Category: இதழ் 121

பதினொரு நிமிடங்கள்( Paulo Coelho ) – நாவல் வாசிப்பின் பகிர்வு – தர்மினி-

18119106_10210577528092348_268904011236594745_n

‘முன்பொரு காலத்தில் மரியா எனும் விலைமகள் ஒருத்தி இருந்தாள்’என்ற முதல் வரியுடன் நாவல் ஆரம்பமாகிறது. ஆம், இது மரியா என்ற 23 வயதுப் பெண் தன் பதின்பருவ நினைவுகளாகவும் பாலியற் தொழிலில் ஈடுபடவேண்டிய சூழ்நிலைகள், அதற்கான மனப்போராட்டம், இயல்பாக அதையாரு தொழிலாக ஏற்றுக்கொண்ட மனநிலை போன்றவற்றைக் குறிப்புகளாகவும் எம்முடனான உரையாடலாகவும் சொல்லிக் கொண்டு போகும் நாவல். பாவ்லோ கொய்லாவிற்கு 1997ல் கிடைத்த கையெழுத்துப் பிரதி அப்பெண்ணின் வாழ்வின் பதிவுகள், மரியாவுடனான உரையாடல் மற்றும் இக்கையெழுத்துப் பிரதியையும் அடிப்படையாகக் கொண்டு புகழ்பெற்ற பிரேஸில் நாவலாசிரியரான Paulo Coelho எழுதியது ‘பதினொரு நிமிடங்கள்’நாவல்.

நாம் பாலியல் வேறுபாடுகளை அறியாத குழந்தைகளாக விளையாடித்திரிந்த காலமொன்று உண்டு. பின்னொரு வயதில் நம் உடலை உற்றுக் கவனிக்கத் தொடங்குகின்றோம். நம்மைக் கவரும் மற்றைய பாலினத்தைப் பற்றிய இரகசியங்கள் எவையென யோசிக்கத் தொடங்குகின்றோம். முதலில் மாசற்ற காதலாக அது நம்மை ஈர்க்கும். மனவுணர்வுகள் மட்டுமே போதுமென்றும் உடல்கள் காதலுக்கு அப்பாற்பட்டவையென்றும் தோன்றும். ஒருவர் நம்மைக் கவனிக்கின்றார்.நாம் சிறப்பான நபராக இருக்கின்றோம். அப்போது சொற்களும் பார்வைகளும் இன்பத்தைத் துாண்டப் போதுமானவையாக இருக்கின்றன. பிறகொரு பொழுதில் வார்த்தைகள்-தீண்டல்கள்-முத்தங்கள்-தாண்டிப் பாலுறவு என்ற நிலை இருவரிடையில் ஏற்படும் போது இவ்வுலகமே இந்தப் பதினொரு நிமிடங்களுக்காகத் தான் இயங்குகிறது போல் எனக் கேள்வி ஏற்படும்.

11 வயதில் மாசற்ற காதலுற்ற மரியாவின் கதை. அவரொரு பாலியற் தொழிலாளியாகி வாழ்வு பாலின்பம் பற்றிய குழப்பங்களும் கேள்விகளும் அவற்றுக்கான விடைகளை அறிந்து அதிலிருந்து மீளும் உறுதியானவராக 23 வயதில் ஒரு நாவலுக்குரிய வாழ்க்கையைக் கடந்து அமைதியான வாழ்வொன்றைக் கண்டு கொள்கின்றார்.

15 வது வயதில் முத்தமிடுவது பற்றியும் எல்லாவற்றுக்கும் மேலாகக் காதலானது துயரத்துக்கான காரணங்களில் ஒன்றெனவும் அறிந்து கொண்டதோடு மூன்றாவதாகத் தற்செயலாகச் சுய இன்பம் பற்றியும் அறிந்து கொண்டாள்.

19 வயதில் ஆடையகம் ஒன்றில் பணிபுரியத் தொடங்கிய மரியா சேமித்த பணத்தில் ரியோ டி ஜெனிரோவிற்கு தனியாகப் பயணமாகிறாள். அங்கே சுவிஸ்நாட்டவனொருவன் வேலையொன்று இருக்கிறது என்பதன் பின்னிருக்கும் வளமான வாழ்வொன்றை நம்பி -பெற்றோருக்கு நல்ல வீடும் ஒரு பண்ணையும் தன்னால் உழைத்து வழங்க முடியுமென்ற நம்பிக்கையோடு பயணிக்கிறார் மரியா.

ஜெனிவாவில் இரவுவிடுதியில் நடனமாடும் வேலை. பிரேஸில் நாட்டைச் சேர்ந்த சக தொழிலாளி விவியன்‘சாகசம்-பணம்-கணவன் இந்த மூன்றில் ஒன்றைத் தானே தேடி வந்திருக்கிறாய்?’ என்று முதல் நாளே மரியாவை நோக்கிக் கேட்கிறார். இம்மூன்றும் எதிர்பார்த்ததைப்போல அப்பெண்களால் சாதிக்க முடியாமல் போவதற்கான சாத்தியங்களைச் சொல்லி மரியா செய்த ஒப்பந்தமும் அந்தப் பயணக்கடன் தீரவும் ஒரு வருடமாவது வேலை செய்தாலொழிய இதிலிருந்து மீள முடியாதென்ற உண்மை மரியாவைச் சோர்வடையச் செய்கின்றது. ஆனாலும்பகற்பொழுதுகளில் ஃபிரெஞ் வகுப்புக்குச் செல்வதும் நுால் நிலையம் சென்று ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை எடுத்து வந்து படிக்கத் தொடங்குவதும் நாட்குறிப்புகளை எழுதுவதுமாக இயல்பிலேயே அறிவுத்தேடலும் சாதுரியமும் மிக்க பெண்ணான மரியா,அந்நியமான அந்நாட்டின் சூழலை எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகின்றார். ஃபிரெஞ் வகுப்பில் சந்தித்த அரபுநாட்டுக்காரரின் மீதான காதலில் ஓரிரவு மலையொன்றுக் சென்று வந்ததோடு இரவு விடுதி நடனப்பணி முடிவுக்கு வந்தது.வேலையால் நிறுத்தப்படுகின்றார் மரியா.

ஓர் இரவுக்கு ஆயிரம் ஃபிராங் தந்த மனிதன். மற்றொரு இரவு விடுதி. ஒரு பண்ணை வாங்குவதற்காக இன்னுங் கொஞ்சம் உழைக்கலாம் என்றால் என்ன? ‘இழப்பதற்கு எதுவும் இல்லையென்பதால் அவள் இதில் ஈடுபடுகின்றாள். ஏனெனில் அவள் வாழ்க்கை தொடர்ந்த அனுதின ஏமாற்றங்களைக் கொண்டது’.
ஆயினும், மரியா தன் நாட்குறிப்பேட்டின் பக்கங்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொண்டார். பணத்திற்கான இவ்வேலை புதிதாக எதையும் தரவில்லை. வெறுமனே கால்களை அகட்டுவதாகவும் ஆணுறை பயன்படுத்தும்படி கேட்பதாகவும் கொஞ்சம் டிப்ஸ் அதிகமாகக் கிடைக்குமென கொஞ்சம் முனகுவதாகவும் கடைசியில் ஒரு குளியல் போடும் விதமாகவும் இருந்தது.

புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் தான் தலைப்புக்கான காரணம் பதினொரு நிமிடங்கள் பற்றி ஓர் உரையாடல் ,‘ ஓர் இரவுக்கா?எங்கே சொல் மரியா,நீ மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறாய்.இது உண்மையில் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே.உடைகளைக் களைவது,ப்ரியத்தை வெளிக்காட்டும் போலியான பாவனைகளைச் செய்வது,சற்று நேரம் உரையாடுவது,மீண்டும் ஆடை அணிவது இவற்றுக்காகும் நேரத்தை விட்டுவிட்டால் உண்மையில் பாலுறவுக்கு ஆகும் நேரம் பதினொரு நிமிடங்களே.

download (13)
இருபத்தி நான்கு மணிநேரங்கொண்ட ஒரு நாளில், இந்தப் பதினொரு நிமிடங்களுக்காகவே எவரொருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். குடும்பம் நடத்துகின்றனர்.வீறிடும் குழந்தைகளைச் சகித்துக்கொண்டு, வீட்டுக்குத் தாமதமாக வருவதற்குப் பைத்தியக்காரத்தனமான சாக்குகளை யோசித்தபடி, நுாற்றுக்கணக்கான இதர பெண்களைக் கடைக்கண் பார்வை பார்த்து அவர்களுடன் ஜெனிவா ஏரியைச் சுற்றி வர விரும்பியபடி…இந்தச் சமூகத்தில் ஏதோ பெரிய தவறு இருக்கவேண்டும். அது செய்தித் தாள்கள் கூறுவது போல அமோசன் மழைக்காடுகள் அழிவோ,ஓஸோன் அடுக்கில் ஏற்படும் சேதமோ,பண்டாக் கரடிகள் மரணமோ,சிகரெட்டுகளொ,புற்றுநோய் உண்டாக்கும் உணவுகளொ அல்லது சிறைச்சாலை நிலவரங்களோ இல்லை.’

அது முக்கியமாக அவள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தொழில் சார்ந்தது தான் : பாலுறவு.
மரியாவைப் பார்த்து, உங்களது ‘பிரத்தியேக ஒளி’ ஓவியமாக்கச் சொல்கின்றது என்ற ஓவியன் ‘நீரினுள் கல்லொன்றை எறிந்தான்.கல் விழுந்த இடத்தில் சிறிய வட்டங்கள் தோன்றி, பெரிதாகியபடியே சென்று,தற்செயலாக அங்கே சென்று கொண்டிருந்த கூழாங்கல்லுடன் சம்பந்தம் ஏதுமில்லாத வாத்தொன்றைச் சென்று தொட்டன. அந்த எதிர்பாராத அலையைக் கண்டு பயப்பிடாமல் வாத்து அதனுடன் விளையாடத் தீர்மானித்தது.’

மரியா, ஒரு பாலியற்தொழலாளி என்பதை அறிந்திருந்த ஓவியன் ரால்ப் ஹார்ட் வாடிக்கையாளனாக மீண்டும் சந்திக்கின்றான். ஒருவரது ஆன்மா மற்றவரைத் தீண்டுகின்றது. தனது கண்டுபிடிக்கப்பட்ட காதலை மரியா உணர்கின்றார். மனதைத் தீண்டும் உடல் தான் காதலின் ஊற்று. வெறும் உடல்களால் மனதை வெல்லமுடியுமா?

90 நாட்களில் நாடு திரும்பவேண்டும். தொடர்ந்து உழைத்துச் சேமித்து ஒரு பண்ணையை தன் ஊரில் வாங்கும் திட்டம் ஒரு பக்கம்.மறுபுறம் காதலின் உணர்வுகளைக் கடக்க முடியாத பெண்ணின் இதயமாக மரியாவின் நாட்குறிப்பு சுயவிசாரணைகளைச் செய்கின்றது.

‘உங்களால் மற்றொருவரை உடைமையாக்கிக் கொள்ள முடியுமென நினைப்பது அர்த்தமற்றதென,வாழ்க்கை அவளுக்குக் கற்பித்திருந்த போதும், பொறாமையாக உணர்வது இயல்பானதே.அப்படி உடைமையாக்கிக் கொள்ள முடியுமென நம்பும் எவரும் தம்மையே ஏய்த்துக்கொள்கிறார்கள்.’
‘உறுதியான காதல் ,தனது பலவீனத்தையும்வெளிக்காட்டும் காதலாகும்…’ என்று தன்னை ஆட்கொண்ட காதல் பணத்துக்காக மேற்கொள்ளும் உறவுகளினின்று எவ்விதம் வேறுபடுகின்றது என்ற கேள்விகளை எழுப்புகின்றார்.காரணங்களை-மனித மனங்கள் பற்றிய குறுக்கறுப்புகளைச் செய்கின்றார்.
‘என் வாடிக்கையாளர்கள் நினைப்பதற்கு மாறாக ,பாலுறவை அனைத்து நேரமும் மேற்கொள்ள முடியாது.நம் அனைவருள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது.நாம் காதல் செய்யவேண்டுமானால் இரு கடிகாரங்களின் முட்களும் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தைக் காட்டவேண்டும்.அது தினமும் நிகழாது.நீங்கள் மற்றவரை நேசித்தால் ,நலமாக உணர்வதற்காக நீங்கள் பாலுறவைச் சார்ந்து இருக்கமாட்டீர்கள்.’ என்கிறார்.

ஆயினும், மரியாவுக்குச் சவுக்கால் அடித்து இன்பங்காணும் வாடிக்கையாளன் கொடுத்த வலியை பரவசமாய் உணர்த்தியது எது? அதுநாள் வரை அனுபவிக்காத உணர்வாக அப்பரவசத்தீண்டலை செய்தது ஒரு சவுக்கின் நுனியா?அல்லது வலிகளை-துன்பங்களை விரும்பி ஏற்கும் இரசிக்கும் மனமா?வலி , வேதனை ,சாடிசம் மற்றும் மாசோயிசத்துக்குள் அவருக்கு ஏற்பட்டவை உடலின் இன்பமா?தன்னை வருத்தும் ஒரு பெண்ணின் துயரங்களை விழுங்கிவிட்ட அனுபவமா? குளிர் காலத்தில் வெறுங்காலுடன் அவளை நடக்கச் செய்த காதலன் சொல்கின்றான்‘ நேற்று நீ வலியை அனுபவப்பட்டாய்,அத்தோடு அது இன்பத்துக்கு இட்டுச் செல்லும் என்று கண்டு பிடித்தாய்,இன்றும் நீ வலியை அனுபவப்பட்டாய் ,அமைதியைக் கண்டு கொண்டாய்,அதனால் தான் நான் உன்னிடம் சொல்கிறேன்,அதற்குப் பழகிப்போகாதே.ஏனெனில் ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது ரொம்ப எளிது.அது மிகவும் வலிமையான போதை. நம் தினசரி வாழ்வில் ,வெளித் தெரியாத துயரங்களில், நாம் செய்யும் தியாகங்களில்,நமது கனவுகள் அழிந்து போனதற்கு காதலைக் குறை கூறுவதில் வேதனை இருக்கிறது.வலி அதன் உண்மை முகத்தைக் காட்டும் போது, அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் தன்னல மறுப்பாகவோ, தியாகமாகவோ, கோழைத்தனமாகவோ மாறுவேடத்தில் வரும் போது மிகவும் வசீகரமானதாக இருக்கும். எவ்வளவு தான் நாம் அதனை நிராகரித்தாலும் மனிதர்களாகிய நாம் வலியுடன் இருப்பதற்கு அதனுடன் சரசமாடுவதற்கு அதனை நம் வாழ்வின் ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்வதற்கு ஏதாவதொரு வழியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம்.’

பிரேஸிலுக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்னர்,பண்ணை நிர்வாகம் குறித்துப் படிக்கவென இரவல் வாங்கிய புத்தகத்தைக் கொடுப்பதற்காக நுாலகம் சென்ற மரியாவிடம் தோழியாகிவிட்ட நுாலகர், மரியா முதன் முதலாக வந்த போது ஒரு பாலியல் தொழிலாளியாகத் தான் அறிய வேண்டியவைகளுக்கு ஏதும் புத்தகம் இருக்கின்றதா எனக் கேட்டதை நினைவு படுத்துகின்றார். இதோ அந்தப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கின்றோம் என்கிறார். அப்போது அப்பெண்கள் இருவரிடையில் உரையாடல் நிகழ்கின்றது. நுாலகர் கேட்கின்றார், உனக்குத் தெரியுமா ‘கிளிட்டோரிஸ்’ சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. 1559 ல் தான் ரியால்டோ கொலம்போ எனும் மருத்துவர் ‘டி ரி அனாடமிகா’எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்ட பிறகு தான் கிளிட்டோரிஸ் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தகவலைச் சொல்லி, சில ஆப்பிரிக்கப் பழங்குடியினரால் இதை நீக்கும் வழக்கம் இப்போதும் இருப்பதைப் படிக்கிறோம், அது பெண்களுக்கான பாலுறவு இன்ப உரிமையை மறுத்துவருவது தான் என்கிறார்.

19 ம் நுாற்றாண்டில் ஐரோப்பியாவிலும் கூட பெண்ணுடலில் இருக்கும் முக்கியத்துவமற்ற பகுதியாகக் கருதப்பட்டு நரம்புத் தளர்ச்சி, வலிப்பு, மலட்டுத்தன்மை மற்றும் பாலுறவில் அதீத ஈடுபாடு போன்றவற்றுக்குக் காரணமென்று நம்பி அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதும் நடைபெற்றதுதான் எனப் பெண்கள் அவர்களது இன்பத்துய்ப்புக்கான உடலின் மெல்லிய ஒரு பாகத்தை நீக்குவதில் ஆண்மையச் சமூகம் எவ்வாறு முனைப்பாயிருந்தது என்றும் நம்மைச் சிந்திக்கச் செய்யும் உரையாடலாக அது நீள்கின்றது. ஓர் ஆணால் பெண்ணுக்கு வழங்க முடியாத பரவச அனுபவத்தை பெண்ணே தன்னுடலில் கண்டுணர முடியும் என்ற அறிதலை அவர்கள் தம் வாழ்வின் உதாரணங்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். பெண் மனதை-உடலைப் பற்றிய புரிதலின்றி ஆண்கள் தங்களது சுயத்தை மட்டுமே முன் வைப்பவர்களாக காதலிலும் காமத்திலும் இருக்கின்றனர்.

download
பெண்கள் தம் உடலை அறியாதவர்களாகவே வளர்வதும் வளர்க்கப்படுவதுமாகத் தான் இருக்கின்றனர். அவர்கள் தம் உடல் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் கூட அதிர்ச்சியாகவே பலருக்கும் இருக்கின்றது. இன்றும் இலங்கை உட்பட சில நாடுகளில் குழுக்களாக மூடிய அறைக்குள் பிளேட்டுகளால் அறுத்து நடக்கும் இக்கொடுமை நிறுத்தப்படவேண்டியது. பெண்ணுறுப்பின் உணர்வரும்பின் துண்டிப்பு என்பது காது குத்துவதைப் போலவோ அல்லது ஆபிரிக்க சில இனக்குழுக்களுக்கிடையில் தம் அடையாளங்களுக்காக முகங்களில் கீறல்களைச் செய்வதைப் போலவோ இல்லை. சில துளிகள் இரத்தம் மட்டுமே அங்கு சிந்தப்படுவதில்லை. அது அவளது பாலின்ப உரிமையை மறுக்கும் வன்செயல் தான் இது. ஏன் எதற்கு எனக் கேட்காமல் பழகிப்போய்விட்ட பல சடங்குகளைப் போல, மூடநம்பிக்கைகளைப் போல மறுக்க வேண்டிய சடங்கு அது என்ற புரிதல் இன்றும் கூட அவசியமாயிருக்கின்றது. தானொரு பெண்ணாக இயல்பான உணர்வுகளோடு தன்னுடல் பற்றிய புரிதலுக்கு முன்பாகவே அதற்கான உரிமை மறுக்கப்படும் செயல் தான் இது.

மரியா என்ற இக்கதாபாத்திரம் திரும்பி வந்து துணைவரும் இரு பெண் குழந்தைகளுமாக சுவிஸ் லுாசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் என பாவ்லோ கொய்லோ தன் பின்னுரையில் முடித்திருப்பது, அந்தரித்த படி இதை வாசித்தவர்களுக்கு ஆறுதல் தான். அவர் விரும்பாமல் தள்ளிவிடப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிவிட்ட உறுதிநிறைந்த பெண்ணாக, காதலும் வாழ்வைத் தேடுதலும் – வலி , பணம்,பாலியற்தொழிலில் பண்டமான பெண்கள், அவர்களை விலை கொடுத்துக் கொடுமை செய்யும் ஆண்கள், மனிதர்களின் உணர்வுகளுமாகத் நிரப்பியபடியிருந்த மரியாவின் கையெழுத்துப் பிரதியின் சாரம் ஒரு நாவலாகி மனிதர்களை விசாரணை செய்கின்றது.

‘நான் இரண்டு பெண்களாக இருக்கிறேன்.ஒருத்தி அனைத்து இன்பங்களும், வாழ்க்கை எனக்களிக்கும் காதலும் சாகசமும் வேண்டுமென விரும்புகிறாள். இன்னொருத்தியோ பழக்கத்துக்கும், குடும்பவாழ்க்கை, திட்டமிட்டுச் சாதிக்க வேண்டிய விஷயங்களுக்கும் அடிமையாய் இருக்க விரும்புகிறாள். இருவரும் ஒரே உடலில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபடி இருக்கின்றனர்’ என்ற வரிகள் மரியாவிற்கானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் இவரின் எழுத்துகளில் தம்மைக் காணக்கூடும்.அதற்கு மரியா போல் நம்மிடம் நாமே உண்மையானவர்களாய் சுயவிசாரணை செய்யாமல் இதைக் கண்டுணர முடியாது.

••

தமிழில் – க. சுப்பிரமணியன்.
எதிர் வெளியீடு –
விலை 220.
தர்மினி

முத்தொள்ளாயிரம் எளிய உரை ( 1 ) / வளவதுரையன்

download (16)

முத்தொள்ளாயிரம் ரொம்பப் பழமையான நூலு; எட்டுத்தொகை, பத்துப்பாட்டுக்கும் முந்தியதுன்னு கூடச் சொல்றாங்க; இதை எழுதியது யாருன்னே தெரியலை; ஆனா இதுல இருக்கற சில பாட்டுங்க நக்கீரர் எழுதிய சில நூல்கள்ள அதாவது ”கைலை பாதி காளத்தி பாதி” அப்பறம் ”திருஈங்கோய் மலை எழுபது”ன்ற நூல்கள்ல இருக்கற சில பாட்டுங்க போல இருக்கறதால அவரு எழுதி இருக்கலாம்னு சொல்றாங்க; முத்தொள்ளாயிரம்னா மூணு வகையான தொள்ளாயிரம் பாட்டுங்க உள்ள நூலுன்னு பொருளாம்; மூணு வகைனா சேர, சோழ, பாண்டியரைப்பத்தின்னு பொருளுங்க; இதுல நமக்குக் கெடச்சுது மொத்தமே 130 பாட்டுங்கதாம்!

அவங்களோட ஆட்சி எப்படி இருந்தது? வீரம் எப்படி? படைகள்ளாம் எப்படி? இருந்ததுன்னு இதைப் படிச்சா தெரிஞ்சுக்கலாம்; அத்தோட அந்தக்காலத்துல இருந்த சில பழக்க வழக்கங்களும் தெரிய வருமுங்க. மொதல்ல கடவுள் வாழ்த்து;.

கடவுள் வாழ்த்து

முன்னம் படைத்த முதல்வன்
மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்—பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்[று] அயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு

[ மன்னிய=நிலைபெற்றுள்ள; நாண்மீன்=நட்சத்திரம்; மதி=சந்திரன்; கனலி= சூரியன்; அயரும்= சொல்லும்; திரை=அலை; ]

ஆகாசத்துல இருக்கற நட்சத்திரம், சந்திரன், சூரியன் எல்லாத்தையும் படைச்சது ஆதிமூலமா இருக்கற சிவன்தானே; ஆனா அது தெரிஞ்சிருந்தும், அவனை ‘ஆதிரையான், ஆதிரையான்’ன்னு இந்த உலகம் சொல்லுதேன்னு இந்தப் பாட்டு வியப்பா சொல்லுது.
அவன்தான் எல்லாத்தையும் படைச்சான்; ஆதிரையோட எல்லா நட்சத்திரத்தையும் அவன்தானே படைச்சான்; அப்படி இருக்கச்சே அவனை ஆதிரையான், ஆதிரையான்னு மட்டும் இந்த உலகம் சொல்லுதே; ஆதிரை நட்சத்திரம் அவனைப் போலவே செவப்பா இருக்கும்; அதுவும் அவனைப் போலவே ஆடிக்கிட்டு இருக்கும். அதால அப்படிச் சொல்றாங்களாம். ஆனா அவனுக்குப்போயி உவமை சொல்லமுடியுமா? உருவம் சொல்லமுடியுமா? இல்ல; பெயரைத்தான் சொல்ல முடியுமா? என்னா இந்த ஒலகம் இப்படிப் பேசுதேன்றதுதான் இதுக்குப் பொருளு; அவன் தன்மையை விடக் கொறைவானதைச் சொல்லக் கூடாதுங்களே!

முத்தொள்ளாயிரம் 2 புகழ்

இன்தமிழால் யாம் பாடும் பாட்டு
மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளும்
கடம்பம்பூ கொண்டேத்தி அற்றால்—தொடங்கமருள்
நின்றிலங்கும் வென்றி நிறைகதிர்வேல் மாறனை
இந்தமிழால் யாம்பாடும் பாட்டு

மொதல்ல இருக்கற 41 பாட்டுங்க பாண்டியனைப் பாடுது; இந்தப்பாட்டுல முருகனை, பாண்டியனை, செந்தமிழைப் பாராட்டறாரு; முருகன் நான் கொடுக்கறக் கடம்பப் பூ மாலையை மகிழ்ச்சியோட ஏத்துக்கறாரு. அதேபோல பாண்டிய மன்னன் நான் கொடுக்கற தமிழ்ப் பாமாலையையும் ஏத்துக்குவான்னு சொல்றாரு.
”தொடங்கற போரில வெற்றி கொள்ளும் பாண்டியனை நான் இனிமையான தமிழால பாடற பாட்டு மயிலை வாகனமா வச்சுருக்கற முருகனுக்கு நான் கடம்பமாலை சாத்தற மாதிரி”ன்னு அவரு சொல்றதுதான் பாட்டோடப் பொருளு.


முத்தொள்ளாயிரம் 3. சூடிய பூ

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப்
பைங்கண் வெள்ளேற்றான்பால் கண்டற்றால்—எங்கு
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப்படும்

இந்தப் பாட்டுல ஒரு பாரத நிகழ்ச்சி சொல்லியிருக்காரு; குருச்சேத்திரப் போர் நடக்குது; அதில பதிமூணா நாள் போருல அருச்சுனன் வேறெங்கோ போய்ப் போர் செய்யறான். அப்ப அவன் மகன் அபிமன்யுவை எல்லாரும் சேந்துகிட்டுக் கொன்னுடறாங்க; வந்த அருச்சுனன் துடிக்கறான்; என் மகனைக் கொன்னவங்களை நாளைக்கு நான் சாகடிப்பேன்; இல்லன்னா தீயில குதிச்சுடுவேன்னு சபதம் செய்யறான்; அதோட எதுவும் சாப்பிடாம இருக்கறான். அப்ப கண்ணன் அருச்சுனனைச் சாப்பிடச் சொல்லறான். அதுக்கு அருச்சுனன், “நான் சிவனுக்குப் பூசை செய்யாம சாப்பிடமாட்டேன்ல” இங்க எங்க பூசை செய்யறது”ன்னு கேக்கறான். உடனே கண்ணன், “ என் தலை மேலே பூ போட்டுப் பூசையைச் செய்; அது சிவனின் காலடியிலப் போய்ச் சேரும்”னு பதில் சொல்றான்.

அதே மாதிரி அருச்சுனன் பூசை செய்யறான். அன்னிக்கு ராத்திரியே அருச்சுனன் கைலாயம் போய்ப் பாக்கறான்; அங்க இவன் கண்ணன் தலையில போட்ட பூவெல்லாம் சிவனோட காலடியில கிடக்குதுங்க;
விசயன் போட்ட பூவெல்லாம் வெள்ளையான காளை மேல வர்ற சிவனோட காலடியில கிடக்குதுல்ல; இங்க எல்லா அரசரும் பாண்டியனோட காலடியில வந்து விழுந்து வணங்கறாங்களாம்; அப்ப அவங்க அவங்க தலையிலேந்து பூவெல்லாம் பாண்டியன் காலடியில விழுந்து கிடக்குமாம். இதான் பாட்டோட பொருள்; பாண்டியன் எவ்வளவு உயர்ந்தவன்னு சொல்ற பாட்டு இது.

முத்தொள்ளாயிரம்–4 எங்கே ஒளித்தாய்?

கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்
பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால்—யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு

[கூந்தன்மா=பிடரி மயிர் உள்ள குதிரை; ஞான்று=அப்பொழுது; தேறுநீர்=தெளிந்த நீர்]

இந்தப் பாட்டு பாண்டியனைக் கண்ணனாகவே நெனச்சுப் பாடற பாட்டுங்க; திருமால் மார்பில ஒரு மறு இருக்குமாம்; அதைக் கேக்கதுஇந்தப் பாட்டு; “பாண்டியனே! தேரெல்லாம் உடைய மன்னவனே! தெளிந்த நீர் இருக்கற கூடல்ல இருக்கறவனே! நீ பிடரி மயிர் உள்ள குதிரையைக் கொன்ன போதும், குடக் கூத்தாடியபோதும், நப்பின்னையைக் கட்டிக்கிட்ட போதும் ஒன் மார்புல மறு இருந்ததே! இப்ப அதைக்காணோமே? எங்க ஒளிச்சு வச்ச?”
இந்தப் பாட்டுல மூணு கதை வருது; கண்ணனோட மாமன் கம்சன் கண்ணனைக் கொல்ல ஒரு அரக்கனை அனுப்பி வச்சான்; அந்த அரக்கன் ஒரு குதிரையா வந்தான். கண்ணன் அந்தக் குதிரையைக் கொன்னு போட்டான்.
வாணன்னு ஒருத்தன்; அவன் பொண்ணு பேரு உஷை; அவளை மன்மதன் மகனான அநிருத்தன் காதலிச்சான். அதனால அநிருத்தனை புடிச்சுப் போயி வாணன் சிறையில வச்சுட்டான். கண்ணன் அவனை மீட்டுக்கொண்டு வர்றதுக்காக மண்ணாலயும் செம்பாலயும் குடங்கள் செய்து குடக்கூத்தாடினானாம்.
மூணாவது கதை கண்ணன் எடையர் குலத்தில் அவதரிச்சதைப்பத்தி; அங்கதானே ஏழு எருதுகள அடக்கி நப்பின்னையை கல்யாணம் செஞ்சுகிட்டான். இதெல்லாம் இந்தப்பாட்டுல வருது.
==============

( தொடரும் )

வரும்போது இருந்த வெயில். / வண்ணதாசன்.

18157841_10213179660225259_5741567510453736258_n

இந்திரா கதவைத் திறக்கும் போது பெருமாள் மட்டும் இல்லை. அவளுடன் ஒரு பையனும் நின்றுகொண்டு இருந்தான். நாரத்தை இலையா எலுமிச்சையா என்று தெரியவில்லை, பெருமாள் தன் விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கிக்கொண்டு இருந்தாள்.

அவர்கள் இரண்டு பேருக்கும் பின்னால் , அவர்களோடு சேர்ந்து வீட்டிற்குள் நுழைவதற்குத் தயாராக இருந்த வெயிலின் மேல் அந்த நசுங்கின வாசனை பூசப்பட்டிருந்தது. பெருமாள் அந்தப் பையனின் உச்சந்தலையில் கை வைத்து, ‘குடையை எடுத்துட்டு வந்திருக்கலாம். சொல்லச் சொல்ல வேண்டாம்னுட்டே. தீயா பொரிக்கி.’ என்று சொன்னாள். அந்தப் பையன் குனிந்துகொண்டே கலைந்த தலையைச் சரி செய்து வகிட்டில் கை வைத்து ஒதுக்கி நீவிவிட்டுக்கொண்டான். இந்திராவை அவன் பார்க்கவே இல்லை.

‘ரெண்டு பேரும் உள்ளே வாங்க, ஏன் வெளியிலேயே நீக்கீங்க?’ இந்திரா கூப்பிடும் போதும் பெருமாள் அந்த இலையை இப்போது சிறு குளிகையாக உருட்டி முகர்ந்துகொண்டு இருந்தாள். வெயில் அதன் பச்சைச் சாறு கசிய அவள் விரல்களுக்கு இடையில் இருந்தது.

‘அதைத் தூரப் போட்டுட்டு வா, பெருமாக்கா” இந்திரா சொன்னதும் பெருமாள் வெளியே போய் அதை உதறினாள். அந்தப் பையன் அப்படியே நின்றுகொண்டு இருந்தான். சாயம் போயிருந்த அவனுடைய நீல முழுக் கால்சட்டை கரண்டைக்கு மேல் இருந்தது. அவனைப் பொறுத்தவரை ஒரு புதிய சணல் சாக்கு போல அடித்துக்கொண்டிருந்த வெயிலின் வாடை ரொம்பப் பிடித்திருந்தது. வீட்டிற்குள் போக விருப்பம் இல்லாததற்கு அதுவும் ஒரு காரணம்.

பெருமாள் கையை மட்டுமல்ல, முகத்தையும் வெளியில் இருக்கிற குழாய்த் தண்ணீரில் கழுவி, வளைந்த சுட்டு விரலால் ஒரு சிறிய தகடாகத் தண்ணீரை வழித்து எடுத்தபடி,’ நான் சொன்னேன் லா இந்திராம்மா?’ என்றாள். அந்தப் பையன் இப்போது இந்திராவை ஒரு சிறிய பொழுது பார்த்துவிட்டுக் குனிந்துகொண்டான். இந்த இடத்தைவிட்டு அகன்றுவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

பெருமாள் அத்தை அவனிடம் எல்லாவற்றையும் சொல்லித்தான் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். இன்றைக்கு அவனைக் கூட்டிக்கொண்டு வந்திருப்பது சும்மா தான். அந்த வீட்டில் இருக்கிற ஜன்னல் கதவுகளையும், ஒவ்வொரு அறையிலும் இரண்டு இரண்டாக ஓடிக் கொண்டு இருக்கிற விசிறிகளில் படிந்திருக்கும் தூசியையும் துடைத்துக் கொடுக்க வேண்டும். அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை என்றால் கீழே மூன்று, மச்சில் இரண்டு என்று இருக்கிற ‘பாத் ரூமை’யும் கழுவிக் கொடுக்கலாம். பெருமாள் அத்தை மிகுந்த சங்கடத்துடன் ‘பாத் ரூம்’ என்றுதான் சொன்னாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை.

‘மத்த வீட்டு ஆட்கள் மாதிரி இல்லை இந்த வீட்டு ஐயாவும் அம்மாவும். நான் இந்த வீட்டில் பத்துப் பன்னிரண்டு வருஷமா வேலைக்கு நிக்கேன். உண்கிற சோத்துக்கும் உடுத்துகிற துணிக்கும் தரித்திரியமில்லாமல் இண்ணையத் தேதி வரைக்கும் கழிஞ்சுக்கிட்டு இருக்கு. அக்காங்கிற சொல்லுக்கு அடுத்த சொல் சொல்வார் கிடையாது. இங்கே நிக்கப் படாது, அங்கே உக்காரப்படாதுண்ணு ஒரு நாள்க் கூட சொன்னது இல்லை. நாமளும் உப்புக்கு உப்பா, உரைப்புக்கு உரைப்பா, அது அதுக்குத் தக்கன குனியுறதுக்குக் குனிஞ்சு, நிமிர்கிறதுக்கு நிமிந்து நடமாடிக்கிடுதோம். அதையும் சொல்லணும்’லா”.

இதை எல்லாம் இவனிடம் சொல்வது போல, பெருமாள் அத்தை இவனுடைய அம்மாவிடம்தான் சொல்லிக்கொண்டு இருந்தாள். அம்மாவின் முகத்தை இவன் பார்க்கவே இல்லை. அம்மா மூக்கை உறிஞ்சிக்கொள்வதையும் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொள்வதையும் பார்த்துத்தான் அவன் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?. பெருமாள் அத்தை சொல்வதை அவளால் தாங்க முடியவில்லை. அப்புறம் எதற்கு, பெருமாள் அத்தை சொல்கிற ஒவ்வொன்றுக்கும் ‘அது சரி’, ‘அது சரி’ என்று சொல்லவேண்டும்.? எல்லாம்சரியாக இருப்பதற்கு ஏன் தொண்டை கம்ம வேண்டும்?

அம்மாவிடம் பெருமாள் அத்தை இதை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கையில், இவனுக்கு சிமெண்டுத் தொட்டித் தண்ணீரில் விழுந்திருக்கிற வெயில் நெளிந்து தொந்தரவு செய்தது. எழுந்திருந்து போய், ஒரு செம்பில் தண்ணீரைக் கோதி, வாசல் சுவரில் தகர டப்பாவில் வைத்திருக்கிற டேபிள் ரோஸ் செடிகளுக்கு ஊற்றிவிட்டு வந்தான். எல்லா வாடகை வீட்டுச் சுவர்களிலும் அடர்ந்த கருஞ்சிவப்புப் பூக்களோடு இப்படிச் சில செடிகள் இருப்பதற்கு அவசியம் உண்டு என நினைத்தான். இக்கட்டான சமயங்களில் எழுந்துபோய் அதற்குத் தண்ணீர் வார்த்துவிட்டு, அந்த இடத்திலேயே அசையாமல் நின்று ஒரு சிகரெட் புகைத்துவிட்டு வரும் பழக்கம் உள்ள அப்பாவின் முகம், அப்போது அவனுக்கு மிக அருகில் தெரிந்தது.

download (26)

‘வா,உள்ளே வா’ என்று இந்திரா அவனுடைய தோளில் கையை வைத்துக் கூப்பிட்டாள். மணிக்கட்டுக்கு உள்ப்பக்கமாகக் கடிகாரம் கட்டியிருக்கும் முருகேஸ்வரி டீச்சர் தான் இப்படி அவனுடைய தோளில் கைவைத்து எப்போதும் பேசுவாள். ஜவஹர் ஸ்கூலை விட்டு அவனை அனுப்பவே மாட்டேன், டி.சி. கொடுக்கக் கூடாது என்று கட்டாயப் படுத்தி, பத்தாவது வரை அங்கேயே ‘ நீ எதைப் பத்தியும் கவலைப் படாமல் படி, உன் படிப்புக்கு நான் ஆச்சு’ என்று சொன்னது முருகேஸ்வரி டீச்சர்தான். இதை அப்பாவும் அம்மாவும் இருக்கும் போதுதான் வீட்டில் போய்ச் சொன்னான். அப்பா மறு நாளே, சாயுங்காலம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்க்கூடத்துக்கு வந்து டீச்சரைக் கும்பிட்டார்.

செம்பருத்திப் பூக்கள் மூங்கில் பட்டிகளுக்கு ஊடாக எட்டிப்பார்த்திருக்கிற முன் தாழ்வாரத்தில் அப்பா முருகேஸ்வரி டீச்சரைக் கும்பிட்ட தோற்றம் இன்னும் அப்படியே இருக்கிறது. அப்பா குரல் கலங்கியிருந்தது. யாரோ பிடித்து உலுப்பியது போல, அவருக்குள் நிரம்பியிருந்தவை எல்லாம் அப்போது உதிர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அப்பாவின் இரண்டு கைகளின் முழங்கையும் மணிக்கட்டு வரை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்தது. உள்ளுக்குள் ஒரு மொக்கையோ பூவையோ வைத்திருக்கும் தினுசில் கூப்பியிருந்த கைகளுடன் அவர் டீச்சரைக் கும்பிட்டார். அடுத்த கணத்தில், டீச்சரின் கைகளைப் பற்றி, தன் நெற்றியில் வைத்துக்கொண்டார்.

‘ நல்லா இருங்க தாயி. எம் புள்ளை இனிமேல் கரையேறியிருவான்’ என்று சொல்லி, எடுத்த இடத்தில் வைப்பது போல், முருகேஸ்வரி டீச்சரின் கைகளை மெதுவாகத் தளரவிட்டார். டீச்சர் தன்னுடைய கைகளை அதற்கு அப்புறம் என்ன செய்வது என்று தெரியாமல், இயல்பில்லாமல் நெஞ்சோடு மடித்துக் கட்டுவதும் தளர்த்துவதுமாக இருந்தார்.

இந்திரா அவனை அப்படித் தோளில் கை வைத்துக் கூட்டி வருவதை பெருமாள் அத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். கால் சட்டையில் இருந்து ஒரு திரிபோலப் பிரிந்து தொங்கிய நூல் மேல் பாதத்தில் உரசி ஒரு வித அசௌகரியத்தை உண்டு பண்ணியது. குனிந்து அதைச் சுண்டியிழுத்து அத்துப் போடவேண்டும் போல இருந்தது அவனுக்கு.

பெருமாள் அத்தைக்கு என்ன தோன்றியதோ? இவனுக்குத் தாகமாக இருப்பதாகவும், பேசமுடியாத அளவுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டதாகவும் நினைத்து, உள்க் கட்டு வரை போய் ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீரும் அதைக் குடிப்பதற்கு ஒரு கண்ணாடி டம்ளரும் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தாள். வெள்ளையும் நீலமுமாகக் கொடி போலச் சுருண்டு மேலேறிக் கொண்டிருந்த அந்தக் கண்ணாடி டம்ளரை அவனுக்குப் பிடித்திருந்தது. அப்படி மேலேறிய கொடிகள். அந்தக் கண்ணாடி டம்ளரின் விளிம்புகளுக்கும் வெளியே வளர்ந்து அந்த அறை முழுவதும் படர்ந்திருப்பது போல இருந்தது. குடித்தது போக, டம்ளரைப் பெருமாள் அத்தையிடம் நீட்டினான். இன்னும் ஒரு மடக்குக்கு மேல் மிச்சம் இருந்த தண்ணீரை, அண்ணாந்து பெருமாள் அத்தை குடித்துவிட்டுச் சிரித்தாள். இந்தச் சிரிப்புதான் அந்த டம்ளரின் படர்ந்திருந்த கருநீலக் கொடிகளில் காய்த்துத் தொங்கும் குலைகளாக இருக்கும். அப்படித்தான் அவனுக்குப் பட்டது. அவன் பெருமாள் அத்தையின் கழுத்துக்குக் கீழேயே பார்த்தபடி இருந்தான். பெருமாள் அத்தை தன் மேல் படர்ந்திருந்த கொடிகளை விலக்குவது போல, சேலைத் தலைப்பை அள்ளிப் போட்டுக்கொண்டாள்.

வீட்டுக்குள் வருகிற புது ஆட்களிடம் நின்று பேச, ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். வெளிப்பக்கத்தில் இருந்து வருகிற வெளிச்சத்தில் இவர்கள் மூன்று பேருடைய நிழல்களும் தரையில் விழுந்து மேகமாகிக் கிடந்தன. கிருஷ்ணனும் ராதையும் ஊஞ்சலாடுகிற ஒரு படமிருந்த சுவர்ப்பக்கம் வந்ததும் மேற்கொண்டு நகராமல் நின்று, அந்த இடத்திலிருந்து பேசத் துவங்குவது உகந்தது என்று தீர்மானித்த முகத்துடன், ‘உம் பேரு என்ன ப்பா?’ என்று கேட்டாள். கேட்கும் போதே ,’எம் பேரு இந்திரா’ என்று சொல்லிச் சிரித்தாள், களக்காட்டு மாமா வீட்டில் யாரோ ஒருத்தருக்கு இதே மாதிரிச் சிரிப்பு உண்டு. குருவ மண் வாசனையை பக்கத்தில் நடமாடும் போது எல்லாம் உண்டாக்குகிற அந்த முகத்துக்கு இதே போல நெருக்கமான மஞ்சள் பற்கள் இருந்திருக்கிறது.

‘திரிகூடம்’ என்று சொன்னான். அவனால் இப்போது மறுபடியும் இந்திராவைப் பார்க்க முடிந்தது. இதுவரை முகமற்றவனாக இருந்தவனுக்கு, இந்தப் பெயரைச் சொல்லும் போது ஒரு சரியான அடையாளம் வந்துவிட்டது. பள்ளி ஆண்டு விழாப் பரிசளிப்புகளில் திரும்பத் திரும்ப மேடைக்கு அழைக்கப்படும் அந்தப் பெயரை, இந்த வீட்டு ஹாலில் அப்படி யாரோ உச்சரித்துக் கூப்பிடுகையில் ஒலிபெருக்கிக் கோளாறில் கொஞ்ச நேரம் உய்யென்று ஒரு விசில் சத்தம் மட்டும் வந்து, மறுபடியும் அவன் பெயர் சொல்லப்படுவது போல, அவனே மீண்டும் ‘திரிகூடம்’ என்றான்.

பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த பெருமாள் அத்தை, ‘வீட்டில ராஜன்’னு கூப்பிடுவாங்க. பள்ளிக்கூடத்தில ‘திரிகூடம்’ ‘என்று சிரித்தாள். அவளுக்குத் தானும் இந்திராவைப் போல, அந்த இடத்தில் அவன் தோளில் கையைப் போட்டபடி பிரியமாக ஏதாவது பேசவேண்டும் போல ஆசை உண்டாயிற்று. தான் நின்ற இடத்தை மாற்றி அவன் வலது தோளுக்குப் பக்கமாகப் போய் நின்று, ‘ அம்மா கேக்கதுக்குப் பதில் சொல்லு, ராஜன்’ என்றாள்.

‘திரிகூடம் ணா வெறும் திரிகூடமா? திரிகூட ராஜன், திரிகூட ராசப்பன் … அந்த மாதிரியா?’ – இந்திரா கேட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை தான் இப்போதும் ‘ வெறும் திரிகூடம் தான் இந்திராம்மா.’ என்று சிரித்தாள். பெருமாள் அத்தை அப்படிச் சிரித்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பெருமாள் அத்தை அவனுடைய அப்பாவிடமும் இப்படித்தான் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அவன் பார்க்க, சமீபத்தில் அம்மா கூட அப்படிச் சிரித்துப் பேசிப் பார்த்தது கிடையாது.

இனிமேல் பெருமாள் அத்தையைப் பேச விடக்கூடாது, தானே பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ‘நீ போய் பாத்திரம் எல்லாத்தையும் நனைச்சு வச்சிட்டு, துணியை சர்ஃப்ல முக்கி வச்சிட்டு வா பெருமாக்கா. நான் இவன் கூடக் கொஞ்சம் விசாரிச்சுக்கிடுதேன். நீ வந்த பிறகு என்ன ஏதுண்ணு விபரம் சொல்லிக்கிடலாம்’ என்று இந்திராவே சொல்லி அவளை அனுப்பிவைத்தது நல்லதாகப் போயிற்று.

தானும் உட்கார்ந்துகொண்டு இவனையும் நாற்காலி ஒன்றில் உட்காரச் சொன்ன இந்திராம்மா, ‘வசதியா இருக்கா? இல்லை இப்படிக் கீழே உட்கார்ந்துக்கிடுவமா?’ என்று இவன் பதில் சொல்வதற்கு முன்பே, எழுந்துவந்து தரையில் உட்கார்ந்துகொண்டாள். ஒவ்வொரு கட்டாக, எந்தக் கதவும் மூடப்படாமல் திறந்து கிடக்க இப்படித் தரையில் உட்கார்ந்தது திரிகூடத்திற்குப் பிடித்திருந்தது. நின்றுகொண்டு இருந்ததை விட, உட்கார்ந்ததும் இந்த வீடு வேறொரு வீடாக மாறிவிட்டதாகக் கூடத் தோன்றியது. அம்மா பெரும்பாலும் மத்தியானத்தில் படுத்துத் தூங்குகிற அடுக்களைத் தரையின் சிமெண்ட் சொரசொரப்பு அவன் விரல்களுக்குத் தெரியும். திரும்பத் திரும்ப வழவழப்பான இந்த ஹாலின் தரையை அவன் தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அப்படிப் படுத்திருக்கும் போது எல்லாம் அம்மா அழுதுகொண்டும் இருந்திருக்கிறாள்.

திரிகூடம் இந்திராவின் கண்களைப் பார்த்துக் கொண்டான். சற்று ஒடுங்கியவையாக அவை இருந்தன. சிரிப்பு, அழுகை என்று அதற்கென்று பிரத்யேகமாக எதுவும் வைத்திருக்கவில்லை. கண்ணாடி அணிகிறவர்கள் கண்ணாடியைக் கழற்றி வைத்திருக்கும் நேரத்துக் கண்கள் போல சோர்வும் ஆதுரமும் படிந்தவை. அவனுடைய அப்பாவைப் பெற்ற ஆச்சியின் கண்கள் அப்படித்தான் இருக்கும்.

‘எங்க அப்பாச்சி முகம் மாதிரி இருக்கு, உங்களுக்கு” எடுத்த எடுப்பில் அவனுக்கு இதை எப்படி இந்திராவிடம் சொல்லத் தோன்றியது என்று தெரியவில்லை. அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே என்று எல்லாம் சொல்கிற அமைதியான ஒரு சிரிப்பு இந்திராவிடம்.

’உங்க ஆச்சி பேரு என்ன? ‘ என்ற கேள்வி திரிகூடத்திற்கு மிகுந்த உற்சாகம் கொடுத்தது. அவளுடைய பெயரைச் சொல்வதன் மூலமே அவளுடைய முழுச் சித்திரத்தை வரைந்துவிட முடியும் என்று தோன்றிற்று. யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைவாக நிறுத்திவைத்திருந்த தேரை ஒற்றை ஆளாக இழுத்து வருகிற மாதிரி சொன்னான், ‘ஆச்சி பேரு மந்திரம். சீட்டுக் கம்பேனி மகராச பிள்ளை கேள்விப்பட்டு இருக்கேளா? அது எங்க அப்பாத் தாத்தா ல்லா!’

இந்திராவுக்கு அவளைச் சுற்றிய உலகம் அப்படியே ஒரு பனிக்கட்டியாக உறைந்துவிட்டது. ஆனால் பளிங்கு மாதிரி எல்லாம் தெரிகிறது. சீட்டுக் கம்பெனி நொடித்துப் போனது. மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வெள்ளிப் பாக்குவெட்டி பழைய விலைக்கு வந்தது, எம்.டி.ட்டி 2992 வண்டிச் சாவியைப் பிடுங்கிக்கொண்டு மகராசப் பெரியப்பாவை தச்சநல்லூர் ரயில்வே கேட் பக்கம் இறக்கிவிட்டுவிட்டுப் போனது எல்லாம் இடது கையின் குழிவில் ஐஸ்கட்டியை வைத்து, எலுமிச்சம் பழம் பிழிகிற கட்டையால் அடித்துப் பொடியாக்குகிற மாதிரிச் சிதறின. வைரம் நொறுங்கி வைரம் மினுங்கி வைரம் கரைந்தது.

’ சேது ராமன், மத்தியார்ஜுனன், அன்ன ராஜு எல்லாம்….?’ இந்திரா திரிகூடம் முகத்தைப் பார்த்துக்கொண்டு கேட்கும் போது, இந்த அறை, அடுத்த அறை, மொத்தமாக இந்த வீடு முழுவதுமே கனவு போல உருகியோடிக் கொண்டிருந்தது அவளைச் சுற்றிலும்.

‘எங்க அப்பா தான் சேது’ என்று சொல்கிறவனின் கையை இந்திரா எட்டிப் பிடித்துக்கொண்டாள். மந்திரத்துப் பெரியம்மை வீட்டு வேப்பமரக் காற்றில் கலைந்த சிகையை அவளால் லேசில் ஒதுக்கிவிட முடியவில்லை. மந்திரத்துப் பெரியம்மை வீட்டுக் கொலு பொம்மைகள் செந்தாமரை நிறத்தில் அவளுக்கு முன்னால் நிரம்பிக்கொண்டே போயின. மூக்கு, முகவாய் எதிலும் ஒரு ரோம இழை கூடக் கோரை இல்லை. சரஸ்வதி, லட்சுமி சிரிப்பு எல்லாம் அப்படியே உதட்டோரத்துப் புள்ளியோடு மிதந்தன. வாசலில் மந்திரத்துப் பெரியம்மை கல்யாணத்துக்குக் கட்டின மணமேடை அப்படியே சச்சதுரமாகக் கிடந்தது. இந்திரா அதைச் சுற்றிச் சுற்றிச் சீட்டிப் பாவாடையோடு ஓடிக்கொண்டு இருந்தாள். மகராசப் பெரியப்பா போட்டிருக்கிற அத்தரும் ஜவ்வாதும் ஒரு நீராவி போலப் படர்ந்துகொண்டிருந்தது.

images (7)

‘சேதுவோட பிள்ளையா நீ?’ இந்திரா வாய்விட்டுக் கேட்கவில்லை. ஆனால் திரிகூடத்தின் இரண்டு கையையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டாள். தன் உதடுகளில் ஒவ்வொரு கையாக வைத்து முத்திக்கொண்டாள். நெஞ்சில் வைத்துக் கொண்டாள். அவளுடைய கை சுடுகிறதா தன்னுடைய கை சுடுகிறதா என்று திரிகூடத்திற்குத் தெரியவில்லை. ஒரு கையை மெதுவாக உருவிக் கொண்டான். இன்னொரு கையைப் பிடித்திருந்த இந்திராவின் கை அப்படியே அவளுடைய சம்மணமிட்ட இடது முழங்கால் சேலை மடிப்பில் கிடந்தது.

‘மத்திச் சித்தப்பா செத்துப் போச்சு’ என்று திரிகூடம் சொன்னதும், இந்திரா அவனுடைய கையை நழுவவிட்டுவிட்டு, ‘ஐயோ’ என்று வாயைப் பொத்திக்கொண்டாள். இதுவரை இல்லாத ஒரு தீர்க்கமான முகம் அப்போது வந்திருந்த இந்திரா, ‘நானும் அவனும்தாம் ஒண்ணாப் படிச்சோம். ஆனால் சேதுதான் எப்போ பார்த்தாலும் எங்கூடச் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பான்.’ என்று சிரித்தாள். ‘அவன்கிட்டே எவ்வளவு அடி பட்டிருக்கிறேன் தெரியுமா?’ என்று மேலும் சிரித்தாள். ‘சீட்டு, கேரம் எல்லாத்திலேயும் சேது ரொம்பக் கள்ள ஆட்டை விளையாடுவான்’. இந்திராவுக்குச் சிரித்துச் சிரித்து இப்போது அழுகை வந்திருந்தது.

திரிகூடம் இந்திரா முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுடைய அப்பாவை சேது, சேது என்றும் அவன் அவன் என்றும் சொல்லிக்கொண்டு அடுக்கடுக்காகச் சிரிக்கிற இந்திராவின் முகம் அடைந்துகொண்டே போன ஒரு பிரகாசத்தில் அவனுடைய உடம்பு சொடுக்கியது. முதலில் ஒரு சந்தோஷம் போல இருந்து, தாங்க முடியாக துக்கத்தை உண்டாக்கத் துவங்குவதை உணர்ந்தான். அவனுக்கு அவனுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

‘பெருமாள் அத்தை உள்ளே ஜோலியா இருக்காங்களா? அவங்க கிட்டே சொல்லீருங்க’ திரிகூடம் இந்திராவிடம் சொல்லிக்கொண்டே எழுந்திருந்தான்.

வரும்போது இருந்த வெயில் இன்னும் அப்படியே இருந்தது. கொஞ்சம் கூடத் தணியவே இல்லை.

‘%

****

புத்திசாலித்தனம் (சிறுகதை) / செல்வராஜ் ஜெகதீசன்

images (5)

(பொறியியல் துறை சாராதவர்க்கும் இக்கதை புரியும் என்றே நினைக்கிறேன்)

“பிடிக்காததை செய்யறதுதான் புத்திசாலித்தனம்”

அப்துல்லாவிடம் இருந்து பேச்சுவாக்கில் ஏதாவது ஒரு அரிய வாக்கியம் இப்படி வந்து விழும்.

நாலைந்து நண்பர்கள் கூடும் அபுதாபியின் வாராந்திர தேநீர் கடை சந்திப்பில் எப்போதாவது துபாயில் இருந்து வந்து கலந்து கொள்ளும் அப்துல்லா.

பிடித்தது பிடிக்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி, அமீரகத்தில் கால்பதித்த நாள் முதல், கொடுக்கப்பட்ட (முற்றிலும் என் அனுபவத்திற்கு சம்பந்தமில்லாத) வேலையை இரண்டு வருடங்களாக ஒட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்த வாசகம் ஏதேதோ பொருள் தந்தது. கொடுத்த வேலையை பிடிக்கவில்லை என்று சொல்லி அடம்பிடித்திருந்தால் இந்நேரம் வந்த வேகத்திலேயே திரும்பி தாய்நாடு போயிருப்பேன். கடந்த இரண்டு வருடங்களை அப்படி இப்படி ஒட்டியதில் சொந்த ஊரில் ஏற்பட்ட அனுகூலங்கள் கணிசம்.

மேலும் மனதை விட்டு அகலாத பின்வரும் நிகழ்வுபோல் எத்தனையோ.

இன்னமும் நினைவில் உழலும் அந்த நிகழ்வு, அமீரகத்தின் சூடான ஒரு மாதத்தில் நடந்தது. கிழமை கூட நன்றாக நினைவில் உள்ளது. ஞாயிறு. வெள்ளி சனி விடுமுறை முடித்து கொஞ்சம் மந்தமாக தொடங்கிய ஞாயிறு.

அன்று காலை ஒன்பது மணிக்கே நல்ல வெயில். அயல் நாட்டு வேலை என்று வந்து இறங்கியபோது கொளுத்தி எடுத்து பின் கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப்போன வெயில். ஜேசிபி இயந்திரத்தின் மேல் அமர்ந்தபடி முத்து வெயிலை ரசித்தபடி என்னுடைய உத்தரவுக்காக காத்திருந்தான்.

சூப்பர்வைசர் வேலையில் முதல் நாள் அன்று. அயலக வேலையில் இது இரண்டாவது மாற்றம்.

முதல் மாற்றம் இரண்டு வருடங்களுக்கு முன் வேலையில் சேர்ந்த பொழுதில் நிகழ்ந்தது. டிசைன் என்ஜினீயர் என்ற கனவுகளோடு வந்தவன் ப்ராஜெக்ட் கண்ட்ரோல் செக் ஷனில் அமர்த்தப்பட்டேன். அப்படி இப்படி என்று இரண்டு வருடங்களை ப்ராஜெக்ட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவதில் ஒட்டியாகி விட்டது. அமீரகத்தில் ஐந்தாறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட உயர் மின்னழுத்த சப்ஸ்டேஷன்கள், ஒன்றுடன் ஒன்று இணைப்பு கொடுக்கப்பட்ட ப்ராஜக்ட்.

அந்தப் ப்ராஜக்ட் முடிந்ததும் அடுத்ததில் டிசைன் என்ஜினியர் வேலைக்கு மாற்றுவோம் என்று சொல்லப்பட்ட உறுதி, அமீரகப் புழுதிக்காற்றோடு போனதில், இதோ இங்கே சைட் சூப்பர்வைசராய். எதிரே முத்து ஜேசிபி யுடன்.

காலையிலேயே முதல் வேலையாய் கன்சல்டன்ட் அலுவலகம் போய் ஜேசிபி உபயோகித்து தோண்டுவதற்கு பெர்மிட் வாங்கியாகி விட்டது. அந்த ப்ராஜெக்ட் சைட்டில் பூமிக்கடியில் மின்சாரக் கேபிள்கள் ஏதாவது உள்ளதா என்று கண்டுபிடிக்க ஆங்காங்கே தோண்டிப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். எதுவும் இல்லை என்றானதும் அந்த இடத்தில் ஒரு புதிய சப்ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது.

பார்க்கும் தூரத்தில் இருந்த சைட் அலுவலகத்தில் இருந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்தேன். ஒரு கொரியனின் தலையும் தென்படவில்லை. முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் “கிம்”களும் “பார்க்”களும் நிரம்பிய அந்தக் கொரிய கம்பெனியில் இந்த சைட் வேலையை மேற்பார்வை செய்ய, அனுபவம் உண்டோ இல்லையோ, என்னை மாதிரி ஒரு இந்தியன் இருக்கும்போது, அவர்கள் அங்கே அலுவலகத்தில் காலைக் காப்பியை அருந்தியபடி இன்டர்நெட்டில் எதையாவது துழாவிக் கொண்டிருப்பார்கள்.

“சார் ஆரம்பிக்கலாமா?” என்றான் முத்து.

‘ஆரம்பி’ என்று முத்துவை நோக்கி சிக்னல் காட்டிவிட்டு சற்று தள்ளி, அந்த வெயிலிலும் பிழைத்து ஆங்காங்கே கொஞ்சம் இலைகளோடு இருந்த மரத்தடியில், போடப்பட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்தேன்.

தரையைக் கொத்தி மண்ணை வாரி ஒரு பக்கமாக போட்டபடி நகரும் இயந்திரத்தை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் இருந்து வரும்போது யாருக்கும் தெரியாமல் இன்டர்நெட்டில் இருந்து பிரிண்ட் பண்ணிக் கொண்டு வந்த ஓஷோவின் தியானம் பற்றிய சொற்பொழிவைப் படிக்க ஆரம்பித்தேன். மூன்றாவது பக்கத்தைப் படித்துக்கொண்டிருந்தவன் “சார்…தண்ணீ…” என்ற முத்துவின் குரலில் தலை நிமிர்ந்தேன்.

download (4)
தோண்டிய குழியில் இருந்த தண்ணீர் பைப் ஒன்று உடைந்து தண்ணீர் குபுகுபுவென்று வெளிவந்து கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் ஆபீசை நோக்கி ஓடினேன். கன்ஸ்ட்ரக்சன் மேனேஜரை (ஒரு கிம்) அணுகி விஷயத்தை சொன்னேன். அவன் கைகாட்டிய பைப்பிங் என்ஜினீரிடம் ஓடி (இன்னொரு கிம்) விஷயத்தைச் சொன்னேன்.

பரபரப்பு ஏதும் இல்லாமல், “என்ன பைப்பு” என்றான்.

“பீ வீ சி”

“ஆனா…நான் ஸ்டீல் பைப் என்ஜினீயர்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்க ஆரம்பித்தான்.

மறுபடியும் நான் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜரை அணுகி வேறொரு ஆளோடு சைட்டுக்கு விரைந்து போனபோது தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டிருந்தது. முத்து ஓடிப்போய் யாரையோ அழைத்து வந்து, பைப் லைனில் இருந்த தண்ணீர் வால்வைக் கண்டுபிடித்து மூடியிருந்தான்.

பிடிக்காததை செய்ததால்தானே இது போன்ற “ஸ்டீல் என்ஜினீயரை எல்லாம் பார்க்கக் கிடைத்தது?

இப்போது சொல்லுங்கள்.

பிடிக்காததை செய்வது புத்திசாலித்தனமா இல்லையா?

o

கைவிடப்பட்ட ஒரு கதை ( சிறுகதை ) : ஜீ.முருகன்

download (24)

‘நாயர் மெஸ்’ என்று ஒரு கதை எழுதி நண்பர் ஒருவருக்கு படிக்க அனுப்பியிருந்தேன். ‘கதை சரியாகவே வந்திருக்கிறது. ஆனால் உயிர்ப்பில்லாமல் இருக்கிறது’ என்றார். அவர் சொன்ன பிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனால் வழக்கம் போல அதை கிடப்பில் போட்டுவிட்டேன். இப்படித்தான் கதைக்களத்தின் தேர்வு நம்மை ஏமாற்றிவிடும். அதை எப்படி எழுதினாலும் பல்லிளித்துவிடும். ஆனால் ‘நாயர் மெஸ்’ கதையை எதற்காக எழுதினேன் என்பது முக்கியமாகப்பட்டது. அது பற்றி எழுதலாமே என ஒரு யோசனை. அதாவது கைவிடப்பட்டக் கதையைப் பற்றிய ஒரு கதையை. அப்படியே அக்கதையை சொல்லிவிடும் வாய்ப்பும் அமைந்துவிடுகிறதல்லவா.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது நண்பர்களுடன் ஒரு மதுவிடுதியைத் தேடிப் போனாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில், அதுவும் மதுவிடுதிக்குச் சென்று குடிப்பது அதுதான் முதல் முறை. சிலருடைய வழி காட்டுதல் எங்களை பழைய நாயர் மெஸ்ஸுக்குத்தான் இட்டுச் சென்றது. அது டாஸ்மாக் பாராக மாற்றப்பட்டது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. நண்பர்களுடன் அங்கிருந்து கிளம்பி வந்தப் பிறகும் நாயர் மெஸ் ஞாபகத்தில் வந்துகொண்டே இருந்தது. அது ஒரு டாஸ்மாக் பாராக மாறிப்போன இன்றைய நிலை ஏதோ ஒரு காவியத் தனமான வீழ்ச்சிப் போலவேத் தோன்றியது. அக்கதையை எழுதத் தூண்டியது அதுதான். அதன் காவிய நாயகியாக அன்னம்மா மாறினாள். அவள் நாயரோடு வாழ வந்ததும், நாயருக்குப் பின் நாயர் மெஸ்ஸின் உரிமையாளரானதும், அவளின் மரணமும் ஏனோ ஜெயலலிதாவின் வாழ்வோடு ஒப்புமை கொண்டு நின்றன. அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். இந்த ஒப்புமைகூட அக்கதையை எழுதியதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கதையை எப்படித் தொடங்குவது என யோசிக்கையில், அன்னம்மா என்ற பேரழகிக்கு நகரத்தில் நிறைய காதலர்கள் இருக்கிறார்கள். அவளின் நினைவாக அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் அன்னம் சைக்கிள் கடை, அன்னம் சலூன், அன்னம் மளிகை, அன்னம்மா பழக்கடை, அன்னம்மா உணவகம் என்பது போல பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

இவ்விதமான ஆரம்பம் கதையின் போக்கில் பொருத்தமில்லாமல் போனதால் நீக்க வேண்டியதாகிவிட்டது. மேலும் படர்க்கையில் சொன்னதால் கதையின் வசீகரம் குறைவது போலவும் இருந்தது.

பிறகு ஒரு காதல் காவியத்தின் தொடக்கம் போல முன்னிலையில் எழுதிப்பார்க்கப்பட்டது. அன்னம்மா இறந்த பிறகு அவளது சடலம் படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கிறது. அவளுடைய மரணம் அறிவிக்கப்படாததால் அவள் தனியாகவே படுத்திருக்கிறாள். அவளை அந்நிலையில் காணும் நாயரின் ஆவி ஆற்றாமையில் புலம்பந்தொடங்குகிறது.

நாயரின் ஆவி பேசுகிறது:

“நான் முதன் முதலில் பார்த்த அன்னம்மாதான் நீ என்றால் காலம்தான் எவ்வளவு கொடியது. உன் அழகிய முகத்தை வெளிறிப் போகச் செய்து, உதடுகளை ஊதா நிறமாக்கிய மரணம்தான் எவ்வளவு இரக்கமற்றது. உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய அந்த சதிகாரர்களை நான் வணங்கிய அந்த ஐயப்ப சாமி தண்டிக்காமல் விட மாட்டர்.

நீ எப்போது என் வாழ்க்கையில் வந்தாயோ அப்போதே என் வீழ்ச்சியும் நாயர் மெஸ் வீழ்ச்சியும் தொடங்கி விட்டதென்று பாம்பே சலூன் சாத்தான் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை உன் வரவு ஒரு வசந்தம், பெருமகிழ்ச்சியின் தொடக்கம்.”

பாம்பே சலூன் சாத்தானை உங்களுக்குத் தெரியாது இல்லையா? இந்த இடத்தில் நான் யார், நாயர் மெஸ்ஸுக்கும் எனக்கும் என்ன உறவு, பாம்பே சலூன் சாத்தான் யார் என்பதை சுருக்கமாகத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது. இது கதையின் கதையாக இருந்தாலும் உங்களை குழப்பக் கூடாது இல்லையா?

அப்போது நான் மேல் நிலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கணேசன் எனக்கு வகுப்பு தோழனாகவும் நண்பனாகவும் இருந்தான். இருவரும் “லைட் ஹவுஸ்” என அழக்கப்பட்ட பிரம்மச்சாரிகள் மட்டுமே தங்கும் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுக்கு டியூஷன் படித்துக்கொண்டிருந்தோம் என்பதால் இந்த ஏற்பாடு. வேறுவேறு கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் காலையில் சைக்கிளில் புறப்பட்டு டியூஷன் வந்துவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். இது சிரமமாக இருந்ததால் அறை எடுத்துத் தங்கும் யோசனையை கணேசன்தான் சொன்னான்.

கணேசனுக்கு குடும்ப நண்பராக இருந்த ராஜா சார் தான் விடுதி உரிமையாளரிடம் பேசி அறையைப் பிடித்துக் கொடுத்தது. மாடியில் இருந்த அறை ஒன்றில் தங்கி, தேசிய வங்கி ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்தார் அவர். நாயர் மெஸ்ஸில் கணக்குத் தொடங்குவதற்கு சிபாரிசு செய்ததும் அவர்தான். அந்த மெஸ்ஸின் நீண்ட கால வாடிக்கையாளராக அவர் இருந்தார். மெஸ் இயங்கி வந்த தெருவில்தான் எனது பள்ளியும் இருந்தது.

முன்னால் விஸ்தீரணமாக இடம் விட்டு (இப்போது யாருக்கும் இவ்வளவு தாராளம் வருவதில்லை) உள் ஒடுங்கிக் கட்டப்பட்டிருந்த ஒரு பழையப் பாணி மச்சுவீட்டுக்கு முன்புதான், ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரைக்குக் கீழே நாயர் மெஸ் செயல்பட்டு வந்தது. வலது முன்புறத்தில் வெளியே பார்த்தவாக்கில் டீக்கடை இருந்தது. இடது பக்கத்தில் கல்லா மேஜை. அதைக் கடந்தால் இடப்பக்கம் நடக்க இடம்விட்டு வலது பக்கம் வரிசையாக நான்கு சாப்பிடும் பென்ஞ்சுகள். சமையல் எல்லாம் வீட்டுக்குள்தான்.

download (25)

மெஸ்ஸில் முதன் முதலாக அன்னம்மாவைப் பார்த்த போது ராஜா சார் சொன்னது போல ஒரு காலத்தில் அவள் பேரழகியாக இருந்தாள் என்பதை நம்ப முடியவில்லை. நல்ல அலங்காரத்துடன், எடுப்பான வண்ணத்தில் சேலை உடுத்தி குடை பிடித்தபடி அவள் தெருவில் நடந்து சென்றால் எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பார்களாம். இப்போது “பெரிய” அழகியாக மாறிப்போயிருந்த அவளின் எந்தெந்தப் பகுதிகள் முன்னர் அவளை அழகியாகக் காட்டியது என்பதை யூகிக்க முடியவில்லை. அந்த இழப்பைச் சரி செய்வது போலவோ என்னவோ அவள் எப்போதும் அலங்கார ரூபினியாகக் காட்சி தருவாள். பெரும்பாலும் கல்லா மேஜைக்கு பின்னாலோ, சாப்பிடும் இடத்தையும் வீட்டையும் இணைத்த வாசலுக்கு அருகில் இருக்கும் மர நாற்காலியிலோதான் அவள் காணப்படுவாள். இரவு உணவின் போது மட்டும் அவள் மாயமாகிப்போவாள் (ஏன் என்ற மர்மம் பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது). அந்த உணவகத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர் அவள் நடப்பதைப் பார்த்திருக்கவே முடியாது. ஆனால் நான் சில சமயத்தில் அந்த “அன்னம்” நடப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அந்த முன்னாள் பேரழகியின் மீதான இயற்கையின் கேலி என்றே சொல்லும்படி இருக்கும்.

‘அங்க தண்ணி வையி, இந்த டேபிளுக்கு இலையப் போடு, சாம்பார் கேட்கறாங்க பாரு’ இப்படியான வாய்மொழி உத்தரவுகளும், பார்வையால் ஆன உத்தரவுகள் மட்டும் அவளிடமிருந்து வந்து கொண்டிருக்கும். அத்தோரணை காலத்தின் நிரந்தர உணவகம் ஒன்றின் நிரந்தர உரிமையாளரும், நிரந்தர நிர்வாகியும் அவள்தான் என்பது போல் இருக்கும். அவளுடைய அதிகாரக் குரல், நிகழ் காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் சென்று ஒலிக்கும்படி தொனிக்கும். அவளுடைய குரல் ஜெயலலிதாவின் போலவே இருந்ததுதான் ஆச்சர்யம்.

கல்லா மேஜைக்கு பின்னால் ராமன் நாயர் படமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். இருமுடி தரித்தக் கோலத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட மெஸ்ஸை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டிருப்பது போல அத்தோற்றம் இருக்கும். அந்த நகரத்துக்கு ஐயப்ப சாமியை அறிமுகப்படுத்தியவர் அவர்தானாம். புனிதப் பயணம் செல்பவர்களுக்கு கருப்பு உடை மாட்டி புரட்சி செய்தவர் அவர்தான். குருசாமியான அவருடைய தலைமையில் ராஜா சார் கூட ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வந்திருக்கிறாராம். பின்னர் அவர் ‘சக்தி’ தாசனாகி சிவப்புக்கு மாறிவிட்டார் என்பது வேறுகதை.

நாயர் மெஸ் என்றாலே அன்னம்மாதான் என்பது ஒரு மாயத் தோற்றம். அதன் வாடிக்கையாளர்கள் பலருக்கும் இப்படியான ஒரு எண்ணம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அன்னம்மாவின் உத்தரவுகளை வடிவமைப்பதும், அதை செயலாக்கம்செய்வதும் அவளுடைய தங்கை செல்விதான் என்று சொல்லப்பட்டது. இந்த இடத்தில் நீங்கள் செல்வி பாத்திரத்தோடு சசிகலாவை பொருத்திப் பார்ப்பீர்கள் என்பது தெரியும். ஆனால் அவ்வளவு பொருத்தம் வராது என்பதே உண்மை. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனால் துரத்தப்பட்ட அவளுக்கு அன்னம்மாதான் அடைக்களம் கொடுத்திருக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் ராஜா சார் சொல்லியிருக்கிறார்.

சற்றே கறுத்த நிறம் என்றாலும் செல்வியும் ஒரு அழகிதான். அந்த மெஸ்ஸின் – கோழிக் குழம்பைவிட பெரிய வசீகரம் அவள்தான். மை பூசாத கண்களுடன் அவளைப் பார்ப்பது மிக அபூர்வம். அதனால் ‘மைக்கண்ணி’ என்றே பலராலும் அழைக்கப்பட்டாள். ஆண்களிடம் அவள் பேசும் விதம், காட்டும் புன்னகை, வெட்கம் எல்லாமே தனி ரகம். ஏற்கெனவே பெண் பித்தராக இருந்த ராஜா சாருக்கு அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை. அவரின் நண்பர்கள் என்பதாலேயே மெஸ்ஸில் எனக்கும் கணேசனுக்கும் தனி கவனிப்பு இருக்கும். மற்றவர்களுக்கு சிக்கன் சேர்வா கிடைத்தால் எங்களுக்கு சிக்கன் கிரேவி கிடைக்கும். சில நேரங்களில் சிக்கனும் அதில் இருக்கும். அவருக்கு முன்பாகவே நாங்கள் சென்றுவிட்டால் “உங்க சார் வர்லயா?” என்று விசாரிப்பாள். அவருடன் சென்று விட்டால் நாங்களும் அந்த காதல் அலைகளுக்குள் சிக்கிக்கொள்வோம்.

நாயர் மெஸ்ஸுக்கு எதிர் வரிசையில் சற்று தள்ளி “பாம்பே சலூன்” என்ற முடித்திருத்தகம் இருந்தது. வாய் பேசமுடியாத ஐந்து சகோதரர்களுக்குச் சொந்தமானது அது. நானும் கணேசனும் அந்த முடித்திருத்தகத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தோம். மேலும் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அங்கு போய் பேப்பர் படிப்பதுண்டு. எங்களுக்கு அந்த ஊமைச் சகோதரர்கள் வணக்கம் வைத்துச் சிரிப்பார்கள். “சாப்பிட்டாச்சா?” என ஜாடையில் விசாரிப்பார்கள். இந்த வரவேற்பு எங்களை மகிழ்விக்கும். அங்கு வரும் எல்லோருக்குமே அந்த வரவேற்பு கிடைக்கும் என்றாலும் அதில் குறைகாண முடியாது.

பிளாஸ்டிக் காகித மாலையுடன் பெரியார், அண்ணா இருவரின் புகைப்படங்கள் பெரிய அளவில் தொங்கும். பக்கத்திலேயே திமுக துண்டுடன், நடத்தர வயதுடைய ஒருவரின் புகைப்படம். முகச்சாயல் ஒத்துப் போனதால் அது அந்தச் சகோதர்களின் அப்பாவாகவோ மூத்த அண்ணனாகவோ கூட இருக்கலாம் எனத் தோன்றும். அந்த முடித்திருத்தகத்தின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் அங்கு எப்போதும் காணப்படும் கிழவன். அது போன்ற முடித்திருத்தகங்களிலோ தேனீர் கடைகளிலோ வழக்கமாகக் காணப்படக்கூடிய ஆள்தான் அவன். தினசரிகளை படித்துக் கொண்டோ யாருடனாவது விவாதம் பண்ணிக்கொண்டோ இருப்பான். அவனுக்கு எண்பது வயதிருக்கும். கைத்தடி ஒன்றும் அவன் கூடவே இருக்கும். அழுக்கான ஒரு வேட்டியும் பழப்பு வண்ண சட்டையும்தான் அவனுடைய நிரந்தர உடை. அந்த சகோதர்களிடம் சைகை பாஷையில் பேசுவான். அந்த சகோதரர்களும் தங்களுக்குள் ‘சப்சப்’ என்ற உதட்டசைவிலும் கையசைவிலும் உரையாடிக்கொள்வார்கள். சிரிப்பை பரிமாறிக்கொள்வார்கள், சண்டையிட்டுக்கொள்வார்கள். அங்கு வந்துவிட்டால் வாடிக்கையாளர்களும் அவர்களுடன் அதே பாஷையில்தான் பேசவேண்டியிருக்கும். அந்தச் சூழல் நம்மை ஒரு வேற்று மொழிப் பிரதேசத்துக்குள் சென்றுவிட்ட ஒரு அந்நியன் போல உணரச் செய்துவிடும்.

கிழவன் ஒருநாள் என்னை அருகில் அழைத்துப் பேசினான். நான் பக்கத்தில் போய் உட்கார்ந்ததும், “அந்த கரகாட்டக்காரியோட ஓட்டல்லதான் சாப்பட்றியா தம்பி?” எனக் கேட்டான்.

இக்கேள்வி எனக்கு வியப்பாகவும், அத்தகவல் புதிதாகவும் இருந்தது. என் வியப்பை போக்கும் கடமை அவனுக்கு இருந்தது. அதில் அவன் அதிக ஆர்வமுடையவனாகவும் இருந்தான். என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் இந்தக் கதையைச் சொல்லி அவன் சந்தோஷமடைந்திருக்க வேண்டும்.

ராமன் நாயரும் அவனும் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களாம். பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு டீக்கடையில்தான் நாயர் டீ மாஸ்டராக வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் அந்த ராஜ வீதியில் வேறு ஒரு இடத்தில் தனியாகக் டீ கடை ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு இப்போது மெஸ் இருக்கும் வீட்டை நாயருக்காக கிழவன்தான் வாடகைக்குப் பிடித்துக்கொடுத்தானாம். இந்த வீட்டுக்கு எதிரே ஒரு கீற்றுக்கொட்டை போட்டு டீக்கடையையும் இட்லிக் கடையையும் ஆரம்பித்திருக்கிறார் நாயர். பின்னர் ஏறுமுகம்தான். அவருக்கு திருமணம் செய்து வைத்தது, இந்த வீட்டையே கிரயம் பேசி வாங்கிக் கொடுத்தது எல்லாமே அந்த கிழவன்தானாம். கருட சேவை திருவிழாவில் கரக்காட்டம் ஆட வந்தவள்தான் இந்த அன்னம்மா என்றான் கிழவன்.

“என்ன பேசினாளோ, என்ன சொக்குப்பொடி போட்டாளோ, இந்த மலையாளத்தான் அவ வலையில போய் விழுந்துட்டான்” என்றான் கிழவன்.

“உனக்கு பொண்டாட்டி, ரெண்டு கொழந்தைங்க இருக்காங்க. ஊர்ல நல்ல பேரு இருக்கு. இதையெல்லாம் கெடுத்துக்காதேன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அந்த ஆளு கேக்கல.” என்று வருத்தத்துடன் சொன்னான் கிழவன். இந்த விவகாரத்தால் அவர்களுடைய நட்பிலும் விரிசல் விழுந்துவிட்டதாம்.

அன்னம்மாவுக்கு தினமும் இரவில் சாராயமும், கோழிக் குழம்பும் வேண்டுமாம். இந்த படையலுடனேயே அன்னம்மாவை நாயர் ஆராதித்து வந்திருக்கிறார். பிறகு சைவ ஓட்டலாக இருந்த நாயர் மெஸ் அசைவத்துக்கு மாறிவிட்டதாம். இதனால் அது பல நல்ல வாடிக்கையாளர்களை இழந்து நாசமாகிவிட்டதாக கிழவன் வருத்தத்துடன் சொன்னான். குருசாமி அந்தஸ்தைத் துறந்து, அவளுடன் குடித்து, அதற்கு அடிமையாகி குடல் வெந்து செத்தாராம் நாயர். அவருடைய அழிவுக்கு முழு காரணமும் அந்த கரகாட்டக்காரிதான் என்றான் கிழவன். “இவளால அந்தாளுடைய குடும்பமே சீரழிஞ்சி போச்சி. மெஸ் இருக்கிற இந்த வீட்டையும் தன் பேருக்கு எழுதி வாங்கிக்கிட்டா. அந்த குடும்பமே இப்ப நடுத்தெருவுல நிக்குது” என்றான் வருத்தத்துடன்.

நாயர் இறந்த பிறகு அவருடைய மனைவியும் மகனும் அந்த வீட்டின் மீது வழக்குப் போட்டிருக்கிறார்களாம். கிழவன்தான் அவர்களுக்கு உதவியிருக்கிறான். “இப்ப இந்த கரகாட்டக்காரிக்கு நான் பரம விரோதியாயிட்டேன்” என்றான் கிழவன்.

பிறகு ராஜா சாரிடம் இது குறித்துக் கேட்ட போது, “உங்களுக்கு இதையெல்லாம் அந்த கிழட்டு ராஸ்கேல்தானே சொன்னான்?” எனக் கேட்டார். பிறகு இந்த விஷயம் செல்வி வழியாக அன்னம்மா காதுக்குச் சென்றதா அல்லது கிழவனைப் பற்றி வேறு யாராவது அவளிடம் போட்டுக்கொடுத்தார்களாத் தெரியவில்லை, அன்னம்மா அந்த முடித்திருத்தகத்துக்குப் போய் விளக்குமாறால் கிழவனை சாத்தினாளாம், கணேசன் சொன்னான். “அய்யோ என்னக் கொல்றாளே, என்னக் கொல்கிறாளே, யாராவது காப்பாத்துங்களேன்” என தெருவே கேட்கும்படி அலரினானாம் கிழவன்.

இத்தெளிவு போதும் என நினைக்கிறேன். இப்போது நாயரின் ஆவி தன் புலம்பலைத் தொடர்கிறது:

“அன்னம்மா உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அது கருடசேவைத் திருவிழாவின் இரண்டாவது நாள். நடு இரவைத் தாண்டிய நேரம். வாணவேடிக்கையும் சுவாமி ஊர்வலம் நடந்துகொண்டிருந்தன. தெருக்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சாப்பாடு முடிந்து போனதால் மற்றவர்கள் தூங்கச் சென்றுவிட நான் டீக் கடையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போது மெஸ் வாசலில் நீ வந்து விழுகிறாய். கரகாட்டக்காரிகள் உடுத்தும் உடை அலங்காரத்தோடும் அலங்கோலமாகவும் நீ கிடந்தாய். நீ அளவுக்கு அதிகமாக குடித்திருந்தாய். பலரும் உன்னை வேடிக்கைப் பார்த்தபடிச் சென்றார்கள். திருவிழாக் கொண்டாட்டத்தில் இளைஞர்களுக்கு இதுவும் கேளிக்கையாகிக்கொண்டிருந்தது. பெண்கள் கூட வெட்கத்துடன் உன்னைக் கடந்து செல்கின்றனர். இக்காட்சியை என்னால் பார்த்துக்கொண்டிக்கு முடியவில்லை. உன்னை இழுத்துச் சென்று வேறு இடத்தில் படுக்க வைத்துவிடலாம் என முடிவுக்கு வருகிறேன். அருகில் வந்து சிறிது நேரம் யோசனையுடன் நிற்கிறேன். அங்குப் பரவியிருந்த அலங்கார விளக்கொளியில் உன் முகம் வசீகரமாகத் தோன்றுகிறது. குழந்தைமையும் பெண்மையும் கலந்த உன் முகத்தை யாரால் புறக்கணித்துவிட முடியும்?

உனது கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு வந்து மெஸ்ஸின் உள்ளே போடுகிறேன். வாசலை சாத்தினேன். பொழுது விடியும்வரை நீ தரையிலேயே படுத்திருந்தாய். முதல் ஆளாக வந்து பார்த்த டீ மாஸ்டர் ராமசாமிக்கு அதிர்ச்சி. இதெல்லாம் என்ன என்பது போல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திலேயே நீயும் எழுந்துவிட்டாய். தூக்கத்திலிருந்து எழுந்து ஒரு குழந்தையைப் போல திகைப்புடன் சுற்றும்முற்றும் பார்க்கிறாய். உன்னை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்று குளியல் அறையைக் காட்டும்படி ராமசாமியிடம் சொல்கிறேன். நீ சங்கோஜத்துடனும் மன்னிப்புக் கோரும் தோரணையுடன் அவனுக்குப் பின்னால் போகிறாய். நீ அங்கிருந்துத் திரும்பி வரவேற்பறை வழியாக வந்த போது எதிரில் வந்து நிற்கிறேன். உன்னுடையப் பெயரைக் கேட்கிறேன். வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே சொல்கிறாய் ‘அன்னம்மா’. சுவரில் சாய்ந்து நின்று கொள்கிறாய்.

அலங்கோலமான, தெளிவற்ற, யூகிக்க மட்டுமே முடிந்த உன் வாழ்வின் பின்னணியிலிருந்து சோகமும் தனிமையும் கொண்ட ஒரு முகம் எனக்கு முன் மலர்ந்துத் தோன்றுகிறது. உன்னுடைய சீரழிந்த வாழ்க்கை குறித்து எந்தக் கேள்விகளையும் நான் எழுப்பவே இல்லை. அதுவே என்னை கடந்து போகாமல் உன்னைத் தயங்கி நிற்கச் செய்ததோ என்னவோ.

நான் கேட்கிறேன், “எப்ப ஊருக்கு?”

நீ சொல்கிறாய், “மதியமே கிளம்பனும். எங்க ஊருக்கு பக்கத்துல இன்னிக்கு இராத்திரி திருவிழாவில எங்க ஆட்டம் இருக்கு.”

“இந்த ஊருக்கு எப்ப திரும்ப வருவே?”

நீ என்னைக் வியப்புடன் பார்க்கிறாய். என் கேள்விக்குப் பின்னால் உள்ள அர்த்தம் உன்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

நீ கேட்டாய், “நீங்க அய்யரா?”

நான் சொன்னேன், “இல்லே மலையாளி, நாயர். ஏன் கேக்கிற?”

நீ யோசனையுடனும் சங்கடத்துடனும் என்னைப் பார்க்கிறாய்.

நான் சொல்கிறேன், “உனக்கு விரும்பம்ன்னா எப்ப வேணா வரலாம்”

யோசிப்பதற்கு நான் கொடுத்த இடைவெளி என் பைத்தியக்காரத்தனத்தை புரிந்துகொள்ள உனக்கு உதவியிருக்க வேண்டும். நீ வேடிக்கையாகக் கேட்கிறாய், “எனக்கு தினமும் சாராயம் குடிச்சாத்தான் தூக்கம் வரும். வாங்கிக்கொடுப்பிங்களா?”

இந்த வடிவத்திலான கதை சொல்லலையும் இடையில் நிறுத்த வேண்டியதாகிவிட்டது. காரணம் இதில் கதை சொல்லியின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. எல்லை வகுக்கப்பட்டுவிடுகிறது. அன்னம்மாவின் மீது அளவற்ற பித்து கொண்ட ஒருவன், தன் வாழ்க்கையையே அழித்துக்கொண்ட ஒருவன் கதையைச் சொன்னால் அது ஒரு காதல் கதையாகவே முடிந்து போகும் ஆபத்தும் உண்டு. அந்த ரொமாண்டிஸ காலமெல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டதால், நானே தன்னிலையில் கதை சொல்வதென முடிவு செய்கிறேன். அதன் தொடக்கம் இப்படி இருந்தது:

அன்னம்மாவின் மரணம் ஒரு அபத்த காவியம். அதை இவ்விதம் உணர்த்தவே சீக்கிரம் சென்று சேர்ந்தாளோ என்னவோ. வாழ்ந்த காலத்தில் அவளின் திறமை, சாதுர்யம், தைரியம் பலரால் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அவள் மீது பிரகாச ஒளி எதுவும் படிந்திருந்ததாகத் தெரியவில்லை. ஒரு குடும்பத்தையே சிதைத்த பாவம் பலரது வார்த்தைகளாகவும் சாபமாவும் மாறி அவளைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. ராமன் நாயர் என்ற மதிப்பு மிக்க மனிதரை தரம் தாழ்த்தி சுடுகாட்டுக்கு அனுப்பி வைத்த புண்ணியவதியாகவும் அவள் பார்க்கப்பட்டாள். குடிக்கு அடிமையான, ஒழுக்கம்கெட்ட பெண்ணாகவும் அவள் அறியப்பட்டாள். பிறகு அவளுடைய மரணம் எப்படி முக்கிய நிகழ்வானது, இழப்பானது?

அவளுக்குப் பின் நாயர் மெஸ் என்னவாகும் என்ற கேள்வியை பலரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சந்தேகமில்லாமல் அது மிகையான எதிர்வினைதான். அது வாடிக்கையாளர்களின் உடனடி ஆதங்கம்தானே தவிர அவர்களின் சிந்தனையிலிருந்து முளைத்தக் கேள்வியாக இல்லை. அந்த நகரத்தில் அப்போது இயங்கி வந்த எவ்வளவோ உணவகங்களில் ஒன்றுதான் நாயர் மெஸ். அதற்கென்று சில வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். அதற்கு மேல் அதற்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அங்கே பரிமாறப்பட்ட இட்லிக்கோ, பூரிக்கோ, பரோட்டாவுக்கோ, சிக்கன் குழம்புக்கோ எந்தத் தனித் தன்மையும் இருந்த்தாகத் தெரியவில்லை. அதே போலத்தான் அன்னம்மாவும். அது ஒரு நிகழ்வு. நாயர் மெஸ் தொடர்ந்து இயங்கி வந்திருக்கலாம் இல்லாமல் போயிருக்கலாம், அன்னம்மா என்ற ஒரு ஜீவன் அங்கு வாழ்ந்திருக்கலாம், அப்படி ஒரு வரவு அதற்கு நிகழாமல் போயிருக்கலாம். இந்த கதையில் இடம்பெறுகிறது என்பதற்கு மேல் இப்போது அதற்கெல்லாம் என்ன பெரிய முக்கியத்துவம் இருக்கிறது? கணக்கு வைத்து மூன்று வேளை உணவை அங்கு சாப்பிட்டு வந்தோம் என்பதற்கு மேல் அதற்கும் எங்களுக்கும் என்ன உறவு? செல்வியுடனான தொடர்பு காரணமாக ராஜா சாருக்கு ஒருவேளை அது முக்கியமானதாக இருந்திருக்கலாம். அவர் மூலம் அன்னம்மா குறித்த சில ரகசியங்கள் எங்களுக்குத் தெரிய வந்ததென்னவோ உண்மைதான். அதானாலேயே பிணைப்பின் இறுக்கம் கூடி விடுமா என்ன?

கிழவன் சொன்னதை ஒரு நாள் ராஜா சார் உறுதிப்படுத்தினார். தினமும் கால் பாட்டில் பிராந்தி சாப்பிட்டால்தான் அன்னம்மாவுக்குத் தூக்கம் வரும் என்றார். டீ மாஸ்டர் ராமசாமிதான் அவளுக்கு வாங்கி வந்து கொடுப்பாராம். “அந்த ஆளு டீ மட்டுமா போட்றான்…”என அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

நாயர் காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்தவர் ராமசாமி. நாயர் இறந்த பிறகு அன்னம்மாவின் தீவிர விசுவாசியாகவே மாறிவிட்டிருந்தார். செல்விகூட அவருக்கு அடுத்த நிலைதான் எனத் தோன்றும். அன்னம்மாவின் விசுவாசிகளில் இன்னொருவன் சங்கர். நாயர் மெஸ்ஸுக்காகவே பிறப்பெடுத்து வந்தவன் அவன். ராஜா சாரிடம் அவன் அதிக மரியாதைக் காட்டுவான். ஆனால் எரிச்சலான ஒரு எதிர்வினைதான் அவரிடம் வெளிப்படும். அவன் எப்போதும் செல்வியோடே இருக்கிறானே என்ற பொறாமையாக இருக்கலாம்.

மெஸ் கட்டடத்தின் மீதான வழக்கில் தீர்ப்புத் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. அதன் பரபரப்பு நாயர் மெஸ் ஆட்களிடமும் காணப்பட்டது. அன்னம்மாவிடம் தனது விசுவாசத்தை காட்டும் வகையில் ராமசாமி திருப்பதிக்குப் போய் வெங்கடேஷ்பெருமாளை தரிசித்துவிட்டு மொட்டை போட்டுக்கொண்டு வந்தார்.

எதிர்பார்த்தது போலவே வழக்கில் அன்னம்மா ஜெயித்து விட்டாள். இதனால் ஆத்திரமடைந்த நாயர் மகன், அன்னம்மாவை கொல்லாமல் விடமாட்டேன் என நீதிமன்ற வளாகத்திலேயே சபதம் போட்டுவிட்டுச் சென்றானாம். நாயரின் மனைவி மண்ணை வாரித் தூவி “நீ நாசமாத்தான் போவ” என சாபமிட்டபடியே சென்றாளாம்.

இந்த இடத்தில் இந்த வழக்கோடு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஒப்பிட வேண்டாம். அப்படி எழுதும் யோசனையும் எனக்கில்லை. அப்படி எழுதினால் கதை அளவுக்கு அதிகமான அபத்த நாடகமாக போய்விடும் ஆபத்து இருந்தது. நிஜ வாழ்க்கையில், வரலாற்றில் இது போல ஆயிரம் அபத்தங்கள் அரங்கேறிக்கொண்டுதானே இருக்கின்றன. அதை எல்லாம் கதையாக்கினால் கதை சீக்கிரத்திலயே அழுகிப்போய்விடுமல்லவா.

இனி கதையின் போக்கு எப்படி அமைந்தது என்று பார்ப்போம். கதைச்சொல்லி கதையைத் தொடர்கிறார்:

எங்களுக்குப் பொதுத் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான் ஒரு நாள் காலை ராஜா சார் வந்து ரகசியமாகச் சொன்னார் அன்னம்மா இறந்துவிட்டாள் என்று. அளவுக்கு அதிகமான போதை அவளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார். நடு இரவைத் தாண்டி அவளுடைய மரணம் நிகழ்ந்திருந்தது.

images (6)

மெஸ்ஸின் முன் வாசலைப் பூட்டியிருந்தார்கள். பின்பக்கமாக உள்தள்ளியிருந்த வீட்டின் பின்வாசலை திறந்து வைத்து அடுத்தத் தெரு வழியாக சங்கரும் ராமசாமியும் வெளியே போய் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கென அவசரமான சில வேலைகள் இருந்தன. செல்வி வீட்டிலேயே இருந்தாள். அவள் சில உத்தரவுகளை அவர்களுக்கு அளித்துக்கொண்டிருந்தாள். ராஜா சாரின் ஆலோசனையின் பேரில் அன்னம்மாவின் மரணச் செய்தியை மாலையில் சொல்வதென முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் குளிர்பதனப் பெட்டி முதலான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட வேண்டும். முக்கியமாக அன்னம்மாவுக்கு வரவேண்டிய பெரிய அளவிலான தொகையை இரண்டு பேரிடம் வாங்கிவிடவேண்டும் என்பதே அவர்களின் திட்டம். இல்லையென்றால் அது வராமலேயே போய்விடுமோ என்ற அச்சம். அன்னம்மாவின் மரணச் செய்தி தள்ளிப்போனது அதனால்தான்.

அன்று மாலை அன்னம்மாவின் மரணம் ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் மதியம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. நாயரின் கல்லறைக்குப் பக்கத்திலேயே அன்னம்மா புதைக்கப்பட்டவில்லை, எரிக்கப்பட்டாள்.

பலரும் எதிர்பார்த்தபடியே அன்னம்மா இறந்து ஒரு மாத காலத்துக்குள் சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. எங்களை ஆச்சர்யப்படுத்திய விஷயம், செல்வி மீது காவல் நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார் என்பதுதான். அன்னம்மா அதிக குடிபோதையில் இறக்கவில்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு செல்விதான் பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து அன்னம்மாவைக் கொன்றுவிட்டாள். அதனால் தான் அவசரஅவசரமாக சடலத்தை கொண்டு போய் எரித்துவிட்டார்கள் என்று.

ராஜா சாரின் ஆலோசனையின் பேரில் செல்வி ஒரு புகார் கொடுத்தாள். அதில், ஏற்கெனவே திருமணமான என்னை ராமசாமி திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார். இரவில் படுக்கைக்கு அழைத்துத் தொல்லைத் தருகிறார். சம்மதிக்கவில்லை என்றால் கொலை சேய்துவிடுவதாக மிரட்டுகிறார். அவரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு வேண்டும் என புகாரில் சொல்லியிருக்கிறாள்.

இதனால் ராமசாமி நிலைகுலைந்து போனார். ராஜா சாரிடம் வந்து, அந்த மெஸ்ஸை நம்பியே கல்யாணம் கூட பண்ணிக்கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டதாகவும் தனக்கு ஒரு தொகையைப் பெற்றுத்தந்தால் இந்த ஊரைவிட்டேப் போய்விடுவதாகவும் கண்ணிர்விட்டு கெஞ்சினார். அதன்படி ஒரு தொகையை தர செல்வி சம்மதிக்க பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் செல்வியும் சங்கருமே அந்த மெஸ்ஸை நிர்வகித்து வந்தாகவும் அன்னம்மாவின் ஒரே வாரிசு செல்வி என்பதால் அந்த சொத்து செல்விக்கே சென்றுவிட்டதாகவும் கணேசன்தான் எனக்குச் சொன்னான். சென்னை வந்த பிறகு அவனுடையத் தொடர்பும் அறுந்துவிட்டது.

டாஸ்மாக் பாராக மாறிப்போன அந்த நாயர் மெஸ்ஸில் போடப்பட்டிருந்த மேஜைக்கு எதிரே உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த போது ஒரு கற்பனைத் தோன்றியது. அதையே கதையின் முடிவாகவும் வைத்திருந்தேன். அது இப்படி அமைந்திருந்தது:

குடிகாரர்களெல்லாம் கிளம்பிப் போனப் பிறகு நாயரின் ஆவியும் அன்னம்மாவின் ஆவியும் ஒரு மேஜைக்கு எதிரெ உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றன. பழைய நினைவுகளை அசைப் போட்டு மகிழ்கின்றன. சில பொழுது நாயர் மெஸ்ஸின் இன்றைய நிலையை எண்ணி கண்ணீர் விட்டு அழுகின்றன. புகை மண்டலம் ஒன்று எழுந்து பாரை நிறைக்க அது ஒரு கனவுப் பிரதேசமாக மாறிவிடுகிறது. சினிமாவில் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் நடனமாடுவது போல அங்கே நாயரும் அன்னம்மாவும் பளப்பளப்பான ஆடைகளை அணிந்து ஓடிப் பிடித்து ஆடத் தொடங்குகின்றனர்.

0

சுயாந்தன் கவிதைகள்.

18118658_1226268380805731_480789767473769502_n

1. பூஜ்ஜியங்கள்.

ஆகாய இடுக்குகளில்
ஆயிரம் பூஜ்ஜியங்கள்.
மணமான மங்கையின்
ரத்தப் பொட்டுவழி
கரையிறங்கிய செம்பூஜ்ஜியங்கள்.
அவளது தீட்டுக்களைத் தீண்டி ஒரு கோயிலின் கருவறையில்
யாவரும் வணங்கும்
சிலையின் பின்வளையமாகி
எம்மை உற்றுப் பார்ப்பதுண்டு.

அப்போதுதான் புதிதாகப்
பிறந்த பூமியின்
கறுப்பிகளும், சிவப்பிகளும்
கண்வெட்டாமல் என்மீது
முதல்காதலை வீசியெறிகின்றனர்.

2. உரையாடல்கள்.

ஒரு பக்கமும் சிந்திக்க முடியாதபடி ஒவ்வொரு
பக்கமும் உருகிவிடுகிறது.

ஒரு பக்கத்தின் நிழலில்
ஒவ்வொரு பக்கத்தின்
உருவும் சதிராடுவதால்
புதுப்பக்கங்கள்
பழைய பக்கங்களை
உரையாட விடுவதில்லை….

3. இடமாற்றம்.

சதுர நிலவுகள்
வட்ட நினைவுகளில் அழ்ந்தன.
ஒருபோதும் அவை வானத்துக்குள் தம் எல்லைகளை விஸ்தரிப்பதில்லை.

சதுரத்தின் நாற்பக்கமும்
கொஞ்சம் கொஞ்சமாக
வேதனைகள் அழுந்தப் பதிந்தன என்று நீள்சதுரமான நட்சத்திரங்கள் விவரிக்கின்றன எங்கோ இருந்து…..

இப்படியான நிலவுகளுக்கு
வானத்தில் இடமில்லை என்பதனால்
அணையுடைத்த குளம் ஒன்று ஊரருகிலுண்டு.

அங்கே குடியிருந்து
வானத்தையும், பூமியையும்
ஆழத்தொடங்கியது வட்ட நிலவுகள்.
சதுர நினைவுகள் கூடவே துணையிருக்க…..

4. தனியறை

சுவர்களில் தொங்கவிடப்பட்ட வானத்தை,
சேர்ட்டுடன் சேர்த்துக் குத்தப்பட்ட பத்து நிலவுகள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன.

தனித்த விண்மீனின்
வெளிச்சம் அணைக்கப்படவில்லை.
யார்மீதோ ஏறிப்போகும்
கருமுகில்கள் தொங்கவிடப்பட்ட வானின் நீலத்துடன் இப்போது அழையாத விருந்தாளியாக…..

••••••••••••••

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

12074886_793797267432431_3543079615050370159_n

நீர்த்தடத்தை இரத்தத்தில் வரைதல்

தாகத்தின் உச்சி நனைய கடைசி துளிகள் பருகி
கடைசி மீன் குஞ்சின் துடிதுடிப்பை
பார்த்தவாறு பறந்தது பறவை

புனலில் ஒவ்வொரு நாளும் ஓரிடத்தில்
படுத்த கூழாங்கற்கள்
நீர்மை தேடும் கொடுங்கனவில் இருந்தன

நீண்ட தாகமென படுத்திருந்த ஆறு
தன் கழுத்து உயர்த்தி பார்த்ததபடி லாரிகளில் சென்றது
லாரியின் சக்கரங்கள்
நீர்தடம் ஒன்றின் கடைசி கோட்டை
வரைந்தபடி சென்றன
நேர்மையான அலுவலரின் இரத்தத்தில்

கடைசியாக குளித்த நாளைப் பற்றி
காலி குடங்களில் கதைகள் நிரப்பினார்கள்

திருடுவதற்கு கூட
இல்லாத பொருளான தண்ணீர்
அவமானங்களை உருவாக்கும் பொருளானது

நான் கொல்லாத மீன்களின் கருவாட்டை
சுவைத்தபடி இருந்தேன்
தவளைகளின் பாட்டை
பாம்புகள் முணுமுணுத்தபடி
மணலற்ற ஆற்றினை வரைந்து சென்றன

•••••

ஓவியனின் காதல்

வானத்திற்கு ஒரு வாசல் வைத்து
ஓவியம் வரைந்தான்
பறவைகள் மட்டும் வந்து போகலாம் என்றான்
தன்னை பறவையாய் அலங்கரித்தவள்
உள்ளே சென்று மரக்கிளை ஒன்றை பரப்பினாள்
தன் நரம்புகளில் வேர் பாய்த்தபடி.

ஓவியனின் அன்பு நிறமற்ற கனியாக
இருப்பதை அறிந்து
உலகின் புதிய சொல் ஒன்றினால்
பறவைகளை அழைத்தாள்

புதிய நடனம் ஒன்றின் சாயலோடு
இரைக்கு பதிலாய் மேகத்தை கொத்திய ஈர அலகோடு பறந்து வந்தன

தன் முத்தத்தில் ஒரு தாழ்ப்பாள் செய்து
பறவைகளுக்கு பழக்கியபடி
சேலை தலைப்பில் பிரிந்த நூலின் நுனியில் இருந்த
பழைய காதல் கவிதையைப் படித்தாள்
மேகத்தின் ஆழத்தில் இருந்த
ஆதி மௌனம் சொல்லான நேரத்தில்

யாருக்கும் தெரியாமல் இறந்த ஓவியனை
சிறு துணுக்கு ஓவியங்களாய்
பறவைகள் சுமந்து சென்றன .

•••••

செடியில் பூத்தவள்

இன்னும் பூக்காத அந்த சிறிய செடியின்
இலைக்கோணத்தில்
தனது சிவப்புக்கல் மூக்குத்தியை
பூக்க செய்கிறாள் சிறுமி

கொஞ்சம் தூரத்தில் ஒருசில துளிகளோடு
நிற்க மனமின்றி நின்ற மழை
மண்வாசனையை அனுப்புகிறது

யார் சொல்லியோ வருகிற வண்ணத்துப்பூச்சி
தேன் குடித்ததாய் மயங்குகிறது

இனி எப்படி காய்ப்பதென
பதறுகிறது செடி

காற்று ஒரு ஆட்டிடையனை
சற்று மயக்கி தூங்கவைக்கிறது

ஆட்டு மந்தை ஓடுகிறது
எதிரியற்ற போர்க்களமென

பயமறியாத மறி ஒன்று செடிமீது
கோலையோடு புழுக்கை போட்டு விரைகிறது

செடி பச்சை நிற காய்களோடு
இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டது
நாளை மறி மேய்ந்து கொள்ளட்டும் என்று

சிறுமி தன் மூக்குத்தியின் ஒளியை
சூரியனுக்கு கொடுத்தபடி நடக்கிறாள்

••••••••••••••

ஆக்டவியோ பாஸ் கவிதைகள் ( Octavio Paz 1914 – 1998 ) ஸ்பானியக் கவிதைகள் ( மூலம் ) : ஆங்கிலம் : எலியட் வெயின்பெர்கர்( Eliot Weinberger) / தமிழில் : தி.இரா.மீனா

download (18)

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆக்டவியோ பாஸ் ஸ்பானியமொழிக் கவிஞர் களான Gerardo Diego , Juan Ramón Jiménez, மற்றும் Antonio Machado ஆகியோரின் தாக்கத்தாலும்,பாப்லோ நெருடாவின் தூண்டுதலாலும் இருபதுவயதில்கவிதை யுலகில் நுழைந்தவர். Luna silvestre (1933).என்பது அவரது முதல் கவிதைப் புத்தகமாகும்.நவீனத்துவம் சர்ரியலிசம் இயக்கங்களின் தாக்கம் பெற்றவர். Eagle or Sun? என்ற தொடர்வரிசை உரைநடைக் கவிதை மெக்சிகோ நாட்டின் இறந்த,நிகழ்,எதிர்காலத்தின் தொலைநோக்கு வரைபடமாக மதிப்பிடப்படுகிறது. The Labyrinth of Solitude ,அவரை இலக்கிய உலகின் சிறந்த படைப்பாளியாக அடையாளம் காட்டியது.படைப்புகள் அனைத்தும் அவர் அறிவின் ஆழத்தை இனம் காட்டுவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர் தத்துவம்,மதம், கலை, அரசியல்,தனிமனிதனின் பங்கு என்று எல்லாவற்றையும் ஆழமாகக் காணும் பார்வை அவருடைய படைப்புகளுக்கிருந்தது. ”வாழ்க்கையை கவிதையாக்கு வதை விட,கவிதையாக வாழ்க்கையை மாற்றுவது உன்னதமானதல்லவா?” என்ற கேள்வியை தன் காலத்துப் படைப்பாளிகளிடம் கேட்டவர்.நவீனத்துவம் என்பது இறந்த காலமின்றி உருவாக முடியாதது. நவீனத்துவத்தின் தேடல் என்பது வம்சாவளியின் தொடக்கம்தான்.”என் தொடக்கத்தையும்,தொன்மத்தை யும் நோக்கி என்னை இயக்கவைத்தது நவீனத்துவம்” என்று In Search of the Present ல் குறிப்பிடுகிறார்.மனதின் வாழ்க்கை என்பது உடலின் வாழ்க்கை என்பதிலிருந்து மிக வேறுபட்டதல்ல.அறிவு,அரசியல்,உடல் என்று எல்லாம் ஒன்றே என்பதும் அவர் சிந்தனையாகும். மொழியியல், பண்பாடு, இலக்கியக் கொள்கைகள்,வரலாறு ,அரசியல் என்று பலதுறைகளிலும் கட்டுரைத் தொகுப் புகள் வெளிவந்திருக்கின்றன.கிடைத்த பல விருதுகளில் Cervantes award , Neustadt International Prize for Literature மற்றும் 1990 ல் பெற்ற நோபெல் பரிசு ஆகியவை குறிப்பிடத்தக்கவை..

•••••

போவதற்கும் இருப்பதற்கும் இடையில்

போவதற்கும் இருப்பதற்கும் இடையில்

தனக்கான தன்மையில்

நாள் நிலையின்றித் தள்ளாடுகிறது.

மதியத்தின் சுற்றறிக்கைபடி இப்போது

கல்லாய் உலகம் அசைவற்றிருக்கிறது.

எல்லாம் புலனாகிறது, பிடிபடாமலிருக்கிறது

எல்லாம் அருகிலிருக்கிறது தொடமுடியாதிருக்கிறது.

தாள் ,புத்தகம், பென்சில் ,கண்ணாடி

இன்னபிற தனக்கான பெயர்நிழலில் இருக்கின்றன

அதே மாறாத குருதியோட்டத்தை

காலம் என் நெற்றியில் மீள்செயலாக்குகிறது.

பாரபட்சமற்ற சுவற்றை

ஒளி பேயரங்காக மாற்றுகிறது. .

ஒரு கண்ணின் மையத்தில் என்னைக் கண்டுபிடிக்கிறேன்.

அதன் வெறித்தநோக்கில் என்னைப் பார்க்கிறேன்

அந்தக் கணம் சிதறுகிறது.அசைவற்றிருக்கிறது.

நான் இருக்கிறேன் போகிறேன் ; நான் ஓர் இடைநிறுத்தம்.

கடைசி வைகறை

உன் கூந்தல் காட்டில் தொலைந்துபோனது,
உன் கால் என்னைத் தொடுகிறது.
நீ இரவைவிடப் பெரியவள்,
ஆனால் உன் கனவுகள் இந்த அறைக்குள் அடக்கம்.
சிறியவர்களாக இருப்பினும் நாம் எவ்வளவு பெரியவர்கள் !

ஆவிகளைச் சுமையாகக் கொண்டு
வெளியே ஒரு கார் கடக்கிறது.
ஓடும் ஆறு
எப்போதும் மீண்டோடிக் கொண்டிருக்கிறது.
நாளை இன்னொரு நாளாக இருக்குமா?

பாலம்

இப்போதுக்கும் இப்போதுக்கும் இடையில்,
எனக்கும் உனக்கும் இடையில்,
சொல்தான் பாலம்.

அதற்குள் நுழைந்த பிறகு
நீ உனக்குள் நுழைகிறாய் :
உலகம் இணைகிறது
வட்டம் போல நெருங்குகிறது.

ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு
எப்போதும் ஒரு திரள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது:
ஒரு வானவில்.
நான் அதன் வளைவுகளின் கீழ் உறங்குகிறேன்.

இனி பழைய பஞ்சாங்கமில்லை

அழகான முகம்
சூரியனுக்கு தன் இதழ் விரிக்கும் அல்லிபோல
நீயும்.
நான் பக்கத்தைப் புரட்டும்போது எனக்கு உன்முகம் காட்டுகிறாய்
மயக்கும் புன்னகை
எந்த மனிதனும் உன்னிடம் வசியப்படுவான்
ஓ, பத்திரிகையின் அழகு.
எவ்வளவு கவிதைகள் உனக்கு எழுதப் பட்டிருக்கின்றன?
தாந்தே உனக்கு எத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறான் பியட்ரைஸ்?
உன்னுடைய ஆட்டிப் படைக்கிற மாயைக்கு
நீ உருவாக்கும் கற்பனைக்கு.

ஆனால் இன்று இன்னுமொரு
பழைய கவிதையை உனக்கு எழுதமாட்டேன்.
இல்லை. இனி பழைய பஞ்சாங்கமில்லை.
தங்கள் அறிவுக் கூர்மையில்
தங்கள் குணத்தில்
அழகை வெளிப்படுத்தும் பெண்களுக்கு
இந்தக் கவிதை அர்ப்பணம்
ஜோடிக்கப்பட்ட தோற்றங்களுக்கல்ல.

இந்தக் கவிதை உங்களுக்கு பெண்களே
ஒவ்வொரு காலையிலும் சொல்வதற்கு
புதிய கதையோடு எழும் ஷஹ்ரஆசாத் போல
மாற்றத்திற்காகப் பாடப்படும் கதையாய்
போராட்டங்களுக்கான நம்பிக்கையாய் ;
ஒன்றிணைந்த உறவுகளின் காதல் போராட்டங்கள்
புதிய நாளுக்கான உணர்வெழுப்பும் போராட்டங்கள்
புறக்கணிக்கப்பட்ட உரிமைகளுக்கான போராட்டம்
அல்லது இன்னொரு இரவுமட்டும் பிழைத்திருப்பதற்கான போராட்டங்கள்.

ஆமாம். உலகில் இருக்கும் பெண்களே உங்களுக்காக
மின்னும் நட்சத்திரமாக பிரபஞ்சத்தில் இருக்கும் உங்களுக்காக ஆயிரத்தோரு போராட்டங்களில் போராளியினியான உங்களுக்காக
என்நெஞ்சம் கவர்ந்த சினேகிதிக்காக.

இந்தக் கணத்திலிருந்து என்தலை புத்தகத்தில் கவிழாது
மாறாய் அது இரவைப் பற்றியும்
மின்னும் நட்சத்திரங்கள் பற்றியும் சிந்திக்கும்
அதனால் இனி பழைய பஞ்சாங்கமில்லை.

அந்த வீதி

இங்கே ஒரு பெரிய அமைதியான வீதி
நான் இருட்டில் நடந்து தடுமாறி விழுகிறேன்
எழுந்து குருட்டுத்தனமாக நடக்கிறேன்,என் பாதம்
அமைதியான கற்களையும் காய்ந்த இலைகளையும் நசுக்குகிறது.
என் பின்னால் வரும் யாரோ ஒருவரும் நசுக்குகிறார்
இலைகளையும், கற்களையும்.
நான் மெதுவாக நடந்தால் அவரும் மெதுவாக நடக்கிறார்.
நான் ஓடினால் அவரும்.நான் திரும்புகிறேன்;ஒருவருமில்லை
எல்லாம் கருமையாகவும் எல்லையின்றியும்,
என் காலடிகளுக்கு மட்டும் என்னைத் தெரியும்,
தெருவிற்குப் போகும்
மூலைகளினிடையே திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
யாரும் காத்திருக்கவில்லை,யாரும் என்னைப் பின்தொடரவுமில்லை,
நசுக்கியும் எழுந்தும் என்னைத் துரத்தியும் பார்த்தும் : ஒருவருமில்லை.
சகோதரத்துவம்

நான் ஒரு மனிதன்; செய்யமுடிவது சிறிதுதான்

இரவு பேரளவானது;

ஆனால் மேலே பார்க்கிறேன்;

நட்சத்திரங்கள் எழுதுகின்றன.

அறியாது புரிந்துகொள்கிறேன்;

நானும் எழுதியிருக்கிறேன்.

இந்தக் கணத்தில்

யாராவது என்னை நினைக்கலாம்.

—————————–

விஷ்ணுகுமார் கவிதைகள்

images (8)

ஓ…அது உங்கள் ஆடையா…!!

நன்கு அயர்ந்துறங்கும் சமயமாய்ப்பார்த்து
அளவு சரியில்லையென
கீழ்சட்டையும் மேல்சாராயும் என்னை உருவிப்போட்டுவிட்டு ஓடிவிட்டது
கண்திறக்கும் நேரம் ஒரு துணிக்கடையின் முன்பு ஆடையில்லாமலிருக்கிறேன்
ஓடிவந்த ஆடையோ , கடைக்குள்ளே தன்னை புத்தம்புதிதாக மடித்து அடுக்கில் அமர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் சத்தமிட்டு அழைக்கிறேன்
ஆனால் அதுவோ என்னைக் கண்டும் காணாதபடி அமர்ந்திருக்க
விருட்டென உள்ளே வந்து அதையெடுத்து அங்கேயே அணிந்துகொண்டு போகிறேன்

நீங்கள் இதுபோன்ற சம்பவங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்
ஏனெனில்
ஆடையை அணிந்துகொண்டு வெளியேறுகையில்
வாசலிலிருந்த முதலாளி
புன்னகைத்து வழியனுப்புகிறார்

———–

தலைகீழி…!!!

குழந்தையின் விரலைப்பிடித்து வந்துகொண்டிருந்தவள் சாலைக்கடக்கவேண்டி சற்றுநேரம் நின்றாள்
அங்கே மழையின் விரலைவிட்ட குட்டையொன்று சாலையின் மத்தியில் விழிபிதுங்கியபடி அல்லது வழிந்தபடி படுத்துக்கொண்டிருந்தது

அதைப்பார்த்ததும்
இவள் ஓடிப்போய் குட்டையில் குதித்தாள் அவ்வளவு சந்தோஷம்
அவ்வளவு ஆர்பரிப்பு
தெறித்த நீர் சாலையின் நடுவே வந்துகொண்டிருக்கும் நரைக்கோடுகளை சற்றுநேரம் மறைத்துக்கொண்டது
கைகளை விரித்த குரல்வளையும் முடிந்தளவு ஒலிவீசிக்கொண்டிருந்தது
சாலையில் எல்லோரும் இவளையே பார்க்க ஓடிவந்த குழந்தை பின்மண்டையில் அறைந்து அவளை இழுத்துப்போகிறது

குதித்த அவளின் எடைக்கேற்ப
வெளியேறியிருந்த நீர் மீண்டும் குட்டைக்கே வந்துகொண்டிருக்க
இதே நிகழ்வு போனநூற்றாண்டிலும் நிகழ்ந்தது ஆனால்
அப்போது கொஞ்சூண்டு நீரே வெளியேறிருந்தது

கருணாகரன் கவிதைகள் ( இலங்கை )

download (19)

இது நான் தின்று முடிக்காமலிருக்கும் பிணம்

இன்னும் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது

அன்பின் மணம்தான்.

விலகிச் செல்ல உங்களுக்கு எந்த நியாயமுமில்லை

நீங்களும் வந்தால்

சேர்ந்து நாம் தின்று களிக்கலாம்.

ஒரு பிணத்தை இப்படி அரையும் குறையுமாக விட்டுச் செல்வது நீதியற்றது

அதுவும் உடலொன்றைப் புசிக்க வேணும் என்ற தாகத்தோடிருக்கும்

இந்த நாட்களில்.

இன்னும் உதிரம் வற்றிக் காயவில்லை

என்பதே இந்தப் பிணத்தின் சிறப்பு

வற்றாத அன்பின் ஓட்டங்கள்

பிணமெங்கும் நிறைந்திருக்கின்றன.

ஞாபங்களும் எதிர்காலக் கனவும் பிணத்தின் இடது ஓரத்தில்

ரகசியமாகப் பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது

பலரைப்பற்றிய ரகசியக் குறிப்புகளும் பிணத்தின் இதயத்தில் உண்டு

இன்னும் ஒரு பங்கை இரவு தின்பேன்

அதன் பிறகும் மீதியிருக்கும்.

முப்பதாண்டுகளாகத் தின்று கொண்டிருக்கும் இந்தப் பிணத்தை

இன்னும் தின்று முடிப்பதற்கு ஒரு இரவோ பல யுகங்களோ தேவைப்படலாம்

சிலவேளை இந்தக் கணத்தில்கூட

முழுப்பிணமும் பசியாறி முடியக்கூடும்.

அதற்குள் வந்து விடுங்கள்

பிணமாயினும் பகிர்ந்துண்பதே கூடி வாழ்வதன் அழகல்லவா.

00