Category: இதழ் 130

வேதாளம் ( சிறுகதை ) / சைலபதி

download (15)

நீளமான கயிறை மரக்கிளையில் போடமுயன்றான் கதிர். கயிறு நழுவிக் கீழே விழுந்தது. வெறுப்புடம் மீண்டும் எடுத்துக் கிளைநோக்கி வீசினான். ‘டேய், யார்…றா நீ…’ என்று குரல் எழுந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான்.

யாரையும் காணோம். குரல் நிச்சயம் கேட்டது. யாரோ தொலைவில் இருந்து அழைக்கிறார்களாக இருக்கும். அல்லது அப்படி யாரேனும் அழைத்துத் தன்னை நிறுத்தவேண்டும் என்ற மனதின் எண்ணமாகக் கூட இருக்கலாம்… தயங்குகிற ஒரு நொடியில் சுயஇரக்கம் பிறந்துவிடும். பேசாமல் நீ கயிறைப் போடு. கதிர் நீளமான கயிறைக் கிளையில் வீசினான்.

தாலிகட்டும்போது இதே முடிச்சுதான் போடுகிறார்களா…

“டேய், யார்றா, நீ, ஊருக்குள்ள ஒரு மரம் கொப்பும் கிளையுமா இருக்கக்கூடாதே, ஆளாளுக்குக் கயித்தை எடுத்துக்கிட்டு வந்திர்றீங்க தற்கொலை பண்ணிக்க. டேய் நிறுத்துடா.”

குரல் மேலிருந்து வந்ததுபோல இருந்தது. நிமிர்ந்து பார்த்தான். ஒரு நொடி மூச்சு நின்றுவிட்டது. மரத்தின் உச்சாணிக்கிளையில் அவன் இல்லை இல்லை அது தொங்கிக்கொண்டிருந்தது. பாதிரியார் அங்கியைத் தலையில் இருந்தே போட்டுக்கொண்டதுபோல உருவம். அதற்கு முகம் இருக்கிறதா தெரியவில்லை. மேசையில் இருந்து காற்றில் ஆடி ஆடிப் பறந்து கீழேவிழும் காகிதமாய் இறங்கியது.

ஏண்டா, ஊருக்குள்ள ஒரு மரத்த விடமாட்டேங்கிறீங்களேடா, மரம் வாழ்றதுக்கான அடையாளம், சாக இல்லை. ஆமா, நீ சாகத்தான வந்த, நான் மட்டும் சத்தம் கொடுக்கலைன்ன்னா இந்நேரம் நீயும் இப்படிக் காத்துல ஆட ஆரம்பிச்சிருப்படா. உயிர்மேல இவ்வளவு ஆசை இருக்கு, அப்புறம் ஏன் இந்த பயம்”

கதிருக்கு உதடுகள் ஒட்டிக்கொண்டு நடுங்கியது. தொடைகள் நிலைகொள்ளவேயில்லை. பேய் சொல்வதைக் கேட்டு அவனுக்கு அவமானமாக இருந்தாலும் பயத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பேய் மெல்ல மெல்ல ஒரு மனிதனைப் போல உருவம் மாறியது. பார்க்க நல்ல வாலிபபையனின் தோற்றம் அது. கண்களில் அப்படி ஒரு மினிமினுப்பு. கதிர் அந்தக் கண்களைக் காணக் காண அவனின் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

“என்ன ஆச்சுன்னு சாகவந்துட்ட… வாழ்ற வயசுடா. அப்படி என்ன பிரச்சனை உனக்கு?”

பேயின் குரல் அத்தனை கனிவானதாக மாறியிருந்தது. உண்மையில் இது பேய் இல்லை. யாரோ மனிதன் தான். நாம் எல்லாவற்றையும் மரணத்தோடு தொடர்பு படுத்திப் பார்த்துக் குழம்பிக் கிடக்கிறோம். அந்தக் கனிவும் குழைவும் நடுக்கம் தளர்த்தி அழுகையை வெடிக்கச் செய்தது. காற்று தள்ளிக்கொண்டு போகும் மழைபோல அப்படி ஒரு சடசட அழுகை. சில நொடிகளில் மழை நின்றுவிட்டது. ஆதரவான அந்த நண்பனை கதிர் ஏறெடுத்துப் பார்த்தான். அவன் முகம் அத்தனை அமைதியாய் இருந்தது.

“அண்ணே, நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன். அவ என் லவ்வ ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா. இனி நான் வாழ்றதுல என்ன அர்த்தம் இருக்கு? அதான் சாவலாம்னு நினைச்சேன். நீங்க வந்து காப்பாத்திட்டீங்க” மீண்டும் சிறு சடசட தூரல்.

“அடப் பாவி, லவ்வுக்காகவா உயிரவிடத் துணிஞ்ச? அதுவும் உன்ன லவ் பண்ணாத பொண்ணுக்காக. தம்பி, நம்மள லவ் பண்ணலைன்னா உயிர விடுறதும் தப்பு, உயிர எடுக்கிறதும் தப்பு.”

கதிருக்குக் கோபம் வந்தது. யாரிடம் சொன்னாலும் இப்படிக் கிண்டல் அல்லது அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

“உங்களுக்கு என்னங்க தெரியும் லவ்வப் பத்தி. உண்மையா லவ் பண்ணியிருந்தா அதோட கஷ்டம் தெரியும்”

அந்த நண்பன் உதடுகளைச் சுழித்துச் சிரித்தான். “நீ சொல்றது சரிதான் தம்பி. காதலுக்காக உயிரைக்கூடத் தரலாம் தான். ஆனா அது இப்படியில்ல. வா நான் உனக்கு ஒரு கதை சொல்றேன். அப்படியே நடந்துகிட்டே பேசலாம். இன்னும் எதுக்கு அந்தக் கயிறப் பிடிச்சிகிட்டே இருக்க கருமத்தத் தூக்கிப் போடு.”

கயிறைத் தூர எறிய மனமில்லை. இருநூறு ரூபாய்க்கு வாங்கியது. கீழே போட்டுப்போனால் யாராவது எடுத்துப் போய்விடலாம். அவன் கயிறைச் சுருட்டி மரத்தின் அடியில் போட்டு அதனை மண்போட்டு மூடிவைத்துவிட்டு வந்தான்.

“என்னப்பா திரும்பிவரும்போது நான் கூட இல்லைன்னா தொங்க வசதியாயிருக்கும்னு மறைச்சு வச்சிட்டு வர்றியா” என்று கேட்டான் நண்பன்.

“அதெல்லாம் இல்லைண்ணே, நான் ஏதோ வேகத்துல முடிவு பண்ணினது. இனி அப்படி நினைக்க மாட்டேன். நீங்க ஏதோ கதை சொல்றேன்னு சொன்னீங்களே…”

“அடப்பாவி, காதல விட சாவ விட காசுகொடுத்து வாங்கின அந்தக் கயிறைவிட உனக்குக் கதை ரொம்ப முக்கியமாப் போச்சா. சரி விடு. உலகத்துல நடக்கிறதெல்லாமே கதைதான். என்ன நிறையக் கதை ஒண்ணுபோல இருக்கும். கேட்டுக் கேட்டுச் சலிச்சிப் போயிருக்கும். ஆனா சில கதைகள் கேட்டா மனசவிட்டுப் போகவே போகாது. அது, நம்ம வாழ்க்கைல இப்படி நடக்கவே யில்லையேன்னு நாம பொறாமைப் படுற கதையா இருக்கும் இல்லை இத மாதிரி நம்ம எதிரி வாழ்க்கைல கூட நடக்கக்கூடாதுன்னு நாம பயப்படுற கதயா இருக்கும். அப்படி ஒருகதையத்தான் எல்லாரும் கேக்கவும் சொல்லவும் ஆசைப்படுறோம். நான் சொல்லப்போற கதைகூட அப்படி ஒரு கதைதான்”

அந்த நண்பன் கதிரின் முகத்தைப் பார்த்தான். கதிர் கதைகேட்கும் ஆர்வத்தில் இருந்தான். நண்பன் கதிர் முகத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு எங்கோ தனக்குள் கிடக்கும் ஏதோ ஒன்றைத் தேடுபவன் போல பாவனை செய்தான்.

“எல்லோருக்கும் வயசுல காதல் வரும். ஆனா அதை எல்லாரும் வெளிப்படுத்தறதில்லை. ஊரு, உறவு சாதி சனம் இப்படி எவ்வளவோ விசயம் அதுல சம்பந்தப் பட்டிருக்கிறதால அவ்வளவு எளிதா யாராலையும் காதலைச் சொல்லிறவும் முடியாது, கேட்டிறவும் முடியாது, சம்மதிச்சிறவும் முடியாது. இந்தக் கதைல வர்ற பையனுக்கு ஆரம்பத்துல காதல் மேல அவ்வளவு நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. ஆனா அவன் ஒருநாள் பஸ்சுல ஒரு பொண்ணப் பார்த்தான். பாத்ததும் ஏனோ பிடிச்சுப் போச்சு. அவ அப்படி ஒண்ணும் பெரிய ரதி எல்லாம் இல்ல. சாதாரணமான ஒரு தாவணி, தலைல கொஞ்சமா பூ, எண்ண வச்சிப் படிய வாரின தலை, பௌடர் கிவுடர் எதுவும் இல்லை, அவ்வளவுதான். அட, அதுவே என்ன அழகுங்கிற. அந்தப் புள்ள ஆரம்பத்துல இவனக் கவனிக்கவே இல்லை. ஏதோ நினப்புல இவன் பக்கமாத் திரும்பி இவன ஒரு பார்வை, அதுவும் இவன் கண்ணையே பாக்கிறமாதிரி ஒரு பார்வை, அதுவும் ஒரு நொடி பாத்தா பாரு, ஒரே வெட்டுல ரெண்டு துண்டாகிறமாதிரி ஆகிப் போச்சு அவனுக்கு…”

“ஆமாமா. அதான் காதல்…” என்று கதிர் சிரித்தான்.

“அவளுக்கு எப்படின்னு தெரியல. அவ மறுபடி இவனப் பாக்கவேயில்ல. ஆனா இவனுக்கா கிறுக்காகிப் போச்சு. மறுநாளும் மறுநாளும் அதே பஸ்சுல வர்றா, இவனும் பாக்கிறான். முதல்ல மொறைச்சா, அப்புறம் பதிலுக்குப் பாத்தா, சில நாள்ளையே சிரிக்க ஆரம்பிச்சிட்டா. இது போதாதா பசங்களுக்கு. ஒருநாள் அவளத் தனியா சந்திச்சுத் தன் காதலச் சொன்னான்”

ஒரு கணம் பேச்சை நிறுத்தினான் நண்பன். கதிர் அந்த ஆசுவாசத்தை ஆமோதிப்பவன் போல அமைதியானான். சில நொடி இடைவெளியில் மீண்டும் தொடர்ந்தான்.

“ஆம்பளைங்க காதலப் புரிஞ்சிக்கிறதுக்கும் பொம்பளைங்க புரிஞ்சிக்கிறதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. பசங்க, அவங்க நினைச்சா எல்லாத்தையும் சாதிச்சிற முடியும்ங்கிற ஒரு நாயகன் பாவனைல காதலிக்கிறான். காதலச் சொல்றான், கேட்கிறான். ஊரு உலகம்னு ஒண்ணு இருக்கிறதே அப்போ அவனுக்குப் புரியாது. ஆனா பொண்ணுங்க அப்படியில்ல. முதல்ல அவங்க வீட்டுல இருந்து ஆரம்பிப்பாங்க. வீட்டுல என்ன சொல்லுவாங்க. என்ன நடக்கும். இதுக்கு முன்னாடி வீட்டுல, ஊருல, சாதி சனத்துல இந்த மாதிரி விசயத்துக்கு எப்படி நடந்துகிட்டாங்க, எப்படி நடந்துப்பாங்கன்னு தான் யோசிப்பாங்க. நல்ல விதமா இருக்காதுன்னு தெரிஞ்சா முடிஞ்சவரைக்கும் ஆசையக் காதலா மாத்திக்காம அடக்கி வாசிப்பாங்க. அப்படி முடியாமப் போய் ஆசை காதலாயிருச்சுன்னா எந்த மயிருக்காகவும் அதை மாத்திக்கமாட்டாளுங்க. புரிஞ்சதா. இந்தப் பொண்ணும் அப்படித்தான். ஆரம்பத்துல ரொம்ப யோசிச்சா, ஆனா இவன் அழகும் அன்பும் அவள விடாம தொல்ல பண்ண அவனக் காதலிக்க முடிவு செஞ்சா. ஒருநாள் அவனத் தனியாப் பாக்கணும்னு சொல்லிவிட்டா, இவனும் போனான்”

சமவெளிகளில் காற்று ஏனோ தொடர்ந்து வீசுவதில்லை. அதற்கு சில நொடி இடைவெளி எப்பொழுதும் தேவையாய் இருக்கிறது.

மீண்டும் அவன் சொல்லத் தொடங்கினான்.

“நீயும் நானும் காதலிக்கிறதெல்லாம் சரி, இந்த சினிமால வர்றமாதிரி, நீ பின்னாடி வர்றது, எங்கையாவது மறிச்சு நின்னு பேசறது, சினிமா டிராமான்னு போறது எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. எனக்கும் அப்படியெல்லாம் லவ் பண்ணனும்னு ஆசைதான். ஆனா ஊருல எவனாவது பாத்துவச்சி எங்க வீட்டுக்கு விசயம் போச்சு, அவ்ளோதான் அன்னைக்கே தீயவச்சிக் கொளுத்திருவாங்க. சிரிக்காத, என்னைய மட்டுமில்ல உன்னையும் தான். அதனால மரியாதையா என்னைக்குக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லு, அன்னைக்கு இந்த ஊரவிட்டு ஓடிறலாம். இங்கயிருந்து ரொம்ப தூரமாப் போயிறலாம். யாரும் நம்ம வாசனைபிடிச்சு வந்துறக்கூடாது. அப்படி ஒரு ஊருக்குப் போயி நாம நிறைய லவ் பண்ணலாம், சந்தோசமா வாழலாம். இது சரின்னா சொல்லு, இல்லையா ஆளவிடு. எனக்கு உசிர்மேல ஆசை இருக்கு ராசா.”

“என்ன தம்பி கதை நல்லாப் போகுதா இல்ல போரடிக்குதா…” கதிர் சிரித்துக்கொண்டே “அண்ணே என்ன கேள்வி, நல்லாத் தான் போகுது. மேல சொல்லுங்க” என்றான்.

“இந்தப் பையந்தான் அவமேல பைத்தியமாக் கிடக்கானே, அவ சொன்னத யோசிச்சு ஒரு நாள், அவளக் கூட்டிக்கிட்டுக் கண்காணாத ஊருக்கு ஓடிட்டான். உண்மையில இவன் தான் அவளக் கூட்டிக்கிட்டு ஓடிட்டான்னு யாருக்கும் தெரியாது. ப்ரெண்ட்ஸுங்ககூட ஒண்ணும் விவரம் தெரியாமத் திண்டாடினாங்க. இதுங்க ரெண்டும் புது ஊருக்கு வந்து கோயில்ல தாலியக் கட்டிக்கிட்டு குடும்பத்த நடத்த ஆரம்பிச்சிடுச்சுங்க. அவன் அங்கையே ஒரு வேலையத் தேடிக்கிட்டான். அவ குடும்பம் நடத்தக் கத்துக்கிட்டா. ஜோடிக்கிளி ரெண்ட கூட்டுக்குள்ள போட்டா என்ன ஆகும்? ஒரே கூத்தும் கும்மாளமும் தான். இப்படி ஒருவருசம் இல்ல ரெண்டு வருசம் போயிருச்சு. ரெண்டு பேருக்கும் வீட்டு நெனப்பே அத்துப் போச்சு. கையில ரெண்டு காசு நேர்ந்ததும் ஒரு புள்ளையப் பெத்துக்கணும்னு திட்டம். அந்த நாள் கூட நெருங்கினாப்போலத் தான். இத்தனை நாள் கூடினதுக்கும் தங்களுக்கு சந்ததி வேணும்னு கூடுறதுக்கும் எத்தனை வித்யாசம் இருக்குன்னு ரெண்டுபேருக்கும் தெரிஞ்சது. ரெண்டு பேரும் ராத்திரியானா, கைகால அலம்பிகிட்டு நெத்தில துந்நூறு இட்டுக்கிட்டு ஒரு நிமிசம் சாமிபடத்துக்கிட்ட நின்னு கும்பிட்டுட்டுப் படுக்கைக்குப் போவாங்க. அந்த அளவுக்கு அவங்க சந்ததி நல்லா உருவாகணும்னு ஆசை. ம், ஆசைப் படுறதெல்லாம் அப்படியேவா நடந்திருது”

ரசித்துக் கொண்டிருக்கும் போதே கோலம் கலைகிறதைக் காண்கிறது போலக் கதிர் ஒருகணம் பதறினான்.

“அவளுக்கு நாப்பது நாள் தள்ளிப்போச்சு, அன்னைக்கு டாக்டர்கிட்டக் கூட்டிக்கிட்டுப் போகக் கிளம்பி வாசலுக்கு வந்தா… அந்தப் பொண்ணோட அண்ணனும் மாமனும் நிக்காங்க. ரெண்டு பேருக்கும் ஈரக்கொலையே ஆடிப்போச்சு. ரெண்டுபேரையும் ஊருகாடெல்லாம் தேடிக் கண்டுபிடிச்சிருக்காங்க. அவ அண்ணன்காரன் பார்வையே அத்தன கொடூரமாயிருந்தது. அவன் துள்ளப்போனான், அவ மாமம் அவன் கையப் பிடிச்சிட்டான். அவ மாமன்காரன் ஒரு சிரிப்பு சிரிச்சான். நரி ஆட்டைப்பாத்துச் சிரிக்கிறாமாதிரி ஒரு சிரிப்பு. ஆனா அவ அந்த சிரிப்புக்கு பதில் சிரிப்பு சிரிச்சா. ஏம் புள்ள, தூக்கிவளத்த எங்ககிட்டச் சொல்லாமக் கூட வந்துட்டியே தாயின்னு அவன் குரல் நடுங்கச் சொன்னதும் இவ அழுதுகிட்டே அவன் கால்ல விழுந்துட்டா. சரி சரி, எழுந்திரு தாயி உள்ளார போயிப் பேசுவோம். ஊரே நம்மளைத் தான் வேடிக்கை பாக்குதுன்னு சொல்லி உள்ளார வந்தாங்க. அவளுக்குக் கையும் ஓடல காலும் ஓடல. பின்ன தாய்மாமனும் கூடப் பொறந்தவனுமில்ல வந்திருக்காங்க. அவளுக்கு எல்லாம் மறந்துபோச்சு. இத்தனை வருசத்துல எல்லாம் எல்லாருக்கும் மறந்திருக்கும். போனது போகட்டும் மனுஷாளக் கண்ணால பாத்தாப் போதும்னு ஆயிருக்கும்னு நினைச்சா. ஆனா அவனுக்கு என்னமோ அவ்வளவு எதார்த்தமாப் படல. இவளா, அவனக் கூப்பிட்டு கறி எடுத்துட்டு வரச் சொல்றா விருந்துவைக்க. இவனுக்கா இவளத் தனியா விட்டுட்டுப் போக மனசு கேக்கல. ஏதேதோ சாக்கு சொல்லிகிட்டு அங்கையே நிக்கிறான். ஒருகட்டத்துல அவ நீங்க போறீங்களா இல்லை நான் போகவான்னு கேட்டா.

இதுதான் விதி போல. சரி நாமே போவோம்னு நினைச்சிக்கிட்டான். எதுக்கும் ஒரு வார்த்தையப் போட்டுப் பாப்பம்னு , ‘மாமா, மச்சான் கூட வர்றீங்களா, இந்த ஊரு சந்தை நல்லாயிருக்கும்னு’ சொன்னான். அவனுங்களுக்கு என்ன தோணிச்சோ சரின்னுட்டானுங்க. ‘நீ மசாலா அரக்கிட்டு சோத்த வை. அதுக்குள்ள வந்திர்றேன்னு கிளம்பினாங்க. ரொம்ப தூரம் நடந்தே வந்தாங்களே ஒழிய மூணு பேரும் ஒருவார்த்தை கூடப் பேசவேயில்லை.

இவனுக்கா மனசு கிடந்து அடிச்சுகிது. இவனுங்க எதுக்காக வந்திருக்கானுங்கன்னு தெரிஞ்சுக்கணும். நம்ம இடம் தெரிஞ்சுபோச்சு, இனி அவ்வளவு சாதாரணமா விடமுடியாது. ஒருவேளை நல்லமாதிரி மனசோட பிள்ளைய மன்னிச்சு ஏத்துக்கிட வந்திருந்தா… அது கடவுள் கிருபைன்னுதான் சொல்லணும். ஆனா இவனுங்களப் பாத்தா அப்படித் தெரியலை. சரி, எதுக்கு பயந்துகிட்டு நேருக்கு நேராப் பேசிருவோம்னு இந்தப் பையன் முடிவெடுத்தான்.

அவன் நினைப்பு சரிதானே, எவ்வளவுதான் பயப்படுறது உலகத்துல. கொஞ்சம் ஊருக்கு ஒதுக்குப்புறம் வந்தாச்சு. அவன் நின்னான். அவங்க ரெண்டு பேரையும் பாத்தான்.

‘தப்பா நினைச்சுக்கிடாதீங்க, எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சிருங்க’ன்னு கால்ல விழுந்தான். ‘அட என்னப்பா நீ எழுந்துக்கோ’ன்னு மாமங்காரன் இவனத் தூக்க முயற்சி செய்றான். ஆனா இவனோ ‘இல்ல எங்கள மன்னிச்சிட்டேன்னு சொன்னாத்தான் கால விடுவேன்’னு கதர்றான். மாமாவால காலப் பிடிச்சவனப் பிரிக்கமுடியல. திடீர்னு பாத்த அந்த அண்ணங்காரன் இவன எட்டி ஒரு மிதி மிதிச்சான். ஏண்டா, சாதிகெட்ட நாயே, யார்வீட்டுப் பொண்ணத் தூக்கிட்டு யார் கால்ல விழுந்து நடிக்கிற. ஊரவிட்டு ஓடிட்டா அப்படியே தலைமுழுகிட்டுப் போயிருவோம்னு நினைச்சியா. போன அன்னைல இருந்து தேடிக்கிட்டுதான் இருக்கோம். உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் பொலிபோடத் தாண்டா நாங்க வந்திருக்கோமே… ஊருக்கு வெளில எங்க ஆளுங்க இருக்காங்க, ஒரு போன் இப்போ போட்டப் போதும் ஊடு புகுந்து அவ கழுத்தை அறுத்துருவானுங்க. போடட்டா, சொல்லு போடட்டா…”

இதெல்லாம் யார் வாழ்க்கைலையும் வரக்கூடாது. தனியாப் பதியமாகி ரெண்டு இலைவிட்டு பசபசன்னு வளர்ந்து தனக்குன்னு ஒரு பூவப் பூத்துக்கிட ஆசையா மொட்டுவிட இருக்கிறப்போ சூறாவளி வந்து வேரோட புடுங்கி எறிஞ்சா என்ன ஆகும் சொல்லு. அவனுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. கால்ல விழுந்து கதறினா இளகற இடத்துல அது பலிக்கும். கால்ல விழும்போது கழுத்த அறுக்கிற ஆட்கள்னா. எதாவது செஞ்சாகணும்னு இவன் மூளை வேலை செஞ்சது. சண்டைபோட்டு செயிக்கிறதெல்லாம் சினிமால தான். இப்பக்கூட ஒரு சொருகு சொருகிட்டா முடிஞ்சது கதை. இத்தனை நேரம் அதைச் செய்யாம வச்சிருக்கிறதே ஏதோ நல்லதுக்குதான். நாம பொழைக்கிறோமோ இல்லையோ அந்தப்பிள்ளையும் அவளுக்குள்ள வளர்ற பிள்ளையும் பொழைச்சாப் போதும்னு தோணிடுச்சு. இவன் அவங்க கிட்ட பேச ஆரம்பிச்சான்.

ஐயா, நாங்க பண்ணினது தப்புன்னு நினைச்சா என்னை என்ன வேண்ணா செய்யுங்க, அவள விட்டுருங்க. அவ வாயும் வயிறுமா இருக்கா…இதச் சொன்னதும் அவனுங்க ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க. அதுலையும் அவ மாமங்காரன் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டான்.

அதுக்காக உம்புள்ளையப் பெத்து நாங்க வச்சி சீராட்டணுமாடான்னு அவ அண்ணங்காரன் பாஞ்சு ஒரு மிதி மிதிச்சான். மாமங்காரன் அவனப் பிடிச்சிக்கிட்டான். பக்கத்துல இருந்த கல்லுல போய் உட்கார்ந்துகிட்டான். தலைய ஆட்டி ஆட்டி என்ன என்னமோ யோசிச்சான். அப்புறம் அண்ணன்காரன்கிட்ட எதையோ சொன்னான். ரெண்டு பேரும் இவன் கிட்ட வந்தாங்க.

‘இத பாரு. இது எங்க சாதிப் பிரச்சனை. இத இப்படியே விட்டா நாளைக்கு வளர்ற சிறுசுங்களுக்கு துளிர்விட்டுப் போயிரும். அதனால எதாவது செஞ்சுதான் ஆகணும். நீ சொல்றதக் கேட்டாலும் மனசு ஏதோ பண்ணுது. ஒண்ணு பண்ணு, நீ தற்கொலை பண்ணிகிட்டு செத்துப் போய்டு. நாங்க எங்க பிள்ளையக் கூட்டிக்கிட்டுப் போய்டுறோம். பயப்படாத எங்க சாதில வாக்குக் கொடுத்தா உசுரையும் கொடுப்போம். ஒண்ணு நீ செத்து அவள வாழவை. இல்லையா ரெண்டு பேரையும் கொன்னுட்டு நாங்க ஜெயிலுக்குப் போகத் தயாராத்தான் வந்திருக்கோம்’

அந்த ஆள் தன் இடுப்பிலிருந்து ஒரு வளைந்த கத்தியை உருவினான். இவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு புறம் புலி மறுபுறம் பாம்பு என்று ஒரு கதை உண்டே அப்படி ஆகிப் போச்சு. இவங்ககிட்டப் பேசி சமாதானப் படுத்த முடியாதுன்னு தெரிஞ்சுபோச்சு. அவன் அவங்களக் கையெடுத்துக் கும்பிட்டான். கண்ணெல்லாம் தண்ணிகட்டிகிருச்சு. ‘ஐயா, எனக்கு வேற வழி தெரியலை. நான் செத்துருர்றேன்னு. நீங்க அவள நல்லபடியா வச்சிப்பீங்களா’ என்றான். அந்தப் பெரியவர் அவன் கிட்ட வந்தார்.

‘டேய், நீ ரொம்ப நல்லவனா இருக்க. ஆசப்பட்ட பிள்ளைக்காக உசுரைக்கூடத் தர்றேங்க. நல்லவந்தான் நீ.’ சொல்லி அவன் முதுகிலத் தட்டிக்கொடுத்தார். இவனுக்கு லேசா ஆசை முளைவிட்டது. ஒருவேளை நம்ம மன்னிச்சிட்டாரோன்னு. ஆனா அவரு அடுத்த நொடி,

‘நீ நல்லவந்தான் ஆனா என் சாதிக்காரன் இல்லாமப் போயிட்டியே என்ன பண்றது. நீ சொன்னமாதிரி செத்துரு. நான் வாக்கு கொடுத்தபடி அவளக் கண்கலங்காம வாழ வைக்கிறேன்’ எப்படி ஒரு மனுசனால இன்னொரு மனுசன செத்துருன்னு உண்மையான அர்த்தத்துல சொல்ல முடியுமோ தெரியல. அவரு சொன்னாரு. அதுல அவருக்குக் கொஞ்சமும் தடுமாற்றமில்லன்னு அவர் குரல்ல தெரிஞ்சது.

எப்ப சாகணும்னு அவங்களையே கேக்கலாமன்னு நினைச்சான். ஆனா அதுல அர்த்தம் இல்லைன்னு தெரியும். அதனால எப்படிச் சாகிறதுன்னு யோசிச்சான். சரியா இன்னும் பத்து நிமிஷத்துல எக்ஸ்பிரஸ் ரைல் அந்தப் பக்கம்தான் போகும். அதுதான் சரி. இவன் பேசாம நடந்தான். தண்டவாளம் வந்தது. அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தள்ளியிருந்த கல்லுல உக்கார்ந்துகிட்டாங்க. ஏதோ விளையாட்டை வேடிக்கை பார்க்கிற தோரணை ரெண்டு பேருக்கும் இருந்தது.

தாமதம் இல்லாமல் ரயில் குறித்த நேரத்தில் வந்தது. தண்டவாளத்தை ஒட்டியே நின்னுகிட்டிருந்தான். ரயில் நெருங்கவும் அவனுக்கு அவ நினைவு வரவும், அவ நல்லாயிருக்கணுமேன்னு நினைச்சு, அவ பேரச்சொல்லி, “என்னை மன்னிச்சிரும்மா” என்று சொல்லியபடி ரயில் மீது மோதினான்…

கதிர் அப்படியே நின்றுவிட்டான். அவன் மேல் ரயில் மோதியதுபோல இருந்தது. உடலிலும் உள்ளத்திலும் அப்படி ஒரு பாரம் ஏறிவலித்தது. இந்த உணர்வுதான் மரணம் என்று தோன்றியது. ‘சே’ என்று சத்தமிட்டுக் காறி உமிழ்ந்தான்.

அந்த நண்பன் கதிரினை ஆதரவாகப் பற்றிக்கொண்டான்.

“விடு நண்பா, எல்லாம் விதி. அவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.” கதிரால் அவ்வளவு எளிதாகச் சமாதானம் ஆகமுடியவில்லை. அந்த நண்பனையே உற்றுப் பார்த்தான். அவன் கண்களில் ஒரு தெளிவு இருந்தது. அப்படி ஒரு அமைதியான கண்களை அவன் வாழ்வில் கண்டதேயில்லை. வாழ்வின் துயரங்களைக் கடந்தவிழிகள் அவனுடையது. அவன் அபூர்வமாக இமைக்கிறான் அல்லது இமைக்கவேயில்லை. கதிருக்குப் புரிந்து போயிற்று. நீதானா அது? காதலுக்காகத் தன் உயிரை விசிறி எறிந்த அந்த வீரன் நீதானா நண்பா… என்று கேட்கவேண்டும் போல் இருந்தது. ஆனால் அதைக் கேட்டுத்தான் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் இல்லை. தன் கைகளைப் பற்றியிருப்பது ஓர் ஆன்மா என்று தெரிந்தபின்னும் கதிருக்கு அந்தக் கைகளை விடுவித்துக்கொள்ள மனம் இல்லை.

“நண்பா, நீ பெரிய வீரன். காதலுக்காக உயிரக்கொடுக்கணும்னு நீ சொன்னதோட அர்த்தம் இப்போத்தான் புரியுது. நீ செத்து அவள வாழவச்சிட்டியே”

அந்த நண்பன் கண்கள் மெல்லக் கலங்கின.

“இல்லை நண்பா, இல்லை. நான் சொன்னதோட அர்த்தம் அது இல்லை. அங்க பாரு” என்று ஒரு வீட்டைக் காட்டினான்.

வாசலில் தலைவிரிகோலமாய் ஒரு பெண் அவள் அருகிலேயே ஒரு சிறுபிள்ளை மண்ணை அள்ளிவிளையாடிக் கொண்டிருந்தது. உள்ளிருந்து ஒரு கனத்த சரீரமுள்ள ஒரு அம்மா வந்தாள்.

“அடப் பைத்தியமே, பிள்ளைய மண்ணத் திங்கவிட்டுட்டு கல்லுமாதிரி உக்காந்திருக்க பாரு. இதெல்லாம் மெண்டல் ஆஸ்பத்திரில சேக்காம வீட்டுல வச்சு உசுர வாங்குறாங்க. இதுக்கெல்லாம் ஒரு சாவு வராதா…” என்று திட்டியபடியே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போனாள். அது பற்றிய பிரக்ஞையே அவளிடம் இல்லை.

“அவன் செத்த அதிர்ச்சில அவளுக்கு சித்தம் கலங்கிப் போச்சு. யார் நல்லா வாழணும்னு செத்தானோ அவ வாழவே இல்லை. இப்படித் தட்டுப்பட்டுச் சீரழிவான்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே அவனுங்கள்ள எவனையாவது கொன்னுட்டு செத்துருக்கலாம். காதல் சாகிறதுன்னா போராடிச் சாகணும். யாருக்கும் தெரியாம அழுதுகிட்டு சாவறதெல்லாம் காதல் கணக்குல வராது. அப்புறம் வேப்பமரத்துலையும் புளியமரத்துலையும் பேயா உட்கார்ந்து காலம் முழுக்க இப்படி வேடிக்கை பார்த்து அழுது தீர்க்கணும். புரிஞ்சுதா?”

shylapathy@gmail.com

Mob 97899 92848

இசையமைப்பாளர் ஆர்.கோவர்தனத்திற்கு இசைஅஞ்சலி / கலாப்ரியா

இசை அமைப்பாளர் கோவர்தனம்

இசை அமைப்பாளர் கோவர்தனம்

பனி மூடிய இசைமலைகள்
”சாஞ்சா சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆடுகளா- உங்க
சாயம் வெளுத்துப் போகும் பழைய ஏடுகளா”

என்று ஒரு பாடல் உண்டு ரம்பையின் காதல் படத்தில், தஞ்சை ரமையாதாஸ் எழுதினது என்று நினைவு. சினிமாவிலும் அப்படித்தான். ஒரு நடிகனோ நடிகையோ நடித்து படம் வெற்றி பெற்று விட்டால் அவர்கள் பின்னாலேயே போவார்கள். நடிகர் நடிகை மட்டுமல்ல, இசையமைப்பாளர்கள் கதையும் அப்படித்தான். பா(ட்)டும் அப்படித்தான் என்று சொல்ல வேண்டும். கே.வி.மகாதேவன் இசை அமைத்த ஒரு படம் நன்றாக ஓடி விட்டால அவர் பின்னாலேயெ செல்வார்கள். விஸ்வநாதன் ராம மூர்த்தி படம் வெற்றி பெற்றால் அவர் பின்னால் படையெடுப்பார்கள் படத் தயாரிப்பாளர்கள். நீண்ட காலத்திற்குப் பின் எம்.ஜி.ஆரின் பணத்தோட்டம் படத்திற்கு மறுபடி இசை அமைத்தார்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தி இருவரும். அதிலிருந்து அவர்களை அதிகம் நாடிச் சென்றார்கள் எம்.ஜி.ஆர் படத் தயாரிப்பாளர்கள்.

பெரும்பாலும் தமிழ்த் திரை ரசிகர்கள், கோவர்த்தனம் அவர்களை விஸ்வநாதன் ராம மூர்த்தியின் உதவியாளராகவே அறிவார்கள். அவர் ஏ.வி.எம்.நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர் சுதர்சனத்தின் சகோதரர் ஆனாலும் கூட ஏ.வி.எம் மின் பல படங்களில், சுதர்சனத்தின் உதவியாளராகக் கூட அவர் பெயர் வராது. விஸ்வநாதன் ராம மூர்த்தியின் உதவியாளரான ஜி.கே. வெங்கடேஷ் பிரிந்து கன்னடத் திரையுலகில் பிரபலமானதும் கோவர்த்தனம் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் தனியேயும் இசை அமைத்திருந்தார்.

அவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்றாலும், கன்னடம், தமிழ் இரண்டும் நன்றாகவே தெரியும். கன்னடம், தமிழ் தெலுங்கு என மும்மொழிப் படமாக வந்த ’ஜாதகம்’ படமே அவருக்கு முதல் படம். இந்தப் படத்தைத் தழுவியே பின்னாளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘செல்வம்’ படம் வந்தது என்பார்கள். ஜாதகம் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடும் “ மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்” பாடல் பிரபலமானது. https://www.youtube.com/watch?v=HqK26OK_dLE

இதில்த்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகிறார். “சிந்தனை ஏன் செல்லமே..” என்ற தனிப்பாடலும், ”கண்ணுக்கு நேரே மின்னலைப் போலே…. “ என்று ஜானகியுடன் பாடும் பாடலும் பிரபலம். (ஜாதகம் சிலருக்கு சாதகம் அது சரியில்லேன்னா பாதகம் என்றும் ஒரு பாடல் உண்டு என்று நினைவு).

ஏ.வி.எம். பட்டறையிலிருந்து தயாரான, இயக்குநர், எடிட்டர், கே.சங்கருடன், ஸ்டுடியோ நிர்வாகியான வாசு மேனன் இணைந்து, வாசு ஸ்டுடியோ என்று புதிதாக ஆரம்பித்து,முதன் முதலாக ’ஒரே வழி’ என்ற படம் தயாரித்தார்.அதற்கு இசை கோவர்த்தனம். அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம்…” https://www.youtube.com/watch?v=O0lNCQEtJ1c&list=RDO0lNCQEtJ1c&t=16 .

இந்தப் பாடல் அப்போது சிலோன் வானொலியில் ஒலிக்காத நாளே இருக்காது. இதன் வெற்றிக்குப் பின் வாசு மேனன், சங்கர், கோவர்த்தனம் கூட்டணியில் ”கை ராசி” வெளி வந்தது. 1960 தீபாவளிக்கு, மன்னாதி மன்னன், பாவை விளக்கு, பெற்ற மனம், யானைப்பாகன் ஆகிய படங்களுக்கு எதிராக வந்து சக்கைப் போடு போட்டது. சங்கர் ராசியான இயக்குநர் ஆனார்.

இதே வாசு மேனன் பின்னாளில் தயாரித்த “ பூவும் பொட்டும்” பிரமாதமாக எதிர் பார்க்கப்பட்ட படம். ”எண்ணம் போல கண்ண வந்தான் அம்மம்மா”, ”நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்”, போன்ற பாடல்கள் அற்புதமாக இருந்தும் படம் வெற்றி பெறவில்லை. சங்கர் இயக்க மறுத்து தாதா மிராஸி இயக்கினார் என்பார்கள்.கே.சங்கரின் தம்பிகளான கே.நாரயணன், கே.சங்குண்ணி ஆகியோர் எடிட்டிங் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை.

கே.சங்கரின் தம்பி கே.நாராயணன் இயக்கிய படங்களில் கொஞ்சம் நன்றாக ஓடிய படம் வரப்பிரசாதம். இதற்கு இசை கோவர்த்தனம். “கங்கை நதியோரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை மெள்ள நடந்தாள்…” என்கிற புலமைப்பித்தனின் அழகான பாடலுக்கு பிரமாதமான டியூன் போட்டிருப்பார். படமும் நன்றாக ஓடியது. வாசு பிலிம்ஸின் அஞ்சல்பெட்டி 520 படத்திற்கும் கோவர்த்தனின் இசையமைப்பில் மிக மிக சிறப்பான பாடல்களும் பின்னணி இசையும் அமைந்தது ‘பட்டணத்தில் பூதம்” திரைப்படம். இது பிராஸ் பாட்டில் என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவல். ஜாவர் சீதாராமன் எழுதியது.

முதலில் கண்ணதாசன் தயாரிப்பதாக இருந்து கை விட்டு விட்டார். அவரது சிபாரிசின் பெயரிலேயே கோவர்த்தனம் இசை அமைத்தார். அவ்வளவு பாடல்களும் பிரமாதமானவை. எல்லோருக்கும் பிடித்த சிவரஞ்சனி ராகப் பாடலான. “ சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..” உட்பட அவ்வளவு பாடல்களும் பிரமாதமானது. படக்கதையையும் அப்போதைய (1967) சூழலுக்கேற்ப ஜேம்ஸ்பாண்ட் பாணியில் படமாக்கி இருப்பார்கள். ”எதிர்பாராமல் இருந்தாளோ இங்கு ஏன் வந்தாள் என்று நினைத்தாயோ….” என்ற பாடல் எனக்குப் பிடித்தமானது, குமுதம் விமர்சனத்திலும் இந்தப் பாடலை பாராட்டிய நினைவு. விஸ்வநாதன் ராம மூர்த்தியிடம் பணியாற்றிய சங்கர் –கணேஷ் தனியாக இசை அமைத்த போது அவை விஸ்வநாதன் ராம மூர்த்தியின் நகல்களாகவே இருந்தன. உதாரணம், “இதயவீணை”. ஆனால் கோவர்த்தனம் இசை அப்படி இல்லை. தனித்துவமானது.

விஸ்வநாதன் ராம மூர்த்தியுடன் இவர் இசை அமைத்த வெற்றிப் படங்கள் தெலுங்கிலும் கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்படும் போது அவற்றிற்கு கோவர்த்தனமே இசைப் பொறுப்பை முழுதுமாகப் பார்த்துக் கொள்ளுவார். போலீஸ்காரன் மகள், ராமு, களத்தூர் கண்ணம்மா (சுதர்சனம் இசை) போன்ற படங்கள் உதாரணம். இவை பெரும்பாலும் ஏ.வி.எம் நிறுவனத்திற்காகச் செய்யப்பட்டவை.

தன்னுடைய இசை அறிவின் மீது அபார நம்பிக்கை கொண்டதனால் பெரிய சமரசங்களுக்கு உடன்படாதவர். அதனாலும் அவரால் தனிப் பெரும் இசை அமைப்பாளராக வலம் வர முடியவில்லை. நாம் ஏற்கெனவே சொன்னது போல திடீரென்று திரையுலகில் வந்து விடுகிற ராஜாக்களும் சக்கரவர்த்திகளையுமே தயாரிப்பாளர்கள் தேடி ஓடி விடுவதால் கோவர்த்தனம் போன்ற இசை மலைகளைப் பனி மூடியே இருக்கிறது எப்போதும்.

•••••

இன்பக் காதல் இசை பாடியதும் நீயே அன்றோ? – ( திரையிசை மேதை சேலம் R. கோவர்தனன் நினைவு அஞ்சலிக் கட்டுரை ) – சத்தியப்பிரியன்

இசை அமைப்பாளர் கோவர்தனம்

இசை அமைப்பாளர் கோவர்தனம்

.

18-09-2017 அன்று மறைந்த திரையிசை மேதை சேலம் R. கோவர்தனன் நினைவு அஞ்சலிக் கட்டுரை

இசையமைப்பாளர் R.கோவர்த்தனம் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளரான R. சுதர்சனத்தின் சொந்த சகோதரர் ஆவார். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் நெடுநாட்கள் உதவியாளராக இருந்து பட்டணத்தில் பூதம் , கைராசி, வரப்பிரசாதம் போன்ற படங்களில் பல இனிமையானப் பாடல்களைக் கொடுத்தவர். சேலத்த்துக்காரர். என்ன காரணமோ தெரியவில்லை இவரால் ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளராகப் பரிணமிக்க முடியவில்லை. கோவர்தனம் தனது தந்தை ராமச்சந்திர செட்டியார் மூலமே இசையைக் கற்றுக் கொண்டார். மூன்று மொழிகளில் நல்ல பரிச்சயம் உள்ளவர். தமிழ், தெலுங்கு, கன்னடம். இதன் காரணமாகவே இவருடைய முதல் திரை இசை மூன்று மொழிகளில் வெளியான ஜாதகம் என்ற படத்தின் மூலம் நிகழ்ந்தது. பிருமாண்ட ஆரம்பம் என்றாலும் அதன் பின்னர் அவர் வளர்ச்சி அப்படிச் சொல்லிக் கொள்ளும்படியில்லை. எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளராகத் தொடர்வது வசதியானது என்று இருந்து விட்டார் போலும். கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளிலும் சேர்த்து மொத்தம் ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருப்பார். ஆனால் ஒவ்வொரு படமும் இசையில் சொல்லிக்கொள்ளும் விதமாக அமைந்திருக்கும்.

S.ஜானகி ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தானப் பாடகியாக இவரால்தான் தேர்வு செய்யபப்ட்டார்.

எஸ்.ஜானகியை மட்டுமில்லை ஜெமினியின் பிரத்தியேகப் பின்னணிக் குரல் என்று பேசப்பட்ட பி.பி.ஸ்ரீநிவாசைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். ஜாதகம் என்ற தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்றிலும் பாடும் வாய்ப்பைப் பெற்ற பின்னர் பி.பி. ஸ்ரீநிவாஸ் தொட்ட உயரங்கள் எத்தனை எத்தனையோ.

இன்னும் ஒரு அற்புதமான அறிமுகம். தனது ஆரம்ப காலங்களில் இடதுசாரி மேடைகளில் இசையமைத்துக் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவைத் தனது உதவியாளராக இணைத்துக் கொண்டு அவரது முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தவர் கோவர்தனம் அவர்கள்தான். இதனை இளையராஜா எல்லா மேடைகளிலும் கூறுவார். வரப்பிரசாதம் என்ற திரைப்படத்தில்தான் முதன் முதலாக இளையராஜாவிற்கு கோவர்தனன் மூலம் டைட்டில் அந்தஸ்து கிடைத்தது. தன் வாழ்நாள் முழுவதும் திறமையுள்ளவர்களை ஏற்றிவிடும் ஏணியாகவே இருந்திருக்கிறார்.

கண்ணதாசனைப் போலவே மாயவநாதன் என்றொரு கவிஞர் ஒருவர் இருந்தார். சில பாடல்களைக் கேட்கும்பொழுது இந்தப் பாடலைக் கவிஞர் எழுதினாரா மாயவநாதன் எழுதினாரா என்று தோன்றும். கண்ணதாசனை அடியொட்டி எழுதியதாலோ என்னவோ தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொள்ளாமல் போகவே அந்தக் கவிஞரால் தனிப்புகழ் அடையமுடியாமல் போனது. இதே விபத்து விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரையும் அடியொற்றிய கோவர்தனத்திற்கும் நேர்ந்திருக்கும். பெரும்பாலும் இவர் எம்.எஸ். விஸ்வநாதனின் நிழலாகவே இருந்து செயல்பட்டவர்.

இவரது இசையில் வெளியான பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி பாடல் குறித்து ஒரு ரசமான சம்பவம் ஒன்று உண்டு. இதனைக் கண்ணதாசனே தனது எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அருமையான காபி ராகப் பாடல். கண்ணதாசன் காங்கிரசில் ஏன் அகில இந்திய அளவில் போற்றிய ஒரே தலைவர் காமராஜர் மட்டும்தான். காமராஜர் தலைவராக இருந்தார் என்பதனாலேயே காங்கிரசில் அங்கத்தினராக இருந்தார். ஆனால் உலகறிந்த கவிஞரின் குடிப்பழக்கம் அவருக்கு கட்சியில் பலத்த எதிர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஒரு சமயம் காமராஜர் கூப்பிட்டு,” கட்சியா? மதுவா?,’என்ற கேள்வியை எழுப்ப கவிஞர் பட்டென்று,”மது,’” என்று கூறிவிட்டார். அதன் பிறகு கர்மவீரர் கவிஞருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். கவிஞருக்கோ காமராசர் மீதிருந்த பற்று குறையவில்லை. மீண்டும் காங்கிரசில் சேரப் பிரியப்பட்ட நிலையில் தனது சொந்த முயற்சியில் பட்டணத்தில் பூதம் படத்தை எடுக்கத் தொடங்கினார். அதன் பிறகு அது வேறு ஒரு நிறுவனத்தின் கைக்குச் சென்று வீனஸ் பிக்சர்ஸ் இறுதியில் தயாரித்து வெளியிட்டது வேறு கதை. அந்தப் படத்தில் ஹீரோயின் கே.ஆர்.விஜயா ஹீரோ ஜெய்ஷங்கரை நினைத்துப் பாடுவதைப் போல ஒரு பாடலுக்கு கோவர்தனம் மெட்டு அமைத்திருந்தார். பல்லவியில் கவிஞர் ‘ அந்த சிவகாமி மகனிடம் தூது சொல்லடி. என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி?’ என்று கிட்டத்தட்ட காமராஜரை மனதில் நிறுத்தி கண்ணதாசன் எழுதிய பாடல். பாடலும், இசையும் மிகப் பிரமாதமாக அமைந்த பாடல் அது. பாடல் காமராஜருக்குப் போட்டுக் காட்டப்பட்டது. காமராஜர் தனது உதவியாளரைக் கூப்பிட்டு,” கவிஞரை வந்து கட்சியில் சேரச் சொல்லுங்க,”என்றாராம்.

கடித இலக்கிய மரபு என்றவொன்று தமிழ் இலக்கியத்தில் கிடையாது. நேரில் சொல்ல முடியாத பல விஷயங்களைக் கடிதத்தில் தெரிவிக்கும்பொழுது ஒருவித பயமற்ற அச்சமற்ற தெளிவான கருத்து வெளிப்பாடு உண்டாகிறது. இதற்கு முன்னோடி தமிழில் உண்டா எனப் பார்த்தால் தூது இலாக்கிய மரபு இருந்திருக்கிறது. விலங்கு , பறவை போன்ற வாய் பேச முடியாத ஜீவராசிகளிடம் தங்கள் எண்ண வெளிப்பாடுகளைச் சங்ககாலப் புலவர்கள் பாடல்களில் பதிவு செய்திருக்கிறார்கள். .

அவரது இசையில் 1960-ம் ஆண்டு வெளியான கைராசி படத்தின் பாடல் ஒன்றைக் கொஞ்சம் அலசுகிறேன்.

மடலெழுதும் பழக்கம் ஆதிகாலம் தொட்டே தமிழ் இலக்கியத்தில் இருந்து வந்திருக்கிறதா தெரியவில்லை. பாகவதத்தில் ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணருக்கு எழுதிய கடிதம் மிகப் பிரபலம்.அதே போல தமயந்தி நளன் நடுவில் கடிதப் போக்குவரத்து இருந்திருக்கிறது. காப்பியம் என்று எடுத்துக் கொண்டால் அனுமான் இராமனுக்கும் சீதைக்கும் நடுவில் ஒரு காகிதம் போலவும் ஒரு தொலைபேசிக் கருவி போலவும் ஒரு கூரியர் சேவகனைப் போலவுமே செயல்பட்டிருக்கிறான். கம்பர் அதன் காரணமாகவே அவனுக்கு சொல்லின் செல்வர் என்ற சிறப்புப் பெயர் வழங்கினார்.

தமிழில் கோவலனுக்கு மாதவி எழுதிய மடலும், சீவகனுக்கு காந்தருவதை எழுதிய கடிதமும் இலக்கியச் சான்றுகள். பெரியபுராணத்தில் இடம்பெறும் திருமுருகப் பாசுரங்களும் , மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பப் பாசுரங்களும் கடிதஇலக்கியங்களாகும். மிகச்சமீபமாக பாரதியார் எழுதிய சீட்டுக்கவிகள் சான்றாகும். பின்னர் இந்த இலக்கியமரபு கொஞ்சம் அரசியல் சாயம் பூசிக்கொண்டு அண்ணாவின் கடிதங்கள் , உடன்பிறப்பிற்குக் கருணாநிதி எழுதிய கடிதங்கள், மகள் இந்திராவிற்கு தந்தை ஜவஹர்லால் நேரு எழுதியக் கடிதங்கள் என்று உருமாறின.

இப்படிப்பட்டச் சூழலில்தான் கண்ணதாசன் தனது திரைப்படப் பாடல்களில் இந்தக் கடிதஇலக்கியத்தை அறிமுகப்படுத்துகிறார். கவிஞரின் உயிர்நாடியே தமிழனின் தலைமைப் பண்பான காதல் என்றாகும்பொழுது அவர் தனதுக் கடிதப்பாடலைத் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலேயே அமைக்கிறார். இது முற்றிலும் இலக்கியத்தில் தோய்ந்த பாடல். ஆயிழைஎன்ற சங்ககாலச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பார் கவிஞர் இந்தப் பாடலில்.

இது காட்சிப்படுத்துதலின் காலம். மேலும் திரைப்படம் என்பது பல்வேறு இலக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஊடகம். இதன் பல்வேறு காட்சிப்படுத்துதல்களின் கூறுகளை நமது சங்க இலக்கியப் பாடல்களில் காணலாம். உண்மைக்குப் புறம்பானவை என்று சீரிய இலக்கியவிமர்சகர்களால் தமிழ் திரைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப் படும்பொழுது இவ்வளவு தெளிவோடும் சிலநேரங்களில் அதீத கற்பனைவளத்தோடும் எழுதப்பட்டுள்ள சங்கப் பாடல்களையும் நாம் உண்மைக்குப் புறம்பானவை என்ற தராசில் வைத்துதான் அளக்கவேண்டியிருக்கும். எனவே திரைப்படங்களில் பாடல் காட்சிகள் என்பன தனியாகத் தோன்றினாலும் கவிஞர் கண்ணதாசன் போன்ற –போன்ற கிடையாது என் அபிப்பிராயத்தில் அவர் ஒருவர் மட்டும்தான்– சிலபாடல்களுக்கு நமது சங்ககால அந்தஸ்து வழங்கியிருப்பார்.

அப்படி ஒரு பாடல்தான் கைராசி படத்தில் இடம் பெற்றுள்ள அன்புள்ள அத்தான் என்று தொடங்கும் இந்தப்பாடல்.

கைராசி 1960ம் ஆண்டு வெளிவந்தத் தமிழ்த்திரைப்படம். ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம். இசை R..கோவர்த்தனம். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்.

தனது இளமைக்கால திரைப்படங்களில் ஒரு நவீன கதாநாயகன் அதிலும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திய கதாநாயகன் என்ற அந்தஸ்து ஜெமினி கணேசனுக்கு மட்டும் உண்டு. காதல் மன்னன் என்பது ஒரு குறும்புக்கார ரசிகன் இவருக்குக் கொடுத்த சிறப்புப் பெயர். இவரும் சரோஜாதேவியும். நடித்து ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான கல்யாணப்பரிசு அசாத்திய வெற்றியை ஏற்படுத்தி இளமை இயக்குனர் என்ற சிறப்புப் பெயரை ஸ்ரீதருக்குப் பெற்றுத் தந்தது. காதல் என்ற தனியாளுமையை தமிழ்ப்படங்களில் உண்டாக்கிய படமும் இதுவே. இதைப் பின்பற்றி உடனே நூறு திரைப்படங்கள் வருவது தமிழ்த்திரைப்படத் துறையில் இடம்பெறும் வாடிக்கையான ஒன்று. அப்படி உருவான திரைப்படம்தான் கைராசி. தன் வசதிக்கேற்ப இயக்குனர் திரைப்படத்தைக் கொண்டு போயிருப்பார். எது எப்படியோ அன்புள்ள அத்தான், காத்திருந்தேன் காத்திருந்தேன்,கண்ணும் கண்ணும் போன்ற சில கண்ணதாசனின் அற்புதப் பாடல்கள் இடம் பெற்றத் திரைப்படம் இது.

இந்தப்பாடலும் திரைப்படத்தை மீறிய பாடல். கவிஞர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் ஒரு திரைப்படத்தில் ஒரு திரைக்ககதைக்கு எழுதிய பாடல்களை எவ்வாறு இலக்கியமாகக் கருதுவது என்பதுதான்.. அப்படிப் பார்த்தால் மகாகவி தனது பாடல்களை தேசியம்,பக்தி,தத்துவம் என்று வைகைப்படுத்திப் பாடவில்லையா? அதில் பொதுத் தன்மை இல்லாமலா போயிற்று?

நிலவு வந்து உலவும் பூஞ்சோலையில் மலர்கள் உதிரும் பன்னீர் மரநிழலில் தன் காதலன் வேண்டிக்கொண்டான் என்று அவன் பிரிவாற்றாமையின் துயரை அவனிடமே அவள் விவரிப்பது போல் அதுவும் கடிதமொழியின் வாயிலாக விவரிக்கும் பாடல். சரோஜாதேவியின் இளமையும் இனிமையும்ததும்பும் வசீகர முகம் . ஒரு குளிர்நிழற் பூஞ்சோலையின் காட்சியமைப்பு. இரவுநேரத்திற்கான மிதமான் ஒளிப்பதிவு என்று பாடலின் ஆரம்பமே ரம்யமாக இருக்கும்.

அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்.

என்று குறும்பு ததும்பும் பாவத்துடன் காட்சியமைப்புக்கேற்பப்ப் பாட வேண்டிய கட்டாயம் பி.சுசீலா அவர்களுக்கு. அழகாகப் பாடியிருப்பார். ஆயிழை என்ற வார்த்தையின் அமைப்பிலேயே அந்தப்பாடலில் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் கவிஞர் திருப்பியிருப்பார். அந்த வார்த்தையை பி.சுசீலா பிரமாதமாக உச்சரித்திருப்பார்.

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்.

இங்கே தென்னவர் என்று குறிப்பிட்டது பாண்டியர்களை. பாண்டியர்களின் கையிலிருக்கும் வாளின் கூர்மையினைப் பற்றி பாடல் பாடல்களாக சங்க இலக்கியம் கூறும்.
பிரிவாற்றாமையைக் குறித்து திருவள்ளுவர் பல அருமையானக் குறள்களை எழுதியுள்ளார். அதில் ஒரு குறளில் நெருப்பு தொடும்போது சுடும் ஆனால் பிரியும்பொழுது சுடுவது காமநோய் ஒன்று மட்டுமே என்ற பொருளில் ஒரு குறள் உண்டு.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. என்கிறது அந்தக் குறள்.

வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா என்று கண்களை மிக நுட்பமாக திருவள்ளுவர் பாடியிருப்பார். வைரமுத்து இதையே
உன்னை வந்து பாராமல் தூக்கம் இல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே என்று எழுதியிருப்பார்.

எனவே தென்னவர் கையிலிருக்கும் வாளைப் போன்ற கண்கள் நீ வாராததால் உறங்கவில்லை என்கிறார் கவிஞர்.
பட்டியல் தொடர்கிறது.

மாலைப்பொழுது வந்து படைபோல கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்
ஆலிலைப் போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்.

மாலையோ அல்லது மணந்தார் உயிருண்ணும் வேலைநீ என்பார் திருவள்ளுவர்.

சிலநேரங்களில் கவிஞர் மீறும் சில அந்தரங்க இடங்கள் அதன் அகத்தன்மையின் உச்சத்தை அதன் கவிதைத்தனமை வென்றுவிடும் . அப்படிப்பட்ட வரிகள்தான் மேற்கூறிய வரிகள். நமக்குக் கிடைக்கும் சங்காலக் குறுந்தொகை போன்ற அகப்பாடல்கள் வெறும் ஏட்டு வடிவிலும் எழுத்து வடிவிலும் மட்டுமே. இங்கே கவிஞரின் பாடல்களுக்கு ஒரு நல்ல இசையமைப்பாளர் உண்டு. ஒரு நல்ல பாடகி உண்டு. அப்படியே கட்டிக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையல்லவா?

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்காணல் உற்று என்கிறார் வள்ளுவர்.

அதாவது தனது எல்லாவற்றையும் பறித்துச் சென்ற காதலனிடம் தன் கண்களையும் பறித்து செல்லுமாறு காதலி இதயத்திடம் விண்ணப்பிக்கிறாள். காரணம் காதலனைக் காண வேண்டுன்று கண்கள் அவளைப் பிடுங்கித் தின்கின்றனவாம். இதைத்தான் கவிஞர் இப்படிப் பாடுகிறார்.

பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே?
பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே?
கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
கண்ணா இனிநான் பொறுப்பதற்கில்லை.

இந்த வரிகளும் அதற்கு பி.சுசிலாவின் குயிலை வெல்லும் குரலும் பிசிறு தட்டாத உச்சரிப்பும் பாடலை அற்புதப் படுத்தி விடும்.

பொன்அணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும்
கைவளை சோர்ந்து விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிசொல்ல நேரும்.

என்ன அழகான வார்த்தைப் பின்னல்கள். என்ன அற்புதமான இசை. என்ன அற்புதமான குரல் வளம்.

கவிஞரின் இலக்கியத்தரமான பாடலை அதன்தன்மை மாறாமல் பி.சுசீலா பாடி ஓர் உயர்ந்த அந்தஸ்தை அளித்திருப்பார்.

கோவர்தன் இசையில் கொண்டாடப்பட வேண்டிய பாடல்.

இந்தப் பாடல் காலத்தால் அழியாத பாடல். அதேபோல இந்தப் பாடலுக்கு இசையமைத்த கோவர்தனத்தின் பெயரும் இந்தப் பாடல் இருக்கும் தோறும் நீங்காது இடம் பெறும்.

****

செஸ்லா மிலாஷ் கவிதைகள் ( போலந்து மொழி கவிதைகள் ) : Czeslaw Milosz ஆங்கிலம் : ராபர்ட் ஹாஸ் ,ராபர்ட் பின்ஸ்கி Robert Hass and Robert Pinsky. / தமிழ் : தி.இரா.மீனா

Czeslaw Milosz

Czeslaw Milosz

செஸ்லா மிலாஷ் [ Czeslaw Milosz 1911–2004 ] 1980 ல் போலந்து மொழி யில் இலக்கியத்திற்கான் நோபெல் பரிசு பெற்றவர்.கவிதை, நாவல்கள், கட்டுரைகள்,மொழிபெயர்ப்பு என்று பலதுறை பங்களிப்பாளர்.

எதிர்பார்ப்பு

நீ நம்பும் பொழுதில் நம்பிக்கை உன்னிடமிருக்கிறது

பூமி என்பது ஒரு கனவில்லை ஆனால் வாழும் சதை

அந்தக் காட்சி , தொடுவுணர்வு, பொய்யின்மை

அங்கு நீ பார்த்த எல்லாமும்

கதவிலிருந்து பார்க்கும் தோட்டம் போன்றது.

நீ நுழையமுடியாது.ஆனாலது அங்கிருக்கிறதென்று உனக்குத் தெரியும்

மிகத் தெளிவாகவும் தீட்சண்யமாகவும் பார்க்கமுடியும்

ஒரு புதிய வித்தியாசமான மலரையும் பெயரில்லாத நட்சத்திரத்தையும்

அந்தத் தோட்டத்தில் நாம் கண்டுபிடிக்கலாம்.

நம் கண்களை நாம் நம்பக் கூடாதென்று சிலர் சொல்வார்கள்,

அங்கு ஒன்றுமில்லை,இருப்பதாகத் தெரிகிறது,.

அவர்கள்தான் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள்.

நாம் திரும்பும் கணத்தில் நம் பின்னாலிருக்கிற

உலகத்தை திருடர்கள் பறித்துக் கொண்டது போல அவர்கள் நினைக்கின்றனர்

நம்பிக்கை

உனக்குள் இருக்கும் நம்பிக்கை என்பது

நீ பனித்துளியை அல்லது மிதக்கும் இலையைப் பார்ப்பதானது.

அவை அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதால் அப்படியிருக்கின்றன.

நீ கண்களை மூடிக் கொண்டு கனவு கண்டாலும்

உலகம் எப்போதும் தானிருப்பது போலவேயிருக்கும்

இலை ஆற்றுநீரால் சுமந்து செல்லப்படும்.

உன்காலைக் கூரானகல்லால் நீ காயப்படுத்திக் கொள்ளும்போதும்

கல்லிருப்பது நம்பாதங்களைக் காயப்படுத்தத்தான் என்பது உனக்குத் தெரியும்.

மரத்தால் உருவான நீண்ட நிழலைப் பார்

நாமும் மரங்களும் பூமியில் நிழலை வீசுகிறோம்

எதற்கு நிழலில்லையோ அதற்கு வாழ்வதற்கான வலிமையில்லை.

எதிர்கொள்ளல்

வைகறையில் பனியுறைந்த வயல்களினூடே

வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு சிவப்பு இறக்கை இருளிலிருந்து எழுந்த்து.

திடீரென ஒரு முயல் சாலையின் குறுக்கில் ஓடியது

எங்களில் ஒருவர் தன் கையால் சைகை காட்டினார்.

அது பல காலத்திற்கு முன்பு. இன்று இருவரும் உயிருடனில்லை

முயலுமில்லை, சைகை காட்டியவருமில்லை.

அன்பே, அவர்கள் எங்கே, அவர்கள் எங்கே போகின்றனர்

கையின் சைகை அசைவின் கீற்று, கூழாங்கல்லின் சலசலப்பு

நான் துக்கத்தால் கேட்கவில்லை ஆச்சர்யத்தில் கேட்கிறேன்.

மேலும் ஒரு முரண்பாடு

ஆறுகள் பாய்ந்தகொண்டிருக்கிற ,புற்கள் தம்மை புதுப்பித்துக்கொண்டிருக்க்கிற

வெள்ளை மேகங்களின் கீழேயுள்ள ஒரு வீட்டின் விருந்தாளி நான்.

இங்கே பூமியில் நான் செய்ய வேண்டியதை நிறைவேற்றினேனா?

எனக்குத் தெரியாமலேயே நான் அழைக்கப்பட்டுவிட்டால் என்ன ஆகும்

அடுத்த முறை விரைவிலேயே நான் ஞானத்தைத் தேடுவேன்

நான் மற்றவர்களைப் போலத்தான் என்று நடிக்கமாட்டேன்

அதிலிருந்து கேடும் துயரமும்தான் வரும்.

துறக்கும்போது கீழ்ப்படிதலின் விதியை நான் தேர்ந்தெடுப்பேன்

என் பொறாமைக்கண்ணையும் கெட்டநாவையும் ஒடுக்குவேன்

கீழே மின்னும் நகரங்களை அல்லது ஓடை ,

ஒரு பாலம் மற்றும் பழைய தேவதாருக்களைக் காணும் நோக்கத்தோடு

துறவுக் கன்னியர்மாடத்தின் ஒருகுடியிருப்பாளர் வானில் பறக்கிறார்

என்னால் ஒரு பணியில்தான் செயல்பட முடியும்.

எனினும் அதுவும் நிறைவேற்ற முடியாதது.

மறந்துவிடு

மற்றவர்களுக்கு நீ தந்த

துன்பங்களை மறந்துவிடு.

மற்றவர்கள் உனக்குச் செய்த

துன்பங்களை மறந்து விடு.

தண்ணீர் ஓடிக் கொண்டேயிருக்கும்,

வசந்தம் பிரகாசித்து முடியும்

நீ மறந்த பூமியிலேயே நடந்து கொண்டிருப்பாய்.

சில சமயங்களில் தொலைவில் நீ ஒரு பல்லவியைக் கேட்கலாம்

யார் பாடுகிறார்கள் அதன் பொருளென்ன என்று நீ கேட்கலாம்

குழந்தை போலான சூரியனின் இளம்சூடு வளர்கிறது.

பேரனும் கொள்ளுப் பேரனும் பிறக்கின்றனர்

கரங்களால் நீ மீண்டும் வழிநடத்தப்படுகிறாய்.

ஆறுகளின் பெயர்கள் உன் நினைவில் தங்கியிருக்கும்

எத்தனை முடிவற்றவையாய் அந்த ஆறுகள் தெரிகின்றன!

உன் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.

நகரத்தின் கோபுரம் முன்னிருந்ததைப் போலில்லை

நீ தொடக்க நிலையில் ஊமையாக நிற்கிறாய்.

என்னுடையதல்ல

அவர்களின் உலகம் என்னுடையது என்று நான் வாழ்க்கை முழுவதும்

நடித்தால் அந்த நடிப்பு அவமானகரமானது

ஆனால் நான் என்ன செய்யமுடியும்?ஒரு வேளை நான் திடீரென அலறி

குறிசொல்லத் தொடங்கி விட்டால்.யாரும் என்னைக் கேட்க மாட்டார்கள்.

அவர்களின் திரைகளும் மைக்ரோபோன்களும் அதற்கானவையல்ல.

என்னைப் போன்ற மற்றவர்கள் வீதிகளில் அலைந்து

தனக்குள்ளாகவே பேசுவார்கள்.பூங்காக்களின் பெஞ்சுகளில்.

அல்லது சந்துகளின் நடைபாதைமேல் தூங்குவார்கள்.

எல்லா ஏழைகளையும் அடைப்பதற்கு

போதுமான சிறைகளில்லை.நான் சிரித்து அமைதியாகிறேன்.

அவர்களால் என்னைப் பிடிக்க முடியாது

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு விருந்து—நான் அதை நன்றாகச் செய்கிறேன்.

பொருள்

நான் இறக்கும்போது, உலகின் உள்பூச்சைப் பார்ப்பேன்.

மற்றொரு புறத்தில் பறவைகள்,மலைகள்,சூரியாஸ்தமனத்திற்கப்பால்

உண்மையான பொருள் குறிவிலக்கிற்காகத் தயாராக இருக்கும்

எது சேர்க்க முடியாமலிருந்ததோ அது சேர்க்கப்படும்

எது புரிந்து கொள்ளமுடியாத்தாக இருந்ததோ அது புரியும்

-இந்த உலகிற்கு உள்பூச்சே இல்லையெனில்?

மரத்தின் கிளையிலிருக்கும் பறவை அடையாளமில்லையெனில்,

ஆனால் கிளையின் மேல் பறவையெனில்?இரவும் பகலும்

ஒன்றையொன்று தொடர்வதில் பொருளில்லையோ?பொருளில்லையெனில்?

இந்த பூமியின் மேல் பூமியைத் தவிர எதுவுமில்லையெனில்?

-அப்படி இருந்தாலும் அது தொடரும்

உதடுகளிலிருந்து பிறந்த வார்த்தை அழியும்

விண்மீன்களினூடே சுழலும் அண்டங்களுக்கிடையே

சலிப்பின்றி ஓடிக்கொண்டேயிருக்கும் தூதுவர்

அழைத்தும், எதிர்த்தும் ,கதறியும்.

மிகச் சிறிய அளவில்

நான் மிகச் சிறிய அளவு சொன்னேன்

நாட்கள் குறுகின

குறுகிய நாட்கள்

குறுகிய இரவுகள்

குறுகிய ஆண்டுகள்.

நான் மிகச் சிறியஅளவு சொன்னேன்

நான் அவற்றைப் பின்பற்ற முடியவில்லை.

மகிழ்ச்சியில்

கசப்பில்

ஆசையின் தீவிரத்தில்

நம்பிக்கையில்

என் இதயம் களைப்புற்றது.

திமிங்கலத்தின் தாடைகள்

என்னைக் நெருக்குகின்றன.

பாலைவனத் தீவுகளின் கரையில்

நிர்வாணமாய் படுத்துக் கிடக்கிறேன்.

உலகின் வெள்ளை திமிங்கிலம்

என்னைத் தன் குழிக்குள் இழுக்கிறது.

எனக்கு இப்போது தெரியவில்லை

அதற்குள் இருந்த எல்லாமும் உண்மையென்று.

———————————

மச்சம் – இஸ்மத் சுக்தாய் சிறுகதை / தமிழில் / .ஜி. விஜயபத்மா

இஸ்மத் சுக்தாய்

இஸ்மத் சுக்தாய்

“சௌத்ரி… ஓ சௌத்ரி… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்”

சௌத்ரி அமைதியாக இருந்தார்.

“உஷ்… உஷ்”…

“எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?”

“எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு”

“மரியாதையா சும்மா உட்காரு. இல்லேன்னா…”

“இனிமேலும் என்னால உட்கார முடியாது. இங்கே பாரு. உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு. ஹே ராம்”¬¬

“ச்சு… ச்சு…

“எனக்கு அப்படியே வலியில் உடம்பெல்லாம் நடுங்குது ”

சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை.அவருக்கு அவளுடைய செய்கைகள் கோபத்தை வரவழைத்தன

“இங்கே… தோ… இங்கேதான் பாரு . இங்கே பின்பக்கமா எறும்பு வேற கடிச்சுக்கிட்டே இருக்கு”

“இதோ பாரு ராணி. வரைய ஆரம்பிச்சு பத்து நிமிஷம் கூட இன்னும் ஆகலை. அதுக்குள்ளே இப்படி நீ நெளிய ஆரம்பிச்சா எப்படி?

” “ஐயே… என்னை என்ன களிமண்ணுலேயா செய்திருக்காங்க?”

ராணி தன்னுடைய தடித்த உதடுகளைப் பிதுக்கியவாறு வெண்பளிங்கு முக்காலியில் இருந்து கீழே நழுவினாள்.

“சனியனே, அசையாமல் உட்காரு. சொல்லிக்கிட்டே இருக்கேன்ல. தேவடியா”.

சௌத்ரி வண்ணக் கலவைப் பலகையை ஸ்டூலின் மீது எறிந்து விட்டு, கோபத்துடன் அவளுடைய தோளைப் பிடித்து பலமாக உலுக்கினார்.

அவள் சௌத்ரியின் கோபத்தை புரிந்து கொண்டு , உடனே தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு காதலுடன் அவரை நோக்கியவாறு

“அது சரி. ஒண்ணு பண்ணலாம். கொஞ்சம் பக்கத்துலே வா”… என்றவாறு தரையில் மல்லாக்கப் படுத்தாள்.

அவள் பக்கத்தில் நின்று கொண்டு ,அவளையே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு இருந்தார் சௌத்ரி . அவருக்கு கோபம் மூளைக்குள் ஏறி , கண்கள் சிவந்து உதடுகள் துடித்தன. அவளுடைய கன்னத்தில் பளார் பளாரென நான்கு அறைகள் விட்டால் என்ன என்றும் நினைத்தார்அவருக்கு அவளது குணம் மிக நன்றாக தெரியும் .

இவர் கோபத்தில் அவளை அறைந்து விட்டால் அதுதான் சாக்கு என்று . அவள் வேண்டுமென்றே கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி விடுவாள். பின் இத்தனை பிரயாசைப்பட்டு வரைந்து கொண்டிருக்கும் இந்த ஓவியம் அறைகுறையாக நின்றுவிடும்.. ஆத்திரத்தில் நிதானம் தவறி தன் வேலையை கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை

அவர் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு , அவளிடம் அமைதியாக பேசத் துவங்கினார்
“இதோ பாரு. கொஞ்சநேரம் இப்படி அசையாமல் உட்கார்ந்துக்கோ. எல்லாம் பிறகு பார்த்துக்கலாம்” என்று சமாதானப்படுத்தும் தொனியில் சொன்னார்.
“ரொம்பக் களைப்பா இருக்கு” என்று அவள் தரையில் உருண்டாள்.

வேண்டுமென்றே அவள் செய்யும் செய்கை மீண்டும் அவரை உசுப்பேற்றியது

“களைப்பா இருக்கா? தெருத்தெருவா நாள் முழுக்க ஊரெல்லாம் அலைஞ்சு சாணி பொறுக்கிக்கிட்டு இருந்தியே. அப்போ உனக்குக் களைப்பா இல்லையா? நாயே..”

சௌத்ரி தன்னை அடக்க இயலாமல் அவளிடம் கத்தினார்.

“யாரு சாணி பொறுக்கினா? சரியான அல்பம்யா நீ. என்னமோ சண்டைக்கோழி மாதிரியும் வேண்டாத மாமியார் மாதிரியும் என்னோட சண்டைக்கு நிக்கிறே”

என்று அவள் சிடுசிடுத்தாள். சௌத்ரிக்குப் புரிந்து விட்டது. அவள் வேண்டும் என்றே தன்னுடன் மல்லுக்கு நிற்கிறாள் . இன்றும் எதுவும் வரைய இயலாமல் நாள் வீணாகத்தான் கழியப்போகிறது.
“சரி. இந்த கடிகாரத்தைப் பாரு. அரைமணி நேரம் அமைதியா இரு”

“அதெல்லாம் முடியாது. வெறும் ஆறே நிமிஷம்தான். அவள் மீண்டும் முக்காலியில் ஏறி உட்கார்ந்து கொண்டே முனகினாள். விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஆறு அல்லது ஏழுக்கு மேல் எண்ணிக்கை தெரியாது. வெறும் ஆறு நிமிஷம்தான் என்று எண்ணிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.

அவள் உட்கார்ந்து விட்டால் அவளுக்கு கணக்கு தெரியாது பேசியபடியே அரைமணிநேரத்தை ஒட்டி ஓவியத்தை முடித்து விடலாம் என்று சௌத்திரிக்கும் தெரியும். ராணி இடுப்பை நேராக வைத்துக் கொண்டு கனமாக இருந்த பெரிய பூஜாடியை இடுப்பில் ஏந்தியபடி விரைப்பாக உட்கார்ந்து கொண்டாள். எத்தனை நேரம் அப்படி உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்கும் தெரியாது.

“இப்போ சரியா?

“ம்”, சௌத்ரி தான் வரைந்து கொண்டிருந்த கேன்வாஸ் பக்கம் திரும்பினார்.

“என்னைப் பாரேன்”

“எல்லாம் சரியா இருக்கு”

“என்னைக் கொஞ்சம் பாரேன்”

“எல்லாம் சரியா இருக்கு”

“அவருடைய தூரிகை சிறிது நேரம் சத்தமின்றி இயங்கிக் கொண்டிருந்தது. வண்ணக்கலவைகள் ஒன்றுடன் ஒன்று துரிதமாக இழைந்தும் குழைந்தும் ஓவியச்சீலையில் வர்ணஜாலம் உருவாகிக் கொண்டிருந்தது. இப்படி ஒரு நிமிடம் கூடக் கடந்திருக்கவில்லை. அவள் பொறுமையற்று சத்தமாகப் பெருமூச்சை இழுத்து விட்டாள்.

“அவ்வளவுதான் சௌத்ரி. உன்னோட ஆறு நிமிஷம் தீர்ந்தது”

“ஹூம்.. ஹூம்… ஓவியச்சீலையில் அறைகுறையாகத் தீட்டியிருந்த வர்ணங்களையும் அவளையும் பதட்டத்துடன் மாறி மாறிப் பார்த்தார் சௌத்ரி.

“ரொம்பக் குளிரா இருக்கு. சௌத்ரி, அந்தப் போர்வையை போர்த்திக்கட்டுமா?”

“ஊஊஊ… ஆஆஆஆ… என்னமா குளிருது”

என்று நாயைப் போல ஊளைச் சத்தம் எழுப்பினாள்.
“வாயை மூடு” என்று உறுமினார் சௌத்ரி.

“இடுப்பு… ஐயோ, என்னோட இடுப்பு… இப்படி பிடிச்சிக்கிச்சே… சௌத்ரிஜி” – அன்று அவள் தேவையின்றி அழிச்சாட்டியங்கள் செய்தாள்.

“சால்வை… என்னோட சால்வை எங்கே போச்சு?”
“வாயை மூடு” என்று மீண்டும் உறுமினார் சௌத்ரி
.
“ஹூம்…நான் ரொம்ப களைப்பா இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ கேட்க மாட்டேங்கறியே. இந்தப் பூஜாடி சனியனைத் தூக்கி எறிஞ்சிடுவேன்”

சௌத்ரி சரேலென அவளைத் திரும்பிப் பார்த்தார். இந்த ஓவியம் வரைவதற்காக மியூஸியத்தில் இருந்து அந்த ஜாடியை இரவல் வாங்கி வந்திருந்தார். அதை அவள் போட்டு உடைத்தாள் என்றால் அவளுடைய மண்டையை சௌத்ரி பிளந்து விடுவார்.

“நான் என்ன வேணும்னா பண்றேன். எனக்குக் களைப்பா இருக்கு. நான் என்ன பண்ணட்டும்? என் தலை முழுக்க பேன் ஊர்ந்துக்கிட்டு இருக்கு நமைச்சல் எடுக்குது” பூஜாடியைக் கீழே இறக்கி வைத்து விட்டு தலையைப் பரபரவென்று இருகைகளாலும் சொறிந்து கொண்டாள்.

சௌத்ரி, கால்களை அகட்டி வைத்துக் கொண்டு கண்களை உருட்டி அவளைக் கொடூரமாக முறைத்துப் பார்த்தார். அவருடைய பொறுமை எல்லையைக் கடந்து கொண்டிருந்தது. ஆத்திரத்தில் அவருடைய முகத்தின் நரம்புகள் தெறித்துக் கொண்டிருந்தன. நரைத்து நீண்டு தொங்கிய வெண்தாடி புயற்காற்றில் சிக்குண்ட படகின் காற்றாடியை போலக் காற்றில் அலைந்து கொண்டிருந்தது. உச்சி மண்டை வழுக்கையில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாகத் துளிர்க்கத் துவங்கின.

“இடுப்புக்குக் கீழே வலி உயிர் போகுது” என்று ஆரம்பித்தவள் சௌத்ரியின் முகத்தில் தெறித்த ரௌத்ரத்தைப் பார்த்து அடங்கிப் போனாள். அமைதியாகத் தன்னுடைய இடத்தில் முன்பு போலவே உட்கார்ந்தாள். பிறகு கண்களில் குபீரெனக் கண்ணீர் மல்க வாய்விட்டு அழத்துவங்கினாள்.

“ஐயோ… கடவுளே… நான் செத்தாலும் இங்கே யாரும் கேட்பாரில்லை… கடவுளே….” என்று பெருங்குரல் எடுத்து அழுதாள்.

சௌத்ரி அவளையே கோபத்துடன் உற்றுப் பார்த்தார். இப்படி அவள் அழும்போதெல்லாம் அவருக்கு தாடைகள் இறுகிக் கொள்ளும். இறுக்கமடைந்த முகத்துடன் அவளை மூர்க்கத்துடன் தாக்கத் தயாராக இருப்பது போல முகத்தை வைத்துக் கொள்வார்.

ஆனாலும் அவர் தன் வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டே இருந்தார் அவருடைய கையில் அசையும் தூரிகை ஏதோ வாணவேடிக்கையைப் போல ஓவியச்சீலையின் மீது சீற்றம் கொண்டு அங்குமிங்குமாக அலைந்தது.

வர்ணக் கலவைத் தட்டின் குழிகளில் படிந்திருந்த வர்ணங்கள் கலவையாகக் குழைந்து இருந்தன. இந்த ஓவியத்தை முடிக்காமல் , அவரால் நிதானமடைய முடியாது . இந்த ஓவியத்தை ரசித்து முடிக்க நினைத்தார் .

அது ராணியின் செய்கைகளால் முடியாமல் போனது . ஆனாலும் , தான் நினைக்கும் ஓவியத்தை படைக்கா விட்டால் , அவர் மூளைக்குள் ஏதோ குடையும். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஓவியம் முடிந்தால் தான் அவர் மூளையில் குத்தி நிற்கும் முள்ளை பிடிங்கி எறிய முடியும் . அது நடக்கும் வரை அவருடைய, இந்த வேதனைக்கு ஒரு முடிவு இருக்காது என்று நினைத்தார். எதிரில் அமர்ந்து இருக்கும் ராணியின் தேவையற்ற பிடிவாதமும் அவளுடைய உடல்மொழியும் அவருடைய ஆன்மாவைத் துளைக்கும் ஈட்டியாகப் பாய்ந்தது.

சௌத்ரியின் எல்லா பாவனைகளும் சற்று மிகையானவை. அவற்றின் தாக்குதலில் இருந்து யாரும் அதிகம் தப்பியது கிடையாது. ராணியும் இதற்கு விலக்கல்ல.வயிற்றை எக்கி பீறிட்டெழும் துக்கத்தில் உதட்டைத் துருத்தி அழுதுகொண்டே முக்காலியின் மீது தயக்கத்துடன் அமர்ந்தாள்.
சில கணங்களுக்கு அமைதியாக பூமிப்பந்து மீண்டும் வழக்கப்படி சுமுகமாக சுழலத் துவங்கியது. சௌத்ரியின் தூரிகை கேன்வாஸ் மீது துரிதமாக இயங்கியது. வண்ணக் கலவைத் தட்டு பல்வகை வண்ணங்களால் குழைக்கப்பட்டு அசிங்கமாகக் காட்சியளித்தது.

“சௌத்ரீ” என்று மென்மையான குரலில் குழைவுடன் செல்லம் கொஞ்சத் துவங்கினாள் ராணி. சௌத்ரியின் அக்குளில் குப்பென்று வியர்த்தது. அவர் காலடியில் பூமி லேசாக ஊசலாடிக் குலுங்கிற்று.
“சௌத்ரி, இதைப் பார்த்தாயா?”

சௌத்ரியின் தோள் சற்று அதிர்ந்தது. அவருடைய மிருதுவான உச்சித் தலை வழுக்கையில் வியர்வைத்துளிகள் அதிகமாகப் பரவின. ராணி மீண்டும் பேசினாள்.

“இதைப்பாரு. இதோ, இங்கே… என் கழுத்துக்குக் கீழே இந்த மச்சத்தைப் பாரேன். இங்கே… கொஞ்சம் கீழே… இங்கே பாரு… கையில் இருந்த பூச்சாடியை தரையில் வைத்து விட்டு , தன் மார்பகங்களின் பிளவில் கண்களை சரித்தபடி சௌத்ரியை நோக்கிப் புன்னகைத்தாள்.

“பார்த்தியா இதை? நீயும் அதைத்தான் உற்று பார்த்துக் கிட்டு இருக்கியா ?

சௌத்ரி… சீ…நீ ரொம்ப மோசம் ”ஐயோ, எனக்குக் கூச்சமா இருக்கு…”” என்று வெட்கப்படுகிறவள் போல பாவனை செய்தாள் ராணி

“சும்மா அசையாமல் உட்காரு” சௌத்ரி உறுமினார்.

“அடேயப்பா, என்ன ஒரு அதிகாரம்? இப்படி ஒரு பொண்ணோட மச்சத்தை வச்ச கண் வாங்காமல் பார்க்கிறது நல்ல ஆம்பிளைக்கு அழகா? அதுவும் இந்த மாதிரி ஒரு மோசமான இடத்துலே இருக்கிற மச்சத்தை இப்படியா ஒருத்தரு பார்க்கறது? என்று வெட்கப்படுவது போல அசட்டுத்தனமாகச் சிரித்தாள்.

“நான் எந்த மச்சத்தையும் பார்க்கலை. எனக்குப் பார்க்கவும் வேண்டாம்” சௌத்ரிக்கு எரிச்சல் கலந்த கோபம் அதிகரித்துக் கொண்டே போனது.

“ஹூம்… சும்மா கதை விடாதே. ஓரக்கண்ணாலே அந்த இடத்தையே நீ திருட்டுத் தனமா பார்க்கலே? குறுஞ்சிரிப்புடன் வம்புக்கு இழுத்தாள்.

“ராணி”

ராணி மூக்கை விடைத்துக் கொண்டு மையலுடன் அவரை நோக்கித் திரும்பினாள். இவளிடம் கோபப் பட்டும் பயன் இல்லை . என்ன செய்வது என்று புரியாமல் சௌத்ரி, தோல்வியுற்றவராக ஓவியப் படுதாவுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டியின் மீது சரிந்து விழுந்தார்.

“எனக்கு என்ன வயசு ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா?”

“ஹேராம்… எத்தனைவயசு? ஆர்வத்துடன் பூச்சாடியை கீழே வைத்து விட்டு அவரை நோக்கி லேசாகச் சாய்ந்தாள் ராணி.

“உன்னோட அப்பன் வயசு எனக்கு. இல்லை. தாத்தா வயசு. உனக்கு எத்தனை வயசு?
இன்னைக்கு இருந்தா பதினஞ்சு இருக்குமா? வயசை மீறி நீ ஆபாசமாப் பேசறே”.

உண்மையில் சௌத்ரிக்கு ஒன்றும் அவளுடைய தகப்பன் வயதெல்லாம் கிடையாது. தாத்தா வயதும் கிடையாது. அப்படிச் சொன்னாலாவது அவள் வாயடைக்குமே என்பதற்காக அப்படிச் சொன்னார்.

“ஹூம்… நீதான் ஆபாசமாப் பேசறே. என்னோட மச்சத்தை அப்படி உத்து உத்துப் பார்க்கறே.
அதுவும் அந்த மாதிரி மோசமான இடத்துலே இருக்கிற மச்சத்தை நீதான் அப்படி உத்து உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தே” தன்னுடைய கரங்களால் அந்த இடத்தை மூடிக் கொள்வது போன்ற பாவனையில் தடவிக் கொண்டாள்.

“எத்தனை சின்னப் பொண்ணு நீ, இப்படி பேசலாமா?”.

“சின்னப் பொண்ணா? நான் சின்னப்பொண்ணுன்னு யார் சொன்னா? அப்படி நான் இருந்திருந்தேன்னா அப்புறம்….”

அப்புறம்? அப்புறம் என்ன?

“அந்த ரத்னா என்ன சொன்னான் தெரியுமா?
யாருக்கு அந்த இடத்துலே
மச்சம் இருக்கோ…”

“ரத்னாவா? அவனுக்கு எப்படித் தெரியும் உனக்கு அங்கே மச்சம் இருக்குன்னு?”

“நான் அவனுக்கு இதைக் காண்பிச்சேன்” என்று அவள் அந்த மச்சத்தின் மீது தட்டிக் காண்பித்தாள்.

“காட்டுனியா? நீ… நீ இதை அந்த ரத்னா பயலுக்குக் காட்டுனியா,

சௌத்ரிக்கு மீண்டும் ரத்தம் கொதிக்கத் துவங்கியது. அக்குளில் ஒருமாதிரி வெடுக்கென்று வெட்டியது. கன்னச்சதைகள் நடுக்கத்தில் குலுங்கின. அவள் பேசியதை அவரால் ரசிக்க இயலவில்லை . ரத்னா விடம் அவள் தன் மார்பைத் திறந்து காட்டியதாக சொன்னதை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை . அதை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும் என்று கோபத்துடன் தன் வேலையை மீண்டும் தொடர்ந்தார் சௌத்ரி அவருடைய தூரிகை பரபரவென்று துரிதமாக இயங்கத் துவங்கியது. மீண்டும் வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று குழைந்து கலங்கின.

“ஆஹா… அது சரி. அவன் அந்த மச்சத்தைப் பார்த்தால் நான் என்ன செய்யட்டும்?”

“எப்படி? எப்படி அவனால் அதைப் பார்க்க முடிந்தது… நீ….” கீல்கள் தளர்ந்த கதவினைப் போல சௌத்ரியின் தாடைகள் நடுங்கின.

“நான் குளிச்சிக்கிட்டு இருந்தப்போ அவன்…” என்று வாக்கியத்தை முடிக்காமல் பூச்சாடியை இடது கையில் ஏந்தி மீண்டும் முக்காலியின் மீது உட்கார்ந்தாள்.

“நீ குளிச்சிக்கிட்டு இருந்தப்போ அங்கே வந்தானா? பாஸ்டர்ட்…”

“ஆமாம். நான் குளத்துலே குளிக்கப் போனேன். எனக்குத் தனியாப் போக பயமா இருந்தது. அவனை துணைக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன். தீடீர்னு அங்கே வர்ரறவங்களை அவன் தடுக்கலாம் இல்லையா? ஆமாம். குளிச்சிக்கிட்டு இருந்தேன். அவன் என்னோட ரவிக்கையைக் கூடத் துவைத்துக் குடுத்தான்”.

“யாராவது குளிக்கறப்போ வந்துடுவாங்கன்ற பயத்துலே நீ அவனை அங்கே அழைச்சிக்கிட்டுப் போனே இல்லையா?

“ஆமாம்” வெகுளியாகச் சொன்னாள்.

“ராணி”, சற்று முன்னே நகர்ந்தார் சௌத்ரி.

“மூஞ்சியை அந்தப் பக்கமா திருப்பிக்கோன்னு அவன் கிட்டே சொன்னேன்.

ஆனா…”

“ஆனா?”

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா

“அவன் தூரத்துலே உட்கார்ந்திருந்தான். அப்புறம் நான்தான் சொன்னேன், ரத்னா, எனக்கு மோசமான இடத்துலே ஒரு மச்சம் இருக்கு. அவன் எந்த ஆர்வத்தையும் காட்டலே. சரி. எனக்கு என்ன? உனக்குப் பார்க்க வேண்டாம்னா நீ அங்கே பார்க்க வேண்டாம்னு சொன்னேன். என்ன சரிதானே சௌத்ரி?”

“அப்புறம் அவன் பார்த்தான்னு எப்படிச் சொல்றே?”

“ஆமா , பார்த்தான். உண்மைதான். நான் தண்ணியிலே முழுகறதுக்கு இருந்தேன்.தண்ணி இத்தனை ஆழமா இருந்திச்சு. அவன்தான் ஓடி வந்து காப்பாற்றினான் .”.

அவள் மச்சத்துக்குக் கீழே சற்று இறக்கித் தன் கைகளை வைத்துக் காண்பித்தாள்.

“தேவடியா முண்டை”- சௌத்ரி தூரிகையை தூர எறிந்து விட்டு தரையில் கிடந்த குச்சியைக் கையில் எடுத்தார்.

“ஹேராம்… ஒரு நிமிஷம்… கேளு சௌத்ரி… நீ என்ன.. நான் முழுகி செத்திருக்கணும்னு சொல்ல வர்றியா?”

“நாயே.. உனக்கு நீச்சல் தெரியாது?
பிறந்ததுலே இருந்து அந்தக் குளத்துலேதான் குளிச்சிருக்கே. அப்புறம் முழுகி செத்துத் தொலைய வேண்டியதுதானே?”

“ஹா .. ஹா உண்மையில் நான் குளிக்கப் போகலை. நிஜமா… நிஜமாகவே அவனுக்கு அந்த மச்சத்தைக் காமிக்கத்தான் அப்படி அவன் கிட்டே பொய் சொல்லி கூட்டிகிட்டு போனேன் .. ” அவள் உற்சாகமாக சிரித்தாள்…

“அப்போ அவனுக்கு அந்த மச்சத்தைக் காண்பிக்கத்தான் எல்லா நாடகத்தையும் ஆடியிருக்கே இல்லையா? சௌத்ரி அந்தக் குச்சியைத் தூக்கிக் காற்றில் எறிந்தார். மெலிதாகப் புன்னகைக்கத் துவங்கினார்.

“ஹேராம்… இந்தத் துண்டையாவது சுத்திக்கிறேன் சௌத்ரிஜி”. அவள் குரங்கு போலத் தாவிக் குதித்து படிக்கட்டு அருகில் சென்று நின்றாள்.

“இப்போ என்னை அடிச்சா, நான் இப்படியே வெளியே போயிடுவேன். அப்புறம் எல்லோரையும் கூப்பிட்டு சொல்லிடுவேன்”…

சௌத்ரி அப்படியே சிலைபோல ஸ்தம்பித்து நின்றார். “அவங்க கிட்டே என்ன சொல்லுவே?”
“சௌத்ரி சொல்றாரு – என்னோட மச்சம்… ஹ்ம்… ஹ்ம்…

“தேவடியா” சௌத்ரி ஏதோ வெறி பிடித்த நரி போலத் துள்ளி எழுந்தார். அவளுக்குத் தெரிந்து விட்டது. தான் எய்த அம்பு குறி தவறாமல் பாய்ந்து விட்டது என்று.

“சௌத்ரி, நான் கண்டிப்பா எல்லார் கிட்டேயும் சொல்வேன். தெரிஞ்சிக்கோ. அடிப்பியா? தைரியம் இருந்தா அடிச்சிப் பாரு. வாயேன்… தைரியம் இருந்தா அடிச்சுப் பாரேன். ஏன் என்னையே அப்படி முறைச்சுப் பார்க்கறே? நான் வயசுப் பொண்ணு. சின்னப்பொண்ணு. நீ? மஹா குறும்புக்காரன்” கதவை நோக்கி சிறிது சிறிதாக நகர்ந்து சென்றாள்.

சௌத்ரி வாயடைத்துப் போய் நின்றிருந்தார். ஒரு கணம், அந்த ஓவியத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, அவளைக் கூழாக நசுக்கிக் கொல்லவேண்டும் என்று நினைத்தார். ஆனால் வரப்போகும் ஓவியக் கண்காட்சியையும் அதில் அவருடைய ஓவியம் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐயாயிரம் ரூபாய் சன்மானம் பெறுவதற்காக அவர் சில நாட்களாக உழைத்துக் கொண்டிருப்பதும் அவருடைய நினைவுக்கு வந்தது.
ஒரு கணம் தலைசுற்றியது.

அவருடைய வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான ஓவியங்களை அவர் வரைந்திருக்கிறார். மொட்டவிழ்ந்து மலரும் ரோஜாப்பூக்கள், பசுமையான இலைகள், தழைகள், செடிகள், கொடிகள், மரங்கள், தாவிச்செல்லும் புள்ளினங்கள் என இயற்கையின் பரிசுகள் அனைத்தையும் வரைந்திருக்கிறார். இவை மட்டுமல்ல, பெருமூச்சுக்களையும் வாசங்களையும் கூடத் தன் தூரிகையில் சிறைப்பிடித்திருக்கிறார்.

இவரைப் போன்ற ஓவியருக்கு போஸ் கொடுக்கும் பெருமை ஒன்றுக்கே, உலகின் பல பாகங்களில் உள்ள பெண்மணிகள் நிர்வாணமாகவும் ஆடைகள் அணிந்தும் அவருடைய ஓவியங்களுக்கு மாடல்களாக ஒத்துழைக்கக் காத்திருக்கிறார்கள். ஆனால் எங்கோ, சாக்கடையில் இருந்து பொறுக்கி எடுத்து வந்த இந்தப் பெண் சமாளிக்க முடியாத வகையில் அவருக்கு இம்சை கொடுக்கிறாள்.

அவரை மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒரு விஷயம் என்னவென்றால், என்னதான் வண்ணக் கலவைகளைப் பல்வேறுவகைகளில் மாற்றிப் பார்த்தாலும் அவளுடைய சருமத்தின் வண்ணத்தை அச்சு அசலாக அப்படியே தீட்டுவதற்கு என்ன செய்தும் அவரால் முடியவில்லை. சந்தன நிறத்தைக் கறுமையுடன் கலந்து சிறிதளவு நீலவர்ணத்தை சேர்த்துப் பார்த்தார். ஆனால் பளிங்குக்கல், சந்தனம், நீலம் மற்றும் லேசான காவி நிறம் சேர்ந்த கலவையாக இருந்தது அவளுடைய சருமத்தின் நிறம். அது மட்டுமல்ல.

அவளுடைய நிறமானது ஒருநாள் சிப்பியின் நிறமாகத் தோற்றம் அளித்தால் மறுநாள் விடிகாலையில் வானத்தில் தோன்றும் சிகப்பில் இருந்து வெடித்துதோன்றும் வண்ணம் போல் காட்சியளிக்கும். வைகறையில் இளஞ்சிகப்பு மேகத்தின் வர்ணஜாலத்தில் மினுக்கும் அவளின் நிறம் மற்ற நேரங்களில் சர்ப்பத்தின் விஷத்தைப் போல நீலமாகப் படர்ந்திருக்கும்.

அவளுடைய கண்களின் நிறமும் அவ்வப்போது தொடர்ச்சியாக மாற்றம் கொண்டிருக்கும். முதல் நாள் அவர் கண்களின் நிறத்துக்காக தார்க்கறுப்பு நிறத்தைக் குழைத்துத் தயாராக வைத்திருப்பார். ஆனால் திடீரென்று அவளுடைய கருவிழிப் படலத்தில் செவ்வண்ணமாக வரிகள் படர்ந்து இருக்கும்.

அதனைச் சூழ்ந்திருக்கும் இமைப்படலங்கள் நீலமேகங்களால் சூழப்பட்டது போலக் காட்சியளிக்கும். அவர் சுத்தமாகப் பொறுமை இழந்தார். இதுவரை நிறைய பெயிண்டு கலவைகள் வீணடிக்கப்பட்டிருந்தன. சில கணங்களுக்குப் பிறகு அவளுடைய கண்ணின் மணிகள் பச்சை நிறத்தில் மாறிச் சுழன்று இரு மரகத மணிகளாக நடனமிடத் துவங்கியபோது அவருடைய பொறுமையின்மை எல்லையைக் கடந்தது. கண்ணின் மணியைச் சுற்றியுள்ள வெண்பரப்பில் லேசாகப் படர்ந்திருந்த செவ்வரிகள் அடர்த்தி மிகுந்து ரத்தச் சிவப்பாக மாறியது. “நாசமாப் போச்சு” என்று விரக்தியின் உச்சியில் பதற்றத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டார் சௌத்ரி. தொல்லை அத்துடன் முடியவில்லை.

“பயங்கரமா கொசு கடிக்குது” என்று குழந்தையைப் போலச் சிணுங்கினாள் ராணி. என்னதான் இவள் எரிச்சல் மூட்டினாலும் இன்று முழுநாளும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார் சௌத்ரி.

“பாரேன். இந்தக் கொசு என்னைப் பிச்சுப் பிடுங்குது” என்று மீண்டும் கொஞ்சினாள். சௌத்ரி ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார்.
சௌத்ரி கால்களை அகலமாக விரித்து நின்றார். ராணி திடீரென்று மிகவும் ஆபாசமான வசைச் சொல் ஒன்றை அவரை நோக்கி உதிர்த்தாள்.

சௌத்ரி ஒருகணம் அதிர்ந்துபோய் நின்றார். ஒரு பெண்ணால் எப்படி இதுபோன்ற வார்த்தையை எப்படி இப்படி லஜ்ஜையின்றிப் பேசமுடிகிறது? அவருக்கு இதுபோன்ற வசைகள் எல்லாம் அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது. அவருக்குத் தெரிந்திருந்த சில வசவுகள் மிகவும் மென்மையானவை.

அவர் இதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வாயில் கூட இதுபோன்ற அசிங்கமான வசைகள் எல்லாம் வராது. அதிகபட்சம் தன்னுடைய உத்தியோக நிர்ப்பந்தத்துக்காக சில வார்த்தைகளை அந்தப் போலீஸ்காரன் எப்போதாவது ஒரு படிமமாக உபயோகிக்கலாம்.

“நீ எங்கிருந்து இந்த மாதிரி கேவலமான வார்த்தைகளை எல்லாம் பேசக்கத்துக்கிட்டே?”
“எது? இதைச் சொல்றியா?” என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அதே வசவை மீண்டும் கேள்வி போல உச்சரித்தாள்.

“ராணி” என்று இரைந்தார் சௌத்ரி.

“இதை ஒருமுறை சுன்னன் பேசக் கேட்டுஇருக்கேன். கொசுக்களை விரட்டும்போது அவன் அப்படித் தான் திட்டுவான். அவனோட குடிசையில் படைபடையா கொசு இருக்கும்” என்று அவள் விஷயத்தை சமாளிக்க முயன்றான்.

“என்ன? சுன்னனோட குடிசையிலேயா? அப்போ நீ அவனோட குடிசைக்குப் போயிருக்கே இல்லையா?”

“ஆமாம். அவன் எனக்கு வெல்லச் சேவு குடுக்கறேன்னு சொல்லி என்னை அங்கே அழைச்சிக்கிட்டுப் போனான்”

“அப்போ அங்கே வெல்லச் சேவு சாப்பிட்டே…”

“ஐயோ… அப்படி இல்லை… அவன் கூப்பிட்டப்போ வெல்லச்சேவு எதுவும் அங்கே இல்லை.. அவன் சும்மா பொய் சொல்லி இருக்கான். இப்போ எல்லாம் ஒழுங்காக வாங்கிக்கிட்டு வந்துடறான்”.

“ஓஹோ… இப்போ எல்லாம் சுன்னன் உனக்கு வெல்லச் சேவு வாங்கிட்டு வர்றான் இல்லையா?”

“ஆமாம். வெல்லப்பாகுலே ஊற வச்ச பொரியும் வாங்கிட்டு வர்றான்”. பூச்சாடியின் மீது பதித்த கண்ணாடிக் கற்களைத் தடவிக் கொண்டே அவள் சொன்னாள்.

“ஓஹோ… பொரி கூட… சரிதான்”. ஏதோ தான் தேவையின்றி அதிர்ச்சியானது போல உணர்ந்தார் சௌத்ரி. ராணிக்கு வெல்லச்சேவு என்றால் கொள்ளைப் பிரியம். அதற்காக சுன்னன் குடிசையில் இருந்து ஏன், ஏதாவது சாக்கடையில் புரளும் நாயின் வாயில் வெல்லச்சேவு இருந்தால் அதைக்கூடப் பிடுங்கி இவள் சாப்பிடுவாள் என்று நினைத்தார்.

“நான் உனக்கு தேவைக்கான பணம் குடுத்திருக்கேன். அப்பவும் நீ சுன்னன் குடிசைக்குப் போய் வெல்லச்சேவு எல்லாம் சாப்பிட்டு வர்றே…”

“ஹூம். நான் ஒண்ணும் கெஞ்சிக்கேட்டு வாங்கி சாப்பிடறது இல்லை. அவன் எனக்காக ஆசையா வாங்கிக்கிட்டு வருவான். தன் குடிசைக்கு வந்துட்டுப் போன்னு என்னைக் கூப்பிடுவான். அவனை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

மீசையை எத்தனை பெரிசா வளர்த்து வச்சிருக்கான். எனக்குத் தும்மலா வந்துக்கிட்டு இருக்கும். அக்ஷ்.. அக்ஷ் என்று வேண்டுமென்றே யாரோ அவள் நாசிக்குள் குச்சியை செருகியது போலத் தும்மிக் காண்பித்தாள்.

“சௌத்ரி, என்னோட முதுகிலே கொஞ்சம் சொறிஞ்சிக்கட்டுமா?”

சௌத்ரிக்கு மீண்டும் உடம்பெல்லாம் பற்றி எரிவது போலத் தோன்றியது. அவனுடைய மண்டைக்குள் நுழைந்து யாரோ கைதட்டும் ஓசையை எழுப்புவது போல இருந்தது. தாடைகள் இறுகின.

அனைத்து வர்ணங்களும் ஒன்றுடன் ஒன்று குழைந்து தன் மண்டையோட்டைத் துளைத்து மாயக்காளான்களாக முளைத்து வெளிக்கிளம்புவது போல உணர்ந்தார்.

அப்போது அவருக்கு எதிரில் இருந்த முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த ஓவியத்தை வரைவதை மேலும் தொடர்வதா அல்லது பாம்பு போலப் பின்னித் தன்னை வதைக்கும் வேடிக்கைக்கு ஆளாவதா என்று குழம்பி நின்றார்.

இது தொடர்ந்தால் தான் சட்டையைக் கிழித்துக் கொண்டு சேற்றில் புரண்டு அலைய வேண்டியிருக்கும் அல்லது தீயாகக் கொழுந்து விட்டெரியும் தலையை எங்காவது குட்டையில் கொண்டு போய் புதைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தார். வரைவதை நிறுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறினார்
குளம் நோக்கி அவருடைய கால்கள் தானாக நடந்தன. வீட்டில் இருந்து குளம் அத்தனை தூரம் இல்லை. இது அவருக்குள் அடிக்கடி நடக்கும் விஷயம்தான்.

குளத்தின் கரையில் உட்கார்ந்து நீருக்குள் குலுங்கிக் குலுங்கி மினுங்கும் சூரியனின் நிழலையே வெறித்துக் கொண்டிருப்பார். அவர் இயற்கையிலேயே ஒரு கவிஞர். இந்த உலகில் வாழ்ந்து கொண்டே எல்லாவற்றில் இருந்தும் ஒருவகையான எல்லையை நிர்ணயித்துக் கொண்டு இடைவெளிகளுக்குள் பயணம் செய்து வாழ்கிறவர். அத்தனை வயதானவர் இல்லை. ஆனால் இளைஞர் என்றும் சொல்ல முடியாது. நடுத்தர வயதில் இருப்பவர் .

ஆனால் தன் உருவத்தின் மீது பெரிய அக்கறை இல்லாதவர். தன்னுடைய தாடியை ஓழுங்காக வெட்டிக் கொள்ளக்கூட சிரத்தை காட்டாது புதராக மண்டிப் போன தாடியுடன் அலைந்து கொண்டிருந்தார்.

அவருடைய அக்குள் இடுக்கில் மீண்டும் நடுக்கம் ஏற்பட்டது. ராணியின் பேச்சுக் குரல் தவளை ஒன்றின் கத்தலுடன் சேர்ந்து ஒலித்தது போலத் தோன்றியது. தவளையா அது? ஆனால் இன்னும் மழைக்காலம் துவங்கவில்லையே. அதனால் தவளையாக இருக்க வாய்ப்புக் குறைவுதான். ஒருவேளை பூனையின் கத்தலாக இருக்குமோ?இருக்காது. பூனையாக இல்லாமல் இருந்தால் வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம். குளத்தின் அருகே கேட்ட அந்த வினோதமான ஒலி அவர் மூளைக்குள் சென்று கிறுகிறுக்க வைத்தது. என்ன என்று தெரிந்து கொள்ள குளத்தின் கரையோரமாக நடந்து சென்றார்

சௌத்ரி எதையும் சட்டென்று நம்பி விட மாட்டார் . குளத்தின் வழியே அவர் போகும் போது ராணியும் ரத்னாவும் குளத்தில் முரட்டுத்தனமாக ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டபோது,கூட அது ஒருவகையான காட்சிப்பிழையாக இருக்கலாம் என்று தான் முதலில் நினைத்தார். ராணியின் இது போன்ற செய்கைகள் அவரை சொல்லொணா வேதனையில் ஆழ்த்தி வதைத்தது. இன்று எல்லாமே எல்லை மீறிக்கொண்டு போகின்றன என்று நினைத்தார்.

அவர்கள் இருவரையும் அவர் நெருங்கிய போது அவர்களுடைய ஒழுங்கீனமான சிரிப்பொலி அடங்கி, இருவரும் பளிங்குச் சிலைகளாக மாறிப் போனார்கள். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தில் வெறித்துத் தெறித்தன. மாயத்தோற்றமாக இருந்தாலும் எத்தனை தெளிவாக இருந்தது? உருண்டு திரண்டதொடைகள், தூக்கி வாரிய சிகையலங்காரம், ஆழமாகத் துளைத்தெடுக்கும் கருவிழிகள்… என ரத்னாவின் ஒவ்வொரு அவயமும் மிகவும் எடுப்பாகவும் தெளிவாகவும் இருந்தது.

ராணியின் கட்டான மேனி, சாம்பல் கலந்த பழுப்பும், இளஞ்சிவப்பும், கற்பூர வெண்மையும் நீல நிறத்திலும் வர்ணக் கலவையாகத் தெறித்தது. எடுப்பாகப் புடைத்திருந்த அந்தக் கருமச்சம், சௌத்ரியின் மீது துப்பாக்கிக் குண்டுபோலப் பாய்ந்தது.

அவர் தன் கண்ணை நம்பாமல் மீண்டும் அந்தக் காட்சியை விழித்து பார்த்தார் . அவரைக் கண்டதும் ரத்னா தன் வேட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு பக்கவாட்டில் மெல்ல நழுவினான். ஆனால் ராணி மட்டும் எவ்வித எதிர்வினையும் இன்றி தன்னுடைய இருகரங்களாலும் நீரை வாரி இறைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவன் நழுவிப் போவதைக் கண்டதும் தான் இக்காட்சி தன் பிரமையல்ல , உண்மை என்றே உணர்ந்தார் . யாரோ ஒரு ஊஞ்சலில் தன்னை வலுக்கட்டாயமாக உட்கார வைத்து வேகமாகவும் முரட்டுத்தனமாகவும் ஆட்டி, ஆட்டி மிகவும் உயரே தன்னைத் தூக்கி எறிந்தது போல இருந்தது சௌத்ரிக்கு.

ராணியின் கொஞ்சலான குரலில் மீண்டும் அக்காட்சியில் இருந்து மீண்டு சுயநினைவுக்கு வந்தார் சௌத்ரி . அவர் அவர்களை பார்த்து விட்டார் என்றாலும் அதற்காக ஒருவிதத்திலும் பாதிப்படையாமல் எதுவுமே நடக்காதது போல் அவரிடம் பேசினாள் ராணி

“என்னோட மச்சத்தைத்தான் உற்றுப் பார்த்துக்கிட்டு இருக்கே இல்லையா? குறும்பைப் பாரேன்”

சௌத்ரியை சமாதானப்படுத்துவதற்காக பசப்புத் தனமாகச் சிரித்தாள் ராணி.

“எங்கிருந்து நீ இத்தனை ஆபாசமான வார்த்தைகளைக் கத்துக்கிட்டே?”

கடினமாக இறுகிய மன நிலையில் இருந்து சௌத்ரியால் வெளிவரமுடியவில்லை.

“தண்ணீரை விட்டு வெளியே வா…” என்றார்.
“ஓஹோ… என்னை அடிப்பியா?” என்று தண்ணீருக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியபடி ராணி கூச்சலிட்டாள்.

“இன்னிக்கு உன்னை உயிராடு தோலை உரிக்கப் போறேன்”. சாக்கடையில் பெரிய தவளையாக வளர்ந்திருந்த அதே பெண்தான் இவள் என்று தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொண்டார் சௌத்ரி.

“அம்மணமாக நிக்கிற ஒரு பெண்ணை அடிக்கக் கையை ஓங்குறியே வெக்கமா இல்லையா உனக்கு?” என்று ராணி கேட்டாள்.

சௌத்ரி பெரிதும் சீற்றம் கொண்டார்.
“அம்மணமாக இருக்கிற பெண்களை எல்லாம் அடிப்பாயா? என்ன காரியம் இது?” தண்ணீரில் இருந்து அவள் உருவம் இடுப்புக்கு மேல் உயர்ந்தது.

அவள் மிகவும் பயந்திருந்தாள். எனவே அவளுடைய குரலை சண்டைக்கோழி மாதிரி வைத்துக் கொண்டு நிலைமையை சமாளிக்க முயன்றாள்.

“சீ போ…” என்று கூச்சத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சௌத்ரியின் கைகளில் ஆடிக் கொண்டிருந்த குச்சி கையில் இருந்து நழுவியது. சௌத்ரியின் உயரம் ஒரு சில அங்குலத்துக்கு அதிகரித்தது. அவருடைய கைகள் வீங்கிப் போயின. மண்டைக்குள் ஏதோ எறும்புகள் ஊர்ந்து செல்வது போல இருந்தது. சில்லென்ற மூடுபனியைப் போல் மேல்கிளம்பிய கருங்காற்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்றது போல இருந்தது. முழுவேகத்துடன் தீப்பொறிகள் தெறித்து, தீச்சுவாலைகள் உயரக் கிளர்ந்து எழுந்தன. புடைத்திருந்த அவளுடைய மச்சத்தின் மீது அவருடைய பசியேறிய கண்கள் ஆழப்பதிந்தன.

அந்த மச்சம் திடீரெனக் கருங்கல்லாக மாறி அவருடைய நெற்றியைத் துளைத்தது. சண்டையில் தோல்வியைக் கண்ட நாயைப் போல மிகவும் வேகமாக அங்கிருந்து அகன்று தன் அறைக்குள் சென்று படுக்கையில் வீழ்ந்தார்.

அன்றைக்கே ரத்னாவை வெளிய துரத்தினார் சௌத்ரி. ரத்னா, தான் தன்னுடைய கோவணத்தை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்ததாக பிடிவாதத்துடன் மன்றாடிக் கொண்டிருந்தான். ஆனால் ஆவேசம் வந்தது போல சௌத்ரி உக்கிரமாக இருந்தார். இரவு முழுதும் அவர் அரக்கர்களின் படை ஒன்று தன்வசம் இருப்பது போன்ற பாவனையில் சமர் புரிந்து கொண்டிருந்தார்.

அவருடைய உடலின் வழியாக யாரோ துளையிடும் இயந்திரத்தை வைத்துத் துளைப்பது போலவும் இடையில் ஏதோ கருங்கல் ஒன்று தடுப்பதால் அந்த இயந்திரம் துளைக்க முடியாமல் தடைபட்டு நிற்பது போலவும் தோன்றியது.
அன்று பலவகையான வர்ணங்களும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன. மஞ்சள் காவி நிறத்துடன் லேசாக நீலத்தைக் கலந்தார். அது கடலின் ஆழத்தில் கிடைக்கும் அடர்த்தியான நீலவர்ணத்தில் குழைந்து மிளிர்ந்தது.

கண்களுக்கான வர்ணத்துக்காக இளம்பச்சை மற்றும் கருப்பை – இல்லை, விழியோரத்தில் சாம்பல் நிறச் சாயலில் இளஞ்சிவப்பைச் சேர்த்தார். ஒருகணம் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். நீண்ட நேரமாக இதனை அவர் செய்யாமல் இருந்தார். ஒரு ஓவியர் தன்னுடைய முகத்தைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டுமா? கண்ணாடி அந்த ஓவியனுக்கு எதைக் காட்டும்? அவர் வரைந்த எண்ணற்ற ஓவியங்கள் அவருடைய முகத்தை மட்டுமல்லாது ஆன்மாவின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடியாக இருந்தன.

வண்ணக் கலவைகளால் உருவாக்கப்பட்ட அவருடைய இதயமும் எண்ணங்களும் அவர் பார்வையில் படும் வகையில் எதிரும் புதிருமாக நின்று கொண்டிந்தன. இருப்பினும் தன் முகத்தின் பிம்பத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டார். காலியாகிப் போன தகர டின்களில் ஒன்றைக் கையில் எடுத்து அதனை அடிப்புறமாகத் திருப்பிப் பார்த்தார். இரண்டு பாச்சைகள் அவருடைய மூக்கை உரசியபடி பறந்து போயின. புறக்கையால் டப்பாவில் படிந்திருந்த ஒட்டடையைத் துடைத்துவிட்டு டப்பாவின் பளபளப்பான மேற்பரப்பில் தன் முகத்தைப் பார்த்தார்.

முதலில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. என்னதான் நுணுக்கமாகக் கூர்ந்து பார்த்தாலும் அடர்த்தியான குச்சங்களாகப் படர்ந்திருக்கும் கடலின் ஆழத்தைப் பார்ப்பது போலத்தான் அவரால் உணரமுடிந்தது. அல்லது இமைகளில் ஏதேனும் பிரச்னையோ? காணும் அனைத்தும் கலங்கியும் நுரைத்தும் காணப்படுவது போல அவருக்குத் தோன்றியது.

வேடிக்கையாகத் தொங்கும் அவருடைய தாடியும் பசித்த கண்களும் அனலாக தகிப்பதைக் கண்டார். அவரா அது? டப்பாவை மீண்டும் தலைகீழாகத் திருப்பி மீண்டும் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டார்.

அவருடைய தாடி இன்னும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தபோது கறைபடிந்த அவருடைய மூக்கின் நுனியும் செம்பட்டையாகிப் போன ஒழுங்கற்ற மீசையும் தெரிந்தது. ஒரு கத்திரி இருந்திருந்தால் அந்த மீசையை ஒழுங்காகத் திருத்திக் கொண்டிருக்கலாம். பார்ப்பதற்கும் கொஞ்சம் மதிப்பாக இருந்திருக்கும்.
சுன்னனின் மீசை தனக்குக் குத்தியதாக ராணி சொன்னாள். மீசை குத்தியதால் தும்மல் வந்ததாகவும் சொன்னாளே.

தன்னுடைய மூக்கால் தும்முவது போன்ற ஓசையை எழுப்பினார். ரத்னா கோமணம் அணிந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும். இப்போது ஒருவேளை அவன் வேட்டியைக் கட்டி இருக்கலாம். அல்லது தன் பார்வைக்கு வரும்போது மட்டும் அவன் வேட்டியைக் கட்டிக் கொண்டு வரலாம். ஆனால் அவனுடைய அந்த வெல்லச்சேவு?

சௌத்ரிக்கு விநோதமான எண்ணம் ஒன்று தோன்றியது. தன் வீட்டின் சுவர்கள் அனைத்தும் வெல்லச்சேவினால் கட்டப்பட்டது போலவும் அச்சுவர்கள் தன்னை வலுவாக நெருக்கி நசுக்குவதாகவும் தோன்றியது. அரைகுறையாகத் தாக்கப்பட்டு படபடக்கும் சிறகுகளுடன் தவிக்கும் ஈயைப்போல அந்த வெல்லச்சேவுக் குவியலின் உச்சியில் அவர் சிக்கியிருந்தார்.

மேலும் கீழுமாக பரபரப்புடன் நடந்ததில் அவர் மிகவும் களைப்புற்று ஸ்டூலின் மீது உட்கார்ந்து கொண்டார். அரைகுறையாக முடிக்கப்பட்டிருந்த ஓவியத்தின் மேலிருந்து திரையை விலக்கினார். சற்று நேரத்துக்குப் பிறகு அந்த ஓவியத்தில் இருந்த புள்ளிகளும் பூச்சுக்களும் அவரைச் சுற்றிச் சுற்றிப் பறந்து பறந்து ஓரிடத்தில் உறைந்து நின்றன. தோள்கள் மெருகேற்றப்பட்ட தோலைப்போல மினுமினுத்தன.

கண்கள் நீலம், கருமை மற்றும் பச்சை நிற விளக்குகளைப் போல மிளிர்ந்தன. மச்சம்? அந்த மச்சம் இங்கே எப்படி வந்தது? பாம்பைப் போலப் புடைத்துச் சுருண்டிருந்தது. ஓ… மச்சம். டிக்… டிக்… டிக்… அவருடைய இதயம் கடிகாரத்தைப் போன்று துடித்தது.

அவர் ஒரு கணம் எழுந்து கொண்டார். தன்னை அறியாமலே கால்கள் ராணியின் குடிசைக்கு அவரை இழுத்துச் சென்றன. அக்குடிசை மிகவும் குறுகலாக, அசிங்கமாக, மூச்சைத் திணற வைப்பதாக இருந்தது. அதன் கூரையை நாளை சற்று உயர்த்திக் கட்ட வேண்டும் என்று நினைத்தார். அது வேண்டாம்.

காலி டப்பாக்களை அடுக்கி வைத்திருக்கும் தன்னுடைய வீட்டின் அறை ஒன்று இந்தக் காரியத்துக்குப் போதும் என்று நினைத்தார். அவர் இருளில் சற்று முன்னேறினார். அவருடைய இதயம் இன்னும் கடிகாரத்தைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது. அதனுள் இருந்த இருட்டு ஈரமான அடுப்புக்கரியைப் போல அவருக்குள் அப்பிக் கொண்டது. கயிற்றுக் கட்டிலின் நாடாக்களில் அவருடைய கை மாட்டிக் கொண்டது.

அவர் இருளில் மூர்க்கமாகத் ராணியின் உடலைத் தேடி தடவிக் கொண்டே சென்றார். ஆனால் ராணி அங்கு இல்லை. கொசுக்கள் அவருடைய உடலெங்கும் அட்டைபோலப் பரவி குருதியைக் குடித்தன. முரட்டுத்தனமாக ரீங்கரித்தன கொசுக்கள். வெல்லச்சேவுகள் ஒவ்வொன்றாக அவர் மீது விழுந்து கொண்டிருந்தன.
மறுநாள் காலை, ராணியின் முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கி நிறுத்தி,

”தேவடியா, ராத்திரி எல்லாம் எங்கே போயிருந்தே?” என்றுகேட்க வேண்டும் போல இருந்தது அவருக்கு. ஆனால், தன்னுடைய குடிசையில் அவருக்கு என்ன வேலை என்றும் தன்னுடைய கட்டிலில் இவர் ஏன் புரண்டு கொண்டிருந்தார் என்றும் அவள் கண்டிப்பாக திருப்பி கேட்பாள். எனவே சௌத்ரி மவுனம் காத்தார்

அன்று அமைதியாக அவர் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார். ராணியும் அன்று அமைதியாக இருந்தாள். அவள் ஏதாவது பேசவேண்டும் என்று நினைத்தார். அப்போதுதான் நேற்று இரவு அவள் எங்கே போயிருந்தாள் என்கிற விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் எதுவுமே கேட்கமுடியாதபடி அவள் முகத்தைக் கடுப்புடன் உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டும் சிணுங்கிக் கொண்டும் இருந்தாள்.
பூச்சாடியை தரையில் வைப்பதைக் கவனித்த அவர்,

‘என்ன களைப்பா இருக்கா?” என்று மிகவும் கரிசனத்துடன் கேட்டார். அவளுடன் அன்று எந்தத் தகராறும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தார்.

“பின்னே? என்னை என்ன களிமண்ணுலேயா செஞ்சிருக்கு?” என்று அவரிடம் பேசிக் கொண்டே தன் இருகைகளாலும் இடுப்பை லேசாகப் பிடித்து மஸாஜ் செய்து கொண்டிருந்தாள் அவள்.

அவளை உற்சாகப்படுத்தும் வகையில் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தார் சௌத்ரி. ஆனால் திடீரென தொனியை மாற்றிக் கொள்ளக் கூச்சமாக இருந்தது அவருக்கு.

“சரி. வா. வேண்டிய ஓய்வு எடுத்தாச்சு”.

தன்னோடு அவள் சண்டையிடுவாள் என்று எதிர்பார்த்தார். அவள் தானாக ஏதாவது பேசுவாள் , அப்பொழுது தான் எல்லாவற்றையும் பேசி விட வேண்டும் என்று அவர் நினைத்தார் .

ஆனால் அவளோ ஜாடியை இடுப்பில் சுமந்து கொண்டு அமைதியாக போஸ் கொடுக்கத் துவங்கினாள்.
அன்று வர்ணங்கள் அவருடன் தீராத தர்க்கம் புரிந்து கொண்டிருந்தன. அவை அவரை ஏளனம் செய்து கொண்டிருந்தன. அந்த மச்சத்தை அன்று வரையவேண்டும் என்று யோசித்திருந்தார்.

வர்ணங்கள் தங்களுக்குள் மச்சங்களைக் கொண்டிருக்காதோ? ஆனால் வர்ணங்கள் கலகத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டதும் அதுபோன்ற யோசனையை முற்றிலுமாகத் தவிர்த்தார்.

ராணி அங்கிருந்து கிளம்புவதற்காக முக்காலியை விட்டு எழுந்தபோது அவள் சுற்றிக் கொண்டிருந்த துப்பட்டாவில் இருந்து வெல்லச்சேவுத் துண்டு ஒன்று கீழே விழுந்தது. அவள் அதை கவனிக்கவில்லை. ஆனால் சௌத்ரிக்கு ஏதோ கூரையே தன் மீது சரிந்து விழுந்ததைப் போன்று இருந்தது.

“இந்த… இந்த வெல்லச்சேவு…” கோபத்தில் அவருடைய வாயில் நுரை தள்ளியது. அந்த வெல்லச்சேவுத் துண்டை குனிந்து எடுக்க அவள் முயற்சித்தாள். ஆனால் சௌத்ரியின் கோபத்தைப் பார்த்ததும் எண்ணத்தைக் கைவிட்டாள்.

“நீ வேணும்னா அதை எடுத்துக்கோ” என்று தோளைக் குலுக்கித் துடுக்காகச் சொல்லி விட்டு அவள் அகன்று சென்று விட்டாள்
மரணத்துக்கு ஈடான விரைப்பு சௌத்ரியின் உடல் எங்கும் பரவியது.

ராணியின் உருவம் மறைவதைப் பார்த்துக் கொண்டே நின்ற அவர், தன் காலடியில் விழுந்திருந்த அந்த வெல்லச் சேவுத் துண்டை வெறியோடு பொடிப் பொடியாக நசுக்கினார்.
மறுநாள் ராணி எவ்விதச் சுவடும் இன்றி மறைந்து போனாள். தன்னுடன் எதையும் எடுத்துச் செல்லாமல் வந்தது போலவே திரும்பிப் போனாள். மீண்டும் சேற்றிலும் சகதியிலும் புரளும் தன்னுடைய வாழ்க்கைக்குத் திரும்பினாள்.

சௌத்ரியின் ஓவியம் அரைகுறையாக நின்றுபோனது. ஐயாயிரம் ரூபாய் சன்மானம் அவருடைய மூளைக்குள் ஒரு கரும்புள்ளியாக உறைந்து போனது. மச்சத்தை நினைவில் கொண்டுவரும் கரும்புள்ளி. அவருடைய நெஞ்சில் குத்திய கரும்புள்ளி.

இதற்குப் பிறகு சௌத்ரி ஒரு வகையான மனக்கொதிப்புடன் வாழத் தொடங்கினார். ராணி மாயமாக மறைந்து போனதைப் அவர் யாரிடமும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் இவர் மீதே அவர்கள் சந்தேகப்படுவார்கள்.

நாட்கள் நகர்ந்தன. தொடர்ந்து ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். ஆனால் யாரும் அவருடைய ஓவியங்களுக்கு காலணா கூடக் கொடுக்கத் தயாராக இல்லை. அதற்கான காரணம் என்னவென்றால் அவர் வரையும் பூக்களின் மீது கருப்பு மற்றும் சாம்பல் நிற வர்ணத்தைப் பூசியதால் அவை விகாரமாகக் காட்சியளித்தன. அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள்.

அவர் வீட்டில் இருந்த வர்ணங்கள் எல்லாம் ஒன்றாகக் குழைந்து போய் கலங்கிய சேறாகக் காட்சியளித்தன. அவரால் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஓவியத்தில் கவனம் செலுத்த இயலவில்லை
மேலும் சில வேதனையான சம்பவங்கள் தொடர்ந்தன. அண்டை வீட்டுக்காரர்கள் அவரிடம் ராணியைப் பற்றிக் கேட்கத் துவக்கினார்கள் அவள் எங்கே போனாள் என்று தனக்குத் தெரியாது என்று எல்லோரிடமும் இவர் சொல்லிக் கொண்டிருந்தார் ஆனால் இதுபோன்ற நேரடியான பதில் அவர்களைத் திருப்திப் படுத்தவில்லை.

“ராணியை யாருக்கோ விற்றுவிட்டார் இந்த சௌத்ரி”
“ஏதோ ஒரு வியாபாரிக்கு பல ஆயிரங்களுக்கு விற்று விட்டார்”

“அவளோடு இந்த ஆளுக்குக் கள்ளத் தொடர்பு இருந்தது. எப்படியோ அவளைக் கழித்துக் கட்டி விட்டார்”

இப்படி ஆதாரமற்ற வம்புகள் முடிவில்லாமல் தொடர்ந்தன. சௌத்ரியின் வாழ்க்கை ஒரு இருட்டறையில் முடங்கிப் போனது. ஜனங்கள் ஏதோ அவரை வறுத்து விழுங்கத் துடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.
அது மட்டுமல்ல திடீரென ஒருநாள்.

ராணி திரும்பி வந்து சாலையின் முனையில் ரத்தம் தோய்ந்த சிறிய மூட்டை ஒன்றை விட்டுச் செல்ல முயன்றபோது அங்கு பெரும் ரகளை ஏற்பட்டது. அந்த மூட்டைக்குள் பிறந்த குழந்தையின் சடலம் இருந்தது. உடனடியாக அந்தக் கிராமத்தில் ரெய்டுகள் நடந்தன. சௌத்ரி மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச நிதானத்தையும் இழக்கத் துவங்கினார். ராணி மாயமாக மறைந்து போன புதிரும் மிக எளிதாக விடுபட்டது.

சௌத்ரி வாயடைத்துப் போனார். மக்கள் அவர்தான் ராணிக்கு அநீதி இழைத்தவர் என்று பேசத் துவங்கினார்கள் என்ன அநீதி இது? இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினால் ,வாழ்நாள் முழுதும் அவர் சேமித்து வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் நாசமாகப் போய்விட்டது. சமூகத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாக அவர் தலைகுனிந்து நின்றார்

ஆனால் கடவுளுக்குத் உண்மை தெரியும். குற்றமற்ற தன்னை கடவுள் காப்பாற்றுவார் என்று உறுதியுடன் நம்பினார். இந்த சமூகத்தின் முன்னால் தான் நிரபராதி என்று கடவுள் நிரூபிப்பார் என்று அவர் நம்பிக்கையுடன் காத்து இருந்தார் சத்தியம் எப்போதும் வெல்லும். ஆனால்… இவர் குற்றவாளி என்று அவர்கள் எப்படித் தீர்மானித்தார்கள்? இந்த உலகில் பிறந்ததே தான் செய்த பெரும் குற்றம்தான் என்று வருத்தப்பட்டார்.

தவறே செய்யாமல் அந்த குற்றத்தை தான் சுமப்பதற்கு பதில் அந்த தவறை செய்திருக்கலாமே என்று ஆதங்கப் பட்டார்

அப்படி நடந்து இருந்தால் , சிறைத்தண்டனை, வலி, பாதிப்பு, கடுந்துயரம், சபையில் அவப்பெயர் போன்ற அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டிருப்பார். கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்க மாட்டார். அங்கு மச்சம் இருந்தது உண்மைதான். சரி.

ஆனால் மனிதனுக்கு உள்ள பலவீனங்களைப் பற்றி கடவுளுக்குத் தெரியாதா என்ன? ஒருவேளை ராணியிடம் போலீசார் விசாரிக்கும்போது அல்லது வழக்கறிஞர்கள் தன்னைக் குறுக்கு விசாரணை செய்யும்போது தான் வகையாக சிக்கிக் கொள்வோம். அப்போது ராணி தன்னுடைய வாக்குமூலத்தினால் தன்னை விடுவித்தாலும் அதன் வழியாக அவள் தன்னை முற்றிலுமாக அழித்துவிடலாம் என்கிற விஷயம் சௌத்ரிக்குத் தெரிந்திருக்கவில்லை.

“அது சௌத்ரிக்கு சொந்தமானது அல்ல” என்று பெருந்திரளாகக் கூடியிருந்த நீதிமன்றத்தில் ராணி வாக்குமூலம் அளித்தாள்.

“சௌத்ரி ஆண்மையற்றவர்” என்று அலட்சியத்துடன் உளறினாள். சுன்னனையோ ரத்னாவையோ கேட்டுப் பாருங்கள்.

அது யாருடையது என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? ஹூம்.. என்று விரைப்புடன் கத்தினாள்.

சௌத்ரியின் தலைமீது பிரம்மாமாண்டமான கறுப்பு மலை ஒன்று வெடித்துச் சிதறியது. பேரிடியும் மின்னலும் இணைந்து கொண்டது. தூரத்தில், வெகுதூரத்தில் ஆழமான வட்டமான கரும்புள்ளி ஒன்று கிளர்ந்து உச்சியில் நின்றது.

சௌத்ரி இன்றும் கூட, சாலையில் உட்கார்ந்து ஒரு கரிக்கட்டியால் பெரும் வட்டங்களை, பெரும்புள்ளிகளாக, கருமையான மச்சக் குறியைப் போல எப்போதும் வரைந்து கொண்டிருக்கிறார்.

•••••

வேர்கள் – இஸ்மத் சுக்தாய் சிறுகதை / தமிழில் / – ஜி.விஜயபத்மா

இஸ்மத் சுக்தாய்

இஸ்மத் சுக்தாய்

அன்றைய தினம் . வெளுத்த முகங்களுடன் அனைவரும் உறைந்திருந்தனர் . சாப்பாட்டு வேலைகள் ஒன்றும் நடக்கவில்லை வீட்டை மயானம் சூழ்ந்து இருந்தது . வலிகள் தெரியா குழந்தைகள் உலகம் மட்டும் உல்லாசமாக இருந்தது .

பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை விடப்பட்ட ஆறாம் நாள் அன்று . குழந்தைகள் , ஓடுவதும் , தாவிக் குதிப்பதும் ,ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு கூச்சல் இடுவதுமாக வீடு இரண்டு பட்டது . இந்த குழந்தைகளுக்கு ஆகஸ்ட் பதினைந்து என்றால் என்ன என்று புரியாது . ஆங்கிலேயர்கள் நாட்டை கூறு போட்டதும் , இன்று ரணங்களின் மேல் ஒரு சுதந்திரத்தை கொடுத்து விட்டு வெளியேறி யதையும் இந்த குட்டி பிசாசுகள் அறியாது . முனை மழுங்கிய கத்திகள் குரல் வளைகளை அறுக்க திராணியற்று , இந்தியாவை சிதைத்து போட்டன குருதிகளுக்கான ஊற்றை தொண்டைக்குழியில் தோண்டி எடுத்த அரக்கத்தனம் ஊரெங்கும் ரத்த சேற்றினை வாரி இறைத்தது .

வெட்டு பட்ட காயங்களை தைக்க இங்கு ஒருவரும் இல்லை
சாதாரண நாட்களாக இருந்தால் , விடுமுறை நாட்களில் இந்தக் குட்டி பிசாசுகளை சமாளிக்க இயலாமல் தெருவுக்கு அனுப்பி இருப்போம் . ஆனால் , சில நாட்களாக நகரமே ஒரு மயான வலைக்குள் சிக்கி கொண்டது போல கலவர பூமியாக இருந்தது . முஸ்லீம்கள அச்சுறுத்தப் பட்டு வீடுகளுக்குள் முடக்கப் பட்டனர் . வீட்டிற்கு வெளிப்புறம் தாளிட்டு , காவலர்கள் ஊரைச் சுற்றி வலம் வந்தனர் . கள்ளம் கபடமில்லா குழந்தைகள் உலகம் இவை எதையும் அறியாமல் , தங்கள் விளையாட்டை பூட்டிய வீட்டிற்குள் தொடர்ந்து கொண்டு இருந்தன.

குழந்தைகள் , வறுமை, அறியாமை ஆக்கிரமித்த இடங்கள் மிக இலகுவாக மத வெறியர்களுக்கான சரியான வேட்டைத்தளமாக உருமாறி விடுகின்றன. மக்கள் துண்டாடப் பட்டு போக்கிடம் அறியாமல் இங்கும் அங்குமாக புலம் பெயர்ந்து கொண்டு இருந்தனர். இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் ,கூட்டம் கூட்டமாக பஞ்சாபில் இருந்து வந்து குடியேறும் அகதிகளின் எண்ணிக்கை அசச்சுறுத்தலாகி , அங்கேயே வசிக்கும் சிறுபான்மை முஸ்லீம்களின் வாழ்வாதாரம் பறிக்கப் படுமோ என்ற கவலை யில் அவர்களிடையே பதற்றம் அதிகரித்தது .ஊரே குப்பைகளால் நிறைக்கப்பட்டு ,அலங்கோலமாக கிடந்தது .

எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் சவக்களையுடன் திரிந்தார்கள் . இரண்டொரு இடங்களில் சச்சரவுகள் வெளிப்படையாகவே வெடித்தது , மேவார் மாகாணத்தை பொறுத்தவரை இந்துக்களும் , முஸ்லீம்களும் மிகப் பெரிய அளவில் வேறுபாட்டை கொண்டு இருக்க வில்லை அவர்களின் உருவங்களோ , ஆடைகளோ , பெயர்களோ ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தன. ஆனால் வேறு இடங்களில் இருந்து இங்கு இடம் பெயரும் முஸ்லீம்கள் மட்டும் எளிதில் அடையாளம் காணப் பட்டனர். மக்களிடையே காற்றைப் போல வதந்தியாக , ஆகஸ்ட் 15 பற்றிய செய்தி பரவி இருந்தது .

யூகங்களால் விளைவுகளை புரிந்து கொள்ள முடிந்த ஒரு சிலர் ஏற்கெனவே பாகிஸ்தான் எல்லையை பாதுகாப்பாக கடந்து சென்று விட்டனர். ஆனால், நீண்ட நாட்களாக அந்த மாகாணத்தில் வசித்து வந்தர்களால் நடை முறை சிக்கலை அவதானிக்க சாமர்த்தியம் இல்லாது இருந்தார்கள் . இந்தியா , பாகிஸ்தான் இடையே நிலவிக் கொண்டு இருக்கும் பிரச்சனைகள் பற்றிய போதிய ஞானம் அவர்களுக்கு இல்லை அதனால் அது அங்கே விவாதப் பொருளாக மாறவில்லை . விசயத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தவர்கள் , தங்களையும் , தங்கள் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளும் , முன்னேற்பாடுகளில் இறங்கி தங்கள் அரண்களை பலமாக அமைத்துக் கொண்டனர் .

மிச்சமிருந்த வெள்ளந்தி மக்கள் , பாகிஸ்தானில் நான்கு சேர் கோதுமை ஒரு ரூபாய்க்கும் , பெரிய ரொட்டிகள் வெறும் காலணாவுக்கும் கிடைக்கிறது என்ற புரளியை உணமை என்று நம்பினார்கள் . அவர்கள் ஆசையால் தூண்டப்பட்டு பாகிஸ்தான் பகுதிக்கு புலம் பெயரத் துவங்கினர்.. மீதமுள்ள அறிவாளிகள் , காலணாவும் , ரூபாயும் சம்பாதிக்க இருத்தலை தக்க வைத்து கொள்வது அவசியம் என உணர்ந்து போராடினாலும் தங்கள் வாழ்வை இங்கேயே அமைத்துக் கொள்வது என சமூக போருக்கும் தயாரான மன நிலையில் காத்து இருந்தனர்.

இருத்தலை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் கலந்த தவிப்பில் இருந்த மக்கள் ,சிறுபான்மை சமூகத்தினரை அப்புறப் படுத்துவதில் வெறியுடன் நின்றனர். இதை அவர்கள் வெளிப்படையாக விவாதிக்கவும் தயங்கவில்லை . இதனால் அங்கு சிக்கலான பிரச்சனைகள் உருவாகி பதட்ட மன நிலையை எல்லோரு மனதிலும் விதைத்து இருந்தது . அந்த ஊரில் பரம்பரையாக பணக்காரர்களாக வாழ்ந்து வந்த தாகூர்கள் , தங்கள் நிலைப்பாட்டை மிக தெளிவாக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி விவாதித்தார்கள் . அவர்கள் நாட்டை துண்டாடும் விஷயத்தை அறவே வெறுத்தார்கள் .

” இங்கே இந்துக்களும் , முஸ்லீம்களும் கலந்து சரிசமமாக வாழ்ந்து வருகிறோம் . அவர்களை தனித்தனியே அடையாளம் கண்டு பிரிப்பது சாதாரண வேலையல்ல . அதை சரியான ஆள் பலமில்லாது நீங்கள் செய்ய இயலாது ஆட்களை வேலைக்கு எடுத்தால் , அரசுக்கு வீண் செலவு . , இங்கு புதிய மக்களை குடியேற்ற தேவையான நிலத்தை ஒதுக்கி தர அரசுக்கு பணம் தேவை . அந்தப் பணத்தை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம் . இங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் , இவர்கள் காட்டில் வசிக்கும் மிருகங்கள் அல்ல ,ஒரு நாளில் விரட்டி அடிப்பதற்கு என்று தங்கள் முடிவில் பிடிவாதமாக நின்றனர்

ஒவ்வொரு நாளும், வலம் வரும் புதிய வதந்திகளால் , அச்சுறுத்தப் பட்டு மக்கள் தெளிவு இல்லாமல் , அங்குமிங்குமாக இடம் பெயர அலைந்து கொண்டு இருந்தார்கள் . அவற்றில் அந்த ஊரில் சில குடும்பங்கள் வெளியேறாமல் தங்கியிருந்தனர் ஏறக்குறைய அவர்கள் அனைவரும் மஹாராஜாவிடம் பணிபுரிபவர்களாகவே இருந்தனர். அவர்கள் வேறு எங்கும் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை . அதற்கு மஹாராஜாவும் ஒப்புதல் அளிக்க மாட்டார். ஆனாலும் சில குடும்பங்கள் தொடர்ந்து இதே இடத்தில வசிப்பது ஆபத்து என பயந்து போய் , கிளம்பி விட வேண்டும் என்று அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்து இருந்தனர். . அதில் எங்கள் குடும்பமும் ஒன்று .

அஜ்மீர் சென்று இருந்த பர்ரே பாய் , அங்கிருந்து வந்த உடனேயே , எல்லோரிடமும் பீதியைக் கிளப்பினார். தங்கள் குடும்பத்தினர் பாகிஸ்தானில் குடியேறியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார் .ஆனாலும் அவர் பேச்சை ஒருவரும் பொருடபடுத்த வில்லை . தன் பேச்சை ஒருவரும் கேட்க வில்லை என்றதும் கிட்டத்தட்ட அந்த திடடத்தை கைவிடும் மன நிலைக்கு வந்து விட்டார் பர்ரே பாய் . அந்த சமயத்தில் சப்பன் மியான் செய்த சில தந்திரமான காரியங்களால் , பர்ரே பாய் கூறியதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.

சப்பன் மியான் பள்ளிக்கூடச் சுவரில் ” பாகிஸ்தான் ஜிந்தாபாத் ” என்று எழுத எல்லா ஏற்பாடுகளும் செய்து எழுத துவங்கினார். அதே சமயம் ரூப்சந்த்ஜியின் பிள்ளைகள் அந்த சுவற்றில் ” “அகண்ட் ஹிந்துஸ்தான்” என எழுதினர் . இருசாராருக்கும் இந்த விஷயத்தில் சண்டை வந்து , அது பெரும் சமூக அச்சுறுத்தலாகவும் இருபுறமும் கொலை மிரட்டல்களுமாக கிளர்ந்தெழுந்தது .நிலைமை கட்டுக்கடங்காமல் வரம்பு மீறிப் போக துவங்கியதும் போலீஸ் வரவழைக்கப் பட்டு, முஸ்லிம் சிறுவர்களை லாரியில் ஏற்றி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.

இந்த சிறுவர்கள் , வீடு சேர்ந்ததும் , எப்பொழுதும் அவர்களை சபிக்கும் அவர்களின் தாய்கள் இன்று தங்கள் குழந்தைகளை ஆரத்தழுவி முத்தமிட்டனர். எங்களின் இரு குடும்பங்களுக்கும் இடையே மூன்று தலைமுறைக்கும் தாண்டிய நெருங்கிய அன்பால் பிணைந்த உறவிருந்தது . முன்பு இதுபோல் நடந்து இருந்தால் ரூப்சந்த்ஜியின் பிள்ளைகளுடன் சண்டையில் ஈடுபட்டு சப்பா வீடு திரும்பினான் என்றால், துல்ஹன் பாய் அவன் கன்னத்தில் சில அறைகள் விட்டு ரூப்சந்த்ஜி வீட்டுக்குப் போய் காயத்துக்கு விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு கொஞ்சம் கொயினா மருந்தையும் வாங்கிக் குடித்து வரச்சொல்லி கண்டித்து அனுப்பி இருப்பாள்.

ரூப் சந்த்ஜி எங்கள் அப்பாவின் பால்ய நண்பர் மற்றும் எங்கள் குடும்ப வைத்தியரும் கூட .. அவருடைய மகன்கள் என் சகோதரர்களுக்கு நண்பர்களாகவும் , எங்கள் அண்ணிகள் அவரது மருமகள்களின் நெருங்கிய சினேகிதிகளாகவும் இருந்தனர். எங்கள் இரு குடும்பங்களின் குழந்தைகளுகிடையே இருபாலரும் வேற்றுமை இன்றி அன்பாய் இருந்தனர். குழ்நதைகளும் அபபடியே ஒன்றாகவே வளர்ந்தனர். இது போல் எங்கள் நாட்டிற்குள் பிரிவினை வரும் , அது எங்கள் ஒற்றுமையை ,நட்பை கூறு போடும் என்று ஒருநாளும் நாங்கள் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை .

எங்கள் இரு குடும்பங்களுக்குள்ளும் எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் அங்கம் வகித்தனர். அனைவரும் ஒன்று கூடும் சமயம் , கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி போலவே அனைவருக்குள்ளும் அரசியல் தொடர்பான காரசாரமான விவாதங்கள் நடை பெறும் .அப்பா காங்கிரஸ் காரராக தன் பக்கத்து நியாங்களை எடுத்துரைப்பார்.. டாகடர் சாஹிப்பும் , பர்ரே பாயும் முஸ்லீம் லீக் ஆதரவாளர்கள் .

கியான்சந்த் மகாசபா ஆதரவாளராக இருந்தார் . குலாப் சந்த் சோஷலிஸ்டாகவும், மஞ்ஜ்லே பாய் கம்யூனிஸ்டாகவும் இருந்தனர் வீட்டுப் பெண்கள் இந்த விஷயத்தில் மிக ஒற்றுமையாக அவரவர் கணவர்களின் கட்சியை ஆதரித்தார்கள் . குழந்தைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு அவரவர் தந்தையை ஆதரித்து விட்டு , ஒற்றுமையாக எல்லோர் பேச்சுக்கும் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள்.எப்பொழுதும் விவாதங்கள் காங்கிரஸ்காரர்களால் தான் ஆரம்பித்து வைக்கப் படும் .காங்கிரஸ்காரர்கள் ஆரம்பித்து வைக்கும் விவாதங்கள் , சூடேறி , கம்யூனிஸ்ட்கள் மீதும் , சோஷலிஸ்டுகள் மீதும் , குற்றசாட்டுக்கள் வசைகளாக முடியும் . தங்கள் மீதான தாக்குதலுக்கு அரசியல் ரீதியாக பதில் இல்லாமல் அவர்கள் ஒரு கட்டத்தில் காங்கிரஸ் காரர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா


உடனே மகாசபையம் , முஸ்லீம் லீக்கும் ஒன்று சேர்ந்து காங்கிரசை தாக்கும் . சில ஆண்டுகளாக முஸ்லீம் லீக், மஹாசபாவிற்கு ஆதரவு அதிகமாகி காங்கிரசின் பாடு திண்டாட்டமாகி விட்டது .இரு குடும்பத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களும் ஒன்றிணைந்து அவர்கள் மட்டும் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற ரீதியில் உரிமைகளை கையில் எடுத்துக் கொண்டு உலாவ ஆரம்பித்து விட்டனர். மறுபுறம் சிறிய அளவில் , கியான்சந்த் தலைமையில் சேவக் சங் துவங்கியது.. இவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் கருத்துக்களில், கொள்கைகளில் வேறு பட்டு இருந்தாலும் , நட்பிலும் , பாசத்திலும் எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையாகவே இருந்தனர்.

“என் லல்லு , முன்னியை திருமணம் செய்து கொள்ள போகிறானாம் “ என்று மஹாசபா கியான்சந்த் முஸ்லீம் லீக் ஆதரவாளரான முன்னியின் தந்தையிடம் கூற , அவரோ “அப்பா உடனே உன் மருமகளுக்கு தங்க கொலுசு வாங்கி வா போ ” என்று கேலி செய்வார். இதற்கு பர்ரே பாய் ,” அந்தக் கொலுசு சுத்த தங்கமாக இருக்கும்ல ?” என்று கியான்சந்த்தின் தொழிலைக் கேலி செய்வார் .

சுவர்களில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று நேஷனல் குவார்டுகள்,எழுதினால் சேவக் சங் ஆட்கள் அதை அழித்து விட்டு, “அகண்ட் ஹிந்துஸ்தான்” என்று எழுதிவிடுவார்கள் . முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்ற தனித் தேசம் உருவாகப் போகிறது என்ற புரளிகள் எங்கும் பரவிக் கொண்டிருந்த பொது , இப்படி எல்லாம் இன்னொரு புறம் கூத்து நடந்து கொண்டு இருந்தது . இந்து முஸ்லீம் பிரிவினைக்கான உணர்வினை மக்கள் அறியாமலே , அவர்கள் சிந்தனையில் விதைக்கப் பட்டு கொண்டு இருந்தன.
ஒருங்கிணைந்த ஆசியாவைப் பற்றிய திட்டங்கள் குறித்து எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்கும் அப்பாவும் ரூப்சந்திஜியும் இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு லேசாகப் புன்னகைப்பார்கள்.

புற விஷயங்கள் குறித்த அக்கறை எதுவும் இல்லாமல் , அம்மாவும் சாச்சியும் கொத்துமல்லி விதை பற்றியும் மஞ்சள் கிழங்கு பற்றியும் மகள்களின் சீர்வரிசைகள் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

மருமகள்களோ , ஆடை அலங்கரங்கள் பற்றி , தீவிரமாக கருத்து சொல்லிக் கொண்டு , விவாதித்துக்கொண்டு இருப்பார்கள் . டாக்டர் சாஹிப் வீட்டில் இருந்து எங்கள் வீட்டிற்கு சமையல் பொருட்களும் மருந்துகளும் வந்து கொண்டிருந்தன. வீட்டில் யாருக்காவது தும்மல் வந்து விட்டால் கூட அடுத்த கணம் அவர் டாகடர் சாஹிப் வீட்டில் மருந்து குடித்துக் கொண்டு இருப்பார்
அம்மா சப்பாத்தி , கெட்டி பருப்பு , தயிர் வடை செய்தால் , டாகடர் சாஹிப்பிற்கு அழைப்பு போகும் .
அவர் தன்னுடைய பேரப்பிள்ளைகளைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போவார்.” அடிக்கடி அவங்க வீட்ல பொய் சாப்பிட றீங்களே ? என்று டாகடர் சாஹிப் மனைவி கேட்டால்
“அப்புறம் எப்படி மருந்துக்கு காசு வசூல் செய்யறது .?” என்று திருப்பி கேட்டு விட்டு , “லாலாவையும் சன்னியையும் கூட சாப்பாட்டுக்கு அங்கே அனுப்பி வை” என்று சொல்வார்.

“ஹே ராம். அநியாயத்துக்கு வெட்கம் கெட்ட ஜென்மங்களாக இருக்கே” என்று அவள் தலையில் அடித்துக் கொள்வாள்.
அம்மா தனக்கு உடம்பு சரியில்லை என்றால் , ஐயோ இந்த கோமாளி டாகடர் வேண்டாம் நான் நகரத்துக்கு போய் நல்ல டாகடர் பார்த்துக் கொள்கிறேன் என்று புலம்புவாள் . ஆனால் பக்கத்து ஊர் வரை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை விளைவு டாக்டர் சாஹிப் வீட்டுக்கு விரைந்து வந்துவிடுவார்.

” புலால் ஜர்தாவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாயா ? அதுதான் என்று அவர் அம்மாவை கிண்டல் செய்வர் . அம்மா பர்தாவின் உள்ளே இருந்து கொண்டு முறைப்பாள் .

“ என்னை பார்க்கணும்னு சொன்னால் நான் வரமாட்டேனா ? அதுக்கு ஏன் உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்றே ? உனக்கு ஒன்னும் இல்லே நலலா இருக்கியேன்னு அம்மாவை டாகடர் சாஹேப் கிண்டல் அடிப்பார் .

அம்மா வாய்க்குள்ளேயே அவரைத் திட்டி மூணு முணுப்பாள் அப்பா இவர்கள் சண்டையை ரசித்து சிரிப்பார்
டாகடர் சாஹிப் வீட்டிற்கு வந்து விட்டாலே , வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எதாவது வியாதியை சொல்லிக் கொண்டு அவரை பரிசோதிக்க சொல்வார்கள்
” ஆஹா , நான் என்ன மிருக வைத்தியரா என்று ” கேட்டுக் கொண்டே அனைவரையும் வரிசையில் நிறுத்தி பரிசோதிப்பார்

எங்கள் வீட்டில் யாருக்காவது குழ்நதை பிறக்க போகிறது என்றால் , இலவச மருத்துவர் ஒருத்தர் இருக்காருன்னு வரிசையா பெற்று தள்ளுகிறீர்களா ? என்று கேட்பார். பிரசவ வலி துவங்கியதும் அவருக்கு பதற்றம் அதிகமாகி , எங்கள் வீட்டுக்கும் அவர் வீட்டுக்குமாக அங்குமிங்கும் நடந்து கொண்டே இருப்பார் .

பிரசவ வலியில் கத்து பவர்களைக் காட்டிலும் , இவர் அதிகமாக கத்தி , புலம்பி அக்கம் பக்கத்துக்கு ஆட்களை எல்லாம் கலவரப் படுத்தி விடுவார்.. தந்தையாகப் போறவனை இழுத்து வைத்து அறை வார் உன்னால் தானே இந்த பெண் இவ்வளவு வேதனைப் படுகிறாள் என்பார் .
ஆனால் குழந்தை பிறந்து அழுகுரல் கேட்டதுதான் தாமதம் , தன் வயதை மறந்து வராந்தாவில் இருந்து தாவிக் குதித்து , பிரசவ அறைக்கு ஓடுவார். அவருடைய பதட்டத்தில் எங்கள் அப்பாவையும் இழுக்க கொண்டு அறைக்குள் நுழைய , அங்குள்ள பெண்கள் கூச்சப்படுவார்கள் . அவசரமாக பிரசவித்த பெண்மணியை பர்தாவுக்குள் நுழைப்பார்கள் .

பிரசவித்த தாயின் நாடியை பிடித்து பார்த்து விட்டு , குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து விட்டு குழநதையை அவரே குளிப்பாட்ட முயற்சிப்பார் . அம்மா அப்பாவையும் டாகடர் சாஹிப்பையும் ” ஆண்களுக்கு பிரசவ அறையில் என்ன வேலை” என்று திட்டி துரத்துவாள் .

இருவரும் பதில் சொல்லாமல் சிறுவர்களைப் போல் உற்சாகத்துடன் ஓடி வருவார்கள்
அப்பாவுக்கு பக்கவாதம் தாக்கி படுத்த படுக்கையானதும் , அப்பாவுக்கு வேறு மருத்துவர்கள் வந்து தான் சிகிச்சை செய்தார்கள் .ஆனால் டாகடர் சாஹேப் அந்த மருத்துவர்களையும் , செவிலியர்களையும் இது ஏன் செய்கிறீர்கள் ? மருந்து கொடுத்தீர்களா என்று கூடவே நின்று அவர்களை மேற்பார்வை பார்த்து கொண்டார். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அப்பா இறந்ததும் , அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் ..
குழந்தைகளின் பள்ளிகளுக்கு சென்று அவர்கள் படிப்பை பற்றி விசாரித்து அவர்களின் பள்ளி கட்டணத்தில் விலக்கு வாங்கி வருவது . வீட்டுத் திருமணத்திற்கு தேவையான நகைகளை கியான் சந்திடம் பேசி விலை குறைத்து வாங்கி வருவது என எங்கள் குடும்பத்தை தன் குடும்பமாகவே பாவித்து பொறுப்புகளை தானாகவே எடுத்துக் கொண்டு அலைந்தார்.

வீட்டில் இடப்பற்றாக்குறை அதனால் வீட்டின் மேற்கு புறத்தில் இரு அறைகள் கட்டலாம் என வீட்டில் அனைவரும் முடிவு செய்த போது டாகடர் சாஹேப் அது தேவையில்லை என்று சொன்னதால் அந்த திட்டமே கைவிடப் பட்டது .“இதற்கு பதிலாக வீட்டின் மேல் பகுதியில் ஏன் அறைகள் கட்டக் கூடாது என்று டாகடர் சாஹேப் கூறியதும் , மறு பேச்சு இல்லாமல் மாடியில் அறை கட்டினார்கள் .

விஞ்ஞானப் பாடம் எடுத்து படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான் ஃபஜ்ஜனை , டாக்டர் சாஹிப் தன்னுடைய ஷூவினால் விளாசி, அவனை வழிக்கு கொண்டு வந்தார் .

ஃபரீதா கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தபோது டாகடர் சாஹேப் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து வைத்தார். டாக்டரின் இளைய மருமகள் ஷீலாவால் எங்கள் வீட்டு பிரசவத்திற்கு வெளியில் செவிலியரைத் தேடும் சுமை குறைந்தது . பிரச வலி என்று தகவல் கிடைத்தவுடன் அவள் தன் மருத்துவ மனையில் இருந்து விரைந்து வந்து பிரசவம் பார்த்து விட்டு குழந்தைக்கு ஆறாம் நாள் குல்லாவும் , குர்த்தாவும் பரிசளிப்பாள்
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருந்தது . சப்பா சண்டை போட்டு வீட்டு வந்தவுடன் அவனை ஒரு விடுதலைப் போராட்ட வீரனைப்போல் நடத்தினர். எல்லோரும் ஆவலுடன் அவன் சண்டையை விவரிக்க சொல்லி அதை மிகப்பெரிய சாகச செயலாக கொண்டாடினர். ஆனால் அம்மா மட்டும் இது எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தாள் .அவள் ஆகஸ்ட் பதினைந்து கொண்டாட்டங்களை பார்த்து விட்டு மனம் வேதனையுடன் வந்து இருக்கிறாள் .

அன்று டாகடர் சாஹேப் வீட்டில் மூவர்ணக் கொடியும் , எங்கள் வீட்டில் முஸ்லீம் லீக் கொடியும் ஏற்றப் பட்டது .இந்த இருகோடிகளும் ஆக்ரோஷமாக பல மனங்களை உடைத்து இடைவெளி உருவாக்கி பல மைல் நீளத்திற்கு தெறித்து பிளந்து அகண்டு முடிவில்லாது விரிந்து கொண்டே சென்றன. அதன் முடிவற்ற பிளவுகளின் எல்லையில் நின்று , கண்ணீர் மல்க நடுங்கிக் கொண்டு நின்றாள் அம்மா .

எங்கிருந்து வருகிறார்கள் என்று யோசிக்கும் முன்பே கூட்டம் கூட்டமாக அகதிகள் வந்து நிறையத் துவங்கியது நகரம் . மூத்த மருமகளின் உறவினர்கள் பவல்பூரில் தங்கள் உடமைகளை இழந்து உயிர் பிழைத்து ஓடி வந்த போது , இந்த விரிசல்கள் ஆழமாகவும் , அகலமாகவும் விரிந்தது . அதன் பிறகு நிர்மலாவின் உறவினர்கள் இரத்தம் கொப்புளிக்க , வெட்டுக்காயங்களுடன் வந்து சேர்ந்த பொது அந்த இடைவெளிகள் இனி ஒருபோதும் இணைய முடியாத படி நச்சுப் பாம்புகளால் நிரப்ப பட்டன .

எங்கள் இளைய அண்ணி தன் மகனின் வயிற்று வலி அதிகரித்து துடித்த பொது , டாகடர் சாஹிப்பின் மருமகள் ஷீலா வர மறுத்து , தகவல் சொன்ன எங்கள் வீட்டு வேலைக்கார பையனை திட்டி துரத்தி விட்டாள் . இரு குடும்பமும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட சந்தோச கணங்கள் , துயர் மிகு நாட்கள் எல்லாவற்றிக்கும் அர்த்தமில்லாமல் , போய் பரஸ்பரம் பேசிக் கொள்வதும் நின்று போனது .

பர்ரே பாபி தன்னுடைய ஹிஸ்டீரியா வலிப்புக்களையும் மறந்து கிளம்புதற்கு ஆயத்தமானாள் .அம்மா தன் மவுனத்தைக் கலைத்து ,” நான் உங்களுடன் வரவில்லை , என் டிரங்கு பெட்டியை ஒருவரும் தொட வேண்டாம் . என்னால் அங்கே அந்த சிந்தி ஆட்களோடு போராட முடியாது . அவர்கள் புர்காவையும் , பைஜாமாவையும் தூக்கியெறிந்து அருவெறுப்பாக அலைகிறார்கள்” என்றாள் அனைவரும் அம்மாவின் மவுனம் இவ்வளவு சீற்றமாக கலையும் என்று எதிர்பார்க்காமல் வாயடைத்து போனார்கள் .
“அப்ப , டாக்காவில் இருக்கிற சின்ன மகனோடும் இவங்க போக மறுக்கிறார்களே ”

“ஐயோ , அங்க தலையை வெட்டி தின்னும் பெங்காலிகள் வெறும் கைகளால் சாதத்தை பிசைந்து விழுங்குவார்கள் இவங்க ஏன் அங்க போகணும் ?” ஸஞ்ஜ்லே பையாவின் மாமியார் முமானி பீபி குரோதம் நிறைந்த குரலில் கூறினாள் .

“அப்படின்னா ராவல்பிண்டிக்குப் போய் ஃபரீதாவோட தங்கலாமே?” என்றாள் காலா.

“அய்யயோ அங்க இருக்கிற பஞ்சாபிகள் நரகத்தில் வசிக்கிற பேய்கள் . அவர்களிடம் இருந்து நம்மை அல்லா தான் காப்பாற்ற வேண்டும் .”

அம்மாவின் மவுனம் உடைந்து வார்த்தைகள் வெள்ளமாய் பொங்கி வந்தது . அவள் அளவுக்கு மீறி ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாள் .

“ஐயோ , அத்தை நாம் என்னவோ ஜனங்களே இல்லாத பாலைவனப் பிரதசத்திற்கு குடி போவது போலவே பேசுகிறாயே ! யாரும் மகாராஜா உன்னை சேனைகளை அனுப்பி பல்லக்குல ஊர்வலமா கூட்டிப் போகப் போறாரா என்ன ? ”
என்றதும் , அனைவரும் சூழலை மறந்து சிரிக்க அம்மா முகம் வாடிப் போனாள் அதைக் கவனிக்காமல் அனைவரும் சிரித்துக் கொண்டே இருந்தனர்.

” சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொளகிறீர்கள் நிறுத்துங்கள் ” என்று நேஷனல் கார்ட்ஸின் தலைவன் சர்தார் அலி கத்தி எல்லோரையும் அடக்கினான் . .

“நீதான் மடத்தனமா பேசுறே. இங்கேயே தங்கி எங்களையும் யாராவது கொல்லணுமா ?”
“நீங்க எல்லோரும் போங்க. இந்த வயசுலே நான் எங்கேயம் வரல !’ என்றாள் அம்மா தீர்மானமாக
“கடைசியிலே இந்தக் காஃபிர்கள் கையாலேதான் நாங்க சாகணும்னு எழுதியிருக்கு போல !

தங்கம் வெள்ளி மட்டுமல்லாது , சந்தனம் , வெந்தியம் , ஆட்டுகால் எலும்பு தூள்கள் , முல்தானி மட்டி கட்டிகள் ,என்று பல பொருட்களையும் மூட்டைகளாக கட்டி தன் உடைமைகளை எண்ணி கொண்டு இருந்தாள் காலா பீ பீ .

பர்ரே பாய்க்கு கோபம் வந்து அந்த பொருட்களைத் தூர எறிய , பாகிஸ்தானில் தன் வாழ்வாதாரமே அந்தப் பொருட்கள் தான் என்பது போல பதறி கூச்சலிட்டு மீண்டும் அவற்றை தன் பொருட்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டாள் காலா பீ பீ .
குழந்தைகள் சிறுநீர் கழித்து பிய்ந்து போன பழைய மெத்தைகளின் பருத்து பஞ்சுகளையும் கூட மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டனர். கோணிகளில் பாத்திரங்கள் கட்டப் பட்டன .கட்டில்கள் பிரிக்கப்பட்டு கட்டைகளாக ஒன்று சேர்த்து கட்டினார்கள் . எங்கள் கண் முன்னே எங்கள் வீட்டை அழகாக நிறைத்து இருந்த அத்தனை பொருட்களும் , மூட்டைகளாகவும் ,பெட்டிகளாகவும் , வீடு முழுவதும் இறைந்து கிடந்தன. வீடு என்பது வெறுமையாகி விட்டிருந்தது . அங்கு கட்டி வைக்கப்பட்ட அத்தனை பொருட்களும் அந்தந்த உடமையாளர்களின் எண்ணங்களைப் போல கால் முளைத்து தாண்டவம் ஆடிக் கொண்டு இருந்தன. ஆனால் அம்மாவின் டிரங்கு பேட்டி மட்டும் அவளைப் போலவே இறுக்கமாக அமைதியாக அசைவில்லாமல் இருந்தது .

“இங்கேதான் சாகணும்னு நீ தீர்மானித்து இருந்தா, அதை யாரும் தடுக்க முடியாது” என்று பாய் சாஹிப் முடிவாகச் சொன்னார்.

என்னுடைய வெகுளியான அம்மா தன் அலைபாயும் கண்களால் வானத்தை வெறித்துப் பார்த்து, , “என்னை யாரால் கொல்ல முடியும்? எப்போது அது நடக்கும்?” என்றாள்.
“அம்மாவுக்கு மூளை பிசகிவிட்டது போல , . ” என்று பாய் சாஹிப் கிசுகிசுத்தார்.
“அந்த காஃபிர்கள் அப்பாவிகளை எப்படி சித்திரவதை செய்தார்கள் என்று இவளுக்கு என்ன தெரியும்?
நம் மக்கள் இருக்கும் நமக்கான சொந்த இடத்துக்கு நாம் போய் விட்டால் , அதுதான் நமக்கு பாதுகாப்பு இல்லையா ? அங்கு தான நாமும் நம் உடைமைகளும் பத்திரமாக இருக்க முடியும் !

அத்தனை அதிகமாகப் பேசாத அம்மாவிற்கு கூர்மையான நாவு இல்லாது போனது துரதிர்ஷ்டமே !அவளுக்கு பேச மட்டும் தெரிந்து இருந்தால் அவர்களைத் திருப்பி இப்படி கேட்டு இருப்பாள் .

“நம் சொந்த இடம் என்று சொல்லும் அந்த விசித்திர உலகின் பெயர் என்ன ? அது எங்கே இருக்கிறது ? இங்கு தானே நாம் பிறந்தோம் . உயிரும் உடலுமாக வளர்ந்தோம் .

நாம் பிறந்த நம் மண் இன்று அந்நிய பூமியாக போய்விட்டதா ? இதோ இன்று நீ வேறு இடத்திற்கு அடைக்கலம் போகிறாய் .. அங்கும் யாரவது வந்து உன்னை நாளை விரட்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? அங்கு யாரவது வந்து இங்கா நீ பிறந்தாய் ஓடு என்று விரட்டினால் என்ன செய்வீர்கள் ? பலமான காற்று வீசினால் அணைந்து போகும் விளக்கு போல பலகீனமாக இருக்கிறேன் நான் . எந்த நிமிடமும் எல்லாம் முடிந்து போகும் . அதன் பிறகு எனக்கான சொந்த இடத்தை தேடும் உங்கள் சிக்கலும் தீர்ந்து போகும் .ஒருத்தரின் சொந்த பூமி திடிரென அவர்களுக்கு அந்நியமாவதும் , சம்பந்தமே இலலாத ஏதோ ஒரு இடம் நமக்கு சொந்தமாவதும் அத்தனை ரசிக்க கூடிய விளையாட்டு அல்ல . ஒரு காலத்தில் முகலாயர்கள் காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறிவது போல் , தங்கள் சோந்த நாட்டை விட்டு அந்நிய தேசத்தை சொந்த பூமி என சொல்ல விழைந்தார்கள் என்னவானார்கள் ?

அம்மா அமைதியானாள் . அவள் முகம் அவள் வாழ்ந்து முடித்த காலங்களின் நினைவுகளை சுமந்து தாங்க இயலாமல் , களைத்து இருண்டு போய் இருந்தது . பல நூற்றாண்டுகளாக தனக்கான பூமியைத் தேடும் முயற்சியில் அலைந்து கலைத்தவள் போல காணப் பட்டாள்
நேரம் தன் வழியில் நகர்ந்து கொண்டே இருந்தது . எத்தனை சூறாவளியையும் தாண்டி நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் போல் அம்மாதன் நிலையில் உறுதியாக இருந்தாள் .

அவளுடைய மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் தங்கள் உடைமைகளுடன் வாசலில் போலீஸ் காவலுடன் இருக்கும் லாரியில் ஏறலானார்கள் . அதுவரை அசைவில்லாது இருந்த அவள் மனம் பட படத்தது . விரிந்த வெளியில் எல்லைகளைத் தாண்டி அவளின் பார்வை எதையோ தேடி அலைந்தது . பக்கத்து வீடு காற்றில் கலைந்து , மேகங்களுடன் கரைந்து காணாமல் போகத் துவங்கி இருந்தது .

ரூப்சந்த்ஜியின் வீட்டு வராந்தா வெறுமையாக இருந்தது . ஓரிரு முறை ஏதோ ஆவலுடன் வெளியில் வந்த குழந்தைகளை வலிமையான கரங்கள் அவசரமாக உள்ளே இழுத்துக் கொண்டன அம்மா கண்ணில் இருந்து அருவி போல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது .கண்ணீருக்கு இடையில் மூடிய கதவுகளுக்கு பின்னால் , திரைகளின் இடுக்குகளில் இருந்து கலக்கத்துடன் எட்டிப் பார்க்கும் குழந்தைங்களின் கண்ணீரை அவளால் உணர முடிந்தது

அம்மா மிகவும் கலவரமடைந்து இருந்தாள் . அந்த விசாலமான பெரிய முற்றத்தில் தனியாளாக , தான் நேசித்தவர்களையும் , தனக்காக ஆண்டவன் கொடுத்த அத்தனை ஐஸ்வர்யங்களையும் , இறைவனின் கருணையின் பாதங்களில் ஒப்படைத்து விட்டு , அனாதையாக , அவள் ஆட்சி செய்த வீட்டில் நின்றிருந்தாள் அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது . தனிமை .. அவளை அசச்சுறுத்தியது . அந்த சூழலின் ஏகாந்தம் , பல அமானுஷ்யங்கள் அவளை சூழ்ந்து தாக்க வருவதான உணர்வில் அவள் மிரண்டு போனாள் . எண்ணங்கள் வலையாக பின்னி அவள் மூளைக்குள் மொய்த்தது . அவளுக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது .அருகில் இருந்த தூணில் சாய்ந்து , நிற்க இயலாமல் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தாள்

மெல்ல எழுந்து ஆளில்லாத அந்த வீட்டை , இன்றுதான் புதிதாக பார்ப்பது போல் சுற்றி வந்தாள் . அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அவள் வாழ்வை அவளுக்கு திருப்பி சொன்னது . வீட்டின் முன்னறைக்கு வந்ததும் , நெஞ்சு வெடித்து விடும் போன்றதொரு அழுத்தம் பிறந்து , துக்கம் அவள் தொண்டையை அடைத்தது . இந்த அறையில் தான் அவளின் இல்லறம் துவங்கியது . இந்த அறைக்குள் முதன் முறையாக எந்த தவிப்புடன் , உள் நுழைந்தாளோ , அதே தவிப்புடன் இன்று அந்த காட்சியை நினைவு கூர்ந்தாள் .

அவள் வாழ்வின் இன்ப துன்பங்களில் இணைபிரியாது பங்கு கொள்வேன் என்று கூறிய அவளது கணவன் ,இந்த அறையில் போடப்பட்ட கட்டிலில் அமர வைத்து தான் அவள் முக்காட்டை விலக்கி , நிலவு போன்ற அழகிய முகத்தை தன் கரங்களில் தாக்கி ரசித்து பார்த்தான் . அவனை முழுவதுமாக நம்பி தன்னை அவனிடம் முழுமையாக அவள் ஒப்படைத்த அறை இதுதான்
இதோ இந்த அறைக்கு பக்கத்தில் உள்ள அறையில் தான் அவளது தலைப்பிரசவம் நடந்தது . அதோ அந்த மூலையில்தான் அந்த மூத்த மகளின் தொப்புள் கொடி புதைக்கப் பட்டது .முதன் முதலாக தாய்மையை உணரச் செய்த மகளை கையில் ஏந்தி உச்சி முகர்ந்து இந்த அறையில்தான் . ஏறக்குறைய அவளது எல்லா குழந்தைகளையும் இந்த அறையில் தான் பிரசவித்தாள் அவளது எல்லா குழந்தைகளின் தொப்புள் கொடியும் இந்த அறையின் மூலைகளில் தான் புதைக்க பட்டு இருக்கின்றன . தன் அந்திம காலத்தில் ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த அறையில் தான் பத்து குழந்தைகளை , பத்து மனித உயிர்களை இந்த அறையில்தான் பெற்று எடுத்தாள் .

இன்று அந்த நினைவுகள் மட்டுமே சொந்தமாக , யாரும் இல்லாத தனிமரமாக பெற்றெடுத்த அந்த புனித கருப்பையின் வெறுமையுடன் நிற்கிறாள்
பாம்பு தன் தோலை எளிதாக உரித்து விட்டு , அகன்று சென்று விடுவதைப் போல இவளது குழந்தைகள் இவளை விட்டு , அமைதியும் , நிம்மதியுமான வாழ்வைத் தேடி சென்று விட்டார்கள்
அந்த வீட்டின் திசையெங்கும் குழந்தைகளின் குரல்கள் ஒலிப்பது போன்ற பிரமையை , உண்மை என நினைத்து அங்குமிங்கும் ,திரும்பி அலைபாய்கிறாள். புதிதாக திருமணம் ஆகி வரும் பெண்கள் எல்லோரும் அம்மாவின் மடியை வணங்கி, பத்து பிள்ளைகள் பெற்ற தங்க மடி இது , எங்களை ஆசிர்வதியுங்கள் என்று ஆசி வாங்கி செல்வதுண்டு .அம்மாவின் மடி அதிர்ஷ்டம் பொங்கி வரும் மடி என்றும் , அதனை வணங்குவதால் நல்ல படியாக பிள்ளை பேறு நடைபெறும் என்றும் பெண்கள் நம்பினார்கள் இன்று அவள் பிள்ளை பெற்று மகிழ்ந்த அறையைப் போலவே அவளது கருப்பையும் வெறுமையால் நிறைந்து இருந்தது .
மனம் கனத்து வேதனை சுமை கூடியதால் , நடக்க இயலாமல் கால் தடுமாற அடுத்த அறைக்குள் நுழைகிறாள். இந்த அறை அன்று தந்த வேதனையை இன்றும் அவளால் உணர முடிந்தது . ஐம்பது ஆண்டு காலம் அவள் வாழ்வில் நிறைவாக பெங்கெடுத்த அவளின் வாழ்க்கைத் துணை தன் இறுதி மூச்சை விட்டது இந்த அறையில் தான் . இதோ இப்பொழுதும் அவளால் பார்க்க முடிகிறது . இதோ அந்த அறையின் ,கதவுக்கு பக்கத்தில் தான் , அவரின் சவத்தை கொடித்துணி போர்த்தி மூடி வைத்து கிடத்தி இருந்தார்கள் . அத்தனை சொந்தமும் , பிள்ளைகளும் , உற்றார் உறவினரும் அவரைச் சுற்றி அழுது கொண்டு இருந்தார்கள் . அழுவதற்கு மனிதர்களை சுற்றி இருக்கும் போதே இறப்பது கொடுப்பினைதான்

அவர் என்னமோ மிக அதிர்ஷ்ட சாலிதான் . என்னைப் போல் இல்லை . நான் இன்று உயிரோடு இருக்கும் போதே பிணமாக , யாரும் அருகில் இல்லாமல் அலைகிறேனே , இந்த அவல வாழ்வு அனுபவிக்காமல் அவர் விரைந்து சென்றது நல்லது தான் என்று அவளுக்குத் தோன்றியது .. அவள் கால்கள் நடக்க இயலாமல் துவண்டன . கணவரை இறுதியாக படுக்க வைத்து இருந்த இடத்தில் தலைப்பகுதியில் சென்று சரிந்து விழுந்தாள் . கணவர் இறந்த தினத்தில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக அவரின் நினைவாக தினமும் விளக்கேற்றி வழிபடும் இடம் அது . வீட்டின் அத்தனை பொருட்களையும் எடுத்து சென்றவர்கள் தேவையில்லை என்று விட்டுப் போயிருந்த பொருள் அது .விளக்கில் எண்ணெய் தீர்ந்து போய் , திரி எரிந்து கருகி வீட்டிருந்தது .

ரூப்சந்த்ஜி பித்து பிடித்தவர் போல அவர் வீட்டு முற்றத்தில் நிலை கொள்ளாது நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு உலக நினைத்தாலே வெறுப்பாக இருந்தது . இந்த அரசாங்கம் , அரசியல் , அவளது மனைவி , குடும்பத்தினர் , அவர் வசிக்கும் தெரு , சாலைகள் ,கத்திகள் , என எல்லாவற்றையும் சபித்து திட்டிக் கொண்டு இருந்தார்.
அவரின் சாபம் பலித்து விடும் என இந்த உலகு பயந்து அவர் முன் மண்டியிட்டு , மன்னிப்பு கோருவதாக கற்பனை செய்து கொண்டார் . இத்தனை ஆண்டுகாலமும் ஒன்றாக கூடி வாழ்ந்த பக்கத்து வீட்டின் வெறுமை அவரை மிகவும் கலங்கடித்தது .

தானே பார்த்து ரசித்து கட்டிய வீட்டை , தானே சுக்கு நூறாக சம்மட்டி எடுத்து உடைத்து போன்றதொரு வேதனையில் துடித்தார். அந்த வீடு இருக்கும் திசையை பார்க்கவே அஞ்சினார். அந்தக் குடும்பத்துக்கும் தனக்குமான பந்தம் நிலத்தின் ஆழம் வரை ஊடுருவிச் சென்ற வேர்களைபோல , நினைவுகளாய் பின்னி பிணைந்து உயிர்வரை இணைந்திருப்பதை எப்படி வேரறுப்பது ? அந்த நிணவுகளை மறக்க வேண்டும் என்று நினைத்தாலே , தன்னைத்தானே , வெட்டிக்கொண்டு , ரத்த நாளங்களை சிதைத்து கொண்டு , வீழ்வதைப் போல ஒரு வேதனை அவரைத் துடிக்கச் செய்தது .

அவரால் பக்கத்து வீட்டின் , கனத்த மவுனத்தை தங்க முடியாது இருந்தது . மனம் என்னவோ , போல பித்தனைபோல் உளறச் செய்தது . சட்டென்று அமைதியானார் என்னவோ யோசித்தார் . தனது காரில் ஏறி சென்று விட்டார்.
ஊர் மொத்தமும் இரவின் இருண்மைக்குள் தன்னை இருத்திக் கொண்டு மவுனமான பின் , பக்கத்து வீட்டின் பின் கதவின் வழியாக , தன இரு கைகளிலும் உணவை ஏந்திக் கொண்டு ரூப்சந்த்ஜியின் மனைவி வீட்டினுள் பிரவேசித்தாள் . எதுவும் பேசாமல் அம்மாவின் எதிரில் அமைதியாக அமர்ந்து இருந்தாள் .இரு கிழவிகளும் , நீண்ட நேரம் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தனர்.

ஆனால் இருவரின் மனமும் ஓராயிரம் விசயங்களை உள்ளுக்குள் பேசிக் கொண்டு இருந்தன. அவர்கள் பார்வையில் மொழி பரிமாற்றம் மவுனமாக நடந்தது . இந்த இருவரும் முன்பு பேசிக் கொள்ளும் பொது , அந்த சூழல் கிடு கிடுக்கும் . இன்று உணர்ச்சி வசப்பட்டு வாயடைத்து போய் இருவரும் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்குள் இருந்த பந்தத்தின் நெகிழ்வு அவர்கள் வாய்க்கு பூட்டு போட்டு மனதை திறந்து விட்டிருந்தது .
அத்தனை பெரிய வீடு . முழுவதும் மனிதர்களால் நிறைந்து இருந்த வீடு , இன்று மவுனமாக சப்தமின்றி இருந்தது . அனைவரும் அவளை விட்டு போய் விட்டாலும் , குழைந்தைகளுடன் செல்லும் அவர்களுக்கு ஒன்றும் அசம்பாவிதம் நடக்காமல் , அவர்கள் விரும்பிய இடம் சென்று சேரவேண்டுமே என்று கவலைப் பட்டாள் .

நாடு இருக்கும் பதட்டமான சூழலில் , எல்லா இடங்களிலும் ஆட்களை கொன்று குவித்து , ஊரே ரத்த களறியாக இருக்கிறதே , ரயில் வண்டிகளில் மனிதர்களாக பயணத்திற்கு ஏறியவர்கள் பிணங்களாக குவித்து இறக்கப் படுகிறார்கள் என்று செய்திகள் வருகிறதே என்றெல்லாம் பல சிந்தனைகள் , கவலைகள் அவளை அலைக்கழித்தன . அவளால் இரவு முழுவதும் தூங்க இயலாமல் , இருட்டில் , விழித்தபடி இருளுக்குள் தன்னை ஒளித்து கொண்டு படுத்து இருந்தாள் .
கடந்த ஐம்பது ஆண்டுகளாக , அவள் அக்கறையுடன் தன் உயிரை விட்டு இரத்தத்தால் வளர்த்த பயிர்கள் இன்று , வேறு நிலத்தில் தான் செழிப்பாக வளர இயலும் என்று சென்று விட்டன. சொந்த நிலத்தை மறுத்து புதிய நிலம் சென்ற பயிர்களின் குருத்து , கருகி விடாமல் , செழித்து வளருமா என்ற கவலை அவளுக்கு ள் உழன்று கொண்டே இருந்தது .

பாவம் இளைய மருமகள் , நிறைமாத கர்ப்பிணி . அவளை அல்லாஹ் ரட்சிக்கட்டும் . அவளுக்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் . அவர்கள் செல்லும் வழியில் எந்த பால்வெளியில் , அந்தக் குழந்தை பிறக்க போகிறதோ யாருக்குத் தெரியும் .? இது என் தேசம் அல்ல என்று , அந்நிய தேசத்தை நம்பி சென்று இருக்கிறார்கள் . ஏற்கெனவே அந்த மண்ணில் வசித்துக் கொண்டு இருக்கும் , நயவஞ்சக கழுகுகள் இவர்களை நிம்மதியாக வாழ விட்டு விடுமா ? இல்லை , மீண்டும் இவர்கள் சொந்த மண்ணை தேடி வந்து விடுவார்களா ?

அப்படி ஒருவேளை திரும்பி வந்தால் … இங்கிருந்து பிய்த்து கொண்டு சென்ற வேர்கள் , மீண்டும் இம்மண்ணில் தழைக்குமா ?அப்படி ஒரு வேளை அவர்களுக்கு மகிழ்வான தருணங்கள் மீண்டும் இம்மண்ணில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் எனில் , அன்று என் மக்கிப் போன எலும்புகள் சாட்சியாக நிற்குமா ?அவள் தனக்குள்ளேயே எதை எதையோ பிதற்றிக் கொண்டு , அந்த வீட்டின் , சுவர்கள் , கதவுகள் , ஜன்னல்கள் எல்லாவற்றையும் , ஒரு தாயின் வாஞ்சையுடன் , தடவிக் கொடுத்த வண்ணம் வீட்டை சுற்றி சுற்றி வந்தாள். .

அவளது மனக்கலவரத்தில் , இளைய மருமகளையும் , மக்களையும் கலகக்காரர்கள் நிர்வாணமாக்கி ரோட்டில் ஓடவிட்டு வெட்டுவது போலவும் , குழந்தைகளை கதற கதற துண்டு துண்டாக வெட்டி எறிவதை போலவும் காட்சிகள் வந்து அவளின் தனிமையை மேலும் கொடூரமாக சிதைத்தது .

களைப்பில் அவள் மயங்கி கண்ணசர நேர்ந்தால் , தெருவில் கேட்கும் , கூச்சல்களும் , அலறல்களும் , அவளை குலுக்கி எழுப்பி மேலும் அச்சுறுத்தின .அவளைப் பற்றிய கவலைகள் அவளுக்கு கொஞ்சம் கூட இல்லை , ஆனால் கொடும் ராட்சசர்களாக வெறிபிடித்தலையும் மனிதர்கள் கையால் வரும் மரணத்தை விட , இயற்கையான சாவு சிறிது மென்மையாகத்தான் இருக்கும் போலும் .அணையும் விளக்கு படபடத்து அணைவதை போல அவள் பட படத்து கொண்டு இருந்தாள் .
நாட்டில் கலவரக்காரர்கள் கிழவிகள் என்று கூட பாராமல் , அவர்களது தோல் தேய்ந்து , இரத்தமும் சதையுமாக எலும்புகள் துருத்தி தொங்கும் அளவுக்கு இருந்தாலும் , இரக்கமின்றி தெருவில் இழுத்து செல்வதாக யாரோ கூறினார்கள் . நரகத்தை விட பல மடங்கு கொடுமைகள் இன்று நாட்டில் எல்லா பகுதியிலும் நடந்து கொண்டு இருப்பாதாக பேசிக் கொள்கிறார்கள்

வீட்டு வாயிலில் யாரோ நின்று கொண்டு முரட்டுத் தனமாக கதவை தட்டும் சப்தம் கேட்கிறது . தூரத்தில் இருந்து யாரோ குரல் கொடுத்து அழைப்பது கனவில் கேட்பது போல் தெளிவில்லாமல் கேட்கிறது . ஒருவேளை மூத்தமகன் திரும்பி வந்து விட்டானோ ? இல்லையே .. இது இளைய மகனின் குரல் போல இருக்கிறதே .. அச்சத்தில் அவளுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டது போல் சிந்தனைகள் தறிகெட்டு அலைகின்றன. மரணத்தின் தூதுவன் அவளை சந்திக்க ஆவேசமாக வருகிறான் போலும் . அவன் மிகவும் அவசரத்தில் இருப்பதாக அவளுக்கு தோன்றுகிறது .தெளிவில்லாத காட்சிகள் மாறுகின்றன. இதோ .. எல்லோரும் புதிய இடத்தில் நின்று கொண்டு அவளை திரும்பி பார்க்கிறார்களே ….இளைய மகன் தன் மனைவி குழைந்தைகளோடு பேசிக் கொண்டு இருக்கும் காட்சி தெளிவாக தெரிகிறதே … கலங்கிய மனதில் சிறிது நிம்மதி உருவாகிறது . திடீரென்று வீடு வெளிச்சத்தால் நிறைந்து , மீண்டும் எல்லோரும் அவள் அருகில் வந்து நிற்கிறார்கள் . குழந்தைகள் அவளை கூடி நின்று அவளைக் கட்டிக்கொள்கின்றன. களை இழந்து வெறுமையில் நிறைந்திருந்த வீடு மீண்டும் களை கட்டியது . கலகலப்பாக குழந்தைகளும் மகன்களும் மருமகள்களும் அந்த வீட்டை நிறைத்து இருந்தனர் .

அவளது அச்சம் மறைந்து மனதில் நிம்மதி பிறந்தது . இனி கவலையில்லை என்று மனம் சொன்னது . அவள் நிம்மதியாக கண்ணைத் திறந்து பார்த்தாள் . அவளுக்கு மிகவும் பரிச்சயமான கரம் ஒன்று அவள் நாடியை பரிசோதித்துக் கொண்டு இருந்தது “மன்னிக்கணும் பாபி . உனக்கு என்னை பார்க்கணும்னு தோணினா கூப்பிட்டால் நான் வருவேன்ல . அதற்காக ஏன் மயங்கி விழுவது போல் நடிக்கிறாய் ? “என்று ரூப்சந்த்ஜி கலகலவென்று சிரித்தபடி அவளிடம் பேசினார்.

” இந்த முறை நீ பீஸ் எனக்கு கொடுத்தே ஆகவேண்டும் . உன் உதவாக்கரை பிள்ளைகளை லோனி ஜங்க்சனில் இருந்து , மிரட்டி திரும்ப அழைத்து வந்து இருக்கிறேன் . முட்டாள்கள் . இவங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மேல் கூட நம்பிக்கை இல்லை .

அந்த பெண்மணியின் கிழட்டு முகத்தில் மகிழ்ச்சி , பரவியது . பரவசத்தில் , உணர்ச்சி மேலீட்டில் கண்கள் கசிந்தன. ரூப்சந்த்ஜி அவளை அன்பாக பார்த்து மெல்ல சிரித்தார்.அவளால் பேச இயலாமல் , அவர் கைகளை பிடித்துக் கொண்டு புன்னகைத்தாள் . அவர் கிழட்டு கரங்களில் சூடான அவள் கண்ணீர் துளிகள் சிதறின
.

•••••••••

.

. .

காஞ்சனா அம்லானி / அவர்கள் நம் அயல் மனிதர்கள் 09 / எம்.ரிஷான் ஷெரீப்

காஞ்சனா அம்லானி

காஞ்சனா அம்லானி

பத்திக் கட்டுரைத் தொடர்

காதலும் அன்பும் நேசமும் அனைத்து உயிர்களுக்குமே பொதுவானது. அந்த உணர்வுதான் ஒவ்வொன்றையுமே இவ்வுலகில் ஜீவிக்கச் செய்கிறது. வாழ்க்கை மீது பேராவல் கொள்ளச் செய்கிறது. தினமும் வாழ நேரும் புதுப்புது மாற்றங்களுடனான வாழ்வில், சக உயிரிடமிருந்து மாறாத அன்பைப் பெறுவது ஒரு பாக்கியமன்றி வேறென்ன?

சகல வசதிகளும் காலடியில் கிட்டக்கூடிய இக் காலத்தைப் போலவன்றி, அக் காலத்தில் தொலைதூரம் சென்ற தம் அன்புக்குரியவர்களுக்கு கடிதம் எழுதியனுப்பி விட்டு, அதற்கு பதில் கிடைக்க மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுதும் கூட அந்த அன்பைக் குறித்து சிலாகித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அவர்களை அவ்வாறு காத்திருக்கச் செய்ததுவும் ஒரு ஆத்மார்த்தமான அன்புதான் இல்லையா?

தாய் – சேய் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான அன்பு போலவே யார், எவரென்றே அறியாது ஏதோவொரு சந்திப்பின் போது அல்லது சடுதியாகக் கிடைத்த தொடர்பொன்றின் மூலம் இருவருக்கிடையில் தோன்றக்கூடிய உறுதியான அன்பும் கூட போற்றத்தக்கதுதான். சமகாலத்தில் உண்மையான அன்புக்கெல்லாம் சாத்தியமில்லை என நேசத்தில் தோற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். உண்மையான அன்பு எங்கும் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பாதுகாக்கத் தேவையான விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும், பூரண நம்பிக்கையும்தான் அரிதாகிக் கொண்டு வருகிறது.

காதலையும், நேசத்தையும், அன்பையும் தடுப்பது நியாயமற்றது. அது ஒரு காட்டாறு. அதன் போக்கிலேயே பாய விடுவதன் மூலமே அது செல்லும் பாதையெல்லாம் வாடிய பயிர்களைத் துளிர்க்கச் செய்யும். கட்டுப்படுத்துவதன் மூலமோ, நிபந்தனைகளை விதிப்பதன் மூலமோ அதனை அடக்கிவிட முடியாது. எல்லாவற்றையும் மீறி அது பாய்ந்து கொண்டேயிருக்கும்.

எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து

தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று

என்னிடத்தில்

தென்படாத வர்ணக் கறையைப் போல

மிகப் பெரிதாகவும்

கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும்

இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய

நானறியாத ஏதோவொன்று

என்னிடம்

இந்தளவு தனிமை

எங்கிருந்துதான் உதித்ததோ

எனக்குள்ளே மூழ்கிப் போயிருந்த ஒன்று

எப்படி உனக்குரியதாயிற்றோ

எனது இதயத்தின்

எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்

இந்தளவு துயர் தந்து போக?

***

உறவைப் பிரிந்து விலகிச் செல்பவர், தனக்குரியவற்றையெல்லாம் எடுத்துச் சென்ற போதிலும், அவர் ஏதோவொன்றைத் தவறுதலாக விட்டுச் செல்வதாகத் தோன்றுகிறது. அது நேசித்த மனதை மிகவும் பாரமாக அழுத்துகிறது. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் துரத்துகிறது. இவ்வளவு துயரத்தையும், தனிமையையும் மீதமாகத் தந்து விட்டுப் போகும் அளவிற்கு, இத்தனை காலமாக எனது இதயத்தின் எந்த இடத்தில் நீ ஒளித்துக் கொண்டிருந்தாய் எனக் கேட்கச் செய்கிறது அன்பு.

இந்தக் கவிதையை எழுதியிருக்கும் கவிதாயினி காஞ்சனா அம்லானி இலங்கையில் பத்திரிகைத் துறையில் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருபவர். சிங்கள மொழியில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். இவரது புதிய கவிதைத் தொகுப்பான ‘உனதிரு விழிகளும் பூமராங்குகள்’ இம் மாதம் ஏழாம் திகதி சிறப்பாக வெளியிடப்பட்டது.

இரு ஜீவிதங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆரம்பிக்கும் காதல், திருமணம் ஆகிய உறவுகளில் அன்பின் நெருக்கம், அப் பந்தங்களை இன்னுமின்னும் நெருங்கச் செய்கிறது. அப் பிணைப்புக்களில் ஏற்படும் பிரிவும், விலகலும் அந்த உள்ளங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. கவிதாயினி காஞ்சனா அம்லானியின் இக் கவிதையும் கூட, இதயத்தில் ஆழமான வலியை மீதமாகத் தந்து விட்டுப் போன காதலொன்றைக் குறித்தே அமைந்திருக்கிறது. காதலும், நேசமும், அன்பும் அனைவருக்குமே பொதுவானது. அதன் பிரிவு தரும் வலியும் அவ்வாறுதான்.

– எம். ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

வானம்பாடி இளமுருகு / சென்னிமலைதண்டபாணி

இளமுருகு

இளமுருகு

மப்பும் மந்தாரமுமாக இருந்த கவிதை வானில் பேரிடி இடித்துப் பெருமழை பெய்த காலம் வானம்பாடிக் கவிதைக் காலம்தான்.. நமுத்துப் போன சிந்தனைகளைச் சலித்துப் போன சொற்களில் சிலர் எழுதிக் கொண்டிருந்தபோது மகாகவி பாரதி, புரட்சிக்கவிஞர் வழியில் பயணித்த வானம்பாடி புதிய திசைகளைக் கவியுலகில் அறிமுகப்படுத்திவைத்தது. மானுட எழுச்சியைப் பாடிப் பறந்த அந்தப் பறவைக்கு “வானம்பாடி” என்று பெயர் சூட்டிய பெருமகனார் நம் கவிஞர் இளமுருகு அவர்கள். அதற்கு “மானுடம் பாடும்” என்று சிறகு சேர்த்தவர் கவிஞர் சிற்பி. வானம்பாடிக்கு முன்னோடி இதழாக மரபுக் கவிதைகளைச் சுமந்து கொண்டு தேனீ பறந்தது.

அதைப் பறக்கவிட்டவர்கள் நம் கவிஞர்கள் இளமுருகு அவர்களும் புவியரசு அவர்களும். வானம்பாடி என்று பெயர் வைத்தபின்னால் நடந்த இரண்டாவது கூட்டம் கோவை என்.டி.சி. கல்வியகத்தில் நடந்தபோது புவியரசு, சிற்பி, இளமுருகு, முல்லை ஆதவன்,அக்கினிபுத்திரன்,மேத்தா, ஜன.சுந்தரம், ஞானி,சி.ஆர்.ரவீந்திரன்,நித்திலன்,சிதம்பரநாதன், சக்திக்கனல், தேனரசன், கங்கைகொண்டான், சி.வேங்கடசாமி, ஆதி ஆகியோர் கலந்துகொள்ள அந்தக் கூட்டத்தில் கவிஞர் இளமுருகு, மலையாளக் கவிஞர் வயலாரின்

”பூந்தேனருவி பூந்தேனருவி
பொன்னிற நதியின் தங்கையே
நமக்கொரே மோகம்
நமக்கொரே தாகம்
நமக்கொரே பிராயம்”
என்ற பாடலைப் பாடுகிறார். இதுவே வானம்பாடி இயக்கத்தின் இலட்சியப் பாடலாக இருந்தது என்கிறார் கவிஞர்.

எப்படி வானம்பாடி இயக்கம் உருப்பெற்றது? கவிதைகளை எவரும் அரங்கேற்றலாம். விமர்சனம் செய்யலாம். அதனால் புதிய புதிய கவிஞர்கள் புறப்பட்டு வந்தார்கள். எவருடைய கருத்துக்கும் தடையில்லை. எனவேதான் மக்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் வானம்பாடி நிலைத்து நின்றது. முல்லை ஆதவனும், அக்கினிபுத்திரனும் புதுக்கவிதைக்கான களம்காணக் கிளைஅசைத்த போது வானம்பாடி வந்தமர்ந்து பாடியது. இது ஒரு சுருக்க வரலாறு. இந்த வரலாற்றின் பக்கங்கள் தோறும் பாடி நடந்தவர் இளமுருகு.

இன்றைக்கு வரையிலும் வானம்பாடிகளைக் குறித்து நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. என்ன காரணம்? அவர்கள் பெற்ற வெற்றிதான். வேறென்ன? மிகச்சிறந்த கவிஞர்களை,அறிஞர் ஞானி போன்ற தேர்ந்த திறனாய்வாளர்களை, சி.ஆர்.ரவீந்தரின், நண்பர் சூர்யகாந்தன் போன்ற மிகச்சிறந்த கதையாளர்களை வானம்பாடித் தமிழுக்குத் தந்திருக்கிறது என்பதுதான்.

அன்றைய காலகட்டக் கவிதை எப்படி இருந்தது?கலாநிதி கைலாசபதி மிக அழகாகச் சொல்வார்

“புதுக்கவிதைகள் வெளிவந்த தாசப்தத்திலே, அவற்றில் தன்னுணர்ச்சிப் பண்பு குறைாகவே காணப்பட்டது. அதீத நம்பிக்கை வறட்சி, அந்நியமயப்பாடு, பாலியற்பிறழ்ச்சி, மனோவிகாரம், போலி மேதாவித்தன்மை முதலியவற்றால் உந்தப்பெற்று, மேனாட்டு நாகரிகப் பேதலிப்பில் பிறந்த “ஒலிமுறிவுக் கவிதைகளை”க் கண்மூடித்தனமாக நகல் செய்யப்பட்டது.

ஆயினும் புதிய தலைமுறை, வானம்பாடி,தாமரை, செம்மலர் முதலிய சிற்றேடுகள் புதுக்கவிதைகளை நெறிப்படுத்தத் தொடங்கிய பின் தத்துவ வீச்சும், தமிழ்த்திறனும்,தனித்துவமும், பொருள்தெளிவும், கருதது அழுத்தமும் வாய்க்கப்பெற்ற புதுக்கவிதைகள் பல தோன்றியுள்ளன. நா.காமராசன் முதல் சி.ஆர்.ரவீந்திரன் வரை புதுக்கவிதை வளர்ச்சி இன்று இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. மானுடத்தின் குரலே தன்னுணர்ச்சிப் பாடலாக ஒலிக்கிறது என்பதில் ஐயமில்லை.” (கவிதைநயம்பக் 71). என்றார். அதுமட்டுமல்ல

ஓசைநயம் முற்றிலும் புறக்கணிக்கப்படுமாயின், வசன கவிதை எனப்படும் வெற்றுச் சொற்கூட்டம் கிடைக்கும். ஓசைநயத்தை அளவுமீறிப் பிரதானப் படுத்தினால், தெளிவு குன்றிய சலங்கை நாதம் பெறப்படும். ஓசை வறுமையுடைய வசனக் கவிதைகள் போலவே,கருத்துத் தெளிவில்லாத கிண்கிணிச் சிலம்பல் ஒலி்ப்பாட்டுகளும் தரம் குறைந்தவையே. இவற்றைப் பாகுபடுத்திக் காணப் பழகுவது சிறந்த விமர்சனப் பயிற்சியாகும்” (பக் 133) என்று சொல்லிவிட்டு

‘நாட்டுப்பாடல்களுக்குள்ள மரபாற்றலையும் வெகுஜனப் பண்பையும் உணர முற்பட்டதாலேயே யாப்பிலாக் கவிதை எழுத ஆரம்பித்த புதுக்கவிதையாளர்கள் கூட நாளடைவில் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து உயிர்ச்சத்துப் பெற விரும்பினர்.

நாட்டுப்பாடல்களில், பேச்சு வழக்கில் உள்ள வசனநடை வடிகட்டப்பட்டு இயல்பாக அதே நேரத்தில் சொற்களுக்குள்ளே உள்ள ஒலிநயச் சேர்க்கை குன்றாத அளவுக்கு நாட்டுப்புறக் கவிதைகளாக உதடுகளில் வாழ்கின்றன. இதனால்தான் நா.காமராசன். சிற்பி, இன்குலாப், செந்தமிழ்மாறன். புவியரசு போன்ற புதுக்கவிஞர்கள் நாட்டுப்புறக் கவிதைகளை(பாடல்களை)ப் பின்பற்றி எழுதுகின்றனர்(பக் 177) இவ்வுணர்வு பரவலாகச் செயற்பட்டால் தற்காலக் கவிதை ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்று துணிந்து கூறலாம்(பக் 177). என்கிறார்.

பல ஆண்டுகளுக்குமுன் நான் ஒரு கவிதைப்பிரதியைப் படித்தேன். பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் எழுதிய கவியரங்கக் கவிதை. அற்புதமான மரபுக் கவிதை. விருத்தத்திலும் சிந்திலும் விளையாடியிருந்தார். இந்தி எதிர்ப்பின்போது கொந்தளித்த அவர் மனஉணர்வுகள் அந்தக் கவிதைக்குள் கொதித்துக் கிடந்தன. அதைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரே மறந்துபோன அந்தக் கவிதையை ஒளிநகல் எடுத்து அவருக்கு அனுப்பியிருந்தேன். அது ஒர் இனிய தருணம். அவர்தான் வானம்பாடிக் கவிதை இயக்கத்துக்கு விதைபோட்ட கவிஞர் முல்லை.

ஆதவன் அவர்கள்.. சில காலம் என் வாசலுக்கு வரவில்லை.அப்போது அதைப் பறக்கவைத்தவர் அண்ணன் சிற்பி அவர்கள்.. உடனே கடிதம் எழுதினேன். உடனடியாகச் சில நாள்களில் உள்நாட்டு அஞ்சலில் பதில் பறந்து வந்தது. வானம்பாடி அமர்ந்து அமர்ந்து பறந்து வருகிறது. எல்லாம் என் தோள்களில் நானாகப் போட்டுக்கொண்டது.என்று எழுதியிருந்தார் அண்ணன் சிற்பி அவர்கள்.. வெள்ளிக்கிழமை எங்களூர்ச்சந்தையில் புத்தகங்களை விரித்து வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள்.

அங்கே வாங்கினேன். அண்ணன் புவியரசு அவர்களின் முதல் சிறிய நூலை. இப்படித்தான் வானம்பாடிக் கவிஞர்களின் தொடர்பு எனக்கு நீண்டகால உறவானது. அதனால்தான் அவர்களின் தோள்களில் நின்று என்னால் எழுத முடிகிறது. இந்த நேரத்தில் பின்னாளில் சுதந்திரம் என்ற தலைப்பில் எழுதிய அண்ணன் அக்கினிப்புத்திரன் அவர்கள் எழுப்பிய கலகக் குரல் நமுத்துப்போன கவிஞர்களை எல்லாம் நடுங்க வைத்தது..நமக்குச் சுதந்திரம் கிடைத்து என்ன பயன்? வாக்குச்சீட்டுப் போடுவதுதான் கண்டபலன். யாருக்காக? யாருக்கோ ஒருவருக்காக. நம்மை ஆட்டிப் படைப்பவனுக்காக. நமக்குச் சுதந்திரம் உண்டா? உண்மையில் இல்லை. இதை

“கூண்டு திறந்தது
சிறகு விரிக்கவா
ம்..ம்..ம்
சீட்டெடுக்க”
என்கிறார்.

கிளி என்ற புறப்பொருளைக்கூடக் குறிக்கவில்லை. ஆனால் கிளி என்று குறிக்கப்படுவது நாம்தான் என்பது தெளிவாகிவிடுகிறது. உலகெங்கும் சுதந்திரம் கிட்டியும் மேடேறாத மனிதர்களின் நிலையைச் சுருக்கமாகச் செறிவாகச் சொல்லிவிடுகிறார். இப்படித்தான் வானம்பாடிக் கவிஞர்கள் செம்மாந்த சிந்தனைகளை முன்னெடுத்தார்கள். மூடுமந்திர முணுமுணுப்புகள் இல்லை. வெடிப்புறப் பாடினார்கள்.

கைலாசபதியின் கருத்துக்களின் வழியே வானம்பாடிக் கவிதைகளைப் பார்த்தால், அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளைப் பாடுபொருளாக்கினார்கள். ஓசைநயத்தை முற்றாக ஒதுக்கவில்லை. வெறும் உரைநடையைக் கவிதையாக்க முயற்சிக்கவில்லை. உலகப்பார்வை அவர்களுக்கு இருந்தது. உள்ளூர்ப்பிரச்சனைகளும் அவர்கள் கவிதையாக்கினார்கள்.

பல புதிய சோதனை முயற்சிகளைச் செய்தார்கள் கவிதையை நாட்டுப்புறப்பாடல் வடிவில் வானம்பாடிகள் மிகச்சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதற்கு கவிஞர் அண்ணன் சிதம்பரநாதன், எளிய நாடோடி மக்களின் வலிமிகுந்த வாழ்க்கையைக் கண்முன்னே காட்சிப்படுத்துகிற கவிதையே சாட்சி.

“கோழிக் குழம்பா வச்சா குறத்தி
குறவனையும் புடிச்சாங்க தொரத்தி
டேசனிலே கொண்டுபோயி அடைச்சு
கேசு போட்டு மாட்டுனாங்க அடிச்சு
கோர்ட்டுள கொண்டுவந்து நிறுத்தி
குத்தத்தைச் சாட்டுனாங்க வருத்தி
புள்ளத்தாச்சிக் காரியவ சொன்னா
புருஷன்மேலே சத்திய மின்னா
எங்களுக்குத் தெரியாது எசமா
கோழி திருடவில்லை நெசமா
காளான் குழம்பு வச்சா வாசம்
கோழிக் குழம்பாட்டம் வீசும்”

நம் கண்முன்னால் அந்தக்காட்சியை இப்படித்தான் புதுக்கவிதை விரித்துக் காட்டுகிறது. சமகாலப் பிரச்சனைகளைப் பாடாமல் கவிஞனால் இருக்க முடியாது. முணுமுணுத்துக் கொண்டிருப்பது கவிதையாகாது. பணத்துக்கு விலைபோகும் மனிதர்களும் அவர்களைப் பகடைக்காய்களாக உருட்டிவிளையாடும் அரசியல்வாதிகளையும் விமர்சிக்காமல் கவிதை இருக்க முடியாது.

இப்போது தன் எண்பத்தாறு வயதில், தான் நடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்த்து, தன் திசைகளில் பூத்துக் கிடந்த மலர்களைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் கவிஞர் “வானம்பாடி” இளமுருகு அய்யா அவர்கள்.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்கிற தெளிவு கவிஞருக்கு இருந்தது. அந்தத் தெளிவு பெற இயலாதவர்கள் கவிதையில் வெற்றிபெற முடியவில்லை. சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்கள் வானம்பாடிகள். மூன்றாண்டுகளுக்குமுன்

(ஹரியாணவில் சாமியார்(?) ராம்பாலைப் பிடிக்க ஹரியாணா அரசு 15.43 கோடி பஞ்சாப் 4.34கோடி..சண்டீகர் நிர்வாகம் 3.29 கோடி, மத்திய அரசு 3.35 கோடி என்று மொத்தம் 26.61 கோடி செலவிட்டிருக்கிறதாம்… செய்தி தி இந்து நாளிதழ் 29.11.2014) இப்போது அதே ஹரியானாவில் ராம்-ரகீம் என்கிற சாமியார் ஆடியிருக்கிறார் சகிக்கமுடியாத சல்லாபங்கள். என்ன காரணம்? மூடநம்பிக்கைதான் வேறென்ன? எனவேதான் எல்லாக் கட்டுகளையும் தகர்த்தெறிய அறிவியல்,சமூக விஞ்ஞானச் சிந்தனைகளை முன்னெடுத்தார் நம் கவிஞர்..

தெருவுக்குத் தெரு “கடவுள்” என்று எழுப்பப்படும் எல்லா மூடத்தனங்களையும் “சாலைக்கடவுள்” என்ற கவிதையில் முன்வைக்கிறார். ஒருகாலத்தில் பக்திமானாகக் கோயில் கோயிலாகச் சென்று பேசியவர்தான் கவிஞர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“சாலைக் கடவுள்களே— நடுச்
சாலைக் கடவுள்களே

வழியில் தடையாய் முள்ளைப் பரப்பி
வளர்ந்து நிற்கும் கள்ளிகளே!

என்று கவிதையைத் தொடங்குகிறார்.

“மாதா கோவிலாய் மசூதித் தளமாய்
மாரியாய் காரியாய் மாதவன் கோயிலாய்
எங்கோ மூலையில் இருந்த நீங்கள்
எங்கள் வழிகளில் ஏன் முளைக்கின்றீர்?” என்ற கேட்கிறார். இந்த நிலைமை எதற்காக?

“இன்று
சுயநலக் கைகளின் கேடயம் நீங்கள்
வஞ்சகர் மார்புக் கவசம் நீங்கள்
ஊரை விழுங்கும் மூர்க்க முதலைகள்
உறங்கும் ஆழ்ந்த அகழிகள் நீங்கள்”
என்ற உண்மையைச் சொல்கிறார். இன்று நாட்டில் நடக்கும் நாசகார அரசிலுக்கு எது மூல முதலீடாக இருக்கிறது என்பதை அறியாதவர் யார்? இன்று நாடெங்கும் முற்போக்குப் படைப்பாளிகள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதைப் பாரத்துக் கொண்டுதான் இருக்கிறோம். என்றாலும்

“ஆயிரம் யானைப் பலத்தொடு நிற்கும்
நவீன விஞ்ஞான வாகன மேறி
நாளை நாங்கள் பயணம் தொடர்கையில்
நீங்கள் எங்கள் கால்களில் சிக்கி
நிச்சயம் நிச்சயம் அழியப் போகிறீர்”
என்று நாளை நடக்கவிருப்பதை அன்றே அறிவிப்பு செய்திருக்கிறார்.

அதனால்தான்
“மடாதிபதிகள் காலில்விழும்
ஜனாதிபதிகள் வேண்டாம்”
என்று கவிஞரால் துணிந்து சொல்ல முடிகிறது.

கவிஞரின் உழைப்பும் சுயசிந்தனையும் அவரை நெஞ்சுயர்த்திப் பாடவைக்கிறது.

“சருகல்ல நான்
காற்றில் மிதக்க
காலில் மிதிக்க
காலக் கரையான்
அரிக்காத வைரம்நான்”

என்று பாடுகிறார்.. அழகியல் உணர்வோடு உணர்ச்சி ததும்பக் கவிதை படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கவிஞர்.
தன் வாழ்வின் ஒவ்வோர் அடியையும் திட்டமிட்டு எடுத்துவைத்துச் சிந்தனைகளைச் செதுக்கிச் செதுக்கிச் சீர்படுத்தி செழுமை கண்டவர் கவிஞர் என்பதை
“மனமே விழியாய்
ஒவ்வோர் இரவிலும்
உறுதி நிரப்பி
எடுத்து வைத்தேன்
இரவிலும் கூட…

ஒழுகும் இருளில்
நட்சத்திரங்கள்
வழிகாட்ட
நடந்து வந்தேன்
வனப்பிரதேசம்.

இரவு கிழித்து
உதயம் அறிவிக்கும்
விடிவெள்ளி”
என்கிற வரிகள் எதிரொலிக்கின்றன. பத்துப்பேர் கொண்ட பெரிய குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் கவிஞர் சலிப்படையவில்லை. சலியா உழைப்பில் களிப்படைந்திருக்கிறார். எப்படிப்பட்ட பின்னணி கவிஞருக்கு இருந்தது?

கோவைக்கு அருகில் மங்கலப்பாளையம் என்ற கிராமத்தில் படிப்பறிவற்ற எளிய குடும்பத்தில் பிறந்து நான்காம் வகுப்புக்கு மேல் படிக்க வழியின்றி, வறுமையின் கைகளில் வதைபட்டு, தானே தக்கிளி தயாரித்து விற்று காலணா ஒண்ணே காலணா சம்பாதித்து எட்டாம் வகுப்பை எட்டிப் பிடித்து, அதற்குப்பின் பக்கத்தில் குடியிருந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், குதிரைவண்டிக் காரர்களின் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்துத் தன் படிப்புக்கான செலவைத் தானே தேடிக் கொண்டு பேரூர்த் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவரான அவர் வாழ்க்கையை, அழுக்குப்படாமல் அலங்கரித்துக் கொண்டிருந்தது கவிதைதான்.

அவர் நகர நகராட்சிப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தஞ்சைப் புயலின் தாக்கத்தில் எழுந்த முதல் கவிதை “ சமுதாயம்” இதழில் வெளிவந்து இவரை வெளிச்சப்படுத்தியது. கல்லூரிக் காலத்திலேயே இவரும் கவிஞர் புவியரசும் சேர்ந்து புத்தகம் எழுதினார்கள். இருவரும் கோவையின் இரட்டைப் புலவர்களாகப் புகழ்பெற்றவர்கள். “கோவைமலர்” “பூ” என்ற இதழ்களுக்குத் துணை ஆசிரியர்களாக இருந்து, பின் தேனீ இதழைப் பதினொரு முறை பறக்க விட்டார்கள். நடைமுறை வாழ்க்கையில் வறுமையைத் தோற்கடித்த இவர் உழைத்த கடும் உழைப்பு கவிதையைக் கைகழுவிவிடவில்லை. மரபில் ஆழங்கால்பட்ட இவர் புதுக்கவிதையில் சிறகு விரித்தவர். வானம்பாடிக் கவிஞர்களிலேயே ஆரம்பநாள்களிலேயே அறிவியல் சிந்தனைகளை அதிகம் பதிவுசெய்த கவிஞர் இவர் என்று நாம் மனந்திறந்து சொல்லலாம்.

”ஓராணை உடன்பிறந்தே
ஓரானை தனைப்புணர்ந்த
சீரானை திருச்செந்தில்
ஊரானை தேன்கடப்பந்
தாரானை இளமுருகுப்
பேரானை, பேசுவன்என்
பிஞ்சுக்கவி கனியவே”

என்று 1959ல் மரபு வழிப்பட்ட சிந்தனைகளோடு “காந்தி பிள்ளைத் தமிழ்” எழுதிய விரல்கள்தான் கால மாற்றத்திற்கேற்ப
”தமிழ் இனப்படுகொலையும்
நிச்சயம் பிரசவிக்கும்
தமிழ் ஈழம்…
நகரும் சரித்திரம்
இனி அந்தத்
திசைநோக்கித்தான்”
என்றும் எழுதியிருக்கின்றன.

சிறுவயது நிகழ்வு ஒன்றை மிக அழகாகக் “கரியக்கா” என்ற கவிதையில் பதிவு செய்கிறார் கவிஞர்.
தவளையைப் பிடித்துவிளையாடும் விளையாட்டு சிறுவர்களுக்குத் தனிவிளையாட்டு. இவரும் பிடிக்கத் தாவுகிறார். அது குட்டைக்குள் தாவிவிடுகிறது. இவரும் விழுகிறார். சகதி. எழமுடியில்லை. கூடவந்த சிறுவர்கள் ஓடிப்போய்விடுகிறார்கள். உதவிக்காகக் கத்துகிறார். கைகொடுத்துக் காப்பாற்ற வருகிறாள் வேலியோரம் ஆடுமேய்க்கும் கரியக்கா. வரும்போதே ஒப்பாரி வைத்தபடியே வருகிறாள். ஆனால் கவிஞரைக் காப்பாற்றிக் கரைசேர்த்து விடுகிறாள். இந்த நிகழ்வை மிக இயல்பாக,

“திட்டிக் கொண்டே கையால்
சேந்தினாள் கரையில் சேர்த்தாள்.
திட்டும் வாய்.. தேன்சிந்தும் கைகள்”

என்கிறார். இன்றைய வாழ்வை

”மீன்கள் தூங்கும் குளம்போல்
சலனப்படக் கூடாத இந்த வயதிலும்
எதைஎதையோ பிடிக்க
எட்டிக் குதிக்கிறேன்.
பறப்பதைப் பிடிக்க
இருப்பதை இழந்து
நழுவிப் புதைமணல்
வீழ்ந்து தவிக்கிறேன்”
என்று படம்பிடித்துக் காட்டுகிறார்.

”உள்ளிருந்த சக்தி
உந்தியது என்னை
புதைமணல் நீந்தி நீந்தி
மீண்டுநான் கரையெழுந்தேன்,
இப்பொழுதும் என்நெஞ்சில்
ஆடு மேய்க்கும் கரியக்கா”
என்று தன் வாழ்வையே ஒரு கவிதைச் சித்திரமாக்கிக் காட்டுகிறார். தவளை என்பதை ஒரு குறியீடாகக் கொண்டு அவரவர் அவரவர்க்குக் கிட்டிய வாழ்க்கை அனுபவத்தை அசைபோட்டுப் பார்த்தால் .இந்தக் கவிதையின் ஆழம் புரியும். இந்தக் கவிதையைத் தன் அனுபவமாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனின் அனுபவமாகவும் மாற்றிவிடுகிற ரசவாதத்தைக் கவிஞர் செய்துவிடுகிறார்.

.இப்படிப்பட்ட அனுபவங்களின் வழியே கவிஞர் வாழ்க்கையைக் கடந்து வந்ததால்தான்
”அனுபவமே
என் வாழ்வு
அதுவேதான் என் செல்வம்” என்கிறார். அதனால்தான் இளைய தலைமுறைக்கு இதயம் திறந்து

“முன்னோர் செல்வம்தின்று
முடமாகிப் போனவனே!
மண்ணுலகே உனக்காக
மலர்ந்து கிடக்கிறது
சிறகுகள் விரியட்டும்
திசைதோறும் பாடிச்செல்” என்கிறார்.

மரபுக் கவிதையிலும் சரி புதுக்கவிதையிலும் சரி தன் சோதனை முயற்சிகளைச் செய்தவர் கவிஞர்.அறிவியல் உண்மைகளை அழகியல் அனுபவமாக மாற்றி இயற்கையின் இயக்கத்தைப் பாடுபொருளாக்கிவிடுகிறார். சூரியனையும் பூமியையும் தாயும் சேயுமாக வைத்துப் பாடுகிறார்.

“பூமிக் குழந்தை புலம்பலொலி.. மேனியெலாம்
முத்து வியர்வைத்துளிகள் மூச்சற்றுப் போனதுபோல்
மட்ட மலாக்காக வான்பார்த்துக் கிடக்கிறது”
என்று பூமியின் தோற்றத்தைப் புலப்படுத்துகிறார். சூரியன் தவிக்கும் தவிப்பை
“வாரி எடுத்துன்னை மார்போடு சேர்த்தணைத்து
முத்தமிட என்நெஞ்சில் மூளுதடி பேராசை
என்செய்வேன் என்மகளே..என்மேனி தீப்பந்தம்”
என்று இயற்கையைப் பாடுபொருளாக்கிப் பாடுகிறார். பூமியைக் குழந்தையாகக் கருதிய கவிஞர் தாயாக வைத்துப் படிமக் கவிதையைப் படைக்கிறார்

“ஆயிரம் மானிட நெஞ்சுகளாலும்
அளந்தள வறியா வான்வெளிப்பரப்பில்
தேகம் தீயினில் வேகும் ஆதவன்
திசைதடு மாறிச் செல்கையில் என்றன்
அன்னையைத் தூக்கி வெளியில் எறிந்தான்
அக்கினிச் சேறாய் அவளிங்கு வந்தாள்”

அழகாய் படிம அடுக்குகளை அடுக்கிக்கொண்டே வருகிற கவிஞர்
”என்றோ ஒருநாள் எதிர்பாராமல்
கால வெள்ளக் கரையில் எங்கோ
பூத்தது மானிடப் புதுமலர்… அன்னை
பார்த்துப் பார்த்துப் பனிநீர் அரும்ப
எடுத்துத் தொடுத்த மானிட மாலையில்
இருக்கும் எளிய ஒருசிறு மலர்நான்”
என்று பிரபஞ்ச வரலாற்றையே பிழிந்து தருகிறார். அன்றைய காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை அபூர்வமானது. அறிவியல் பார்வையின் வழியே சமூக விமர்சனத்தை முன்னெடுத்தவர் கவிஞர்.

அதன் வழியே தன்னையே தான் சுயவிமர்சனம் செய்து கொள்கிறார். அவரின் உள்மன விமர்சனம்

“எனக்குள் ஒருகுரல்.

எல்லாம் தெரிந்தவனென்று
பீற்றிக்கொண்டாய்
எனக்கெவர் நிகரெனப்
போற்றிக் கொண்டாய்.

“எல்லாம் இரவல்தானா
சுயம் அற்ற சுடலை மண்ணா நீ?”
என்று கேட்டுவிட்டு

“அனுபவச் சூட்டில்….
விழித்த மனவெளியில்
அதோ என் அறிவு தேவதை
விளக்கேந்தி வருகிறாள்.”
என்கிறார்.

கவிஞர் நகைப்பட்டறையின் அனுபவங்களைப் பெற்றவர். படிக்க முடியாமல் தவித்த பால்யகால நினைவுகளை
“பால பருவத்தில்
படிக்காத காலத்தில்
ஊர் ஊராய்
ஓடிய வாழ்க்கை
ஊக்கம் தந்தது” என்கிறார். இது சுயபுலம்பல் அன்று. வாழ்வின் உண்மை தரிசனம். அவர் வாழ்வில் உற்ற துணையாய் இருந்து வழிகாட்டி வழிநடத்தியவர் நண்பர் ஜன.சுந்தரம். தீர்க்கமான சிந்தனையாளர்.. அதனால்
“உள்ளமும் வாழ்வும்
ஒன்றிய நட்பு
உறுதுணையானது” என்று சொல்லிவிட்டு

“அலைஅலையாய்ப்
பொங்கும் வெளிச்சம்
வெளியிலும் என்னுள்ளம்.
மனம் தோகைவிரித்தாடியது.”
என்று கண்முன்னால் தன் வாழ்வையே சித்தரித்துக் காட்டுகிறார்.

தன் மாணவர் இறந்த போது மனங்கசிந்த கவிஞர் “பூமி நமக்கு குருசேத்ரம்” என்று எழுதுகிறார். அக்கவிதையில்
”ஓ! காலமே!
உனக்கும் எனக்கும் உறவுண்டு
உள்ளே நமக்குள் பகையுண்டு
என்னில்நீ…. உன்னுள்நான்..
பூமி நமக்கு குருசேத்ரம்”
என்கிறார். “பிரகலாதன்” என்கிற கவிதை வர்க்கப்போராட்டம் குறித்த படிமக் கவிதையாக மிளிர்கிறது.

“தந்தையே
உமது கைகளில் பகடைக்காய்களாய்
உமது காலில் பிய்ந்த செருப்பாய்
உமது வாயில் சாராய நெடியாய்
நாங்கள் எத்தனை காலம் இருப்பது?” என்கிற கேள்வி தந்தையிடம் மகன் கேட்கும் கேள்விமட்டுமல்ல..தொழிலாளி, முதலாளி வர்க்கத்திற்குள் கேட்கப்பட்டுக்கொண்டேயிருக்கிற கேள்வி. இன்றைய இளைய உள்ளங்கள் எப்படியெல்லாம் கற்பனைக் குதிரையில் பறந்து கொண்டிருக்கின்றன… காலத்திற்கேற்ப மாறமுடியாத மனங்கள். சமுதாயக் கண்ணோட்டத்தில் கவிதையைப் படைக்கிறார் கவிஞர்

“நீ ஆசைப்படும் வேலை
யார்கொடுப்பார் மகனே?
வாழ்க்கை நெருப்பு
எரியவில்லையா உன்னுள்?
காலங்கள் தோறும் மாறும் தொழில்கள்
மாறுந் தொழிலுக்கு மாறா மனிதர்கள்
தார்மெழுகிய நகரத் தெருக்களில்
காகிதம் மேயும் தொழிலற்ற வண்டிக்
குதிரைகள் போலக்
காலப் போக்கில் காகிதம் தின்பர்.” என்று விமர்சிக்கிறார். அதுமட்டுமல்ல..

“உறவும் நட்பும் தரும்
அவமானங்களின்
ஆலகாலம் விழுங்கு
அமுதாய் மாற்று” என்று அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்கிறார்.

பங்களாதேஷ் பிரிவிணையின் போது

“.இனியும் இவனொடு வாழ்க்கை நடத்த
என்னால் முடியாது
இதயம் முழுதும் நெருஞ்சிக் காடு
இரத்தம் கசிகிறது,”
என்று பாடுகிறார். இதைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்கையில் அலைஅலையாய் எத்தனை எண்ணங்கள் எழுகின்றன? பங்களாதேசுக்கு மட்டும்தானா பொருந்தும் இந்த வரிகள்? அதிகார மையம் ஓரிடத்தில் மட்டும் குவிக்கப்படுகிற பொழுது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள இந்த வரிகளே போதும்.

நிலவில் மனிதன் முதன்முதல் கால்பதித்ததைப் பதிவு செய்யும் கவிதை “விஞ்ஞானக் கன்னி”. அதில்
“காலத்தின் நெற்றியிலே
கருஞ்சாந்துப் பொட்டான
கோல நிகழ்ச்சி” என்கிறார்.

இப்படிப்பட்ட பார்வை கவிஞரின் கவிதைகள் பெரும்பாலானவற்றில் காணக் கிடைக்கின்றன. செம்மொழி என்று நம் தமிழைச் சிறப்புச் செய்த காலத்திற்கு வெகு முன்பே கவிஞர்
“என்னெதிரில் கைகட்டி
.இருந்தமொழிச் சோதரிகள்
ஏழடுக்கு மாளிகையில்
எனைப்பார்த்துச் சிரிக்கின்றார்” என்கிறார்.

அன்றைய இந்தி எதிர்ப்பில் எத்தனைபேர் வெந்து மடிந்தார்கள். அவையெல்லாம் விழலுக்கிரைத்த நீராகிவிட்டது இன்று. இந்த வரிகளுக்குள் இன்றைய நிலையைப் பொருத்திப் பாருங்கள். கவிதையின் சூடு நம்மைச் சுடும். மனிதனைப் பற்றிப் பாடுகிற பொழுது கவிஞர் பெருமிதம் ததும்ப

“மானிட வீணையின் கானம் எழுந்தே
வானைத் தொடுகிறது—இந்த
மண்ணில் விண்ணில் காற்றில் மனிதன்
சுவடுகள் தெரிகிறது” என்கிறார்.
அதனால்தான்

“உழைப்பின் காலில் முத்தமிடும் சொர்க்கம்
வேட்டுவன் நாவில் உதிக்கும் காவியம்”

என்கிறார். இந்த வரிகளுக்குள் எத்தனையோ வரலாறுகள் உறவாடிக் கொண்டிருக்கின்றன. சமூகநீதியைச் சமாதிக்குள் தள்ள நடத்தப்படுகிற நாடகங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடிக் கொண்டிருக்கும் ஊமைகளைக் குறித்து நாம் என்ன சொல்ல? கவிஞரின்

”பதவிகளின் காலில் விழும்
மனிதன் சொன்னான்
நான்
யாருக்கும் அடிமையில்லை”
என்கிற வரிகள் எத்தகைய அர்த்த அடர்த்தி நிரம்பியவையாக இன்று விளங்குகின்றன? மரபில் ஆழக் காலூன்றிக் கவிபடைத்த கவிஞர் அண்ணல் காந்தியடிகளைப் பாடுகிறபோது
“கள்ளிருக்கும் மலர்களிலே
உள்ளிருக்கும் வண்டுகள்போல்
காசுகுறி கொண்டிருக்கும் உலகம்—அதைக்
கண்டுவிட்டால் வந்துவிடும் கலகம்” என்கிறார்.

குற்றவாளிகள் சிறைக்குள்ளும் குதூகலத்துடன்தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கொடுமைகளையெல்லாம் தட்டிக்கேட்கக் கவிஞரின்
“வெட்டிப் புதைத்தாலும்
மண்ணில் நிழல்பரப்பி
விழுதூன்றுவேன்”
என்ற வரிகளை இதயத்தில் ஏந்தியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கவிஞர் இளமுருகு மலையாளக் கவிஞர் குமாரன் ஆசானின் ”மாறுதல்” கவிதையை நண்பர் ஜன.சுந்தரத்தின் உதவியோடும் வால்ட்விட்மனின் “முடிவற்று ஆடும் தொட்டில்” கவிதையை “நவஇந்தியா” துணைஆசிரியரும் முதுபெரும் படைப்பாளருமான அறிஞர் டி.சி. இராமசாமி அவர்களின் உதவியோடும் மிக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்.

வானம்பாடிக் கவிஞர்கள் வாழ்வை நேசித்தவர்கள். அதோடு போராடியவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையை ஊட்டியவர்கள். சொற்களில் சூடேற்றிக் கவிதையில் வைத்தவர்கள். அறிவியல் சிந்தனைகளை, சமுதாயச் சிந்தனைகளைக் கவிதையில் கொணர்ந்தவர்கள். அதனால்தான் இன்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கவிஞர்களாக இருக்கிறார்கள். இந்த இடத்தில் பேராசிரியர் தமிழவன் தீராநதி பிப்ரவரி 2017 இதழில் எழுதிய “வாசகன் முக்கியம் ஆசிரியன் அல்ல“ என்கிற கட்டுரை வரிகளை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. என்ன சொல்கிறார் பேராசிரியர்? “கல்லூரி விடுதிகளில் வசிக்கும் இலக்கியப் படைப்பு ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் தமிழ்க்கவிஞர்கள் எங்கே வந்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்” என்கிறார்.

எப்படிப்பட்ட கவிஞர்களை என்பதை விளக்கமாக எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே பட்டியலிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அன்றைய வானம்பாடிக் கவிஞர்களுக்கு மாணவர்கள்,இளைஞர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே போலிப் படைப்பாளிகளை நம்பிக்கை வரட்சியாளர்களைக் குறித்து “சவாரி” என்ற கவிதையில் சரியாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் இளமுருகு.

“இருளிலே நீந்திப்பறக்கும்
மனக்குதிரையே!
சாட்டைச் சொடுக்கில்
உன்னை வழிநடத்திச் செல்லும்
மாயமனிதர்கள் யார்?
அவர்களையும்
ஆட்டிப்படைக்கும்
சூத்திரதாரிகள் யார்?

இந்தக் கவிதைவரிகளோடு இன்றைய அரசியல்நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

கவிஞர் எப்படி இருக்கிறார் தெரியுமா? அவர் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள். கவிதையின் கம்பீரத்தைக் காணமுடியும்.அவர்யார்?
“காட்டாற்றங்கரையில்
காத்துக் கி்டக்கிறேன்
கால காலமாய்ப்
பூத்துக் கிடக்கிறேன்” என்கிறார். வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர் கவிஞர். அதனால்தான்

“எண்ணங்கள் ஆயிரம்
கோடிகள் என்னுள்
ஏமாற்றங்களே
சிரித்தன என்முன்…

வீட்டு முல்லையாய்ப்
பூத்துச் சொரிய
விம்மி எழுகின்ற
ஆசைப்பெருக்கில்…

இன்றும் தளிர்க்கிறேன்
இனியும் தளிர்ப்பேன்”

என்று கம்பீரமாகப் பிரகடனம் செய்கிறார். இது வெற்று கோசமோ முழுக்கமோ அல்ல. அவர் வாழ்க்கையின் துடிப்பு. வளர்ச்சியின் துடிப்பு.

”ஒரு கவிதையைப் படிக்கும்போது அதன் தலைப்பையோ அல்லது சிற்சில சொற்களையோ பார்த்த மாத்திரத்தில் ஒரு முடிவுக்கு வராதுஈ நுட்பமாகப் பாடலைப் பலமுறை படித்தல் வேண்டும்.” (கவிதை நயம் பக் 129) என்பார் கலாநிதி கைலாசபதி. இந்தக் கவிதைத் தொகுப்பையும் திரும்பத்திரும்பப் படிக்கவேண்டும். சமகாலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் கவிதை எப்படிக் காலம் கடந்து நிற்கிறது என்பதைக் காண முடியும். கவிஞனின் கவிதை மட்டுமல்ல அவன் வாழ்வும் அழகு மிக்கதாக இருக்க வேண்டும். இங்கே கவிஞர் இளமுருகுவின் கவிதைகள் அழகொளிர மிளிர்கின்றன… அவரின் வாழ்க்கையைப் போலவே.

மற்றவர்கள் நடைபயிலப் பாதையைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. நம் கவிஞர் ஒரு காவியத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். அதையும் விரைவில் வெளிக்கொணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு “வெள்ளைப் பறவை“க்குப்பின் சாகித்ய அகாதமி விருதை அதிகம் பெற்றவர்கள் வானம்பாடி இயக்கக் கவிஞர்கள்தான் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்காலத்திலும் வானம்பாடிகளின் குரல் ஒலித்துக்கொண்டுதானிருக்கும்.அந்தக் கவிதையை முன்னெடுப்பவர்கள்தான் கவிதையில் வெற்றிபெற முடியும், வெற்றி பெறுகிறார்கள் .

இஸ்மத் சுக்தாயின் நேர்காணல் ( உருது இலக்கிய எழுத்தாளர் ) / தமிழில் / ஜி. விஜயபத்மா

இஸ்மத் சுக்தாய்

இஸ்மத் சுக்தாய்

இஸ்மத் சுக்தாய் குறிப்புகள்

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 பிறந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்திசாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவனம் செலுத்தினார் .சுக்தாயின் படிப்புக்குப் பெற்றோர்கள் தடை விதித்தபொழுது அந்தத் தடைகளையெல்லாம் களைந்து கல்வி பயின்ற சுக்தாய் இளங்கலை பட்டத்தை லக்னோவில் உள்ள இஸபெல்லா துருபன் கல்லூரியில் 1933 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டம் படிப்பதற்கு எந்தப் பெண்களும் முன்வராத நிலையில் ஆண்களுடன் சேர்ந்து படித்தார். வகுப்பறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். பெண்கள் அந்தத் திரைக்குப் பின்னால் இருந்துதான் பாடம் கேட்க வேண்டும். ஆனால் சுக்தாய் இதனைப் பின்பற்றாமல் ஆண்கள் பகுதியில் அமர்ந்தே பாடம் கேட்டார். தன சிறுவயதில் இருந்தே பர்தா போடுவதை எதிர்த்து தானும் பர்தா போடாமலே வாழ்ந்தார் சுக்தாய்

வீட்டில் நிச்சயம் செய்த திருமணத்தை மறுத்த இஸ்மத் சுக்தாய் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஹாகித் லத்தீப் என்பவரை 1942 இல் வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு முன்பே எழுத ஆரம்பித்த சுக்தாய், தமது ஆசிரியத் தொழிலை விடுத்து மும்பையில் நிரந்தரமாகக் குடியேறி முழு நேர எழுத்தாளராக மாறினார்

1938 இல் இஸ்மத் சுக்தாய் எழுதிய முதல் படைப்பு ஃபஸாதி என்ற நாடகம் என்றாலும், அவரை உருது இலக்கிய உலகில் தனிப்பெரும் ஆளுமையாக அடையாளப்படுத்தியது 1942இல் வெளிவந்த ‘லீஹாப்” என்ற சிறுகதைதான் இஸ்மத் சுக்தாய் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அவை இதுவரை எட்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஏக்பாத், தோ ஹாத் என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் புகழ்பெற்ற படைப்புகளாகக் கருதப் பெறுகின்றன..சுக்தாயின் கதைக்களம் முற்றிலும் புதியதொரு சிந்தனையை முன்வைத்தே அமைந்திருந்தது. எழுபது வயதான பெண் ஒருத்தி இருபத்தைந்து வயது இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நஈ துல்ஹன் என்னும் கதையில் எழுதியிருக்கிறார்.இது இந்திய இலக்கியங்களில் இல்லாத பெண்ணின் ஆழமன உளவியல் பதிவு

இஸ்மத் சுக்தாய் மற்ற பெண் எழுத்தாளர்கள் தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களை தன்கதைகளில் அழுத்தமாக பதிவு செய்தார் .அது அவரது துணிச்சலை வெளிப்படுத்திய அதே நேரத்தில் அவருக்கு சமூகத்தில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியது அதிலும் முக்கியமாக சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் இளம் வயதுப் பெண்கள் காம இச்சையில் மன அமைதி இழப்பதை சித்திரிக்கின்றன.பாலியல் அணுகுமுறையின் களங்களை மையமாக கொண்டு அவர் எழுதிய சிறுகதைகளில் ‘தோ ஹாத்’ (இரண்டு கைகள்) மிக முக்கியமான ஒரு கதையாகும் . இதில் ஒரு பெண், மிகவும் எதார்த்தமாக பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதை மிகவும் சாதாரண விசயமாக விவரித்து இருப்பார். அதற்கு இவர் சொல்லும் அழுத்தமான காரணம் ஒரு ஏழை இளம் பெண்ணிற்கு உணவிற்கான தேடலின் ஒரு வழி தான் அவளது பாலியல் தொடர்புகள் என்று குறிப்பிட்டு இருப்பார் சுக்தாயின் லீஹாப் (கனத்த போர்வை), கூன்கட் (முகத்திரை), அமரபேல் (அமரவல்லி) ஆகிய கதைகள் பொருத்தமற்ற திருமணத்தைப் பற்றியும் அதனால் பெண்களுக்கு ஏற்படும் மன சிக்கல்களையும் பாலியல் தேடல்களையும் பதிவு செய்து இருப்பார்

வரதட்சனை என்பது பெண் ,ஆண் இரு குடும்பத்திற்கும் சிக்கலுக்குரியதாகவே இருக்கிறது என்பதைத் தனது (தோ ஹாத்) கதையில் பதிவு செய்திருப்பது சுக்தாயின் சமூகம் குறித்த நடுநிலைமை பார்வையை விளக்குகிறது இவை தவிர வேர்கள் என்ற கதையில் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி, தனது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார் சுக்தாய்.

.மரபு சாரா ஆண் – பெண் உறவு முறைகளின் இடையில் பொதிந்து இருக்கும் நுட்பமான உடலரசியல் இவரது தனித்தன்மை எனலாம்

பதினொரு புதினங்களையும் ககஜி ஹை பைரஹன் என்ற தன்வரலாற்று நூல் ஒன்றினையும் எழுதியுள்ள இஸ்மத் சுக்தாய் ஒன்பது நாடகங்களையும் நான்கு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார் இவரது புகழ் பெற்ற கட்டுரை தொகுப்பு மேரா தோஸ்த் மேரா துஷ்மன், ஹம் லோக் மற்றும் இவரது “ கரம் ஹவா” எனும் சிறுகதை திரைப்படமாகவும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கரம் ஹவா என்ற திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான குடியரசுத் தலைவர் விருதும் (1973), சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். இஸ்மத் சுக்தாய்க்கு சோவியத் குடியரசு 1982 ஆம் ஆண்டு சோவியத் லேண்டு நேரு விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.

சுக்தாய் 1991 இல் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தமது 76ஆவது அகவையில் மும்பையில் காலமானார்.உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் என்றால் மிகையாகாது

••••
ஜி. விஜயபத்மா குறிப்புகள்

மணற்குன்று பெண் (2014)என்ற மொழி பெயர்ப்பு நாவலை எதிர் வெளியீடு பதிப்பித்து வரவேற்பை பெற்றது . முல்லைப்பெரியாறு குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதிய முல்லை பெரியாறு அணை கட்டிய வரலாறு (2015) தமிழில் விகடன் பிரசுரித்தது , ஆங்கிலத்தில் அமேசான் பதிப்பகம் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. சீனாவில் மிகவும் பரபரப்பை உருவாக்கிய சீன வானொலி தொகுப்பாளர் எழுதிய GOOD women of china என்ற புத்தகத்தை தமிழில் சீனாப் பெண்கள் சொல்லப்படாத கதைகள்92017) என்று மொழி பெயர்த்துள்ளார். இதை எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ள இவரது சுவாமி விவேகானந்தர் பற்றிய ஆங்கில புத்தகம் (2017) அமேசான் வெளியிட்டுள்ளது .

உருது இலக்கிய எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் பேட்டி

மஹ்பில் : உருது சிறுகதையின் முன்னோடியான உங்களின் ஆரம்ப கால எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்து ? மற்றும் உங்கள் ஆரம்ப கால சிறுகதைகளில் எது உங்களுக்கு முதன்மை இடத்தை பெற்று தந்ததாக கருதுகிறீர்கள் ?

இஸ்மத் : என் கதைகளை , பொருட்களை தரம் பிரித்து சான்று வழங்குவது போல் வழங்க நான் விரும்பவில்லை .முதன்மை இடம் என்று எதைக் குறிப்பிட முடியும் ? நான் எழுத துவங்கிய காலத்தில் உருது இலக்கியத்தில் ஒன்று காதலைப் பற்றி எழுதுவது , இல்லையென்றால் முற்போக்கு சிந்தனையோடு எழுதுவது என்று இருவிதமான எழுத்துக்களே இருந்தன . இதில் இருந்து விலகி நான் யதார்த்த வாழ்வின் முரண்பாடுகளை வெளிப்படையாக எழுதியதால் மக்கள் அதிர்ச்சியுற்றார்கள் . அதுதான் எனக்கான இடமாக இருந்தது எனலாம் .

மஹ்பில் : உங்களுடைய வெளிப்படைத்தன்மை என்ற மனோதைரியம் உங்களுக்கு எப்படி வந்தது ?

இஸ்மத்:: அது ஏன் குடும்பத்தில் இருந்து எனக்கு வந்தது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகவும் வெளிப்படையான மனிதர்கள் .என் தந்தை எனக்கும் , என் சகோதரர்களுக்கும் நினைத்தை வெளிப்படையாக பேசும் சுதந்திரத்தை உருவாக்கி தந்து இருந்தார். அவர் ஒரு சிறந்த முற்போக்குவாதி .எங்கள் வீட்டில் பெண்கள் ஒருபுறம் ஆண்கள் ஒரு புறம் என்று அவர் பிரித்து வைக்கவில்லை . அனைவரும் சரி சமமாக ஒன்றாக சாப்பிடுவது , ஒன்றாக கூடத்தில் அமர்ந்து விவாதிப்பது என்று குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து சுதந்திரமாக வாழ்ந்தோம் .என் தந்தை கல்வியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். குழந்தைகளை வளர்த்த விதத்தில் என் சகோதரர்களோடு எனக்கும் எந்த பாரபட்சமும் இன்றி சம வாய்ப்பு அளித்தார் . கல்வியில் இருந்து குதிரை ஏற்றம் வரை .இளவயதிலேயே இப்படி என்னை வளர்த்ததால் , வெளியுலகில் எனக்கு வெளிப்படையாக எந்த கருத்தையும் முன் வைக்க தயக்கம் இருக்கவில்லை .

மஹ்பில் .: எப்போது முதல் முற்போக்கு இயக்கத்தோடு நீங்கள் ஈடுபாடு கொண்டீர்கள்? நான் நேற்று மற்றொரு உருது எழுத்தாளரோடு உரையாடினேன். அவர், தாம் தம்முடைய எழுத்து வேலையை தான் பார்த்து கொண்டிருந்ததாகவும், பிறகு திடீரென்று தான், தாம் ஒரு முற்போக்காளர் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த இயக்கத்தில் முறைப்படி இணையாமல் ஆனால் அதில் தான் இருந்தார். நீங்கள் எப்படி?

இஸ்மத்: 36ல், நான் B.A படித்து கொண்டிருந்த போது, லக்னோவில் நடைபெற்ற முதல் முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டேன். அதில் பிரேமச்சந்த் கலந்து கொண்டார். எனக்கு அன்றைய கால கட்டத்தில் எதுவும் புரியவில்லை . பின் ரஷீத் ஜஹானை சந்தித்தேன் . அவர் மிகவும் தைரியமானவர் .எந்த விஷயத்தையும் தயக்கமின்றி வெளிப்படையாக பேசும் அவர் தன்மை எனக்கு பிடித்து இருந்தது .நான் அவரைப் போன்ற ஒரு எழுத்தாளராக விரும்பினேன் .நான் “அங்கரே” (Angare – நிலக்கரி) படித்திருந்தேன். என்னால் அவரது எழுத்துக்களுடன் ஒன்று பட முடிந்தது . என் வாழ்க்கை திசை திரும்பியதற்கு அவர் தான் காரணம் என்று என் குடும்பத்தினர் பழி சொல்லும் அளவு அவரது பாதிப்பு என் மேல் இருந்தது .

அவருடைய திறந்த மனதும்,கட்டுப்பாடற்ற சிந்தனையும்… நீ எதை பற்றி சிந்தித்தாலும் அதை பற்றி பேசவோ , எழுதவோ வெட்கப்படாதே ஏனென்றால் இதயம் உதடுகளை விட புனிதமானது .மனதில் ஒன்றை நினைத்து விட்டு அதை வெளிப்படையாக பேச இயலவில்லை என்றால் அந்த நினைப்பு மிகவும் .மோசமானது வெளிப்படுத்த இயலுமான வார்த்தைகளே .சிறந்தது என்பது அவரது அறிவுரையாக இருந்தது . அதையே நானும் உண்மை என்று ஆழ்ந்த நம்பிக்கை வைத்து .இருந்தேன்

நான் துவக்கம் முதலே முற்போக்குவாதியாகத் தான் இருந்தேன் . யாரும் என் மேல் நம்பிக்கை வைத்து ரகசியம் பேச இயலாத அளவு வெளிப்படையானவளாக இருந்தேன் .எந்த கட்சியும் உறுப்பினர் ஆக சேர்த்து கொள்ள இயலாத அளவுக்கு திறந்த மனது கொண்ட வளாகவும் தைரியமானவளாகவும் இருந்தேன் ஏனென்றால் நான் கண்டதையும் பேசுவேன். எதையும் பேச பயப்படவும் மாட்டேன்,இதில் கூட.. (டேப் ரெகார்டரை காட்டியவாறு) ஏனென்றால் யாருடைய பெயருக்கும் களங்கம் விளைவிக்க முடியும் என்றோ யாருடைய நல்ல பெயரையும் கெடுக்க முடியும் என்றோ நான் நினைக்கவில்லை. என் வெளிப்படையான பேச்சு எனக்கு இருக்கும் அல்லது இருப்பதாக தோன்றும் நல்ல பெயரை கெடுக்கும் என்றோ நான் ஒருபோதும் நினைத்தது இல்லை .

.மஹ்பில் .: நீங்கள் ஆரம்பம் தொட்டே முற்போக்கு இயக்கத்தில் இருந்ததாக சொல்கிறீர்கள். முற்போக்குவாதிகள் உங்கள் கதைகளை எப்படி பார்த்தார்கள்.? க்ரிஷன் சந்தர் பாராட்டினார் என்று சொன்னீர்கள். .?.

முற்போக்கு இயக்கத்தில் பெரும்பாலோர் என்னுடைய நண்பர்கள்.அவர்கள் என் உறவினர்களுக்கும் மேலானவர்கள் .. எனவே சில சமயம் அவர்கள் என்னை பாராட்டுவார்கள். சில சமயம் கண்டனம் செய்வார்கள். என்ன செய்தாலும் அதை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பாராட்டையும் சரி. கண்டனத்தையும் சரி. ஒரே மாதிரி மனநிலையில் எடுத்துக் கொள்வேன்

மஹ்பில் .: நீங்கள் இந்த இயக்கம் உருது இலக்கியத்துக்கு பெரிதாக வளம் சேர்த்ததாக நினைக்கிறீர்களா?

இஸ்மத் : ஆம்.

மஹ்பில் . ஆனால் உரைநடைக்கு எப்படி? ஏராளமான நல்ல சிறுகதைகள் உள்ளன..சரி.. ஆனால் நாவல்கள்?

இஸ்மத் : நாவல்கள் எழுதுவதற்கு கடின உழைப்பு தேவை. மேலும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு எழுத நேரமில்லை. அதனால் அவர்கள் எழுதுவதை விட்டு விடுகிறார்கள். எழுத்தாளர்களுக்கு சம்பளம் மிக குறைவு. திரை உலகில் தான் அவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது. .எனவே பெரும்பாலான எழுத்தாளர்கள் சினிமாவுக்கு எழுத போய் விடுகிறார்கள். சினிமா மூலம் சம்பாதித்து கொண்டு, பின்னர் மனதிருப்திக்காக எழுதுகிறார்கள். ஒரே நேரத்தில் ரெண்டு வேலை செய்தால், எப்படி ஒரு உருப்படியான விஷயத்தை உருவாக்க முடியும்?

மஹ்பில் .: அப்படியென்றால், உருது எழுத்தாளர்கள் தற்போது எழுதுவதை விட சிறந்த நாவல்களை எழுதாததற்கு காரணம், அவர்களுடைய நேரத்தை பொறுத்த விஷயமும், பொருளாதார நிலைப்பாடுகளும் மட்டுமே என்று கருதுகிறீர்களா?

இஸ்மத் : ஆம். சிறிது நேரம் கிடைக்கும் போது, அவர்கள் குறுநாவல்கள் எழுதுகிறார்கள். நாவல்களும் எழுதுகிறார்கள். அவை நன்றாக உள்ளனவா இல்லையா என்பது வேறு விஷயம்.

மஹ்பில்: திரைப்படங்களுக்கு எழுதும் பணியில் ஈடுபடுவதால், ஏதாவது எதிர்மறை விளைவுகள் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் என்று எண்ணுகிறீர்களா ?

இஸ்மத்: வயிற்று பிழைப்புக்காக அவர்கள் எழுதுகிறார்கள். சிறந்த படைப்புகள் என்ற வகையில் வேறு எதுவும் அதிகமாக அவர்களால் செய்ய இயலாது. எப்படி சொல்வது? அவர்கள் உணவு தான் அவர்கள் வாழ்க்கை. திரைப்படத்துறை அதை எங்களுக்கு அளிக்கும்போது, நான் அதற்கு எதிராக எப்படி பேசமுடியும்?

மஹ்பில்: எனக்கு புரிகிறது.

இஸ்மத் : அது ஒரு புறம் இருக்க, மக்கள் நீண்ட நாவல்களை படிக்க விரும்புவது இல்லை. அதற்கு பதில் அவர்கள் சினிமாவை போய் பார்க்கிறார்கள். மேலும், இந்தியாவில் படித்த மக்கள் ஆங்கில நாவல்களை படிப்பதையே, விரும்புகிறார்கள். உருது இலக்கியம் படிப்பது நாகரிகமே இல்லை. மிகச் சிலர் தான் படிக்கிறார்கள். சாதாரண மக்கள் படிக்கிறார்கள். ஆனால் மிகவும் மலிவான புத்தகங்களையே படிக்கிறார்கள். கருத்துவளம் கொண்ட ஆழ்ந்த இலக்கியங்கள் அவர்கள் படிப்பதில்லை.

மஹ்பில்: பேடியின் “ஏக் சடார் மைலி” ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மொழிமாற்றத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தியுள்ளதே?

இஸ்மத்: நான் என்னுடைய படைப்புகள் மொழிமாற்றம் செய்யப் படுவதை விரும்புகிறேன். எந்த ஒரு படைப்பும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படாவிட்டால் அதற்கு எந்த மதிப்பும் இல்லை.என்பதுதான் இன்றைய நிலைமையாக இருக்கிறது . மொழிமாற்றம் செய்யப்பட்டால், அது நன்றாக மொழிமாற்றம் செய்யப்படுவதில்லை. என்பது பொதுவான கருத்து அதைத்தானே நீங்கள் சொல்ல வருகிறீர்கள் ? அது அப்படி அல்ல . உருது மொழியின் பிரத்யேக மொழிக்கான நுணுக்கங்களை ஆங்கில மொழியில் நீங்கள் எதிர்பார்க்க முடியாது .ஆங்கிலம் அதற்கு உண்டான எல்லைக்குள் மட்டுமே ஒரு மொழியின் மாற்றத்தை பிரதிபலிக்க முடியும் . என்னுடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப் பட நான் விரும்புவதைக் குறித்து பத்ராஸ்க்கு ஒரு கருத்து இருந்தது. அவர் என்னிடம் , “ஏன்? உங்கள் கதைகள் இல்லாமல் ஆங்கில இலக்கியம் என்ன குறைந்தா போய் விடும்?” என்று என்னிடம் கேட்டார்.

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா


மஹ்பில்: அதற்கு நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன். ஆமாம் அது குறைந்து தான் போய் விடும் நீங்கள் ஏன் உங்களை ஒரு பெரிய எழுத்தாளராக கருதி கொள்வதில்லை?

இஸ்மத்: இல்லை. என்னிடம் பெரிய எழுத்தாளர்களுக்கான தகுதிகளில் ஒன்று கூட இருப்பதாக நான் நினைக்கவில்லை . ஆனால் ஏதோ ஒன்று என்னிடம் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள் . அதை நானும் நம்புகிறேன் அவ்வளவுதான்

மஹ்பில்: சிலர் உங்களை பெரிய எழுத்தாளர் என்று அழைக்கிறார்களே?

இஸ்மத்: அவர்கள் நினைக்கிறார்கள் என்றால் அது அவர்களின் சுய விருப்பம் . ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை . நான் என் வீட்டின் மீதும் , என் குழந்தைகள் மீதும் தான் அதிக அக்கறை செலுத்துகிறேன் . எனக்கு உருது இலக்கியத்தை விட என் குடும்பம் மிகவும் முக்கியம் .

மஹ்பில் : நீங்கள் இந்தியர்களின் ஆங்கில படைப்புகளை படிக்கிறீர்களா? ராஜா ராவ் மற்றும் ஆர். கே. நாராயண் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள்?

இஸ்மத்: அவர்களின் படைப்புகள்,ஆங்கில எழுத்தாளர்கள் உருதில் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறது . நான் எப்போதும் படித்து கொண்டிருக்கும் சிறந்த மேற்கத்திய நாவல்களை ஒப்பிடும்போது, இவர்களின் படைப்புகள் ஒன்றும் அந்த அளவுக்கு நன்றாக இல்லை. ஒருவேளை அதற்கு மொழிகூட ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் புத்தகங்களின் தலைப்புகள் அத்தனை வசீகரமாக இல்லை .இவர்களின் ஆங்கில படைப்பிற்கு , இந்திய மொழிகளின் இலக்கிய படைப்புகள் எவ்வளவோ மேல் என்பதே என் கருத்து .”செம்மீன்” தெரியுமா? “தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ” (The OId Man and the sea) போன்றது. ஒரு மிகச் சிறந்த நாவல். நவீன இலக்கியமாக இந்த இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகள் அத்தனை சிறந்தது இல்லை என்பதே என் கருத்து

•••••

1972 ல் வெளிவந்த நேர்காணல்

கல்லு -இஸ்மத் சுக்தாய் / தமிழில் / ஜி.விஜயபத்மா

இஸ்மத் சுக்தாய்

இஸ்மத் சுக்தாய்

ஏழு வயது கூட நிரம்பாத “கல்லு ” வளர்ந்த மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்ய பழகி இருந்தான் .அசந்து தூங்கும் பொது , யாரோ அடித்து எழுப்புவது போல் அதிகாலையிலேயே எழுந்து விடுவான் . குளிர்காலமானாலும் , பழைய கந்தல் சட்டை அணிந்து கொண்டு , அப்பாஸின் குரங்கு குல்லாவை கழுத்து வரையிலும் இழுத்து மூடி அணிந்து கொண்டு , அவ்வப்போது மூக்கை உறிஞ்சி கொண்டு , பெரியதோரணையு டன் கூடிய சிறிய மனிதனாக தன் வேலைகளை செய்ய தயாராகி விடுவான் அவனுக்கு குளிர்ந்த தண்ணீர் என்றால் பயம் . அதனாலேயே அவன் முகம் கழுவதே இல்லை . தன் விரல் நுனிகளால் பல்லுக்கு வலிக்காதவாறு மெல்ல தேய்த்து விட்டு வாய் கொப்புளித்து விடுவான் . இதனால் எப்பவும் அவன் பற்களில் காரைப் படிந்து மஞ்சளாகவே இருக்கும்
காலையில் அவன் செய்யும் முதல் வேலை அடுப்பை பற்ற வைத்து டீ க்கு தண்ணீர் வைப்பது . அதன் பிறகு காலை உணவிற்கு சாப்பிட்டு மேஜையை தயார் செய்வது . அதற்காக , சமயலறைக்கு , சாப்பிட்டு மேஜைக்கு ஒரு நூறு தடவையாவது நடப்பான் . முட்டை எடுத்து வர , பால் எடுத்து வர , என ஒவ்வொரு பொருளாக தேடித்தேடி அவன் எடுத்து வந்து மேசையில் நிரப்ப , அவன் காலில் அணிந்திருக்கும் செருப்பை சரக் , சரக் என்று சப்திக்க தரையில் இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருப்பான் .அவன் பொருட்களை மேசையில் அடுக்கிய பின் சமயல்காரர் காலை உணவை தயார் செய்வார். அதன் பிறகும் , சுடப்பட்ட பிரெட் , மற்றும் பரோட்டாக்களை தூக்க இயலாமல் சமையல் அறையில் இருந்து தூக்கி கொண்டு வந்து தருவதற்கு மேலும் பல தடவை அலைவான் .
பள்ளிக்கு கிளம்பும் அந்த வீட்டு குழந்தைகளுக்கு , அவை வேண்டாம் என்று முகம் சுளித்தாலும் , வலுக்கட்டாயமாக ஊட்டி விடப்பட்டு பள்ளிக்கு அனுப்புவார்கள் . அந்த குழந்தைகள் சாப்பிடுவதையும் பள்ளிக்கு கிளம்புவதையும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பான் கல்லு. எல்லா குழந்தைகளுக்கும் ஏறக்குறைய அவன் வயது தான் இருக்கும் அவர்கள் கிளம்பி சென்ற பின்பு இருக்கும் மிச்ச உணவுகளை சேகரித்துக்கொண்டு சமயலறை யின் மூலையில் அமர்ந்து டீ வைத்துக் கொண்டு சாப்பிடுவான் கல்லு .

அதன் பிறகு அவனுக்கான அடுத்தப் பணி துவங்கும் . மாலிஹா பீ யின் சைக்கிள் காற்றடிக்கும் பம்பை எடுத்து சுத்தம் செய்து வைப்பது ., ஹமிதாவின் காணாமல் போன ரிப்பன் களை கண்டு பிடித்து எடுத்து வைப்பது , அக்தர் பாயின் காலுறைகளை துவைத்து எடுத்து வைப்பது சலீமா பீ யின் புத்தகப் பாயை ஒழுங்கு செய்து வைப்பது , முமானி ஜான் அலமாரியை சுத்தம் செய்து அடுக்கி வைப்பது . அப்பாஸின் படுக்கையறையில் இருக்கும் சிகரெட் துகள்கள் போட்டு வைத்திருக்கும் கிண்ணத்தை சுத்தம் செய்து வைப்பது . மொத்தமாக காலையில் ஆபிசுக்கு , குழந்தைகள் பள்ளிக்கும் தயாராகும் போது நடந்த அலங்கோலங்களை சரி செய்து வீட்டை ஒழுங்கு செய்வது
அதன் பிறகும் அவனுக்கு ஓய்விருக்காது . குழந்தை நானிஹி யின் இடுப்பில் கட்டும் துணிகளில் உள்ள மலத்தை கொட்டி விட்டு துவைத்து காய போட வேண்டும் . வாசலில் வந்து மணி அடிப்பவர்களுக்கு ஓடி சென்று பதிலளிக்க வேண்டும்
இந்த வேலைகளை அவன் முடிக்க நண்பகல் ஆகி விடும் . அதன் பிறகு சமையல்காரர் அவனை அழைத்து தேங்க்காய் துருவி கொடு , பீன்ஸை நறுக்கி கொடு என்று சமையல் வேலையின் மேல் வேலைகளை செய்யச் சொல்வார். அதை செய்து முடித்த பின் சமைத்த சாப்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்து வந்து சாப்பாடு மேஜையில் வைக்க வேண்டும் . அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் , சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்ய்ய வேண்டும் . இப்படி ஓயவில்லாத வேலையை இந்த சின்ன வயதிலேயே பொறுப்பாக சுமக்க கற்றுக் கொண்டான் கல்லு. அந்த வீட்டை பொறுத்தவரை , துப்புரவு செய்வதில் இருந்து , வீட்டின் மொத்த வேலைகளுக்கும் எடுபிடி என்றால் கல்லுதான் . இதற்காக அவனுக்கு மாதம் இரண்டு ரூபாய் சம்பளம் தரப்படுகிறது கல்லுவின் அம்மா கிராமத்தில் இருக்கும் ஜமீன்தார் வீட்டில் , சமையல் வேலை செய்கிறாள் . இவவளவு பெரிய வீட்டில் வேலை செய்தால் கல்லுவுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கும் அவன் எதிர்காலத்தை அந்த வீட்டுக்காரர்கள் பார்த்து கொள்வார்கள் என்ற ஆசையில் தான் அவனை இங்கு வேலைக்கு அமர்த்தி இருக்கிறாள்

எப்பொழுதாவது விசேஷ நாட்களில் , வறுத்த சோளம் , வெல்லப்பாகு உருண்டை போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து மகனை பார்த்து விட்டு செல்வாள் .

அவள் வந்தாலும் மகனை ஆசையுடன் கொஞ்சுவது கிடையாது . மகனே கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா. என் முதுகை தேய்த்து விடு , சமையல்காரரிடம் ரொட்டியும், பருப்பும் வாங்கி வா , என்று ஏதாவது வேலை வாங்கி கொண்டே இருப்பாள் .

கல்லுவின் மென்மையான கைகளால் பாதங்களை நீவி விட்டால் அவ்வளவு சுகமாக இருக்கும் , அவனை பாதங்களை மசாஜ் செய்ய சொல்லி விட்டால் , நிறுத்து என்று சொல்லும் வரை சோர்வில்லாமல் , பாதங்களை நீவிக் கொண்டே இருப்பான் . சமயத்தில் ஒரே வேலையை செய்வதால் அவனுக்கு தூக்கம் தூங்கி விழுவான் . அப்பொழுதெல்லாம் காலால் அவன் தலையை உதைத்தால் எழுந்து கொண்டு , மீண்டும் விட்ட இடத்தில் இருந்து நீவி விட ஆரம்பிப்பான்

கல்லுவுக்கு விளையாடுவதற்கு நேரமே இருப்பதில்லை . எப்பொழுதாவது ஏதாவது தவறு செய்து விட்டான் என்றால் அதற்கு திட்டினால் , சோர்வுடன் வாசலில் சென்று அமர்ந்து கொண்டு , பைத்தியக்காரன் போல வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பான் .அவன் இது போல் எப்பொழுதாவது சோர்ந்து போய் உட்க்கார்ந்து இருந்தால் , அப்பொழுதேல்லாம் குழந்தை களில் யாராவது ஒருவர் அவன் காதில் எதாவது குச்சியை விட்டு குடைவார்கள் . அவன் திடுக்கிட்டு கூச்சத்தில் , காதில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டே மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்து விடுவான் .

மாலிஹா பீ க்கு திருமண ஏற்பாடு நடக்கத் துவங்கியது . வீடு முழுக்க திருமண பேச்சாக பேசி ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு இருந்தனர். யாரு யாரை திருமணம் செய்து கொள்வார்கள் என்று எப்படி அறுதியிட்டு சொல்ல முடியும் ? இருந்தாலும் திருமண பேச்சு பேசுவதே ஒரு சுவாரசியம் இல்லையா ?

நானிஹி நீ யாரை திருமணம் செய்து கொள்வாய் என்று விளையாட்டாக முமானி கேட்க அது “அப்பாஸி’ என்றது . எல்லோரும் அவளின் பதிலை ரசித்து சிரித்தார்கள் .

அம்மா கூட ஒரு நாள் விளையாட்டாக கேட்டாள் கல்லு நீ யாரை திருமணம் செய்து கொள்ள போகிறாய் என்று

இந்த கேள்வியை எதிர் கொள்ள இயலாமல் கல்லு வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான் . தன் கறை யேறிய பற்களை காண்பித்து வெட்க புன்னகையுடன் ஓரக்கண்ணால் பார்த்தபடி “சலீமாபீ யை ” என்று மெல்லிய குரலில் கூறினான்

கல்லுவின் பதில் கேட்டு அங்கு உள்ளவர்கள் சிரிக்க ,முமானி கோபமாகி ,” நீ நாசமா போக , முட்டாளே ,, நீ வீணாய் போக சபிக்கிறேன் ” என்று கூறியபடி எழுந்து வந்து கல்லுவின் காதை பிடித்து தன் பலம் கொண்ட மட்டும் திருகினாள் மு மானி . அவன் வலியில் கண் கலங்கினான்

மற்றொருநாள் சலீமா விளையாடிக் கொண்டு இருந்த போது அருகில் சென்ற் கல்லு சலீமாவிடம் ஆவலாக , ” சலீமா நீ என்ன திருமணம் செய்து கொள்வாய் தானே ?” என்று கேட்க , அவள் தன் தலையை மேலும் கீழும் வேகமாக ஆட்டி ” ஆமாம் ” என்று சொல்ல குழந்தைகள் இருவரும் சிரித்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்த இடத்தின் அருகில் அமர்ந்து தன் தலையை வாரிக் கொண்டு இருந்த முமானி இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைக் கேட்டு ஆத்திரம் அதிகமாகி தன் காலில் போட்டு இருந்த செருப்பை கழட்டி கல்லு வை நோக்கி ஆவேசமாக வீசினாள் .

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா


அந்த குதிகால் செருப்பு வேகமாக கல்லுவின் முகத்தில் பட்டு மூக்கு உடைந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது . சிறிது நேரத்தில் கன்னத்தின் பக்கவாட்டில் இருந்தும் ரத்தம் வழிய ஆரம்பித்தது . அதேசமயம் தன் மகனைப் பார்க்க வந்த கல்லுவின் தாய் இரத்தம் கொட்டி கொண்டு தன் மகன் மயங்கி செய்வதைப் பார்த்து , அலறியபடி ” ஐயோ என் மகனை கொல்றாங்களே ” என்று அழுது கொண்டே மகனைத் தாங்கி பிடிக்கிறாள் .

முமானி தன் கோபம் தனியாமலே , கல்லுவையும் , அவன் அம்மாவையும் வீட்டை விட்டு வெளியே பொங்கள் என்று ஆத்திரத்தில் கத்து கிறாள் . கல்லுவின் அம்மா அவள் காலைப் பிடித்து கெஞ்சுகிறாள் .இந்த ஒரு தடவை மன்னித்து விடுங்கள் இனி என் மகன் தவறு செய்ய மாட்டான் என்கிறாள் .கல்லுவின் அம்மாவின் வேண்டுதல்கள் ஏற்கப்படவில்லை .” இவனுக்கு என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம் . இருவரும் நயவஞ்சகர்கள் வெளியில் போங்கள்” என்று கோபம் தணியாமல் முமானி அவர்களை துரத்தி விடுகிறாள் காலம் வெகு விரைவில் பறந்தோடியது . அந்த வீட்டிற்கு அதன் பின்னர் வேறு வேலைக்காரர்கள் வந்தனர் . கல்லுவை அந்த குடும்பம் மறந்து போனது .

மாலிஹா பீக்கு இப்பொழுது குழந்தைகள் பிறந்து தாயாகி விட்டாள் . ஹமிதாவிற்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை . பாதி குடும்பம் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து சென்று விட்டனர். மீதி உள்ளவர்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டனர்.நானிஹி , சாலியா , சலீமா மூவரும் படிப்பை முடித்து விட்டு திருமணத்திற்கு தயாராக காத்து இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை

எங்களது மாமா சாச்சா மியான் என்பவர் எங்களுக்காக மாப்பிள்ளை தேடி அலைந்தார் . பல அரசு அலுவல்களில் , நிறுவனங்களில் சென்று மாப்பிள்ளை கிடைக்கிறார்களா என்று தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை . மாலிஹா பீ யின் திருமணத்தின் போது பெரிய அரசு அலுவலகங்களில் அலைந்து அவளுக்கு மாப்பிள்ளை தேடித் தந்தார்சாச்சா மியான். இன்று அவராலும் எதுவும் முடியவில்லை இப்பொழுது மிகவும் மோசமான கால கட்டமாகதான் இருக்கிறது நல்ல மாப்பிள்ளைகள் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அவர்கள் , கார் , வரதட்சணை பணம் , இங்கிலாந்து செல்ல விமான டிக்கெட் எல்லாம் திருமண செலவாக கேட்கத்துவங்கி விட்டனர். மாப்பிள்ளைகள் கேட்பது அத்தனையும் செய்வதானால் வீட்டிற்கு ஒரு பெண் மட்டும் வைத்து இருப்பவர்கள் வேண்டுமானால் இது போன்ற வரதட்சனையை பரிசீலிக்கலாம் எங்கள் வீட்டிலோ மூன்று பெண்கள் திருமணத்திற்கு காத்து இருக்கிறோம்

இதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன . எங்கள் நிலங்களை நாங்கள் இழந்து விட்டதால் , எங்கள் குடும்பத்தின் மதிப்பு குறைந்து விட்டது . வீட்டு விசேஷங்களோ , குடும்பத்திற்குள் விருந்துகளோ நடை பெற்றால் , இளம் பெண்கள் , வாலிபர்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் . அதன் மூலம் ஏதாவது திருமண பேச்சு நடை பெறலாம் இது எதற்குமே வழியில்லாத சூழலில் , திருமணம் மட்டும் எங்கே இருந்து நடக்கும் ?

எங்கள் மாமா வின் மூலமாக புதிய டெபுடி கலெக்டர் டின் வீட்டு விருந்துக்கு அழைப்பு வந்தது . வீட்டு பெணகள் அனைவரும் கலந்து கொள்வது என்று முடிவானது . அந்த விருந்துக்கு எப்படி எங்களை தயார் செய்து கொண்டு போவது என்பதை விருந்துக்கு பல நாட்கள் முன்னதாகவே ஏற்பாடு செய்து ஆர்வத்துடன் நாங்கள் தயாரானோம் .டெபுடி கலெக்ட்டர் டின் னிற்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை . எங்கள் நகரத்தில் உள்ள பணக்கார குடும்பங்கள் அத்தனை பெரும் போட்டி போட்டுக் கொண்டு டின்னிற்கு பெண் கொடுக்க அலைந்தனர் . அப்படி யார் என்ன ஆர்வத்துடன் விருந்து சென்ற நாங்கள் அவரைப் பார்த்து அசந்து விட்டோம் . கோதுமை நிறத்தில் , ஆறடி உயரத்தில் , முத்து வெள்ளை பற்கள் தெரிய சிரித்தபடி மிக வசீகரமான வாலிபராக இருந்தார் டின் .

பரஸ்பர அறிமுகத்தை பொது , சலீமா பெயரைக் கூறியதும் , அவர் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டு , அந்த இடத்தை விட்டு அகன்று மற்ற விருந்தினரை வரவேற்க சென்று விட்டார். விருந்து முடிந்து நாங்கள் கிளம்பத் தயாரானோம் . சாச்சா மியான் வேகமாக எங்களை நோக்கி வந்தவர் குழப்பத்துடன் ,வியப்புடனும் “உங்களுக்கு டின்னை முன்பே தெரியுமா? “என்று கேட்டார்

டெபுடி கலெக்டரைத் தெரியாதவர் யார் இருப்பார் ? என்று வேகமாக மாமாவை திருப்பி கேட்டார் முமானி

“நான் அப்படி கேட்கவில்லை . உங்களால் அவரை அடையாளம் காண முடிகிறதா ? அவர்தான் நம் வீட்டு கல்லு ” என்றார் அவசரமாக சாச்சா மியான் .

“என்னது கல்லுவா ?” என்று முகத்தை சுளித்தாள் மூமானி

” ஆமாம் கலிமுதீன் .. கல்லு ?

” யார் நம் வீட்டில் சிறுவயதில் வேலை செய்தானே அவனா ?அந்த கல்லுவா /” என்று சந்தேகத்துடன் கேட்டார் முமானி

” ஆமாம் , தினமும் உன் கையால் அடிவாங்கி கொண்டு நம் வீட்டில் வேலை செய்த அதே கல்லுதான் . இந்த டின் : என்கிறார் மாமா பரவசமாக

‘ஐயோ என்ன ஆனது இந்த அரசாங்கத்துக்கு ? தகுதி இல்லாத யார் வேண்டுமானாலும் வேலைக்கு சேர்ந்து விட முடியுமா என்ன ? இவ்வளவு பெரிய பதவியில் இருக்க ஒரு தராதரம் வேண்டாமா ? இது எப்படி நடந்தது ? “முமானியால் தன வீட்டு வேலைக்காரன் கல்லு , இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறான் என்பதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை .அவள் வெறுப்புடன் கத்தினாள்

” ஏன் முடியாது அவர் குரோஷி ஜாதியை சேர்ந்தவர் . நல்ல ஜாதி . நல்ல பையன் . உங்களிடம் வாங்கிய அத்தனை அடியையும் மறந்து விட்டு இன்று உங்கள் குடும்பத்தின் பேரில் மிக அக்கறை உள்ளவனாக இருக்கிறான் “என்று கிண்டலாக முமானியிடம் கூறினாள் அம்மா

” ஏன் நல்ல பையன் நல்ல சம்பந்தம் என்றால் உன் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டியது தானே ? என்று அம்மாவை குதர்க்கமாக திருப்பி கேட்டாள் முமானி

” என் மகள்களுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்காதது அவர்களது துரதிர்ஷ்டம் தான் .இது போன்ற மாப்பிள்ளை எனக்கு வாய்த்தால் , நான் மிகவும் அருமையாக அவரை கவனித்து கொள்வேன் . ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை . இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த பிறகும் அவர் எந்த குடும்பத்தில் வேலைக்காரனாக கொடுமைகளை அனுபவித்தானோ அந்த குடும்பத்திற்கே தான் மருமகனாக செல்ல வேண்டும் விரும்புகிறான். இதைத்தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை நல்ல குடும்பத்தில் தன் மகன் வளர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் . என்றுதான் கல்லுவின் அம்மா ஆயிஷா உன்னிடம் மகனை ஒப்படைத்தார் . நீயோ அவனை வேலைக்காரனாக்கி விட்டாய் ஆனால் அவனோ அது எதையும் நினைக்காமல் இன்று உன் குடும்பத்துக்கு உதவ நினைக்கிறான் என்றார்அம்மா

“அவனது தாய் , அவனை மிகவும் கஷ்டபட்டு வளர்த்து , படிக்க வைத்து இன்று சமூகத்தில் ஒரு அந்தஸ்தான இடத்தில வைத்து விட்டாள் . இங்கு அவனுக்கு பெண் கொடுக்க பெரும் பணக்கா ரர்கள் வெள்ளித்தட்டு ஏந்தி காத்து இருக்கின்றனர் நீ என்ன சொல்கிறாய் “என்றார் சாச்சா மியான் .

” அப்படி யார் வரிசையில் நிற்கிறார்க்ளோ அவர்கள் பெண்ணை அவன் கட்டிக்கொள்ளட்டும் என் பெண்ணிற்கு அவன் வேண்டாம் “ என்று தீர்மானமாக மூமானி பதில் கூறினாள் .

அதன் பிறகு சில நாட்கள் கழித்து , தன்னுடைய இயல்பான படபடப் போடும் ,, அவசரத்தோடும் வீட்டிற்கு வந்தார் சாச்சா மியான் .

“ நாங்கள் வழக்கமும் கிளப்பில் உட்க்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம் . அப்பொழுது அங்கு வந்த கலாமுதின் வாங்க நாம் போகலாம் என்று என்னை அவருடன் அழைத்து கொண்டு கிளம்பி விட்டார். இங்கே அவர் வந்து கொண்டு இருக்கிறார். டீ ஏதாவது செய்ய இயலுமா ? ” என்று மிகுந்த பதட்டமாக கேட்டார்.

அம்மா உடனே பரபரபபாக சமயலறைக்கு டீ தயார் செய்ய ஓடி விட்டாள் . முமானி இந்த செய்தியால் தனக்கு எந்தவித மகிழ்வும் இல்லை என்பது போல் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு , கொஞ்சம் கூட அசைவில்லாமல் அப்படியே உட்க்கார்ந்து இருந்தாள் .எங்களுக்கோ இனம் புரியாத புதிரான உணர்வுடன் வெளிறிப்போய் என்ன செய்வது என்று புரியாமல் , ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டு அமர்ந்து இருந்தோம் எங்களுக்கு இது மிகவும் ,மகிழ்ச்சி தரும்ஸ் செய்தியாக இருந்தது . முக்கியமாக சலீமா தன் மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு பதட்டத்தில் நிலை கொள்ளாது அலைந்து கொண்டு இருந்தாள் .

எங்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது . கலீம் சாஹேப் , தன் வீடு என்ற உரிமையுடன் வீட்டிற்குள் வந்து விடுவாரா ? இல்லை பெண்கள் அனைவரையும் வராந்தாவுக்கு வரவழைத்து பேசுவாரா ? அல்லது சாச்சா மியான் எல்லாவற்றையும் அவரே பேசி முடித்து விடுவாரா ? என்று பல கேள்விகள் விடை தெரியாமல் , கேள்விகளாகவே தொக்கி நின்றன . இதுவும் ஒரு மகிழ்வின் வெளிப்பாடுதான் . என்ன நடக்குமோ என்று எதிர்பார்ப்பு தந்த அச்சமும் எங்களை ஆட் கொண்டு இருந்தது .

‘கலீம் ஏதோ பழிவாங்கும் எண்ணத்துடன் தான் இங்கு வருகிறார் என நினைக்கிறேன் ‘ என்று மாலிஹா பீ உறுதியான குரலில் கூறினாள் . அதைக் கேட்டதும் , முமானிக்கு நடுக்கம் வந்து விட்டது .பயத்தில் ஒடுங்கி போய் அமர்ந்து இருந்தாள் . சலீமாவுக்கு அத்தனை நேரமும் இருந்த பரவச உணர்ச்சி மாறி , முகம் வாடி போய் விட்டாள் .

“என்ன நடந்தாலும் கவலையில்லை . அவரே நம் வீடு தேடி வருகிறார் என்றாலே அவர் மிகுந்த மரியாதைக்குரிய நல்ல மனிதராகத்தான் இருக்க வேண்டும் . அவரைப் போலவே நாமும் பெருந்தன்மையுடன் அவரை வரவேற்று உபசரித்து அனுப்புவது தான் மரியாதை” என்றாள் அம்மா .

முமானி கோபமாக அம்மாவிடம் ,” அதெல்லாம் முடியாது . நான் அவனிடம் அவமானம் அடைய விரும்பவில்லை ” என்று அம்மாவின் வாதத்தை மறுத்து பொருமினாள் .”உன் பெண்களை வேண்டுமானால் அவனுக்கு பணிவிடை செய்ய சொல்லு . என்னை ஒருவரும் , மாற்ற இயலாது . அவன் தான் எவ்வளவு பெரிய ஆளாக மாறிவிட்டேன் . என்று நம்மிடம் பெருமையை காட்டிக் கொள்ளவே வருகிறான் என்று முமானி ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே இருந்தாள் .

” அப்பா .. இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை .. நல்லவேளை எனக்கு திருமணம் முடிந்து விட்டது . நான் இதில் எந்தவிதத்திலும் சம்பந்தப் படவில்லை ” என்றாள் மாலிஹா பீ சிரித்துக் கொண்டே அவளுக்கு இவர்களின் சூழலும் பதட்டமும் வேடிக்கையாக இருந்தது .

அம்மாவும் முமானியும் மாறி மாறி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். என் மகள்களை நான் அனுபப மாட்டேன் . நீங்கள் வேண்டுமானால் அவனை வரவேற்று கொள்ளுங்கள என்று முமானி தீர்மானமாக கூறிவிட்டாள். எனவே நாங்கள் மட்டும் போவது , எங்களுடன் மாலிஹா பீ வருவது என்று தீர்மானித்தோம் .மூமானியோ அவள் பெண்களோ வர மாட்டார்கள் என்று பிரச்னை முடிவுக்கு வந்தது .

ச்சே .. அவர் என்ன நினைப்பார் ? கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாத ஆட்களாக இருக்கிறார்களே !வீட்டுக்கு வரும் ஒரு பெரிய மனிதரை வரவேற்க இத்தனை குமுறல்களா ? ” என்று சாச்சா மியான் . புலம்பத் துவங்கினார்.

நாங்கள் அனைவரும் கலீம் சாஹேப் பபுடன் வராந்தாவில் அமர்ந்து பேசினோம் . மிக அற்புதமான மனிதர் அவர் . பழைய நினைவுகள் ஒன்றைக் கூட மறக்காமல் ,நினைவு கூர்ந்து பேசினார். எங்களுக்கு எந்த விதமான கூச்சமோ தர்ம சங்கடமோ இல்லாது , எங்களிடம் பழைய கதைகளை ரசிக்கும் படி கூறி அந்த மாலையை இனிமையாக்கினார் .

முது சாச்ச்சா உங்களுக்கு நினனைவு இருக்கிறதா ? நீங்கள் எப்படி கத்துவீர்கள் ” தண்ணீர் ” என்று ? நான் ஒரு துணியை எடுத்து மூடிக் கொண்டு , கதவு அருகே வந்து தண்ணீரை வைப்பேன்.

” சரியாக சொல்லு , அப்பொழுது நீ துணியின் வழியாக பார்ப்பாய் அல்லவா ?

சித்தப்பா சிரிக்க கலீம் சாஹேப் சிரிக்க , நாங்கள் அனைவரும் சேர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசி சிரித்தோம்

மாலிஹா பீவி நான் பல்லு சரியாக விளக்குவதில்லை என்று நீங்கள் எப்படி என் காதைப் பிடித்து திருகுவீர்கள் என்று நினைவு இருக்கிறதா ?” என்று டீ குடித்துக் கொண்டே கேட்க மாலிஹாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது .

“குழந்தைப் பருவம் எத்தனை மகிழ்ச்சியற்ற தாக இருந்தாலும் , அது மீண்டும் , மீண்டும் நினைவு படுத்தி பார்க்க , இனிக்கும் கனவுகள் .தான் . நீங்கள் அனைவரும் என்னை மறந்து இருப்பீர்கள் .ஆனால் நான் ஒரு நாளும் உங்கள் அனைவரையும் மறந்தது இல்லை .” என்றார் நெகிழ்வுடன் கலீம் சாஹேப்

மனதில் எந்தவித நெருடல் இல்லாமல் இயல்பாக , கலகலவென்று ஜோக் அடித்து பேசி சிரித்த கலீமை அனைவருக்கும் பிடித்துப் போனது நேரம் போனதே தெரியவில்லை . அவர் கிளம்பும் போது முமானிக்கு என் வணக்கத்தை சொல்லுங்கள் என்று சொல்லி சென்றதும் அவரது நல்ல மனம் கண்டு அனைவரும் வியந்து போனோம் . அவர் பிரிந்து போனதும் அனைவருக்கும் எதையோ இழந்தது போல் ,மனம் வாடித்தான் போனது . அவர் கிளம்பும் பொது “துல்ஹான் பீ க்கு என் வணக்கத்தை மறக்காமல் சொல்லுங்கள் “ என்றார்

மாலிஹாவிற்கு மிகவும் தர்மசங்கடமாக போய்விட்டது “ முமானிக்கு உடம்பு சரியில்லை “ என்று அவரிடம் பொய் சொன்னாள் .

அவர் சிரித்தபடி ,” என்னை மன்னிக்க வேண்டும் . எனக்கு நினைவாற்றல் அதிகம் . யார் மீதாவது கோபம் இருந்தாலோ , அவருக்கு பிடிக்காதவர்கள் வீட்டிற்கு வந்தாலோ எப்பொழுதுமே அவள் இப்படித்தான் உடல் நிலை சரியில்லை என்று சொல்லி அறையில் படுத்துக் கொள்வார் .எனக்கு எதுவும் மறக்கவில்லை மாலிஹா பீவி என்று பதிலளித்து விட்டு சென்று விட்டார்

இரவு வெகு நேரம் வரை கலீம் சாஹேப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டு இருந்தோம் . அவரைப் பற்றி எங்கள் ஓவொருவர் மனதிலும் மிக உயர்வான எண்ணங்களே உருவாகி இருந்தன. சாச்சா மியான் மிகவும் தயக்கத்துடன் கலீம் சாஹேப் என்ன நினைக்கிறார் என்று சொல்லத் துவங்கினார் . சட்டென்று முமானி ,” அது எங்களுக்கு தேவையில்லாத விஷயம் . எங்கள் வீட்டு பெண்களிடம் இருந்து அவர் விலகி இருந்தால் நல்லது என்யார் . அம்மாவுக்கு கோபம் வந்தது . எரிச்சலுடன் ,” ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று மூமானியிடம் கேட்டாள் .

: எனக்கு பிடிக்கவில்லை அதனால சொல்கிறேன் ” என்று கோபமாக கூறினாள் . சலீமாவுக்கு அவர்கள் பேசிக் கொள்வது மிகவும் வருத்தமாகி , அழத் துவங்க ., மற்ற பெண்கள் அவளை கிண்டல் செய்தனர்.

முமானி எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏன் அவரை வெறுக்கிறாள் என்பது எங்கள் ஒருவருக்கும் புரியவில்லை . கடவுள் தான் அவளது மனதிற்குள் சென்று கண்டு பிடிக்க முடியும்

இந்த சந்திப்பு நடந்து ஒரு மாதம் கடந்து விட்டது . வீட்டில் அனைவரும் கிட்டத்தட்ட கலீம் சாஹிப்பை மறந்து போய் , இயல்பு நிலைக்கு வந்து விட்டோம் . இப்பொழுது தான் மீண்டும் ஒருநாள் சாச்சா மியானை அழைத்துக் கொண்டு கலீம் சாஹேப் வீட்டிற்கு வந்தார் .

சாச்சா மியான் , ” கலீம் சாஹேப் துல்ஹான் பீயை பார்க்க வேண்டும் என்று வந்து இருக்கிறார். என்றார்

அம்மாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது .

” முமானி இவரை பார்க்க சம்மதிக்க மாட்டாள் ‘என்று சாச்சா மியானிடம் உண்மையை சொல்லி விட்டார் அம்மா.சாச்சா மியானுக்கு சங்கடமாக போய்விட்டது . என்ன செய்வது என்பது போல் பரிதாபமாக பார்த்தார்.

முமானியிடம் கேட்டால் தானே அவர் பார்க்க சம்மதிக்க மாட்டார் . என்று நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு உபாயம் செய்தோம் . முமானியிடம் சொல்லாமல் கலீம் சாஹிப்பை முமானியிடம் கொண்டு விட்டு விட்டால்..? நேருக்கு நேர் பார்த்த பிறகு . அவள் என்ன செய்கிறாளோ செய்யட்டும் என்று முடிவு செய்தோம்

இந்த ஏற்பாட்டில் சாச்சா மியானுக்கு உடன்பாடு இல்லை “குழந்தைகளே .. மூமானி ஒரு சூனியக்கார கிழவி .மரியாதை தெரியாதவள் சாஹேப் எவ்வளவு பெரிய மனிதர் . அவரை மூமானி அவமானம் செய்வது போல் பேசினால் என்ன செய்வது ? நாளை மறுநாள் நான் சாஹெப்பை எப்படி எதிர் கொள்ள முடியும் என்றார் அச்சத்துடன் .

“அந்த அளவுக்கு முமானி விவரம் இல்லாதவள் அல்ல . நான் உள்ளே ஏற்பாடு செய்கிறேன் . நீங்கள் சாஹேப்பை உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் மாலிஹா பீவி.

மாலிஹாவையும் என்னையும் தவிர வீட்டில் அனைவருக்கும் என்ன நடக்குமோ ? மூமானி எப்படி கத்தி ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறாளோ என்று அச்சமாக இருந்தது . அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் போய் ஒளிந்து கொண்டனர்.

முமானி அறையில் பேசினை கழுவி துடைத்துக் கொண்டு இருந்தாள் . கலீம் சாஹேப் சப்தமில்லாமல் அவளது பின்னால் சென்று நின்று கொண்டார்.

“மாலிஹா , சமையல் அறையில் இருந்து மைதா மாவை கொஞ்சம் எடுத்து வருகிறாயா ?” என்று குரல் கொடுத்தார் மூமானி .

மாலிஹா கொண்டு வந்து கொடுத்ததும் , தன் தலையை திருப்பாமலே வாங்கி கொண்டு ,” கொஞ்சம் தண்ணீர் கூட எடுத்து வா ” என்றார்

மாலிஹா எடுத்து வந்த பாத்திரத்தை தான் வாங்கி , முமானியிடம் கொடுத்தார் சாஹேப் . அதன் பிறகே தலையை திருப்பி பார்த்த முமானி ” அல்லாஹ் ” என்று சொல்லி விட்டு அவரை நேருக்கு நேர் பார்ப்பதை த் தவிர்த்து தன் தலையை குனிந்து கொண்டாள் .

கலீம் சாகேப் அகலாமல் நின்று கொண்டே இருக்கவும் ,என்ன செய்வது ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக உணர்ச்சியே இல்லாமல் ” கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக | என்று கூறி விட்டு அவள் மாவை அளந்து இன்னொரு பாத்திரத்தில் மவுனமாக போட ஆரம்பித்தாள்.

அதன் பின் மெல்லிய குரலில் ,” நல்லா இருக்கியாப்பா ” என்று கேட்டாள் .

“உங்கள் ஆசீர்வாதத்தில் நான் நல்லா இருக்கிறேன் . ” என்று சாஹேப் பதில் கூறினார்.

” ஏன் நின்று கொண்டு இருக்கிறாய் ? உடகார் என்றார் வெறுமையாக

அவர் திவான் படுக்கைக்கு சிறிது தூரத்தில் அமர்ந்தார்.

உடனே பரபரப்புடன் முமானி “ ஐயோ அங்க இல்லே …” என்று பதறினாள் கலீம் சாகேப் தாவி அருகில் இருந்த ஸ்டூலை இழுத்து போட்டு அமர்ந்தார்

சலீமாவை கலீம் சாஹேப் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சாச்சாமியான் செய்தி வந்து சொல்லும்போது , ” என் பெண்ணை கொடும் நரகத் திலேயோ , பாழுங் கிணற்றிலேயோ தள்ளுவேனே தவிர அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன்.” என்று தீர்மானமாக மறுத்து கத்தி இருக்கிறாள் மூமானி

” அதுதான் ஏன் ? கலீம் சாஹேப் வேண்டாம் என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா ? அதை சொல்லுங்கள் என்று சாச்சா மியான் , மற்றும் உறவுக்காரர்கள் கேட்டால் அவள் பதில் ” என் பெண் எனக்கு கொடுக்க விருப்பம் இல்லையென்றால் விட வேண்டியது தானே ,இதற்கு காரணம் எல்லாம் நான் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று மறுத்து விடுவாள் .

சாச்சா மியான் மூமானி சலீமாவை திருமணம் செய்து கொடுக்க விருப்ப மில்லை என்று கூறுகிறாள் என்று கூறியதற்கு கலீம் சாஹேப் சிரித்தபடி

” என் வாழ்வில் இல்லை என்ற சொல்லுக்கோ முடியாது என்ற சொல்லுக்கோ வேலையில்லை . அதுவும் அந்த வயதான கிழவி முடியாது என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டு நான் சும்மா இருக்க முடியாது பார்க்கலாம் என்று பதில் கூறியுள்ளார்.

கலீல் சாஹிப்பும் அவர் முடிவில் மிக உறுதியாக இருந்தான் . இதை எப்படி நடத்த வேண்டும் எனக்கு தெரியும் நான் பேசிக் கொள்கிறேன் என்று தான் இப்பொழுது இங்கே வந்து இருக்கிறார் .அதனால் அறைக்கு வெளியே இரு பெரிய மல்யுத்த வீரர்கள் நடுவில் நடக்கும் சண்டையை வெடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் அனைவரும் குழுமி இருந்தனர்.

. ” நான் ஒரு விஷயத்தை உறுதியாக இப்பொழுது பேச போகிறேன் ” என்று மூமானியுடனான தன் பேச்சைத் துவங்கினான் .

மூமானி அவனை சிடுசிடுப்புடன் பார்த்தாள்

மேசைகளை நீங்கள் இப்படி அவருக்கு எதிராக திருப்பி வைப்பது சரியல்ல ..துல்ஹான் பீ.. என்று ” சாச்சா மியான் இடை மறித்து ஏதோ சொல்ல முயல ,

” நீங்கள் விடுங்கள் சாச்சா மியான் , இந்த விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன் ” என்று சாச்சா மியான அமைதிப் படுத்தி விட்டு கலீல் சாஹேப் முமானியின் பக்கம் திரும்பினார்.

” என் தவறு என்ன என்று மட்டுமாவது சொல்லுங்கள் .துல்ஹான் பீ..?”

துல்ஹான் பீ …. ஓஹோ .. நான் துல்ஹான் பீ யா.. இவ்வளவு நாளைக்கு பின் வந்து என்னை இப்படித்தான் அழைப்பாயா ? என்று கோபமாக அவனைப் பார்த்து முணுமுணுக்கிறாள் முமானி .

அவன் கண்கள் கலங்க , வேதனையுடன் ,” சொல்லுங்க அம்மா ..” என்றான் தழு தழுப்புபடன்

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த மூமானி கண்களும் கலங்குகின்றன. யாரும் அறியாமல் அவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு

” இங்கு என்ன சர்க்கஸ் ல வித்தையா காட்டுகிறார்கள் . எல்லோரும் கூடடம் போட்டுக் கொண்டு என்ன வெடிக்க பார்க்கிறீர்கள் ? நீங்கள் எல்லோரும் என்ன முட்டாள்களா ? இந்த பெண்களுக்கு எதற்கும் சாமர்த்தியம் பத்தாது . திருமண வேலைகளுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது . வழக்கம் போல் , நான்தான் எல்லாவற்றையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்ய வேண்டும் . இவர்கள் எல்லோரும் எதற்கும் லாயக்கு இல்லாதவர்கள் .” என்று கோபமாக எல்லோரையும் கத்திக் கொண்டு எழுந்தாள் மூமானி .

முமானியின் கோபமான காட்டுக் கத்தல் , திருமணத்தில் ஒலிக்கும் கெட்டி மேள சப்தம் போல எங்கள் காதில் உரத்து கேட்கிறது

••••