Category: குறும்படம்

ஏழு தோட்டாக்கள் / சின்னப்பயல்

கௌரி லங்கேஷ்

கௌரி லங்கேஷ்

‘ஐ யாம் கௌரி’ நேற்று சாயங்காலம் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி அரங்கத்தில் திரையிடப் பட்டது. அரங்கு நிறைந்த மௌனம். ஆங்கிலம் மட்டுமே பிழையின்றி எழுதிப்பேசிக் கொண்டிருந்த கௌரி, கன்னடத்திலும் வெகு குறுகிய காலத்திலேயே பத்திகள் எழுதுமளவுக்கு தேர்ந்தார். பத்திரிகைகளில் வரும் எழுத்துப்பிழைகளை சரிபார்க்கும் அளவுக்கு முன்னேறினார்.

பிறப்பால் கன்னடராயினும் ஆங்கில வழிக்கல்வி பயின்றவர். பங்காளிச்சண்டையில் ‘லங்கேஷ் பத்திகே’ கை நழுவிப்போன போது கொஞ்சமும் அசராமல் இரண்டே வாரங்களில் ‘கௌரி லங்கேஷ் பத்ரிகே’ என ஒன்றைத்தொடங்கி இன்று வரை அதை நடத்திக்கொண்டிருந்தார். எடுத்துக்கொண்ட பிரச்னைகள் அவரை இந்த அளவிற்கு வன்முறைக்கு இலக்காக்கியிருக்கிறது. பழங்குடியினரின் வாழ்வாதாரம், ஜேஎன்யூ மாணவர்கள் கன்னையா குமார்/ஷீலா ரஷீத் போன்றவர்களை அரவணைத்துச்சென்றது, ஆர் எஸ் எஸ்ஸிற்கு கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்த்துப்பேசியது என.

ஐந்து மணிக்கு எனக்கூறியிருந்த போதும் , படம் திரையிட தாமதமானது. இயக்குநர் தீப்பு மன்னிப்புக்கூறிக்கொண்டு படத்தை தொடங்கி வைத்தார். தங்கு தடையின்றி கௌரி லங்கேஷின் பேச்சு, அவரது நடவடிக்கைகள் என தொடர்ந்தும் சம்பவங்கள் கோவையாக வந்து விழுந்தன.

ஒரு ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிக்கூறு படம் ஓடியிருக்கும். அரங்கில் அவரது அன்னை, மற்றும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர். வழக்கம்போல எல்லா அம்மாக்களையும் போல என் மகள் டாக்டராக வேணும் என்றுதான் விரும்பினேன் அவள் தான் ஜர்னலிஸம் எடுத்துப்படிக்கப்போகிறேன் என அதையே படித்து பின் முழுநேர பணியாக்கிக்கொண்டார்.

லிங்காயத் பிரச்னைகளையும் முன்னெடுத்துச்சென்றிருக்கிறார். லிங்காயத் வகுப்பைச்சேர்ந்த துறவிகளும் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்துக்கொண்டதைக்காண நேர்ந்தது. இஸ்லாமியர்களும் பர்தாக்களுடன் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். Communal Harmony என்றால் என்னவெனப்போதிக்க முயன்றவருக்கு பரிசு ஏழு தோட்டாக்கள்.

கௌரியால் கர்நாடக முதலமைச்சரை ஒரு ஃபோன் காலில் அழைத்து அவரை சந்திக்கமுடிந்ததையும் நினைவு கூர்ந்தனர். எல்லோரும் வெகு எளிதில் அணுகும்படியான தூரத்திலேயே இருந்திருக்கிறார். திருநங்கைகளுடன் அவர் பேணிய உறவு, பழங்குடியினருடன் அவர் உரையாடியது என அத்தனையும் ஆவணக்கோப்பில் பதிவாகியிருக்கிறது.

அவர் சுடப்பட்ட அன்று உடன் வெளியான அத்தனை ட்வீட்களையும் இயக்குநர் தீப்பு’ படத்தில் ஆவணப்படுத்திருக்கிறார். மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதில் என்ன தவறு என்று காரசாரமாக அவர் என்ன செய்ய விழைந்தார் என அறிந்துகொள்ளாமலேயே முன்கூட்டிய அவதானிப்பில் அள்ளித் தெளித்திருந்த கோலங்களைப் பதிவு செய்திருந்தார்.

அவருடன் பணியாற்றிய பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் ஆவணப்படத்தில் பேசியி ருக்கின்றனர். எத்தனை பெரிய பத்திரிக்கைகளிலும் சம்பளம் நேரத்துக்கு கிடைப்பதில்லை எனினும் கௌரி லங்கே ஷ் பத்ரிக்கையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினத்தன்று சம்பளம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். கடைசி செப்டம்பர் மாதச்சம்பளத்துக்கென கௌரி லங்கேஷ் தமது எல் ஐ சி பாலிசியை சரண்டர் செய்திருப்பதாகவும் அதன் மூலம் இம்மாதம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்ததை எண்ணி மாய்ந்து போகிறார் பதிப்பாளர்.

தொடர்ந்தும் பத்திரிக்கை நடக்கும் என மேடையில் முழங்குகிறார். இரவு இரண்டு மணி எனப்பாராது விமான நிலையம் வரை வந்து தம்மை அன்புடன் அழைத்துச்சென்றதை நினைவு கூறுகிறார் கன்னையா குமார்/மேவானி. பின்னரும் காலை பத்து மணியளவில் தானே காரை ஓட்டிக்கொண்டு இவர்களை கூட்டம் நடக்கும் இடத்திற்கும் அழைத்துச்செல்கிறார். உழைக்கத்தயங்காத கௌரி.

இந்த ஆவணப்படத்தயாரிப்பில் பங்கெடுத்துக்கொண்ட அத்தனை பேரும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் , ஏற்கனவே கௌரி லங்கேஷுடன் இணைந்து பணியாற்றியவர்கள். இதே அரங்கில் தான் சென்ற ஆண்டு ஷீலா ரஷீத்’ காஷ்மீர் போராளியின் பேச்சும் நடந்தது. படம் முடிந்ததும் அரங்கின் வெளியில் இயக்குநரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம் நான் ஸ்ரீனி மற்றும் தோழர் சௌரி.

இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் திரையிட திட்டமிட்டிருப்பதை எங்களிடம் கூறினார் தீப்பு. எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பிரதி அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்தேன். தோழர் சௌரியும் அதையே வேண்டிக் கொண்டார். இரண்டொரு நாளில் இந்தப்படத்தை யூட்யூபில் பதிவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிவித்தார் இயக்குநர்.

படம் முடிந்ததும் வழக்கமாக நாற்காலிகள் நகற்றுவதும். சலசலவென பேச்சு கிளம்புவதும் இயல்பு. அப்படி ஏதும் இங்கு அரங்கில் நிகழவேயில்லை. சட்டென விளக்குகள் எரியத் தொடங்கியதும் அவசர அவசரமாக கண்ணீரைத்துடைத்துக்கொள்ள எத்தனித்தனர் அனைவரும். அரங்கில் மயான அமைதி. மைக் எடுத்து இயக்குநர் தீப்பு பேசத்துவங்கியதுமே நிலமை சகஜமானது. எழுத்தை எதிர் எழுத்தால் சரி செய்ய வேண்டுமென்ற காலமெல்லாம் போயே போய்விட்டது.

ஆவணப்படத்தில் பணியாற்றிய அத்தனை பெயர்களும் பட்டியலிட்ட பிறகு ,கௌரி நம்மை நோக்கி ‘உங்களுக்கென இன்னமும் இரண்டொரு வார்த்தைகள் உள்ளது பிறகு பேசுகிறேன்’ என்று கூறியதும் திரை விழுந்தது. அவர் எப்போதும் பேசுவார் நம்முடன் அவரின் எழுத்துகள் மூலம் அதை யாராலும் தடுக்க இயலாது. .

•••

– (chinnappayal@gmail.com)

பொதுவும் சிறப்புமாக நகரும் பிம்பங்கள் : சில தமிழ் ஆவணப்படங்களை முன்வைத்து. .. / அ. ராமசாமி

தமிழ் வெளியைப் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படங்களைச் சென்னையில் மூன்று இடங்களில், ஒருவாரத்திற்குத் (மார்ச் 13-19)திரையிட்டார் அமுதன். அமுதனின் அழைப்பை ஏற்றுக் கடைசி நாள் பெரியார் திடலிற்குத் தான் போக முடிந்தது. கடைசிநாளில் கடைசியாகத் திரையிடப்படும் படம் கக்கூஸ் என்று அறிவுப்பும் இருந்தது. படம் ஓடக்கூடிய நேரம் 105 நிமிடங்கள். நான் பயணிக்கவேண்டிய நெல்லைவிரைவுரயில் கிளம்பும் நேரம். 20.10. அந்தப் படத்தைப் பார்க்கமுடியாமல் கிளம்ப வேண்டிய சூழல்.

சொர்ணவேலின் ‘தங்கம்’, டாடா குழுமத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பெண்கவிகளைப் பற்றிய ‘அவள் எழுதுகிறாள்’ சோமிதரனின் ‘முள்ளிவாய்க்கால் சாஹா’, வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் ‘பிளவுண்ட நகரம்: சென்னை’ ஆகியன முடியும்போது நேரம் 19.30. திவ்யா பாரதியின் கக்கூஸ்,19.30 -க்கு ஆரம்பித்தாலும் முடியும்போது 21.15 ஆகிவிடும். பயணத்தைத் தள்ளிப்போட முடியாது. அன்று கிளம்பிவிட்டேன். ஆனால் எண்ணிப் பத்தே நாளில் அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் திருநெல்வேலி அலுவலகத்தில் 29.03.2017 அன்று கக்கூஸ் படத்தைப் பார்த்தேன். இந்தப் படங்கள் உருவாக்கியுள்ள மனநிலை எனது பழைய நிலைபாட்டில் மாற்றத்தைக் கோருகின்றன.

வாரத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட புனைவுப் படங்களைப் பள்ளிப்படிப்புக்காலம் தொடங்கிப் பார்த்துவருகிறேன். பார்த்து முடித்தபின் குப்பையானதொரு சினிமாவைப் பொறுமையாகப் பார்த்துமுடித்துவிட்டோமே என்று பாராட்டிக்கொள்ளும் மனம், இப்போதும் ஆவணப் படங்களைப் பார்க்கும்போது அப்படியொரு பாராட்டைத் தனக்குத்தானே வழங்கிக் கொள்வதில்லை. அதற்கான காரணங்கள் இவைதான் என்றும் சொல்லமுடியவில்லை. பள்ளிக்காலப் பழக்கம் அல்லது கொண்டாட்டம் புனைவுப்படங்கள் என்றால் ஆய்வுப் பட்டக்காலத் தேடலே ஆவணப்படங்கள்.

ஆவணப்படங்களைப் பார்க்கச் செல்லும்போது ஒரு தளர்வான மனநிலை உருவாவது அண்மைக்கால மனநிலை என்று சொல்லமுடியாது. தொடக்கக் காலங்களில் அப்படியொரு தளர்வு மனநிலை இருந்ததில்லை. பாண்டிச்சேரியில் இருந்த காலங்களில் நடந்த ஆவணப்பட விழாக்கள், திரையிடல்கள் வழியாக உருவான தளர்வு மனநிலை, ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தைக்கூட விலக்கிவிட்டன. புனைவுப் படங்களைப் பார்க்கத் தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பின்பே ஆவணப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் உருவானது. இப்படித்தான் இருக்கும் என்ற முன் அனுமானமின்றைப் புனைவுப்படங்களைப் பார்க்கப்போவதுபோல ஆவணப்படங்களைப் பார்க்கப் போகமுடியாது என்பது ஒருபெருந்தடையாகவே இருக்கிறது.

எப்போதும்போல இந்தத் திரையிடல்கள் நிகழ்வையும் முன்னரே எனக்குத் தெரிவிக்கவே செய்தார். எனக்குக் கடைசிநாள்தான் போக முடிந்த்து. இந்தத் திரையிடல்களில் காண்பிக்கப்பட்ட 19 படங்களில் பாதிக்கும் மேல் முன்பே பார்த்தவைகளே. என்றாலும் ஒரே நேரத்தில் பார்த்தால் அவற்றை முன்வைத்து ஆவணப்படங்கள் உருவாக்கும் தளர்வுமனநிலை குறித்து விரிவாகப் பேசியிருக்க முடியும். நெல்லை மாதிரியான கிராமந்தர நகரத்தில் வசிக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு அந்த வாய்ப்புகள் குறைவுதான். சென்னைவாசிகளுக்கும்கூட அது சாத்தியம் என்று சொல்லமுடியாது. ஆனால் அமுதன் சென்னைவாசிகளுக்குத் தொடர்ந்து அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கத்தந்துகொண்டே இருக்கிறார். அதுவும் இலவசமாகவே உருவாக்குகிறார் என்பதுதான் ஆச்சரியம்.

தமிழ்வெளியைக் களமாகக் கொண்ட இந்த ஆவணப்படங்களில் சோமிதரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திவ்யா பாரதி ஆகியோரின் மூன்று படங்களை முக்கியமான படங்களாகச் சொல்லவேண்டும். அவை கவனப்படுத்தியுள்ள நிகழ்வுகளுக்காக அல்லாமல் அவை சொல்லப்பட்ட முறை அல்லது கிளத்துதல் காரணமாகவும் அடுக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளதற்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. சினிமாக்கள் அவை புனைவாக இருந்தாலும் ஆவணப்படமாக இருந்தாலும் அடிப்படைகள் ஒன்றுதான். பிம்பங்களாலும்(Images), நகர்வுகளின்வழி காட்சிப்படுத்தப்படும் உத்தியாலும்(Movements of Camera) , அவற்றை வெட்டியடுக்கப்படும்(Editing and Montage) நிலைபாட்டாலும் முன்வைக்கும் சொல்முறையாலும்(Narratology) கவனிக்கப்பட வேண்டிய கலைவடிவம். இதனை உணர்ந்தவர்களாக இம்மூன்று இயக்குநரும் வெளிப்பட்டுள்ளனர் என்பதாலேயே கவனிக்கத்தக்க படங்கள் எனச்சொல்லத் தோன்றுகிறது.

சக்ரவர்த்தியின் சென்னை

download (45)

வளர்ச்சியடையும் சென்னை மாநகரம் ஒவ்வொரு திசையிலும் சம அளவில் விரியாமல் தெற்கிலும் மேற்கிலும் தொழில் கூடங்களால் வீங்கிப் பெருத்துக்கொண்டிருக்கிறது எனக் காட்டுகிறது. தென்சென்னையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக விரிகின்றன. அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் பழைய தொழிற்பேட்டைகளோடு, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்ச் சாலைகளில் தொடங்கப்படும் கனரகத் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் பலனடையப்போகும் மனிதர்கள் சென்னையின் மனிதர்கள்தானா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அத்தோடு மாநகரத்தின் குப்பைகளைக் கொட்டுமிடமாக ஆக்கப்பட்ட வடசென்னை, விரிவாக்கத்தை/வளர்ச்சியை அடையாமல் தடுக்கப்பட்ட அரசியலையும் பேசுகிறது. மொத்தத்தில் பிளவு என்பதைப் பொருளாதார அடிப்படையில் பார்த்துள்ள இந்த ஆவணப்படம் சென்னை நகர மக்கள் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களையும் அவற்றிற்கான நாட்களையும் விடாப்பிடியாகத் தக்கவைக்கப் போராடுவதையும் காட்டுகின்றது. இது ஒருவிதத்தில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சென்னை. அரைநூற்றாண்டுக்காலச் சென்னை வாழ்க்கையால் அந்நகரின் சாலைகளிலும், பலவகையான நிகழ்வுகள் நடக்கும் வெளிகளிலும், ஓய்வெடுக்கும் பிரதேசங்களிலும் அலைந்து திரிந்த ஒருவரின் பார்வையாக அந்தப் படத்தின் காட்சித் தொகுப்புகள் இருந்தன.

நான் அவரைப்போலச் சென்னைவாசி அல்ல. சென்னைக்கு எப்போதும் விருந்தாளிதான். எனது முதல் சென்னைப்பயணம் 1982. அரசுப்பணி ஒன்றிற்கான நேர்காணலுக்காக வந்தது. அப்போது தொடங்கி ஆண்டுதோறும் வந்துபோய்க் கொண்டே இருக்கிறேன். அதிக அளவில் ஒருவாரம்வரை இரவிலும் பகலிலும் இங்கே தங்கிச் சுற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் சென்னை நகரம், தென் தமிழ்நாட்டுக் கிராமத்து மனிதர்கள் எங்களுக்கும் இந்த மாநகரில் பங்கிருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் அடையாளங்களைப் பார்க்கிறேன்.

பண்பாட்டு அடையாளங்களை நிலையான காட்சிகளாகவும் அசையும் பிம்பங்களாகவும் விழாக்களாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் . அந்தவகையிலும் சென்னை: பிளவுபட்ட நகரமாகவே இருக்கிறது. இதனைப் பிம்பங்களாக அடுக்கிப் பார்ப்பதைப் போல புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயந்தன், சா.கந்தசாமி, அசோகமித்திரன், திலகவதி, சுஜாதா, திலீப்குமார், தொடங்கி அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அரவிந்தன், விநாயகமுருகன், கரன் கார்க்கி, லக்ஷ்மிசரவணக்குமார், சரவணன் சந்திரன் என நீளும் புனைகதைப்பரப்பிலும் தேடிப்பார்க்கலாம். அப்படியான ஆய்வு சென்னையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும்.

சோமிதரனின் முள்ளிவாய்க்கால்

download (46)

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை எழுத்தாகவும் காட்சிகளாகவும் உலகம் கவனித்துக் கடந்த ஒன்று. வெற்றியும் தோல்வியுமாக 30 ஆண்டுகள் நடந்த விடுதலைப்போராட்டத்தை முடிவுக்கொண்டுவந்த வெளியின் குறியீடு, விடுதலையை விரும்பிய ஒரு கூட்டம் / இனம் குரூரமாக அந்த நாட்டு அரசாங்கத்தால் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசிக் கொல்லப்பட்ட போர்க்களம்.

இந்தப் போர்க்களக் காட்சிகளைத் தமிழ்க்கவி, தமிழ்நதி, தேவகாந்தன், சயந்தன், குணா கவியழகன் போன்றவர்களின் நாவல்களிலும், ராகவன், தமிழினி போன்றவர்களின் சிறுகதைகளிலும் வாசித்திருக்கிறேன். துயரங்களையும் வலிகளையும் நேரடியாகப் பதிவுசெய்யும் காட்சிச் சித்திரங்கள் அவை. ஆனால் சோமிதரனின் ஆவணப்படம் நேரடிக் காட்சிகளை ஆவணப்படுத்துதலை முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல், குற்றவுணர்வு கொண்ட உலகின் மனச்சாட்சியை நோக்கிக் கச்சிதமாக வாதங்களைக் காட்சிகளாக அடுக்கிக் காட்டும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த ஆவணங்களை அடுக்குவதினூடே ஆதாரமான சாட்சியங்களாக இரண்டு குரல்களைத்தேடிப் பயன்படுத்தியுள்ளார். ஒன்று பெண்குரல்; லண்டனில் இருந்து. . இன்னான்று ஆண்குரல்; ஆஸ்திரேலியா.இருவரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப்பின்- கோரத்தை அனுபவித்துவிட்டு அரசின் வழியாகவே வெளியே வந்தவர்கள். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்புகள், பக்கத்து நாடான இந்தியா, அரச வன்முறைக்கு உதவிய ஆயுத வியாபார நாடுகள் என அனைவரும் பதில் சொல்லவேண்டிய கேள்விகளாகக் காட்சிகள் நகர்கின்றன. பதில்களை மறைக்கும் இருள்மேகங்களிடம் என்ன பதில்கள் கிடைக்கும்?

கக்கூஸ்

download (44)

திவ்யா பாரதியின் கக்கூஸ் தமிழ்நாடு என்னும் மொத்த நிலப்பரப்பிலும் குறிப்பிட்ட ஒரு தொழிலில் ஈடுபடும் மனிதக்கூட்டத்தின் மீது நடத்தப்படும் பலதள வன்முறைகளைச் சொற்களாகவும் காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும் அடுக்கிக் காட்டியுள்ளது. மதுரை, விழுப்புரம், விருதுநகர், திருநெல்வேலி எனப் பலநகரங்களிலும் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் மனிதர்களுக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய சலுகைகள், உரிமைகள் போன்றவற்றை மறுக்கும் நிலைக்குப் பின்னே இருக்கும் ஒதுக்கல்களை முன்வைக்கிறது திவ்யாபாரதி படம். இந்திய சமூகத்தின் கட்டமைப்பை உருவாக்கியுள்ள சாதியக் கருத்தியலே, நிகழ்கால அரசியலையும், அரசுகளையும் அதனை இயக்கும் மனிதர்களிடமும் ஆழமாகப் படிந்து கிடக்கிறது என்பதைச் சொல்லும் குரல்கள் நேரடியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஆனால் கேள்விகள் முழுவதும் அமைப்புகளை நோக்கியே நீள்கின்றன. இதற்குப் பதிலாகப் பார்வையாளர்களை நோக்கியும் ஆழமான கேள்விகள் நீண்டிருக்க வேண்டியன. ஏனென்றால் மலங்கழித்தல் அதனைச் சுத்திகரித்தல் என்பது இந்திய சமூகத்தில் நிகழும் ஒன்று மட்டுமல்ல. உலகம் முழுவது நடக்கும் ஒன்று. பெரும்பாலான நாடுகளில் இது ஒரு தொழிலாகவும் பாதுகாப்பான கருவிகள் மூலமும் நடக்கும்போது இந்தியாவில் / தமிழ்நாட்டில் அப்படி நடக்காமல் தடுக்கப்படுவதில் செய்வதில் அமைப்புகள் மட்டுமே பொறுப்பேற்கவேண்டியன என்பதை விடவும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது.

இந்திய சமூகத்தை விழிப்படைந்த சமூகமாக – நாகரிகமடைந்த சமூகமாக – மனித உரிமைகளைப் பேணும் சமூகமாக ஆக்குவதற்கான கல்வியைத் தராமல் திசைதிருப்பும் கல்வி நிறுவனங்களுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. இதுபோன்றவற்றை அடிப்படைக்கல்வியாகக் கற்பிக்கத் தவறும் நமது கற்பித்தல் முறை கோளாற கற்கைமுறை. அதன்மீதும் இப்படம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்க இந்தப் படத்தின் சொல்முறையில் சிறிய மாற்றம் ஒன்றைச் செய்திருந்தாலே போதும்.

கக்கூஸ் பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்வதின் மூலம் மற்றபடங்களிலிருந்து வேறுபடுகிறது. அதன் மூலம் ஆவணப்படம் என்ற வகைப்பாட்டிலிருந்து புனைவுப்படம் என்ற வகைக்குள் நகரும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது என்றுகூடச் சொல்ல்லாம். மதுரை ஆரப்ப்ப்பாளையத்தில் தான் நேரடியாகச் சந்தித்த அனுபவத்திலிருந்து உந்துதல் பெற்றுதான் இந்தப் பெரும்படத்தைத் தமிழ்நாடென்னும் பரப்பில் எடுத்துள்ளார். இந்தக்கூறு – தூண்டுதல் தரும் அந்த நிகழ்வு சிறப்புப் புள்ளி. அதுவே மொத்தப்படத்தையும் பொதுத்தள விவாதமாக மாற்றும் முயற்சியாக விரித்துள்ளது. முள்ளிவாய்க்கால் சாஹா, சென்னை: பிளவுபட்ட நகரம் மற்ற இரண்டு படங்களிலும்கூட இந்தப் பொது மற்றும் சிறப்பு என்ற தளங்கள் செயல்படவே செய்துள்ளன.

சென்னையை மதம் சார்ந்த நிகழ்வுகளைச் சிறப்புக்கூறுகளாகக் கவனப்படுத்தி அவற்றைத் தக்கவைக்க முயலும் பாரம்பரியச் சென்னை வெளியால் விரிந்துகொண்டிருப்பதின் மூலம் பின் நவீனத்துவ வெளியோடு மோதிப்பார்ப்பதை – பிளவுண்ட நகரமாகக் காட்டுகிறது. முள்ளிவாய்க்கால் சாஹாவிலும் போரின் குரூரமாக நகரும் தகவல் பிம்பங்களின் மீது குரல் பதிவாக நகரும் (Voice Over) கேள்விகளும் விவரணைகளும் பொது- சிறப்புத் தளங்களை உருவாக்குகின்றன. இப்படியான அடுக்குதல் மூலம் ஆவணப்படங்கள் உருவாக்கும் தளர்வுநிலையை இல்லாமல் ஆக்கும் வலிமையைக் கொண்டனவாக ஆகியிருக்கின்றன இந்த மூன்று படங்களும். இப்படங்கள் தமிழர்கள் பார்க்கவும் விவாதிக்கவும் வேண்டிய படங்கள்

•••••••••••••••••••

லீஸா ஸ்டாஃபர் – பயோக்ராஃபியா. / சின்னப்பயல்

images-15

லீஸா ஸ்டாஃபர் – நெய்தல் கலை ஓவியங்கள் புனையும் கலைஞர். சுவிட்ஸர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. நேஷ்னல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்’ பெங்களூரில் சென்றிருந்தேன். நிறைய நூல் நெய்து அதில் ஓவியங்கள் உண்டாக்கி காட்சிப்படுத்தும் கலைஞர். பி ஆர் விஸ்வநாத்’ என்ற ஒளிப்பதிவாளர்/ ஓவியக்கலைஞர் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பயோக்ராஃபியா’ என்ற பெயரில். “கலை என்பது சமூகத்தை திருத்துவதற்கோ இல்லை பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ இல்லை” என்கிறார்.

முழுக்க வாழ்க்கை வரலாறு போலல்லாது , அவரின் பணிகளினூடே இவர் காமிராவை வைத்து எடுத்தது போல கொஞ்சமும் சலிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடும் டாக்குமென்ட்டரி. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார். பல சொற்கள் கிட்டாது தவித்து யோசித்து , ஸ்விஸ் மொழியிலிருந்து தமக்குள் மொழி பெயர்த்துக்கொண்டு பின்னர் சொல்கிறார். அது வரை காமிரா அசையாது அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அவரவர்க்கான மொழி என்று ஒன்று உண்டு. ஜெர்மன்/இட்டாலியன்/ போல ஸ்விஸ் மொழியும் தமது சொற்களைக்கொண்டு விளங்குவதே. நான் ப்ராக்(செக் குடியரசு)கில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது கண்கூடாக அதைக்கண்டிருக்கிறேன். தமிழனுக்கு இந்தி எங்கனம் ஒரு வெறுப்போ, காலனியாதிக்கம் செலுத்தும் மொழி என்ற தேஸ்யம் உள்ளது போல ஐரொப்பிய பிற மொழி பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் மேல் அத்தனை வெறுப்பு. எனக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது ( இன்னமும் தான் 🙂 ).

அப்போது சிலர் கூறுவர். ஜெர்மனோ இல்லை கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் இங்கு சமாளிக்கலாம் என. கொஞ்சமும் ஸ்னானப்ரப்தியே இல்லாத வேறு குடும்பத்தை சேர்ந்த மொழி அது. அது போல அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் பிணக்கு. இருப்பினும் வலுவில் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார் லீஸா. என்ன காரணம் என ஊகித்தேன். படம் எடுப்பவர் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் தாம் உரையாடுவது அவருக்கு புரிய வேணும் என்று கருதி பேசியிருக்கலாம். இடையிடையே அவர்தம் மகள் சொற்களை எடுத்துக் கொடுக்கிறார். உண்மையைச்சொன்னால் அவரின் பெயரும் அவர்தம் ஓவியங்களும் எனக்குப் பரிச்சயமானது இந்த ஆவணப்படத்தின் மூலமாகத்தான். ஒருவேளை இதையும் அவர் ஊகித்திருக்கலாம் உலகம் முழுக்க பரவ ஆங்கிலத்தில் தான் பேசவேணும் என்று. மொழி மற்றும் சொற்களுக்கு முன்னரே கலை தோன்றிவிட்டது என்று அறுதியிட்டு கூறுகிறார் லீஸா. இதுவும் கூட காரணமாகக்கூட இருக்கலாம்.

இருப்பினும் என்னியோ மரிக்கொன் தமது 80ஆவது வயதில் ஆஸ்கர் பரிசு மேடையில் தம் தாய்மொழியான இட்டாலியனிலேயே பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு கருத்து.

முதற்கணவர் உடல் நலக்குறைவால் விரைவில் இறந்துவிட்டதையும் பின்னர் ஒரு பெயின்டருடன் தாம் இணைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது உறவு அத்தனை சுகமாயில்லை. அந்த பெயின்ட்டர் இவரை கீழ்ப்படிந்து நடக்கும் படி பணித்ததையும் , தமது ஓவியங்களின் மீது பொறாமை கொண்டதாகவும் வருந்துகிறார். தம்பதியருக்குள் இப்படி ஒரு பிணக்கு. Jealous என்ற சொல்லை ஜெலூஸ் என்று உச்சரிக்கிறார். பெண்கள் ஆணை சார்ந்திருக்கவேணும் , பணம் சம்பாதிப்பது ஆணுக்குரியது(ஹ்ம் அங்குமாடா இதெல்லாம் ?!) இப்படிக்கும் இதெல்லாம் 70-80களில் நடக்கிறது. பின்னர் அந்த வலிகொடுக்கும் உறவிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளிவந்து தம் மகள்களோடு ஓவியப்பணியை தொடர்ந்திருக்கிறார்.

Tapestry என்ற பல நிறங்கள் கொண்ட நூல்களை சட்டகத்தில் வைத்துக்கொண்டு அதில் ஓவியங்களை உருவாக்குதல் இவரின் சிறப்பு. க்ராபிக் டிசைன்ஸ், ஓவியங்கள் என பல படிப்புகளை கல்லூரியில் பயின்று பின்னர் அதையே தொழிலாக கொண்டிருக்கிறார் லீஸா. தமது முதற்கணவர் வேண்டுகோளுக்கிணங்க தாவரவியல் ஓவியங்களை வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அவர் ஒரு தாவரவியல் நிபுணராக இருந்திருக்கிறார் எனினும் 36 வயதில் இறந்து விட்டதை நினைவு கூர்கிறார். இந்த டாபிஸ்ட்ரி பெண்களுக்கான கலை என்பதில் உறுதியாக இருக்கிறார். இயல்பிலேயே நெய்தலில் பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்றும் கூறுகிறார்.

டாப்பிஸ்ட்ரி மட்டுமல்லாது கண்ணாடியை சிறு கத்தி கொண்டு கீறி அதில் ஓவியங்களை உண்டாக்கி பின் வண்ணம் தீட்டும் கலையும் இவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அத்தனை தேவாலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக்காணலாம். வெளிப்புற வழி சூரிய ஒளி அக்கண்ணாடியில் பட்டு சர்ச்சுக்குள் படரும் நிழலில் ஓவியம் துலங்கும். அத்தனை வண்ணங்களும் ஜெகஜ்ஜோதியாக ஒளிரும். நான்கு காலங்கள் என்ற ஓவியம் நான்கு கண்ணாடிகளில் செய்து அதை சர்ச்சின் ஜன்னல்களில் பொருத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.பதினைந்துக்கு பத்தடி என்ற அளவில் இந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

கம்ப்யூட்டர் க்றாபிக்ஸ் பற்றி அத்தனை விருப்பின்றியே பேசுகிறார். 80களில் அப்போது வெளிவந்த தொழில் நுட்பத்தை அவர் வெறுத்திருக்கிறார். அந்தச்சமயமே அவர் மரபு நோக்கி நகர்ந்து ட்ரெடிஷனல் ஓவியங்களை டாபிஸ்ட்ரியில் நெய்யத்தொடங்கியிருக்கிறார். உலகம் முன்னோக்கி கலைகளை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல முற்படும் போது அவர் பின்னோக்கி தன்முனைப்புடன் தம் கைகள் கொண்டு உருவாக்கும் கைவினைக்கலஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்.

அவர் கண்களில் அந்த வெறுப்பு மண்டிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அதுவரை பென்சிலும் பேப்பருமாக வரைந்து கொண்டிருந்தவர் , மிகுந்த உடலை வருத்தும் டாப்பிஸ்ட்ட்ரியில் கவனம் செலுத்தத்தொடங்கி அவரின் புறங்கைகள் உள்ளுக்குள் வளைந்து போயிருக்கின்றன. கூன் விழுந்து நெஞ்சு முன்பக்கம் நகர்ந்து உருவம் சொல்லிக்கொள்ளும் படியாகவே இல்லை அவருக்கு, கணினியும் தொழில் நுட்பமும் எத்தனை வெறுப்பை அவருள் விதைத்திருக்க வேணும் என்பது தெளிவு. விரல்களும் புறங்கைகளும் அந்த க்றோஷா/கொண்டை ஊசிபோல வளைந்து போனதன் காரணமாக வழக்கமாக வாசிக்கும் பியானோவை இப்போதெல்லாம் வாசிக்க முடியவில்லை என வருந்துகிறார்.

டாப்பிஸ்ட்ரி தவிர, தனியாக உள்ளூர் ஸ்விஸ் கடிகார நிறுவனங்களுக்கு லெட்டர் பேடுகளும், லோகோக்களும் வரைந்து கொடுத்திருப்பதை ஆர்வத்துடன் காட்டுகிறார். எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. பின்னர் விஸ்வநாத்துடன் காரில் பயணித்து தமது ஓவியங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். ஒரு பெரிய டப்பிஸ்ட்ரி வொர்க், கிட்டத்தட்ட 40 அடிகள் உயரமும், 10 அடி அகலமும் கொண்ட டாப்பிஸ்ட்ரியை ஓவியக் கண்காட்சி நடக்கும் ஆர்ட் கேலரியில் காண்பிக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக அதற்கென உழைத்திருப்பதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட கலையால் சமூகத்திற்கு என்ன பயன் என்ற விஸ்வநாத்தின் கேள்விக்கு , இதனால் ஒரு பயனும் இல்லை எல்லாம் எனது விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டவையே எனத்தெளிவாக பதிலளிக்கிறார் லீஸா. இருப்பினும் ஸ்விஸ் உள்ளூர் கலைகளில் வேறு வெளிநாட்டுத்தாக்கங்களை குறித்து அச்சம் தெரிவிக்கும் அதே லீஸா, கொரியன் பாதிப்பில் தாம் ஒரு டாப்பிஸ்ட்ரி செய்திருப்பதையும் காண்பிப்பது நகை முரண். இருப்பினும் இவரின் மகள்கள் யாரும் இப்பணியை தொடராது இசை மற்றும் இன்னபிற கலைகளை பயிற்சி செய்பவர்களாகவே இருக்கின்றனர். ஒரு விஷயம் சொன்னார் விஸ்வநாத், பொதுவாக தாயை பேட்டி எடுக்கும்போது மகள்களோ/மகன்களோ கூட இருப்பதில்லை தாமுண்டு தம் வேலையுண்டு என்றேயிருப்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் இங்கு தலைகீழ். கூடவே பயணிக்கின்றனர் ஆவணப்படம் முழுக்க.

பின்னர் படம் முடிந்ததும் விஸ்வநாத் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நல்ல சுவாரசியமான கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார். எனது கேள்விகள் இவை, ஸ்விஸ்ஸீல் நிறைய கலைஞர்கள் இருந்த போதிலும் லீஸாவை தேர்ந்தெடுத்தது ஏன் ? சமூகத்திற்கு என் கலைகள் ஏதும் செய்யப்போவதில்லை என லீஸா கூறுகிறார். அதே கேள்வியை உங்களிடம் (விஸ்வநாத்திடம்) கேட்பின் என்ன பதிலுரைப்பீர்கள், இந்த டாக்குமென்ட்ரியை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததா (ஏனெனில் அவர் 2009-ல் மறைந்து விட்டார்). லீஸாவின் பணியில் அவர்தம் கலையில் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேணும் என்பதும், மேலும் மரபு வழி வந்த அவரின் கலைப்பயணம் குறித்தும் தாம் மகிழ்ந்ததாலும் படம் எடுக்கத்தோணியது என்றார். சமூகத்திற்கென , இந்தப்படத்தை ஒரு சிறுவன் பார்த்து அதன் மூலம் அவனின் கலையை வெளிக்கொணர இது உதவலாம் என்பதே எனது நோக்கம். இந்தப்படத்தின் ரஃப் கட்டை மட்டுமே அவரால் காண முடிந்தது,முழுக்க படம் எடுத்து/இசைக்கோர்ப்பெல்லாம் செய்து முடித்து முழுப்படமாக வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். பலமுறை இந்தப்படத்தின் பல வித நேரங்களில் அவரிடம் காண்பித்து பல மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய கலைஞர், ஒரு விக்கிப்பீடியா பக்கம் போலும் இல்லை.அவரைப்பற்றிய அவரின் ஓவியங்களின் படங்கள் எவையும் இணையத்தில் கிடைக்கவேயில்லை எனக்கு. (கிடைக்கும் படங்களும் வலைப்பூக்களும் இதே பெயரில் இருக்கும் வேறொரு அமேரிக்கப்பெண்மணியின் ஓவியங்களாகவே இருக்கிறது) ஒருவேளை அதுவே அவரின் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் கணினி கொண்டு உருவாக்கும் படைப்புகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருந்ததில்லை. விஸ்வநாத்தின் ஆவணம் மட்டுமே அந்தப்பணியை செய்திருக்கிறது. மேலும் கலை என்பது பிறரின் அங்கீகாரம் தேடுவதற்கெனச் செய்யப்படுவதில்லை , அது முட்டமுழுக்க அதை உருவாக்கும் கலைஞனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாகவே இருக்கவேணும் என்பதே விஸ்வநாத்தின் கூற்றாக இருக்கிறது.

•••

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திடம் புலம்பெயரா மக்கள் பேசும் ஆவணப்படம் / முருகபூபதி ( அவுஸ்திரேலியா )

download

download

(பார்த்தோம் சொல்கின்றோம் )

தங்கேஸ் பரம்சோதியின் அரிய ஆவண முயற்சி:

தெய்வங்கள் தூணிலுமிருக்கும் துரும்பிலும் இருக்கும் என்றுதான் எமது முன்னோர்கள் எமது பால்யகாலத்தில் சொல்லிவைத்தார்கள்.

அந்தத்தெய்வங்கள் கனவில் வந்தால் நாம்தான் வரம்கேட்போம் என நம்பியிருந்தேன். ஆனால், தெய்வங்கள் தங்களுக்கு வரம் கேட்குமா ? நாம் தூணிலும் துரும்பிலும் மாத்திரம் .இருந்தால் போதாது எங்களுக்கென்று கோயில்கள் கட்டு எனச்சொல்லும் தெய்வங்களும் எனக்காக பத்து முட்டை அடித்து என்பசி போக்கு என்று அம்மன்களும் கனவில் வந்து சொல்லும் கதைகளை கேட்கத்தொடங்கியிருக்கின்றோம்.

“கோயிலைக்கட்டு இந்துக்கள் மகிழ்ச்சி அடைவர். தேவாலயங்கள் கட்டு கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைவர், மசூதிகள் கட்டு இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியடைவர். பாடசாலைகளைக்கட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவர்” இவ்வாறு தமிழகத்தின் கர்மவீரர் காமராஜர் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதாக அறிந்திருக்கின்றோம்.

எங்கள் இலங்கையில், ஒருவர் இப்படிச்சொன்னார்:

“கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார், கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்” இவ்வாறு சொன்னவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர். சமூகச்செயற்பாட்டாளர். அவர் பிறந்து வாழ்ந்த ஊரில் ஒரு கண்ணகி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீர் அள்ளுவதற்கு மேல்சாதிக்காரர் அனுமதி தரவில்லை என்றபடியால் சாத்வீக முறையில் அந்தக்கோயில் முன்றலில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்தார்.

மேல்சாதிமான்கள் பொலிஸிடம் சொல்லி அவரை அடித்து இழுத்துச்செல்லவைத்தனர். அவர் பொலிஸிடம் அடிவாங்கி சில மாதங்களில் அற்பாயுளில் மறைந்தார்.

இச்சம்பவம் 1974 ஆம் ஆண்டில் நடந்தது. இது நிகழ்ந்த ஊரின் பெயர் புங்குடுதீவு. அவ்வாறு மரணித்தவர் எமது மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளி மு. தளையசிங்கம்.

download
இது நிகழ்ந்து 42 வருடங்களாகிவிட்டன. இந்த நான்கு தசாப்த காலத்தில் புங்குடுதீவில் நேர்ந்துள்ள மாற்றங்களை, இன்றும் அதே சாதிப்பிடிப்புடன் அவரவர்களுக்கு கோயில்கள் கட்டுகின்றார்கள்.

அதேசமயம் இந்தக்கொடுமைகளை சகிக்காமல் நன்னீர் ஊற்றுக்களும் மரணித்துவிட்டன என்பதை துல்லியமாக பதிவுசெய்துள்ளது ஆவணப்படுத்தியிருக்கிறது ‘ புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்’ என்ற ஆவணப்படம்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொண்ட பணிகளைப்பற்றி நீண்ட தொடரே எழுதமுடியும். தமது தாயகத்தில் போர் முடிந்தபின்னர், இதுவரையில் இலட்சக்கணக்கானோர் சென்று திரும்பியுள்ளனர்.

தங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று, ” இதுதான் எங்கள் ஊர், இவர்கள்தான் எமது உறவுகள், இங்குதான் நாம் பிறந்து வளர்ந்த வீடு இருக்கிறது” என்பதைக்காட்டி படங்களும் எடுத்து, தங்கள் முகநூல்களிலும் பதிவுசெய்துகொண்டிருக்கின்றனர்.

தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர் இங்கிலாந்தில் கிழக்கு இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தமது கலாநிதி பட்டப்படிப்பிற்கான மானிடவியல் கள ஆய்வுக்கற்கையை அடிப்படையாகக்கொண்டு புங்குடுதீவுக்குச்சென்று இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.

இதுவெறுமனே மானிடவியலை மாத்திரம் பேசவில்லை. சிதைந்துகொண்டிருக்கும் ஒரு அழகிய தீவின் தொன்மையை ஆத்மாவையும் பேசுகிறது.

தாயகத்தின் சொந்த நிலத்திற்கும் புகலிட மண்ணின் இரண்டக வாழ்வுக்கும் இடைப்பட்ட கானலையும் சித்திரிக்கிறது.

” இந்த மண் என் கால்களின் கீழுள்ள தூசிப்படலமல்ல

எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்துபோகாத உயிர்த்தளம்”

என்ற வரிகளுடன் இந்த ஆவணப்படம் தொடங்குகிறது.

இந்த உள்ளத்துணர்வை எம்மிடம் விட்டுச்சென்றவர் கவிஞர் சு. வில்வரத்தினம். இவரும் புங்குடுதீவைச்சேர்ந்த சிந்தனையாளர். இவரும் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து, திருகோணமலையில் மறைந்துவிட்டார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட மு. தளையசிங்கத்துடன் இணைந்து சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டவர்தான் கவிஞர் சு. வில்வரத்தினம்.

download-7
நீடித்த இனநெருக்கடியும் போர்ச்சூழலும் புங்குடுதீவில் வாழ்ந்த 20 ஆயிரம்பேருக்கு மேற்பட்டவர்களை விரட்டியபோது அவர்களில் ஒருவராக இடம்பெயர்ந்து, திருகோணமலைக்குச்சென்றார். இவ்வாறு உள்நாட்டுக்குள்ளேயே பல பிரதேசங்களுக்கும் அவ்வூர் மக்கள் சென்றனர். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் பரதேசிகளாய் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா என்று பறந்தனர்.

புங்குடுதீவில் 42 ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீருக்காக எங்கள் தளையசிங்கம் போராடி உயிர் நீத்த காலத்தில் பிறந்திருக்காத, தங்கேஸ் பரம்சோதி என்ற இளைஞர், அந்தத்தீவிலிருந்து புலம்பெயர்ந்து அந்நியம் சென்றவர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் எதிர்காலச்செயற்பாட்டுக்கும் வழங்கியிருக்கும் இந்த ஆவணப்படம் இலங்கை அரசை , வடமாகாண சபையை, எம்மவர்களின் மனச்சாட்சியை பிரசார வாடையே இன்றி கேள்விக்குட்படுத்துகின்றது.

இங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் பாரிய உள்ளுர் இடப்பெயர்வு, வெளிநாடு புலப்பெயர்வுகளினால் இந்தத்தீவின் நிலம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணமாக முன்னிறுத்தியிருக்கிறது.

இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தை இவ்வாறு சுருக்கமாகச்சொல்ல முடியும் என்ற பதிவையும் இதன் உறையில்(DVD Video Cover) காணமுடிகிறது.

ஆயுத யுத்தம் முடிவுற்றதொரு சூழலில் தாய்நாட்டுக்கு வெளியே சிதறிவாழும் உறவுகளை மீளிணைக்கும் ஒரு யுக்தியாகத் தமது சமுதாயக்கோயில்களை மீளக்கட்டுவிக்கின்ற புலம்பெயர்ந்து வாழும் ஊர்ப்பற்றுள்ள தமிழர்களினதும் உள்ளுரில் வாழும் அவர்களது உறவினர்களினதும் முயற்சிகள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நாளாந்த வாழ்வில் புங்குடுதீவில் வாழும் மக்கள் எதிர்கொள்கின்ற வாழ்விடம், தண்ணீர், விவசாயம், பாதுகாப்பு, சாதியம், மதம் முதலிய பல சிக்கலான பிரச்சினைகளையும் இந்தப்படம் வெளிக்கொண்டுவருகின்றது.

யாழ்ப்பாணம் குடாநாட்டின் தென்மேற்குத்திசையில் 28 கிலோ மீற்றர் தொலைவில் 11. 2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத்தீவு முன்னோர் காலத்தில் பொன்விளையும் பூமியாகத்திகழ்ந்திருக்கிறது. பொன்குடுதீவு மருவி, பொங்குடுதீவாகி பின்னாளில் புங்குடுதீவாகியிருக்கிறது.

ஆனால், இங்கு வந்திறங்கிய போர்த்துக்கேயர், சப்த தீவுகள் என்றழைக்கப்படும் சில தீவுகளுக்கு மத்தியில் இது அமைந்திருப்பதனால் இதற்கு மிடில்பேர்க் (Middleburg) என்றே பெயர்சூட்டியிருக்கிறார்கள்.

இந்தத்தீவில் வாழ்ந்த சில ஆளுமைகள், படைப்பாளிகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்தப்பதிவுகளில் இவ்வூரின் மகிமைகளை சொல்லியிருந்தாலும், இந்த மண்ணில் கால் பதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆயினும் இந்த ஊரைக்கடந்து குறிக்கட்டுவான் சென்று அங்கிருந்து நயினாதீவுக்கு இரண்டு தடவைகள் சென்றிருக்கின்றேன்.

1983 இல் தென்னிலங்கையில் கலவரம் வந்த பின்னர் குழந்தைகளுடன் நயினாதீவுக்குச்சென்றிருந்தபோது, கோயில் கிணற்றடியில் இரண்டு இளம் யுவதிகளின் உரையாடல் என்னை துணுக்குறச்செய்தது.

ஒருத்தி மற்றவளிடம் கேட்கிறாள்,” தண்ணீர் அள்ளுவதற்கு உனது வீட்டருகிலேயே ஒரு கிணறு இருக்கிறதே…? ஏன் குடத்தை தூக்கிக்கொண்டு இவ்வளவு தூரம் வருகிறாய்..? ”

மற்ற யுவதியின் பதில்: ” அங்கே கண்ட கண்ட சாதியெல்லாம் தண்ணியள்ள வருகுது”

” என்னம்மா இப்படி சொல்றீங்களேயம்மா…?” என்று அன்றே அவர்களிடம் கேட்டேன்.

உடனே ஒருத்தி, ” ஊருக்குப்புதுசோ” என்று முறைத்துப்பார்த்தாள். அந்த முறைப்பு இன்னும் எனது கண்களிலிருந்து மறையவில்லை.

தங்கேஸ் பரம்சோதியின் இந்த ஆவணப்படத்தை பார்க்கின்றபோது அங்கு ஆன்ம ஈடேற்றத்திற்காக கோயில்கள் பல எழுந்தாலும் அவற்றின் அத்திவாரங்களுக்குள் ஆணவச்சாதி அகம்பாவம் புதையுண்டுபோகவில்லை என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது.

அங்கு 1991 இல் அத்துமீறி நுழைந்த இராணுவத்திற்கு அவ்வூர் மற்றும் ஒரு சிங்கப்பூராக காட்சியளித்திருக்கிறது.

அழகான கல்வீடுகள், தோட்டம் துரவுகள், பசுமையான வயல்வெளிகள், கோயில்கள், கிராமத்தின் வனப்புகள் யாவும் ரம்மியமான காட்சிகளாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் இன்று …?

ஊர் வெறிச்சோடியிருக்கிறது. வீடுகளில் மக்கள் இல்லை. புதர்க்காடுகள் செழிப்படைந்திருக்கின்றன. கிணறுகள் பாழடைந்துள்ளன. குட்டைகள் கழிவுப்பொருட்களின் தங்குமிடமாகிவிட்டன. ஆழ் கிணறுகளில் தூர் வாரப்படாதமையினால் நன்னீர் இல்லை.

இந்த ஆவணப்படத்தில் இந்த ஊரைச்சேர்ந்தவரும் சிறிது காலம் கனடாவில் வாழ்ந்துவிட்டு திரும்பி வந்திருப்பவருமான அருணாசலம் சண்முநாதன் , பேராசிரியர்கள் பாலசுந்தரம்பிள்ளை, குகபாலன் மற்றும் ஊர் பொதுமக்களும் உரையாற்றுகிறார்கள்.

புலம்பெயர் வாழ்வில் நினைவு மறதிநோயினால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை ஊருக்கு அழைத்துவந்தால் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கும் அருணாசலம் சண்முகநாதனுக்கு புங்குடுதீவில் கோயில்களில் மணியோசை கேட்கவில்லை. ஒரு கோயிலின் மணியை திருத்தி அடிக்கச்செய்திருக்கிறார். அதன் பின்னர், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்று அவர் உணர்ச்சிகரமாக கண்ணீர் பனிக்கச்சொல்கிறார்.

புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு தமது ஊரிலுள்ள கோயில்களில் மணியோசை கேட்கவேண்டும். அதற்காக இடிபாடுகளுடன் காட்சியளிக்கும் கோயில்களை திருத்தி அல்லது மாற்றங்கள் செய்து புனருத்தாரணம் செய்யவேண்டும். கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். அமைக்கும் மணி மண்டபங்களில் தங்கள் பெயர் பொறிக்கப்படவேண்டும் என்றெல்லாம் ஆசைவருகிறது.

இதேவேளை, ஊரில் இருப்பவர்களின் கனவுகளில் தெய்வங்கள் வருகிறார்கள். தத்தமக்கு கோயில்கள் எழுப்புமாறு வேறு சொல்கிறார்கள்.

இந்தத்தெய்வங்கள், பாடசாலைகளைக்கட்டு, நூல் நிலையங்களை உருவாக்கு, மருத்துவமனைகளை எழுப்பு என்று கனவில் வந்து சொல்ல மாட்டார்களா…?

இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்பொழுது, இந்த ஊருக்கு ஒரு பொலிஸ் நிலையத்தையாவது கட்டிக்கொடுங்கள் என்று இவ்வூர் மக்களிடம் வாக்குக்கேட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகளின் கனவில் வந்து அந்தத்தெய்வங்கள் சொல்ல மாட்டாதா..? என்ற ஏக்கம்தான் வருகிறது.

ஊரைச்சுற்றிப் பற்றைக்காடுகள். பாழடைந்த வீடுகள். சனநடமாற்றமில்லாத சூனியப்பிரதேசங்கள். இவைபோதும் குற்றச்செயல்களின் அதிகரிப்பிற்கு. அவ்வாறு நடந்த ஒரு சம்பவம்தான் வித்தியா என்ற ஒரு பாடசாலைச்சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை. அவள் வன்கொடுமைக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட இடமும் இதில் காண்பிக்கப்படுகிறது.

இது நிகழ்ந்து அடுத்த வருடம் மே மாதத்துடன் இரண்டு வருடங்களாகப்போகிறது. ஆனால், குற்றவாளிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை.

எழுக தமிழ் எழுச்சிப்பேரணி போன்று பல பல பேரணிகள் நடந்துவிட்டன. நாடாளாவிய ரீதியிலும் ஒரு தமிழ்ச்சிறுமிக்காக மூவின மக்களும் வீதிக்கு வந்து அறப்போராட்டம் நடத்தினர்.

ஜனாதிபதியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். வீடும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால் , அவ்வூர் மக்கள் இன்றும் தங்கள் பாதுகாப்பிற்கென்று ஒரு காவல் நிலையம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வெளிநாட்டில் வதியும் உறவுகள் அனுப்பும் பணத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் இம்மக்கள் அவதிப்படுகின்றனர்.

பாழடைந்த வீடுகளை திருத்தி, சீர்படுத்தி கழுவித்துடைத்து அங்கு தற்காலிக வாழ்வு வாழும் மக்களின் பிரதிநிதிகளும் குறிப்பாக பெண்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

வெளிநாடு சென்றவர்கள், என்றாவது ஒருநாள் வந்து பார்த்துவிட்டு வீடியோ எடுக்கின்றனர், படம் எடுக்கின்றனர். பின்னர் தமது முகநூல்களில் பதிவேற்றுகின்றனர். திரும்பிச்செல்கின்றனர்.

பூர்வீகச்சொத்துக்களை அவற்றை பாதுகாத்து பேணிக்கொண்டிருப்பவர்களுக்கு விற்பதற்கும் மனம் இடம்கொடுப்பதில்லை.

வீடுகளைத்திருத்துவதை விடுத்து கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து பணம் வருகிறது.

ஒவ்வொரு வருடமும் சராசரி 20 கோடி ரூபா இந்தக்கோயில் கட்டுமானங்களுக்காக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா முதலான தேசங்களிலிருந்து வருகிறது.

இது இவ்விதமிருக்க, சாதி அடிப்படையிலும் சிறிய கோயில்கள் பெரியகோயில்களாகின்றன.

இவ்வாறு எதிர்காலத்திலும் நிகழும் என்று தீர்க்கதரிசனமாக மு. தளையசிங்கம் சிந்தித்தமையால்தானோ அன்றே ” கட்டினார் கட்டினார் கோயில்கள் கட்டினார் கட்டிய கோயில்களில் என்னதான் கண்டார்” என்று பாடினாரோ.

இதில் வேடிக்கை என்னவென்றால், 1980 களில் இங்கு 85 சதவீதமான உயர்சாதியினர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், இன்றோ அவர்களின் வீதம் பத்து சதவீதம்தான் என்கிறார் ஒரு ஊர்ப்பொதுமகன்.

வீடுவிட்டு வீடு மாறிச்சென்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிரந்தர வீடுகள் இல்லாதவர்கள், தாம் இதுவரையில் பல வீடுகளை கழுவிவிட்டோம் என்று பெருமூச்சுவிடுகின்றனர்.

அரசினாலும் புலம்பெயர்ந்து சென்றவர்களினாலும் கைவிடப்பட்ட கவனிப்பாரற்ற தீவாகியிருக்கும் இந்த ஊருக்குள் தென்னிலங்கை வாசிகளின் பிரவேசம் மௌனமாக நடந்துகொண்டிருப்பதையும் இந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது.

” இப்படியே சென்றால், விரைவில் பக்கத்து வீட்டுக்காரரை ” எப்படி மாத்தயா சுகம்? ” என்று விசாரிக்கும் நிலைவரலாம் என்கிறார் ஒருவர்.

தென்னிலங்கை மக்களின் வழிபாட்டுத்தலம் நயினாதீவில் நாகவிகாரை என்ற பெயரில் இருக்கிறது. அங்கு செல்வதற்கான பாதை புங்குடுதீவில் பிறக்கிறது. போர் முடிந்த பின்னர் அங்கு அவர்கள் உல்லாசப்பயணிகளாக வந்து திரும்புகிறார்கள்.

அவர்களுக்காக தென்னிலங்கை பெரும்பான்மையினரால் கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படுகின்றன. அவர்கள் அங்கு வந்து பனையின் நுங்கு சுவைக்கிறார்கள். தாம் தங்கும் வீடுகளில் குடிநீர் தாங்கிகள் அமைக்கிறார்கள்.

இந்த மாற்றங்களை காட்சிப்படுத்தும்பொழுது பின்னணியில் ஒலிக்கிறது, ” டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப்பாரு டிங்கிறி டிங்காலே” பாடலின் இசைக்கீற்று.

” Pungudutivu: A Disintegrating Island ” என்னும் இந்த ஆவணப்படத்தை தமது மானிடவியல் கலாநிதி பட்டப்படிப்பிற்கான சமூக ஆய்வாக தங்கேஸ் பரம்சோதி இயக்கித்தயாரித்திருந்தாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும் உள்நாட்டில் மக்களின் வாக்குகளுக்காக நம்பியிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளையும் சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர்களையும் சுயவிமர்சனத்திற்குள்ளாக்குகிறது.

தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழ் ஈழம் என்ற கனவுகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கண்முன்னால், ஒரு அழகான தொன்மையான தமிழர் தீவு, சிதைந்துகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் வாழுபவர்களினதும் அவர்கள் சந்ததிகளினதும் காட்சிப்பொருளாகத் திகழும் பூர்வீக மண்ணும் உறக்கத்தின்போது கனவுகளில் வரவேண்டும்.

புங்குடுதீவு போன்று இலங்கையில் கைவிடப்பட்டு அநாதைகளான பல கிராமங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் அந்த அநாதை நிலங்களின் வாசனை ஆவணமாக்கப்படல் வேண்டும் என்பதையும் பார்வையாளர்களிடமும் ஊர்ப்பற்றுள்ளவர்களிடமும் செய்தியாக வலியுறுத்துகிறது இந்தப்படம்.

இந்த ஆவணப்படத்தை வடமாகாண சபைக்கும் சமர்பித்து, புங்குடுதீவு வாழ் புலம்பெயர் சமூகத்திடம் மட்டுமன்றி உலகெங்கும் சிதறி வாழும் ஈழத்தமிழர்களிடத்திலும் காட்சிப்படுத்தல் வேண்டும்.

சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான் படைப்பாளிகள், கலைஞர்கள், கல்வியியலார்களினதும் கடமை.
download-3
அந்தக்கடமையை நிறைவேற்றியிருக்கும் தங்கேஸ் பரம்சோதியின் இந்த அரிய முயற்சி பாராட்டுக்குரியது.

•••

letchumananm@gmail.com

••

Respect வும் Reunion வும் – இந்தியாவும் பாகிஸ்தானும்- இரு காணொளிகளின் அலசலில்…… / மேமன்கவி

 

download (21)

 

இன்றைய உலகச் சூழலை தகவல்களின் யுகம் என்று சொல்லப்படுவதுண்டு. இதனை இன்னும் ஆழமாகச் சொல்வது என்றால் இது ஊடகங்களின் யுகம் என்று சொல்வது கூட பிழையாகாது.

அவ்வாறான ஓரு செல்வாக்குமிக்க, தாக்கபூர்மான, ஊடகமாக இணையம் இன்று பயன்படுகிறது. இத்தகைய வெகுசனத் தொடர்ப்பாடல் துறையான இணையம், அதற்கு முன்னால், தோன்றிய உலகை சுருக்கி விட்ட, பலமிக்க தொடர்பாடல் துறைகளையும், முறைமைகளையும் பலவற்றை பின் தள்ளியும், அவை தம்மை உள் வாங்கியும், இன்று உலகை இன்னும் நுண்ணிய முறையில் சுருக்கி விட்டது எனலாம். அதே வேளை உலக மனிதச் சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சிக்கும் இணையம் இன்று சிறப்பாக பயன்படக்கூடியாதாக இருக்கிறது.

1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிருந்த இந்தியா சுதந்திரம் பெற்ற வேளை, பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய நிலப்பிரிவிருந்து முஸ்லிம்களுக்கென இரு துண்டங்களாக பாகிஸ்தான் என்ற பேரில் ஒரு சுதந்திர நாடு வாங்கப்பட்ட பொழுது, ஏற்பட்ட கலவரங்களில் லட்சக் கணக்கான இரு சமூக மக்கள் பலியாகினர்.; இது இந்திய உபகண்ட வரலாற்றில் இரத்தக்கறை படிந்த வரலாறு ஆகும். அத்தோடு லட்சக் கணக்காண மக்கள் கட்;டாய இடப்பெயர்வுக்கு ஆளாகியினர். அந்த வகையில் இந்தியாவிலிருந்த முஸ்லிம்கள்; பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியிலிருந்த இந்துக்கள் இந்தியாவுக்கும் விரட்டப்பட்டு பலாத்காரமாக இடப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டனர், International Business Times என்ற பத்திரிகை குறிப்பிடுவது போல, ‘மனித குல வரலாற்றில் பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றாக’ உலக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

அன்றைய நாள் தொடக்கம் இந்தியா-பாகிஸ்தான்; இரு நாடுகளிடையே தீராத பகை தொடர்ந்த ஒன்றாக இருக்கிறது. இப்பகைக்கு காரணம் இந்திய உபகண்டத்தின் சமூக அரசியல் வரலாறு முதற்கொண்டு, பிரிட்டிஷ் காலனியத்தின் மிக நுண்ணிய பண்பான, பிரித்தாளும் தந்திர உபாயமும் காரணமாக இருந்தன.(நவகாலனிய யுகத்தில் அதை சிறந்த முறையில் கையாண்டு அதிகாரத்தை தாக்க வைப்பதில் பலர் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கதக்கது)

இந்தியாவில் மழை வீழ்ச்சி குறைவு, உணவுப் பொருட்களின் தட்டுபாடு, கட்டவிழ்க்கப்படும் பயங்கரவாதம் (இந்திய சினிமாகளில் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுபவர்கள் எல்லோருமே முஸ்லிம்களாகவும், அவர்கள் எல்லோரும் பாகிஸ்தானிலிருந்து வருபவர்களாவும் சித்திரிக்கும் போக்கு) போன்ற எந்தவொரு பாதகமான விடயத்திற்கும் பாகிஸ்தான் தான் காரணம் என்ற மாதிரியான எண்ணத்தை இந்திய அரசு வளர்த்து வந்திருக்கும் சூழலிலும்,

இந்தியாவில் முஸ்லிம் தாக்கப்படுவதும், பாகிஸ்தானிலும், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகிய பங்காதேஷ்த்திலும் இந்துக்கள் தாக்கப்படும் ஒரு சூழலிலும்,

இணையஉலகில் வெளியிடுப்பட்டுள்ள இரு குறுங்காணொளிகள்(Videos)உலக கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

ஓன்று 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் வெளியிட்டப்பட்ட பாகிஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களின்; முயற்சியாக Taha Kirmani எனும் இளம் திரைப்பட இயக்குனர் இயக்கிய Respect எனும் குறுங்காணொளி.

அடுத்து இன்றைய இணைய உலகில் மிகவும் பேசப்படும் Google இந்தியப் பிரிவுக்காக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Ogilvy & Mather India எனும் இந்திய நிறுவனம் தயாரித்து Amit Sharma வின் இயக்கியத்தில் உருவாகி வெளியாகியிருக்கும் Reunion எனும் குறுஙகாணொளி.

முதலில் இவ்வரிரு காணொளிகள் மேற்குறித்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை சம்பந்தமான பிரச்சினையை எவ்வாறு முன் வைத்துள்ளன என்பதை பார்ப்போம்.

Respect

பாகிஸ்தானில் வசிக்கும் முதியவர் தனது பேரனிடம், 1947 ஆம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் தான் இந்தியாவிலுள்ள லுத்தியானா எனும் இடத்தில் வாழ்ந்ததாகவும், அங்கு தனக்கு Raj Dev எனும் சிறிது வயதில் முதலே நெருக்கமான நண்பர் இருந்ததாகவும், அவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தான்தான் Aman Dev என்று பெயர் வைத்ததாகவும், அவனை டாக்டராக படிக்க வைப்பேன் என தனது நண்பன் Raj Dev தனக்கு வாக்களித்தாகவும் கூறி, 1947 ஆம் பிரிவின் போது பாகிஸ்தானுக்கு வந்த ரயிலில் தன்னை கண்ணீர் மல்க வழி அனுப்பியதாகவும,; இப்பொழுது அவர் என்ன செய்கிறாரோ?, எங்கு இருக்கிறாரோ? என்ற ஏக்கத்தை வெளியிடுகிறார். இதனை கேட்ட அவரது பேரன் இணையத்தில் Google, Google Map, Twitter, Facebook Email இப்படியான பல வழிகளில் தாத்தா சொன்ன இந்திய நண்பர் Raj Dev யின் வசிப்பிடத்தை அறிந்துக் கொள்வதோடு, அவரது டாக்டராக பணிபுரியும் அவரது மகன் Aman Dev வுடன் தொடர்ப்பினை ஏற்படுத்தி இரு நண்பர்களை இணையத்தில் Skype வுழியாக தொடர்பினை ஏற்படுத்தி பிரிந்து போன இரு நண்பர்களை நீண்ட காலத்திற்கு பின் காணவும், பேசவும் வைக்கிறான். அச்சந்திப்பு பாகிஸ்தான் நண்பருக்கும் இந்திய நண்பருகும் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Reunion

இன்றைய பாகிஸ்தானிலுள்ள லாகூரில்; பிறந்து வளர்ந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவின் பொழுது, இந்தியா டில்லிக்கு இடப்பெயர்ந்த Baldev Mehra எனும் பெரியவர், அவரது பேத்திக்கு, இரு சிறுவர்கள் ஒன்றாக நிற்கும் ஒரு பழைய புகைப்படத்தை காட்டி, இது தனது சிறுவயது படம் என்றும், அப்படத்தில் தன்னுடன் இருக்கும் சிறுவன் தனது பால்ய கால நண்பன் யூசுப் என்று அடையாளம் காட்டி, யூசுப்பும் தானும் சிறு வயதில் நெருக்கமான நண்பர்கள் என்றும், அந்த காலத்தில்; தாங்கள் பட்டங்கள் விட்டதும், யூசுப்பின் குடும்பத்தினரின் மிட்டாய் கடையில் Jhajariyas எனும் மிட்டாயை திருடிச் சாப்பிட்டதாகவும் என ஏக்கத்துடன் பழைய நினைவுகளை பேத்தியிடம் மீட்டுகிறார். தன் நண்பர் யூசுப்பை பிரிந்து 60 வருடங்கள் ஆகி விட்டது எனவும், இனி என்று அவனை காண்போம் என்றலாம் தன் ஏக்கத்தை வெளியிடுகிறார். அதனை புரிந்து கொண்டு அவரது பேத்தி தன் கையடக்க கணனியின்; இணையத் தொடர்பில் கூகுள் தேடுபொறி மூலம் தாத்தா கூறிய லாகூர், அங்கு தயாரிக்கப்படும் Jhajariyas எனும் மிட்டாய், அம்மிட்டாய் விற்கும் தெரு, அத்தெருவில் அமைந்துள்ள யூசுப்பின் Fazal Sweets எனும் மிட்டாய் கடை, அக்கடைக்காக முகநூலில் உருவாக்கப்பட்ட பக்கம், அக்கடையின் தொலைபேசி இலக்கம் போன்ற சகல விபரங்களை கூகுள் தேடுபொறி வழியாக பெற்றுக் கொண்டு, தொடர்புக் கொள்கிறாள். மறுமுனையில் லாகூரில் அக்கடையில் பணியாற்றும் யூசுப்பின் பேரனுடன் பேசி, யூசுப்புடனும் கதைத்து அவரது நண்பரான தனது தாத்தா பற்றியும் கதைத்து, அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுகிறாள். அவளது அழைப்பை ஏற்றுக் கொண்டு, யூசுப்பின் பேரன் அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்கிறான்;. இந்தியாவில் அவனது தாத்தாவின் நண்பர் இருக்கும்; டில்லியயை பற்றிய விபரம், அதன் காலநிலை, இந்தியாவுக்கு செல்வதற்கான விசா பெறும் வழிமுறை, போன்ற விபரங்களை அவனும் கூகுள் தேடுபொறி மூலம் அறிந்து அவரை இந்தியா அழைத்து வருகிறான். டில்லியில் விமான நிலையத்திற்கு அவர்கள் வரும் விமானத்தின் நேரத்தை கூகுள் தேடுபொறி மூலம் பேத்தி அறிந்து கொண்டு, அவர்களை தாத்தாவிடம் அழைத்து வருகிறாள். நீண்ட காலத்தால் பிரிந்து போன இரு நண்பர்கள் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பு டில்லி நண்பருக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

download (20)

மேற்படி இரு காணொளிகளை காணும் பொழுது, கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு காலத்தால் முன்னுக்கு வந்த பாகிஸ்தானிய குறுங்காணொளியான Respect யின் கதையை அப்படியே தலைக்கீழாக புரட்டி தனதாக்கிக் கொண்டதாக என தெரிகிறது. இதனையிட்டு Deference.pk எனும் இணையக் குழுமத்தில் இது அப்பட்டாமான திருட்டு என பேசப்பட்டது ஆனால் கூகுள் ஆதரவாளர்கள் சிலரால் ஓரே நேரத்தில் ஒரே மாதியான சிந்தனைகள பலருக்கும்; தோன்றலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இன்றைய இணைய உலகில் மிக பிரபலமான ஒரு நிறுவனமாக கூகுள் திகழ்கிறது. அது வழங்காத சேவைகளே இல்லை என்று சொல்லாம். இணையத்தின் தோற்றம் காலம் முதல் முன்னணி-முன்னோடி நிறுவனங்களாக திகழ்ந்த பல நிறுவனங்களின் சாதனைகளை முறியடித்து விட்ட ஒரு நிறுவனமாக கூகுள் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அது மின்னஞ்சல்(Gmail), மொழிபெயர்ப்பு (Translate),தேடுபொறி (Searchengine), காலநிலை (Weather), வரைப்படம் (Map), என்ற வகையிலான நூற்றுக்கணக்கானச் சேவைகளை வழங்கி, இணையப் பாவனையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அதிலும் அதன் தேடுபொறியானது, இன்று இணையப் பாவனையாளர்களிடையே மிக பிரசித்தம் பெற்ற ஒரு தேடுபொறியாக முன்னணி வகிக்கிறது. இணையத்தளத்தில் எதையும் தேடி அறிய வேண்டுமா அதற்கு கூகுள் தேடுபொறி சரியான மார்க்கம் என்ற நிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக இந்த நிறுவனம் வழங்கி வரும் பல சேவைகளை பற்றியும் பிரஸ்தாபித்திருக்கும் மேற்படி பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி தெரியாமல் இருந்ததா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

ஆனாலும் Reunion இணையத்தில் இருக்கும் காணொளிகளின் தொகுப்புத் தளமான You Tube யில் மட்டும் அது இணைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் ஒரு கோடியே 10 லட்சத்திற்கு மேலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு இருப்பதோடு, நூற்றுக்கணக்கான உணர்ச்சிவசப்பட்ட, கண்ணீர் மல்கிய கருத்திடல்கள் இதற்கு முன் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை பாகிஸ்தானிய காணொளி Respect யை அதே You Tube யில் 8000 அளவான தொகையினரே பார்வையிட்டு இருப்பதோடு, குறைந்த அளவான கருத்திடல்களே அதற்கு வந்து இருக்கின்றன என்பதோடு, கூகுளின் Reunion பிரபல்யம் அடைந்த பின்தான் மேற்குறித்த பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி தெரிய வந்துள்ளது என்பதும் மறப்பதற்கில்லை.

இவ்விரு காணொளிகளை பற்றி கருத்து தெரிவித்திருக்கும் இந்தியாவின் The Times of india பத்திரிகை நிறுவனமும் பாகிஸதானிலுள்ள Jang Group னும் ஊடக நிறுவனமும் இணைந்து, இந்தியா–பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையை சுமூக உறவு வளர்தெடுத்தலை முக்கிய நோக்கமாக கொண்டு உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான Aman ki asha (சமானத்திற்கான நம்பிக்கை) எனும் அமைப்பின் உத்தியோகபூர்வமான பத்திரிகையான Aman ki asha வின் ஆசிரியரும், பாகிஸ்தானிய பெண் திரைப்பட இயக்குனரும், மனித உரிமை செயறபாட்டாளருமான Bena Sarwar அவர்கள் பின வருமாறு கூறுகிறார்.

கூகுளின் அவ்;விளம்பர காணொளி உணர்ச்சிகரமான சிறந்தொரு குறுந்திரைப்படமாக வெளிப்பட்டுள்ளது என்றும,; இக்குறுந்திரைப்படத்தை பற்றி பேசும் பொழுது ஒரு வருடத்திற்கு முன்னதாக பாகிஸ்தானில் Taha Kirmani எனும் இளம் திரைப்பட இயக்குனர் இயக்கிய Respect எனும் குறுங்காணொளி பற்றியும் நாம் பேசியே ஆகவேண்டும் என்றுகிறார். மேலும் அவர் இவ்விரு காணொளிகள், முன் வைக்க நினைத்துள்ள செய்தியினை தாக்கபூர்வமான முறையிலும், உணர்ச்சிபூர்வமான முறையிலும்,; சினிமா மொழி வழியாகவும், Reunion முன் வைப்பதில் அடைந்த வெற்றியினை, Respect (அதில் வரும் பாகிஸ்தானிலுள்ள தாத்தா வேடத்தில் இளைஞர் ஒருவரை நடிக்க வைத்தமை போன்ற குறைப்பாடுகளின் காரணமாக) அடையவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் பாகிஸ்தான் காணொளியான Respect இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் நிலவும் இன்றைய யதார்த்தத்தை சித்திரிப்பதில் மிக சரியாக வெளிப்பட்டுள்ளது என்றுகிறார்.

அதாவது கூகுள் விளம்பரத்தில் பாகிஸ்தானில் உள்ள முதியவரின் பேரன் கூகுள் தேடுபொறி மூலம் இந்திய விசா பெறும் முறைமையை கூகுள் மூலம் அறிந்து கொள்வதாக வருகிறது. ஆனால் பாகிஸ்தானிய காணொளியில் பாகிஸ்தானிய நண்பரின் பேரன் அவரது தாத்தாவின் இந்திய நண்பரை பற்றி இணையத்தில் பல வழிகளில் அறிந்து கொண்டு, தனது தாத்தாவை இந்தியாவிலுள்ள அவரது நண்பருடன் இணையத்தில் இன்று வெளிநாட்டிலுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள, எல்லோரும் பயன்படுத்தும் Skype மூலம் தொடர்புப்படுத்தி வைக்கிறார் என்று முடித்திருப்பது இன்றை நிலையில் யதார்த்தமாக இருக்கிறது என்றுகிறார்.

ஏனெனில் இற்றை வரை எத்தனை’யோ பேசசு வார்த்தைகள், ஒப்பந்தங்கள் மூலம், பரஸ்பர நிலையில் இரு நாடுகளுக்கு விஜயம் செய்ய தேவைப்படும் விசா பெறுவதில் இரண்டு நாடுகளிலும் காணப்படும் நெருக்குவரம், காலதாமதம், நெருக்கடி, போன்றவை இல்லாது செய்ய முயற்சிகள் நடந்திருப்பினும், அம்முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அப்பிரச்சினை இன்னும் தொடரும் ஒரு சூழலில, இந்திய-பாகிஸ்தானிய சாமானிய பிரஜைகள் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ போக தேவையான விசாவை கூகுள் விளம்பர காணொளி சித்திரிப்பது போல் வெறுமனே கூகுள் செய்து பெற்று கொள்வது நடைமுறை சாத்தியமிலாத ஒன்று என்ற நிலையில், பாகிஸ்தான் காணொளியான Respect யில்; Skype மூலம் தொடர்புப்படுத்தல் என்பதாக முன் வைப்பது யதார்த்தமானது என்றுகிறார் Bena Sarwar.

அந்த வகையில் பாகிஸ்தானிய குறுந்திரைப்படமான Respect யில் அதிக வேகத்திலான காட்சி மாற்றம் (இந்த வேகம் ஒருவகையில் இணையத் தேடலின் வேகத்திற்கு குறியீடாக முன் வைக்க இயக்குனர் நினைத்திருக்கக் கூடும்.) ஆனால் இந்த வேகம் காட்சிகளை புரிந்து கொள்ளுதல் என்பதற்கு தடையாக இருக்கின்றது. முடிவில் யதார்த்தத்தை முன் வைத்தாலும், Bena Sarwar கூறியது போல், தாத்தாவாக ஒரு இளைஞனை நடிக்க வைத்திருப்பது, மற்றும் Skype யில் பழைய நண்பர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பாராத விதமாக காணும் பொழுது ஏற்படும் இன்ப அதிர்ச்சியை எந்த விதமான முக பாவங்ளையும் வெளிக் காட்டாது வெறுமனே உறைந்து போகுதல் போன்ற குறைகளின் காரணமாக, அது சொல்ல நினைத்த செய்தியை உணர்ச்சிகரமாகவும் தாக்கபூர்வமாகவும் அதனால் முன் வைக்க முடியவில்லை. ஆனாலும் பரலாக பார்க்க-பேசப்படாவிடினும் அது பேசியிருக்கும் செய்திக்கான முன்னோடித் தன்மையும் அதனை யதார்த்தபூர்வமான முறையில் இளம் இயக்குனரான Taha Kirmani பேசி இருப்பது போன்றவையின் காரணமாகவும்;, இக்காணொளி கவனத்திற்குரிய ஓரு காணொளி என்பது மறுப்பதற்கில்லை.

அடுத்து கூகுள் தந்திருக்கும் Reunion யை எடுத்து கொண்டோமானால், சிறந்த ஒளிப்பதிவு, பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பு, முதியவர்களாக முதியவர்களையே நடிக்க வைத்திருப்பது, அவர்கள் வெளிப்படுத்தும் முகபாவங்கள், வசன வெளிப்பாடு, படத்தொகுப்பு போன்றவைகளின் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கான ஒரு விளம்பர காணொளியினை மிக சிறந்த குறுந்திரைப்;படமாக மாற்றி இருப்பதோடு, ஒரு விளம்பர காணொளியினால் உணர்ச்சிவசப்பட (பிரிவுத்துயர்) வைக்கவும் முடியும் என்பதையும்; இக்காணொளி நிருபித்து இருக்கிறது. இந்த பெருமை பாகிஸ்தானிய குறுங்காணொளியான Respect யின் கதையை அப்படியே தலைக்கீழாக புரட்டி தந்திருக்கும் குறையை மீறியும், சினிமா மொழியினை நன்றாக புரிந்து வைத்திருக்கும் இக்காணொளியின் இயக்குனர் Amit Sharma வையே சாரும்.

கூகுளின்; காணொளியான Reunion பற்றி தனது வலைப்பதிவு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பத்தி எழுத்தாளரும் படைப்பாளியுமான Dan Lyons அக்காணொளி, இந்திய பாகிஸ்தான் பிரிவினை பொழுது, பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டு பலவந்தமாக இந்தியாவில் குடியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களில் ஒருவர் என்று கூகுள் காணொளி வரும் டில்லியில் இருக்கும் தாத்தாவை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் அதே மாதிரி இந்தியாவிருந்து விரட்டப்பட்டு பாகிஸ்தானுக்கு பலவந்தமாக குடியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும் கூகுளின் அக்குறுந்திரைப்படம் நினைவுப்படுத்துகிறது என்பதை Dan Lyons சொல்ல தவறி இருப்பதோடு, இந்தியாவிருந்து விரட்டப்பட்டு பாகிஸ்தானுக்கு பலவந்தமாக குடியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களில் ஒருவரை பற்றி பேசும், ஒரு வருடத்திற்கு முன்னே வந்திருக்கும் பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி அறியாது இருக்கிறார். Reunion பற்றி பேசவந்தவர் இதே கூகுளை விரிவாக பயன்படுத்தி இருந்தால் பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி அவர் அறிந்து இருப்பார்.

ஆனாலும் இக்குறைகளுக்கு அப்பாலும், Dan Lyons மேற்படி கருத்தாடலில் முன் வைத்திருக்கும் பல முக்கியமான விடயங்கள் இக்காணொளியை இன்னொரு வாசிப்புக்கு உட்படுத்துகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

Dan Lyons Reunion எனும் இக்குறுந்திரைப்படம் மூலம் கூகுள் நிறுவனம் என்ன சாதிக்க நினைக்கிறது? என்ற கேள்வி ஒன்றினை எழுப்புகிறார். பன்னாட்டு நிறுவனங்கள், தனிநபர்கள் பற்றிய தரவுகளை, அவர் தம் உணர்வுகளையும் பல்வேறு வழிகளில் கூகுள் மாதிரியான நிறுவனங்கள் வழியாகவும், தெரிந்து கொண்டு, அவை தம்மை தம் நலனுக்காக பயன்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், கூகுள் நிறுவனம் தம் வழியிலான தனிநபர்களின் தரவுகளை அவர்கள் தம்மை ஒன்றிணைக்கும் வகையில் பயன்படுத்தி இருக்கிறது என்பதை கூகுளின்; இக்குறுங்;திரைப்படம் நிருப்பிக்கிறது என்ற வகையில் இதுவொரு பாராட்டதக்க முயற்சி என்றுகிறார்.

அத்தோடு பெரும் நிறுவனங்கள் தமது உற்பத்திகளுக்கான விளம்பரங்களை கதை ஒன்றினை சொல்லும்; வகையில் வெளியிட்டாலும், ஒரு சில நிறுவனங்களே அம்முறைமையில் வெற்றி அடைகின்றன. அந்த வகையில் ஒரு விளம்பரத்தை இத்துணை உணர்ச்சிபூர்வமாகவும் கலைத்துவமாகவும் எடுக்க முடியும் என்பதை எடுத்து காட்டி இருப்பதன் மூலம், கூகுள் நிறுவனம்;; இக்காணொளி மூலம் சந்தைப்படுத்தல் துறையில் ஒரு புதிய தளத்தை எட்டியிருக்கிறது என்றுகிறார் Dan Lyons.

அடுத்து இக்குறுந்திரைப்படத்தை பற்றி Dan Lyons முன் வைத்திருக்கும் இன்னுமொரு கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. அதாவது இன்றைய இளைய தலைமுறையினர், உலகம் இன்று மதங்களாலும், இனங்களாலும் பிரிந்து கிடக்கும் நிலையில் (நாம் இவையோடு எல்லைகளாலும் இன்னபிற பேதங்களாலும் என்று சேர்த்து கொள்ளலாம்); அப்பேதங்களையும் பிரிவுகளையும் மறந்து, தேச-வர்த்தமான எல்லைகளை கடந்து, உலகை ஒன்றிணைக்க அவர் தம் மூத்தவர்கள் அறிந்திருராத மொழியை நன்றாக கையாளுகிறார்கள்(அறிவியல்; தொழில் நுட்ப அறிவினையே Dan Lyons மொழி என்றுகிறார்);என்பதை இக்குறுந்திரைப்படத்தில் அவ்விரு தேசத்து தாத்தாகளின் உணர்வுபூர்வமான தேவைகளை ஏக்கங்களை அறிந்து, அவ்விருவர்களின் பேத்தியும் பேரனும் கூகுள் தேடுபொறி மற்றும் இன்னபிற இணைய வழிமுறைகளை பயன்படுத்தி நிவர்த்தி செய்கிறார்கள் என்பதன் மூலம் எடுத்து காட்டப்படுகிறது என்பார் Dan Lyons.. இதே மாதிரியான ஒரு கருத்தினையே பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி கருத்துக்களை முன் வைக்கும் வேளை Bena Sarwar வும் கூறுகிறார்.

அத்தோடு Bena Sarwar அதே கருத்தாடலில் பிறிதொரு இடத்தில் தனது சக பத்திரிகையாளரும் பள்ளித் தோழருமான Mazhar Zaidi (இவரும் ஒரு திரைப்பட இயக்குனர்) 2004 ஆம் ஆண்டில் லண்டன் பிபிஸி உருதுச் சேவையுடன் இணைந்து, காலனியம் விட்டுச் சென்ற, பின்-காலனிய சூழல் வரை இன்னும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையிலான தீராதப் பிரச்சினையாக இருக்கும் காஷ்மீர் பிரதேசத்தில் பாகிஸ்தான் வசமுள்ள Muzaffarbad நகரிலும், இந்தியா வசமுள்ள Srinagar நகரிலும், காஷ்மீர் பிரிவினையால,; பல வருடங்களால் பிரிந்த குடும்பத்தினரை வலைத்தள, மற்றும் பிபிஸி யின் காணொளி தொடுப்புக்கள் மூலம் ஒன்றிணைக்கும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டதையும் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் இக்காணொளிகளை பற்றி கருத்துக்களை வெளிப்படுத்திய இந்தியா- பாகிஸ்தான்; சார்ந்தவர்களில் மூத்தவர்கள் இக்காணொளிகள் தமது கதையையும், இளையவர்களில் பலர் இவை தம் குடும்பத்தின் மூத்த அங்கத்தினரின் கதைகளையும் பேசுகின்றன என்றும் கூறியுள்ளார்கள். அத்தோடு, இக்காணொளியை(Reunion) பற்றி கருத்துக்கள் முன் வைத்த உலகளாவிய ரீதியான ஊடகங்கள், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு தேச அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாததை, 2-3 நிமிடத்திற்குள் மட்டுமே ஒடுகின்ற இக்காணொளி;கள் சாதாரண மக்களின் மத்தியில் சாதிக்க முனைகின்றன என்ற அர்த்தத்தில் கருத்துக்களை முன் வைத்துள்ளன.

மேற்கூறிய கூற்றை ஆமோதிக்கும் வகையில், Reunion சம்பந்தமாக கூகுள் நிறுவனத்தினருடன் தொடர்பு கொண்ட Dan Lyons..விடம் கூகுள் நிறுவன அதிகாரி ஒருவரும், இக்காணொளி இந்தியா பாகிஸ்தான் பிரதேசத்தில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியாகவும் பிரிந்தவர்கள் ஒன்றுக் கூடுதல் பற்றியும் பேசுகின்ற அகத்துண்டுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு, அக்காணொளிக்கான பின்னுட்டல்களில் பலரால் முன் வைக்கப்படும் பிரிந்தவர்கள் ஒன்றுக்கூடுதல் சம்பந்தமான கதைகள் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது என குறிப்பிட்டதாக Dan Lyons கூறுகிறார்

.மொத்தத்தில் நாடுகள், அரசுகள், சமூகங்கள், மத்தியில் காணப்படும் பேதங்கள், முரண்பாடுகள், சந்தேகங்கள், சுமூகமற்ற நிலை, போன்றவைகளை கடந்து, சாதாரண மக்கள் மத்தியில் காணப்படும் மனிதநேயம் உறவுநிலை போன்றவை என்றும் மாறாதவை என்பதை இக்காணொளிகள் பாறைச் சாற்றுகின்றன எனலாம்.

Respect காணொளிக்கான தொடுப்பு

Reunion காணொளிக்கான தொடுப்பு

நாளி – பழங்குடிகளின் வழியே திரையினூடாக ஓர் பயணம் – கிருஷ்ணமூர்த்தி

download (6)ஒரு ஆவணப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நான் பார்க்கும் இரண்டாவது ஆவணப்படம் இந்த நாளி. இப்படத்தை சில நண்பர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். ஆனால் எங்கு வாங்குவது எனத் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் கோவை இலக்கிய சந்திப்பில் இந்த படம் எனக்கு கிடைத்தது. மேலும் இதை இயக்கியவர் இரா. முருகவேள்.

நான் பார்த்த முதல்  ஆவணப்படம் ஜெய் பீம் கம்ரேட். அதன்படி ஆவணப்படம் பல உண்மைகளை பேட்டியெடுத்தோ அல்லது காட்சிப் படிமங்களாகவோ பதிவு செய்தல் வேண்டும். மேலும் ஆவணம் ஒரு நாட்டின் அடிப்படை தேவை என்று சொல்வேன். அதற்கு மூலக் காரணமும் இருக்கிறது. நாம் இப்போது புழங்கிக் கொண்டிருகும் நாகரீகம் பேசிக் கொண்டிருக்கும் மொழி எல்லாம் பல ரூபங்களிலிருந்து மருவி இப்போது இந்த உருவத்தை எடுத்திருக்கிறது. இந்த ரூபம் முழுக்க சரியானதா என்பது நமக்கே தெரியாத ஒன்று. இதற்கு முந்தைய, பழக்கத்திலிருந்தவற்றில் இருக்கும் போதாமையினாலோ அல்லது சிலரின் அதிகாரத்தினாலோ இந்த உருவத்தை எடுத்திருக்கலாம். அது கூட சரியானதாக இருக்கலாம். இப்போது நாம் பின்னோக்கி பார்ப்பின் அதிலிருந்து சில நல்ல விஷயங்களை தற்காலத்தில் இருக்கும் கோட்பாடுகளுள் இணைத்துக் கொள்ளும் அளவு இருக்கக் கூடும்.

மேலும் ஒரு நாட்டின் செவ்வியல்  அல்லது தொன்மவியல் தன்மைகள் இந்த பழைய என்னும் பதத்தில் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு பின் நான் இருக்கும் இந்த நூற்றாண்டு ஒரு தொன்மமாக மாறலாம். யாரேனும் அதை கண்டெடுத்துக் கொண்டிருப்பார்கள். இன்று தமிழ் மொழியை உலக செம்மொழி என்று கூறும் போது அதற்கான காரணம் அதனுள் இருக்கும் ஒரு பாரம்பரியமே. காலம் கடந்து பல இலக்கியங்களை, சங்க இலக்கியங்கள் மூலமாக பல நாகரீகங்களை, உணவு முறைகளை, கலாசாரத்தை, அரசியல் விதிமுறைகளை இவ்வுலகத்திற்கு கொடுத்திருக்கிறது. ஆனால் சங்க இலக்கியங்கள் மட்டுமே ஆவணம் தொன்மம் என்று இருந்துவிட முடியுமா ? வாய்வழிப் பாடல்கள் கதைப்பாடல்கள் போன்று பதிவுகளற்று ஏகப்பட்ட இலக்கியங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அவைகளின் தற்கால நிலை என்ன என்பது தான் கேள்வி. வழக்கொழிந்து செல்லுமாயின் நாம் நம் தமிழகத்தை நினைவிழக்க செய்து கொண்டிருக்கிறோம் என்று தான் அர்த்தம்.

நினைவிழத்தல் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாளி என்னும் ஆவணப்படம். முழுப்படத்தையும் பார்த்துவிட்டு முருகவேளை அழைத்து நாளி எனில் என்ன என்று கேட்டேன். அது இருளர்களின் மொழியில் இருக்கும் ஒரு வார்த்தையாம். அதன் அர்த்தம் நதி போல என்பதாம்.

இப்படம் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளினூடாக செல்கிறது. காரமடை வயநாடு அட்டப்பாடி கிராமம் போன்ற இடங்களில் இருக்கும் பழங்குடிகளின் வாழ்க்கையை பேசுகிறது.

இப்படம் அதை மேலோட்டமாக சொல்லாமல் அங்கு நிலவும் ஆவணமற்ற வாய்வழி வரலாற்றையும் சொல்லி அதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் சொல்லுகிறது. ஆனால் அந்த வாய்வழி வரலாறு பேசும் பழங்குடிகள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் வயநாட்டிலும் அட்டப்பாடி கிராமங்களிலும் இருக்கின்றன.

வாய்வழிக் கதைகளில் ஆரம்பித்து போர்ச்சுகீசிய மிளகு வாணிபம், ஆங்கிலேயர்களின் ஊடுருவல் இந்தியா சுதந்திரத்திற்கு பின் நிலவிய அரசியல் தாக்கங்கள் என சமகால நிலை வரை விரிவாக இப்படம் பேசுகிறது. இதில் குறிப்பாக நாம் இழக்கும் விஷயம் காடுகளின் வளம்.

என்னால் அதை நன்கு உணர முடிகிறது. கேரளாவில் இருக்கும் ஆய்வாளர்களின் பேச்சுகளும் இதில் வருகிறது. அதிலெல்லாம் பழங்குடிகள் இருக்கும் வரையில் காடுகள் செழிப்பாக இருந்தன என்று சொல்லுகிறார்கள். மனிதர்களால் ஆக்ரமிப்புகள் காலம் தொட்டு நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அவைகளில் கொடுமையானது விவசாய முறையை மாற்றுவது. அது தான் நிகழ்ந்திருக்கிறது. பழங்குடிகளின் விவசாய முறை காட்டை கேடு விளைவிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காட்டின் குறிப்பிட்ட பகுதியை எரித்து தங்கள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தி சில காலத்திற்கு பிறகு அங்கிருந்து சென்றுவிடுவார்களாம். அதன் பின் பன்னிரெண்டு பதிமூன்று ஆண்டுகளுக்கு பின்னரே அந்த இடத்திற்கு மீண்டும் வருவார்களாம். காடுகளின் வளம் பழங்குடியின மக்களால் வளர்ந்ததே ஒழிய அழியவோ குறையாவோ இல்லை என்று ஆதாரப் பூர்வமாக சொல்லுகிறார்கள். அவர்களின் வேட்டையும் ஒழுக்க ரீதியாகவே இருந்திருக்கின்றன என்று இந்த ஆவணம் சொல்லுகிறது.

மலைகளில் பயிர்களின் மாற்றங்களும் ஒரு ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மிளகு காபி தேயிலை மற்றும் அவை எங்கிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது, எது எதனால் நிலைநாட்டப்பட்டது என்று சொல்கிறது. மேலும் அங்கே மேஸ்திரிகள் என்று சிலர் இருப்பார்கள். அவர்கள் ஆங்கிலேயர்களுக்காக ஆட்களை பிடித்துக் கொண்டு வந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய விடுவார்களாம். அவர்களின் கொடுங்கோல் அம்சங்களை ‘எரியும் பனிக்காடு’ நாவல் விரிவாக பேசுகிறது. அதன் ஆவணமும் கொஞ்சம் இப்படத்தின் இடையில் வந்து செல்கிறது. இக்கொடுமைகளின் சாயல் அவர்களின் வம்சத்தவர்கள் மனதில் ஒரு வடுவாய் பதிந்திருப்பது உருக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்து மொழி. இவர்களின் மொழி காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் அழிந்தாலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை என்பதை தெள்ளத் தெளிவாக இப்படம் சொல்லுக்கிறது. அவர் ஒரு பள்ளி செல்லும் சிறுமியிடம் கேட்கிறார். அவள் சொல்லும் பதிலோ பள்ளிகளில் கூட இவர்களின் மொழியை சொல்லித் தருவதில்லை என. அவர்களின் மொழியிலும் வாய்வழிப் பாடல்களும் கதையாடல்களும் இருக்கின்றன என்பதை படத்தின் இறுதியில் ஒரு பாடலின் மூலமாக காட்டுகிறார்கள்.

மதமும் தன்பால் சில  ஆக்ரமிப்புகளை பழங்குடிகளிடம் செய்திருக்கிறது. சைவம் வைணவம் சமணம் என ஆவணங்கள் நிறைய இருக்கிறது. காரமடைப் பகுதிகளில் இன்றும் நிலவும் மத ரீதியான கடவுள்களுக்கிடையில் மக்களால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல் விஷயங்களை பதிவுகளாகவே காட்டியிருக்கிறார்.

பழைய கால அந்நிய நாடுகளின்  ஆக்ரமிப்பால் நிகழ்ந்த அபத்தங்களை விட தற்கால அரசியல் ஆதிக்கங்களால் நிகழ்ந்து கொண்டிருக்கும் அபத்தங்கள் தான் மனதை வலிக்க செய்கிறது. பழங்குடியினரை மலைகளிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி, குறிப்பாக மனிதர்களே இன்றி விலங்குகளுக்கான இடமாக மாற்ற வேண்டும் என்று கூறி அரசு சுற்றுலாத் துறையை வைத்திருக்கிறது. இதை எப்படி நியாயப்படுத்தலாம் என்று எனக்கு தெரியவில்லை.

எல்லாவற்றையும் நடுநிலைமையில் நம்மால் கணிக்க முடியாது. அதேப் போல இந்த படத்தையும் நம்மால் முழுமையாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. கடைசியாக ஒரு கிழவியின் பாடல் கேட்கிறது. அர்த்தம் புரியாமல் படம் முடிந்தும் அந்த பாடல் மட்டும் எனக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஷிப் ஆஃப் தீசெஸ். – திரு

Ship-of-Theseus

சமீபத்தில் எழுதுவதை ஒரு தொற்று நோயாக கொண்ட எல்லோரும் ஷிப் ஆஃப் தீசெஸ் பற்றி எழுதுவதை பார்த்திருக்கலாம். கொஞ்சம் எழுதவோ பேசவோ தெரிந்த எல்லோரும் இதை பற்றி பேசாமலோ எழுதாமலோ இருக்க முடியாது என்பது தான் இந்த படத்தின் தாக்கமாக உணரவேண்டியிருக்கிறது. உறுப்பு தானத்தை வலியுறுத்தி மையலிடப்பட்ட இந்த படம் ஒரு மிகச்சிறந்த ஆவணமாக மாற்றப்பட்டிருக்கிறது. டாக்குமென்ட்ரி என சாதரணமாக கடந்து சென்றுவிடவும் முடியாது.

ஷிப் ஆஃப் தீசெஸ். ஒரு படகின் உடைந்த பாகங்களை ஒன்று சேர்த்து மீட்டுருவித்தால் அது பழைய படகினை நினைவுறுத்துமா? என்ற வினாவுடன் தொடங்கிறது படம். பண்டைய கிரேக்க புராணத்தில் ’மித்’தாக கருதப்படும் ”தீசெஸ் பேரடாக்ஸை”(தீசெஸ் முரண்) உள்ளீடாக கொண்டு துவங்குகிறது. இப்போது இதை கடுமையான தத்துவ விசாரனைகளை தாங்கி வந்திருக்கும் படம் என்று நினைத்து பயந்துவிடாதீர்கள்.

மிகச்சிறந்த கலை வெளிப்பாட்டின் செய்நேர்த்தியுடன் அழகாக பொருந்தி வந்திருக்கும் இப்படம் எல்லோர்க்குமானது தான். தேவை திறந்த மனமும் பொறுமையும். மூன்று தளங்களில் விரியும் கதை ஒரு முடிச்சில் மிக இயல்பாக இனைகிறது.

சிறு வயதில் பார்வைத்திறன் பறிபோன ஆலியா என்ற அரபுப்பெண், தன் பார்வை குறைபாட்டை மீறி சிறந்த புகைபடக்கலைஞராக வளருகிறாள். பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் பார்வை கிடைக்க பெற்ற ஆலியாவால் முன்பைபோல் புகைப்படம் எடுப்பதில் மனத்தடங்கள் ஏற்படுகிறது. இதுவரை தான் கேட்டுணர்ந்த இவ்வுலகை கண்டுணர்ந்து அவளால் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. ஜனனெருக்கடி மிகுந்த ஒரு நான்முனை சந்திப்பில் புகைப்படம் எடுத்து பார்ப்பவள், எதிலும் திருப்தியுறாமல் எல்லாவற்றையும் அழிக்கிறாள். இச்சிக்கலில் இருந்து விடுபட ஒரு மாற்றத்திற்க்காக பயணம் செல்பவள் அங்கு அவளுக்கு ஏற்படும் அதிஅற்புத உணர்வோடு படம் அடுத்தகதைக்கு செல்கிறது.

மைத்ரேயா என்ற ஜைன மத துறவி பரிசோதனை கூடங்களில் விலங்குயிர்கள் பாதிக்கப்படுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். எவ்வித சின்னஞ்சிறு பிராணிகளுக்கும் இன்னல் வராமல் ஒரு மனிதன் தன் வாழ்வை வடிவமைப்பது குறித்து பஜனைகளில் பாடியும் பேசியும் வருகிறார். இப்போது அவர் கடுமையான வயிற்று வலியால் அவதியுறுகிறார். மருத்துவர் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கிறார். மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை துறவி ஏற்க மறுக்கிறார். அம்மருந்துகள் விலங்குகளுக்கு கொடுத்து பார்த்து பரிசோதிக்கப்பட்டவை என நிராகரிக்கிறார். பின் நோய் முற்றிப்போன துறவிக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு வற்புறுத்தப்படுகிறார். எவ்வொரு உயிரையும் துன்புறுத்தாது வாழ பிரயத்தனப்படும் ஒருவர் ஒரு மனிதனின் கல்லீரலை ஏற்காது ஒரு நாள் இரவு வலியால் துடித்து சாவின் விளிம்புக்கு செல்கிறார். பின் அவ்ர் எடுக்கும் முடிவோடு அடுத்த கதைக்கு செல்லும் இப்படத்தின் ஆகச்சிறந்த நடிப்பை துறவியாக நடித்த நீரஜ் கபி வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் ஒரு சிறந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்.

பங்கு வர்த்தக தரகராக எப்பொதும் தன் நேரத்தை குறுக்கிகொள்ளும் நவீனுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெறுகிறது. சமூகம் குறித்து எவ்வித்த பிரக்ஞையுமே இல்லமல் எப்போதும் கணினி திரையின் முன் பங்குவர்த்தகங்களை கவனித்துகொண்டிருக்கும் அவனது குடும்பம் சமூக செயர்பாட்டளர்களால் நிரம்பியது. அவனது பாட்டி கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்பவர். அவனது தங்கை கைது செய்யப்பட்ட ஆர்.டி.ஐ ஆக்ட்டிவிஸ்ட்டுக்காக போராடிக்கொண்டிருப்பவள்.

காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாட்டியை கவணித்துகொண்டிருக்கும் இவனுக்கும் பாட்டிக்கும் கடுமையான வாக்குவதம் நடக்கிறது. பாட்டி இவனை சமுகத்திற்க்கு எதாவது செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறாள். இவன் கடுமையாக மறுப்பதோடு பாட்டியிடம் சண்டையிடுகிறான். அன்றைய இரவு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் கூலிதொழிலாளியின் மனைவி அழுது கூப்பாடுபோடுகிறாள். தனது கனவனை அப்பெண்டிக்ஸ் அறுவைசிகிச்சைக்காக சேர்த்ததாகவும் ஆனால் அவனது ஒரு சிறு நீரகம் இப்பொது களவாடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறாள். அப்படி திருடப்பட்ட ஒரு சிறு நீரகம் தான் தன் உடலில் இருப்பதாக நினைத்து குற்றவுணர்ச்சி கொல்லும் அவன் அந்த தொழிலாளிக்கு நியாயம் தேடி களவாடப்பட்ட சிறு நீரகத்தை தேடி அலைகிறான். சிறுநீரகம் கிடைக்கபெற்றதா இவனின் குற்றவுணர்வுகள் மனப்போராட்டங்கள் என படம் முடிவை நோக்கி செல்கிறது. மற்ற இரண்டு கதைகளில் இருந்து சற்றே விலகி இறுக்கம் இல்லாமல் நெகிழ்வுத்தன்மையுடன் விவரிக்கபடுகிறது.

தன்னை சுற்றி நடப்பவைகளை கேட்டுணர்ந்து நவீன கருவிகளின் உதவியுடன் புகைப்படம் எடுப்பதை எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல் நம்பகத்தன்மையுடன் இயல்பாக படம் பார்ப்பவர்களுக்கு புரியவைத்துவிடுகிறது. உன்மையில் ஆலியா கையாளும் நவீனகருவிகள் எதுவுமே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாம் கற்பனையான கருவிகள் தான். ஆலியாவின் புகைப்படங்கள் கருப்புவெள்ளையில் இருப்பதையே அவள் விரும்புகிறாள். தான் எடுக்கும் புகைப்படங்களை தினமும் இரவில் தன் கனவரின் உதவியுடன் தேர்வு செய்கிறாள். அப்படி ஒரு நாள் ஆலியாவின் பிரஞையின்றி யதேச்சயாக ஒரு படம்பிடிக்கப்பட்ட ஒரு படம் மிக அருமையாக இருப்பதாகவும் அதை தெரிவு செய்துகொள்ளுமாரும் கனவன் சொல்ல, ஆலியா மிகக்கடுமையாக மறுக்கிறாள். அது தான் எடுத்த புகைப்படம் அல்ல என்று நிர்தாட்சன்யமாக மறுத்து சண்டை பிடிக்கிறாள். இங்கே கனவனுக்கும் மனைவிக்கும் கடுமையான வாக்குவாதம் நிகழ்கிறது. பார்வை கிடைக்கபெற்ற ஆலியா தன் உணர்வுகளை கண்ணீரால் வெளிப்படுத்தும் காட்சி அழகான கவிதை நேர்த்தி. கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுடன் திரையில் தோன்றும் இன்னடிகை இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல் படத்தில் மைத்ரேயாவாக வரும் துறவி அடிப்படையில் ஒரு சமணமத துறவியாக படத்தில் காட்டப்பட்டாலும் காந்தியக்கூறுகளையும் புத்ததின் சில பத்திகளையும் இயக்குனர் பிரக்ஞைபூர்வமாக இனைத்திருக்கிறார். மற்ற இரண்டு கதைகளிலும் எழும் விவாதங்களின் சாரம் கதையின் இழையோடு தான் செல்கிறது. இங்கே துறவிக்கும் அவருக்காக வாதாடும் இளம் வழக்கறிஞருக்கும் நடக்கும் விவாதம் மிகவும் அப்பட்டமாக தத்துவ விசாரணைகளுடன் நிகழ்வதை கவணிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் அது நம்மூர் பாலச்சந்தர்-கமல்ஹாசன் படங்களில் கதாபாத்திரங்கள் தன் அறிவுக்கும் அளவுக்கும் மிஞ்சிய வகையில் அமெட்சூராக பேசுவதுபோல் இல்லாது திரையோட்டத்தின் போக்குக்கும் இடைஞ்சலாக இல்லாது சுவாரஸ்யம் கூட்டுவது தான் இயக்குனரின் வெற்றியாக இருக்கிறது. அதில் எனக்கு பிடித்த வசனம் இப்படி வருகிறது. Monks are supposed to be celibate, then why this much intellectual masturbation in first place?

இந்த உரையாடலில் துறவியை மருத்துவத்துக்கு வற்புறுத்தும் இளம் வழக்கறிஞர் கார்டிசெப்ஸ்(cordyceps) என்னும் பூஞ்சை(fungus) வகைமையை பற்றி குறிப்பிடுகிறார். மிகவும் சுவாரஸ்யமான தகவல். கார்டிசெப்ஸ் என்னும் நுண்ணுயிரி எறும்பின் சுவாசம் வழியாக மூளைக்கு சென்றடைந்து வசப்படுத்தி ஒரு மரத்தின் இலையை நோக்கி எரும்பை இயக்குமாம். பின் எரும்பை கொன்று உரமாக்கி அதன் மூளையில் இருந்து வளருமாம். ஒரு ஸோம்பியின்(zombie) கதை போல இதை பற்றிய தகவல்களை இனையங்களில் படிக்கும் போது பயங்கரமாக இருக்கிறது. நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் ஒவ்வொரு படைப்பும் ஒரு கார்டிசெப்ஸாகதான் இருக்கிறது போலும்.

இந்த மூன்று கதைகளிலும் ஒரோர் கட்டத்தில் கதைமாந்தர்களுக்குள் ஒரு விவாதம் ஏற்படுத்துகிறது. அத்துனை முரண் நிறைந்த அந்த விவாதங்களே படத்தின் மைய்யக்கருவாக கருதப்படவேண்டியிருக்கிறது. அதுவே தான் பார்வையாளனுக்கும் பல எண்ணங்களாக விரிவடையவைக்கிறது. நாம் எல்லொருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் இவ்வித முரண்களை நிச்சயம் சந்தித்து இருப்போம்.

ஒரு விஷயத்தை – அது கடவுள், கம்யூனிசம், அறிவியல், அரசியல், கலை, இலக்கியம் இன்னும் வேறென்னவாகவோ நாம் அதிதீவிரத்துடன் நம்புவோம் இல்லையா. அப்படி நம்பின பல விஷயங்களை எதோ ஒரு கட்டத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் அதிலிருந்து முற்று முழுதாய் விட்டு விடுதலையாகி எதிர் திசையை நோக்கி பயனித்திருப்போம் தானே. உலக ஆளுமைகள் எல்லோருடய வாழ்வுமே இப்படியான முரண்களால் ஆனது தான். புத்தர் முதல் காந்தி வரை, ஐன்ஸ்டீன் முதல் பெரியார் வரை அனைவரும் இந்த முரண்களை தன்னளவில் மிக நியாயமாக எதிர் கொண்டவர்கள். அதனால் பயன் பெற்றவர்கள் உலகமக்கள் தான் என்ற போதும், இந்த பயன்பாடு அவர்களை செதுக்கிகொள்ளவும் தன்னை உருப்படுத்திக்கொள்ளவுமே அதன் இயல்பாக இருந்திருக்கிறது. இம்மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு தொட்டு பேச வேண்டிய ”நீயா நானா” டைப் சங்கதியை திரைமொழியில் மிக இயல்பாக காட்சிப்படுத்திருக்கிறார்கள்.

வாழ்வின் பல படிநிலைகளில் நாம் சந்திக்கும் இதுபோன்ற முரண்களை நாம் எத்தனை நியாத்துடன் எதிர்கொண்டிருக்கிறோம் என்பது தான் இப்படம் எனக்கு எற்படுத்திய பல்வேறு எண்ணங்களில் பிரதானமாக இருக்கிறது. நாம் நேசித்திருக்கும் மனிதரை, நேசித்திருக்கும் படிப்பை, நேசித்திருக்கும் வேலையை எத்துனை ஒரு அற்ப விஷயத்திர்க்காக எவ்வித நியாய பேதமும் இல்லாமல் கைவிட்டு ஒரு சராசரி இயந்திர கதியில் உழன்றுகொண்டிருக்கிறோம். இந்த முரண்களை நியாயமாக எதிர்கொள்ளும் மனதைரியம் படைத்தவர்கள்தான் தொடர்ச்சியாக வரலாறுகளால் நினைவுகூறப்படுகிறார்கள்.

•••

மொழியைத் துறந்த கவிதை வருணன்.

m1
அன்பெனும் வார்த்தையைக் கேட்டதும் தோன்றுகின்ற மன பிம்பத்தில்
நிறைந்திருப்பது பெரும்பாலும் தாய் தான். ஏனோ தந்தையின் ஆளுமை எப்பொதும்
கண்டிப்பு மிக்கதாகவே கட்டமைக்கப் படுகின்றது. இருப்பினும்
தந்தைகளிடத்திலும் மிகுதியாயிருக்கும் அன்பு கலை இலக்கிய பரப்பில்
ஏறக்குறைய சொல்ல மறந்த கதையாகவே இருக்கிறது தாயின் அன்புக்கு
தரப்பட்டுள்ள கவனத்தோடு ஒப்பிடும் போது.

சினிமா கலையில் குறும்படங்கள் தனி ரகம். சொல்லும் கதையின் முழுத்
தாக்கத்தையும் குறுகிய நேரத்தில் சில காட்சிகளிலேயே பார்வையாளனுக்கு
கடத்திட வேண்டிய அவசியத்தை உள்ளடக்கிய சவால் அது. ஒரு தந்தைக்கும்
மகளுக்குமான அன்புறவை எட்டரை நிமிட கால இடைவெளியில், அதுவும் மொழிகளற்று,
சொல்லியிருக்கும் ஆச்சரியம் டச்சு குறும்படம் “தந்தையும் மகளும்” (Father
and Daughter, 2000). மிஷெல் டுடாக் (Michael Dudok de Wit) எழுதி
இயக்கிய இக்குறும்படம் 2000 ஆண்டிற்கான சிறந்த அனிமேஷன்
குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றது.

இந்த சுட்டியை சொடுக்கி அக்குறும்படத்தை பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=MgdsfRDxIeQ

இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அனுமேஷன் துறை அசுர வளர்ச்சி
காணத் துவக்கிய காலகட்டத்தில் (Toy Story திரைப்படத்திற்குப் பிறகு பல
தொழில்நுட்ப சாத்தியங்கள் உருவாகியிருந்தது) அன்றைய முறைமைகளை முற்றாக
புறக்கணித்துவிட்டு டுடாக் கோட்டோவியப் பாணியில் தனது படத்தை
உருவாக்கியிருந்தார். ஆம். இயக்கத்தோடு கூடவே மொத்த அனிமேஷனையும் அதன்
பிண்ணனியையும் அர்ஜான் வில்ஷுட்டுடன் (Arjan Wilschut) இணைந்து அவரே
உயிரூட்டியிருந்தார். வண்ணக் கலவைகள் பெரும்பான்மையாய் பழுப்பும் பழுப்பு
சார்ந்த நிறங்களிலேயே திரையை தீட்டியிருந்தன.

m2

கிளாரினெட் இசையோடு துவங்கிறது படம். வசனமே இல்லது வெறும் இசையே கதையின்
நுண்மையான உணர்வுகளைச் சொல்லும் ஊடகமாகிறது. ஒரு தந்தையும் மகளும்
தத்தமது மிதிவண்டிகளில் நெதர்லந்தின் இயற்கை ஆசீர்வத்திருக்கும் வீதி வழி
வருகின்ற துவக்கக் காட்சி. செல்லும் வழியில் ஒரு சாலையோரம் வரிசையில்
நிற்கும் ஒரு மரத்தடியில் மிதிவண்டிகளை இளைப்பாற விட்டு எதிரேயிருக்கும்
நீர்பரப்பை நோக்கிச் செல்கிறார். அங்கு ஒரு படகு அவருக்காய் தயார்
நிலையில். தன் அன்பை கன்னங்களில் முத்தங்களாய் பதியனிட்ட மகளை விடுத்து
அதில் புறப்படுகிறார். படகில் ஏறும் முன் கண நேரத் தடுமாற்றம். பிரிந்து
போக வேண்டிய நிர்பந்தத்திற்கும் தனது இருப்பை வேண்டும் மகளின்
யாசிப்பிற்கும் இடையேயான உணர்ச்சிப் போராட்டம். மனதின் இந்த
ஊசலாட்டத்தின் உந்துதலால் திரும்பி ஓடி வந்து தன் உயிரைத் வாரியணைத்துக்
கொள்கிறார். தேவைகள் நிர்பந்திக்கும் புறப்பாடு தவிர்க்கவியலாதது.
புறப்படுகிறார் சிறுமியை கரைதனில் விடுத்து.

தந்தையோடு வந்தவள் தனியாய் திரும்புகிறாள். தகப்பனின் இருப்பையும் அவரது
அணைப்பையும் எதிர்நோக்கும் அவளது பால்யம் அவளை நாள்தோறும் அதே இடத்திற்கே
வருவிக்கிறது. தந்தையை காணும் ஆவல் தேக்கி அன்றாடம் அவ்விடம் வருவது
அவளுக்கு வாடிக்கையாகிறது. கிளாரினெடின் மௌனத்தை பியானோவின் இசை
நிரப்புகிறது. ஒரு கட்டத்தில் அவளது குணாதிசியமாய் மாறுகிறது அந்த தேடல்.
பருவம் மாறுகிறது. கிளைகளில் தங்கா இலைகள் உதிர்கின்றன. காற்றும்
வெயிலும் மழையும் பனியுமாய் காலம் உடை மாற்றி விடுகிறது நிலத்திற்கு.
எந்த மாற்றமும் சிறுமியின் தகப்பனை எதிர்பார்க்கும் அந்த காத்திருப்பை
ஒன்றும் செய்ய முடியவில்லை. விடிந்தால் ஆதவன் எழுவது போல ஆகிறது அவளுடைய
வருகையும். தூரத்தைப் புசிக்கும் சக்கரத்தின் சுழற்சியாய் அவளது வயதை
உண்கிறது காலம். சிறுமி யுவதியாகிறாள். கால ஓட்டமோ பதின்மத்தில் வாயிலில்
தோழிகளின் உடனிருப்போ அவளுடைய தந்தையைக் கோருமந்த ஆழ்மன கேவலை எந்த
விதத்திலும் மாற்றயிருக்கவில்லை.

தனக்காக ஒருவன் வந்த பிறகும் மனம் தந்தையில்லாத மனதின் வெறுமையை மறக்க
மறுக்கிறது. இருள் போர்த்தி நிலம் உறங்கும் இரவுகளில் கூட விழித்தே
இருக்கிறது அவளது தேடல். நாட்களின் நகர்வில் அவளுக்கும் குடும்பமும்
குழந்தைகளும் என்றாகிறது. தமது தந்தையோடு அதே நீர் நிலையில் தனது மழலைகள்
விளையாடி மகிழும் போது இவள் மட்டும் தொடுவானில் நிலைத்த கண்களோடு
கரையினிலே நிற்கிறாள்.
mail.google.com
ஒரு இலையுதிர்ந்த மரமொன்று காலச் சக்கரத்தின் சுழற்சியில் கரைந்த இவளது
இளமையின் குறியீடாகிறது. உடலிற்கு மட்டுமே வயது கூடி இன்னும் பால்யத்தைக்
கூட கடக்கா நினைவுகளோடு, இன்னமும் வருகை தொடர்கிறது. கிழப்பருவமெய்தி
மூதாட்டியாய் அவள் வழக்கமான இடத்தில் மிதிவண்டியை நிறுத்துகிறாள். நிற்க
மறுக்குமதனை நிறுத்தும் அவளது எத்தணிப்புகள் பொய்க்க அதனை அப்படியே
விடுத்து நீர் பரப்பின் அருகிலே வருகிறாள். காலன் குடித்த நீர்பரப்பில்
புற்கள் மட்டுமே மண்டிக் கிடக்கின்றன. புற்களை விலக்கி மெல்ல அதனூடாய்
நடக்கத் துவங்குகிறாள். வழியில் ஒரு சமப்பரப்பில் தன் தந்தையை சுமந்து
சென்ற படகினை மட்டும் காண்கிறாள். அதனை மெல்ல ஸ்பரிசித்து கால்களைக்
குறுக்கிப் படுத்துக் கொள்கிறாள். பார்க்கும் நமக்கோ அது அவளது தந்தையின்
மடி போலவும் அவள் அதில் தலை வைத்து தான் சுகித்துணரா தன் தந்தையின்
அருகாமையை, இருப்பை உணர முற்படுவதாகவுமே தோன்றுகிறது.

நேரம் கடப்பதை தவழும் முகில்களின் நகர்வில் அறிகிறோம். திடீரென மூதாட்டி
எழுந்து நடக்க ஆரம்பிக்கிறாள் எதை நோக்கியோ. எட்டு வைத்து நகர நகர அவள்
வயது குறைந்து குறைந்து சிறுமியாகிறாள். நடை நிற்கிறது எட்டும் தூரத்தில்
தந்தையைக் கண்டவுடன். கண நேர உறைதலுக்குப் பின் இருவரும் ஒரு அடி
முன்னேறி நெருங்க ஒரு யுகத்தின் ஏக்கம் முடிந்தவளாய் தேடியதைக்
கண்டுகொண்ட பேரானந்தத்தில் ஆரத்தழுவிக் கொள்கிறாள் தந்தையை. திரையில்
இருள் பரவ முடிகிறது படம். நம் மனதில் அதீத அன்பும் வாஞ்சையும் உடையவராய்
நமது தந்தையின் முகம் மின்னலாய் வந்து போகிறது.

மொழியை முற்றிலுமாய் தவிர்த்து இசை மற்றும் குறியீடுகளின் வழியாகவே கதை
சொல்லும் முறைமையை மிக நேர்த்தியாய் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
காட்சிகள் வழியே நம்மை வழிநடத்தி தனிமனித அனுபவ சரடுகளின் வாயிலாக
பார்வையாளர்களே கதையினைப் புரிந்து கொள்ளும் ஒரு திரை அனுபவத்தை படைப்பு
தருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் விரவிக் கிடக்கும் குறியீடுகள் ஒரு
விழிப்பான பார்வையாளனின் கவனத்தை வேண்டி நிற்கும் அதே வேளையில்,
உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்படும் ஒரு சாமானிய பார்வையாளனுக்கும்
இடமளிக்கும் பாணியில் அமைந்திருக்கிறது கதையாடல்.

மையப் பாத்திரமான சிறுமியின் வயதை பிரதிபலிக்கும் வண்ணமாய், அவளது பால்ய
காலத்திற்காண பிண்ணனி இசை துள்ளலாகவும் வேகமாகவும் பயன்படுத்தப்
பட்டுள்ளது. அதே வேளையில் அவளது வயது முதிர முதிர இசையின் துள்ளலும்
குறைவதாக கோர்க்கப்பட்டுள்ளது. இந்த கோணத்தில் பார்க்கையில் இசையும் ஒரு
குறியீடாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையமைபாளர்கள் நார்மண்ட் ரோஜர்
(Normand Roger) மற்றும் டெனிஸ் சார்ட்ரண்ட் (Denis Chartrand) தங்களின்
இசையால் ஒரு தனித்துவமான பரிமாணத்தை நிச்சயம் திரைக்கதையோட்டத்தில்
உருவாக்கியிருக்கிறார்கள்.

வசனங்களற்று இசையை மட்டுமே துணையாய் கொண்ட மௌனப்படங்கள் கதை சொல்லலுக்கு
பெரிதும் நம்பியிருக்க வேண்டியது முக பாவங்களையே. அது சாதாரண படமோ
அனிமேஷன் படமோ, இரண்டிற்கும் இது பொதுவானதே. ஆனால் தனது அனிமேஷனை வெறும்
கோட்டோவியச் சாயலில் உருவாக்கிய இயக்குனர் டுடாக் பாரம்பரியமான மௌனப்
படங்களின் கதை சொல்லும் முறைமைகளைப் புறக்கணித்து முற்றாக ஒரு புதிய கதை
சொல்லும் யுக்தியை கையாண்டுள்ளார். படத்தில் ஒரு க்ளோசப் ஷாட் கூட இல்லை.
பெரும்பாலான ஷாட்கள் நிலையாக இருக்கும் காமிராவின்  சட்டத்துக்குள்
(Frame) கதாபாத்திரங்கள் வரும் டெயில் அவே ஷாட்கள் (Tail away Shot)
தான்.

எந்த ஒரு படைப்பாயினும், அது இலக்கியப் படைப்போ அல்லது கலைப் படைப்போ
எதுவாயினும், படைப்பாளியை மீறி எதையோ சொல்ல தொடர்ந்து எத்தணிக்கின்றன.
தன் குடும்பம் தழைக்க, அவர்களது நல்வாழ்விற்காகவும் மகிழ்ச்சிக்காகவும்,
எத்தனையோ பேர் திரைகடல் ஓடி திரவியம் தேடுகிறார்கள். கூடியிருந்து
சுகித்திருக்கக் கூடிய இளமை அனைத்தையும் அயல் நாடுகளில் பொருள் தேடும்
பொருட்டு இழக்கின்றனர். அப்படி பணி நிமித்தமாய் தன் புதல்வியைப் பிரிந்து
செல்லும் ஒரு தந்தையின் வரவை எதிர்நோக்கும் ஒரு மகளின் ஏக்கத்தால்
எழுதப்பட்ட கதை இதுவென்றும் பொருள் கொள்ள முடியும்.

இயக்குனர் டுடாக் (1953- ) இது வரையில் மொத்தமே நான்கு குறும்படங்களே
எடுத்துள்ளார். Tom Sweep (1992), The Monk and the Fish (1994), Father
and Daughter (2000), The Aroma of Tea (2006) ஆகியன இவரது படைப்புகள்.
நெதர்லாந்தில் பிறந்து தற்போது லண்டன் நகரத்தில் வசிக்கும் இவர் பிற
திரைப்படங்களில் அனிமேஷன் கலைஞராவும், விளம்பரப் படங்களை இயக்கியும்
அவற்றுக்கு அனிமேஷன் செய்தும் வருகிறார். இவர் இயக்கிய குறும்படங்களின்
அனுமேஷன்களில் ஒரு பொதுமைத் தன்மையை பார்க்கலாம். அது சீன மற்றும்
சப்பானிய ஓவிய பாணியின் (கோட்டோவியம் மற்றும் நீர் வண்ணக் கலவைகளால்ல்
ஓவியம் தீட்டும் முறைமை) சாயலை அவை பெற்றிருப்பதே. இக்குறும்படத்திற்கு
கூட அவர் பென்சிலாலும் மரக்கரியாலும் வரையப்பட்ட கோட்டோவியங்களில்
டிஜிட்டல் முறையில் வண்ணங்களைச் சேர்த்திருந்தார். உருவான விதத்தை
கீழ்காணும் சுட்டியை சொடுக்கிக் காணலாம்.

https://www.youtube.com/watch?v=GjwDoN3E1fA

இப்படத்தை பார்த்தவுடன் பார்வையாளர்கள் தத்தமது தந்தையரை குறித்த மன
பிம்பங்களை மீள் உருவாக்கம் செய்வது அனிச்சையானதே.

m3