Category: இதழ் 123

தோற்றம் மறைவு (கவிதைகள் ) / ப.மதியழகன்

download (26)

1

இந்த இரவு மிகவும்
துக்ககரமானது
அதிர்ஷ்டத்தின் கதவுகள்
என் வரையில் திறக்கப்படவில்லை
இலைகள் சருகுகளாகும் போது
காலடியில் மிதிபடத்தான் செய்கிறது
வேருக்கு எதிராக இலைகள் எங்கேயாவது
போராட முடியுமா
ஆயுள் முழுவதும்
உடலின் தேவைகளைத்தானே நாம்
பூர்த்தி செய்து வருகிறோம்
கடவுள் சென்ற பாதையில்
வேறு காலடிகள் காணப்படுவதில்லை
எனக்கு முன்னே உள்ள
பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன
இருளின் கோரப்பிடியில்
நிற்கதியாய் நின்றுகொண்டிருக்கிறேன்
என்னை எதிர்ப்பவர்கள்
என் பலவீனத்தையறிய
இடங்கொடுத்துவிட்டேன்
வாழ்க்கைப் பந்தயத்தில்
ஜெயித்தவர்கள் கொண்டாடப்படுகின்றனர்
தோற்றவர்கள் முயற்சியைக் கைவிட்டு
விதியை நொந்து கொள்கின்றனர்
கனவான்கள் ஏழைகளிடம்
கருணை காட்டினால்
இன்று நான் கையேந்த நேர்ந்திருக்காது
மறதி என்ற ஒன்று இல்லாவிட்டால்
மனிதர்கள் தற்கொலை
செய்து கொள்வதைத் தவிர
வேறுவழி இல்லை
ஞானியர்கள் கூட
உடலைவிட்டுச் செல்ல
தயக்கம் காட்டுகின்றனர்
உலக சட்டதிட்டங்களால்
ஆன்மாவை சிறைப்படுத்த முடியாது
என்பதால் தான் நான்
இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

2

ஆன்மாவின் பாடல்களை
யாராவது கேட்க நேர்ந்தால்
அவர்களால் அழுகையை
அடக்க முடியாது
அடியாழத்திலிருந்து கிளம்பும்
அந்த ராகம் உயிர்களின் மேல்
அன்பைப் பொழிகிறது
உதடுகளிலிருந்து வெளிப்படும்
வார்த்தைகள் உச்சரித்தவுடன்
மரித்து விடுகின்றன
சூரியன் உதித்த உடனே
ரோஜா இதழில் படிந்துள்ள
பனித்துளி விடைபெற்றுச் சென்றுவிடும்
இந்த உலகம் அமைதியை
தொலைத்து விட்டது
சத்தமற்ற சில நொடிகளைக்கூட
மனிதனால் சகித்துக் கொண்டிருக்கமுடியாது
மற்றவர்கள் வழிவிடுவார்கள்
என எதிர்பார்த்தால் நாம்
காத்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும்
கல்லறைத் தோட்டத்தில்
காலங்களின் சமாதி
இருந்ததே தவிர
அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின்
பெயர்கள் பொறிக்கப்படவில்லை
கடல் நடுவில் என்
எண்ணப்படகு அலையில்
சிக்கித் தவிக்கிறது
காதலில் வீழ்ந்த என்னை
மண்மகள் முத்தமிட்டுச்
சொன்னாள் காதலின் பாதை
மரணத்தில் முடிகிறதென்று
அதலபாதாளத்தில் வீழ்ந்து
கொண்டிருந்த நான்
மரக்கிளையைப் பற்றினேன்
கடவுளை நம்பி கைப்பிடியைத்
தளர்த்தினேன் என் கபாலம் சிதறியது
அவ்வோசை கடவுளுக்கும் கேட்டிருக்கும்.

3

கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறோம்
என்று சொல்லிக் கொள்பவர்கள்
நான்கு பேர் நம்ப வேண்டும்
என்பதற்காகவே இப்படி
நடிக்கிறார்கள்
கடவுளின் பெயரால்
வெகுஜனத்தை சுலபமாக
அடிமைப்படுத்தலாம் என்று
அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது
கடவுளுக்கு முன்னால்
கொசுவைவிட மனிதன்
மேலானவனா அப்படி நினைத்தால்
அவன் கடவுளே அல்ல
கண்ணுக்குப் புலப்படாத
சட்டமொன்று இம்மண்ணில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சாக்ரடீஸுக்கு விஷமும்
இயேசுவுக்கு சிலுவையும் தந்தது
அந்த விதிதான்
மரத்தில் பல கிளைகள்
இருப்பதைப் போன்றது தான்
தெய்வச் சிலைகள்
ஆதாரம் வேரில் இருக்கிறது
என்பதை அறியாதவர்களா நாம்
கொடிய சிந்தனை
செயல்படுத்தாவிட்டாலும் கூட
அதுவொரு பாப காரியமே
வாழ்க்கையின் நிழலை நாம்
கவனிக்கத் தவறிவிடுகிறோம்
பேய்கள் தன்னைக் கண்டு
அஞ்சுபவனிடத்தில் தான்
ஆட்டம் காட்டுகிறது
அழிவுசக்திகளுக்கு எதிராக
கடவுள் உனக்குத் துணை
நிற்க மாட்டார்
பிரபஞ்ச அதிபதிக்கு மனிதன்
ஒரு பொருட்டேயில்லை
அரசனா ஆண்டியா
பூமியில் அவன் வாழ்க்கை எப்படிபட்டது
என்ற கோப்புகளை இறைவன்
படித்துப் பார்ப்பதே இல்லை
பரிசோதனை எலிகள்
எப்போது வேண்டுமானாலும்
மரணத்தை எதிர்கொள்ள
தயாராய் இருக்க வேண்டும்
ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இவ்வுலகத்தில்
சமரசத்தை கொண்டுவரும்
மரணச் சட்டம் புனிதமானதாக
கொண்டாடப்பட வேண்டும்.

4

துயரநீர்ச்சுழலில் எனது வாழ்க்கைப்படகு
அகப்பட்டுக் கொண்டது
இந்த உலகில் பிரவேசித்த
ஒவ்வொருவரும் பிறரைப் பார்த்து
தாமும் மாம்சத்தை திருப்திபடுத்தவே
கற்றுக் கொள்கிறார்கள்
போகத்தில் திளைக்கும் மக்கள்
கடைத்தேற்ற வந்த உத்தமர்களின்
அழைப்புக்கு செவி கொடுப்பதில்லை
இருண்டகாலங்களில் மாபெரும்
வெளிச்சத்தை நோக்கி நாம்
முன்னேற வேண்டும் என்ற
நோக்கம் அவர்களுக்கு இருக்காது
துக்க ஆறு ஒருபோதும்
மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கிற்கு நம்மை
அழைத்துச் செல்லாது
அன்பெனும் ஓடையில்
நீந்திப் பாருங்கள்
துக்கத்தின் புதல்வர்கள்
இரட்சிக்கப்படுவார்கள்
வாழ்க்கைப் பாதையில்
எந்த மரணக்கிணற்றில்
தடுக்கி விழுவோம் என
யாருக்கும் தெரியாது
நரகத்தில் வீழ்ந்துபடுவோம் என்று
தெரிந்தும் போகத்தின் பாதையையே
தேர்ந்தெடுக்கிறது மனிதமனம்
வாலிபத்தில் நெறிமுறைகளைப்
பின்பற்றாமல் வயோதிகத்தில்
வானத்தைப் பார்த்து கதறுவதால்
பயனொன்றுமில்லை
துயரக் கடலில் நீந்துவோருக்கு
மரணமே விடுதலையை
பரிசளிக்கும்
உடல் நோய்களின் கூடாரம்
வியாதி ஒன்றே ஞானத்தைப்
பரிசளிக்கும்
சிலந்தி வலையில் சிக்கிய
பூச்சிகள் கடவுளிடம்
பாரத்தைப் போட்டு
முயற்சியைக் கைவிடுமா
காரிருள் பாதையில்
துணிந்து நடப்பவனுக்கு
விமோசனம் மிக அருகில்
இருக்கின்றது
வாழ்நாளில் ஆணிகளைநிறைய
சேகரித்துக் கொள்
நீ விருப்பப்பட்டாலும்
சவப்பெட்டியிலிருந்து
வெளியே வரமுடியாதபடி.

இந்திய சிற்ப, ஓவிய, கட்டடக் கலையியலில் ஜைனம் / அரவகோன்

download (41)

இந்தியத் துணைக்கண்டத்தில் ஜைனமதத்தின் வளர்ச்சியால் சிற்பம், ஓவியம், கட்டடக்கலை ஆகியவை பெரும் பயனடைந்தன. பௌத்தம் போலவே ஜைனமும் கலைகளை அரவணைத்துக்கொண்டு தானும் வளர்ந்து பரவியது. இது கி.மு. 5ஆம் நூற்றாண்டில் ஜைனமதத்தை மக்களிடையே எழுச்சியுடன் எடுத்துச் சென்ற வர்தமான மஹாவீரர் காலத்துக்குப் பிறகு தொடங்கியது. ஆனால், ஹரப்பா, மொஹேஞ்சதாரொ நாகரிக அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளிலேயே ஜைன தீர்த்தங்கர் ரிஷபநாதர், மற்றும் தியானத்தில் சம்மணமிட்டு அமர்ந்தும், நின்றும் (உடையற்று) உள்ள தீர்த்தங்கர்கள் சிலைகள் அடையாளம் காணப் பட்டுள்ளன. அச்சிலைகளில் எழுத்துக்களும் காணப்படுகின்றன. மகதர் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு), கலிங்கர் (அதே காலம்), சாதவாஹனர் (கி.மு.60-கி.பி.225) ஆட்சிக் காலங்களில் மதுரா, சௌராஷ்ட்ரா பகுதிகளிலும் குஷானர் ஆட்சிக் காலத்திலும் (கி.மு.1-கி.பி.2ஆம் நூற்றாண்டு) ஜைனம் செழித்துப் பரவியது. இதனால் தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள் மிகுந்த எண்ணிக்கைகளில் உருவாயின.

ஜைன சமய வளர்ச்சிக்கு பீஹார் மாநிலம் மையமாக தொடர்ந்து செயற்பட்டது. பல தீர்த்தங்கர்கள் வீடுபேறு பெற்றநிலம் அது. சிலைகள் கொண்ட கல்வேலிகள், தூண்கள், சிற்பங்கள் போன்றவை பர்வநாத மலை, பராபர் மலை, பவபுரி போன்ற இடங்களில் அதிக அளவில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவ் விதமாகவே மேற்கில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் தொடக்ககாலம் முதலே ஜைன சமயம் நிலைகொண்ட நிலப்பகுதிகளாக விளங்கின. ஆந்திரப் பிரதேசத்திலும், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு பகுதிகளிலும் ஜைனம் பரவி வளர்ந்தது.

புத்தர் பௌத்த மத்தத்தை தோற்றுவித்தார். ஆனால், ஜைனமதத்தை வர்தமான மஹாவீரர் தோற்றுவிக்கவில்லை. அம்மத்தத்தில் இணைந்து துறவறம் பூண்டபின்னர் அவர் அதில் சில மாற்றங்களையும் புதிய விதிகளையும் உட்புகுத்தினார். ஜைன மதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் கடைசியான மஹாவீரர் அம்மத்திற்குப் பெரும் தூண்டு சக்தியாகவும் அனைத்துமாகவும் விளங்கினார்.

ஜைன நூல்களின்படி வர்தமானர் என்பது அவரது இளமைக் காலப்பெயர். பெற்றோர் இட்டது. குறுநில மன்னரின் மகனான அவர் போர்க்கலையில் வல்லமை கொண்டவராக விளங்கியதால் மஹாவீரர் என்று சிறப்பிக்கப்பட்டார். ஸ்வேதம்பரப் பிரிவு நூல்களின்படி அவரது பெற்றோர் ஜைன தீர்த்தங்கர் (23) பார்ஸ்வநாதரின் கொள்கைகளைப் பின்பற்றிய ஜைனர்கள். யசோதா என்னும் பெண்ணை மணந்து ஒரு மகளுக்குத் (ப்ரியதர்சனா) தந்தையுமானார் மஹாவீரர். ஆனால் திகம்பரப் பிரிவு ஜைனர் இதை ஏற்பதில்லை. அவரை கட்டை பிரம்மச்சாரி என்றே கொள்வர்.

வர்தமானர் தமது 28ஆவது வயதை எட்டியபோது அவரது பெற்றோர் அடுத்தடுத்து சல்லேகன முறையில் (வடகிருத்தல்) உயிர் நீத்தனர். இதனால் தோன்றிய துயரின் காரணமாக தனது 30ஆவது வயதில் அவர் உலகியல் பற்றை விடுத்து ஜைனசமயத்தில் இணைந்து துறவறம் மேற்கொண்டார். பல ஆண்டுகள் அலைந்தவாறே இருந்த அவர் மிகக் கடுமையான உடலைவருத்தும் வழிகளைத் தவமாகக்கொண்டு உடைகளைக் களைந்தெறிந்து, தலை முடியை தமது கைகளால் பற்றி நீக்கினார். உடலைப் பேணுவதை முற்றிலும் அகற்றினார். அசோக மரத்தின் கீழே அமர்ந்து யோக நிலையில் 12ஆண்டுகாலம் கடும் தவம் செய்தார். அவருக்கு ஞான விழிப்புக் கிட்டியது (இதை கேவல ஞானம் என்பர் ‘கேவல’ என்னும் வட சொல்லுக்கு சிறந்த-உயர்ந்த என்பது பொருள்) அடுத்த முப்பது ஆண்டுகள் ஜைன மத்தத்தை மக்களிடையே பரப்பிய அவர் தமது 72ஆவது வயதில் நிர்வாணம் (வீடுபேறு) பெற்றார். ஜைனநூல்களின்படி அவரது இறுதிநாள் பவபுரி என்னும் நகரில் மன்னரின் அவையில் கழிந்தது. (பவபுரி இன்றைய பீஹார் மாநிலத்தில் உள்ளது) அவரது முதல் சீடர் கௌத்தமஸ்வாமி அன்றுதான் ஞானம் எய்தினார். வர்தமானரின் உடல் வானோரால் எரியூட்டப் பட்டது. இது அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்

மஹாவீரர் ஞான விழிப்பு அடைந்தபின்னர் மதத்தை மக்களிடையே நெருக்கமாகக் கொண்டு செல்லவும், உரைகள் செய்து அவர்களை மதத்தில் இணைக்கவும் தொடர்ந்து கால்நடையாகப் பயணித்தபடியே இருந்தார். மழைக் காலங்களில் (நான்கு மாதங்கள்) ஒரே இடத்தில் தங்கி முனி சங்கத்தாருக்கு சமய நெறிகளையும் அவர்கள் பின்பற்றவேண்டிய அறங்களையும் பற்றி விளக்கங் களுடன் உரைகள் செய்தார். அவர் பயணித்த பகுதிகளில் இன்றைய பீஹார், மேற்கு வங்கம் மேற்கு உத்திரப்பிரதேசம் ஆகியவை அடங்கும்.

ஜைன மதத் துறவிகளும் இல்லறத்தாரும் பின்பற்றவேண்டிய அறங்கள் என்று அவர் முறைப்படுத்தியவை

ஃ பிறர் பொருளைக் கவராமை (ஹஸ்தேய)

ஃ வாய்மை (ஸத்ய)

ஃ உடமைகளின்மீது உள்ள பற்றினை விலக்குவது. (அபரிக்ரஹ)

ஃ பிற உயிர்களுக்கு துன்பம் இழையாமை (அஹிம்ஸ)

ஃ பெண்ணாசையை முற்றுமாக விலக்குதல் (பிரமச்சர்யம்- இது துறவிகளுக்கு மட்டுமானது)

உடை அணிவதை ஒதுக்கிய அவர் முனி சங்கத்தில் இணைய அதை ஒரு கட்டாயமான விதியாக்கினார். உடலைப் பேணுவதைத் துச்சமாக்கி உயிர் உடலில் நிலைப்பதற்கான உணவுமட்டுமே ஏற்பதையும் விதியாக்கினார். ஜைனத்தில் ஆண் துறவிகள் ‘முனி’ என்றும், பெண் துறவிகள் ‘ஆர்யிகா’ என்றும், இல்லறத்தாரில் ஆண் ‘ஸ்வரா’ என்றும் பெண் ‘ஸ்விகா’ என்றும் குறிப்பிடப் படுவர்.

பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபடுவதே ஹிந்து, பௌத்த, ஜைன மதங்கள் முன்னெடுத்த இலக்கு. ‘தீர்த்தங்கர்’ என்னும் வடசொல்லுக்கு (பிறவி) கடலில் சிக்குண்ட எளியவரைக் கரை சேர்ப்பவர் என்பது பொருள்.

ஜைன ஆகமங்கள் எனப்படுவது மஹாவீரரின் படிப்பினைகளின் தொகை நூல். அது அவரது முதல் சீடர் கௌத்தம ஸ்வாமி என்பவரால் தொகுக்கப் பட்டது. ‘ஞான தாரா’ என்பது நூலின் பெயர். அது 12 பகுதிகள் கொண்டது அதில், ‘அனேகவாதம்’, “ஸ்யதவாதம்” “நியாய வாதம்” போன்றவை அடங்கும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் ஆச்சாரியர் புஷ்பநாதர் ஆச்சாரியர் புத்தபலி இருவராலும் ஓலைச் சுவடிகளில் ஆகமவிதிகள் எழுதப்பட்டன. இன்று அந்த நூலின் பெரும் பகுதி இல்லை. பௌத்த நூல்கள் ‘நிகந்த ஞானபுத்தா’ (முடிச்சற்ற ஞானவான்) என்று மஹாவீரரைச் சிறப்பிக்கின்றன.

‘அசரங்க சூத்ர’ என்னும் நூல் அவரது முக்கால ஞானம் பற்றியும், ‘உத்தர புராணம்’ ‘ஹரிவம்ச புராணம்’ ஆகியவை அவர் ஞான விழிப்பு பெற்ற விவரத்தையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன. ‘கல்பசூத்ர’ அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் துறவிகளுக்கான நடைமுறை விதிகள் பற்றி கூறுகிறது.

‘மஹாபுராணம்’ ‘த்ரிஸஷ்டி சகல புருஷ சரித்ர’ ஆகிய நூல்கள் மஹா வீரரின் முந்தையப் பிறவிகள் பற்றி விரிவாகப் பேசுகின்றன. பரத சக்ரவர்த்தியின் மகன் மரிசியாக ஒருமுறை அவர் இவ்வுலகில் தோன்றியதாக இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.

கி.மு.2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சாரியர் உமாஸ்வாமி ஜைன சமய வழி மனித அறிவின் குணம், அதன் எல்லை, உண்மை, அறிவு ஆகியவற்றை ஆயும் முறை, பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு சார்ந்த ஆராய்ச்சிமுறை, சுயக்கட்டுப்பாடு சார்ந்த தெளிவு, சமயத்தின் அறங்களையும் விதிகளையும் செயற்படுத்துதல் ஆகியவை சார்ந்த சிதறிக்கிடந்த நூல்களை ஒருங்கிணைத்து ‘தத்வார்த்த சூத்ர’ அல்லது தத்வார்த்தாதி ஆகம சூத்ர’ என்னும் நூலை எழுதினார். இதில் பத்து அங்கங்கள் உள்ளன. இந்நூல் ஜைன சமய அனைத்துப் பிரிவுகளுக்கும் ஏற்புடையது. பின்வந்த நூற்றாண்டுகளில் (கி.பி.5) அதற்கு பல மொழிகளில் விளக்கவுரை பலராலும் எழுதப்பட்டது.

ஜைனத்தில் பிரிவுகளும் உட்பிரிவுகளும்

ஜைனமதம் இரண்டாகப் பிரிவதற்கான கருத்துவேற்றுமைச் சலசலப்பு மஹாவீரரின் காலத்திலேயே தோன்றிவிட்டது. ஜைனம் மஹாவீரருக்கு முன்னரே நெடுங்காலமாக இருந்துவந்த மதமரபு (மஹாபாரதக் காலத்துக்கும் முந்தையது), அவருக்கு முந்தைய தீர்த்தங்கர் பார்ஸ்வநாதரின் துறவி சங்கம் மஹாவீரரின் சங்கத்தில் இணைந்ததா அல்லது தனித்தே இயங்கியதா என்பது உறுதியில்லை. ஜைனம் இரண்டாகப் பிரிவதற்குத் தலையாய காரணம் மஹாவீரர் துறவியாகும் தகுதியாக உட்புகுத்திய உடை அணிவதை ஒதுக்கும் புதிய விதிதான். அவர் ஒருவர் சங்கத்தில் இணைய இதை அடிப்படைத் தகுதியாக்கினார். (உடை அணிவதை முற்றிலுமாகத் துறத்தல்) இதற்கு உடன்படாது ஒரு சங்கக்கூட்டம் விலகியே இருந்தது.

இந்த உடைக்கோட்பாடு சார்ந்த விரிசல் மஹாவீரரின் காலத்திற்குப் பின்னர் அகலமானது. இரண்டையும் ஒன்றிணைக்கப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் அவை பலனளிக்க வில்லை. கி.பி.85-87 இல் இரண்டும் பிரிந்தே இயங்குவது என்பது வெளிப்படையாக முடிவாகியது. அது இன்றளவும் தொடர்கிறது.

உடமைகளைத் துறக்கும் கோட்பாட்டில் உடை அணிவதையும் கைவிட்ட முனிசங்க வழி திகம்பர ஜைனம் என்றும், அதை ஏற்காத முனிசங்க வழி ஸ்வேதம்பர ஜைனம் என்றும் தங்களை அழைத்துக் கொண்டன. ஸ்வேதம்பரப் பிரிவின் துறவிகள் வெள்ளை ஆடையை இடுப்பிலும் மேலாடையாகவும் அணிந்தனர். திகம்பரர் பொதுவிலும் தனித்திருக்கும் போதும் உடை நீக்கியவராகவே வாழ்ந்தனர். ஒரு துறவி சம்சாரச் சுழலிலிருந்து விடுபட, வீடுபேறு அடைய இதுவே அடிப்படை வழியாக கொள்ளப்பட்டது. பெண் துறவிகளுக்கு வீடுபேறு வாய்க்காது ஏனெனில் அவர்கள் உடைஅணிபவர்கள். இன்னொரு பிறவிலில் ஆணாகப் பிறந்து துறவறம் ஏற்றால்தான் அதற்கான வாய்ப்புக் கிட்டும்.

ஸ்வேதம்பரப் பிரிவினர் 23 ஆவது தீர்த்தங்கர் பார்ஸ்வநாதரைப் பின் பற்றினர் என்பதை முன்பே கண்டோம். இதில் பெண் துறவிகளுக்கும் வீடுபேறு வாய்க்கும். இப்பிரிவினரின் தீர்த்தங்கர்களின் உருவச்சிலைகள் உடையுடன் காணப்படும். திகம்பரப்பிரிவில் அவ்விதம் இராது. ஓவியங்களிலும் இந்தமுறை தான். ஸ்வேதம்பரப் பிரிவுத் துறவிகள் ஒருநாளில் ஒருமுறைக்கு மேலும் பகலில் உணவு கொள்ளலாம். உணவு யாசிக்க கையில் திருஓட்டுடன் செல்லலாம். பல வீடுகளிலிருந்தும் தொடர்ந்து யாசகம் ஏற்கலாம். ஆனால், திகம்பரத் துறவிகள் ஒருநாளில் ஒரு வீட்டில்தான் யாசிக்கலாம். திருவோடு இல்லாமல் உணவைக் கைகளில் பெற்றுக் கொண்டு நின்றவாறே உண்ண வேண்டும். ஒரு ஸ்வேதம்பரத் துறவி பதிநான்கு பொருள்களைத் தனது உடமைகளாகக் கொள்ளலாம். அவற்றுள் உடையும் திருவோடும் அடங்கும். ஆனால் திகம்பரருக்கோ உடமைகள் இரண்டுதான். ஒன்று விசிரி, மற்றது மரத்தாலாகிய நீர்க்குடுவை. ஆயின் இருபிரிவினரும் சமய நூல்களைச் சுமந்து செல்லலாம்.

உட்பிரிவுகள்

காலப்போக்கில் இந்த இரு பிரிவுகளிலும் உட்பிரிவுகள் தோன்றின. தலைமை மீது அதிருப்தி, பரிவார தேவதைகளை வழிபடும் முறை உட்புகுதல், துறவறத்தில் நுழைந்த சிறுசிறு மாற்றங்கள், ஹிந்து பௌத்த மதங்களில் இருந்த வழிபாட்டு முறைகள் எளியோரை ஈர்த்ததால் அதுப்போலவே மதத்தை மக்களை மதத்தில் இருத்தி வைக்கவும், மதத்தை உறுதியாக வைத்திருக்கவென அதற்குப் பல காரணங்கள் உண்டு.

திகம்பரப் பிரிவில் இடைக்காலத்தில் ஆறு உட்பிரிவுகள் உண்டாயின. ஸ்வேதம்பரப் பிரிவில் மூன்று பிரிவுகள் தோன்றின. இன்றளவும் இவை பின்பற்றப்படுகின்றன. இவையெல்லாம் சிற்ப ஓவியங்களிலும் வெளிப்பட்டன.

ஜைனத்தில் யட்சன் யட்சிணி (சாசன தேவதைகள்)

உருவ வழிபாடு

download (42)

ஜைனம் கடவுள் நம்பிக்கை இல்லாதது, கடுமையான மதக் கோட்பாடுகளை உள்ளடக்கியது, தாந்திரிக, தெய்வ வழிபாடுகளை ஒதுக்கியது என்னும் கருத்து பொதுவாக நம்பப்படுகிறது. உண்மையில், ஜைனத்தில் குறிப்பாக திகம்பரப் பிரிவினரால் தாந்திரிக வழிபாட்டு முறைகள் ஈடுபாட்டுடனும் முனைப்புடனும் பின்பற்றப்பட்டன. அதில் பெண் தேவதையான யட்சிணியை வழிபடுவது தலையாயதான ஒன்றாக விளங்கியது.

இந்த தேவதை வழிபாடு இணையும் முன்னரே ஜைனத்தில் தாந்திரிகத்தின் தாக்கம் தோன்றிவிட்டது. அவர்களது புராணங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் யட்சன்-யட்சிணி தேவதைகளின் உருவங்கள் வழிபாட்டு மேடையில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. தம்மை வழிபடுவோரிடம் யட்சர்கள் காட்டும் அன்பைச் சிறப்பித்தும் போற்றியும் கூறும் கதைகளும் உருவாயின. ஜைனத்தில் ஊடுருவிய தாந்திரிக வழிபாட்டு முறையில் யட்சிணிகளின் உயர்வும் வலிமையும் வளர்ந்து கொண்டே வந்தது.

இறைவனின் இருப்பை மறுக்கும் கோட்பாடுடைய ஜைனம் பெண் தேவதைகளை வழிபடும் முறையை எவ்வாறு ஏற்றுக்கொண்டது? பௌத்த ஹிந்து மதங்களுடன் நிகழ்ந்த சமயச் போட்டியால் தனது இடத்தை எளிய மக்களிடையே தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தால் இது உள்நுழைந்ததா, அல்லது ஜைனப் படிப்பினைகளில் உள்ள அரூப வழிபாட்டு முறைகளாலா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஜைனத்தில் இறைவழிபாடு என்பது ஒதுக்கப்பட்டதால் எளிய பாமர மக்களுக்கு இறை நிலைக்கு உயர்ந்த தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகளை தங்களுக்கு உலகியல் வாழ்க்கையில் எதிர்ப்படும் துயர், இடர், அச்சம் போன்றவற்றைக் களைந்தெறிய வழிபட இயலவில்லை. எனவே ஜைனசமயக் கோட்பாட்டு நூல்களில் மெல்ல மெல்ல இவற்றிற்கான தீர்வாகத் தாந்திரிகம் சார்ந்த தேவதை வழிபாட்டு முறைகள் இணைக்கப்பட்டன. யட்ச-யட்சிணி உருவச் சிலைகள் ஜைன ஆலயங்களில் தீர்த்தங்கர் உருவசிலைகளைச் சுற்றிலும் இடம் பெறத் தொடங்கின. அவை யார்? எவ்வாறு இத்துணை வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றன என்பது பலருக்கும் வியப்பளிக்கும் கேள்விகள்.

தீர்த்தங்கர்களுக்கும் இந்த தேவதைகளுக்கும் -இவை பெருமளவில் வழிபட்ட போதும்- உள்ள அடிப்படை வேற்றுமை ஒன்று உண்டு. தீர்த்தங்கர்கள் புலன்களை அடக்கி, வென்று ஞானவிழிப்பு அடைந்து இறைநிலைக்கு உயர்ந்தவர்கள். என்றபோதும், அவர்கள் இறைவன் அல்ல; வழிகாட்டிதான். ஆயின் இந்த யட்சன்-யட்சிணி தேவதைகள் புலன்களை அடக்க இயலாதவை. மானுடரைப் போலவே பிறவிச் சுழலில் அலைபவை. அவை பரிவார தேவதைகள். மண்ணுலகுக்கும் வானுலகுக்கும் இடைப்பட்ட வெளியில் அலைபவை. பெரும் ஆற்றல் கொண்டவை. அணிமா, கரிமா போன்ற நவ சித்திகளும் கைவரப் பெற்றவை.
download (27)
இந்திரனால் (இந்துசமய இந்திரன் அல்ல) தீர்த்தங்கர்களின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டவை. எனவே இவை ஆலயங்களில் தீர்த்தங்கரின் உருவச் சிலைகளுடன் -யட்சன் வலப்புறத்திலும் யட்சிணி இடப் புறத்திலுமாக- இடம் பெற்றன. தொடக்க நாட்களில் இவை தீர்த்தங்கரை வழிபடும் மாந்தராகவே இருந்தன. ஆனால், காலம் செல்லச்செல்ல இவை வழிபாட்டு மையத்துக்கு வந்ததும் தீர்த்தங்கரின் உருவம் சிறிய அளவில் இவற்றின் தலைக்கு மேலே தியான நிலையில் சிலைகளில் பொருத்தப்பட்டதும் நிகழ்ந்தது.

இவற்றின் வசிப்பிடம் ஆலயங்களில், நகருக்கு வெளியே, நகரின் நுழை வாயிலில் அல்லது நகரினுள், மலைகளில், மரங்களில், நீர்நிலைகளுக்கு அருகில், என்று பல்வேறு வகைப்படும். பொதுவாக மாந்தருக்கு நல்லதே செய்யும் இவை. என்றாலும் இவற்றில் சில தேவதைகள் தீமைசெய்யும் குணம் கொண்டவை. சுல்பானி என்ற யட்சன் மஹாவீரரின் தவத்தைக் கலைக்கப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்ததாகவும் இன்னும் இதுபோன்ற வேறுசில கதைகளும் உண்டு. சுயநலம், பேராசை, அசூயை போன்றவற்றின் இருப்பிடம் மனிதர்கள். எனவே அவர்கள் எவ்வளவு வழிபடினும் தீர்த்தங்கர்கள் அதற்கான பலன்களைக் கொடுப்பதில்லை தீர்த்தங்கர்களுக்குப் பாதுகாவலராக விளங்கும் தேவதைகள்தான் மக்களின் துயர் தீர்க்க, செல்வம் நல்க, பகையை அழிக்க என்பன போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொடுக்க நியமிக்கப்பட்டவை. எனவே இந்தப் பரிவார தேவதைகள் தீர்த்தங்கரைச் சுற்றிலும் வழிபாட்டுத் தலத்தில் இடம் பெற்றன. தங்கள் குலம் தழைக்கவும், நோயிலிருந்து மீளவும், அச்சம் விலகவும் வரங்கள் வேண்டி மாந்தர் அவைகளுக்குக் காணிக்கைகளைப் படைத்தார்கள்.

‘ஸ்தானங்கா சுத்ர’ (Sthananga Suthra), ‘உத்தராயண் சூத்ர’ ‘பகவதி சூத்ர’ ‘அந்தகாதாசோ சூத்ர’, ‘பௌமசரிய சூத்ர’ போன்ற தொடக்க கால ஜைன நூல்களில் யட்சன்-யட்சிணி சார்ந்த செய்திகள் தென்படுகின்றன. கி.பி.783 இல் எழுதப்பட்ட ‘ஹரிவம்ச புராண’ த்தில் இந்தச் செய்தி முதலில் இடம் பெற்றது. கி.பி.6 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான ஜைன நூல்களில் இடம் பெற்ற தேவதைகள் யட்சராஜா, தர்மேந்திர யட்சா, சக்ரேஸ்வரி, அம்பிகா, பத்மாவதி போன்றவைதான். ஆணும் பெண்ணுமாக இணைந்த 24 யட்ச யட்சிணிகளின் பட்டியல் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இறுதி வடிவம் பெற்றது. அதாவது, ஒரு தீர்த்தங்கருக்கு ஒரு ஜோடி என்பதாக. அவற்றிற்கான தனி அடையாளங்களும் 11-12 நூற்றாண்டுகளில் முடிவு செய்யப்பட்டன. ஆனால் திகம்பரருக்கும் ஸ்வேதம்பரருக்கும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. இந்த தேவதைகளின் தனித்த அடையாளங்களும் பெயர்களும் பெருமளவில் வைதீக, பௌத்த சமயங்களிலிருந்து பெறப்பட்டவை. ஜைன ஆகமங்களில் இது சார்ந்த குறிப்புகள் காணப்படவில்லை.

இப்போது நாம் இத் தேவதைகளில் அதிக அளவில் வழிபடப்படுபவை சார்ந்த சில விவரங்களைக் காண்போம்.

01-சக்ரேஸ்வரி தேவி

ரிஷபதேவர் எனப்படும் ஆதிநாதரின் பெண்காவலர் தெய்வம் சக்ரேஸ்வரி தேவி. அப்ரதிசக்ரா என்னும் இன்னொரு பெயரும் அவளுக்கு உண்டு. அவள் பொன்னிறமானவள். கழுகினை ஊர்தியாகக் கொண்டவள். எட்டுக் கைகளை உடையவள். அருளும் கை, வில், பாசக்கயிறு, சக்கரம் ஆகியவற்றை வலக் கரங்களிலும், கடிவாளம், அம்பு, வச்சிராயுதம், சக்கரம் ஆகியவற்றை இடக் கரங்களிலும் கொண்டவள்.

02-அம்பிகா தேவி
download (41)

நேமிநாதர் எனப்படும் 22ஆவது தீர்த்தங்கருக்கான காவல் தெய்வம். அம்பை, அம்பா, ஆம்ரா என்னும் பெயர்களிலும் விளிக்கப் படுவாள். பொன்நிற மேனியாள். அரிமா அவளது ஊர்தி. நான்கு கரங்களைக் கொண்டவள். வலப்புறக் கைகளில் ஒரு மாங்கனி (அல்லது காய்) ஒரு மாங்கிளை (இலைகளுடன்) எனவும் இடது கைகளில் கடிவாளம், இரண்டு குழந்தைகள் என்றும் அவள் உருவகப் படுத்தப் படுகிறாள். (நேமிநாதருக்கு மயிலையில் ஒரு ஆலயம் உண்டு)

03- பத்மாவதி தேவி

பார்ஸ்வநாதரின் (23தீர்த்தங்கர்) பெண் காவல் தேவதை.

04-சரஸ்வதி தேவி

இந்து மதத்தில் வழிபடப்படும் சரஸ்வதி தேவிபோலவே இவளும் அதே ஆற்றலுடனும், உருவ அமைப்புடனும் உள்ளாள். அறியாமையை விலக்குபவள். அறிவின் ஒளி, கல்வியின் நாயகி, நான்கு கரங்களைக் கொண்டவள். சுவடியும், மலரும் கொண்டவள், வீணையை மீட்டும் விதமாக தாமரை மலரில் அமர்ந்துள்ளாள். அவளது ஊர்தி அன்னம் அல்லது மயில்.

05-இலக்குமி தேவி

18157841_10213179660225259_5741567510453736258_n

இந்துசமய வழிபாட்டில் உள்ளவிதமாகவே இங்கும் தோற்றம் கொண்டவள். செல்வத்தின் நாயகி.

மணிபத்ர தேவர், கண்டகர்ண தேவர், நாகோட பைரவர், என்றெல்லாம் யட்சர்கள் வழிபடப் படுகின்றனர். பூமியாஜி என்னும் தேவதை மலை வடிவில் உள்ளது.

06-நைகமேஷா

நைகமேஷா என்னும் தேவதை வழிபாடுகளில் முக்கியமான ஒன்று. மதுராவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பத் துண்டான ஜைன தீர்த்தங்கரின் சிலையில் காணப்படுகிறது. இதிலுள்ள எழுத்து இது கி.பி. முதல் நூற்றாண்டு சார்ந்தது என்று அறிவிக்கிறது. நைகமேஷா சிலை ஆண் பெண் என்று இருவிதமாகவும் உள்ளது. இது ஆட்டின் தலைகொண்டது. ஹரிநேக மேஷி என்று ‘கல்பசூத்ர’விலும் நைகமேஷின் என்று .நேமிநாத சரித்திர’ த்திலும், நெஜமேஷா அல்லது நைகமேயா என்று வேறு சில நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. சிற்பங்களிலும் ஓவியங்களிலும் ஆட்டின் தலையுடனோ ஒட்டகச் சிவிங்கியின் தலையுடனோ காணப்படுகிறது.

மஹாவீரர் தேவநந்தா என்னும் ஒரு அந்தணப் பெண்ணின் வயிற்றில் கருத்தரித்ததாகவும் பின்னர் இந்திரனின் கட்டளைக்கிணங்க அவர் நைகமேஷா தேவதையால் சத்திரியப் பெண்ணான த்ரிஷலாவின் கருப்பையில் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், ‘கல்பசூத்ர’ நூலில் கூற பட்டிருக்கிறது. இத்தேவதையை இனப் பெருக்கத்துடனும் இணைத்துக் கூறும் கதைகளும் உண்டு. பேறுகாலத்தில் செவிலி போலவும் இத்தேவதை ஓவியங்களில் தீட்டப்படுகிறது.

இவையெல்லாம் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் பெருமளவில் தோற்றம் கண்டன என்பதால்தான் இவ்வளவு விரிவாக இதுபற்றிப் பேச நேர்ந்தது.

••••

மலையாள மொழி கவிஞர் வினய்சந்திரன் ( கட்டுரை ) – தி.இரா.மீனா

maxresdefault (1)

“காட்டிற்கு நான் என்ன பெயரிடுவேன்?

காட்டிற்கு நான் என் பெயரிடுவேன் ”

தலைமுறைகளைக் கடந்த படைப்பாளராக மதிக்கப்படும் மலையாள மொழிக் கவிஞரான டி.வினய்சந்திரன் எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர் மலை யாள மொழி நவீன யுகத்துக்குள் காலடி எடுத்து வைத்த சூழலில் ஆழ் மனதை ஆதிக்கம் செய்கிற உணர்வுகளையும், அனுபவங்களையும் வாச கனுக்கு வெளிப்படுத்துகிற சக்தி வாய்ந்த ஓர் ஊடகமாக அவர் தன் கவிதை களை அறிமுகப்படுத்தினார்..அவை கருவும் ,விளக்க உத்திகளும் மரபும், நவீனத் தன்மையும் இணைந்ததாக வெளிப்பட்டன.நவீனப் போக்கை அவர் கையாண்டாலும் கவிதைகள் நாட்டுப்புறச் சாயலும், இசைச்சார்பும் கொண்டி ருந்தன. காடுகள்,ஏரிகள் இயற்கை என்று அவர் கவிதைகளில் இயற்கையின் ஆளுமை அதிகமாக வெளிப்பட்டது.

மலையாளப் பேராசிரியராக கேரள மாநிலத்தின் பல்வேறு அரசுக் கல்லூரி களில் பணியாற்றிய அவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.குடும்ப வாழ்க்கை அவருக்குப் பிடித்தமானதாக இல்லை. புத்தகங்களையும், கவிதைகளையும் பெரிதும் ரசித்த அவர் நட்பையும், நாடோடியாக பல இடங்களுக்குச் சென்று வருவதையும் வாழ்வின் உன்னதமாக நினைத்தார். கேரளாவில் எண்பதுகள் தொண்ணூறுகளில் கவிஞர்கள் கூடிக் கவியரங்கங்கள் போலக் கவிதைகள் படிப்பது மிகப் பரவலாக இருந்தது. சொல்லப் போனால் திருமணப் பந்தல்களி லும் கூட கவிதை வாசிப்புகளைக் கேட்கலாம். நாட்டுப்புறச் சாயலும், இசைச் சார்பும் கொண்டிருந்ததால் அவர் கவிதைகள் பரவலாக எல்லோரையும் கவர்ந்தன. புயல் போல அவர் கவிதைகள் அமைய வினய்சந்திரன் சுழல் காற்றாக இருந் தார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் – மாணவர் களாக இருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். நாடகம், கவிதை ,மொழிபெயர்ப்பு உரைநடை என்று பலதுறைகளில் பங்களித்திருந்தாலும் முதன்மையாக நின்றது கவிதைதான். வாய்மொழிப் பாரம்பரியம்,எழுத்து வடிவம் இரண்டும் ஒருங்கே வெளிப்படுவதான தன்மை இவர் கவிதைகளுக்கு இயல்பானதாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

வினய்சந்திரனின் ’உபரிகுன்ன” நாவலுக்கு முன்னுரை எழுதும் போது விமர் சகராகிய கே.வி. அப்பன் “அந்த நாவலின் சிறந்த ஆளுமை என்பது அதன் கவிதை சார்ந்த பண்புதான்” என்கிறார்.முழுக் கவிஞராக மலையாள இலக் கியம் இவரைப் போற்றுவதற்குரிய முக்கிய காரணம் கவிதையைத் தவிர இவருக்கு வேறு வாழ்க்கை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்ததும் இறுதி வரை அப்படிச் செயல்பட்டதும்தான் என்று நெருங்கிய நண்பர்கள் குறிப் பிட்டுள்ளனர்.”கவிதை என்பது பகுப்பாய்விற்கு உட்பட்டதல்ல.அது கேட்க, பார்க்க,தொட,உணர, அனுபவிக்க, உள்வாங்கிக் கொள்ள வேண்டிய உணர் வாகும் “என்கிறார். இவருடைய கவிதைகளை ’இந்த வகை” என்று எந்த அடையாளத்திற்குள்ளும் கொண்டு வரமுடியாது. செறிவு, தொடர்களி லான கட்டமைப்பு, பன்முகத்தன்மை ஆகிய நிலைகள் இவர் கவிதைகளை மற்ற வர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றன

இந்திய மொழிகளில் மட்டுமின்றி உலக மொழிகளிலும் அவர் விருப்பம் கொண்டிருந்ததை அவருடைய மொழி பெயர்ப்புகள் உறுதி செய்கின்றன. ஆசிய, ஐரோப்பிய ,ஆப்பிரிக்க,லத்தீன்,அமெரிக்க மொழிகளின் கவிதைகளை மலையாள மொழியில் மொழிபெயர்த்தவர். Seferis ,Rilke ,Lorca,Tomas Transt romer, Octavio Paz, Guiseppe Ungaretti, Pablo Neruda, Kalil jibron ஆகியவர் களின் படைப்புகளில் தான் ஈடுபாடு கொண்டிருந்ததோடு மட்டுமின்றி மாண வர்களிடமும் மொழிகள் கடந்த நிலையில் அந்த படைப்புக்களை படிக்கத் தூண்டியவர்.

கன்னட வசனங்கள்,தெலுங்கு மொழி திகம்பர கவிதைகள் ஆகியவற்றையும் மொழி பெயர்த்தவர்.உரைநடை,கதை, நாடகங்கள் என்று பல படைத்திருப் பினும் அவருக்கு மிக நெருங்கியதாக கவிதை மட்டுமிருந்தது. பயணம், சுற்றுச்சூழலியம்,சமுதாயச் செயல்பாடுகள் என்று எல்லாமும் கவிதை சார்ந்த தாக அமைந்தன.வாழ்க்கையைக் கவிதையாகப் பார்த்த மரபில் வந்தவர்.தன் கவிதைகள் விமர்சிக்கப்படும் போது உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அவருடைய ’தன்முனைப்பு’ மற்றவர்களுக்கு எரிச்சலூட்டினாலும் அதைப் பொருட்படுத்தவில்லை.” நூறு வருடங்களுக்குப் பிறகு படித்தாலும் படிப்பவர்க ளுக்கு நான் எதிர்கால மொழிக்கு உரியவனென்பது புரியும் “என்று குறிப்பிட் டுள்ளார்.பொதுவாக இதைப் படிக்கும் போது ’அகந்தை’என்பது போலத் தெரிந் தாலும் உலக வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக வாழ்ந்த நிலையை அவர் கவிதைகளின் மூலமாக உணரமுடிகிறது.ஆண்,பெண் வேறுபாடில்லாத நிலை யில் உலகக் கவிஞர்களை ஏற்றவர்.

பயணத்தைப் பெரிதும் விரும்பினார். அவருடைய ’யாத்ராபாட்டு” அவர் அற்புதமான பயணியாக விளங்கியதைக் காட்டும். பயணத்தின் பல பரிமா னங்களைக் காட்டுவதான நூல் என்று மதிப்பிடப்படுகிறது.. தன் பயணக் கதைகளை நண்பர்களோடும்,மாணவர்களோடும் பகிர்ந்து கொண்டவர். தென்னிந்தியாவின் சித்தர் என்றும் அவரை அழைக்கின்றனர்.
மாறும் உணர்திறனுக்கேற்ப செவ்வியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், இருத்தலியல் என்று தொடர்ந்த எழுத்து சமகாலச் சிறந்த கவிஞன் வரிசையில் வைக்கிறது.

அவருடைய இருபது கவிதைத்தொகுப்புகளில் சில: வினய்சந்திரன் கவிதைகள் , நரகம் ஒரு பிரேம கவிதா எழுத்துன்னு பேரு அறியாத மரங்கள் வம்சகதா,சமஸ்தகேரளம் பிஓ,ஸௌம்யகாஸி, வீட்டிலுக்குள்ள வழி,உபரிகுன்னு
விருதுகள்: ஆசான் நினைவு விருது, செங்கம்புழா விருது, கேரள சாகித்ய அகாதெமி விருது,மஸ்கட் கேரளா மைய விருது.
அவருடைய “நரகம் ஒரு பிரேம கவிதை எழுதுன்னு ’என்ற படைப்பு என்று மிகச் சிறந்த்தாக மதிப்பிடப்படுகிறது.அவர் படைப்புகளுக்கான விமரிசனங்கள் உரைநடை கவிதையின் முன்னோடியாக அவரை நிலைநிறுத்தியது.

“காட்டிற்கு நான் என்ன பெயரிடுவேன்?

காட்டிற்கு நான் என் பெயரிடுவேன்.”

என்று ’காடு” என்ற கவிதையில் இடம் பெறும் வரிகள் சுருக்கமாக இவரை, இவர் கவிதையை, பரந்த உலகப் பார்வையைக் காட்டுகின்றன

இலைகள்

அவள் எனக்கு ஒரு மலர் தந்தாள்

அதை முத்தமிட்டு மனிதனானேன்

அவை எனக்கு நெருப்பைத் தந்தன

அதனால் கவிஞனானேன்

ஒரு மேகம் அறிவுரை சொன்னது எனக்கு

தலையிலிந்து கால்வரை

நரகத்திலிருந்து சொர்க்கம் வரை

எப்போதும் அலையும்படி.

இறுதியில்

புல்வெளியின் இலையொன்று

என்னை அழைத்தது

அழுகின்ற பூமியின்

மலர்கின்ற வானத்தின்

நெருக்கடியைப் பகிர்ந்து கொள்ள.

ஓவியங்கள்

காக்கைகளின் கரைவு

ஈர தலைமுடிகளின் மணம்

–இது வைகறை

பல பாதைகளும்

பார்வையற்ற சூரியனும்

-இது மதியம்.

தேயும் நிழலும்

அச்சுறுத்தும் ஈக்களும்

-இது அந்தி

முடிவற்ற இடுகாடு

இடையே மயக்கும் காற்று

-இது இரவு.

பலகையின் மேல்

வெளியே ஒரு

பிரிவின் கொந்தளிப்பு.

கீழ்ச் சட்டையோடும் முகத்திரையோடும்

என் கவிதை உறங்கப் போகிறது.

இந்தக் கடல் புதுநிலவு நாளில்

நிலவை அழைக்கிறது

என் கவிதை இன்னமும் உறங்குகிறது.

தீவிலிருந்து எழும் கணங்கள்

எல்லையற்ற பெருவெளியைக்

காணப்பறக்கிறது.

காற்று இறுக்கமாகிறது.

இன்னமும் மீட்டலின்றி மனதின் இழைகள்.

மனம் தூண்டிலில்பட்ட

மீன்போல அழுகிறது.

என் உறக்கமற்ற பாடலும்

நானும் காற்றின் தோளில்உட்கார்ந்து

வைகறை நட்சத்திரத்திற்காக

வானத்தை ஊடுருவும்போது

கடல் உறங்குகிறது.

***

சாஜை கே.வி. — வினய்சந்திரனோடு ஓர் உரையாடல்

கே : “வெகுநேரம் மௌனமாக இருக்கமுடியாத, தெய்வமாக்கப்பட்டுவிடும் உயர்நிலைக்கு அஞ்சிய காதலர்கள் அலைகளுடன் சரசமாடும் வகையில் கடற்கரைக்குத் திரும்பினாரகள் ” மேலே சொன்ன மேற்கோளுக்குச் சான்று போல உங்கள் சமகாலத்தவர்களிடையே தனித்துவம் உடையவராக இருக்கிறீர்கள்.இந்தமாதிரியான அணுகுமுறை “அனகம்”போன்ற கவிதைகளில் வெளிப்படுகிறது.டி.எச்.லாரன்ஸின்Lady Chatterly’sLover புத்தகத்தில் இதே மாதி ரியான ஒரு கருத்திருக்கிறது.புணர்ச்சிக்குப் பின்னேயான காதலியின் முகம் புத்தனின் முகம்போலச் சாந்தமாயிருந்தது என்று — காதலும், காமமும் இணைந்த ஆன்மீக நிலைக்குச் சிறிது விளக்கம் தரமுடியுமா?”

பதில்:மனிதன்புலன் சார்ந்தவன்.காமம் என்பது வாழ்க்கைக்கான விழா. எனினும்அது கவிதை என்பதன் உத்வேகத்திற்கு ஒருபடி மேலானது.ஒருவன் நிர்வாணம் அல்லது மோட்சம் என்பதை நோக்கிப் போகும்போது மற்றொரு வன் உருவாக்கத்தின் உச்சத்திற்குப் போகிறான்.கலைத் தேவதையான சரஸ் வதி தன் மடியிலிருக்க பிரமன் வேதத்திற்குட்படுகிறான்.எப்படியானாலும் நம் உண்மை அனுபவங்களிலிருந்து மாறுபட்டது சொற்களின் வெளிப்பாடு.

கே:உங்களின் பல கவிதைகள் அப்ரோடைட்,சாப்போ,மற்றும் கடல் ஆகியவற்றைக் குறிப்பாகக் காட்டுவதாகவேயுள்ளன.உங்கள் கவிதைகளில் இருந்து அப்ரோடைட் ஒரு போதும் விலகாது என்று சொல்லலாமா?

ப:கலைத்தெய்வத்தின் மனிதவடிவம்தான் சாபோ.அடக்க முடியாத அன்புடை யவள்.பழக்கவழக்கங்கள் அவளைத் தடுக்கமுடியாது.குந்தியை,சீதையை நம் மால் தழுவிக் கொள்ளமுடியாது.பூமி சிதைந்து,காட்டுத்தீ பரவி எல்லாம் முழுமையாகஅழிந்துவிடும்,அவர்கள் வியப்பின் உச்சக்கட்டம்.இயற்கைஆற்ற லின் விளைவும்,முடிவடையாத உள்உருமாற்றமும் ஆகியவை கவிதைக்கான இயக்கங்கள் ஞானத்தை நோக்கி என்னைச் செலுத்துவது அதுதான்.

கே:இயற்கையிலிருந்து நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சி ,பரவசம்,தெய்வீக இன்பம் ஆகியவை குறித்த கணங்கள் ?

பதில்:ஓ! ஒரு கருநாகத்தைப் பார்த்த தருணமாக இருக்கலாம்.அல்லது மிக நெருங்கியவர்களை இழந்தபோது ஏற்படும் வெறுமையாக இருக்கலாம் அது மழையில் முற்றிலும் நனைந்து நிர்வாணமாக இருப்பதைப் போன்றது. பரிகாரமென்னும் எண்ணெயை உடலில் பூசிக் கொண்டு செல்லும் புழுவின் யாத்திரை.வல்லூறுகளின் வானம்.வெளிறிய நிலாவைக் காட்டும் கடல். இமாலயத்தின் ஆழ்அமைதி.பெண்ணின் மார்பைத் தொடும் உணர்வைத் தரும் இனிய மணமுடைய மாங்கனிகள்.பனங்கள்ளின் இனிமை.அசோக மரத்தின் மென்மையான இலைகள். காட்டுத்தீயின் ஒன்றிய ஒலிநயமான கணங்கள். பால்வீதியின் ஆனந்தமாக எல்லா ஆறுகளும்,அமைதியான தண்ணீரும். மிகச் சிறியபூவும்,மிகப்பெரிய அருவியும் பனி மறைத்த நிலப்பிரதேசம். பாலை வனம்.கிழக்கும்,மேற்கும் ஒலியெழுப்பிப் பறக்கும் கிளியாகச் சூரியன். துவைக் கப் போடப்படும் வெள்ளை ஆடையாக முழுநிலா புதுநிலவின் மேல் தணி யாத தாகம். முன்னோர்களின் மந்திரம் சொல்லும் உதடுகளாக புற்களின் இருபக்க அலகுகள்.

கே.உங்கள் கவிதைகளில் வெளிப்படும் சோக நகைச்சுவையின் மூலம்?

பதில்:பறைச்சி பெற்ற பன்னிரு குலம் எங்களுடையது.[Twelve castes born of Parayi ] பாக்கனார்,சாட்டனார், நரநது— தேவி -காளிதேவி தன் தோற்றத்தைப் பார்த்து நகைப்பாள் எரிச்சல்-வெறுப்பு -உலோகதவாயம் –சிசிபஸ்- நம்மிடம் வியாசர் ,பாஸன், சாலிங்கர், குந்தேரா என்று. .இவர்களை ஆதரிக்கும் வகையில் Borges கதைகள் எல்லாம்.

கே:பயணத்தின் போது ஏற்பட்ட மறக்க முடியாத கணங்கள் ?

பதில்:ஒரு முறை ரயில் பயணத்தின்போது அந்த கம்பார்ட்மென்டில் என் னையும், ஒரு சிறு குழந்தையையும்,நட்சத்திர வானமும் தவிர எல்லோரும் தூங்கி விட்டனர்.இன்னொரு சமயம் பனாரசில் ஒரு படகோட்டியின் பெயர் தசரதன் என்று அயோத்திமன்னனின் பெயராக இருந்தது.உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சூழ்ந்திருக்க மெக்சிகோவின் பிரமீடு உச்சியில் ’காடு’ என்ற கவிதையைப் படித்தேன்.சேக்ஸ்பியரின் வீட் டிற்கு முன்னால் ஈரேழ் வரிப்பா[Sonnet]படித்தேன்.காப்பாளர் மீண்டும் அதை சொல்லச்சொன்னார்.ஹெமிங்வேயின்வீட்டிற்கு முன்னால் போனபோது மழை தூறத் தொடங்கியது. அன்று அவர் பிறந்த நாள் என்பது நான் அறியாதது.

கே:உணர்ச்சி நிறைந்த கவிஞனுக்கும் ,வார்த்தைக்குமான நெருங்கிய உறவு?

பதில்:ஒவ்வொரு புதிய வார்த்தையும் என்னை மகிழ்ச்சிபடுத்துகிறது.அதன் மணம் என்னை படபடக்க வைக்கிறது.அதுதான் பூட்டும் சாவியும்.வாழ்க் கையின் நான்கு லட்சியமும் அதுதான்.அது நம் பூர்வவாழ்க்கையையும் தொடுகிறது.மூஞ்சுரு,மயில்,அன்னம்,கருடன்,காளை என்று தெய்வங்களுக்கு வாகனங்கள் போல எனக்கு வாகனம் கவிதைவார்த்தைகள்,சொற்களுக்கு என்று நிச்சயிக்கப்பட்டபிறகு ஒருவனின் உலகம் அமைதியில் பயணிப்பதா கிறது.வார்த்தை என்பது விதை.அது இடி.ஆழ்மனதின் அடுக்குதளம் அழிவி லிருந்து தொடங்கி மணவாழ்வின் உச்சம்வரை அது அழைத்துச் செல்கிறது.நானும் வார்த்தையும் ஒருசேர ஓய்வெடுக்கும் போதுகண்ணுக்குப் புலனாகாத ’பாவத்தின்’ முத்திரை தங்குகிறது.

கே: Larca மற்றும் Paz டன் உங்கள் நெருக்கம்?

பதில்:லார்காவுக்கு என்னைப் போல வாழ்வும் சாவும் Gipsy-Ballad தான். ஹோமரிலிருந்து ரில்கே வரை இணைக்கிற ஒரு நூல்.ஒவ்வொரு அங்கம் எழுதுவதும் காளைச் சண்டைதான். Paz நம்முடைய சகபயணி. விரிவான நம் வரலாற்று மார்க்கத்தை பகுப்பாய்வு செய்தவர்.ஸ்பெயின் மற்றும் Aztecs இரண் டின் பாரம்பரியமும்,நவீனத்துவமும் கலந்த கலவை .தென் அமெரிக்காவைச் சேர்ந்த Cezer Vallejo என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்.

கே:மலையாளத்தில் உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்?

நிரனது ராமதாசன்,எழுத்தச்சன்,சிவி,ஆசான்,உன்னிவாரியர் இவர்கள் ஒரு வகை.எனது முன்னோடிகளில் எடப்பள்ளி என்னை மிகவும் கவர்ந்தவர். ராம்ராஜபஹதூர் நவீன செவ்வியலில் அடங்குபவர். இது சாத்தியமற்ற சாத் தியம்.கோடையின் வானம்பாடியாக இருந்தவர் எடப்பள்ளி.

கே:முதுமையின் தாக்குதலும்,தவிர்க்க முடியாத மரணமும் குறித்து?

பதில்:சிறுவயதில் இருந்த போது என் கவிதைகள் ’மரணம்’என்ற கருவை இயல்பாகக் கொண்டிருந்தன தீர்க்கதரிசிகள்,தத்துவவாதிகள்,கவிஞர்கள் போல நானும் அதில் ஆழ்ந்திருந்தேன்.சில காலம் அதுபற்றி ஆராய்ச்சி செய்தேன். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. நரைமுடியும், மங்கும் பார்வையும் என்னைச் சிரிக்க வைக்கும் .எனினும் சுற்றியுள்ள புறக்கணிக்கப்பட்ட முதிய வர்களைப் பார்க்கும் போது நடுக்கம் வருகிறது.ஆனால் கவிதை என்று வரும் போது நான் ’மார்க்கண்டேயன் ’போலத்தான். இறந்த கணவன் சத்யவானை மீட்டுக் கொண்டு வந்த சாவித்ரி நான்.ஒரு வகையில் யுலிஸசின் இரண்டாவது ஒடிசி போலத்தான்.

கே:கவிஞனாக எப்படி உங்களை மதிப்பிட்கிறீர்கள்?நவீனத்துவமாகவாகவா?

பதில்:ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு என்னைப் படியுங்கள்.நான் எதிர்காலத்தின் கவிஞன் என்பதை உணர்வீர்கள்..பாஸ்ட் ஃபுட் போன்றதான இன்றைய இலக்கியப் போக்கை யார் விரும்புகிறார்கள்? மலையாள மொழி இருக்கும் வரை,என் வாசகன் / வாசகி அவன் மண்ணையும் ,மரபையும் என் கவிதைகளிலிருந்து மீண்டும் கண்டறிவார்கள்.

தி.இரா.மீனா

*****

நன்றி :Kavya Bharathi Indian Literature in English and Translation, American College , Madurai.

Indian Literature –Sahitya Academy Feb 2013

பாகுபலி : கடந்த காலத்தைத் தொன்மமாக்கும் முயற்சி / அ.ராமசாமி

download (43)

‘வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்’ பலரும் பலவிதமான சூழல்களில் உச்சரிக்கும் சொற்றொடர். அறிவார்ந்த விவாதங்களில் உச்சரிக்கப்படும் இச்சொற்றொடர் சாதாரணமான உரையாடல்களில், “ கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கணும்” என்பதாக வெளிப்படும். தனிமனிதனொருவர் சொந்த வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதன் வழியாகத் தனது தவறுகளைக் கண்டறிந்து அத்தகைய தவறுகள் இனி நிகழாதவாறு சரிசெய்யும்போது வரலாறும், வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பதும் நேர்மறைக்கூறு கொண்டனவாக அமையும். தனிமனிதனாக அல்லாமல், ஒரு கலைஞனாக/ படைப்பாளியாக / இயக்கமாக வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பதிலும் இதே நேர்மறைக்கூறைக் காணமுடியும். ஆனால் நேர்மறைக்கூறுகள் மட்டுமே இருக்கின்றன என்று வாதிட்டால், வாதம் செய்பவர்கள்மேல் சந்தேகம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. வரலாற்றின் ஒரு கட்டத்தில் நடந்த வெற்றியும் அதன் காரணிகளும் அப்படியே இப்போதும் பயன்படும்; வெற்றிதரும் என நம்புவதும், அதனையே சரியென முன்வைப்பதும் நேர்மறைக் கூறுகள் அல்ல; அதன் பின்னிருப்பது எதிர்மறை மனோபாவம்; நிகழ்காலத்தை மறுக்கும் போக்கும்கூட.

காட்சி மற்றும் கேட்புக்கலை, இரண்டையும் உள்ளடக்கிய நிகழ்த்துக்கலை தொடங்கி, எழுத்துக்கலை ஈறாகச் சிலவகைக் கலையியல் காலகட்டங்களைத் தாண்டியே பயணித்துள்ளன. கலையியல்வாதிகள் ஒன்றின் இடத்திலிருந்து இன்னொன்றிற்கு நகரும்போது நேர்மறைக்கூறுகளையும் எதிர்மறைக்கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்துத் தங்கள் காலத்திற்கு ஏற்ற கலையியல் போக்கு எதுவென முடிவுசெய்துவிட்டே நகர்ந்துள்ளனர்.

செவ்வியலின் போதாமையை உணர்ந்தபோதுதான் புனைவியலுக்குள் நுகர்ந்தது கலையியல். புனைவியலின் அதீதம் உணரப்பட்டபோதுதான் இயற்பண்புவாதம் பரிசீலிக்கப்பெற்றது. அதன் சாத்தியங்களும் முன்வைப்புகளும் தட்டையானவையெனத் தோன்றியது நடப்பியலின் தேவை உணரப்பட்டது. அதுவும் சிக்கலாக இருப்பதாக உணரப்பட்ட நிலையில் அதன் உட்கூறுகள் பலவிதமாகப் பல்கிப்பெருகின. அவைகளைத் துறந்தவர்களின் கண்டுபிடிப்புகளே நடப்பியல் அல்லாத கலையியல் போக்குகளான அபத்தவாதம், மனப்பதிவியல், வெளிப்பாட்டியம், குறியீட்டியம், குரூரவியம், தூரப்படுத்தி இணைத்துக்காட்டும் காவ்ய பாணியெனக் கலையியல் வகைமைகள் உருவாகின.

‘இவையெல்லாம் ஐரோப்பிய அறிவாளிகள், அவர்களது சமூகத்தின் தேவைக்காகக் கண்டுபிடித்த கோட்பாடுகள்; இந்திய சமூகத்தின் பழம்பெருமைக்குள் இவற்றின் இடம் கேள்விக்குரியது’ என வாதம் செய்கின்றோர் எண்ணிக்கை இப்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான பதிலைப் பசுவய்யாவின் கவிதை வரிகளான – மனைவிக்குப் பிடித்ததோ தக்காளி ரசம் – என்பதின் மூலம் கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
கலைப்படைப்புருவாக்கத்தில் புனைவியல் வெளிப்பாடுகளைப் போற்றிய காலமுண்டு. புனைவியலின்மீது கொண்ட விருப்பத்தால் சில கலைஞர்கள் புனைவியல் ஆக்கங்களை, மிகைப்புனைவியலாக ஆக்கியதுமுண்டு. அதனால் அதன் தாக்கம் குறைந்தது.

download (46)
இந்தியப் புனைவியலின் சிகரங்களாகக் காளிதாசன், பாஷன், மகேந்திரவர்மப்பல்லவன் போன்ற சம்ஸ்க்ருத நாடகாசிரியர்களையும், சீவகசிந்தாமணி, கம்பனின் ராமாயணம் போன்ற காப்பியங்களையும் சொல்லலாம். காப்பியங்களுக்குப் பின் தோன்றிய உலாக்கள், பரணிகள், பிள்ளைத்தமிழ்கள்,தூதுகள் முதலியனவும் புனைவியல் வெளிப்பாடுகளே. ஓவியங்கள், சிற்பங்கள் என இடைக்காலக் கோயில்களில் புனைவியல் வெளிப்பாடுகள் உள்ளன. புனைவியல் வெளிப்பாடுகள் எப்போதும் நிகழ்காலத்தைப் பேசுவன அல்ல. கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்தும்/ முன்வைக்கும் படைப்புகளாகவே இருக்கும்.

கடந்தகாலத்தை முன்வைக்கும் படைப்புகளுக்கு ஆதாரமாக இருப்பனவற்றை நவீனத்திறனாய்வு ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதில்லை. சிலவற்றை வரலாறு என்று சொல்லும்; சிலவற்றைப் புராணமெனக்கூறும். இரண்டையும் இணைத்துத் தொன்மம் எனவும் சொல்வதுண்டு. சிலவரலாற்று நிகழ்வுகளும் சிலபுராண நிகழ்வுகளும் தொன்மங்களாகி இப்போதும் நீண்டுகொண்டிருக்கின்றன;நீளும். இத்தகைய நீட்சிக்குக் காரணமாக இருப்பவைகள் கலைகள். கலைகளைத் துணைக்கொண்ட நிகழ்வுகளே தொன்மங்களாக நீள்கின்றன.
வரலாற்றுப் பின்னணிக் கதைகளும் கிளைக்கதைகளும் மிகைப் புனைவியல் அடுக்குகளுக்குப் பொருத்தமானவை.

புராணவியல் கதைகளும் தொன்மக் கிளைக்கதைகளும் அந்த அளவுக்குப் பொருத்தமானவை அல்ல. பாகுபலி என்ற பெயரில் எடுக்கப்பட்ட இரண்டு பாகத்திரைப்படம், வரலாற்றைத் தொன்மமாக்கிப் புராணவியலுக்குள் நிலைநிறுத்தும் எத்தணிப்புகள் கொண்ட படம். இந்த முன்மொழிவை விளக்குவதற்கு முயலலாம்.
பாகுபலி 1 மிகைபுனைவியல் அடுக்குகளால் நிரப்பப்பட்டிருந்தது. அப்படம் வெளிவந்தபோது விரிவான கட்டுரையொன்றை அம்ருதா இதழில் எழுதினேன்.

காட்சி இன்பத்தின் பொருளாதாரம் என்ற தலைப்பிட்டு எழுதிய அக்கட்டுரையின் முன்வைப்பாக எழுதப்பெற்ற பகுதி இது:
வெகுமக்கள் ரசனை என்பதே நினைவுத் தூண்டுதலின் வழியாகவே உருவாக்கப்படுகிறது. வெகுமக்களின் மனப்பாங்கையும் ரசனையையும் கட்டமைப்பதில் முக்கியமான இடம் இருப்பின் தொடர்ச்சியை (Status go ) முன்னெடுப்பதற்கு உண்டு. வாழ்தலுக்கான அறம் அல்லது வாழ்க்கை முறை என்பதில் புதிதான கருத்துகளையோ, மாற்றங்களையோ முன்வைக்காத வாழ்க்கைமுறையைப் பெரும்பான்மைப் பொதுமனம் ஏற்றுக்கொள்ளும்; கொண்டாடும். அதேபோல ஏற்கெனவே ரசித்த- மெய்மறந்த பொருட்களைப் புதுக்கிப்புதுக்கிப் புத்தம் புதிதாக ஆக்கித் தரும் கலைஞர்களையும் ஏற்றுக்கொள்ளும்; கலைகளையும் கொண்டாடும். இவ்விரண்டையும் பாகுபலி கச்சிதமாகச் செய்திருக்கிறது.

பாகுபலி 2, முதல் பாகத்தையும் இணைத்து – காட்சி இன்பத்தைத் தவற விடாமல், நல்திற நாடகவடிவத்தை ( WELL -MADE PLAY) முழுமையாக்கியுள்ளது. அதன்மூலம் புனைவியல் தயாரிப்பை மிகைப்புனைவியல் சினிமாவாக ஆக்கியிருக்கிறது. புனைவியல் சினிமாக்கள் வசூல் வெற்றிக்கு உத்தரவாதமானவை. அதிலும் நற்றிறக் கட்டமைப்பு நாடகவடிவத்தில் உருவாக்கப்படும்போது எல்லாவகைப் பார்வையாளர்களையும் தனது பார்வையாளர்களாக இழுத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உருவாகிவிடும்.

பாகுபலி இரண்டின் காட்சி அடுக்குகளை மறந்து விட்டுக் கதையடுக்குகளை நினைவுபடுத்திக்கொண்டு யோசித்துப் பார்க்கலாம். அதன் ஒவ்வொரு அங்கமும் அதன் உட்பிரிவான காட்சியும் (ACT & SCENE ) நல்திற நாடகத்தின் முடிச்சுகளாகவே அமைக்கப்பட்டிருப்பதை உணரமுடியும். தொடர்ந்து சதிவலைகளைப் பின்னிக்கொண்டே இருக்கும் பிஜ்ஜல தேவாவுக்கும் (நாசர்), அதனைத் தொடர்ச்சியாகத் தகர்த்துத் தனது சத்திரிய அடையாளத்தை – “ராஜ்மாதா” பிம்பத்தைத் தக்கவைக்கும் அவரது மனைவி சிவகாமிதேவிக்கும் (ரம்யா கிருஷ்ணன்) இடையே உருவாக்கப்படும் முரண்நிலைகளின் வளர்ச்சியே பாகுபலி என்னும் நல்திற நாடக வடிவில் அமைந்த திரைக்கதை.

சொந்த மகனைப் (பல்வாதேவா) புறந்தள்ளிவிட்டு மாற்றாள் மகனுக்கு(மகேந்திரபாகுபலிக்கு)ப் பட்டமளிப்புச் செய்யும் சிவகாமி தேவியின் சத்திரிய அறம்.

சொந்த தேசத்து மக்களை அறியப்போனவன் அந்நியதேசத்து இளவரசியின் காதலைப் பெற மாறுவேடம்.
நாட்டைப் பறிகொடுத்ததற்குப் பலிவாங்க அவனது காதலியைச் சதிமூலம்- வாக்குக்கொடுத்தால் நிறைவேற்றுவாள் சிவகாமியென்னும் சத்திரியகுல அன்னை என்பதைக் காரணமிட்டு பாகுபலியோடு மோதல்.

அதிகாரமா? காதலிக்குக் கொடுத்த வாக்கா? எது முக்கியம் என்ற கேள்விக்கு அதிகாரத்தைத் துறக்கும் பாகுபலியின் தியாகம் அல்லது சத்திரிய குணம்.
தன் மடியில் வளர்த்த குழந்தையை அன்புக்குரிய பாகுபலியை முதுகில் குத்தித் தன்னை நிரூபிக்கும் அடிமை கட்டப்பாவின் சத்திரிய விசுவாசம்.
எல்லா அதிகாரத்தையும் தந்த தாயைவிடத் தாரத்திடம் மயங்கிவிடும் மகனை வெறுக்கத் தொடங்கும் அம்மாவின் உளவியல் சிக்கலோடு கூடிய முரண்அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகுபலி மக்களோடு இணைந்து மாற்று அரசனாக உருவாகும் சிக்கலின் வளர்ச்சிநிலை.

மக்களின் மதிப்பைப் பெற்ற மகேந்திர பாகுபலிக்குத் தனது அடிமை விசுவாசத்தால் மரணத்தைத் தந்த கட்டப்பாவின் மனமாற்றத்தால் அல்லது கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் செயலால் தோற்ற அறம் திரும்பவும் வெல்லும் என்ற உச்சநிலை. மக்களைக் காப்பாற்றாத பல்வாள் தேவனின் தோல்வியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களைக் காக்கும் புதிய பிரகடனத்தோடு -சாசனத்தோடு- அமரேந்திர பாகுபலியின் நல்லாட்சி ஏற்பட்டது
என முடியும் பாகுபலியின் கதைப்போக்கில் வெளிப்படுவது மகாபாரதத்தின் கதைப் போக்கு அம்சங்களே.

ஆட்சி நிர்வாகம் செய்யும் திறனும் அறத்தின் மீதான நம்பிக்கையும் தன் மகன் துரியோதனனுக்கு இல்லை; தன் தம்பி மகன் தர்மனுக்கே உண்டு என்று கருதியவன் திருதராஷ்ட்ரன். ஆனால் சகுனியின் துணையால் ஆட்சியைக் கைப்பற்றிய துரியன், பாண்டவர்களை வனவாசமும் அஞ்ஞாதவாசமும் செய்யவைத்தான்; கடைசியில் சத்திரிய தர்மத்தை நிலைநாட்டவே 18 நாள் போர் நடந்தது. பாரதக்கதையின் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், அது எழுப்பிய தன்னேரில்லா வீரம், தியாகம், காதல், காமம், தாய்மை, மக்கள் சார்பு, ஈகை, இரக்கம் போன்ற உணர்வுகளும் பாகுபலிக்குள் பொதிந்து கிடக்கின்றன.
download

நற்றிற நாடகவடிவத்தில் துன்பியல் வகைகள்கூடத் தோல்வையைச் சந்திக்கும். ஆனால், நாயகப்பாத்திரத்தின் வெற்றியை உறுதிசெய்யும் இன்பியல்வகைகள் பெரும்பாலும் தோற்பதில்லை. அதிலும் நிகழ்கால இந்தியச் சூழலில் அவற்றிற்கு வெற்றி நிச்சயம். நிச்சயமான வெற்றிப்படமாகத் தயாரிக்கப்பட்ட பாகுபலி, சமகால அரசியலைப் பின்னோக்கிய அரசியலுக்குள் நகர்த்தும் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது; கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் செயல்பட்ட திராவிட இயக்கங்களும், அதன் முன்னணிப்படையாகச் செயல்பட்ட அறிவாளிகளும், கலையைப் பயன்படுத்தி வெகுமக்களை அரசியல் மயமாக்கியதில் முன்னனுபவங்கள் நிரம்பியவர்கள். ஆனால் இன்று திராவிட இயக்கங்களின் பின்னணியில் வெளிவரும் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் பாகுபலிபோன்ற படங்களைக் கொண்டாடுகிறார்கள் என்பது நகைமுரண் மட்டுமல்ல; அரசியலற்ற தன்மையின் வெளிப்பாடும்கூட.

மந்திரிகுமாரி, அரசிளங்குமாரி, பாக்தாத் திருடன், மணிமகுடம், காஞ்சித்தலைவன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி மன்னன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரைமீட்ட சுந்தரபாண்டியன் என வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்ட சினிமாக்களைத் திரும்பவும் தேடிப்பார்க்கலாம்; ஏற்கெனவே பார்த்தவர்கள் நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம். இவற்றிற்குத் திரைக்கதை அமைத்தவர்கள் நாயக பிம்பங்களை/ தன்னேரில்லாத் தலைவர்கள் முன்வைக்கும் வடிவங்களில்தான் செயல்பட்டார்கள். ஆனால் அத்தலைவர்கள் மக்கள் சார்பு அரசியலின் மீது நாட்டம் கொண்டவர்களாக முடிவில் வெளிப்பட்டார்கள்.

அரசாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்களாட்சியை நோக்கி நகர்த்தும் தலைவர்களாக அவர்களின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டன. இத்தகைய சார்புநிலையே படைப்பாளியின் அரசியல். ஆனால் பாகுபலியில் வெளிப்படும் சார்புநிலை பழைமைக் கொண்டாடும், உறுதிசெய்யவிரும்பும் சார்புநிலை.

நிகழ்கால அரசியலில் இத்தகைய அரசியலை வெளிப்படுத்தும் அரசியல் இயக்கம் எவையெனச் சொல்லவேண்டியதில்லை. மதவாத இயக்கங்களும் சாதிய இயக்கங்களும் சத்திரியத் தலைமையை உறுதிசெய்யும் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. அதன்வழி பிராமணியத்தைத் தக்கவைக்கப்பார்க்கின்றன.

அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் நவீனத்துவ அரசியல்/ நேருவிய மக்களாட்சி அரசியல், இருப்பைத் தக்கவைப்பதைக் கைவிடச் செய்து சிறிதளவு மாற்றங்களை முன்வைத்தது. அதற்கு ஆதாரமாக அமைந்திருந்தது அம்பேத்கர் எழுதித்தந்த அரசியலமைப்புச் சட்டம். ஆனால் நவீனத்துவ அரசியலிலிருந்து முன்நகர்ந்து செல்லவேண்டிய நிலைக்கு மாறாகப் பின்னோக்கி ஓடும் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறது சமகால அரசியல் வாழ்வு. அந்த ஓட்டத்தில் பின்னங்கால்கள் பிடறியில் அடிபடுவதைக்கூட ரசிக்கிறார்கள் வெகுமக்கள் ரசனையை உருவாக்கும் ஊடகக்காரர்கள். அதனை ஏற்றுக் கொண்ட திரள்மக்களும் பண்பாட்டின் பெயரால் பாகுபலி போன்ற படங்களைக் கொண்டாடுபவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

அந்த ரசனை வெகுமக்கள் ஊடகத்தை ரசிக்கும் ரசனையாக இல்லாமல் பண்பாட்டின் பெயரால் பழைமையை ஆராதிக்கும் மனநிலையாக – தன்னேரில்லாத் தலைவனைத்தேடும் அரசியலாக மாறும் என்பது உணரப்படவில்லை. தன்னேரில்லாத் தலைவர்களின் காலம் நிலமானிய காலம் என்பதை உணரவேண்டும். உணர்த்தவேண்டிய அரசியல் இயக்கங்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றன.

•••••

ஹலினா போஸ்வியாடொவ்ஸ்கா (Halina Poswiatowska) கவிதைகள் / தமிழில் : வே.நி.சூர்யா

download (47)

(1)

நான் ஜூலியட்

யெனக்கு வயது இருபத்திமூன்று

ஒருமுறை நான் காதலை ஸ்பரிஸித்தபோது

அது காஃபியின் கசப்பு சுவையோடிருந்தது

அது யென் ஹிருதய துடிப்பை அதிகமாக்கியது

யென் உயிருள்ள உடலை வெறிகொள்ளச் செய்தது

யென் உணர்ச்சிகளை உலுக்கியது

அது விட்டுப்போனது

நான் ஜூலியட்

பால்கனிக்கு மேலே இருக்கிறேன்

அது தொங்கிக் கொண்டிருந்தது

நான் அழுதேன் திரும்பி வா

நான் அழைத்தேன் திரும்பி வா

யென் உதடுகளை கடித்தேன்

இரத்தம் சிந்தினேன்

அது திரும்ப வரவில்லை

நான் ஜூலியட்

யென் வயது ஆயிரம்

உயிரோடு இருக்கிறேன்

•••

(2)

கவனமாக யென் ஹிருதயத்தை ஏந்தியிருக்கிறேன்

துண்டிக்கப்பட்ட ஞானஸ்நானி யோவானின் தலையைப் போல

பூமி யெனக்கு கீழே நடனமாடிக் கொண்டிருக்கிறது

யென் ஹிருதயம் ஒரு அமீபாவை போல்

முடிவற்று பெருகிக் கொண்டிருக்கும் நுண்ணுயிரியாக இருக்கிறது

இந்த உலகம் அதற்கு சொந்தமானதாக இருக்கிறது

படுக்கை, புகைப்படம், நான்கு மூலைகளும்

யென் ஹிருதயம் வடிவவியல் உருவங்களையும் இசைவையும் போலிருக்கிறது

நான் அதை கவனமாக ஏந்தியிருக்கிறேன்

துண்டிக்கப்பட்ட புனிதரின் தலையைப் போல

•••

download (48)

ஆசிரியர் குறிப்பு:

ஹலினா போஸ்வியாடொவ்ஸ்கா (Halina Poswiatowska) போலாந்தை சேர்ந்த முக்கியமான சமகால கவிஞர். வார்த்தைகளை சந்தேகித்தல் என்பது கிழக்கு ஐரோப்பாவில் பரவலாக பரவிய போது அதை காதல் கவிதைகள் வழியாக பரவலாக்கியவர். பெரும்பாலும் ஐரோப்பாவில் காதல் கவிஞர் என்றே அழைக்கப்படுபவர். இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதைகள் அவருடைய Indeed I love எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது

குற்றம் ( கவிதைகள் ) அறிமுகப் படைப்பாளி – அ. விஜயபாரதி

download (39)

குற்றம்

நான் நீரூற்றியிராத
ஒருமரத்தின்
நிழலில் சற்று இளைப்பாற
அதன் கனியொன்ற சுவைக்க
அது சமைக்கும் பிராண வாயுவை சுவாசிக்க
குற்றவுணர்ச்சி பிடுங்கித்தின்றுவிடும்
ஆயுளுக்கும் என் இதயத்தை.

நம்பிக்கை

நம்பிக்கொண்டிருக்கிறேன்
இரவில் மினுங்கும் விண்மீன்கள்தான்
பகலில் பறந்துவந்து தேனெடுக்கிறதென
பூக்களில்.

சுதந்திரம்

மொட்டை மாடியில் உலரும்போது
இருக்கும் சுதந்திரம்
வீட்டுக்குள் இருப்பதில்லை
பெண்களின் உள்ளாடைகளுக்கு.

••••

E-mail: bharathi8783@gmail.com

இசையும் உறவும் சஞ்சரிக்கிற பிரகார வெளி / ந. ஜயபாஸ்கரன்

download (50)

“மறைந்த கோவில் வெங்கலத் தேரையும், கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும் பராபரிச் செய்திகளென இவன் கேட்டிருக்கிறான்” என்ற மெளனியின் “மனக்கோட்டை“ வரிகள் மனதில் ஊர்கின்றன, ரவிசுப்பிரமணியனின் கவிதை உலகில் நுழையும் போது. கேள்வி மாத்திரமாக அல்லாமல் காட்சியாகவே, இசையும் இருளும் முயங்கும் பிரகார வெளிகள் விரிந்துகிடக்கின்றன அவர் கவிதைகளில். “பிரகாரம் மறந்த நாயனங்கள் / மூலவர் மீதும் தூசிவலை” என்கிறது அவரது முன் தொகுதிக் கவிதை வரி. காலத்தில் சிதைவுறும் விதானச் சித்திரமும், வாய் பிளக்கும் மெளன யாழியும், அசையும் திரிகளின் விசும்பல் நீலமும், பாதாளச் சுரங்க வழி உறவுகளும், கவிதையைக் காலத்தின் கழிவுக்கும் நிகழுக்கும் இடையே கொண்டு வந்து நிறுத்துகின்றன. இந்த வெளி ரவிசுப்பிரமணியனின் கவிதை வெளி. சில தருணங்களில் இருள் விலகும் வெளி. அப்பொழுது,
“நாதஸ்வரத்தில் மிதந்துவரும் / ரசாளி ராகக் குழைவோடு” உஷை பரிசளிக்கப்படுகிறாள் அவரது கவிதையில்.

“மோகமுள்” ரங்கண்ணாவுக்குப் போல, உலகமே ஒரு இசையின் ஊடும் பாவுமாக இழைந்து ஒலிக்கிறது ரவிக்கு. “குழலின் துளையில் மறையும் சூரியன்” கவிதை முழுவதும் விரவியிருக்கும் குளிர்மை, இசை பற்றிய ஞானம் இல்லாத வாசகனுக்கும் எளிதாகக் கடத்தப்படுகிறது.

“சாரலிலே அசைந்தாடும் ஜீவ ஸ்வரங்கள்
ஏறுநிரல் பாதைகளில் ஊதல் காற்று
இறங்கு நிரல் வழியெங்கும் கணுக்கால் வெள்ளம்
மந்த்ரத்தில் நிற்கையிலே குளிரின் விதிர்ப்பு
குழலின் துளைகளிலே மழைநாள் சூரியனை
மறைத்தும் விடுத்தும் விளையாடும்
பிரெய்லி விரல்கள்”

இயல்பாகத் திரண்டுவரும் இந்தக் கவிதையில் பார்வையற்றவரின் குழலிசை வெள்ளம், சூரியனை மறைத்தும் விடுத்தும் விளையாடியவாறு நாதக்கடலில் கலந்துவிடுகிறது. புலன் வழியிலான இசை அனுபவம், ஒரு புள்ளியில் உயிர் அனுபவமாய் உருமாற்றம் கொள்கிறது. “நெடுமால் ஊதி வருகிற / குழலின் தொளைவாய் நீர் கொண்டு / குளிர முகத்துத் தடவீரே” என்ற ஆண்டாள் கவிதை. இசையைத் தாண்டிய உறவுக்குத் தாவிச் சென்றுவிடுகிறது. இங்கு கவிதை இசைக்குள் நின்று அண்டம் அளாவிய உறவைச் சொல்லி விடுகிறது, எளிய சொற்களில். “விளையாடும் பிரெய்லி விரல்கள்” என்ற படிமம், கவிதைக்கு உன்னதமானதும், கிறக்கத்தையும் வியப்பையும் தாண்டியதும் ஆன ஒரு மாயத்தன்மையைப் பூசிவிடுகிறது.

மாறிவரும் இசைப்பின்னல் போல, மனித உறவின் இழைச் சிடுக்குகளும் ரவியின் கவிதை உலகின் அங்கம் தான். நிலமெங்கும் உருண்டலையும் நெகிழிப்பை ஆகவும், திரும்பிவரும் ஒற்றைச் சொல் ஆகவும் அல்லாடும் உறவை உருவகிப்பவர், இளமையின் களிப்பு நிலை உறவையும் பதிவு செய்யத் தவறுவதில்லை.

“பொறாமை தவிர்த்து
காதலர்களைக் கவனிக்கக்
கற்றுக் கொண்டுவிட்டேன்
லென்சின் கீழே
வீட்டு ஈக்கள் உரசிக்கொள்வதையோ
முத்தமிட்டுக்கொள்வதையோ
அவதானிப்பது போல”

என்ற ஏ.கே. ராமானுஜனின் கவிதை இளமையை விலகியிருந்து பார்க்கும்போது, ரவியின் “இனி நீங்கள் தொடரலாம்”, “இருண்டு ஒளிரும் கணங்கள்” போன்ற கவிதைகள் இளமையின் கட்டுக்கடங்காத திமிறலை விலகியும், இணைந்தும் ரசிக்கின்றன.

“எதிர்பாராத தருணங்களில்
அவர்கள் முத்தமிட்டுப் பிரிகையில்
பூங்கா சில கணங்கள் இருண்டு பின் ஒளிரும்
சரேலென நீங்கள் உங்கள் பருவத்தின் வாசலுக்குச் சென்று திரும்புவீர்கள்”

என்ற “இருண்டு ஒளிரும் தருணம்” கவிதை வரிகள் அவதானிப்பின் மீது பரிவைப் போர்த்துகின்றன. இருண்டு ஒளிர்வதாக அமைவதுதான், தாட்சாயிணிக்குத் தட்சன் சொல்வதாக வரும் கவிதையும். நமக்குத் தெரிய வந்த தொன்மம் மறுதலையாக கட்டமைக்கப்படுகிறது, இந்தக் கவிதையில். தட்சப் பிரஜாபதிக்கும் ருத்திரனுக்கும் இடையே ஆன உறவு, மாமன் – மருமகன் என்ற நிலைக்கு அப்பால், அகங்காரமும் சினமும் பொங்கிவரும் அக்கினிக் குழம்பாகவே சிவ புராணத்தில் பெருகிச் செல்கிறது. “தக்கனது பெருவேள்வி தகர்த்தான்” என்றும் “தக்கனது பெருவேள்வி கெடச் சாடினான்” என்றும் வருகிற திருநாவுக்கரசரின் திருத்தாண்டக வரிகள் வன்மம் நிறைந்த ஒரு உறவையே நம் முன் விரிக்கின்றன. தட்சனுடைய யாகத்தில் சிவனுக்கு இல்லாத அவிர்பாகமும், தாட்சாயணி அடைந்த அவமானமும், அவளை யாக குண்டத்தில் தன்னுடைய தேகத்தை விடுக்கும் அளவு துரத்தி விடுகின்றன. சிவனுடைய சினத்திலிருந்து உற்பவித்த வீரபத்திரன் தட்சனுடைய தலையைத் துண்டித்ததோடு நில்லாமல், தேவர்கள் அனைவரையும் கடுமையாக இம்சிக்கிறான். வன்முறையால் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொன்மப் பின்னணியை மறுத்து எழுதுகிறது, ரவிசுப்பிரமணியனின் கவிதை. சிவனுடைய குணமுரண்களில் மறைந்திருக்கும் இசைவைத் தாட்சாயணிக்கு மெல்லிய குரலில் தட்சன் உணர்த்துவதாக அமையும் கவிதை, தொன்மத்துக்கு எதிர் திசையில் பயணிக்கிறது. சிவனுடைய விலகலில் இருக்கும் அண்மையும், அண்மையில் இருக்கும் தொலைவும் தட்சனால் உணர்த்தப்படுகிறது. நிலத்திலிருந்து ஆகாயத்தை நேசிப்பவனாக சிவன் தட்சன் முன் எழுகிறான். “முகம் தெரியாத அதிதி ஆனாலும் சுணக்கம் கொள்ளாதே” என்ற அறிவுரை அனைத்துப் பேரிலும், தட்சனுடைய வன்ம உதடுகளிலிருந்தே உதிர்கிறது. தொன்மத்தின் மூலப் படிமம், கவிஞனால் பதிவு உருவப் படிவம் ஆக வேறு வகையில் வார்க்கப்படுகிறது.

“மற்றுமொரு அழுகை” யில் கவிதை ஆகாமல் தடுமாறும் கணம்,
“ஒரு பள்ளிக்கூடம்” கவிதையில் எளிமையாகக் கூடி வந்திருக்கிறது. “இலையளவு இடைவெளி” என்ற தலைப்பே அந்த சிறிய கவிதைக்குக் கூடுதலான பரிமாணத்தைச் சேர்ப்பதாக அமைகிறது.

“முகநூலில் நெடுநாள் நிலைத்தகவல் போடாத திரு. கிருஷ்ணனுக்கு ஒரு பிராது” கவிதை, அதன் முகப்பிலுள்ள நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி வரிகளின் காரணமாக, நவீனத்தையும் தாண்டிய எல்லைக்குச் சென்று விடுகிறது. இறந்த காலத்தால் நெறிப்படுத்தபடும் நிகழ்காலமும், நிகழால் பாதிக்கப்படும் கடந்த காலமும் படைப்புகளின் ஒழுங்கு வரிசையை மாற்றிக்கொண்டே இருப்பதாக டி.எஸ். எலியட் குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் “முகநூலில்”, கவிதை, காலம் தாண்டுதலை இயல்பாக சாதித்திருக்கிறது. அது போலவே கைவிலங்கை மூடியிருக்கும் கச்சேரியில் போர்த்திய துண்டும், ஞாபகநதியில் மிதக்கும் குறைமாச சிசு கலைந்த உதிரக் கவுச்சியும் அவற்றின் எதிர்பாராத எதிர்கொள்ளலில் வாசக மனத்தில் பதிந்துவிடுகின்றன. ”ஒரு வகையில் செப்பிடு வித்தை போல, படித்த சொல்லின் பொருள் ஒன்று கணத்தில் மாயமாகி, அதே சொல்லில் வேறொன்று ஒன்றும் தெரியாதது போல அமர்ந்திருக்கிறது” என்று அபியின் அரூபக் கவிதை குறித்து ரவி எழுதியிருப்பது, அவருடைய உருவப் பிரக்ஞை உள்ள சில கவிதைகளுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

ரவிசுப்பிரமணியனின் ”காலாதீத இடைவெளியில்” கவிதைத் தொகுப்பை முன் வைத்துப் பேசும் போது, ”அதிராத குரலில், ஒரு அடர்ந்த தனிமையில் பயணப்படுகின்றன ரவியின் கவிதைகள்” என்று குறிப்பிடுகிறார் லதா ராமகிருஷ்ணன். அதிராத ரவியின் குரல் இசையின் ஆழத்தை, உறவின் புதிர்த் தன்மையை அளந்து பார்க்கிறது. அவரது அடர்ந்த தனிமை, கசப்பின் மிடறை விழுங்கிய போதிலும், வெறுப்பையோ தன்னிரக்கத்தையோ சுமக்காமல் பயணிக்கிறது.

IMG_0680

••••••••••••

எல்லை (சிறுகதை ) / ஸிந்துஜா

images (29)

ஸ்ரீமதி இரு பக்க வீடுகளுக்கு இடையே செல்லும் நடைபாதையில் நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தாள்,

அந்த ஸ்டோரில் பனிரெண்டு வீடுகள் இருந்தன. வலது பக்கம் ஆறு வீடுகள். இடது பக்கமும் ஆறு. அப்போது காலை மணி பத்திருக்கும். மற்ற குடித்தனங்களில் உள்ள வேலைக்குச் செல்லும் ஆண்களும் பெண்களும் ஸ்கூலுக்குச் செல்லும் குழந்தைகளும் ஒன்பதரை மணி வரை போவதும் வருவதும் ஓடுவதுமாய் அந்தப் பாதையில் கூத்தடிப்பார்கள். அதற்கு மேல் அந்த நடைபாதையில் நடமாட்டம் அதிகம் இராது, சாயங்காலம் எல்லோரும் திரும்பி வரும்
வரை.

ஸ்ரீமதியின் அம்மா இருந்த வரை “யார் கேட்டா இந்த ஆறடிக் கூந்தலை?” என்று குரலில் சற்றுப் பெருமையுடன் குறை கூறிக் கொண்டு அவளுக்குத் தலை வாரி விடுவாள். அவளும் போய்ச் சேர்ந்து ஒரு வருஷமாகி விட்டது. இப்போது ஸ்ரீமதி அண்ணனின் நிழலில் குடியிருக்கிறாள். கோபாலி சாக்பீஸ் செய்யும் பாக்டரி வைத்திருக்கிறான். அது அவர்கள் குடியிருக்கும் சாரியிலிருந்து எதிர் சாரியில் இருக்கிறது. மன்னி டெலிபோன் டிபார்ட்மெண்டில் இருக்கிறாள். அவளுக்கு ஆபிஸ் பானஸ்வாடியில்.
அதனால் எட்டரைக்கே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.

பின்னால் நடந்து வரும் சத்தம் கேட்டது. ஸ்ரீமதி திரும்பிப் பார்க்கவில்லை.அந்த நடை ஒலியை வைத்தே அமிர்தம்தான் வருகிறான் என்று அவளுக்குத் தெரியும். அவளைக் கடந்து செல்லும் போது அவள் தோளை இடித்துக் கொண்டு போனான். அவன்
தலையில் பெருங் குண்டான் ஒன்று இருந்தது.

“என்ன பெரிய கமலஹாசன்னு நினைப்பா?” என்று அவள் இரைந்து சொன்னாள்.

“ஆமா இவங்க பெரிய ஸ்ரீதேவி” என்று திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவனது வரிசையான பற்கள் மின்னின.

“சொல்றது சொல்றே. கொஞ்சம் சின்னவளாய் பாத்து சொன்னா என்ன?” என்று அவளும் சிரித்தாள்.

“ஆமா.கமலஹாசனுக்கு வயசு இப்ப இருபது ஆறது பாரு” என்று அமிர்தம் சொன்னான்.

அமிர்தத்துக்கு இருபத்தி ஐந்தோ ஆறோ ஆகிறது என்று கோபாலி பேச்சு வாக்கில் ஒரு நாள் சொன்னது அவள் நினைவில் உறைந்திருந்தது. அவளை விட அவன் ஒரு வயது சிறியவன்.

“போ போ. தலைல பொணம் கனம் கனக்கற குண்டானை வச்சு நின்னுண்டு என்ன வேண்டுதலா பாழாப் போறது?” என்று அவனை அவள் விரட்டினாள்.

“ஆமா. வேண்டுதல்தான்.”

“என்னது?”

“தேவியோட கடைக்கண் பார்வை” என்றான் அமிர்தம்.

“டேய், என்னடா வழில நின்னுண்டு? சீக்கிரம் குண்டான்ல கலரைப் போட்டு கரைச்சு வை. நாளக்கி சென்ட் ஜோசப்லேர்ந்து கலர் சாக்பீஸ் ஆர்டர் வந்திரும் ” என்று குரல் கேட்டுத் திடுக்கிட்ட அமிர்தம் திரும்பிப் பார்த்தான்.

கோபாலி வாசலிலிருந்து உள்ளே வந்து கொண்டிருந்தான்.

அமிர்தம் சொன்னது அவனுக்கு கேட்டிருக்குமோ என்று ஸ்ரீமதி ஒரு நிமிஷம் சந்தேகப்பட்டாள்.

அமிர்தம் விரைந்து வெளியே சென்றான்.

கோபாலி அவளைப் பார்த்து “ஒரு செக் தரேன். பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துர்றியா?” என்று கேட்டான்.

அவள் தலை அசைத்தாள். கோபாலி வீட்டுக்குள் சென்றான்.

ஸ்ரீமதி தலையை வாரிப் பின்னி கொண்டை போட்டுக் கொண்டாள். பின் வீட்டின் உட்புறம் சென்றாள். கோபாலி அவளிடத்தில் செக்கைக் கொடுத்து “முடிஞ்சா ஐநூறும் நூறுமா வாங்கப் பாரு. இன்னிக்கி சம்பளம் போடணும். எதுக்கெடுத்தாலும் ரெண்டாயிரம் நோட்டை தூக்கிப் போட்டு உயிரை எடுக்கிறான்கள். நான் பேக்டரிக்கு போறேன். அங்கயே பணத்தை கொண்டு வந்துடேன்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.

ஸ்ரீமதி புடவை மாற்றிக் கொள்ள பெட் ரூமுக்குச் சென்றாள். அது பெரிதுமில்லாமல் சிறிதும் இல்லாமல் ஒரு நடுவாந்திரத்தில் கட்டின வீடு. அந்த பெட் ரூம் தவிர ஒரு ஹால் கிச்சன் பாத்ரூம் அவ்வளவுதான். அப்பாவும் அம்மாவும் இருந்த வீடு. அந்த ஸ்டோரில் இருந்த முக்கால் வாசிப் பேர் இவள் குடும்பத்தைப் போல் அங்கே முப்பது வருஷமாகக் குடியிருந்து கொண்டிருந்தார்கள். பெட் ரூமை மன்னி தன்னுடைய அறையாக ஆக்கிக் கொண்டு விட்டாள். ஸ்ரீமதியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? அவள் தினமும் ஹாலில் படுத்துக் கொண்டாள்.

ஸ்ரீமதி ஹாலில் மாட்டியிருந்த கண்ணாடியில் கிளம்புவதற்கு முன்னால் முகத்தை ஒரு தடவை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள் கண்ணாடி ரசம் இழந்து கிடந்தது. ஒரு நேரத்துக்கு அது நெற்றியையும் கண்ணையும் மட்டும் காண்பிக்கும். கண்ணையும் மூக்கையும் பார்க்க வேண்டும் என்றாலோ மூக்கையும் வாயையும் என்றாலோ அதற்கு ஏற்ப அவள் குனிந்தோ நிமிர்ந்தோ தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கண்ணாடியைக் கையில் எடுத்துக் கொண்டு அசைத்து அசைத்து அட்ஜஸ்ட் செய்து பார்க்க வேண்டும். இந்த வீட்டில் இருக்கும் அழகுக்கு இதுவே போதும் என்று கண்ணாடி கூட நினைத்து விட்டதா என்ன?

அவளது உருண்டை முகத்தையும் நறுக்கி விட்டாற் போன்ற நாசியையும் சிவந்த உதடுகளையும் பொறாமையுடன் அவளிடம் விட்டு விட்டுக் காண்பித்தது கண்ணாடி. கண்களைப் பார்த்த போது அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. கடைக் கண் பார்வையாமே? ரொம்பப் பொல்லாதவனாகி விட்டான். அமிர்தம் இங்கே வந்து மூன்று வருஷங்களாகி விட்டது. கோபாலியின் பாங்க்டரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிச்சையை இன்னொரு சாக்பீஸ் கம்பனிக்காரர்கள் நல்ல சம்பளம் தருவதாகக் கூறி இழுத்துக்
கொண்டு போய் விட்டார்கள். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் கோபாலி திணறி விட்டான்.

பாக்டரியில் முக்கியமானது அடுப்பு வேலை. கோட்டை அடுப்புக்கு முன்னால் நின்று வேலை பார்க்க வேண்டும். வாட்ட சாட்டமான பெரிய இரும்பு வாணலியை -அதைத் தூக்கி வைக்க நாலு கை வேண்டும்-
அடுப்பின் மேல் ஏற்றி ஜிப்சம் கல்லைப் போட்டு வறுக்க வேண்டும். ஆளுயரத்திற்கு எழும்பிச் சீறும் தீயின் ஜுவாலையின் முன்பு மணிக் கணக்கில் நின்று வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அரை மூட்டைக் கல் என்றால் ஒரு நாளைக்கு ஐந்து ஆறு மணி நேரமாவது நின்று தீய வேண்டும்.

அமிர்தம் அந்த சமயத்தில் கோபாலியிடம் வந்து சேர்ந்தான். அவன் அடுத்த தெருவில் இருந்தான் காலேஜுக்குப் போய்ப் படிக்க வசதியில்லை என்று வேலை தேடிக் கொண்டிருப்பதாக கோபாலியிடம் வந்து சொன்னான். இரும்பு வாணலியைப் போல அவனும் வாட்டசாட்டமாக இருந்தான். அவனது இறுக்கமான உடல் கட்டும் விண்ணென்றிருந்த கைகளும் கால்களும் தனது வேலைக்கு சரியான ஆள் என்று பார்த்த நிமிஷத்திலேயே கோபாலிக்குத் தோன்றி விட்டது. மறுநாளே அமிர்தம் வந்து வேலைக்குச் சேர்ந்து விட்டான்.

வந்த இரண்டு வருஷத்தில் அவன் அவளது வீட்டில் ஒரு ஆள் போல ஆகி விட்டான். அம்மாவுக்கு அவனிடம் தனிப் பாசம். அதற்கு காரணம் அமிர்தத்தின் அம்மா அவன் பிறந்த சில மாதங்களிலேயே இறந்து விட்டாள். அவன் ஸ்கூல் படிப்பை முடித்த சமயம் பார்த்து அப்பாவும் கண்ணை மூடி விட்டார். பெங்களூரில் இருந்த அவனது சித்தப்பாதான் அவனை மரூரிலிருந்து தன்னுடன் இருக்கட்டும் என்று அழைத்து வந்து விட்டார். தாய்ப் பாசம் அறியாத பிள்ளை என்று ஸ்ரீமதியின் அம்மாவுக்கு அமிர்தத்தின் மேல் அப்படி ஒரு இரக்கம். தவிர அம்மாவின் பிறந்த இடம் தில்லைஸ்தானம். கல்லை விட்டு எறியும் தூரம். தஞ்சாவூர் பாசம் பிச்சுண்டு போறது என்று கோபாலி அம்மாவைக் கேலி செய்வான். பாக்டரி வேலை நேரம் போக மிச்சமிருக்கும் முக்கால் வாசி நேரம் அவர்கள் வீட்டில்தான் இருந்து அமிர்தம் வம்படித்துக் கொண்டிருப்பான்.

அம்மா போனதற்குப் பின் அவன் படிப்படியாக அந்த வீட்டில் இருப்பதைக் குறைத்து விட்டான். அம்மா காண்பித்த நெருக்கத்தை நினைவில் வைத்துக் காப்பாற்ற விரும்பியவன் போல இருந்தான். அம்மாவிடம் இருந்த ஒட்டுதலை அவன் மன்னியிடமிருந்து பெற முடியாது என்று ஸ்ரீமதி ஒரு முறை நினைத்திருக்கிறாள். மன்னி அம்மாதிரி ஒரு தூரத்தைக் காண்பிக்காத போதிலும். ஸ்ரீமதியே ஆரம்பத்தில் அவனால் கவரப்படாதிருந்தாள். எங்கோ தஞ்சாவூர் கிராமத்திலிருந்து வந்து அவர்களை அண்டியிருப்பவன் என்ற ஆரம்ப நினைப்பு காரணமாக இருந்திருக்கலாம். பெங்களூரின் ஃபாஷனுக்கு ஒட்டாதவன் அல்லது ஓட்ட முடியாதவன் என்கிற உள்மனத் திமிரும் கூட.
ஆனால் பழகப் பழகப் புளிக்காத பாலாகி விட்டான். பின்னாட்களில் அவர்களிடையே இருந்த தோழமைக்கு அவர்களின் வயது காரணமாயிருக்கலாம். ஆனால் இன்று அமிர்தம் சொன்னது கோபாலியின் காதில் விழுந்திருக்குமோ? கோபாலி நடந்து கொண்டதைப் பார்த்தால் கேட்ட மாதிரித் தெரியவில்லை.

***

வங்கியில் பணம் எடுக்க அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. அவள் கேட்ட ஐநூறையும் நூறையும் தருவதில் பிரச்சினை எதுவும் வரவில்லை. க்யூவில் நின்ற நாட்களை மறந்து விட்டவர்கள் போலத்தான் எல்லோரும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவள் பணத்தை எடுத்துக் கொண்டு பாக்டரிக்குப் போன போது அமிர்தம் மட்டும் இருந்தான். அடுப்பில் ஜிப்சம் வறுபட்டுக் கொண்டிருந்தது. முகத்திலும் அகன்ற மார்பிலும் கைகளிலும் வியர்வை ஊற்றாக ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட பலமான இரும்புக் கரண்டியை இரு கைகளாலும் பிடித்து பெரிய வாணலிக்குள் இருந்த பொடிக் கற்களை வலது பக்கமும் இடது பக்கமுமாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். இரு புஜங்களிலும் கண்டு கண்டாகத் தெறித்த சதைத் திரள் அவனது வலிமையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. தீ ஜுவாலையிலிருந்து கிளம்பிய செந்நிறம் அவன்முகத்தில் ஏதோ ஒளிவட்டம் போல் சுழன்று சுழன்று அடித்தது.

அந்தக் காட்சியில் மனதைப் பறி கொடுத்தவளாய் ஸ்ரீமதி நின்று விட்டாள்.
யதேச்சையாகத் திரும்பிய அமிர்தம் அவள் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் திகைத்து விட்டான். வேலையை நிறுத்தி விட்டு அவளருகே வந்தான்.

” நீ எப்படி இங்க? நீ எதுக்கு?” என்று திணறினான்.

“நீ சரியா வேலை பாக்கறயான்னு பாக்க வந்தேன்.”அவள் கண்கள் அவன் மேல் விழுந்து படர்ந்து எழுந்தன.

“நீ என்ன என்னோட பாஸா?” என்று அவன் சிரித்தான்.

“அட. நான் பாஸுக்கும் மேல” என்றாள் அவள்.

மறுபடியும் அவள் பார்வை அவன் மேனியில் ஊர்ந்தது.

“ஒரு நிமிஷம். நா சட்டைய மாட்டிண்டு வந்துர்றேன்” என்று திரும்பினான்.

“உஷ். என் பெர்மிஷன் இல்லாம நகரப்படாது” என்றாள் அவள்.

அவன் மறுபடியும் அவளை நோக்கித் திரும்பினான்
.
அவன் தடுமாறுவதை பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
“சரி, அண்ணா எங்கே?” என்று கேட்டாள்.

” திடீர்னு கிளம்பி மார்க்கெட்டுக்கு போயிருக்கார். காட்போர்டு வாங்கணும்னு. இப்ப வர டயம்தான்”என்றான் அமிர்தம்.

“அண்ணா பணம் எடுத்துண்டு வரச் சொன்னான். சரி நா ஆத்துக்கு போறேன். சாப்பிட வரச்சே பணத்தை எடுத்துண்டு போகட்டும்” என்றாள்
அப்புறம் “இன்னிக்கி என்ன லஞ்சு கொண்டு வந்திருக்கே?” என்று கேட்டாள்.

“இன்னிக்கி ஓட்டல்லதான். சித்திக்கு உடம்புக்கு முடியலன்னு சமையல் ஒண்ணும் பண்ணலே. இங்க வரதுக்கு மின்னாடி நான்தான் நாலு இட்லி வாங்கி குடுத்துட்டு வந்தேன்” என்றான்.

“சரி. அப்ப நீயும் அண்ணா வரும் போது சாப்பிட வா” என்றாள் ஸ்ரீமதி.

“இல்ல வேண்டாம்” என்று அவன் மறுத்தான்.

“ஏனாம்?”

“இல்ல. ரசத்துல உப்பு பத்தாது. குழம்புல கண்ணுலேர்ந்து ரத்தம் வர்ற மாதிரி காரம் இருக்கும்” என்று அவளைப் பார்த்தான்.

“திமிர பாரு. இன்னிக்கு இருக்கு உனக்கு” என்று சிரித்தபடியே அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

ஆனால் கோபாலியும் அமிர்தமும் சாப்பிட வரும் போது மூன்று மணியாகி விட்டது. அமிர்தம் குண்டானையும் தூக்கிக் கொண்டு வந்தான்.

“குண்டான அப்பறம் மேலே ஏத்திக்கலாம். பசி கொல்றது. வா. சாப்பிட்டுடலாம்” என்று கோபாலி உள்ளே வந்தான்
.
“ஏண்ணா இவ்வளவு லேட்டு? மார்க்கட்டுல லேட்டாயிடுத்தா?” என்று கேட்டபடி இரண்டு தட்டுகளில் பரிமாறினாள்.

“இல்ல. அங்க எல்லாம் வேல சீக்கிரம் ஆயிடுத்து. கொஞ்சம் எஸ்ட்ராவா கல்லை வறுத்து போட்டுடலாம். இங்கதான் திடீர் திடீர்னு மழை வந்து அடிச்சுக்க கொல்லறதேன்னு நின்னோம்.அது இவ்வளவு நேரம் ஆயிடுத்து” என்றான் கோபாலி.

தொடர்ந்து “இன்னும் கொஞ்சம் சாம்பார் விடு சூப்பரா இருக்கு” என்றான்.

ஸ்ரீமதி கோபாலியின் தட்டில் சாதம் போட்டு குழம்பை ஊற்றினாள்.
அமிர்தத்தை ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் சாப்பிட்டு
முடித்திருந்தான். தட்டில் சாதம் போட்டு விட்டு “ரசமா?” என்று கேட்டாள் ஸ்ரீமதி.

அமிர்தம் தலையை நிமிர்த்தாமல் “சாம்பார்” என்றான்.

ஸ்ரீமதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் புடவைத் தலைப்பால்வாயை மூடி சிரிப்பை அடக்கிக் கொண்டு சாம்பாரை ஊற்றினாள்.

சாப்பிட்டு முடித்ததும் கோபாலி தனக்கு லேசாகத் தலை வலிப்பதாகவும் சற்று நேரம் தூங்கிவிட்டு வருவதாகவும் அமிர்தத்திடம் சொன்னான்.”அதுக்காக நீ உடனே குண்டான மேல எடுத்து வக்யணும்னு பறக்காத. ஒரு பத்து நிமிஷம் உக்காந்து ரெஸ்ட் எடுத்துண்டு அப்புறம் அதை மேலே போட்டுட்டு போ” என்று சொல்லி விட்டுச் சென்றான்.

ஸ்ரீமதி அமிர்தத்திடம் “அப்பா, கண்ணுலேர்ந்து எவ்ளோ ரத்தம் கொட்டித்து!”என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“நா அப்போ அப்படி சொல்லிருக்காட்டினா இன்னிக்கு சாம்பாரும் ரசமும் இப்பிடி ஆளை தூக்கி அடிச்சிருக்குமா?” என்று புன்னகை செய்தான்.

“ஏன் மீசைல மண்ணு ஒட்டிருக்கு?” என்று அவள் விரல்களால் அவன் மீசையைச் சுட்டிக் காட்டினாள்.

அவன் உள்ளே ஹால் பக்கம் எட்டிப் பார்த்தான். “எதுவும் நம்பறதுக்
கில்லே” என்றான்.

“என்னது?”

அவன் பாத்ரூம் பக்கம் சென்றான் அவளையும் வருமாறு சமிக்ஞை
செய்தபடி. ஸ்ரீமதி அவனைப் பின் தொடர்ந்தாள்.

அமிர்தம் மெல்லிய குரலில் சொன்னான். கோபாலி கேட்டானாம்
‘காலையில் அவர்கள் இருவரும் வழியில் நின்று கொண்டு எதற்கு வம்பளந்தார்கள்? பார்க்கிற குடித்தனக்காரர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்?’ என்று. மத்தியானம் அவள் பாக்டரியில் நின்று கொண்டிருக்கும் போதே கோபாலி வந்து விட்டான். அவள் போன சில நிமிடங்களில் அவன் வந்து அமிர்தத்திடம் அவள் என்ன சொன்னாள் என்று கேட்டானாம். அவள் சாப்பிடக் கூப்பிட்டாள் என்ற சொன்ன போது நீ எதற்கு அவளிடம் லஞ்சு கொண்டுவரவில்லை என்று சொன்னாய் என்றானாம். சரி இப்போ அவள் கூப்பிட்டதால் வா . இனிமேல் இதெல்லாம் வேண்டாம். வேலையில் கவனமா இரு என்றானாம்.

ஸ்ரீமதிக்கு உடம்பெல்லாம் எரிவது போலிருந்தது. கோபாலி அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவளிடம் பேசாமல் அமிர்தத்திடம் ஏன் சொல்ல வேண்டும்? தன்கீழ் வேலை பார்க்கிறவன்தானே என்ற திமிரா?

அவள் அமிர்தத்தைப் பார்த்தாள். கோபாலி விட்ட வார்த்தைகளுக்காவது அவனை ஒரு முறை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று வெறி எழுந்தது.
.
ஸ்ரீமதி ஒன்றும் சொல்லாமல் சுவரைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அமிர்தம் கிச்சன் வாசலில் இருந்த குண்டானைத் தம் பிடித்து இழுத்து எடுத்தான். ஒரு ஆள் மாத்திரம் தூக்கக் கூடிய பாத்திரம் அல்ல. ஆனால் அவன் அதை எடுத்துக் கொண்டு போய் உள்ளே இருந்த பரண் மீது வைத்தான். அது பெரிய பரண் இல்லை என்பதால் குண்டானின் முக்கால் பாகம்தான் பரணுக்குள் சென்றது. மீதம் கால் பாகம் துருத்திக் கொண்டு நின்றது. அதை வாகாக நிறுத்தி விட்டு பெரிய மூச்சொன்றை விட்டான்.அவளிடம் சொல்லிக் கொண்டு அமிர்தம் வெளியே போனான்.

ஸ்ரீமதி ஹாலில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டாள். மனது அலை பாய்ந்தது. என்ன வார்த்தை சொல்லி விட்டான் கோபாலி ? பக்கத்தில் குடியிருப்பவர்கள் நினைத்துக் கொள்வார்களாமே ! என்னவென்று? அமிர்தத்திடம் பேசுவதில் என்ன தப்பு கண்டான்?

அவளுக்கு இருபத்தி ஏழு வயதாகிறது. அவள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று அண்ணனாக என்ன செய்திருக்கிறான்?
அம்மா இருந்த வரைக்கும் பெண்ணுக்கு வயசாகிப் கொண்டிருக்கிறதே என்று மறுகி மறுகி அங்குமிங்கும் மாப்பிளை தேடி அலைந்து கொண்டிருந்தாள். அவள் காலத்தில் அது நடக்கவில்லை. அவள் போய் ஒரு வருஷம் கழித்து மன்னியின் தூரத்து உறவு என்று ஒரு அரைக் கிழவனை புருஷனும் பொண்டாட்டியுமாகத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.

“பேங்க்ல ஆபிஸரா நல்ல உத்யோகத்ல இருக்கான். அடுத்த வருஷம் ப்ரமோஷன் கிடைச்சு லண்டனுக்கு போகப்போறான்னு அவா அண்ணா சொல்றார். மெட்றாஸ்ல காரும் பங்களாவுமா கொழிக்கிறா” என்றான் கோபாலி.
அவ்வளவு செழிப்பா இருக்கறவன் எதுக்கு இந்த ஒண்டு குடித்தனக்
காரிய விரட்டிண்டு வரான்னு யோசிச்சியாடா அண்ணா என்று ஸ்ரீமதிக்குக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனா அவன்
என்ன பண்ணுவான் என்று பாவமாகவும் இருந்தது.எல்லாம் பொண்டாட்டியாத்தா பெரியாத்தான்னு கால்ல விழுந்து அவ
சொல்றதே தேவவாக்குன்னு இருக்கிறவன்கிட்டே என்ன எதிர்பார்க்க முடியும்?

“இந்த சம்பந்தம் கிடைச்சா நல்லது” என்று கோபாலி ஸ்ரீமதியின் முகத்தைப் பார்த்தான்.

“சீமதிய பண்ணிக்கறதுக்கு அவனுக்கு கசக்குமா என்ன?” என்று மன்னி சொன்னாள்.

“எனக்குத்தான் கசக்கும்” என்றாள் ஸ்ரீமதி.

மன்னிக்கு முகம் வெளிறிப் போய் விட்டது. சிரிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு சட்டென்றுஎழுந்து பெட்ரூமுக்குப் போய் விட்டாள்.

கோபாலி ஸ்ரீமதியைப் பார்த்து “ஆனாலும் உனக்கு திமிர் ஜாஸ்தி” என்று மன்னி பின்னாலேயே போய் விட்டான்.

அதற்கப்புறம் இருவரும் அவளிடம் திருமணம் பற்றி பேச்சே எடுக்கவில்லை. ஏதோ அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது போல். அப்படியென்றால் இன்று எதற்கு இந்த சட்டாம்பிள்ளைத்தனம் பண்ண கோபாலி முன் வருகிறான்? இவ்வளவுக்கும் அவள் அமிர்தத்துடன் சகஜமாகப் பழகி வருவது தவிர வேறு கோணங்களை நோக்க அவள் யாருக்கும் எதற்கும் வாய்ப்பளிக்கவில்லையே? அவள் வயதின் காரணமாகவும் அவளுக்குப் பிடித்த மாதிரி பேசவும் நடந்தும் கொள்ளுகிறான் என்பதால் அமிர்தத்தை அவளுக்குப் பிடித்திருக்கிறது. இதை அடக்க கோபாலிக்கு உரிமை கொடுத்தது யார்? அவளுக்குள் கோபம் முண்டிக் கொண்டு வந்தது
.
***

மன்னி வழக்கம் போல் ஏழு மணிக்குத்தான் வந்தாள் பெங்களூர் டிராபிக்கைத் திட்டிக் கொண்டே. ஸ்ரீமதி வழக்கம் போல மன்னிக்கு காபி போட்டுக் கொடுத்தாள். அப்போது பாக்டரியை மூடி விட்டு உள்ளே வந்த கோபாலி ” எனக்கும் ஒரு ஸ்ட்ராங் காபி குடேன்” என்று ஸ்ரீமதியைப் பார்த்து சொன்னான்.அவள் முகத்தில் எந்த வித அதிருப்தியையும் காண்பித்துக் கொள்ளாமல் இயல்பாக இருந்தாள்.

எட்டு மணிக்கு ஸ்ரீமதி சமையலை முடிந்ததும் மன்னி சாப்பிட உட்கார்ந்து விட்டாள்.அவளுக்கு ஒன்பது மணிக்கு ராணி வாணி பார்த்தே ஆக வேண்டும். “சிந்துபாத்தோட கன்னித் தீவ பீட் அடிச்சிருவாங்க போல இருக்கே” என்று ஒரு நாள் அமிர்தம் சொன்ன போது எல்லோரும் சிரித்தார்கள்.

கோபாலி ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு அன்றைய கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தான். எப்படியும் அவன் கணக்கு தினமும் அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்துவிடாது. உதைத்துக் கொண்டே இருக்கும். அதை முடித்து விட்டுத்தான் சாப்பிட உட்காருவான். இன்றும் அதே மாதிரி ஒன்பது மணிக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தான்.. ஸ்ரீமதி பாத்திரங்களை ஒழித்துப் போட்டு அலம்பி வைத்து விட்டு ஹாலுக்கு வரும் போது மணி பத்தாகி விட்டது.

அவள் உள்ளே வருவதற்கும் மன்னியும் கோபாலியும் அவளிடம் குட் நைட் சொல்லி விட்டு அவர்கள் அறைக்குப் போவதற்கும் சரியாக இருந்தது. சாதாரணமாக அவள் அரை மணி நேரம் மாற்றி மாற்றி பல சேனல்களில் சுற்றி விட்டு வரும் போது தூக்கம் வந்து விடும். இன்று என்னவோ மனதின் அலைக் கழிப்பில் டி.வி . பக்கம் போக மனம் வரவில்லை.

கூடத்து விளக்குகளை அணைத்து விட்டு அவள் படுத்துக் கொண்டாள். இப்போது அமிர்தம் என்ன செய்து கொண்டிருப்பான் என்று மனதில் கேள்வி எழுந்தது. அவளைப் போல அவனும் அவளைப் பற்றி நினைப்பானோ? அல்லது கோபாலியின் கடும் சொற்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பானோ?அவளைப் பார்ப்பதையும் அவளுடன் பேசுவதையும் முடிந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தால்? அவளுக்குத் தாங்க முடியாத கோபம் கோபாலியின் மேல் ஏற்பட்டது.
அப்போது இரவின் வெளிறிய நிசப்தத்தில் பெட் ரூமிலிருந்து ஒலிகள் கேட்டன. இதற்கு முன்னாலும் கேட்டிருந்த சிரிப்பும் முனகலும் வளை ஒலியும்இப்போது செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டு செல்லும் வலியைத் தருவன போல் ஸ்ரீமதிக்கு இருந்தது. அவளை வலியின் இறுக்கமான பிடியில் தள்ளி விட்டு விட்டு கோபாலி தனது சந்தோஷ உலகில் நடமாடுவது அவளுடைய அடிமனதில் ஆங்காரத்தை உண்டாக்கியது. தொடர்ந்து வந்த ஒலிகளைத் தாங்க மாட்டாதவளாய் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். கூடத்து ஜன்னல் வழியே உள்ளே பரவியிருந்த அரை வெளிச்சத்தில் சுற்று முற்றும் பார்த்தாள்.

கண்ணில் கிச்சன் பட்டது. ஸ்ரீமதி எழுந்து கிச்சனை நோக்கிச் சென்றாள். உள்ளே தரை பாத்திரம் பண்டம் எதுவுமற்று சுத்தமாக இருந்தது. பரண் மேல் இருந்து நீட்டிக் கொண்டிருந்த குண்டான் அடியை இரு கைகளாலும் இறுகப் பற்றினாள். முதலில் இழுத்த போது லேசாக அசைந்து முன் வந்தது.. முழு பலத்தையும் கைகளுக்குள் கொண்டு வந்து கால் பாகத்துக்கும் மேல் பரணிலிருந்து வெளி வந்திருந்த
குண்டானைப் பிடித்து ஒரே தள்ளு !

மிகப்பெரிய சத்தத்துடன் குண்டான் கீழே விழவும் அவள் படுக்கையில் போய்ச் சரியவும் ஒரே நேரமாக இருந்தது. பெட் ரூம் கதவைத் திறந்து “என்னது?என்னது?” என்று அலங்கோலமாக கோபாலி ஓடி வந்தான். மன்னியும் சரி செய்து கொண்டே அவன் பின்னால்.

ஸ்ரீமதி “என்ன ஆச்சு?” என்று திடுக்கிட்டபடி படுக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.

கோபாலி கிச்சனுக்குள் சென்றான். கீழே கிடந்த குண்டானைப் பார்த்து விட்டு அயர்ந்து நின்றான்.

“இவ்வளவு பெரிய குண்டான் எப்படி கீழே விழுந்தது?” என்று கடுப்புடன் கேட்டான். பாதிக்கப்பட்ட உடலையும் இரவையும் நினைத்துக்
கோபத்தை எறிந்த அவன் முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை.

“ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்றாள் மன்னி.

“ஆமா.எனக்கும்” என்றாள் ஸ்ரீமதி.

கோபாலி அவளை உற்றுப் பார்த்தான். ஸ்ரீமதி சலனமற்ற கண்களுடன் அவனை நேராக நோக்கினாள். .

——

அவர்கள் நம் அயல்மனிதர்கள் – 03 – எம்.ரிஷான் ஷெரீப்

download (25)

இருவரதும் ஜீவித காலத்துக்கும், எத் துயரம் வந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்தே இருப்போம் என உறுதி கொண்டு இணையும் பல தம்பதிகள், திருமணத்துக்குப் பிறகு வரும் சிறு, சிறு பூசல்களுக்கும் விவாகரத்து செய்து பிரிந்து செல்லும் மிக மோசமான மனப்பாங்கு அண்மைக்காலமாகப் பரவிவருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனங்களும், ஊடகங்களும் இப் பிரிவுகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.

தாம் பெற்ற குழந்தைகளது எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொள்ளாது, தம்பதிகள் இருவரும், தமது நலன்களை மாத்திரம் கருத்திற் கொண்டு விலகிச் செல்லும் இப் போக்கு கிராமப்புறங்களை விட, நகரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. என்றாலும், நகரங்களை விடவும் கிராமங்களில் இடம்பெறும் இவ்வாறான ஒன்றிரண்டு நிகழ்வுகள் கூட அக் கிராமங்களில் பெரிதாகப் பேசப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களது வாழ்க்கையை, தற்கொலை வரை கொண்டு சென்று விடுகின்றன.

கதைப்பதற்கு எளிதாகத் தோன்றும் இவ் விடயம், சம்பந்தப்பட்டவர்களது வாழ்க்கையை, அவர்களது இடத்திலிருந்து பார்த்தால்தான் உண்மையான சிக்கல் புரியும். நாட்டில் திருமண மண்டபங்கள் பெருகிவருவதைப் போலவே, விவாகரத்து வக்கீல்களும் தினந்தோறும் பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.

இனி, விவாகரத்து சம்பந்தப்பட்ட கவிதையொன்றைப் பார்ப்போம். சிங்கள மொழியில் இக் கவிதையை எழுதியிருப்பவர் பெண் கவிஞர் சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி.

விவாகரத்தின் பின்னர்

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு

கீழே
முற்புதர்கள், கற்சிதறல்கள்
நாகம், விரியன், மலைப்பாம்புகள்
நிறைந்திருக்கும் பாதாளம்
அகன்ற வாயைத் திறந்துகொண்டு

அவளது தலைக்கு மேலே
இரவின் கனத்த இருட்டு
ஊளையிடும்
மழையும் கோடை இடியும்
வெற்றியுடன் ஒன்றிணைந்து

ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது

மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்தவாறு
அவளைக் கைவிட்டு
அவர்களெல்லோரும் சென்று விட்டாலும்

கீழே மரக் கிளையொன்றில்
மறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்
பிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்
இற்றுப் போன புடைவைத் துண்டொன்று

இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்து
முட்புதர்களை சீராக வெட்டியகற்றி
பாதையொன்றை அமைத்தபடி
நாளைக் காலையில்
அவள் வருவாளா ஊருக்கு

நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியவாறு

****

கவிஞர் சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி ஒரு வழக்கறிஞர். இலங்கையில் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்து வரும் பெண் சட்டத்தரணி இவர். தமிழை எழுத, வாசிக்கக் கற்றிருக்கிறார். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு சிறந்த இளைஞர் இலக்கியத்துக்கான விருதினை வென்றது. இந்தக் கவிதையும் அத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒன்றாகும்.

ஒரு தம்பதியினது விவாகரத்து எனப்படுவது, அதனைக் கேள்விப்படுபவர்களுக்கு, ஒரு செய்தியாக மாத்திரமே இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், சமூகத்தில் அதன் பிறகு எதிர்கொள்ள நேரும் இன்னல்கள் அனேகமானவை. தம்பதிகளுக்கிடையேயான சிறிய பிரச்சினைகளுக்குக் கூட, விவாகரத்து எனும் மலை மீது ஏற்றிவிட பலரும் காத்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்றி விட்டுக் கைவிட்ட பின்பு, அம் மலை மீதிருந்து அவர்களால் சகஜ வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவது மிகவும் கடினமானதாக இருக்கும். இக் கவிதை உணர்த்திச் செல்வது, ஒரு சமூகத்துக்கு மாத்திரமேயான துயரத்தையல்ல.

– எம்.ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

மேற்கே நடந்தேன் ( கவிதைகள் ) / சின்னப்பயல் ( பெங்களூர் )

images (28)

பாலையை நடந்தே கடந்த முகமது
கந்தனிடம் மயிலைக்கேட்டிருக்கலாம்
சிலுவையுடன் பல கல் தொலைதூரத்தை
தோளில் சுமந்தே கடந்த ஏசு
அதே கந்தனிடம் தொற்றிக்கொள்ள
வேண்டியிருக்கலாம்

***

உன்
நிர்வாணத்தைப்
பார்க்கத்தூண்டும்
ஆடை

***

மலையில்
வளைந்து நெளிந்து
செல்கிறது பாதை
யாரைத்தேடி ?

***

காகம் அடைகாத்த
குயில் நீ
குயில் அடைகாத்த
காகம் நான்

***

மேற்கே நடந்தேன் இடித்தான் ஒரு கம்யூனிஸ்ட்
தெற்கே நடந்தேன் இடித்தான் ஒரு ஆர் எஸ் எஸ்
வடக்கே நடந்தேன் இடித்தான் ஒரு காங்கிரஸ்
கிழக்கே நடந்தேன் இடித்தான் ஒரு வஹாபி
குறுக்கே நடந்தேன் இடித்தான் ஒரு மாவோயிஸ்ட்
எம்பிக் குதித்தேன் இடித்தான் ஒரு பிஜேபி
சும்மா இருந்தேன் இடித்தான் ஒரு திராவிடன்

***

கிளிகள்
பேசத்தொடங்கியதும்
கூண்டுகளில்
அடைபட்டன

***

இன்மையை எழுதுகிறேன்

அதில்

இருக்கிறாய்

***

குடையை
மடக்கி வைத்துவிட்டு
மழையில் நடக்கலாம்
கொஞ்சம் குடையும்
நனையட்டும்

***

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)