Category: இதழ் 105

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் / சிபிச்செல்வன்

download-6

நேற்று முன்னிரவில் ஒரு உறவினரின் வீட்டிற்குப் போயிருந்தேன். அவருடைய பெண் குழந்தைக்கு ஒரு வயது ஆனதை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாடப் போவதாக காலையிலிருந்து தொடர்ந்து போனில் அழைத்துக்கொண்டிந்தார்கள்.

சுமார் 100 பேர் வந்திருந்தார்கள். அவர்கள் வசித்த வீடு சாதாரண ஓட்டு வீடு. அங்கே நிற்பதற்குக்கூட இடமில்லை. ஒரு பெரிய கேக் வாங்கி வந்திருந்தார்கள். அதை வெட்டுவதற்குப் பிளாஸ்டிக்கில் கத்தியையும் கொஞ்சம் மெழுகுவர்த்திகளையும் அந்தப் பெட்டியில் இணைத்துக்கொடுத்திருந்தார்கள் கடைக்காரர்கள்.

வீடு முழுவதும் பலூன்களைக் கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். கொஞ்சம் வண்ண காகிதங்களை அறை முழுவதும் கட்டியிருந்தார்கள். நான்கைந்து இளைஞர்கள் கையில் மொபைல் போனில் செல்பி எடுப்பதும் மற்றவர்களைப் போட்டோ எடுப்பதுமாகப் பரவசமான மனநிலையில் இருந்தார்கள்.

ஒரிருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். நான் அந்த வீட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்து நடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

உறவுக்காரர்கள் , நண்பர்கள் என வரிசை கட்டி வந்து கொண்டிருந்தார்கள். நேரில் வர இயலாதவர்கள் போனில் அழைத்து வாழ்த்துகளைச் சொல்லியவாறேயிருந்தார்கள்.

காலையில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் அக்குழந்தையின் படத்தை ஒளிபரப்பி பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொன்னதால் அந்தப் பகுதியில் அன்று அக்குழந்தையின் பிறந்த சற்றே பிரபலமாகியிருந்தது .

இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்போது தொடங்கியது என யோசித்து பார்த்தேன்.

ஆம் நான் சின்ன வயதாக இருந்தபோது ( எழுபதுகளில் ) தமிழ் சினிமாக்களில் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் பிறந்த நாள் கொண்டாடுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அது மெல்ல மெல்ல பரவி சமூகத்தில் வேரோடு வேராக பெரிய விருட்சமாக இன்று வளர்ந்திருக்கிறது. அதற்கு சமூக ஊடகங்களின் வளர்ச்சி , தொலைக்காட்சி , அச்சு ஊடகங்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியும் பரவலாக்கமும் ஒரு பெரிய காரணம்.

அப்புறம் பொருளதார வளர்ச்சியும் , நிறைய பேருக்குக் கல்வி அறிவு வாய்த்ததும் , அதில் கொஞ்சம் பேர் அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்களாக மாறியதும் , அவர்கள் வாங்கிய அதீத லஞ்ச பணத்தை எப்படியாவது செலவு செய்து தன்னை சமூகத்தில் பெரிய ஆளாக காட்டிக்கொள்ள வேண்டிய வேட்கையும் இப்படியான பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகளுக்குத் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கின்றன.

இந்தப் பழக்கம் மெல்ல மற்றவர்களுக்கும் பரவி கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் எல்லா மட்டங்களிலிருப்பவர்களுக்கும் வந்து சேர்ந்துள்ளது.

images-3
இதனால் ஆடைகள், கேக் மற்றும் பலூன்கள் மட்டுமல்லாமல் வண்ண காகிதங்கள் மற்றும் வெடிகள் , பட்டாசுகள் , வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு பொருட்கள் ஆகியவற்றின் வியாபார வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

அவரவர் வசதிக்கேற்ப சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் ( பிராய்லர் கோழிகளின் எண்ணிக்கை பெருகியிருப்பதால் இதுபோன்ற கொண்டாட்டங்களில் அவற்றின் பயன்பாடு முட்டை இறைச்சி என பல மட்டங்களில் பல வடிவங்களில் தவிர்க்கவியலாத பொருட்களாக மாறி இடம் பிடித்துள்ளன.) திண்பண்டங்கள் போனற பொருட்களின் பயன்பாடும் விற்பனையும் நுகர்வும் கூடியிருக்கின்றன. இவற்றின் விற்பனையைப் பெருக்குவதற்காக வியாபாரிகள் நூதனமாக வலைவிரித்து விற்பனையை பெருக்குகிறார்கள்.

தங்க நகைக் கடைகளிலோ அல்லது ஜவுளிக்கடைகளிலோ நாம் பொருட்களை வாங்கும்போது அவர்கள் அக்கறையாக நமது பிறந்த நாள் மற்றும் மணநாளைக் கேட்டு வாங்கிக்கொண்டு மறக்காமல் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துகளை சொல்லுவதுபோல அவர்களின் கடைகளில் நம்மை மறைமுகமாகப் பொருட்களை வாங்கத் தூண்டுகிறார்கள்.

ஒரு அரசியல்வாதியின் பேரக்குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடியபோது அவர் அமைச்சராக இருந்தார். இதனால் தாத்தாவை காக்கா பிடிப்பதற்காக அதிகாரிகள் மற்றும் சக அரசியல்வாதிகள் என ஒரு பெரும்படையே கிளம்பிப் போய் அவரவர் பங்கிற்கு அந்தக்குழந்தைக்கு கேக்கை ஊட்டிவிட்டார்கள். அதீதமாக கேக் சாப்பிட்டதால் அக்குழந்தை இறந்து போனது . இந்த சம்பவம் எல்லாருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களின் எல்லா தருணங்களிலும் என் நினைவில் நிழலாடும்.

முதன் முதலாக நான் எப்போது பிறந்த நாள் கொண்டாடினேன் என நினைத்துப் பார்த்தால் அது வெகு சமீப ஆண்டுகளுக்கு முன்புதான் எனத் தோன்றுகிறது. அதுகூட என் பிறந்த நாளை இந்த முகப்புத்தகம் ஊருக்கெல்லாம் உலகிற்கெல்லாம் அறிவித்ததன் விளைவாக அனைவருக்கும் தெரிந்தது.

முகப்புத்தகம் வந்த பிறகுதான் மற்றவர்களின் பிறந்தநாட்கள் வெளியே பரவலாகக் கவனத்திற்கு வந்தது. அவருடைய நண்பர்களின் எண்ணிக்கைக்கும் அவரின் பிரபலத்திற்கும் ஏற்ப வாழ்த்து சொல்பவர்களின் எண்ணிக்கை கூடுவதையும் இப்போது கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

பலருக்கும் அவர்களின் பிறந்த நாளை மற்றவர்கள் கொண்டாடுகிற ஒரு பொதுவெளியாக முகப்புத்தகம் மாற்றியிருக்கிறது என்பதும் ஒரு மறுக்க இயலாத உண்மைதான்.

என்னுடைய 50 ஆவது பிறந்த நாள்தான் நான் முதன் முதலாக கொண்டாடிய தருணம். அதுகூட என் மகன்களும் என் அன்பான மனைவியும் இணைந்து எனக்கே தெரியாமல் ரகசியமாக செய்த ஏற்பாடு.

கேக் மற்றும் ஆடைகள் என வாங்கி வந்ததும் நள்ளிரவு வரை என்னை உறங்கவிடாமல் அன்று பேச்சுக்கு இழுத்ததும் அந்த பிறந்த நாளின் முதல்நொடிவரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

சைவ அசைவ விருந்து என தடபுடலாக ஏற்பாடுகளை செய்து அசத்தினார்கள். என் மூத்த மகன் அப்போது இறுதியாண்டு பி .டெக் படித்துக்கொண்டிருந்ததால் அவருடைய வகுப்பில் படிக்கிற மாணவ மாணவிகளும் அந்த பிறந்த நாளுக்கு வந்திருந்து வாழ்த்தினார்கள்.

இப்படி ஒரு நிகழ்வை இதுவரை நான் கொண்டாடியதில்லை என்பதால் எனக்கு சற்றே கூச்சமாக இருந்தது.

இந்தப் பிறந்த நாளுக்காக எனக்குக் கைக்கடிகாரமும் பளபளக்கும் பட்டாடைகளும் வண்ண கண்கண்ணாடிகளையும் வாங்கிக் கொடுத்து என் குடும்பத்தினார் கொண்டாடினார்கள்.
அதற்குப்பிறகு வந்த ஆண்டுகளை நான் கொண்டாடவில்லை.

என் மகன்களின் மற்றும் மனைவியின் பிறந்த நாட்களை அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் கொண்டாடி வருகிறோம் என்பதும் உண்மைதான்.

ஆனால் நேற்று நடந்த பிறந்த நாள் விழாவில் நிற்பதற்கே இடமில்லாத நிலையிலும் நிறைய நண்பர்கள் உறவினர்கள் வந்திருந்து வாழ்த்திவிட்டு சைவ உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டும் போனார்கள்.

வந்திருந்தவர்கள் எல்லோரும் தவறாமல் கையில் பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருந்தார்கள்.

முந்தைய தலைமுறையினருக்கு அவர்களின் பிறந்த நாள் குறித்த எந்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருந்தார்கள் என்பது உண்மையிலும் உண்மை. அப்புறம் அவர்களின் வயதுகூட இந்தப் பொங்கல் வந்தால் எனக்கு அறுபது என்றோ அம்பது என்றோ நாற்பது என்றோ சொல்லுவதை கேட்டிருக்கிறேன்,. அவர்களுக்கு வயதை அளக்கிற கருவியாக அவர்களின் ஜாதகம் இருந்தது. பலருக்கு அது கூட இருந்ததில்லை. அப்படி ஒரு குறிப்பை எழுதி வைக்கும் அளவிற்குக்கூட வசதி வாய்ப்புகள் அன்று இருந்ததில்லை என்பதும் உண்மைகளின் இன்னொரு பக்கமாக இருந்திருக்கிறது.

ஆனால் இன்று முகப்புத்தகம் மற்றும் அச்சு மற்றும் தொலைக்காட்சி போன்ற சமூக ஊடகங்கள் தாக்கம் பெரியஅளவில் பரவியதால் எல்லோருக்கும் அவரவர் பிறந்த நாளை கொண்டாடுகிற எண்ணத்தை உருவாக்கியருக்கின்றன.

தற்போது பணக்காரர்கள்தான் மட்டும்தான் தங்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்ற நிலை இருப்பதில்லை.நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விளம்பு நிலை மக்கள்கூட அவரவர் வசதிக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப தங்களது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம் , தற்போது பிறக்கிற குழந்தைகள் அவ்வளவு எளிதாகப் பிறந்து விடுவதில்லை என்பதால், அதாவது மருத்துவத்தின் பல்வேறு வசதிகளை பெற்றுதான் பிள்ளைகள் பிறக்கிற காலமாக மாறியிருப்பதாலும் பிள்ளைகளின் பிறந்த நாள் என்பது நிச்சயம் கொண்டாடுகிற தருணங்களாக மாறியிருப்பதில் வியப்பேதுமில்லை.
images-5
கேக் வெட்டுகிற நேரம் வந்ததும் ஹேப்பி பர்த்டே பாட்டை சுற்றியிருந்தவர்கள் பாட அந்தக் குழந்தை வீரிட்டு அழத் தொடங்கியது . அவ்வளவு மூச்சு முட்டுகிற மக்களின் நெருக்கத்தினாலும் புத்தம் புது ஜிகினா ஆடைகளின் நசநசப்பினாலும் அக்குழந்தை அழத் தொடங்கியது.
அந்தக் குழந்தையை ஆள் ஆளுக்குத் தூக்கிக் கொஞ்சியதால் மிரண்டுபோய் குழந்தை வெகுநேரம் தேம்பிக்கொண்டிருந்தது.

••

நெம்பர் ப்ளீஸ் … ( கட்டுரை ) / – சிபிச்செல்வன்

download (10)

அப்போது சென்னையில் நான் வசித்தேன். ஒரு செல்போன் வாங்க வேண்டும் என நீண்ட நாட்களாக எனக்கு ஒரு கனவு இருந்தது. அப்போதுதான் ரிலையன்ஸ் நிறுவனம் 500 ரூபாய் போனை அறிவித்திருந்தது.
எல்லோரும் போனை வாங்குவதும் சரளமாக எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவதுமாக இருக்கத் தொடங்கியிருந்தார்கள்.

ஆனாலும் நமக்கு எதற்கு போன் என்று வாங்குவதை தள்ளிப்போட்டுக்கொண்டேயிருந்தேன். அதற்கு காரணம் ஒரு காலகட்டம் வரையில் வருகிற போனுக்குரிய கால் கட்டணத்தையும் நாம்தான் செலுத்த வேண்டும் என ஒரு விதியிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.
செல்போன்கள் வந்த புதிதில் பெரும் பணக்கார்கள் வைத்துக்கொண்டிருக்கிற சமாச்சாரமாக இருந்தது, ஒரு நிமிடத்திற்கு ஏழு எட்டு ரூபாய் என கட்டணம் இருந்ததாக நினைவு . கூடவே அந்தப் போனுக்கான கட்டணம் அழைப்பவருக்கும் அழைப்பை ஏற்பவருக்கும் என இருவழிக ட்டணங்களாக ஒரு கால கட்டம்வரை இருந்தது.

அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முதன் முதலாக டெலிபோனை எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு கைத்தறி சொசைட்டியில்தான் பார்த்தேன். கருப்பு வண்ணத்தில் பெரிய அளவில் அது இருந்தது. அந்தப் போனில் மணியடித்தால் 500 அடி தொலைவிலிருக்கும் எங்கள் கூரை வீட்டிற்கு பகலிலேயே கேட்கும். இரவில் என்றால் சொல்லவே வேண்டியதேயில்லை. அது எங்கள் வீட்டிலேயே அடிப்பதைப் போலக் கணீரெனக் கேட்கும்
அந்தப் போனை எடுத்து பேசுபவர்களின் குரல் எங்கள் வீட்டிற்கே கேட்கும். ஹலோ ஹலோ என போனை எடுத்தவுடன் சொல்வார்கள். இந்த ஹலோ என்றால் என்ன பாஷை என்பது எனக்கு அப்போது தெரியாது. ஆனால் ஹலோ என்பது போனில் முதலில் பேச வேண்டிய சொல் என்பது மட்டும் அறிவேன்.

எங்கள் உறவினர்கள் எல்லோரும் அந்த சிறிய கிராமத்திலேயே வசித்து வருவதால் எனக்கோ அல்லது எங்கள் வீட்டினருக்கோ எப்போதும் போன் வர வேண்டிய அவசியம் இருந்ததில்லை. அப்புறம் அப்போது அதாவது எழுபதுகளின் தொடக்கத்தில் அந்த ஊரிலேயே அந்த கைத்தறி சொசைட்டியில்தான் போன் இருந்தது. அவர்களுக்குதான் அலுவலக ரீதியாக பேசவேண்டிய தேவையும் இருந்தது.

ஊரில் யாருக்கும் வெளியில் வியாபார ரீதியான தொடர்புகள்கூட அப்போது பெரிதாக இருந்திருக்கவில்லை. அல்லது அப்படி அவசரமாக பேசி சாதிக்க வேண்டியதாக எந்தக் காரியங்களும் யாருக்கும் இருந்திருக்கவில்லை என இப்போது நினைக்கிறேன். எல்லாரும் விவசாயம் அல்லது கைத்தறி தொழில்களைதான் செய்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு போன் ஒரு தேவையான விஷயமாக இருந்திருக்கவில்லை என்பதோடு அதை எப்படி பயன்படுத்துவது என்பதும் யாருக்கும் தெரியாது.

எழுபதுகளின் முன் பகுதியில் என நினைக்கிறேன். என் பெரியப்பாவின் மகன் – எனக்கு அண்ணன் – ஒருவர் வெளியூர் போய்விட்டு வந்திருந்தார். அவர் யாருக்கோ அந்த சொசைட்டியின் போன் எண்ணைக் கொடுத்து வந்ததாக சொன்னார்.அந்தப் போன் எண் 22 என்பதாகும். அப்போது சேலம் மாவட்டம் ஒன்றாக இருந்தது. நாமக்கல் மாவட்டம் பின்னால்தான் தனியாக பிரிந்தது. இப்போது எங்கள் ஊர் நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்திருக்கிறது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அப்போது சேலம் மாவட்டம் என்பது மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது என்பதை சொல்வதற்குதான்.

இங்கே மணியடித்தால் நாம் அழைப்பவருக்கு எப்படி போய் சேருகிறது என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. அது ஒரு மாயஜால கதைகளில் வருகிற மந்திர சமாச்சாரம் என்றுதான் நான் நம்பிக்கொண்டிருந்தேன். காரணம் அப்போது நான் அம்புலி மாமா கதைகளைதானே வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்த போன் சமாச்சாரமும் அப்படிதான் போலும் என நான் கற்பனை செய்திருந்தேன்,.
பின்னால் நான் எங்கள் கிராமத்துப் பள்ளியில் 5 ஆம் வகுப்பை முடித்து ஆறாம் வகுப்பிற்குப் போய் சேர்ந்தபோதுதான் இன்னொரு விஷயம் தெரிந்தது.

ஆமாம் என்னுடன் இப்போது மற்ற ஊர்களில் இருந்து என்போன்றே வந்திருந்த பல பள்ளி மாணவர்கள் ஒன்றாக படிக்கிற இடமாக ஆறாம் வகுப்பு மாறியிருந்தது. அதாவது பல ஊராட்சிப் பள்ளிகளின் மாணவர்கள் அந்த உயர்நிலைப் பள்ளிக்கு படிக்க வந்து சேர்ந்திருந்தார்கள்
அப்படி என் வகுப்பில் சேர்ந்த மாணவன் ஒருவனின் வீட்டில்தான் அந்த பெரிய ஊருக்கான தொலைபேசி அலுவலகம் இருந்தது என அவன் சொன்னான்.

அவன் அப்பாதான் அந்த அலுவலகத்தில் இருந்த ஒரே பணியாளர். பின் பகுதியில் அவர்கள் வீடும் முன்பகுதியில் தொலைபேசி அலுவலகமும் இயங்கிக்கொண்டிருந்தது.
அவன் பெயர்கூட ரவிக்குமார் என இப்போது நினைவுக்கு வருகிறது. அவனுக்குப் பல் கொஞ்சம் தூக்கிக்கொண்டிருந்ததால் என் வகுப்பில் அவனுக்கு பல்லன் எனப் பெயர் வைத்திருந்தார்கள்.அவன்தான் போன்கள் எப்படி வரும் அதை எப்படி இயக்குவார்கள்.

அவன்தான் போன்கள் எப்படி வரும் அதை எப்படி இயக்குவார்கள், போன் வந்ததும் ஒரு பின் போலிருப்பதை மாற்றி சொருகினால் போன் கனெக்ட் ஆகும் என விளக்குவான். அவன் சொல்ல சொல்ல கற்பனைகளில்தான் அந்தக் காட்சிகளை காண முடிந்தது

எங்கள் கிராமத்தின் சாலை முடியும் இடத்தில் அந்த பெரிய ஊரின் சாலை தொடங்கும் . அந்த ஊருக்குப் பெயர் மல்லசமுத்திரம் என்பதாகும். அங்கேதான் ரவிக்குமாரின் வீடும் தொலைபேசி அலுவலகமும் இருந்தது. பின்னாட்களில் அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் என் பள்ளி வகுப்புத் தோழன் இருக்கிறானா என வெளியிலிருந்து பார்ப்பேன்.

சில சமயங்களில் அவன் இருப்பான். பல சமயங்களில் அவன் கண்ணிலேயே தென்பட மாட்டான்,. அவன் இருந்த சமயங்களில்கூட உள்ளே போய் அந்த தொலைபேசி நிறுவனம் எப்படி செயல்படுகிறது எனப் பார்க்கும் தைரியம் எனக்கு வந்திருக்கவில்லை. ஆனால் அந்த ரவிக்குமார் அதை வைத்தே பல கதைகளை அவ்வப்போது சொல்லிவருவான்.

எண்பதுகளின் தொடக்கத்தில் எங்கள் ஊரில் ஒரு பெரிய பணக்காரரின் வீட்டில் முதன் முதலாக ஒரு டெலிபோன் இணைப்பை வாங்கினார்கள். அவர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டும் அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்து சில கதைகளை சொல்வார்கள், அந்தப் போனின் பெருமைகளை சொல்லுவார்கள்.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் இன்னொருவர் அவர் வீட்டிற்கு தொலைபேசி வாங்கினார். இப்போது அந்த கிராமத்தில் மொத்தமாக மூன்று வீடுகளில் தான் தொலைபேசிகள் இருந்தன. ஆனாலும் பொதுவாக யாருக்கும் போன்களின் பயன்பாடுகளே தெரிந்திருக்கவில்லை. அதற்கான தேவைகளும் வந்திருக்கவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.
இது தவிர அப்போது போன் இணைப்பை வாங்குவதற்குநிறைய பணம் டெபாசிட்டாக கொடுக்கவேண்டும்என்பதால்போன் இணைப்பை வாங்குவது மிகவும் கௌரவமான விஷயமாக இருந்தது ( அப்போது சில நூறுகள்கூட பெரிய தொகையாகதான் இருந்தன. )

அதன் தேவையை யாரும் அறியாமல் இருந்ததாலும், அப்புறம் நிறைய அப்ளிகேஷன்கள் போட்டு போன் இணைப்பிற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாலும் ( இதுவும் ஒரு காலகட்டம்வரை உண்மையாக இருந்தது ) யாரும் போனை ஒரு அத்தியாவசியமான பொருளாக நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.

நான் தொன்னூறுகளின் தொடக்க வருடங்களில் பணிநிமித்தமாக மேட்டூருக்குப் போன பிறகுதான் அலுவலக போனை பயன்படுத்த தொடங்கினேன்.

அலுவக தேவைக்காக நான் குடியிருந்த வீட்டிற்கு ஒரு போன் இணைப்பையும் அவர்களே வாங்கிக்கொடுத்திருந்தார்கள். அப்போது அதைப் பெரிய விஷயமாக கருதினேன். ஆனால் எந்த நேரமும் என்னை போனில் அழைக்கவும் அலுவலக ரீதியான பணிகளை நிறைவேற்றிக்கொள்ளவும்தான் அப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதை இப்போதுதான் உணர முடிந்தது.

தொன்னூறுகளின் பின்பகுதியில் எங்கள் கிராமத்தில் இருக்கிற வீட்டிற்கு நான் ஒரு தொலைபேசி இணைப்பை வாங்குவதற்காக முயன்றேன். அப்போதும் 3000 பணம் டெபாசிட் செய்யவேண்டும் எனவும் சில காலம் காத்திருக்க வேண்டும் எனவும் சொன்னார்கள்.

அப்படி காத்திருந்து எங்கள் கிராம வீட்டிற்கு ஒரு தொலைபேசி இணைப்பை கொடுத்தார்கள். அதற்குள் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இணைப்பை கொடுப்பதற்கு (ஒயரை இழுப்பதற்கு) இரண்டு மூன்று கம்பங்கள் போட்டுதான் உங்கள் வீட்டிற்கு ஒயரை இழுத்துவந்து கொடுக்க வேண்டும் என சொல்லி அந்த அலுவலகத்தில் பணியாற்றி சிலர் என்னிடம் தனியாக சில நூறுகளை லஞ்சமாக பெற்றதெல்லாம் தனிக்கதை.

(எனக்கு) மேட்டூரிலிருந்து வீட்டிற்கு பேசவும் ஊரில் ஒரு நல்லது கெட்டது நடந்தால் அறிந்துகொள்ளவும் எனக்கு வேறுவழியில்லாமல் இருந்ததால் இந்த ஏற்பாட்டை நானே செய்துகொள்ள வேண்டியிருந்தது.

அப்போது சனிக்கிழமை மதியத்திற்குமேல் கிளம்பி மாலைக்குள் ஊருக்கு குடும்பத்தோடு வருவோம். திங்கள் காலையில் மீண்டும் மேட்டுருக்குத் திரும்பிவிடுவோம். இடைப்பட்ட நாட்களில் ஊருக்கு நான் தினமும் போன் செய்வதும் ஊரில் ஏதாவது ஒருவர் இறந்துவிடடால் மட்டுமே அங்கேயிருந்து போன் எனக்கு வரும். அவர்களாக ஒரு நாளும் போன் செய்ய மாட்டடார்கள்.

காரணம் தொலைபேசி பில் நிறைய வந்துவிடுமே என்ற பயமும் அந்தத் தொகையை ஏன் வீணாக கட்ட வேண்டும் என்ற சிக்கனத்தைக் கருதியும் என் பெற்றோர்கள் போனை செய்ய மாட்டடார்கள்,. அந்தப் போனுக்கான பில்லை நான் தான் தொடர்ந்து செலுத்திவந்தாலும் இதுதான் யதார்த்தமான சூழல்.

இந்த காலகாட்டத்தில் அதாவது தொன்னூறுகளின் தொடக்கத்தின் நடுப்பகுதியிலிருந்து பின்னால் சில வருடங்கள் ஊருக்கு ஊர் தெருவிற்கு தெரு புதிதாக சில பெட்டியமைப்பில் ஒரு பூத் வரத் தொடங்கியிருந்தன.

ஆமாம் அதற்கு எஸ்டிடீ பூத்கள் எனப் பெயர்களும் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் ஊனமுற்றவர்களுக்கு பயன்படுகிற விதமாக தொலைபேசி நிறுவனங்கள் வழங்கி வந்தன. இவற்றில் போன்கள் இல்லாத நபர்கள் ஒரு போனை பேசியதும் அதற்கான தொகை ஒரு பிரிண்டர் வழியாக பில்லாக அச்சிட்டு வரும். இந்த அமைப்பில் எல்லா ஊர்களிலும் போன் பேசுகிற விஷயங்களை மக்களுக்கு பழக்கப்படுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எல்லா ஊர்களிலும் இந்த தொலைபேசி அமைப்பு வந்திருந்ததாலும் சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட பேசுகிற பழக்கம் மெதுமெதுவாக வரத்தொடங்கியிருந்தன. முதலில் ஒரு கட்டம்வரைக்கும் வெளிநாடுகளில் பணியாற்றுகிறவர்களை தொடர்புகொள்ள இந்த பொதுத் தொலைபேசிகள் பயன்பட்டன.

உதாரணமாக துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிபுரிகிறவர்களின் குடும்பங்களில் இருப்பவர்கள் அவர்களை தொடர்புகொள்ள இந்த தொலைபேசிகள் பெருமளவில் உதவின என்பதுதான் நிதர்சனம்.
பலருக்கு இந்தத் தொலைபேசிகள்தான் தொலைபேசியில் பேசுவதை எளிமையாக்கின.

மேலும் தொலைபேசி பயன்பாட்டை அதன் உபயோகம் சம்பந்தமாக இருந்த பயத்தை அச்சத்தைப் போக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல பெருமளவில் பயன்பாட்டிற்கு வரச்செய்தது.அதாவது ஏககாலத்தில் தமிழகத்தின் எல்லாயிடங்களிலும் இன்னும் சொல்லப் போனால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இந்த பொதுத் தொலைபேசிகள் தான் மக்களின் வாழ்வில் ஒரு இயல்பான பயன்பாட்டிற்குப் பழக்கியது.

2000 ஆண்டுகளின் தொடக்க வருடங்களில் நான் சென்னைக்கு பணி நிமித்தமாக குடிபெயர்தேன். அந்த சமயங்களில் சென்னையில் பேஜர்களின் இறுதிக்காலமாக இருந்தது. பேஜர்கள் எஸ்எம் எஸ் போல அனுப்புவதும் பெறுவதுமாகதான் பயன்பாட்டில் இருந்தன. அப்போது பிபிஎல் நிறுவனம் தொலைக்காட்சிகளை விற்று மக்களின் மனதில் இடம் பெற்றிருந்தன. அவர்கள் இந்த பேஜர் கருவியை விற்பனை செய்வதில் முன்னணியில் இருந்தார்கள்.

சென்னை போன்ற நகரங்களில் மற்றும் ஒரிரு சிறு நகரங்களிலும் இந்தபேஜர்கள் பயன்பாட்டிற்கு வந்திருந்தன. இந்த பேஜர்களை இடுப்பு பெல்ட் பகுதியில் ஒரு பௌச் போல இருக்கும் பகுதியில் மாட்டிக்கொண்டு தகவல்கள் வரும்போதும் அனுப்பும்போதும் பயன்படுத்துவார்கள்.அந்தப் பேஜர்களைப் பயன்படுத்துபவர்கள் முகங்களில் அப்போது பெருமிதங்களோடு பெருமையும் கொஞ்சம் திமிரும் இருப்பதை அப்போது நான் பார்த்திருக்கிறேன்.

விரைவிலேயே பேஜர்கள் விடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. காரணம் பேஜர்கள் ஒரு அளவிற்கு மடுடமே பயன்படுத்துகிற வகையில்தான் அவற்றின் அமைப்பு இருந்தது. அதாவது ஒரு குறுகியளவில்தான் அதன் பயன்பாட்டின் எல்லை இருந்ததும் ஒரு காரணம்.

ரிலையன்ஸ் நிறுவனம் திடிரென மார்கெட்டில் 500 ரூபாய்க்கு செல்போன் என அறிவிப்பு செய்து மார்கெட்டில் இந்தியாவெங்கும் பயன்பாட்டிற்கு விட்டது. அதுவரை செல்போன் என்பது பெரும் பணக்காரர்கள் பயன்படுத்துகிற சமாச்சாரமாக இருந்தது.இதனால் செல்போன் பெரும் பணக்காரர்களுக்கானதாக இருந்தது. ஆனால் இந்த 500 ரூபாய் போன் வந்ததும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அவர்களுக்கும் அடுத்த படியிலிருந்தவர்களும் இந்தப் போனை போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கினார்கள். இதன் பயன்பாட்டுக் கட்டணமும் எளியளவில் இருக்கும்வகையில் அவர்கள் வைத்திருந்தார்கள்.

இதனால் நாட்டில் பெரும்பாலானவர்களின் கைகளில் செல்போன் என்ற கருவி இடம் பெற்றிருந்தது. அப்புறம் இந்த போன் கையடக்க கருவி போல கையாளுவதற்கும் எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டருந்தது.
இதற்குமுன் இருந்த போன்கள் ஒரு செங்கல் சைசில் இருந்ததும் அதன் தலையில் ஒரு கொண்டை போன்ற வடிவமைப்பு இருந்ததும அதை வைத்திருப்பதும் ஒரு பெரிய விஷயமாக இருந்தது.

500 ரூபாய் என்பதால் நிறைய பேர் போன்களை வாங்கிவிட்டார்கள்.அவர்களின் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு தேவையிருந்ததோ இல்லாமல் இருந்ததோ ஆனால் தினசரி பேசுகிற வழக்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வைத்துவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து வந்த போன் பில்லை பார்த்து சிலர் அதிர்ந்து போனார்கள். சிலர் வேண்டியமட்டும் பேசிவிட்டு போனைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள் என்பதெல்லாம் அப்போதைய தினசரி கதைகள். குப்பைகளில் முட்புதர்களில் வீசிவிட்டுப் போனவர்களும் உண்டு. இவர்களில் சிலர் பில்லை ஒழுங்காக கட்டி தொடர்ந்து இப்போது வரையும் பயன்படுத்திவருகிறார்கள்.

இந்த 500 ரூபாய் போன் மக்களிடையே வேக வேகமாகப் பரவியதோடு அல்லாமல் அதன் பயன்பாட்டை தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்துகிற வழக்கத்தை மக்களின் மனங்களில் உருவாக்கினார்கள். உங்கள் வீட்டில் என்ன சமையல் என்பது போன்ற சாதாரண விஷயங்களில் தொடங்கி குடும்பங்களில் நடக்கிற சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பேச பழகினார்கள்.

அலுவலக விஷயங்களாக தினசரி வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களுக்காக என மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக செல்போன் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியிருந்தது.

இந்த சமயங்களில் இந்திய பொருளாதாரம் தாரளமயமாக்கத்தின் விளைவாக மக்களிடம் பணப்புழக்கமும் சரளமாகப் புழக்கத்திற்கு வந்திருந்தன. அதாவது ஒரு தினசரி கூலி வேலைக்குப் போகிறவர்கள்கூட சில நூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறவர்களாக மாறியிருந்தார்கள். மேலும் இளைஞர்கள் நிறைய பேர் பொறியியல் படித்து வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியத் தொடங்யிருந்தார்கள்.

இப்போது செல்போன்கள் அதிகமாக மக்களிடம் புழக்கத்தில் வரத் தொடங்கியதும் நிறைய போன் கம்பெனிகள் தங்களது சேவைகளை வழங்க போட்டிப் போட்டுக்கொண்டு போன்களை உற்பத்தி செய்வதிலும் விற்பனை செய்வதிலும் போட்டிகளை தொடங்கியிருந்தன.ஆபர்கள் என்ற பெயரில் போன்களை புதிது புதிதாக போன்களை வடிவமைத்து வெளியிட்டு வந்தார்கள்.

இதேபோல போன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பேசுகிற நிமடங்களுக்கேற்ப கட்டணங்களை குறைத்து போட்டிபோட்டுக்கொண்டு விலை குறைப்பு செய்து மக்களிடையே தங்களது நிறுவனங்களை நிலைநிறுத்த போராடி வந்தன.

இதனால் மக்களுக்கு நிறைய உபயோகிக்கிற வாய்ப்புகள் வருவாகிவந்தன. இதன் விளைவாக ஒவ்வொருவரும் நிறைய போன் எண்களை வாங்குவதும் அதனை பயன்படுத்துவதற்காக இரண்டு போன்களை வாங்குவதும் அல்லது இரண்டு சிம்களை உபயோகிப்பதற்குகேற்ப வடிவமைக்கபட்ட்ட புதிய போன்களை வாங்கவேண்டியதுமாக சூழல்கள் மாறிக்கொண்டிருந்தன

இப்படி மக்களிடம் குறைந்தது இரண்டு போன்கள் அல்லது இரண்டு சிம்கள் இருக்கிற காலம் வேகமாக பரவியதும் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு பரவியிருந்த தொலைபேசி எஸ்டீடி பூத்கள் மெல்ல மெல்ல தங்களது தேவையை இழந்தன. ஒவ்வொன்றாக தாக்குப்பிடிக்க இயலாமல் காலியானது. ஒரு கட்டத்தில் எங்குமே இந்தப் பூத்களை பார்க்க இயலவில்லை. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் , எங்குப் பார்த்தாலும் இந்தப் பூத்கள் வந்த வேகத்தில் குறைந்த வருடங்களில் காணாமலும் போய்விட்டன.

சென்னையில் பணிக்கு சேர்ந்த சமயங்களில் செல்போன் உபயோகத்தையும் அதன் வேகமான பரவலாக்கத்தை கண்டுருந்தாலும் அதன் தேவையை நான் உணரவில்லை. 2003 ஆம் ஆண்டில் நானும் நண்பர் அழகியசிங்கரும் ஒரு கூட்டத்திற்காக திருப்பூருக்கு போனோம். இரண்டு நாட்கள் ஊரில் இல்லாத சமயத்தில் என் மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத தகவலை எனக்கு நண்பர் அழகியசிங்கரின் போன்வழியாக என் மனைவி பொதுத் தொலைபேசியின் வழியாக அழைத்து தகவலைத் தெரிவித்தார். மகனை மருத்துவரிடம் அழைத்துபோக சொல்லியும் ஆறுதல் சொல்லியும் நான் பேசினேன்.
திருப்பூரிலிருந்து சென்னைக்கு திரும்பியதும் ஒரு செல்போன் வாங்க வேண்டும் அது இதுபோன்ற நெருக்கடி சமயங்களில் நமக்கு உதவும் என யோசிக்க வைத்தது. அப்போதிருந்து திட்டமிட்டு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து என் மூத்த மகன் பிறந்த நாளான்று சென்னை மவுண்ட்ரோடிலிருக்கும் ஸ்பென்சர் பிளாஸாவில் ஒரு கடையில் போனை வாங்கினேன்.

அப்போது சிம் கார்டு வாங்குவதற்கு பெரிய வசதிகள் இப்போதுபோல இயல்பானதாக இல்லாததால் என் நண்பர் மகாலிங்கம் பெங்களூரிலிருந்து ( அவர் பிஎஸ்என்எஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியிலிருந்தார் ) சென்னையிலிருந்த அவரின் நண்பர் சிவலிங்கம் என்பவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்து எனக்கு ஒரு சிம் கார்டு வாங்க உதவினார். இந்த எண்ணை நான் வெகுநாட்கள் உபயோகத்தில் வைத்திருந்தேன் . பின்னால் நான் சேலத்திற்கு திரும்பும்வரை பல வருடங்களுக்கு இதுதான் என் எண்ணாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் போன்களில் பேசுவதைவிட எஸ்எம்எஸ்கள் அனுப்புவதும் பெறுவதும் கட்டணங்கள் குறைவு என்பதால் எப்போதும் யாராவது ஒருவர் போனில் டைப் செய்தபடியே இருப்பதைக் காண முடிந்தது. குறிப்பாக இளம்பெண்கள்தான் அதிகமாக எஸ்எம்எஸ் அதிகமாக அனுப்புவர்களாக இருந்ததைக் கவனித்தேன்.அவர்களின் கைகள் வெகு லாகவாமாகவும் அதே சமயத்தில் விரைவாகவும் டைப் செய்வதை கவனித்திருக்கிறேன்.

பலரும் போன்களில் குனிந்துவாறே டைப் செய்வதும் அவற்றை எஸ்எம்எஸ்களாக அனுப்புவதும் அதைப் பெறுவதும் உடனுக்குடன் பதில் எஸ்எம்எஸ்களை அனுப்புவதுமாக இருந்தார்கள். அப்போது பலரின் போன்களில் இருந்த எழுத்து பட்டன்கள் கைபட்டு கைபட்டு மறைந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. மேலும் வேகமாக டைப் செய்வதற்காக மொழியை சுருக்கி புதுவிதமான பயன்பாட்டிற்கும் இளைஞர்களும் இளைஞிகளும் கொண்டு வந்திருந்தார்கள். இதனால் மொழி அழிந்துவிடும் எனவும் இல்லை ஒரு புதுமொழி உருவாகியுள்ளது எனவும் கூச்சல்கள் கிளம்பியிருந்தன.

அப்போது செல்போனில் ஒரு கால்குலேட்டர் மற்றும் டார்ச் என தினசரி வாழ்வில் உபயோக்கிற பிற பொருட்களின் இணைப்பையும் புதிதாக வந்ததிருந்த செல்போன்களில் கொண்டுவந்தார்கள். இது மக்களின் வாழ்வில் பயன்பாட்டிற்கு வந்ததும் மற்ற தேவைகளான கேமிராவையும் செல்போனில் இணைத்து கொண்டு வந்தார்கள். போட்டோக்களை எடுப்பதும் அதனை உடனடியாக பார்ப்பதும் அப்போது புது அனுபவங்களாக மாறத் தொடங்கியிருந்தன.

போட்டோக்கள் எடுப்பதற்கு தனியாக கேமிராக்கள் இருப்பதும் அதை எடுப்பதற்கு தனித்திறமை வேண்டும் என்பதும் ஒரு பயமாக இருந்தது பெரும்பாலான மக்களிடம். மேலும் போட்டோக்களை எடுக்க பில்ம்கள் பயன்படுத்துவதும் படங்களை எடுத்ததும் அதனை லேப்களில் கொடுத்து பிராசசஸ் செய்து படங்களை ஆல்பங்களாக போடுவதற்கும் தனித்தனியாக தொழில்நட்பங்கள் தேவைப்பட்டதும் அதை உபயோகப்படுத்த நிறைய பணம் தேவைப்பட்டதோடு அல்லாமல் அதனை நிறைய நேரம் செலவளித்து மெனக்கெட்டு அதை படங்களாக மாற்றுவதும் பெரிய வேலைகளாக இருந்தன.
ஆனால் செல்போன்களில் கேமிராக்கள் இணைக்கப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் கேமிராக்களும் வந்திருந்ததால் அதனை எளிதாக செல்போனில் இணைத்திருந்தார்கள்.

இதனால் செல்போன்களின் புதிய வடிவமைப்புகளால் ஈர்க்கப்பட்ட பலரும் தங்களது பழைய போன்களை விட்டு உடனே புதிய புதிய தொழில்நுட்பங்களோடுள்ள செல்போன்களை வாங்குவதும் அதைப் பயன்படுத்துவதும் தங்களது அப்டேட் விஷயங்களாக தங்களுடைய அந்தஸ்துக்குரிய விஷயங்களாக மாற்றிக்கொண்டார்கள். இதனை அந்த செல்போன் நிறுவன விளம்பரங்களும் ஒரு வகையில் மூளைச்சலவை செய்து வந்திருந்தன.
போனில் ஆடியோ கேட்கிற வசதியை உருவானதும் பலரும் அதை உபயோகிக்கி தொடங்கியிருந்தார்கள்.

ஐபாட் என்ற கருவிகளில் பாடல்களை கேட்பதற்காக உருவாக்கப்பட்ட சமயம் அது. பலருக்கும் தனியாக ஐபாட் கருவியை வாங்குகிற வசதியும் நிலைமையும் வந்திக்கவில்லை. இந்த வசதி போனில் வந்ததும் பாடல்களை போனில் தரவிறக்கம் செய்து அதை மீண்டும் மீண்டும் கேட்கிற வாய்ப்பை போன்கள் எளிதாக்கியதால் பலரும் தங்களுக்குப் பிடித்த பாடல்களை திரும்பத் திரும்ப கேட்டு மகிழ்ந்தார்கள்.
இந்த ஹெட்போன்களில் பாட்டு கேட்கிற வழக்கத்தோடு அந்த ஹெட்போன்கள் வழியாக காதில் மாட்டிக்கொண்டு பயணங்களின் சமயத்திலும் குறைந்தபட்சம் நடந்துபோகும்போதுகூட அதில் வருகிற போனை அப்படியே ஒரு பட்டனை அழுத்தி பேசலாம் என்ற தொழில்நுட்பம் வந்ததும் பலரும் அப்படி பேச பழகினார்கள்.

இந்த சமயங்களில் தெருக்களில் பலரும் தனக்கு தானாக பேசிக்கொண்டு போவதைப் போல இருந்ததைக் கண்டு இது அறியாதவர்கள் பாவம் இந்தப் பிள்ளை தனக்குத் தானே பேசிக்கொண்டு போகிறதே எனப் பச்சாதாபப் பட்டார்கள்.
அடுத்த கட்டமாக போனில் வீடியா இணைப்பும் வந்தது. இதனால் எந்த ஒரு நிகழ்வையும் உடனுக்குடன் தங்களது போனில் பதிவு செய்து கொள்வதும் அதை தேவையான இடங்களில் மறுபடியும் இயக்கிப் பார்த்துக்கொள்ளவும் வசதியாக இருக்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் இணைய வசதிகளால் தாங்கள் விரும்புகிற சினிமாக்கள் மற்றும் குறும்படங்கள் மற்றும் பட்டிமன்றஙகள் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்களின் உரைகளை வீடியோக்களில் கேட்கவும் பார்க்கவும் தொடங்கியிருந்தார்கள்.

குறிப்பாக சினிமாக்களை இணையதளங்களின் வழியாக தரவிறக்கம் செய்து பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். பயணங்களின் சமயங்களில் உங்கள் பக்கத்து இருக்கையில் குறிப்பாக யாராவது ஒரு இளைஞரோ அல்லது இளைஞியோ இருந்தால் நிச்யமாக அவர்கள் போனில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிப்பதையும் அதை அவர்கள் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.
இந்த வீடியோவின் தொழில் நுட்பத்தால் நிறைய பாலியல் இணையங்களிலிருந்து பாலியல் சார்ந்த வீடியோ படங்களும் தரவிறக்கம் செய்து பார்க்கிற கலாச்சாரம் ஒன்று உருவானது.

அதாவது எண்பதுகள் வரை அல்லது தொன்னூறுகளின் இறுதிவரை ஏன் இரண்டாயிரத்தில்கூட பாலியில் விஷயங்களை அச்சிட்ட புத்தகங்கள் குறிப்பாக தமிழில் சரோஜாதேவியின் புத்தகங்கள் தான் ரகசியமாக இளைஞர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.ஆனால் போனில் வீடியோ என்ற தொழில்நுட்பம் சரளமானவுடன் பாலியல் படங்கள் போன்களில் தாரளமாக தரவிறக்கம் செய்யப்பட்டு பார்க்கப்பட்டன.இதில் ஆண்கள் பெண்கள் என்ற போதமில்லாமல் சமத்துவம் ஒன்று உருவாகிவந்திருந்தது.
இந்த பாலியல் சமாச்சாரங்களில் எப்போதும் நடிகைகளின் பெயர்கள் தாங்கிய படங்கள் அதிகமாக பரவ தொடங்கியிருந்தன.

அவற்றை அதிகமாக தரவிறக்கம் செய்வதும் நண்பர்களோடு அதை பகிர்ந்துகொள்வதும் நடைமுறையாக இருந்தன. சினிமாக்களில் அப்போது நடித்துக்கொண்டிருக்கிற அல்லது முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிற பெரும்பாலான நடிகைகளின் இந்த வகையான பாலியல் படங்கள் அதிகமாக இணையதளங்களில் இருந்த போன்களில் தரவிறக்கம் செய்து பார்க்கப்பட்டன.
வழக்கம்போல அந்த நடிகையின் படம் அல்ல இது எனவும் இது முழுகக முழுக்க தொழில்நுட்ப ரீதியாக மார்பிங் செய்து அந்த நடிகையின் பிரபலத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன என ஒரு சாரரும் இன்னொரு சாரர் இல்லை இல்லை அந்த நடிகையே நடித்த படம்தான் எனவும் தங்களுக்குள் வாத பிரதிவாதங்களை செய்து கொண்டே உற்சாகமாக பார்த்து வந்தார்கள்.

செல்போன்களில் கால்குலேட்டர் மற்றும் டார்ச் மற்றும் கேமிரா மற்றும் ஆடியோ , வீடியோ என வந்ததும் அடுத்ததாக இணைய இணைப்புள்ள போன்கள் வரத் தொடங்கின. இவற்றை உபயோகித்து மெயில்களை அனுப்புவதும் இணையத்தில் தங்களுக்கு தேவையான தகவல்களை எடுத்துக்கொள்ளவும் மக்கள் பழகிக்கொண்டார்கள்.

இந்த சமயங்களில் இணையத்தின் வளர்ச்சி அபாரமாக வளர்ச்சியடைந்து வந்தவாறேயிருந்தது. ஜிமெயில் என ஒரு புதிய நிறுவனம் 10 ஜிபி நினைவத்தை ஒவ்வொரு இமெயில் உபயோகிப்பாளருக்கும் இலவசமாக வழங்கத் தொடங்கியிருந்தது.

அதுவரை யாஹீ நிறுவனத்திலிருந்துமெயிலை பயன்படுத்தியவர்கள் மெதுவாக இங்கே இடம் பெயர்ந்தார்கள்,அப்போதுதான் சமூக ஊடகங்களான டிவிட்டர் பயன்பாட்டிற்கு வந்திருந்தது. இதுவும் பெரிள ஆட்கள் பயன்படுத்துகிற வகையில் இருப்பதாகவும் 140 எழுத்துருக்களில் எழுத வேண்டும் எனவும் நிபந்தனைகள் இருந்ததும் அதன் உபயோகம் ஒரு குறிப்பிட்ட சதவீகிதத்தினரே பயன்பாட்டில் வைத்திருந்தார்கள்,
இந்த சமயத்தில்தான் பேஸ்புக் என்ற சமூக ஊடகம் பயன்பாட்டிற்கு வந்தது. 5000 பேர் வரை நண்பர்களை இணைத்துக்கொள்ளவும் விரும்பியவகையில் படங்களை இணைத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும் எளிதாக இருந்தது. இந்த விஷயங்களை பயன்படுத்துகிற வகையில் செல்போன்களில் ஆண்ராய்டு என்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்திய போன்கள் மார்கெட்டில் விற்பனைக்கு வரத் தொடங்கின. இதனால் புதுப்புது போன்கள் மார்கெட்டில் வரத்தொடங்கின.

அதன் பயன்பாட்டின் எல்லைகளும் விரிந்தவாறே இருந்தன. இதற்கும் சில மாதங்களில் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசன் தளத்தில் ஆர்டர்களை போட்டு பொருட்களை வாங்கும் ஆன்விற்பனை நிலையங்களைப் போலவே இந்தியாவில் ப்ளிப்கார்ட் என்ற நிறுவனம் தன் எல்லைகளை விரிப்பதற்கும் இந்த செல்போன்களின் வழியாக சாத்தியங்கள் உருவானது.இதனால் இரண்டு வகையினருக்கும் பயனானதாக மாறியது.
டிவிட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,வைபர்,லிங்டன், என சமூக ஊடகங்களின் எண்ணிக்கையும் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கியிருந்தன.

அமேசன் ப்ளிப்கார்ட்,ஸ்னப்டீல் என இணைய தளங்களின் வழியாக பொருட்களை விற்பனை செய்கிற தளங்களும் பெருகின. இணைய தளங்களின் வழியாக தினசரிகளை வாசிப்பதும், பருவ மாத இதழ்களை வாசிக்கிற வழக்கங்களும் செல்போன்கள் எளிதாக்கின. ஒரு தகவல் அது அறிவியல் அல்லது அரசியல் அல்லது பொருளாதார அல்லது அறிவியல் அல்லது உலகின் எல்லா விஷயங்
களையும் இணையத்தில் தேடி வாசிப்பது எளிமையாக்கியிருக்கிறது செல்போன்கள்.

இப்போது செல்பி என தற்படங்களை எடுத்துக்கொள்வதற்காக செல்போனின் முன்னால் ஒரு கேமிராவும் பின்னால் ஒரு கேமிராவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார்கள்

இந்த செல்பி மோகம் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந் ஆபத்தான காட்சிகளை செல்பியாக எடுக்கிற த்ரில்லால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கின்றன.

சமீபமாக இந்தியாவில் செல்பி மரணங்கள் அதிகரித்து அதிகரித்து உலகளவில் முதலிடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது

சமீபகாலத்தில் வாட்ஸ்அப் என்ற சமூக ஊடகம் பேஸ்புக்கைவிட எளிதான பயன்பாட்டில் மக்களுக்குப் பயன்படுகிற வகையில் இருப்பதால் மக்கள் அதைப் பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.

இதனால் மக்கள் பல விஷயங்களை உடனுக்குடன் வாட்ஸ்அப்பில் போடுவதால் அது பலரையும் ஈர்த்துள்ளது. தீ போன்ற வேகத்தில் நாடெங்கும் பரவிவருகின்றது. பல அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களில் நடந்த விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. பல நூற்றாண்டுகளாக மனிதன் காணாத வளர்ச்சியை இந்த செல்போன்களின் வளர்ச்சி ஒரு தசம ஆண்டுகளில் சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

செல்போன்கள் தகவல் தொடர்புகளை பெருமளவில் எளிமையான பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதன் பரிணமா வளர்ச்சியை பல மடங்கு சாத்தியமாக்கியுள்ளது. அதே சமயத்தில் தனி மனிதனின் அந்தரங்க விஷயங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாக பரப்பிக்கொண்டு வருகின்றன. இந்த அதீத பயன்பாட்டினால் போனை எந்தளவிற்கு பயன்படுத்துவது என்பது சாதரண மனிதர்களால் ஒரு கட்டுக்குள் பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் வினுப்ரியா என்ற பெண்ணின் தற்கொலைகளும் தற்படங்களால் நிகழ்கிற சாவுகளும் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி கேட்கிற பலிகள்.

விஞ்ஞானத்தின் தினசரி வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் நடந்த சமூக மாற்றத்தில் பெருமளவு எல்லா வகையிலும் வளர்ச்சிகளை கொடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் போன் என்பது ஆடம்பரமானதாக இருந்தது போய் ஒரு கட்டத்தில் வீட்டிற்கு ஒருவர் பயன்படுத்துவதாக மாறி இப்போது வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனியாக பயன்படுத்தினார்கள். இப்போது அதுவும் மாறி ஒவ்வொருவரும் இரண்டு மூன்று போன்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அவ்வப்போதைய கட்டண அறிவுப்புகளுக்கேற்ப தங்களது பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்கிற வகையில் புத்திசாலிகளை உருவாக்கியிருக்கிறது சூழல்.

சாதரண போன்களிலிருந்து இன்று போன்கள் மற்றும் அதன் இணைப்புகள் இந்தியாவில் 2 ஜி 3 ஜி என வளர்ந்து இப்போது 4 ஜி இணைப்புகள் என விஞ்ஞானம் வளர்ந்துள்ளது ( இப்போது அமெரிக்காவில் 5 ஜி இணைப்புகள் நடைமுறையில் உள்ளன )

இப்படி போன்களில் தினசரி புதுப்புது தொழில்நுட்பங்களை கொண்டு வருவதால் பொதுமக்களும் தங்களது வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப போன்களையும் தங்களையும் மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள்
இந்தக் கட்டுரை எழுதுகிற சமயத்தில் லேட்டஸ்டாக வந்துள்ள போனை என் மகன் வாங்கியிருக்கிறான். அதில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதுவரை ஆண்டராய்டு போன்களில் செக்யூரிட்டி லாக்காக பயன்பாட்டிலிருந்ததன் அடுத்த கட்ட வளர்ச்சியாக இந்த பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளார்கள், உங்கள் கைரேகையை போனின் ஒரு இடத்தில் வைத்து ஒவ்வொருமுறையும் பயன்படுத்தினால்தான் அந்த லாக் திறந்து போனில் உள்ளே நீங்கள் நுழைய முடியும்.

இன்னும் இன்னும் எத்தனை சாத்தியங்களும் தேவைகளும் உருவாக வேண்டுமோ அதற்கேற்ப போன்களும் தன்னை விரித்துக்கொண்டே போகும் . சாத்தியங்களின் எல்லைகளும மனித தேவைகளின் எல்லைகளும் விரிந்தவாறே இருப்பதால் நாளைய போன்களைப் பற்றி இன்று கற்பனை செய்துகூட முன்கூட்டியே சொல்ல முடியாத வகையில் இருப்பதுதான் இன்றைய யதார்த்தம்.
ஒரு காலகட்டத்தில் எட்ட கனியாக இருந்த தொலைபேசிதான் இன்று உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மனித வாழ்வை நெருக்கமானதாகவும் நெருக்கடி மிகுந்ததாகவும் ஒரே சமயத்தில் மாற்றுகிறதாக அமைந்துள்ளன.

நிலவிற்குத் தெரியும் / மலையாளம் மூலம் : சாராஜோசஃப் / ஆங்கிலம் : ஜே.தேவிகா / தமிழில் : தி.இரா.மீனா

download (9)

சாராஜோசஃப்[1946 ] மலையாளமொழி சிறுகதை மற்றும் நாவலாசிரியர். நாற்பதுஆண்டுகளாக எழுதிவருபவர்.பெண்ணியவாதி.சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம்,ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம் ,மனசிலே தீமாத்ரம் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.இச்சிறுகதை ‘நிலவு அறியுன்னு’ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.தன் எழுத்தையும், எழுத்தாளர்களைக் குறித்த பார்வையையும்” For me politics is the tool to analyze life, to give it a perspective. If you exclude your politics from your writing, what will be left is a heap of lies. I believe writings that have a politics is will last. Scratch a little deeper, you will find the politics of each writer”என்று வெளிப் படுத்துகிறார்.

••

நிலவிற்குத் தெரியும்

தங்கமணி கண்முழித்துப் பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்திலில்லை .அவன் பாத்ரூமில் இருக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.ஆனால் அமைதி கனமாக இருந்தது;முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை.தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப் படியின் முகப்புக்கதவும் திறந்துகிடந்தது.கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்.;மூச்சிறைத்தது அவள் திணறினாள்..

பழைய மரமாடிப்படி சத்தம் ஏற்படுத்தியது.பெரியதாத்தா விழித்துக்கொண் டார்.

“தங்கமணி..’ மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார்.

“அவர் அறையில் இல்லை…”தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது.

வீடு முழுவதும் லைட் போடப்பட்டது!சந்திரனும்,சேகரனும் விழித்துக்கொண் டனர்.முன்வாசலில் பலமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தனும்,மொய்துட்டியும் கூட விழித்துக்கொண்டனர்.

எங்கும் டார்ச் லைட்டுகளும், கைவிளக்குகளும் ஒளிர்ந்தன.

“தங்கமணி…”உன்னிகிருஷ்ணனின் அம்மா பலவீனமான நடையோடு தென் பகுதி இருட்டிலிருந்து தட்டுத்தடுமாறி வந்தாள்.கண் பார்வையை கூர்மைப் படுத்திக்கொள்ள சிறிது நின்றாள்.காது சிறிதும் கேட்பதில்லை.

எதையோ அறிந்தவள்போல “தங்கமணி!நீ கீழே விழுந்துவிட்டாயா?”என்று கேட்டாள்.தங்கமணி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டுபடியிலிருந்து இறங்கி வந்தாள்.

நிலா வெளிச்சம் குளத்தைப் பிரகாசப்படுத்தியது.உன்னிகிருஷ்ணன் கத்திக் கொண்டே நடந்தான்.அந்த ஓடை எங்கே போனது?மாலயில் கூட சந்தோஷ மாக அதில் குளித்தானே!யார் அதை மறையச்செய்தது?சிறிதுநேரம் தூங்கி விட்டு வருவதற்குள்ளாக அது காய்ந்துவிட்டதா?

முடியவில்லை..முடியவில்லை..தண்ணீர் இல்லாமல் என்ன செய்வது?சேறு ..எங்கும்.

நிலாவின் வெளிச்சத்தில் கானல்நீரைத் தேடிஓடினான்.அங்கு தண்ணீரில்லை .நிலா வெளிச்ச்சம் மட்டும்..அவன் தொய்ந்து நடந்தான்.இலக்கு இல்லாமல் காலை இழுத்துக் கொண்டு ஆற்றின் கரையில் இங்குமங்குமாக ஓடினான்.பயம் கோரைப்பல்லாக சதையைத் துளைத்து மேலே மேலே இழுத்துக் கொண்டு போனது.

’உன்னி கிருஷ்ணா..ஏய்..!”

வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்

ஏய்..ஏய்..

இரவுப் பறவைகள் பதிலுக்குக் குரல் கொடுத்தன.

“என்ன.. சத்தம் அது, தங்கமணி?”

உன்னிகிருஷ்ணனின் தாய் கழுத்தை வெளியே நீட்டி கஷ்டப்பட்டுப் பார்த் தாள்.

தங்கமணி போர்டிகோவிலிருந்து வெளிவாசல் முற்றத்திற்குப் போனாள் டார்ச்சுகளும் ,விளக்குகளும் வீடு முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பின.

“கிணற்றின் அருகே பாருங்கள்” என்று சேகரன் கூப்பிட்டார்.

தங்கமணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கிணற்றின் அருகே போயிருப் பாரோ? அதற்கு கைப்பிடிச்சுவர் கூடக் கிடையாது. மிக ஆழமானதும் கூட.

குழிபோல இருந்த ஆழத்தைநோக்கி டார்ச்சுகள் அடிக்கப்பட்டன.தங்கமணி நடுங்கினாள்.கிணற்றுத்தண்ணீர் கருப்பாக இரக்கமின்றி ,அசைவின்றி இருந்தது.நிலா வெளிச்சம் அதன்மீது பட்டுச் சிரித்த்து.

“இல்லை, அவன் இங்கிருப்பதாகத் தெரியவில்லை”

“எங்கே போயிருப்பான்?ஐயோ கடவுளே!”

வீட்டைச் சுற்றிலும் ஒளிர்ந்த டார்ச்சுகள் ஆற்றை நோக்கி நகர்ந்தன.

“தங்கமணி,உள்ளே வா” பெரியமாமா கூப்பிட்டார்.தங்கமணி போர்ட்டிகோ பகுதிக்கு வந்தாள்.

“தங்கமணி எங்கேயிருக்கிறாய்?”உன்னிகிருஷ்ணனின் அம்மா கதவரு வந்து கேட்டாள்.தங்கமணியின் நிழல் அவள் தெளிவற்ற பார்வையை மேலும் மறைத்தது.

வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நடுஇரவில் வெளியே இருக்கி றாயா?

போர்ட்டிகோவின் தூணில் அவள் சாய்ந்துநின்றபோது டார்ச்சுகளின் ஒளி ஆற்றின் மீது பரவுவது தெரிந்தது.பின்பு அவைகளின் வெளிச்சம் வேறுவேறு பகுதிகளில்பட்டு அசைந்தது.அதுஅரக்கர்கள் தம் கண்களால் ஆற்றின் எல்லாப் பகுதிகளிலும் பயமுறுத்துவது போல மோதிப் பரவியது. பம்பாயில் இருந்த வரை உன்னி பக்கத்தில் படுக்கையில் இல்லையென்றால் பாத்ரூமில்தான் இருப்பான் என்று அவளுக்கு உறுதியாகத்தெரியும்.சாத்தி வைக்கப்பட்ட சிறிய அறை,பாத்ரூம் என்ற இரண்டு அறைகளில்தான் அவள் தேடவேண்டியதிருக் கும்.பாத்ரூம் ஷவரில் உடம்பு முழுவதையும் நனைத்துக்கொண்டு உன்னி நிற்பான்;அவள் ஊகம் தவறியதில்லை.தன்கைகளை அவள் முன்னால் நீட்டிக் கொண்டு குழப்பத்தோடு“இப்போது ..பார், தங்கமணி உண்மையாகவே என் கைகள் மிகச் சுத்தமாக இருக்கிறதல்லவா?என்று கேட்பான்.

செத்த மீன் ஆற்றில் மிதப்பதுபோல வெளிறி.ஊறியிருக்கும் அவன்கைகளை மடக்கி பாத்ரூமிலிருந்து வெளியே அழைத்துவருவாள்.

“தெரியுமா உனக்கு?இந்த இடம் இன்னும் பாட்டனார்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடம்… வா ..உள்ளே வந்துவிடு!’

உன்னியின் தாய் தன் சில்லிட்ட கையை நீட்டித் தங்கமணியைத் தொட்டாள். அவள் வயிற்றில் உன்னியின் குழந்தை அசைந்தது.

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு போன உன்னிகிருத்ணன் ,பல மைல்கள் தொலைவிலிருந்த ஓடையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான்.

“தண் ணீர்..தண் ணீர் எல்லா வற்றுக்கும்.. தேவை ஆனது.. தண் ணீர் இல்லா விட்டால் ஒன்றும் செய்ய முடி யாது”.

அவன் பாதங்கள் மண்ணில் புதைந்தன. ஒருவிதப் பதட்டம் ஏற்பட்டது.உடம்பு இறுகியது.தண்ணீர் தாகம் வாட்டியது.தண்ணீருக்கு அலையும் பித்துப் பிடித்த நாய் போல.. தண்ணீர் தாகம் அவனை வாட்டியது

உறவினர்கள் ஆற்றின் கிழக்கு திசையில் ஒளியைப் படரவிட்டுத் தேடிக் கொண்டிருந்தனர்.

“இது தண்ணீர்பிசாசின் வேலைதான்.ஒரு சந்தேகமுமில்லை” பெரியமாமா சோகமாகச் சொன்னார்.”தண்ணீர்ப் பிசாசு நம் குடும்பத்தின் சாபமில்லையா?” அவர் முகம்இறுகியது.

சங்குண்ணி மாமாவின் வெண்கலப் பாத்திரத்தில் காற்று பரவியது.

கங்கேச யமுனேச்சைவ

கோதாவரி சரஸ்வதி

நர்மதே சிந்து காவேரி

ஜலஸ்மின் சந்நிதிம் குரு…”

நாரணி,என் பாத்திரம் எங்கே?

சங்குண்ணி மாமா பதட்டத்தோடு வீட்டைச் சுற்றியோடினார்.பாத்திரத்தில் இல்லாத தண்ணீரை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண் டிருந்தார்.

கங்கே ச யமுனேச் சைவ..

சங்குண்ணி மாமா முணுமுணுத்துக் களைப்பானார்.

சுட்டெரிக்கும் வெயிலில் ஆற்றுமணல் கொதித்துக் கிடந்தது. கண்ணுக் கெட் டிய தூரம் வரையில் வெள்ளைமணல் விட்டுவிட்டு பிரகாசித்தது

சங்குண்ணிமாமா ஆற்றை நோக்கி பித்துப் பிடித்தவர் போல ஓடிக்கொண் டிருந்தார்.

கங்கே ச..

காற்று வேகமாக அடித்து மண்ணைக்கிளப்பி அவரை அணைத்துக்கொண்டது. சங்குண்ணிமாமா வெறிபிடித்தவர் போல ஆடிக்கொண்டிருந்தார்.காவடியாகத் தன்னை மறந்து ஆடிஆடிக் கீழே விழுந்தார். சுட்டெரிக்கும் மண்பூக்கள் அவர் தோளைத்தழுவின.தகிக்கும் மணலுக்குள் சங்குண்ணி மாமா புதைந்து மறைந்து போனார்.

அவரைத் தேடிப் போனவர்கள் மண்ணின் மேலே தெரிந்த இடதுஉள்ளங் கை யைப்பார்த்து அடையாளம் கண்டுகொண்டார்கள்.

காற்று இன்னமும் தண்ணீர் ஊற்றும் பாத்திரச்சப்தத்தின் ஒலியோடு கலந்தி ருந்தது.

பெரியமாமாவின் உடல் நடுங்கியது.

’உன்னிகிருஷ்ணன் சங்குண்ணி மாமாவைத் தொடர்கிறான்”

அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ஆனால் அவனுக்கு அவ்வளவு வயதாகவில்லையே.. அல்லது.. ?

“ஆனால். தண்ணீர்ப் பிசாசால் இறந்தவர்கள் எல்லோரும் எண்பது ,தொண் ணூறு வயதானவர்கள்.ஆனால் உன்னிகிருஷ்ணனுக்கு முப்பதுவயதுகூட ஆகவில்லையே?அவன் பம்பாய்க்குப் போனபோது அவனுக்கு இருபத்து நான்குவயது. தங்கமணியை அவன் கல்யாணம் செய்துகொண்டபோது இருபத்தியெட்டுவயதுதான்.”என்று யாரோ சொன்னார்கள்.

பம்பாயில் என்ன ஆனதோ தெரியவில்லை?எதையாவது பார்த்து பயந்து விட் டானோ?சந்தேகமில்லை..சந்தேகமில்லை!அவன் முகம் எப்போதும் பயந்த மாதிரியே இருந்தது.சரியா?அவன்.. இல்லை!உன்னிகிருஷ்ணன் பயந்தாங் கொள்ளியில்லை.இளைஞனாக இருந்தபோது இப்படியில்லை. கல்லூரி நாட் களில் நடுராவில் தனியாக வருவான்.இருட்டில் இந்த ஆற்றின்வழியாக தனி யாக வந்திருக்கிறான்!தூக்கம்வராத பல இரவுகளில் எத்தனை நாட்கள் இந்த மண்ணில் படுத்திருக்கிறான்?அவன் தலைக்கருகே எத்தனை புகைத்த பீடிக் கட்டுகள் கிடந்திருக்கின்றன!

ஆனால்..

உன்னிகிருஷ்ணன் பயப்படுவான்!தங்கமணிக்கு அது ஞாபகமிருக்கிறது.வீட்டை விட்டு வெளியேவரவே பயப்படுவான்.எங்கு பார்த்தாலும் இரத்தம்.. அப்படித் தான்ல்வ் சொல்வான் தெருவோரங்கள், சாலைகள், தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள்,பஸ்கள்,..எல்லா இடங்களிலும் இரத்தம்…காலைக் கீழே வைக் காதே!கீழே பார்க்காதே!என்று சொல்வான்

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே பாத்ரூமிற்குள் ஓடுவான். கால் கள் சுத்தமாக இல்லை என்று பாத்ரூமிலிருக்கிற துவைக்கும் கல்லில் தோல் கிழியும் அளவுக்கு மணிக்கணக்காக கால்களைத் தேய்த்து தேய்த்துக் கழுவு வான்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?வெளியே வாருங்கள்”

பாத்ரூமிலிருந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே கூட்டி வரும்போது அவன்முகம் பயத்தில் உறைந்திருக்கும்.அந்தக் கையாலாகாத முகபாவம்.தனக்குள் அவன் பேசிக்கொண்ட விதம்…

“துர்நாற்றம்.. அப்படி ஒருநாற்றம் தங்கமணி!”

“அப்படி ஒருநாற்றமும் இல்லையே. உங்கள் கற்பனை அவ்வளவுதான்”.

’இல்லை.. ஒன்றுமேயில்லை என்கிறாயா?”

அவன் அவளை அந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் கீழே இழுத்துக் கொண்டு போனான். மாடிப்படிகளில்.முன்பகுதியில்,போக்குவரத்துச்சாலையில்,.. தங்க மணிக்கும் கூட இரத்தமழை உணர்வால் குமட்டல் வந்தது.

டார்ச் லைட்டுகள் அணைந்து விட்டன.”கவலைப்பட வேண்டாம்”பெரியமாமா சொன்னார்.மின்சாரவிளக்குகளைப் பயன்படுத்தலாம் என்றார். ஆற்றில் நடக்கும்போது யாருக்கு லைட் வேண்டும்?

நிலாவின் பால்ஒளி வரண்ட ஆற்று மணலின்மீது பட்டு மின்னியது.யாரும் கண்ணில் தென்படவில்லை இங்குமங்குமாக சில செடிகளும், சில பசுக்க ளும் சிலைபோலக் கண்ணில் பட்டன.

தேடுபவர்களில் சிலருக்கு சந்தேகம் எழுந்தது.உன்னிகிருஷ்ணன் இவ்வளவு தூரம் வந்திருப்பானா?அவன் தண்ணீரின்மேல் பிரமையுள்ளவன். தண்ணீரில் லாத ஆற்றில் திரியவருவானா?வேறு இடத்திற்குப் போய்த் தேடலாமா?

பெரியமாமா ஒப்புக் கொள்ளவில்லை.”உங்களுக்கு அவனைப்பற்றித் தெரியாது இந்த ஆறுதான் அவனுக்கு எல்லாமும்.அவன் இங்குதான் இருப்பான்” என்று அவர் முன்னால் நடந்து கொண்டே சொன்னார்.

உன்னிகிருஷ்ணனின் தாய் கையில் விளக்கோடு போர்ட்டிகோவிற்கு வந்தாள்.

கண்ணாடியால் மூடப்பட்டிருந்த அந்த விளக்கின் சிவப்பொளி விம்மிற்று.

“எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்,தங்கமணி?யாரையும்காணவில்லையே.

பதில் எதுவுல்லை.தங்கமணியின் நிழலசைந்தது இன்னமும் போர்ட்டிகோ தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“தங்கமணி, நீயா?”

காலை நீட்டிஉட்கார்ந்தபடி நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள்.உன்னிகிருஷ்ணன் சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு போகவில்லையா”

“என்ன இது?சாப்பாட்டை எங்கே எடுத்துக் கொண்டு போகிறீர்கள்?”

உன்னிகிருஷ்ணன் பயந்து விட்டான்.குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக ”இது எல்லாம் விஷம் தங்கமணி…அரிசி,காய்கறிகளை எல்லாம் நம்பக் கூடாது…”

“நான்தான் சமைத்தேன். என்னையும் நம்பமாட்டீர்களா?”

“இல்லை.தங்கமணி.. விஷம் அரிசிக்குள் இருக்கிறது!உன் சாப்பாட்டையும் இங்கு எடுத்துக் கொண்டு வா.. அதைக் கழுவி விட்டுச் சாப்பிடு…”

சாதம் பாத்ரூம் தரைமுழுவதும் கொட்டிக்கிடந்தது.தங்கமணி தனக்குள் பல நாட்களாக அடக்கிவைத்திருந்த உணர்வுகள் ஓர் அலறலாக வெளியே வந் தது.துக்கம் நிறைந்தவனாகத் தெரிந்த அவனதுதோற்றம் கண்களில் கண்ணீ ரைப் பெருக்கியது. அது சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தட்டில் விழுந்தது.

உன்னிகிருஷ்ணனின் தாயின் கண்கள் இருட்டைப் பார்த்து வெறுமையானது.

“இப்போது மணி என்ன?”

தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியாமல் அவள் இருட்டிடம் கேட்டாள். பிறகு அவள் மெதுவாக நடந்து தென்கோடி அறைக்குள் போனாள்.

திடீரென்று மின்சாரம் பாய்ந்ததைப்போல உன்னிகிருஷ்ணன் தன் காலில் குளிர்ச்சியை உணர்ந்தான்.ஈரமான மண்ணிலிருந்து எழுந்த குளிர்ச்சி அவன் நெற்றிவரை பாய்ந்தது.உன்னிகிருஷ்ணன் தரையில் உட்கார்ந்தான்.தன் உள்ளங்கையில் மண்ணை எடுத்து அதை முகர்ந்தான்.புதிய ஆற்றுநீரின் மணம்!

ஒரு விநாடிகூட யோசிக்காமல் அவன் மண்ணைத் தோண்டத் தொடங்கி னான்.ஆழமாக ஆற்றுமண்ணைத் தோண்டும்போது ஒரு குழந்தையைப் போல உணர்ந்தான்.சந்தோஷத்தில் பெரிதாகக் குரல் கொடுத்தான்.ஆற்றின் மறுகரையிலிருந்த அவன் நண்பர்கள் மகிழ்ச்சியாக எதிர்க்குரல் கொடுத்து அவனை அழைத்தனர்.அவர்கள் டார்ச்சுகளோடும்,விளக்குகளோடும் அவனை நோக்கி ஓடிவருவதைப் பார்த்தான்.மிகுதியான சந்தோஷத்தில் ஆழமாகத் தோண்டினான்.இரண்டு புறங்களில் இருந்தும் வேகவேகமாக சிறிய அளவில் குவியல் உருவானது.இரவுப் பறவைகள் ஒலியோடு தாழ்வாகப் பறந்தன.

வழிதவறிய கால்நடை அவன் பின்னால் பொறுமையாகக் காத்துக் கொண் டிருந்தது.பரவியிருந்த வரண்ட கருக்காச்செடி அவன் காலைச் சுற்றிப் பின்னி யது.மகிழ்ச்சியான மனதோடு உன்னி தன் வெற்றுக் கைகளால் தண்ணீர் எடுத் தான்.நிலா வெளிச்சம் அவனுடைய உள்ளங்கைகளில் விழுந்து சிரித்தது.

தங்கமணி கையில் லாந்தர்விளக்கோடு தனியாக கிணற்றினருகே போனாள். நிலாவெளிச்சம் கிணற்றில் விழுந்து பொருமியது.தண்ணீர்ப் பிசாசினால் அழிந்தவர்களின் ஆத்மாக்கள் நிலாவெளிச்சத்தில் கிணற்றில் தெரிந்தன.

“அப்படியானால் நீங்கள் எங்களைச் சோதிக்கிறீர்கள்?’அவள் சோகமாகக் கேட் டாள்.

வீட்டிற்குப் போக வேண்டும்.நம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதில் குளிக்கவேண்டும்.அந்தக் கிணற்றின் அடிப்பகுதி உறுதியான நெல்லிமரத்தா லானது.எங்களின் முன்னோர்கள் மரத்தை வெட்டி மதில்சுவராகக் கட்டினார் கள். அங்கு அவ்வளவு சுத்தமான தண்ணீர்—உள்ளேயும் வெளியும் குளிர்ச்சி யாக இருக்கும்..நாம் போகலாம் தங்கமணி,நாம் திரும்பிப் போய் விடலாம். அவன் மிகவும் பிடிவாதமாக இருந்ததால்தானே அவனைஅழைத்துக் கொண்டு வந்தேன்.? இப்போது ?நீ என்ன செய்திருக்கிறாய்?

ஆத்மாக்கள் பேசாமல் நின்றன.தங்கமணி விம்மியழுதாள்.அந்த லாந்தர் விளக்கிலிருந்து கடைசியாக ஜூவாலை வந்து அணைந்தது.உன்னிகிருஷ்ண னின் குழந்தை துன்பத்தில் புழுவாய் நெளிந்தது.தங்கமணி அசைந்த வயிற் றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுப் பகுதியைவிட்டு ஓடினாள்.அவளுக்குப் பின்னால் அவை சிரித்தன.

உன்னிகிருஷ்ணனின் அம்மா தென்கோடிஅறையிலிருந்து முற்றத்துக்கு வந்து அமைதியாகக் கல் போல நின்றாள்.

“எனக்கு எதுவுமே புரியவில்லை’.

முயற்சி செய்தும் அவளால் தங்கமணியின் நிழலை பார்க்கமுடியவில்லை.

“தங்கமணி,இது எத்தனையாவது மாதம்?”

தங்கமணி பதில் சொல்லவில்லை.அவள் தன் இடுப்பு ஆடைப்பகுதியைச் சிறிது தளர்த்தி வயிற்றைத் தடவிக் கொண்டாள்.அது உன்னிகிருஷ்ணனின் கனவை வருடுவதாக இருந்தது.

எந்த பதிலும் கிடைக்காததால் உன்னிகிருஷ்ணனின் அம்மா சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

கோள்களைச் சோதித்த ஜோசியன் வரப்போகும் அபாயத்தை எச்சரித்திருந் தான் .தண்ணீர்ப் பிசாசுகளும், பாட்டனார்களின் ஆவிகளும் தொல்லை தரலாமென்று.

“இனியும் தாமதிக்கக் கூடாது.நாளைக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்”. பெரிய மாமா சொன்னார்.

“முதலில் நாம் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும்”’

தேடப்போனவர்கள் களைப்படைந்தனர்.

“அவன் எங்கே போகமுடியும்?”

பெரியமாமாவின் குரலெழுந்தது.அவருக்குக் கோபமும் ,வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன.அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும்.!அவர்கள் அபாயமானவர்கள்! ஆறு அல்லது கிணறு, எதுவென்று சொல்ல முடியாது. அவனை எங்கே இழுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை.இது விளையாட்டில்லை.

ஆடிமாதத்தின் கோபமான ஆறு,பருவமழை,ஆகியவை பெரிய மாமாவின் நெஞ்சை அழுத்தின.ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு ..வாழை இலை களில் உணவுபடைக்கும் காட்சிகள்.. ஒற்றை மண்விளக்குகள்.. மெலிதான ஜுவாலையோடு.. தண்ணீரில் மிதந்தபடி துளசி மணமும், மலர் களின் மெலிதான மணமும் இருபுறமும்…

முன்னோர்களே ! எங்களுக்கு உதவுங்களேன்..

பம்பாயிலிருந்து அவர்கள் வந்த நாளில் என்ன நடந்தது?உன்னிகிருஷ்ணன் பூஜை அறையிலிருந்து ராமனின் சிலையையும் அத்யத்ம ராமாயணப் புத்த கத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்றுப்பக்கம் போனான்.கிணற்றினருகேயுள்ள சுவரில் ராமன்சிலையை வைத்தான்.அதைத்துடைத்து வர்ணத்தைச் சுரண்டி னான் ராமாயணப்புத்தகத்தைக் கழுவிச் சுத்தம்செய்ததால் கனமான அட்டை கிழிந்து பக்கங்கள் கிணற்றைச் சுற்றிச்சிதறின.அனைவரும் குழம்பிக் கிணற் றினருகே ஓடியபோது அவன் புனிதப்புத்தகத்தின் கடைசிப்பகுதியைச் சுறு சுறுப்பாகக் கழுவிக்கொண்டிருந்தான்.அப்பாவிக் குழந்தை தவறு செய்துவிட்டு முழிப்பதைப் போல ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தான்.

“இது மிகவும் அழுக்காக இருக்கிறது.கழுவிச்சுத்தம் செய்யவேண்டுமல்லவா?”

சந்திரனும்,சேகரனும் உளவியல் மருத்துவரை அப்போதே பார்க்கவேண்டு மென்று வற்புறுத்தினார்கள்.தங்கமணி ஒரு மலையாளமருத்துவரோடு பம்பா யில் ஆலோசித்திருந்தாள்.”சூழ்நிலைகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்”என்று அவர் ஆலோசனை சொன்னார்.தங்கமணி குழம்பினாள். அவற்றை எப்படித் தவிர்க்கமுடியும்?முக்கியம் கொடுக்காமலிருக்க முடியும்? உன்னிகிருஷ்ணனின் உள்ளுணர்வை, மாயையை எந்தத் தண்ணீரால் கழுவமுடியும்?

சம்பளநாளில் ரூபாய்நோட்டுகள் அனைத்தையும் அவன் கழுவிக் காய வைக் கும் போது அவன் முகத்தில் ஏற்பட்டபாவம் அவன் நிலைமையை அவளுக் குத் தெளிவாகப் புரியவைத்தது.அவளுக்கு முத்தம்கொடுக்கும் போதெல்லாம் பாத்ரூமிற்கு ஓடித் தன்வாயைக் கழுவிக் கொள்ளும்போது அவனுக்குள் ஏற்படும் பயத்தின் ஆழத்தை அவளால் மட்டுமே உணரமுடியும்.எழுத்துக்கள் அசிங்கமாக இருக்கின்றன;அம்மாவிற்கு ஒரு கடிதம்கூட எழுதமுடிய வில்லை.உன்னிகிருஷ்ணன் பேனாவை பலமணிநேரம் கழுவுவான்.அவனைத் தழுவும் காற்று புகையாக மண்ணைத் தூவி,அதிர்வை ஏற்படுத்தும்.உன்னி கிருஷ்ணன் ஜன்னல்கள் ,கதவுகள், எல்லாவற்றையும் சாத்துவான்.தங்கமணி எப்படிச் சூழ்நிலைகளுக்கு முக்கியம் கொடுக்காமல் இதையெல்லாம் தவிர்க்க முடியும்?

திடீரென்று பெரியமாமா ’உன்னிகிருஷ்ணா.. ’என்று பெரிதாக அலறி எல்லோ ரையும் அதிர்ச்சியடையவைத்தார்.அது மறுகரைவரை எதிரொலித்தது.பெரிய மாமா தூரத்தில் உன்னிகிருஷ்ணனைப் பார்த்துவிட்டதைப் போலத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார்.வேகவேகமாக நடந்தார்.நடை ஓட்டமாக மாறியது.

உன்னிகிருஷ்ணனின் பாதங்களை நனைத்தபடி மண்ணூற்று வழியாக தண் ணீர் பரவியது.தண்ணீரைக் கையால் தட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக கத்திக்கொண்டே குதித்தான்.மண்ணும் சந்தோஷத்தில் குளிர்ச்சியான தண் ணீரில் ஊறியது.காய்ந்து கிடந்த புல்லின்மீதும், நின்றிருந்த பசுக்களின்மீதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது.ஆற்றின்மார்பு நிறைந்து வழிந்தது.தெய்வத்தின் பிர சாதம் போல அமிர்த ஓடையாய் வெடித்தது.உன்னிகிருஷ்ணனின் முழங் கால்களைத் தண்ணீர் தொட்டது. இரண்டு பக்கங்களிலுமிருந்த துளைகளிலி ருந்து மண் சரியத்தொடங்கியது .துளை பெரிதானது.ஆற்றின்கீழே அமைதி யான பிரவாகம் இப்போது உன்னியின் பாதத்தில் ஒன்று திரண்டது.அவன் காலின் கீழிருந்த மண் மூழ்கியது.அவன் பாதங்கள் கீழே கீழே.. உன்னி கிருஷ்ணன் சந்தோஷமாக நெஞ்சுவரை வந்துவிட்ட தண்ணீரைத் தட்டினான்.

உன்னிகிருஷ்ணன்….விளக்குகளும், மனிதர்களும் நெருங்கிக்கொண்டிருந்தார் கள்.அவர்கள் நிலவொளியில் மங்கித்தெரிந்தனர்.அவனுக்கு பயம்வந்தது. அவர்கள் ஓடையை அபகரித்துக் கொண்டுவிடுவார்கள்..அவர்கள் ஈரப்பதத் தையும், மென்மையையும் வடித்து விடுவார்கள்.

“இங்கே வராதீர்கள்…”அவன் கத்தினான்.தன் கைகளை விரித்துத் தண்ணீரை அணைத்துக் கொண்டான்.கரையின் முனையும், துளைகளும் இன்னும் சிறிது தண்ணீரைப் பரப்பின.ஆறு,எல்லையற்ற அன்புக்கு அடையாளம்.அவளுடைய இரக்கமான பரிசுகள் அவனை நோக்கிப்பாய்ந்தன;அவை அவன் காலடியில் இணைந்தன.தண்ணீர் கழுத்திற்கு ஏறியது.

’உன்னிகிருஷ்ணா ..மகனே .!யாரோ கூப்பிட்டார்கள்.அம்மாவா அல்லது தங்கமணியா? மக்கள் பெரிதாக அழுதுகொண்டு அவனைநோக்கி ஓடிவந் தார்கள்.அவர்களிடம் டார்ச்சுக்ளும் ,விளக்குமிருந்தன.கூடாது!இந்தத் தண்ணீர் அசுத்தம் அடையக்கூடாது. உன்னிகிருஷ்ணன் தன் இரண்டு தோள்களையும் விரித்துத் தண்ணீரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

பெருங்காற்று வீசியது.அவன் குளிர்ச்சியான இளநீரைக் குடிப்பதுபோல .தாய்ப்பாலைக் குடிப்பதுபோல வாய்நிறையக் குடித்தான்.மீண்டும்..மீண்டும்..

மக்கள் வெளிச்சத்தோடு அந்த இடத்திற்குப் போனபோது அவர்கள் எதையும் பார்க்கவில்லை பகல்நேரத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காகத் தோண் டிய குழியில் நிலாவெளிச்சம் விழுந்து சிரித்தது.

—————

ஜெய்ப்பூரில் பேருந்துலிருந்து பார்த்தது / Al Zolynas poems – தமிழில்: ஆர். சிவகுமார்

download (8)

லித்துவேனியப் பெற்றோர்க்கு 1945இல் ஆஸ்திரியாவில் பிறந்த Al Zolynas சிட்னியிலும் சிகாகோவிலும் வளர்ந்தவர். சமையலறை உதவியாளர், தொழிற்சாலைப் பணியாளர், டாக்சி ஓட்டுநர், சாலைப் பணியாளர் என்று பலவித வேலைகளையும் செய்துள்ளார். Fulbright கல்வி நிதி நல்கையில் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். தற்போது சாண்டியாகோவில் உள்ள Alliant International பல்கலைக் கழகத்தில் இலக்கியம், இலக்கியம் படைத்தல் ஆகியவற்றைப் போதிக்கிறார். ஜென் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்க்கையின் புதிர்த்தன்மையைக் கவிதையில் பதிவுசெய்ய முயல்வதாகச் சொல்லும் இவருடைய படைப்புகள் பரவலாக ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. The New Physics மற்றும் Under Ideal Conditions ஆகியவை இவருடைய கவிதைத் தொகுப்புகள்.

***

ஜெய்ப்பூரில் பேருந்துலிருந்து பார்த்தது

’ஆபரணங்களின் நகர’த்தைவிட்டு அகல இருந்த நேரம்.

முன்காலைப் போக்குவரத்தில் நிறுத்தப்பட்டது பேருந்து.

அசைந்து நகரும் அங்காடி வாழ்க்கைக்கு இடையே

சாலையோரத்துப் புழுதியில் மல்லாந்து படுத்திருக்கும்

ஒரு நிர்வாண மனிதனை நான் பார்க்கிறேன் –

சாதுவா, பிச்சைக்காரனா, அல்லது இரண்டுமா –

ஒரு முழங்கால் நிமிர்ந்து

ஒரு கை கால்களின்மேல் வீசப்பட்டு;

மெதுவாக விழித்தெழுகிறான்

பொருள் வாங்க வருபவர்கள், வேலையாட்கள் என

தன்னைக் கடந்து செல்லும்

யார்மீதும் கவனம் கொள்ளாமல் படுத்திருக்கிறான்.

ஆடை எதையும் அவன் அணிந்திருக்கவில்லை

அவனிடம் போர்வையுமில்லை, தலையணையுமில்லை.

தெருவில் அவன் நிர்வாணமாக இருக்கிறான், தூங்கவும் செய்கிறான்!

நகரும் பொருள்களின் உலகில் முற்றிலும் பாதுகாப்பற்று.

ஒரு புதிய நாளை சுட்டிக்காட்டும்

தன் குறியின் பகுதியளவு விறைப்புடன்

பெருத்த விரைகள் அதை சரிஈடு செய்யப் படுத்திருக்கிறான்.

இது பைத்தியக்காரத்தனமா, முழுநிறைவான நம்பிக்கையா?

அங்கே இருக்கிறது அது, என்னுடைய மற்ற வாழ்க்கை

சட்டைப்பைகள் இல்லாத, சந்திப்புத் திட்டங்கள் இல்லாத,

“எப்படி இருக்கிறேனோ அதுதான் நான்,

எப்படி இருக்கிறேனோ அதுதான் அதன் எல்லாமும்”

என்று பகட்டில்லாமல் சொல்லும் அந்த வாழ்க்கை.

இருந்தும்

என்னுடைய உடைகளுக்குள்ளும் பேருந்துக்குள்ளும்

உட்கார்ந்திருக்கும் நான்

என்னுடைய நம்பிக்கையை மீட்டுக்கொள்கிறேன்:

இன்னும் கொஞ்ச நேரத்தில்

அவன் எழுந்து உணவைத் தேடத் தொடங்க வேண்டியிருக்கும்,

அல்லது அவன் உண்ணாவிரதம் இருந்தால்

மிகக் குறைந்த பட்சம் அவன் தண்ணீரையாவது தேடத் தொடங்க

வேண்டியிருக்கும்

ஆம், நிச்சயமாக அவன்

தண்ணீரையாவது தேடத் தொடங்க வேண்டியிருக்கும்.

@@@@@

வகுப்பறையில் நேசம்

என்னுடைய மாணவர்களுக்கு

பிற்பகல். தோட்டத்துக்கு அப்பால், விடுதியின் கூடத்தில்

யாரோ அந்தப் பழைய பியானோவை வாசிக்கத் தொடங்குகிறார்கள் –

தன்னெழுச்சியான ஒரு உருப்படி.

எளிமையான, களிப்பூட்டும் பண் நிறைந்த உருப்படி

கற்றுக்குட்டித்தனமாகவும் உயிர்ப்புடனும் ஒலிக்கிறது.

வகுப்பறையிலிருக்கும் எங்களுக்கிடையே அந்த இசை மிதக்கிறது.

என்னுடைய மாணவர்களுக்கு முன்னால் நின்றபடி

வாக்கியத்தின் கூறுகள் பற்றி அவர்களுக்கு விளக்குகிறேன்.

பக்கம் நாற்பத்தைந்தில் காணப்படும்

இருபத்தோரு வாக்கியங்கள் கொண்ட பத்தியில்

பத்துக் கூறுகளையும் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் சொல்கிறேன்.

ஈரான், மைக்ரோனேசியா, ஆஃப்ரிக்கா,

ஜப்பான், சீனா என்று உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும்,

லாஸ் ஏஞ்சிலீஸிலிருந்தும்கூட அவர்கள் வந்திருக்கிறார்கள் –

என்னை மகிழ்விக்க அவர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

வகுப்பு தொடங்கி இன்னும் கால் மணி நேரம்கூட ஆகவில்லை.

புத்தகங்கள்மீது குனிந்து அவர்கள் பயிற்சியைத் தொடங்குகிறார்கள்.

ஆங்கில வாக்கிய அமைப்பின் சிக்கலான, குழப்பமூட்டும் பாதையைப்

பின்பற்றும் ஹமீதின் உதடுகள் அசைகின்றன.

கால்மேல் கால்போட்டு யோஷி விரைப்பாக உட்கார்ந்திருக்கிறாள்

நிறைவான, அடக்கமான ஒப்பனையோடு.

பதற்றம் அவளுடைய வலதுகாலை நுட்பமாக வெட்டியிழுக்கிறது.

தெற்கு பசிஃபிக் தீவு ஒன்றிலிருந்து வந்துள்ள டோனி

தன்னுடைய இருக்கையில் கால்களைப் பரப்பி

சௌகரியமாக உட்கார்ந்திருக்கிறான்.

அவ்வப்போது விட்டு விட்டு, துண்டாகி, மீண்டும் தொடங்கி

எங்களைச் சுற்றியும், எங்களுக்கு ஊடாகவும் பண்ணிசை மிதக்கிறது.

மத்தியக் கிழக்கு இசையாகத் தோன்றுகிறது அது.

ஆனால், ஜாஸ் அல்லது ப்ளூஸ் ஆகவும் இருக்கலாம்.

அது எந்தப் பகுதியைச் சேர்ந்த எந்தவகை இசையாகவும் இருக்கலாம்.

காத்திருக்க என்னுடைய இருக்கையில் உட்கார்கிறேன்.

எங்கிருந்தென்றில்லாமல் அது என்னைத் தாக்குகிறது,

எதிர்பாராத, சுவையான, கிட்டத்தட்ட வேதனை தரும் நேசம் அது.

என் மாணவர்கள் மீது எனக்கு உண்டாகும் நேசம்.

“அது கிடக்கட்டும், விடுங்கள்,” என்று கத்திச் சொல்ல விரும்புகிறேன்:

”கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ

வாக்கியத்தின் துண்டுகள் முக்கியமே இல்லை.

ஒவ்வொன்றும் ஒரு துண்டுதான்

ஒவ்வொன்றும் ஒரு துண்டு இல்லையும்தான்.

இசையைக் கேளுங்கள்

எப்படித் துண்டாக, எப்படி முழுமையாக,

பசுந்தாவரங்கள் மீது பரவும் சூரிய ஒளியிலிருந்து பிரிக்க முடியாதபடி,

இந்தக் கணத்திலிருந்து பிரிக்க முடியாதபடி

-நேற்றின் எல்லாத் துண்டுகளையும்

நாளையைப்பற்றி நமக்குத் தெரியப்போகும் எல்லாவற்றையும்

உள்ளடக்கிய இந்தக் கணம்-

அது இருக்கிறது!”

அதற்கு மாறாக, ஒரு கோழையின் மௌனத்தைப் பேணுகிறேன்.

இசை திடீரென்று நின்றுபோகிறது;

அவர்கள் பயிற்சியை முடிக்கிறார்கள்.

நாங்கள் சரியான விடைகளைத் துருவிப் பார்க்கிறோம்.

அதாவது

முழுமையிலிருந்து துண்டுகளைப் பிரித்தெடுக்கிறோம்.

@@@@@

ஒரு மனிதனும் அவனுடைய வாழ்க்கையும்

இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவன்

அவனுடைய வாழ்க்கையின் பக்கம் திரும்புகிறான்.

அதை அணைத்துக்கொள்ள முயல்கிறான்.

எப்போதும்போல அது அவனுடைய பிடியிலிருந்து நழுவி

அவனைப் பார்த்து சிரிக்கிறது.

மூர்க்கத்துடன் அதைத் துரத்துகிறான்,

வெடிக்காத குண்டுகளைப்போல அவனுடைய பாதங்கள் கனத்திருக்கின்றன.

அவனுக்கு முன்னால் அவனுடைய வாழ்க்கை அநாயாசமாக நடனமாடுகிறது.

அதைப் பற்றிக்கொள்ள விரும்புகிறான்,

சிக்கலான சில காலடி வைப்புகள் மூலம்

ஒரு டாங்கோ, ஃபாக்ஸ் ட்ராட், அல்லது மஸூர்க்கா மூலம்

அதை அவன் துய்க்க விரும்புகிறான்.

ஆனால், அது அப்படியான எதையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை

பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு இடுப்பை அசைத்து ஆட்டி

அவனைப் பார்த்து இளிக்க மட்டும் செய்கிறது அது.

*

டாங்கோ: துரிதமான ஒரு தென் அமெரிக்க நடன வகை

ஃபாக்ஸ் ட்ராட்: மெதுவாகவும் துரிதமாகவும் இருவர் சேர்ந்து ஆடும் வட அமெரிக்க நடன வகை

மஸூர்க்கா: 4 அல்லது 8 ஜோடிகளுக்கான துரிதமான போலிஷ் நடன வகை.

@@@@@

வானவில்லும் சில எறும்புகளும் ( அறிமுகப் படைப்பாளி கவிதை ) / சரவண கணேஷ் ( ஆட்டையாம்பட்டி )

images (4)

கிணற்றடியில் அமர்ந்து கொண்டு

நகம் வெட்டிக்கொண்டிருந்தேன்.

யாரோ அழைத்தது போலிருந்தது.

வெட்டியெறிந்த நகங்களை

சுமந்து கொண்டிருந்து எறும்புகளில் ஒன்றுதான்..

எனை விளித்திருக்கவேண்டும்.

குனிந்து பார்த்தேன்..

பார்க்க பார்க்க

நானும் சிறிதாகி சிறிதாகி

எறும்புடன் நிற்கலானேன்

என் பெயர் விளம்பி..

எறும்பின் குரல் என் காதில் கேட்டது.

என் பெயர் என என் குரலை உயர்த்தும் முன்

உங்கள் பெயர் மகிழ்நன்

உங்கள் தந்தையார் உங்களை அழைக்கும்போது கேட்டுள்ளோம்.

கருவேப்பிலை மர நிழலில் நனைந்து அதன் வேருக்கும்

மண்ணுக்குமான ஒரு சிறிய சந்தில் எறும்புடன் நுழைந்தேன்.

நான் விழுந்துவிடாது பற்றிக்கொண்டது.

சிறிய வெளிச்சத்தில் பள்ளத்தாக்கு போல் தெரிந்தது.

மிகப் பழமையான இந்த வசிப்பிடத்தில்

உங்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்கிறோம்.

இன்று மனிதர்கள் தினம்.

வேப்பம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பீடம் ஒன்று.

இது எறும்பனார் நினைவு இடம்.

இயற்கை வீசி எறிந்த கொடி மின்னலால்

பார்வையற்ற பின் எறும்பனார் தன் குழுவினரால்

கட்டியது இந்தப் புற்றுக்கண்.

100 ஆண்டுகள் பழமை மிக்கது.

இதன் ஒரு பகுதி இடிக்கப்பட்டு குடியிருப்பாய் மாற

அதன் மேல் 10 வருடமாய் நீங்கள் வசிக்கிறீர்கள்.

கேட்க வியப்பாய் இருந்தது எனக்கு.

ஆதியில் இந்த வனத்தை ஆண்ட

கார்கோடன் பாம்பின் கடைசிச் சட்டை இது.

நான் பயந்தபடி தொட்டுப்பார்த்தேன்.

குறுக்கும் நெடுக்குமாய் சாரை சாரையாய்

எறும்புகள்

நகரத்து வீதிகளில் பறக்கும் கார்களைப் போல

புகையின்றி போய் கொண்டிருந்தது.

இவள் பெயர் முகில்

மழை வேண்டி தவம் இருக்கிறாள்.

யானையும் பாம்பும் அற்புத ஓவியம்

மண்ணும் தானியம் கொண்டு எழுதப்பட்டிருந்தது.

வண்ணன் என்று வரைந்தவன் பெயர் எழுதியிருந்தது.

ஒரு பகுதியில்

உணவுப் பொருட்களாய் நிரம்பிக்கிடந்தன

வெண் சர்க்கரை¸ தேநீர் காபி பொடிகள் உப்பு

அரிசி¸ பருப்பு தானியங்கள் நிறைய அழகாய் தொகுக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் உங்கள் சமையல் அறையில் சிந்தி வீணடிக்கப்பட்டவை.

இது நினைவிறுக்கிறதா..

சிவப்பாய் கரும்பு போல நீள நீளமாக.. யோசித்தேன்.

உங்கள் மனைவி உண்டாகி இருந்தபோது

உண்ணாமல் கீழே விழுந்த குங்குமப்பூ.

எத்தனை வருடங்கள்

நினைவுகளில் யாரோ வயலின் வாசித்தார்கள்.

திடீரென ஒரு எறும்பு விளம்பனில் காதில் படபடத்தது.

ஓரே கட்டளையில் ஆயிரம் ஆயிரம் எறும்புகள் ஓடின.

என்ன என வினவினேன்.

பக்கத்து வயலில் குழாய் பதிக்க

தந்தம் இல்லா இரண்டு இரும்பு யானைகள் வந்துள்ளனவாம்.

அந்த குழுக்களின் உணவு மற்றும் இருப்பிடத்தை மாற்ற

உதவி செய்ய பணியாளர்களையும் வீரர்களையும் அனுப்பினேன்.

நீங்களும் இடர் வரும் போதுதான் உதவிக்கொள்வீர்களா?

இல்லை எப்போதும் உதவிக்கொள்வோம்.

அவைகளின் கழிப்பிடம்¸ நீர்நிலை

சீராக வடிவமைக்கப்பட்ட அனைத்தும் கண்டேன்.

உங்கள் குழுவின் ராணி எங்கே?

அவள் எங்களின் குழு எண்ணிக்கையை அதிகரிக்க

காமம் தோய்ந்த இறகுகளோடு காதலன் தேடலில் இருப்பாள்.

இரண்டு எறும்புகள் அவரை வணங்கின.

இவள் சுடர்¸ அவள் தோழி சுவை இருவரும் என் மகள் போன்றவர்கள.;

அடுத்த அறையில் இனிப்பின் மணம் வந்தது

என்னைவிட உயரமாக இருந்தது அந்த இனிப்பு.

உயரே அழைத்துச் சென்று காட்டினான்.

அது ஒரு கேக்குத்துண்டு¸ எனக்கு நினைவு வந்ததது.

சென்ற வாரம் கொண்டாடிய

என் மகளின் 5ஆம் பிறந்தநாள் விழா மகிழ்வின் துண்டு.

அமைதியானேன்.

உங்கள் மகளின் பிறந்த நாள் இனிப்புதான்.

எங்களுக்காக அவள் கொடுத்தது.

அந்த விழாவிற்கு எங்களை அழைத்திருந்தாள்

நாங்கள் வந்திருந்தோம்.

உங்களின் மகள் எங்கள் வரவில் மகிழ்ந்திருந்தாள்.

என் கண்கள் கலங்கின.

விளம்பன் தன் கை கொண்டு எனை அணைத்தான.

உங்களைப் போன்ற நல்லவர்கள் வாழும்

இதே உலகில் கொடியவர்களும் உள்ளனர்.

வருந்துகிறோம்.

ஒழுக்கமில்லா மானிடர்களின் பாதகச் செயலால்

உயிர் இழந்த உங்கள் மகள்¸ எங்களின் தோழியின்

மறைவுக்கு வருந்துகிறோம்.

இன்று மனிதர்கள் நாள்.

நான் மீண்டும் மனிதனாக

மாறிக்கொண்டிருந்தேன்.

((((((((())))))))

கடலும் மலையுமானவள்… / சக்தி ஜோதி

download (4)

பயணம்:

கடலடி நிலம் நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொருமுறையும் முதல்முறையாகச் செல்வது போலவே இருக்கிறது. இம்முறை மங்களூர். இதற்கு முன்பாக சமீபத்தில் ஒருமுறை அங்கு சென்றிருந்த பொழுது, ஒருமுறையில் பார்த்துத் தீராத கடலாக சோமேஷ்வரா கடற்கரை மனதில் பதிந்துவிட்டது. அதனால் இம்முறை மங்களூர் பயணம் அமைந்த கணத்திலேயே கடலும், கடலடிப் பாறைகளும், மோதிச் சிதறும் அலைகளும் நினைவுக்கு வந்துவிட்டன. கரையிலிருக்கும் சோமேஷ்வரா கோவிலுக்குப் போக வேண்டும், வெட்கச்சிவப்பைக் கோருகிற கோவிலின் மேற்கூரையில் பிரதிபலிக்கும் மாலைச் சூரியனைக் காணவேண்டும், அடர்ந்த சிவப்பும் பொன்மஞ்சளுமான வெளிச்சம் கடலில் இறங்கி மறையும்வரையில் அங்கே காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் திட்டமிட்டுக் கொண்டேன். திட்டமிட்டபடியே தடையேதுமின்றி கிளம்பினேன்.

மங்களூர், கடலும் மலையுமான பிரதேசம். சமவெளியில் வாழ்கிறவளாக நானிருந்தாலும், அடிப்படையில் மலைப்பிரதேசத்தின் நிலக்காட்சிகளை மனதில் பொதிந்து கொண்டிருப்பவள். பால்யம் முதல் வளரிளம் பருவம் வரையில் வளர்ந்தது மலைப்பிரதேசம் என்றாலும் கடலின் மீது விருப்பம் அதிகமிருந்தது. அந்தப்பருவத்தில் இரண்டுமுறை மட்டுமே கடல் பார்த்ததாக நினைவு இருக்கிறது. ஆனால் கடலும்,கடலின் உப்பும், உப்புப் பிசுபிசுத்த கடலின் காற்றும் எப்பொழுதும் தீராது என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது . மங்களுரின் நிலம் அப்படித்தான், என்னை அழைக்கும்படியான கடலையும், நான் புதிதாய் உயிர்த்திருக்கும்படியான மலையையும் தனக்குள் பொதித்துவைத்திருக்கிறது.
download (3)
சோமேஷ்வரா கடற்கரைக்குப் போகும் பாதையெங்கும் இளஞ்சிவப்பில் நவாப்பழநிற மஞ்சரியில் நொய்மையான ஊமைத்தையைப் போன்ற மலர்கள் பூத்திருந்தன. விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. கட்டடங்களின் சுவர்களில் படிந்திருக்கும் பாசிநிறத்திலிருந்து மழையின் பிடிவாதமான ஈரத்தை உணரமுடிந்தது. நனைந்து நனைந்து உலராத கட்டடங்களில் கருமை படர்ந்திருக்க, அதன்மீது பரவியிருக்கிற பச்சையின் புதிய துளிர்ப்பு சித்திரமென காட்சிகளை கடல்வரை வரைந்து கொண்டே இருந்தது.

கடலை அடைந்த சிலகணங்களில், ‘இன்று நான் கடல் பார்க்கிறேன். இன்றுதான் நான் கடல் பார்க்கிறேன். இன்று, நான் மட்டுமே தனித்துக் கடல் பார்க்கிறேன். இன்று, இந்தக் கடற்கரையெங்கும் என்னைத் தவிர வேறு ஒருவர் இல்லவே இல்லை’ என்பதாக நான் கடலோடு கலந்துவிட்டேன்.

கடல் எப்போதுமே எனக்குக் கடல் மட்டும்தான். அது அரபிக்கடலா, இந்துமாக்கடலா, அட்லாண்டிக் பெருங்கடலா என பெயர்கள் நினைவிலிருப்பதில்லை. கடல்பார்த்த கணத்தில் கடலுக்கு பெயர்கள் என்வரையில் இல்லாது போய்விடுகிறது. புத்தகங்களில் பெயரளவில் கடலாக இருப்பதெல்லாம்,நேரில் நீராகிப் பொங்கி, என்னை அதனுள் அழைக்கத் தொடங்கிவிடுகிறது. கடலின் அழைப்பை உணரத் தொடங்கிய சற்றைக்கெல்லாம் அலையின் அகடுகளிலும் முகடுகளிலும் மனம் தளும்பத்தொடங்கிவிடுகிறது. ஒரு அலைக்கும் மறுஅலைக்கும் நடுவே உயிர்த்திருக்கும் காலத்தின் மாயத்தில் உப்பெனத் துளிர்த்து, திரும்புதலே அற்ற நீலத்தின் அழைப்பில் ஒளிரும் நட்சத்திரமென ஆகிவிடுகிறேன்.

#

சோமேஷ்வரா கோவில், புராதனமான வீட்டின் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. கோவிலுக்குப் போயிருந்த பொழுது, நடை சாத்தப்பட்டிருக்க வெளிப்பிரகாரத்தை ஒரு முறை, இருமுறை சுற்றிவந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். பக்கநடை திறந்து பணிப்பெண்கள் உள்ளே செல்ல, நானும் அனுமதி கேட்டு கோவிலுக்குள் சென்றேன்.கருவறை பூட்டியிருந்தது. கோவில் மணியையும், சரவிளக்கினையும் புகைப்படம் எடுத்தபடி மெல்ல நடந்தேன். சின்னஞ்சிறிய நந்தியை அதன் பக்கவாட்டிலிருந்து பதிந்துகொண்டேன் . பக்கக்கூரைத் திறப்பில் மெல்லிய வெளிச்சத்தில் பதிந்த நந்தியில் மறைந்திருந்த கரும்பாறையின் காலம் அடர்ந்து ஒளிர்ந்தது. பித்தளை, செம்புப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த பெண்களை பார்த்துக் கொண்டே கோவிலின் உள்பிரகாரத்தையும் ஒருமுறை சுற்றிவந்தேன். இருள் படிந்திருந்த இடுக்குகளில் பழமையின் வாசனை பரவியிருந்தது. கோவில் பெரும் அமைதியாய் என்னை என்னவோ செய்தது.

கோவிலின் உட்புறத் திண்ணையில் அமர்ந்து வாழைப்பழங்களை தட்டில் வைத்து ஒழுங்கு செய்துகொண்டிருந்த மேலும் சில பெண்களுடன் எனக்குப் பேசத்தோன்றியது. கொங்கணி, துளு அல்லது கன்னடம் எதுவென்று எனக்குக் கண்டறியத் தெரியாத மொழியில் தங்களுக்குள் மெலிதாகப் பேசிக்கொண்டிருக்கிற அவர்களிடம் நானென்ன பேசமுடியும் என்கிற தயக்கத்தில் அவர்களைப் பார்த்தபடி மெல்ல நடந்தேன். என்னுடைய தயக்கமோ அல்லது வேறு எதுவோ ஒன்று அங்கிருந்த பெண்களில் ஒருவருக்குப் புரிந்திருக்கும் போல, என்னை அழைத்து அவர் பேசினார். அவர் என்ன சொல்கிறார் என எனக்குப் புரியவில்லை. ஆனால் கேமராவைக் காட்டி அவர் என்னவோ சொன்னார். அவரைத்தான் புகைப்படம் எடுக்கச் சொல்கிறாரோ என நினைத்தேன். சைகையால் அவரிடம் கேட்டுவிட்டுப் அவரைப் புகைப்படம் எடுக்க முயன்றேன். ஆனால் அவர் கையசைத்து மறுத்து, முன்வாசல் பக்கமாகக் கையை நீட்டினார். ஒருவேளை வெளியே போகச் சொல்கிறாரா அல்லது நடை திறந்தாச்சு எனச் சொல்கிறாரா என்கிற குழப்பத்துடன் அவர் கை நீட்டிய திசையில் பார்த்தேன். அந்தத் திசையில் மூன்றடி உயரக் குத்துவிளக்கு ஒன்று ஒற்றைத் திரியில் சலனமற்று நின்றெரிந்தது. கோவிலின் முன்வாசலில் கருவறையைப் நோக்கி அமைந்திருந்தது அந்த விளக்கு.

அந்தப் பெண்ணைப் புரிந்துகொண்டேன். விளக்கின் சுடரைப் புகைப்படம் எடுக்கவேண்டும் என அந்தப் பெண்ணுக்குத் தோன்றியிருக்கிறது. அதை என்னிடம் சொல்லத் தோன்றியிருக்கிறது. அந்தப் பெண்ணை அக்கணம் மிகப் பிடித்திருந்தது. திறக்கப்படாத கருவறையின் கதவுகளைத் திறந்து எழுந்து வந்த குரலென அப்போது அவரைப் பார்த்தேன். குத்துவிளக்கு இருந்த திசை நோக்கி செலுத்திய அம்பென நடந்தேன். சுடரின் புகை விளக்கின் மேல் தண்டில் அடர்கருமையை ஏற்றியிருந்தது. கருவறையின் லிங்கம் விளக்கின் ஒற்றைத் நிமிர்வென மினுங்கியது. நெய்வார்த்த சுடரையும், சுடரில் ஒளிர்ந்த விளக்கின் நிமிர்வினையும் புகைப்படக் கருவியில் பதிவு செய்தேன். கூடவே அலைவற்று அசைந்து சுடர்ந்த அந்தப் பெண்ணின் குரலை மனதிலும் பதிவு செய்து கொண்டேன்.

சரவிளக்கு மட்டும் ஆடியில் பிம்பத்தின் அந்தரங்கம் காட்ட செண்பகப்பூ மணத்தது .

அன்றைய சோமேஷ்வர தரிசனம் அதுதான்.

#

மீண்டும் கடல், மீண்டும் பாறைகளில் மோதிச் சிதறும் அலை . மீண்டும் மீண்டும் கடலின் நீலம் நுரைத்துப் பொங்கும் ஆர்ப்பரிப்பு என்னை அழைத்துக்கொண்டே இருந்தது.

கடல் நோக்கிய என்னுடைய பார்வை இப்போது கடலாடும் சிறுவர்களிடமும் சிறுமியர்களிடமும் திரும்பியிருந்தது. அலையின் ஆரவாரத்திற்கு சற்றும் குறைவில்லாதது கடலாடும் குழந்தைகளின் மனமும் என்பதை எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். கடலோடு கூடியிருக்கும் மனதினை, நுரைத்துப் பொங்கும் கிளர்ச்சியை கடலாடும் யார் ஒருவரும் உணர்ந்துதான் திரும்ப முடியும். அதுவும் இது போன்று பாறைகளில் மோதிச் சிதறும் பேரலையும் ,சுழித்துத் தனக்குள் அழைக்கும் கடலும் அச்சம் கொடுக்கும் ஈர்ப்புடன் இருந்தாலும் கரைக்குத் திரும்பவே தோணாது. ஆளுயரம் எழும்பும் அலைகளில் கண்கள் சிவக்க, சிதறிப் பறக்கும் உப்புக்கரிப்பை வழங்கியபடி தன்னுள் மூழ்கிக் கரையவைக்கும்.

உடலின் வெதுவெதுப்பை கடலில் சேர்த்து, கடலின் வெம்மையை மனதில் ஏற்றி கரைக்குத் திரும்பும் வழியில் ஒற்றைப் பாறையில் சின்னச்சிறு லிங்கம். மிகச்சிறிய அந்த லிங்கத்தின் அருகில் சென்று தொட்டு வணங்க இயலாது. கடல் உள்வாங்கிய ஒரு பருவத்தில் சிவனின் சீருறு அமைக்கப் பட்டிருக்கிறது. சோமேஷ்வரா என்றழைக்கும் மேற்குகடலின் பேரலைகள், தன்னுடைய நுரைத்த நீரை அதன்மீது மோதிச் சிதற வைக்கிறது. தூரக்காட்சியில் அந்த சின்னஞ்சிறு லிங்கத்திற்கு உச்சி தொடும் பால் அபிஷேகம் ஓயாமல் நடக்கிறது.

இது கடல், இது அலை , இது நுரை , இது பேருரு மறுத்த சீருறு லிங்கம். கடலாடும் சோமேஷ்வரன் முக்கண்ணும் சிவந்து ஒளிர்கிறான்.
#

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கத்ரி மஞ்சுநாதர் ஆலயம், முகம் மட்டுமே காட்டுகிறார். அடர்ந்த மீசையும் அகன்ற கண்களும் பளீரென்ற வெள்ளியில் கருவறையிலிருந்து சிவபெருமான் அங்கே காட்சி தருகிறார்.

இந்தியாவின் பழமையான பித்தளைச்சிலை இதுவென்ற அறிவிப்புப் பலகையுடன் முழுஉருவ திரிலோகேஷ்வரர் இன்னொரு பக்கம் கருமை படிந்து காலத்தின் பழமைக்குள் அழைக்கிறார்.

மலையாள அமைப்பு வீட்டினுள் சற்று பெரிய விநாயகர், ஆலய நுழைவாயிலில் அய்யப்பன், மேற்குப்பகுதியில் துர்க்காதேவி, தெற்கே மத்ஸ்யேந்திரநாதர் என சற்று பெரிய சமசதுர வடிவக்கோவில்.

கோவிலின் சதுரத்தில் சற்று விலகி தென்புறமாக ஒரு நூறு படிகளில் மேலே போனால் மிகமிக உயரமான தீபத்தூண், அதனைக் கடந்து மேலே செல்ல மலையைத் துளைத்து வெளியேறும் நீருற்றில் சதாப்பொழுதும் நனைந்தபடி மகாவிஷ்ணு, இன்னும் சில நூறு படிகள் மேலேற மரங்களோடு மரமாய் பச்சையாய் சற்று உயரமாய் ஆஞ்சநேயர் சிலை. இந்தக் கோவில்,பரசுராமர் தவம் செய்த இடமென புராணக்கதையினை ஏற்றியிருக்கிறது. இடைக்காலத்தில் புத்தமதமும் இவ்விடத்தைக் கைக்கொண்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் மறக்கச் செய்யும்படியாக மலையுச்சி நீரூற்றுகளின் நீர்மையில் அந்தப் பிரதேசமே நிறைந்திருக்கிறது.

திரும்புதலில் மஞ்சுநாதர் சதுக்கத்தில் நுழைய, கோவிலின் மேற்கூரைகளில் அங்கங்கே தொங்குகிற சிறிய சிறிய மணிகளை யாரேனும் ஒலித்தபடி நகர்வதைக் காணமுடியும். மழலையர் பள்ளியில் முன்னும் பின்னுமாகத் தட்டப்படுகிற மெல்லிய கரவொலி போல மிக மெலிதான மணியோசை கோவிலின் ஏதோவொரு ஒழுங்கு கலைத்து ஒலித்தபடி இருந்தது. திட்டமான கட்டட அமைப்பிற்குள் கலைந்து பரவியிருக்கிற மணியோசையை கணந்தோறும் மிகத் துல்லியமாக உணரமுடிந்தது. அடர்ந்து அதிராமல் மெல்லிய ஓசையெழுப்பும் மணிகளின் ஓசையை பிரியமான எவரிடமேனும் சேர்த்துவிட அக்கணத்தில் தோன்றியது. அப்படித் தோன்றிய கணமே ஓசையின் ஸ்தூலவடிவைச் சேர்த்திருந்தேன்.

சந்தனமும் குங்குமமும் மணக்கும் மணியோசை பிரியமானவர்களிடம் சேர்ந்திருக்கும்.
download (12)
#

இசையும் பாடலும் உரையாடலும் காட்சிபடிமங்களும் பல்வேறு விதமான நவீன வடிவத்திற்குள் நகர்ந்து கொண்டே இருக்கிற இந்தக் காலகட்டத்திலும் கூத்து, நாடகம் இவற்றின் மீது தீராத பிரியம் இன்னும் மிச்சமிருக்கிறது.

எங்கே கூத்து அல்லது நாடகம் நடந்தாலும் சிலமணித்துளிகளாவது நின்று பார்க்காமல் திரும்புவதில்லை. மனனம் செய்து பேசுகிறார்கள், தங்கள் குரலிலேயே பாடுகிறார்கள் என்பதால் மட்டும் அந்த ஈர்ப்பு ஏற்படவில்லை. இதுவும் ஒருவகையில் போலச்செய்தல் தான், ஆனால் அப்படியொரு எண்ணத்தினை பார்வையாளரிடம் தோன்றுவதில்லை. காட்சியில் தோன்றுகையில் திருத்திச் செய்யாமல்,முன்பாகவே பலமுறைப் பயிற்சி செய்து இரத்தத்தில், சுவாசத்தில் வேறு ஒரு மனிதரை தானாக வரித்துக்கொள்வதை மிக இயல்பாக நேர்ந்திருக்கும் நாடகக்கலைஞர்களை எனக்கு எப்போதும் பிடித்திருக்கிறது என்பதே அதன் காரணம்.

மங்களாதேவி ஆலயம் சென்றபோது அங்கே அந்தகாசுரன் வதம் நாடகமாக நடந்துகொண்டிருந்தது. மனிதக்கதைகளை நாடகமாக அமைக்கப்படும் பொழுது முன்மாதிரிகளாக சிலரை உருவகப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் கதைகளாக மட்டுமே உலாவுகிற புராணக்கதைகளின் கதாப்பாத்திரங்களுக்குள் நுழைந்து அவர்களாக வாழ்வது என்பதற்கு முன்மாதிரி எதுவும் இல்லை. செவிவழி அறிந்த ஒரு உருவத்தை அதுவாக மாற்றம் ஏற்கிற கலைஞர்களைக் கண்டு எப்போதும் வியக்கிறவளாக இருக்கிறேன். அன்னை ஆதிபராசக்தி ரக்தேஸ்வரி வடிவம் கொண்டு அந்தகாசுரனை அழிக்கிற காட்சியைப் பார்த்தேன். காட்சி முடிவில் மங்களாதேவியாக எல்லோருக்கும் அருள் பாலிக்கிறாள்.

ஹிரண்யன் மகள் விகாசினியாகவும், மகாவிஷ்ணுவாகவும், அந்தகாசுரனாகவும், மங்களாதேவியாகவும் ஆண்களே பாவனை செய்ய பெண்தெய்வம் அங்கே ஜெயித்திருந்தாள்.

அவள் பெயரிலேயே மங்களூர்.

#

“இறைவன் ஒருவனே சுதந்திரமானவன்; இறைவன் வேறு, மனிதன் வேறு”என்கிற துவைதத் தத்தவத்தை தோற்றுவித்த மத்துவர் வாழ்ந்த இடம் உடுப்பி. கப்பல் ஒன்று புயலில் அகப்பட, மத்துவர் தன்னுடைய கையசைத்து கப்பலில் உள்ளவர்களைக் காப்பாற்றியதாக ஒரு செய்தி உள்ளது . ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பாக துவாரையில் ருக்மணிதேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கியபொழுது கடலில் மூழ்கிய கிருஷ்ணர் சிலை ஒன்று புயலில் அலைந்து வந்த கப்பலின் மூலம் உடுப்பியில் மத்துவர் கையில் கிடைத்து, அதுவே மூலவிக்கிரகமாக உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இருக்கிறது என்கிற கதை நிலவுகிறது. தவிர, தட்சனின் சாபத்தினால் ஒளியை இழந்து வருந்திய சந்திரன் தன்னுடைய 27 மகள்களையும்( நட்சத்திரங்களையும்) சிவபெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்து அவரை தவமிருந்ததால் மீண்டும் ஒளிபெற்றதாகவும், அந்த 27 மனைவியரும் லிங்கம் அமைத்து வழிபட்ட இடம் உடுப்பி என்பதாகவும் இன்னுமொரு புராணக்கதை இருக்கிறது. உடுப்பி என்றால் நட்சத்திரங்களின் இறைவன் எனவும் நிலவு உள்ள இடம் எனவும் பொருள்படும். சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் உடுப்பி கிருஷ்ணருக்கு எதிரே அமைந்துள்ளது.

கனகதாசர் என்பவர் கர்நாடக இசைக்கலைஞர். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாழ்த்தபட்ட குலத்தில் பிறந்தவர். கோவிலினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால் கோவிலின் பின்பக்கம் அமர்ந்து ஒற்றைகம்பியில் அமைந்த ஏகதாரி வீணை இசைத்து வழிபட்டார். ஒருநாள் பின்பக்கச் சுவரின் கற்கள் திறந்து கிருஷ்ணன் கனகதாசருக்குக் காட்சி தந்தாராம். கனகதாசர், கிருஷ்ணனைத் தரிசித்த கனகதண்டி என்கிற பலகணி வழியாகவே எல்லோரும் தரிசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. இந்த பலகணி வெள்ளியினால் செய்யப்பட்டு நவக்கிரக துவாரம் எனப்படுகிறது .கனகதாசரின் வழிபாட்டினாலேயே கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கனகதாசர் 240 கர்நாடக இசைப்பாடல்களையும், மோகன தரங்கிணி, நள சரித்திரே, ராமதான்ய சரித்திரே போன்ற படைப்புக்களையும் எழுதியவர். இவரைக் கொண்டாடும் விதமாக கர்நாடக அரசு கனகதாசர் ஜெயந்தி கொண்டாடுகிறது.

கோவிலில் நுழைகிறேன். வரிசையில் நிற்கிறேன். சற்றுநேரத்தில் வரிசையிலிருப்பவர்களை ஒதுங்கி நிற்கும்படி காவலர்கள் விரட்டுகிற குரல். வரிசையில் நின்றிருந்தவர்களும் கிருஷ்ணர் சிலையைத் தான் தூக்கிக்கொண்டு வருகிறார்களோ என்று நினைக்குமளவு பணிந்து வழிவிட்டார்கள் . வந்தவர்கள், கோவிலை நிர்வகிக்கிற அதிகாரத்தை அடையாளம் காட்டும்படியான தோற்றத்திலிருந்தவர்கள். திரும்பிவிடலாமா என உடன்வந்தவர்கள் கேட்க, பாதியில் திரும்பும் வழக்கமில்லை என நான் பதில் சொன்னேன். வந்தாச்சு முழுமையும் சுற்றிவருவோம் என்று சொல்லி வரிசையில் முன் நகர்ந்தேன்.

இன்னொருபக்கம், இழந்த ஒளியைத் திரும்பப் பெற்ற சந்திரன் அமைத்ததாக நம்பப்டுகிற ‘சந்திர புஷ்கரணி’ குளத்தினருகே உருளைவடிவில் மிகச்சீராக அடுக்கிவைக்கபட்டிருந்த திரண்ட விறகுகள் இருந்தன.ஸ்ரீ மத்வாச்சார்யர் கிருஷ்ண மடத்தின் நிர்வாகத்தை எட்டு சீடர்களிடம் ஒப்படைத்தார். அந்தத் துறவிகள் எட்டு மடங்களாகப் பிரிந்து கிருஷ்ண மடத்தை நிர்வாகம் செய்கின்றனர்.பேஜாவர்,புத்திகே,பலிமார்,அதமார்,சோதே,

கனியூர்,ஷிருர் மற்றும் கிருஷ்ணபுரா என எட்டு மடங்கள் உள்ளன. கிருஷ்ணபுரா மடத்தில் கிருஷ்ணர் வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பெற்றதாகவும் ஸ்ரீ மத்வாச்சார்யர் கையெழுத்துப்பிரதிக்கு இங்கே வழிபாடு நடக்கிறது. மூலஸ்தானத்தைச் சுற்றிலும் சிறிய ஆயிரக்கணக்கான விளக்குகள் பொருத்தப்பட்டு கிருஷ்ணன் ஒளிவடிவாக இருக்கிறார் என நம்பப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படுகிற ‘பார்பாயா’விழாவின் பொழுது நிர்வாகம் ஒரு மடத்திலிருந்து மற்ற மடத்திற்கு ஒப்படைக்கப்படும். தலைமை சுவாமியாக இருப்பவர் பொறுப்பு ஏற்கும் பொழுது விறகினால் செய்த மிகப் பெரிய தேரில் மரியாதை செய்யப்படுகிறார். அதன் பின்பு அந்த விறகுகள் மடத்தின் அன்னதானச் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வரிசையில் காத்திருப்பதும் கோவிலுக்கான வெப்பமும் சக மனிதர்களின் மூச்சுக்காற்றின் புழுக்கமுமென நகர்தல் தொடர்ந்தது. கோவிலின் உள்ளே நுழைந்த சிறிய திருப்பம். பாட்டுப் பாடுகிற குரல் மட்டும் கேட்டது. உடனிசையும் இசைக்கருவியின் இசை எதுவுமில்லை.தனித்த ஆணின் குழைந்த குரலில் கிருஷ்ணா கிருஷ்ணா .. அம்பிகே அம்பிகே .. என்று கேட்டுக்கொண்டிருந்தது. பாடலின் பொருள் புரியவில்லை என்றாலும் கிருஷ்ணனை அம்பிகையாக நினைத்து உருகுகிற குரலில் நானும் கரைந்தேன். குரலுக்குரியவரைப் பார்க்க விரும்பினேன். மெல்ல நகர்ந்த வரிசையில் அரையடி தூரத்தில் அவரைப் பார்த்தேன். உள்பிரகாரத் திண்ணையில் இரு தூண்களுக்கிடையே ஒல்லியான தேகத்தில் மேல்சட்டயின்றி தன்னந்தனியே அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார். கையில் சிறிய பாட்டுப்புத்தகத்தைத் திறந்து வைத்திருந்தார். ஆனால் அதைப் பார்த்துப் பாடவில்லை. தன்னை மறந்து பாடுகிற அந்த மனிதர் அவருக்கு மிக அண்மையில் நகர்கிற மனிதர்களைக் கவனித்ததாகவும் தெரியவில்லை. மேலும் அவர் பாடுவதை வரிசையில் வருபவர்கள் கேட்கிறார்கள் என்பதோ நாளின் இறுதியில் ஒருவேளை கோவில் நிர்வாகம் கூலி கொடுக்கும் என்பதோ அவரது மனதில் இல்லாத தோற்றத்தில் பாடிக்கொண்டிருந்தார். தன்போக்கில் கிருஷ்ணனைப் பெண்ணாகப் பாவித்து உயிர் உருகியிருந்தார். கண்கள் அந்தரத்தில் நிலைத்திருக்க உதடுகளில் ஈரம்ததும்பும் புன்னகை வழிந்து கொண்டிருந்தது. பெண்ணிடம்தான் ஒரு ஆணால் அத்தனை உருக முடியும். ஒருபாடல் முடிந்தது. அடுத்த பாடலுக்காக தன்னுடைய கையிலிருந்த புத்தகத்தைப் புரட்டினார். அந்த இடைவெளியிலும் க்ருஷ்ணா .. க்ருஷ்ணா என உச்சரித்தபடி மனதின் புன்னகையை தக்கவைத்திருந்தார்.

அந்தரவெளியில் நம்மைச் சொல்லித் திரும்ப வைக்கிற மாயத்தை சொற்களின் வழியே வழிந்தோடும் குரல் நிகழ்த்தியது.

க்ருஷ்ணா .. க்ருஷ்ணா .. என்று தன்போக்கில் உயிர் உருகப் பாடியபடி இருப்பவரின் குரலிலும் இளம்சிரிப்பிலும் கிருஷ்ணனைக் காண முடிந்தால் போதாதா என்ன..

#

புனித அலோசியஸ் தேவாலயம் வழிபாட்டு நேரம் முடிந்து பூட்டப்பட்டிருக்க, மிலாக்ரஸ் தேவாலயம் சென்றேன். மிகச் சரியாக மையப்பூசை நடந்துகொண்டிருந்தது. பலிபீடத்தில் பாதிரியார்,அப்பத்தைப் பிட்டு கிறிஸ்துவின் உடலெனச் சொல்லிக்கொண்டிருந்தார். திராட்சை ரசத்தை, கிறிஸ்துவின் இரத்தமெனப் பகிர்ந்துகொள்ளச் சொன்னார். நற்கருணை ஆராதனை பார்த்துவிட்டுத் திரும்புவதற்கு மொழியொன்றும் தடையாக இல்லை.
download (2)

#

மணிக்கொருமுறை மழை பொழிகிற பருவமென்பதால் மங்களூரின் கட்டிடச் சித்திரங்களும் மலையினடியில் ஊற்றுப் பிடித்திருந்த ஓடைகளுமென மேலும் நீர்மையாக ஆக்கிக்கொண்டிருந்தது.

ஒருபக்கம் கடல், மறுபக்கம் மலைத்தொடர் இரண்டுக்கும் நடுவே குர்புரா நதியும் நேத்ராவதி நதியும் இணைகிற முகத்துவாரம் தான் மங்களூர். ஓயாத துறைமுக நகரமாக இது இருப்பதால் தன்னிர்பாவி, பனம்பூர் கடற்கரை என எங்கே சென்றாலும் சற்றுத் தூரத்தில் கப்பலின் வெளிச்சப் புள்ளிகளை சற்று அடர்வாகப் பார்க்க முடிந்தது.

பெரும்பாலும் கடல்பார்க்க மாலையில் சென்று இரவுவரை கடலடியில் இருப்பது பிடிக்கும். மெல்ல மெல்ல வெளிச்சம் மறைந்து , கடல் மறைந்து, புரளும் அலை மறைந்து, அலையின் ஓசை மட்டுமே கேட்டபடி திருப்புவது வழக்கம். அதற்கப்புறம் கடல் என்பது ஓசையாகப் பதிந்திருக்கும்.

சோமேஷ்வரனின் குரலும், உடுப்பிக்கிருஷ்ணனின் குரலும் தேவாலய நற்கருணை ஆராதனைக் குரலும் கடல்நீலம் பூசியிருந்ததாகத் தோன்றியது.

குரலுக்கு வாசனையும், குரலுக்கு வண்ணமும், குரலுக்கு ஒளிர்வும், குரலுக்குச் சுவையும், குரலுக்கு இளம் சிரிப்பும் இருப்பதாக மங்களூர் உணர்த்தியிருக்கிறது.

#

காட்டரளிப் பூக்கள் ( கவிதைகள் ) / லக்ஷ்மி மணிவண்ணன்

14159253_1773916652897984_1489497528_n

1
காட்டரளிப் பூக்கள்

பள்ளிக்குழந்தைகள் ஊளை கரகோஷம் அடிக்கும்
சுற்றுலாப் பேருந்து பிரேக் அடித்துக் கிரீச்சிட்டு
வளைவில் முன்திரும்பி நிற்கிறது
ஓட்டுனரின் முகமெங்கும் வண்ண பலூன்கள்
சிறுதெய்வப் பிரகாசம்
முந்த முயன்ற வாகனங்கள் முந்திமுந்திச் சென்றாலும்
முந்த இயலாத இடம்
பரபரப்பின் சாலையோரம்
வந்து இங்கே நிற்கிறது
நீங்கள் பார்த்தீர்களா
நண்பர்களே
அன்பர்களே
உறவுகளே
நாட்டாமைகளே ?
காற்றும் சாரலும் புதுமையடையும் கணம்
மாலைச் சூரியன் பிறவிப் பெரும்பயனடைந்தான்.
அலர்மேல் வள்ளி காம்பவுண்டுக்குள் நீரூற்றும் செம்பருத்தி
வளைந்து நெளிந்து சுவர்மேலேறி தித்திக்க
உடையநங்கை நாச்சியாள் கருந்துளசி மாடம் ஒளிகொள்ள
ஏங்கிய இசக்கியம்மா மனம்விட்டு விடுதலையானாள்
பேருந்தின் மீது அவசரகோலத்தில் முளைத்ததோ
சரக்கொன்றையும்
பாரஸ்ட் பிளேம் குளிர் நெருப்பும்
இடித்து நெரித்து முந்திச் செல்ல முயல்கிறீர்களோ?
முந்துங்கள்
திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டேனும் முந்துங்கள்
சந்தேகத்தை உண்மையாக்கி விடுபவளும்
பயத்தில் யதார்த்தம் சமைப்பவளும்
பிரச்சனையின் மடியில் படுத்துத் துயில்பவளும்
கொத்திக் கிளறிப் புண்ணாக்கும் ஊழின் கதைகளை
தெருவெல்லாம் இழுத்து ;
நிற்கும் பேருந்தில் பெருவேகம் மோதிக்
கடக்கும் வாகனத்தின் சாரதியே என விளித்து
வெட்கத்தில் தலை அசைத்து
ஓ ஓவென்று ஓங்கிச் சிரிக்கின்றன
காட்டரளிப் பூக்கள்

2
காதலியின் தோழியைக் காதலிப்பவனின்
அல்லது காதலிப்பவளைக் காதலியின் தோழியாக்கிவிடுபவனின்
ஏங்கும் பிச்சைச் சத்தம்
தெருவெங்கும் ,ஊரெங்கும் ,நகரெங்கும் ,பெருநகரெங்கும்
எங்கும்

images (3)

3
கருஞ்சுருட்டு படராத தினம்

அகத்துக்குள்ளொதுங்கிய அத்தனைப் பேய்களையும்
இன்றைய முன் பௌர்ணமியில் கண்ணால் கண்டேன்.
வெண்திரடுகள் குறுக்கே ஊடுருவும்
கருஞ்சுருட்டு மேகங்களுக்கிடையில் அது கொப்பளித்துக் கொண்டிருந்தது
வெள்ளியின் கீற்றுக்கள் வரிக்குதிரையின் சாயலில் பௌர்ணமியில் கலங்கியிருக்கின்றன
விசித்திர ஓவியம்.
அது பயணத்தில் என்திசையின் பின்னே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
காட்டின் பாதையில் வளைந்து செல்லும் ரயில்வண்டி போலே
நாம் நம்முள்ளே நிகழ்த்த நினைக்கும் கொலைகளை
யாருமறியாத வண்ணம் அது விரித்து பறவையைப் போல பாவிப்பதை
பாரடா தோழா
நமது அகச் சாயல்களை வெளியே எடுத்தெறியும் மூடன் அங்கேதானிருக்கிறான்.
நமது கறைகளின் உள்பக்கம் திறந்து காட்டிக் கொண்டேயிருக்கிறான் அவன்
இந்த பௌர்ணமியில் கருஞ்சுருட்டு படராத தினத்தில் நீங்கள் தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம்
ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருங்கள்
அவன் இருப்பதுவரையில் நிம்மதி கிடையாதே !
ஆயுதங்கள் உங்களுக்கு எதிராகப் பயன்பட்டு நீங்களே கொலையுண்டால்
அதற்குப் பொறுப்பாளி நானில்லை.
நீங்கள் எத்தனை பெரிய குசுவாக இருந்தாலும்
சிந்திக்காத பொழுதில் எனக்கு நாற்றம் தோன்றுவதில்லை.
எதுவாக இருந்தாலும் இக்காரியத்திற்கு என் துணையும் தேவை.
வெடிகுண்டுகளையையே குசுவென்று எண்ணிப் போய்விட்டால் என்ன செய்வீர்கள் ?
என்பதை மட்டும் சற்றே யோசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ம் உக்கும் ம் உக்கும்
அந்த சுபாவமும் மூடனுக்கு உண்டும்.
இப்போது நீங்கள் தயாராகலாம்
எடுத்துச் சாடி முன் நோட்டு வந்து
முக்குத்துள்ளி வட்டமடித்து
சந்தேகத்தின் முனையில் கத்தியை ,துப்பாக்கியை
நோக்கம் கற்பித்தலின் கொடுவாளை என் முன்னே நீட்டுங்கள்
பௌர்ணமியில் கருஞ்சுருட்டு நீங்கிக் கரைகிறது
வெண்வெள்ளி மேகப்படலம் பௌர்ணமியை விட்டு விலகுகிறது
வேகம் வேகம்

•••••••

நொருங்கும்_புற்தரைகள் – மனுதீரன்-

14088643_875162235922921_9196216476046424828_n

லியோவின் நொருங்கும் புற்தரைகளுக்கேற்றாற்போலே நிறமோடிப் பிறழ்கிறது அகநுகப்படிமங்கள்

டெம்ரேச்சர் மூழ்கிக் கொண்டே இருக்கும் வழி நெடுங்கிலும்

நடைப்பயணக் கனவுகள்

ஏதோரு ஒப்புமையை பொருத்துங்கள்

அதன் தலை என்னிலிருந்த வெளியை

அதிகமாக மேலும் அதிகமாக

தன் உடலுறுப்புக்கள் எல்லாவாற்றாலும் அகழ்ந்து கொண்டிருக்கிறது

காட்சிகள் என் உள்ளிருந்து ஓடிக்கொண்டிருக்கும் வண்ணத்திக்கு

மிருதவேதங்களை திடீரென்டு காட்டி மகிழ்கிறதுகாலம்

லியோ என்னும் பெயர்

நான்

அதைப்பற்றிய பல வினாக்களுக்கு

மனைதை இருமுனைகளும் மடிக்கப்பட்டு

வண்ணங்கள் உடையதான ஏதோ ஒன்றைக் காட்டி

தானும் மயங்கிக் கிடக்கிறது

காலம் மனம்

எல்லாவற்றையும் ஊக்கப்படுத்தும் இந்த புற்தரைகளுக்கு தற்போதுள்ள நிலைகளில்

பொய்மைகள்தான்

சற்றுநேரச்சலசலப்புக்குப்பின்

இருண்டுவிடுகிறது எனக்கான புற்தரைகளை கறுப்பு நிகழ் வந்து மறைத்திருக்கிறது

என் புற்தரைகள் லியோ நான் எல்லோரும் அதற்குள் மறைந்து கிடந்தோம்

நம்மீது பல காலடித்தடங்கள் எம்மைக் காயப்படுத்தி செல்கிறது அதை அவர்கள் உணரமாட்டார்கள்

அவர்களுக்கு நான் புற்களாகிய தருணம் மறைக்கப்பட்டிருக்கிறது நான்

இப்போது அமைதியாக உறங்கவேண்டும் இந்த புற்களைப்போன்று நான் என்னை மாற்ற வேண்டும் நான்

இன்னும் எதுவாகவோ மாறக் காத்திருப்பேனோ!!

மழைதூவுமோரு அடர்வெளிச் சினுங்கலில் இன்னுமொரு இரண்டடுக்கு கண்ணீரும் மிகச்சிறந்த ஒரு துளி புன்னகையும்

அது எங்கேயும் தொலைந்து விடாமல் என்னை பின்தொடருமிந்த நிறைவாழ்வு

எல்லாமே இருக்கிறது ஒன்றுமே இல்லையென்று நம்பும் படிக்கு

இந்த நுண்காற்றினிடையில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது

காலங்கள் சோர்ந்து கால்களை நனைத்துக்கொண்டிருக்கிறது

இன்னும் ஒரு சில வாரங்களே இந்த

புன்னகை போதுமானதாக

இருக்கிறது

இந்த கால நடுங்கல்களும்

பொய்மைகளும்

நகலல்ல என்பதனைப்பாதுகாக்க என்னிடம் இரண்டு சிகறட் துண்டுகளும் ஒரு தீக்குச்சியும் போதுமானதாக இருக்கிறது

இந்த நீட்சியான கடலலையின் ஒதுங்குமொரு கிழிஞ்சலினிமித்தமென்னைப் பாவித்து இந்த கடாலோரமாய் .. உடைந்து கொள்கிறேன்

கரைவது எப்போதுமே நிறைவுகடப்பதல்ல ஆனாலும் இது சூட்சுமமும் மயக்கமும் உருவேறிக்கிடக்கும் கணப்பொழுதுகள் சுற்றோட்டமாய் பின்தொடர்வதை ஒருபோதும் நான் பின் தொடர்ந்ததில்லை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குதர்க்கம் நகலெடுத்து சிந்திப்பதற்கு நேரம் தராமல் இன்னொரு ஆயிரம் கேள்விகள்

அது கேள்விகளாலும் குதர்க்கங்களாலும் நிறைந்தது அது நம் கற்பனையிலுருவாக்கியிருக்கும் கடவுளைப்போலே!!

அவ்வாறில்லாமல் சாதாரணமாகவும் இந்த வாழ்வு இருந்துவிடக்கூடும்!!!!!

•••••

அந்த இறந்துகொள்ளும் இரவில் கூட ஒருபறவை தன்னை சுதந்திரனாக வானமுழுமைக்கும் ஒப்புவித்து

அலைகிறது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பறவைகள் தங்கள் எல்லைகளை வகுத்துப்பார்ப்பதிலை தன்

#இறக்கைகளின்_சக்தியையே_நம்புகிறது.

#இறக்கையில் !! அவ்வளவு சக்திஉண்டு

வீண்விரயம் செய்யப்போவதில்லை.

அந்த நீருக்கும் தாவரத்திற்கும் விலங்குகளின் அரற்றல்களுக்கும் மிகவும் பிரியத்தனப்பட்டவன்

நேசம் இயற்கையின் வாசனை

நேசம் ஆன்மாவின் சுவாசம்

நேசம் கடவுளின் முதல் முத்தம்

நேசம் கெடுதலின் பிரிகை

நேசம் கோபத்தின் இறத்தல்

நேசம் காலத்தின் பிறப்பு

என் சாபங்களை நீக்க நேசத்தின்

கோடுகளுள் இறங்க

இந்த குருவிகளையும் மலைகளையும்

மரங்களையும் பயன்படுத்துகிறேன்

இது கடவுளின் வானம்

அது அசையாமல் அப்படியே தன்னை வழங்கும்

அதுவரை இந்த நேசத்தின் மிகச்சிறந்த பாவனையாளன் நான்

கொடூர ஆசைகளின் கடைசிச் சிந்தனையாய்

இந்த நேசம் என்னை மாற்றியமைக்கும்.

இது அகதிதேச ஆற்றாமையாகவும் இருக்கலாம்

***********************

இரவின் நிறத்தைத்துரத்தும்

மஞ்சள் பறவை ஒன்று

………..

கொதித்துக்கொண்டிருக்கும் உறக்கத்தின் மீதமரும்

உயிர்த்தலின் பின்னால்

ஓடுகிறது

இங்கே உடைக்க நினைக்கும்

டெதஸ்கோப் வழியாக

எல்லோர் பின்னால் ஓடும்

வேறோர் பிரங்ஞையை

அடையாளம் காண்கிறது

எனக்கும் அந்த மரத்தடியில் எந்த நாகரீகத்தையும் அவதானிக்காது

கண்கள் தொழுது

கொண்டிருக்கும்

கவலைகளைச்சேர்க்கும்

துளிகளைக் கவானிக்காத அந்த

மஞ்சள் பறவைக்கும்

சில நொடிகள்தான் வித்தியாசப்படுகிறது

நான் இப்போதுதான்

இரவின்

நிறத்தைத்துரத்திக்கொண்டிருக்கிறேன்.

.************************

#சாத்தான்கள் மீது எறியப்படும் கற்கள்**

உப்புக்கடலின் உயிர்ப்பை உள் இளுத்தபடி

அலைந்து திரிகிறது

ஒளி மங்கிய கண்களுடன் ஒரு சில பெண்ணுடல் ஆன்மாக்கள்

அங்கே எல்லோர்க்கும்

வரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது தேவதைகளாய் தங்களை மெய்ப்பிக்கும்படி

சிலர் தங்களுடைய அவயவங்கள் சீழ்பூத்துப்போயிருப்பதாகவும் தங்களுக்கான தகமை இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் எனவும்

ஆயுத முனையிலிருந்து

விடுதலைக்கு தங்களை மோட்சப்படுத்துமாறும் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள்

பின் நம் இணைய முகவரிகளைப் பற்றி ஆதாரங்களை சமர்ப்பிக்கிறார்கள்

சில சாத்தான்கள்

சாத்தான்கள் பெரும் சத்தத்துடன்…..

அதில் விடுதலை என்பது சலுகைகளாக மாறிவிட்டதாகவும்

போர்கள் என்பதை விட

அடிமைத்தனங்களின் உபாதைகளை விரும்புவதாகவும் கூறப்பட்டிருப்பதை ஆதாரங்களாக

கூறிக்கொள்கின்றனர்

சாத்தான்களின் இந்த குரல் அந்தக்கடலின் கரையில் மோட்சம் பெறாமல் இறந்து கிடந்த ஏனைய ஆன்மாக்களின்

காதுகளுக்குள் பிணங்களின் இரைச்சலாய் எதிரொலிக்கிறது

ஆன்மாக்கள் எல்லாம் ஒன்றிணைந்து அழும் சத்தம் அந்த பூமியில் எஞ்சியிருந்த கரையோரக்குடிகளில் வாசிக்கும் குழந்தைகளின் காதில் விழுகிறது

அது அச்சத்தில் உரத்து அழுது கண்ணீர் சிந்துகிறது

இதை கடவுளின் காதுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அச்சமாக சாத்தான்கள் புரிந்து கொள்கிறார்கள்

அவர்களிடத்தில் ஒரு சராசரிப் போராட்ட வாழ்வின் இறுதி ஓலங்ளாலான அழுகை ஒழிந்து கிடப்பதை உணர்ந்த கடவுள் சாத்தான் களையும்

ஏளனப்படுத்திய அந்த

தமிழ் இணைய அந்தரர்களையும்

பார்த்து

பாவிகளின் தன்மைக்குள் உங்களை அழைக்கிறேன்

இவர்கள்

பாக்கிய சாலிகள் என்று நினையாதவர்கள்

அவர்கள் மீது கல்வீசுங்கள் என்கிறார்

அவர்கள் எறிந்த கற்கள் சாத்தன்கள்மீதே போய் விழுகிறது

அது மீண்டும் மீண்டும் சாத்தான்களிலே போய் விழுகிறது

கடவுள் பேசுகிறார்!!…

நீங்கள் உங்களுக்கான வாழ்விற்காய் புகழுக்காய் இன்னொருவர் மீது எறியும் கற்கள் சாத்தானின்மீதே விழுகிறது

நீங்கள் எறியும் கற்கள் சாத்தான்மீதே விழுகிறது

மீண்டும் சொல்கிறேன் !!!

அது சாத்தான்களின் மீது எறியப்பட்ட கற்கள் அதற்கான தண்டனையை சாத்தான்களே வளங்குவார்கள்.

….

சின்னஞ் சிறு உலகில் ( சிறுகதை ) / ஸிந்துஜா ( பெங்களூர் )

13319909_1638082513183370_8237096727182420454_n

சின்னக் கண்ணன், அம்மாவின் கையைப் பிடித்து இழுத்து , “இன்னிக்கி மட்டும் நான் டூஷனுக்கு போலேம்மா ” என்றான் .சாயந்திர வகுப்புக்கு இப்போதே கட்டை போடுகிறான் .

” செவிட்டுல ஒரு அறை விட்டா எப்படி இருக்கும் தெரியுமா ? தினைக்கும் இது ஒரு பிடுங்கலா போச்சு உன்னோட ” என்றாள் திரிபுரா கோபத்துடன் .

” இன்னிக்கி ஒரு நாள் மட்டும்மா , ப்ளீஸ் ” என்று கெஞ்சினான் .

திரிபுரா அவனைப் பார்த்தாள் . அவன் முகமும், ப்ளீஸ் என்று இறைஞ்சுகிற குரலும் , ஒரு நிமிஷம் அவளை இளக்கி விட்டது. கட்டால போறவன், என்ன ராயஸம் பண்ணறான் !

” ஏண்டா, இன்னிக்கி போகவேண்டாம் ? ” என்று கேட்டாள் .

” அந்த டீச்சர் இன்னிக்கி தொடைல கிள்ளுவார் ” என்றான் . .

” நீ என்ன சேஷ்டை பண்ணிட்டு வந்தே ? ” என்று கேட்டாள்
திரிபுரா. இவன் படு விஷமக்காரன்.

சின்னக் கண்ணன் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

” ஒண்ணும் டிராமா பண்ண வேண்டாம் என்கிட்டே . உள்ளதைச் சொல்லு ” என்று அதட்டினாள்

” நான் அவர் குடுத்த ஹோம் ஒர்க்கை பண்ணலே ” என்றான் கையைப் பிசைந்தபடி .

” ஓஹோ , சோட்டா பீம் பாத்துண்டு மகராஜா பாடத்தை கோட்டை விட்டாராக்கும் ”

” நான் ஒண்ணும் அதைப் பார்க்கலே ” என்றான் சின்னக் கண்ணன் படு சீரியஸாக .

” பின்னே ? ”

” கிரிக்கெட் மேட்ச் பாத்திண்டிருந்தேன் ” என்றான் சிரிப்புடன், கன்னத்தில் குழி விழ .

திரிபுரா சிரித்து விட்டாள் . என்ன பொல்லாத்தனம் !

சின்னக் கண்ணன் நாலாவது படிக்கிறான் . கணக்கில் மட்டும் அவன் வீக் . இத்தனைக்கும் அவன் அப்பா சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் . பெரிய கம்பனியில் ஃ பைனான்ஸ் மானேஜராக இருக்கிறான் . சின்னக் கண்ணன் புலிக்குப் பிறந்த புலிதான் . ஆனால் , கணக்கில் வீக்கான புலி .

சின்னக் கண்ணனின் வகுப்பு ஆசிரியரிடமே அவனுக்கு கணக்கு ட்யூஷன் வைத்தாகி விட்டது . ஒரு மாதமாகப் போய் வருகிறான் . ஆரம்பத்தில் ட்யூஷனுக்குப் போவது என்றால் அப்படி ஒரு வேகம் . மாலையில் ஸ்கூலிலிருந்து வந்து டிபன் சாப்பிட்டு விட்டு பையைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுவான் . பக்கத்து வீட் டு ஜக்கு , எதிர் வீட்டு ரங்கு என்று அவன் வகுப்புப் பையன்கள் எல்லோரும் . அவன் வகுப்பு வாத்தியாரிடம் தான் போனார்கள் . அவருக்கு ஸ்கூலில் நல்ல பெயர் . கண்டிப்புக்குப் பெயர் போனவர் . அவர் வகுப்பில் படிக்கும் எல்லா மாணவர்களும் பரிட்சையில் நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணி விடுவார்கள். ஒரு தடவை கூட யாரும் பெயில் ஆனதில்லை .அவருக்கு எப்போதும் டிசிப்ளின் முக்கியம் .

சின்னக் கண்ணன் இப்போது தகராறு பண்ணுவதற்கு அந்த டிசிப்ளின் தான் காரணம் . ஆரம்பத்தில் அவன் சார் வீட்டுக்கு ஓடி ஓடிப் போனதற்கு காரணம் , விளையாடுவதற்கு நிறைய சான்ஸ் இருந்தது. சாரின் வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் . வடக்கு மூலையில் பெரிய கிணறு. அதை ஒட்டி பம்ப் செட்.. சற்றுத்தொலைவில் பெரிய தொட்டி கட்டி, நீரைச் சேமித்து, அங்கிருந்து ,சிமென்ட் போட்டுக் கட்டிய வாய்க்கால் மூலம் நீர் தோட்டத்துக்கு போயிற்று .

சின்னக் கண்ணனும், அவனது நண்பர்களும் சாரின் வீட்டுக்கு வந்து சற்று நேரம்ஆன பிறகு தான் , தாமஸ் சார் ஸ்கூலிலிருந்து வருவார். அந்த இடை வெளியில், சிறுவர் கூட்டம் , ஆட்டமும் பாட்டமுமாக, அட்டகாசம் செய்வார்கள் . தொட்டியில் இருக்கும் தண்ணீரை இரு கைகளாலும் மொண்டு ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொள்வார்கள் . புளிய மரத்தில் தொங்கும் புளியம் பழத்தை எடுக்க ஒருவன் மரம்மேல்குரங்குபோலஏறுவான். ஜக்கு சின்னக்கண்ணனிடம் வந்து, நாலைந்து கற்களைக் கொடுத்து உயரத்தில் இருக்கும் புளியம் பழக் கொத்தை கீழே விழுமாறு அடிக்கச் சொல்லி கெஞ்சுவான் . சின்னக் கண்ணன் குறி பார்த்து அடிப்பதில் எம்டன். ‘ இடது பக்க கிளையா ,வலது பக்க
கிளையா ? ‘ என்று ஜக்குவின் சாய்ஸ் கேட்டு , அதையே அடித்துப் பறித்துத் தருவான் .

” எப்படிடா அர்ஜுனன் மாதிரி இப்பிடி குறிபார்த்து கரைக்டா அடிக்கிறே ? “என்று வாயைப் பிளந்து கொண்டு
ஜக்கு கேட்பான். அவனுக்கு டி . வி.யில் மகாபாரதம் சீரியல் என்றால் உயிர். அதே போல சண்டைகளும் … டைசனுக்கும் முகம்மது அலிக்கும் நடக்கும் சண்டையெல்லாம் எந்த மூலைக்கு என்று கேட்பது போல் குத்துச் சண்டை நடக்கும் .

சில நாட்கள் , சார் வீட்டில் வேலை பார்க்கும் செங்கம்மா வழக்கமாக காலையில் வர முடியாமல் போய் விட்டால் சாயங்காலம் வருவாள். பசங்களின் கூத்தடிப்பை சிரித்து ரசித்துக் கொண்டே வேலையைக் கவனிப்பாள் . அவர்களை விட ஏழெட்டு வயதுதான் அவள் பெரியவளாக இருப்பாள். சின்னக் கண்ணனுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். அவன் வீ ட்டில் வேலை பார்க்கும் தாயம்மா எப்போதும் சிடு சிடு வென்று இருப்பாள். அவன் செய்யும் குறும்புகளைப் பார்த்துத் திட்டிக் கொண்டே இருப்பாள்.
“எப்படிம்மா சார் வீட்டு வேலைக்காரி மட்டும் சிரிச்ச மூஞ்சியா
இருக்கா ? ” என்று சின்னக் கண்ணன் திரிபுராவிடம் இரண்டொரு தடவை கேட்டிருக்கிறான்.

இதெல்லாம் சார் வருவதற்கு முன்பு. ஆனால் அவர்
வரும் போது, இடத்தில் சுத்தமும், அமைதியும் கொஞ்சி விளையாடும் .ஆனால் நேற்று , இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முற்றுப் புள்ளி விழ வேண்டியதாயிற்று
. ‘பட’ பட ‘ வென்று அவருடைய மோட்டார் பைக் தெரு முனையில் வரும் சப்தம்தான் , ஆட்டம் போடும் கூட்டத்துக்கு எச்சரிக்கை மணி. ஆனால் நேற்று அவர் பைக் வரும் வழியில் தகராறு பண்ணியதில் , அவர் அதை கராஜில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த போது , கலாட்டா நடந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் , அனைவரும் கலங்கி விட்டார்கள். ரங்கு, டிராயரில் மூத்திரம் போய் விட்டான் . டிசிப்ளின் மன்னன் அவர் கோபத்தை செமத்தியாகக் காட்டி விட்டார் .

ரங்குவை டிராயரைக் கழற்றச்சொல்லி, புட்டத்தில், கம்பால் விளாசினார் . தோல் சிவந்து போய் விட்டது .அவன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான். சாருக்கு முன்னால் அவர் தண்டனை கொடுக்கும் போது, யாரும் அழக் கூடாது. முத்துச் சாமியின் கன்னத்தில் ரத்தம் வரும்படி கிள்ளினார். அவன் வாயை இறுகப் பொத்திக் கொண்டு சப்தத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டாலும், கண்ணீரை அடக்க முடியவில்லை.சின்னக் கண்ணனின் கையை நீட்டச் சொல்லி, பிரம்பை எடுத்து நாலு அடி கொடுத்தார். உயிரே போவது போல இருந்தது.உள்ளங்கை செக்கச் செவேலென்று ரத்தம் கட்டிக் கொண்டது போல பளபளத்தது . கையை உதற உதற, வலி இன்னும் அதிகமாகிக் கொண்டேபோனது. கருப்புசாமியின் இரு காதுகளையும் ஏதோ ரப்பரால் செய்யப்பட் ட விளையாட்டுச் சாமானைப் போல் சார் திருகி இழுத்ததில் அவனுக்கு உயிரே போய்விட்டது.

அன்று ட்யூஷன் வகுப்பில் அவர் பாடம் எதுவும் எடுக்கவில்லை. பதிலாக எல்ரையும் முட்டிக்கால் மண்டி போடச் சொல்லி விட்டு வீட்டுக்குள் போய் விட்டார். அரை மணி கழித்து வந்த போது, எல்லாப் பயல்களும் மயங்கிக் கீழே விழும் நிலையில் இருந்தார்கள். அவர் கையில் எடுத்து வந்திருந்த செம்பிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் சுக்குக் காப்பியை ஊற்றிக் கொடுத்தார். உடம்பு வலிக்கும், முட்டிக் கால் வேதனைக்கும் அந்தப் பானத்தை ஒவ்வொருவனும் ருசித்துக் குடித்தான்.

கிளம்பும் போது , இரண்டு நாள்கள் செய்ய வேண்டிய வீட்டுப் பாடத்தை மறுநாளே முடித்துக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று உத்திரவு போட்டு விட்டு அனுப்பினார்..

வீட்டுக்குத் திரும்பியதும்,அவன் அம்மா கையைப் பார்த்து விட்டாள் ” எதுக்குடா கையெல்லாம் இப்படி சிவந்து கிடக்கு ? ” என்று திரிபுரா அதிர்ச்சியுடன் பார்த்தாள் .

” கோடு போடறச்சே, கோணலாவே வந்திண்டு இருந்தது. நாலு பிரப்பம் பழம் குடுத்தாதாண்டா , உங்களுக்கு எல்லாம் புத்தி வரும்னு , கையை நீட்டச் சொல்லி, அடிச்சிட்டார் ” என்றான் சின்னக்கண்ணன் விக்கலுடன். உண்மையைச்
சொன்னால், அவளிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.

வழக்கமாக திரிபுரா அவனை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு வீட்டுப் பாடங்களை முடிக்க அவன் கூட உட்காருவாள் . ஆனால் அன்று அவளுக்கு டாக்டரிடம் போக வேண்டியிருந்தது . அதனால் சின்னக் கண்ணன் பாடங்களை முடிக்காமலே ட்யூஷனுக்குப் போக வேண்டியிருந்தது ..

சின்னக் கண்ணன் சார் வீட்டுக்கு வரும்போது மற்ற எல்லோரும் வந்திருந்தார்கள். ரங்கு அவனிடம் சார் உள்ளே இருப்பதாகவும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாரென்றும் குசுகுசுத்தான். தினப்படி விளையாட்டுக்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி விழுந்ததின் சோகம் எல்லோர் முகத்திலும் இருந்தது . சின்னக் கண்ணன் பையிலிருந்த ஜாமெட்ரி பாக்ஸை திறந்து அதன் உள்ளே இருந்து பென்சிலை எடுத்தான். கூர் உடைந்து போயிருந்தது. மெண்டரைத் தேடிப் பார்த்தான் . இல்லை. கைக்கு உதவட்டும் என்று அவர்கள் ஒரு பிளேடை ஜன்னலுக்கு அருகில் வைத்திருந்தார்கள். ஜாமென்ட்ரி பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு ஜன்னலை நெருங்கினான் .

அப்போது செங்கம்மா வேலிப் படலைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் வருவதை சின்னக் கண்ணன் பார்த்தான். கறுப்புக் கலரில் புடவையும் , சிவப்புக் கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் .

அவள் உள்ளே வந்ததும் சின்னக் கண்ணன் ” டிஎம்கே வராங்க டோய் ” என்று சிரித்தான் .மற்ற பையன்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

செங்கம்மாவும் சிரித்தபடி “உனக்கு கொழுப்பு ஜாஸ்திடா ” என்று அவனருகே வந்து காதைப் பிடித்துத் திருகினாள் ” நேத்து செம உதை வாங்கியும் திமிரைப் பாரேன்! ” என்றாள் .சின்னக் கண்ணனும், மற்றவர்களும் அசடு வழிய அவளைப் பார்த்துச் சிரிக்க முயன்றார்கள் .

” ஒரு மூஞ்சியும் பாக்கறபடி இல்ல . நாலு நாள் கழிச்சு எல்லாம் சரியா போயிடும் , போங்க ” என்றபடி வீட்டுக்குள் போனாள்

அப்போது சார் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார் .

” நேத்திக்கி குடுத்த வேலை எல்லாம் முடிச்சிட்டீங்களா ? ” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அனைவரும் ஏதோ துக்க வீட்டில் கூடியிருப்பது போல மௌனம் அநுஷ்டித்தார்கள்

“இங்க வந்து விளையாட்டு சாம்பியன்களா ஆகப் போறிங்களோ ? ” என்றார். .

அவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல் மேலும் சில வீட்டுக் கணக்குகளைக் கொடுத்தார். அவர்களைப் பார்த்து
” இன்னிக்கி ட்யூஷன் இல்ல. எனக்கு உடம்புக்கு முடியலை . நீங்க வீட்டுக்கு போயிட்டு திங்கக் கிழமை வாங்க ” என்றார். அப்போது செங்கம்மா அவருக்கு மருந்து கொண்டு வந்து கொடுத்தாள் .

எல்லோரும் களிப்பை அடக்கிக் கொண்டு, சாருக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தியால் வருத்தப் படும் மூஞ்சிகளை வைத்துக் கொண்டு கிளம்பினார்கள் .

வெளியே வந்ததும் ” நம்மளை நேத்தி அந்த அடி அடிச்சதுக்கு, கடவுளே தண்டனை கொடுத்திட்டாரு ” என்றான் கருப்புசாமி .

” இன்னும் எனக்கு சொயிங் ‘னு இருக்குடா ” என்றான் சின்னக்கண்ணன் தனது இரண்டு கைகளையும் தடவியபடி.

” ரொம்பவும் புலம்பாதீங்கடா .பாவம்னு அடிச்சதுக்கு வருத்தப்பட்டு, சுக்கு காப்பி போட்டுக் குடுத்தாரே ” என்றான் ஜக்கு. எல்லோரும் விரோதமாக அவனைப் பார்த்தார்கள் .

அவர் கள் மேம்பாலம் அருகே வரும்போது குச்சி ஐஸ்க்ரீம் வண்டிக்காரன் எதிர்ப்பட்டான் .ஒவ்வொருவரும் தங்கள் சட்டைப் பையிலிருந்து காசை எடுத்துக் குடுத்து குச்சி ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு நடந்தார்கள் .

” டேய் ஜக்கு, சாருக்கு உடம்பு சரியில்லாதப்ப , நாம ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடறது தப்புன்னு ஏண்டா சொல்லலே ? ” என்று சின்னக் கண்ணன் விஷமமாக அவனை வம்புக்கு இழுத்தான் .

மற்றவர்கள் சிரித்தார்கள் .’ சரி, நான் சொன்னது தப்புதான் ” என்று ஜக்குவும் சிரித்தான் .

” ஹோம் ஒர்க் செமத்தியா தீட்டிட்டார்டா. இன்னிக்கி நைட்டு பூரா கண் முழிச்சி வேலை பெண்டு கழண்டிரும் ” என்றான் முத்துச்சாமி .

” டேய் , நேத்திக்கு குடுத்த ஜாமெட்ரி கணக்கு நான் போடலைடா . கண்ணா, உன்னோட ஜாமெட்ரி பாக்ஸை இன்னிக்கு குடுக்கிறியா. கணக்கை முடிச்சிட்டு, நாளைக்கு உங்க வீட்டுல வந்து குடுத்திடறேன் ” என்றான் ஜக்கு .

சின்னக் கண்ணனுக்கு அப்போதுதான் ஜன்னல் அருகே தன்னுடைய ஜாமெட்ரி பாக்ஸை விட்டு விட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது.
” அடச்சே , சார் வீட்ல விட்டுட்டு வந்துட்டேனே. ” என்றான்.
” சரி , நீங்கள்லாம் போங்க, ஜக்கு நான் சார் வீட்டுல போய் எடுத்திண்டு வந்து உங்க வீட்டுல குடுத்திடறேன் ” என்றபடி, வந்த வழியில் திரும்பினான் .

பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. சின்னக் கண்ணன் ஓட்டமும் நடையுமாக சார் வீட்டைப் பார்க்க விரைந்தான் அவர் வீடு இருக்கும் தெரு முனையில் திரும்பும் போது , சார் அவருடைய மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் . அவனைப் பார்த்து வண்டியை நிறுத்தினார் .

சின்னக் கண்ணன் அவசர அவசரமாக ” நான் உங்க வீட்டுக்குத்தான் சார் போயிட்டு இருக்கேன் . என் ஜாமெட்ரி பாக்சை மறந்து விட்டுட்டு போயிட்டேன் ” என்றான் பயந்து கொண்டே..

சார் அவருடைய மோட்டார் சைக்கிளின் பின் புறம் இருந்த தோல் பையிலிருந்து அவனுடைய ஜாமெட்ரி பாக்சை எடுத்துத் தந்தார்.

” ஹோம் ஒர்க் இது இல்லாமே எப்படி பண்ணுவே ? மறந்து வச்சிட்டு போயிட்டே , செங்கம்மாதான் சொன்னா இது உன்னுதுன்னு . சரி உன் வீட்டுல குடுத்துடலாம்னு கிளம்பினேன். நீயே வந்திட்டே ”
என்றார் . ” உன்னை வீட்டு வரையிலும் கொண்டு போய்
விட்டுரட்டா ? ” என்று கேட்டபடி வண்டியைக் கிளப்பினார் . .

” இல்ல சார், நான் ஜக்கு வீட்டுக்கு போய் , ரெண்டு பேரும் ஜாமெட்ரி கணக்கை போட்டுட்டு அப்புறம் வீட்டுக்கு போறேன் சார். ” என்றான் .
உடம்பு சரியில்லாத நிலையிலும் அவர் செய்த காரியம் ….அவரைப் போய்த் திட்டியும் கேலி செய்தும் …

சின்னக் கண்ணன் அவரிடம் ” சாரி சார் ” என்றான் .

அவர் ” சாரி இல்லே , தேங்க்ஸ்னு சொல்லணும் ” என்றார் சிரித்தபடி .

” இல்ல சார் , சாரிதான் சார் கரெக்ட் ” என்றான் சின்னக் கண்ணன் .

சார் அவனை வியப்புடன் பார்த்தார் .

—–

தேவதையின் துணை ( சிறுகதை ) ( அறிமுகப் படைப்பாளி ) / அனிதா சரவணன்,

download (5)

அந்த “ட“ வடிவ சாய்விருக்கை வரவேற்பறையின் முக்கால்வாசி வெற்றிடத்தை வளைத்து இறுக்கிக் கொண்டு பறந்து விரிந்திருந்தது. அதன் வலது கைவளைவில் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஐந்து வயது நிலா, சிரித்தபடி அவள் மடியில் கிடந்த அவளால் லயா என்று பெயரிடப்பட்ட குழந்தை பொம்மையை மேலும் கீழும் வேகமாக அசைத்து மீண்டும் மீண்டும் கண்ணை மூடித் திறக்கச் செய்துக் கொண்டிருந்தாள். சிறுது நேரம் அவளும் லயாவும் மட்டுமே உலகமாய் விளையாடிக் கொண்டிருந்தவள் சட்டென்று விழி திறக்கும் இமை போல தலை தூக்கி வீட்டை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த மலரைப் பார்த்து,

“ம்மா…..திவியும், அவ தங்கச்சிப் பாப்பாவும் போட்டுட்டு வந்திருந்தாங்களே ஒரே மாதிரி கவுன், அது மாதிரி எனக்கும் லயாக்கும் வாங்கிக் கொடுக்கறீங்களா…” என்றாள்.

சரிடா, வாங்கித்தரேன்…

ஒரே கலர்ல…

சரி…

ஒரே டிசைன்…

“ஒரே கலர்ல, ஒரே டிசைன்ல, இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கித்தரேன் சந்தோஷமா?” என்றாள் மலர்.

ம்ம்…என்று உற்சாகமாகத் தலையை அசைத்தவள், “ம்மா… அப்புறம் லயா விளையாடக் கிலுகிலுப்பும் வேணும்” என்று கூறிவிட்டு, பதில் சொல்லாமல் யோசனையோடு நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்த மலரைக் கவனிக்காமல், லயாவின் கையையும், கண்களையும் மாற்றி மாற்றி அசைத்துக் கொண்டே, மீண்டும் லயாவிற்கும் அவளிற்குமான உலகிற்குள் நுழைந்துக் கொண்டாள்.

பல நாட்கள், கடை, பார்க் என்று பார்க்குமிடத்தில் எல்லாம், எதிர்த்த வீட்டு திவியை வீட்டிற்கு வரச் சொல்லி நிலா விரும்பி அழைத்ததால் இன்று பள்ளி முடிந்ததும் வந்து சென்றிருந்தார்கள்.

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அவர்களை வரவேற்பதற்கான தயாரிப்பில் இருந்தாள் நிலா. அவளோடு சேர்ந்து டாஃபி டக், விஷ் பியர், பார்பி, என்று அனைவரும் வரிசைக்கட்டி தயாராகி நின்றுருந்தார்கள். எல்சா, அன்னா கூட அவர்கள் மாளிகையில் காத்திருந்தார்கள் நிலாவைப் போலவே திவியின் வருகைக்காக.

“ம்மா….இங்க பாருங்க, நான் திவிக்காக வெல்கம் கார்ட் பண்ணியிருக்கேன், நல்லாயிருக்கா? திவிக்கு பிடிக்குமா? இந்தப் படம் எப்படி இருக்குமா? ம்மா…இந்தப் படம் பாருங்க” என்று திவியையும் அவளையும் சேர்த்து அவள் வரைந்த படங்கள் ஒவ்வொன்றையும் காட்டி, மலரின் பதிலை எதிர்பார்க்காமல் வினா தொடுத்தபடி சுற்றிக் கொண்டிருந்தாள்.

விட்டு விட்டு ஒலித்த அழைப்பு மணி சத்தத்தில் ஓவியங்களையும், வெல்கம் கார்டையும் அள்ளிக்கொண்டு திவியை வரவேற்க அம்பாகப் பாய்ந்தவளின் உற்சாகம், அடுத்த இரண்டு மணி நேரங்களும் சற்றும் குறையாமல் தொடர்ந்தது.

அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த கத்திரித்த பேப்பர் துண்டுகள், நிலாவும், திவியும் சேர்ந்து வண்ணங்களை வாரி இரைத்திருந்த காகிதங்கள், களைந்து கிடந்த எல்சாவின் மாளிகை, குளியலறை டப்பில் மிதந்து கொண்டிருந்த டாஃபி டக், தரையில் தலை கலைந்து நனைந்து கிடந்த எல்சா, வந்ததிலிருந்து சிரித்தபடி விளையாடிக்கொண்டிருந்த திவியின் தங்கை விட்டுச் சென்ற கிலுகிலுப்பை, என்று வீடே திருவிழா நடந்து முடிந்த இடம்போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

என்றைக்கும் அம்மாவிற்கு உதவி செய்கிறேன் என்று அதிக குதூகலத்தில் கலந்து கொள்ளும் நிலவோ, தற்போது உதவி செய்யவும் முன் வராமல், யோசனை படர்ந்த முகத்தோடு தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் மலரையும் கவனிக்காமல், கவுனுக்கும், கிலுகிலுப்பைக்கும் உறுதி பெற்றுவிட்ட மகிழ்ச்சியோடு, லயாவை மடியில் கிடத்தி அவள் முகத்தை இரு கைகளால் மறைத்துக் கொண்டு “நிலா எங்க காணோம் கண்டுபிடிங்க” என்று விளையாடிக்கொண்டிருந்தாள்.

நேரம் செல்லச் செல்ல, தானே இயங்காத லயாவைப் பார்த்து மெல்ல மெல்ல உற்சாகம் வடிய மடியில் அசையாமல் கிடந்த பொம்மையையே உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் லயா அந்த “ட“ வடிவ சாய்விருக்கையின் தெற்கு மூலையின் கைவளைவில் சிரித்தபடி கிடந்தது, நிலாவின் கண்கள் தொலைக்காட்சி திரையிலும் கைகள் ரிமோட்டின் பட்டன்களிலும் வேகமாக இயங்க ஆரம்பித்தது…

“ம்மா….இந்தக் கார்டூன் பேர் என்ன சொல்லுங்க,” என்றாள் நிலா மலர்ந்து சிரித்தபடி.

டொனால்ட் டக்…

“இல்லை….டாஃபி….டாஃபி டக்” என்றவள் இது கூட உங்களுக்குத் தெரியலையே என்று கண்களைச் சுழற்றினாள்.

“இதோட பேர் சொல்லுங்க,” என்றாள் மீண்டும், இப்பொழுது சவால் விடும் பார்வையில்.

யோசனையாகப் புருவத்தை நெரித்தபடி, “வின்னி த புஹ்” என்றாள் மலர்.

“ம்ப்ச்…தப்பு…. விஷ் பியர்” என்ற நிலாவின் குரலில் சலிப்பு தட்டியது.

இது….என்று சொற்களை உதிர்க்காமல், கண்கள் அம்மாவை உற்றுப் பார்த்திருக்க, கை மட்டும் நீண்டு வேறொரு பொம்மையைத் தொட்டது.

“பார்பி, இப்ப சரியா சொல்லிவிட்டேனா அம்மா,” என்று பெருமிதமாக மலர்ந்து சிரித்த மலரிடம், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, ஆழ்ந்த அகன்ற கண்களால் முறைத்துக் கொண்டே, கீழ் உதட்டை முடிந்தவரை வளைத்துப் பிதுக்கினாள் நிலா.

என்னடா இது, என்று என்றும் இல்லாத பழக்கமாக நகத்தைக் கடித்தும், முடியைப் பிய்த்தும், மூலைக்கு மூலை உட்கார்ந்து பார்த்து யோசித்தும், ஆரம்ப கல்வி முதல் மேலாண்மை கல்வி வரை படித்த பாடங்கள் அனைத்தும் மூளையில் படமாக ஓடியதே தவிர தினமும் பிள்ளையிடமிருந்து கற்கும் பாடங்கள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது மலருக்கு. அதனால் வழக்கம்போல் மகளிடமே சரணடைந்தாள். “இந்த ஒருதடவை மட்டும் சொல்லுமா, அம்மா அடுத்த தடவை சரியா சொல்றேன்,” என்றாள் இயலாமையில் எழுந்துவிட்ட வருத்தத்தோடு.

மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “எல்சா” என்றவள் அம்மாவின் முகத்தில் வருத்தத்தின் சாயலைப் பார்த்து, “பரவாயில்லைமா, திவிக்கு எல்லாம் தெரியும் அவளை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து நாமளே வச்சிக்கிலாம், சரியா…” என்றாள் திரு திருவென்று முழிக்க ஆரம்பித்த மலரைப் பார்த்துத் தீர்வைக் கண்டுபிடித்து விட்ட மலர்ச்சியோடு.

“திவி அம்மாவிடம் கேட்டு இப்ப வந்த மாதிரி ஒரு நாள் மட்டும்…” என்று மலர் முடிப்பதற்குள்ளாக, “எல்லாப் பொம்மையும் திவியிடம் காட்ட எடுத்து வைக்கிறேன்” என்று கத்தியபடி தேடுதல் வேட்டைக்குக் கிளம்பிவிட்டாள் நிலா, மலர் கன்னத்தைத் தாங்கிக்கொண்டு உட்கார்ந்துவிட்டதைப் பார்க்காமல்.

****

அன்று பள்ளியிலிருந்து திரும்பியவுடன், மகளோடு சம அளவில் அமர்ந்து அவளுடைய முகத்தை ஆவலாய் பார்த்துக்கொண்டே, “என்ன பண்ணிங்க பள்ளிக்கூடத்தில் இன்னைக்கு?” என்றாள் மலர்.

இரண்டு தோள்களையும் குலுக்கியபடி, முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு “ஒண்ணுமில்லை” என்றாள் நிலா.

“புதுசா என்ன விளையாட்டு கத்துக் கிட்டீங்க இன்னைக்கு? உங்க பிரெண்ட் தியா என்ன சொன்னாங்க?” என்று மலரின் விக்கிரமாதித்திய முயற்சியைத் தடை செய்த படி முகமெல்லாம் பிரகாசமாக…”ம்மா…ம்மா…இன்னைக்கு நான், தியா, ரக்ஷி, மித்து எல்லாம் ஹாப்ஸ்காட்ச் விளையாண்டோமா…நான் தான்மா நிறைய முறை ஜெயிச்சேன்…தியா சிரிச்சிக்கிட்டே கல்லு தொலைச்சிட்டாமா…அப்பறம் நாங்க போய்த் தேடினோமா, குச்சி தான் கிடைச்சிதா அதுக்குள்ளே பெல் அடிச்சிடுச்சிமா…எனக்கு இன்னும் விளையாடனுமா, நாம ‘இப்பவே’பார்க் போகலாம் வாங்க.”

இப்ப எப்படிமா போக முடியும்? அம்மாவுக்கு வேலையிருக்கு, நாம சனி, ஞாயிறு போகலாம். இப்ப போய் நிலாக் குட்டி துணி மாத்திட்டு, கை, கால் கழுவிட்டு வருவீங்களாம். நாம இரண்டு பேரும் வீட்டிலேயே இன்னைக்கு ஹாப்ஸ்காட்ச் விளையாடலாம்.

ஹாப்ஸ்காட்ச் நீங்க விளையாட முடியாதுமா…

ஏன்மா?

“அதுவா…அது குட்டி கட்டமா இருக்கும், உங்க காலுக்குப் பத்தாது. எனக்கு ரக்ஷிக்கு, தியாக்கு, மித்துக்கு மட்டும் தான் பத்துமா” என்று எப்படியாவது அம்மாவிற்குப் புரிய வைத்துப் பார்க்கிற்கு கூட்டிக் கொண்டு போய் விடும் தீவிரத்தில் இருந்தாள் நிலா.

“அப்ப நாம பெரிய கட்டமா போட்டுக்கலாம்” என்ற மலரிடம், “அப்புறம் எனக்கு எட்டாதுமா, எனக்குக் குட்டி கால் தானே, அதனால நாம பார்க் போகலாம் அங்க திவி, விது, மகி, கரண் எல்லாம் வருவாங்க என்றாள் நிலா.”

“அப்படியா சரி, அப்ப நாம வேற விளையாட்டு விளையாடலாம், பார்க்குக்கு சனி, ஞாயிறு போகலாம்” என்ற மலரின் பதில் நிலாவுக்கு உவப்பானதாக இல்லை. அதனால் அடுத்த முயற்சியில் இறங்கி விடுவது என்ற முடிவோடு, “இருங்கமா, நான் அப்பாட்ட கேட்கிறேன்…” என்று சாய்விருக்கையை நோக்கி விரைந்தாள்.

ப்பா….அப்பா…

என்னம்மா…

“இங்க என்னைப் பாருங்கப்பா” என்றாள் நிலா அழுத்தமாக, அங்கமெல்லாம் கண்களாக மடிக் கணினி திரையை உற்று பார்த்துக் கொண்டிருந்த மதனின் தோள் வளைவைத் தன் சிறு கைகளால் குழி பறித்தபடி.

“சொல்லுமா” என்று வாயை மட்டும் அசைத்த மதனிடம், “ப்பா…எனக்கு ‘இப்பவே’ பார்க் போகணும்” என்றாள் நிலா.

‘உடனே இந்த வேலையை முடித்து அனுப்பி விடுங்கள் மதன்’ என்று மேலதிகாரியிடமிருந்து வந்திருந்த மெயிலை படித்துக் கொண்டிருந்த மதன், தன் மகளின் இப்பவே என்ற பிடிவாதமான கட்டளையில் அதிர்ந்து கவனத்தை நிலாவிடம் குவித்தான்.

“இப்பவே வா? பார்த்தீங்க தானே அப்பாவுக்கு நிறைய வேலையிருக்கு, நாம சனி, ஞாயிறு போகலாம், இப்ப நீங்கத் தோட்டத்தில் இருக்கும் நிலாக்குட்டியோட பிரின்சஸ் சறுக்கல், டோரா ஊஞ்சல்ல போய் விளையாடுங்க, அப்பா கண்டிப்பா வார இறுதியில் கூட்டிக்கொண்டு போறேன்” என்று தனது வார்ப்புரு(template) பதிலை அளித்து விட்டு மீண்டும் கணினியிற்குள் தொலைந்தான் மதன்.

சனி, ஞாயிறு என்ற வார்த்தைகளோடு செவிமடுப்பதை நிறுத்திவிட்ட நிலாவிற்கோ, ஒரே வித பதிலில் இது தான் முடிவு என்று தெளிவாகத் தெரிந்து விட, தோல்வியிலிருந்து வெளிவர முடியாமல் கோபமாக அமர்ந்துவிட்டாள்.

சாய்விருக்கையின் கைவளைவில் உம்மென்று அமைதியாகக் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த நிலாவிடம் வந்த மலர், “வாடாக்குட்டி தோட்டத்திற்குப் போய்ச் சறுக்கல்ல விளையாடலாம், அம்மாவும் உங்க கூட விளையாடறேன்…” என்றாள். மலரைத் திரும்பியும் பார்க்காமல் அதே நிலையில் கண்களில் நீர் உருளப் பதிலற்று அமர்ந்திருந்தாள் நிலா. பொறுத்துப் பார்த்த மலர் லயாவை எடுத்து வந்து அவளிடம் தர, அது நொடியில் பதினைந்தடி கடந்து வாசல் கதவை அடைந்து இடித்துக் கொண்டு தலை கீழாகத் தொங்கி சற்று நேரம் ஊஞ்சலாடியது. நிலாவை வொத்த லயாவின் கவுன் நுணி தாழ்பாளில் சிக்கியிருந்தது.

கண்களை மட்டும் உருட்டிக் கோபம் பரவ ஆரம்பித்திருந்த மலரின் முகத்தை அளந்துவிட்டு, தலையைச் சிலுப்பி கண்களிலிருந்து உருண்டுவந்த நீரை தோல்பட்டையில் துடைத்துக் கொண்டு டிவி ரிமோட்டை கைப்பற்றினாள் நிலா….

****

ம்மா… தூக்குங்க, என்னால நடக்க முடியலை….

“அதுக்குள்ளையா? நீ தானே வெளியே போகணுமென்று அழுத, அதனால தானே அம்மா உன்னைக் கூட்டிக்கிட்டு வந்தேன். பத்தடி கூட நடக்கல அதுக்குள்ள தூக்க சொல்ற,” என்ற மலரின் வார்த்தைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மலர்மேல் தொத்தி ஏற முயற்சி செய்தபடி மீண்டும் “தூக்குங்கமா” என்றாள்.

நிலாக் குட்டி, நாம விளையாடிக்கிட்டே போகலாமா, அஞ்சி அஞ்சி நம்பரா எண்ணலாமா இல்லை பத்து பத்தா எண்ணலாமா…?

“வேண்டாமா….தூக்குங்க” என்றாள் அதே முயற்சியோடு…

சரி நீங்க மரம் எண்ணுங்க, அம்மா செடி எண்ணுறேன்….சரியா…

இல்ல நான் தான் செடி எண்ணுவேன் ஆனா நீங்கத் தூக்கினதுக்கப்புறம் தான் எண்ணுவேன்…

இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று வழக்கம்போல் சரணடையும் முடிவை எடுத்த மலர், நிலாவிடம், “அம்மாவிற்கு வயிற்றில் பாப்பா இருக்கு, பாருங்க வயிறு எவ்வளவு பெருசா இருக்குது, அதனால் அம்மாவால்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே… இடுப்பில் ஏறும் முயற்சிகளையெல்லாம் கைவிட்டுவிட்டு, அம்மாவின் விரல்களைப் பற்றியபடி முகத்தை நோக்கி, “பாப்பா இருக்காமா? திவி தங்கச்சிப் பாப்பா மாதிரியே குட்டி பாப்பாவா? எப்ப வெளியே வரும்? நம்ம வீட்டிலேயே இருக்குமா? என்கூட விளையாடுமா? என்னுடைய பொம்மையெல்லாம் பாப்பாவுக்கு பிடிக்குமா? ஹாப்ஸ்காட்ச் விளையாடக் கட்டம் இன்னும் கொஞ்சம் சின்னதா போடணுமா?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கினாள் நிலா.

ஆமாம்டா திவி தங்கச்சி மாதிரியே குட்டிப் பாப்பாவா இருக்கும். சீக்கிரம் வெளியே வந்திடுவாங்க நிலா கூட விளையாட. நம்ம வீட்டிலேயே, நிலா கூடவே தான் இருப்பாங்க. தங்கச்சி பாப்பாவுக்கு நிலா அக்காவை ரொம்ப பிடிக்கும்.

சட்டென்று ஒரு நிமிடம் மலரைப் பற்றியிருந்த கையால் இழுத்து நிறுத்தி, அவள் முன் வந்து நின்று அம்மாவை மேலும் கீழும் பார்த்த நிலா, “ம்மா, பாப்பா எப்படிமா வெளியே வரும்?” என்றாள்.

மருத்துவமனை போனா டாக்டர் பாப்பாவை பத்திரமா வெளியே எடுத்திடுவாங்க? என்றாள் மகளின் கேள்விகளை எதிர்பார்த்து பதிலைத் தயார் நிலையில் வைத்திருந்த மலர்.

எப்படி எடுப்பாங்க?

டாக்டர் ஒரு மேஜிக் பண்ணி வெளியே எடுப்பாங்க.

என்ன மேஜிக்? என்றாள் நிலா ஆர்வம் கொப்பளிக்க.

அது நாம படித்து டாக்டரானாத்தான் தெரியும்.

அதுக்கு நிறைய படிக்கணுமாமா?

அம்மா, ஆமாம் என்று தலையாட்டியதை பார்த்த நிலா…சிறிது நேரம் தீவிர யோசனையோடு வந்தவள், “பாப்பாவுக்கு என் பொம்மை, லயாவோட பொம்மை எல்லாம் விளையாடத் தருவேன். பாப்பாவுக்குக் கதை பிடிக்குமா? எனக்கு நிறைய கதை தெரியும்மா, நான் தினமும் பாப்பாவுக்கு கதை சொல்லுவேன். திவி தங்கச்சிப் பாப்பா மாதிரி பாப்பாவுக்கு கண்ணாமூச்சி விளையாடப் பிடிக்குமா?” என்று பேசிக்கொண்டே வந்தவள் வீடு கண்ணில் பட்டவுடன் “நான் போய்ப் பாப்பாவுக்கு எல்லாம் எடுத்து வைக்கிறேன்மா” என்று பாப்பா வெளியே வரும் பொறுப்பை மருத்துவரிடமே விட்டுவிட்டு, அம்மாவின் கையை உருவிக்கொண்டு, “கவனம் பாப்பா” என்ற மலரின் வார்த்தைகளைக் காற்றில் பறக்க விட்டு அவள் வீட்டை நோக்கிப் பாய்ந்திருந்தாள்.

****

அன்று காலையிலிருந்து தொலைப்பேசி மணி சத்தம் கேட்டாலே பர பரத்துக் கொண்டிருந்தாள் நிலா, வந்தவையெல்லாம் அவள் எதிர்பார்த்த அழைப்பாய் இல்லாத போதும், அவள் ஆரவாரம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது…

மதியம் மூன்று மணி அளவில் நான்கு மூலையிலிருந்தும் ஓங்கி இசைத்த தொலைப்பேசி அவளது நீண்ட காத்திருப்பை முடித்து வைத்தது.

பாட்டி….போன் சத்தம் போடுது…போன் எடுங்க…எடுங்க…”

இதோ எடுக்கிறேன்மா…நீ குதிக்காமல் மெதுவா வா விழுந்திட போற…

பாட்டி தொலைப்பேசியை எடுத்ததிலிருந்து, அவர் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்துவிட்டு, போன் காதிலிருந்து கீழே இறங்க ஆரம்பிக்கும்போதே… அவள் ஆரம்பித்துவிட்டாள். “யார் பாட்டி போனில்? அம்மாவா? அப்பாவா? பாப்பா பிறந்தாச்சா? பாப்பா எப்ப வரும் வீட்டுக்கு?” என்று காலையிலிருந்து வரிசை மாறாமல் தொடர்ந்து வரும் அதே கேள்விகளைப் பாட்டியின் கைகளைப் பிடித்துக் குதித்துப் படி கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அப்பாதாண்டா போனில்… பாப்பா பிறந்தாச்சு…அம்மா நாளைக்கு வந்திடுவாங்க…இப்ப சந்தோஷமா உங்களுக்கு?” என்று கேட்ட பாட்டியிடம் தலையை எல்லாப் பக்கமும் உருட்டிவிட்டு, “இப்பவே பாப்பாவை பார்க்கணும் வாங்கப் போகலாம் என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.” பின்பு பாட்டியும் தாத்தாவும் அவளைச் சமாதானப் படுத்தி, பாப்பாவை வரவேற்க வீட்டைத் தயார் செய்யலாம் ‘இப்பவே’, என்று சொன்னவுடன் தான் மறுபடியும் முகத்தில் புன்னகை ஒளியின் வேகத்தில் பரவ ஆரம்பிக்கப் பேப்பரையும், பலூனையும் எடுத்து வரப் பறந்து விட்டாள் நிலா.

வீட்டைச் சுற்றிலும் இருந்த ஆறு கண்ணாடி ஜன்னல்களிலும் நிலாவின் ஓவியமே வீதியைப் பார்த்தபடி ஒட்டிக்கொண்டிருந்தது…அப்பா, அம்மா, நிலா, தங்கச்சிப் பாப்பா ஒரு ஓவியத்தில் இருந்தார்கள் என்றால், நிலாவும் தங்கச்சிப் பாப்பாவும் மட்டுமே மீதி அனைத்து ஓவியங்களிலும் நிறைந்திருந்தார்கள். கைக்கோர்த்தபடி, பலூன் பிடித்தபடி, ஓடி விளையாடியபடி, கதை புத்தகம் படித்தபடி, ஒரே விதமான உடை அணிந்தபடி என்று அவள் கற்பனைகளை வண்ணங்களால் காட்சிப் படுத்தியிருந்தாள். சாலையைப் பார்த்திருந்த ஜன்னல் கண்ணாடி ஒன்றின், கிடைத்த இடைவெளியில் அவள் கண்களும், கைகளும் ஒட்டிக்கொண்டிருந்தது…ஆனால் வாய் மட்டும் பாட்டியிடம் உரையாடலில் இருந்தது.

“பாட்டி இப்ப ஒரு வெள்ளை கலர் கார் வருது…ம்ஹும் …இதுவும் இல்லை…இன்னொரு வெள்ளைக் கார்…ம்ஹும்…இந்தக் கார் முன்னாடியும் அந்த ஒடுக்கு இல்லை…உங்களுக்குத் தெரியுமா, நான் தான் சைக்கிள் ஓட்டும்போது கவனிக்காமல் போய்க் கார் மேலே இடிச்சுட்டேன்…அதனால தான் முன்னாடி அந்தப் பம்ப் வந்துடுச்சி….” என்று நிலாவின் வாய் தான் அசைந்ததே தவிர, நீண்ட நேர எதிர்பார்ப்பிலும், நிலாவின் கண்கள் சோர்வடையாமல் விரிந்தே இருந்தது…கொஞ்சம் கொஞ்சமாக அவள் கன்னங்களும், உதடும் கண்களோடு போட்டி போட்டுக்கொண்டு விரிந்து கொண்டிருந்தது….”பாட்டி கார் வந்துடுச்சி, தங்கச்சி பாப்பா வந்துட்டாங்க” என்று கத்திக்கொண்டே வாசற்கதவை நோக்கி வேகமாகச் சென்றவளை கைப் பிடித்து நிறுத்தினார்கள் அவளின் பாட்டி.

குழந்தையைப் பார்த்ததும் வருந்துவாளோ…முன்பே இதைக் கவனிக்காமல் விட்டு விட்டோமோ என்று தன்னையே நொந்தபடி, தயங்கித் தயங்கி, “தங்கச்சிப் பாப்பா இல்லைடா நிலாக் குட்டிக்குத் தம்பிப் பாப்பா பிறந்திருக்காங்க. தம்பியும் பாப்பாகூட விளையாடுவான், கதை கேட்பான்” என்று அவள் முகத்தைப் பயந்தபடி பார்த்துக் கொண்டே கூறிக் கொண்டிருந்தார் பாட்டி…

பாட்டி கைப்பிடித்து தடுத்ததும் வாசலிலேயே கண்களை வைத்துவிட்டு கையை உருவ முயற்சி செய்து கொண்டிருந்த நிலா, பாட்டியின் வார்த்தையை உள்வாங்கியதும் சட்டென்று அமைதியாகி, தீவிர யோசனை முகத்தில் பரவ நின்றுவிட்டாள்.

வீட்டின் அழைப்பு மணி ஒலித்த சத்தத்தில் மீண்ட நிலா, பாட்டியின் கையை உதறிவிட்டு, சாய்விருக்கைக்கு முன்னிருந்த மேஜையில் தங்கச்சிப் பாப்பாவிற்காக அவள் அடுக்கி வைத்திருந்த லயாவின் கிலுகிலுப்பையும், பொம்மைகளையும், பலூன்களையும் கைகள் கொள்ள அள்ளிக்கொண்டு முகம் மீண்டும் புன்னகையில் முழுகி நீச்சலடிக்க, ஆவலோடு வாசலுக்கு விரைந்தாள் தம்பிப் பாப்பாவை வரவேற்க…

((((((()))))))))))

rajaani97@gmail.com