Category: கலை

நேர்காணல் டகேஷி கிடானோ. தமிழில் ஜா.தீபா தன் நிழலில் நின்று தன்னை வரைபவன்

images (5)

 

 

விருப்பமில்லை என்கிற காரணத்தை வைத்து வன்முறையை நாம் சகித்துக் கொள்வதில்லை. ஆனாலும் நம்மை சுற்றி அவை வெவ்வேறு சரடுகளாக ஊடுருவிச் செல்ல நாம் அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கலையும் தன் தன்மைக்கு ஏற்றவாறு  அதனை தன் வடிவங்களின் நிறங்களில் பிரதிபலித்துக் கொண்டுதான் வருகிறது. திரைப்படங்கள் வன்முறையை ஒரு களமாகவே இன்றைக்கு எடுத்துக் கொண்டுவிட்டதை அறிகிறோம். தன் கோபத்தை வெளிக்காட்ட வன்முறை தளத்தை உபயோகப்படுத்தி அதனை அன்பின் ஊடாக சொல்ல முடிகின்ற கலைஞனாக இருக்கிறார் டகேஷி கிடானோ. ஜப்பான் மக்களின் தவிர்க்க முடியாத திரைப்படப் படைப்பாளியாக நெடுங்காலம் இருப்பவர். தான் இயக்கும் படங்களில் தனது பார்வையை, திறன்முதிர்ச்சியை வெளிப்படுத்துவதன் வழியாக அனைவரையும் தன்னுள் ஈர்த்துக் கொள்கிற ஒரு திறனாளி.

கேள்வி : படம்பார்க்கும்போது பார்வையாளர்கள் எங்கேயாவது வலியை உணர்ந்தே ஆக வேண்டுமென சொல்லியிருக்கீறீர்கள்..ஏன்?

திரைக்கதை எழுதும்போதும், படம் எடுக்கும்போதும்  நிஜ வாழ்வில் உள்ளது போலவே  வலி மிகுந்ததாய் வன்முறை  இருக்க வேண்டுமென நினைக்கிறேன். ஆனால் வன்முறையைக் காட்டும்போது எனக்குள் தயக்கம் வருகிறது. நிழலுலகத்தைக் காட்டும்போது ரம்பம் போன்ற ஆயுதங்களால் கொலை செய்வதைக் காட்டினால் பயங்கரமான படமாக மாறிவிடுகிறது. எப்படி நிஜ வாழ்வில் கொலை நடக்கிறது என்பதைக் காட்டவே முடியாது. ஒருமுறை பல் மருத்துவர் ஒருவரிடம் சென்றிருந்தேன். ‘கொஞ்சம் காத்திருங்கள்’ என சொல்லிவிட்டு அந்த டாக்டர் உள்ளே சென்றார். அப்போது திடீரென தோன்றியது, ‘கடவுளே இப்போது திடிரென யாராவது உள்ளே நுழைந்து என் பல்லை ட்ரில்லிங் மிஷினால் பிடுங்கினால் எப்படி இருக்கும்?’ இந்தக் கற்பனையை திரைப்படத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. உடனே நாற்காலியில் இருந்து எழுந்து வந்து எழுதத் தொடங்கிவிட்டேன்.

வன்முறையையும், நகைச்சுவையையும் சேர்க்கும்போது அது வரவேற்பை பெறுகிறது என்பதை படம் திரையிடும்போதெல்லாம் கவனிக்கிறேன். பரபரப்புக்கு நடுவே சின்ன இளைப்பாறுதலை இது போன்ற காட்சிகள் தருகின்றன.

images (4)

கேள்வி : நீங்கள் வளரும்போதே Zatoichi  படங்களின் ரசிகராக இருந்தீர்களா? (Zatoichi  என்பது ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற கற்பனை கதாபாத்திரம்.)

உண்மையில் நான் Zatoichiயின் பெரிய ரசிகன் இல்லை. அவன் நம்ப முடியாத கதாபாத்திரம். “நகைச்சுவை உணர்வு கொண்ட, மின்னல் போல் வாளை சுழற்றக் கூடிய, சூதாடும் புத்திசாலி’ – இது தான் Zatoichi கதாபாத்திரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்த கதாபாத்திரத்தைக் கிண்டல் செய்வேன். என்னுடைய ‘Getting Any? ‘ படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன். அந்த சமயத்தில் ஒரு முழு நீளப்படம் இதை வைத்து செய்வேன் என நான் நினைத்து பார்க்கவே இல்லை. எனக்கு வாய்ப்பு வந்தபோது, இது சாத்தியமே இல்லை, ஏற்கனவே டீவி நிகழ்ச்சியில் கிண்டல் செய்திருக்கிறேன் என்று சொன்னேன். அந்த நிகழ்ச்சியை மக்கள் மறந்து போய் விட்டார்கள் எனத் தெரிந்ததும் தான் ‘Zatoichi’ இயக்கினேன். இப்போதும் நினைத்தால் கூச்சமாகத் தான் இருக்கிறது.

கேள்வி : Zatoichi  -உங்கள் பாணி படத்திலிருந்து மாறுபட்டது. எடிட்டிங், ஷாட் எல்லாமே வேறுமாதிரி இருந்தது. என்ன காரணம்?

Zatoichi ‘ முழுக்கவே பொழுதுபோக்கு படம். இது என்னுடைய கற்பனை அல்ல. மற்றவர்கள் என்னிடம் இயக்கித் தருமாறு கேட்ட படம். வணீகரீதியான படத்தை எடுக்க மற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால், ஷாட் பிரிப்பதில் தொடங்கி, காமெரா கோணங்கள், கிரேன் உபயோகிப்பது என பொழுதுபோக்கு படத்திற்கான அம்சங்களைத் திட்டமிட்டேன். மற்ற என்னுடைய கலைப்படங்களை விட இப்படி எடுப்பது எனக்கு சுலபமாக இருந்தது. என்னுடைய கலைப் படத்தை நானே முடிவுசெய்து இயக்குவதைக் காட்டிலும் இது அதிக சுதந்திரத்தைக் கொடுத்தது. நான் மரபுரீதியான கலைப்படங்கள் எடுப்பவன் என்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

கேள்வி : Zatoichi படத்தில் சில காட்சிகள், குறிப்பாக மழையில் நடக்கும் வாள் சண்டைக் காட்சி போன்றவை குரோசாவாவின் பாதிப்பில் எடுக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். குரோசாவாவின் மகள் கசூகோ இந்த படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார். படத்தைப் பற்றி அவர் என்ன சொன்னார்?

மழைக் காட்சியை படமாக்கும்போது கசூகோவிடம் , ‘உன் அப்பாவின் படத்தைப் போலே இருப்பதாக தோன்றவில்லையா?’ எனக் கேட்டேன். அவர், ‘இல்லை’ என்றார். மனநிலைப் பாதிக்கப்பட்ட ஒருவன் சாமுராயாக மாற நினைக்கும் இடத்திலும் கேட்டேன், ‘உங்கள் அப்பாவின் சாயல் தெரிகிறதா?’ அவர் சிரித்துக் கொண்டே ‘இல்லை’’ என்றார். இதெல்லாம் சுவாரஸ்யமான உதாரணங்கள்.

கேள்வி : திரைப்படம் எடுப்பதில் உங்களுக்கு பிடித்தது எடிட்டிங் என்று சொல்sகிறீர்கள். எதனால்?

திரைப்படம்  எடுப்பதை பிளாஸ்டிக் பொம்மை செய்வதோடு ஒப்பிட்டால், படப்பிடிப்பு என்பது பொம்மையை உருக்கி அதற்கு வண்ணம் கொடுப்பது. படத்தொகுப்பு என்பது ஏற்கனவே இருக்கிற உருவங்களை , வண்ணங்களைக் கொண்டு முழுமையாக்குவது. இதனாலேயே எடிட்டிங் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எடிட்டிங் தான் கஷ்டமான காரியம். நான் சீக்கிரமே படப்பிடிப்பை முடித்து விடுவேன். ஒரு ஷாட்டுக்கு இரண்டு டேக்குக்கு மேல் போக மாட்டேன். படப்பிடிப்பு தளத்தில் ஸ்க்ரிப்ட்டை மாற்றிக் கொண்டே இருப்பேன். எடுக்கத் தேவையில்லை என படப்பிடிப்புத் தளத்தில் வைத்து முடிவெடுத்துவிட்டால் அந்த ஷாட்டை எடுக்கவே மாட்டேன். பிறகு எடிட்டிங்கில் தோன்றும், அந்த ஷாட் எல்லாமே தேவை என்று. அப்போதெல்லாம் மற்ற வெவ்வேறு காட்சிகளில் உள்ள ஷாட்களைத் தேடி எடுத்து இதில் கோர்த்து விடுவேன். இது எப்படி இருக்குமென்றால், ஒரு காரை உருவாக்கிவிட்டு, ஸ்டியரிங் வீல் வைக்க மறந்து போய் வேறு ஒரு டயரை அதற்கு மாற்றாக வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். அதனாலேயே யாரையும் நம்பாமல் நானே என் படங்களை எடிட் செய்கிறேன்.

கேள்வி : காமெடியனாக இருந்து தீவிரமான நடிகராகவும்,இயக்குனராகவும் மாறும்போது மக்களின் பார்வை எப்படி இருந்தது?

தீவிரமான  நடிகன் என்று ஜப்பானியர்களை நம்பவைப்பது ரொம்ப கடினமாகி விட்டது. 80களின் தொடக்கத்தில், Merry Christmas, Mr. Lawrence படங்கள் நகிஷா ஓஷிமா இயக்கத்தில் நான் நடித்த படங்கள். ஜப்பானில் வெளியாகும்போது தியேட்டரில் பார்வையாளர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக போனேன். படம் மிக சிறப்பாக இருந்ததென்றும், நான் நன்றாக நடித்திருந்தது போலவும் தோன்றியது. ஆனால் நான் திரையில் தோன்றியதும் தியேட்டரில் இருந்த ஒவ்வொருவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த அனுபவம் என்னை அவமானத்தில் குறுக வைத்துவிட்டது. ஏனென்றால் அந்தப் படத்தில் அந்த கதாபாத்திரம் தீவிரமான ஒன்று. அதன் பிறகு தான் முடிவு செய்தேன் இனி டிவியிலும். படத்திலும் மிகத் தீவிரமான பாத்திரங்களில் மட்டுமே நடிப்பதென்று. கொலைகாரன், நிழலுகத் தலைவன், என பீட் டகெஷி பெயரில் நடித்தேன்.

இயக்குனர், நடிகன், காமெடியன் என எனக்கு பல முகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் நிரூபிக்க நிறைய சக்தியை செலவழிக்கிறேன். ஆரம்ப கால என்னுடைய படங்களை மக்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளும்வரை பொறுமையாக இருந்தேன்.

Fireworks எனக்கு ஏழாவது படம். இதன் பிறகு தான் ஜப்பானில் தீவிரமான இயக்குனராக நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன். ஒரு நகைச்சுவை கலைஞன் பொழுது போக்குக்காக படம் இயக்குகிறான் என்று தான் நினைத்தார்கள். பொதுவாக ஜப்பானியர்கள் கலைகளை மதிப்பவர்கள். ஒவ்வொரு நாளும் இரவு என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதை இலவசமாக பார்க்கிறார்கள். ஆனால் தியேட்டரில் என்னுடைய படங்கள் நன்றாக இருக்காது என முடிவு செய்து விட்டார்கள். வெனிஸ் திரைப்பட விழாவில் Fireworks படத்திற்கு கோல்டன் லயன் விருது கிடைத்ததும் எல்லாமே மாறியது. ஒரு காமெடியனின் பகுதி நேர வேலையான படம் இயக்குதல் உலகப் புகழ் பெற்றதாகி விட்டது. வெளிநாடுகளை ஜப்பானியர்கள் எந்தளவு கண்மூடித் தனமாக நம்புகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.

கேள்வி : வன்முறைக் காட்சிகளுக்கு பிரபலமானவர் நீங்கள். ஆனால் வன்முறையை எதிர்க்கக்கூடிய படமாகவும் இயக்கியிருக்கிறீர்கள். வன்முறைக் காட்சிகளை முன்னிலைப்படுத்தும்போது எப்போதாவது வருத்தம் அடைந்திருக்கிறீர்களா?

ரத்தத்தை பார்ப்பதையே நான் வெறுக்கிறேன். உடல் வலியை என்னால் சகிக்க முடியாது. வன்முறை என்னை பயமுறுத்துகிறது. எல்லோரையும் விட நான் கோழையாக இருக்கிறேன் என நினைக்கிறேன். எந்தளவு வன்முறைக்கு பயப்படுகிறேனோ, அந்தளவு அதைப் படத்தில் காட்டவும் விரும்புவது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. Sonatine, Fireworks படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமிருக்கும். இவை பிரபலமடைந்தன. வன்முறைகள் குறைவாக இருக்கிற Dolls, Kikujiro, Kids Return, Getting Any?,  A Scene At The Sea படங்களையும் இயக்கி இருக்கிறேன். இதில் குறுப்பிடவேண்டியது என்னவென்றால், இது போன்ற படங்களை நான் இயக்கும்போது பத்திரிகையாளர்கள் ‘ஏன் இந்த முறை வன்முறையே இல்லை?’ எனக் கேட்கிறார்கள்.

மற்ற இயக்குனர்களைக் காட்டிலும் இது போன்ற காட்சிகளை  நான் தனித்துவமாக காட்டுவதாக நினைக்கிறேன். நான் காட்டும்போது அது வலிக்கிறது. இது எதிர்பாராமல் அமைந்தது. நிஜ வாழ்க்கையில் வலிகள் வலிக்கத்தான் செய்யும். அதைத் தானே காட்டுகிறேன். தேவையில்லாமலோ, கவர்ச்சிக்காகவோ நான் திணிப்பதில்லை

கேள்வி : கவிதை, செய்தித்தாள்களில் கட்டுரை, நாவல் எழுதுகிறீர்கள் இதையெல்லாம் தாண்டி படங்கள் இயக்குவதே உங்களது அடையாளமாக இருக்கிறது.  உங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு சினிமா தான் சிறந்த ஊடகம் என நினைக்கிறீர்களா?

சினிமா பல கலைகளை உள்ளடைக்கிய பெறும் வெளி. இதில், காமெடி, நாடகம், இசை என எல்லாவற்றையும் ஒன்றிணைக்கலாம். இன்னொரு பக்கம் டீவி நிகழ்ச்சிகளில் காமெடி, விவாத நிகழ்ச்சி, வினாடி வினா, கலை நிகழ்ச்சிகள் என வெவ்வேறு வகையில் பண்ணும்போது திரைக்கதை எழுதுவது மேம்படுகிறது. இதன் மூலம் சுவாரஸ்யமான மனிதர்கள், சம்பவங்கள், அவர்களின் கதைகளைக் கேட்க முடிகிறது.  கடைசியில் என்னை எல்லோரும் எப்படி நினைவுகூற வேண்டும் என்றால், ‘நகைச்சுவை, நடிப்பு திரைப்படம் இயக்குவது, எழுத்தாளர் எதிலுமே இவன் சிறந்தவன் கிடையாது. ஆனால் மற்ற எவரும் இவனை விட சிறப்பாக ஒரே நேரத்தில் இத்தனையையும் கையாள வில்லை’.

images (3)

.கேள்வி : ஒரு சில படங்களைத் தவிர பெண் கதாப்பாத்திரங்கள் உங்கள் படங்களில் குறைவாக இருக்கிறார்கள்…

எனக்கு பெண்களைப்  பிடிக்கும். அதனாலேயே அவர்களுக்கு  என் படத்தில் குறைவான இடம் இருக்கும். நான் கூச்ச சுபாவி. பெண்களுக்கு முக்கிய இடத்தை படங்களில் தருபவர் உண்மையிலேயே  பெண்களை விரும்பாதவர்கள்  என நினைக்கிறேன். என்றைக்கு பெண்கள் மீதான எனது முடிவு பலவீனமாகிறதோ, அன்று பெண்களை மையப்படுத்தி படம் எடுப்பேன்.

கேள்வி : உங்களது சிறு வயது வாழ்க்கை குறித்து சொல்லுங்கள்.

டோக்கியோவில்  பிறந்து வளர்ந்தேன். அப்பா  வீடுகளுக்கு வண்ணம் பூசுபவர். அம்மா கடும் உழைப்பாளி. பகல் முழுவது கேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்வார். இரவு நேரத்தில் பொம்மைகள் தயாரிக்கும் இடத்தில் வேலை பார்ப்பார். 50, 60களிலேயே நான் நன்றாக படிக்க வேண்டும் என என்னுடைய அம்மா விருப்பப்பட்டவர். என்னை சுற்றி உள்ள எல்லாருமே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஜப்பான் அப்போது பொருளாதாரத்தில் மிக வேகமான முன்னேற்றத்தில் இருந்தது. நான் விஞ்ஞானம் சம்பந்தமாக ஏதாவது படிக்க வேண்டும் என என்னுடைய அம்மா விரும்பினார். பொறியியல் படிப்பு தான் எதிர்காலத்தில் வேலை வாங்கித் தரும் என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார். அதனால் சின்ன வயதில் கதைப் புத்தகங்கள் படிக்கவோ, படங்கள் பார்க்கவோ என்னை அனுமதித்ததில்லை. படிப்பு ஒன்று தான் நோக்கமாக இருந்தது. என்னைச் சுற்றி நிழலுகத்தில் ஈடுபடும் இளைஞர்கள் இருந்தார்கள்.  அவர்களைச் சின்ன பையன்களுக்கு பிடிக்கும். அவர்கள் எங்களுக்கு மிட்டாய் வாங்கித் தருவார்கள். நாங்கள் புகைபிடிக்கும்போதோ, மது அருந்தும்போதோ அவர்கள் பார்த்து விட்டால் ‘பள்ளிக்கூடம் போக வேண்டும்..அப்பா அம்மா சொல்படி நடக்க வேண்டும் அல்லது எங்களைப் போல் மாறி விடுவீர்கள் ‘ என அறிவுரை சொல்வார்கள்.

கேள்வி : ‘outrage’ படம் அகங்காரம், சுய விருப்பங்கள், லட்சியங்கள் இவற்றுக்கு நடுவே வாழ்கிற மனிதர்களை மையப்படுத்தியது. நிஜ வாழ்க்கையில் ‘office kitano’ என்கிற உங்களது தயாரிப்பு நிறுவனத்தில் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? உங்களைச் சுற்றி உள்ளவர்கள் படபடப்பாகவே இருக்கிறார்களே..?

என்னைச் சுற்றி உள்ளவர்கள் படபடப்பாக இருக்கிறார்கள் என நினைக்கவில்லை. எங்களுக்குள் எந்த முரண்பாடுகளும் கிடையாது. நான் மிகவும் அமைதியான இயக்குனர். யாரையும் நான் படப்பிடிப்புத் தளத்தில் திட்டியதில்லை. மற்றவர்களுடன் ஒன்றாக செயல்படவே விரும்புகிறேன். மற்றவர்களின் யோசனைகளையும் கேட்கிறேன். அவர்கள் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.

கேள்வி : உங்களை ஈர்த்த இயக்குனர்கள் யார்?

இதற்கு  பதில் சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது. சின்ன வயதில் என்னை சினிமாப் பார்க்க யாரும் அழைத்து சென்றதில்லை. இதனாலேயே இயக்குனர் ஆகும் வரை படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஐரோப்பாவில் நடந்த திரைப்பட விழாவிற்கு முதன் முதலில் சென்றிருந்தபோது அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள், குரோசாவா, கோடர்ட் படங்கள் தான் உங்களுக்கு உந்துதலாக இருந்ததா என்றுக் கேட்டார்கள். எனக்கு இவர்கள் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஜப்பான் வந்த பின் என்னுடைய உதவியாளர்களிடம் வீடியோக்கள் வாங்கி வரச் செய்து பிறகு தெரிந்து கொண்டேன்.

கேள்வி : 1990 ல் ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கிக் கொண்டீர்கள். அதன் பின் வாழ்க்கை குறித்த உங்கள் பார்வை மாறியதா?

அது மிக மோசமான விபத்து. அதில் நான் உயிர்பிழைத்தது அதிசயம் என மருத்துவர்கள் சொன்னார்கள். என் முகத்தின் வலது பக்கம் சிதைந்து போனது. அதை திரும்பவும் உருவாக்கி இருக்கிறார்கள். எனக்கு நினைவு வந்ததும், ‘அட! இது எனக்கு பெரிய வாய்ப்பு’ என்று தான் நினைத்தேன். இப்படி யாராவது மோசமான விபத்தை சந்தித்து மீண்டு வந்தவுடன் அவர்களுக்கு ஆன்மீக, தத்துவ ஞானங்களோ, மேதாவித்தனமோ ஏற்படும் என கேள்விபட்டிருப்பீர்கள். எனக்கும் அப்படி நேர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன். உடனேயே நான் ஓவியம் வரைய ஆரம்பித்து விட்டேன். விபத்து என்னை இன்னொரு பிகாசாவாக மாற்றும் என நினைத்தேன். அது பெரிய தப்பு. எனக்குள் எந்த மாற்றமும் நிகழவில்லை. என்பதை என்னுடைய முதல் ஓவியத்திலேயே தெரிந்து கொண்டுவிட்டேன். அது ஏற்பட்டது ஏமாற்றம் தான்.

கேள்வி : முதல் முறை படம் இயக்குபவர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்?

யாரையும் நம்பாதீர்கள். யார் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாமல் உங்கள் உள்ளுணர்வை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மற்றவர்களின் பேச்சை உங்களது முதல் படத்தில் கொண்டு வந்தீர்கள் என்றால், இரண்டாவது படத்தில் நிலைமை இன்னும் மோசமாகும். மூன்றாவது, நான்காவது படங்களில், மற்றவர்களின் கருத்துகளை கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால் முதல் படத்தில் நீங்கள் நினைத்தை மட்டும் செய்யுங்கள். ‘நட்பற்ற வெற்றிகரமான இயக்குனர்’ என்ற பெயர் உங்களுக்கு வரக்கூடும். அதற்கும் தயாராக இருங்கள். ஏனென்றால் நான் அப்படித்தான் அழைக்கப்பட்டேன் (சிரிக்கிறார்).

 

உடலின் மொழி நடனம் 2 பகுதி . சந்தோஷ் நாராயணன்

snஇசையைப்போலவே நடனமும் அதற்குரிய இலக்கணக்கூறுகள் கொண்டது தான். அதை சற்று மேலோட்டமாக பார்க்கலாம். நடனத்தின் அடிப்படைக்கூறுகள் 1.உடல்(body) 2.அசைவு(action) 3.வெளி(space) 4காலம்(time) 5.சக்தி(energy). இவற்றின் சேர்க்கைகளே பல்வேறு நடன வடிவங்களை உருவாக்குகிறது.

 

இந்த ஐந்து அடிப்படைக்கூறுகளுக்கு கீழும் பல்வேறு உட்கூறுகள் உண்டு. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலான அனைத்து உறுப்புகள் மற்றும் மனம். உணர்ச்சி வெளிப்பாடுகளை காட்டும் முகத்தின் பாவனைகள், மூச்சு விடும் அசைவு போன்ற நுட்பமான உடலியக்கங்கள் வரை உடல் என்கிற அடிப்படைகூறின் உள்ளே வருபவை.

 

ஒரே இடத்தில் நின்ற படியே செய்யும் அசைவுகள்(Non-locomotor) நகர்ந்துகொண்டே செய்யும் அசைவுகள்(locomotor) என்பது அசைவுகள்(action) என்கிற அடிப்படைக்கூறின் இரண்டு பிரதானமான பிரிவுகள். இந்த இரண்டு பிரிவுகளுக்குள்ளும் உடலின் பல்வேறு சாத்தியமான இயக்கங்களையும் உட்படுத்தி விட முடியும். உதாரணமாக உடலை வளைத்தல், உதறுதல், சுழற்றுதல் முதலிய non-locomotor அசைவுகள். நடத்தல், ஓடுதல், சுற்றி வருதல் போன்ற locomotor அசைவுகள்.

 

வெளி(space) என்பது நடனமாடும் உடலுக்கு தேவைப்படும் இடம், பின்னனி, சூழல் எல்லாம் கலந்தவை. நடனவகைகளுக்கு ஏற்றமாதிரி வெளியின் தேவை தீர்மானிக்கப்படுகிறது. நடனக்கலைஞன் வெளியை தன் நடனத்தால் வேறொன்றாக மாற்றிவிடுகிறான். பரதநாட்டியக் கலைஞன் தான் ஆடும் அரங்க மேடையை குழந்தைக்கண்ணன் ஓடித்திரியும் கோகுலமாக பார்வையாளனின் மனதிற்குள் மாற்றிவிடமுடியும். தெய்யம் ஆடும் கலைஞன் தான் ஆடும் கோயில் முற்றத்தை உக்கிரமான போர்க்களமாக பார்வையாளர்களுக்குள் உணரவைக்க முடியும். நடனத்தின் உள்ளர்த்தமே வெளியை உருவாக்குகிறது.

 

இசையில் சுருதி (pitch)போல நடனத்தில் தாளம் (beats) தான் காலம். தாளம் எடுத்துக்கொள்ளும் நேரஇடைவெளிகள் நடனவகைகளுக்கு ஏற்றார்போல மாற்றமுடையது. கலைஞன் தன் அசைவுகளின் மாற்றத்திற்கு எடுத்துகொள்ளும் இடைவெளிகள் தான் காலம். காலத்திற்குள் மீன்போல நீந்தி செல்லும் கலைஞன், பார்வையாளர்களின் மனதிற்குள் உருவாக்கும் காலம் என்பது அவன் கைக்கடிகாரத்தில் உள்ளதல்ல. அது நடனத்தின் காலம். தன் அசைவுகளால் காலத்தை வேகப்படுத்தவும் அசைவினமையால் காலத்தை உறையச்செய்யவும் முடிகிறது.

 

சக்தி (energy) என்பது மேற்சொன்ன கூறுகளின் கலப்புகளால் கலைஞன் உருவாக்கும் ஒட்டுமொத்த உணர்ச்சி என்று சொல்லாம். நடனத்தை பார்வையாளனுக்குள் கடத்தும் ஊடகம் இதுதான். ஒரு நடனம் உருவாக்கும் பேரின்பத்தையோ பெருந்துக்கத்தையோ இந்த சக்தி தான் தீர்மானிக்கிறது. இது ஒட்டுமொத்த நடனத்தின் உணர்ச்சிவெளிப்பாடு. ஒரே நடனத்தை இரு கலைஞர்கள் ஆடினாலும் அவர்களிடமிருந்து வெளிப்படும் சக்தி வெவ்வேறு மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. கர்நாடக சங்கீதத்தில் மனோதர்மம் என்று சொல்வார்களே அதுபோல இது கலைஞர்களின் தனிப்பட்ட உடல் மன உச்சத்திற்கு ஏற்ப வெளிப்படுவது.

 

மேலே சொன்ன கூறுகள் பற்றி இன்னும் விஷயமறிந்தவர்களால் விரிவாகவே கட்டுரைகள் எழுதமுடியும். ஆனால் இது நடனத்தைப்பற்றிய ஆராய்ச்சி கட்டுரை அல்ல என்பதால் சுருக்கமாக, நடனக்கலைஞன் தன் உடலை காலத்திற்கும்(time) வெளிக்கும் (space) ஏற்ப சக்தியுடன்(energy) பல்வேறு அசைவுகளின்(action) வழியாக பார்வையாளனின் கண்களுக்கு நிகழ்த்தும் கலையே நடனம் என்று வகுக்கலாம்.

 

இந்த கூறுகள் மேற்கத்திய நடன்க்கலைகளை கொண்டு வகுக்கப்பட்டிருந்தாலும் இவை உலகின் பிற நடனவகைகளும் பொருந்துவதாகவே இருக்கிறது. நாட்டிய சாஸ்திரத்தை வகுத்த பரத முனிவர் நாட்டியம் எனபதை ஆடல், இசை, உரையாடல், பாவனைகள், ஒப்பனை மற்றும் அரங்கம் இவை ஒருங்கிணைந்த நிகழ்த்துகலை என்றே பொருள்கொள்கிறார். பரதரின் இந்த இலக்கணம் மேலே சொன்ன கூறுகளுடனும் ஒத்து போவதை உணரலாம்.

 

இந்த அடைப்படைகளின் மீது கட்டி எழுப்பபடும் நடனக்கலை அதன் கலாச்சார, அரசியல் பின்னணியினால், பண்பாட்டு உளவியல் மற்றும் வாழ்வியல் காரணங்களால், சுற்றுச்சூழலின் இயற்கை அமைவுகளால், உள்ளடக்கத்தால்,உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவம் கொள்கிறது. அதன் பேசுபொருளும், வடிவங்களும் வெவ்வேறானாதாக இருக்கலாம் ஆனால் அது உலக மனிதர்களின் உடலின் மொழி. ஒரு ஆப்பிரிக்க மொழி உங்களுக்கு தெரியாமலிருக்கலாம் ஆனால் ஒரு ”ஆக்பெகோர்” (agbekor) நடன்க்க்லைஞனின் உடல் மொழி உங்களுக்கு புரியாமலிருக்காது. ஏனென்றால் நடனம் உலகத்தின் பொது மொழி கூட.

 

ஆனால் ஒவ்வொரு நடனக்கலைகளுக்கு என்று தனிப்பட்ட குறியீடுகளும், படிமங்களும் உண்டு அது அந்த நடனவகையின் சமூகப்பின்னணியை கருத்தில் கொள்ளாமல் ஒருபோதும் நமக்கு புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம். தென்தமிழ் நாட்டில் ஆடப்பெறும் கணியான் கூத்தை புரிந்து கொள்ள சுடலை மாடனுக்கு ”கைவெட்டு” ரத்தபலி கொடுக்கும் கணியானின் தொன்மம் பற்றிய புரிதல் தேவையாக இருக்கிறது.

ஜப்பானிய கபுகி(kabuki) நடனத்தை புரிந்துகொள்ள பதினாறாம் நூற்றாண்டின் ”தொகுவா ஷொகுந்தே” ராணுவ ஆட்சியின் வரலற்றை பற்றிய அறிதல் தேவைப்படுகிறது. 1920களில் மேற்கில் ஒரு இயக்கமாக உருவாகி வந்து மூதல் உலகப்போருடன் முடிவுபெற்ற ‘ஃபிளாப்பர்ஸ் ‘ காலகட்டத்தை அறியாமல் “பிளாக் பாட்டம்” (black bottom) நடனத்தை ரசிக்க முடியாது.

 

நடனக்கலையின் மூலத்தை தேடிசெல்ல வேண்டுமாயின் மானுடவியல் ஆய்வாளர்களைப்போல நாமும் தொல்குடிகளின் ஆதி உடல்களை நோக்கித்தான் செல்லவேண்டி இருக்கிறது. அங்கிருந்து தொடங்குவது தானே சரி.

 

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த

பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.

 

நீச்சல் நடனக்கலைஞனான ஆட்டனத்தியைத்தேடும் ஆதிமந்தி எழுதிய வரிகள் இவை. நடனமே காதலின் வாசலாக தனக்கும் ஆட்டனத்திக்கும் இடையே உள்ளதாக கண்டுகொள்ளும் ஆதிமந்தி எழுதிய இந்த ஒரே ஒரு பாடலே சங்க கவிதையில் உள்ளது. இப்படிப்பட்ட நம் மூதாதையர்களின் நடனம் மீதான காதல் நமக்கு உந்துதல் அளிக்கிறது. “நடனமாடுங்கள் அது உங்கள் ரத்தத்தில் உள்ளது, எப்போதெல்லாம் விடுதலையை உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் நடனமிடுங்கள்” என்கிறார் சூஃபியிசத்தின் தந்தையான ஜலாலுதீன் ரூமி. “ஒரு தடவை கூட சின்னதாக நடனமாடாத நாட்கள் வீணானவை” என்று தத்துவவாதி நீட்சே கூட சொல்லியிருப்பதாக எங்கோ படித்தேன். ஆச்சரியமாக இருந்தது.

 

கூத்துப்பட்டறை சுரேஷ்வரன் – களிப்பும் கற்பிதமும்

 

1

நடிப்பு என்பது நடிகனின் மொழி. ஓவியம், சிற்பம், நடனம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போல நடிப்பு என்பதும் ஒரு மொழி. மொழி என்பது எண்ணங்களையும் உணர்வுகளையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பது. நடிப்பு அவ்வாறு பகிர்வதோடு அல்லாமல் ஆழ்ந்த அனுபவத்திற்குப் பிறரை ஆட்படுத்துவது என்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பது.

 

மொழி என்று வருகிறபோது அதன் தோற்றம் குறித்த கேள்வி நம்முள் எழுdramaற்காய் சொல்லப்படுபவைகளாக அவைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த அளவிற்கு ஒன்று தொன்மையானது என்று சொல்லப்படுகிறதோ அந்த அளவிற்கு அதன் முக்கியத்துவம் கூடும். போதிய கவனமும் பொறுப்புணர்வும் இன்றி அதனைக் கையால்வது அதனால் தவிர்க்கப்படலாம் என்ற அக்கறை அதற்குப் பின்னால் இருக்கலாம். எது எப்படியோ நமக்கு நமது நடிகனின் மொழியின்மீது அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையின் அடிப்படையில் மட்டுமல்ல, அறிவுக்குப் பொருத்தமான காரண காரியத்தின் அடிப்படையில் நின்றும் சொல்கிறோம்… நடிப்பு ஓர் ஆதிகலை! மூத்தகுடி பேசிய முதல்மொழி நமது நடிகனின் மொழி. உடல்மொழி!

 

உணவுக்காய் பிற உயிரினங்களை வேட்டையாட வேண்டியவனாய் இருந்தான் காட்டுமனிதன். அதே காரணம் பற்றி அவன் பிற உயிரினங்களால் வேட்டையாடவும் பட்டான். பசியும் அச்சமும் உள்ளிருந்து கிளர்த்த மனிதனும் விலங்கும் மூர்க்கமுடன் எதிர்கொண்ட தருணங்களில் காடு அதிர்ந்தது. வேட்டை நிகழ்வில் உயிர்மீளும் கணம் ஒவ்வொன்றும் பெருமகிழ்ச்சி கொடுக்க, அதைப் பிறரோடு பகிரவும் கொண்டாடவும் துடித்தானவன். கொடுவிலங்கை தான் வீழ்த்திய கதையை மொழியறியா அம்மனிதன் தன் உடலையே மொழியாக்கிக் கதைக்க, அவன்தன் மனைவியும் மக்களும் நட்பும் சுற்றமும் தம் விழிகளையே செவிகளாக்கி உற்றுக்கேட்டனர் அதை. தான் கொன்ற மிருகத்தைத் தன் கற்பனையால் உயிர்ப்பித்து, அதனோடான தனது போராட்டத்தை அவன் நிகழ்த்திக் காட்டிய அக் கணத்தில் முளை விட்ட கலைதான் நடிப்புக்கலை.

 

உணவுமுறையும் வாழிடமும் மனிதனுக்குள் நுட்பமான சலனங்களை நிகழ்த்தவல்லவை. தன்னால் வெல்லமுடியாத ஆற்றல்களை வணங்கத் தலைப்பட்டவன் சடங்குகளைக் கண்டடைந்தான். பேரச்சத்திலிருந்தும் பெரும்பசியிலிருந்தும் பெருகி வந்த அவனின் விநோத நம்பிக்கைகளை உண்டு பெருத்தது சடங்கு. உணவுக்கென வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல்கள் ஆடைகளாயின. எலும்புகள் ஆயுதங்களாயின. விலங்குகளின் அசைவுகள் அடவுகளாயின. வேட்டை ஆட்டமானது. ஆட்டம் சடங்கின் அங்கமானது. வேட்டைக்கு முன்பும் வேட்டைக்குப் பின்பும் சடங்காடினான். சடங்கின் ஆட்டம் அவனுக்கு வேட்டைக்கான மனோபாவத்தையும் வேட்டையாடுதலின் நுட்பங்களையும் அவனளவில் பேராற்றல்களின் காப்பையும் அவனுக்கு ஒரு சேர அளித்தது. தாம் ஆடிய வேட்டையோடு மூத்தோர் ஆடிய மாபெரும் வேட்டையையும் அடுத்த தலைமுறை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் பொருட்டும் அதன்வழி வேட்டையின் நுட்பங்களை அது கற்றுக்கொள்ளும் பொருட்டும் ஆடிக்காட்டினான். தன்னை வெளிப்படுத்துவது என்பதிலிருந்து பிறிதொன்றையும் பிரதிபலித்திக்காட்ட ஆதிமனிதன் முனைந்த அந்தக் கணம் மிகவும் முக்கியமானது. கதாபாத்திர ஏற்பு என்பதின் துவக்க வடிவம் கருக்கொண்டது அக்கணத்தில்தான்.

 

ஒரு கலைச்செயல்பாடு என்கிற வகையில் ‘நயனில சொல்லினும் சொல்லுக, பயனில சொல்லாமை நன்று’ என்கிறது தமிழ் மரபு. மக்களுக்குப் பயன்படாத எதுவொன்றையும் நிராகரிக்கிற மரபு நம்மரபு. அவ்வகையில் நடிப்புக்கலை பகிர்தலில் பொழுபோக்கின் அம்சங்களோடு, அடுத்த தலைமுறைக்கு வேட்டையின் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கும் காரியத்தைச் செய்யக்கூடிய ஒன்றாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. வேட்டைச் சமூகத்தில் வேர்பிடித்து, கிளைபரப்பி, காடுகடந்தும் பரந்திருக்கிற நடிப்புக்கலை, கற்காலம் தொட்டு இக்காலம் வரைக்கும் அடைந்திருக்கிற மாற்றங்களும் கண்டடைந்திருக்கிற நுட்பங்களும்தான் எத்தனை \

 

 

 

2

முன்னரே கண்டதுபோல பண்டு காலத்திலேயே வேர்கொண்ட நமது நடிப்புக்கலை, அதன் முளைப்பருவத்தில் தற்போது நாம் காணும் வடிவில் செறிவு பெற்றிருக்கவில்லை. காட்டு மனிதனிலிருந்து உடல்வழி வழிந்த அது காட்டாற்றின் மூர்க்கத்தோடு இருந்தது. அவனது அசைவுகளில் காட்டு மிருகங்கள் தென்பட்டன. மிருகங்களின் உறுமலும் பிளிறலும் கதறலும் சீற்றமும் அவன் குரலேறி வந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல்களையும் நரம்புகளையும் எலும்புகளையும் கொண்டு இசைக்கருவிகளையும் உருவாக்கிக் கொண்டான். ஆட்டத்தின் அசைவுகளோடும் குரலோடும் இசையையும் இணைவுக்கொள்ளச்செய்து கலைஞனாகிப் போயிருந்தான் காட்டுமனிதன்.

 

மழைபொய்த்து காடு கருகிய ஒரு காலத்தில், நீர் தேடியும் உணவு தேடியும் காட்டாற்றின் வறண்ட சுவடு பற்றித் தொடர்ந்தவன் நிலம் தொட்டான். தேங்கிக் கிடந்த நீரருகே தங்கிப்போனான். விதைக்குள் உறங்கும் காட்டைக் கண்டுகொண்டவன் நிலம் கீறத் துவங்க, அவன் மனசு நிலத்தோடு சேர்ந்து பண்பட்டது. உணவுக்காய் உழுது பயிர்செய்யத் துவங்கினான். வாழிடமும் உணவுமுறையும் புத்துலகம் ஒன்றை அவனுள் திறக்க, காட்டாறு நிலம் தொட்டு சற்று நிதானம் கொண்டது. நடிப்புக்கலை அதன் அடுத்தகட்டமும் கண்டது.

 

பயிர் வாசனையை அவன் முகரும் போது அவனுள் ஏதோ ஒன்று இரத்த வீச்சத்திற்காய்த் தவித்தது. புதிய மதிப்பீடுகளினாலான வாழ்க்கை முறை சடங்குகளிலேயே அதற்கான தீர்வையும் வகுத்தது. வேட்டைக்கான வடிகால்களாய் பலி கொடுத்தல், ஏறுதழுவல், வீரவிளையாட்டுகள், கூத்து எனக் கண்டது. அனைத்தும் சடங்குகளை மையம் கொண்டன. சடங்குகள் வழிபாட்டிடத்தை மையமாகக் கொண்டிருந்தன. சகலகலைகளும் சங்கமிக்குமிடமாக வழிபடும் இடம் இங்கு ஆனது.

 

வேட்டையாடி விலங்கினை வீழ்த்தியதைக் கொண்டாட்டமான மனநிலையோடு நடித்துக்காட்டியதைப் போலவே பயிர்கள் நன்கு செழித்து வளர்வதையும் இளங்காற்றில் அவை அசைவதையும் தன்மொழியில் சொல்லத்தலைப்பட்டான் அவன். புதிய மதிப்பீடுகளை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் சுயசந்தோஷத்திற்காகவும் தன் கற்பனையைக் கொண்டு கதைகளைப் புனைந்தான். வெல்ல இயலாத சக்திகளையெல்லாம் கதாபாத்திரங்களாக்கினான். அசாத்தியமான கற்பனையாற்றலின் வழி படைப்பாற்றலின் ருசியினை அறிந்தான். அனைத்து கலைகளிலும் இலக்கியங்களிலும் நுட்பம் கூடின. நடிப்புக்கலை அடுத்தடுத்து நுட்பங்களை அடைந்துகொண்டே இருந்தது. .

 

நம் தொல்தமிழ்க்குடியின் பெரும்பரப்பை கடல் குடித்துத் தன் தாகம் தணித்துக்கொண்டபோது கரைந்து போயிருந்த நூல்கள் கடலளவு. எஞ்சியவைகளையும் நினைவில் மிஞ்சியவைகளையும் கொண்டு இலக்கணம் தொகுக்க தொல்காப்பியம் ! தமிழின் மூத்தநூல், கூத்தநூல், செய்யிற்றியம், சிலப்பதிகாரம் போன்றவற்றில் தமிழ்மரபு நடிப்புக் கலையின் நுட்பங்களை நுணுகிப் பார்த்திருப்பதற்கான தடம் தென்படுகிறது. அவ்வகையில் ஒரு மெய்ப்பாடு தோன்றுவதற்கான நிலைகளன்கள் நான்கு என்கிறது நம்மரபு. பொருள், உணர்வு, குறிப்பு மற்றும் அதன் வெளிப்பாடு என்பவையே அவை. வரிப்புலியொன்றைக் காணும் கணத்தைப் பிளந்து நிலைக்களன்கள் நான்கும் விளக்கமாக முனைவோம். புலி- பொருள். விழிவழி புலி என்பதனை அறிதல்- புலனுணர்வு. அவ்வுணர்வு மனதுள் கிளர்த்தும் அச்சம்- குறிப்பு. அச்சம் தாளாத உடலின் நடுக்கம்- வெளிப்பாடு.

 

அதேபோல், மனதில் தோன்றும் குறிப்புகளை நம்மரபு சுவை என்கிறது . ” நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டாம் மெய்ப்பாடென்ப ” ஆக, சுவை எட்டு. தன்னுள் பீறிடும் எட்டுவிதமான சுவையாறுகளின் ஆழ அகலங்களில் திளைத்தெழும் அனுபவமே படைப்பாற்றல். ”உய்ப்பேன் செய்தது.காண்போர்க் கெய்துதல் மெய்ப்பாடென்ப மெய்யுணர்த்தோரே” (செயிற்றினார்). அந்த அனுபவத்தை பார்வையாளனையும் அடையச் செய்யும் திறனே ஆளுமை. வெளிப்பாட்டின் வழி தன் உள்ளக்குறிப்பை பார்வையாளனையும் உணரச்செய்வதில் இருக்கிறது நடிகனின் ஆளுமை. அகத்தின் அழகு முகத்தில் என்பது பழமொழி. உள்ளமே உடலாகி இயங்கல் என்பது நடிகனின் மொழி, உடல்மொழி.

 

மஜீத் மஜிதி நேர்காணல் மொழிபெயர்ப்பு ஜா. தீபா சொல்லியும் தீராத கதைகள்

 

majith

“கடவுளுக்கு கண் பார்வையில்லாதவர்களை மிகவும் பிடிக்கும் என எங்களது ஆசிரியர் சொல்லுவார். நான் ஆசிரியரிடம் கேட்டேன், ‘நமக்குத் தான் கண் தெரியாதே , படைத்த அவரைக் கூட நம்மால் பார்க்க முடியாதே?’ அவர் சொன்னார், ‘கடவுள் கண்ணில் தெரிவதில்லை. ஆனால் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். உன்னுடைய விரல் நுனியால் அவரை ஸ்பரிசிக்க முடியும்.’ என்றார். இப்போது அவரை என் கையால் உணர்கிறேன், எல்லாவற்றையும் கடவுளிடம் சொல்லி விடுகிறேன்.  என்னுடைய ரகசியங்களைக் கூட அவருக்கு தெரிவித்து விடுகிறேன்.’ இது ‘colour of paradise’ படத்தில் கண் பார்வையற்ற சிறுவன் பேசுவது. குழந்தைகள் படம் என்பது குழந்தைகள் பார்ப்பதற்காக மட்டுமல்ல, அவர்கள் மூலமாக நமக்கு பாடங்கள் தெரிந்து கொள்வதற்குத் தான் என்பதை தனது ஒவ்வொரு திரை மொழியிலும் அழுத்தமாகச் சொல்கிறார் ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதி. எவ்வளவு சொல்லியும் இன்னமும் தீராத கதைகள் அவரிடம் இருக்கின்றன. மஜீதின் தேர்ந்த கதை சொல்லும் பாத்திரங்கள் எப்போதும் குழந்தைகள் தான். அவர்கள் மூலமாகவே நம்பிக்கையையும், பேருணர்வையும் நமக்கு ஏற்படுத்தமுனைகிறார்.

இவருடைய படங்களில்  எல்லாமே இருக்கின்றன வன்முறையைத்  தவிர. இவர் இயக்கிய ‘children of heaven’ படம் ஈரானில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்டது. அந்த வருடம் ஆஸ்கர் விருததை இத்தாலிய திரைப்படம் ‘life is beautiful’ படம் வென்றது. ஆனால் இன்று வரை அனைவராலும் விரும்பப்பட்டு, பெருமிதமான இடத்தைப்பெற்று வருகின்றன இவரது படங்கள். ஈரான் நாட்டில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படுகிற தணிக்கைகளுக்கு நடுவே படங்கள் வெளிவருவதே சாகசங்கள்   தான். ஒவ்வொரு இயக்குனருமே அங்கு போராளிகள் தான்.

உணர்வுப்பூர்வமான  சிறுகதைகளின் சேர்க்கைகளாகவே இவரின் எல்லா படங்களும் அனுபவத்தைத் தருகின்றன. திரைப்படங்கள் மட்டுமின்றி ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார் மஜீத் மஜிதி. தற்போது காஷ்மீர் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தியாவைக் களமாக கொண்டு ஒரு படம் இயக்கப் போவதாகவும் தன் விருப்பத்தினை அறிவித்திருக்கிறார்.

திரைப்படத் துறைக்கு எப்போது அறிமுகமானிர்கள்?

மஜீத் மஜிதி: என்னுடைய பனிரெண்டாவது வயதில், ஒரு நாடகத்தில் நடித்தேன். நாடகமும், நடிப்பும் பிடித்துப்போனது. அதிலேயே தொடர்ந்தேன். பிறகு இயக்கும் வாய்ப்பு வந்தது. அதிலிருந்து எழுதவும், இயக்கவும் ஆரம்பித்தேன். என்னுடைய முதல் படம் ரொம்பவும் கடினமான வேலையாக இருந்தது. ஆனால் எந்த இயக்குனருக்கும் அவருடைய முதல் படம் தான் தன்னை வெளிக்காட்டும் படைப்பாக இருக்கும். எத்தனைத் தடைகள் வந்தாலும் பலகீனங்களுக்கு இடம் கொடுக்காத படைப்பாக இருப்பது முதல் படம் தான்.

சில்ரன் ஆப் ஹெவன்’ (Children of Heaven) படத்தில் குழந்தைகள் ஈரானிய கிராமம் ஒன்றின் குறுகிய தெருக்களில் ஓடும் பல காட்சிகள் இருக்கின்றன. அப்போது சாலையில் கடந்து போகும் மனிதர்கள் நடிகர்களா அல்லது யதார்த்தமாக படப்பிடிப்பு செய்யப்பட்டதா?

மஜீத் மஜிதி : அந்த வாழக்கையை அப்படியே பதிவு செய்வதற்கு காமெராவை மறைத்து வைத்து படம்பிடித்தோம். அப்படி எடுக்கும்போது சில தவறுகள் நேர்ந்தன. ஆனால் அவை எல்லாமே யதார்த்தமாகவே இருந்தன. முக்கிய கதாபாத்திரத்திற்கே காமெரா எங்கிருக்கிறது என்பது தெரியாது. அது இன்னும் இயல்பைத் தந்தது. படப்பிடிப்பு நடப்பதே தெரியாமல் படம் எடுப்பதென்பது ரொம்பவும் கஷ்டமானது. ஆனால் மிக யாதார்த்தமான நடிப்பை அதில் பெறமுடியும்.

எல்லா நாடுகளிலுமே வறுமை இருக்கிறது. ‘சில்ரன் ஆப் ஹெவன்’ (Children of heaven) படத்தில் வறுமையைக் காட்டும்போது மட்டும் பிரச்னை எழ என்ன காரணம்?

மஜீத் மஜிதி: இந்தப் படத்தை பார்ப்பது பெரும்பாலும் குழந்தைகள் என்பதால் தான் இந்த பிரச்சனை எழுந்தது. வறுமையை கொண்டாடக்கூடாது என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. வறுமையைக் காட்ட வேண்டுமென்பது என் எண்ணமும் இல்லை. எங்காவது ஒரிடத்தில் காமெராவை வைத்துவிட்டு அங்குள்ள வறுமையை பதிவு செய்வதென்பது கஷ்டமான காரியமல்ல. அது அல்ல என்னுடைய நோக்கம். ஒன்றைக் காட்டுவதன் மூலம் வேறொன்றை நான் சொல்ல விரும்புகிறேன். என் படத்தில் காட்டப்படும் வறுமைக்கு கூட ஒரு மரியாதை இருக்கும்.

சில விஷயங்கள் ஸ்க்ரிப்டில் இருக்காது. நடிக்கும்போது, ஒளிப்பதிவு, இசை , சில உருவகக்  காட்சிகள் இவற்றையெல்லாம் சேர்த்து பார்க்கும்போது வேறு ஒரு வடிவத்திற்கு வந்துவிடும். எனக்கு அப்படித்தான் நடக்கின்றன. இந்தப் படம் ஈரானில் மிகப்  பெரிய வெற்றி பெற்று சாதனை  படமானது. சர்வதேச அளவில் பெரிய விருதுகளைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள், இது போன்ற திரைக்கதைகள் லாபம் தராது என்று நினைத்தார்கள். நான் உறுதியாக நம்பினேன்  இது அனைவரையும் போய்ச் சேரும் என்று.

சர்வாதிகாரம், அரசியல் சூழலுக்கு நடுவில் உங்களது ஈரான் நாட்டில் படம் எடுப்பது எப்படி சாத்தியப்படுகிறது? (1997 ம் ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல்)

 

maj

மஜீத் மஜிதி : படப்பிடிப்பு கருவிகள், பிலிம் சுருள்கள் அரசாங்கத்திடமிருந்தே பெறவேண்டும். இதனை அவர்களிடமிருந்தே நாங்கள் வாடகைக்கு பெறவேண்டும். திரையிடுவதற்கான அனுமதியும் அவர்களிடமிருந்தே பெற வேண்டும். அதனால் படத்தில் எந்த மாற்றமும் அவர்கள் கொண்டு வரலாம். தடுக்கவும் செய்யலாம். கலை, கலாசார ரீதியினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு தருகிறார்கள். A கிரேட் படங்களுக்கு அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களில் விளம்பரம் தரும். நல்ல திரை அரங்குகளில் வெளியிடவும் அனுமதி தரும்.  C கிரேட் பட இயக்குனர்களை ஒரு வருட காலத்துக்கு படம் எடுக்க தடை விதிக்கும்.

முன்னை விட தற்போது ஈரானில் திரைப்படம் எடுக்கும் சூழல் சுலபமாகிருக்கிறதா? (2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட நேர்காணல் )

*

மஜீத் மஜிதி: கடாமி அதிபர் ஆனதற்கு பின் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கலாசாரத் துறையின் அமைச்சராக இருந்தவர். ஈரானிய படங்களை சர்வதேச நிலைக்கு மேம்படுத்துவதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இப்போது அதிபரானதற்கு பின்பும் கூட சினிமாவிற்கு அதே பங்கினை செய்கிறார். இது எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இரானிய படங்கள் மேலும் சர்வதேச அங்கீகாரங்கள் பெறும். எதிர்காலத்தில் சிறந்த இயக்குனர்கள் உருவாவார்கள்.

‘பரான்’ படம் (Baran) ) சிறு வயது காதலைப் பற்றி சொல்கிறது. கதாபாத்திரத்தின் தன்மையை எப்படி நடிகர்களுக்கு புரிய வைத்தீர்கள்?

இருவரின் அன்பும், உடல் கடந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால் படத்தில் நடித்த ஜாஹ்ராவையும், ஹொசெய்னியையும் பேச விடக் கூடாது என்பதை முதலிலேயே தீர்மானம் செய்து விட்டோம். கலீப் கதாபாத்திரத்திற்கு ஃபாதர் படத்தில் நடித்த ஹொசைன் அபேதினி சரியாக பொருந்தினான். முதலில் ஹோசெயணியை பார்க்கும்போது அவனுக்கு பனிரெண்டு வயது. பள்ளிக்கூடம் போகாமல் ஒரு  பழக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஃபாதர் திரையிடப்ப்படும்போது அவனுக்கு ரொம்ப சந்தோசம். நான் பிரபலமாகி விடுவேன். தர்பூசணி விற்று கொண்டு போகும்போது எல்லோரும் என்னிடமே வாங்குவார்கள்  என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவனை பள்ளிக்கூடம் போவதற்கு நாங்கள் தூண்டினோம். ஆனால்  இது நடந்து பத்து வருடங்கள்  ஆகி விட்டன. இப்போதும் ஹொசெய்னி பழக்கடையில் தான் வேலைப் பார்க்கிறான்.

அந்த பெண் கதாபாத்திரத்தை நேரில் கண்டுபிடிக்கத்தான் அதிக சிரமமாகி விட்டது. மிக  அழகான பெண்ணாக இல்லாமல், ஆனால் முகத்தில் ஒரு  தெய்வீகத் தன்மையுடன் உள்ள பெண் தேவைப்பட்டாள். என்னுடைய உதவி இயக்குனர்களுக்கு முழு திரைக்கதையும் தெரியும். அவர்கள் வீடியோ காமெராக்களை எடுத்துக் கொண்டு சுற்றினார்கள். கண்கள் தான் எனக்கு முக்கியம். உறுதியும், கனிவும் கொண்ட கண்கள் வேண்டும் என அவர்களிடம் சொல்லியிருந்தேன்.

டெஹ்ரான் பகுதியில்  முதலில் தேட ஆரம்பித்தோம். அங்கு பல பள்ளிகளில் ஆப்கானிஸ்தானியர்கள்  படிக்கிறார்கள். ஒன்றரை மாதங்கள் கழிந்த பின்பும் யாரும் கிடைக்கவில்லை. பின்பு மஷ்ஹாத் என்கிற இடத்திற்கு போக தீர்மானம் செய்தோம். இது ஆப்கானிஸ்தான் எல்லையில்  உள்ளது. அங்கு பாலைவனத்தில் இரண்டு பெரிய ஆப்கான் அகதிகள்  முகாம்கள் இருந்தன. ‘அங்குள்ள அதிகாரியிடம், 13-16 வயது வரை உள்ள எல்லா பெண்களையும் அழைக்க முடியுமா? என்று கேட்டேன். மைக்கில் அவர் அழைத்தார். ஐநூறு பெண்கள் வரை வந்தார்கள். சட்டென்று ஒரு பெண்ணைப் பார்த்தேன். கருப்பு, வெள்ளை நிற திரையை அணிந்திருந்தாள். ‘இந்த பெண் தான்’ என தீர்மானித்து விட்டேன். அதற்குள் கூட்டத்திற்குள் அவள் காணாமல் போய் விட்டாள்.

அவளைக் கண்டுபிடித்து  பேசத் தொடங்கினேன். உறுதியான மனம் படைத்த பெண். பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். அந்த பகுதியைப்  பற்றிய அவளுடைய விஸ்தாரமான அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அவளுக்கு என்னையும், என்  படங்களையும் நன்றாக தெரிந்திருந்தது. பழைய படங்களில் நான் நடித்ததையும் பார்த்திருக்கிறாள். ஆவலுடன் சென்று அவள் குடும்பத்தினரை சந்தித்தேன். அவர்கள் நன்றாக வரவேற்றனர். மற்ற அகதிகள் வீடு போலவே இரண்டு அறைகள், ஒரு சமையலறை, கருப்பு வெள்ளை டிவி, பொது கழிப்பறை என்று வீடு அமைந்திருந்தது.

ஐந்து பேர் கொண்ட  குடும்பத்தை  டெஹ்ரானுக்கு வரவைத்தோம். அவர்கள் தங்குவதற்கு  வீடு ஏற்பாடு செய்தோம். அவளுடைய  சகோதரர்கள் படிக்க ஏற்பாடு  செய்தோம். படப்பிடிப்பின் இடைவெளியில் ஜாஹ்ராவும் படிக்கத் தொடங்கினாள். அவள் அப்பாவும் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஜாஹ்ரா என்னுடைய மகள் போலவே ஆகிவிட்டாள். பல நேரங்களில் முக்கிய ஆலோசனைகளை  என்னிடம் கேட்டிருக்கிறாள். அவள் மட்டும் அமெரிக்கா சென்றாள் என்றால், ஆப்கானின் சிறந்த தூதுவராக இருப்பாள்.

ஈரானில் உள்ள ஆப்கானியர்கள் எப்படி இதை எடுத்து கொண்டார்கள்?

இந்தப் படம் அவர்களை  ரொம்பவும் மகிழ்வித்தது. ஜாஹ்ராவின் புகைப்படம் நாளிதழ்களில் வெளிவந்ததும் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன. ஜாஹ்ராவின் படத்தை கத்தரித்து தங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டி  வைத்துக் கொண்டனர். இது அவர்களுக்கு  பெருமையைத் தந்தது.

maji

படப்பிடிப்பு தளத்தில் கூட ஜாஹ்ராவும், ஹோசெனியும் பேசிக் கொள்வதில்லை. ஒருவருக்கொருவர்  ஏதாவது சொல்லவேண்டும் என்றாலும்  கூட எங்களிடம் தான் அதைப் பகிர்ந்து கொள்வார்கள். ஒருமுறை ரொம்ப குளிராக இருந்தது. இருவரையும் ஒரு அறைக்குள் சென்று நெருப்பின் அருகில் கொஞ்ச நேரம் நின்று விட்டு வரச் சொன்னோம். சிறுது நேரத்திற்குப் பிறகு என்னுடைய உதவியாளன் என்னிடம்,’ சார் கொஞ்சம் வந்து பாருங்களேன்’ என்றான். அங்கு போன போது இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெகு சில ஈரானியப் படங்களே வெளிநாடுகளில் காணக்கிடைக்கின்றன. அங்கு தயாராகும் எல்லா படங்களையுமே பார்க்க முடியாததன் காரணம் என்ன?

மஜீத் மஜிதி : எங்களுடைய நாட்டில் வருடத்திற்கு 70 முதல் 80 படங்கள் வரை தயாரிக்கிறோம். அதில் 40 முதல் 50 படங்களே ‘நடுநிலை’ என்பதற்குள் வருகிறது. இங்கு நடுநிலை என்பது வெறும் பரபரப்புக்காகவும், பொழுதுபோக்குகாகவும் எடுக்கப்படுகிற படங்கள். அவை ஹாலிவுட் போல ஃபாஸ்ட் ஃபுட் வகை படங்கள். வெறும் பொழுதுபோக்கு என்பது தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத படங்கள் அவை. பணம் சம்பாதிப்பது மட்டுமே அதன் நோக்கம். ஆனால் எங்களிடம் இருபது முதல் முப்பது இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தான் ஈரானின் கௌரவம். இந்தப் படங்களின் வெற்றி தான் ஈரானுக்கு வெளியே பேசப்படுகிறது. இந்த இயக்குனர்கள் வருடத்திற்கு 10 முதல் 15 நல்ல படங்களை எடுக்கிறார்கள். இவை மட்டுமே மற்ற நாடுகளில் திரையிடப்படுகிறது. பெரும்பாலும் இந்தப் படங்கள் திரைப்பட விழாக்களிலும், திரைப்பட சங்கங்களிலுமே காட்டப்படுகிறது. வெகு சொற்பமான படங்கள் தான் திரைப்பட சந்தைக்குள் வருகின்றன. இந்த சந்தைகளில் பங்கெடுப்பதில் தான் எங்களது உண்மையான வெற்றி இருக்கிறது.

நவீனமயமாக்கலின் தாக்கங்கள் உங்கள் திரைக்கதையில் தவறாமல் இடம்பிடிக்கின்றன.. என்ன காரணம்?

என்னுடைய படங்களில் யாதார்த்தங்கள் மட்டுமே இடம்பிடிக்க வேண்டுமென  நினைக்கிறேன். மக்கள் நவீனமயமாக்களுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். மக்களை அது சிறைப் பிடித்து வைக்கிறது. ஒருவனை நவீன நகரம் எப்படிப் பேராசைக்காரனாக, ஆசைகளைத் தூண்டி விட்டபடியே இருக்கிறது என்பதை ‘song of sparrow’ போன்ற படங்களில் சொல்லி வருகிறேன்

உடலின் மொழி நடனம். சந்தோஷ் நாராயணன்

images (1)

ஆதிபரன் ஆட அங்கை கனலாட

ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட

பாதிமதி யாட பாரண்ட மீதாட

நாதமோ டாடினான் நாதந்த நட்டமே

– திருமூலர்

 

நட‌னக்கலையின் வரலாறு பற்றி தேடும்போது “நடனம் எப்போது தோன்றியது என்று ஊகிக்க இயலவில்லை” என்பதே பதிலாக இருக்கிறது. ஆனால் பிரபஞ்சம் தோன்றியபோதே நடனமும் தோன்றி இருக்க வேண்டும் . பிரபஞ்சத்தின் இயக்கத்தையே மாபெரும் நடனமாக உருவகித்துக்கொள்ளும் மரபு நம்முடையது. தில்லை நடராஜர் அதன் உருவகம் என்பது அறிந்த செய்திதான். நடராஜரின் ஆடலை அணுவின் ஆற்றல் நடனத்தோடு ஒப்பிட்டார் விஞ்ஞானி ப்ரிட்ஜாப் காப்ரா. தேகத்தை பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகிறது கீழை மரபு. நடனக்கலை தேகத்தையே ஊடகமாகக் கொண்ட கலை.

 

மனித உடல் மட்டுமல்ல. எல்லா உயிரனங்களின் உடலிலும் நடனம் உள்ளது. தாவரங்கள் உட்பட. மழையில், காற்றில் மரங்களின் செடிகளின் நடனங்களை ரசித்திருக்கிறோம்.. பூச்சியினங்களிலிருந்து பெரிய மிருகங்கள் வரை நடனத்தை ஒரு தொடர்பு ஊடகமாகக்கொண்டு இணைகளை கவரவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ள‌வும் முனைவதை பல்துறை அறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மயிலின் தோகை நடனம் நமக்கெல்லாம் சட்டென்று ஞாபகம் வருவது. அது ஒரு அடிப்படை உயிரியல் செயல்பாடு. ஆனால் நாம் அதை ஒரு கலையாக வளர்த்தெடுத்திருக்கிறோம்.

 

மானுடவியல் அறிஞர்கள் சுட்டுவது போல நடனம் சடங்குகளின் கலையாகவே இருந்திருக்கிறது. கடவுள் வழிபாடுகள், வேட்டை மற்றும் போர் வெற்றிகள், அறுவடை நிறைவு மற்றும் காமம்  போன்றவற்றின் சடங்குகளுடன் இசையும் நடனமும் இணைந்தே இருக்கிறது. எகிப்திய சுவரோவியங்கள் முதல் இந்திய சிற்பங்கள் வரை இதைப்பார்க்கலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் சிற்பங்களிலும், பாறை ஓவியங்களிலும் மனிதர்களின் நடனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உதாரணம் சிந்து சமவெளியின் நடனமாது சிற்பம்.

 

பழங்குடி சடங்குகளின் நடனம் இன்றும் நம் கிராமங்களில் இசக்கியம்மனாகவும், சுடலைமாடனாகவும்  பல உடல்களின் வழியாக நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதைப்பார்க்கிறோம். ஆழ்மனம் நடனம் வழியாக வெளிப்பாடு கொள்ளும் தருணங்கள் அவை. தொல்மனதின் உக்கிரத்தை தீப்பந்தம் சுழற்றி ஆடும் மாடனின் வியர்வை வழியும் உடலின் ஆக்ரோஷமான நடனத்தில் பார்க்கிறோம்.

 

‘வால்இழையார் வினைமுடிய

வேலனொடு வெறியாடின்று.’

ஆநிரை கவரச்செல்லும் வெட்சிமறவர்களின் வெற்றி வேண்டி மறத்தியர்கள் வள்ளி வேடமிட்டு ஆடும் வெறியாட்டு பற்றி சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இவை. தலைவியின் உளவருத்தம் போக்கவும் வேலன் வெறியாட்டு நடத்துவதாக சில பாடல்கள் குறிப்பிடுகிறது.

 

நமது தொன்மையான சடங்குகள் நாட்டார் கலைகளாகி பின் செவ்வியல் வடிவை அடைகின்றன என்பதை சடங்கு-தெய்யம் -கதைகளி  வழியாக கண்டுகொண்டதாக சமீபத்தில் ஜெயமோகனின் ஒரு கட்டுரையில் படித்தேன்.இது உலகின் எல்லா  கலைகளுக்கும் பொருத்திப்பார்க்கலாம். இன்று உலகம் முழுதும் இளைஞர்களால் கொண்டாடப்படும் ஹிப்ஹாப் கலையின் வேர் கறுப்பின மக்களின் வாழ்வின் வரலற்றுக்குள் காலங்கள் கடந்து பின்னோக்கி நீண்டு செல்லும்.

 

நாட்டிய சாஸ்திரத்தை வகுத்த பரத முனிவர் நாட்டியம் எனபதை  ஆடல், இசை, உரையாடல், பாவனைகள், ஒப்பனை மற்றும் அரங்கம்  இவை ஒருங்கிணைந்த நிகழ்த்துகலை என்றே பொருள்கொள்கிறார். அன்று நாட்டியமே கதைகளின் வழியாக தொன்மங்களை வெகுமக்களுக்கு எடுத்துச்செல்லும் ஒரு ஊடகம்.  வாய்மொழி  பாடல்கள் வழியாக கதைகளையும் நிகழ்வுகளையும் பதிவு செய்யவும் வெளிப்படுத்தவும் வேண்டி இருந்த்தால் நாடகத்தை விட நடனமே எளிதானதாக இருந்திருக்கும்.  ஆண்களுக்குரிய  நடனத்தை தாண்டவம் என்றும் பெண்களுக்குரிய நடனத்தை இலாசியம் என்றும் பொதுவானதை நிருத்தம் என்றும் பரதர் வகுக்கிறார்.

 

நடனக்கலையின் பற்றிய பதிவுகள் சிலப்பதிகாரத்தில் நிறைந்திருக்கின்றன. சிகண்டியின் “இசை நுணுக்கம்” சியாமளேந்திர்ரின் “இந்திரகாளியம்” அறிவனாரின் “பஞ்ச மரபு” ஆதிவாயிலாரின் “பரத சேனாபதீயம்” மதிவாணரின் “நாடகத் தமிழ் நூல்” போன்றவை நடனம் பற்றிய தமிழ்மரபு நூல்க்ள்.

 

 

கி.மு. 8ம் நூற்றாண்டிலேயே கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளின் துவக்க நிகழ்ச்சி பெண்களின் நடனத்துடன் ஆரம்பித்தாக ஒரு குறிப்பு சொல்கிறது. கிரேக்கத்தின் நடன வரலாற்றைப்பார்க்கும் போது அது பழங்குடிகளின் நடன முறைகளிலிருந்து முன்னகர்ந்து செவ்வியல் வடிவம் பெற்ற ஒழுங்கமைவுடன் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பைரிச்சே என்னும் நடனம் ஒரு வகை வீரவிளையாட்டு போல ஆயுதம் தாங்கிய நடன முறை. இந்த நடனம் யுத்தப்பயிற்சியின் ஒரு பகுதியாகவே கிரேக்கத்தில் இருந்திருக்கிறது. சாகரடீசின் சொல்லில் “சிறந்த நடனக்காரனே சிரந்த வீரனாகவும் இருக்க முடியும்”. கிரேக்க பானை ஓவியங்களில் பதியப்பட்டுள்ள நடனம் பற்றிய ஓவியங்கள் டயோனைஸஸ் என்கிற கிரேக்க கடவுளுடன் தொடர்புடையவை.

 

இதைப்போலவே எகிப்து, ரோம் போன்ற எல்லா கலாச்சார வரலாற்றிலும் நடனங்கள் சடங்குகள் வழியாக சமூக தொடர்புகளுக்கான ஒரு ஊடகமாகவே இருப்பதை காணலாம். ஒரு அறிமுகமாகத்தான்  இதை எழுதி இருக்கிறேன். உலகின் பல்வேறு  நாடுகளின் நிகழ்த்தப்பட்ட படுகிற  நடனங்களின் அழகியல்கூறுகள், வடிவங்கள், சமூகப்பின்னணி இன்றைய நவீன கலை உலகில் நடனங்கள் அடைந்திருக்கும் சிதைவுகள், வளர்ச்சிகள், அதன் புதிய வடிவங்கள் பற்றியும் பேசும் முன்பு,  நடனத்தின் அடிப்படைகளை அதன் பொதுக்கூறுகளை பற்றி ஓரளவு அறிந்து கொள்வது முக்கியம். இசையைப்போலவே நடனமும் திட்டவட்டமான இலக்கணம் கொணடது தான். அதைப்பற்றி அடுத்தபகுதியில் பேசுவோம்.

 

நேர்காணல் சீன இயக்குனர் ஜாங் யிமூ. தமிழில் ஜா. தீபா – யானைகளை சுமக்கும் பாகன்

download (4)

 

 

உலகப் படங்கள் எடுப்பதென்பது  நம்முடைய கலாசாரத்தை சரியாக எடுத்துச் செல்வது தான் என்பதை தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் வெளிப்படுத்தி வருபவர் சீன இயக்குனர் ஜாங் யிமூ. குழந்தைகளின் உலகத்தை அருமையாக பதிவு செய்கிற கலைஞன். நம்பிக்கையையும், ஆழமான அன்பையும் படைப்பின் வழி சொல்லத் தெரிந்தவர். ஜாங் யிமூவின் சரித்திர படங்கள் ஒவ்வொன்றுமே நமக்கு வண்ணமயமான கனவுக்குள் நடக்கிற சதிகளையும், அன்பையுமே காட்டுகின்றன. வண்ணங்களை கையாள்வதில் இவருக்கு இருக்கிற நேர்த்தி யாரையுமே வியக்க வைத்துவிடும்.

*

அப்பா மருத்துவராக இருந்தபோதும் சீன நாட்டின் அரசியல் மாற்றங்கள் காரணமாக பல பிரச்சனைகளை  சிறு வயதிலிருந்தே அனுபவித்து வந்தவர்.

“என்னுடைய 28 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நான் என்னுடைய பலமாக நினைப்பது, தொடர்ந்து வருகிற மாற்றங்களை அவதானித்து எனது படங்களில் கொண்டு வருவது தான். என்னுடைய படங்கள் எந்த மொழியில் திரையிடப்பட்டாலும், எங்கு வெளியிடப்பட்டாலும் சீன திரைப்படத்துறைக்கும், எனது நாட்டிற்கும் அதில் லாபம் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்” என்கிற ஜாங் யிமூ சீன படங்களுக்கு சர்வதேச அந்தஸ்த்தை பெற்றுத் தந்த இயக்குனர்களின் முன்னோடி.

சீனாவில் அதிகம் விமர்சிக்கபட்ட இயக்குனரும் இவர் தான். ஒவ்வொரு படங்களை வெளியிடும்போதும் தவறாமல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார். “என்னுடைய படங்கள் அதிகம் விமர்சிக்கப்படுகின்றன. ஒவ்வொரு படத்தையும் முடித்து விட்டு அது குறித்து நானே எனக்குள் விமர்சிப்பேன். மக்களுக்கு என் படம் சென்றடைவதற்கு முன்பு நானே எனது படங்களில் பல தவறுகளைக் கண்டுபிடித்து விடுவேன். நாமே நமது படங்களுக்கு சாட்சியாக இருப்பதென்பது உங்களது படைப்பை முன்னெடுத்து செல்வதற்கான உந்துதல். என்னுடைய ஒரு படத்தில் கூட நான் திருப்தி அடைந்ததில்லை. அடுத்த முறையேனும் சிறப்பான படங்கள் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். எத்தனை விருதுகள் பெற்றாலும், நல்ல வசூல் கிடைத்தாலும் கூட எனக்கு திருப்தி ஏற்படுவதில்லை”. ஜாங் யிமூவின் கனவுகள் எப்போதுமே பெரியதாகவே இருக்கிறது. இருக்கின்றன.

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத ஜாங் யிமூவும், சீன மொழியின் ஒரு அட்சரமும் அறியாத நடிகர் கிறிஸ்டியன் பேல் (Christian Bale) இருவரும் ‘flower of war’  படத்தில் இணைந்தனர். ‘மொழி என்பது இருவருக்கும் தடையாக இல்லையா?’ என்பது தான் இந்த படம் முடிந்ததும் ஜாங் யீமூ அதிகம் எதிர்கொண்ட கேள்வி.

“முதலில்  கிறிஸ்டியன் பேலுக்கு கதையும் காதாபாத்திரமும் பிடித்திருந்தது. திரைக்கதை பற்றிய விவாதத்தின் போதே கிறிஸ்டியன் பேலுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கி விட்டேன். எங்களுடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இருந்தார். ஆனால் மொழிபெயர்ப்பாளரின் உதவி எப்போதும் தேவைப்படவில்லை. சில நேரங்களில் மொழிபெயர்ப்பதற்கு முன்பே நாங்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினோம். இதன் பிறகு படப்பிடிப்பு நேரத்தில் எதுவும் கடினமாக இல்லை”.

சீன திரைத்துறையின் ஐந்தாவது தலைமுறை இயக்குனர்களின் முக்கியமானவராக கருதப்படுபவர். சர்வதேச அளவில் திரைப்படத்திற்கான  விருதுகள் அனைத்தையும்  தனது பெற்றுவிட்டவர்.

உங்களுடையபடங்கள்என்றதும்மக்களுக்குஎதுநினைவுவரவேண்டும்எனவிரும்புகிறீர்கள்?

காட்சியின் விஸ்வரூபம். முன்பெல்லாம் ஒளிப்பதிவு என்பது  யதார்த்தமாக இருக்க வேண்டுமென நினைப்பேன். சீன  பாணி காட்சியை தருவது தான்  எனக்கு முக்கியமாக இருக்கிறது. இருபது வருடங்களில் நான் இன்னும் பல படங்கள் செய்துமுடிக்கும் போது ‘ சீன பாணியை அழகான  காட்சி பரப்பில் தந்தவர்’ என என்னை பற்றி சீன பாடப்புத்தகங்களில் வந்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.

download (5)

உங்களுடையபள்ளிக்காலக்கட்டத்தில்  நடைபெற்றகலாச்சாரபுரட்சியின்போதுமூன்றுவருடங்கள்கிராமங்களில்வேலைசெய்யநிர்பந்தபடுத்தபட்டிர்கள். எப்படிஇருந்ததுஅங்குபணிசெய்தஅனுபவம்? ஒருமருத்துவரின்மகனானஉங்களுக்குஅந்தசூழல்கடினமாகஇருந்ததா?

நான் அந்த காலகட்டத்தில்  நிறைய கற்று கொண்டேன். விதைகள் விதைத்தேன். பயிர்  செய்தேன். மரக் கிளைகளை வெட்டினேன். சமைக்கக் கூட கற்று கொண்டேன். மாடுகள், குதிரைகள், கழுதைகளையும் பராமரித்தேன். என்னுடைய படங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் கைகொடுத்தன.

பெய்ஜிங் பிலிம் அகாடெமிக்கு முதல் முறை நீங்கள் விண்ணப்பம் செய்தபோது  உங்களை ஏற்று கொள்ளவில்லை. அந்த நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது. நம்மால் ஒருபோதும் இயக்குனராக முடியாது என நினைத்தீர்களா? அல்லது ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என விரும்பினீர்களா?

ஆரம்பக் கட்டத்தில் திரைப்படம் பற்றி ஒன்றுமே  எனக்கு தெரியாது. பெய்ஜிங் திரைப்பட கழகத்தில் இடம் கிடைக்கவில்லை என்றதுமே உடற்கல்விமேல் ஆர்வம் வந்துவிட்டது. அடுத்ததாக நான் தேர்ந்தெடுத்தது விவசாயக் கல்லூரியை. ஒரு சாதாரண பார்வையாளன் என்ற வகையில் மட்டுமே எனக்குத் திரைப்படங்கள் அறிமுகமாயிருந்தன. பிறகு திரைப்பட பள்ளியில் சேரக்கூடிய வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. அங்கு நான் தான் வயதானவன். 18 – 22 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி. என்னுடைய வயது அப்போது 28. ஒளிப்பதிவு பிரிவில் தான் சேர்ந்திருந்தேன். மற்றவர்களை விட 10 வயது கூடுதலாக இருந்தது எனக்கு எப்போதும் கூச்சத்தேயே தந்தது. எனக்கு அடுத்த வகுப்பு இயக்குனர்களுக்கானது. அங்குள்ளவர்கள் 26 வயது வரை இருந்தார்கள். எனக்கு அது தான் பொறுத்தமானதாக இருக்கும் என நினைத்துக் கொள்வேன்.

 

இரண்டாம் வருடத்தில் இயக்குனர் பிரிவுக்கு மாற்றிக் கொண்டேன். அப்போது மனதளவில் வசதியாக உணர்ந்தேன். ஆனாலும்  கூட திரைப்பட இயக்கத்தில்  தனிப்பட்ட ஆர்வம் எல்லாம்  வந்து விடவில்லை. அங்கு  என்னுடன் படித்த சக மாணவர்களிடம் திரைப்பட இயக்கம் குறித்த  புத்தகங்கள் கேட்டேன். அவர்கள்  நாற்பது, ஐம்பது புத்தகங்கள்  பெயரை வரிசையாக சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அத்தனை புத்தகங்களையும்  கடன் வாங்கினேன். அவற்றை சில  திரைக்கதைகளை உடன் வைத்துக் கொண்டு படித்தேன். பிறகு  மெள்ள எனக்குள் இயக்குனராகும்  ஆசை வந்துவிட்டது.

download (3)

ஒவ்வொருபடத்திலும்வெவ்வேறுவிதமானபாணிகளை , அழகியலைபின்பற்றுகிறீர்கள். உங்களுக்குநீங்களேசவால்விட்டுகொள்கிறீர்களா?

ஆமாம். ஒவ்வொரு திரைக்கதையிலும்  இதற்கு முன்பிருந்த பாணியோ, களமோ இருந்தால் அதை நிராகரித்துவிடுவேன்.

புதியபடங்கள்செய்யும்போதுஎப்படிஉங்கள்மனநிலையைதயார்செய்துகொள்வீர்கள். அதேபாணியில்அமைந்தமற்றபடங்களைபார்ப்பீர்களா?

அப்படியான அவசியம்  இல்லை. ‘ஹீரோ’ குங் பூ படம். ‘ஹீரோ’ படத்தை இயக்குவதற்கு முன்பு எந்த குங் பூ படங்களையும் பார்த்ததில்லை. என்னுடைய சுய சிந்தனையிலேயே இயக்குகிறேன்.

ஹீரோபடத்தில்தான்முதலில்குங்பூ  வைகையாண்டீர்கள்.. எப்படிஇருந்ததுஅனுபவம்?

இந்த மனிதர்களுக்கு  இரண்டு கைகள் மட்டுமே இருப்பது எனக்கு பெரிய பிரச்சனையாக  இருந்தது. என்னுடைய கற்பனையை இரண்டு கைகளுக்குள் பொறுத்தி பார்ப்பது மிகுந்த கஷ்டமாக  இருந்தது. ஹாங்காங்கில் உள்ள பிரபலமான குங் பூ வடிவமைப்பாளரைக்  கொண்டு பயிற்சி கொடுத்தோம். அப்போதும் என்னுடைய கற்பனைக்கு திருப்தியாகவே இல்லை. சின்ன  வயதில் இருந்தே குங் பூ கலை  குறித்த நாவல்கள் படிப்பதில் ஆர்வம இருந்தது.

உங்களுடையபடங்களில்பெண்கதாபாத்திரங்கள்வலுவானதாகஇருக்கிறது. இதுயதார்த்தமாகநடப்பதா?

இதை நான் தெரிந்தே செய்கிறேன். ‘ஹாப்பி டைம்ஸ்’ படம் சிறுகதையில் இருந்து எடுத்தாளப்பட்டது. அதில் பெண் கதாபாத்திரங்கள் இல்லை. நான் திரைப்படமாக மாற்றும்போது பெண்களை சேர்த்தேன். இன்று சீனாவில் ஓரளவுக்கு பெண்கள் சமபங்கினை பெற்றுவருகிறார்கள். ஆனால் ஆயிரம் வருடங்களாக அவர்கள் அழுத்தப்பட்டே வாழ்ந்திருக்கிறார்கள். என்னுடைய படங்கள் பெரும்பாலும் நாவலில் இருந்தே உருவாகிறது. பெண்களை மையமாக கொண்ட நாவல்களைத் தான் எடுத்து வருகிறேன். இதன் மூலம் அடிப்படைவாதத்தினை எதிர்க்கிறேன். பெண் கதாபாத்திரங்கள் அடக்கபட்டவர்களாக இருந்தாலும் மிகுந்த புத்திசாலிகளாகவும் தொடர்ந்து அடக்குமுறையை எதிர்ப்பவர்களாகவும்  இருக்கிறார்கள். அவர்களால் சுலபமாக பொதுமக்களை சென்றடைய முடியும். தற்போதைய காலகட்டத்தில் சீன பெண்களை மிக உறுதியாக காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. 1937ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட நைசிங் சம்பவம் மற்றும் போர் குறித்து எத்தனையோ படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் சீனாவில் வந்து விட்டன. ஆனால் பெண்கள் பார்வையில் போரின் பாதிப்புகளை சொல்ல நினைத்தேன். ஒரு நாவலைப் (13 Flowers of Nanjing )படித்த பின் ‘flowers of war’ படத்தின் விதை மனதில் விழுந்தது. ஆறு வருடங்களுக்கு மேலாக இந்த படம் உருவாக்கம் குறித்து யோசித்து கொண்டே இருந்தேன்.

உங்கள்படங்கள்அதிகமும்நீங்கள்உபயோகபடுத்தும்வண்ணங்களுக்காகபேசப்படுகிறது. எப்படிஇந்தமாயஜாலம்நடைபெறுகிறது?

இது கதை மற்றும் அதன் பின்னணியையும் சார்ந்தே இருக்கிறது. என் படத்தின் வண்ணங்கள் இரண்டு விதமான உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கும். ஒன்று கதாபாத்திரத்தின் உணர்வுகள். மற்றொன்று அந்தக் கதையை நான் புரிந்து கொண்ட விதம். ‘curse of the golden flower’ படத்திற்கு Tung சாம்ராஜ்யத்தின் வரலாறு தேவைப்பட்டது. அவர்களின் ஓவியங்களைப் பார்த்த பிறகே வண்ணங்களை உபயோகித்தோம். சின்ன விஷயங்களில் கூட மெருகு குலையாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வண்ணங்கள் எனக்கு மிக முக்கியமானவை.

Gong li கதாநாயகியாகஉங்களுடையபலபடங்களில்பணியாற்றியுள்ளார்..முக்கியகதாபாத்திரங்களைஅவருக்குதந்திருக்கிறீர்கள். எப்படிஅவரைதயார்செய்தீர்கள் ?

Ju dou படத்திற்கு முன்பு தான் Gong liயை சந்தித்தேன். எப்போதுமே படம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நடிகர்களுடன் ஸ்க்ரிப்ட் பற்றி பேசத் தொடங்கிவிடுவேன். அவர்கள் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கிறார்கள், எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பேன், பயிற்சி நேரங்களில் அவர்கள் அந்த படத்தில் எந்த உடை அணிவார்களோ, எந்த மாதிரியான தலை அலங்காரத்தில் இருப்பார்களோ அப்படியே இருக்க வேண்டும். இப்படி செய்யும்போது கதாபாத்திரத்தோடு பொருந்தி போய் விடுவார்கள். படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் இருக்கும் சமயம் அவர்களை நடிக்க வைத்து பதிவு செய்து பிறகு போட்டு காட்டுவேன். படப்பிடிப்பு தொடங்கியதும் அவர்களிடம் ஸ்க்ரிப்ட் பற்றி எதுவும் பேச மாட்டேன். சிக்கலான காட்சி எடுக்கும்போதோ, திரைக்கதையில் மாற்றம் இருந்தாலோ மட்டுமே அவர்களிடம் தெரிவிப்பேன். ஏனென்றால் அவர்கள் மனநிலையில் அடிக்கடி குறுக்கிட கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.

நடிகர்களில் இரண்டு விதம் உண்டு. ஒன்று நடிப்பதற்கு முன்பு தியான நிலைக்கு சென்று தன்னை நடிப்புடன் ஒன்றுபடுத்துவார்கள்.. மற்றொன்று, நடிக்கதொடங்கியதுமே அந்த உணர்ச்சியில் தங்களை சட்டென்று மாற்றி கொள்பவர்கள்.

Gong li யிடம் காட்சியை விளக்கினாலே போதுமானது. அவருடைய உள்ளுணர்வு அவரை வழிநடத்திவிடும்.

download

 

உங்கள்படங்களைபற்றிபேசும்போதுஜாங்சியி (Zhang Ziyi) பற்றிபேசாமல்இருக்கமுடியாது. Crouching Tiger, Hidden Dragon (2000) படத்தில்நடித்தபிறகுதான்நடிகைஜாங்சியிஅமெரிக்காவில்பிரபலமானார். ஆனால்நீங்கள்தான்அவரைஉங்களின்ரோட்ஹோம்படத்தில்அறிமுகம்செய்தீர்கள்.

‘தி ரோட் ஹோம் ‘ படம் எடுக்கும்போது எங்களுக்கு 18, 19 வயதில் ஒரு பெண் தேவைப்பட்டார். அசலான சீன முகமாக இருக்க வேண்டுமென விரும்பினேன். ஜாங் சியி அப்போது பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து கொண்டிருந்தார். நடிப்பு குறித்த எந்த அனுபவமும் அவருக்கு இல்லை. இரண்டு முறை நேர்காணல் செய்தோம். பிறகு அவரை புகைப்படம் எடுத்தோம். எனக்கு திருப்தியாக இருந்தது. பிறகு ஜாங் சியி யை ஒரு விவசாய குடும்பத்தோடு வசிப்பதற்கு அனுப்பி வைத்தோம். அவர்களோடு ஒரு மாதம் தங்கி இருந்தார். அந்தக் குடும்பத்தினர் அவருக்கு சமைக்க கற்று கொடுத்தனர். அந்த படம் வெளிவந்ததும் சீனர்களுக்கும் ஜாங் சியி அறிமுகமாகி விட்டார். ‘Crouching Tiger, Hidden Dragon’ படத்திற்காக 18 வயது பெண் வேண்டுமென ஆங் லீ தேடிக் கொண்டிருந்தார். என்னிடம் ஜாங் சியி பற்றி கேட்டார். நான் சொன்னேன், ‘நீ தேடும் பெண்ணை ஏற்கனவே நான் பரிட்சித்து விட்டேன்’ என்றேன். பிறகு தான் அந்தப் பெண் ஆங் லீ படத்தில் நடித்தார்.

சீனாவின்தணிக்கையைஎப்படிஎதிர்கொள்கிறீர்கள்? நீங்கள்சொல்லவருவதைஉங்களால்சொல்லமுடிகிறதா?

நான் இன்னும் கொஞ்சம்  கூர்மையாக சொல்ல வேண்டும் என விமர்சகர்கள் விரும்புகிறார்கள். எத்தனை தூரம் போக வேண்டும் என்பதும் எவ்வளவு சொல்ல வேண்டும் என்பதும் சீனாவில் உள்ள ஒவ்வொரு இயக்குனரின் மனதிற்கும் தெரியும். தாங்கள் உருவாக்க நினைத்த திரைப்படத்தை தான் தந்திருக்கிறோம் என ஏதாவது இயக்குனர் சொன்னால் அது பொய் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சொல்லப்போனால் நிழல் உலகத்தை படமாக எடுக்கும்போது கூட எந்தளவுக்கு எடுக்க வேண்டும் என்கிற வரைமுறை எங்களுக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் எங்களுக்கு மிகுந்த சுதந்திரம் கிடைக்கும் என நம்புகிறோம்.

ஆஸ்கர்என்பதுஉங்களுக்குஎவ்வளவுமுக்கியம்?

இரண்டு முறை ஆஸ்கர் வாய்ப்பு வந்துள்ளது. விருது விழாவில் நான் அமர்ந்திருக்கும்போதெல்லாம் அது ஒரு அமெரிக்க விளையாட்டாகவே தோன்றும். அது முற்றிலும் அமெரிக்க பாணி. அவர்களின் தரத்தை கொண்டது. ஏன் ஐரோப்பிய இயக்குனர்கள் எல்லோரும் ஹாலிவுட்டை விஷம் என்று சொல்கிறார்கள் என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படி மூன்றாம் உலகத்தில் உட்கார்ந்து விழுமியங்களற்ற ஐரோப்பிய சினிமாக்களையும், கலாசாரமற்ற அமெரிக்க படங்களையும் பார்த்துகொண்டிருப்பது ஆர்வமாகவும் அதே நேரம் சோர்வாகவும் இருக்கிறது. சீன இளைஞர்கள் மீது ஹாலிவுட்டின் தாக்கம் கவலை அளிக்கிறது. நம்முடைய படத்தை நாமே உருவாக்கி கொள்வது நமது துறைக்கு வேலை வாய்ப்பு உத்திரவாதம் அளிக்ககூடியதாக இருக்கும்.

திரைப்படஇயக்குனராவதற்கானமுக்கியதகுதியாகஎதைநினைக்கிறீர்கள்?

தன்னம்பிக்கை. உங்களை எப்போதும் வேலைக்குள் மூழ்கவிடும் தன்மை. உங்களின் நேரத்தை எப்படி செலவிடவேண்டும் என்பது உங்களுடைய விருப்பம். எல்லாவற்றிக்கும் மேல் திரைப்படம் உருவாக்கத்தில் இருக்க வேண்டிய அசாத்திய நம்பிக்கை. சமூகத்தில்  எத்தகைய மாற்றம் ஏற்பட்டாலும்  மக்கள் நல்ல திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவார்கள். கால மாற்றங்களை  ஏற்றுக் கொள்வதும் கூட முக்கியமான தகுதி தான்.

*

 

 

2004ம் ஆண்டின் ஒலிம்பிக் சீனாவில் நடைபெற்றபோது நிறைவு  விழாவினை  நடத்தும் பொறுப்பு ஜாங் யிமூவிற்கு தரப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் ஜாங் யிமூ பற்றி சொன்ன வார்த்தைகள், “மனதின் உள்ளார்ந்த அமைதியைத் தேடும் ஒரு மனிதனின் வெளிப்பாடே ஜாங் யிமூவின் படங்களின்  வெளிப்பாடும். இந்த நிறைவு நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும் கூட அவை வெளிப்படுவதை நான் புரிந்து கொள்கிறேன்”.

 

 

 

 

 

 

 

 

***

இசை பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர் பாஸ்கர் லக்ஷ்மன்

பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர்
பாஸ்கர் லக்ஷ்மன்

 

download (11)

 

 

 

 

தன்னுடைய திறமை, உழைப்பு என அனைத்தையும் ஒரு துறையில் ஒருமுகப்படுத்தி தன் வாழ்க்கையை முழுதும் அர்பணித்த ஆளுமைகள் பலர். அப்படிப்பட்ட ஒருவர் தான் மதுரை மணி ஐயர் அவர்கள். அவர் கொடுத்துச் சென்ற இசை இந்த நிமிடத்திலும் எங்கோ ஒலித்துக் கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. சமீப காலத்தில் மதுரை மணி ஐயர் அவர்களை நினைக்கும் சமயம் க.நா.சு வைப் பற்றிய எண்ணங்கள் வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.. இருவரின் நூற்றாண்டும் ஒரே வருடத்தில் வந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.க.நா.சுவும் தன் வாழ்நாள் முழுதும் இலக்கிய சிந்தனையுடன் கழித்த ஓர் ஆளுமை. இருவரின் வாழ்க்கையும் பொருள் பட அமைந்தது என்பதை மறுக்க முடியாது.

 

மதுரை மணி அவர்கள் மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் கர்நாடக இசை விற்பன்னர் ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதிரிடம் சங்கீதம் பயின்றார். தனெக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு ஓர் உயர்ந்த சங்கீதத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார். இவரைப் பற்றி பல தகவல்கள் என் வீட்டுப் பெரியோரிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அவற்றில் சில. தான் பணம் வாங்கிக் கொண்டு பாடுவதால் கல்யாணியில் அமைந்த “நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவை சுகமா” (பணம் பெரிதா இல்லை ராமனுக்கு சேவை செய்வது பெரிதா) பாடலை பாடியதே இல்லை. பணம் பெற்றாலும் கொடுப்பதை வாங்கிக் கொள்வர் என்பார்கள். சாதாரண பிள்ளையார் கோவிலில் பாடச் சொன்னாலும் வெறும் தேங்காய் மூடி வாங்கிக் கொண்டு மணிக்கணக்கில் பாடுவார்என்பார்கள். ஒரு முறை ஒரு ரிக்க்ஷா ஓட்டுனரிடம் சவாரிக்கு வருவாயா எனக் கேட்டவரிடம், இல்லை “ஐயர் பாடப் போகிறார்” வர முடியாது என்றாராம். மகாராஜபுரம் விஸ்வநாதையர் (மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் தந்தை) மோகனம், ஆரபி போன்ற ராகங்களை மிகவும் தேர்ந்த முறையில் கையாள்பவர். அவரே ஒருமுறை மணி அவர்கள் மோகனம் பாடியதைக் கேட்டு அவரை “மோகன மணி” என்றாராம். கர்நாடகா சங்கீதத்தின் மிகப் பெரிய ஆளுமையான அரியக்குடி அவர்கள் மணியின் பாடல் “மணி”யாக இருக்கும் என்றிருக்கிறார். ஒரு முறை மணி அவர்கள் திருவல்லிக்கேணி ஹிந்து பள்ளியில் “அபராம பக்தி எந்தோ” என்ற பந்துவாரளியில் அமைந்த கீர்த்தனையில் “கபி (குரங்கு)வாரிதி தாடுணா” என பக்தியுடன் பாடும் சமயம் எங்கிருந்தோ ஒரு குரங்கு ஒரு நிமிடம் வந்து காட்சியளித்து மறைந்ததாம்.

 

மணி அவர்கள் கற்பனை ஸ்வரம் பாடுவதைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு நல்ல பேச்சாளர் பேச்சை நிறுத்தும் போது இன்னும் சிறிது பேச மாட்டாரா என்று நினைக்கத் தோன்றும். அதுபோல் தான் மணி அவர்களின் ஸ்வரம் பாடுதலும். மடை திறந்த வெள்ளம் போல் ஸ்வரங்கள் வந்து விழும். சிலர் பாடும் போது ரசிகர்களும் சேர்ந்து கற்பனை ஸ்வரம் பாடுவதைக் காணலாம். இவர்கள் ஒரே மாதிரி எல்லா கச்சேரிகளிலும் பாடுவதின் விளைவு. ஆனால் மதுரை மணி அவர்கள் பாடுவதைக் கேட்கும் சமயம் வெவ்வேறு ஸ்வரங்கள் வந்து விழும் போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

 

“தாயே யசோதா எந்தன்” என்ற தோடி ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவன் அவர்களின் பாடலில் “காலினில் சிலம்பு” என்ற இடத்தில் மணி அவர்களின் நிரவல் கேட்கக் கேட்க இன்பம். சிவனின் மற்றொரு பாடலான “கா வா வா கந்தா வா வா” என்ற வராளி ராகத்தில் அமைந்த பாடலை அருமையாகப் பாடி பிரபலப்படுத்தினார். மற்றுமொரு தமிழ் பாடலான “சேவிக்க வேண்டும் அய்யா” என்ற ஆந்தோளிகா ராகத்தில் அமைந்த முத்துத் தாண்டவர் பாடலை சிறப்பாக பாடியிருப்பார். தியாகராஜரின் “நன்னு பாலிம்ப நடசி ஓச்சி” என்ற மோகன ராகப் பாடல் மற்றும் “சக்கணி ராஜ மார்கமு” என்ற கரகரப் பிரியா ராகத்தில் அமைந்த பாடலும் எனக்கு மிகவும் பிடித்தவைகள்.

 

கச்சேரியின் இறுதியில் முக்கிய பாடல் பாடிய பிறகு தனி ஆவர்தனத்திற்குப் பின் “துக்கடா” எனப்படும் பிற பாடல்கள் பாடப்படும். இந்த துக்கடா பாடல்களைக் கேட்க என்றே ஒரு ரசிகர் கூட்டம் வரும். இந்த வகையில் மணி அவர்களின் “வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்”, “கற்பகமே கடைக் கண் பாராய்” மற்றும் “எப்போ வருவாரோ” முதலிய பாடல்கள் மிக முக்கியமானவைகள். மணி அவர்களின் ஆங்கில நோட்ஸ் மிகவும் பிரபலம். அதை இயற்றியவர் ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதராக இருந்தாலும் அதை மணி அவர்கள் பிரபலப் படுத்தியதால் மணி நோட்ஸ் என்றே வழக்கிலுள்ளது.

 

அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்ட வருடத்தில், டிசம்பர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் தருணம் மணி அவர்களின் இசையைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம்.

 

இசை காற்றினிலே வரும் கீதம் – M.S. சுப்புலக்ஷ்மி பாஸ்கர் லக்ஷ்மன்

இசை

காற்றினிலே வரும் கீதம் – M.S. சுப்புலக்ஷ்மி
பாஸ்கர் லக்ஷ்மன்

download (1)

வாழ்க்கையில் சில அனுபவங்கள் தோளில் ஏறி அமர்ந்து கூடவே பயணிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் என் இளமையில் நடந்தேறியது. அப்போது நான் ஈரோட்டில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை என் பெரியம்மா ஓர் இசைக் கச்சேரிக்கு செல்கிறேன் நீயும் வா எனக் கூடிச் சென்றார். ஆண் பிள்ளை துணைக்காக என்று நினைவு. அந்த இசைக் கச்சேரி திருமதி எம்.எஸ் அவர்களது தான். அன்று அவர் பக்க வாத்திய வித்வான்களுடன் அமர்ந்திருந்தது இன்றும் பசுமையாக என் நினைவில் விரிகிறது. அன்று எனக்கு இசை மேல் பெரிய ஈடுபாடு இருந்ததாக நினைவில்லை. ஆனாலும் அன்று எம்.எஸ் அவர்களின் குரல், அவர் பாடிய விதம் ஒரு சொல்லொணா பரவசத்தைக் கொடுத்தது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அதன் பிறகு பல வருடங்களாக அவருடைய இசையை கேட்ட வண்ணம் இருக்கிறேன். எம்.எஸ் அவர்கள் 13 வயதில் தொடங்கிய தன் இசை வாழ்கையை எழுபது வருடங்கள் இடைவிடாமல் தொடர்ந்திருக்கிறார். கர்நாடக இசையை பாடுவதில் வெவ்வேறு இசை விற்பன்னர்கள் பல வித விதமான பாணியை பயன்படுத்துகிறார்கள். எம்.எஸ் அவர்களைப் பொறுத்த வரை அவரின் தனித்துவமான குரல் வளமும், பக்தியுடன் கூடிய ஆத்மார்த்தமான பாடும் முறையே தனிச் சிறப்பு. செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் இசையமைத்த ஸ்வாதித் திருநாள் அவர்களின் “பாவயாமி ரகுராமம்” என்ற ராகமாலிகையில் அமைந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒன்று.ராகமாலிகை என்றால் பல ராகங்களின் தொகுப்பாக அமைந்த பாடல் எனலாம். இந்தப் பாட்டு சாவேரி, நாட்டக்குறிஞ்சி ,தன்யாசி,மோகனம்,முகாரி,பூர்விகல்யாணி மற்றும் மத்தியமாவதி ராகங்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது, இந்த பாடல் இராமயணத்தை சுருக்கிக் கொடுத்துள்ளது. மேலும் பிருந்தாவன சாரங்கா ரா கத்தில் அமைந்த “ஸ்ரீ ரங்க புரவிஹாரா” என்ற பாடலும் எம்.எஸ் அவர்கள் பாடிக் கேட்பது ஒரு தனி சுகம். சங்கராபரண ராகத்தில் அமைந்த “சரோஜா தள நேத்ரி” என்ற ஷ்யாமா சாஸ்திரிகள் இயற்றிய கிருதி எம்.எஸ் அவர்களின் குரலில் தேனாக இனிக்கும்.இப்படி பல பாடல்கள், பஜனைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்த பாடல்கள் யூ டூபில் கேட்கக் கிடைக்கிறது. எம்.எஸ். அவர்களின் இசையைக் கேட்டு மகிழ இறை நம்பிக்கை தேவையில்லை என்பது நேருவின் ரசனையின் மூலம் அறியலாம். கர்நாடக இசை நுணுக்கங்களும் கூட தேவையில்லை. இசை ரசனை ஒன்றே போதுமானது.

இவர் தன் நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் பொருளை பல தொண்டு நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்கள் கொடுத்திருக்கிறார் . ஆனால் தன் வாழ்வில் பொருள் சிக்கல் வந்த போதும் அதற்காக வருந்தியதில்லை. அவர் கணவர் சதாசிவம் அவர்கள் தன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் கல்கி கார்டன்ஸ் விற்கப்பட்டு வாழ்வின் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ் அவர்களை “அன்னமாச்சாரியார்” தெலுங்கில் எழுதிய கீர்த்தனைகளைப் பாடிக் கொடுக்குமாறு கேட்டது. கடவுளுக்காக பாடுவதால் சன்மானம் பெற மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். ஆனால் திருப்பதி தேவஸ்தானம் அந்த பாடல்களைப் பதிவு செய்து விற்பனை செய்து பணம் ஈட்டப் போகிறது என்று அவரை ஒரு சிறிய தொகையைப் பெறும்படி வற்புறுத்திக் கொடுத்தார்கள். அன்னமாச்சாரியார் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 36000 பாடல்கள் எழுதியுள்ளார். எம்.எஸ் அவர்கள் பாடிய “நானாடி பெதுகு நாடகமு ” (அன்றன்றைக்கு பிழைப்பு நாடகம்) என்ற ரேவதி ராகத்தில் அமைந்த பாடல் தத்துவ பொருள் செறிவு கொண்டது. அதை எம்.எஸ் அவர்கள் குரலில் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இயற்கை தனக்குக் கொடுத்த திறமையை பயன்படுத்தி சமுதாயத்திற்கு உதவும் நோக்கத்துடன் எம்.எஸ் அவர்கள் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு, பல லட்சம் இசை ரசிகர்களை காலத்துக்கும் மகிழ்விக்கும் இசைத்தட்டுக்களை சந்ததியனருக்கு விட்டுச் சென்றுள்ளார். பொருளை தானமாகக் கொடுத்து தன் வாழ்வை பொருள் பட அமைத்துக் கொண்டார்.

டிசம்பர் இசை சீசனும், எம்.எஸ் அவர்களின் டிசம்பர் 11 நினவு நாளும் அவரைப் பற்றிய சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தூண்டுகிறது.
நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். நெருப்பு வானத்தைப் பார்த்து எழும். ஆனால் சப்தம் எங்கும் நிறைந்திருக்கும். எம்.எஸ் அவர்களின் இனிமையான இசை காற்றினிலே கீதமாக வாழ்ந்து கொண்டேயிருக்கிறது.

***

இசை லால்குடி ஜெயராமன் 80 அசதா

  லால்குடி ஜெயராமன் 80

அசதா

(2010-ல்திரு. லால்குடிஜெயராமன்அவர்களின் 80வதுபிறந்தநாளைமுன்னிட்டுஎழுதப்பட்டகட்டுரை)

ஓர்இசைமேதையாக:

இன்று உலகில் லால்குடி என்னும்  பெயர் இசை, வயலின் ஆகிய விஷயங்களோடு  சேர்த்து அறியப்படுகிறது என்றால் அதற்கான பெருமையனைத்தும் திரு. லால்குடி ஜெயராமன் அவர்களையே சாரும். 1930ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிறந்த திரு. லால்குடி ஜெயராமன் இவ்வாண்டு தமது எண்பதாவது அகவையில் கால் பதிக்கிறார். திரு. லால்குடி ஜெயராமன் இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராயரின் சிஷ்யப் பரம்பரையில் தோன்றியவர். இசைச் சூழலில் வளர்க்கப்பட்ட அவர் இசையில் வல்லவரான அவரது தந்தை திரு.கோபால ஐயரிடம் கர்னாடக இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். திரு. லால்குடி ஜெயராமன் அவர்களால் தென்னிந்திய இசை உலகு பல வழிகளில் துலக்கமும் மேன்மையும் அடைந்தது என்றால் அது மிகையாகாது. வியக்கத் தகுந்த அவரது இசைஞானம் கர்னாடக இசை ‘சாகர’த்திற்கு ஊக்கமூட்டியது. அதன்வழி பரந்தவொரு, அர்த்தமிகு பரிமாணத்தினை இசைக்கு நிரந்தரமாக அவர் உருவாக்கியளித்தார். இசைக்கான முழுமொத்த அர்ப்பணிப்பு, கூர்த்த மதி, மேன்மையை நோக்கிச் செயல்படவும் தம் சமகாலத்தை விஞ்சவுமான திடசித்தம், நெடுங்காலமாய்க் குன்றாது தொடரும் விடாமுயற்சி இவையே திரு. லால்குடி ஜெயராமன் இந்திய மற்றும் கர்னாடக இசையுலகில் உயரிய ஓர் இடத்தை அடைய உதவியவை.

ஒருகலைஞராக:

வயலின்  மீதான அவரது பிசகற்ற  ஆளுமை, வசீகரிக்கக்கூடியதான  ஆழ்ந்த ஞானமிக்க பாணி, இசையின் அனைத்துக் கூறுகள் மீதுமான மேதமை ஆகியவை இசை வாழ்வின் ஆரம்பத்திலேயே அவரை ஒப்புயர்வற்ற இசைக் கலைஞராக்கின. பலரும் தங்கள் கச்சேரிகளில் பக்கவாத்தியம் இசைக்க லால்குடி அவர்களையே தேர்வு செய்தனர்.ஆகவே முடிகொண்டான் வெங்கட்ராம ஜயர், முசிறி, அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி அய்யர், ஜி.என். பாலசுப்ரமணியம், ஆலத்தூர் சகோதரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களோடு அவர் கச்சேரிகள் செய்தார் என்பதொன்றும் வியப்புகுரியதல்ல. இசைக்கலைஞனுக்கான நுண்மான் நுழைபுலமும், கச்சேரி செய்பவரின் இசைப்போக்கினை முன்னறியும் திறனும் கொண்டு ஒரு பக்கவாத்தியக் கலைஞராக தமது அழியா முத்திரையைப் பதித்தார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் கச்சேரி செய்பவரை தான் விஞ்சிவிடாதபடி பார்த்துக் கொண்டார்.இவ்வாறு ஒரு பக்கவாத்தியக் கலைஞராக புதியதொரு கச்சேரி தர்மத்தை அவர் வகுத்தளித்தார்.

ஓர்இசை வல்லுனராக:

திரு. லால்குடி ஜெயராமன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிக் கச்சேரிகளை நிகழ்த்தி உலகெங்கும் தனது தனித்த வயலின் இசையினை நீக்கமற நிறைந்திருக்கச் செய்திருக்கிறார். அதோடு ‘லால்குடி பாணி’ என அறியப்படும் தனது தனித்துவமான, ஒப்பற்ற இசைப் பாணியையும் உருவாக்கித் தந்திருக்கிறார். ‘பாடும் வயலின்’ எனப்படும் அவரது வயலின் உள் இழைந்த பாவம் மற்றும் உணர்ச்சிகளுடன் வார்த்தைகளுக்கு உயிரூட்டி, வாய்ப் பாட்டினை அப்படியே செவிக்குத் தரவல்லது. அவரது வார்த்தைகளில் சொன்னால் இசையை வழங்கும்போது முழுக்க முழுக்க ஒருவிதப் பேருவகையிலும், கலையில் மூழ்கியிருக்கும்போது மெய்மறந்தும் இருப்பதுதான் அவரது கச்சேரிகளை தெய்வீக அனுபவமாக்குகின்றன. கற்பனைமிகு ராக ஆலாபனைகள், பாவம் கூடிய இசைவரிகளுடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இசைக்கப்படும் கிருதிகள், லயத்தினை தன் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவற்றால் லால்குடி அவர்களின் இசை மேன்மைமிக்கவொன்றாக மதிக்கப்படுகிறது.
அவரதுபாணி

திரு. லால்குடி ஜெயராமன் கர்னாடக இசை உலகுக்கு லால்குடி பாணி என்ற ஒப்பற்ற இசைப் பாணியை வழங்கியிருக்கிறார். அவரது தன்னிகரற்ற இசைக்கோலங்கள், ஆயிரக்கணக்கான நெஞ்சையுருக்கும் கச்சேரிகள் யாவும் இன்னும் எண்ணற்ற தலைமுறைகளுக்கு இசையுலகில் கோலோச்சியபடி இருக்கும்.

ஒருஇசைஞராக:

லால்குடி  ஜெயராமன் அவர்கள் இசையுலகுக்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளில் ஒன்று தென்னிந்தியக் கர்னாடக இசையையும் அதன் வழி வயலினையும் மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்தியதாகும். ரஷ்யாவில் நடந்த ‘இந்திய சர்வதேச இசை விழா’( India International Festival), அமெரிக்கா மற்றும் லண்டனில் நடந்த ‘இந்தியா விழா’(Festival of India) ஆகியவற்றில் பங்கேற்று இவர் இசை வழங்கியது இங்கு குறிப்பிடத் தகுந்தது. 1965 ம் ஆண்டு நடந்த எடின்பர்க் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் அவர்களின் வயலின் இசையையும் அவரது வாசிக்கும் திறனையும் கண்டு வியந்த புகழ்பெற்ற வயலின் இஞைக் கலைஞர் எஹுத் மெனுஹின் அவர்கள் லால்குடி அவர்களுக்கு இத்தாலிய வயலின் ஒன்றினைப் பரிசளித்தார். லால்குடி அவர்கள் சிங்கப்பூர், மலேசியா, மணிலா மற்றும் கிழக்கு ஜரோப்பிய நாடுகள் பலவற்றிலும் எண்ணற்ற கச்சேரிகள் செய்துள்ளார். பாக்காத்திலுள்ள ‘சர்வதேச இசைக் கழகம்’ (International Music Council), ‘ஆசிய பசிபிக் இசை மேடை’ (Asian Pacific Music Rostrum), ஈராக் ஒலிபரப்பு ஸ்தாபனம் ஆகியவற்றில் தமது இசையை அவர் சமர்ப்பித்துள்ளார். 1979ம் ஆண்டு 77 போட்டியாளர்களில் முதலாவதாக அவரது இசை தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் அவர் வழங்கிய ‘ஜூகல்பந்தி’ கச்சேரிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. லால்குடி உருவாக்கிய ‘ஜெய ஜெய தேவி’ என்ற நாட்டிய நாடகம் 1994ல் அமெரிக்காவின் க்ளீவ்லேண்டில் அரங்கேற்றப்பட்டது. பிறகு அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் இந்நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது.

ஓர்இசையமைப்பாளராக:

ஓர் இசையமைப்பளராக  லால்குடி அவர்களது பரிமாணம் மிக முக்கியமானது. இந்தப் பரிமாணத்தில் கிட்டத்தட்ட  சரஸ்வதியின் மறுவடிவாகவே  அவர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 26 வயது இளைஞராக முதன் முதலில் ‘தில்லானா’வை உருவாக்கியதிலிருந்து, சமீபத்தில்(ஜனவரி 2009) ராகம் ஹிந்தோளம் வாஸந்தத்தில் அவர் அமைத்து அவரது பிள்ளைகளும் பிரதம சிஷ்யர்களுமான லால்குடி GJR கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோரால் இசைக்கப்பட்ட தில்லானாக்கள் வரை லால்குடியின் இசைப்பெருக்கு தொடர்ந்து தில்லானாக்கள், வர்ணங்கள், கிருதிகள் என பல ஆண்டுகாளகப் பாய்ந்தோடியபடியே இருக்கிறது. ‘ஒரு கலைஞன் தனது சமகாலத்தை விஞ்சியவனாகவோ அல்லது அதற்குப் பிந்தையவனாகவோ இருக்கிறான்’ என்றார் ஜார்ஜ் மூர். இதில் லால்குடி முதல் வகையைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு அவர் உருவாக்கிய இசைக்கோலங்கள் அபூர்வமான அவரது ஆழ்ந்த இசை ஞானத்துக்குச் சான்றாக விளங்குபவை. கால ஓட்டத்தினை மீறி இன்றும் அவை வாசிப்பவரையும் கேட்பவரையும் இசையின்பத்தில் ஆழ்த்துவனவாக இருக்கின்றன.

ஒருகுருவாக:

ஒரு குருவாக  அவர் தமது நோக்கத்தில் முழு அர்ப்ணிப்புள்ளவராக இருந்தார். நயந்தும் புகழ்ந்தும் வேலைவாங்குபவர் தம் சிஷ்யர்களின் உச்சபட்ச திறமையை வெளிக்கொணர கடுமையான ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் தயங்கமாட்டார். தமது பரந்த  இசையறிவை மற்ற இசைக்கலைஞர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயங்காத பெருந்தன்மையுடையவர். அவர் வாசிப்பதைக் கண்டே பலர் வயலினும் கர்னாடக இசையும் கற்க உந்தப்பட்டனர் என்பது யதார்த்தம். தொழில்முறைக் கலைஞராக தமது தொழிலின்மீது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மிக்கவர். அவரது இசை வாழ்வு பல தலைமுறைகள் அளவுக்குப் பரந்ததாக  இருந்த போதும் தமது மனநிலையினை எப்போதும் தற்காலத்தோடு ஒத்திசைவுடன் வைத்திருப்பவர்.

விருதுகளும்அங்கீகாரங்களும்:

சிறப்பு வாழ்நாள் சாதனை விருது- மியூசிக் அகாடமி, சென்னை-2008.

சங்கீத  சுரபி-2008.

சிறப்பு வாழ்நாள் சாதனை விருது, கர்னாடிகா-2008.

ஸ்ரீ  சண்முகானந்தா உயர் விருது-2008.

ஸ்வாமா  ஜெயந்தி விருது- கிருஷ்ண  கான சபா- 2004.

லலிதா லய கம்பீரர்- சின்மயா மிஷன், போஸ்டன்-2003.

சௌடய்யா பிரசாஸ்தி, கன்னட & கலாச்சாரத்துறை, கர்நாடகா-2003.

பத்மபூஷன்-2001.

பத்மஸ்ரீ-1972.

விஷ்வப்ரியா சங்கீத பூபாலி, மகராஜபுரம் விஸ்வநாத ஜயர் அறக்கட்டளை-2003.

பாரத  ஜோதி, பாரதீய வித்யாபவன், நியூயார்க்-1999.

சங்கீத  கலா ரத்னா-1997.

கௌரவக்  குடியுரிமை, மேரிலேண்ட், அமெரிக்கா-1994.

சௌடய்யா நினைவு தேசிய விருது,

சங்கீத  நாடக அகாடமி விருது-1979.

தமிழக அரசின் அவைக் கலைஞர்-1979

சங்கீத  சூடாமணி, இசை சபாக்கள் கூட்டமைப்பு, சென்னை          (1971 & 1972)

வாத்ய சங்கீத கலாரத்னா, பாரதி சங்கம், நியூயார்க்.

நாத வித்யா ரத்னகரா, கிழக்கு மேற்கு பரிமாற்றம் (East West Exchange), நியூயார்க்.

நாத வித்யா திலகம்- இசை அன்பர்கள்  சங்கம், லால்குடி-1963.

 

(லால்குடி  ஜெயராமன் பற்றி நான்  ஆங்கிலத்தில் எழுதிய விரிவான  கட்டுரை இங்கு: http://www.mugaiyur.blogspot.in/2012/08/sri-lalgudi-g-jayaraman-violin-virtuoso_28.html)

***

இசை – தத்துவமும் அழகியலும், அதிகாரமும் பாலசுப்ரமணியன்

இசை –  தத்துவமும் அழகியலும், அதிகாரமும்

பாலசுப்ரமணியன்

 

 

 

 

 

 

 

பண்பாட்டுத்தளத்தில் பழங்குடியின சமூகங்கள் முதலாக அனைத்து சமூகக் குழுக்களிலும் நிலவுகிற பொதுமைகளில் இசையும் ஒன்று. இசை உருவாக்கமும் அனுபவித்தலும் மிகப் பழமையான காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து நிகழ்ந்து வருகிற கலை வடிவங்களில் முதன்மையானதாகவும், கலை என்கிற வகைமையில் எவ்வித கல்வியும் அறிவும் தேவைப்படாத அதனாலேயே சமூகத்தின் ஒர் அடுக்கிற்கு மாத்திரம் உடைமையானதாக இல்லாத சுதந்திரமும் கொண்டதாக உள்ளது. நவீன ஓவியத்தின் ஒரு கோட்டைக் கூட புரிந்து கொள்ள முடியாத, கவிதைகளில் ஒரு வரியைக் கூட புரிந்துணராமல் போகக் கூடிய சாத்தியங்கள் நிலவும் போது முழுக்கவும் இசை, கருவிகள், அதன் நுட்பங்கள் குறித்து எவ்வித கவனமும் இன்றி இசையின் அழகியலை புரிந்துணர முடிவது கலை வடிவங்களில் சில அறிவோடும் சில ஆன்மாவோடும் உரையாடலை நிகழ்த்துபவை என்கிற முடிவிற்கு வர வாய்ப்பளிக்கிறது. இசை எவ்வாறு மானுட சமூகத்தின் வரலாற்றில் ஒர் அம்சமோ அதே போல இசைக் கருவிகளுல் பலவும் நூற்றாண்டுகள் வரலாறு உடையவை. பல சமூகங்களின் இசை பரிவர்த்தனைகளில் வடிவங்களைவிடவும் இசைக் கருவிகள் அதிகம் கொடுக்கல் வாங்கலுக்கு உள்ளாகியுள்ளன.

இசை என்பது வடிவத்திற்கு உட்பட்டதாக இருக்கும் போது இசைக் கருவிகள் பல்வேறு ஒற்றுமைகள் இல்லாத வடிவங்களுக்கும் பங்களிக்கிற தன்மையைக் கொண்டுள்ளதானது, கருவிகள்தான் இசை வடிவங்களை உற்பத்தி செய்திருக்க முடியும் என்கிற முடிவிற்கு நம்மை நகர்த்துகிறது. கருவி ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டால் புதிய வடிவங்களை உருவாக்க முடியுமா என்பதும் எளிமையாக பதில் அளிக்கிற வகையில் இல்லை. எனினும் மின் கிதாரை உருவாக்கியது ராக் இசை வடிவத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவியது.  இன்று மின் கிதாரின் பங்களிப்பில்லாமல் போகும் போது ஒரு பாடலை நாம் ராக் பாடல் என வகைப்படுத்த முடியாது. இசை வடிவங்களை வகைமைப் படுத்துவதில் கருவிகளும் கவனத்திற்குரியதாக உள்ளது. வடிவங்களை சார்ந்திராதவை இசைக் கருவிகள் ஆயினும் வடிவங்கள் கருவிகளை சார்ந்துள்ளன (Instruments are form independent but music forms are instrument dependent).

இசைக்கருவிகள் தேவையற்ற பாடல் வடிவங்களும் உண்டு என்றாலும் பாடல்களின் வெறுமையை – ஒருவகையில் பேசுவற்கான மொழியின் வார்த்தைகளை பாடுவதற்காக உபயோகிக்கும் போது நேர்கிற கடினத் தன்மையை இலகுவாக்குவதும், மொழியின் வெற்றிடத்தை நிரப்புவதாகவும் இசை உள்ளது.

மொழி அதன் பேச்சுக்கான  தன்மையிலிருந்து விடுபட்டு பாடுவதற்கானதாக மாறும் போது மாத்திரை மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு வேளை இந்த மாத்திரை மாற்றங்கள்தான் இசை வடிவங்களின் மூலமோ என்னவோ? ஒரு சொல் அதன் மாத்திரை அளவை குலைப்பதின் மூலம் பாடுவதற்குரிய வடிவத்தை அடைவது போலத்தான் ஒரு ஒலி அதன் கால அளவை குலைப்பதின் மூலம் இசையாக வாத்தியங்களில் ஒலிக்கிறது. ஒலியிலிருந்துதான் மொழியும், இசையும் பிறக்கின்றன என்றாலும் மொழி பாவிக்கப்பட்டு எழுகிற உணர்வுகளும் இசை உண்டாக்குகிற உணர்வுகளும் வேறாகவும் தோன்றுகின்றன. இசையனுபவம் என்பது சமயங்களில் கருத்துக்களால் சுட்டிவிட முடியாத வெளியை ஏற்படுத்தி விடுகிறது. வாக்கியங்கள் பேசப்பட்டோ, எழுதப்பட்டு வாசித்து முடித்த உடனோ எதிர்வினைகளை எண்ணங்களில் உருவாக்கி விடுகிறது. ஒரு வேளை அதற்கான எதிர்வினையை வெளிப்படுத்த முடியாமல் போவதில் தொடர்புச் சிக்கல் இருக்கலாம். ஆனால் இசையனுபவம் நேரடியாக மனதில் உணர்வு நிலைகளை உருவாக்கி விடுகிறது.  இவ்வித உணர்வு நிலைகளுக்கான எதிர்வினையை மொழியின் துணையின்றிக் கூட நிகழ்த்த முடியும். பெரும்பாலும் இது மெளனத்தால் கூட சாத்தியமாகிறது. இசைக்கான எதிர்வினையாக மெளனம் இருந்தாலும் இசையின் நோக்கமே மெளன வெளியை உற்பத்தி செய்வதாகவும் கருதலாம். இசைக்கு எந்தவித நோக்கங்களும் இல்லை, வெளிப்பாடு, அனுபவித்தல் போன்ற கட்டுப்பாடுகளும் அற்றது. மேலும் இசை அனுபவம் என்பது இசையைக் கட்டுப்படுத்த முடியாததும் கூட. வடிவம் ஒன்றைத் தவிர அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதன் கருத்துரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இசையும் அதிகாரமும் குறித்து பின்னர் விவாதிக்கலாம். சில சமயம் இசை எவ்வித அர்த்தங்களும் இல்லாததாகவும் இருக்கலாம்.  மொழிக்கு அப்பாற்பட்ட உணர்வுநிலைகளும் இருக்கிற சாத்தியங்கள் உண்டு என்பதை இசை மட்டுமே நிரூபிக்கிறது.

சமயங்களில் இசை, உணர்வு  நிலையை உணர்ந்து கொள்வதற்கும்,  அந்த நிலைகளை புரிந்து கொண்டு மொழியின் மூலம் வெளிப்படுத்துவதற்குமான கால இடைவெளியில் மையம் கொள்கிறது அல்லது அந்த கால இடைவெளியில் உணர்வு நிலையை மொழி வரைக்கும் கடத்துவதற்காகவும் உதவுகிறது.

அர்த்தமற்ற  வெளியை காலத்தின் பொருள்மைய (meaning centric) தருணங்களில் உருவாக்குகிறது இசை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் கேட்கப்படும் இசை அதன் அர்த்தத்தை அடையாளப் படுத்துவதாக இருந்தாலும் அந்தத் தருணத்தில் இசை உருவாக்குகிற வெளி அனுபவ நிலைகளை காலத்திலிருந்து பிரித்துவிடுகிறது.  சிலசமயம் வரலாற்றுக் காலகட்டத்தின் அடையாளமாகவும் இசை இருக்கிறது.

வரலாறு  முடிவுக்கு வந்துவிட்டது, அறிவியல், தத்துவத்தின் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டது, இனி தத்துவத்திற்கு இருப்பதெல்லாம் மொழிச்சிக்கல் மட்டுமே என விவாதிக்கப்படுகிற காலத்திலும் கூட இசை இன்னுமே அதன் வசீகரம் குன்றாததாக உள்ளது. சிலசமயம் இலக்கியம் கூட சலிப்பை உண்டாக்கிவிடுகிறது.

இசையின் அழகியல் அது உருவாக்கும்  மனநிலைகளையும் சித்திரங்களையும் கடந்து அதன் நுடபங்களால் பயிலப்படுகிறதாகவும் இருக்கிறது. இசைத் துண்டை கேட்பது, அது எழுப்பும் உணர்வு நிலைகளை தியானிப்பது என்பது இசையின் அழகியலை தோற்றப்படுத்தினாலும் அதன் வடிவ நுட்பங்களை அறிந்து கொள்வதன் மூலம் – முறையான (முறையற்ற) பயிற்சி உதவியுடன் – அதன் அழகியல் வேறொரு அல்லது பல்வேறு தோற்றங்களை உருவாக்கிவிடுகிறது. நுட்பங்களை அறிந்து கொள்வது இசை கேட்பதற்கு கட்டாயமான முன்பயிற்சி இல்லை எனினும் நுட்பமறிந்து கேடகப்படும் இசை அதன் வெளிப்புற மற்றும் அகவயப்பட்ட அழகியல் கூறுகளையும் அறிய உதவும்.  அனுபவிப்பதோடு முடிந்துவிடாமல் அறிந்து கொள்வதற்குமான வாய்ப்பை இசை வடிவங்கள் அளிக்கின்றன. இந்நிலை இசையை அறிவு என்பதாகவும் மாற்றுகிறது.  இதுவே இசையிலும் இரண்டு பிரிவுகளை ஏனைய கலைகளைப் போலவே உருவாக்கிவிடுகிறது.  கலையின் முதன்மை நோக்கமான அதனை அனுபவிப்பது, கலை அறிவாகும் மாறும் இடத்தை நோக்கி நகர்வது இரண்டுமே இசையிலும் சாத்தியாமாகின்றன.

 

 

 

 

 

 

 

 

இசையை அறிவாக அணுகுதல் கோட்பாடுகளையும், விமர்சனங்களையும் உருவாக்குகிறது. இது மற்ற கலைகளுக்கும் இசைக்கும்  இருக்கும் பொதுவான கலையின்  நோக்கம் மற்றும் எல்லையைத்  தாண்டின இன்னொரு பரிமாணம்.

அறிவும் கலையும் மனித இருப்பின், இயங்கியலின் இரு வெளிப்பாட்டு வடிவங்கள். இதில் கலை மட்டுமே தீவிர சிந்தனையிலிருந்து முளைக்க வேண்டிய நிலைமை இராதது.  ஒரு வகையில் கலை அறிவுக்கு எதிரானது. கலை உருவாக்கும் அனுபவம் அறிவு உருவாக்கும் வெளிப்படையான, முடிவான பதில்களுக்கும் அப்பாற்பட்டு உண்மைத்தன்மை, அதன் நிரூபணம் போன்ற தேவைகள் இல்லாதது.  அறிவென்பது உண்மைத்தன்மையால் கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும் போது கலை கற்பனை வழங்கும் சுதந்திரத்தை – அதுவே மனித மனத்தின் ஆதாரங்களில் ஒன்றாகவும், எண்ணங்களால் எளிதாக உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது – மிக சுலபமாக உபயோகிக்கிறது.  அறிவுசார் துறைகளில் நிகழும் பரிசோதனைகளுக்கு இணையாக கலைகளிலும் பரிசோதனைகள் நிகழ்கின்றன.  இந்தப் பரிசோதனைகள்தான் கலையின் இயங்கியலாகவும், புதுப்புது அழகியல் விதிகளையும் உருவாக்குவதாகவும் உள்ளது. கலை மனித மனத்தின் அடிப்படைகளுக்கு நெருக்கமானது. இசை கலைவடிவங்களில் இன்னும் மனத்திற்கு நெருக்கமானது.

அழகியல் இசையைப் பொருத்தவரையிலும் அதன் நுட்பங்களின் சிக்கலான அமைப்பால் (complexities) உருவாகிறது.  எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கலானதாக  அதன் நுட்பங்கள் அமைகின்றனவோ  இசையின் பரிமாணங்களும் விரிவடைகின்றன. ஒரு படிமத்தை உருவாக்க இசை அதன் அமைப்பில் சிக்கல்தன்மையை கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.  இசையின் நுட்பங்கள் கூடக்கூட அந்த வடிவங்களின் அழகியலும் விரிவடைகிறது.

இசை அடையாள உருவாக்கத்திலும் பங்கு வகிக்கிறது.  சமூகத்தில் நிலவுகிற வகுப்புகளின் பண்பாட்டு அடையாள உருவாக்கத்தில் இசையும் ஒரு கூறாகும். இங்கிருந்துதான் இசையும் அதிகாரமும் குறித்திப் பேச வேண்டியுள்ளது.  இசை அதன் வடிவ சாத்தியங்களாலும் நுட்பங்களாலும்  வகுப்புகளின் அடுக்கில் மேல் கீழ் பாவிப்பிற்கு உள்ளாகிறது. செவ்வியல் மற்றும் நுட்பங்கள் நிறைந்த இசை மேல் வகுப்பினரால் பாவிக்கப்படுவதோடு ஒவ்வொரு வகுப்பும் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தனிநபர்களின்  இசை ரசனையிலும் நுட்பங்கள் நிறைந்த மற்றும் செவ்வியல்  இசை நோக்கிய நகர்வே ரசனைத் தேர்ச்சியாகவும் இசையில் மேல்நோக்கிய வளர்ச்சியாகவும் பார்க்கிற பார்வை நிலவுகிறது.

ஒரு இசை வடிவத்தை பாவிப்பது  சுதந்திரத்தின் அடையாளமாக மற்றும் அதிகாரத்திற்கு எதிராகவும் இருந்திருக்கிறது. இசை வடிவங்கள் அதிகார எதிர்ப்பு, அதிகார உருவாக்கம் இரண்டிற்கும் பங்களிப்பதாக இருந்தாலும் இசையை அதிகாரத்திலிருந்து பிரித்தும் பார்க்கமுடியும்.  இசை உருவாக்கம், விநியோகம், பரவலாக்கத்தில் நிலவும் அதிகாரம் இசையையும் பண்டமாக மாற்றிவிடுகிறது. இசை உருவாக்கம் கூட அதிகாரத்திலிருந்து வெளியே இருக்கலாம் ஆனால் அதன் விநியோகமும், பரவலாக்கமும் முழுக்க அதிகாரம் சம்பந்தப்பட்டது.  அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுவது, இசை பண்டமாக மாறுவது, பழங்குடியினர் அல்லாத சமூகங்களிலேயே நிகழ்கிறது. நாகரிக சமூகங்களில் இசையும் அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடிகிறவற்றில் ஒன்றாக உள்ளது. அதுவும் நிலவுகிற நுகர்வுமய உலகில் இசை கலைவடிவம் என்பதைக் கடந்து பண்டம் என்கிற அளவில் உருவாக்கத்திற்கு பதிலாக உற்பத்தி செய்யப்படுவதாக மாறிவிட்டது. இங்கே பழங்குடி மற்றும் கிராமிய வாழ்க்கை முறை மற்றும் நாகரிக, நகர்ப்புற வாழ்க்கை முறை என்கிற எதிர்மைகளுக்கு இசையும் உள்ளாகிறது.  நம்காலத்தின் அதிகாரம் கிராமப்புற வாழ்க்கை முறையைக் கூட நாகரிகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டது தனித்து பேசப்பட வேண்டிய விசயம். ஆனாலும் கிராமப்புறங்களில் நிலவுகிற இசைவடிவங்களும், இசை உருவாக்கங்களும் பாவிக்கப்படுவது, அதிகாரம் பரவலாக்குகிற இசைவடிவங்களால் சிதைவுக்குள்ளாவது கிராமிய வாழ்க்கை முறையின் சிதைவுக்கும் அடையாளக் குழப்பங்களுக்கும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். இன்று நகரங்களில் அடையாளங்களை உருவாக்குவதில் இசை எவ்வித பங்கு வகிக்கிறதோ அதே அளவிற்கு கிராமங்களிலும் வகிக்கிறது.

*