Category: இதழ் 120

சண்முகம் சிவகுமார் கவிதைகள்

images (3)

01.
வெறுமையின் முகம் துடைத்த சூரியப்பூ

மனத்தீயை
சுற்றியெடுத்தது
வண்ணாத்துப்பூச்சி வார்த்தை

வார்த்தையில்
இறைந்து கிடக்கும்
சோர்வின் பருக்கைகளை
உசுப்பி பறந்த
வண்ணாத்துப்பூச்சியின் முகத்தில்
வெளிச்சத்தின் விதை

விதையின்
கைநீட்டலில்
அகம் அதிர்ந்தது

அகமிழந்த வாழ்வின்
முகத்தில்
பூவின் மலர்வு தோன்றியது

இனி எல்லோருக்கும்
நம்பிக்கையோடு கொடுப்பேன்

வெறுமையின் முகம் துடைத்த
சூரியப்பூவான என்னை

02.
அறுவடை

என்னிடம் விதையொன்று இருந்தது
அதை
என் ஆர்வங்களில்
ஊற வைத்து
கனவுகளில் விதைத்துவிட்டேன்

முளைவிட்ட அரும்பு
தனக்கான உலகத்தில்
தலை ஆட்டியப்படி வளரத் தொடங்கியது

கிளைவிட்ட தாவரம்
பூத்தது
காய்த்தது
கனிந்தது

பறவைகள்
வண்ணாத்துப்பூச்சிகள்
அணில்கள்
பூச்சி புழுக்களின்
ஜீவனோடு என் மரம்

உள்ளுக்குள் விரிந்த உலகத்தை
யாருக்கும்
தெரியாமல் மறைத்து வைத்தேன்

நேற்று அந்த மரத்திலிருந்து
பிடுங்கி வந்த கனியொன்றை
எனது நண்பனுக்கு கொடுத்தேன்

அவனது கனவில்
ஆர்வமாய் விதை முளைப்பதாய்
அவன் கூறினான்

03.
பாத்திரம் நிரம்பி வழிகின்ற போது

வரிசையில்
மிகவும் பின் தள்ளப்பட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்ற போது

எங்களுக்கான
மகிழ்ச்சியை விதைத்ததை மறந்துவிட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது

யாருக்காகவோ அறுவடை செய்தும்
களைத்துவிட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது

எங்கள் தூரிகையில்
நிகழும் புதுமையை தாரைவார்த்துவிட்டோம்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது
கனிமரங்களை கொண்டு வரும்
கடவுள்கள்
முன் வரிசையில் நின்று
உழைப்பின் ஜீவச்சாற்றைப் பெற்றனர்

பாத்திரம் நிரம்பி வழிகின்றபோது
வரிசையில்
நாங்கள்
மிகவும் பின்தள்ளப்பட்டோம்.

04.
வாள் போல் வளரும் சொற்கள்

எங்கள்
கவிதையெங்கும்
அனுமதியின்றி
அலைகின்றன
ஓநாய்கள்

கவிதையின் அழகியலை
நவீன உத்திகளை
தின்று தீர்க்கின்றன

வெறுமையான கவிதைக்குள்
பூரணம் அற்ற
எங்கள் முகம்
காண சகிக்காது கிடக்கிறது

தவறி கிடக்கும்
வார்தைகளில்
எழும்பிய புதுக்குரல்களை
நடு இரவொன்றில்
யாரும் எதிர்பாராவண்ணம்
ஓநாய்கள் வேட்டையாடின

பின்
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை
எங்கள் வார்த்தைகள் மனிதருக்கானது எனும்
ஞாபகம் வந்து தொலைக்கிறது

பல்லைக் காட்டி வரும்
அவைகளைக் கண்டு
எங்கள் கவிதையெங்கும்
சொற்கள்
வாள் போல் வளர்வது
வேட்டைக்காகவே

05.
என் கவிதை

திறந்த கண்களுடன்
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறது

அது
வட்டத்தை விட்டு
வெளியே பாதத்தை எடுத்து வைத்துள்ளது

புறாவுக்கு உள்ளது போன்ற
சிறகுகளை எனக்குத் தருகிறது

நெரிசல்களில் உடைந்து
மறைந்து கொண்டிருக்கும்
மலையின்
தேநீர் கோப்பையை
நம்பிக்கையால் ஆகர்சிக்கிறது

காப்பற்றப்படவேண்டிய
மலையின்
மகிழ்ச்சியின் மீது
ஒளியால் பிரகாசிக்கிறது

நூற்றாண்டு ஏமாற்றங்களால்
பிடிபடாத
பவித்திரத்தை வெளிக்காட்டுகிறது

இப்படி
ஒளித்துவிட முடியாத
அழகான கவிதைகள்
என்னைத் தேடிக் கொண்டிருக்கின்றன
நானும்…

06.
கவிதையில் மாற்றம் செய்து கொண்டிரும்பவர்கள்

என் கவிதையில்
உன் கடவுள்
என்ன செய்து கொண்டிருக்கிறார்

உன் கடவுள்
என் கவிதையில்
என்னச் செய்தாரோ
அதைச் செய்துகொண்டிருக்கிறார்

என் கடவுளும்
உன் கடவுளும்
கவிதையில்
என்ன செய்து கொண்டிருக்கின்றனர்

அவர்களை மறந்துவிடாதிருக்கும் படி
கவிதைக்குள்ளிருந்து
ஜீவனை கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்;

பின்
நீயும் நானும்
கொலை புரிந்து கொண்டாம்;
கடவுளில் பெயரில்

07
பூனை மற்றும் குருதியெழும் விதையும்

விதையின் வெடிப்பில்
எழும்
குருதியின் சூட்டில்
ஒளி மிக
மலரும் வார்த்தை
நகரும் தனிமையை
பூனையாக்கிவிட்டது

பூனை
இருட்டை ஓவியமாக கீறி
வெளியெங்கும் வைத்தது

ஏமாறும் எலிகள் வரும்வரை
இருட்டை நக்கியப்படி அமர்ந்திருந்தது

விதையின் வெடிப்பில்
எழுந்த குருதியின் வாசம்
பூனையின் வேட்கையை பெருக்கியது

அதீத உடல் கொண்ட பூனை
உலகை எலியாக்கி
சப்பித் தின்றுவிட்டு
இருளின் ஓவியத்தை வரைந்து கொண்டேயிருக்கிறது

08
அச்சாகிய சொற்களுக்கு பின்

யதார்த்தத்தை நோக்கி
மிகுந்த நம்பிக்கையோடு
ஓடி வந்த நண்பர்களே
பின்
எம்மிலிருந்து விடுவிக்கப்பட்டவைகளை
நிரம்பும்
மொழியற்று
வேறுவேறு
இழைகளுக்கு
முகத்தை நீட்டுகின்றோம்

உழைப்பின் வரலாற்றை
முழுவதும் விழுங்கிய
பாம்பின்
கரிய வயிற்றுக்குள்
நண்பர்களே
நாம் சிக்கிக் கொண்டோம்

பாம்பின் மொழியிலேயே
பேசவும் பழகினோம்
இப்படி
பிளவுண்டது மொழி

எம் அடையாளத்தை
இழந்தோம்
அவரவர் இழிவை
வரிசையாகச் சென்று
அச்சாக்கும் சொற்களுக்குப் பின்
இன்றும்
வழிந்துகொண்டிருக்கிறது;
நண்பர்களே நமது
இரத்தமும்
சதையும்
வார்த்தைகளும்

09.
இளவரசரின் வரவேற்பில் காணாமல் போன கவிதை

நான் எழுத நினைத்தேன்
அவசியமான அர்த்தங்களை
அதிகாரத்திற்கு புரியும்படி
ஒரு கவிதை

முதலில்
என் முகத்தை
கையில் ஏந்தி
தோற்றப் பொழிவை கூட்ட
மகாராணியின் பேசியல்
ஒன்றை செய்தேன்

என் நாக்கை
நன்றாக வலித்து
உச்சரிப்புகளில்
“சார்ல்ஸ்” சாயலை கூட்டினேன்

என் மூளையை
எடுத்து
குளிர் சாதனப் பெட்டியில்
வைத்தேன்

ஆம்
எழுத தொடங்கினேன்
இளவரசரின் சப்பாத்துக்களில்
தூசி படியவில்லை என
நான் தான்
நவீன கவிஞன்

10.
சுதந்திரம்

காத்திருக்கத் தொடங்கினர்
தாள்களில்
வரையப்பட்ட மரங்களில்
பழுத்து விழும்
கனிகளை
எடுத்துச் சென்று
தம் குழந்தைகளின்
பசியாற

………………………………….

விஷ்ணுகுமார் கவிதைகள்

images (2)

ஒளிவட்டம்..!!!

1.)

என் வலது காலின்-எண் நான்கு இடது காலின்-எண் பத்து சும்மா இல்லாமல் வேண்டுமென்றே சகதியில் குதித்தேன் உம் முகத்தில் தெறிக்க பின்பு அதை மின்கம்பத்தில் இழுகிவிட்டுச் சென்றேன் மேலும் தடயமாக என் உணவுக்கூடை சிக்கிக்கொண்டது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கால்தடத்தை மட்டும் உற்றுநோக்கி இரு நபரென்று துப்பறிந்து செல்கிறீர்

2.)

தேர்வின்போது தினமும் மடிதெரியாதபடி அமர்ந்திருக்கும் பசுவைத் தொட்டு வணங்கிப்போவோம் அன்றைய நாள்தோறும் எழுதும்போது ரெட்டைக் கொம்புகளை அதிகமாக பயன்படுத்துவோம் இப்போது ஆரம்ப காலத்து தொலைபேசியின்மீது படுத்திருக்கும் ரெட்டைக்கொம்பையெடுத்து பேசுகிறார் அவர், அடுத்த தடயம் இன்று தொழுவமில்லாமல் மாடு மின்கம்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது

3.)

இந்த மைதானம் இப்படியொரு விளையாட்டை பார்த்திருக்காது ” நிண்டா ஒதை ”
அதாவது
எது நடந்தாலும் நீங்கள் குத்தவைத்து அமர்ந்தேயிருக்கவேண்டும்
யாராவது எழ யோசித்தால்கூட முதுகெலும்பு ஒட்டடையாடும்
என்ன செய்ய
பெரும்பாலும் கேள்விகேட்கயெழும்நாம் நிறம்பியிருக்கும் நம் கைகளிலிருந்து ஏதேனுமொரு எழுத்தைச் சிந்திவிடுகிறோம் நம் கேள்வியும் பொருளற்று
புரியாமலேயே போகிறது
அதாவது பேசிக்கொண்டிருந்த அவர் ரிசிவரை பெட்டியின்மீது சரியாக வைக்காததைப்போன்று

4.)

ஒளிவட்டத்தை
ஓளிவிட்டம் என்றெழுதும்
ஐந்தாறு ஜோடிக்கால்களை
வகுப்பிற்கு வெளியே
எரிக்கப்போகும் விறகுக்கட்டைகளைப்போல் வரிசையாகக் கிடத்தப்பட்டன
அவற்றிலிருந்து தப்பியோடிய
ஒரு ஜோடிக்கரிக்கட்டை மட்டும்
கழிப்பறை சுவற்றில் ஓளிவிட்டத்தைப் பற்றி கெட்டவார்த்தையில் எழுதிக்கொண்டிருக்கிறது
அதும் அவரை அருகில் வைத்துக்கொண்டே
கரிக்கட்டைக்கு எவ்வளவு கொழுப்பு

5.)

மழைமுடிந்தநேரம் மென்ற
வெத்தலயைைத் துப்ப வீடுமுழுதும் சேறு
இந்த காலத்திலெல்லாம் வெத்தலைக்கறையோடு வெளியேறும் எறும்புகளில் வர்ணபேதமெல்லாம்
ஒரு மயிறுயுமில்லை

நம் நிலம்
நம் சேறு
நம் சுவர்
ஆனால் பெரும்பாலனோர் பதற்றமுற்று தொடர்ந்து கையொப்பமிடுகிறோம் ஆனால் வெகுசிலரே கெட்டவாரத்தையை எழுதி வைப்பது அல்லது மூஞ்சியை அருகில் கொண்டுவரும்போது சேற்றில் குதிப்பது

சின்னஞ்சிறு (சிசி) கதைகள்/ செல்வராஜ் ஜெகதீசன்

download (4)

சின்னஞ்சிறு (சிசி) கதை-1

அபிப்பிராயம்
#

எல்லாரிடமும் அபிப்பிராயம் கேட்டாகி விட்டது. என்னைத் தவிர. …
விஷயம் இதுதான். கலாவிற்கு இப்போதை விட கூடுதல் சம்பளத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் வேலை ராஜஸ்தானில்.
சென்னையில் இருந்து ராஜஸ்தான். போகலாமா வேண்டாமா?

எல்லாரிடமும் கேட்டானபின் என் முறை. எதிரில் கலா.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? ஒன்று நீங்கள் கவனிக்க வேண்டும் கலா. நான் ஏதாவது சொன்னாலும், அது, நான் அந்த நிலையில் இருந்தால் என்ன செய்வேன் என்பதாகவே இருக்கும். அது உங்களுக்கு எப்படி பொருந்தும்? ஆகவே நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு இது. நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா?”

அவள் எழுந்து போன வேகத்தில் ஏதோ புரிந்த மாதிரி தான் தெரிந்தது.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-2

மௌனமே காதலாய்

#

கண்ணீரை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தது தொலைக்காட்சி. …
எந்தவிதக் கண்ணீருமின்றி, அமைதியாய் இருந்தது எங்கள் அடுத்த வீட்டு நாய் ஒன்று, அதன் துணை இறந்த நாளிலிருந்து.
அடுத்தடுத்த நாட்களில்தான், அனைவருமே கவனித்தோம். எப்போதும் குறைக்குமந்த நாயின் இடைவிடாத மௌனத்தை.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-3

காதல் கடிதம்
#

அடுத்த வீட்டிலிருந்து அப்படியொரு சத்தம். ஓடிப்போய் பார்த்தபோது உதைபட்டுக் கொண்டிருந்தான் சக்கரை. எங்களுக்கு தெரிந்த நாளிலிருந்து புத்தி சரியில்லாதவன். காதல் கடிதம் ஒன்றைக் காட்டி, எவர் கொடுக்கச் சொன்னதென்று, கேட்டுக் கேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நாள் முன்பு, என்னிடம் கடிதம் போலொன்றை, அடுத்த வீட்டு அக்காவிடம், கொடுக்கச் சொன்னவன்தான், அங்கு அதிகமாக சக்கரையை அடித்துக் கொண்டிருந்தான்.

o

சின்னஞ்சிறு (சிசி) கதை-4

விழிகள்

#

பயணங்களில் பெரும்பாலும் வாசிப்பது அவன் வழக்கம். அன்றைய வாசிப்பில் ஆழ முடியாமல், ஈர்த்தன அந்த விழிகள். இடைப்பட்ட பயணிகளின் அசைவுகளின் ஊடே அப்படியொரு நிலைத்த பார்வை. பயணம் முடிந்த பின்னும், நெடுநேரம் நினைவில் இருந்தது, கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டோடு, அவ்வப்போது சிரித்தும் வைத்த, அந்த குழந்தை (யின்) கண்கள்.

o

ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டல் என்ற தேசமும் அதன் இளவரசர்களும் ( சிறுகதை ) / றாம் சந்தோஷ் ( அறிமுகப் படைப்பாளி )

download (3)

முன் குறிப்பு: இக்கதையானது உண்மைச் சம்பவங்களையும், மனிதர்களையும் மையமிட்டு எழுதப்பட்டதாகும். எனினும் இக்கதை உண்மையானது இல்லை.

இக்கதை ஒரு தேச எல்லைக்குட்பட்ட எனினும், முத்தேசக் குணமுள்ள அதாவது, தத்தமது உடல்களையும், அவ்வுடல்களுக்கு உள்ளும், அவற்றிற்கு வெளியேயும் வாழ்ந்தலையும் மனங்களையும் ’ஆளும் மொழி’ இன்னதென அறியாமல் இயங்கும் மக்களின் பகுதியிலமைந்துள்ள, ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டல் என்று பலவாறாக அழைக்கப்படும் ஒரு தேசத்தில் வாழ்ந்து வந்த, பிறரை வாழவிடாமல் செய்த, தூக்கு மாட்டிக்கொண்ட இளவரசர்கள் பற்றியதாகும்.

***

இக்கதைப் பற்றிய முந்தைய பத்தி அல்லது அந்த அளவிலான ஒற்றை தொடரைப் படித்தவுடன் இக்கதை முழுவதும் இதே மாதிரியாக வளைத்து, நெளித்து எழுதப்பட்ட கோணல் எழுத்தாக இருக்கப்போகிறதோ என்று அச்சப்பட வேண்டாம். இருக்கிற ஒரு ‘கோ’மானின் கோணல் எழுத்தே போதும் என்கிற அலுப்பின் குரலில் நானும் பல நேரம் பேசியிருப்பதால் அவ்வாறினி இக்கதை வளைய, நெளிய எழுதப்படாது என்று உறுதியளிக்கிறேன். எனினும் அதையும் மீறி ஒருவேளை வளையும், நெளியும் அக்கோணல் எழுத்து இக்கதையுள் நுழைந்துவிட்டால் அளித்த உறுதியைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன். இனி கதைமாந்தர்களுக்கு வருவோம்.

***

ஸ்டீபன் பெல்லி என்ற கணபதி, காளிதேவி, கற்பூரநாயகி, கணகவள்ளி ஆகியோரைப் பூஜிக்கும் கண்ணப்பதாசன் என்று அழைக்குமளவிலான, கண்களையே பிடிங்கி வைக்கும் அக்மார்க் இந்து / ஹிந்து, இந்தியன் / ஹிந்தியன், எனினும், ‘தி’கட்சிகளின் புண்ணியத்தால் இந்தி / ஹிந்தி கற்றுக்கொள்ளாதவன் என்பவனைப் பற்றி இக்கதையில் அடிக்கடி வரலாம். அன்றி, ஒருவேளை இந்த பத்தி மட்டுமே அவனைக் குறித்து இக்கதையில் வரும் கடைசி சொல்லலாகவும் இருக்கலாம். இதனையே இக்கதையின் தொடக்கமாக வைத்துக்கொண்டு முன்னகரலாம். என்றால், இக்கதையில் பெல்லி கதாபாத்திரமானது சொல்லப்பட்டதைப் போன்றே சொல்லியும், சொல்லப்படாமலும், சொன்னதைச் சொல்லவில்லை என்று பேசியும் அலையும் ஒரு மோசமானதும் மோசமில்லாதுமான கதைசொல்லியால் எழுதப்பட்டதாகும்.

***

இக்கதையில் முதலில் சொல்லப்பட வேண்டியவராக நான் நினைத்தது ‘மாண்புமிகு இளவரசர் முதலாம் ராஜா’ பற்றிய ஆகும். எனினும், இவ் முதலாம் ராஜாவின் கதையானதுத் தற்கொலையில் முடியவிருப்பதால் அவர்தம் கதையை இக்கதையின் முடிவில் வைப்பதா அல்லது தொடக்கத்தில் வைப்பதா என்ற கேள்வி என்னைத் துளைக்கிறது. என்றால், அத்தகைய துளைப்பிற்கான காரணம், “இதுபோன்ற துக்ககரமான சொல்லலைக் கதையின் தொடக்கத்தில் வைத்தாலோ அல்லது முடிவில் வைத்தாலோ வாசகர்களை / அவர்தம் மனங்களை அது பாதிக்கும் / வருத்தமடையச் செய்யும்” என்று என் நண்பன் சொன்னதுதான்.

அன்றி, அவ்வாறொரு தூக்கில் முடியும் அல்லது தொடங்கும் ஒரு கதையை வாசகன், ஏதேனும் நல்லகாரியத்திற்குப் போகும்போதோ அல்லது அவன் மனம் மகிழ்ச்சியை நாட விரும்பும் சமயத்திலோ படிக்க நேர்ந்தால் “அவன் என்னடா கத இது.. ச்சீ கருமம்.. என்று சொல்லலாம் அல்லது என்னடா இது அபசகுணம் என்று பழிக்கலாம்” என்று இன்னொரு நண்பன் (சிலர் இவனை நண்பி என்று அழைத்து கேலி செய்வர்.) சொன்னதும்தான்.

எனவே இத்துர்சொல்லலை நடுவில் வைத்துவிடலாம் என்று முடிவு செய்து இங்கு வைக்கிறேன். எனினும் இதுவே இக்கதையின் நடு எனப்படும் மையமாக இருக்கும் என்ற எந்தவிதமான உறுதியுமில்லாததால் கதை எழுதப்பட்டு முடிந்தவுடன் இச்சொல்லலை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக்கொள்ளலாம் என்பது என் இப்போதைய முடிவு. இது இருக்கட்டும்.

***

இக்கதையில் மாண்புமிகு இளவரசர் முதலாம் ராஜாவைப் பற்றி கூறிய நிலையில், அவர் வாழ்ந்து மடிந்த அதே துறையில் அவருக்கு இளையவராய் வந்து சேர்ந்த மாண்புமிகு இளவரசர் இரண்டாம் ராஜா பற்றியும் கூறவேண்டியது கட்டாயமாகிறது. ஏனெனில் மாண்புமிகு இளவரசர் முதலாம் ராஜாவைப் போன்றே இவரும் தூக்கிமாட்டிக் கொண்டு சாக நினைத்தவராவார். எனினும், தூக்கு மாட்டிக்கொண்டு தன் முன்னவர் துடிதுடித்து மடிந்தார் என்ற தகவலைக் கேட்டு மனம் மாறியவராய் அதாவது, தூக்குமாட்டிக்கொள்ளும் தன் எண்ணத்திலிருந்து பின்வாங்கி, பிறகு மருந்து குடித்து மாண்டுபோனார் மாண்புமிகு இளவரசர் இரண்டாம் ராஜா. இனி இக்கதையில் வரும் குட்டி இளவரசர் என்பவர் குறித்து காணலாம்.

***

குட்டி இளவரசர் பொதுவாக ஆண்களின் கண்களுக்கு அதிகம் தெரியமாட்டார் என்ற செய்தி அவ்வாஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலில் அதிகம் பரவியிருந்தது. அன்றி, அவர் கண்களுக்குதான் ஆண்கள் தெரியமாட்டார்கள் என்ற செய்தியோ அவ்வாஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிருந்து ஒரு பர்லாங்கு தூரமிருந்த பெண்கள் என்பவர்கள் தங்கியிருந்த ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும் (முன்சொன்ன தகவலைவிடவும் வேகமாய்) பரவியிருந்தது.

***

குட்டி இளவரசர் தம் அந்தரப்புரத்து இளவரசிகளை விட்டுவிட்டு இந்த பக்கத்து தேசத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலுக்கு வந்தபோது தம் இளவரசிகளுடனான உடல்புணர்ச்சியை இழந்து தவித்தார். எனினும் அவருடைய இந்த கொடும் இழப்பை ஈடுசெய்ய தொழில் நுட்பம் அவருக்கு உதவியது. என்றால், அவர் தமது அந்தரப்புரத்து இளவரசிகளை மனதால், வார்த்தைகளால், வாட்ஸ் அப் வீடியோக்களின் பார்த்தல்களால் புணந்தார்.

மேலும், அவ்வாறு அவர் தொடர்ந்து புணர்ந்துகொண்டிருக்க கடைசியில் அவருக்கு நேரம் போதா நிலையே ஏற்பட்டது. அவ்வாறான நேரம் போதா நிலையை ஈடுசெய்ய வேண்டி குட்டி இளவரசரோ பக்கத்து நாளிலும், அதற்குப் பக்கத்து நாளிலும் நேரத்தைத் தொடர்ந்து கடன் வாங்குபவராய் மாறலானார். அவ்வாறு அவர் தொடர்ந்து நேரத்தைக் கடன்வாங்கத் தொடங்கியபோது, அவரை அவர்தம் குடிகளனைவரும் கடங்காரா என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

அதுபோக, நம் குட்டி இளவரசரின் கண்களுக்கு ஆண்கள் தெரியமாட்டார்கள் என்பதால் அவருடன் தங்கியிருந்த ஆண்களை அவர் வெறும் உடலற்ற ஆன்மாக்களாகவே – ஆவிகளாகவே உணர்ந்தார். அன்றி, இதை தம் ஹாஸ்ய வரிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள விருப்பிய அவ்வான்மாக்கள் – ஆவிகள் செய்த காரியங்கள் சொல்லத்தக்கதாகாத எனினும் இங்கு சொல்லப்படவேண்டியவை ஆகும்.

அவர்கள் – அவ்வான்மாக்கள் – ஆவிகள் – திடீர் திடீர் என்று நாய்போல் குரைக்கவும், நரி போல் ஊளையிடவும், உடலுறவில் ஈடுபடும் பெண்களென ஹ்ம்… ஹ்ம்… என்று சப்தமிட்டவும் செய்தனர். அவ்வாறு அவர்கள் செய்யும் சப்தத்தால் அதிகம் மிரண்டு போன குட்டி இளவரசர் ஒருநாள், தான் படுத்துக்கொண்டிருந்த மஞ்சத்தின் மீதிருந்து ‘தொப்’பென்று விழுந்தார்.

அவ்வாறு அவர் விழுந்தது அவர் மஞ்சத்திற்குப் பக்கத்தில், கீழே தரையில் படுத்துக்கொண்டிருந்த ஆண் எனும் அவ்இளவரசரின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆன்மா – ஆவியின் மீதாகும். அவ்வான்மாவோ இளவரசரின் கீழ் சராயைக் கீழே இழுத்து ஒதுக்கி அவர் ஆண்குறியைக் கீழே தள்ளியது. அவர் ஆண்குறியானது கீழே தள்ளப்பட அவருடலும் நிலைகுலைந்து கீழே தொம்மென்று விழுந்தது. இதனால் மிகவும் மருட்சியுற்ற குட்டி இளவரசர் தன் குறியைக் கீழேதள்ளி அதன் மூலம் தன்னுடலை கீழ் விழுவித்த, விழுவித்ததன் மூலம் தன் உடலின் கீழ்ப்பரப்பில் எதையோ மேல் தள்ளி கீழ் இழுக்கப் பார்த்த ஆன்மாக்கள் என்ற ஆவிகள் இருக்கும் அந்த அரண்மனையின் கீழடுக்கிலுள்ள, கிழக்கு திசைப் பார்த்த, கிழட்டு அறையின் கீழ்த்தரையில் இனியும் படுக்கக்கூடாது என்று முடிவெடுத்தவராய் கீழே பார்க்காமல் வான்நோக்கிபடி வழிநெடுக கிடுகிடுவென ஓட்டம் கண்டார்.

ஓட்டம் கண்டவர் ஓடிப்போனது அவர் வேண்டாமென ஒதுங்கிய அறைக்கு ஒரு பர்லாங்கு தூர இடைவெளியிலிருந்த ஒரு சிற்றறைக்கு ஆகும். அந்த சிற்றறைக்குச் சிலர் சின்னவீடென்ற பெயர் வைத்திருந்தனர்.

***

இக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் போதே படித்த அதாவது, கதையை முழுசாய் படிக்காத ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “இக்கதை கதைகளின் கதையாகும் என்று சிலரும், கதையாடல்களின் கதையாகும் என்று சிலரும் சொல்ல வாய்ப்பிருக்கிறது.”

அவர் சொன்னதை நான் இங்கு முக்கியமாய் குறிப்பிடக் காரணம், சொன்னவர் வெறும் இலக்கிய ஆரூடம் சொல்பவர் மட்டுல்ல. மாறாய் இலக்கிய உலகில் முக்கியமானவராவார். அத்தகைய முக்கியமான ஒருவர் முக்கியமற்று சொன்னதை முக்கியத்துவம் வாய்ந்ததாக அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்வதுதான் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இலக்கிய நிகழ்வாக இருக்கமுடியும். அதனால் அத்தகையதொரு முக்கியத்துவம்வாய்ந்ததும் முக்கியத்துவமற்றதுமான ஒன்றே இங்கு கதைச் சம்பவமாகி உள்ளது என சொல்லிக்கொள்கிறேன்.

அன்றி, அத்தகைய முக்கியமானவர்களுடன் தனக்குத் தொடர்புள்ளதை அப்பொழுதிற்கப்பொழுதே முகநூலில் பதிதல் என்பதே ஒருவன் தன்னை இலக்கியவாதியாக நிருவிக்கொள்ளவதற்கான அடிப்படைத் தேவையாகும். அப்படியான ஒரு முகநூல் பதிதலைச் செய்யும் முன்பு அத்தகைய ஒரு முக்கியமானவரைப் பற்றிய கூடுதல் தகவல் ஒன்றை இக்கதையிலும் பதிந்துவிட்டு முன்னகரலாம். அவர் பற்றிய முக்கியமானதும் முக்கியமில்லாதுமான பதிவு:

என் நண்பர் அல்லாதவரும் பல கருத்தரங்குகளைத் தான் நடத்தும் கருத்தரங்குகளில் பங்கேற்று கட்டுரை படிக்கவருவோரிடமே காசுவாங்கி நடத்தியவருமானவர்தான் மேற்சொன்ன முக்கியமானவராவார். அவரை இங்கு நாமொரு கில்லாடி என்றுதான் பாராட்ட நினைக்கிறோம். எனினும், அவரை நெறுக்கமாக அறிந்த பலரும் அவரைச் சொல்லாடி – வாயாடி – கேடி என்றே அதிகம் புகழ்ந்துரைப்பர் (ஆனால் இதை அவர்முன்பு சொல்வதில்லை.) என்பதால், நாமும் அவர்தம் வழி சென்று அவரை பெரிதாய் புகழ்துரைப்போம்; போற்றுவோம். கேடியார் வாழ்க – அவர் போன்றவர் தம் புகழ் ஓங்குக!

கேடியார் அவ்வாறு கருத்தரங்குகள் நடத்திக் கிடைத்த மேல் வருமானத்தில் சில சின்ன வீடுகளைக் கட்டியுள்ளார் என்பது இங்கு கட்டாயம் சொல்லவேண்டிய தகவல் ஆகும். (எனினும், இதை ஒற்றை அர்த்தத்தில் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும் என்பது இங்கு வைக்கப்படும் முக்கிய வேண்டுகிறோம்.) அதுபோல், எழுதிக்கொண்டிருக்கும் போதே இக்கதை பற்றி அவர் புகழ்ந்ததுமேகூட ஒரு கப் காபிக்காகத்தான் என்பது இங்கு கட்டாயம் சொல்லக்கூடாத தகவல் ஆகும். என்றாலும், அன்னார் புகழை நாம் ஆவணப்படுத்த வேண்டியுள்ளதால் சும்மா அதையும் சொல்லி வைப்போம். சுபம்.

இடைக்குறிப்பு 1: கதைக்கு இவரைப் பற்றிய ஆவணம் தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவரும் கதைமாந்தர்தான் என்பதைப் புரிந்துகொள்க.

***

முற்சொன்ன சிற்றறை அல்லது சின்னவீட்டு என்பதில் வாழ்ந்துவந்தவர்கள் முதன்மை இளவரசரும், அவரின் முக்கிய நண்பியுமாவர். அந்நண்பியைச் சிலர் நண்பன் என்று சொல்லி கிட்டல் செய்து வந்தனர் என்பதைத் தவிர்த்து அவளைப் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. அன்றி, மாண்புமிகு முதன்மை இளவரசரே இங்கு முக்கியமாய் சொல்லப்படவேண்டிய முக்கியமானவரும் முக்கியமல்லாதவருமாவார் என்பதால் இனி அவர் குறித்து காண்போம்.

முதன்மை இளவரசரின் சொந்தப் பெயர் என்னவென்று தெரியாத அளவுக்கு அவருடைய பட்டப் பெயர்கள் அந்தப் பக்கத்து தேசத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலில் பிரசித்தம். முதன்மை இளவரசர் காலைகளில் ஒருவிதமாகவும் அது சாயும் வேளைகளில் இன்னொருவிதமாகவும் இருக்கும் ஒரு வினோதமான மனிதர் என்று கூறுவதுண்டு. அப்படியான ஒருவரைப் பற்றி புரிந்துகொள்ள ஒரு சிறு உதாரணம்:

முதன்மை இளவரசர் தான் படுத்துறங்கும் போது ஒரு சிலையென மல்லாக்கப் படுத்தபடி குரல் கொடுத்துக்கொண்டிருப்பவராவார். அப்படியாக அவர் சிலையெனப் படுத்துக்கொண்டிருக்கும் போது அவரின் வலது கை வான் நோக்கியும் அல்லது மேல்நோக்கியும், இடது கை மண் நோக்கியும் அல்லது கீழ்நோக்கியும் இருக்கும். வலக்கையில் ஒரு கைஅருவாள் இருப்பதைப் போன்றும் இடக்கையில் ஒரு மணிச்சரடு இருப்பதைப் போன்றும் இருக்கும். அதுபோல், கால்கள் இரண்டும் ஒற்றென்றிராமல், ஒரு காலை மண்டியிட்ட வாகிலும், இன்னொரு காலை ஓடுவதற்குத் தயாராக உள்ளதைப் போன்று அதன் முட்டியை ஒரு இன்ச் முன்னோக்கியும் வைத்திருப்பார் முதன்மை இளவரசர்.

எனினும், அப்படியான ஒரு சிக்கலான சிலையை முதன்மை ராஜா தன் உடலில் செதுக்கிக்காட்ட எடுத்துக்கொள்வது வெறும் ஒரே ஒரு செகண்டுதான். என்றால், அத்தகையதொரு வேகத்துடன் பாயும் மாய மான் அவர்.

***

தான் ஒரு மாய மான் என்பதால் அடிக்கடி மாயமாகிப் போகும் குணமுடையவராக இருந்தார் முதன்மை இளவரசர். அவ்வாறு அவர் மாயமாகிப்போனபோது, அவர் தன் குடிகளின் மீது சொன்ன குற்றச்சாட்டு அந்த தேசத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும், அதற்குப் பக்கத்து ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும் மிகப் பிரசித்தம். அப்படியாக அவர் என்னதான் சொன்னார் என்பதன் விளக்கம் பின்வருமாறு:

முதன்மை இளவரசர் தன் குடிகளுடன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார். திடீரென அவ்நகர்வலத்தின் போது காணமல் போனார் முதன்மை இளவரசர். அப்போது அவரைத் தேடி அலைந்தவர்கள் அவரைக் காணவில்லையே என்று அலைந்து அலைந்து பின் அலுப்புற்றனர். எனினும், கடைசியில் அவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார் முதன்மை இளவரசர். அவ்வாறு வந்து சேர்ந்தவரிடம் அவர்கள், “எங்குபோய் தொலைந்தீர்கள்.. நீங்கள் காணவில்லையே என்று நாங்கள் எவ்வளவு தவிப்புற்றோம் தெரியுமா?” என்றனர். அதற்கு மறுமொழியாற்றிய முதன்மை இளவரசர், “என்ன நான் தொலைந்து போனேனா? நீங்கள் அனைவரும்தான் கூட்டாய் காணமல் போனீர்கள்!” என்றார். அதை கேட்டவுடன் அவர்தம் மந்திரி, மைத்துனர்கள் அனைவரும் திகைத்துப் போய்த் தின்ன எதையோ தங்கள் வாய்களில் தினித்ததுக் கொண்டவர்களைப்போல திறந்தவாயுடன் விட்டம் பார்த்து ஆச்சரியமுற்றனர். என்ன இருந்தாலும் முதன்மை இளவரசரின் மூளை முதன்மை இளவரசரின் மூளைதான்!

***

அடுத்து, இக்கதையை எப்படித் தொடர்வதென்பதை நினைத்தால் அது எனக்கு மலைப்பைய் வரவழைத்து விடுகிறது. அவனவன் காலை எழுந்து காலைக்கடன் முடித்தவுடன் கை வைத்தால் கட்டற்று கணக்கில்லாமல் எழுதுகிறான். சிலவனோ மாலை வந்ததும் மருந்து ஒரு குப்பி ஏன் (சில மொடா குடியன்கள்) குடத்தையும் கூட அசால்டாய் குடித்துவிட்டு கண்களை மூடியபடியே எழுதுகின்றான். இத்தனைக்கும் இவர்கள் எழுதுவது ஒன்றிரண்டு பக்கங்களோ ஒரு பத்து பக்கங்களோ ஒரு நூறு பக்கங்களோ அல்ல. மாறாய், தொட்டால் துவழாமல் அன்றைய நாளின் 24 மணி நேரமும் பத்தாமல் பக்கத்து நாளில் ஒரு மணிநேரத்தைக் கடன்வாங்கி ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதும் கருமமே கண்ணான கடவுள்கள். ஆனால், நானோ இவர்களளவு எழுத யோக்கியமற்று ஒற்றைப்படை பக்கங்களுக்கே நாக்கு தள்ளி மல்லாகப்படுத்துவிடும் சைத்தானாவேன்.

***

நான் இப்படி என் முன்னோர்கள் பழிக்கும் சைத்தானாகிவிட்ட துக்க முடிவை என் மனம் செறித்துக்கொள்ள மறுக்கிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளலாமா நம் கதையில் வரும் ராஜாக்களைப் போல என்றும் தோன்றுகிறது. சரி தற்கொலை என்றால் முதலாம் இராஜாவைப் போல தூக்குமாட்டிக் கொண்டா அல்லது இரண்டாம் ராஜாவைப் போல மருந்து குடித்தா? அப்படி ஒருவேளை மருந்து குடிக்கலாம் என்று முடிவெடுத்தால், இரண்டாம் ராஜா குடித்ததைப் போன்றே விஷமருந்தை மட்டும் ராவாய் குடிப்பதா? அல்லது ‘உன் செய்யுளுலக முன்னவன் நான்தான்’ என்று என் முன்னே முகநூல்களில் வந்து நிற்பவர்கள் குடிக்கும் ‘அந்த’ மருந்துடன் மிக்ஸ் செய்து குடிப்பதா? அடச் ச்சீ! ஒரு நிமிடம் பொறுங்குள். இது என்ன கருமம் பிடித்த ஆலோசனை எனக்கு. இல்லை. இல்லை. இதை இது என்ன துரதிஷ்டம் பிடித்த ஆலோசனை எனக்கு என்று இலக்கிய நயம் மேலிட செல்லிவிட்டு இனி மீண்டும் முதன்மை இளவரசர் கதைக்கு வருவோம்.

இடைக்குறிப்பு 2: கதைக்கு இக்கதைசொல்லியின் கதை தேவை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவரும் கதைமாந்தர்தான் என்பதைப் புரிந்துகொள்க.

***

முதன்மை இளவரசர் என்னதான் பல விஷயங்களில் மஸ்தான் என்றாலும், அந்த விஷயத்தில் அவர் ஒரு சுஸ்தான்* (சுஸ்து – சோர்வு, சோற்வுறக்கூடியவர்) என்று கூறுவாள் அவருடைய நண்பி. அவ்வாறு முதன்மை இளவரசரைப் பற்றி அவள் கடைசியாக குறை கூறியது நம் குட்டி இளவரசரிடம்தான். குட்டி இளவரசரிடம் நண்பி தன் குறையைக் கூறி முடிக்கும்போது, குட்டி இளவரசரும் அவளிடம் தனக்கு நேரவிருந்த கொடுமையைக் கூறினார்.

நண்பியோ தாங்கள் சொல்வது தனக்கு விளங்கவில்லை என்றும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் என்றாள் குட்டி இளவரசரிடம். அவரோ இதுதான் சாக்கு என, விளக்கினால் என்பதை விலக்கினால் என்பதாகப் புரிந்துகொண்டர் போல் நடித்து, அவள் ஆடைகளை விலக்கத் தொடங்கினார். அவர் அவள் ஆடைகளை விலக்க அவளுடம்பு அவருக்கு விளங்கத் தொடங்கியது.

***

குட்டி இளவரசர் தனக்கு நேரவிருந்த கொடுமையை நண்பிக்கு விளக்கியபோது அல்லது நண்பிக்கு, விலக்கி விளக்கியபோது அவரின் மனபாரம் சற்றே குறைந்திருந்தது. அன்றி, அதைவிடவும் தான் விளக்கமுற்றதன் முடிவில் அல்லது தன் ஆடைகள் விலக்கமுற்று தான் விளக்கமுற்றதன் முடிவில் அவள் உடல்பாரம் சற்றுக்கும் மிகுதியாகவே குறைந்திருந்தது.

இருவர்தம் பாரமும் குறைய இவர்தம் கதை முடிய நேர்வது ஒரு சுப – மங்கல முடிவுதான். எனினும், மேற்சொன்ன இருவரை ஒருவராகப் பார்த்துவிட்டார் நண்பியின் முதன்மை நண்பர் அதாவது, நம் முதன்மை இளவரசர் என்பது இக்கதையின் முக்கியமானதும் முக்கியமல்லாததுமான திருப்பம் ஆகும்.

***

முதன்மை இளவரசர் தான் பார்த்த முக்கியமானதும் முக்கியமல்லாததுமான அந்த திருப்பத்தைத் திரும்பத் திரும்ப எல்லோரிடம் சென்று சொன்னது குட்டி இளவரசருக்கு வருத்தத்தையும், வருத்தத்தின் உச்சத்தையும் காட்டியது. இதனால் சற்றும் மனம் தளராத மாயமானானவர் கடைசில், தன் உடல் தளர்த்தி மாயமனார். இவர் இப்படி மாயமாகிப் போனது பற்றி ஏற்கனவே ஒருமுறை கூறப்பட்டது. மேலும், மங்கலம் கருதி அதன் மீளச் சொல்லுதல் இங்கு தவிர்க்கப்படுகிறது.

***

முதன்மை இளவரசரைப் பற்றி கூறும்போது மூன்றாம் நிலை இளவரசரைப் பற்றியும் கூறவேண்டுமென்பது இக்கதையில் தவிர்க்க முடியாததாகும். அவ்வாறு முதன்மை இளவரசரைப் பற்றி கூறியவுடன், இரண்டாம் நிலை இளவரசரைப் பற்றி கூறாமல் எதற்கு மூன்றாம் நிலை இளவரசர் பற்றி கூறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். என்றால், ஏற்கனவே இரண்டாம் நிலை இளவரசரைப் பற்றி கூறியாகிவிட்டதென்பதும், அவர் மாய்ந்துபோக முழுமுதல் காரணமாக இருந்தவர்தான் முதன்மை இளவரசர் என்பதும் இங்கு சொல்லவேண்டியதும் சொல்லக்கூடாததுமான தகவல்களாகும். அதுபோல, குட்டி இளவரசரும் மூன்றாம் நிலை இளவரசரும்தான் இக்கதையின் ராஜாக்கள் ஆவார் என்பதும் இங்கு முக்கியமாய் சொல்லவேண்டியதும் அதிமுக்கியமாய் சொல்லக்கூடாததுமான தகவல் ஆகும். இது இருக்கட்டும்.

***

மூன்றாம் நிலை இளவரசர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவுக்கு உடலுடையவர் அல்லது உடல் என்று அடையாளப் படுத்துமளவிலான கொஞ்சம் எலும்புகளையும் அதன் மேல் ஒரு பெரும் போர்வையென தோலைப் போர்த்தியவருமாவார். தன் உடலில் கொஞ்சம் சதையும் இருக்கிறதென்று சதா வாதித்திட்டுக் கொண்டிருப்பவரின் அங்கங்களுள் முக்கிய அடையாளம் அவர் தலைமுடி ஆகும். பிறரிலிருந்து வேறுபட்டு பாதி மழித்தும் மழிக்கமலுமான ஆர் ஸ்டைல் – ஹேர் ஸ்டைல் – ஓர்ஸ்டைல் என்ற ஒரு வடிவழகை தன் தலையழகாய் கொண்டிருந்தார் என்பது அவர் வாழ்ந்து வந்த ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும், அவ்வாஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிருந்து ஒரு பர்லாங்கு தூரமிருந்த பெண்கள் என்பவர்கள் தங்கியிருந்த ஆஸ்டல் – ஹாஸ்டல் – ஓஸ்டலிலும் பரவலாக்கம் பெற்றிருந்தது. இதுவொருகையில் பிறரை அவர்பால் பொறாமை கொள்ள வைத்திருந்தது. அன்றி, ஆர் ஸ்டைல் – ஹேர் ஸ்டைல் – ஓர்ஸ்டைல் மன்னன், ஒல்லிக்குச்சி மன்னன் என்று பலவாறாக அழைக்கப்படும் அவரைப் பார்த்து பிறர் பொறாமை படும் அல்லது பொறாமையே பொறாமைபடும் பண்பொன்று இங்கு குறிப்பிடத்தக்கது.

அது, மூன்றாம் நிலை இளவரசர் படுத்த அடுத்த நொடி பரலோகம் போனவர் போல் தினந்தினம் தற்காலிமாகமாய் தன் உடலின் தொடர்பை நிலவுலகுடன் துண்டித்தபடி தூங்குவார் என்பதாகும்.

அத்தகையவர் காலை வந்தவுடன் தன் கால்களை அசைத்து நிலவுலகம் மீள்பவரான அவரின் இடி விழுந்தாலும் எழாத எழிலுறக்கத்தைப் பார்த்து எரிச்சலுற்றனர் சிலர். அந்தச் சிலர், முன்றாம் நிலை இளவரசர் தன் உள்ளாடைகள் அணிந்துகொண்டு உறக்கிக் கொண்டிருக்குபோது எச்சில் துப்பும் இரண்டுறுப்புகளில் கீழுள்ளதான ஓர் உறுப்பில் ஒரு துண்டை எடுத்து அதைச் சுருட்டி வைத்துத் துவைத்தனர். அப்படியாக அவர்கள் அதிரத் துவைத்தும் அவரோ அசைந்தாரில்லை. அதாவது, அவர் துள்ளி எழவில்லை என்றால்கூட பரவாயில்லை; குறைந்தபட்சம் மெல்லகூட எழவில்லையே என்ற மனவருத்தத்தால் அவர்கள் மனமுடைந்து போயினர்; மேலும், இதனால் பாதிப்புற்று அந்நாளுக்கு மறுநாள் அம்மறுநாளின் உச்சி மதியம் வரும்வரை மயக்கம்போட்டு விழுந்தனர்.

அப்படியான தூக்கமிழக்கா தூய மன்னனின் பாதி நாள் நில உலகத் துண்டிப்பை சிதைப்பது எப்படி என்று பலரும் சதி செய்துவந்த வேளையில், அந்த வேலையை ஒரு ரதி வந்து செய்யலானார். அந்த ரதி வெறும் ரதி இல்லை. சுரஸ்வதி.

சுரஸ்வதி கடாச்சியம் பெற்றவராய் ஒருநாள் ராவு தொடங்கி மறுநாள் ராத்திரி ஆகும்வரை விடாமல் எதையேனும் வாசித்து வாசித்து வாட்டம் காணத்தொடங்கினார் மூன்றாம் நிலை இளவரசர். அன்றி, அவருக்குத் தானும் ஒரு எழுத்தாளனாகி வாசகர்களை வாட்டலாம் என்ற ஆசை மனதிலும் அது உறங்கும் உடலிலும் தோன்றியது. இதற்குத்தான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று புரிந்துகொண்டிருந்தார் மூன்றாம் நிலை இளவரசர்.

மேலும், அவ்வாறு தோன்றிய ஒரு ஆசையினடிப்படையில் எழுதத் தொடங்கிய மூன்றாம் நிலை இளவரசர், அதன் தொடக்கத்திலேயே துவண்டுபோய் மாண்டுபோக நினைத்து மருந்தும் குடித்தார். இது ஏற்கனவே இக்கதையில் சொல்லப்பட்டது என்பதாலும், மங்கலம் கருதி அதன் மீளச் சொல்லுதல் இங்கு தவிர்க்கப்படுகிறது என்று கூறி முடிப்போம். சுபம். மங்கலம்.

பின்குறிப்பு: இக்கதை சுபச்சொல்லுடன் முடியும் மங்கல கதையே ஆதலால் எங்களை இக்கதை துன்பிக்கச் செய்கிறது என்று துளைக்காதீர்கள்.

•••••

தீ (கவிதை ) /பா.மணிகண்டன்

download

தீ

எனக்கு

என்னுடைய தீயைக்

கட்டுப்படுத்தத் தெரியாது

முன்பெல்லாம்.

என்னுடைய

கண் கொண்டே பார்ப்பேன்

என்னுடையத் தீ

எல்லாவற்றையுமே

கன்னாபின்னாவென்று

அழிப்பதை.

எனது பூக்களை

எனது செடிகளை

எனது மரங்களை

எனது காட்டை

உங்களுடைய பூக்களை

உங்களுடைய செடிகளை

உங்களுடைய மரங்களை

உங்களுடைய காட்டை

உங்களை…..

என்னுடைய தீயை

எப்படிக் கட்டுப்படுத்துவதென்பதை

கற்றுக் கொண்டு வருகிறேன்

இப்போது.

அழிக்க வேண்டியவற்றை

மட்டுமே அழிக்க.

••••

மிட்நைட் எக்ஸ்பிரஸ் – ஆல்பிரட் நோயிஸ் / தமிழில்: பெரு.முருகன்

images (1)

அதுவொரு பழைய, நைந்துபோன, சிவப்பு முரட்டுத்துணியால் மேலட்டை இடப்பட்ட புத்தகம். அவன் தனக்கு பனிரெண்டு வயதாக இருக்கும்போது, தன் தந்தையின் நூலகத்து மேல்அலமாரியில், அதைக் கண்டெடுத்தான்;மற்றும், எல்லா விதிகளுக்கும் புறம்பாக, அவன் தன் படுக்கையறைக்கு கொண்டுபோய் மெழுகுவர்த்தியின் ஒளியில் படிப்பான், அச்சமயம் அந்த அறையை தவிர்த்து, பழைய எலிசபெத் வீடு முழுக்க இருளில் ஆழ்ந்திருக்கும்.

இப்படித்தான் இளம் மார்டிமர் நினைத்துக் கொண்டிருப்பான்.அவனது அறை தனித்துவிடப்பட்ட சின்னஞ்சிறு பெட்டியாகும், அதில் திருடப்பட்ட மெழுகுவர்த்திகளின் ஒளியால், சூழும் இருளை கடல்வரை துரத்திவிடுவான், அதேநேரம் மற்றவர்கள் எல்லாரும் உறக்கத்திற்கு அடிமையாகி, வெளிப்புற இருளை உள்ளே வரவிட்டிருப்பர். தன்னுணர்வை நீக்கிய அவன் மூத்தோர்க்கு எதிராக, அப்போது அவன் இளம்மூளையில், ஒவ்வொரு நாடிநரம்பும் உச்சபட்ச உயிருடன் இருக்கும். கீழிருக்கும் கூடத்தில் அவன் தாத்தாவின் கடியாரம் துடிக்கும் ஓசை, தன் இதயம் துடிக்கும் ஓசை, தூரப் பிரதேசத்தின் கடலலைகளின் இடைவிடாத `ஹா’என்ற ஓசை, இவையெல்லாம் அவனையொரு பெரும் மர்மத்தில் ஆழ்த்தும். அவன் நூலை படிக்கும்போது, குருட்டு விட்டில் பூச்சியொன்று, மெழுகுவர்த்திக்கு மேலுள்ள சுவரில், மென்மையுடன் மோதி எழும் ஓசையால், காட்டில் சுள்ளிஉடையும் சப்தத்தை உன்னிப்புடன் கேட்கும் ஜந்துவென திடுக்கிட்டுப் போவான்.

நைந்துப்போன பழைய புத்தகம் அவனுக்கு விநோதமான ஆர்வத்தை தந்தாலும், அந்நூலின் சாரம் மட்டும் பிடிபடவேயில்லை. அது மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்பட்டது. அதன் ஐம்பதாவது பக்கத்தில், ஒரு படம் இருந்தது, அதை அவன் பார்க்கவே மாட்டான். ஏனெனில் அது அச்சத்தை தந்தது.
அந்த படத்தின் தாக்கத்தைப் பற்றி இளம்வயது மார்டிமர் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அவன் கற்பனைவளம் மிகுந்தவன். ஆனால் பித்துப்பிடித்தவன் அல்லன், அவன் ஆறுவயது சிறுவனாக இருந்தபோது,வளர்ந்தவொரு மனிதனாக தனிமையான சாலையிலோ, இருளான படிக்கட்டு மூலையிலோ சடாலென்று வந்துவிடுபவன்போல், புராதன கடலோடி சுற்றிலும் பார்த்துவிட்டு வந்துவிடுவதைபோல், அந்த ஐம்பதாவது பக்கத்தை கடந்துவிடுவான்.அந்த படத்தில் ஒன்றுமேயில்லை -வெளிப்படையாக -அமானுஷ்யத்தனமாக இல்லை. அதன் பிரதானமான கருத்தானது இருள், அதுமட்டுமே; அதுவொரு சூனியமான இரயில்வே நிலைய நடைபாதையை காட்டியது -இரவில் -அதில் ஒரேவொரு சாரமில்லாத விளக்கு: அது ஏதோவொரு நாட்டின், ஆளில்லா பகுதியில் அமைந்திருந்த, தனிமையான கூட்டுப்பாதையின், சூனியமான இரயில்வே நடைபாதை. அங்கே நடைபாதையில் ஒரேஒரு உருவம் இருந்தது:ஒரு மனிதனின் கருத்த நிழலுருவம், ஏறத்தாழ விளக்குக்கு அடியில் நின்றிருந்த அவன், இரயில்வரும் குகைப்பாதையை நோக்கி தன்முகத்தை திருப்பியிருக்க-அதன் விநோதமான காரணத்தினால் -சிறுவனை அதீத பயங்கரத்தில் அப்படம் ஆழ்த்தியிருந்தது .

அந்த மனிதன் எதையோ கேட்டுக்கொண்டிருப்பதை போல் தோன்றியது. அவனுடைய தோரணை குழப்பமாக, பயங்கர நிகழ்வை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாகவும் தோன்றியது. சிறுவன் படித்தவரையில், எழுத்தில் எதுவும் சொல்லப்படாததால், விழித்துக்கொண்டிருக்கும் பயங்கர கனவைப்பற்றி, அவனால் எதையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை .அவனால் புத்தகத்தைப்பற்றிய ஆர்வத்தை அடக்க முடியவில்லை, அதேநேரம் இரவின் தனிமையில், பீதியில் அப்படத்தை ஏறெடுத்தும் பார்க்க இயலவில்லை.

எனவே அவன் இரண்டு ஊசிகொண்டு அப்பக்கத்தை தைத்துவிட, இனி அவனால் ஏதேச்சயாகக்கூட அப்படத்தை பார்க்க முடியாது. பிறகு அக்கதையை முழுக்க படித்துவிடுவதென அவன் தீர்மானித்துக் கொண்டான். ஆனால் ஐம்பதாவது பக்கத்தை தொடும்போது அவன் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்; அவன் அதுவரை படித்ததெல்லாம் கனவுபோல் நிழலாடும்; அடுத்த நாள் இரவில் திரும்பவும் தொடங்குவான்; ஆனால் ஐம்பதாவது பக்கம் வரும்போது திரும்பவும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்.

அவன் வளர்ந்ததும், அந்த புத்தகத்தை, படத்தைப்பற்றி எல்லா விஷயத்தையும் மறந்துவிட்டான். ஆனால் தன்வாழ்வின் பாதிகட்டத்தில், விநோதமான சர்ச்சைக்குரிய நேரத்தில், மார்டிமர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் நுழைந்து, நேரான பாதையை விட்டுவிட்டு, நள்ளிரவுக்கு சற்றுநேரம் முன்பாக, ஆளில்லா கூட்டுப்பாதையில், தானொரு இரயிலுக்கு காத்திருப்பதைக் கண்டான்; மேலு‌ம், நிலையத்தின் கடியாரம் பனிரெண்டை தொட்டு மணியடித்தபோது பழைய ஞாபகம் வந்தது; நீண்டதொரு கனவிலிருந்து விழித்துக்கொண்ட ஒரு மனிதனின் ஞாபகமென அவன் நினைவுகூர்ந்தான்.

அங்கே, மங்கலான விளக்குக்கு அடியில், நீண்டதொரு, ஒளிமங்கிய நடைபாதையில், அவன் முன்பே அறிந்த, கறுப்பான உருவம் தனிமையில் நின்றிருந்தது. அதன் முகம் ,அவனுக்கு எதிர்புறமாக, குகைப்பாதையின் கறுத்த வாயிலை பார்த்திருந்தது.அது, முப்பதெட்டு வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல, அதன் தோரணை குழப்பமாக, எதையோ கேட்டுக்கொண்டிருப்பதைபோல் தோன்றியது.

ஆனால் அவன் குழந்தைப் பருவத்தில் இருந்ததைப்போல் இப்போது அச்சம்கொள்ளவில்லை. அவன் அந்த கறுத்த உருவத்திடம் போவான், அதன் எதிரே நிற்பான், நீண்டகாலமாக மறைந்திருந்த, அவன் பார்க்கவண்ணம் தடுக்கப்பட்டிருந்த, அதன் முகத்தைப் பார்ப்பான். அவன் அமைதியாக நடந்துசென்று, அதனிடம் பேச, ஏதேனும் விஷயத்தை தேர்ந்தெடுப்பான். உதாரணமாக, இரயில் வர இன்னும் நேரமாகுமா என்று . ஒரு வளர்ந்த மனிதனுக்கு இதையெல்லாம் செய்வது மிகச்சுலபம். ஆனால் முதலடி எடுத்துவைக்கும்போதே, அவன் கைகள் கோர்த்துக் கொண்டன.

அதாவது அவனுங்கூட, குழப்பத்தில் ஆழ்ந்தவனைப்போல், எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனைப்போல்; ஆனால் தேய்ந்துபோன பழைய ஞாபகம் அவனை எழுப்பிவிட்டதைப்போல், விளக்குக்கு அடியில் நின்றிருந்த அவ்வுருவத்தை நோக்கி அவன் நடந்துசென்று, அதைக் கடந்து, தடாலென்று திரும்பி அதனோடு பேசுவதற்கு முயன்றான்; பிறகுதான் அதைப் பார்த்தான் – ஒரு வார்த்தைகூட பேசாமல், பேசவேமுடியாமல்-
அது இவனேதான் – இவனை வெறிக்கப் பார்க்கிறது – கேலிபேசும் நிலைக்கண்ணாடியென, அவன் தன் சொந்தக் கண்கள் அவன் தன் வெண்ணிற முகத்திலிருக்க, அவை இவன் கண்களுக்குள் பார்த்தன, உயிர்கொண்டு-

அவன் இதயத்தின் நாடி நரம்புகள் துடிக்கத் தொடங்கி, ஸ்தம்பிக்கச் செய்வனபோல் தெரிந்தன. பீதியின் அலைகள் அவனுக்குள் அடித்தன. அவன் திரும்பி, மூச்சிரைத்து, தடுக்கியபடி, கண்மண் தெரியாமல், ஆளற்ற எதிரொலி உண்டாக்கும், டிக்கெட் பதிவுசெய்யும் அலுவலகத்தை கடந்து, நிலையத்தின் பின்புற நிலவொளி வீசும் சாலையில் ஓடினான். அந்த பகுதி முழுவதுமே ஆளரவமற்று காணப்பட்டது. நிலவொளி கதிர்கள் தனிமையில் ஒளிவீசிக்கொண்டிருந்தன.
அவன் சற்றுநேரம் நின்று, தன் காலடி சப்தங்களைப் போலவே, பதிவுசெய்யும் அலுவலகத்தின் மரத்தரைக்கு உள்ளே, தடுக்கி விழும் காலடி சப்தத்தைக் கேட்டான். உடனே வெட்கமறியாது பயத்திற்கு தன்னை விட்டுக்கொடுத்த அவன், பயங்கொண்ட மிருகமென வியர்த்து, நீண்டதொரு நேரான கால்வாய் என, முடிவற்ற வெண்ணிற சாலையின் இருபுறமும் அடர்ந்திருந்த பாப்லர் மரங்களுக்கிடையே, ஒருபுறத்து பாப்லர் மரங்கள் பிரதிபலிக்கும் சாலையில் ஓடினான்.

அவன் காலடி சப்தங்கள் தனக்கு பின்னால் எதிரொலித்ததைக் கேட்டான். அது மெல்ல ஆனால் அழுத்தமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. கால்மைல் தூரம் தாண்டி, சாலையின் ஓரத்தில், ஒரு சிறு வெண்ணிற வீட்டைக் கண்டான், அந்த வெண்ணிற வீடு, இரண்டு இருட்டைந்த சாளரங்களையும், ஒரு கதவையும் கொண்டிருந்தது, அவனுக்கு மனிதமுகத்தை நினைவுபடுத்தியது. குறித்த காலத்திற்குள், அந்த வீட்டை மட்டும் அடைந்துவிட்டால், புகலிடமும், பாதுகாப்பும் கிடைத்துவிடும் – தப்பித்தல் – என நினைத்துக் கொண்டான்.

மெலிதான, அமைதிப்படுத்த முடியாத அந்த காலடியோசைகள், அவனுடையதாக எதிரொலித்து, இன்னும் கேட்டுக்கொண்டிருக்க, அவன் முன்புறம் சாய்ந்து, சிறுவாயிலுக்குள் மூச்சிரைத்தான்; கலக்கமாக,தாழ்ப்பாளை பிடித்தாட்டினான், பின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான். தட்டப்படுவதற்கு சாதனமோ,ஒலிப்பதற்கு மணியோ கிடையாது.அவன் கைமுட்டியால், இரத்தம் வரும்வரை, கதவை பலமாக குத்தினான். உள்ளிருந்து பதிலேதும் வரவில்லை. இறுதியில் வீட்டினுள்ளே, பலத்த காலடியோசைகள் அவன் கேட்டான். கரகரக்கும் படிக்கட்டுக்களில் அவை மெல்லமாக இறங்கின. பின் மெதுவாக கதவுகள் திறந்தன. உயரமான நிழலான உருவம் அவன்முன்னே நின்று,எரிகின்ற மெழுகுவர்த்தியைப் பிடித்திருந்தது; அது நின்றிருந்த தோரணையில் அதன் முகத்தையோ அல்லது உருவத்தையோ பார்க்க இயலவில்லை. ஆனால் அதன் முகத்தை சுற்றி மெழுகிடப்பட்ட துணியால் போர்த்தி,ஒரு அமைதியான பயங்கரத்தை தந்தது.
இருவருக்குமிடையே எந்தவொரு வார்த்தையும் எழவில்லை.உருவம் அவனை உள்ளே வரும்படி சைகை செய்தது;அவன் அதற்கு அடிபணியவே,அது கதவை பூட்டியது.பின் அது திரும்பவும் சைகை செய்து,பின்னொரு வார்த்தையும் இன்றி, உருவம் கோணலாகி படிக்கட்டுகளில் ஏற,பேய்த்தனமான மெழுகுவர்த்தியின் ஒளியானது, வெண்ணிற சுவர்களிலும், விதானத்திலும்,பெரும் ,அஷ்டகோணலான நிழல்களை காட்டியது.

அவர்கள் மேல்மாடியின் அறையை அடைந்தனர், அங்கே கணப்பு அடுப்பில் பிரகாசமாக தீயெரிந்துக் கொண்டிருந்தது,அதன் இருபக்கங்களிலும் கைப்பிடி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன,இடையில் சிறு ஓக்மர மேஜை இருந்தது, அதன்மேலே, பழைய நைந்துபோன புத்தகம், ஆழ்ந்த சிவப்புநிறத்துணியால் அட்டையிடப்பட்டிருந்தது.அவன் வருகையை நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்ததைபோல்,எல்லாம் தயார்நிலையில் வைத்திருந்தது.

உருவம் ஒரு நாற்காலியை சுட்டிக்காட்டியது,பின் மெழுகுவர்த்தியை புத்தகத்தின் அருகே மேஜையின் மேல் வைத்தது. [அவ்விடத்தில் நெருப்பை தவிர்த்து வேறெந்த விளக்கொளியும் இல்லை] பிறகு மறுவார்த்தை ஏதுமின்றி, அவனுக்குப்பின் கதவை பூட்டிவிட்டுப்போனது.
மார்டிமர் அந்த மெழுகுவர்த்தியை பார்த்தான்.அது முன்னமே பார்த்ததுபோல் தெரிந்தது.சாக்கடையான அந்த மெழுகின் நாற்றம், பழைய எலிசபெத் வீட்டின் சின்னஞ்சிறு அறையை ஞாபகத்திற்கு கொண்டுவந்தது. அவன் நடுங்கும் விரல்களால் அந்த புத்தகத்தை எடுத்தான்.நெடுங்காலத்திற்கு முன்னே அந்தக் கதையை பற்றிய விவரங்களை மறந்திருந்திருந்தாலும்,இப்போது சட்டென உணர்ந்துகொண்டான்.

அவன் புத்தகத்தின் தலைப்பிடப்பட்ட பக்கத்திலிருந்த மைக்கறையை ஞாபகம் செய்துக்கொண்டான்;பின், அதிர்ச்சிக்குள்ளாக்கும்விதமாக, குழந்தைப்பருவத்தில் தான் ஊசிகொண்டு தைத்திருந்த ஐம்பதாவது பக்கத்திற்கு வந்தான்.ஊசிகள் இன்னும் அங்கிருந்த. அவற்றை அவன் தொட்டான்-சிறுவனாக இருந்தபோது நடுங்குகின்ற விரல்களால் தொட்ட அதே ஊசிகள்தான் அவை.
அவன் திரும்பவும் தொடக்கத்திற்கு வந்தான்.அவன் புத்தகத்தை படித்து ,அதிலிருப்பதென்னவென்று கண்டுபிடிக்க தீர்மானம் கொண்டான்.அது அச்சினில் இருக்கவேண்டும் எனவும் உணர்ந்தான்;குழந்தையாக இருக்கும்போது புரிந்துக்கொள்ள முடியாவிட்டாலும், இப்பொழுது அதன் ஆழத்தை தொடபோகிறான்.
அந்நூலின் பெயர் மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்பதாகும்.அவன் முதல்பத்தியை படித்துமுடித்துபோது, மெல்லமெல்ல, தவிர்க்கமுடியாத பயங்கரத்தோடு ,விளங்கியது.
அதுவொரு மனிதனின் கதையாகும், அவன் நீண்டகாலத்திற்கு முன் சிறுவனாக இருந்தபோது,ஒரு புத்தகத்தை படிக்கவே,அதிலிருந்த ஒருபடம் பயங்கரத்தை ஊட்டியது.பின் அவன் அதை அறவே மறந்துபோனான்.ஒருநாள் இரவு,வெறிச்சோடிய இரயில்நிலைய நடைபாதையில், அவன் அந்த படத்தைப்பற்றி ஞாபகம் செய்து கொண்டான்.அவன் விளக்குக்கு அடியில் நின்றிருந்த உருவத்தைப் பார்த்தான் :உடனே அதைஉணர்ந்துகொண்டதும் பீதியில் ஓடினான்.வழியில் ஒருவீட்டில் அடைக்கலம் புகுந்தான்: மேல்மாடி அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்,அங்கே அந்த புத்தகம் இருக்க,உடனே எடுத்து படிக்க ஆரம்பித்து,கடைசியில் முடித்தே விட்டான்-இந்த புத்தகத்தின் பெயரும் மிட்நைட் எக்ஸ்பிரஸ். அதன் கதையும் ஒரு மனிதனுடையது, அவன் சிறுவனாக இருந்தபோது-இவ்வாறு அப்புத்தகம் சென்றுகொண்டே இருந்தது, முடிவேயில்லாமல்.தப்பிப்பதற்கு ஒருவழியுமில்லை.

ஆனால் கதையானது சாலையிலுள்ள வீட்டைப்பற்றி வருகையில்,மூன்றாவது முறையாக,ஒரு ஆழ்ந்த ஐயம் அவனுள் மெல்ல, தவிர்க்கவியலாமல்,அச்சமுடன் எழுந்தது-தப்பிப்பதற்கு வழியில்லாமல் இருந்தபோதிலும்,குறைந்தபட்சம் அவன் நகர்ந்துகொண்டிருக்கும்,அச்சம்தரும் சக்கரத்தை,விநோதமான வட்டச்சுழலைப்பற்றியாவது ,தெளிவான பார்வையை பெறலாம்.
விவரங்கள் பற்றி புதிதாக விவரங்கள் ஏதுமில்லை. அவை அங்கேயே இருந்துகொண்டிருக்கும்;ஆனால் அவை என்னசொல்ல வருகின்றன.அவைதான் அவனுக்கு வேண்டும்.ஏறுமாறான படிக்கட்டுக்களில் அவனை வழிநடத்திய விநோதமான பயங்கர ஜந்து -யாரது?அல்லது என்ன அது?

அவனிடமிருந்து விடுபட்டவொன்றை கதையானது சொல்கிறது.அந்த விநோத உபசாரகன், அடைக்கலம் தந்தவன்,ஏறத்தாழ அவன் உயரமிருப்பான். எனில், அதுவே அவனாக இருப்பானோ- அதனால்தான் முகம் மறைக்கப்பட்டிருக்கிறதோ?
இக்கேள்வியை கேட்டுக்கொண்ட அதே கணத்தில், பூட்டப்பட்டிருந்த கதவில் சாவியை நுழைக்கும் ஓசை கேட்டது.

விநோத உபசாரகன் உள்ளே நுழைந்தான் -அவன் பின்புறமிருந்து வந்து கொண்டிருந்தான்-அவலட்சணமான நிழலை வீசினான்,மின்னிய மெழுகுவர்த்தியின் ஒளியில், வெண்ணிற சுவரில் தெரிந்த அது மனிதவுருவை காட்டிலும் பெரிதாக இருந்தது.
அது நெருப்பின் அந்தபுறமாக அவனை பார்த்தவண்ணம் அமர்ந்தது.திடுக்கிடவைக்கும் அமைதியில், ஒரு பெண்ணானவள் ஆடையை விலக்குவதுபோல், அது கைகளை உயர்த்தி தன் முகத்திலிருந்த திரையை விலக்க சென்றது.அந்த முகம் எவருக்கு சொந்தமானது என்பதை அவனறிவான்.ஆனால் அது செத்துப்போனதா? அல்லது உயிருடன் இருக்கிறதா?

அதைஅறிந்து கொள்ள ஒரேஒரு வழி தானுள்ளது. அந்த கொடூரனின் கழுத்தை மார்டிமர் பிடித்து அழுத்தியவிநாடியில், அவனுடைய கழுத்தும் அதேஅழுத்தமான பிடியில் சிக்கிகொண்டது. இருவரின் கூக்குரல்களும் பிரித்துபார்க்க முடியாதவாறு ஒன்றிணைந்து ஒலித்தன;குழப்பமான அவ்வொலிகள் ஓய்ந்துபோன அக்கணத்தில், அந்த அறையின் ,எதுவுமே அசையாத நிலைத்ததன்மை, முப்பதெட்டு வருடங்களுக்குமுன்,வயதுமுதிர்ந்த தாத்தாவின் சுவர்கடியாரத்தின் டிக்டிக் ஓசை, தூரத்தே ,ஹா என்று அலறும் தூரத்து கடலோசை,முதலானவற்றை நீங்கள் கேட்கலாம்.

ஆனால் இறுதியில் மார்டிமர் தப்பித்தேவிட்டான்.ஒருவேளை அவன் மிட்நைட் எக்ஸ்பிரஸ் இரயிலை பிடித்துவிட்டிருக்கலாம்.
அதுவொரு பழைய நைந்துபோன, சிவப்புநிற முரட்டுத்துணியால் அட்டையிடப்பட்ட புத்தகம்.

*

இந்தக் கதை திஸ் வீக் என்ற இதழில் 1935ஆம் ஆண்டு வெளியானது. 1968இல், ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் தொகுத்த BAR THE DOORS என்ற நூலில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

•••••

அருணா சுப்ரமணியன் ( அறிமுகக் கவிஞர் ) கவிதைகள்

download (2)

வலி

ஓயாது ஓடிய
பிள்ளையின்
கால்களை
இதமாய் பிடித்து
வலிதனை
வாங்கிக் கொள்கிறாள்
தன் கரங்களில் …

***************

வாடை

தயக்கமின்றி என்
தட்டுக்களில் விழும்
தடித்த கூரான
சொற்களையும்
தொடுத்து வைக்கிறேன்
கவிதைகளை
அச்சிட்ட தாள்களில்
வீசுகிறது
ரத்த வாடை…

***************

விதை

எனை நோக்கி
வீசப்படும்
சொற்களை
எல்லாம்
மனதில்
விதைக்கிறேன்
விருட்சம் போல்
வளர்கின்றன
கவிதைகள்.

***************

வீரம்

புரவியின் வேகத்தாலும்
வாளின் கூர்மையாலும்
போர்க்களத்தில்
வீழ்த்திய தலைகளைக் காட்டி
தன்னைத் தானே
சொல்லிக்கொள்கிறான்
தலைசிறந்த வீரன் என்று!

•••

விஸ்லவா சிம்போர்ஸ்கா (Wislawa Szymborska 1923-2012 ) மூலம் போலந்து : ஆங்கிலம் : கிளாரே காவென் மற்றும் ஸ்டனிஸ்லா பாரன்செக் [Clare Cavanagh and Stanislaw Baranczak ] தமிழில் : தி.இரா.மீனா

download (1)

விஸ்லவா சிம்போர்ஸ்கா போலந்து மொழி பெண்கவிஞர். கட்டுரை, மொழி பெயர்ப்பு ஆகிய துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர். 1996 ல் இலக்கியத் திற்கான நோபல்பரிசு பெற்றவர். The Goethe Prize,The Herder Prize உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். People on a Bridge,View with a Grain of Sand: Selected Poems , மற்றும் Monologue of a Dog ஆகியவை ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள அவரது கவிதைத் தொகுப்புகளில் சிலவாகும்..

****


மேகங்கள்

மேகங்களை என்னால்

மிக வேகமாக வர்ணிக்க முடியும்–

வேறுருவாக மாற அவைகளுக்கு

நொடிப்பொழுது போதுமானது.

அவற்றின் முத்திரை :

வடிவம், நிழல்,காட்சியாகும்விதம் அமைப்பு என்றவை

எதையும் இரண்டாம் முறையாக மீட்டுருச் செய்வதில்லை.

எவ்வித நினைவுகளின் சுமையுமின்றி

உண்மைகளின் மேல் அவை மிதந்துசெல்லும்.

பூமியில் அவை எதற்கு சாட்சியாகவேண்டும்?

ஏதாவது நிகழும்போது அவைசிதறுகின்றன.
மேகங்களோடு ஒப்பிடும்போது,

வாழ்க்கை திடமான நிலத்திலிருக்கிறது,

பெரும்பாலும் நிரந்தரமாக, ஏறக்குறைய சாஸ்வதமாக.

மேகங்களுக்கு அருகில்

ஒரு கல்கூட சகோதரனாகத் தெரிகிறது,

நீங்கள் நம்பக்கூடிய

சராசரி இடைவெளி உடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள்

விருப்பமிருப்பின் மனிதர்கள் வாழலாம்

பிறகு ஒருவர் பின் ஒருவராக இறக்கலாம்.

கீழ் என்ன என்பது பற்றி

மேகங்களுக்குக் கவலையில்லை

அதனால் அவை கர்வம் கொண்ட படைகளாய்

பூர்த்தியடையாத நம் முழுவாழ்க்கையின் மீது பயணிக்கலாம்,

நாம் போனபிறகு அவைகளுக்கு மறைய வேண்டிய கட்டாயமில்லை

பயணிக்கையில் அவைகள் பார்க்கப்பட வேண்டுமென்பதில்லை.

—-

எதுவும் இருமுறையில்லை

எதுவும் இரண்டாம் முறையாக நிகழமுடியாது
உண்மை எதுவெனில்
மேம்படுத்திக் கொள்ளவரும் நாம்
பயிற்சிக்கு வாய்ப்பளிக்கப்படாமல் வெளியேறுகிறோம்

மூடராக யாரும் இல்லையெனினும்
கோளின் மிகப் பெரிய முட்டாளெனினும்
கோடையில் மீண்டும் வகுப்புக்குச் செல்லமுடியாது.
இந்தப் பாடத்திட்டம் மட்டும் வழங்கப்படுவது ஒருமுறைதான்.

எந்த நாளும் முன்தினம் போலிருப்பதில்லை
எந்த இரண்டுஇரவுகளும் எது ஆனந்தம் என்பதைச் சொல்வதில்லை
துல்லியமாக அதேவழியில்,
துல்லியமாக அதேமுத்தங்களுடன்

ஒருநாள், யாரோ அர்த்தமின்றி
யதேச்சையாய் உன் பெயரைக் குறிப்பிடலாம்;
மணமும் நிறமுமாய் ஒரு ரோஜா
அறைக்குள் வீசப்பட்டது போலுணர்வேன்.

அடுத்த நாள் நீ என்னுடன் இருந்த போதும்,
கடிகாரத்தைப் பார்ப்பதை என்னால் தவிர்க்கமுடியாது;
ஒரு ரோஜா? ஒரு ரோஜா?அது எதுவாக இருக்கமுடியும்?
அது புஷ்பமா? அல்லது பாறையா?

விரைந்தோடும் நாளை நாம் ஏன்
தேவையற்ற அச்சத்தோடும் துக்கத்தோடும் கடத்துகிறோம்?
அதன் இயற்கை என்பது தங்காமலிருப்பதுதான்
இன்று என்பது எப்போதும் நாளையாகிவிட்டதுதான்.

நாம் வித்தியாசமானவர்களாக இருந்தாலும்( ஒத்துப் போகிறோம்)
புன்முறுவலோடும் முத்தங்களோடும்,
நட்சத்திரங்களின் கீழே இசைவானவர்களாகிறோம்
இருதுளி தண்ணீர் போல.

****

மூன்று வினோதமான சொற்கள்

எதிர்காலம் என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
முதல் அசை இறந்த காலத்திற்குச் சொந்தமாகிறது.
அமைதி என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
நான் அதை அழித்துவிடுகிறேன்.
ஒன்றுமில்லை என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது
எதுவுமற்ற நிலை இருக்கமுடியாததைச் சொல்கிறேன்.
வெறுமையான குடியிருப்பில் ஒரு பூனை
சாவு — ஒரு பூனைக்கு அதைச் செய்யக்கூடாது.

***

ஒரு காலியான வீட்டில்

ஒரு பூனை என்ன செய்யமுடியும்?

ஒரு காலியான வீட்டில்

ஒரு பூனை என்ன செய்யமுடியும்?

சுவற்றில் ஏறுமா?

மரச்சாமான்களின் மீது உரசுமா?

எதுவும் இங்கே வித்தியாசமாகயில்லை,

ஆனால் எதுவும் வழக்காமாயுமில்லை

எதுவும் அசைக்கப்படவில்லை

ஆனால் நிறைய இடமிருக்கிறது.

இரவில் விளக்குகளெதுவும் ஏற்றப்படவில்லை.

மாடிப்படிகளில் அடிச்சுவடுகள்

ஆனால் அவை புதியவை.

கோப்பையில் மீனைவைக்கும்

கையும் மாறிவிட்டது.

வழக்கமான நேரத்தில்

ஏதோ ஒன்று தொடங்கவில்லை

நடக்க வேண்டிய ஏதோ

ஒன்று நடக்கவில்லை.யாரோ எப்போதும் இங்கேயிருந்தார்கள்..

திடீரென மறைந்தார்கள்

பிடிவாதமாக மறைந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மறைவறையும் சோதிக்கப்பட்டுவிட்டது

ஒவ்வொரு அலமாரியும் ஆய்வுக்குள்ளாகி விட்டது

கம்பளத்தின் அடி அகழாய்வும் எதையும் சொல்லவில்லை

கட்டளையும் கூட பழுதாகிப் போனது;

தாள்கள் எங்கும் சிதறிக்கிடந்தன.

என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை

தூங்கிக் காத்திருக்கலாம்

அவன் திரும்பி வரும்வரை காத்திருக்கலாம்

அவன் தன் முகத்தைக் காட்டட்டும்

ஒரு பூனைக்கு என்ன செய்யக்கூடாது

என்பது பற்றிய பாடத்தை அவன் எப்போதாவது அறிவானா.

குறைந்தபட்சம்

விருப்பமில்லாதது போல

மிக மெதுவாய்

வெளிப்படையாகத் தெரியும் புண்பட்ட கையோடு

தாவுதலோ அல்லது கிறிச்சிடலோ இன்றி

அவனை நோக்கிப் பக்கவாட்டில் போகலாம்.

——