Category: இதழ் 102

சேலத்தில் ஞானக்கூத்தன் அஞ்சலி கூட்டம்

download (42)

சேலத்தில் ஞானக்கூத்தன் அஞ்சலி கூட்டம்

ஞானக்கூத்தன் கவிதைகள் வாசிப்பு கட்டுரைகளை பற்றிய உரையாடல்

31 / 7 / 16 ஞாயிறு காலை 11 மணி
இடம் 119 கடலூர்மெயின் ரோடு அமமாபேட்டை சேலம்

பங்கேற்போர்

கவிஞர் ஷாஅ

மோகனரங்கன்

சிபிச்செல்வன்

தக்கை பாபு

சாகிப் கிரான்

அகச்சேரன்

குமாரநந்தன்

மற்றும்

நீங்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு

சேலம் இலக்கிய வட்டம் , தக்கை இலக்கிய அமைப்பு மற்றும் மலைகள் இணைய இதழ்

இலக்கியத்தை விரும்புகிற அனைவரும் வருக

ஞானக்கூத்தன் சில நினைவுகள் ( அஞ்சலி ) / சிபிச்செல்வன்

download (41)

ஞானக்கூத்தனை சி.மணிதான் எனக்கு முதன்முதலாக நடை இதழ்களின் வழியாக அறிமுகப்படுத்தினார். நடையில் அவர் கவிதைகள் வந்த காலகட்டத்தில் அவரின் பெயர் யாருக்கும் அதிகம் தெரியாது. நடை பழைய இதழ்களில் ஞானக்கூத்தன் கவிதைகள் சில பிரசுரிமாகியிருந்தன. அவரைப் பற்றி சி.மணி சில நினைவுகளை என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்டார்.

கொஞ்சம் வருடங்கள் கழித்து நானும் சில இலக்கிய நண்பர்களும் சேர்ந்து சேலத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில் சந்திப்போம். அப்படி சில வருடங்கள் சந்திப்பில்கழித்தபின் சில
எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டோம்.
அப்படி முதன்முதலாக அழைக்க வேண்டும் என நினைத்த பெயர் ஞானக்கூத்தன்தான்.

அவருக்கு ஒரு போஸ்ட் கார்டு எழுதினேன். அவர் உடனே பதில் கடிதம் எழுதி வருவதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆகஸ்டு 15 1994 ஆம் வருடம் அவர் சேலத்திற்கு வந்தார். அவருடன் விருட்சம் ஆசிரியர் அழகிய சிங்கரும் உடன் வந்திருந்தார். அப்போது ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரை தொகுப்பை அவர் வெளியிட்டிருந்தார். காலையில் ஒரு நண்பரின் அறையில் தொடங்கிய கூட்டம் இரண்டு முறை காபி சாப்பிட்டுக்கொண்டே உரையாகவும் உரையாடலாகவும் போய்க்கொண்டிருந்தது.

மதிய உணவிற்காக அப்போது சேலத்தில் பிரபலமாக இருந்த ஒரு சைவ ஹோட்டலுக்கு நண்பர்களோடு அவரை அழைத்து சென்றோம். அங்கே அவர் ஒரே ஒரு தயிர் சாதம் மட்டும்தான் சாப்பிட்டார். வேறு எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

அவருடைய பெயர் கொடுத்திருந்த ஆகிருதியால் எப்படி நடந்துகொள்வாரோ என கொஞ்சம் பயந்துகொண்டுதான் நண்பர்கள் இருந்தோம். ஆனால் அவர் எந்த ஆடம்பரங்களும் இன்றி சாதாரணமாக மிகச் சாதாரணமாக பழகினார். பேசினார். குறைந்தபட்சம் வயதில் மூத்தவர் என்ற விலகலைக்கூட அவர் எங்களிடம் காட்டவில்லை என்பது அப்போது எங்களுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.

ஒருநாள முழுவதும் நடந்த இந்த அறைக்கூட்டம் கொடுத்த உற்சாகமும் இலக்கிய அறிவும் இன்னும் பல தமிழ் இலக்கிய ஆளுமைகளை வரவழைக்க ஒரு காரணியாக அமைந்தது.

ஞானக்கூத்தன் அக்கூட்டத்தில் பேசியவற்றை ஒரு கேசட்டில் பதிந்து வைத்திருந்தோம். ஆனால் அது காலத்தின் வேகமான போக்கில் எங்கேயே மறைந்து போய் பல ஆண்டுகளுக்குப்பின் கிடைத்தபோது அதை மீட்கும் கதியில் அது இல்லாமல் போயிருந்தது என்பது நிச்சயமாக இழப்புதான்.

இந்த சந்திப்பிற்கு முன்னும் பின்னும் நண்பன் குவளைக்கண்ணன் அவருடைய சைக்கிள் கமலம் கவிதைகளை மனப்பாடமாக சொல்வதோடு அந்தக் கவிதை குறித்த விஷயங்கள் திரும்பத்திரும்ப பேசுவான். மேலும் ஞானக்கூத்தனின் பல கவிதைகளை அவன் வரி தப்பாமல் சொல்வான்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு சென்னையில் சில விழாக்களில் சந்தித்திருந்தேன்.ஆனால் அப்போது அவரோடு பெரியளவில் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

பின்னால் காலச்சுவடு மற்றும் உலகத்தமிழ் இதழ்களில் பணியாற்ற சென்னைக்கு போன சமயத்தில் எங்கள் அலுவலகம் திருவல்லிக்கேணி பகுதியில்தான் இருந்தது. ஒரு நாள் அவரை திருவல்லிக்கேணி ஹைரோட்டில் சந்தித்தேன். உற்சாகமாகப் பேசினார்.

எங்கள் அலுவலகத்திற்கு பக்கத்திலேதான் அவருடைய வீடு என்பதால் மாலை வேளைகளில் அவருடைய வீட்டில் சந்திக்க தொடங்கினேன். சந்திப்பில் குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர் பேசுவார். நான் கேட்டுக்கொண்டிருப்பேன். அப்போது நான் கவிதைகளை உற்சாகமாக எழுத தொடங்கியதாலும் கவிதைகளின் போக்குகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்போடு இயங்கியதாலும் அவரோடு சந்தித்து அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டேன்.

அவர்தான் பல உலக கவிஞர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். சில கவிஞர்களின் கவிதை பற்றிய கட்டுரைகளை நகலெடுத்து வைத்திருந்த பிரதிகளையும் காட்டுவார். எழும்பூரிலிருக்கும் அரசாங்க நூலகத்தில் நிறைய உலக கவிஞர்களின் புத்தகங்கள் இருப்பதையும் அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

என்னுடைய இரண்டாவது கவிதை தொகுப்பான கறுப்பு நாய் புத்தகத்திற்கு ஒரு விரிவான மதிப்புரையை எழுதியிருந்தார்.

பின்னாட்களில் அழகியசிங்கருடன் நெருக்கம் ஏற்பட்டதால் அவரோடு சேர்ந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவதொரு சமயத்தில் ஞானக்கூத்தன் வீட்டிற்குப் போவோம். சில மணி நேரங்கள் அவரோடு பேசிக்கொண்டிருப்போம். அவர் எப்போதும் தவறிக்கூட தமிழ் இலக்கியவாதிகளைப் பற்றி வம்பாக எதுவும் சொன்னதில்லை.

சென்னையில் நடக்கிற இலக்கிய கூட்டங்களுக்கும் அவர் வருவார். கவிதை குறித்து பேசுவார். வாசகர்களோடு உரையாடுவார். வீட்டிற்குத் தேடி வருகிற நண்பர்களோடு உரையாடுவார்.

அவர் வீட்டிற்கு நான் போயிருந்த எல்லாச் சமயங்களிலும் எங்கள் உரையாடல்களுக்கு நடுவில் அவருடைய மனைவி எங்களுக்கு காபி கொடுப்பார். நான் அடிக்கடி போய் வருவதால் இப்போது அவரும் எனக்கு நட்பாகியிருந்தார். அவர் எப்போதே எழுதிய நாவல் ஒன்றை நோட்டுப் புத்தகத்திலிருந்து எடுத்து வந்து காட்டினார்.அதைப் பற்றி ஞானக்கூத்தனும் சில சமயங்களில் சொல்வார்.

அவருடைய மகன் திவாகர் ரங்கநாதன் எங்களோடு கொஞ்ச நாட்கள் காலச்சுவட்டில் பணியாற்றினார். அவர் அரவிந்தனோடு இந்தியா டுடே பத்திரிகையில் பணியாற்றியவர். இவர்தான் பின்னாட்களில் வேறு ஒரு புனை பெயரில் எழுதுகிற பிரபலமானவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அந்தப் பெயரை அவர் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாததால் அதைப் பற்றி நான் இங்கே சொல்லப்போவதில்லை.

ழ என்ற இலக்கிய கவிதை இதழை ஞானக்கூத்தன் ஆத்மாநாம் ஆர்.ராஜகோபால் ஆகிய நண்பர்களோடு சேர்ந்து நடத்தினார். இந்த இதழை பின்னாட்களில் சந்தியா பதிப்பகம் கொண்டு வர வேண்டும் என முயற்சித்து அதன் புரூப் திருத்தங்களை நான் பார்த்துகொடுத்திருந்தேன். ஆனால் ஏதோ காரணங்களால் அந்த ழ சிற்றிதழின் மொத்த தொகுப்பு இதுவரை வெளிவரவேயில்லை.

ஞானக்கூத்தன் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கத்தின் காரணத்தால் அதே பகுதியில் வசித்த ழ ராஜகோபாலையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அவர் அப்போது பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் சில கவிதைகளையும் கதைகளையும் கட்டுரைகளையும் மொழிபெயர்பபாக செய்திருந்தார். ஆகையால் அவரோடும் என் சந்திப்புகள் தொடர்ந்தன.

ஒருமுறை செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு அவரோடு நானும் போனேன்.அங்கே நவீன கவிதைகளைப் பற்றி அவர் உரையாடி முடித்தபோது இந்திரன் சில கேள்விகளை எழுப்பினார். அவரோடு ஒரு பெரிய விவாதம் வந்ததும் அந்த கூட்டத்தில் வெகுநேரம் அந்த உரையாடல் நடந்ததும் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

download (42)
இன்னொரு சந்தர்ப்பத்தில் பெங்களூரில் தமிழ்ச் சங்க வளாகத்தில் ஒரு இலக்கிய சந்திப்பிற்கு மூத்த இலக்கியவாதியாக அவரை அழைத்திருந்தார்கள் . அவரோடு என்னையும் இளைய கவியாக அழைத்திருந்தார்கள். அன்று அவர் விரிவாக நண்பர்களோடு உரையாடினார்.அவரோடு பயணத்தில் ஒன்றாக போய் வந்ததோடு அல்லாமல் நானும் அவரும் ஒரே அறையில் தங்கி ஒரு காபி ஷாப்பில் காபி சாப்பிட போகும்போது அங்கே இலக்கியத்தைப் பற்றியும் கவிதைகள் பற்றியும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டதும் இப்போதும் நினைவிலிருக்கிறது.

அவருடைய கவிதைகள் பற்றி நான் விரிவாக ஒரு கட்டுரையை எழுதி அது அப்போது நான் பணியாற்றிய உலகத் தமிழ் மின் இதழில் வெளிவந்தது. பின்னால் அதை புத்தகமாக கொண்டு வர வேண்டும் என நினைத்திருந்து இன்றுவரை சாத்தியப்படாமலே போய்விட்டது.

மதிய உணவிற்குப் பிறகு அவர் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு வாக்கிங் போவார். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில்தான் இது தினமும் நிகழும். அவர் எதற்காக உலா போகிறார் என்ற ரகசியம் எனக்கு தெரியும்.சில சமயங்களில் அவரை அந்த சாலையில் நான் எதிர்கொண்டு பார்த்துவிட்டு அவரோடு நானும் கொஞ்ச நேரம் உலா போய்விட்டு வருவேன்.

அவரின் இளைய மகன் திருமண நிகழ்வில் குடும்த்தோடு கலந்துகொள்ள அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்த அந்த மண்டபத்திற்கு நாங்கள் போயிருந்தோம். அப்போது நடிகர் கமல்ஹாசன் அந்த திருமண நிகழ்விற்கு வந்திருந்தார்.

அந்தக் கல்யாண சமயத்தில் அவ்வளவு கூட்டத்திலும் கமலோடு என்னை அறிமுகப்படுத்தினார். அன்றுதான் வசூல்ராஜா எம் பி பி எஸ் படம் வெளியாகியிருந்தது . கூடுதலாக அன்று விநாயசதுர்த்தி தினம் என்பதும் என் நினைவிலிருக்கிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மாடியில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கும் ஞானக்கூத்தன் அழைத்ததால் நடிகர் கமல் வந்திருந்தார்.அப்போதும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவருக்கு ஏதோ ஒரு வகையில் என்னைப் பிடித்திருந்ததால் என்னைப் பலரோடும் அறிமுகப்படுத்தினார் என நம்புகிறேன்.

நடிகர் கமலின் படங்களில் குறிப்பாக ஹேராம் போன்ற படங்களின் கதை விவாதங்களில் ஞானக்கூத்தன் பங்கேற்றிருக்கிறார். ஆனால் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளவே மாட்டார்.

அவருடைய கவிதை தொகுப்பை மொத்தமாக வெளியிட நண்பர் செந்தில் நாதனின் ஆழி பதிப்பகம் முயன்றது. அப்படி வெளியான புத்தகம் இலக்கிய ஆர்வலர்களிடமும் புதிய வாசகர்களிடம் அவரை மீண்டும் கொண்டு சேர்த்தது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு நான் திரும்பி வந்துவிட்டபோதும் எப்போதாவது சில சமயங்களில் அவருக்கு செல்போனில் தொடர்பு கொள்வேன். அவர் அதே உற்சாகத்தோடு பேசுவார்.

ஞானக்கூத்தன் கவிதைகள் நவீன தன்மையில் இருந்தாலும் அவருக்கு இருந்த மரபுக் கவிதைகளின் பரிச்சயமும் அதன் தாக்கமும் அவரின் கவிதைகளில் படிந்துள்ளன. மேலும் வரி வடிவில் கவிதைகள் நவீன தன்மையோடு இருப்பினும் அதன் ஓசை தாளம் லயம் ஆகியன மரபுக் கவிதையின் ஓசைகளில்தான் பெரும்பாலும் இருக்கின்றன.

அவரின் பெரும்பாலான கவிதைகள் அவை வெளிவந்த காலகட்டத்தில் அவற்றின் புதுமைக்காகவும் அல்லது அதன் அரசியல் கருத்துகளுக்காகவும் நிறைய விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.
இதற்கு ஒரு பெரிய உதாரணமாக
இந்தக் கவிதையைச் சொல்லலாம்

தமிழ்

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்

••••

சென்னையில் மீண்டும் சில கூட்டங்களில் அவரை சந்தித்திருந்தேன். அவருடைய வீடு இடையில் முகப்பேருக்கு மாற்றிக்கொண்டு போய்விட்டார்.ஆனாலும் அவர் திரும்ப திருவல்லிக்கேணிக்கே வந்துவிட்டார். அப்போது ஒரு அபார்ட்மெண்டில் அவர் வசித்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு பூர்வீகம் மயிலாடுதுறை என்கிற மாயவரம்தான். ஆனால் அவருக்கு ழ காலத்திலிருந்து திருவல்லிக்கேணிதான் வாசம் என்பதால் ஏதோ சில காரணங்களால் அவருக்கு அந்த இடமே பிடித்துப்போயிருந்தது. அதனால் அவர் திருவல்லிக்கேணி தெருக்களில் தான் உலா வருவார்.அவருடைய கவிதைகளிலும் இந்த திருவல்லிக்கேணி தெருக்கள் கொஞ்சம் பதிவாகியிருக்கின்றன. இன்னும் பல வருடங்களுக்கு அவருடைய கவிதையின் மணம் திருவல்லிக்கேணி தெருக்களில் வீசும்.

••
ஞானக்கூத்தன் கவிதைகள் சில இங்கே

•••••••

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

••

காக்கை

காக்கையை எனக்குத் தெரியும்
யாருக்குத்தான் தெரியாது. ஆனால்
இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது.

எனக்கு நேரே ஏதோ என்னிடம்
பேச வந்தாற் போலப் பரபரப்பில்
அமர்ந்திருக்கும் இந்தக் காக்கை

ஊரில் எனது குடும்பத்தினருக்குப்
பழக்கமுள்ள காக்கை ஒன்று
எங்கள் வீட்டுச் சிறிய கரண்டியை
எடுத்துச் சென்று பெரிய கரண்டியைப்
பதிலாய் ஒரு நாள் முற்றத்தில் போட்டதாம்

இந்தக் காக்கை என்ன செய்யுமோ ?
காலும் உடம்பும் கழுத்தின் நிறமும்…
அதற்கு நவீன உலகம் பழகிவிட்டது

காக்கையின் மூக்கில் மெல்லிய இரும்புக்
கம்பிகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன

நாற்பது வயதில் மூன்று தடவைகள்
சிறகால் அடித்த அவற்றையே என்னால்
அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை

மீண்டும் ஒருமுறை இந்தக் காக்கை
எனக்கு நேரே வந்தமர்ந்தால்
தெரிந்து கொள்ள முடியுமா என்னால் ?
முடியும் என்பது சந்தேகந்தான்
ஏனெனில் காக்கையை யாரும்
முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.

••

அங்கம்மாளின் கவலை

பலகைக் கதவில் நான்காவதனைக்
கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில்
அங்கம்மாளின் கண்ணில் நாராயணன்
வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள்

ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப்
பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும்
கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு
இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள்.

கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான்
சங்கடமான சிரிப்பொன்று காட்டினான்.
பார்க்காதவள் போல் அவளிருந்தாள்
சுருட்டுக்காக அவன் வந்திருந்தான்
முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல
கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான்
என்ன வென்று அவள் கேட்கவில்லை
என்ன வென்று அறிந்திருந்ததால்

சைக்கிளில் வந்தான் சுப்பிரமணியன்
அவனைக் கண்டதும் அவள் வியர்த்தாள்
காலைப் பொழுதில் இரண்டாயிற்று
இன்றைக் கெப்படி ஆகப் போகுதோ?

“என்னடா நாணி? ஆரம்பிக்கலையா?”
“உன்னைத்தான் பார்த்தேன் நீ ஆரம்பி.”
அங்கம்மாள் இந்தப் பேச்சைக் கேட்டு
உள்ளுக்குள்ளே எரியத் தொடங்கினாள்.

“நாணிக்கிரண்டு எனக்கிரண்டு
நடக்கட்டும் வியாபாரம் இன்றைக்”கென்று
சுப்பரமணியன் வண்டியை விட்டுக்
கடைக்குப் பக்கமாய் நெருங்கி வந்தான்
ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள்
வேகம் குறையாத நடை பயின்று
கோபாலன் வந்தான் சேர்ந்து கொண்டான்
கேட்பதைத் தனக்கும் சேர்த்துக் கேளென்றான்
அங்கம்மாள் அவனை ஒருகணம் முறைத்தாள்
“என்ன முறைக்குது அங்கம்மா?” என்றான்
“எல்லா முறைப்பும் சரியாப் போய்விடும்
வருகிறான் அங்கே ரத்தினம்” என்றான்
அந்தப் பெயரை கேட்டதும் அங்கம்மா
கொஞ்சம் பதறி நிலைமைக்கு வந்தாள்

“என்னடா அங்கே காலை வேளையில்
கிணடல் கலாட்டா நமது கடையில்?”
ரத்தினம் குறும்புடன் சிரித்துக் கூறினான்

“வாடா இன்னும் மத்தவனெல்லாம்
வரலியா?” என்றாள் அங்கம்மா
“என்னடா ரத்தினம் பெண்டாட்டி வாயில்
அடாபுடா? வெட்கம்” என்றான் கோபாலன்

சீற்றத்தோடு அங்கம்மாள் எழுந்து
நாயென்றும் கழுதையென்றும் அவர்களைத்
திட்டினாள்
“கணவன் மனைவி உறவில் இதெல்லாம்
சகஜம்” என்று ரத்தினம் சொன்னான்.

“நீங்களெல்லாம் படித்தவர்கள் தானா?
உங்களுக்கு எந்த மூடன் கொடுத்தான்
பட்டங்கள்?” என்று பொரிந்தாள் அங்கம்மா.

‘அவரும் ஒருவேளை உன்னிடம் வருவார்
சுருட்டுக் கேட்டெ’ன்று நாராயணன் சொன்னான்

“அவரைப் பிடித்துக் கொண்டு அப்புறம் என்னை
விட்டு விடாதே” யென்று ரத்தினம் கெஞ்சினான்
அந்தச் சமயம் வேணுவும் வந்தான்
சுருட்டை எடுக்கக் கடைக்குள் நீண்ட
வேணுவின் கையை அவள் மடக்கினாள்
சுகமோ சுகமென்று வேணு பாடினான்

ரத்தினம் அவனது தலையில் தட்டி
அத்து மீறினால் உதை என்று சொல்லி என்
பெண்டாட்டி என்பது மறந்ததா என்றான்

மன்னிக்கச் சொல்லி வேணு சிரித்தான்
வேணுவின் கையை மடக்கிய வேகத்தில்
சேலை நகர்ந்து சிறிது வெளிப்பட
நல்லதாய்ப் பெயரை உங்கப்பன் வைத்தான்
என்றான் ரத்தினம் அங்கம்மாளுக்குக்
கோபம் பொரிய உங்கம்மாவைப்
பார்த்துச் சொல்லென்று உரக்கக் கூவினாள்

இடையில் சிறுவன் மிட்டாய்க்கு வந்தான்
எடுத்துக் கொடுத்து அனுப்பிய பின்பு
சீயக்காய்க்குக் கிழவி ஒருத்தியும்
வெற்றிலைக்குக் கோனார் ஒருவரும்
ஊறுகாய்க் கென்று பிச்சைக் காரியும்
வந்து போனதும் கோபாலன் மெல்ல
முதல் வியாபாரம் நடந்த பிற்பாடு
தாமதம் ஏனென்று கையை நீட்டினான்.

நீட்டிய கையைத் தட்டி நீக்கினாள்
தட்டிய கையைத் தீண்டிய தன் கையை
முத்தம் கொடுத்துப் பிறர்க்கு நீட்டினான்
அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தனர்

கௌரவமான தகப்பன் தாய்க்குப்
பிறக்காத பிறவிகள் நீங்களென்று
ஒட்டு மொத்தமாய் அங்கம்மாள் திட்டினாள்
உன்னைப் பார்த்தோம் உன்னைத் தொட்டோம்
முத்தம் கூடக் கிடைத்துவிட்டது
சுருட்டைக் கொடுத்து எங்களை அனுப்பென்று
வேணு நயமாய் எடுத்துக் கூறினான்.

அவளுக்குக் கோபம் எல்லை தாண்டிற்று
அவர்கள் சிரிப்பும் எல்லை தாண்டிற்று
அடுத்த வீடுகள் எதிர்த்த வீடுகள்
இன்னும் தெருவில் போவோர் வருவோர்
அனைவரும் இதனைப் பார்த்து ரசிக்க ஒரு
சுருட்டுப் பெட்டியைத் தெருவில் எறிந்தாள்

ஆளுக் கொன்று பற்ற வைத்துத்
தங்கள் பாக்கியை ஒன்றாய்த் திரட்டி
அங்கம்மாளை ஆங்கிலப் படத்துக்குக்
கூட்டிக் கொண்டு போகலாமென்று
ரத்தினம் சொல்ல அனைவரும் சிரித்தனர்

ஒன்பதுக் கப்புறம் இரவில் பார்ப்பதாய்
வேணு சொன்னதும் அனைவரும் கலைந்தனர்.

அங்கம்மாள் இருக்கையில் அமர்ந்தாள்
அருகில் இருந்த ஒருவரைக் கேட்டாள்.
‘என்ன சாமி எனக்கும் வயது
நாளை வந்தால் ஐம்பதாகிறது
இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்
நினைக்காமல் போகக் காரணம் என்ன?’

•••

சைக்கிள் கமலம்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்

•••

சமூகம்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம்
வாடா

•••

ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டங்கள் / சிபிச்செல்வன்

download (30)

அதிகாலை நேரத்தில் 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் எங்கள் ஊரில் நடக்கிற ஒரு திருமணத்திற்குக் கிளம்பிப் போக வேண்டியிருந்தது. புறப்பட்டவுடன் சேலத்திலிருந்து ஒரு காட்சியை சாலையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் தொடர்ச்சியாக வருவதைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

ஆம் எல்லா இடங்களிலும் கறிக்கடைகள் அந்த நேரத்தில் பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருந்ததை நான் பார்த்துக்கொண்டே வந்தேன்.

கறிக்கடைகள் என்றால் அவை ஆட்டுக் கறிகள் போடுகிற மட்டன் ஸ்டால்கள் மட்டுமல்லாமல் கூடவே பிராய்லர் கோழிக்கறி போடுகிற கடைகளும் இருந்தன. சில இடங்களில் அபூர்வமாக நாட்டுக் கோழியும கிடைக்கும் எனவும் அறிவிப்புகளோடு இருப்பதையும் கவனித்தேன்.

நான் சின்ன வயதிலிருக்கும்போது எங்கள் கிராமத்தில் ஏதாவது ஒரு திருவிழா நடக்கும்போது கறிக்கடையைப் பார்த்திருக்கிறேன். நன்றாக இந்த வரியைத் திரும்பப் படியங்கள். ஒருமையில்தான் சொல்லியிருக்கிறேன். ஆமாம் கறிக்கடையைதான் பார்த்திருக்கிறேன்.

70 களின் தொடக்கத்தில் ஆடிமாதத்தின் முதல் நாளான தலை ஆடி அன்று இட்லி சுட்டு கறி சமைப்பார்கள்.ஆட்டுக்கறிக்கும் இட்லிக்கும் அவ்வளவு ருசியாக இருக்கும். எங்கள் அம்மாவின் கைப்பக்குவத்தில் காரசாரமாகக் குழம்பு மணக்கும். குழம்பில் சேர்மானங்கள் சேர்த்து கொதித்த சில நிமிடங்களில் ஒரு டம்ளர் தனியாக எடுத்து அதில் கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்றி அதை நன்றாக ஆற்றிக்கொடுப்பார். இதைக் குடித்தால் நெஞ்சில் இருக்கிற சளி ஒன்றாகக் கோர்த்துக்கொண்டு வரும். இதனால் உடலில் இருக்கிற காய்ச்சல் நோயின் தொடக்கத்திலியே கிள்ளி எறிகிற ஒரு மருந்தாகவே அம்மா கொடுப்பார். ஒருவேளை அம்மா மறந்துவிட்டால் இந்த சூப்பைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அப்பா நினைவூட்டுவார்.

ஆடி முடிந்ததும் தீபாவளி மற்றும் எங்கள் கிராமத்தில் பங்குனியில் நடக்கிற மாரியம்மன் திருவிழா இப்படிதான் ஊரில் பெரும்பாலானவர்கள் கறி சமைப்பார்கள். கொஞ்சம் வசதிகூட இருப்பவர்கள் அந்த ஊரில் வார சந்தை நடக்கிற புதன் கிழமையன்று கறி சமைப்பார்கள்.அவர்கள் சந்தையில் இருக்கிற ஒரு பெரிய கறிக்கடையில இருந்து கறியை வாங்கி வந்து சமைப்பார்கள்.
download (34)
பெரிய கறிக்கடை என்றால் கடை பெரிதல்ல. அங்கே நான்கு பக்கங்களிலும் திறந்திருக்கும் ஒரு வீடு போன்ற ஓடுகள் போடப்பட்ட ஒரு பெரிய இடம் இருக்கும். அங்கே மட்டும்தான் வாரத்தில் ஒரு நாள் கறிக்கடை இருக்கும். எட்டுப்பட்டியிலிருந்தும் வருகிற கிராமத்து மக்கள் அந்த வார சந்தை கூடுகிற புதன் கிழமையில் மட்டும்தான் கறியை வாங்கிக்கொண்டு போய் சமைப்பார்கள்

அந்தக் கறிக்கடையில் எங்கள் தாத்தாவின் கறிக்கடையும் இருந்தது என என் அப்பாவும் பெரியப்பாக்களும் அத்தைகளும் பாட்டிகளும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் பூர்வீக தொழிலே ஆடுகளை மேய்ப்பதும் அதை வாங்கி விற்பதும் மற்றும் கறிக்கடை போட்டு வியாபாரம் செய்வதும்தான் என அவர்கள் நிறையக் கதை சொல்லி கேட்டிருக்கிறேன்.

அந்த வாரச் சந்தை கறிக்கடையில் இப்போது போல மின்னணு தாரசுகளில் எடை போட்டு கறியை கொடுக்க மாட்டடார்கள். மாறாக கறியைக் கூறுகூறாகப் பிரித்து வைத்திருப்பார்கள். அந்தக் கறியின் அளவைப் பொறுத்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என விலை இருக்கும்.அதில் ஒரு கூறோ அல்லது அவர்களின் தேவைக்கேற்ப இரண்டு கூறோ வாங்கிப் போவார்கள்.

இந்தக் கறியை ஒரு பாக்கு மட்டையில் வைத்து மடித்துக் கட்டிக்கொடுப்பார்கள். இந்த பாக்குமட்டையைக் கழுவி அப்படியே பத்திரமாக மடித்து கூரையில் சொருகி வைப்பார்கள். அப்போது பெரும்பாலும் பனைவோலை வேய்ந்த கிராமத்து வீடுகள் என்பதால் கூரையில் சொருகி வைத்து யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு அந்தப் பாக்கு மட்டையில் சாப்பாடு போடுவார்கள்.

எனக்குத் தெரிந்து எண்பதுகளின் தொடக்கங்கள்வரை எங்கள் ஊரில் வாரச் சந்தை நடக்கிற நாளில் மட்டும்தான் கறிக்கடை இருந்தது. பின்னால் அந்த ஊரிலேயே ஒன்றிரண்டு இடங்களில் கறிக்கடைகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. அதிலேயும் தினசரி கறிக்கடைகள் இருக்காது. புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என இரண்டு நாட்கள் மட்டும அந்தக் கறிக்கடைகள் இருக்கும்.

இந்தக் கறிக்கடைகள் புதிதாக வந்தபிறகுதான் கறியை கூறாகக் கட்டி விற்பது போய் எடை போடுகிற பழக்கம் வந்தது. நான் அநேகமாக எடை போடுகிற தராசை இங்கேதான் முதன்முதலாகப் பார்த்த நினைவிருக்கிறது. ஒரு கிலோ மற்றும் அரைக்கிலோ இதற்கு மட்டும்தான் எடைக்கற்கள் இருக்கும். கால்கிலோ மற்றும் 100 கிராம்கள் போன்ற அளவுகளுக்கு அவர்களாகவே சில கூழாங்கற்கள் போல சில கற்களை தாயரித்து வைத்திருப்பார்கள். அது உண்மையிலேயே அந்த எடை அளவில்தான் இருந்ததா என்பது பற்றியெல்லாம் யாருக்கும் கேள்விகூட எழுப்பத் தெரியாது என்பதுதான் உண்மை. கறிக்கடைகாரர்கள் எடைபோட்டு கொடுப்பது நியாயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லாமே இயங்கி வந்தன. பெரும்பாலும் இரண்டு தரப்பிலும் யாரும் யாரையும் ஏமாற்றும் நோக்கம் அப்போது இருந்ததாக நான் அறிந்திருக்கவில்லை.

எண்பதுகளின் பின் ஆண்டுகளில் ஊரின் நிறைய இடங்களில் கறிக்கடைகள் தொடங்கியிருந்தார்கள். அதாவது தெருவின் ஒரு மூலையில் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு புளியமரம் இருந்தால் போதும் அதன் அடியில் ஒரு கயிற்றை கட்டி ஆட்டை உரிக்க தொடங்கியிருந்தார்கள்,. புளிய மரத்தின் ஒரு அடிப்பாகத்தை வெட்டி அதை கறிவெட்டும் கட்டையாகயாகவும் பயன்படுத்த தொடங்கி கடையை போட்டுவிடுவார்கள். குடல் கழுவி ஆட்டின் இரைப்பையை சுத்தம் செய்த கழிவுகள் சேர்ந்து ஈக்களும் நாய்களும் போட்டிப் போட்டுக்கொண்டு சண்டையிட்டுக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன்.

நான் தொடக்கத்தில் சொன்ன கறிச் சந்தையில் ஒரே இடத்தில் ஆடுகளை அறுப்பார்கள். இதனால் அந்தக் கழிவுகளை குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொட்டிவைப்பார்கள். பின்னாட்களில் ஆட்டுத் தொட்டிகளில் மட்டும்தான் ஆடுகளை அடிக்க வேண்டும் என பஞ்சாயத்துகளில் ஒரு விதி இருப்பதும் அறிந்தேன். அந்த விதிகளின்படிதான் அந்த வாரச் சந்தைஅப்போது இயங்கி வந்ததையும் அறிந்தேன்.

ஆனால் பின்னால் இந்த விதிகளை பஞ்சாயத்துகார்கள் கண்டுகொள்ளவில்லையா? அல்லது தனியாக கவனிக்கப்பட்டார்களோ தெரியாது. தெருவிற்கு தெரு கறிக்கடைகள் அவர்கள் இஷ்டம்போல வசதி போல சௌகர்யம் போல வைத்துக்கொண்டார்கள்.

இடையில் சில ஆண்டுகள் நான் சென்னையில் குடியிருந்த சமயங்களில் அங்கே கறிவாங்க போகும்போது கவனித்த ஒரு விஷயம் அங்கே எந்தக் கறிக்கடையிலும் ஆடுகளை உரிப்பதை பார்த்திருக்கவில்லை. எங்கேயிருந்து கறியை மட்டும் எடுத்து வருகிறீர்கள் என விசாரித்ததில் அவர்கள் மொத்தமாக ஒரிடத்தில் ஆடுகளை உரித்து சுத்தம் செய்து அங்கேயிருந்த அவர்களும் ஆடுகளை எடை போட்டு வாங்கிவருவதையும் சொன்னார்கள். சென்னை மாநகராட்சி இந்த விஷயத்தில் சுகாதாரத்தை பேணியதை கவனித்தேன். ஆனால் இந்த ஸ்லாட்டர் ஹவுஸ்களில் உரித்து தொங்கவிடப்பட்ட ஆடுகளை எப்போது உரித்தார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியாது.

ஒருமுறை ஆட்டுக்கறியை சமைத்து சாப்பிட்ட போது அது நெடுநாளைக்குமுன் உரித்து ஐஸ்ஸில் வைத்திருந்த கறியைப் போட்டு அனுப்பிவிட்டார்கள் போல. அந்த மாமிசத்தை சமைத்து சாப்பிடும்போது கெட்டுப்போன வாசனை வந்ததாலும் வாயில் ஒருவித மோசமான வாசனை வந்ததாலும் அருவறுப்புடன் அந்தக் கறியை எடுத்து சாக்கடையில் கொட்டியதும் நினைவிற்கு வந்தது.

இந்த ஞாயிறுதான் அந்தக் கறிக்கடைகளை அதிகாலையில் கிளம்பியபோது கவனித்தேன் என முதல் வரியைத் தொடங்கினேன் அல்லவா-? சேலத்திலிருந்து எங்கள் மல்லசமுத்திரம் ஊருக்கு 30 கிலோ மீட்டர் தொலைவிற்கும் வரிசையாக ஒவ்வொரு ஊரிலும் சாலை ஓரங்களில் கறிக்கடைகள் இருப்பதையும் அங்கே கறியை வாங்க கூட்டமாக நிற்பதையும் பார்த்தேன்.

எங்கள் அப்பா புதன் கிழமைகளில் கறியை வாங்கி வருவதையும் பண்டிகை காலங்களில் அவை எந்த நாளில் வந்தாலும் அன்று கறி சமைப்பதையும் பார்த்திருக்கிறன். பின்னாட்களில் எண்பதுகளின் தொடக்கங்களில் நான் மேல்நிலை படிப்பை முடித்து கல்லூரியில் படிப்பதற்காக ஈரோட்டிற்குப் போன சமயங்களில் அங்கேயே விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியிருந்தது. நான் வீட்டில் செல்லப் பிள்ளை என்பதாலும் எனக்கு ஹோம் சிக் அதிகமென்பதாலும் வாரம் தவறாமல் சனி ஞாயிறுகளில் வீட்டிற்கு வந்துவிடுவேன். இந்த சமயத்தில்தான் ஞாயிற்றுக் கிழமைகளில் கறி சமைப்பது என்கிற பழக்கத்திற்கு குடும்பத்தை அப்பா மாற்றினார்.

அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் கறி வாங்க வேண்டும் என்றால் 5 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிற பக்கத்து ஊரான ஆட்டையாம்பட்டிக்குப் போக வேண்டும். காரணம் அன்றுதான் ஆட்டையாம்பட்டியில் வார சந்தை . மேலும் என் அப்பாவின் நண்பர் அங்கே கறிக்கடை போடுவார் என்பதும் உபரி காரணங்கள்.

download (32)

ஞாயிற்றுக் கிழமையானால் நான் சைக்கிளை எடுததுக்கொண்டு உற்சாகமாக கறி வாங்குவதற்காக அந்த ஊருக்குப் புறப்படுவேன். அநேகமாக அந்தக் கடையில் அப்பா பெரும்பாலும் இருப்பார். காரணம் என் அப்பா கிராமங்களில் தோட்டம் தோட்டமாக போய் ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ ஆடுகளை வாங்கிவந்து ஞாயிற்றுக் கிழமை சந்தையில் விற்பார். அப்போது புதன் கிழமை மல்லசமுத்திர சந்தை வெள்ளிக்கிழமை மோர்பாளைய சந்தை செவ்வாய் திருச்செங்கோட்டு சந்தை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆட்டையாம்பட்டி சந்தை. இவ்வளவுதான என் அப்பா அபப்போது போகிற வார சந்தைகள் . பெரும்பாலும் அப்பா வாங்கி விற்கிற சந்தைகள் இவ்வளவுதான்.

அப்பாவின் அந்தக் கறிக்கடை நண்பர் ஒரு நாளும் கறியை எடைபோட்டு எங்களுக்கு கொடுப்பதை நான் பார்த்திருக்கவில்லை. கூறுபோட்டு கறி விற்ற காலத்திலும் சரி அதன் பின்னால் எடைபோட்டு விற்ற காலத்திலும் சரி அவர் இரண்டு கைகளால் கறியை அள்ளி அள்ளி ஒரு பாக்கு மட்டையில் போட்டு கட்டி கொடுத்து அனுப்புவார். அப்பா பக்கத்தில் இருந்த சமயங்களிலும் சரி அவர் இல்லாத சமயங்களில் நான் மட்டும் போய் வாங்கி வந்த சமயங்களிலும் சரி அவர் இதே முறையில்தான் கறியை அள்ளிப்போடுவதை கவனித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு இப்படி செய்யாததையும் பார்த்திருக்கிறேன்.அதேபோல ஒரு நாளும் நான் அவரிடம் காசு கொடுத்து வாங்கிவந்திருக்கவில்லை. அப்பாவிடம் வாங்கிக்கொள்கிறேன் என சொல்லிவிடுவார். அதனால்அப்போது கறி என்ன விலைக்கு விற்றது என்பதுகூட எனக்கு தெரியாது.

புதன் கிழமைகளில் கறி சாப்பிடகிற வழக்கம் என்னால்தான் எங்கள் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைக்கு மாறியது என்பதை இப்போது தான் நினைத்தால் புரிந்தது. ஆனால் மொத்த ஊரும் ஞாயிற்றுக் கிழமை என்றால் கறி சாப்பிட வேண்டும் என்பது எப்போது மாறியது என்று கவனித்தர்ல் அல்லது இப்போது நினைத்து பார்த்தால் ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது.

எண்பதுகளின் பின் ஆண்டுகளில் இது நடக்கத் தொடங்கியிருந்தது. பெரும்பாலான அரசாங்க பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுக்கு வார விடுமுறையாக ஞாயிறு மட்டும்தான் விடுமுறை என்பதால் தங்களது வார விடுமுறையைக் கறி சாப்பிடும் நாளாக மாற்றிக்கொண்டார்கள் .

இந்த வழக்கம் மெல்ல மெல்ல மற்றக் குடும்பங்களுக்கும் பரவி இப்போது இந்த இருபது வருடங்களுக்கும் மேலாக எல்லாக் குடும்பங்களிலும் வார விடுமுறை என்பது ஞாயிறு எனவும் அன்று கறியோடு மற்ற சமாச்சாரங்களையும் இணைத்து கொண்டாட்டங்களுக்கு உரிய நாளாக மாற்றியிருந்தார்கள்.

இன்னும் சொல்லப் போனால் பின்னாட்களில் உலக தொலைக்காட்சிகள் கேபிள் வழியாக வீடுகளில் புகுந்த பிறகு ஞாயிறுகள் கறி சாப்பிடுவதோடு சில படங்களை வீட்டு தொலைக்காட்சிகளில் பார்க்கிற நாளாகவும் மாறத் தொடங்கியிருந்தன.

இந்த வழக்கம் தற்போது பெரியளவில் குடும்பங்களில் பரவத் தொடங்கியிருந்ததன் விளைவுதான் நான் பயணம் செய்த 30 கிலோ மீட்டர் தொலைவிற்கும் கறிக்கடைகள் மற்றும் அங்கே போட்டிப் போட்டுக்கொண்டு கறி வாங்க இருந்த கூட்டம். முன்பு ஆட்டுக் கறி அதிகம் போனால் பன்றிக் கறி எங்கேயாவது அதிசயமாக ஒரு கடை இருக்கும் . மாட்டுக் கறிக்கடையை நான் அதிகமாக பார்த்ததில்லை. கோழிக்கடைகள் என்பதெல்லாம் அப்போது அதிகமாக இல்லை.

ஆனால் கொங்கு நாட்டில்தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணைகள் உருவானதாலோ என்னவோ தெரியவில்லை இங்கேதான் நிறைய கோழிக்கடைகள் தொடங்கியிருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில்தான் கறி சாப்பிடுகிற வழக்கத்தையும் இக்கடைகள்தான் மாற்றியமைத்தன. தினசரியும் கோழிகளை வாங்கி சமைக்க இயலும் என்பதை இந்த சிறு சிறு கோழிக்கடைகள் தான் தொடங்கி வைத்தன.
images (27)
இவர்கள் இன்னொரு காரியத்தையும் செய்தார்கள். தினசரி உங்கள் வீட்டில் கோழிக்கறி சமைக்க இயலவில்லை என்றால் கவலை வேண்டாம். அதற்கும் நாங்களே வழி செய்து கொடுக்கிறோம் என்ற ரீதியில் அவர்களே சில்லி சிக்கன் என்ற பெயரில் கோழிக்கறியை வாரத்தின் எல்லா நாட்களில் கிடைக்க செய்தார்கள்.அவ்வளவு ஏன் தினசரி எந்தநேரமும் கோழிக்கறியை வறுத்து விற்றார்கள்.கூடவே கோழி முட்டைகள் வேகவைத்தும் ஆப் பாயில் மற்றும் புல் பாயில் மற்றும் கலக்கி என விதவிதமாக சமைத்து அந்த கோழிக்கடைகளிலேயே விற்றார்கள்.

ஆக தினசரி கறி சாப்பிடுகிற பழக்கம் மெல்ல மெல்ல சமூகத்தில பரவ வசதியாக தொன்னூறுகளின் தொடக்கத்தில ஏற்பட்ட குளோபல் எக்கானமிக் மாற்றங்களும் மன்மோகன்சிங்கின் பொருளாதார கொள்கைகளும் காரணங்கள் என்று சொன்னால்அது கொஞ்சம் கூடுதலான கதையாகக்கூட நிறையப் பேருக்கு தோன்றாலாம். ஆனால் அதுதான் உண்மை.

images (28)
மக்களிடம் பணப்புழக்கம் என்பது சரளமாகயிருந்தது. அதாவது பணத்தின் மதிப்பு குறைந்தது ஆனால் புழக்கம் அதிகமாகியிருந்தது. இதனால் சாதரணமாக கூலி வேலை செய்பவர்கூட ஒரு நாளுக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதும் அதிலிருந்து நிறையப் பொருட்களை வாங்கி நுகிர்கிற காலச்சாரம் தொடங்கியிருந்ததும் நிகழ்ந்தது.இதை தொலைக்காட்சி விளம்பரங்களும் கட்டமைத்திருந்தன.
இதன் தொடர்ச்சியாகவே மக்கள் நினைத்த நேரங்களில் நினைத்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற பழக்கம் உருவாகவும் இந்தக் கறிக்கடைகள் அதிலொன்றாகவும் மாறத் தொடங்கியிருந்தன.

சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் எங்களூருக்கு பைக்கில் போய்விடலாம் என்பதால் நான் திருமண நேரத்திற்கு கல்யாண மண்டபத்திற்குப் போய் சேர்ந்துவிட்டேன். வழியெங்கும் கறிக்கடைகளைப் பார்த்து வந்திருந்தாலும் கல்யாண வீட்டில் சைவ சமையல்தான் என்பது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. விருந்து முடித்து நண்பர்களை உறவினர்களை சந்த்தித்து பேசிவிட்டு மகிழ்ச்சியோடு மதிய நேரத்திற்கு திரும்பவும் சேலம் பயணம் தொடங்கினேன்.

இப்போது வழி நெடுக வேறு ஒரு காட்சியைப் பார்த்தேன். வேறு ஒரு கடையில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஆம் வழிநெடுக இருந்த ஊர்களில் இருந்த டாஸ்மாக் அரசு மதுவிற்பனைக் கூடங்களில் மது விற்பனை ஜோராக தொடங்கியிருந்ததும் அதற்கு காரணம்.

காலையில் வீட்டில் எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த கறியை சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு நண்பர்களோடு அந்த ஞாயிற்றுக் கிழமையைக் கொண்டாடுவதற்காகக் குடிமக்கள் இப்போது சாராய கடைகளை நோக்கி படைபடையாக வரத் தொடங்கியிருந்தார்கள் என்ற உண்மைதான் அது.

காலையில் கறிக்கடைகளில் கூட்டம் கறி வாஙக இருந்ததைப் போலவே இப்போது அரசு சாராய கடைகளில் கூட்டம் இருந்தார்கள். இப்போது ஞாயிறுகள் என்பது கறி சாப்பிடவும் சாராயம் குடிப்பதற்கும் ஆன கொண்டாட்ட நாளாகவும் மாறியுள்ளது. அப்புறம் மாலைவேளைகளில் போனால் போகிறதென இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக ஒரு ஞாயிற்றுக்கிழமையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சிவப்புப் பெட்டி / சிபிச்செல்வன்

download (11)

அந்தப் பெட்டியைத் தெருவின் ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஒரு ஓரத்தில் கட்டித் தொங்கிவிட்டிருந்தார்கள். அதை யாரும் கவனிப்பதாகவோ அல்லது குறைந்தபட்சம் அதன் தேவையை அறிந்தவர்களாகவோகூட யாருமில்லை.

அது ஒரு முக்கியமான ஜனங்கள் அதிகம் கூடுகிற இடம்தான்- அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் சிவப்பு வண்ணத்தில் அவ்வளவு பெரிய பெட்டி தொங்கிக்கொண்டிருப்பதை யாருமே கவனிக்காமல் அவரவர்வேலைகளில் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு கொஞ்சமும் வியப்பில்லை
யாருமே கவனிக்காத அல்லது யாருமே உபயோகிக்காத அந்தப் பெட்டியை இப்போதும் எதற்காக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை.
நிச்சயமாக யாரோ பயன்படுத்துகிறார்கள் . அதனால்தான் அந்தப் பெட்டியை அங்கே வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்

நான் அந்த இடத்திற்கு வரும்போதெல்லாம் யாராவது அந்தப் பெட்டியின் அருகே வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஒரு நாளும் யாரும் அதன் அருகில் வந்ததைப் பார்க்கிற வாய்ப்பு எனக்கு நேரவில்லை.
ஆனாலும் பிடிவாதமாக அந்த சிவப்பு நிற பெட்டி அங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறது

•••••

கடந்த 90களின் முன்பகுதிவரை நான் என் கிராமத்தில்தான் வசித்து வந்தேன். அப்போது எனக்கு யாரவது கடிதங்களை எழுத மாட்டார்களா எனவும் , தபால்காரர் வருகிற நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருப்பேன் என்ற கதையை சொன்னால் என் பிள்ளைகளேகூட நம்பாமல் நான் நல்ல கதைவிடுவதாகதான் சொல்வார்கள்.

நான் பள்ளியில் படிக்கிற இளம்பருவத்தில் எங்கள் ஊருக்கு வரும் தபால்காரரின் சைக்கிள் பின்னாலேயே தபால்காரர் தபால்காரர் என சப்தமிட்டுக்கொண்டே நானும் மற்றப் பிள்ளைகளும் ஓடுவோம்.

தபால்காரர்

தபால்காரர்

தபால்காரர்

தபால்காரர்

எங்கள் சொந்த பந்தங்கள் எல்லோரும் நான் வசித்த அந்தச் சிறிய கிராமத்திலேயே இருந்ததால் எங்களுக்கோ அல்லது எனக்கோ கடிதங்களை எழுதுபவர்கள் என யாரும் வெளியூர்களில் இருந்திருக்கவில்லை

ஆகையால் எனக்கு தபால்காரர் என்பவர் என் பெயருக்கு கடிதங்களை ஒரு நாளாவது கொண்டுவந்து கொடுக்க மாட்டடாரா என்ற ஏக்கமும் ஆசையும் அப்போது இருந்துகொண்டிருந்தன.

ஆனால் அதற்கு யாராவது ஒருவர் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும் அல்லவா?

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஒரு காரியம் செய்தேன்
பொங்கல் சமயம் அது. அப்போது பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது என்ற வழக்கம் இருந்தது. ஒரு கடையில் போய் வெகுநேரம் தேடி ஒரு பொங்கல் வாழ்த்தை வாங்கி அதை என் பெயரை எழுதி ஒழுங்காக முகவரிகூட எழுத தெரியாமல் தட்டுத்தடுமாறி ( முகவரியை எப்படி எழுதுவது என்று தெரியாமல் ) எழுதி எனக்கு நானே அனுப்பிக்கொண்ட பொங்கல் வாழ்த்து வந்தது.

தபால்காரர் என் பெயருக்கு பொங்கல் வாழ்த்து வந்திருக்கிற விவரத்தை சொல்லி இந்தப் பெயரும் வீடும் எங்கேயிருக்கிறது என, என் சொந்தக்காரரிடம் விசாரித்து என் வீட்டில் கொண்டு வந்து தபாலைக் கொடுத்த போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

பின்னால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு நண்பன் கோடைவிடுமுறை காலத்தில் ( மே மாத விடுமுறைகளில் ) தினசரி ஒரு கடிதம் எனக்கு எழுதுவதும் அவனுக்கு நான் பதில் கடிதம் எழுதுவதுமாக நாட்கள் போனது. தபால் எனக்கு வரவேண்டுமே என்ற ஆசையில் விளைந்தவைதான் அந்த நிகழ்வுகள் .

என்னுடன் படித்த அந்த மாணவ நண்பன் ஒரு கட்டத்தில் கடிதங்களை ஏதோ காரணங்களால் எழுதாததாலும் எனக்கு கடிதங்கள் வருவது நின்று போயின.

அந்த ஏக்கத்தின் விளைவாக நான் இலக்கியத்தில் நுழைந்ததும் நிறைய நண்பர்களை உருவாக்கிக்கொண்டதும் உள்மன காரணங்களோ என இப்போது நினைக்க தோன்றுகிறது

ஒரு கட்டத்தில் என் கல்லூரி நண்பன் முருகன் ( இப்போது பெருமாள் முருகன் என அறியப்படும் பிரபல எழுத்தாளர்தான் ) முதுகலை பட்டத்திற்காகக் கோவைக்குப் படிக்கப் போன சமயத்தில் அங்கேயிருந்து வாரம் தவறாமல் ஒரு போஸ்டுகார்டு எழுதுவதும் அதற்குப் பதிலாக நான் எழுதுவதும் நடந்துகொண்டிருந்தது.

இலக்கிய இதழ்களோடு பரிச்சயம் ஆவதற்குமுன் நடந்தவைகள் இவை. இலக்கிய இதழ்களை வாங்குவதற்கு என் ஊரிலிருந்து சேலத்திற்கு சுமார் 30 கிலோமீட்டர் தொலைவு போய் வாங்கிவருகிற சிரமத்தைக் குறைப்பதற்காகவும் மேலும் பல இதழ்கள் கடைகளில் கிடைக்காது என்பதாலும் சந்தாக்களை செலுத்தி அந்த இதழ்கள் வருவதற்குக் காத்திருந்திருக்கிறேன்

90களின் முன்பகுதியில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்புக்கு ஆண்டு சந்தாவை மொத்தமாக செலுத்தி அது வரத் தொடங்கியிருந்தது

தபால்களைப்பெட்டியில் போடும்போது

தபால்களைப்பெட்டியில் போடும்போது


இப்படி நிறைய விஷயங்களும் தபால்களாக தினசரி எனக்கு வரத்தொடஙகியிருந்தன

அந்தக் காலகாட்டத்தில் அந்தக் கிராமத்தில் எனக்குதான் தினசரி அதிகமான கடிதங்கள் வந்துகொண்டிருந்தன.
இது 90களின் முன் பகுதிவரை நடந்தது.அந்தக் கிராமத்தைவிட்டு பணிநிமித்தமாக மேட்டூருக்குப் போனபிறகு கூரியரில் கடிதங்களை அனுப்புவதும் பெறுவதும் என்ற பழக்கத்திற்கு ஆளாகியபின் அஞ்சல் துறையை நான் பயன்படுத்துவது மிகமிகக் குறைந்தது.

இரண்டாயிரத்தின் முன்பகுதியில் கணிணியின் புழக்கம் சரளமான பிறகு எனக்கென ஒரு இமெயில் ஐடியை உருவாக்கிக்கொண்ட பின்னால் கடிதங்கள் எழுதுவதும் போஸ்ட்ஆபிஸ் போவதும் என்ற வழக்கங்களும் எனக்கு குறைந்து கொண்டேயிருந்தன.

இதற்கிடையில் நான் சிறுவனாக இருந்த சமயங்களில் அஞ்சல்தலைகளைக் கிழித்து வைத்துக்கொண்டு அதை மற்ற நண்பர்களிடம் காட்டி பெருமையடித்துக்கொண்ட விஷயங்கள் எல்லாம் உபகதைகள். images (10)

அப்போது தபால்தலை சேகரிப்பு என்பது பற்றியோ அதன் முக்கியத்துவங்கள் பற்றியோ நான் அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்துகொண்ட சமயத்தில அஞ்சல்துறையின் சேவையைப் பபன்படுத்திக்கொள்ளும் வழக்கம் எனக்கு குறைந்துபோயிருந்தது,

இமெயில் கடிதங்கள் அதற்கு பதில்கள் என ஒரு கட்டம் வரை போய் செல்போன்கள் உபயோக்கிற வழக்கம் சரளமானதும் எஸ்எம்எஸ்களின் வழியாக உடனுக்குடன் அனுப்புவதும் பதில்களை வாங்குவதும் திருப்பி அனுப்புவதும் காலத்தின் வேகத்திற்கு இணையாக மாறிக்கொண்டிருந்தது.

ஆன்ராய்டு போன்களின் வருகைக்குபிறகு பேஸ்புக் , டிவிட்டர்,இமெயில் , வாட்ஸ்அப், என பல வழிகளில் தொடர்பு சாத்தியங்கள் எளிமையானவுடன் தற்போது அஞ்சல்துறையின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போய்விட்டிருக்கிறது

ஆனால் இன்னும் அரசாங்க துறைகளின் கடிதங்கள் அஞ்சல்துறை வழியாகதான் போய்க்கொண்டிருப்பதாலும் பிடிவாதமாக மூத்தோர்கள் அஞ்சல்துறையின் வழியாகவே கடிதங்களை மட்டுமே அனுப்புவோம், மற்றவை எல்லாம் இளைஞர்கள் கெட்டுப்போவதற்காகப் பயன்படுத்துகிற சமாச்சாரங்கள் என்ற கூச்சல்களும் போடுகிற பெருசுகளின் உபயோத்திற்காக மட்டுமே எனக்கு தெரிந்து இருக்கிறது. ஒரு வகையில் இவர்களால்தான் நூற்றாண்டுகள் கண்ட அஞ்சல்துறை இயங்கிக்கொண்டுள்ளது.

•••••••••

இதனால்தான் ஊரின் மையத்தில் தொங்கிக்கொண்டிருக்கிற சிவப்பு வண்ண பெட்டிகள்தொங்கிக்கொண்டுள்ளன. அவற்றில் யாருமே கடிதங்கள் எழுதிப் போடவிட்டாலும் தினசரி அஞ்சல்துறை அலுவலர்கள் திறந்துபார்த்து கடிதங்களை சேகரிக்க வருவதும் நடந்தவாறே இருக்கிறது.

டெலிகிராம் சேவையை இழுத்து மூடியதுபோல அஞ்சல்துறையின் சேவைகளையும் அரசாங்கம் இழுத்து மூடும்போது ஒரிருவர் நாஸ்டால்ஜியாவின் நினைவுகளில் கொஞ்சம் நாட்கள் இருப்பார்கள்.

மற்றபடி கடிதம் என்றாலே என்னவென அறியாத ஒரு தலைமுறைதான் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் காலத்தின் வேகத்தில் அவர்களுக்கான தொலைதொடர்புகளைப் பேணுவதிலும் கற்றுக்கொள்வதிலும் அதைக் கையாளுவதிலும் மூத்தோர்களைவிட வேகமாகவும் விவேகமாகவும் இருக்கிறார்கள்.

•••••

காலவேகத்தில் மாற்றங்கள் நிகழும் வேகத்திற்கு அஞ்சல்துறை தன்னை மாற்றிக்கொள்ள இயலாத காரணங்களால் மக்களும் அடுத்த தலைமுறை இளைஞர்களும் சிவப்பு பெட்டிகளை நிராகரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த தலைமுறைக்கு நொடிக்கு நொடி செய்திகள் தகவல்கள் உடனுக்குடன் அனுப்புவதும் பெறுவதும் விஞ்ஞானம் சாத்தியபடுத்தியிருப்பதால் அவற்றைவிட ஆமைவேகத்தில் இயங்குகிற நூற்றாண்டு பழமைகளை அவர்கள் நிராகரிக்க கற்றுக்கொண்டார்கள்.

பழமையானது என்பதாலேயே அதைக் கொண்டாடுவோம் என அவர்கள் சொல்லத் தயாராக இல்லை. அவர்களுக்கு அவர்கள் காரியம் உடனுக்குடன் நடக்க வேண்டும்.ஆகையால் அவர்கள் சிவப்பு பெட்டிகளை நாடுவதில்லை.
•••••
( கடிதங்கள் கொண்டு வருகிற தபால்காரர்களோடு இருக்கிற உறவுகள் அதுசார்ந்த நெருக்கம் அல்லது கோபங்கள் எல்லாம் இந்தக் கட்டுரையில் பதியவில்லை )

எழுத்தாளர்களின் புகைப்பட கேலரி / படங்கள் / செல்வம் ராமசாமி

எழுத்தாளர்களின் புகைப்பட கேலரி ஒன்றை உருவாக்கும் நோக்கில் இங்கே சில படங்கள் /

நன்றி
படங்கள் செல்வம் ராமசாமி

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன்

எஸ்.ஏ.பெருமாள்

எஸ்.ஏ.பெருமாள்

சீராளன்

சீராளன்

அஃதொரு பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள் / அ.ராமசாமி ( அமெரிக்காவிலிருந்து )

download (14)

ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடுதான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக்கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால், இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.

download (19)
அமெரிக்காவிற்குக் கிளம்புவதற்கு முன்பு பெட்னாவைப் பற்றி அறிந்தனவெல்லாம் பிரபலமான ஆளுமைகளை அழைத்துக் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்கும் ஓர் அமைப்பு என்பதாக இருந்தது. 1990 முதல் நடத்தப்படும் பெட்னா விழாவின் இந்த அடையாளத்தைச் சமீபகால நிகழ்வுகள் கொஞ்சம் மாற்றிட முனைந்திருந்தன. தீவிரமான கவிகள் என அறியப்பட்டவர்களும், திரைப்பட ஆளுமைகளும் நவீன நாடகங்களும் அழைக்கப்பட்டதைக் கவனித்திருக்கிறேன். அதனால் நாமும் பங்கேற்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது.

download (20)
அழைக்கப்படாவிட்டாலும் பார்வையாளனாகப் பங்கேற்கலாம் என்ற திட்டம் இருந்தது. அதனைத் தாண்டி எனது அமெரிக்க வருகையைக் கூறி, அதன் தலைவர் நாஞ்சில் பீட்டருக்குக் கடிதம் ஒன்றையும் என்னைப் பற்றிய சிறுதகவலையும் அனுப்பினேன். அனுப்பிய ஒருவாரத்தில் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்; உரிய கடிதம் 10 நாட்களில் வந்து சேரும் என்றார்

முகநூல் வழியாகப் பெட்னாவின் நிகழ்ச்சிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல் முன்னோட்டமாக ஒன்றிரண்டு வந்தன. எனது பங்கேற்பும் படத்துடன் உறுதிசெய்யப்பட்டது. எனக்கான அமெரிக்க நுழைவு அனுமதியை(VISA) ஏற்கெனவே வாங்கிவிட்டேன் என்பதால், பெட்னாவின் ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கவில்லை. அமெரிக்காவிற்கு வந்திறங்கிவிட்டேன். கவி சுகிர்தராணி, பேரா.கல்யாணி, நாடகம் மற்றும் திரைப்படங்கள் சார்ந்த நண்பர் அம்ஷன்குமார் ஆகியோர் பெயர்களும் அந்த முன்னோட்ட விளம்பரங்களில் இருந்தன. தஞ்சாவூரிலிருந்து வரலாற்று நாடகமொன்றும் கலந்துகொள்ளும் என்ற தகவலும் இருந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் வரவில்லை என்பதை அங்கு போனதும் அறிந்தேன். அமைப்பாளர்களிடம் உடனடியாக விசாரித்தபோது அமெரிக்கத் தூதரகத்தில் புதிதாகக் கடைப்பிடிக்கத்தொடங்கியுள்ள புதிய விதிமுறைப்படி 2 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டும் எனச் சொல்லிவிட்டதால் நுழைவு அனுமதி கிடைக்கவில்லை. அவர்களின் வருத்தம் நியாயமானது. வருத்தம் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியுள்ளதோடு அவர்களுக்குண்டான செலவுகளையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தார் அதன் தலைவர் திரு நாஞ்சில் பீற்றர். அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய கடிதத்தையெல்லாம் எனக்குக் காண்பித்தார்.

முதலில் நடிகரும் தொழில் முனைப்பு வழிகாட்டி உரையாளருமான அரவிந்த்சாமியின் பெயரும், பின்னர் இன்னொரு நடிகர் ஜெயம் ரவியின் பெயரும் இணைக்கப்பெற்றன. இந்தப் பிரபலங்களோடு விஜய் தொலைக்காட்சிப் புகழ் சூப்பர் சிங்கர் பாடகர்களும் பங்கேற்பார்கள் என்ற தகவல்கள் எனக்குக் கலக்கத்தையே ஏற்படுத்தின. இவ்வளவு பிரபலங்களுக்குள் நான் கவனிக்கப்படும் வாய்ப்புகள் இல்லை என்றே நினைத்தேன். அடிப்படையில் நானொரு பேச்சாளன் அல்ல; பெரும்பத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதிப் படங்கள் போடப்பட்ட பிரபல ஆளுமையும் அல்ல. ஏராளமான கட்டுரைகளை எழுதியிருந்தாலும் அவை எதுவும் 500 பேரைத்தாண்டாத சிறு மற்றும் குறு இதழ்களில் தான். என்னைக் கூடுதல் எண்ணிக்கையில் அறியத்தந்த ஊடகம் என்றால், விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? தான். நீயா நானா போன்ற நிகழ்வுகளில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசுவது என்னைப்போன்றவர்களுக்கு எளிமையானது. பேசப்பட்ட கருத்துகளின் மேல் தர்க்க நியாயங்களோடு கூடிய- ஏற்கத்தக்க முடிப்புரையொன்றைச் சொல்லவேண்டும். அப்படி நான் சொன்ன முடிப்புரைகள் பலநேரங்களில் கவனிக்கப்பட்டதாக இருந்திருக்கின்றன என்பதைத் தமிழ்நாட்டில் பயணம் செய்தபோது உணர்ந்திருக்கிறேன்.
download (21)
தஞ்சாவூரிலிருந்து வரலாற்று நாடகமொன்றும் கலந்துகொள்ளும் என்ற தகவலும் இருந்தது.
இரண்டுமாத வெளிநாட்டுப் பயணத்திட்டத்தில் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கமும் பெட்னா விழாவும் சேர்ந்துகொண்டபோது சுற்றுலாப் பயணம் கல்வி மற்றும் பண்பாட்டுப் பயணமாக மாறிவிட்டது. யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் மே மாதத்தின் வாரக்கடைசி. கோடை விடுமுறையின் தொடக்கம். பல்கலைக்கழகத்திற்குத் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். கூடுதல் விடுமுறை தேவையில்லை. ஆனால் பெட்னா விழா நடப்பதோ ஒவ்வோராண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரக்கடைசி நாட்கள். அமெரிக்காவின் சுதந்திரதினத்தையும் உள்ளடக்கிய நீளும் வாரக்கடைசி எனத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜூலையில் பல்கலைக்கழகம் தொடங்கிவிடும் என்பதால், பல்கலைக்கழகத்தில் கூடுதலாக அனுமதியும் விடுமுறையும் வாங்கவேண்டும். அதற்கான அழைப்புக்கடிதங்கள் வேண்டும். அத்தோடு அங்கிருக்கும் வேறுசில தமிழ்ச் சங்கங்களின் நிகழ்வுகளிலும் பங்கேற்க நேரிடலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்த கடிதங்களை ஏப்ரல் மாதத்தின் நடுவிலேயே அனுப்பிவிட்டனர். எனது அலுவலகத் தேவைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு உதவியவர் நண்பர் பாஸ்டன் பாலா. அவரது தொடர்புகளின் வழியாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புகளின் தலைவரான நாஞ்சில் பீற்றரும் உரிய அழைப்புக்கடிதங்களை தேவையான நேரத்தில் அனுப்பிவைத்தனர். அதனால் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கும் விடுப்புக்கும் விண்ணப்பம் செய்வது எளிதானது. பயணக் காலம் 50 நாட்கள், 80 நாட்களாக நீண்டு விட்டது.
download (17)
வடஅமெரிக்காவின் பெருநகரங்களில் செயல்படும் தமிழ்ச்சங்கங்களின் செயல்பாடுகளையும் கல்வி முயற்சிகளையும் முன்பே அறிவேன். தமிழ் இணையக் கல்விக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் ஒன்றில் அவற்றின் சார்பாளர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஆர்வமும் ஓய்வுநேரங்களைத் தமிழ் கற்பிக்கப்பயன்படுத்தப்படும் பாங்கும் உள்நாட்டுத்தமிழர்கள் கைவிட்டவை.
புலம்பெயர்ந்து வாழும் தேசத்தின் பெருமொழித்தேவையைக் கூடுதலாக உணர்ந்திருக்கிறார்கள். அமெரிக்க ஆங்கிலம் பேசும் லாவகத்தையும், அவற்றோடு லத்தீன், பிரெஞ்சு போன்ற சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் விருப்பங்களும் உண்டு. அதனோடு சேர்த்துத் தங்களின் சொந்தமொழியின் தேவையையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்கள்.

தனிமனிதனுக்கான பண்பாட்டு அடையாளத்தொடர்ச்சி, அவரது தாய்மொழி வழியாகவே தொடரும். உலக மனிதனுக்குள் இருக்கும் உள்ளூர் அடையாளத்தைக் காட்ட, அவரது தாய்மொழியும், அதன் சொல்முறையும் இலக்கியங்களும் கலைகளும் வாழ்முறையறிவும் அவசியமானவை. அப்படித் தக்கவைப்பதென்பது பெருங்கடலில் நீந்தும் மீன்களின் வாலசைப்புகள். அதற்கு மாறாகச் சொந்தமொழியைக் கைவிடுதலென்பது பெருங்கடலில் கரைந்துவிட்ட உப்பாக மாறுதல். நாம் கடலின் மீன்களாக இருப்பதா? கரைந்துவிடும் உப்பாக இருப்பதா? என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர்கள் தனிமனிதர்கள். மீன்களாக இருக்க நினைப்பவர்களுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க நினைப்பதாகப் பண்பாட்டுக்குழுமங்களும் கூட்டங்களும் அமையும்.

பெட்னாவின் நான்கு நாள் பெருவிழாவில் முதல் நாளில் விருந்தினர் சந்திப்பின்போது விழா நடக்கும் விடுதியை அடைந்துவிட்டேன். எனக்கு முன்பே நடிகர் அரவிந்த்சாமி, மருத்துவர் சிவராமன், ஜெர்மனியிலிருந்து தமிழ் அறக்கட்டளையின் பொறுப்பாளர் சுபாஷினி போன்றோர் வந்துவிட்டனர். 2000 பேருக்கும் மேல் திரண்டிருந்த பெருவிருந்து அரங்கில் விஜய் தொலைக்காட்சிப் பாடகிகள் பாடிக்கொண்டிருந்தனர். விருந்தினர்கள் மேடையில் தோன்றினார்கள். ஒருவரோடு ஒருவர் இணைந்து நின்று படம் எடுத்துக்கொண்டார்கள். குழுமியிருந்த கூட்டமும் அங்கங்கே நின்று படம் எடுப்பதும் சாப்பிடுவதுமாகக் கடந்தது அந்த இரவை.
download (15)
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது என்னிடம் வந்தவர் தன்னைச் சங்கரபாண்டி எனப் பெயர்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். அத்தோடு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் என்றும் சொன்னார். பைக்குள் நாளை வெளியிடவுள்ள மலரின் பிரதியிருக்கிறது. அதை நீங்கள் தான் வெளியிட்டுப் பேசுகிறீர்கள். மருத்துவர் சிவராமன் பெற்றுக்கொண்டு பேசுவார். அந்நிகழ்ச்சி நாளை காலை 11.00 மணிக்கு என்றார். இது எனக்குக் கூடுதல் பணியாக நினைத்தேன். நான் அழைக்கப்பட்டபோது சொல்லப்பட்ட வேலைகள் இரண்டு. வார்சா பல்கலைக்கழகத்தில் நான் பெற்ற மொழிக்கற்பித்தல் அனுபவங்களை மையப்படுத்தி ஓர் உரையைப் பொதுஅரங்கில் தரவேண்டும். இன்னொரு உரையைத் தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றக்காரணங்கள், தேவைகள், தாக்கங்கள் பற்றிப் பேசவேண்டும். இந்த இரண்டு உரைகளுக்கு மட்டுமே நான் தயாராகப் போயிருந்தேன். ஆனால் சங்கரநாராயணனின் அறிமுகமும் பேச்சும் என்னை மூன்று நாட்களும் அங்கேயே இருக்கவேண்டியவனாக மாற்றிவிட்டது. என்னோடு அவர் தனது பொறுப்பிலிருந்த “தமிழ்மணம்” இணைய இதழுக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்டதையெல்லாம் நினைவுபடுத்தினார். இங்கே உங்களது இணையவழிச் செயல்பாடுகளை அறிந்த பலரும் இருக்கிறார்கள்; உங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தப்போகிறோம் என்றார்.

முதல் நாளின் முற்பகலில் மலரைவெளியீடு. பேரவைகளின் ஆண்டுமலருக்கென ஒரு மலர்க்குழு இருந்தது. மலர் தயாரிப்பவர்களுக்கு முக்கிய நோக்கமும் இருந்திருக்கிறது. பாவேந்தர் பாரதிதாசனின் 125 -ஆவது பிறந்தநாள், தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு என்பன அவை. இதனோடு சேர்ந்து உலகத்தமிழர்களுக்கான மலராக இருக்கவேண்டுமென்ற அக்கறையை மலர்க்குழுவின் தலைவி ரேணுகா குமாரசாமி வெளிப்படுத்தியிருந்தார். கிழக்கிலிருந்து – ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை எனத்தாவி ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் தமிழ், தமிழர்கள் வளமாக வாழ்கிறார்கள் என்பதற்கான அடையாளங்களை மலரின் இதழ்களாக ஆக்கவேண்டுமென்ற ஆர்வமும் உழைப்பும் வெளிப்பட்ட இந்த மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சியெனக் கூறி வெளியிட்டேன். மருத்துவர் சிவராமன் பெற்றுக்கொண்டார். இன்னொரு நிகழ்வில் கவி அறிவுமதி எழுதி, உன்னிகிருஷ்ணன் மகளோடு சேர்ந்து பாடிய பாடலின் குறுவட்டு வெளியிடப்பெற்றது.மேற்கு வங்காளத்தின் கூடுதல் அரச செயலாளராக இருந்த திரு. பாலச்சந்திரன் இஆப.வோடு இந்தியவியல் அறிஞர் திருமதி ப்ரெண்டா பெக், முனைவர் சுபாஷிணி ஆகியோருடன் இணைந்து வெளியிடப்பெற்ற பாடல் உலகெங்கும் இணையம் வழியாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்க வழிசெய்யப்பட்டது.
download (13)
முதல் நாள் இரண்டு தடவை என்னை மேடையேற்றிய சங்கரநாராயணன் அடுத்தடுத்த நாட்களிலும் இரண்டு தடவை மேடையில் இருக்கவேண்டும் என்றார்.
இரண்டாவது நாள் திரளான கூட்டத்தில் தமிழ் உலகமெங்கும் கற்பிக்கப்படும் முறைகளின் வேறுபாட்டை எடுத்துக்கூறி, “மொழியென்பது அறிவு; அறிவே அதிகாரம்; தமிழ்மொழியின் வழியாக ஒவ்வொருவரும் அதிகாரம் பெறமுடியும்” என்று காரணகாரியங்களோடு சொன்னபோது கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. பேச்சுக்குப் பின்னான இடைவேளையில் ஒவ்வொருவராக வந்து அறிமுகம் செய்துகொண்டு பேசினார்கள். இன்னும் எவ்வளவு நாட்கள் இங்கே இருக்கிறீர்கள்? எங்கள் மாநிலத்தமிழ்ச்சங்கத்திற்கு வரமுடியுமா? எனக்கேட்டபோது பேச்சின் ஆழம் அவர்களை யோசிக்கவைத்ததை நான் உணர்ந்தேன்.
download (16)
பிற்பகலில் நடந்த வினாடிவினா நிகழ்வுக்கு நடுவராக இருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. என்னோடு சங்கரபாண்டியனும் இருந்தார். 50 நிமிடத்தில் 50 கேள்விகள். தமிழண்ணல் அணி, வ.சுப. மாணிக்கம் அணி எனப் பிரிக்கப்பட்ட இரு அணிகளிலும் ஒவ்வொரு பக்கமும் 50 பேர். ஆழமான வினாக்களோடு உயர்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இதுபோன்ற போட்டிகளைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர்களுக்கு நடத்தவேண்டும். அதை உருவாக்கியவர் இப்போதைய தலைவர் நாஞ்சில் பீற்றர். இவ்வளவு பணிகளுக்கிடையிலும் இதை அமைப்பாளராக இருந்து அவரே கணிணியை இயக்கினார். பாராட்டுக்குரிய ஒன்று. நடுவராக இருந்து ரசித்துக்கொண்டே இருந்தேன்.

நானே பங்கேற்ற இந்நிகழ்வுகளைத்தாண்டி அங்கே நடந்த பல நிகழ்வுகளுக்கும் பார்வையாளனாக அமர்ந்து நான் ரசித்ததோடு, வட அமெரிக்கத் தமிழர்களின் ரசனையையும் ஈடுபாட்டையும் கவனித்துக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். மருத்துவர் சிவராமனின் உரை மற்றும் கருத்துக்களத்தில் அவர்கள் பங்கேற்ற விதமாகட்டும், திருக்குறள் தேனீ என்ற நினைவாற்றல் போட்டியாகட்டும் ஒவ்வொன்றிலும் சிறுவர்களும் பெரியோர்களும் ஆழமான ஈடுபாட்டைக் காட்டினர்.

கரகாட்டம், பறையடிப்பு, கும்மியாட்டம் என மேடையில் பல நாட்டுப்புறக்கலைகள் வண்ணமயமாக அசைந்து கோடுகளை உண்டாக்கிக் கண்களுக்கு விருந்தளித்தன. இடையிடையே அறிஞர்களும், தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் இலக்கியத்திற்கும் பங்களிப்புச் செய்தோரை அளித்துச் சால்வை அணிவித்து நினைவுப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள்.

சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையை நாடகமாக்கி ஒரு தமிழ்ச்சங்கம் மேடையேற்றியது. இரண்டு ஊர்களிலிருந்து வேலுசரவணன் தந்த பயிற்சியோடு இரண்டு சிறுவர் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. வேலுசரவணன் எனது மாணவன். தம்மின் தம்மக்கள் என்பதுபோல.. நம் மாணவர் நம்மைத் தாண்டும் தருணம் நமக்கும் பெருமை. எப்போதும் பார்வையாளர்களைத் தொட்டுவிடும் நாடகங்களை அரங்கேற்றும் வேலுசரவணன், தேவலோகத்து யானை,தங்கராணி என்ற இரண்டு நாடகங்களைச் சிறுவர்களைக் கொண்டு மேடையேற்றினார். ஒன்று நீதிக்கதை. இன்னொன்று எப்போதும் பொருந்தும் மிதாஸ் கதை.
download (22)
வேலுசரவணன் எப்போதும் பார்வையாளர்களை நிகழ்த்துநர்களாக்கும் வல்லமைகொண்ட அரங்கியலாளன். முதல் நாடகத்தில் உடலாலும் பேச்சாலும் தொட்டுவிடும் உத்தியைக் கையாண்டிருந்தார். இரண்டாவது நாடகத்தில் கருத்தால் பார்வையாளர்களைத் தொட்டுவிடும் உத்தியைக்கையாண்டார்.

இரண்டு மற்றும் மூன்றாவது நாளின் பிற்பகல்களில் ஐந்து அறைகளில் இணை அமர்வுகள் நடந்தன. அவரவர் விருப்பம் சார்ந்து தமிழ் மருத்துவம், ஆவணக்காப்பகம், வரலாற்றுத்தரவுகள், யோகா, ஓலைச்சுவடிகள் சேகரிப்பு என ஏதாவதொன்றைத் தேர்வுசெய்து பங்கெடுத்தனர். எனது விருப்பத்தின் அடிப்படையிலும் திருமதி சுபாஷினியின் வேண்டுகோளின்படி அவரது உரைக்களத்தில் பங்கேற்றேன். அண்மையில் கோப்பன்ஹாகன் அரச நூலக சேகரிப்பில் உள்ள தமிழ் ஓலைச்சுசடிகள் மின்னாக்கம் தொடர்பான அவரது உரைக்குப் பின் உடன் அந்த நடவடிக்கைகளில் நானும் இணைந்துசெயல்படுகிறேன் என உறுதியளித்திருக்கிறேன். ஆய்வுசெய்வதற்கான அடிப்படைத் தரவுகளைத் தொகுத்தளிப்பதற்குத் தன்னார்வம் வேண்டும். தன்னார்வத்தின் நிகழ்கால முன்மாதிரி சுபாஷ்சினி

பெட்னா தமிழ்விழாவில் சந்தித்த இன்னொரு ஆளுமை வைதேகி ஹெர்பர்ட். தனது மொழிபெயர்ப்பு சார்ந்த/ அகராதி உருவாக்க முயற்சிகள் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வந்த வைதேகி ஹெர்பர்ட்டோடு உரையாடிக் கொண்டிருந்தேன். தனி மனுசியாக அவரது ஆர்வமும் பணிகளும் ஆச்சரியம் உண்டாக்குபவை. சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்பைத்தாண்டி இன்னும் பல பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையொன்றை உருவாக்கத்திட்டமிட்டுள்ள மருத்துவர்கள் சம்பந்தம், ஜானகிராமன் ஆகியோரோடு இணைந்து அதற்கான நிதிதிரட்டலில் மூன்று நாளும் கவனம் செலுத்தினார். அவரது தொடர்புகிடைத்தது முக்கியமான ஒன்று.
இரண்டாவது நாள் இரவிலும் மூன்றாவது நாள் இரவிலும் திரைப்படப்புகழ் ஆளுமைகள் மூலம் கூட்டத்திற்குக் கொண்டாட்ட மனநிலை உருவாக்கப்பட்டது. நடிகர் அரவிந்சாமியின் வணிக நிறுவனங்கள் குறித்த தனியுரையை நான் கேட்கவில்லை. பொது அரங்கில் அவர் பேசிய உரையைக் கேட்டபோது ஆழமானதும் நிதானமானதுமான ஆளுமையை அழைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவின் இசை பற்றிய உரையையும் குறிப்பிட்டாகவேண்டும். மூன்றாம் நாளின் இரவைத் திரைப்படப்பாடல்களின் வழி உருவாக்கப்பட்ட ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற மனநிலை குதூகலமாக்கின.

அதற்கும் முன்னதாக நடந்த சங்கங்களின் சங்கமம் பெட்னா விழாவின் உச்சநிகழ்வு எனலாம். அனைத்துச்சங்கங்களும் தங்கள் மாநிலக் கொடியடையாளத்துடன் வந்து கலந்துகொண்டார்கள். விளையாட்டு அணிவகுப்புகளில் இடம்பெறும் இத்தகைய அணிவகுப்பைப் பண்பாட்டுத்திருவிழா ஒன்று உள்வாங்கியிருப்பதை இப்போதுதான் நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்தின்அணிகளும் தங்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பதோடு கலந்துகொண்ட அந்தப் பெருநிகழ்வு கண்கொள்ளாக்காட்சி. எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் மாநிலத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்தோடு கரகம், காவடி, பறை, தப்பு, மத்தளம், கொம்பு, கும்மி, கோலாட்டம், கூத்து வேடம், செவ்வியல் நடனக்கோலம் எனத் தமிழ்நாட்டின் கிராமங்களும் நகரங்களும் நியுஜெர்சிக்கு பெயர்ந்திருந்தன. அப்படி இடம்பெயர்ந்திருந்தால்கூட இவ்வளவு வண்ணமயம் இருக்குமா? குதூகலம் இருக்குமா? என்று தெரியவில்லை. ஆண்களும் பெண்களும் வயதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். நிச்சயம் தமிழ்நாட்டில் இது நடக்காது. பத்தாண்டுகள் நடனம் கற்ற பெண் திருமணத்திற்குப் பின் சலங்கையைத் தொட அனுமதிக்கப்படாமல் போன கதைகள் எனக்குத் தெரியும். கல்லூரிக்காலத்தில் கற்ற கலைகளையெல்லாம் வேலைக்குப் போனபின் தள்ளிவைத்து அதிகாரியாக ஆகிப்போன ஆண்களையும் அறிவேன்.
download (18)
இந்தக் கொண்டாட்டங்களின் பின்னால் ஒரு வாழ்வியல் உண்மை இருக்கிறது.அமெரிக்காவின் சுதந்திரம் தந்த வெளிப்பாடு அது. தன்காலில் நிற்பேன் என்ற தன்னம்பிக்கை. அத்தோடு எனது நிலப்பரப்பின் அடையாளத்தைக் காட்டவேண்டும் என்ற அக்கறை.
நான்காவது நாள் மதியம் வரைதான் நிகழ்வுகள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளைத் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழாக் கருத்தரங்கமும் பட்டிமன்றமும் தனதாக்கிக் கொண்டன. கருத்தரங்கில் ஓர் சிறப்புரையாற்றிய என்னை பள்ளிச்சிறார்களின் பேச்சுவளத்தைக் கூர்தீட்டும் தனித்தமிழ் இயக்கப் பட்டிமன்றத்திற்கும் நடுவராக இருக்கக் கேட்டபோது அன்போடு மறுத்துவிட்டேன். அங்கிருந்த பேரா. இரா.மோகனே பொருத்தமானவர் எனக்கூறி அவரிடம் வழங்கினேன். என்றாலும் பரிசு தரும் பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டது. பட்டிமன்றத்திற்குப் பொறுப்பேற்றிருந்த வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த திருமதி சுபாவும் அந்நிகழ்வைத் தொகுத்தளித்தவரும் என்னைக் குறித்துக் கொண்டிருந்த கருத்து எனக்கே ஆச்சரியமூட்டுவனவாக இருந்தன. அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் வெகுமக்கள் ஊடகங்களான திரைப்படம், தொலைக்காட்சி, வியாபாரப்பத்திரிகைகள் போன்றவற்றை மட்டுமே கவனித்து ஆளுமைகளை முடிவுசெய்பவர்கள் அல்ல என்பது புரிந்தது. தொடர்ந்து இணையம் வழியாக நான் எழுதும் கட்டுரைகளை அவர்கள் வாசித்திருக்கிறார்கள். எனது வலைப்பூவைத் தொடரும் நபர்கள் அங்கே இருக்கிறார்கள். குறிப்பிட்ட கட்டுரையைச் சொல்லிக் கேள்விகேட்டவர்களையெல்லாம் தமிழ்நாட்டில் சந்தித்ததே இல்லை.

நிகழ்ச்சிநிரல் திட்டமிடலில் ஒரு பன்னாட்டுக்குழுமங்களின் தேர்ச்சி இருந்தது. கருத்துக்குரியன; காட்சிக்குரியன; செவிக்குரியன; சிந்தனைக்குரியன என ஒவ்வொன்றும் அடுக்கப்பட்ட விதத்திலும், அவற்றிற்கு வழங்கப்பட்ட நேரத்திலும் அதனைக்காணமுடிந்தது. அச்சடித்துத் தரப்பட்ட நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் நிமிடக்கணக்கில் தரப்பட்டிருந்தன. ஒன்று காலத்தை நீட்டினாலும், இன்னொன்றின் இடம் காலியாகிவிடும் என்பதால் காலத்தைக் கறாராகப் பின்பற்றுவதில் கவனம் செலுத்தினார் ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன்.
முதல் நாள் அறிவிப்பின்போது காலை 08.45 தொடங்கி இரவு 10 மணி வரை முதன்மை மேடையிலும் பிற்பகல் நேரங்களில் இணை அரங்குகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை அப்படியே பின்பற்ற வேண்டாம். கடைசிநேர மாறுதல்கள் இணையத்தில் இருக்கின்றன. அதில் மாற்றங்கள் இருக்காது என்றார். அதையே ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டுமென அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் தரப்பட்ட இன்னொரு பட்டியலில் எத்தகைய மாற்றமும் இல்லை. அது உணவுப்பட்டியல். அதில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நேரமும் வழங்கப்படும் உணவும் உடன் வழங்கப்படும் பண்டங்களும் பானங்களும் எனக் குறிப்பிடப்பட்டபடி வழங்கப்பட்டதை அவர்களின் திட்டமிடலுக்குச் சான்றாகச் சொல்லவேண்டும். ஒரு பண்பாட்டுப் பெருவிழாவை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதையும் எவ்வாறு நடத்தவேண்டுமென்பதையும் ஒவ்வொருவரின் பங்கேற்பையும் எவ்வாறு கவனப்படுத்த வேண்டுமென்பதையும் எனக்குக் கற்றுத்தந்த விழாவாக இந்த பெட்னா விழா என் நினைவை விட்டு அகலாமல் இருக்கப்போகிறது.

********

பர்மிய நாட்கள் 10 ( பயணத் தொடர் ) / நடேசன் ( ஆஸ்திரேலியா )

download

The stairway to Taung Kalat is narrow and steep, and it climbs a 300-foot lava plug crowned by Buddhist temples.
National Geographic, Burma: The richest of poor countries, July 1995

மண்டலேயியில் இருந்து நாங்கள் வீதி வழியாக சென்ற இடம் பகான் என்ற பர்மாவின் புராதனத் தலைநகரம். வுழியெங்கும் இலங்கையின் அனுராதபுரம் மாதிரியான நிலஅமைப்பு . பர்மியர்களின் பானை வனைதல், பனைமரத்தின் கள்ளில் இருந்து சர்க்கரை எடுத்தல், சாராயம் வடித்தல், விவசாயம் செக்கில் எண்ணை எடுத்தல் என்பவற்றை வழி நெடுக பார்த்தபோது ஊர் இலங்கையின் நினைவுகள் வந்தன.
நாங்கள் போகும் வழியில் பகன் அருகில் 1500 அடிகள் உயரத்தில் ஒரு சுற்றிவரக் குன்றுகள் அற்று ஒற்றைமலை நேராகத் வானத்தை நோக்கி எழுந்திருப்பது தெரிந்து. மலை உச்சியில் உச்சியில் விகாரையும் தெரிந்தது. இந்த மலை கிரேக்கருக்கு ஒலிம்பியா மலைபோல் இலங்கையருக்கு சிவனொளிபாதமலைபோல் பர்மியருக்கு போபாமலை(Popa mountain) புனிதமானது. அந்த மலையின் உச்சியில் உள்ள விகாரைக்கு பர்மாவில் உள்ள புத்தமதத்தவர்கள் புனிதத்தலமாக யாத்திரை செய்வார்கள்.

புத்தசமயம் மக்களிடையே வருவதற்கு முன்பே இந்த போபா மலை புனிதமான இடமாக கருதப்பட்டது. பர்மியர் இந்த மலையைத் தெய்வமாக வழிபட்டார்கள் ஆனால் பிற்காலத்தில் அதில் புத்தவிகாரையை கட்டிய போதும், நட் என்ற காவல்த் தெய்வ வழிபாடும் நடக்கிறது. அந்த மலையை ஏறி பார்க்க விரும்பினாலும் அதனது உயரத்தை நினைத்து தவிர்த்து விட்டு வேறு ஒரு இடத்தில் நின்று பார்த்துவிட்டு பகனை நோக்கி வாகனத்தில் சென்றோம்.

பர்மா என்ற தேசத்தின் சரித்திரம், மதம், மற்றும் நாகரீகம் பகானில் இருந்து உருவாகிறது. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இங்கு அரசவம்சங்கள் உருவாகியது என சொல்வப்ப்டாலும் வரலாற்றின் தடயங்கள் 11ம் நூற்றாண்டில் இருந்துதான் கிடைத்துள்ளது. ஐராவதியின் கிழக்கே அமைந்துள்ள நகரமிது இந்த நகரத்தை மையமாக வைத்து (Aniruddha 1044-1077) ஆண்ட மன்னன் முழு பர்மாவையும் ஒன்றாக்கினான். அதுவரையும் மகாஜான பௌத்தத்தை தழுவி இருந்தவர்கள்,தேரவாதத்திற்கு மாறினார்கள்.

11ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகிய பகானைத் தலைநகராக கொண்ட இராட்சியம் 250 வருடங்கள் இருந்தது. அப்பொழுது வானசாத்திரம், விஞ்ஞானம், மருத்துவம் என எல்லாத்துறைகளும் உருவாகி வளர்ந்திருந்தது. இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மகாஜான, தேரவாத, தந்திரிய என்ற புத்தசமயப பிரிவுகளுடன் சைவ, வைணுவம் பிரிவுகளும் இருந்தன. பிற்காலத்தில் தேரவாதம் மட்டும் பர்மியரசரால் பாதுகாக்கப்பட்டதால் மற்றவைகளின் செல்வாக்கு குறைந்தாலும், முற்றாகவிட்டு செல்லவில்லை என்பதை அங்குள்ள பகோடாக்களைப் பார்த்தபோது தெரிந்து.

ஓன்றிணைந்த பர்மியர்களின் முதல் தலைநகரம் பகன் அதன் அரசன் அனவர்த்தா (Aniruddha) 11ம் நூற்றாண்டில் இந்த இராச்சியத்தின் எல்லை தற்போதய கம்போடியாவுக்குள் சென்றதாக சொல்கிறர்கள் தேரவாத புத்தமத உருவாக்கத்தின் முக்கிய பங்கு இலங்கைக்கு உண்டு

பகன் தற்பொழுது சிறிய நகரம். சில கடைகளும் சிறுதொகை மக்களும் உள்ளனர் ஆனால் 3000 மேல் பகோடாக்களும் ஸ்தூபிகளும் உள்ளன. பார்த்த இடமெல்லாம சிறிதும் பெரிதுமான பகோடாக்கள் தெரிந்தன. ஒரு சில மட்டுமே வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. மற்றவை செங்கல்லாலானதும் பாதி உடைந்து கவனிப்பாரற்றும் இருந்தது. தற்பொழுது யுனஸ்கோ, மக்களால் பராமரிக்கப்படாத புராதன பகோடாக்களையும் ஸ்தூபிகளையும் பராமரிக்க முன்வந்துள்ளது.

பர்மியரின் உணவில் நம்மைப போல்அரிசி முக்கியமானது. கறி வகைகள் உண்டு ஆனால் காரம் குறைவு நாங்கள் அதிகம் போடும்படி கேட்டால் போடுவார்கள். பகானில் ஒரு ரெஸ்ரோரண்டில் இருந்தபோது ஐரோப்பிய இளம் பெண் அதிக காரத்தை தின்றதால் கண்ணீர மல்கி மூச்சுத்திணறியபடி இருந்தாள். தனது நிலையை அவளால் பர்மியருக்கு சொல்லிப் புரியவைகக முடியவில்லை. அந்த சந்தர்பத்தில் இனிப்புகளை தின்னும்படி சொல்லி நான் உதவினேன். உறைப்பை கேட்டால் எவ்வளவு போடுவது என்பது பர்மியருக்கு தெரியவில்லை அதேபோல் ஐரோப்பியர் பலர் உறைப்பை விரும்பி உண்டு அவஸ்தைப்படுவதை பார்த்திருக்கிறேன்.

குடிபானங்கள் அதிகமில்லாத நாடு தற்பொழுது இளைஞர்களிடையே பியர் பிரபலமாகி பியர் கடைகள் பல உள்ளன. பியர்கள் பல உள்ளுரில் வடிக்கப்பட்டாலும் மியான்மார் பியரே எனக்கு பிடித்தது

1975 ம்ஆண்டில் நடந்த நில நடுக்கத்தின் முன்பு பத்தாயிரம் பபோடாக்கள் கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் பிரதேசத்தில் அமைந்திருந்தன என வழிகாட்டி சொன்னார். பர்மாவின் வடபிரதேசம் இமாலயத்தைப்போல் நிலநடுக்கத்திற்கு பல முறை உள்பட்டது. ஜோர்ச் ஓவல் பார்மிய நாட்கள் நாவலில் கதாநாயகன் தனது காதலை காதலிக்கு தெரிவிக்க முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டு இருவரையும் பிரிக்கிறது.அந்தப் பிரிவால் முழுக்கதையும் திசை மாறுகிறது.

தங்கமுலாமிட்ட பகோடா Shwezigon Pagoda)ஆரம்ப அரசனால் (king Anawrahata) தொடக்கப்பட்டு மகனால் முடிக்கப்பட்டது. இதை சுற்றி பல பகோடாக்கள் கட்டப்பட்டது. இந்தப் பகோடாவைக கட்டுவதற்காக புத்தரின் தலையின் முன் பகுதி எலும்பு வைக்கப்பட்ட வெள்ளையானை பல பிரதேசங்களில் அலைந்து கடைசியில் யானை நின்ற இடத்தில் இந்தப் பகோடாவைக் கட்டினார்களாம். பிற்காலத்தில் புத்தரின் தந்தமும் இங்குள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள மகாபோதியின் வடிவமாக இது கட்டப்பட்டது. இந்த பகோடாவின் அமைப்பு பிற்காலத்துப் பகோடக்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்தப் பகோடாவை சுற்றி காவல் தெய்வங்கள் உள்ன. அவைகள் எல்லாம் இந்து தெய்வங்கள் ஆனால் அவை பர்மாவில் நட் (NUT)) என பெயரிடப்பட்டுளளது எல்லா காவல் தெய்வங்களுக்கும் தலைமையாக சக்கர ஆயுதத்தைக் கொண்ட இந்திரன் சிலை இங்குள்ளது. பர்மாவில் இந்துமதம், பர்மிய சோசலிசம்போல் மாற்றப்பட்டுள்ளது. 1975 இந்தப் பகோடா புவி நடுக்கத்தால் சேதமக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுளளது.

பகனில் எனக்குப் பிடித்தது ஆனந்தாவிகாரை (Ananda Temple) 1090 ல் அமைக்கப்படடது கவுதம புத்தரின் பிரதம சீடன் ஆனந்தவின் பெயரில் கட்டப்பட்டது இதனது கட்டுமானமத்தைப் பார்த்தால் அக்காலத்து இந்திய கோயில்களை நினைவுக்கு கொண்டுவரும். இதை ஆராய்ச்சியாளர் இந்தியாவில் உள்ளவற்றிற்கு ஒப்பிடுவதுடன் பர்மாவில் கட்டப்பட்ட இந்தியவிகாரை என்கிறார்கள். இந்த விகாரையை கட்டிய கட்டடிடக் கலைஞர்கள் நிட்சயமாக இந்திய கலைஞர்களாக இருக்கவேண்டும்
வேறு எங்கும் இதேபோல் ஒன்றைக் கட்டாமலிருக்க இந்தக்கலைஞரகள் பர்மிய அரசனால் கொலை செய்யப்பட்டதாக கதை உள்ளது விகாரையின் உள்ள நான்கு புத்தர்களின் சிலைகள் வெவ்வேறு முத்திரைகளுடன் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் அழகான கட்டிடம்

சுவசன்டோ பகோடா (The Shwesandaw Pagoda) ஐந்துதட்டுகள் கொண்டது இந்த விகாரை புத்தரின் புனித தலைமயிரை வைத்து கட்டப்பட்டது. இதை கணேச பகோடா என கூறுவார்கள் ஆரம்பத்தில் பிள்ளையாரின் சிலை வடிவம் நாலு மூலையிலும் இருந்ததாம். நான்கு பக்கமும் ஏறி பார்பதற்கு படிகள் உள்ளது அத்துடன் மேலே நின்று பார்கும் காட்சி பகானிலும் விகாரைகள் எழுந்து நிற்பதைப் பார்பது மிகவும் இரசிக்கக்கூடிய காடசி. இப்படியான விகாரைகளின் தோற்றத்தைத்தான் ஜோர்ச் ஓர்வெல் இரட்சசிகளின் முலைகள் என தனது பர்மியநாட்கள் நாவலில் வர்ணித்திருக்கிறார். பல இடங்களில் பரமீய பெண்களில் முலையில்லை என சொன்னதால்த்தான் இந்த இராச்சகியின் உருவகம் அவருக்கு தேவையாக இருந்திருக்கிறதோ?

புத்த விகாரையின் நூனிகளில் சில வெங்காயம்போல் ஊதியும் சில இடங்களில்மெலிந்தும் மற்றும் வளையங்கள் என்பனவற்றை வைத்து காலங்களையும் கணிப்பார்கள். பகான் பிரதேசம் வாழ்நாள் முழுக்க தங்கி வரலாறைப புரிந்துகொள்ள வேண்டிய இடம். என்னோடு வந்தவர்கள் இதுவரை பார்த்த பகோடாக்கள் போதும் என்றார்கள் எனது மனைவிக்கும நண்பர் இரவிக்கும் மனைவி நிருஜாவுக்கும் புத்த விகாரைகளைப் பார்த்து அலுத்துவிட்டது மேலும் அவர்கள் இந்து கோவில் இல்லையா என்று வழிகாட்டியைக் கேட்டபோது ஒரு இந்துக் கோயிலுக்கு எம்மை கூட்டிசென்றனர்

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் சதுரவடிவமாக அமைந்துளது தற்போதய பகுதி பிரதான பகுதியான உட்பிரகாரம் மட்டும் தற்போது உள்ளதாக கருதப்படுகிறது . மற்ற கோயில் வெளிப்பிகாரம் சுற்றுமதில் என்பன காலத்தின் தாக்கம் மற்றும் புவிநடுக்கம் என்பவற்றால அழிந்துவிட்டது. அக்காலத்தில் பகானில் வசித்த இந்தியர்களுக்காக கட்டப்படடதாக தற்போது கருதப்படுகிறது.

இந்தக் கோவிலுக்கு நாம் சென்றபோது கோவில் சில பூசைசாமன்கள் மற்றும் ஊதுபத்தி எரிந்தது. அப்பொழுது நான் கேட்டேன் இங்கு யார் கும்பிடுவது இங்கு சுவனியர் விற்பவர்கள் அதை செய்கிறார்கள் . பல உல்லாசப் பிரயாணிகள் வந்து கொண்டிருந்தார்கள் நல்ல வியாபார தந்திரம் . ஆனாலும் இந்துக்கோயிலைப் பார்த்த பொச்சம் என்னோடு வந்தவர்களுக்கு தீர்ந்தது நல்லதே.

புகானில் ஒருகிரமத்திற்கு அழைத்து சென்றபோது அங்கு கண்ட காட்சிகள் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் நான் கண்ட காட்சிகளை காட்டியது. கொல்லன் துருத்தி நான் சிறுவயதில் ஐம்பது வருடங்கள் முன்பாக எழுவைதீவில்.கண்டது. ஓர் இரு வருடத்தில் யாழ்பாணத்திற்கு வந்தபோது இருப்புபை காஸ் கொண்டு உருக்கப்படும் தொழில்நுட்பம் வந்து விட்டடது. இங்கு தோட்ட செய்கைக்கான ஏர் போன்றவற்றையும் வண்டிசக்கரத்தின் வளையங்களையும் தயாரிப்பதில் ஆணும் பெண்ணுமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதேபோல் வெள்ளி தங்கம் மிகவும் அதிகமாக கிடைப்பதால் இந்த தொழிலாளர்கள் இன்னமும் கைளால் செய்கிறார்கள். இந்த கிராமமும் உல்லாசப் பிரயாணிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் பலநாடுகளில் மறைந்துவிட்ட விடயங்கள் இங்கே பார்க்க முடிந்தது.

பர்மாவில் அதிசயிக்க வைத்தவிடயம் மிகவும் அமைதியாகவும் வரவேற்கும் தன்மையும் காணமுடிந்தது. பர்மியர்கள் பேசும்போது உரத்துப்பேசுவதில்லை. ஆடை விடயத்தில் லுங்கி அணிந்திருப்தால் ஒருவித யூனிபோமானதன்மை தெரிந்தது. தென்கிழக்காசியாவில் இவர்கள் வித்தியாசமாக தெரிந்தார்கள்.

பர்மாவில் இருந்த அரசர்கள் சகல அதிகாரமும் படைத்தவர்கள். அவர்களுக்கு கீழே இருந்து கிராமஅதிகாரிவரையும் தலைமுறையாக வருபவர்கள். இந்த வழக்கம் பிரித்தானியர்களின் காலத்தில் முற்றாக ஒழிக்கப்பட்டு நமது நாடுபோல் சிவில்சேவை கொண்டுவந்தார்கள். சுதந்திரத்திற்குப் பின்பாக வந்த இராணுவ ஆட்சி தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்தது. கடந்த 2010 இருந்து கிராம மட்டத்தில் தேர்தல் நடந்து கிராம அதிகாரிகள் நியமிக்கப்படுவது மக்கள் மத்தியில் சந்தோசத்தை கொடுப்பதாக எமது வழிகாட்டி சொன்னார்.

பர்மாவில் மொழி சிக்கலால் சாதாரண மக்களுடன் உரையாடுவது முடியாது போயிருந்தது என்பது மனவருத்தத்தைக் கொடுத்தது.

••••••

பனையூர் என்றொரு பல்கலைக்கழகம் . / பொ.கருணாகரமூர்த்தி. ( பெர்லின்.

download

சிலகதைகள் அதன் முதல் வாசிப்பிலேயே மனதில் ஒட்டிக்கொண்டுவிடும். இக்கதையை எழுதியவர் வர்த்தக எழுத்தாளர் என்று விமர்சிக்கப்பட்ட மணியன்தான். நான் ஒன்பதோ பத்தோ வாசித்துக்கொண்டிருந்த நேரம் அது, 1968 ஆம் ஆண்டாக இருக்கலாம். ‘இதயம் பேசுகிறது’ மணியன் அப்போது ‘இதயம் பேசுகிறது’ இதழை ஆரம்பித்திருக்கவில்லை. ஆனந்தவிகடனின் இணையாசிரியராகக் கோலோச்சிக்கொண்டிருந்து அவ்வாண்டின் தீபாவளி மலரில்த்தான் அக்கதையை எழுதினார். ஒவ்வொரு பக்கத்திலும் மருக்கொழுந்து மணக்கும் அந்த இதழை எங்கள் வீட்டிலும் வெகுபக்குவமாகத்தான் வைத்திருப்பார்கள். அதில் நான் படித்துச்சுவைத்த அக்கதை மனதில் ஈர அடுக்குகளில் அன்றே பதிந்துபோய்விட்டது. இதைப்போல் அதேமனதில் மின் இரசாயன/ ஆவர்த்தன அட்டவணைகளும், தாவரவியலின் பூச்சூத்திரங்களும் பதிந்திருந்தால் இக்குறிப்பை உங்களுக்கு நான் எழுதும் வாய்ப்பமைந்திருக்காது. அக்கதையில் மணியன் எவளது இடுப்பையோ தாவணியையையோ வர்ணித்திருக்கவில்லை. இனி அக்கதையின் பிழிவுக்கு வருவோம்.

ரமணன் அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்புப்பெற்ற ஒரு நடுத்தரக்குடும்பத்து இளைஞன். அமெரிக்காவுக்குச் சென்று படித்துக்கொண்டிருக்கையில் அங்கே தவிர்க்க முடியாதவாறு சகமாணவியான அமெரிக்கப் பெண்ணொருத்தியுடன் நெருக்கமேற்பட அதுவே காதலாகிக் கல்யாணமும் பண்ணிக்கொண்டுவிடுகிறான். கல்யாணத்தை வீட்டாருக்குத்தெரிவிக்க நெஞ்சில் துணிவில்லை, பயந்துகொண்டிருந்தான், இருக்குந்தானே.

படிப்பு முடிந்து அவளையும் அழைத்துக்கொண்டு நாடு திரும்புகையில் ரமணனுக்கு நேரடியாகத் தன்வீட்டில்போய் இறங்கிவிடும் திராணியில்லை. சென்னையில் ஹொட்டலில் சிலநாட்களையும் உறவினர் வீட்டில் சில நாட்களையும் கழித்துக்கொண்டிருக்கின்றான். ரமணன் வெள்ளைக்காரியைத் திருமணம் செய்து இட்டுக்கொண்டுவந்திருக்கும் சேதி நண்பர்கள் வட்டத்தில் வைரஸாகப்பரவிவிடுகிறது. காண நேர்பவர்கள் எல்லோரும் அவனைக் கேலியும் இளக்காரமும் பண்ணுகிறார்கள். “ என்ன மச்சான் படிக்கப்போன இடத்திலயிருந்து ஒண்ணைத்தள்ளிக்கொண்டு வந்திட்டியாமே” என்பவர்களும் “அப்படி என்னடா வெள்ளைக்கும் தமிழ்ப்பெண்ணுக்கும் வித்தியாசம்” என்றெல்லாம் நுணுக்கம் விசாரிப்பவர்களுக்கும், தொளைப்பவர்களுக்கும் அவள் எந்தவூர்க்காரியாக இருந்தாலும் அது அவன் மனைவி, அவளும் ஒரு மனுஷிதானே என்றெல்லாம் மரியாதையாக எண்ணத்தோன்றுவதில்லை. இனி வீட்டுக்கு அழைத்துச்சென்றால் எப்படியான மரியாதை கிடைக்குமோவென அஞ்சுகிறான்.

அவனுக்கு பனையூர்க்கிராமத்தில் இருக்கும், தான் அமெரிக்காவுக்குச் சென்றதுக்குத் காணாமலிருக்கும் பாட்டியின் நினைவும் அடிக்கடி வருகிறது. எப்படிச்சுகமாக இருக்கிறாரோ என்னவோ அவரைப்பார்த்துவரலாமென்று ஒருநாள் மனைவியைச் சென்னையில் விட்டுவிட்டுத் தனியாக அங்கே தொடருந்தேறிச் செல்கிறான்.

எதிர்பாராமல் பெயரனைக் கண்டுவிட்ட பனையூர்ப்பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி. ஓடிவந்து கட்டிக்கொள்கிறார். அங்கே அவனுக்குத்தடல்புடலான வரவேற்புக்கிடைக்கிறது. அவனை வீட்டின் உள்ளே அழைத்துச்செல்லும் பாட்டி இவன் எடுத்துச்சென்ற பரிசுப்பொருட்களை எல்லாம் ஆசையோடு வாங்கி வைத்துக்கொள்கிறார். கிராமத்தின் அயலவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்க்கக்கூடிவிடுகிறார்கள். அவனுக்காகப் பிரமாதமாகச் சமைத்து உபசரித்து அமர்க்களபடுத்தும் பாட்டியிடம் எப்படித் தன் திருமணவிஷயத்தை பிரச்சனையை அவிழ்ப்பது என்று உள்ளூரக் கலவரப்பட்டுக் கொண்டிருக்கிறான் ரமணன். அவன் பாட்டி கைப்பக்குவத்தில் மதியச்சாப்பாட்டை ரசித்துச்சாப்பிட்டு முடித்தானதும் கும்பகோணம் வெற்றிலைகள் அடுக்கப்பட்ட வெற்றிலைத்தட்டத்தோடு அவனருகில் வந்து அமரும் பாட்டி அதை அவன் முன்னே மெதுவாகத் தள்ளிவைக்கிறார். இவனுக்கோ ஆச்சரியம்.

கிராமத்தில் ‘பிரமச்சாரிகள் தாம்பூலம் தரிப்பதில்லை’ என்பது இன்னும் தொடரும் அக்காலத்தைய பண்பாடு.

அங்கே அவனுக்கு வைக்கப்பட்ட வெற்றிலைத்தட்டம் ரமணன் இப்போது பிரமச்சாரியில்லை என்பதைப் பாட்டி தெரிந்துகொண்டுவிட்டார் என்பதன் மிருதுவான குறியீடு. ரமணன் வாய்திறந்து எதுவும் சொல்லவேண்டிய தேவையைப் பாட்டி அவனுக்கு வைக்கவில்லை. ரமணனின் திருமணம், மனைவியைப்பற்றி எதை அவள் பேசினாலும் அது அவனை நோகச்செய்யலாம். மௌனசங்கேதத்தால் தன் புரிதலையும் அழகாகத் தெரியப்படுத்திக்கொண்டு விடுகிறார் அந்த அற்புதப்பாட்டி.

மாலையில் தொடருந்துநிலைய மேடைக்கு வழியனுப்ப வந்த பாட்டியை தொடருந்து நகர்ந்து அவர் ஒரு கடுகு அளவுக்குப் புள்ளியாகும் வரையில் ஜன்னலால் எட்டிப்பார்த்தபடி இருக்கிறான் ரமணன் என்று முடித்திருப்பார் மணியன். தொடருந்து விரைகிறது.

விற்பனைக்கு வந்திருக்கிறோம் / கவிதைகள் / ( அறிமுகப் படைப்பாளி )சதீஷ் குமரன்

download (3)

விற்பனைக்கு வந்திருக்கிறோம்

என்பதையறியாமல்

விலைபேச வந்திருப்போரிடம்

வாலாட்டிக் குழையும்

நாய்க்குட்டிகளாய் நீயும் நானும்

சந்தையில்.

2

எங்கள் ஊரில்

“நாங்க ஆண்ட பரம்பரை” என்று

சொல்லாத ஒரே சாதி

நிலவு சாதிதான் தாண்டவக்கோனே .

3

பெரும் பதட்டத்துடனே

கடக்கிறது

தண்டவாளத்தில் நிலவு .

4

நிலவுக்குப் பிடித்த

ஒரே கவிதை

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

•••••••••

புறா / ஃபராஸ் மஹொமத் / தமிழில் / ஸ்ரீதர்ரங்கராஜ் ( மலேசியா )

download (7)

( ஃபராஸ் மஹொமத் : ஜோஹன்னஸ்பெர்க்கில் வசிக்கும் தென் ஆப்பிரிக்கர், மனநல மருத்துவர், மனித உரிமை ஆய்வாளர், சிறுகதை எழுத்தாளர். மனித உரிமை சார்பாக பல கட்டுரைகளை எழுதிவருபவர். தற்போது தன்னுடைய முதல் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். இச்சிறுகதை 2016க்கான காமன்வெல்த் சிறுகதைப்போட்டியில் சிறந்த ஆப்பிரிக்கச் சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. )

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக தினந்தோறும் காலைநேரத்தில், அருவெறுக்கும்படி உள்ள கொழுத்த புறா ஒன்றின் குரலால் எழுப்பப்படுகிறேன். என்னால் நிரூபிக்க முடியாவிட்டாலும் கூட, நிச்சயமாக அவன் ஒரே ஆள்தான். உண்மையைச் சொன்னால், அவன் ’அவன்’தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளக்கூட ஏதும் வழியில்லை. ஒருவேளை சன்னல்புறமோ அல்லது உள்ளேயோ எதையேனும் தவறவிட்டுவிட்டானோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும். எனவே, அதை எடுப்பதற்காக இங்கே இருப்பது அவனுக்கு ஏதேனும் ஒருவகையில் நிம்மதியைத் தருகிறதோ என்று நம்பினேன். பெரும்பாலான சனிக்கிழமைகளில் சன்னலைத் திறந்து வைக்கத் தொடங்கினேன். இது என்னுள் கருணையை உணரச் செய்யும், ஏனென்றால் நான் அவன் ஆத்மாவை அடுத்த நிலைக்கு அல்லது அந்தவகையிலான ஏதோ ஒன்றுக்கு நகர்த்துகிறேன். ஆனாலும் அவன் உள்ளே வருவதில்லை. எனவே, அவனுக்கு என்ன தேவை அல்லது உலகத்தில் அத்தனை இடங்கள் இருக்க இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தான் என்றெல்லாம் மௌனமாக நாங்கள் உரையாடிக் கொள்வதுண்டு,

நான் அவனுக்குப் பெயர் வைக்கவில்லை, ஏனென்றால் அவனோடு உணர்வுபூர்வமான ஓர் உறவினை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவன் இங்கிருந்து போய்விடுவான் ஆனால் நான் எனக்குள்ளே மட்டுமான ஓர் உறவை வளர்த்துக்கொண்டு இருப்பேன். பதிலாக அவனுக்குப் புறா என்று பெயர்வைக்கலாம், அல்லது எப்போதெல்லாம் அவனைப்பற்றிப் பேச்சு வருகிறதோ – அது அடிக்கடி வருகிறதுதான் – அப்போது அவனைப் புறா என்றே சொல்லலாம். அவனுக்குக் கொடூரமான முகம் இருந்தாலும் அவன் குனுகும் ஒலி உண்மையில் அவ்வளவு மென்மையாக இருக்கும். ஒருவேளை சிறகுகளில் பாதிப்பு ஏற்பட்டு பறந்துசெல்ல இயலாமல் இருக்கிறானா என்று பார்க்கச்சொல்லி SPCA வுக்கு தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன். அடுத்த முனையில் இருந்த பெண், நிச்சயமாக வயதான பெண், அவர்கள் புறாக்களைக் காப்பாற்றும் வழக்கமில்லையென்று சொன்னதால் நான் அவனை உள்ளே வரவைக்க வேண்டியதாயிற்று. ஒரு சனிக்கிழமையன்று, வாளி மற்றும் காய்கறி வேகவைக்கும் பாத்திரம் – எவர்சில்வரில் வடிகட்டும் துளைகளோடு இருக்குமே, அதையும் எடுத்துக்கொண்டு தீவிபத்துகளின்போது பயன்படுத்தும் அவசரகாலவழியில் இறங்கினேன். ஆறு அல்லது ஏழு நிமிடங்கள் அவனை நன்றாகத் தேடினேன், பகலின் வெம்மை என் கண்களுக்குள்ளும் மூக்கினுள்ளும் ஏறியது. கடைசியில் அந்தப்புறாதான், தான் எங்கே இருக்கிறேன் என்று எனக்குக் காட்டியது. காலையில் எழுந்து சிறுநீர் கழிக்க மெதுவாகத் தள்ளாடியபடி கழிப்பறை நோக்கிச் செல்லும் வயதான ஒருவர் போல மெதுவாக, நான் நன்றாக அறிந்த அவனது குனுகும் ஓசை என் தலைக்குமேல் எங்கோ கேட்டது. மெதுவாக அவனை நெருங்கினேன். அநேகமாக இந்நேரம், அவனைக் காயப்படுத்துவது என் நோக்கமல்ல என்று அவன் புரிந்து கொண்டிருக்கவேண்டும். நான் நெருங்குவதை அவன் கண்டுகொள்ளவில்லை, ஆனால் என் தற்காலிக பறவைக் கூண்டை உபயோகிக்க நான் முயற்சித்ததும் பறந்து சென்றுவிட்டான். பறக்கையில் சிரமமோ அல்லது அதிக முயற்சியோ இருக்கிறதா, அல்லது ஒருபக்கமாகச் சாய்ந்து பறக்கிறானா என்று உன்னிப்பாகப் பார்த்தேன். ஆனால் அப்படியேதும் இல்லை, திறமையாகக் காற்றைக் கிழித்தபடி, தன்னுடைய குறிப்பிடத்தகுந்த எடையை எந்தக் கவலையுமின்றி சுமந்து பறந்தான்.

அந்தப் புறாவுக்கும் எனக்குமான உறவு விரும்பத்தகுந்த, வசதியான ஓர் உறவு. ஒரு நெருக்கத்தை உணரமுடிகிறது, ஆனால், அவன் என்னிடம் அறிமுகம் செய்துகொள்ளத்தான் சமயம் வாய்க்கவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன். உண்மையில், என்னைப்பற்றி என்னவெல்லாம் தெரியவேண்டுமோ அதெல்லாம் அவனுக்குத் தெரியும், ஆனால், எனக்கு அவனைப் பற்றி வெகு சொற்பமாகத்தான் தெரியும். அவனது நீள்வட்ட விழிகள் தெளிவற்றவையே, சிலசமயத்தில், அவன் தனது பின்னந்தலையில் இருக்கும் கீறலுடன்தான் பிறந்தானா அல்லது அது ஏதேனும் தவறிய சாகசத்தின் விளைவா என்று கேட்க விரும்புகிறேன். குறிப்பிடும்படியான ஒரு பொறுப்பற்ற நாளில், ஜாஸ்மினுடனான மிகமோசமான வாக்குவாதத்திற்குப் பின் நான் எனது ரம்மை சற்று அவனுடன் பகிர்ந்து கொண்டேன். அது அப்போது வேடிக்கையாகத் தோன்றினாலும் இப்போது அதைக் குரூரமானதென்று உணர்கிறேன். அவசரகால வழியில் யாரோ விட்டுச்சென்ற உணவுப்பாத்திரத்தின் அடிப்பகுதியை நோக்கி மெதுவாகத் தலையைக் குனிந்தான். திரவத்தைக் கொத்தி எடுக்க முயற்சித்தபோது அது அலகிலிருந்து துளிகளாகச் சிதறியது. அதை முகர்கிறான் என்று எனக்குத் தோன்றினாலும் புறாக்களுக்கு எந்த அளவு முகரும் திறன் உண்டென எனக்குத் தெரியாது. இருப்பினும், அன்று என்னோடு மது அருந்துவதில்லை என்று அவன் முடிவெடுத்துவிட்டான், இதில் சற்று ஒதுக்கப்பட்டுவிட்டதாக நான் உணர்ந்தேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவன் உடனே மகிழ்வோடு அங்கிருந்து உந்திப் பறந்து சென்றுவிட்டான், நான் முற்றிலுமாகத் தனிமையில் விடப்பட்டேன்.
download
அந்தநாளில், ரம் எனது தொண்டையில் கொடுத்த எரிச்சல் எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது, அழுத்தமாகச் சீண்டியபடி என் உணவுக்குழாய் வழியாக இறங்கி, பாதைகளில் எரிச்சலூட்டியபடி வயிற்றில் சேர்ந்தது. நிதானமாக, உள்ளிருந்து மங்கிப் புரையோடிய புண்களாக மாறி, நான் வெளியே எவ்வளவு காயப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தின. உடலின் எல்லா இடங்களிலும் இல்லையென்றாலும், முக்கியமான இடங்களில் மட்டும். ஜாஸ்மினும் நானும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள கருணையற்ற சொற்களைத் தேர்ந்து கொண்டிருந்தோம். சண்டைக்கு முன்பான நாட்களில், அவை ஜாஸ்மினின் இளஞ்சிவப்புநிற உதடுகளில் சண்டையின்போது வெடித்துக் கிளம்பத் தயாராகக் காத்திருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஆபத்தில்லாத மெல்லிய முரணாக ஆரம்பித்து மெதுமெதுவாகச் சண்டையை நெருங்கியது, நீங்கள் அது சண்டையாகிவிடாமல் இருக்க தற்காப்பு ஏற்பாடுகள் செய்தும் அது நடப்பதைக் காணமுடியுமே அது மாதிரியான சண்டை. மெதுவாகத்தான் ஆரம்பிக்கும் ஆனால் பாதுகாப்புகளை வெகுநேரம் முன்னே வைத்திருப்பது சிரமம். சிறிது சிறிதாக உங்கள் பாதுகாப்பின் முனை வற்றி உடைந்தழிவதைக் காண்பீர்கள்.

எல்லாவற்றையும்விட, எங்கள் உறவிலுள்ள புதுமை மற்றும் வியப்பார்வமிக்க கள்ளத்தனம் மெதுவாக மறைவதை நான் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொண்டதாகத் தோன்றும்படி உணர ஆரம்பித்திருந்தோம், அதை நிச்சயமாக நான் விரும்பவில்லை. அவளது தெளிவற்ற மற்றும் பெயரற்ற பாதுகாப்பின்மைகள் அப்படியே இருக்கவேண்டுமென்றுதான் விரும்பினேன். ஏதுவான அல்லது புணர்ச்சியின் தருணங்களில் மெதுவாக அவை தம்மை வெளிக்காட்டின. நான் அவற்றிற்கு கோழைத்தனம், மரத்துப்போனவை என்று பெயர்சூட்ட ஆரம்பித்தேன். அவள் உடலின் வனப்புகூட இவ்வுலக வாழ்க்கை சார்ந்த மாயையாகத் தோன்ற ஆரம்பித்தது. அவளுடைய சாம்பல்நிற விழிகளில் உள்ள கரும் இழைகள், உச்சத்தில் அவள் விழிகள் விரிவடைந்தபோது எவ்வாறு இருந்தன என்பதைக்கூடத் துல்லியமாக உங்களுக்குச் சொல்ல என்னால் முடியும் என்பதை நேற்று உணர்ந்தேன்.

* * *

அது எப்படி நடந்ததென்று எனக்குத் தெரியாது, ஏனென்றால் ஒருவரையொருவர் நெருங்குவது என்ற விஷயத்தில் இருவருமே மிகக்கவனமாக இருந்தோம். இருவருமே அந்த இடர்பாட்டைச் சந்திக்க விரும்பவில்லை, அதுவும் குறிப்பாக இப்போது அவள் வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில். இதில் மோசமான ஒன்று என நான் நினைப்பது அந்த உறவில் அவள் மனப்பூர்வமாக இருந்தாள். அவள் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள், நான், அவள் தனக்கென என்ன விரும்பினாளோ அதை அவள் அடையவேண்டுமென விரும்பினேன். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள், அவளின் நீண்டு சரிந்த கூந்தல் அவனது எடுப்பான கன்ன எலும்புகளுக்குப் பொருத்தமானது. ஆனால் என்னை அலைக்கழித்ததும் அதுதான் என்பதற்கு இப்புறா சாட்சியமளிக்கும். நான் குற்றவுணர்வில் வேதனைப்படுவதையும் நேதனுக்கு நான் தரவிருக்கும் வேதனைக்காக ஆத்மார்த்தமாக நான் வருந்துவதையும் இவன் பார்த்திருக்கிறான். என் பால்யத்தின் மிச்சமென இருப்பதும் நான் பாதுகாக்க நினைப்பதும் நேதனின் நட்பு ஒன்றுதான். இவன், இந்தப்புறா, ஜாஸ்மினுடனான உறவில் நுழைவதற்கும் வெளிவருவதற்குமான வழிகளை நான் ஆராய்வதை, தன் கூரிய கண்களால் கவனித்துக் கொண்டிருந்தவன். உறுதியாகத் தெரிந்துகொள்ள வழியேதும் இல்லாவிட்டாலும் அவன் என்னைப் புரிந்து வைத்திருக்கிறான் என்றே தோன்றுகிறது.

அதைப்பற்றி யோசிக்கையில், நேதனுக்கு அந்த விபத்து நடந்து ஏழு அல்லது எட்டு நாட்களுக்குப் பிறகுதான் எங்களின் உறவு ஆரம்பித்தது, ஏதோ என் சுய-அனுபவங்களுக்குச் சாட்சியாக இருக்க அவன் தேவை என்று அவனுக்குத் தோன்றியது போலவோ அல்லது வெறுமனே எனக்கு ஒரு நட்பு தேவை என்பதற்காகவோ இந்தப்புறா வந்தது, இரண்டும் ஒரே சமயத்தில் நடந்தது. ஆரம்ப நாட்கள் உண்மையில் சித்திரவதையாக இருந்தன. எப்போது மருத்துவமனையிலிருந்து ஜாஸ்மினை எனது இடத்துக்குக் கூட்டி வந்தேனோ, ரத்தக்கறை படிந்த அவளது ஆடைகளை உரித்தெடுத்து, குளியலறைக்கு அவளைத் தூக்கிச்சென்று நிர்வாணமாக உட்காரவைத்து, அவளின் ரத்தமும் நேதனின் ரத்தமும் வெதுவெதுப்பான நீரில் கரைந்து குழாய்க்குள் ஓடி மறைந்ததோ அப்போதிருந்து நானும் அவளும் எங்களுக்கான தேறுதல் மிகவும் தேவை என்ற உண்மையோடு போராடிக்கொண்டிருந்தோம். இருவரும் மற்றவரைக் கறைப்படுத்த விரும்பாமல் இருந்தபோதும், அது நடப்பதைத் தடுக்க முடியவில்லை.

அவர்கள் ஒரு நீண்ட சுற்றுலாவுக்காகச் சென்றிருந்தனர். இரவில் அவனது இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது, இருவருமே சாலையில் இருந்த முகட்டைக் கவனிக்கவில்லை. அச்சம்பவத்தை நினைவுகூரும்போது ஜாஸ்மின் எனக்குச் சொன்னது இது, ஆனால் இது இன்னும் மோசமானது. ஏனென்றால் அதன் முடிவு உண்மையில் ஒரு ஆரம்பம்தான். நடுங்கிக்கொண்டு தனக்குத் தானே முணுமுணுத்தபடி இருந்தவளை நான் பார்த்தபோது, ஒரு மதிப்பான இடத்தில் அவளை வைத்து யோசிப்பதே சற்று சிரமமாக இருந்தது. ரத்தத்திலும் சிறுநீரிலும் நனைந்திருந்த ஆடையில் அவளொரு மருட்சி கொண்ட சிறுமியாகவே எனக்குத் தோன்றினாள். அநேகமாக ஒருமணிநேரம் இருக்கலாம், அவளது உடலில் அவர்கள் தையலிட்டு முடிக்கும்வரை நான் உடனிருந்தேன். நேதன் கோமாவில் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களுக்கு அவனை மருத்துவமனையில் வைத்திருக்கப் போவதாகவும் அடர்நீல ஆடை அணிந்த ஒருவர் சொன்னதும் நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

நடக்கவியலாத சாத்தியக்கூறு போலத்தான் இருந்தது. இப்போதும் கூட, அன்று மாலையில் நடந்த அப்பெருங்குழப்பம் இன்னொரு பரிமாணத்திலுள்ள உண்மை போலவே எனக்குத் தோன்றுகிறது, ஜாஸ்மின் நீளிருக்கையில் படுத்தபடி புலம்பிக்கொண்டிருக்க நான் அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் சொல்வது மட்டுமே எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது, மற்றவை அனைத்தும் உறைந்தும் அதைரியப்படுத்தும் வெறுமையிலும் இருந்தன. ஆறு மாடிகள் கொண்ட கட்டிடமொன்றின் ஐந்தாம் தளத்தில் இருந்தோம், மேலேயும் கீழேயும் யாருமில்லை என்றே நினைக்கிறேன். நாங்களும் அனைத்து பாரங்களையும் உள்ளே தக்கவைத்துக்கொள்ளும் கலவையாலான சுவர்களும் மட்டுமே தனித்திருந்தோம். இருவருக்குமே அணைத்துக்கொள்வதும் உறவு கொள்வதும் தேவையாக இருந்தது. அது ஒரு படபடப்பான, சங்கடமான, தடுமாற்றமும் தயக்கமும் பொதிந்த ஒரு கலவி. நான் என் சகோதரியோடு ஒருபோதும் உறவு கொண்டதில்லை, ஆனால் அப்படி நடந்தால் வரும் நடுக்கம் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. குரல்கள் மூச்சுக்காற்றில் கலக்க, உடல்கள் கவனமாக ஒன்றோடொன்று வலிமையால் விலக்க முடியாதவரை பின்னிக்கொண்டன. கூசுவதும், நடுங்குவதும் முறுக்கிக் கொள்வதும் நினைவில் இருக்கிறது, அது நடந்து முடிந்த உடனேயே இனி அது தொடரப்போகிறதென எங்களுக்குத் தெரிந்து விட்டது.

சிலநாட்களுக்கு மருத்துவமனைக்குள், ஒருவரையொருவர் வட்டமிட்டுக் கொண்டிருந்தோம், பேசுவதற்கென ஏதும் சொற்களற்ற மௌனத்தின்போது அல்லது சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்ள ஏதுமில்லாதபோது, நேதனின் மாறாத இதயத்துடிப்பின் ஒலியையும் சுத்திகரிப்பானின் வாசனையையும் பகிர்ந்துகொண்டோம். என்னைவிட அதிகமாக மனப்போராட்டத்தில் இருந்தாள். ஏனெனில் அந்த வாரயிறுதியில்தான் அவனுக்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்திருந்தாள். தன்னுடைய செயல்களில் எது பிழையானது அல்லது தவறான கணிப்பு என்று அவளுக்குத் தெரியவில்லை என இப்போது உணர்கிறேன். அவள் எல்லாவற்றுக்காகவும் மனவுளைச்சல் கொள்கிறவளாக இருந்தாள் – இருக்கிறாள்.

விபத்து நடந்து தோராயமாக ஒரு வாரத்திற்குப் பின், ஜாஸ்மினின் கால்கள் மற்றும் கைகளிலிருந்த மஞ்சளும் நீலமும் கலந்த சிராய்ப்புகள் மங்கத் தொடங்கின. அவை மறைய மறைய, அவளுக்கு தன்செயலுக்காக மனம் உளைதலும் அதிகரித்துக்கொண்டே போனது. அவனின்றி வாழ்கிறாள், சுவாசிக்கிறாள், குணமடைகிறாள். அவளது வீக்கமுற்ற வலதுகண் முன்போல வலிதருமளவு குடைவதில்லை. அவளது சிறிய கைகள் இப்போதெல்லாம் அந்தளவுக்கு நடுங்குவதில்லை. அந்த இரவின் புதுமையை தக்கவைத்துக் கொள்ளும் முகமாக இரண்டு அல்லது மூன்று விரல்நகங்களை அழுக்காக வைத்திருந்தாள். ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், முன்னைவிட அதிகமாக, ‘அவளாக’ தோற்றமளிக்க ஆரம்பித்தாள். நன்றாகச் சீவிய தலைமுடி. நான் அவளை முதன்முறை பார்த்தபோது அணிந்திருந்த இதயவடிவ தங்கப் பதக்கம் அவள் கழுத்தை அலங்கரித்தது.

* * *
download (1) (1)

அந்த இரவில் நடந்தது மீண்டும் நிகழப்போவதை நெருங்கிக் கொண்டிருந்தோம், இதில் எங்கோ ஓரிடத்தில் நாங்கள் அதை எதிர்ப்பது நின்றுவிட்டது. அது ஒரு சனிக்கிழமை மாலை, காற்று வீசியது, ஆனால் குளிரில்லை. சென்றமுறை ஒருவரில் மற்றவரை இழந்தது குறித்துப் பேசுவதான மெல்லிய போலிப்பாவனையில், தேநீர் நேரத்தில் சந்திப்பதென முடிவு செய்தோம். ஜாஸ்மினுக்கு அவளது தேநீர் வெள்ளையாக இருப்பதுதான் பிடிக்கும், அதை யோசித்தபடியும் கவனமாகவும் பருகுவாள். நான் திடத்தையும் கசப்பையும் விரும்பும் வகை, அதன் பொருள் நான் அங்காடிக்குச் சென்று பால் வாங்கிவரவேண்டும். அவளுக்கு இரண்டு சதவீதப் பால்தான் பிடிக்கும். நேதனின் சகோதரன் ஐசக் – இவனொரு சுயவிரும்பி மற்றும் வெல்ல முடியாத பத்தொன்பது-வயதுப்பையன் – இங்கு வந்திருந்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையினால் இது எனக்குத் தெரியவந்தது. ஐசக், பழைய சீசாப்பால் முடியும் முன்பே புதியதைத் திறப்பான். அது மிகவும் குறைவான நடைமுறை அறிவுள்ள செயல், ஆனால் ஐசக்கிற்கு ஒரு பொருள் கெட்டுப்போவது அல்லது தன்னுடைய புதுத்தன்மையை இழப்பது குறித்துக் கவலையில்லை. அச்செயல் ஜாஸ்மினுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், நேதனுக்கு அது முக்கியமாகப் படவில்லை. இச்செயலுக்கான அவனுடைய இசைவுத்தன்மை குறித்து, இன்னமும் தெளிவான, அறிவார்ந்த, முதிர்ச்சியுள்ள காரணம் கிடைக்கும்வரை அவள் இரக்கமற்ற வகையில் அதேசமயம் நிதானமாக தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கான வாய்ப்பு, போகோ ஹராம் பற்றி ஐசக் ஒரு கருத்தை வெளியிட்டபோது கிடைத்தது, ஏதோ ஒருவகையில் அவன் அவர்களது செயல்களை நியாயப்படுத்துவது போல அவளுக்குத் தோன்றியது. இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது, எவ்வளவு வேகமாக அந்த அசிங்கம் ஆரம்பித்தது, எவ்வளவுநேரம் அது நீடித்திருந்ததாகத் தோன்றியது. இந்தக் குழப்பத்திற்கிடையில், இரண்டு சதவீதப்பால் விஷயம் எப்படியோ முக்கியமானதாகி குறிப்பிடும்படியானது. நான் அவர்களைக் கடந்து செல்லும்போது, கலங்கரை விளக்கினடியில் எல்லா கொந்தளிப்புகளும் அடங்குவதுபோல, அதன் முக்கியத்துவத்தை நினைவில் இருத்திக்கொண்டேன்.

கனமான சீசாவைக் கையில் சுமந்து செல்லும்போது, எங்களுடைய இந்தக் குற்றவுணர்வு மற்றும் நேர்மை என்ற பம்மாத்துகளெல்லாம் தேநீர் நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்று முழுமையாக உணர்ந்தே சென்றேன். இருந்தாலும் நாங்கள் இருவரும் எதிர்பார்த்ததைவிட அது மிக மெதுவாகவே மறைந்தது என்று நினைக்கிறேன். நான் வசிக்கும் கட்டிடத்தை நெருங்கியபோது அவள் எதிர்த் திசையிலிருந்து வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். நாங்கள் ஆர்வத்தோடும் இல்லை, அதேசமயம் இயல்பாகவும் இல்லை. நான் சீசாவை அவளிடம் காண்பித்ததுமே அது எனக்கு எப்படித் தெரியவந்தது என்பதை உடனே நினைவுகூர்ந்தாள். திராட்சைக்கொடியில் வேண்டாத ஒரு திராட்சையைக் கைவிடுவதுபோல நாங்கள் அவ்விஷயத்தை அமைதியாகத் தவிர்த்தோம்.

‘நானாகக் கற்பனை செய்து கொள்கிறேனா என்று தெரியவில்லை, ஆனால் இன்று அவன் என கையை இறுகப் பற்றிக்கொண்டதாக உணர்ந்தேன்.’

பேசுவதற்கு இது பாதுகாப்பான விஷயம் என்று தெரிந்து, அவளுடைய யூகத்தின் அபத்தத்திற்குள் நுழையாமல் தலையசைத்தேன்.

‘நன்றாகத் தூங்குகிறாயா?’

‘தொடர்ந்து தூங்கமுடியவில்லை, ஆனால் முன்னைவிடப் பரவாயில்லை. இரண்டு இரவுகளாக அதைப்பற்றிய கனவுகள் வரவில்லை.’

சிந்தனை நிறைந்த மௌனங்கள், அவளுடைய எக்ஸ்-ரே முடிவுகள், நேதனின் முதலாளியுடனான அவளது பேச்சுவார்த்தை போன்ற உடனடியாகத் தீர்ந்துபோகிற சோபையிழந்த நடைமுறை உண்மைகளால் தடங்கலுற்றன.

பேசவந்த விஷயத்தை ஜாஸ்மினே ஆரம்பித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ’சரியாகச் சொன்னால் அதுவொரு தவறு’ என்று ஆரம்பித்தாள்.

‘இவை எதுவுமே நேதன் குணமடைவதைத் தடுப்பதை நான் விரும்பவில்லை.’ உண்மையில் எங்களிருவருக்குமே அந்த விஷயத்தைச் சுலபமாக்கிக் கொண்டிருந்தாள். குணமடைதல் என்ற ஒன்று நடக்கவேண்டுமா என்ற தெளிவு இல்லாவிட்டாலும் அதைக்குறிப்பிட்டாள்.

‘எனக்குப் புரிகிறது.’

‘உண்மையில் அதன் அர்த்தம் என்ன, ஏன் அது நடந்தது என்றெல்லாம் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. . . அநேகமாக நான். . . நாமிருவரும். . .’

அவளுடைய வலிநிறைந்த நினைவுகளிலிருந்து அவளைக் காப்பாற்ற, ‘அது அதிர்ச்சி அல்லது வேதனையின் விளைவாக இருக்கும். அதுபற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை,’ என்றேன்.

‘என்னால் மறுபடி அதைச்செய்ய முடியாது,’ என்று உறுதிபடக் கூறினாள். நான், அதுவொரு முட்டாள்தனம் என்பதை அறிந்து எதுவும் பேசாமல் இருந்தேன்.

‘MSF-லிருந்து ஏதேனும் தகவல் வந்ததா?’ வேறு ஏதேனும் தேடிப்பேச அவளுக்கு இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டன.

‘அவர்கள் அனுப்பிய கடித உறை அதோ இருக்கிறது. . . ’ சிற்றுண்டி மேசையைச் சுட்டிக்காட்டியபடி கூறினேன் ‘. . . அதைத் திறப்பதற்கு நான் இன்னும் தயாராகவில்லை.’

‘அதில் என்ன தகவல் இருக்கும் என எதிர்பார்க்கிறாய்?’

அவளுக்குச் சொல்ல என்னிடம் பதிலில்லை. எனக்கு ஒரு மாறுதல் தேவையாக இருக்கிறது, இந்த வெற்றிடத்திலிருந்து ஒரு மாறுதல். என் உடல் அதற்காகக் கதறிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன், ஆனால், எந்த மாறுதலும் இல்லாததற்கும் நான் தயாராக வேண்டும், அவளை ஏமாற்றுவதுபோல, இனிமேலும் என்னை நானே ஏமாற்றிக்கொள்ள முடியாது.

முனைப்பின்றி இயல்பாக என்பார்வை அவளது திறந்த கால்முட்டிக்குத் தாவியது, நன்கு உருவுற்ற, பழுப்புநிறத்தில், மென்மையான மற்றும் அதற்கேயுரிய தன்மையில் உள்ளது, மற்றது அசிங்கமாக உருக்குலைந்து, பூமியில் ஆரோக்கியமாக நிலைபெறாத மரத்தின் கிளைபோலத் தோற்றமளித்தது. நான் பார்த்ததை அவள் பார்த்தாள், ஆனாலும் என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

‘அது நல்லசெய்தி என்று நம்புகிறேன்.’ நான் அவளைச் சங்கடப்படுத்துகிறேன் எனும் விதமாக கால்களை மாற்றிகொண்டு கூறினாள். அது என்னைப் பார்வையைத் திருப்பிக்கொண்டு எங்களுக்கிடையில் மொத்த அறையின் இடைவெளி இருக்கும்படியாக சன்னலருகில் நடந்து செல்லவைத்தது. அது பெரிய இடமல்லதான், ஆனால் கவனமான அல்லது அநேகமாக நாகரீகமற்ற எனது இச்செயலால், அப்போது நான் இருந்ததை விட இன்னும் அதிகதூரம் செல்லமுடியாது என்றாலும் கூட, எங்களைப் பிரிக்கும் இவ்விடைவெளியில் நிறைந்துள்ள மெல்லிய ஒளி மற்றும் மலர்ச்சி இழந்த காற்று அவளுக்கு ஒருவேளை பாதுகாப்புணர்வை அளிக்கலாம் என்று தோன்றியது.

‘அப்படி இல்லாவிட்டாலும் நான் அதைக் கடக்க முடியும் என்று நம்புகிறேன்.’

’அப்போது, நீ இங்கே இருப்பதில் நிறைவு கொள்ளவேண்டியதாகும், அப்படித்தானே?’

என் செயலின்மையை அவள் மிகச்சாதாரணமாக அணுகிய விதம் என்னைக் காயப்படுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. நான் இங்கிருந்து தப்புவதற்கான, புதியவற்றுக்குச் செல்வதற்கான என் தேவையை, ஜாஸ்மின் தான் அறிந்திருப்பதாக அனுமானிப்பது நுண்ணுணர்வு அற்ற தன்மையாகவே எனக்குத் தோன்றியது. இருப்பினும், இருவரும் ஒருவரையொருவர் அதீதமான சூழலில் வைத்துப் பார்த்திருக்கிறோம். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததற்கு, என் பிரச்சினையை நான் எவ்வளவு தீவிரமாக அணுகுகிறேன் என்பதை எப்படிப் புரியவைப்பது என்ற தடுமாற்றமும் காரணம். மேலும், அவள் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதில் காயப்பட்டாலும், உண்மையில் அந்தச் சமயத்தில், விபத்தைத் தாண்டி அல்லது அதன்பின் நிகழ்ந்தவற்றைத் தாண்டியும் வேறு வலிகளுக்கோ மனக் கொந்தளிப்புகளுக்கோ இடமில்லாமல்தான் இருந்தது. அப்போது சற்று குரூரமாகத்தான் உணர்ந்தேன். வெறுமனே, நான் நேதனிடம் எதுவும் சொல்லமாட்டேன், அவன் அதைக் கண்டுபிடித்துவிடுவானோ என்று அவள் கவலைகொள்ளத் தேவையில்லை, அது நமக்கிடையேயான ரகசியமாக இருக்கும் என்று சொல்லிவைத்தேன். முரணாக, அந்த உறுதி மட்டுமே மீண்டும் அதைச் செய்வதற்கு அவளுக்குத் தேவையானதாக இருந்தது.

இம்முறை வேகமோ அல்லது அசௌகரியமோ இல்லை. அவள் மெதுவாக, தனியாக இருப்பது எவ்வளவு சிரமமானது என்று சொன்னாள், நேதனோடு ஒருவருடமாக வாழ்ந்து கொண்டிருப்பதில் ஒருவருக்குச் சமைப்பதே கைவராமல் எல்லாம் மீந்துபோவதைச் சொன்னாள். அது எவ்வளவு முட்டாள்தனமான கவலை என்று தோன்றியதால் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை, அவளுக்கும் அது ஏன் என்று புரிந்தாற்போலத்தான் இருந்தது. அது அவ்விரவை ஒளிரச்செய்துவிட்டது.

‘அவன் விழிப்பான் என்று நீ நினைக்கிறாயா?’ இக்கேள்வியில் சரியான விதத்தில் அவநம்பிக்கை தொனித்தது. அந்தச்சமயம் வரை, அவன் இறந்துவிடுவான் அல்லது செயலற்றுக் கிடப்பான் என்ற சாத்தியக்கூறு பற்றிய பேச்சு எங்களுக்குள் வந்ததே இல்லை. எழுந்திருக்கும்போது எவ்வளவு மோசமான நிலையிலிருப்பான் என்பதே கேள்வியாக இருந்தது. நீக்கப்பட்ட கால் குறித்து மனமுடைவானா? நினைவிழத்தல் ஏதும் இருக்குமா அல்லது மறுவாழ்வுக்கான அறிதல் பயிற்சிகள் தேவைப்படுமா? சாத்தியக்கூறுகளின் பரந்துபட்ட வீச்சில் கூட நேதன் இறந்துபோகலாம் என்பது சேர்க்கப்படவேயில்லை.

நான் பொய்யான நம்பிக்கை எதுவும் தரவிரும்பவில்லை. பதிலாக ஒயின் தந்தேன் – விலைமலிவான, யாரும் எப்போதுமே விரும்பாத ஷார்டுனே (வெள்ளை ஒயின்), விதிவிலக்காக அந்தத் தருணத்தில் மட்டும் விரும்பப்பட்டது. அடுத்து நடந்ததெல்லாம் வேகமாகவும் பொறுப்பற்றும் நடந்தது, முட்கள் நிறைந்த காட்டுக்குள் நடந்த விரட்டல் போல, முடிவில், வெற்றிக்கான விலை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என இருவருமே தீர்மானமாக இருந்தோம். முடியும்போது மென்மையாகவும் நயத்தோடும் இருந்தது, ஏனெனில் இருவரும் மற்றவர் எவ்வாறு கலவி கொள்ள விரும்புகிறோம் என்பதைப் புரிந்துகொண்டோம். நான் அவள் பின்னால் நின்றபோது அவளுடைய மார்புகளோடு பதக்கமும் மேலும் கீழுமாக ஆடியது. ஏதோவொரு இயல்புமீறிய காரணத்தால், அப்போது நான் அப்புறாவின் கூரிய கண்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன், இதை அவள் அறிந்திருக்கவில்லை.

என்னோடு அமர்ந்து தேநீர் அருந்திவிட்டு, என்னில் எந்தவிதமான வெட்கமும் மிச்சமில்லை என்ற உண்மையைக் கண்டபின் உணர்ச்சிக் கொந்தளிப்போடு, தன்னிரக்கத்தால் கிழிபட்டு அவள் வெளியேறும்வரை அவன் காத்திருந்தான். மிச்சமிருந்த குற்றவுணர்வின் கூர்முனைகள் மழுங்கிக்கொண்டிருந்தன, அவை என் தோலைக்கூடத் துளைப்பதில்லை என்பதை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

* * *

அது முன்னெப்போதோ நடந்த ஒன்றாகத் தோன்றுகிறது. காலப்போக்கில், ஜாஸ்மினின் உடலில் உள்ள ஒவ்வொரு வளைவுகளும் எனக்கு அத்துப்படியாகின, அவளுடைய முனகல், உறுமல், பார்வை மற்றும் சிரிப்புகளுக்கு எந்த இடத்தில் என்ன முனைப்பு, என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியும். நேதன் கண்விழித்த முதல் மூன்று நாட்கள் மிகக்கடினமானவை. அவர்கள் மெதுவாக அவனுள் செருகப்பட்டிருந்த குழாய்களை எடுத்துவிட்டு அவனுடைய செயல்பாட்டைக் கவனித்தார்கள். மீண்டும் வாழவேண்டியது குறித்து அவனது கைகள் நடுங்கின, அவன் முகம் பயத்தினால் கோணியது, அவனை நெருங்கும் பகலின் ஒளி விருப்பமில்லாதவரின் வருகைபோல ஆனது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நேதனை எனக்குத் தெரியும், அவனுடைய சாமர்த்தியத்தை வியந்திருக்கிறேன், அவனது உறுதித்தன்மையைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த ஒற்றைக்கால் கொண்ட ஆதரவற்ற ஒன்று அவனுடலை ஆக்கிரமித்துக் கொள்ளப் பார்ப்பது அவனை அந்நியமாகவும் விநோதமாகவும் காட்டியது.

சிறுகுழந்தை நடக்கையில் பின்னால் சாய்ந்து விழுவது போல, நடப்பது நேதனுக்கு மிகமோசமானதொரு போராட்டமாக இருந்தது, தன் புதிய காலைவிடவும் ஊன்றுகோலைத்தான் அதிகம் நம்பினான். நானும் ஜாஸ்மினும் எங்களோடு வெளியில் நடக்கும்படி மெதுவாக அவனைச் சம்மதிக்கச் செய்தோம், அவனை எங்களுக்கிடையில் வைத்தபடி, அவனுடைய ஒருகை என் மீதும் மற்றொன்று அவள்மீதும் வைத்தபடி தடுமாறிக்கொண்டு, பயமுறுத்தும் மூன்றுதலை மிருகம்போல நடப்போம். அப்போது, குற்றவுணர்வும் வெட்கமும் அவள் முகத்தில் ஊர்வதை என்னால் பார்க்கமுடியும். ஆனால், அவன் எங்களுக்கிடையில் இல்லாதபோது அது காணாமல் போனது. எங்கள் குற்றவுணர்வைப் பற்றிச் சிந்திப்பதை விடவும் அதை மதுவில் மூழ்கடித்து, காமம் தன்னை அவிழ்க்கக் காத்திருந்தோம். ஜாஸ்மின், விலகப்போவதாக எப்போதும் என்னை மிரட்டுவாள், இதுவே கடைசிமுறை என்று சொல்லி, அது அவ்வாறு இல்லாமலாகும்போது அசிங்கமான குற்றச்சாட்டுகளை என்னை நோக்கி வீசுவாள். நான் அதற்காக வருந்துவதில்லை, எனவே அவள் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடுவதும் இல்லை, ஆனால், சமயத்தில் அவளின் இம்மெல்லிய வன்முறை காலப்போக்கில் மறையவில்லை என்பது குறித்து வருந்துவதுண்டு.

இப்போதெல்லாம், புறாவுக்காக சன்னலைத் திறந்துவைப்பது வசதிக்குறைவானதாக ஆகிவிட்டது. பிடிவாதமான வெப்பத்தைக் குளிர் நிதானமாக நகர்த்தியிருந்தது என்பதால் வெளியிலிருந்து வரும் ஒலிகளின் மாதிரி மட்டும் உள்ளே நுழையும்படியான சிறு திறப்பு மட்டுமே உண்டு. எப்போதேனும் தனது அலகை அதனுள்ளே நுழைப்பான். அவனை உள்ளே வரும்படியோ அல்லது அதற்குமேலோ அவனை ஊக்குவித்தால், அவசரகால வழியிலிருந்து படுக்கையறையின் வரைவிளிம்பிற்கோ அல்லது தெருவிலோ பறந்து மறைந்துவிடுவான். அவனைத் தொல்லை செய்வதை விடுத்து, அவனை ஒரேயடியாக இழப்பதைக்காட்டிலும் அவனோடு எனக்கான தூரத்தைக் கடைபிடிக்கக் கற்றுக்கொண்டேன்.

* * *

இன்று நேதனின் பிறந்தநாள், இதை அவனுடைய இரண்டாம் முதல் பிறந்தநாள் என்று அழைக்கிறோம். அவனை கௌரவப்படுத்தும் விதமாக ஜாஸ்மின் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்ள என்னைத் தயார்படுத்துகிறேன். சாவின் விளிம்பில் அதை வெற்றிகொண்டு மீண்டும் ஒரு புதியவாழ்வுக்குள் நுழைவதென்பது நிச்சயமாகக் கொண்டாடப்படவேண்டிய விஷயம்தான். இதுவொரு பனிமூட்டத்துடனான மந்தமான ஞாயிறு, வெளியில் சாம்பல்நிறம் இப்போது அடர்நீலக் கருப்புக்கு மாறிக்கொண்டிருக்கிறது. அவனுடைய சுவடு எங்கும் இல்லை. நேற்றிலிருந்தே அவனைப் பார்க்கவில்லை.

கோட் மற்றும் கம்பளித் துண்டு மற்றும் கையுறைக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு, சமையலறை மேசையிலுள்ள சாவிகளை எடுத்துக் கொண்டேன், இங்குதான், அப்புறாவின் கண்பார்வையில் நடந்த ஒவ்வொரு கதையும் சௌகரியமாக உறங்குகிறது. புத்தக அலமாரியிலிருந்து ஜாஸ்மினின் காதணி துருத்தியபடி என்னைப் பார்க்கிறது, அது நேதன் என்மீது வைத்துள்ள சந்தேகமில்லாத கருணையை எனக்கு நினைவூட்டியபடியும் விபத்து நடந்த இரவில் நான் ஜாஸ்மினை அடைந்ததற்காகக் குற்றம் சாட்டியபடியும் இருக்கிறது. MSF- லிருந்து வந்த கடிதம் இப்போது, உள்ளே எப்படியோ நுழைந்துவிட்ட மழைத்துளியால் சுருக்கத்துடன் கசங்கி, என்னைக் காயப்படுத்தும்படியாக மற்ற கடிதக்குவியல்களின் மேலாக, ஜாஸ்மின் மற்றும் நேதனின் திருமண அழைப்புக்கு அருகில் கிடக்கிறது.

சன்னலை அடைக்க முனையும்போது காகிதம் மடிவதுபோன்ற சரசரக்கும் ஓசை கேட்டதும் தோள்களைக் குறுக்கி வெளியில் எட்டிப்பார்க்கிறேன். கடந்த சிலநாட்களில் பெய்தமழையால் தண்ணீர் தேங்கி சிறுசிறு வட்டங்களோடு சுழித்துக் கிடக்கிறது. ஒரு கல்லின் வனப்போடு சுற்றித் திரிபவன், தன்னுள் சுருண்டு இருக்கிறான், அவனுடைய சின்னஞ்சிறு இதயத்தில் துடிப்பேதும் மிச்சமில்லை. அவன் கண்கள் மூடியிருக்கின்றன. வார்த்தைகள் ஏதும் வெளியாகிவிடக் கூடாது என்பது போல இப்போது அலகுகளையும் இறுக்கமாக மூடியிருக்கிறான்.

•••••••••••