Category: இதழ் 129

விருட்சம் இலக்கியச் சந்திப்பின 29வது கூட்டம்…. / அழகியசிங்கர்

இது சரியா

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 29வது கூட்டம், வருகிற 16.09.2017 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ‘ஓஷோவும் நானும்’ என்ற தலைப்பில் உரையாட உள்ளார். தமிழில் ஓஷோவை செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார். எப்படி அவருக்கு ஓஷோ மீது ஈடுபாடு வந்தது போன்ற விபரங்களை சனிக்கிழமை அன்று உரை ஆற்றுவார். யாவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அழைப்பிதழைத் தயாரித்த நண்பர் கிருபானந்தனுக்கு என் நன்றி.

கல்வி – மரணம் – பாடம் பாலகுமார் விஜயராமன்

நீட் அனிதா

நீட் அனிதா

தமிழகத்துக் கல்விமுறை என்பது மாணவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது, பின் தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவனும் தொடர்ந்து எட்டாவது வரை பள்ளிக்கு வந்து, தொடர்ச்சியாக கல்விச் சூழ்நிலையில் இருந்து, முடிந்தமட்டும் கற்று, தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், சமூதாயத்திற்கும் பயனுள்ள வகையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வது. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால், அவனைக் கல்விச் சூழலில் இருந்து விலக்கி, வொர்க் ஷாப் வேலைக்கோ, களையெடுக்கவோ அனுப்பி விடாமல், அடுத்த மாதமே மறு தேர்வு வைத்து, அந்த கல்வியாண்டே அவனுக்கு அடுத்த வகுப்பில் படிக்க வாய்ப்பு வழங்குவது.

சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாணவனும், கல்வியின் மூலம் ஏதாவது ஒரு நிலையில் தனக்கான ஊன்றுகோலைப் பிடித்து மேல் எழுந்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட கல்வி முறை இது. பள்ளிக்கல்வியில் வெகு சுமாராகப் படிக்கும் எத்தனையோ மாணவர்கள், தொடர் வாய்ப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

அவர்களின் வெற்றிக்கு இந்த இலகுவான கல்வி முறை தான் காரணம். தகுதியில்லை என பெரும்பகுதியைக் கழித்துக் கட்டிவிட்டு சிறந்ததற்கு மகுடம் சூட்டும் முறை அல்ல இந்த கல்வி முறை, மாறாக சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் தொடர் வாய்ப்புகள் வழங்கி அனைவரையும் மேலே அழைத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கம்.

நூற்றாண்டுகளாக சமூகத்தின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடும் இந்த அடிப்படையில் தான். ஒரு நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற எல்லா வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது, அதில் ஊட்டச்சத்து இல்லாமல் இளைத்திருப்பவனுக்கு கொஞ்சம் க்ளுகோஸ் கொடுத்து அவனையும் தேற்றி, பந்தய தூரத்தை கடக்க வைப்பது.

போதுமான நீண்ட கால அவகாசமும், சரியாக முன்னெடுத்துச் செல்கின்ற தலைமையும் இருந்திருந்தால், ”நீட்” தேர்வையும் எதிர்கொள்ள தமிழகம் தயார் ஆகியிருக்கும். ஆனால் நீட் எதிர்ப்புக்கான காரணம் அதுவல்ல.

பலதரப்பட்ட பண்பாடு, மொழி, பொருளாதார, சமூக நிலை உள்ள பரந்துபட்ட தேசத்தை, ஒற்றைக் கொள்கை மூலம் அடைக்க நினைக்கும் முட்டாள்த்தனத்துக்கு எதிராக கிளம்பு எதிர்ப்பு இது. ஏற்கனவே கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தலைநிமிர்ந்து நிற்கும் மாநிலங்களை, தங்கள் பிடிவாதமான கடிவாளப் பார்வை கொண்டு, ஒடுக்க நினைக்கும் அடக்குமுறையாகத் தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மாநில இனங்களின் அடையாளங்களை அழிப்பதன் மூலமே, அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து இருக்குமானால், அது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பாதையாக நிச்சயம் இருக்காது.

சமீப காலத்தில், “நீட்” தொடர்பாக, மத்திய மாநில அளவில் நடந்த கலந்துரையாடல்கள் எதுவுமே ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லவில்லை. நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்று தெரிந்தே, மாநில வழிக்கல்விக்கு 85 சதம் ஒதுக்கீடு அளித்தது, மத்திய அமைச்சர்களின் பொய்யான வாக்குறுதிகள், மாநில அமைச்சர்களின் டெல்லி பயண நாடகங்கள் இப்படி எல்லாமே வெறும் கண் துடைப்பாகவே அமைந்தன. உடைத்து சொல்வதானால், இவையணைத்தும் மக்களை ஏமாற்றும் வேலையின்றி வேறு இல்லை. மத்திய மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் தொடர்ந்து தவறான வழிகாட்டுதல்களை செய்து கொண்டே இருந்தார்கள்.

எப்படியும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பை மக்களின் மனதில் போலியாக விதைத்துக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் தங்கள் பதவிகளுக்காக நடந்த பேரங்களை எல்லாம், நீட் குறித்த விவாதம் என்று பரப்பினார்கள். விளைவு, நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒரு உயிர் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றுக் கணக்கான பிள்ளைகள், மனக்குமுறலோடும் ஆற்றாமையோடும் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியவில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பெரும நிலை அரசியல் இப்படி தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது. பெரும் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இதற்கான உடனடித் தீர்வு கண்களுக்குத் தென்படுவது போல இல்லை. வழக்கம் போல, அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கத் தான் வேண்டியிருக்கிறது. மத்தியில் இருப்பவர்களுக்கு, நாமெல்லாம் கிள்ளுக் கீரைகள், இங்குள்ள மக்கள், அவர்களுக்கான முதல்தர குடிமகன்கள் இல்லை. மாநிலத்தில் இருப்பவர்களுக்கோ தங்கள் நாற்காலிகளைக் காத்துக் கொள்ள வேண்டிய பரிதாமான நிலை. இது மேலே இருப்பவர்களுக்கு மிக வசதியாய் போய்விட்டது. நினைத்தபடி எல்லாம் அடித்து ஆடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அரசன் குடிகளை நினைக்க மறந்தாலும், குடியானவன் உழுவதை நிறுத்தக் கூடாது என்பது தானே விதி. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய சிறுமியின் மன உறுதியை, ”மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போவேன் என்று சொல்லிட்டு இருந்த, இப்போ மாட்டுக்கு வைத்தியம் பார்க்கப் போறியா” என்பது போன்ற எந்த சுடு சொல் வீழ்த்தியதோ தெரியவில்லை. அவளின் மனவருத்தங்களைப் பகிர்ந்து கொண்டு, அவளுக்கு இருக்கும் மறு வாய்ப்புகள் பற்றி, மாற்றுப் பாதைகள் பற்றி மனம் விட்டு உரையாட, அந்த நேரத்தில் அவள் அருகில், அணுக்கமான ஒரு ஆசிரியரோ அல்லது அவள் உச்சநீதி மன்றம் வரை சென்று வாதாடத் துணை நின்ற ஏதேனும் அமைப்புகளோ இல்லாமல் போனார்களே என்ற ஆதங்கம் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

கிராமப்புற, விளிம்பு நிலை மாணவர்களிடம் பேச வாய்பு கிடைக்கும் போதெல்லாம், நாம் நினைக்கின்ற கனவு தேசம் என்று ஒன்று இல்லவே இல்லை. இங்கே ஏற்றத்தாழ்வுகளும், அவநம்பிக்கைகளும், அவமானங்களும் எப்பொழுதும் நம் வழியை மறித்து நிற்கவே செய்கின்றன. அதற்காக எல்லாம், மனம் நொந்து, உங்கள் பயணத்தை இடையில் நிறுத்திவிடாதீர்கள். உங்கள் தொடர் முயற்சிகள் எப்பாடுபட்டேனும் திறக்காத கதவுகளைத் திறக்க வைக்கும், இல்லையென்றால், உங்கள் பயணத்துக்கான மாற்றுப் பாதையும் இருக்கலாம், சரியான திசையைக் கண்டறிந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதே சாதிப்பதற்கான வழி. முழுதும் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் தேவையில்லை. ஏற்கனவே இதைப் போன்ற இடர்களை எல்லாம் உடைத்து பலர் முன்னேறி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை உங்கள் பயணத்தில் சந்திப்பீர்கள், அவர்களது வழிகாட்டுதல் உங்களுக்கு தக்க நேரத்தில் இளைப்பாறுதலைத் தரும். எப்படி இருந்தாலும், முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். தன் வாழ்நாள் கனவான மருத்துவப்படிப்பு அநியாயமாக மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட அந்தச்சிறுமியின் மனநிலையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அறியும் ஆற்றல் ஒருவருக்குமில்லை. ஆனாலும், இந்தப்பிரச்சனை தான் என்றில்லை, எதுவாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களின் தயக்கங்களை விலக்கி, அவர்கள் மனதில் உள்ளதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டு அவர்களுடன் உரையாடினால், அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும்.

அதனால் பல விபரீத நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க முடியும் என்று தோன்றுகிறது. இன்று அந்தச் சிறுமிக்காக கண்ணீர் சிந்துகிற ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. ஒரு மரணத்தைக் கொச்சைப் படுத்துகிறவர்களைப் பற்றி பேச எதுவுமில்லை.

******

நிகனோர் பார்ரா கவிதைகள் ( 2 ) – தமிழில் : ராஜேஷ் சுப்ரமணியன்

நிகனார் பார்ரா

நிகனார் பார்ரா

நிகனோர் பார்ரா கவிதைகள்

தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன்

1.

கட்டு விரியன்

பல வருடங்களுக்கு, வெறுக்கத்தக்க ஒரு பெண்ணை
ஆராதிக்க நான் சபிக்கப்பட்டேன்.

என்னையே அவளுக்குத் தியாகம் செய்தேன் ,

முடிவில்லா அவமானங்களையும் பரிகாசங்களையும்
பொறுத்துக்கொண்டு ;

இரவும் பகலும் உழைத்தேன் அவளுக்கு

உணவும், தேவையான உடைகளையும் அளிக்க,

பல குற்றங்கள் செய்தேன் , தகாத பல

செயல்களையும் செய்தேன்,

நிலவொளியில் சிறு கொள்ளைகளிலும் ஈடுப்பட்டேன்,

ஆவணங்களில் போலிகள் செய்து மோசடி செய்தேன்

அவளின் உள்ளம் கொள்ளை கொள்ளும் கண்களில்
இருந்து

வரக்கூடிய ஒரு இகழ்ச்சியான பார்வைக்குப் பயந்து.

ஒருவருக்கொருவர் புரிந்துக் கொண்ட சில

அதிசய சிறு தருணங்களில், பூங்காக்களில் நாங்கள் சந்தித்து

ஒன்றாக இயந்திரப் படகை ஓட்டும்

காட்சியைப் புகைப்படம் எடுத்துக்கொள்வோம்.

அல்லது ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்று

விடியலைத் தாண்டியும் களியாட்டம் போடுவோம்.

பல வருடங்களுக்கு, அந்தப் பெண்ணின் வசியத்தில் இருந்தேன்.

என்னுடைய அலுவலகத்திற்கு முழு நிர்வாணமாக வருவாள்,

வந்து,கற்பனைகூட செய்ய இயலாத வகையில்

உடலை வளைத்து ஜாலம் காட்டுவாள்,

அவளுடையப் பாதையில் இழுக்க.

எல்லாவற்றிற்கும் மேல் என்னிடம் இருக்கும்

கடைசித் துளிப் பணத்தையும் பிழிந்து எடுத்து செல்ல.

என்னுடைய குடும்பத்துடன் எந்தவிதத் தொடர்பும்

வைத்துக் கொள்வதைத் தடை செய்தாள் .

என்னுடைய நண்பர்களை என்னிடமிருந்து பிரித்துவிட

என்னைப் பற்றி அவதூறுப் புரளிகளைத்

தனக்கு சொந்தமான நாளிதழில் வெளியிட்டாள் .

வெறி மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடன்

ஒரு கணம் கூட இடைவெளிவிடாமல் அவளுடைய வாயில்

முத்தமிட எனக்குக் கட்டளையிட்டாள் .

அவளுடைய அறிவற்ற கேள்விகளுக்கும்

உடனே பதில் அளிக்க சொன்னாள்;

அவளுடைய அந்தக் கேள்விகள், மற்றவற்றுடன் கூடவே,

நித்யத்துவம் பற்றியும், மரணத்திற்குப் பின்னரான வாழ்வு

பற்றியும், அதுபோன்ற என் மன அமைதியைக் கெடுக்கும்படி

இருந்த , காதில் நாராசுரமாக விழுந்த விஷயங்கள்.

அவற்றால் அடிக்கடி குமட்டலும், திடீர் மயக்கங்களும்

ஏற்பட்டன எனக்கு. அதையே, தனக்கே உரியத் தனித்துவமான

பாணியில் காரணமாகக் காட்டி ஒரு கணமும் வீணாக்காமல்

ஆடைகளை அணிந்து, என்னுடைய வீட்டிலிருந்து அவள்

வெளியேறியபொழுது, வீழ்ந்துப் போனேன் நான்.

இதே சூழ்நிலை ஐந்து வருடங்களுக்கும், அதற்கு மேலும்

அவ்வாறே இழுத்துச் சென்றது.

இடையே, சில சிறு காலக் கட்டங்களில்

நாங்கள் ஒரு சிறிய வட்ட அறையில் ஒன்று சேர்ந்து

வாழ்ந்தோம், கல்லறைக்கு அருகில் இருந்த சொகுசு நிறைந்த

ஒரு பகுதியில், வாடகையைப் பகிர்ந்துக் கொண்டு.

(சில இரவுகளில், எங்கள் தேனிலவில் சிலக் குறுக்கீடுகள்

செய்ய வேண்டியிருந்தது, ஜன்னல்கள் வழியே விடாது

உள்நுழைந்த எலிகளை சமாளிக்க).

கட்டுவிரியன், தான் பராமரித்த மிகத் துல்லியமான கனக்குப்

புத்தகத்தில்,நான் அவளிடமிருந்து கடன் வாங்கிய

ஒவ்வொரு பைசாவையும் குறித்து வைத்துக் கொண்டாள் .

நான் தான் அவளுக்கு வாங்கித் தந்தேன் என்றபொழுதும்

பல் பிரஷை நான் உபயோகப்படுத்தக் கூடாதாம்.

அவளுடைய இளமையை நான் பாழடித்து

விட்டதாகவும் குற்றம் சாட்டினாள்.

கண்களில் அனல் பொங்க பயமுறுத்தினாள்

என்னுடைய கடனின் ஒரு பகுதியை ஒரு

நியாயமான அவகாசத்திற்குள் நான்

செலுத்துவதற்கு,

அவள் மேற்கொண்டு படிக்க அந்தப் பணம் தேவைப்பட்டதால்.

வேறு வழியில்லாமல் தெருவிற்குத் தள்ளப்பட்டேன்
பொது மக்கள் அளித்த நன்கொடைப் பணத்தில் வாழும்படி.

பூங்காக்களின் இருக்கைகளில் உறங்கிய பொழுதுகளில்

காவலர்கள் என்னை மீண்டும் மீண்டும் கண்டெடுப்பர்

இலையுதிர் கால முதல் இலை உதிர்வில்
இறக்கும் நிலையில் இருப்பவனாக.

அதிர்ஷ்ட வசமாக,அந்த நிலை நீண்ட நாள் தொடரவில்லை;

மீண்டும் ஒரு பொழுது , பூங்காவில் நான் இருந்த போது

ஒரு புகைப்படைக்கலைஞர் என்னைப்
படமெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது

சுவை மிகுந்த ஒரு ஜோடிப் பெண்மைக் கரங்கள்
என் கண்களை மூடின. நான் மிகவும் நேசித்த ஒரு குரல் கேட்டது

“நான் யார்?” என.

“நீ, என் காதலி” நான் அமைதியாக சொன்னேன்.

என் தேவதையே ! என்றாள் அவள் பதட்டத்துடன் .

உன்னுடைய கால் முட்டிகளின் மேல் மீண்டும் நான் அமர விடு.

அப்போதுதான் நான் உணரமுடிந்தது அவள்

உடலோடு ஒட்டிய குட்டை ஆடையை அணிந்திருந்தாள் என்பதை.

அது, ஒரு நினைவில் நிற்கும் சந்திப்பு,

முரணான பேச்சுகள் நிறைந்திருந்தது எனினும்.

“நான் ஒரு சிறியத் துண்டு நிலம் வாங்கி இருக்கிறேன்

இறைச்சிக் கூடத்திற்கு அருகில் ” என்றாள் அவள்
உரக்கமாக . ” அங்கு ஒரு வகையான பிரமிட் கட்ட விரும்புகிறேன்

நமது எஞ்சிய காலத்தைக் கழிக்க உதவும் வகையில்.

நான் எனது படிப்பை முடித்து விட்டேன்;

வழக்கறிஞராகப் பதிவும் பெற்று விட்டேன்,

கொஞ்சம் நன்றாகவே பணமும் சேர்த்து விட்டேன் ,

அதை நல்ல லாபகரமான வியாபாரத்தில் முதலீடு செய்வோம்,

நாம் இருவரும், என் அன்பே ” என்றவள் சொன்னாள் மேலும்.

“இந்த உலகிலிருந்து தூரத்தில் நாம் நமது கூட்டைக் காட்டுவோம்”.

“போதும் உனது முட்டாள்தனம்; உனது திட்டங்களில்
எனக்கு நம்பிக்கை இல்லை ” என்று பதிலளித்தேன் நான்.

“மனதில் நன்றாக வைத்திரு,

எனது உண்மையான மனைவி நம் இருவரையும் ,

அஞ்சக் கூடிய வறுமையில் எந்த நேரமும் விட்டுவிடக்கூடும்.

எனது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள்;
காலம் கடந்து விட்டது;

முற்றிலும் சோர்வடைந்தவனாக நான் உணர்கிறேன்;

ஒரு நிமிடம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்;

பெண்ணே, சிறிது தண்ணீர் எடுத்து வா,

நான் உண்ண எங்கிருந்தேனும் ஏதாவது எடுத்து வா,
நான் பட்டினியில் வாடுகிறேன் ,

உனக்காக நான் இனி மேலும் வேலை செய்ய இயலாது,

நம் இருவரிடையே எல்லாம் முடிந்து விட்டது”.

(ஆங்கில மொழியாக்கம்: W S மெர்வின் )

*********

2.

பியானோவில் தனி வாசிப்பு

மனிதனின் வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை

சற்று தொலைவில் நடக்கும் கொஞ்சம் செய்கைகள் என்பதால்;

ஒரு கண்ணாடி கோப்பையின் உள்ளே பளபளக்கும்
கொஞ்சம் நுரை ;

மரங்கள், நடக்கும் மரங்களேயேன்றி

வேறொன்றுமில்லை என்பதால்

தொடர் நகர்வில் இருக்கும் மேஜைகளும்,

நாற்காலிகளும்

அன்றி வேறொன்றில்லை.

ஏனெனில் நாமும் கூட, உயிர்களேத் தவிர
வேறொன்றுமில்லை

(எப்படி கடவுட் தன்மை என்பது , கடவுளே அன்றி வேறொன்றுமில்லையோ );

நாம் பேசுவது, கேட்கப்படுவதற்காக மட்டும் அல்ல

மற்றவர்களும் பேசட்டும் என்பதற்காக

எதிரொலி, தன்னை உருவாக்கிய குரலை முந்தி செல்லுகிறது;

பெரும் குழப்பங்கள் கொடுக்கக்கூடிய ஒரு ஆறுதல் கூட நமக்கில்லை என்பதால்

காற்றால் நிறைத்து, கொட்டாவி விடும் தோட்டத்தில்;

நமது மரணத்திற்கு முன்பு தீர்க்கவேண்டியப் புதிர்
பின்னர் ஆசுவாசமாக புத்துயிர் கொடுக்கலாம் என்பதால்

நாம் பெண்ணை மிகுதிக்கு அழைத்துச் சென்றவுடன்;

நரகத்திலும் ஒரு சொர்க்கம் இருப்பதால் ,
ஒரு சில விஷயங்களை முன்மொழிய அனுமதியுங்கள்

நான் என் பாதங்களால் ஓசை எழுப்ப விரும்புகிறேன்

எனது ஆன்மா அதற்குத் தகுந்த உடலை
கண்டடைய வேண்டும் என விரும்புகிறேன்.

(ஆங்கில மொழியாக்கம்: வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )

 ராஜேஷ் சுப்ரமணியன்

ராஜேஷ் சுப்ரமணியன்

**********

நிகனோர் பார்ரா கவிதைகள் – தமிழில் : ராஜேஷ் சுப்ரமணியன்

images (1)

1.

என்னுடன் கவிதைகளும் முடிகின்றன

நான் எதையும் ஒரு
முடிவுக்குக் கொண்டுவரவில்லை .
அதைப்பற்றி எந்த
கற்பனைகளும் எனக்கில்லை.
கவிதைகள் எழுதிக்கொண்டே இருக்கவே
நான் விரும்பினேன்.
ஆனால் மன உத்வேகம்
நின்றுவிட்டது.
கவிதைகள் தம்மை சிறப்பாகவே
வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
நான் தான் மிக மோசமாக
நடந்துக் கொண்டிருக்கிறேன்.

நான் தான் சிறப்பாக செயல்பட்டேன்
கவிதைகள்தான் மோசமாக
நடந்துக்கொண்டன என்று சொல்வதில்
எனக்கு என்ன லாபம்,
குற்றம் சாட்டப்படவேண்டியவன்
நான்தானென்று
அனைவரும் அறிந்திருக்கும்பொழுது ?

ஒரு முட்டாளுக்குத் தகுதியானது
இதுதான் !

கவிதைகள் தம்மை சிறப்பாகவே
வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
நான் தான் மிக மோசமாக
நடந்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடன் கவிதைகளும்
முடிகின்றன.

***

2.

உயரும் விலைவாசி

ரொட்டி விலை மேலே ஏறுகிறது
ஆகவே ரொட்டி விலை மீண்டும் மேலே ஏறுகிறது
வாடகை உயருகிறது
உடனே எல்லா வாடகைகளும் இரட்டிப்பாகுகின்றன.
துணிகளுக்கான செலவு மேலே போகிறது
உடனே துணிகளுக்கான செலவு மீண்டும்
மேலே ஏறுகிறது.
வேறு வழியே இல்லை
ஒரு விஷச் சுழியில் நாம் மாட்டிக்கொண்டுள்ளோம் .
கூண்டில் உணவு உள்ளது.
அதிகமில்லை, ஆனால் உணவு உள்ளது.
வெளியேவோ, நீண்டுக் கிடைக்கும்
சுதந்திரம் மட்டுமே உள்ளது.

***

3.

அமைதி வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை

வன்முறை வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை
ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வைக்கவே
விரும்புகிறேன் – ஆனால் செய்வது இல்லை.
எதையேனும் நம்புவது என்றால்,
கடவுளை நம்புவதற்கு ஒப்பாகும்.
தோள்களைக் குலுக்கிச் செல்வது மட்டுமே
நான் செய்யக்கூடியது.
பட்டவர்த்தனமாக சொல்லிவிடுவதற்கு
என்னை மன்னிக்கவும்.
பால் வீதியில் கூட
எனக்கு நம்பிக்கை இல்லை.

*****

4.

ரோலர் கோஸ்டர்

அரை நூற்றாண்டுக்கு
கவிதைகள், கடைந்தெடுத்த முட்டாள்களின்
சொர்க்கமாக இருந்தது.
நான் வரும் வரை.
வந்து, எனது ரோலர் கோஸ்டரைக்
கட்டமைத்தேன்.
உயரே செல்லுங்கள்,
நீங்கள் அவ்வாறு விரும்பினால்.
எனது தவறு அல்ல,
மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிய
நீங்கள் கீழே வர நேர்ந்தால்.

5.

உண்மையில் உங்களிடம் என்ன
சொல்வதென்று தெரியவில்லை.
மூன்றாம் உலகப்போரின்
விளிம்பில் நாம் இருக்கிறோம்.
யாரும் ஏதும் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை.
நீங்கள் உலகத்தை
அழித்தீர்கள் என்றால்
நான் அதை மீண்டும் உருவாக்குவேன்
என்றா நினைக்கிறீர்கள் ?

**

6.

பறவைகள்
கோழிகள் அல்ல, புனிதத் தந்தையே !
கோழிக்கூட்டின் எல்லைகளுக்கு உள்ளே
கட்டற்ற சுதந்திரம் நடமாடுவதற்கு.

***

7.

உணவுக்காக,
உடைக்காக, தங்குமிடத்திற்காக
நாங்கள் கூக்குரலிடவில்லை,
சுவாசிக்க சிறுவெளி மட்டும்
கொஞ்சம் கொடுங்கள்
மேதகு பொருந்தியவரே !

***********
Note:
( Spanish to English translation: Miller Williams, David Unger)

************

பைத்தியக்காரர்களுக்கு மட்டும் ( அறிமுகக் கவிஞர் ) / கே.முனாஸ் ( இலங்கை )

download (3)

ஆத்ம வாகனம்
அல்லது
பைத்தியக்காரர்களுக்கு மட்டும்

நேற்று மொழி ஆசிரியர்
பாடம் எடுத்தார்
‘போக்குவரத்துச் சாதனம்’ அவரின் தலைப்பு
பிள்ளைகள்
உங்களுக்குத் தெரிந்த போக்குவரத்துச் சாதனங்களைக்
கூறுங்கள் என்றார்
அவர்களும் தமக்குத் தெரிந்தவற்றை
ஒவ்வொன்றாகச்சொன்னார்கள்.
சைக்கிள்,
கார்,
பஸ், என்றனர்
மேலதிகமாக அவர்
விமானம்,
ஹெலி கொப்டர் என்பவற்றைச்சேர்த்தார்.
அவர்
கப்பலையும் இன்னும் சிலவற்றையும்
விட்டுவிட்டார் என்பது எனக்குப்
பிரச்சினை அல்ல
நாம் பயணிக்கும்
‘ஆத்ம வாகனம்’ பற்றி அவருக்குச்
சொல்லணும் போல மனம் துடித்தது
அடக்கிக் கொண்டேன்
தப்பித் தவறிச் வாய்திறந்தால்
கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு
பைத்தியக்காரன் என்று
மனதுக்குள் நினைத்துக் கொள்வார்.
நாம் இங்கு சிறு பிள்ளைகளாகவே
அவரின் வகுப்பில் இருந்தோம்.
ஐந்து ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில்
நீயே ஒரே ஒரு ராணி.

சிறு காட்டு ராணி

பின் அங்கிருந்து
சிறு காட்டுக்குப் போனோம்
வந்திருந்த நாம் எல்லோரும்
கைகொட்டிப் பாடினோம்
சிறுகாடு சிறு காடு
நீயே அதன் ராணி
நீயே அதன் ராணி
மலை அருவி ஓடை செழிப்புறும்பூக்கள்
நீ சூடிக்கொள்ள அவை காத்திருக்கும்
தேன்வண்டுகள் மொய்க்கும்
நான் தடுத்தால்
நீ கோவமுறுவாய்
அப்படி எத்தனிக்கவில்லை என்றால்
நான் அவதியுறுவேன்
சிறுகாடு சிறு காடு
நீயே அதன் ராணி
மானும் மரையும்
உன்னைச் சுற்றி நிற்கும்
உன் கண் கேட்டு ஏங்கித் திரியும்
மிடுக்கில் இந்த ரகசியங்களை
என்னிடம் குசுகுசுப்பாய்
நாம் சிரித்து மகிழ்வோம்.
சிறு காடு சிறு காடு
நீயே அதன் ராணி
பச்சை எங்கும் பூசிய மணல்வெளி
மெல்லிய இதமாக நம் பாதம் பட்டு ஆடும்
வண்ணத்துப்பூச்சிகளின்தாளம்
கலர் கலராய்
நீ அவற்றில் எடுத்த நிறத்தை வைத்து
வரைவாய் சித்திரத்தை
நான் பார்த்து ரசிப்பேன்
வேறு யாரும் அப்படிச் செய்தால்
என்னிலை என்னவென்று சொல்வேன் உன்னிடம்
அது உனக்குப் பிடித்திருக்கும்
உன் பார்வையால் என்னை ஆறுதல் படுத்துவாய்
அது எனக்குப் பிடிக்கும்
சிறு காடு சிறு காடு
நீயே அதன் ராணி
பின் அங்கிருந்து
தொடங்கிய இடத்திற்கே திரும்பினோம்

பூனைக்கு ஓதிப்பார்த்தல்

ஒவ்வொரு நடுச்சாமமும்
பூனையும் எலியும் விளையாட்டு
வாழ்வின் ஆலாபனையையும் ராகத்தையும்
பறிக்கிறது.
நீ பூனை
நான் எலி
பின், பாத்திரம் மாறி நீ எலியும்
நான் பூனையும்
திடீரென உனது பூனையை என்னிடம்
வீசிவிட்டு
எனது எலியைக் கேட்டு அடம்பிடிக்கிறாய்
என்ன பிடித்திருக்கிறது உனக்கு
வா, ஓதிப்பார்ப்போம்…!
ஒரே ஒரு நிபந்தனை
போகும் வழியில் பட்ட மரமோ,
அந்தி செம்மஞ்சளோ,
மாதுளை கிளையோ,
குளமோ இருக்கக் கூடாது குறுக்கறுத்தால்
நீ உருவம் மாறி விடுவாய்
வா, நாம்
சூபியைக் கொண்டு வந்து
ஓதிப் பார்ப்போம்.

கழுகுகள் கூடும் பெருவெளி

அடிக்கடி முன்னர் நாம் சந்திக்கும் இடம்
கழுகுகள் கூடும் பெருவெளி
இனி அங்கு நாம் சந்திக்கத் தேவையில்லை
அது சஞ்சலங்கள்,
ஆசைகள் நிறைவேறா ஆத்மாக்களுக்குரியது.
நிம்மதியாக பரவசத்தோடு
கூடிக் கனிவோம் நாம்எம் வெளியில்
கழுகுகள் கூடும் இடத்தில்
எதைப் பார்த்தாலும் ஏதோ செய்தி சொல்லி
சஞ்சலத்தை அதிகரிக்கிறது
ஒரு நாய்
ஒரு நரி
கரடி
ஆந்தை
இப்படி எல்லாமே
ஏதோவொன்றின் குறியீடாகித்துரத்துகின்றது.
இன்னும் நிறைவேறா வேலைகள்
காத்துக்கிடக்கின்றன எமக்காக
வா, இனி அங்கு போவோம்
இனி நம்மை நாம்
கழுகுகள் கூடும் பெருவெளியில்
தேடத்தேவையில்லை

அவர்களைப் பாட விடுங்கள்

ஏன் தடுக்கின்றீர்கள்
அந்தப்பாடல் நூற்றாண்டு காலச் சங்கீதம்
குழைத்துச் செய்த பாடல்

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை
சேர்ந்து தாளமிடுங்கள்
ஆடுங்கள்
பாடுங்கள்

நாம் ஆரம்பித்து வைக்கிறோம்

நீங்கள் தொடருங்கள்
வாருங்கள் சேர்ந்து தாளமிடுங்கள்

சங்கீதம் ஒரு சுகம்
பாடல் ஒரு ஆறுதல்
சித்திரம் ஒரு செய்தி
ஓவியம் ஆன்ம வெளிப்பாடு

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
தள்ளி நில்லுங்கள்
ஏன்,எங்களைத் தடுக்கிறீர்கள்
நாங்கள் பாடுவோம்
நாங்கள் கீறுவோம்
நாங்கள் வரைவோம்

இங்கு ஆண்பெண் வேறுபாடு கிடையாது

இது கலை
இது வாழ்க்கை
எப்படி பெண்ணைப் பிரித்து
தடுத்து வாழ நினைக்கிறீர்கள்
அவள் தான் அச்சாணி

நீ பாடடி!
எனக்கு ஆக்கும் கலையைக் கற்றுத்தா
நான் சமைத்துப் போடுகிறேன்
அதில் ஒன்றும் தவறில்லை
இது தான் வாழ்வு

எங்களைப் பாடவிடுங்கள்
அவர்கள் தான் அந்த நாம்

••••

கவிதையின் விடுதலை / நிகனோர் பார்ரா – நேர்காணல் (தமிழில் : ராஜேஷ் சுப்ரமணியன் )

நிகனார் பார்ரா

நிகனார் பார்ரா

1914 ம் ஆண்டு சிலி (சிலே -Chile ) நாட்டில் பிறந்த நிகனோர் பார்ரா , ஸ்பானிய மொழியின் மிக முக்கியக் கவிஞர். பல முறை நோபல் இலக்கியப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கவி ஆளுமை.

அவரது ” கவிதைகளும் எதிர்க்கவிதைகளும் ” (Poems & Antipoems ), ஸ்பானிய மொழியின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்பாகக் கருதப்படுகிறது. தன்னை, “எதிர்க்கவிஞன் ” என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர். எளிமையான வார்த்தைகளுடன், நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் புற உலகப் பொருட்களையும் கொண்டு, அபார வீச்சுடன் வெளிப்படுபவை அவரது கவிதைகள். கேலியையும், நகைச்சுவையையும், நையாண்டியையும் ஆயுதங்களாகக் கொண்டு சமூகத்தையும், மதிப்பீடுகளையும் கேள்விக்கு உட்படுத்துபவை அவரது கவிதைகள்.

சுற்றுச்சூழல் அழிவுகளால் மனித இனம் அழிவுப் பாதையில் செல்லுவதை அவரது பிற்காலத்திய கவிதைகள் பிரதிபலிக்கின்றன. சூழலியல்-கவிஞர் (eco-poet ) என்றும் அழைக்கப்படும் அவர், Marie-Lise Gazarian Gautier என்பவருக்கு அளித்தப் பேட்டியிலிருந்து (1989) பெரும்பகுதி கீழே:

கே: லோர்க்காவின் “நாடோடிப் பாடல்புத்தகம் ( Gypsy Songbook) ” நூலின் தாக்கம் உங்களுடைய முதல் கவிதைத் தொகுப்பில் ( “Cancionero sin nombre” ) இருந்தது என்று நினைக்கிறீர்களா?

ப: கட்டாயம், எல்லா வகைகளிலும் இருந்தது.

கே: “புதிர் ” ( Puzzle ) எனும் உங்கள் கவிதையில், ” ஒரு முட்டாளாகவே நடித்துவிட்டு , ஒன்றிற்கு பதில் இன்னொன்று சொல்லிச் செல்வது மேல் ” என்று கூறுகிறீர்கள். உங்களுடனான இந்தப் பேட்டியும் ஒரு எதிர்-பேட்டியாகவே மாறி விடுமோ?

ப: நீங்கள் அவ்வாறு நினைப்பது சரியாகவே இருக்கும், ஏனெனில் நான் தொடர்ந்து எப்பொழுதும் அறிவுத்தன்மைக்கும், அறிவற்றதன்மைக்கும் இடையே இடம் மாறிக் கொண்டே இருக்கிறேன். பரந்து விரிந்த நிறமாலையின் (spectrum ) எந்த ஒரு இடத்திலும் தேங்கி நின்று விடக்கூடாது எனும் உள்மனக் கட்டமைப்புடன் இருக்கிறேன். இந்தப் பேட்டியும் வெறுப்படைய வைக்கக் கூடிய ஒன்றாக மாறிவிடக் கூடும்.

 ராஜேஷ் சுப்ரமணியன்

ராஜேஷ் சுப்ரமணியன்


கே: “வெறுப்படைய வைக்கக் கூடிய ” என்று கூறுவதின் பொருள் என்ன ?

ப: அது என்னப் பொருளை உணர்த்துகிறதோ, அது தான்- கூடுதலாக ஒன்றும் இல்லை.

கே: சிலி (சிலே ) நாடு, ஒரு கவித்துவம் மிகுந்த நாடாகக் கருதப்படுகிறது. ரூபென் டாரியோ (Ruben Dario ) எழுதிய “அஸுல் ” (Azul ) எனும் நூலின் மூலம், Modernismo என்றழைக்கப்படும் நவீனத்துவ இலக்கிய இயக்கம் அங்குதான் தோன்றியது. நோபல் இலக்கியப் பரிசு பெற்ற பாப்லோ நெருடா மற்றும் கேப்ரியலா மிஸ்ட்ரல் ஆகியோர் பிறந்த நாடு சிலி. கவிதை செழித்தோங்கும் நாடாக ஏன் சிலி அமைந்திருக்கிறது?

ப: மேற்சொன்ன பெயர்களுடன் நோபல் பரிசு பெற்றிருக்கவேண்டிய Vicente Huidobro வின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எழுப்பியக் கேள்வி குறித்து ஒன்றிற்கு மேற்பட்ட தருணங்களில் நானும் யோசித்திருக்கிறேன். பொதுவாக சொன்னால், கவிஞர்கள் பலரும் சிலி நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு தற்செயல்தான். எல்லா விஷயங்களின் மேலும் ஏன் சட்டத்திட்டங்களைத் திணிக்க வேண்டும்? இருப்பினும், நீங்கள் விடாப்பிடியாகக் கேட்பீர்களெனில், சிலி நாடு புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பது மேற்சொன்னதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். அருமையான பல வைன் (wine ) பானங்கள் அங்கேத் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே, தனிமையும், வைனும் கவித்துவ ஊற்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புக் கொண்டுள்ளன.

கே: உங்கள் கைகளின் கீழே ஒரு நோட்டுப் புத்தகத்துடனேயே செல்வதை நீங்கள் விரும்புகிறீர்கள். ஒரு கவிஞன் என்பவன், தனது காலத்தைப் பதிவு செய்பவனாக நீங்கள் கருதுகிறீர்களா?

ப: ஆம், ஒரு நோட்டுப் புத்தகத்துடனேயே நான் வலம் வருகிறேன் என்பது உண்மைதான்; சொல்லப் போனால், ஒரு குரல் பதிவும் செய்யும் கருவியையோ (tape recorder ), கேமராவையோ எடுத்து செல்லவும் விரும்புவேன், ஏனெனில் கவிதை தன்னிச்சையாக, உரையாடல்கள் மற்றும் பேச்சிலிருந்து திடீரென எந்தத் தருணத்திலும் பிறக்க வாய்ப்புண்டு. “Hojas de Parra ” எனும் எனது சமீபத்திய நூலில் உள்ள பல கவிதைகள், நான் காதால் கேட்ட சொற்றொடர்களை அடிப்படையாகக் கொண்டது; அவற்றை, இயன்றவரை இயல்பு மாறாமல் பயன்படுத்தி இருக்கிறேன் அந்தக் கவிதைகளில். கவிதை என்பது ஒரு உரையாடல் என்னும் கருத்தாக்கத்துடன் தொடர்பு கொண்டது இது. எனவே நான் உரையாடல்களுடன் நேரடி நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறேன்; முன்னரோ, நான் கேட்ட விஷயங்களை விவரித்து எழுதும் பழக்கம் கொண்டிருந்தேன்..

கே: ஒரு கவிஞனின் வேலை என்ன: ஒரு உலகை உண்டாக்குவது, அந்த உலகை புரிந்துக் கொள்ளும்படியாக மாற்றுவது, அதை அழிப்பது அல்லது அதனை போலித்தனங்களில் இருந்து விடுவிப்பது, இவற்றில் எது?

ப: சுற்றுச் சூழல் சீரழிந்துப் போவதையும், வாழ்வுத் தொடர்ச்சி பற்றியும் நான் செவி மடுக்க வேண்டும். தற்காலத்தில், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும், இந்த உலகை அழிவிலிருந்துக் காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளில் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். பழையப் பிரிவினைகளும் ( யார் எதை செய்யவேண்டும் என்பது போன்றவை) வேற்றுமைகளும் அழிந்து இந்த புதிய முக்கியத்துவங்கள் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.

கே: ஆகவே, நாம் இந்த உலகைக் காக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

ப: ஆமாம், முதலில் நமது பூமியைக் காப்பாற்ற வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைந்துவிட்டோம் என்றால் ( ஏற்கனவே காலம் கடந்து விட்டது என்றுப் பலரும் கருதுகிறார்கள்), நாம் முன்னர் கடந்தக் காலங்களில் ஈடுப்பட்ட பொழுதுப் போக்குகளில் ஈடுபடலாம்.

கே: கட்டுக்கதைகளை அழித்தொழிப்பவர் என்று அறியப்படுகிறீர்கள். அதனை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப: அப்படி ஒரு அடையாளம் பெறுவதுப் பற்றி மகிழ்ச்சியே அடைகிறேன், ஏனெனில், நான் கருதுவது என்னவென்றால், நமது புராதனக் கலாச்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புக் கொண்ட அணைத்து முன்னுதாரணங்கள் மற்றும் செயற்பாடுகளால் தான், நமது உலகம் இப்போது ஒரு முடிவை/அழிவை நோக்கி செல்லும் நிலையை அடைந்துள்ளது. அத்தகைய முன்மாதிரிகள் மற்றும் முன் உதாரணங்கள் அனைத்தும் அழுகிய மீன்களின் நாற்றம் கொண்டவையாகவே நான் கருதி வந்திருக்கிறேன். அணு குண்டுகளால் உண்டான நாசமும், சுற்று-சூழலியல் அழிந்ததும், விதியினால் ஏற்பட்டவை அல்ல. நம் சமூகத்தை ஆளும் இரண்டு நாசக் காரத் தத்துவங்களால் ஏற்பட்டவை அவை – முதலாளித்துவமும் , சோசியலிச பொது உடமைக் கோட்பாடும் ( அது உருவான, வளர்ந்த வகையினால்) தான் அவை.

images (5)
கே: ” கடவுள் உலகத்தை ஒரு வாரத்தில் உருவாக்கினார் , நான் அதை ஒரு கணத்தில் அழித்து விட்டேன் ” எனும் உங்கள் கவிதை வரியை விளக்க முடியுமா ?

ப: அந்தக் கவிதையின் பொருள் என்ன என்று எனக்குத் தெரியாது. கவிதைகளையோ , ஹாஸ்யங்களையோ விளக்குவதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. ஒரு ஹாஸ்யத் துணுக்கு, உங்களை உடனே சிரிக்க வைக்க வேண்டும்; ஒரு கவிதை உடனே உங்கள் உள் -மூளையைத் தாக்க வேண்டும்- அவ்வாறு அது செய்யாவிட்டால் , எந்த அளவு விளக்கம் கொடுத்தாலும், எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

கே: “பெயர் மாற்றம் ” ( Change of Name- “Cambios de nombre ” ) எனும் உங்கள் கவிதையில் , ” சுய மரியாதை உள்ள எந்தக் இந்தக் கவிஞனும், அவனுக்கேயான சுய-அகராதியை வைத்திருக்க வேண்டும்; நான் சொல்ல மறந்து விடுவதற்கு முன்னர் ஒன்று சொல்ல வேண்டும்- கடவுளுடையப் பெயரைக் கூட மாற்ற வேண்டும்” என்று சொல்கிறீர்கள். உங்களுடைய அகராதியில் என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றன மற்றும் கடவுளுக்கு என்னப் பெயர் கொடுத்து உள்ளீர்கள்?

ப: இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்னர் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். ஒருவர், ஒரு கவிதையின் சொற்களையும், அதை எழுதிய ஆசிரியனின் உணர்வுகளையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எந்தக் கவிதையுடனும் என்னை நானே ஒன்றுப் படுத்திப் பார்ப்பதில்லை, சிலத் தயக்கங்கள் இல்லாமல். முகமூடிகள் அணிந்து செயல்படுவது என்னுடைய படைப்புகளில் அதிகம் – பிரெஞ்சுக் கவிஞர் ரைம்போவுடன் (Rimbaud ) பல ஒற்றுமைகள் இந்த விஷயத்தில் உண்டு. எதிர்-கவிதை என்பது ஒரு புதிய சித்தாந்தம் என்று நினைக்கக்கூடாது. ஒன்றைச் சார்ந்து பேசுவதோ அல்லது மறுதலித்துப் பேசுவதோ கவிதை ஊடகத்தில் தம்மளவில் சுயமாகத் தாமே தனித்து நிற்கவேண்டும்; இல்லையெனில், அவை பொருத்தமற்று, பொருளற்றுப் போய்விடும்.

கே: ஒரு எதிர்க் கவிஞனின் மொழி எது? இருக்கும் மொழியை அழித்து, புதிய சொற்களை உண்டாக்குகின்றானா அவன், மொழியை மறு-உருவாக்கம் செய்ய?

ப: நான் கவிதைகள் எழுதத் துவங்கியபோது, இருவகையான மொழிகளைக் கண்டேன்: கவிஞர்கள் பயன்படுத்திய ” கவி மொழி” மற்றும் தெருக்களில் வாழ்ந்த சாதாரண மனிதர்கள் பயன்படுத்திய “இயல்பான / சாதாரண” பேச்சு மொழி. இவற்றின் இரண்டிற்கும் இடையே இருந்த பெரும் பிளவிற்கான காரணத்தை நான் கண்டறிய முடியாததால், இந்தப் பிரிவை/பிளவை அழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். சாதாரண நடைமுறை மொழி தினசரி அனுபவங்களுக்கு நெருங்கியதாக இருந்த அதே சமயத்தில், “கவி மொழி” காலத்திற்கு ஒவ்வாத குணத்தையும், மற்றக் குறைகளையும் கொண்டிருந்ததாக நம்பினேன். ஆகவே, பேச்சு மொழியில் அமைந்த கவிதையை முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன்- அந்த உள்ளுணர்வு சரி என்றும் பிற்பாடு சரியானது என்று உறுதி ஆனது, ஹெய்டெக்கரை (Heidegger ) வாசித்தப் பிறகு. அந்தத் தத்துவ அறிஞர் சொல்வார் , மொழியின் சாராம்சம் கவிதை என்று. இந்த விதிமுறையை சற்றே மாற்றி நான் கூறுவேன் – பேச்சு மொழியின் சாராம்சமே கவிதை என்று. இறுதியாக, நான் இலக்கியத்திற்கு எதிரானவன் என்று அறிவித்துக் கொள்ள விரும்பவில்லை – ஏனெனில், இலக்கியமும் மனித அனுபவத்தின் ஒரு பகுதியே ஆகையால், கவிதைக்கான ஒரு நல்லத் தொடக்கப் புள்ளியாக அது அமையக் கூடும். ஆகவே, ஒரு பேச்சுக் கவிதையின் இடையே ஒரு ” தேய்ந்துப் போன / நைந்துப் போன ” ( cliche ) சொல்லைக் கண்டு ஆச்சர்யப் படக்கூடாது.

கே: கவிதைக்கு என்னென்ன புதிய சொற்கள், சொற்றடர்களை நீங்கள் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் ?

ப: எதிர்-கவிதை, முழு அகராதியையும் திறப்பதற்கு ஒரு வாயிலை தோற்றுவிக்கிறது. எந்த ஒரு வார்த்தையையும் தூக்கி எறிந்து விடக் கூடாது. அதன் காரணமாக, ஒவ்வொரு வார்த்தையும் ஏதேனும் ஒரு கவிதையில் இடம் பெறத் தகுதிக் கொண்டதே.

கே: பழக்கத்தில் தேய்ந்துப் போன /பொருள் இழந்துப் போன சொற்களைக் கவிதைகளில் பயன்படுத்தி, அக்கவிதைகளில் அவை பொருத்தமாக அமைவதற்கேற்றார் போல் செய்ய எவ்வாறு முடிந்தது?

ப: ஒரு தேய்ந்துப் போன சொல்லை மையமாக வைத்து அமைக்கும் கொலாஜ் போன்றது அது. அத்தகைய ஒரு சொல், தன்னுடைய தனித்தன்மையை ஒரு எதிர் கவிதையில் தக்க வைத்துக்கொள்வதில்லை, ஆனால், அக்கவிதையை ஒரு விசேஷமான விளைவை, தாக்கத்தை உண்டாக்கும். கூடைப் பந்தாட்டத்தில் பந்தைத் தூக்கி எறிவது போன்றது அது- பந்தை குறிப்பிட்ட முறையில் சுழற்றி எரிய வேண்டும், புள்ளிகள் பெறுவதற்கு; பழைய முறையில் ஏதோ சும்மாத் தூக்கி எறிந்தால் போதாது.

கே: இந்த உலகைப் பற்றிய யதார்த்தமான ஒரு பார்வை உங்களுக்கு இருக்கிறதா, ஒரு எதிர்-கவிஞன், சூழலியல் கவிஞன் என்ற முறையில் ?

ப: அனைத்துப் புலன் உணர்வுகளும், அனைத்து அனுபவங்களும் ஒரு முழுமையின் ஒரு பகுதியே என்றும், அவை கவிதைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனும் அனுமானத்துடனேயே இருக்கிறேன். ஒரு கவிஞனின் வேலை, இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு வரைவை உருவாக்குவதே.

images (1)
கே: ” நிகனோர் பார்ராவின் கவிதைகள்” ( “La Poesia de Nicanor Parra “)

எனும் தனது புத்தகத்தில், Marlene Gottlieb சொல்கிறார், ” கவிதையின் விடுதலையை நீங்கள் சாதித்து விட்டீர்கள் ” என்று. பழையக் கவிதை மொழியை கைவிட்டு, முதலில் எதிர்-கவிதையையும் பின்னர் சூழலியல் -கவிதையையும் நீங்கள் கைக்கொள்ளவும், அவற்றை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது?

ப: மரபார்ந்த கவிதை, சாதாரண மனிதனின் அனுபவங்களை எதிரொலிக்கவில்லை என்றே நான் எப்போதும் கருதி வந்துள்ளேன்; அத்தகைய அனுபவங்களை ஒரு தனித்த தளத்திற்குத் தள்ளி வைத்து விட்டது. அனுபவங்களை ஆராய்ந்து, அவற்றை அவை உள்ளபடி எழுதுவது, குறிப்பாக அலங்காரங்கள் இல்லாமல் எழுதுவது சரியாக இருக்கும் என்றே நான் கருதினேன். ” யதார்த்தவாதம்” என்பது நான் சொன்ன இந்த நம்பிக்கையைத்தான் பிரதிலிபலிக்கிறது எனில்,என்னுடைய எதிர்-கவிதை அதனுடன் அதிகத் தொடர்பு கொண்டது- குறியீடுகள், படிமங்கள் போன்றவற்றுடன் உள்ள தொடர்பை விட.

கே: 1938 ம் வருட தலைமுறையை ( The generation of 1938) சேர்ந்தவர் நீங்கள்; அந்த இயக்கத்தின் போர்க்குரல், ” உருவகத்துடன் சண்டையிடுங்கள்; காட்சியியலின் மரணம், யதார்த்தம் நீண்டு வாழட்டும், மீண்டும் தெளிவு பிறக்கட்டும்”. உங்கள் கவிதையை இந்த போர் முழக்கம் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா?

ப: நான், உவமைகள், உருவகங்கள், படிமங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை. என்னுடைய அக்கறைகள் வேறானவை. ரைம்போ, குறியீட்டாளர்கள், நவீனத்துவர்கள் ( Modernistas ) போன்றவர்கள் போல, புலன் ஆகாத விஷயங்களைத் தேடி நான் போவதில்லை. ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், யதார்த்தம் எப்படி தோன்றுகிறதோ, அதை அவ்வாறே உருவாக்குவதையே நான் விரும்புகிறேன்.

கே:அப்படியெனில், உங்களை “தெளிவு மற்றும் வெளிச்சத்தின் ” கவிஞர் என்று அழைக்கலாமா ?

ப: நான் எனது இருபதுகளில் இருந்தபொழுது, இதுவரை வெளியிடப்படாத ( ” பகல் பொழுதின் வெளிச்சம்”- “The Light of Day” ) எனும் நூலை எழுதினேன். அந்தப் புத்தகத்தில் இருந்துதான், ” தெளிவு” எனும் கருத்தாக்கம் பெற்றேன். பல காலத்திற்கு முன்னர் எழுதப்பட்ட , பெருமைவாய்ந்த சிலி நாட்டு விமர்சகரும் கவிஞரும் ஆன டோமஸ் லகோவின் அறிவார்த்தமான ஒரு கட்டுரையின் அடிப்படையில் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன்.

கே: கவிதைகளை , ” இரவின் கவிதைகள் ” மற்றும் “விடியலின் கவிதைகள் ” என்று இருவகைகளாகப் பிரிப்போமாயின் , நீங்கள் உங்கள் கவிதைகளை பாப்லோ நெருடாவின் கவிதைகளோடு எந்த வகையில் ஒப்பிடுவீர்கள்?

ப: அவரே பல முறை சொன்னதுபோல, நெருடாவின் கவிதைகளை ” இரவின் கவிதைகள் ” என்றேக் ,கொள்ளவேண்டும். இருப்பினும், காலப்போக்கில் அவர் “விடியல் கவிதைகளையும்” எழுத முற்பட்டார் (உதாரணம், “Extravagario ” மற்றும் ” The Primary Odes” ). என்னுடைய விஷயத்தில்,நேர்மாறாக நடந்தது; நான் ” பகல் பொழுதின் கவிதைகள்” ( Poetry of Day) மற்றும் “விடியல் கவிதைகளுடன்” தான் துவங்கினேன்; இருப்பினும், எனது கவிதைகளில் நிழல்களின் இருப்பையும், மதிப்பையும் மறுக்கமுடியாது. “கற்பனையான மனிதன் ” ( “The Imaginary Man” ) போன்ற கவிதை, இசை நயத்துடனும், குறியிடுகளுடனும் இருப்பதற்கு வெட்கம் கொள்ளவில்லை.

கே: புதிர்த்தன்மையும் , தெளிவுத்தன்மையும் ஒன்றின் மேல் ஒன்று ஒரே நேரத்தில் இயங்குவதை எவ்வாறு உருவாக்குகிறீர்கள்?

ப: நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. ஒரு வேளை , வாசனைகளை நன்றாக முகரும் திறன் எனக்கு இயல்பிலேயே நன்றாக அமைந்திருப்பதால் இருக்கக் கூடும்.

கே: பார்வைத் திறனை விட அதிகப்படியாக அமைந்திருக்கும், மூக்கினால் வாசனைகளை நுகரும் திறனாலா?

ப: இல்லை,ஒரு உருவகத்தன்மைக்காக , உவமானம் போல சொன்னேன்; “பார்வை வாசனையும் “, ” மூக்கினால் முகரப்படும் வாசனையும் ” வெவ்வேறாக , ஆனால் இருக்கின்றன. அதனை, ஏழாவது அறிவு என்றும் அழைக்கலாம்.

கே: உங்கள் முதல் கவிதைகள் 1937 ஆம் ஆண்டு, ” Cancionero sin nombre” எனும் தலைப்பில் வெளிவந்தது. உங்களுடைய இரண்டாம் நூல், ” கவிதைகள் மற்றும் எதிர்-கவிதைகள்” 1954 ஆம் ஆண்டு வெளிவந்தது. ” கவிதைகள்” மற்றும் “எதிர்-கவிதைகள் ” ஆகிய பதங்களை விளக்க முடியுமா?

ப: எதிர்-கவிதை எனும் கருத்தாக்கத்தை நான் தான் தோற்றுவித்தேன் என்று நினைத்திருந்தேன். அப்படி ஒரு பெயர் ஏற்கனவே இருந்தது என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. பிரெஞ்சுக் கவிஞர் Henri Pichette எழுதிய Apoemes எனும் புத்தகத்தில் இருந்து எனக்கு அது வந்தது. அந்தப் புத்தகத்தை நான் Oxford பல்கலைக்கழகத்தில் ஒரு புத்தகக் கடையில் 1949 ஆம் வாக்கில் பார்த்தேன். அந்தப் புத்தகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது; உடனடியாக எதிர்-கவிதை எனும் பதம் என் மனதிற்கு வந்தது. அந்த பிரெஞ்சுக் கவிஞரின் புத்தகம் Antipoems என்று தலைப்பிடப்பட்டிருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்,ஏனெனில், எதிர்-கவிதை எனும் சொல், வலிமையானதாக,அதிக தாக்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. அந்தப் பதம் என் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்தது, நான் கடைசியில் தைரியமாக எனது புத்தகம் ஒன்றின் தலைப்பாக அதைப் பயன்படுத்தும் வரை. ஆனால், எதிர்-கவிதை என்பதுடன் ஏதோ வேறு ஒன்றையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்; ஆகவே,” கவிதைகள்” எனும் பதத்தையும் சேர்த்து, ” கவிதைகள்- எதிர்-கவிதைகள் ” என்று பெயரிட்டேன். அவ்வாறு செய்ததின் காரணம், எதிர்-கவிதை என்பது, முரண்பாடுகளுடன் தொடர்பு கொண்டது; அது, யதார்த்தத்தின் ஒரு பாதி அளவுடன் திருப்தி அடைந்துவிடுவதில்லை; அனுபவத்தின் முழுமையை ஆட்கொண்டதாக அது இருக்கவேண்டும். ஆராய்ந்து, அலசிப் பார்க்கும் கவிதை வகை அல்ல அது; ஒரு செயற்கையான வகைப்பாடுதான் . அந்த நாட்களில், நான் இயற்பியல் மாணவனாகவும் இருந்தேன். Bohr எனும் இயற்பியல் விஞ்ஞானியின் ஆராய்வுப் படி, ஒவ்வொரு அணுவின் மத்தியில், நேர்மறை சக்தி கொண்ட துகளும், அதை சுற்றி வட்டப்பாதையில், எதிர்மறை சக்தி கொண்ட துகளும் உண்டு. ஆன்மீக உலகிலும், நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் பற்றிய கருத்தாக்கம் உண்டு. அதே பாணியில், கவிதையும், எதிர்-கவிதையும்.

கே: தாங்கள் இப்போது சூழலியல்-கவிதைகளும் எழுதுகிறீர்கள்; அவற்றில், எதிர்-கவிதையும் ஒரு பங்கு வகிக்கமுடியுமா?

ப: கண்டிப்பாக. எதிர்-கவிதையின் அடிப்படை முகாந்திரம், எந்த வகையான கண்முடித்தனமான நம்பிக்கையையும் மறுதலிப்பது, நான் அந்த சமயத்தில் (எதிர்-கவிதையில்) எடுத்துரைக்கும் விஷயத்தைத் தவிர. ஆகவே, உறுதிப்படுத்துதல்-மறுதலித்தல் ( Affirmation -Negation ) எனும் எதிர்மறைகளுடன் ஒரே நேரத்தில் நான் செயல்படவேண்டும். அந்த வகையில், எதிர்-கவிதை என்பது ஒரு விதத்தில் Taoist கவிதைதான் ( சீனத் தத்துவம்- நேர்மறையும் எதிர்மறையும் ஒன்றுடன் ஒன்று கூடியே வாழும்; ஒன்றின் பிம்பம் தான் மற்றையது எனக் கூறுவது). கடந்தப் பத்தாண்டுகளாக நான் Taoist தத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்பது தற்செயல் அல்ல. பார்வை, முகருதல் மற்றும் மற்றப் புலன்கள் சம்பந்தமாகவும், உள்ளார்ந்த (உள்முக, அக) ஆராய்ச்சியிலும், TaoTeChing தத்துவம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு தத்துவத்தின் தொடர்பு இல்லாமல் என்னை கற்பனை செய்துப பார்க்க இயலவில்லை இப்பொழுது.

கே: உங்களுக்கு ” கடவுள்” எவ்வாறு அர்த்தப்படுகிறார்?

ப: எனக்கு, கிறிஸ்துவர்களின் கடவுளோ அல்லது வேறு தனிப்பட்ட கடவுள்களோ இல்லை; இருப்பினும் தவிர்க்க முடியாத வகையில் சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவ மதத்தின் பாதிப்பு ஓரளவு இருந்துவந்திருக்கிறது. சிறுவயது முதலே , நம் உள்ளே ஆழமாக ஏற்றப்பட்டிருக்கிறது என்பதால், ஒரு நாத்திகன் கூட ஏதோ ஒரு சமயத்தில் திடீரென ஒரு கத்தோலிக்க பாதிரியிடமிருந்து புனிதப் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது ஆச்சரியம் அளிக்காது.

கே: உண்மைதான்,ஆனால் நீங்கள் நாத்திகவாதி இல்லையே?

ப: இல்லை, நான் என்னை நாத்திகவாதியாக அழைத்துக் கொள்ளமாட்டேன். இந்த விஷயத்தை சரியான முறையில் அணுகவேண்டுமென்றால், Taoist முறையில் தான் செய்ய வேண்டும். ஆகவே, என்னை நானே விவரித்துக் கொள்ள வேண்டுமென்றால், நான் சொல்வேன்,நான் ஒரு Taoist துறவி என்று, அல்லது ஒரு Taoist துறவியின் சீடன் என்று.

கே: உங்கள் குழந்தைகளுடன் உங்களுக்கு சிறப்பான உறவு இருக்கிறதல்லவா ?

ப: அவர்கள் அனைவருடனும் என்னுடைய உறவு சீராக இருக்கிறதென்றே சொல்வேன் ; ஆனாலும் என்னுடைய குழந்தைகளில் ஒருவரிடம், பெரும் பிரச்சனைகளை அனுபவித்து வருகிறேன், அதைப் பற்றி பேசவே முடியாத அளவிற்கு.

கே: உங்களுக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள்?

ப: ஆறு.

கே: உங்களுக்கு மிகவும் கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன ?

ப: தற்போதய காலத்தில்,நமது கிரகம் அழியாமல் வாழ்வதுப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். இதனைப் பலமுறைகளிலும் சொல்லி இருக்கிறேன், இருப்பினும், திரும்ப சொல்வதில் தயக்கமில்லை. நான் மிகவும் அக்கறைக் கொள்வது,இந்த பூமியின் ஆரோக்கியத்திலும், சுற்றுசூழல் அழிந்துவிடாமலிருப்பதிலும். மற்றும் , அணு ஆயுதப் பேரழிவைத் தடுப்பதிலும் . மற்ற வேறு விஷயங்களில் முன்பு நான் ஆர்வம் கொண்டிருந்தேன்- புதிராகக் கடந்து செல்லும் காலம், நோய்கள்,மறுக்கப்பட்ட காதல் போன்றவற்றில். ஆனால், இன்று நம்மை எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிடும்பொழுது , இவை எல்லாம் மேலோட்டமான ஆடம்பர விஷயங்கள் .

******************************

( Email: thesrajesh@gmail.com)

(Parra, Nicanor, and Marie-Lise Gazarian Gautier. “Nicanor Parra.” In Interviews with Latin American Writers, pp. 173-97. Elmwood Park, IL: Dalkey Archive Press, 1989)

நிக்கனார் பார்ரா கவிதைகள் / தமிழில் / ஜி. விஜயபத்மா

நிக்கனார் பார்ரா

நிக்கனார் பார்ரா

சில வருடங்களுக்கு முன்

அகாசிஸ் பூக்கள் பூத்திருந்த சாலையோரம்

நான் உலா வரும் பொது

நம்மை அறிந்த நண்பர் சொல்லக் கேட்டேன்

‘நீ யாரையோ திருமணம் செய்து கொண்டாய்’ என !

இதில் நான் சொல்வதற்கு எதுவுமில்லை

நான் ஒருபோதும் உன்னை காதலிக்கவில்லை

என்று நண்பருக்கு பதில் கூறினேன் .

– என்னைப் பற்றி என்னைவிட உனக்கு நன்றாகத் தெரியும்

ஒவ்வொரு வசந்தத்திலும் அகாஸிப் பூக்கள் சாலையோரம் பூக்கும் தருணங்களில்

வருடங்கள் கடந்தும் உணர்வு மாறாது அப்படியே இருக்கிறது என்பதை

நீ நம்புவாயா என்று தெரியவில்லை

ஆனாலும்

அந்த அகாஸிப் பூக்கள்

என்னை சுட்டி காட்டி

என் இதயத்தைப் பிளக்கும் அந்த செய்தியை

என்னிடம் வருடம் தோறும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன

– நீ வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டாயா ? என்று !

•••••

முத்தொள்ளாயிரம் ( 2 ) / வளவ.துரையன் ( கடலூர் )

14212844_879713405467804_3754012655543410611_n

முத்தொள்ளாயிரம்—26.

அறிவார் யார்?

அறிவார்யார் யாமொருநாள் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமேல் நடந்து—மறிதிரை
மாடம் முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட ஒருநாள் பெற.
[செறிவு=தலைவியை அடைத்து வைக்கும் காவல்; முரிஞ்சும்=உராயும்]
இந்தப் பாட்டு ஒரு தலைவி தன் தோழிகிட்ட சொல்றது.
”தோழீ, நாம் ஒரு நாளைக்காவது மதுரைக் கோமான் பாண்டியனுக்குப் பொண்டாட்டியா இருக்கறதுக்கு வழி சொல்றவங்க யாருடி? இப்படி என்னப் பாதுகாத்து வச்சிருக்கறவங்க தலைமேல் நடந்து போய் வைகை ஆத்துத் தண்ணி அலையெல்லாம் உராய்கிற மாடமெல்லாம் இருக்கற மதுரைக்கு மன்னனாகிய பாண்டியனை ஒரு நாளைக்காவது சேர்றதுக்கு வழி சொல்வார் யாரடி?”
ஒருநாளு அவன் கூட வாழ்ந்தா கூடப் போதும்றா; இதேபோலக் குறுந்தொகையில ஒரு பாட்டு வரும்.
”ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே”

===

முத்தொள்ளாயிரம்—27

எதனைப் பெறாமல் வாடும்?

கைய[து] அவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங்[கு] ஈன்ற செழுமுத்தால்—மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியில் சந்தனமால்
என்பெறா வாடுமென் தோள்
தலைவி தோழிகிட்ட சொல்றா, “ தோழீ, என்கையில நான் போட்டிருக்கற வளையெல்லாம் அந்தப் பாண்டியனோட கடலிலேந்து எடுக்கப்பட்ட சங்கிலேந்து செஞ்ச வளையல்கள்தாம்; போட்டிருக்கற நகையெல்லாம் அவன் கடலோட சங்கு ஈன்ற முத்தால செஞ்சதுதான். என்ஒடம்புல நான் பூசியிருக்கற சந்தனமும் வெற்றியே கொள்ற வேலை வச்சிருக்கற பாண்டியனோட பொதிகமலையிலிருந்து வந்த்துதாம்; இதெல்லாம் போதும்னு நெனக்காம இன்னும் என் தோளெல்லாம் இன்னும் வாடுதுடி; வேற இன்னும் என்ன பெறணுமாம்?

முத்தொள்ளாயிரம்—28

வயமான் வழுதி

நாணாக்கால் பெண்மை நலன்அழியும் முன்னின்று
காணாக்கால் கைவளையும் சோருமால்—காணேன்நான்
வண்[டு]எவ்வம் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்[டு]எவ்வம் தீர்வதோர் ஆறு
[வழுதி=பாண்டியன்; எவ்வம்=துன்பம்; வயமான்=வலிமயான குதிரை]
பாண்டியன்கிட்ட காதல் வச்சிருக்கற ஒரு பொண்ணு தன் தோழிகிட்ட சொல்றா.
”வண்டெல்லாம் எப்படிப் பசியாறும் தெரியுமாடி; தேனக் குடிச்சுதான; அந்தத் தேனிருக்கற பூக்களால கட்டப்பட்ட மாலையாத்தான் அவன் போட்டிருக்காண்டி; அவன் வலிமையான ஒரு குதிரைப் படையை வச்சிருக்காண்டி; அப்படிப்பட்ட அந்தப் பாண்டியனைப் பாக்காம இருந்தாலோ என் தோளெல்லாம் மெலிஞ்சு போயிடும்டி; கைவளையெல்லாம் சோந்துபோயிக் கழண்டு போயிடும்டி; சரி; அவனைப் போய் பாக்கலாம்னா வெக்கம் வந்து தடுக்குதடி; வெக்கப்படாட்டா நானும் ஒரு பொண்ணாடி; என்ன செய்யறுதுன்னு தெரியலடி; இந்தத்துன்பம் தீர ஒரு வழியும் தெரியலயேடி”

முத்தொள்ளாயிரம்—29

கோட்டுமண் கொள்ளல்

வாருயர் பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோல்
ஏரிய வாயினும் என்செய்யும்—கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந்[து] அணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை
[வாருயர் பெண்ணை=நீண்டுயர்ந்த பனை]
கோட்டு மண் கொளல்னா என்னா தெரியுமுங்களா? தலைவன் இருக்கான்ல; அவனோட ஒண்ணா சேந்து தலவி தழுவற பொது அவன் மார்பில இருக்கற சந்தனம் போன்றதெல்லாம் இவள் மார்பில் வந்து படியறதுதாங்க; இதைச் சீவக சிந்தாமணியிலயும் பாக்கலாமாம்.
கோட்டுமண் கொண்ட மார்பன் கோதைவாள் குளித்து மூழ்கிக்
கோட்டுமண் கொள்ளா நின்றாள் குரிசில்மண் கொள்ள நின்றாள்
அவ தன் நெஞ்சுகிட்டயே சொல்லிக்கறா; “நெஞ்சே! என்னுடைய முலையெல்லாம் உயரமான பெரிய பனையோட குரும்புபோல அழகாத்தான் இருக்கு; ஆனா இந்தப் பாண்டியன் இருக்கானே? அவனுக்குக் கூர்மையான கொம்பெல்லாம் இருக்கற யானைகளோட படை உண்டு. அப்படிப்பட்ட அவனோட மார்பில சந்தனம் பூசிய கலவை இருக்கும்; அந்தக்கலவையோட அழுந்தித் தோய்ந்து அந்தக் கலவையை உச்சியிலயும் அடியிலயும் கொள்லாத இந்த என் முலை அழகாக இருந்தாலும் பயனில்லையே!

முத்தொள்ளாயிரம்—30

எல்லாம் எனக்கு

ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றி இருந்தாள் எனவுரைப்பர்—வேற்கண்ணாய்
கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர்
எல்லாம் எனக்கோ இடர்
தலைவி தோழிகிட்ட சொல்றா, “வேலைப்போல அழகான கண்ணு இருக்கற என் தோழியே! எதிரியைக் கொல்ற யானப்படை இருக்குது பாண்டியன்கிட்ட; அவனோட குளிரான தண்ணி உள்ள வைகை ஆத்துல நான் நல்லா உள்ள மூழ்கிக் குடைந்து குளிச்சா ஒடனே, அங்க இருக்கறவங்க, “ஓகோ! இவ அந்தப் பாண்டியன்கிட்ட வச்சிருக்கற காதல் அதிகமாயிடுச்சா; அதனாலதான் இப்படிக் குளிக்கறா”ன்னு ஏசுவாங்க; குளிக்காம இருந்தாகூட ஒடனே, ”ஓகோ! இவ பாண்டியன் மேலே வச்சிருக்கற காதலு வெளிய தெரிஞ்சுடும்னு குளிக்காம இருக்கா”ன்னு சொல்வாங்க; இப்படிக் குளிச்சாலும் சரி குளிக்காம இருந்தாலும்சரி எல்லாமே எனக்குத் ஒரே தும்பமா இருக்கேடி; நான் என்னா செய்வேன்”

முத்தொள்ளாயிரம்—31

இழையாது இருக்கும்

கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவனேல் கூடென்று—கூடல்
இழைப்பான்போல் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பிற் பிழைபாக்[கு] அறிந்து
அந்தக் காலத்துல ‘கூடல் இழைத்தல்’னு ஒண்ண் இருந்ததுங்க; அதாவது பொண்ணுங்க ஏதாவது மனசில நெனச்சது நடக்கணும்னு வேண்டிக்கிட்டு, மணல்ல வட்டம் போடுவாங்க; அப்பறம் அந்த வட்டத்துல சின்ன சுழியா போட்டுக்கிட்டே வருவாங்க; கடைசில எல்லா சுழியையும் எண்ணிப் பாப்பாங்க; அது ஒத்தப் படையா வந்தா நெனச்சது நடக்காதாம்; ரெட்டப் படையா வந்தா நெனச்சது நடக்குமாம்;
ஒருத்தி இதே மாதிரி சுழி போடற மாதிரி போட்டா; ஆனா பாதியிலேயே நிறுத்திட்டா; அப்ப தோழி தன் நெஞ்சுக்குள்ளேயே சொல்லிக்கறா;
“ஏ கூடற் சுழியே! நான் மதுரையில இருக்கற கூடல் பெருமானான என் பாண்டியனைக் கூடுவேன்னு நீ நெனச்சா நல்லாப் பொருந்தி வா”ன்னு தலைவி நெனச்சுக்கிட்டான்னு நாம நெனக்கணும்னு மொதல்ல ஆரம்பிச்சா; ஆனா அது தவறிப்போயி பொருந்தாம தவறிப் போனா என்னா செய்யறதுன்னு பயம் வந்துடுச்சி; அதால சுழிக்கறது போலக் காட்டினவ இன்னும் சுழிக்காமலேயே இருக்கா”

முத்தொள்ளாயிரம்—32

தமிழ்நர் பெருமான்

என்னை உரையல்என் பேர்உரையல் ஊர்உரையல்
அன்னையும் இன்னள் என உரையல்—பின்னையும்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்[கு]என்
கண்படா வாறே உரை
[உரையல்=சொல்லாதே; தண்படா=குளிர்ந்த தன்மை பொருந்தாத]
தலைவி தன் தோழிகிட்டத் தான் பாண்டியன் மேல் காதல் வச்சிட்டதைப் போய் சொல்லச் சொல்றா; ஆனாலும் அவ பொண்ணு இல்லையா? தன்னைப் பத்தி வெளிப்படையா சொல்லக்கூடாதுன்னு நெனக்கறா; அதே நேரத்துல குறிப்பா சொன்னாலே போதும்; அவளப் பத்திப் பாண்டியன் தெரிஞ்சிப்பான்னு அவ நெனக்கறா;
”தோழீ! பாண்டியனோட யானை இருக்கே; குளிர்ந்த தன்மைக்கும் அதுக்கும் சம்பந்தமில்லே! அப்படிப்பட்ட யானையை வச்சிருக்கற பாண்டியன்கிட்ட போயி என்னப் பத்தி நீ சொல்லணும்; ஆனா இன்ன தெருவில இன்னாருடைய பொண்ணுன்னு எதுவும் சொல்லாத; சொல்லிட்டா என்னாடா வெக்கமில்லாம சொல்லி அனுப்பிச்சிட்டாளேன்னு என்னைப் பத்தி அவன் நெனச்சுடுவான்; அதால என் பேரச் சொல்லாதே; என் பேரைச் சொன்னா எனக்குப் புடிச்ச பொண்ணு பேரு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே! அவ சொல்லி அனுப்பி ஒரு தோழியும் வந்துட்டாளேன்னு அவன் நெனப்பான்; என் ஊரையும் சொல்லாதே; என் அம்மா இப்படிப்பட்டவன்னு சொல்லாதே; இதெல்லாம் நீ சொல்லக்கூடாது; ஆனா பொதுவா யாரோ ஒருத்தர் கிட்ட சொல்றதுபோல ஐயோ; பாவம் ஒரு பொண்ணு இன்னும் தூங்காமலே ஏங்கிக்கிட்டிருக்கான்னு அவன் காதுல உழற படற மாதிரி நீ சொன்னா போதும்”

முத்தொள்ளாயிரம்—33

இளையளாய் மூத்திலள் கொல்லோ

வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ—தளைஅவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கலென் பாள்
[வாட்கணாய்=வாள்போன்ற கண்களை உடைய பெண்; தளைஅவிழ்ந்த தார்=கட்டு அவிழ்ந்த பூமாலை; தானை=படை; மாறன்=பாண்டியன்]
அவனைப் பாக்காதேன்னு சொல்லிட்ட தன்னோட அம்மாவப் பத்தி அவ தன் தோழிகிட்ட சொல்ற பாட்டி இது:
”நல்லா அழகா வளையலு போட்டிருக்கற, வாள் போல கூரா கண்ணு உள்ள என் அருமத் தோழியே! நான் சொல்றதக் கேளு; என் அம்மா அந்தப் பாண்டியனப் பாக்காதேன்னு சொல்றா; எந்தப் பாண்டியனத் தெரியுமா: அவன் தோள்ள அரும்புக் கட்டு அவிழ்ந்து போன மாலை இருக்கும்; எதிரின்னு ஒத்தன் வந்துட்டான்னா அவனைக் கொன்னுபோட்டு, அவன் நெலத்தைப் பாண்டியன் எடுத்துக்குவான்; அவன் வேலே வீரத்தோட கோபத்தோடே இருக்கும்; அப்படிப்பட்ட பாண்டியனக் கண்ணால பாக்கக்கூடாதுன்னு சொல்றாளே எங்கம்மா; இப்ப எளமையா இருக்கற என் நெலமய அவ புரிஞ்சுக்கலியே? ஏன்? ஒருவேளை அவ எளமையாவே இருந்ததில்லையாடி; இப்ப இருக்கற கெழவியாத்தான் என்னிக்குமே இருந்தாளா?

முத்தொள்ளாயிரம்—34

அம்மனைக் காவலுளேன்

கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித்—தொடிஉலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவேனோ யானுமோர்
அம்மனைக் காவல் உளேன்
[கொய்தண்தார்=பூக்கள் கொய்து உடனேயே கட்டப்பட்ட மாலை; தொடி உலக்கை=பூண் கட்டப்பட்ட உலக்கை; ஓச்சல்=உலக்கியைக் குத்துவதற்காக உயரே தூக்குதல்; அம்மனை=ஒப்பற்ற தாய்]
இந்தப் பாட்டுல அந்தக் காலத்துல ஒலக்கையால எப்படிக் குத்துவாங்கன்னு சொல்லப்படுது. ஒலக்கை குத்தற பொண்ணுங்க பாட்டுப்பாடிக்கிட்டே குத்துவாங்களாம்; அதே போல ஒரு ஊட்ல இருக்கற பொண்ணுங்க அவங்க மனசில யாரை நெனச்சுக்கிட்டு இருக்காங்களோ அவனோட பேரு, தெறம எல்லாத்தையும் சொல்லிப் பாட்டுப் பாடி ஒலக்கை குத்தறாங்க; அதைக் கேட்டுட்டு அவ தன் மனசுக்கு சொல்றா.
” மனமே! என் அம்மா என்னை இப்படி ஊட்லயே அடைச்சுப் போட்டுட்டா; நானும் அடங்கிக் கெடக்கறேன்; அதோ அவங்கள்ளாம் பாட்டுப் பாடிக்கிட்டு ஒலக்கை குத்தறாங்க; நானும் அப்ப பூத்த பூக்களால கட்டின மாலையை போட்டிருக்கற பாண்டியனோட கொடி, தேரு, தலையில அணிந்திருக்கற முடி, மார்பில போட்டிருக்கறா முத்தாரம், இதைப் பத்தியெல்லாம் பாடி பூண் போட்டிருக்கற ஒலக்கையை எப்ப குத்துவேனோ?”

முத்தொள்ளாயிரம்—35

வெறுங்கூடு காவல்

கோட்டெங்கு சூழ்கடல் கோமானைக் கூடஎன
வேட்டாங்குச் சென்றஎன் நெஞ்சறியாள்—கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்
[கோட்டெங்கு=தேங்காய்க் குலைகள் உடைய தென்னைகள்; குறும்பூழ்=காடை என்னும் பறவை;]
வேடர்கள் காடையைப் புடிக்கறதுக்காக தாங்களே ஒரு காடையை கூட்டில வச்சு வளத்து வருவாங்களாம். அதுக்குப் பார்வைக் காடைன்னு பேரு. வலையைக் கட்டிட்டு அதுக்குப் பக்கத்துல இந்தப் பார்வைக் காடை இருக்கற கூட்டை வச்சிடுவாங்க. இந்தக் காடை சத்தம் போடும். அதைக் கேட்டுட்டு வர்ற காடைங்க வலையில மாட்டிக்கும். ஒரு நா அந்தக் கூட்டிலிருந்த பார்வைக் காடை எப்படியோ பறந்து போச்சு. அது கூடத் தெரியாம அந்த வேடன் அந்தக் கூட்டை மட்டும் இன்னும் காத்துக்கிட்டிருக்கானாம். அதைச் சொல்லி தன் நெஞ்சுகிட்ட ஒருத்தி சொல்றா;
நெஞ்சமே! தேங்காய்க் குலையெல்லாம் நெறய இருக்கற தென்னை மரமெல்லாம் இருக்கறதுதான் பாண்டிய நாடு. அவனைப் போயி கூடணும்னு என் நெஞ்சு எப்பவோ பறந்து அவன்கிட்ட போயிடுச்சு; ஆனா அது தெரியாம வேடன் ஒருத்தன் கூட்டுக்காடை பறந்து போனது தெரிஞ்சுக்காம வெறுங்கூட்டைக் காவல் காத்தானாமே, அதேபோல என் அம்மா என் வெறும் ஒடம்பை ஊட்ல வச்சுக் கதவைச் சாத்தி காவல் காக்கிறாளே!

முத்தொள்ளாயிரம்–36

நானும் இழக்கிறேனே!

களியானைத் தென்னன் இளங்கோஎன்[று] எள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க—அணியாகங்
கைதொழ தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம்
[அணியாகம்=அழகிய மார்பு; களியானை=மதக்களிப்புள்ள யானை; நறுமா=நல்ல மணமுள்ள மாமரம்; கொய்தளிர்=கொய்யும் தன்மையுள்ள மாந்தளிர்]
அவ பாண்டியன் கிட்ட காதல் கொண்டாச்சு; அவனைப் பிரிஞ்சு இருக்கறதால அவ ஒடம்பு பசலை பூத்துடுச்சு; நெறம் எல்லாம் மாறிப் போச்சு; அப்ப அவ தன் மனசுக்கிட சொல்றா;
”ஏ மனமே! பாண்டியன்கிட்ட மதம் புடிச்ச யானையெல்லாம் இருக்கற பெரிய யானைப் படை இருக்கு; அதக் கூட நெனக்காம அவனைச் சின்ன பையன்ன்னு நெனச்சுக்கிட்டு வணங்காம ரொம்பத்தான் எளக்காரமா பேசினாங்களே; அதுக்காக அவங்களோட நெலம் நாடு எல்லாம் போக வேண்டியதுதான்; ஆனா அவன் தெருவில போகச்சே அவனோட அழகான மார்பைப் பாத்து நான் வணங்கினேனே? அப்படி இருக்கச்சே ரொம்ப லேசாப் பறிக்கற மாங்கொழுந்து போல மென்மையா இருந்த என் ஒடம்பு நெறத்தை நான் இழக்கிறேனே; இது சரியா”

முத்தொள்ளாயிரம்—37

எவ்வாறோ?

கனவை நனவென்[று] எதிர்விழிக்கும் காணும்
நனவில் எதிர்விழிக்க நாணும்—புனையிழாய்
என்கண் இவையானால் எவ்வாறோ மாமாறன்
தன்கண் அருள்பெறுமா தான்
தலைவி தோழிகிட்ட சொல்றா, “நகையெல்லாம் அழகா போட்டிருக்கற என் தோழியே! இதைக் கேளு. இந்தப் பாண்டியனை நேராப் பாக்கும்போது அவனைப் பாக்கறதுக்கு வெக்கம் வந்து என் கண்ணெல்லாம் பாக்கமாட்டேங்குது. ஆனா கனவில அவன் வரான் இல்ல; அப்ப அதைக் கனவுன்னு நெனக்காம அவனைப் பாக்குது; இப்படி என் கண்ணெல்லாமே எனக்கு எதிரியா மாறிட்டா நான் அவன்கிட்ட அன்பு வாங்கி அடையதுதான் எப்படிடி?”

முத்தொள்ளாயிரம்—38

கைதிறந்து காட்டேன்

தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும்என் கைதிறந்து காட்டேன்—வளைகொடுபோம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்[து]
என்கண் புகுந்தான் இரா.
[மால்யானை=பெரிய மத யானை; இரா=இரவு; தளையவிழும்=அரும்புக் கட்டு அவிழ்ந்த; கோதை=மாலை; வன்கண்ணன்=அஞ்சாதவன்; வாண்மாறன்=வாள் ஆகிய ஆயுதம் உடையவன்; வளைகொடுபோம்=வளையலைத் திருடிக்கொண்டு போகிற]
அந்தக் காலத்துல பெத்த தாயின்னு ஒருத்தரும் வளக்கற தாய்னு ஒருத்தரும் இருப்பாங்க; வளக்கற தாயிக்கு செவிலித்தாய்னு பேரு; இந்தப் பாட்டு தலைவி தன் செவிலித்தாய்கிட்ட சொல்ற பாட்டாம்;
”நீங்கள்ளாம் எனக்கு பூ மாலை போட வந்திருக்கீங்க; அந்த மாலையும் இன்னும் அரும்பு கட்டு அவிழ்க்காத பூக்களால கட்டினதுதான்; அன்னிக்கு ஒரு நா வந்து என் வளகளை எல்லாம் திருடிக் கொண்டு போன யாருக்கும் பயப்படாதவன்தான் அவன்; பெரிய வாளை வச்சிருக்கறவன்; நேத்து ராத்திரி பெரிய யானையோட வந்து என் கண்ணுள்ள புகுந்துட்டான். நான் கண்ணைத் தொறந்துட்டா அவன் ஓடிடுவான்; அதால என் உயிரையே எடுத்தா கூடநான் என் கண்ணைத் திறக்க மாட்டேன்”
இதுல ஒரு நயம் இருக்கு. ஒரு நா அவ தோட்டத்துல போகச்சே அவ வளையலு அவளுக்கே தெரியாம கழண்டு விழுந்துடுச்சு; அன்னிக்கு ராத்திரி அவன் கனவுல வந்தான்; கையைப் புடிச்சான்; அதால காலையில வளையல அவன்தான் திருடிக்கினு போயிட்டான்னு நெனச்சாளாம்.

முத்தொள்ளாயிரம்—39

நல்வினை ஒன்றில்லேன்

ஓராற்றான் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன்என் கைப்பற்ற—வாரா
நனவென்[று] எழுந்திருந்தேன் நல்வினைஒன்று[] இல்லேன்
கனவும் இழந்திருந்த வாறு
[ஓராற்றால்=ஒருவகையால்]
தலைவி தோழிகிட்ட சொல்றா
”தோழி! அன்னிக்கி ஒரு நா ராத்திரி ரொம்ப நேரமா தூக்கமே வரலை; கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு வகையா கண்ணு ரெண்டும் மூடிச்சு; அப்ப என்னாச்சு தெரியுமா? கூர்மையான வேலை வச்சிருக்கற பாண்டியன் வந்தான்; என் கையைப் புடிச்சான்; அது கனவுன்னு எனக்குத் தெரியேலேடி; உண்மையிலேயே வந்து என் கையைப் புடிக்கறான்னு நெனச்சு நான் பட்டுன்னு எழுந்திருச்சுட்டேன்; அதால கனவும் கலைஞ்சு போச்சு; பாருடி; கனவுல கூட அவனை அணைக்கற நெலமை எனக்கு வரலியே; அதையும் எழந்திட்டேனே! நல்ல காரியம் நான் ஒண்ணுமே செய்யலியா? ஏண்டி எனக்கு இந்த மாதிரி நடக்குது?

முத்தொள்ளாயிரம்—40

திரைவரவும் உரைவரவும்

உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி
நகுவாய்முத்[து] ஈன்றசைந்த சங்கம்—புகுவான
திரைவரவு பார்த்திருக்கும் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு
[உகுவாய்=மணல் உதிர்கின்ற கடற்கரை விளிம்பு; நகுவாய் முத்து=ஒளிவிட்டு விளங்கும் முத்து; புகுவான்=கடலினுள் புகும்பொருட்டு; திரை=அலை]
அருமையான ஓர் உவமை இந்தப் பாட்டுல சொல்றாங்க; அதாவது ஒரு தலைவி தன் மனத்தைப் பாண்டியன்கிட்ட தூது விடறா; அப்புறம் மனசோட சொல்லிக்கிறா;
”கடல்ல அலையெல்லாம் வந்து மோதும்; அங்க இருக்கற மணல் மேட்டை அரித்து மணல் குறைஞ்சு போயிடும்; விளிம்பு மட்டும் தெரியும்; அந்த மணல்மேட்டில கடல்லேந்து கரையில் வந்து மோதற அலைமேலே ஏறிக்கிட்டு சங்கு வரும்; அது மணல் மேட்டில முத்தை ஈனு வச்சுடும்; அதனால உண்டான தளர்ச்சியால கொஞ்ச தூரம் போயி நிக்கும்; அத்தோட அது மறுபடியும் கடல் உள்ள போறதுக்குப் பெரிய அலை எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கும்; அதேபோல கொற்கையை ஆளுற பாண்டியனோட அரண்மனை வாசல்ல போயி என் மனசு நிக்கும். அவன் எப்ப நம்ம கூப்பிடுவான்னு அவன் கட்டளையை எதிர்பாத்துக் காத்துக்கிட்டு இருக்கும்”

முத்தொள்ளாயிரம்—41

மாறடு போர்மன்னர்

மாறடு போர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ! குளிர்வாடாய்!—சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியில் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை
[மாறுஅடு=பகையை அழிக்கும்; மதிக்குடை=சந்திரன் போன்ற குடை; ஆரம்=சந்தனம்; வாரம்=அன்பு]
இந்தப் பாட்டுல வாடைக் காத்த தலைவி தூது விடறா; அவ சொல்றா,
“ ஓகோ! நீதான் வாடைக் காத்தா? நான் வேற யாரோன்னுதான் நெனச்சேன்; குளிரான வாடையே! நீ தெற்கதான போற? அங்க சோறு பொங்கறவங்க கூட சந்தனக் கட்டையால தீ மூட்டுவாங்களாம்: அந்த எடம் தான் பொதிய மலையாம்; அதுக்குத் தலைவனான பாண்டியன்கிட்ட வச்சிருக்கற அன்பாலதான் நான் என் வளையலைத் தோத்தேன்; அவன்கிட்ட போயி சொல்லு;
”எதிரிங்களை எல்லாம் கொன்னு போடற தெறமையான அவன் வச்சிருக்கற வெள்ளையான குடையோட தகுதிக்கும், கையில வச்சிருக்கற செங்கோலுக்கும் இத மாதிரி அவன்கிட்ட அன்பு செலுத்தற ஒரு பொண்ணை வருந்த உடறது நியாயமான்னு கேளு”

முத்தொள்ளாயிரம்—42

நகுவாரை நாணி

புகுவார்க்[கு] இடம்கொடா போதுவார்க்[கு] ஒல்கா
நகுவாரை நாணி மறையா—இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றஎன் நெஞ்சு
புகுவார்=உள்ளே செல்பவர்; [கொடா=கொடுத்து; போதுவார்=வெளியே செல்பவர்; இகுகரை=தாண்டிச் செல்லக் கூடிய கரை; ஏ=அம்பு; ஏமான்=அம்பு எய்யப்பட்ட மான்; பிணை’பெண்மான்]
இந்தப் பாட்டுல ஒரு காட்சியையே நாம பாக்கலாம். ஒரு காடு; அங்க ஒரு ஆண் மானும் பெண்மானும் கூடிக்கிட்டு இருந்துச்சு;. அத ஒரு வேடன் பாத்தான்; ஒடனே அம்பு போட்டான்; ஆண்மான் கரையைத் தாண்டி ஓடிப் போச்சு. பெண் மான்மேலே போயி அம்பு தைச்சுடுச்சு; அம்போடயே பெண்மான் பொதர்லே மறைஞ்சு கெடந்தது. போறவங்க எல்லாரும் போகட்டும்; அப்பறம் நாம போயிடாலாம்னு நெனச்சது. அதோட போறவங்க எல்லாரும் நம்ம நெலயப் பாத்தா சிரிப்பாங்களேன்னு நெனச்சு வருந்திச்சு.
இதைச் சொல்லி தலைவி, தோழிகிட்ட சொல்றா, “ தோழி! பாண்டியன் பின்னாலயே என் மனம் போச்சுடி; அவனோட அரண்மனை வாசல்ல நின்னுக்கிட்டு உள்ளேந்து வர்றவங்களுக்கு வழி கொடுத்து, உள்ள போறவங்களுக்கும் வழிவிட்டு அவன் எப்ப தனியா இருப்பான்னு பாத்துக்கிட்டு அம்பு தைச்ச பெண்மான் போல நிக்குதுடி”
மானோட ஒடம்புல வேடனோட அம்பு தைச்சதும், அவளோட மனசில காமன் அம்பு தைச்சதும்தான் இங்க நல்ல நயம்.

முத்தொள்ளாயிரம்—43

மணவா மருண்மாலை

பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாள் போல
அணியிழை அஞ்ச வருமால்–மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து
[பிணி=நோய்; அணி=அணிகலன்; மருண்மாலை=மயக்கம் தரும் மாலை]
இது தலைவி தோழிகிட்ட சொல்லற பாட்டு
“நல்லா நகையெல்லாம் போட்டிருக்கற தோழியே! பாண்டியன் யானை மேலே ஏறி வருவான். அந்த யானையோட ரெண்டு பக்கமும் ’கணீர் கணீர்’னு சத்தம் போடற மணியெல்லாம் கட்டித் தொங்க விட்டிருப்பாங்க; அவனோட கூட முடியாத இந்த மயக்கமான மாலைப் பொழுதிலே இந்த வாடைக் காத்து வந்து துன்பப்படுத்துது; பொதுவா நோயில கெடக்கறவங்களுக்குப் பொறந்த நாளு வந்தா அன்னிக்கு நோயி அதிகமா வாட்டுமாம். அதுபோல இந்தக் காத்து வந்து ரொம்ப துன்பம் தருதே நான் என்ன செய்வேண்டி?

முத்தொள்ளாயிரம்—44

புல்லப் பெறுவேனோ?

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன்— கண்டக்கால்
பூணாகத் தாஎன்று புல்லப் பெறுவேனோ
நாணோ[டு] உடன்பிறந்த நான்
[மாணார்=பகைவர்; கடந்த வென்ற; மறம்=வீரம்; வெம்போர்=கொடும்போர்]
தலைவி தன் நெஞ்சுகிட்ட சொல்ற பாட்டு இது.
”ஏ! மனமே! என் பாண்டியன் தன் எதிரிங்களை எல்லாம் சண்டையில தோக்கடிச்சு வெற்றி பெற்றவன்; அவனைப் பாக்காத போது ,’நீ போட்டிருக்கற வேப்பம்பூ மாலையைத்தான்னு கேட்டு வாங்கிப் போட்டுக்குவேன்; அவன் தோள்ல சாஞ்சுக்குவேன்; அவனோட ஆடுவேன்; மயங்குவேன்; ஊடுவேன்; தேடுவேன்; என்னென்னமோ ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவேன்; ஆன நேர பாத்துட்டா வெக்கம் வந்து தடுக்குதே! அப்படிப்பட்ட வெக்கதோடயே இருக்கற நான் அவன்கிட்டப் போயி ’நீ என்னா நகை போட்டிருக்க; சொல்லு பாப்போம்’னு கேட்டுக்கிட்டுப் பக்கத்துல போயி அவனோட மார்போட தழுவிக் கிடப்பேனோ; சொல்லு பாப்போம்”

முத்தொள்ளாயிரம்—45

வல்லே புலர்க

புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா இரவே நெடிதென்பர்—நல்ல
விராமலர்த் தார்மாறன் வெண்சாந்[து] அகலம்
இராவளிப் பட்ட திது
[புல்லாதார்=தழுவாதார்; வல்லே=விரைவாக; புல்லினார்=தழுவியவர்; புலர்க என்பர்=விடிக என்பர்; விராமலர்=பலவகை மலர்; சாந்தகலம்=சந்தனம் பூசிய மார்பு]
அவ பாண்டியன்கிட்ட மனசைப் பறிகொடுத்திட்டா; ராத்திரியில தன் மனசுக்குள்ளியே பொலம்பறா.
ஏ மனசே! நல்லா பல நெறமான மலரெல்லாம் ஒண்ணா சேத்துக் கட்டின மாலையைப் போட்டுக்கிட்டுருக்கான் பாண்டியன்; அவனோட சந்தனம் பூசி இருக்கற மார்பை நல்லா தழுவினவங்க எல்லாம், ராத்திரியைப் பாத்து, “ஏ ராத்திரியே! இரு;இரு; சீக்கிரம் போயிடாத”ன்னு சொல்லுவாங்க; ஆனா அவன் மார்பைச் சேராதவங்க எல்லாம், “ஏ! ராத்திரியே! போ, போ, சீக்கிரம் போய் விடிஞ்சுடு”ன்னு சொல்லுவாங்க;
இரா அளிப்பட்டதுன்னு வர்றத ஒரு பொருளா “ராத்திரி அவங்களுக்குக் கொடுத்தது இதுதான்”ன்னு சொல்லலாம்; இன்னொரு பொருளா ”பாவம்தான்; அவங்கள ராத்திரி தொல்லைப்படுத்து”ன்னு இரக்கமா சொல்ல வைக்குதுன்னு எடுத்துக்கலாம்.

முத்தொள்ளாயிரம்—46

கருதியார் கண்

இப்பிஈன் றிட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே அல்ல படுவது—கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந்[து] அகலங்
கருதியார் கண்ணும் படும்

[இப்பி=முத்துச் சிப்பி; எறிகதிர்=வீசுகின்ற ஒளி; நித்திலம்=முத்து; குருதி வேல்=இரத்தம் தோய்ந்த வேல்; கருதியார்=நினைத்தவர்]

பாண்டியனைப் பாத்து அவன்கிட்ட ஒருத்தி மனசைப் பறி கொடுத்திட்டா; இப்ப அவனைப் பிரிஞ்சிருக்கறா; ரொம்பவும் துக்கப்படறா; அதால கண்ணீரு வர்றது;
அப்ப அவளோட தோழி பேசறா, “மனசே! சிப்பியிலேந்துதான் முத்து உண்டாயி அந்த சிப்பி இருக்கற கொற்கையிலேந்துதான் வரும்னு சொல்லுவாங்க; இல்ல;இல்ல; அந்தக் கொற்கையை ஆட்சி செய்யற, எப்பவும் ரத்தக் கறை இருக்கற வேல வச்சிருக்கற, பாண்டியனோட குளிர்ச்சியான சந்தனம் பூசியிருக்கற மார்பை நெனச்சவங்களோட கண்களிலும் உண்டாகுமாம்.”
பாண்டியனை நெனச்சவங்கள கண்ணில எல்லாம் வர்ற கண்ணீர்த் துளிகள்தான் முத்துகள்னு சொல்லப்படுது.

வளவ.துரையன்

வளவ.துரையன்

முத்தொள்ளாயிரம்–47

யானும் தானும்

யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
தானூட யானுணர்த்தத் தானுணரான்—தேனூறு
கொய்தார் வழுதி குளிர்சாந்[து] அணியகலம்
எய்தா[து] இராக்கழிந்த வாறு

தலைவன் வந்தபோது அவன்கிட்ட பொய்யாக் கோபிச்சுக்கிட்டு ஊடி இருந்ததால
அவனைச் சேராத தலைவி சொல்ற பாட்டு இது. தோழிகிட்ட சொல்றா.
”தோழி! ராத்திரி பாண்டியன் என்கிட்ட சேரத்தான் வந்தான். நான் வேணுமின்னே அவனோட ஊடிக்கிட்டு இருந்தேன். அவன் பலவிதமா சொல்லிச் சொல்லி என்னை மாத்தப் பார்த்தான். ஆனா நானோ மறுபடி மனசு மாறாம ஊடிக்கிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு மனசு மாறி அவனோட சேரப் போனேன். ஆனா இப்ப அவன் ஊட ஆரம்பிச்சுட்டான்; நான் அவன் மனசை மாத்த எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் அவன் தெளியவே இல்ல; அதால ரெணு பேரும் மாறிமாறி இப்படிச் செய்ததால அன்னிக்கிப் பூத்த பூக்களால கட்டப்பட்டதும், தேன் சொட்டிக் கொண்டிருக்கறதுமான மாலையைப் போட்டுக்கிட்டிருக்கற பாண்டியனோட சந்தனம் பூசிய மார்பைத் தழுவாமலே இரவு கழிஞ்சுப்போச்சிடி”
யான், தான், உணர்த்த, உணரா ஆகிய முரணான சொல்லெல்லாம் வச்சு இந்தப் பாட்டு நல்லா எழுதப்பட்டுள்ளது.

முத்தொள்ளாயிரம்—48

வரிவளையும் புரிவளையும்

செய்யார் எனினும் தமர்செய்வர் என்னும்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்—கையார்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு

[விளங்கிழாய்=ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்தவள்; புரிவளை=வலம்புரிச் சங்கு; வரிவளை=கைவளை]

”செய்யார் எனினும் தமர்செய்வர்”னு ஒரு பழமொழி இருக்கு; அதுதான் இந்தப் பாட்டுல சொல்லப்படுதாம். அதாவது ஒரு சமயத்துல ஒதவி செய்யாதவங்க வேற காலத்துல ஒதவுவாங்கன்றதுதான் இதோடப் பொருளாகும்.
”நல்ல ஒளி உள்ள அணிகலன்கள் போட்டிருக்கற தோழியே! பாண்டியன் போனான்; அவன் என்னப் பாக்கல; ஆனா நான் அவனைப் பாத்தேன்; காதலை அவன் மேல வச்சேன்; என் தோளெல்லாம் மெலிஞ்சு போச்சு; கயில போட்டிருந்த சங்காலான வளையெல்லாம் கழல ஆரம்பிச்சன; ஆனா அப்பத்தான் பாண்டியன் கெளம்பி வர்றப் போனான்னு சொல்லற வலம்புரி சங்கு சத்தம் பெரிசா போட்டுது. அவன் வர்றப் போறான்னு கழல ஆரம்பிச்ச வளையெல்லாம் நின்னு போச்சு; சங்கால செய்யப்பட்ட வளை கழண்டு விழுந்து ஒடைஞ்சு போயிடப் போகுதேன்னு சங்கு இனத்தைச் சேந்த வலம்புரிச் சங்கு மொழங்கி ஒதவி செஞ்சுது; இதே சங்கு முன்னாடி மொழங்காமே இப்ப சத்தம் போடறதால ஒரு காலத்தில ஒதவி செய்யாதவங்க வேற காலத்துல ஒதவி செய்வாங்கன்ற பழமொழி தெரியுதடி.

முத்தொள்ளாயிரம்—49

துளை தொட்டார்

காப்படங்[கு]என் றன்னை கடிமனை இற்செறித்[து]
யாப்படங்க ஓடி அடைத்தபின்—மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவந் துளைதொட்டார்க்[கு]
என்னைகொல் கைம்மா[று] இனி

[காப்பு=காவல்; கடிமனை=காவல் உள்ள மனை; இற்செறித்து=வீட்டினுள் அடக்கி வைத்து; யாப்படங்க=கதவு விளிம்பு பொருந்த; தொட்டார்=தோண்டினவர்]

மாக்கடுங்கோன்னு பாண்டியனுக்கு ஒரு பேருண்டு. அவன் வீதி உலா வரான்; அவனைப்பாத்தா அப்பறம் மக அவனையே நெனச்சு ஒடம்பு எளைச்சுப் போயிடுவான்னு அம்மா ஓடிப்போய் கதவை அடக்கறா. ஆனா அந்தக் கதவுல ஒரு தொளை இருக்கு அது வழியா உள்ள இருக்கற மக பாண்டியனைப் பாத்துடறா; பாத்துட்டு தோழிகிட்ட சொல்றா.
“தோழி! ”உள்ளயே இரு, உள்ளயே இரு”ன்னு சொல்லிக் காவலுக்கு அடங்கி இருக்கற ஊட்டுல நான் இருக்கேன்; பாண்டியன் வரச்சே ஒடனே ஓடிப்போய் கதவோட விளிம்பெல்லாம் ஒண்ணா பொருந்தற மாதிரி அம்மா கதவை அடைச்சு வச்சிட்டா; ஆனா அந்தப் பாண்டியனோட அழகை எல்லாம் அந்தக் கதவுல இருக்கற தொளை வழியா பாத்துட்டேன்; அப்படி நான் பாக்கற மாதிரி முன்னாடியே அந்தத் தொளையைத் தோண்டி வச்ச தச்சருக்கு நாம எப்படி நன்றி காட்டுவோம்டி, ஒண்ணுமே செய்ய முடியாம இருக்கோமே”
கதவுலயே பூட்டு வச்சு அதைச் சாவிபோட்டுத் தெறக்கறதுக்கு ஒரு தொளை இருக்குமே; அந்த்த் தொளையைத் தன் மேல இரக்கம் வச்சுத் தச்சர் வச்சிருக்கார்னு அவ நெனச்சுக்கறா; அதை வச்சவருக்கு ‘என்ன கைம்மாறு இனி”ன்னு சொல்லச்சே அவளொட ஆர்வம், மயக்கம் எல்லாம் தெரியுது.

முத்தொள்ளாயிரம்—50

சாலேகஞ் சார்

துடிஅடித் தோல்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியே!யான் நின்னை இரப்பல்—கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெம்
சாலேகம் சார நட

[துடி=உடுக்கை; தொல்=கேடயம்; தூங்குதல்=தூங்குதல்; நாலுதல்=தொங்குதல்;சேலேகம்=செந்தூரம்; சாலேகம்=சன்னல்]

பாண்டியன் உலா வரப் போறான்; ஆனா அவனைப் பாக்க உடாம ஒரு பொண்ணை உள்ள அடைச்சு வச்சிருக்காங்க; அப்ப அந்தப் பொண்ணு பாண்டியன் ஒக்காந்து வர்ற யானையை பாத்துச் சொல்லற பாட்டு இது.
”உடுக்கையைப் போல பாதமும், கேடயம் போல காதும், தொங்கற தும்பிக்கையையும், தொங்கற வாயும் இருக்கற யானையே! நான் ஒன்கிட்ட ஒண்ணு கெஞ்சிக் கேக்கறேன்; நல்ல வாசனை உள்ள பூமாலையைப் போட்டுக்கிட்டு செந்தூர நெறமா இருக்கற பாண்டியனோட நீ வரும்போது எங்க ஊட்டுச் சன்னல் ஓரமா நடந்து போவணும்”.
சன்னல் ஓரமா யானை போனா அப்ப உள்ள அடைச்சு வச்சிருக்கற அந்தப் பொண்ணு அது மேல இருக்கற பாண்டியனைப் பாத்த்துடுவாளாம். இவ சொன்னா யானை கேக்குமா? எப்படியாவது அவனைப் பாக்கணும்னு அவ கேக்கறா; அவ்வளவுதான்.

•••••

மரணம் நோக்கியதொரு பயணத்தில் ….! ( சிறுகதை ) / விஜயபத்மா .ஜி

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா

நார்த் கரோலினா அருகில் உள்ள சார்லோட் நகரில் இருக்கும் முதியவர்களுக்கான வசிப்பிடத்தில் சுமார் 50 முதியவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் . சமூகத்தில் பெரிய வேலைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் , வசதியான மேல்தட்டு மக்கள் வசிக்கும் முதியோர் இல்லம் அது .

மூப்பு முதிர்ந்து மரணத்தை வரவேற்கும் மனதோடு வாழ்ந்து வரும் , அந்த முதியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்யப் பட்டு இருந்தது .எந்த நேரத்தில் விருப்பப் பட்டாலும் நகரில் உள்ள பெரிய மால்களுக்கு அழைத்து செல்ல வாகன வசதி , மருத்துவ வசதி , எல்லா விதமான உடற்பயிற்சி கருவிகள் நிறைந்த உடற்பயிற்சி கூடம் தனியறை , பிரிட்ஜ் , மைக்ரோ ஓவன் டீ கெட்டில் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய சிறிய சமையல் வசதியுடன் ,கூடிய வசிப்பிடம் ,, உதவிக்கு வேலையாட்கள் என கவலையின்றி முதியவர்கள் வாழ வசதிகளுக்கு குறைவில்லாது பெரிய நிலப்பரப்பில் அமைக்கப் பட்டு இருந்தது. அங்கு வாழும் முதியவர்கள் அனைவருக்கும் துணி துவைத்து , சலவை செய்து கொடுக்க உதவியாளர்களுடன் அமைப்பும் ஏற்படுத்த பட்டு இருந்தது . . இங்கு வாழும் பெற்றோர்கள் குறித்து அவர்கள் குழந்தைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை .

குழந்தைகளுடன் ஒன்றாக வயதான காலத்தில் வாழ்ந்து கொண்டு , தங்களது சுதந்திரங்களை தொலைத்துக் கொண்டு வாழ இங்கு வாழும் முதிய பெற்றோர்களும் விரும்புவதில்லை . என்ன முற்போக்கு சிந்தனையுடைய பெரியவர்களானாலும் “தலைமுறை இடைவெளியை “சமாளிப்பது பெரிய நடைமுறை சிக்கல் என்பதை உணர்ந்து இருந்தார்கள் எனவே தங்களது குழந்தைகளுக்கு சிரமம் கொடுக்காமல் , அதே சமயம் மிச்சமிருக்கும் சொச்ச வாழ்வையும் , தங்களது விருப்பபடி சுதந்திரமாய் வாழ்வதையே இவர்க்ளும் விரும்பி வாழ்கிறார்கள் . எனவே இந்த முதியோர் இல்லம் எப்பொழுதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் .

அங்கு வசிப்போர் அனைவரும் காலையில் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி தியானம் எல்லாம் முடித்து விட்டு , அலுவலகத்திற்கு போவது போல் , நேர்த்தியாக உடையணிந்து சாப்பிட்டு மேஜைக்கு வருவார்கள் . அவர்களின் உடையில் , மிடுக்கும் , பணக்காரத்தனமும் மின்னும் . ஆனால் இவர்களுடன் ஒட்டாமல் எப்பொழுதும் தனிமையில் பூங்காவில் உட்கார்ந்து , குருவிகளுடன் பேசிக் கொண்டு இருப்பது , இல்லையென்றால் வராந்தாவில் ஏதோ சிந்தனையில் அங்கும் இங்கும் நடப்பது என தன் உலகத்தில் தனியே சஞ்சாரித்துக் கொண்டு இருப்பவர் பெர்னி டெக் வொர்த் மட்டுமே .89 வயதான பெர்னீ மூப்பின் அழுத்தமான பதிவுகளான முகச்சுருக்கங்களுடன் , வழுக்கைத் தலையுடன் குள்ளமாக இருப்பார் .அவர் உருவத்தை பார்க்கையில் , இவர் கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்கவே மாட்டாரோ என்றே தோன்றும் .

எப்பொழுதும் கலைந்த தலையுடன் கசங்கிய பேண்ட் மற்றும் வியர்வையுடன் கூடிய சட்டையும் அணிந்து கொண்டு கையில் ஒரு ஊன்று கோலுடன் , தேவையில்லாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பார் இரவு சாப்பாட்டு நேரம் வரும் பொது மட்டும் சிறிது முக மலர்ச்சியுடன் காணப்படுவார். இரவு என்பது தனக்கான உலகில் சஞ்சரிக்கும் நேரம் என்று அவர் கருதுவது போலவே தோன்றும் ஏறக்குறைய பத்து வருடங்களாக இந்த முதியோர் இல்லத்தில் பெர்னீ வசித்து வருகிறார். அவருடைய அன்றாட செயல்களில் அன்றில் இருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லை

பெர்னீ , சார்லோட் உளவுத்துறையில் வேலை பார்த்ததாக சொல்வார்கள் . அவர் வேலையின் தன்மை காரணமாகவோ என்னவோ அவர் வாலிப வயதில் கூட யாரிடமும் மனம் விட்டு சிரித்து பேசியதில்லை என்றே அவரைத் தெரிந்தவர்கள் கூறும் தகவல்கள் . அவருடன் ஒன்றாக படித்த பள்ளித் தோழி மெர்லின் மட்டுமே பெர்னீயை புரிந்து கொண்டு தன் காதலை சொல்லி அவரை மணந்து கொண்டாள் . அறுபது வருடம் இருவரும் நிறைவான திருமண வாழ்வை வாழ்ந்தனர் . இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் , ஒரு மகளும் இருக்கிறார்கள்.

பெர்னீ எப்பொழுதும் தனிமை விரும்பி . வீட்டில் குழந்தைகளிடம் கூட அவ்வளவு கலகலப்பாக பேச மாட்டார். எப்பொழுதும் மெர்லினுடன் மட்டுமே பேசுவார் , பெரும்பாலும் அமைதியாக ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டோ , தோட்டத்தில் உலாவிக் கொண்டோ இருப்பது மட்டுமே அவரது வழக்கம் .

அவரது குழந்தைகளும் , அப்பா எப்பொழுதும் ஏதோ யோசனையுடனேயே இருப்பதால் தங்கள் தேவைகளுக்கு அம்மாவிடம் மட்டுமே செல்வது வழக்கம் . மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாலையில் மெர்லின் தூக்கத்திலேயே மாரடைப்பில் இறந்து விட்டார் . அருகில் படுத்து இருக்கும் தனது மனைவி இறந்தது கூட தெரியாமல் வழக்கம் போல தோட்டத்தில் உலாவி விட்டு வந்து , அமைதியாக பேப்பர் பார்க்க அமர்ந்து விட்டார் பெர்னீ. நேரமாகி விட்டதே இன்னமும் அம்மா ஏன் எழுந்திருக்க வில்லை என்று அறைக்குள் சென்று பார்த்த , அவர்களது மூத்த மகன் தான் அம்மா இறந்து விட்டார் என்பதை அறிந்து டாக்டரை அழைத்தான் .

இரவு இரண்டு மணிக்கே உயிர் பிரிந்து விட்டதாக டாகடர் சொல்லி விட்டு சென்றதும் , அதிர்ச்சியில் உறைந்து போய் அழக்கூட மறந்து மவுனமானார் பெர்னீ .. மெர்லின் இனி இந்த உலகில் தன்னுடன் இல்லை என்பதை அவர் மனம் நம்ப மறுத்தது அமைதியாக உறங்குவது போல் படுத்திருந்த , மனைவியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு , தன் கரங்களால் அவள் முகத்தை வருடிக் கொண்டே அமர்ந்து இருந்தார் பெர்னீ .அப்பாவின் இந்த செயல்களால் குழந்தைகள் மூவரும் , கலக்க முற்றனர். அம்மா இல்லாத வாழ்வை அப்பா எப்படி வாழப் போகிறார் என்று அவர்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது . ஆனால் நல்லவேளை , பெர்னீ வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டார் . அமைதியாகத் தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தார் தன் பெயரில் இருந்த பெரிய வீட்டை விற்று விட்டு , இந்த முதியோர் இல்லத்திற்கு குடி பெயர்ந்தார்.

ஆனால் பெர்னீ மற்ற முதியோர்களில் இருந்து மாறுபட்டவர். அவருக்கு வால்மார்ட்டில் சென்று தனக்குத் தேவையான ஷேவிங் லோஷன் , ஷாம்பூ ஆகியவற்றை வாங்குவதே மலை ஏறுவது போன்ற சாகச காரியம் என்று நினைப்பார். பெரும்பாலும் அனைவரும் வால்மார்ட் கிளம்பினால் கூடத் தனக்கு தேவையானதை வாங்கி வரச் சொல்லி விடுவார்.

மற்றவர்கள் அவரை கட்டாயப் படுத்தி கூப்பிட்டாலும் , எனக்கு சூப்பர் மார்க்கெட் உள்ளே நடக்க இயலாது என்பார் . நடக்க இயலவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தான் மினி வண்டி கொடுக்கிறதே அதில் அமர்ந்து கொண்டு சுற்றி வரலாமே என்று கேட்டால் அதற்கும் ஏதாவது சாக்கு சொல்லி மறுத்து விடுவார்
முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டாலும் , பெர்னீ மாறவில்லை . யாருடனும் ஓட்ட மாட்டார் . எப்பொழுதும் தனியாகவே நடந்து கொண்டு இருப்பார் . அவருக்கு சிந்தனையில் அவர் வயது மறந்து போய் விட்டிருந்தது .அவரைப் பொறுத்தவரை மெர்லீன் மிகவும் அவசரமாக தன்னை விட்டு போய் விட்டதாக நினைத்தார் . மெர்லீன் குணத்தில் பெர்னீக்கு நேர் எதிர் . மிகவும் கலகலப்பானவர் .

விஜய் பத்மா

விஜய் பத்மா

எப்பொழுதும் அவளைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும் . ஒருவரைப் பார்த்த முதல் அறிமுக நொடியிலேயே தனது கலகலப்பான பேச்சால் அவர்களைக் கவர்ந்து தனக்கு நட்பாக்கி கொள்வாள் . அவளுடன் இணைந்து செல்லும் போது கூட பெர்னீ , அமைதியாகவே இருபபார் . அவளுடைய நண்பர்களுடன் இவர் பேச மாட்டார் . அப்படியே இவருக்கு அறிமுகம் செய்து வைத்தாலும் , மறந்து விடுவார். அடுத்த முறை இவரை அவர்கள் பார்த்து அவர்களாகவே அடையாளம் கண்டு பேசினால் தான் உண்டு. .பெரும்பாலும் அடுத்த மனிதர்களுடன் பேசுவதையே தவிர்த்து , தனிமையாக இருப்பதே பெர்னி க்கு பிடித்த ஒன்று .

மவுனமாக மனிதர்களை வேடிக்கை பார்ப்பதே பெர்னீயின் வாடிக்கை மெர்லின் மரணத்திற்கு பிறகு , தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வாழும் முதியவராக எதிலும் பற்றில்லாமல் , வாழவேண்டுமே என்று வாழ்ந்து வருகிறார் பெர்னீ
மெர்லின் உயிருடன் இருக்கும் போது பெர்னீ அலுவலகத்தில் இருந்து வரும் முன்னரே சாப்பாட்டு மேஜையில் தயாராக உணவு இருக்கும் . அவர் சாப்பிடும் போது அருகில் அமர்ந்து , அவருக்கு தேவையானவைகளை கொடுத்து உபசரித்து , அவர் தூங்கும் வரை விழித்திருந்து உறங்குவாள் மெர்லீன் . அவள் உயிருடன் இருந்தபோது இது ஒரு மனைவியின் கடமை என்று நினைத்து இருந்த பெர்னீ , இன்று ஊன்று கோலுடன் சாப்பாட்டு மேஜைக்கு வரும்போது , உணவை பார்த்தாலே , மெர்லின் பரிமாறியது உணவல்ல ‘அன்பு’ என்று உள்மனம் சொல்ல கண் கலங்குவார் .

ஒவ்வொரு நாளும் கண்கலங்கி உணவு உண்ணும் அவரை ஏன் இப்படி கலங்குகிறீர்கள் என்று அந்த இல்லத்தில் வாழ்ந்த சக முதியோர்கள் ஒருபோதும் கேட்டதில்லை . அவரவர்க்கு அவரவர் வாழ்வும் , அருகி வரும் மரணமும் குறித்த கவலையில் ,பெர்னீயின் கண்ணீர் குறித்த அக்கறையை அவர்களை வெளிப்படுத்துவது இல்லை . அது மட்டும் கூட காரணமாக இருக்க முடியாது . ஒவ்வொரு வேளை உணவின்போதும் கலங்குவது பெர்னீயின் வழக்கம் எனும் போது அதை அவரது குணம் என்று அதற்கு முக்கியத்துவம் இல்லாது போயிற்று என்றும் கூறலாம் . பெர்னீயை அவருடன் வசிக்கும் சக முதிய நண்பர்களால் புரிந்து கொள்ள முடிவதே இல்லை , அவர் சாதாரணமாக யாரிடமும் பேச மாட்டார். பேசும்போது அடுத்தவர்கள் சொல்லும் கருத்தையோ , பதிலையோ காதில் வாங்கி கொள்ள மாட்டார். தனக்கு இன்னமும் வயதாகிவிட வில்லை . மனைவி மெர்லின் மிக விரைவில் காலமாகி விட்டார் என்ற அவரது நம்பிக்கையை யாராலும் மாற்ற முடியவில்லை .

அங்கு வசிக்கும் முதியவர்களில் பாதிபேர் பெர்னீயிடம் பேசுவதையே தவிர்ப்பார்கள் .இவர் நம் பேச்சை காதில் வாங்க மாட்டார் . அவருடன் நமக்கு என்ன பேச்சு என்று அவர்கள் எண்ணம் . ஆனால் பெர்னிக்கோ இவர்கள் எல்லோரும் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்கள் . உணர்வில்லாத நரக வாழ்வை வாழ்கிறார்கள் . என் காதல் மனைவியின் நினைவுகளை அவர்களால் ரசிக்க முடியவில்லை .

ஒத்த உணர்வில்லாத , என்னை புரிந்து கொள்ளாத இவர்களுடன் எனக்கென்ன பேச்சு . என்று அமைதியாக அவர்களை கடந்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஆனால் பெர்னீ உளவுத் துறையின் பெரிய அதிகாரியாக வேலை பார்த்தவர் என்றாலும் , மெர்லீனின் அன்பான பாதுகாப்பில் ஒரு குழந்தையைப் போல வாழ்ந்து விட்டார். அவருக்கு மனதிற்கு ஆறுதல் தரும் துணை ஒன்று தேவை பட்டது . மெர்லீன் நீ ஏன் இறந்தாய் ? உனக்கு என் மேல் அக்கறை இல்லை . அக்கறை இருந்து இருந்தால் நீ என்னை விட்டு போயிருக்க மாட்டாய் என்ற அவரது தனிமைப் புலம்பல் காற்றில் கரைந்து போனது .

அவரது அன்பிற்கான ஏக்கம் , தொட்டத்து குருவிகளும் , காற்றும் மட்டுமே அறிந்தது . மற்றவர்களுக்கு அவர் இன்னமும் தன்னை ஆபீசர் என்று நினைத்துக் கொண்டு அந்த திமிரிலேயே இருக்கிறார் என்பதே அவரைக் குறித்த மதிப்பீடு .
அந்த முதியோர் இல்லத்திற்கு , ஜேக் என்பவர் புளோரிடாவில் இருந்தும் , பிராம்டனில் இருந்து ஹெலனும் புதிய வரவாக வந்தனர். இதில் ஜேக் அப்படியே பெர்னீ போல் , யார் பேசுவதையும் காது கொடுத்து கேட்க மாட்டார் . தான் சொல்வதே சரி என்று வாதிடுவார் . ஹெலன் தன்னை சுற்றிய சூழல் எப்பொழுதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக போராடுவாள் . அது என்ன மாயமோ , பெர்னீக்கு இவர்கள் இருவரையும் பிடித்து போயிற்று . இந்த மூவரும் எப்பொழுதும் ஒன்றாக திரிவதை வழக்கமாக கொண்டனர்.இவர்கள் சாப்பிட வருமுன் தாங்கள் சாப்பிட்டு விட்டு சென்று விட வேண்டும் என்று மற்ற முதியவர்கள் அவசரமாக சாப்பிட்டு சென்று விடுவார்கள் . ஏனெனில் சாப்பிடும் போது ஏதாவது கருத்தை பெர்னீ முன் வைப்பதும் , அதை கொஞ்சம் கூட ஏற்று கொள்ளாமல் ஜேக் பேசுவதும் , இருவருக்கு இடையில் வார்த்தை தடித்து சண்டையாகி விடக் கூடாது என்று ஹெலன் தன் குரலை உயர்த்தி கத்தி பேசி இருவரையும் அடக்குவது வாடிக்கையானது .

இவர்களுக்குள் தர்க்கம் ஏற்படும் போது ஏதோ மார்க்கெட் உள்ளே இருப்பது போல் ஒரே கூச்சலும் , குழப்பமுமாக இருக்கும் .மற்றவர்கள் தெறித்து ஓடி விடுவார்கள்
அன்றும் அப்படித்தான் ஜேக் , பெர்னீயிடம் “நீங்கள் நல்ல ஆரோக்கியமாகத் தானே இருக்கிறீர்கள் ? பின் ஏன் எப்பொழுதும் ஒரு ஊன்று கொலை கையில் பிடித்து கொண்டு நடக்கிறீர்கள் ? தினமும் எங்களுடன் நடை பயிற்சி செய்யலாமே , முடிந்த அளவில் உடற் பயிற்சி செய்யலாமே என்றார் அதற்கு பெர்னீ , “நீண்ட காலம் வாழ விருப்பம் உள்ளவர்கள் செய்யும் வேலை அது . எனக்கு அது தேவையில்லை .

எனக்கு சீக்கிரம் வயதாகி நான் இறப்பதையே விரும்புகிறேன் . அதனால் தான் என் உடைகளில் கூட நான் கவனம் செலுத்துவது இல்லை” என்றார். அதற்கு ஹெலன் ,’ எல்லோரும் மரணத்தை நோக்கிய பயணத்தில் தான் இருக்கிறோம் .அதற்காக , இருக்கும் வரை ஆரோக்கியமாக வாழ வேண்டாமா ?” என்கிறாள் . பெர்னீ ” உங்கள் எண்ணங்களை என் மேல் திணிக்க நினைக்காதீர்கள் “ என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார் . சக முதியோர்கள் அவர்களிடம் வந்து,” நாம் எது சொன்னாலும் , அவர் வேறு விதமாகத்தான் சிந்திப்பார் . நாங்கள் எத்தனையோ முறை சொல்லி விட்டோம் . யோகா , உடற்பயிற்சி செய்வது நல்லது என்று அவர் கேட்பதாக இல்லை . அவரை திருத்த முடியாது விட்டு விடுங்கள்” என்று சிரிக்கின்றனர் . ஹெலன் “அது எப்படி முடியும் ? நான் அவரை திருத்தி காண்பிக்கிறேன்” என்று சவால் விடுகிறாள் . ஆனால் அவளால் முடியவில்லை . அன்றைக்கு இரவு சாப்பாட்டு அறைக்கு பெர்னீ வரவில்லை . ஜேக் , ஹெலன் மிகவும் கவலையாகி இல்ல உதவியாளரிடம் கேட்கின்றனர். அதற்கு அவர் , அவருக்கு உடல் நிலை சரியில்லை டாக்டரை பார்த்து விட்டு அறைக்கு சென்று விட்டார் . உணவை அறையிலேயே கொடுத்து விட்டேன் . இந்நேரம் தூங்கி இருப்பார் என்று கூறுகிறார் . ஜேக் , ஹெலன் இருவரும் பெர்னீயை சென்று பார்க்க விரும்பினாலும் , உடல் நிலை சரியில்லாதவரை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை .

மறுநாள் காலையில் இருவரும் நடைபயிற்சி கூட செல்லாமல் பெர்னீயின் அறைக்கு செல்கின்றனர் . அங்கு பெர்னீ கால், கைகளில் அடிபட்டு கட்டு போடப்பட்ட நிலையில் சோர்வாக இருக்கிறார் “என்ன நடந்தது ? எங்கு விழுந்தீர்கள் ?” என்று இருவரும் பதட்டத்துடன் கேட்க அவர் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். அவர் முகத்தில் வெட்கமும் குற்ற உணர்வும் இருக்கிறது . அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் , எனக்கு சோர்வாக இருக்கிறது .நான் ஓய்வெடுக்க வேண்டும் என்கிறார் . இருவரும் பதில் பேசாமல் அறையை விட்டு வெளியேறுகின்றனர்.
இருவருக்கும் பெர்னீக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தாலும் , அது எப்படி தெரிந்து கொள்வது என்று புரியவில்லை . இருவரும் பேசிக் கொண்டே உடற்பயிற்சி அறைக்கு சென்றனர். அங்கு ட்ரெட்மில் எனப்படும் நடைப்பயிற்சி சாதனம் பழுது பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஜேக் அவர்களிடம் “என்ன ஆச்சு ? பழுதாகி விட்டதா ? என்று கேட்க , அங்குள்ள பயிற்சியாளர் “உங்களுக்கு விஷயம் தெரியாதா ?” எனக் கேட்க இருவரும் விழிக்கின்றனர்
.”நேற்று உங்கள் நண்பர் இரகசியமாக வந்து நான் இல்லாத போது நடை பயிற்சி இயந்திரத்தில் ஏறி , விவரம் புரியாமல் , ஏதேதோ பட்டனை அழுத்தி , இயந்திரம் வேகமாக ஓடி , அவர் விழுந்து அடிபட்டு விட்டார். அவர் விழுந்தது கூட பெரிதில்லை . இதை வெளியில் யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று வலியுடன் முனகினார் பாருங்கள் அதுதான் ஹைலைட் . அவருக்கு திடீர்னு என்ன ஆச்சு . உடற்பயிற்சி எல்லாம் ஆரம்பித்து சுமார்ட்டாக முயற்சிக்கிறார் ?” என்று சிரித்தபடியே பயிற்சியாளர் கேட்க இருவருக்கும் நம்பவே முடியவில்லை .

இன்றைக்கு பெர்னீயிடம் விஷயத்தை கேட்காமல் விடுவதில்லை என்று சப்தம் செய்து கொண்டு இருவரும் பதினோரு மணிக்கு பெர்னீயின் அறை நோக்கி செல்கின்றனர். அப்பொழுது சூப்பர் மார்க்கெட் போக விரும்பும் முதியோர்களுக்காக வண்டி புறப்பட தயாராக இருக்கிறது .பெர்னீ மிகவும் ஸ்டைலாக ஓடி வண்டியில் ஏறுகிறார். ஏறும் போது அவர் சிறிது தடுமாற வண்டியில் இருந்து ஒரு கரம் அவரை பிடித்து ஏற்றுகிறது . ஜேக் , ஹெலன் இருவரும் தங்கள் கண்களையே நம்ப இயலாமல் பார்த்து கொண்டு இருக்க வண்டி சென்று விடுகிறது .
இரவு சாப்பிட்டு மேஜையில் ஜேக் , ஹெலன் இருவரும் பெர்னீக்காக காத்து இருக்கின்றனர். பெர்னீ அவர்கள் அருகில் எதுவும் பேசாமல் அமர்கிறார் . ஹெலன் , “பெர்னீ எங்களை கூப்பிட்டு இருந்தால் , உனக்கு நடை பயிற்சிக்கு நாங்கள் உதவி செய்து இருப்போம்ல . ஏன் இப்படி செய்தாய் ? என்று கேட்க அவர் தலை குனிந்தபடியே , “எனக்கு முதல் அனுபவம் அதனால் அந்த பட்டன்கள் சரிவர புரியவில்லை . அடுத்த முறை இந்த தவறு நிகழாது ” என்கிறார் .

“அதுசரி . நீ வால்மார்ட் சென்று பொருட்கள் வாங்க போவதை ஏன் எங்களிடம் சொல்ல வில்லை .நீ எப்பொழுதும் போக மாட்டாய் அல்லவா ? நீ உன் தனிமையை விட்டு எங்களுடன் வெளியில் வர வேண்டும் என்று தானே நாங்களும் விரும்புகிறோம் . அதற்கு தானே இத்தனை நாட்களாக நாங்கள் இருவரும் உன்னிடம் விவாதம் செய்கிறோம் ? ஏன் இப்படி செய்கிறாய் ? நீ எங்களிடம் எதையோ மறைக்கிறாய் ..என்ன அது ?” ஜேக் பெர்னீயிடம் கத்துகிறார் . பெர்னீ பதில் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிடுகிறார் . மூவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமல் , அமைதியாக சாப்பிட்டு விட்டு வராந்தாவில் நடந்து வருகின்றனர்.
அப்பொழுது வராந்தாவில் அழகிய பெண் ஒருத்தி தன் சக்கர நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறாள் .

அவளது பொன்னிற கூந்தல் காற்றில் பறந்து அவள் கண்களை சுற்றி வட்டமிட , அவள் அவற்றை புறங்கையால் ஒதுக்கி விடுகிறாள் .அவள் கண்கள் நீல நிறத்தில் நிலவொளியில் மின்னுகின்றன. அவளுக்கு சுமார் அறுபது வயது இருக்கலாம் . ஆனால் ஐம்பது வயது பெண்ணிற்கு உரிய வனப்பு அவள் உடலில் இருந்தது . ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்க்க தூண்டும் அழகுடன் அவள் இருந்தாள் . இவர்கள் மூவரும் அவளை கடந்து செல்லும் போது பெர்னீயின் முகம் சட்டென்று புத்துணர்ச்சி பெற்று பொலிவாக மாறுவதை ஹெலன் கவனிக்கிறாள் . அவள் ஜேக்கிற்கு ஜாடை காட்ட ஜேக் பெர்னீயின் பரபரப்பை பார்த்து சிரிக்கிறார். ஜேக்கும் ஹெலனும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் சிரித்து கொள்ள , உலக நினைவையே மறந்து பெர்னீ அந்த பெண்ணை பார்க்கிறார். அந்த பெண்ணும் , பெர்னீயை பார்த்து சிரித்தபடி , “ஹாய் .என்கிறாள் . பெர்னீ உடனே அவள் அருகில் சென்று ” ஹாய் லியோனா நான் உங்களை தோட்டத்திற்கு அழைத்து செல்லவா ? என்று கேட்ட படி , ஜேக்கையும் , ஹெலனையும் பார்த்து , நாளை சந்திக்கலாம் என்று கூறி விட்டு லியோனாவின் சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு தோட்டத்திற்கு செல்கிறார் .ஜேக்கும் , ஹெலனும் அவரவர் அறைக்கு திரும்பியபின் ஜன்னல் வழியே பார்த்தால் உலக மறந்து பெர்னீயும் , லியோனாவும் ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு தோட்டத்தின் புல்வெளியில் படுத்துக்கொண்டு நிலவை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

இருபத்து நாலு மணிநேரமும் நாம் மூவரும் ஒன்றாகத்தானே இருந்தோம் . இது எப்படி நிகழ்ந்தது ? பெர்னீக்கு , லியோனா எப்படி அறிமுகம் ஆனார் ? என்று ஜேக்கும் , ஹெலனும் தங்களுக்குள் விவாதித்து மண்டையை போட்டு உடைத்துக் கொண்டனர். அவர்களுக்கு விடை தெரியவில்லை .ஆனால் ஒன்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது . எந்த வயதிலும் காதல் மனிதனை வசியப் படுத்தி , இறகை போல் இலேசாக்கி விடுகிறது . அது ஒரு மேஜிக் என்பது
காலையில் சாப்பிட்டு அறைக்கு சுறுசுறுப்பாக , நன்கு சலவை செய்ய பட்ட டிசர்ட் , மற்றும் கசங்காத ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து கொண்டு ஸ்டைலாக பெர்னீ வந்தார். ஜேக்கிடம் ‘வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளது . அது பல அழகிய தருணங்களை உள்ளடக்கியது .” என்கிறார் .ஜேக்கும் , ஹெலனும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டே , ‘ ஆம் காதல் மிக அற்புதமானது . அது மனிதனுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது . அது ஒரு மேஜிக் ” என்கின்றனர் . பெர்னீ வெட்கத்துடன் தலை குனிந்து சிரிக்கிறார் .

அளவும் அறிவியலும் / முனைவர். ஆர். சுரேஷ்

images (8)

நம் அன்றாட வாழ்வில் அளவற்று புழங்கும் சொல் ‘அளவு’. ஆம், உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வாழும் இடம், சொல்லும் சொல் எல்லாவற்றிற்கும் அளவு உண்டல்லவா? அவ்வாறே, பயன்படுத்தும் கருவிகளாம், கணினி, தொலைக்காட்சி, அலைபேசி, வாகனம், முதலியன யாவும் பிரத்யேக அளவுடையாதாய் இருக்கின்றன. அறியாமலோ அல்லது அறிந்தும் உணராமலோ அளவினை பயன்படுத்தும் (சொல்லாகவோ அல்லது பொருளாகவோ) இடங்கள் ஏராளம்! வழக்கத்தில் வந்தேரிப்போன அளவு, அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப (அறிவியலின் பயன்பாடு) துறையின் அடிப்படையாக திகழ்கிறது. நம் வாழ்விலிருந்து நீக்க முடியா (வாழ்நாளும் அளவுடையதாயிற்றே!) அளவின், அறிவியல் பற்றி இங்கு காண்போம்.

அளவு என்பது வெற்றிடத்தில் ஒரு பொருள் (அல்லது ஏதேனும் ஒன்று) கொள்ளும் (occupy) இடம் பற்றிய செய்தியை குறிப்பதாகும். அளவினை அலகுகளால் (units) அளக்கிறோம். பொதுவாக, ஒன்றின் நீளம், அகலம், உயரம், பரப்பளவு, நிறை முதலிய செய்திகளை பற்றி தெரிவிப்பதாக அது அமைகிறது. அதாவது, ஒரு பொருளின் பரிமாணத்தை (dimension) தெரிவிப்பதாக அளவுகள் அமைகின்றன. உதாரணமாக, உயிரற்றவைகளின் அடிப்படையாம் அணுவின் மையத்தில் அமைந்திருக்கும் அணுக்கருவின் (புரோட்டான் மற்றும் நீயுட்ரான்களின் கூட்டு) விட்டம் ஃபெம்டோ (10-15, 10ன் மடங்கு -15) மீட்டர் அளவுடையது. அணுவின் ஆரம் (radius) பிக்கோ (10-12, 10ன் மடங்கு -12) மீட்டர் வரம்பில் அமைந்திருக்கிறது. இவ்வணுக்கள் இணைந்து மூலக்கூறினை உருவாக்குகின்றன. பொதுவாக, ஒரு மூலக்கூறின் அளவு அதனை உண்டாக்கும் அணுக்களை பொருத்து அமைகிறது. உதாரணமாக, இரு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜனும் சேர்ந்து உண்டாகும் நீர் மூலக்கூறின் விட்டம் ஆம்ஸ்ட்ராங் (10-10, 10ன் மடங்கு -10) அளவுடையதாகும். எண்ணற்ற நீர் மூலக்கூறுகள் ஒன்றினைந்து, நிறமற்ற நீர்மமாக நமக்கு காட்சியளிக்கிறது. நீர், இருக்கும் கலனை பொருத்து, அதன் கொள்ளளவினை அறியலாம்.

சரி, ஒரு பொருளின் பரிமாணத்திற்கும் (நீளம், அகலம் முதலியன) அதன் பண்பிற்கும் தொடர்பு இருக்கிறதா? இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு, இரும்பு ஆணியை கருதுவோம். இயல்பாகவே, இரும்பு துரு பிடிக்கும் என்பதன் அடிப்படையில், இரும்பு ஆணியும் துரு பிடிக்கத்தானே செய்யும். இங்கு, ஆணியின் எப்பகுதி விரைவில் துரு பிடிக்கும் என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு பதில், ஆணியின் தலை மற்றும் நுனி பகுதி என்பதே! ஆம், ஆணியின் தலை பகுதியை தட்டையாக்கவும், நுனிபகுதியை கூர்மையாக்கவும், அதிக அளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே, அப்பகுதிகள், ஆணியின் தண்டு (ஒப்பீட்டளவில் அதிக அகலம்) பகுதியை கட்டிலும் அளவில் மிகவும் மெல்லியதாக மாறுகிறது. கொடுக்கப்பட்ட அழுத்தத்தினாலும் (அழுத்தத்தால் இரும்பும் உருமாறுகிறதே!), மெல்லிய தடிமனாலும் ஆணியில் தட்டை மற்றும் கூர்மை பகுதிகள் (ஒப்பீட்டளவில் மிக குறைந்த அகலம்) எளிதில் துருவாகின்றன. அதாவது, அகலமான பகுதியை காட்டிலும், மிக குறைந்த அகலம் கொண்ட ஆணியின் பகுதிகள் எளிதில் துரு பிடிக்கும் பண்பினை பெற்றிருக்கிறது. இதிலிருந்து, பரிமாணத்திற்கும், பண்பிற்கும் தொடர்பு உண்டு என்பதனை அறிய முடிகிறது அல்லவா?

மற்றுமொறு உதாரணமாக, வானவில் நிறங்களை கருதுவோம். வானவில் நிறங்கள் ஏழு என்பதை நாம் அறிவோம். அவற்றில் நீலம், பச்சை, மங்சள், சிவப்பு முதலிய நிறங்களை நம்மால் எளிதாக காண (வானவில் தோன்றும் பொழுது) முடியும். இதற்கும், அளவிற்கும் என்ன தொடர்பு? என்ற வினா எழலாம்! நிச்சயமாக தொடர்பு உண்டு! ஆம், வானவில்லின் ஏழு நிறங்களும், சூரிய கதிரான வெள்ளொளியிலிருந்து பிரிகை அடைவதன் மூலம் உண்டாகின்றன. பொதுவாக, ஒளிக்கதிருக்கு அலைநீளம் என்ற பண்பு உண்டு. அதன் அடிப்படையில் ஒவ்வொறு நிற கதிருக்கும் ஒவ்வொறு அலைநீளம் இருக்கின்றது. உதாரணமாக, நீல நிற ஒளிக்கதிரின் அலைநீளம் 450 முதல் 495 நானோ மீட்டர் ஆகும். மங்சள் நிற ஒளிக்கதிரின் அலைநீளம் 570 முதல் 590 நானோ மீட்டர். சிவப்பு நிற ஒளிக்கதிரின் அலைநீளம் 620 முதல் 750 நானோ மீட்டராக இருக்கிறது. அதாவது, ஒளிக்கதிரின் அலைநீளத்தை சொன்னால், அக்கதிரின் நிறத்தை சொல்ல முடியும். இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், அளவினை சொன்னால், அதன் (நிறம் ஒரு பண்பாகும்) பண்பினையும் சொல்ல முடியும் என்பது தானே?

வாழ்விலும், ஒருவரது பேச்சின் அளவினை வைத்து அவரது பண்பினை கண்டறிவது சாத்தியம் தானே?

சரி, அளவு பண்பினை அறிய உதவுகிறதெனில், பண்புகள் அளவினை பொருத்து மாறுவதும் நிச்சயம் தானே? மேலோட்டமான உதாரணம் ஒன்றினை பார்போம். முதலில், பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியனவற்றை கருதலாம். இவற்றில் எதை குறித்து நாம் அஞ்சுவோம்? நிச்சயமாக வைரஸ் தானே? காரணம், அதன் தீங்கிழைக்கும் (நோயினை உண்டாக்க கூடிய) பண்பு! மேலும் பூஞ்சையும், பாக்டீரியாவும் உயிரினத்தில் சேர்ந்தவை. வைரஸோ, உயிருள்ளவையாகவும், உயிரற்றவையாகவும் செயல்பட கூடியது. இங்கும் அளவிற்கும் பண்பிற்குமான நெருங்கிய தொடர்பு உண்டு என்று கருதுகிறேன. அதாவது, பூஞ்சையின் (காலான்) உடல அளவு நம் கண்களுக்கு புலப்பட கூடியதே! பாக்டீரியாவின் அளவோ (செல்லின் விட்டம்) மைக்ரோ மீட்டர் வரம்புடையது. எனவே, வெற்றுக்கண்ணால், இவைகளை காண இயலாது. நுண்ணோக்கியின் வழியாக மட்டுமே இவைகளை காண முடியும். வைரஸ்களோ, நானோ மீட்டர் அளவில் இருக்கின்றன. பாக்டீரியாவை காட்டிலும் மீச்சிறியது வைரஸ். எனவே, நுண்ணோக்கியால் கூட வைரஸினை காண முடியாது! ஆக, பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸின் பண்புகள் மாறுவதை அறிகிற அதேவேலையில், அவற்றின் அளவும் சீறாக குறைந்து கொண்டே செல்வதை இங்கு சுட்டிகாட்ட விழைகிறேன். ஒருவேளை, வைரஸின் விந்தையான பண்புகளுக்கு அதன் மீச்சிறு அளவே கூட காரணமாக அமைந்திருக்கலாம்!

சரி, மேற்கண்ட உதாரணங்களின் மூலம் சொல்ல வந்த கருத்து எதுவென்றால், ‘அளவினை பொருத்து பண்புகள் மாறும்’ என்பது தான். இதன் அடிப்படையிலேயே, தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நானோ தொழிற்நுட்பம் செயல்படுகிறது. வாருங்கள், நானோ தொழிற்நுட்பம் பற்றிய சில அடிப்படை தகவல்களை இனி பார்போம்.

‘நன்னாஸ்’ (nanos) என்ற கிரேக்க சொல்லிலிருந்து ’நானோ’ என்ற சொல் பெறப்பட்டுள்ளது. ’நன்னாஸ்’ என்பதற்கு ’சிறிய’ அல்லது ‘குல்லமான’ (dwarf) என்று அர்த்தமாம். ஆக, நானோ என்பதற்கும் சிறிய அல்லது குல்ல என்பதே பொருள். சிறிய என்று சொன்னால், எந்த அளவிற்கு சிறியது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கான விடையாகவே, 10-9 (10ன் மடங்கு -9) என்ற எல்லையை விஞ்ஞானிகள் தந்தனர். எனவே, நானோ மீட்டர் என்பதற்கு 10-9 மீட்டர் என்பதே வரையறை ஆகும். அதாவது, ஒரு பொருள், ஏதேனும் ஒரு பரிமாணத்தில் ஒன்றிலிருந்து நூறு நானோமீட்டர் அளவுடையதாக இருந்தால் அதற்கு நானோ பொருள் (அளவில் மீச்சிறியதாக இருப்பதால் ‘பொருளை’ ‘துகள்’ எனக்கொள்க) என்று பெயர். நானோ பொருட்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் தொழிற் நுட்பத்திற்கு நானோ தொழிற்நுட்பம் என்று பெயர். எவ்வொறு தொழிற்நுட்பத்திற்கும் அறிவியலே அடிப்படையாக இருக்கிறது. எனவே, நானோ பொருளின் அறிவியலை நானோ அறிவியல் எனலாம்.

பொதுவாக, நானோ பொருட்களை பற்றி படிக்கும் பிரிவிற்கு ‘நானோவியல்’ (நானோ+இயல்) என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். ஆம், வேதிபொருட்களை பற்றி படிக்கும் பிரிவிற்கு வேதியியல் (வேதி+இயல்) என்றும், பொருளின் இயல்பினை பற்றி படிக்கும் பிரிவிற்கு இயற்பியல் (இயல்பு+இயல்) என்றும் அழைக்கப்படுகிறதே!

முன்னதாக அளவை பொருத்து பண்புகள் மாறும் என்பதை பார்த்தோம் அல்லவா? குறிப்பாக, நானோ மீட்டர் அளவுடைய பொருளின் பண்புகள், அதன் மைக்ரோ அல்லது அதற்கும் அதிகமான (மீட்டர் அளவில்) அளவினை காட்டிலும் பெருமளவு வேறுபடுகிறது. உதாரணத்திற்கு தங்கத்தை (gold) கருதலாம். பொதுவாக தங்கத்தின் நிறம் என்ன? என்று கேட்டால் மிளிரும் மஞ்சள் (சேர்க்கப்படும் சிறிதளவு உலோகத்தை பொருத்து மிதமான நிற வேறுபாடு இருக்கலாம்) என்று தானே சொல்வோம். ஆனால், தங்கம் சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறத்திலும் இருக்கிறது! ஆம், தங்கத்துகளை நானோ மீட்டர் அளவிற்கு குறைத்தால், இந்நிறங்களை பெறலாம். உதாரணமாக, தொண்ணூறு, என்பது, அறுபது, மற்றும் இருபது நானோமீட்டர் விட்டமுடைய தங்க துகளின் நிறம் முறையே, சிவப்பு, மஞ்சள், பச்சை, மற்றும் ஊதா நிறமாகும்.

மேலும், பெருத்த பருமனான (bulk state) நிலையிலிருந்து ஒரு பொருள் நானோ மீட்டர் அளவிற்கு கொண்டு செல்ல, அதன் மின்னாற் (electrical) பண்பு, காந்த (magnetic) பண்பு, வினையூக்க (ஒரு வினையின் வேகத்தை அதிகரிக்க கூடிய) பண்பு முதலிய பல வகையான பண்புகள் பெருமளவு மாறுபடுகின்றன. இத்தகைய விரும்பத்தகு பண்புகளை கொண்ட நானோ துகள்கள் பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, பெருத்த பரும நிலையை காட்டிலும், நானோ மீட்டர் அளவுடைய வெள்ளிதுகள்கள் மிகச்சிறந்த கிருமி நாசினி பண்பினை பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட வகை வைரஸை கொல்லும் கிராஃபின் ஆக்ஸைடு (கார்பனின் ஒரு வடிவம்) நானோதாள் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் அழுக்கு படியாத மற்றும் தீ பிடிக்காத ஆடைகள், சுயசுத்தம் செய்து கொள்ளும் வீட்டு வண்ண பூச்சுக்கள் (self-cleaning paint), புற்று நோய் சிகிச்சையில் பயன்படும் நானோ மருந்துகள் உள்ளிட்ட எண்ணற்ற பயன்களை நானோ மீட்டர் அளவுடைய பொருட்களால் பெறமுடிகிறது.

சரி, நானோ தொழிற்நுபத்தின் தொடக்கம் எது? என்று கேட்டால், பொதுவாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் என்றே கூறலாம். காரணம், 1959 ஆம் ஆண்டு, புகழ் பெற்ற அமெரிக்க நாட்டு இயற்பியல் விஞ்ஞானியான இரிச்சர்ட் ஃபெயின்மன் (Richard Feynman) அவர்களின் ‘There’s Plenty of Room at the Bottom’ என்ற தலைப்பிலான உரையில், நானோ அறிவியலுக்கான விதையை தூவினார். பின்னர், 1974 ஆம் ஆண்டு, டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியான நோரியோ டானிகுச்சி (Norio Taniguchi) அவர்களால் தான் நானோ தொழிற்நுட்பம் (nanotechnology) என்ற சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக வளர தொடங்கிய இத்தொழிற்நுட்பமானது, 1980 களில் தனிப்பொரும் துறையாக எழுர்ச்சி பெற தொடங்கியது. இதற்கு காரணம், இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளே! ஒன்று ’ஸ்கேனிங் டனலிங் மைக்ரோஸ்கோப் (Scanning Tunneling Microscope) எனப்படும் மீநுண்ணோக்கியாகும். இக்கருவியின் மூலம், அணுக்களையும் பார்க்கலாம்! இரண்டாவது ‘அட்டாமிக் ஃபோர்ஸ் மைக்ரோஸ்கோப்’ (Atomic Force Microscope) எனப்படும் மற்றுமொறு கருவியாகும். இக்கருவிகளே, புதிய நானோ உலகை படைக்க அடிகோலின. ஆம், ஆடை, உணவு பாதுகாப்பு, அழகுசாதன பொருட்கள், கண்ணாடி, மருந்து, உள்ளிட்ட பல பொருட்களிலும் நானோ தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இன்றளவில் ஏறக்குறைய எல்லா துறைகளிலும் நானோ தொழிற்நுட்பம் தனது முத்திரையை பதிக்க தொடங்கியுள்ளது.

மேற்கண்டவாறு, இன்றைய நவீன நானோ தொழிற்நுட்பத்தின் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற பொழுதிலும், இத்தொழிற்நுட்பம், பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆம், கி.மு. பதின்மூன்று மற்றும் பதிநான்காம் நூற்றாண்டுகளிலேயே, உலோக நானோதுகள்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேலும், ஜன்னல் கண்ணாடி கதவுகளில் சிவப்பு நிற தாமிர ஆக்ஸைடு நானோதுகளும் பயன்படுத்தபட்டு வந்திருப்பது கண்டுபிடுக்கப்பட்டுள்ளது.

பழங்கால நானோதொழிற்நுட்பத்திற்கு அடையாலமாக லைகர்கஸ் கண்ணாடி கோப்பையை (Lycurgus Cup) சொல்லலாம். நான்காம் நூற்றாண்டை சார்ந்த ரோம நாட்டு கலைபடைப்பான இக்கோப்பை இரு வண்ணங்களில் (dichroism) காட்சியளிக்க கூடியது. அதாவது கோப்பையின் உள்ளிருந்து வெளியே ஒளியை பாய்ச்சும் பொழுது, அக்கோப்பை சிவப்பு (அல்லது ரூபி நிறம்) நிறத்தில் தெரியும். அதுவே, வெளியிலிருந்து ஒளியை கோப்பையின் மீது உமிழ, கோப்பை பச்சை-மஞ்சள் நிறத்தில் தெரியும். இதற்கு காரணம், இக்கோப்பையில் மிகச்சிறிதளவு தங்கம் மற்றும் வெள்ளி நானோதுகள்கள் சேர்க்கப்பட்டிருப்பது தான் என தெரியவந்துள்ளது. பழங்கால நானோதொழிற்நுட்பதிற்கான இன்னும் பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நவீன நானோ தொழிற்நுட்பம் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

••••