Category: இதழ் 107

தவறிய அழைப்புகள் / கலைவாணி

6a00d83516850d53ef01bb093493b9970d-800wi

சாளரத்திற்கு வெளியே இரவு இறந்துகொண்டிருந்தது. இறந்து போகிற இந்த இரவின் சுவடே இல்லாமல் இன்னொரு நாள் விடிந்து கொண்டிருந்தது. சாளரத்திலிருந்து அறைக்குத் தாவிய கண்கள் ஆங்காங்கே அமர்ந்து பார்க்கின்றன.. எல்லாம் சரியாய் இருக்கிறதா?

தன் சொட்டுகளால் வாளியின் வாயில் கொட்டு வைக்கும் குளியலறைக் குழாய்,மடித்த துணிகள் அடுக்கி வைத்த புத்தகங்கள், கழுவித் துடைத்த பாத்திரங்கள், தரையின் மடியில் நான்,என் மணிக்கட்டின் வழி கழன்று விழுந்து தரைவிரிப்பை ருசி பார்க்கும் எனது குருதி, தீக்கிரையாகும் முன் எறும்புகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த எனது உடல்..

எல்லாம் சரியாய் இருக்கிறது.

விளக்கை அணைத்து வைத்திருக்கலாம் என்று தோன்றியது. வெளியில் இறந்து கொண்டிருக்கிற இரவோடு இருளைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். இரவைத் தின்னுகிற அந்த இன்னொரு நாள் இந்த இருளையும் சேர்த்துத் தின்றிருக்கும்.

அலைபேசியையும் அணைத்து வைக்கத் தவறிவிட்டேன். அழைப்புகள் தவறிக் கொண்டிருந்தன. குறுஞ்செய்திகள் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தன. அதனருகில் அந்தத் தாள். தன் மீது படுத்துக் கொண்டிருந்த பேனாவின் பாரம் தாங்காமல் படபடத்துக் கொண்டிருந்தது. அந்தப் படபடப்பு பேனாவினாலா அல்லது அதில் பதிந்திருந்த எழுத்துக்களினாலா.. தெரியவில்லை.

இரவினை அங்கங்கே கதிர்களால் கத்தியிட்டுக் கிழித்துக் கொண்டிருந்தது. இறந்து முடிந்த இரவின் மீது விடிந்தது நாள். நான் கடிகாரத்தை வெறித்துக் கொண்டிருந்தேன். எனது நேரத்தை இந்தக் கடிகாரமோ நாட்காட்டியோ கணக்கிட இயலாது. நான் அவற்றின் எண்ணிக்கைக்கு அப்பாலிருக்கிறேன். கேள்வி எழுந்தது, மெழுகுவர்த்தி அணைந்த பின் எழும் மெல்லிய புகைக் கோட்டைப் போல: “ஒரு வேளை நான் அவசரப்பட்டுவிட்டேனோ..?” எழுந்த வேகத்தில் மறைந்து போனது அந்தக் கேள்வி – விடையில்லாமல், வேறு வழியில்லாமல்.

அழைப்புகள் இன்னமும் தவறிக் கொண்டிருந்தன.

அன்றாடம் அழைக்கும் அலைபேசி நிறுவனம், அவ்வப்போது அழைக்கும் நண்பர்கள், எப்போதாவது தெரியாமல் அழைத்துவிடும் அறியாத எண்கள்.. எல்லாமே தவறிக் கொண்டிருந்தன.

இப்போது ஒலிப்பது வாசலின் அழைப்பு மணி. அதுவும் தவறியது.இப்போது என் பெயரைக் கூவி அழைப்பது நண்பனின் குரல்.

ம்ஹூம்.

மௌனத்திற்கு சத்தமாய்ப் பதில் சொல்ல திராணி இல்லை. அந்த அழைப்பும் தவறியது.

கதவின் முதுகில் பலமான அறைகள் விழத் தொடங்கின. அழைப்புகள் அலறல்களாய் அவதாரமெடுத்தன. ஆயினும் தவறின. பதில் இல்லாமல்..

படிக்கப்படாமல், மடிப்புக் கலையாமல் வயதாகிப்போன செய்தித்தாள்கள், பிரிக்கப்படாமல் பழையதாய்ப் போன பால் பாக்கெட்டுகள் அவனது அழைப்புகளை அவசரப்படுத்தியிருக்க வேண்டும். அக்கம் பக்கத்தினர் இணைந்து அறை வாங்கிக் கொண்டிருந்த கதவை உடைத்தார்கள்.

அறையைத் துழாவிய அவனது கண்கள் மேசையில் படபடத்த தாளின் மீது விழுந்தன. என்னுடைய முதல்(!) தற்கொலைக் கவிதை. என் மணிக்கட்டின் வழி கழன்று விழுந்த குருதி, தரைவிரிப்பில் சிக்கியிருந்தது.

என் எழுத்துக்களைப் படியெடுத்த அவன் மனம் கனத்திருக்க வேண்டும். இப்படித்தான் எனக்கும் கனத்தது. துக்கம் மனதை நிரப்பி மூழ்கடித்துவிட்டுக் கண்களில் வழிந்த போது. இப்போது அழுது குலுங்கும் தோள்கள், என் முகம் புதைத்து அழ இடம் தராத போது.. ஏதாவது ஒரு தோளில் என் அழுகை தீர்ந்திருந்தால்.. நான்கு தோள்கள் என்னைச் சுமக்கும் நாளை நான் தேடியிருக்க மாட்டேன்.

மீண்டும் அந்த மெழுகுவர்த்திப் புகை கேள்வி எழுந்தது: “அவசரப்பட்டு விட்டேனோ?” தோள்களில் அழுது தீர்க்க முடியாத துக்கத்தை தாள்களில் எழுதித் தீர்த்திருக்கலாம். என் மரணத்தை கதையாகவோ கவிதையாகவோ மொழி பெயர்த்திருக்கலாம்.

சாளரத்திற்கு வெளியே இரவு இறந்து முடிந்திருந்தது. உள்ளே நான்.ஒவ்வொரு குரலாய் அழுது, கூவி என்னை அழைத்துக் கொண்டிருந்தன. அழைப்புகள் தவறிக்கொண்டிருந்தன.

(((••)))

பனியில் எரிதல் – எம்.எல்.எம்.அன்ஸார்

1473445819b

எழுப்பப் படுகின்றன

அவளின் மீது மாடிக் கட்டடங்கள்.

திங்கட் கிழமையின் நடுப்பகல் அவசரத்தை

ஆரம்பித்து வைக்கிறது

அவளின் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை!

*

கூதலில் பற்றி எரிவதைக் கண்டிருக்கிறேன்.

நிமிர்ந்து நிற்கவோ

உட்கார்ந்து ஆறுதல் படவோ

அவளின் எலும்புகளுக்கு

அனுமதி வழங்கப் பட்டிருக்கவில்லை.

அவள் கொழுத்திருப்பது பயத்தால்.

தனது வெட்கத்தை

உதட்டின் புன்னகையை வளைத்து

கொழுவி வைத்துவிடுகிறாள்.

*

அந்த உயிரின் எடையை

சுமந்தே ஆக வேண்டும்.

சடங்குகளின் சாபம் பலிக்கும் என்ற

மனவுறுதியில்

அவளது பணிகள் விடிகின்ற பொழுதுகளாகின்றன!

*

சூரியனோடு சேர்ந்து

அஸ்தமிக்கப் பழகியிருக்கின்ற அவளின் ஆசைகள்

காசு கொடுப்பவனுக்கு இனித்துவிட்டுப் போகின்ற

கரும்பாக தோட்டத்திற்குத் திரும்புவதில்லை!

*

அவளுக்கான இறப்பு சம்மதிக்கின்ற வரை

அழுக்கு ஆடைகளையும் கரிப் பாத்திரங்களையும்

கழுவுவது போல

ஒவ்வொருவரும் கொடுக்கின்ற மரணத்தையும்

ஆபரணாம் போல செய்து முடிக்கிறாள்!

(((((

சினமும் அணுவும் – முனைவர். ஆர். சுரேஷ், ஆராய்ச்சியாளர்,

download

’சினம்’ என்ற கோபமானது ஒரு வகை உணர்ச்சி. பொதுவாக, நம்மை அச்சுறுத்தும் சக்தியினை (ஆற்றல்) எதிர்க்க, இவ்வுணர்ச்சி தோன்றுகிறது. அச்சுறுத்தும் சக்தியானது பிறரிடமிருந்து வரும் சொல்லாகவோ, செயலாகவோ இருக்கலாம். ஆக, எதிர் வரும் சக்தியினை எதிர்க்க உடலில் தோன்றும் சக்தி தான் கோபம்! சக்தி நல்லது தானே? இருப்பினும் ஏன் கோபப்பட கூடாது என்கிறார்கள் நம் முன்னோர்கள். தெய்வப்புலவர் திருவள்ளுவர், கோபப்படுவதால் ஏற்படும் தீமையை இவ்வாறாக அறிவுருத்துகிறார்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவே பிற (குறள் 304)

அதாவது, முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ? (டாக்டர் மூ.வ. வின் உரை) என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

அதீத சக்தி, அதனை பெற்றவைகளை பாதிக்கும். உதாரணமாக, ஒருவர் தன்வீட்டு சுவரில் ஆணி ஒன்றை அடிக்க விரும்புகிறார். கூராண ஆணியை சுவரில் வைத்து கையாலே திருகுகிறார். ஆணி சுவரில் ஏறுமா? நிச்சயம் ஏறாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆணி சுவரில் துலையிட்டு செல்ல, அவர் என்ன செய்ய வேண்டும். சுத்தி கொண்டு ஆணியை அடிக்க வேண்டும். இந்நிகழ்வே சுவற்றை அச்சுறுத்தும் சக்தியாகும். கொடுக்கப்படும் இச்சக்தியினை சுவரு சும்மா வாங்கி கொள்ளுமா? இல்லை. அதற்கு கோபமாகிய எதிர்பினை சுவரு காட்டும். இதன் விளைவு, ஆணி சுலபமாக சுவரில் ஏறாது! அதனையும் மீறி ஆற்றலை கொடுக்கும் போதுதான் ஆணி சுவற்றில் ஏறும். அதிகப்படியான ஆற்றல், கோபப்பட்ட சுவற்றை உடைக்கவும் செய்யலாம்! இதேபோன்று தான், கோபப்பட்ட மனிதனையும் அது அழித்துவிடுகிறது.

கோபமானது உணர்ச்சி என்பதால், அதனை முழுவதுமாக நீக்கி விட முடியாது. இருப்பினினும் அதன்பால் வரும் துன்பங்களை உணர்வதின்மூலம் அதனை கட்டுபடுத்த முடியும். ஆம், கோபத்தை தூண்டுவிக்க கூடிய சக்தி நம்மை தாக்கினாலும் கோபம் கொள்ளாது இருப்பது நல்லது என்பதை நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறாக விளக்குகிறது.

….ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. (நாலடியார் 61)

இதன் விளக்கமாவது, அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்த சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது கோபம் கொள்ளாதிருத்தல் நன்று என்பதாகும்.

தமிழ் பாட்டி ஒளவையும் ’ஆறுவது சினம்’ என்கிறார். அதாவது, கோபமானது ஆறக்கடவது.

மேலும் கோபப்படும் பொழுது ஏற்படும் உடல்ரீதியான இரசாயண மாற்றங்களையும் அதினால் ஏற்படும் துன்பங்களையும் நவீன அறிவியல் உலகமும் கண்டறிந்துள்ளது. இதனால் கோபத்தை கட்டுபடுத்த அல்லது தவிர்கும் வழிமுறைகளும் இதன் துறைசார்ந்த அறிஞர்களால் வகுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் கோபத்தை காட்ட வேண்டிய நேரத்தில் அல்லது இடத்தில் கோபப்பட்டாக வேண்டும் என்பதனை,

’பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ளலாகாது பாப்பா.
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என குழந்தையின் மனதில் விதைக்கிறார் பாரதியார்.

இது என்ன? கோபம் வேண்டுமா? வேண்டாமா? என்ற வினா எழுகிறது. குழம்ப தேவையில்லை. அளவான கோபம், இன்பம் பயக்கும் என்பதை

’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் ’(குறள் 1330)

என்று குறிப்பிடுகிறாரே! திருவள்ளுவர். முழுமையான விளக்கத்தை பாராவிடினும், சுருக்கமாக, நன்மை பயக்கும் என்றால் அளவான கோபம் நல்லது தானே!

சரி, உயிரினங்கள் மட்டும் தான் கோபப்படுமா? உயிரற்ற ஜடப்பொருட்கள் கோபப்படாதா? என்றால், அவைகளும் கோபங்கொள்ளும் என்றே கூறலாம்! ஆம், ஆற்றலை கொடுக்கும் பொழுது, உயிரற்றவைகளின் அடிப்படையான ’அணுக்களும்’ கோபங்கொள்கின்றன! ஜடபொருளுக்கு உணர்ச்சிகள் இல்லையென்பதால், அவைகள் கொள்ளும் கோபத்தை ’கோபம்; என்று சொல்லாமல் ’கிளர்வு நிலை’ என்கிறோம்.

ஒளி அல்லது மின்னாற்றலை அணுக்களுக்கு கொடுக்கும் பொழுது, தன்னை எதிர்த்து வரும் இச்சக்தியினை வாங்கிக் கொள்ளும் அணுக்கள் கிளர்வு நிலைக்கு செல்கின்றன. அதாவது, இவ்வணுக்களின் ஆற்றல் அதிகரிக்கின்றது. இந்நிலையில், அணுக்கள் சும்மாய் இருப்பதில்லை! மனிதர்களை போன்றே ஒரு வித பதற்றுத்துடனே இருக்கின்றன. எப்பொழுதுமே, கிளர்வு நிலையை விரும்பாத அணுக்கள் பல வகையில் தான் பெற்ற ஆற்றலை (கோபத்தை) வெளிக்கொணர்ந்து தனது இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. ஆருவது சினம்! ஒளவையின் வாக்காயிற்றே! ஆற்றல் வெளிப்பாடானது அணுக்களை பொருத்தும் அவைகள் எதிர் நோக்கிய சக்தியை பொருத்தும் அமைகிறது.

கிளர்வு கொண்ட சில வகை அணுக்களின் தொகுதி (மூலக்கூறு), சில மனிதர்களை போன்றே, அதிர்வுருகின்றன. இதனை ’மூலக்கூறு அதிர்வு’ என்கிறோம். இவ்வதிர்வின் காரணமாக தனது அதிகப்படியான ஆற்றலை (வெப்ப ஆற்றலாக), அருகில் உள்ள சக மூலக்கூறுகளுக்கு கொடுத்து (கோபத்தை காட்டி), தான் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகின்றன! உதாரணமாக, அதிகாலையில் செய்யப்படும் சூரிய வணக்கத்தை கருதலாம். காலை பொழுதில் வெளிப்படும் சூரியக்கதிரில் அகச்சிவப்பு கதிர்கள் அதிகம். இக்கதிர்கள் நம் உடலில் படும்பொழுது, உடலின் மூலக்கூறுகள் எதிர் சக்தியான அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சி அதிர்வுருகின்றன. இதனால், உருவாகும் வெப்பம் இரத்த நாலங்களை விரித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் புத்துணர்ச்சியினை பெருகிறது.

download-15
வேறு சில வகை கிளர்வு கொண்ட அணுக்களோ! தான் பெற்ற ஆற்றலை ஒளியாக உமிழ்கின்றன! ஆம், தான் பெற்ற எதிர்ப்பு சக்தியினால் உயர் ஆற்றல் மட்டத்திற்கு செல்லும் அணுக்கள் உடனே, அதிக படியான ஆற்றலை புற ஊதா கதிராகவோ அல்லது கண்னுரு ஒளியாகவோ உமிழ்ந்து, தனது இயல்பு நிலையை அடைகின்றன. உதாரணமாக, வீட்டில் பயன்பத்தப்படும் ஒளிரும் விளக்குகளை (CFL) கருதலாம். மின்னாற்றலை செலுத்தும் பொழுது, இவ்விளக்குகளில் உள்ள பாதரச அணுக்கள் கிளர்வு நிலைக்கு செல்கின்றன. உடனே, அவைகளின் ஆற்றலை புறஊதா கதிராக வெளியிட்டு தான் இயல்பு நிலைக்கு வந்தடைகின்றன. இப்புறஊதா கதிரினை கண்னுரு ஒளியாக மாற்ற வேறு சில வேதிபொருட்களும் விளக்கின் உட்புறத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கொடுக்கப்படும் அதிக அளவு ஆற்றலை உறிஞ்சும் சிலவகை அணுக்கள் மேற்கண்ட வழிகளை பின்பற்றி ஆருவதில்லை! அதாவது, கிளர்வு நிலையிலிருந்து திரும்பாமல், தன்னுள் உள்ள அடிப்படை துகளான எலக்ட்ரானை இழந்து தனது பண்பினை முழுவதுமாக மாற்றிக் கொள்கின்றன. இன்னும் சிலவகை அணுக்களோ, தன்னுடைய அகமான உட்கருவினுல் மாற்றத்தை நிகழ்த்தி சிதைவுருகின்றன. அத்தோடு, அவை வெளியிடும் ஆற்றல் உயிரினங்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும். உதாரணமாக கட்டற்ற அணுக்கரு சிதைவு வினையை அடிப்படையாக கொண்டு இயங்கும் அணுகுண்டினை கருதலாம். இதனை தான்,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமின்னும்
ஏமப் புணையைச் சுடும் (குறள் 306) என்றாரோ? திருவள்ளுவர்.

ஆக மொத்தத்தில், அளவான சினம் கொண்ட அணுக்கள், அதாவது, தணியகூடிய சினத்தை கொண்ட அணுக்கள் ஒருசில துன்பத்தோடு (அதிர்வு, வெப்பம்) தன்நிலைக்கு திரும்புகின்றன. இவைகளால் இன்பமும் விளையலாம். தனிக்கமுடியா சினம் கொண்ட அணுக்களோ, தன்னையும் கொன்று பிறவற்றையும் அழித்துவிடுகிறது.

நம் வாழ்வியலுக்கு தேவையான இலக்கிய கோட்பாடுகள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையான அணுக்களுக்கும் பொருந்துகிறது. அதேபோல் அணுவின் அறிவியல், நம் வாழ்விற்கும் பொருந்துகிறதல்லவா? ஆஹா… அறிவியலும் அறம் புகட்டுமோ? வியப்பில்லை! இலக்கியங்கள் வாழ்வை நெறிபடுத்தி நன்மை பயக்கும். வாழ்வில் நன்மை கிட்டவே, அறிவியில் ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இலக்கியம் மற்றும் அறிவியிலின் நோக்கம் ஒன்றெனில் அறத்தின் சாயல் அறிவியலில் தெரிவதில் வியப்பில்லை! இதற்கு சான்றாக, எதிர்கால சந்ததியின் நன்மைக்காக, தங்களது வாழ்வை அறிவியலுக்காகவே அற்பனித்த பல தவப்புதல்வர்களை இவ்வுலகம் கண்டிருக்கிறது.

***

சினமும் அணுவும்

முனைவர். ஆர். சுரேஷ்,
ஆராய்ச்சியாளர்,
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை,
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
மின்னஞ்சல்: sureshinorg@gmail.com; அலைபேசி: +56-9-98316720

அ-கவிதை -தயாஜி

images-9

1.
என்னை முழுதாய் தின்று செரிக்க முடிந்தவள்
நீயெனில்
அருகில் வா
மிச்சம் வைக்காதே

2.
என் உடல் சதைகளை நீக்கி
நரம்புகளைக் கோர்த்து
எலும்புகளைப் பிடுங்கி
உன்னால் இசைக்கவும்
துளையின்றி என்னை
வாசிக்கவும் முடியுமெனில்
உனக்கான இசைக்கருவி நான்

3.
கூரிய நகங்கள் கொண்டு
என் முதுகை ரணப்படுத்து
அதன் ரத்த வெள்ளத்தில்
நீச்சலடிக்க முடிந்தவள்
நீயெனில்
என்னை கட்டிப்பிடி

4
என்
இதழில் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாக
என்னை கடித்துத்தின்ன
தைரியமானவள் நீயெனில்
முத்தமிடு

5.
என் இரு காதுகளையும்
நாவால் கிழித்துத்தெடுக்க
முடிந்தவள் நீயெனில்
ஏதாவது ரகசியம் சொல்
உன் மடியில் படுக்கிறேன்

6.
உன் கொதிக்கும் பார்வையில்
என்னை அவித்து எடுக்கும்
சமையல்காரி நீயெனின்
என்னைச் சமைத்துக்கொடு

7.
என் கழுத்தை
தன் கருங்கூந்தலால்
இறுக்கி
அந்தரத்தில் தொங்கவிட்டு
ஊஞ்சலாட முடிந்தவள்
நீயெனில்
உனக்கான ஊஞ்சல் நானாகிறேன்

8.
பூஜாடிகள் அத்தனையும்
கொண்டு என் தலையில்
உடை
நீ விரும்பும்
ரத்த ரோஜாவாக
நான் மாறுகிறேன்

9.
ஆப்பிள்களை அழகாய் நறுக்க
என் கையில் இருந்து தொடங்க எண்ணுகிறாயா
சுண்டு விரலிலிருந்து நறுக்க ஆரம்பி

10.
என் முகம் முழுக்க
கண்ணாடித்துண்டுகளை சொருகு
பல கோணங்களின் தெரியும்
உன் முகத்தை உன் கண்களின் வழி
காட்டத்துணிந்தவள் நீயெனில்
உடைக்கவேண்டிய நிலைக்கண்ணாடி அதோ

11.
அழுக்கடைந்த என் நகங்களைச்
சுத்தம் செய்ய
ஒவ்வொன்றாகப் பிடிங்கி
அதன் அடிவேரை நீரில் கழுவும்
வேலைக்காரி நீயெனில்
விரல்கள்
இருபதோடு நின்றுவிட்டது
என் துரதிஷ்டம்

12.
உன் தோட்டத்து மண்ணை
தின்றுப்பார்த்து
அதன் வருங்கால பூக்களின் வண்ணங்களையுனக்கு
சொல்லவைக்கும் திட்டமுண்டெனில்
பசியோடு வருகிறேன்
மண் போடு

13.
பறவையைப் போல
என் பறத்தலையும் ரசிக்க
தூக்கி வீசும் முன் யோசி
பத்தாவது மாடியைவிட
நூறாவது மாடிதான்
உன் ரசனைக்கு ஏற்றது

14.
என் முகப்பருக்களை
இல்லாமலாக்க
அவ்விடங்கள்தோரும்
ஊதுபத்தி தீயினால்
ஒத்தடம் கொடுக்க
தயாரானவள் நீயெனில்
ஜவ்வாது ஊதுபத்தியை
பயன்படுத்து
மற்றது
உனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திடும்

15.
என்னை
கட்டியணைத்திடு
வெட்டி எறிந்திடு
பிய்த்து தின்றிடு
மிச்சமின்றி
உதிரம் குடி
அதற்கு முன்
கொஞ்சமேனும்
என்மீது
காமம் தெளி

16.
உன் பட்டாடை
மடிப்புகளற்று வடிவு பெற
இஸ்திரிச்சூட்டை
அதிகம் வைக்கவேண்டும்
நினைத்தது போலவே
என் முதுகில் முயற்சி செய்
எங்கேனும் தோல் கருகினால்
கொஞ்சம் தண்ணீர் மட்டும்
தெளிக்க மறக்காதே

17.
என் கண்ணில் கருவிழியில் ஊசியினை குத்திக்குத்தி
கற்றுக்கொள்ளலாம்
ஊசியில் நூல் கோர்க்கும் வித்தையை
என முடிவெடுக்கும்
தையல்க்காரி நீயெனில்
அரைகுறை வேண்டாம்
என் இருவிழிகளையும் எடுத்துக்கொள்

18.
தொண்டைக்குழியைக் கிழித்து
அமிலம் ஊற்றுவதுதான்
என் இருமலுக்கான
மருத்தெனக் கண்டறியும் மருத்துவச்சி நீயெனில்
முதலில் உன் சிங்கப்பல்லால் கடித்துத்துளையிட்டு
அதனிலிருந்து கிழிக்கத்தொடங்கு

19.
என் உதட்டினை
பிளேடு கொண்டு
சின்னச் சின்னதாய்க் கோடு கிழி
இரத்தத் துளிகளோடு உன்னிதழைப் பதித்து முத்தச் சுவையைப் பருகிட நினைப்புள்ளவள் நீயென்பதில் தவறில்லை
புதிய பிளேடுகளைக் கையிலெடு

20.
என் முதுகுத்தண்டில்
மெழுகுவர்த்தியைக் கவிழ்த்துச்
சொட்டுச்சொட்டாக
நீ விரும்பும் ஓவியத்தை உண்டாக்க
விரும்புகிறவள் நீயெனில்
கழுத்துக்கும் முதுகிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து ஓவியம் தொடங்கு

#

ஞாபகக்குதிரைகள் / வே.நி.சூர்யா

images-1

உயிர் தாண்டவம்

போய்விடும் சகஜமாக அனைத்தும்
நண்பா போய்விடும்
கடல்லயத்திருக்கும் கரைக்கு
தருகிறேன் உன்னிடம் என்னிடம் இருந்தவற்றை மரணத்தின் பகடையாட்டத்துடன்
கடலோர வளியை உருட்டுகிறேன் கார்பன் டை ஆக்ஸைடு ரயில் வண்டியாய்
தடங்கள் சுழற்பாதையாய் குழம்புகிறது
ஆக்ஸிஜன் பெட்டிகளில் உயிர் நடனத்தின் தனித்தனி இளம்நடனம் நாட்களின் மேடையில்
வெட்டுக்கிளிகளின் பச்சையும்
கரப்பான் பூச்சியின் கூட்டுக்கண்ணும் சலங்கை ஒலியாக
விடும்-போய்விடும்-போய்விடும் அனைத்தும் சகஜ சகிப்போடு

ஞாபகக்குதிரைகள்

வயதான சிறுவன் காதலிக்க வேண்டும் என வெறுப்புடன் திரிந்து கொண்டிருந்தான் வீட்டில் அமர்ந்தபடி.
திடீரென விஷமான பாற்கடல் அமிர்தத்துடன் மோகினி வந்துபோய் வந்துக்கொண்டிருந்தாள் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்.
இருவரும் எண்ணையும் நீரும் போல சந்தித்துக்கொள்ள காதலிக்கும் வெறுப்பு விஷமான அமிர்தத்துடன் கொண்டாடப்பட வயதான சிறுவனும் மோகினியும் அங்கேயே வாழ்த்தொடங்கினர் மூச்சு விடாமல் ஞாபகக் குதிரைகளாய்.

முன்னிலை கவிதை

கீழ்கண்ட வரிகளை வாசிக்க நீங்கள் வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்திருக்க வேண்டும்.
இப்போது நின்றுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் .
சற்று நேரம் நீங்கள் உங்கள் தாயின் கருவிலிருந்து இந்தக் கணம் வரை கற்றவை அனைத்தையும் மறந்துவிடுங்கள் .
இப்போது கவிதைசொல்லியான நான் உங்கள் அருகில் நிற்கிறேன்.
உங்களை நோக்கி புன்னகைத்து கையசைக்கிறேன்.
நீங்களும் கண்கள் விரிய புன்னகைத்து கையசைக்கிறீர்கள்.
நான் உங்களுக்கு தலைகீழாக எல்லாவற்றையும் கற்பிக்கிறேன் .
எடுத்துக்காட்டாக
வானத்தை கடல் என்றும்
பெண்ணை ஆண் என்றும்
கடவுளை நாய் என்றும்
சூரியனை புளூட்டோ என்றும்
கற்பிக்கிறேன்
உங்களை நான் போகச்சொல்கிறேன்
நீங்கள் போகிறீர்கள் என் கற்பித அறிவின் துணையோடு .
அப்போது நீங்கள் ஒருவனை எதிர்கொள்கிறீர்கள்
அவன் உங்களிடம் நான் சொல்ல மறந்த பணத்தை கேட்கிறான்.
நீங்கள் புன்னகைத்து கையசைக்கிறீர்கள்.
பசியெரிச்சலில் அவன் கத்தி எடுத்து உங்களுடைய தலையில் செங்குத்தாக குத்துகிறான் .
நீங்கள் இறந்துபோகிறீர்கள் .
புராதன குற்றயுணர்ச்சி மிகுந்து கவிதைசொல்லியான நான்
மறுபடியும் “கீழ்கண்ட வரிகளை வாசிக்க நீங்கள் வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்திருக்க வேண்டும்” என்கிறேன்.
யாரோ என் சொல் கேட்பதை உணருகிறேன் .
என் சொல் கேட்பவரை இந்த முறை எப்படி கொல்ல என யோசிப்பதற்குள் என் சொல் கேட்பவர் வேப்பமர நிழலுக்கு வந்துவிடுகிறார்.
இந்தமுறை அவர் என்னை கொல்லட்டும்.

படிம வெறுப்பு

இந்த கவிதையை எழுத வேண்டும்
எனக்கு படிமங்களை தவிர்க்க வேண்டும் என்ற விதியிருக்கிறது
இந்த கவிதையை உணர்ச்சி – சிந்தனை சீசாவில் ஏற்றி வைக்க வேண்டும்
இந்த கவிதை எதையுமே உங்களிடம் பேசக்கூடாது என்பதற்காக
இந்த கவிதையை எழுதவும்கூடாது
கொண்டுவாருங்கள் ஆஷ்விட்ஸ் வதை முகாமை கனவிலோ கற்பனையிலோ
எனது கைகள் அறுபடட்டும்

வறுமை ஒழிக்க ஒரே வழி

நாமெல்லாம் இன்னொருவரின் கற்பனையாக இருக்கலாம்
அப்படி இருந்தோம் எனில்
அந்த இன்னொருவர் இன்னொருவரின் கற்பனையாய் இருக்கலாம்
இது தொடர்வரிசை.
முடிந்தால் ஒன்று செய்யவோம்
என்னை உங்கள் கற்பனையில் பயன்படுத்த பணம் என்று அந்த இன்னொருவரிடம் இருந்து வசூலிப்போம்
இப்படியாவது இந்த முதலாளித்துவ உலகில் பணக்காரன் ஆகிவிடுவோம்.

(((((()))))))

சீனமொழிக் கவிதைகள் மூலம் : லி யு ஆங்கிலம் : பிராயண்ட் டேனியல் / தமிழில் : தி.இரா.மீனா

images-10

சீனமொழிக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான லியு[ Li Yu –937 – 978 ] தென் தாங்[ Southern Tang] வம்சத்தின் கடைசி அரசர்.சிறந்த கவிஞர்.ஆழமான உணர்வுகள், சொல்லாட்சி இவர் கவிதைகளின் சிறப்பு என்று சீனஇலக்கிய ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.உணர்வுகளை உண்மையாகவும்,வெளிப்படையாகவும் நேரடியாகவும் சொல்லியவர் என்ற பாராட்டிற்குரிய லியுவின் கவிதைகள் இன்று உலகப் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் Li Congjia என்றும் Li Houzhu என்றும் அழைக்கப்படுகிறார்.

காக்கைகளின் ராத்திரி அழுகை

நேற்றிரவு காற்றும் மழையும் கூடிக் கலந்தன
சுவர்த்திரைகள் இலையுதிர் காலப் பாட்டுக்கு ஆடின
மெழுகுவர்த்தி அணைந்தது நீர்க்கடிகை களைப்பானது
எழுந்தேன் உட்கார்ந்தேன் அமைதி இல்லாமல்
ஆணின் உறவுகள் வெள்ளநீர்ப் பெருக்கு போல
கனவில் மிதக்கும் ஒரு வாழ்க்கைதான்
நான் அடிக்கடி குடிக்க வேண்டும்
இல்லையெனில் வாழ்க்கை சகிக்க முடியாமல் போகும்நள்ளிரவுப் பாட்டு

வாழ்க்கையின் துக்கத்திலிருந்தும் வேதனையில் இருந்தும்
மனிதன் எப்படித் தப்ப முடியும்
என் தனிமை துக்கம் எந்த எல்லைக்குட்பட்டது
கனவில் சொந்தமண்ணுக்குப் போனேன்
விழித்தபோது இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகள் வடிந்திருந்தன
நினைவில் இலையுதிர்காலக் காட்சிகள் ஞாபகங்களாய்
உச்சியின் மீது ஏறப்போவது யார்
அர்த்தம் தொலைந்துபோனதாய்க் கடந்த கால நிகழ்வுகள்
அவை கனவுகளாக அப்படியே மறைகின்றன.

வாழ்க்கை

உன் மனதின் துக்கம்
அங்கங்கு தெரியும் நரைமுடியால் வெளிப்படுகிற.
வாழ்க்கை வெறுமையான மலைத்தொடர் போன்றது
உன்வருகைகளுக்காக பனி காத்திருக்கிறது.
இன்னமும் நீ கடந்தகால வனாந்தரத்தில்
தனித்துப் பின்வாங்கியபடி..

((()))

செல்லாமை / கலைவாணி கருணாகரன்

1473445819e

அந்தநூலகம், தூசிப்போர்வையணிந்து உறங்கிக்கொண்டிருந்த புத்தகங்களைத் தட்டி எழுப்பினேன். ஒரு புத்தகத்தை நான் எடுத்த போது எழுந்த என் இருமல் சத்தத்தில் மற்றவை புரண்டுபடுத்தன. தொட்டால் உடைந்து உதிரும் முதிர்ந்த புத்தகங்கள்; வந்தநாள் முதல் உறங்கியே வயதாகிப் போன புத்தகங்கள்; படிப்பதற்காக கடன் பெறப்பட்டு படித்தவரோடு சேர்ந்து பலநாட்களின் உறக்கம் தொலைத்தவை; புதிதாய் அச்சிலிருந்து வந்து நூலகத்தைப் புதிராய்ப் பார்த்தவை; இவற்றை நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கே அவள்.. வகுப்புகள் தொடங்கி மூன்று வாரங்கள் கழிந்தபின் என்னிடம் முதன்முறையாகப் பேசினாள்:

‘எட்வர்ட்த்ரீ..’

முழுவாக்கியமும் முழுதாய் வெளிவரவில்லை. பாதி வாக்கியம் அவள் சுவாசத்தோடு வெளியே சென்றது, சத்தமில்லாமல். ஒருஅலமாரியை நோக்கி கையை காட்டினேன்.

‘தேங்க்யூ’ அவள் நகர்ந்தாள்.

மூன்று வருடங்களுக்குப் பின் அதே நூலகம். நான் காத்திருந்தேன். அதோ அவள். நான் நகரவில்லை. பலநாட்களாக பக்கங்களைப் புரட்டிய போதும் விழித்துக் கொள்ளாத புத்தகங்கள் அருகில் சென்ற என் இதயத் துடிப்பைக் கேட்டு அதிர்ந்து விழித்தன.

இரண்டு மணிநேரங்களுக்கு முன் பேருந்து நிறுத்தத்தில் நண்பர்களுடன் நின்ற என் குறிப்பேட்டை வாங்கினாள், புரட்டினாள். பின் என்னிடம் தந்தபோது அதன் மீது கண்களால் அம்புக்குறியிட்டாள். நகர்ந்தாள்.

அதில் ஒரு துண்டுச்சீட்டு:

‘ கொஞ்சம் பேச வேண்டும். நூலகத்திற்கு வரவும்’

இறக்க மறுத்த அந்த இரண்டு மணிநேரங்களின் பதிவுகள் இறந்தகாலத்தில் சேர்ந்துவிட்டன. இதோஅவள், என் எதிரில். முதல் அரைமணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவளது வார்த்தையை எதிர்பார்த்து, ஏமாற்றத்துடன் மௌனத்தைச் சுமந்து மரித்தன. கடந்து போனவர்களின் காலடிச்சத்தங்களும், இருமல்களும், செருமல்களும் அவள் தேக்கிய அமைதியின் அணையில் கல்லெரிந்தன. அணை உடைந்தது. அவளே உடைத்தாள்: ‘ இதபடிங்க’

அந்தத்தாளில் நான் கண்டது, வார்த்தைகளில் அவள் வடித்த ஓவியம். அது என்னோவியம். நான் புத்தகங்களைப் புரட்டும் முறை, நான் அடிக்கடி அணியும், அவளுக்குப் பிடித்த ஊதா நிற சட்டை, என் வலது கை நடுவிரலில் பொட்டு வைக்கும் மச்சம்..

கடந்து போகும் போது மறந்தும் என்னை நிமிர்ந்து பார்த்திராதவள், கண்ணாடியில் தன்னைக் கண்டது போல் என்னை வார்த்தைகளில் வடித்திருந்தாள்.

உடன் ஒரு பெண்ணோவியம். அது அவள். அந்தக் காதல் கவிதையில் என்னையும் தன்னயும் வரைந்திருந்தாள். கன்ணிமைகளுக்குள் சிறைபட்டு கண்களின்வழி கசிந்து கொண்டிருந்த எங்கள் காதல் அவளது கவிதை வரிகளில் கம்பீரமாய் வழிந்தது, மூன்று வருடங்களுக்குப் பிறகு.

‘ரொம்ப நல்லாருக்கு. எப்போ எழுதினது? பப்ளிஷ் பண்ணலா..’

மனதிற்கு வெற்று வார்த்தைகளின் அரிதாரம் பூசினேன்.

இதுவரை தரையில் நிலைகுத்தியிருந்த கண்கள், நிமிர்ந்து என்னைக் குத்தின. அவளது கண்மை கலைத்த கண்ணீர் என்னைச் சுட்டது. கவிதையில் வழிந்த காதல் என்னைத் தொட்டது.

‘என்ன… என்னப்பத்தினது மாதிரி..’

‘உங்கள வச்சுதான் எழுதினேன்’ எனது பாதி வாக்கியத்திற்கு பலத்த அடி. சுகமாயிருந்தது.

‘அப்ப அந்தப்.. பொண்ணு..’

‘நான்தான்’

என்ன தைரியம்! இதுநாள்வரை எனக்கில்லாதது!

காற்றிலாடும் கொடியாய் நடுங்கிய அவள் உதிர்த்த வார்த்தைகள், இனிக்கும் இடியாய் எனக்குள் வந்து இறங்கின. மறுபடியும் மௌனம்.

இம்முறை மௌனத்தை நான் உடைத்தேன்.

‘இதெல்லாம் ப்ராக்டிகலா சரியா வராதும்மா..’ மௌனத்தை உடைத்த அந்த வாக்கியம் முடிந்த போது நாங்களும் உடைந்து போனோம். சாதி, அன்புச் சிறையிட்ட எனது அன்னை, அவளது தந்தை, பொருளாதாரச் சூழ்நிலைகள், இவை ஆறாய்ப் பெருகி எங்கள் காதலை அடித்துச் செல்ல, இருகரைகளாய் நாங்கள். மணல் லாரிகளுக்கு இடம் தராத இது தீராநதி. எங்களைப் போன்றோர்க்குப் பிரிவு, என்றும் மாறாத கணித விதி.

என் வார்த்தைகளைக் காதுகளில் கேட்டு, கண்களால் பதிலுரைத்தாள். கண்ணீர் அவளது கன்னங்களில் காதலை வரைந்தது, வலியுடன். வலித்தது. கண்ணீர் முத்துக்களை அணிந்து அவள் அன்று பார்த்த கடைசி பார்வை இன்றும் நெஞ்சில் நின்றது, திருமணத்தில் முடிந்து, திருமணத்தோடு முடிந்துவிடாத எங்கள் காதலைப் போல..

இதை நான் என் மனைவியிடம் கூறி முடித்தபோது அவள் சொன்னாள்:”வெரி டச்சிங். இத வேணும்னா ஒரு ஸ்டோரியா எழுதுங்களேன். நல்லாருக்கும்..” சில நொடிகள் இடைவெளிவிட்டு சொன்னாள்: “கொஞ்சம் ஜெலசாத்தான் இருக்கு. பட் அந்த பொண்ணு உங்கள மிஸ் பண்ணினதுனாலதான நீங்க எனக்கு கெடச்சீங்க..”

கண்ணீர் வற்றிய கண்களோடு அவள் கூறிய ஒற்றை வரிபத்திரமாக இருந்தது: “என்னைப் போல வேறு யாராலும் உங்களை நேசிக்கமுடியாது..”

அப்படியா..?

சிந்தித்தேன். அவளது கவிதை வரிகள் சில மனதில் தோன்றின

” காய்ந்த சூரியன் தன்

சாய்ந்த கதிர்கோலால்

வயலின் மேல் மரங்களின்

நிழல் எழுதும் நேரம்..

நானும் பாதையெங்கும் பார்வைகளால்

நினைவெழுதினேன்..

நாங்கள் நடந்த பாதையில்

நான் நடந்த போது..”

யோசித்தேன். உறக்கம் வந்தது. உறங்கும் நூல்களின் முன் உதிர்ந்த காதலின் நினைவுகளும் உறங்கச் சென்றன.

•••

பிச்சை கேட்கும் 3 கைகள். / ப.சரவணகணேசன்.

images

உறையூர் குறத்தெரு திருப்பத்தில்

பேருந்து வளைகையில்

இடது ஓரம் யானை சென்றது.

கனவுக் கையால் யானையின் முதுகைத் தொட்டு

மகிழ்ந்து நெளிந்தாள்

முன் இருக்கை இருந்த பள்ளிச் சிறுமி.

அசைந்து அசைந்து ஆடிய

யானையின் பொச்சைக் கண்டு

குனிந்து சிரித்தாள் அவளின் தோழி.

யானைக்காகப் பாகனும்

பாகனுக்காக யானையும்

பிச்சைக் கேட்கிறார்கள்.

முதுகில் இருப்பவனுக்காய் முதல்வனும்

முதலில் நடப்பவனுக்காய் முனிவனும் கேட்கும் பிச்சை.

முடிவில்லா நாடகத்தின் முகவரி தரிசனம்.

ஓடாய் தெரிந்த யானையின் முகத்தில்

ஓட்டாண்டி முக விபூதிப் பட்டை

பாகன் ஓவியன் என்பதைப் பறை சாற்றியது.

பட்டையின் அக்கரை – காவிரியின்

அக்கரைச் சேர்ந்ததும் நாமம் ஆகும்.

வறுமையில் விழுந்தவனுக்கு

அடையாளமின்மையே அடையாளம்.

திங்கட்கிழமை ஆட்சியாளர் அலுவலப் படிக்கட்டில்

மனு கொடுக்க காத்திருக்கும்

காமாட்சிப் பாட்டியைப்போல்

கவலையில் இருந்தது அந்தப் பிடி.

யானையின் வலது உடம்பில்

ராக்கெட் குண்டுகளால் அடிபட்ட

காஷ்மீரியன் வீட்டைப் போல் இரண்டு கருப்புக் காயக் குழி.

அடைக்கலம் தந்த நாட்டில்

சிறு ரொட்டிக்காய் கையேந்தும் சிரியாச் சிறுமி போல்

மனித நிழலைக் கண்டவுடன் கையை நீட்டுகிறாள் யானை.

அனைவரும் வரவேற்க அவள் ஒன்றும்

ஐ நாச் செயலர் இல்லை.

பல்லுப் போன பழைய யானை முதுகு

வில்லைப் போல் வளைந்தும் நிற்கிறது.

விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை -அதற்குள்

அழும் நாளைக் குறைக்க ஆசைப்படுகிறது யானை.

நெகிழிக் கடையிலிருந்து சிறுமி ஒருத்தி

ஓடி வந்து இரண்டு வாழைப்பழம் கொடுத்தாள்.

என்னைப் போல் எளிதில் நெகிழ்ந்த யானை

கட்டிப்பிடிக்கத் துதிக்கை சுழற்றியது.

பாகன் கால்கள் நெற்றியை அழுத்த

நிதானமாக யானை சிறுமியை ஆசீர் வதித்தது.

வெள்ளை கோசா அணிந்த அவளின் தாய்

வெளியே வந்து யானையை வணங்கினாள்.

யானைக்காகப் பாகனும்

பாகனுக்காக யானையும்

கருணையைக் கேட்கிறார்கள்.

கண்ணீரில் மனு எழுதி

தண்ணீருக்கு உரிமை கோரும்

தஞ்சை உழவனைப் போல

சுடும் தெருவில் ஏங்கும் இரு இதயங்கள்.

யானையின் கண்ணில் படப்போகும்

மாந்தர்கள் நெஞ்சில் துளிர்க்க

கருணையின் ஈர நீர்க்கொடி

யானையின் முன்னே செல்வது என் கண்ணில் தெரிகிறது.

பேருந்துப் பாகன்

பிரேக்கிலிருந்து காiல எடுத்தான்.

யானை துளியாய் மறைந்து மனதுள்

கருணை காட்டு யானையாய் நடந்தது.

(((((((((())))))))))

நிஷாமன்சூர் கவிதைகள்

images-5

1)
முளையடித்துக் கட்டிய பாழ்மனசு..!!

மீன்கவுச்சியேறிய அழுக்கு முந்தானைக்காரியின்
வெற்றிலைக்கறை படிந்த மாராப்பில் தளும்பி நிற்கும்
நிறைவுறா வேட்கைகளின் காமக் கானல்நீரில் காலம் ஸ்தம்பிக்கும்

பழையசோற்று வெங்காயக் காரம் கமறி நிற்கும் தொண்டைக்குழிக்குள்
சங்கரா மீனின் சிறுமுள்ளாய்க் குத்தும் காமக்கடும்புனல் நீந்தா நெடுந்தவம்
கோவிற்சிலைகளின் கல்முலைகளைத் தடவிச்சூடுதணிக்கும்

கவுச்சியற்ற மீன்கள் நீந்தும் அலங்காரத் தொட்டிகளுக்குள்ளிருந்து வெளியேறும் காற்றுக்குமிழ்களில்
யோனிக்கசிவுகளின் துவர் உவர் கடுஞ்சுவை தேடி அலையும் நாசி
வெறுமையடர்ந்த நறுமணத்தில் பசியடங்காமற் திமிறியலையும்

ஆற்றினுள் கடலைப் புகுத்தப்
பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்த கனவில் இறுதியில்
ஒரு கிணற்றுக்குள் பாய்ந்திருந்தது நிகழ்காலம் தலைகீழாக

உச்சிவெய்யில் தகிக்கும் அறைப்புழுக்க வியர்வைநற்பொழுதில்
புத்தம்புதிய பொஷிசன்களைப் பரீட்சிக்க
உடலும் மனதும் ஒத்துழைக்கும் வரமன்றி வேறொன்றும் வேண்டேன் பராபரமே.

2)

மயிறாலானதிவ்வாழ்வு..!!

மயிறு வளர எவற்றை உபயோக்கிக்க வேண்டுமென்று
ஒருவர் உபதேசித்துக் கொண்டிருந்தார்

மயிறு உதிராமலிருக்க எவற்றை உபயோகிக்க வேண்டுமென்று
இன்னொருவர் ஆலோசித்துக் கொண்டிருந்தார்

மயிறு சிக்குப் பிடிக்காமல் சிலுசிலுக்க எவற்றை உபயோகிக்க வேண்டுமென்று
வேறொருவர் அறிவுரைத்துக் கொண்டிருந்தார்

மயிறு நரைக்காமலிருக்க எவற்றை உபயோகிக்க வேண்டுமென்று
மற்றொருவர் பரிந்துரைத்துக் கொண்டிருந்தார்

மயிறு கருப்பாக எந்தச்சாயம் உபயோகிக்க வேண்டுமென்று
மேலுமொருவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார்

மயிறு சாப்பாட்டில் கிடந்ததென்று ஒரு கோபக்கார கணவன்
மனைவியின் மயிற்றைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறான்

தனக்குப் போட்டியாகக் கிளம்பிவிட்ட சகோதரனை மயிறுக்குச் சமானமிவனென்று
ஒருவர் ஆவேசத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறார்

மயிறு வாசம் இயற்கையா செயற்கையாவென ஆராய்ச்சிகள் பலசெய்த
மாமன்னர்கள் வாழ்ந்து மயிறு வளர்த்த தேசமிது

மயிறு முடியேனென சபதங்கள் செய்து நகரங்களைத் தீக்கிரையாக்கின
கற்புக்கரசிகள் கொண்டாடப்படும் மாபுண்ணிய பூமியிது

நாசி நிரம்பவும் மயிர்தான் – இரண்டு கால்
நடுவிலும் ஒரு கூடை மயிர் தான்
ரோசம் கெடுவார்கள் என்கடை மயிர் தான் – குணங்
குடி கொண்டால் என் உயிர்க்கு உயிர்தான் என்கிறார்கள் குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா

மயிறாலான இந்த வாழ்க்கையை வெறும் மயிறுதானெனப் புறந்தள்ளி
மதியாமல் முன்னகர முடியுமா என்ன ??

3)
மிருதுவான முத்தம்..!!

முதல் முத்தத்தின்போது மிருதுவாக இருந்த காதலியின் விரல்கள்தான்.
காய்கறிகள் நறுக்கி
அரிவாள்மனைத் துருவேறிச்
சமையலறைப் பிசுக்கடைந்து
சொரசொரத்துக் கிடக்கின்றன மனைவியின் விரல்களான பின்னர்.

மிருதுவாக இருந்தபோது ததும்பிக் கொண்டிருந்த காதல்,
சொரசொரப்பான போது காவியமானது

••••••••••

துயரோடு கலைந்துபோன லோதி – ந.பெரியசாமி

images-3

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டிருக்கு. அவரின் நோயை எவராலும் குணப்படுத்த முடியவில்லை. தன் மகனை அழைத்த அரசன் இனி நீயே ஆளவேண்டும் என உத்திரவிடுகிறார். மகனோ உங்கள் நோயை குணப்படுத்தாமல் நான் அரயணை ஏறமாட்டேன் என சபதமெடுத்து அலைந்து திரிகிறான். வந்து வந்து போகும் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை குணப்படுத்த முடியவில்லை. கவலையோடு இளவரசன் அமர்ந்திருக்க யாசகம் கேட்டுவந்த பரதேசி ஒருவர் உன் ஊரின் எல்லையில் ஒரு மகான் இருக்கிறார் அவரைப் போய் பார்த்துவா உன் கவலைத் தீரும் என்கிறார். உடனே மந்திரிகள் அங்குபோய் பார்த்து அவரை அழைக்கிறார்கள். அவரோ வர மறுத்துவிடுகிறார்.

அரசனை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இப்போது இல்லை என. மந்திரிகள் கோபத்தோடு இளவரசனிடம் முறையிடுகிறார்கள். இளவரசன் அமைதிபடுத்தி அவரைப்போய் பார்த்து அரசனின் நிலையை கூறுகிறான். அவர் நம் ஊரின் வடமூலையில் ஒரு பெரிய குளம் உண்டு அக்குளத்துள் மீனென முதலைகள் வாழுகின்றன. அக்குளத்தின் அடுத்தப்பக்கத்தில் ஒரு பெரிய மரம் இருக்கு அம் மரத்தில் ஒரே ஒரு கனி இருக்கு. அக்கனியை ஒருவன் காவலிருக்கிறான். அவனிடமிருந்து அவன் கையாலே அக்கனியை பெற்று வந்து அருந்தக் கொடுத்தால் குணமடைவார் என்கிறார். குளத்துள் யாரும் இறங்க வேண்டாம் பெரும் ஆபத்தாகிவிடும் எனவும் எச்சரித்து அனுப்பிவிடுகிறார்.

விரைந்து அக்குளத்திடம் செல்கிறார்கள். அவனிடம் விதவிதமான ஆசைகளை காட்டி அக்கனியை கேட்க அவனோ மறுத்துவிடுகிறான். என்ன செய்வதென புரியாது கலக்கத்தோடு எல்லோரும் நிற்க வேடிக்கை பார்த்தபடி இருந்த ஆடுமேய்க்கும் சிறுவன் நான் ஒரு யோசன சொல்லட்டுமா என்கிறான். மந்திரிகள் அவனை பரிகசித்து விரட்டுகிறார்கள். இளவரசன் அவனை அழைத்து கேட்கிறார். மந்திரிகளை சிறு சிறு கற்களை பொறுக்கி வர சொல்கிறான். எல்லோரும் அவனை முறைத்தபடி கற்களை குவிக்கிறார்கள். இப்பொழுது இளவரசனிடம் அவன் கைகளில் கிடைக்குமாறு கற்களை வீசுங்கள் பிடித்து திருப்பி வீசுவான் என்கிறான் .

அதுமாதிரியே செய்ய அவனும் பிடித்து இவர்கள் மீது வீசுகிறான். இப்பொழுது நிறுத்தி அவன் கைக்கு கிடைக்காதவாறு வீசுங்க என்கிறான். அப்படியே செய்ய ஒரு கல்லும் கையில் கிடைக்காமல் போக ஆத்திரத்தில் அவன் கனியை பறித்து இவர்கள் மீது வீசுகிறான். அதை அச்சிறுவன் பிடித்து இளவரசனிடம் கொடுத்துவிடுகிறான். அக்கனியின் சாறு உண்ண அரசன் குணமடைகிறான். இக்கதையை எனக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அந்த ஆடு மேய்க்கும் சிறுவனாக எனை உணர்ந்தேன். என்னுள் எழுத முடியும் எனும் நம்பிக்கையை அளித்தது இந்த நாட்டுப்புற கதை.

இது போல் சில நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளும் , சொற்களுமே நமை சோர்வுறாது எழுதத் தூண்டும். என் முதல் தொகுப்பான நதிச்சிறைக்கு சேலத்தில் கூட்டம் நடந்தது. கூட்டத்திலேயே யவனிகாவிடம் தொகுப்பை கொடுக்க அப்பொழுதே வாசித்துமுடித்திட்டார். அவரை பஸ் ஏற்றிவிடும்போது தொகுப்பை எடுத்து ஒரு கவிதையை காட்டி இக்கவிதை எனக்கு நம்பிக்கையூட்டுகிறது. நீ கட்டாயம் கவிதை எழுதிவிடுவாய் என்றார். அவ்வார்த்தை எனக்கு அன்றைய சூழலில் பெரும் மயக்கத்தை தந்தது. இப்படியான சில குரல்களும் அவ்வப்போது நமை சோர்வடையாது இருக்கச்செய்து எழுதவைக்கும்.

சிறுகதைகளில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கும் குமாரநந்தன் கவிதையிலும் அப்படியானதொரு பாய்ச்சாலை உண்டாக்குவார் எனும் நம்பிக்கையை இத் தொகுப்பு அளிக்கிறது.

நாம் ஒருவரின் மீது வைக்கும் மதிப்பீடுகளின் கணிப்பு எல்லா நேரங்களிலும் சரியானதாக அமைந்துவிடுவதில்லை. இவ்வாறாக பலரின் மதிப்பீட்டால் தனிமைப்படுத்தப்பட்டவனின் துயரம் பெரும் அவஸ்தைக்குள்ளானது. நானே மரம், நானே இலையாகி உதிர்ந்து நானே பறப்பேன், நான் பெரும் மரமாக இருந்தபோதும் யாரும் வரவில்லையே எனும் துயரால் தனிமைப்பட்டிருப்பவன் துயரடைந்தோர்களை கானும்போதெல்லாம் அவர்களின் துயரை தன் துயராக ஏற்று அவர்களின் நிலையை உணர்த்தும் கவிதைகளைக் கொண்டிருக்கிறது ”பகற் கனவுகளின் நடனம்”.

காலத்தை தொலைத்தவன், காட்டை கடப்பவன், எவராலும் கண்டுகொள்ளப்படாதவன், வேரொடு பிடிங்கி வீசப்பட்டவன், வெறுமையை தன்னுள் வைத்திருப்பவன், பிரிவால் வாடுபவன், முகப்பூச்சுகளால் மாற்றமடையாத கரிய முகமுடையவன், காத்திருப்பில் தவற விடுபவன், புன்னகைக்க வற்புறுத்தப்படுபவன், கயிற்று ஊஞ்சல் விற்பவன், நினைவுகளில் காலத்தை சிதறடிப்பவன், பறவைகளை தேடுபவன், ஆதிவாசியாக மாறத் துடிப்பவன், பேருந்து வராத ஊர்க்காரன், தூய்மையான காற்றை இழந்து தவிப்பவனென துயரடைவோரின் நீண்ட பட்டியலை இத் தொகுப்பில் காணமுடிகிறது.

யாரிது

நீர் தாரை போல் ஒழுகும்
வார்தைகளைப் பற்றிக்கொண்டு
எங்கெங்கே தான் போவது
எல்லா வாசல்களையும்
திறந்து வைத்திருந்தாலும்
ஏன் எனக்குள்ளே யாருமே வருவதில்லை.
பூக்களும் இலைகளும்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
இந்த மரத்தை இங்கே யார் வைத்தது
ஒருவேளை இந்த மரம்தான் நானா?
உதிர்ந்துகொண்டே இருப்பதும்
பறந்துகொண்டே இருப்பதும்
நான்தானா?

காதல் ஏற்படும் காலத்தில் பிறக்கும் சொற்கள் நெஞ்சினில் தேனாடையாக படிந்துகிடக்கும். அது நமக்குள் துயர் பெருக்கெடுக்கும் காலங்களில் சிறிதாக கசிந்து நமை குளிர்விக்கும். இடையில் ஏற்படும் பிரிவு இப்பிரபஞ்சத்தை ஏதுவும் மாற்றாமல் விட்டாலும் முதல் சந்திப்பின் உணர்ச்சியை ஊற்றாக வைத்திருக்கும் ‘நாம் பிரிந்துவிட்டோம்’ இச் சமூகத்தில் எய்யப்பட்ட அம்புகளாக மனிதர்கள் சிதைந்து ஒவ்வொருவரும் அவரவருக்கான இலக்கோடும் இலக்கற்றும் இல்லாது வாழ்ந்துபோவதைக்கூறும் ‘அம்பின் பயணம்’. சிலரை நினைவு கொள்ளும் தருணங்களை வியந்து அவர்களை பிறப்பித்த இப்பூமியின் அற்புதத்தை கொண்டாடும் ‘இந்தப் பூமி ஏன் அற்புதமாய் இருக்கிறது?’ நாம் நமக்கான கொதிப்பூட்டும் வரலாற்றை கனவாக்கி விடுவோம்- மீண்டும் ஒரு சந்திப்பை புதிதாக நிகழ்த்திக்கொள்ளலாம் என அழைக்கும் ‘கொதி’ இனி என்றுமே வராதுபோகும் உண்மையை உணர்த்தியபோதும் மரணத்தை ஏற்க மறுக்கும் மனதோடு அலைவதை காட்சியாக்கியிருக்கும் ‘அப்பா’ நாம் எவ்வளவுதான் நம் கழிவால் அழுக்கடையச் செய்த போதும் மீனை எடுத்துப் பறக்கும் ஊதா நிறக் குருவியை காட்டும் ‘துவர்ப்பு நதி’ ஆரஞ்சு பானம் போல மகிழ்வான வண்ணம் கொண்ட ‘தனிமை’, தேவன் எந்த புத்தகத்தை வாசித்து இப் பிரபஞ்சத்தை உருவாக்கியிருப்பானெனும் தேடலைத் தரும் ‘பிரபஞ்சத்தின் தோற்றம்’, தவறவிட்ட ரயிலில் சென்றிருக்கும் தேவதைகளை நினைவுபடுத்தும் ‘எது வேண்டுமானாலும் நடக்கும்’, எழுத முடியாத சூழலில் துளிர்த்து மடியும் கவிதைகளுக்காக வருந்தும் ‘இயலாத ஒன்றை முயற்சித்தல்’, கிருமிகளை தன்னுள் கிரகித்துக் கொண்டு நமக்கு ஆரோக்கியத்தைத் தரும் காற்றின் கதை கூறும் ‘கிருமிகள் நிறைந்த சுகமான காற்று’ போன்ற கவிதைகளை ரசித்திடச் செய்திடுகிறார்.

இத்தொகுப்பில் வரும் ஒரே தேவதை லோதி. தன்னை ஆறாக மாற்றிக்கொள்ளும் ஆளுமை மிக்கவள். லோதி கண்ட துக்கமான கனவு நமக்கும் பெரும் துயரமாகிப் போகிறது. ஏனெனில் அவளோ ஒருவனின் கனவில் மட்டுமே பிறப்பவள். கனவு கலைய அவளும் கலைந்துவிடுகிறாள்.லோதி விரைவில் கலைந்துபோவது நமக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.

லோதியும் ஆறும்

லோதி துணி துவைக்க
ஆற்றுக்குப் போன போது
எதிரே ஒருத்தி
அழுக்குத் துணியுடன் வந்து
ஆறு
ஆழுக்காய் இருக்கிறது
என்றாள்
ஆறு கொஞ்சம்
அழுக்காய் இருந்தாலும்
அது நம் துணிகளை
வெளுப்பாக்கும்
என்றாள் லோதி
ஆறு
ஆக்ரோசமாய் இருக்கிறது
என்றாள்
ஆறு எவ்வளவு
ஆக்ரோசமாய் இருந்தாலும்
அது குளிர்ச்சியானது
என்றாள் லோதி
ஆறு நம்மை அடித்துக் கொண்டு
போய்விடும் என்றாள்
நாம் ஆறாக மாறிவிடலாம்
என்றாள் லோதி.

தன்னுள் இருக்கும் கவிஞனை எப்பொழுதும் காப்பாற்றிவிடுவேன் என முன்னுரையில் குமாரநந்தன் கூறியிருப்பதை நாமும் நம்புவோம்.

••
குமாரநந்தன்

வெளியீடு – புது எழுத்து
விலை- ரூ-70