Category: இதழ் 117

நெய்தல் ( கவிக்கொத்து ) / அன்பாதவன் ( துபாய் )

download (39)

1.

துறைக்குள் செலுத்த முற்படும்
எளியப் படகொன்றினைப் போல்
உள் நுழைய விரும்புறான் !

ஓடுபாதை நீங்கி குபீரென உயரும்
விமானமாய் வெளியேற்ற யத்தனிக்கிறாய்

பசிய நீர்த் திடலில்
நீந்தி திளைக்கும் மீனமாய்க்
கொண்டாட விழைகிறேன் வாழ்வை
கறிக்கடை கத்திக்காரனாய் வெட்டியத் துண்டங்களை
வீசியெறிகிறாய் எண்திசைகளிலும் நாய்கள் கவ்வ …

விசிற விரும்புகிறான்
வேப்பந்தழைக் குளிர்ச்சியாய் நலம் பயக்க..
கசப்பைக் காரணம் காட்டி அடிவேரையும் அறுக்க
மர[ன]ச் சிதைவோடு நிகழ்ந்தந்த மரணம் !

பனிக்கிதமான வெந்நீர்ப் பையாய்ப்
பிரியாமலிருக்க விரும்புகிறான்..
கழிவுகளடங்கிய ஞெகிழிப் பையாய்
வீசி எறிகிறாய் அருவருப்போடு

மனசும் தீண்டத்தகாதவனா அவன்…?

2.
காத்திருக்கின்றன கடற்காகங்கள்
மீன் சந்தை கூரையின் மீது

3.
புகையோடு மலரும் பெட்ரோல் ஓவியங்கள்
“அப்ரா”நீரில் விரிய
உரத்தக் குரலெடுத்து தொடங்கும்
படகுப் பயணம்

பசிய நீர்த் துறந்து
வான் பார்க்க வரும் மகரங்களை
‘லபக்’க்கும் கடற்காகங்கள்
அமாமிசப் புறாக்கூட்டத்துக்கு
கயல் திரள் கரையிலென்னக் காரியமோ ?

ஓங்கி நெடிதுயர்ந்த
கான்கிரீட் கட்டட கண்ணாடிகளுள் ஊடுருவி
திரைகடல் ரசிப்பான் தினகரன்

சரக்கு பொதிகள் சுமந்து
ஒட்டகம் போல மெல்ல நகரும்
பெரும்படகின் உழைப்பாளிகள்
வியர்வை கலக்க ருசியாகிறது அப்ராவின் உப்புநீர்
இக்கரைக்கும் அக்கரைக்குமாக பச்சையம் தேடி
பயணிக்கிறதெம் வாழ்க்கைப் படகு

# அப்ரா: A GREEK BETWEEN DUBAI AND DEIRA CITIES

4.
என்ன தான் உறவோ
அவனுக்கும் நெய்தலுக்கும்

மருதத்தின் மகனவன்
பிழைப்போட்டுவது அலைவாய்க் கரைகளில்

கடந்த பிறவியொன்றில் கப்பல் தப்பி
கரைச் சேர்ந்தவனா?

யவனர் விட்டுச் சென்ற
ரத்தினப் பொதிகளின் மனித உருவா..

பூம்புகார் மூழ்குமுன் கரைதேங்கிய
பண்டமூட்டையா

திரைகடலோடித் திரவியம் தேடச்சென்ற
கூலவணிகரின் வேண்டாப்பண்டமா

கரையொதுங்கி வாழும் கருந்திமிங்கலமா
மனித குலத்தை உய்விக்க
ஏதோ ஓர் தெய்வச்சிப்பி ப்ரசவித்த முத்தா

அலையோடு அலைபவன் கரையேருவானா ?
கலமாக மிதப்பவன் துறை சேருவானா ..?

காத்திருக்கிறானவன்
கலங்கரை விளக்கின் ஒளிக்காக…

5.
வாஸ்கோ ட காமா
பாய்மரங்களும் விண்மீன்களும் வழிகாட்ட
காற்றின் திசையில் பயணித்து
கடலோடி நீ கண்டடைந்தாய்
உனக்கானக் கரையை…

வாஸ்கோ ட காமா
கள்ளிக்கோட்டையில் கால் பதித்து கதவம் திறந்தாய்
செங்கள்ளர்கள் கடல்வாசல் வழியாக
கைப்பற்றினரெம் கோட்டைகளை

கடல் வழியாக அய்ரோப்பியர் கற்றது
களவு வழிதானே
சின்ன அன்பளிப்புகள் மூலமாக
பெரிய தேசத்தையும் விழுங்க முடியுமென்ற
கார்பொரேட் வித்தைக்கு வித்திட்டவன் நீ..
வாஸ்கோ ட காமா

மணம் பரப்பி வரவேற்ற சேர தேச முகவாசல்
மதம்பரப்பிகளுக்கு முகாமாக
அய்ரோப்பிய சிலுவைகள்
திரிசூலங்களுக்கு போட்டியாய்…

போர்ச்சுகீசியன்…டச்சுக்காரன்
பிரெஞ்சுக்காரன்..ஆங்கிலேயன் என
பரங்கிக் கொள்ளைக்கூட்டம்
நாடு தாண்டி கூடு கட்டியது

மாபெரும் தேசத்தின் மாற்றங்களின்
மூல விதையே வாஸ்கோ ட காமா

உப்புக் காற்றை சுவாசித்து
காதங்கள் கடந்து கலங்களில் பயணித்தது
அரபிக்கரைக்கல்லறைக்குள்
செரித்துப்போகவோ..?

6.
நாளெல்லாம்
படகோட்டி படகோட்டி
வாழ்வெல்லாம்
படகோட்டி

7.

அமைதியாய்க் கரை தன்
திடமான மவுனத்துடன்

ஆர்ப்பரிக்கும் கடல்
ஆரவர அலைகளுடன்

கரையைத் தழுவி விலகும்
கடலின் மோகம் குறையவேயில்லை

சிறுநண்டுகளாய்க் கடல் கிளர்ச்சியூட்ட
தாங்கவொண்ணாக் கரையோ
கலக்கும்
கடலதிர..கரையதிர

அலைநா வருட கரைத் தீண்டும்
கடலின் பெரும்பசி அறியும் கரை

பவுர்ணமித் தண்ணீரவில் அதிர்ந்து பிளந்தது
தாபம் தாங்கா கரை
பொங்கியெழுந்து ஆலிங்கனித்தது கடல்

ஆரத் தழுவி அனல் முத்தம் பாய்ச்சி
சேர்ந்து களித்த சிருங்காரத் தருணத்தில்
ஆனந்த சுனாமியின்
மூச்சரவம் கேட்கலையோ…?

anbaadhavanjp@gmail.com

ஏப்ரல் மாதக் காலையில் 100 % பொருத்தமான பெண்ணைப் பார்த்து ( ஜப்பானிய மொழி சிறுகதை ) மூலம் : ஹாருகி மு ராமி [ Haruki Murakami ] ஆங்கிலம் : ஜே .ருபின் [ Jay Rubin ] / தமிழில் : தி.இரா.மீனா

download

ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமி[ 1949]சர்வதேச அளவில் புகழ் பெற்ற படைப்பாளி. சிறுகதை,நாவல்,கட்டுரை ,மொழி பெயர்ப்பு என்ற பன்முகம் கொண்டவர்.இவர படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. World Fantasy Award, Frank O’ Connor International Short Story Award உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். A Wild Sheep Chase , Norwegian Wood, The Wind – Up Bird Chronicle ,Kafka On the Shore , IQ84 ஆகியவை அவருடைய சிறந்த படைப்புகளில் சிலவாகும்.

••••

ஓர் ஏப்ரல் மாதத்தின் காலைப் பொழுதில் டோக்கியோ நகரின் நாகரிகமான ஹருஜூக்கு பகுதியின் குறுக்குத்தெருவில் 100 % பொருத்தமான பெண்ணைக் கடந்தேன்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவள் அப்படி ஒன்றும் அழகி யில்லை.அழகு என்று கூட சொல்லமுடியாது.அவள் உடைகள் விஷேசமா னவையல்ல.தூக்கத்திலிருந்து எழுந்து வந்தது போல அவள் பின்புறத் தலை முடியின் வடிவம் வளைந்தேயிருந்தது.அவள் இளமையானவளுமில்லை. முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கலாம்.தெளிவாகச் சொன் னால் இளம்பெண் என்றுகூடச் சொல்லமுடியாது.ஆனாலும் ஐம்பது அடி தூரத்தி லிருந்து பார்க்கும்போதே அவள் எனக்கு 100 % பொருத்தமானவள் என்று தெரிந்தது.அவளைப் பார்த்த கணத்தில் நெஞ்சு குறுகுறுக்க வாய் வறண்டு போனது.

உங்களுக்குப் பிடித்த பெண் என்பவள் — மெலிதான கணுக்கால்கள் அல்லது பெரிய கண்கள் அல்லது நீண்ட விரல்கள் ,அதிக நேரம் சாப்பிடும் இயல்பு என்று எந்த அம்சம் கொண்டவளாகவுமிருக்கலாம்.ஒரு பெண்ணைப் பிடிக்க எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.எனக்கென்று சில அபிப்பிரா யங்களுண்டு.சில சமயங்களில் ஹோட்டலில் பக்கத்து மேஜையருகே உட்கார்ந்திருக்கும் பெண்ணை வெறித்தபடி இருப்பேன்.அவளுடைய மூக்கின் வடிவம் பிடித்திருப்பதால் அவ்வாறு இருக்கலாம். முன்கூட்டியே முடிவு செய்த தன்மையோடு 100 % பொருத்தமாக தனக்குப் பிடித்த பெண் இருக்க வேண்டுமென்று யாரும் கட்டாயப்படுத்துவதில்லை.எனக்கு மூக்குகளின் மேல் ஒரு விதக் கவர்ச்சியிருப்பதால் அவளுடைய உருவத்தை நினைவில் வைத் திருக்க முடியவில்லை.எனக்கு ஞாபகத்திலிருப்பது அவள் பேரழகியில்லை. அது வினோதமானதுதான்.

“நான் நேற்று தெருவில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் 100 % பொருத் தமானவளாகத் தெரிந்தாள்.”நான் யாரிடமோ சொல்வேன்..

“அப்படியா? மிகவும் அழகா?” அவன் கேட்கிறான்.

“அப்படி ஒன்றும் சொல்ல முடியாது”

“அப்படியானால் உனக்குப் பிடித்த வகையோ?”

“எனக்குத் தெரியவில்லை.எனக்கு அவள் கண்கள், தோற்றம் ,மார்பு என்று எதுவும் நினைவிலில்லை.”

“விசித்திரம்”

“ஆமாம்.விசித்திரம்தான்”.

“சரி. என்ன செய்தாய்? பின் தொடர்ந்து போனாயா? பேசினாயா?”அவன் உற்சா கமிழந்து கேட்பான்.

“இல்லை.தெருவில் அவளைக் கடந்து போனேன் ”.

அவள் கிழக்கிலிருந்து மேற்கே நடந்தாள்.நான் மேற்கிலிருந்து கிழக்கே போனேன்.அது ஓர் அற்புதமான ஏப்ரல் மாதக் காலைநேரம்.

நான் பேசியிருக்க வேண்டும்.அரைமணி நேரம் அதிகம்தான். அவளைப் பற்றிக் கேட்டிருக்கலாம்.என்னைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்—நான் என்ன செய்ய விரும்புகிறேன்… ஓர் ஏப்ரல் மாதக் காலை நேரத்தில் ஹஜுருக்கு தெருவில் இருவரும் ஒருவரை ஒருவர் கடக்க நேர்ந்த விதியின் தன்மையைச் சொல்லியிருக்கலாம்.இந்த விஸயத்தில் மென்மையான ரகசியங்கள் புதைபட்டிருக்கும் என்று தோன்றுகிறது.உலகில் அமைதி நிறைந்திருந்த நாளில் ஒரு மிகப் பழமையான கடிகாரம் உருவாக்கப்பட்டது போல.

பேசியதற்குப் பிறகு மதிய உணவு எங்காவது சாப்பிட்டிருக்கலாம்.உடி ஆலா னின் படம் பார்த்திருக்கலாம்.பிறகு காக்டெயிலுக்காக ஒரு ஹோட்டல் பாருக் குப் போயிருந்திருக்கலாம்.அதிர்ஷ்டமிருந்திருந்தால் இருவரும் சேர்ந்தும் இருந்திருக்கலாம்.

சாத்தியக்கூறுகள் என் நெஞ்சக் கதவைத் தட்டின.

எங்கள் இருவருக்கும் இடையிலான தூரம் பதினைந்து அடியாகக் குறைந்த்து.

எப்படி அவளை அணுவது? என்ன பேசுவது ?

காலை வணக்கம்.ஓர் அரைமணி நேரம் என்னோடு பேசமுடியுமா?

கேலியாகிவிடும். இது இன்ஷுரன்ஸ் வியாபாரி பேசுவது போல இருக்கும்.

மன்னியுங்கள்.இங்கு பக்கத்தில் யாராவது இஸ்திரி செய்ப்பவர்கள் இருக்கி றார்களா?

இல்லை. இதுவும் வேடிக்கையாகிவிடும். என்கையில் எந்தத் துணியுமில்லை தவிர யார் அப்படிப் பேச விரும்புவார்கள்.

நேரடியாக விஷயத்திற்கு வருவதே சரி.”வணக்கம்.நீங்கள் எனக்கு 100 % பொருத்தமான பெண்”

அவள் நம்பமாட்டாள். நம்பினாலும் என்னோடு பேச விருப்பமில்லாமல் இருக் கலாம்.மன்னிக்கவும். நான் உங்களுக்கு 100 % பிடித்த பெண்ணாகத் தெரிய லாம்.ஆனால் நீங்கள் எனக்கு 100 % பொருத்தமானவரில்லை என்று அவள் சொல்லலாம்.அப்படிஒரு சூழ்நிலை வந்தால் நான் உடைந்து போய்விடுவேன் அந்த அதிர்விலிருந்து மீளமுடியாது.எனக்கு 32 வயதாகி விட்டது.

ஒரு பூக்கடையைக் கடந்தோம்.மெல்லிய இளங்காற்று என்னைத் தழுவியது. என்னால் அவளோடு பேசமுடியவில்லை.அவள் வெள்ளை நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வலதுகையில் ஒரு வெள்ளைக் கவர் வைத்திருந்தாள். அதற்குத் தபால்தலை ஒட்ட வேண்டும் போலிருக்கிறது. அவள் யாருக்கோ கடிதம் எழுதியிருக்கிறாள்.இரவு முழுதும் தூங்காமல் எழுதியது போலக் கண்கள் தூக்கக் கலக்கத்திலிருந்தன.அவள் ரகசியங்கள் அனைத்தையும் தாங்கியதாக அந்தக் கடிதம் இருக்கவேண்டும்.

நான் மேலும் சில அடிகள் நடந்தேன்.அதற்குள் அவள் கூட்டத்தில் காணாமல் போயிருந்தாள்.

இப்போது அவளிடம் என்ன சொல்லியிருக்க வேண்டுமென்று தெரிந்து விட்ட. அது ஒரு ஓர் எளிய உரையாக இருந்திருக்கும்.அதைச் சரியாகச் சொல்ல எனக்கு நேரமாகியிருந்திருக்கலாம்.எனக்கு வந்த சிந்தனைகள் மிக மிக இயல்பானவை.

அது இப்படித்தான் ஆரம்பித்திருக்கும்.”ஒரு காலத்தில் “என்று தொடங்கி” “சோகமான கதைதான் இல்லையா”என்று முடிந்திருக்கும்.

ஒரு பையனும் பெண்ணும் வசித்து வந்தனர்.அவனுக்கு 20 வயது. அவளுக்கு 18 வயது.அவன் பெரிய அழகனில்லை.அவளும் மிகச் சாதாரணமானவள். இரு வரும் தனியாகவே இருந்தனர்.தனக்கு 100 % பொருத்தமானவன் கிடைப் பான் என்று அவளும்,தனக்கு தனக்கு 100 % பொருத்தமானவள் கிடைப்பாள் என்று அவனும் முழுமையாக நம்பினார்கள்.அந்த அற்புதம் நிகழ்ந்தது.

ஒரு நாள் இருவரும் தெருவில் சந்தித்தனர்

“இது அற்புதமானது.”அவன் சொன்னான்” இவ்வளவு நாட்கள் உனக்காகத்தான் காத்திருந்தேன்.நீ நம்பமாட்டாய்.ஆனால் நீதான் எனக்கு 100 %பொருத்தமான பெண்”என்றான்.

“நான் எனக்குள் கற்பனை செய்து வைத்திருந்தவனைப் போலவே நீ இருக் கிறாய்.நீ எனக்கு 100 % பொருத்தமானவன்.இது ஒரு கனவு போல இருக் கிறது.”என்றாள் அவள்.

பார்க் பெஞ்சில்உட்கார்ந்து கைக்குள் கைகோர்த்தபடி இருவரும் தங்கள் கதை களைப் பரிமாறிக்கொண்டனர்.அவர்கள் இப்போது தனியானவர்களில்லை100 % பொருத்தமானவரை இருவரும் கண்டுபிடித்து விட்டனர். 100 % பொருத்த மானவரைக் கண்டுபிடிப்பது எவ்வளவு உன்னதமான விஷயம்.! அற்புதம்..இது உலக விந்தை!

அவர்கள் பேசியபடி இருந்தனர்.என்றாலும் இருவர்மனதிற்குள்ளும் மெல்லிய இழையாய் ஒரு சந்தேகம்.ஒருவரின் கனவு இவ்வளவு எளிதாக உண்மையா வது சாத்தியமாகுமா? சரியானதாகுமா?

இந்த எண்ணத்தால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது.”ஒரு சிறிய பரி சோதனை செய்வோம்.நாம் இருவரும் ஒருவருக்கொருவர் 100 % பொருத்த மானவர்கள் என்றால் எங்கேயாவது ,எப்போதாவது மீண்டும் சந்திப்போம். அப்படிச் சந்திக்கும்போது நாம் 100 % பொருத்தமானவர்கள் என்பது உறுதி யாகும். உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம்.என்ன சொல்கி றாய்?” என்று அவன் கேட்டான்.

“சரி.அப்படியே செய்யலாம்”

அவர்கள் பிரிந்தனர்.அவள் கிழக்கும்,அவன் மேற்குமாக.அவர்கள் மேற் கொண்ட சோதனை தேவையில்லாதது.அவர்கள் இருவரும் ஒருவருக்கொ ருவர் 100 % பொருத்தமானவர்கள்.அவர்கள் சந்தித்தது அற்புதம்தான்.அவர் கள் மிக இளையவர்கள் என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடியாமல் போனது.விதி இரக்கமற்று அவர்களைப் பிரித்தது.

ஒரு குளிர்காலத்தில் இருவருக்கும் கடும் காய்ச்சல் வந்தது.வாழ்வுக்கும் சாவுக்குமிடையே இருவரும் போராடினார்கள்.நோயின் தீவிரத்திலிருந்து மீண்டபோது அந்த நினைவுகள் நீங்கியிருந்தன.இளம் டி.எச்.லாரன்சின் பிக்கி பாங்க் போல. தலை காலியானது.

இருவரும் புத்திசாலிகள் என்பதால் கடுமையான முயற்சிகள் செய்து தங்களை ஒரு சமுதாயத்திற்கு எல்லா வகையிலும் தகுதியுடையவர்க ளாக்கிக் கொண்டனர்.ஒரு வழியிலிருந்து மற்றொரு வழிக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் பிரஜைகளாய் மாறியிருந்தனர். 75 % அல்லது 85 % அளவு காதலுணர்வை அனுபவித்திருந்தவர்களாயிருந்தனர்..

காலம் கடந்தது. அவனுக்கு முப்பதிரண்டு வயது. அவளுக்கு முப்பது.ஒரு ஏபரல் மாத காலம்.அவன் மேற்கிலிருந்து கிழக்கும்,அவள் கிழக்கிலிருந்து மேற்கும் நடந்து வந்தனர். அவள் கையில் ஒரு கவரோடு வந்தாள்.தெருவின் பிரதான சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தனர்.ஒரு நொடி இருவரின் மனதிலும் தொலைந்து போன நினைவு ஓரிழையாக ஓடியது. நெஞ்சு படபடப்பதை இருவரும் உணர்ந்தனர். அவர்களுக்குத் தெரியும்.

அவன் எனக்கு 100 % பொருத்தமானவன்.

அவள் எனக்கு 100 % பொருத்தமானவள்.

ஆனால் அந்த ஞாபகங்களின் இழை மிக பலவீனமாகிவிட்டது. பதினான்கு வருடங்களுக்கு முன்பிருந்த தெளிவு இல்லை.ஒரு வார்த்தை பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் கடந்தனர்; கூட்டத்தில் கலந்து மறைந்தனர்.

ஒரு சோகமான கதைதான்.இல்லையா?

ஆமாம். அதுதான்.அதுதான் அவளிடம் நான் சொல்லியிருக்க வேண்டியது.

———————————

தூக்கம் பற்றி ஒளவையின் அறிவுரை / முனைவர். ஆர். சுரேஷ்

download (34)

தூக்கத்தின் கால அளவானது, உயிரினங்களை பொருத்து மாறுபடுகிறது. சில விலங்குகள் நீண்ட நேரம் தூங்குபவையாக இருக்கின்றன. உதாரணமாக, கோலா கரடிகளை சொல்லலாம். நாளொன்றுக்கு, சுமார் இருபத்திரெண்டு மணி நேரம், இக்கரடிகள் தூங்குகின்றன. பழுப்பு நிற வவ்வாலோ பத்தொன்பது மணி நேரத்திற்கும் குறையாமல் தூங்குகிறது. வலிமையான புலி சுமார் பதினாறு மணி நேரம் உறங்குகிறது. இவைகளின் மத்தியில், சில வகை பிராணிகள், மிக குறைந்த நேரமே, தூங்குகின்றன. இதற்கு, ஒட்டக சிவிங்கியை சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஆம், இவைகள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகின்றன. பசுக்களின் உறக்க கால அளவு, சுமார் நான்கு மணி நேரம்.

சரி, மனித இனமாகிய நம்முடைய தூக்க கால அளவு எவ்வளவு? பொதுவாக, வயது, பணிச்சூழல் முதலியவற்றை பொருத்து தூக்கத்தின் கால அளவு மாறுபடுகிறது. இருப்பினும், குறைந்தது ஆறு மணி நேரமாகிலும் கட்டாய தூக்கம் அவசியம் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். அதேசமயத்தில், தற்கால சூழ்நிலையின் காரணமாக, ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரையிலும் தூங்கலாம் என்ற கருத்தும் ஒருசில ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது.

இந்நவீன காலத்தில், பற்பல கருவிகள் கண்டறியப்பட்டு, நடைமுறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்காலத்தில் செய்யப்பட்ட பல வேலைகளை, இக்கருவிகளை கொண்டு, தற்காலத்தில், நொடி பொழுதில் செய்திட இயலும். இருப்பினும், வேலை சுமை மட்டும் குறைந்த பாடில்லை! சில நேரங்களில், கால வரையறைக்கு உட்பட்ட வேலை பளுவின் நிமித்தம், உறக்கத்தையும் உதாசீனப்படுத்த வேண்டிய கட்டாயம். இதனால், உறக்க கால அளவு குறைகிறது.

இதற்கிடையில், வேலையின் தன்மையை பொருத்து, உறக்கத்தின் காலமும் (இரவுக்கு பதில் பகல் பொழுதில்) மாறுபடுகிறது.

இயற்கை எல்லாவற்றையும் தெளிவாக வகுத்து, படைத்து, இயக்கி வருகிறது. இயற்கையை (அளவோடு!) பயன்படுத்தலாம். ஆனால் மாற்ற முடியாது அல்லவா? மாற்ற முற்படும் பொழுது, அது பல இன்னல்களை கொண்டுவந்து சேர்த்துவிடும். இதன் அடிப்படையில், தூங்கும் நேரம் மற்றும் காலத்தில் ஏற்படும் மாற்றம் பல வகையான உடல் உபாதைகளை உண்டுபன்னுகிறது. இவைகளை எல்லாம், தற்கால அறிவியல் உலகம் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், நவீன அறிவியல் வளர்ச்சி அடியாத காலமாக கருதப்படும் பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே, தற்கால ஆய்வு முடிவினை நம் முன்னோர்கள் தீர்க்கமாக நமக்கு அறிவுறுத்தியிருப்பது வியப்பளிக்கிறது அல்லவா? ஆம், தூக்கத்தின் காலத்தை பற்றி ஒளவை பாட்டி,

வைகறைத் துயில் எழு (ஆத்திச்சூடி, வகர வருக்கம் 107) என்று நமக்கு சொல்லியிருக்கிறாரே!

அதாவது, ’நாள் தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு’ என்பது ஒளவையின் அறிவுரை.

சூரியன் உதிக்கும் முன்னமே எழுவதால் என்ன பயன்? இதனை பற்றி ஆராய்ச்சி செய்த அறிவியல் அறிஞர்களின் முடிவுகளை கீழ்வருமாறு காண்போம்.

நேரத்திற்கு உறங்க செல்வதும், சூரிய உதயத்திற்கு முன்பே எழுவதும், உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்குமாம். மேலும், தூக்க குறைவால் வரும் நேய்களும் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

மன அழுத்தம் குறைந்து மன மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதிகாலை பொழுதில் இரைச்சலின் அளவு மிகமிக குறைவு என்பதால், தியானம் போன்ற ஆரோக்கியம் தரும் செயல்முறைகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். இதன் மூலமும் உடல் ஆரோக்கியம் பெருகும் வாய்ப்பு உள்ளது.

அதிகாலை பொழுதில் எழுந்திருப்பவர்களின் செயல்பாடுகள் நன்றாகவும், அதிக பயன் தருபவையாகவும் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

பாரதியும், ’காலை எழுந்தவுடன் படிப்பு’ (பாரதியார் பாடல் – ஓடி விளையாடு பாப்பா) என்று பாடியுள்ளாரே!

எல்லா தலைச்சிறந்த ஆளுமைகளும், அதிகாலையிலே எழுந்திருப்பவர்களாக இருந்தனர்/இருக்கின்றனர் என்பதை அவர்களை பற்றி அறியும் பொழுது தெரியவருகிறது அல்லவா?

நேர்மறையான என்னம் அதிகரித்து, மனம் செழுமை அடைகிறதாம். இதன் மூலம், நல்ல பழக்க வழக்கமும் உண்டாவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

இன்றைய சூழலில், காலம் தாழ்ந்து எழுவதால் உண்டாகும் பிரச்சனைகளை நன்கு அறிவோம்! ஆம், நேரமின்மையால் (?), அவசர அவசரமாக வேலைக்கு கிளம்புவதும், காலை சிற்றுண்டியை தவிர்ப்பதும் வாடிக்கை ஆகிவிட்டதே! இதனால், பலவகையான உடல் உபாதைகள் நம்மை வந்து சேர்கின்றன. அதிகாலமே எழுவதல் இதுபோன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.

அதிகாலை எழுவதால், மன அமைதி, சமாளிக்கும் திறன், சிந்தனை ஆற்றல் போன்றவை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரி, ஒருவேளை சூரியன் உதித்த பின் எழுந்தால் என்னவாகும்? அதாவது, அதிக நேரம் உறங்குவதால் என்ன தீய விளைவுகள் ஏற்படும்? என்ற கேள்விக்கான விடையை பல ஆய்வுகளின் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதன் சாராம்சத்தை தற்போது பார்க்கலாம்.

உடலில் சுரக்கும் மெலடொனின் என்ற ஹார்மோனே, நமக்கு தூக்கத்தை வரவழைப்பாதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். சூரியன் உதித்த பின்பு, இயற்கையாகவே, மெலடொனின் அளவு குறைந்து விடுகிறது. ஒருவேளை, பகல் பொழுதிலும், தொடர்ந்து தூங்க, இந்த ஹார்மோனின் சமநிலை பாதிக்கப்படும் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். இதன் காரணமாக, நீரிழிவு நோய், மன அழுத்தம், உடல் வலி, உடல் எடை கூடுதல், உள்ளிட்ட கோலாருகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், ஏராளாமான ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ’தூக்கதை’ பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களது ஆய்வு முடிவுகளின் மூலம், நாம் அறிவது என்னவெனில், சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே! சூரிய உதயத்திற்கு பின்பு எழுவோமாயின், உபாதைகளை சந்திக்க நேரிடும். இதனையே, ’வைகறைத் துயில் எழு’ என்று ஒளவை பாட்டி நமக்கு அன்றே சொல்லியிருக்கிறார்.

மேலும், ஒளவையின் இவ்வறிவுரையில், மறைமுகமான மற்றொரு அறிவுரையும் இருக்கிறது. அது என்னவெனில், பகல் பொழுதில் தூங்குதல் கூடாது! என்பது தான். ஆம், சூரியன் உதிக்கும் முன்பே எழு என்பதன் மூலம், தூங்கும் காலம் இரவு பொழுது தான் என்பதை கட்டாயப்படுத்துகிறார்.

ஒருவேளை இரவு பொழுதில் கண்விழித்து, பகல் பொழுதில் தூங்கினால் என்னவாகும்? இதற்கான பதிலாக நவீன அறிவியல் என்ன சொல்கிறது? வாருங்கள் பார்போம்.

தொடர்ந்து பகல் நேரத்தில் மட்டுமே தூங்குவதன் காரணமாக, நாளடைவில் தூக்கமின்மை நோய் வரலாம். தூக்கமின்மையால், உடற் சோர்வு, நினைவாற்றல் குறைவு உள்ளிட்ட பல கடுமையான உபாதைகள் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சுருங்க சொன்னால், வைகறைத் துயில் எழு என்ற ஆத்திச்சூடி அறிவியல் உண்மையின் விளக்கங்களை ஆராய்ந்து அறிந்துள்ளோம். நம் மூதாதயர்கள் அருளிய நீதி நூல்கள், நம் வாழ்வை நெறிபடுத்தி ஆரோக்கியத்துடன் வாழவைப்பதுடன் உண்மையான வாழ்வை அடையவும் துணை செய்பவை. அவற்றில் இயற்கை அறிவியலின் சித்தாந்தங்கள் இருப்பதும் இயற்கையே!

•••••

ஒரு சோறு பதம் ( சிறுகதை ) / கல்யாணி

download (35)

“ஹ்ம்ம் சொல்லு..”

“இப்போ தான் ஏறினேன்..”

“இன்னும் எடுக்கல”

“தெர்ல.. எங்கயோ வெளிய போயிருக்காரு ட்ரைவர்..”

“வெளிய போயிருக்கா……ரு…….”

“வீட்லயா..?”

“அவங்க என்ன சொல்ல போறாங்க.. அதே கத தான்..”

“…”

“இல்ல இல்ல.. இப்போவே யாரு தூங்குவா.. ஹ்ம்ம்.. பஸ் எடுத்துட்டாங்க.. சரி, கொஞ்ச நேரம் பேசலாம்.. அப்புறம் நான் தூங்க போறேன்.. ”

“ஹ்ம்ம்… ஆனா சில டைம் ரொம்ப எரிச்சலா வருது.. ச்சும்மா.. கத்திகிட்டே இருக்காங்க.. எது சொன்னாலும்.. இந்த விஷயத்துனால எனக்கு மண்ட குடைச்சல் தான் அதிகம்.. எவ்ளோ நாள் தான் இதே மாதிரி சண்ட போட்டுட்டு உட்கார்றதுனு தெர்ல எனக்கு..”

“நீ ஈஸியா சொல்லிட்டு போயிடுவ.. வந்து கேட்டு பாரு ஒவ்வொண்ணும்.. ஏண்டா உயிரோட இருக்கோம்னு தோணும்.. சில டைம் எங்கயாவது ஓடி போயிடலாம்னு தோணுது.. இன்னும் எவ்ளோ நாள்னு தெர்ல.. அதுவும் இன்னிக்கு சாயந்தரம் ரொம்ப பெருசாயிடுச்சு..

எல்லாரும் ஒரே அழுக..”

“இந்த பாரு.. எவ்ளோ பொறுமையா இருக்கறது.. பொறுமையா தான் ஒன்றரை வருஷம் இருந்தாச்சு.. எப்போ வெடிக்க போறேனோ.. அப்போ எல்லாம் உடைஞ்சுடும்.. ”

“இல்ல இல்ல.. அழலாம் இல்ல.. பஸ்ல உட்கார்ந்து எப்படி அழர்தாம்.. வீட்டுக்கு போய், போர்வைய போத்திட்டு வேணா சத்தமா அழலாம்.. எனக்கு அழ கூட முடிய மாட்டேங்குதே இப்போல்லாம்.. ”

“சாப்டேன்.. நிறைய கைக்கு கட்டி கொடுத்திருக்காங்க.. ஆபீஸ் மக்களுக்கு, room matesக்கு..”

“அவளுக்கு என்ன.. ஓகே வா தான் இருக்கா.. தினமும் அவளும் போன் ல அழுகை தான்.. Women are cursed .. ”

“ஆமாமாம் தேவையே இல்லாம இந்த வளைக்குள்ள மாட்டிகிட்டு, நாங்க தான் அவஸ்தை படறோம்.. பசங்களுக்கு ஈஸி தான.. சரக்கடிச்சா மறந்துடலாம்..”

“ஹ்ம்ம்.. அப்புறம்..”

“அவரு தான.. பாத்தேன்.. ஏதோ mail அனுப்பியிருந்தாரு.. ‘விடுதி நாட்களில் பெங்களூர் சாலை வயது முதிர்ந்த தாசியை போல’னு.. ஜி, எப்படி ஜி னு இருந்தது எனக்கு..”

“இல்ல.. சத்தமாலாம் பேசல.. நாங்க கொஞ்சம் குரல் உசத்திட கூடாதே.. நீங்க ஆயிரம் கேட்ட வார்த்தை பேசலாம் பப்ளிக்கா.. ”

“பக்கத்துலயா.. ஹ்ம்ம்.. ஒருத்தர் செம்மயா குறட்டை விட்டுட்டு தூங்கிட்டு இருக்கார்.. ரொம்ப குண்டா இருக்காரு.. கை கால அங்க இங்க நகத்தை முடில.. கை வைக்குற இடத்தையும் அவரே முழுசா வெச்சுக்கிட்டு இருக்கார்.. தூங்க போறப்போ silent ஆ சண்ட போட்டா தான் நான் கைய வைக்க முடியும்..”

“இல்….லடா.. வயசானவர் தான்.. கேட்டாரு.. மாறி உட்காரவானு. பரவால்ல உட்காருங்க னு சொல்லிட்டேன்..”

“ஏன் உனக்கு ஏதாவது பிரச்னையா.. ”

“ஹ்ம்ம்.. உங்கள திருத்தவே முடியாதே.. நேத்து அந்த மிருணாளினி போட்டுட்டு வந்த டிரஸ்ச பாத்துட்டு எப்படி வாய பொளந்த நீ.. ”

“சரி சரி போ போ. ஒரு கட்டத்துக்கு மேல.. எல்லாம் ‘அது’ தான் னு ஆயிடும்ல..”

“அது நா… அது தான்.. ”

“I agree .. ஆனா அதுவும் ஒரு main விஷயம் தான.. அது இல்லைனா உங்களுக்கு கஷ்டம் தான..”

“See I agree .. ஆனா நாங்க எல்லாம் நாக்கை தொங்க போட்டுட்டு அலைய மாட்டோம் சரியா.. நாங்க அப்டியே, silent ஆ பாத்துட்டு விட்ருவோம்..”

“சரி விடு.. அப்பாக்கு தான் பிளட் பிரஷர்.. கொஞ்சம் அதிகம் இந்த தடவ..

ஆமா இந்த விஷயத்துனாலே அவருக்கு எக்க சக்க பிரச்னை.. ஏண்டா விழுந்தோம்னு இருக்கு இதுல.. அவரு சொல்றது ஒன்னே ஒன்னு தான்.. அப்பவும் சரி, இப்பவும் சரி.. Cultural difference .. அவரு ரொம்ப பயந்த சுபாவம் வேற..”

“See , அவரு என்ன தான் இதுல பிடிவாதமா இருந்தாலும், He is a gentleman .. இது வரைக்கும் மாப்ள பாக்குறது பத்தி எல்லாம் பேசினதே கிடையாது.. yeah i agree அப்பப்போ கொஞ்ச கேவலமான வார்த்தைகள் எல்லாம் வரும்.. ”

“See அவர் என்ன கண்ட கண்ட வார்தைனால திட்டுறது தப்பு தான்.. நான் ஒத்துக்கிறேன்.. ஆனாலும் he is the best அப்பா னு I can tell surely .. எவ்வளவோ பேர், வீட்டுக்குள்ள அடைச்சு எல்லாம் வைக்குறாங்க, வேற என்னென்னமோ பண்றங்க.. Still he gives freedom to me .. அவருக்கு இந்த விஷயம் சுத்தமா புடிக்கலேனாலும், இன்னிக்கும் அவர் கிட்ட எதுவும் மாறல..”

“பின்ன.. நான் ஏன் விட்டு கொடுக்கணும்.. ”

“ஹ்ம்ம்.. அப்புறம்..”

“பாப்போம் டா.. நேத்து தான் எங்க அம்மா சொல்லிட்டு இருந்தாங்க.. இன்னிக்கும் நான் தூங்குனதுக்கு அப்பறோம் வந்து நான் தூங்குறத பாத்துட்டு இருக்காராம்.. சின்ன வயசுல ஆரம்பிச்சது.. இன்னும் அவருக்கு அந்த பழக்கம் போல.. காலைல பக்கத்துக்கு தெரு பலா பழம் பழுக்குற சமயம் போல.. அங்க smell அடிக்கும்ல.. ஹல்லோ.. ஹல்லோ.. ஹான்.. அதான் அந்த smell அடிக்கும்ல.. அதுக்காக ஒரு walk போயிட்டு வந்தோம்.. ப்ப்ப்ப்பாஆஆ. என்ன வாசனை.. இதெல்லாம் அனுபவிக்கணும்னு அவருக்கு தான் தோணுது..”

“ஆமாமாம் .. நிறைய பூ பூத்திருந்தது எங்க வீட்டுக்கு பக்கத்துல, போன தடவ பெங்களூர் வந்தப்போ அவர் அத பாத்து நினைவு வெச்சு இந்த தடவ கேட்டார்.. ‘என்ன டா பூக்க ஆரம்பிச்சுடுச்சா’னு.. இதெல்லாம் விடு, போன தடவ ஒரு relative கல்யாணத்துக்கு போயிருந்தோம்.. அப்போ போட்டோ எடுக்க கூப்பிட்டாங்க.. ஓகே வா.. இவரு என் கைய அவர் இடுப்பை சுத்தி போட்டுக்க சொன்னாரு.. ‘அப்பா எனக்கு 25 வயசாயிடுச்சு, இன்னும் சின்ன குழந்தை இல்லனு’ சொன்னேன் அவர் கிட்ட..”

“ஆமாம் டா.. அப்பா புராணம் தான்..See எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அப்பா தங்க மீன்கள் ராம் தான்.. சரியா.. ”

“:ஹ்ம்ம்.. அப்புறம்…”

“படமா.. ம்ம்ம்ம்ம்… சரி நாளைக்கு book பண்ணிடு.. Tuesday night கு.. ”

“அவருக்கு தெரியாம வெளிய சுத்துறது எல்லாம் புடிக்கல.. மத்தவங்க எல்லாரும் வருவாங்க னு தான் வரேன்.. வர வர night time ல பெங்களூர்ல நடக்கறதுக்கே பயமா இருக்கு..

“ஏன்னா? அட, போன வாரம் kammanahalli ல ஒரு incident ஆச்சுல்ல..

அப்பறோம் new year party அன்னிக்கு…”

“ஹான்.. நடக்க தான் செய்யும்னா, நடந்துக்கிட்டே தான் இருக்கும்.. ஹல்லோ.. ஹல்லோ.. அதான்……. நடக்க தான் செய்யும்னா, நடந்துக்கிட்டே தான் இருக்கும்.. நாம தான் change பண்ணனும்.. ச்சும்மா, அத விட்டுட்டு இப்டி தான் இருக்கும்ன்னா அப்டியே இருந்துட வேண்டியது தான்.. ”

“See நான் பெண்ணியம் லாம் பேச வரல.. உங்க atrocity தல தூக்குறப்போ, ஒரு மிடில் பாயிண்ட் நோக்கி நாங்க கூச்சல் போடறோம்.. அவ்ளோ தான்”

“ஆமாமாம்.. இல்லைனா தான் அமுக்கி டம்மி ஆக்கிடுவீங்களே.. ஹல்லோ.. ஹல்லோ.. டம்மி டம்மி.. டம்மி ஆக்கிடுவீங்க.. வீட்ல எங்க அம்மா உட்கார்ந்துருக்குற மாதிரி.. ”

“See சண்டை எல்லாம் போடல.. இந்த நேரத்துல நாம ஏதாவது சண்டை போட்டா அதுவே சாக்கா போயிடும் எங்க வீட்டுக்கு..”

“ஹ்ம்ம்.. பாப்போம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சா சரி.. வர ஏப்ரல் மாசம் 26 ஆக போகுது.. அக்கா வேற வரா அந்த டைம் ல ஊர்லேர்ந்து..”

“அவளும் பாவம் தான்.. மாசத்துக்கு ஒரு தடவ அவங்க வீட்லேர்ந்து வந்து உட்கார்ந்துடறாங்க.. இவை ஒரு வேல சமைக்கர்தே பெருசு.. இவங்க வர்ற அன்னிக்கு மட்டும் சீக்கிரம் எழுந்து மதியானதுக்கும் சேத்து சமைச்சாகனும்.. ஏதோ project deadline வேற நெருங்குதுனு சொல்லிட்டு இருந்தா.. ”

“See girls know how to handle .. எந்த விஷயமானாலும்.. பசங்க தான் தாம் தூம்னு குதிப்பீங்க.. ”

“சரி சொல்லல.. போதுமா.. ”

“ஹலோ.. ஹலோ..”

“ஹம்ம்ம்.. அப்புறம்..”

“யாரு.. என்ன சொன்னா..? ”

“உன் team mate ஆ ?”

“ஓ.. அவனா.. சரி சரி.. ”

“See , வரதட்ஷன வாங்குறது ரொம்ப தப்பு தான்.. correct , பொண்ணுங்க வீட்லயும் பையனோட சம்பாத்தியம், வீடு இருக்கானு கேட்குறது எல்லாம் கூடாது.. ”

“கவலை படாத, என் அப்பா உன் கிட்ட அதெல்லாம் கேட்க மாட்டார்..”

“ஓ.. பொண்ண கொடுத்தா மட்டும் போதுமா.. ஷப்பா, அசடு வழியுது தொடச்சுக்கோ.. ”

“ஆமாம் உனக்கு தெரியுமா, இவ இருக்கால….. அஅஅ… அவ பேரென்ன.. ம்ப்ச்… correct ஆ ஞாபகம் வர மாட்டேங்குது.. ”

……

“ஹான், ஹிருதயா.. அவ வேற ஒருத்தனோட சுத்தறாளாம் இப்போ.. நான் shock ஆயிட்டேன் கேட்டு.. ”

“இல்ல.. ஆனா முதல்ல லவ் பண்ணவனையும் புடிச்சுருக்காம்.. எப்படி டி னு இருந்தது.. ”

“இல்ல.. அவ அதுக்கு சொன்ன reason கேட்டா உனக்கு கோபம் வரும்.. என்ன சொல்றானா, அதாவது பசங்களுக்கு மட்டும் எக்க சக்க பொண்ணுங்கள புடிக்கலாம், கல்யாணம் பண்ணிக்கலாம், சின்ன வீடு வெச்சுக்கிட்டு, ரெண்டு குடும்பத்தையும் ஒரே அன்போட பாத்துக்கலாம்.. நாங்க பண்ணிக்க கூடாதான்னு கேட்குறாளாம்.. Oh my god னு ஆயிடுச்சு.. ”

“See , in a way she is correct ல.. எல்லாருக்கும் அவங்க எதிர் பார்க்குறது ஒரே ஆள் கிட்ட இருக்காதுல.. ”

“ஹ்ம்ம்.. சரி விடு.. இதெல்லாம் இப்போ யோசிக்கிற அளவுக்கு எனக்கு இப்போ தெம்பு இல்ல.. நாளைக்கு அந்த code அ முடிச்சு தொலையனும்.. இல்லைனா manager கத்துவான்.. ”

“ஹான்.. colleague ஒருத்தர் தான் நாளைக்கு office லேர்ந்து கூட்டிட்டு போறேன் னு சொல்லிருக்காரு..”

“ஹ்ம்ம்… சரி நான் தூங்க போறேன்.. பாப்போம்.. கொஞ்சம் வயித்த வேற வலிக்குது..”

“இல்ல இல்ல.. அது இல்ல இப்போ.. கொஞ்சம் நிறைய சாப்டாச்சு இன்னிக்கு.. ”

“ஓஹோ.. அந்த டைம் ல hysteria வந்த மாதிரி கத்துவோமா.. யாரு சொல்றா உனக்கிதெல்லாம்.. Phone அ வெய்யு முதல்ல..”

“பின்ன.. ச்சும்மா லூசு தனமா உளறுனா அப்டி தான்..”

“உஊம்.. எல்லாத்துக்கும் பின்னாடி இந்த வார்த்தையை சேர்த்தா சரியா போச்சுல.. ”

“சரி நான் தூங்கறேன்.. இல்லைனா நாளைக்கு full day tired ஆ போகும்.. எங்க அப்பா வேற காலைல 4 மணிலேர்ந்தே call பண்ணி வீட்டுக்கு போயிட்டியா னு கேட்க ஆரம்பிச்சுடுவாரு..”

“ஓக்கே.. பாப்போம்.. bye .. good night ..”

*************************************************************************************************************************************

“என்னடா பெங்களூர் போயாச்சா?”

“இப்போ தான் silk board ஆ?”

“சரி சரி.. அடுத்தது என்ன.. 500 c பஸ் தான ? சரி வீட்டுக்கு போயிட்டு Watsapp ல message அனுப்பிடு.. பயங்கர குளூர் இருக்குமே.. ஷால் எடுத்து வெச்சுருக்கல?”

“சரி டா.. thank you .. thank you .. thank you …”

*************************************************************************************************************************************

“ராமநாதன் தான் பேசுறன்..”

” யோவ் நீயா.. ஹ்ம்ம்.. இன்னிக்கு எப்படி.. சரியா வந்துடுமா..?”

“நேத்து பொண்ணு வந்துருந்தா ஊர்லேர்ந்து.. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்.. போன தடவ தான் சொத்தையா ஒன்னு கொடுத்து ஏமாத்திடீங்க.. ”

“ஆமாம்.. சொல்லுவீரு இப்டி தான்.. ஆனா ஒன்னும் இருக்காது.. சரி……. எத்தனை வயசு..?

“ஹம்ம்ம்ம்ம்ம்…… சரி எந்த லாட்ஜ்?”

“அதே தானா.. ? சரி வந்துடறேன்.. சரக்கு வேணாம்.. night வீட்டுக்கு போனும், பொண்டாட்டி கத்துவா வாசம் வந்துதுன்னா.. ”

“சரி விடு.. 8 மணிக்கு வர சொல்லு.. Bank key என் கிட்ட தான் இருக்கு.. So நான் வர கொஞ்சம் லேட்டாகும், காய் கரி எல்லாம் வாங்கிட்டு..”

“மறுபடியும் கேட்குறேன்.. இது fresh தான?…”

“சரி போ.. பாப்போம்….. ஹ்ம்ம்ம்….”

“ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்.. அ அ அ அ அ……. நமக்கு வேண்டாத பயன் ஒருத்தன் இருக்கான் பெங்களூர்ல…… கொஞ்சம் கவனிக்கணுமே”

••••

தொண்டூர் சமண மலைப்பள்ளி / ஸ்ரீதரன் ( புதுச்சேரி )

download (37)

பன்னாட்டு பள்ளி ,மத்திய பள்ளி .மாநில பள்ளி . மெட்ரிக் பள்ளி ,மாண்டிசரி பள்ளி என்று பல ரக பள்ளிகள் இன்று . ஒரு 60 ஆண்டுக்கு முன்னர் வரை திண்ணை பள்ளி முறை வழக்கில் இருந்தது . ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை மலைகளில் தான் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்திருக்கின்றது .அப்படி என்றால் அந்த மலைகளில் உபாத்தியாயர் எனப்படும் ஆசிரியர்கள் எங்கிருந்து வந்து பாடம் நடத்தினார்கள் ?மாணவர்கள் எங்கிருந்து போய் பயின்றார்கள் ?

புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீதரன் மிக்க ஆர்வத்துடன் மலைப்பள்ளிகள் குறித்து நம்மிடம் பேசினார் .அச்சக முகமை தொழில் செய்யும் 54 வயதாகும் இவர் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான மலைப்பள்ளிகளை பார்வையிட்டு இருக்கிறார் .

”கல் குவியலாகவும் ,பாறைகளாகவும் ,கனிமவள கொண்டவையாகவும் விளங்கும் இயற்கையான மலைகள் தமிழகத்தின் தொன்மை கல்வி நிறுவனங்களாக சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தும் அறப்பள்ளிகளாக விளங்கி இருக்கின்றன .
ஓர் அறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதர் வரை உள்ள உயிர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என வாழும் நெறி புகட்டிய முற்றும் துறந்த சமண துறவிகள் இப்பள்ளிகளில் ஆசிரியப்பணி ஆற்றி உள்ளனர் .கணிதம் ,வானியல் ,விஞ்ஞானம் ,உயிர் ஞானம்,மொழியறிவு ,மருத்துவம் என வாழ்வின் பல துறைகளும் இங்கே பயிற்றுவிக்கப்பட்டுள்ளன .
தூய துறவியர்கள் கல்வியுடன் மருத்துவ சேவையும் புரிந்துள்ளனர் .உணவு தானம் ,புகலிட தானம் முதலியவையும் அவர்களால் கொடுக்கப்பட்டு உள்ளது .
மிக பிரதானமாக வாழும் நெறிகள் குறித்து அவர்கள் மாணாக்கர்களுக்கு போதித்து உள்ளனர் .
துறவிகள் கல்வி போதித்த இடங்கள் பள்ளிகூடம் என்றும் – அவர்கள் மலைகளில் கல்படுக்கை மீது உறங்கிய இடங்கள் பள்ளியறை என்றும் — அவர்கள் வழிபாடு நடத்திய இடம் பள்ளிவாசல் என்று பின்னாளில் பெயர்கள் உருவாக அடிப்படை காரணமாயின .

கடும் பனி , அனல் கக்கும் வெப்பம் என அனைத்து நிலைகளுக்கும் பொருத்தமானதாய் சமசீரான தட்பவெப்ப நிலை கொண்டதாய் இந்த மலைப்பள்ளிகள் விளங்குகின்றன .தமிழகத்தில் மலைகளிலும் இயற்கையாய் அமைந்த குன்றுகளிலும் 50க்கும் கூடுதலான மலைகளில் இன்றைக்கும் அறப்பள்ளிகளுக்கான சான்றுகள் உள்ளன .

தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதற்கு இன்றும் அதன் பழமையை உணர்த்தும் தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களே பெரும் காரணமாய் உள்ளன .இந்த தமிழி எழுத்துகள் 1700 ஆண்டுகள் முதல் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை . தமிழ் எழுத்துகளின் தொடக்கத்தை காட்டும் இந்த அரிய கல்வெட்டு எழுத்துகள் சமண துறவியர்கள் நடத்திய அறப்பள்ளிகளிலேயே அதிகமாய் காண கிடைப்பதாக தொல்லியல் அறிஞர்கள் ஆவணங்களை பகிர்கின்றனர் .

மிகுந்த அமைதி சூழலை கொண்ட மலைப்பள்ளிகள் துறவியர்கள் தவம் நோற்க ஏற்ற சூழலை அளித்ததை இன்றைக்கும் அந்த மலைகளில் சிறிது நேரம் தங்கினால் நாமும் அறியலாம் .

மதுரையை சுற்றிலும் உள்ள இந்த மலைகளில்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சங்கங்கள் செயல்பட்டதை வரலாறு நமக்கு தெரிவிக்கறது .எண்பெருங்குன்றங்கள் என மலைப்பள்ளிகள் மதுரையில் செயல்பட்டுள்ள இடங்கள் இன்றும் மாறாத ஆவணங்களாக உள்ளன .யானைமலை ,கொங்கர்புளியங்குளம் ,திருப்பரங்குன்றம் ,அழகர்மலை,திருவாதவூர் ,அரிட்டாபட்டி ,சமணர்மலை போன்ற இந்த மலைப்பள்ளிகளில் சான்றுகள் பல இன்றும் பசுமை நடைபோன்ற அமைப்பின் முயற்சியால் நல்ல விழிப்புணர்வை பெற்று வருகிறது .

மன்னர்கள் தானம் அளித்த செய்திகள் , துறவியர்க்கு உறைவிடம் கல்படுக்கை செய்து கொடுத்த செய்திகள் ,வடக்கிருத்தல் எனப்படும் உண்ணாநோன்பு செய்திகள்,அறப்பள்ளி ஆசிரியர் மாணாக்கர் குறித்த செய்திகள் கல்வெட்டுகளில் இன்றும் தடயங்களாக உள்ளன .
மூலிகை அரைக்க துறவியர் பயன்படுத்திய மருந்துகுழிகள்,பள்ளி நடத்திய கட்டிட எச்சங்கள் ,துறவியர் உறைவதற்கு பயன்படுத்திய கற்படுக்கைகள் , அவர்கள் மலை மீதேற சிறியபடிகள் என இன்னும் அழியா சான்றுகளை சமண சான்றுடைய மலைகள் இன்றும் பறைசாற்றுகின்றன .

அயல்நாட்டவர் படையெடுப்பிலும் பல நூறு ஆண்டுகளாக அழியாமல் தன் இயல்போடு விளங்கிய இந்த மலைப்பள்ளிகள் தற்போது சிறிது சிறிதாக அழிய தொடங்கி வருகின்றன .ஆயில் பெயிண்ட் ,பிரஷ் மட்டுமின்றி உளி ,சுத்தியல் போன்ற ஆயுதங்களையும் தாங்கி மலையேறி சென்று தொன்மையான கல்வெட்டின் அருகிலேயே தங்கள் பெயருடன் காதலர் பெயர், காதல் குறியீடு என பல வழிகளில் அறிந்தும் அறியாமலும் தொன்மையை இல்லாமல் ஆக்கி விடுகின்றனர் . இன்னும் பல மலைகள் சாலைகளில் போடப்படும் சரளை கற்கள் தொடங்கி க்ரானைட் கற்கள் என பணம் தரும் கற்பகவிருட்சமாய் கபளீகரம் செய்யப்படுகின்றன .மது அருந்துவோர்க்கு இயற்கையாய் அமைந்த குகை பள்ளிகள் இன்று மதுபான கூடமாய் சமூக விரோதங்களை அரங்கேற்றிடும் நிலையமாய் மாறி வருகின்றன.தமிழகம் முழுக்க இன்னமும் தொன்மை சின்னங்கள் என்று அறிவிப்பு கூட செய்யப்படாத நிலையில் 30க்கும் கூடுதலான மலைப்பள்ளிகள் உள்ளன .பல மலைகள் மத்திய மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பராமரிப்போ பாதுகாப்போ இன்றியும் உள்ளன .இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலை .எந்த துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என மலையை சுற்றி ஐந்து இடங்களில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகைகளே அடியோடு வெட்டப்பட்டு குஜிலி கடைக்கு செல்லும் அவலமும் ஒரு பக்கம் ..

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிதறாலில் திருச்சாரணத்து மலை தொடங்கி ,கழுகுமலை ,திருமூர்த்திமலை ,திருச்செங்கோட்டுமலை , சித்தன்னவாசல் ,நார்த்தாமலை ,திருச்சி மலைக்கோட்டை ,திருமலை, ,வள்ளிமலை என அறம் உரைத்த மலைகள் தமிழகம் முழுதும் பரவியிருக்கின்றன.தமிழ்வளர்ச்சி துறையும் .தொல்லியல் துறையும் இந்த தொன்மைமிக்க தமிழர் பண்பாட்டின் அடையாளங்களை பாதுகாக்க முனைய வேண்டும் . . .

இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளவும் ,அந்த இடங்களை சுத்தம் செய்யவும் ,மலை சார்ந்த ஊர் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கவும் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று அகிம்சை நடை என்கிற அமைப்பின் மூலம் விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம் .2014 ஜனவரியில் தொடங்கி 38 மாதங்களில் 60க்கும் கூடுதலான இடங்களில் நிகழ்வுகளை நடத்தி உள்ளோம் .

இத்தகைய மலைப்பள்ளிகள் மானிடருக்கு ஐந்து விதமான வாழ்வியல் நெறிகளை விளக்கி கூறின .இம்சை செய்யாமை ,களவு செய்யாமை ,பொய் சொல்லாமை ,பிறன்மனை விழையாமை ,மிகு பொருள் விரும்பாமை என்ற ஐந்து நெறிகளோடு வாழும் போது வாழ்க்கையில் இடர்களை குறைத்து கொள்ள முடியும் என துறவியர் வழிகாட்டினர் . அறம் உரைத்த இந்த மலைப்பள்ளிகள் தமிழர் நாகரீகத்தின் எச்சங்கள். இந்த பண்பாடு சின்னங்களை பாதுகாப்பது மனித மனங்களுக்குள் அமைதியை உருவாக்க வழிகாட்டும் என்பது உறுதி”

———————————————————————————————————-

அய்யா , வணக்கம் .தமிழக அளவில் 20 க்கும் கூடுதலான மாவட்டங்களில் 1500 முதல் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் நாகரீகத்தின் எச்சங்களாக உள்ள மலை பள்ளிகள் — அங்கு உறைந்த சமண துறவிகள் குறித்து கட்டுரை அனுப்பி உள்ளேன் . ஆய்வு செய்து வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன் .
••••

கிருஷ்ண புஷ்கரம் ( சிறுகதை ) நர்மதா குப்புசாமி

14925395_946559818813950_5262247892014269441_n

images (12)

அநேகமாக அமரக்கூடிய எல்லா சாத்தியங்களையும் கும்பல் ஆக்ரமித்திருக்க அந்த இரண்டு பெண்களும் நின்று கொண்டு வரவிருக்கும் கிருஷ்ணா விரைவு இரயிலின் வரவை சோர்வுடன் எதிர்பார்த்தபடி இரயில்வே ஜங்ஷனில் காத்திருந்தனர். அவர்கள் தங்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளாமல் மௌனமாக இருந்தனர். யாரோ ஒரு பயணியின் கையிலிருந்த ரொட்டிகளை கவர்ந்து சென்று உச்சாணியில் உட்கார்ந்து தின்று கொண்டிருந்த குரங்கு குட்டியைப் பார்த்தாள் அந்த இரு பெண்களில் மூத்தவள். அவளுக்குச் சிரிப்பு வந்தது. எத்தனை லாவகம் பார் இந்தக் குரங்குகளுக்கு ? இரயில் வருகின்ற நேரம் நெருங்க நெருங்க இருவரிடமும் பதற்றம் காணப்பட்டது. அவர்கள் தனியாகச் செல்வதில் அவர்களுடைய அம்மாவிற்கு துளியும் இஷ்டமில்லை. ஆனால் வேறு வழியில்லை. சரஸ் போய்த்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்து விட்டாள். அவள் இளையவள், அக்கா வேதாவை முன்னிட்டுதான் இந்தப் பயணமே. அக்காவைத் திரும்பிப் பார்த்தாள் சரஸ். அவள் எந்தச் சலனமும் இல்லாமல் வெற்று இருப்புப்பாதையை வெறித்துக் கொண்டிருந்தாள். ஏனோ இரயில் இல்லாத இருப்புப்பாதை சரஸுக்கு அத்தனை சோகத்தைத் தந்தது. அவளுக்கு சங்கரின் நினைவு வந்தது.அவள் தனது செல்பேசியை இரகசியமாக எடுத்துப் பார்த்தாள். திரையின் வெளிச்சத்தை எவ்வளவு குறைவாக வைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துதான் வைத்திருந்தாள், எனினும் அநிச்சையாக வேதா தலையைத் திருப்பிப் பார்த்தாள். வேதாவிற்கு சாடைமாடையாக சங்கர் விஷயம் தெரிந்துவிட்டிருக்கிறது. ‘யாரு சரஸ் உன்ன டி போட்டு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பியிருக்குறது? ‘ என்றாள் ஒருநாள். சரஸ் தன்னுடன் வேலை பார்ப்பவர் வெறும் நண்பர் என்று சொல்லி சமாளித்தாள். இன்னொருமுறை சரஸ் குளித்துக் கொண்டிருந்தபோது வந்த அழைப்பை வேதா எடுத்துவிட்டாள். சங்கர் உற்சாகம் ததும்ப ‘ ஸ்ஸ்ஸ்ரஸ் ‘ எனச் சொல்ல, வேதா ‘ யாரு நீங்க? என்றிருக்கிறாள் கறாரான குரலில். சங்கர் சரஸிடம் எகிறினான். ஃபோனை வெச்சிட்டு எங்கடி போன ? இந்தச் சங்கடத்தைத் தவிர்க்கவே எந்நேரமும் செல்பேசியை சைலன்ட் நிலையிலேயே வைக்க நேர்ந்தது. இப்போது கூட சங்கடமாக உணர்ந்தாள். சங்கர்தான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அவனுக்கு இந்தப் பயணம் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. பெண்கள் மட்டும் தனியாக வேறு ஒரு மாநிலத்திற்கு அதுவும் இலட்சோபஇலட்ச மக்கள் திரளாக சங்கமிக்கும் ஒரு விழாவிற்கு நெரிசலில் கலந்து இடிபட்டு, மிதிபட்டு…..அப்படியென்ன இது முக்கியம்? என்பது அவன் வாதம்.

‘ இப்போ இந்தத் திருவிழாக்கு நீ போய்த்தான் ஆகனுமா? அதுவும் ரெண்டு பொம்பளங்க தனியா ? ‘ என்றான் சங்கர்.

‘ அதென்ன பொம்பளைங்க தனியா போகக் கூடாதா? விஜயவாடா போனதும்தான் ராஜூ வந்துடுவானே. இந்த புஷ்கரம் போகனும்னு தோணுது. எல்லாமே ஒரு நம்பிக்கைதானடா , இந்தமுறை அந்த கணகதுர்கா கண் திறப்பா, சின்ன குழந்தையிலிருந்து அவள கும்பிட்டு வளந்தவங்க நாங்க ‘ என்றாள் சரஸ். ‘

‘ நான் கூடவரட்டுமான்னா வேனாங்குற ‘

‘ வேதா என்ன நினைச்சுப்பா, வீட்டுக்கு வேற தெரிஞ்சுடும், இப்ப இருக்குற நிலைமைல இந்த பிரச்சனை வேறயா ? ‘

‘ எனக்குப் பிடிக்கல ‘

‘ ………………….. ‘

சரஸ் பிடிவாதமாக அவன் பேச்சை புறக்கணித்திருந்தாள். இப்போது அது தொடர்பாகதான் அவர்களுள் சண்டை நடந்து கொண்டிருந்தது. சரஸுக்கும் சங்கருக்கும் இந்த மூன்று மாதங்களாக சண்டை வருவது அதிகரித்திருந்தது. வாக்குவாதம், கடைசியாக அவன் புறப்படுமுன் ‘ தோ பாரு இனிமேயும் வெயிட் பண்ணமுடியாது. நீ உங்க வீட்டுல சொல்லிடு, ஒத்துக்கலன்னா வீட்ட விட்டு வந்துடு‘ , சங்கர் கத்தினான். கடந்த மூன்று மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் உச்சக்கட்டம். வேதாவின் கல்யாணத்திற்கு முன்னால் சரஸ்வதியால் ஒருபோதும் அப்படிச் செய்யமுடியாது. சங்கரை இந்த ஒரு வருடமாத்தான் தெரியும். வேதா உடன்பிறந்தவள். அவளுக்கு ஒரு வழிபண்ணாமல் திடுதிப்பென்று வரமுடியுமா?

‘ லூசு மாரி பேசதடா. அப்படில்லாம் என்னால செய்யமுடியாது. முதல்ல அக்காக்கு முடியனும். ‘ என்றாள் சரஸ்வதி.

‘ சரஸ் . ஒரு வருஷமா நீயும் இதேயேதான் சொல்ற. அக்காக்கு எப்ப முடியறது நம்ம விஷயத்தை எப்ப சொல்றது ?

‘ நீ இப்டியே பேசிட்டு இரு நா வரேன். ‘

சரஸ்வதி வளாகத்தைவிட்டு விடுவிடுவென்று வெளியேறினாள். சங்கர் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

ஆடி மாதம் துவங்கியவுடன் கிருஷ்ண புஷ்கரத்தைப் பற்றி பேச்சை முதலில் ஆரம்பித்தது சரஸின் அம்மாதான். இரயில்வேயில் வேலையாயிருந்த சரஸின் அப்பா நீண்டகாலம் பணியில் இருந்த இடம் விஜயவாடாதான். அவள் மனதால் இன்னமும் அங்கேயேதான் வாழ்ந்தாள். சரஸ், வேதா எல்லாம் பிறந்தது கூட அங்குதான். விஜயவாடா கிருஷ்ணாவின் தீரத்தில் அமைந்திருந்ததால் அதன் சம்பிரதாயங்கள் சரஸின் குடும்பத்துக்கு மிக நெருக்கமானதாக மாறிவிட்டிருந்தது. சரஸுக்கு இப்போதும் தமிழ் வேகமாக படிக்கத்தெரியாது, வேதாவுக்கு சுத்தமாக ஒரு அக்ஷரம் கூட தெரியாது. அவள் சென்னையில் வேலைபார்த்த போதுகூட தமிழ் தேவைபடவில்லை, எல்லாமே ஆங்கிலம்தான்… அப்பா ஓய்வு பெற்ற பின்னர்தான் தமிழ் நாட்டுக்கு வந்தார் அப்போது சரஸ் கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். இது போல் ஒரு மாநிலத்தில் வளர்ந்து படித்து, பிறகு வேறு மாநிலத்திற்கு வந்து அந்த வாழ்கையையும் , கலாச்சாரத்தையும் பழகுவது சிரமமாகத்தான் இருந்தது. அத்தோடு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வது, சாதிச்சான்றிதழ் பெறுவது எல்லாமே அதிசிரமமாகத்தான் இருந்தது. ‘ நாம விஜயவாடாவிலிருந்து வந்திருக்கவே கூடாது ‘ என்பாள் சரஸ் அடிக்கடி..

புஷ்கரத்துக்கு போய்வந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்று சரஸ் மனதில் பட்டவுடன் அப்பாவிடம் சொன்னாள், ‘இப்ப நிலத்த விட்டுட்டு என்னால வரமுடியாதே. நீ வேதாவோட போ, விஜயவாடாவுல எறங்கிவுடனே ராஜு வந்து கூட்டிட்டு போவான் ‘ என்றார் அப்பா. வெகுநாட்களாகவே வீட்டைவிட்டு எங்கும் செல்வதை அம்மா நிறுத்திவிட்டிருந்தாள். அவள், மூட்டுவலி, முதுகுவலி என்று நிரந்தர சீக்காளி. வீட்டு வேலைகளைக் கூட கடந்த இரண்டாண்டுகளாக அவள் செய்ய இயலவில்லை. சரஸின் அக்கா வேதா வாரநாட்களிலும், வாரஇறுதிகளில் சரஸும் பகிர்ந்து கொண்டனர். அப்படி வாரஇறுதியில் சரஸ் செய்யமுடியாமல் கூடுதல் வகுப்புகள் எடுக்க பள்ளியில் பணித்து விட்டால் வேதா எரிந்து விழுவாள். எப்பவும் நாந்தான் செய்யனுமா? அப்படியென்ன சனி ஞாயிறு கூட கிளாஸ் எடுக்கச் சொல்றது? என்று கத்துவாள். அவளது கோபம் நியாயமானதுதான் ஆனால் சரஸும் என்னதான் செய்வாள். வேதாவுக்கு என்னத் தெரியும் தனியார் பள்ளிகளின் நெருக்கடியைப் பற்றி. இப்போது புஷ்கருக்கு செல்வதற்கு லீவு கூட கொ‘டுக்கத் தயங்கினார் அவளது பள்ளி முதல்வர். ‘ ரிவிஷன் டைமாச்சே ‘ . என்றார். சரஸ் எப்படியோ சமாளித்துவிட்டு வந்தாள். எல்லாம் வேதாவுக்காகத்தான். ஆனால் வேதா இதிலெல்லாம் நம்பிக்கை இழந்து விட்டாளோ ?

போன மாதம் வேலு அண்ணாவிற்கு சங்கர் விஷயம் தெரிந்து விட்டது. பள்ளிக்கு செல்லும் வழியில் பைக்கை நிறுத்தி, ‘ குட்டிம்மா யாரவன் நேத்து பஸ் ஸ்டாண்டுல பேசிட்டு இருந்தியே. என்றபோது சரஸ் வெளிறிப்போனாள். ‘ என்கூட வேலை பார்க்கறவர் அண்ணா ‘ ‘ உனக்கு அடிக்கடி மெசேஜ் , ஃபோன் பன்றவன் இவன்தானா ? ‘ சரஸுக்கு படபடத்தது. வியர்வை வெள்ளமாக வடிய குழறிகுழறிப் பேசினாள். ‘ நான் அந்த சங்கரோட பேசனும். சாயிந்திரம் கூட்டிட்டு வா ‘ சொல்லிவிட்டு பைக்கை விரட்டி மறைந்தான். சரஸ் தீர்க்கமாக சங்கரிடம் சொன்னாள் , ‘ நீ வந்து அண்ணாவ பாத்து சொல்லு. மத்தத நான் பாத்துக்கறேன். ‘ அன்று அவளுடன் வேலை செய்யும் தோழிகள் சிலரை மாலை அண்ணாவுடன் பேச ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்திருந்தாள் சரஸ். அண்ணா கேட்ட முதல் கேளிவியே ‘நீங்க என்ன கம்யூனிட்டி ? ‘ சங்கர் ‘பி.சி ‘ என்றான். ‘ என்ன அப்ளிகேஷன்ல ஃபில் பண்ற மாதரி ? ‘ பிறகு சங்கர் தன் சாதிப்பெயரைச் சொன்னான். ‘ உங்க வீட்ல இந்த விஷயம் தெரியுமா ? ‘ என்றதற்கு சங்கர் ‘ சொல்லியிருக்கேன். அவங்க சரின்னுட்டாங்க ‘ என்றான். ‘ சம்பளம் என்ன வாங்கறீங்க? ‘ சங்கர், பள்ளிவருமானத்தைச் சொன்னதற்கு ‘ அது போதாதே ‘ என்றான். சரஸ் எல்லாக் கடவுளையும் வேண்டியபடி அதீத பதட்டத்தில் உட்கார்ந்திருந்தாள். சங்கர் சுருக்கமாக ‘ சம்பளம் மட்டுமில்ல சார் டியூஷன் சென்டர் நடத்துறதுல வேற வருமானம் உண்டு, நான் வீட்டுக்கு ஒரே பையன் சொந்தவீடு இருக்கு. உங்க பொண்ண காப்பத்தற திராணியிருக்கு ‘ என்றபோது அவன் குரல் நடுங்கியது. அண்ணா தெளிவாகச் சொன்னான் , ‘ இதப்பாருங்க, எங்க வேதாவுக்கு ஆகாம சரஸை கல்யாணம் பண்ணித் தர மாட்டோம். நா சித்தபாட்ட சொல்லி முடிக்கறேன். ஆனா அதுவரை அங்க இங்கன்னு பாத்து பேசறது வெளில போறது ஃபோன் பன்றதுன்னு எதும் இருக்கக் கூடாது. பொறுமையா இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்கு சரஸுன்னா உயிர். ( இதையே அவன் பலமுறை திருப்பித் திருப்பிச் சொன்னான் ) சின்ன வயசுல மார்மேல போட்ட வளத்தவன். அவ நல்லது கெட்டது எல்லாமே என் சம்மதத்தோடதான் நடக்கும். ‘ சங்கர் அமைதியாக , ‘ உங்க சம்மதம் இல்லாம நாங்க எதும் பண்ணமாட்டோம் ‘ என்று உறுதி சொன்னபிறகு முகஇறுக்கம் கொஞ்சம் தளர கைக்குலுக்கிக் கொண்டனர் இருவரும்.

கிருஷ்ண புஷ்கரத்தைப் பற்றி அம்மா ஞாபகப்படுத்தியதும் சரஸிற்கு அங்கு போய்வந்தால் வேதாவிற்கும் தனக்கும் ஒரு வழி பிறக்கக்கூடும் என்று தோன்றியது, சென்ற புஷ்கரம் நினைவுக்கு வந்தது. அது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு. கிருஷ்ண புஷ்கரம் பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை கிருஷ்ணா நதிதீரத்தில் நடைபெறும் திருவிழா. ஆடிமாதத்தில் விழா துவங்குவதற்கு பத்து தினங்களுக்கு முன்னரே கிருஷ்ணா நதிக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டாட்டத்தை பண்டிதர்கள் துவக்கி வைப்பார்கள். அன்றிலிருந்து தொடர்ந்து பத்து நாட்களுக்கு கிருஷ்ணா நதியின் படித்துறைகளில் பல்வேறு சடங்குகளும் பூஜைகளும் பிரார்த்தனைகளும் கோலாகலமாக நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலைமோதுவர். நதியின் படித்துறைகள் நிரம்பி வழியும். இந்திரகீல மலை விளக்கொளியில் ஒளிவீசும். கணகதுர்கா கிருஷ்ணை நதியை பார்த்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். எத்தனை ஆயிரம் பூஜைகள் , வேண்டுதல்கள், பிராயசித்தங்கள், சிரார்த்தாங்கள். வேதா சென்ற புஷ்கரத்தின் போது பதின்ம வயதில் இருந்தாள். சரஸ் சிறுமி. அவளது அம்மா அப்போது சற்று இளமையாகவும் செயலாகவும் இருந்த காலம். அவள் உற்சாகமாக கட்டுசாதம் செய்து எடுத்து வந்திருந்தாள். அவர்களைப் போலவே பிரார்த்தனைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முந்தினர். இந்திரகீல மலைமேல் இருக்கும் கனகதுர்க்கை அம்மனை அதிகாலை தரிசித்துவிட்டு நதியில் முழுக்குபோட ஜனங்கள் முண்டியடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முயற்சியில்லாமலேயே தன்னிச்சையாக நீருக்குள் இழுத்துவரப்பட்ட சகோதரிகள் இருவரும் கைகளைக் கோர்த்தபடி நீருக்குள் மூன்றுமுறை முழுகியெழுந்தனர்.

‘ முத முக்கு துர்க்கைக்கு ‘

‘ ரெண்டாம் முக்கு கிருஷ்ணனுக்கு ‘

‘ மூணாம் முக்கு எனக்கு ‘

சரஸ் உரக்கக் கத்தினாள். அப்போது அவள் வேண்டுதலின் எந்த அவசியமும் தெரியாத சிறுமி. இப்போது அப்படியில்லை . எத்தனை கவலைகள்.

இதோ பனிரெண்டு வருடங்கள் கடந்து விட்டன. விஜயவாடாவிலிருந்து வந்தவுடன் வேதா சிலவருடங்கள் சென்னையில் வேலையாயிருந்தாள். அவள் எம்.பி.ஏ முடித்திருந்தாள். பெரிய நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவளது ஆங்கில உச்சரிப்பு நிகரற்றது. திறமையான பெண் எனவே உடனடியாக அவளை விடுவிக்க நிறுவனம் ஒப்பவில்லை. ஒருவருடம் பொறுத்து பெங்களூருக்கு மாற்றலானாள். சிலவருடங்கள் அங்கேயே பணியாற்றினாள்.. எத்தனை திறமைகள் இருந்தாலும் என்ன ?அதற்கும் கல்யாணத்திற்கும் என்ன தொடர்பு ? இப்போது இரண்டாண்டுகளாய் அவள் இந்தச் சிறு நகரத்திலேயே முடங்கிக் கிடக்கிறாள். மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தவுடன் அவள் சென்னையில் வேலையாயிருந்தது ஒரு தடங்கலாக இருந்தது கூடவே அம்மாவுக்கு முடியாததாலும் வேதா வேலையை விட வேண்டியிருந்தது. அவள் பண்ணாட்டு நிறுவனத்தில் வேலையாயிருந்தாள் இந்தச் சிற்றூரில் பள்ளி ஆசிரியை வேலைமட்டும்தான் கிடைக்கும் எனவே அவள் வீட்டிலேயேதான் இருந்தாள். வைத்தியமூர்த்திக்கு வம்சவழியாக வந்த ஏக்கர் கணக்கான விளைநிலங்களில் அரிசியும், நிலக்கடலையும், சோளமும் போகம் போகமாக விளைந்தது. வீட்டில் ஒரு ஆளில்லாமல் அவற்றை பரிபாலனம் செய்ய முடியாது. எனவே வேதா அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சரஸ் ஆசிரியை பயிற்சி முடித்தாள். தனியார் பள்ளியில் வேலை தேடிக்கொண்டாள். சிலபல பள்ளிகளில் மாறிமாறி இப்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்தாள். இங்குதான் சங்கர் அறிமுகமானது. ‘ உங்க வீட்ல ஒத்துப்பாங்களாடி ? ‘ சங்கர் அடிக்கடி சந்தேகத்துடன் கேட்கும் கேள்வி. அப்போதெல்லாம் சரஸ் சொல்லும் பதில், ‘ வேதாக்கு நிச்சயமாவட்டும். அப்பாக்கிட்ட நேக்கா விஷயத்து சொல்லி பர்மிஷன் வாங்கறேன். ‘ ‘வேதாவுக்கு திருமணம் நிச்சயமாவதில்தான் எத்தனை தடங்கல்கள். தோஷ பரிகாரம், கூட என்று செய்தாகிவிட்டது. பெண்பார்க்க வருபவர்கள் முன் வேதா பொறுமையாக பட்டுசேலை உடுத்தி பூவைத்து தலைகுனிந்து நின்ற போது ஒன்றும் குறையில்லை. ஆனாலும் எங்கேயோ இருந்தது. அது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இரண்டு மூன்று இடங்கள் தட்டிப் போனபின் வரனை வீட்டிற்கு வரவழைப்பதைத் தவிர்த்தனர். புகைப்படத்தை ஈமெயிலிலோ வாட்சப்பிலோ அனுப்புவதோடு நிறுத்திக் கொண்டனர்.வேலு அண்ணா கூட தேடாத இடமில்லை. எதுவும் திகையவில்லை.

அவளது வயதுடைய உறவுக்காரிகள் , சிநேகிதிகள் எல்லோரும் இப்போது பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு தாயாகியிருந்தார்கள். கணவருடன் விசேஷங்களுக்கு வந்துபோயினர். வேதா அவர்களிடம் சகஜமாக பேசினாலும் ஒரு விலகல் இருந்து கொண்டுதான் இருந்தது. நுட்பமான ஓர் விலகல். அவர்களை கூடுமானவரை தவிர்ப்பதில் குறியாக இருப்பாள். நீண்டகாலம் தொடர்பில் இல்லாதத் தோழிகளை காண்பதில் தயக்கம் காட்டினாள். எடுத்தஎடுப்பிலேயே அவர்களது கேள்விகள் அவளது திருமணத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும். உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதை எப்போதோ நிறுத்தியிருந்தாள்.. எதிர்பாராமல் அவர்களைச் சந்திக்கும் தருணங்களில் வேதா சலனமற்று முகத்தை வைத்துக்கொள்வாள். என்றாலும் அவளுடைய பதற்றத்தை சரஸ் அறிவாள்.

இப்போதுகூட வேதா அப்படிப்பட்ட பதற்றத்தில்தான் இருந்ததாகத் தோன்றியது. முன்பதிவு செய்த பூகியைத் தேடி இருக்கை எண்ணை பார்த்து உட்கார்ந்த பிறகும் அவளுடைய பதற்றம் தொடர்ந்ததைக் கவனித்தாள் சரஸ். இடையில் சங்கரின் குறுஞ்செய்திகள் வேறு. அடிக்கடி அவள் செல்பேசி உபயோகிப்பதை வேதா கவனியாதது போல் இருந்தாலும் அவள் கவனித்திருப்பாள். அதைத் தவிர்க்கத்தான் சரஸ் அதிகம் சங்கருக்கு பதில் செய்தி அனுப்பாமல் தவிர்ப்பது. சங்கர் அதைப் புரிந்து கொள்வதில்லை. கோபம் தலைக்கேறும் அவனுக்கு. இடையில் சரஸ் மாட்டிக்கொள்வாள். இரயிலின் தாளலயம் அவர்களிடையே இருந்த இறுக்கத்தை தளர்த்துவதாக இருந்தது. முதல்முதலாக நீண்ட மௌனத்தைக்கலைத்து

வேதா, ‘ சரஸ் விடிகாலமே விஜயவாடா சேர்ந்திடுவோம் இல்ல,‘ என்றாள்

அவள் குரலில் அசாதாரணமான தெளிவு முதன்முதலாகத் தென்பட்டது. சரஸுக்கே ஆச்சரியமாக இருந்தது அவள் முகத்தில் பழைய அழகு மிச்சமிருந்தது . கண்களில்தான் சற்று ஒளி குன்றியது போல தோன்றியது. அவளது பதின்வயதுத் தோற்றம் சரஸுக்கு நினைவிலிருக்கிறது, எத்தனை அழகாயிருபபாள்..

‘ ஆமா வேதா, விஜயவாடாவை விட்டு நாம இப்பத்தான் வந்த மாதிரி இருக்கு. ஹும் எத்தன வருஷம் ஓடிடுச்சில்ல ‘ சொல்லிவிட்டு அசூயையாக உணர்ந்தாள். வருஷத்தை நினைவூட்டி இருக்கவேண்டாமே என்று தோன்றியது. வேதா சன்னல் வழியே பார்த்துக்கொண்டே சொன்னாள்,

‘ ஆமா வருஷம் ஓடிடுச்சு, நாந்தான் நின்னுட்டேன். ‘ எதுக்காக இப்ப இந்த புஷ்கரத்துக்கு போகனும்னு பிடிவாதம் பிடிச்ச சரஸ் ? ‘ சலிப்பாகக் கேட்டாள்.

‘ ப்ச். என்னா நீ மறுபடி முதல்லேந்து கேக்கற ? வேண்டுதலைக்குதான் வேதா ‘

‘ என்னால உன் கல்யாணமும் லேட்டாகுதுல்ல சரஸ். ‘

சரஸுக்கு மூச்சடைத்தது. ‘ அதுக்கென்ன இப்ப..‘

‘ நீ சொல்லாம இருந்தா எனக்குத் தெரியாதா? ‘

சரஸ் பதற்றமடைந்தாள். இயல்பாக இருப்பது போல பாவனை செய்தாள். வேலு அண்ணா ஏதேனும் சொல்லியிருப்பானோ ? இவளுக்கு மட்டுமா வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டிருக்குமா ?வேதா மேலும் சொன்னாள், ‘ சரஸ் நான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் இதுவர ஷேர் பண்ணிட்டுதான இருக்கேன். ஆனா நீ என்ன அப்டி நினைக்கல. இல்லாட்டா சங்கர் விஷயத்த என்கிட்டருந்து மறைச்சிருப்பியா ? ஆனா வேலு அண்ணா சொன்னான். ( அடப் பாவி ) ஆனா உனக்கு இந்த இடம் தோது படுமான்னு யோசிச்சியா ? அவங்க சாதி வேற. பழக்கவழக்கம் எல்லாம் மாறும். கறிமீன் திங்காம உன்னால இருக்குமுடியுமா குட்டி?

‘ பழகிக்க வேண்டியதுதான் ‘

‘ இப்ப அப்படித்தான் சொல்வ, அவன் வீடு, மனுஷாள் பழக்கவழக்கம்….‘

‘ அக்கா இதெல்லாம் மனசுலவச்சுகிட்டுதான் வீட்ல பூனையாட்டம் இருந்தியா ‘

‘ யாரு நீயா நானா ?

‘ …………………………….. ‘

‘தோ பாரு சரஸ். எனக்கு எப்ப ஆகுதோ ஆகட்டும். அதுக்காக நீ கவலப் படாத. ஆனா உன்ன நினைச்சா எனக்கு கவலையா இருக்கு. அவங்க வேற சாதி. கவர்மெண்ட் வேலையுமில்ல. நீ சந்தோஷமா இருக்கனும். அவ்ளவுதான். ‘

சரஸுக்கு சுருக்கென்றெது. ‘உனக்கு நல்ல இடத்துல முடியட்டும் முதல்ல அப்புறம் என் கதய பேசிக்கலாம்‘ என்ற போது அவளுக்கு தொண்டை அடைத்துக்கொள்ள கண்களில் நீர் முட்டியது.

‘ ப்ச். அப்படிச் சொல்லல. பிராக்டிக்கலா சொல்றேன். ‘

துர்க்கா நம்மள கைவிடமாட்டா. நீ மனசார வேண்டிக்கோ அக்கா ‘ என்றவாறு சரஸ், வேதாவின் கையைப் பற்றினாள். மெதுவாக கையை விடுவித்துக்கொண்டே வேதா அலுப்புடன் சொன்னாள்

‘ நா பனிரெண்டு வருடத்துக்கு முன்னால வந்த புஷ்கரத்திலேயும் இதைத்தான வேண்டிக்கிட்டேன் ‘

சரஸ் அக்காவிற்காக மனதிற்குள் துர்க்கையை பிரார்த்தித்தாள். எத்தனை தவிர்த்தும் தன் திருமணத்தைப் பற்றி எண்ணாமல் அவளால் பிரார்த்திக்க முடியவில்லை.

•••

காதல் பாடல் – ஜோசப் பிராட்ஸ்கி / தமிழில்: வே.நி.சூர்யா

download (38)

ஒருவேளை நீ மூழ்கிக் கொண்டிருந்தால் நான் உன்னை காப்பாற்றி என் போர்வையில் உன் தலையை துடைத்து ஒரு சூடான தேநீரை பருகத் தருவேன்.
ஒருவேளை நான் ஷெரிப் ஆகயிருந்தால் உனை கைது செய்து பூட்டும் சாவியும் உள்ள சிறையில் அடைப்பேன் .

ஒருவேளை நீ பறவையாக இருந்தால் நான் என் இசைத்தட்டை நிறுத்தி இரவெல்லாம் உன்னுயர்ந்த கீச்சுக்குரலை கேட்பேன்.
ஒருவேளை நான் ராணுவ அதிகாரியாக இருந்தால் உன்னை பணியமர்த்தி ஒரு பையனாக உறுதியளிப்பேன் நீ பயிற்சியை விரும்புவாய்.

ஒருவேளை நீ சீனாவை சேர்ந்தவளாக இருந்தால் நான் மொழியை கற்றுக்கொண்டு நறுமண தூபங்களை ஏராளமாய் எரிப்பேன், நகைப்பூட்டும் உடைகளை அணிவேன் .
ஒருவேளை நீ கண்ணாடியாக இருந்தால் மற்ற பெண்களை தாக்குவேன், என் சிவப்பு உதட்டுச்சாயத்தை தருவேன் மற்றும் உனது நாசியின் மீது பூசவும் செய்வேன்.
ஒருவேளை நீ எரிமலைகளை நேசித்தாயெனில் நான் தீக்குழம்பாக இருந்து அயராது என் மறைவிடத்திலிருந்து வெளிவருவேன்.
மேலும் ஒருவேளை நீ என் மனைவியாக இருந்தால் நான் உன் காதலனாக இருப்பேன்
ஏனெனில் தேவாலயம் உறுதியாக விவாகரத்திற்கு எதிரானது

Original:

LOVE SONG – Joseph Brodsky

If you were drowning, I’d come to the rescue,
wrap you in my blanket and pour hot tea.
If I were a sheriff, I’d arrest you
and keep you in the cell under lock and key.

If you were a bird, I ‘d cut a record
and listen all night long to your high-pitched trill.
If I were a sergeant, you’d be my recruit,
and boy i can assure you you’d love the drill.

If you were Chinese, I’d learn the languages,
burn a lot of incense, wear funny clothes.
If you were a mirror, I’d storm the Ladies,
give you my red lipstick and puff your nose.

If you loved volcanoes, I’d be lava
relentlessly erupting from my hidden source.
And if you were my wife, I’d be your lover
because the church is firmly against divorce.

மேற்கண்ட கவிதை So Forth தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது
ஆசிரியர் குறிப்பு:
ஜோசப் ப்ராட்ஸ்கி ரஷ்யாவில் 1940ல் பிறந்தார். அவர் தன்னுடைய பதின்ம வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். சுய சார்பற்ற தன்மை, காஸ்மோபாலிட்டன் தன்மை ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி 1972ல் சோவியத் அரசு அவரை சோவியத் ரஷ்யாவை விட்டு வெளியேற அழைப்பு விடுத்தது. பின்பு வியன்னா ,லண்டன் ஆகிய இடங்களில் சிறிது காலம் தங்கி பின் W.H.ஆடன் உதவியுடன் அமெரிக்கா சென்றார். 1977ல் அமெரிக்க பிரஜை ஆகி 1987ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார். ஜோசப் ப்ராட்ஸ்கியின் கவிதைகள் செவ்வியல் தன்மை மிக்கது.

••••

.லாவண்யா கவிதைகள்

images (13)

முன்பிருந்த உலகம்

இன்று நேற்றல்ல
ஆண்டவனை ஆண்டவனாய்
ஆராதிக்கும் பழக்கம்.
மண் பொன் பெண்ணுக்கன்றி
அறப்போர் எப்போது நடந்த்து?
இறைவர்கோனும் இலங்கைக்கோனும்
பிறன்மனையில் கள்ளச்சாவி போட்ட முன்னோடிகள்.
தந்தைக்குப் பெண் கேட்கப் போனான் தனயன்.
அரசவையில் துகிலுரிப்பு அன்றும் நடந்த்து.
கள்ளக்காதல் எல்லைமீறி
வெள்ளாவி பிடிக்கச் சென்றாள்
வேந்தனைத் துறந்து ராணி
கருவூலக்காசு கோவிலாச்சு. மணிவாசகன் உபயம்
விதேசிக் கம்பெனிக்கு விலைபோனார் பாளையக்கார்ரஃ.
கயிற்றில் தொங்கினான் கட்டபொம்மன்,
இன்றிருப்பது போல்தானிருந்த்து
முன்பிருந்த உலகம்.

…..

அசரீரி

கலகம் செய்வதால்
கைப்பேசியின் வாயைக் கட்டிவிட்டேன்.
தொலைக்காடசி
தொல்லைக்காட்சியாகுமென்று
சின்னத்திரையைத் தவிர்த்துவிட்டேன்.
மின்னஞ்சல் படிக்கவோ அனுப்பவோ
பகற்பொழுதில் முடியாதென்று
மடிக்கணினியை மடித்தகணினியாக்கிவிட்டேன்
பர்ஸ், பால்டோக்கன, பவுடர்டப்பா
கண்ணாடி கடிகாரம் கத்தரிக்கோல்
ஒப்பனைக்ரீம்கள் மாத்திரைகள் நலங்காக்க
சற்றுமுன் காகமாய் பறந்துவந்தேன்
காயலான்கடையாயிருக்கும் கூடத்தில்
கார்கள் ஓட, டைனோசார் நடக்க, பூனை மேளங்கொட்ட
கண்சொக்கவே ரயில்தூக்கம் போட்டவொரு நிமிடம்
தண்ணீர்க்குடுவை தலைகீழாகி
பெருகும் நீர்வீழ்ச்சியில்
பிஸ்கட் பழுப்பான பஞ்சுக்கரடி
க்ரேயான் தேய்த்துக் குளிக்க காண கூச்சலிடுகிறேன்.
வீட்டைச் சுத்தம் செய்து மாளவில்லை
பைத்தியம் பிடிக்கிறதெனக்கு.
அசரீரீ கேட்கிறது.
இதற்குத்தானே ஏங்கினாய் பத்து வருடங்கள்?
அழுதுகொண்டே சிரிக்கிறேன்.

••••

உரைகல்

எம்பிப் பறிக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
பிழைப்பிற்குதவா.
மயிர்பிளக்கும் விவாதங்களில் மதியச்சோறு
சுவைகெடும். ஏடுகளை எரி.
வரலாற்றின் வழிநெடுக நிற்பவை
கொலையாளிகளின் சிலைகள்.
சிலைகளை உடை.
பித்தனைச் சித்தனாக
சித்தனைப் பித்தனாக
பிம்பங்கள் மாயங்கட்டும். பிம்பங்களைப் பிள.
ஆசைகாட்டி மோசம் செய்யும்
சதிகளாலானது சந்தை.
சதிகளை சந்திக்கிழு.
அதிகார நாற்காலியை முடமாக்க
ஆறுவழிகளையேனும் யோசி.
பருத்த்தொந்திமுன்பு கூனிக்குறுகாதே
தலைவனை மற.
எத்தனை காலம் இரவல் மூளையில் வாழ்வாய்?
உன்னை நினை.
அனுபவ உரைகல்லில் அனைத்தையும் உரசு.
உண்மையை அறி. உரத்த குரலில் பேசு.
போதும் நீ அடிமையாய் வாழ்ந்த்து……….

வார்த்தை ( சிறுகதை ) : ஜீ.முருகன்

download (33)

அவள் எழுப்பினாளா, அவனே எழுந்தானாத் தெரியவில்லை, அவன் விழித்துப் பார்த்த போது கணினி மேஜையின்மேல் காப்பியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு அவள் நின்றிருந்தாள். அவள் கண்கள் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தன. இது வழக்கத்துக்கு மாறான ஒன்று. அவள் பார்வையை அந்த விதமாக எதிர்கொள்ள அச்சப்பட்டவனாக என்ன என்பது போல அவனும் பார்த்தான். அவள் முகம் கோபத்திலும் துக்கத்திலும் துடித்துக்கொண்டிருந்தது.

பதைத்துப் போனான். அவன் மீதான, அவன் பொருட்டான கோபம்தான் அது. ஏன் என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை.

அவன் கேட்டான், “என்ன…?”

இக்கேள்விக்காகவே காத்திருந்தது போல அவள் உடைந்து நொறுங்கினாள், “என்னவா? என்ன மனுஷன் நீ, என்ன யாருன்னு நெனச்சி அந்த வார்த்தையச் சொன்ன?”

அவனுக்கு விளங்கவில்லை. “நான் என்ன சொன்னேன்?”

“என்ன சொன்னயா? ராத்திரி முழுக்க நான் தூங்கலத் தெரியுமா?” அவள் அழுதாள். இது அவனை நிலைகுலையச் செய்தது. படுக்கையிலிருந்து எழுந்து கால்களைத் தரையில் வைத்து அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். யோசித்தான், அப்படி சொல்லியிருந்தால் இரவுதான் அவன் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ஞாபகம் வரவில்லை.

“நான் என்ன சொன்னேன்? புரியல சித்ரா”

பதில் பேசாமல் உடல் குலுங்க அவள் அழுதுகொண்டிருந்தாள். இப்போது எதுவும் சொல்ல மாட்டாள் என்பது தெரிந்தது. அவளுடைய குணத்துக்கு அது பொருத்தமானதில்லை. அப்படி சொல்லிவிட்டால் அது அவனோடு சமரசம் சொய்து கொண்டதற்கு ஒப்பானதாகும், அதற்கு அவள் தாயாரில்லை. அவளுடைய கோபம் அதற்கும் அப்பாற்பட்டது. அப்படி ஒரு வார்த்தையை அவன் சொல்லியிருக்கிறான். என்னதான் வார்த்தை அது, இது வரை அவளை நோக்கி சொல்லியிருக்காத அந்த வார்த்தை?

அவள் சொல்லவில்லை என்றாலும் அவளை சமாதானப் படுத்த வேண்டிய நிலையில் அவன் இருந்தான். இந்த சச்சரவு இந்த அறையோடு முடிந்துவிட வேண்டும். அதுதான் பாதுகாப்பானது. அவன் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. எவ்வளவோ நாட்கள் இந்த அறையில் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டுள்ளார்கள். அனால் எதுவும் மற்றவர்களின் இடையீட்டுக்கு வழி வகுக்கும்படி ஆனதில்லை. ஒரு வேளை இருவருடைய முகபாவங்களை, வார்த்தையாடல்களை வைத்து இருவருக்குள் ஏதோ நடந்திருக்கிறது என அவர்கள் யூகிக்கும்படி இருந்திருக்கலாம், அவ்வளவுதான். அவளும் அவன் குறித்து எந்தக் குற்றச் சாட்டையும் அவன் பெற்றோரிடமோ, அவளுடைய பெற்றோரிடமோ கொண்டுசென்றதில்லை. நேற்று இரவு அவர்களுக்குள் வழக்கமான மோதல் இருந்துதான். ஆனால் அவள் இவ்வளவு புண்படும்படி எதுவும் சொல்லியதாக நினைவில் தங்கயிருக்கவில்லை.

அவன் எழுந்தான். அவளை நோக்கிப் போனான், தோளின் மேல் கை வைத்தான்.

“என்ன சித்ரா சொன்னேன்? சத்தியமா எனக்கு ஞாபகம் இல்ல”

இந்த சமாதானத்துக்கு ஈடானதில்லை அவளுடைய கோபம். அதைப் புலப்படுத்தும் விதமாக அவள் அவன் கையை உதறிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டே கதவை நோக்கி நகர்ந்தாள்.

பின்னர் திரும்பி அவனை நோக்கி ஆத்திரத்துடன் சொன்னாள், “இவ்வளவு நாள் என் பையனுக்காகத்தான்பொறுத்துக்கிட்டிருத்தேன். ஆனா இனிமே என்னால இருக்க முடியாது.”

கதவைத் திறந்து கொண்டு அவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அவன் அந்நிலையிலேயே சிறிது நேரம் உறைந்து நின்றிருந்தான். பின்னர் திரும்ப வந்து கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டான். கணினி மேஜையின்மீது காப்பி ஆறிக்கொண்டிருந்தது.

‘என்ன எழவு வார்த்தை அது?’ தலையைப் பிடித்துக்கொண்டு யோசித்தான். இரவு நடந்ததை திரும்பவும் ஞாபகத்தில் கொண்டு வர முயன்றான். சமீப நாட்களில் அவன் அதிகம் குடிக்கத் தொடங்கியிருந்தான். வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வருவது சகஜமாகி விட்டது. சில நாட்களில் அவளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருக்கும். சில நாட்கள் ‘நீ இப்படித்தான், நான் என்ன செய்வது?’ என்பது போல அவள் வெறுப்புடன் கீழே பாய் விரித்துப் படுத்துக்கொள்வாள். போதை குறைவாக இருந்தால் அவளே உணவு பறிமாற விரும்புவான். சாப்பாட்டு மேஜையில் போய் உட்கார்ந்துகொள்வான். கொஞ்சம் அதிகமாகிவிட்டால் அவனே போட்டுக்கொண்டு சாப்பிட்டுவான். சில பொழுது பசியுடனேயே படுத்துக்கொண்டிருக்கிறான். பெரும்பாலும் வெளியே அவன் சாப்பிடுவதில்லை. நேற்று இரவு அவனே போட்டு சாப்பிட்டு வந்துதான் படுத்தான். மகன் குறித்து எதையோ அவன் கேட்க வேண்டியிருந்தது. அதுதான் வாக்குவாதத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. வழக்கம் போல அது சற்று உச்சத்துக்குப்போய் அவனுடைய பின்வாங்கலோடு முடிந்து போனது. இதற்கு நடுவே அவன் அவளை என்ன சொன்னான் என்பது நினைவுக்கு வரவில்லை. ஏதோ அவள் மனம் நோகும்படி சொல்லியிருக்கிறான். இல்லையென்றால் அவள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்ய நேர்ந்திருக்காது. பாழாய்ப் போன என்ன வார்த்தைதான் அது?

இதே போன்று பலமுறை அவன் தவிப்புறும்படி அவள் நிறுத்தியிருக்கிறாள். அவனைப் பழிவாங்கும் ஒரு வழிமுறைதான் இது. அவன் நடவடிக்கைகளுக்குப் பொறுத்துப் போகிறாள் என்றாலும் அவள் அவ்வளவு அப்பாவி இல்லை. அவளுக்குள்ளும் சிறுசிறு தந்திரங்களும், சிறு சிறு பொய்களும், அவள் தரப்பு பலவீனப்படும்போது பேச்சை கீழ்நிலைக்கு கொண்டுபோய் வீழ்த்தும் சாகசமும் தெரிந்தவள்தான்.

அவர்கள் இருவருக்குள் காதல் மீதுரும் பிணைப்பு எப்போதும் நிரந்தரமாக இருந்ததில்லை. படுக்கையில்கூட அவள் தனக்காக இல்லாமல் அவன் பொருட்டே இணக்கம் காட்டுகிறாளோ என்றும் நினைப்பதுண்டு. அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்க வாய்க்கப் பெற்றவர்கள் அவ்வளவுதான். அவனுக்கு மனைவி, குழந்தை என ஒரு குடும்பம் தேவை. அவளுக்கும் அப்படித்தான். இந்த வாழ்க்கையை இப்படி வாழ விதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

எவ்வளவு உச்சபட்ச சண்டையின் போதும் ஒருமுறை கூட அவன் கை நீட்டியதில்லை. அவனுடைய இயல்புக்கு அது பொருத்தமற்றது. யாருடனும் சண்டையை அவன் வெறுத்தான. அலுவலகத்திலோ, வெளியிலோ அதற்கான சூழல் ஏற்பட்டால் கவனமாக தயக்கமின்றி பின்வாங்கிவிடுவான். அவனுக்கு எதிராக சதியை நிகழ்த்தியிருந்தாலும், தந்திரங்களை பிரயோகித்திருந்தாலும், தவறு இழைத்திருந்தாலும் அவர்கள் முகத்துக்கெதிரே தன் கோபத்தைக் காட்டி அவர்கள் அவமானத்தில் குன்றுவதை அவனால் பார்க்க இயலாது. அவன் போய் அவன் மனைவியை என்ன வார்த்தை சொல்லி இப்படி புண்படுத்தியிருக்க முடியும்?

அவளுடைய இவ்விதமான தாக்குதல் அவனை அதிகம் வருத்தியது. சில நாட்களுக்கு முன்புகூட அவள் இப்படியான நிலைக்கு அவனை தள்ளிவிட்டு நின்றாள். யாரோ அவன் குறித்து அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். மதுவிடுயிலிருந்து தடுமாறிக்கொண்டே அவன் வெளியே வந்தானாம். இருசக்கர வாகனத்தில் ஏறுவதற்குக் கூட அவனால் முடியவில்லையாம். அப்படி நிலை தவறும் அளவுக்கு எப்போதும் அவன் குடித்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு அதிகப்படியானது; அவனைக் குறித்த தரம் தாழ்ந்த விமர்சனம். அது அவளை அதிகம் அவனமானப்படுத்திவிட்டதாக அவள் சொன்னாள். ‘ஏன் இவ்வளவு கீழ்த்தரமா நடந்துகிற?’ என்று கேட்டு அவள் அழத்தொடங்கிவிட்டாள். கடைசி வரை அது யார் என்று அவள் சொல்லவில்லை. இந்தக் குற்றச்சாட்டை அவன் கழுத்தில் போட்டு அவள் இறுக்கத் தொடங்கிவிட்டாள். அவன் மூச்சுத் திணறிப் போனான்.

குடும்ப விஷயங்கள் எதையாவாது கோடிட்டு காட்டிவிட்டு, முழு விவரங்களைச் சொல்லாமல் சொல்வாள், ‘இதோல்லாம் உனக்கு எதுக்கு? எதையும் காதுல போட்டுக்காத. உன் வேலை, உன் குடின்னு இப்படியே இருந்துடு.’ அவனை பெரிய குற்ற உணர்ச்சியில் ஆழ்த்திவிடுவாள். என்ன விஷயம் என வற்புறுத்திக் கேட்டாலும் கடைசிவரை சொல்லமாட்டாள். அது போன்ற ஒன்றுதான் இது என்றாலும், இதில் ஏதோ விபரீதம் கலந்திருக்கிறது. அவன் என்ன சொன்னான் என்பது தெரிந்தால்தான் அதற்குரிய பதிலைச் சொல்லவோ, மன்னிப்புக் கேட்கவோ முடியும். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை. அவளை தனியே சந்தித்தால் மட்டும்தான் அதை செய்ய முடியும். இந்த அறைக்கு இப்போது அவள் வரமாட்டாள். பிறகு எங்கே பேசுவது?

அவன் வெளியே வந்தான். அவள் சமையல் அறையில் இருப்பது தெரிந்தது. அவன் வரவேற்பறையில் சோபாவில் போய் உட்கார்ந்தான். அங்கே வழக்கத்துக்கு மாறான எந்த அறிகுறியும் இல்லை. அவன் அம்மாவும் சமையல் அறையில் இருப்பது தெரிந்தது. அங்கே போய் அவளை சமாதானப்படுத்த முடியாது. அவனுடைய மகனுக்கு காலையிலேயே பள்ளிப் பேருந்து வந்துவிடும். அவன் சென்றுவிட்டிருந்தான். அவனும் அலுவலகம் கிளம்பியாக வேண்டும். அவளை இதே நிலையில் விட்டுவிட்டுச் செல்ல அவனுக்குத் தயக்கமாக இருந்தது. ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சினான். அந்த யோசனையுடனேயேக் குளிக்கப் போனான். அந்த குழப்பமான மனநிலையிலேயே பல் துலக்கினான், கழிவறையைப் பயன்படுத்தினான், குளித்தும் முடித்தான்.

உடை மாற்றிக்கொண்டு வந்து பார்த்த போது அவள் வீட்டில் இல்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. அவன் அம்மாதான் அவனுக்கு உணவு பறிமாறினாள். அவள் எங்கே என்று கேட்டான். மார்க்கெட் போயிருப்பதாகச் சொன்னாள். வழக்கமாக மார்க்கெட் போக வேண்டும் என்றால் அவன் அலுவலகம் கிளம்பியப் பிறகுதான், துணியெல்லாம் துவைத்துவிட்டுப் போவாள். இவ்வளவு காலையில் அவள் ஏன் கிளம்பிப் போக வேண்டும்?

உணவு குறைவாகவே இறங்கியது. அதில் கவனம் இல்லை. போயிருந்தால் வழக்கமாக அவள் போகும் பல்பொருள் அங்காடிக்குத்தான் போயிருக்க வேண்டும். காய் கறி, மளிகை சாமான் எல்லாம் ஒரே இடத்தில்தான் அவள் வாங்குகிறாள். இதையே சாக்காக வைத்து அவள் வேறு எங்காவது சென்றுவிட்டிருந்தால்? அவள் என்ன மனநிலையில் வீட்டிலிருந்துக் கிளம்பிப் போனாள் என்று தெரியவில்லை.

அவன் தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினான். ஆனால் அதை அவன் அலுவலகம் இருக்கும் திசையில் செலுத்தவில்லை. அவன் யோசனை முழுவதும் மனைவி குறித்தும் அவள் எங்கு போயிருப்பாள் என்றே இருந்ததால் அந்த பல்பொருள் அங்காடி இருக்கும் திசையில் சென்றுகொண்டிருந்தான். காலையில் அலுவலகம் புறம்படும்போது அன்று செய்யக்கூடிய முக்கிய வேலைகள் பற்றியே அவன் கவனத்தில் இருக்கும். அது சுமையாக அழுத்த அது பற்றியச் சிந்தனையிலேயேச் செல்வான். ஆனால் இன்று அதையும் தாண்டி அவன் மனைவி குறித்த அச்சம் பிரக்ஞையை ஆக்கிரமித்திருந்தது. வேறு எதுவும் அவனுக்கு இப்போது ஒரு பொருட்டல்ல. அந்த பல்பொருள் அங்காடிக்குப் போய் அவள் அங்கே இருக்கிறாளா என்பதை அவன் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கேயே அவளை சமாதானப்டுத்தி விட வேண்டும். அவள் சம்மதித்தால் எங்கேயாவது அழைத்துக்கொண்டு போய் பேசிவிட்டும் வரலாம். அது என்ன வார்த்தையோ அதை தெரிந்து கொள்ளாமலேயே மன்னிப்பு கேட்கவும் அவன் தயார்.

அந்த பல்பொருள் அங்காடி சற்று அருகில்தான் இருந்தது. வெளியே வண்டியை நிறுத்திவிட்டு அங்காடிக்குள் நுழைந்த போது திகைப்பாக இருந்தது. இவ்வளவு காலையில் இத்தனை கூட்டமா? விடுமுறை நாட்களில்தான் இப்படிப் பார்த்திருக்கிறான். அன்று ஏன் எனத் தெரியவில்லை. அந்த அங்காடி மிக விஸ்தீரணமானது; பல அடுக்குகள், பல பிரிவுகள் கொண்டது. அவள் எங்கே இருக்கிறாள் என்று எப்படி தேடுவது? அவள் காலையில் வந்தால் காய்கறி வாங்கத்தான் வருவாள். மற்றப் பொருள்களை மாதத்தின் முதல் வாரமோ, ஞாயிற்றுக்கிழமைகளிலோ வாங்குவாள். உடன் அவனும் பையனை அழைத்துக்கொண்டு வருவதுண்டு.

காய்கறி வைத்திருந்தப் பகுதியைத் தேடி அவன் போனான். அது கீழ்த் தளத்தில்தான் இருந்தது. அங்கும் ஆட்கள் அதிக அளவிலேயே காணப்பட்டார்கள். ஆனால் தேடுவதற்கு அவ்வளவு சிக்கலை ஏற்படுத்தாத விதத்திலேயே அது அமைக்கப்பட்டிருந்தது. அவள் அங்கு இல்லை. கீழ்த்தளத்தில் எங்கும் இல்லை என்பதும் உறுதியானது. இங்கு வேறு பகுதிகள் எதுவும் இல்லை. மேல்தளங்களில் ஏதாவது ஒன்றில்தான் அவள் இருக்க வேண்டும். அங்கு போவதற்கான படி இடது புறம் தொடங்குகிறது. அவன் அதில் ஏறினான்.

இந்நேரம் அவன் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும். அவனுக்காக பல வேலைகள் அங்கே காத்திருக்கின்றன. அற்ப விஷயங்களுக்கெல்லாம் விடுப்பு எடுத்துவிட முடியாது. சில வேலைகள் தள்ளிப்போகும். அது அலுவலகத்துக்கோ அவனுக்கோ நன்மை பயக்காது. ஆனால் இன்று அவன் மனநிலையை திசைத் திருப்பி இங்கு கொண்டுவந்து அவள் சேர்த்திருக்கிறாள் அல்லது அந்த வார்த்தை. என்ன வார்த்தை அது? அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

முதல் தளம் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாத்திரங்கள் பகுதி. கீழ்த்தளத்தை விட இங்கே ஆட்கள் குறைவாகவே காணப்பட்டார்கள். சிறிது நேரத்திலேயே அவள் அங்கே இல்லை என்பதை அவனால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. அதற்கு மேல் இன்னொரு தளம் இருக்கிறது. ஆனால் அங்கே என்ன இருக்கிறது என அவனுக்குத் தெரியவில்லை. திரும்பவும் இடது பக்கமாகச் சென்று படியை அடைந்தான். அதில் கால் வைத்த போது மேலிருந்து கீழ் நோக்கி கையில் கூடையுடன், நன்கு அறிமுகமான ஒருத்தி வந்தாள். பக்கத்து வீட்டுக்காரி. அவனைப் பார்த்ததும் அவள் புன்னகைத்தாள். இவளுடன்தான் அவன் மனைவி வந்திருக்க வேண்டும். இருவரும் சினேகிதிகள். ஏனோ அவளை அவனுக்குப் பிடிப்பதில்லை. அவளிடம் ஏதோ கள்ளத்தனம், விஷமம் கலந்திருப்பதாக அவனுக்குத் தோன்றும். இவளுடன் எதற்குப் போய் அவன் மனைவி பழகுகிறாள் என்ற கேள்வி எழும். அவனைக் குறித்து அந்த மதுவிடுதி சம்பவத்தைச் சொன்னவள் இவளாகவே இருக்க வேண்டும் என்பது அவன் யூகம். வேறு யாரும் சொல்வதற்கு வாய்ப்பில்லை. அவள் பார்த்திருக்க வேண்டும் அல்லது அவளுடைய கணவன் பார்த்துவிட்டு வந்து அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்.

வெட்கப் புன்னகையுடன் அவள் படி இறங்கி வருகிறாள். அவளுடன் அவன் அதிகம் பேசியதில்லை என்பதால் அவன் மனைவி குறித்துக் கேட்பதா வேண்டாமா என யோசித்தான். இவளுடன்தான் அவள் வந்தாள் என்றால் அவள் எங்கே போனாள்?

அவன் கேட்காமலேயே அவள் சொன்னாள், “வினோத் அம்மா மேலதான் இருக்காங்க.”

அவள் அவனை கடந்து போய் விட்டாள். மனம் சற்று நிம்மதி கண்டது. அவள் இங்கு தான் இருக்கிறாள். அந்த வார்த்தை அவளை ஒன்றும் செய்துவிடவில்லை. அவன் மேலே ஏறினான். ஏதோ ஒரு பொருளை வாங்குவதற்காக அவள் இவ்வளவு மேலே வந்திருக்கிறாள். இருவரும்தானே ஒன்றாக வந்திருக்கிறார்கள், ஏன் பக்கத்து வீட்டுக்காரி மட்டும் தனியாக கீழே இறங்கிப் போகிறாள்?

மேலே அவளைப் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தால் போதும். எதுவும் பேச வேண்டியதில்லை. பதறிப் போய் அலுவலகம் கூட போகாமல் அவளைத் தேடி அவன் வந்திருக்கிறான் என்பதே அவளுக்குத் திருப்த்தியைத் தந்துவிடலாம். அந்த வார்த்தை குறித்துகூட எந்த சமாதானமும் தேவை இருக்காது. அவனும் கேட்காமல் அவளும் சொல்லாமல் நாட்களில் கரைந்து போய்விடலாம். ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவனை வீழ்த்த வேண்டிய நிலையில் அது அவளுக்குப் பயன்படும். பெண்கள் எதையும் மறப்பதில்லை. வார்த்தைகளின் வீரியம் தெரிந்தவர்கள் அவர்கள்; அவற்றுடனேயே வாழ்பவர்கள்; அதை ஆயுதமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.

அவன் இரண்டாவது தளத்திற்குப் போனான். அதுதான் கடைசி தளமா எனவும் அவனுக்குத் தெரியவில்லை. அந்த கட்டடத்தில் உணவகம், திரையரங்கம், ஜவுளிக்கடை என பலப் பகுதிகள் இருந்தன. எது எங்கே இருக்கிறது என அவனுக்குத் தெரியவில்லை.

இரண்டாவது தளத்தில் பீரோ கட்டில் என மரத்திலும், இரும்பிலும் செய்யப்பட்ட ஏராளமான வீட்டு உபயோகப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இங்கு எதற்கு வந்தாள் என அவனுக்குப் புரியவில்லை. அங்கே எளிதாக ஊடுருவிப் பார்க்க முடியாத அளவுக்கு பொருள்கள் இருந்தன. ஏதோ புதிருக்குள் அகப்பட்டவன் போல அதன் மத்தியில் தேடிக்கொண்டு நகர்ந்தான். எவ்வளவு பொருள்கள்! அவனுக்கு வியப்பாக இருந்தது. ஒரு பெரு நகரத்தின் மாதிரி வடிவம் போலவும் அதில் வழி தவறிவிட்டவன் போலவும் அது அவனை திணறிப்போகச் செய்தது.

யாரையாவது கேட்கலாம் என்றாலும் அங்கு யாரும் இல்லை. காலை வேளையில் இப்பகுதிக்கு பணியாளர்கள் யாரும் வருவதில்லையா? யோசனையுடன் அவன் நடந்தான். தொலைவில் ஒரு பெரிய கதவும் அங்கே கொஞ்சம் ஆட்களும் தென்பட்டார்கள். அது வேறு பகுதி போலத் தோன்றியது. அதை நெருங்க நெருங்க ஆட்களின் சப்தம் அதிகரிக்கத் தொடங்கியது. கதவை அடைந்த போதுதான் அது கை கழுவும் இடம் என்பது தெரிந்தது. வரிசையாக குழாய்களும் கழிப்பறைகளும் இருந்தன. அந்த ஆண்களும் பெண்களும் உடை உடுத்தியிருக்கும் விதம் பக்கத்தில் திருமண மண்டம் இருப்பதை உணர்த்தியது. அவள் திருமணத்துக்கா வந்திருக்கிறாள்? யாருடைய திருமணம்? இது குறித்து அவளோ, வீட்டிலோ யாரும் சொல்லவில்லையே.

அவன் அந்த இடத்தைக் கடந்து மண்டபத்துக்குள் நுழைந்தான். அது உணவு பரிமாறும் பகுதி. அங்கே ஏராளமான ஆட்கள் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். சீருடை அணிந்த பணியாளர்கள் அவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தனர். அழைக்காத ஒரு திருமணத்துக்கு, எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் வந்திருக்கிறான். இது அவனை அதிகமே சங்கடப்படுத்தியது. ஏதோ பின்வாசல் வழியாக ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிட்டது போல இருந்தது. அவன் மனைவி வந்திருந்தால் மண்டபத்தின் பிரதான வாசல் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும். பிறகு அந்த பக்கத்துவீட்டுக்காரி எப்படி அந்த வழியாக இறங்கிப் போனாள்?

அப்பகுதியைக் கடந்து படியேறி திருமணம் நடைபெறும் இடத்தை நோக்கி நடந்தான், அவள் அங்குதான் இருக்க வேண்டும். ஆண்கள் தூய வேட்டி சட்டை அணிந்திருக்க, பெண்கள் பகட்டான உடையலங்காரத்துடன் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த நகைகளின் பளிச்சிடல் அந்த மண்டபத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அவர்களில் சிலரை அவன் பார்த்திருக்கிறான். அவன் ஊர் பெண்கள்தான் அவர்கள்.

அது ஒரு சின்ன மண்டபம்தான். ஆனால் அதில் ஆட்கள் நிறைந்து காணப்பட்டார்கள். பாதி பேருக்குமேல் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்கள். சந்தேகமே இல்லை, அது அவனுடைய உறவினர் வீட்டுத் திருமணம்தான். அவனுடைய சொந்தங்களும் அவன் மனைவியின் சொந்தங்களும் அங்கே காணப்பட்டார்கள். அவர்களுக்குள் தேடியதில் அவள் தென்பட்டுவிட்டாள். தொலைவில் பெண்களுக்கு மத்தியில் அவள் தெரிந்தாள். மிக சாதாரண உடையிலேயே அவள் இருந்தாள். திருமணத்துக்கு வந்தது போலத் தெரியவில்லை. அதனாலேயே அவள் தனித்துத் தெரிந்தாள். அவளுடைய முகம் மட்டும் வாடிய நிலையிலேயே, அந்தத் துயரத்தையும், கோபத்தையும் சுமந்தபடி இருந்தது. அவளை இந்த நிலையில் பார்க்கும் அவர்கள் என்ன நினைப்பார்கள்? ஏன் அவள் இங்கு வந்தாள்? அவனை பழிவாங்க அவளுக்கு இதைவிட வேறு வழியில்லையா என்ன?

அவளை நோக்கி அவன் போனான். யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவள் திரும்பி அவனைப் பார்க்கிறாள். அவளிடம் எந்த வியப்புமில்லை. அவனை அங்கு எதிர்பார்த்தவள் போலவே காணப்பட்டாள். அந்தக் கூட்டத்தில் அவளை தவற விட்டுவிடுவோமோ என்பது போல அவளைப் பார்த்துக்கொண்டே அருகே போனான். ஆனால் அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்தப் பெண்களை விலக்கிக்கொண்டு திருமண மேடை இருக்கும் திசையை நோக்கி நடந்தாள். அவனும் பின் தொடந்தான். படியில் கால் வைத்து மேடை மீது ஏறினாள். அவள் இருக்கும் கோலத்தில் எதற்காக அங்கெல்லாம் போகிறாள்? அவன் வேகமாக அவளைப் பின்தொடர்ந்தான். அவள் அங்கு நின்றிருந்த பெண்களை விலக்கிக்கொண்டு மணமகள் அறையை நோக்கி நடந்தாள். இவளுக்கு என்ன ஆனது? திறந்திருந்த அந்த அறைக்குள் நுழைந்தவள் கதவைச் சாத்திக்கொண்டாள். அவன் கதவைத் தள்ளினான். அது திறக்கவில்லை. மெல்ல தட்டினான். “சித்ரா” மெல்ல அவன் கூப்பிட்டான். கதவுத் திறக்கவில்லை. செய்வதறியாது நின்றான். இங்கு நடப்பதைப் பார்த்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? கதவுக்கு மிக அருகில் முகத்தை வைத்துச் சொன்னான், “சித்ரா கதவத் தெற, இது நம்ம வீடு இல்ல. சொந்தகாரங்கெல்லாம் இருக்காங்க, அவுங்க என்ன நினைப்பாங்க, தயவுசெய்ஞ்சி கதவத் திற” அவள் திறக்கவில்லை. கதவை முழு விசையுடனும் ஆத்திரத்துடனும் அவன் தள்ளினான். கதவு திறந்து கொண்டது.

அது அவர்களின் படுக்கையறைப் போலவே தெரிந்தது. அதே கட்டில். கணினி மேஜையில் அவன் காலையில் குடிக்காமல் விட்டிருந்த காபி டம்ளர். சுவரில் சாய்ந்து நின்று அவள் அழுதுகொண்டிருந்தாள். மேலே மின் விசிறியிலிருந்து ஒரு புடவை முடிச்சிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தது, அந்த விபரீத வார்த்தை அதுதானோ என்பது போல.

0***

மத்தியானவாசியின் புகை விளையாட்டு / சிபிச்செல்வன் கவிதைகள்

download (29)

மலை யடிவாரம்

மலையடிவாரத்தில் வெகுநேரம் பார்த்திருந்தேன்
மலை மிக மிக உயரமாகத் தெரிந்துகொண்டிருந்தது
அங்கேயே காத்திருந்தேன்
ஊரின் எல்லாப் பக்கங்களிலிருந்தும்
மலையைப் பார்க்கலாம்
தொலைவிலிருந்து பார்க்கும்வேளை
மலையடிவாரம் தெரியாது
ஆனால் அதைப் பற்றி ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை மலையடிவாரம்
நான் பார்க்கும்போது அது இல்லையென்பதில் அதற்கு ஒரு நாளும் குற்றச்சாட்டு கிடையாது
மலையை ஏறத்தொடங்கும் ஆரம்பமும்
மலையடிவாரத்தில்தான்
மலையிலிருந்து இறங்கும்போது அதுதான் முடிவாகமுடிந்தும் நிற்கிறது

•••

அப்பாவின் சட்டைக்குள் குழந்தை

நுழைந்து அப்பாவாக முயற்சித்துக்கொண்டிருந்தது
அப்பாவோடு வளர்ந்த குழந்தையின் சட்டையை அப்பா அணிந்துகொண்டிருப்பதாக நண்பர்கள் பகடி செய்கிறார்கள்
அப்பாவின் சட்டையை மாற்றிப்போட்டுக்கொண்டு அலுவகம் போகிறன் பிள்ளை
பிள்ளையின் காலத்திற்கேற்ற பேஷன் சட்டைகளை உடுத்திக்கொண்டு இளமையின் மெருகை காட்டிக்கொள்ள விரும்புகிறார் அப்பா
அப்பாவின் சட்டையைப் போட்டுக்கொண்ட பிள்ளை
குறிப்பாலுணர்த்துகிறான் அப்பாவாக மாறவிரும்புவதை
இப்படியாக இந்த விளையாட்டை
ரசித்துக்கொண்டிருக்கிறது காலம்
அப்பாவின் சட்டையும்
பிள்ளையின் சட்டையும்
வேகமாக நைந்துகொண்டிருப்பதை

••
மத்தியானவாசியின் புகை விளையாட்டு

உயரமான மேம்பாலத்தின் அடியிலிருந்து
ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
உயரமாக போய்க்கொண்டிருந்த வாகனங்களை
மற்றும் அதன் வண்ணங்களை
மற்றும் அதன் வேகங்களை
பாலத்தின் கீழிருந்த சாலையிலும் மத்தியானத்தை விரட்டிக்கொண்டு போன கார்களையும் பார்த்தபடியே இருந்தான் அந்த மத்தியானவாசி.
சலிப்புற்ற ஒரு கணத்தில் சாலையோர பெட்டிக்கடையில் சில்லறைகொடுத்து ஒரு சிகரெட் வாங்கி கொளுத்தினான்.
முதல் புகையை ஆழ்ந்து இழுத்து ரசித்தவாறே
புகையை வெளியே ஊதினான்
புகை அதன் வேகத்தில் மெல்ல காற்றில் கலைந்தது
அடுத்தடுத்து புகையை இழுப்பதும்
அதை வெளியே ஊதுவதுமாக ஒரு விளையாட்டைத் தொடங்கி அதை அவனே சலித்துக்கொண்டிருந்தவேளையில்
கடைசியாக விட்ட சுருள் சுருளான புகையில்
மேம்பாலம் மறைய
சில கணங்களில்
பதட்டமாக விரைந்தான் மத்தியானவாசி.
போக்குவரத்துக் காவலர் வீசில் ஊதி அவனைப் பின்னாலேயே விரட்டிக்கொண்டு போவதைப் பார்த்தவாறேயிருந்தான் அவன்.

••••

நன்றி
அம்ருதா இதழ் மார்ச் 2017