Category: இசை

நெளிக்கோடுகளும் அசையாப் புள்ளிகளும் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன்  பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

நாம் செயல்பட முடிகிற எல்லைக்கு வெளியே ஓர் உலகமே (பெரும்பாலும் நமக்கு எதிராகவே) இயங்கிக் கொண்டிருக்கிறதென்பதை மிக விரைவில் உணர்வது மனச்சமாதானத்திற்கான எளிய வழி. சில பொருளில்லாத தருணங்களுக்குப் பிறகு நான் எனக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு விதி FAT.

உதாரணத்திற்கு, பாரத வங்கியின் ஏடிஎம் அட்டையை முதலில் தென்படும் வேறெதாவது வங்கியின் இயந்திரத்தில் நுழைப்பதைத் தவிர்த்து பாரத வங்கியின் ஏடிஎம்மைத் தேடிப் பிடித்தால் அவ்வியந்திரம் மலரிதழ்களைப் போலத் தூவப்பட்ட காகிகத் குப்பைகளுக்கு நடுவே பிணமாகியிருக்கும். முடிந்தால் கேமராவைப் பார்த்து விட்டு அதற்கு ஓர் உதை கொடுக்கலாம் அல்லது அதன் அம்மாவைத் திட்டலாம். இரண்டிற்குமே அது அசைந்து கொடுக்காது. தனது கடமையைக் கண்ணாகச் செய்வதில் மார்வாடிகளுக்கு ஒப்பானது.

அன்றாட வாழ்க்கைக்கான விதிகளை உருவாக்கிக் கொள்வதற்கு ஆராய்ச்சிகள் எதுவுமே தேவையில்லை. எனது விதியை விவரிக்கிறேன்.

FAT: First Availablity Theory

தவறுதலாக Fist Availablity என வாசித்து விட வேண்டாம். இவ்விதி எளிமையானது. நாம் ஒரு செயலைச் செய்ய நினைத்தால் அதற்கான முயற்சியின் துவக்கத்திலேயே கிடைக்கக் கூடய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது. ஆனால் இது நூறு சதவீதம் வெற்றிகரமானதென்பதற்கு நான் உத்திரவாதமளிக்க முடியாது. ஒரு சட்டையின் மீது கவனம் குவிந்து பின் வெகுநேரம் தேடிச் சலித்து கவனத்திலிருக்கும் சட்டையை வாங்குவதற்கு ஒப்பானது.

மலைகள் இணைய இதழுக்கு ஒரு பத்தி எழுதுவதென்று ஒப்புக் கொண்ட பிறகு எங்கிருந்து துவங்குவதன்று அதிகமும் யோசிக்காமல் இப்பத்தியை எழுத அமர்ந்திருக்கும் வேளையில் ஒலிக்கும் EDM எனப்படும் மின்னணு நடன இசையிலிருந்து துவங்கிவிடாலமென்ற முடிவை எட்டியதற்கு மேற்சொன்ன என்னுடைய சொந்தத் தியரியதைத் தவிர வேறொரு காரணமுமில்லை.

டெட்மவுஸின் (DeadMou5) அவரிசியா எனும் இசைத்துண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் டெட்மவுஸிற்கு வருவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே, டஃப்ட் பங்க் இசையமைத்த ட்ரோன்: லெகஸி திரைப்படத்திற்கான இசையைக் கவனித்த பிறகு மின்னணு இசையைக் கேட்கத் துவங்கியிருந்தேன்.

download (12)

என்ன ஓர் ஆரம்பம். சோர்வுற்ற நாளின் தலையில் தண்ணீரை ஊற்றிச் சிலிர்க்க வைத்து, உடையும் நிலைக்கு உற்சாகத்தை உயர்த்திய இசை. பாடலுடனும், வெறும் இசைக்கோர்ப்பாகவும் மின்னணு நடன இசை படைக்கப்படுகிறது. டஃப்ட் பங்க் இசையமைத்து பேரல் வில்லியம்ஸ் (Pharrel Williams) பாடிய “கெட் லக்கி” பாடலில் இருந்தே துவங்கியது நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் அது ஒரு பாப் பாடலைப் போன்றிருக்கும். கறுப்பர்களின் முகத்திலிருக்கும் வசீகரத்தால் நாம் ஈர்க்கப்பட்டால் வசீகர வெள்ளை முகங்களும் கூட பின்னுக்குப் போய்விடும். அப்படியொரு முகம் வில்லியம்ஸிற்கு. வாயை இறுக்கமாக மூடினாலும் புன்னகைக்கும் முகம்.

மின்னணு இசையின் மூலகங்கள் ஆச்சரியமானவை. Kraftwerk எனும் ஜெர்மானிய இசைக்குழுவினர் அல்லது ஜியார்ஜியோ மோரடோர் ஆகியோரிடமிருந்து துவங்குவதாக என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை. நாம் அறுதியுட்டுக் கூற முடியாத ஆரம்பநிலை முயற்சிகளும், தொடர்ச்சியும் ஜாஸ் இசைக்காலத்திலிருந்தே துவங்கி விட்டதாக மின்னணு இசைக்கருவிகளின் வரலாறு சொல்கிறது. ஹென்றி கோவெல் எனும் இசைக்கலைஞரும், லியோன் தெரெமின் எனும் இரஷ்யரும் இணைந்து Rhythmicon எனும் முதல் டிரம் மெஷினை உருவாக்கிய வருடத்தில் காந்தி உப்புச்சத்தியாகிரம் செய்து கொண்டிருக்க, முதல் தமிழ் டாக்கியான காளிதாஸ் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

டிஸ்கோவும் மின்னணு நடன இசையும் ஒட்டியே வளர்ந்தவை. டோனா சம்மர் பாடிய ஹாட் ஸ்டஃப் பாடலுக்கான இசை ஜியார்ஜியோ மோரடோர். டிஸ்கோ இசைக்கு கச்சிதமான உதாரணம் இப்பாடல். இருவரும் சேர்ந்து பணியாற்றிய நாட்களில் டோனா பாடிய “ஐ ஃபீல் லவ்” (1977) பாடலே மின்னணு நடன இசையின் சரியான துவக்கம் என்கிறார் ஜியார்ஜியோ. ஆனால் Kraftwerk குழுவினரின் ஆட்டோபான், டிரான்ஸ் யூரோப் எக்ஸ்பிரஸ் ஆல்பங்கள் இதற்கு முன்பே வெளியாகியிருக்கின்றன. அதிலும் ஆட்டோபான் (1974) ஆல்பத்தின் இசை நேற்றுத்தான் இசைக்கப்பட்டதைப் போலிருக்கும். இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும் இதே உணர்வுதான் எழக்கூடும். நிச்சயமாக ஒரு T-800 எதிர்காலத்திலிருந்து ஒலிகளைச் சேகரித்து அவர்களுக்கு அளித்திருக்க வேண்டும். ரஹ்மானின் பல இசைக் கோர்வைகள் Kraftwerkன் பாதிப்பில் எழுந்தவையாக ஊகிக்க முடிகிறது. டஃப்ட் பங்க்கின் “டெக்னலாஜிக்” பாடலையும் அவர் எந்திரன் திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ஜியார்ஜியோ நடன இசைக்கு வழிவகுத்தவர் என்று ஒப்புக் கொண்டால் Kraftwerkஐ தாராளமாக மின்னணு இசையின் செவ்வியல் மூதாதை எனலாம். அவர்களுடைய ஆல்பங்கள் இன்றுமே புத்துணர்ச்சியுடனிருக்கின்றன. டஃப்ட் பங்க்கின் இசையை விட எனக்கு இவர்களைக் கேட்பதே பிடித்திருக்கிறது. பெளத்தர்கள் மந்திரம் ஓதுவதைப் போன்றொரு meditative quality ஆட்டோபான் ஆல்பத்திலிருக்கிறது. பறவைகள் கூட்டமாக நிலம் நோக்கிச் சரியும் சாயங்காலத்தின் அலையடிப்பையும், உயர எழும் கட்டிடங்களின் ஒழுங்கையும் மின்னணு இசை அளிக்கிறது.

வெறும் நான்கைந்து மின்னணு கருவிகளைக் கொண்டு வெவ்வேறு இசை ஒலிகளைக் கோர்த்து விதவிதமான இசைக்கோர்ப்புகளையும், பாடல்களுக்கான இசையையும் எப்படி தொடர்ந்து உருவாக்க முடிகிறதென்று எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. பல்வேறு இசைக்கருவிகளின் கலவையான தமிழ் சினிமாப் பாடல்களின் இசையைக் கேட்டு வளர்ந்த எனக்கு மின்னணு கருவி இசையின் விரிவடையும் கற்பனை வியப்பளிக்கிறது. Nothing will be endless. ஆனால் வாழ்வைப் போலத்தான் இசையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாத வெளிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

என்னைப் போலவே சில சொந்தத் தியரிகள் உள்ள ஒரு கதாபாத்திரத்தை Arturo Perez-Reverte நாவலொன்றில் சந்தித்தேன். தீவிர இலக்கிய வகை நாவல் அல்ல. ஷெர்லாக் ஹோம்ஸின் தந்தையின் மீது உங்களுக்கு ஆர்வமிருந்தால் அல்லது ராபர்ட் லூயி ஸ்டிவென்சனின் “லாங் ஜானை”* உங்களுக்குப் பிடித்திருந்தால் இந்நாவலும் உங்களுக்குப் பிடிக்கும். நாட்டிகல் சார்ட் எனும் அந்நாவலின் பாத்திரம் Coy சில சொந்த தியரிகளை உற்பத்தி செய்வான். அவற்றில் ஒன்று:

LBTAFFD: Law of Buttered Toast Always Falls Face Down.

இங்கே இதனை அளிப்பதற்காக வாசிக்கையில் ஒருவேளை இக்கட்டுரையைத்தான் இது குறிக்கிறதோ என்கிற சந்தேகத்தோடு…

•••

*லாங் ஜான் – டிரஸர் ஐலண்ட் நாவலின் ஒரு பாத்திரம்.

டஃஃப்ட் பங்கின் டெக்னோலாஜிக் பாடலும் , Kraftwerkன் தி ரோபோட்ஸ் பாடலும் ரஹ்மானின் எந்திரன் திரைப்பட இசையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனத்திற்கு இசைஅஞ்சலி / கலாப்ரியா

இசை அமைப்பாளர் கோவர்தனம்

இசை அமைப்பாளர் கோவர்தனம்

பனி மூடிய இசைமலைகள்
”சாஞ்சா சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆடுகளா- உங்க
சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா”

என்று ஒரு பாடல் உண்டு ரம்பையின் காதல் படத்தில், தஞ்சை ரமையாதாஸ் எழுதினது என்று நினைவு. சினிமாவிலும் அப்படித்தான். ஒரு நடிகனோ நடிகையோ நடித்து படம் வெற்றி பெற்று விட்டால் அவர்கள் பின்னாலேயே போவார்கள். நடிகர் நடிகை மட்டுமல்ல, இசையமைப்பாளர்கள் கதையும் அப்படித்தான். பா(ட்)டும் அப்படித்தான் என்று சொல்ல வேண்டும். கே.வி.மகாதேவன் இசை அமைத்த ஒரு படம் நன்றாக ஓடி விட்டால அவர் பின்னாலேயெ செல்வார்கள். விஸ்வநாதன் ராம மூர்த்தி படம் வெற்றி பெற்றால் அவர் பின்னால் படையெடுப்பார்கள் படத் தயாரிப்பாளர்கள். நீண்ட காலத்திற்குப் பின் எம்.ஜி.ஆரின் பணத்தோட்டம் படத்திற்கு மறுபடி இசை அமைத்தார்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தி இருவரும். அதிலிருந்து அவர்களை அதிகம் நாடிச் சென்றார்கள் எம்.ஜி.ஆர் படத் தயாரிப்பாளர்கள்.

பெரும்பாலும் தமிழ்த் திரை ரசிகர்கள், கோவர்த்தனம் அவர்களை விஸ்வநாதன் ராம மூர்த்தியின் உதவியாளராகவே அறிவார்கள். அவர் ஏ.வி.எம்.நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர் சுதர்சனத்தின் சகோதரர் ஆனாலும் கூட ஏ.வி.எம் மின் பல படங்களில், சுதர்சனத்தின் உதவியாளராகக் கூட அவர் பெயர் வராது. விஸ்வநாதன் ராம மூர்த்தியின் உதவியாளரான ஜி.கே. வெங்கடேஷ் பிரிந்து கன்னடத் திரையுலகில் பிரபலமானதும் கோவர்த்தனம் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் தனியேயும் இசை அமைத்திருந்தார்.

அவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்றாலும், கன்னடம், தமிழ் இரண்டும் நன்றாகவே தெரியும். கன்னடம், தமிழ் தெலுங்கு என மும்மொழிப் படமாக வந்த ’ஜாதகம்’ படமே அவருக்கு முதல் படம். இந்தப் படத்தைத் தழுவியே பின்னாளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘செல்வம்’ படம் வந்தது என்பார்கள். ஜாதகம் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடும் “ மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்” பாடல் பிரபலமானது. https://www.youtube.com/watch?v=HqK26OK_dLE

இதில்த்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகிறார். “சிந்தனை ஏன் செல்லமே..” என்ற தனிப்பாடலும், ”கண்ணுக்கு நேரே மின்னலைப் போலே…. “ என்று ஜானகியுடன் பாடும் பாடலும் பிரபலம். (ஜாதகம் சிலருக்கு சாதகம் அது சரியில்லேன்னா பாதகம் என்றும் ஒரு பாடல் உண்டு என்று நினைவு).

ஏ.வி.எம். பட்டறையிலிருந்து தயாரான, இயக்குநர், எடிட்டர், கே.சங்கருடன், ஸ்டுடியோ நிர்வாகியான வாசு மேனன் இணைந்து, வாசு ஸ்டுடியோ என்று புதிதாக ஆரம்பித்து,முதன் முதலாக ’ஒரே வழி’ என்ற படம் தயாரித்தார்.அதற்கு இசை கோவர்த்தனம். அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம்…” https://www.youtube.com/watch?v=O0lNCQEtJ1c&list=RDO0lNCQEtJ1c&t=16 .

இந்தப் பாடல் அப்போது சிலோன் வானொலியில் ஒலிக்காத நாளே இருக்காது. இதன் வெற்றிக்குப் பின் வாசு மேனன், சங்கர், கோவர்த்தனம் கூட்டணியில் ”கை ராசி” வெளி வந்தது. 1960 தீபாவளிக்கு, மன்னாதி மன்னன், பாவை விளக்கு, பெற்ற மனம், யானைப்பாகன் ஆகிய படங்களுக்கு எதிராக வந்து சக்கைப் போடு போட்டது. சங்கர் ராசியான இயக்குநர் ஆனார்.

இதே வாசு மேனன் பின்னாளில் தயாரித்த “ பூவும் பொட்டும்” பிரமாதமாக எதிர் பார்க்கப்பட்ட படம். ”எண்ணம் போல கண்ண வந்தான் அம்மம்மா”, ”நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்”, போன்ற பாடல்கள் அற்புதமாக இருந்தும் படம் வெற்றி பெறவில்லை. சங்கர் இயக்க மறுத்து தாதா மிராஸி இயக்கினார் என்பார்கள்.கே.சங்கரின் தம்பிகளான கே.நாரயணன், கே.சங்குண்ணி ஆகியோர் எடிட்டிங் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை.

கே.சங்கரின் தம்பி கே.நாராயணன் இயக்கிய படங்களில் கொஞ்சம் நன்றாக ஓடிய படம் வரப்பிரசாதம். இதற்கு இசை கோவர்த்தனம். “கங்கை நதியோரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை மெள்ள நடந்தாள்…” என்கிற புலமைப்பித்தனின் அழகான பாடலுக்கு பிரமாதமான டியூன் போட்டிருப்பார். படமும் நன்றாக ஓடியது. வாசு பிலிம்ஸின் அஞ்சல்பெட்டி 520 படத்திற்கும் கோவர்த்தனின் இசையமைப்பில் மிக மிக சிறப்பான பாடல்களும் பின்னணி இசையும் அமைந்தது ‘பட்டணத்தில் பூதம்” திரைப்படம். இது பிராஸ் பாட்டில் என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவல். ஜாவர் சீதாராமன் எழுதியது.

முதலில் கண்ணதாசன் தயாரிப்பதாக இருந்து கை விட்டு விட்டார். அவரது சிபாரிசின் பெயரிலேயே கோவர்த்தனம் இசை அமைத்தார். அவ்வளவு பாடல்களும் பிரமாதமானவை. எல்லோருக்கும் பிடித்த சிவரஞ்சனி ராகப் பாடலான. “ சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..” உட்பட அவ்வளவு பாடல்களும் பிரமாதமானது. படக்கதையையும் அப்போதைய (1967) சூழலுக்கேற்ப ஜேம்ஸ்பாண்ட் பாணியில் படமாக்கி இருப்பார்கள். ”எதிர்பாராமல் இருந்தாளோ இங்கு ஏன் வந்தாள் என்று நினைத்தாயோ….” என்ற பாடல் எனக்குப் பிடித்தமானது, குமுதம் விமர்சனத்திலும் இந்தப் பாடலை பாராட்டிய நினைவு. விஸ்வநாதன் ராம மூர்த்தியிடம் பணியாற்றிய சங்கர் –கணேஷ் தனியாக இசை அமைத்த போது அவை விஸ்வநாதன் ராம மூர்த்தியின் நகல்களாகவே இருந்தன. உதாரணம், “இதயவீணை”. ஆனால் கோவர்த்தனம் இசை அப்படி இல்லை. தனித்துவமானது.

விஸ்வநாதன் ராம மூர்த்தியுடன் இவர் இசை அமைத்த வெற்றிப் படங்கள் தெலுங்கிலும் கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்படும் போது அவற்றிற்கு கோவர்த்தனமே இசைப் பொறுப்பை முழுதுமாகப் பார்த்துக் கொள்ளுவார். போலீஸ்காரன் மகள், ராமு, களத்தூர் கண்ணம்மா (சுதர்சனம் இசை) போன்ற படங்கள் உதாரணம். இவை பெரும்பாலும் ஏ.வி.எம் நிறுவனத்திற்காகச் செய்யப்பட்டவை.

தன்னுடைய இசை அறிவின் மீது அபார நம்பிக்கை கொண்டதனால் பெரிய சமரசங்களுக்கு உடன்படாதவர். அதனாலும் அவரால் தனிப் பெரும் இசை அமைப்பாளராக வலம் வர முடியவில்லை. நாம் ஏற்கெனவே சொன்னது போல திடீரென்று திரையுலகில் வந்து விடுகிற ராஜாக்களும் சக்கரவர்த்திகளையுமே தயாரிப்பாளர்கள் தேடி ஓடி விடுவதால் கோவர்த்தனம் போன்ற இசை மலைகளைப் பனி மூடியே இருக்கிறது எப்போதும்.

•••••

இன்பக் காதல் இசை பாடியதும் நீயே அன்றோ? – ( திரையிசை மேதை சேலம் R. கோவர்தனன் நினைவு அஞ்சலிக் கட்டுரை ) – சத்தியப்பிரியன்

இசை அமைப்பாளர் கோவர்தனம்

இசை அமைப்பாளர் கோவர்தனம்

.

18-09-2017 அன்று மறைந்த திரையிசை மேதை சேலம் R. கோவர்தனன் நினைவு அஞ்சலிக் கட்டுரை

இசையமைப்பாளர் R.கோவர்த்தனம் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளரான R. சுதர்சனத்தின் சொந்த சகோதரர் ஆவார். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் நெடுநாட்கள் உதவியாளராக இருந்து பட்டணத்தில் பூதம் , கைராசி, வரப்பிரசாதம் போன்ற படங்களில் பல இனிமையானப் பாடல்களைக் கொடுத்தவர். சேலத்த்துக்காரர். என்ன காரணமோ தெரியவில்லை இவரால் ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளராகப் பரிணமிக்க முடியவில்லை. கோவர்தனம் தனது தந்தை ராமச்சந்திர செட்டியார் மூலமே இசையைக் கற்றுக் கொண்டார். மூன்று மொழிகளில் நல்ல பரிச்சயம் உள்ளவர். தமிழ், தெலுங்கு, கன்னடம். இதன் காரணமாகவே இவருடைய முதல் திரை இசை மூன்று மொழிகளில் வெளியான ஜாதகம் என்ற படத்தின் மூலம் நிகழ்ந்தது. பிருமாண்ட ஆரம்பம் என்றாலும் அதன் பின்னர் அவர் வளர்ச்சி அப்படிச் சொல்லிக் கொள்ளும்படியில்லை. எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளராகத் தொடர்வது வசதியானது என்று இருந்து விட்டார் போலும். கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளிலும் சேர்த்து மொத்தம் ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருப்பார். ஆனால் ஒவ்வொரு படமும் இசையில் சொல்லிக்கொள்ளும் விதமாக அமைந்திருக்கும்.

S.ஜானகி ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தானப் பாடகியாக இவரால்தான் தேர்வு செய்யபப்ட்டார்.

எஸ்.ஜானகியை மட்டுமில்லை ஜெமினியின் பிரத்தியேகப் பின்னணிக் குரல் என்று பேசப்பட்ட பி.பி.ஸ்ரீநிவாசைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். ஜாதகம் என்ற தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்றிலும் பாடும் வாய்ப்பைப் பெற்ற பின்னர் பி.பி. ஸ்ரீநிவாஸ் தொட்ட உயரங்கள் எத்தனை எத்தனையோ.

இன்னும் ஒரு அற்புதமான அறிமுகம். தனது ஆரம்ப காலங்களில் இடதுசாரி மேடைகளில் இசையமைத்துக் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவைத் தனது உதவியாளராக இணைத்துக் கொண்டு அவரது முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தவர் கோவர்தனம் அவர்கள்தான். இதனை இளையராஜா எல்லா மேடைகளிலும் கூறுவார். வரப்பிரசாதம் என்ற திரைப்படத்தில்தான் முதன் முதலாக இளையராஜாவிற்கு கோவர்தனன் மூலம் டைட்டில் அந்தஸ்து கிடைத்தது. தன் வாழ்நாள் முழுவதும் திறமையுள்ளவர்களை ஏற்றிவிடும் ஏணியாகவே இருந்திருக்கிறார்.

கண்ணதாசனைப் போலவே மாயவநாதன் என்றொரு கவிஞர் ஒருவர் இருந்தார். சில பாடல்களைக் கேட்கும்பொழுது இந்தப் பாடலைக் கவிஞர் எழுதினாரா மாயவநாதன் எழுதினாரா என்று தோன்றும். கண்ணதாசனை அடியொட்டி எழுதியதாலோ என்னவோ தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொள்ளாமல் போகவே அந்தக் கவிஞரால் தனிப்புகழ் அடையமுடியாமல் போனது. இதே விபத்து விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரையும் அடியொற்றிய கோவர்தனத்திற்கும் நேர்ந்திருக்கும். பெரும்பாலும் இவர் எம்.எஸ். விஸ்வநாதனின் நிழலாகவே இருந்து செயல்பட்டவர்.

இவரது இசையில் வெளியான பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி பாடல் குறித்து ஒரு ரசமான சம்பவம் ஒன்று உண்டு. இதனைக் கண்ணதாசனே தனது எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அருமையான காபி ராகப் பாடல். கண்ணதாசன் காங்கிரசில் ஏன் அகில இந்திய அளவில் போற்றிய ஒரே தலைவர் காமராஜர் மட்டும்தான். காமராஜர் தலைவராக இருந்தார் என்பதனாலேயே காங்கிரசில் அங்கத்தினராக இருந்தார். ஆனால் உலகறிந்த கவிஞரின் குடிப்பழக்கம் அவருக்கு கட்சியில் பலத்த எதிர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஒரு சமயம் காமராஜர் கூப்பிட்டு,” கட்சியா? மதுவா?,’என்ற கேள்வியை எழுப்ப கவிஞர் பட்டென்று,”மது,’” என்று கூறிவிட்டார். அதன் பிறகு கர்மவீரர் கவிஞருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். கவிஞருக்கோ காமராசர் மீதிருந்த பற்று குறையவில்லை. மீண்டும் காங்கிரசில் சேரப் பிரியப்பட்ட நிலையில் தனது சொந்த முயற்சியில் பட்டணத்தில் பூதம் படத்தை எடுக்கத் தொடங்கினார். அதன் பிறகு அது வேறு ஒரு நிறுவனத்தின் கைக்குச் சென்று வீனஸ் பிக்சர்ஸ் இறுதியில் தயாரித்து வெளியிட்டது வேறு கதை. அந்தப் படத்தில் ஹீரோயின் கே.ஆர்.விஜயா ஹீரோ ஜெய்ஷங்கரை நினைத்துப் பாடுவதைப் போல ஒரு பாடலுக்கு கோவர்தனம் மெட்டு அமைத்திருந்தார். பல்லவியில் கவிஞர் ‘ அந்த சிவகாமி மகனிடம் தூது சொல்லடி. என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி?’ என்று கிட்டத்தட்ட காமராஜரை மனதில் நிறுத்தி கண்ணதாசன் எழுதிய பாடல். பாடலும், இசையும் மிகப் பிரமாதமாக அமைந்த பாடல் அது. பாடல் காமராஜருக்குப் போட்டுக் காட்டப்பட்டது. காமராஜர் தனது உதவியாளரைக் கூப்பிட்டு,” கவிஞரை வந்து கட்சியில் சேரச் சொல்லுங்க,”என்றாராம்.

கடித இலக்கிய மரபு என்றவொன்று தமிழ் இலக்கியத்தில் கிடையாது. நேரில் சொல்ல முடியாத பல விஷயங்களைக் கடிதத்தில் தெரிவிக்கும்பொழுது ஒருவித பயமற்ற அச்சமற்ற தெளிவான கருத்து வெளிப்பாடு உண்டாகிறது. இதற்கு முன்னோடி தமிழில் உண்டா எனப் பார்த்தால் தூது இலாக்கிய மரபு இருந்திருக்கிறது. விலங்கு , பறவை போன்ற வாய் பேச முடியாத ஜீவராசிகளிடம் தங்கள் எண்ண வெளிப்பாடுகளைச் சங்ககாலப் புலவர்கள் பாடல்களில் பதிவு செய்திருக்கிறார்கள். .

அவரது இசையில் 1960-ம் ஆண்டு வெளியான கைராசி படத்தின் பாடல் ஒன்றைக் கொஞ்சம் அலசுகிறேன்.

மடலெழுதும் பழக்கம் ஆதிகாலம் தொட்டே தமிழ் இலக்கியத்தில் இருந்து வந்திருக்கிறதா தெரியவில்லை. பாகவதத்தில் ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணருக்கு எழுதிய கடிதம் மிகப் பிரபலம்.அதே போல தமயந்தி நளன் நடுவில் கடிதப் போக்குவரத்து இருந்திருக்கிறது. காப்பியம் என்று எடுத்துக் கொண்டால் அனுமான் இராமனுக்கும் சீதைக்கும் நடுவில் ஒரு காகிதம் போலவும் ஒரு தொலைபேசிக் கருவி போலவும் ஒரு கூரியர் சேவகனைப் போலவுமே செயல்பட்டிருக்கிறான். கம்பர் அதன் காரணமாகவே அவனுக்கு சொல்லின் செல்வர் என்ற சிறப்புப் பெயர் வழங்கினார்.

தமிழில் கோவலனுக்கு மாதவி எழுதிய மடலும், சீவகனுக்கு காந்தருவதை எழுதிய கடிதமும் இலக்கியச் சான்றுகள். பெரியபுராணத்தில் இடம்பெறும் திருமுருகப் பாசுரங்களும் , மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பப் பாசுரங்களும் கடிதஇலக்கியங்களாகும். மிகச்சமீபமாக பாரதியார் எழுதிய சீட்டுக்கவிகள் சான்றாகும். பின்னர் இந்த இலக்கியமரபு கொஞ்சம் அரசியல் சாயம் பூசிக்கொண்டு அண்ணாவின் கடிதங்கள் , உடன்பிறப்பிற்குக் கருணாநிதி எழுதிய கடிதங்கள், மகள் இந்திராவிற்கு தந்தை ஜவஹர்லால் நேரு எழுதியக் கடிதங்கள் என்று உருமாறின.

இப்படிப்பட்டச் சூழலில்தான் கண்ணதாசன் தனது திரைப்படப் பாடல்களில் இந்தக் கடிதஇலக்கியத்தை அறிமுகப்படுத்துகிறார். கவிஞரின் உயிர்நாடியே தமிழனின் தலைமைப் பண்பான காதல் என்றாகும்பொழுது அவர் தனதுக் கடிதப்பாடலைத் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலேயே அமைக்கிறார். இது முற்றிலும் இலக்கியத்தில் தோய்ந்த பாடல். ஆயிழைஎன்ற சங்ககாலச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பார் கவிஞர் இந்தப் பாடலில்.

இது காட்சிப்படுத்துதலின் காலம். மேலும் திரைப்படம் என்பது பல்வேறு இலக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஊடகம். இதன் பல்வேறு காட்சிப்படுத்துதல்களின் கூறுகளை நமது சங்க இலக்கியப் பாடல்களில் காணலாம். உண்மைக்குப் புறம்பானவை என்று சீரிய இலக்கியவிமர்சகர்களால் தமிழ் திரைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப் படும்பொழுது இவ்வளவு தெளிவோடும் சிலநேரங்களில் அதீத கற்பனைவளத்தோடும் எழுதப்பட்டுள்ள சங்கப் பாடல்களையும் நாம் உண்மைக்குப் புறம்பானவை என்ற தராசில் வைத்துதான் அளக்கவேண்டியிருக்கும். எனவே திரைப்படங்களில் பாடல் காட்சிகள் என்பன தனியாகத் தோன்றினாலும் கவிஞர் கண்ணதாசன் போன்ற –போன்ற கிடையாது என் அபிப்பிராயத்தில் அவர் ஒருவர் மட்டும்தான்– சிலபாடல்களுக்கு நமது சங்ககால அந்தஸ்து வழங்கியிருப்பார்.

அப்படி ஒரு பாடல்தான் கைராசி படத்தில் இடம் பெற்றுள்ள அன்புள்ள அத்தான் என்று தொடங்கும் இந்தப்பாடல்.

கைராசி 1960ம் ஆண்டு வெளிவந்தத் தமிழ்த்திரைப்படம். ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம். இசை R..கோவர்த்தனம். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்.

தனது இளமைக்கால திரைப்படங்களில் ஒரு நவீன கதாநாயகன் அதிலும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திய கதாநாயகன் என்ற அந்தஸ்து ஜெமினி கணேசனுக்கு மட்டும் உண்டு. காதல் மன்னன் என்பது ஒரு குறும்புக்கார ரசிகன் இவருக்குக் கொடுத்த சிறப்புப் பெயர். இவரும் சரோஜாதேவியும். நடித்து ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான கல்யாணப்பரிசு அசாத்திய வெற்றியை ஏற்படுத்தி இளமை இயக்குனர் என்ற சிறப்புப் பெயரை ஸ்ரீதருக்குப் பெற்றுத் தந்தது. காதல் என்ற தனியாளுமையை தமிழ்ப்படங்களில் உண்டாக்கிய படமும் இதுவே. இதைப் பின்பற்றி உடனே நூறு திரைப்படங்கள் வருவது தமிழ்த்திரைப்படத் துறையில் இடம்பெறும் வாடிக்கையான ஒன்று. அப்படி உருவான திரைப்படம்தான் கைராசி. தன் வசதிக்கேற்ப இயக்குனர் திரைப்படத்தைக் கொண்டு போயிருப்பார். எது எப்படியோ அன்புள்ள அத்தான், காத்திருந்தேன் காத்திருந்தேன்,கண்ணும் கண்ணும் போன்ற சில கண்ணதாசனின் அற்புதப் பாடல்கள் இடம் பெற்றத் திரைப்படம் இது.

இந்தப்பாடலும் திரைப்படத்தை மீறிய பாடல். கவிஞர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் ஒரு திரைப்படத்தில் ஒரு திரைக்ககதைக்கு எழுதிய பாடல்களை எவ்வாறு இலக்கியமாகக் கருதுவது என்பதுதான்.. அப்படிப் பார்த்தால் மகாகவி தனது பாடல்களை தேசியம்,பக்தி,தத்துவம் என்று வைகைப்படுத்திப் பாடவில்லையா? அதில் பொதுத் தன்மை இல்லாமலா போயிற்று?

நிலவு வந்து உலவும் பூஞ்சோலையில் மலர்கள் உதிரும் பன்னீர் மரநிழலில் தன் காதலன் வேண்டிக்கொண்டான் என்று அவன் பிரிவாற்றாமையின் துயரை அவனிடமே அவள் விவரிப்பது போல் அதுவும் கடிதமொழியின் வாயிலாக விவரிக்கும் பாடல். சரோஜாதேவியின் இளமையும் இனிமையும்ததும்பும் வசீகர முகம் . ஒரு குளிர்நிழற் பூஞ்சோலையின் காட்சியமைப்பு. இரவுநேரத்திற்கான மிதமான் ஒளிப்பதிவு என்று பாடலின் ஆரம்பமே ரம்யமாக இருக்கும்.

அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்.

என்று குறும்பு ததும்பும் பாவத்துடன் காட்சியமைப்புக்கேற்பப்ப் பாட வேண்டிய கட்டாயம் பி.சுசீலா அவர்களுக்கு. அழகாகப் பாடியிருப்பார். ஆயிழை என்ற வார்த்தையின் அமைப்பிலேயே அந்தப்பாடலில் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் கவிஞர் திருப்பியிருப்பார். அந்த வார்த்தையை பி.சுசீலா பிரமாதமாக உச்சரித்திருப்பார்.

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்.

இங்கே தென்னவர் என்று குறிப்பிட்டது பாண்டியர்களை. பாண்டியர்களின் கையிலிருக்கும் வாளின் கூர்மையினைப் பற்றி பாடல் பாடல்களாக சங்க இலக்கியம் கூறும்.
பிரிவாற்றாமையைக் குறித்து திருவள்ளுவர் பல அருமையானக் குறள்களை எழுதியுள்ளார். அதில் ஒரு குறளில் நெருப்பு தொடும்போது சுடும் ஆனால் பிரியும்பொழுது சுடுவது காமநோய் ஒன்று மட்டுமே என்ற பொருளில் ஒரு குறள் உண்டு.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. என்கிறது அந்தக் குறள்.

வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா என்று கண்களை மிக நுட்பமாக திருவள்ளுவர் பாடியிருப்பார். வைரமுத்து இதையே
உன்னை வந்து பாராமல் தூக்கம் இல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே என்று எழுதியிருப்பார்.

எனவே தென்னவர் கையிலிருக்கும் வாளைப் போன்ற கண்கள் நீ வாராததால் உறங்கவில்லை என்கிறார் கவிஞர்.
பட்டியல் தொடர்கிறது.

மாலைப்பொழுது வந்து படைபோல கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்
ஆலிலைப் போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்.

மாலையோ அல்லது மணந்தார் உயிருண்ணும் வேலைநீ என்பார் திருவள்ளுவர்.

சிலநேரங்களில் கவிஞர் மீறும் சில அந்தரங்க இடங்கள் அதன் அகத்தன்மையின் உச்சத்தை அதன் கவிதைத்தனமை வென்றுவிடும் . அப்படிப்பட்ட வரிகள்தான் மேற்கூறிய வரிகள். நமக்குக் கிடைக்கும் சங்காலக் குறுந்தொகை போன்ற அகப்பாடல்கள் வெறும் ஏட்டு வடிவிலும் எழுத்து வடிவிலும் மட்டுமே. இங்கே கவிஞரின் பாடல்களுக்கு ஒரு நல்ல இசையமைப்பாளர் உண்டு. ஒரு நல்ல பாடகி உண்டு. அப்படியே கட்டிக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையல்லவா?

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்காணல் உற்று என்கிறார் வள்ளுவர்.

அதாவது தனது எல்லாவற்றையும் பறித்துச் சென்ற காதலனிடம் தன் கண்களையும் பறித்து செல்லுமாறு காதலி இதயத்திடம் விண்ணப்பிக்கிறாள். காரணம் காதலனைக் காண வேண்டுன்று கண்கள் அவளைப் பிடுங்கித் தின்கின்றனவாம். இதைத்தான் கவிஞர் இப்படிப் பாடுகிறார்.

பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே?
பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே?
கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
கண்ணா இனிநான் பொறுப்பதற்கில்லை.

இந்த வரிகளும் அதற்கு பி.சுசிலாவின் குயிலை வெல்லும் குரலும் பிசிறு தட்டாத உச்சரிப்பும் பாடலை அற்புதப் படுத்தி விடும்.

பொன்அணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும்
கைவளை சோர்ந்து விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிசொல்ல நேரும்.

என்ன அழகான வார்த்தைப் பின்னல்கள். என்ன அற்புதமான இசை. என்ன அற்புதமான குரல் வளம்.

கவிஞரின் இலக்கியத்தரமான பாடலை அதன்தன்மை மாறாமல் பி.சுசீலா பாடி ஓர் உயர்ந்த அந்தஸ்தை அளித்திருப்பார்.

கோவர்தன் இசையில் கொண்டாடப்பட வேண்டிய பாடல்.

இந்தப் பாடல் காலத்தால் அழியாத பாடல். அதேபோல இந்தப் பாடலுக்கு இசையமைத்த கோவர்தனத்தின் பெயரும் இந்தப் பாடல் இருக்கும் தோறும் நீங்காது இடம் பெறும்.

****

புரந்தரதாசர் (1484–1564) இசைக் கட்டுரை : – தி.இரா.மீனா

download

கர்நாடக இசையில் தாச இலக்கியத்தின் பங்கு மிக அதிகமானது.சாதாரண மனிதனும் விரும்பி ஏற்கும் வகையில் பண்பாடு மற்றும் சமய மேன்மை சார்ந்த கருத்துக்களை தாசர்கள் கீர்த்தனைகளாக்கி தங்கள் பக்தியை வளப்படுத்தினர்.’நாதோபாசனா’என்ற பெயரில் அமையும் இது இசை, பக்தி, இலக்கியம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்றாலும் தனித்தனியாக இனம் கண்டறிய முடியாத அளவுக்குத் தமக்குள் இணைந்துள்ளது. ஹரிதாசர்களின் இலக்கியத்தைப் பொதுப் பாடல்கள், கவித்துவப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம். ஹரிதாசர்களின் படைப்பில் மிக முக்கியமானது கீர்த்தனைகளே.இது தேவர்நாமா என்றும் அழைக்கப்படும்..வேதம்,உபநிடதம்,புராணம் குறிப்பாக தசாவதாரம் ஆகிய வற்றின் கருத்துக்களை எளிமையாகச் சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் வெளிப்படுத்தியவர்கள் ஹரிதாசர்கள்.

கருத்துக்களைக் கொள்கை களாக வெளிப்படுத்தாமல் இயல்பான கதை மற்றும் ,பேச்சுப்பாங்கில் கீர்த்த னைகள் வடிவத்தில் அமைத்ததால் மனிதர்கள் மனதில் அவை எளிதாகப் பதிந்தன.எல்லாப் பாடல்களும்,மறுக்கப்படாத சமய நிலைகளை வெளிப்படுத் தின.கடினமாக உணராமல்,வாழ்க்கையை அதன் போக்கை மனிதனுக்குப் பிடித்த வகையில் தெரிந்து கொள்ள அவை உதவின.வேதம் ,புராணம் ஆகியவைகள் சொன்ன கருத்துக்களை தாசர் கீர்த்தனைகள் மக்களுக்குக் காட்டின.ஹரிதாசர்கள் ஒன்றையும் விடாமல் எல்லா முக்கிய அம்சத் தையும் கீர்த்தனைகளில் வெளிக்கொண்டு வந்தனர்.வாழ்க்கையின் நடப்புகளை, அடை யாளத்தைக் காட்டும் வகையில் கீர்த்தனைகளில் சொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான விஷயங்கள் ஒவ்வொரு வகையில் விஷேசமானவை;அர்த்தம் நிறைந்தவை.

மனிதன்தானாகப் புரிந்து கொண்டிருக்க முடியாதவை.குறிப்பிட்ட காலச்சூழ்நிலையில் வாழ்க்கையின் திக்குத் தெரியாமல் இருந்த சாதாரண மனிதர்களுக்கு உண்மைகளின் அறிக்கைகளாக இருந்த கடினமான இலக்கிய வகைகள் புரியவில்லை. அந்நேரத்தில் ஹரிதாசர்களின் கீர்த்தனைகள், வழி நடத்திச் செல்லும் விளக்காக இருந்தன. கற்றறிந்தவர்களான தாசர்கள் மத்து வரின் செய்திகளை மிக எளிமையாகவும், விசாலமான நோக்குடனும் வெளிப்படுத்தியுள்ளனர்.விறுவிறுப்பான நிலையில் சொற்றொடர்களை எளி மையான கன்னட மொழியில் வெளிப்படுத்தினர்.அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பழமொழிகள் போலக் கீர்த்தனைகளை அமைத்தனர். எளிமை அவர்களின் அழகாகும்.அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவையோ, துறையையோ பற்றிப் பேசவில்லை.பொதுவான பார்வையைக் கையாண் டதால் எல்லோரையும் ஈர்க்கின்ற தன்மை அந்த இலக்கியத்திற்கு இருந்தது . அகந்தை,ஆங்காரம்,தந்திரம்,ஆகியவைகளை ஒழித்த நிலையில்தான் அவர்கள் பாடல்களிருந்தன.ஒவ்வொரு ஹரிதாசனுக்கும்தனியானநடையிருந்தது.அந்த நடையின் வளர்ச்சிதான் கர்நாடக இசை என்ற ஒரு வடிவத்தை உலகிற்குத் தந்தது.

நவீன கர்நாடக இசையின் காலம் புரந்தரதாசரோடு தொடங்குகிறது. இசைப் பயிற்சிக்கு உரிய ஸரளி வரிசை,ஜண்டி வரிசை அலங்காரம்,கீதம் என்று பலவற்றையும் புரந்தரதாசர் அறிமுகம் செய்தார். அன்றாட வாழ்க்கை நிகழ் வுகள் பற்றிய அபிப்ராயங்களைத் பாடல்களில் வெளிப்படுத்தி,பேச்சு மொழிக் கூறுகளை பயன்படுத்தி,சாதாரண மனிதனும் கற்றுக் கொண்டு பாடும்படியான மெட்டு மற்றும் ராகங்களை நாட்டுப்புற ராகத்தோடு இணைத்து தன் பாடல்களில் வெளிக்கொண்டு வந்தவர்.மாயாமாளவ கௌளை ராகத்தை அறிமுகம் படுத்தியதும் இவர்தான்.

தாசர்களின் தலைவனாகப் போற்றப்படும் புரந்தரதாசர் செல்வப் பரம்பரை யில் வந்தவர்.ஒரு கட்டத்தில் பேராசை வாழ்க்கையின் நிலையிலிருந்து விலகி விஷ்ணுபக்தனானார்.உலக வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து பல்வேறு சூழ்நிலைகளில் பழகியதால் அவர் கீர்த்தனைகள் நகைச்சுவை,கண் டனம்,சமூகவிமர்சனம்,அறிவுரை என எல்லாவற்றின்கலவையாகவும் அமைந் தன.நாமமகிமை,துதி,நிவேதனம், கிருஷ்ணலீலை, சமூக விமர்சனம்,அறிவுரை என்ற பிரிவுகளில்அவர் கீர்த்தனைகள் அடங்குகின்றன.

அவருடைய பாடல்கள் அனைத்தும் தேற்றமும்(theorems) விளக்கவுரைகளும்தான் (commentaries ) எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான பாடல்கள் அவருடைய அறி வுப் பிரதிபலிப்பாக இல்லாமல் சாதாரண மனிதனையும் தொட்டுப் பார்த்துப் பேசுவதாகிறது.ஒவ்வொரு பாடலும் உலகத்தொடர்பான செய்திப் பகிர்வாகவும் உள்ளது. இந்த நிலை மனிதர்களிடம் இசையின் மீது ஒரு தாக்கத்தை உண் டாக்கியது என்பதில் இரண்டாம் கருத்தில்லை.,

’வயிற்று வைராக்கியம் ”என்ற கீர்த்தனை சமூக வாழ்க்கையின் குறை பாடுகளைப் பிரதிபலிக்கும் கீர்த்தனையாகும் ”வைகறையில் எழுந்து குளிரில் குளித்துவிட்டு மதம்,மாச்சர்யம்,கோபம் ஆகியவைகளோடு வாழ்தல்,ஒருபுறம் மந்திரம் சொல்லிக்கொண்டு மறுபுறம் மனதைஅலையவிடுதல்,மேடை வேடம் போட்டு வாழும் சோற்றுஞானம் “என்று சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார்..’மடி மடி என்று’ என்ற பாடலில் ஈரஆடைகளை அணிந்து உலகத்தவருக்குத் தன்னைக் காட்டிக் கொள்வது மடியாகாது.. மனதிலிருக்கும் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவைகளைஒழிப்பதுதான் உண்மையான மடிஎன்கிறார். வெளிப்புறச் செயல்களுக்கு அதிக மதிப்புத் தந்து மற்றவர்கள் முன்பு தன்னைக்காட்டிக் கொள்ளும் தன்மைமனிதர்களிடம் அதி கமாகவுள்ளதுள்ளது என்கிறார்.

அநீதியையும்,ஆடம்பரத்தையும் பழிப்பதான பார்வையிலும் சில கீர்த்தனைகள் உண்டு.” எனக்கு சிரிப்புத்தான் வருகிறது உடல் தண்ணீருக்குள் இருந்து பயன் என்ன?வேம்பினை வெல்லத்தில் இணைப்பதால் என்ன பயன்?புலையன் நம்மிடையிலன்றி வெளியிலா இருக்கிறான் உடல்அழுக்கை கழுவ முடியும்போது மன அழுக்கைக் கழுவமுடியாதா?”என்பன போன்ற கருத்துக்கள் குறிப்பிடத் தக்கவை.சமூக போதனைக்குச் சான்றாக “தருமமே ஜயம்” என்ற கீர்த்தனை அமைகிறது .”நஞ்சுகொடுத்தவனுக்கு நல்ல உணவு தரவேண்டும்:பழித்தவனைப் பாராட்ட வேண்டும்”என்ற கருத்து இன்னாசெய்தவனுக்கும் நன்னயம் செய்யத் தூண்டும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகிறது’ இது பாக்கியம்என்ற கீர்த்த னையில் “கல்லாயிருக்க வேண்டும் கடின சம்சாரத்தில்,வில்லாக வளைய வேண்டும் பெரியோரிடம்”என்ற வரி பழமொழி போல இன்றும் எல்லோராலும் பயன்படுத்தப்படும் எளியதொடராகிறது.

எதையும் எதிர்த்து நிற்கும் ஆன்மபலம் மனிதனுக்கு வேண்டும் என்ற வற்புறுத்தல் அவர் பாடல்களில் தொடர்ந்து இடம் பெறுகிறது பக்தி என்பது பல கோயில் களுக்குச் செல்வதல்ல.சரியான வாழ்க்கைமுறைதான் பக்திஎன்கி றார்.மண்,பொன்,பெண் மீது இருக்கும் ஆசை நீக்கப்படவேண்டும் என்ற செய்தி சொல்லப்படும் விதம் புதுமையானதாக உள்ளது.”ஆசைகளை நீக்கும்படி நேரில் உபதேசம் செய்வது இயல்பு. ஆனால் திருமால் தன் கையால் கடிதமெழுதி இவைகளை நீக்கும்படி வேண்டுகிறான்”என்ற தொனியிலான கீர்த்தனை புதுமையாக மட்டுமின்றி வியப்பையும் ,கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு நாளும் நல்லநாளே. திதி, வாரம், நட்சத் திரம்,யோகம் ஆகியவை பற்றியெல்லாம் மனிதர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.கடவுளை வழிபட்டால் எல்லா நாளும் நல்லநாளாகும் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையான முறையில் “இந்த தினம் சுபதினம்இந்த நட்சத்திரம் சுபநட்சத்திரம் “என்ற பாடல் காட்டுகிறது .“மனிதர்களுக்கு வாழ்க்கைஎன்பது வானவில்லைப் போல பல்நிறம் கொண் டதாக,கவர்ச்சியானதாகத் தெரிகிறது.ஆனால் அவையெல்லாம் மாயையே என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் .”யாருக்குக் கவலை” என்ற பாடலில் எந்த நேரமும் உடையும் நீர்க்குமிழியைப் போல உள்ள வாழ்க்கையில் யாரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். யானை கள்,குதிரைகள், கஜானா, நாடு,கௌரவம், புனிதமான உறவுகள்,நட்பு எல்லாம் மாயையும்,குறைவான ஆயுளும் உடையவை என்று .நிரந்தமற்ற தன்மையை உணர வைப்பது அவர் கருத்தாகிறது.

என்ன சாதியாக இருந்தாலும் மனித நேயத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால் என்ன பயன்?ஒருவனுடைய பிறப்பு மட்டும் அவன் உயர்வுக்கோ ,தாழ்வுக்கோ காரணமாக முடியாது.வெவ்வேறு நிறமுடைய பசுக்கள் தரும் பாலும் வெவ்வேறு வடிவம் கொண்ட கரும்புகள் தரும் சுவையும் வித்தியாசப்பட முடியுமா? தோற்றத்தில் இருக்கும் வேறுபாடு யாருடைய இயல்புத் தன்மையையும்,பக்குவத்தையும் மாற்ற முடியாது என்பது அவர் கொள்கை.

தீண்டாமை அவரால் பொறுக்க முடியாததாகிறது.பிறந்த சாதியை வைத்து மனிதன் தீண்டத்தகாதவன் என்று முத்திரை குத்துவது சரியல்ல.அவன் செயல்பாடுகள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.தீண்டாமை என்பது தொடுவுணர்ச்சியை முன் வைத்து அமையும் பொருளல்ல என்றொரு பாடல் சொல்கிறது. சுயஒழுக்கமில்லாதிருப்பது ,செல்வனாக இருந்து கொண்டு பொருள்தர மறுப்பது,மென்மையான பேச்சை பயன்படுத்தத் தெரியாம லிருப்பது இறுதியில் புரந்தரவிட்டலனை வணங்காமலிருப்பது ஆகியவைகள் தான் அவர் பார்வையில் தீண்டாமை யாகும்.புரந்தரதாசரின் கருத்து நம் சமூகத்தின் தீண்டாமைக்குத் தரும் அடியா கும்.புரந்தர விட்டல என்பது எந்தக் கடவுளுக்கும் பயன்படுத்தப்படும் பெயராகும் என்ற கருத்தையும் அறிஞர்கள் முன்வைக்கின்றனர். பல கடவுளரின் பெயர்களை அவர் பயன் படுத்தியிருப்பது இதற்குச் சான்றாகும். ஒவ்வொரு ஹரிபக்தனின் விருப்பமும் நல்ல எஜமானனுக்கு பொருத்தமான வனாக இருக்கிற தாச பாவம்தான்.

புரந்த ரதாசரின் பெரும் பாலான பாடல்கள் அவ்வுணர்வு சார்ந்தவையாகவே வெளிப் படுகின்றன.கடவுளுக்கும் அவன் பக்தனுக்குமிடையே நெருக்கம் அதிகமாகும் போது பரஸ்பர மதிப்பும், அன்புமான ஓருணர்வு வளர்கிறது.இந்த உணர்வுக்கு அடையாளம் கொடுப்பது போல மிக அதிகமான பரிச்சயப்பட்ட தொனியில் பாடல்களை வெளிப்படுத் துகிறார்.”எனக்கு நீயோ ,உன் உதவியோ தேவை யில்லை.உன் நாமத்தை உச்சரிக்கும் பலம் என்னிடம் இருப்பதே போதும்” என்கிறார் .இன்னொரு இடத்தில் நட்புணர்வோடு “ நான் சத்தியம் செய்கிறேன். நீயும் செய்ய வேண்டும்.நாமிருவரும் பக்தர்கள் மீது சத்தியம்செய்வோம் “ என்கிறார்.

புரந்தரதாசர் சிறந்த கணக்குப்பிள்ளையும் கூட.நல்ல செயல்களைச் செய்யும் போதும்,கெட்ட செயல்களைச் செய்யும் போதும் ஒருவன் தன் மனதையே தணிக்கை செய்து கொள்ளவேண்டும் மனம்தான் தணிக்கைக் கருவி என்கிறார்.”மனதைச் சோதித்துக் கொள்” [”மனவ சோதிசபேக்கு” ]என்ற பாடல் இதைக் காட்டுகிறது பாடல் இப்படித் தொடங்குகிறது.”எல்லா ஹரிதா சர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை அழைப்பு. நேரம் குறைந்துவிட்டது. நூறுஆண்டுகள் ஆயுளாக இருந்தால் ஐம்பதாண்டுகள் தூக்கத்தில் போய்விடுகிறது.

மீதமுள்ள ஐம்பதாண்டுகளில் முதல் பதினைந்து ஆண்டுகள் அறிவுக் குறைவான இளமையிலும்,கடைசி இருபத்தைந்தாண்டுகள் முதுமையிலும் கழிகின்றன.இடையிலுள்ள இளமையான நிலையிலுள்ள இருபதாண்டுகள் இளரத்தம் என்பதால் மனம் அரேபியக் குதிரை போல உலகத்து ஆசைகளை நோக்கி ஓடுகிறது.இப்படி இருந்தால் எந்த நேரத்தில் கடவுளை நினைத்து வாழமுடியும்’.என்று பாடல் அமைகிறது.

மனிதாபிமானத்தைப் புறம் தள்ளி விட்டு சாதி,பெண்,பணம்,ஆகியவைகளில் ஆழ்ந்து மயங்கிக் கிடந்த தன் காலச் சமூகம் அவரைப் பெரிதும் பாதித் தது.இவற்றைத் தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து தன் கருத்துக்களை வெளிப்படுத் தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில கருத்துக்கள் பழமொழி போல சமுதாயநலம் சார்ந்து அமைகின்றன.”வயது முதிர்ந்தவனோடு திருமண உறவுக்கு எதிர்ப்பு, இரு மனைவியர் வாழ்க்கைக்கு எதிர்ப்பு, கீழ்ச்சாதி வந்தான் என்ற பேச்சுக்கு எதிர்ப்பு ” எனச் சமூக அவலங்களை அகற்ற முயல்கிறார்.

ஏழைகளின் உணவான ராகியைப் பாடலாக்கி ’ராகி என்ற சொல் ’பல்வேறு பாவனைகளில் வெளிப்படுத்தியிருக்கும் தன்மை அற்புதமானது

“ராகி தந்தீரோ பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரோ

அன்னதான மாடுவராகி அன்னசத்ராவணிதவாராகி

குருகள் சேவைய மாடுவராகி

புரந்தரவிட்டலன சேவிப்பவராகி

போக்யராகி யோக்யராகி பாக்யவந்தராகி

ராகி தந்தீரா பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரா”

ஒரு வயதான மூதாட்டியிடம் தனக்கு உணவு தரும்படி பக்தன் வேண்டு கிறான்.தன்னிடம்ஒரு ராகிரொட்டி மட்டுமே இருப்பதாக அவள் சொல் கிறாள்.அது தனது தேவைக்கு மேலானது என்கிறான். அதுமுதல் தினமும் பிச்சைக்கு வந்து ராகியையே வேண்டுகிறான்.இந்தப் பாடலின் மிகச் சிறந்த அமசம்’ராகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் விதம்தான். ”யோக்யராகி”,”போக்யராகி”, ”பாக்யவந்தராகி” என்று எல்லாம் இரட்டைப் பொருளில் அமைகிறது.சான்றாக “யோக்ய +ராகி—சாப்பிடுவதற்கு ஏற்ற ராகி ,”யோகயர்+ஆகி—கொடை கொடுப்பதற்கு தகுதியானவர், போக்யர்+ ஆகி கொடுப்பதில் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி “என இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர்.இது அவருடைய மிகச் சிறந்த பாடலெனவும் கூறப்படுகிறது.

’லம்போதர லகுமிரா’, ’கஜவதனா பேடுவே’, ’பாக்யதலட்சுமி பாரம்மா ”,என்று எல்லோரும் அறிந்த சில பாடல்கள் அவருடைய எளிமை நடைக்கும், எவரும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் சான்றுகளாகும் புரந்தரதாசருக்குப் பின்வந்தவர்கள் அவர் மரபையே பின்பற்றினர்.இன்றும் அது தொடரப் படுகிறது..தியாகராஜரும் ராகம்,பாவம், தாளம்.என்று புரந்தரதாசர் வழியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னட மொழியில் அவரால் படைக்கப்பட்டவைகளை ’புரந்தரோபநிஷத்” என்று அவரது குருவே போற்றியுள்ளார்.நான்கு லடசத்திற்கும் மேலான பாடல்களை அவர் பாடியிருந்தாலும் எழுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களே இன்று பயன்பாட்டிலுள்ளன.

ஹிந்துஸ்தானி இசையில் புரந்தரதாசரின் தாக்கம் அதிகமுண்டு. ஹிந்துஸ்தா னிய பாடகரான தான்சேனின் குருவான சுவாமி ஹரிதாஸ் புரந்தரதாசரின் சீடராவார்.அவருடைய பாடல்கள் ஹிந்துஸ்தானி இசையிலும் மிகப் பிரபல மாக இருக்கின்றன.அவற்றை அண்மைக் காலங்களில் பீம்சிங்தோஷி மாதவ் குடி, பசவராஜ் ராஜ்குரு ஆகியோர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக்கி யுள்ளனர். ’ தாசசாகித்ய திட்டத்தின்’ அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் புரந்த்தாசரின் பாடல்களை மக்கள் மத்தியில் பரவலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

’தாசர் என்றால் புரந்தரதாசர்தான்”என்ற அடைமொழியோடு கன்னட மண்ணில் இன்றும் போற்றப்படுபவராக உள்ள அவரையும் ,கனகதாசரையும் இணைத்து ’கனக புரந்தரா’ என்ற செய்திப்படம் ஒன்று கிரீஷ்கர்னாடால் இயக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணனின் இளம்பிராயத்தை வர்ணிக்கும் புரந்தரதாசரின் சிறிய அளவிலான கீதங்கள் இன்றும் தென்னகத்து தாய்களால் பாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

———————

நீங்கள் இளையராஜாவின் ரசிகரா… இசையின் ரசிகரா..? B.R. மகாதேவன்

images

தமிழர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி யாரேனும் ஏதேனும் நியாயமான சிறு விமர்சனத்தை முன் வைத்தால்கூட, பொம்மையைப் பறித்தால் அழும் குழந்தைகள்போல் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு அழுவார்கள். பிஞ்சுக் கைகளால் சட் சட்டென்று நம்மை அடிப்பார்கள். குழந்தைகளைப் போலவே தமிழர்களின் உலக அனுபவமும் வெகு குறைவு என்பதால் எதையும் சொல்லிப் புரியவைக்கவும் முடியாது. தமிழர்களின் இத்தகைய மனநிலை தெரிந்த பிறகும் சில உண்மைகள், சிலரால், சில நேரங்களில் சொல்லப்படுவதுண்டு. அப்படி ஓர் உண்மையைச் சொல்லும் முயற்சியே இது.

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுக்கும் லைஃப் ஆஃப் பை படத்தில் வரும் தாலாட்டுக்கோ பாம்பே ஜெயஸ்ரீயின் பிற தாலாட்டுகளுக்கோ இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடிந்தவர்கள் மட்டுமே படிக்கவும். மற்றபடி, மூன்றாவது நிமிடத்தில் 17வது நொடியில் நான்காவது வரிசையில் இருக்கும் வயலின்காரர் இழுத்த இழுப்பு இருக்கிறதே… அங்கே நிற்கிறார் நம் ராஜா என்பதுபோன்ற பண்டித மிரட்டல்கள், உருட்டல்கள் என்னிடம் வேண்டாம். நான் இசையின் பெரும் ரசிகன்.

ராஜாவின் பாடல்கள் 80களில் ஆரம்பித்து தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அந்தக் காலகட்டத்துத் தமிழர்களுடைய வாழ்க்கையின் பிரதான அம்சமாகவே கலந்துவிட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நட்பு, பிரிவு, பிறப்பு, இறப்பு, அன்பு, துரோகம், உற்சாகம், உரிமைக்குரல், ஆன்மிகம் என எதை எடுத்துக்கொண்டாலும் ராஜாவின் பாடல்களே பெரும்பாலான தமிழர்களுக்கு எல்லாமுமாக இருந்துவருகிறது. வெளிநாடுகளில் இந்தியாவை காந்தியின் தேசம் என்று அடையாளப்படுத்துவதுபோல் தமிழகத்தை இளையராஜாவின் தேசம் என்று சொல்லவேண்டும் என்று சொல்ல்லக்கூடிய அளவுக்கு ஆராதகர்களைப் பெற்றவர் இளையராஜா. சமீபகாலமாக அவருடைய இசையைப் பாராட்டி அதி பண்டிதத்தனத்துடன் தற்கொலைப்படை மனோபாவத்துடன் ஒரு ரசிகர் குழுமம் உருவாகி நிலைபெறத் தொடங்கியிருக்கிறது. அதற்குப் பின்னால் ஒருவித இனம் புரியாத பதற்றம் மிகுந்திருப்பதுபோலவே தோன்றுகிறது. நுட்பமான ரசனை உணர்வு கொண்ட ஒருவருடைய மனதில் இளையராஜாவின் பாடல்களுக்கு என்ன இடம் இருக்கக்கூடும் என்பதே இந்தக் கட்டுரையின் மையம்.

ராஜா மூன்றுவிதமான இசை மரபுகளோடு பரிச்சயம் கொண்டவர். முதலாவதாக அவர் பிறப்பால் பறையர் சாதியைச் சேர்ந்தவர். எனவே, நாட்டுப்புற/நாட்டார் இசை மரபு அவர் ரத்தத்தில் ஓடுகிறது. இரண்டாவதாக கர்நாடக செவ்வியல் மரபால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர். அவருடைய பாடல்கள் பெரும்பாலும் அந்த செவ்வியல் ராகங்களை அடியொற்றி அமைந்தவையே. மூன்றாவதாக அவருக்கு மேற்கத்திய இசையுடனான பரிச்சயமும் உண்டு. இந்த மூன்று மரபின் அதி உயர்ந்த பாடல்களோடு ஒப்பிடுகையில் ராஜாவின் பாடல்கள் என்ன இடத்தைப் பிடித்திருக்கின்றன… அந்த மரபுகளின் நவீன வடிவமாகப் பரிணமித்திருக்கின்றனவா… பலவீனமான பிரதிபலிப்பாக இருக்கின்றனவா என்ற எளிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலே போதும். பல மயக்கங்கள் எளிதில் தெளிந்துவிடும்.

ராஜாவின் பாடல்களில் நாட்டுப்புற அம்சம் படு மோசமான முறையில் எடுத்தாளப்பட்டிருக்கும். அவருடைய முதல் பாடலான ’அன்னக்கிளியே உன்னைத் தேடுறேன்…’ என்பதில் ஆரம்பித்து ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்றே என்ற நாட்டுப்புறப் பாடலின் சாயலில் அமைந்த ’மாங்குயிலே பூங்குயிலே…’ என்ற ராஜாவின் அதி பாப்புலர் பாடல்வரை பல பாடல்களை எந்தவித நேர்மையும் இன்றித் தனது பாடலாகவே முன்வைத்திருப்பார். உண்மையில் அந்தப் பாடல்களின் நாட்டுப்புற வேர்கள் பற்றி பின்னாளில் அவர் ஒப்புக்கொண்டதைப் பெரிய விஷயமாகச் சொல்லவே முடியாது. அந்தப் படத்திலேயே அவை நாட்டுப்புறப்பாடல்கள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு அவர் எடுத்தாண்டிருக்க வேண்டும். இது நிச்சயம் பெரிய தவறுதான். இன்னொருவருடைய கதையைத் தன்னுடைய கதையாக வெளியிடுவது போன்ற நேர்மையற்ற செயலே இது.

அடுத்ததாக, அந்தப் பாடல்களின் நாட்டுப்புற அம்சங்களை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்துப் பாடலாக்கியிருப்பார். பின்னணிக்குப் பயன்படுத்தியிருக்கும் இசைக்கருவிகள் நாட்டுப்புறப்பாடலின் கலை அழகைக் கெடுக்கும்படியாகவே இருக்கும். அதைவிடப் பெரிய தவறு அந்தப் பாடல்களுக்கு ரா-வான நாட்டுப்புறக் குரலைப் பயன்படுத்தாமல் திரைப்பட மெல்லிசைக் குரல்களைப் பயன்படுத்தியிருப்பார். இந்த மூன்றாவது தவறு எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. ராஜாவின் ஒட்டுமொத்த இசை வாழ்க்கையிலுமே நாட்டார் குரல்களை ஐந்து சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தவில்லை.

எஸ்.பி.பி., ஜானகி, சித்ரா, மலேசியா வாசுதேவன், மனோ வகையறாக்களுடைய குரல்கள் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றில் நாட்டுப்புறப் பாடகர்களின் எளிமையும் வசீகரமும் துளியும் கிடையாது. கிராமத்தானுடைய அழகு என்பது அவருடைய மேலாடை அணியாத திறந்த உடல், தலைப்பாக்கட்டு அல்லது தோளில் துண்டு, தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டி, புழுதி படிந்த பாதம் இந்தத் தோற்றத்தில் மாடு மேய்த்தபடியோ, களை பறித்தபடியோ துணி துவைத்தபடியோ குல தெய்வக் கோவிலில் கும்பிட்டபடியோ இருப்பதுதான். கோட் சூட், டை ஷூ, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு முகத்துக்கு பவுடரும் லிப்ஸ்டிக்கும் பூசிக்கொண்டு எடுக்கப்படும் புகைப்படம் கிராமத்தானின் புகைப்படமாக இருக்காது. ராஜா தன்னுடைய நாட்டுப்புறப் பாடல்களுக்கு திரைப்பட மெல்லிசைக் குரல்களைப் பயன்படுத்தியதென்பது அப்படியான ஒரு ”அழகிய’ புகைப்படத்தைப் போன்றதுதான்.

அடுத்ததாக, நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய வடிவம் என்பது கானா பாடல்கள்தான். இளையராஜா முழுக்க முழுக்க கானா பாடல்களை ஒதுக்கிவிட்டிருக்கிறார். அந்தவகையில் தேவாவில் ஆரம்பித்து ஆலுமா டோலுமா அனிருத் வரை துள்ளல் இசையுடன் போட்டிருக்கும் பாடல்களே ராஜாவை எளிதில் புறமொதுக்கிவிடுகின்றன. பண்டித எதுகை மோனைகளைப் பகடி செய்வதில் ஆரம்பித்து, உயரிய தத்துவங்களை எளிய வார்த்தைகளில் சொல்வதில் ஆரம்பித்து, பாலியல் சார்ந்த அத்துமீறல்களை வார்த்தைகளிலும் தாளகதியிலும் கொண்டுவந்திருக்கும் கானா பாடல்களை நாட்டார்-செவ்வியல் தன்மையை எட்டிய பாடல்களாகவே சொல்லலாம். ராஜாவின் பாடல்களில் காதை எத்தனை கூர் தீட்டிக்கொண்டு கேட்டாலும் அந்தத் தடயங்களைக் காணவே முடிவதில்லை. அவர் பழங்கால நாட்டார் மரபில் வேர் ஊன்றியவராகவும் இல்லை. நவீன நாட்டார் மரபை முன்னெடுத்தவராகவும் இல்லை.

கர்நாடக செவ்வியல் இசை மரபைப் பொறுத்தவரை ராஜா அந்தக் கடலின் கரையோரமாக நின்று கால் நனைக்கும் சிறுவன் மட்டுமே. இதை அவர் தன்னடக்கத்துடன் சொல்வதுண்டு. ஆனால், உண்மையும் அதுதான். ராஜாவின் மிகப் பெரிய பலவீனங்களில் ஒன்று அவர் அந்த செவ்வியல் இசையை நோக்கியே தன் அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார். அதில் பரிதாபகரமாகத் தோற்றும்விட்டிருக்கிறார். வேர்ப்பிடிப்பும் அற்று, சிறகு முளைத்து நவீன வானில் பறக்கவும் முடியாமல் அந்தரத்தில் அலையும் இரண்டுங்கெட்டானாகவே அவருடைய இசை இருக்கிறது. சில ராகங்களில் சில பரிசோதனை முயற்சிகள் செய்ததைவைத்து மதிப்பிடும் கிம்மிக்குகளின் அடிப்படையில் பார்க்காமல் கர்நாடக செவ்வியல் மரபில் இடம்பெற்ற பாடல்களில் சிலவற்றை ஒரு தடவையாவது கேட்ட ஒருவருக்கு ராஜாவின் பாடல்களின் இடத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

செவ்வியல் இசையைப் பொறுத்தவரையில் அப்படியெல்லாம் புதிதாகவோ அடிக்கடியோ சாதனைகளை யாராலும் செய்துவிடமுடியாதுதான் (தியாகராஜர் போல் இசைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தாலொழிய). இளையராஜாவுக்கும் இசைதான் தொழில் என்றாலும் செவ்வியல் நிலைக்கு உயரவேண்டுமென்றால் வேறுவிதமான மனோபாவத்துடன் இயங்கியிருக்கவேண்டும். திரைப்படத் தொழில் அதற்கு ஏற்றதல்ல. தெருவோரங்களில், ரயில் வண்டிகளில் பாடும் புறக் கண் தெரியாத கலைஞர்களின் குரலுக்கும் பாவத்துக்கும் கால் தூசி பெறாத மெல்லிசைக் குரல்களை வைத்துக் காலமெல்லாம் இயங்கிய ஒருவருக்கு செவ்வியல் என்பது கண்ணுக்கெட்டாத தொடுவானத்தைத் தாண்டிய ஒளிப்புள்ளியே.

ஜனனி ஜனனி… பாடலுக்கும் எந்தரோ மஹானுபாவுலு (டி.எம்.கிருஷ்ணா) பாடலுக்கும் நகுமோ ஓமோகனலே (மஹாராஜபுரம் சந்தானம்) பாடலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடிந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். கர்நாடக இசைப் பின்புலம் கொண்ட மோக முள் படத்தில் ராஜாவின் இசையைக் கேட்டவர்களுக்கு ஏக தந்தம் என்ற அவருடைய கர்நாடக இசைக்கோவையைக் கேட்டவர்களுக்கு அவர் எந்த அளவுக்கு பலவீனமான செவ்வியல் பாடல்களையே உருவாக்கியிருக்கிறார் என்பது புரியும்.

இளைய ராஜாவின் மேற்கத்திய இசைப்புலமையைப் பொறுத்தவரையில் அவருடைய சிம்ஃபொனி வெளியாகாமல் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டாலே போதும். கலைஞானி கமல்ஹாசன் சர்வதேச ஒப்பனைக் கலைஞர்களைத் தனது படத்தில் பயன்படுத்தினால் சர்வதேசத் தரத்தை எட்டிவிடமுடியும் என்று அபாரமாக யோசித்தது போலவே ராஜாவும் சர்வதேச ஸ்டூடியோக்களில், சர்வ தேசக் கலைஞர்களை வைத்து தனது நோட்ஸ்களை வாசிக்கச் செய்தால் போதும் என்று நினைத்துவிட்டார் போலும். அவருடைய மேற்கத்திய இசை முயற்சிகள் எல்லாமே அந்த உலகில் புன்முறுவலுடன் ஓரங்கட்டவேபட்டிருக்கின்றன. தமிழ்கூரும் நல்லுலகுக்கு ராஜா இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்கள் அனைத்துமே சிம்பொனிக்கள்தான் என்பது வேறு விஷயம். திருவாசகத்துக்கு அவர் உருவாக்கியிருக்கும் ஃப்யூஷன் அவருடைய கலை உயரத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிடுகிறது. இருளும் ஒளியும் நர்த்தனமாடும் அதிகாலையில் யாருமற்ற பிரமாண்ட பிரகாரத்தில் பறவைகளின் ஒலி மட்டுமே பின்னணி இசையாக ஒலிக்க ஓதுவார்கள் காலத்தால் கைமாற்றித் தரப்பட்ட கணீர் குரலில் பாடும் தேவாரத்தின் நவீன வடிவம் என்பது எந்தவகையிலும் மூலம் தரும் உணர்வுக்கு அருகில் வரவே முடியாது என்றாலும் ஃப்யூஷன்கள் தரும் மகிழ்ச்சிகூட அதில் இல்லை. இரைச்சல் இசை ஆகாது.

மேலும் ராஜாவின் இன்னொரு முக்கிய குறை என்னவென்றால், அவர் தனது பாடல்களை திரைப்படங்களில் எப்படிக் கந்தரகோலமாக்கினாலும் எதுவும் சொல்லமாட்டார். இது ஒரு கலைஞனுடைய மனநிலைக்கு முற்றிலும் எதிரானது. ”சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற இதமான பாடலுக்கு சாமுராய் பாணியில் காட்சி அமைத்திருப்பார் மணிரத்னம். முந்தைய இயக்குநர்கள் எல்லாம் ராஜா ராணி வேடத்தில் பாடல்கள் அமைத்திருந்ததால் மணிரத்னம் வித்தியாசமாக (?) யோசித்து ஜப்பானிய உடை அலங்காரத்துடன் காட்சிப்படுத்தியிருப்பார். அதை குரோசோவாவுக்குச் செய்த மரியாதை என்று கூச்சமில்லாமல் சொல்லவும் செய்தார். இத்தனைக்கும் அந்தப் படம் மகாபாரதத்தை நவீன மொழியில் சொன்ன படம். வைர கிரீடம், தங்கக் கவசம், பட்டுப் பீதாம்பரம் என்று காட்டியிருக்காமல் எளிய பாண்டவர் கால உடையுடன்தான் பாடலைப் படமாக்கியிருக்கவேண்டும். ராஜாவோ, காசு கொடுத்திட்டியா… கன்னுக்குட்டியை ஏர்கால்ல பூட்டினாலும் சரி… கசாப்புக் கடைக்கு ஓட்டிட்டுப் போனாலும் சரி.. எனக்கு ஒரு கவலையில்லை என்ற மனநிலையிலேயே இருந்திருக்கிறார்.

ராஜாவுமேகூட இசைத் துணுக்குகளில் நாரசமாக ஒலிக்கும் பல கிம்மிக்குகளைச் செய்திருப்பார். ”பூவே செம்பூவே’ என்ற இனிமையான பாடலுக்கு இடையில் ஒலிக்கும் வயலின் கூச்சல்கள் இதமான முரணாக இருக்காமல் எரிச்சலூட்டும் முரணாகவே இருக்கும்.

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே.

இந்தப் பாடலை எழுதிப் பாடியது இளையராஜாவே. இந்தப் பாடலை அவர் ஒரு தனி ஆல்பமாகப் பாடியிருந்தால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், அசட்டு தமிழ் சினிமா நாயகனுடைய காதலை தியாகராஜரின் பக்தியுடன் ஒப்பிட்டது மகா கேவலம். கம்பனை மிஞ்சிய கற்பனையை எழுதியதாக வைரமுத்து தனக்குத்தானே சூட்டிக்கொண்ட மகுடத்தைவிட இது கேவலமானது. இதுபோல் அவர் தனது பல பாடல்களைப் பல வகைகளில் வீணடித்திருப்பார்.
மேலும் ராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களில் மிகப் பெரிய ரசிகர்கூட பத்து அல்லது இருபது சதவிகிதப் பாடல்களை மட்டுமே உயர்வாகச் சொல்வார். எஞ்சிய பெரும்பாலான பாடல்களை அவரே இரண்டாம் தடவை கூடக் கேட்கமாட்டார்.. அப்படி ஒருவருடைய இசை வாழ்க்கையில் பெரும்பாலான பாடல்கள் ஒப்பேற்றியவையாக இருந்தால் அதையும் சேர்த்தேதான் மதிப்பிடவேண்டும். அந்தவகையில் இளையராஜா ஒரு கலைஞனாகச் செயல்பட்ட நேரங்கள் வெகு குறைவு. பத்து சிலைகள் செதுக்கிவிட்டு 100 அம்மிகளைக் கொத்திய ஒருவரை சிற்பி என்று அதுவும் தலை சிறந்த சிற்பி என்று சொல்ல முடியுமா என்ன? இத்தனைக்கும் அம்மி கொத்தியாக வேண்டிய எந்த நிர்பந்தமும் நெருக்கடியும் அவருக்கு இருந்திருக்கவே இல்லை.

தமிழ் சமூகத்துக்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும்தான் மாபெரும் அரசியல் தலைவர்கள். வைரமுத்துதான் கவிப்பேரரசு. சுஜாதாதான் இலக்கியவாதி.. குமுதம் விகடன்தான் உயர்ந்த பத்திரிகைகள். அவர்களுடைய பக்தி எனது லெளகீக, சுயநல பிரார்த்தனைகளால் நிறைந்து கிடக்கிறது. அவர்களுடைய பணித்திறமை என்பது ஊழலாலும் செய் நேர்த்தியின்மையாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் டி.வி. சீரியல்களுக்கும் அதையொத்த பிற கலை வெளிப்பாடுகளுக்கும் கண்ணீர் மல்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாகவே ராஜாவின் இசையையும் அவர்கள் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

அதேநேரம் இப்படியான மலினங்களில் சிக்காத இசை மேதைகளும் ராஜாவின் பாடல்களைச் சிலாகிக்கவே செய்கிறார்கள். அதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.

1. ராஜா பிறப்பால் தலித் என்பதால் சிலரும் பிறப்பால் மட்டும் தலித் என்பதால் வேறு சிலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.

2. தமிழ் லாபியைப் பகைத்துக்கொள்ள யாருக்கும் துணிச்சல் கிடையாது.

3. அவர்களுக்கு ராஜா பாணி இசையும் பிடித்திருக்கிறது. ஆனால், அவர்களுடைய ஆன்மாவுக்கு நெருக்கமான பாடலாக அது நிச்சயம் இருக்காது. இன்று சூரியன் மறைவதற்குள் நீ இறந்துவிடுவாய் என்று கடவுள் வந்து சொன்னால், உயிர் போகும் முன் கேட்டுவிடவேண்டும் என்று அவர்கள் அவசர அவசரமாக எடுத்துவைக்கும் இசைத்தட்டுகளில் ராஜாவின் பாடல் கடைசியாகவே இருக்கும்.

அடிப்படையில் திரை இசை என்பது மாற்றுக்குறைவான கலை வடிவமே. திரைப்படம் என்பது பல கலைகள் கூடி இணைந்து உருவாக்கப்படும் கலைவடிவம். அதில் ஒவ்வொரு கலையும் பல சமரசங்கள் செய்துகொண்டே செயல்பட முடியும். அதிலும் வணிக நோக்கு பிரதானமாக இருக்கும் தமிழ் திரையுலகம் போன்றவற்றில் எந்தக் கலைஞரும் தனது ஆன்மாவை அடகு வைக்காமல் செயல்படமுடியாது. அப்படிக் குறுக்கிக் கொண்டு செயல்படுவதில் சுகம் கண்ட ஒருவருடைய படைப்புகள் அந்தக் காரணத்தினாலேயே பல அழகுகளையும் மதிப்புகளையும் கலை நுணுக்கங்களையும் இழந்துவிடும். குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைத்து கூவச் சொல்லும் உலகம் அல்லவா இது. அதிலும் பின்னணி இசை என்பது முழுக்க முழுக்க காட்சிகளுக்கு ஏற்ப இசையமைக்கும் பக்கவாத்தியச் செயல்பாடு மட்டுமே. இந்தத் திரைப்படங்களைப் பார்த்து அவர் இசையமைக்கவில்லை. மனதுக்குள் இயல்பாக தானாக உருவாக்கியவற்றை இந்த இடங்களில் நிரப்பி இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான பாடல்களும் பின்னணி இசைக்கோவைகளும் அந்தக் கூற்றை நியாயப்படுத்துபவையாக இல்லை.

தூய நாட்டார், செவ்வியல், மேற்கத்திய இசையாக அல்லாமல் அவற்றின் பல்வேறு அம்சங்கள் கலந்த ஒரு புதிய நவீன காலகட்ட இசை வகைமையை ராஜா உருவாக்கியிருக்கிறார். அதை அதற்கான அளவுகோலுடன் மதிப்பிடவேண்டும் என்ற கூற்றில் நியாயம் இல்லை. அவருடைய பாடல்கள் அப்படியொன்றும் அந்த மரபுகளின் நவீன வடிவமாக வெளிப்பட்டிருக்கவில்லை. நாட்டுப்புற மண் வாசனையோடு, நாட்டுப்புற குரல்களோடு அவருடைய பாடல்கள் இல்லை. குத்தாட்டப் பாடல்களில் கானா பாடல்கள் தரும் உற்சாகத்தை ராஜாவின் பாடல்கள் தருவதில்லை.

மென்மையான பாடல்களை எடுத்துக்கொண்டால் அவை கர்நாடக செவ்வியல் இசையின் பலவீனமான பிரதிநிதிகளாகவே இருக்கின்றன. மேற்கத்திய இசையை எடுத்துக்கொண்டால் டைட்டானிக் போல் உயிரை உருக்கும் இசை ராஜாவிடம் கிடையாது. வேண்டுமானால் இந்த மூன்று மரபுகளின் நீர்த்துப்போன வகைமை என்றே ராஜாவின் இசையைச் சொல்ல முடியும். ஒரு இளையராஜா ரசிகர் இசையின் ரசிகராகப் பரிணாமம் பெறப் பெற ராஜாவிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார் என்பதே உண்மை. தேனைச் சுவைத்துவிட்டால் சர்க்கரைக் கரைசலை ஒதுக்கித்தானேயாகவேண்டும்!

•••••••••

ராஜாவின் பாடல்களில் எனக்குப் பிடித்தவை:

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…

என் இனிய பொன் நிலாவே…

என் வானிலே…

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ…

என்னுள்ளே என்னுள்ளே… பல மின்னல் வந்து தீண்டும்…

மன்றம் வந்த தென்றலுக்கு…

ஆட்டமா தேரோட்டமா…

காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லை…

சின்னத் தாயவள் பெற்ற ராசாவே…

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…

•••••••••

எம்.எஸ்.விஸ்வநாதன்- என்றும் ஒலிக்கும் ஓர் இனிய ஹார்மோனியம்- சத்தியப்பிரியன்.

download (2)

 

 

அது என்னுடைய பதின் பருவம். இசைக்கு மடங்கிய செவிகள் எனது. அப்பாவின் இசை ஞானம் காரணம். என் அருகில் எப்போதும் ஒரு கையடக்க ட்ரான்சிஸ்டர் இருக்கும். அதிகாலை ஆறுமணியிலிருந்து மாலை ஆறு மணிவரை பொழுதுக்கும் சிலான் ரேடியோதான். படிக்கும்போதும் சாப்பிடும்போதும் எப்போதும் என்னருகில் இசை இருந்து கொண்டே இருக்கும். தலையை ரேடியோக்குள்ள விட்டுக்கோ என்று என் அம்மா கடிந்து கொள்ளும் அளவிற்கு இருக்கும். என்னை வளர்த்தது கண்ணதாசனும் எம் எஸ் வியும் என்றால் மிகையில்லை.

சில பாடல்கள் உள்ளன. அது எதனால் என்றே தெரியாது இன்றளவும் அந்தப்பாடல்களைக் கேட்கும் தோறும் மனம் முதல் முறை கேட்டது போலவே இருக்கிறது. பாலும் பழமும் படம் வெளிவந்தது என் பதின் பருவம் எழுபத்தியாறில் தொடங்குகிறது. 16 வருடங்கள் கழித்து நான் பேச நினைப்பதெல்லாம் பாடலை கேட்கிறேன். சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை என்று ஒரு கவிஞனால் எழுத முடியும் அதற்கு அற்புதமாக ஒரு கலைஞன் இசை அமைக்க முடியும் என்ற ஆச்சரியம் இன்றளவும் தொடர்கிறது.

குடும்பம் என்ற அமைப்பு வலுப்பெறத் தொடங்கிய காலம் 1960கள் என்றால் மிகையில்லை. நகர் சார்ந்த குடும்பங்களுக்கு என்று ஒரு அடையாளம் எப்போதும் உண்டு. இன்றைய காலகட்டத்தின் அளவுகோல்களால் அவற்றை கணிக்க முடியாது. ஒற்றை வருமானத்தை நம்பி இருக்கும் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரவர்கத்து குடும்பங்கள். தலைவன் என அறியப்படும் தந்தை பணம் சம்பாதித்து வருவார். அவர் கொண்டு வரும் சம்பாதியத்தில் குடும்பத் தலைவி என அறியப்படும் மனைவி குறைந்தது நான்கு குழந்தைகளாவது உள்ள குடும்பத்தில்நிதிப் பங்கீட்டினை திறம்பட செய்ய வேண்டும்.ஒரு கலிடாஸ்கோப் சுழற்சியில் உணர்வுகளின் வரிசைமாற்றம் இருந்து கொண்டே இருக்கும். இதனை மிக ரசனையாக பத்திரிகை ஊடகங்கள் பதிவு செய்து கொண்டே வந்தன. எழுத்து தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டது எனலாம். ஜெயகாந்தன் , அசோகமித்திரன் போன்றோர் சீரிய இலக்கியத்திலும், பி.விஆர் , ரா,கி,ரங்கராஜன், சுஜாதா போன்றோர் பொதுஜன இலக்கியத்திலும் தங்கள் பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருந்தனர். 1960-லிருந்து 1990 வரை இலக்கியத்தில் நகர்சார் மத்தியதர குடும்பங்களின் காலம் என்றுதான் சொல்லவேண்டும். இதனை சினிமாவும் தனது பங்களிப்பை இசை மூலம் பாடல்கள் மூலம், வசனங்கள் மூலம், காட்சியமைப்புகள் மூலம் செய்திருக்கிறது.

குடும்பம் என்ற வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பீம்சிங் படங்கள் எடுக்கத் தொடங்கிய காலம். வசனங்கள் தனது பொலிவை இழந்து காட்சிபடுத்தலுக்கு திரைப்படம் தன்னை மாற்றிக் கொண்டதால் மு.கருணாநிதி வசனம் எழுதி பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படம் தோல்வியைத்தான் தழுவியது. 1958-ல் விஸ்வநாதன் பீம்சிங்குடன் இனைந்து வெளிவந்த படம் பதிபக்தி. பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அதன் உச்சத்தை தொட்டது எனலாம். இன்னும் கூட சின்னஞ்சிறு கண்மலர் பாடலையும்,கொக்கரக்கோ சேவலே பாடலையும் அத்தனை எளிதில் ஒரு இசைரசிகனால் ஒதுக்கித் தள்ளமுடியாது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனின் துரதிர்ஷ்டம் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் 1959-ல் தனது இளம் வயதில் இயற்கை எய்திவிடுகிறார். இடதுசாரி இயக்கங்களுக்கு அது பேரிழப்போ இல்லையோ எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது பேரிழப்பு.

மெல்லிசை என்பது இசையுடன் நில்லாமல் மொழி சார்ந்தும் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட மெல்லிசை மன்னருக்கு கவிஞர் ஆப்த நண்பனாக வந்து சேர்கிறார்.- நான் எங்குமே கவிஞர் கண்ணதாசனை பெயர் சொல்லி அழைக்க மாட்டேன். கவிஞர் என்றால் எனக்கு அது கண்ணதாசன் ஒருவர் மட்டும்தான்- 1960-ல் தொடங்கி 1965 வரை மெல்லிசை மன்னர்கள் , கவிஞர் பீம்சிங் மூவர் கூட்டணியில் பல அற்புதப் பாடல்களை திரையுலகம் கண்டது. பி.சுசீலா மற்றும் டி.எம்.சௌந்தரராஜன் ஆகிய இருவரும் இந்தக் கூட்டணிக்கு உறுதுணையாக இருந்தனர். டி.எம். எஸ் க்காகாவது ஒரு நாடகப் பின்னணியும் சங்கீதப் பின்னணியும் இருந்தது. பி.சுசீலாவிற்கு அதுவும் இல்லை. எனவே தான் நினைத்த டியூனை கவிஞர் மூலமும் பி.சுசீலா மூலமும் வெளிக்கொணர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை வழங்கினார் அவர்கள் மூவர் கூட்டில் கீழ் கண்ட பாடல்களை எந்த காலத்திலும் மறக்க முடியாது.

1.காலங்களில் அவள் வசந்தம்- பாவ மன்னிப்பு,

2 )மலர்ந்தும் மலராத பாதி மலர்-பாசமலர்

3)தாழையாம் பூமுடிச்சு –பாகப்பிரிவினை

5) நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்

6) வீடுவரை உறவு-பாதகாணிக்கை

7) கொடி அசைந்ததும் காற்று வந்ததா?- பார்த்தால் பசி தீரும்.

8) நான் கவிஞனும் இல்லை- படித்தால் மட்டும் போதுமா?

9)குத்துவிளக்கெரிய கூடமெங்கும்- பச்சை விளக்கு

10 )அவள் பறந்து போனாளே – பார் மகளே பார்.

இவை ஒரு இசையமுதக் கடலின் சின்னஞ்சிறு துளிகள் மட்டுமே.

அதேகாலகட்டத்தில் ஸ்ரீதர் தன்னுடைய பாணியின் மூலம் கதை சொல்லும் போக்கை மாற்ற முயற்சி செய்யத் தொடங்கினார். நாடகநடிகர்கள் நாடகங்களில் கோலோச்சிவிட்டு திரையுலகில் நுழையும்போது அவர்களுடைய பருத்த சரீரம் ரசிகர்களிடம் கவர்ச்சியை இழந்து வந்த காலகட்டத்தில் சமகால கதைகளுக்கு சமவயது நடிகர்களை நடிக்கவைப்பது என்ற பெரிய புரட்சியை ஸ்ரீதர் ஏற்படுத்தினார். கல்யாணப்பரிசிலிருந்து அவளுக்கென்று ஒருமனம் படம் வரை ஸ்ரீதரின் காலகட்டம் எனலாம். கல்யாணப்பரிசு, விடிவெள்ளி, தேன்நிலவு நீங்கலாக அத்தனை படங்களுக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைப்பாளர் . கவிஞர்தான் பாடலாசிரியர். எஸ்.ஜானகிக்கு ஒரு இசை மேடையை அமைத்துக் கொடுத்தவர் மெல்லிசை மன்னர் என்றால் மிகையில்லை.இளமையும் காதலும் கோலோச்சினால் எளிதில் இளம்ரசிகர்கள்வசம் இசை சென்றுவிடும் என்பதற்கு இந்தக் காலகட்ட படங்களின் இசை உதாரணம். அத்தகைய பாடல்கள் பலவற்றிற்கு இசையமைத்தவர் எம்.விஸ்வநாதன். சுமைதாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை,நெஞ்சிருக்கும் வரை,வெண்ணிற ஆடை, சிவந்த மண், காதலிக்கநேரமில்லை, உத்தரவின்றி உள்ளே வா, உரிமைக்குரல் போன்ற படங்கள் அவற்றின் பாடல்களினால் நினைவுகூர பட்ட படங்கள்.

இசைசையுலகம் எப்போதும் மாற்றுக் குரலைத் தேடிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு குரலாக வந்தவர்களில் முதலில் பி.பி.ஸ்ரீநிவாஸ். ஸ்ரீதரின் மென்மையான காதல் கதைகளுக்கு மென்மையான குரல் தேவைப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன் பீ.பி ஸ்ரீநிவாசை உச்சத்திற்கு கொண்டு போனார். காத்திருந்த கண்கள், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், பனித்திரை, வாழ்க்கை படகு, சுமைதாங்கி போன்ற படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் பீ.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலுக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருப்பார். Under-acting பண்ணும் அத்தனை இளம் கதாநாயகர்களுக்கும் பீ.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள்தான் குரல் கொடுத்திருப்பார்.அதே போல எஸ்.பி. பாலசுப்ரமணியன் என்ற தேனைக் குழைத்து ரசிகர்களை கட்டி போட்ட குரலை முதன் முதலாக சாந்தி நிலையம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்றளவும் தேன்கிண்ணம் போன்ற பழைய பாடல்களின் தொகுப்பில் கண்டிப்பாக இந்தப்பாடல் இடம் பெறும். எம்.எஸ்.வி பி.சுசீலா எல்லார் ஈஸ்வரி இருவரிடமும் ஒரு தன்னிறைவு அடைந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். சுசீலாவை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் இங்கே தனி கட்டுரை எழுத வேண்டியிருக்கும். எல்லார் ஈஸ்வரியை பற்றி சுஜாதா குறிப்பிடும்போது அவருடைய பாடல்களை மட்டும் ஒரு லிஸ்ட் எடுத்து கேட்கவேண்டும் என்பார். எம்.எஸ். விஸ்வநாதனிடம் இயல்பாகவே இருந்த ஒரு துள்ளல் இசையின் குரல் வடிவம் எல்லார் ஈஸ்வரி. இருவரிசை என்ற புதியபாணிக்கு வித்திடதற்கு எல்லார் ஈஸ்வரியும் ஒருவர். அவர் சுசீலாவுடன் இனைந்து பாடிய சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றதுவோ, மலருக்கு தென்றல் பகையானால், உனது மலர் கொடியிலே, சொன்னதெல்லாம் பளிச்சிடுமான்னு சொல்லடி கிளியே, அம்மம்மா கேளடி தோழி, புன்னகை மன்னன் பூவிழி கண்ணன், கை நிறைய சோழி போன்ற பாடல்கள் இன்றளவும் மீண்டும் மீண்டும் ரசிகர்களாலும் எந்நாளும் கேட்கப்படும் பாடல்கள். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலை ஹிந்தியில் பதிவு பண்ணும்போது லதா மநேஷ்கர் எல்லார் ஈஸ்வரி அளவிற்கு தன்னால் பாட இயலாது என்று கூறியதாக பத்திரிகை செய்தி ஒன்று உண்டு. பொம்மை படத்தின் மூலம் ஜேசுதாஸ் அறிமுகம் ஆனாலும் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இசையமைத்த காதலிக்க நேரமில்லை படத்தில் இரண்டு அழகான பாடல்களைத் தந்து உச்சாணிக் கொம்பில் ஏற்றி விட்டார். சுசீலாவிற்கும் ஜானகிக்கும் இடைப்பட்ட குரலாக போனதாலோ என்னவோ வாணிஜெயராம் ஒரு மிகச் சிறந்த பாடகி என்ற பெயரை தட்டிக் கொண்டு போகாமல் சென்றுவிட்டார். இவரும் எம்.எஸ்.வி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மேலும் இந்த காலகட்டத்திற்கு பிறகு தன்னை மாற்றிக் கொண்டு வந்த இசை நாட்டுபுற பாடல்களுக்கு இடம் கொடுக்க போக இளையராஜா என்ற மேதை தமிழ் திரையிசையை தனதாக்கிக் கொண்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர். அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது. கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.

ஸ்ரீதருக்கு ஒரு ஏ.எம் ராஜா போல கே.பாலச்சந்தருக்கு ஒரு வி.குமார். மேடைப் பழக்கம் திரையுலகில் தொடர்ந்தது என்றாலும் கதைக்கு ஏற்றபடி பாடல்களை அமைப்பதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் பாலச்சந்தர். வி.குமார் எதிர்நீச்சல் , நீர்க்குமிழி, வெள்ளிவிழா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பாமா விஜயம், சர்ர்வர் சுந்தரம், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, காவியத்தலைவி, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களில் பாடல்களும் பாடல் காட்சிகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இளையராஜா அன்னக்கிளி மூலம் பேசப்பட்டு தனது உச்சங்களை தொட்ட காலகட்டத்தில் வெளிவந்த பாலச்சந்தரின் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் உருவான நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்கள் சாதனை படைத்தன. ரீ-மிக்ஸ் என்ற ஒரு ட்ரெண்டை ஏற்படுத்தி வைத்த முதல் பாடல் என்றால் அது நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற எங்கேயும் எப்போதும் பாடல்தான். கே.பாலச்சந்தரே கவிஞரும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இருந்திருந்தால் என்னுடைய சிந்து பைரவியின் க்ளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

பீரியட் படங்கள் என்ற வகையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ள படங்கள் ஏராளம்.சிவகங்கைச் சீமை,ராஜபார்ட் ரங்கதுரை, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்,கர்ணன் போன்றவை அத்தைகைய படங்கள். கர்ணன் அவற்றுள் முக்கியமான ஒன்று. கர்ணன் திரைப்படம் டிஜிட்டல்முறையில் மீண்டும் புதிப்பிக்கபட்ட பிரிண்டில் இந்தக் கால கட்டத்தில் நூறுநாட்களை கடந்து ஓடியிருக்கிறது என்றால் அதற்கு அதன் இசை மிகவும் முக்கிய பங்கு வகித்தது எனலாம்.கர்ணன் கதாபாத்திரத்தை சரியான விகிதத்தில் வெளிக்கொண்டு வந்ததற்கு எம்.எஸ்.வி அவர்களும் ஒரு முக்கிய காரணம்.

இரண்டு மூன்று வாத்தியகருவிகளுடன் முத்தான முத்தல்லவோ பாடலில் மயக்கியிருப்பார் என்றால் அதிக அளவில் இசைக்கருவிகளுடன் புதியபறவை படத்தில் இடம் பெற்ற எங்கே நிம்மதி பாடலில் மிரட்டியிருப்பார். நவரசங்களும் அவருடைய பாடல்களில் ததும்பி ஓடியிருக்கிறது.

ஏட்டுக் கல்வி எதுவும் கற்காமல் தனது அனுபவ ஞானத்தால் இசையை கற்று மெல்லிசை காலம் என்ற காலத்திற்கு ஒரு சக்கரவர்த்தியாக திகழ்ந்து விளங்கிய மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்என்ற எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் அவருடைய திரையிசைப் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

மறந்து போன நாதம் / கிருஷ்ணமூர்த்தி

 

download (1)

 

 

 

 

 

 

 

 

ஆத்ம மத்ய கதா: பிராண:
ப்ராண மத்ய கதோ த்வனி:
த்வனி மத்ய கதோ நாத:
நாத மத்யே சதாசிவ:
(உடம்பின் நடுவுள் உயிர்
உயிரின் நடுவுள் ஓசை
ஓசை நடுவுள் நாதம்
நாதத்துள் சதாசிவம்)

சக நண்பர்களின் அலைபேசிகளை ஆராயும் போது அவர்களின் இசை கோப்புகளை பார்ப்பது வழக்கம். அதன் மூலம் அவர்களின் குணத்தை ஆராய முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவர்களின் ரசிகத்தன்மையை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். தமிழ் திரைப்பட பாடல்களை மட்டும் கண்டால் கூட மெல்லிய இசையா, குத்துப்பாடல்களா, இளையராஜா இசையில் இருக்கும் கிராமத்து பாடல்களா, வெளிநாட்டு இசையெனில் ராக், ஜாஸ் என எந்த வகையறா அல்லது எமினெம், ஏகான், இயாஸ் போன்ற கர்த்தாக்களைக் கொண்டு அவரவர்களின் ரசனையை எளிதில் தரம் பிரித்துவிடலாம். எல்லோரும் ஏதோ ஒரு வகையறாவில் ஒன்றிணைந்து லயிக்கும் போது பாரம்பரியமாக இருக்கும் சாஸ்திரிய சங்கீதம் ஏன் சிறுபான்மையினருக்கான பகுதியாக மாறியது என்பது என்னவோ புரியாத புதிராக இருக்கிறது. பெரும்பகுதி இளைஞர்களால் சங்கீதத்தை கேட்க முடியவில்லை. அவர்களுக்கு உறக்கத்தையோ அல்லது பொறுமையை சோதிக்கும் விஷயமாகவோ தான் சங்கீதம் என்னும் வகையறா மாறியிருக்கிறது. இது ஏன் என்னும் கேள்வி என்னுள் எப்போதும் உறுத்திக் கொண்டிருந்தது. இதற்கு வார்த்தைகள் தான் பிரதானமா என்னும் உபகேள்வியும் என்னுள் எழுந்தது. வெறும் இசையை இக்காலத்தியவர்களால் கேட்க முடிவதில்லை. இருந்தும் திரைப்படங்களில் வரும் பிண்ணனி இசை அல்லது நாயகனுக்கென வரும் பிரத்யேக இசையை ரசிக்கிறார்கள். இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது எங்கோ செய்யப்பட்ட பிழையானது வம்சவம்சமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிழையை சரிசெய்ய இயலுமா என்பது என்னவோ மீண்டும் சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

இசையானது பக்திமார்க்கமாகவே நம் கலாச்சாரத்தினுள் நுழைந்திருக்கிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களை நோக்கினாலும் அவை செய்யுள் அல்லது பாடல்களின் வடிவத்தில் திகழ்கின்றன. மற்றுமொரு பார்வையில் பழங்குடியினங்களின் அல்லது தொன்மை வாய்ந்த நாட்டுப்புற பாடல்களாக இருந்திருக்கின்றன. இவற்றிலிருந்து பக்திக்கு இசை மாறும் போது கடவுளின் வழிப்பாட்டிற்கு பாடல் வடிவம் தேவைப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாடல் என்றாலே அது கடவுளை வழிபடுதல் என்னும் நிலை தமிழகத்தில் நிலவியிருக்கிறது. அப்போது புரந்தரதாஸர் என்றொருவர் இருந்திருக்கிறார். சங்கீதத்தின் வேர்கள் தமிழகத்தில் ஊன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இந்த புரந்தரதாஸர் தான். இசை வழிப்பாட்டிற்கு மட்டுமல்ல அது தனியானதொரு அனுபவம் என்பதை உணர்ந்திருக்கிறார். சில ராகங்களை உருவாக்கவும் செய்திருக்கிறார். ஆனால் அவரது காலத்தில் முன்னெடுப்பாக மட்டுமே அவை அமைந்திருக்கின்றன.

அவருக்கு பின்வந்த வேங்கடமகி தாளங்களை நிர்ணயம் செய்ய முயற்சித்திருக்கிறார். 72 வகையான மேள ஓசைகளை அவர் நூலாக்கியிருக்கிறார். இவருடைய இந்த ஆவணம் தான் அவருக்கு பின்வந்தவர்களின் சங்கீத ஞானத்திற்கு முக்கிய தேவையாக அமைந்திருக்கிறது. இந்த இருவருக்கு பின் சின்ன சின்னதான அறிமுகங்களும் கண்டறிதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. இருந்தாலும் இவர்வரையில் சங்கீதம் அறிவார்த்த நிலையில் மட்டுமே நின்றிருக்கிறது. ஞானம் என்னும் மார்க்கத்திற்கும் உன்னதம் என்னும் உணர்ச்சி நிலைக்கும் செல்லவில்லை. இவர்களுக்கு பின் வந்தவர்களான சங்கீத மும்மூர்த்திகள் தான் இந்த ஞான மார்க்கத்திற்கான பிரதான வழிகாட்டிகளாக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தான் சியாமா சாஸ்திரி, தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர்.

மூவரும் வெவ்வேறு காலகட்டத்தில் ஜனித்தவர்கள். ஆனாலும் சமகாலத்தவர்களே. இவர்களின் ஆய்வுகளை சரிவர பராமரிக்க இயலவில்லை. கர்ணபரம்பரை கதைகளின் மூலமாகவும் அவரவர்களின் சிஷ்யப்பிள்ளைகளின் வம்சத்தவர்களின் மூலமாகவும் கிடைக்கப்பெற்ற கதைகள் தான் மூவரின் வரலாற்றையும் சொல்லுகின்றது. இதனை சரிவர ஆவணம் செய்திருக்கின்றனர் நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா. மூவரின் வாழ்க்கை வரலாறும் தனித்தனியே கிடைக்கின்றன.

சியாமா சாஸ்திரி – வித்யா சங்கர் – தமிழாக்கம் : நெல்லை எஸ்.வேலாயுதம்
தியாகராஜர் – பி.சாம்பமூர்த்தி
முத்துஸ்வாமி தீட்சிதர் – டி.எல்.வெங்கடராம ஐயர் – தமிழாக்கம் : கே.வி.தியாகராஜன்

இந்திய இசைகள் மதம் சார்பாக பிரிவினையை கொண்டிருந்தாலும் இந்து மதத்தின் அடிப்படையில் கண்டால் ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக சங்கீதம் என இருவகைப்படுகின்றன. சூஃபிகளின் இசையும் பழங்குடியினர்களின் இசையும், நாட்டுப்புற இசையும் தனிப்பட்டவையாகும். அவை இந்த கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் விட்டுவிடுவோம். இந்த இரண்டும் இருவேறு துருவங்களாகவே இந்தியாவில் திகழ்ந்திருக்கின்றன. ஹிந்துஸ்தானி இசையின் வளர்ச்சிக்கொப்ப தென்னிந்தியாவில் கர்னாடக சங்கீதமும் வளர்ந்திருக்கிறது.

கர்னாடக சங்கீதத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது அதற்கு முன்னிருந்த கடவுள் வழிபாட்டு பாடல்களே ஆகும். இசையே இரண்டு பெரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. ஒன்று ராகம். மற்றொன்று சாஹித்தியம். கடவுளை வழிபடும் பாடல்களில் வார்த்தைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கேட்போருக்கு இறையின் அருள் கிடைக்க வேண்டுமெனில் நல்வாக்கு சொல்ல வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். ஆக அங்கே இசை என்பது வார்த்தைகளின் துணையாக நின்று கொண்டிருந்தது. வேங்கடமகியின் காலத்திலிருந்து இந்த இரண்டு விஷயங்களின் தன்மைகள் இடம் மாறத்துவங்கின. ராகத்தின் முக்கியத்துவம் மேலேறப்பெற்று பேசப்படும் வார்த்தைகள்(சாஹித்தியம்) குன்ற ஆரம்பித்தன. இந்த நிலையில் வெளியாகும் இசையினை கேட்கும் போது நம்மால் அந்த ராகத்தையே உணர முடிகிறது. இசையினை பற்றி வர்ணிக்கும் போதெல்லாம் இழை என்னும் பதத்தை உபயோகப்படுத்துவதை கண்டிருப்பீர்கள். இதன் உள்ளார்ந்த அர்த்தம் வார்த்தைகளை பின்தொடராமல் அர்த்தத்தை அறியாமல் உணரமட்டுமே முடியும் ராகத்தை மனம் பின்தொடர்வது. இந்த நிலையை பெருவாரியாக கொண்டு செல்ல ஆரம்பித்தனர். அதற்கு பெருந்துணை புரிந்தவர்கள் மும்மூர்த்திகள்.

மூவர்களின் வரலாற்றை பார்க்கும் போதும் அதனூடே நிறைய மாய விஷயங்கள் இருக்கின்றன என்பதை காணமுடிகிறது. அதே போல் மூவருக்குமான ஒற்றுமைகளும் இருக்கின்றன. மூவரும் பிறக்கும் முன்னர் அவரவர்களின் தந்தையாரின் கனவுகளில் தெய்வத்தின் வாக்கு தோன்றியிருக்கிறது. மேலும் மூவருக்கும் இறக்க போகும் நாள் தெரிந்திருக்கிறது. இதுமட்டுமின்றி இசைக்காக வாழ்க்கையையே அர்பணிக்கும் திராணி கொண்ட மூவரின் வீட்டிலும் ஏழ்மை குடிகொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் யாரிடமும் செல்வத்தை கேட்கவில்லை. அவரவர்களின் இசையின் தன்மையாலும் தெய்வத்தின் அருளாலும் வீட்டில் செல்வமும் உணவும் நிரம்பியிருக்கிறது. இதனை முதலில் நம்பமுடியவில்லை. ஆனால் அவர்களின் இசை ஞானத்தை உணரும் போது நிகழ்ந்திருக்கக்கூடுமோ எனவும் அல்லது அவர்களின் ஞானத்தை உணர்த்த இப்படி கூறப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது.

மூவரின் இசையும் தனித்துவம் வாய்ந்தவையாகவும் அவரவர்கள் அதனின் சில நுட்பங்களை எடுத்து அதில் ஐயந்திரிபுற கற்க முனைந்தவர்களாகவும் தெரிகிறது. சியாமா சாஸ்திரி தாளத்திலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கிறார். தாளம் எனில் வார்த்தைகளும் எழுத்துகளும் எத்தனை அமைப்பெற வேண்டும் எவ்வளவு இடைவெளியில் இருக்க வேண்டும் என முடிவெடுப்பது. இதில் பல கடினமான ராகங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சில கணிதவியல் முறைமையில் அமைத்திருக்கிறார். பலருடனான போட்டிகளில் கடினமான ராகங்களில் பாடியே வென்றிருக்கிறார் சியாமா சாஸ்திரி. இந்த தாள அமைப்புகளில் அவரின் சிஷ்யர்களில் சிலரால் மட்டுமே பாட முடிந்தது எனவும் கூறப்படுகிறது.

அடுத்ததான தியாகராஜரோ ராகத்திலேயே முழுக்கவனமும் கொண்டிருந்தார். இவருக்கு துளசிதாஸரின் ராமகாதை பிடித்துப் போனது. அதனால் அதனுள் இருக்கும் இடைவெளிகளை தன் பாடல் கொண்டு நிரப்பியிருக்கிறார். பல கதைகளையும் தன் இசையினில் இட்டு நிரப்பி தன் மனதுள் முழுமையான ராமாயணத்தை மக்களிடம் சேர்ப்பிக்க முனைந்திருக்கிறார்.

அடுத்தவரான முத்துஸ்வாமி தீட்சிதரோ சற்று சுவாரஸ்யமான ஆள். அவருடைய காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் இசையை தமிழகத்தில் பரப்ப முனைந்திருக்கிறார்கள். அப்போது பிரபல சங்கீத வித்வானாக இருந்தவர் தீட்சிதர் தான். அதனால் அவரிடமே சென்று தங்களின் இசை மெட்டுகளுக்கு வேறு வார்த்தைகளை இட்டு மக்களிடம் சேர்ப்பிக்க கேட்டிருக்கின்றனர். அவரும் அதை செய்திருக்கிறார். இதன் விளைவு என்ன எனில் புதிய ராகங்களை அவர் உருவாக்க ஆரம்பித்திருக்கிறார். பிற்காலத்தில் வந்த ஆய்வாளர்கள் அவரின் ராகங்கள் இந்துஸ்தானி இசையுடன் ஒன்றுகிறதே என கேள்விகளை எழுப்பியிருகின்றனர். ஆனால் அவர்களைப் போலவே இருக்கும் பிற ஆய்வாளர்கள் இந்துஸ்தானி இசையுடன் வேறுபடும் நுண்ணிய அம்சங்களை எடுத்துக்கூறி கர்னாடக சங்கீதத்தின் தனித்துவத்தையும் அதில் தீட்சிதரின் பங்கையும் விளக்கியிருக்கின்றனர். சியாமா சாஸ்திரி தேவியையும், தியாகராஜர் ராமரையும் வழிபட்டது போல தீட்சிதர் யாரையும் பின்தொடரவில்லை. மாறாக அத்வைதத்தில் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். எல்லாம் பரம்பொருளே என்பதில் கவனமாக இருந்து மையத்தை நோக்கிய இசையையே அவர் வழங்கியிருக்கிறார்.

இசை கலையின் ஓர் வடிவமே. அந்த வடிவத்திற்கு பயணங்களும் அனுபவங்களும் எவ்வளவு முக்கியமானவை என்பதை இம்மூவரிடமிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மூவரின் வரலாற்றையும் தொகுக்க அவரவர்களின் கீர்த்தனங்களே முக்கியமாக உதவியிருக்கின்றன. அதனூடே அவர்கள் கூறியிருக்கும் வாழ்க்கை அனுபவங்களும் மேற்கொண்ட பயணங்களும் தான் ஆவணங்களாகவும் மாறியிருக்கின்றன. தியாகராஜரின் வறுமையும் தீட்சிதரின் பயணமும் சியாமாவின் அறிதலுமே இசைக்கான வித்துகளாக அமைந்திருக்கின்றன.

இவர்களின் கடின உழைப்புகளெல்லாம் அந்த பாடல்களில் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கீர்த்தனங்களிலும் இரண்டு இலக்கணங்கள் மோதுகின்றன. ஒன்று மொழிக்கான இலக்கணம். அந்த கீர்த்தனங்கள் யாவுமே தெலுங்கு அல்லது சமஸ்கிருத மொழிகளில் இயக்கப் பட்டிருக்கின்றன. ஆக அம்மோழிகளில் இருக்கக்கூடிய பெரியளவிலான அறிவும் கவிப்புலமையும் சாஹித்தியத்திற்கு தேவையாக இருந்திருக்கிறது. ஆனால் ராகத்திற்கேற்ப மொழியிலக்கணத்தில் சில தளர்ச்சிகள் செய்யப்பட்டன. இதை சில ஆய்வாளர்கள் எதிர்த்தனர். குறிப்பாக சியாமாவின் கீர்த்தனங்களில். அவர் தாளலயத்திற்கு ஏற்ப மொழிக்கான இலக்கணத்தில் நானாவித சமரசங்களை செய்திருக்கிறார். மொத்தமான வடிவில் அவர் செய்திருப்பதோ மாபெரும் மொழி விளையாட்டு!

மேலும் இந்த மூவரும் கர்னாடக சங்கீத வித்துவான்கள் என்னும் கர்வத்தை யாரிடமும் காண்பித்ததில்லை. ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் மீது இவர்களுக்கிருந்த மரியாதை வியத்தகு விஷயமாக அக்காலத்தில் அமைந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி கலைஞர்கள் தென் தமிழகத்திற்கு விஜயம் செய்யும் போதெல்லாம் அவர்களின் இசையை கேட்டு தங்களை சாமான்யனாக மாற்றுவது இயல்பான விஷயமாக இருந்திருக்கிறது. தமிழில் தி.ஜானகிராமன் இயற்றிய மோகமுள் நாவலிலும் சில கதாபாத்திரத்தில் இந்த தன்மையை காணலாம். இருந்தாலும் வாழ்க்கை வரலாறும் நாவலும் அதனதன் தொனியில் வாசிப்பின் போது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மூன்று நூல்களுமே செறிவான தகவல்களுடன் நல்ல மொழியுடனும் அமைந்திருக்கிறது. தியாகராஜரின் நூலில் மட்டும் பத்து பக்கங்கள் அவரின் வழிபடுதலாக அமைந்திருக்கிறது. முத்துஸ்வாமி தீட்சிதரின் நூல் சங்கீதம் சார்ந்த பல நுண்ணியமான பொருள் விளக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. மேலும் இம்மூவரின் வாழ்க்கை வரலாறுகளும் சரிவர ஆவணமாக இல்லாமல் இருப்பதால் நிச்சயமாக பல தகவல்களை ஆசிரியர்களால் சொல்ல இயலவில்லை. அதை தர்க்கமாகவும் பயணமாகவும் மாற்றி இயற்றியிருப்பது வாசிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் தொய்வின்றியும் இருக்கிறது.

மூன்று நூல்களையும் வாசித்து முடிக்கும் போது காரணமற்று ஏமாற்றப்பட்டதன் உணர்வே மேலோங்கியது. அதிகாரத்திற்கும் பசிக்கும் சுற்றத்தாருக்கும் இணங்காமல் இசைக்காகவும் அதனூடே கண்டுகொண்ட உன்னதத்திற்காகவும் வாழ்ந்த மக்களை நம்மால் வரும் தலைமுறையினருக்கு எளிதில் அடையாளம் காட்ட முடியவில்லை. திருவாரூர், திருவொற்றியூர், காஞ்சீபுரம், திருத்தணி என கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள இடங்களில் இவர்கள் செய்த அற்புதங்கள் எல்லாம் காற்றுடன் கரைந்து காணாமல் போயிருக்கின்றன. சுவர்கள் முழுக்க கருத்தடை சார்ந்த விழிப்புணர்வு செய்வதற்கு பதில் அவ்வூரின் வரலாற்றுகளை ஓவியமாக வரையலாம். கருத்தடை சார்ந்த விழிப்புணர்வுகள் பெருந்தீனிக்காரனின் பொழுதுபோக்கு சித்திரங்கள். அதை குறைகூறவில்லை. இருந்தாலும் பள்ளிகளில் கூட முழுமையாக கூறப்படாத வரலாறுகளை கண்டுகொள்ளாமலே இருந்தால் வரலாறு என்பதே மீமாயப் புனைகதையாகிவிடும். மொசார்ட், பாக், பீத்தோவன் முதல் எமினெம் வரை அவரவர்களின் நாடுகளில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாம் இங்கே இசையையே வாழ்வாக வாழ்ந்தவர்களை மறந்து சயனித்துக் கொண்டிருக்கிறோம். எந்த சங்கீதத்தின் இழைகளைக் கண்டு அஞ்சுகிறீர்களோ அதுவே விஞ்ஞான ரிதியான இசை என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் மீண்டும் சாஹித்தியங்களை நோக்கி பயணம் செய்து கொண்டிருகிறோமோ என்பதையே இந்த பெருவாரியான மறத்தல் எனக்குள் நினைவூட்டுகிறது. சங்கீதத்தை கேட்கவில்லையெனினும் பரவாயில்லை வாங்கியோ பதிவிறக்கம் செய்தோ வைத்துக் கொள்ளுங்கள். நாளை அவையும் காணாமல் போகலாம் அதுவும் நாம் அறிவதற்குள்ளேயே!

••••

 

பூந்தளிராட, பொன்மலர் சூட (பன்னீர் புஷ்பங்கள், 1981) – ஆனந்த்

download (14)

 

இளையராஜாவின் இசைமொழி எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. பரவலாகக் கேட்கப்படும் பாடல்களை நானும் பரவலாகக் கேட்டிருக்கிறேன். பாடிக்கொண்டு திரிந்திருக்கிறேன். இந்த பரிச்சயம்தான் என்னால், என்னைப் போன்ற உங்களால், இளையராஜாவின் பாடல்களை, இசைத்துணுக்குகளை, (எடுத்துக்காட்டாக) லுட்டோஸ்லாவ்கியின் இசையைவிட வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

 

Forget all. பின்பு நான் இசையைக் கோர்க்க ஆரம்பித்ததிலிருநது இளையராஜாவின் பாதிப்பு ஏதுமில்லாமல் இயல்பாகவே விலகியிருக்கிறேன். இசையில் என் தொடக்கப்புள்ளி வேறு, என் கவனம், பிரச்சினைகள், வழிமுறைகள் எல்லாம் எனக்கானவை. தனியானவை. எடுத்துக்காட்டாக நான் ‘ட்யூன்’களாக யோசிப்பதில்லை. டியூன் என் இசையின் அடிப்படை அலகு அல்ல.

 

ஆக என் வழியில் நான் இசை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது நான் ‘பூந்தளிராட’ போன்று ஒரு பாட்டைக் கேட்கும்போது, படைப்பாளியின் காலணிகளைப் போட்டுக்கொண்டு பாட்டுக்குள் உலவத்தோன்றுகிறது.

 

 

ஊட்டி. கான்வெண்ட். பதின்ம வயதுப் பையன் – பெண். காதல்.

 

டைரக்டர் சொன்ன சிட்சுவேசனில் முக்கிய வார்த்தைகள் இவைதான். ஊட்டியை சுற்றிக் காட்டுவார்கள். அந்தப் பையனுக்கும் பெண்ணுக்கும் காதல் அரும்புவது, பதின்ம வயதின் குறும்பு, துடிப்பு.

 

பாட்டில் காதலின் அழகு, இனிமை, நளினம் இருக்க வேண்டும். + சிறு வயதின் தேடல்,  enegry, துள்ளல், fun, excitement.

 

விளையாட்டு.

 

இளையராஜா விளையாடிவிட்டார் 🙂

 

https://www.youtube.com/watch?v=p1eplC5zWxE

 

 

பாட்டில் புதுமையை (மேற்குறிப்பிட்ட காராணங்களுக்காக) கொண்டுவர புது வகையான, exciting/fun சப்தங்களைச் சேர்த்திருக்கிறார். preludeன் தொடக்கத்தில் வரும் தாளம், கீபோர்ட், கிட்டாரின் குறிப்பிட்ட ஒலிகள், அவற்றின் சவுண்ட் எஃபெக்ட்ஸ்.

 

அதற்காக முழுக்க முழுக்க experimentalஆன சப்தங்களையே போட்டு நிரப்ப முடியாது. (One flew over the cuckoo’s nestன் தொடக்க இசை என்றால் செய்யலாம்) பாட்டு standardஆனதாக இருக்க வேண்டும். அதனால் புதுமையான ஓசை, கோர்வைகளுடன், வழமையான, அழகான – இனிமையான – அதே சமயம் safeஆன ஓசை/துணுக்குகளையும் சேர்த்திருக்கிறார். தேவையான அளவு துடிப்பான ரிதம் கித்தார், ட்ரம்கள், புல்லாங்குழல், பியானோ…

 

Preludeன் ஆரம்பத்தில் மிகப்புதுமை. இந்த மாதிரியான கற்பனை ஒரு குறிப்பிட்ட மனநிலையிலிருந்து திடீரென உதிப்பது. சுரீரென வருமே கோபம், அது போல, உள்ளிருந்த ஒரு குவிந்த கணத்தில் கட்டுப்பாடில்லாமல், அதே தம்மை இழுத்துக்கொண்டு வருவது. ஆழ்ந்த சிந்தனையில் ஒரு புதிரை விடுவிக்கையில் நடுவில் கிடக்கும் ஒருநிலை.

 

அது பாட்டில் முதல் 10 நொடிதான் (இந்த வீடியோவில் 20 நொடி வரை). அதற்குள் prelude 2 அடுக்குகளைத் தாண்டி வந்துவிட்டது. பொங்கிவரும் அருவி இப்போது தெளிவான ஆறாகும் நேரம். இப்போது ட்ரம்ஸ் எல்லாம் சேர்ந்து கொண்டு ஒரு நேர்த்தியான அடுக்கு. இதைப் படைத்தது பொங்கி வரும் மனநிலையல்ல. அமைதியான, யோசிக்கும் இசைஞனின் மூளை. Balance.

 

பூந்தளிராட…

 

பல்லவி ஆரம்பிக்கிறது. ஆண் குரல்.

 

பூந்தளிராட…

 

அழகாக, வருடும் தொனியுடன் ஆரம்பிக்கிறது. இது ஒரு கதை சொல்பவனின் குரல். ‘பூந்தளிராட, பொன் மலர் சூட’ என ஒரு வர்ணனையுடன் ஆரம்பிக்கிறது. வர்ணனையாக இருப்பதால்தானோ என்னவோ பாடகர் கதை சொல்பவராகிறார். இவர் 3ம் நபர். காட்சியில் வரும் காதலனல்லர்.

 

அஅஅ ஒஒஒ அஅஅ ஒஒஒ கோரஸ் இளையராஜாவின் குறும்பு. இது நான் குறிப்பிடும் experimental element. அவ்வப்போது வழக்கமான கோரஸாகவும் மாறும். balance. இதே போல முதல் interludeல் (இணைப்பிசை) நடுவில் அவர்கள் பியானோ வாசிக்கும் காட்சி. அதில் வரும் பியானோவின் ஓசை அந்த காலகட்டத்தில் வந்த கீபோர்டில் வினோதமான sound effectஉடன். 1981ல் அது மிகப்புதுமையாக இருந்திருக்கும். உடனே அழகான, ஆனால் அவ்வளவு வினோதமில்லாத துணுக்குகளின் தொடர்ச்சி.

 

காதலை ஏற்றும் காலையின் காற்றும்…

 

நாயகியின் குரல் பாட்டில் முதன்முறையாக ஒலிக்கிறது. இது மூன்றாம் நபரின் குரலல்ல. காதலில் கிறங்கும் பெண்ணின் குரல். personal. intimate.

 

கோடிகள் ஆசை கூடிய போது…

 

இந்த ஆண் குரல் இனி மூன்றாம் நபரின் குரலல்ல. வர்ணனை இல்லை. ஒரு வேளை சரணத்தின் டியூன் இதற்கு ஒத்துழைக்கிறதோ? ஏன் பல்லவியில் இந்த பர்ஸனல் டச் இல்லை?

 

பூந்தளிராட…

 

பெண் குரல் முதல்முறையாகப் பல்லவியின் வரிகளைப் பாடுகிறது. அதே வர்ணனைப் பல்லவி, ஆனால் இது அந்த சின்னப் பெண்ணின் குரல். யாரும் கதை சொல்லவில்லை. அவள் தன் காதலனுடன் வாஞ்சை கொண்டிருக்கிறாள்.

 

காட்சியிலும் இசையிலும் இது வரை நிறைய விளையாட்டு. அஅஅ ஒஒஒ. ஆனால் ஒரு இசைகோர்ப்பவருக்கு இரண்டு melodic lineகளைக் கைகள் கோர்த்து ஆடவிடுவது போல் அலாதியான இன்பம் தரும் விளையாட்டு ஏதுமில்லை. இரண்டாவது இணைப்பிசையில் கித்தாரும் போஸும் உச்சஸ்தாயியிலும் கீ்ழ்ஸ்தாயியிலும் கைகள் பிணைத்து காதல் நடனம் புரிகின்றன. (ரயில் காட்சி). கண்கள் பார்த்துக்கொள்கின்றன. உள்ளம் வரை ஊடுருவும் பார்வைகள்.

 

(3:09) காதல் பருவம் முடிந்தது. இளையராஜா மணம் முடித்து வைக்கிறார். ஊட்டி. கான்வெண்ட். எதோ சர்ச்சில் திருமணம் நடக்கிறது.

3.26 தேனிலவு ஆரம்பம். bassல் புதுப்புது அனுபவங்கள். புல்லாங்குழலில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன.

 

இளையராஜாவின் continuity பிரமிக்கத்தக்கது. தொடர்ச்சியான இசை-மனதிலிருந்து எழும் தொடர் வாசங்கள். வெட்டி ஒட்டி சரிபார்க்கப்படாதவை. இயல்பான நடை. மோஸார்ட்டுடையது போல. (ரஹ்மானுடைய தொடர்ச்சியை பெத்தோவனுடயதுடன் ஒப்பிடலாம்). சுஜாதாவின் நடை போல.

 

ஆனால் இந்த தொடர்ச்சிக்குப் பின்னால் லாஜிக் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு ப்ரெலூடிலோ, இண்டர்லூடிலோ அடுத்தடுத்த துணுக்குகள் எந்த அடிப்படையில் பிணைக்கப் பட்டுள்ளன என்பதற்கு விடை ஏதும் கிடைக்காது. ஸ்டூடியோவில் இசைஞர்கள் கிட்டார், புல்லாங்குழல், வயலின் என வைத்துக் கொண்டு காத்திருப்பது காரணமாக இருக்கலாம். resource management. ஆளுக்கொரு பீஸ் போட்டு இந்தாங்க புடிச்சுக்கங்கன்னு கொடுப்பதாயிருக்கலாம்.

 

 

இரண்டாவது இண்டர்லூட் தாண்டி கடைசி சரணத்தை நான் கேட்பதில்லை. தமிழ்ப்பாடல்களில் இரண்டாவது சரணத்தில் ஒன்றும் புதிதாக இருப்பதில்லை, வரிகளைத் தவிற. அதே டியூன், அதே ஃபில்லிங்க் துணுக்குகள்.

 

பூமலர்த் தூவும் பூ மரம் நாளும்…

ஆண் குரலின் தொனியில் தெள்ளத்தெளிவான மாற்றம். இது அந்த விடலைப் பையன்தான்.

 

பூமழை தூவும் பொன்னிற மேகம்…

பெண் குரல், அன்பில் திளைத்திருக்கிறார்.

 

ஏங்கிடுதே.. (ஆண் ஏங்குகிறார், ஆனால்)

என் ஆசை எண்ணம் — இறங்கி பூலோகத்துக்கு வந்துவிடுகிறார்.

 

(ஆண்) பூந்தளிராட…

ஹனிமூன் முடிந்துவிட்டது. ஊர் திரும்ப ரயிலேறியாச்சி.

 

(பெண்) சிந்தும் பனி வாடைக்காற்று…

மனதெல்லாம் பூரிப்பு. கணவனின் தோளில் தலை சாய்கிறார். ரயில் கிளம்பிவிட்டது.

 

இசைஞானியின் ராஜ முத்திரை !! – கலைச்செல்வன் ரெக்ஸ்

Radio with raja

180களில் ராஜா, ராஜாங்கம் நடாத்திய காலத்தில் வந்ததும், மணிரத்னத்தின் முதல் தமிழ்ப் படமுமான பகல் நிலவு என்ற படத்துக்காக இசைஞானி படைத்த பொக்கிஷங்களில் ஒன்றுமான பூமாலையே..தோள் சேரவா.. என்ற அற்புத மெலடியைப் பற்றி நண்பர் கானா பிரபா இட்ட பதிவுக்கு கருத்திட விழைந்தேன் ..ஏனோ தெரியவில்லை கருத்திட முடியவில்லை.

80களில் எங்கும் ராஜா.. எதிலும் ராஜா என்றிருந்த காலத்தில் பதின்ம வயதில் இருந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள். ராஜா கைவைத்த எல்லாமே பொக்கிஷங்கள். அதில் தாய்க்கொரு தாலாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற இசைஞானியும் சித்திராவும் பாடிய‌ காதலா.. காதலா ..கண்களால் என்னைத்தீண்டு என்ற பாட்டிருக்கிறதே அப்பப்பா .. அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பாட்டின் தொடக்கம் ஒரு தொகையறா போன்றது. அது சித்திராவினுடையது. அவர் காதலா.. காதலா ..என்று உச்சரிக்கும் இரண்டு தடவையும் வித்தியாசமான பரிமாணத்தை தனது குரலில் கொண்டு வந்திருப்பார். முதல் முறை காதலா எனும் போது சாதாரணமாகவும் இரண்டாம் முறை அதே காதலா .. எனும் போது ஏக்கத்தையும் தனது குரலில் கனியவிட்டு நம்மையெல்லாம் பித்துப்பிடிக்க வைக்கும் சித்திராவுக்கு பதிலாக இசைஞானி காதலி.. காதலி கண்களால் எனைத்தீண்டு என்று விட்டேந்தியாக பாடி சித்திராவின் கூப்பிடலுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். அடுத்த வரியான காதல்.. ஒரு வேதம்.. கண்கள்.. அதை ..ஓதும் என்று ஏங்கும் சித்திரா, அதை மென்மையாகவும் அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாகவும் பாடும் போது அந்தக் குரலில் காதலுடன் சேர்ந்ததொரு காமத்தை இழையோட விட்டிருப்பார். .. அதைத்தொடர்ந்து இசைஞானி, ஒரு கோயில் மணியோசையை மட்டும் இசையாகக் கொடுத்து பின் புல்லாங்குழலுடனும் தபேலாவுடனும் தனது இசை ராஜாங்கத்தை தொடர்ந்து அவற்றின் முடிவில் பல வயலின்களை ஒன்று சேர்ந்து ஆலாபனை செய்து முதல் சரணத்துக்கு பிள்ளையார் சுழி போடவைப்பார். கேட்கும் போது அவ்வளவு சுகமாக இருக்கும். .

 

முதலாவது சரணத்தை இசைஞானி ,` நீ…ரோடையின் ஓ..சையில் உந்தன் பேரைக் கே..ட்கிறேன்.. பூ..ஞ்சோலையின் பூ..க்களில் உன்னை நா..னும் பார்க்கிறேன் என்று பாட அதற்குச், சித்திரா போட்டியாக தே..வனே உன்..னிலே என்னை தே..டிப் பா..ர்க்கிறேன், நீ.. விடும் மூ..ச்சிலே, நா..னும் கொஞ்சம் வா..ழ்கிறேன் என்பார் இது ராஜாவுக்கு நெத்தியடியாக இருக்கும். விடுவாரா ராஜா அவரும் அடுத்த வரியான என் தே..வியே உன் பே..ச்சிலே ஏ..தோ இசை கேட்கிறேன் என்று முடிப்பார். இதில் என் தேவியே என்பதை அழுத்தி சுகமாகப் பாடும் இசைஞானி முடிவில் ஏதோ இசை கேட்கிறேன் எனும் போது பின்னணி இசை எல்லாவற்றையும் நிறுத்தி கொஞ்சலும் ஏக்கமுமாகப் பாடுவார்.. ஆஹா..ஆஹா.. என்னவொரு பாவம் ராஜாவுடன் சேர்ந்து.. சித்திரா பின்னிப் பெடலெடுத்திருப்பார்.
(பாடலைக் கேட் இங்கே சொடுக்கவும்)

இதே போலவே இரண்டாவது இடையிசையின் தொடக்கமும் புல்லாங்குழ்லின் எக்கோவுடன் தொடங்கி வயலின்களின் குழுமம் தொடர்ந்து சென்று அமைதியான காற்றின் ஓசையை மட்டுமே இறுதி இசையாக்கி நிறுத்துவார் இசைஞானி. அதைத் தொடர்ந்து முதல் சரனத்தில் ராஜா தொடங்கியதற்குப் பதிலாக இரண்டாவது சரணத்தை சித்திரா கண்ணா.. என்ற ஏக்கக் கூவலுடன் ஆரம்பிப்பார் . இப்படியே நெஞ்சை அள்ளிச் செல்லும் இந்தப் பாட்டிற்கு இசைஞானி பெரும்பாலான இடங்களில் பாவித்திருப்பதெல்லாம் தபேலா,வய‌லின் புல்லாங்குழல்,கிற்றார், பேஸ்கிற்றார் மற்றும் டோலக் மட்டுமே. எந்தக் கொம்பியூட்டரும் கிடையாது, இங்கிலாந்தின் இசைக்குழுவும் கிடையாது, சிம்பொனி இசை வல்லுனர்கள் கிடையாது, மும்பாய் ஒலிப்பதிவுக்கூடம் கிடையாது.. ஐந்து நட்சத்திர ஹொட்டேலில் தங்கி கொம்போசிங் செய்யவு மில்லை. இதுதான் ஞானம். இயற்கையின் கொடை.
இந்தப் பாட்டை எங்கே எப்போ கேட்டாலும் 80கலின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கிற்கும் விக்னா ரியூசன் சென்ரருக்கும் அருகில் இருந்த வீனஸ் ரெக்கோடிங் பார் தான் நினைவு வரும் .

80களின் நடுப்பகுதியில், போருக்கு முந்திய யாழ்ப்பாணத்தில் நண்பர்கள் நாங்கள் விக்னாவுக்கு வார விடுமுறை ரியூசனுக்கு போகின்றபோது வகுப்பு தொடங்குவதற்கு ஓரு மணி அல்லது அதற்குக்கும் முன்பாக யாழ் நகர் சென்று, வெலிங்டன் திரையரங்கிற்கு நேரே முன்னால் இருந்த ரவர் ரீ அன் கூல் பாரில் ஒரு பிளேன்ரியும் வடை அல்லது றோளும் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து வெவ்வேறு இடங்களில் இருந்து பஸ்ஸில் வரும் நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக நடந்து சென்று , வீனசுக்கு முன் ரயில்வே கடவைக்கு அருகில் இருந்த குட்டிச் சுவர் ஒன்றிலும் ஏனையோர் கைவிடப்பட்ட பழம் விற்கும் வண்டில் ஒன்றிலும் ஏறி இருந்துகொள்ளுவோம்.

. அங்கிருந்தபடியே வீனஸில் ஒலிக்க விடப்படும் புதிய பாடல்களை நண்பர்களாகச் சேர்ந்து கேட்டு ரசிப்பதில் அப்படி ஒரு குஷி எங்களுக்கு. படிக்கவென்று செல்லும் நாங்கள் இந்தப் பாடல்கலைக் கேட்ட பாதிப்பில், ஏதோவொரு இனம் புரியாத சுகத்துடனும், அமைதியுடனும், கனவுகளுடனும் தான் வகுப்புக்குள் செல்வோம். உள்ளே சென்றால் வாத்தி படிப்பித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பாடல்களைப் பற்றிய பிரமையே மனதுள் ரீங்காரமிடும். பிற‌கென்ன .. வாத்தி தன்ரை பாட்டுக்கு லெக்சர் அடிச்சுக்கொண்டிருக்க அது எமக்கெல்லாம் செவிடன் காதிலை ஊதிய சங்குதான். ம்ம் நினைவழியா நாட்கள் அவை.

அந்த நேரத்தில் கேட்டு, இன்றும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இன்று இந்தப் பாட்டைக் கேட்கும் போது , இன்றுகூட வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை வந்து அடைப்பதையும் அந்தக் கால யாழ்ப்பாணம் கண்ணுக்குள் மின்னி மறைவதையும் தடுக்க முடியவில்லை. இந்த எனது அனுபவம் யாழ்ப்பாணத்தின் 80ன் நடுப்பகுதி ரீன் ஏஜ்ஜுக்கள்… சத்தியாக் கட் வெட்டிக் கொண்டு திரிந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு

 

தமிழ்த் திரையிசையில் பொங்கஸ் ( Bongo Drums ) – அ.கலைச்செல்வன். சிட்னி, ஆஸ்திரேலியா.

 

 தமிழ்த் திரையிசையில்  பொங்கஸ் ( Bongo Drums ) 

 

                                        Inline image 1

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலத்தில் அவர் இசையமைத்த திரையிசைப் பாடல்களில்பிரபலமாகக் காணப்பட்டு, இசைஞானியால் தப்லா  வுடன் சேர்த்து புதுமையாக பாவிக்கப்பட்டு, ஏ.ஆர்.ரஹ்மானால் அதிரடியாக முழக்கப்பட்ட  இசைக்கருவி பொங்கஸ்  ( Bongo Drums) ஆகும்.

 

பொங்கஸ் ட்றம் என்றழைக்கப் படும்  இந்த வாத்தியம் காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும்தரத்திலும் மாற்றமடைந்து வந்தாலும் அது இசை  உலகின் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டது. 19ம்நூற்றாண்டின் இறுதியில்  உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும் இதன் பூர்வீகம் கியூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான அழவு கொண்ட இரண்டு ட்றம்ஸ் களை ஒன்றோடு ஒன்று சேர்த்துப்பொருத்துவதன் மூலம் பொங்கஸ் வடிவமைக்கப் படுகிறது. இரண்டு மேளத்திலும் அழவில் பெரிதாக உள்ள மேளத்தை ( Drum ) , ஹெம்ப்றா ( hembra) என்று அழைக்கிறார்கள். . இது ஸ்பானிய மொழியில்பெண்பாலைக் குறிக்கும். சிறிய Drum மஹ்கோ (macho ) என்று ஸ்பானிய மொழியில் ஆண்பாலாகஅழைக்கப் படுகிறது. இதன் அழவு 6 – 7inch  தொடக்கம் 7 – 8.5 inch   ஆகும்.  ( சிறுவர்களுக்காகசெய்யப்படுவது அழவில் சிறியதாகக் காணப்படும்

 

1900இன் ஆரம்பத்தில் கியூபாவில் வாழ்ந்த ஆபிரிக்க ஸ்பானிய மக்களால் “changui`என்ற இசைக்கு/பாடலுக்கு இசையாக இது பயன்படுத்தப் பட்டதாதாகவும் காலப்போக்கில் அதுவே மருவி இப்போதையசல்சா ( Salsa ) ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

 

1900 தின் நடுப்பகுதியில் இந்த வாத்தியம்,  பொங்கோ மற்றும் ஜக் கோஸ்ரன்சோ என்பவர்களால்மிகப்பிரபலமாகி உலகின் எல்லா இசைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.  தற்போதும்உலகெங்கும் பிரபலமாகவுள்ள jazz ற்கு அடித்தளம் இந்த வாத்தியமென்றால் அது மிகையல்ல.

 

 

 

Inline image 3

 

இதை இசைப்பவர்கள் தங்களின் இரு கால்களிற்கிடையிலும் தாங்கிப்பிடித்தபடியே விரல்களால்லாவகமாக  இசைக்கவேண்டும்.

1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது.  அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

 

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

 

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன்  குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.

 

மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல்  நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப்  பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.

 

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப,  தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச்  சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

 

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில்  மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில்  மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில்  காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

 

அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.

 

கே. மகாதேவனும் பொங்கசை நன்றாகப் பாவித்துள்ளார். வசந்தமாளிகையில் குடிமகனே.. பெரும் குடி மகனே .. என்ற பாட்டில் பொங்கஸ் மிகச் சுதந்திரமாக விளையாடுவதைக் கேட்டு மலைக்கலாம்..

 

இந்தி இசையமைப்பாளர்களான ஆர்.டி. மற்றும் எஸ்.டி. பர்மன்கள் இறுதிவரை இந்த இசைக்கருவிமேல்எம்.எஸ்.விஸ்வநாதனைப் போலவே அதிக வாஞ்சை கொண்டிருந்தார்கள். அடிக்கடி தங்களின் பாடல்களில்பயன்படுத்தத் தவறியதில்லை.

                     Inline image 4

76 – 80 களில் இசைஞானியின் காலத்தில் பொங்கசை அவர் பாவித்த விதம் மிகப் புதுமையானது. அவரின் அனேகமான மெலடிப்பாடல்களின் ஆரம்ப மற்றும் இடையிசையில் களம் புகும் இந்த வாத்தியம் கூட்டுச் சேர்வது தப்லாவுடன். அது இசைஞானியின் அதீத கற்பனையின் வெளிப்பாடு. அனேகமாக தப்லாவும் பொங்கசும் சேர்ந்து இசைக்கும் போது ஒன்றின் கேள்விக்கு மற்றொன்று பதில் சொல்வதைப்போல அச்சு அசலாக இருப்பதுதான் அதன் சிறப்பு. இந்தக் கூட்டணியில் பல பாடல்கள் வந்திருந்தாலும் நான் சிவப்பு மனிதனில் இடம் பெற்ற,  பெண்மானே சங்கீதம் பாடவா, என்ற ரஜினி பாடல்..  தென்றலே என்னைத் தொடுவில் இடம்பெற்ற தென்றல் வந்து எனைத் தொடும் என்ற பாடல் மற்றும் புன்னகை மன்னனில் இடம் பெற்ற என்ன சத்தம் இந்த நேரம் போன்ற பாடல்களைக் கேட்டுப்பார்த்தால்  இசைஞானி என்ன விதமாக இந்த வாத்தியத்தை உபயோகித்துள்ளார் என்பது புரியும். இதில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய இன்னொரு விடயம் இசைஞானியின் இரண்டாவது படத்தில் இடம் பெற்ற ஒருநாள்.. உன்னோடு ஒருநாள்.. என்ற பாட்டில் பொங்கஸிற்கே தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அதை வாசித்த நோயல் கிராண்ட் என்பவரால் வாசிப்பில் சேர்க்கப்பட்ட புதுமைகள் பாடலின் போக்கையே மாற்றிவிட்டிருந்தது. இதை சமீபத்தில் இசைஞானியே ஒரு கலந்துரையாடலில் கூறியிருந்தார்.

 

     Inline image 2

 

 

90களின் நடுப்பகுதி வரை இசைஞானி இளையராஜா என்ற ஜாம்பவானால் கட்டிப்போடப்பட்டு, அவரின்ஆதிக்கத்தில் சுகமான மெலடிப்பாட்டில் சங்காரித்துக் கொண்டிருந்த தமிழ் இசை ரசிகன் குடும்பஸ்தனாகிவாழ்க்கையில் பிசியாகிப்போனான்.

 

அந்த இடத்துக்கு புதிதாய் வளர்ந்த இளம் ரசிகனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது, அந்த நேரத்துஅரசியல், சமூக  மாற்றத்துக்கு ஏற்ப, புதிதாய் தென்னாசியாவில் புகுந்து கொண்ட எம்.ரீ.வியைப் பார்த்தபாதிப்பினால் ஏற்பட்டதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மாற்றம் , மாற்றான் தோட்டத்துமல்லிகையான உலக இசையை ரசித்துப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டதுதான்.

அதுவரை அமைதியான மெல்லிசையான தமிழ்த்திரையிசையைப் போற்றிப் புகழ்ந்தவர்களின் வழிவந்தவாரிசுகள், அட்டகாசமான கொம்பியூட்டர் இசையில் கவனத்தைத் திருப்பத் தொடங்கியதுடன் நில்லாது,உலகமயமாக்கலுக்கேற்ப உலகிலுள்ள வித்தியாசம் வித்தியாசமான இசைகளை நோக்கி எட்டிப்பார்க்கத்தொடங்கினர். இந்த வேளையில் காலமாற்றத்துக்கு ஏற்ப மணிரத்னத்தால் அறிமுகமானர் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

                  Inline image 5

 

ரஹ்மான் அறிமுகமாகும் போது மிகச்சிறிய வயது. எனவே இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிவதில்அவருக்குக் கஷ்டம் இருக்கவில்லை. அதனால் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உலகின் பல விதமானஇசைச்சேர்க்கைகளையும் ,இசைக்கருவிகளையும் தமிழிசையுலகில் அறிமுகப் படுத்தினார். அப்படி அவர்jazz ஐயும் அறிமுகப்படுத்தினார். அந்தப் பாட்டுத்தான் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் சக்கைபோடுபோட்ட முக்காலா ..முக்காபுலா..

இந்தப் பாட்டில் பொங்கசையே போன்ற ஆனால் பொங்கசிலும் பார்க்க நவீனமானதும் பெரிதானதுமான ஒருஇசைக்கருவியை பயன்படுத்தினார் அதன் பெயர்  Tumba (drum) ஆகும். முக்காலா பாட்டுக்கு இந்த Tumba (drum) ஆற்றிய பங்கிருக்கே… அப்பாடா அதைப் பற்றி விளக்கத்தேவையில்லை, காரணம் அது உலகத்துக்கேதெரிந்த விடயம்.

 

இந்தப் பாட்டுப் பெற்ற அமோக வரவேற்பின் பின் மீண்டும் அனேகமான இசையமைப்பாளர்கள் பொங்கொஸ்போன்ற ஆனால் அதைவிட நவீனமான கொங்கோ, ரும்பா போன்ற இசைக்கருவிகளை அதிகமாக துள்ளலிசைக்கு பாவிப்பதைக் கேட்ட்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் எனக்கென்னமோ எம்.எஸ்.வி.மற்றும் இசைஞானி அழவுக்கு அவற்றை ஆழமாக ஒருவரும் இப்போ பயன்படுத்துவதில்லை என்றஎண்ணம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.