Category: இதழ் 131

அகம் பிரம்மாஸ்மி ( சிறுகதை ) / ப.மதியழகன்

images (14)

மனித வாழ்க்கை இன்பத்தின் தேடலாகவே உள்ளது. அவன் துக்கத்தைத் தாங்கிக் கொள்வதெல்லாம் இன்பம் அடுத்து வரும் என்ற நம்பிக்கையில் தான். வாழ்க்கைக் கடலில் ராட்சச அலைகளுக்கெதிராய் மனிதன் நீந்த வேண்டியுள்ளது. மனிதன் தன்பிறப்பை ஒரு விபத்து என்று தான் கருதுகிறான். மனிதனின் மனதில் எழும் ஆசைகளே அவன் பாவ காரியம் செய்ய ஏதுவாய் அமைகிறது. மனம் ஐம்புலன்களின் வழியே இன்ப நுகர்வின் மீது வெறி கொண்டு அலைகிறது. மனிதன் பாவப்பிறவி அவன் மனதின் கைப்பாவையாக இருந்து தான் இறுதியில் இறக்கிறான்.

இந்த மனதிற்கு பெண்ணை அணைக்க இரண்டு கைகள் போதவில்லை என்பதால் தான் இவ்வளவு உருவங்களை எடுத்துள்ளது. மனிதனை மோகத்தீயில் எரிய வைத்து போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. அறுபது வயதில் மரணம் வருமென்றால் அதுவரை மனம் பேயாட்டம் ஆடுகிறது. பொம்மலாட்ட பொம்மையைப் போன்று தான் மனிதன் மனதினால் ஆட்டுவிக்கப்படுகிறான். கிளர்ச்சியூட்டும் கனவுகளைத் தோன்றச் செய்து மனிதனின் ஆசைத் தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்கிறது.

மனம் இந்த மாய லோகத்தை சிருஷ்டித்து தனது அடிமைகளான மனிதர்கள் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறது. பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த மனதிற்கு பூமியை ஆளுமை செய்வது ஒன்றும் கடினமானதல்ல. மனம் தனது ஆய்வுக்கூடமான இந்த உலகத்தில் மனிதர்களை மோதவிட்டு ரசித்துக் கொண்டிருக்கிறது. மரணம் விடுதலையளிக்கும் வரை மனிதன் மனதிற்கு ஏவல் புரிந்துதான் ஆகவேண்டும்.

ஆதிகாலம் தொட்டே மனம் தனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த மனிதனுக்கு மரணத்தையே பரிசாகத் தந்திருக்கிறது. சூட்சும மனதுக்கு ஸ்தூல உடல் கட்டாயத் தேவையாய் இருக்கிறது. பாவ காரியத்தில் மனிதனை விழவைப்பதே மனதின் வேலையாய் இருக்கிறது. மனிதனை சக்கையாக பிழியும் வரை மனதின் வேட்கை தீருவதில்லை. குழந்தைகளுக்கு பொம்மையைக் காட்டி வழிக்குக் கொண்டு வருவதைப் போல் மனம் மனிதனுக்கு கடவுளைக் காட்டி தனக்கு சேவகம் செய்வது தான் உடலெடுத்ததின் பயன் என்று மனிதனை உணர வைக்கிறது. மனிதனுக்கு ஓய்வளிக்கும் இரவில் மனம் வேறொரு உடலை எடுத்துக் கொள்கிறது.

அபூர்வமான சில பிறவிகள் மனத்துடனான தனது தொடர்பை துண்டித்துக் கொள்கின்றனர். அத்தகையவர்களை அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மனிதர்கள் ஏசுகின்றனர். பல நூற்றாண்டுகள் கடந்த பின்னர் இறைத் தூதர்கள் எனப் போற்றுகின்றனர். தான் விழுந்து கிடப்பது பாவச் சேற்றில் என்று உணர்ந்திருந்தாலும் மனிதன் அதிலிருந்து மீள விருப்பப்படவில்லை. விட்டில் பூச்சியைப் போல மனதில் எரியும் ஆசைத்தீ மனிதனைச் சாம்பலாக்குகின்றது. பாவ காரியம் செய்ததற்காக பதறாதே பரிகாரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறது மனம். ஆண், பெண் விளையாட்டில் மனம் சலிப்படைவதே இல்லை.

இதோ இந்த பரசுராம் உட்கார்ந்திருப்பது இந்த ஊரிலுள்ள பழமையான சிவன் கோயிலில். சிவனுக்குத் தெரிந்த மனதின் ஆடுபுலி ஆட்டமெல்லாம் பரசுராமுக்குத் தெரியாது. ஒரு இக்கட்டான சூழ்நிலையே அவனை இங்கே வரவைத்தது. தற்கொலை முடிவுடன் உட்கார்ந்திருக்கும் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை மனம் தேட ஆரம்பித்தது. ஆனாலும் அவன் தன் தற்கொலை முடிவில் உறுதியாக இருந்தான். அவனுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. கண்ணில் நீர் அரும்பியது. அவனுக்கு தனக்குத் தண்டனை கொடுத்துக் கொள்வதைவிட வேறு வழி தெரியவில்லை.

இந்த விபரீதமான முடிவு எடுப்பதற்கு தானே காரணம் என தன்னைத் தானே நொந்துகொண்டான். சாதாரணமாக எறும்பு கடித்தாலே சுளீர் என்கிறதே மரணம் வலி மிகுந்ததாக இருக்குமா என அவன் யோசித்தான். ஏதோவொரு புத்தகத்தில் அவன் ஆன்மாவைப் பற்றி படித்திருந்தான். அப்படி இறப்புக்குப் பின் வாழ்க்கை இருக்குமாயின் அது தனக்கு மிகுந்த சங்கடத்தைத் தரும் என எண்ணினான். தான் வாழ்ந்த வாழ்க்கையை முற்றிலும் மறக்கவே அவன் எண்ணினான்.

உயிர் உடலுக்குள் எங்கிருந்து இயங்குகிறது. மரணத்தின் போது எது பிரிகிறது. அப்படி உயிர் பிரிந்தால் இடுகாட்டில் என் உடல் எரிக்கப்படுவதை என்னால் பார்க்க முடியும் அல்லவா? இறந்த பிறகு வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அவ்வப்போது ஞாபகத்தில் வந்தால் நான் என்ன செய்வது. தற்கொலை செய்து கொண்ட பிறகு வாழும் ஆசை வந்தாலும் உடலில் மீண்டும் புக முடியாது அல்லவா? என்றோ வரப்போகும் மரண அனுபவத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டால் அது தவறா?

ஒருவனது இருப்பை அழிக்கும் மரணத்தைப் போன்றதொரு கொடியது உலகில் இல்லையல்லவா. ஆனாலும் வாழ்நாள் நீண்டு கொண்டே சென்றால் சலிப்பு ஏற்படாதா? மரணம் இளைப்பாறுதலா, தண்டனையா? அசையாமல் கிடக்கும் உடலைப் பார்த்தால் மனம் பீதியடைகிறதே ஏன்? உயிர் வெளியேறினால் இரத்த ஓட்டம் நின்றுவிடும் என்கிறார்களே, தூக்கத்தில் இரத்த நடைபெறும் போது உயிர் எப்படி வெளியில் சென்று திரும்புகிறது. விழித்த பின்புதானே கனவு என்று தெரிகிறது. அதுவரை நிஜம் போலத்தானே தோன்றுகிறது. இந்த இரவில் மரணித்துவிடவேண்டும் என்று கண்மூடிய பிறகு காலையில் மீண்டும் விழித்தெழுவது கொடுமையானதல்லவா?

தற்கொலை செய்து கொண்டால் சுவர்க்கத்தில் நுழைய முடியாதா? பூமியிலேயே வாழ்நாள் முடியும் வரை பேயாக அலைய வேண்டுமா? மரணத்திப் பிறகான வாழ்வைப் பெறுவதற்கும் நிராகரிப்பதற்கும் மனிதனுக்கு உரிமையில்லையா? புத்தர் போதித்த சூன்யவாதம் மெய்யா இல்லையா என்பது மரணிக்கும் போதுதான் தெரிய வருமா? வாலிப வயதில் இருக்கும் என்னால் வைராக்யமாகத் தேகத்தை உதற முடியாதா? என் உடலை மாய்த்துக் கொள்ள நான் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? தற்கொலை செய்து கொள்பவர்களை கோழை என்கிறார்களே, அதற்கு எவ்வளவு வைராக்கியம் வேண்டும். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்கு கடவுளின் அசரீரி கேட்டதாமே அது உண்மையாகவா?

தோற்றவனின் டைரிக் குறிப்பை இந்த உலகத்தில் யார் தான் படிக்க முன்வருவார்கள். என் முடிவுக்கு கர்மவினை மட்டும் தான் காரணமா? அப்படியென்றால் பாவக்கணக்கு தீரும்வரை பிறவியெடுக்க வேண்டியது தானா? எனக்கு இது தான் விதிக்கப்பட்டது என எண்ணிக் கொள்ளவா? அடுத்து எங்கு யாருடைய கருவில் புக வேண்டும் என நிர்ணயிப்பது யார்? அப்படியென்றால் இந்த பூலோகம் ஒரு பத்ம வியூகமா எந்த மனிதனாலும் வியூகத்தை உடைத்து வெளியேற முடியாதா? கடவுளுக்கு அறம் தான் முக்கியமா உயிர்களில்லையா? முகமூடிகளை நம்பி ஏமாந்ததால் தானே இந்த நிலை எனக்கு ஏற்பட்டது.

பந்தயத்தில் ஓடி ஜெயிக்க முடியவில்லை, என்னால் பந்தயத்தை வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. வெற்றி மாலை சூடியவர்களுக்குத் தானே பெண்ணும், பொன்னும். என்னால் பணத்தை வேட்டையாட முடியவில்லை. எந்த வழியில் வந்தால் என்ன பணம் பணம் தானே. மாதம் ஐம்பதாயிரம் என்றால் பெண்ணைப் பெற்றவர்கள் வாய் பிளக்கிறார்கள். என்னால் ஐயாயிரம் கூட சம்பாதிக்க வக்கில்லாதவனாக இருக்கிறேன். பணத்தைப் பெரிதாக மதிக்கும் மனிதனை கடவுள் தன்னுடைய படைப்பு என்று சொல்லிக் கொள்வானா? ஏங்கி ஏங்கிச் சாக வேண்டியது தான் என் தலையெழுத்தா?

தேவையான அளவு பணமிருந்தால் நான் இங்கு வந்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருப்பேனா? யாரோ முகம் தெரியாதவர்கள் என்னைப் பழி தீர்த்துக் கொள்கிறார்கள். என் சிறகை முறித்து அவர்களின் அடிமையாக்க முயலுகிறார்கள். நான் வேதனைப்படுவதைப் பார்த்து குதூகலிக்கிறார்கள். என்னை மரணக் குழியில் தள்ளிவிட்டு கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

அப்போது கோயிலின் மணியோசை அவன் சிந்தனையைக் கலைத்தது. திரும்பிப் பார்த்தான் வயதான மூதாட்டி மூளை வளர்ச்சி குன்றிய இளைஞனை தனது இடுப்பில் சுமந்து கொண்டு மணியடித்துக் கொண்டிருந்தாள். பரசுராமுக்கு தனது அம்மாவைக் காணவேண்டுமென்ற அவா எழுந்தது. விறுவிறுவென எழுந்து நடந்தான். ஏதோ அவனை உந்தித் தள்ளியது.

காலணியை அணிந்து கொண்டான். வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரனின் திருவோட்டுக்கு அருகில் சில்லறைகாசுகள் சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்த பரசுராம் சற்றும் யோசிக்காமல் அதைப் பொறுக்கி திருவோட்டில் போட்டான். அண்ணாந்து பரசுராமைப் பார்த்த பிச்சைக்காரன்.

“ ஓ சிவனா உன் ஊர் திருவாலங்காடுதானே, நீ இங்க சுத்திறியா?”

“ மரணப்புதிருக்கு விடை தேடுறியா?”

“ மரணத்தோடு விளையாடுறது தானே உன் பொழுதுபோக்கு!”

“ உன் சைவக் கொடிதான் இன்னும் பறக்குதான்னு பார்க்க வந்தியா?”

“ சைவ நெறியை மீறுனதுனால சித்தருங்க உன்னைய அலைய உட்டாங்களா?”

“ அடியவர்க்கு சிவனாக மட்டும் இருந்திருந்தீனா இந்த நிலை வந்திருக்குமா?”

“ வாழ்க்கை வானம் மாதிரி துன்பமேகம் போகும் வரும், பித்தா, பிறைசூடி போய்வா போய்வா!” என்றான்

இரண்டு கைகளையும் உயர்த்தி பரசுராமைப் பார்த்து அந்த பிச்சைக்காரன்.

•••••

ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு,
இந்தியா.
cell:9597332952, 9095584535
mathi2134@gmail.com

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜி

கல்யாண்ஜி

1.
ஒரு கல் உதிர்ந்த மூக்குத்தி அணிந்த பெண் அவள்.
அந்த உதிர்ந்த கல்லின் இடத்தில்
அவள் மா பெரும் சந்தோஷத்தை இட்டிருந்தாள்.
மேல் உதட்டில் சதா சிரிப்பின் ஈரம் இருந்தது.
என்ன எனில், அதன்
பின்னான என் வாழ்வு முழுவதும்
அந்த உதிர்ந்த மூக்குத்திக் கல்லைத் தேடுகிறவன் ஆனேன்.
மலைபோல் வளர்ந்து மினுங்கிக் கிடக்கிறது
எடுக்க முடியாத் தூரத்தில் அது.

2.
படித்துறையில் அவள் இறங்கும் போது
கரண்டைக் கால் அளவு ஓடியது ஆறு.
சூரியனுக்கு தன் உடலைத் திறந்ததும்
மஞ்சள் உரசிய படியில் நீர் ஏறியிருந்தது.
சிமிழ் போலொரு முலை கழற்றி
நதியில் இட்டதும்
ஆரத்திச் சுடரேந்தி நகர்வதைப்
படகிலிருப்பவர் வணங்கினர்.
மறு முலை கொய்து
செம்பருத்தி என மிதக்கவிட்டதும்
புரண்ட பிரவாகத்தில்
எதிர் நீந்துகிறது நானான மீன்.

3.
நீத்தார் சிதைச் சாம்பலில்
ஒரு வெண்தாமரை மொக்கிட்டு வணங்கினேன்.
ஈரேழு லோகம் தொட்டு
இதழ் மலர்த்திக் கிடக்கிறது
என் ஜென்மம்.

4.
அவளைக் கடைந்தேன்.
அவளுக்கே அமுதிட்டேன்.
அவளுக்கே ஆனேன்
ஆலமுண்ட நீலகண்டன்.

%

மாலதி மைத்ரி கவிதைகள்

மாலதி மைத்ரி

மாலதி மைத்ரி

நான் அவளாக

ரகசியமாய்த் தடவிக் களிக்க
துளிர்க்கும் அரைப்பாக்கு முலையை
ஓடுரசிப் பொசுக்க
ரகசிய குறிப்பு தரும்
பால்யத் தோழி

மறைவில் இருட்டில் தனிமையில்
எண்ணிலா லிங்கங்கள்
வாயிலும் குதத்திலும்
கதறக் கதறத் திணித்தப் பின்னும்
மிச்சமிருக்கும் உயிர்த்திருக்கும் வெறி.

இடையறாத கொத்தல்களில்
குரலாலும் உடலாலும்
கூட்டுக்கு அந்நியம்
அன்றாடம் என்பது
ஈஸ்ட்ரோஜன் வளர்ப்பின்
தியானப் பயிற்சி
நான் வளர்கிறேன் அம்மா
தாயைப் போல
நீ பெறாத மகளை
உனக்கே பெற்றுத் தருபவன் நான்

வெட்டி குறியறுத்து
மீண்டும்
ஒருமுறை என்னையே உருவாக்கும்
படைப்பின் உச்சம் நான்
நான் அவளாக.

அசல் அசைவம்

பெண் முத்தம்
துடிக்கும் இறாலை
உயிராய் உரித்துண்பது
பதனீயுடன்

ஆண் முத்தம்
பச்சைக் கணவாய் மீனை
பற்கடிப்படாமல் பனங்கள்ளுடன்
சுவைப்பது.

முத்தத்துக்கு பிந்திய முத்தம்

சிற்றகலின் நாக்கு மேய்கிறது
வெக்கையான இரவின் உடலை
சன்னமான மூச்சில்
அலையும் சுடரை வாயமர்த்துகிறது
பெருமுத்தத்தால் இவ்வுதயம்.

ப்ராய்டின் தத்துப்பிள்ளைகள்

அமேசான் காடுகளில் விளைந்த
அரிய மூலிகைகளைத் தருவித்து
ஆண்குறிகளைப் பெரிதாக்க
நீவிக்கொள்ளும் ரோமியோக்கள்
ஆன்லைனில்
360 மணிநேரம் தொடர்ந்து
இயங்கும் ஆண்குறியின்
சாகசக் கதைகளை விற்கிறார்கள்
முலைகளைப் பெரிதாக்கும்
வில்லைகளை விழுங்கும்
ஜுலியட்கள்
மடாதிபதிகளின் அந்தபுரத்தில்
ஆயகலைகளை
அய்யம் திரிபர கற்கிறார்கள்.

வெட் சாட்

அவன்: ஹை!
அவள்: ஹை!
அவன்: உன் ட்ரீமில் நான் வந்தனா?
அவள்: என்னது?
அவன்: ஏன் டார்லு கோபம்….
அவள்: ஹேய் கோபமில்லை 🙂

அவன்: அப்ப சொல்லு.
அவள்: உன் ஆண்குறி சைஸென்ன?
எவ்வளவு நேரம் எரெக்‌ஷன் நிக்கும்?
எத்தனை ரவுண்ட் வருவ?
அவன்: என்னது?
அவள்: பதில் சொல்லு மச்சி.
அவன்: நேர்ல வா மச்சி காட்றன்.
அவள்: ஹாய் மச்சி முதல்ல வீடியோவில் காட்டு.
அவன்: பொண்ணா நீ
அவள்: பிறகென்னனு நினைச்சு சாட்டுக்கு வந்த?
அவன்: வாய மூடுடி பிட்ச்…..
அவள்: மூடிட்டு போடா பொறம்போக்கு… எச்ச பொறுக்கி…..

காமத்தைக் கொண்டாடித் திளைக்கும்
வெளிவர இருக்கும் ஆயிரம் பக்க
ரொமாண்டிக் நாவலிலிருந்து சில வரிகள்….

••••

வயோதிபமும் சேரியலிஸ சிந்தனைகளும். பகுதி – 3 / பொ.கருணாகரமூர்த்தி ( பெர்லின் )

பொ.கருணாகரமூர்த்தி

பொ.கருணாகரமூர்த்தி

இன்றும் Polimar பராமரிப்பகத்தில் பணி.

முதலில் Peter Birlem இன் அறைக்குப் போனேன். மனிதர் வெகு உற்சாகமாக என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். நான் அறைக்குள் நுழைந்தவுடன்

“நான் இன்றைக்கு அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன்……தெரியுமோ ” என்றார்.

“ஏனாக்கும்……………?”

“ யாரோ என் கண்ணில் மேலும் கீழுமாக கறுப்பு நிறத்தில் கொழுப்புமாதிரி பட்டையாக எதையோ பூசிவிட்டார்கள்…….மேலே தூங்கமுடியவில்லை” என்றார்.

“ உம் தோழி எவளாவது வந்து உமக்கு மைதீட்டியிருப்பாள் ” சீண்டினேன்.

“ அட நீயொன்று…………… அது என் கண்ணாடியில் அல்லவா பூசியிருந்தது” என்றார்.

அப்போது அங்கே அவரது செவிலி வரவும் அவளிடம் “ Birlem சொல்வது நிஜந்தானா” என்று கேட்டேன். அவள் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு அவரது தலைக்குமேல் ‘வட்டம்’ போட்டுக்காட்டினாள்.

“ சரி……. ஏதோ வாசித்துப்பிடுங்குகிறவர் மாதிரி……… இனிமேல் கண்ணாடியோடு தூங்காதீரும்………” என்றேன்.

வழமையான முகமனுக்குப்பிறகு ஒருவித உரிமையுடன்

“ தோழர் இன்று என்ன எனக்குக் கொண்டுவந்தாய்…………?” என்றார்

“ செப்டெம்பர் மாதத்தின் வெயிலைத்தான் ஏராளம் கொண்டுவந்திருக்கிறேன்” என்றுவிட்டு அவருக்கு நான் எடுத்துப்போயிருந்த திராட்சையையும் பியர்க்குப்பியையும் கொடுத்தேன். முதலில் பியர்க்குப்பியை எடுத்து அதன் குளிர்ச்சியைக் கன்னத்தில் வைத்து அனுபவித்துவிட்டு அதற்கொரு முத்தம் கொடுத்தபடி “ இதை இப்போதே நான் குடிக்கவா” என்றார்.

“ இப்ப எதுக்கு மதிய உணவுக்கு முன்னதாகக்குடித்தால் கொஞ்சம் பசி எடுக்கும்” என்றேன்.

“அதுவும் சரிதான்” என்றுவிட்டு அதைக்குளிர்பதனப்பெட்டியுள் வைத்து மூடிவிட்டு கோடைக்கான மேலங்கி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டார்.

வெளியே உலாத்தப் புறப்பட்டோம். வெளியே முகத்தில் வெயில் பட்டதும்

“எனக்குச் சீக்கிரம் Winter வந்துவிடவேண்டும்…….. போலிருக்கு” என்றார்.

“ஏனோ………..” என்றேன்.

“ பனியைப் பார்க்க ஆசையாயிருக்கு, அதைக்கைகளில் அள்ளவேண்டும் போலிருக்கு ”

“ இப்போதுதான் கோடைமுடிகிறது……இனி Herbst (இலையுதிர்காலம்) வந்துதானே Winter வரும்” என்றேன்.

“ஏன் அப்படி……….” என்றார் வெள்ளந்தியாய்.

‘மூன்றாம்பிறை’ கமல் ஞாபகத்துக்கு வரவும் “ அது அனாதியிலிருந்தே அப்படித்தான் ” என்றேன்.

“ அப்பச்சரி………….” என்றார்.

Polimar பராமரிப்பகத்திற்கு அணுக்கமாக Marzahner Park என்றோரு பூங்கா அமைந்திருக்கிறது. அதையே நோக்கியே நடந்தோம்.

பெர்லினுக்கு சுற்றுலா வந்தவர்களாயிருக்கவேண்டும் ஆணும் பெண்ணுமாக இரு இளைஞர்களின் வழிநடத்தலில் இருபத்தைந்துபேர் வரையில் பள்ளிச்சிறுவர்கள் வரிசையில் எங்களை முந்திக்கொண்டு சென்றார்கள். Birlem அவ்வழிகாட்டிகளைச் ‘ஹலோ மெஸூர், மெடம்’ என்று சத்தமாகக் கூப்பிட்டார். நான் அவர்களிடம் என்னதான் கோளாறு வலிக்கப்போகிறாரோ என்று பயந்தபடி இருந்தேன். அவர்களும் குழந்தைகளை அப்படியே ‘நில்லுங்கள்’ என்றுவிட்டு அவரிடம்வந்து மரியாதையுடன் “என்ன பெரியவரே’ என்று விசாரித்தனர்.

“ நீங்கள் குழந்தைகளை வழிநடத்திச்செல்லும் முறை சரியில்லை, தயவுசெய்து வரிசையின் முன்னாக ஒருவரும், கடைசியில் ஒருவருமாக நின்று குழந்தைகளை அழைத்துச்செல்லுங்கள். நீங்கள் முன்னே சென்றுகொண்டிருந்தால் பின் தொடரும் குழந்தைகளுக்கு எதுநடந்தாலும் உங்களுக்குத் தெரியாதல்லவா” என்று கண்டிக்கும் குரலில் சொல்லவும் அவர்களும் சிரித்து நன்றிசொல்லிவிட்டு அப்படியே நடத்திச்சென்றனர்.

வழிநடத்துபவர்களில் அந்தப்பெண் பம்பாய் (பஞ்சு) மிட்டாய் வர்ணத்தில் தலைக்குச்சாயம் பூசியிருந்ததக்கவனித்த Biirlem

“அவள் தலையிலுள்ள பேன்கள்தான் பாவம்” என்றார்.

“புரியலை…………”

“பேன்கள் எல்லாம் நாம் இன்னும் அவள் தலையில்தான் இருக்கிறோமா……….. இல்லைத் தவறி பஞ்சுமிட்டாய்ப்பெட்டிக்குள் எதுக்குள்ளும் விழுந்துவிட்டோமோவென்று ஏங்கித் தவிக்கப்போகுதுகள் ” என்றார்.

பூங்காவுக்குள் போய் மரவாங்கொன்றில் அமர்ந்தோம். Birlem சிகரெட் ஒன்றைப் பொருத்தினார்.

“Birlem நீரும் மழலையர் பள்ளிக்குச் சென்றிருக்கிறீரா” என்று கேட்டேன்.

“ இல்லை, அது என் பப்பாவுக்குப்பிடிக்கவில்லை…….. நான் தனிப்பிள்ளைதானே……… அதனால் தனியாக ஒரு ஆசிரியை நியமித்து என்னை வீட்டிலேயே கவனித்துக்கொண்டார்.”

“அதுக்கெல்லாம் நிறைய பொருண்மியப் பின்னணி இருந்திருக்கவேணுமே……. பப்பா என்ன பணியிலிருந்தார்.”

“ எங்களுக்குப் பொருண்மியக் குறைகளிருக்கவில்லை, போருக்கு முன்னிருந்தே எங்கள் நிலங்களிலிருந்து கரியைவெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள், அந்தவகையில் எங்களுக்கு ஆண்டாண்டு நிறையப்பணம் வந்துகொண்டிருந்தது.” என்றார்.

*

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது விமானமொன்று இரைச்சலுடன் வானில் சென்றுகொண்டிருந்தது. தலையை நிமிர்த்தி அண்ணார்ந்து அதைப்பார்க்க முயன்றார் Birlem. அன்றையநாள் மப்பும் மந்தாரமாயும் இருந்ததால் ஒன்றுந்தெரியவில்லை. அதன் இரைச்சல் கடந்து போனபின்னால் “ நான் ஒரு தடவையாவது விமானத்தில் பறந்ததில்லை தெரியுமோ……….மூர்த்தி.” என்றார்.

விமானத்தில் பறக்காததை விடவும் அவர் என் பெயரை ஞாபகம் வைத்துச்சொன்னதுதான் எனக்கு ஆச்சரியம்.. யாழ்ப்பாணத்தில் பிறந்ததிலிருந்தே தொடரியிருப்புப்பாதை அருகில் வாழ்ந்திருந்த ஒரு தோழி ஒருமுறை என்னிடம் “ நான் ஒரு தடவைகூட ரயிலில் போனதில்லை ” என்றிருக்கிறார். சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை தமிழகத்தில் நாகையருகில் வாழும் ஒரு மூதாட்டி. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ நான் இன்னும் ரயிலையே பார்த்ததில்லீங்க ” என்றதும் ஞாபகத்துக்கு வந்தது.

வெளியுலகத்தொடர்புகள் குறைந்த கிழக்கு ஜெர்மனியில் வாழநேர்ந்த பலரும் இவரைப்போலவே அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, பப்பாளி, மங்குஸ்தான், றம்புட்டான், கொடித்தோடை, பலா /டோறியான், , தேங்காய், கிவி போன்ற பழங்கள் எதையுமே கண்ணாலே காணாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

“ விமானத்தில் பறப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை Birlem. இன்னும் இந்தியாவிலும் ஆபிரிக்கநாடுகளிலும் ரயிலையோ விமானத்தையோ கண்டிராத பலர் இருக்கிறார்கள்” என்று சமாதானம் செய்தேன்.

“மெய்யாலுமோ………………” என்றவர் கொஞ்சம் திருப்தியடைந்ததைப்போல் இருந்தது.

“ சரி……… இதைப்போல் வேறும் நிறைவேறாத ஆசைகள், விருப்பங்கள் இப்படி ஏதும் இருக்கிறதா?” என்றேன்.

“ வேறெதையும் பெரிதாகச் சொல்லமுடியாது ” என்றவர் கண்களைமூடிச் சற்று யோசித்துவிட்டு “வேண்டுமானால் நான் ஒருபோதும் கடற்பரப்பில் Surfing செய்ததில்லை என்பதைச் சொல்லலாம்” என்றார். (Surfing on Segel boat > பாய்மர மிதவைச் சறுக்கல்)

“ இவ்வளவும் உனக்காகச் செய்த உன் பப்பா Surfing க்கு மட்டும் அனுமதிக்கவில்லையா என்ன……………….” என்றேன்.

“ இல்லை இல்லை…… பப்பாவுக்கு இதில் பங்கொன்றுமில்லை, Birlem க்குத்தான் நீந்தவே தெரியாதே, பின்னே Surfing….. செய்வதெப்படி……?” என்றுவிட்டு அவரே குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார். நான் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கவும் “உனக்குத்தான் Lichtenberg இல் Siegfried Strasse யிலிருக்கும் பேருந்துச்சாவடி தெரியுமே………….. அதன் அருகில் அப்போது நீச்சல்தடாகங்கள் இருந்தன. நீந்தப்பழகப்போவதாக சொல்லிவிட்டு நேராகப்போய் 5 மீட்டர் ஆழமுள்ள தடாகத்தில் மற்றவர்களைப்போல் உயரமான தளத்தில் ஏறித் தலைகீழாகக் குதித்தேன், மேலே வரத்தெரியவில்லை, முக்குளித்துத் ‘தனி’ வாசித்துக்கொண்டிருக்கையில் என்னைக் கவனித்துவிட்ட நீச்சல்பயிற்றுனன் பாய்ந்துவந்து என்னைத்தூக்கி எடுத்து ‘இனிமேல் இந்தப்பக்கம் தலைகாட்டப்படாது’ என்று எச்சரித்து வீட்டுக்கு விரட்டிவிட்டான். அதன் பின்னர் நீந்துவதற்காக நான் தடாகங்களுக்கோ, கடலுக்கோ போனதேயில்லை” என்றார்.

“ நீர் போயிருந்த தடாகத்தில் பயிலுனர்களுக்கான வேறு ஆழங்குறைவான தடாகங்கள் இருக்கவில்லையா…….?”

“ இல்லாமல் எப்படி…… எல்லாமும் இருந்திருக்கும், அதையெல்லாம் தேடிப்பார்க்கும் பொறுமை எனக்கு இருந்தால்த்தானே……..இப்ப தெரிஞ்சென்ன ” என்றுவிட்டு மீண்டும் குலுங்கிச் சிரித்தார்.

பப்பாவுக்கு புகைப்பழக்கம் இல்லை, அவருடைய சிற்றுந்தில் முன் ஆசனத்தில் ஏறியமர்ந்துகொண்டு புகைத்தேனாகில் என்னைப் ‘பின்னுக்குப்போடா பன்றிக்குப்பிறந்த பன்றி’ என்று விரட்டுவார்…………….. அப்படி விரட்டினான்பா அந்த நீச்சல்பயிற்றுனன் ” என்றுவிட்டு மீண்டும் குலுங்கினார்.

“ இப்போ எதுக்காம்…………………?”

“ அன்றைக்கு 2 மீட்டர் உயரப்பன்றிகளும் இருக்கோ பப்பா…….. என்று கேட்டுவிட்டேன்…………. இருக்கும் நிதானமாக தேடிப்பார்த்துக்கொண்டு வீட்டுக்கு வா என்று என்னைப் பாதிவழியில் வண்டியால் இறக்கிவிட்டுவிட்டான்……….. தடியன்.”

“ ஏதோ ஒரேபிள்ளையானபடியால் அன்று தப்பித்தீர்……… என்னுடைய அப்பாவானால் என்னை அதில வைத்தே வகுந்து போட்டிருப்பார்” என்றேன்.

என் அப்பாவுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு நான் புகைவிட்டிருப்பேனாகில் என் பிடரிக்கு எப்படியான பூரணகும்பமரியாதை நடந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்த்தேன். எனக்கும் சிரிப்பு வந்தது. “ இப்போ எதுக்குச்சிரிகிறாய் ” என்றார் Birlem.

” வேறு என்ன ஆசைகள்………..?”

“எனக்கொரு தம்பியோ தங்கையோ பெற்றுக்கொடு என்று நான் பலதடவை பப்பா,மமாவிடம் கேட்டேன், எவ்வளவு முயன்றும் அவர்களால் அதுவும் முடியவேயில்லை” என்றுவிட்டு உதட்டைப்பிதுக்கினார்.

*

நாம் இவ்வாறு பழமைபாடுகள் பேசிக்கொண்டிருக்கையில் எமக்கருகாக கரியநிறத்தில் இரட்டைவால்க்குருவியின் தோற்றத்தில் ஆனால் ஒரு குயிலளவு பருமனுடைய பறவையொன்று தத்திக்கொண்டு வந்தது.

Eurasian Magpie

Eurasian Magpie

அணுக்கத்தில் அதன் இறக்கைகளின் மறைவுப்பகுதியும் நெஞ்சும் பால்வெள்ளையாயிருந்தன. சற்று நேரத்தில் அதைத்தேடிக்கொண்டு அதன் இணையும் வந்து சேர்ந்தது. ‘அட இவைகள் வருமென்று தெரிந்திருந்தால் கொஞ்சம் விதைகள் வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம்………..ம்ம்ம்ம் அந்தப்பறவைக்கு என்னபெயர்’ என்று கேட்டார். ஜெர்மனில் அதற்கு என்ன பெயரென்று எனக்கும் தெரியவில்லை. Magpie யின் சாயல்கள் கொஞ்சம் இருந்தன. எங்களூர் ‘இரட்டைவால்க்குருவி’யின் சாயலும். பூங்காவின் ஒரு பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் ‘அந்தக்குருவிக்கு என்ன பெயர்’ என்று கேட்டோம். ‘அது Estel’ என்றுவிட்டுக் கேலியாகச் சிரித்தார்கள். ‘ம்ம்ம்………இரண்டு பெரிசுகளுக்கும் Estel ஐத்தெரியவில்லையாம்’. கூகிளில் Estel ஐத்தேடியபோது அதை Eurasian Magpie என்றும் அதன் உயிரியல் பெயர் Pica Pica என்றுங்கூறியது.

“ பார்த்தியா எவ்வளவு பெரிய விளையாட்டுமைதானம், பள்ளிகளுக்கும் விடுமுறைக்காலம் மூன்றேமூன்று சிறுவர்கள்தான் விளையாடுகிறார்கள் ”

என்றார் வருத்தமாக.

“என்ன……….. மீதிப்பேர் வீட்டிலிருந்து தொலைக்காட்சி, கணினி, ஐ-பாட், இணைவலை விளையாட்டுக்கள் எதிலாவது கண்ணாடியைப் போட்டுப் பூஞ்சிப்பார்த்தபடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்” என்றேன்.

பொழுதும் ஏறிக்கொண்டிருந்தது. 12:00 மணி, அவரை மதியபோசனத்துக்கு எதிர்பார்க்கப்போகிறார்கள். நாம் மெல்ல எழுந்து தத்தத்தொடங்கினாலே அங்கு நேரத்துக்குப் போகலாம்.

“ கிளம்புவோம் ” என்றேன்.

“அதற்கிடையில் இன்னொன்று புகைக்கட்டுமா” என்றுவிட்டு சிகரெட் பெட்டியை எடுத்து முகர்ந்தார்.

மனிதர்களிடம் ஏதாவது கொறிப்பதற்கு இருக்கும் என்கிற நினைப்பில் வழியில் இரண்டு காகங்களும் எங்கூடத்தத்திக்கொண்டு பின் தொடர்ந்தன.

nebelkraehe_klein

இங்கத்தைய காகங்கள் நம்மவூர்க்காகங்களைப்போல் கருமை இல்லை, , வெண்சாம்பல் நிறம். அவற்றின் தொண்டையும் வயிற்றுப்பகுதியும் பழுப்பு கலந்த வெண்ணிறத்தில் இருக்கும். கரைவதும் மிகக்குறைவு. சும்மா சும்மா குருவிகளைப்போலத் தம்பாட்டுக்கு வந்து போய்க்கொண்டிருக்கும். உபத்திரவம் எதுவுமில்லை. வழமையில் காகத்தைக்கூட விநோதமாகப்பார்க்கும் Birlem இன்றைக்கு அக்காகங்களைக் கண்டதும் “இவை என்ன அந்த Estel களின் அம்மா அப்பாவா” என்றார்.

“இல்லையே வடிவாகப்பார்த்துச் சொல்லும்”

“ஆஹா………… எனக்குத்தெரியுமே…… இதுதான் Rabe (காகம்)” என்று ஒரு சிறுவனுக்குரிய குதூகலிப்புடன் சொல்லிவிட்டு “ எனக்குக் காகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்” என்றார். உடனே மனதில் எதுவும் வரமறுத்தது.

பாட்டி வடைசுட்ட கதையைக் கொஞ்சம்மாற்றி ஒரு பாட்டி ’டோனட் ’ விற்றுக் கொண்டிருந்ததாகச்சொன்னேன்.

என்னை மடக்குவதுபோல் ”பாட்டிமாரையும் வேலைசெய்ய அனுமதிப்பார்களா” என்றார்.

“ இது பலநூறு வருடங்களுக்கு முந்திய கதைதானே……….. சட்டக்கெடுபிடிகள் அத்தனை இருந்திருக்காது” என்றேன். ‘ஆமோ’ என்றார். என்னோடு சேர்ந்த பின்னால் Birlem மும் இப்போ படுபுத்திசாலியாகிவிட்டார், ஆதலால் பெம்மான் எக்குத்தப்பாக ”நரி எப்படிக் கதைக்கும்” என்று கேட்டுக் கதையை நிராகரித்துவிடுவாரோ என்ற பயமும்கூட வந்தது. நல்லகாலம் அவர் ஏனோ அன்று அத்தனை ஆழத்துக்குப் போகவில்லை.

மிகுதித் தூரத்துக்கு எதைச்சொல்லலாம் என்று சிந்திக்கையில் என்.எஸ்.கிருஷ்ணன் “இந்த ஊரில் எத்தனை காக்காக்கள் இருக்கு சொல்லுபார்க்கலாம்” என்று ஒரு புதிர் போட்டு அதை எஸ்.பாலச்சந்தர் நடித்துக்காட்டியது ஞாபகம் வந்தது.

“காகங்கள்பற்றிய ஒரு ஜோக் இருக்கு சொல்லட்டுமா?” என்றேன்.

“ சொல்லு…. சொல்லு…. சொல்லு…. நீ நல்லாவே சொல்லுவாய்”

“ ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தவொரு ‘பரதேசி’ என்னிடம் இந்த ஊரில் எத்தனை காக்காக்கள் இருக்கு சொல்லு பார்க்கலாம் என்று புதிர்போட்டான், நல்லாய் யோசித்துப்பார்த்துவிட்டு தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஏழு என்றேன்.”

“அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே……… எண்ணிப்பார்க்கையில் எட்டுப்பத்து அதிகமாயிருந்திச்சின்னா………. என்றான் பரதேசி”

“அதிலென்ன அதிசயம்……… அவையெல்லாம் வெளியூரிலிருந்து இங்கே விருந்தாட வந்தவையாயிருக்கும் என்றேன்”

“அப்ப……….. கொறச்சலா இருந்திச்சின்னா…………….”

“ அட…….. நம்மவூர்க் காக்காக்கள் வெளியூருக்கு விருந்தாடப்போயிருக்கும்பா…… என்றேன்……..பரதேசி வாயடைத்துப்போனான் ”

“அப்பச்சரி………..நீ சாமர்த்தியசாலி” என்றுவிட்டுப் புன்னகைத்தார் Birlem.

‘இன்னொன்று தன் உணவை அது எங்காவது களவெடுத்தாலும் தட்டிப்பறித்தாலும் உலகத்திலேயே காகம் ஒன்றுதான் பகிர்ந்துண்ணும் பறவை’ என்பதைச்சொல்லி அவை எங்கேயாவது உணவைக் கண்டுவிட்டால் தானே தனித்து உண்ணாமல்……… கரைந்து தம் சுற்றத்தவர் அனைவரையும் அழைத்தே உண்ணும்’ என்று அதன் குணத்தைப்பற்றி ஒரு சிற்றுரையாற்றிவிட்டு. ’பராசக்தி’யில் வரும் சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் ‘ஆகாரமுண்ண எல்லோரும் நீங்க அன்போடு ஓடிவாங்க’ என்றபாடலை மெட்டைக்கொஞ்சம் மாற்றி சொற்களிடையே கார்வை சேர்த்து ஒரு மெலோடிராமாப் பாடலைப்போல இழுத்துக்காட்டவும் Polimar பராமரிப்பகம் வந்துவிட்டது

*.

என் திவ்யவகீதம் நிறைகையில் அதன் சந்தங்கள்தான் உருக்கியதோ, இல்லை மனிதனிடங்கிடையாத காக்கையின் அருங்குணம் நெகிழ்த்தியதோ, அல்லது அடுத்த செவ்வாய்க்கிழமை வரையில் அவரை வருத்தப்போகும் தனிமையின் துயரத்தை நினைத்தாரோ……… விடைபெறுகையில் Birlem இன் கண்கள் பனித்திருந்தன.

#*#

மொழியில் விளையாடும் மிலார்ட் பாவிச் / எஸ்.வாசுதேவன்

download (30)

உண்மை,நம்பகத்தன்மை,அனுபவம், லட்சியம், நீதி, தர்மம், நியாயம் இத்தியாதிகளை ஒதுக்கி மொழியின் பல சாத்தியப்பாடுகளோடு பிரதியில் விளையாடுகிறார் செர்பிய எழுத்தாளர் மிலோர்ட் பாவிச். பின் நவீனத்துவ எழுத்தாளர்களில் அதிமுக்கியமானவர் பாவிச்.ஒரே கதையை வாசகனை பல்வேறு கோணங்களில் வாசிக்க தூண்டுகிறார்.நாம் நினைக்க முடியாத அளவுக்கு புனைவில் வாசகனை பங்கேற்க வைத்து மொழியின் பலவித பரிமாணங்களை வெளிக்கொணர்கிறார். தமிழில் தற்போது சடங்காக வெளிவரும் ஆயிரம் பக்கம் நாவல்களை வாசித்து பழக்கப்பட்ட ஒரு வாசகனுக்கு, பிரதியில் பாவிச் ஆடும் மொழி மாயாஜாலத்தை பிடிக்கவே முடியாது.
பாவிச் கலையை இரண்டாக பிரிக்கிறார்.

(a) சிற்பம்,ஓவியங்களை நாம் பல வித கோணங்களில் பார்க்கலாம்.ஒவ்வொருகோணத்திலும் ஒரு புதிய பரிமாணம் கிட்டும்.இதை Reversible Art என்கிறார்.

(b) இசை,இலக்கியத்தை நாம் மரபாக நேர்கோட்டு தன்மையில் கேட்கிறோம்/தொடக்கம்_முடிவு என வாசிக்கிறோம். இதை Non reversible Art என்கிறார். ஆக புனைவு இலக்கியத்தை Reversible Art க மாற்றுகிறார்.அதாவது சிற்பம்,ஓவியங்களை போல் பல விதங்களில் வாசிக்கலாம்.வாசகனை பன்முக வாசிப்புக்கு உள்ளாக்குகிறார்.

பாவிச்சின் ஒவ்வொரு நாவலை வாசிக்கும் ஒரு வாசகன், மொழியின் தீராத விளையாட்டை எதிர் கொள்கிறான். இந்த மொழிப்புதிரில் பிரதியில் தன்னை மறந்து விளையாடுகிறான்.. இப்படி பிரதியில் ஒரு வாசகன் சுதந்திரமாக ஆடுவதற்கு முன்னுரிமைக் கொடுக்கிறார்.

(1) கசார்களின் அகராதி என்ற நாவல் ஆண் பால் பதிப்பு,பெண் பால் பதிப்பு என இரண்டாக வெளிவந்துள்ளது.ஒரே கதைதான் ஆனால் ஒரு பத்திதான் இரண்டு பதிப்புக்கும் உள்ள வித்தியாசம்.ஒரு பத்தியில் மொத்த நாவலின் கதை போக்கு மாறுகிறது. கூடுதலாக, இந்த நாவலுக்குள் 3 பார்வையில் கசார்களின் அகராதி கதை சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் என மூன்று பார்வைகளை உள்ளடக்கி, முன்னுரையில் பாவிச் எழுதியதுபோல் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு வாசகன் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

அதாவது கசார்கள் என்ற கற்பனையான இனக்குழுவின் வரலாறு மூன்று கலாச்சார மொழியில் எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவத்தின் அடிப்படையில் சிவப்பு நிறப் புத்தகமாகவும், இஸ்லாமியத்தின் அடிப்படையில் பச்சை நிறப் புத்தகமாகவும், யூதத்தின் அடிப்படையில் மஞ்சள் நிறப் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு அவர்களின் கலாச்சார வாழ்க்கை மூன்று கோணங்களில் எழுதப்பட்டுள்ளது.

(2) இவருடைய மற்றொரு நாவலை Landscape painted with tea , மரபாக முதல் பக்கத்திலிருந்து வாசித்தால்,வாசகன் நாவலின் மத்தியில் எச்சரிக்கை வருகிறது.இது வரையில் நேர்கோட்டு தன்மையாக வாசித்தது தவறு என குறிப்பிட்டு எப்படி வாசிக்கவேண்டும் என குறுக்கெழுத்து கட்டத்தில் நாவலின் பல அத்தியாங்களை குறிப்பிடுகிறார்.அதாவது மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் வாசிக்கலாம்.ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு புதிய கதை உருவாகுகிறது.

(3) மூன்றாவது நாவல் The Inner Side of the Wind வேறு ஒரு விளையாட்டை ஆடுகிறார். மரபாக நாம் வாசிக்கும் நாவலின் முடிவு கடைசி பக்கத்தில்தான் இருக்கும்.இந்நாவலை முதல் பக்கத்திலிருந்தும் மற்றும் கடைசி பக்கத்திலிருந்தும் வாசிக்கலாம். முடிவு நாவலின் மத்தியில் உள்ளது. ஆக இங்கேயும் இரு வித வாசிப்புகளை முன்வைக்கிறார்.

(4) அடுத்த Last Love in Constantinople நாவலோடு டாரட் கார்டும் வாசகனின் கைக்கு வருகிறது. எப்படி வேண்டுமானுலும் குலுக்கி போட்டு, வரும் அத்தியாயம் பொருத்து வாசிக்கலாம்.ஒவ்வொரு குலுக்கலிலும் கதையும் மாறும். ரம்மி சீட்டாட்டத்தில் கோடிக்கணக்கான வழிகளில் சீட்டை சேர்க்கமுடிவது போல், நாவலோடு டாரட் அட்டைகளூம் நமக்கு தரப்படுகிறது. ஒரு முறை சீட்டு குலுக்கி வரும் அத்தியாயம் பொருத்து வாசித்தால், நாவலின் முடிவு ஒரு மாதிரி இருக்கக்கூடும், அடுத்த நாள், குலுக்கி போட்டு வாசித்தால் முடிவு வேறுமாதிரி இருக்கும்.

(5) பொதுவில் புனைவு எழுத்தாளர்கள் முன்னுரையில் சொல்வது நாவலில் வரும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் கற்பனை. ஆனால் Second Body நாவலில் இப்படி ஆரம்பிக்கிறார்.

இந்நாவலில் வரும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை.ஆனால் இதை எழுதிய எழுத்தாளன் கற்பனை என தொடங்குகிறார். வாசிக்கும் வாசகன் தன் மரணத்தை பார்க்க சாத்தியமில்லை என்றுதான் தோன்றும் ஆனால் இந் நாவலை வாசிக்கும் வாசகன் கொல்லப்படுகிறான். இதை இணையத்தில் வாசிக்கமுடியும். ஒரு சீரியஸ் வாசகன் கூகுளில் தேடினால் கிடைக்கும்.
(6) அடுத்து ஒரு விளையாட்டை “Unique Item” என்ற நாவலில் முன்வைக்கிறார். காதலை மர்ம நாவலைப்போல் எழுதியுள்ளார். ஆனால் இந்நாவலின் விஷயமே வேறு. இந்த நாவலுக்கு 100 முடிவுகள். நீங்கள் வாங்கும் நாவலின் பிரதியும், நான் வாங்கி வாசிக்கும் பிரதியும் வெவ்வேறானவை. அதாவது கதையின் முடிவு வேறானது.

இதுமாதிரி ஒரே பதிப்பில் நூறு முடிவுகளோடு ஒரு நாவல்! நாவலின் முன்னுரையில் பாவிச், ஒரு படைப்பின் மரணம் முக்கிய முடிவில் இருக்கிறது என்ற தொன்மையான கூற்றை தான் இந்நாவலில் பின்பற்றியதாக குறிப்பிட்டு, ஒரு வாசகனுக்கு கிடைக்கும் பிரதியில் வரும் முடிவை ஏற்றுக் கொண்டு, மற்ற 99 முடிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டாம் என எழுதியுள்ளார். அதாவது புகைப்பிடித்தல் தீங்கானது. அது போல், ஒரே நாவலின் 100 முடிவுகளையும் வாசிப்பதும் கேடானது. இது மரணத்தை நூறு முறை சந்திப்பதற்கு ஒப்பானது என எச்சரிக்கையுடன் தன் முன்னுரையை முடிக்கிறார்.
(7) மெய் நிகர் வெளியான இணையத்தில் இதுவரை அச்சில் வெளிவர முடியாத ஒரு குறு நாவலை எழுதியுள்ளார். கதையின் பெயர் GLASS SNAIL. கதையின் துவக்கத்தில் வாசகர்களுக்கு முன் இரு தேர்வுகள். இரு கதாபாத்திரங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை நேர்வு செய்து அதன் வாயிலாக கதையை வாசிக்கலாம்.

கதையின் மத்தியில் வாசகர்கள் முன் மற்றொரு இரட்டைத் தேர்வுகள். அதாவது கதையின் முடிவை வாசகர்களே தீர்மானிக்கலாம். அதாவது சோக முடிவு தேவையெனில் ஒரு திசையில் வாசிக்க வேண்டும் அல்லது மகிழ்ச்சியான முடிவு தேவையெனில் அம்புக்குறியிட்ட மற்றொரு திசையில் வாசிக்கவேண்டும். கதையின் தொடக்கத்தில் உள்ள மற்றொரு கதாபாத்திரம் வாயிலாக வாசித்தால் வேறொரு கதை பிறக்கும்.

கதாபாத்திரங்கள் பெயர்கள் எகிப்து இளவரசி Hatshepsut மற்றும் பண்டைய எகிப்து கட்டிட கலைஞர் Senenmut. கதையின் ஒரு முடிவு இரு கதாபாத்திரங்களும் மாண்டு, நம் முன் எழுத்தாக உருமாறுவதாக எழுதியுள்ளார்.

அபாரமான கதை.. ஒவ்வொரு அத்தியாமும் இரண்டு அல்லது மூன்று பத்திகளுக்கு மேல் இல்லை. ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் அம்பு குறி வாயிலாக அடுத்த அத்தியாயத்திற்கு நகரலாம். மீண்டும் விளையாடியிருக்கிறார் பாவிச். அதாவது வாசகர்களுக்கு கதை தொடக்கத்தில் பல்வேறு சாத்தியப்பாடுகள் மற்றும் கதை முடிவின் பல கோணங்களை முன்வைத்து வாசகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற முடிவை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.

இப்படி பிரதியில் அனாயசமாக விளையாடியவர் பாவிச். இருபதாம் நூற்றாண்டின் அதிமுக்கிய எழுத்தாளர். இதுவரையில் இலக்கியம், வாசிப்பைப் பற்றிய அரதப்பழசான கருத்துகளை புரட்டிப் போட்டு பிரதியில் நிரூபித்து காண்பித்தவர். இவரைப்போல் மொழியில் பரிசோதனை முயற்சிகளை செய்தவர் எவரும் இல்லை. வாசகர்களுக்கு பல சாத்தியங்களையும், பன்முக வாசிப்புகளை பாவிச் போல் முன்வைத்த எழுத்தாளர் உலக சரித்திரத்தில் எவரும் இல்லை.

இப்படி பிரதியில் பாவிச் விளையாடியதற்கு உந்துதலாக இருந்தது அச்சம் என்கிறார். அதாவது பயம் அதிகரிக்கும்போதுதான் ஒரு எழுத்தாளன் பிறக்கிறான் என்கிறார். பயம் அதிகரிக்க அதிகரிக்க, நாம் உண்மைக்கு அருகில் செல்கிறோம். பயம்தான் ஒரு எழுத்தாளனுக்கு ஆகச் சிறந்த நண்பன், தனக்கு சிறுவயது முதல் இருந்த பல அச்சங்களை பட்டியலிட்டுள்ளார்.. சிறுவயதில் தனக்கு முதுமை வரக்கூடாது என்ற பயம், தனிமை கண்டு பயம், ஆளில்லாத வீட்டைக் கண்டு பயம், இருட்டு வீட்டைக் கண்டு பயம், வீட்டிற்கு ஒரு கதவுதான் என்பதைக் கண்டு பயம், மற்றும் வீட்டின் பின்பறமும் அவருக்கு அச்சமூட்டியுள்ளது.

அவருக்கு வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பயங்கள், எழுத்தில் படைப்பாற்றலின் உச்சத்திற்கு தள்ளியுள்ளது என ஒப்புக்கொள்கிறார். அவரை பொருத்தமட்டில், ஒரு வீட்டிற்கு ஒரு முன்வாசல் மற்றும் ஒரு பின் வாசல் என்பது பலத்த கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தான் ஒவ்வொரு நாவலையும் ஒரு வீடு போல் கட்டியுள்ளதாகவும். உள்ளே நுழைவதற்கு எண்ணற்ற வாயில்கள், வெளியேறுவதற்கு பல வழிகளோடு விசாலமாகவும், சுதந்திரமாக நடமாடமுடிகிற நாவல் என்ற வீட்டை பிரதியில் கட்டியுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளனைப் பீடத்தில் ஏற்றி, சூடம் கொளூத்தும் இரண்டாம் நூற்றாண்டு கபாலத்தை சுமக்கும் தமிழ் வாசகர்கள், பாவிச்சின் எழுதியதை கவனிக்கவேண்டும். அதாவது எழுத்தாளனை மறுத்து, வாசகர்களை முன்னிலைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, முழு சுதந்திரத்தையும், சுயமாகச் சிந்திக்கும் பொறுப்பை தன் எழுத்து முன்வைக்கிறது என்கிறார்.

பாவிச்சை பொருத்தமட்டில் ஒரு வாசகனை நுகர்வோராகவோ அல்லது பார்வையாளனகவோ(Spectator) இருக்கக்கூடாது. பங்கேற்ப்பாளனாக (Participator) இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறார். அதாவது தன் நூலை வாசிக்கும் வாசகர்களுக்கு லட்சக்கணக்கான தேர்வுகளில் வாசிக்கும் சாத்தியப்பாட்டை முன்வைக்கிறேன் என்றும், இப்படி எண்ணற்ற முறையில் தன் நாவல் வாசிக்கப்படுவது திருப்தி அளிக்கிறது என்கிறார். இப்படி ஒவ்வொரு வழியில் வாசிக்கும்போது, பாவிச் என்ற எழுத்தாளர் மறைகிறார்.

ஒவ்வொரு வழியில் வாசகன் வாசித்து ஒரு புது எழுத்தாளரை கண்டடைகிறான். ஆக இப்படி பாவிச்சை மறந்து, வாசிப்பில் பல புது எழுத்தாளர்கள் பிறப்பது தனக்கு உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்கிறார்.
1969 ல் இரு கவிதை தொகுதிகளை வெளியிட்டார். பெரிதாக கவனம் பெறவில்லை. ஆனால் 1984ம் வருடம் அவருடைய முதல் நாவல் கசார்களின் அகராதி வெளிவந்தவுடன் உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். ஒரு எழுத்தாளனாக இருநூறு வருடங்களுக்கு முன்னால் தான் பிறந்துவிட்டதாகவும், தான் எழுதுவதற்கு தன்னுடைய மூதாதையர்களும் ஒரு காரணம் என்கிறார். இரு எழுத்தாளர்களை தன் வாழ்நாளில் சந்திக்க விருப்பப்பட்டுள்ளார்.

ஒருவர் டி.எம்.தாமஸ் மற்றொருவர் போர்ஹெ. ஆனால் போர்ஹெவிடம் உரையாடுவதற்கு தயக்கம் என்றும், அவரை சந்திக்க நேர்ந்தால், அவருடைய பேச்சை அமைதியாக கேட்கவே விருப்பபடுவேன் என்கிறார். பலமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாவிச், அந்த அங்கீகாரம் கிட்டாமல் தன் 80 வயதில் 2009ம் வருடம் காலமானார்.

••••

தொடர்புக்கு

யாதென அழைப்பாய்
எஸ்.வாசுதேவன்

விலை 300

பக்கங்கள்318

மருதா பதிப்பகம்
6 , முதல் தளம்
77 தாமரைத் தெரு
பிருந்தாவன் நகர்
சென்னை 600 092

95000 61608

நிஷாமன்சூரின் மூன்று கவிதைகள்

images (13)

1)

மாமுதுகு போற்றுதும்..!

ஒரு சிறுகவிதை எழுதிவிடலாம் போலொரு
வனப்புமிகு முதுகு இவளுக்கு

ஒரு நீள்கவிதை எழுதிவிடலாம் போலொரு
வாளிப்புமிகு முதுகு அவளுக்கு

ஒரு சிறுகதை எழுதிவிடலாம் போலொரு
பிரம்மாண்ட முதுகு இன்னொருத்திக்கு

மல்லிகைப்பூச்சரம் புரளும்
மலர் முதுகென் பால்யகாலசகிக்கு

ஈரம்காயாத நீள்ரோமங்கள் தவழும்
கார்குளிர்மேக முதுகென் ரகசிய சிநேகிதிக்கு

பிடரிக்குழல்மேற் சூடியரோஜா இதழுதிர்ந்து
வியர்வையருவி மேல்மிதக்கும் பரந்தவெண் முதுகென் அணுக்கிக்கு

அன்புசூழ் மாந்தரனைவரையும் ஆராதிக்க
வான்போல் விரிமனசுகொண்ட யாம்
பின்புறமிருந்து கட்டியணைத்து முகம்புதைக்க அருள்பாலிக்கும்
மாமுதுகுகள் போற்றுதும்
மாமுதுகுகள் போற்றுதும்.

2)

போதாமைகளின் பெருநகரம்

இந்நகரம் மாறிவிட்டது
இந்நகரத்தின் அழகிகளுக்கு வயதாகிவிட்டது
இந்நகரத்தின் அடையாளச் சின்னங்கள்
சீந்துவாரற்றுச் சிதிலமடைந்து விட்டன
இந்நகரத்தின் புகழ்பெற்ற நவீன விடுதிகள்
போதைமருந்துக் கிடங்குகளாகி விட்டன
இந்நகரத்தின் எழில்மிகு பூங்காக்கள்
குடிகாரர்கள் வாந்தியெடுக்கும் கழிவுத்தொட்டியாகின

இந்நகரத்தின் கார்ப்பரேட் மஹான்கள்
ஒரு மாபெரும் கான்கிரீட் கூரையை வடிவமைத்தனர்.
அதற்குள் ஒருநாள் செயற்கைப் பூங்கா அமைக்கப் படுகிறது
மறுநாள் செயற்கை வனம் அமைக்கப் படுகிறது
அடுத்தநாள் செயற்கை மலைநகரம் நிமிர்ந்தெழுப்பப்படுகிறது
வார இறுதியில் செயற்கை பனிப்பொழிவு நிகழ்த்தப் படுகிறது
மக்கள் எல்லா இடங்களிலும் தற்படம் எடுத்து குதூகலிக்கிறார்கள்
அறிவிக்கப்படும் போட்டிகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டு
சிறுபரிசுகளை வென்று உளமகிழ்கிறார்கள்.
வண்ணக் கண்ணாடிகளுடன்
ஏழுபரிமாணக் குறும்படங்களைக் கண்டபடி
கற்பனை சாகசங்களில் இறும்யூதெய்துகிறார்கள்.

வாசல்களில் காத்துக் கொண்டிருந்த
வயசாளிகளில் ஒருவர்
இங்கே ஒரு பெரும் குளம் இருந்தது என்றார்.
அந்தக் குளத்தில் நீச்சல் பயின்றபோது ஏற்பட்ட
சிறுகாயத் தழும்பைத் தடவிக்கொண்டபடி
அங்கு துவைக்கவந்த காதலியை
ஆளரவமற்ற நண்பகலொன்றில் கட்டித்தழுவியதை நினைவுகூர்ந்தார்
சுற்றத்தாரை எதிர்த்து அவளைக் கரம்பிடித்து
பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததை நினைவுகூர்ந்தார்
அவள் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்
இப்படி கொடுநரகம்சூழ் தனிமையில் வாழ நேர்ந்திருக்காதே
எனக் கண்ணீர் உகுத்தார்.

அவரது இருக்கைக்குப் பின்புறம்
பூச்சொரிந்து கொண்டிருந்ததொரு செயற்கை நீரூற்று
அதில் பரப்பப்பட்டிருந்த ஆதிக்குளத்தில் இருந்த கூழாங்கற்களில் ஒன்று
உந்தி வெளியேறி அம்முதியவரின் குதிகாலில் தெறித்தது.
துணிகளைத் தப்பித்தப்பித் துவைக்கும் காதல் மனைவி
குறும்புத்தனமாக முகத்தில் தெறிக்கவைத்த
புடவை ஈரத்துளியைக் குதிங்காலில் உணர்ந்து
விதிர்விதிர்த்தெழுகிறார் அந்த முதியவர்.

அந்தக் கணத்தில் ஒரு வாழ்வின் முடிச்சவிழ்ந்து
ஒரு குலவையொலி அதிர்ந்தெழுந்தது.

3)

பெயர்ச்சொல்

யாரையாவது நினைவூட்டும் செயலை
யாராவது செய்கிறார்கள்

யாருடைய சாயலிலாவது
யாராவது இருக்கிறார்கள்

விரும்பாத சில பெயர்களைச்
சிலபோது கேட்கநேர்கையில் எரிச்சலுறுகிறோம்

நேசத்துக்குரிய சில பெயர்களை
சிலபோது கேட்க நேர்கையில்
புன்னகைத்து மலர்கிறோம்

மறக்க நினைக்கும் சில துரோகிகளின் பெயர்களை
யாராவது வலியவந்து நினைவூட்டுகிறார்கள்

இதயத்தைத் திருடிச்சென்ற ஒரு பெயரை
யாருடையதாகவோ எழுத நேர்கையில்
விரல்களில் சிறுநடுக்கம் பரவுகிறது

ஒரு பெருவரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கும் சில பெயர்களை
அந்தப் பெயருக்குரியவர் அறியாதிருப்பது
கடும் மனப்பதட்டத்தை உண்டாக்குகிறது

யாரையோ யாரோ அழைக்கும் ஒரு பெயர்
என்னுடையதாக இருக்கும்போது
யாரோ ஒருவராகக் கடந்து செல்ல வாய்க்கிறது

ஒரு நள்ளிரவில் இனி பெயர்கள் செல்லாப் பெயர்களென அறிவித்துவிட்டு
எண்களாக மாற்றிக்கொள்ள மாமன்னர் ஆணையிடுவதற்கு முன்
எல்லாப் பெயர்களையும் ஒருமுறை எழுதிப் பார்த்து விடுங்கள்

நாளை என்னுடையதென்று உரிமை கொண்டாட உங்களுக்கு
ஒரு பெயர்கூட இல்லாமற் போய்விடலாம்.

******

சமயவேல் 5 கவிதைகள்

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

அசோகமித்திரன்

அசோகமித்திரன்

அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும்

அடிபம்ப் சப்தம், நீர் விழும் சப்தம்.

அதிகாலை

எழுந்துவிட்டேன். திருவல்லிக்கேணி எனும் இம்பர் உலகமே

எழும்பிவிட்டது

தண்ணீர் வருவதைக் கண்டு பிடித்து

முதலில் அடிக்கத் தொடங்கிய அந்த எவரையோ

வாழ்த்திக் கொண்டே தங்கையை எழுப்பினாள் ஜமுனா

‘உனக்கு வேலை இல்லை, நீ போய் அடி’

எழுப்பியதற்காக இடதுபுறம் திரும்பிப் படுத்தாள்.

தண்ணீர் விழுகிற சப்தமும்

வாசல் தெளிக்கிற சப்தமும்

அடிபம்ப் சப்தமும் இல்லாமல் என்ன காலை?

4ஜி ஆட்கள் தோண்டிப் போட்ட தெருவில்

எதிர் காம்பவுண்டு ஆண்டாள்

நனைந்த சேலையுடன் குடந்தூக்கிப் போனாள்.

தோழிமார் குடங்கள் தெரு முழுதும் அலைந்தன.

ஹாண்ட்பாரில் ஒரு குடமும் கேரியரில் இரண்டு குடங்களுமாக

தெருவைத் தெளித்துக் கொண்டு

சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள் கமலம்.

ஞானக்கூத்தன் வீட்டிலும் பம்ப் சப்தம் கேட்டது

தமிழகம் முழுவதும் கேட்டது என செய்தியில் வாசித்தார்கள்

நற்றமிழர் வாழ்வு நீரின்றி அமையாது

என முனகிக் கொண்டே தெளியாத போதையுடன்

தூங்கிக் கொண்டிருந்தான் கவி.

இழுவை விதிகள்

இன்னும் தூங்கு தூங்கு என இழுக்கிறது

தூக்கம்

இல்லை விழித்துக்கொள் விழித்துக்கொள்

என இழுக்கிறது பகல்

பால் வந்துவிட்டது

நாளிதழ்கள் வந்துவிட்டன

ஜன்னலில் அசைகிறது வெயில்

இல்லை கொஞ்சம் தூங்கலாம் இமைகளைத்

திறக்காதே என்கிறது தூக்கம்

படுக்கையில் எழுந்து உட்கார்ந்து

கண்களை மூடிக் கொள்கிறேன்

வாழ்வில் இணைய விரும்பாத வெற்று

நொடிகளின் போதையில்

மெல்லச் சுற்றுகிறது தலை

இக்கணம்

இப்பொழுதின் இப்பொழுதில்

ததும்புகிறது நகரம்

இக்கணத்தின் இக்கணம்

தங்க மீனாய்த் துடிக்கிறது

தொட்டியை நன்னீரால் நிரப்புவோம்

உயிர்வளி எந்திரத்தை முடுக்கிவிடுவோம்

இக்கணத்தின் இக்கணத்தில்

இளைப்பாறுவோம் கொஞ்சம்.

ஏதோ ஒரு நிலையத்தில்

தண்டவாளங்களின்

இருபுறமும் கும்பலாக

ரயில் பார்க்க

நெருக்கியடித்து நிற்கும்

பீ நாறிச் செடிகள்

எங்கணும் பறந்து

பார்வை மறைக்கும்

மழைக்கால

குட்டிக் குட்டி

வண்ணத்துப் பூச்சிகள்

எங்கோ போகிறோம்

நானும் என் ரயிலும்.

அம்மாவின் யானைகள் தேசம்

ஆயிரக்கணக்கில் யானைகள்

அணிவகுத்து நிற்கும் பெருநகரில்

மகாராணியாக இருந்தாள் அம்மா.

சர்வ லட்சணங்களுடன் கூடிய

தும்பிக்கை தூக்கிப் பிளிறும்

யானைச் சிற்பங்கள் நிறைந்த

மணிமண்டபத்தில் தான் அவளைச் சந்தித்தேன்

அவள் இறந்துபோன

அதே முப்பத்தைந்து வயது இளமையில் இருந்தாள் அம்மா

அறுபது வயது நிரம்பிய என்னை

ஆரத் தழுவிக் கொண்டாள்.

உனக்காகவே நான் உருவாக்கிய

எனது யானைகள் ராஜ்ஜியம்

இந்திரலோகத்தை விட ஆனந்தமானது என்றாள்.

அதை நான் பூமியிலேயே அமைத்திருக்கிறேன்

விழித்துப்பார் என்றாள்

அம்மா.

௦௦௦

த.அரவிந்தன் கவிதைகள்

download (25)

சாப்பாட்டுத் தட்டுகள்

1.

சாப்பிடும்போது
குழந்தைகளின் கண்கள்
அப்பாவின் தட்டிலேயே இருக்கின்றன
கண்டுபிடிக்க வேண்டிய
ஆறு வித்தியாசங்களையும் அம்மா
அப்பாவின் தட்டிலேயே வைத்துவிடுகிறாள்
வறுத்த சிறிய மீன் – பெரிய மீன்
குட்டியோண்டு கேசரி – அதிக கேசரி
துக்குணோண்டு சுண்டல் – வட்டா நிறைய சுண்டல்
ரெண்டு தோசை – ஐந்து தோசை
மோர் – கெட்டித்தயிர்
சின்ன கிளாஸில் ஜூஸ் – பெரிய கிளாஸில் ஜூஸ்
எளிதில் கண்டறியும் குழந்தைகள்
அம்மாவின் தட்டைத் தேடுவதில்லை.

2.

ஓர் அப்பன்
இனி, இந்தக் கழுதைகள் எதிரில் சாப்பாடு போடாதே என்கிறான்
கனவு காணும்
ஓர் அப்பன்
தெரு நீளத்துக்கான மேஜையில்
நண்டு, இறால், மீன், கோழி, ஆடு என அத்தனையும்
சமைக்கப்பட்டு,
ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை என அத்தனை பழங்களும்
நறுக்கப்பட்டு, ஜூஸாக்கப்பட்டு
பெரிய குளிர்ப்பெட்டிகளில்
வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்கள் நிரப்பப்பட்டு
குழந்தைகளை இஷ்டத்துக்கும்
ஒரு நாள் சாப்பிடவிடுவேன் என
சபதம் எடுக்கிறான்
போதையில் வரும்
ஓர் அப்பன்
இடப்படும் சாப்பாட்டை எடுத்து
தெரு நாயை வலிய இழுத்து ஊட்டுகிறான்.

3.

விருந்தினர்கள்
யாராவது வர வேண்டும் என்று
குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள்
கறிச்சோறு, ருசி என
எல்லாமே சற்று கூடுதலாகும்தான்.

4.

பிடிக்காத சாப்பாடுகள்
தட்டுகளின்
சுவர் விளம்புகளில்
ஏறி, நின்று
குதிக்கின்றன.

5.

குழந்தைகளுக்கு என்றுதான்
அப்பன்
ஆரஞ்சு மிட்டாய், கமர்கட்
இலந்தை வடை
எல்லாம் வாங்கி வருவான்
வீடு வந்ததும்
டேய்…. டேய்
எனக்குக் கொஞ்சம் தாடா என்பான்.

6.

ஆறியிருந்தாலும்
சூடாயிருந்தாலும்
சோறு
வெள்ளையாகத்தான் இருக்கிறது
அவளுக்குக்
கடிக்கக் கொடுக்கும் எலும்பு
சண்டை நாள்களில் மட்டும்
நான்
நாயாயென கடிக்க வருகிறது.

7.
சாப்பாட்டின் கரங்கள்
எப்போதும்
தந்திரங்களால் நீள்வது
சில நேரம் நஞ்சாக
சில நேரம் அன்பாக

8.

மீன் குழம்பு என்றால்
ஒரு பிடி சாதம் கூடுதலாக
உள்ளே போகும்
சிலருக்கு
ரேஷன் அரிசிக்குப் பதில்
நல்ல வெள்ளைச் சாதமெனில்

9.

ஒண்டியாக இருப்பவள்
அணைந்த அடுப்பில்
ஏறிப் படுக்கிறாள்
பூனையாக.

10.

தொண்டைக்குக் கீழே
ருசிக்காவிட்டால் என்ன
நாக்கின் நீளம்
பால்வீதியையும் கடந்தது
அடியெடுக்க
அடியெடுக்க நீளும்.

11.

தம்பி
நான்
வெங்காயத்தையும்
பச்சை மிளகாயையும் கடித்து
கஞ்சி சோறு சாப்பிட்டவன்
தீய்ந்து போன தோசையை
எடுத்துப் போகச் சொன்னதற்காக
சில்லி பரோட்டாவில்
என்னை
மிரட்டப் பார்க்காதே

12.

ருசிக்காத சோற்றை
இவன்
தட்டோடு எறிந்து
சுவரைச்
சாப்பிடச் சொல்லி
மிரட்டுகிறான்
இவள்
எப்போதும் நல்லவள்
சாப்பிட்டு
வாய் கழுவாத குழந்தையை
நன்றாகத் துடைக்கிறாள்.

13.

சாப்பாட்டின்போது
உருட்டப்படும் கதைகள்
பாம்பும் ஏணியுமாக
பரமபதம் ஆடுகின்றன

14.

எல்லோரும்
ஆடை உடுத்தும் வரை
அரை ஆடையே அணிவேன்
என்றுகூட
சொல்ல முயலுவேன்
எல்லாருக்கும்
உணவு கிடைக்கும் வரை
என்று
ஒரு பருக்கை அளவுக்குக்கூட
வாய் திறக்க மாட்டேன்.

••••

இணை ( சிறுகதை ) கன்னடத்தில்: கனகராஜ் ஆரணகட்டே – தமிழில் : கே. நல்லதம்பி

கனகராஜ் ஆரணகட்டே

கனகராஜ் ஆரணகட்டே

தென்னந் தோப்பின் இருட்டை கண்கொட்டாமல் வீரத்தேவர் பார்த்துக் கொண்டிருந்தார். காலையில் பெற்றவளின் பிணத்தைப் பார்த்தபோது தான் தன் மனதின் ஆழத்திலிருந்து அழவில்லை என்று தோன்றியது. அவள் தனக்கு என்னதான் செய்திருந்தாலும் சடலத்திற்கு தான் மரியாதை செலுத்தவில்லை என்றால் மக்கள் என்னவென்று நினைப்பார்கள்? சொத்தைப் அபகரித்துக்கொண்டு பெற்றவர்களைத் துரத்திவிட்டான் என்று முதுகிற்குப் பின்னால் பேசிக் கொள்கிறார்கள். பெற்ற தாயின் இறுதிச் சடங்கை செய்யாத பாவத்தை நான் ஏன் சுமக்கவேண்டும்? என்னை எவ்வளவு கொடுமைப் படுத்தினாள் அவள் வாழ்ந்துகொண்டிருந்த போது…?! எல்லாவற்றையும் மகளுக்கு மட்டுமே செய்வேன் என்றால் நான் எங்கு போவது? என் பிள்ளைகளுக்கு ஒரு நியாயம், அந்தக் குருடி பிள்ளைகளுக்கு மற்றொரு நியாயம். அம்மா மகள் இருவரும் சேர்ந்துகொண்டு என்னையும் என் மனைவி, பிள்ளைகளையும் எப்படி எல்லாம் இம்சைப் படுத்தினார்கள்….அதற்குத்தான் இருவரும் கண்களை இழந்தார்கள்.

அவள்…என் தங்கை, திருமணமான பத்தே வருடத்தில் கணவனைப் பலி வாங்கிவிட்டாள்…. அப்பப்பா, இருவரும் என்ன ஆட்டம் ஆடினார்கள்! அவள் கணவன் பொள்ளாச்சித் தாலூக்காவிற்கே பணக்காரனாம்…என்னை எத்தனை முறை அவளும் அவள் கணவனும் அவமானப்படுத்தி இருகிக்கிறார்கள்…இவள்…என்னைப் பெற்றவள், மகளுக்கொரு நீதி, எனக்கொரு நீதி. சிறிய வயதிலிருந்தே அவளுக்கு நெய்ச் சோறு…அப்போதெல்லாம் எனக்குத் புரிந்திருக்கவில்லை. தங்கச்சி என்றால் எனக்கும் அவ்வளவு பிரியம்…திருமணமாகி பிள்ளைகள் பிறந்த பிறகல்லவா, எல்லாம் புரிந்தது…. என் பிள்ளைகள் தின்பதற்கு நொறுக்குத் தீனி கேட்டால், மிரட்டி ஒட்டிவிடுவாள். ஆனால் அந்தச் சிறுக்கி பிள்ளைகள் வீட்டிற்கு வருவதுதான் தாமதம், வித விதமான பலகாரங்கள் வந்து சேரும்…பிறகு பண்டிகை, சாவு, கல்யாணம் என்று அவள் வீட்டிற்குச் செய்தது ஒன்றா இரண்டா..?! அப்படியே விட்டிருந்தால் கிழவன் கிழவி இருவரும் சொத்தை விற்று மகளுக்கு சீதனமாகக் கொடுத்திருப்பார்கள். நான் துணிச்சல்காரனாக இருந்தததால் பரவாயில்லை, இந்த என் பிள்ளைகள் போல கூமட்டைகளாக வளர்ந்திருந்தால் பிச்சைதான் எடுத்திருக்க வேண்டும்.

சடலத்திற்கு செய்யவேண்டிய முதல் சடங்குகள் எல்லாம் முடிந்தது. உயிர் தந்தவள்

என் மனதை எறித்ததுபோல இருந்தது. நெஞ்சம் பாரமானது. ‘வீரா…’ என்று அவள் அழைக்கும் குரல் இதயத்தில் தோன்றி தேகம் நொறுங்கி வீழ்வதுபோலானது. தான் இறந்தாலும் உன் வீட்டிற்குள் கால் வைக்கமாட்டேன் என்ற பிடிவாதத்துடன் இருந்தவள்; தன் கூடப் பிறந்தவளுடன் தூரத்துப் பொள்ளாச்சியிலேயே வாழ்ந்து கடைசிவரை அவள் பிடிவாதத்தால் என் வீட்டில் ஒரு வேளை சாப்பிடாமல் கூட போய்விட்டாள். முறைப்படி அவள் இறுதிச் சடங்கு நடக்கவேண்டி இருந்தது என் வீட்டில்தான். ஆனால் அவள் பிறந்த வீட்டார்கள் பிணத்தை எடுத்துக் கொண்டு வர என்னுடன் தகராறு செய்வது உறுதியாக இருந்தது. அதற்காகவே என் பிள்ளைகளை அனுப்பினேன். ஆரம்பத்தில் அந்தப் பயல்கள் ரெண்டுக்குல தேவர்களுக்கு பயந்திருந்தார்கள்! குலத்து பெரியவர்கள் முன் பாஞ்சாயத்து செய்து எப்படியோ கிழவியின் பிணத்தை எடுத்து வந்தார்கள்….இதனால் என் பிள்ளைகளைப் பற்றி அவ்வப்போது பெருமையாக இருக்கிறது.

அடிக்கடி தகராறு செய்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை. எவ்வளவுதான் சண்டைகள் இருந்தாலும் ஒருவர் சிரமங்களை மற்றொருவர் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. எனக்கு எதிராக அந்த சௌந்தரத் தேவன் வீராப்புடன் நின்ற போது என் ஐந்து பிள்ளைகளும் எப்படி ரௌத்திராவதாரம் எடுத்து அவனை அடித்து வீழ்த்தினார்கள். மூன்றாமாவன் என் பேச்சிற்கு எள்ளளவும் மரியாதை தரமாட்டான். நான் சொல்வதற்கெல்லாம் எதிர்த்துப் பேசுவான். அப்படிப்பட்டவன் அன்று சௌந்தரத்தேவனை அடித்து நொறுக்கினான்.

யார் முன்னிலையிலும் தலை குனியாதா என் குணம் அநேகமாக மற்றவர்களை விட இவனிடம் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது. அந்தக் கிழவியை தூக்கிக்கொண்டு வர தானே போவதாக பிடிவாதம் பிடித்தான். ஏதாவது அவனை அனுப்பி இருந்தால் பெரிய போர் நடத்தி பிணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருப்பான். ரெண்டுகுலத் தேவர்களின் முன் என் மரியாதையை பொடிக்காசுக்கும் மிச்சம் வைத்திருக்கமாட்டான். எனக்கே கத்தியைக் காண்பித்தவன் அல்லவா, அவன்!?

இரண்டாவது மகள் கூவி அழுது ஓடி வருவது கேட்டது. இந்தக் கிழவி தன் பிள்ளைகளில் விரும்பியது இவளைத்தான்….தனக்கும் அவள்தானே அதிகம் பிடிக்கும். எட்டுப் பிள்ளைகளில் என் படியாக்கம் என்றால் இவள்தான்! என் வார்த்தையை என்றும் தூக்கி எறிந்தவளல்ல. ஆணுக்கு நிகராக வயலில் வேலை செய்வாள். அவள் சத்தத்திற்கு ஆம்பிளைப் பிள்ளைகள் பயந்துகொண்டு அடுப்படியில் நுழைந்து கொள்வார்கள். அவள் ஆண்களைப்போல என் முன்னால் நின்று பேசுவாள். என்னையே மிரட்டுவாள்.

என் ஆண்பிள்ளைகளை விட பொட்டப் பிள்ளைகளுக்கே தைரியம் அதிகம். என் மூன்று பெண்கள் மூன்று புலிகள்…. இந்த ஆம்பளப்பசங்க எதற்கு கோபித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் நாய்களைப்போல அடித்துக் கொள்வார்கள். அந்த மூன்றாவது பையன் எனக்கே கத்தியைக் காண்பிக்கிறான்… இவள் குறுக்கே வராவிட்டால் அன்றே அவன் கதையை முடித்திருப்பேன். அன்று அவனைக் கொல்ல மனசு துடித்தது. தப்பித்துக் கொண்டான்….

“அப்பா….தாயே, தவிச்சிட்டு நிக்கரேங்களேப்பா” என்று தேவர் மார்பில் தலைவைத்துக்கொண்டு கதறி அழுதுகொண்டிருந்தாள், இரண்டாம் மகள் காமாட்சி. மகளை சமாதானப் படுத்தும் போது தேவருக்கு ஏனோ அம்மாவின் முகம் நினைவிற்கு வந்தது; நெஞ்சுக்குள் ஈரமானது போல இருந்தது. அழுவதைப் போல நடித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் கரைந்துவிடுவேனோ என்று அஞ்சி “உள்ளே போம்மா” என்று மகளை அனுப்பினார். அவள் உள்ளே போனதும் அழுகையின் ராகம் உச்சத்திற்கு ஏறியது. வீடே அழுகையின் அலைமீது மிதக்கும் படகைப் போலானது.

அவள் அழுதுகொண்டே “கடைசிவரை எங்கப்பன் வீட்லே ஒரு வாய் சோறு திங்காம செத்துப் போயிட்டயே, அப்பத்தா …” என்ற போது தேவர் கதறி விக்கி தன் வாழ்நாளின் வலியையெல்லாம் ஒரேடியாக வெளியே எறிந்ததைப் போல அழத்தொடங்கினான் . தேவரின் இந்த அழுகைக்கு காத்திருந்தைப் போல அங்கிருந்த பலர் துன்பத்தின் உச்சத்தைத் தொட்டு அமைதியானார்கள். ஆனால் தேவருக்கு வெட்கமாக இருந்தது. எல்லாரையும் போல தானும் சாவிற்கு முன் அழுமூஞ்சி ஆனேனா? சே! அசிங்கமாக இருக்கிறது.

இருள் அடர்ந்து படர்ந்துகொண்டிருந்தது. தூக்கம் எல்லோருடைய கண்களையும் தழுவியது. தேவர் இருட்டில் தென்னந் தோப்பையே பார்த்துக் கொண்டிருந்தார். இருட்டின் புரியாத இரகசியங்களைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதைப் போல இருட்டைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். குளிர் காற்றிற்கு தென்னங் கீற்றுக்கள் சலசலவென்று ஓசை எழுப்பியது. இருட்டின் அறிவே இல்லாத வௌவாலைப் போல தேவரின் மனது தென்னந் தோப்பிற்குள் நுழைந்தது. எதையோ ஆவேசத்துடன் தேடுவைதைப்போல இருந்தது.

சம்பந்தமற்ற கனவையா? சிந்தனைக்கும் கிடைக்காத நினைவையா? கண்ணுக்கு எட்டாத காட்சியையா? அவருக்கு அறிவு வந்ததிலிருந்து வாழ்க்கையை கண் முன்னே பரப்பிக்கொண்டு சரி –தவறு, இன்பம் – துன்பங்களை கணக்குப் போட முயற்சி செய்கிறாரா? மனது நிலை இழந்து விலங்காக மாறியது. கம்மென்று வீசத் தொடங்கிய மண்ணின் கடும் மணம் கோபத்தை மூக்கின் நுனிக்கு கொண்டுவந்து நிறுத்தியது. அவர் மனது இடிக்கு ஆளாகிய தென்னை மரத்தைப் போல தகதகவென்று பற்றிக்கொண்டது. பந்தலைத் தாண்டி வெளியே வந்தார்.

தலையைத் தூக்கி மேலே பார்த்தார். நட்சத்திரங்கள் இல்லாத ஆகாயம் இருண்டிருந்தது. இவ்வளவு நாள் இல்லாத இந்தப் பாழாய்ப் போன மழை நாளை வந்தால் என்ன கதி? இந்தக் கிழவியின் இறுதிச் சடங்கு எப்படி நடக்கும்? எந்தத் தடங்கல்களும் இல்லாமல் நடந்தால் போதும். வாழும் போது இம்சைப்படுத்தியவள் சாகும் போதும் நிம்மதியாக இருக்கவிடாமாட்டாளோ, இந்தக் கிழவி.

அய்யோ! என்ன இது! இங்கே வந்திருக்கிறேன்? இருட்டுக்கு கால் இருப்பது உண்மைதானோ! வீட்டைத் தாண்டி இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்! யாராவது என்னை தேடிக்கொண்டிருப்பார்களோ?

நல்லதம்பி

நல்லதம்பி

கொட்டு ஆரம்பித்துவிட்டார்கள். காலையில் வரச்சொல்லுங்கள் என்றேன். இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டார்களா? என் பேச்சைக் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்….தாயோளிகள். இன்னைக்கு ஒரு வழி பண்ணனும் இந்த தரித்திரம் பிடித்த நாய்களை…… எவ்வளவு தூரம் சொல்லியிருந்தேன் சாவு வீட்டுக்கு கோணங்கிகளை கூப்பிடாதீங்கடான்னு… எல்லோரும் அழுதுகொண்டிருக்கும் போது அந்தக் கோணங்கி வேடிக்கை காட்டி சிரிக்க வைப்பான். உளறுவான். இறந்தவர்களைப் புகழ்ந்து தலையில் தூக்கி வைச்சு ஆடுவான்.

இந்த உலகில் இறந்தவர்கள்தான் சத்தியவான்கள், நீதிமான்கள் என்பதைப் போல. பீசனஹள்ளி டேம் பக்கம் யாரோ ஒரு கோணங்கி தமிழ் நாட்டில இருந்து நம்மைப் போல இங்க வந்து வாழ்ந்துகிட்டு இருக்கானாம். அவனைத் தேடிக் கண்டு பிடுச்சுருக்காங்களே இந்த முட்டாப்பசங்க. வயல்ல வேலை பண்ணுங்கடான்னா ஆகாது; கோட்டைக்கும் – மைசூருக்கும் சினிமாப் பார்க்க ஓடுவானுங்க. எப்படிப் பட்ட வீட்டை நாசமாக்கிட்டாணுங்க. மாதாபுரத்து வயல விக்கணும், லட்சக்கணக்கா கடன் தலை மேல இருக்கு. ஆறு பிள்ளைங்க கல்யாணத்தைப் போலவே கடைசி ரெண்டு பேரோட கல்யாணத்தையும் ஜோராச் செய்யணும்.

பிள்ளைங்களைப் பெத்து வளத்தறது எவ்வளவு சிரமமுன்னு இந்தப் பசங்களுக்கு குடும்ப நடத்தறப்பத் தெரியும். என்னைப் போல எட்டுப் பிள்ளைங்களை வளக்கறது எந்தக் கொம்பனாலையும் முடியாது. அதுவும் இந்த ஒழுக்கங் கெட்ட ஆம்பளப் பசங்களை……. இவனுங்க கைக்கு அதிகாரத்தைக் கொடுத்த என்னயை வீதிக்கு கொண்டு வந்துருவானுங்க. கூத்தும் கும்மாளமும் அடிக்க லட்சக்கணக்கில கடன வாங்கி, ஒருநாள் சொத்த வித்து குடிச்சே அழிஞ்சுபோவானுங்க. என்ன நடந்தாலும் சரி, இப்பவே சொத்தை அவனுங்க பொறுப்பில விடமாட்டேன். சொத்தைக் கையில கொடுத்த என்னை போட்ட துணியோட துரத்தி விட்டாலும் விடுவானுங்க…

வேகமாக நடந்துகொண்டிருந்தார், தேவர். தான் விரைவாக நடக்கிறேனா அல்லது அப்படி நினைக்கிறேனா? என்ன ஆனது எனக்கு? தலை சுற்றுவதைப்போல ஆனது.

அங்க யாரு?! யார்ரா அது? டேய்? நில்றா….

யாரது? தன் இரண்டாவது மகனா? இருக்கலாம்…வேலி மறைவில் கருப்பு மனிதனின் உருவமல்லவா அது? அவன் முகம் தெரியவே இல்லை. அவ்வளவு கருப்பாக இருக்கிறது…….பார்த்தே ஆகவேண்டும், “டேய், யார்ரா நீ? வெளிய வாடா!”

தலைக்கு மேல் இருந்த கரிய வானம் முழங்கியது, அது ஒரு பெரிய இடி. ஊரே நடுங்குவது போலான இடி… சில நொடிகள் நின்று மறுபடியும் ஆரம்பமான கொட்டுச் சத்தம் தேவரின் தேகத்தை முழுவதும் நடுங்கச் செய்தது. வீட்டுப் பக்கம் புறப்பட்டார்.

கொட்டுச் சத்தம் உறுமிச் சத்தமாகக் அவருக்குக் கேட்டது. தமிழ் நாட்டில் தான் விற்ற தன் பூர்வீக தோட்டத்துக்குள் இருக்கும் கருப்புச் சாமி உற்சவத்தில் அடிக்கும் உறுமிச் சத்தம் காதை அரைந்தது. இடி நிற்காமல் மூன்று நான்கு முறை நடுங்க வைத்தது.

வேலிக்குப் பின்னால் யாரும் இல்லைதானே! அதோ அங்கே, அதோ இங்கே! அது குதிரையா?! அந்த ஆள் குதிரை மீது உட்கார்ந்திருக்கிறானா? ஆம்! என்னை நோக்கித்தான் வருகிறான். அப்படித்தான் தெரிகிறது…கையில் வீச்சறுவா! தலையின் வலது பக்கம் அழகான கொண்டை! பட்டு அங்கவஸ்திரம், வாட்ட சாட்டாமான உடம்பு, கருப்பந்தான் அவன்! சந்தேகமே இல்லை…இந்த நேரத்தில் வேட்டைக்குப் போகும் கருப்பன் இங்கே எதற்கு வருகிறான்? ஆம்! எதற்கு இத்தனை ஆவேசம்? அவன் கண்கள் சுடும் நெருப்புக் கனல்களைப் போல இருக்கிறதே! குதிரை கணைக்கிறதே! வருகிறான், வருகிறான்…..

“டேய், வாடா…” அவன் சிங்கப்பல் தனியாகத் தெரிகிறது.

“என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய், எங்களைக் காக்கும் தெய்வமே?”

“வாடா…டேய் ..வாடா, பாக்கலாம்.”

“நான் என்ன தப்புச் செய்தேன், என் மீது இப்படி வெறுப்புக் காட்ட? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உனக்கும் உன் தங்கை பேச்சிக்கும் தவறாம பூசை செய்யறேன். அன்னைக்கு ஒரு பொழுது சாப்பிடாம உன் நினைவாவே இருக்கிறேன். வருசத்துக்கு ஒரு கெடா வெட்டறேன். தவறாம சாராயம், சுருட்டு எல்லாம் படையல் போடறேன்.

நீ சொல்றதைப் போல என்னைக்கும் தைரியம் இழக்கலே. என் மனசுக்கு சரின்னு தோனறதை செஞ்சுட்டு வறேன். சிரமமுன்னு வந்தவங்களுக்கு துணையா இருக்கேன். தினம் பத்துப் பாவப்பட்டவங்க என் வீட்டில சாப்பிட்டுட்டுப் போறானுங்க. யாருக்கும் பயந்து எதற்கும் பின் வாங்கியதில்லை…. சொல்லு உன் கோபத்துக்கு ஆளாக நான் என்ன தப்புச் செஞ்சேன்? உன் வெள்ளைக் குதிரையும் சிவப்பாத் தெரியுதே? “.

“வாடா…டேய், வாடா..என் வீச்சறுவாவா நீயா ஒரு கை பாக்கலாம்!” கருப்பன் கத்தினான்.

“நீலி மலைச் சாத்தானே, ஏழு கடல், ஏழு மலை தாண்டி என்னயப் பலி வாங்க வந்தாயா? நான் அதென்ன தப்புச் செஞ்சேன், சொல்லு…சொல்லிட்டு…என் தலையைச் சீவு….

டேய், நீ யார்ரா என் தலையைச் சீவ? என்ன காப்பாத்தரேங்கறதுக்காக என்னை கொன்னு போடுவயா? எப்பவும் போல உடம்பு பூராம் சந்தனம் பூசிக்கிட்டு வந்திருக்கற. மீசையை முறுக்கிக்கிட்டு நிக்கற….அதோ அங்க எங்க அம்மா செத்துக் கிடக்கறா. நீயும் சாகனுமா? ஓ! அதான் விஷயமா! நிஜந்தானே…என் அம்மாவையும் என் தங்கச்சியையும் அனாதைகளாக விட்டு வந்தேனல்லவா…அதுக்குத்தான உன் கோபம்..? ஆனால் அவங்க என்னென்ன செஞ்சாங்கன்னு தெரியும்தானே? அவங்க செய்ததை எல்லாம் பொறுத்துக்கொண்டு நான் உன்னைப்போல வாழ்ந்திருக்க வேண்டுமா?…உன் உயிரைவிட கூடப் பிறந்தவள் அல்லவா உனக்கு முக்கியம் …என் அப்பன், தாத்தா, அவன் பாட்டன் எல்லோரும் அப்படித்தானே நடந்துகொண்டார்கள். நான் மட்டும் ஏன் வழி தவறினேன்? அதற்காக என் பசங்ககிட்ட எனக்கு பாடம் கற்பிக்கிறாயா?

கடைசி மூச்சு இருக்கும் வரை இந்த வீரச்சாமி தேவன் அந்தப் பொடிப்பசங்க முன்னாடி தோக்கமாட்டான். என் பெண் பிள்ளைகளை அனாதைகளாக்கிவிடுவார்கள் – சொத்தை அவங்களுக்கு கொடுத்துவிட்டால் பெண் பிள்ளைகளுக்கு என்ன செய்ய? அவர்களை புருசன்கள் துரத்திவிட்டால் நான் எப்படி அவர்களைக் காப்பாற்றுவது? அப்படி நடக்க இந்த வீராச்சாமி விட்டுருவானா? ஒரு வேளை நான் தோற்றுவிட்டால்? தோற்கும் பேச்சுக்கே இடமில்லை….சாவுதான் என் தோல்வி….” உதட்டின் கீழிருந்து நடுக் கன்னம் வரைக்கும் பரவிக்கொண்டிருந்த கிருதா மீசையை தன் வலது கையின் நான்கு விரல்களை மடக்கி அவர் அழுத்தி தடவிக்கொண்டார். “டேய், வாடா” என்பது இப்போது வீரத்தேவரின் வாய்ப்பானது.

“டுர்ரம் ட்ரும், டுர்ரம் டுர்ரம் ட்ரும்” என்ற உறுமிச் சத்தம் “டம் டமார்” என்ற இடியின் சத்தங்களின் ஆர்பாட்டம் குறைந்து குளிர்ந்த மழைத் துளிகள் வானத்தின் கருப்பு மேகங்களிருந்து உதிரத் தொடங்கின. தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தவர்கள், வெளியில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் பந்தலுக்குக் கீழே கூடினார்கள். தேவர் சுற்றியும் பார்த்தார். வலது பக்கம் குலத்தின் பெரியவரும் அவர் பங்காளியுமான இரத்தின சாமித் தேவர், இடது பக்கம் மற்றொரு பங்காளி, அங்கும் இங்கும் சுற்றியும் பங்காளிகள் அவர்கள் பிள்ளைகள்…பிறகு மற்ற உறவினர்கள், சம்பந்திகள்; உள்ளே பெண்களின் அழுகை நின்றிருந்தது. இடை இடையில் குழைந்தைகள் விளையாட்டு – மழை மெல்ல அதிகமானது. இடி மறுபடியும் இடித்தது. தேவர் காதுகளில் உறுமிச் சத்தம் நெஞ்சைக் குத்திக்கொண்டே இருந்தது. குதிரையின் குளம்புச் சத்தம் கூவி அழைப்பதைப் போல தோன்றி உட்காரவே முடியவில்லை…நெஞ்சம் படபடத்தது.

எழுந்து வீட்டின் பின்புறம் போனார், பங்காளியும் அவர் நண்பனும் ஆனா காளாச்சாமி பின்னால் வந்ததைப் பார்த்து பெருமூச்சுவிட்டார். வேட்டியத் தூக்கி சிறுநீர் கழிக்க உட்கார்ந்தார். மழை தூரிக்கொண்டிருந்தது. பளீர் என்று கண்களை அதிரவைக்கும் மின்னல் அவரை இருண்ட கறுப்பு உலகிற்கு தள்ளியதைப் போல உணர்ந்து நடுங்கினார். ஆனால் அந்த மின்னல் வெளிச்சத்தில் பாம்போ எதுவோ தெரிந்தது; கண்களை சிறிதாக்கி கூர்ந்து அந்தப் பக்கம் பார்த்தார்.

இருட்டில் மங்களாகத் தெரிந்தது பெரிய தவளை. நிக்கர் பாக்கெட்டிலிருந்து பீடி, வத்திப் பெட்டியை எடுத்து மழைத் துளி விழாதவாறு பற்ற வைத்துக் கொண்டார். வத்திக் குச்சி வெளிச்சத்தில் அந்தத் தவளையைப் பார்த்தார். அது வேகமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதன் வயிறு புஸ்புஸ் என்று உள்ளும் வெளியும் போய் வந்துகொண்டிருந்தது.

அதன் முதுகின் மேல் வெள்ளைப் புள்ளிகள் வெண்குஷ்டம் போலக் கண்டது, தன் மூன்றாவது மகனின் தேகம் இப்படித்தானே இருக்கிறது? யாருடன் படுத்திருந்தானோ! ஐந்து பேரும் பாழடித்து விட்டார்கள், இனி என்ன மிச்சம் இருக்கிறது? உடம்பை வளைத்து உழைக்கமாட்டார்கள். கூத்தும் கும்மாளமுமாக இருக்கற இந்த நாயிங்ககிட்ட சொத்தைக் கொடுத்தா கடைசிக் காலத்தில எனக்கு கஞ்சியும் கிடைக்காது; பாழாப்போன கிழவி, என்னையைச் சபிச்சு சபிச்சே கடைசியா என்ன ஜெயிச்சுட்டாளே! அவதான் சொல்லிக்கொடுத்திருக்கணும்.

அந்தச் சக்களத்தி ரங்காத்தா பிள்ளைங்க மூலமா. ரங்காத்தாளுக்கும் அவ புருசனுக்கும் எங்க குடும்பத்து மேலே மொதல்ல இருந்தே வயித்தெறிச்சல். அவ பிள்ளைங்க தானே இந்த தரித்திரப் பசங்களுக்கு கூட்டாளிங்க…கள்ளு சாராயம், சண்டை- இரத்தம் இதெல்லாம் இவங்கள பாதிக்கக் கூடாதூன்னுதானே நான் பொள்ளாச்சியை விட்டு மைசூருக்கு வந்தது.

“அண்ணா, கொஞ்சம் போடறீங்களா, கொண்டாருட்டா? அந்தப்பக்கம் போ..வர்றேன்,” காளச்சாமி சொல்லி இருட்டில் கரைந்தான்.

***

இவ்வளவு ஆடம்பரமான தேர் வேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காத பிள்ளைகளின் பிடிவாதத்திற்குத் தோற்று தேவர் தூரத்தில் மௌனமாக அமர்ந்திருந்தார். தம்பட்டைச் சத்தத்திற்கும், அவ்வப்போது விழும் இடிச் சத்தத்திற்கும் அதிர்ந்து கண் மூடுவதும் திறப்பதுவுமாக இருந்தார்.

அடை மழை பூமி முழுவதையும் மிதக்கவைப்பது போல தோன்றியது. மனிதர்களை விட மிருகங்களும் பறவைகளும்தான் இந்த கன மழைக்கு நடுங்கும் என்று யோசித்து புளியமரத்தின் கீழே சிறகுகளை போர்த்தி நடுங்கிக்கொண்டிருந்த குருவிகளைப் பார்த்தார். அதில் ஒன்று நிற்கமுடியாமல் கத்திக் கொண்டிருந்தது. எதற்காக இருக்கலாம் என்று கண்களைக் குறுக்கி அதன் வயிற்றை ஒருமுறை, கால்களை ஒருமுறை கவனித்தார். கூட்டை அடையமுடியாமல் நடுங்கிக்கொண்டிருக்கும் இந்தக் குருவி அநேகமாக சமீபத்தில்தான் குஞ்சுகளுக்கு காவு கொடுத்திருக்கவேண்டும் என்றவாறே அவர் தம் கோழிகள் எங்கே போனது என்று தேடினார். போன பௌர்ணமிக்கு குஞ்சு பொறித்த கருப்பனக் கோழி தன் குஞ்சுகளைக் காலுக்கு கீழே நிற்கவைத்துக் கொண்டு சிறகுகளை விரித்து மழைத் துளிகளிலிருந்து குஞ்சுகளைக் காத்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்து நிம்மதி அடைந்தாலும், எங்கிருந்தோ ‘ஃபீ’ என்று கேட்ட கழுகின் இரைச்சல் தேவரின் காதுகளை ஈட்டிபோல குத்தியது. வானிலிருந்து மழை பொழியும் தருணம் கழுகு வேட்டைக்கு வருமா என்று அதிர்ச்சியுற்று வானை நோக்கினார். நின்ற படி விடாமல் மேகங்கள் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தன. அவைகளில் ஒன்று தேவரை பயமுறுத்தி டமார் என்று ஓலமிட்டது. பார்க்கக் கழுகைப் போலத் தெரியும் அந்த மேகத்தை ஒரே அடியில் சிதறடிக்கட்டுமா, என்று நினைத்தபோது தன் துப்பாக்கியில் தோட்டா காலியாகியிருப்பது நினைவிற்கு வந்து அதிர்ந்து போனார்.

பல வருடங்களாக கழுகை விரும்பிய தேவர் அதை இப்போது கொல்லவேண்டும் என்று தீர்மானித்தது ஆச்சரியமாக இருந்தது. கழுகிற்கும் தேவருக்கும் இடையிலான கதை சுவாரசியமானது; ஒரு நாள் ஆகாயத்திலிருந்து சட்டென்று கீழே இறங்கி பேச்சி ஆத்தாளுக்கென்று வேண்டி விட்ட கோழியின் அழகான மூன்று குஞ்சுகளை பட்டென்று தூக்கிக்கொண்டு பரந்த கழுகின் பின்னால் தேவர் கைக்குக் கிடைத்ததை எரிந்துகொண்டே கரண்ட் ரூம்வரை ஓடியிருந்தார். மரங்களில் தாவி, கிணரை மூடி சிறகை அடித்துக் கொண்டே வெட்ட வெளியில் மறைந்த அது அவரை மிகவும் வருத்தியது. அன்றையிலிருந்து அவர் பார்வை ஆகாயத்தின் மேலே இருந்தது. கோழிகள் குஞ்சு பொறித்த போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் அந்த குஞ்சுகளின் பின்னாலேயே திரிவார்.

தேவர் என்னும் ஆஜானுபாகுவான மனிதன் தன் உணவிற்குப் பின்னால் திரிவதைக் கண்டு பயந்தோ என்னமோ கழுகின் வருகை வரவர மாயமானது. தேவர் சலித்துப் போய் குஞ்சுகளின் பின்னால் திரிவதை நிறுத்தினார். ஆனால் பல நாட்களுக்குப் பிறகு மறுபடியும் தாக்கிய கழுகின் மேல் தேவருக்கு ஒரு கண். கழுகு எந்த நாள், எந்த நேரத்தில் குஞ்சுகளின் ருசி பார்க்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்தார். வர வர கழுகின் அதிக சக்திக்கு தோற்றுவிட்டார்.

அதன் பலமான றெக்கைகள், கத்தியைப்போல் கூர்மையான அலகு, மண்ணைத் தோண்டுவது போலான அதன் பேட்டரிக் கண்கள், கற்பாறையையும் கவ்விக்கொண்டு போகும் அதன் கால் விரல்கள்! அவர் கண்பார்வைக்கு சமீபமாக வரும் அந்த கழுகின் முகம் ஒவ்வொரு முறை அவர் தாத்தாவின் முகத்தை ஒத்திருப்பது போலத் தெரிவது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவ்வப்போது கழுகு அவர் வளாகத்தில் இறங்கி சில குஞ்சுகளை தழுவிக்கொண்டு கண் சிமிட்டுவதற்குள் நீல வானில் கலந்துவிடுவதைப் பார்த்துப் பெருமூச்சு விடுவார்.

கழுகின் ஒவ்வொரு அசைவின் பொருள் அவருக்குத் தெரியும். றெக்கையை மெல்ல அடித்து காற்றில் மிதந்து பூமியைத் தொட இறங்கும் அதன் நோக்கத்தை அறிந்ததைப் போலவே கண்ணுக்கு எட்டாத வானத்தின் நெற்றியில் லீலாஜாலமாக பெருமையுடன் பறக்கும் சிறகின் நுனியும் அவருக்குத் தெரியும். மனிதர்களின் ஆழ்மனதின் வாசனையை நுகர்வதுபோலவே விலங்கு பறவைகளின் கூவல், நடையின் சுளிவை அறிந்துகொள்ளும் திறமைசாலியாக இருந்தார். எந்த இருட்டில் வேட்டைக்குப் போகவேண்டும், எந்த நேரத்தில் போகவேண்டும், நட்சத்திரங்கள் மின்னும் நேரத்தில் கிடைக்கும் விலங்குகள் எது போன்ற விவரங்களையும் கூட வரும் அவருடைய இரண்டாவது மகனுக்குச் சொல்லிக்கொடுப்பார்.

வேட்டைக்குப் போகாத இரவுகளில் தூக்கம் வராத நேரங்களில் வெளியே கேட்கும் ஒவ்வொரு கூவல் சத்தத்திற்கும் உயிர் துடிக்க அவர் தாத்தாவின் கட்டிலில் புரளுவார். வீட்டாரின் குறட்டைச் சத்தத்தைக் அவ்வப்போது கேட்டு அவர்கள் தூக்கத்தின் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கணிப்பார். தன் காம விளையாட்டை முடித்து அந்த உயிர்ப்பான இருட்டிற்கு சவால் விடுவதைப்போல அவரும் கண் திறந்து கூரையைப் பார்த்து தாத்தாவை நினைத்துக் கொள்ளும்போது அவருடைய பிரியமான கருப்பு நிறப் பூனை அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகளின் மீது வழுக்கி சத்தமில்லாமல் நிலத்தில் காலைப் பதித்து வீட்டின் குறட்டைச் சத்தங்களில் நனைந்து பஞ்சுபோன்ற நடையில் காலடிகளை எண்ணிக்கொண்டு பிணங்களாக விழுந்திருக்கும் மூச்சுவிடும் மனிதர்களை முறைத்துப் பார்த்தபடி புற்றில் வழுக்கும் பாம்பைப் போல சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களில் இருக்கும் உணவை நக்கும் பாணியை படுத்துக்கொண்டே பார்த்து உதடு விரிய சிரித்துக் கொண்டிருப்பார்.

மாட்டுக் கொட்டைகையில் காளைகளின் வாயசைவை கவனித்து இனி இரண்டாம் ஜாமம் ராக்கோழி பறவை கூவும், மேற்கு திசையில் நிலா பெரிதாகிக்கொண்டே கரைய ஆரம்பித்திருக்கிறது என்று சோர்வடைந்தது போலாகி தூக்கத்தை வரவழைத்துக் கொள்வார். இருட்டின் ஒவ்வொரு கனத்தையும் அறிந்தவரான தேவர் இன்று மழைக்கு முன் மொட்டையாக நிற்கிறார். நெஞ்சில் வைத்திருந்த கழுகு இப்போது வானத்து மேலே ஏறி அவர் கண்களை குத்தியது.

பெரும் மௌனத்தைப் பிளந்த இரண்டாம் மகனின் பீறிட்ட ஒலி கேட்டு தேவர் அந்தப் பக்கம் போனார். தடுக்க வந்தவர்களை தூரமாகத் தள்ளி பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே போனார்; பல் ஒன்று ஓவென்று உயிர் போவதுபோல கத்தி, அவருக்கு இருக்கும் பல்வலியை நினைவூட்டியது சுதாரித்துக் கொண்டு கால்களின் மேல் தன் உடம்பின் பாரத்தைப் போட்டு முன்னால் நடந்தார்.

ஆற்றின் மேல் நடப்பதுபோல தோன்றியது. மழைத் துளி அவரின் மொட்டைத் தலையின் மேல் பட்டென்று விழுந்தபோது அவருக்கு பெரும் கோபம் வந்தது. நெஞ்சுக்குள் உறுமி முழக்கமிட்டது. மகன் கத்திக் கொண்டிருந்தான்: “எவ்வளவு சொன்னோம், வெள்ளிச் சொம்பைத்தான் தேருக்கு கட்டவேண்டும் என்று. எவர்சில்வர் சொம்பைத் தொங்கவிட்டிருக்கிறீர்கள்….ஸ்டீல் சொம்பையாவது கட்டியிருக்கலாமே…ஏய், எழுந்திரிடா, வண்ணாப்பயலே, உனக்கு யாருடா இதக் கொடுத்தது? எங்க பாட்டி எப்படி எல்லாம் வாழந்தானு உனக்கென்னடா தெரியும்?! எங்க பாட்டன்-பாட்டி வெள்ளித் தட்டுல சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க தெரியுமா? அப்படிப்பட்டவ பொணத்த எப்படி எடுத்துக்கிட்டுப் போகணும்னு தெரியாத கூறுகெட்ட மனுசங்க எங்க வீட்டுக்காரங்க. போட, நான் சொன்னேன்னு வெள்ளிச் சொம்ப வாங்கிட்டுவந்து கட்டு. இல்லேன்னா ஸ்டீல் சொம்பையாவது வாங்கிட்டு வா போ…”

“டேய், உன் வேலைய நீ பாரு”, மகனை நோக்கி “ டேய், என்னடா ஆச்சு உனக்கு, யாருடா உன் தலையைக் கெடுத்தது” தேவர் செருமினார். மழை நிற்காமல் பொழிந்துகொண்டே இருந்தது. காற்று வீசத் தொடங்கியது. புளியமரம் காற்றுக்கு அசைந்தது. அதன் கீழே நின்றிருந்த மக்கள் தேவர் வந்ததும் தூரம் சரிந்தார்கள்.

அந்த தருணத்திருக்கு காத்திருந்ததைப் போல புளியமரம் வேகமாக நடுங்கியது. மழை இன்னும் அதிகமானது. எல்லோரும் பந்தலுக்குள் ஓடினார்கள். தேவரும் மற்றும் அவர் இரண்டாவது மகனும் மட்டும்தான் மழையில் நின்றார்கள். தம்பட்டை நின்று பெருமூச்சு விட்டது.

“பெத்த தாயிக்கு ஒருவேளை ஒழுங்கா சோறுபோடாமே துரத்திட்டு இப்ப சுடுகாட்டுக்குப் போற வேளையிலும் சரியா அனுப்பிவைக்காம இப்படி பிடிவாதாம இருக்கீங்களே…நீங்கள்ளாம் மனுசனா?”

“என்னடா பேசற நீ?” என்று பைத்தியம் பிடித்தவரைப் போல கைக்குக் கிடைத்ததைத் தூக்கி அவர் தன் மகனை அடிக்க தொடங்கினார். அவன் தப்பித்துக் கொண்டிருந்தான். அப்போது புளியமரத்திலிருந்து திடீரெனக் கீழே குதித்த தேவரின் மூன்றாவது மகன் அவரின் தோல் மீது படார் என்று மரக் கட்டையால் அடித்தான். தேவர் மல்லாக்காக விழுந்தார். மழை தோ என்று பேய்ந்து கொண்டிருந்தது. சிலர் அலறினார்கள். இரண்டாமாவன் தன் தம்பியை அடித்து கீழே தள்ளி “அப்பாவை ஏண்டா அடித்தாய்?” என்று கத்தினான்.

தேவர் சுத்தியும் பார்த்தார். தூரத்தில் அவர் தங்கை அவளுடைய மகளுடன் மூத்திரம் கழித்து திரும்பிக்கொண்டிருந்தாள். இருவருக்கும் கண் தெரியாதலால் தங்கச்சியின் பேத்தி அவர்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு போவது தெரிந்தது. பெண்களுக்கு கண் தெரியாவிட்டால் எவ்வளவு சிரமம் என்று நினைத்தார். மாதம் ஒரு முறை வெளியாவதை எப்படிச் சமாளிக்கிறார்களோ, இருவரும்!? தோள்பட்டை அதிகமாக வலித்தது. எழும் பலம் காலுக்கு இருந்தாலும் ஏனோ அவர் ஆகாயத்தை பார்த்தார்.

இரு பிள்ளைகளும் சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்கள். யாரும் இந்தப் பக்கம் வரவில்லை. தனக்கு ஒருமுறை கத்தியைக் காண்பித்த மூன்றாவது மகன் இன்று தன்னை கொலை செய்வது உறுதி என்று நினைத்தார். யாரோ தன் மூத்தவனையும், நான்காமாவனையும், சின்னவனையும் கூப்பிடுவது தேவர் காதில் விழுந்தது. கடைசிப் பையன் நாசவனுடன் எதையோ வாங்கிவர சிங்கமாரன ஹள்ளிக்கு போயிருகிக்கிறான்.

நாலாவது பையனை கரும்புத் தோட்டத்திற்கு போய்க் கொண்டிருந்த மழைத் தண்ணீருக்கு வரப்பை திறந்துவிட அவர்தான் அனுப்பி இருக்கிறார். பெரியவன் உள்ளே இறுதிச் சடங்குகளிற்கான ஏற்பாடுகளை நடத்திக்கொண்டிருக்கிறான்.

எல்லாப் பக்கமும் கண்களை சுழற்றினார். மருமகன்கள் சுவரின் மறைவில் நின்று திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்தது. தேவர் அந்தப் பக்கம் பார்த்தார். அவர் தங்கச்சி “டேய், ஜெயபிரகாசா, போடா, உங்கப்பன உன் தம்பிங்க அடிக்கராணுங்களாமா” என்று “அம்மா, உன் மகன என்ன கதிக்கு ஆளாக்கிட்டே என்று அழுதுகொண்டிருந்தாள். அவருக்காக நெஞ்சு அடித்துக் கொள்வது அவர் தங்கச்சி மட்டும்தான் என்று தோன்றி அவளைப் பற்றி பெருமையாக இருந்தது. திடீரென்று தண்ணீர் சுளியில் சிக்கிக்கொண்டாதைப்போல, யாரோ பூமியிலிருந்து இழுப்பதைப் போல தோன்றியது.

சட்டென்று எழ முயன்று முடியாமல் மல்லாக்காகப் படுத்தார். இப்போது பல் பயங்கரமான வலியைக் கொடுத்தது. மூளையை நெருடும் அந்தப் பல் தேவருக்கு புகழ் வாய்ந்த தமிழ் பழமொழி ஒன்றை நினைவூட்டியது. “கள்ளர் மறவர் கணத்தால் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாரானார்” என்னும் பழமொழி அவர் கண்முன் வந்து ஒரு விநாடி அவரை ஆட்டிவைத்தது. அப்படி ஆட்டிவைத்தது அந்தப் பழமொழி அல்ல, அதன் ‘மெல்ல’ என்ற ஒரு வார்த்தை. அந்த வார்த்தைக்கான ‘மெல்ல, படிப்படியா, மெதுவாக’ என்னும் பொருள்களுக்கு மாறாக மற்றொரு அர்த்தத்தை அவருக்குக் கொடுத்தது. கடவாய்ப்பல் வலியால் சீறியது. “கடி, மெல், அரை’ என்ற மற்றொரு பொருளும் இருக்கும். அந்த மெல்ல’ என்ற வார்த்தை தேவரை உண்மையாலும் குலுக்கியது. பழமொழியே வேறுமாதிரி புரிந்தது.

வீரமான காட்டு இனம் ஒன்று நாகரீக சமுதாயத்தில் இணைந்து பணிவான விவசாய சமுதாயமாக உருவெடுத்தது என்பதுதான் அந்தப் பழமொழியின் கரு என்று நினைத்திருந்தவர் இப்போது அவர் கடவாய்ப்பல் வலியால் தோன்றிய மற்றொரு அர்த்தத்தில் பார்த்தார். வெளி சமுதாயத்தின் நீதி களுக்கு வளைந்து கொடுக்காமல் தங்களுக்கே உறிய கட்டுப்பாடுகளைக் கொண்ட தங்கள் கூட்டத்தை இந்த சமுதாயம் சோற்றுப் பருக்கைகளை மெல்வது போல ‘மென்று’ வெள்ளாளனக ஆக்கியாதோ? என்ற புதிய கேள்வி அவருக்குத் தோன்றியது.

வெள்ளாளராகா ஆனதால் தாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோமா? இந்த சமுதாயத்தின் நீதிப்படி தங்களின் வாழக்கையை அமைத்துக் கொண்டதுதான் இதற்கெல்லாம் காரணமா? தாய், தங்கையை கவனிக்க மறுக்கும் பிடிவாதமான மனது தனக்கு எப்படி வந்தது? தன் பாட்டன், முப்பாட்டன் வழியில் நடந்திருந்தால் வாழ்க்கை சரியாக அமைந்திருக்குமோ? விடைகள் கிடைக்காத கேள்விகள் பொழிந்துகொண்டிருந்த அந்த மழையில் தேவர் நடுங்கிக்கொண்டிருந்தார். எப்போதும் புலியைப்போல பாயும் தன் மனது இப்போது மழைக்கு பயந்த பூனையைப்போல சோர்ந்துவிட்டதா?

கிர்ரென்று தலைக்கு ஏறும் ரோசம் இப்போது ஏன் பொங்கி எழவில்லை என்பது தேவருக்குப் புரியவில்லை. மனதைப் போலவே தேகமும் நீரின் ஆழத்தில் இறங்கி எழமுடியாமல் பாரமானது. தன்னில் இருப்பதை எல்லாம் ஆகாயம் பூமியின் மேல் பொழிவதைப் போல, தன் நெஞ்சுக் கூட்டில் மழைத் தண்ணீர் நுழைவது போலத் தோன்றி தேவர் மூச்சை வேகமாக இழுத்தார். அவர் இரண்டாவது மகனைப் பார்த்தபடி “மருமகனே, வந்து காப்பாற்றுங்கள், என்னை இவர்கள் கொன்றுவிடுவார்கள்”, என்று அவர் பலத்தை எல்லாம் கூட்டிக் கதறினார். கந்தவேலனின் கண்களை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். தன் தம்பியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டாம் மகன் கந்தவேலன் சட்டென்று திரும்பினான்.

மூன்றாமாவன் சொன்னான்: “பாத்தயா, இவனுக்கு வக்காலத்து வாங்காதேன்னு நான் உங்களுக்கெல்லாம் சொன்னது சரிதானே?”

“வாடா, இன்னைக்கு நடக்கறது நடக்கட்டும்…நான் கால பிடிச்சுக்கறேன், நீ செய்யணுமுன்னு நினைச்சத செய்” என்றவன் தேவரின் கால்களை ஒன்றாகச் சேர்த்து இறுகப் பிடிதுக்கொண்டான். தேவர் எழ எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. கால்களை இறுகப் பிடித்திருக்கிறான் இரண்டாமாவன், கைகளுக்கு பலம் போதவில்லை. மூன்றாமாவன் “ஏய்..” என்றுகொண்டே தேவரின் கைகளை தனது கால்களால் மிதித்துக்கொண்டே அவர் நெஞ்சின் மீது ஏறி உட்கார்ந்தான். தன் வெள்ளைச் சட்டையை தூக்கி பெல்டில் சொறுகியிருந்த கத்தியை சர்ரென்று எடுத்து தேவர் கழுத்தை ரப்பென்று அறுத்தான்.

இரத்தம் பீய்ச்சி அடித்தது. தேவரின் முதல் மகன் ஓடிவந்து மூன்றாமாவனை எட்டி உதைத்தான். கூட்டம் ஓ என்று கத்திக்கொண்டு ஓடிவந்தது. தேவர் மனைவி, பெண் பிள்ளைகள் இரண்டாமாவனை அடித்து நொறுக்கினார்கள். நான்காமாவன் ஓடிவந்து இரண்டாமாவனை கருவேலா மரத்தின் கூர்மையான கட்டையால் ரப்பென்று சாத்தினான். இரண்டாமாவன் தலையிலிருந்து இரத்தம் புஸ்ஸென்று வெளியே பாய்ந்தது.

மூன்றாமாவன் முதலாமவனின் வயிற்றைக் கிழித்து ஜொம்பனஹள்ளிப் பக்கம் ஓடினான். நான்காமாவன் அவனை துரத்திக் கொண்டு போனான். அவன் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தான். அது சம நிலம். முன்பு அது பெரிய புல் புதராக இருந்தது. அங்கேதான் மகாராஜாவின் குதிரைகள் வந்து மேயுமாம். மைசூர் பகுதியிலேயே அதிகம் புல் வளரும் இடம் அதுவாகத்தான் இருந்ததாம். அப்படிப் பட்ட வரலாறு உடைய நிலத்தை மிதித்துக் கொண்டு அவன் ஓடிக்கொண்டிருக்கிறான். தான் மிதித்துக் கொண்டிருப்பது மழைத் தண்ணீரையா இல்லை ஓடும் இரத்த வெள்ளத்தையா? என்று கலவரமடைந்து அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான்.

தன் அப்பா இந்நேரம் இறந்திருப்பார், உயிருடன் இருந்தாலும் இருக்கலாம்! தலையைத் வெட்டியிருந்தாலும் எழுந்து அதை ஒட்டிக்கொண்டு நின்றாலும் நிற்பவன்! ஏ, முடியாது. இன்று அவன் கண்களில் தைரியம் தெரியவில்லை, தோற்று சோர்ந்ததுபோல இருந்தது.. உயிர் பிழைக்க சாத்தியமில்லை. ஆஸ்பத்திரிக்கு யாராவது தூக்கிக்கொண்டு போனாலும் பிழைக்கமாட்டான்.

ஏனென்றால் ஆஸ்பத்திரி இருப்பது இங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்..அப்பாடி…ஜெயித்தேன், ஜெயித்தேன், என்னை மிதித்தவனை, துன்புறுத்தியவனை கழுத்தை அறுத்து எதற்கும் அஞ்சாதவன் நான் என்று இந்த உலகிற்கு காட்டிவிட்டேன்….எவ்வளவு முயற்சிகளின் தோல்வி இன்று வெற்றிக்கு வழிவகுத்தது….பள்ளி, மருத்துவமனைகள் இல்லாத இந்தக் காட்டான் ஊரில் எங்களைக் கொண்டுவந்து போட்டு எங்கள் வாழ்க்கையை சீரழித்தான்…சூரியன் உதிப்பதிலிருந்து மூழ்கும்வரை கழுதையைப் போல உழைக்கவேண்டும்…செலவிற்கு கொடுப்பதோ நூறோ இருநூறோ…ஆனால் பெண் பிள்ளைகளுக்கு!? உழைத்தது எல்லாம் அவர்களுக்கு…கேட்கக் கூடாது.

ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது….எவ்வளவு நாள்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருப்பது…எதிர்த்துப் பேசினால் அடி, உதை. வாரங்கள் கடந்தாலும் எழமுடியாதபடி வலி! இதற்கெல்லாம் பதிலாக அன்று குத்தியது என் அவசர முயற்சி…ஆனால் இன்று…எனக்குத் தெரியும், அவன் இன்று எதிர்த்து நிற்க முடியாது என்று ..ஹ..ஹ..ஹ…..

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான் .

மழை ஊற்றிக்கொண்டே இருந்தது. தொலைவில் ஓநாய், யானை, நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. காலம் நத்தையைப் போல ஜொள்ளு விட்டுக் கொண்டு ஊர்ந்து முதுகின் மேல் மழைக் குன்றை தூக்கிக்கொண்டு நகர்ந்துகொண்டிருந்தது.

நீல ஆகாயத்தின் கழுகு மேகங்களுக்குள் அந்த மனிதனின் உருவம் கலந்துகொண்டிருந்தது.

வீராச் சாமி தேவர் மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொட்டிருந்தார். தொண்டையைக் கீறிக்கொண்டு பல்வலி வெளியேறிக்கொண்டிருந்தது.

***

நித்யையின் நாடகம் ( சிறுகதை ) / எல்.ஜே. வயலட்

images (11)

ஐந்திரரான புத்தர் தோட்டத்தில் நடைபோட்டுக்கொண்டிருந்தார், பின்னால் ஒரு நாரையும் ஆனந்தரும் கூடவே வர, புதிதாய் சங்கத்தில் சேர்ந்த பிக்குணியானவள் வினவினாள், பிரபுவே எத்தனை பாதைகள் எக்கச்சக்க பாதைகள். புதிர்ப்பாதைகளில் ஆகத் தந்திரமானது நேராய் நீண்டிருக்கும் ஒரு எலிவேட்டட் எக்ஸ்பிரஸ்வே என்பது உண்மைதானா?
*
கடவுளற்ற நிலம். நித்யை முதல்முறையாக என்னிடம் சொன்ன வார்த்தைகள். அவள் மறுபடி சொன்னாள், கடவுளற்ற நிலம்.
*
மேடை காலியாக இருக்கிறது. உவள் தன் டிரம் செட்டை மெதுவாக கொண்டுவந்து செட் செய்ய முயன்றுகொண்டிருக்கிறாள். ஃபோனில் ரெனி சொன்னது மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, You have to snap out of this di. ஆகத்தான் வேண்டுமா. அவ்வளவுதானா இது. இன்றும் அவள் வருவாளா. அதற்குள் அங்கங்கே சிலர் வந்து சீட்டுகளைத் தேடி உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். ரெனி இன்னமும் வரவில்லை.

உவளுக்கு தவறான இடத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் சமயங்களில் முழு வாழ்க்கையுமே அப்படித்தான் தோன்றுவதால் அதை உவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. திடீரென்று மேலிருந்து எதுவோ உவளருகில் விழுகிறது. செத்துப்போன ஆட்டுக்குட்டி. அல்லது வைக்கோல் நிரப்பி தைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் உடல். உவளுக்கு அதை சரியாக கவனிக்கவும் நேரம் அளிக்கப்படவில்லை. பதறி வழுக்கி டிரம்கள் சிதறிக்கிடக்க விழுந்துகிடக்கும் இவள் மேல் மட்டும் ஒளி, மற்ற விளக்குகள் அணைக்கப்படுகிறது. அங்கங்கே இருந்து சில கைத்தட்டல் ஒலிகள் கேட்கின்றன.

*

டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன். மஞ்சள் டிஷர்ட் அணிந்த ரன்பீர் கபூர் தன் நண்பனோடு பெரிய புதிய சிப்ஸ் பாக்கெட்டை விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார். குண்டு நண்பன் எனக்கு எனக்கு என கேட்க ரன்பீர் சிப்ஸ் பாக்கெட்டை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.

நண்பனும் ரன்பீரும் தங்கள் சிறிய விண்கலத்திலிருந்து பெரிய விண்கப்பலைப் பார்த்துக்கொண்டே மீண்டும் அதைக் கைப்பற்றுவதைப் பற்றி பேசிக்கோன்டிருக்கிறார்கள். கையிருப்புகளும் உணவும் தீர்ந்துகொண்டே இருப்பதாக நண்பன் சொல்கிறான். ஆயுதங்கள் மிகச் சொச்சமே மீதமிருக்கின்றன. இருந்தாலும் முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.

கிளம்பிய ரன்பீரைத் தடுத்துவிட்டு நண்பன் விண்கப்பலுக்குச் செல்கிறான். டிவியையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். விண்கலத்திலிருக்கும் கனெக்‌ஷன் லிங்க் எப்போது ஆக்டிவேட் ஆகும். கப்பலில் நண்பனுக்கு என்ன ஆகுமென ஸ்க்ரீனையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். உடைபட்ட சிக்னல் சத்தங்களோடு திரை ஒளிர்கிறது. நண்பனுக்கு பதிலாக அவனது உறைந்த உடல். நித்யை சிரித்துக்கொண்டிருக்கிறாள். அவள் முடியிலிருக்கும் கறுப்புநிற மயிலிறகுகள் சிரிப்பிற்கேற்ப அசைகின்றன. இப்போது நான் சோகமாக முடியாது. கடமையைச் செய்தே ஆகவேண்டும்.

கலத்திலிருந்து வெளியே வருகிறேன். மிக அருகாமை கிரகம் கூட பல ஒளியாண்டுகள் தூரம். நான் தனியாக கப்பலுக்குப் போனாலும் எந்தப் பயனும் இல்லை. திரும்பிப் போயாக வேண்டும். வீட்டிற்கு. மிகநீண்ட தூரம்.

*

தலைவலி. ட்ரம் ஸ்டிக்குகளை இறுக பற்றிக்கொண்டேன். சுற்றி ஓருமுறை தெளிவாகப் பார்த்துக் கொண்டேன். மேடையில் எனக்கு கொஞ்சம் முன்னால் நின்றபடி ரெனி பாடத் தயாராக இருந்தான். ஏ.பி.யின் பேஸ் கிதார் லேசாக அதிர்ந்துகொண்டிருந்தது, பிரபஞ்சத்தின் பின்னணி இசை. அறுபதுபேர் இருக்க்கூடிய கூட்டம். சிலர் இருக்கைகளைவிட்டு மேடைக்கு அருகிலிருக்கும் திறந்தவெளியில் நின்றுகொண்டிருந்தனர். நித்யை அதன் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தாள். கடவுளற்ற நிலம், அவள் சொன்ன வார்த்தைகள் மனதில் சுழன்றுகொண்டிருந்தன. பெரிய கச்சேரியொன்றில், மேடையில் எங்கிருந்தோ வந்தமர்ந்த வெள்ளை புறாவை கையில் ஏந்தியபடி ராபர்ட் ப்ளாண்ட் நிற்கும் புகைப்படம் ஞாபகம் வந்தது. கடவுளற்ற நிலம், ரெனி பேசி முடித்திருந்தான். முதல் பாடல். மெல்லிதாக தொடங்க வேண்டும். 1. . . 1 – 2. . . 1. . . 1 – 2. . . . 1. 1. 1. 2. 2. . . ஒவ்வொரு அடிக்கும் எதிரிலிருக்கும் காட்சி அதிர்ந்தது. பின் ஒவ்வொருமுறையும் அதிரும் காட்சியில் நடுவே நிலையாய் நித்யை. அவள் புன்னகை. கடவுளற்ற நிலம். இரண்டாவது பாடலின்போது கண்களை இறுக மூடிக்கொண்டேன். நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை ஒழுங்கற்று பல திசைகளிலிருந்து நேர்க்கோடுகள் தொடங்கி நிறைந்தன. அதிலும் ஒரு ஒழுங்கைக் கண்டபோது. . . . கண்களைத் திறந்தேன்.

நித்யையைக் காணவில்லை. தொடர்ந்து வாசித்தேன். அதிர, அதிர உடல் அதிர்ந்தது. எழுந்து எழுந்து உட்கார்ந்தேன். கண்விழித்தபோது ரெனி ஓங்கி அறைந்தான், பின் இறுகக் கட்டிக்கொண்டான். அப்படியே அமர்ந்துகொண்டு அவன் முதுகில் விரலால் தாளமிட்டேன். . . . 1 – 2. . . 1. . . 1 – 2. . . . பின்னால் ஏ.பி நின்றுகொண்டிருந்தான். மான்ஸ்டர் என்று சொல்லி சிரித்தான்.

அவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு இடத்தில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. ஏ.பியும் வந்திருந்தான். அவனும் நானும் ஒருவரின் கண்களை ஒருவர் பார்த்தவுடனே பட்டென விலகிக்கொண்டோம். நான் பதட்டமாக தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டிருந்தேன். ஏ.பி பார்த்துவிட்டு ஓய் பூசணி என்று ஓடிவந்தான். ஃபோன் பண்ணா எடுக்கமாட்டியா என தலையில் கொட்டினான். கால்களை மாற்றி மாற்றி வைத்து நின்றேன். ஃபோனை எடுத்துப் பார்ப்பதும் மறுபடி பைக்குள் வைப்பதுமாக இருந்தேன். என் மழை நீ
நீ மழை
நீ வெயில்
இலையுதிர் நீ
நீ மழை மழை நீ நீ மழை
வெயில் நீ
வெயில் நீ
நீ வெயில்
நீ ர்
வ தி
ச யு
ந் லை
த இ
ம் நீ
மழை நீ
என் மழை நீ நீ மழை நீ மழை மழை நீ . . . . . . . . . . . . . . . .

நித்யையை அதன்பிறகு நீண்டகாலம் பார்க்கவில்லை. ஏ.பி மேலே படிக்க என்று யூ.கே போய்விட்டான். ரெனியைப் பார்ப்பது கொஞ்ச கொஞ்சமாக குறைந்துகொண்டிருந்தது. காதுமடல்களுக்கு மிக அருகில் அவள் தோன்றும் கனவுகளால் பதற்றமுற்று நள்ளிரவுகளில் விழித்தேன். பணப்பிரச்சனைகளற்ற ஒரு நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறாய், கொஞ்ச நாள் பைத்தியக்காரத்தனங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு அமைதியாய் இரு என்றாள் அக்கா.

தினம் பேசவில்லை, ஃபேஸ்புக் அப்டேட் போடும் நேரத்தில் எனக்கு மெஸேஜ் செய்திருக்கலாம் போன்ற எதுவும் ரெனியை பாதித்ததாக தெரியவில்லை. அவனிடம் அவ்வாறான யோசனைகள் எதுவுமில்லை. நேரில் சந்திக்கும்போது வெகு எளிதாக கட்டியணைத்து இயல்பாக பேசத் தொடங்கிவிடுகிறான், நானும் சிறிது நேரம் அலங்கமலங்க விழித்து பின் அதையே தொடர்வேன். ஒருமுறைகூட நித்யையைப் பற்றிப் பேச்செடுக்கவில்லை. பின் அவனைப் பார்ப்பதும் குறைந்துபோனது.

*

பெரிய கடவுள்களைப் பொறுத்தவரை எல்லா நிலமும் அவர்தம் நிலமே.
வெள்ளை, நீலம், கருப்பு என மூன்று வண்ணங்களில் உடையணிந்திருந்த தடிமாடுகளைப் போலிருந்த மூவரும் அன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பூமியின் மேல் ஆகாயமிருந்தது. வெள்ளை ஆடை அணிந்திருந்த மூத்தவன் நிலமும் அதன் பலத்தில் நிற்கும் ஆகாயமும் தமதென்றான். நீல உடை அணிந்திருந்தவன் நீரும் அதில் மிதக்கும் நிலமும் தமதென்றான். இளையவன் சிரித்தபடி, நிலமும் அதனுள்ளிருக்கும் வெப்பமும் தமதென்றான். சண்டையின் ஆறாம் நாள்தான் அவர்கள் அவளை கவனித்தனர். அந்த பெரும் பரப்பில் சண்டையைக் கவனியாது தன் நினைவிலிருந்து எடுத்து தாவரங்களை நட்டு, எங்கோ செல்லும் மேகங்களை நிறுத்தி நீர்விட சொல்லி ஆணையிட்டுக்கொண்டிருந்தாள்.

*

உன்மேல் பூனைவாசம் அடிக்கிறது, அதுதான் அவள் கடைசியாக என்னிடம் சொன்னது.
நித்யை ப்ளீஸ், எல்லாரும் சொல்லீட்டாங்க. நீ வெறும். இல்ல. நீ என்னவா இருந்தாலும் சரி, என்னால இதுக்குமேல முடியாது. நித்யே ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ். என்னைச் சுற்றி ஒளி நிறைகிறது. எங்கே போனாள் அவள். யாரோ என் கையைப் பற்றி இழுக்கிறார்கள்.

பின்னாலிருந்து பஸ் ஹாரன் சத்தம் மெல்லத் தொடங்கி இரைகிறது. எவ்வளவு நேரமாக கண்களை மூடிக்கொண்டு நடுரோட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். பஸ்ஸிலிருந்து கண்டக்டர் எட்டிப்பார்த்துத் திட்டுகிறார். நிறைய பேர் ஜன்னல்களிலிருந்து தலைநீட்டி என்னையே பார்க்கிறார்கள். ஓரமாக இழுத்தவர் என்னமா ஆச்சு என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். என்னை அறியாமல் அவளைத் தேடுகிறேன். அவள் அந்த பஸ்ஸில் ஏறுகிறாள், என்னைப் பார்த்து ஏமாற்றமடைந்தவளாய் தலையாட்டுகிறாள். பஸ் தூர செல்லும்வரை பார்த்துக்கொண்டே இருக்கிறேன், அவள் என் பக்கம் திரும்பவில்லை. நித்யை, ப்ளீஸ்.

*

ரெனியின் ஆய்வுப்படிப்பின் கள ஆய்வுக்காக அந்த கிராமத்தில் ஒரு கிழவியின் வீட்டில் தங்கியிருந்தோம். அந்த வீட்டில் கிழவியையும் அவள் பேரனையும் தவிர யாருமில்லை. அந்த வீட்டின் ஒரு மூலையில் நான்கு பொம்மலாட்ட பொம்மைகள் சரித்துவைக்கப் பட்டிருக்கும். முன்று கொஞ்சம் உயரமாகவும், வெள்ளையாகவும் இருந்தன. அவை பளபளப்பாக இருந்திருக்கக்கூடிய துணிகளில் வெள்ளை, நீலம், கருப்பு என ஆளுக்கொரு நிறத்தில் ஆடையுடுத்தி இருந்தன. அணிகளும் பூட்டப்பட்டிருந்தன. நான்காவது பொம்மை கொஞ்சம் மங்கலான நிறத்தில் சிவப்புத் துணி சீலைபோல போர்த்தப்பட்டு இருந்தது.
அவற்றை சின்னப்பையன் எப்போதாவது எடுத்து விளையாடிக்கொண்டிருப்பான்.

அவன் பள்ளி நண்பர்களுக்கு கதை சொல்வான். ரெனியுடன் அங்கே தங்கியிருந்தபோது கவனித்தேன். அந்த குள்ள பொம்மைதான் எப்போதும் கோமாளி, அதன் தலையில் இலை தழைகளை சொருகிவைப்பான்.
வயிற்றைச் சுற்றி துணிகள் கட்டி பெரிய தொந்தியாக்கியிருப்பான்.

ஏய் அம்பது கோழி எம்பது முட்ட வேகாமத் திம்பேன்
அம்பது கோழி எம்பது அப்படியேத் திம்பேன்
ஆறண்டா சோறு நூறண்டா காபி
பத்தாமப் போச்சே, பத்தும் பத்தாமப் போச்சே
சத்தோம், என்ன சத்தோம், சைலன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்
. . .

அதே பொம்மையை வெறும் சிவப்புத்துணியை சுற்றி கிழவி ஒருநாள் ஒப்பாரி வைத்தாள்
சீலையில சிங்காரி
சிறுத்தப் புலி கோவம் உண்டு
சீமயில என்ன கண்டு
சிறுக்கி அவ போனாளோ
சிரிச்சதில கண்ணுபட்டோ. . .

பாடிக்கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் நிறுத்திவிட்டாள். நானும் அப்படியே நின்றுகொண்டிருந்தேன். திரை மெல்ல அவிழ்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சட்டென எல்லா பக்கமும் தட் தட்டென்ற சத்தத்துடன் விழுகிறது கனத்த திரை. எங்கும் இருட்டு. கையை நீட்டி எல்லா பக்கமும் தேடுகிறேன். ஆனால் திரையோ எதுவுமோ கையில் படவில்லை.

வெற்று மேடை. என் மேல் மட்டும் ஒளி விழுகிறது. எங்கோ தூரத்திலிருந்து. கனத்த பாதங்கள் என்னைச் சுற்றி நடக்கும் ஒலி. யானைக் குட்டியொன்று இரண்டு கால்களில் மெல்ல எதையோ யோசித்துக்கொண்டே நடப்பதுபோன்று. தம் தம் தம் தம் தம். அப்போதுதான் பின்னால் மங்கலாகத் தெரியும் உருவத்தைக் காண்கிறேன், அதன்மேலும் ஒளி, யாரோ நிற்கிறார்கள். நித்யை நீயா, இம்முறை நான் விலகி ஓடுவதாயில்லை. வேகமாக அதனை நோக்கி ஓடுகிறேன்.

கண்ணாடியில் தொம்மென இடித்துக்கொண்டு விழ தூரத்திலிருந்து சிரிப்பொலிகள் கேட்கின்றன. சிரிப்பு நிகழ்ச்சிகளுக்கென பதிவு செய்யப்பட்ட சிரிப்பொலிகள், என்ன நகைச்சுவைக்காக இப்படிச் சிரித்திருப்பார்கள் அவர்கள். கண்ணாடியை மறுபடி பார்க்கிறேன். குழப்பத்தோடு உற்றுநோக்குகிறேன். மறுபடி சிரிப்பொலிகள். கண்ணாடிக்குள்ளிருந்து எதிர்ப்பக்கம் தூரமாக பார்த்து வாயில் விரல்வைத்து கோமாளி எச்சரிக்கிறான். சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்…. என்ன சத்தோம், தித்தோம். . .

தத்தோம் தித்தோம் திகதிக யப்பப்பப்போ… யம்மோ, ஒரு எடத்துல ஆட மாட்டியா தாயி, இதென்ன காலா ஒடச்சுவுட்ட காவாயா, எல்லா தெசயிலயும் பாயுது. தத்தத்தத்த. . . .

மறுபடி கைத்தட்டல் ஒலிகள் கேட்கின்றன. முடிந்ததா. என்னதான் நடந்ததென பார்வையாளர்களைக் கேட்கலாம் என்றால் எல்லோரும் நான் வெளியேவருவதற்குள் ஒரு பஸ்ஸில் ஏறிவிட்டிருக்கின்றனர். பஸ் கிளம்பிவிட்டிருந்தது. சில நிமிடங்கள் பயனற்று தெரிந்த முகங்கள் ஏதுமிருக்கிறதா என தேடியபிறகு உள்ளே கோமாளியைத் தேடி ஓடுகிறேன். நித்யை ப்ளீஸ்.

*

ஸ்பேஸ் போர்ட்டை அன்லாக் செய்வது மிக சிக்கலான ஒரு வழிமுறையாகும். ஒரு பெரிய ஸிப்பின் ஒவ்வொரு பல்லிலும் கால் வைத்து நடப்பதை போல எதுவுமில்லாத வெளியில் செய்யவேன்டும். சரியான பாஸ்வேர்டில் நடந்தால் மட்டுமே திறக்கும்.

வானில் திறந்த போர்ட்டிலிருந்து நான் மேகங்களைக் கடந்து தரையை நோக்கி விழுந்துகொண்டிருக்கிறேன். மிக லேசாக நான் மிதந்து தரையில் விழுகிறேன். அருகில் இருந்த நீண்ட குழலுடைய துப்பாக்கி போன்ற ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தூரத்திலிருந்த மலையை நோக்கி ஓடுகிறேன். இங்கிருந்து பெரிய சிலையின் பாதங்கள் மட்டும் லேசாகத் தெரிகிறது. ஊர்வரைப் போனால்தான் நீட்டிப் படுத்திருக்கும் சிலையின் கைகளைப் பார்க்கமுடியும்.

நான் ஓடுகிறேன். பின்னால் உருண்டுவரும் பெரிய கல் உருளைகளை கையிருக்கும் ஆயுதத்தால் சுட்டபடி. தரையிலிருந்து பல அடி உயரம் வரை எளிதாக பறந்தும் மிதந்தும் ஓடுகிறேன். எதிலோ இடித்துக்கொண்டேன். அல்லது எதனாலோ தாக்கப்பட்டிருக்கிறேன். கைகள் கட்டுப்பாடிழந்து விரிய சுழன்றபடி கீழே விழுகிறேன்.

கண் விழிக்கும்போது குளக்கரையிலிருக்கிறேன். சிலை தலைக்கு மடக்கிவைத்துப் படுத்திருக்கும் கைமுட்டிக்கு அருகிலிருக்கும் விகாரையின் குளம். நிமிர்ந்துபார்த்தால் சிலையின் தலைமுடி தெரியவில்லை. மேகங்கள் மறைத்திருக்கிறது. நித்யையும் நண்பனும் அருகில் இருக்கிறார்கள். ஆனால் எதுவோ சரியாக இல்லை. நான் சுற்றிமுற்றி பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அவர்கள் வேறு எதையோ என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் விகாரையின் படிகளில் இருந்துவரும் கறுப்பு நிறப் பூனை. அதன் மின்னும் ரோமங்களில் சிறிய வெள்ளைப் பனித்துளிகள் ஒட்டியிருக்கின்றன.

*

ஏய் பூசணி. . .

நீங்க யாருமே என்ன நம்பவேயில்ல ஏபி, அத்தனை நாள். அத்தனை நாள் அவ நம்ம முன்னாடியே இருந்தப்ப. . .

இட்ஸ் ஓகே என்றபடி கட்டிக்கொள்கிறான். லேசாக அழுதிருப்பான் போலிருந்தது. அவன் மறுபடி யூகே செல்வதைப் பற்றிப் பேசத் தொடங்குகிறோம்.

*

புத்தர் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து நடக்கிறார். நாரையும் அவரைத் தொடர்கிறது. பின்தொடரத் தொடங்கிய ஆனந்தர் ஒரு கணம் தயங்கி அவளிடத்தே வருகிறார். துறவியே கேள், பதிலில்லாத கேள்விகளைப் பின்தொடர்தல் என்பது கட்டிமுடிக்கப்படாத எலிவேட்டட் எக்ஸ்பிரஸ்வேயில் எண்பதில் செல்வதைப் போன்றது.

•••