Category: இதழ் 116

கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறவர்கள் / சிபிச்செல்வன்

images (11)

கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறவர்கள்

குளியலறைகளில்
சாப்பாட்டு அறை வாஷ்பேஸின்களில்
கழிவறைகளில் என எல்லாயிடங்களிலும்
கைகளைக் கழுவிக் கொள்வதற்காக நவீன டெட்டால் சோப்பு நீரை பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள்
காலையில் எழுந்ததும் முதலில் கைகளைக் கழுவிக்கொண்டுதான் பல் துலக்க வேண்டும்
கழிவறைகளில் காலைக்கடன்களை கழித்ததும்
கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்
பின் குளித்து முடித்ததும் ஒருமுறை அதீத பாதுகாப்பு கருதி கைகளில் டெட்டால் சோப்பு நீரை பிதுக்கி சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொருமுறையும் இருபது நொடிகள் கழுவுதல் வேண்டும்
முதலில் உள்ளங்கையில் சோப்புநீரை விட்டு
மெதுவாக மிக மெதுவாக தேய்த்து
பின் வேகவேகமாக தேய்த்துவிடவும்
வலது கையிலிருந்து இடது கையையும்
இடது கையிலிருந்து வலது கையையும் தேய்க்கவும்
உள்ளங்கைகளை சுத்தமாக அழுத்தி தேய்க்கவும்
பின் கைகளின் மேற்புறத்தில் இதேபோல இடவலமாக வலஇடமாக தேய்க்கவும்
விரல்களுக்கிடையில் நகக்கண்களுக்கிடையில் என ஒரு இடம் விடாமல் தேய்க்கவும்
இப்படியாக ஒரு நாளின் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம்
சுத்தம் சுத்தமென கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள்.
கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள் ஓயாமல்
கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள்.
கிருமிகள் ஒட்டிக்கொள்ளக்கூடாதென சொல்லியவாறே
ஓயாமல் கொல்கிறார்கள் பாக்டீரியாக்களை
மற்றும்
சக மனிதர்களை
ஓயாமல் கைகளைக் கழுவிக்..,,,,,

•••

பாவனை எதிரி

குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்
ஒரு ஓரத்திலிருந்து அதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
முன்னால் இருந்தவர்களை நோக்கி
குத்திக்கொண்டிருக்கிறார்கள்
முன்னும் பின்னுமாக குதித்து
கடும் பயிற்சியை மேற்கொண்ட குத்துச் சண்டை வீரர்கள்
இப்போதும் அப்போதும்
எதிரிலில்லாத எதிரியை நோக்கி
குத்துகிறார்கள் பாவனையாக
அவ்வளவு அதிகாலையில் நிறைந்திருக்கிறது விளையாட்டு மைதானம்
மூக்குடைபட்டு இரத்தம் தெறித்து
வழிகிறது பயிற்சியாளனின் முகம்
பயிற்சி நிறைந்துவிட்டதாக கத்திக்கொண்டு ஓடிவருகிறார்கள் மற்ற பயிற்சியாளர்கள்
அப்போது பாவனையாக தப்பித்து ஓடுகிறான்
எதிரி வீரன்

•••

முகம் ( கவிதைகள் ) / மதியழகன்

download-26

1

வீழும் சொற்கள்
வானம் பார்க்கும்
தன்வழி செல்லும்
ஆற்றை யாராலும்
தடுத்து நிறுத்த முடியாது
மறதி இல்லையென்றால்
வாழ்க்கை சகிக்க
முடியாததாகிவிடும்
மனதுக்கு சாந்தி தரும் பாட்டு
மையல் கொண்டாடும்
மாதுவின் மார்பினில்
புதைந்து போனேன் நேற்று
சாமியென்று நீங்கள்
துதிக்கும் அனைத்தும்
சாத்தானையே போய்ச்
சேரும்
ஆயிரம் சாமிகள் வேறு
வசிப்பிடம் தேடும்
கொள்கைக்கு சமாதி
கட்டி மக்களை கொள்ளையிடுவார்
இங்கே
அவரைக் கூண்டிலேற்றுவது
எங்கே
கொடி பிடித்து கோஷம் போட்டு
நீ ஏமாந்து போனாய் தம்பி
அரசியல் விளையாட்டை நம்பி
கட்சிகளின் வாக்குறுதிகளைக்
கேட்டு ஓட்டுப்போட்டாய் நீ
நேற்று
வயிறு கேட்குது சோறு
கொஞ்சம் வாய்க்கு அரிசி
நீ போடு
கன்னமிட்டுக் கொள்ளையிட
ஆயிரம் வழிகளை நீ கண்டுபிடித்தாய்
காந்தி தேவனின் வழியில் வந்த நீ
நீதியை ஏன் மறந்தாய்
இரவும் பகலும் போதையிலே
மிதந்து
குடும்பத்தையும் மறந்து
கோழையானது ஏனோ
கண் இருந்தும் குருடனானது
நீ தானோ.

2

இவர்களுக்கு பணமே
முக்கியம்
தர்மம் நீதி பேசுகிறவர்கள்
பிழைக்க முடியாது இங்கே
தடுக்கி விழும் வரை
பிடித்து நிறுத்த முடியாது
இவர்களை
தெருவில் குதித்து விடாதீர்கள்
வடம் பிடித்து இழுக்க
ஆட்கள் இருக்கிறார்கள்
மலத்தில் ஈ மொய்க்கிற
மாதிரி இவனுக்கு
உறுத்தல் இல்லாமல் இருக்காது
தேடல் தான் வாழ்க்கை
இவன் பெண்ணாசையால்
மீண்டும் பிறவி எடுக்க
வேண்டியிருக்கும்
சங்கோஜப்படாதீர்கள்
வரிசையில் நிற்பவர்கள்
எல்லாம் கட்டாயம்
தரிசனம் பண்ணலாம்
இவனது பசிக்கு
பந்திச் சாப்பாடு
போதாது
ஜீவனின் கணக்கு
பரமனின் கையில்
வாழ்க்கை விதிவசம்
சிவனே அன்னபூரணியிடம்
கையேந்த வேண்டியிருந்தது
பிச்சை எடுக்கலாம்
எழுதிப் பிழைப்பு நடத்த
முடியாது
உயிர்த்தெழ ஆசையில்லை
இவனுக்கு சலிப்பூட்டுகிறது
வாழ்க்கை
முக்கியத்துவத்தை இழந்து
நிற்பதை விட
மரணமே மேல்
முற்பிறவியின் பலன் தான்
இவனை சந்தியில்
நிறுத்தியிருக்கிறது
சாரமற்ற வாழ்க்கையில்
சிக்கிக் கொண்டு
இந்த ஜீவன்
ஓலமிடுகிறது
புலன் வழியே மனம்
செல்லும் தருணம்
நரகத்தை விடக் கொடியது.

3

கையேந்த வைக்காமல்
விட்டதே
இன்னும் கொஞ்சம்
அழுத்தம் கொடுத்திருந்தால்
என் சித்தம் கலங்கியிருக்கும்
அறிவுரையை காதில்
வாங்கிக் கொள்ளாதவர்களுக்கு
காலம் தான்
கற்றுக் கொடுக்கும்
கால ஆற்று வெள்ளத்துக்கு
சாம்ராஜ்யங்கள் எல்லாம்
சீட்டுக்கட்டு மாளிகையை
போலத்தான்
இருப்பு இருந்தால் தான்
கொடுக்க முடியும்
என்பதற்கு அன்பு
கடைச்சரக்கா
சடங்குகள் நடத்தப்படுகின்றன
குறைவைத்தால்
குடும்பத்துக்கு சங்கடங்கள்
நேரும் என்பதற்காக
கடவுளை விடுத்து
காசை நோக்கி
ஓடுகிறபோது இரவில்
தூக்கம் வராது
காரியங்கள் விதிப்படி
நடக்கின்றது
இயற்கை இருக்கின்றவனுக்கே
அள்ளிக் கொடுக்கின்றது
கண்ணால் காணும்
காட்சிகளெல்லாம்
ஏக்கத்தையே கொடுக்கின்றது
பணத்தின் பின்னால்
ஓடும் உங்களுக்கு தெரியாது
ஏர்வாடியில் கட்டப்பட்டிருப்பவர்களுள்
யாரேனும் ஒருவர்
கடவுளாக இருக்கலாமென்பது.

4

வானுயர வளர்ந்திருந்தது
அந்த மரம்
கிளைகளில் ஒரு இலை கூட
இல்லை
சூரியன் அதை
காய்ந்து போன
சுள்ளியாய் மாற்றிக்
கொண்டிருந்தான்
மரத்தின் ஒவ்வொரு
அணுவும் வேரை
நீருக்காக கெஞ்சிக்
கொண்டிருந்தன
கடந்து போகும்
கருமேகங்களிலிருந்து
விழும் ஒரு துளி நீரை
கிளை யாசித்தது
மரணம் மரத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
ஆக்கிரமித்துக் கொண்டிருந்தபோது
இரக்கப்பட்ட மனது
உடலுக்கு தாகம் எடுப்பதை
உணர்ந்தது
மனிதர்களின் மனது
பொறுப்பைத் தட்டிக்
கழிப்பதிலேயே
குறியாக உள்ளது
மனிதர்களுக்கு மட்டுமானதல்ல
இவ்வுலகம் என்று
கூறுபவர்களை கேவலமாய்
பார்த்து சிரிக்கின்றது
இயற்கையின்
சாபத்தால் தான்
மனித குலம்
இந்த நிலையை
அடைந்துள்ளது
இடம் தந்த நிலத்தில்
விஷத்தை தெளித்துவிட்டு
மனித இனம் வேறெங்கோ
தப்பி ஓடப்பார்க்கின்றது.

5

எந்த நேரத்திலும்
அந்த சிந்தனையிலா
இருப்பது
எண்ணத்தின் பின்னாலிருந்து
இறைவன் பார்க்கின்றான்
அல்லவா
விழித்திருக்கும் போது மட்டும்
தோன்றும் இவ்வுலகம்
கனவு போன்றது
உன் மனக்கோட்டையை
தகர்த்தெறிய கடவுள்
தயாராகவே இருக்கிறார்
பாஞ்சாலியின் கேலிச்
சிரிப்பு தான் பாரதப்
போருக்கு வித்திட்டது
மண்ணிலிருந்து உருவாவதன்
மீதான காதல்
பாடையில் போகும் வரை
தீராது
சோற்றுக்கு அலைந்த நாயை
சொர்க்கத்தில் வைத்தான்
இறைவன்
அது உடலை மோகித்து
மலத்தில் விழுந்து புரண்டது
சாக்கடையில் சந்தனம் விழுந்தால்
வாசனை மாறாது இருக்குமோ
வேப்பமரத்தில் குடிகொண்டிருக்கும்
தெய்வத்தினால் அதில்
மாங்காய் காய்க்க
வைக்க முடியுமா
ஊர்ப்பணத்தில் உடல்
வளர்க்கும் கள்வனுக்கு
தெரியாது உழைப்பது
எப்படியென்று
ஏய்த்துப் பிழைப்பு நடத்தும்
மனிதர்களின் உடலில்
எண்ணிடலங்கா நோய்கள்தான்
குடியிருக்கும்
தள்ளாமையால் உடல்
சொல் பேச்சு கேளாது
ஆனாலும் மனத்திற்கு
பெண் மேல் இருக்கும்
ஆவல் என்றென்றும்
தீராது.

6

விட்டிலுக்கு நெருப்புடன்
காதல்
சூரியோதயத்தைக் காணாத
சோம்பேறிகளுக்கு
உறக்கமென்பது இறைவன்
அள்ளித் தரும் பரிசு
கனவு பலிதமாக வேண்டுமென்பது
தான் அனைவரின் விருப்பம்
எப்பொழுதும் இரவாயிருந்தால்
உறங்கிக் கொண்டே
இருக்கலாம்
மேலிருந்து கீழே விழும்
அருவி
அதைப் பார்க்கையிலே
நாம் ஒரு சிறு குருவி
ஒவ்வொரு முறை
தவறு செய்யும் போதும்
வைராக்கியம் பிறந்துவிடும்
சற்று நேரத்திற்கெல்லாம்
தண்ணீரில் உப்பென
கரைந்துவிடும்
வானிலிருந்து மழை
வீழும்
துக்கமென்பது எப்போது
தீரும்
கூரிய விழியம்பு
இதயத்தில் பாய்ந்திடும்
பொங்கிடும் குருதியில்
காதல் பிறந்திடும்
கோப்பையிலே மதுவை
நிரப்பும்போது
வார்த்தைகள் கடலலையைப்
போல சீறிடும்
கந்தல் துணி மானம்
காத்திடும்
வீதியே கூரை வேயாத
வீடாக மாறிடும்
அலட்சியப்படுத்திய கேள்விகளெல்லாம்
முட்களாக மாறி
கால்களை காயப்படுத்திடும்
இளரத்தம்
ஓயாமல் ஆட்டம் போடும்
ஆட்டம் அடங்கிய
பின்பு தான்
பட்டினத்தார் சொல்ல வந்தது
என்னவென்று புரியும்.

7

தொடங்குவது தான் நான்
தொடர்ந்து எழுதுவதும் முடிப்பதும்
அவன்தான்
வேண்டுவது நான் தான்
பலிக்க வைப்பதும்
பாராட்டு மழையில்
குளிக்க வைப்பதும் அவன் தான்
சிறு கல்லை எடுத்து
குருவியை அடிக்கத் தளைப்பட்டேன்
வெட்டவெளியில் எங்கோ
சென்று மறைந்தது
அக்குருவி
காட்டிக் கொடுக்க
காகம் வருமென்று
காத்திருந்தேன்
வந்த காகம் என் தலைமீது
எச்சமிட்டுச் சென்றது
தென்னந் தோப்பில்
அச்சத்துடனேயே நடந்தேன்
குலைகள் தலைமீது
விழுந்துவிடுமோ என்ற
பீதியில்
மார்கழியில் கோலமிட
வரும் தேவதையை தரிசிக்க
இவன் அலாரம் வைப்பான்
கைக்குழந்தை முலை தேடுவது
யதார்த்தம்
இந்த வயதில் துணை தேடுவதும்
யதார்த்தம் தான்
துக்க வீட்டில் நுழைந்து
வெளியேறும் போது
ஏற்படும் தெளிவு
எனக்கான நாள்
ஏற்கனவே குறிக்கப்பட்டிருக்கும்
ஆராரோ பாடி தூங்க
வைத்த தாயை
ஒப்பாரி பாடி வழியனுப்ப
வைக்காத மகனே
பாக்கியவான்
காமதகனம் செய்யப்பட்ட
மன்மதன்
புணர்ச்சிக்காய் ஏங்குகிறான்
அரசன் உடலில்
சங்கரம் நுழைந்து
புணர்ச்சி விதி
பழகுகிறான்
தேவி குமரியை
சிவன் மறந்து
இடுகாட்டில் ஆடுகிறான்
ஞானமடைந்த மனிதனின்
பேச்சை மானுடன்
ஏற்றுக் கொள்ளாமல்
ஏசுகிறான்
மரணம் நெருங்கிவிட்ட
பின்னாலும் இன்னுமிவன்
கலவிக்காக ஏங்குகிறான்
வட்டத்துக்குள் அடைபட்ட
வாழ்க்கை வாழும் உனக்கு
இத்தனை திமிர் கூடாது.

8

வாழ்க்கையில் சில விஷயங்கள்
சலிப்பை ஏற்படுத்துகின்றன
தூங்கும்போது கவலைகளை
மறக்கிறோம்
விழித்திருக்கும் போது சிலுவை
சுமக்கிறோம்
உச்சிவெயிலில் சிமெண்ட்
தரையில் விழும் மழைத்துளி
காணாமல் போகும்
தரித்திர வாழ்வு என்னை
வீதிவீதியாய் அலைய
வைக்கிறது
மற்றவர்களின் வாழ்விலிருந்து
பாடம் கற்றுக் கொள்ளவில்லையென்றால்
என்ன மனிதன் இவன்
செய்த தவறுக்கு
பிராயச்சித்தம் செய்துவிட்டால்
கர்மவினையிலிருந்து தப்பித்துவிட
முடியுமா
கோபத்திலும் காமத்திலும்
என்னை நான் இழக்கிறேன்
குற்றவுணர்வுடன் தான்
கோயில்படி மிதிக்கிறேன்
உடலில் தொந்தரவு
தாங்க முடியவில்லை
சாகும்வரை உடலைப்
பேணுவதிலேயே பொழுது
கழிகிறது
கையேந்தும் என்னை
ஏசுங்கள் தப்பில்லை
வயிற்றை பட்டினி போட்டு
வதைக்காதீர்கள்
அன்றைய பொழுதில்
நடந்ததையெல்லாம் குடித்து
மறக்கலாம் என்றுதான்
இவர் வீட்டுக்கு வருவது
இவன் வாழ்க்கையில்
விளக்கேற்றிவைக்க
யாரும் முன்வரமாட்டார்கள்
தீவிரமான யோசனையில்
கவனிக்காததால்
சிகரெட் தீர்ந்துபோய்
விரலைச் சுட்டது
புணர்ச்சியே மனஉளைச்சலுக்கு
மருந்து
அது கிடைக்காததால்
இவன் இரவைக்
கொள்கிறான் விழித்திருந்து.

••••

ப.மதியழகன்(P.MATHIYALAGAN)
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு,
இந்தியா.
cell:9597332952, 9095584535
mathi2134@gmail.com

அருணா சுப்பிரமணியன் ( அறிமுகக் கவிஞர் )

images (10)

1.மலடி

ஒளி நோக்கி
ஓங்கி உயர்ந்து
கிளைத்த உடல்
உச்சம் தொட்டும்
உழலும் பட்டமரம்
காய்க்க மறுத்து
உதிர்த்த இலைகள்….

2. பிறழ்வு

கனியத் தயங்கும்
மரங்கள் ஒரு புறம்
கனி சுமக்கும்
தளிர்கள் ஒரு புறம்
நிறைந்த
இவ்வனம் ஒரு பிறழ்வு……

3.பலவந்தம்

மதில் தாவி
நிலம் தழுவி
கனி சுமந்த தளிர்…
கல்வீசி சிதைத்து
கிழித்தெறிந்து
கூறு போட்டது
கூர்வாள் …..

4. திருமணம்

கடல் நோக்கிய பயணத்தில்
நிலை பிறழ் நதி நீர்
தடம் மாறி
தடை தாண்டி
மடை திறந்து
மண்ணரித்து பாய்ந்தது
குப்பை மேடு நோக்கி..
சிப்பிக்குள் முத்தாகி
இருக்குமோ என்னவோ?!
சீரழிந்து போனது
சாக்கடையாய்…

••••

கணங்களின் உணர்வெழுச்சிக் கூடு – ந.பெரியசாமி

images (9)

பத்மபாரதியின் நீர்ச்சாரி கணங்களின் உணர்வெழுச்சிக் கூடு. இவர் தனக்க நேர்ந்த அனுபவங்களையோ, சம்பவங்களையோ கதைபோல கவிதையில் கூறாது, அனுபவங்கள் மற்றம் சம்பவங்களின் உருவாக்கத்தின் உள்ளீடாக இருக்கும் கணங்களை கவிதைகளாகிச் செல்கிறார். நீர்ச்சாரியில் பெரும்பாலான கவிதைகளில் அப்படியானதொரு கணங்களை தரிசிக்கலாம். பூக்கள், பொழுதுகள், தனிமை, பயணம், காதல், இழப்பு, துயரம், குழந்தமை ஆகிய தளங்களில் உணர்வுகளை தன் வாழ்வின் ஓட்டத்தில் விவரிக்கிறார். வேண்டிப் பூசிக் கொண்டும், நிழலாய் உடன் உறையச் செய்தும், அதன் கணங்களை உருவி அதன் அதிர்வுகளை மொழியாக்கி, அழகியலோடு காட்சிபடுத்திச் செல்ல நாமும் நமக்கானதைக் கண்டடைந்தவாறே தொகுப்பில் பயணிக்கலாம்.

நீர்ச்சாரி

கடந்து சென்ற ஒரு
சரக்கு வாகனத்தில்
ஈரச் சாக்கு மூட்டைகள் இருந்தன
பாயும் அதன் திறந்த உடலிலிருந்து
துளித்துளியாக
நீர்சொட்டிச் சென்றது வினாடியில்
பால்யத்தில் நகர்ந்த
எறும்புகளின் ஒழுங்காக
புறவழிச்சாலை எங்கும் விரையும்
பால்யத்தில் நகர்ந்த
எறும்புகளின் ஒழுங்காக
புறவழிச்சாலை எங்கும் விரையும்
நீர்த்துளிகளின் வரிசையில்
லயித்த ஒரு கணம்
மல்லிகைப் பூ வாசம்
வெளியையும் நிறைத்தது
அப்படிப் பூத்தாள் அங்கே அவள்.

புறத்தின் காலம் எதுவாக இருந்தபோதும் அகத்தின் காலம் வேறானதாகவே இருக்கும். எவ்வித திரிதலுமின்றி நம்முள் படிந்திருக்கும் நிலம் அதன் திணைகளோடு பயணிக்கச் செய்து சில தரிசிப்புகளை காணச்செய்து நமை குளிர்மை அடையச் செய்யும். சாக்கடையிலிருந்து மேலேற்றும் தேவதையைக் காட்டும் ‘செம்பருத்தி மலரும் காலை’, பொன்னரளியின் பூக்களிலிருந்து வழியும் நிறம் விடியலில் சாயமேறிய காட்சியைக் காட்டும் ‘பொன்னிற விடியல்’, நிறங்களை ஒளிர்விக்கும் கணங்களைக் காட்டும் ‘குல்மஹர்’. நின்று நீங்கியது கணப்பொழுதாகினும் அன்றைய முழுப்பொழுதையும் ஆக்கிரமித்த மகிழம்பூக்களின் மணம், சக்கையாகக் கிடக்கும் தருணங்களில் ஒளிர்வூட்டும் நிலவின் சொல், சிரிக்கும் மழையொலியோடு வீழ்ந்திருக்கம் காவல் தெய்வம் அம்மாவாக மாற்றம் கொள்ளும் வெய்யில் பொழுது என தரிசிப்புகளை தந்தபடியே கவிதைகள் செல்கின்றன.

இருக்கத்தான் செய்கிறார்கள். காதலையும் கண்ணீரையும் தாங்கவியலாத மனிதர்கள். முன்னிறுத்தும் தடுப்புகளையெல்லாம் தன் பிரியத்தின் சொற்களால் சிதைத்து காதலை சொல்லியபடியே இருக்கும் குரல், கொடுத்து உதவாத சில்லரையை சவமாக உடலில் கணப்பதாக உணர்தல் நமக்கும் நிறைய்ய அதுபோன்ற சம்பவங்களை நினைவூட்டும்.

பால்யத்தின் வாழ்விடம் கவனிப்பாரற்று அழிவைநோக்கி விரையும் வேகம் கண்டு அவசரஅவசரமாக நினைவில் சேமித்து வைப்பது, வாழ்வையும் சாவையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வானத்தோடு தனித்திருந்து துயரைப் பகிர்தல், நீடிக்கும் நிம்மதியின்மையின்மீது வலுத்துப்பெய்ய மழையை வேண்டி நிற்பது,
நாம் விரும்பாமலேயே நம்முள் முளைவிடும் நச்சு நமையே கொன்றெடுப்பதன் விளைவுகளை எதிர்கொள்ளல், பருவங்களின் மாறுபாட்டால் வாழ்வை இழக்கும் பூக்கள் அற்றச் செடியில் தானே மலர்ந்து உதிர்தல் என துயர் சார்ந்த கணங்களில் கரைக்கிறார்.

தார்ச்சாலையில் மூடிக்கிடக்கும் வார்த்தைகளை காட்சிபடுத்துகிறது நாவல்பழக் கவிதைகள், குழந்தைகளுடனான உரையாடலின் போது மனம் சிட்டுக்குருவியாக அவர்களின் கரங்களில் அமர்ந்திடல், பாலித்தின் சுவருக்கும் முண்டுகிற நெல்லிச்செடியாக தனை உணரும் தருணம், பிம்பம் கொத்தும் காகத்தின் வலிக்காக வருந்தும் கணம், எலிப்பாஷாணம் விற்பவளின் வண்டியில் இருக்கும் சித்திர எலியை உயிர்ப்பித்திடச் செய்யும் கணங்களென அவரின் தனித்துவத்தை உணர்த்துகின்றன கவிதைகள்.

பத்மபாரதியின் பயணங்கள் சிலவற்றும் நானும் உடன் இருந்திருக்கிறேன். அப்படியானதொரு நாட்களில் எனை இருத்தியது சில கவிதைகள். பறக்கும் கப்பல் கவிதையில் வரும் பறக்கும் கப்பலைச் செய்தவன் நானே. தூத்துக்குடியிலிருந்து ஓசூர் திரும்பும் பயணத்தில் அச்சிறுமியுடனான உரையாடலும் அங்கு நிகழ்ந்த சம்பவங்களுடன் மீண்டும் பயணிக்கச் செய்தது அக்கவிதை.

மேதினம் ஒன்றின் புலர்பொழுதில் சிதைவுண்ட திப்புவின் நட்சத்திரக்கோட்டையை சூரியனற்ற வானின் வெளிச்சத்தில் வியந்து, நடந்து நடந்து கண்டடைந்த அருவி ஒன்றில் குளித்து குதூகலித்திருந்த நாளைப்போன்ற வேறொரு நாள் இனி வருமா எனும் எக்கத்தோடு பக்கங்களை திருப்பச் செய்தது ‘உடைந்த நட்சத்திரத்தின் பாடல்’ கவிதை.

தள்ளுபடி கூப்பனோடு உள்நுழைந்து, அதிகாரத்தால் ஓசியாக வந்து ச்சேர் உடைந்திருக்கு, கூடாரம் பொத்தலாக இருக்கு, ஏன் இன்னும் இவ்வளவு லேட்பன்றாங்கவென எதையாவது நொட்டைச்சொல்லியவாறு நகரும் கூடாங்களின் நிழலில் தங்களின் வாழ்வை நகர்த்தும் சர்க்கஸ் கலையின் அழிவுக்குத் துணைபோகாது, தன் மொழியால் வாசிக்கும் பொழுதெல்லாம் சர்க்கஸை நிகழ்த்திக்காட்டுகின்றன ‘சர்க்கஸ் பார்வையாளனின் குறிப்புகள்’ கவிதைகள். அந்தரத்தில் மிதந்தபோதும் ஆடையை அனிச்சையாக சரிசெய்யும் பதட்டத்தையும் அவர்களுக்கு பயிற்சியாக கொடுத்திருக்கும் சமூக பார்வை அலட்சியப்படுத்த ஒளிப்பெண்களின் வெளிச்சத்தில் மினுங்கும் அரங்கில் தான் மேய்க்கும் பறத்தலை மறந்த கிளிகளைப் போல் அறுக்கப்பட்ட இறகுகளோடு அலைவுறும் தேவதைப் பெண்ணை காட்சியடுத்தி நமை காணச்செய்யும் பத்மபாரதி கூடாரம் காலிசெய்யப்பட்ட நிகழ்விடத்தில் நம்மையும் பெரும் துயரோடு நிற்கவைத்திடுகிறார்.

ஒளிப்பெண்

ஒளியாடை அணிந்த அவள்
வர்ணவொளி ததும்பி
மிகும் அடுத்த துளியில்
நொறுங்கித் தூளாகும்
கண்ணாடிக் குடுவைகளை
சிரத்தில் ஏந்தியிருக்கிறாள்
உடலை முறித்து முறித்து
பாதத்திற்கு அவற்றை நகர்த்தும்
அவளது ஆடை
சிறிதும் கசங்கவில்லை
குடுவைகளிலிருந்து
சிதறிவிழும் ஒளித்துளிக்காக
ஏந்திய பார்வையாளர்களின் கரங்கள்
ஆர்ப்பரித்து ஒலிக்கிற
கணத்தில்
ஒளிததும்பும் கோப்பையாகிற
அவளது கண்ணாடி உடலிலிருந்து
பீய்ச்சித் தெறிக்கும் வெளிச்சத்தில்
மூழ்குகிறது அரங்கம்.

எதிர்பாராத தருணங்களில் சாலைகளில் நிகழும் சம்பவங்கள் நாம் அறியாமலேயே நம்முள் பதிவாக்கப்டும். பைத்தியங்கள், சாலை விபத்து, சூடிய பூவின் மணத்தோடு நம்மையும் சூடிச்செல்லும் பெண்கள், கையசைக்கும் குழந்தைகள் என நம் இயல்பின் குளத்தில் உண்டாக்கப்படும் சலனங்கள் ஏற்படுத்தியவாரே இருக்கிறார் ‘புறவழிச் சாலை குறிப்புகள்’ கவிதையில். நீர்ச்சாரியாக எப்படிப் பூத்தாள் அவளென அவர் கண்ட காட்சியின் அனுபவத்தை நமக்குள்ளும் ஏற்படுத்திடுகிறார். நாய்குட்டிகளை நசுக்கி விரையும் சாலை, அதன் விஸ்தரிப்பால் மனிதர்களையும் நசுக்கி பயணிக்கும் துயர் நமக்கானதாகவும் மாற்றிவிடுகின்றன கவிதைகள்.

குறுந்தொகைப் பாடலொன்றை வாசித்த நிறைவைத் தந்நது ‘மாசிமாதத்தின் பகற்பொழுது’ இயற்கையின் சூழலோடு மனிதனின் உணர்வுகளைப் பொருத்தி கவிதையாக்கியிருப்பது நல்ல அனுபவ முதிர்வு.

புறக்காட்சிகளோடு பயணிப்பவனின் அகத்தில் ஒளிரும் தனிமையின் கணங்களை பத்மபாரதி ‘அகவழிச்சாலை குறிப்புகள்’ கவிதைகள் விவரிக்கின்றன.சம்ஷாபாத் விடுதியின் அழமை காட்சிபடுத்துகையில் தன்னும் இருப்பவளின் குணாதிசயங்களையும் விவரிக்கும் பாங்கு, மலரைப்போன்று சுதந்திரமானவனாக இருக்கச் செய்திடுபவளின் கருணை, எல்லாம் இருந்தும் தனித்திருப்பதன் தவிப்பை நம்முள்ளும் படரச்செய்தல், தனிமைக்காக துணைகளை அவமதிக்கும் செயலுக்காக வருந்தி தணித்திருக்கத் துடிப்பவனின் செயல்பாடுகளுக்கு மனம் வெதும்பாது அரவணைத்துச் செல்பவளின் அருகிருப்பை சிலாகித்தல், தனிமையின் நோய்மைகளை சகித்து அரவணைக்கும் பிரியத்தை மெச்சுதல் என்பதாக உணரச்செய்கின்றன கவிதைகள்.

தெளிவான பார்வையேடு புதிதான பயணத்தில் நாம் கண்டடையும் சித்திரங்கள் என்றென்றைக்குமாக நம்மோடு இருக்கச்செய்யும்

•••

பத்மபாரதியின் நீர்ச்சாரி

வெளியீடு- தக்கை பதிப்பகம்

கம்பன் கவியமுதங்கள் / வளவதுரையன்

images (8)

கம்பன் கவியமுதம்-1

மண்வாசனை

வெண்தளக் கலவைச் சேறும் குங்கும விரைமென் சாந்தும்
குண்டலக் கோல மைந்தர் குடைந்தநீர்க் கொள்ளை சாற்றின்
தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டல் இட்டு ஓட மண்னும் மதுகரம் மொய்க்கும் மாதோ [44]

[சாலி=ஒருவகை நெல்; திருமங்கையாழ்வார் ‘செஞ்சாலி விளை வயலுள்’ என்பார்; வேலி=வயல்; வைப்பு=மருத நிலம்; மதுகரம் மொய்க்கும்=-வண்டுகள் மொய்க்கும்]

கம்பன் கோசல நாட்டின் மண்வளம் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டின் மண்ணும் மணம் கமழுமாம். அதற்காக அம்மண்ணை வண்டுகள் மொய்க்குமாம். தம் காதுகளில் குண்டலங்களை அணிந்துள்ள ஆடவர்கள் நீராடுகிறார்கள். அவர்கள் குள்ளக் குடைந்து நீராடும் அந்நீர்ப்பெருக்கு ஓடி வருகிறது. குளிக்கின்ற அந்த ஆடவர்கள் பூசியிருந்த வெண்சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ முதலிய கலந்த சந்தனக் குழம்பையும் அந்த நீரானது சுமந்து வருகிறது. அவற்றைக் கொண்டு வந்து சாலி என்னும் ஒருவகை நெல் விளயும் வயல்களிலும் மருத நிலத்திலும் அது பரப்புகிறது. அது படிகின்ற வண்டல் மன்ணும் அக்கலவையால் மணம் கொண்டு வீசுகிறது. அம்மணத்தை வண்டுகள் மொய்க்கின்றன.
இவ்வாறு அந்நாட்டின் மண்ணும் வாசனை நிரம்பியதாய் இருந்ததாம். என்னே கம்பனின் கற்பனை!

கம்பன் கவியமுதம்—2

எருமைப் பாலுண்ணும் அன்னக் குஞ்சு

சேல் உண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலும் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை [45]

[சேல்=மீன்; ஒண்கண்=ஒளி பொருந்திய கண்; மாலுண்ட நளினம்=பெருமையான தாமரை; மேதி=எருமை; உள்ளி=நினைத்து; பண்ணை=வயல்]

இந்தப் பாட்டில் கம்பன் ஓர் அழகான இயற்கைக் காட்சியைக் காட்டுகிறான். செழுமையான வயல்கள் இருக்கின்றன. அங்கே சேலென்னும் மீன்களைப் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய மகளிரைப் போல நடக்கின்ற அன்னங்கள் வசித்து வருகின்றன. சிவந்த கால்களைக் கொண்ட பெண் அன்னம் தன்னுடைய ஓர் இளங்குஞ்சை மென்மையான தாமரை மலரான படுக்கையில் கிடத்திப் போகிறது. அப்பொழுது அங்கே கால்களில் சேற்றை உடைய எருமை வருகிறது. அது தன் கன்றை எண்ணிக் கனைக்கிறது. அன்பினால் அந்த எருமைக்கு உடனே பால் சுரந்து கொட்டுகிறது. அப்பாலை அந்த இளம் அன்னக் குஞ்சுக் குடித்துத் தூங்குகிறது. அதன் தூக்கத்திற்கு அங்கிருக்கும் பச்சை நிறமுள்ள தவளை தன் குரலில் கத்தித் தாலாட்டுகிறது.
ஆண்டாள் திருப்பாவையில் பாடும் “கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைந்து முலைவழியே நின்று பால் சோர” என்னும் பாசுர அடிகள் இப்பாடலைப் படிக்கும்போது நினைவுக்கு வருகின்றன. அதிலும் தன் கன்றை நினைத்த உடனேயே எருமைக்குப் பால் சுரந்து கொட்டுகிறது என்பார்.

அத்துடன் கம்பனின் இப்பாடலை ஒரு குறியீட்டுப் பாடலாகவும் கொள்ளலாம். அதாவது எருமையின் பால் அதன் உரிமையாளனுக்கோ அல்லது அதன் கன்றுக்கோதான் போக வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத அன்னக் குஞ்சிற்குப் போய்ச் சேருகிறது. அதேபோல அயோத்தியின் அரச சிம்மாசனம் இராமனுக்கோ அல்லது கைகேயி வரம் வாங்கியபடிக்கு பரதனுக்கோதான் போக வேண்டும் ஆனால் தொடர்பே இல்லாத பாதுகைக்கன்றோ போகிறது. இக்காட்சி வரும் அச்சூழலை முன்கூட்டியே உணர்த்துகிறது போலும்.

கம்பன் கவியமுதம்–3

பருந்தொடு தொடரும் நிழல்

பொருந்திய மகளி ரோடு வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல்சென் றன்ன இயலிசைப் பயன்துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவிஉற மாந்து வாரும்
விருந்தினர் முகம்கண் டன்ன விழாவணி விரும்புவாரும் [47]

[வதுவை=திருமணம்; மருந்து=அமுதம்]

கோசல நாடு மக்கள் எப்படிப் பொழுது போக்கினார்கள் என்று அடுத்து சொல்லத் தொடங்கிப் பாடுகிறான் கம்பன். தமக்குப் பொருத்தமான மகளிருடன் சிலர் திருமணச் சடங்கில் பொருந்தினார்கள். இந்த இடத்தில் பொருத்தம் என்பது பருவம், வடிவம், குலம், செல்வம் போன்றவற்றில் பொருந்தி உள்ளதைக் காட்டும். வேறு சிலர் இயற்றமிழோடு இசைத் தமிழையும் அனுபவித்தார்கள். இந்த இடத்தில் இயற்றமிழும் இசைத்தமிழும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருப்பதற்குக் கம்பன் ஓர் உவமை கூறுகிறான். அதாவது பருந்துடன் அதன் நிழல் தொடர்ந்து செல்லுதல் போல இயலும் இசையும் தொடர்ந்து வருமாம். சிலர் அமுதத்தை விட இனிக்கும் கேள்விச் செல்வத்தை கேட்டார்கள். வந்த விருந்தினர்களின் முகம் பார்த்து அவர்கள் மகிழ அவர்களுக்கு அன்னம் அளிக்கும் விழாவை விரும்பினார்கள்.
”செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்த வர்க்கு” என்னும் குறள் இங்கு நினைவு வருகிறது.

கம்பன் கவியமுதம்—4

உழவர் ஓதை

முள்அரை முளரி முளைஇற முந்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்ப சாலில்
துள்ளிமீன் பிடிப்ப ஆமை தலைபுடை சுரிப்ப தூம்பின்
உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்ப்புவாரும் [50]

[முள்அரை=முள்தன்மை பொருந்திய; சலஞ்சலம்=ஒருவகை சங்கு; சுரிப்ப=அடக்கிக் கொள்ள; தூம்பு=மதகு; பகடு=கடா]

கோசலநாட்டு உழவர்களின் செயல்கள் இப்பாடலில் காட்டப்படுகின்றன. அவர்கள் உழுகின்ற கடாக்களை அதட்டி வயலை உழுகிறார்கள். அப்போது அந்த வயலில் இருக்கும் முள் தன்மை பொருந்திய தாமரையின் வெண்ணிறமான முளைகள் முறிந்து போகின்றன. அங்குக் கிடக்கும் முத்தும் பொன்னும் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. இரத்தினங்கள் சிதறிப் போகின்றன. சலஞ்சலம் என்னும் சங்குகள் வாய்விட்டு அழுகின்றன. உழுபடை சால்களிலில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. வயலில் இருக்கும் ஆமைகள் தம் தலையையும், நான்கு கால்களையும் தம் ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்கின்றன. வரால் மீன்கள் எல்லாம் மதகுகளில் சென்று ஒளிந்து கொள்கின்றன.

இப்பாடலில் அந்நாட்டு வளத்தை மிகவும் உயர்த்தும் உயர்வு நவிற்சி அணி பயின்று வருவதாகக் கொள்ளலாம்.

கம்பன் கவியமுதம்—5

ஏற்றுமதி வணிகம்

முறைஅறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறைஅறிந்து உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப்
பொறைஅறிந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்
நிறைபரம் சொரிந்து வங்கம் நெடுமுதுகு ஆற்றும் நெய்தல்

[அவா=ஆசை; முனிவுழி முனிந்து=சினம்கொள்ளவேண்டிய இடத்தில் சினந்து; இசை=புகழ்; நிறை பரம் சொரிந்து=அருமையான பொருள்கள் இறக்கி]

கோசல நாட்டில் நடந்த வணிகத்தைப் பற்றிக் கம்பன் கூறுகிறான். வங்கம் என்றால் கப்பம் என்று பொருளாகும். ஆண்டாள் தம் திருப்பாவையின் 30-ஆம் பாசுரத்தில், “வங்கக் கடல் கடைந்த” என்று கப்பலைச் சொல்வார். கோசல நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைந்தன. அந்நாட்டில் தங்களுக்குத் தேவையானது போக எஞ்சிய பொருள்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று ஏற்றுமதி செய்தார்கள். அப்படிப் பல பொருள்களை ஏற்றிச் சென்று இறக்கிய பிறகு அக்கப்பல்கள் தம் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றி நிற்குமாம்.
சிறந்த நெறிமுறையில் அரசாளும் மன்னன் ஆளுவதால் பாரம் சுமந்த வருத்தம் நீங்கிய பூமிதேவியை அக்கப்பல்களுக்கு உவமையாகக் கூறுவான் கம்பன். கோசல நாட்டில் கடலே கிடையாது. கப்பல்கள் எங்கு வந்தன என்ற கேள்வி எழலாம். சரயு நதியே கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும், ஆழமாகவும் இருந்ததாம்.
அறநெறியை அறிந்து, பொருளாசையை நீக்கி, சினம் கொள்ள வேண்டிய நேரத்தில் சினம் கொண்டு, மக்களிடம் வரிப்பொருள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என அறிந்து பெற்று, தன் ஆட்சியின் கீழ் வாழும் உயிரினங்களிடத்தில் இரக்கம் கொள்கிற புகழ் பெற்ற அரசன் பூமியைப் பாதுகாத்து வந்தான். அதனால் பூமியைச் சுமக்கின்ற தம் பாரத்தை இறக்கி இளைப்பாறுகின்ற பூதேவியைப் போலக் கப்பல்கள் அருமையான பொருள்களின் நிறைந்த பாரத்தை இறக்கிவிட்டு நெய்தல் நிலத்தில் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றிக் கொள்ளும்.

கம்பன் கவியமுதம்–6

கண்களை வண்டென எண்ணி மயங்கல்

பருவ மங்கையர் பங்கய வாள்முகத்து
உருவ உண்கணை ஒண்பெடை ஆம் எனக்
கருதி அன்போடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகினை வண்டு அரோ [55]

[பங்கயம்=தாமரை; கணை=கண்ணை; வேலி=நிலம்]

மருத நிலத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறான் கம்பன். அதன்மூலம் கோசல நாட்டு மகளிரின் அழகையும் காட்டி விடுகிறான். மருத நிலத்தில் வண்டுகள் தங்கி இருப்பது இயல்பான ஒன்று. அதில் தன் குறிப்பை ஏற்றி இப்பாடலில் கம்பன் பாடி உள்ளான். மங்கைப் பருவம் அடைந்த மகளிரின் முகங்கள் தாமரை மலர் போன்று இருக்கின்றன. அவர்களின் அழகிய மை பூசப்பட்ட கண்கள் அத்தாமரை முகத்தில் பெண்வண்டுபோல் இருக்கின்றன. ஆதலால் அக்கண்களைப் பெண் வண்டென எண்ணி ஆசையோடு காமம் கொண்ட ஆண் வண்டுகள் அந்த மருத நிலத்திலேயே தங்கின.

கம்பன் கவியமுதம்—7

மகளிரும் வாளை மீனும்

வேளை வென்ற விழிச்சியர் வெம்முலை
ஆளை நின்று முனித்திடும் அங்கோர்பால்
பாளை தந்த மதுப்பரு கிப்பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் [56]

[வேளை=மன்மதனை; முனித்திடும்=கோபிக்கும்; மதர்க்கும்=மதம் கொள்ளும்]

மருத நிலத்தின் மற்றொரு பக்கத்தின் காட்சி இப்பாடலில் காட்டப்படுகிறது.

அங்கிருக்கும் மகளிரைக் குறிக்கும்போது மன்மதனையும் தம் கண்களால் வெற்றிகொண்டவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். மன்மதன் அம்புகளாலும் வசப்படுத்த முடியாத ஆடவரை அப்பெண்களின் கண்கள் வசப்படுத்தி விடுமாதலால் அவர்களை ”வேளை வென்ற விழிச்ச்சியர்” அதாவது மன்மதனையும் வெற்றி கொண்டவர்கள் எனக் குறிப்பிடுகிறார். அவர்களது முலைகள் காண்போர்க்கு விருப்பத்தை உண்டாக்கும். அவை தாம் இருக்கும் இடத்திலேயே இருந்து அங்கு வேலை செய்யும் ஆள்களைக் கோபித்து வசப்படுத்தும்.
நின்று என்பதற்கு இருக்கும் இடத்திலேயே என்று பொருள் கொள்ள வேண்டும். பிறருக்குக் கோபம் உண்டாக்க அவர்களிடம் செல்ல வேண்டாம் என்பது உணர்த்தப்படுகிறது. மேலும் அம்மருத நிலத்தின் எல்லாப் பக்கங்களிலும் தென்னம் பாளை அரியப்பட்டதால் வடிகின்ற கள்ளைக் குடித்தப் பருத்த வாளை மீன்கள் நிமிர்ந்து எழுந்து செருக்கித் திரியும். பெண்களின் முலைகள் நிமிர்ந்து நின்று கோபிக்கும். அதேபோல வாளை மீன்களும் நிமிர்ந்து நிற்கும் என்பது நயம்.
காமவிருப்பத்தைத் தருதலில் மன்மதனை வென்ற முகத்தினர் என்பதைக் “காமனேர் வயங்கு முகத்தியர்” என்று வில்லிபுத்தூரார் பாடுவார். வாளை மீன்கள் பாளையிலிருந்து வடியும் கள் குடிப்பதைப் பரிபாடல் “ பழன வாளை பாளை உண்டென” என்று காட்டும்

கம்பன் கவியமுதம்—8

எருமைப் பாலால் வளரும் செந்நெல்

ஈர நீர் படிந்து இந்நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை
தாரைகொள்ள தழைப்பன சாலியே [57]

[கார்=கரிய மேகம்; மேதி=எருமை; உள்ளி=நினைத்து]

குளிர்ச்சியான நீரில் மூழ்கிக் கிடந்த எருமைகள் இப்போது வயல்களில் வருகின்றன. கரிய மேகங்கள் போல அவை காட்சியளிக்கின்றன. அவை ஊரில் இருக்கின்ற தம் கன்றுகளை நினைக்கின்றன. உடனேயே கன்றின் மீது கொண்ட அன்பினால் அவற்றிற்குப் பால் சுரக்கிறது. இதே போலப் பால் சுரப்பதைக் கம்பனின் 45- ஆவது பாடலிலும் பார்க்க முடிகிறது. அப்பால் வெள்ளமாகப் பாய்ந்து வருகிறது. அவ்வெள்ளம் பாய்வதால் சாலி என்னும் செந்ந்நெல் வளர்கிறது.
ஆண்டாளின் திருப்பாவையில் கன்றுக்கிரங்கின உடனேயே எருமைக்குப் பால் சுரப்பதைக் “கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்தில்லம் சேறாக்கும்” என்பார். சாலி எனும் ஒருவகை நெல்லை திருமங்கையாழ்வார், “செஞ்சாலி விளை வயலுள்” என்று குறிப்பிடுவார்.

கம்பன் கவியமுதம்–9

கழுநீர் வளர்க்கும் செந்நெல்

முட்டுஇல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர்நெடு நீத்தம்தான்
பட்ட மென்கமுகு ஓங்கு படப்பைபோய்
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே [58]

[முட்டுஇல்=குறைபாடில்லாத; அட்டில்=சமையல் சாலை; நெட்டுலை=பெரிய உலை; நெடு நீத்தம்=உலை வடித்த கஞ்சி; படப்பை=சோலை; நாறு=நாற்றுகள்]

இப்பாடலைச் சுவைக்கும்போது “சோறு ஆக்கிய பெருங்கஞ்சி ஆறு போலப் பெருந்தொழுகி” என்னும் பழம் இலக்கியப் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டில் அன்னதானக் கூடங்களில் சோறு வடிக்கிறார்கள். அப்போது கொட்டும் கஞ்சி ஆறு போலப் பெருகி வந்ததாம். இங்கே கோசல நாட்டிலும் அந்தக் காட்சியைக் காட்டுகிறன் கம்பன்.
எந்தக் குறைபாடும் இல்லாத சமையல் கூடங்களிலே கனத்த ஒலிகளுடன் பெரிய உலைகளிலே கொட்டுவதற்காக அரிசியைக் கழுவுகிறர்கள். அந்தக் கழுநீரைக் கொட்டுகிறார்கள். அது வெள்ளம்போல் ஓடுகிறது. அவ்வெள்ளமானது நீர்க்கரைகளிலே வளர்க்கப்பட்ட மெல்லிய கமுகுகள் ஓங்கி வளர்ந்துள்ள சோலைகளின் வழியே சென்று நடப்பட்ட செந்நெல் நாற்றுகளை வளர்க்கிறது.
பழம்பாடல் சோறு வடித்த கஞ்சியைக் காட்டியது என்றால் கம்பனின் பாடல் அரிசியைக் கழுவிய கழுநீரைக் காட்டுகிறது.

கம்பன் கவியமுதம்—10

குப்பையில் இரத்தினம்

சூட்டு டைத்தலைச் செந்நிற வாரணம்
தாள் துணைக் குடைய தகைசால்மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ [59]

[சூட்டுடை=உச்சிக் கொண்டை கொண்ட; வாரணம்=கோழி; தாள்=கால்; மணி=இரத்தினம்; குரீஇயின் குழாம்=குருவிக் கூட்டங்கள்]

ஒரு நாட்டின் செல்வ வளம் கூற வரும்போது புலவர்கள் சற்று மிகையாகக் கூறுவதே மரபு. நெல்லை வீட்டு முற்றத்தில் காயவைத்துக் காவல் காக்கும்போது அந்நெல்லைக் கொத்த வரும் கோழிகளைத் தம் காதில் அணிந்துள்ள பொன்னாலான தோடுகளைக் கழற்றி விரட்டுவார்கள் என்று ஒரு பழம்பாடல் கூறும்
அதே மரபில் கோசல நாட்டின் குப்பைகளில் கூட இரத்தினங்கள் இருக்கும் என்று கம்பன் கூறுகிறான்.
உச்சியில் கொண்டையைக் கொண்ட தலையையும், செந்நிறத்தையும் உடைய கோழிகள் தம் கால்களினால் குப்பையைக் கிளறுகின்றன. அப்போது குப்பையில் கிடக்கும் இரத்தினங்கள் வெளிப்பட்டு ஒளி விடுகின்றன. அந்த இரத்தினங்களை மின்மினிப் பூச்சிகள் என்று கருதிய குருவிக் கூட்டங்கள் அவற்றைக் கொண்டுபோய்த் தம் கூட்டில் சேர்க்கும்.
முதல் அடியில் ’செந்நிற’ என்பதை ’தூநிற’ என்று பாடம் கொண்டு தூய்மையான வெண்ணிறம் என்று சொல்வாருண்டு.

கம்பன் கவியமுதம்—11

முத்துகள் குப்பையாதல்

குற்ற பாகு கொழிப்பவர் கோள்நெறி
கற்றிலாத கருங்கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில்
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே [62]

[பாகு=பாக்கு; கோள்நெறி=களவு நெறி; நுளைச்சியர்=நெய்தல் நிலப் பெண்கள்; முற்றில்=முறங்கள்; முன்றில்=முற்றம்]

அவர்கள் நெய்தல் நிலத்தில் வாழும் மிகச் சிறுமியர்; அவர்கள் களவு நெறி அறியாத காமப்பார்வை கொள்ளாத நுளைச்சியர் ஆவர். அவர்கள் பறிக்கப்பட்ட பாக்கை முறம் நிறைய வாரி வந்து கொழிக்கிறார்கள். கொழித்தல் என்பது ஒரு பொருளைச் சுத்தம் செய்கையில் அதனுடன் கலந்து விட்ட குப்பைகளை நீக்குதலாகும். அப்படிக் கொழிக்கும்போது அவர்கள் நீக்குவது பாக்குடன் கலந்து விட்ட முத்துகளாகும். அந்தமுத்துகள் அப்பெண்கள் தம் வீட்டு முற்றத்தில் சிறுவீடு கட்டி விளையாடும்போது சிந்திய முத்துகளாகும்.
இப்பாட்டில் விளையாடுவதற்குக் கூட முத்துகள் பயன்பட்டன என்பதும், அவற்றை குப்பையாகக் கருதி நீக்கியதும் அந்நாட்டின் வளத்தைக் காட்டக் கூறப்படுகிறது.
குற்ற பாகு கொழிப்பவர் என்பதற்கு குறுகுதலை உடைய சருக்கரைப் பாகைப் பனையோலையில் சேர்த்து விற்பவர் என்றும் அவர்களிடம் சிறுவீடு கட்டி விளையாடும்போது சிந்திய முத்துகளைக் கொடுத்து பாகை வாங்குபவர் என்றும் பொருளுண்டு.
இப்பாடலில் திணை மயக்கம் உண்டு என்று வழங்குவர். அதாவது பாக்கு மருத நிலமான வயலில் விளைவதாகும். அவற்றுடன் நெய்தல் நிலமாகிய கடலில் கிடைக்கும் முத்து கலந்துள்ளது என்பது இரு திணைகள் கலந்து வருவதாகும்.

கம்பன் கவியமுதம்-12

ஆடு மோத மின்னல் உண்டாதல்

துருவை மென்பிணை ஈன்ற துளக்குஇலா
வரிமருப்பு இணைவன் தலை ஏற்றை வான்
உருமிடித்தெனத் தாக்குறும் ஒல்ஒலி
வெருவிமால்வரைச் சூழ்மழை மின்னுமே [63]

[துருவை=செம்மறி ஆடு; துளக்கு=அச்சம்; மருப்பு=கொம்புகள்; ஏற்றை=கடாக்கள்; வெருவி=அஞ்சி; வரை=மலை]

இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி பயின்று வந்துள்ளதாம். அதாவது இயற்கையாக நிகழும் நிகழ்வில் புலவன் தன் குறிப்பை ஏற்றிப் பாடுவதாகும். மின்னல் மின்னுகிறது அதற்குக் கம்பன் காரணம் கூறுகிறான்.
மென்மையான செம்மறி ஆடுகள் ஆண்குட்டிகளை ஈனுகின்றன. வரிகளைக்கொண்ட கொம்புகளை உடைய ஒன்றுக்கு ஒன்று சமமான அக்கடாக்கள் மேகத்தில் உண்டாகும் இடியோசை போல ஒலி உண்டாகும்படி மோதிக் கொள்கின்றன. அப்போது பேரொலி உண்டாகிறது. அந்த ஒலியைக் கேட்டு பெரிய மலையில் தங்கி உள்ள நீர் கொண்ட மேகங்கள், வாய் திறக்க அதனால் மின்னல் உண்டாகும்.
இப்பாடலிலும் திணை மயக்கம் உள்ளது. அதாவது செம்மறி ஆடு முல்லை நிலத்துக்கு உரியதாகும். மலை என்பது குறிஞ்சி நிலப்பொருளாகும். இப்படி இரண்டு திணைகள் இங்கு மயங்கி வந்துள்ளன.

கம்பன் கவியமுதம்—13

வள்ளிக் கிழங்கும் மாம்பழமும்

வள்ளி கொள்பவர் கொள்வன மாமணித்
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி
புள்ளி கொள்வன பொன்விரி புன்னையில்
பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே [65]

[துள்ளி=தேன்துளி; பங்கயம்=தாமரை]
நல்ல ஓசை நயம் கொண்ட பாடல் இதுவாகும்.

வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுக்கையில் அவர்களிடம் இரத்தினங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவர்கள் எறிய அவை தொங்குகின்ற மாம்பழங்களின் மீது விழுகின்றன. அதனால் அவை தேன் துளிகளைச் சிந்துகின்றன. புள்ளிகளின் வடிவம் கொண்ட மகரந்தத் தாதுக்கள் கொண்ட புன்னை மரங்களில் தாமரை மலரில் தங்கும் அன்னம் போய்ப் படுத்துக் கொள்கிறது.
இப்பாடலின் நான்கு அடிகளையும் தனித்தனியே கொண்டும் பொருள் கொள்ளலாம். துள்ளி என்பதற்கு ஆமை என்று பொருள் கொண்டு மாம்பழங்களை ஆமைகள் கவர்ந்து கொள்கின்றன என்பார்கள்.
இப்பாடலில் வள்ளிக் கிழங்கு குறிஞ்சி நிலப்பொருளாகும். மாமரம் மருத நிலத்துக்கு உரியதாம்; தாமரை நெய்தலுக்கும் அன்னம் மருத நிலத்துக்கும் உரியதாம் இப்படி நான்கு வகை நிலங்களும் இங்கு மயங்கி வந்துள்ளன.

கம்பன் கவியமுதம்—14

ஈகையும் விருந்தும்

பெரும்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே [68]

இப்பாடலில் கோசல நாட்டுக் கல்வி, விருந்தோம்பல், மற்றும் ஈகைப் பண்பு ஆகியவற்றைக் கம்பன் காட்டுகிறான். இப்பாடலில் அந்நாட்டுப் பெண்கள் தாம் கூறப்படுகிறர்கள். அவர்களின் அழகு முதலில் கூறப்படுகிற்து.
அவர்கள் மிகப் பெரிய கண்களைக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களின் நெற்றியானது பிறைச் சந்திரன் போன்று இருந்தது. அவர்களிடம் செல்வம் நிறைய இருந்தது. அச்செல்வத்தைக் கம்பன் ’பொருந்து செல்வம்’ என்கிறான். அதாவது அது நிலை பெற்ற செல்வமாம். அவர்களை விட்டுப் போய்விடாதாம். மேலும் அம்மகளிர் கல்வியறிவு நிரம்ப வாய்க்கப் பெற்றிருந்தார்கள். அக்காலத்திலேயே பெண் கல்வி இருந்தது இதன் மூலம் தெரிய வருகிறது.
செல்வம், கல்வி இரண்டும் இருந்ததால் அவர்களிடம் நல்ல குணங்கள் இயல்பாகவே இருந்தன. அதனால் அவர்கள் தங்களிடம் வருத்தமடைந்து வந்தவர்க்கு அவர்கள் வேண்டிய பொருள்களைக் கொடுத்தார்கள். வந்த விருந்தினரை மிகவும் உபசரித்தார்கள். நாள்தோறும் அவர்கள் செய்ய வேண்டியது இச்செயல்கள் அன்றி வேறொன்றும் இல்லையாம்.
இப்பாடல் மூலம் விருந்தினரை உபசர்த்தல், ஈகை ஆகியவற்றுக்கு இன்றியமையாதன செல்வமும், கல்வியும் என்பதும் தெரிய வருகிறது.

கம்பன் கவியமுதம்—15

ஒன்றால் ஒன்று இல்லை

கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தை செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே [71]

[கூற்றம்=மரணபயம்; சீற்றம்=சினம்; இழிதகவு=தாழ்வடைவது.

இப்பாடலின் நயமே ஒன்று இல்லாததால் மற்றொன்று இல்லை என்பதாம். அதாவது கோசல நாட்டில் யாரிடமும் தீய செயல்கள் செய்கின்ற எவ்விதக் குற்றமும் இல்லை; அதனால் அவர்களுக்கு மரண பயமே இல்லையாம்; அவர்களின் உள்ளத்தில் நேர்மைக் குணமே இருக்கிறது; அதனால் அவர்களுக்குச் சினம் தோன்றுவதே இல்லையாம். அவர்கள் நல்ல அறச் செயல்கள் அன்றி வேறு செய்வதில்லை; அதனால் அவர்கள் மேலும் மேலும் உயர்வடைவதே அன்றித் தாழ்வடையதேஇல்லையாம்.
நாட்டில் தீய செயல்கள் செய்வதால்தான் மரண பயங்கள் தோன்றுகின்றன என்பது அக்கால நம்பிக்கை.

கம்பன் கவியமுதம்—16

நாட்டு மக்களின் நன்னெறி

நெறி கடந்து பரந்தன நீத்தமே
குறிஅ ழிந்தன குங்குமத் தோள்களே
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே
வெறியவும் அவர் மென்மலர்க் கூந்தலே [72]

[நெறி=வழி; நீத்தம்=வெள்ளம்; மருங்குல்=இடை; வெறி=வெறி பிடித்தல், வாசனை]]

கோசல நாட்டு மக்கள் பின்பற்றிய வாழ்வு முறை இப்பாடலில் கூறப்படுகிறது.
அந்த நாட்டில் மக்கள் தாம் வாழவேண்டிய நல்ல வழியை விட்டு செல்ல மாட்டார்கள். மழைபெய்து வருகின்ற வெள்ளமே தன் வழியை விட்டுச் செல்லுமாம். அந்நாட்டின் பொருள்கள் யாவும் தம் அடையாளங்களை அழிந்தவை அல்ல; ஆனால் அங்குள்ள மகளிரின் தோள்களில் குங்குமத்தால் செய்த அடையாளம் மைந்தர் தழுவுதலால் அழிந்தனவாம். தானியங்கள், நெற்கதிர்கள் ஆகியவற்றைப் போராகக் குவித்து அவற்றின் மேல் அடையாள முத்திரை இட்டு வைப்பார்கள். யாரேனும் அவற்றை எடுத்தால் அதன் அடையாளக்குறிகள் கலைந்து அழிந்துவிடும்.
அந்நாட்டில் எடுப்பார் இல்லாததால் அந்தக்குறிகள் அழியவே அழியாதாம். அந்நாட்டில் சிறுமை பெற்ற பொருள்கள் எதுவுமே இல்லை. ஆனால் சிறுமைப் பண்பை உடையன மங்கையரின் மெல்லிய இடைகளே ஆகும். வெறி என்பது இங்கு சிலேடையாக ஆளப்பட்டுள்ளது. கொடுமையான வெறிக்குணம் எவரிடத்தும் இல்லை. ஆனால் வாசனை மிக்கவை மங்கையரின் கூந்தலே ஆகும்.

கம்பன் கவியமுதம்—17

மகளிரிடம் தோற்பன

இயல்புடை பெயர்வன மயில்மணி இழையின்
வெயில் புடைபெயர்வன மிளிர்முலை குழலின்
புயல்புடை பெயர்வன பொழிலவர் விழியின்
கயல் புடைபெயர்வன கடிகமழ் கழனி [74]

[இயல்=சாயல்; புயல்=மேகம்; கயல்=மீன்]

அந்நாட்டு மகளிரின் சாயலுக்குத் தோற்று ஓடுவன மயில்களாகும். அம்மகளிரின் முலைகளிலே விளங்கும் இரத்தினங்கள் பதிந்த அணிகலன்களுக்குத் தோற்று ஓடுவன வெயிலின் கதிர்களாகும். ஏனெனில் அந்த அணிகலன்கள் வெயிலைக் காட்டிலும் மின்னக் கூடியவையாம்; மகளிரின் கூந்தலுக்குத் தோற்று ஓடுவன சோலையில் உள்ள மேகங்களாம். ஏனெனில் கார் மேகங்களைவிட அம்மகளிரின் கூந்தல் கருமையாக உள்ளதாம். அப்பெண்களின் கண்களுக்குத் தோற்று ஓடுவன வயல்களில் உள்ள மீன்களாம்.
இப்பாடலில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளான் கம்பன். அதாவது முதலில் உபமேயங்களைக் கூறிப் பின்னர் உவமைகளைக் கூறுகிறான், மயிலின் சாயல், வெயில், மேகம், மீன் ஆகிய உபமேயங்களைக் கூறிப் பின் அவற்றுக்கு உவமையாக மகளிர், முலைகளின் அணிகலன்கள், கூந்தல், கண்கள் எனக் கூறுகிறான். இப்படிக் கூறுவதை எதிர்நிலை அணி என்பர்.

கம்பன் கவியமுதம்—18

பழிப்பன, பழிப்பன

விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினைநகுவன அவர்நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் [76]

[அயில்விழி=கூரியவிழி; பிடி=பெண்யானை; கதி=நடை; பொதி=மொட்டுகள்; கலை=பதினாறு கலைகள்]

இப்பாடலில் நகுதல் என்பதைப் பழித்தல் அல்லது இகழ்தல் என்ற பொருளில் கொள்ள வேண்டும். விதி என்பது இங்கே இலக்கண விதியைக் குறிக்கும். விதி என்பது ஒன்றுக்கு மற்றொன்றை உவமையாகக் கூறுதலாகும். ஆனால் இங்கே மகளிரின் விழிகளுக்கு எப்பொருளையுமே உவமையாகக் கூற முடியாமையால் அவை அவ்விதியையே பழிக்கின்றனவாம்.
அவர்களுடைய நடையானது பெண்யானையின் நடையைப் பழித்தனவாம். தமக்குள்ளே இடைவெளியின்றி நெருங்கி அமைந்துள்ள அவர்தம் முலைகள் தாமரை மொட்டுகளைப் பழித்தனவாம். அந்த மங்கையரின் முகமோ பதினாறு கலைகளுடன் வாழ்கின்ற சந்திரனையே பழித்தனவாம்.
தாமரை மொட்டுகள் மலர்தலும் கூம்புதலும் ஆகிய பண்புகள் ஏற்றவை. ஆனால் அவர்களின் முலைகளோ அப்பண்பைக் கொள்ளாததால் மொட்டுகள் உவமைக்கு ஏற்றவை அல்ல. சந்திரனுக்கும் வளர்தலும், தேய்தலும் ஆகிய குற்றங்கள் உள்ளன. மகளிரின் முகங்கள் மாற்றம் இல்லாதவையாம். எனவே சந்திரன் ஏற்ற உவமை இல்லையாம்.

கம்பன் கவியமுதம்—19

போட்டிகள் போட்டிகள்

பகலினொடு இகலுவ படர்மணி மடவார்
நகிலொனொடு இகலுவ நளிவளர் இளநீர்
துகிலொனொடு இகலுவ சுதைபுரை நுரைகார்
முகிலினொடு இகலுவ கடிமண முரசம் [77]

[ பகல்=சூரிய ஒளி; நகில்=முலை; துகில்=ஆடை; சுதை புரை நுரை=பால் மீது படர்ந்த நுரை]

இப்பாடலில் உள்ள இகலுதல் என்பதற்கு மாறுபடுதல் அல்லது போட்டியிடுதல் என்று கொள்ளலாம்.
கோசல நாட்டில் எங்கும் பரவிப் படர்ந்திருக்கும் மணிகள் சூரியனுடன் அதற்குச் சமமாக ஒளி வீசப் போட்டியிடுகின்றன. அந்நாட்டில் இருக்கும் பெருமை மிக்க இளநீர்கள் மகளிருடைய தனங்களோடு போட்டியிடுகின்றன. மங்கையர்கள் அணிந்துள்ள வெண்பட்டாடைகள் பாலின் மேல் படர்ந்துள்ள நுரையின் வெண்மையுடன் போட்டியிடுகின்றன. திருமணங்களில் அடிக்கப்படுகின்ற முரசின் ஒலி கார்மேகங்களின் இடி ஓசையோடு போட்டியிடுகின்றன.
மணிகள், மார்புகள், ஆடைகள், முரசுகள் ஆகியனவற்றின் அழகும் பெருமையும் இப்பாடலில் கூறப்படுகின்றன.

கம்பன் கவியமுதம்—20

மாலைகள் தேன் சொரிதல்

கோதைகள் சொரிவன குளிர்இள நறவம்
பாதைகள் சொரிவன பருமணி கனகம்
ஊதைகள் சொரிவன உயிர் உறும் அமுதம்
காதைகள் சொரிவன செவிநுகர்கனிகள் [83]

[கோதை=பூமாலை அல்லது கூந்தல்; நறவம்=தேன்; பாதைகள்=மரக்கலங்கள்; மணி=இரத்தினம்; கனகம்=பொன்; ஊதைகள்=காற்றுகள்; காதைகள்=காப்பியங்கள்]

கோசல நாட்டில் மங்கையரின் கூந்தல்கள் தேனைச் சொரிவனவாம். அதாவது அவர்கள் அப்போதுதான் கொய்த மலர்களால் தொடுக்கப்பட்ட பூக்களை அணிந்து கொண்டிருந்தார்களாம். மரக்கலங்கள் வணிகம் மூலம் பருத்த இரத்தினங்களையும், பொன்னையும் சொரிந்தனவாம். பாதைகள் என்பதற்குச் செல்லும் வழி என்று கொண்டு அவ்வழிகளில் எடுப்பார் யாரும் இல்லாமையால் இரத்தினங்களும் பொன்னும் கிடந்தன எனப் பொருள் கொள்வாரும் உண்டு. காற்றுகள் உயிரை உடலில் பொருந்துமாறு செய்கின்ற அமுதத்தைச் சொரிந்தனவாம். குளிர் காற்றானது ஆவியை உயிர்ப்பிக்க வல்லதென்பர். கவிஞரின் இனிய காப்பியங்கள் செவிகளால் நுகரப்படும் இனிய பாடல்களைச் சொரிந்தன.

கம்பன் கவியமுதம்–21

இல்லாமையால் இல்லை

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால் [85]

பெரும்பாலும் எல்லாப் பேச்சாளர்களும் எடுத்துக்காட்டும் பொருள் நிறைந்த இனிய ஓசை நயமுளள பாடல் இதுவாகும். ஒன்று இல்லாமையால் வேறொன்று வெளிப்படத் தெரியவில்லை என்று இப்பாடல் கூறுகிறது.
ஒரு நாட்டில் வறுமை என்பது இருந்தால்தான் அங்கு வறியவர் இருப்பார்கள். அவ்வறியவர்கள் பிறரிடம் சென்று யாசிப்பார்கள். கொடைத்தன்மை கொண்டவர் அவர்களுக்குக் கொடுப்பார்கள். கோசலநாட்டில் வறுமையே இலாததால் கொடைத்தன்மையானது வெளிப்படையாகத் தெரியவில்லையாம். ஒரு நாட்டிற்குப் பகைவர் இருந்தால்தான் அந்நாட்டின் வீரம் வெளிப்படும். கோசல நாட்டிற்குப் பகைவர்களே இல்லாததால் அந்நாட்டு மக்களின் வீரமானது வெளிப்படையாகத் தெரியவில்லையாம். கோசல நாட்டில் உண்மையே இல்லையாம். பொய் என்ற ஒன்று இருந்தால்தானே அதிலிருந்து வேறுபட்டு உண்மை என்பது தனியே தெரிய வரும். எனவே பொய் இல்லாததால் உண்மையும் இல்லை. யாவரிடமும் கல்வியறிவோடு கேள்வி அறிவும் சிறந்திருந்ததால் அங்கே வெறும் ஏட்டுக் கல்வி அறிவு வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஒரு நாட்டின் சிறப்புக்குக் காரணமாக கொடை, வீரம் இசை [புகழ்] கல்வி என்று கூறுவர். ஒன்று, இரண்டு, நான்கு அடிகள் முறையே கொடை, வீரம், கல்வி ஆகியவற்றைக் குறித்தன. மூன்றாம் அடி உண்மையைக் காட்டுவதால் அதனால் வரும் புகழையும் குறிக்குமாம். இப்படிக் கோசலநாடு கொடை, வீரம், சத்தியம், கல்வி ஆகியவற்ரில் சிறந்திருந்ததாம்.

கம்பன் கவியமுதம்—22

இடம் மாறிச் செல்லுதல்

உயரும் சார்வுஇலா உயிர்கள் செய்வினைப்
பெயரும் பல்கதிப் பிறக்கு மாறுபோல்
அயிரும் தேனும்இன் பாகும் ஆயர் ஊர்த்
தயிரும் வேரியும் தலைம யங்குமே [87]

[அயிர்=கண்ட சருக்கரை; வேரி=கள்]

கோசல நாட்டில் கண்ட சருக்கரை, தேன், இனிய வெல்லப் பாகு, இடையர் ஊரில் கிடைக்கும் தயிர், கள் ஆகியன இடம் மாறும் என்று கம்பன் கூறுகிறான். இவை பண்ட மாற்று முறை வாணிகத்தால் ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் மாறிக்கொண்டே இருக்கலாம்.
இதை வைத்துக் கம்பன் ஒரு பெரிய, கனமான கருத்தை விளக்குகிறான். அதாவது இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள் பல்வேறு வினைகளில் ஈடுபடுகிறார்கள். அவ்வினைகளின் தகுதிக்கேற்ப அவர்கள் மோட்சம் அடைகிறார்கள் அல்லது மீண்டும் பிறக்கிறார்கள். அப்படி மோட்சம் என்னும் உயரிய கதியை அடைவதற்கு உரிய பற்றுக்கோட்டைப் பெற்றிருக்காத உயிர்கள், தாம் செய்த வினைப்பயனை அனுபவிக்கும் பொருட்டு, மீண்டும் மக்கள், தேவர், நரகர், விலங்குகள் என்னும் நால்வகைக் கதிகளில் பிறக்கும். அப்படி உயிர்கள் மாறி மாறிப் பிறப்பது போல மேலே சொல்லப்பட்ட பொருள்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன என்று இப்பாடலில் ஒர் அரிய உவமை கையாளப்பட்டுள்ளது.

கம்பன் கவியமுதம்—23

உழவர் ஓசையில் இசை அடங்குதல்

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியும் மாயுமே [89]

[மூரி=நெருக்கி; நேர் தாக்கின்=நேரான குறுந்தடியால் தாக்குதல்; தண்ணுமை=மத்தளம்; மாயும்=அடங்கும்]

கோசல நாட்டில் எழுப்பப்படும் இசைக்கருவிகளின் ஒலியை இப்பாட்டில் அறியலாம். மூக்கு போன்ற இடத்திலே வாய் வைத்து ஊதப்படுவது சங்கு. நேரான குறுந்தடியால் தாக்கப்பட்டு ஒலி எழுப்புவது பறை. வார் கொண்டு இறுகக் கட்டி இருப்பதால் அதிர்ந்து ஒலி எழுப்புவது மத்தளம்.
இப்படிப்பட்ட சங்கு. பறை, மத்தளம் ஆகியன எழுப்பும் ஓசைகளெல்லாம் அந்நாட்டின் உழவர்கள் தங்கள் உழவு மாடுகளை வாயினால் அதட்டி எழுப்பும் ஒலியில் அடங்கி விடுமாம். அதாவது அந்த வாத்தியங்களின் ஓசையை உழவர்கள் ஒலி அடக்கிவிடும் எனில் மாடுகளின் பெருக்கமும், அவற்றை அதட்டும் உழவர்களின் கூட்டமும் அறியப்படும். அதனால் உழவுத்தொழில் மேம்பட்டிருந்ததையும் அறியலாம்.

கம்பன் இசையமுதம்–24

செங்கையே பங்கயம்

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய்அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம்
வால்நி லாஉறக் குவிய மானுமே [90]

[பங்கயம்=தாமரை; வால்=வெண்மை]

தாலி என்பது அக்காலத்தில் பலவகைகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. திருப்பாவையில் ”காசும் பிறப்பும் கைகலப்ப” என்பார் ஆண்டாள் நாச்சியார். காசு என்பது அச்சுத்தாலியையும், பிறப்பு என்பது ஆமைத்தாலியையும் குறிக்கும். அவை அக்கால வழக்கப்படி இடையர் குலப்பெண்கள் அணிந்தனவாம். அதுபோல இப்பாடலில் ஐம்படைத்தாலி என்பது குறிக்கப்படுகிறது.
தாலி என்பது இக்காலத்தில் கணவன் அணிவிக்கும் மங்கல அணிப் பொருளாக மாறி விட்டது. ஆனால் இந்த ஐம்படைத்தாலி என்பது குழந்தைகளுக்குப் பிறந்த ஐந்தாம் மாதத்தில் அணிவிப்பதாகும். இருபால் குழந்தைகளுக்கும் அணிவிக்கப்படும். இதைத் தாலி ஐம்படை, ஐம்படை என்றும் வழங்குவர். இதை அணிந்த குழந்தைகளுக்கு அவ்விதக் குறையும் வராது என்ற நம்பிக்கை அன்று நிலவி வந்தது.
குழந்தை ஒன்று அந்த ஐம்படைத் தாலியை அணிந்து கொண்டுள்ளது. அத்தாலி அணிந்த அதன் மார்பிலே அக்குழந்தையின் வாயிலிருந்து சொள்ளு நீர் வடிகிறது. அக்குழந்தைக்கு மகளிர் பால் சோறு ஊட்டுகிறார்கள். சோற்றைத் தம் கைகளில் எடுத்துக்கொண்டு வாயின் அருகில் குவித்துக் கொண்டு போகும் அவர்களின் உள்ளங்கை வெண்மையான நிலா வந்ததால் குவிகின்ற தாமரை மலரைப் போன்றிருந்ததாம்.
குழந்தையின் முகம் வெண்ணிலா என்றும் அதைக் கண்டு குவிகின்ற மலராகிய கை என்றும் பொருள் கொள்வதும் உண்டு.

கம்பன் கவியமுதம்—25

அகமும் புறமும்

பொற்பின் நின்றன பொலிவு பொய்இலா
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன காலமாரியே [91]

[பொற்பு=நல்ல குணங்கள்;பொலிவு=அழகு; அற்பு=அன்பு; காலம் மாரி=பருவ மழை]
கோசல நாட்டு மக்களின் அக பண்புகள் சிறப்பாக இருந்ததானால் அவர்தம் புற அழகுகளும் சிறந்திருந்தனவாம். நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்ததால் புற அழகும் நிரம்பி இருந்தது. அவர்களுடைய பொய்யில்லாத தன்மையால் நீதிகள் எல்லாம் நிரம்பி இருந்தன. அவர்களின் அன்பினால் அறங்கள் நாட்டில் நிரம்பி இருந்தன. அந்நாட்டு மகளிரின் கற்புத் திறத்தால் பருவ மழைகள் காலந்தவறாமல் பொழிந்தன.
இவ்வாறு அகப்பண்புகள் சிறந்துள்ள மக்கள் வாழும் நாட்டில் அவர்கள் வாழ்வதற்கேற்ற புறச்சூழலும் அமையுமென்பது தெரிகிறது.
இப்பாடலின் பின்னிரண்டடிகள் மகளிரையும், முன்னிரண்டடிகள் ஆடவரையும் குறிக்கும்.

••••

டொரினா ( சிறுகதை ) கார்த்திக் பாலசுப்பிரமணியன்.

images (7)

அம்மா மிகச் சாதாரணமாகத்தான் இந்தச் செய்தியைக் கூறினாள். இரவுச் சாப்பாட்டுக்கு சோள தோசையும், மல்லிச் சட்னியும் வைத்திருக்கிறேன். உனக்குக்கூட ரொம்பப் பிடிக்குமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி விசயத்தைச் சொன்னாள். வசந்தா அக்கா இறந்துவிட்டாளாம். அதுவும் தற்கொலையாம் என்றாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவள் பேசிய எதுவுமே என் காதில் விழவில்லை.

மலர்விழியிடம் ஹிமாலயா என்றெழுதியிருந்த ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, கட்டியிருந்த கைலியிலிருந்து ட்ராக்சுக்கு மாறினேன். ஒரு மாதிரி புழுக்கமாக இருக்கிறது. கடற்கரை வரையில் ஒரு நடை போய்வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு, செருப்பையணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினேன். கிரைண்டரில் ஆட்டி வைத்திருந்த மாவை வழித்துக் கொண்டிருந்தவள், நெற்றியில் வந்து விழுந்த முடியை புறங்கையால் ஒதுக்கிவிட்டு ‘சரி’ என்றாள்.

இறங்கி நூறடி நடந்தால் கடற்கரை வந்துவிடும். மனது சஞ்சலப்பட்டுப் போகும் தருணங்களில் எல்லாம் முகத்தில் காற்று பட கொஞ்சம் தூரம் கடலைப் பார்த்து நடந்து வந்தால் போதும் எனக்கு. வீடு திரும்பும் போது, கோடைக்கால வானம் போல மனம் தெளிந்து போயிருக்கும்.

செருப்பை மணலில் களைந்துவிட்டு, அலைவந்து கால் வருடும்படி, நிலவொளி பட்டு ஒளிரும் கடலையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். அலைபட்டு உள்ளங்காலில் ஏறிய குளுமை வசந்தா அக்காவின் உள்ளங் கைகளை நினைவு படுத்தியது.

அக்கா தன் இருபதுகளில் ஜொலித்துக் கொண்டிருந்த நேரம் நான் என் பதின்களை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அவள் வீடும், எங்கள் வீடும் இருப்பது ஒரே வளவுதான். நான் குழந்தையாய் இருந்ததிலிருந்து என்னைத் தூக்கிக் கொஞ்சியவள் தான் என்றாலும், அவள் ‘ச்ச்சமத்து’ என்று என் கண்ணங்களை அள்ளும் போது கழுத்தைக் குனிந்து, உடல் குறுகி கூச்சத்தில் நெளிவேன். அப்போது அவள் அம்மாவிடம் சொல்வாள் ‘அக்கா, பிள்ளைக்கு மீசை முளைக்க நேரம் வந்துடுச்சு’ என்று கூறி என்னைப் பார்த்து கண் சிமிட்டுவாள். நான் மீண்டும் நெளிவேன். ‘அடிப் போடி இவளே.. இன்னும் படுக்குற பாயில உச்சா போயிட்டு திரியுதான். இவனுக்கு மீசை ஒண்ணுதான் கேடு’ என்று அம்மா அங்கலாய்ப்பாள்.

என்னால் இப்போதும் அந்தக் கைகளின் குளுமையை உணர முடிகிறது. நினைவுகளைப் போல, என்னால் எப்படியோ உணர்வுகளையும் மீட்டெடுக்க முடிகிறது. ஆயிரம் மலர்களுக்கிடையேயும், கோகுல் சாண்டல் பவுடர், கழுத்து வியர்வை நனைந்து எழும் அவளின் பிரத்யோக வாசனையை என்னால் இப்போதும் பிரித்து உணர முடியும்.

வசந்தா அக்கா நன்றாக ஓவியம் வரைவாள். அவளது ஓவியங்களால் ‘ நன்று – மிக நன்று’ குறிப்புகளை வாங்கி நிறைந்தன என் ஓவியப் பயிற்சிப் புத்தகங்கள். என் வீட்டின் சிவப்பு சிமெண்ட் பாவிய தரையில், அப்பாவின் எழுத்து மேசையை இழுத்துப் போட்டுக் கொள்வாள். எனக்கும் அவளுக்கும் மட்டுமே கேட்கும் ஒலியில் ‘மோகன்’ நடித்தப் படப் பாடல்களைப் பாடிய படியே, எனக்கான படங்களைப் போடுவாள். வராண்டாவில் மாட்டப் பட்டிருக்கும் குண்டு பல்பின் ஓளியில், நெற்றியிலிருந்து அவளின் கழுத்துக்கு இறங்கும் வியர்வைக் கோடுகளின் மினுமினுப்புகளை ரசித்துக் கொண்டிருப்பேன்.

சட்டென்று வரைவதை நிறுத்தி, ஓரக் கண்ணால் பார்த்து, ‘என்னலே’ என்பது போல, ஒரே ஒரு புருவத்தை மட்டும் தூக்குவாள். நான் வெட்கிக் குனிந்து, வெட்டுப்படப் போகும் ஆடுபோல தலையை ஆட்டுவேன். அதைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொள்வாள்.

அவளின் சிறு வயதிலேயே அப்பா தவறிவிட்டார். அம்மா மட்டும் தான். சொஸைட்டிக்கு தறி நெய்து கிடைக்கும் கூலியில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் எப்படியோ உருட்டிப் பிரட்டி அக்காவை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துவிட்டார். குடிகார அண்ணனைத் தவிர அவள் அம்மாவுக்கும் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள நாதியில்லை. அவர்களின் எல்லா சுக துக்கத்திலும் அம்மாதான் தோள் கொடுத்து நின்றிருக்கிறார்.

* * *

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அக்கா என்னைத் துணைக்கு அழைத்துக் கொண்டாள். நானும் அவளும் மட்டும் பெண்கள் அமரும் பகுதியில் அமர்ந்து ‘காதல் கோட்டை’ படம் பார்த்தோம். அவள் வீட்டில் இன்னும் சில தோழிகளும் உடன் வருவதாய்ச் சொல்லியிருந்தாள். ஆனால் அப்படி யாரும் வரவில்லை. இடைவெளியில் அரிசி முறுக்கு வாங்கிக் கொடுத்த போது, ‘ஏலே.. கூட என் ப்ரண்டுக யாரும் வரலேன்னு அம்மாக்கிட்ட போயி சொல்லிடாதே என்ன’ என்றாள்.

எங்க அம்மாகிட்டயா.. உங்க அம்மாகிட்டயா..

ரெண்டு பேர்கிட்டயும் தான்.

படம் முடிந்து திரும்பி வரும் போது, ‘படம் பிடிச்சதாலே.. அஜித் சூப்பரா இருக்காம்ல’ என்றாள். அக்காவுக்கு இன்னொரு ஆணையும் பிடிக்கிறது. அதுவும் அவள், அவனை ரசிக்கவெல்லாம் செய்கிறாள் என்று உணர்ந்த போது நான் அஜித்தை முற்றிலுமாக வெறுக்கத் தொடங்கியிருந்தேன்.

நடந்து வந்து கொண்டிருந்த எங்களின் பின்னால், சரியாக மூன்று முறை சைக்கிள் பெல் கேட்டது. இந்தச் சத்தம் எனக்குப் பழக்கமான ஒன்று. நான் மட்டும் திரும்பிப் பார்த்தேன். கலர் கதிரேசன் அண்ணன் தான் தனது லோடு சைக்கிளை அழுத்தி வந்து கொண்டிருந்தார். இந்த முறை காலிப் பெட்டி தான் இருந்தது. அண்ணன் தான் எங்கள் ஊரில் உள்ள பெட்டிக் கடைகளுக்கு கலர், சோடா முதலியன சப்ளை செய்வார். தீவிரமான ரஜினி ரசிகர். அப்போது கூட முத்துப் பட ரஜினி போல வெள்ளை ஜிப்பா, கழுத்தில் ஒரு சிவப்புத் துண்டு, நெற்றியில் குங்குமம் என்று வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

ஒவ்வொரு வருடமும் ரஜினி பிறந்த நாளுக்கு, பெரிய தட்டி கட்டி, ஸ்பீக்கர் வைத்து, நாள் முழுக்க ரஜினி பாட்டுகளை ஒலிக்க வைத்துக் கொண்டிருப்பார். என்னைப் போன்ற பிள்ளைகளுக்கு நோட்டும் பேனாவும் கொடுப்பார். அப்படியே நாங்களும் ரஜினி ரசிகர் ஆனோம். ஆனால், அக்காவுக்கு ஏனோ கமல் தான் பிடிக்கும்.

வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோவில் தெரு முக்கு வரை பின்னாலேயே வந்தார். மீண்டும் மூன்று முறை பெல் அடித்து இந்த முறை எங்களுக்கு சைடில் வந்து சைக்கிளை நிறுத்தினார். ஒரு காலை சைக்கிளின் பெடலிலும், மறுகாலைத் தரையிலும் ஊன்றிய படி நின்று கொண்டு, ‘என்னடா சரவணா.. நீ கூட நான் டொரினா வாங்கித் தந்தா குடிக்க மாட்டியோ’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மலங்க மலங்க அக்காவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘இதெல்லாம் ஒரு படமால்லே.. அடுத்த வருசம் எப்படியும் தலைவர் படம் வந்துடும். அப்போ வாடே நான் உன்னக் கூட்டிட்டுப் போறேன். தலைவரு படத்த முதல் நாள் பாத்திருக்க மாட்டேல்ல.. நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா மாதிரி இருக்கும் டே’ என்றார்.

அக்கா, என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். ‘யார்ட்டயும் சொல்லிடாதே சரியா’ என்றாள். எதைச் சொல்கிறாள் என்பது புரியாத போதும், எதையுமே சொல்லக் கூடாது என்பதாக முடிவெடுத்துக் கொண்டேன்.

* * *

பன்னிரெண்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு பரிட்சை நடந்து கொண்டிருந்த நேரம். அக்காவும் பன்னிரெண்டாம் வகுப்பு தான் எழுதினாள். பெரிய பரிட்சை ஆதலால், என்னைப் போன்ற சிறு வகுப்புப் பிள்ளைகள் சத்தம் போட்டுவிடக் கூடாது என்பதால் எங்களுக்கெல்லாம் விடுமுறை விட்டிருந்தார்கள்.

விளையாடுவதற்காக வண்ண வண்ண கோலிக் குண்டுகளை டவுசரின் இரண்டு பைகளிலும் திணித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அங்கே, சம்முகம் தாத்தாவின் பெட்டிக் கடையின் முன்னர் கதிரேசன் அண்ணனின் லோடு சைக்கிள் நின்று கொண்டிருந்தது. அவரது சைக்கிளை அடையாளம் காண்பது மிகவும் எளிது. அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் போலவே இருக்கும். அதில் இருக்கும் முருகேசன் என்ற பெயர் கூட அண்ணாமலை படத்தின் டைட்டில் போலவே எழுதப் பட்டிருக்கும். சைக்கிளின் இரண்டு பக்கங்களிலும் கோலி சோடா, கலர் மற்றும் டொரினாக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கதிரேசன் அண்ணன் அங்கேதான் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். நான் வருவதைப் பார்த்ததும் சிகரெட்டை அணைத்துவிட்டு, ‘டேய் சரவணா.. இங்க வாடா’ என்றார்.

‘அண்ணே.. கோலி விளையாடப் போறேண்ணே’

‘அடப் போகலாம் இருடா.. டொரினா குடிக்கியா’

விளையாட்டெல்லாம் மறந்து ‘ சரியண்ணே’ என்றேன்.

முதலில் தன் சைக்கிள் பெட்டியிலிருந்து எடுக்கப் போனவர், பின்னர் சம்முகம் தாத்தாவிடம் சொல்லிவிட்டு ஐஸில் குளிர வைக்கப்பட்டிருந்த டொரினா ஒன்றை எடுத்து வந்தார். அதன் மூடியை அத்தனை லாவகமாக தன் பற்களாலேயே திறந்தார். பின்னர் ஒரு முறை நானும் அது போலவே முயற்சித்து வாய் கிழிந்து இரத்தம் வந்தது தனிக் கதை.

அதுவரை ஒரு முழு டொரினாவைக் குடித்ததேயில்லை. வீட்டுக்கு விருந்தினர்கள் வரும் போது, நான் கடையிலிருந்து வாங்கி வருவேன். அப்போது, அதிலிருந்து ஒரு டம்பளரில் பாதிவரை ஊற்றி அம்மா தருவாள். டொரினாவை டம்பளரில் ஊற்றிக் குடிப்பதே தனிக்கலை. அதை ஊற்றும் போது, புஸ் புஸ் என்ற ஒலியுடன் வரும் கேஸ் போய் விடுமுன் மெதுவாகக் குடிக்கத் தொடங்க வேண்டும். ஆனால், உடனே தீர்ந்து போய் விடவும் கூடாது. வைத்து வைத்துக் குடிக்க வேண்டும். குடித்து முடித்ததும் அந்த ஆரஞ்சு வண்ணமும் சுவையும் நாக்கில் நெடு நேரம் நிலைக்க வேண்டும். எனவே உடனடியாக வேறு எதையும் குடிக்கவோ, திங்கவோ கூடாது.

அரை டம்பளர் டொரினாவையே அரைமணி நேரம் குடிப்பவனுக்கு, அண்ணன் ஒரு முழு டொரினா பாட்டிலை வாங்கிக் கொடுத்திருந்தார். உண்மையில் என்னால் குடிக்க முடியவில்லை. ஒவ்வொரு வாய் குடித்து முடித்ததும் அதன் அளவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தீர்ந்தபடியே தெரியவில்லை. குடிக்க முடியவில்லை என்று சொல்வதோ ஆகப் பெரிய அவமானம். அதனால் முக்கி முக்கி குடித்துக் கொண்டிருந்தேன்.

‘ நல்லா இருக்காலே’ என்றார்.

‘சூப்பர்ண்ணே’ என்று தலையாட்டினேன்.

‘ஏன்டா.. உங்க அக்காளுக்கு மட்டும் டொரினா பிடிக்காதோ’

‘தெரியல்லண்ணே.. அது அம்மா அதுக்கு வாங்கிக் கொடுத்து நான் பார்த்தேயில்லண்ணே’

‘ஓ.. அவுக அம்மா வாங்கிக் கொடுத்தாதான் மகாராணி குடிப்பாகளோ’

அக்காவை, ‘மகாராணி’ என்றழைத்த போது இருந்த நக்கல் என்னை எரிச்சல் படுத்தியது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. அப்போதுதான் சரியாக அக்கா பரிட்சை எழுதி முடித்து வந்து கொண்டிருந்தாள். வழக்கமாக வரும் அவளது தோழிகள் முன்னே செல்ல இவள் மட்டும் இரண்டடி பின்னால் வந்து கொண்டிருந்தாள். அவள் தூரத்திலிருந்தே எங்களைப் பார்த்துவிட்டாள்.

அப்போது சரியாக அண்ணன் தன் சைக்கிளில் இருந்து பாட்டொன்றை ஒலிக்க விட்டார் ‘போகும் பாதை தூரமே, வாழும் காலம் கொஞ்சமே’ என்று பாதியில் இருந்து பாட ஆரம்பித்தது. நான் அதன் ஆரம்ப வரிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருந்தேன்.

அக்கா எங்களைக் கடந்து செல்லும் போது, அண்ணன் ஒரு டொரினாவை எடுத்து அக்காவின் பக்கம் நீட்டி, வேண்டுமா என்பது போல் தலையை அசைத்தார்.

அவள் இல்லையென்பதாக தலையாட்டினாள். அப்போது அவள் தலையில் இருந்து விழுந்த மல்லிகைப் பூக்களை நான் கவனித்தேன். அவள் லேசாகச் சிரித்தது போலத் தான் தெரிந்தது. கதிரேசன் அண்ணன் முன்னால் சிலுப்பியவாறு இருந்து முடியை உள்ளங்கையால் கோதி மேலே இழுத்துவிட்டுச் சிரித்தார்.

* * *

அன்று நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது, அடுக்களைக்குள் அம்மாவும், அக்காவின் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

‘வசந்தாவ முருகேசன் கலியாணம் முடிக்கணும் ஆசைப்படுறாப்புலயாம். நேத்து சொஸைட்டிக்கு சீலைய வரவு வைக்கப் போயிருந்தப்ப வழியில பார்த்தேன் அந்தப் பையன. காசு பணம் ஒண்ணும் பெரிசா எதிர்ப்பார்க்கலைக்கா. முடிஞ்சதப் பண்ணுங்க. பொண்ணு மேல படிக்கணும்ன்னு ஆசைப்பட்டாலும் கலியாணம் பண்ணிட்டு நான் படிக்க வைக்கிறேன்னு சொன்னாப்புல. பார்த்தா நல்ல பையனாத்தான் தெரியுறாப்ல. இருந்தாலும் நம்ம அண்ணாச்சிக்கிட்ட சொல்லி ஒரு வார்த்தை விசாரிக்க சொன்னா நல்லாருக்கும். ஆம்பிளைங்க பழக்க வழக்கமெல்லாம் அவுகனா கரெக்க்ட்டா சொல்லிப் பொடுவாப்புல’

‘இதையெல்லாம் சொல்லுணுமா பொன்னக்கா. நாளைக்கே விசாரிக்கச் சொல்லுவோம். பையன் ரொம்பத் தெளிவுதேன். ஊர் காரியத்துலகூட அப்பப்போ முன்னாடி வந்து எடுத்துப் பண்ணப்போ பார்த்துருக்கேன். நம்ம வசந்தாவுக்கு ஏத்த சோடிதேன்.’

அடுத்த ஒரு வாரத்தில் எல்லாம் கூடி வந்தது. அக்காவுக்கு அன்று ‘பூ வைக்க’ கதிரேசன் அண்ணன் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள். அன்றைக்கு அக்கா கிளிப்பச்சை நிற பட்டுப் புடவையில் அத்தனை அழகாக இருந்தாள். காதில் கம்மல் மாட்டி, தலை நிறைய பூ சூடி, அம்மாவின் நெக்லஸ் ஒன்றை வாங்கி அணிந்திருந்தாள். அது அம்மாவை விட அக்காவுக்குத்தான் அத்தனை பொருத்தமாக இருந்தது.

அவர்கள் வீடு சிறியது என்பதால், எங்கள் வீட்டில் வைத்துத்துதான் எல்லாம் நடந்தது. அங்கு வந்த கதிரேசன் அண்ணன் என்னைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

அடுத்த வைகாசியில் திருமணத்தைக் குறித்தனர். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது. அந்தச் சந்தோசம் எல்லாம் இரண்டே வாரம்தான். அந்த வெள்ளிக் கிழமை, முருகேசன் அண்ணனின் அப்பா, கடையைச் சாத்திவிட்டு இரவில் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்துவிட்டார். விழுந்தவர் இதயம் நின்று போய்விட்டது. அதோடு அக்காவின் கல்யாணமும்.

அதற்குப் பிறகு அக்கா வீட்டை விட்டு வெளியே வருவதையே நிறுத்திக் கொண்டார். அடுத்த வருடம் முருகேசன் அண்ணனுக்குக் கலியாணமாகி அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள் என்றான போதும் கூட, அக்காவுக்கு கல்யாணப் பேச்சே கூடி வரவில்லை.

பள்ளி முடிந்து நான் கல்லூரி செல்லும் போது ‘நல்ல பிள்ளையா போய்ட்டு வாடா சரவணா’ அவள் என் தலையைக் கோதிய போதும் அதே குளுமைதான் இருந்தது.

எங்கள ஊரில் நடக்கும் மாரியம்மன் திருவிழா சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் விசேஷம். பொதுவாக ஏப்ரல், மே மாத கோடையில் வரும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைக் காலம். ஆதலால், பொருள்வயின் பொருட்டு வெளியூரில் இருப்பவர்கள் கூட அனைவரும் கூடிய மட்டும் ஊருக்கு வந்துவிடுவர். ஊர் முழுவதும் உற்சாகம் நிரம்பி வழியும்.

காலையில் பூச்சப்பர பவனி. தெருவையே கூட்டித் தெளித்து, புத்தாடைகள் கட்டி, தேங்காய் பழத்துடன் அனைவரும் தெருவில் குழுமியிருந்தோம். கோவில் யானை எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அடுத்து, இளவட்டங்கள் சுற்றிலும் ஆடிவர கொட்டு மேளம் ஒலித்து வந்ததது. கொளுத்தி வைக்கப்பட்ட பத்திக்கட்டின் மணமும், தொடுத்து வைக்கப்பட்டிருந்த மல்லிகை மாலையின் மணமும், ஏற்றி வைக்கப்பட்ட மாவிளக்கிலிருந்து நெய் எரிந்து வரும் காந்தார வாசமும் சுற்றியெங்கும் கமழ்ந்து கொண்டிருந்தது.

தீபாராதனை காட்டியபடி கோவில் பூசாரி வந்து கொண்டிருந்தார். வியர்வை மழையில் குளித்தவாறே மேளக்காரர்கள், உடல் அதிர, உள்ளோடும் குருதி கொதிக்க கொட்டடித்துக் கொண்டிருந்தனர்.

அருகில் நின்று கொண்டிருந்த வசந்தா அக்கா, தனது உடலை மெதுவாக முறுக்கி, முன்னும் பின்னுமாய் நெளியத் தொடங்கினார். அவரின் மூச்சு சர்ப்பமாய் சீறிற்று. பற்களை நரநர வென்று கடித்தவாறு சாமியாடத் தொடங்கியிருந்தார். எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு சக்தியும். தரையில் புரள எத்தனித்தவரை, அருகிலிருந்த பெண்கள் இருவர், தாங்கிப் பிடித்துக் கொண்டனர். கூட்டத்தின் கவனம் முழுவதும் அவரிடம் சென்றது. என்னைப் போன்ற சிறுவர்கள் எல்லோரும் வெருண்டு ஒதுங்கிக் கொண்டோம்.

சுற்றியிருந்த வயதான பாட்டிமார்கள் சிலர், ‘உனக்கு என்னத்தா வேணும்.. வயசுக்கு வந்த புள்ளய இப்படிப் படுத்துறியே.. இது உனக்கே நியாமா?.. அவளுக்கு நாளைக்கு கல்யாணம் காட்சின்னு பாக்க வேணாமா’ என்று அந்த அக்காவிடம் வேறு யாரிடமோ பேசும் தோரணையில் பேசிக் கொண்டிருந்தனர்.

சிலப் பல மிரட்டல்களுக்கும், வேண்டுகோள்களுக்கும் பிறகு, அதிரும் குரலில் அக்கா ‘இப்ப எனக்குக் குடிக்க டொரினா வேண்டும்’ என்றார். அருகிலிருந்த ஒருவர் சம்முகம் தாத்தாக் கடையில் இருந்து ஐஸில் வைக்கப்பட்ட இரண்டு டொரினாக்களை வாங்கி வந்து உடைத்துக் கொடுத்தார். இரண்டையும் சொட்டு மிச்சம் வைக்காமல் குடித்து முடித்து அவர் மீண்டும் அக்காவானார்.

கடந்த முறை மகியின் முதல் மொட்டைக் கூப்பிட அவளை விட்டுவிட்டேன். அப்போதும் அவள் வந்து அவன் கைகளில் நூறு ரூபாயைத் திணித்து, ‘உங்கப்பன மாதிரி நீயும் இந்த அத்தையை மறந்துடாதேல..’ என்று அவனை அள்ளி முத்தமிட்டுச் சென்றாள்.

மகியும் கூட அந்தக் கைகளின் குளுமையை உணர்ந்திருப்பானாயிருக்கும்.

இப்போது, இறுக்கம் சற்று குறையவே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மலர் விழி, ‘ இடியாப்பம் செஞ்சு ஹாட் பாக்ஸில் வச்சுருக்கேன். முகம் கழுவிட்டு வந்தீங்கன்னா சாப்பிட ஆரம்பிக்கலாம்’ என்றாள்.

அவளை மறித்து நிறுத்திவிட்டு, என் போனை எடுத்து, நான் மீண்டும் அம்மாவுக்கு அழைத்தேன் ‘ அம்மா.. வசந்தக்கா எப்படிச் செத்தா?’ என்றேன். ‘டொரினால பூச்சி மருந்த கலந்து குடிச்சுருக்கா பாதகத்தி..’ என்றாள்.

* * *

வே.நி.சூர்யா கவிதைகள்

images (6)

1
நாம் பிறந்த அந்த நொடியே தயாராகிவிடுகின்றன நம் ஒவ்வொருவரின் மீதான குற்றச்சாட்டுகள்

2
நேரம் தவறாமல் வரும் ரயில் போல வந்து வந்து போய் கொண்டிருக்கிறது குற்றமே செய்யாதவனை குற்றம் செய்ததாய் அறிமுகப்படுத்தும் நிலை

3
இலவசமாக கிடைத்த மதுபானத்தை பருகுவதை போலத்தான் அவர்கள் குற்றங்களை புரிகிறார்கள்
அதன் கசப்பு தீர அடிக்கடி குற்றயுணர்ச்சியை தொட்டுக் கொள்கிறார்கள்

4
ஒரு சிகரெட் நீளமுடைய தவறு அது
அதை அவளுக்கு என்று வெகுகாலமாக பத்திரமாக வைத்திருக்கிறேன்

5
செய்த குற்றத்திற்காக தூக்கு மேடையில் நிற்கிறேன்
என் தந்தை என்னை தூக்கிலிட தயாராக இருக்கிறார்
தூக்கு தண்டனைக்கு
இன்னும் பத்து நிமிடங்கள் தான் என்கிறார்கள்
சரியாக ஒன்பதாவது நிமிடத்தில் பிரார்த்தனை செய்வேன் இந்த பத்து நிமிட சிந்தனைகள் என்றும் உங்களோடு இருப்பதாக என

*****************************
விடுதலையும் குற்றமும்

மதுபான விடுதிக்கு மத்தியான பொழுதொன்றில் சென்றிருந்தோம்
முட்ட முட்ட மது வருந்தினோம்
என்னுடனிருந்தவர்கள் தத்தம் சொரூபத்தை காட்டத் தொடங்கினர்
தேவடியா மகளே உனை நான் காதலிக்கிறேன் என தன் காதலை சொன்ன முதலாமவன் அவளால் தான் நாசமாய் போனேன் என்றபடி கதறியழ தொடங்கினான்
வருந்தி வருந்தி சேர்த்த மூவாயிரம் ரூபாயை தீயிலிட்ட இரண்டாமவன் அவன் எப்படி என் மனையாளிடம் அப்படி பேசலாம் என்றபடி ஆக்ரோஷமாய் கத்த தொடங்கினான்
வயதில் இளையவனாகிய நான் அமைதியாக இருந்தேன்
தாஸ்தாவெஸ்கியின் எழுத்துக்களின் சாயலுடைய மூன்றாமவன் நீ எப்படி அமைதியாக இருக்கலாம் என்றபடி என் கன்னத்தில் பளாரென அறைந்தான்
அதன்பிறகு தான் எங்களது கோப்பைகளிலிருந்து குற்றமும் விடுதலையும் ஊற்றெடுத்து காட்டாறென பாயத்தொடங்கியது

•••

1.அந்த வேறு யாரோ என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார்

1
கடவுளை நம்பவில்லை
எனை கண்டு அஞ்சியென் கண்களில் தென்படாமல் இருப்பவரை நான் எப்படி தொழுவது
ஆனால் அவர் என்னை கட்டுப்படுத்த துடியாய் துடிப்பவரென்பது வேறு விஷயம்

2
ஓர் அறவுரை தொனியில் எனை ஈன்றெடுத்த தாய் சொன்னார் எதையோ தொழுதே ஆக வேண்டுமென்று
எனக்கும் சரியென்று தான் பட்டது

3
வீட்டின் பீரோக்களில் பணம் திருடும்போதும் பெண்களை ஏமாற்றி ரகசியங்களை தீண்டும்போதும் மாதவியின் சா நிகழ்ந்த மத்தியானம் வரும்போதும்
கோப்பை கோப்பையாய் உன்னதம் பருகி துன்பயின்பங்களை தாண்டும்போதும் யாரையாவது கொலை செய்ய வேண்டுமென ஏக்கமடையும்போதும் என்னுடன் எனைத் தவிர வேறு யாரோ இருப்பது போலிருந்தது

4
அந்த வேறு யாரோ நம்பிக்கைகளை பரிசளிப்பவராகவும் கட்டற்றவராகவும் வார்த்தைகளில் சிக்கிவிடாதவராகவும் தோற்றம் கொடுத்தார்
அந்த வேறு யாரோ கடவுளை போல எனை தடுத்து நிறுத்த முயல்வதேயில்லை

5
மேலும் அந்த வேறு யாரோ என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார்
அவர் தான் என் கடவுள் என முடிவுசெய்த சமயம்
வீட்டிற்கு குற்றத்தால் நெய்த புதுச்சட்டை பரிசாக வந்திருந்தது

——–

2.கனவு

என்ன ஒரு கனவு நான் கண்டது
நானும் மாதவியும் மிக நெருக்கமாக அழுத்தமாக உலகின் கடைசி காதலிணைகள் போல முத்தமிட்டுக் கொள்கிறோம்
உதட்டில் மாதவிக்கு தசையே இல்லை
ஏன் தேகத்தில் கூட இல்லை
அதனாலென்ன என சொல்லியவாறு கனவு தொடர்ந்து கொண்டிருந்தது நான் விழித்தபிறகும்

யூமா வாசுகியின் வேட்டை அகால நேரங்களில் கதை படித்தல். / சுயாந்தன்.

images (5)

நாம் எல்லோரும் கதைகளிலும், நாளிதழ்களிலும் படித்திருப்போம்; காதலை ஏற்க மறுத்த காதலியைக் காதலன் கொலை செய்தான் என்றும் இரசாயன அமிலம் வீசினான் என்றும். யூமா வாசுகியின் வேட்டை என்ற சிறுகதை கிட்டத்தட்ட ஒருதலைக்காதலையும், உறவுகள், பொருளாதாரம், Orthodox & Unorthodox கலாசாரம் பற்றிய வெளிவீதி விளக்கங்களையும் அமரிக்கையாகக் கூறுகின்றது. முதற்சொன்ன வேட்டை முறையாக அன்றி இது ஒரு வித்தியாசமான வேட்டையைக் கூறுகிறது. அதன் இறுதி முடிப்பு அமரிக்கைக்கு(Silent) எதிர்வினையைக் கடுமையாகக் காட்டிவிட்டே நகர்கிறது. முன்கூறியதுபோல் இது ஒன்றும் தேய்வழக்கினாலான கதைமுறையன்று.

“என் சன்னல்களைத் திறந்தேன்
உன் முகம் கலைந்து பல்லாயிரம்
ஈசல்களாகப் பறக்கிறது” இப்படியான கவிதைகள் படித்தே யூமாவாசுகியை எனக்கு நான் அறிமுகஞ்செய்து கொண்டிருந்தேன். இதுநாள்வரை அவரின் கவிதைக்குள்ளிருந்த ஆழ்வுணர்வுகள் மெதுவாகக் கலைந்துவிட்டன இவரது கதைகளைப் படித்த மாத்திரத்தில். வேட்டை உண்மையிலேயே உணர்வுகளின் பூரிப்புடனும், கொந்தளிப்புடனும் விளையாடும் கதை. அவரது கவிதைகள் போலவே உலா வருகின்றது இக்கதை. ஆனால் விபரிப்புக்களுடன்.

கதைக் களத்தில் வருகின்ற கூர்க் என்பது குடகு மாவட்டத்தைக் குறிப்பதாக இருத்தல் வேண்டும். அந்தப்பிராந்தியம் சார்ந்தவர்களின் கதையாக இருக்கின்றது எனலாம். இதற்குச் சான்றாக காவேரியம்மன் என்ற சொல்லும் வருகிறது. காவேரியம்மன் கோயில் குடகுமலைப் பக்கம்தானுள்ளது.

உஸ்மானி, ராசையா, பினு, ஷகிலா, பொனாச்சா ஆகிய ஐந்து உறவினர்களுக்கு இடையில் நடக்கும் குறித்தநேர சம்பவங்கள் நேர்த்தியான முறையில் கதையாக்கப்பட்டுள்ளன. ஷகிலாவை உறவுத்திருமணம் செய்வதாக இருந்து அது நடந்திருக்காத வேளையில் உஸ்மானியின் மகன் பொனாச்சா துயரத்தால் வாடுவதும், போதையில் மூழ்குவதும் பற்றிய ஒரு விரிவும், உஸ்மானியின் தங்கை பினு மற்றும் கணவன் ராசையா பற்றிய உணர்ச்சிப் பரிமாறல்களும் என இருவேறு விடயங்கள் ஒரே கதைக்குள் அழகாகப் பிணைந்துள்ளன.

இவற்றை நகர்த்த யூமா வாசுகி தான் ஒரு கவிஞர் என்பதைக் காட்ட அங்கங்கே அழகான விவரிப்புக்களும், படிமங்களும் அமைத்திருந்தார். ஒருவகையில் கதையினை ரசிக்க இவையும் ஒரு செழிப்பளித்தன. உதாரணமாக;
1. ரத்தம் உறைந்து போகிற இரவுக் குளிரில், அகால நேரங்களில் உறங்குவதற்கு வீடு திரும்புகிறவன்.
2. சூரியன் மேகத்துள் சோம்பியிருந்தான். காலையின் மங்கலான வெளிச்சத்தோடு மலைச் சரிவுகளின் செழுமையை இன்னும் போர்த்தியிருந்தது பனி.
3. இரவு யாருக்கும் தெரியாமல் மலர்ந்த பூக்களை விடியலில் பார்க்கிற சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரிந்திருந்தது.
4. பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா. இதழ்கள் மிதந்தன.

கதையின் கலாசார விவரிப்புக்கள் பெரும் பிரமிப்பை உண்டாக்கிவிடுகின்றன. குறிப்பாக மது பற்றிய விடயங்கள். அவ்வளவு சாதாரணமாக மதுவினை குடும்பத்தினர் பிள்ளைகளுக்கு ஊற்றி வழங்குவதையும், அதனை ஒரு கண்டிப்புடன் பார்த்திராத கலாசார வெளிப்பாடுகளும் கதையினை கொஞ்சம் வியந்து பார்க்க வைத்தது. அடுத்து இந்து-இஸ்லாமியப் பெயர்கள் ஒரே குடும்பத்தில் இருக்கின்ற அதேவேளை மதம் பற்றிய உரையாடல்கள் எவ்விடத்திலும் ஒலிக்கவில்லை. மாறாக பழங்குடிகளின் கௌரவ மேலாண்மை மட்டுமே மேலோங்கி நிற்கிறது. அதற்குச் சான்றாகவே “கூர்க்” என்ற இனக்குழும பெயர் ஆரம்பத்திலேயே குறியீடாக வந்து முக்கியம் பெறுகிறது. கலாசாரம் என்பது எமக்காக நாமே உண்டாக்கியவை. மதம் கலாசாரத்துக்கு அப்பாற்பட்டது என்ற கோணத்தில் கதை நகர்ந்துள்ளதோ என்றே கருதத் தோன்றுகிறது.

ஒரு கதைக்கான தலைப்பு எப்போதும் வலிந்து வைக்க முடியாது என்பதற்கு இந்தக் கதையே சான்று. கதையின் முக்கால் பகுதி வரையும் வேட்டைக்குச் சம்பந்தமில்லாத பகுதிகள் வந்து இறுதியில் வேட்டை என்ற தலைப்பு கதைக்கு ஏன் என்பதை அதிர்வுடன் கூறிச் செல்கிறது.
“முகத்தில் சிரிப்பில்லை. போதையின் அலைக்கழிப்பில்லை. சர்வ கவனமாய் கூர்ந்த விழிகளில் வேட்டைக்களை. வாளை பக்கவாட்டில் ஓங்கினார் உஸ்மானி. சுவாசம் திணறியது.”

நிச்சயமாக இக்கதையினை வாசிப்பவர் கதைமுடிவில் கொஞ்சநேரம் அமைதியுற்று அகால நேரங்களில் கதை படித்த உணர்வை அடைவார் என்பது துலாம்பரமாகும்.

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண்சிலை / தமிழில் அரவக்கோன்

download (25)

1-திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண்சிலை

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண்சிலை படைக்கப்பட்ட காலம் தொடர்பான இருவேறு கருத்துக்களை முன்வைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை களுக்குள் போகும் முன் அந்த சிலை சார்ந்த சில விவரங்கள் படிபோர்க்கு விளக்கமும் தெளிவும் பெற உதவும் என்பதால், தொடக்கமாக அச்சிலை பாதுகாக்கப்படும் பாட்னா அருங்காட்சியகத்து விளியீட்டில் (2012) கூறப் பட்டிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

“வரலாற்றில் நமக்குக் கிட்டும் செய்திகள் தற்செயலாக ஒன்றுக்கு ஒன்று தொடர் புடையதாக அமைவதுண்டு. புகழ்பெற்ற சாமரம் சுமக்கும் பெண் சிலை உண்மையில் நமக்குக் கிட்டிய ஒரு அரிய சிலைதான். 1917 இல் (99ஆண்டு களுக்கு முன்னர்) குலாம் ரசூல் என்பவர் பாட்னா திதர்கஞ்ச் கங்கை நதிக் கரையில் தற்செயலாக மணலிலிருந்து எழும்பியிருந்த கல்மேடையைக் கண்டார். ஆர்வம் காரணமாக சுற்றியிருந்த மணலை அப்புறப்படுத்திய போது அந்த கல் மேடை உண்மையில் ஒரு சிலையின் அடிப்பகுதி என்பது தெரியவந்தது.

“அந்த நாளையப் பெண்சிற்பம் அமைக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்சிலையின் அமைப்பும் உள்ளது. ‘யட்சி’ அல்லது ‘யட்சினி’ என்று குறிப்பிடப்படும் இச்சிலையின் எழில் காண்போர் கிளர்ச்சியுறும் விதமாக உள்ளது. பெருத்த மார்பகங்களும், குறுகிச் சிறுத்த இடையும், அகன்ற இடைப் பகுதியும் தொடைகளும் கொண்ட சிலையின் கழுத்தில் சாமுத்திரிகா இலக்கணம் என்று பெண் உடல் அமைப்பை அந்நாட்களில் கூறிய விததிற்கேற்ப நீள வாட்டமாக மூன்று கோடுகளும், (griva trivali) வயிற்றில் மூன்று சதை மடிப்புகளும் (Katyavali) அமைந்துள்ளன. சிலை நிமிர்ந்து நிற்காமல் சிறிது முன்புறம் சாய்ந்தவிதமாக இருப்பது பணிவைக்காட்டுவதாக உள்ளது. உதட்டுச் சுழிப்பில் மெல்லிய புன்னகையின் சாயல் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படுகிறது. சிலையின் வலதுகால் சற்றே முன்னால் மடங்கியுள்லது. சாமரத்தை உறுதியாகப் பற்றியிருக்கும் கைவிரல்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன..

“ஆனால் மக்களிடையே செவிவழியே வழங்கிவரும் கதை ஒன்றும் உண்டு. அது சிறிது கற்பனை கூடியது, சுவையானதும்கூட. பாட்னா நகரத்துச் சலவைத் தொழிலாளர் கங்கைக் கரையில் மணலுக்கு மேலே எழும்பியிருந்த ஒரு கற்பரப்பில் துணி துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு தினம் அருகில் அமைந்திருந்த ‘யட்சி’ ஆலயத்திலிருந்து ஒரு நல்ல பாம்பு வெளியேறுவதைக் கண்ட சிலர் அதைப் பின்தொடர்ந்தனர். அந்த சர்ப்பம் கல்பரப்பிற்கருகில் இருந்த ஒரு பொந்தில் நுழைந்து மறைந்து போனது. கிராமத்து மக்கள் கல் மேடையைச் சுற்றியிருந்த மணலை அப்புறப்படுத்திய போது அது புதைந்துகிடக்கும் ஒரு சிலை என்பதைக் கண்டனர்.” இவ்வாறு பாட்னா அருங்காட்சியக வெளியீடு குறிப்பிடுகிறது

ஒற்றைக்கல்லில் (chunar sand stone) வடிக்கப்பட்ட இந்தச்சிலையை பார்வையாளர் சுற்றிவந்து அனைத்துக்கோணங்களிலும் பார்க்கமுடியும். பலகாலம் புதைந்து கிடந்ததால் அதன் இடக்கை உடைந்து மூளியாகிவிட்டது. நாசியின் முனையும் சிதைந்து விட்டது. இதன் உயரம் 5அடி 2அங்குலங்கள். அது 1அடி 71/2 அங்குலம் அளவுள்ள கற்பீடத்தின்மேல் நிற்கிறது.

இனி கட்டுரைகளைப் படியுங்கள்.

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண்சிலை சார்ந்த ஒரு பார்வை

(The Didarganj Chauri-Bearer A view Point)

By late Prof. Daniel Schlumberger in French and

Translated by Madam Schlumberger in English

(Daniel Théodore Schlumberger (19 December 1904 in Mulhouse, France – 21 October 1972 in Princeton, New Jersey, USA.[1]) was a French archaeologist and Professor of Near Eastern Archaeology at the University of Strasbourg and later Princeton University.

In the 1940s he conducted fieldwork at Ay Khanum in Afghanistan as Director of the Délégation Archéologique Française, discovering ruins and artifacts of the Hellenistic period.[2] His written works were included posthumously in The Cambridge History of Iran (1983).)

சாமரம் சுமக்கும் இந்தப் பெண்சிலையின் சிகை ஒப்பனை சார்ந்த இந்த ஒப்பீடு நாம் காணவிருக்கும் இரு தேசங்களின் கலாசாரத்துடன் தொடர் புடையது. முதலாவது, இத்தாலியின் ரோம் நகரத்துப் பெண்கள் சார்ந்தது. அது பற்றிய காலம் நம்மால் மிகத்தெளிவாக அறியப்பட்டுள்ளது. மற்றது இந்தியாவின் வடபகுதியில் பெண்களிடையே இருந்த சிகை ஒப்பனை முறை, இந்த இருவகை சிகை ஒப்பனை அமைப்பிலும் நமக்கு வெளிப்படையாகத் தெரிவது பெண்களின் முன் நெற்றியில் காணப்படும் கொத்தான சிகைப் பந்துச் சுருள்தான்.

இந்த ஒப்பீடு முன்பே வேறு ஒரு சமயம் ஒரு சிறுகுறிப்பாக மட்டுமே உரிய புகைப்படங்கள் இல்லாமல் வெளிவந்துள்ளது. இப்போது என்னிடம் அதற்கான (ஒப்பீட்டிற்கான) சிலைகளின் புகைப்படங்கள் இருப்பதால் இது பற்றின விரிவான ஒரு அணுகுமுறையைக் கைகொண்டு ரோமன் கலை ஆராய்ச்சி பெருந்தகையர்க்கு நான் செய்யும் ஒரு சிறிய சிறப்பாய் இதைச் செய்ய விழைகிறேன்.

பழங்கால இத்தாலியில் ரோமாபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இரண்டாம் முக்கூட்டாட்சிக் (Second Triumvirat) குழுவின்01 தொடக்க காலத்தில் பெண்கள் தமது முன்னெற்றியில் பந்துபோலக் கொத்தாக முடி அமைத்துக்கொள்ளும் ஒப்பனைமுறை எவ்வித முன்மாதிரியும் இல்லாத ஒன்றாக திடீரென்று தோன்றியது. லியான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாணயத்தில் (தோராயமாக அதன் காலம் கி.மு.43) இவ்விதப் பெண் உருவம் பதியப் பட்டுள்ளது இதை உறுதி செய்கிறது. கி.மு.40-35 ஆண்டு காலத்திய நாணயங்களில் ஆக்டேவியாவின்02 உருவத்தில் இதைக் காண்கிறோம். ஆனால், கி.மு.13-9 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்ட அரா பாஸிஸ் (Ara Pacis)03 என்னும் அமைதிக்கான பெண்கடவுள் கோவிலில் காணப் படும் பெண் சிலைகளில் இந்த முடி ஒப்பனை காணப்படுவதில்லை. அவ்வித முடி ஒப்பனைமுறை வழக்கம் மக்களிடமிருந்து அகன்று போயிருப்பதையே இது காட்டுகிறது. ஆனால், இது முற்றிலும் இல்லாமற் போய் விட்டதாகக் கருதுவதற் கில்லை. நம் காலத்திலும் இறுதி ஊர்வல ஓவியங்களில் இந்த ஒப்பனை முறை -தாம் பின்பற்றாத போதும்- முதிய பெண்டிர் தோற்றத்தில் காணப்படுகிறது என்று ஆய்வாளர் ஓவிட் (Ovid) குறிப்பிட்டுள்ளார்.

இங்கு நாம் இவ்வித முடிஒப்பனை, அதன் காலம், அது எப்போது மக்களிடமிருந்து அகன்றுபோனது என்பன போன்ற ஆராய்ச்சி விவரங்களுக்குள் போகவேண்டாம். நாணயங்களில் காணப்படும் பெண் முகம் ஃபல்வியா (Fulvia) ஆக்டாவியா (Octavia) அல்லது லிவியா (Livia) இவர்களுள் யாருடையது என்னும் குழப்பத்துக்குள்ளும் நுழையவேண்டாம். இங்கு நம்மை ஈர்க்கச்செய்யும் ஒரு செய்தி இதுதான்: அதாவது கி.மு.43 இல் (தோராயமாக) ரோமன் பெண்டிரிடம் தங்கள் முன்நெற்றியில் கொத்தான மயிர்க்கற்றையைப் புரளவிடும் ஒப்பனைமுறை நடைமுறையில் இருந்தது என்பதே.

இந்த முடி ஒப்பனை மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. நெற்றியின் உச்சியில் காணப்படும் முடிச்சுருள், கழுத்தின் பின்புறம் காணப்படும் முடிப்பந்து, இவை இரண்டையும் இணைக்கும் தலையில் பதிந்த பின்னல். இந்த ஒப்பனை சிலைக்குச் சிலை வேறுபடுகிறது. இவை நமக்கு இதுபற்றி முழுமையான ஒரு செய்தியைத் தரவில்லை எனினும், இம்மூன்றும் நாம் காணும் அந்தக் காலம் சார்ந்த பெண் சிலைகளில் தவறாமல் இடம்பெறுகின்றன. அதுவே நமது ஆவலைத் தூண்டும் செய்தியும்கூட.

இந்தியாவில் இதே காலத்தில் படைக்கப்பட்ட பெண் சிற்பங்களில் மதுரா மற்றும் பெக்ரம் (Begram)04 தந்த சிற்பங்களிலும் இவ்வித முன்நெற்றி முடிக்கற்றை காணப்படுவதை ஆய்வாளர் Dr.Philippe Stern கண்டுள்ளார். ஆனால் மதுரா மற்றும் பெக்ரம் பெண் சிற்பங்களில் முன்நெற்றி முடிச்சுருள் காண்போரை ஈர்க்கும் அமைப்பாக இருந்தாலும், சிலையின் பக்கவாட்டு, பின்புறத் தோற்றம் போன்றவை காண்போர் பார்வையிலிருந்து அகன்று விடுகின்றன. அன்றியும், தலையில் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரம் கூடிய தலைப்பாகை அவற்றை ஏறத்தாழ மறைத்தே விடுகின்றன.

ஆனாலும்கூட, திதர்கஞ்ச் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாமரம் தாங்கிய பெண் சிலையிலும்05 இவ்வித முன்நெற்றி முடிக்கொத்து மதுரா, பெக்ரம் தந்தச் சிலைகளில் காணப்படும் விதமாகவே இருப்பது இன்னொரு எடுத்துக்காட்டு. இவற்றின் நெருங்கிய ஒற்றுமையையும் அகழ்வாராய்ச்சியாளர் Dr.Stern தான் நமக்குக் காட்டித் தருகிறார். அந்த ஒற்றுமை அத்துடன் முடிந்து விடுவதில்லை. ரோமன் சிலைகளில் நாம் காணும் அதேபோன்ற தலைமுடி ஒப்பனையை (முன்னெற்றி மயிர்க்கொத்து, பின்தலை முடிப்பந்து இவற்றை இணைக்கும் பின்னல்) இந்தியச் சிலைகளிலும் காணமுடிகிறது. இந்தியச் சிற்பங்களில் தலையில் மணிகள் பொருத்திய அணிகலன் அந்த மயிற்கற்றைக்கு மேலேயே பொருத்தப்பட்டுள்ளது. அது தலையின் பின்னலில் ஒரு கொண்டை ஊசி கொண்டோ அல்லது வேறு விதமாகவோ இருக்கிப் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுவாக இந்திய சிற்பங்களில் காணப்படும் நுண்ணிய வேலைப் பாடுகளும் நெருக்கமான வளைவுகளும் கொண்ட காதணி, இடைமேகலை, மாலைகள் போன்ற அணி கலன்கள் அதிக அளவில் அமைந்துள்ளதை மனதில் கொண்டு நாம் இந்த பெக்ரம் சிற்பங்களிலிருந்து அகலுவோம்.

download (26)
ஒன்றுபோலவே தோற்றமளிக்கும் இவ்வகை ரோமன்/இந்திய முடி ஒப்பனை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகத் தோன்றியிருக்க முடியும் என்று நம்ப இடமில்லை என்பது வெளிப்படை. அல்லாமலும், அன்றைய (கி.மு.43) ரோமப்பெண்டிரிடம் இது இந்திய ஒப்பனை முறையிலிருந்து பெறப்பட்டிருக்கும் என்பதையும் நம்ப வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ரோமானிய மன்னன் அகஸ்தஸ் (Augustus) இந்திய கலாசார தூதுவரை சந்தித்தான் என்பதும், ரோமானிய அரசு இந்தியாவிலிருந்து மிளகு, தந்தம், உயர்ந்த ரத்தினக்கற்கள், துணிவகைகள், இந்தியாவின் அரியவகை விலங்குகள் போன்ற வற்றைப் பெருமளவில் இறக்குமதி செய்தது என்பதும் வரலாற்று பதிவுகள்தான். ஆயின், ரோமானியக் கலைகளில் இந்தியக் கலை உத்திகளோ அமைப்பு முறைகளோ தாக்கம் உண்டாக்கியதற்கான சான்றுகள் ஏதும் காணப்பட வில்லை. உடையமைப்பும், முடிஒப்பனையும் மட்டும் கடன் வாங்கப் பட்டிருக்கும் என்பது பொருத்தமற்ற கருத்து. கிரேக்க நாகரிகம் அல்லாது மற்ற நாட்டின் நாகரிகத் தாக்கம் அன்றைய ரோமானியக் குடியரசையோ, பின்னர் நடை முறைக்கு வந்த மன்னர் ஆட்சித் தொடக்க அரசையோ பாதித்திருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது. மன்னன் அகஸ்தஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியக் கலாசாரத் தாக்கம் என்பது ரோமில் மிகக்குறைவாகவே இருந்துள்ளது. மாறாக, ரோமானியக் கலாசாரம் இந்தியாவில் பெரும் தாக்கம் கொண்டதாக இருந்துள்ளது. இந்தக்காலத்தில்தான் இந்தியாவுடனான ரோமானிய வர்த்தகம் மத்தியத்தரைக் கடலில் தோன்றும் பருவகாலக் காற்று பற்றின கண்டு பிடிப்பால் ஒரு பெரும் விரிவாக்கம் கண்டது.

கிரேக்க மாலுமிகளின் சிறப்பான கடற்பயணம் காரணமாக ரோமானிய வர்த்தகர்கள் மத்தியத்தரைக்கடல் வழியே பயணித்து இந்தியா வரமுடிந்தது. இந்தியாவின் தென்பகுதியில் கூலிக்காக வேலை செய்யவோ கட்டுமானப் பணியாளராகவோ யவனமக்கள் பெரிதும் விரும்பி ஈடுபடுத்தப்பட்டனர். அதே வேளையில் ரோமானிய நாட்டு நாணயங்கள், கலைப்படைப்புகள் இந்தியத் துணைக் கண்டத்தில் பரவலாக இருந்தன. அவற்றால் ஈர்க்கப்பட்ட கனிஷ்கர் போன்ற அரசர்கள் அவற்றிலிருந்து பெரும் அகத்தூண்டுதல் பெற்று அவ்வகை நாணயங்களைப் படியெடுத்து தமது நாணயங்களை உருவாக்கினர். அண்மையில் அகழ்வாராய்ச்சி செய்பவர்களால் அந்த நாணயங்கள் மீண்டும் பார்வைக்கு வந்துள்ளன. மத்தியத்தரைக்கடல் கலை உத்திகள் இந்தியாவில் உள்வாங்கப் பட்டன. இந்தியப் பெண்டிர் இந்த முடிஒப்பனை முறையை ஏற்றுக் கொண்டனர் என்பது இதற்கு இன்னமும் மெருகு கூட்டுகிறது..

இவ்வகை முடிஒப்பனையுடன் காணப்படும் இந்தியப் பெண் சிற்பங்கள் எந்தவகையிலும் கி.மு.43 க்கு முந்தைய காலத்ததாக இருக்க வாய்ப்பில்லை. இவ்வகை முடிஒப்பனைமுறை ரோமில் பரவி வளர்வதற்கான காலம், பின்னர் அது இந்தியப் பெண்டிரிடையே ஏற்கப்படுவதற்கான காலம் என்று கணக்கிடில் இந்தச்சிலைகள் அகஸ்தஸ் ரோமானிய நாட்டை ஆட்சி செய்ததற்கு முன்னதாக இருந்திருக்க முடியாது என்னும் முடிவுக்கு வருவோம்.

இவ்வாறு நாம் இந்தக் கருத்தில் சிறிது தெளிவு பெற்றுள்ளோம் என்று நம்பலாம். திதர்கஞ்ச் சிலை இதற்கு முந்திய காலத்தில் படைக்கப்பட்டிருக்க முடியாது என்பதை Dr.Stern நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். மதுரா, பெக்ரம் சிலைகள் பற்றின தெளிவும் நமக்கு முன்னரே உண்டு. மேலே கண்ட இந்தச் சிந்தனை அணுகுமுறையை ஒருவர் ஏற்பரேல் அதைத் இந்தியத் துணைக் கண்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான தொடக்கமாகக் கொள்ளலாம். ஆனால், தெளிவான காலவரிசைக் குறிப்புகளைப் பின்பற்றாத இந்திய தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்பாட்டை முன்வைத்துப் பார்த்தால் நாம் இதுவரை பேசிய காலம் சார்ந்த முடிவை தொடக்கமாகக் கொண்டு, மதுரா, பெக்ரம் படைப்புகளைப் பற்றின எதிர்கால ஆராய்ச்சிகளை Dr.Stern அவர்களின் முடிவுகளின் துணைகொண்டு மெற்கொள்ள உதவும் என்று துணியலாம்.

திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண்சிலை -இன்னொரு பார்வை

Karl Khandalavala (Hon.Chief Editor-Lalith Kala)

இந்த ‘லலித் கலா’ இதழில் (இதழ்-23) காலம்சென்ற எனது நண்பரும், கலை ஆராய்ச்சி உலகில் நன்கு அறியப்பட்டவருமான Dr.Schlumberger அவர்கள் எழுதியுள்ள திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண் சிலை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளோம். முன்னரே பிரெஞ்ச் மொழியில் வெளிவந்த அதை Madam Schlumberger அவர்கள் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். Dr.Fussman அதை நமக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இந்தியக் கலை வரலாற்று வல்லுனர்களுக்கு இந்தக் கட்டுரை பற்றின அறிதல் இல்லை. இக் கட்டுரையின் கருப்பொருளாயிருக்கும் குறிப்பிட்ட பெண் சிலையின் காலம் பற்றின மாறுபட்ட கருத்தின் காரணமாக அதன் முக்கியத்துவம் கருதி இந்தியக் கலை வரலாற்று வல்லுனர்களும் படித்து உணரும் பொருட்டு இங்கு அது வெளியிடப்படுவதை நாம் பொருத்தமாகக் கருதினோம். கட்டுரையில் காணப்படும் கருத்துக்கு நாம் முற்றிலும் மாறுபட்டாலும், அது மிகவும் கவனத்துடன் படிக்கப்படவேண்டிய கட்டுரை என்பதில் ஐயமில்லை.

கட்டுரையில் அவர் பொருத்தும் சிலை சார்ந்த காலம் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது. பொதுவாக, திதர்கஞ்ச் பெண்சிலை படைக்கப்பட்ட காலம் மௌரிய ஆட்சியின் கி.மு.3 ஆம் நூற்றாண்டு என்று ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. கட்டுரையில் இதன் காலம் கி.பி. முதலாம் ஆண்டு தொடக்கம் என்னும் கருத்தை வலியுறுத்தும் நோக்கத்தின் அடித்தளமாக அமைவது சிலையில் காணப்படும் முன்னெற்றி முடிக் கொத்துதான். சிலையில் காணப்படும் மற்ற தலைமுடி சார்ந்த ஒப்பனைகள் ஆய்வுக்குள் வரவில்லை. அந்தச் ‘சுருள்’ சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டபோதும் ஒரு அணிகலன் அல்ல;. முன்னெற்றி அணிகலன் சார்ந்த தெளிவான அமராவதிப் பகுதிப் பெண் சிற்பத்தைப் புகைப் படத்தில் காணலாம். (Pl.3-Fig-3) அதன் காலம் கி.மு.2 ஆம் நூற்றாண்டு என்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. திதர்கஞ்ச் சிற்பத்தில் காணப்படும் முன்னெற்றி முடிச்சுருள் ஒப்பனை குஷான் வம்ச ஆட்சிக் காலத்தில் படைக்கப்பட்ட பெண்சிலைகளில் அதிகப் புடைப்பு இல்லாத போதும் கண்களுக்குத் தப்பாது பரவலாகக் காணப்படுகிறது. எனவே, தித்ர்கஞ்ச் சிலையில் இந்த முடிஒப்பனை காணப் படுவதால் சில கலை ஆராய்ச்சியாளர் அதை குஷான் சிலைப்படைப்புகளின் காலத்துக்கு அருகிலேயே -உண்மையில் அது குஷான் காலத்துக்கு மிக முன்னது என்றபோதிலும்- பொருத்துகின்றனர். இந்த முடிவால் அதன் காலத்தை கி.பி. முதலாவது நூற்றாண்டுக்கு முந்தையதாக இராது என்றே கருதுகிறார்கள்.

நாம் புரிந்துகொண்டபடி, கட்டுரையாளரின் வாதத்தின் மையம் அவ்வித முன்னெற்றி முடிச்சுருள் ஒப்பனை இத்தாலியில் ரோமானிய இரண்டாம் முக்கூட்டாட்சி காலத்தில்தான் அந்நாட்டுப் பெண்களிடத்தில் புழக்கத்தில் இருந்தது என்பதால் அந்த ஒப்பனைமுறை இத்தாலியிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்திருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து ரோமுக்குப் பயணித்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான். கட்டுரையாளர் அக்கருத்துக்குச் துணை செய்யும் விதமாகச் சில சிற்பங்களின் புகைப்படங்களைத் தருகிறார். அவை மேலோட்டமாக நோக்குபோது ஏற்கும் விதத்தில்தான் உள்ளன. ஆனால், அந்த ஒப்பனை பாதிப்பு இந்தியாவிலிருந்து இத்தாலிக்குப் பயணத்திருக்க வாய்ப் பில்லை என்னும் கருத்து நமக்கு ஏற்புடையதில்லை. இதை வலியுறுத்த மூன்று காரணிகள் நமக்கு முன் உள்ளன. அவையாவன:

01- இந்தியாவில் மௌரியர் ஆட்சிக்காலத்தில் (கி.மு.3 ஆம் நூற்றாண்டு) அயல்நாட்டுக் கலைஞர்கள் (குறிப்பாக யவனர்) தமது குடும்பத்துடன் இங்கு வந்ததும் தொடர்ந்து இங்கேயே வசித்ததும் நாம் அறிவோம். அசோகர் காலத்து தம்ம சக்கரமும் காளை சிலையும் பெர்ஷிய-கிரேக்க அல்லது ஆசிய -கிரேக்க கலைஞர்களின் படைப்பு என்பதில் எவ்விதச் சர்ச்சையும் இல்லை. இந்த முன்னெற்றி முடிச்சுருள் சிகை ஒப்பனை வழக்கம் யவனப் பெண்டிரிடமிருந்து பெறப்பட்டு இந்தியப் பெண்டிரின் ஒப்பனை புழக்கத்தில் இணைந்திருக்கலாம். இது யவனர்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து வசித்ததால் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. மௌரிய ஆட்சிக்காலம் என்பது ரோமானிய மன்னன் அகஸ்தஸ் காலத்துக்கு மிகவும் முந்தையது (300 ஆண்டுகள்)

02- சாணக்கியர் படைத்த ‘அர்த்த சாஸ்திர’ நூலில் அயல்நாட்டு நாடகக் கலைஞர்கள் குழுக்களாக மௌரிய ஆட்சிக்காலத்தில் இந்தியா வந்த செய்தி பதிவாகியுள்ளதை நாம் அறிவோம். இப்போது பாட்னா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும், அளவில் சிறிய சுடுமண் சிற்பங்களில் அவ்விதம் வந்த பெண் கலைஞர்களின் உடை, ஒப்பனை சார்ந்த வடிவமைப்புகள் இதை உறுதி செய்வதாக உள்ளன. அயல் நாடுகளிலிருந்து இங்குவந்து நிலைகொண்ட மண்பாண்டக் கலைஞர்களால் படைக்கப்பட்டவற்றில் வெகுசிலவே இப்போது நம்மிடம் உள்ளன. அவற்றில் இந்த முடிஒப்பனை காணப்படவில்லை. இந்தவகை முடிஒப்பனை வழக்கம் மௌரிய ஆட்சிக்காலத்தில் அயல் நாடுகளிலிருந்து இந்தியா வந்து நிலைகொண்டு வாழத்தொடங்கிய நாடகப்பெண் கலைஞர்களிட மிருந்தே நம் நாட்டுப் பெண்டிரிடம் ஏற்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு நிச்சயம் இருந்திருக்கும். அவ்வித நாடகக் குழுக்கள் ரோமானிய மன்னன் அகஸ்தஸ் ஆட்சிக் காலத்துக்கு மிக முன்னது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

03- இவ்வித முடி ஒப்பனை முறை வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டதாயினும், நம்நாட்டுப் பழங்குடி இனத்தவர் பயன்படுத்தியதாக இருப்பினும் அது ரோமானிய மன்னன் அகஸ்தஸ் காலத்தில் இத்தாலியிலிருந்து இந்தியா வர வாய்ப்பில்லை. அதற்கு முன்னரே அந்த ஒப்பனைமுறை இங்கு புழக்கத்தில் இருந்துள்ளது. ஜெயபெட்டா கற்பலகையில் காணப்படும் (சென்னை அருங் காட்சியகம்) “சக்ரவர்த்தின்” சார்ந்த புடைப்புச் சிற்பக்குழுவில் காணப்படும் சாமரம் சுமக்கும் பெண் உருவத்தின் முன்நெற்றியிலும் இவ்வகை முடிக்கொத்து அமைந்துள்ளது. அது நெற்றியின் உச்சியில் பொருத்தப்படும் அணிகலன் அல்ல என்பது தெளிவு. திதர்கஞ்ச் பெண்சிலையில் உள்ளதுபோலத் தெளிவாக இல்லை யெனினும், காண்பவர் கண்களுக்கு அது தப்புவதில்லை. இது நம்மை பழங்குடிப் பெண்டிரிடையே நிலவிய ஒப்பனை வகையாக இருந்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. கி.மு.43 இல் ரோமானிய ஆட்சிக்காலத்தில்தான் இது இந்தியாவிற்கு வந்தது என்னும் கட்டுரையாளரின் கருத்தை இதனால்தான் நம்மால் ஏற்க முடிய வில்லை. ரோமானிய ஆட்சிக்காலத்தில் இத்தாலிக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்தது என்னும்போது இந்த ஒப்பனைமுறை இந்தியாவிலிருந்து ஏன் இத்தாலிக்குச் சென்றிருக்கக்கூடாது?

மேலே நாம் பேசியவற்றிலிருந்து அகன்று திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண்சிலையின் அமைப்புவகை, அதற்குப் பயன்படுத்திய கல், படைப்பு உத்தி, மௌரிய ஆட்சிக்காலத்தில் சிறப்பாக இருந்த சிலைகளுக்கு வழவழப்பு ஏற்றும் செயற் திறன், சிலையின் அளவு போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது மௌரிய மன்னர் அசோகர் காலத்துப் படைப்பாகவே தெரியவரும். அதை வேறு காலத்துடன் இணைக்க முடியாது. ராம்பூர்வா சிங்கம், காளை சிற்பங்களுக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமையை சில கலை ஆராய்ச்சியாளர் காணத் தவறியிருக்கின்றனர் என்றபோதிலும் சிற்பம் சார்ந்த அழகியல் நுணுக்கம் அறிந்தவர் இவற்றின் ஒற்றுமையைக் காட்டிலும் அவற்றில் உள்ள கலைத் திறத்தின் உச்சத்தைத் தவறவிட மாட்டார்கள். குறிப்பாக, இவை இரண்டும் அளவில் பெரியவை, நாம் இவற்றுடன் ஒப்பிடக்கூடிய குஷான் ஆட்சிக் காலத்திய சிற்பத்தைக் கண்டதில்லை.

திதர்கஞ்ச் பெண் சிற்பத்தின் அமைப்புவகை, எழில்சார்ந்த உயர்வு, அதன் மேல்பரப்பு, கல், மற்றும் பளபளப்பு போன்றவற்றை நாம் ராம்பூர்வா சிலைகளான சிங்கம், எருது இவற்றிலும் தெளிவாகக் காண்கிறோம். இரண்டுமே ஒப்பீட்டளவில் ஒரே காலம் சார்ந்தவை என்பதும் விளங்குகிறது. திதர்கஞ்ச் பெண் சிற்பத்தில் நாம் காணும் 1 அதன் அளவு, 2 தெரிவுசெய்யப்பட்ட கல், 3 கண்ணாடிபோன்ற பரப்பு, 4 வடிவமைப்பு நுட்பம், 5 தெளிவான சிலை வடிவமைப்பு, 6 அதில் தென்படும் ஒயில், 7 படைப்பு உத்தி ஆகிய அனைத்தையும் சிங்கம் எருது சிற்பங்களிலும் காண்கிறோம்.

இதை கி.பி. முதல் நூற்றாண்டு சார்ந்ததாக முடிவு செய்வது எவ்வாறு? குஷான் காலத்தய பெண் சிற்பங்களின் நீட்சி என்பதும் எவ்வாறு? இந்த மாதிரியான சிலை இது ஒன்று மட்டுமே. அதன் அளவு, கல், பளபளப்பு, செயற்திறன், கருப்பொருள், போன்றவைகொண்ட வேறு சிலை ஒன்றுகூட நம்மிடையே இல்லை. கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ள அளவில் பெரிய பெஸ்நகர் (Besnagar) ‘யட்சி’ சிலைகளிலிருந்து இது முற்றிலும் வேறான படைப்பு. அன்றியும் மதுராவில் உள்ள வரிசையாக அமைக்கப்பட்டுள்ள பெண் சிலைகளிலிருந்தும் இது வேறானது. நாம் சொல்லும் கருத்துடன் ஒத்துப்போனால் திதர்கஞ்ச் பெண்சிலை ஐயமின்றி மன்னர் அசோகர் ஆட்சிக்காலத்தில் படைக்கப் பட்டது என்று உணரலாம். அசோகரை ‘மாமன்னர்’ (சக்ரவர்த்தின்) என்று பறை சாற்றுபவை அவை. அசோகரை ‘மாமன்னர்’ என்று கூறும் சிலைகளை அதிக எண்ணிக்கையில் படைக்கவேண்டியிருக்கவில்லை என்பது நம் கணிப்பு. இங்கு பேசப்படும் சிலையே அவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்காலத்து மற்ற சிற்பப் படைப்புகளில் காணப்படும் பெர்ஷிய-கிரேக்க, அல்லது ஆசிய-கிரேக்க சிலைவடிக்கும் முறை கையாளப் பட்டிருப்பதைப் போல இந்த சிற்பத்திலும் கையாளப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எந்த ஒரு இந்தியச் சிற்பியினாலும் படைக்கப்பட்டிருக்க இயலாது என்பதும் புலனாகிறது. கிரேக்க நாட்டிலிருந்து இங்கு வந்து நிலைகொண்டு வாழ்ந்த யவன சிற்பக் கலைஞரின் படைப்பு என்பதும் தெளிவாகத் தெரிகிறது. சிலைகளில் காணப்படும் இந்தியப்படைப்புத் தன்மையுடன் மேலைநாட்டு வழியும் இணக்கமாகக் கலந்துள்லது. எனவே இந்தச்சிலை மௌரியர் காலத்து படைப்பு என்பது உறுதியாகிறது.

இங்கு நாம் காணும் ரோமானிய நாட்டுப் பெண் சிலைகளில் ஒன்றில்கூட இந்தியசிற்ப படைப்பின் பாதிப்பு தெரியவில்லை. சாமரம் சுமக்கும் பெண் சிலையை படைத்த சிற்பி அகஸ்தஸ் காலத்து ரோமானிய சிற்பியாக இருந்திருப்பின் இந்த ஒரு முடி ஒப்பனை மட்டுமேயா எடுத்தாண்டிருப்பார்? தன் நாட்டுப் படைப்பியல் அனுபவத்தை இயல்பாகவே இதில் ஏற்றியிருக்க மாட்டாரா? கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல உண்மையில் இச்சிலை ரோமானிய மன்னன் அகஸ்தஸ் ஆட்சிகால படைப்பாக இருக்கமுடியுமா?

திதர்கஞ்ச் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் மௌரிய ஆட்சிக்குட்பட்ட பகுதி. அவ்வளவு பெரிய சிலை இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது. சாமரம் சுமக்கும் இந்தப்பெண்சிலை அசோகர் “மாமன்னர்” என்னும் நிலைப்பாட்டிற்கு ஏற்ப படைக்கப்பட்ட ‘ஸ்திரீ ரத்னா’ என்று எழுத்தாளர் முனைவர் தேவன்கணா தேசாய் (Dr.Devangana Desai) கூறியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த சிற்பம் சிலரால் குறிப்பிடப்படுவதுபோல ‘யட்சி’யுமல்ல அசோகர் “சக்ரவர்த்தின்” என்னும் நிலைப்பாட்டிற்கு உள்ளடங்கியது என்னும் முடிவுக்கு வருகிறோம்.

விளக்கக்குறிப்புகள்

ஆக்டாவியா (Octavia): இந்தப் லத்தீன் பெயர் பொதுவாக ரோமாபுரி அரசுப் பெண்களிடையே கி.மு.முதலாம் நூற்றாண்டு காலத்தில் காணப்பட்ட பெயர். ‘எட்டாவது’ என்பது இதன் பொருள். மன்னன் க்ளாடியஸ் (Claudius) மகளுக்கும் இப்பெயர்தான். அவள் அரசியல் பாதுகாப்புக்காக மார்க் அந்தோனி (Mark Antony) க்கு மணம் செய்துவைக்கப்பட்டாள்.

அரா பாசிஸ் (Ara Pasis Augustae): லத்தீன் மொழி- பாக்ஸ் (Pax) என்னும் ரோமானிய அமைதிப் பெண் தெய்வத்திற்காக (goddess of Peace) எழுப்பப் பட்ட ஆலயம்

பெக்ரம் தந்தச் சிலைகள் (Begram ivories):

இந்நாளில் ஆப்கனிஸ்தானில் உள்ள பெக்ரம் என்று அழைக்கப்படும் நகரம் கி.பி. முதலாம் நூற்றாண்டு காலத்தில் கபிசா என்று அழைக்கப்பட்டது. குஷான் மன்னர் கனிஷ்கரின் கோடைகாலத் தலைநகரமாக அது விளங்கியது. இது காபுல் நகரித்திலிருந்து 80 மைல் தொலைவில் உள்ளது. அந்நாட்களில் இத்தாலி, சீனா இந்தியா போன்ற நாடுகளின் வர்த்தகப் போக்குவரத்தின் மைய இணைப்புப் புள்ளியாக (silk road) திகழ்ந்தது.

1936-40 களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிரஞ்சு அரசும் ஆப்கானிய அரசும் இணைந்து அங்கு ஒரு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டன. அப்போது அங்கு ஒரு திடமானதும் உருக்குலையாததாகவும் இருந்த கட்டடம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது அதில் இரு அறைகள் பூட்டிய நிலையில் இருந்தன. அதைத் திறந்தபோது அவற்றுள் ஏராளமான பன்னாட்டுக் கலைப்பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றுள் தாமிரச்சிலைகள், கண்ணாடிக் கலைப் பொருட்கள், அரியவகைப் பன்னாட்டு நாணயங்கள், இந்திய தந்தச் சிற்பங்கள், இருக்கை, மேசை போன்ற பயன்பாட்டு மரச்சாமான்கள், சீனப் பீங்கான் கிண்ணங்கள் போன்றவை அடங்கும்.

அது யாருக்குச்சொந்தம் என்பதோ எதனால் கைவிடப்பட்டது என்பதோ ஏன் பூட்டப்பட்டது என்பதோ இதுநாள்வரை ஒரு புதிராகவே உள்ளது. அதன் உரிமையாளர் விட்டுச்சென்றபின் இந்த அகழ்வாராய்ச்சியில்தான் (ஏறத்தாழ 2000 ஆண்டுகள்) மீண்டும் அவை கண்டெடுக்கப்படுள்ளன.

இதில் கிடைக்கப்பெற்ற இந்திய தந்தச் சிற்பங்கள் எண்ணிக்கையில் ஆயிரத்தையும் தாண்டும். கி.பி. முதலாம் நூற்றாண்டு காலத்தில் படைக்கப்பட்ட அவை அணிகலன் வைக்கும் மரப்பேழைகள், உடைகளை வைக்கும் மரப் பெட்டிகள், இருக்கைகள், மேசைகள் போன்ற இல்லப் பயன்பாட்டுப் பொருட்களில் பதிக்கப்பட்டு உள்ளன.

முக்கூட்டு ஆட்சி (Triumvirate):

01-முதலாவது முக்கூட்டு ஆட்சி

முக்கூட்டு ஆட்சி என்று அழைக்கப்பட்ட ரோமானிய ஆட்சிமுறை அதன் குடியாட்சியை அகற்றி உருவானது. முதலாவது முக்கூட்டு ஆட்சியில் ஜூலியஸ் சீசர் (Julius Caesar), பாம்ப்பே (Pompey the Great), மார்க்கஸ் (Marcus Licinius Crassus) மூவரும் அறிவிக்கப்படாத முக்கூட்டு அரசியல் கட்சித் தலைவர்களாக செயற் பட்டனர். Amitica என்று அழைக்கப்பட்டது இது.

02-இரண்டாவது முக்கூட்டு ஆட்சி

27, நவம்பர் கி.மு.43 ஆம் ஆண்டில் ரோமானிய நாட்டில் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்ட ஆட்சிக்கூட்டணி இது. இதில் மார்க் ஆந்தொனி (Mark Antony), மார்க்கஸ் (Marcus Aemilius Lepidus), ஆக்டாவியன் (Octavian, Caesar Augustus) மூவரும் தலைமையேற்று ஆட்சி செய்தனர். பத்து ஆண்டு காலம் இயங்கிய இந்தக்கூட்டாட்சி உள்நாட்டுப்போரால் முடிவுக்கு வந்தது. சீசரின் வளர்ப்பு மகன் ஆக்டாவியன் அகஸ்தஸ் என்னும் பெயருடன் முடிமன்னனாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றான்.

_______________________________________________________

லலித் கலா அகாதமி வெளியீடான “லலித் கலா” என்னும் ஆங்கில இதழில் (Lalit Kala -A Journel of Oriental Art- Chiefly Indian) 1988 ஆம் ஆண்டு (இதழ்-23) வெளி வந்தவை தமிழில் அரவக்கோன்

வினையனின் எறவானம் கவிதை நூல் குறித்து இரா. மதிபாலா

download (24)

சொல்லவொண்ணுமில்லைனு சொல்லத் துவங்கி எளிய வாழ்க்கையின் உட் பக்கங்களை தன் யதார்த்த மொழி நடையில் உடலை தொட்டு பேசும் உணர்வோடு பேசுகிற வினையனின் #எறவானம் கவிதைகள் தொகுப்பின் கடைசி பக்கத்தில் இறங்கி உள்ள கவிதை காமத்தின் முட்டு தெருவிற்கு இட்டு செல்கிறது.

“உரசலுக்குப் பின்பான
வழு வழுப்பில்
தீ”.

என்ற வரிகள் மறைவிட போரட்டங்களின் முடிவாக மட்டுமல்ல சொல்ல இயலா வலிகளின் முடிவிற்கும் இந்த வரிகள் பொருந்தும்.

முகவுரையில் தன்னை தானாவாகவே காட்டும் துணிச்சல் எத்தனை கவிஞர்களுக்கு உண்டு? வினய் க்கு இருக்கிறது. இது தேவையா என தோன்றினாலும்
நான் இதுதான் என சொல்ல வந்திருப்பதை அவரின் இயல்பாக தெரிகிறது.

சரி, இனி என் பார்வையில் இத்தொகுப்பு குறித்து….

என் கவிதை நானே எழுதுவதில்லை எனக்குள் இருக்கும் வேறொன்றால்தான் என உள்ள நிலை முகம் காட்டுகிறார் “என்னை விழுங்கி காலத்தை கக்குகிறேன்.”

இம் .காலத்தால் சொிமானம் ஆகாதவை சில கவிதைகளாக எஞ்சுகின்றன. ( பக் 7)

அப்பாக்கள் மகன்களிடமும்
மகன்கள் அப்பாக்களிடமும் இரகசியமாய்தான் பாசம் வைப்பாங்க போல.அது எப்போதாவது வெளிப்படும்.

அப்படியே தன் தகப்பனை மனசுக்குள் சுமந்து திரியும் கவிஞனின் பகல் உறக்கத்தில்
“மொவ பேரு கேட்ட அப்பன்” காணக் கிடைக்கிறான்.நாமும் ஆபூர்வ தருணங்களில் குழந்தையாகவே கலங்க செய்கிறோம் .

போலி மனசில்லாத கிராம மக்களிடம் ஆத்திரம் எழுகிறபோது குலச்சாமியே மாட்டும் போது… பெய்யாத “கண்டாரோழிபய வானமும்”மாட்டாதா என்ன? தப்பாத இயல்பை வேளாண் ஆற்றாமை வறண்ட வெப்பமாய்….வீசுகிறது “தண்ணியில” கவிதையில் ( பக் 9)

எள்ளலாய் , யதார்த்தமாய் அறிமுகப்படுத்தப்பட்ட மழை
அருமை. கூரை வீட்டில் பல கதா பாத்திரங்களோடு பேசுகிறது மழை சொட்டு சொட்டாய்……

மாறாத மரண வாசனை இழவு வீட்டின் இறுதி முகத்தை காண்பிக்கிறது. ‘சாய்த்து போட்ட பெஞ்சை நிமிர்த்து கழுவினாலும்’ மரணத்திற்கான குறியீடாக பார்க்கிறேன்.
( பக் 13 )

அரசியல் போல இருக்கு இந்த கவித . “மேகக்கூரைய அடச்சாதான் நிம்மதி……
அதுக்கு ரெண்டு சுருட்டும் பட்டசாராயமுந் தர்றேனு சொல்லற கத…

இம் ,சாமிக்கும் வீரியத்தை ஏத்தவும், குறைக்கவும் ரூட் போதைதானா.? மக்களின் ஆற்றாமை வரிகளில் சுழல்கிறது.

வண்ணாத்தி மகள் ஒரு கவிதையிலும் , மகன் ஒரு கவிதையிலும் வந்திருப்பது
வினய் யின் மன விசாலத்தையும் தடையின்றி எங்கும் நுழைகிற
எண்ண பாங்கினையும் காட்டுகிறது.

நூலிழையில் ஒட்டிய வாசம் உள் நுழைந்து கிளர்த்தும் இயல்பு. சரி.,இங்கு துர்நாற்றமும் ,ஊளைச் சளியும் அழுக்கு படலமும் சூழ் வாழ்வியலும் கவிதை தருகிறது.

இறுதியாய் இரு வரிகளில் சொல்லும்

“ பிட்டந் தட்டும் பெரியாண்டைக்கு எப்போதாவது இப்படி எழுச்சி பெறும்” என பெரிசுகளின் காமத்தை பளிச்சென தெறிக்கிற நுண்ணியம் இரகசிய அழகு.

ஊரில் ஒதுங்கிய சேரி பகுதி மக்களின் வாழ்வியலை இயல்பாய் வட்டார வழக்கில் சொல்லும் பாங்கில் கழுதைக் குட்டி தூக்கி கொஞ்சிய பாரதியாய் தெரிகிறான் வினையன்.

ஈச்சம் பூண்டி கிழவன் மனசு
ஆழ்வெளி நிர்வாணத் துள்ளல்.
உயிர் நீர் வாசம் படிக்கையில்….

“அசதியில் புரண்டயிடம்
கொழுந்தனுக்கு” எனும் இடத்தில்
இயற்கை மலர்கிறது.

காமத்தில் லயித்து விடாது அடுத்து நாத்திக பார்வையில்
பாமரன்….பரமன் பதில் தரட்டும்.

“நீங்கள் என்னை சூத்திரன் என்றழைத்தபோது” கவிதையின் தீ தத்துவ யதார்த்தமாய் தகிக்கிறது.
“யாவருக்குமாய் காத்திருக்குமாம் தீ “ என உணர வைத்ததோடு இடது முட்டியில் மாடர்னு ரெண்டு அடி கொடுத்து “சாம்ப தான் நீயிம் நானும் “சொல்லி முடித்து வைக்கிறார்.வாழ்க்கையை.

அறிந்தவன் பிணமாகி வரும் போது வெட்டியான் மனசு விட்டு அவன பத்தி எதாவது சொன்னால் அதுதான் உண்மையான வாழ்க்கை குறிப்பு.

அதிக வித்தியாசமாய் ஒரு கருப்பொருள் “கெஜிராவை பிளந்து தின்னும் மணிமேகலைக்கு மாப்பிளை இருந்தால்” சொல்ல சொல்வது.
நச் இரக்கம்…

ஒரு திருமணம் கழிந்த தனியனின் நினைவுகளில் தாம்பத்திய நதி அக்கரையாய் பிழைப்பும் , இக்கரையாய் தவிப்பும் இரு(று)க்க… இரவின் ஒளியில் ஓடுகிறது பிழைப்பு நிலத்தில்
என குறுஞ்செய்திகவிதையாய் சொல்கிறார் நெடுந்து வளரும்
துயரை…..காத்திருப்பது தனியறையில் என.

அதோடே முடியுதா தனியன்கள் கத இல்ல என்கிறார் கவிஞர் .தீர்த்தமாடி போதையில் மிதலைந்து மனசுடன் நிர்வாணத்தில் புரளுவது தோப்பிலும் குளிரூட்டிய அறை அனுபவம் அலாதி வெவ்வேறு தான் என நிதானப்படுத்துகிறார்.

பளிச்சென தெறிக்கிறது கிடாய்களின் இரத்த துளிகள்.
அப்போதும் கடவுள் ஏதும் சொல்ல போவதுதில்லை.
அவருக்கு பதிலா பூசாரி சொல்லலாம். தேர் சக்கரங்களும்
அனுமதிக்கப் பட்ட வீதிகளில் மட்டும் தானே.

பேச்சு முடிஞ்சி சரிபாதி…..கவிதையில்
வயதானவளின் வலி.
இன்னொரு கவிதையில் அழுவுது ஆயா என்பதை சொல்கிற அனுபவ உணர்வு
தன் சொந்த வாழ்வில் தகப்பனிடத்தில் நின்று ஆயாவை தன் குடும்பதோடு வைத்திருப்பதில் தெரிகிறது.

ரொம்ப பிடிச்சது #கங்கை_கொண்ட_சோழபுரத்து கவித தான் இங்கு வினையனின் வாள் ஒளிர்கிறது பிரகதீஸ்வரன் முகத்தில். இப்பவும் பதில் சொல்லாது புன்னகை சிந்துவார் மிஸ்டர் பிரகதீ.

“ஆடி” முடிஞ்சி மன்னிக்க இன்னும் ஆடி முடியல அவரு
கவிதை வரிகளில் தாம்பாளத்து பழம் ஆற்றாமையில் அரற்றுகிறது அதுவும் உக்கிர தெய்வம் காளிக்கிட்ட.
செம உக்கிரம் தான்யா.

பௌத்திர நோட்டீஸ் ஒட்டும் கூலியின் வாழ்வையும் கனவையும் காட்டியது வாழ்வின் இடுக்கங்களில் உள்ளவர்கள் மீதான கூரிய பார்வையை காட்டுகிறது.

கடைசி பக்க கவிதைகள் நவீனத்தின் முதல் வரிசை.
எல்லோருக்குள்ளும் உருளும் காமச்சக்கரங்கள். ஜதி சுத்தமா ஓடியிருக்கிறது.

அதிலும் “ தீ “ இன்னும் சுகம்.

எறவானத்தில் ஏறி இறங்கிய எனக்கு எட்டிய வரை பார்த்தேன்.
சென்னைக்காரன் எனக்கு வட்டார மொழி பழக்கமில்லை.
வினையனின் அன்பும் யதார்த்த மொழியும் படிக்க வைத்தது.

இத்தொகுப்பில் வழிச்சல் காதல் இல்லை.பாலின உறுப்புகளை கொச்சையாய் அதிர சொல்லும் மேதாவி தனம் இல்லை.வட்டார மொழியில் கிராமத்தின் இடுக்குகளில் வாழும் மனிதர்களின் வாழ்வியலை எண்ண ஒட்டத்தை சிறப்பாக செதுக்கி இருக்கிறார்.

வட்டாரக் காற்றை சுவாசத்தித்த படியே கிராமம் காண விழையும் வாசகர்களுக்கு எறவானம் நல்ல வாகனம்.

கடைசி பக்க கவிதைகளால் தன் எழுத்து உளி நவீனமும் செதுக்கும் என செப்பியுள்ளார் #கங்கை_கொண்ட_சோழபுரத்து இளவல்.

••••