Category: இதழ் 118

அசோகமித்திரன் – நினைவேந்தல் கூட்டம்

download (20)

அசோகமித்திரன் – நினைவேந்தல் கூட்டம்

தலைமை : இந்திரா பார்த்தசாரதி

புலிக்கலைஞன் என்ற அசோகமித்திரனின் சிறுகதையின் குறும்படம் திரையிடப்படும்.
அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனின் ஆவணப்படம் காட்டப்படும்
கீழ்க்கண்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
1. எஸ் வைதீஸ்வரன் 2. சா கந்தசாமி 4. நாசர் 5. பாலகுமாரன் 6. அம்ஷன்குமார் 7. திலகவதி 8. திலீப் குமார் 9. ஞாநி 10. ஏ எஸ் பத்மாவதி 11. சாருநிவேதிதா 12. எஸ் ராமகிருஷ்ணன் 13. திருப்பூர் கிருஷ்ணன் 14. மனுஷ்யப்புத்திரன் 15. தேவகோட்டை வ மூர்த்தி 16. பா ராகவன் 17. இளையபாரதி 18. இரா.தெ.முத்து 19. சிகரம் ச. செந்தில்நாதன் 20. இரா முருகன் 21. பாரவி 22. சுகுமாரன் 23. வெளி ரங்கராஜன் 24. வேடியப்பன் 25. கிருஷாங்கினி 26. க்ளிக் ரவி 27. ஷங்கர ராம சுப்பிரமணியன் 28. ரோகினி 29. ரமேஷ் (தினமணி) 30. முத்துக்குமார் 31. பத்ரி 32. ராஜாமணி 33. வத்சலா 34. கௌதம சித்தார்த்தன் 35. ஜனனி
மேலும் அசோகமித்திரன் குடும்பத்தில் யாராவது ஒருவரைப் பேச அழைக்க உள்ளோம்.
இடம் கவிக்கோ மன்றம்
6 இரண்டாவது பிரதான சாலை
சிஐடி காலனி
மயிலாப்பூர், சென்னை 4
தேதி 31.03.2017 (வெள்ளிக்கிழமை)

நேரம் மாலை 5.00 மணிக்கு

இக் கூட்டத்தை அழகியசிங்கர், ஸ்ரீகுமார், பெருந்தேவி மூவரும் ஏற்பாடு செய்கிறோம்.

இடைவிடாத துரத்தல் – சிறுகதை – பெரு.முருகன்.

download (19)

‘ப்ரம்மம் ஸ்த்யம் ஜகத் மித்யா ‘பெரியதுறவி அழுத்தந்திருத்தமாக உச்சரித்துவிட்டு கொய்யாக்காவை ஒரு கடிகடித்தார்.கடிபட்ட துண்டு கொய்யா நாவினில் பட்டு, சுவையை மூளைக்கு கடத்தி,தொண்டையில் வழுக்கி வயிற்றுக்குள் சென்று அடங்கியது.’ஆஹா என்னே ஒரு விந்தை; இந்த உலகமே பொய் என்கிறோம்,கானல்நீர் என்கிறோம்,மாயா என்கிறோம் ,ஆனால் இந்த சிறு கொய்யாவின் மகிமை,நம் எல்லா வாதத்தையும் மறுத்துவிடும் போலிருக்கிறேதே,அட இந்த தோன்றுவதும் தோன்றாததும் ப்ரமை ஆகும்.எல்லாம் ஈஸ்வர லீலை’.பெரிய துறவி மனதில் சொல்லிக்கொண்டே தோப்பிலிருந்த ஒரு கொய்யாமரத்தின் மீது நன்கு சாய்ந்து கொண்டார்.

பெரியதுறவியின் மனதிலிருந்த விஷயத்தை உள்வாங்கி கொண்டவராக ,சின்னதுறவி கலகலவென நகைத்தார்.’என்ன ஸ்வாமி கொய்யாவின் சுவை நிஜமாகவே தோன்றுகிறதா?பின் எதற்க்காம் உலகை பொய் என்று சொல்லவேண்டும்?’

பெரியதுறவி பதில் சொன்னார்.’கொய்யாக்காவின் சுவையா ?நிஜத்தில் கொய்யாக்காவே இல்லை என்கிறேன்;இந்த உலகம் ,அதில் காணும் பொருட்கள், நான் நீ ,எல்லாமுமே பொய்;சிலந்தியானது தன் உடலில் இருந்து நூலெடுத்து கூடுகட்டி ,பின்அதை அழியவிடுகின்றாற்போலே,ப்ரம்மமானது இவ்வுலகை தோன்றச்செய்து விளையாடுகின்றது,போகபோக நீ புரிந்து கொள்வாய்’.பெரியதுறவி கண்களை மூடிக்கொண்டார். பின் அவர் கண்களை திறந்து பார்த்தபோது சின்னதுறவியைக்கண்டு பெருமூச்சு விட்டார்.ஆறடிக்கு குறையாத உயரம்,பொன்னிறமேனி ,தோள்வரை புரளும் சுருண்ட கருங்குழல்,ஐயோ ஆண்டவனே ,கிடைக்கின்ற ஒருவேளை உணவுக்கே இந்த உடற்கட்டா?வயது என்ன சொன்னான்?நாற்பத்தைந்தா?பார்த்தால் முப்பது தான் மதிக்கலாம்!எல்லாம் ஈஸ்வரலீலை!பெரியதுறவி திரும்பவும் கண்களை மூடிக்கொண்டார்.அவருக்கு அறுபது வயதாகின்றது.ஆனால் எண்பதோ அல்லது நூறோ என்று பார்ப்பவர்கள் கூறுவார்கள்.கருத்து சுருங்கிபோன மேனி ,பஞ்சடைந்த கண்கள்,பழுப்பு வெண்ணிறத்தில் தாடியும் மீசையும் ,எப்போது சாவு வரும் என்று நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறார்.

சின்னதுறவி ஆய்ந்து முடித்ததும் ,’ஸ்வாமி நான்சென்று இதை சமைப்பதற்கு பானையும் நீரும் கொண்டு வருகிறேன்’,என்று கூறிவிட்டு தோப்பைவிட்டு வெளியே சென்றார்.தோப்புக்கு வெளியே கிழக்கும் மேற்க்குமாக நீண்டிருந்த சாலையில் மேற்குபுறமாக நடந்தார்.அது ஆடிமாதம், நேரம் பிற்பகல் இரண்டு இருக்கலாம்.சாலையில் பலதரப்பட்ட வயதுகளில் ஆண்கள் பழுப்புநிற வேஷ்டிகளில் ,சிலர் தலைப்பாகை அணிந்து போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர்.வலப்புறம் இருந்த கூரைவேய்ந்த சிறுகோயிலினில் கூழ் ஊற்றப்பட்டு அந்த இடமே களேபரமாக காட்சியளித்தது.கோயில் பூஜாரி ஒருஓரமாக உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தான்.சற்றுதள்ளி இடதுபுறமாக புதிதாக கட்டப்பட்ட முசல்மான் அரண்மனையொன்று தனித்து காணப்பட்டது.திடீரென்று நான்கு வெண்ணிறகுதிரைகள் பூட்டிய சாரட் வண்டியொன்று கிழக்குபக்கம் சென்றது.அதுபோன திசையில், தூரத்தில் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஓசை அமுங்கினாற்போல் கேட்டது.

சின்னத்துறவி இன்னும்கொஞ்சம் மேலே நடந்து ஒருநாட்டுஓடு வேயப்பட்டிருந்த வீட்டின்முன் நின்று அதன் கதவை தட்டினார்.உடனே கதவை திறந்த ஒருஆள் அவரை வணங்கிவிட்டு புதிதான மண்பானையும் அதில் நீரும் எடுத்துவந்து வைத்தான்.சின்னத்துறவி அவனை ஆசிர்வாதம் செய்துவிட்டு மண்பானையை எடுத்துக்கொண்டு வந்தவழி நடந்தார்.

சின்னத்துறவிக்கு பூர்வீகம் காசிமாநகரம்.ஆனால் காசியில் பிறந்தவரல்லர்.அவரின் சொந்த ஊர் காவிரிஆற்றுப்பக்கம் ஏதோ ஒருகுக்கிராமம்.பனிரெண்டு வயதுவரையினில் செழுமையாகத்தான் வளர்ந்து வந்தார்.பின்னர் பெற்றோர் இறந்துபடவே போக்கிடம் அற்ற அவர் ஊர் ஊராக சுற்றி கடைசியில் மலையாளதேசம் குருவாயூரப்பன் கோயிலில் அடக்கம் புகுந்தார்.அவர் பிறப்பிலேயே நல்ல சிவப்பு;அழகான முகம் வேறு;எனவே தலைமைகுருக்கள் அவரை சொந்தப்பிள்ளையாக தத்தெடுத்துக்கொண்டார்.அவர் இரண்டுவருடம்வரை அங்கேயே வளர்ந்து மலையாளத்தையும் கூடவே கிருஷ்ணமந்திரங்களையும் கற்றுகொண்டார்.நாள்தவறாத அதுவும் வேளை தவறாத சத்துநிறைந்த ருசியான உணவு.இதனால் அவரது உடல் மேன்மேலும் தகதகவென ஆனது.அவ்வபோது மலையாளபெண்டிர் சிலரின் இரகசியதொடுகை வேறு,அவருக்கு தலைகால் புரியவில்லை.ஒருநாள் வடதேசத்தில் இருந்து ஒரு கூட்டம் கோயிலுக்கு வந்தது.அக்கூட்டத்தின் தலைவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும்.அரையில் ஒரேஒரு பச்சைபட்டுவேஷ்டி,மற்றபடி உடல்முழுக்க பொன் ஆபரணங்கள்,வலதுகையில் தங்கத்தாலான நீளமான புல்லாங்குழல்,ரோமங்கள் சிறிதும் அற்ற தளதள தேகம் ,முகம்,நெற்றியிலே ஒற்றை சந்தன கோடு,அவர்களை சுற்றிலும் பத்துபேர்கள் வரை கைகளில் வாள்தாங்கி காவல் காத்தனர்.ஆனால் இவர்களைவிட அவரை கவர்ந்து இழுத்தது ,கூட இருந்த பெண்களே;அவர்கள் மொத்தம் ஒரு இருபது பேர்கள் இருப்பார்கள்,சிவப்பிலும் பச்சையிலும் வெண்ணிறத்திலும் ஆன பட்டு சீலைகளை அணிந்திருந்த ,தந்தமோ தங்கமோ எனும் அவர்களின் மேனி வண்ணம் ,அவைகளின் மேலிருந்து வீசிய மெல்லிய சுகந்தம் ,வாயினில் அதக்கிய தாம்பூலத்திலிருந்து வழிந்த சிவந்த எச்சிலை கைத்துணியால் துடைக்கின்ற இலாவகம்,பொங்கிபூரித்திருந்த மேனி ,மையிட்டிருந்த கண்களில் தென்ப்பட்ட ஒருவித போதை,இவையெல்லாம் சேர்ந்து அவரை சுண்டி இழுத்தது.

அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யும்படி தலைமைக்குருக்கள் இவரிடம் சொல்ல ,மனதிலும் உடலிலும் என்னமோ வெடிக்க ,இவரும் அவர்களுக்கு தங்கவேண்டிய வசதிகள் செய்துதந்து கோயிலையும் அக்கம்பக்க சுற்றுபிரதேசங்களையும் சுற்றிக்காட்டினார்.ஒருமாதகாலம் தங்கியிருந்த அவர்களின் இந்தியும் சமஸ்கிருதமும்,அவற்றுடன் சேர்த்து சாமியாரின் லீலாவினோதங்களும் புரியலாயின.அந்த தேவகன்னிகையர் கூட்டம் முதலில் யார்யாருக்கோ மனைவிகளாக இருந்தவர்கள்,இப்போது கிருஷ்ணபரமாத்மாவின் நேரடி தோன்றல் என்று கூறப்படும் சாமியாரின் அடிவருடிகளாக மாறிப்போனவர்கள்.சதாசர்வகாலமும் அவர்கள் மெல்லும் தாம்பூலத்தில் ஸோமம் என்றபொருள் கலக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் அது கஞ்சா என்றே நினைத்தார்.தவிர இரவுகளில் அந்த கன்னியர்கள் சாமியாருக்கு செய்யும் பணிவிடைகளை கண்டவர் தனக்கு வாழ்வு இனிமேல் அங்கேதான் என தீர்மானித்துக்கொண்டு ,பிற்பாடு புறப்பட்டவர்களின் அடியில் தானும் ஒட்டிக்கொண்டார்.

ஒருமாதகாலம் தெலுகு கலிங்க என்று ஊர்சுற்றி பின் காசிமடத்தை அடைந்தனர்.மடமா அது?கடல் என்று சொன்னால் தகும்.நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்கும் அறைகள் கொண்ட அந்த பிரம்மாண்டமான கட்டடத்தின் பின்புறம் அடர்ந்த காடு இருந்தது.எவருமே அணுகாத காடு,அதன் முடிவில் ஆக்ரோஷமான ஆறு.பார்த்தாலே பயம் தட்டும் பிரவாகம்,அதேசமயம் கட்டடத்தில் சாமியாரின் அந்தரங்க அறைக்கும் ஆற்றுக்கும் ஒரு அகலமான சுரங்கவழி உண்டென்பதை ,அவர் நாட்பட்ட பழக்கத்தில் அறிந்துகொண்டார்.

சாமியாரின் போக்கும் இவருக்கு பிடித்து இருந்தது.அவர் அடிக்கடி சொல்லும் ஒரேஒரு வாக்கியம் ,”ஸர்வம் க்ருஷ்ணாப்யம்”.மற்றபடி மெளனம்தான்.ஆனால் இரவுகளில் அவர் அடிக்கும் கூத்து இருக்கின்றதே ,சகலமும் கிருஷ்ண அர்ப்பணம்தான்.பகலில் அவர் நடுநாயகமாக அரியணை போன்ற நாற்காலியில் அமர்ந்துக்கொள்வார்,சுற்றிலும் கோபிகையர் எனும் அந்த பெண்களின் கூட்டம் சூழ ,அவர் கண்களை மூடிக்கொண்டு நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார்.அவருக்கு முன்பாக பழம் பூ ,புடவை வேஷ்டிகள் ,நகைகள் அடங்கிய தட்டுக்கள் ,சந்தனம் பன்னீர் அடங்கிய பாட்டில்கள் ,பட்சணங்கள் ஆகியவற்றோடு மெய்மறந்த பக்தர் கூட்டம்.ஆண்கள், பெண்கள் ,கிழவி கிழவானரோடு ,குழந்தைகள் ,குமரிகளும் உள்ளடக்கம்.நிஷ்டையில் இருந்து கண்விழிக்கும் சாமியார் இடதுகை யாரை சுட்டுகிறதோ அவர் பாக்கியவான்.பெரும்பாலும் அவர் குமரிகளாகவே இருப்பர்.அதுவும் அழகாக புஷ்டியாக இருப்பர்.அவளின் கணவனோ தந்தையோ யாராக இருந்தாலும் அவளை சாமியாரிடம் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும்.இந்த விஷயத்தில் யாவருக்கும் மெத்த மகிழ்ச்சி என்பதில் சாமியாருக்கும் சந்தோஷம்,இவருக்கும் சந்தோஷம்.அத்துடன் அவள் கிருஷ்ணபரமாத்மாவின் கோபிகை ஆகிவிட்டாள்.மேற்க்கொண்டு அவள் அங்கேயே தங்கலாம்,அல்லது விருப்பப்பட்டால் தன் வீட்டிற்கு சென்று விடலாம்.சில சமயங்களில் கோபிகைக்கு விருப்பம் இல்லாவிடினும் ,சாமியாருக்கு ஆசை அதிகம் இருந்துவிட்டால் பிறகு சிக்கல்தான்,என்ன சற்றுநேர சிக்கல்;உடனே தாம்பூலத்தில் ஸோமத்தின் அளவு கூட்டப்பட்டு சிக்கல் தீர்க்கப்படும்.அதையும் மீறி சில பெண்கள் முரட்டுத்தனமாக முரண்டு பிடிப்பார்கள்.அப்போது அவர்கள் சுரங்கப்பாதை சுவரிலோ ,காட்டின் மண் தரைக்கடியிலோ, ஆற்றின் பிராவாகத்திலோ மறைந்துபோய் விடுவார்கள்.எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்.

சின்னத்துறவி என்று இப்போது அழைக்கப்படும் அவருக்கு இதை பற்றியெல்லாம் கவலைகள் இல்லை.அவருக்கு மயக்கத்தில் இருக்கும் பெண்களே போதும்;அதுவும் கருக்கல் ஐந்துமணி அளவில்,யாரும் அவரை கேட்ககூட காணோம்,காரணம் நாள்பொழுதில் மடத்திற்க்கு செய்யும் பணிகள்,மார்கழிமாதத்து உயிர்வாங்கும் பனியில் அவர் ஆறு மணிக்கெலாம் எழுந்திரிந்து மடத்தை கூட்டிபெருக்கி ,குளித்துமுடித்து தலைமைசாமியாரை எழுப்பிவிட போகிறது என்பது அவ்வளவு சுலபத்தில் நடக்கிற காரியமா?ஆனால் எழுப்பிவிட போகும் சாக்கில் அங்கே அரைகுறை ஆடைகளில் தூங்கும் கோபியரின் கோலங்களை காணுகின்ற பாக்கியம் வேறுயாருக்கு கிட்டும்.

இவர் சாமியாரின் அன்புடன் ஆசிர்வாதத்துடன் சகலசெளபாக்கியங்களையும் பெற்று அமோகமாக வளர்ந்தார்.இவரின் தகிடுதத்தங்களை சாமியார் கண்டுகொள்வதில்லை.காரணம் முன்னைப்போல் அவரால் “பூஜைகளில் ” பங்குகொள்ள வயது தடை செய்கின்றது.தவிர இவருக்கும் நாற்பது வயதாகி நெடுநெடுவென வளர்ந்து மடத்தின் சகலகட்டுப்பாட்டையும் தன் கரங்களுக்குள் கொணர்ந்தார், ஆனால் தலைமை சாமியாரிடம்தான் இருந்து வந்தது,அதுகூட சிலகாலம்தான்,ஒருநாள் காலை நான்குமணிவாக்கில் சாமியாரின் முகத்தை ,தூங்கிக்கொண்டிருந்த கோபிகையின் பட்டுச்சீலையால் அழுந்த அழுத்திய இவர் ,பின்சத்தப்படாமல் சுரங்கப்பாதையின் நடுவில் இருந்த தூணில்,கொண்டுபோய் புதைத்தார்.மடத்தில் கேள்வி எழும்பதான் செய்தது,ஆயினும் சாமியாரும் கிருஷ்ணர்ப்பணம்தான்.

இப்படியே நாளொரு கோபிகை பொழுதொரு தாம்பூலம் எனபோய்க்கொண்டிருந்தவரின் மடத்திற்க்கு ஒருநாள் ,அதாவது கிபி 1899 பங்குனி மாதத்தில் ஒரு வெள்ளைக்காரர் கூட்டம் வந்தது.அக்கூட்டத்தில் ஒருஓரமாக நின்றிருந்த ஒரு வெள்ளைநிறக்கன்னி இவரை கிளர்ந்தெழச்செய்தாள்,தாம்பூலத்தின் சக்தியானது மேலும் உற்சாகப்படுத்த ,அவளின்பக்கம் தன் இடதுகையை உயர்த்த ,அவளும் சிரித்தப்படி இவர்பக்கம் வந்தாள், வந்தவளை தன்காலடியில் அமர்த்திக்கொண்டு நிஷ்டையில் அமர்ந்துவிட்டார்.கூட்டமானது அவளை போகும்போது அழைத்துக்கொள்ளலாம் எனக் கருதிக்கொண்டே வெளியே கிளம்பிவிட்டது.

அவளின் பெயர் மிஷல், ஒரு இருபது இருக்கும்,கொடுக்கப்பட்ட தாம்பூலத்தை அப்படியே ஓரமாக வைத்துவிட்டாள்.சற்றுநேரம் போனதும் அவளை அழைத்துக்கொண்டு பள்ளியறைக்கு சென்ற இவர் கொஞ்சம் வேகமாக நடக்க ,அதை எதிர்பாராத அந்த பெண் அப்படியே மூர்ச்சை போட்டாளோ அல்லது செத்துதான் போய்விட்டாளோ தெரியாது,அக்கணமே போதை தெளிந்த இவர் கைக்குகிடைத்த நகைகளை எடுத்துக்கொண்டு ,தான் அவசரகாரியமாக வெளிதேசம் செல்வதாக மடத்தில் சொல்லிவிட்டு ,அப்போது கிளம்பியவர்தான் ,இரண்டுமாத காலம் அங்கேஇங்கே என சுற்றி ,கடைசியில் காஞ்சிவரம் வரதராஜபெருமாள் கோயிலின் வாசலில் பசியோடு பயத்தோடு அமர்ந்திருந்த வேளையில் ,இதோஇந்த பெரியதுறவியின் சகவாசம் கிட்டியது.அப்படியே கிளம்பி இப்போது மதராசபட்டிணம் திருவல்லிக்கேணி என்று சொல்லக்கூடிய இடத்தில் வந்திருக்கிறார்கள்.

தோப்புக்குள் நுழைந்த சின்னத்துறவியை பெரியதுறவி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்நிலையை நினைந்து நொந்து கொண்டார்.’அடச்சே பாழாய்போன இந்த அத்துவிதக்கொள்கையால் என் வாழ்வே பறிபோய்விட்டதே’,என்று நினைத்துவிட்டு துணிப்பையிலிருந்த கிழிசல் புத்தகத்தை எடுத்து படிக்கத்தொடங்கினார்.” ஆயிரம் நீர்ப்பானைகளில் ஆயிரம் சூரியன் பிரதிபலித்தாலும் ,அந்த ஆயிரம் பானைகள் உடைந்து ஒன்றுமே இல்லாமல் போனலும் ,சூரியனுக்கு ஒன்றும் ஆகாததுபோல்….திடீரென்று குறட்டையோசை கேட்டு ,அடுப்பு மூட்டுவதில் முனைந்திருந்த சின்னத்துறவி ஏறெடுத்துப்பார்த்து அங்கே பெரியதுறவி கண்களை பாதிதிறந்திருந்த நிலையில் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு மனதிற்க்குள் நகைத்தவாறு ,பானையை கற்களின் மேல் வைத்தார்.

சற்றுநேரம் போனது.”இன்னும் இரண்டொருமாதம்தான்,பிறகு திரும்பவும் மடத்திற்க்கு சென்றுவிடலாம் “என்று நிச்சயப்படுத்திக்கொண்ட சின்னதுறவி ,ஆங்கிருந்த குப்பைகளின் மேலிருந்த சின்னதொரு மரக்குச்சியை எடுத்து ,பானையில் விட்டு கிளறினார்.இதோ ஆனது, கேழ்வரகு கூழ்,என்று நினைத்தபடி பெரியதுறவியை அசக்கினார்.அலங்கமலங்க கண்விழித்தவர் ,’அப்பா ஸ்வாமி எனக்கு பசியில்லை ,அதனால் நீயே உண்டுவிடு,என்னை சற்று தூங்கவிடு,’என்று கூறிவிட்டு ,திரும்பவும் கண்ணயர்ந்தார்.

‘விட்டது சனி ‘,என்று சொல்லிக்கொண்டே,கிண்டிய மரக்கிளையை தூரவீசிவிட்டு ,பானையிலிருந்த மொத்த கேழ்வரகையும்கூழையும் குடித்துவிட்டு , பசியடங்கிய சுகத்தில் ,பானையை உடைத்துவிட்டு ,அப்படியே தூங்கிப்போனார்.மீண்டும் எழுந்தவர், தன்னெதிரே பெரியதுறவி ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருப்பதை கண்டு விழித்தார்.

சடாரென தன்னை அசைத்துக்கொண்ட பெரியதுறவி ,’ஏய் ஏய் நீ நீ நீ என்னுடன் கூட வந்திருந்த குமாரசாமி தானே ?’என்று சின்னத்துறவியை போட்டு உலுக்கினார்.சின்னத்துறவி என்கிற குமாரசாமி ஒன்றும் புரியாது ,’ஏன் ஏன் என்ன ஆனது? ,’என்று கேட்டார்.சற்று யோசனையில் ஆழ்ந்த பெரியதுறவி ,’சரி சரி நீ உண்ட கேழ்வரகு எங்கே?முக்கியமாக அதைக் கிளற வைத்திருந்திருந்தாய் அல்லவா?அது எங்கே ?’

ஒன்றும் புரியாத குமாரசாமி ,’ஏது கேழ்வரகு ,நீங்கள் வேண்டாம் என்று சொன்னதால் தானே நான் முழுவதுமாக உண்டுவிட்டேன்,பானையை உடைத்துவிட்டேன்,மரக்குச்சியை அதோஅங்கே எறிந்துவிட்டேன்’,அவர் கையை தூரத்தில் காட்டினார்.அங்கே சருகுகளும் மரக்கிளைகளும் இலைகளும் மலைபோல் குவிந்துகிடந்தன.பக்கத்தில் வேறு குட்டையொன்று இருந்தது.குமாரசாமி அப்போதுதான் தன் கைகால்களை உடலை பார்த்து இன்பத்தில் அதிர்ந்தான்.’என்ன இது விந்தை?ஒன்றுமே புரியவில்லை’,ஆமாம் அவர் இப்போது அவனாகிவிட்டார்.அவர் கேழ்வரகை கிண்டிய அந்த மரக்கிளை ஏதோ அற்புதமான மூலிகையால் ஆனது.அதனால் திரும்ப இளமை ஆகி விட்டார்.ஆனால் வாய்க்கு எட்டிய அற்புதம் கைகளுக்கு எட்டாமல் எங்கோ தொலைந்து போய்விட்டது.

பெரியதுறவி அங்கேயே அப்போதே மரணமடைந்து போனார்.அதே இடத்தில் புதைக்கவும்பட்டார்.அவரிருந்த கொய்யாதோப்பே இப்போது இருக்கும் ஜாம்பஜார் மார்க்கெட்.உருதுமொழியில்’ ஜாம் ‘என்றால் கொய்யா என்று பொருளாகும்.பெரிய துறவியின் ஆசையை மனதில் தேக்கிக்கொண்டு அங்கிருக்கும் வியாபாரிகள் எதற்கோ ஆசைப்பட்டு அலைகின்றார்கள்.

••••

துயர்மிகு வரிகள்… / ப.மதியழகன்

images (16)

1

மகத்தான பகல்பொழுதை
இரவுதான் நிர்ணயிக்கிறது
வருத்தப்படகுகள் கவலையாற்றில்
மூழ்கவே செய்யும்
கையில் அதிகாரம் இருக்கும்
நபருக்குத்தான் பதவி பறிபோய்விடுமோ
என்ற கவலையிருக்கும்
சிலசமயம் நேசித்தவளுக்காக
சிலுவை சுமக்க நேரலாம்
வானக்கூரையின் கீழேயுள்ள
எனக்கு காதல் விடுதலை தந்தது
எதிர்ப்பார்ப்பில்லாத விருப்பம்
மனிதனின் சுயநல விலங்கை
உடைத்துவிடுகிறது
என் பிம்பத்தை அவளுடைய
கரியவிழியில் இழந்துவிட்டேன்
என் நிழல்கூட அடிமையாய்
அவள் காலடியில் கிடக்கிறது
அவளற்ற உலகத்தில்
என்னைத் தள்ளப் பார்க்காதீர்கள்
சுயநல அரக்கர்கள்
மலரைக் கொய்ய
ஆயுதமெடுக்கும் கயவர்கள்
என்னை அவளிடம்
இழந்துவிட்டேன்
அடைய முடியாததை
எதற்காக இலக்காகக் கொண்டாய்
எனக் கேட்கிறீர்களா
கடவுளே என் ஆன்மாவுக்கு
விடுதலை கொடு
அது அவள் இருப்பிடத்தைத் தேடி
பயணிக்கட்டும்
வாழ்க்கைப் பெருங்கடலில்
எனது மரக்கலம் திசைதவறிப்
போய்விட்டது
நான் கொடுத்த முத்தத்தின் ஈரம்
காய்ந்து போய்விட்டது
அவளை இன்னொருவன் தன்
உடைமையாக்கும் போது
எனது காதல் அழிந்திருக்கும்
அவளது நினைவுகள்
என் மரணத்திற்குப் பிறகும்
என்னை விடாமல்
துரத்திக் கொண்டிருக்கும்
புனிதமான காதலர்களுக்கு
எனது வரிகள் சிறகுகள் கொடுக்கும்
ஆதிமுதற் கொண்டு காதல்
நிராகரிக்கப்பட்டவனின் மனத்தில் தான்
மிகுந்திருக்கும்
காதல் சரித்திரம் தோற்றவனின்
குரலையே பிரபல்யப்படுத்தும்
விலைக்கு வாங்குவதற்கு
காதல் கடைச்சரக்கல்ல என்று
அவளுக்கும் தெரிந்திருக்கும்.

2

துயர இரவுகள் என்னை
அலைக்கழிக்கிறது
அந்திப்பொழுது களங்கமற்ற
அவள் முகத்தை
ஞாபகப்படுத்துகிறது
தேவாலயத்தில் மண்டியிடும்போது
மனம் கேவி அழுகிறது
ஓவியச் சுடர்கள்
வெளிச்சம் கொடுக்குமா
நினைவோடையில் நீந்த
முடியுமா
துயரமூட்டையின் பாரம்
மிகுந்திருக்கிறது
இந்தப் பேரண்டம்
காதலின் அதிர்வுகளாலேயே
இயங்குகிறது
மூளியாக நிற்கும் மரங்கள்
வசந்தத்தை நினைத்துக்
கொள்ளுமா என்ன
உனக்கு நிகரானவளை
சந்திக்கும் வாய்ப்பை
வாழ்க்கை எனக்கு
ஏற்படுத்தித் தராது
மலர்ப்படுக்கையில் உன்னை
படுக்க வைத்து நானுனக்கு
தாலாட்டுப் பாடட்டுமா
ஒவ்வொரு நாளும்
யாரேனும் ஒருவர்
அலையாய் எழும்பச் செய்து
விடுகிறார்கள் உன் நினைவை
காதல் வேள்வியில்
ஆகுதியாவதற்கு கொடுத்து
வைத்திருக்க வேண்டுமல்லவா
இந்த மழை உன்னையும்
நனைத்திருக்குமா
பேய்க்காற்றில் உதிரும்
பழுத்த இலைகள் நீ மிதிப்பதற்காக
உனது காலடியில் தவங்கிடக்கும்
உன் மனக்கதவை தட்டிக் கொண்டிருக்கின்றன
எனது கைகள்
நீ திறப்பாய் என்ற நம்பிக்கையில்
நிலவைப் போன்று
உன் நிழலும் அன்றாடம்
தேய்ந்து வளருகிறது
நட்சத்திரத்தின் காதலை
நிலா ஏற்றுக் கொள்ளுமா
அலையென மீண்டும் மீண்டும்
முயற்சியெடுக்கும் எனக்கு
என்ன விடையளிக்கப் போகிறாய்
மங்கிய ஒளியில்
உன் முகம் ஒளிர்வதை
தூரத்திலிருந்து நான்
பார்த்துக் கொண்டிருந்தேன்
நான் நாடுகடத்தப்படலாம்
காதலுக்கு எல்லைக்கோடுகள்
ஒரு பொருட்டல்ல
என்பதை நீ மட்டுமே அறிவாய்.

3

தன்னைவிடவும் அதிகமாய்த்
தெரிந்திருப்பவரை மனிதன்
தேடிப் போகிறான்
பூசாரிகள் சடங்குகள்
என்ற பெயரில்
அவனைச் சுற்றிலும்
சுவர்கள் எழுப்பியுள்ளனர்
மதகுருமார்களிடம் அனைத்துக்
கேள்விகளுக்குண்டான பதிலையும்
பெற்றுவிடலாம் என மனிதன்
நம்பிக் கொண்டிருந்தான்
வலியவர்களின் அடக்குமுறையை
கடவுள் விட்ட வழியென்று
எளியவர்கள் பொறுத்துக் கொண்டனர்
அதிர்ச்சியான சம்பவங்களை
எப்படி எதிர்கொள்வது என்று
துரோகிகள் ஒத்திகைப்
பார்த்துக் கொண்டனர்
அலங்கரிக்கப்பட்ட பிணத்திலிருந்து
கோடித் துணியை
உருவுவதற்கு வெட்டியான்
தயக்கம் காட்டுவதில்லை
எனது கூக்குரல்
வெளியே தெரியாமல்
நினைவுச் சுவர் தடுத்துவிடுகிறது
கருணையை வேண்டி நிற்கிறான்
கவிஞன்
அவனது உதிரத்தை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்
கடவுள்
கால்களை வருடிய அலைகள்
கவிதை நீரூற்றுக்கு
வழி காட்டியது
வாயில்கள் திறந்திருந்தன
இவனை வரவேற்கும் விதமாக
சவப்பெட்டி செய்பவனுக்குத்
தெரியாது தான் எப்போது
சாவோமென்று
களைப்பு மேலிட அவன்
கீழே விழுந்தான்
கடக்க வேண்டிய தொலைவு
இன்னும் மீதமிருந்தது
மரணம் அவனை சிறைப்பிடித்தாலும்
உயிர்த்தெழலாம் என்ற
நம்பிக்கை இருந்தது அவனுக்கு
மூதாதையர்களின் ஆசி
அவனுக்கிருந்ததால் தான்
இலக்கின் முக்கால்வாசி
துாரத்தை அவனால் கடக்க
முடிந்திருக்கிறது
வசந்தத்தை எதிர்கொள்ளும்
நன்னாளை அவன்
எதிர்ப்பார்த்திருந்தான்
எல்லாவற்றையும் வசப்படுத்திக்
கொள்ள முயன்ற அவன்
இறுதியில் வெறுங்கையோடுதான்
விடை பெற்றான்.

4

துயர்மிகு இரவில்
எனது கண்கள்
தூங்க மறுத்தன
மரணத்தின் கைகள்
என்னை ஆரத்தழுவிக் கொண்டன
விழிப்பற்ற உறக்கத்தை
விரும்புகிறது என் இதயம்
நினைவு முட்கள்
உடலெங்கும் காயத்தை
ஏற்படுத்துகிறது
உறக்கத்தை நாடும்
எனது ஆன்மா
மரணத்தை பரிசாகக்
கேட்கிறது
படுக்கையில் முள்
விடியலை வெறுத்தொதுக்குகிறது
என் கண்கள்
பாரத்தை இறக்கிவைக்க
தகுந்த இடம் தேடுகிறேன் நான்
மரணம் எனக்கு சிறகுகள் தரட்டும்
மனிதன் இல்லாத தீவுகளில்
கொஞ்சநாள் இளைப்பாறட்டும்
எனது ஆன்மா
அமைதியின் பாடலில்
லயித்திருந்தேன் சிறிதுநேரம்
ஓய்வை நாடுகிறது எனதுடல்
மரணத்தை யாசகமாய்க் கேட்கிறது
எனது இதயம்
நான் விடைபெற்றுச் சென்றதற்காக
வருந்தாதீர்கள்
விடுதலையின் கரத்தில்
என்னை ஒப்படைத்துவிடுங்கள்
பிரிவு மதிப்புமிக்கது
துக்கம் மிகுந்த அழுகையால்
அதைக் களங்கப்படுத்தாதீர்கள்
பழிகாரா உனது தாகத்துக்கு
எனது இரத்தத்தை அல்லவா
கேட்கிறாய்
துயரக்கடலில் என் படகு
தள்ளாடுவது உங்களுக்கு
வேடிக்கையாய் இருக்கிறது
குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்
எனக்கு வாழ்க்கையிலிருந்து
விடுதலை அளியுங்கள்
விளக்கை அணைத்துவிடாதே
எனது ஆன்மா அந்த
வெளிச்சத்தைத் தான்
நம்பியிருக்கிறது
கள்ளங்கபடமற்ற ஒருவரைக்கூட
என் வாழ்நாளில் நான்
சந்தித்ததில்லை
கடவுளின் ராஜ்ஜியத்தில்
நுழைய ஆசைப்படுகிறேன்
எனக்கு விடைகொடுங்கள்
அப்போதாவது கடவுளின் பாடலை
எனது செவிகள் கேட்கட்டும்.

•••

ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு,
இந்தியா.
cell:9597332952, 9095584535
mathi2134@gmail.com

சிவன் கோயிலில் லலித் தாண்டவம் : சொ.பிரபாகரன்

images (15)

கிழக்கு காட்மண்டின் பக்மதி நதித்துவாரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது பசுபதிநாத் கோவில். அங்கு இனியாவைப் பதினைஞ்சு வருசத்துக்குப் பிறகு பார்ப்போம் என்று, நான் கனவிலும் நினைக்கவில்லை. ஜானைத் திருமணம் செய்து, குழந்தைகளுடன் வந்திருந்தாள். சற்று உடம்பு வைத்திருந்தது. அவளது பழைய வசீகரம் இன்னும் குறையவில்லை. சேலை அணியாமல், ஸ்கர்ட் அணிந்திருந்தாள். அது கவர்ச்சிகரமாக இருந்தது.

இனியா என் பழைய நண்பன் நிரஞ்சனின் மனைவி. அதெல்லாம், இப்பப் பழங்கதையாகி விட்டது? நிரஞ்சனுக்கும், அவளுக்கும் எப்படிப் பழக்கம் ஏற்பட்டது என்பது எனக்குத் தெரியாது. கொட்டாவி வருவது, போவதற்கு எப்படிக் காரணம் கிடையாதோ, அது போல காதல் வருவதற்கும் போவதற்கும் கூட காரணம் கிடையாது.

நிரஞ்சனுக்கு அப்போது 35 வயது. ஆனால் இனியாவுக்கு 20-க்குள், சரியாகச் சொன்னால், 18 அல்லது 19 இருந்திருக்கும்.

வழியாமல் கதையைச் சொல்ல சொல்கிறீர்களா?

நிரஞ்சனுக்கு மெலிந்த தேகம்; நோஞ்சான். அவன் வயதை எளிதில் கணிக்க முடியாது. பார்ப்பவர், 25 வயது இருக்குமென எண்ணி ஏமாறுவார்கள். மாறாக இனியா கொழு கொழு என திண்ணமான மார்புடன் விதிர்த்து நிற்பாள். பார்ப்பவர், 22 வயதிருக்கும் என எண்ணுவார்கள்.

நிச்சயமாக நிரஞ்சன் உடம்பைப் பார்த்து, இனியா அவனைக் காதலிக்கவில்லை. அவன் உண்மையைப் பேசுகிறான் என்பதற்காக, அவள் அவனைக் காதலித்தாகச் சொன்னாள்.

“நான் சொல்லும் உண்மையைக் கேட்டால், நீ என்னைக் காதலிப்பதையே நிறுத்தி விடுவாய்!” என்றுதான், நிரஞ்சன் முதலில் இனியாவிடம் பேச ஆரம்பித்தான்.

“உன்னைக் காதலித்தால்தானே, நிறுத்துவதற்கு? ஏதாவது எதேஷ்டத்துக்குக் கற்பனைச் செய்து கொண்டு, அவஸ்தைப் படாமல், உண்மைகளை அவிழ்த்து விடு” என்று சாதாரணமாக வேட்டியை அவிழ்ப்பது போல் கேட்டாள் இனியா. உண்மையை அவிழ்த்து விடா விட்டால், அவனை ஒரு ஆண் என்றே மதிக்க மாட்டாள் என்பது போல, நிலைமைச் சிக்கலாகி விட்டது.

“வந்து இனியா! வந்து… நான் ஏற்கனவே திருமணமானவன்..”

“அப்படியா? எஞ்சாய் தி லைப் வித் யுவர் ஒய்ப்..”

“அப்படி எஞ்சாய் பண்ண முடியாது என்ற நிலை வந்ததால்தான், நாங்கள் டிவோர்ஸ் வாங்கிப் பிரிந்து விட்டோம். பத்து வருசம் என்னோட வாழ்ந்தவள், பதினொராவது வருசம் என்னை புருசனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி விட்டாள்..”

“சோ… பத்து வருசத்துக்கு முன்பு தொலைத்த சந்தோசத்தை, இப்போது மீண்டும் பெற்று விட்டாய், என்று சொல்!”

அவளது இந்த வார்த்தைகளைக் கேட்டதும், வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் நிரஞ்சன்… தனது ஜோக்கையும் கேட்டு, இப்படிக் கேணைத்தனமாக ஒருவன் சிரிக்கிறானே என்று, அவளுக்கு அவன் மேல் ஒரு வாஞ்சை வந்தது.

சிரித்துக் கொண்டே, அவள் இடுப்பை அவன் ஒரு தட்டு தட்டினான். ஏதோ அவளுக்கு அவன் கையில் இருந்து, இடுப்பு வழியே இதயத்திற்குள் குறைந்த அழுத்த மின்சாரம் பாய்வது போல் இருந்தது. பரவச பட்டுப் போனாள். இடுப்பைத் தட்டியதால்தான் காதல் வந்தது என்றால், காமந்தான் காதலுக்கு மூலக்காரணம் என இழிவாக எண்ண வாய்ப்பு உண்டு. ஆகவேதான், உண்மையைப் பேசுவதால், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசாததால், அவனைக் காதலித்தேன் என்று உண்மைக்குப் புறம்பாக, ஒரு காரணத்தை ஜோடித்தாள் இனியா. பின்னர் தான் சொன்னதை, அவளே நம்பவும் ஆரம்பித்து விட்டாள்.

காதலிப்பதற்குக் காரணம் சொல்ல வேண்டுமா? ஆமாம் காதலிப்பதற்குக் கண்டிப்பாகக் காரணம் சொல்ல வேண்டும். ஆனால் காதல் ஏன் வருகிறது என்பதற்குக் காரணம் தேவையில்லை..

நிரஞ்சன், இனியா இப்படிச் சொல்வாள் என எதிர்பார்க்கவில்லை. “நீ இவ்வளவு உண்மை பேசுபவனாய் இருப்பாய் என நான் நினைக்கவே இல்லை.. உன் உண்மைத் தன்மைதான், உன்னைக் காதலிக்க வைத்தது…” தான் எப்போது உண்மை பேசினோம் என்பது நிரஞ்சனுக்குப் புரியவில்லை என்றாலும், அதைப் புரிந்து கொள்ளவும், அவன் முயற்சிக்கவில்லை.

“அப்படி என்றால், நீ என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தயாரா?” என்று அவளிடம் சந்தோசத்துடன் கேட்ட தருணத்தில், அவனது உள் மனது எச்சரித்தது.. ‘உண்மையைப் பேசுவதினால், உன்னைத் திருமணம் பண்ண விரும்புவதாக, அவள் சொல்கிறாள்.. இவளைத் திருமணம் செய்து, வாழ்க்கைப் பூராவும், உன்னால் உண்மையைப் பேச முடியுமா?’

உச்சக்கட்ட மகிழ்ச்சியின் போது, எதிர்கால ஆபத்துகளைத் துச்சமாக மதிப்போம். உங்களுக்குச் சுகர் உள்ளது, ஸ்வீட்ஸ் சாப்பிட கூடாது என பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். பத்து வருசத்துக்குப் பிறகு, சிறுநீரகம் பழுதுபட்டு அவஸ்தைப் பட வாய்ப்புள்ளது என்பதற்காக, இன்று கிடைக்கும் ரசகுல்லாவை யாரும் மறுப்பதில்லை. நிரஞ்சனின் நிலையும் அதுதான். வாழ்க்கை முழுதும் உண்மை பேசுவது, ஏதோ அல்வா சாப்பிடுவது போல எளிதானது என்ற குருட்டு நம்பிக்கையுடன், அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

நிரஞ்சன் சுத்த இந்து. இனியா புராடஸ்டண்ட் கிருத்துவச்சி. மதம் மாறி, அவளைத் திருமணம் செய்து கொண்டான். கிருத்துவத்திற்கு மாறி, அந்தத் திருமணம் நடப்பதை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “செக்குலராக ரெண்டு பேரும் கல்யாணம் செய்திருக்கலாம். குறைந்தது, இந்து முறைப்படியாவது திருமணம் செய்திருக்கலாம். புராடஸ்டண்டில் விவாகரத்துச் செய்வது கடினம். நம்ப சிரிவித்யா பிராமணப் பொண்ணு. புகழ்பெற்ற நடிகை. ஒரு கிருத்துவரை மதம் மாறி கல்யாணம் பண்ணி, கடைசி வரை விவாகரத்தே வாங்க முடியாம, எவ்வளவு நஷ்டப்பட்டு இறந்தாள் தெரியுமா?” எனது நண்பர்கள் என்னைக் கடுமையாக கண்டித்தார்கள்.

வாழ்க்கையைத் துவங்கும் போதே, அபசமாய் பேசுறேனாம்.. என் கருநாக்கு, அபசச்சொல்லைப் பலிக்க வைத்து விட்டது.

நாங்க நாடகம் போடுவோம். நாடக்குழுவின் நிரந்தர கதாசிரியன் நான் என்றால், நிரந்தர கதாநாயகன் நிரஞ்சன். ரிகர்சல் செய்றோம் என்று கூத்தடிக்க. நாங்க எல்லாம் கூடுவோம். அப்படிதான், நிரஞ்சன் பழக்கம். நிரஞ்சனின் காதலியாய், மனைவியாய் இனியா பழக்கம்.

ரிகர்சலின் போது, எனது தத்துவத்தை எடுத்துரைப்பது வழக்கம். கதாசிரியர் சும்மா இருக்கக் கூடாதல்லவா? “நண்பர்களே! கடந்த ஒரு மாதமாக பொய்யே சொல்லாதவங்க, ஏமாற்றாதவங்க, யாராவது நம்ப குழுவில் இருந்தா, கையைத் தூக்குங்க..”

நிரஞ்சன் மட்டும் தயங்கி தயங்கி, கையைத் தூக்கினான். அவனது கட்டாயம் அது. இனியாவின் முகத்தில் பெருமிதம்.

“கடந்த ஒரு வாரமாய், பொய்யோ ஏமாற்றோ செய்யாதவங்க, கையைத் தூக்குங்க..” நிரஞ்சனைத் தவிர யாரும் கையைத் தூக்கவில்லை. இனியாவின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி.

“கடந்த 24 மணி நேரமா பொய்யோ ஏமாற்றோ செய்யாதவங்க, யாரா இருந்தாலும் கையைத் தூக்குங்கள்.”

“இனியா! நீயும்தான் பொய்யே சொல்வதில்லையே? ஒற்றையில் நான் மட்டும் கையைத் தூக்கிக் கொண்டிருக்க, வெட்கமாக உள்ளது..” என்று இனியாவிடம் கிசுகிசுத்தான் நிரஞ்சன்.

“டியர்! உன்னை ஊக்குவிக்கும் வகையில் நான் காப்பர்-டி போட்டிருப்பதாக அடிக்கடி சொல்வேன்.. உனக்கு குழந்தைகள் என்றால், வளர்க்க நமது பொருளாதார பலம் தடையாய் இருக்கும் என்ற பயம். ஆனால் எனக்குக் குழந்தைகள் மேல் கொள்ளைப் பிரியம்.. உண்மையில் நான் காப்பர்-டி அணியவில்லை..” என்று அவன் காதுகளில் இனியா உண்மையைக் கிசுசிசுக்க, கதாநாயகன் தொய்ந்து போனான்.

“காப்பர்-டி அணியவில்லையா? உன் பொய்யின் முலம், நான் அம்பலப்பட்டுப் போவேன், போலிருக்குது.” கையை இறக்கிக் கொண்டான் நிரஞ்சன்.

நான் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தேன். “நம்மால் உண்மையைப் பேசவே முடியாது. நம்ப வார்த்தையில், நம்ப எழுத்தில், எந்த உண்மைகளையும் அப்படியே கொண்டு வர முடியாது.. ஒரு இடைவெளி கண்டிப்பா இருக்கும். வேண்டுமானால், நமது எழுத்து மூலமா, பேச்சு மூலமா, உண்மைக்கு அருகாமையில் செல்லலாம். உதாரணமா ஒருவன் சிரித்தான் என்று சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் வாய் விட்டு மனதார சிரித்தானா? புன்முறுவல் பூத்தானா? வஞ்சத்தோடு சிரித்தானா? வெறுத்துப் போய் சிரித்தானா? என்பது கேட்பவருக்குத் தெரியாது. வாய்மொழியால் ஒரு அர்த்தம் பட சொல்லி விட்டு, உடல்மொழியால் வேறு அர்த்தம் கொடுக்க முடியும். சொல்லப் போனால், அதுவும் பொய்தான், ஏமாற்றுதான். நிரஞ்சன் இந்தப் பொருளில் உண்மையைப் புரிந்து கொள்ளாததால்தான், எப்போதும் கையைத் தைரியமாகத் தூக்கிக் கொண்டே இருந்தார். மேலும் அவர் நமது நாடகக்குழுவின் கதாநாயகன். இங்கே கதாநாயகர்கள் பொய்யே சொல்ல மாட்டார்கள் என்ற பிம்பம் கட்டப்பட்டுள்ளது.. உண்மையில் கதாநாயகர்கள்தான், தங்கள் பிம்பத்தை உண்மையாக்க, நிஜ வாழ்க்கையில், பெரும் பொய்யர்களாக இருக்க வேண்டி உள்ளது…”

நான் முழுப்பேச்சையும் முடிப்பதற்குள், ஏற்கனவே நொடிந்திருந்த நிரஞ்சன், கோபித்துக் கொண்டு கிளம்பி விட்டான். இனியாவும், அவனைச் சமாதானப் படுத்த பின் தொடர்ந்தாள்.

“நிரஞ்சன் நீ எழுதின நாடகங்களில், இனி நடிக்க மாட்டான். அதனால் உன்னை நாடகக் குழுவின் நிரந்தர கதாசிரியன் பொறுப்பிலிருந்து தூக்க வேண்டியதுதான், வேறு வழியே இல்லை.” என எனது நண்பர்கள் என்னைச் சுற்றி நின்று, இடுப்பை ஆட்டிக் கிண்டல் செய்தனர்.

நண்பர்களிடம் இருந்து தப்பி, வீட்டிற்கு வந்ததும், எனக்கு வியர்த்து விறுவிறுத்தது. வெற்றி கொடுக்கும் சந்தோசத்தை விட, தோல்வி கொடுக்கும் வலி, பல மடங்கு அதிகம்.. நான் எதை இழக்கவும் தயார், ஆனால் கதாசிரியன் என்ற அந்தஸ்தை மட்டும் இழக்கத் தயாரில்லை. ஆத்திரத்தில், இனியாவை நிரஞ்சன் கண் முன்னர் வைத்தே புணர்வது போல கற்பனைச் செய்து, அவனை வஞ்சித்துக் கொண்டிருந்தேன்.

வீட்டின் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டு, கதவைத் திறந்தேன். பார்த்தால், இனியாதான். அவள் என்னைப் பார்க்கத் தனியே ஏன் வரவேண்டும்? வியர்த்து இருந்த, எனது தேகத்தைப் பார்த்து, “மாஸ்டர்பேசனா?” என்று கேட்க நினைத்தவள், ஏனோ மரியாதை கருதி, அப்படிக் கேட்காமல், “இப்பச் சூழல் சரியல்லை? பிறகு வரேன்..” என கிளம்பினாள்.

“நோ.. நோ.. வேற ஒண்ணுமில்லை. கொஞ்சம் அப்செட் ஆகியிருந்தேன்.. இரண்டு நிமிசம் பொறு. பிரெஸ்-அப் பண்ணிட்டு வந்துடறேன்..” என உள்ளறைக்கு ஓடினேன்.

நான் திரும்பி வரும் போது, இனியா அழுது கொண்டிருந்தாள். ஏதோ ஆறுதல் தேடி வந்திருப்பாள் போலிருக்கிறது.. என்னைப் பார்த்ததும், கண்களைத் துடைத்துக் கொண்டு, பேச ஆரம்பித்தாள்.. “நான் அவனை உண்மையானவன் என நம்பினேன். ஆனால் அவன் உண்மையானவனாய் இல்லை..” என்று சொல்லி மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

“நாம் உண்மையானவனைதான் கல்யாணம் செய்யணும்னா, திருமணம் பண்ணாமதான் இருக்கணும். சத்தியசோதனை எழுதின மகாத்மா கூட, சத்தியத்தைச் சோதனைப் பண்ணி பார்த்தாரே ஒழிய, உண்மையைதான் பேசினார் என்று சொல்ல முடியாது.. இங்கே சொல்லப் பட்ட வார்த்தைகளுக்கும், எழுதப்பட்ட எழுத்துகளுக்கும், அவை எவ்வளவு உண்மையின் அருகாமையில் சென்றிருக்கிறது என்பதை வைத்துதான் உயர்வாக மதிக்கப் படுகிறதே ஒழிய, எந்த எழுத்தும் பேச்சும், அப்படியே உண்மையாக இருந்ததில்லை…” என்று உடைத்துப் போடுவது போல சொன்னேன்..

“நீ சொல்றது எதுவும் எனக்குப் புரிய மாட்டேங்குது, பிரபா?”

“உண்மைப் பேசறவனை எதுக்குக் கல்யாணம் பண்ணணும்? கல்யாணம் பண்றது, குழந்தை குட்டிகைளப் பெற்றுக் கொள்வதற்காக.. குழந்தைகள் பெற்றுக் கொள்ள, உண்மைப் பேசினால் என்ன? பொய் பேசினால் என்ன?”

அவள் கட்டுக்கடங்காமல் அழுதாள்.. “அவனது முதல் மனைவி, நிரஞ்சனுக்குத் தகப்பனாகும் அருகதை இல்லை என்பதற்காகதான் டிவோர்ஸ் செய்தாளாம்.. அதை மறைத்து, இவன் என்னைத் திருமணம் செய்து கொண்டான்..”

அப்படியா? முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு, யோசித்தேன். நான் அப்போது யோசித்ததை வார்த்தைகளால் சொல்லி விட்டேன் போலிருக்கிறது: “குழந்தைப் பெற்று கொள்ள வேண்டும் என்றால்தான், கல்யாணம் வேண்டும்.. பாலியல் இன்பத்துக்குக் கல்யாணம் தேவையில்லை..” சொன்ன பிறகுதான், இதைப் போய் இப்போது நான் ஏன் சொன்னேன் என்று எனக்கே தோன்றியது.

நான் சொன்னது, அவளைச் சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, துயரத்தை மிகுதிப்படுத்துவது வெளிப்படையாகத் தெரிந்தது. நான் சொன்னதை மீண்டும் ஒரு தடவைச் சொல்லச் சொல்லி, சைகையால் வினவினாள். நான் காதில் விழாதது போல் செவிடனாக இருந்தேன். “என்னமோ சொன்னீயே? என்ன?” என தெளிவான வார்த்தைகளில் கேட்டாள்.

“நம்ப கதாநாயகர்கள் பலருக்கு நிஜத்தில் ஆண்மை இருப்பதில்லை.. நிஜத்தில் ஆண்மையற்ற கதாநாயகன், அந்த உண்மையை மறைத்து, தங்களைப் பராக்கிரமசாலியாக காட்ட முனைகிறான். அதில் ஏமாந்த சாமானிய ரசிகன், அவனை நெஞ்சில் ஏந்துகிறான்,” என்றேன்.. அவள், தனது துயர நிலையையும் மறந்து, சிரித்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, போகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து அகன்றாள். போகும் போது, “நீ நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு ஏதோ புளுகுகிறாய்! கதாநாயகன் புளுகுக்கு அச்சாரம் போடுவதே, உன்னைப் போன்ற கதாசிரியர்கள்தானே? நீங்கதான் பொய்யர்கள்!!” என்றாள்.

எதுவும் நடக்காத மாதிரி, இருவரும் அன்னியோனியமாய் நாடகக்குழு வழக்கமாக குழுமும் இடத்திற்கு வந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போதுதான் நடிகனாக பிறக்கவே பிறப்பெடுத்தவன் நிரஞ்சன் என்று நம்பினேன். எப்படி அவனால் தனது அகஉணர்வுகளை மறைக்க முடிகிறது!! நடிகனுக்கேற்ற ஜோடி அவள். இருந்தாலும் குழுவின் நிரந்தர கதாசிரியருக்கும், கதாநாயகனுக்கும் சர்ச்சை இருந்ததால், நாடக ஒத்திகை நடத்த இயலவில்லை.

சும்மா வீதியில், ‘நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணும்’ திரைபடத்தில் வரும் நண்பர்கள் மாதிரி, கிரிக்கெட் விளையாட முடிவு செய்தோம். மெடுல்லா ஒப்ளங்காவில் அடிபடாம விளையாடணும். நிரஞ்சன் கதாநாயகன் அல்லவா? அவன் தான் முதலில் பேட் செய்வேன் என அடம்பிடித்து, மட்டையை எடுத்துச் சென்றான். நான் பெளலிங் போட ஆரம்பித்தேன்.

கதாநாயகன் ஆக்டிவாக இருக்கும் போது, அவனது மனைவி எதிர்மாறாக மந்தமாக இருந்தாள். அப்போதுதான் கதாநாயகன் எடுப்பாய் தெரிவான் என நினைத்து அப்படிச் செய்கிறாளா? எது எப்படியோ, அனைவரும் அவரவர் பாத்திரத்தைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

திடீரென பேண்ட் சத்தம் கேட்டது. முறையான இடைவெளியில், ஒரே அலைவரிகையில் மத் மத் என மத்தளம் ஒலிக்க, ஒலித்தப் பேண்ட் இசை, சவ ஊர்வலம் போவதைப் பறை சாற்றியது.

நிரஞ்சன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவனது முகத்தில் துக்கத்தின் ரேகைகள். பேட்டை அப்படியே கீழே போட்டு விட்டு, தொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, தலை குனிந்து, சவ ஊர்வலம் மறையும் வரை, அப்படியே கல் மாதிரி நின்று மரியாதை செலுத்தினான். நாங்கள் அனைவரும், நெகிழ்ந்து போனோம். நாங்களும், அவன் கூட நின்று, அந்தச் சவத்துக்கு மரியாதை செலுத்தினோம். பாவம் யாரோ ஒரு பெண்மணி, 30-35 வயதுக்குள் மரணத்தைத் தழுவி இருக்கிறாள். ஆண்டவன் அவளுக்கு, அவ்வுலகத்திலாவது உண்மையான சொர்க்கத்தை நல்குவாராக!

சவஊர்வலம் கடந்து சென்றதும், மறுபடியும் பேட் பண்ண அவன் தயாரானான். ஆனால் நான் அவனைப் போய், கட்டிப் பிடித்துக் கொண்டேன். “உன்னை மாதிரி ஒருவனை நண்பனாக அடைந்ததற்கு, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாதிரி குணநலன் இருப்பதால்தான், கடவுள் உன்னைக் கதாநாயகனாகவும், என்னைக் கதாசிரியனாகவும் படைத்துள்ளான்,” என்று கண்ணீர் வடித்தேன். என் சகாக்களும், நான் சொன்னதை ஆமோதித்தார்கள். இனியா விம்மித்துப் பெருமையுடன் இருந்தாள்.

நிரஞ்சனும் கண்ணீர் வடித்தான்: “என்னோட பத்து வருசம் குடும்பம் நடத்தினவளுக்கு, நான் இந்த மரியாதைக் கூட, செலுத்தாட்டா, நான் மனுசனே இல்லை. இது கூட நான் செய்யாட்டா, என்னை எல்லாரும் காரித் துப்புவாங்க.”

நாங்கள் நிரஞ்சனைக் காரித் துப்பினோம்.. “எப்படிடா? எப்படிடா? பொண்டாட்டியை தூக்கிட்டுப் போறாங்க.. உன்னாலே கிரிக்கெட் விளையாட முடியுது?”

இனியாதான் ரொம்ப நொந்து போனாள். தேம்பி தேம்பி அழுதாள்.

அதற்குப் பிறகு கிரிக்கெட் விளையாடும் மூட் யாருக்கும் வரவில்லை. அனைவரும், அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டோம்.

இரண்டு நாள் கழித்து, வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம். திறந்தால், இனியா நின்றாள். நான் உள்ளே வா என்று கூப்பிடாமலேயே, பொண்டாட்டி புருசன் அறைக்குள் நுழைவது போல் உள்ளே நுழைந்தாள். “இன்றைக்கு பாதி சந்தோசமாயும், பாதி வருத்தமாயும் இருக்கிறேன்..”

“ஏன்?” என்று நான் கேட்காமலேயே, பதிலைத் தொடர்ந்தாள். “நிரஞ்சனின் குழந்தைக்குத் தாயாகவில்லை என்பதில் சந்தோசம். அவனைப் புராடஸ்டண்டாக மாற்றி, திருமணம் செய்ததில் வருத்தம்.”

“ஏன் வருத்தம்?” என்று இந்த தடவைக் கேட்டு, வைத்தேன்.

“புராடஸ்டண்ட்கள், எளிதாக டிவோர்ஸ் வாங்க முடியாது என்று, நீ எங்க கல்யாணம் அன்று சொன்னது உண்மைதான்,” எனச் சொல்லி முகத்தைப் பொத்தி அழுதாள்.

எனக்கு என்னச் சொல்லி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. அவள் எனது மடியில் முகத்தைப் புதைத்து அழுதாள். அவளது முதுகில் இதமாய் வருடினேன். கல்யாணம் ஆன ஒருத்தி முதுகில், அன்னிய ஆண் வருடுவதை, நமது கலாச்சாரம் மன்னிக்குமா?

“பிரபா! இனி அந்த நிரஞ்சனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபா பணமிருந்தால் தா! என் பிரெண்ட் ஒருத்தி பெங்களூரில் இருக்கிறாள். அங்கே போய், ஏதாவது வேலைப் பார்த்துப் பிழைத்துக் கொள்கிறேன்..”

“என்ன பேசுகிறாய்? நிரஞ்சனைப் பார்க்காமல், இப்படியே புறப்படுவது சரியா?”

“ஆமாம்.. நிரஞ்சனைப் பார்த்தால், நான் அவனைக் கொன்று விடுவேன்.”

நான் அவளுக்குச் செக் எழுதிக் கொடுத்தேன். “நிரஞ்சனிடம் சொல்லாமல் போவதை, சரியென நான் நினைக்கவில்லை.”

“நிரஞ்சன் உயிரோடிருப்பது, உனக்குப் பிடிக்க வில்லை என்று நினைக்கிறேன். நிரஞ்சனைப் பார்த்தால், நிச்சயம் கொன்று விடுவேன்?” என்று ஆக்ரோஷமாய் கத்தினாள் இனியா.

அவளுக்குப் பரிச்சயமான விசயங்களைச் சொல்லி அறிவுறுத்த முனைந்தேன்: “உனக்குப் பெண் சாத்தானி லிலித்தைத் தெரியுமா? குழந்தைகளைக் கூட கொல்ல தயங்காத சாத்தானி அவள். அவளை ஆதாமுக்கு நிகராக படைத்தார் கடவுள். ஆனால் அந்தச் சாத்தானியோ, தான் ஆதாமுக்கு நிகரானவள் என்பதினால், யாருக்கும் அடங்க மறுத்தாள். கடவுள் ஆணையிட்டும் அவள் ஆதாமுக்கு அடங்கேவே முடியாது என்று சொல்லி விட்டாள். கடவுளுக்கே சவால் விட்டுத் தாண்டவம் ஆடினாள்.. உன்னைப் பார்த்தால் எனக்கு லிலித்தின் ஞாபகம்தான் வருகிறது..”

அவள் நான் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. சொல்லாமல் கொள்ளாமல், கிளம்பி விட்டாள். நான்தான் நிரஞ்சனுக்குப் போன் பண்ணி எச்சரித்தேன். “நிரஞ்சன்! இனியா, ரொம்ப டிஸ்டர்ப்பாக உள்ளாள். இப்பப் பேங்கிற்குப் போகிறாள். அவளைச் சமாதானம் செய்து, வீட்டிற்குக் கூட்டிட்டுப் போ!”

அப்படி அவனிடம் பேசியிருக்கக் கூடாது. ஒரு குற்றஉணர்வு, அப்படியே என்னைக் கழுத்தைப் பிடித்து வாழ்க்கை முழுவதும் அழுத்துவதற்கு, அவனுடன் பேசிய அந்த அலைப்பேசி பேச்சு காரணமாகி விட்டது.

பணம் எடுக்க இனியா வங்கிக்குச் சென்றாள். அவளைத் தொடர்ந்து, நிரஞ்சனும் போனான். அப்போது, முகமூடிக் கொள்ளையர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் சுட்டதில் இறந்த ரெண்டு கஸ்டமர்களில், ஒருவன் எங்கள் கதாநாயகன் நிரஞ்சன்.

புத்திப் பேதலித்தது போல அதிர்ச்சியின் உறைந்து போனாள் இனியா. அவள் சுயஉணர்வுக்கு வந்த போது, நிரஞ்சனின் சாம்பலைக் கடலில் கரைத்து, இரண்டு மாதம் முடிந்திருந்தது.

பின்னர் என்னிடம் வேறு புதிய செக் மூலம் பத்தாயிரம் வாங்கிச் சென்ற இனியா, ஒரு வருடம் கழித்து எனக்குப் பனிரெண்டாயிரம் ரூபாய் நைஜீரியாவில் இருந்து அனுப்பி வைத்தாள். வட்டியுடன் என்னைப் பைசல் செய்து விட்டாளாம். பிறகு எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை.

காட்மண்டில் அப்ப குளிர் என்று சொல்ல முடியாது என்றாலும், கம்பளிப் போர்த்தியிருப்பது கதகதப்பாக இருந்தது. “என்ன, பொண்டாட்டியை மட்டும் கூட்டிட்டு வந்துட்டே? உனக்கும் நிரஞ்சன் மாதிரி, குழந்தை இல்லையா?” என கொஞ்சமும் கரிசனம் இல்லாது கேட்டாள் இனியா.

“எங்கப் பொண்ணை, என் அண்ணன் கனடாவுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கான்..” என்று என் மனைவிதான் பவிசாய் சொன்னாள். அந்தச் சொல்லுக்குள், அவள் அண்ணன் எங்கப் பொண்ணைக் கனடாவுக்கு எல்லாம் கூட்டிட்டுப் போயிருக்கான், ஆனால் என் அண்ணன் அப்படிப் பட்ட நல்லக் காரியத்தைச் செய்ய மாட்டான் என்ற குற்றச்சாட்டு ஒளிந்திருப்பது இனியாவுக்குத் தெரியாது.

ஜான் முன்னாடி நிரஞ்சனை நினைவூட்டுவது இங்கிதமில்லாது. என்றாலும், அதைத் தவிர்த்து, அவள் என்னிடம் என்ன பேச முடியும்? எங்கள் இருவருக்கும் பொதுவானவன் நிரஞ்சன் மட்டுந்தானே? நாங்கள் அனைவரும் காற்று வரும் தாழ்வாரத்தில் நின்று கொண்டோம். “பிரபா! உன்னை இங்கே பார்க்க முடியும்னு நான் சத்தியமாக நினைக்கலை. நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஏரோடிராமில் இருக்கணும். மிஞ்சினால் இன்னும் அரை மணி நேரம் உன்னுடன் பேச முடியும். அதற்குள் அனைத்து உண்மைகளையும் சொல்ல வேண்டும்.”

அனைத்து உண்மைகளையுமா? நான் எதுவும் பேசவில்லை. அவளை உற்றுப் பார்த்தேன். அப்படி உற்றுப் பார்ப்பதை என் மனைவி விரும்பா விட்டாலும், என்னால் தவிர்க்க முடியலை. “உன் தியரி படி, வார்த்தைகளில் அத்தனை உண்மைகளையும் கொண்டு வந்து விட முடியாது என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு, உண்மையைச் சொல்லி விடுவது என முடிவு செய்துள்ளேன்..” என்று மூச்சு விடாமல் பேசினாள் இனியா.

சிறிய அமைதிக்குப் பிறகு, “நிரஞ்சன் இறந்த அன்று, அதாவது நான் பேங்கிற்குப் போகும் முன்னர், உன்னிடம் என்ன சொன்னேன் என்பது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“நிரஞ்சன் உயிரோடு இருப்பது, பிடிக்க வில்லையா? என்று என்னைக் கேட்டாய். நிரஞ்சனைப் பார்த்தால், கொன்று விடுவேன் என்று எச்சரித்தாய்…”

“அப்படிச் சொல்லியும், நிரஞ்சனை அங்கே அனுப்பி, அவனைச் சாக வைத்து விட்டாயே? நிரஞ்சன் சாவுக்கு நீதான் காரணம்..” என்று அவள் சொன்னதும், எனக்குப் படபடத்தது. அங்கு அடித்த குளிரையும் மீறி எனக்கு வியர்த்தது. எனது மனைவியும் பதைபதைத்து நின்றாள்.

“நான் பேங்கிற்குப் போன கொஞ்ச நேரத்திற்குள் முகமூடி கொள்ளையர்கள் வந்தாங்க. எங்களைத் துப்பாக்கி முனையில் தரையில் படுக்க வைத்தார்கள். அப்பதான் நிரஞ்சனும் அங்கே வந்து மாட்டிக் கொண்டான்…..

“அப்பப் பாத்து ஒரு முகமூடிக்காரன் தலைஉறைக்குள் குழவி ஒன்று போய் விட்டது. தனது முகமூடியைக் கழற்ற வேண்டிய கட்டாயம் அவனுக்கு.. கழற்றும் போது, அவன் முகத்தைச் சிலர் பார்த்து விட்டார்கள். குழவியை வெளியே அடித்துப் போட்டு, முகமூடியை மறுபடியும் போட்டுக் கொண்டவன், ஒருவரைப் பார்த்து, ‘நீ என் முகத்தைப் பார்த்தாயா?’ என்று கேட்டான். அவர் பயத்தில் இல்லை என்பதற்குப் பதிலாக, ‘ஆமாம்’ என்று உண்மையைச் சொல்ல, அவரை உடனே கொள்ளையன் சுட்டுக் கொன்றான். உண்மை அவனுக்கு சரியான தண்டனையை வாங்கித் தந்து விட்டது.

“பின்னர் என்னிடம் திரும்பி ‘நீ பார்த்தாயா?’ என்று கேட்டான். அப்ப நான் சொன்னதுதான், நிரஞ்சனின் சாவுக்குக் காரணமாகப் போனது. எனக்காக புராடஸ்டண்டாக மாறிய, அந்த சுத்த இந்து நிரஞ்சனைக் கொல்ல, வேறு வழி எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவன் இந்துவாகவே இருந்திருந்தால், அன்று செத்திருக்க மாட்டான்; இன்றும் உயிருடன் இருந்திருப்பான்..”

எனக்கு வாய் குளறியது. இருந்தாலும், திக்கித் திக்கிக் கேட்டேன்: “நீ பார்த்தாயா என்று கேட்ட அந்தக் கொள்ளையரிடம், அப்படி என்னச் சொன்னாய்?”

“நான் சொன்னேன்: ‘நான் உங்களைப் பார்க்கவில்லை. ஆனால் என் கணவர் பார்த்தார். அதோ இருக்கிறாரே, அவர்தான் என் கணவர்..’ என்று சொல்லி, நிரஞ்சனை அடையாளம் காட்டினேன்.” இதைச் சொல்லி விட்டு, அவள் என்னைக் குரூரமாய் பார்த்தாள். ஒரு வக்கிரம் அவள் முகத்தில் கட்டித் தட்டிப் போயிருந்தது.

எனக்கு, சுகர் பேசண்ட் குளுகோஸ் சாப்பிட்டதும், சர்க்கரை கிறு கிறுவென தலைக்கு ஏறுமே, அப்படி கோபம் ‘சுர்’ரென உடல் முழுதும் ஏறியது. “இவ்வளவுப் பாவத்தையும், செய்து விட்டு, பாவ பரிகாரம் செய்யதானே, பசுபதிநாத் கோயிலுக்கு வந்துள்ளாய்?”

இதைச் சொல்லும் போது, இந்து என்பதற்கான செருக்கு, எனக்குள் சற்று பதிந்திருந்தது.

அவள் கேலியாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். “நாங்கதான் இப்பச் சுத்த இந்து. நாங்க இந்துவா மாறின கதையைச் சொன்னாதான், எங்களுக்கும் பசுபதிநாத் கோயிலுக்கும் உள்ள கனெக்சன் உனக்குப் புரியும். உண்மையில் ஜான் ஒரு புராடஸ்டண்ட். அவன் அப்பா இந்திய கிருஸ்துவர், அம்மா நைஜீரியாகாரி, அடிப்படையில் முஸ்லீம். புராடஸ்டெண்ட் முறைப்படி கல்யாணம் செய்தால், அவனை டிவோர்ஸ் செய்ய அவசியம் ஏற்பட்டால் முடியாது அல்லவா? அப்படி டிவோர்ஸ் வாங்க அவசியம் ஏற்பட்டு, அதுவும் முடியாமல், இன்னொரு கொலை செய்வதற்கு வாய்ப்பும் கிடைக்காமல் போய் விட்டால், இவனோடயே வாழ்நாள் முழுசும் கிடந்து சாக முடியுமா? அதனால் நாம் இந்துவாக மாறிடுவோம், அதுதான் உன்னதமான மதம்னு சொல்லி, அவனையும் நம்ப வைத்து, மதம் மாறி கொண்டோம். அப்படி மதம் மாறதான், நாங்க மொத மொதலா நேபாளம் வந்தோம். இந்தக் கோயிலில்தான், இந்துவா மாறினோம். எங்களுக்கு இந்து என்ற அடையாளத்தைத் தந்தது இந்தப் புனிதமான பசுபதிநாத் கோயில்…”

நான் ஜானைத் திரும்பிப் பார்த்தேன். அவன் தனது குழந்தைகளுடன் கொஞ்சிக் கொண்டு வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு வெட்டுக்குக் காத்திருக்கும் கிடா போல, இன்னொரு நிரஞ்சனாய், அவன் தெரிந்தான்.

“இந்த உண்மைகள் எல்லாம் உன் கணவனுக்குத் தெரிந்தால், அவன் வருத்தப் படுவான் இல்லையா?” என்று கேட்டேன்.

“அதுதான் உன்னிடம் தமிழில் பேசுகிறேன். அவனுக்குத் தமிழ் தெரியாது.. இந்தியும் ஆங்கிலமும்தான் தெரியும்..”

நான் ஸ்தம்பித்துப் போய் நின்றேன். “உன் ஜானாவது, நிரஞ்சன் போலில்லாமல், உண்மையைப் பேசறானா? உண்மையைப் பேசினாதானே உனக்குப் பிடிக்கும்?”

“கல்யாணம் பண்ணிக்கிற ஆண், எதுக்கு உண்மையைப் பேசணும்? தகப்பனாக ஆகிற தகுதி மட்டும் அவனுக்கு இருந்தா போதாதா?”

“உனக்கு இந்தக் கேடுகெட்ட அறிவுரை எல்லாம் தந்து, புத்திப் பேதலிக்க வைத்தது யார்?” என்று இனியாவைப் கடுமையாகக் கேட்டாலும், உள்ளுக்குள் இனியா குறித்துப் பயந்து போயிருந்தேன். அவளுக்குள் அடங்காத லிலித் சாத்தானி, ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“எனது குருநாதர் பிரபாகரன்.”

சம்மட்டி அடி பட்டது போல, நான் நொறுங்கிப் போனேன்.

அதற்குப் பிறகு நான் எப்போதுமே, லிலித் தாண்டவம் ஆடும் எந்தச் சிவன் கோயிலுக்கும் போவதில்லை. அது போல, லிலித் வாசம் கொள்ளும் சர்ச் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை.

எந்தக் கடவுளும் வேண்டாம்! வீட்டில் இருக்கும் கடவுள், எனக்குள் இருக்கும் கடவுள், என்னைக் காப்பாற்றட்டும், போதும்!

###

*****

மழை ( மலையாளம் ) : சாரா ஜோசப் ஆங்கிலம் :ஜே.தேவிகா தமிழில் :தி.இரா.மீனா

download (18)

அந்த மத்தியானத்தில் திடீரென்று மழை பெய்யத்தொடங்கிய போது ஹாலிற் குப் போகும் வழியிலிருந்த அந்தச் சிறிய அறையின் கதவு, ஜன்னல்களை அவள் சாத்தினாள். ஒரேயொரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்து அங்கு நின்று கொண்டு பெரும் ஓலமிட்டு வீசியடிக்கும் மழையைப் பார்த்தாள். மலைச்சரிவில் வெடிச் சத்தத்தோடு தன் பொருமலை மழை வெளிப்படுத் தியது.

“கடவுளே! ’அவள் முணுமுணுத்துக் கொண்டு தன்கையை நெஞ்சினருகே கொண்டுபோனாள்.கைவிடப்பட்டு இந்த மாதிரி—இந்த மாதிரி மழை ஓலமிட் குரல் கொடுக்கும்போது நானும் அழ வேண்டும்.அவள் தன் கன்னத்தை இரும்பு ஜன்னலில் வைத்து அழுத்தித் தேய்த்தாள்.தன் சக்தியை முழு வதுமாக இழந்து ஜன்னலில் சாய்ந்து உட்கார்ந்தாள். முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டாள்.

அவள் கணவன் ஹாலில் மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார்.மேகங்கள் மழை பெய்யக் கூடியபோதே அவர் ஹால்லைட்டைப் போட்டு விட்டார்..மோதும் ஓசையோடு கனமாக மழை பெய்தது. குளிர்காற்றில் வாசல் மிதியடியும்,திரைச் சீலைகளும் நனை யத் தொடங்கிய போது அவர் எழுந்து முன் கதவைச் சாத்தினார் காற்றில் திரைச்சீலைகள் தொடர்ந்து உக்கிரமாகப் படபடத்தன.அவள் படித்து விட்டுக் கீழேதரையில் பரத்திப் போட்டிருந்த புத்தகங்களை நனையாமலிருக்க பக்கத் தில் உள்ள அலமாரியில் அடுக்கி வைத்தார்.பிறகு அந்த நாற்காலியில் சாய்ந்து செய்தித்தாளை மீண்டும் படிக்கத்தொடங்கினார்.

குழந்தைகள் ஓடிவந்து அவரருகே தரையில் உட்கார்ந்து பழைய பேப்பர் துண்டுகளிலிருந்து படகுகள் செய்யத் தொடங்கினர்.

“அப்பா, கதவைத் திறந்து வையுங்கள்”மகன் கொஞ்சிய குரலில் கேட்டான். இடதுகையால் பேப்பர் படகைத் தூக்கியும் ,வலது கையால் நழுவி விழும் நிக்கரைச் சரிசெய்யவும் முயன்று கொண்டிருந்தான்.அவர் அதைச் சிறிதும் சட்டை செய்யாததால் அவர் கையைப் பிடித்து மீண்டும் இழுத்தான்.

“அப்பா!”

“என்னடா?”

“கதவு…”

“கதவா?”

“தயவுசெய்து திறங்கள் அப்பா”

“எதற்கு?”

“இந்தப் படகுகள் விட வேண்டும்”.

“ போடா,மழையில் நனைந்தால் ஜூரம் வரும்.நீயும் உன் படகும்!””

அவர் கண்கள் செய்தித்தாளில் இருந்து சிறிதும் விலகவில்லை.சிறுவன் கோபமும் ஏமாற்றமும் கலந்த நிலையில் தன் அக்காவைப் பார்த்தான்.” அடுத்து என்ன செய்யலாம்?அழத் தொடங்கலாமா ?”என்று கேட்பதுபோல அவன் பார்வை இருந்தது.;நல்ல கவனம் எடுத்து மிக அழகான முறையில் படகைச் செய்திருந்தாள். பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்வது போலத் தம்பியைப் பார்த்தாள்.தன் படகைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்;அது கசங்கி விடாமல் கவனமாக அழுத்தி மடித்துக் கொண்டிருந்தாள்.அவன் அதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்குக் கோபம் வந்தது. அவளும் அவள் படகும்! மழை இப்போது நின்று விடப்போகிறது.மழை நின்று விட்டால் அவள் தன் அழகான படகை எங்கே விட முடியும்?

“அக்கா!இங்கே வா’

“இரு. இதோ முடிந்து விட்டது! வருகிறேன்”.

அப்பா பார்த்துவிடாதபடி மிக கவனமாக இருவரும் ஜன்னல் கம்பியில் ஏறி கையை இயன்றவரை வெளியே நீட்டிப் படகுகளை விட்டனர்.

அவன் படகு மழைத் தண்ணீரில் சாய்ந்து அசையாமல் நின்றுவிட்டது.அவள் படகு நல்ல வடிவத்திலும், சிறகு போல மெல்லிதாகவுமிருந்த்து.ஒரு வினாடி நடுங்குவது போல இருந்து பின்பு மழைத்தண்ணீரில் செல்ல ஆரம்பித்த்து.

பலமான படகு செய்யத் தெரியாதா உனக்கு?பார், அதனால்தான் அசையாமல் நின்று விட்டது” அவள் சொன்னாள்

“ஏய்! மழைத்தண்ணீர் வருகிறது. இரண்டு பேரும் உள்ளே வாருங்கள்!”அப்பா சத்தமாகக் கூப்பிட்டார்,கண்களைப் பேப்பரிலிருந்து எடுக்காமலே.எதுவும் பேச வேண்டாம் என்பது போல அக்காவுக்குச் சிறுவன் ஜாடை செய்தான். அசையா மல் அங்கே நின்றனர். .

மழை வலுவானது.பூமியிலிருந்து பனி நீராவியாக எழுந்தது.மேற்கு பகுதியில் வானம் கனமானது.மலைகள் உப்பியது போலவும்,பனியில் மூழ்கியது போல வும் தெரிந்தன.அந்த நடுக்கம் தரும் மழை அவளை இன்னமும் பலவீனமாக் கியது .வேறு வழியில்லை என்று அவள் தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள்.

“நான் ஏன் அழுகிறேன்? ஏன் ? ஏன்?”

திடீரென்று தோட்டத்திலிருந்த சப்போட்டா மரக்கிளையிலிருந்து கோழியின் முட்டை அளவு கூட இல்லாத ஒருசிறுபறவை நடுங்கியபடி கீழே விழுவ தைப் பார்த்தாள்.ஒரு வினாடிதான்.மரத்தினடிப் பகுதிக்கு அது மழை வேகத் தில் அடித்துச் செல்லப்பட்டது.அது செத்துக் கொண்டிருக்கிறதென்று அவள் நினைத்தாள்.கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தாள். மூச்சிறைக்க வாசல்கதவைத் திறந்துகொண்டு மழையில் ஓடினாள்.முன் வாசலிலுள்ள துள சிச்செடி மேடையின் அருகே அது உருண்டு கொண்டிருந்தது.அவள் அதைக் கையிலெடுத்தாள்.சேற்றுத் தண்ணீர் அவள் காலை நீர்ச்சுழல்போலச் சுற்றி யது.பறவை மிகவும் சிறியதாக இருந்தது.அவள் கலக்கமடைந்தாள் .அது நடுங்கியது. தண்ணீரில் ஊறியிருந்தது.துக்கத்தை விட ஒருவித பிரிவுணர்வு அவளை வருத்தியது..பறவைகள் மரத்தைச் சுற்றி கவலையோடு சிறகுகள் படபடக்கப் பறப்பதைப் பார்த்தாள்.

“உனக்கு என்ன ஆயிற்று?இந்த மழையில் நனைந்து கொண்டிருக்கிறாயே?”

அவர் கோபத்தோடு கதவருகில் நின்றிருந்தார்.

“அம்மா!மழையில் நனையாதீர்கள்”மகன் கூப்பிட்டான்.அப்பாவின் காலருகே கிடந்த தன் படகை எடுத்து மீண்டும் தண்ணீரில் விட இதைச் சிறந்த ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டான்.அது சுருண்டு பேப்பர்ப்பந்து போல இருந்தது.”ஐயோ, மக்கு! உன் படகைப் பார்”என்று அக்கா கேலி செய்தாள். அவனுக்கு அவமானமாகி விட்டது.கோபமாக அவளைப் பார்த்தான்.அவளைப் பழிவாங்க நினைத்து ஹாலுக்குள் வரத் தொடங்கியபோது “அப்பா,பாருங்கள்! சுரேஷ் மழையில் நனைகிறான்.அவன் தலை முழுவதும் நனைந்து விட்டது!” என்று அக்கா சொன்னாள்.

“உம்!அவன் நனையட்டும்.மற்றவர்கள் செய்வதைத்தான் குழந்தைகள் காப்பி அடிப்பார்கள். சரியா?’

அவளுக்கு திடீரென்று கோபம் வந்தது.தன் இடதுகையில் அந்தச் சிறிய பற வையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.சுரேஷை நோக்கி வேகமாக நடந் தாள்.அவன் தொடையில் பலமாக அடித்தாள்.

”போ! மழையில் நிற்காமல் உள்ளே போ!”

அவன் பெரிதாக அழுதான்.அவள் அடித்ததை விட அம்மாவின் முகமாற்றம் அவனை அழவைத்தது.”நான் செத்துவிடுவேன். நீங்கள் எல்லோரும் என்னைக் கொன்று விடுவீர்கள்” வெறியோடு சொன்னாள்.

“நீ உள்ளே வரப் போகிறாயா இல்லையா?”அவர் எரிச்சலடைந்து கேட்டார்.

“இல்லை.நான் மழையில்தான் நனைவேன்”.

“உண்மையாகவா?”கேலியாக,அலட்சியமாக கேட்டார். அந்த பாவங்கள் அனைத்தையுமே அவள் வெறுத்தாள்.அவள் முன்வாசலில் கோபத்தோடு இறங்கினாள்.

”அம்மாவுக்கு என்ன ஆனது?”குழந்தைகள் குழம்பினர் .தங்களுக்குள் மெது வாகக் கேட்டுக் கொண்டனர்.

“ஆமாம்.கேளுங்கள்.!நான் பலவகையான பித்துக்களைப் பார்த்திருக்கிறேன். இது கொஞ்சம் வித்தியாசமானது”

அவள் தன் மகளை முறைத்தாள்.சிறுமி சிறிது பின்வாங்கி “ஜூரம் வந்தால் நீங்கள்தான் கஷ்டப் படுவீர்கள் “என்றாள்.

அவள் எதுவும் பேசவில்லை.தென்னைமட்டையால் தலையை மறைத்தபடி தோட்டவேலை செய்யும் பெண்கள் அவளைக் கடந்து போனார்கள்.அவர்கள் அவளை வெறிப்பதைப் பார்த்துவிட்டு“ நீ உள்ளே வரப்போகிறாயாஇல்லையா பத்மா?” என்று அவர் கேட்டார்.

அவள் அமைதியாக இருந்தாள்.திரும்பிப் பார்க்கவில்லை.சிறிய பறவையை நெஞ்சில் அணைத்தபடி, அவமானமடைந்தவளாக அந்த கொட்டும் மழையில் நின்றிருந்தாள்.வீட்டைக் கடந்தவர்கள் அவளை வெறிப்பதைப் பார்த்து விட்டு அவர் ’வேசி” என்றுதிட்டினார்.

விரக்தியிலும் ,வெறுப்பிலும் என் மனம் வருந்துகிறது என்று நினைத்தாள் .பறவையைப் பிடித்திருந்த இடது கையை இறுக்கினாள்.அதன் எலும்புகள் நொறுங்குவது அவளை இயல்புநிலைக்குக் கொண்டு வந்தது.அவர் கதவை பலம் கொண்டமட்டும் அறைந்து சாத்தினார்.அவள் கையிலிருந்த பறவை சில நிமிடம் தத்தளித்துத் தவித்தது. அவள் கையை லேசாக்கி ஆட்டினாள். அது சிறிது தொலைவில் சென்று விழுந்தது.அசைவின்றி.இறந்து கிடந்த அதை மற்ற பறவைகள் சூழ்ந்தன.அவற்றின் சிறகுகள் நனைத்தும் பிசுபிசுத்து மிருந் தன அவற்றின் புலம்பல் மழைச் சத்தத்தை விடப் பெரிதாக இருந்தது .ஒரு கொலையாளியின் பதற்றம் அவளுக்குள் எழுந்தது.பறவையின் ஈரம் இன்னும் கையிலிருந்தது. அவள் தன் இரு கைகளையும் தேய்த்துக் கொண்டாள். அந்தப் பறவைகளின் புலம்பல் அவள் மீதே அவளுக்கு வெறுப்பையும் இகழ்வையும் ஏற்படுத்தின.வேதனை மனதைப் பிசைய கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.திடீரென்று அவளுக்கு சுரேஷைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.காரணமின்றி சின்னக் குழந்தையை அடித்தது வருத் தமாக இருந்தது.பித்துப் பிடித்தவள்போல ஓடிவந்தாள். ஒடி வரும்போது சில தடவைகள் ஈரப்புடவை காலை தடுக்கியதால் மூடியிருந்த கதவின் மேல் பலமாகச் சாய்ந்தாள்.அவள் தலையிலிருந்து மழைத் தண்ணீர் சொட்டியது. புடவை உடம்போடு ஒட்டியிருந்தது.அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

’போதுமா ,இப்போது?”

அவர் ஏளனமாகக் கேட்டார்.அவர் ஏளனத்தில் கொடூரமிருந்தது.அவள் தனக் குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டாள்.சுரேஷிடம் போகும் விருப்பம் அவ்வளவு அவசரமாக இப்போது இல்லாமலிருக்கலாம் அவர் ஏளனத்தை பொறுக்க முடியாமல் இருக்கலாம்.அல்லது ..

“கதவை திறங்கள்”அவள் முணுமுணுத்தாள்.அவளது பலவீனமான குரல் மழையின் ஒலிக்கு முன்னால் மெலிதாக இருந்தாலும் அவருக்குக் கேட் டது.எழுந்து வந்து ”பெண்கள் இப்படித் திமிரெடுத்து இருக்கக் கூடாது. புரிந்ததா?”.என்று கேட்டபடி கதவைத் திறந்தார்.

அவள் பதில் சொல்லவோ அவர் பேச்சுக்கு கவனம் காட்டவோ இல்லை. தலையைத் துவட்டிக் கொண்டு படுக்கை அறைக்குள் போனாள்.

சுரேஷ் அழுதபடியே தூங்கியிருந்தான்.குழந்தையைப் பார்த்தபடி அவள் வெகு நேரம் அங்கு நின்றிருந்தாள்.அவன்முகம் அவளுக்கு பரிச்சயம் இல்லாதது போலவும் கூட உணர்ந்தாள்.தன்னை உலுக்கிக் கொண்டு அவன் முகத்தருகே முத்தம் கொடுக்கக் குனிந்தாள்.ஆனால் முடியவில்லை.நான் ஏனிப்படி இருக் கிறேன்.!அவளுக்கு வலித்தது.சிறுமி அறைக்குள் வந்து அம்மாவின் அருகில் உட்கார்ந்தாள்.அவள் முகம் வாடியிருந்தது.தன் மகளின் சின்னமுகத்தைப் பார்த்ததும் அவளுக்கு அந்தச் சிறியபறவையின் ஞாபகம் வந்தது.மிக மென் மையாக அன்போடு”சுதா, தூங்கும் நேரம் வந்து விட்டது.போ” என்றாள்.

சிறுமி அமைதியாக அம்மாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டாள்..படுத்துக் கொண்ட பிறகும் அந்தப் பெரியவிழிகள் அம்மாவின் முகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.அந்த முகபாவத்திலிருந்து சிறுமியால் எதுவும் கண்டுபிடிக்க முடிய வில்லை. குழந்தைகளுக்குப் போர்த்தி விட்டு அவள் களைப்போடு நாற்கா லியில் சாய்ந்தாள்.

இந்தக் குழந்தைகள்…

அவர்களின் துரதிர்ஷ்டம் நான் அவர்களின் தாய் என்பதுதான்.. நான் அவர்கள் மீது அன்பு காட்டவில்லை.கடவுளே!நான் அவர்களை நேசிக்கவில்லையா?

ஆமாம். .இல்லை. ஆமாம்.இல்லை.

ஆமாம். கடவுளே! அவர்கள்தான் என் வாழ்க்கை.

ஆனால் அவர்களுக்கு என்னைவிட ஒரு நல்லதாய் கிடைத்திருக்கலாம். அவர்கள் அருமையான குழந்தைகள்.

எப்படியானாலும் நான் அவர்களை நேசிக்கிறேன்.உண்மையாக.. அவர்களின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகம் மீண்டும் சிறிய பறவையை நினைவூட்டியது.சுரேஷின் கழுத்தை நெறிப்பது போலவும்,சுதாவின் மென் மையான எலும்புகளை உடைப்பது போலவும் பிரமை ஏற்பட்டது .வேதனை பெருகத் தன் இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொண்டாள்.

ஹாலில் கணவன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.அவளுக்கு சிறிதும் பிடிக்காத பாப்இசை அவருக்கு மிகவும் பிடிக்கும்.இது அவளை ஏளனம் செய்யத்தான்.முன்பை விட அதிகம் ஏளனம் செய்யதான் இப்போது இந்த இசை என்பது அவளுக்குத் தெரியும்.

“இந்தக் கொடூரமான உதாசீனத்தைப் பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்குத் தெம்பில்லை”முணுமுணுத்தாள்.

இந்த இடத்தில் நான் எவ்வளவு அற்பமாக இருக்கிறேன்!

கடவுளே !எப்படி இங்கு மட்டும்?

அவள் கையைத் தூக்கினாள்.

“நான் இறந்து விடுவேன்”தீர்மானித்தாள்

’பாவம் என் குழந்தைகள்!அவர்களுக்கு யாருமில்லை”

தரையில் சாய்ந்து முகம் மிதியடியில் புதைய திடீரென்று அழத்தொடங் கினாள்.

————————-

எலும்பில்லா மனிதர்கள் – Alfred Hitchcock ( The Stories that even scared me ) / .தமிழில்.பெரு.முருகன்.

download (17)

பியூர்டோ போர்பரில் உள்ள கிளேர் டாட்ஜில் நாங்கள் வாழைப்பழங்களை ஏற்றிக்கொண்டிருக்கும்போது,ஜூரத்தால் அடிக்கப்பட்ட சின்னஞ்சிறு மனிதன் ஒருவன் கப்பலுக்குள் வந்தான்.எல்லோரும் அவன் கடந்துபோக வழிவிட்டனர்-நிக்கல் உலோகம் பதித்திருந்த ரெமிங்டன் ரைபிளை தாங்கியபடியும், மெருகிடப்பட்ட தோல் காலுறைகளை பூட்சுகள் இல்லாமல் அணிந்திருந்த, அந்த துறைமுகத்தை காவல்காத்த காவலாளிகளும் அவனை விட்டுவிட்டனர். அவர்கள் அவனிடமிருந்து தள்ளியே நின்றனர்; காரணம்,அவன் கடவுளால் இன்னலுக்கு ஆட்பட்டவன், பித்துப்பிடித்தவன், தீங்கேதும் விளைவிக்காதவன் ,ஆனால் அபாயகரமானவன்;என்று நம்பினர்.அதனால் விட்டுவிடுவதே சிறப்பு.

அப்போது இரசக்கற்பூரவாசனையெழும் நெருப்பு புகைப்போக்கியிலிருந்து எழ, அடிமட்ட ஆட்களின் கூட்டம் ,கீழேயிருந்து பெருங்குரலெடுத்து கத்தியது.”புரூட்டா!புரூட்டா!புரூட்டா!”கூட்டத்தின் தலைவனும் அதேபோல் குரலெழுப்பி, பளீரென்றிருக்கும் பச்சைவாழைப்பழத்தார்களை தூக்கி எறிந்துக்கொண்டிருந்தான்.வேறுஎதற்காகவது இல்லாவிட்டாலும்,இந்த நிகழ்வு அதற்காகவே மனதில் நின்றது -அதாவது, விரிந்துபரந்த இரவு,நெருப்பில் ஒளிர்ந்த நீக்ரோக்களின் வெண்கல உடல்கள், பழங்களின் பச்சைநிறம்,கப்பலின் அடியிலிருந்த நீரின் கலவையான நாற்றம். வாழைத்தாரின் ஒன்றிலிருந்து மயிரடர்ந்த சிலந்தியொன்று ஓடி,மாலுமிகளை பயமுறுத்தி தார்களின் போக்குவரத்தை தடைசெய்தது, உடனே ஒரு நிக்ராகுவா பையன் சிரித்த
படியே, தன் காலால் நசுக்கி கொன்றான். அது தீங்கற்றது, என அவன் சொன்னான்.

பிறகே அந்த பைத்தியக்காரன்,யாரும் தடைசெய்யாமல், தளத்திற்கு வந்து என்னை கேட்டான்:”எங்கே போகிறது? ”

அவன் நிதானமாகவும்,எச்சரிக்கையான பண்படுத்தப்பட்ட குரலிலும் கேட்டான்.ஆனால் அவனிடத்தில் ஏதோ வெறுமை இருந்தது, கண்கள் எங்கேயோ வெறிக்க,அவை பறவையை உண்ணும், மயிரடர்ந்த, சாம்பல்வண்ண சிலந்தியை நினைவுப்படுத்தி,அவன் ஓய்வறியாமல் அசைந்து கைகளை கொண்டிருக்க, சற்றுநான் தள்ளியே இருக்கவேண்டுமென ஞாபகப்படுத்தியது.

“மொபைல், அலாபமா”,நான் சொன்னேன்.

“என்னை அழைத்துபோக முடியுமா? “அவன் கேட்டான்.

“அது என் வேலையில்லை. மன்னிக்கவேண்டும், நானே ஒரு பயணி “,என்று நான் பதிலளித்தேன்.”கப்பல்தலைவன் கரையில் இருக்கிறார்.நீங்கள் துறையிலேயே அவருக்காக காத்திருந்தால் நல்லது.அவரே எல்லோருக்கும் தலைவர் “.

“சரிசரி போகட்டும்.குடிப்பதற்கு ஏதேனும் மது இருக்கிறதா? ”

அவனிடம் கொஞ்சம் ரம்மதுவை கொடுத்துவிட்டு கேட்டேன்.”உங்களை எப்படி கப்பலின்மேலே விட்டார்கள்? ”

“நானொன்றும் பைத்தியமல்லன். உண்மையில் இல்லை….சற்று ஜூரம் அவ்வளவுதான். மலேரியா, டெங்கு காய்ச்சல், காடுகளில் வரும் ஜூரம், எலிகடித்த ஜூரம். இந்த இடமே ஜூரம், மற்றும் எங்குபார்த்தாலும் ஜூரம்.என்னை அறிமுகப்படுத்துகிறேன்.என்பெயர் குட்பாடி,ஓஸ்பால்டெஸ்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டம் பெற்றிருக்கிறேன்.உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? இல்லையா? அப்படியானால் இதை சொல்லவேண்டும், நான் பேராசிரியர் யோவர்ட் க்கு உதவியாளன்.இப்போதாவது புரிகிறதா? ”

“யோவர்ட், பேராசிரியர் யோவர்ட்? ஆமாம்.அவர் தொலைந்து போய் விட்டார்.ஏமர் ஆற்றின் மூலத்திற்கப்பால், காட்டின் நடுவில் எங்கோ ஓரிடத்தில்? அப்படித்தானே?”நான் கேட்டேன்.

“சரிதான் “.குட்பாடி என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்ட அம்மனிதன் கூவினான்.”அவர் இவ்வுலகைவிட்டுப்போனதை நான் பார்த்தேனே “.

புரூட்டா!-புரூட்டா! -புரூட்டா! -புரூட்டா! மனிதர்களின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.கூட்டத்தின் தலைவனுக்கும், கூட்டத்திற்கும் இடையே போட்டி நடப்பதை போலிருந்தது.புகைபோக்கி ஓலமிட்டது . பச்சை வாழைப்பழங்கள் கப்பலேறிக்கொண்டிருந்தன.காட்டிலிருந்து அசெளகரியமான காற்று அடித்துக்கொண்டிருந்தது, நதிபடுகையில் நெளியவைக்கும் நாற்றம் -காற்றோ,தென்றலோ இல்லை -உச்சபட்ச ஜூரத்தின் அறுவெறுப்பான நாற்றம்.

எதிர்பார்த்தலின் நடுக்கம் காரணமாக, அதேசமயம் ஜூரத்தின் குளிரால்,அவன் தம்ளரை இருகரத்தாலும் உதடுவரை உயர்த்தினான்-எனினும் பெருமளவு இரம்மை கீழே சிந்திவிட்டான் -டாக்டர் குட்பாடி சொன்னான். “கடவுளின் பெயரால் கேட்கிறேன், உடனே இந்நாட்டைவிட்டு என்னை அழைத்துச்செல்லுங்கள்-மொபைல் பிரதேசத்திற்கு அழைத்துச்செல்லுங்கள்-உங்கள் கப்பலறையில் என்னை ஒளித்துவைத்துக்கொள்ளுங்கள் “.

“எனக்கு அவ்வாறு செய்ய அதிகாரமில்லை “.என்று நான் சொன்னேன்.”ஆனால் நீங்களொரு அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர்;உங்களை நீங்களே அடையாளப்படுத்திக்கொள்ள இயலும்; கவுன்சில் உம்மை வீட்டிற்கு அனுப்பிவைக்கும்”.

“சந்தேகமில்லை. ஆனால் அதற்கு காலம் ஆகுமே.எனக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக கவுன்சில் நினைக்கலாம்.நான் இங்கிருந்து போகவிட்டால் உண்மையிலேயே எனக்கு பைத்தியம் பிடிக்கும்.நான் பயந்து போயிருக்கிறேன். உண்மையிலேயே நீங்கள் எனக்கு உதவமுடியாதா “.

நான் அவருக்கு பதில் சொன்னேன்.”இதோ பாருங்கள் ,நான் அருகே இருக்கும்வரையில் யாரும் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க முடியாது. நீங்கள் எதற்காக பயப்படுகின்றீர்கள்? ”

“எலும்பில்லா மனிதர்கள் “,என்று அவன் சொன்னான், அப்போது அவன்தன் குரலின் தொனியானது என்பின்னங்கழுத்தினில் இருந்த மயிர்களை நெட்டுக்குத்தாக நிற்க செய்தது.”சின்னஞ்சிறு, தடிமனான, எலும்பில்லா மனிதர்கள் “.

நான் அவனையொரு போர்வையால் போர்த்தி,கொஞ்சம் க்வைனான் மருந்தை தந்து, நடுக்கத்தில் வியர்க்கும்படி விட்டுவிட்டு,பிறகு நகைச்சுவையாக கேட்டேன்.”எலும்பில்லாமல் என்ன மாதிரியான மனிதர்கள்? ”

அவன் திரும்பவும் ஜூரம் வந்து வலிப்புவந்தவனாக,சித்தப்பிரமை கொண்டவன்போல் உளறினான்.

“…..எலும்பில்லாமல் என்ன மாதிரியான மனிதர்கள்? ……நிஜத்தில் அவர்களைபார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை. அவர்கள்தாம் உம்மைக்கண்டு அச்சப்பட வேண்டும். நீங்கள் உங்கள் கால்பூட்சுகளால் அல்லது ஒரு கொம்பினால் அவர்களை கொன்று விடலாம். …அவர்கள் ஜெல்லி போல் கொழகொழப்பானவர்கள்.இல்லை,அது பயம் கிடையாது, அது கெட்டதொரு நாற்றம், அவர்களிடம் இருப்பது.அது மகாநாற்றம்.அது ஸ்தமபிக்கச்செய்துவிடும்.நான் சிறுத்தையை பார்த்திருக்கிறேன், முழுவதும் வளர்ந்த சிறுத்தை -அது உறைந்துபோய் நின்றுவிட, நூற்றுக்கணக்கில் அவர்கள் அதைப்பற்றி, உயிருடன் தின்றுவிட்டனர்!என்னை நம்புங்கள், நான் அதைப்பார்த்தேன்.ஒருவேளை அவர்கள் எண்ணெய் போன்ற பொருளை, ஏதோ நாற்றத்தை. …எனக்குத் தெரியவில்லை. …”

பின் தேம்பியவாறு டாக்டர் குட்பாடி சொன்னார். “ஓஓஓ, பயங்கரக்கனவு,பயங்கரக்கனவு,பயங்கரக்கனவு!ஒரு மேன்மைதாங்கிய விலங்கானது பசியின்கொடுமையால் இப்படி அழிந்துபோவதா! பயங்கரம், பயங்கரம் !”

“ஏமர் ஆற்றின் மூலத்திற்கப்பாலுள்ள காட்டில் ,உயிரின் சிதைந்த மாறிய உயிர்களை கண்டாயோ?”
என்று கருத்துரைத்தேன்.”மனிதக்குரங்கின் வகையில் ஏதேனும் உருமாறிய இனம்? ”

“இல்லை, இல்லை, இல்லை.மனிதர்கள்.பேராசிரியர் யோவர்டின் இனஅறிவியலின் பயணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்? ”

“இல்லை “,இது நான்.

நானும் அவர்கூட “,என்று அவன் சொன்னான். ….”எங்களுக்கு துரதிர்ஷ்டம். அனானா ஆறு வேகமாக பாய்கையில் நாங்கள் இரண்டு படகுகளை இழந்தோம்,அவற்றுடன் எங்களின் பாதிபொருள்களும், சாதனங்களில் பெரும்பாலானவையும் போயின அவற்றுடன் டாக்டர் டெர்ரி,ஜேக் லேம்பர்ட்,மற்றும் எட்டு வாகனங்களும். …

“பிற்பாடு நாங்கள் அஹூ பிரதேசத்திற்கு போனோம் ,அங்கே இந்தியர்கள் விஷஅம்புகளை பயன்படுத்துவார்கள், ஆனால் நாங்கள் அவர்களை நண்பர்களாக்கி, இலஞ்சம் கொடுத்து,காட்டினூடே மேற்குதிசைபுறமாக,எங்கள் பொருட்களை சுமைதூக்க செய்தோம்….நீங்கள் அறிந்தமட்டில், எல்லா அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு யூகத்தில், வதந்தியில், பழைய மனைவியரின் கதையில் கண்டுபிடிக்கப்படுகிறது.பேராசிரியர் யோவர்டின் பயணநோக்கம், இந்திய பழம்பெரும் கதைகள் உண்மையானவா என்று கண்டுபிடிப்பது.இந்த உலகம் துவக்ககாலத்தில் இருந்தபோது, வானிலிருந்து பெரும் தீயில், கடவுளர்கள் இறங்கிவந்தனரா என்பதே. ….

“நேர்க்கோட்டிலும் குறுக்கிலும்,வட்டவட்டமாக இட்டு அதன் மையத்திலும், யோவர்ட் இக்கதைகளின் மூலத்தை ஒரேஇடத்தில் கொண்டுவந்து, கண்டுபிடிக்கமுடியாத இடத்தை கண்டுபிடித்தார்; அதற்கு பெயரேதும் இல்லை, ஏனெனில் இந்தியர்கள் அதற்கு பெயர் தரமறுத்துவிட்டார்கள்,அது `துன்பமான இடம் ‘என்று அவர்கள் அழைத்தனர்.

அவனுடைய குளிர்ச்சி குறைந்துகொண்டே வர,ஜூரமும் மட்டுப்பட,டாக்டர் குட்பாடி இப்போது அமைதியாகவும் நம்பத்தகுந்தமாதிரியாகவும் பேசினார்.அவர் குறுஞ்சிரிப்பின் ஊடே பேசினார்.”இந்த ஜூரம் என்னை தாக்கும்போதெல்லாம், எலும்பில்லா மனிதரின் ஞாபகம் பயங்கரகனவுகளாக வந்து எனக்கு பீதியை அளிக்கின்றது…..

“எனவே,அந்த இரவில் கடவுளர் தீயாகவந்த இடத்தை தேடிக்கொண்டு சென்றோம்.பச்சைக்குத்தியிருந்த சின்னஞ்சிறு இந்தியர்கள், அஹூ பிரதேசத்தின் எல்லைவரை அழைத்துச்சென்று, பொருட்களை இறக்கிவைத்துவிட்டு, கூலியை கேட்டனர், மேற்க்கொண்டு வருவதற்கு நாங்கள் எவ்வளவுசொல்லியும் அவர்கள் வரவில்லை. நாங்கள் துன்பமயமான இடத்திற்கு செல்கிறோம் என அவர்கள் கூறினார்கள்.அவர்கள் காலத்தில் தலைசிறந்தவனாக விளங்கிய அவர்தம் தலைவன், ஒரு சுள்ளியை எடுத்து ஏதோவொன்றை வரைந்து, தானும் அவ்விடத்தில் ஒருமுறை இருந்திருப்பதாக கூறினான்.அவன் அப்படத்தை நீள்வட்டமாக வரைந்து நான்கு கைகால்களை வரைந்தான்.பின் எச்சில்துப்பி காலால் அந்த படத்தை அழித்தான்.சிலந்தியா?என்று நாங்கள் கேட்டோம்.நண்டா?என்னது?

“முதிய தலைவனால், எங்களால் தூக்கமுடியாததை அங்கேயே விட்டுவிட்டு , மேலே செல்ல நிர்பந்திக்கப்பட்டோம்,யோவர்ட்டும் நானும் உலகிலேயே மோசமான காட்டில் முப்பது மைல்களுக்கு பிரயாணம் செய்தோம்,ஒருநாளைக்கு கால்மைல் தூரம் என்றளவில். ..தொற்றுவியாதிகள் நிறைந்த அந்த இடத்தினூடே! அந்த காட்டில் மோசமான காற்று வீசும்போது நான் மரணம் பீதியை தவிர்த்து வேறெதையும் நுகரவில்லை. …

இறுதியில் நாங்கள் அந்த பீடபூமியை கண்டறிந்து மேட்டில் ஏறியபோது, அற்புதமான விஷயத்தை கண்டோம்.அதுவொரு பிரம்மாண்டமான இயந்திரம்.மூலத்தில் அது முத்துவடிவில் இருந்திருக்க வேண்டும்,குறைந்தபட்சம் ஆயிரம் அடி நீளத்திலும் அகலத்திலும்,சுற்றளவில் அறுநூறு அடிகள் இருந்தது.அது எவ்வகை உலோகத்தால் செய்யப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை ஏனெனில் அதன்மேலே தூசு அடர்ந்திருந்தது,தவிர ஒருவித அமானுஷ்யமும், இதுவரையில் பார்க்காத அளவுக்கு ,நம்பமுடியாத சிக்கலான இயந்திரமும் இருந்தன . அது எங்கிருந்து வந்திருக்கும் என யூகிக்க முடியவில்லை; ஆனால் அது இறங்கியதால் அந்த பிரதேசத்தில் பெரியதொரு பள்ளத்தாக்கு ஏற்பட்டிருந்தது.

“அக்காலத்தில் அதுவொரு பிரமாதமான கண்டுபிடிப்பு!அது பலநூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருந்தது என நிரூபித்தது, இந்த கிரகத்திற்கு நட்சத்திரத்தில் இருந்து மனிதர்கள் வந்திருக்கின்றனர்.கணக்கிடமுடியாத சந்தோஷத்தில் நானும் யோவர்ட் டும்
அந்த இயந்திரத்தற்குள் இறங்கினோம் ஆனால் எதைத்தொட்டாலும் அது மாவாக உதிர்ந்தது.

கடைசியில் மூன்றாவது நாளன்று,யோவர்ட் அரைவட்ட வடிவிலிருந்த, தெரியாத, அற்புதமான, கடினமான உலோகத்தால் ஆன தகடொன்றை கண்டெடுத்தார், அதில் நன்கறிந்த வரைபடங்கள் இருந்தன.நாங்கள் அதை சுத்தப்படுத்த, இருபத்திநாலு மணி நேரமாக சிறிதளவே உணவு உண்டோம்.யோவர்ட் அதை படித்து பார்த்தார்.பிறகு ஐந்தாம்நாள் காலை என்னை எழுப்பி, பெரிதாக கத்திக்கொண்டே சொன்னார். `இதுவொரு வரைபடம், வானத்தின் வரைபடம்,அதாவது செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வழி சொல்லும் வரைபடம்!’

“மற்றும் அவர் பண்டைய கண்டுபிடிப்பாளர்கள் எப்படி வான்வழி யே செவ்வாய்கிரகத்திலிருந்து,நிலவின் வழியாக, பூமிக்கு வந்தனர் என்று விளக்கினார்….அப்போது இந்த பச்சை நரக காட்டின் சமவெளியில் அது மோதி இருக்கவேண்டும்?என்று நான் நினைத்தேன். `ஆஆ அப்போது இந்த இடம் காடாக இருந்திருக்க கூடுமோ?’என்று யோவர்ட் கேட்டார்.இது நடந்து ஐம்பது இலட்சம் வருடங்களாகி இருக்கும்! ‘

அப்போது நான் சொன்னேன் :ஓஓஓ. நிச்சயமாக!இரோம் நகரம் புதையுருவதற்கு சிலநூறு வருடங்கள் பிடித்தன.ஐம்பது இலட்சம் வருடங்களை விட்டுவிடலாம் ,குறைந்தபட்சம் ஐயாயிரம் வருடங்கள் இது பூமிக்கு மேல் எப்படி இருந்திருக்கக்கூடும்?’யோவர்ட் பதிலளித்தார்:”அப்படியில்லை. பூமியானது பொருட்களை அப்படியே விழுங்கும் மீண்டும் வெளிதள்ளும். இது எரிமலை பிரதேசம்.ஒரு சிறு கிளர்வுபோதும் ஒரு நகரையே விழுங்க, பூமியின் குடலானது பொருட்களை விழுங்கி மீண்டும் வெளிதள்ள ஒரு இலட்சம் வருடங்களாவது ஆகியிருக்கும். செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கும் இந்த இயந்திரத்திற்கும் அதேகதி வாய்த்திருக்கும்….”

“அதனுள்ளே யார் இருந்திருப்பார்கள் ?”என்று நான் கேட்டேன். யோவர்ட் சொன்னார் :”பூமியின் சூழலை தாக்குப்பிடிக்க முடியாத ஏதேனும் அயல்கிரகத்து உயிரினம் இருந்திருக்கும், அவை இறந்திருக்கலாம், அல்லது மோதியதனால் விபத்தில் மரணமடைந்து இருக்கலாம்.இந்த காலவெளி ஓட்டத்தில் எலும்பு கூட மிஞ்சி இருக்காது ‘.

பின் நாங்கள் நெருப்பு மூட்டினோம், யோவர்ட் உறங்க சென்றார்.அவர் தூங்க நான் கண்காணித்தேன், எதை கண்காணித்தேன், எனக்கு தெரியாது. சிறுத்தை, காட்டுப்பன்றிகள், பாம்புகள்? ஆனால் இந்த விலங்குகள் இந்த மேட்டினில் ஏறி வர முடியாது;வந்தாலும் இரையேதும் கிடைக்காது.இருந்தும் விவரம் புரியாமல் நான் பயந்திருந்தேன்.

அந்த இடம் பலகாலங்களை பார்த்திருக்கிறது. பழங்காலத்திற்கு மரியாதை தர வேண்டுமென யாரோ ஒருவர் சொன்னார், எவ்வளவு காலங்கள் பழமையோ அந்தளவு மரியாதை செலுத்த வேண்டுமாம்;ஆனால் மரியாதை அல்ல அது,காலத்தை கண்டு ஏற்படும் பயம், மரணம், ஐயா! ….நான் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும், ஏனெனில் தீயின் அளவு குறைந்திருந்தது-எனவே நான் விழித்துக்கொண்டிருந்து நெருப்பை நன்கு எரியவிட வேண்டும் -அப்போதுதான் முதன்முறையாக எலும்பில்லாத மனிதர்களை பார்த்தேன்.

“திடுக்கிட்டுப் போய் அவைகளை பார்த்தபோது,மேட்டுநிலத்தின் விளிம்பில் குறைந்திருந்த நெருப்பின் ஒளியில் ஒளிரும் ஜோடி கண்களை பார்த்தேன்.ஒருவேளை சிறுத்தையாக இருக்கும் என்று நம்பி துப்பாக்கியை எடுத்தேன்.ஆனால் அது சிறுத்தையாக இருக்கமுடியாது, ஏனெனில் இடமும் வலமுமாக அவைகளின் ஒளிரும் கண்கள் தெரிந்தன.-கோமேதக கண்கள்; அப்போது என் மூக்கில் வாசம்பிடித்த நாற்றம் என்னவென்பதை கடவுள் மட்டுமே அறிவார்.

“விலங்கு பயிற்சியாளர், பயம் என்பதின் வாசத்தை கூறுவார். உடல்நலக்குறைவால் உண்டாகும் நாற்றத்தை -செவிலியர்கள் கூறுவார்கள். ஆரோக்கியமான மிருகம் இவைபோன்ற நாற்றத்தை உணர்ந்தவுடன் தப்பியோடும், அல்லது சண்டைபோடும்.இவை இரண்டும் சேர்ந்த நாற்றத்தோடு அழுகிப்போன மாமிச நாற்றமும் சேர்ந்துக்கொண்டது.நான் முதலில் பார்த்த ஒருஜோடி கண்களை சுட்டேன்.உடனே எல்லா கண்களும் அவ்விடத்தில் மறைந்து போய் விட்டன, அப்போது காட்டில் குரங்குகளின் பறவைகளின் சலசலப்பொலி கேட்டு, குண்டுவெடிப்பின் எதிரொலி உண்டானது.

“கடவுளுக்கு நன்றி, ஏனெனில் விடியல் வந்தேவிட்டது.கண்களின் நடுவில் சுட்ட அந்த ஜந்துவின் ஒளியை நான் விரும்பவே இல்லை.

“அது பழுப்புநிறமாக ,தோல் வழவழப்பாகவும் கடினமாகவும் இருந்தது.இருப்பினும் உருவஅமைப்பு மனிதகுலத்தை சேர்ந்ததாக இல்லை.அதற்கு கண்கள் இருந்தன-மற்றும் தலை, கழுத்து, கைகால்கள் போன்று ஏதோ இருந்தன.

யோவர்ட் என்னை ஆசுவாசபடுத்திக்கொள்ள சொன்னார். குழந்தைப்பருவத்தில் இருந்த பயம் என்னை தொடர்வதாகவும் கூறினார்.பின்பு அந்த மிருகத்தை ஆராய்ந்தார்.நான் அவ்விலங்கின் உடலை திறந்தபோது அவர் அப்பால் விலகினார் என்பதை நான் சொல்லியாக வேண்டும். உயிரியல் ஆராய்ச்சியாளர் என்ற முறையில் நான் அதை ஆராயவேண்டும். நுண்பெருக்கிகளும் மற்ற சாதனங்களும் படகோடு போய்விட்டன.அதனால் கத்தி மற்றும் குறடுகொண்டு ஆராய்ந்தேன். நான் கண்டுபிடித்தது?ஒன்றுமேயில்லை. ஜீரண உறுப்பும், நரம்பு மண்டலம் போன்ற ஏதோவொன்று அவ்விலங்கிற்கு இருந்தன.மற்றும் மூளை சிறுபாக்கு வடிவில் இருந்தது.ஒட்டுமொத்த உருவமே நான்கடி இருந்தது.

சோதனைக்கூடம் இருந்தால்-கூடவே ஒன்றினண்டு உதவியாளர்கள் இருந்தால்- அதைப்பற்றி உங்களிடம் ஏதாவது சொல்லியிருப்பேன்.ஆனால் இல்லையே!அதனால் வேட்டையாடும் கத்தி மற்றும் குறடுகொண்டு, அதனுடலை கிழித்தேன். அந்தசமயம் எழுந்த நாற்றத்தை கஷ்டப்பட்டு பொறுத்துக்கொண்டேன்.ஆனால் சூரியன் எழ எழ, அந்த ஜந்து நீர்மமாக ஆகிவிட்டது,ஒன்பது மணி ஆனபோது,அது கரைந்து நீராக மாறி அதில் இரண்டு கண்களும் மிதந்தன.அந்த கண்கள் வீங்கிப்போய் நீச்சலடித்து கொண்டிருந்தன.

பிறகு அப்பால் விலகிவிட்டேன்.பின் நான் திரும்பி வந்தபோது அவ்விடத்தில் சூரியன் எல்லாவற்றையும் குழம்புபோல் மாற்றிவிட, அது கடற்கரையில் செத்துப்போய்கிடக்கும் ஜெல்லி மீனை நினைவுபடுத்தியது.சகதி, மொத்தத்தில் சகதி.யோவர்டின் முகம் வெளுத்துப்போக அவர் என்னிடம் கேட்டார்.`என்ன இழவு இது? ‘அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை எனவும்,என் அனுபவத்தில் அதுபோல் பார்த்ததில்லை என்று நான் பதிலளித்தேன்.நான் அறிவியலை நம்பும் மனிதன் என்றாலும் மறுபடியும் அந்த ஜந்துவை நான் தொட வில்லை.

யோவர்ட் சொன்னார். `நீ பைத்தியமாக போக போகிறாய்.அதை சரிபடுத்திக்கொள்.நம்மை நாமே பார்த்துக்கொள்ள இவ்விடத்திற்கு வரவில்லை. அறிவியல் தம்பி அறிவியல்.அந்த ஜந்துவை விட மோசமான பொருளை எல்லாம் மருத்துவர்கள் சோதித்து பார்த்திருக்கிறார்கள்.”நான் அவருக்கு பதில் சொன்னேன் :”புரபசர் யோவர்ட் அவர்களே, நான் வாழ்நாளில் சிலபல விநோதமான ஜந்துக்களை சோதித்து இருக்கிறேன்.ஆனால் இந்த ஜந்து விநோதத்தில் விநோதம்….இவ்விடத்திற்கு நம்முடன் ஒரு மனநல மருத்துவரை அழைத்து வந்திருக்கலாம்.நான் அதை ஆராய்ந்தபோது நீங்கள் அப்பால் சென்றுவிட்டதை நான் கவனித்தேன்.மேற்க்கொண்டு அந்த ஜந்துவை பற்றி தெரியவேண்டுமானால் நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்!’

அந்த உலோக தகட்டில் தன் கவனம் உள்ளதாக யோவர்ட் தெரிவித்தார். அந்த இயந்திரம் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்திருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் கூறினார். ஆனால் அதேநேரம் அந்த ஜந்துவை நான் தொட்டிருப்பதனால் எங்கள் இருவருக்கும் இடையே நெருப்பு இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

யோவர்ட் தனக்குத்தானே பேசிக்கொண்டு அந்த இடிபாடுகளை ஆராய்ந்து பார்த்தார்.நான் என் வேலையை -மிருகங்களின் வாழ்க்கையை ஆராயும் -பார்க்கச்சென்றேன்.நான் என்ன கண்டுபிடித்தேன் என்று தெரியாது -ஆனால் துணையேதுமில்லை அதனால் பீதிக்குள்ளானேன்.

ஒருநாள் காலையில் அது நடந்தது . நான் சுற்றியிருந்த காட்டிற்குள் நடந்து சென்று என்னை பீடித்திருந்த பயத்தை விரட்ட முயன்றேன்.சிறுவயதில் உண்டான பயத்தை மட்டுமல்ல,என்னை அங்கிருந்து துரத்த முயன்ற அச்சத்தையும் ஓட்ட முயன்றேன்.உங்களுக்கு தெரியுமோ அல்லது தெரியாதோ,காட்டில் இருக்கும் எல்லா மிருகங்களிலும் தேவாங்கு இனத்தை சார்ந்த ஒருவகை மிருகம் அசைக்கவொண்ணாதது.அது பெரியதொரு மரக்கிளையில் ஏறி, தன் பனிரெண்டு இரும்புக்கரங்களால் பற்றிக்கொண்டு தொங்கும்.அது உறுதியானது, துப்பாக்கி குண்டு அதன் இதயத்தை துளைத்தாலும் கூட அது தன்னிருப்பிடத்திலிருந்து விலகாது . இதுபோன்ற மிருகத்திடம் சிறுத்தையோ அல்லது கருஞ்சிறுத்தையோ ஒன்றும் செய்ய முடியாது. அது பெரியதொரு மரக்கிளையை தேர்ந்தெடுத்து அதிலுள்ள இலைகளை எல்லாம் தின்றபின்,பிறகு தன் கனத்தை தாங்கும் மரக்கிளையில் படுத்துறங்கும்.

இந்த அறுவெறுப்பான காட்டினில் ,என்தன் சுருக்கமான தேடுதலின் போது, சுருக்கமான தேடுதல் என்று சொன்னேன், காரணம் பயம்-அப்போது ஒரு பிரம்மாண்டமான தேவாங்கு இன விலங்கு பாதியுண்ட மரக்கிளையில் படுத்துறங்கி கொண்டிருப்பதைக் கண்டேன்.பிறகுதான் எங்கிருந்தோ நாற்றமடிக்கும் அந்த ஜெல்லி மீன் வகைகள் ஒளியாக வந்தன.அவை மரத்தின் மீது பரவிக்கொண்டே நெளிந்தன.

பயமறியாத அந்த விலங்கும் அப்போது மிகவும் பயந்துபோனது. அது ஓடமுயற்சித்து மெலிதான மரக்கிளையை பற்ற, அது உடைந்துபோனது.உடனே அது கீழேவிழ பொங்கியெழுந்த ஜெல்லிகளால் பிடிக்கப்பட்டது. அந்த எலும்பில்லா மனிதர்கள் கடிக்கவில்லை மாறாக உறிஞ்சினார்கள்;அவர்கள் உறியும்போது உடல்நிறம் சாம்பல்நிறத்திலிருந்து ஒருவித சிவப்பாக மாறி பின்னர் பிரவுனாக மாறியது.

அதேசமயம் அவர்கள் எமைக்கண்டு அஞ்சினார்கள்.அங்கே ஒருவிதமான இனப்போராட்டம் இருந்தது.நாங்கள் அவர்களை தடுக்கமுயல,அவர்கள் எங்களை தடுத்தார்கள்.அவர்கள் நானிருப்பதை உணர்ந்தபோது, ஓட்டம்பிடித்து, நடனமாடும் காட்டின் நிழல்களூடே ஒளிந்துகொண்டனர்.உடனே என்னை பயங்கரமானது சூழ்ந்துக்கொள்ள முள்ளெல்லாம் முகத்தில் பட்டு இரத்தம் வழிய களைப்புமேற்பட,கூடாரத்திற்கு ஓடிவந்து விட்டேன்.

யோவர்ட் தன் கணுக்காலில் ஈட்டியால் குத்திக் கொண்டிருந்தார்.அவரின் முட்டிக்கு கீழே கட்டொன்று போடப்பட்டிருந்தது.அருகில் ஒரு செத்த பாம்பு கிடந்தது.அவர் அதை உலோக தகட்டால் அடித்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் முதலில் அவரைக் கடித்து விட்டிருக்கின்றது.அவர் சொன்னார் :இதன் பெயர் என்னவென்று நீ சொல்வாய்? அது விஷம் வாய்ந்தது என்று நான் அஞ்சுகிறேன்.என் கன்னங்கள் மார்பு மற்றும் கைகளில் மரத்துப்போய் கொண்டே வருகிறது ‘.

“நான் சொன்னேன் :ஐயோ கடவுளே! கட்டுவிரியன் உங்களை கடித்து விட்டிருக்கின்றது! ‘

`வருத்தம் மேலிட அவர் சொன்னார்:”நாம் இச்சமயம் மருந்துகளை இழந்து விட்டிருக்கிறோம்.செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. ஐயோ, என்ன ஆனாலும் சரி, இதை மட்டும் கொண்டுசென்று விடு ‘

“அவர் புனிதமான பொருளைப்போல் அந்த அரைவட்ட தகட்டை என்னிடம் அளித்தார்.பிறகு இரண்டுமணி நேரம் கழித்து அவர் இறந்துபோனார்.அன்றிரவு ஒளிரும் கண்கள் அருகில் நெருங்கி வந்தன.உடனே நான் குண்டுகள் தீரும்வரை துப்பாக்கியால் சுட்டேன்.விடியலின்போது எலும்பில்லா மனிதர்கள் காணாமல் போனார்கள்.

கற்களை கொண்டு யோவர்டின் உடலை மூடினேன். அவர் உடலை சுற்றிலும் கற்களை கோபுரம் போல் சுற்றிவைத்து விட்டேன்,எனவே எலும்பில்லா மனிதர்கள் அவரை தின்ன முடியாது.பின் பயங்கர தனிமை என்னை துரத்த நான் பயத்தில் ஆழ்ந்தேன். -நான் உடனே பையை, துப்பாக்கியை ,கத்தியை எடுத்துக்கொண்டு,குத்துமதிப்பாக நாங்கள் வந்தவழியில் ஓடினேன்.ஆனால் வழி தவறவிட்டேன்.

“கேனிலிருந்த உணவை எடுத்து உண்டு உண்டு நான் உடல் பெருத்தேன்.பிறகு என் துப்பாக்கியும் வெடிமருந்துகளும் போனது . அதன்பின் வேட்டைக்கத்தியும்; பின் நெடுநேரம் கழித்து அந்த அரைவட்ட தகட்டையும் தூக்கமுடியாமல், ஒரு மரத்தின் கொடியில் கட்டி தொங்கவிட்டு ,பின் நடந்தேன்.

“பிற்பாடு நான் அஹூ பிரதேசத்தை அடைந்தேன், அவ்விடத்தில் பச்சைகுத்திக்கொண்டிருந்த மனிதர்கள் மரியாதையாக நடந்துகொண்டு என்னை பராமாரித்தனர்.பெண்கள் தங்கள் வாயினால் உணவை மென்று பின் எனக்கு ஊட்டினார்கள், பிறகு நான் பழைய உடல் வலிமையை அடைந்தேன்.நாங்கள் விட்டுச்சென்ற பொருட்கள் அங்கேயே இருந்தன, தேவையான பொருட்களை நான் எடுத்துக்கொண்டு மீதத்தை வழிகாட்டிகளே எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டேன்,ஆற்றில் இருந்த படகையும் எடுத்துக்கொள்ள சொல்லி விட்டேன். பிறகு காட்டினில் இருந்து வெளியே வந்தேன்….

“தயைசெய்து இன்னும் கொஞ்சம் இரம் தரவும் “அதைக்குடித்தபோது அவன் கைகள் உறுதிப்பட்டு கண்கள் தெளிவடைந்தன.

நான் அவனை பார்த்து சொன்னேன்:”நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென கருதுகிறேன் :அந்த `எலும்பில்லா மனிதர்கள் ‘செவ்வாய் கிரகத்து மனிதர்கள் என யூகிக்கிறேன், இல்லையா? முதுகெலும்பில்லாத அவர்கள் அதிக நாற்றம் பிடித்து -”

உடனே டாக்டர் குட்பாடி கூக்குரலிட்டார்.”செவ்வாய் கிரகத்து வாசிகளை பற்றி யார் சொன்னார்கள்.இல்லை, இல்லை,இல்லை! செவ்வாய்கிரகத்து மனிதர்கள் இங்கே வந்து புதியதொரு சூழலுக்கு தங்களை பழக்கிக்கொண்டார்கள்.அற்பமனிதர் அவர்கள், மிகவும் கீழாகசென்று வலிநிறைந்த இந்த மாற்றத்திற்கு உட்பட்டு பூமியில் வாழப்பழகி கொண்டார்கள்.முட்டாள்,முட்டாள் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நானும் யோவர்ட்டும் செவ்வாய்கிரகத்துவாசிகளை கண்டுபிடிக்கவில்லை.அந்த எலும்பில்லாதவர்கள் `மனிதர்கள் ‘ஆவார்கள்.நாங்கள் தான் செவ்வாய்கிரகத்து வாசிகள்! ”

••••

ஒரு கிராமத்திற்கு இரு ஆண்கள் வந்தடைந்தனர் / ஜேடி ஸ்மித் / தமிழில்- க.ரகுநாதன்

052616-AuthorsVoice-WP-320x240-1464303143சில சமயங்களில் குதிரையின் மீது, சில நேரம் கால்நடையாக, காரில் அல்லது மோட்டார் பைக்குகளில், எப்போதாவது டாங்குகளில், அவ்வப்போது ஹெலிகாப்டர்களின் மூலமும் தங்களது படைப்பிரிவிலிருந்து வழி தவறி தொலைதூரம் கடந்து இரு ஆண்கள் வந்தடைகிறார்கள். ஆனால் நாம் நிகழக்கூடிய சாத்தியங்களின்படி பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் நடந்தே வருகிறார்கள் என்பதை குறைந்தபட்சம் இந்த முறையாவது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். உண்மையில் இது பைபிள் நீதிக் கதை போல வெளிப்படையாக உள்ளது. இரு ஆண்கள் ஒரு கிராமத்திற்கு நடந்தே வந்து சேருகிறார்கள்; ஆம், எப்போதும் கிராமத்திற்கு, நகரத்திற்கல்ல. அதே நேரம் இரு ஆண்கள் ஒரு நகரத்திற்கு வந்து சேர்ந்தால் அவர்கள் வெளிப்படையாகவே அதிக நபர்களுடனும் பரிவாரங்களுடனும் இன்னபிற பொருட்களுடனும் தான் வருவார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் அந்த இரு ஆண்கள் ஒரு கிராமத்திற்கு வந்து சேரும் போது அழுக்கடைந்த கைகளுடனோ, வெளுத்த கைகளுடனோ, பெரும்பாலும் அந்தக் கைகளில் ஏதோவொரு வகைக் கத்தியோ, கோடரியோ, நீளமான வாளோ, குத்துவாளோ, வெட்டுக் கத்தியோ, பட்டாக் கத்தியோ, மடக்குக் கத்தியோ அல்லது குறைந்தபட்சம் ஒரு ஜோடி துருப்பிடித்த பழைய சவரக் கத்தியோ இருக்கும். சில நேரங்களில் துப்பாக்கி. அது சூழ்நிலையைப் பொருத்தது. அது அப்படித்தான் தொடர்ந்து கொண்டுமிருக்கிறது. பக்கத்து கிராமத்திற்குச் செல்லும் இந்நீண்ட சாலையானது அஸ்தமிக்கும் கதிரவனைச் சந்திக்கும் இடத்தில் தொடுவானத்தில் இந்த இருவரையும் நாங்கள் கண்டோம் என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

இந்த நேரத்திற்கு அவர்கள் வருவதின் அர்த்தத்தை நாங்கள் புரிந்து கொண்டோம். அவர்கள் எங்கு வந்து சேர்ந்தாலும் அஸ்தமன நேரம் அவர்களுக்கு சரியான நேரமாகவே இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம். பெண்கள் எல்லோரும் அப்போதுதான் பாலையிலிருந்தோ, பண்ணையிலிருந்தோ, நகரத்தின் அலுவலகங்களிலிருந்தோ, பனிமலைச் சாரல்களிலிருந்தோ வந்திருந்தார்கள். குழந்தைகள் கோழிகளுக்கருகே புழுதியிலோ உயரமான அடுக்குமாடி கட்டிடங்களுக்கு வெளியிலுள்ள பூங்காக்களிலோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் கொடுமையான வெக்கையிலிருந்து தப்பிக்க முந்திரி மரங்களின் நிழலிலும் ரயில்வே பாலத்தின் அடியிலும் படுத்துக் கிடந்தனர். மிக முக்கியமாக இளம்பெண்கள் தங்கள் குடிசைகள் அல்லது வீடுகளுக்கு வெளியே ஜீன்ஸ் அணிந்தோ, முகத்திரை அணிந்தோ அல்லது லைக்ரா குட்டைப் பாவாடை அணிந்தவாறு சுத்தம் செய்தல் அல்லது சமையல் செய்வதோ, இறைச்சி அரைப்பதோ, தங்கள் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியபடியோ இருந்தனர். அது அந்த நேரத்தைப் பொறுத்தது. தீரமான வலிமை கொண்ட ஆண்கள் இன்னும் அவர்கள் சென்றிருந்த இடத்திலிருந்து திரும்பவில்லை.

இரவுக்கென்று சில சாதகங்கள் உள்ளன. வியப்பின் கூறுகளை சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் அந்த இருவரும் குதிரையின் மீதோ, வெற்றுக் காலில் நடந்தோ, இருவரும் ஒருவரையொருவர் பிடித்தபடி சுசுகி ஸ்கூட்டரிலோ அல்லது ராணுவ ஜீப்பின் மீது ஏறி நின்றபடியோ நள்ளிரவில் வந்து சேர்ந்தார்கள் என்பதை மறுப்பார் எவருமில்லை. ஆனால் இருளுக்கென்று சில பாதகங்களும் உள்ளன. ஏனெனில் அவர்கள் இருவரும் எப்போதும் கிராமங்களுக்கே வருகின்றனர், நகரங்களுக்கு அல்ல. உலகின் எப்பகுதி என்பதோ நீண்ட வரலாற்றில் எப்பகுதியில் என்பதோ இங்கு முக்கியமல்ல. அவர்கள் நள்ளிரவில் வந்தால் ஒரு முழுமையான இருளையே சந்திக்கிறார்கள். அந்த மாதிரியான இருளில் நீங்கள் உங்கள் மனைவியுடையதா தாயுடையதா அல்லது கன்னிமைப் பருவத்தின் இளஞ்செழுமையில் இருக்கும் பெண்ணுடையதா அல்லது யாருடைய கணுக்காலைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் மிகச் சரியாகச் சொல்ல முடியாது.

அவர்களில் ஒருவன் உயரமாக- அழகென்று சொல்ல முடியாது- சிறிது இருண்ட முகமும் கொடூரன் போலவும், மற்றவன் குட்டையாக தந்திரசாலியான நரிமுகம் கொண்டவன் போலவும் இருந்தனர். குட்டையன் கிராமத்தின் நுழைவாயில் போன்று காட்சியளித்த கோககோலா பதாகையின் மீது சாய்ந்தபடி நட்பாக வணங்குவது போல கையுயர்த்த அவனது கூட்டாளி எதையோ மென்றபடி தன் கையிலிருந்த குச்சியைத் துக்கி வீசியவாறே அவனிடம் புன்னகைத்தான். அவர்கள் ஒரு விளக்குக் கம்பத்தின் மீது சாய்ந்தபடி சூயிங்கம் மென்று கொண்டிருக்க போர்ஷ்ட் சூப்பின் மணம் காற்றில் மிதந்து வந்தது. ஆனால் நாங்கள் எங்கள் கிராமத்தில் போர்ஷ்ட் சூப் செய்வதில்லை. நாங்கள் காஸ்காஸ், டைல் மீன்கள் உண்பதால் அந்த மணமும் காற்றில் தவழ்ந்தது. டைல்மீனின் வாசத்தினை எங்களால் இன்று கூட இயல்பாக ஏற்று சுவாசிக்க முடிவதில்லை. ஏனென்றால் அந்த வாசம் இந்த இரு ஆண்களும் எங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்த நாளை நினைவூட்டியபடியே இருக்கிறது.

நெட்டை மனிதன் நட்பாக தன் கைகளை உயர்த்தியபோது பக்கத்துக் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த கிராமத் தலைவரின் மனைவியின் சொந்தக்காரி வேறு வழியில்லாமல் நெட்டையன் முன்பு நிற்க வேண்டியதானது. அவனுடைய பட்டாக் கத்தி சூரிய ஒளியில் மின்னுவதைப் பார்த்ததும் உயர்த்திய அவள் கை முழுவதும் நடுங்கியது.

ஏறக்குறைய நட்பு ரீதியிலான வாழ்த்துக்களுடன் தான் அந்த இரு ஆண்களும் கிராமத்திற்கு வந்து சேர்வதை விரும்புகிறார்கள். அது வெறுக்கப்படுவதற்கு முன்போ அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முன்போ சில மணி நேரங்களாவது அவர்கள் மட்டுமல்ல, எல்லோரும் தாங்கள் விரும்பப்படவே நினைக்கிறார்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது. அவர்கள் மீது விருப்பம் அல்லது ஆர்வத்தை ஏற்படுத்துவதை விட அச்சத்தை ஏற்படுத்துவதே அவர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் நாங்கள் அவர்களைப் பார்த்து அச்சமடைவதுதான் அவர்களின் இறுதி நோக்கமாக இருக்கிறது.

அவர்களுக்காக உணவு சமைக்கப்பட்டது. நேரத்திற்கேற்ப உணவு சமைக்கிறோம் என்றோம். அல்லது உணவு கொடுங்கள் என்று அவர்களே வேண்டிக் கொண்டார்கள். சில நேரங்களில் அருகில் உள்ள கைவிடப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் 14வது மாடியில் உள்ளே நுழைந்த இருவரும் சோபாவை இழுத்து வந்து, ஓடிக் கொண்டிருக்கும் டி.வி. முன்பு போட்டுப் படுத்தபடி, புரட்சியின் மூலம் தாங்கள் அமைத்த புதிய அரசாங்கத்தின் புதிய தலைவரானவர் கோமாளி போன்ற தொப்பியை அணிந்து கொண்டு அணிவகுப்பை முன்னும் பின்னும் நடந்து கொண்டே பார்த்துப் பேசுவதைக் கண்டு சிரித்தனர். அந்த வீட்டின் வயதான பெண்மணியை தோழமையுடனும் அழுத்தமாகவும் அணைத்தபோது அவள் அழுதாள். (“நாம் தோழர்கள் அல்லவா? நாமெல்லோரும் இங்கு தோழர்கள் இல்லையா? என்று கேட்டான் நெட்டை மனிதன்.)

இப்படி ஒரு வகையில் அவர்கள் வந்தார்கள். இந்த கிராமத்திற்கு அவர்கள் அது போன்று வரவில்லை என்றாலும் இது போன்ற வகையிலும் வந்தார்கள்.எங்களிடம் தொலைக்காட்சி இல்லை. பனி இல்லை. நாங்கள் தரைத் தளத்திற்கு மேல் குடியிருந்ததும் இல்லை. இருந்தாலும் விளைவுகள் ஒன்று போலத்தான் உள்ளன. என்னவென்று தெரியாத அமைதி கலந்த அச்சமும் எதிர்பார்ப்பும் கலந்திருந்தது. எங்கள் கிராமத்து வழக்கப்படி ஒரு இளம் பெண் அவர்களுக்கு ஒரு தட்டில் உணவை எடுத்து வந்தாள். “என்ன கருமம்டா? என்றவாறு நெட்டையன் தன் அழுக்கான விரல்களால் பட்டும் படாதவாறு அவள் கொண்டு வந்த டைல் மீன் துண்டினை எடுத்தான். “ஓ…எங்கம்மா இதை அடிக்கடி செய்வா. நல்ல வேளை அவள் ஆன்மாவை ஆண்டவன் அடக்கிவிட்டான்! என்றான் ஓநாய் முகம் கொண்ட குட்டையன். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இளம்பெண்ணை தங்கள் மடியின் மீது மாற்றி மாற்றித் துக்கிப் போட்டு விளையாடியபோது வயதான பெண்கள் எல்லோரும் சுவற்றோரம் ஒட்டி நின்றபடி அழுது கொண்டிருந்தனர்.

உணவுக்குப் பிறகு அந்த கிராமத்தில்- மது அனுமதிக்கப்பட்டிருந்தால்- குடித்துவிட்டு வந்து வெளியே பார்க்க என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ள அவ்விருவரும் ஒரு நடை செல்வார்கள். அதுதான் திருடுவதற்கு ஏற்ற நேரம். அந்த இரு ஆண்களும் எப்போதும் திருடுவார்கள்- இந்த சொல்லை சில காரணங்களுக்காக பயன்படுத்துவதை அவர்கள் விரும்பாவிடிலும் உங்களுடைய கடிகாரத்தையோ, சிகரெட்டையோ, பணப்பையையோ, தொலைபேசியையோ அல்லது மகளையோ பறிக்கும் போது மறக்காமல் “உங்கள் பரிசுக்கு நன்றி! என்றோ “லட்சியத்திற்காய் செய்த தியாகத்தை நாங்கள் பாராட்டுகிறோம்! எனச் சொல்லும் போது நெட்டையன் நக்கலாகச் சிரித்து வைப்பதால் குட்டையன் தங்களது செயலை என்னதான் பெருந்தன்மையுடையதாக்க நினைத்தாலும் அது வீணாகிவிடும். சில இடங்களில் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வீடு செல்கையில் ஒரு தைரியமான சிறுவன் தன் தாயின் பின்னாலிருந்து பாய்ந்து வந்து ஓநாய் முகம் கொண்ட குட்டையனைத் தள்ள முயற்சிப்பான். எங்கள் கிராமத்தில் 14 வயது கொண்ட இந்தப் பையனை நாங்கள் கிங் ஃபிராக் என்றழைப்போம். ஒருமுறை அவன் நான்கைந்து வயது சிறுவனாக இருந்தபோது நமது கிராமத்தில் யார் பெரும் சக்தி கொண்டவர் என்று யாரோ சிலர் கேட்டபோது வாசலில் இருந்த அறுவறுப்பான பெரிய தேரையைக் காட்டி “இந்தக் கிங் ஃபிராக் தான், ஏன்னா என் அப்பா கூட இவனைப் பார்த்துப் பயப்படுவார்” என்றான். 14 வயதுடைய அவன் தைரியமானவன் என்றாலும் கூட அஜாக்கிரதையானவன் என்பதால் தான் அவன் தாய் அவனை ஒரு குழந்தை போல தனக்குப் பின்னால் நிறுத்தி மறைத்துக் கொள்வாள்.

ஆனால் இது போன்ற தைரியமான செயல்கள் உண்மையாகவும் தொடர்ந்தும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கின்றன என்பதை விளக்குவது கடினமானாலும் அந்த தைரியம்- எதற்கும் உதவாது என்றாலும் கூட- ஒரு அழகிய மலையை அல்லது முகத்தைப் பார்த்தால் எப்படி எளிதில் மறக்க முடியாதோ அதுபோல இதையும் மறக்க முடியாது. அது எப்படியோ உங்களுக்கு நீங்களே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை எப்படியோ மெலிதாக அறிந்த நெட்டையன் பளபளக்கும் பட்டாக் கத்தியை ஓங்கி சிரமமில்லாமல் ஒரு மலரைக் கொய்வது போல அச் சிறுவனை அவன் வாழ்விலிருந்து பிரித்தான்.

ரத்தம் சிந்தத் துவங்கியவுடன், அதுவும் பெருகியோடும் ரத்தத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பம் அதுவரை நிகழ்ந்த விருந்துபசாரத்தையும் அச்சத்தையும் கரையச் செய்தது. அப்போது மிக அதிகமாகக் குடித்தவர்கள், அதிலும் புதுமையாக, பாதுகாப்பற்ற வயதான ஆண்கள் பாட்டில் பாட்டில்களாக குடித்துவிட்டு அழுதார்கள். இப்படியொரு கொடூரத்தினை நிகழ்த்த மட்டுமல்ல அது நடக்கும்போது அருகிலிருந்து வெறுமனே வேடிக்கை பார்க்கவும் அசாத்திய துணிச்சல் தேவை. ஆனால் பெண்கள்! எங்கள் பெண்களை நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு தங்கள் பெண்களைப் பாதுகாக்க சுற்றி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த நெட்டையன் கடுப்பாகி தரையை ஓங்கி உதைத்தபடி, ‘இந்தப் பொட்டைங்களுக்கு என்னாச்சு? இதோட முடிஞ்சுது, நான் ரொம்பக் குடிச்சிட்டேன்” என்றான்.

குட்டையன் கிராமத் தலைவரின் மனைவியின் அத்தை மகளின் முகத்தில் குத்தியபடி (தலைவரின் மனைவி பக்கத்து கிராமத்தில் உறவினர்களைச் சந்திக்கச் சென்றுவிட்டார்) அவளருகே வந்து புரட்சியின் கரங்கள் வருவதை அறிவித்தான். இது போல பெண்கள் முன் காலத்திலும் அண்மைக் காலத்தில் யானைக் கடவுளின் கிராமத்திலும் பல பழைய புதிய ஊர்களிலும் நின்றிருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம். அந்த சமயத்தில் ஏனென்று அறிய முடியாத பெண்களின் மனோதைரியம் பெரிய விஷயம் இல்லையென்றாலும் – அந்த இருவரையும் இந்த கிராமத்திற்கு வருவதைத் தடுப்பதோ அல்லது மோசமான கொடுமைகள் செய்வதைத் தடுப்பதோ இயலாது என்றபோதும்- எப்போதும் நிகழ்வதில்லை. ஒரு பெண் இருண்ட முகம் கொண்ட நெட்டையனைப் பார்த்து காறி உமிழ்ந்தாள். அதைப் பார்த்த குட்டையன் அப்பெண்ணின் யோனியில் எட்டி உதைத்தபோது அவர்கள் செய்ய வேண்டிய குருரங்களுக்கான வழி கிடைத்தது. பாதுகாப்பு அரண் சிதறியது.

அடுத்த நாள் கிராமத்தில் என்ன நடந்தது என்பதைக் கேட்டவர்களுக்கேற்ப ஒவ்வொருவரும் கூடக் குறைய சொல்லிக் கொண்டிருந்தனர். படைவீரன், பெண்மணி, பக்கத்து கிராமத்திலிருந்து ஆர்வத்துடன் வந்த ஒருவன் அல்லது தனது நாத்தனார் வீட்டிலிருந்து திரும்பி வந்த கிராமத் தலைவரின் மனைவி என பெரும்பாலும் எல்லோரும் கேட்கும் கேள்வி- யார் அவர்கள்? இந்த ஆண்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? என்ன மொழி பேசினார்கள்? அவர்களுடைய முகத்திலும் கைகளிலும் என்ன அடையாளம் இருந்தது?- ஆனால் எங்கள் கிராமத்தில் அதிகாரவர்க்கம் என்ற ஒன்று இல்லாததும் ஒரு அதிர்ஷ்டம்தான். எல்லாவற்றையும் சொன்னபிறகு கிராமத் தலைவரின் மனைவி தலைவரைவிட உண்மையான தலைமையாக மாறிப்போனார். அவள் உயரமாகவும், அழகாகவும், தைரியசாலியாகவும் இருந்தாள். சில இடங்களில் வெம்மையாகவும் சில இடங்களில் கூதலாகவும் வீசும் பாலைவனச் சூறைக்காற்று கா ஹரமாட்டனை எல்லோரும் வேறு வழியில்லாமல் சுவாசிப்பது போல்- ஒரு சிலராலேயே இது போன்ற ரத்தக் களறியில் சுவாசிக்க முடியும் என்றாள். அது போன்ற மனிதர்கள் கா ஹரமாட்டன் போல தங்களையும், அடையாளங்களையும், பெண்களையும் இழப்பார்கள். அவர்கள் எந்த சுழற்காற்றையும் ஏற்படுத்தமாட்டார்கள்.

மாறாக அந்தக் காற்றாகவே அவர்கள் இருப்பார்கள் என்றாள். இது ஒரு உண்மை உருவகம். ஆனால் அவள் அப்படித்தான் இருந்தாள். அவள் நேராக இளம்பெண்களிடம் சென்று நடந்ததைக் கூறுமாறு கேட்டாள். கடுமையான அவள் வார்த்தைகளில் மனமுருகிய பெண்ணொருத்தி பேசினாள். அந்தக் குட்டையன் தானாக ஒருதலைக் காதல் கொண்டவனாக என் மார்பின் மீது தலைசாய்த்து தனது கதையை- தான் ஒரு அநாதை என்றும் பல்லாண்டுகள் அநாதையாகவே வாழ்வதாகவும் எல்லா ஆண்களையும் போல வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தாகவும் பயங்கரங்களைச் சந்தித்துள்ளேன் என்றும் இப்போது தனக்கு இந்தப் பெண்கள் மூலம் குழந்தைகள் வேண்டும், நிறைய ஆண் குழந்தைகள், அழகான, வலிமையான ஆண்- ஆம். பெண் குழந்தைகளும் கூட…இந்தக் குழந்தைகள் படையுடன் நாங்கள் கிராம நகரங்களுக்கு அப்பால் சென்று வாழ்வோம் என்று பிதற்றினான். அவன் பெயரை நானறிய வேண்டும் என்று விரும்பினான் என்று வியப்புடன் கூறினாள் அப்பெண். அவனுக்கு வெட்கமே இல்லை. அவன் இந்த கிராமத்தையோ, என் உடல் மீதோ கடந்து சென்றதை நினைத்துப் பார்க்க விரும்பவுமில்லை; மற்றவர்கள் தன்னை எவ்வாறு அழைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. அநேகமாக அது அவனுடைய உண்மையான பெயரில்லை, ஆனால் அவன் என் பெயர் ————— என்றான்” என்று கூறினாள்.

இதைக் கேட்ட தலைவரின் மனைவி சட்டென்று அறையை விட்டு வெளியேறி வேகமாகச் சென்றாள்.

••••

அமைராவின் மூன்று கவிதைகள் ( அமைரா (இலங்கை) அறிமுகக் கவிஞர்.

images (14)

அமைரா (இலங்கை) அறிமுகக் கவிஞர்.

ஈழத்தில் இன்று எழுதிவரும் மிக இளங்கவிகளில் ஒருவர்.

01.

நான் விசையின் மையத்தை நோக்கி விரைகிறேன் சடுதியில்…!!
நீ திசை எங்கிலும் வியாபிக்கிறாய் வானத்தை காட்டிலும் அதி அமைதியாக..!!

பக்தனைக்காட்டிலும் நீ முக்தியில் உள்ளாய் நான்தான் தரிசித்தேன் ஆலயங்களில் ஆனால் நீ விசித்திரமாகவே என்னை தோன்றச்செய்கிறாய்

மிக துல்லிய
ஒலியாய் காதினுள் ஊடுருவும் நேசம் இழையோடிய ஏதோ ஒன்றைப் பற்றி முன்னே குறிப்புகள் மாத்திரம் நாம் கொண்டிருந்தோம்

இன்று முடிவில் தொடங்கி இனிமேலும் தொடர்கிறது……,, ஆனால் வெவ்வேறு கோணத்திலும் துருவத்திலும் இதுவேதான் முற்றிலும் மாறாக…,

வெறும் புன்னகையிலான உன் முழு பரவசத்தின் ஔியில் வெல்வதாய் எண்ணி தோற்கி்றேன் நீ உண்மையில்
வானத்தைப்போல்
ஆரவாரமற்றவளாய்
தனித்திருக்கிறாய்

02.

கடல்தாண்டி வந்த ஒரு பட்சி தூங்காத இரவுகளை என்னிடம் கொனர்ந்து சேரத்தது…..!
பல மைல்களுக்கப்பாலுள்ள நகரத்தினரின் முற்றும் முகாரிகள் அடங்கிய ஒரு பாஷையை அது அறிந்திருக்கக்கூடும்
என் திடல் முன் உதிர்ந்த அதன் ஒற்றையிறகில் அப்பாவியாய் இறந்துபோன ஒரு சிறுமியின் அரூபக்கனவொன்று உதிரக்கரையுடன் உலர்ந்திருந்தது
அதில் படிந்துள்ள ஏக்கங்களை எப்படி எழுதுவேன்….?
ஆதி நிலத்தின் விதைத்த ரோஜாச்செடி ஆச்சரியமான தன் விடியலொன்றில் மலர்ந்திருக்கவேன்டும் என்பதே
அவளது அதியுச்சபட்ச ஆவலாயிருந்தது
புகைந்து கருகிய பிணவாடையை உள்ளிளுக்கும் பொழுதெல்லாம் என்றுமே தான் நுகர்ந்திராத ரோஜாக்களின் சுகந்தத்தை தேடியிருந்தாள்
அவர்களது தேகங்களை துளைக்கும் சன்னங்களெல்லாம் ரோஜாவின் இததழ்களாய் மாறிவிடக்கூடாதாயென பிராத்தனை செய்திருந்தாள்
தன் தாயின் மயானத்தில் ஒற்றை ரோஜாவையாவது வைத்துவிட பிரயர்தனப்பட்டாள்
இறுதியில் உருக்குலைந்த தன் உறுப்பை பார்த்து ரோஜாக்களின் நிறத்தை அடியோடு வெறுந்திருக்கக்கூடும்
சதையங்களோடு சிதைந்துபோனது அவளது அழகிய ரோஜாக்கனவும் புனிதபூமியும்
ஆனால் அவர்கள் அடுத்ததொரு யுகத்துக்குள் பல்லாண்டுகாலமாக இங்கே ரோஜாத்தோட்டங்கள் இருந்ததாக சாட்சியங்கள் வைத்திருப்பார்கள்

03

நகரத்து நெடுச்சாலையில்
துாரமாய் பயணிக்கும் அவளது சொப்பனங்கள்

ஜன்னலுாடாக ரசித்துக்கொன்டிருக்கிறாள்

அலாதியானதொரு இன்பம்
மீளமுடியாத தனிமை
சொல்லமுடியாத துயரம்
சுயங்களை தொலைத்த பிம்பமென
ரசித்தலோடு நிறுத்திக்கொள்கிறாள்

சில மெதுவாக
பல சடுதியாக
பார்வைவெளியில் நகர்ந்து தொலைக்கின்றன
அக்கணங்களில் சப்தமாக உடைந்த பின்னும்

நெடு நாழி யுகங்தோறும்
நின்றுகொண்டுதான் இருக்கிறாள்
ஏக்கங்களையெல்லாம் விழுங்கியபடி
வாழ்வின் ஓரமாக

இந்தப் பூமி
இன்னும் ஏன் பிளந்துகொள்ளவில்லை….?

•••

எழுத்துக்காரர்களின் புலம்பல்கள் ( உள்ளோட்டங்கள் ) / அ.ராமசாமி.

download (16)

இலக்கியப்பட்டறைகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்படும் பட்டியலில் இடம்பிடிக்க எப்படி எழுதவேண்டும் நண்பர்களே?

இப்படியொரு கேள்விக்குறியோடு காலபைரவன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவொன்றைப் போட்டிருந்தார். அப்பதிவைப் பலருக்கும் தொடுப்பு செய்திருந்தார். தொடுப்பில் என்னுடைய பெயரும் இருந்ததால் உடனடியாக என் பார்வைக்கு வந்தது. நான் உடனடியாக,

இலக்கியப்பட்டறைகளா? பிற மாநிலங்களில்/ நாடுகளில் நடக்கும் இலக்கியவிழாக்களா? என்று கேட்டேன். என் கேள்விக்கு

பட்டறைகள் பிறமாநில பிறநாடுகளில் நடப்பவைதான் ஐயா என்றார்.

பதிப்பகப் பின்னணிதான் முதன்மைக்காரணம். இதனை விரிவாக எழுதவேண்டும். ஓரிரண்டு நாளில் எழுதுகிறேன்

என்று சொல்லியிருந்தேன். முகநூலில் எழுதினால் ஒருநாள் கழிந்ததாகக் காணாமல் போய்விடும். அதைத் தவிர்க்க இங்கே எழுதுகிறேன். காலபைரவனின் இந்தக் கேள்வி ஓரளவு நியாயமான கேள்விதான். இலக்கியத்தில் – அதற்குள் சிறுகதை என்னும் ஒரு வகைப்பாட்டில் கவனம் செலுத்தித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளருக்கு இப்படியொரு கேள்வி எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

காக்கா என்னும் முதல் சிறுகதையைத் தீராநதி இதழில் 2004 இல் எழுதிய காலபைரவன் இதுவரை புலிப்பாணி ஜோதிடர் (2006, சந்தியா பதிப்பகம்), விலகிச்செல்லும் நதி (2008, மருதா பதிப்பகம்) கடக்கமுடியாத இரவு (2009,சந்தியா பதிப்பகம்), பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் (2011,சந்தியா பதிப்பகம் ) என நான்கு சிறுகதைத்தொகுதிகளை வெளியிடும் அளவுக்குக் கதைகள் எழுதியுள்ளார். ஆதிராவின் அம்மாவை ஏன் தான் நான் காதலித்தேனோ?(2008, கே.கே.புக்ஸ்) என்றொரு தலைப்பில் கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிசெய்யும் விஜயகுமார் என்ற காலபைரவனின் எழுத்துக்களைப் படிக்கும் வாசகர்களைத் தாண்டி, எழுத்தாளர்களுக்கும் அவரது கதைகள் பிடித்திருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமாக அவரது கதைகளிலிருந்து தேர்வு செய்த தொகுப்புகள் இரண்டு தொகுப்புகள் ஒரே ஆண்டில் வந்துள்ளதைச் சொல்லலாம். (சூலப்பிடாரி, காலச்சுவடு பதிப்பகம் 2016) முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம்,2016 ) ஆனால் அவருக்குச் சாகித்திய அகாடெமியோ, ஒரு பல்கலைக்கழகமோ, மாநில அளவில் இலக்கியச்சேவையாற்றும் நிறுவனங்கள் நடத்தும் பட்டறைகளுக்கோ, இலக்கிய விழாக்களுக்கோ அழைப்பு இல்லை. இந்த நிலையிலேயா அப்படியொரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த ஆதங்கம் நியாயமானதுதான். இவரைப்போல ஆதங்கப்படும் தமிழ் எழுத்தாளர்கள் 50 பேராவது இருப்பார்கள் என்பது எனது கணக்கு. இப்போது இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம்.

எழுத்தாளன்: அந்நியமாதலும் இணைதலும்

ஒருமொழியில் தனது எழுத்துகள் வழியாகப் பத்துப்பன்னிரண்டு ஆண்டுகள் பங்களித்துள்ள காலபைரவன் போன்ற எழுத்தாளர்களுக்கு இத்தகைய கேள்விகள் எழுவதில் நியாயங்கள் உண்டு. எழுத்து அல்லது கலைச்செயலில் ஈடுபடுபவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு முன்னால் சில கட்டங்களைத் தாண்டுகிறார்கள். தனது கலை இலக்கியச் செயல்பாடு கவனிக்கப்படுகின்றனவா? என்பதே முதல் கட்டம். பொதுவான போக்கிலிருந்து விலகித் தனித்துவமான கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடும்போது சுற்றியிருப்பவர்களிடமிருந்து- குடும்பத்தினர், உடன் பணியாற்றுவோர், நண்பர்கள் – விலகுவதாக உணர்வார். அந்த விலகல் மனநிலையின் எதிர்நிலையில் “தன்னைக் கவனிக்கும் நபர்கள் அல்லது ஒரு கூட்டம் இங்கே இல்லை; வேறிடங்களில் இருக்கிறது; அவர்களின் எதிர்பார்ப்புகளுக்காகவே தான் இதைச் செய்கிறேன்” என்ற நம்புவார்கள். தனிநபர் வெளியான குடும்பம் அல்லது பணியிடத்திலிருந்து அந்நியமாகும் ‘தன்னைச் சேர்த்துக்கொள்ள அல்லது நமக்கான மனிதர்’ என நினைக்க பொதுவெளியில் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற நம்பிக்கையே கலை இலக்கியச் செயல்பாட்டில் இருக்கும் இயங்கியல். தனிவெளியிலிருந்து அந்நியமாகிப் பொதுவெளியில் இணைவதாக நம்பும் கலை இலக்கியவாதிக்குப் பின்னதிலும் ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்படும்போது இத்தகைய –

இலக்கியப்பட்டறைகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்படும் பட்டியலில் இடம்பிடிக்க எப்படி எழுதவேண்டும் நண்பர்களே?

என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழ் எழுத்தாளன் தனக்கான அங்கீகாரமாக அல்லது கவனித்தலாக நினைப்பதில் உச்சகட்டமாக இருப்பது இந்திய அரசின் விருதான சாகித்திய அகாடெமி விருதைத் தனது எழுத்துக்காகப் பெறுவதாக இருக்கிறது.. இதுபோன்று அரங்கியல், ஓவியம் போன்ற துறைகளிலும் அகாடெமி விருதுகள் உள்ளன. அதைப் பெறுவதை நோக்கி ஒரு நாடகக்காரனும் ஓவியனும் இயங்குகிறான். திரைப்படத்துறையில் இருப்பவர்கள் அதனையொத்த ‘தங்க’ விருதுகளை நோக்கிய நகர்வாக இருக்கிறது. அவைகளும் கிடைத்துவிட்டால் ஞானபீடப்பரிசு பற்றிய எண்ணம் உண்டாகிறது. உலக நாடுகள் -குறிப்பாகச் சோசலிச நாடுகளின் எழுத்தாளர்கள் இன்னொரு நாட்டின் தூதுவர்களாகக் கூடப் போயிருக்கிறார்கள்.

கால பைரவனின் நகர்வு அந்தக் கடைசிகட்டத்தை நெருங்கியதாக இல்லை. மாநிலம் தாண்டிய/ தேசத்தைத் தாண்டிய பட்டறைகளில்/ கருத்தரங்குகளில் கலந்துகொள்ள நினைக்கும் இந்த நகர்வை இடைநிலைக்கட்ட நகர்வு எனச் சொல்லலாம். தொடக்க நிலையில் ஒரு எழுத்தாளன் தனித்தனியாக எழுதப்பெற்றவற்றைத் தொகுப்பாகக் கொண்டுவரவேண்டுமென நினைக்கும்போது தனது மொழியில் இயங்கும் முக்கியமான பதிப்பகங்கள் முன்வரவேண்டுமென எதிர்பார்க்கிறார். அந்த எதிர்பார்ப்பு நடக்காதபோது தனது கைக்காசைப் போட்டு அச்சிட்டுக் கொண்டுவருகிறார். அதனைத் தொடர்ந்துசெய்ய முடியாதபோது பதிப்பகங்களின் மீது விமரிசனத்தைச் செய்கிறார். அதன் பிறகு அச்சான தொகுதியை விமரிசகர்கள் கவனிக்கவில்லை என்ற வருத்தத்தைக் காட்டுகிறார். அதன் வெளிப்பாடாக மதிப்புரை எழுதப்பெறவில்லை; விமரிசனக் கூட்டங்கள் நடக்கவில்லை என்ற மனவருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். தமிழின் முதன்மையான கவிகளும் புனைகதையாளர்களும் தங்களின் நேர்காணலில் இவ்விதமான புலம்பல்களை வாசித்திருக்கிறேன். இதன் அடுத்த கட்டமே காலபைரவனின் கேள்வியும் ஆதங்கமும்.

அங்கீகாரத்தின் இயங்கியல்

கலை, இலக்கியங்களில் செயல்படுபவர்களை வாசகர்கள் மட்டுமே கவனிப்பதில்லை. அரசு நிறுவனங்களும் தனியார்களின் பணத்தில் இயங்கும் அறக்கட்டளைகளும் கவனிக்கின்றன; அழைக்கின்றன; அங்கீகரிக்கின்றன; பாராட்டுகின்றன. அதனை ஒருவிதச் சமூகக் கடமையாக நினைக்கின்றன. நினைக்கவேண்டும் என எழுத்தாளர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. புரவலன் -புலவன் மரபு ஒன்றும் தமிழர் மரபு மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கும் மரபுத்தொடர்ச்சிகளே. அந்த மரபில் அரசின் அல்லது ஆட்சியாளர்களின் நலன் பேசப்படவேண்டுமென எதிர்பார்ப்பது மக்களாட்சிக்கு முந்திய காலகட்ட எதிர்பார்ப்பு. நமது காலம் மக்களாட்சிக்காலம். எனவே வேறுபாடுகள் காட்டாத அல்லது ஒதுக்கல்கள் நிலவாத தன்மையில் இருக்கவேண்டும் என நினைப்பது இயல்பு. அது நமது காலத்தின் மனநிலை. ஏனென்றால் ‘… முன் அனைவரும் சமம்’ என நினைக்கிறோம். ஆனால் நமது காலம் எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் காலமாக இல்லை என்பதுதான் உண்மை.

அரசு நிறுவனங்கள் கலை இலக்கியவாதிகளைப் போற்றிப்பாடும் நிலவுடமைக்காலப் புலவனாகவே நினைக்கின்றன. தனியார் நிறுவனங்கள் பண்டமாகவும் பண்டங்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளனாகவும் கருதுகின்றன. நமது காலம் எல்லாவற்றையும் பண்டமாக ஆக்கி விற்பனைசெய்யும் காலமாக இருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியதில்லை. இலக்கியமும் அப்படியான பண்டமாக ஆக்கப்படுகிறது. கச்சடா எழுத்துமுதல் கணமான எழுத்துவரை எல்லாமே விற்பனைக்கான பண்டம்தான். எழுத்தைப் பண்டமாக்குவதில் முதலிடம் அவற்றை வெளியிடும் இதழ்களுக்கும், தொடர்ச்சியாக அவற்றை நூலாக வெளியிடும் பதிப்பகத்திற்கும் இருக்கிறது. அதற்குப்பல அவை பலவித விளம்பர உத்திகளையும் கைக்கொள்கின்றன. இந்தப் பின்னணியில்தான் தமிழின் பதிப்பகங்கள் ஒவ்வொன்றும் மாதப்பத்திரிகைகளைக் கொண்டுவருவதையும் புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பத்திரிகைகள் ஒவ்வொன்றும் இலக்கிய இதழொன்றையும் பதிப்பகம் ஒன்றையும் தொடங்குவதையும் கணிக்கவேண்டும்.

வியாபாரத்தின் தரகர்கள்

பல இடங்களிலும் நடக்கும் பட்டறைகளுக்கு / கருத்தரங்குகளுக்கு/ பயிலரங்குகளுக்கு/ இலக்கியச்சுற்றுலாக்களுக்கு/ தங்கி எழுதும் உதவித்தொகைகளுக்கு அழைக்கப்படும் எழுத்தாளர்கள் யாரோ ஒருசிலரின் பரிந்துரைகளின் பேரில்தான் அழைக்கப்படுகிறார்கள். சாகித்திய அகாடெமி, மொழி வளர்ச்சித்துறை, பல்கலைக்கழகங்கள் போன்றன குழுக்கள் அமைத்துப் பரிந்துரைகளைப் பெற்றுப் பரிசீலனை செய்து தேர்வுசெய்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கின்றன. குழுக்களில் தேர்வின் நோக்கத்திற்கேற்ப ஆலோசனைக்குழுக்கள் உருவாக்கப் படவேண்டும் என்பது நியதி. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சரியான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படாததாலும், குழுவின் பெரும்பான்மைக் கருத்து ஏற்கப்படுவதாலும் தேர்வுகள் சரியாக இல்லாமல் போய்விடுவதுண்டு. அதனாலேயே அவை விமரிசனங்களையும் விவாதங்களையும் எதிர்கொள்கின்றன. ஆனால் தனியார் அறக்கட்டளைகளில் இந்தக் குறைந்த அளவு நடைமுறைகள்கூடக் கிடையாது. பரிந்துரைகள் செய்பவர்கள் யார்? எந்த அடிப்படையில் ஏற்கப்படுகின்றன என்ற விவரங்கள் எல்லாம் எதுவும் வெளியில் தெரிவதில்லை. இலக்கியக்கருத்தரங்களிலும் எழுத்துப் பட்டறைகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் வெளியில் சொன்னால் மட்டுமே அறியக் கிடக்கும்.

இந்தியாவைத் தாண்டி ஒரு தமிழ் எழுத்தாளர் இதுபோன்ற அழைப்புக் கிடைக்க வேண்டுமென்றால் முன்பெல்லாம் அவரே தனது எழுத்துகளைப் பற்றி ஆங்கிலத்தில் சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது ஆங்கிலம் பேசத்தெரிவது அடிப்படைத்தகுதியாக இல்லை என்றபோதிலும் அவரது ஒன்றிரண்டு எழுத்துகளாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அழைக்கப்படுகிறார். அதையும் தாண்டி அவரது படைப்புகளில் அடிநாதமாக ஓடும் உள்ளடக்கம் நிகழ்காலத்து இலக்கியப்போக்கில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் பேசியிருக்கவேண்டும். அண்மைக் காலங்களில் பிறமாநில/ அயல்நாட்டுக் கருத்தரங்குகள், பட்டறைகள், விழாக்கள் போன்றவற்றில் கலந்துகொண்ட தமிழ்ப் புனைகதையாளர்கள், கவிகள் ஆகியோரின் பெயர்களை நினைத்துக்கொண்டால் இது புரியவரலாம்.

இந்திய அளவிலும் உலக அளவிலும் நடக்கும் பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றனவும் இலக்கியம் என்ற பொதுத்தளத்தை மையப்படுத்தி நடத்துவன போலத் தோற்றமளித்தாலும், காலத்தின் உள்ளோட்டமான – குறிப்பான போக்குகளை மையப்படுத்தியே வாய்ப்புகளும் தரப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகள் இந்தியாவில் நடக்கும் எல்லாப் பட்டறைகளிலும் தலித் இலக்கியத்தை அங்கீகரித்தல் என்ற போக்கு இருக்கிறது. அதேபோலப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் போக்கும் இருக்கிறது. விளிம்புநிலையில் இருக்கும் மனிதர்களைக் கவனிப்பதாகப் பாவனைசெய்யும் அரசுகளைப் போலவே பெரும்முதலாளிகளின் பணத்தில் நடக்கும் விழாக்களில் அவர்களை அங்கீகரித்து மேடையேற்றுகிறார்கள். இது ஒருவிதத்தில் குற்ற மனம் செய்யும் பரிகாரம் மட்டுமே. இந்த அடிப்படையில் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பைக் கொண்டு அப்பிரிவுக்குள் வராதவர்கள் கேள்வி எழுப்புவதோ, புலம்புவதோ அர்த்தமற்றது.

உலக அளவில் நடக்கும் பட்டறைகளில் முன்பெல்லாம் இந்தியவியல் என்னும் கருத்துருவைப் பேசும் -விவாதிக்கும் எழுத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதற்கிணையாகத் தமிழியலை – தமிழ்க்கவிதை மரபை – தமிழ்ச் சமயமரபைக் கட்டமைக்கும் முயற்சிகளுக்கும் வாய்ப்புகள் கிட்டின. இப்போதும் இதனை உள்வாங்கிய நவீன எழுத்தாளர்கள் கவனிக்கப்படுகிறார்கள்; அழைப்புகளைப் பெறுகிறார்கள். இந்த உள்ளோட்டங்களுக்கேற்பத் தனது பதிப்பக எழுத்துகளைத் தயாரிக்கும் – எழுத்தாளர்களை முன்வைத்துக் காட்டும் பதிப்பகங்கள் வெற்றிபெறுகின்றன. இது ஒருவிதத்தில் தங்களின் எழுத்தாளரை – அவரின் படைப்புகளைத் “தரமான பண்டம், இந்தக் காலத்துக்கேற்ற பண்டம்” எனச் சொல்லி விற்பனை செய்யும் விற்பனை உத்திதான். இத்தகைய எழுத்தோட்டம் கவனம்பெறும்போது இங்கே தமிழ்ப் பரப்புக்குத் தேவையான நவீனத்துவ, பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் பதற்றம் கொள்கிறார்கள். “தட்டையான எழுத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; எழுத்தைத்தாண்டி வேறுகாரணங்களுக்காகப் பரிந்துரை நடக்கிறது” என்ற குரல்கள் கேட்கின்றன. நவீனத்துவ, பின் நவீனத்துவ எழுத்துகளை ஐரோப்பிய மாதிரிகள் என்று சொல்லிக் கவனிக்காமல் விட்டுவிடும் வாய்ப்புகள் அதிகம். அந்தப் பண்டங்கள் அங்கேயே கிடைப்பவைகள் தானே. இரண்டாண்டுகள் ஐரோப்பாவிலிருந்த போது நடந்த கருத்தரங்குகள், பட்டறைகளின் அனுபவத்திலிருந்து இதைக்கூறுகிறேன்.

ஆங்கிலத்தில் அறிமுகம் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு என்ற நிலையில்தான் பதிப்பகத்தின் பங்களிப்பு ஒரு எழுத்தாளருக்குத் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டுச் சந்தையை – இன்னும் சொல்வதானால் சென்னையில் நடக்கும் புத்தகச்சந்தையை மட்டும் மனதில்கொண்டு நூல்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தில் தனது நூல்களை வெளியிடும் கவிக்கோ, சிறுகதை எழுத்தாளருக்கோ, நாவலாசிரியருக்கோ இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது. தனது பதிப்பகத்திற்கான பதிப்புக்குழுவில் ஆங்கிலத்தில் அறிமுகம்செய்யும் வல்லமைகொண்ட ஒரு பதிப்பகம் இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கித்தரமுடியும். அது சாத்தியமில்லாதபோது ஆங்கில இதழ்களில் கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதும் நபர்களோடு தொடர்புடையதாக ஒரு பதிப்பகம் இருக்கவேண்டும். அதன் வழியாக இந்திய அளவிலான அறிமுகத்தையும் உலக அளவிலான அறிமுகத்தையும் ஒரு எழுத்தாளருக்குப் பெற்றுத்தரமுடியும். தமிழ்நாட்டில் இயங்கும் க்ரியா, காலச்சுவடு போன்ற ஒன்றிரண்டு பதிப்பகங்கள் மட்டுமே இதில் கவனம் செலுத்துகின்றன. அவைகளோடு தொடர்புடைய விமரிசகர்கள், முன்னோடி எழுத்தாளர்கள், மதிப்புரையாளர்களின் பரிந்துரைகளின் பேரிலேயே அப்பதிப்பகங்களின் எழுத்தாளர்கள் இத்தகைய வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதனைப் பெரிய குறையாகச் சொல்லமுடியாது. இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கும் திறமையை எல்லாப் பதிப்பகங்களும் -குறைந்தபட்சம் நவீன இலக்கியத்தளத்தில் இயங்கும் பதிப்பகங்களாவது செய்யவேண்டும். கால் நூற்றாண்டுக்கு முன்பு அல்லயன்ஸ், வாசகர் வட்டம் போன்றன இத்தகைய முயற்சிகளைச் செய்தன. ரஷ்யாவிற்கும் சோசலிச நாடுகளுக்குமான அழைப்பை மாஸ்கோவிலிருந்து இயங்கிய முன்னேற்றப்பதிப்பகம் கவனித்துக்கொண்டது.

பதிப்பகங்களைச் சார்ந்து வாய்ப்புப்பெறும் எழுத்தாளர்களின் தகுதி, குறைவான பங்களிப்பு, தமிழ் எழுத்துப் பரப்பிற்குள் அவர்களின் இடம், நவீன இலக்கியப்போக்குக்குள் வராத நிலை போன்றவற்றை முன்வைத்துக் கேள்விகள் எழுப்பமுடியும். அவையெல்லாம் இலக்கியமென்னும் பொது அறம் சார்ந்த கேள்விகளே. அறங்களைத் தொலைத்த – கைவிட்ட பின் நவீனத்துவக் காலத்தில் அந்தக் கேள்விகளுக்கு யாரிடமிருந்தும் பதில்கள் கிடைக்கப் போவதில்லை. பதில் சொல்லவேண்டுமென ஒருவரையும் வலியுறுத்தவும் முடியாது. இங்கேதான் தனியார் அறக்கட்டளைகளின் செயல்பாடுகளுக்கும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணமுடியும். அரசு நிறுவனங்கள் நிகழ்காலப் போக்குக்குள் இடம்பெற முடியாத எழுத்தை, எழுத்தாளரைக் கொண்டாடும்போது கேள்விக்குட்படுத்தமுடியும். தனியார் அறக்கட்டளைகளை எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது.

••••

பிசிராந்தையாரும் நரையாமுடி அறிவியலும் – முனைவர். ஆர். சுரேஷ்

download (43)

இயற்கையாகவே, நமது தலையில், முடி இருப்பதற்கு காரணம் அழகு மட்டுமல்ல. உடலின் வெப்பத்தை தக்கவைப்பதற்காகவும் தான்! ஆம், உடல் வியர்த்தலின் மூலம், அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்பட்டு உடல் குளிர்விக்கப்படுகிறது. அதேசமயத்தில், அதிகப்படியான வியர்வையின் மூலம், உடலின் சராசரி வெப்ப நிலையைவிட, குறையாமல் இருப்பதற்கு, தலைமுடி துணைசெய்கிறது. கோடைகாலங்களில், வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பின்பு, உங்களது தலையை தடவி பார்த்திருக்கிறீர்களா? தலைமுடியின் வேர்கால்களில் வியர்வை சொரிந்திருக்கும் அல்லவா? அதாவது தலைமுடியினால், வியர்வை துளிகள் எல்லாம் ஆவியாகாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது. இதன் மூலம், அதிகப்படியான உடலின் வெப்ப இழப்பு குறைக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை சமநிலையில் வைக்கப்படுகிறது. தலையை தவிர உடம்பில் உள்ள முடியின் முக்கிய நோக்கமும் இதுதான்! அதாவது, உடலின் வெப்பதை காப்பதற்காக!

சரி, தலைமுடியின் அறிவியல் பின்ணனி ஒருபுறம் இருக்க, தற்காலத்தில் சிலருக்கு தலைமுடியே பிரச்சணையாக வந்துவிடுவதுண்டு. ஆம், முடிஉதிர்தல், இளநரை, இளம் வயதில் வழுக்கை போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சணையால், சிலர் அவதிபடுவதும் உண்டு. இப்பிரச்சணைகளுக்கான காரணத்தையும், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நவீன அறிவியல் உலகம் ஆராய்ந்து அறிந்துள்ளது. முன்னதாக, தலைமுடி பிரச்சணையில், குறிப்பாக, நரைமுடி பிரச்சணையில், நம் முன்னோர்களின் நிலைபாடு எப்படி இருந்தது? வாருங்கள், நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்த பிசிராந்தையாரின் அனுபவ வழிமுறையை பார்போம்.

பிசிராந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நேரில் காணாமலே கோப்பெருஞ்சோழனோடு நட்புப் பூண்டிருந்த பிசிராந்தையார் பாடிய புறநானூறு பாடல் பின்வருமாறு.

யாண்டு பலவாக நரையில் வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே (புறநானூறு – 191)

மேற்கண்ட பாடல் வரிகளின் விளக்கம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. வயோதிக பருவம் வந்தாலும், தான் இளமையோடிருக்கும் காரணத்தை இப்படியாக கூறுகிறார் பிசிராந்தையார்.

எனது மனைவியும், மக்களும், சிறந்த பண்பும் அறிவும் நிறைந்தவர்கள். என்னிடம் பணிபுரிபவர்களும், நான் எண்ணுவதை போன்றே எண்ணுபவர்கள். என் அரசனும் அறச்செயல்களை மட்டுமே செய்து நாட்டு மக்களை காப்பாற்றுகிறான். மேலும், நல்ல பண்பும், பணிவும் கொண்ட சான்றோர்கள், நான் வாழும் ஊரில் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை என்றார்.

அதாவது, பிசிராந்தையாரின் குடும்பம், மற்றும் சமூகம் நிலை (நல்ல பண்புள்ளவர்கள் இருந்தமையால்) சிறப்பாகவும், மனமகிழ்வை தரும் வகையிலும் இருந்துள்ளது. அதனால், மன அழுத்தம் தரும் பிரச்சனைகள் ஏதும் இல்லா நிலை இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே, தனுக்கு (பிசிராந்தையாருக்கு) நரை தோன்றவில்லை என்றுரைத்திருக்கிறார்.

’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ அல்லவா?

தன் அகமாகிய மனதில் எவ்வித பிரச்சணையும் இல்லாத காரணத்தால் தன் புறமாகிய தலைமுடியில் நரை தோன்றவில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறார் பிசிராந்தையார்.

சரி, பிசிராந்தையார் சொன்னது போன்று, உன்மையில் ஒருவரின் மனதிற்கும், அவரது தலைமுடிக்கும் தொடர்பு உண்டா? வாருங்கள், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகளை பார்ப்போம்.

தலைமுடியானது, ’கெரட்டின்‘ எனும் ஒருவகை புரதத்தால் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து வளரும் தன்மை கொண்டது.

மேலும் தலைமுடி நரைப்பதற்கென, குறிப்பிட்ட வயதுவரம்பு ஏதும் இல்லை. இருப்பினும், உடலின் ஆரோக்கியம், நோய் தாக்கம், ஹார்மோன்களின் நிலை, மன அழுத்தம், ஒரவரது மரபு பண்பு உள்ளிட்ட காரணங்களால், தலைமுடியின் நிறத்தில் மாற்றம் (நரை) இருக்கலாம்.

முதலில், தலைமுடி நரைப்பதற்கான (வெள்ளையாவதற்கான) காரணத்தை காணலாம்.

உண்மையில் தலைமுடியின் நிறம் வெள்ளை! ஆயினும், இது கருப்பாக இருப்பதற்கு காரணம், ’மெலனின்’ எனும் கருப்பு நிறமி ஆகும். உடலில் உள்ள மெலனோசைட் செல்களால், உற்பத்தியாக்கப்படும் இந்நிறமி, முடியின் வேர்கால்களின் மூலம், முடிக்குள் செலுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே, தலைமுடி கருமையாக இருக்கிறது. ஒருவர் உயிருள்ள வரை, அவரின் உடலில் இருக்கும் மெலனோசைட் செல்கள் தொடர்ந்து மெலனின் நிறமியை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், சராசரியாக முப்பது வயதிற்கு பின்பு, (மெலனோசைட் செல்கள்) இவற்றின் செயல் திறன் படிப்படியாக குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயத்தில் தலைமுடி வேர்கால்களுக்கு ஒரு விசேஷித்த தன்மை இருப்பதாகவும் விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. அதாவது, வயதினை பொருத்து, மெலனின் நிறமியை முடியின் வேர்பகுதிகள் தங்களுக்குள் அனுமதிப்பதாக சொல்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் melanogenic clock என்கின்றனர்.

மேற்கண்ட விளக்கத்தின் மூலம், வயதாக (மூப்பிற்கான), நரைமுடி வருவது இயல்பு என்பதை அறிய முடிகிறது. ஆனால், பிசிராந்தையாருக்கோ, வயோதிக பருவம் வந்த பின்பும் தலைமுடி நரையாமல் இருந்ததற்கு காரணம் என்ன? அல்லது, தற்காலத்தில் இளம் வயதிலேயே, நரைமுடி வருவதற்கு காரணம் என்ன? இக்கேள்விக்கான விஞ்ஞானிகளின் பதில்களை இனி காண்போம்.

தொடக்க காலத்தில், நரைமுடிக்கு காரணமாக, மெலனின் உற்பத்தி குறைபாடாக இருக்க கூடும் என்று நம்பப்பட்டது. ஆனால். அன்மையில் கண்டறியப்பட்ட ஆய்வில், முற்றிலும் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நரைமுடிக்கு காரணம் மெலனின் குறைபாடு இல்லை! மாறாக, ’ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ எனும் வேதிபொருளின் உற்பத்தியே! இது ஒரு சிதைவு காரணியாகும். அதாவது, கரிம பொருட்களை (உதாரணம், மெலனின் நிறமி) சிதைக்கும் பண்பு கொண்டது. இருப்பினும், நம் உடலில் உள்ள கேட்டலேஸ் நொதி (catalase enzyme), உடலில் உருவாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சிதைவு காரணியை சிதைத்துவிடுகிறது. இதன் மூலம், நரை தவிர்க்கப்படுகிறது. ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க, கேட்டலேஸ் நொதியின் செயல் திறன் குறைந்து விடுகிறதாம். இதனால், முடியின் வேர்பகுதியானது, உடலில் உண்டாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை அதிகமாக எடுத்து கொள்கிறதாம். எனவே, முடியிலிருக்கும் மெலனினின் சிதைவு அதிகரிக்கிறது. அதாவது தலைமுடி நரைக்கிறது.

ஒருவேளை, ஹைட்ரஜன் பெராக்ஸைடின் உற்பத்தி உடலில் அதிகம் இல்லை என்றால், என்னவாகும்? மெலனின் சிதைவு அடையாது! எனவே, தலைமுடியும் நரைக்காது! இதன் அடிப்படையில் பார்த்தால், மூப்பு அடைந்த பொழுதும் ஒருவரது உடலில் ஹைட்ரஜன் பெராக்ஸைடின் உற்பத்தி இல்லை எனில், அவரின் தலைமுடி நரைப்பதற்கு சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.

சரி, நம் உடலில், எப்படி அல்லது ஏன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உற்பத்தியாகிறது? இதற்கான அறிவியல் பூர்வமான விளக்கத்தை பார்ப்போம்.

பொதுவாக நமக்கு உண்டாகும் மனஅழுத்தம், சமச்சீரற்ற உணவு பழக்கம், சூழ்நிலை மாசுபாட்டின் தாக்கம், உள்ளிட்ட காரணங்களால், உடலில் உள்ள செல்கள், ஹைட்ரஜன் பெராக்ஸைடை உண்டாக்குகிறது. ஏற்கனவே பார்த்தது போன்று, இயல்பாக உருவாகும் இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை கேட்டலேஸ் நொதி, சரிகட்டி, அவற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் காக்கிறது. இருப்பினும், தொடர்ந்து இருக்கும் மன அழுத்தத்தின் விளைவாக, உடலில் ஹைட்ரஜன் பெராக்ஸைடின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதற்கிடையில் கேட்டலேஸ் நொதியால், அதிகப்படியான அளவு ஹைட்ரஜன் பெராக்ஸைடை முழுமையாக சிதைக்க முடிவதில்லை. எனவே, இவைகள், மெலனின் நிறமியை சிதைத்து தலைமுடியை வெள்ளையாக்குகிறது.

சிந்தித்து பார்த்தால், பிசிராந்தையாரின் சுற்றம் சிறப்பானதாக இருந்தமையால், மன அழுத்தம் இல்லாமை, சரியான மற்றும் ஆரோக்கியமான உணவு, தூய்மையான சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால், அவரது உடலில் ஹைட்ரஜன் பெராக்ஸைடின் உற்பத்தி இல்லாமலே இருந்திருக்கும். இதன் காரணமாகவே, அவரது தலைமுடி நரையாதிருந்திருப்பது, தற்கால அறிவியல் விளக்கத்துடன் உணர முடிகிறது. மேலும், இளவயது தலைமுடி நரைக்கான காரணத்தையும் நம்மால் அறிய முடிகிறதல்லவா? ஆம், இளவயதானாலும் தொடர்ந்து இருக்கும் மன அழுத்தம், சூழ்நிலை மாசுபாடு முதலிய காரணங்களால் உற்பத்தியாகும் அதிகப்படியான ஹைட்ரஜன் பெராக்ஸைடு, தலைமுடியை வெள்ளையாக்குகிறது.

சுருங்க சொன்னால், சுற்றம் தூய்மையானதாகவும், சுற்றத்தாரும் நல்ல பண்புடையவர்களாகவும் இருப்பார்களேயானால், நம் அகத்தில் தீங்கான மாற்றங்கள் (ஹைட்ரஜன் பெராக்ஸைடின் உற்பத்தி) நிகழ்வதில்லை. அதனால், நரைமுடியில்லை என்ற நம் முன்னோரது தீர்க்கமான முடிவு எத்துனை உன்மையானது! உலகெங்கிலும் நிகழ்த்தப்பட்ட பலதரபட்ட ஆராய்ச்சியின் விளைவாக, தலைமுடி நரையாதிருக்க, விஞ்ஞானிகள் சொல்லும் வழிமுறையும் இதுவே! ஆம், மனாழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.

***