Category: சினிமா

தமிழ் சினிமா : காட்டப்படுவதுவும் காண்பதுவும் – அ.ராமசாமி / விமர்சனம் – இமையம்.

download (8)

அண்மைக் காலத்தில் வெளிவந்து பெரிதும் பாராட்டப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வசூல் ரீதியாக வெற்றி பெற்ற, தோல்வியுற்ற தமிழ் சினிமாக்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே காண்பதுவும், காட்டப்படுவதுவும். இந்த நூலின் வழியே தமிழ் சினிமா பார்வையாளனிடம் அ.ராமசாமி ஒரு உரையாடலை நிகழ்த்த விரும்புகிறார். இந்த உரையாடலின் மையமாக இருப்பது சினிமா சார்ந்த ரசனையை, பார்வையை உருவாக்குவது. எது நல்ல சினிமா, எது கெட்ட சினிமா, எது பார்க்க வேண்டிய படம், எது நிராகரிக்கப்பட வேண்டிய படம் என்ற கேள்விகளை முன்வைத்து தன்னுடைய கட்டுரைகளின் வழியே பதில்களை தேடுகிறார். “நான் எப்போதும் சினிமா விமர்சனம் எழுதவில்லை” என்று அ.ராமசாமி சொல்கிறார். அவர் விமர்சனம் எழுதவில்லை. அது உண்மைதான். ஆனால் தன்னுடைய கட்டுரைகளின் வழியே ஒரு விவாதத்தை உருவாக்குகிறார். தமிழ் சினிமா என்று ஒன்று இருக்கிறதா, இந்திய, உலக சினிமா என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கிறார். அப்படியிருந்தால் அதற்கான காரணங்கள் என்ன? சினிமாவை எப்படிப் பார்க்கிறோம், எப்படிப் புரிந்துகொள்கிறோம்? கலை என்பது நமது மனதை பண்படுத்த வேண்டும். பண்பாட்டை ஒரு படி மேலே உயர்த்த வேண்டும். இவைதான் கலைக்கான விசையாக இருக்க வேண்டும். ஆனால் நமது சினிமா நம் மனதை கெடுக்கிறது. நமது பண்பாட்டை அழிக்கிறது. இது ஒரு கலை வடிவம் செய்யக்கூடிய வேலை அல்ல.

download

மெட்ராஸ், விஸ்வரூபம், ஏழாம் அறிவு, அழகர்சாமியின் குதிரை, பரதேசி, அவன் இவன், நான் கடவுள், எந்திரன், கந்தசாமி, அரவான், ராவணன், திருமணம் என்னும் நிக்காஹ், பூர்ணமை நாளில் ஒரு மரணம், ஈசன் போன்ற தமிழ் படங்கள் ஒவ்வொன்று குறித்தும் அ.ராமசாமி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த படங்கள் அதனுடைய ரசிகர்களான பார்வையாளனுக்கு சொன்ன செய்திகள் என்ன? எந்திரன், கந்தசாமி, நான் கடவுள், ஏழாம் அறிவு போன்ற படங்கள் எந்த அளவுக்கு யதார்த்த சமூகத்தோடு ஒட்டியிருந்தன? சாதாரண புதுமுக, தோற்றப் பொலிவுக்கூட இல்லாத ஒரு நடிகனை வைத்து எடுக்கப்பட்ட அழகர்சாமியின் குதிரை எப்படி வெற்றி படமானது? தமிழ் சினிமா பார்வையாளனுடைய ரசனையை எப்படி மதிப்பிடுவது? ஒவ்வொரு படமும் எப்படி வெற்றி பெற்றது, எதனால் தோல்வியுற்றது என்பதோடு அந்தந்த சினிமா படம் முன்னிருத்திய, முன்னிருத்த விரும்பிய மையம் எதுவென்று ஆராய்கிறார் அ.ராமசாமி. மணிரத்தினத்தின் ‘ராவணன்’ படம் எதனால் தோல்வி படமானது, ‘கந்தசாமி’ படம் மிகைக்கற்பனையால் நம்பகத்தன்னையை எப்படி இழந்து நிற்கிறது? ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படம் சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களுககு சொல்லத்தவறியது என்ன? இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வெற்றிப் படமானதற்கு எது காரணம்? எந்திரன் ஏன் நல்ல படம் இல்லை? ‘மெட்ராஸ்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் கவனிக்கத்தக்கப் படமாக ஏன் இருக்கிறது? சில்க் ஸ்மிதாவின் தற்கொலை எப்படி சுய அழிவின் வெளிப்பாடாக இருந்தது என்பது குறித்தெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நாயகர்களின் காலம் என்பதுபோய், இயக்குநர்கள் கூடுதல் வெளிச்சம் பெற வைப்பது எது? பாலா எப்படி மற்ற இயக்குநர்களைவிட கூடுதல் வெளிச்சம் பெறுகிறார்? சினிமா என்பது முற்றிலும் கூட்டுழைப்பு அடிப்படையில் உருவாவது. ஆனால் தமிழ் சினிமா நடிகரை முன்னிருத்துகிறது. இல்லையென்றால் இயக்குநரை முன்னிறுத்துகிறது. ஏன்? தமிழ் சினிமா முன்னிருத்துகிற நடிகரோ, இயக்குநரோ அவ்வளவு சிறப்பானவர்களா? சிறப்பு எதுவும் பெறாதபோதும் எப்படி முன்னிலைப் பெறுகிறார்கள் என்பது ஆச்சரியம். சங்கர், பாலா, மணிரத்தினம் போன்ற இயக்குநர்கள் சிறப்பான தகுதி பெறுவதற்குரிய மனிதர்களா? இவர்களுக்கு மட்டும் ஏன் ஊடகங்கள் முன்னுரிமை அளிக்கிறது? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் செயல்பாடுகள் எவை என்று முக்கியமான கேள்விகளை இக்கட்டுரையில் கேட்டிருக்கிறார். நடிகர்களுக்கு, இயக்குநர்களுக்கு கிடைக்கிற புகழ், வெளிச்சம், விளம்பரம், பணம் ஏன் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை?

download (11)

அறிவார்ந்த சமூகத்தில் காட்சி குறிப்பாக சினிமா என்ற ஊடகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? தமிழ் சினிமா தனக்கான அறத்தை, பொறுப்புணர்வை செய்யாதது மட்டுமல்ல தொடர்ந்து உதாசினப்படுத்தியே வந்திருக்கிறது. தனக்கான சமூகக் கடமையை முற்றிலுமாக புறக்கணித்தே வந்திருக்கிறது. தன்னுடைய அறத்தை, சமூகக் கடமையை உணராத, ஒரு வகையில் இழிவுப்படுத்தியே வருகிற தமிழ் சினிமாவை – தமிழ் ரசிகர்களால் எப்படி கொண்டாட முடிகிறது? பார்க்கவும், ரசிக்கவும் முடிகிறது? இதற்கான சமூக உளவியல் காரணங்கள் எவை என்பதை ஆராய்ந்து சொல்வதுதான் அ.ராமசாமியின் காட்டப்படுவதுவும் காண்பதுவும் என்ற இந்த கட்டுரைத் தொகுப்பு நூல்.

தமிழ் சினிமா அவ்வப்போது நிஜத்தைக் காட்டுவதாக பாவனை செய்கிறது. பாவனைகள் சிலநேரம் வெற்றி பெறுகின்றன. பல நேரங்களில் தோல்வியுறுகின்றன. அழகர்சாமியின் குதிரை வெற்றி பெற்றதற்கும், பாபா படம் சுருண்டு போனதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமா ஒருபோதும் நிஜத்தைக் காட்டுவதே இல்லை. காட்டியதுமில்லை. காட்டப்போவதுமில்லை. தமிழ் சினிமா என்றாலே மிகைதான். பிரம்மாண்டம்தான். யதார்த்தத்திற்கு அதில் வேலை இல்லை. தமிழ் மண்ணுக்கே உரிய இயல்பான வாழ்வை, தமிழ்ச்சமூகத்திற்கான வரலாற்றை, தொன்மத்தை, நம்பிக்கைகளை எந்த அளவிற்கு தமிழ்சினிமா வெளிப்படுத்தி இருக்கிறது? வெளிப்படுத்தவில்லை என்றால், ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை சராசரி பார்வையாளனின் நிலையிலிருந்து, சராசரி ரசிகனின் மனநிலையிலிருந்து கேட்டிருக்கிறார் அ.ராமசாமி. நாம் பார்த்து, ரசித்து, கொண்டாடிய சினிமாக்ககளில் நாம் பார்க்கத் தவறிய, பார்த்தும் பொருட்படுத்தத் தவறிய பல நுணுக்கமான விசயங்களை நூலிலுள்ள கட்டுரைகள் நினைவுப்படுத்துகின்றன.

இசை, நடனம், காட்சி அமைப்பு, கதை, கேமரா கோணம், எடிட்டிங் என்று பல விசயங்கள் தமிழ் சினிமாவில் எப்படி இருக்கின்றன என்பதை அறிவதற்கு இந்நூலைப் படிக்க வேண்டும். தமிழ் சினிமா அதனுடைய எஜமானர்களான பார்வையாளர்களுக்கு என்ன செய்திருக்கிறது. தற்காலிக கிளுகிளுப்பை மட்டுமே ஏற்படுத்துகிற தமிழ் சினிமாவின் நாயகர்களை தங்களுடைய கடவுளாக ரசிகர்கள் ஏன் கருதுகிறார்கள்? ரசிகர்களுடைய கடவுளாக இருக்கிற, கடவுளாக மாற்றப்பட்ட சினிமா நடிகர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? கடவுள்களாக வணங்கப்படுகிற நாயகர்கள் வணங்கப்படுவதற்கு – தகுதியானவர்களா? நடிகர்கள் மட்டும்தான் என்றால் அவர்கள் நிஜமான கலைஞர்களா? தமிழ் சினிமா நடிகர்கள் ஏன் எப்போதும் அரசியல்வாதிகளைப் போலவே நடந்துகொள்கிறார்கள்? ஏன் சமூகம் சார்ந்து சிறிதும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள்? இதற்கெல்லாம் இந்த நூலில் விடைகள் இல்லை. பதில்களும் இல்லை. கேள்விகள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. அதுதான் இந்நூலின் நோக்கமும்.

சமூகத்திற்கான ஊடகமாக இருந்திருக்க வேண்டிய தமிழ் சினிமா என்ற கவலை வடிவம், பெரும் பணக்காரர்களுடைய, கார்ப்பரேட் நிறுவனங்களுடைய ஊடகமாக எப்படி மாறியது? சராசரி சினிமா ரசிகனுடைய வேலை சினிமாவைப் பார்த்துவிட்டு, மறந்துவிட்டு அடுத்த படத்திற்கு காத்திருப்பது மட்டும்தானா? தமிழ்ச் சமூகத்தைப்பற்றி ஏன் தமிழ் சினிமா ரசிகர்களும், சமூகமும் கவலை கொள்ளாமல் இருக்கிறது என்பதுதான் அ.ராமசாமியினுடைய கவலை. இது அவருக்கு மட்டுமான கவலை அல்ல. நமக்கான, சமூகத்திற்கான கவலை.

நல்ல சினிமா எது, வியாபார சினிமா எது, அழகியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஒரு படத்தை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது தெரியாததால் ஏற்படுகிற குழப்பங்கள் அதிகம். இதனால்தான் நடிகர்கள் கடவுளாக மதிக்கப்படுகிறார்கள். மாற்றப்படுகிறார்கள். கடவுள் ஆவதற்கான தகுதியுடையவர்களா தமிழ் நடிகர்கள்? கலை என்றால் என்ன? கலைஞன் என்பவன் யார் என்று அறியாதவர்கள்தானே தமிழ் நடிகர்கள்.
தமிழ் சினிமா காட்டப்படுவதுவும், காண்பதுவும் நூலில் சினிமா சார்ந்த தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்துவதின் வழியேதான் நிஜமான, சமூகத்திற்கான சினிமாவை உருவாக்க முடியும், பார்க்க முடியும் என்று அ.ராமசாமி கூறுவது மிகையான கூற்று அல்ல. சாத்தியப்படாததுமல்ல. இதுபோன்ற நூல்களை படிப்பதன் வழியேதான் சினிமா என்ற மகத்தான கலைவடிவத்தின் முழுத் திறனையும், வலிமையையும் புரிந்துகொள்ள முடியும், சினிமா சார்ந்த ரசனையை வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு இந்நூல் நிச்சயம் உதவும். சினிமா சார்ந்த புரிதலை ஏற்படுத்தும்.
••••••••••••••••

சாப்ளினின் அரசியல் / ஜெஃப்ரி வான்ஸ் மலையாளம் வழி தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

download

திரைப்படத்தில் அரசியல் விஷயங்களையும் தன் அரசியல் பார்வையையும் திணிக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு சாப்ளினின் பொதுவாழ்வு முழுக்க நிலைத்திருந்தது – அவர் அதை எப்போதுமே மறுத்திருந்தார் என்றபோதும். இருபதாம் நூற்றாண்டின் சரித்திரத்தில் அரசியல் கலைஞர்களில் முன்வரிசையில் இடம பிடித்தவர் சாப்ளின்.

தன் திரைப்படங்களில் சமூக விமர்சனங்களோ மெசேஜ்களோ இல்லையென்ற சாப்ளினின் வாதம் அவருடைய ஆரம்பகால திரைப்படங்களைப் பொறுத்தவரை சரியாகவே இருந்தது என்று சொல்லலாம். ‘டவ் அன்டு டயனாமைட்’ (1914), ‘பிஹைன்ட் தி ஸ்க்ரீன்’ (1916) ஆகிய திரைப்படங்களில் தொழிலாளர் போராட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் காண்பிக்கப்படுகின்றன என்றாலும் அவற்றை அவருடைய அரசியல் நிலைப்பாடுகளாகப் பார்க்க முடியாது.சாப்ளினின் அரசியல் சிந்தனைகளின் மெல்லிய நூலிழைகளை அவற்றில் காணமுடியும் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பிற்காலத்தில் வந்த முழுநீளப்படங்களில் நான்கு படங்களாவது அவருடைய வாதத்தை நிராகரிக்கின்றன. தொழிலாளியை இயந்திரத்தின் பாகமாகவே கருதுகின்ற மனிதாபிமானமில்லாத முதலாளித்துவத்துக்கு எதிராக கலகம் செய்யும் ‘மாடர்ன் டைம்ஸ், பாசிசத்தின் பயங்கரத்தைக் குறித்து முன்னறிவிக்கும் ‘தி கிரேட் டிக்டேட்டர்’, முதலாளித்துவத்தின் மினுக்கிய முகத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் குப்பைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திய ‘மெஸ்யோ வெர்தோ’, மெக்கார்த்தியின் கம்யூனிச எதிர்ப்பு எனும் சித்தப்பிரமையை கேலி செய்த ‘எ கிங் இன் நியூயார்க்’ இவை நான்குமே முழுமையான அரசியல் திரைப்படங்கள்தான். மனித சமூகம் முழுக்க ஒன்றுபட வேண்டும் என்றும் அரசியல் ரீதியான இன ரீதியான புவியியல் ரீதியான பாகுபாடுகளை மக்களாட்சியின் சமத்துவத்தால் கீழ்ப்படிய வைக்கவேண்டும் என்றும் விரும்புகிற சாப்ளினின் அரசியல் பார்வையை வார்த்தைகளாலும் காட்சிகளாலும் பதிவு செய்த படங்கள் இவை.

குழந்தைப்பருவத்திலும் வாலிபப் பருவத்திலும் அவர் அனுபவித்த கொடிய வறுமையிலிருந்தும் அனாதைத்தனத்திலிருந்தும்தான் சாப்ளினின் அரசியல் உருவெடுக்கிறது. பனிரெண்டாவது வயதில் அவர் தந்தை இறந்தார் எனினும் வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து எந்த ஆதரவும் கிடைத்திருக்கவில்லை. பசி சகித்து சகித்து பைத்தியமாகிவிட்ட அம்மாவோ நெடுங்காலம் மனநோய் மருத்துவமனையில். சகோதரன் சிட்னியுடன் அனாதை ஆசிரமங்களில்தான் நெடுங்காலம் சாப்ளின் வாழவேண்டியிருந்தது. பிறகு ஊரூராய்த் திரியும் நாடகக் கம்பெனியில் துச்சமான சம்பளத்துக்கு காமெடியனாக வேலை. நாடகக் குழுவின் ஓர் அங்கமாக அமெரிக்காவை அடைந்தபிறகுதான் சாப்ளினிடமிருந்து வறுமை விட்டொழிந்தது. கீஸ்டோன் நிறுவனம் மூலமாக சினிமாவுக்கு வந்த சாப்ளின் வெகு சீக்கிரமாகவே பெரும் மக்கள் ஆதரவுடன் மிக அதிக சம்பளம் பெறும் நட்சத்திரமாக மாறினார். ஆடை அணிகலன்களிலும் பேச்சு நடையிலும் மேல்தட்டு மனிதனின் பாணியை வரித்துக்கொண்டாலும் வறுமையின் ஆழங்களிலிருந்து கரைசேர முடியாமல் உழலும் விளிம்பு நிலை மனிதர்களின் மீதான கரிசனத்தையும் நெருக்கத்தையும் ஒருபோதும் அவர் இழந்ததில்லை. அக்காலத்து சாப்ளின் படங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. அடிமட்ட வர்க்கத்தினரின் துன்பியல் வாழ்க்கைதான் அப்படங்களின் அடிப்படை. அவற்றின் கதாநாயகனான ‘பொறுக்கி’ வாழ்க்கையை ஓட்டுவதற்காக அதிகார வர்க்கத்துடன் நிரந்தர யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமுடையவன். சாப்ளினின் அந்தக் காலத்து ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் தரித்திரர்கள்தான். பொறுக்கியின் போராட்டங்களுக்குள் அவர்கள் சீக்கிரமாகவே ஐக்கியமானார்கள். முதலாளியின் வீங்கிய காலில் பொறுக்கி தெரியாமல் மிதித்தபோது அவர்கள் வெடிச்சிரிப்பு சிரித்தார்கள். கருணையேயில்லாத இமிக்ரேஷன் ஆபிசரின் புட்டத்தில் அவன் ஓங்கி உதைத்தபோது அவர்கள் நிறுத்தாமல் கை தட்டினார்கள். சாப்ளின் படங்களின் அசாதாரணமான ஜனரஞ்சகத்தன்மையோடு கூடவே அவை முன்வைத்த செய்திகளும் மக்கள் இதயங்களைக் கீழடக்கியது.

சாப்ளினின் அரசியல் பார்வையை மேலும் ப்ரோலிட்டேரியனாக பக்குவப்படுத்தியதில் அமெரிக்காவிலிருந்த அவருடைய ஆரம்பகால நண்பர்கள் நால்வரின் பங்கு முக்கியமானது. ஐரிஷ் வம்சாவளியில் வந்த ஜர்னலிஸ்ட் ஃப்ராங்க் ஹாரிஸ், எழுத்தாளரும் ‘தி மாஸ்ஸஸ்’, ‘லிபரேட்டர்’ ஆகிய இடதுசாரி வெளியீடுகளின் ஆசிரியருமான மாக்ஸ் ஈஸ்ட்மேன், எழுத்தாளரும் இன்டலக்சுவலுமான ரோப் வாக்னர், நாவலாசிரியரும் கட்டுரையாளருமான அப்டன் சிங்ளேர் ஆகியோர். நால்வருமே சோஷலிச அனுதாபிகளாகவும் ரஷ்யப் புரட்சி, அடிமை வர்க்கத்தின் விடுதலைக்குச் சாத்தியமான ஒரு யுகப்பிறவியின் துவக்கம் என்று நம்புபவர்களாகவும் இருந்தார்கள்.

1917-ல் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தில் ஏறியதை சாப்ளினும் அவருடைய இடதுசாரி அறிவுஜீவி நண்பர்களும் கொண்டாடியபோது அமெரிக்காவில் பெரும்பான்யானவர்கள் புரட்சியை முதலாளித்துவத்துக்கும் அமெரிக்க தனி நபர் வாதத்துக்கும் எதிரான பயமுறுத்தலாகத்தான் பார்த்தார்கள். 1920-ல் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மிஷேல் பாமர் சிவப்புக்கெதிராக முன்னறிவுப்புச் செய்தார். அதைத் தொடர்ந்து சோவியத் அனுதாபிகள் தேசம் முழுக்க வேட்டையாடப்பட்டார்கள். ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

1922-ல் சாப்ளின் தன் ஸ்டுடியோவில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வில்லியம் ஃபாஸ்ட்டருக்கு விருந்தளித்தார். அத்தோடு முதலிலேயே கண்காணிப்புக் குள்ளாகியிருந்த சாப்ளினின் பேரில் எஃப்.பி.ஐ. ஒரு ஃபைலைத் திறந்தது. பிற்காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்கள் வருகிற ஒரு பெரும் பதிவாக அது வளர்ந்தது.

அதேசமயம் இந்த ப்ரோலிட்டேரியன் அரசியல் முதலாளித்துவத்தின் மதுரங்களை அனுபவிப்பதிலிருந்து சாப்ளினை தடுக்கவில்லை. ஏழைகள் உண்மையானவர்கள் என்றாலும் ஏழ்மையிலேயே தொடர்வதில் எந்த உண்மையுமில்லை என்றும் பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்க்கும்போது எவ்வளவு உணர்வுபூர்வமாகத் தோன்றினாலும் வறுமை என்பது அடிப்படையிலேயே தீமையானது மோசமானது என்று சாப்ளின் அனுபவித்து அறிந்திருந்தார். பொருளாதார சமத்துவமின்மைக்கு அஸ்திவாரம் போட்ட முதலாளித்துவம் தன் பாவ பாரம் தாங்காமல் வெகு சீக்கிரமாகவே தகர்ந்துவிடும் என்று சாப்ளின் நம்பினார். ஆனால் அப்படித் தகர்வதற்கு துணை நிற்கும் செயல்கள் எதுவும் சாப்ளினின் பக்கமிருந்து நிகழவில்லை. அதற்குப் பதிலாக முதலாளித்துவத்தின் பயன்களை அறுவடை செய்து தன்னுடைய தன் குடும்பத்தினுடைய சொத்துக்களைப் பெருக்குவதிலேயே இருந்தது சாப்ளினின் கவனம். எவ்வளவுதான் வெறுக்கத்தக்கதானாலும் ஒரு கொள்கை நிலைநிற்கும்போது அதன் பயன்களை முடிந்தஅளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் நிலைப்பாடு.

மிகுந்த முன்ஜாக்கிரதை உணர்வுடைய ஒரு பிசினஸ்மேனாகாவும் இருந்தார் சாப்ளின். 1929-ல் அமெரிக்காவின் அடித்தளத்தையே தகர்த்த ஸ்டாக் மார்க்கெட் வீழ்ச்சியில் சாப்ளினுக்கு ஒரு பைசாகூட நஷ்டம் ஏற்படவில்லை. வீழ்ச்சியை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட சாப்ளின் அதை புத்திசாலித்தனத்துடன் கையாண்டார். மேஜர் சி.எச். டக்ளஸ் அமெரிக்க பொருளாதார நிலையை விமர்சித்து எழுதிய ‘சோஷியல் கிரெடிட்’என்ற நூலை சாப்ளின் வாசித்திருந்தார். அதில், லாபங்கள் எல்லாமே கூலியில் இருந்துதான் வருகிறது என்றும், அதனால் வேலைவாய்ப்பின்மை என்பது லாபத்தின் நஷ்டம் என்றும் மூலதனத்தின் வீழ்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கருத்து சாப்ளினை மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக 1928ல் அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி நாற்பது லட்சம் பேர் என்ற செய்தி வந்ததுமே தன் பாண்டுகளையும் ஸ்டாக்குகளையும் விற்று பணமாக்கிவிட்டார்.

1931-32 வருடங்களில் நடத்திய உலகப்பயணத்தின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியின் பலநாட்டு முகங்களைக் காண்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. மேற்கத்திய நாடுகள் கம்பளம் விரித்து மூடிய இந்த வீழ்ச்சியின் தாக்குதல்களை குணப்படுத்த ஒரு உலகக் குடிமகன் என்ற முறையிலும் ஒரு கலைஞன் என்ற முறையிலும் எதாவது செய்யவேண்டியது தன் கடமை என்று சாப்ளின் உணர்ந்திருந்தார். இதை நிரூபிக்கும் விதமாகவே அதற்குப் பின் வந்த அவருடைய அறிக்கைகளும் படங்களும் அமைந்திருந்தன. அதீதமான தேசப்பற்றின் அபாயத்தை சாப்லின் தீர்க்கதரிசனம் செய்தார். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் தான் பார்த்த தேசப்பற்று ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் படர்கிறது என்றும் அது இன்னொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் சாப்ளின் முன்னறிவிப்பு செய்தார். வின்ஸ்டன் சர்ச்சில் மட்டுமே சாப்ளின் கூறியதில் நியாயம் இருப்பதை உணர்ந்தவர். 1939 இறுதியில் ஐரோப்பா இரண்டாம் உலகப் போருக்குள் விழுந்தது. பிறகு சாப்ளின் எழுதினார்: ‘‘நான் தேசப்பற்றில்லாதவன் என்று சொல்வது அறிவுபூர்வமான, தரிசனமான காரணங்களால் அல்ல. தேசபக்தி என்ற பெயரில் சகமனிதர்களைக் கொன்றுகுவிப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? அறுபது லட்சம் யூதர்களை ஜெர்மானியர் கொன்றுகுவித்தார்கள். அது ஜெர்மனியில்தானே என்று சிலர் கேட்கிறார்கள். இருக்கலாம். ஆனால் இன வதையென்னும் இருட்டறைகள் எல்லா தேச உடம்புகளிலும் உறங்கிக் கிடக்கின்றன.’’

ஆனால் இந்த அறிக்கைகளையும் பார்வையையும் அமெரிக்க ஆட்சியாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவுக்கு வந்து யாரையும் விட புகழும் பணமும் சம்பாதித்த சாப்ளின் அதுவரையிலும் அமெரிக்கக் குடிமகன் ஆகவில்லை என்ற விஷயத்தை நோக்கி எஃப்.பி.ஐயின் கவனம் திரும்பியது. இவ்வளவு அளித்த அமெரிக்காவிடம் கடமைப்பட்டவராக சாப்ளின் இருக்கவேண்டும் என்ற அபிப்ராயம் எஃப்.பி.ஐ தலைவர் எட்கார் ஹூவருக்கு இருந்தது.

1938-ல் வெளிவந்த ‘மாடர்ன் டைம்ஸ்’ சாப்ளினின் முதல் முழுமையான அரசியல் திரைப்படம் ஆகும். முதலாளித்துவத்தின் மனிதாபிமானமில்லாத் தன்மையைக் குறித்தும் தொழிலாளி வர்க்கத்தின் துன்பங்களைக் குறித்ததுமான ஒரு பதிவாயிருந்தது அது. அது ஆரம்பிப்பதே, ஓட்டிச் செலுத்தப்படும் ஒரு ஆட்டுமந்தையின் காட்சியிலிருந்து பேக்டரி விட்டு வெளியேவரும் தொழிலாளிகளின் காட்சிக்கு டிசால்வ் செய்வதில்தான். இன்னொரு காட்சியில் கன்வெயர் பெல்ட்டின் வேகத்துக்கு ஈடாக நட்டை தருகமுடியாத தொழிலாளி ஒருவனை அந்த பிரமாண்ட இயந்திரம் உள்ளுக்குள் இழுத்து பல்சக்கரங்களுக்கிடையில் கடத்திச் செல்கிறது. பெரும் அளவிலான உற்பத்தி சாத்தியமான இயந்திர யுகத்திலும் தொழிலாளிக்காக குரல் எழுப்புகின்ற மாடர்ன் டைம்ஸ் ஒரு கம்யூனிச திரைப்படம் என்று படம் ரிலீசாவதற்கு முன்னமே செய்திகள் பறந்தன. நாசி ஜெர்மனியும் பாசிச இத்தாலியும் செய்திகளின் அடிப்படையில் படத்தை திரையிட அனுமதி மறுத்தன. ஹிட்லர் சாப்ளினின் எல்லாப் படங்களையும் நிராகரித்தார்.

நாற்பதில் வெளிவந்த ‘த கிரேட் டிக்டேட்டர்’ ஹிட்லரை மேலும் ஆத்திரப்படுத்தியது. இந்தப் படத்தில் சாப்ளின் ஹிட்லரைப் போன்ற உருவமுள்ள ஹிங்கல் என்னும் சர்வாதிகாரியாகவும் ஹிட்லருக்கு இரையான யூதனாகவும் திரையில் தோன்றி ஹிட்லரை வேண்டுமான அளவு கேலி செய்தார். கேலிசெய்வதற்கு மேலாக ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நடமாடும் பச்சையான பாசிசத்தை போர்பயம் காரணமாக பார்க்காததுபோல் பாவிக்கின்ற உலகத்துக்கு ஒரு தாக்கீதாகவும் இந்தப் படம் அமைந்தது. படத்தின் தயாரிப்பு துவங்கிய 38-ல் அமெரிக்காவும் மெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் ஹிட்லரின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ஒரு ஆன்ட்டி-ஹிட்லர் சினிமாவின் வியாபாரத்தைக் குறித்து தயாரிப்பாளர்களான யுனைடட் ஆர்டிஸ்ட் பெரும் குழப்பத்தில் இருந்தது. ஆன்ட்டி-ஹிட்லர் பிரச்சாரம் அடுத்த உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று அமெரிக்கர்கள் பயந்திருந்தது அந்தக் காலத்தில் சாப்ளினுக்குக் கிடைத்த குற்றச்சாட்டுக் கடிதங்களிலிருந்தும் கொலை மிரட்டல்களிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது.

விமர்சகர்கள் எல்லோருமே படத்தின் கடைசிக் காட்சியில் பிரசங்கம் அனாவசியமானது என்றும் படத்தின் கட்டமைப்பை அது குலைத்துவிட்டது என்றும் விமர்சித்தார்கள். சாப்ளின் பார்வையாளர்களை நோக்கி கம்யூனிசத்தின் விரலை சுட்டுகிறார் என்று நியூயார்க் டெய்லி நியூஸ் எழுதியது. ஆனால் ரசிகர்கள் அந்தப் பிரசங்கத்தை மனதார வரவேற்றனர். அதன் வசனத்தை அச்சடித்து விநியோகித்தார்கள். பிரசங்கத்தை திரும்ப நிகழ்த்த பல மேடைகளிலும் அழைக்கப்பட்டார் சாப்ளின். லண்டனில் படம் ரிலீஸ் செய்கையில் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் போர் துவங்கிவிட்டிருந்தது. அதனால் படமும் அந்தப் பிரசங்மும் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது. 41 இறுதியில் அமெரிக்கா போரில் நேரடியாகவே நுழைந்தவுடன் படத்தின் மீதான அமெரிக்க மனோபாவம் இன்னும் வலுப்பெற்றது. 44-ல் பிரான்சின் விடுதலையைத் தொடர்ந்து பிரெஞ்சு மக்கள் பார்ப்பதற்காக ‘டிக்டேட்டரின்’ பிரெஞ்சு மொழியில் டப் செய்யப்பட்ட பிரிண்டுகள் தேவை என்று அனைத்துக்கட்சிகளின் சுப்ரீம் கமேன்டரான ஜெனரல் ஐசன் ஹோவர் சாப்ளினுக்கு நேரடியாகவே கடிதம் எழுதினார்.

ஹிட்லருக்கெதிரான போரில் அமெரிக்காவுக்குத் துணை நின்ற சோவியத் யூனியனுக்கு எதிராக, போர் முடிந்த பிறகு, அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் கடுமையான எதிர்பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டது சாப்ளினை மிகவும் வருத்தமடையச் செய்தது. அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் மொத்தமாக ஏற்பட்டதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு நஷ்டம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருந்தது. அதைக் காணாதது போல் நடிப்பது நீதியல்ல என்று சாப்ளின் கருதினார். அதனால் ‘சோவியத் யூனியன் சகாய சமிதி’ என்ற அமைப்பு சான்பிரான்சிஸ்கோவில் நடத்திய சம்மேளனத்தில் அவர் பங்குகொண்டார். பத்தாயிரக்கணக்கான மக்களின் முன்நின்று ‘தோழர்களே’ என்று விளித்து நடத்திய சொற்பொழிவில் சாப்ளின், தேச மறு உருவாக்கத்தில் சோவியத் யூனியனுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க மக்களைக் கேட்டுக்கொண்டார். ‘‘கம்யூனிஸட்டுகளும் நம்மைப் போன்றவர்கள்தான்.’’ அவர் சொன்னார்: ‘‘கை கால்களை இழந்தால் நம்மைப் போலவே அவர்களும் கஷ்டப்படுவார்கள். நம்மைப் போலவே அவர்களும் இறப்பார்கள்.’’

ஆனால் அவருடைய அரசியல் அறிக்கைகளுக்கான எதிர்வினைகள் அவர் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை. 1947-ல் வெளிவந்த ‘மெஸ்யோ வெர்தோ’ என்ற திரைப்படம் சாப்ளின் எதிரிகளுக்கு, மக்களை அவருக்கு எதிராக திருப்பி விடுவதற்கான சக்திவாய்ந்த ஆயுதமாக அமைந்தது. பணக்காரப் பெண்களை மணந்து கொண்டு அவர்களின் சொத்து கையில் கிடைத்தவுடன் கொலை செய்துவிடும் ஒரு ஆன்ட்டி-ஹீரோ கதாபாத்திரம் வெர்தோ. முதலாளித்துவ நிலைமைகள்தான் தன்னை அப்படி செய்ய வைத்தது என்று வெர்தோ நீதிமன்றத்தில் சொல்கிறான். இது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.‘அமெரிக்கன் லெஜியன்’ என்ற வலதுசாரி அரசியல் அமைப்பு படம் திரையிட்ட தியேட்டர்களில் பிக்கெட்டிங் செய்தது. அவர்களிடம் சாப்ளின் சொன்னார்: ‘‘நான் கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் பாசிசத்துக்கு எதிரான போரில் முன்னணியில் இருந்தது ரஷ்யாதான் என்பதை நான் மறக்க மாட்டேன். அதற்காக அவர்களிடம் நன்றியறிதல் உண்டு எனக்கு. அவர்களை வெறுப்பதன் மூலம் உங்களுக்கு விருப்பப்பட்டவன் ஆக நான் தயாரில்லை.’’

‘மெஸ்யோ வெர்தோ’ வெளிவந்த அதே சமயத்திலேயே, அமெரிக்க சினிமா வர்த்தகத்தில் கம்யூனிசத் தலையீடுகளைக் குறித்து விசாரிக்கும் ‘ஹவுஸ் ஆஃப் அன்அமெரிக்கன் ஆக்டிவிட்டீஸ் கமிட்டி’ செயல்படத் துவங்கியது. விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்பட்ட முதல் பத்தொன்பது பேர்களில் சாப்ளினும் ஒருவர். எஃப் பி ஐயைத் தொடர்ந்து இமிக்ரேஷன் அன்ட் நாச்சுரலைசேஷன் துறையும் சாப்ளினுக்கு எதிராகத் திரும்பியது.

ஐம்பதுகளின் துவக்கத்தில் சாப்ளின் எதிர்ப்பு மனோபாவம் அதன் உச்சத்தை அடைந்திருந்தது. ஒரு புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கு பெற வந்த சாப்ளினின் முகத்தில் ஒருவர் காறித்துப்பிய சம்பவமும் நடந்தது.

52-ல் ‘லைம்லைட்’டின் வோர்ல்ட் பிரீமியரில் பங்குகொள்வதற்காக லண்டனுக்கு புறப்பட்ட சாப்ளினுக்கு துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்பிய உடனே அமெரிக்க அட்டர்னி ஜெனரலிடமிருந்து தந்தித் தகவல் வந்து சேர்ந்தது. சாப்ளினுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பெர்மிட்டை ரத்து செய்யும் உத்தரவு அது.

சாப்ளினின் அரசியல் பார்வையிலிருந்த முக்கியமான பிழையே, தன் கதாபாத்திரமான தேசமில்லாத பொறுக்கியை உலகம் புரிந்துகொண்டு அங்கீகரித்ததைப் போலவே தன்னையும் தேசமில்லாத குடிமகனாக உலகம் ஏற்றுக்கொள்ளும் என்ற தவறான நம்பிக்கைதான்.

அமெரிக்காவுக்கு வெளியேயான வாழ்க்கையிலும் அமெரிக்க மக்களோடு ஒத்துப்போகிற எந்த நடவடிக்கையும் சாப்ளின் தரப்பிலிருந்து உண்டாகவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களை மேலும் ஆத்திரமடைய வைக்கும் விதமாக அவருடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன. 1954-ல் கம்யூனிஸ்ட் சீனாவின் பிரதமர் சௌ என் லாயியை சந்தித்தார். அந்த வருடமே சோவியத் யூனியன் வழங்கிய வோல்டு பீஸ் பிரைசையும் ஏற்றுக்கொண்டார்.

அந்தக் காலத்தில் அவர் தயாரித்த ‘எ கிங் இன் நியூயார்க்’ ஒரே சமயத்தில் சுயசரிதையாகவும் அரசியல் ரீதியானதாகவும் அமைந்திருந்தது. அணுகுண்டுகளை வைத்து குறைந்த செலவில் சக்தி தயாரிக்கத் தன்னால் முடியும் என்ற திட்டத்தோடு அமெரிக்கா வருகின்ற ஒரு வெளிநாட்டு ராஜாவின் கதையினூடே தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அணு ஆயுதங்களைப் பெருக்குவதற்கெதிரான தன்னுடைய அச்சத்தைத்தான் அவர் அதில் கூறினார். படத்தின் இறுதியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகளுக்கு எதிராக விசாரணை நடத்தும் கமிட்டிக்கு முன்பாக ராஜா நிறுத்தப்படுகிறார். விசாரணை பல நாடகீயமான திருப்பங்களுடன் நடக்கிறது. இறுதியில் மிகவும் குழம்பிப்போன ராஜா தெரியாமல் அழுத்திவிடும் ஃபயர் ஹோசினால் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் தண்ணீரில் குளிக்கிறார்கள். அமெரிக்காவில் தன்னை அடக்குமுறை செய்தவர்களிடம் தன் காமெடி மூலம் பதிலடி கொடுத்தார் அவர்.

‘எ கிங் இன் நியூயார்க்’குக்குப் பிறகு சாப்ளினுக்கு அரசியல் மீதான ஈர்ப்பு குறைந்து வந்ததைக் காண முடியும். தன் தொழிலையும் குடும்பத்தையும் பராமரிப்பதிலேயே அவர் கவனம் இருந்தது. 1960-ல் ஒரு நேர்முகத்தில் கூறுகிறார்: ‘‘இறுதியாக அலசிப் பார்த்தால் நான் ஒரு கோமாளிதான். வெறும் கோமாளி மட்டுமே. எந்த ஒரு அரசியல்வாதியையும் விட மிக உயரத்தில் எனக்கு இடம் தந்தது அதுதான்.’’

1971-ல் லைஃப் இதழுக்கு அளித்த பேட்டியில் சாப்ளின் சொன்னார்: ‘‘அமெரிக்கா எனக்குப் பிடிக்கும். எப்போதும் பிடிக்கும். அமெரிக்காவிடம் எனக்கு வெறுப்போ பகைமையோ கிடையாது. நான் வாழ்ந்த காலம் முழுவதும் நீங்களும் வாழ்ந்து பார்த்தால் உங்களுக்கும் புரியும் எல்லா அரசியலும் முட்டாள்தனமானது, சிறுபிள்ளைத்தனமானது என்று” வாழ்க்கையின் பெரும்பகுதியை அரசியல் சிந்தனைகளில் செலவிட்ட ஒரு மனிதரிடமிருந்து இப்படியொரு அறிக்கை கவனிக்கத்தக்கது.

1972 ஏப்ரலில் சாப்ளின் அமெரிக்காவுக்குத் திரும்பச் சென்றார். நியூயார்க் லிங்கன் சென்டர் பிலிம் சொசைட்டியின் விருதும் ஹாலிவுட் மோஷன் பிக்சர் அகாதமியின் ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட்’ விருதும் பெற்றுக்கொள்வதற்காக.

இன்று சாப்ளின் அதிகமாக அறியப்படுவது அவருடைய அரசியல் நிலைப்பாடுகளின் பேரில் அல்ல. அவர் படைத்த பொறுக்கி என்ற விரும்பத்தகுந்த கதாபாத்திரத்தின் பேரில்தான். ஆனாலும் இருபதாம் நூற்றாண்டு கண்ட மிகப் பெரிய அரசியல் கலைஞன் அவர்.

இந்தப் பதவி அவரை நாசத்தின் எல்லையில் தள்ளியது. அதே சமயம் அவருடைய அசாதாரணமான படைப்புகளின் அடியோட்டமாகவும் அது திகழ்ந்தது.

———

நன்றி : ‘சாம்ஸ்காரிக பைத்ருகம்’ மலையாள மாத இதழ்

வீடியோ கேம்ஸ் ( கடைசி அத்தியாயம் ) / பி.ஆர்.மகாதேவன்

images (8)

புலியைப் பார்த்ததும் குழந்தைகளும் ஆசிரியர்களும் விழுந்தடித்து வெளியே ஓடிப் போய்விடுகிறார்கள். ஆனால், ப்ரீகேஜியில் இருந்த குழந்தைகள் மட்டும் தப்பிக்க வழி தெரியாமல் பள்ளிக்குள் மாட்டிக்கொண்டுவிடுகின்றன.

புலி ஒவ்வொரு அறையாக மானையும் முயலையும் தேடியபடி போகிறது. ஒரு அறைக்குள் ப்ரீகேஜி குழந்தைகள் சத்தம் போடாமல் பதுங்கி இருக்கிறார்கள். புலி மெள்ள அந்த அறையைக் கடந்து போகிறது. புலி போய்விட்டது என்று நினைத்துக் குழந்தைகள் மெள்ள வெளியே வரவே ஒரு குழந்தையின் கொலுசுச் சத்தம் கேட்டுப் புலி திரும்பி வந்துவிடுகிறது. புலியைப் பார்த்ததும் குழந்தைகள் விழுந்தடித்து ஓடுகின்றன. ஒரு குழந்தை மட்டும் கால் தடுக்கி கீழே விழுந்துவிடுகிறது. புலி மெள்ள அந்தக் குழந்தையை நெருங்குகிறது. அந்தக் குழந்தை தன் பலத்தையெல்லாம் கூட்டிக்கொண்டு ஓட முற்படுகையில் புலி ஆவேசத்துடன் அந்தக் குழந்தை மீது பாய்கிறது. அந்த நேரத்தில் சட்டென்று ஒரு மனிதக் குரங்கு வந்து புலியை அடித்து வீழ்த்துகிறது. அடிபட்ட புலி எழுந்திருப்பதற்குள் மனிதக் குரங்கு அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேறு அறைக்கு ஓடிவிடுகிறது.

அதன் பிறகு அந்தக் குரங்கு மாட்டிக்கொண்ட குழந்தைகளையும் மான், மயில், முயல் என ஒவ்வொரு உயிரையும் தனித்தனியாகப் போய்க் காப்பாற்றி மாடியில் ஒரு அறைக்குள் பத்திரமாகப் பூட்டிவைக்கிறது. இடையிடையே புலியுடனான சண்டையில் அதன் உடம்பில் காயங்கள் பட்டு ரத்தம் கசிகிறது. இருந்தும் அனைவரையும் காப்பாற்றிவிடுகிறது.

இதனிடையில் புலியைப் பிடிக்கக் காவல் படை வந்து சேருகிறது. அவர்களைப் பார்த்ததும் மனிதக் குரங்கு சந்தோஷ மிகுதியில் மாடியில் இருந்து கைகளை ஆட்டியபடியே அவர்களை நோக்கி விரைவாக சுவரில் ஏறிக் குதித்து ஓடி வருகிறது. ஆனால், அதன் உடம்பில் இருக்கும் ரத்தக் கறையைப் பார்க்கும் காவலர்கள் குழந்தைகளை அது கடித்துக் கொன்றதாகத் தவறாக நினைத்து துப்பாக்கியால் அதனைச் சுட்டுவிடுகிறார்கள். அது மயக்க மருந்து தோட்டாதானென்றாலும் மனிதக் குரங்கு நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்துவிடுகிறது. புலியும் காவலர்களைப் பார்த்துப் பாயவே அதையும் சுட்டு வீழ்த்துகிறார்கள்.

மனிதக் குரங்கு கீழே விழுந்ததைப் பார்த்ததும் குழந்தைகள் பதறி அடித்து கீழே விரைகின்றன. மனிதக் குரங்கைத் தமது மடியில் கிடத்திக்கொண்டு அழுகின்றன. துப்பாக்கியால் சுட்ட காவலர் உண்மை அறிந்து அதன் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்கிறார். குரங்கு அவரை மன்னித்து எல்லாம் விதி என்பதுபோல் கைகளை விரித்து வான் பார்த்து அழுகிறது. குழந்தைகளை அவருடைய கையில் ஒப்படைக்கிறது. குழந்தைகள் கதறி அழுகின்றன. காவலர்கள் விரைந்து சென்று ஸ்ட்ரெச்சரைக் கொண்டுவருகிறார்கள். மனிதக்குரங்கோ அதெல்லாம் வேண்டாம். எல்லாம் முடிந்துவிட்டது. குழந்தைகளின் மடியிலேயே என் உயிர் பிரியட்டும் என்று சைகையில் சொல்லியபடியே குழந்தைகளின் தலையை வாஞ்சையுடன் வருடியபடியே கண்களை மூடுகிறது. குழந்தைகள் துக்கம் தாளாமல் மனிதக் குரங்கின்மீது விழுந்து கதறி அழுகிறார்கள். மான்களும் மயில்களும் முயல்களும்கூட அருகில் வந்து மண்டியிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கின்றன.

அந்தப் பள்ளியில் காந்தி, நேரு, விவேகானந்தர் எனப் பெரும் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் மனிதக்குரங்குக்கும் ஆளுயரச் சிலை ஒன்றைச் செய்கிறார்கள். தினமும் பள்ளிக்கு வரும் குழந்தைகள் அந்தச் சிலைக்குப் பூக்கள் தூவி அகல் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்திவிட்டே வகுப்பறைக்குள் நுழைகிறார்கள்.

*

பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் குழந்தைகள் படிப்பை விட வீடியோ கேம்ஸில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது பற்றிய பேச்சு வருகிறது. பள்ளியின் மருத்துவ ஆலோசகரும் அந்த விளையாட்டுகள் அதி வேகம், பதற்றம், போட்டி, சண்டை, வன்முறை போன்ற உணர்வுகளை அடிப்படையாகவைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளின் மன நிலையை வெகுவாகப் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார். ஆனால், குழந்தைகளோ வீடியோ கேம்ஸ் கட்டாயம் விளையாடியாகவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். எனவே, நம் ஆசிரியை இதற்கொரு தீர்வு கண்டுபிடிக்கிறார். நாம் என்ன விதமான மதிப்பீடுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்புகிறோமோ அதனடிப்படையில் வீடியோ கேம்ஸ் தயாரிக்க சம்பந்தபட்ட துறை நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கிறார். அவர்களும் அதற்குத் தகுந்த கேம்ஸ்களை உருவாக்கித் தருகிறார்கள்.

கார் பைக் ரேஸ் போன்றவற்றுக்கு பதிலாக சாலை விதிகள் தொடர்பான கதை எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரில் புறப்படும் நபர் முதலில் சீட் பெல்ட் இல்லாமல் புறப்படுகிறார். சாலையின் முதல் வளைவில் சீட் பெல்ட் கிடைக்கும். அதை எடுத்து அணிந்துகொள்வார். அடுத்த திருப்பத்தில் ஏர் பேக் எடுத்து காரில் பொருத்திக் கொள்வார். மூன்றாவது திருப்பத்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இருக்கும். கார் 50 கி.மிக்கு அதிகம் போக முடியாதபடி அது கட்டுப்படுத்தும். ஹார்ன் என்பது எரிச்சலூட்டக்கூடியதாகவும் ஒருவகையில் அதிகாரத்தின் குறியீடாகவும் இருகிறது. எனவே நமது வீடியோ கேம்ஸ் காரில் ஹார்ன் அடித்தால், ‘தயவு செய்து வழி விடுங்கள்’ என்று இனிய குரலில் ஒரு குயில் கூவும்படியாக வடிவமைக்கப்படுகிறது.

சாலையில் செல்லும்போது நாலைந்து வாத்துகள் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும். கார் டிரைவர் அவை சாலையைக் கடக்க வழிவிட்டு நிற்க வேண்டும். அதுபோல் ஒரு சிக்னலில் வாகனங்கள் எதுவுமே இருக்காது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும். சிவப்பு மஞ்சளாகி பச்சையாகும்வரை காத்திருந்து செல்லவேண்டும். யாரும் இல்லாவிட்டாலும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற பாடத்தை அதன் மூலம் கற்றுத் தரலாம். அடுத்ததாக வழியில் ஒருவர் சாலை ஓரமாக நடை பாதையில் மயங்கிக் கிடப்பார். காரை நிறுத்தி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து அருகில் இருக்கும் கடையில் இருந்து க்ளுகோஸ் வாங்கிக் கலந்து கொடுத்துவிட்டுப் புறப்படவேண்டும். இப்படியாக அட்ரீனலினைத் தூண்டும் ரேஸ் கார் விளாஇயாட்டை சாலை விதிகள் மற்றும் சக மனிதர் தொடர்பான நற்பண்புகளைக் கற்றுத்தரும் விளையாட்டாக ஆக்குகிறார்.

அதுபோல், தங்கப் புதையலைத் தேடிப் போகும் வழியில் கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் வெட்டிக் கொல்லும் வீடியோ கேம்ஸுக்கு பதிலாக நோய்வாய்ப்பட்ட நண்பனுக்காக ஏழுமலை தாண்டி ஏழு கடல் தாண்டி இருக்கும் காட்டில் கிடைக்கும் அரியவகை மூலிகையைக் கண்டுபிடித்து எடுத்து வரவேண்டும் என்ற விளையாட்டு வடிவமைக்கப்படுகிறது. முதல் மலையை ஏறி இறங்கியதும் அங்கு கிணற்றில் விழுந்து கிடக்கும் பூனைக் குட்டியைக் காப்பாற்றினால் அடுத்த மலைக்கான குகைப்பாதை திறக்கும். அதன் வழியாக அடுத்த லெவலுக்குச் சென்றால் அங்கு ஒரு கோவில் இருக்கும் அதன் பீடத்தில் எந்தக் கடவுள் சிலையும் இருக்காது. பக்கத்தில் இருக்கும் சிறபக் கூடத்தில் பல தெய்வ்வங்களின் சிலைகள் இருக்கும். இந்து குழந்தைகள் சிவன் அல்லது அம்மன் என அவர்களுக்குப் பிடித்த தெய்வத்தை எடுத்து அந்தக் கோவிலின் பீடத்தில் வைக்கவேண்டும். அதன் பிறகு அந்த தெய்வத்துக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து ஆரத்தி காட்டி ஆசிபெற்றுவிட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும். கிறிஸ்தவக் குழந்தைகள் ஏசு நாதர் அல்லது அன்னை மரியாளின் சிலையை எடுத்துச் சென்று அந்தக் கோவிலில் பிரதிஷ்டைசெய்வார்கள். ஏசுநாதருக்கும் மரியாளுக்கும் பாலபிஷேகம், தேனபிஷேகம் செய்து மாலைகள் அணிவித்து ஆரத்தி எடுத்து ஆசி பெறுவார்கள். இஸ்லாமியக் குழந்தைகள் வெறும் பீடத்தை மண்டியிட்டு வணங்கிவிட்டுப் புறப்படுவார்கள்.

இதில் இன்னொரு விளையாட்டில் கூட்ட நெரிசல் மேலாண்மை பற்றிய சவால் முன்வைக்கப்படும். இஷ்ட தெய்வத்தைக் கும்பிடப் போன இடத்தில் விபத்தில் உயிர் துறப்பது போல் கொடூரம் வேறு எதுவும் இருக்காது. மெக்கா, காசி, மகாமகக் குளம், கும்பமேளா போன்ற இடங்களில் ஒருவருடைய உயிர் இயல்பாகம் பிரியும் என்றால் அதுவேறு விஷயம். ஆனால், மாநகராட்சிகளின் நிர்வாகக் கோளாறுகளால் நூற்றுக்கணக்கில் இறப்பதைப் போன்ற கொடூரம் வேறு எதுவும் இருக்காது. அது அரசின் கொலையே. அப்படியான விபத்தில் உயிரை இழப்பவர்களின் உறவினர்களுக்கு அதன் பிறகு ஆயுள் முழுவதும் அந்தத் திருவிழா என்பது உறவினரின் கோர மரணத்தை நினைவுறுத்தும் கொடுங்கனவாகவே ஆகிவிடும். ஒவ்வொரு மதத்தின் அரசியல் சக்திகளில் ஆரம்பித்து அதன் எளிய விசுவாசிகள் வரை அனைவருக்கும் பெரும் அவமானம். நமது வீடியோ கேம்ஸில் கூட நெரிசல் மேலாண்மை ஒரு அங்கமாக இடம்பெறும்.

விழா நடக்கும் இடத்துக்கு ஒரு கி.மீ முன்னதாகவே அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிடுதல், தாறுமாறாக நிற்கும் வாகனங்களை இழுத்துச் சென்று ஓரங்கட்டுதல், ஒரு குறிப்பிட்ட சதுர கி.மி.யில் இன்ன நிமிடத்தில் இத்தனை பேர் மட்டும் இருக்கவேண்டும் என்று நெறிப்படுத்துதல், பக்தர்கள் வீசும் குப்பைகளை உடனுக்குடன் தன்னார்வத் தொண்டர்கள் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போடுதல் என அனைத்து விஷயங்களும் வீடியோ கேம்ஸில் இடம்பெறவேண்டும். குறிப்பிட்ட நல்ல நேரத்துக்குள் குறுகிய குளத்தில் லட்சக்கணக்கானவர்கள் குளித்தாக வேண்டும் என்று வரும்போது அந்தப் புனித நீரை ஸ்பிரிங்ளர் மூலம் ஒரு கி.மி வரை நிற்கும் பக்தர்கள் மேல் நல்ல நேரம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் வரை தெளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். சொர்க்கத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை முன் வரிசையில் அமர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பின்வரிசைப் படிக்கட்டுகளில் நின்றுகொண்டாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை பக்தர்கள் அனைவருக்கும் அதன் மூலம் தரலாம். இனி எங்கள் மத விழாவில் ஒரு உயிர் கூடப் பிரியாது என ஒவ்வொரு மதத்தினரும் உறுதி எடுக்கும் வகையில் அந்த வீடியோ கேம்ஸை வடிவமைக்கவேண்டும்.

அடுத்த மலையில் ஒரு மந்தை குறுக்கிடும். அதில் இருக்கும் கன்றுகளின் முகத்தில் கூடை மாட்டப்பட்டிருக்கும். அந்தக் கூடையை அவிழ்த்து கன்றுகளை அவற்றின் தாயிடம் கொண்டு சேர்த்து பால் அருந்தி மகிழ வைக்கவேண்டும் அம்மா பசுவையும் கன்றுக்குட்டியையும் சரியாகப் கண்டுபிடித்துச் சேர்த்துவைப்பதுதான் இந்த லெவலின் சவால்.

அடுத்த லெவலில் ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் லாக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து பழங்குடிகள் பலருக்கு அவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கு ஏற்ப பிரித்துக்கொடுக்கவேண்டும்.

அடுத்ததாக கடல் சாகசங்கள். அங்கு மிதக்கும் ஒரு கப்பலில் இருந்து பெட்ரோல் கசிந்து கவ்டல் வாழ் உயிரினங்கள் எல்லாம் மூச்சு முட்டி இறக்கத் தொடங்கும். பெட்ரோல் கசிவைத் தடுத்து நிறுத்தி கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும்.

இப்படி ஒவ்வொரு லெவலிலும் தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கம் என ஒவ்வொரு ரத்தினங்களாகக் கிடைக்கும். அதையெல்லாம் சேகரித்து காட்டை அடைய வேண்டும். நண்பனுடைய நோய்க்குத் தகுந்த மூலிகையைக் கண்டுபிடித்து அதில் இருந்து மருந்து தயாரித்துக் கொடுக்கும் மூப்பருக்கு அந்த ரத்தின மாலையைப் பரிசாகக் கொடுத்துவிட்டு அவர் தரும் மாயக் கம்பளத்தில் பறந்துவந்து நண்பனைக் காப்பாற்றவேண்டும்.

**********

கடைசி அத்தியாயம் / பி.ஆர்.மகாதேவன்

images (7)

இதுவரையில் பள்ளி தொடர்பான ஒரு திரைப்படத்தின் திரைக்கதைக்கான ஆராய்ச்சியைக் கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிட்டிருக்கிறோம். சுமார் 15 அத்தியாயங்களில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை இனி நம் திரைப்படத்தில் கோர்வையாக இடம்பெறச் செய்வோம்.

நமது திரைப்படத்தின் ஒன் லைன்: ஃபின்லாந்தில் இருந்து வரும் லட்சிய ஆசிரியை நமது பள்ளியில் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கிறார். அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதுதான் கதை.

கருவில் இருக்கும்போதே ஆங்கிலம் கற்றுத் தருதல், காலையில் நான்கு மணிக்கே குழந்தைகளை எழுந்து படிக்க வைத்தல், தினமும் பரீட்சை, ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கான கோச்சிங், அமெரிக்க வேலைக்கான பயிற்சி என ஒவ்வொரு பள்ளியும் போட்டிபோடும் நிலையில் ஒரு பள்ளிக்கூடத்தின் பொதுக்குழுக்கூட்டத்தில் தமது பள்ளியின் பிராண்ட் மதிப்பை அதிகரிக்க ஒரு முடிவெடுக்கிறார்கள். உலகிலேயே மிகச் சிறந்த கல்வி ஃபின்லாந்தில்தான் தரப்படுகிறது. எனவே, நமது ஆசிரியர்களை ஃபின்லாந்துக்கு அனுப்பிப் பயிற்சி பெற்று வரச் சொல்வோம்; அதை விளம்பரப்படுத்தி நமது பள்ளியை முன்னுக்குக் கொண்டுவருவோம் என்று ஒருவர் ஆலோசனை சொல்கிறார்.

இன்னொரு நபரோ நமது ஆசிரியர்கள் அங்குபோய் பயிற்சி பெற்று வருவதற்குப் பதிலாக ஃபின்லாந்து ஆசிரியர் ஒருவரையே நம் பள்ளிக்குத் தலைமை ஆலோசகராக நியமித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறார். அதன்படி ஃபின்லாந்தில் இருந்து ஒரு ஆசிரியையை அழைத்து வருகிறார்கள். அவரும் ஒரு ஆறு மாதம் தமிழகப் பள்ளியை அருகில் இருந்து கவனிக்கிறார். அதன் பிறகு விஜயதசமியில் இருந்து பொறுப்பெடுத்துக்கொள்கிறார். சாரா ஜீசஸ் என்ற தன் பெயரை சரஸ்வதி ஜீசஸ் என்று மாற்றிக்கொள்கிறார். ஐந்து வருடங்கள் தன்னுடைய திட்டங்கள், கொள்கைகள் எதிலும் யாரும் தலையிடக்கூடாது என்ற உத்தரவாதத்தின் பேரில் பள்ளியின் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார். அவர் கொண்டுவரும் அதிரடித் திட்டங்களும் அதற்கு நம் ஆசிரியர் வர்க்கமும் சமூகமும் போடும் முட்டுக்கட்டைகளும் அதை அவர் வெல்லும் விதமுமே திரைப்படமாக விரிகிறது.

முதல் காட்சியிலேயே அவருடைய கண்டிப்பும் நேர்மையும் காட்டப்படுகிறது. அந்தப் பள்ளிக்கு காலையில் கார், ஆட்டோக்களில் குழந்தைகளைக் கொண்டுவந்து விடுவது வழக்கம். அதனால் காலை நேரத்தில் பள்ளிக்கூடச் சாலை போக்குவரத்து நெரிசலில் பிதுங்கும். நம் ஆசிரியை முதலில் அனைத்து பெற்றோருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்புவார். அதில் இருபது காரில் இருபது பேர் பயணிப்பதற்குப் பதிலாக 20 பைக்குகளில் பயணித்தால் சாலையில் பாதி இடம் மட்டுமே அதற்குப் போதுமானது. அந்த இருபது பேரும் ஒரே ஒரு பேருந்தில் வந்தால் 90 சதவிகித சாலை நெரிசல் குறைந்துவிடும். மேலும் இருபது பேரும் சைக்கிளில் வந்தால் சுற்றுச் சூழலுக்கும் பெரும் நன்மை கிடைக்கும் என்று நான்கு புகைப்படங்களில் அந்த விஷயம் அழகாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

வழக்கம்போல் நம் பெற்றோர்கள் அதைப் படித்துவிட்டு மறு நாளும் காரிலும் ஆட்டோவிலும் குழந்தைகளை அழைத்து வருவார்கள். அவர்கள் அனைவரையும் அப்படியே திருப்பி அனுப்புவார் நம் கதாநாயகி. பள்ளிக்குப் பேருந்தில் வாருங்கள். அல்லது சைக்கிளில் வாருங்கள் என்று சொல்வார். எல்லாரிடமும் கார் இருப்பது அல்ல; எல்லோருமே செல்வந்தர்கள்உட்பட, சைக்கிளிலும் பஸ்ஸிலும் பயணம் செய்வதே முன்னேறிய நாட்டின் அடையாளம் என்று சொல்வார். இன்று ஒருநாள் உங்களை மன்னிக்கிறேன். நாளை முதல் காரில் குழந்தைகளை அழைத்து வந்தால் அதுவும் ஒரு காரில் ஒரே ஒரு குழந்தை மட்டுமே வந்தால் அந்தக் குழந்தை வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று சொல்வார்.

அடுத்த நாள் கார் பூலிங் முறையில் ஐந்தாறு குழந்தைகள் ஒரே காரில் வந்து இறங்குவார்கள். பெருமளவுக்கு நெரிசல் குறையும். எல்லா கார்கள், ஆட்டோக்களைப் பள்ளிக்கூட வாசலில் இருந்து சற்று தள்ளி நிறுத்தச் சொல்லியிருப்பார்கள். பிரின்சிபால் மட்டும் தன் காரில் நேராக பள்ளிக்குள் நுழைவார். அதைப் பார்க்கும் ஃபின்லாந்து ஆசிரியை, காரை நிறுத்தி அதன் சாவியை எடுத்து பிரின்சிபாலிடம் கொடுத்து, முன்னுதாரணமாக நடந்துகொள்ளவேண்டிய நீங்களே இப்படி விதியை மீறினால் மற்றவர்கள் எப்படி பின்பற்றுவார்கள்; நாளையில் இருந்து உங்கள் வீட்டுக்கு அருகில் இருந்து நம் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் நான்குபேரை உங்கள் காரில் அழைத்துவரவேண்டும். மேலும் காரை எல்லாரும் போல் பள்ளிக்கு வாசலிலேயே நிறுத்திவிடவேண்டும் என்று சொல்லி அவரை நடந்து செல்லும்படிச் சொல்வார்.

கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு மிகுந்த கடுப்புடன் தன் அறைக்குள் நுழைவார் பிரின்சிபால். அங்கு அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கும். அவர் பாடம் எடுப்பதற்கான அட்டவணை அங்கு ஒட்டப்பட்டிருக்கும். கடந்த சில வருடங்களாக பிரின்சிபாலாக அவர் ஆனதில் இருந்து எந்த வகுப்புமே எடுத்ததில்லை. ஆனால், அவரும் பாடம் எடுத்தாகவேண்டும் என்று ஃபின்லாந்து ஆசிரியை சொல்வார்.

ஐந்து வருடங்கள் அவர் சொல்வதைக் கேட்டாகவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் சாக்பீஸையும் டஸ்டரையும் எடுத்துக்கொண்டு தன் வகுப்புக்குச் செல்வார்.

ஃபின்லாந்து ஆசிரியையை முதலில் நர்சரி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அறிமுகப்படுத்தும்வகையில் மிகப் பெரிய விழா நடக்கும். அதில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு என்ன புரியும் என்ற யோசனை சிறிதும் இல்லாமல் ஆக்ஸ்ஃபோர்டு, ஷேக்ஸ்பியரியன் ஆங்கிலத்தில் மணிக்கணக்கில் உரையாற்றுவார்கள். தமது பள்ளி செய்த சாதனைகள், மாணவச் செல்வங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களுடைய பள்ளியில் தரப்படும் கல்வியும் பிற பயிற்சிகளும் எப்படியெல்லாம் உதவும், ஒழுக்கம், நேர்மை, நாணயம், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என அவர்களுக்குத் தெரிந்த விழுமியங்களைப் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசுவார்கள். குழந்தைகளோ பேந்தப் பேந்தவென முழித்துக்கொண்டிருக்கும். குழந்தைகள்தான் நாட்டின் வருங்காலத் தூண்கள், எதிர்கால மன்னர்கள், குழந்தைகள்தான் பள்ளிகளின் கதாநாயகர்கள் என்று அவர்களுக்குப் புரியாத மொழியில் பேசிக்கொண்டே செல்வார்கள். பிஞ்சுக் குழந்தைகள் சிலரையும் ஆங்கிலத்தில் சில வாக்கியங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வைத்திருப்பார்கள். அந்தக் குழந்தைகள் மேடையோரத்தில் கையில் பேப்பருடன் நின்று கொண்டு ஆசிரியர் ஒருவர் முன்னால் சொல்லிச் சொல்லிப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

கடைசியாக ஃபின்லாந்து ஆசிரியை பேச அழைக்கப்படுவார். உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் என்று தூய தமிழில் பேச ஆரம்பிப்பார். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்து 12 மணிவரை நடந்த விழாவில் முதன் முதலாகப் பேசப்பட்ட தமிழ் வாக்கியம் அது. ஒரே இடத்தில் உட்கார வைக்கப்பட்டதாலும், புரியாத மொழியில் பேசிக்கொண்டே போனதைக் கேட்க நேர்ந்ததாலும் இரண்டு பக்கமும் நின்றிருந்த ஆசிரியர்களால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்ததாலும் ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்த குழந்தைகள் அந்தத் தமிழ் வாக்கியத்தைக் கேட்டதும் ஒரு நிமிடம் அமைதியாகி மேடையை நோக்கித் திரும்புகின்றன.

உங்கள்ள யாரெல்லாம் ரயில் பாத்திருக்கீங்க…

குழந்தைகள் பெரும் ஆரவாரத்துடன் நான் பாத்திருக்கேன்… நான் ரயில்ல போயிருக்கேன் என்று கைகளை உயரத் தூக்கிக் காட்டும்.

சரி… ரயில் எப்படி சத்தம் போடும்..?

கூ…குச்…குச்…குச்…. கூ….குச்…குச்…குச்…

ரயில் எப்படி ஓடும்…

குழந்தைகள் எழுந்து சத்தம் போட்டபடியே ஓடத் தொடங்குகின்றன. ஒவ்வொரு குழந்தையும் முன்னால் இருக்கும் குழந்தையின் சட்டையைப் பிடித்தபடி ஓடத் தொடங்குகின்றன. அந்த விழா அரங்கம் முழுவதும் குழந்தைகளின் நீண்ட ரயில் ஓடத் தொடங்குகிறது…

சரி… நாம ஒரு பாட்டுப் பாடிட்டே ஓடுவோமா…

ஓ… பாடலாமே…

ஆசிரியை : காற்றைச் சிமிழில் அடக்கலாம்…

குழந்தைகள் : காற்றைச் சிமிழில் அடக்கலாம்

நீரை அணையில் தடுக்கலாம்

நீரை அணையில் தடுக்கலாம்…

எங்களை யாரும் அடக்க முடியாது

எங்களை யாரும் அடக்க முடியாது

கன்றை மரத்தில் கட்டலாம்

கன்றை மரத்தில் கட்டலாம்

பறவையைக் கூண்டில் அடைக்கலாம்

பறவையைக் கூண்டில் அடைக்கலாம்

எங்களை யாரும் அடக்க முடியாது…

எங்களை யாரும் அடக்க முடியாது!

விழா அரங்கம் ஒரு சில நிமிடங்களில் உயிர் பெற்று உத்வேகம் பெறுகிறது.

பிரின்சிபால், ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள் முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிப்பதுபோல் நெளிகிறார்கள். அடுத்த அஸ்திரம் அவர்களை நேராகத் தாக்குகிறது.

இப்போ நான் ஒரு ஒரு பரீட்சை வைக்கப் போறேன்.

ஆசிரியர்கள் உற்சாகமாகக் கை தட்டி வரவேற்பார்கள்.

குழந்தைகள் பேச்சு மூச்சற்று ஒடுங்கும்.

மொதல் நாள்லயே பரீட்சையா…

பாடம் எடுக்காமலேயே பரீட்சையா என்று சலசலப்பு எழும்.

பரீட்சை வைக்கப் போறேன்னு சொன்னேனே தவிர யாருக்குன்னு சொல்லலையே…

சொல்லுங்க… சொல்லுங்க…

நம்ம டீச்சர்களுக்குத்தான்…

இப்போது ஆசிரியர் கூட்டம் ஸ்தம்பித்து நிற்கும். குழந்தைகள் கூரையே இடிந்து விழும் அளவுக்கு ஆர்பரித்து வரவேற்பார்கள்.

நான் ஒவ்வொரு கேள்வியா கேட்பேன். ஆசிரியர்கள் டக் டக்குன்னு பதில் சொல்லணும்… சரியா…

ஆசிரியர்கள் தர்ம சங்கடமாக சிரித்தபடியே சரி என்பார்கள்.

உலகில் அதிகம் பேர் பேசும் மொழி எது.

பலர் ஆங்கிலம் என்பார்கள்.

சிலர் சீன மொழி என்பார்கள்.

ஆம் சீன மொழி.

உலகின் மூத்த மொழி

சமஸ்கிருதம் என்பார்கள் சிலர்.

தமிழ் என்பார்கள் சிலர்.

ஆம் சமஸ்கிருதமும் தமிழும்.

உலகின் எல்லாரும் பேசும் முதல் மொழி

அவர்களுடைய தாய் மொழி என்று எல்லாரும் கோரஸாகச் சொல்வார்கள்.

உலகில் எல்லாருக்குமான பயிற்று மொழி

தாய்மொழி… தாய் மொழி என்று சொல்வார்கள்…

நாம் பயிற்றுவிக்கும் மொழி…

ஆசிரியர் கூட்டம் தலை குனிந்து நிற்கும்.

சொல்லுங்க… ஏன் பேச்சே இல்லை?

ஆங்கிலப் பாடங்கள் தேவை… ஆங்கில வழிப் பாடங்கள் தேவையா..?

ஆசிரியர் கூட்டம் அமைதியாக இருக்கும்.

ஒரு ஆசிரியர்: உயர் கல்விக்கு ஆங்கிலம் தானே தேவை…

ஐந்தாம் வகுப்புக்கு அது தேவையா… நர்சரிக்கு அது தேவையா?

மனிதர்கள் உயிர் வாழச் சாப்பாடு தேவை. அரிசி, ரசம், குழம்பு, தயிர், காய், ஊறுகாய் எல்லாமே தேவை… பச்சைக் குழந்தைக்கு..?

தாய்ப்பால் மட்டுமே ஜீரணமாகும் குழந்தைகு தட்டு நிறைய சாதம் கொடுத்தா என்ன ஆகும்…

வாந்தி பேதிதான் ஆகும்…

தாய் மொழி மட்டுமே புரியற குழந்தைக்கு ஆங்கிலத்தைத் திணிச்சா என்ன ஆகும்?

தரம் கெட்டுத்தான் போகும்.

அதைத்தான் செய்யறீங்க. ஆங்கிலம் ஒரு பாடமா சொல்லிக் கொடுங்க. ஐந்தாம் வகுப்புக்கு மேலதான் அந்நிய மொழியை எல்லா நாட்டுலயும் சொல்லித் தர்றாங்க. அப்பயும் ஒரு மொழிப் பாடமாத்தான் சொல்லித் தர்றாங்க. அதுதான் சரி. உங்களைக் கையெடுத்துக் கேட்டுக்கறேன்… ஆங்கிலம் சொல்லிக் கொடுங்க… ஆங்கில வழில சொல்லிக் கொடுக்காதீங்க. நாளைல இருந்து தமிழ்க்கு மாறுங்கன்னு சொன்னா குழந்தைகளுக்கு சந்தோஷமா இருந்தாலும் உங்களுக்கும் குழந்தைகளோட பெற்றோருக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். அதனால, தினமும் பாடம் எடுக்கும்போது ஆங்கிலத்தில சொல்றதோட தமிழ்லயும் சேர்த்தே சொல்லிக் கொடுங்க. ஒவ்வொரு ஆசிரியர் கூடயும் தமிழ்ல மொழி பெயர்த்துச் சொல்ற ஒருத்தரும் இருக்கட்டும். ஃஞுt தண் குடூணிதீடூதூ ஞிடச்ணஞ்ஞு டூடிணஞுண். மெதுவாகத் தடம் மாறுவோம்! நன்றி என்று சொல்லிப் பேச்சை முடிக்கிறார்.

குழந்தைகள் கை தட்டி வரவேற்கிறார்கள். ஆசிரியர்களும் தயக்கத்துடன் கை தட்டி முடிப்பார்கள்.

தினமும் வகுப்பில் விளக்கேற்றிவிட்டுப் பாடங்களைத் தொடங்குதல், பள்ளிக்கூடத்தில் மிருக காட்சி சாலை, வகுப்பறைகளில் மைதானம், ஆசிரியர்களுக்கு கார்ட்டூன் உடைகள், குழந்தைகளுக்கும் வண்ணச் சீருடைகள், குழந்தைகளைப் பேசவிட்டு, கேள்வி கேட்கவிட்டு அதில் இருந்து கதைகள், நாடகங்கள், பாடல்கள் வாயிலாகப் பாடம், தினமும் தாங்கள் பார்த்த கார்ட்டூன்கள் பற்றிப் பேச ஒரு மணி நேர வகுப்பு, காலையில் பாடம், மதியம் இசை, ஓவியம், தச்சுவேலை, பொம்மை தயாரிப்பு, தோட்ட வேலை எனக் கலைகள், கண் தெரியாதவர்களுடைய பள்ளிக்குச் சென்று வாரம் ஒருமுறை வாசித்துக் காட்டுதல், பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்து வாரத்துக்கு ஒருமுறை பள்ளி நாடாளுமன்றம் கூடிப் பள்ளியில் செய்ய வேண்டியவை குறித்து விவாதித்தல், மாணவர்களே தேர்வுகளுக்கான கேள்விகளைத் தீர்மானித்தல், குழந்தைகள் கேள்வி கேட்க ஆசிரியர்கள் பதில் சொல்லுவதுதான் தேர்வு எனப் பல அம்சங்களைக் கல்வியாளர்கள், மாற்றுக் கல்வி தொடர்பான புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்திருக்கிறோம் (முந்தைய அத்தியாயங்களில் அவற்றை விரிவாகப் பார்த்திருக்கிறோம்) நமது ஃபின்லாந்து ஆசிரியை அவற்றை நமது பள்ளியில் அமல்படுத்துகிறார்.

பிரதான கதையில் இவையெல்லாம் இடம்பெறும். பள்ளி, சமூகம், தேசம், உலகம் சார்ந்த பிரச்னைகளும் அவற்றுக்குப் பள்ளி மாணவர்கள் சொல்லும் தீர்வுகளும் குறும்படங்களாக எடுக்கப்பட்டுப் படத்துடன் இணைக்கப்படும். குறும்படம் என்று சொல்லியிருப்பது எளிதில் புரியவேண்டும் என்பதற்கு மட்டுமே. அவை அனைத்திலுமே நம் பள்ளி மாணவர்களும் ஆசிரியரும் கதாபாத்திரங்களாக வருவார்கள் என்பதால் அது ஒரு முழுத் திரைப்படத்தின் தனித்தனி அங்கங்கள் போல மட்டுமே இருக்கும்.

இவற்றில் சொல்லப்படும் தீர்வுகள் ஒருவகையில் மிகவும் மேலோட்டமானதாகவோ பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாததாகவோ தோன்றக்கூடும். விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு எல்லாருக்குமே தெரிந்துதான் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதே பெரிய பிரச்னையாக இருக்கிறது.

உதாரணமாக அரசு அலுவலகங்களில் ஊழல் அதிகமாக இருக்கிறது. இதைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது. இப்போது அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள், ப்யூன்கள், கிளர்க்குகள், மேலதிகாரி, தலைவர் என்ற கட்டமைப்பு இருக்கிறது. நாம் புரோக்கர்களை அலுவலக வாசலில் சந்திக்கிறோம். அவர் ப்யூனை சந்தித்து நம் வேலையைக் கொடுக்கிறார். அவர் கிளார்க்கிடம் அதைத் தருகிறார். கிளார்க் வேலையைச் செய்துவிட்டு மேலதிகாரியிடம் ஒப்புதலுக்கு அனுப்புகிறார். மேலதிகாரி தலைவரிடம் காட்டி கையெழுத்து பெற்று நம் வேலையை முடிக்கிறார். இதில் புரோக்கரில் ஆரம்பித்து ப்யூன், கிளார்க் சில நேரங்களில் மேலதிகாரி என நம் நகர்வுகள் இருக்கும். தலைவரை அநேகமாகப் பார்க்கவேண்டியிருக்காது. புரோக்கரில் ஆரம்பித்து கிளார்க் வரை அனைவருக்கும் நாம் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும். இதுதான் அரசு அலுவலகங்கள் செயல்படும் விதம்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அந்த அலுவலகத்தின் தலைவர் புரோக்கர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் டேபிள் போட்டு உட்காரவேண்டும். நாம் அந்த அலுவலகத்தில் தலைவரை மட்டுமே பார்க்க முடியும்படி இருக்கவேண்டும். நமது விண்ணப்பத்தைப் பார்த்து ஒரு வாரம் அல்லது பத்து நாளில் முடித்துத் தருவதாக அவர் கையெழுத்துப் போட்டுத் தருவார். நாம் அப்படியே வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும். அந்த விண்ணப்பத்தைத் தலைவர் ப்யூனிடம் கொடுத்து கிளார்க்கிடம் அனுப்புவார். அவர் அதை உரிய காலத்துக்குள் முடித்து மேலதிகாரிக்கு அனுப்புவார். அவர் அதைச் சரி பார்த்துவிட்டுத் தலைவருக்கு அனுப்புவார். தலைவர் உடனே நமக்கு போன் போட்டு உங்கள் வேலை முடிந்துவிட்டது என்று சொல்வார். இவ்வளவுதான். கீழிருந்து மேலே செல்வதற்குப் பதிலாக மேலிருந்து கீழ் என்று அரசு அலுவலகத்தை மாற்றினாலே போதும் லஞ்சம் வெகுவாகக் குறைந்துவிடும். மேலதிகாரிக்கும் தலைவருக்கும் சேர்த்துத்தான் கிளார்க்கும் ப்யூனும் லஞ்சம் வாங்குவது வழக்கம். தலைவரே நேரடியாகத் தலையைச் சொறிவது இல்லை. எனவே, அவரை மக்களுடன் நேரடியாக இணைத்துவிடவேண்டும். அவரும் தலையைச் சொறிந்தால் அதுபோல் கேவலம் வேறு எதுவும் இருக்காது. 60-70 ஆயிரம் வாங்கும் ஒருவர் ஆயிரம் ஐநூறு என்று கையை நீட்டமாட்டார் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்.

ஒரு தலைவர் அந்த அலுவலகத்துக்கு தினமும் வரும் நூறு பேரையும் சந்திக்க வேண்டுமா என்ற கேள்வி வரும். 100 பேருடைய விண்ணப்பங்களையும் பார்த்து அவர் கையெழுத்து போடத்தானே செய்கிறார். எனவே, 100 பேரை அவர் பார்ப்பதில் தவறே இல்லை. அந்தப் பொறுப்பை ஒரு ரிசப்ஷனிஸ்ட் போல் யாரிடமாவது ஒப்படைக்கலாம். ஆனால், இன்னொரு கடைநிலைப் பணியாளரை அங்கு நியமித்தால் லஞ்ச ஆறு அந்த வாய்க்கால் வழி பாயத் தொடங்கும் என்பதால் தான் தலைவரையே வாசலுக்கு வரச் சொல்கிறேன்.

இது இன்று காலையில் உத்தரவு போட்டால் மதியத்தில் இருந்தே அமலுக்குக் கொண்டுவர முடிந்த எளிய தீர்வுதான். ஆனால், இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கும். எனவே, நமது திரைப்படத்தில் இப்படி ஒரு தீர்வு சொல்லப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவதாகக் காட்டினாலோ வேறு சுலபமான வழி இருப்பதாகக் காட்டினாலோ அது விஷயத்தை எளிமைப்படுத்தியதாகவே தோன்றும். அதற்காக எளிய, நடைமுறை சாத்தியமான தீர்வைச் சொல்லாமலும் இருக்க முடியாது. எனவே, முடிந்தவரை பிரச்னையின் தீவிரத்தைக் காட்சிப்படுத்திவிட்டுத் தீர்வையும் இடம்பெறச் செய்வோம்.

பள்ளி என்பது மாணவர்களை மையமாகக் கொண்டதாக, அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று நம் ஆசிரியை சொல்கிறார். உண்மையில் என்ன பாடத்தை எப்படிப் படிக்கவேண்டும் என்பதை மாணவர்களே தீர்மானிக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு பள்ளிக்கு பிரின்சிபாலாக மாணவர்களே இருக்கவேண்டும் என்கிறார்.

மற்ற ஆசிரியர்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பொறுப்பைக் குழந்தைகளிடம் விட்டால் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். படிக்கவே மாட்டார்கள் என்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

மாணவர்களுக்குக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லை என்று சொல்வது மீன் குஞ்சுகளுக்கு நீந்துவதில் ஆர்வம் இல்லை என்பதைப் போன்றது. நாம் பாடம் என்று சொல்லிக் கற்றுத் தருபவற்றைப் படிப்பதில்தான் அவர்களுக்கு விருப்பம் இல்லையே தவிர கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கவே செய்கிறது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோரும் சரி ஆசிரியரும் சரி எப்படி வளர்க்கிறோம். வாயை மூடு… கேள்வி கேட்காதே… அசட்டுத்தனமாக உளறாதே என்று சொல்லிச் சொல்லித்தானே வளர்க்கிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகளை எல்லாம் யார் சொல்லிக் கொடுத்துக் கேட்கிறார்கள். அவர்களாகத்தானே கேட்கிறார்கள். அவையெல்லாம் என்ன? உண்மையில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கற்றுக்கொள்ளும் நோக்கத்தில்தானே அந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலைத்தானே சொல்லித்தரவேண்டும். அதுதானே உண்மையான கல்வி.

படிப்பு வேண்டாம் என்று சொன்னால் குழந்தைகள் படிக்கவே மாட்டார்கள். விளையாடிக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்கிறீர்களே… விளையாடவிடுங்கள். ஏதேனும் ஒரு குழந்தை கீழே விழுந்து அடிபட்டதும் ஆயிரம் கேள்விகளுடன் உங்களிடம் வருவார்கள். ரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது? உடம்பில் எங்கு அடிபட்டாலும் ரத்தம் வருமா? ரத்தத்தின் சுவை என்ன? ரத்தம் எப்படி சிறிது நேரத்தில் உறைந்துவிடுகிறது? பேண்ட்-எய்டில் என்ன இருக்கிறது; அது எப்படிப் புண்ணைக் குணப்படுத்துகிறது என்று ஆயிரம் கேள்விகள் கேட்பார்களே. அதற்கான பதிலைச் சொல்லுங்கள். இயல்பான உரையாடலாக நீங்கள் அங்கு நடத்துவதுதான் கல்வி. அது தொடர்பான புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதைச் சொல்லுங்கள். இணையத்தில் அதுசர்ந்த தகவல்களை எப்படித் தேடுவது என்று சொல்லிக் கொடுங்கள். சிலபஸில் அது இல்லையே என்று கவலைப்படாதீர்கள். சிலபஸ் என்பது மாணவர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்துதான் உருவாகவேண்டும். எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கித் தருவதைக் குழந்தைகளின் மூளைக்குள் திணிப்பதற்குப் பெயர் கல்வி அல்ல.

இந்த ஆல்டர்நேட் கல்வியினால் குழந்தைகளின் அறிவு வளரும் என்பது சரிதான். ஆனால், அவர்களுக்கு வேலைகள் எதுவுமே கிடைக்காதே. உலகில் வாழ நல்ல வேலை மிகவும் அவசியமாயிற்றே என்று ஆசிரியர்கள் கேட்பார்கள்.

உங்களுடைய கேள்விகளுக்கு இரண்டு பதில்கள் சொல்கிறேன். முதலில் ஆல்டர்நேட் எஜுகேஷன் என்ற வார்த்தையே தவறு. ஏதோ வழக்கத்தில் இருக்கும் கல்விதான் இயல்பானது என்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி என்பது அதற்கான ஆல்டர்நேட் என்றும் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. உண்மையில் மாணவர்களை மையமாகக்கொண்ட கல்விதான் உண்மையான கல்வி. அதுதான் ரியல் எஜுகேஷன். மற்றவை எல்லாம் போலியான பொய்யான கல்விகள். எனவே, ஆல்டர்நேட் எஜுகேஷன் என்று சொல்லாதீர்கள். அதை ரியல் எஜுகேஷன் என்று சொல்லுங்கள்.

அடுத்ததாக வேலை என்பது முக்கியம்தான். ஆனால், ரியல் எஜுகேஷன் பெறுபவர்களுக்கு வேலை கிடைக்காது என்று யார் சொன்னார்கள். இன்று பொய்யான கல்வி பெற்று வருபவர்கள் பொறியியல் படித்தாலும் கணினி உயர் கல்வி படித்தாலும் அவர்களைத்தான் அன்-எம்பலாயபிள் என்று சொல்லி ஓரங்கட்டுகிறார்கள். தனிப் பயிற்சி கொடுத்தாகவேண்டியிருக்கிறது. ரியல் எஜுகேஷன் பெறுபவர்கள் அவர்களையெல்லாம் எளிதில் வென்றுவிடுவார்கள். கவலையே வேண்டாம். அப்படியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அந்தப் பாடங்களை நடத்தி அந்தத் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்துவோம். அது அப்படியொன்றும் கடினமான பணி அல்ல என்கிறார் நம் ஆசிரியர்.

சரி உங்கள் வழிக்கே வருகிறோம். மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்றால் எப்படி என்று ஆசிரியர்கள் கேட்கிறார்கள்.

தேர்தல் நடத்தி பிரதமர், முதலமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி. எனத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு முதலமைச்சர். நான்கு எம்.எல்.ஏக்கள். பள்ளி முழுமைக்கும் ஒரு பிரதமர். ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் இரண்டு எம்.பி.க்கள் வீதம் மொத்தம் 36 வகுப்புகளில் இருந்து 72 எம்.பி.க்கள் என்று சொல்கிறார்.

ஆனால், பெற்றோர்களுக்கு இந்த விவரம் தெரிந்ததும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பெரியவர்களைவிடக் குழந்தைகள் புத்திசாலிகள் அல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள். சரி நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் அவர்கள் உங்களை ஜெயித்துவிட்டால் நீங்கள் நம்புவீர்களா என்று ஆசிரியர் சவால்விடுகிறார். ஆசிரியர்களும் பெற்றோரும் சரி என்கிறார்கள்.

நமது திரைப்படத்தின் ஆதாரக் கருதுகோள்களில் ஒன்று மாணவர்கள் ஆசிரியர்களைவிட புத்திசாலிகள்; குழந்தைப் பருவமே படைப்பாக்கம் உச்சத்தில் இருக்கும் காலகட்டம். அதை நாம் சிதைக்கக்கூடாது என்பவைதானே.

மேலைநாட்டில் நடந்த ஒரு விளையாட்டை இங்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தார்கள். இருபது பெரிய பந்துகளைக் கொண்டுவந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாணவனின் பெயரை எழுதினார்கள். அந்தப் பந்துகளை ஒன்றாகக் கலந்து வகுப்பறைக்குள் போட்டுவிட்டு, மாணவர்களிடம் ஒவ்வொருவரும் தனது பெயர் எழுதிய பந்தை எடுக்கச் சொன்னார்கள். முதலில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. பந்துகள் இங்குமங்கும் துள்ளிக் கொண்டிருந்தன. மாணவர்கள் ஒவ்வொரு பந்தாக எடுத்து தமது பெயர் அதில் இல்லை என்றதும் அந்தப் பந்தை வீசி எறிந்துவிட்டு வேறொரு பந்தை எடுக்கப் பாய்ந்தார்கள்.

சுமார் பத்து நிமிடம் இப்படியே கழிந்தது. ஒரு ஒழுங்கில்லாமல் அனைவரும் ஓடிக் கொண்டிருந்ததால் யாருக்கும் அவர்கள் பெயர் எழுதிய பந்து கிடைக்கவே இல்லை. அப்போது ஒரு மாணவி யோசித்தாள். தன் கையில் இருந்த பந்தில் யார் பெயர் எழுதியிருக்கிறதோ அதை அவள் உரக்கச் சொன்னாள். அந்தப் பெயரை உடைய மாணவி தன் கையில் இருந்த பந்தைக் கீழே போட்டுவிட்டு ஓடிவந்து அந்தப் பந்தை வாங்கிக் கொண்டாள். அதைப் பார்த்ததும் பக்கத்தில் இருந்த இன்னொரு குழந்தை அதுபோலவே தன் கையில் இருந்த பந்தில் என்ன பெயர் இருந்ததோ அதை உரத்த குரலில் சொன்னாள். அந்தப் பெயரையுடைய குழந்தை தன் கையில் இருந்த பந்தில் இருந்த பெயரை உரக்கச் சொன்னது. அப்படியாக ஒவ்வொரு குழந்தையும் தத்தமது கைகளில் இருந்த பந்தில் என்ன பெயர் எழுதப்பட்டிருந்ததோ அதைச் சொல்லி பந்துகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். ஓரிரு நிமிடங்களில் அனைவரிடமும் அவர் பெயர் எழுதிய பந்துகள் கிடைத்துவிட்டன.

பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழவேண்டும் என்ற விஷயத்தைப் போதிப்பதற்காக அந்தப் பள்ளியில் அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தார்கள். இதை நாம் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம். முதலில் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இந்தப் போட்டி வைக்கப்படும். அரை மணி நேரம் ஆனாலும் அவர்களால் சரியான பந்தைக் கண்டுபிடிக்கமுடியாமல் ஓடி ஓடிக் களைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு குழந்தைகளுக்கு இந்தப் போட்டியை வைக்கிறார்கள். நாலைந்து நிமிடங்கள் தடுமாறும் குழந்தைகள் சட்டென்று சரியான வழியைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றுவிடுகின்றன.

அப்படியாக ஆசிரியர்களும் பெற்றோரும் போட்டியில் தோற்றதும் தேர்தலுக்கு அனுமதி கிடைக்கிறது. மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்.

நாங்கள் நினைத்ததையெல்லாம் அமல்படுத்த முடியுமா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக என்று சொல்கிறார் நம் ஆசிரியை. வீட்டுப் பாடம் வேண்டாம் என்று சொன்னால் அனுமதிப்பீர்களா..? பாட புத்தகங்கள் வேண்டாமென்று சொன்னால் அனுமதிப்பீர்களா..? ஆசிரியர்களே வேண்டாம் என்று சொன்னால் அனுமதிப்பீர்களா என்றெல்லாம் கேட்கிறார்கள்.

பள்ளிக்கூடமே வேண்டாம் என்று சொன்னால் அதைக்கூட அனுமதிப்போமென்று சொல்கிறார் ஆசிரியை.

இல்லையில்லை… பள்ளிக்கூடம் கட்டாயம் இருக்கணும். ஆனால், புக்ஸ்மட்டும்தான் இருக்கக்கூடாது. எக்ஸாம்ஸ் இருக்கவே கூடாது என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகள் தூள் பறக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹோம்வொர்க்கே இருக்காது என்று ஒரு கட்சி அறிவிக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாருக்கும் தேர்வுகளில் எல்லாருக்கும் 35 மதிப்பெண்கள் இலவசம் என்று இன்னொருவர் அறிவிக்கிறார். நான் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களுக்கு ஹோம் வொர்க் தருவேன் என்று சொல்லும் முதலமைச்சருக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களுக்கு தினமும் தேர்வு நடத்துவேன் என்று சொல்பவர் பிரதமராகவே ஆகிவிடுவார் என்பதுபோல் அமோக வரவேற்பு பெறுகிறார்.

தினமும் ஒரு சாக்லேட், யூனிஃபார்மே கிடையாது, வகுப்புக்குக் காலையில் அரை மணி நேரம் தாமதமாக வந்தால் மாலையில் அரை மணி நேரம் கூடுதலாக இருந்தால் போதும். காலை எழுந்தவுடன் விளையாட்டு… பின்பு கனவை வளர்க்கும் நல்ல கார்ட்டூன்… மாலை முழுவதும் மண்ணில் ஆட்டம் என்று பழக்கப்படுத்திக் கொள்ளு பேபி என்று புதுக்கவிதை மழை பொழிகிறது.

போட்டியிடுபவர்களில் 50% பெண்கள். பொதுக்கூட்டங்களில் துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், கொடிகள் எனக் கலக்குகிறார்கள். கூட்டம் முடிந்ததும் பொறுப்பாகக் குப்பைகளை எடுத்துச் சென்று குப்பைக் கூடையில் போடுகிறார்கள். ஙணிtஞு ஞூணிணூ குதணூஞுண்ட என்ற பேனர் தட்டி அவர்களுடைய கூட்டம் முடிந்ததும் தரப்படுகிறது. அதில் சுரேஷ் என்ற பெயருக்கான ஸ்டிக்கரை எடுத்துவிட்டு திணிtஞு ஞூணிணூ குதட்ச்tடடி என்று ஒட்டிக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

பெரும் பரபரப்புடன் சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்ந்து தேர்தல் நடந்து முடிகிறது. மூன்று கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பெறுகின்றன. ஒரு கட்சிக்கு 36% வாக்குகள் கிடைத்து பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. அடுத்ததாக இன்னொரு கட்சிக்கு 30% வாக்குகள் கிடைக்கிறது. அடுத்த கட்சிக்கு 25% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 49-ஓ-வுக்கு 4% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 3% வாக்குகள் செல்லாதவை. 2% வாக்களிக்கவில்லை.

36% வாக்குகள் கிடைத்த கட்சிக்கு 80% இடங்கள் கிடைக்கின்றன. மற்ற கட்சிகள் இதை ஆட்சேபிக்கின்றன. எங்களுக்கு 30% வாக்குகள் கிடைத்திருக்கிறதே… வெறும் 15% இடம் மட்டும்தானா… எங்களுக்கு 25% வாக்குகள் கிடைத்தும் ஐந்து இடம் தானா என்று கேட்கிறார்கள். சரி அப்படியானால் எத்தனை சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கிறதோ அத்தனை பிரதிநிதிகள் என்று தீர்மானிக்கப்படுகிறது.

முதல் நாள் கூட்டம் நிஜ நாடாளுமன்றமும் சட்டசபையும் தோற்றுப் போகும் அளவில் களேபரமாகிறது. டெஸ்குகளைத் தூக்கி எறிதல், சட்டை டிரவுசரைக் கிழித்தல், பென்சிலால் குத்துதல், டஸ்டர் சாக்பீஸை எடுத்து எறிதல் என நடக்கிறது. பிரதமர் இவை அனைத்தையும் வேதனையுடன் பார்க்கிறார்.

அனைத்து பள்ளி மாணவர்களையும் அழைத்து கார்ப்பரேட் கம்பெனிகளின் கூட்டங்கள் நடத்தப்படும் விதத்தை வீடியோவில் போட்டுக் காட்டுகிறார். உலகின் பிற நாடுகளில் சட்டசபைகள் கண்ணியமாக நடப்பதைக் காட்டுகிறார். சட்டசபையும் நாடாளுமன்றமும் மக்கள் பிரச்னைகளைப் பேசுவதற்கான இடம். ஒவ்வொரு நாளும் சில தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் பட்டிமன்றங்களில் நடப்பதுபோல் நடக்கவேண்டும். அதன் பிறகு ஏகமனதாக ஒரு முடிவெடுக்கப்படவேண்டும். நமது மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும்தான் உலகமே நம் சட்டசபை, நாடாளுமன்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றனவே… இப்படி தேசத்துக்குப் பெரும் அவமானத்தைத் தேடித் தருகிறோமே என்ற குற்ற உணர்ச்சியோ பொறுப்போ இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்றால் நாமும் அப்படியே நடந்துகொள்ளலாமா? அவர்களைப் போலவே நடந்துகொண்டால் புதிய தலைமுறை என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்றவர்களாகிவிடுவோம் என்று சொல்கிறார்.

அடுத்த நாளில் இருந்து இரு அவைகளிலும் ஒழுங்கு வருகிறது. ஒவ்வொரு வாரமும் மூன்று தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது கருத்துகளை நிதானமாக எடுத்து வைக்கிறார்கள். கடைசியில் ஏகமனதாகச் சட்ட திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

முதல் தீர்மானமாக, ஒவ்வொரு மாணவரும் தமது பெட் அனிமல்களைப் பள்ளிக்குக் கொண்டுவரலாம் என்று சட்டம் போடப்படுகிறது. பெட் அனிமல் இல்லாதவர்கள் தமக்குப் பிடித்த விலங்குகளைச் சொல்லலாம். அவை பள்ளியில் வளர்க்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அப்படியாகப் பள்ளிக்கு என்று முயல், மான், கோழி, வாத்து, புறாக்கள், மயில், பூனை, நாய், பசு என சாதுவான விலங்குகள் வாங்கப்படுகின்றன. பள்ளிக்கூடம் மாணவர்களுக்குப் பிடித்த மிருககாட்சி சாலைபோல் ஆகிறது.

பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பெற்றோர்கள் எல்லாம் குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வமாகப் புறப்படுவதைச் சொல்லி மகிழ்கிறார்கள். முன்பெல்லாம் குழந்தைகளை எழுப்பி, குளிக்கவைத்து, சாப்பாடு கொடுத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். இப்போதோ குழந்தைகள் தாமாகவே சீக்கிரம் எழுந்து எல்லா வேலைகளையும் மடமடவென்று முடித்துவிட்டுப் புறப்பட்டுவிடுகிறார்கள். காலையில் முயலுக்கு நான் தான் சாப்பாடு கொடுக்கணும்; மானுக்கு நேத்திக்கு அடிபட்டிருச்சு. மருந்து கொடுக்கணும் சீக்கிரம் புறப்படு என்று குழந்தைகள் எங்களை அவசரப்படுத்துகிறார்கள் என்று சொல்லி மகிழ்கிறார்கள்.

ஆனால், அந்தப் பள்ளியில் மான்களும் முயல்களும் சுதந்தரமாக உலவும் விவரம் வேறொருவருக்கும் தெரிந்து அவரும் சந்தோஷப்படுகிறார். ஒரு மழை நாள் இரவில் நெருப்புத் துண்டு போல் மின்னும் கண்களுடனும் கூர் நகங்கள் கொண்ட நான்கு கால்களுடனும் பதுங்கிப் பதுங்கிப் பள்ளிக்கு வந்து சேர்கிறார்.

( தொடரும் )

திருநாள்கொண்டசேரி / B.R. மகாதேவன்

download (4)

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை சாதி மோதல்கள்தான். இந்தியா முழுவதுமே அதுதான் பிரதான பிரச்னையும் கூட. சாதிப் பிரச்னை என்னென்ன வடிவங்களில், எந்தெந்த அளவுகளில், எந்தெந்த இடங்களில், எந்தெந்த சாதிகளுக்கு இடையில், எந்தெந்த காலங்களில் என்னென்ன காரணங்களுக்காக எல்லாம் வெளிப்பட்டிருக்கிறது, அதன் மூல நோக்கம் என்ன என்று அதன் வரலாற்றை அலசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதைத் தீர்க்க வழி கிடைக்கும். நோய் நாடி நோய்க்கு முதல் நாடினால்தானே அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயலைச் செய்ய முடியும்.

ஆதிக்க சாதிகள் சமத்துவத்தை மறுக்கின்றன. அடங்கிக் கிடந்த சாதிகள் சமத்துவத்தை கோருகின்றன. அப்படியாக, சாதிப் பிரச்னையின் அடிப்படை அம்சம் சமத்துவ மறுப்பும் சமத்துவ கோரலும்தான்.

எங்கள் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது…
செல்வோம்;
எங்கள் குளங்களில் நீர் எடுக்கக்கூடாது…
எடுப்போம்;
எங்கள் குவளைகளில் தேநீர் அருந்தக் கூடாது…
குடிப்போம்;
எங்களைப் போல ஆடை அணியக்கூடாது.
அணிவோம்;
எங்கள் கோவிலுக்குள் வரக்கூடாது.
வருவோம்;
எங்கள் தேரைத் தொடக்கூடாது.
தொடுவோம்;
எங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
செய்வோம்;
எங்களுக்கு அருகில் உட்காரக்கூடாது.
உட்காருவோம்;
எங்களுக்கு சமமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடாது;
சாப்பிடுவோம்.
எங்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தித்தான் நிற்க வேண்டும்.
நிற்கமாட்டோம்;
நாங்கள் சொல்லும் வேலைகளை நாங்கள் தரும் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு செய்தாகவேண்டும்.
செய்யமாட்டோம்;
எங்களைவிடப் பணக்காரராக ஆகக்கூடாது.
ஆவோம்.
எங்களை முந்திச் சென்றுவிடக்கூடாது.
செல்வோம்.

இந்தியா முழுவதுமான ஆதிக்க சாதிகள் தமக்கு அடுத்த சாதியிடம் சொல்வதும் எதிர்பார்ப்பதும் இந்த அடிபணிதலைத்தான்.
இந்தியா முழுவதிலுமான அடங்கிக் கிடந்த சாதியினர் செய்வதும் செய்ய விரும்புவதும் இதே மீறலைத்தான்.

மேல் சாதியினர் தமக்கு அடுத்தபடியில் இருக்கும் இடைநிலை சாதியினரின் மீறல்களை, அனுமதிப்பதுபோல் அனுமதித்து, ஆதிக்கத்தை தந்திரமாக வேறு வழிகளில் நிலைநாட்டிக் கொள்கிறார்கள். அப்படிச் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத இடைநிலை சாதியினர் தமது ஆதிக்கத்தை வன்முறை மூலம் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.

இந்திய சாதிய மோதல்களின் சாராம்சம் இதுதான்.

பொதுவாக இந்த சமத்துவ மறுப்பும் சமத்துவ உரிமை கோரலும் ஏதாவது ஒரு பிரச்னையை முன்வைத்து வெளிவரும். எங்கள் தெருவின் வழியாக உங்கள் பிணங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்று ஒரு ஊரில் ஆதிக்க சாதியினர் சொல்வார்கள். அடங்கிக் கிடந்த சாதியினரின் அரசியல் சக்திகள் அப்படித்தான் போவேன் என்று சொல்வார்கள். பொதுவாக இப்படியான பிரச்னை இடை மற்றும் கடைநிலை சாதிகளுக்கு இடையில்தான் அதிகமும் ஏற்படும். இடைநிலை சாதியினர் தமக்குத் தெரிந்த ஒரே வழியான வன்முறையைக் கையில் எடுப்பார்கள்.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

அடங்கிக் கிடக்கும் சாதியினருக்கு என்று தனியாக ஒரு பாதையை சு(இ)டுகாட்டுக்குச் செல்ல அமைத்துக் கொடுக்கலாம். அவர்களுடைய குடியிருப்புக்கு அருகிலேயே ஒரு சு(இ)டுகாடு கட்டித் தரலாம்.

அல்லது காவல்துறையின் துணையோடு எந்தத் தெருவின் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்று சொல்கிறர்களோ அந்தத் தெருவின் வழியாக பிணத்தைக் கொண்டு செல்லலாம்.

அல்லது அடங்கிக் கிடந்த சாதியினர் தம்மை அடக்கிய ஆதிக்க சாதியை அவமானப்படுத்தும் நோக்கில் தமது வளர்ப்புப் பிராணிகளில் நாயோ, பன்றியோ இறந்திருந்தால் அதை ஆதிக்க சாதியினரின் தெருவின் வழியாகக் கொண்டு சென்று அல்லது ஆதிக்க சாதியின் சுடுகாட்டிலேயே எரித்துக் காட்டலாம். எங்க பிணங்கள் எரிக்கப்படக்கூட உங்க சு(இ)டுகாடுக்கு அருகதை இல்லை. எங்கள் நாயும் பன்னியும் எரிக்கத்தான் அது லாயக்கு என்று காட்டலாம்.

இந்த மூன்று வழிகளில் முதலாவது சாத்விக, காந்திய வழி.
இரண்டாவது சட்ட பூர்வமான, அம்பேத்கரிய வழி.
மூன்றாவது கலக வழி. ஒரு பேச்சுக்காக ஈ.வே.ரா.வின் வழி என்று அதைச் சொல்கிறேன். ஈ.வே.ரா. பேச்சில் காட்டிய வெறியை என்றுமே செயலில் காட்டியதில்லை. அதாவது காட்ட முடிந்திருக்கவில்லை. இந்து சமூகம் கழைகூத்தாடியின் சாகசங்களைக் கை தட்டி மகிழ்ந்துவிட்டு தமது வழக்கமான வீடுகளுக்குத் திரும்பியதைப் போல் அவருடைய பேச்சுகளை ரசித்துக் கேட்டுவிட்டு தெய்வம், ஆணாதிக்கம், சாதிப் பற்று, பிராமண மரியாதை என அனைத்தையும் அப்படியே பின்பற்றி வந்திருக்கிறது. இருந்தாலும் அதிரடியான, கலக வழி என்பதால் மூன்றாவதுவழியை ஈ.வே.ரா.வின் வழி என்று புரிதலுக்காகச் சொல்கிறேன்.

இந்த மூன்றுமே தவறு. ஏனென்றால் இந்த மூன்றுமே ஆதிக்க சாதியின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவராது. ஆதிக்க சாதியினர் தாம் செய்வது சரி என்ற நினைப்பில்தான் இதைச் செய்கிறார்கள். முதலில் அவர்களுக்கு அது தவறு என்பதைப் புரியவைக்கவேண்டும். திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது சொல்லிப் புரிய வேண்டிய விஷயமா என்ன… இந்த எளிய விஷயத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத ஒருவர் இருக்கமுடியுமா… உண்மையில் அது புரியாமல் எல்லாம் இல்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கிறார்கள். அதாவது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். தமது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு ஒரு தடை வரும்போது தந்திரமாக அதை வென்றெடுப்பதற்கு பதிலாக வன்முறையாக அதை நிலைநாட்டிக்கொள்ள விரும்புகிறார்கள்.

இந்தப் பிரச்னை தீரவேண்டுமென்றால், ஆதிக்க சக்தியினரின் மனதில் சமத்துவ உணர்வு மலர்ந்தாக வேண்டும். இதை எப்படி அமல்படுத்துவது? நிதானமாக பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரியவைக்கவேண்டுமா? கடும் தண்டனைகளைக் கொடுத்து அதிரடியாகப் புரியவைக்கவேண்டுமா?

இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கவேண்டுமென்றால், சாதிப் பிரச்னைக்கு எது அல்லது யார் காரணம் என்ற கேள்வியைக் கேட்டாகவேண்டும். ஏனென்றால், அதுதான் அமைதிவழியா, அதிரடி வழியா என்பதைத் தீர்மானிக்கும்..

சாதி என்பது இந்து மதத்தின் கண்டுபிடிப்பு. குறிப்பாக பிராமணர்களின் கண்டுபிடிப்பு. வேலைகளின் அடிப்படையில் பிரிந்து வாழ்ந்த எளிய மனிதர்களை மேல் கீழ் என்று பிரித்து பிறப்பின் அடிப்படையில் வேலைகளைத் தீர்மானித்து சாதிய அமைப்பை உருவாக்கினார்கள். புராணங்கள், ஸ்மிருதிகள் மற்றும் சடங்காசாரங்களை உருவாக்கி அந்த சாதி அமைப்புக்கு அசைக்க முடியாத மதரீதியான அங்கீகாரத்தை உருவாக்கிவிட்டார்கள். பிற சாதியினரிடம் இந்த உணர்வு இருந்தாலும் மதம் மாறிய பிறகும் இந்த உணர்வு இருந்தாலும் பிராமணர்களே சாதிச் சீர்கேட்டுக்குக் காரணம். மனு ஸ்மிருதியே சாதி அமைப்பின் ஆணிவேர்.

இதுதான் சாதி தொடர்பான முதலும் கடைசியுமான தீர்மானம். வேதாகமத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் கிறித்தவரைப் பார்த்திருப்பீர்கள்… குர்ரானைச் செல்லமாக விமர்சிக்கும் இஸ்லாமியரைக்கூட நீங்கள் பார்க்க முடியலாம். ஆனால், சாதி தொடர்பான இந்த மேற்கத்திய இறுதி வரிகளைக் கேள்விக்கு உட்படுத்தும் ஒருவரைக்கூட நீங்கள் பார்க்கவே முடியாது. இந்துப் பாரம்பரியம் குறித்து மிகுந்த பெருமித உணர்வுகொண்ட அதி தீவிர இந்துத்துவர்கள் கூட சாதி ஒரு சாபக்கேடு என்றுதான் சொல்வார்கள். அதை அவர்கள் மனப்பூர்வமாக நம்பிச் சொல்கிறார்களா… இஸ்லாமியரை எதிர்க்கும் போரில் இந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்றால் சாதியை விமர்சித்துத்தான் ஆகவேண்டும் என்ற அரசியல் உந்துதலினால் சொல்கிறார்களா என்பது வேறு விஷயம். ஆனால், சாதி அழியவேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் அவர்களுக்கும் கிடையாது.

சாதி உணர்வு என்பது பழங்குடிகால உணர்வு. அகமண முறையும் சம பந்தி மறுப்பும் பழங்குடி வேர்களைக் கொண்டவை. அந்தவகையில் சாதியானது மேலடுக்கில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்டுக் கீழே திணிக்கப்பட்டதல்ல. கீழிருந்து மேலே கொண்டுசெல்லப்பட்டதுதான்.
இனம், நிறம், மொழி, மதம், தேசம் போன்ற பிற எல்லா குழு மனப்பான்மையைப் போன்றதுதான் சாதியும். பிறப்பின் அடிப்படையில்தான் இந்த அடையாளங்களும் தீர்மானமாகின்றன. மத மாற்றம் என்பது ஓரளவுக்கு புதிதாக ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் என்றாலும் அங்கும் பழைய பாரம்பரியங்களைத் தூக்கி எறிந்துவிட்டு புதிதாகப் பிறப்பதையடுத்துத்தான் அந்தக் குழுவுக்குள்ளும் இடம்பெற முடியும். அதன் பிறகு அப்படியே அவருடைய வாரிசுகளுக்கு அது கைமாற்றித் தரப்பட்டாகவும் வேண்டும். அங்கும் அது அப்படியாகப் பிறப்பின் அடிப்படையை நோக்கி நகர்ந்துவிடத்தான் செய்கிறது.

ஆனால், சாதி என்பது கொஞ்சம் கூடுதலாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது. அதாவது ஒருவர் செய்ய வேண்டிய வேலையையும் அது பிறப்புடனே பிணைத்துவிடுகிறது. பிற அடையாளங்களில் இந்த அம்சம் அந்த அளவுக்குக் கோட்பாட்டளவில் கறாராக இல்லை. ஆனால், நடைமுறையில் அங்கும் ஏழை கறுப்பருக்குப் பிறந்தவர் அப்பா செய்த அதே வேலையைத்தான் 19-ம் நூற்றாண்டுவரை செய்தாக வேண்டியிருந்தது. எல்லா தேசத்திலும் ஏழை விவசாயின் மகன் விவசாயக் கூலியாகவேதான் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பார். எல்லா மொழிகளிலும் மன்னருடைய மகனே அடுத்த மன்னராக ஆகியிருப்பான். என்றாலும் அங்கு அது கறாரான விதியாக இருந்திருக்கவில்லை. ஐந்தில் இருந்து பத்து சதவிகிதத்தினர் தமது குலத்தொழிலை விட்டு விலகி வேறொரு தொழிலைச் செய்துகொள்ள வழி இருந்திருக்கிறது. 100 சதவிகிதம் பேருக்கும் குலத்தொழிலை விட்டு வேறொன்றைச் செய்ய அனுமதி இருந்தது என்றாலும் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே அப்படி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் நடைமுறை.

ஆனால், மேலே செல்ல ஏணிகள் இருந்தது என்பதால் அந்தக் குழுவினரை இறுக்கமான சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களாகச் சொல்ல முடியாது. சாதியில் இந்த வாய்ப்பு மிக மிகக் குறைவு. சங்க காலத்தைப் போலவே வேத காலத்திலும் இப்படியான தொழில் மாற்றம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறப்போடு தொழிலைப் பிணைத்ததால் சில தொழில்களில் செய் நேர்த்தி உச்சத்தை எட்ட முடிந்திருந்தது. எந்தவொரு குலமும் பூதாகாரமாக வளர முடிந்திருக்கவில்லை. சிலுவைப்போரோ ஜிஹாதோ இந்து சமயத்தால் முன்னெடுக்கப்படவில்லை. அப்படியான அதிகாரக் குவிப்பு சாதி இருந்ததால்தான் சாத்தியமாகியிருக்கவில்லை.
போர்களில் போர் சாதி மட்டுமே மடிந்தன. எல்லாரும் வாளை எடுத்துக்கொண்டு போய் இறக்க வேண்டியிருக்கவில்லை. மேல் ஜாதியினரிலும் சாதிக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. கீழ் சாதிகளிலும் சாதி வெறி மிகுதியாக உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இன்று பிறப்புடன் தொழிலைப் பிணைப்பது 90 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது.

இந்த உண்மைகளில் எந்தவொன்றையுமே யாரும் பொருட்படுத்திப் பார்ப்பதே இல்லை. அப்படிச் செய்திருந்தால் சாதி பற்றிய முற்றிலும் மாறுபட்ட சித்திரம் கிடைத்திருக்கும்.

சாதிக் கட்டமைப்பை பிராமண உருவாக்கமாக மட்டுமே பார்ப்பதால் என்ன பிழை நேர்கிறதென்றால், பிற ஜாதியினர் தமது சாதி வெறியை அப்படியே பாதுகாத்துக்கொள்ள வழி பிறக்கிறது. மதம் மாறினாலும் சாதி வெறி தொடர்கிறது. தவறான இலக்கை நோக்கிக் குறிவைத்தால் இரை எப்படி விழும்? உண்மையில் உலகம் தழுவிய உணர்வான குழு மனப்பான்மை என்பது பிற இடங்களில் எப்படியெல்லாம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்து அந்த வழிமுறைமுறையை இந்தியாவிலும் பின்பற்றினால்தான் சாதி வெறி மறையும்.

அதற்கு முதலில் சாதி உணர்வு என்பது வேறு… சாதி வெறி என்பது வேறு என்ற புரிதல் தேவை. தமிழ் பற்று என்பது வேறு… தமிழ் வெறி என்பது வேறு. இந்து மதப் பற்று என்பது வேறு… இந்து வெறி என்பது வேறு. இஸ்லாமியப் பற்று என்பது வேறு… இஸ்லாமிய வெறி என்பது வேறு. கிறிஸ்தவ விசுவாசம் என்பது வேறு. கிறிஸ்தவ வெறி என்பது வேறு. இவற்றில் முந்தையது ஆக்கபூர்வமானது. பிந்தையது அழிவுபூர்வமானது. பிற எல்லா குழு மனப்பான்மைகளிலும் ஆக்கபூர்வமானதைத் தக்கவைத்துக் கொண்டு அழிவுபூர்வமானதை வெறுக்கும் ஒருவர் சாதி சார்ந்தும் அப்படியே சிந்திக்கலாம். இன்று பிறப்பின் அடிப்படையிலான தொழில் கட்டுப்பாடுகள் ஒழிந்துவிட்டதால் ஒருவகையில் சாதி அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். பாம்பின் பல் பிடுங்கப்பட்டுவிட்டிருக்கிறது. உடம்பை முறுக்கி வாலைச் சுழட்டி அது இப்போது காட்டும் வித்தைகள் எல்லாம் எளிதில் தாண்ட முடிந்தவையே. எனவே, இன்றைய சாதி வெறியைக் கொஞ்சம் நிதானமாகவே பார்க்கலாம்.

மேலைநாடுகளில் இருந்த இன, நிற, மத வெறிகள் அவர்களுக்கு சுரண்டுவதற்குப் பெரும் கிழக்கு உலகம் கிடைத்ததால் மட்டுப்பட்டிருக்கின்றன. கிழக்கு நாடுகளைச் சுரண்டுவதால் கிடைக்கும் செல்வத்தை மேற்குலகின் மேல் தட்டினர் கீழ்தட்டினருக்கும் கொடுத்து போஷிக்கின்றனர். ஏற்கெனவே பெரு நிலப்பரப்பும் குறைவான மக்கள் தொகையும் கொண்டவர்கள் என்பதால் பொருளாதாரத்தில் அங்கு அனைவருமே பெரும்பாலும் தன்னிறைவுடன் இருக்கிறார்கள். இது அங்கு நிலவும் பிறவகை ஒடுக்குதல்களை வெகுவாக மட்டுப்படுத்திவிடுகிறது.

இந்தியாவில் அப்படியான பொருளாதாரச் செழிப்பு இல்லை. இருக்கும் வளங்களும் கூட அந்நியர்கள் எடுத்துக் கொண்டதுபோக அவர்கள் கழித்துக் கட்டுபவை மட்டுமே கிடைக்கின்றன. இந்தியப் பசுவின் பால் அவர்களுக்கு; சாணியும் கோமியமும் முழுக்க முழுக்க நமக்கே. இதை வைத்துத்தான் நமது சமூகத்தை நாம் மேலெழச் செய்தாகவேண்டியிருக்கிறது.

இது மாறியாகவேண்டும். இந்திய வளங்கள் இந்தியர்களுக்கே கிடைத்தாகவேண்டும். அதுதான் ஓரளவுக்கு நம் கடைநிலை சாதியினரை மேலான நிலைக்கு வர வழிவகுக்கும்.

அடுத்ததாக சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை சரியான கோணத்தில் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய சாதி வெறியானது தலித்களை அப்படியொன்றும் முடக்கிப் போடுவதாக இல்லை. சாதி வெறியை நியாயப்படுத்துவதாக இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ளப்படும் என்பதால் சிறு உதாரணம் சொல்கிறேன். திவ்யாக்களைத் திருமணம் செய்துகொள்ளாத இளவரசன்களால் இன்று நிம்மதியாக வாழ முடியும். நேற்றைய நிலை எப்படி என்பது தெரியவில்லை. ஆதிக்க சாதியினர் இன்று சமபந்தியில் ஆரம்பித்து அரசாங்கச் சலுகைகள் வரை தலித்களுக்குக் கிடைக்கும் பல விஷயங்களில் எந்தத் தடையும் முன்வைப்பதில்லை. இந்திய அரசியல் சாசனம் தலித்களுக்குத் தந்திருக்கும் உரிமைகள், சலுகைகள் எல்லாம் அளப்பரியவை. நேற்றை ஒப்பிடும்போது இன்று வெகுவாக முன்னேறியிருக்கிறது நிலைமை. இன்னும் செய்ய வேண்டியது பாக்கி இருக்கிறது என்றாலும் குறுகிய கால அளவில் கிடைத்திருக்கும் வெற்றிகள் கணிசமானவையே.

மேல வளைவு முருகேசன் வாழ்ந்த அதே பூமியில்தான் கே.ஆர். நாராயணனும் வாழ்ந்திருக்கிறார். தலித்களைத் தேர் இழுக்க விடாமல் தடுக்கும் கண்டதேவியும் தமிழகத்தில்தான் இருக்கிறது. தலித்களும் சேர்ந்து இழுக்கும் 100க்கணக்கான தேர்களும் தங்கத் தேர்களும்கூட அதே தமிழகத்தில்தான் ஓடுகின்றன.

இப்படி ஒருபக்கம் சமத்துவம் வந்துவிட்ட பிறகும் வேறு சில இடங்களில் வராமல் இருப்பதற்குக் காரணம் என்ன..? மேலும் இந்த மாற்றம் அழுத்தமானதாகவோ ஆத்மார்த்தமானதாகவோ இருக்கிறதா..? எப்போது வேண்டுமானாலும் விரிசல் விழும் வகையில்தான் ஒட்டுப் போடப்பட்டிருக்கிறதா? இந்த அடிப்படை உரிமைக்கே இவ்வளவு போராடத்தான் வேண்டுமா? இந்து சமூகம் இப்படிச் செயல்படுவதால் உண்மையிலேயே கொடூரமானதுதானா? அல்லது அரிதாக நிகழ்பவற்றை மிகைப்படுத்திக் கிளர்ந்தெழுகிறோமா?

இப்போது இந்தப் பிரச்னையை இப்படிப் பார்ப்போம். ஒருவர் நான் உனக்குச் சளைத்தவன் இல்லை என்று சொல்கிறார். இன்னொருவர் நீ எனக்குக் கீழேதான் என்கிறார். இருவருமே இந்த பலப்பரீட்சையில் ஈடுபடாமலேயே வேறு வேலைகளில் ஈடுபடமுடியுமென்றால் அதைச் செய்து இணக்கமாக வாழ்வதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆதிக்க சாதியினர் தமது தெருவின் வழியாக ஊர்வலம் போகக்கூடாது என்று சொல்கிறார்களா? சரி… அவர்கள் மனம் திருந்தி அந்தப் பாதையைத் திறந்துவிடும்வரை நான் வேறு வழியில் போய்க்கொள்கிறேன் என்று ஒருவர் சொல்வதில் என்ன தவறு. இதை எதனால் கேட்கிறேன் என்றால், இப்படியான கலகத்தை முன்னெடுப்பது யார்? ஒரு ஊரில் இருக்கும் ஆதிக்க சாதியினர் ஒரு கட்டுப்பாட்டை விதித்தால் தலித்கள் அதை அனுசரித்து நடக்கவே விரும்புவார்கள். ஆனால், அவர்களை வைத்து அரசியல் நடத்துபவர்கள்தான் அந்த சமத்துவ உரிமை கிடைத்தே ஆகவேண்டும் என்று கச்சை கட்டிக்கொண்டு புறப்படுகிறார்கள்.

உண்மையில் எங்கள் தெருவின் வழியாகப் போகக்கூடாது என்று சொல்லும் இடைசாதி மனிதர்களை அரக்கர்கள் போலெல்லாம் சித்திரிக்கவேண்டாம். அவர்கள் வேறு பல விஷயங்களில் தலித்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது அவர்களைவிட உயர்ந்துவிட்டதாக நினைக்கிறார்களோ அப்போதுதான் தடுக்க நினைக்கிறார்கள். ஒருவேளை தலித்களுக்குக் கிடைத்ததுபோல் அவர்களுக்கும் உயர வழி பிறந்திருந்தால் அதாவது தலித்கள் நான்காம் படியில் இருந்து மூன்றாம் படிக்கு உயர்ந்ததுபோல் மூன்றாம் படியில் இருந்த இடைநிலை சாதியினர் இரண்டாம் படிக்கும் உயர முடிந்திருந்தால் அவர்களுடைய மேலாதிக்கம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கும். அவரும் கடைநிலை சாதியின் மேல்நிலையாக்கத்தை மேல் சாதிகளைப் போலவே எளிதில் ஏற்றுக்கொண்டிருப்பார். ஒடுக்குமுறைகளை கொஞ்சம் நாசூக்காக வெளிப்படுத்தத் தொடங்குவார். அக்ரஹாரத்தைவிட்டு இடம்பெயர்ந்ததில் (இடம்பெயர்க்கப்பட்டதில்) பிராமணர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நகரங்களில் அதைவிட வசதியான வசிப்பிடங்கள் கிடைத்துவிட்டிருக்கின்றன. அதுபோல் இடைநிலை சாதியினருக்கும் கூடுதல் வசதி வாய்ப்புகள் கிடைத்தால் கடைநிலை சாதியினரின் வளர்ச்சியை பதற்றமில்லாமல் எதிர்கொள்வார்கள்.

இந்த இடைநிலை சாதியினரை தமிழ் தேசியவாதிகள் என்றாலும் சரி, இந்து தேசியவாதிகள் என்றாலும் சரி கம்யூனிஸ்ட்கள் என்றாலும் சரி அனைவருமே தமது அணியில் சேர்த்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். அதற்காக அந்த சாதிவெறியை பிராமண உருவாக்கமாக நினைக்கிறார்கள். மனுவை எதிர்க்கக் கிடைத்த வாய்ப்பு என்பதால் இடைநிலை சாதிக்காரர் செய்யும் ஒரு தவறைப் பெரிதாக்குகிறார்களே தவிர இடைநிலை சாதியினரை தமது அணிக்குள் கொண்டுவரவே விரும்புகிறார்கள். பிராமணர்களை விலக்குவதுபோல் செய்வதில்லை. அதுபோலவே, இடைநிலை சாதியினர் தலித்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளும் இடங்களையும் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. கண்டதேவியில் தேர் இழுத்தே தீருவேன் என்று சொல்லும் எந்த தலித் தலைவரும் பிற ஊர்களுக்குச் சென்று தேர் இழுத்து சாதி இந்துக்களுக்கும் தலித்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அங்கீகரித்ததில்லை. வராதே என்று சொல்லும் சபரிமலைக்குச் செல்வேன் என்று புறப்படும் எந்தப் பெண்ணியவாதியும் வா வா என்று அழைக்கும் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றதாகச் சரித்திரம் இல்லை. ஆக விஷயம் கோவிலுக்குச் செல்வது அல்ல. இந்து, பிராமண சக்திகளை எதிர்க்கவேண்டும். அதுதான் இலக்கு. ஏனென்றால், அவர்களை எதிர்ப்பதே இலகுவானது. ஆதாயபூர்வமானது. குறிப்பாக அபாயம் இல்லாதது.

ஆனால், எளிய மக்களுக்கு அது இலக்கு அல்ல. பெண்கள் சபரி மலைக்குப் போகக்கூடாது என்று சொல்கிறீர்களா.. சரி மேல்மருவத்தூருக்குப் போய்க் கும்பிட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு தெய்வத்தைக் கும்பிடுவதுதான் முக்கியம். பிராமணரையோ இந்து மதத்தையோ எதிர்ப்பது அல்ல என்று சொல்வார்கள்.

இப்போது சமத்துவம் என்பது எந்த அளவுக்குத் தேவை… எந்த இடங்களில் தேவை என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மக்களிடம் விட்டுவிடவேண்டும். அரசியல் சக்திகள் இதில் தலையிடக்கூடாது. அப்படியே அரசியல் சக்திகள் தினவெடுத்து நிற்கிறார்கள் என்றால், அவர்கள் சொரணையுள்ள தலித் போராளிகள் என்றால் இத்தனை ஆண்டுகாலம் திமுக கூட்டணியில் இருந்தபோது சட்டசபைக்கான தொகுதி பேரங்களில் வீரத்தைக் காட்டியிருக்கவேண்டும். தலித்கள் எஸ்.சி எஸ்.டி. மொத்தம் 20 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறோம். 234 தொகுதிகளில் சுமார் 40 மேல் எங்களுக்கு இடம் வேண்டும் என்று உரிமையை அங்கு கேட்டிருக்கவேண்டும். ஆனால், அங்கே வாயையும் பிற துவாரங்களையும் பொத்திக்கொண்டு இருந்துவிட்டு கிராமத்தில் இருக்கும் எளிய தலித்தைப் பார்த்து, மனோகரா பொறுத்தது போதும், பொங்கி எழு என்று பின்னால் இருந்து முடுக்கிவிடுவது கேவலமானது. சொரணையுடன் இருக்கவேண்டுமென்றால் முதலில் நீயல்லவா நடந்து காட்டவேண்டும்.

உண்மையில் இந்த மோதல் போக்கு மிகவும் தவறு. சட்ட வழிப் போராட்டமும் போதாது. அதேநேரம் மேல் சாதியினரை வழிக் கொண்டுவந்தாகவும் வேண்டும். அதற்கு என்ன வழி? தலித்கள் இந்த விஷயத்தில் தமக்கு சாதகமாக இருக்கும் சக்திகள் அனைவரையும் பயன்படுத்தவேண்டும். உதாரணமாக, கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இதே தலித் சாதியில் இருந்து மதம் மாறிச் சென்றவர்கள்தான். அவர்களை உதவிக்கு அழைக்கவேண்டும். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்கூட நேற்றைய சகோதரன் என்றவகையில் தலித்களின் பிரச்னையில் தாமாகவே அக்கறை காட்டவேண்டும். எங்கள் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என்று எந்த இந்துவும் சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு தமிழனாக, இந்தியனாக இந்த விஷயத்தில் தலையிட அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

தலித்களின் இன்னொரு நேச சக்தி காந்தியவாதிகள். மேல் சாதியினரின் மனதில் இருந்த மேலாதிக்க எண்ணங்களை அறவே ஒழித்த மனிதர்கள் என்று பார்த்தால் காந்தியவாதிகளைத்தான் சொல்லவேண்டும்.

அதுபோல் சாதி விஷயத்தில் நெருப்பாக இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இன்றுவரையிலும் சாதி உணர்வு துளியும் இல்லாமல் இருந்துவரும் ஒரு இந்து இயக்கம் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸைத்தான் சொல்லவேண்டும்.

“வலுவான இந்தியாவே தலித்களுக்கு நன்மை தரும்; சமஸ்கிருத மொழி தேசியமொழியாக, அதிகாரபூர்வ மொழியாக ஆக்கப்படவேண்டும்; ஆரியப் படையெடுப்பு என்பது கட்டுக்கதையே. ஆரியர்கள் திராவிடர்கள் என்ற பிரிவினை முழுக்கவும் பொய்யே; மேற்கத்தியர்களின் அந்தக் கற்பனைக் கதையைக் குப்பைக் கூடையில் வீசவேண்டும். சாதி இந்துக்களுடனான போரில் இஸ்லாமியரை நட்புறவாகக் கொள்வது தலித்களுக்குப் பெரும் அபாயத்தையே கொண்டுவரும்; கம்யுனிஸ்ட்களின் மிகப் பெரிய எதிரி நான்” என கிட்டத்தட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க சாலக் போல் பேசும் அம்பேத்கர் சாதிப் போராட்டத்தில் வீர சவார்க்கர் போன்றவர்களை நேச சக்தியாகவே பார்த்திருக்கிறார். அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ். சாதி ஒழிப்பில் காட்டும் அக்கறையில் சந்தேகம் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கும் தலித்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டு அல்லது அவர்களே ஆர்.எஸ்.எஸில் சிலகாலம் இருந்து பார்த்துவிட்டுச் சொல்லவேண்டும்.

அப்படியாக நமது திரைப்படத்தில் இறக்கும் முதிய தலித்தின் உடலை ஆதிக்க சாதியின் தெரு வழியாக எடுத்துச் செல்ல நான்குபேரின் துணையை நாடவேண்டும். கடந்த கால சாதி வெறி மற்றும் வேதனையின் குறியீடாக மட்டுமல்லாமல் விடுதலையின் குறியீடாகவும் இருக்கும் அந்த தலித் முதியவரின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் பாடையின் ஒரு காலை காந்தியவாதியும் மறு காலை ஆர்.எஸ்.எஸ்.காரரும் பிடிக்கவேண்டும். பின்பக்க காலில் ஒன்றை கிறிஸ்தவ பாதிரியார் பிடிக்கவேண்டும். மறு காலை இஸ்லாமிய தலைவர் பிடிக்கவேண்டும். இந்த நால்வரும் ஆதிக்க சாதியின் தெருவழியாகச் சுமந்து சென்று சூரியன் மறையும் சுடுகாட்டில் பிணத்தை எரியூட்டவேண்டும். அங்கு எரிவது வெறும் உடலாக இருக்கக்கூடாது; ஆதிக்க சாதிகளின் ஆண்டாண்டுகால ஆணவ வெறியாக இருக்கவேண்டும். அதன் பின் உதிக்கும் சூரியன் வேறு உலகில் உதிக்கவேண்டும்.

••••••••••••••••••

நம் சமூகம் எதிர்கொள்ளும் அடுத்த முக்கியமான பிரச்னை : சாராயம். / B.R. மகாதேவன்

download (2)

ஏற்கெனவே சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களே இதிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஜமீந்தார் அல்லது மன்னர் போன்ற பெரு முதலாளிகளோ பணக்காரரோ சாராயம் குடித்து வாழ்க்கையை அழித்துக்கொண்டால் நாம் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர்களுடைய அனைத்துத் தேவைகளும் ஏற்கெனவே பூர்த்தியாகிவிட்டிருக்கும். அந்தக் குடிப் பழக்கத்தினால் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் துன்பம் ஏற்படும் என்றாலும் அதற்காக ஓரிரு சொட்டு கண்ணீர் விடலாமே தவிர அதைத்தாண்டி எந்தவொன்றையும் நாம் செய்யத் தேவையில்லை. ஆனால், எளிய மக்களின் குடிப்பழக்கம் அப்படியானதல்ல. ஏற்கெனவே பலவகைகளில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் அவர்களுக்கு இதுவும் சேரும்போது கடலுக்குள் விழுந்து தத்தளிப்பவரின் காலில் பாறாங்கல் கட்டப்படுவதைப் போலாகிவிடுகிறது. ஏற்கெனவே முள் கீரிடம் சுமப்பவரை சிலுவையில் அடிப்பதைப் போன்ற கொடூரம்.

இதற்கான ஒரு தீர்வு : சாராய உற்பத்தியை நிறுத்துவது. ஆனால், அது சாத்தியமே இல்லை. ஒருவகையில் அது அவசியமும் இல்லை. ஏனென்றால், மது என்பது பல்வேறு அடுக்குகளைக் கொண்ட பிரச்னை. வாழ்க்கையை சந்தோஷமாக ஆக்கிக்கொள்ள மனித இனம் கண்டுபிடித்த அருமையான பானம். அளவோடு குடித்தால் அமிர்தம். அளவுக்கு மிஞ்சினால்தான் அது நஞ்சு.

ஒருவர் சமூகத்துக்குத் தன் பங்களிப்பைச் சரிவரச் செய்துவிட்டாலோ, தன் குடும்பத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டாலோ, குடித்துவிட்டுப் பிறருக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாமல் இருந்தாலோ அவர் குடித்து சந்தோஷப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. கண்ணதாசன் மொடாக்குடியர்தான். ஆனால், அவரை யாரும் குறை சொல்ல முடியாது. குடிக்காமல் இருந்திருந்தால் கூடுதல் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாமே என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், அவரோ அது உண்மைதான். ஆனால், நான் குடிக்காமல் இருந்திருந்தால் பாட்டு எதையும் எழுதியிருக்கமுடியாதே என்று சொல்லியிருப்பார். அப்படியானவர்களைப் பார்த்து, நீங்கள் தினமும் நாலு பெக் கூடுதலாகச் சாப்பிடுங்கள்… உங்கள் பாடல்கள்தான் எங்களுக்கு மிக முக்கியம் என்றுதான் நாம் சொல்லவேண்டும்.

மதுவுக்கும் அவருடைய பாடல் திறமைக்கும் இடையிலான தொடர்பை மருத்துவ விஞ்ஞானமோ பாடல் புனைவியலோ எதுவுமே விளக்கிவிடமுடியாதுதான். அவருடைய திரைப்பாடல் மரத்தை மது ஊற்றித்தான் அவர் வளர்த்திருக்க முடியும் என்றில்லை. ஆனால், மதுவின் மீதுதான் நம்பிக்கை வைத்தார். எனவே, அவருடைய பாடல்கள் நமக்குத் தேவை என்பதால் அவருடைய அந்த விளக்க முடியாத நம்பிக்கைக்கு நாமும் ஆதரவாகவே நிற்கலாம்.

ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் கண்ணை மூடினால் ரத்தமும் அறுபட்ட மனித உறுப்புகளும்தான் தெரிகின்றன. என்னால் ஒரு நிமிடம்கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அதில் இருந்து தப்பிக்க எனக்கு மதுவின் துணை தேவை என்று சொல்கிறார் என்றால் அதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தியானம், யோகா என மனதை வேறு வழியில் நிதானப்படுத்த முடியுமா பாருங்கள் என்று லேசாகச் சொல்லலாம். அவரோ மதுதான் தனக்கான ஒரே மருந்து என்று சொல்வாரென்றால், அறுவை சிகிச்சைகளைப் பாதிக்காவண்ணம் குடிக்க அவருக்கு அனுமதி தரலாம்.

ஒரு போர் வீரருக்கும் இந்த விதிவிலக்கு தரலாம். உள்நாட்டில் மக்கள் குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் எல்லையில் ஒரு சில ராணுவத்தினர் எதிரிகளைக் கொன்றுதான் ஆகவேண்டும். கொலைக் கனவுகளில் இருந்து தப்பவும் தோளில் தொங்கும் துப்பாக்கிகள் தொடர்ந்து நினைவுபடுத்தும் மரண பயத்தை வெல்லவும் அவர்களுக்கு மது தேவைப்படலாம். இப்படி சமூகத்தில் சில அவசியமான செயல்கள் நடக்க சிலருக்கு அனுமதி தரலாம்.

சாதாரண மனிதர்களும்கூட மேலே சொன்னதுபோல், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் குடிப்பார் என்றால் சரிபோகட்டும் என்று அனுமதி தந்துவிடலாம். ஆனால், அடித்தட்டு மக்கள், கடினமான, கேவலமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வலியையும் வேதனையையும் மறக்கக் குடிக்கிறேன் என்று சொல்வார்கள் என்றால் அதை நிச்சயம் அனுமதிக்கக்கூடாது. அந்தக் கடினமான, கேவலமான பணிகளில் இருந்து அவர்களுக்கு விடுதலையைத் தேடித் தருவதே சமூகத்தின் இலக்காக இருக்கவேண்டும். அத்தகைய பணிகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளை அமல்படுத்துவது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் கேவலமான, கடினமான பணி துப்புரவுப் பணிதான். இப்போதைய பெரு வெள்ளம் மெட்ரோ சிட்டியில் கொண்டுவந்து குவித்த குப்பை கூளங்களையும் சேறுகளையும்கூட துப்புரவுத் தொழிலாளர்கள் வெறும் கைகளாலும் கால்களாலும்தான் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. உடல் உழைப்பை இழிவாகக் கருதும் வைதிக இந்து சமயத்துக்கு நிகராக பவுத்தமும் சமணமும் இந்தியா முழுவதும் எந்த வன்முறையும் இல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பரவியிருந்திருக்கிறது; பத்தாம் நூற்றாண்டு முதல் இஸ்லாம் வன்முறை மூலம் பரவியிருக்கிறது; சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ ஆதிக்க சக்திகள் அனைத்துவகை தந்திரங்களையும் பயன்படுத்தி அழுத்தமாகக் காலூன்றியிருக்கின்றன; மேலும் சமீப காலங்களாக உலக முதலாளித்துவ சக்திகள் இந்தியச் சந்தையைக் கண் வைத்து இங்கு மூர்க்கத்தனமாக தமது இருப்பை வலுப்படுத்தி வருகின்றன; அதற்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் அவற்றைவிடக் கூடுதலான ஆண்டுகளாக கம்யூனிஸ இடதுசரி சக்திகள் இந்தியாவில் முகாமிட்டிருக்கின்றன.

ஆனால், இந்த அதிகார சக்திகளில் எந்தவொன்றுமே கடைநிலைப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு துரும்பையும் இதுவரை கிள்ளிப்போட்டதில்லை. பார்ப்பனிய, மனுவாத, இந்துத்துவ, ஆரியசக்திகளின் மீதான விமர்சனத்துக்குத் தோதாக இருக்கட்டும் என்று இந்தப் பிரச்னையை விட்டு வைத்திருக்கிறார்களா தெரியவில்லை. தொழில்நுட்ப கருவிகளை இந்தத் தொழிலுக்குப் பயன்படுத்துவதே மிகவும் சரியான, எளிமையான தீர்வாக இருக்கும். அதை யாருமே இதுவரை செய்திருக்கவில்லை. துப்புரவுப் பணியாளர், ஒரு வாரத்துக்குக் குடிக்கச் செலவிடும் காசை வைத்துத் தனக்கான காலுறை, கையுறைகளை வாங்கிவிட முடியுமென்பது வேறு விஷயம். ஆனால், அரசும் சமூகமும் இன்னபிற அதிகார மையங்களும் வேறு பல வசதிகளைச் செய்து தந்திருக்கவேண்டும்.

ஒரு மனிதர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது தனது கைகளையும் கால்களையும் பயன்படுத்தி அடைப்புகளை நீக்குகிறார். சில நேரங்களில் கழிகள் அல்லது இரும்பு குச்சிகளைப் பயன்படுத்தி அடைப்புகளை நீக்கி நீர் வழியைச் சரி செய்கிறார். மின்சாரத்தில் அல்லது சைக்கிள் பெடல் போல் இயக்குவிசை மூலம் ஒரு பிஸ்டனை முன்னும் பின்னும் நகரச் செய்து அதனுடன் ஒரு இரும்பு கம்பியைப் பொருத்திவிட்டால் அடைப்பை அது சரிசெய்துவிடும். சாக்கடைக்குள் இறங்கவேண்டிய அவசியமே இல்லை.

நகரத்தில் இருக்கும் அனைத்து சாக்கடைகளையும் கிராமங்களைப்போல் திறந்த நிலை சாக்கடைகளாக ஆக்கிவிட்டால் அடைப்புகளைச் சரி செய்வது மிகவும் சுலபமே. ஆனால், அப்படித் திறந்த நிலையில் இருந்தால் நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் வாகனங்கள் சாக்கடைக்குள் விழுந்துவிடும் அபாயம் உண்டு. அதோடு திறந்த நிலையில் இருந்தால் கொசு உற்பத்தி முதலான இன்னபிற பிரச்னைகள் வரும். எனவே அதைத் தீர்க்கவேண்டுமென்றால், மூடித்தான் இருக்கவேண்டும். ஆனால், இந்த முடியானது எளிதில் திறந்து மூடப்படும்வகையில் இருக்கவேண்டும். அதாவது திறந்த நிலைச் சாக்கடைகள் போல் அமைத்துவிட்டு அதன் மேல் வரிசையாக எந்த இடத்தில் வேண்டுமானாலும் திறக்க முடியும் வகையில் ஸ்லாப்களை அமைக்கவேண்டும். அந்த ஸ்லாப்களை நடைபாதையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். சாக்கடை அடைத்துக்கொள்ளும்போது அதைத் திறந்து குப்பை கூளங்களை தொரட்டியால் வெளியில் நின்றபடியே எடுத்துபோட்டு சுத்தம் செய்துவிடலாம். இப்படிச் செய்துவிட்டால் துப்புரவுப் பணியாளர்களுக்கு பைலட்களைப்போல் வெண்ணிற உடையையே சீருடையாகத் தந்துவிடலாம்.

அதுபோலவே, இந்தத் தொழிலுக்கு வேறு நபர்களை நியமிப்பதும் நல்ல பலனைத் தரும். குறிப்பாக, சிறைச்சாலைகளில் இருப்பவர்களை இப்படியான அனைத்துவித துப்புரவுப் பணிகளுக்கும் பயன்படுத்தவேண்டும். உண்மையில் இந்த துப்புரவுப் பணி என்பது வேலை அல்ல; தண்டனையே. இப்போது தவறு செய்து சிறையில் இருப்பவர்களுக்கு தோட்டவேலை, தச்சு வேலை என எளிய வேலைகள் தரப்படுகின்றன. அதற்கு பதிலாக இந்த துப்புரவுப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

இந்து மதத் தலைவர்கள், பாதிரியார், இஸ்லாமிய மத குரு என யார் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களுக்கும் கையில் ஒரு துடப்பக்கட்டையும் வாளியும் கொடுக்கலாம். அது அவர்களுடைய மனத்தையும் தூய்மைப்படுத்த உதவும். காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் தமது ஆஸ்ரமங்களில் அனைத்துவகை தூய்மைப்பணிகளையும் அவர்களேதானே செய்தார்கள். மற்றவர்களையும் செய்ய வைத்தார்கள். அனைவரும் இறைவனின் படைப்புகளே… வேலைகளில் உயர்வு தாழ்வு கிடையாது. எந்தத் தொழில் செய்தாலும் இறைவனை அடையமுடியும் என்பது போன்ற உயர் தத்துவங்களுக்கு நடைமுறை வடிவம் கொடுத்ததுபோலவும் இருக்கும்.

அதுபோலவே ஜெயலலிதா, சோனியா, அழகிரி என ஊழல், கொலை போன்றவற்றுக்கு எந்த அரசியல் தலைவர் சிறைத் தண்டனை பெற்றாலும் அவர்களையும் கயிற்றைக் கட்டி சாக்கடைக்குள் இறக்கிவிடலாம். அகவுரவக் கொலைகளில் ஈடுபடும் நபர்களில் ஆரம்பித்து கும்பலாகச் சென்று குடிசைகளைக் கொளுத்துபவர்கள் வரை அனைவரையுமே இந்தத் துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். முற்காலத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னர் எதிரி நாட்டுப் படையினரை கடினமான வேலைகளுக்குப் பயன்படுத்துவது சகஜமாக இருந்திருக்கிறது. பவுத்தர்களாக இருந்த காரணத்தினால்தான் வைதிக இந்துமதம் தலித்களைக் கடினமான கேவலமான பணிகளுக்குத் தள்ளியது என்பதுதான் அயோத்திதாசர் போன்றோரின் நம்பிக்கையும்கூட. எனவே, இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தொழில் நுட்பக் கருவிகளை வாங்க நிறைய செலவாகும். கூடுதல் கால அவகாசமும் எடுக்கும். சிறைதண்டனை பெற்றவர்களை கடைநிலைப் பணிகளுக்குப் பயன்படுத்துவது என்பது வெகு எளிதில் நாளையே ஆரம்பித்துவிட முடியும். இப்படிச் செய்தால் துப்புரவுப் பணியாளர்களைக் குடியில் இருந்து காப்பாற்றிவிட முடியும்.

நமது லட்சியப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தை துப்புரவுப் பணியில் ஈடுபடுபவராக இருப்பார். மாணவர்களுடைய வீடுகளுக்கு நம் ஆசிரியர் சர்ப்ரைஸ் விசிட் அடிக்கும்போது அந்த மாணவனின் தந்தை தெருமுனைச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்துகொண்டிருப்பார். ஆசிரியருடன் வந்த மாணவர்கள் துப்புரவுப் பணியாளரின் மகனைப் பார்த்துக் கேலிசெய்வார்கள். அடுத்த நாள் அவன் வகுப்பறைக்குள் வந்ததுமே அனைவரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு அவனை அவமானப்படுத்துவார்கள். அந்த மாணவன் மிகவும் மனம் சோர்ந்துபோவான். நம் லட்சிய ஆசிரியர் அதைத் தவறென்று கண்டித்து, அந்த வார ப்ராஜெக்டில் சாக்கடைகளை சுத்தம் செய்வதில் தொழில்நுட்பம் என்ற பாடத்தைத் தருவார். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வழிமுறையைச் சொல்வார்கள். அதில் சிறந்த ஒன்றை மாணவர்களே அமல் செய்து சக மாணவனின் அவமானத்தையும் துப்புரவுத் தொழிலாளியின் வேதனையும் போக்குவார்கள். அவரும் அன்றிலிருந்து படிப்படியாகக் குடிப்பதைக் குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி கொடுப்பார்.

அடுத்ததாக, குளிர் பிரதேசங்களுக்குப் பொருந்தக்கூடிய மது வகைகளை வெப்பம் நிறைந்த நம் நாடுகளில் கொடுக்கக்கூடாது. நமது பாரம்பரிய மதுவகைகளான கள்ளு போன்றவற்றுக்கே முக்கியத்துவம் தரவேண்டும். அது உடலுக்கு அதிக தீங்கைத் தராது. மேலும் அது பனை விவசாயத் தொழிலாளிகளுக்கும் நன்மை தரும். பனை மரங்கள் கூடுதலாக வளர்க்கப்பட்டால் பனை வெல்லம், பதநீர், பனையோலை விசிறிகள் இன்னபிற கைவினைப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தை தன்னிறைவு பெறச்செய்யவும் வழி பிறக்கும்.

கடைநிலை மனிதர் குடிப்பதில் தவறில்லை; ஆனால், அவருடைய குடும்பம் அதனால் தள்ளாடும்படியாகிவிடக்கூடாது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் காபி, தேநீர் போல் குடும்பத்தோடு சேர்ந்து பருகும் பானமாக அது இருக்கிறது. மேலும் அவர்கள் குடித்துவிட்டு தெருக்களில் புரள்வது கிடையாது. அளவாகக் குடித்து நிறைவாக வாழ்கிறார்கள். நம் ஊர்களிலும் குடியைத் தடுப்பதற்குப் பதிலாக முறையாகக் குடிக்கக் கற்றுத் தரலாம். முதல்கட்டமாக, நாளொன்றுக்கு ஒருவருக்கு அவரால் நிதானமாக இருக்க முடிந்த அளவுக்கு அதிகமாகக் கொடுக்ககூடாது. ஒவ்வொரு மதுக்கடையிலும் மருத்துவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும். குடிக்க வருபவரின் உடல் நிலையைக் கணக்கில் கொண்டு அவர் எவ்வளவு குடிக்கலாமென்று அனுமதிக்கிறாரோ அந்த அளவு மட்டுமே தரவேண்டும்.

அதையும் மீறி ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடிப்பார் என்றால், அவருடைய குடும்பத்துக்கு அரசு சார்பில் தரப்படும் நலத்திட்டங்களை ரத்து செய்துவிடவேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடிப்பவருடைய ரேஷன் கார்டு முதலில் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவருக்கு அரசு மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்கவேண்டும். அவர் விவசாயியாக இருக்கும்பட்சத்தில் இலவச மின்சாரம், உர மானியம் போன்றவை நிறுத்தப்படும். இப்படியான நடவடிக்கைகள் மூலம் அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிபோல் தோன்றலாம். ஆனால், குடும்பத்தில் ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடிக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அந்தக் குடும்பத்தினருக்கு இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் சரிவர நிறைவேற்றாவிட்டால் அதற்கான தண்டனையை அவர்களும் அனுபவிக்கத்தான் வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பாக அந்தக் குடும்பத்தினருக்கு மூன்று முறை எச்சரிக்கை தரப்படவேண்டும். முதல் எச்சரிக்கை விடப்பட்டதுமே அந்தக் குடும்பத்தினர் காவல்துறை அல்லது மதுக்கடையில் இருக்கும் மருத்துவர் ஆகியோரிடம் முறையிட்டு இனிமேல் குடிக்காமல் தடுத்துவிடவேண்டும். அப்படியான முயற்சிகளை அவர்கள் எடுக்காதபட்சத்திலேயே ரத்து நடவடிக்கைகள் அமலாக்கப்படவேண்டும்.

இவையெல்லாம் குடிக்காமல் இருக்கமுடியாது என்பவர்களுக்குச் செய்யவேண்டிய நடவடிக்கைகள். மிதமாகக் குடிக்கும் ஒருவரைக் குடியில் இருந்து திசை திருப்பும் நடவடிக்கைகளையும் நாம் எடுக்கவேண்டும். பெரிய தீய பழக்கத்தைச் சிறிய தீய பழக்கத்தால் பதிலீடு செய்வது நல்ல தொடக்கமாக இருக்கும். சீட்டு, கேரம், லாட்டரி போன்ற விளையாட்டுகளில் ஒருவருடைய கவனத்தைத் திருப்பலாம். அதோடு ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளுக்கான மைதானங்களையும் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கலாம். இன்று பொதுவாக பள்ளி, கல்லூரிப் பருவத்தோடு ஒருவருடைய வாழ்க்கையின் விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. சுமார் 25 வயதுக்குப் பிறகு பெரும்பாலானோரின் வாழ்க்கையில் விளையாட்டே இல்லாமல் போய்விடுகிறது. அதை மாற்றி ஒவ்வொரு கிராமத்திலும் பேட்மிண்டன், வாலிபால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு வசதி செய்து தரலாம். அந்த கிராமத்தில் இருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் அங்கு தினமும் கூடி விளையாடலாம். சகமனிதர்களிடையே நட்புறவையும் வளர்க்கும். உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். குடி போன்ற பழக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் செய்யும்.

குடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம் இவற்றிலெல்லாம் கிடைக்காது என்று நினைப்பவர்களுக்கு மசாஜ், செக்ஸ் என சில வழிமுறைகளை முன்னெடுக்கலாம். உடல் நோவுகளுக்கு மட்டுமல்லாமல் மன நிம்மதிக்கும்கூட மசாஜ் பெரிதும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் மசாஜ் கலையைக் கற்றுத் தரவேண்டும். எண்ணெய் குளியல்கள், நீராவிக் குளியல்கள், முழு உடலுக்கான மசாஜ்கள் என அனைத்தையும் குடும்பத்தலைவிகள் கற்றுக்கொண்டால் வீடுகளிலேயே அவரவருடைய கணவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரமுடியும். ஆண்களும் இந்த கலையைக் கற்றுக்கொள்வதன் மூலம் தமது வாழ்க்கைத் துணைகளுக்குப் பெரிதும் புத்துணர்ச்சியைத் தரமுடியும். கட்டட வேலை செய்துவிட்டு வரும் கணவருக்கு மனைவி செய்யும் மசாஜ் குடியில் இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக விலக வைக்கும்.

அதுபோல் ஆணும் பெண்ணும் காமம் சார்ந்த பல நுட்பங்களை பழங்கால நூல்களில் இருந்தும் மருத்துவர்களிடமும் கற்றுக்கொள்வதன் மூலம் செக்ஸ் வாழ்க்கையில் அதிக இன்பத்தைப் பெற முடியும். கணவனும் மனைவியும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள என்ன வழி, என்னென்ன உணவுப் பொருட்கள் வீரியத்தைக் கொடுக்கும், செக்ஸ் டாய்ஸ் என குடியில் இருந்து மனதைத் திசை திருப்ப முயற்சி செய்யவேண்டும். மனைவியிடமிருந்து தப்பிக்கத்தான் குடிக்கவே செய்கிறோம்; எனவே எங்களுக்கு மசாஜ், செக்ஸ் போன்றவற்றுக்கு வேறு துணைகள் தேவை என்று சொல்லும் ஆண்கள், தமது மனைவிகளுக்கும் அதே சுதந்தரத்தைத் தருவதன் மூலம் தமது ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். வெளிநாடுகளில் பாலியல் சுதந்தரமென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே இருக்கிறது. அந்த நல்ல விஷயத்தை நாமும் பின்பறலாம்.

சாராயப் பிரச்னையில் எளிய மக்கள் பாதிக்கப்படுவதுபோலவே நாம் அக்கறையுடன் சரி செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் அரசே சாராயக்கடைகளை நடத்துவதுதான். இதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும். இந்த அரசு செய்யும் அனைத்து நல்ல விஷயங்களிலும் சாராயக் காசு கலந்திருக்கிறது என்ற நினைப்பு நுட்பமான நேர்மையாளர்களின் மனதைப் பதறச் செய்யும். இந்த அரசு தன் பொறுப்பில் இருக்கும் ஒரு கோவிலில் இருக்கும் விக்ரஹத்தின் மீது ஊற்றும் அபிஷேக நீர் சாராயமன்றி வேறல்ல. இந்த அரசு கொடுக்கும் அரிசியைச் சமைத்து ஊற்றப்படும் நோன்புக் கஞ்சி என்பது சுண்டக் கஞ்சியேதான். இந்த அரசு கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களின் மீது ஜெயலலிதாவின் திரு உருவப்படத்துக்குப் பதிலாக சாராய பாட்டில் ஸ்டிக்கரை ஒட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தின் அரசு முத்திரையாக இருக்கும் கோபுரம் சின்னத்தை மாற்றிவிட்டு அழகான சாராய பாட்டிலை அரச முத்திரையாக மாற்றினால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் (நம் லட்சியப் பள்ளியில் நடக்கும் மது ஒழிப்பு ஓவியப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெறும் ஓவியங்களாக இவற்றைக் காட்டலாம்).

உண்மையில் அரசு அதில் இருந்து கிடைக்கும் கொழுத்த வருவாய்க்காக சாராயக்கடைகளை எடுத்து நடத்துகிறது. ஆனால், அரசுக்கு வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஏராளமான வழிகள் இருக்கின்றன. அரசின் பொறுப்பில் இருக்கும் துறைகளை எடுத்துக்கொண்டால் மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, சாலை, கல்வி, மருத்துவம், ஊடகம் எனப் பல இருக்கின்றன. இந்தத் துறைகளில் தனியாருக்கும் இடமளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தனியார் துறைகள் அனைத்துமே பெரும் வெற்றிகளை ஈட்டுபவையாகவும் அதே தொழிலைச் செய்யும் அரசு நிறுவனங்கள் தரத்திலும் லாபத்திலும் மிகவும் கீழான நிலையிலும் இருக்கின்றன. அரசுத் துறைகளுக்குக் கூடுதல் நபர்களுக்குச் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தரத்தைப் பேண முடியவில்லை என்ற வாதத்தில் நியாயம் இருக்கிறது. என்றாலும் அரசுத் துறைகளின் வீழ்ச்சிக்கு அது மட்டுமே காரணமில்லை.

தனியார் நிறுவனங்கள் வரி செலுத்துகின்றன என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தரப்படும் இன்னபிற சலுகைகளை ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை. மேலும் தனியார் நிறுவனங்கள் ஈட்டும் லாபமெல்லாம் உண்மையில் அரசுக்கு நேரடியாகவே வரவேண்டியவையும்கூட. குறிப்பாக மருத்துவம், கல்வி, ஊடகம் போன்ற துறைகளில் அரசு மிகவும் மோசமாகச் செயல்படுகின்றன. சன் டிவிக்குக் கிடைக்கும் லாபத்தில் நூறில் ஒரு பங்குகூட தூர்தர்ஷனுக்குக் கிடைப்பதில்லை. கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே தூர்தர்ஷனுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தருபவையாக இருந்தன. இப்போது அவையும் அவர்களுடைய கையைவிட்டுப் போய்விட்டன.

ஒன்று அரசு இந்த நிறுவனங்களை அரசுடமையாக்கிக் கொள்ளலாம். அல்லது அந்த நிறுவனங்களில் இருந்து அல்லது சர்வதேச ஊடக நிர்வாகிகளைத் தமது நிறுவனங்களில் நியமித்து பத்து வருடங்களில் சன் டி.வி.போல் தூர்தர்ஷனை ஆக்கிக் காட்டுங்கள் என்று இலக்கு நிர்ணயிக்கலாம். தமிழக அரசு பசுமாட்டில் இருந்து கிடைக்கும் பாலை உள்ளூர், வெளியூர் முதலாளிகளுக்குக் கொடுத்துவிட்டு சாணியை அள்ளிக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசுக்குச் செய்வதும் அதுவே. இதை முதலில் தடுத்து நிறுத்தி மத்திய மாநில அரசுகளுக்குப் பெருமளவுக்கு நிதி வந்து சேரும் வகையில் சீரமைக்கவேண்டும்.

மருத்துவமனை, கல்வி, ரேஷன் அரிசி, விவசாய மின்சாரம் போன்றவற்றை இலவசமாகத் தருவதால் அந்தந்தத் துறைகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. அந்தத் துறைகளின் தரமும் அதனால் குறைவுபட்டதாக இருக்கிறது. இவற்றுக்கு நியாயமான கட்டணம் விதித்து அவற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு வருவாயையும் பெருக்கிக் கொள்ளலாம். ஐந்து ஏக்கருக்கு மேல் இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது என்று சொல்வதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும்.

தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கவில்லையென்றால் கூடுதல் வரி என்று வேண்டுமானால் சட்டம் இயற்றலாமே தவிர, தமிழில் வைத்தால் வரி விலக்கு என்பது பச்சை அயோக்கியத்தனம். அதிலும் ப்ரீகேஜி, எல்.கேஜி.களிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியை அனுமதிக்கும் ஒரு அரசு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் திரைப்படப் பெயர்களிலும் தமிழை வளர்க்க முயற்சி செய்வது கடைந்தெடுத்த கயவாளித்தனமே.

திரைப்படத்துறை கோடிகளை சம்பாதித்துத் தருவதாக இருக்கிறது. இப்போதைய அரசுகள் தணிக்கைத்துறையை மட்டுமே தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அதற்கு பதிலாக திரைப்படங்களைத் தயாரிக்கும் தொழிலிலும் அரசு கால் பதிக்கலாம். என்.எஃப்.டி.சி. என ஒரு துறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை மறுசீரமைத்து லாபம் கொழிக்கும் துறையாக மாற்றவேண்டும். சன் குழுமம் திமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு விஷயத்தைச் செய்தது. ஒரு திரைப்படத்தின் பெயர் வைப்பதில் ஆரம்பித்து யார் நடிகர்கள், யார் இசையமைப்பாளர், என்ன கதை என எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாமல், பிறரால் எடுத்து முடிக்கப்படும் படங்களை போட்டுப் பார்த்துவிட்டு, வணிக வெற்றி பெரும் என்று தெரிந்தால் தயாரிப்புச் செலவுக்கு மேல் ஒரு சில லட்சங்களைக் கொடுத்து வாங்கி தன் பெயரில் வெளியிட்டு கோடிகளை அள்ளிக் குவித்தார்கள். திரையரங்குகளைக் கைப்பற்றியதன் மூலமும் ஆட்சி அதிகாரம் கையில் இருந்த திமிரிலும் கோடிகளை வெகு சுலபமாகச் சம்பாதித்தார்கள்.

ஒரு பெரிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்கும் அல்லது இயங்க வாய்ப்பு உள்ள சிறிய நிறுவனங்களை தனக்குள் இணைத்துக்கொண்டு லாபத்தைப் பெருக்கிக் கொள்வதென்பது வணிக நோக்கில் ஓரளவுக்கு சரியான செயல்தான். ஆனால், நேர்மையான அரசு இதுபோல் செய்யவேண்டியதில்லை. வெற்றிகரமான நடிகர்கள், படைப்பாளிகள், நல்ல கதை இவற்றைத் தெரிவு செய்து தயாரிப்புக்கு நியாயமான பணத்தைக் கொடுத்து (ரஜினிகாந்துக்கு பிற படங்களில் சம்பளம் ஐம்பது கோடி என்றால் அரசு தயாரிக்கும் படத்தில் மொத்த தயாரிப்புச் செலவில் அல்லது லாபத்தில் 20% என்பதுபோல் தீர்மானிக்கவேண்டும். அதாவது மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது அனைத்து கலைஞர்களும் தமது சம்பளத்தை வெகுவாகக் குறைத்துக்கொள்வதுபோல் அரசின் படங்களில் மட்டுமாவது நியாயமான சம்பளத்தைப் பெற்று நடிக்கவேண்டும்)

கிரிக்கெட் போட்டிகளில் பெரும் தொகை வருவாயாகக் கிடைக்கிறது. ட்வெண்டி ட்வெண்டி, ஒருநாள் தொடர் போன்றவற்றை அரசே தன் கட்டுப்பாட்டில் நடத்தலாம். 20-20 போட்டிகளுக்கு உலகம் முழுவதுமான வீரர்களை வணிக நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்து நடத்துவதற்கு பதிலாக அந்தந்த மாநிலங்களே எடுத்து நடத்தலாம். இன்று ஷாரூக்கான்களும் மல்லையாக்களும் சீனு மாமாக்களும் கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை அரசு தன் கஜானாவுக்கு வரச் செய்யலாம். ரஞ்சி டிராஃபி, புச்சி பாபு போன்ற போட்டிகளை ரகசியமாக ஆளற்ற மைதானங்களில் நடத்திவரும் அரசு லாபம் கொழிக்கும் போட்டிகளை வணிக முதலைகளுக்குத் தாரைவார்த்துவிட்டு ஒதுங்கி நிற்பதில் அர்த்தமே இல்லை. சாராயக்கடை நடத்தி சம்பாதிப்பதைவிட திரைப்படம் எடுத்தும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியும் அதிகப் பணத்தை நாணயமாக, கவுரவமாக சம்பாதிக்க முடியும்.

கனிம வளங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு சல்லிக் காசுக்கு விற்றுவிட்டு அவை உற்பத்தி செய்து தரும் பொருட்களை, சேவைகளை கோடிகளைக் கொடுத்து வாங்கிக்கொள்வதற்கு பதிலாக அரசே அந்தத் துறைகளில் நேரடியாக முதலீடு செய்து நியாயமாகப் பணம் சம்பாதிக்கலாம்.

ஒரு வீட்டுக்கு சூரிய மின்சார கருவிகளைப் பொருத்த தற்போது இரண்டு லட்சம் ஆகிறது என்றால் அரசு அந்தப் பேனல்கள் மற்றும் பேட்டரிகளை பத்தாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும்வகையில் உள்ளூர் விஞ்ஞானிகளைக் கொண்டு தயாரிக்கச் சொல்லவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளமுடிவதோடு அரசின் மின் கிரிடுக்கும் தரமுடியும். இதனால் மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரிப்பதோடு அரசுக்கு வருவாய் அதிகரிக்கவும் செய்யும். காந்தியவாதியான ஹிமேஷ் ஈ-சக்ரா என்ற மின் ராட்டை ஒன்றைத் தயாரித்திருக்கிறார். அதன் மூலம் நூல் நூற்பதோடு சிறிய விளக்கு, ரேடியோ போன்றவற்றை இயக்கமுடியும். இப்போது நூல் நூற்புக்கு பதிலாக அதில் இருந்து கிடைக்கும் சக்தி முழுவதையுமே மின்சாரமாக சேமித்துக்கொள்ள முடிந்தால் டி.வி ஃபேன் போன்றவற்றை இயக்கும் அளவுக்குக்கூட மின்சாரத்தை அதில் இருந்து உற்பத்தி செய்துவிட முடியும். தொலைகாட்சி சீரியல்கள் பார்த்தபடியே பெண்கள் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். ரயிலில், பேருந்துகளில் பல மணி நேரம் வெறுமனே அமர்ந்தபடியே பயணம் செய்பவர்கள் அந்த நேரத்தில் அரை யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட முடியும்.

ஒவ்வொரு தெருவிலும் இதுபோல் சைக்கிள் அல்லது சிறிய காற்றாடிகள் போன்றவற்றை வைத்து சுழற்சி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். உடற்பயிற்சி மையங்களில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவதில் இருந்து வெளி நாடுகளில் மின்சாரம் தயாரித்துக்கொள்கிறார்கள். இவற்றில் கிடைக்கும் மின்சாரம் மிகவும் குறைவாக இருக்கும் என்றாலும் மக்கள் தொகை அதிகமான நம் நாட்டில் ஒருவர் ஒரு வாரத்துக்கு ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்தாலும் கணிசமான அளவை எட்டிவிடும். இப்போது அணு உலைகள் நிறுவ ஆகும் செலவு, அதில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை நாடு முழுவது கொண்டு செல்ல ஆகும் செலவு, அணு உலைப் பாதுகாப்புக்கான செலவு, அணு உலைக் கழிவுகளைப் பராமரிக்க ஆகும் செலவு, விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்புகள் இவற்றை ஒப்பிடும்போது அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வெகு சொற்பமே. எனவே, ஈ-சக்ரா மூலம் கிடைக்கும் மின்சாரம் குறைவாக இருந்தாலும் அதில் அணு உலை போன்ற எந்த செலவும் அபாயமும் கிடையாது என்பதால் அது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.

கீழ் வெண்மணி தீ வைக்கப்பட்ட குடிசையின் வெளித்தாழ்ப்பாளைப் போட்டது யார் / B.R. மகாதேவன்

Nellu-Movie-Download-Torrent-5

தஞ்சை மாவட்டத்தின் கீழ் வெண்மணி கிராமத்தில் டிசம்பர் 25, 1968-ல் 44 தலித் மக்கள் தீயில் எரிந்து கருகினர். அதில் 20 பேர் பெண்கள் 19 பேர் குழந்தைகள்!

அரைப்படி நெல் கூடுதலாகக் கேட்டதால் பண்ணையார்கள் 44 கூலித் தொழிலாளிகளைக் கொன்றுவிட்டார்கள்; மேலும் கூலித் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பண்ணையார்களின் நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சேரச் சொன்னார்கள். அப்படிச் செய்யாததால் தீவைத்துக் கொன்றுவிட்டார்கள்.

இவைதான் கம்யூனிஸ்ட் கட்சி பிரதானமாக முன் வைக்கும் சித்திரம்.

உண்மையில் நடந்தது என்ன..?

‘நின்று கெடுத்த நீதி’ என்ற தலைப்பில் மயிலை பாலு எழுதி அலைகள் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தைப் படித்தபோது பல கேள்விகள் எழுந்தன.

அதைப் பார்ப்பதற்கு முன் வேறு சில விஷயங்களை முதலில் சொல்கிறேன். அந்த துயரச் சம்பவத்துக்கு கம்யூனிஸ்ட்கள்தான் காரணம் என்று காந்தியவாதிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அதைப் புரிந்துகொள்ளமுடியும். ஏனென்றால், மேல் ஜாதி மற்றும் மேல் வர்க்க மனிதர்களின் மனத்தில் நல்லெண்ணத்தை வரவைத்து அதன் மூலம் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கவேண்டும் என்பதுதான் காந்திய வழிமுறை. கம்யூனிஸமோ இதற்கு நேர்மாறானது. வன்முறை மூலமே சமத்துவத்தை மலரவைக்க முடியும் என்பது அதன் கோட்பாடு. எனவே, காந்தியவாதிகள் கீழ்வெண்மணி துயரத்துக்கு கம்யூனிஸ்ட்களைக் காரணமாகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், தலித்களையும் உள்ளடக்கிய (?!) பிராமணரல்லாதாரின் ஒரே மீட்பராக முன்வைக்கப்படும் ஈ.வே.ரா. கூட கம்யூனிஸ்ட்களையே விமர்சனம் செய்திருந்தார். அதுகூட ஒருவகையில் எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான். ஏனென்றால், தீ வைத்துக் கொளுத்தியவர்களில் ஒருவர்கூட பிராமணர் இல்லை. எந்தப் பக்கம் திருப்பி வைத்தாலும் வட திசையை மட்டுமே காட்டும் காந்த ஊசிபோல், எந்தப் பிரச்னையென்றாலும் பிராமணர்களையே காரணமாகச் சொல்லும் அவருடைய மூளை தீவைத்து எரிக்கச் சொன்னவர் கோபால கிருஷ்ண நாயுடுகாரு என்பதால் அடக்கிவாசித்துவிட்டிருக்கிறார். இன்னொருவகையில் பார்த்தால், கம்யூனிஸ்ட் தலைமைகளில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்பதால் அவருடைய காந்த ஊசி மூளை துல்லியமாக அவர்களையே சுட்டிக்காட்டியதோ என்னவோ. காந்தியவாதிகளும் ஈ.வே.ராவும் ஒத்துப்போகும் விஷயம் இந்த உலகில் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. அதையும் மீறி இந்த விஷயத்தில் அவர்கள் இரு தரப்பினரும் கம்யூனிஸ்ட்களைக் குற்றம் சாட்டியபோதும் அவர்கள் மேல் குற்றம் இருந்திருக்காது என்றே நினைத்துவந்தேன். ஆனால், இந்தப் புத்தகம் சில விஷயங்களை மறுபரிசீலனை செய்யவைக்கிறது.

முகத்தில் அறைவதுபோல் முதலில் தெரியவரும் விஷயம்: தீயில் கருகி இறந்தவர்களின் குடும்பத் தலைவர்களான கம்யூனிஸ்ட்களில் பெரும்பாலானோர் அந்தக் கலவரத்தில் காயங்களோடும் சிராய்ப்புகளோடும் ஓடித் தப்பிவிட்டிருக்கின்றனர். சுந்தரராமசாமி தன் முதல் நாவலில் ஒரு கம்யூனிஸ்ட்டைப் பற்றிச் சொல்லும்போது இதுபோல் ஓடி ஒளிந்ததாகக் கிண்டல் அடித்திருப்பார். முதலில் படித்தபோது அதை அவருடைய அரசியல் வாக்கியமாகவே நினைத்திருந்தேன். ஆனால், அது நடைமுறையைப் பார்த்துச் சொன்னதுதாகத்தான் இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

இதைவிட இன்னொரு அதிர்ச்சி தரும் விஷயம், இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் வீரைய்யன் என்ற தோழர் தெரிவித்திருக்கும் தகவல். அதாவது, 44 பேர் எரிக்கப்பட்டபோது அந்த வீட்டுக்குள் சிக்கிய ஒரு பெண் தன் குழந்தையைக் கூரை வழியாக வெளியே வீசி எறிந்ததாகவும் சுற்றி நின்று கொக்கரித்துக் கொண்டிருந்த பண்ணையார்களில் ஒருவர் அந்தக் குழந்தையைக் கண்டந்துண்டமாக கத்தியால் வெட்டித் தீயில் மீண்டும் வீசி எறிந்து கொன்றதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சாட்சி சொன்ன அறுபதுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவர்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கவில்லை. தீயில் கருகிய உடல்களைப் பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும் அப்படியான எந்த தகவலையும் தெரிவித்திருக்கவில்லை. கீழ்வெண்மணி தீ வைப்பு பற்றி பதிவு செய்த எந்தச் செய்தித்தாளிலும் இந்தச் சம்பவம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அதனால்தான் நீதிபதி கூட பண்ணையார்களும் அவருடைய ஆட்களும் தீவைத்ததால்தான் இந்த எளிய மக்கள் இறந்துவிட்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அந்தக் குடிசைக்குள் 44 பேர் இருப்பது அவர்களுக்குத் தெரியாது. எல்லா குடிசைகளுக்கும் தீ வைத்ததுபோல் இந்தக் குடிசைக்கும் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். உள்ளே மாட்டிக்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டனர் என்று சொல்லியே பண்ணையார்களையும் அடியாட்களையும் குறைந்த தண்டனையுடன் விடுவித்திருக்கிறார்.

சரி அப்படியானால். வீரைய்யன் ஏன் இப்படிச் சொல்கிறார்? ஏனென்றால், பண்ணையார்கள் தெரிந்தேதான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என்பதை நிரூபித்தாகவேண்டிய நிர்பந்தம் ஓடி ஒளிந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இருக்கிறது. எனவே, இந்தப் புனைவை இந்தப் பதிப்பின் முன்னுரையில் எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். மெள்ள மெள்ள அதுவே வரலாறாகப் பலராலும் பிரதியெடுக்கப்பட்டு ஏதேனும் ஒரு சாட்சியின் குரலாகவும் காலப்போக்கில் பதிவுசெய்யப்படலாம். ’உண்மை வரலாறுகள்’ இப்படித்தானே உருவாக்கப்பட முடியும்.

அடுத்ததாக இந்தப் புத்தகத்தில் இருந்து தெரியவரும் இன்னொரு முக்கியமான விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் தமது எதிரிகளாகக் கருதிய 23 மிராசுதார்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்திருக்கிறார்கள். இதுபோல் மடத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கம்யூனிஸக் கோட்பாட்டின்படி அவர்கள் குற்றவாளிகள்தான். ஆனால், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கோ 44 பேரை தீவைத்துக் கொளுத்தியது தொடர்பானது. சம்பவம் நடந்த அன்று யார் யாரெல்லாம் அதில் ஈடுபட்ட்டர்களோ அவர்களை மட்டுமே சட்டம் (ஒருவேளை) தண்டிக்க முடியும். அப்படியிருக்கும்போது நமது எதிரிகள் எல்லாரையும் தண்டிக்கக் கிடைத்த வாய்ப்பு என்று வழக்கில் கோர்த்துவிட்டால் உண்மைக் குற்றவாளிகள்கூட எளிதில் வழக்கை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவார்கள். இதுதான் நடந்தது.

அடுத்ததாக, இந்தப் புத்தகம் சொல்லும் இன்னொரு முக்கிய விஷயம்: கம்யூனிஸ்ட்கள் வெறுமனே அரைப்படி நெல் கூடுதலாகக் கொடுக்கும்படி கை கட்டி வாய் பொத்தி ஒன்றும் கேட்டிருக்கவில்லை. மிக மோசமான முறையில் அடிதடியில் இறங்கியே கேட்டிருக்கிறார்கள். அந்த சம்பள உயர்வைத் தரமுடியாது என்று மறுத்த பண்ணையார்களுடைய வயல்களில் கம்யூனிஸ்ட்கள் அதிரடியாக இறங்கி அறுவடை செய்துள்ளனர். பக்கத்து ஊரில் இருந்து கூலியட்களை அழைத்து வந்து அறுவடை செய்ய முற்பட்ட பண்ணையார்களை எதிர்த்தும் கூலியாட்களை தடுத்தும் அடித்தும் வந்திருக்கிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கீழ்வெண்மணி கம்யூனிஸ்ட் கிளையின் தலைவரில் ஆரம்பித்து அந்தத் தீவைப்பை நேரில் பார்த்த அந்த கிராமத்து நபர்கள் வரை அனைவருமே எங்கள் ஊரில் கூலிப் பிரச்னையே கிடையாது என்றுதான் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

டிசம்பர் 25 அன்று பக்கத்து ஊரில் இருந்து கூலியாட்கள் (அவர்களில் தலித் சாதியினரும் உண்டு; பிற சாதியினரும் உண்டு) வந்து அறுவடை செய்தபோது, நூறுக்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் கும்பலாக வந்து வேலை முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் அவர்களைச் சந்தித்து மிரட்டியிருக்கின்றனர். அந்தக் கூலித் தொழிலாளிகள் பயந்து ஓடி அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் ஒளிந்துகொண்டபோது அவர்களை வீடு புகுந்து அடித்திருக்கின்றனர். இந்தக் கூலித்தொழிலாளிகளை அழைத்து வந்த மேஸ்திரி பக்கிரிசாமியை தூக்கிச் சென்று, கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு மாமா வேலையா பார்க்கிறாய் என்று சொல்லி அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

தமது அடியாளைக் கொன்றது என்பது தமக்கு விடுக்கப்பட்ட சவால் என்று கோபப்பட்டுத்தான் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவருடைய ஆட்களும் ஆத்திரத்தில் கீழ்வெண்மணிக்குள் புகுந்து கம்யூனிஸ்ட்களைத் தேடிக் கொல்ல வந்திருக்கிறார்கள். அனைத்து கம்யூனிஸ்ட்களும் சிட்டாகப் பறந்துவிட்டிருக்கவே வீடுகளுக்குத் தீவைத்தபடியே கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே போயிருக்கிறார்கள் நாயுடு அன்கோவினர். அப்படித் தீ வைக்கப்பட்ட குடிசைகளில் ஒன்றுதான் 44 பேர் பதுங்கி இருந்த ராமையாவின் குடிசை.

இதில் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அப்படி துப்பாக்கியால் சுடப்பட்ட, அருவாள், கத்திகளால் வெட்டப்பட்ட கம்யூனிஸ்ட்களில் ஒருவர்கூட இறக்கவில்லை. அவர்களுடைய காயங்கள் எல்லாம் ஓரளவுக்கு குணப்படுத்த முடிந்தவையே. அதாவது பண்ணையார்(ள்)கள் கொல்லும் நோக்கில் செய்த செயல்களில் ஒரு கம்யூனிஸ்ட் கூட இறக்கவில்லை. வெறும் குடிசைகளைக் கொளுத்தவேண்டும் என்று செய்த செயலில் 44 அப்பாவிகள் இறந்துவிட்டிருக்கிறார்கள். அதிலும் 23 குடிசைகள் தீவைக்கப்பட்டதில் ராமையாவின் குடிசைக்குள் மட்டுமே ஆட்கள் இருந்திருக்கிறார்கள். வேறு எதிலும் யாரும் ஒளிந்திருக்கவில்லை. பெண்களையும் குழந்தைகளையும் பண்ணையார்கள் திட்டமிட்டு அந்த குடிசைக்குள் பூட்டிப் போட்டுக் கொன்றது உண்மை என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்வோம். அப்படிக் கொலை வெறியில் இருந்தவர்கள், கையில் கிடைத்த கம்யூனிஸ்ட்களை என்னவெல்லாம் செய்திருக்கவேண்டும். ஆனால், கம்யூனிஸ்ட்கள் ஒருவருக்குக் கூட உயிராபத்து ஏற்பட்டிருக்கவே இல்லையே.

ராமையாவின் குடிசை ஆவணப்படத்தில்கூட The (not so) Hindu என்.ராம் இது வெறும் கூலி உயர்வுப் போராட்டம் அல்ல; பல ஆண்டுகளாக நடந்த வீரம் செறிந்த போராட்டத்தின் க்ளைமாக்ஸ் என்பதாகக் குறிப்பிட்டிருந்தார். கம்யூனிஸ்ட்களுக்கும் பண்ணையார்களுக்கும் இடையில் ஆட்கடத்தல், வெட்டுக் குத்து, தீவைப்பு என சர்வ சாதாரணமாக பெரும் வன்முறை இரு தரப்பிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பண்ணையார்களின் எண்ணிக்கையும் பலமும் அதிகம் என்பதால் அவர்களால் செய்யப்பட்ட வன்முறை அதிகம் என்றாலும் கம்யூனிஸ்ட்கள் தம்மிடம் அப்போது எவ்வளவு பலம் இருந்ததோ அதை வைத்து எவ்வளவு வன்முறையில் ஈடுபடமுடியுமோ அதை முழுவதுமாகச் செய்து வந்திருக்கிறார்கள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து ஊர்ஜிதமாகிறது.

அரைப்படி நெல் கூடுதலாகக் கேட்டதற்காகக் கொன்றுவிட்டார்கள் என்பது பொது புத்தியில் பரிதாபத்தைக் கிளர்த்துவதற்கான தந்திரம் மட்டுமே. அது தெரிந்திருந்ததால்தான் காந்தியவாதிகளும் ஈ.வே.ராவும் இந்த இழப்புக்கு கம்யூனிஸ்ட்களே காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். காந்தியவாதிகள் அப்படிச் சொன்னதோடு நிறுத்தவில்லை. மாநில அரசிடம் கடனுதவி பெற்று அந்த பண்ணையார்களில் யாரெல்லாம் நிலத்தை விற்கத் தயாராக இருந்தார்களோ அவர்களிடமிருந்து அந்த நிலத்தை தலித் கூலித் தொழிலாளர்களுக்குக் கடனில் வாங்கிக் கொடுத்தார்கள். ஒரு சில ஆண்டுகளில் அந்த மக்கள் தமது பங்கு கடனை அடைத்து முடித்ததும் அரசு எஞ்சிய தொகையை மானியமாகக் கொடுத்து அந்த நிலத்தை எளிய கூலித்தொழிலாளர்களின் பெயருக்கு பட்டாவே போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அப்படியாக காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர் நூற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் வாங்கித் தந்துவிட்டனர்.

உண்மையில் கோவில் நிலங்கள் முழுவதையும் இந்து சக்திகள் நிலமற்ற கூலித் தொழிலாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கவேண்டும். வினோபாவே பூதான இயக்கம் என்ற ஒன்றை நடத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தலித்களுக்கு கொடுத்தார் (புரட்சியைத் தள்ளிப்போடும் முதலாளித்துவ தந்திரம் என்று சொல்லி எள்ளி நகையாடினர் கம்யூனிஸ்ட்கள்). வினோபாவும் காந்தியவாதிகளும் செய்ததை இந்த சமூகமும் அரசும் இன்னும் பெரிய அளவில் முன்னெடுத்துச் சென்றிருக்கவேண்டும். குறிப்பாக ஏழைகளுக்கு உதவுவது உண்மையான நோக்கமாக இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தச் செயல்பாடுகளுக்கு பேராதரவு தந்திருக்கவேண்டும். ஆனால், அவர்களோ இப்படியான சீர்திருத்த நடவடிக்கைகள் புரட்சியைத் தள்ளிப்போடும் முதலாளித்துவ தந்திரம் என்று எட்டி நின்று எள்ளி நகையாடினார்கள். விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் போனதைத் தொடர்ந்து கடைநிலைச் சாதியினருக்கு நிலம் எளிதில் கிடைக்க வழி பிறந்திருக்கிறது. என்றாலும் அந்தப் பிரிவினருக்கு அந்த நிலம் இப்போதும் பெரும் விடுதலையைத் தருவதாக இருக்கிறது என்பதும் அந்த விடுதலையையும் கம்யூனிஸ்ட்கள் பெற்றுத் தரவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களே.

ஆனால், நிலமற்ற அந்தக் கூலித் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தலித்கள் என்பதால் ஈ.வே.ரா. இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எதையும் காட்டியிருக்கவில்லை. கீழ்வெண்மணி சம்பவம் நடந்தபோது கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்ததோடு ஒதுங்கிக்கொண்டுவிட்டார். ஈவேராவின் உடம்பில் இருந்த கண்றுக்குத் தெரியாத பூணூலின் சில இழைகள் கோபால் கிருஷ்ண நாயுடுகாரு வகையறாக்களை எதிர்க்கவிடாமல் தடுத்திருக்கக்கூடும். எனினும் பிராமணர்களிடமும் கோவில்களிடமும் சிக்கியிருந்த நிலங்களையாவது நிலச் சீர்திருத்தம் மூலம் மீட்டெடுத்து கூலித் தொழிலாளர்களுக்குத் தர முயற்சிகள் எடுத்திருக்கலாம். நம்மளவாளையும் அது பாதிக்கும் என்பதால் சிறுநீர் கலயத்தைத் தூக்கிக்கொண்டு வேறு திசைக்கு ஓடிவிட்டார்.

உண்மையில் தஞ்சைப் பகுதியில் வெகு காலமாகவே பண்ணையார்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வந்திருக்கிறது. நாகப்பட்டனம் தாலுக்காவில் இருந்த கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மேஜைக்குப் பின்னால் அமர்ந்திருந்த கம்யூனிஸ்ட் தலைவர்தான் கீழ்வெண்மணி போன்ற கிராமங்களுக்கான செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்துவந்திருக்கிறார். அவருக்கு தமிழக, தில்லி தலைமைகள் திட்டம் வகுத்துத் தந்திருக்கின்றன. அவர்களுக்கு ரஷ்யாவும் சீனாவும் திட்டம் வகுத்துத் தருகின்றன, கிறிஸ்தவர்களுக்கு போப் திட்டம் வகுத்துத் தருவதைப்போல்!

இந்த தில்லி தலைமைதான் மத்திய அரசு தொழிற்சங்கக் கோரிக்கை ஒன்றுக்காக செப்டம்பர் 1968-ல் ஒரு போராட்டம் நடத்தியது. அதற்கு ஆதரவாக கீழ்வெண்மணி கூலித் தொழிலாளியும் வேலைக்குப் போகாமல் தடுக்கப்பட்டார் (ஆனால், கீழ்வெண்மணி மக்கள் கொல்லப்பட்டபோது எந்த மத்திய தொழிற்சங்கமும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. சொந்த பந்தங்களைப் பறிகொடுத்துத் தவித்த இந்த மக்களுக்குத் தமது ஒரு மணி நேர சம்பளத்தைக் கூடக் கொடுத்து உதவியதாகத் தெரியவில்லை). இப்படியான வேலை நிறுத்தங்களினால் கோபப்பட்ட பண்ணையார்கள், 20 ரூபாய் அபராதம் தந்தால்தான் வேலைக்கு வரமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை அந்தக் கூலித் தொழிலாளர்கள் தமது கையில் இருந்துதான் தரவேண்டியிருந்தது, தில்லி தலைமையோ ரஷ்யாவோ சீனாவோ தரவில்லை. அல்லது ரஷ்ய-சீனப் பணம் கூலித் தொழிலாளிக்கு வந்து சேரவில்லை.

அதன் தொடர்ச்சியாக பண்ணையார்கள் 20 ரூபாய் அபராதம் கட்டியதோடு நிறுத்தினால் போதாது. இந்த கூலித் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படிச் செய்யவில்லையென்றால் ரூ 250 அபராதம் விதிக்கப்படும் என்கிறார்கள். விஷயம் நாகப்பட்டணம் கம்யூனிஸ்ட் தலைவருக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. அவர் மேலிடங்களுக்குத் தெரிவித்து அபராதம் கட்டவேண்டாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. கூலித் தொழிலாளர்கள் அதைச் சென்று பண்ணையார்களிடம் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு விலகாவிட்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் பண்ணையார்கள்.

இப்படியாக கீழ்வெண்மணிக் களம் மெள்ளக் கொதிநிலைக்கு உயர்ந்துகொண்டிருந்த நிலையில் டிசம்பர் 25 அன்று பக்கத்து ஊரில் அறுவடை செய்துவிட்டு வந்தவர்களை அடித்து விரட்டியும் அவர்களை அழைத்து வந்த மேஸ்திரி பக்கிரிசாமியைத் தூக்கிச்சென்று வெட்டிக் கொன்றும் போடுகிறார்கள் கம்யூனிஸ்ட்கள். கீழ்வெண்மணி கிராமத்தின் ஹரிஜன நடுத்தெருவில்தான் பக்கிரிசாமியின் வெட்டுப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் கீழ்வெண்மணிக் குடிசைகளில் விழுந்த முதல் பெரு நெருப்பு. தனது ஆளை வெட்டிக் கொன்ற கம்யூனிஸ்ட்களைக் கொன்று குவிக்கும் நோக்கில்தான் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான கோபால கிருஷ்ண நாயுடு தலைமையில் அடியாட்கள் திரண்டுவந்து வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு எழும் இரண்டு முக்கிய கேள்விகள் : குடிசைகளுக்குத் தீ வைப்பதென்பது சகஜமான வன்முறைச் செயல்பாடாக இருந்துவந்திருக்கும் நிலையில் எதிர்த்துத் தாக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் குடிசைகளை விட்டுத் தப்பித்து ஓடுவதுதானே வழக்கம். இதற்கு முன்னால் நடந்த அனைத்துக் கலவரங்களிலும் அப்படித்தானே செய்திருக்கிறார்கள். இம்முறை மட்டும் ஏன் ஒரே குடிசைக்குள் அனைவரும் ஒளிந்துகொண்டனர்? யார் சொன்னதால் இப்படிச் செய்தனர்?

ராமையாவின் குடிசை வீட்டின் முன்பக்க அறையில் ஒளிந்திருந்த சிலர் கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் அந்த வீட்டை நோக்கி வருவதைப் பார்த்ததும் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து 44 பேரும் ஓடித் தப்பியிருக்கலாமே. ஏன் வீட்டுக்குள் போய் முடங்கினர். தப்பித்து ஓட நேரமும் வலுவும் இல்லை என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்க முடிவெடுத்தனரா..? வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தால் உள்ளே யாரும் இல்லை என்று நினைத்துப் போய்விடுவார்கள்; இல்லையென்றால் அவர்கள் கையில் சிக்கி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று நினைத்து பூட்டிவிட்டுப் போகும்படிச் சொல்லியிருந்தார்களா? அப்படியொன்றும் முந்தைய கலவரங்களில் பாலியல் வன்முறைகள் இருந்திருக்கவில்லையே. சபிக்கப்பட்ட அந்த இரவில் அந்தக் குடிசைக்குள் அவர்கள் ஏன் பதுங்கிக்கொண்டனர். வெளித் தாழ்ப்பாள் எப்படிப் போடப்பட்டது?

இத்தனைக்கும் கீழ்வெண்மணி கம்யூனிஸ்ட் தலைவர் முதல்கொண்டு அந்த கிராமத்தில் இருந்த ஆண்களில் பெரும்பாலானோர் ராமையாவின் குடிசையின் இரு பக்கமும் இருந்த சந்தின் வழியாக ஓடி அவருடைய வீட்டுக்குப் பின் பக்கம் இருந்த வேலியை உடைத்துக்கொண்டு வயல்வெளிக்குப் போய் உயிர் தப்பியிருக்கிறார்கள். அப்படியானால், அந்த 44 பேர் மட்டும் அப்படி ஓடித் தப்பிக்க முயற்சி செய்யாமல் வீட்டுக்குள் ஒளிந்ததன் காரணம் என்ன..? அந்த கிராமத்தில் அந்த இரவில் அங்கு இருந்த சுமார் 400, 500 பேரும் வயல்வெளி, தோப்பு, குட்டை என ஓடித் தப்பித்திருக்கும் நிலையில் இந்த 44 பேர் மட்டும் ஏன் தீ பிடிக்க வாய்ப்பு இருந்த குடிசைக்குள் போய் ஒளிந்தார்கள்? கூரைக்குத் தீவைக்கப்பட்டாலும் தமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தார்களா..?

இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் பற்றி அரசு தரப்பு மருத்துவர் தெரிவித்திருக்கும் அறிக்கையில் அனைவரும் மூச்சு முட்டி இறந்தாகவே தெரிவித்திருக்கிறார்.

எட்டுக்கு ஐந்து நீள அகலம் கொண்ட ஒரு அறைக்கு மேலே இருக்கும் கூரையில் இருந்து வரும் தீயால் நாலைந்து பேரைக்கூடக் கொல்ல முடியாது. அந்த அறைக்குள் மாட்டிக்கொண்டதால் கார்பன் டை ஆக்ஸைடையும் கார்பன் மோனாக்ஸைடுயும் சுவாசித்து மயங்கி விழுந்து மூச்சு முட்டி இறந்திருக்கிறார்கள் (இவ்வளவு சிறிய அறைக்குள் 44 பேர் அடைபட்டுக் கிடந்ததும் ஒருவர் மேல் ஒருவராக இறந்து விழுந்து கிடந்ததும் விளக்கமுடியாத விஷயங்களே) அந்த அறையின் மூன்று பக்கச் சுவர்களுக்கும் நான்காவது பக்கக் கதவுக்கும் அப்பால் ஒரு எட்டு வைக்க முடிந்திருந்தால்கூட அவர்கள் உயிர் தப்பியிருக்க முடியும். அந்த அறையில் ஒரு ஜன்னல் இருந்திருந்தால்கூட அதில் இருந்து கிடைத்த ஆக்ஸிஜனை சுவாசித்துப் பலர் தப்பிக்க முடிந்திருக்கும். ஆனால், உள்ளே மாட்டிக்கொண்டவர்களின் பயமும் மயக்கமும் சேர்ந்து அவர்களை முடக்கிவிட்டிருக்கிறது. யாரேனும் ஒரு கம்யூனிஸ்ட் அவர்களைக் காப்பாற்ற நினைத்திருந்தால் உள்ளே குதித்து அவர் முதுகில் ஒவ்வொருவராக ஏறி எரிந்த மேல் கூரையைத் தள்ளிப் போட்டபடி வெளியேறி இருக்க முடியும். அல்லது அந்த ஒரு கம்யூனிஸ்ட் வெளித் தாழ்ப்பாளைத் திறந்து எளிதில் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இத்தனைக்கும் கலவரம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த கிராமத்துக் கிளையின் கம்யூனிஸ்ட் தலைவரும் வேறு முக்கிய பிரமுகர்களும் ராமையாவின் குடிசைக்கு முன்னால் நின்றுகொண்டு ஏதோ ஒரு விஷயம் குறித்து கலந்துபேசிகொண்டுதான் இருந்திருக்கிறார்கள். பண்ணையார்களின் கையாள் பக்கிரிசாமி கொல்லப்பட்டது அவர்களுக்குத் தெரியும். பண்ணையாரின் ஆட்கள் அடிக்கவருவார்கள் என்பதும் தெரியும். எப்படி ஓடித் தப்பிக்க வேண்டும் என்று கலந்து பேசியவர்கள் ராமையாவின் குடிசைக்குள் ஒளியவிருந்தவர்களைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை? அல்லது அப்படி அந்த மக்கள் அங்கு மடத்தனமாக ஒளிவார்கள் என்பதை அவர்களும் எதிர்பார்த்திருக்கவில்லையா?

அதோடு மொத்தம் இருந்த ஐந்து ஹரிஜனத் தெருக்களில் மூன்றில் இருந்த வீடுகள் மட்டுமே எரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வீடுகளில் பானை, சட்டி நீங்கலாக வேறு எந்தப் பொருளுமே இல்லை. அதாவது நெல் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த பக்கிரிசாமியைக் கொன்றதும் பிற கூலியாட்களை அடித்ததும் தெரியவந்தால் பண்ணையார்கள் அடியாட்களுடன் வந்து வீடுகளை எரிப்பார்கள் என்பதை யூகித்து அந்த ஹரிஜனங்கள் எல்லாரும் தமது வீட்டில் இருந்த சொற்ப முக்கிய பொருட்களை எல்லாம் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இதன் பிறகும் 44 பேர் ஒரே குடிசைக்குள் மாட்டிக்கொண்டு இறக்க இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்கமுடியும். ஒன்று அவர்களை யாரோ சிலர் உள்ளே விரட்டி வெளியே தாழ்ப்பாள் போட்டுத் தீவைத்திருக்கவேண்டும்; அல்லது அவர்கள் உள்ளே இருப்பது தெரியாமல் வெளிப்பக்கம் தவறுதலாக யாரோ பூட்டிவிட்டுச் சென்றிருக்கவேண்டும். ஜனநாயக (ரஞ்சக) விக்கிபீடியாவின் ஆங்கில வெர்ஷனில் பண்ணையார்கள் தீ வைத்தபடி அந்த வீட்டைச் சுற்றி நின்று கொக்கரித்ததாகவும் வெளியே தப்பித்து வந்த ஆறு பேரில் இரண்டுபேரை மறுபடியும் அடித்துத் தீயில் தூக்கிப் போட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் வெர்ஷனில் அந்த சீன் இல்லை.

அவர்களை உள்ளே தள்ளிப் பூட்டித் தீவைத்ததாக சம்பவ இடத்தில் இருந்த, பாதிக்கப்பட்ட எந்த நபரும் சாட்சி சொல்லவில்லையென்பதால் அப்படி நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. அப்படியானால், பிறகு எப்படித்தான் வெளித்தாழ்ப்பாள் போடப்பட்டது? துப்பாக்கியால் சுட்டபடியும் தீப்பந்தம் ஏந்தியபடியும் கூக்குரலிட்டபடி பாய்ந்து வந்த பண்ணையாரின் கும்பலைப் பார்த்ததும் எதிர்த்து நிற்க முடியாது என்று தெரிந்து ஓடிவிட்டிருந்த கம்யூனிஸ்ட்களில் ஒருவர் கூடவா இந்த அப்பாவி மக்களையும் ஓடித் தப்பிக்கும்படிச் சொல்லியிருக்கவில்லை. அல்லது தீப்பந்தங்களுடன் வருபவர்கள் குடிசைக்குத் தீவைத்தால் மாட்டிக்கொண்டு இருந்துவிடுவோமே என்ற அடிப்படை புரிதல் கூடவா அந்த மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இதற்கு முன் நடந்த அத்தனை தீ வைப்புகளிலும் குடிசைகளை விட்டு ஓடித் தப்பிக்கத்தானே செய்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முடிவுகட்ட கூட்டுத் தியாகமா செய்திருக்கிறார்கள்?

தென்பரையிலிருந்து வெண்மணிவரை என்றொரு நூலில் வேறொரு தகவல் இடம்பெற்றிருந்தது. அதாவது கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் தீவைத்தபடியே வந்தபோது கம்யூனிஸ்ட்கள் வயல்வெளிகளுக்கும் வீடுகளின் பின் பகுதிகளுக்கும் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். அப்படி ஓடும்போது, எதிரிகளை பயமுறுத்தும் நோக்கில் ஏ மேலூரானே வேல் கம்பை எடுத்துட்டு வா… ஏ கீழூரானே அருவாளை எடுத்துட்டு வா என்று குரல் எழுப்பியபடியே போயிருக்கிறார்கள். அதாவது கம்யூனிஸ்ட்களும் அடிப்பதற்கு பக்கத்து ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பதுபோல் சத்தம் போட்டால் ஒருவேளை கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் கொஞ்சம் பயந்து விலகக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அப்படிச் செய்தார்களாம். ஒருவேளை அப்படி வெளியூரில் இருந்து வந்தவர்கள் எந்தக் குடிசைக்குள் இருந்தாலும் வெளியே வர முடியாமல் தடுக்கும் வகையில் கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் எல்லா வீடுகளுக்கும் வெளியில் தாழ்ப்பாள் போட்டுத் தீவைத்துச் சென்றார்களா? அப்படி எதிர் தரப்பின் ஆயுததாரிகளைக் கொல்லும் நோக்கில் செய்த செயலுக்கு எளிய மக்கள் பலியாகிவிட்டனரா? அல்லது கம்யூனிஸ்ட்கள் தெரிந்தே தமது சொந்தபந்தங்களை அந்தக் குடிசைக்குள் விட்டுவிட்டுச் சென்றனரா..?

இப்படியானதொரு போர்வியூகத்தை நாம் பல இடங்களில் கேட்டிருக்கிறோம்தானே… சதாம் ஹுசேன் மக்கள் அடைக்கலம் புகுந்த மசூதிக்குள் ராணுவ டாங்கிகளைப் பதுக்கி வைத்தார்; வானில் இருந்து டாங்கிகளை அடையாளம் காட்டும் ரேடார்கள் அந்த மசூதிகளை குண்டு வீசித் தாக்கின; அதைக் காட்டி அமெரிக்கப் படைகள் அப்பாவிகளைக் கொல்கின்றன என்று அவர்கள் மேல் பழிபோட்டதைப் பார்த்திருக்கிறோம்.

இலங்கையில் கூட கடைசி கட்ட யுத்தத்தில் மருத்துவமனைக்குள் இருந்தபடி விடுதலைப் புலிகள் சிங்கள விமானங்களைத் தாக்கியிருக்கிறார்கள்; ஏவுகணைகள் வரும் இடத்தைக் குறிவைத்து பதிலுக்கு அவர்கள் வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். அதில் அப்பாவி மக்கள் கொல்லப்படவே நோ ஃபயர் ஜோனுக்குள் இருந்த மருத்துவமனைகளில் குண்டுவீசும் சிங்கள விமானங்கள் என்று அந்த நிகழ்வுகளை உலகுக்குக் காட்டியிருக்கிறார்கள் புலிகள். மருத்துவமனைப் பகுதிக்குள் புலிகள் ஏவுகணைகளைக் கொண்டு வந்த உடனேயே செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. சதாமுக்கும் பிரபாகரனுக்கும் அவர்களுடைய மக்கள் வெறும் பகடைக்காய்களே. கீழ்வெணி மக்கள் யாருடைய பகடைக்காய்களாக இருந்தனர்? ராமையாவின் குடிசை தீ வைக்கப்பட்டதற்கு பண்ணையாரின் கொடூரமா.. எளிய மக்களின் கூட்டுத் தியாகமா.. கம்யூனிஸ்ட்களின் பகடையாட்டமா… அல்லது அது ஒரு விபத்தா… எது காரணம்?

இதில் இன்னொரு சந்தேகமும் வருகிறது. குடிசைக்குள் மாட்டிக்கொண்டவர்கள் உயிர் போகும் தறுவாயில் கூக்குரல் எழுப்பியிருப்பார்கள். அது நிச்சயம் அங்கு இருந்த தீ வைப்பு கும்பலுக்கும், வயல், தோப்பு, புதர்கள், குட்டைகளில் பதுங்கியிருந்த கம்யூனிஸ்ட்களுக்கும் கேட்டிருக்கும். அவர்களில் யாராவது ஒருவர் பாய்ந்து சென்று அந்த வீட்டின் தாழ்ப்பாளைத் திறந்திருக்கலாம். ஆனால், ஒருவரும் செய்யவில்லை. கம்யூனிஸ்ட்கள் உயிர் பயத்தில் தப்பி ஓடியிருக்கிறார்கள். பண்ணையார் கும்பலோ தீ வைத்தபடியே தெருத்தெருவாகப் போய்க்கொண்டே இருந்திருக்கிறது. அந்த ஊர் முழுவதுமே கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்ததால் குடிசைக்குள் மாட்டிக்கொண்டவர்களின் கூக்குரலும் அதோடு கலந்துவிட்டிருக்கிறது. எனவே, ராமையாவின் குடிசைக்குள் 44 பேர் மாட்டிக்கொண்ட விவரம் யாருக்குமே தெரியாமல் போய்விட்டிருக்கிறது. ஒருவேளை பண்ணையார் கும்பலுக்கு சிலர் உள்ளே மாட்டிக்கொண்டிருப்பது தெரிந்திருந்தால் சுற்றி நின்று யாரும் வெளியே வராதபடி கொக்கரித்து நின்றிருப்பார்கள். ஆனால், அந்தக் கொடூர நிகழ்வு பற்றிய பிற்காலப் புனைவெழுத்துகளில் தான் அப்படியான ஒரு காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறதே தவிர நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன கம்யூனிஸ்ட் உட்பட யாரும் அப்படியான ஒரு சம்பவத்தைப் பற்றி எதுவும் சொல்லியிருக்கவில்லை. எனவே, அப்படி ஒன்று நடந்திருக்கவில்லை என்பதே ஊர்ஜிதமாகிறது. ,

இந்தக் கொடூர சம்பவம் நடந்தபோது ஆட்சியில் திமுக இருந்தது. ஈ.வே.ரா.வின் வாரிசுகள் என்பதால் பிராமண வில்லன்கள் இல்லாததால் இந்த விவகாரத்தை வெறும் ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னை போலவே கையாண்டனர். குற்றம் சாட்டப்பட்ட பண்ணையார்கள் உயர் வர்க்கத்தினர். நிலபுலன்கள், கார் பங்களாக்கள் வைத்திருக்கக்கூடியவர்கள்; அவர்கள் நடந்து சென்று தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை என்று 1973-ல் தீர்ப்பு வழங்கப்பட்டதும் தலித்களின் சம்பந்தியான அதே திமுக கருணாநிதியின் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சியோ மூப்பனார் வகையறாவுக்கு ஆதரவாகவே நடந்துகொன்றது. கோபால கிருஷ்ண நாயுடுகாருவே காங்கிரஸ் பிரமுகர்தான். ஏழைப்பங்காளர் எம்.ஜி.ஆரும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.

அதன் பிறகும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக, திமுக கட்சிகளுக்கு காவடி தூக்கியே காலத்தை ஓட்டிவருகின்றன. வெற்றியை ஈட்டித் தரமுடியவில்லையென்றால் எதற்காகப் போரைத் தொடங்கவேண்டும் என்று நிச்சயம் கேட்க முடியாதுதான். ஆனால், தோல்விகளை இந்த அளவுக்கு நேசிப்பார்கள் என்றால் மக்களைப் பணையம் வைத்து இந்த பயங்கர விளையாட்டில் ஏன் ஈடுபடவேண்டும்? கோட்டையைப் பலப்படுத்திய பிறகுதான் போர்க்கொடியைப் பறக்கவிட்டிருக்கவேண்டும் என்று நிச்சயம் சொல்லமுடியாது. சில போர்கள் தொடங்கப்பட்டாகவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எதிரி படையெடுத்து வந்ததும் மக்களை அவர்களிடம் அம்போவென்று விட்டுவிட்டு ஓடுவது கேவலமல்லவா? யானைக்கூட்டம் சிங்கம் புலிகளால் முற்றுகையிடப்பட்டால் குட்டிகளையும் முதிய யானைகளையும் உள்ளே விட்டுவிட்டு ஆண் யானைகள் பாதுகாப்பு வளையத்தை அமைத்துக்கொள்ளும். அந்த யானைகளைக் கொன்ற பிறகே ஒரு புலி குட்டிகளையும் முதியவர்களையும் நெருங்கமுடியும் இங்கோ கம்யூனிஸ்ட்கள் அப்பாவிகளைத் தனியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல என்பதுதான் உண்மை. அதாவது அரசியல் பாடமும் வன்முறைப் பயிற்சியும் பெற்ற கம்யூனிஸ்ட்கள் அல்ல. எளிய தலித் கூலித் தொழிலாளர்களே. அவர்கள் ஊரில் நாட்ட முடிந்த கம்பத்தில் கதிர் அருவாள் கொடி பறந்திருக்கலாம். அவர்களுடைய தோளில் சிறப்பு நிறத் துண்டு போட்டிருந்திருக்கலாம். ஆனால், அடிப்படையில் அவர்கள் இந்து மதத்தின் கடைநிலையில் இருந்த எளிய மனிதர்கள். ஆண்டைகள் 20 ரூபாய் அபராதம் விதித்ததும் கட்டிவிட்டு களத்தில் இறங்கும் எளிய மனிதர்கள். அவர்களைக் கொம்பு சீவிவிட்ட பெருந்தலைவர்கள் எல்லாம் நாகப்பட்டணத்திலும் சென்னையிலும் தில்லியிலும் சொகுசாக தூங்கிக்கொண்டிருந்த அந்த இரவில் இந்த மக்கள் மட்டும் காலனைத் தனியாகச் சந்திக்க வேண்டிவந்தது.

திருமாவளவன் கீழ்வெண்மணிக் கலவரத்தை தலித்கள் மீதான போராகவே சித்திரிக்கிறார். கொல்லப்பட்ட 44 பேரும் தலித்கள் என்பதால் இது கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான வன்முறை அல்ல என்பது அவருடைய வாதம். கம்யூனிஸ்ட்களோ, இறந்தவர்கள் தலித்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு போராட்ட உணர்வை ஊட்டியது கம்யூனிஸ்ட் இயக்கமே என்பதால் அது கம்யூனிஸ்ட் புரட்சியே என்கிறார்கள். கடந்த ஆண்டுவரை டிசம்பர் 25-ல் வீரவணக்கம் செலுத்த இரு தரப்பும் தனித்தனியே வந்துபோவதுதான் வழக்கம். இந்த முறை மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இரு தரப்பும் ஒன்று சேர்ந்து போஸ் கொடுக்கக்கூடும். அல்லது அந்த மேடையிலேயே சண்டையிட்டுப் பிரியவும் கூடும். உண்மையில் அந்த மக்கள் இவர்கள் இருவரையும் தமது பிரதிநிதிகளாகப் பார்க்கவே இல்லை. தீ வைப்பு நடந்தபோது ஆட்சியில் இருந்ததோடு குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சொற்ப தண்டனையுடன் விடுவித்த திமுகவுக்கும் இந்த விஷயத்தில் பெரிதாக எந்த நன்மையும் செய்யாத அதிமுகவுக்குமே ஆதரவு தந்துவருகிறார்கள். ஆண்டைகள் மோசமானவர்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மீட்பர்களாகச் சொல்லிக்கொண்டு வந்த கம்யூனிஸ்ட்கள் அதைவிட மோசமானவர்கள் என்பதை கீழ்வெண்மணி அவர்களுக்குக் காட்டிவிட்டதுபோல.

எதிரிகளை வெல்வதற்கு முன்பாக, யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுடைய ஆதரவைப் பெறுவது அவசியம். இந்த அடிப்படை பலம்கூட இல்லாமல் வெறும் ஊடக ஊடுருவல், அந்நிய நிதி ஆகியவற்றின் மூலம் இயங்குவதிலேயே மனநிறைவடைவது அந்த மக்களுக்கு மட்டுமல்ல கொள்கைக்கும் கட்சிக்கும் சேர்த்து இழைக்கும் மாபெரும் துரோகமே.

சகாயம் : தமிழகத்தின் கெஜ்ரிவால்? ( பள்ளி தொடர்பான சில விஷயங்கள் ) ( பகுதி 2 ) / அத்தியாயம் 31 / B.R. மகாதேவன்

download (5)

இன்று உலகம் விஞ்ஞானத்துறையில் பல உச்சங்களை எட்டியிருக்கிறது. சில நாடுகளில் எந்த நாளில் எந்தெந்த மணித்துளிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைக்கூடத் துல்லியமாகச் சொல்லமுடிகிறது. வெனிஸ் போன்ற இடங்களில் ஊருக்குள் பெருவெள்ளம் வராமல் தடுக்க பெரும் தடுப்புகளை கடலுக்குள்ளேயே உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், நாம் அந்த அளவுக்கு முன்னேறவில்லை. நம் வானிலை ஆய்வுகளின் வெற்றி சதவிகிதம் 50% கூடக் கிடையாது. மழை பெய்யும் என்று பத்து முறை சொன்னால் ஐந்து முறை பலிக்கும். ஐந்து முறை பொய்க்கும். முன்பைவிட இப்போது முன்னேறியிருக்கிறோம் என்பது உண்மையே. ஆனால், இன்னும் ரொம்பதூரம் இதில் பயணப்படவேண்டியிருக்கிறது

இந்த இழப்புக்கு மூன்றாவதும் மிகவும் முக்கியமானதுமான காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை ஆரம்பத்திலேயே திறக்காததுதான். இதற்குத் தீர்வு என்று எதையுமே சொல்ல முடியாது. மழை நிற்காமல் பெய்யும் என்று ஏரி நிர்வாகிகளோ அரசு இயந்திரமோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பெய்த மழை நீரைத் தேக்கி வைத்துக்கொண்டால் கோடை காலத்தைச் சமாளிக்க உதவும் என்று நினைத்துத்தான் ஏரியை ரொம்பவிட்டிருப்பார்கள். இது மிகவும் நியாயமான எண்ணமே.

அதோடு முழுக் கொள்ளளவை எட்டியதும் திறந்துவிடத் தீர்மானித்தபோது அந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவை மட்டுமே கணக்கில் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பெய்த மழையால் அனைத்து ஏரிகளும் ஆறுகளும் சாலைகளும் நிரம்பிவிட்டிருக்கும் நிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. அப்படியே கணக்கில் கொண்டிருந்தாலும் இனியும் திறக்காவிட்டால் ஏரி உடைந்துவிடும் என்ற நிலை வந்த பிறகு திறக்காமல் இருக்கவும் முடியாது. எனவே, ஏற்கெனவே வெள்ளக்காடாக இருந்த சென்னை நகரம் இந்த வெள்ளமும் சேர்ந்துவிடவே மூழ்கிவிட்டது.

உண்மையில் இந்த இழப்புக்கான காரணங்களை சதவிகிதக் கணக்கில் போட்டால் ஆக்கிரமிப்புகள் 30%, பெரு மழை 30% இருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்ததுதான் 40% காரணம். ஒருவேளை அந்த ஏரியைத் திறக்காமல் இருந்திருந்து அது உடையாமலும் இருந்திருக்குமென்றால், இழப்புகள் பத்தில் ஒரு பங்காகக் குறைந்திருக்கும். ஆனால், இந்த இழப்புக்கு அந்த ஏரியின் நிர்வாகிகளையோ அரசி இயந்திரத்தையோ எந்த அளவுக்குக் காரணமாக்க முடியும். இப்படியான ஒரு நிகழ்வு தமிழர்களின் வாழ்க்கையிலேயே முதன் முதலில் நடந்திருக்கிறது. எந்தக் கடந்தகால அறிவும் இதைத் தடுத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட சுனாமி போன்ற பேரிழப்புதான். இனிமேல் இதுபோல் நடக்காமல் தடுக்க இந்த அனுபவம் தரும் பாடமே நமக்கு உதவும். மேலும் இப்படியான இயற்கைப் பேரிடர் இனி பத்து 15 ஆண்டுகளுக்கு வரவும் செய்யாது.

அடுத்த காரணம், வானிலை ஆய்வறிக்கையைப் பொருட்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கவேண்டும். இதிலும் அரசைக் குறை சொல்லிப் பலனில்லை. பி.பி.ஸி.தான் இந்த கன மழையை யூகித்துச் செய்து வெளியிட்டிருந்தது. நம் வானிலை மையங்கள் அப்படியான அழுத்தமான எச்சரிக்கையை வெளியிட்டிருக்கவில்லை. மேலும் நம் வானிலை ஆய்வறிக்கை குறித்து யாருக்குமே நல்ல அபிப்ராயம் கிடையாது. நமது தொழில்நுட்பத்தால் அவ்வளவுதான் முடியும். யாரையும் குறை சொல்லிப் பலனில்லை. ஒருவேளை இந்த வானிலை ஆய்வு நிபுணர்கள் ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்களிடையே முகாமிட்டு தயவுசெய்து இடத்தைக் காலி செய்துவிடுங்கள் என்று காலில் விழுந்து மன்றாடியிருந்தால்கூட ஒருவரும் அதைப் பொருட்படுத்தியிருக்கமாட்டார்கள். எனவே வானிலை ஆய்வறிக்கையை அரசு இயந்திரம் தீவிரமாகப் பரிசீலிக்காததைப் பெரிய தவறாகச் சொல்லவே முடியாது. இப்படி ஒரு இழப்பு வந்தால்தான் இவையெல்லாம் நமக்குப் புரியும். ஹெல்மெட் போட்டுக் கொள்ளாமல் சென்றால் விபத்தில் உயிர் போகும் என்று தெரிந்த பிறகும் எத்தனை பேர் போட்டுக்கொள்கிறார்கள். அப்படி ஒரு விபத்தில் சிக்கி அடிபடுபவர் கூட அடுத்த ஒரு சிலமாதங்களுக்கு வேண்டுமானால் ஹெல்மெட் அணிந்துகொள்வாரே தவிர தொடர்ந்து அவரும் அணிந்துகொள்ளமாட்டார். அது மனித இயல்பு. அப்படியான மனிதர்களைப் பெருவாரியாகக் கொண்ட அரசும் அப்படித்தான் செயல்படும்.

தொடர் வறட்சி, தொடர் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நிச்சயம் கண்டிக்கத்தான் வேண்டும். அது வேறு விஷயம். ஆனால், இது அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இழப்பு. முன் வரலாறு இல்லாதது.

அடுத்ததாக, ஏரிகள் நிரம்பியதும் அதைத் திறந்துவிடுவதற்கு முன்பாக கரையோர மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகச் சொல்லியிருக்கவேண்டும். இதைச் செய்யவில்லை. இதற்கான காரணம், முன்பே சொன்னதுபோல், நகரம் வெள்ளக்காடாகியிருப்பதைக் கணக்கில் கொள்ளாமல் ஏரி நீரின் அளவை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டதால் வந்த வினை. ஒரு தொட்டியின் கொள்ளளவு ஐநூறு லிட்டர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு 100 லிட்டர் கொள்ளளவுகொண்ட வாளியில் இருந்து நீரை அதில் ஊற்றத் தீர்மானிக்கிறீர்கள். தொட்டியின் கொள்ளளவு இதைவிட அதிகம் என்பதால் துணிந்து நீரை ஊற்ற முடிவெடுக்கிறீர்கள். ஆனால், அந்தத் தொட்டியோ ஏற்கெனவே 450 லிட்டர் நிரம்பிவிட்டிருக்கிறது. இதை நீங்கள் கணக்கில் கொள்ளாமல் 100 லிட்டர் வாளியை அதில் கவிழ்த்தால் தண்ணீர் வெளியே பாயத்தான் செய்யும்.

இப்போது 100 லிட்டர் வாளியைக் கவிழ்த்தவர் செய்தது தவறுதான். ஆனால், அவர் தொட்டி நிரம்பி வழிந்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதைச் செய்தார் என்று சொல்ல முடியாது. உண்மையில் 100 லிட்டர் வாளி உடைந்தால் ஏற்படும் இழப்பைத் தடுக்கவே அவர் அந்த வாளி நீரை தொட்டியில் ஊற்றினார். அவருடைய செயல்தான் இழப்புக்குக் காரணம் என்றாலும் அந்த இழப்பை அவர் திட்டமிட்டு உருவாக்கியதாகச் சொல்ல முடியாது. அதுபோல், இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பகுதி பாதிக்கப்படாது என்ற நினைப்பில் இருந்தவர்களே. அவர்களைக் குறையாகச் சொல்லவில்லை. அவர்களுடைய மனநிலை அப்படியாக இருந்திருக்கிறது. 100 வருடங்களாக மூழ்காத சென்னை இந்த மழைக்கா மூழ்கிவிடப்போகிறது என்று மக்கள் நினைத்தார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அதுபோலவே நினைத்தது.

ஒருவேளை இப்படியான பாதிப்புகள் ஏற்படுமென்று தெரிந்தே அதைச் செய்தார்களா..? இப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. இந்திய வானிலை மையங்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய வானிலை மையங்களும் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்திருந்தன. அதன் பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை? ஏரியானது எந்த முன்னறிவிப்பும் இன்றி ஏன் திறந்துவிடப்பட்டது? அதாவது திறந்ததே தெரியாதவகையில் ரகசியமாக அந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது? ஏரியைத் திறந்ததால் அல்ல… கன மழையினால்தான் சென்னை மூழ்கியது என்று சொல்லித் தப்பிக்கத் திட்டமிட்டார்களா..? கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று நினைத்தார்களா..? நிவாரண உதவிகளைத் தந்து வாக்குகளை வென்றெடுக்க இயற்கையே தந்த நல் வாய்ப்பு என்று கருதிச் செயல்பட்டிருக்கிறார்களா..? நடந்தவை கை மீறி நடந்த தவறா… திட்டமிட்டுச் செய்யப்பட்டதா?

பிஹாரில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள இழப்புகள் குறித்துக் கவலைப்பட்ட அப்துல்கலாம், ஒவ்வொரு ஆண்டும் நிவாரணமாகக் கொடுக்கும் தொகைக்கு பதிலாக, ஒரே தடவையில் கணிசமான தொகையை ஒதுக்கிச் சில நீர் மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்தால் வெள்ளத்தில் இருந்து நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும் என்று மாநில அரசுக்கு திட்டம் ஒன்றை அளித்ததாராம். அப்படிச் செய்துவிட்டால் ஆண்டுதோறும் அடித்து மாற்றப் போதிய பணம் கிடைக்காமல் போய்விடுமே என்று அந்தத் திட்டத்தை மாநில அரசு கிடப்பில் போட்டதாம்.

நம் ஊர்களில் முந்தைய காலங்களில் போடப்பட்ட சாலைகளில் இந்த அணுகுமுறையைப் பார்த்திருப்போமே. வருடா வருடம் செம்மண்ணையும் கல்லையும் கொட்டி சாலை என்ற பெயரில் எதையோ போடுவார்கள். ஒவ்வொரு மழையிலும் அது கரைந்து குண்டும் குழியுமாக ஆகும். மீண்டும் அடுத்த கோடையில் சாலையைப் போடுவார்கள். மழைக்காலத்தில் அது கரையும். இப்படி ஆண்டுதோறும் செலவிட்டால்தானே பஞ்சாயத்து தலைவரும் அவருடைய அல்லக்கைகளும் டாட்டா சுமோக்களில் ஊரை வலம்வர முடியும். எனவே, அரசியல்வாதிகள் பிரச்னைகளைத் தீர்க்க அல்ல… அவை தொடர்ந்து இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்… பாத்திரத்தின் ஓட்டை அடைபடவும் கூடாது. இதுதான் மூன்றாம்தர அரசியல்வாதிகளின் இலக்கு. எனவே, அவர்கள் இந்த வெள்ளத்தையும் தமது அரசியல் நலன்களுக்கு உகந்தவகையில் கையாண்டிருக்கக்கூடும்.

இதற்கு என்ன தீர்வு? மக்கள் நேர்மையான அரசியல்வாதிகளைக் கண்டுபிடித்து ஆதரவு தரவேண்டும். நேர்மையான அரசியல்வாதி என்ற பதம் இன்றைய சூழலில் ஏதோ முரண் தொடர் (ஆக்ஸிமோரான்) போலிருக்கிறது. காந்தி, காமராஜர், கக்கன் போன்றவர்கள் வாழ்ந்த சமூகத்தின் இன்றைய நிலை அதிலும் இத்தனை வேகமான வீழ்ச்சி என்பது அதிர்ச்சியையே தருகிறது. உண்மையில் அவர்கள்தான் விதிவிலக்குகள் போலிருக்கிறது. நம் சமூகம் என்றுமே நேர்மையாளர்களுக்கு ஆதரவானது அல்ல போலிருக்கிறது.

எனினும், இன்றைய அரசியல்வாதிகளில் அல்லது சமூகப் பிரபலங்களில் மக்களுக்கு கூடுதல் நன்மை தர முடிந்தவர் யார், அப்படியான கட்சி எது என்பதை அலசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். புது தில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் கெஜ்ரிவால் இருட்டறையில் ஏற்றப்பட்ட தீபம் போல் வந்தார். ஆனால், சோனியா, ஷீலா தீட்சித் மீதான ஊழல் வழக்குகளில் அவர் காட்டும் சுணக்கம், ஊழலின் சக்கரவர்த்தியான லாலுவுடனான கைகோர்ப்பு என தொடர்ந்து அந்த தீபத்தில் இருந்து ஒளியைவிடக் கரும் புகையே அதிகம் வரத் தொடங்கியிருப்பதால் ஏற்கெனவே இருட்டாக இருந்த அறையில் மூச்சுமுட்டல்தான் அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் அண்ணா ஹசாரேயின் தியாகத்தின் மூலம் கிடைத்த நற்பெயரைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் கெஜ்ரிவாலிஸம் முதல் கோணல் முற்றும் கோணலாக ஆகவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக எந்தக் கருத்தியல் அல்லது யார் முன்னிலை பெற வாய்ப்பு இருக்கிறது?

இதற்கு தமிழகத்தின் பிரதான கருத்தியல் என்ன என்று பார்க்கவேண்டும். திராவிட அரசியல், தமிழ் பெருமிதம், நாத்திகம், சாதி எதிர்ப்பு என சொல்லிக்கொண்டாலும் இவற்றின் அடிநாதமாக இருந்ததெல்லாம் சூத்திர மேலாதிக்கமே. தமிழக அரசியல் இயக்கங்களின் இந்து எதிர்ப்பு என்பது வெறும் பேச்சளவிலான ஒன்றுதான். இஸ்லாமியப் பெரும்பான்மையோ கிறிஸ்தவப் பெரும்பான்மையோ இருந்திருந்தால் அவை இந்து சக்திகளை முற்றாக அழித்தொழித்துவிட்டிருக்கும். இந்து சூத்திரரின் அரசியலாக அது இருந்ததால்தான் திராவிட இயக்கத்தின் இந்து எதிர்ப்பு என்பது தமிழகத்தின் அரசுச் சின்னமாக இருக்கும் கோபுரத்தைக்கூட அசைக்க முடியாத அளவுக்கு பல் இல்லாத பாம்பாகவே இருந்தது. திருடன் கையில் சாவியைக் கொடு என்ற பழமொழிக்கு ஏற்ப திமுக கையில் ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழக இந்துக்கள். திராவிட இயக்கத்தினர் பேசிய அசட்டு நாத்திகம் கூட வெறும் இந்து எதிர்ப்பு என்ற அளவில் சுருங்கியதால் அதை யாருமே பொருட்படுத்தவில்லை.

சாதி எதிர்ப்போ சாதி சமத்துவமோ திராவிட இயக்கத்தின் கொள்கையாக என்றுமே இருந்ததில்லை. அது பிராமண மேலாதிக்கத்தைப் பெயர்க்கும் போர்வையில் இடை நிலைசாதி மேலாதிக்கத்தையே கொண்டுவந்திருக்கிறது அப்படியானால், அந்த அளவுக்காவது அது ஒரு முற்போக்கான பங்கை ஆற்றியிருக்கிறது என்று சொல்லலாம் என்று பார்த்தால், அதற்கும் எந்த வழியும் இல்லாத நிலையே இருக்கிறது. ஏனெனில் பிராமண மேலாதிக்கம் அரசியல் தளத்தில் குறைந்திருக்கிறதே தவிர சமூகப் பொருளாதாரத் தளங்களில் அது கருக்குலையாமல் இருக்கவே செய்கிறது. மேலும் இடைநிலை சாதியினர் அப்படியொன்றும் ”பிராமணக் கருத்தியல்’களில் இருந்து விடுபட்டிருக்கவுமில்லை. ஆங்கில வழிக் கல்வி, பெரு வணிக ஆதரவு, தனியார் மயமாக்கம், விவசாய விரோத நடவடிக்கைகள் என எதை எடுத்துக்கொண்டாலும் பிராமண நலன் சார்ந்தே திராவிட இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தலித்களுக்கு இந்த இடை நிலை சாதிகள் இழைத்துவரும் கொடுமைகள் பிராமணர்கள் செய்ததைவிடப் பல மடங்கு அதிகம்.

அப்படியாக திராவிட அரசியல் கொள்கைகள் எல்லாம் வலுவிழந்த அல்லது உருத்திரிந்த நிலையில் சூத்திர ஜாதி அரசியல் இப்போது எதை நோக்கி நகர்கிறது? அது பொருளாதார மேம்பாட்டை இலக்காகக்கொண்டு ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்துகிறதா? தமிழ் தேசியத்தை நோக்கி நகர்கிறதா? இந்து தேசியத்தை நோக்கி நகர்கிறதா? தலித் விரோதத்தை மையமாகக் கொண்டு இடைநிலை வன்முறை அரசியலாக ஆகிறதா?

download (6)

சகாயம் ஐ.ஏ.எஸ். ஊழலற்ற நிர்வாகத்தின் குறியீடாக இருக்கிறார். வைகோ, சீமான் போன்றோர் தமிழ் தேசியத்தின் குறியீடாக இருக்கிறார்கள். இந்து தேசியத்துக்குத் தலைவர் என்று சொல்லும் வகையில் யாரும் இல்லையென்றாலும் திமுக, அதிமுகவுக்கு மாறாக தேசியக் கட்சியான பாஜகவை வளர்த்தெடுக்கும் வாய்ப்பு மத்தியில் இருக்கும் மோதிக்கு இருக்கிறது. அவரோ பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக அதிமுகவின் தோளில் ஏறி அதைச் சாதித்துக் கொள்ளலாமென்று நினைப்பதுபோல் தெரிகிறது. அது மீண்டும் அதிமுக ஆட்சியையே கொண்டுவரும். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்தால் இடைநிலை ஜாதி வன்முறை அரசியலை நோக்கிப் போவதுபோலவே தெரிகிறது. உத்தரபிரதேசத்து முலாயம் போல் ராமதாஸ் ஆகவிரும்புகிறார் என்றால் தமிழகத்தில் அவர் மேலும் தனிமைப்பட்டுத்தான் போவார்.

இந்த நிலையில் இந்த நான்கில் சகாயம் முதலமைச்சராவதே ஒப்பீட்டளவில் தமிழக மக்களுக்குக் கூடுதல் நன்மையைத் தரும். ஆனால், சாதிப் பிரச்னை, இட ஒதுக்கீடு, மதப் பிரச்னை, தமிழ் தேசியம், இந்திய தேசியம், ஈழப் பிரச்னை, அணு உலைகள், விவசாயம், கார்ப்பரேட் கம்பெனிகள், தாய் மொழிக் கல்வி என நம் மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் அவருடைய நிலைப்பாடு என்ன என்று நமக்குத் தெரியாது. இருந்தும் ஊழலற்ற நிர்வாகத்தை அவர் முன்வைக்கிறார் என்பது மிகுந்த நம்பிக்கை தரும் விஷயம். எந்தவொரு விஷயத்தையும் அதேபோல் நேர்மையாகக் கையாள்வாரா..?

உதாரணமாக, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் அரசு அலுவலகங்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும். ஒரு நேர்மையான முதலமைச்சராக அவர் இதைத் தடுக்கக்கூடும். இது நல்ல விஷயம்தான். அரசு என்பது எந்தவொரு மதத்துக்கும் சார்பாக நடக்கக்கூடாதுதான். ஆனால், அதே நேரம் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு கொடுக்கும் மானியத்தை நிறுத்தவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்வார் என்றால் உண்மையிலேயே அரசையும் மதத்தையும் பிரித்து வைக்க நேர்மையாக விரும்புகிறார் என்று புரிந்துகொள்ளமுடியும். கிறிஸ்தவப் பள்ளிகளில் நடக்கும் மத மாற்ற நடவடிக்கைகளை அவர் தடுக்க முன்வந்தார் என்றால் அவர் நியாயவானென்று புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்து மதத்தை மட்டும் கட்டம் கட்டிச் செயல்பட்டால் அவர் திராவிட வெறுப்பு அரசியலின் நவீன நீட்சியாக மட்டுமே எஞ்சுவார். எனவே, அரசு ஒன்று அனைத்து மதங்களையும் ஆட்சிநிர்வாகத்தில் இருந்து பிரிக்க வேண்டும். அல்லது அனைத்தையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். ஏதாவது ஒரு மதத்தை மட்டும் ஓரங்கட்டுவது என்பது அரசின் நடவடிக்கையாக இருக்காது. அரசியல் நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்.

இந்த இடத்தில்தான் திராவிட ஈவேராயிஸத்துக்கு மாற்றாக இந்திய அம்பேத்கரிஸம் முக்கியத்துவம் பெறுகிறது. அம்பேத்கர் மதம் சார்ந்த விமர்சனத்தில் மிகவும் தெளிவானவராக நேர்மையானவராக இருந்தார். இந்து மதத்தை எவ்வளவு விமர்சித்தாரோ அதற்கு இணையாகவே கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் விமர்சித்தார். மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர் அப்படித்தான் அனைத்து அடிப்படைவாத இயக்கங்களையும் எதிர்த்தாகவேண்டும். ஒரு மதத்துக்கு எதிரியாகவும் இன்னொரு மதத்துக்கு அடிவருடியாகவும் இருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. உலக அளவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் செய்ததை வைத்துமட்டுமல்ல, இந்தியாவில் அவர்கள் செய்ததையும் கணக்கில் கொண்டே அந்த மதங்களை அவர் எதிர்த்தார். கிறிஸ்தவ இயக்கங்கள் முன்னெடுத்ததாகச் சொல்லப்படும் கல்வி, மருத்துவ சேவைகள் எல்லாமே அடித்தட்டு மக்களுக்கு எட்டாதவகையில் இருந்ததை அவர் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். கிறிஸ்தவ கான்வெண்ட்கள்தான் நேற்றுவரை கூடுதல் கட்டணம் வசூலித்தவை. தாய்மொழிக் கல்வியை அழித்தவையும் அவையே. அதுபோல் இஸ்லாம் மீது அம்பேத்கர் வைத்த விமர்சனத்தைப் பெயரை நீக்கிவிட்டுப் படித்தால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லியதுபோலவே இருக்கும். சில இடங்களில் அம்பேத்கர் அவர்களையும் மீறிச் சென்று இஸ்லாமியர்களை விமர்சிக்கிறார்.

இந்தியாவில் இந்து மதம் தான் பெரும்பான்மையில் இருக்கிறது. எனவே, பிற மதங்களின் குறைகளை இப்போது விமர்சித்தால் அது இந்து ஆதிக்க சக்திகளுக்கே உதவும் என்ற அரசியல் கூற்றில் நேர்மையும் இல்லை… உலகளாவிய அரசியல் தெளிவும் இல்லை. அம்பேத்கருடைய காலகட்டத்தில் இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். என இந்து இயக்கங்கள் முழு வீச்சில் இயங்கிவந்தன. காந்திகூட ஒருவகையில் இந்து எழுச்சியையே பிரதிநிதித்துவப்படுத்திவந்தார். அப்படியிருந்தும் அம்பேத்கர் பிற மதங்களின் மீதான விமர்சனத்தை மிக நேர்மையாக இந்து சக்திகளைவிடப் படு தீவிரமாக முன்வைத்தார். ஏனென்றால், நாய்க்கு மாற்று ஓநாய்கள் அல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும். இஸ்லாமும் கிறிஸ்தவமும் எங்கோ இருக்கும் மதங்கள் அல்ல.. இந்தியாவில் வெகுவாகக் காலூன்றிவிட்டிருப்பதோடு இந்தியாவைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் மதங்களும்கூட.

வெளிப்படையான இஸ்லாமிய வன்முறைகள், தந்திரமான, கிறிஸ்தவ வன்முறைகள் இவற்றோடு ஒப்பிடுகையில் இந்து ஆதிக்க சக்திகளின் வன்முறைகள் வெகு மிதமானவையே. அமெரிக்க கிறிஸ்தவம் பூர்வகுடி செவ்விந்தியர்களை அடியோடு அழித்துவிட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நீக்ரோக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸோ இஸ்லாமியத் தீவிரவாதத்துக்குப் புதிய வரைமுறைகளை எழுதிக்கொண்டிருக்கிறது. இவற்றுக்கு முன்னால் இந்துக்களின் மிகப் புகழ் பெற்ற குஜராத் கலவரத்தை வைத்துப் பார்த்தால்கூட ஜப்பானிய சுமோக்களுக்கு முன்னால் நிற்கும் லில்லிபுட் போலத்தான் இருக்கும். கம்யூனிஸ மதம் சார்ந்து உருவான வன்முறைகளோடு ஒப்பிட்டால் ஒப்பீட்டு எந்திரமே ஸ்தம்பித்துத்தான் போகும். இந்தப் புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது. அதனால்தான் அவர் மதம் மாற முடிவெடுத்தபோது பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்.

மாதவிலக்கு நாட்களில் கோவிலுக்குப் போவேன் என்று முழங்கும் பெண்ணியவாதிகள் அடிமைச்சின்னமான பர்தாக்களைக் கிழித்து எறிவேன் என்று துணிந்து சொல்லாதவரையில் அவர்கள் நேர்மையான போராளிகளே அல்ல. விநாயகர் சதுர்த்திக்குக் கடலில் கரைக்கப்படும் சிலைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாசுபற்றி அக்கறைகொள்ளும் அரசியல்வாதி, தினம் தினமும் கார், பைக் பயன்படுத்துவதால் காற்று மாசுபடுவதைக் கடுமையாகக் கண்டிப்பவராகவும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் இனிமேல் சைக்கிள்தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்பவராகவும் இருக்கவேண்டும். ஒருவர் செய்யும் செயல் அவருடைய அரசியலின் நீட்சியாக முன்னெடுக்கப்படுகிறதா… சம்பந்தப்பட்ட விஷயம் சார்ந்து நேர்மையாக முன்னெடுக்கப்படுகிறதா என்பது மிகவும் முக்கியம். அந்தவகையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கு முன்னுரிமை தந்து, அனைத்து மதங்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பார் என்றால் சகாயத்துக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கலாம். அதற்கான முன்னோட்டமாக, பேரிடர் நிவாரணப்பணிகளுக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை நியமித்து அந்தக் குழுவுக்குத் தலைவராக சகாயத்தை நியமிக்க அரசை அனைவரும் வற்புறுத்தவேண்டும்.

மக்கள் நலக்கூட்டணி உண்மையில் விஜயகாந்தைச் சேர்த்துக் கொண்டதற்குப் பதிலாக சகாயத்தை முதல்வராக முன்னிறுத்தியிருக்கவேண்டும். இனியும்கூட அப்படிச் செய்ய நேரம் இருக்கிறது. தமிழ் தேசியவாதிகளின் புலிப் பாச, இந்திய விரோதக் கசடுகளை விடுத்து ஈழத் தமிழ் மக்களின் நலன் என்பதை மட்டும் உறிஞ்சிக்கொள்ளும் அன்னமாக சகாயம் செயல்படவேண்டும். கம்யூனிஸ்ட்களிடமிருக்கும் வன்முறைச் செந்நீரை விடுத்து பாட்டாளிவர்க்க நலன் என்ற பாலை மட்டும் உறிஞ்சவேண்டும். திருமாவளவனை அவருடைய சந்தர்ப்பவாத, இந்து விரோத அரசியலில் இருந்து பிரித்து சாதி இந்துக்களோடு கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அழைத்துவரவேண்டும். பூவோடு சேர்வதால் மணக்கும் நார்களாக அவர்களை ஆக்கவேண்டும். வராகங்களோடு சேரும் கன்றாக இவர் ஆகிவிடக்கூடாது..

இப்படியாக, மாணவர்களுக்கு ஒவ்வொரு அரசியல் தரப்பின் சாதக பாதகங்களை முழுமையாக அறிமுகப்படுத்தவேண்டும். நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை படத்தை ஒட்டிய விஷயம் பற்றிச் சொல்லித்தரும்போது, அரசு இயந்திரம் முற்றாக முடங்கிவிட்டதாக எதிர்கட்சிகளும் ஊடகங்களும் ஒரே குரலில் முழங்கினார்கள். எனவே, தான் செய்த நிவாரணங்களைச் சொல்லிக் காட்டியாகவேண்டிய தேவை அரசுக்கு எழுந்தது என்ற அவர்கள் தரப்பு நியாயத்தையும் சொல்லித் தரவேண்டும். அப்படியானால் தமிழக அரசின் சின்னமான கோபுரம் சின்னத்தை ஸ்டிக்கர்களில் பயன்படுத்திக் கொள்ளவேண்டியதுதானே என்று ஒரு மாணவர் எதிர் கேள்வி எழுப்புவார். கோபுரத்தை முன்னிலைப்படுத்தினால் சிறுபான்மை அடிப்படைவாத அமைப்பினர் கோபம் கொள்வார்கள். அவர்கள் கோபம் கொள்ளாவிட்டால்கூட அவர்களுடைய ஆதரவாளர்கள் (ஆதரவாளர்களா… ஆதரவில் இயங்குபவர்களா? Benefactors or beneficiaries?) கோபப்படுவார்கள் என்று வேறொரு மாணவர் பதில் சொல்வார். அப்படியானால் அனைவரும் ஏற்கும் வகையில் இந்திய தேசியக் கொடியை ஸ்டிக்கராகப் பயன்படுத்தியிருக்கவேண்டியதுதானே என்று மாணவர்களே ஒரு தீர்வைக் கண்டடைவார்கள். இதற்கு ஒரு விஷயத்தின் அனைத்துக் கோணங்களையும் முன்வைப்பது அவசியம்.

வெனிஸில் ஓடும் தண்ணீர்தான் கூவத்திலும் ஓடுகிறது! ( பள்ளி தொடர்பான சில விஷயங்கள் ) ( பகுதி 1 ) / அத்தியாயம் 31 / B.R. மகாதேவன்

download

இன்றைய பள்ளிகள் சமுதாயத்திடமிருந்து வெகுவாகத் துண்டிக்கப்பட்டவையாக இருக்கின்றன என்பதுதான் அடுத்த முக்கிய பிரச்னை. ஒவ்வொரு பள்ளியும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வரவேண்டும். அது அவர்களுடைய கல்வியில் ஒரு பாடமாகவே இருக்கவேண்டும்.

உதாரணமாக, ஒரு பள்ளி அமைந்திருக்கும் ஊரில் ஆண்டுதோறும் விவசாயிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அங்கு நீர்பாசன வசதிகளைப் பெருக்குவது எப்படி, வறண்ட நிலத்தில் என்னென்ன வழிகளில் விவசாயம் செய்ய முடியும், என்னென்ன பயிர்களைப் பயிரிட முடியும், வேறு என்னவிதமான தொழில்களை அங்கு செய்வதன்மூலம் அந்த மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர முடியும் என தீர்வுகளைச் சொல்லும்வகையில் அந்த வட்டாரப் பள்ளிகளின் பாடத்திட்டமானது மாற்றி அமைக்கப்படவேண்டும்.

அந்த மாணவர்கள் அமெரிக்க ஐரோப்பிய வரலாறு, பற்றியோ செவ்வாய்க் கிரஹப் பாறைகளின் தன்மை பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை பென்சீனின் மூலக்கூறு வாய்ப்பாடு பற்றிப் படிக்கத் தேவையில்லை. சைன் தீட்டா காஸ்தீட்டா பற்றிப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அவர்கள் நடந்துவரும் வானம் பார்த்த பூமியைப் பற்றிப் படித்தாகவேண்டும்.. உலகில் அதுபோன்ற வறண்ட பகுதிகளில் என்னென்ன விவசாய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன, என்னென்ன பிற தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்று அந்தப் பள்ளி ஆசிரியர்களே ஒரு பாடத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான மதிப்பெண் என்பது ஒவ்வொரு மாணவன் சொல்லும் தீர்வும் அந்தச் சுற்றுவட்டார மக்களின் நெருக்கடிகளை எந்த அளவுக்கு தீர்க்கிறது என்பதன் அடிப்படையிலேயே இருக்கவேண்டும்.

இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தமிழகமே இந்த எல் நினோ மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ள்ளாகியிருக்கிறது. இதுபோல் ஒரு துயரம் இனிமேல் தமிழகத்துக்கு வரக்கூடாது என்ற நோக்கில் தமிழகத்து ஆசிரியர்கள் உடனடியாகப் புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளவேண்டும். இந்த அரையாண்டுத் தேர்வுக்கான பிரதான பாடமாக அதையே வைத்துக் கொள்ளவேண்டும். வானிலை ஆய்வுகளில் கொண்டு வரவேண்டிய தொழில்நுட்ப மாற்றங்களில் ஆரம்பித்து அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்ந்து எடுக்கவேண்டிய சீர்திருத்தங்கள் வரை அனைத்தையுமே மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுத்தரவேண்டும். எந்தவித அரசியல் கறைகளும் படியாத மூளைகளை உடைய பள்ளி மாணவர்கள் இவற்றுக்கு ஒரு தீர்வைக் கண்டு சொல்லும்வகையில் அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.

இந்த மழை வெள்ளப் பாதிப்புக்கு உண்மையில் எது/எவை காரணம்?

download (4)

ஆறுகளின் கரையோரங்களில் வீடுகள் கட்டிக் கொண்டது, மழை நீர் கடலில் சேர்வதற்காக வெட்டப்பட்ட கால்வாய்களை ஆக்கிரமித்தது, ஏரி, ஆறு, கால்வாய்களைத் தூர் வாராமல் விட்டது, வானிலை மைய அறிக்கைகளைக் கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை எடுக்காதது, ஏரி நீரை எந்தவித எச்சரிக்கையும் இன்றித் திறந்துவிட்டது, நிவாரணப்பணிகளை அரசு இயந்திரம் ஒருங்கிணைக்க முன்வராதது, அத்தனை மழை நீரையும் வீணாகக் கடலில் கலக்கவிட்டது (இப்போது மழைநீரால் மூழ்கிய பயிர்கள் தொட்டுத்து வரும் கோடையில் நீரின்றி வாடி அதிலும் இழப்பை ஏற்படுத்தப் போகின்றன) என ஒவ்வொரு விஷயத்தையும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு கட்டுரையாக எழுதச் சொல்லவேண்டும் அல்லது அவர்களையே வகுப்பெடுக்க வைக்கவேண்டும்.

ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் மாணவர்களுக்கு லேசாக அறிமுகம் செய்துவைத்தால் போதும். உதாரணமாக, நதியின் கரையில் உலகில் எங்குமே வீடுகள் இல்லையா என்ன… வெனிஸ் நகரம் முழுக்க முழுக்க நீருக்குள்தான் அமைந்திருக்கிறது. அங்கு மழை பெய்வதில்லையா… அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லையா..? அப்படியானால் அங்கு என்னென்ன வழிமுறைகளில் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.. வெனிஸில் ஓடும் தண்ணீர்தானே கூவத்திலும் ஓடுகிறது? இந்தக் கேள்விகளை ஆசிரியர் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினாலே போதும். மாணவர்கள் வெனிஸ் நகரக் கட்டமைப்பு பற்றி நூலகங்களில் புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். வெனிஸ் நகரம் பற்றிய ஆவணப் படங்களைப் பார்க்கவேண்டும்.

கூவம் ஆறு நகரம் முழுவதையும் இணைத்தபடி செல்கிறது. ஒரு நகருக்குள் ஆறு பாய்வதென்பது மிகப் பெரிய வரம். நல்லதோர் வீணை கிடைத்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதைப்போல் கூவத்தைச் சாக்கடை நதியாக ஆக்கிவிட்டிருக்கிறோம். இந்த வெள்ளத்தைவிட அது சாக்கடையாக இருப்பது மிகப் பெரிய அவலம். துயரம். உலகில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நாடோடிகளாக, காட்டுவாசிகளாக அலைந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நதிக்கரையில் அற்புதமான நகரத்தை அமைத்தவர்கள் சிந்து சரஸ்வதி சமவெளியில் வாழ்ந்த நம் முன்னோர்கள். அந்தப் புராதன நகரில் அமைந்திருந்த கழிவு நீர் கால்வாய் வசதிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்றைய நவீன வாரிசுகளான நம்மிடம் இல்லை.

கூவம் உண்மையில் தமிழ் சமூகத்தின் மாபெரும் குறியீடாகக் காட்சியளிக்கிறது. மாபெரும் கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்களான தமிழ் சமூகத்தினர் இன்று இப்படி தேங்கிய குட்டையாக நாறும் கழிப்பறையாக வீழ்ந்துகிடப்பதை அந்த நதி குறிப்பால் உணர்த்துவதுபோல் இருக்கிறது. நதிகள் எல்லாம் கங்கையே என்று பழம் பெருமை பேசும் வலதுசாரிகளும் சரி… மேற்கத்திய மதிப்பீடுகளை இலக்காக முன்வைத்துச் செயல்படும் இடதுசாரி சக்திகளும் சரி… இரண்டுமே மாநகரின் தலைநகரில் ஓடும் சாக்கடை பற்றி எந்த அவமானமும் அக்கறையும் இல்லாமல் இருந்துவருகிறார்கள்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கும் அண்டை அயலாருக்கும் நேர்ந்த துயரங்களில் ஆரம்பித்து கூவத்தைச் சுத்திகரிப்பதற்கான வழிகள் என்னென்ன என்பதுவரையிலான விஷயங்களே அரையாண்டுத் தேர்வுக்கான பாடமாக இருக்கவேண்டும். மாணவர்கள் சொல்லும் தீர்வுகளை அரசும் பேரிடர் மேலாண்மைக் குழுவும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற துயரம் இனிமேல் நடக்காவண்ணம் முயற்சிகள் எடுக்கவேண்டும்.

உண்மையில் இந்த வெள்ளத்தை அடிப்படையாக வைத்து என்னென்ன பாடங்கள் தயாரிக்கலாம்.

இந்த பேரழிவுக்கு எது/எவை காரணம்…? இனிமேல் நடக்காமல் எப்படித் தடுப்பது? வானிலை ஆய்வுகளில் கொண்டுவரவேண்டிய தொழில்நுட்ப மாற்றங்கள் என்னென்ன? நகர நிர்மாணத்தில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குகள் எவை?

கூவம், அடையாறைச் சுத்தப்படுத்துவது எப்படி?

download (2)

வீடுகள், உடமைகள் இழந்தவர்களுக்கு எவ்வகையான உதவிகள் தேவை..? (உடனடி மற்றும் நீண்ட காலத் தேவைகள்) விளைநிலங்கள் நீரில் மூழ்கியவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை..? உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகள்)

கிடைத்த உதவிகள், உதவி செய்த தன்னார்வ அமைப்புகள் பற்றிய விரிவான ஆவணப் பதிவு. வெள்ள நிவாரணத்தை வைத்து நடக்கும் அரசியல் அசிங்கங்கள்,

இந்திய அளவிலும் உலக அளவிலும் இதுபோல் நடந்த/நடக்கும் பேரிழப்புகள், அந்தந்த அரசுகள் எடுத்த/எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண நடவடிகைகள், பஞ்சாபில் காலி பேன் நதி மீட்டெடுப்புபோல் நடந்த சீர்திருத்த முயற்சிகள் என பல கோணங்களில் பாடங்கள் எடுக்கலாம்.

நமது லட்சியப் பள்ளியில் ஆசிரியர்கள் இப்படிச் செயல்படுவதாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கான விடைகளைப் பார்ப்போம். இந்த விஷயங்கள் ஓரிரு காட்சிகளாகப் படத்தில் இடம்பெறலாம் அல்லது விரிவாகவும் இடம்பெறலாம். எப்படியாயினும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலும் ஆராய்ச்சிகளும் விரிவாக மேற்கொள்ளப்பட்டாகவேண்டும். உதாரணமாக, தலைமை ஆசிரியர் அறையில் திருவள்ளுவர் படம் மாட்டப்பட்டிருந்தால் அது ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சொல்லும். அம்பேத்கரின் படம் மாட்டப்பட்டிருந்தால் அது வேறொரு விஷயத்தைச் சொல்லும். முத்துராமலிங்கரின் படம் மாட்டப்பட்டிருந்தால் அது வேறொரு விஷயத்தைச் சொல்லும். முத்துராமலிங்கரும் இம்மானுவேல் சேகரரும் கை குலுக்குவதுபோல் ஒரு படம் இருந்தால் அது வேறொரு விஷயத்தை அழுத்தமாக, அமைதியாகச் சொல்லும். இந்தக் காட்சி படத்தில் அரை நிமிடம் இடம்பெறுவதாகக் கூட இருக்கலாம். ஆனால், எந்தப் புகைப்படத்தை மாட்டுவது என்ற தீர்மானத்தை எடுக்க மிக விரிவான அலசல் தேவைப்படும். அதனால்தான் ஒவ்வொரு விஷயங்களும் இந்தத் தொடரில் விரிவாகப் பேசப்படுகின்றன.

அந்தவகையில், மழை வெள்ளம் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இந்தப் பேரழிவுக்கு எது/எவை காரணம்? 1.நதி ஆக்கிரமிப்பு, 2.கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், 3.ஏரி நிர்வாகத்தில் ஏற்பட்ட குழறுபடி. இவையே பிரதான காரணங்கள்.

முதல் நிகழ்வுக்கு தமிழகத்தை இதுவரை ஆண்ட அதிமுகவும் திமுகவுமே காரணம். இரண்டாவது இயற்கைப் பேரிடர். இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. மூன்றாவது நிகழ்வுக்கு இன்றைய அதிமுகவே காரணம்.

இப்போது ஆட்சியில் இருப்பது அதிமுகதான் என்றாலும் ஆக்கிரமிப்புகள் திமுக ஆட்சியிலும் நடந்திருக்கின்றன. எனவே, அந்த ஆட்சியும் இதற்குக் காரணமே. இப்போது திமுக ஆட்சியில் இருந்திருந்தாலும் இழப்புகள் இதுபோல் இருந்திருக்கவே செய்யும். சன் டிவி போல் ஜெயா டிவிக்கு ஆளும் கட்சியின் மேல் அதிருப்தியைப் பெருக்கும் சாமர்த்தியம் இருந்திருக்காது. மேலும், திமுக அரசு இதுபோல் செயலற்ற நிலையில் இருந்திருக்கவும் செய்யாது. இப்போது முன்னெடுத்த அளவுக்குத் தீவிரமாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்றாலும் நிச்சயமாக ஜெயலலிதாவை விடப் பலமடங்கு அதிகமாக திமுக மக்களுக்கு ஆதரவாக நின்றிருக்கும். என்றாலும் இவையெல்லாம் இந்த ஆக்கிரமிப்புகளுக்கும் இழப்புக்கும் திமுகவும் காரணம் என்பதை ஒருபோதும் இல்லாமல் ஆக்காது.

download (1)

திமுக., அதிமுக ஆட்சிகள் காரணம் என்றால் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் சம அளவுக்குக் குற்றம் செய்தவர்களாகிறார்கள். அப்படியாக இது ஒரு கூட்டுக் குற்றம். விழிப்பு உணர்வு இல்லாத மக்கள் தவறான தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தவறான தலைவர்கள் மக்கள் விரோதமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். இதில் இருக்கும் வேடிக்கையான வேதனை என்னவென்றால், சாதிரீதியில் தலித்களும், வர்க்கரீதியில் கடைநிலையில் இருப்பவர்களும்தான் இந்த வெள்ளத்தினால் அதிகமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் அவர்கள்தான் தவறான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முன்னணியில் இருக்கவும் செய்கிறார்கள். ஓரளவு விழிப்பு உணர்வு பெற்ற மக்கள் நிர்வாகத் திறமையும் சமூக அக்கறையும் கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று விரும்பினாலும் கடைநிலை மக்கள் அதை நடக்கவிடுவதில்லை. தொலைநோக்குப் பார்வையும் அரசியல் விழிப்பு உணர்வும் இல்லாத காரணத்தால், தமது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதுபோல் மோசமான, திருந்தவே வாய்ப்பு இல்லாத அயோக்கியர்களையே அவர்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

முள் செடியை நட்டு வளர்க்கும் விவசாயி ரோஜாக்களை எதிர்பார்க்க முடியாது. அந்த முட்கள் குத்தி அவன் ரத்த வெள்ளத்தில் மிதந்தால் யார்தான் காப்பாற்ற முடியும்? அரசியல் விழிப்பு உணர்வு என்பது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை. தமது பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன… யார் அதைப் பேசுகிறார்கள். யார் செய்து தருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாததல்ல.

தேர்தலுக்கு வாக்குக் கேட்க வருபவரைப் பார்த்து தெருவில் ஓடும் சாக்கடையைச் சுத்தம் செய்துகொடு… சாலை வசதி செய்துகொடு, தெருவிளக்கைச் சரி செய்துகொடு, மழை பெய்தால் என்ன பாதுகாப்பு வேண்டுமோ அதைச் செய்துகொடு என்று நிபந்தனை விதிக்கவேண்டும். அல்லது அந்தத் தேவைகளைத் தாமே சரி செய்துகொள்ளத் தேவையான காசை கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும். இலவச டி.வி, கிரைண்டர் வேண்டாம் என்று சொல்லவேண்டும்.

தேர்தல் நேரத்தில்தான் இப்படிச் செய்யமுடியும் என்றில்லை. அது முடிந்த பிறகும் பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி. மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் அரசு அதிகரிகள் வரை அனைவரையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கமுடியும். மக்கள் ஆட்சி என்பது அதுதான். இன்றைய அரசியல் அமைப்பில் அவை எல்லாவற்றுக்குமான வசதி வாய்ப்புகள் உண்டு. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாகக் கடைநிலை மக்களிடையே ஒற்றுமை வேண்டும். வலையில் சிக்கிய பறவைகள் தப்பிக்க வேண்டுமென்றால் ஒன்றாகச் சிறகடித்தாகவேண்டும்.

இந்த மக்கள் செய்திருக்கும் இன்னொரு மிகப் பெரிய தவறு ஆற்றின் கரையிலும் உபரி நீர் கடலில் கலக்க உதவும் கால்வாய்களிலும் வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் அப்படியான தவறுகளைச் செய்தவர்களே. உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும். இந்த முறைகேடான ஆக்கிரமிப்புக்கு அனுமதி கொடுத்த அரசும் தானே இதற்குக் காரணம் என்று சொல்வார்கள். ஒருவேளை ஏதேனும் ஒரு அரசு இவர்களை இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்திருந்தால் அமைதியாக அதை ஏற்றுக்கொண்டு போயிருப்பார்களா? இன்று அரசைக் குறை சொல்பவர்களும் அனைத்து எதிர்கட்சிகளும் வரிந்துகட்டிக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கே ஆதரவாக நின்றிருப்பார்கள். இவ்வளவு ஏன்… இப்போது இத்தகைய பேரிடர் நேர்ந்தபிறகு அரசு அந்த மக்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் ஒதுக்கித் தந்து போகச் சொன்னால் போவார்களா..? அதே இடத்தில் காரைவீடு கட்டித்தரச் சொல்லிக் கேட்பார்கள். மீண்டும் வெள்ளம் வந்தால் தெருவில் நின்று அழுவார்கள்.

அதுபோல், கடைநிலை மக்கள் சாராயத்துக்குச் செலவிடும் காசை மிச்சப்படுத்தினாலே போதும் அவர்களுடைய பல பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொண்டுவிட முடியும். குறைந்தபட்சம் அவர்களுடைய வசிப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவாவது முடியும். அனைத்துக்கும் அரசையும் அதிகாரவர்க்கத்தையும் பழி சொல்லிப் பலனில்லை. ஏனெனில் பாதிக்கப்படப்போவது எளிய மக்கள்தான். என் பசி தீர வேண்டுமென்றால் நான்தான் சாப்பிட்டாக வேண்டும். என் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் சுமையை நான்தான் இறக்கிவைத்தாகவேண்டும். பிரச்னை என்னவென்றால், மனித இனத்தின் ஆதாரமான இரண்டு குணங்கள்: சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது, சூழலை மாற்றி அமைக்க முயற்சி செய்வது. இதில் எளிய மக்கள் முதலாவதையே பிரதானமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பெருமழையினால் வீடுகளுக்குள் கொண்டுவரப்பட்ட சாக்கடைக் கழிவுகளைப் பார்த்துப் பலர் பதறுகிறார்கள். ஒரு சில நாட்களில் இவை அகற்றப்பட்டுவிடும். ஆனால், வாழ்நாள் முழுவதும் அந்தக் கழிவுகளின் நடுவிலேயே வாழும் மக்களும் இதே சென்னையில் கூவம், அடையாறு கரைகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமது வசிப்பிடத்தை ஏன் தூய்மைப்படுத்திக் கொள்வதில்லை? ஏனென்றால், அவர்கள் அந்த அசுத்தத்தை ஒரு பொருட்டாகக் கருதுவதேயில்லை. தமது வசிப்பிடத்தைத் தூய்மைப்படுத்திவிட்டால் அதில் வேறு பலர் வசிக்கவந்துவிடக்கூடும் என்று அஞ்சுகிறார்களோ என்னவோ. அசுத்தம் என்பது அவர்களுக்கு பலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறதுபோல.

ஒரு யாசகருக்கு அவருடைய அழுக்கான உடைகளும் தோற்றமும்தான் முதலீடு. அவருக்குக் கிடைக்கும் பணத்தை வைத்துத் தனது உடைகளைத் துவைத்துப் போட்டுக் கொண்டாலோ குளித்து பவுடர் போட்டுக்கொண்டு வந்து நின்றாலோ யாரும் காசு தரமாட்டார்கள். இந்த இடத்தில் வேறொரு கேள்வி வருகிறது. யாசகரின் அழுக்கான தோற்றத்துக்கு அவர்தான் காரணமா… அவர் அப்படி இருந்தால்தான் காசு தருவேன் என்று சொல்லும் சமூகம் காரணமா..? துறவிகளின் தோற்றத்தில் இருக்கும் பலருக்கும் சமூகம் கருணையுடன் உணவளிக்கத்தான் செய்கிறது. ஒரு யாசகர் நன்கு குளித்து உரிய மதச் சின்னங்களைத் தரித்து யாசகம் கேட்டால் தரத்தான் செய்கிறார்கள். எனவே, யாசகரின் அழுக்குத் தோற்றத்துக்குச் சமூகத்தைவிட அவரேதான் காரணம். அதுபோல் கூவம் நதிக்கரையில் வசிப்பவர்களும் தமது அழுக்குகளை கேடயமாகப் பயன்படுத்தாமல் தமது பகுதியைத் தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்.

அந்தவகையில் கரையோரக் குடிசைவாசிகளின் பெரும்பாலான துயரங்களுக்கு அவர்களும்தான் காரணம். சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்காதது, முறைகேடான ஆக்கிரமிப்புகள், தம்மால் முடிந்த தீர்வுகளைக்கூட அமல்படுத்தாமல் இருப்பது, போதை வஸ்துகளுக்கு அடிமையாவது என பல தவறுகள் அவர்கள் பக்கம் இருக்கின்றன. அப்படியாக அரசு, மக்கள் என இரு தரப்பிலும் இருக்கும் தவறுகளுக்கு யாரோ ஒருவரை மட்டும் தண்டிக்கலாம் அதாவது இந்த அரசை வரும் தேர்தலில் தோற்கடிக்கலாம். அல்லது இந்தக் குடிசைவாசிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம்பெயர்க்கலாம். அல்லது இருவரையும் தண்டிக்கலாம். ஆனால், இரண்டு தரப்பின் தவறையும் மன்னித்து இருவருக்கும் நன்மையும் செய்யலாம். வேறன்ன…. நம்மில் ஒருவர்தானே அவர்கள் இருவருமே. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இந்தத் தவறுகளில் பொறுப்பு உண்டு அல்லவா..? அப்படி நம் பொறுப்பை உணர்ந்துகொண்டு இந்த சாபத்தை வரமாக மாற்றிக் கொள்ள முடியுமா? குழந்தைகள் முன்வைக்கும் தீர்வு அப்படியாகத்தானே இருக்கும்.

1. அந்த வீடுகளில் வசித்தவர்கள் அனைவருக்கும் சென்னையில் இருந்து 30-40 கி.மீ தொலைவில் இருக்கும் புற நகர் பகுதிகளில் அதைவிட வசதியான காற்றோட்டம் மிகுந்த குடிசைகளை அமைத்துத் தரவேண்டும் (சிமெண்ட் வீடுகள் வசதியின் அறிகுறி அல்ல). கூரை வீடுகள் என்றால் தீப்பற்றிவிடும் என்ற பயம் இருந்தால் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் போடலாம்.அவற்றின் மேலே பாகற்காய், அவரைக்காய் போன்றவற்றுக்கான சிறு படர் கொடிப் பந்தல்களை அமைத்து வெய்யிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

2. அவர்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் என்னவாக இருந்திருந்தாலும் ஒரு குடும்பத்துக்குத் தேவைப்படும் அடிப்படைப் பொருட்களான மின் விசிறி, ட்யூப்லைட்கள், கிரைண்டர், மிக்ஸி, ஸ்டவ் அடுப்பு, டி.வி. சைக்கிள் என அனைத்துமே அவர்களுக்குத் தரப்படவேண்டும்.

3. அந்தப் பகுதி குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளின் நல் அம்சங்களும் தனியார் பள்ளிகளின் நல் அம்சங்களும் இணைந்த பள்ளிகள் கட்டித்தரப்படவேண்டும்.

4. அதுபோல் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நல் அம்சங்கள் நிறைந்த மருத்துவமனைகளைக் கட்டித் தரவேண்டும்.

5. இடை மற்றும் கடை நிலை வேலைகளைச் செய்து வரும் அந்த மக்கள் பணியிடங்களுக்கு வந்து போக கேப் வசதி செய்து தரவேண்டும்.

6. அனைத்துக் குடும்பத்தினருக்கும் ஆடு, மாடு, கோழி போன்றவை தரப்படவேண்டும். அவற்றுக்கான புல்வெளிகள், தீவனப் பயிர்களுக்கான நிலம், மூலிகைத் தோட்டம் அமைத்துத் தரவேண்டும்.

7. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் கீரை, மிளகாய், தக்காளி, மலர்ச் செடிகள் போன்ற சிறியவகைத் தாவரங்கள் பயிரிட சிறிய இடமும் சேர்த்துத் தரவேண்டும்.

இதற்கெல்லாம் நிறைய நிதி தேவைப்படும். மத்திய அரசிடம் கேட்டுப் பெறலாம்தான். ஆனால், வேறு எளிய வழிகளும் இருக்கின்றன. சாராய அதிபர்கள் இத்தனை ஆண்டுகாலம் அள்ளிக் குவித்திருக்கும் பணத்தில் இருந்து இந்த வீடுகளைக் கட்டித் தரச் சொல்லலாம். ஒருவகையில் இந்த மக்களிடமிருந்து அள்ளிச் சென்றது அவர்கள்தானே. அல்லது இந்த இழப்பை ஏற்படுத்திய கூவத்தைவைத்தே இந்த நிவாரணப் பணிகளுக்கான பணத்தை மீட்டெடுக்கலாம். அதற்கான எளிய வழி கூவத்தை வெனிஸ் ஆறுபோல் ஆக்குவதுதான்.
download (3)

1. முதலில், அடையாறு, கூவம் நதியின் கரைகளைப் பலப்படுத்தி ஆறுகளை ஆழப்படுத்தி சுத்திகரிக்கவேண்டும்.

2. உபரி நீரும் கழிவு நீரும் எளிதில் கடலில் கலக்க வழி செய்யவேண்டும். அல்லது கழிவு நீரைச் சுத்தப்படுத்தி குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அதில் கிடைக்கும் சேற்றை உரமாக்கிக் கொள்ளலாம்.

3. ஆற்றின் கரைகளில் நடை பாதை, சைக்கிள் வழித்தடம் (மட்டுமே) அமைக்கவேண்டும்.

4. அந்த நடைபாதையில் பூங்காக்களும் அமைக்கவேண்டும்.

5. ஆறு, கால்வாய்களை நீர் வழிப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இணைக்கவேண்டும்.

6. காஷ்மீர் கேரளா போல் படகுவீடுகள், கொடைக்கானல் போல் சுற்றுலா படகுகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

7. கரைகளை ஒட்டிய பகுதியில் நடைபாதைக்கும், சைக்கிள் தடத்துக்கும் போதிய இடம் விட்டதுபோக எஞ்சிய இடத்தில் திறந்தவெளி ஹோட்டல்கள், கடைகள் அமைக்கவேண்டும்.

8. கூவம்- அடையாறு இவற்றை மீட்டெடுத்து இத்தகைய வசதிகளைச் செய்து தர ஒரு தனி அமைப்பை நிறுவவேண்டும். தனியார் இதற்கு முன்வரும்பட்சத்தில் அரசு கொடுக்கும் மானியங்கள், சலுகைகள் போக ஐந்தாண்டுகளில் போட்ட முதலீட்டைவிட அதிகப் பணத்தை அவர்களால் ஈட்டிவிட முடியும். அதன் பிறகு அவர்கள் இந்த அமைப்பை அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

9. அந்த ஐந்தாண்டு காலத்தில் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் 10% ஐ கூவம், அடையாறு கரைகளில் குடிசை அமைத்துத் தங்கியிருந்தவர்களுடைய நலனுக்குச் செலவிடவேண்டும்.

10.ஐந்தாண்டுகள் கழித்து அரசின் கைக்கு அந்த வருவாய் வரத் தொடங்கியதும் அவர்கள் முப்பது சதவிகிதத்தை அந்த மக்களின் நலனுக்குச் செலவிடவேண்டும்.

நம் சிறையின் சாவி நம் இடுப்பில்தான் இருக்கிறது.

கூவம் தங்கம் புதைந்திருக்கும் பூமி; அதை மலம் கழிக்கப் பயன்படுத்திவருகிறோம்.

சந்தன மரத்தை வெட்டி விறகாக்கி அடுப்பெரித்து வருகிறோம்

முப்போகம் விளையும் நெல் வயலைப் புதர் மண்ட வைத்திருக்கும் விவசாயி நாம்

அமுதத்தை விஷமாக்கி வைத்திருக்கிறோம்.

காம தேனுவைப் பொதி மாடாக்கி வைத்திருக்கிறோம்.

கற்பக விருட்சத்தின் கீழே சோம்பிப் படுத்திருக்கிறோம்..

((((((((((((())))))))))))))))

இது தூக்கி எறியும் காலம் பகுதி 2 ) பள்ளி தொடர்பான சில விஷயங்கள் ( பகுதி 4 ) / அத்தியாயம் 30 / B.R. மகாதேவன் !

download (1)

வகுப்பறை டெஸ்குகள், ஆசிரியர்கள், புத்தகங்கள், தேர்வுகள் எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்… இது தூக்கி எறியும் காலம்!

பரிசுகள் நீங்கலாக, குழந்தைகளுக்குப் படிப்பும் பள்ளிக்கூடமும் பிடித்தமானதாக ஆகவேண்டுமென்றால் முதலில் பல விஷயங்களைத் தூக்கி எறியவேண்டும்.

முதல் வேலையாக வகுப்பறையில் இருக்கும் டெஸ்க்குளைத் தூக்கி எறியவேண்டும். அதுதான் குழந்தைகளை விளையாடவிடாமல் தடுக்கின்றன. வகுப்பறை என்பது ஓடி விளையாடும் இடமாக இருக்கவேண்டும். குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரு என்று சொல்வதே பெரிய அராஜகம்தான். குரங்குக் குட்டிகளை அங்குமிங்கும் தாவாதே என்று சொல்வதைப் போல் கொடூரமானது. ஆசிரியர் குழந்தைகளுடன் ஓடி விளையாடியே பாடங்களை எடுக்கவேண்டும்.

வகுப்புச் சுவர்களில் பல போர்டுகள் இருக்கவேண்டும். நோட் புத்தகத்தில் எழுதுவதற்கு பதிலாகக் குழந்தைகளும் மார்க்கர்களால் போர்டில் எழுதிப் படிக்கலாம். அது குழந்தைகளுக்கு ஒருவித பெருமித உணர்வையும் தன்னம்பிக்கையையும் தரும். கை திருந்த வேண்டும். எழுத்துகள் மணி மணியாக இருக்கவேண்டும் என்ற கவலைகள் எல்லாம் இன்றைய இணைய – கணினித் தலைமுறைக்குத் தேவையில்லை. கணினி விசைப் பலகை என்ன கிறுக்கல் கிறுக்குபவருடைய எழுத்துகளையும் மணிமணியாக்கித் தந்துவிடும். எனவே, குழந்தைகளை ஆசிரியரைப் போலவே போர்டுகளில் ஓடியாடி எழுதச் சொல்லலாம். ஓடிக் களைத்த பிறகு வட்ட வடிவில் அமர்ந்து பாடம் எடுக்கலாம்.

அடுத்ததாக வகுப்பறை தனியாகவும் நூலகம் தனியாகவும் இன்றைய பள்ளிகளில் இருக்கின்றன. அதை மாற்றி ஒவ்வொரு வகுப்பறையிலும் பாடம் தொடர்பான மற்றும் அல்லாத புத்தகங்கள் எளிதில் எடுக்கும் வகையில் இருக்கவேண்டும். ஏதாவது குழந்தை பாடத்துக்கு பதிலாக கதை புத்தகத்தை எடுத்துப் படிக்க விரும்பினால் அதை அனுமதிக்கவேண்டும். வரைவதில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு அதற்கான சுதந்தரத்தைத் தரவேண்டும். குழந்தை வரையும் படத்தில் இருந்து அவர்களுக்கான பாடத்தை ஆசிரியர் வடிவமைக்கவேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை மழை மேகங்களையும் மரங்களையும் வரைந்தால் கடல் நீர் ஆவியாவதில் ஆரம்பித்து மழையாகப் பொழிவதுவரையான நிகழ்வுகளை அதன் மூலம் விளக்கலாம். குழந்தை வரையும் படத்தில் இருக்கும் மரத்தில் இருந்து மழைக்கும் மரத்துக்குமான தொடர்பை விளக்கலாம். சிலபஸ் என்பது இருக்கவேண்டும். ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் அதை வெவ்வேறு வகையில் கற்றுத் தரவேண்டும். சமத்துவம் என்பது அனைத்து குழந்தைகள் மீதும் சம அக்கறை என்பதாக இருக்கவேண்டுமே தவிர எல்லா குழந்தைகளுக்கும் ஒரேவிதமாகக் கற்றுக் கொடுத்தல் என்பதாக இருக்கவேண்டியதில்லை.

ஃபின்லாந்து வகுப்பறைகளில் குழந்தைகள் தாம் பார்த்த கார்ட்டூன் படங்களைப் பற்றிப் பேச என்று தினமும் ஒரு வகுப்பு உண்டு. அந்த அரை மணி நேர வகுப்பில் குழந்தைகள் தாம் பார்த்த அல்லது பகிர்ந்துகொள்ள விரும்பும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். சில குழந்தைகள் தனது நண்பர்களுடன் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த வகுப்புக்குமே அதைக் கதையாகச் சொல்ல வைக்கலாம்.

இப்போது ஆண்டு விழா, ஆசிரியர் தினம் போன்றவற்றின் போது பள்ளிகள் அலங்கரிக்கப்படுகின்றன. அன்றைய தினம் குழந்தைகள் மிகவும் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கலாம். அதையே மாதத்துக்கு ஒரு தடவை, வாரத்துக்கு ஒரு தடவை என விரிவுபடுத்திக்கொள்ளலாம். குழந்தைகளுடைய விருப்பப்படி வகுப்பறையைத் தினமும்கூட அலங்கரிக்கலாம். ஜிகினா பேப்பரை ஒரு குழந்தை கொண்டுவந்தால் அதை வைத்து வகுப்பறையை அலங்கரித்தபடியே காகிதத் தயாரிப்பு பற்றிச் சொல்லித்தரலாம். ஒரு குழந்தை பலூன் கொண்டுவந்தால் அதை வைத்து காற்றின் அழுத்தத்தில் ஆரம்பித்து ஹாட் ஏர் பலூன், ராக்கெட் வரை கதையாகச் சொல்லித் தரலாம். இதில் பல புதுமைகளைப் புகுத்துவதன் மூலம் அது அலுத்துப் போகாமலும் அதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுத்தரவும் வழி ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இப்போதைய பள்ளிகளில் ப்ராஜெக்ட்கள் என்று பல விஷயங்களைப் பெற்றோரை விட்டுச் செய்யச் சொல்கிறார்கள். அதில் பெரும்பாலானவை பெற்றோரே செய்யும் வகையிலேயே இருக்கின்றன. பெற்றோர் அதைச் செய்யும்போது குழந்தையுடன் கலந்து பேசிச் செய்ய வேண்டும் என்பது சரிதான். ஆனால், அதையே குழந்தைகள் தமக்குள் கலந்து பேசியும் ஆசிரியருடன் கலந்து பேசியும் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். வேறென்ன அதுவும் ஒருவகைக் கல்விதானே.

குழந்தைகளுக்குச் செடிகளை நட்டுப் பராமரிப்பதில் ஆர்வம் இருக்கும். அவர்களைப் பள்ளித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று தாவரவியல் பாடத்தை எடுக்கவேண்டும். விதையில் இருந்து செடி எப்படி முளைக்கிறது, ஒளிச்சேர்க்கை எப்படி நடக்கிறது, மலர்கள் எப்படி உருவாகின்றன, மகரந்தச் சேர்க்கை எப்படி நடக்கிறது, காய் எப்படிக் காய்க்கிறது, அது எப்படிக் கனியாகிறது… என்னென்ன வகைகளில் எல்லாம் விதைகள் பரவுகின்றன என தோட்டத்தில் நடந்தபடியே அனைத்தையும் சொல்லித்தரலாம். சில குழந்தைகள் இந்த லெக்சரைக் கேட்காமல் மண்புழுவைத் தோண்டி எடுத்துக்கொண்டும் வண்ணத்துப் பூச்சியைத் துரத்திக் கொண்டுமிருந்தால் அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம். நீங்கள் சொல்லித்தரும் பாடத்தைக் குழந்தைகள் தமக்குள் பேசிக் கொள்ளும்போது பகிர்ந்துகொள்வார்கள். அல்லது ஏதேனும் குழந்தைக்கு அது தெரியவில்லையென்றால் அடுத்த நாள் நீங்கள் ஏதேனும் வகுப்பெடுக்கும்போது அவனாகவே வந்து நீங்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பிப்பான். கவலையே வேண்டாம்.

இதையெல்லாம் ஏதோ பாடம் எடுக்கிறோம் என்ற தோரணையில் இல்லாமல் சாதாரணமாகப் பேசுவது போலவே சொல்லித் தரவேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்குக் கல்வி சுமையாக இல்லாமல் இருக்கும். உங்கள் குழந்தைகளை மிருககாட்சிசாலைக்கு, மியூஸியத்துக்கு அல்லது கடலுக்கு என எங்காவது அழைத்துச் சென்றிருப்பீர்கள். அப்போது குழந்தை வியப்பில் ஆழ்ந்து பல கேள்விகளைக் கேட்டிருக்கும். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லியிருப்பீர்கள். அதுதான் கல்வி. அன்று நீங்கள்தான் ஆசிரியர். அந்த இடம் தான் பள்ளி.

அதுபோல் எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம் ஒரு மூலிகைத் தோட்டம் இருந்தாகவேண்டும். போதிய இட வசதி இல்லையென்றால் ஷெல்ஃப் ஃபார்மிங் செய்யலாம். மண் நிரம்பிய பாட்டில்களைப சுவரில் பொருத்தி அதில் செடிகளை வளர்க்கலாம். இரும்புச் சத்து, கால்சியம் சத்து குறைவான குழந்தைகளுக்கு டானிக் தருவதற்கு பதிலாக கீரைகளைச் சாப்பிடத் தரலாம். கீரைகளை அந்தக் குழந்தைகளையே விட்டு வளர்க்க வைத்தால் அவர்கள் நிச்சயம் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் சித்த, ஆயுர்வேத வழிமுறையிலான லேகியங்கள், மூலிகைச் சாறுகள், சூர்ணங்கள் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவேண்டும். மனிதர்கள் அனைவருக்கும் தேவையான, அனைவரையும் பாதிக்கக்கூடிய விஷயம் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் இருந்தாகவேண்டும். அப்படியாக அடிப்படை மருத்துவம் என்பது எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக இருந்தாகவேண்டும்.

அடுத்ததாகத் தூக்கி எறிய வேண்டியது ஆசிரியர்களை!

பயப்படவேண்டாம். இன்றைய ஆசிரியர்கள் எப்படியான ஆசிரியத்தனத்தோடு இருக்கிறார்களோ அந்த அம்சத்தைத் தூக்கி எறியவேண்டும். அதாவது ஆசிரியர்கள் மாணவர்களின் நண்பர்களாகவேண்டும். இதற்கு ஒரு எளிய வழி, மாணவர்களின் நண்பர்களையே ஆசிரியர்களாக ஆக்கிவிடவேண்டும். அதாவது மூன்றாம் வகுப்பு மாணவனை ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பை எடுக்கவைக்கவேண்டும். ஐந்தாம் வகுப்பு மாணவரை மூன்றாம் நான்காம் வகுப்பு எடுக்கவைக்கவேண்டும். இதனால், இளைய மாணவர்களுக்கு ஆசிரியர் மீதான பிரமிப்பும் பயமும் விலகும். மூத்த மாணவர்களுக்கும் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவற்றில் கூடுதல் புரிதலும் பரிச்சயமும் பெற முடியும். இள வயது மாணவர்களின் கல்வி நம் கையில் இருக்கிறது என்ற எண்ணம் அவர்களை மேலும் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் படிப்பில் ஈடுபட வைக்கும்.

ஆண்ட்ரூ பெல் மற்றும் லங்காஸ்டர் போன்ற பிரிட்டிஷ் கல்வியலாளர்கள் இங்கிலாந்தில் பழங்காலத்தில் அறிமுகப்படுத்திய வழிமுறை. கற்றுக் கொடுப்பவரே கற்றுக் கொள்கிறார் அதாவது கற்றுக் கொடுப்பதன் மூலம் கற்றுக்கொள்ளுதல் என்பதாக அந்த வழிமுறையை முன்வைத்தனர். மானிட்டோரியல் வழிமுறை அல்லது இன்று மிக்ஸட் கிளாஸ் என்று அழைக்கப்படும் அந்த வகைக் கல்வி முறையின் வேர்கள் நமது இந்திய பாரம்பரியக் கல்வியில் இருந்தன என்பது உலக அளவில் மறைக்கப்பட்ட ஓர் உண்மை. பெல்லும் லங்காஸ்டரும் கூடத் தங்களுடைய கல்விமுறையை இந்தியாவில் இருந்து கற்றுக் கொண்டதாக வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர சில இடங்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் (இந்த இடத்தில் அது பற்றி இவ்வளவு போதும். நமது பள்ளியில் மூத்த மாணவர்களே இளைய மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதை மட்டுமே எடுத்துக்கொள்வோம்).

இதையே கல்லூரி மாணவர்கள் சில தினங்கள் வந்து வகுப்பெடுப்பது, தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது என விரிவுபடுத்திக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற நிபுணர்களைக் (ஆசிரியர்களைக்) கொண்டு கற்றுத் தரும் வழிமுறை மாணவர்களின் உள்ளார்ந்த இயல்புகளை அதிகம் பொருட்படுத்துவதில்லை. எனவே, ஆசிரியத்துறையில் நிபுணத்துவம் இல்லாவிட்டாலும் மாணவர்களுக்கு நெருக்கமான நபர்களைக் கொண்டு கற்றுத் தருவது நல்லதுதான். அதுவும் இன்றைய நம் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு ஆசிரியத் துறையில் எந்தப் பெரிய நிபுணத்துவமும் இல்லை. அப்படியாக அவர்கள் மாணவர்களுக்கு நெருக்கமானவர்களாகவும் இல்லை… கல்வியில் நிபுணர்களாகவும் இல்லை. கல்வியில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் பெருமளவில் உருவாகிவரும் வரையில் கல்வியை மாணவர்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்டாவது கற்றுத் தரலாம்.

அடுத்ததாகப் புத்தகங்களைத் தூக்கி எறியவேண்டும் என்று குழந்தைகள் ஆவேசமாகக் கத்துவது உங்கள் காதுகளில் கேட்கிறதா..? சரி… அப்படியே செய்வோம். ஆனால், கொஞ்சம் கனிவோடு இதைச் செய்வோம். புத்தகங்களைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக அவற்றைக் கொஞ்சம் மெதுவாக ஓரமாக ஒதுக்கி வைப்போம். பாடங்கள் என்றால் புத்தகத்தில் இருந்துதான் கற்க வேண்டுமா என்ன? கதை சொல்வதன் மூலமாக, நாடகமாக நடிப்பதன் மூலமாக, திரைப்படமாகக் கற்றுக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான வழிமுறை அதுவே. ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் மட்டுமே புத்தகத்தை வைத்துக் கொள்ளட்டும். கற்றுத் தரவேண்டிய விஷயங்களை அவர் கதையாக, நாடகமாகவே சொல்லித் தரட்டும். பெரிய புராணச் செய்யுள் என்றால், அந்தப் பாடல் அரங்கேற்றப்பட்டதை அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை நாடகமாக நடித்துக் காட்டலாம். விஞ்ஞானப் பாடம் என்றால், அதை முழுக்க முழுக்க வகுப்பறையில் செய்தே காட்டலாம்.

கூட்டல் கணக்கு சொல்லித்தர வேண்டுமென்றால், வகுப்பறையிலேயே ஒரு கடை போல் வடிவமைத்து மாணவர்களிடம் சில்லறைகளைக் கொடுத்து பொருட்களை வாங்கிவரச் சொல்லலாம். 12 ரூபாய்க்குப் பொருள் வாங்கிவரச் சொல்லி ஐந்து ரூபாய்களும் இரண்டு ரூபாய்களும் சில்லறைகளும் தந்துவிடவேண்டும். இரண்டு ஐந்து ரூபாயையும் ஒரு இரண்டு ரூபாயையும் மூத்த மாணவன் எடுத்துக் கொடுக்க உடன் செல்லும் இளைய மாணவன் அதைப் பார்த்து ஐந்து + ஐந்து + இரண்டு = 12 என்று புரிந்துகொள்வார்.

எளிய விஷயங்களை இப்படிச் சொல்லித் தந்துவிட முடியும். சைன் தீட்டா, காஸ் திட்டாவை எப்படி எளிதாகக் கற்றுத் தருவது? டிஃப்ரென்ஷியல் கால்குலஸை எப்படி சுவாரசியமாக்குவது? இது நிச்சயம் சிரமம்தான். கணிதத்தில் ஆர்வம் இருந்தால் மட்டுமே இவற்றையெல்லாம் படிக்க முடியும். ஒருவருக்கு அடிப்படைக் கணிதம் தாண்டி இதுபோன்ற அடுத்தநிலைக் கணிதத்தில் ஈடுபாடு இல்லையென்றால் என்ன செய்யலாம்? நிச்சயமாக அதைப் படிக்க வேண்டாம் என்று சொல்லிவிடலாம். வாழ்க்கையில் நேரடியாகப் பயன்படப்போகாத ஒன்றை பத்து பதினைந்து வருடங்கள் படிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இளங்கலை, முதுகலை படித்து முடித்திருப்பவர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்… அவர்கள் கல்லூரியில் படித்த கணிதப் பாடங்களுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றே சொல்வார்கள். பொதுவாகவே நாம் படிப்பவற்றில் பத்து சதவிகிதம் மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுகின்றன. அப்படியென்றால் செமஸ்டர் செமஸ்டராகக் கண் விழித்து, உடல் வருத்தி மூளையைக் கசக்கிப் படித்ததும் எழுதியதும் முற்றிலும் வீண்தானே.

முந்தைய அத்தியாயங்களில் ஓர் இடத்தில் சொன்னதுபோல் இந்த அதிகப்படியான பாடங்கள் என்பவை வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் ஃபில்டர்களில் ஒன்றுதான். பத்து வேலைகளுக்கு ஆயிரம் பேர் போட்டிபோட்டால் என்ன செய்ய..? மரம் ஏறி மாங்காய் பறிக்கும் எளிய வேலையாக இருந்தாலும் உனக்கு மலை ஏறத் தெரிந்திருக்கவேண்டும், கடலில் நீந்தத் தெரிந்திருக்கவேண்டும்…. பாலைவனத்தில் நடக்கத் தெரிந்திருக்கவேண்டும்… காட்டைக் கடக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்று போட்டிகள் வைத்து இதையெல்லாம் செய்து முடித்து வருபவர்கள் யாரோ அவரையே மரம் ஏறி மாங்காய் பறிக்கும் வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைகளுக்குப் போகவேண்டுமென்றால்தான் இவற்றையெல்லாம் படித்தாக வேண்டும். ஒரு மாணவர் சுயமாக ஏதேனும் தொழில் தொடங்க விரும்பினால் அடிப்படைப் பாடங்களை மட்டுமே படித்தால் போதும். நமக்கு விருப்பமான துறை எதுவோ அதில் மட்டும் உயர் நிலைப் படிப்புக்குப் போகலாம். அது சிரமமாக இருந்தாலும் பாடத்தில் ஆர்வம் இருப்பதால் அதைப் பொறுத்துக்கொண்டு மேலேறிவிட முடியும்.

இன்று மருத்துவம், பொறியியல், கம்ப்யூட்டர் துறைகளில் சாதிக்க விரும்புபவர்கள் ஆங்கிலம், தமிழ் போன்ற பாடங்களில் பாஸ் மார்க் எடுக்கும் அளவுக்குப் படித்தாலே போதும் என்று சொல்லித் தருவதைப் பார்த்திருப்பீர்கள். இலக்கியம், கதைகள், நாடகங்கள் என்பதையெல்லாம் அவர்கள் வாழ்நாளில் தொட்டே பார்த்திருக்கமாட்டார்கள். அதுபோலவே நம் வாழ்க்கைக்கு அல்லது நாம் தேர்ந்தெடுக்க விரும்பும் வேலைக்குத் தேவையில்லாத பாடத்தைப் படிக்கத் தேவையே இல்லை. புல்லாங்குழல் கற்றுக்கொள்ள விரும்புபவன் கிடாரைத் தொட்டுக்கூடப் பார்க்கத் தேவையே இல்லை அல்லவா. அதுபோல்தான். குழந்தைகளுக்கு இந்த சுதந்தரத்தைத் தந்தால் விருப்பமான பாடத்தில் கூடுதல் நேரத்தைச் செலவிட்டு அந்தத் துறையில் சாதனைகள் புரிவார்கள்.

கணிதப் பாடத்தில் வரும் அடிப்படை கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களுக்கு கால்குலேட்டரே போதும். குழந்தைகளுக்கு எண்ணியலின் அடிப்படை லாஜிக் புரிந்தால் போதும். அதுபோல் அதிகத் தகவல்களை மனனம் செய்வதுதான் அறிவு என்று தவறாகக் கருதப்படுகிறது. அண்டார்ட்டிக்காவின் தேசிய பூ எது..? 1834-ல் அமெரிக்காவின் அதிபர் யார்..? உலகிலேயே நீளமான பாலம் எது என்பதுபோன்ற கேள்விகள் எல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது? இன்றைய கணினி யுகத்தில் கூகுளில் சென்று நாலு வார்த்தையை டைப் செய்தால் அது அனைத்தையும் கொட்டிவிடும். அப்படியான நிலையில் விழுந்து விழுந்து இவற்றையெல்லாம் படித்து மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

நமது லட்சிய ஆசிரியரின் மாணவருக்கும் போட்டி ஆசிரியருடைய மாணவருக்கும் இடையிலான பந்தயமாக இந்தக் காட்சியை வடிவமைக்கலாம். நம் லட்சிய ஆசிரியர் அவருடைய வகுப்பில் இருக்கும் படு சுமாரான மாணவனை போட்டி ஆசிரியரின் வகுப்பில் இருக்கும் படு புத்திசாலியான அதாவது எந்தக் கேள்வி கேட்டாலும் எந்த க்விஸ் போட்டிக்குப் போனாலும் கோப்பையைத் தட்டிக்கொண்டுவரும் மாணவனோடு போட்டிபோட்டு ஜெயிக்கவைப்பார். இருவருக்கும் க்விஸ் போட்டி நடக்கும் அந்த போட்டி ஆசிரியரின் மாணவன் ஒரு வாரம் லைப்ரரியிலேயே தவம் கிடந்து ஏராளமான என்சைக்ளோபீடியாவைக் கரைத்துக் குடித்து போட்டிக்கு வருவான். நம் லட்சிய ஆசிரியரின் மாணவனோ கையடக்கக் கணினியை வைத்துக்கொண்டு டக் டக்கென்று பதில் சொல்லி ஜெயித்துவிடுவான்.

இப்படியாக மனப்பாடம், நிறைய தகவல்களை வெறுமனே தெரிந்துகொள்ளுதல் என்பதையெல்லாம் வெகுவாகக் குறைத்துவிடவேண்டும். எதையும் ஒப்பிட்டுக் கேள்விகள் கேட்டு ஆராயும் மனநிலையையே ஊக்குவிக்கவேண்டும். சாலையின் ஓரங்களில் மரங்கள் நட்ட அரசர் யார்? அவருடைய ஆட்சிக் காலம் என்ன என்பது தெரிந்திருப்பதைவிட இன்றைய நகரச் சாலைகளில் ஏன் மரங்கள் இல்லை என்று கேள்வி கேட்கும் மாணவரே நாளை சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரமுடியும். கரிகாலன் கல்லணை கட்டினான் என்று படிப்பதைவிட இன்று நாம் ஏன் நதிகளை இணைக்கவில்லை என்று கேட்கும் குழந்தையையே உருவாக்கவேண்டும். சிந்து சமவெளியில் அபாரமான கால்வாய் வசதி இருந்தது என்று படிப்பதைவிட இன்று ஏன் கூவம் இப்படி சாக்கடையாக இருக்கிறது… ஒருமழை பெய்தால் ஊரே ஏன் மூழ்கிவிடுகிறது என்று கேட்கும் குழந்தையே நமக்குத் தேவை. அதற்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் என்சைக்ளோபீடியா மூளைகள் தேவையில்லை. கேள்விகள் கேட்கும் மூளைகளும் தீர்வுகளைச் சொல்லும் மூளைகளுமே தேவை.

அடுத்ததாக பரீட்சைகளைத் தூக்கி எறியவேண்டும்.

நல்லது… இதை அதிர்ச்சியடையாமல் சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தேர்வுகள் இருக்கும்; ஆனால், இருக்காது. அதாவது, இப்போது நடக்கும் தேர்வுகள் போல் இருக்காது. குழந்தைகள் விரும்பும்வகையில் இருக்கும்.

குழந்தைகள் பரீட்சைகளை எப்போது விரும்புவார்கள்?

காப்பி அடிக்க அனுமதித்தால் மாணவர்கள் தேர்வுகளை விரும்புவார்கள். இதை நாம் அனுமதிக்கலாம். மறைமுகமான பயிற்சி வழிதான் இது. அல்லது க்ரூப் ஸ்டடி போல் க்ரூப் டெஸ்ட் வைக்கலாம். ஆனால், இவையெல்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பே அதிகம். எனவே, தேர்வுகளின் அடிப்படைப் பிரச்னை என்ன என்பதைப் பார்ப்போம். இப்போதைய தேர்வுகளில் தமக்குத் தெரியாத கேள்விகளாகத் தேடிப்பார்த்து ஆசிரியர்கள் கேட்பதாகவே குழந்தைகள் வருத்தப்படுகிறார்கள். எனவே, குழந்தைகளுக்குத் தெரிந்த கேள்விகளாகத் தேர்வில் கேட்டால் அவர்கள் உற்சாகமாக எழுதுவார்கள். இதற்கு எளிய வழி… குழந்தைகளை விட்டே தேர்வுக்கான கேள்விகளைத் தயாரிக்கச் சொல்வதுதான்!

ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று தேர்வுகள் வைக்கவேண்டும். ஒவ்வொரு தேர்விலும் முதல் தேர்வில் கேட்காத கேள்விகளைக் கேட்கச் சொல்லவேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஒட்டு மொத்த பாடமும் எப்படியும் கவர் ஆகிவிடும். குழந்தைகளே கேள்விகளைத் தயாரிப்பதால் ஒவ்வொரு முறையும் அந்தந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஆர்வத்துடன் படித்து முடித்துவிடுவார்கள். மூன்று தேர்வு எழுதியதும் ஒரு பாடம் முழுவதும் மனப்பாடம் ஆகிவிடும். மேலும் கேள்வித்தாள்களை ஆசிரியரே திருத்துவதற்கு பதிலாக மாணவர்களைவிட்டே திருத்தச் சொல்லலாம். இதனால் விடைகளைத் திருத்தும்போதும் பாடத்தை ஒரு தடவை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்கள் அந்த விடைத்தாள்களை பின்னர் மாணவர்களுக்குத் தெரியாமல் சோதித்துக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் தேர்வு குறித்த பயமும் அகலும். மாணவர்கள் பாடங்களை ஆர்வத்துடன் படிக்கவும் செய்வார்கள்.

இதுபோலவே கொஞ்சம் சுமாராகப் படிக்கும் அதாவது வேறு விஷயங்களில் அதிகத் திறமை கொண்டிருக்கும் மாணவருக்குத் தேர்வுகளைப் புத்தகத்தைப் பார்த்தே விடைகளை எழுத அனுமதி தரலாம். முந்தைய வருடத்து மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களையே அடுத்த வருடத்து மாணவர்களுக்குக் கொடுத்து கைடு போல் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லலாம். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இப்படியான லகுவான வழிமுறைகள் பெரிதும் பயன்தரும்.

கல்வியாளர் சங்கர் முஸாஃபிர் தேர்வுகள் தொடர்பாக ஒரு புதுமையான வழிமுறையை முன்வைத்திருக்கிறார். அதாவது இன்றைய தேர்வுகளின் மூலம் குழந்தைகளுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பதைத்தான் மதிப்பிடுகிறோம். அதற்கு பதிலாக குழந்தைகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களை மதிப்பிடவேண்டும். அதாவது இப்போதைய தேர்வுகளில் கேள்விகளை நாம் கேட்கிறோம். பதில்களைக் குழந்தைகள் எழுத வேண்டியிருக்கிறது. புதிய வழிமுறையின்படி, கேள்விகளைக் குழந்தைகள் கேட்பார்கள். ஆசிரியர்கள் பதில் சொல்லவேண்டும். எவ்வளவு அருமையான தேர்வுமுறை பாருங்கள். ஒவ்வொரு குழந்தைகளும் பேச ஆரம்பித்ததில் இருந்து கேள்விகளால் நம்மைத் துளைத்தெடுக்கத்தானே செய்கிறார்கள். அவர்களுடைய கல்வி என்பது கேட்டுத் தெரிந்துகொள்வதில்தானே இருக்கிறது. ஆனால், அப்படித் துள்ளிக் குதிக்கும் குழந்தைகளைத்தான் வாயை மூடு, கையைக் கட்டு… சொல்வதைச் செய்… சொல்லித்தருவதைப் படி என்று ஒழுங்குகளின் மூக்கணாங்கயிறு குத்தி, கட்டுப்பாடுகளின் நுகத்தடியில் பூட்டி கற்பனையைக் காயடித்து வண்டியில் பூட்டி வைக்கிறோம்.

கேள்வி கேட்கும் குழந்தைகளைக் கேள்வி கேட்டபடியே படிக்க வைக்கவேண்டும். ஒரு விஷயம் குறித்து எந்த அளவுக்குக் கேள்வி கேட்கிறார்களோ அந்த அளவுக்கு அதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப அவர்களுக்கு மதிப்பெண் தரலாம். குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் கேள்விகள் என்பதால் அதற்கு நாம் சொல்லும் விடைகளை அவர்கள் ஆர்வத்துடன் புரிந்துகொள்வார்கள். அப்படிப் புரிந்துகொள்ளும் விஷயங்கள் அவர்களுக்கு மறக்கவும் செய்யாது.

அப்படியாக நமது ஆசிரியர், தேர்வுகளில் மேலே கூறிய வழிமுறைகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவதாகக் காட்சிகளை அமைத்துக் கொள்ளலாம். திரைக்கதையின் சுவாரசியத்துக்காக இந்த ஒவ்வொரு வழிமுறையையும் ஒரு ஆசிரியர் எதிர்ப்பதாகவும் இறுதியில் நம் லட்சிய ஆசிரியரே வெல்வதாகவும் காட்சியை அமைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, புத்தகத்தைப் பார்த்து விடை எழுதலாம் என்று சொல்வதை காப்பி அடிக்கக் கற்றுத் தருவதாக ஒரு ஆசிரியர் எதிர்க்கலாம். அதே ஆசிரியர் தனது வகுப்பில் ஃபெயில் ஆகும் மாணவர்களுக்கு பத்து தடவை இம்போஸிஷன் எழுதச் சொல்லியிருப்பார். நம் ஆசிரியரோ நீங்கள் பத்து தடவை இம்போசிஷன் எழுதச் சொல்கிறீர்கள். நான் தேர்வு என்ற பெயரில் அதையே எழுதச் சொல்கிறேன். நீங்கள் கொடுப்பது தண்டனை… நான் கொடுப்பது பயிற்சி…. ஆசிரியர் என்பவர் போலீஸ்காரர்போல் இருந்தால் பள்ளி என்பது சிறைபோல ஆகிவிடும். ஓர் ஆசிரியர் மாணவர்களுக்கு நண்பர் போல இருக்கவேண்டும். அப்போதுதான் பள்ளி என்பது குழந்தைகளுக்கு விளையாட்டுமைதானம் போல இருக்கும். கல்வி என்பது விளையாட்டுபோல் ஆர்வம் தரக்கூடியதாக இருக்கும் என்று சொல்லி அவருக்குப் புரியவைக்கலாம்.

•••••••••••