Category: இதழ் 132

தாயுமானவள். / வயோதிபமும் சேரியலிஸ சிந்தனைகளும். பகுதி – 4 / பொ.கருணாகரமூர்த்தி ( பெர்லின் )

97fbfd5231ea96644baecb1bc389335f

Herzogin- Luise Haus எனப்படும் பராமரிப்பகத்தில் அன்று எனக்குப்பணி. அதன் பொறுப்பாளர்கள் Lenz என்கிற அந்த இளைஞரை எனக்கு அறிமுகப்படுத்தி ‘அவருக்கு வயது 51’ என்றார்கள், நம்பமுடியவில்லை. 8 மிமீ இருக்கக்கூடிய சிறிய தாடி கறுப்பு நிறத்தில் வைத்திருந்தார். கட்டங்களிட்ட துணியில் பிஜாமாவும் ரீ- ஷேர்ட்டும் அணிந்து, முகத்தில் சுருக்கங்கள் இல்லாமலும் இளமையாக அழகனாக இருந்தார். இன்னும் வெள்ளத்துக்கு அள்ளுப்பட்ட வயல்போல தலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணிவிடக்கூடிய அளவிலேயே மயிர்கள் இருந்தன. செபமாலையைப்போல் ஈச்சம்பழப்பருமனில் கருமணிகள் கோர்த்த மாலையில் எனாமலில் இணக்கிய ‘ஓஷோ’வின் பதக்கத்தைக் கோர்த்து அணிந்திருந்தார். சாம்பல்நிற வெளிவட்டமும் நீலமையமுங்கொண்ட தேடலுள்ள காந்தியான கண்களால், என்னை நேராகப் பார்த்துப் பேசினார். பொழுதைவிரட்ட சிறுவர்களைப்போல இணைவலையில் ஓராயிரம் விளையாட்டுக்களைத் தரவிறக்கி வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்.

அவரது அறையில் பிரதானவாசலிருந்த பக்கம் தவிர்த்து மற்றைய பக்கமெல்லாம் கிளாஸிக் வகை (Motor bike) எனப்படும் Harley-Davidson BMW, Motor Guzzi, Honda Goldwing, Norton, Triumph போன்ற பன்னாட்டுத் தயாரிப்புகளிலுமான விசையுருளிகளின் படங்களைப் பெரிய பெரிய சட்டகங்களில் பொருத்தி மாட்டியிருந்தார். அங்கே அவருடன் 20 Harley-Davidson விசையுருளிகளும், இரண்டு BMW, Kawasaki விசையுருளிகளும், Triumph இன் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய விசையுருளியான Rocket III Roadster (2294 cc) எனும் மொடலும் சுவர்களில் ஆரோகணித்திருக்கவும் அவற்றின் மத்தியில் வாழும் Lenz இன் தீவிர விசையுருளிப்பிரியத்தை அவரது சொகுசு அறைக்குள் நுழைந்ததுமே உணர்ந்துகொண்டேன்.

1feb4f03f6206eaa771783c814a0e7a6

விசையுருளிகளின் போட்டிகளுக்கானவைகளை விடவும் சும்மா உல்லாசச்சவாரிகளை விரும்புபவர்களுக்கான இவ்வகை வண்டிகளின் வேகம் அநேகமும் 200 கிமீட்டருக்குள்ளாகக் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும். தவிரவும் உடைஅலமாரியின் பக்கவாட்டில் Vintage எனப்படும் தற்போது தயாரிப்பில் இல்லாத விநோதமான விசையுருளிகளின் படங்கள் இருந்த கலெண்டர்களைத் தொங்கவிட்டு அழகிகளைப்போலும் அவற்றை இரசித்துக்கொண்டிருந்தார். 14 ஆண்டுகள் முன்னதாக அவர் ஒரு விபத்தைச் சந்தித்த நாளிலிருந்து அவரது வலதுகால் கணுக்காலின் கீழே பாதம் முழுவதும் செயலிழந்துபோனது. இப்போது அவரால் விசையுருளிகளை ரசிக்கமட்டுந்தான் முடியும்.

ஆரம்பத்தில் Lenz என்னுடன் மனம் திறந்து பேசுவதற்குத் தயங்கினார். வழமையாக அந்நியர்களுடன் பேசுவதைப்போல காலநிலை, சூழலியல், இயற்கைபோன்ற விஷயங்களுக்குடனேயே எம் உரையாடல்கள் நின்றுகொண்டன. பழைய ரணத்தைக் கிளறுவதைப்போல் அவரது விபத்தைப்பற்றியோ, அவரின் நோய்க்குணங்கள்பற்றியோ நான் அதிகம் அவரிடம் உசாவ விழையவில்லை.

ஒருநாள் அவராகவே “என் 12 வருடாகால விசையுருளி அனுபவத்தில் நான் ஒரு சிறுவிபத்தைக்கூடச் சந்தித்தில்லை” என்றார். “ நீங்கள் மிகவும் கவனமும் விழிப்புமுள்ள ஒரு சவாரிக்காரனாக இருந்திருக்கிறீர்கள் என்பதை நம்பலாம், இருந்தும்…………. ‘இந்த விபத்து உண்டாவதற்கான சூழ்நிலை எப்படி அமைந்தது’ என்றுமட்டும் நான் கேட்டபோது அவர் விபரமாகவே பேசலானார்:

“அதொரு கோடைகாலம், நல்லகாலநிலை மாலையில் என் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது எனக்கு மூன்று அல்லது நான்கு வாகனங்கள் முன்னதாகச் சென்றுகொண்டிருந்த ஒரு ட்ரான்ஸ்போட்டரின் (சிறுசரக்குந்து) மோட்டோரிலிருந்து ஒழுகி வீதியில் விசிறப்பட்ட மசகு எண்ணெயில் எனது பைக் கட்டுப்படுத்த முடியாதபடி வழுக்கியதில் விழுந்து இழுபடுகையில் பின்னால் வந்த சிற்றுந்து என் பாதத்தின் மேலேறி நசுக்கியது. மோட்டோர்பைக் ஆபத்து மிகுந்த வாகனந்தான், ஆனாலும் நான் எந்த விதிகளையும் மீறவோ, தவறோ செய்யவில்லை, எல்லா வியாகூலங்களும் தாமாக என்னைத்தேடி வந்தன” என்றார். அப்படி அவர் விபரிக்கையில் மெல்லமெல்ல அவரது முகமும் காதின் சோணைகளும் சிவந்துகொண்டுவந்தன.

அந்தக் கரிய நாளிலிருந்து மீதி ஜீவனம் உருளியிருக்கையில் என்றாகிவிட்ட அவருக்கு இரத்தஅழுத்தம் அதிகரிக்கும்போதும் மிகை உணர்ச்சிவசப்படும்போதும் ஊனமான அந்தக்கால் அப்போதுதான் அறுபட்டதைப்போல் துடிக்கும். அத்துடிப்பை அவராலல்ல எவராலும் நிறுத்தமுடியாது. துடிக்கவிடாது இறுக்கமாக வார்ப்பட்டிகளால் கட்டினால் தாளமுடியாத வலியாக இருக்குமாம். அதுவொரு ‘மருத்துவ விந்தை’ என்றார்கள்.

அன்று அதற்கும்மேல் விபத்துபற்றிய நினைவிடைதோய்தலை நிறுத்திப் பேச்சை வேறு திசையில் திருப்பினேன்.

*

யாழ் – புன்னாலைக்கட்டுவன் சந்தியில் வாகனத்திருத்தகம் வைத்திருந்த மீசை பாலாவையும் வீராவையும் அகவைகள் ஐம்பதை அணுகுபவர்களும், கடந்தவர்களுமான யாழ்வாசிகள் அநேகமாக அறிந்திருப்பர். மீசை பாலாவைப்போலவே அவர் தோழர் வீராவிடவும் தேய்ந்த தும்புக்கட்டையை நினைவூட்டும் தில்லான் மீசை இருந்தது. அவர்களிடம் Harley-Davidson இனது (Prototype) ஆதிப்பதிப்பான Red Indian Motorbike ஒன்று இருந்தது. சரசாலையிலிருந்து பாலாவும் தோழர் வீராவும் அதை உயிர்ப்பித்து இடிமுழக்கிக்கொண்டு அதன் Side Car இனுள் வீரா இருக்க தம் வேலைத்தலத்துக்கு புத்தூரூடாக வந்துபோய்க்கொண்டிருப்பார்கள். அவர்களது விசையுருளியை ‘புதுவைக்கவிஞர்’ ‘நடமாடும் இரும்புக்கடை’ என்று கிண்டலடிப்பார். பின்நாட்களில் மீசை பாலாவும் மீசை வீராவும் ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்களிடையே ஏற்பட்ட குரோதங்களுக்குப் பலியானார்கள் என்பதுவும் வருத்தத்துக்குரிய ஒரு தகவல்.

அந்த Red Indian விசையுருளிக்கு Shock absorbers எனப்படும் அதிர்வுவாங்கிகள் எதுவும் இல்லை. முன்பக்கமாக ஒரு நெஞ்சுக்கூட்டை ஒத்த சுருள்வில் (Spring) ஒன்று மட்டும் தனியாக மையத்தில் இருக்கும், ஒருவேளை உந்து கிணற்றுக்குள் பாய்ந்தால் அது இரண்டு அங்குலம் இயங்குதோ தெரியாது. அதன் கியரைக்கூட கார்களைப்போலவே கைகளால்தான் மாற்றவேண்டும், கிளட்சையும் காலினாலேயே மிதிக்கவேண்டும்” இராணுவத்தேவைக்காக அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பலவகை வாகனங்களில் அதுவுமொன்று என்றும், முழு இலங்கையிலும் அவை மொத்தமும் 10 விசையுருளிகளுக்குள்ளாகத்தான் இருக்கும் என்று இரண்டாம் உலகயுத்தகாலத்தில் இராணுவத்தில் தொழில்நுட்பப்பிரிவிலிருந்த சித்தப்பா சொன்னார்.

எம் கிராமங்களில் சில வயசான மாட்டுவண்டிச் சவாரிப்பிரியர்கள் இருப்பார்கள். ஒருவர் முட்டாமல் தனியாக கோடிக்கேபோக முடியாதவராயினும் சவாரிமாட்டுக்கதையை யாரும் சாமத்தில் எடுத்தாலும், அதிலேயே அம்ர்ந்து கைதடிக் கழுகன்ர பாய்ச்சல், மட்டுவில் மயிலையின்ர எடுப்பு, சங்கானைச் செங்காரியின்ர சீற்றம் என்று பழமைபாடுகளை அவிழ்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

நான் அந்த Red Indian Motorbike இன் அங்கலாவண்யங்கள், விருத்தாந்தங்களைச் சொல்லச்சொல்ல Lenz கண்கள் அகன்று விரியக் கேட்டுக் கொண்டிருப்பார். யாழ்ப்பாணத்துச் சவாரிக்காரர்களைபோல Lenz சுக்கும் இன்னும் Vintage Motorbikes, Cars கள் பற்றிப்பேசுவதற்கு தீராத ஆர்வமிருந்தது. நான்தான் அவற்றைப்பற்றி அவருடன் அளவளாவும் ஒரு மனிதனாக இருந்ததால் என்னுடன் பேசுவதற்கான அவரின் ஆர்வம் நாளடைவில் மெல்ல வளர்ந்தது.

ஆனாலும் அவருக்குத் தன் சொந்தவாழ்வின் பக்கங்களை முழுவதுமாக எனக்குக் காட்டுவதில் இருந்த தயக்கம் நீடித்தது. அதுக்கும் ஏதுவான காரணமில்லாமலில்லை. அந்தளவுக்கு அவர் வாழ்க்கை விநோதமானதாகவும் சிக்கலானதாகவும் கோளாறானதாகவும் இருந்தது.

#

அந்தப் பராமரிப்புமனையில் வதிபவர்களுக்கு பிரதி மாதமும் சிகரெட்டுக்கள், மற்றும் வைன், பியர்போன்ற அல்கஹோல் செறிவு குறைந்த மதுவகைகள் வாங்குவதற்கு அனுமதியுண்டு. தீவிர புகைப்பிரியரான Lenz எப்படியும் தன் இரண்டாவது வாரத்திலேயே தனக்கான பங்குரிமையைத் (Quota) தீர்த்துவிட்டு நுகர்வர் தாமகச் சுருட்டிப்புகைக்கும் பீடியின் கந்தங்கொண்ட மலிவான புகையிலையுடன் அக்கப்பாடுபடுவார்.

அடுத்தவாரம் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவரை வசியம்செய்ய ஒரு Malboro பாக்கெட்டும் அவருக்கு விருப்பமான Club-mate ஒரு குப்பியும் Red Bull சக்திப்பானகக்குவளையும் வாங்கிக்கொண்டுபோனேன். அவரது முகம் ஏகத்துக்கு மலர்ந்தது. சம்பிரதாய முகமன்கூறிவிட்டுக் குசலம் விசாரிக்கையில் நான் நலமா மனைவி பிள்ளைகள் சுகமா என்றவர், “உங்களுக்கு மூன்று மணம் புரிய அனுமதி உண்டு என்ன” என்றார். அவர் என்னை ஒரு இஸ்லாமியராகக் கருதியிருந்ததும் ஒரு வகையில் நல்லதுதான்.

‘ஒற்றையுடன் குத்துமல்லுப்பட்டுக் குறையுயிரிலிருக்கும் பக்கிரிக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. ஆனாலும் வேதாளத்துக்குக் கிடைத்ததைப்போலும் இச்சிறு கொம்பைப்பிடித்தே ‘அவரைக் கொஞ்சம் கிளறலாம்’ என்றும் பட்டது. அன்றைக்கு விசையுருளிகள் பற்றியகதைகளைத் தொடவேயில்லை. என் மூன்று மனைவிகள் பற்றியான சரடுகளை அவிழ்த்துவிட்டேன்.

chf001

“அந்தச் சலுகையை முற்றாகப் பயன் செய்யவேண்டும் என்ற பெருவிருப்பில் நானும் மூவரை மணந்தேன், ஏதோ அவர்கள் மூவரிடமிருந்தும் தப்பிப்பிழைத்து இதுவரை வாழ்ந்துவிட்டேன்” என்றுசொல்லிப் போலிப் பெருமூச்சொன்றை இழுத்துவிடவும் அவர். என்னை ஒரு ‘தேவதூதனைப்போல’ அதிசயத்துப் பார்த்தார்.

“ஆரம்பத்தில் என் 24 இல் இலங்கைப்பெண் ஒருத்தியை என்பெற்றோரின் விருப்பத்தில் திருமணம் செய்துகொண்டேன். பின் கடலில் மாலுமியாகச் சேர்ந்து கடலோடி பிறேஸிலில் 2 வருடங்கள் வாழநேர்ந்ததால் சகமாலுமி ஒருவனின் சகலையைக் காதலித்து மணமுடித்தேன்” என்று முடிப்பதற்கிடையில் “இப்போது அவள் எங்கே” என்றார்.

“அவள் பிறேஸிலில் சுகமாக வாழுகிறாள்” என்றேன்.

“அப்போ மூன்றாவது………………..” என்று இழுத்தார்.

“ என் மூன்றாவது மனைவியைத்தான் ஜெர்மனியில் திருமணஞ்செய்தேன் ”

“ அவள் ஜெர்மன்காரியா……..”

“ பிறப்பால் பெர்ஸிக்காரி, வளர்ப்பால் ஜெர்மன்காரி…………… இப்போது என்கூட வாழ்பவளும் அவள்தான் ”

Lenz இன் முகபாவத்திலிருந்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை இப்போது ஊகிக்கமுடியவில்லை.

“மூன்று கோட்டான்களும் ஒன்று சேர்ந்தால் உனக்கு ஏகப்பட்ட மனவழுத்தத்தை உண்டு பண்ணுவார்களே.” என்றார்.

“அதுதான் மூன்றையும் ஒன்று சேரவே விடமாட்டேனே……………….. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்கில் வைத்திருப்பது பின் எதுக்கு?”

சிரித்தார்.

“அப்போ பிள்ளைகள்………………………?”

“மூத்தமனைவிக்கு ஒன்று, அவள் அங்கே இயற்கை அறிவியல் படிக்கிறாள்

பிறேஸில்காரிக்கும் ஒன்று, அவளும் அறிவியல் மாணவிதான்.

பர்ஸிக்காரிக்கு இரண்டு”

“அதெப்படி இவளுக்கு மட்டும் இரண்டு”

“இவளுடன்தானே நீண்டகாலம் கட்டிலைப்பகிர்ந்துகொண்டேன் அதனால்”

‘ஓ’……………வென்று அதிசயப்பட்டார்.

“இந்த மூன்று பெண்களிடமும் உங்களைக் கவர்ந்த விஷயங்கள் என்ன?”

“ நான் இயல்பிலேயே நுட்பமான அழகியல் ரசனைகொண்டவன்……… இவர்கள் மூவருமே அசாதாரண அழகிகளாக இருக்கிறார்கள்……. இரண்டாவதாக என்னைவிடவும் குடும்பத்துக்காக அதிகம் தியாகங்கள் செய்யத்தயாராக இருக்கிறார்கள் ”

“ அவ்வகைப் பெண்களை நான் இன்னும் சந்திக்காதது……… என் கர்மாவோ என்னவோ…………”

ஐரோப்பியர்களில் சிலரும் இப்போது கர்மாவைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“ என்ன செய்யலாம்… ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை வேறுமாதிரித்தானே இருக்கிறது………”

‘அவரது பிரச்சனையின் பக்கமாக வந்துவிட்டேன்’ என்பது புரிந்தது. ஆனாலும் அவர் இன்னும் தன்கதையைச் சொல்வதிலான தயக்கத்துள் தவித்தார். ‘என் சிக்கலான கதையை எதுக்கு இவனிடம் விளம்பவேண்டும்’ என்றுகூட நினைக்கலாம்.

மோர்ஸ் கோட்டில் தந்தி அனுப்புவதைப்போல ‘எனது பிரச்சனையைப்போல் யாருக்கும் இருக்கமுடியாது அவ்வளவு விசித்திரம் அது’ என்றார் வார்த்தைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக வந்து விழுந்தன, அதில் பரிச்சயமுள்ள எனக்கே அவற்றைப் பூரணமாகப்பொருத்தி உருப்படியான பனுவலாக்க மேலும் உழைப்பு வேண்டியிருந்தது. Lenz மேலும் கொஞ்சம் இணக்கமாக நெருங்கிவருவதைப்போல இருந்தது. அவருடனான அன்றைய என் பணிப்பொழுது நிறைவடைந்தது நான் புறப்படுகையில் ”Red Indian விசையுருளிபற்றிச் சொன்னதுக்கு நன்றி” என்றார்.

‘ அப்போ என் மனைவிகள் பற்றிச்சொன்னதற்கு இல்லையா’ என்றொரு ‘கொக்கி’யைப்போட்டேன்.

சிரித்தபடி “ பதிலுக்கு என் வாழ்க்கைபற்றிச் சொல்லவேண்டியதுதான்………. ஆனால்……………….எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதுதான் தெரியவில்லை” என்று விடைதந்தவர்

“அதை எனக்குச்சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது” என்றபடி நான் வாசலை நெருங்கவும் “ அடுத்தமுறை பார்க்கலாம் ” என்றார். கட்டை விரல்களை உயர்த்திக்காட்டி விடைபெற்றோம்.

*

அடுத்தமுறை போயிருந்தபோதும் அவருக்குப் பிடித்தமான Marlboro பாக்கெட்டும் Red Bull குவளையும் எடுத்துச்சென்றேன்.

முகமன் சம்பிரதாயங்கள் முடிந்ததும் “குழந்தைகள் என்றால் எனக்கு ஆசை ” என்றுமட்டும் சொல்லிவிட்டு நிறுத்தினார்.

“பெற்றுக்கொள்வதுதானே………….”

“அது அத்தனை இலகுவல்ல…….ஒரு (Backer) வெதுப்பாளனுக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய குடும்பத்தைக்கூடப் பராமரிக்க முடியாமலிருக்கும் எனப்பயந்தேன்.”

“அதுதான் திருமணமானவுடன் உனக்கு வருமானவரியிலிருந்து விலக்களிப்பார்களே…”

“இருந்தாலும் சமாளிக்க முடியாதென நினைத்தேன். திருமணம் என்கிற நினைப்பே என்னைப்பயமூட்டியது.”

“அப்போ செக்ஸுக்கு என்ன செய்தாய்……….” நான் முடிப்பதற்குள் Lenz ஸே தொடர்ந்தார். “இதற்குள் என் அடுக்ககத்துப் பக்கத்து அடுக்ககத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இடையீடு செய்யாது அவரைப்பேசவிட்டேன், தொடர்ந்தார்.

“அவளுக்குப்பெயர் Bertina திருமணமானவள், அவளுக்கு மூன்று வயதில் Mayer என்றொரு பையனும் கணவனும் இருந்தார்கள். நான் அதிகாலை ஒருமணிக்கு பணிக்குப்புறப்பட்டால் ஒன்பது பத்துமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவேன். Bertina பணியெதுக்கும் போகாமல் வீட்டிலிருந்ததால் எல்லாம் எமக்கு வசதியாயிருந்தது. வா என்றவளுடன் படுத்துவிட்டு என்பாட்டுக்கு எழுந்துபோயிருந்தால் பிரச்சனை ஒன்றுமில்லை. அதிக உரிமை எடுத்துக்கொண்டு என் பலம் பலவீனம் ஆசைகள் கனவுகள் எல்லாவற்றையும் முட்டாள்த்தனமாக அவளிடம் முற்றாகக் கொட்டிவிட்டதுதான் பிரச்சனையின் ஆரம்பம். ஒருநாள் “உனக்கு பிள்ளைதான் விருப்பமென்றால் நான் பெற்றுத்தருகிறேன் ஆனால் அதுக்கான பராமரிப்புச் செலவினங்களை நீ தந்துவிடவேண்டுமென்றாள்.

நான் அதனை அவளின் ‘வழமையான வேடிக்கைப்பேச்சு’ என்றே எடுத்துக்கொண்டேன். நாட்கள் செல்லவும் எமது களவொழுக்கக் காலத்தில் அவளின் மாதவிலக்கு தள்ளிப்போனது, ‘நான் உண்டாகி இருக்கிறேன்’ என்றாள்.

எனக்கும் அப்பாவாகிவிட்ட பூரிப்பிருந்தாலும் அது நிச்சயம் எனது பிள்ளைதானாவென்ற சந்தேகமும் இருந்தது. அவள் புருஷன் Wolfgang நல்லவன், அவனுக்கு எமது களவொழுக்கம் பற்றிய சந்தேகம் கொஞ்சமும் இல்லை, என்னை நல்லதொரு அயலவனாகத்தான் அவன் எண்ணியிருந்தான். குழந்தை பிறந்ததும் ‘உனக்கு இஷ்டமான பெயரை வைத்துக்கொள்’ என்று என்னிடமே விட்டுவிட்டாள். ஒருவேளை என்னுடைய பிள்ளைதானோ…….. கொஞ்சம் நம்பிக்கை வந்தது, அவனுக்கு Adrian என்று பெயர் வைத்தேன்.

அவள்தான் தத்தாரி……………. குழந்தை Adrian ஐக்காட்டிக்காட்டி அவனுக்கு சப்பாத்து வாங்கவேணும், குளிர்காலம் வருகுது ஸ்வெட்டர் வாங்கணும், ஓவரோல் வாங்கணும் Pampers (diapers) வாங்கணும் என்று என்னிடம் காசு பிடுங்கத்தொடங்கினாள். என் சக்திக்கும்மேலாக அவளுக்கு எல்லாமும் வாங்கிக்கொடுதேன். Wolfgang ம் நிச்சயம் நிறையவே அவளுக்குப் பணம் கொடுத்திருப்பான். அவளுடைய வாழ்முறையோ பேராசையோ என்னவோ அவர்களிடையே அடிக்கடி சண்டைவர ஆரம்பித்தது.

ஒருமுறை Bertina என்னிடம் 3000 இயூரோ பணம் வாங்கியிருந்தாள். அவள் அதைக்கேட்ட ‘தொனி’யைப் பார்க்கவும் ஏதோ கைமாற்றாகக் கேட்டதைப் போலிருக்க என் கடனட்டைமூலம் வங்கியிலிருந்து எடுத்துக் கொடுத்திருந்தேன். நாளும் வங்கியின் வட்டி வளர்ந்துகொண்டிருந்தது. ஆறேழுமாசங்களாகியும் அவள் அதுபற்றி மூச்சேவிடாதிருக்க ஒருநாள் அவளிடம்போய் ‘அந்தப்பணம் எனக்குத் திரும்பத்தேவை’ என்று கேட்டேன்.

அவள் அப்பணத்தில் பாதிக்கும் மேல் Adrian க்குத்தான் செலவானது என்பதுபோலக் கதைவிடவும் நமக்குள் தர்க்கம் ஏற்பட்டது. நாம் தர்க்கித்துக்கொண்டிருக்கையில் Wolfgang ம் வந்துசேர்ந்தான். வந்தவன் ‘உங்களுக்கிடையில் என்ன பிரச்சனை’ என்று கேட்கவும் அவளாகவே முந்திக்கொண்டு ‘இல்லை Lenz இடம் ஒரு ஆயிரம் இயூரோ கடன்வாங்கியிருந்தேன்……….. அதைத்தான் திடுப்பெனத்தரச்சொல்லி வற்புறுத்துகிறான்’ என்றாள். கோபடைந்த Wolfgang ‘நான் உனக்கு வாரியிறைப்பது போதாதென்று வெட்கங்கெட்டு ஒரு நல்ல அயலவனிடமும் போய் கடன் வாங்கினாயா’ என்று கூச்சலிட்டான். பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு “அந்த ஆயிரத்தைவிடவும் வேறு என்னவெல்லாம் அவனிடம் வாங்கினாய்” என்று ஆவிவிட்டான். (பிளிறுதல்)

அதனால் கிளர்ந்து சீறிக்கொண்டு வந்தவள் Adrian ஐத்தூக்கிக் கையில் பிடித்துக்கொண்டு “வடிவாகப்பார் இவனையும் அவனிடந்தான் வாங்கினேன்.” எனவும், வாயடைத்துப்போனான் Wolfgang. ‘ஒருவேளை அவன் என்மேல் பாய்ந்து என் கொலரைப்பற்றுவான்’ என நினைத்தேன். அவன் உணர்ச்சிவசப்படக்கூடிய வன்முறையாளனல்ல. கடைசிவரையில் சாத்வீகியாக இருந்தான்.

“ ஓகே……..ஓகே……………..நீ உன் இஷ்டம்போல் வாழ்ந்துகொள்………………நான் உன் சுதந்திரத்துக்குத் தடையாயிருக்கமாட்டேன் ” என்றுவிட்டு Mayer ஐயும் தூக்கிக்கொண்டு போனவன்தான்……….. இவளிடம் திரும்பிவரவே இல்லை

.*

அவர்களின் பிரிவுக்கு நானும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறேன் என்பது எனக்குப் பச்சாதாபத்தையும் மனவுழைச்சலையும் ஏற்படுத்தியது. ஆறு மாதத்துக்கும்மேல் தனியே வாழ்ந்தாள் Bertina. என் இரக்கம் காரணமாக அவளை என்னுடன்கூட்டி வைத்துக்கொண்டேன். அந்த இரக்கந்தான் என் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. தகுதியில்லாதவர்களுக்கு இரங்கத்தேவையில்லை என்பான் ஒரு தத்துவார்த்தி. மீண்டும் தவறு செய்தேன். நாமும் சேர்ந்து ஆறு மாதங்கள் வாழ்ந்திருப்போம். ஒரு பொருட்பெண்ணைப்போல் அவளுக்குத்தினமும் பணம் தேவைப்பட்டது. பணத்தை வீசினாலே அவளுடன் படுக்கலாம் என்றானது. எனது சம்பளம் எம் வாழ்க்கைச்செலவுக்கு மட்டுமட்டாகவே இருந்தது. சில மாதங்களில் என் முழுச்சம்பளத்தையும் குடும்பத்துக்கே தந்துவிட்டு எனக்கு சிகரெட் , பத்திரிகைகள், உள்ளாடைகள், பெற்றோலுக்கே அல்லாடினேன். அவளிடமும்கூடவே ஊதாரித்தனம் வளர்ந்ததே தவிரத் திருந்திக்கொள்கிற மாதிரியாயில்லை. Bertina ‘நானும் வேலை செய்தால் செலவுகளைச் சமாளிக்கலாம்’ என்றாள். அவ்வேளை நான் பணிபுரிந்த வெதுப்பகத்தில் மாலையில் அதைச்சுத்தம் செய்யும் பணியாளின் வெற்றிடம் ஒன்று வரவும் அதில் அவளைப் பொருத்திவிட்டேன். அதன்மூலம் கிடைத்தபணம் அவளின் ஆடம்பர உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்குந்தான் போதுமாக இருந்தன, நானும் புத்திசொல்லிப்பார்த்து அலுத்தேன். தான்தோன்றித்தனமாக வாழ்ந்து தம் நிம்மதியையும் குடும்பத்தின் ஒற்றுமையும் கெடுத்த பெண்கள்பற்றியான கதைப்புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன், எதுவும் வேலை செய்யவில்லை, எம்மிடையே முறுகல்களும் கருத்துவேற்றுமைகளும் வளரத்தொடங்கின. ஒரு ஒக்டோபரில் அவளுடன் தகராறுண்டான ஒரு நாளில்த்தான் அந்த விபத்து நடந்தது. இத்தனைக்கும் நாம் குடும்பமாக அதே ஒக்டோபரில் Baltimore தீவுக்குப்போய் விடுமுறையைக்கழிப்பதாக இருந்தோம். விபத்து செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்கள் முழுவதும் என்னைக் ‘கோமா’வில் கிடத்தி வைத்தது.”

விபத்தைப் பற்றிச்சொல்லும்போது Lenz இன் வலது கால் உதறலெடுக்கத் தொடங்கியது. அவரது நோய்க்கூறே அதுதான் என்பது எனக்கு முதலிலேயே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

e29ab10a8185c9148ea027ae6a0b91ae
சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்தார், அதைப்பற்ற வைக்க நான் உதவி செய்ததுக்கு ‘நன்றி’ என்றார்.

Lenz ஐ ஆசுவாசப்படுத்தவேண்டி “சரி சரி Lenz இன்றைக்கு இது போதும்…….. பிறிதொரு நாளில் மீதியைக்கதையைப் பேசுவோம்” என்று சொல்லி அன்று அவரின் பெருங்கதையாடலுக்கு அரைப்புள்ளி வைத்தேன்.

அதுவும் ஒரு செப்டெம்பர் மாதந்தான், அடுத்தவாரம் அவரைச் சந்திக்கும் நாளில் Herzogin- Luise Hause பராமரிப்பகத்தில் மதிய உணவுவேளை அங்குள்ள கார்டனில் கிறில் பார்ட்டி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நானும் Lenz அருகிருந்து விருந்து சாப்பிட என்னையும் அழைத்திருந்தார்கள்.

Lenz தன் மீதிக்கதையையும் சொல்ல உன்னிக்கொண்டிருந்தார். நான் ’பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்றுகண்களால் ஜாடைகாட்டினேன். விருந்து முடிந்து அறைக்குத் திரும்புமட்டும் அமைதியாக இருந்தவர் அறைக்குள் நுழைந்ததும் சொன்னார்: “ ஆஸ்ப்பத்தரியிலிருந்து விடுபட்டு மூன்றரை மாதங்களில் மருத்துவவாகனத்தில் வீடு திரும்பினேன். குடியெழும்பிவிட்டவர்களின் வீடுபோல என் வீடு முழுவதும் காலியாக இருந்தது. எனக்கு படுப்பதற்கான கட்டிலைக்கூட விட்டுவைக்காமல் எடுத்துச்சென்றுவிட்டிருந்தாள் அவிசாரி. எந்நிலமையை அறிந்த மருத்துவமனை என்னை உடனடியாகவே (Rehabilitation) புனருத்தாரண முகாமுக்கு 3 மாதங்கள் அனுப்பிவைத்தது.

“இப்போது Bertina எங்கே……….?”

“ Baden-Württemberg மாநிலத்தில் Stuttgart க்கு அருகில் எங்கேயோ வாழ்வதாகச் செய்தி வந்தது………….நான் அவளை எதுக்குத்தேடவேண்டும்?”

“ சரி Adrian என்ன செய்கிறானாம்………….?”

“அவனுக்கு இப்போ 18 வயது வந்திருக்கும்……..அநேகமாகக் கலூரிக்கோ, பல்கலையொன்றுக்கோகூடச் சென்றுகொண்டிருக்கலாம்……..அல்லது ‘பங்கி’ ’ஜங்கியா’….. தெருக்களிலும் சுற்றிக்கொண்டுமிருக்கலாம்……….யார் கண்டார்”

“’ இந்தக்கால இடைவெளியில் Adrian கூட உன்னைவந்து பார்க்க முயற்சிக்கவில்லை, இல்லை?”

“ அவன் நிஜமாக என்னுடைய பிள்ளையென்றால் என்னைப்பாராமல் இருக்கமுடியாது………. என்னைத்தேடி வந்திருப்பான்.”

அப்போது Lenz ஐச் சொஸ்தப்படுத்துவதற்கான வார்த்தைகள் என்னிடம் இருக்கவில்லை, திணறினேன்.

கணபதிபப்பா மோரியா ( சிறுகதை ) -சத்யா

download (1)

உங்களுக்கு மதுரையைப் பற்றித் தெரியுமா? ஒரு காலத்தில் இங்குதான் முஸ்லிம் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. உலக பயங்கரவாதிகளெல்லாம் இங்கேதான் வந்து தலைமறைவாக ஒளிந்திருந்தனர்.

இது குறித்து முதுபெரும் நடிகரும் இயக்குனருமான தாமரைமணாளன் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே விஸ்வரூபம் என்ற ஒரு ஆவணப் படத்தை எடுத்துள்ளார். நான் பள்ளி படிக்கும்போது அந்த படம் எங்கள் பாடமாக இருந்தது. பதினொன்றாம் வகுப்பு வரலாற்றில் அந்த படத்தின் கதை முக்கிய பாடம். இரண்டு பத்து மார்க் கேள்விகள் அதிலிருந்து கண்டிப்பாக கேட்கப்படும். அதுபோக தாமரைமணாளன் வாழ்க்கை வரலாறு தமிழில் உண்டு.

எனவே அவருடைய படங்களெல்லாம் எங்களுக்கு மனப்பாடம், “பாப்பாத்தி அந்த சிக்கன டேஸ்ட் பாரு” முதல் “செத்துட்டா? மன்னிச்சுடலாமா? ஹிட்லர் செத்துட்டார், மன்னிச்சுடலாமா?” என்பதெல்லாம் அவரது மாடுலேஷனில் சொல்லிப் பார்த்துக்கொள்வோம். அந்தப் படத்திலிருந்தும், எங்கள் பாடங்களில் இருந்தும் நாங்கள் புரிந்துகொண்டது ஒன்றுதான். இரண்டு வகை முஸ்லிம்கள் உண்டு.

ஒன்று தீவிரவாதி முஸ்லீம், இரண்டு தேச பக்தி முஸ்லீம். தீவிரவாதி முஸ்லீம் என்றால் தனியாக ஒளிந்திருப்பவர்கள் அல்ல, போலிஸ் அன்பளிப்பு கேட்டு தராத தீவிரவாதி, பைக்கில் போகும்போது ஓன்வேயில் வரும் ஹிந்து ஆட்டோக்காரரைத் திட்டும் தீவிரவாதி, ஒருவேளை ஆட்டோ ஓட்டியாக இருந்து ஐநூறு ரூபாய் கம்மியாக வாங்கி ஒரு ஹிந்து தொழிலாளியின் சவாரியைப் பிடுங்கிக்கொண்டு போகும் தீவிரவாதி, ஹிந்து பெண்களை தன் வலையில் விழவைக்கும் லவ் ஜிகாதி தீவிரவாதி, செத்துப்போன கோமாதாவை தின்னும் மிலேச்சத் தீவிரவாதி, அல்லாவின் புகழை பிரசங்கம் செய்யும் தீவிரவாதி என்று சீசனுக்கு சீசன் தீவிரவாதிகள் இந்த பாரத தேசத்தில் முளைத்துக்கொண்டே இருந்தனர்.

இவர்களெல்லாம் மக்களோடு கலந்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள். இதைக்குறித்து சுப்ரமணிதாஸ் என்பவர் துப்பாக்கி என்ற படம் எடுத்திருந்தார். அது எங்கள் பத்தாம் வகுப்பு பாடத்தில் வந்தது. இரண்டாம் வகை முஸ்லிம்கள் நல்லவர்கள், யார் வம்புதும்புக்கும் போகாதவர்கள், அன்றாடம் தங்கள் பிழைப்பைப் பார்க்க ஓடிக்கொண்டிருப்பதில் குறியாய் இருப்பவர்கள். சுதந்திரதினம் வந்தால் இவர்கள் நெஞ்சில் தேசியக்கொடி மின்னும்.

ஹிந்துக்களை தங்கள் சொந்த சகோதரர்களாக எண்ணி அவர்கள் தங்களை அடிக்கும்போதோ அல்லது வையும்போதோ மூத்த சகோதரனின் அன்பான அடியாக எண்ணி பொறுத்துக் கொள்பவர்கள். சிலர் ராணுவத்தில் சேர்ந்து தேசசேவை ஆற்றப் போவார்கள். முக்கியமாக “பாய்” என்று அழைத்து தீவிரவாதம் போதிக்கும் முஸ்லிம்களிடம் இருந்து விலகி நிற்பவர்கள். இது குறித்து “உங்கள் மகனுக்கு யாரேனும் அழைத்து பாய் என்று கூப்பிட்டால் அந்த எண்ணை உடனே அணைத்துவிடுங்கள்” என்று மைலேந்திர சாபு என்ற முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவர் கூட எச்சரிக்கை செய்திருந்தார்.

என் பெயர் முகமது நவாஸ். இரண்டாம் வகை முஸ்லீம். பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி ஒன்றரை ஆண்டோடு கைவிடப்பட்டவன். நன்றாகத்தான் படித்துக்கொண்டிருந்தேன், ஒருநாள் மீத்தேனையும் கார்போஹைட்ரேட்டையும் கலந்தால் என்ன வரும் என்ற சந்தேகம் வந்தது.

உடனே பேராசிரியர் கமலக்கண்ணனை அழைத்து கேட்டேன். அவர் கேசுவலாக, “வாட் டு யூ வான்ட் மை பாய்” என்றார். முடிந்தது ஜோலி. அவர் பாய் என்றது அத்தாவின் காதில் விழுந்து “மவனே அல்லா புண்ணியத்துல நீ எங்களுக்கு பொறந்த, இந்த தீவிரவாத பயலுகளோட சேந்து கேட்டுப் போயிடாத” என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. என்னை கல்லூரியிலிருந்து நிறுத்திவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார். அடுத்த வாரமே அத்தாவின் நண்பர் ஒருவரிடம் கூறி எனக்கு ஒரு கெமிக்கல் கடையில் வேலை வாங்கிக் கொடுத்தார். அப்பாடா படிப்பு சம்பந்தமாய் வேலை கிடைத்ததே என்று சந்தோசமாய் போனவனுக்கு முதல் நாளே ஏமாற்றம் காத்திருந்தது.

அந்த கடையின் பெயர்தான் “ராயல் கெமிக்கல்ஸ்”. மற்றபடி பெனாயிலும் கக்கூஸ் கழுவும் ஆசிடும் விற்கும் கடை. மாதம் அஞ்சு லட்சம் சம்பளம் சொல்லியிருந்தார்கள். அதெல்லாம் எம்மாத்திரம் இப்போதெல்லாம் கத்திரிக்காய் கிலோ முப்பதாயிரத்துக்கு விற்கிறது.

தக்காளியெல்லாம் அம்பதாயிரம். ஒழுங்காக எம்எஸ்ஸி முடித்திருந்தால் ஒரு அறுபது லட்சம் எழுபது லட்சத்துக்கு வேலை கிடைத்திருக்கும், இல்லையா அல்லா கருணை இருந்தால் துபாயக்கோ, சவுதிக்கோ போய் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். சரி நம்ம தலையில் அல்லா இதைதான் எழுதினான் போல என்று நினைத்துக்கொண்டு வேலைக்குப் போகிறேன். இன்னியோடு ஏழு வருடம் முடிகிறது. இன்னும் அஞ்சு லட்சம் சம்பளம் கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கிறது.

இந்த பஹ்ரீத் வந்தால் சம்பளம் கூட்டி தருகிறேன் என்று முதலாளி சொல்லியிருக்கிறார். என்ன செய்ய குடுக்கும் அஞ்சு லட்சத்தில் பஸ்ஸுக்கே மாதம் ஒரு லட்சம் செலவாகிறது. மாரிப்பாளையத்தில் எனக்கு வீடு. அங்கிருந்து ஆன்டி இண்டியன் பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டும். பின்பு திண்டுக்கல் ரோட்டைப் பிடித்து ரெண்டாவது லெப்ட் எடுத்து ஒரு அஞ்சு நிமிஷம் நடந்தால் நம்ம கடை வந்துவிடும்.

பஸ் ஸ்டாண்டு பேரை நினைத்தால் எனக்கு சிரிப்பு வரும், “ஆன்டி இண்டியன்”. இந்த பேருக்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. ஒருகாலத்தில் இந்த பஸ் ஸ்டாண்டுக்கு பெயர் பெரியார் பஸ் ஸ்டாண்ட். அவர் சுதந்திர காலத்திலும் அதற்கு பின்பும் நிறைய போராட்டங்கள் நடத்திய தலைவர்.

ஆனால் ஹிந்து மதத்தின் கலாசார அடையாளமும் கோடானுகோடி மக்களின் நம்பிக்கையுமான சாதியையும், குறிப்பாக பிராமணர்களையும் அவர் திட்டினார். தாழ்த்தப்பட்ட ஜனங்களை அவர் முஸ்லீமாக மாற சொன்னதாக சொல்லி சில தீவிரவாத அமைப்புகள் அவரை பாராட்டுவதுகூட உண்டு. ஆனால் ஹிந்து மத தலைவர்களுக்கு அவரைக்கண்டால் பிடிக்காது.

குறிப்பாக ஒரு தலைவர் இருந்தார், அவர் தம்மை விமர்சனம் செய்யும் எல்லாரையும் ‘ஆன்டி இண்டியன்’ என்று அழைப்பார். பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டால் ஆன்டி இண்டியன், முஸ்லீம்களுக்கு ஆதரவு சொன்னால் ஆன்டி இண்டியன், கம்யூனிஸ்ட் என்றால் ஆன்டி இண்டியன், முஸ்லீம் வீட்டில் பிரியாணி தின்றால் ஆன்டி இண்டியன், பெரியார் என்ற பேரைச் சொன்னாலே ஆன்டி இண்டியன், இவ்வளவு ஏன் யாராவது மொச்சக்கொட்டையை தின்று விட்டு வந்து வாயு கோளாறில் வாயு பிரித்தால் கூட “ஆன்டி இண்டியன் பாம் போட்டுட்டான்” என்பார். இப்படியே சொல்லிச்சொல்லி காலப்போக்கில் காலப்போக்கில் அவர் பெயரையே எல்லாரும் மறந்து போனார்கள்.

அந்த தலைவர்.. ஏதோவொரு மரியாதைக்குரிய ஜி, ஒரு நாள் இரவு மதுரையில் பொதுக்கூட்டம் முடித்து திரும்புகையில் பெரியார் பஸ் ஸ்டாண்டின் பின் புறம் மண்டை பிளந்து விழுந்து இறந்து கிடந்தார். உடனே இது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல் என்று பெரிய கலவரம் நடந்தது. கலவரத்தில் கண்ணில் பட்ட முஸ்லிம்களையெல்லாம் அடித்து உதைத்தனர். அது நடக்கும்போது அத்தா இளம் வயதில் இருந்தார்.

அதில் அடிபட்டு கால் உடைந்து சிலமாதம் வீட்டில் இருந்தார். அதில் பட்ட தழும்பைக்கூட அடிக்கடிக் காட்டி பயமுறுத்துவார். நான் கல்லூரி செல்வேன் என்று அடம் பிடித்தபோது கூட அதைக் காட்டி பயமுறுத்தினார். அவ்வளவு பயங்கர கலவரம் அது. கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்புகளை சமாதானப்படுத்த இறந்து போன அந்த ஜீயின் பெயரை இந்த பஸ் ஸ்டாண்டுக்கு சூட்டுவதாக அப்போதிருந்த ஜிபிஎஸ் அரசு முடிவு செய்தது.

பிறகு கொலையாளிகளைக் கண்டிபிடிக்க ஒரு சிபிசிஐடி குழுவை அமைத்தது. பின்பு ஆட்சி கலைக்கப்பட எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து விசாரணையை துரிதப் படுத்த, கடைசியில் அந்த ஜீயை யாரும் கொல்லவில்லை அவர் வாழைப்பழ தோல் வழுக்கி சிலாப் கல்லில் மண்டை இடித்து செத்துப்போனார் என்பது தெரியவந்தது.

அதன் பிறகு அவர் பெயரை நீக்கி பெரியார் பெயரை வைக்க வேண்டும் என்றும், பெயரை நீக்கக்கூடாது என்றும் இரு தரப்பும் போராட்டம் நடத்த. கடைசியில் வெறும் டவுன் பஸ் ஸ்டாண்ட் என்று பெயர் வைக்கப்பட்டது. இருந்தாலும் விடாப்பிடியாக ஹிந்து அமைப்பினர் அவர் பெயரிலேயே பஸ் ஸ்டாண்டை அழைக்க கொஞ்ச கொஞ்சமாக அவர் பெயர் மறைந்து “ஆன்டி இண்டியன்னு சொல்லுவாரே அவர் பேருல இருக்கற பஸ் ஸ்டாண்ட்” என்று சொல்லி அப்படியே மருவி “ஆன்டி இண்டியன்” பஸ் ஸ்டாண்ட் ஆனது.

பஸ் ஸ்டாண்டை விடுங்கள், எங்கள் ஊர் மாரிப்பாளையம் கூட ஒரு காலத்தில் கோரிப்பளையம் என்ற பெயரில் இருந்ததாக சொல்வார்கள். உண்மையை நாங்கள் அறிந்ததில்லை. என்னதான் சம்பளம் கம்மியாக குடுத்தாலும் என் முதலாளி தங்கமானவர், என்ன கடையில் வியாபாரம் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் லீவுதான் கிடைக்காது.

பஹ்ரீத் ரம்ஜானுக்கெல்லாம் மட்டும்தான் லீவு. மற்றபடி வேறெந்த ஹிந்து பண்டிகைகளுக்கும் லீவு இல்லை. ஒன்றை தவிர. பிள்ளையார் சதுர்த்தி. அன்று மட்டும் எங்கள் கடை இருக்கும் தெருப்பக்கமாக பிள்ளையார் ஊர்வலமாக வரும். “இந்த நாடு ஹிந்து நாடு, துலுக்கனெல்லாம் பாகிஸ்தான் ஓடு”, “தாடி வெச்ச ஆடு, பாகிஸ்தானுக்கு ஓடு” என்றெல்லாம் கோஷம் போட்டு போவார்கள். நானும் சின்ன வயதில் இவர்கள் கூட ஆடிக்கொண்டு போயிருக்கிறேன், போனால் கடைசியில் லட்டு, ஜாங்கிரி பால்கோவாவெல்லாம் கிடைக்கும் என்பதற்காக. ஆனால் ஒருநாள் அத்தா கூப்பிட்டு அங்கெல்லாம் போனால் கர்வாப்ஸி செய்துவிடுவார்கள் என்று போக விடாமல் தடுத்துவிட்டார்.

அதுபோல இன்றும் பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை. ஆனால் காலை பதினோரு மணிக்கெல்லாம் முதலாளி கூப்பிட்டு “டேய் நவாஸு, நம்ம கடையில டேப்லெட் அத மறந்துட்டு வந்துட்டேன். அதுலதான்டா நம்ம கடையோட மொபைல் பாங்கிங் ஆப் இருக்கு, இன்னிக்கு ஒரு கிளைண்ட் மீட்டிங் வேற இருக்கு. அதுலதான் அப்டேட்டட் வெர்ஷன் ஸ்கைப் இருக்கு. போய் எடுத்துட்டு வரியா? அப்படியே சார்ஜரும் எடுத்துட்டு வாடா” என்று சொன்னார். நானும் அவசர அவசரமாய் கிளம்பி போனேன். எவ்வளவு சீக்கிரம் போகிறேனோ அவ்வளவு நல்லது.

முன்னால் சொன்னேனில்லையா, இரண்டு வகை முஸ்லிம்கள் என்று. பிள்ளையார் சதுர்த்தி வந்தால் மட்டும் ஒரே வகை முஸ்லிம்தான். ‘முஸ்லிம்ல நல்ல முஸ்லீம் கெட்ட முஸ்லீம் ஏதுங்க? முஸ்லீம் என்றாலே தீவிரவாதிதான்’ என்று முப்பது வருடம் முன்பு கடல்பழம் என்ற ஒரு டைரக்டர் வசனம் வைத்திருந்தார்.

அப்படிதான் பிள்ளையார் சதுர்த்தி அன்றும். பார்க்கும் முஸ்லிம்களெல்லாம் அடிக்கப்படுவார்கள், இல்லை கொல்லப்படுவார்கள். நாங்கள் வளைக்குள் ஒளிந்திருக்கும் எலிகள் போல பிள்ளையார் சதுர்த்தி வந்தால் வீட்டுக்குள் ஒளிந்துகொள்வோம். அடுத்த நாள் போனால்தான் கடைவீதியில் உடைந்த எல்ஸீடி போர்டுகளையும் அலங்கார விளக்குகளையும் சரி செய்ய முடியும். சில சமயங்களில் போலிசின் கெஞ்சலை மீறி கடைகள் உடைத்து சூறையாடப்படும். இப்படிதான் ஒருமுறை காஜா மொய்தீன் தனது ஹோட்டலை காலையில் மட்டும் திறந்திருந்தார்.

மதியம் மூடுவதற்குள் ஊர்வலம் வந்துவிட அவசர அவசரமாய் பூட்டிக்கொண்டு ஓடினார். ஆனால் அதைப் பார்த்துவிட சிலர் ஓடி வந்து கடையை உடைத்து பிரியாணியைத் தின்றுவிட்டு பாத்திரத்தை உருட்டிவிட்டனர். நல்லவேளை அன்று காஜா மொய்தீன் பிழைத்ததே அல்லாவின் கருணை. இப்படி பல பிரச்சினைகள் இருக்கும் ஊர்வலம் வரும் முன்பு கிளம்பிவிட வேண்டும் என்று அவசர அவசரமாய் போய்க்கொண்டிருந்தேன். கடையின் பூட்டை என் கண்ணைக் காட்டி திறந்தேன். “நமஸ்கார் நவாஸ்” என்றபடி திறந்தது. உள்ளே போய் முதலாளியின் ட்ராவினை திறந்து டேப்லேட்டை எடுத்து பையில் வைத்தேன்.

சுற்றிலும் பார்த்தேன், நான்கு வரிசையாக ஷெல்ப்களில் பல்வேறு பாட்டில்களில் பெனாயிலும், இன்ன பிற கெமிக்கல்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. யாரும் இல்லை என்ற உணர்வு ஒரு அதீத சந்தோசத்தை கொடுத்தது. முதலாளி போன்ற தோரணையில் இரு கைகளையும் இடுப்புக்குப் பின்னால் கட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி காலை அளந்து வைத்து இருபுறமும் திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தேன். மனதுக்குள் கம்பீரமாக இருந்தது.

பையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போதுதான் அந்த சத்தம் கேட்டது, “கணபதிபப்பா மோரியா”, நெஞ்சிலிருந்து எதோ ஒரு ஆவி கிளம்பி வந்து தொண்டையை அடைத்துக்கொண்டது. கண்கள் அகல விரிந்தபடி உள்ளூர பயத்தோடு மெதுவாக எட்டிப் பார்த்தேன். ஊர்வலம் ஆரம்பித்து விட்டது. அவர்களைத் தாண்டி ஆன்டி இண்டியன் பஸ் ஸ்டாண்டுக்கு போவது சாத்தியமில்லை. தலையை உள்ளிழுத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்து “யா அல்லா” என்றபடி நெஞ்சில் மெதுவாக தட்டிக்கொண்டு யோசித்தேன். ஆம் அதுதான் வழி. பொத்தானை அமுக்கி கதவை மூடினேன். பேசாமல் ஊர்வலம் கிளம்பும்வரை கடைக்குள்ளேயே இருந்துவிட வேண்டியதுதான்.

உள்ளே டிவியை ஆன் செய்து, சிசிடிவி கேமரா வழியாக ஊர்வலத்தைப் பார்த்தேன். ஐநூறுபேர் ஆக்ரோஷமாக எதையோ கத்தியபடி வந்துகொண்டிருக்க அவர்களுக்கு நடுநாயகமாய் இவர்கள் போடும் கூச்சலெல்லாம் தனக்கு மிகவும் சந்தோசம் அளிக்கிறது என்று கூறுவதுபோல் மாறாத புன்னகையுடன் பிள்ளையார் வந்துகொண்டிருந்தார். ஊர்வலம் நெருங்கி நெருங்கி வந்தது. அவ்வளவுதான் ஏழெட்டு கடை தள்ளி இருக்கும் பீர்முகமது கடைக்கு வந்துவிட்டிருந்தார்கள்.

எப்படியும் இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பி விடுவார்கள் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஒருவன் கையில் வைத்திருந்த கட்டையால் பீர் முகமதின் கடை எல்சிடி ஸ்க்ரீனை உடைத்தான். அதைத் தொடர்ந்து பலரும் கடை கதவு என அனைத்தையும் உடைக்கத் தொடங்கினார்கள். பாவம் பீர்முகமது, எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். என்னோடுதான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தான், அப்போது பிள்ளையார் ஊர்வலத்தில் சிக்கிக்கொண்ட அவனது அத்தா செத்துபோனார். வேறு வழியில்லாமல் தள்ளுவண்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்யத் தொடங்கியவன் கொஞ்சம் கொஞ்சமாக இரும்பு வியாபார கடை வைத்திருந்தான். இன்றோடு அதுவும் ஒழிந்தது. அவனது இருபது வருட உழைப்பு வீணாகப் போகிறது.

“அய்யய்யோ” மனதுக்குள் சுரீரென்றது. கடைகளை உடைக்கத் தொடங்கிவிட்டார்கள். விரைவில் எங்கள் கடையும் உடைக்கப்படும். அப்படி உடைக்கப்பட்டால் என் கதி? இதை மறந்து நான் அவனுக்காக பரிதாபப்படுகிறேனே? நான் உண்மையில் பரிதாபத்துக்கு உரியவனா இல்லை பரிதாபப்பட வேண்டியவனா? அல்லா, நான் எப்படி தப்பிப்பது. பீர் முகமதின் கடையின் கதவு உடைக்கப்பட்டு சடசடவென்று உள்ளே புகுந்தவர்கள் கையில் கிடைத்த இரும்பு ராடு, கடப்பாரை என எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வந்து அடுத்த கடையை உடைக்க ஆரம்பித்தனர். அடுத்ததாக முகாஸ் கடை, பின்பு முஸ்தாக் கடை, அடுத்து ஜாகிர் உசைன் கடை என்று எங்கள் கடையை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.

“தொம்” என்று பெரும் அதிர்வை கிளப்பியது எங்கள் கடை கதவு. உள்ளுக்குள் வாயைப் பொத்திக்கொண்டு பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. டிவியை அணைத்துவிட்டு முதலாளியின் டேபிளுக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டேன். “டமார்” கதவு உடைக்கப்பட்டது. “டமார்”, “டமார்”, “டமார்” நன்றாக கிழிக்கப்பட்டதுபோல் திறந்துகொள்ள முண்டியடித்தபடி ஓவென்று கத்திய கூட்டம் உள்ளே நுழைந்தது. “ஜி, பெனாயில் கடை ஜி” என்றான் ஒருவன் ஏமாற்றமாக. “டேய் லச்சுமா.. வெள்ளை கலர்ல இருக்கு, பாலுன்னு நெனச்சு குடிச்சுராத.. அப்பறம் உனக்கு பால் ஊத்திருவாங்க” என்று ஒருவன் சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

“இங்க ஒருத்தன் ஒளிஞ்சுருக்கான்..” என்ற குரல் கேட்டு எனக்கு பகீரென்றது. நல்லவேளையாக குரல் வெளியே கேட்டது. உள்ளேயிருந்தவர்கள் திபுதிபுவென்று வெளியே ஓடினர். என் உடலைக் குறுக்கிக்கொண்டு ஒரு கண்ணை மட்டும் நீட்டி மெதுவாக எட்டிப் பார்த்தேன். ஒரு உருவத்தை எல்லோரும் போட்டு அடித்துகொண்டிருந்தனர். ஒருவன் எட்டி அடி வயிற்றில் மிதிக்க “அல்லா…” என்றபடி புரண்டபோதுதான் அவன் முகம் தெரிந்தது. நாசர். அவன் குரலிலிருந்தும், கண்களிளிருந்தும்தான் அவனை அடையாளம் காண முடிந்தது. கன்னம் வாய் மூக்கு என எல்லாம் இரத்தமாக இருந்தது. நாசர் யாருடைய வம்புதும்புக்கும் போகாதவன். போன வருடம்தான் நிக்காஹ் முடிந்திருந்தது.

அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணி. இன்னும் பத்து நாளில் குழந்தை பிறக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு நெஞ்சுப் பக்கமாய் ஒரு அதிர்வு கிளம்பி உடல் குலுங்கி அழத் தொடங்கினேன். என் முதுகில் ஓங்கி ஒரு அறை விழுந்து, ஒரு கை என் சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டதை உணர்ந்தேன். “ஜீ.. இங்க ஒருத்தன் ஒளிஞ்சிருக்கான்” சாராய வாடையுடன் கூடிய குரல் என் காதில் விழுந்தது. அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தேன்.

சுருட்டை முடியுடன் பெரிய மீசை வைத்த ஒருவன் என்னைப் பிடித்துக்கொண்டிருந்தான். நான் பார்த்ததும் எச்சில் தெறிக்க என்னைப் பார்த்து சிரித்தான். நான் அவனிடமிருந்து திமிரிக்கொள்ள முயலும்போதே திபுதிபுவென உள்ளே நுழைந்து ஏழெட்டு கைகள் என்னை இழுத்துச் சென்று வெளியே போட்டன.

“ஐயா.. ஐயா.. என்ன விட்டுடுங்க. நான் இங்க சம்பளத்துக்கு வேலை பாக்குறேன்”என்றேன். கையால் தடவி கிடைத்த கால்களை பிடித்தேன். சேலையும் கொலுசும் உள்ள கால்கள் கூட கையில் தட்டுப்பட்டது.

“யாரா இருந்தாலும் நீ துலுக்கன்தானடா?” என்றபடி என் இடுப்பில் ஒரு மிதி விழுந்தது.

என் மூளையை அவசரமாய் விரட்டி விட்டேன். நான் முஸ்லீம் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. தாடி வைத்தவன்தான் கெட்ட முஸ்லீம் என்று விஸ்வரூபத்தில் சொல்லியிருந்ததால் நாங்கள் யாரும் தாடி வைப்பதில்லை.

சில பெண்கள் இருப்பதால் நான் சுன்னத் செய்திருக்கிறேனா என்று பார்க்க மாட்டார்கள். அதுபோக பல மருத்துவ காரணங்களுக்காக பலரும் சுன்னத் செய்யத் தொடங்கியிருந்தனர். இதையெல்லாம் முடிவுசெய்து, “இல்லைங்க. என் பேரு ராஜா” என்று அழுதபடி சொன்னேன்.

“என்ன ராஜா? ரபீக் ராஜாவா?” என்றபடி ஒருவன் கையில் ஓங்கி மிதித்தான். அவன் எடை கையில் இறங்கி சுரீரென்ற வலி கிளம்பியது. “ஓ”வென்று கத்தியபடி கையை இழுத்து தொடைகளுக்குள் சொருகிக் கொண்டேன்.

“ஜீ.. விடுங்க ஜீ” எனக்கு ஆதரவு குரல் ஒன்று கேட்டது. “டேய் நீ நெஜமாவே ஹிந்துவா? பொய் சொன்னது தெரிஞ்சுது உன்ன வெட்டிப் போட்டுடுவோம்” என்றான் ஒருவன். அவன் குரலில் இன்னும் குழந்தைமை மாறவில்லை. காக்கி நிக்கரும் வெள்ளை சட்டையும் போட்டிருந்தான். தலையில் கருப்பு தொப்பி. வயது பதினைந்துதான் இருக்கும். மீசை முளைப்பதற்கான தடம் போல் இப்போதுதான் பூனை முடிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன.

நாசரிடம் திரும்பி “டேய் உண்மைய சொல்லு, இவன் துலுக்கன்னா உன்ன விட்டுடுவோம்” என்றான். நாசர் என்னை நிமிர்ந்து பார்த்தான். அவனது வாயில் பற்கள் உடைந்து போயிருந்தது. முகம் ரெண்டு மடங்காய் வீங்கியிருந்தது. வீங்கிய முகத்துக்குள் புதைந்துபோனதுபோன்ற கண்களோடு என்னைப் பார்த்தான். “இல்ல, இவன் முஸ்லீம் இல்ல” என்று சொன்னான். என் இதயத்துக்குள் யாரோ ஏறி உட்கார்ந்தது போல் இருந்தது. சாகும் நிலையிலும் என்னைக் காட்டிக்கொடுக்காத நாசருக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?

“இங்க பாரு பொய் சொன்னா உனக்கும் இந்த கதிதான்” என்றபடி நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனை வேட்டையாடத் தொடங்கினார்கள். கட்டைகளைக் கொண்டு அவன் முட்டியில் அடித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனது கால் உடைந்தது. ஒவ்வொரு அடியிலும் அவன் கண்கள் துடித்ததேயன்றி வேறொன்றும் செய்யவில்லை.உடைந்த காலை விரித்து ஒருவன் ஆண் குறியில் மிதித்தான். “ம்ம்ம்..” என்று கத்தியபடி கண்கள் பிதுங்கி விழுமளவு விரித்து, தன்னிச்சையாய் உடல் எம்பி கைகளால் பிடித்துக்கொண்டு வலதுபக்கமாய் சாய்ந்து விழுந்தான். “ஹோ.. ஹோ…” என்று கத்தியபடி சுற்றி நின்றவர்கள் வலுக்கட்டாயமாய் அவன் கைகள் இரண்டையும் இழுத்து இரண்டு பக்கமும் ஏறி நின்றுகொண்டனர்.

மல்லாக்கப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் ஒன்று, இரண்டு, பத்து, இருபதுபேர் அவன் உயிர்நிலையில் ஏறி மிதித்தனர். ஒவ்வொரு முறையும் அவன் உடல் எம்பி எம்பிக் குதித்தது. கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக துடிப்பு நின்றது. பிறகு முகத்தில் மிதிக்கத் தொடங்கினர். கன்னமெல்லாம் கிழிந்து போகும் வரை வரிசையாக மிதித்தனர். ஒருவன் ஓங்கி மிதித்ததில் கண் ஒரு பக்கம் கிழிந்து வெளியே தொங்கியது.

அதைப் பார்த்ததும் ஒருவன் கையிலிருந்த கட்டையால் அதை பிடுங்கி வெளியே போட்டு நாசரின் இன்னொரு கண் முன்னாலேயே நசுக்கினான். எனக்கு குடலைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. பிறகு மண்டையில் ஓங்கி மிதித்துக்கொண்டே இருந்தனர். கையிலிருந்த கத்திகளைக்கொண்டு உடலைக் கிழிக்கத் தொடங்கினர். ரத்தம் சதை என எல்லாம் வெளியேறி நாசரைச் சுற்றி மிதக்கத் தொடங்கியது. மெதுவாக.. மிக மெதுவாக செத்துபோனான் நாசர்.

பின்பு என் பக்கம் திரும்பினார்கள். என் பின் மண்டையில் யாரோ ஓங்கி அறைந்தார்கள். நான் தலை குப்புற கீழே விழுந்ததும், என் சட்டை காலரைப் பிடித்து தூக்கப்பட்டேன். மண்ணில் பட்டு உப்புச் சுவையோடு உதட்டோரம் ரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.

“நிறுத்துங்க” என்று தடுத்தபடி ஒருவன் வந்தான். “அவன்தான் ஹிந்துன்னு சொல்றான்ல” என்று அதிகார தோரணையில் சொன்னான். உடனே அவனைச் சுற்றி பலத்த விவாதம் நடந்தது.

சிலர் என்னை விட்டுவிடவேண்டும் என்றும் சிலர் விடக்கூடாது என்றும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தனர். ‘அல்லா.. நிறைவானவனே.. இந்த சைத்தான்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று’ என்று வேண்டிக்கொண்டேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவர்களாய். “சரிப்பா.. நீ ஹிந்துன்னா உன்ன விட்டுடறோம்.. ஆனா இங்க நடந்தத யார்கிட்டயும் சொல்லக்கூடாது” என்றனர். நான் அழுதபடி “சத்தியமா சொல்ல மாட்டேங்க” என்றேன். அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டபடி.

“எதுக்கும் ராமர்ஜீய கூப்பிட்டு கேட்டுடுவோம்” என்று ஒருவன் சொன்னான்.

“சரி ராமர்ஜீய கூப்பிடு” என்றனர். கொஞ்ச நேரத்தில் கூட்டத்தை விலக்கியபடி ஒரு போலீஸ்காரர் வந்தார். வந்தவர் மெதுவாக நடந்து போய் நாசர் பக்கத்தில் நின்றார். தனது பூட்ஸ் காலால் அவனது முகத்தை நகர்த்திப் பார்த்தார். “என்னய்யா.. முழுசா செத்துட்டானா இல்ல மிச்சம் மீதி வெச்சு எங்க கழுத்த அறுப்பீங்களா?” என்றார். “அதெல்லாம் இல்ல ஜீ. முடிஞ்சுது” என்று முன்னால் நின்ற ஒருவன் சொன்னான்.

அவனை ஆமோதித்து பல குரல்கள் மரியாதையாக ஒலித்தது. அந்த போலீஸ் மெதுவாக நடந்து என்னை நோக்கி வந்தார். பளாரெனே என் கன்னத்தில் அறைந்தார். என் வாய்க்குள் கன்னம் கிழிந்து ரத்தம் வடிந்தது நாக்குக்கு இம்சையான சுவையை தந்தது. நான் நடுங்கும் கைகளைத் தூக்கிக் கும்பிட்டேன். “மரியாதையா நீ யாருன்னு சொல்லு. உன்ன நானே பத்திரமா கூட்டிட்டு போறேன்.

பொய் சொன்ன.. உன்ன நானே பொதைச்சுடுவேன்” என்றார். ஏற்கனவே வேகமாய் துடித்துக்கொண்டிருந்த என் இதயம் வெளியே வந்து விழுந்துவிடும்போல் துடித்தது. “சார் நான் உண்மையதான் சொல்றேன்” என்று அழுதபடி சொன்னேன்.

“இங்க நடந்தது ஏதாவது வெளில தெரிஞ்சுது.. உன்ன கண்டு பிடிச்சு, உங்கம்மா மேல பிராத்தல் கேசு போட்டு உள்ள தள்ளிடுவேன்” குரலைக் கடுமையாக்கிக்கொண்டு சொன்னார். அவர் கடுமையாக்கிக்கொள்ளவே தேவையில்லை, இயல்பாகவே அவர் குரல் கடுமையாகத்தான் இருந்தது.

“சொல்ல மாட்டேன் சார்” என்று அவசரமாய் சொன்னேன்.

“சரி போ” என்றவர் கொஞ்சம் நிதானித்து. “டேய்.. உன் ஆதார் கார்டை எடு” என்றார். எனக்கு பகீரென்றது. இடுப்பை தடவிப் பார்த்தேன். நல்லவேளையாக நான் இன்று பர்ஸை மறந்துவிட்டு வந்திருந்தேன்.

“சார் ஆதார் கார்டு எடுத்துட்டு வரல சார்” என்றேன்.

“தேச துரோகி”,”பாகிஸ்தான் ஏஜென்டா இருக்கும் “, “இல்ல ஐஎஸ்”,”லஸ்கர்”, “காஷ்மீர் பிரிவினைவாதி” என்றெல்லாம் திட்டுக்கள் கேட்டது. “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல, உன்னை மாதிரி ஆளை பிடிக்கத்தான் ஆதார் கார்டு வெச்சுருக்கோம்” என்றபடி மூக்குக் கண்ணாடியுடன் ஒட்டுமளவு நாமம் அணிந்திருந்த ஒருவன் சொன்னான்.

“இப்ப என்ன ஜீ பண்ணுறது?” போலிஸைப் பார்த்து ஒருவன் கேட்டான்.

“ஒன்னும் பண்ண முடியாது”

“ஜீ உங்க ரெட்டினா ஸ்கேனர்ல பாக்கலாமே” என்றான் நாமம்.

“அதெல்லாம் முடியாதுய்யா.. அப்பறம் இவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா என் மண்டைய உருட்டுவாங்க”

நெருப்பும் நீரும் மாறி மாறி கடந்த என் எண்ணத்தில் நடந்த அந்த உரையாடலில் எனக்கு என்ன நடக்குமோ என்ற பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

என்ன செய்வது என்று போலீஸ் யோசிக்க ஆரம்பித்தார். முப்பது நொடிகள்தான் யோசித்திருப்பார். எனக்கு வெகுநேரம் போல் தோன்றியது. “டேய் சுப்ரமணியம் இங்க வா” என்றார். வெள்ளை வெளேரென்ற ஆஜானுபானுவானவன் ஒருவன் முன்னாள் வந்தான்.

அவன் நெற்றியில் ரத்தத்தை கொண்டு இழுத்ததுபோல் குங்குமம் வைத்திருந்தான். “நீ என்ன பண்ற.. போயி ஜீப்பு கண்ணாடிய ஒடைச்சு உள்ள இருக்கற ஸ்கேனர எடுத்துக்கோ. அப்படியே சீட்டுல கொஞ்சம் கேஸ் பைல்ஸ் இருக்கு. அதையும் எடுத்து கிழிச்சு போட்டுரு. இங்க பாருடா.. எல்லாம் முடிஞ்சதும் அந்த ஸ்கேனர தூக்கிப் போட்டு உடைச்சுடனும்” என்றார். அவ்வளவுதான் என் மனதில் இருந்த கடைசி நம்பிக்கையும் உடைந்தது. இதோடு முடியப்போகிறது. அல்லா.. உன்னிடம் வருகிறேன். அம்மா, அத்தா என்னை மன்னிச்சுடுங்க. என் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது.

ஆச்சு எல்லாம் முடிந்தது. ஸ்கேனரை எடுத்துக்கொண்டு வந்தான். அல்லாஹு அக்பர். மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். “பாருடா” என்று பின்னால் ஒருவன் என் பிடரியில் அடித்தான். கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது. அப்படியே சரிந்தேன்.

“கொஞ்சமாவது அறிவிருக்கா ஜீ” என்று அவனைத் திட்டுவது தூரத்தில் கேட்டது. அவன் பதிலுக்கு எதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தான். யாரோ என்னை மடியில் தூக்கிப் போட்டதுபோல் இருந்தது.

என் இமையை யாரோ பிரித்ததுபோல் இருந்தது. ஒரே சிவப்பு நிறம். கண் கூசியது. இறுக்கமாக மூடிக்கொண்டேன். என் வாழ்வில் கடைசியாக ஒரு முறை என்னை மரியாதையாக அழைக்கும் குரல் கேட்டது.

“நமஸ்காரம் முகமது நவாஸ் உங்களுக்கு பாரதப் பிரதமர் ராமானந்த புராணிக்கின் வாழ்த்துகள்”

என் கண்களில் மங்கலாய் சிரித்துக்கொண்டிருந்த பிள்ளையார் முகம் தெரிந்தது.

•••

தந்திர வாக்கியம் ( எம்.ஜி.சுரேஷின் கடைசியாக வந்த நாவலிலிருந்து சில பகுதிகள் )

4_5983

நிக்கி சிங்கப்பூர் வந்து இரண்டு மாதங்களாகி விட்டன. நாட்கள் போனதே தெரியவில்லை. நாட்கள் என்பதை விட இரவு பகல்கள் என்பதே சரி. ப்ராஜக்ட் மோசமான நிலைமையில் இருந்தது. சீர் செய்ய அதிக நேரம் முட்டி மோத வேண்டி இருந்தது. மற்றவர்கள் போன பின்பும் இவன் வேலை செய்து கொண்டிருந்தான். கூடவே சென் குவாங்கும் இருந்தாள். சேர்ந்தாற்போல் இரண்டு இரவுகள் கூட அலுவலகத்திலேயே தங்க வேண்டிய தருணங்கள் வந்தன. அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொண்டார்கள். ஒரு வழியாக ஒரு ப்ராஜக்ட் முடிந்தது. சென்னி சந்தோஷம் தாங்காமல் நிக்கியின் கன்னத்தில் முத்தமிட்டாள். மறு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றாள். அவனும் சரி என்றான்.

ஜுராங் கிழக்கு பகுதி. தோ குவான் சாலையில் ஒரு ஃப்ளாட். அதில் மூன்று அறைகள். அதில் ஒற்றை அறையைப் பகிர்ந்து கொண்டு அவன் தங்கி இருந்தான். மற்ற இரண்டு அறைகளில் இருவர் குடி இருந்தார்கள். ஒரு அறையில் வங்காளி மாணவன் தங்கி இருந்தான். இன்னொரு அறையில் சீனப்பெண் ஒருத்தி இருந்தாள். அவள் மெரீனா பேயில் இருந்த ஒரு கம்பெனியில் வேலைக்கு இருந்தாள். ஒரே வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார்கள் என்றுதான் பேர். ஒருவரைப் பற்றி அடுத்தவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதற்கெல்லாம் நேரம் இல்லை. மொத்த மாத வாடகையான ஒரு லட்சத்தை மூவரும் பகிர்ந்து கொண்டார்கள். அந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில்லை. வேறு வேறு நேரங்களில் புறப்படுவார்கள். கண்ட நேரத்தில் வந்து அடைவார்கள். ஃப்ளாட்டின் உரிமையாளர் வேறு இடத்தில் இருக்கிறார். மாத வாடகையை அவர் வங்கிக் கணக்கில் சேர்த்துவிடவேண்டும்.

அங்கிருந்து பத்து நிமிட தூரத்தில் தொடர்வண்டி நிறுத்தம் இருந்தது. ஜுராங் கிழக்கிலிருந்து ராஃபிள்ஸ் ப்ளேஸ் போக இருபது நிமிட பயணம். ஜுராங் கிழக்கு ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு உணவுவிடுதி இருந்தது. அதில் காலை மீ கோரிங், லக்ஸா என்று இரண்டரை டாலர் விலையில் எதையாவது தின்பான். பிற்பகலில் ராஃபிள்ஸ் ப்ளேஸில் அதே இரண்டரை அல்லது மூன்று டாலர்களில் எகானமி ரைஸ், நாசி லாமெக், ரோஸ்டட் சிக்கன் ரைஸ் போன்ற எதையாவது விழுங்குவான். இரவிலும் இதே கதைதான். சமயங்களில் குவாங் அவனை பெரிய உணவு விடுதிகளுக்கு அழைத்துச் செல்வாள். தாய்லாந்து சிக்கன், சேற்று நண்டு, முதலைக் கறி போன்றவற்றை அறிமுகம் செய்வாள். இருவரும் ஒரு திரைப்படம் கூட போயிருக்கிறார்கள்.

இன்று ஓய்வு நாள். கடந்த இரண்டு மாதங்களில் அவன் சிங்கப்பூரை சரியாக சுற்றிப் பார்க்கவில்லை. அதற்கு நேரம் இல்லை. ராஃபிள்ஸ் ப்ளேஸையே கூட சரியாகப் பார்க்கவில்லை. ஊர் சுற்றலை ராஃபிள்ஸ் ப்ளேஸில் இருந்தே ஆரம்பிக்க நினைத்தான். தாமதமாக எழுந்தான். நிதானமாக தயாரானான். இன்றைக்கு காலை உணவுக்கு வேறு ஏதாவது சாப்பிடலாம் என்று தோன்றியது. போகும் வழியில் வாஃபிள்ஸ் சாப்பிட்டான். தே சீ எனப்படும் மில்க் மெய்ட் கலந்த தேநீர் அருந்தினான். ஜுராங் கிழக்கு தொடர்வண்டி நிறுத்தம் போய் தனது வண்டியில் ஏறினான்.

24

சிங்கப்பூரின் இதயம் துடிக்கும் இடம் ராஃபிள்ஸ் ப்ளேஸ். சிங்கப்பூரின் மிக முக்கியமான கட்டடங்கள் அங்கேதான் இருக்கின்றன. பெரிய பெரிய வங்கிகள், சர்வதேச நிறுவனங்கள் கொழிப்பது அங்கேதான். சிங்கப்பூர் நதியும், பார்லிமெண்ட், உயர்நீதிமன்றம் போன்ற இடங்களும் அக்கம் பக்கமாய் இருக்கின்றன. ராஃபிள்ஸ் ப்ளேஸின் ஒரு தோளை எஸ்ப்ளனேட் இடித்துக் கொண்டு நிற்கிறது. இன்னொரு தோளை நகரமன்றம் உரசிக் கொண்டு நிற்கிறது. எல்லாவற்றையும் நிதானமாக சுற்றிப் பார்த்தான் நிக்கி. அதற்குள் மதியம் வந்து விட்டது. அடுத்ததாக எங்கே போகலாம் என்று யோசித்தான். போன தடவை போனில் அப்பா சொன்னார். ‘சிங்கப்பூர்லே 13 அடுக்குக் கட்டடத்துல லைப்ரரி இருக்காமே’ பாத்தியா?’ அது நினைவுக்கு வந்தது.. ராஃபிள்ஸ் ப்ளேஸிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அந்த நூலகம் இருந்தது. மாலை நேரம் என்றால் நடக்கலாம். இப்போது இந்த வெயிலில் முடியாது. சட்டென்று ஒரு வாடகைக் காரைக் கை காட்டி நிறுத்தினான். கார் டிரைவர் எட்டிப்பார்த்தான். ‘புகிஸ்’ என்றான். காரில் ஏறி அமர்ந்து, ‘தேசீய நூலகம்’ என்றான். கார் சாலையில் நழுவிக்கொண்டு போயிற்று.

25

தேசீய நூலகம் 16 மாடி உயரத்தில் நிமிர்ந்து நின்றது. அதன் பிரமாண்டம் நிக்கியை மலைக்க வைத்தது. ஒரு கணம் நின்றான். சட்டென்று வந்த காற்று அவன் தலைமுடியைக் கலைத்தது. சுய கவனம் வந்தவனாக, சுற்றிலும் பார்த்தான். பலர் நூலகத்தினுள் போவதும் வருவதுமாக இருந்தனர். அவனும் அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான்.

உள்ளே போனதும் பெயர்ப்பலகைகள் வரவேற்றன. அங்கே இரண்டு நூலகங்கள் இருப்பதைத் தெரிவித்தன. ஒன்று: பொது நூலகம். அது தரைத்தளத்துக்குக் கீழே நிலவறையில் இருந்தது. இன்னொன்று லீ காங் சியான் நோக்கு நூல் நூலகம். அது 7 முதல் 13 வரையிலான படி நிலைகளில் இருந்தது. நிக்கி முதலில் தரைத் தளத்துக்குப் போக முடிவு செய்தான். படிக்கட்டில் இறங்கினான். இறங்கும் போதே கீழ்தளம் தெரிந்தது. மேஜை நாற்காலிகள் போடப்பட்டு நேர்த்தியாக இருந்தது. நிறையப் பேர் படித்துக் கொண்டிருந்தார்கள். சீனர்கள்; இந்தியர்கள், வெள்ளைக்கார மாணவர்கள் என்று பலர். ஒரு மலாய்ப் பெண். தலையில் கறுப்புத்துணி அணிந்திருந்தாள். தனது குண்டு விரல்களால் ஒரு புத்தகத்தைப் புரட்டினாள். நிக்கி நூலகத்தை ஆராய்ந்தான். ஏகப்பட்ட புத்தகங்கள் இருந்தன. ஒரு புறம் ஆங்கிலப்புத்தகங்கள்; இன்னொரு புறம் மாண்டரின்; வேறொரு பக்கம் தமிழ்ப் புத்தகங்கள். மலாய் புத்தகங்கள் இருந்தன. வார, மாத இதழ்களும் இருந்தன. எல்லாமே ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

புத்தகங்களையும், பத்திரிகைகளையும் புரட்டினான். எதைப்படிக்கலாம் என்று யோசித்தான். முதலில் நூலகத்தைச் சுற்றிப் பார்க்கலாம். அப்புறம் படிக்கலாம் என்று நினைத்தான். புத்தகங்களையும், பத்திரிகைகளையும் எடுத்த இடத்தில் வைத்தான். உடனே ஒரு காமிரா பளிச்சிட்டது. திடுக்கிட்டான். கையில் காமிராவுடன் ஒரு சீனர் எங்கிருந்தோ வந்தார். கை குலுக்கினார். வாசகர்கள் எடுக்கும் புத்தகங்களை ஆங்காங்கே எறிந்து விடக்கூடாது. ஒழுங்காக வைக்க வேண்டும். என்பதை உணர்த்த நூலகம் தன்னை அனுப்பி இருக்கிறது என்றார்.. இப்போது எடுக்கப்பட்ட அவன் படம் அறிவிப்புப் பலகையில் சிறந்த வாசகர் என்று ஒட்டி வைக்கப்படும் என்றார். நிக்கி சிங்கப்பூர் அரசின் செயல்பாடு குறித்து வியந்தான். சிங்கப்பூரின் ஒழுங்கு சார்ந்த கவனம் அவனைக் கவர்ந்தது. நம் ஊரில் சரித்திர புத்தகங்கள் இருக்கும் அலமாரியில் சமையல் குறிப்பு இருக்கும். ஆங்கில இலக்கியம் இருக்க வேண்டிய அலமாரியில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் இருக்கும் என்று நினைவு கூர்ந்தான்.

எம்.ஜி. சுரேஷ்

எம்.ஜி. சுரேஷ்


நிலவறையிலிருந்து வெளியே வந்தான். பெயர்ப்பலகை லீ காங் சியான் பார்வை நூல்கள் நோக்கு நூலகத்துக்கு வழி சொன்னது. போவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று எஸ்கலேட்டர். மற்றது ‘லிஃப்ட்’. நேரே போய் லிஃப்ட்டில் நுழைந்தான். உள்ளே யாரும் இல்லை. லிஃப்டினுள் யாரோ விட்டு விட்டுப் போன வாசனை மட்டும் மிச்சம் இருந்தது. அனேகமாக யாரோ ஒரு பெண்ணின் வாசனையாக இருக்கும் என்று நினைத்தான். அலையாதே என்று கடித்தது மனம்.

அடுத்த மாடியில் வேறு சிலர் நுழைந்தார்கள். அதற்கடுத்த மாடியில் வெளியேறினார்கள். லிஃப்டின் 16 வது மாடி வரும் வரை காத்திருந்தான். லிஃப்டின் கதவுகள் விரிய வெளியேறினான். எடுத்த எடுப்பில் ஒரு பூங்காவுக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. பலவிதமான செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அத்தனை உயரத்திலிருந்து பார்க்க சிங்கப்பூர் வசீகரமாக இருந்தது. விதவிதமான கட்டடங்கள். ஒவ்வொன்றும் போட்டி போடும் உயரங்களில்.. இன்னொரு புறம் கடல் தெரிந்தது. சில கப்பல்கள் மிதந்தன. ஓரிரு மோட்டார் படகுகள் எங்கோ விரைந்தன. தொலைவில் தீவுகள் தெரிந்தன. பக்கத்தில் செண்டோசா தீவு வெட்கத்துடன் எட்டிப் பார்த்தது. சற்றுப் பின் தள்ளி இருந்த தீவுகளை மலேசியா, இந்தோனேஷியா என்று பக்கத்தில் நின்றிருந்த யாரோ சொன்னார்கள். ஆம் என்று ஆமோதிப்பது போல் அவை புன்னகைத்தன.

அங்கேயே வெகு நேரம் நின்றிருந்தான். அலைபேசி அழைத்தது. சென்னி இணைப்பில் வந்திருந்தாள். எங்கே இருக்கிறாய் என்றாள். தான் தேசீய நூலகத்தின் பதினாறாவது மாடியில் இருப்பதாகச் சொன்னான். அனிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பிற்பகல் மூன்று. அவள் வீட்டில் இருந்து பேசினாள். நன்கு தூங்கினாளாம். மாலை அவனைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவாளாம். அங்கேயே இருக்குமாறு சொன்னாள். சரி என்றான். ஒரு மணி நேரத்துக்கு என்ன செய்யலாம்? பார்வை நூலகத்துக்குப் போய்ப்பார்க்கலாம். அவள் உள்ளே வருவதற்கும், இவன் வெளியே போவதற்கும் சரியாக இருக்கும்.

லிஃப்டில் கீழே இறங்கினான். 12ஆம் மாடியில் லிஃப்ட் தானே நின்றது. ஒரு வெள்ளைக்காரன் உள்ளே நுழைந்தான். நிக்கி வெளியேறினான். வெளியே நீண்ட காரிடார் வரவேற்றது. காரிடாரைக் கடந்தால் நூலகர் மேஜை தடுத்து நிறுத்தியது. அதில் ஒரு சீன மாது புன்னகையுடன் வரவேற்றாள். மேஜையை ஒட்டி ஒரு வாசல். தொடர்ந்து ஒரு சின்ன வராந்தா. அங்கே நுழையும் இடத்தில் மார்பளவுச்சிலை ஒன்று இருந்தது. லீ காங் சியானின் சிலை. அந்தச் சிலையை நிக்கி பார்த்தபடி நின்றான். சீன மாது புன்னகையுடன் சொன்னாள். அவர் ஒரு செல்வந்தர். அவரது பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனம் தேசீய நூலகத்துக்கு அறுபது லட்சம் சிங்கப்பூர் டாலர்களை அன்பளிப்பாகத் தந்திருக்கிறது. அந்தத் தொகை இந்த 16 மாடிக் கட்டடம் கட்டப் பேருதவியாக இருந்தது. ஓ என்று வியந்தபடி நகர்ந்தான்.

பார்வை நூலகம் பெரியதாக இருந்தது. ஏகப்பட்ட பழமையான நூல்கள் இருந்தன. மிகவும் ஜாக்கிரதையாகப் பராமரிக்கப்பட்டு வருவது பார்க்கும் போதே தெரிந்தது. முன்னூறு, நானூறு வருடங்களுக்கு முந்தைய நூல்கள் பல இருந்தன. பார்த்துக் கொண்டே வந்த போது அவன் கண்களில் ஒரு மிகப் பழைய ஆங்கில நூல் பட்டது. ‘ஹுவா குவா ஜாங்கின் இந்தியப் பயணம்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அது ஒரு மொழி பெயர்ப்பு. புராதன சீன மொழியிலிருந்து ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டது. மால்கம் பிராட்பரி என்பவரின் மொழி பெயர்ப்பு. இரு நூறு ஆண்டுகளுக்கு முன் லண்டனில் பதிப்பிக்கப்பட்டு பழைய ஆங்கில எழுத்துருவில் அச்சிடப்பட்டிருந்தது. அதை எடுத்து சுவாரஸ்யமில்லாமல் புரட்டினான். கீழே வைக்கலாம் என்று நினைத்தபோது சட்டென்று அந்தப் பெயர் அவன் கண்களில் பட்டது. அது மட்டும் படாமல் இருந்திருந்தால் அந்தப் புத்தகம் என்றென்றைக்குமாக மனித குலத்தின் கவனத்தில் படாமல் காணாமலே போயிருக்கும். நிகண்டன் என்ற பெயர்தான் அது. தன்னுடைய பெயர் அல்லவா அது என்று நினைத்தான். இந்தியாவின் தென் பகுதியில் வாழ்ந்த மன்னன் பெயர் நிகண்டன் என்று அதில் இருந்தது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்று, தமிழகத்தை ஆண்ட புரட்சிக்காரன் நிகண்டன் என்றது அந்தப் பிரதி. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தமிழக வரலாறு போல் தோன்றியது. அப்பாவுக்கு இந்தப் புத்தகம் புதையல் கிடைத்த மாதிரி. மனம் பரபரத்தது. காது மடல்கள் ஜிவுஜிவுத்தன. புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். ’பார்வை நூல்களை வெளியே கொண்டு வரக்கூடாது’ என்றாள் சீன மாது. ’எனக்கு இந்தப் புத்தகம் வேண்டுமே. ஏதாவது செய்து உதவுங்கள்’ என்றான். அவள் அதற்கு இந்தப் புத்தகத்தை ஜெராக்ஸ் நகல் எடுத்துக் கொள்ள அனுமதி தந்தாள். அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றாள். அவனிடம் உரிய விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டு மறுநாள் வரச்சொன்னாள். நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறும் போது செல் போனில் சென்னி அழைத்தாள்.

26

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்…

ஐரோப்பா யுத்தங்களால் சீர்குலைந்து கொண்டிருந்தது

ரோமானியப் பேரரசு நெருக்கடியில் சிக்கியது.

பாரசீகத்தில் தனக்கு முன்பு ஆட்சியில் இருந்த பார்த்தினான் பேரரசை வீழ்த்தி விட்டு சஸ்ஸானித் பேரரசு தனது ஆட்சியை நிறுவியது.

சீனாவில் மூன்று பேரரசுகளின் காலம் நிலவியது.

தென் அமெரிக்காவில் மாயா நாகரிகம் உச்சத்தை எய்தி இருந்தது.

எகிப்தில் காப்டிக்குகளின் யுகம் தொடங்கியது.

வட இந்தியாவில் சாரநாத் பௌத்தத்தின் மையமாக இருந்தது.

தென் இந்தியாவில் என்ன நடந்தது?

’எதுவுமே நடக்கவில்லை. அந்த யுகம் இருண்ட காலமாக இருந்தது’ என்பதே இதுவரை இதற்கான பதிலாக இருந்தது. அதையே எல்லா சரித்திரப் புத்தகங்களும் காலங்காலமாக வழிமொழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், உண்மையில் நடந்தது என்ன?

ஒவ்வொரு நாகரிகம் செழிக்கும் போதும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் வந்து அந்த நாகரிகத்தை அழித்து இருண்டகாலத்தை உருவாக்கும். ஹூணர்கள் எனப்படும் அநாகரிகர் கூட்டம் பல நாகரிக அரசுகளை அழித்திருக்கிறது. அதே போல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தென் இந்தியா ஒரு காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் சிக்கிச் சீரழிந்தது. அந்தக் கூட்டத்தின் பெயர் களப்பிரர். இதையே எல்லா சரித்திரப் புத்தகங்களும் சொல்கின்றன.

’அது உண்மை அல்ல. அந்த யுகம் தென் இந்தியாவின் பொற்காலமாக இருந்தது என்பதே உண்மை’. என்கிறார் பிராட்பரி. மனித வரலாற்றில் இடம் பெறும் முதல் கலகக்காரன் ஸ்பார்டகஸ். அவனுக்குப் பின் வரும் இன்னொரு கலகக்காரன் நிகண்டன். ஆண்டான்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தவன் ஸ்பார்டகஸ். தனது காலத்து சேர, சோழ, பாண்டிய ஆண்டைகளுக்கு எதிராக கலகம் செய்தவன் நிகண்டன். ஸ்பார்டகஸ் தோல்வி அடைந்தான். நிகண்டன் வெற்றி பெற்றான். ஸ்பார்டகஸ் கிரேக்கன். நிகண்டன் தமிழன். ஸ்பார்டகஸ் கொண்டாடப்படுகிறான். நிகண்டன் இருட்டடிப்பு செய்யப்பட்டான். இதற்கு ஆதாரமான பல அரிய தகவல்களை ’ஹுவாகுவாங் ஜாங்கின் இந்தியப் பயணம்’ என்ற இந்த நூல் பதிவு செய்திருக்கிறது என்று தனது முன்னுரையில் பிராட்பரி கூறுகிறார்.

நிக்கிக்கு இதில் சுவாரஸ்யமில்லை. அவன் பெயரில் ஒரு புரட்சிக்காரன் இருந்திருக்கிறான். அவன் புரட்சி செய்து சேர, சோழ, பாண்டிய மன்னர்களை ஜெயித்திருக்கிறான். இதுதான் அவனைக் கவர்ந்தது.

அப்பாவிடம் இதைப் பற்றிப் பேசினான். அவர் பெரிதும் கிளர்ச்சி அடைந்திருந்தார். இது ஒரு முக்கியமான ஆவணம் என்றார் திரும்பத் திரும்ப. ‘உடனே அதை எனக்கு அனுப்பு’ என்றார். ’அது முழுக்க ஆங்கிலத்தில் இருக்கிறது. மொழி பெயர்த்து அனுப்புகிறேன்’ என்றான் நிக்கி. ’நல்லது. மொத்தமாக மொழி பெயர்ப்பை நீ முடிக்கும் வரை எனக்குப் பொறுமை இல்லை. தினமும் நீ எவ்வளவு மொழி பெயர்க்கிறாயோ அவ்வளவையும் அனுப்பி விடு’

அந்தப் புத்தகம் ஹூவாகுவாங் ஜாங் என்ற புத்த துறவி எழுதியது. அது கட்டுரைத்தொகுப்போ அல்லது குறிப்புகளின் தொகுப்போ அல்ல.பல கடிதங்களின் தொகுப்பு. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு காலங்காலமாக பல யாத்ரிகர்கள் வந்திருக்கிறார்கள். தங்கள் பயணக்குறிப்புகளை தங்கள் நாட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் ஹுவாகுவாங் ஜாங்கும் ஒருவர். வழக்கமாக யாத்ரிகர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போன பிறகே குறிப்புகளை எழுதுவார்கள். இவரோ பயணத்தின் போதே எழுதி இருக்கிறார். ஃப்ரெஞ்சு பயணியான ஃப்ரான்சிஸ் பெர்னியர் இதே போல் தனது இந்தியப் பயண அனுபவங்களை கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறார். அவருக்கு முன்பே ஜாங் எழுதி இருப்பது ஆச்சர்யம் தருவது.

சீனாவை ஜின் வம்சத்தினர் ஆண்ட காலத்தில், லுவோயாங் நகரத்தில் பிறந்தவர் ஹுவாகுவாங் ஜாங். அவர் காலத்தில் பழைய சீன மொழி மட்டுமே இருந்தது. இப்போதிருக்கும் காண்டனீஸ், மாண்டரின், ஹொக்கியன், அமோய் போன்ற கிளை மொழிகள் இல்லை. புராதன சீன மொழியில் ஜாங் எழுதினார். அதைப் பிற்காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐ சிங் (I-Tsing) என்ற பௌத்தத் துறவி கண்டெடுத்தார். அவர் ஆறாம் நூற்றாண்டில் கடல் வழியாக இந்தியா வந்தவர். நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல பௌத்த நூல்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு பெயர்த்தவர். அவர் ஒரு முறை லுவோயாங்குக்கு வந்த போது அங்கிருந்த மடாலயத்தில் ஜாங்கின் பிரதியைக் கண்டு வியந்தார். தென் இந்தியாவில் நிகண்டன் என்ற மன்னன் வைதீகர்களை வென்று சிரமணர்களை ஆதரித்த செய்தி அறிந்தார். பதினோரு ஆண்டுகள் நாளந்தாவில் இருந்த தான் தெற்கே போகாமல் இருந்துவிட்டோமே என்று வருந்தினார். அவர் ஜாங்கின் பிரதியிலிருந்து தனக்கென்று ஒரு நகல் எடுத்து பத்திரப்படுத்தினார். கூடவே ஜாங்கைப் பற்றிய குறிப்பு ஒன்றையும் சேர்த்தார். அதன் பிறகு பல நூற்றாண்டுகளாக ஜாங்கின் பிரதி என்ன ஆனதென்றே தெரியாமல் இருந்தது.

1605 ஆம் ஆண்டு மேட்டியோ ரிச்சி என்ற ஜெசூட் பாதிரியார் சீனா வந்தார். அவர் பைபிளைப் பரப்ப சீனா வந்தவர். சீன மொழிக்கு லத்தீன் லிபி தந்தவர் அவர். லத்தீன் லிபியில் எழுதப்படும் சீன மொழியை பின்யின் என்கிறார்கள். ஐ சிங் நகல் எடுத்த ஹுவாகுவாங் ஜாங்கின் பிரதி அவர் கண்களில் பட்டது. தற்செயலாகப் புரட்டிப் பார்த்த அவருக்கு பிரதியைப் பிடித்து விட்டது. ஓய்வு நேரங்களில் ஜாங்கின் பிரதியைப் பின்யின் மொழியில் பெயர்த்தார். பின்யின் என்பது மாண்டரின் மொழியை லத்தீன் லிபியில் எழுதுவது. எனவே லத்தீன் லிபியும், மாண்டரின் மொழியும் அறிந்தவர்களால் அந்தப் பிரதியை வாசிக்க முடியும். தனக்கான வாசகனுக்காக அந்தப் பிரதி சில நூற்றாண்டுகள் தவம் இருந்தது. லத்தீனும், மாண்டரினும் அறிந்த மால்கம் பிராட்பரியின் கைகளில் அந்தப் பிரதி கிடைத்ததும் அதன் தவம் முடிந்தது.

27

அலைபேசியில் பேசிய அப்பா பெரிதும் வியந்தார். அவருக்கு அலுவலகத்தில் ’தடைஇல்லை’ சான்றிதழ் கிடைக்கவில்லை. அதானால் விசா பெற முடியாது. இல்லாவிட்டால் இந்நேரம் சிங்கப்பூரில் இருந்திருப்பேனே என்றார். பரவாயில்லை. நான்தான் மொழி பெயர்க்கிறேனே. ஒவ்வொரு கடிதமாக மொழி பெயர்த்து மின் அஞ்சலில் அனுப்பி விடுகிறேன் என்றான் நிகண்டன். அப்போது அப்பா ஒரு செய்தி சொன்னார். ஜாங் குறிப்பிட்டிருக்கும் பெயர் நிகண்டன் அல்ல. நிகந்தன். ஆங்கிலத்தில் ‘ட’ என்பதற்கும் ‘த’ என்பதற்கும் ஒரே எழுத்துதான் அதனால் நிகந்தன் என்பதை நிகண்டன் என்று படித்து விட்டாய். அதனால் பரவாயில்லை. கொலம்பஸ் இந்தியா என்று நினைத்து அமெரிக்காவைக் கண்டு பிடிக்கவில்லையா; அது மாதிரிதான் இதுவும். இதை செரண்டிபிடி என்பார்கள். நிகந்தன் என்றால் சமணன் என்று அர்த்தம். தமிழ் நாட்டை நிகந்தர்கள் ஆண்டார்கள். சமணர்களை நிகந்தர்கள் என்று சமகாலத்தில் வாழ்ந்த இலங்கை அரசர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிகந்தர்கள் தமிழர்கள். பலர் சொல்வதைப்போல் கன்னடர்களோ, மௌரியர்களோ அல்ல… இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து ஆட்சி செய்தவர்களும் அல்ல… அப்பா பேசிக்கொண்டே போனார். ’போதும்’ என்றான் நிக்கி. ‘இது உங்கள் சமாசாரம். மொழி பெயர்ப்பை அனுப்பி வைத்து விடுகிறேன். நீங்களாச்சு, உங்கள் நிகண்டர்கள் ஸாரி நிகந்தர்கள் ஆச்சு’ என்றான் நிக்கி. அப்பா சிரித்தார். ’உனக்கு பிரச்சனை வரும் போதுதான் இது உன் சமாச்சாரமும் கூட என்று தெரியும்’ என்றார்.

28

ஒரு அலை ஓய்ந்ததும் மறு அலை வரும். ஐ.ட்டி கம்பெனிகளில் ஒரு ப்ராஜக்ட் முடிந்ததும் அடுத்த ப்ராஜக்ட் வரும். எக்ஸ் சொல்யூஷன்ஸ் புதிய ப்ராஜக்ட்டில் தீவிரமாக இருந்தது. சரியான வேலை. நூலகத்திலிருந்து ஹுவாகுவாங் ஜாங்கின் பிரதியை வாங்கி வந்ததோடு சரி. படிக்கக்கூட நேரமில்லை. அதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை. எதிர்பாராதவிதமாக விடுப்பு கிடைத்தது. இன்றைக்குப் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும் என்று நிக்கி முடிவு செய்தான்.

புத்தகத்தைப் படிக்கும் போதே கையோடு மொழிபெயர்த்துவிட வேண்டும். மொத்தமாகப் படித்துவிட்டு மொழிபெயர்ப்பது சிரமம். அவ்வப்போது படிப்பதை அவ்வப்போது மொழிபெயர்த்தால் அப்பாவுக்கு மின் அஞ்சலில் அனுப்பி விடலாம்.

இருபதுக்கு இருபது அடி அறை அவனுடையது. மூன்று அறைகள் இந்த மாதிரி இருந்தன. நான்காவது அறை ஸ்டோர் ரூம். எப்போதாவது போர் வந்தால், பதுங்கிக்கொள்வதற்காகக் கட்டப்பட்ட அறை அது. இப்போது பூஜை அறையாக இருக்கிறது. சமையல் அறை ஒன்றும் உண்டு. அறைவாசிகள் சமைத்துக் கொள்ளலாம். அந்த அறைவாசிகள் ஒன்றாக வாழ்ந்த போதும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் தனித்தனித் தீவுகளாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி சாவிகள் வைத்திருந்தார்கள். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; போகலாம். பிரச்சனை என்று எதுவும் வராதவரை பிரச்சனை ஏதும் இல்லை.

ஜன்னலோரம் ஒட்டிப் போடப்பட்ட படுக்கை. அதை ஒட்டி ஒரு சின்ன மலேசிய மர மேஜை. கட்டிலை ஒட்டிய அந்த ஜன்னல் மிகப் பெரியது. கண்ணாடி பொருத்தப்பட்ட வழுக்கும் சட்டக ஜன்னல். ஜன்னல் வழியே வெளியே தெரியும் கட்டடங்களையும், மரங்களையும் பார்த்தபடி படுத்திருப்பது ஆனந்தம். கண்ணாடியைத் திறந்தால் பேயாய் காற்று வீசும். மேஜை மேலிருக்கும் துணிவிரிப்பை கலைக்கும். காலண்டர்களை அலைக்கழிக்கும். மேஜையின் மேல் ஜாங்கின் பயணக்குறிப்பும், லாப் டாப்பும் இருந்தன. படித்தபடியே தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். இன்றைக்கு சீக்கிரமே விழிப்பு வந்திருந்தது. குளித்து, சுயசமையலில் பாம்பே டோஸ்ட் தயாரித்து விழுங்கினான். கறுப்பு தேனீர் தயாரித்து குடித்தான். நேராக மேஜை முன் போய் உட்கார்ந்தான். தயாராகி விட்டாயா என்று ஜாங்கின் பிரதி அவனைப் பார்த்துப் புன்னகைத்தது. சட்டென்று வந்த காற்று புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திறந்துவிட்டு நகர்ந்தது.

முதல் பக்கம், அந்த நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர், மொழிபெயர்ப்பாளரின் பெயர், பதிப்பகத்தின் பெயர் ஆகிய விவரங்களைத் தாங்கி இருந்தது. நிக்கி அடுத்த பக்கத்தைப் புரட்டினான். ஹுவாகுவாங்கின் கோட்டோவியம் இருந்தது. அதற்கு அடுத்த பக்கத்தில் இளவரசியின் கோட்டோவியம். அதற்கும் அடுத்த பக்கத்தில் மால்கம் பிராட்பரியின் சிப்பியா கலர் புகைப்படம். பழைய ஹாலிவுட் நடிகர் ஜான் வெயின் போல் இருந்தார். அதற்கு அடுத்த பக்கம் ‘பார்பராவுக்கு’ என்று சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. அதற்கும் அடுத்த பக்கம் ஹுவாகுவாங்கின் வாழ்க்கைக் குறிப்பைப் பேசியது. புத்தத் துறவி ஐ சிங்கால் எழுதப்பட்டு மால்கம் பிராட்பரியால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜாங் இளவரசிக்கு எழுதிய கடிதங்கள் இருந்தன. மொத்தம் ஐம்பது கடிதங்கள். ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும் மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகள்.

எல்லாவற்றையும் ஒரு முறை புரட்டிப் பார்த்தான். பின்பு, வாழ்க்கைக் குறிப்பைப் படிக்க ஆரம்பித்தான்.

29

புத்தத்துறவி ஹுவாகுவாங் ஜாங்

புத்தத்துறவி ஹுவாகுவாங் ஜாங் கி.பி. 265 ஆம் ஆண்டு சீனாவில் லுவோயாங்கில் பிறந்தார். அப்பாவின் பெயர் போலிங் ஜாங். அம்மா மிங் ஜாங். மூன்று குழந்தைகளில் ஹுவாகுவாங் ஜாங் கடைக்குட்டி. ஒரு அண்ணன். பெயர் ஜியாங். அக்காவின் பெயர் லியூ ஜாங்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த முதல் பயணி ஜாங். பிரபல சீனப்பயணியான ஃபாஹியானுக்கு சற்று முந்திப் பிறந்தவர் அவர்.. இந்தியாவுக்குச் செல்வதற்கு ஃபாஹியானுக்கே ஆதர்சமாக இருந்தவரும் அவர்தான் என்றே சொல்லலாம். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் ஜின் வம்சம் இரண்டு பிரிவுகளாக இருந்து ஆட்சி செய்தது. ஒன்று கிழக்குப் பிரிவு. அடுத்தது மேற்குப் பிரிவு. கிழக்குப் பிரிவின் தலைநகர் ஜியான்காங். மேற்கு ஜின் வம்சத்தை நிர்மாணித்தவர் பேரரசர் வூ. அவர் லுவோயாங்கைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்.

செல்லக்குழந்தையான ஜாங்குக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போகும். அடிக்கடி மருத்துவர் வீட்டுக்குப் போவதே முக்கிய வேலையாக இருந்தது. அம்மா, அண்ணன், அக்கா என்று ஒருவர் மாற்றி ஒருவர் அவனை மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். ஒரு தடவை புத்த பிக்கு ஒருவர் குழந்தையை ஒரு தடவை புத்த மடாலயத்துக்கு அழைத்துப் போகுமாறு சொன்னார். பெற்றோருக்கும் அப்படி செய்தால் என்ன என்று தோன்றியது. அதனால் ஜாங்கை ஒரு நாள் மடாலயத்துக்கு அழைத்துப் போனார்கள். அதன் பிறகு அவனுக்கு நோய் எதுவும் வரவில்லை. அதன் பிறகு ஜாங் நிரந்தரமாக மடாலயத்திலேயே தங்கி விட்டான். பையன் எங்கிருந்தால் என்ன, நன்றாக இருந்தால் சரி என்று பெற்றோரும் விட்டுவிட்டனர். அப்போது அவனுக்கு பத்து வயது. அவனை பயிற்சி பிக்குவாக – சிரமணேராவாக – மடாலயம் சேர்த்துக் கொண்டது. அடுத்த பத்தாண்டுகளில் ஜாங் சீன மொழியுடன் சமஸ்கிருதம், தர்க்கசாஸ்திரம் போன்றவற்றைக் கற்றான். தாவ் தத்துவவாதிகளை தர்க்கத்தில் தோற்கடித்தான். அவன் புகழ் லுவோயாங் முழுக்கப் பரவியது. அறிவில் மட்டுமல்லாமல் தோற்றத்திலும் ஜாங் பேரழகனாக இருந்தான். லுவோயாங்கில் இருந்த இளம் பெண்கள் அவன் மேல் காதல் வயப்பட்டனர்.

கி.பி. முதல் நூற்றாண்டில் பார்த்தியா என்றொரு அரசு இருந்தது. மெசபடேமியாவும், ஈரானும் உள்ளடக்கிய பிராந்தியத்தில் அந்த அரசு இருந்தது. அந்த நாட்டின் இளவரசர் தன் பட்டத்தைத் துறந்து பிக்கு ஆனார். அவர் பெயர் அன் ஷிகாவோ. அவர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக அண்டை நாடான சீனாவுக்குப் போனார். அப்போது அங்கே ஆட்சி புரிந்து கொண்டிருந்த பேரரசர்கள் ஹூவானும், அவருக்குப் பின் பட்டத்துக்கு வந்த லிங்கும் அவரை வரவேற்றனர். ஷிகாவோ தான் முதன் முதலில் புத்த இலக்கியங்களை சீன மொழியில் பெயர்த்தவர். அவர் மொழி பெயர்த்த எல்லா இலக்கியங்களையும் ஜாங் கரைத்துக் குடித்தான். பௌத்த இலக்கியங்களில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒன்றைத் தவிர. ஓரிரு பிரதிகளில் ‘மந்திர வாக்கியம்’ என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை புத்தரே சொன்னாரா, அவருக்குப் பின்னால் வந்த யாரோ சொன்னார்களா தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அது என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் வந்தது. அதற்கு இந்தியா போனால்தான் விடை தெரியும்.

அவனுக்கு இருபத்தைந்து வயதான போது ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டான். அந்தச் சிக்கல் எந்த ஒரு பிக்குவுக்கும் வரக்கூடாதது. அவனுக்கு வந்து தொலைத்துவிட்டது. இளவரசி ஸூ லியூ என்ற இருபது வயது இளம் பெண் வடிவத்தில் வந்துவிட்டது. முதலில் அவள் அவனிடம் தர்க்கம் பயில விரும்பினாள். அவனும் அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டான். தினமும் அரண்மனைக்குப் போய் இளவரசிக்கு தர்க்கம் பயிற்றுவிப்பதில் அவனுக்கு எந்தவிதமான சிரமமும் இருக்கவில்லை. மடாலயமும் அவனை அனுமதித்தது. அதனால் அவன் இளவரசிக்கு தர்க்க சாஸ்திரம் சொல்லிக்கொடுக்க அரண்மனைக்குப் போகலானான். அவன் தினமும் மாலைவேளையில் அரண்மனைக்குப் போவதை யாரும் சந்தேகிக்கவும் இல்லை.

இளவரசிக்கு தர்க்க சாஸ்திரத்தைக் கற்பதைவிட அவனது முகத்தையும், உடலையும் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. அவனுக்கு இது மிகப்பெரிய தவறு என்று புரிந்து விட்டது. நாளுக்கு நாள் இளவரசியின் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவனருகில் வந்து சந்தேகம் கேட்பாள். அப்போது சமயங்களில் அவன் தலை மீது தன் தலையை இடித்துக் கொள்வாள். வேறு சில சமயங்களில் அவன் முகம் அவள் முகத்துடன் உரசும். அவள் மணம் அவனை ஆக்கிரமிக்கும். பெண் வாசனை. சதா சாந்தப்படுத்தப்பட்ட மிருகம் ஒன்று அவனுள் இருந்து எழும். அதை சிரமத்துடன் அடக்கி விட்டு, அவளிடம் ஒன்றும் தெரியாத மாதிரி நடிப்பான். ஒரு நாள் மாலை நேரம் வந்து பாடம் சொல்லிக்கொடுக்கும் போது சற்று இருட்டி விட்டது. எண்ணைய் விளக்குகள் ஏற்றப்பட்டன. அந்த வெளிச்சத்தில் அவள் அசாதாரண அழகுடன் மிளிர்ந்தாள். தன்னை மறந்து ஒரு கணம் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். பின்பு திடுக்கிட்டு தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டான். அவள் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். அவன் முகத்தில் கவலையின் கீற்றுகள். அன்றுடன் தர்க்க சாஸ்திரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். அந்தத் தகவலை இளவரசியிடமும், மன்னரிடமும் தெரிவித்தான். அதன் பிறகு அரண்மனைக்குப் போவதை விட்டொழித்தான்.

சில தினங்கள் கழிந்தன. நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, அன்றாடக் கடமைகளில் கவனம் செலுத்தினான். விதி அவனை விட்டபாடாக இல்லை. மீண்டும் அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது. இளவரசிக்கு சமஸ்கிருதம் கற்க வேண்டுமாம். இதென்ன புதுத் தொல்லை என்று யோசித்தான். இளவரசி அவனைக் கொல்லாமல் விடமாட்டாள் போல் தோன்றியது. இதிலிருந்து எப்படியாவது தப்பியாக வேண்டுமே. சில தினங்கள் உடல் நலம் சரியில்லை என்று சொல்லித் தவிர்த்தான். பின்பு இன்னும் சில தினங்கள் மடாலயத்தில் அவசர வேலைகள் இருப்பதாகப் பொய் சொன்னான். ஒரு பிக்கு பொய் சொல்லலாமா என்று வருந்தினான். அவன் மனச்சாட்சி அவனை அறுத்தது. சரி இன்றைக்குப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அரண்மனையிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அவனும் புறப்பட்டுப் போனான். அன்றிலிருந்து சமஸ்கிருத வகுப்பு தொடங்கியது. இருவருடைய நெருக்கமும் அதிகரித்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனைப் பிடித்து இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொள்வாள் இளவரசி. ஆரம்பத்தில் இம்சையாக இருந்தாலும், போகப் போக அதை சுகமாக அனுபவிக்க ஆரம்பித்தான் ஜாங். ஒரு நாள் அந்த விபத்து நடந்தது. இளவரசியும் அவனும் உடலால் கலந்து விட்டனர். இவர்கள் கலவி முடிந்து பிரியும் போது, ஜாங் மிகவும் குழம்பினான். தான் மிகப் பெரிய பாவம் செய்துவிட்டதாக வருந்தினான். புத்தபகவான் தனது செயலை ஏற்றுக் கொள்வாரா என்று தன்னையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான்.

பகவான் புத்தர் காமம் தீயது என்று ஒரு போதும் சொல்லவில்லை. காமத்தை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீமை என்று சொல்லியிருக்கிறார். காதலுடன் சேர்ந்த காமம் நல்லது. காதல் இல்லாத காமம் தீயது என்றுதான் சொல்லி இருக்கிறார். இளவரசிக்கு என் மேல் காதல் இருக்கிறது. எனக்கும் அவள் மேல் காதல் இருக்கிறது. எனவே நாங்கள் செய்தது இயற்கைக்கு மாறானது அல்ல. என்று நினைத்தான். இருந்தாலும், இதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினான். அப்போது சீனப்பேரரசராக இருந்தவர் வூ. உடனடியாக அவரைச் சந்தித்து தான் இன்-து (இந்தியா) நாட்டுக்குப் போக விரும்புவதாகத் தெரிவித்தான். இளவரசியிடமிருந்து தப்பிப்பதற்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. வியப்படைந்த பேரரசர், ’ஏன் திடீரென்று இன்-துவுக்குப் போகிறாய்’ என்று கேட்டார். தற்போது சீன மொழி பெயர்ப்பில் இருக்கும் பௌத்த நூல்கள் பாடபேதங்களுடன் இருக்கின்றன. எனவே, அவற்றை சரி செய்ய இன்-து நாட்டில் இருக்கும் மூல நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றான். அது மட்டுமல்லாமல் சில பிரதிகள் மந்திர வாக்கியத்தைப்பற்றிப் பேசுகின்றன. அந்த வாக்கியம் என்ன என்று தெரியவில்லை. அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அது இன்-து போனால் மட்டுமே சாத்தியம். அவருக்கும் அவன் சொல்வது சரி என்றே பட்டது. அவனுக்கு இந்தியா செல்வதற்கு அனுமதி வழங்கினார். செலவுக்குப் பணம், பொருட்கள், துணைக்கு உதவியாளன் ஆகிய ஏற்பாடுகளும் செய்தார்.

இளவரசிக்கு இதெல்லாம் தெரியாது. அவளுக்குத் தெரியாமல் நழுவி விடவே ஜாங் திட்டமிட்டிருந்தான். சில ஆண்டுகள் கண்ணுக்குத் தெரியாமல் எங்காவது போய் இருந்தால் இளவரசி மனம் மாறி வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்வாள்; அதன் பிறகு ஊருக்குத் திரும்பி விடலாம் என்பது திட்டம். பயண ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருந்த போது திடீரென்று பேரரசர் வூ காலமானார். ஜாங்கின் பயணம் தடைப்பட்டது. பேரரசர் காலமான செய்தி பரவியதுமே அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் கலவரம் மூண்டது. அரண்மனைக்கு வெளியே எட்டு மாவட்டங்களை ஆண்ட இளவரசர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தனர். அரண்மனைக்கு உள்ளேயே அரசரின் பேரரசிகளுக்குள் யார் பெரியவர் என்ற பலப்பரீட்சை நடந்தது. அரண்மனைக்குள் கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர். அதை பேரரசிகளில் ஒருத்தியான டோவேஜர் யாங் துணிச்சலுடன் எதிர்கொண்டாள். பேரரசர் வூவின் வாரிசாக ஹூயி பட்டம் சூட்டிக் கொண்டார். ஹூயியின் மாற்றாந்தாய் டோவேஜர் யாங் சகல அதிகாரங்களையும் கைப்பற்றிக்கொண்டாள். மற்ற பேரரசிகளும் அவர்களின் வாரிசுகளும் உயிருக்குப் பயந்து அரண்மனையை விட்டுத் தப்பி ஓடினர். சிக்கியவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். இளவரசி ஸூ லியூ நிர்க்கதியாக நின்றாள். அவளைக் காப்பாற்றிக் கொண்டு போய் மடாலயத்தில் ஒளித்து வைத்தான் ஜாங். வெளியே தெரிந்தால் அவள் உயிருக்கு ஆபத்து என்பதால் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ஜாங்குக்கு. மடாலயத்தில் ஒரு பணிப்பெண்ணாகத் தன்னை மாற்றிக் கொண்டாள் இளவரசி.

பேரரசருக்குக் கொடுத்த வாக்கின்படி தான் இன்-துவுக்குப் பயணமாக வேண்டும் என்றும், தான் வரும் வரை அவள் மடாலயத்தில் பத்திரமாக தங்கி இருக்கலாம் என்றும் ஜாங் கூறினான். மடாலயத்தில் ஜாங்குடன் காதல் வாழ்க்கை வாழ்வதைப் பற்றிய கனவுகளில் மூழ்கி இருந்த இளவரசி அதிர்ச்சி அடைந்தாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். அவன் அவளை ஆறுதல் கூறி தைரியம் சொல்லி ஒருவழியாக சமாதானப்படுத்தினான். ’இன்-துவுக்குப் போய் ஓரிரு ஆண்டுகளில் நான் திரும்பி விடுவேன். அங்குள்ள பிரதிகளை வாங்கிக்கொண்டு வரவேண்டும் அவ்வளவுதான். எவ்வளவு விரைவில் வர முடியுமோ அவ்வளவு விரைவில் வந்து விடுவேன்’ என்று உறுதி செய்தான். ’நீ பயப்படாதே. நாம் உடலால் கலந்து விட்டோம். நாம் இருவரும் இப்போது கணவன் மனைவிதானே. தொழில் நிமித்தம் கணவன் மனைவியைப் பிரிவது இயல்பான நிகழ்வுதானே. நீ இதை அந்த ரீதியில் எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றான். அவள் ஒருவழியாக அவனை ஒரு நிபந்தனையுடன் வழியனுப்பி வைத்தாள். அவன் அவளை விட்டுப் போன பிறகு, அவன் போகும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அவளுக்குக் கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. அதற்கு ஒப்புக்கொண்டான்.

ஒரு நல்ல நாளில் ஜாங் இந்தியாவுக்குப் புறப்பட்டார். வழியில் கிளர்ச்சி ஒரே களேபரமாக இருந்தது. மாறு வேடம் பூண்டு அலைந்து திரிந்து, ஜின்ஜியாங் வழியாக யுங்காங், துன்ஹுவாங், மிரான், கோடான், காந்தாரம், புருஷபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து இந்தியா வந்தார். முதல் கட்டமாக, லுவோயாங்கிலிருந்து வந்து சேர்ந்ததும், அங்கிருந்து இளவரசிக்குத் தனது முதல் கடிதத்தை எழுதினார். நேரடியாக இளவரசிக்கு எழுதாமல் மடத்தின் மூத்த பிக்குவான சென்ஷிக்கு எழுதினார். பின்பு ஒவ்வொரு நாட்டுக்குப் போகும் போதும் ஒரு கடிதம் எழுதினார். இந்துகுஷ் மலையைக் கடந்து லும்பினியை அடைந்தார். தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். வாரத்துக்கு ஒரு கடிதம் வீதம் ஒரு ஆண்டில் 52 கடிதங்கள் எழுதினார். (அவற்றில் 50 கடிதங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன.) இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அடிக்கடி வியாபாரிகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். எனவே, அவர் எழுதும் கடிதங்களை இளவரசியிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை.

ஒரே ஆண்டில் இந்தியாவில் இருந்த புத்த மடாலயங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாகக் காஞ்சி, மதுரை என்றெல்லாம் அலைந்து திரிந்து புத்தமத நூல்கள் பலவற்றையும் சேகரித்துக் கொண்டு சீனாவுக்குத் திரும்பினார். தனது லட்சியமான ‘மந்திர வாக்கிய’த்தைக் கண்டடைந்தார் ஜாங். போகும் போது கடல் வழியாக சீனாவுக்குப் போனார்.

இளவரசி ஜாங்குக்காகக் காத்திருந்தாள். ஜாங்கைக் கண்டதும் கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் உகுத்தாள். கண்டவர் மனம் கலங்கியது. ஜாங் தான் கொண்டு வந்திருந்த பௌத்த நூல்களை மடாலயத்தில் ஒப்படைத்தார். தனது துறவறத்தைத் துறந்துவிட்டு இளவரசியைத் திருமணம் செய்து கொண்டு லுவோயாங்கில் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்தார். அவர் மேல் அன்பு கொண்ட ஒரு பிரபு தனது தோட்டத்துடன் கூடிய வீட்டை ஜாங்குக்கு அன்புப்பரிசாகக் கொடுத்தார். அதில் தன் மனவியுடனும் குழந்தைகளுடனும் ஜாங் குடியேறி வாழ்ந்தார். மடாலயத்துக்கு வெளியில் இருந்தபடியே பௌத்த நூல்களில் இருந்த பாடபேதங்களை சரி செய்து தன் சேவையைத் தொடர்ந்தார்.

**********

அது வரை படித்த நிக்கி படிப்பதை நிறுத்தினான்.

ஒரு கணம் கண்களை மூடினான். பின்பு சற்று யோசித்தான். நீண்ட கொட்டாவி ஒன்றை விட்டான். லேசாக சோம்பல் முறித்தான். பின்பு அடுத்த பக்கங்களைப் புரட்டிப்பார்த்தான். அவற்றில் ஜாங்கின் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. தேநீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. தொடர்ந்து படிக்கலாமா, அல்லது தேநீர் குடிக்கலாமா என்று யோசித்தான்.

மீண்டும் சோம்பல் முறித்தான். எலுமிச்சைசாறு பிழிந்த கறுப்புத்தேநீர் ஒரு கப் தயாரித்துக் குடித்தான். படித்த விஷயங்கள் அவன் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தன. பின்பு ஒரு கணம் அந்த இளவரசியைப் பற்றி யோசித்தான். அவள் எப்படி இருந்திருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தான். புத்தகத்தில் இருந்த கோட்டோவியத்தில் முகம் தெளிவாக இல்லை. அவள் ஹாங்காங் நடிகை ஷூ க்வி போல் இருந்திருப்பாளா..அல்லது ’ஸ்கார்ப்பியன் கிங்’ படக் கதாநாயகி கெல்லி ஹூ போல் இருந்திருப்பாளா…ஒரு வேளை சீனத்து பார்பி பொம்மை போல் தோன்றும் சீன நடிகை ஜூ ஷுன் போல் இருந்திருக்கலாமோ..கோட்டோவியத்துடன் அந்த நடிகைகளின் முகத்தை ஒப்பிட்டுப் பார்த்தான். பின்பு போதும் என்று கற்பனையின் சிறகுகளைக் கத்தரித்தான். பின்பு தான் படித்ததை மொழி பெயர்த்தான். பெயர்த்ததை அப்பாவின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினான். ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்ந்தான். ஒரு பெருமூச்சு விட்டான். அப்போது பார்த்து செல்போன் அழைத்தது. அப்பாவாக இருக்குமோ..சட்டென்று எடுத்துப் பார்த்தான். போனின் திரை சென்னி க என்றது. அவளது படம் திரையில் தெரிந்தது. இவள் முகம் கூட ஒரு கொரிய நடிகையை நினைவு படுத்தியது என்று நினைத்தான். கொரியர்களுக்கும், சீனர்களுக்கும் வித்தியாசம் காண்பது கடினம்.

அலைபேசியை உயிர்ப்பித்தான். அவள் பேசினாள். அவனை உடனே பார்க்க வேண்டும் என்றாள். அவள் ஆர்ச்சர்ட் அருகே இருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கி இருந்தாள். அங்கிருந்து எஸ்பிளனேட் பக்கம். அவனை அங்கு வந்து விடுமாறு சொன்னாள்.

30

எஸ்பிளனேட் கலையரங்கம் பிரமாண்டமான டுரியன் பழத்தொப்பி அணிந்திருந்தது. அதன் எதிரே நீர்ப்பரப்பு சலனமற்று இருந்தது. அதைப் பார்த்தபடி நிக்கியும், சென்னியும் நின்றிருந்தனர். சிங்கப்பூரின் கலாசாரக் குறியீடு அது. நாடகம், நாட்டியம் போன்ற பல நிகழ்ச்சிகள் அங்கே நடக்கும். அங்கு வருவதற்குச் சற்று முன் இருவரும் மின் தொடர்வண்டி நிறுத்தத்தில் சந்தித்தார்கள். அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த மக்டனால்டுக்குள் நுழைந்தார்கள். அவள் பர்கர், ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், லெமன் ஐஸ் டீ ஆர்டர் செய்தாள். அவன் பாப்கார்ன் சிக்கன் என்று சொன்னான். அது ஒரு சுயசேவை மையம். இருவரும் தத்தம் தட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

‘என்னை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றாயே?’

‘ஆமாம்’

அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்தான் நிக்கி. அவள் முகம் உணர்ச்சி இன்றி இருந்தது. எதையும் படித்தறிய முடியவில்லை. அவள் ஒன்றும் பேசவில்லை. ஃப்ரென்ச் ஃப்ரைஸை ஒவ்வொன்றாக பதப்படுத்தப்பட்ட தக்காளிச் சாற்றில் தொட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். அவன் ஏதோ கேட்க யத்தனித்தான். பேசவிடாமல் கையமர்த்தி ‘வேறு என்ன சாப்பிடப் போகிறாய்? என்றாள். ’இது போதும்; வேறு ஒன்றும் வேண்டாம்’ என்றான்.

‘சரி, சொல். என்ன விஷயம்?’

‘முதலில் சாப்பிடு. அப்புறம் சொல்கிறேன்’

இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அலுவலகம், வேலை பற்றியே பேச்சு சுற்றியது. சாப்பிட்ட பின் அவள் எழுந்தாள். அவனும் அவளைப் பின்பற்றினான். மக்டனால்டை விட்டு வெளியேறினார்கள். தான்தோன்றியாக அவள் தொலைவில் தெரிந்த எஸ்பிளனேட் கலையரங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவனும் தொடர்ந்தான்.

இருவரும் கொஞ்ச தூரம் நடந்தார்கள். எதிரில் இருந்த ஸ்டாம்போர்ட் சாலையைக் கடந்தார்கள்.

கொஞ்ச நேரம் மௌனம்.

’எங்கே போகிறோம்?’

‘ம்ம் அதைப்பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றாள் அவள்.

மௌனம்.

‘என்னிடம் எதையோ சொல்ல நினைக்கிறாய், இல்லையா?’

’ஆமாம்’

‘சொல்லேன். என்ன தயக்கம்?’

‘அதை சொல்வதற்கான இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’

‘இந்த இடத்துக்கு என்ன?’

உடனே அவள் நின்றாள். அப்போது அவர்கள் இருவரும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்கள். எதிரில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் இருந்தது. அவள் சிரித்தாள்.

‘என்ன சிரிப்பு?’

‘என்னமோ நான் உன்னை ப்ரொபோஸ் செய்யப்போவது போல் இருக்கிறது இந்த இடம். ஆண்டவன் சாட்சியாக நாம் இருவரும் இணைந்து வாழ உறுதி எடுப்பதற்கு ஏற்ற இடம். இது, காதலர்களுக்கு ரொமாண்டிக் ஆன இடம். எனக்கு வேறு மாதிரி இடம் வேண்டும்’

இந்தப் பக்கம் ஸ்டாம்போர்ட் சாலை. அந்தப் பக்கம் கோல்மேன் தெரு; நேராகப் போனால் பழைய சிங்கப்பூர் வரும். அங்கே ஆர்மீனியன் தெரு இருக்கிறது. அங்குதான் சப் ஸ்டேஷன் என்ற மினி தியேட்டர் ஒன்று இருக்கிறது. அங்கே போனால் ஏதாவது பரீட்சார்த்த நாடகம் பார்க்கலாம். இருவரும் அங்கு போவது என்று முடிவு செய்தார்கள்.

இருவரும் நடந்தே போனார்கள். அங்கிருந்து பதினைந்து நிமிடங்களில் சப் ஸ்டேஷனை அடைந்தார்கள்.

டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். மொத்தம் முப்பது இருக்கைகள் இருக்கலாம். இருபத்தி ஐந்து பேர் நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். அன்றைக்கு சாமுவேல் பெக்கட்டின் நாடகம். ’கோடாவுக்காகக் காத்திருத்தல்’ சீனர்களும், மலாய்க்காரர்களும் நடித்தார்கள். நல்ல ஆங்கிலம் பேசி நடித்தார்கள். இயக்குநர் ஒரு தமிழர். நாடகத்தில் இருந்த கதாபாத்திரங்கள் கோடாவுக்காகக் காத்திருந்தனர். நிக்கி அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று காத்திருந்தான். அவளும் அவனிடம் எப்போது சொல்லலாம் என்ற தருணத்துக்காகக் காத்திருந்தாள்.

நாடகம் முடிந்ததும் இருவரும் நாடகம் பற்றிப் பேசினார்கள். நடந்தே போனார்கள். வழியில் எதிர்ப்பட்ட உணவு விடுதிக்குள் நுழைந்தார்கள். என்னென்னவோ பேசினார்கள். என்னென்னமோ சாப்பிட்டார்கள். நகர மன்ற தொடர்வண்டி நிலையத்தில் வண்டி ஏறினார்கள். கடைசி வரை அவள் தான் சொல்ல வந்ததை சொல்லவில்லை. இவனும் கேட்கவில்லை.

••

( எம்.ஜி.சுரேஷின் கடைசி நாவலான
தந்திர வாக்கியம் நாவலிலிருந்து சில பகுதிகள் )

பூஜ்ய நேரம்

45, ஆர்மீனியன் தெரு, சிங்கப்பூர், 179936 என்ற முகவரியில் சப் ஸ்டேஷன் இருக்கிறது. பணத்தை இலக்காக வைத்துக் கொண்டு, மாரத்தான் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும், ராஃபிள்ஸ் ப்ளேஸ் வர்த்தக நிறுவனங்களுக்கு மாற்றாக, அதற்குப் பக்கத்திலேயே, கலையின் மேன்மையை இலக்காக வைத்துக் கொண்டு லாப நோக்கமின்றி மாரத்தான் ரிலே-ரேஸ் ஓட்டம் ஒடிக்கொண்டிருக்கும் மாற்று நிறுவனம் அது. சிங்கப்பூரின் முதல் தன்னிச்சையாக இயங்கும் கலை இலக்கிய அமைப்பும் அதுவே. தீவிரமான கலைஞர்கள், அறிவு ஜீவிகள் ஆகியோருக்கான சுதந்திரமான வெளி அது. குவோ பாவ் குன் என்ற சீனக் கலைஞரின் மூளைக்குழந்தை. வாழ்க்கையின் அர்த்தம் பணம் ஈட்டுவது மட்டுமே அல்ல. வாழ்க்கை அதற்கும் மேலான அர்த்தம் கொண்டது என்ற கருத்தை உடையவர்கள் சங்கமிக்கும் இடம் இது. இங்கே சீன, தமிழ், மலாய் கலைஞர்கள் தங்கள் கலை ஆக்கங்களை சுதந்திரமாக அரங்கேற்றுவார்கள்.

நெளிக்கோடுகளும் அசையாப் புள்ளிகளும் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன்  பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

நாம் செயல்பட முடிகிற எல்லைக்கு வெளியே ஓர் உலகமே (பெரும்பாலும் நமக்கு எதிராகவே) இயங்கிக் கொண்டிருக்கிறதென்பதை மிக விரைவில் உணர்வது மனச்சமாதானத்திற்கான எளிய வழி. சில பொருளில்லாத தருணங்களுக்குப் பிறகு நான் எனக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு விதி FAT.

உதாரணத்திற்கு, பாரத வங்கியின் ஏடிஎம் அட்டையை முதலில் தென்படும் வேறெதாவது வங்கியின் இயந்திரத்தில் நுழைப்பதைத் தவிர்த்து பாரத வங்கியின் ஏடிஎம்மைத் தேடிப் பிடித்தால் அவ்வியந்திரம் மலரிதழ்களைப் போலத் தூவப்பட்ட காகிகத் குப்பைகளுக்கு நடுவே பிணமாகியிருக்கும். முடிந்தால் கேமராவைப் பார்த்து விட்டு அதற்கு ஓர் உதை கொடுக்கலாம் அல்லது அதன் அம்மாவைத் திட்டலாம். இரண்டிற்குமே அது அசைந்து கொடுக்காது. தனது கடமையைக் கண்ணாகச் செய்வதில் மார்வாடிகளுக்கு ஒப்பானது.

அன்றாட வாழ்க்கைக்கான விதிகளை உருவாக்கிக் கொள்வதற்கு ஆராய்ச்சிகள் எதுவுமே தேவையில்லை. எனது விதியை விவரிக்கிறேன்.

FAT: First Availablity Theory

தவறுதலாக Fist Availablity என வாசித்து விட வேண்டாம். இவ்விதி எளிமையானது. நாம் ஒரு செயலைச் செய்ய நினைத்தால் அதற்கான முயற்சியின் துவக்கத்திலேயே கிடைக்கக் கூடய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது. ஆனால் இது நூறு சதவீதம் வெற்றிகரமானதென்பதற்கு நான் உத்திரவாதமளிக்க முடியாது. ஒரு சட்டையின் மீது கவனம் குவிந்து பின் வெகுநேரம் தேடிச் சலித்து கவனத்திலிருக்கும் சட்டையை வாங்குவதற்கு ஒப்பானது.

மலைகள் இணைய இதழுக்கு ஒரு பத்தி எழுதுவதென்று ஒப்புக் கொண்ட பிறகு எங்கிருந்து துவங்குவதன்று அதிகமும் யோசிக்காமல் இப்பத்தியை எழுத அமர்ந்திருக்கும் வேளையில் ஒலிக்கும் EDM எனப்படும் மின்னணு நடன இசையிலிருந்து துவங்கிவிடாலமென்ற முடிவை எட்டியதற்கு மேற்சொன்ன என்னுடைய சொந்தத் தியரியதைத் தவிர வேறொரு காரணமுமில்லை.

டெட்மவுஸின் (DeadMou5) அவரிசியா எனும் இசைத்துண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் டெட்மவுஸிற்கு வருவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே, டஃப்ட் பங்க் இசையமைத்த ட்ரோன்: லெகஸி திரைப்படத்திற்கான இசையைக் கவனித்த பிறகு மின்னணு இசையைக் கேட்கத் துவங்கியிருந்தேன்.

download (12)

என்ன ஓர் ஆரம்பம். சோர்வுற்ற நாளின் தலையில் தண்ணீரை ஊற்றிச் சிலிர்க்க வைத்து, உடையும் நிலைக்கு உற்சாகத்தை உயர்த்திய இசை. பாடலுடனும், வெறும் இசைக்கோர்ப்பாகவும் மின்னணு நடன இசை படைக்கப்படுகிறது. டஃப்ட் பங்க் இசையமைத்து பேரல் வில்லியம்ஸ் (Pharrel Williams) பாடிய “கெட் லக்கி” பாடலில் இருந்தே துவங்கியது நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் அது ஒரு பாப் பாடலைப் போன்றிருக்கும். கறுப்பர்களின் முகத்திலிருக்கும் வசீகரத்தால் நாம் ஈர்க்கப்பட்டால் வசீகர வெள்ளை முகங்களும் கூட பின்னுக்குப் போய்விடும். அப்படியொரு முகம் வில்லியம்ஸிற்கு. வாயை இறுக்கமாக மூடினாலும் புன்னகைக்கும் முகம்.

மின்னணு இசையின் மூலகங்கள் ஆச்சரியமானவை. Kraftwerk எனும் ஜெர்மானிய இசைக்குழுவினர் அல்லது ஜியார்ஜியோ மோரடோர் ஆகியோரிடமிருந்து துவங்குவதாக என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை. நாம் அறுதியுட்டுக் கூற முடியாத ஆரம்பநிலை முயற்சிகளும், தொடர்ச்சியும் ஜாஸ் இசைக்காலத்திலிருந்தே துவங்கி விட்டதாக மின்னணு இசைக்கருவிகளின் வரலாறு சொல்கிறது. ஹென்றி கோவெல் எனும் இசைக்கலைஞரும், லியோன் தெரெமின் எனும் இரஷ்யரும் இணைந்து Rhythmicon எனும் முதல் டிரம் மெஷினை உருவாக்கிய வருடத்தில் காந்தி உப்புச்சத்தியாகிரம் செய்து கொண்டிருக்க, முதல் தமிழ் டாக்கியான காளிதாஸ் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

டிஸ்கோவும் மின்னணு நடன இசையும் ஒட்டியே வளர்ந்தவை. டோனா சம்மர் பாடிய ஹாட் ஸ்டஃப் பாடலுக்கான இசை ஜியார்ஜியோ மோரடோர். டிஸ்கோ இசைக்கு கச்சிதமான உதாரணம் இப்பாடல். இருவரும் சேர்ந்து பணியாற்றிய நாட்களில் டோனா பாடிய “ஐ ஃபீல் லவ்” (1977) பாடலே மின்னணு நடன இசையின் சரியான துவக்கம் என்கிறார் ஜியார்ஜியோ. ஆனால் Kraftwerk குழுவினரின் ஆட்டோபான், டிரான்ஸ் யூரோப் எக்ஸ்பிரஸ் ஆல்பங்கள் இதற்கு முன்பே வெளியாகியிருக்கின்றன. அதிலும் ஆட்டோபான் (1974) ஆல்பத்தின் இசை நேற்றுத்தான் இசைக்கப்பட்டதைப் போலிருக்கும். இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும் இதே உணர்வுதான் எழக்கூடும். நிச்சயமாக ஒரு T-800 எதிர்காலத்திலிருந்து ஒலிகளைச் சேகரித்து அவர்களுக்கு அளித்திருக்க வேண்டும். ரஹ்மானின் பல இசைக் கோர்வைகள் Kraftwerkன் பாதிப்பில் எழுந்தவையாக ஊகிக்க முடிகிறது. டஃப்ட் பங்க்கின் “டெக்னலாஜிக்” பாடலையும் அவர் எந்திரன் திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ஜியார்ஜியோ நடன இசைக்கு வழிவகுத்தவர் என்று ஒப்புக் கொண்டால் Kraftwerkஐ தாராளமாக மின்னணு இசையின் செவ்வியல் மூதாதை எனலாம். அவர்களுடைய ஆல்பங்கள் இன்றுமே புத்துணர்ச்சியுடனிருக்கின்றன. டஃப்ட் பங்க்கின் இசையை விட எனக்கு இவர்களைக் கேட்பதே பிடித்திருக்கிறது. பெளத்தர்கள் மந்திரம் ஓதுவதைப் போன்றொரு meditative quality ஆட்டோபான் ஆல்பத்திலிருக்கிறது. பறவைகள் கூட்டமாக நிலம் நோக்கிச் சரியும் சாயங்காலத்தின் அலையடிப்பையும், உயர எழும் கட்டிடங்களின் ஒழுங்கையும் மின்னணு இசை அளிக்கிறது.

வெறும் நான்கைந்து மின்னணு கருவிகளைக் கொண்டு வெவ்வேறு இசை ஒலிகளைக் கோர்த்து விதவிதமான இசைக்கோர்ப்புகளையும், பாடல்களுக்கான இசையையும் எப்படி தொடர்ந்து உருவாக்க முடிகிறதென்று எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. பல்வேறு இசைக்கருவிகளின் கலவையான தமிழ் சினிமாப் பாடல்களின் இசையைக் கேட்டு வளர்ந்த எனக்கு மின்னணு கருவி இசையின் விரிவடையும் கற்பனை வியப்பளிக்கிறது. Nothing will be endless. ஆனால் வாழ்வைப் போலத்தான் இசையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாத வெளிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

என்னைப் போலவே சில சொந்தத் தியரிகள் உள்ள ஒரு கதாபாத்திரத்தை Arturo Perez-Reverte நாவலொன்றில் சந்தித்தேன். தீவிர இலக்கிய வகை நாவல் அல்ல. ஷெர்லாக் ஹோம்ஸின் தந்தையின் மீது உங்களுக்கு ஆர்வமிருந்தால் அல்லது ராபர்ட் லூயி ஸ்டிவென்சனின் “லாங் ஜானை”* உங்களுக்குப் பிடித்திருந்தால் இந்நாவலும் உங்களுக்குப் பிடிக்கும். நாட்டிகல் சார்ட் எனும் அந்நாவலின் பாத்திரம் Coy சில சொந்த தியரிகளை உற்பத்தி செய்வான். அவற்றில் ஒன்று:

LBTAFFD: Law of Buttered Toast Always Falls Face Down.

இங்கே இதனை அளிப்பதற்காக வாசிக்கையில் ஒருவேளை இக்கட்டுரையைத்தான் இது குறிக்கிறதோ என்கிற சந்தேகத்தோடு…

•••

*லாங் ஜான் – டிரஸர் ஐலண்ட் நாவலின் ஒரு பாத்திரம்.

டஃஃப்ட் பங்கின் டெக்னோலாஜிக் பாடலும் , Kraftwerkன் தி ரோபோட்ஸ் பாடலும் ரஹ்மானின் எந்திரன் திரைப்பட இசையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொங்கு வட்டாரக் கவிதைகள்-அண்மைக் காலப் போக்குகள். / சென்னிமலைதண்டபாணி

images (5)

கொங்கு என்ற சொல்லுக்கு, தேன், பூந்தாது, காடு,நறுமணம், பொன் என்றெல்லாம் பல பொருள்கள் உண்டு. கொங்கு நாடு என்பது நீலகிரி,கோவை,ஈரோடு, சேலம் மாவட்டங்களும் திண்டுக்கள், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த எல்லைவரையரை காலத்திற்கேற்ப மாறக்கூடியது. தமிழ்க் கவிதையுலகில் கொங்கு வட்டாரக் கவிஞர்களின் பங்களிப்பு என்பது அர்த்தம் செறிந்தது. ஆழமானது. கொங்குத் தமிழே கவிதை மொழிதான். மரபின் வேர்கள் ஆழ வேரோடிய கொங்கு மண்ணில்தான் புதுமைகளின் அத்தனை கிளைகளும் பூத்தன என்றால் மிகையன்று. தேசியக் கவிஞர் நாமக்கல் கவிஞர், திராவிட இயக்கக் கவிஞர்கள் புலவர் குழந்தை, உடுமலைநாராயண கவி, பொதுவுடைமைக் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், காந்தியக் கவிஞர் காந்திதாசன் என்று பல திசைகளிலும் எமது முன்னோடிக் கவிஞர்களின் முகங்களே தெரிகின்றன. கொங்குவட்டாரக் கவிதைகளின் அண்மைக்கால நோக்கையும் போக்கையும் அளவிடுவதற்கும் ஆழம் காண்பதற்கும் ஒரு பறவைப் பார்வை பார்ப்பதே ஏற்புடையதாக இருக்கும்.

வாழும் காலத்தில் ஒரு கவிஞன் மறக்கடிக்கப்பட்டாலும் இருட்டடிக்கப் பட்டாலும் பின்னொரு காலத்தில் மீண்டெழுவான் என்பதற்கு

“கூட்டி யெறியடா கூட்டியெறி—கூடும்
குப்பைகூ ளங்களைக் கூட்டியெறி
நாட்டு நலந்தனில் நாட்டமிலாச்சுய
நாயகக் குப்பையைக் கூட்டியெறி
வீட்டில் வெறுமை விதிப்பய னேயெனும்
வேதியக் குப்பையைக் கூட்டியெறி
கூட்டி யெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பை மேடாய் மாறிடும் கூட்டியெறி..”
என்று பாடிச்சென்ற கொங்குக் கவிஞர் வெள்ளியங்காட்டானே காலத்தின் சாட்சியாக நிற்கிறார். மகாகவி பாரதி “காசிப்பட்டுப் போல பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போல நெய்ய வேண்டும். “மல்“ நெசவு கூடாது. “மஸ்லின் நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை,ஆழம், நேர்மை இத்தனையும் இருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணம் சேர்ந்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்” என்றார். அப்படிப்பட்ட கவிதைகளை இன்று வரை இந்தக் கொங்குமண் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பாவேந்தருக்குப் பின் எண்சீர் விருத்தங்களை எழுதி எழதி அழுது தீர்த்த மரபுக் கவிதையைப் புதுக்கவிதை வெள்ளம் புறமொதுக்கிப் பாய்ந்தபோது, திடுக்கிட்டுப் போன திசைகள் கொங்கு மண்ணைத்தான் கூர்ந்து கவனித்தன. ஏனெனில் வானம்பாடிக் கவிஞர்கள் சிறகு விரித்தது இந்த மண்ணில் இருந்துதான். சமுதாயச் சிந்தனைகளை முன்னெடுத்து உலகப் பார்வையோடு எழுதிய கவிஞர்கள், தமிழ்க்கவிதைக்குள் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து அதைப் பொதுமக்கள் தளத்திற்குக் கொண்டுவந்ததில் பெரும்பங்கு வகித்தார்கள். அதே நேரத்தில் எழுத்து, கசடதபற வழிவந்த கவிஞர்களும் தங்கள் பங்களிப்பைத் தரத் தவறவில்லை.

சி.மணி

சி.மணி

நவீன கவிதையின் முன்னோடிகளான நடை.சி.மணி, மீட்சி பிரம்மராஜன், சுகுமாரன் போன்றவர்களின் படைப்பாளுமையும் இம்மண்ணில் இருந்துதான் எழுந்தது. அவரவர்க்குக் கிட்டிய வாழ்வியல் அனுபவங்களை அவரவர் மொழியில் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கவிதையில் பெரும் பாய்ச்சலை நடத்திவிட்டு அவரவர் திசையில் பறக்கும் கொங்கு வட்டாரக் கவிஞர்களின் கவிதை ஆளுமையைக் காலம் தன் நினைவேட்டில் பத்திரப்படுத்திவைக்கும் என்பது நிச்சயம்.

வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் கவிஞர்கள்தான் ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்குப்பின் கவிதைக்காக சாகித்ய அகாதமி விருதுகளைப் பெற்றவர்கள். கொங்கு மண்ணின் கவிஞர்களான சிற்பியின் “ஒரு கிராமத்து நதி”யின் ஓட்டமும் ஈரோடு தமிழன்பனின் “வணக்கம் வள்ளுவ..” என்கிற வள்ளுவத்தின் மீது அடுக்குகிற சிந்தனை அடுக்குகளும் புவியரசின் கவிதைக் ”கையொப்பமும்” விருதுகளை அள்ளிக் கொண்டு வந்தன என்பதும் சிற்பி, புவியரசு,சேலம் தமிழ்நாடன் ஆகியோர் மொழிபெயர்ப்புக்கு விருதுகளை பெற்றதும் வேறு எந்தக் கவிதை இயக்கமும் இந்திய இலக்கிய வரலாற்றில் பெறவில்லை என்பது பதிவுசெய்வதற்குரியது.

திறனாய்வாளர் அறிஞர் ஞானி வானம்பாடி இயக்கம் ஒரு பாய்ச்சல் என்று குறிப்பிடுகிறார்.“கலீல் ஜிப்ரானுடைய மொழிபெயர்ப்பு, நா.காமராசன்,தமிழன்பன் போன்றவர்களின் கவிதை, தமிழவன் மற்றும் சிலரால் தொகுக்கப்பட்ட “ஆக்டோபசும் நீர்ப்பூக்களும்“ இவைகள் எல்லாம் வானம்பாடிக்கு முன்னோடி என்று சொல்ல வேண்டும்.இதிலிருந்து வானம்பாடி இயக்கம் ஒரு பாய்ச்சல் என்று தான் சொல்ல முடியும்” என்கிற கருத்தை முன்வைக்கிற அதே வேளையில் “ஆரம்பத்தில் ரொம்பத் தீவிரமான ஒரு இயக்கமாக வானம்பாடி இருந்தது. பின்னால், மழை எல்லாம் கொட்டித் தீர்ந்தபிறகு ஒரு தூறல் மாதிரிப் போனது என்று நான் நினைக்கிறேன்” என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

உற்று நோக்கிக் கவனித்தால் சமூக அவலங்களுக்கு எதிரான அறச்சீற்றம் கவிஞர்களுக்கு இருந்ததும் ஒரு மாற்றுத் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற உந்துதல் அவர்களை ஒன்றிணைத்தது என்பதும் கண்கூடு. 1970களில் முல்லை ஆதவன், அக்கினிபுத்திரன்,இளமுருகு, சிற்பி,புவியரசு, சக்திக்கனல், சிதம்பரநாதன், தேனரசன்,ஆதி,ஞானி, கங்கைகொண்டான்,சேலம்.தமிழ்நாடன் போன்ற வானம்பாடிக் கவிஞர்களின் பங்களிப்பு இன்றும் பேசப்படுவதாகவே இருக்கின்றது

அறிவியல் உண்மைகளை அழகியல் அனுபவமாக மாற்றி இயற்கையின் இயக்கத்தைப் பாடுபொருளாக்கி, அறிவியல் பார்வையின் வழியே சமூக விமர்சனத்தை முன்னெடுத்தவர் கவிஞர் இளமுருகு. அவருடைய கவிதை ஒன்றைச் சுட்டிக்காட்டுவது தகும் என்றெண்ணுகிறேன். “சாலைக்கடவுள்” என்ற கவிதையில் தன் முற்போக்குப் பார்வையை முன்வைக்கிறார்.

“சாலைக் கடவுள்களே— நடுச்
சாலைக் கடவுள்களே” என்று தொடங்கி
“மாதா கோவிலாய் மசூதித் தளமாய்
மாரியாய் காளியாய் மாதவன் கோயிலாய்
எங்கோ மூலையில் இருந்த நீங்கள்
எங்கள் வழிகளில் ஏன் முளைக்கின்றீர்?” என்ற வினாவை முன்வைத்து
“இன்று
சுயநலக் கைகளின் கேடயம் நீங்கள்
வஞ்சகர் மார்புக் கவசம் நீங்கள்
ஊரை விழுங்கும் மூர்க்க முதலைகள்
உறங்கும் ஆழ்ந்த அகழிகள் நீங்கள்”
என்ற உண்மையைச் சொல்கிறார்.

என்றாலும்
“ஆயிரம் யானைப் பலத்தொடு நிற்கும்
நவீன விஞ்ஞான வாகன மேறி
நாளை நாங்கள் பயணம் தொடர்கையில்
நீங்கள் எங்கள் கால்களில் சிக்கி
நிச்சயம் நிச்சயம் அழியப் போகிறீர்”
என்று பாடுகிறார். ஆனால் இந்தக் கனவு நனவாகுமா என்பதை யாரறிவார்? தன் 86 வயதில் தன் கவிதைகளைத் தொகுப்பாக்கியிருக்கிறார் என்கிற போதே இவருக்குள் இருக்கும் கவிதையின் வீச்சை விளங்கிக் கொள்ள முடிகிறது.

வானம்பாடிக் கவிஞர்கள் பலரின் கவிதைகளில் சமூகக்கோபம் வார்த்தைகளைக் கொண்டு வந்து கொட்டிவிடுகிறது. அதுவே அவர்களில் பலருக்கு பலவீனமாகவும் அமைந்து விடுகிறது.

இன்றைய காலத்தில் கவிதையின் நோக்கும் போக்கும் பெருமளவு மாறிவிட்டது. வானம்பாடிக் கவிஞர்களின் கவிதையோட்டத்திலிருந்து விலகி பல்வேறு தளங்களில் கவிதையும் கவிஞர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“சொற்கள்
மனிதனை நாடுகடத்துமோ?
சொந்தமண்ணில் அவனை அயலவன்
ஆக்கிவிடுமோ?
என் தாய்மொழியின் இடத்தைக் கைப்பற்றி
அதை வெளியேற்றி விட்டதென்ன கொடுமை?(திசைகடக்கும் சிறகுகள் பக் 43) என்று தமிழன்பன் கொதிப்பதோடு உலகலாவிய கவிதையைப் பார்வையை “திசை கடக்கும் சிறகுகள்” தொகுப்பிலும்

“பகல்
வந்து போனதற்கு
நட்சத்திரங்கள் அடையாளம்
இரவு
வந்து போனதற்கு
விடியலே அடையாளம்
நீ
வந்து போனதற்கு
என்ன அடையாளம்?” என்றும்

“வாழ்க்கையில் இல்லை
கவிதையின் இயக்கம்
கவிதையின் கழிவிலா
வாழ்க்கை இயக்கம்?” (மாற்று மனிதம்நூல் )என்றும் கேட்கிற பொழுது அறத்தை முற்றாகத் தொலைத்துவிட்ட ஒரு காலகட்டத்தில் வாழும் நமக்கு இக் கவிதைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியவில்லை. இன்னும் ஹைகூ, சென்ரியு. லிமரைக்கூ, கஜல் என்று பலவகைகளிலும் இவரின் பயணம் விரிந்து கொண்டே போகிறது. தமிழில் முதல் சென்ரியு தொகுப்பான “ஒரு வண்டி சென்ரியு” முதல் லிமரைக்கூப் படைப்பான “சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” முதன்முதல் வினாக்களாலேயே படைக்கப்பட்ட கவிதை நூல் ”கனாக்காணும் வினாக்கள்” புதுக்கவிதையில் முதல் பயண நூலாக “உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன் வால்ட்விட்மன்”,தமிழில் முதல் பேரத்தமிழ்- கவின் குறுநூறு, மரபுவழி முன்னை இலக்கியம் குறித்த முதல் புதுக்கவிதை நூல் “வணக்கம் வள்ளுவ..” என்று கவிதையில் புதுப்புதுத் திசைகளின் கதவைத் திறந்து வைத்தவர் இந்தக் கொங்குமண்ணின் கவிஞர் ஈரோடு. தமிழன்பன் என்பது குறிக்கப்பட வேண்டியது.

சிற்பியின் “பூஜ்யங்களின் சங்கிலி” நமக்குப் பல்வேறு தத்துவ தரிசனங்களைத் தருகிறது. எனினும்

“உதிராத பூ வேண்டும் குருவே”
“சீடா..அப்படியானால்
முதிராமல் இரு” என்றும்

“உலகத் தொழிலாளிகளை
ஒன்றுபடச் சொன்ன மே மாதத்தில்
தனித்தனி ஊர்வலம்”
என்றும்
“யானைக்குப் பயந்தவன்
கண்டுபிடித்த
கடவுள் அல்லவா
விநாயகன்?”(கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை) என்றும் சொல்லிக் கொண்டே வெவ்வேறு தளங்களுக்குள் சிறகு விரிக்கிறார்.

நம் காலத்தின் மாறத் துயரம் ஈழத்தில் நடந்த கொடூரத்தைத் தன் தனித்த மொழிநடையில் கவிதையாக்குகிறார் முல்லை ஆதவன்.

“வந்தார்கள்..அடித்தார்கள்
அடிக்க விரும்பினோம்.அடித்தோம் என்றார்கள்
வநதார்கள் எரித்தார்கள்
எரிக்க விரும்பினோம்..எரித்தோம் என்றார்கள்.
வந்தார்கள் அழித்தார்கள்
அழி்க்க விரும்பினோம்.. அழித்தோம் என்றார்கள்
வந்தார்கள் கொன்றார்கள்
கொல்ல விரும்பினோம்..கொன்றோம் என்றார்கள்
அடிபட்டோம்..எரிபட்டோம்..அழிபட்டோம்
கொல்லப்பட்டோம்.
இன்னும் மிச்சம் என்ன இருக்கிறது?
கொல்லப்பட்ட பின்னும் வாழ்கிறோம்.” (யாருமில்லை என்றான போது பக் 55).

இந்தக் கவிதை ஈழத்தின் துயரம் தோய்ந்த வரலாற்றை மட்டுமன்றி அகதிகளாய் அலைந்து திரியும் யாவருக்கும் பொருந்தக் கூடியதுதான் என்பதை

“எந்த நாடானால் என்ன எந்த மொழியானால் என்ன
எந்த உணவானால் என்ன எந்த உறவானால் என்ன
எனக்கான அசைதலை அறுத்தபின்?”(பக் 51)

என்ற கேள்வியில் கிளர்ந்து எழுகிறது. நாகரிகம் மிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்கிற கேள்வி நம்மைக் குடைந்தெடுக்கிறது. தமிழில் இந்தக் கவிதைத் தொகுப்பி்ன் நடை தனித்துவமிக்கதாக விளங்குகிறது. ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை (பசித்த சிந்தனை 31)“காஞ்சி நகர்க் காட்சி“ என்ற கவிதையில்

“ஜாலிலோ ஜிம்கானா“ என்கிற தலைப்பில்
அர்ச்சகர் அரங்கேற்றிய
அந்தரங்க லீலை பார்த்து
ஆனந்தப் பரவசமடைந்த
ஆண்டவர் அவசரமாய்
அம்மன் கோயிலுக்கோடினார்
ஆலயம் காலி
அய்யருக்கு ஜாலி.
(பசித்த சிந்தனை 126)

என்கிறார் புவியரசு.

கவிஞன் காலத்தின் கண்ணாடி. சமுதாயத்தின் மனசாட்சி. அவன் குரல் என்பது அவனுடைய குரலன்று. காலத்தின் குரல். மக்களின் குரல். இன்றைக்கு முற்போக்குச் சிந்தனைகளை முன்னெடுக்கும் படைப்பாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் நசுக்கப்படுவதையும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் வன்முறையைக் கைகளில் எடுக்கிறார்கள். கோவிந்த்பன்சாரே, நரேந்திர தபோல்கர், எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் என்று பலரைக் காவுகொண்டு விட்டார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு எத்தனை முகங்கள் என்பது எவருக்குத் தெரியும்? கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் புழுத்துக் கிடக்கும் அழுக்குச் சிந்தனையாளர்கள் எப்படிப்பட்ட தந்திரங்களையெல்லாம் கைக்கொள்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆதிக்கச் சக்திகளோடு மோதமுடியாமல் மவுனத்தில் உறைந்து போயிருந்த பெருமாள் முருகனின் சமீபத்திய கவிதை “கட்டைவிரல்“ தன்நிலையைக் குறிப்பதாக அமைகிறது.

“வெட்டப்பட்ட
கட்டைவிரலை
ஒட்டிக்கொள்ளக்
கடவுள் அனுமதித்துவிட்டார்.
கடவுளின் பேச்சுக்கு
மறுபேச்சேது.
ஒட்டிக்கொள்கிறேன்.
இனி
என் கட்டைவிரல்
கட்டைவிரல் அல்ல..
ஒட்டுவிரல் (மணல்வீடு இதழ் 27 டிசம்பர் 2016)

ஒவ்வொன்றிற்கும் ஒரு சராசரி மனிதன் எப்படி நீதிமன்றத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்க முடியும்?. நீதிக்குத் தலைவணங்குகிற மனிதர்களுக்கிடையிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.? கவிதை அவரது ஆழ்ந்த மனவேதனையைக் கொட்டித் தீர்க்கிறது.

சக மனிதனுக்கு நேர்கிற துன்பத்துக்குத் தோள்கொடுக்காமல் ஒரு படைப்பாளியால் எப்படி இருக்க முடியும்?. இந்த ஆண்டு மருத்துவம் படிக்க விரும்பிய நம் மாணவச் செல்வங்களைக் கலங்கடித்தது தேசியத் தகுதியறி நுழைவுத் தேர்வு என்கிற ”நீட்” தேர்வுதான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. கல்வியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எத்தனை வகையான பாடத்திட்டங்கள் நாடுமுழுவதும் இருக்கிறது என்பது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட ஒரு தேர்வு தேவையா என்பது கேள்விக்குறியாகத் தொக்கியே நிற்கிறது. அவற்றைச் சரிப்படுத்திவிட்டுத் தேர்வைவைப்பதுதானே சரியான வழிமுறை. அந்த அறிவிப்பு வெளிவந்த உடனே “என்ன தேசமடா இது” என்ற கவிதையை எழுதினேன். அது கவிஞனின் குரல் என்பதைவிடவும் எளிய மக்களி்ன் குரல் என்பதே பொருந்தும் .(.“ என்ன தேசமடா இது?” என்கிற கவிதை( ஜனவரி—மார்ச்2017 காவ்யா தமிழ் இதழ்)

படித்துப் படித்துப்
பொசுங்கிய இரவுகளின்
முகத்தில் கலவரம்.
உறக்கத்திலும்
பகலைக் கரந்து கரந்து
பாடங்களில் மேய்ந்த
கண்களில் படர்கிறது
படபடப்பு.
என்ன ஆகுமோ
நம் எதிர்காலம்?
நீதி தேவதையின்
தராசில்
ஊசலாடுகிறது
உயிர்காக்கத் துடிப்பவனின்
உயிர்.
அழுத்தப்பட்டுக் கிடப்பவன்
எழக்கூடாது என்பதற்காகவே
இப்படி ஓர்
வலைவிரிப்பா?
இதுவரை எழுதியதெல்லாம்
தேர்வில்லையா?
மனங்கனக்க வாங்கிய
மதிப்பெண்கள் எல்லாம்
மழையில் எழுதிய
எழுத்துக்களா?
இன்னுமொரு
தேர்வில்தான்
அறியமுடியும் தகுதியென்றால்
எதற்கிந்தப்
பாழாய்ப்போன
பள்ளிக்கூடங்கள்..
பாடத்திட்டங்கள்..?
ஒரே தேசத்திற்குள்
விளக்குமாறுக் குச்சிகளாய்
வெவ்வேறு
பாடத்திட்டங்கள்..
இதில்
எந்தக்குச்சி நன்றாய்க்
கூட்டும் என்பதற்கா
இனியுமொரு தேர்வு?
இங்கிருப்பவன் படிக்க
எங்கிருப்பவனோ
நம்மை
எடைபோட்டுப் பார்ப்பது
என்ன நியாயம்?
சிதறிக் கிடக்கும்
செங்கற்களாய்
அங்கங்கு அங்கங்கு
அவனவனுக்கு
ஒரு பாடத்திட்டம்.
இதில்
ஒற்றைக் செங்கல்லில்
இங்கிருப்பவனுக்குக்
கல்லறை கட்டக்
காத்துக் கிடப்பவர்களை
எந்தத்தராசில் வைத்து
எடைபோட?
புதிய வெளிச்சத்தைக்
மருத்துவத்துக்குள்
புகுத்தப் போகிறார்களாம்..
இவர்களுக்கு
யார் முதலில்
வைத்தியம் பார்ப்பது?
பெற்றவர்களின் கனவுகளைப்
பிய்த்தெறியத் துடிக்கும்
இவர்களைக்
கற்றவர்கள் என்று
எந்தக் கழுதை ஏற்கும்?
சுரண்டிச் சுரண்டியே
நாட்டைச்
சுடுகாட்டுக்கு அனுப்பிய
பேர்வழிகள்
மருத்துவக் கல்விக்கு
மதிப்பீடு செய்கிறார்களாம்.
கொழுத்த பெருச்சாளிகளிடம்
கல்வியைக்
கலவிக்கு அனுப்பிய பேர்வழிகள்
மவுனமாய்
நமுட்டுச் சிரிப்பு
சிரிக்கிறார்கள்.
புற்றீசல்கள் போல்
இனிப் புறப்படலாம்
பயிற்சிக் கூடங்கள்.
சீமான்களின் பிள்ளைகள்
இனி
மருத்தவராக
மறுபிறப்பெடுக்கலாம்..
ஏதமில்லா ஏழைக்குடிகளும்
நாள்களை நகர்த்தும்
நடுத்தர வர்க்கமும்
நோயாளிகளாக
நிற்கலாம் வரிசையில்.
நல்ல தேசமடா இது..
நல்ல கல்வியடா இது..

இந்தக் கவிதையில் எதிரொலித்த துயரம் மாணவி “அனிதா” மரணத்தில் பொங்கி வழிந்தது. அந்த ஏழைத் தந்தையின் குரலாகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவக் கல்வி கனவாகப் போய்விட்டதையும் கண்டு கலங்கி நிற்கும் பெற்றோர்களின் குரலாகவும் “நியாயந்தானா..நீதிமாரே..” என்ற கவிதை எழுந்தது.

“நீதிமாரே..நீதிமாரே
நியாயந் தானா நீதிமாரே..

ராத்திரிப் பகலாப் படிச்ச புள்ள
ராவும் பகலும் தூக்கம் இல்ல
காத்திருந்தோமே கனவாச் போச்சு
கல்வி இங்கே கடைச்சரக்காச்சு..

நீதிமாரே நீதிமாரே
நியாயந் தானா நீதிமாரே.

கூழைக் குடிச்சுப் படிக்க வச்சோம்
கும்பி கருகிப் படிக்க வச்சோம்
ஏழை வயிறு எரியுது சாமி
என்ன நீதி? தாங்குமா பூமி?

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே.

அரசாங்க நடத்துற பள்ளியில் படிச்சு
டாக்டரு ஆவான்னு மனசுல நினைச்சு
இரவும் பகலுமா நாங்க ஒழைச்சு
இப்படிப் போட்டீங்க நாமத்தைக் கொழைச்சு

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே.

என்னமோ பெரிசா அளந்தாங்க அளப்பு
எல்லாமே அவங்க பொழைக்கிற பொழப்பு
சொன்னாங்க என்னமோ “நீட்டு”ன்னு ஒன்ன
சொல்லாமப் புடுங்கினீங்க எங்களோட கண்ண

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே

ஒங்க புள்ளைக படிக்கிற .இஸ்கூலு
ஒசந்தவங்க படிக்கிற இஸ்கூலு
எங்க கொழந்தைக படிச்சது எல்லாம்
இளிச்ச வாயக் கவர்மன்டு இஸ்கூலு.

சட்ட விட்டம் தெரியாது சாமி
சட்டுனு கோபம் வந்துடும் சாமி
கெட்ட குடியைக் கெடுத்துப் போட்டீக
கேக்க ஆளில்லைன்னு எழுதிப் போட்டீக..

இத்தனை காலம் எங்களுக்காக
எத்தனை பேரு செத்தாங்க சாமி
அத்தனை ஒழைப்பையும் அடக்கப் பாத்தா
அழியற காலம் வந்துடுஞ் சாமி

வெங்காயத் தீர்ப்பை உரிச்சுப் பாத்தா
விளக்கெண்ணெய்ப் பேச்சா இருக்குதே ஆத்தா
ஒங்கப்பன் என்ன படிச்சா கிழிச்சான்
எங்கப்பன் முதுகுல ஏறி முழிச்சான்.

பணத்தைக் கொட்டி வாரி எறைச்சுப்
பாடம் தனியே படிச்சு முடிச்சு
எடத்தைப் புடிச்சா சரியாப் போச்சா?
சமூக நீதி செத்துப் போச்சா?

நீதிமாரே நீதிமாரே
நியாயந்தானா நீதிமாரே.

இந்தக் கவிதை மாண்பமை நீதியரசர்களையோ நீதிமன்றங்களையோ விமர்சிப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடும் எளிய மனங்களின் வேதனைக் குரலாகவே கருத வேண்டும். இப்படிப்பட்ட சமூக நிகழ்வுகளையெல்லாம் கவிமனம் கவிதையாக்காமல் இருக்க முடியாது

மிக ஆழமான அர்த்தச் செறிவைக் கொண்டவை உருது கஜல் கவிதைகள். குறியீடுகள் ஆழ்ந்த பொருள் கொண்டவையாக விளங்கக்கூடியவை. இதுவரை தமிழில் மூன்று பேர்தான் எழுதியிருக்கிறார்கள். புதுக்கவிதையில் கஜலின் புறவடிவத்தை உதிர்த்துவிட்டு எழுதியவர் அப்துல்ரகுமான். மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப்பூ என்ற இரண்டு தொகுதிகளும் புதுக்கவிதையில் எழுதப்பட்ட கஜல் கவிதைகள். பின் கஜலின் புறவடிவத்தையும் ஏற்றுக்கொண்டு “கஜல் பிறைகள்” என்று எழுதியவர் தமிழன்பன். அதன்பின் முழுக்க முழுக்க உருது மரபை ஒட்டி சென்னிமலைதண்டபாணி எழுதியதுதான் “உனக்காக உதிர்ந்த கஜல்கள்” என்ற கவிதைகள். இன்று கஜல் கவிதைகள் காதல் என்கிற உணர்வைத் தாண்டி ஆன்மிக உணர்வுநிலை தாண்டி, எல்லாப் பாடுபொருள்களையும் ஏற்றுக் கொள்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே கஜல் கவிதையை மரபிலக்கணத்தில் தமிழுக்குக் கொண்டுவந்தவர்கள் கொங்குக் கவிஞர்கள்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஈரோடு தமிழன்பனின் ”கஜல்பிறைகள்“ மரபில்முதல் முயற்சி.

“ஆழங்கள் உரையாடக் கரையோரம் வருமா?
வருமென்றால் ஆழமென்ற பெயரையவை பெறுமா?
எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என்வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
பாதையில்லா ஊருக்குள் துடிக்குமென்றன் ஆன்மா
பயணங்கள் கல்லறைக்குள் உள்ளதென்ன சுகமா?
எனைவளர்த்த நாள்களைநான் காலவங்கிக் கணக்கில்
இட்டுவைக்க முடியமா? வங்கியும் நிலைக்குமா?“
என்று கஜலின் போக்கைக் காட்டுகிறார்.

கஜலின் புறவடிவம் இரண்டிரண்டு அடிகளைக் கொண்ட தனித்தனிக் கண்ணிகளால் ஆனது. மற்ற கண்ணிகளோடு இயைபுத் தொடையால் இணைந்து கொள்வது.

கஜலின் முதல் கண்ணியின் இரண்டு அடிகளிலும் அதற்கு அடுத்துவரும் கண்ணிகளின் ஈற்றடிகளிலும் இறுதியாக இயைந்து வரும் சொல் “காஃபியா” எனப்படும். அதற்கு அடுத்துவரும் ஒரே மாதிரியான இறுதிச்சொல் அல்லது சொற்றொடர் “ரதீஃப்” எனப்படும். ஒரு கஜல் கவிதையில் காஃபியாதான் முக்கியம். “ரதீஃப்” இருக்கலாம். இல்லாமலும் போகலாம். நான் எழுதிய ஒரு கஜல் கவிதையைச் சொல்கிறேன்.

எனக்கென்று மகுடத்தைச் சூட்டியது நீயா?
இருவிழியால் மனநெருப்பை மூட்டியது நீயா?

கனவுகளில் விதவிதமாய் வர்ணங்கள் பூசிக்
கைகுலுங்க மனங்குலுங்கப் பூட்டியது நீயா?

வருவாயோ மாட்டாயோ எனத்தவிக்க விட்டே
மனதிற்குள் துயரத்தை ஊட்டியது நீயா?

அலைமோதும் நெஞ்சிற்குள் அலையாக மோதிக்
கரையாக வெறும்மனலைக் கூட்டியது நீயா?

கனவுகளில் நந்தவனம் போலிருந்த எனக்குள்
காதலெனும் நடைவண்டி ஓட்டியது நீயா?(உனக்காக உதிர்ந்த கஜல்கள்)

இதில் மூட்டியது, பூட்டியது, ஊட்டியது,கூட்டியது, ஓட்டியது என்று வருகிற சொற்கள் தான் காஃபியா. நீயா நீயா என்று வருவது ரதீஃப். தமிழில் இப்படி இயைபுத் தொடையைக் கொண்டுவரும் பொழுது வழக்கில் உள்ள இயைபுத் தொடையின் அமைப்பைப் பின்பற்றுவது இயல்பானது. இறுதிக் கண்ணியில் கஜல் கவிஞன் தன் புனைபெயரைப் பயன்படுத்துவது வழக்கம். கட்டாயமல்ல. இதில் சிறப்பென்ன வென்றால் கஜலின் ஒவ்வொரு கண்ணியையும் தனித்துப் பயன்படுத்தலாம். மற்ற கண்ணிகளைத் தனித்துப் பயன்படுத்தும்பொழுது தன் இயைபுத் தொடையின் அடையாளத்தை இழந்து நிற்கும். அதன் தொனியும் பொருளும்தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட கஜலுக்குள் இருக்கும்வரைதான் இதரக்கண்ணிகள் இயைபுத்தொடை உணரும் வண்ணம் திகழும்.மூலக்கஜலில் இருந்து பிரிந்த இதர கண்ணியின் இயைபுத் தொடை பொருள்பொதிந்த இறுதிச் சொல்லாக மட்டுமே காணப்படும்

கஜலில் குறியீடுகளின் கையாடல் எந்த அளவுக்கு உகந்ததாக அமையுமோ அந்த அளவிற்குப் பொருள் விரிவும் பொருள் திரிவும் உண்டாகும். இதனால் கருத்துக் செறிவுடன் கஜல் கண்ணிகள் மேன்மையடையும்.

“என்னுடைய பிரார்த்தனையில் எதனை வேண்டுவேன்?
உனையென்றன் பிரார்த்தனையாய் இருக்கத் தூண்டுவேன்.

உதிர்ந்துவிழும் கண்ணீரின் போதை ஏறவே
உலகத்தை ஒருநொடியில் எட்டித் தாண்டுவேன்

என்தனிமை எனக்கில்லை என்ற போதிலும்
உன்னினைவில் நான்வந்தே உன்னைச் சீண்டுவேன்.

எனைமறந்து நீஎங்கே இருந்த போதிலும்
உனைவந்து உனைவந்து சுகமாய்த் தீண்டுவேன்.

புயற்காற்றில் அகப்பட்ட தோணி யாகவே
போனாலும் உனைத்தானே இங்கு வேண்டுவேன்.(உனக்காக உதிர்ந்த கஜல்கள்)

இனி வருங்காலங்களில் கஜல் கவிதைகள் குறித்து எழுதவருகிற எவரும் கொங்குமண்ணின் கவிஞர்களைக் குறிப்பிடாமல் எழுத முடியாது.

புதுக்கவிதை வெள்ளத்தில் தத்தளித்து நீந்திக் கொண்டேயிருக்கிறது மரபுக்கவிதை. எனினும் பொன்னடியான், குலோத்துங்கள், புலவர் புலமைப்பித்தன்,மணிவேலனார், தமிழன்பன் ப.முத்துசாமி,கருமலைத்தமிழாழன்,கண்ணிமை, “தும்பை” தேனிரா.பாண்டியன்,ஸ்ரீமதிவாணன், மரபின்மைந்தன் முத்தையா, கவியன்பன் பாபு என்று மரபில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொங்கு மண்ணின் மரபுக்கவிதைகளைக் குறித்துத் தனியே விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். இருந்தாலும் என் கவிதைப் பயணத்தை மரபிலிருந்து தொடங்கியவன் என்பதால் இன்றும் இந்தக் கொங்கு மண்ணின் கவிஞர்கள் மரபுக் கவிதையிலும் எப்படிப் புதுமையைப் புகுத்துகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் பார்வைக்கு வந்த நூலைப்படித்துப் பார்த்துக் களித்தேன். வெண்பாக்களில் குளித்தேன். கவியன்பன் பாபுவும் கவிஞர் பா.மீனாட்சிசுந்தரமும் கோவையின் இரட்டைப் புலவர்களாய் “நேரிசையில் ஊரிசை” என்று 102 நேரிசை வெண்பாக்களில் கொங்கு மண்ணைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். எப்படி? செல்லிடப்பேசியில் முதலிரண்டு வரிகளை ஒருவர் சொல்வார். 35 கிமீ தாண்டியிருக்கும் மற்றொருவர் பின்தொடர்ந்து வெண்பாவை முடிப்பார். கொங்குமண்ணின் பெருமிதங்களை வெண்பாவில் முடிந்துவைத்திருப்பது மட்டுமல்ல மறந்து போன வரலாற்றுச் செய்திகளையும் வாரித் தந்திருக்கிறார்கள். பேரூர்த் திருக்கோயிலில் நடைசாத்துமுன் தீவட்டி ஒளி காட்டப்படும். அதைச் சடங்கு என்றுதான் எவரும் நினைப்பர். ஆனால் இவர்களோ திப்பு சுல்தான் கோயிலுக்குச் செய்த மரியாதை என்பதைத் தெளிவுபடுத்தி அந்த மாமன்னனின் சமயம் கடந்த சமரச நோக்கைச் சரியாகக் காட்டுகிறார்கள்.

“தீவட்டி தூக்கிச் சிவவணக்கம், பின்புதான்
கோவில் நடையடைப்பு! காரணம்சொல்!—என்று கவியன்பன் கேட்க செல்பேசி வழியே
—கோவையர்
நாவினிக்கப் போற்றுகின்ற நற்பேரூர் ஈசனுக்குத்
தீவணக்கம் செய்தவன் திப்பு“
என்கிறார் பா.மீனாட்சிசுந்தரம். இப்படிப் கொங்கு மண்ணைப் பற்றி எத்தனையோ செய்திகள்.இன்றைய காலகட்டத்தில் செல்பேசியில் பேசியே வெண்பாக்களால் உருவான முதல்நூல் இதுதான். இதுவும் கொங்குக் கவிஞர்களின் சாதனைதான்.

காவிய முயற்சிகளுக்கும் இந்த மண்ணில் பஞ்சமில்லை. குலோத்துங்கனின் “மானுட யாத்திரை” சிற்பியின் ”இராமானுஜர் காவியம்“ மணிவேலனாரின் ”பீலிவளை” குறுங்காப்பியங்களாக வெளியங்காட்டானின் காவியங்கள்.இரா.வடிவேலனின் “மருதமலைச்சாரல்” சிற்பியின் “மௌனமயக்கங்கள்” “சிரித்த முத்துக்கள்” முருகுசுந்தரத்தின் “வெள்ளையானை, சக்திக்கனலின் “தீரன் சின்னமலை“ “சொல்வேந்தன், சூலூர் கலைப்பித்தன் ஆகியோர் தனித்தனியே எழுதிய தேவர் காவியம், ஞானி எழுதிய “கல்லிகை”, கவிதை நாடகங்களாக அரங்கசாமியின் “அம்பாபலி,“ சிற்பியின் ”ஆதிரை” புவியரசு எழுதிய “மூன்றாம் பிறை” முருகுசுந்தரத்தின் “எரிநட்சத்திரம்” சென்னிமலைதண்டபாணியின் ”யாத்திரை” என்று கவிதை சார்ந்த படைப்புலகம் விரிந்து கொண்டேபோகிறது.

பெண்கவிஞர்களின் படைப்புலகமும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது. உதகை ரோகினி, கிவி, தேவமகள், தாமரை, மீ.உமாமகேசுவரி, சுகந்தி சுப்பிரமணியன் என்று பட்டியல் விரிகிறது.

“என் மணவிழாவில்
நான் தொலைந்து போனேன்.
ஆனால், யாரும் என்னைத்
தேடவேயில்லை.” என்றும்
“நகரத்தில்
நாற்பது ஐம்பது
நியாயவிலைக் கடைகள்
நியாயம் என்ன விலை?”
என்றும் தாமரையின் கவிதைக்குரல் ஒலித்துக்கொண்டிருப்பது ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து வெளிவரத் துடிக்கும் துடிப்பாக ஒலிக்கிறது.

பெண்களுக்கான பாதுகாப்பும் சுதந்திரமும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மீ. உமாமகேசுவரியின் கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. “தாய்மண்ணே வணக்கம்!” என்கிற கவிதை

‘தானியங்கி மின்தூக்கியில்
தனித்திருக்கிறாள் பெண்ணொருத்தி
இசைஒலி எழுப்பிப்
பிளவுபடும் கதவின்வழி நுழைகிறார்
அறிமுகமற்ற ஆடவர்
பயணிக்க நேரிடும்
அந்தப் பத்து நொடிகள்
இதயம் படபடக்காமல்
இயல்பாய் நிற்க
அவளுக்கு வாய்க்குமெனில்
சொல்லியனுப்புங்கள்.
நாங்களும் கொண்டாடுகிறோம்
தாய்மண்ணின் சுதந்திரத்தை”

கவிஞர் மீ. உமாமகேஸ்வரியின் கவிதைகளில் பெண்களின் அக, புற உலகை அறியமுடிகிறது.

தனக்கான மனவுலகின் தரிசனங்களை, மனப்பிறழ்வுகளின் தெறிப்புகளைக் கவிதைகளாக்கியிருக்கிறார் சுகந்தி சுப்பிரமணியன்.

download (6)

யாப்பின் நுட்பங்களை நன்கறிந்து மரபில் காலூன்றிய கவிஞர்கள்தான் புதுக்கவிதையிலும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கலாநிதி கைலாசபதி அவர்கள் ”ஓசைநயம் முற்றிலும் புறக்கணிக்கப்படுமாயின், வசன கவிதை எனப்படும் வெற்றுச் சொற்கூட்டம் கிடைக்கும். ஓசைநயத்தை அளவுமீறிப் பிரதானப் படுத்தினால், தெளிவு குன்றிய சலங்கை நாதம் பெறப்படும். ஓசை வறுமையுடைய வசனக் கவிதைகள் போலவே,கருத்துத் தெளிவில்லாத கிண்கிணிச் சிலம்பல் ஒலி்ப்பாட்டுகளும் தரம் குறைந்தவையே.“(கவிதைநயம் பக் 133) என்பார். மரபில் கைதேர்ந்தவர்களுக்கு யாப்பு தடையாக இருப்பதில்லை. யாப்பிலும் மரபிலக்கியத்திலும் தோய்ந்து நிற்கும் கவிஞனின் படைப்பின் ஆற்றல் வீரியமிக்கதாக விளங்கும். மொழியின் நவீனத்துவத்தைப் புதுப்பித்துக்கொள்ள அவை பெருமளவு பயன்படும். “காமக்கடும்புனல்“ மகுடேசுவரன், இளங்கோ கிருஷ்ணன், பா.மீனாட்சிசுந்தரம் போன்றவர்களின் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. மகுடேஸ்வரனின் கவிதைகள் நெடுங்கவிதைகளாகவும் குறுங்கவிதைகளாகவும் செறிவான சொற்களோடும் வெளிப்படுகின்றன.

“வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலைமுடிக்கும் போது
உற்றுக் கேள்..
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை” என்ற “வலியின் ஒலி” என்கிற கவிதையில் நசிந்து போன ஒரு குடும்பத்தையே எந்த ஒப்பனையுமின்றிக் காட்டிவிடுகிறார். (விகடன் 75 முத்திரைக்கவிதைகள்பக் 15)

நெருக்கடி மிக்கதாக இருக்கிறது இன்றைய வாழ்க்கை. எங்கே ஓடினாலும் தப்பிக்க இயலாது. திரும்ப நடைமுறை வாழ்க்கைக்கு வந்தாக வேண்டும். அதே பாடுகள் பட்டுத்தான் தீரவேண்டும். மீண்டும் மீண்டும் நாம் நசுக்கப் படுகிறோம். இளங்கோ கிருஷ்ணன் “கொட்டும் மழை” கவிதையில்

“கொட்டும் மழையில்
எங்கொதுங்கித் தப்பிக்க
எங்கொதுங்கித் தப்பிக்க
ஓடும் ஒரு லாரியின்
சக்கரத்தினடியில்..”(பட்சியன் சரிதம் பக்33)

என்று எழுதுகிற பொழுது ஏற்படுகிற மன அதிர்வு அடங்க வெகுநேரமாகும். என்றாலும் வாழ்வின் மீதான பற்றுதலோ ஆசையோ போய்விடுவதில்லை.மிக ரம்மியமான ஒரு கவிதை “பின்னொரு காலை” என்று மலர்கிறது.
“இரவெல்லாம் கொட்டி
ஓய்ந்திருக்கிறது மழை
இப்போதுதான்
எவ்வளவு நிம்மதி
எவ்வளவு ஆசுவாசம்
பரிதியின் இளஞ்சூடு
மெல்லப்
பரவுகிறது மேதினியெங்கும்
புதுப் பச்சையம்
அசைகிறது தாவரங்களில்
திடமான
ஓர் இனிய நம்பிக்கையோடு
ஈரக்காற்று உடலெங்கும் நழுவ
மலர்கிறேன் பரவசத்தில்
இந்தக் காலை
இந்த வாழ்க்கை
இதன் ரம்யம்
அற்புதம்
தேங்கிய நீரில் சுடரும் சூரியனே
உன் வருகைக்கு நன்றி.”(பட்சியன் சரிதம் பக் 62)

இக்கவிதையைப் படிக்கிற எவருக்குள்ளும் ஓர் இனம்புரியாத பரவசம் எழத்தான் செய்யும். இதுவே கவிதையின் ரகசியம். சமூகத்தின் மீதும் அதன் நடப்புகள் மீதும் அக்கறை கொண்டு, மன ஈரம் காய்ந்துவிடாமல் எழுதுகிறவர் பா.மீனாட்சிசுந்தரம். எப்படியெல்லாம் சக மனிதன் புறக்கணிக்கப்படுகிறான், அவன் புறக்கணிக்கப்படுவதற்கு எதுவெல்லாம் காரணமாக இருக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதைப் போல

“மகுடேஸ்வரனின்
சென்ட் ரப்பரை
நான் திருடியதாய் நினைத்து
முழிகளை வீங்கவைத்த
இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு
குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த
ஒரே தடயம்
என் கறுப்பு முகம்” (நிறமறியாத் தூரிகை பக் 52) இந்தக் கவிதை உண்மையில் ஒரு தேர்ந்த அரசியல் கவிதை. இந்தக் கவிதைக்குள் சொல்லப்பட்டிருக்கிற நுட்பமான அரசியல்தான் நம்மை எவர்எவரோ ஆட்டிப் பார்க்க ஆசைப்பட வைக்கிறது.

எல்லா மொழிக்கவிதைகளிலும் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் உண்டு. மொழியைப் பயன்படுத்தும் திறன், பாடுபொருள் என்று பலநிலைகளில் மாறுபடக் கூடிய கவிதைகளாக இருந்தாலும் இதுதான் கவிதை என்று வரையறுத்துவிட முடியாது. “எழுத்து” வகையறாக்களின் தொடர்ச்சியாக சிபிச்செல்வன், வே.பாபு, ஷாஅ போன்றோரின் படைப்புகளும் கொங்கு மண்ணின் படைப்புகள்தான். இடதுசாரிச் சிந்தனைகளை முன்னெடுக்கும் நவகவி, பெரியாரிய,மார்க்சிய.அம்பேத்காரியத்தை முன்னெடுக்கும் ரவீந்திரபாரதி, ஆதவன் தீட்சண்யா, விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் அனுபவங்களையும், அவர்களின் மனக்கோலங்களையும் பதிவுசெய்யும் தவசிக்கருப்பசாமி என்கிற கூத்துக்கலைஞர் ஹரிகிருஷ்ணன், வெய்யில், கதிர்பாரதி, பா.ராஜா, வா.மு.கோமு, “நானும் நானல்லாத உறவுகளும்” என்ற நிலைப்பாட்டில் “கவிதைக்குள்ளிருந்து கவிதை” என்று சொல்லும் க.வை.பழனிசாமி, அம்சப்ரியா,இரா.பூபாளன், இசை, இளஞ்சேரல், பொன்.இளவேனில், ஜான்சுந்தர், ஸ்ரீபதிபத்மநாபா, சூர்யநிலா, பொன்.குமார், அவைநாயகன், “புதுஎழுத்து” மணோன்மணி, மயூரா.ரத்தினசாமி, தென்பாண்டியன், ”முனியமரம்” பாலா,பூ.அ.ரவீந்திரன் என்று ஏராளமான கவிஞர்கள் தங்களுக்குக் கைவரப்பெற்ற மொழியில் அவரவர் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கவிதை என்பதே மொழியின் மலர்ச்சிதான்.

விளிம்புநிலை மக்களின் வாழ்வைப் பற்றி ஏதும் கவலைப்படாத சமூக அமைப்பையும் அரசியல்கட்சிகளின் நிலைப்பாட்டையும் தவசிக்கருப்பசாமி எடுத்துரைக்கும் போக்கு கவிதையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.

“நான் விரும்புவது சனநாயகம்
நடந்து கொண்டிருப்பதோ பணநாயகம்.
உடையவர் கைத்தட்டில் ஒருதட்டு தாழ்ந்தாலென்ன
கடிநட்பு காவலர் உறவில், சட்டவொழுங்கு என்கையில்
கட்சிக் காரர்களிடம் காசுவாங்கி
சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடுவேன்
நேர்மை உண்மை- அரசு அமைச்சு
உபதேசம் எனக்கில்லையடி கண்ணாட்டி
உடம்பு நோகாத வேலை அடிநாவு கட்டாத கூழ்
ஆசாப்பாசம் அங்கே அங்கவஸ்திரம் இங்கே
படிக்கறது ராமாயணம் இடிக்கறது அல்லாக்கோயில்
நான் விரும்புவது சனநாயகம்.” (அழிபசி பக் 21).

உண்மையில் சனநாயகம் என்ற பெயரில் என்ன நடக்கிறது? கவிதை நடப்பு வாழ்வைச் சித்தரித்துச் செல்கிறது. இவரின் அழிபசி,தாண்டுகால்,அங்குசம்,ஆகிய கவிதைத் தொகுதிகளின்வழி எளிய மக்களின் துயரப்பட்ட வாழ்வின் பக்கங்கள் படபடக்கின்றன.
இசையின் “ராஜகிரீடம்” என்கிற கவிதை

“ராஜகிரீடம்
உன் சிரசில் பொருந்தாதற்கு
யார் என்ன செய்யமுடியும் நண்பா
இந்த வாயில்காப்போன் உடையில்
நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?”( சிவாஜிகணேசனின் முத்தங்கள் பக்42) என்று கேட்கிறது. இந்தக் கவிதையைக் குறித்துச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் அரசியல் கட்சித் தலைவர்களின் முகங்கள் வந்து போவதைக் காணமுடியும். நுட்பமான மொழிதல்முறையைக் கைக்கொண்ட இசையின் “தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுக்கிழமையின் காற்று” என்கிற கவிதை ஞாயிற்றுக் கிழமை என்கிற விடுமுறைநாள் எப்படியிருக்கிறது என்பதைக் கவித்துவத்தோடு சொல்கிறது. காற்று கூடப் பிறநாளில் காற்றாக இருப்பதில்லை. அத்தனை கொதிநிலையோடு ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டியிருக்கிறது. இதை

“பிஸ்கட்டைப் பிட்டு
தேநீரில் நனைத்துச் சுவைப்பது போல
இந்த ஞாயிற்றுக்கிழமையைப் பிட்டு
ஒரு கோப்பை மதுவில் நனைத்துச் சுவைக்கிறேன்.
மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த
அலுவலகத்தின் நா
அறுக்கப்பட்டுவிட்டது.
மைதானங்களில் ஒரு ரப்பர் பந்தெனத்
துள்ளிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.
இக்கொதிநிலம் திடீரென்று குளிர்ந்து
பெய்கிறது ஒரு ரம்யமழை.
ஞாயிற்றுக்கிழமையின் காற்றுக்குத்தானா தென்றல்
என்று பெயர்
என்றொரு வரி தோன்றியது.
இதையடுத்து உருகிவழிந்த
கண்ணீரின் துளியொன்று
கோப்பைக்குள் சிந்த
எடுத்து அருந்தினேன்.
தாளாத தித்திப்பு அது!
தாளாத தித்திப்பு அது!( சிவாஜிகணேசனின் முத்தங்கள் பக்16)

அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிச் சூழலில் ஒரு விடுமுறை தினம் எப்படி அழகானதாக இனிமையானதாக இருக்கிறது என்பதைக் கவிதை சொல்லிச் செல்கிறது.

இன்றைய காலகட்டம் எப்படியிருக்கிறது? வாங்கிய சுதந்திரம் என்னாயிற்று? “சொல்ல பயம்” என்கிற கவிதையில் இளஞ்சேரல்

“எங்கள் கொள்ளுத்தாத்தாமார்கள்
வாங்கிக்கொடுத்தார்கள்.
எங்கள் தாத்தாமார்கள்
அனுபவித்தார்கள்
எங்கள் அப்பாமார்கள்
விற்று விட்டார்கள்
நாங்கள் மீண்டும்
வாங்குவதற்காக
சந்தைக்கு வந்திருக்கிறோம் ( கொட்டம் பக் 11)

என்கிறார். பெற்ற சுதந்திரத்தை விற்றுவிட்டார்கள். யாருக்கு விற்றார்கள் எப்படி விற்றார்கள் என்பது தெரியாது. இழந்ததைப் போராடிப்பெறும் வேகமும் சுதந்திர தாகமும் இன்றில்லை. விலை கொடுத்து வாங்குவதற்காக வந்திருக்கிறார்கள். யாரிடத்தில் பேரம் பேசுவது? என்ன விலை? எதுவும் தெரியாது. இப்படிப் போராட்ட உணர்வு மங்கிப் போய்விட்ட காலத்தைக் காட்டுகிறது கவிதை.

”முனியமரம்” பாலாவின் “அம்மாவின் வாசனை” என்கிற கவிதை நினைக்கும் தோறும் எழும் அம்மாவின் நினைவை மிக இயல்பாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.
“அதே அளவு உப்பு
அதே அளவு புளிப்பு
அதே அளவு காரம்.

அம்மாவின் சமையலை
அப்படியே ஆக்கிவைத்தாள்
மனைவி

ஆனால்
கடைசிவரை தேடியும்
கிடைக்கவேயில்லை அதில்
அம்மாவின் வாசனை. (முனியமரம் பக் 18) இந்தக் கவிதை ஒரு தளத்தில் இயங்குகிறது என்றால் வெய்யில் எழுதிய “ஒரு பூ பூத்துச்சாம்” என்கிற கவிதை வேறொரு தளத்தில் இயங்குகிறது.

“அப்பப் பாலுறிஞ்ச ஏலாத
சீக்காளிப் பிள்ளையா இருந்தேனாம்
அம்ம சொல்லும்.
கொள்ளையில் நிக்கும் கருவேலத்தூர்லதான்
மார்ப்பால பீச்சிவிடுமாம்.
முகத்துல தெறிச்சி
கையெல்லாம் வழிஞ்சி
தொழுவத்து சாணவாடையை மீறி மணக்குமாம்
வறண்ட ஆத்த பாக்குறப்பல்லாம்
எதுக்குன்னே தெரியல
அந்தக் காட்சி கண்ணுல கண்ணுல வருது.” (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் பக் 9)

கிராமத்தில் எங்கோ நடக்கும் நடப்பைக் கவிதையில் அதன் மணம் மாறாமல் தருகிறவர் வாமு.கோமு. கிண்டலும் கேலியுமான அவரின் மொழிநடை கவிதைக்குள் இயல்பான கொங்கு வழக்கில் வந்து விழுகிறது.

கண்களுக்கு சிக்குவன

இவடத்திக்காலிக்கி மாடி மேல
நின்னுட்டு சைசா கிழக்கால பாக்கப்ப
ஒரு எழவும் கண்ணுக்கு சிக்கலப் போங்க!
என்னத்துக்குத்தான் நைசாப் பாத்தனோ?

சரிப் போச்சாதுன்னு மறுக்கா மேக்கால
சைசா எட்டிப் பாத்தங்காட்டி தான்
என் கண்ணுக்கு என்ன சிக்கோணுமின்னு
நெனச்சனோ அது சிக்குச்சு!
ரெண்டூடு தாண்டி மூனாவுது ஊட்டுல தான்
பாட்டுக்கச்சேரி போல! பால் கறந்துட்டு
சொசீட்டிக்கி போசி தூக்கிப் போற அண்ணன்
லேடியாப் பொட்டீல மம்மத ராசா! பாட்டுக்கு
செமெக் குத்து போட்டுட்டு இருந்தாப்ல
மாடுவளுக்கு எஜமானியம்மாவோட!
ஐயோ! பட்டப்பவல்ல காலங்காத்தால இதுக
ரெண்டும் இப்புடி குதியாளம் போடுதுகளே
அந்தம்மாவோட வூட்டுக்காரான் வந்தா
என்னாத்துக்கு ஆவும் நெலமென்னு
அடிச்சுக்குது பாருங்க படப்படன்னு எனக்கு!
ஐயோடா சாமி!
இதுனால தான் எப்பயுமே நானு சைசாவும்
நைசாவும் மாடில இருந்து பார்த்துத் தொலைக்கிறது!
எல்லாருத்து வண்டவாளமும் தண்டவாளம்
ஏறுறது நமக்கு மட்லும் கண்ணுக்கு சிக்கிக்குது!

000

அம்மாவின் குலதெய்வம்

“எங்கள் குலதெய்வம் ஒரு ஆலமரத்தடியில்
சிறு திண்டின் மீது அமர்ந்திருக்கிறது.
எப்போதேனும் அம்மாவுக்கு சாமியாட ஆசை
எழுந்தால் என் இருசக்கர வாகனம் கிளம்பிவிடும்.
பூசாரி மணியடித்தாரென்றால் அம்மாவுக்குள்
சாமி இறங்கி விடும். -கோவிலுக்கு நான்கைந்து
பேராவது வந்திருந்தால் அம்மாவிடம் குறி கேட்பார்கள்.
ஆனால் செல்வதே இருவரும் தானே!
“எனக்கு கோவிலை எழுப்புங்கடா! கும்பாபிசேகம்
நடத்துங்கடா!” அம்மா சப்தமிட்டபடி ஆலமரத்தடியில்
கைகளை உயர்த்தி கோர்த்துப் பிடித்து அங்குமிங்கும் செல்லும்.
பூசாரி அம்மாவின் தலையில் திருநீரு தூவி,
“செஞ்சுடலாஞ் சாமி” சொன்னால் சாமி மலையேறும்.
அப்படித்தான் அம்மாவாசை நாளொன்றில் அம்மா
கிளம்பச் சொல்லிவிட்டது கோவிலுக்கு. செல்கையில்
கணிசமான கூட்டமுமிருந்தது அங்கு. – நான்கைந்து
சாமிகள் ஆலமர நிழலில் ஆடிக் கொண்டிருந்தன.
அம்மாவுக்கும் சாமி வந்துவிடுமென திரும்பி பார்த்தேன்.
ஐஸ் பொட்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கி
சப்பிக் கொண்டே சாமியாடுபவர்களை வேடிக்கை
பார்த்தது. -இனி அம்மாவுக்குள் சாமி இறங்குவது
சந்தேகம் தான்.“

இந்த இரண்டு கவிதைகளிலும் வாமு.கோமு இரண்டு வெவ்வேறு காட்சிகளைச் சித்தரித்துக் காட்டுகிறார். உளவியல் சார்ந்த பிரச்சனைகளைக் கவிதை வேடிக்கையும் விநயமுமாகச் சித்தரிக்கிறது.

“எதையாவது கிறுக்கித் தள்ளலாம்
நமக்கு நல்ல கவிதையென
தோன்றினால் லாபம்.
கவிதை மாதிரி
எழுத
எழுத
கழுதை
வராமலா போய்விடும் கவிதை?”(ஒளி செய்தல் பக் 73) என்று பொன். இளவேனில் எழுதிச் செல்வதுபோலப் பலர் எழுதிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
602784_10200198662103337_515294167_n
இன்றைய காலகட்டத்தில் பலவிதமான கவிதைப்போக்குகளைக் காணமுடிகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய மாற்றங்கள் கவிதைக்குள்ளும் வந்து குவிகின்றன. முந்தைய கவிதைச் சிந்தனைகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாயிருக்கின்றன. எந்தப் பொருள் வேண்டுமானாலும் கவிதைக்கான கருப்பொருளாகிறது. ”லாபிங் தெராபி“ என்றொரு கவிதை. ” மலைகள்” சிபிச்செல்வன் எழுதியது.

“கடற்கரையில் முதன்முதலாக அந்தக் காட்சியைப் பார்த்தேன்.
இன்று காலையில் அந்த மாநகரப் பூங்காவில் நடைபயிற்சி
மேற்கொண்ட போதும் கவனித்தேன்.
ஒரு கூட்டமாக
ஒரு குழுவாக இணைந்து
மொத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சிரிப்பை அவர்கள் அடிவயிற்றிலிருந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
விதவிதமாக வகைவகையாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
வினோதமாக ஒருகணம் நின்று பார்த்துவிட்டு
பைத்தியங்கள் எனநினைத்தபடி குறுநகையோடு போகிறார்கள்.
இவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொள்கிறது
லாபிங் தெராபி.“(மலைகள்.காம்- இதழ் 125-சிபிச்செல்வன்). காதலின் மெல்லிய உணர்வுகளை க.மோகனரங்கன்

“ஒரு முத்தத்தின்
ஈரம் போதும்
பின் எப்போதும்
களையவியலாப்
பித்தின் வித்துகள்
நம்
மூளைமடிப்புகளின்றும்
முளைத்தெழும் (க.மோகனரங்கன் மலைகள்.காம் இதழ்59- அப்டோபர் 2015 நெடுந்தொகை கவிதைகள்) என்கிறார். சமீபத்தில் 500 ரூபாய் 1000- ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு வந்து என்ன நிலையை ஏற்படுத்தியது என்பதை அறிவீர்கள். அம்சப்பிரியா தன்னுடைய ”அருக்காணியின் ஐநூறு ரூபாய்” கவிதையில் என்ன சொல்கிறார் தெரியுமா?

”மறுபடியும் மறுபடியும்
எந்நேரத்திலும்
எப்போதெல்லாமோ
கண்ணீர் கசிய
டிரங்க் பெட்டியில் சேலை மடிப்புக்குள்
பத்திரப்படுத்தியிருக்கிற
அந்த ஐநூறு ரூபாயை
ரசித்தபடி இருப்பாள்.
இனி செல்லாதெனினும்
செல்லும்படியாகவேயிருக்கிறது
பிரியமான காலமொன்றிலிருந்து “
(புன்னகை அம்சபிரியா முகநூல் பதிவு 19.9.2017) என்கிறார். சமூக விளைவுகளைக் கவிதையாக்கவில்லை. தனிமனதின் மெல்லிய தவிப்பைக் கவிதையாக்கியிருக்கிறார். அதற்கு நேர்மாறாக கவிஞர் ரவீந்தர பாரதி வங்கிக் கடன் பெற்றதன் விளைவைத் தீர்ககமான சமூகக் கவிதையாக்குகிறார்.

அம்பல்

“எப்படியோ நகர்ந்து கொண்டிருந்தது வாழ்வு
வீட்டில் தோட்டத்தில் கூடமாட
பாத்தி பிடிப்பது வரப்பு கட்டுவது
வாய்க்காச் செதுக்குவது தண்ணி பாச்சுவது
தீனிகட்டுவது பால்கறப்பது
ஓய்ந்த நேரத்தில் எதையாவது படிப்பது
கிறுக்குவது
இப்படிப்போய்க்கொண்டிருந்தது
எங்கிருந்தோ வந்தது ஒரு தென்றல்
அடடா
கருத்துப் பூக்குமோ தாமரை இப்படி?
வரிசைகொள்ளுமோ நட்சத்திரங்கள்?
உயிர்தொலையுமோ பின்னலின் அசைவில்?
சொர்க்கம் இப்படித் தரையில் நடக்குமோ?
அலைமேல் அலையடித்து அதிலேய மூழ்க
அப்பா வந்தார் ஆவேசமாக
வங்கிக்காரன் மோட்டாரத் தூக்கிட்டான்
தம்பிக்குக் கடேசி வருசம்
தவமணிக்கு இப்பவோ அப்பவோ அதுக்கும்மேல
என்ன சாதியோ என்ன எழவோ
இந்த மயிருக்கு இதுதாண்டா கொறச்சல். (செப்டம்பர் 19 முகநூல் பதிவு)

என்று சமகால நடப்பைக் கவிதைக்குள் கொண்டுவருகிறார்.

இன்று ஹைகூ, சென்ரியு, பழமொன்ரியு என்று கவிதை படர்ந்து கிடப்பதையும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஹைகூ என்பது

மூன்றடியில் எழுதப்படுகிறது
அனுபவத்தெறிப்பாக இருக்கிறது
மூன்றாவது அடியில் ஓர் அதிர்வு இருக்கிறது.

நிகழ்காலத்தில் எழுதப்படுகிறது.

பொதுவாக ஹைகூவில் நீ நான் என்பது தவிர்க்கப்படும். மூன்று வரிகளுக்குள் நீங்கள் பெற்ற அனுபவத்தை அப்படியே வாசகனுக்குக் கடத்துவது ஹைகூ.

சொற்சிக்கனம் வேண்டும். படிமம் வேண்டும். ஒரே தடவையில் படித்துவிடக்கூடியதாக இருக்கவேண்டும்.

இறுதிவரியின் இறுதிச் சொல் ஆற்றல்மிக்க வெளிப்பாட்டுக்காக பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்.

1968ல் ஜப்பானிய ஹைகூக் கவிதைகளை நடை இதழில் மொழிபெயர்த்துத் தந்தவர் கொங்கு மண்ணின் கவிஞர் சி.மணி. மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன்.

ஓட்டுப் போட்டுவிட்டுத்
திரும்பிவந்த பிணம் திடுக்கிட்டது
கல்லறையில் வேறொரு பிணம்.- தமிழன்பன்

பத்தாவது முறையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ –தமிழன்பன்.

ஒவ்வொரு கவளச் சோற்றிலும்
நிற்கும்
அம்மா நினைப்பு— சென்னிமலைதண்டபாணி

தள்ளுவண்டியில் ரோஜாப்பதியன்கள் “
வாங்கியதும் பூத்தது
விற்றவன் முகம்.

இயற்கையின் அனுபவத்தெறிப்பு ஹைகூ ஆகிறது. மாறாக சமுதாயத்தைக் குறித்துக் கிண்டலும் கேலியுமாக எழுதப்படுவது சென்ரியூ என்றழைக்கப்படுகிறது. தமிழில் ஹைகூ என்ற பெயரில் அதிகம் எழுதப்படுவது சென்ரியூதான். “கைநீட்டி வாங்காத
அதிகாரி மனைவி
கைநிறைய வளையல்கள்- தமிழன்பன்

“பட்டம் வாங்கவே
நேரம் போதவில்லை
எப்போது படிப்பாரோ?”- தமிழன்பன்.

ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி- – அவைநாயகன்.

மாமியார் மரணம்
மருமகள்கள் அழுகை
எங்கே இருக்கும் நகைகள்? -சென்னிமலைதண்டபாணி

சாகும் வரை உண்ணாவிரதம்
என்றார் தலைவர்
யார் சாகும்வரை?- சென்னிமலைதண்டபாணி

பழமொன்ரியு

சென்ரியூவின் தன்மைகளோடு நம் பழமொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட கவிதை முயற்சிதான் பழமொன்ரியு.
சென்ரியுவில் உள்ள அதே மூன்று வரிகள்தான். முதலில் பழமொழியைச் சொல்லி அதன்பின் சென்ரியுவின் அதிர்வைத் தருவது பழமொன்ரியு. தமிழன்பனின் “ஒரு கூடைப் பழமொன்ரியு” தான் தமிழில் செய்யப்பட்டுள்ள முதல் முயற்சி.

“நீர் இடித்து நீர்விலகாது
நீருக்காக இடித்துக் கொண்டால்
மாநிலங்கள் விலகும்.”

“கந்தையானாலும் துவைத்துக்
கட்டு..துவைத்துத் துவைத்துக்
கந்தலானதை எங்கே கட்ட?”

“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்
கெடாமல் இருந்தால் அதுக்குப்
பேர் பாராளுமன்றமா?”

“உரளுக்கு ஒருபக்கம் இடி
மத்தளத்துக்கு இருபக்கமும் இடி..மக்களுக்கு
எல்லாப் பக்கத்திலும் இடி”

“கொள்ளிவைக்க ஒரு பிள்ளை
வேணுமாம் ஒரு பெண் வைத்தால்
எரிய மாட்டாயா நீ?”

“கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில்
தெரியலாம்..ஒன்பதாம் நாளில்
அவன் தலைவனாய் இருப்பானே”.

கவிதைக்குள் தத்துவவீச்சும், தமிழ்த்திறனும், தனித்துவமும்,பொருள்தெளிவும் , கருத்து அழுத்தமும் வேண்டும் என்பதில் எவருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அது ஏற்புடைய கருத்தாக இருக்க முடியாது. மாறிக் கொண்டேயிருக்கும் அத்தனை மாற்றங்களையும் கவிதை தனக்குள் கொண்டுவரத் துடிக்கிறது.

இன்றைய கவிதைகளிலும் வரட்சிப் போக்குகள் காணப்படாமல் இல்லை. அவற்றைக் காலமே களைந்து எறிந்துவிடும். எனினும் மொழியைத் தொலைத்து விடாதிருப்பதுதான் இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. கவிதை ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று சிலர் விமர்சனத்தை முன்வைப்பார்கள்.உண்மைதான். துரும்பை அசைப்பது அதன் வேலையில்லை. துரும்பு கிடக்கிறது. கண்களில் விழாமல் காத்துக்கொள் என்று பாதையைக் காட்டுவதுதான் கவிதை. தத்துவச் சார்பற்ற கவிதையையும் கவிஞனையும் காலம் கைகளில் தாங்கிப் பிடிப்பதில்லை. கால ஓட்டத்தில் கரைந்து காணாமல் போயிருக்கிறார்கள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதே எமது நிலைப்பாடு.

மொழியைத் தொலைத்துவிட்டால் எந்த இனத்துக்கும் வாழ்வில்லை. தமிழின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிற தாக்குதல்கள் இன்று நேற்று எழுந்ததல்ல. ஆனால் அத்தனைக்கும் தாக்குப்பிடித்து இன்றும் உயிர்ப்போடும் உவப்போடும் இருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் நம் செம்மாந்த இலக்கியச் செழுமைதான். அதை மறந்துவிட்டு எழுதினால் எந்தக் கவிஞனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது. எனவே மொழியை நீர்த்துப் போகாமல் காக்கும் பொறுப்பு கவிஞர்களுக்கு உண்டு. எத்தனை தாக்குதல்களைத் தமிழின் மீது தொடுத்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயங்கினால் நமது எதிர்காலம் கேள்விக் குறிதான். எனவே

“ அப்படித்தான் செய்வார்கள் அவர்கள்.“ என்ற என் கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் உள்ளம் மகிழ்கிறேன்.

அப்படித்தான் செய்வார்கள்
அவர்கள்.
மொழியைத் தொலைத்துவிட்டு
முன்நிற்கச் சம்மதித்தால்
அப்படித்தான் செய்வார்கள்
அவர்கள்.

மைல்கற்கள் என்ன
உன்
மயிர்க்கால்களிலும்
எழுதிவைப்பார்கள்
இந்தியை.
பல்லக்குத் தூக்கவே
சரியாயிருக்கிறது நேரம்.
என்ன நடக்கிறது
என்பதை
எப்படி அறிவாய் நீ?

உன் அடையாளம்
மைல்கற்கள் காட்டும்
அடையாளமல்ல
வரலாறு காட்டும்
அடையாளம்.
அதை
எந்த விலைக்கும்
விற்றுவிடச் சம்மதித்துத்
தலைசொரிந்தபடி நிற்கிறாய்நீ.

எதையோ படித்துத் தொலை..
அதற்குப்
புதைகுழிக்குள் ஏன்
போட்டுவைக்க நினைக்கிறாய்
உன் தாய்மொழியை?

செம்மொழி என்று
சிலிர்த்துக் கொள்கிறாய்.
அது
உன்மொழிதான் என்பது
உனக்குத் தெரியுமா?

தாய்ப்பால் சுரந்த
மார்பகங்கள் எல்லாம்
விசக் கிண்ணங்களா?
அலுங்காமல் குலுங்காமல்
அமர்ந்திருக்கிறாய்
சிம்மாசனங்களில்.
அடித்தளத்தில்
யார் யார் நசுங்கினார்கள்
என்பதைக் குறித்து
ஏதேனும் தெரியுமா உனக்கு?

அன்றாடம் நீ
அன்னதானம் பெறும்
ஆலயங்களில் இல்லை தமிழ்..
அடித்துப்பிடித்து
அலறி நிற்கும்
நீதிமன்றங்களில் இல்லை தமிழ்.
எங்கிருக்கிறது தமிழ்
என்கிறாயா?
தாயின் மார்பகம் தந்த
முதற்சொட்டுப் பாலில்
கலந்திருந்தது.
உனக்குத்தான்
மறந்துவிட்டது.

மார்பிலும் வயிற்றிலும்
அடித்துக் கொண்டு அலறுகிறாள்
தாய்..
இவனுக்கா
பாலூட்டினேன்.
இப்படி
எதற்கெடுத்தாலும்
சுரண்டு கிடக்கும் இவனுக்கு
சுரணை வராமல் போனது எப்படி?

தாய் துடிக்கிறாள்
நீ நடிக்கிறாய்..
மொழியைத் தொலைத்துவிட்டு
எந்த
முகத்தோடு அலையப் போகிறாய்?(புதுப்புனல் செப்டம்பர்2016 இதழ்)

இந்த வினா எப்போதும் நமக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்க வேண்டும். கொங்குமண்ணின் கவிதை பேராறு செழித்துப் புரண்டோடிக் கொண்டேயிருக்கும். எல்லாத் திசைகளிலும் கொங்கு மண்ணின் கவிஞர்களின் கொடி பறக்கும் என்பதோடு தொடர்ந்த வாசிப்பும், இயக்கமும் கவிஞனை நிலைநிறுத்தி வைக்கும். உள்ளத்தில் ஒளியிருந்தால் வாக்கினிலே ஒளியிருக்கும் என்று கூறி இந்த நல்வாய்ப்பை நல்கிய சாகித்ய அகாதமி நிறுவனத்துக்கும் நிர்மலாக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

ந. பெரியசாமி கவிதைகள்

images (4)

1. இறகு

பிரிவு கொண்டு
மண்ணில் மிதந்திருக்க
கைக்கொண்டு காது குடையாது
பரிசளிக்கிறீர்கள்.

கிரீடம் சூடி
ராஜா ராணியாக
அற்புதம் கொள்கிறார்கள்.

தோழமையை வருடி
துள்ளும் நாணத்திற்கு
குதியாடுகிறார்கள்.

புத்தகப் பக்கங்களை
வாழ்விடமாக்கி
மகிழ்ந்திடுகிறார்கள்.

கனவில் உடன் பறந்து
களைப்பில் பிதற்றிடுகிறார்கள்.

உணர்ந்திடுகிறீர்கள்
இறகின் அழகு
பறத்தலில் மட்டுமல்ல.

*

2. பின் உறக்கம்

மௌனித்திருக்கும் நிசியில்
நா மீட்டிட
பற்றும் சுடர் கனன்ற
விரவும் வெதுவெதுப்பு.

சுழிதல் கொள்ளும் இசை
பீச்சிட்ட திரவத்தின் நிழலில்
பிணைகளின் உறக்கம்
ததும்பும் நிறைவோடு.

•••

கூட்டுக்குள்ளே ஒரு பறவை / கன்னட மொழி சிறுகதை: மூலம் :வைதேகி ஆங்கிலம்:சுகன்யா கனரல்லி (Sukanya Kanarally) / தமிழில் : தி.இரா.மீனா

images (7)

வைதேகி ( ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி) நவீன கன்னட இலக்கிய பெண்படைப் பாளி. ஏழு சிறுகதைத் தொகுப்புகள்,மூன்று கவிதைத்தொகுப்புகள்,ஒரு நாவல், ஐந்து வாழ்க்கை வரலாற்று நூல்கள்,மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பதினைந்து சிறுவர் நாடகங்கள்,ஐந்து மொழி பெயர்ப்பு நூல்கள் என்று பல பங்களிப்புகள் உடையவர். அனுபமா விருது,மாஸ்தி விருது,எம்.கே .இந்திரா விருது,நிரஞ்சனா விருது,தனசிந்தாமணி விருது, கதாவிருது என்று பல விருதுகள் பெற்றவர். “கிரௌஞ்ச பட்சிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். இச்சிறுகதை ’சகுந்தலாவுடன் ஒரு மதியப் பொழுதும் மற்ற சிறுகதைகளும்’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது.

அவன் கதவைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டான். சிறிதுதூரம் சென்று விட்டுத் திரும்பிப் பார்த்தான்.மாலதி எல்லாக் கதவுகளையும், ஜன்னல்களையும் அதற் குள் மூடியிருந்தாள்.புறப்படுவதற்கு முன்னால் கதவைப் பூட்டும்படி அவள் சொன்னபோது அவன் சிரித்தான். “நீ ஏன் ஒரு அடையாளச் சீட்டை ஒட்டக் கூடாது? என்னால் இன்னும் அதிகமாகச் சிரிக்கமுடியும்! அவன் சொன்னான்.

“நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை. உண்மையாகச் சொல்கிறேன்”, என்றாள் அவள்.

“எதற்காக அப்படி?”

“வெளியிலிருந்து பூட்டி விடவேண்டும். நான் உள்ளே தனியாக இருக்க வேண் டும் என்பது என் விருப்பம் “என்று பதில் சொன்னாள் மாலதி.

“என்ன வினோதமான ஆசை அது? நான்சென்ஸ் !”

“நாம் செய்யும் எல்லாமும் ஏன் அறிவுடையதாக இருக்கவேண்டும்?அறிவற்ற ஆசைகளும் கூட சந்தோஷம் தர முடியுமல்லவா?”

அவன் அவளை உற்றுப்பார்த்தான்.”சரி. நான் உன்னைப் பூட்டிவிட்டுப் போகி றேன்.ஆனால் யாராவது வந்து விட்டால்?”

“யார் கதவைத் தட்டுவார்கள்?பூட்டியிருக்கும் கதவைப் பார்த்து விட்டுப் போய் விடுவார்கள்.”

“அவர்கள் உன்னை ஜன்னலின் வழியாகப் பார்த்து விட்டால்?”

“ஓ ! நீங்கள் போன உடனே நான் எல்லாஜன்னல்களையும் அடைத்து விடு வேன்”

“ஆனால் ஏன்?ஏன் இப்படிச் செய்ய விரும்புகிறாய்?”

“சும்மாதான். ஒரே மாதிரியாக இருந்து சலித்துவிட்டது”

“சலிப்பா? திடீரென ஒருநாள் ஒரே மாதிரியான மனிதனுடன் இருப்பது சலித் துப் போய்விட்டது என்று கூட நீ சொல்லலாம்.!”அவன் கண்களில் சிரிப்பு வழிய சொன்னான்.

“இருக்கலாம். அதில் ஏதாவது அதிசயமிருக்குமா?”

“என்னைப் போன்ற யாராவது ஒருவர்தான் உன்னுடன் வாழமுடியும்!”கண் ணாடியைப் பார்த்து தலையைச் சீவியவாறு குறும்பாகச் சொன்னான்.

“ஓ,உண்மையாகவா?இதற்காக கடைசியில் உங்களுக்கு தங்கமெடல் வழங்கப் படும்.கவலைப் படாதீர்கள்”

“அதற்கு முன்னாலே நீ இந்த உலகத்தை விட்டுப்போய்விட்டால்?”

“நான் போவதற்கு முன்னால் நீங்கள் போய்விட்டால்? ”தலையைத் தூக்காமல் அவன் சட்டைப் பொத்தானைத் தைத்தபடி சொன்னாள்.

“ஓ, கடவுளே!காலம் எப்படி மாறிவிட்டது!ஒரு காலத்தில் தன் கணவனின் வாயிலிருந்து இப்படி அமங்கலமான வார்த்தைகள் வந்தால், அவன் மனைவி தன் விரல்களால் அவன் வாயைப் பொத்தி ,கடவுளுக்கு முன்னால் நெய் விளக்கு ஏற்றிவைப்பாள்”

“காலம் முழுவதுமாக மாறவில்லை.நான் இப்போது கூட நெய்விளக்கு ஏற்றி நீங்கள் சொன்னதைச் செய்யலாம்.”

“அப்படியானால் அதை மறந்துவிடலாம். எதற்கு நெய்க்காகச் செலவுசெய்ய வேண்டும்?எவ்வளவு நாட்கள் நாம் சேர்ந்து வாழமுடியுமோ அவ்வளவு நாட் கள் வாழலாம். சரியா?”

“ஓ!,ஆமாம், நாம் சந்தோஷமாக வாழலாம். ஏன் சாவைப் பற்றி இப்போது பேசவேண்டும்?”

“உம். சமர்த்துப் பெண். நான் புறப்படட்டுமா?” அவள் கன்னத்தை லேசாக நிமிண்டினான்.”

“சரி, ஆனால் கதவைப் பூட்டுவதை மறக்கவேண்டாம்.”

அவன் ஒரு கணம் யோசித்தான்.

“சரி, நான் பூட்டுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை.நீ உள்ளேயிருக்கிறாய் என்பது யாருக்கும் தெரியக்கூடாது.ஒரு சின்னசப்தம் கூட வரக்கூடாது. மனைவியை உள்ளே வைத்து பூட்டிவிட்டுப் போகும் கணவன் ரகம் என்று என்னை அக்கம்பக்கத்தவர்கள் நினைத்து விட்டால்?நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.”

“ஓ ,ஆமாம்,எனக்குப் புரிகிறது. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஆனால் சமூகம் எப்படி உங்களை எச்சரிக்கையாக்குகிறது!”

“சமூகம் மட்டுமில்லை நானும்தான் ! யாரும் என் மீது பழிபோடுவதை நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.” சொல்லிவிட்டு அவன் படியிறங்கினான்.”கவ னமாக இரு மாலதி!”மிக மெல்லிய குரலில் சொல்லியபடி கதவைப் பூட்டி னான்.

“பூட்டு எப்படியும் பத்திரமாக வைத்திருக்கும்” சொல்லியபடி மாலதி சிரித்தாள்.

“உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை”போவதற்கு முன்பு சொன் னான்.

அவன் மாலை வரை திரும்பமாட்டான்.எல்லாக் கதவுகளையும்,ஜன்னல்க ளையும் மூடிவிட்டு அவள் திரைச்சீலைகளையும் இழுத்து விட்டாள் .மழை மூட்டம் போன்ற ஒரு தன்மை அறையைச் சூழ்ந்தது.வலிந்து அறைக்குள் பகல்நேரத்தில் ஏற்படுத்திய இருட்டு மயக்கம் தருவதாக இருந்தது. கடைசி யாக அவள் தனியாக இருக்கிறாள்.யாரும் எட்டிக் கூடப் பார்க்கமுடியாது.

தையல் ஊசியோடு எப்படி தைப்பது என்று கேட்டுக் கொண்டு உரிமையாக அடுப்படிக்குள் பக்கத்து வீட்டுப் பெண் ஹரீனாவால் வரமுடியாது.

அந்த மூதாட்டியின் வீட்டிலிருந்து சிறுமி கையில் டம்ளரோடு வந்து “சர்க் கரை வாங்கி வரும்படி சொன்னார்கள்..” என்று வரமுடியாது.

இல்லை.ஒருவரும் உள்ளே வரமுடியாது.அவள் மிகமிகச் சுதந்திரமாக இருக் கிறாள்.அவளுக்கு எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கலாம்.யாரும் ஏன் அப்படி இருக்கிறாய் என்று கேட்கமுடியாது.ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று எட்டிப்பார்த்து வீட்டைச் சுற்றி வந்தாள்.இப்போது அவள் என்னசெய்ய வேண்டும்? எதுவும் செய்யாமலிருக்கலாம், சமையல் கூட. டேப் ரிகார்டரை ஆன் செய்து ஒவ்வொரு பாடலையும் மிக நிதானமாகக் கேட்கலாம்ஆனால் அவள் எப்படிப் பாடல்கள் கேட்கமுடியும்?அவள் அதைச் செய்யக் கூடாது! குளியல்?அதை நான் முதலில் செய்கிறேன்.அவள் குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.ஆனால் ஏன் கதவை மூடவேண்டும்? யாரிடமி ருந்து மறைக்க?அவள் ஏன் மூடினாள்?பழக்கதோஷம்தான்.ஏன் பாதி திறந்து வைக்கக் கூடாது? கதவு திறந்தது.அவளுடைய தாய் திறந்தவெளியில் அவ ளைக் குளிப்பாட்டியது கண்கள் முன்பு மிதந்தது.திறந்தகதவுகள், ஆடையற்ற நாட்கள் பேரானந்தமானவை!அவை எப்போதாவது மீண்டுவருமா?ஆடைகளின் அடுக்குகள் பெருகியபோது கதவுகளும் தாழிடப்பட்டன.சிறகுகள் போல் மென் மையாக இருந்த மனங்கள் படிப்படியாக குப்பைகளால் நிரம்பி, இனி பறக் கவோ அல்லது மிதக்கவோ முடியாது என்றாகி விட்டன.மனிதர்கள் தங்க ளைத் தாங்களே சிறைப்படுத்திக்கொண்டனர்!குதிரையைப் போல!இருபதாம் நூற்றாண்டு மனிதர்களை விட ஆதாமும்,ஏவாளும் எவ்வளவோ புத்திசா லிகள். எவ்வளவோ தடையற்றவர்கள் .

கொப்பரையில் சுடுதண்ணீர் கொதித்தது.அதைக் காலி செய்தபோது அவளுக்கு முழுபலத்துடன் விசிலடிக்கவேண்டும் போலிருந்தது.ஓ என்று கத்தவேண்டும் போலிருந்தது.

முழுவதும் கட்டுப்பாடின்றி இருப்பது எப்படியிருக்கும் என்பதை ஒவ்வொ ருவரும் அனுபவிக்க வேண்டும்.

கல்லூரி விழாக்களின் போது அவள் எப்படி விசிலடிப்பாள்! அவள் மட்டுமா? எல்லாம் மாணவிகளும் செய்தனர்.அது பெண்கள் கல்லூரி.எந்த இளைஞனும் அங்கில்லாமலிருந்ததே அப்போது பெரிய சுதந்திரம்.ஒரு முறை,அனிதா தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டு அவளை வரவேற்பதுபோல விரலை வாயில் வைத்து விசிலடித்தாள்.

பின்னாலிருந்த கல்லூரி முதல்வர் திடீரென்று கண்ணில்பட்டார்.அவள் எப்படி அவரைப் பார்க்காமல் போனாள்?

சுகன்யா கனரல்லி

சுகன்யா கனரல்லி

அவர் அவளைத் தன் அலுவலகத்திற்கு வரச்சொன்னார்.பெண்கள் கல்லூரி, ஆண்கள் கல்லூரி,இருபாலார் கல்லூரி என்று அரைமணி நேரத்திற்கு பெரிய சொற்பொழிவு நிகழ்த்தினார்.”நீ ஒரு பெண். அதுவும் இந்தியப் பெண்! என்ற பாட்டையே மீண்டும்மீண்டும் பாடி குமட்டுகிற அளவிற்கு வைத்து விட்டார்.

ஒருவேளை விசிலடிக்க முடியாத அளவிற்கு பெண் பலவீனமாயிருப்பாளோ? அதைச் செய்யக் கூட ஒரு ஆணின் ஆதரவு அவளுக்குத் தேவைப்படுமா?

அவள் மிக மெலிதாக விசிலடிக்கத் தொடங்கினாள்.விரைவில் அது உச்சத்தை அடைந்து விடலாம்.அவளுக்கு திடீரென்று நிகழ்காலம் நினைவிற்கு வந்தது ஒரு மெல்லிய ஒலி கூடக் கேட்கக் கூடாது.அவன் போவதற்கு முன்பு மூன்று முறை எச்சரித்து விட்டுப் போனான்.அவள் காற்றிழந்தவள் போலானாள் தண் ணீர் வேகமாக வந்து விழுந்தது. ஹரீனாவிற்கு பாம்புச் செவி.அவள் பக்கத் துவீட்டு மனிதர்கள் யாரிடமாவது சொல்லி கதவில் சாளரம் வழியாகப் பார்க்கச் சொல்வாள்.ஐயோ!அவன் போவதற்கு முன்னால் ஏன் அவள் குளி யலை முடிக்கவில்லை?

வீடு முழுவதும் நடந்து உடலைத் துடைத்துக்கொண்டாள்.

வாழ்க்கை முழுவதும் இப்படியான ஓர் ஓய்விலிருந்தால் எப்படியிருக்கும்? அவளுக்குச் சலிப்பு வரலாம்.ஆனால் எப்போதாவது இப்படி ஒரு முழுநாளைக் கழிக்கமுடிந்தால் எவ்வளவு பரபரப்பாக இருக்கும்?அவள் அறைக்குள் போனாள்.

என்ன அணிவது?ஆனால் ஏன் அணியவேண்டும்? யாரிடமிருந்து மறைக்க அணிய வேண்டும்?

படுக்கையில் உட்கார்ந்தாள்.மேஜையின் மீது ஒருசிகரெட்பாக்கெட் இருந்தது. பக்கத்தில் டிரேயும்.

உதட்டில் சிரிப்பு மலர்ந்தது.ஒரு சிகரெட்டை உருவி உதடுகளுக்கிடையில் வைத்துக் கொண்டு புகைப்பது போல நடித்தாள்.வேடிக்கையாக உணர்ந்தாள். செய்து பார்த்தாலென்ன?முதல் உறிஞ்சலிலேயே இருமல் வந்தது. வாயை மூடிக்கொண்டு இருமினாள்.

அவளுக்கு மீண்டும் ஹரீனாவின் ஞாபகம் வந்த்து.

எதிர்வரிசையிலிருந்த கல்லூரிமாணவனின் அறை இவள் வீட்டை பார்த்தி ருந்தது.பூட்டியவீட்டினுள் திருடன்இருப்பதாக அவன் நினைத்து விடுவானோ? அவன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டால்?

கட்டுப்படுத்த முடியாத இருமல்… படிப்படியாக குறைந்தது.முகம் முழுவதும் வியர்த்தது.கண்களில் நீர் நிறைந்தது.

சிறிதுநேரம் உன்னிப்பாக கவனித்தாள்.ஹரீனாவின் வீட்டு குக்கர் விசில டித்தது.கிரைண்டர் இரைச்சலிட்டது.மணி இப்போது பத்தரை.அந்தப் பையன் கல்லூரிக்குப் போயிருப்பானா? புல்லியும் ,பாட்டியும்வீட்டு வேலைக்குப் போயிருப்பார்களா?அதிர்ஷ்டவசமாக ! அந்தப் பகுதியிலிருந்து எந்தச் சிறிய ஒலியுமில்லை.குளிக்கும் போது முடிந்திருந்த கூந்தலை அவிழ்த்தாள்.அது சிடுக்காகியிருந்தது.

தலையை வாரிக் கொண்டே” இன்று உனக்கு எந்தச் சங்கிலியும் கிடையாது .உனக்குச் சுதந்திரம்.. விடுமுறை!”என்றாள்.

சுதந்திரமாகத் தலைமுடி பறந்தது.

அவளுக்குப் பசித்ததுஅவள் பங்கிற்கான இட்லி அடுப்படியில் இருந்தது.நான்கு இட்லிகளைச் சட்னி மற்றும் வெண்ணையோடு சாப்பிட்டு சர்க்கரையின்றி ஒரு கிளாஸ் பாலகுடித்தாள்.சத்தமின்றித் தட்டையும்,கிளாஸையும் வைத்து விட்டுத் திரும்பினாள். “இனிமாலை வரை எதையும் கேட்கக்கூடாது”என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

வரவேற்பு அறைக்குப் போனாள்.ரேடியோவைப் போட நீண்ட கை தானாகப் பின்வாங்கியது.

பின்னால் நடந்தவாறு , கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் போல உணர்ந்தாள். சுவர்கள் கூண்டு போலத் தெரிந்தன.அடைபட்ட சிங்கத்திற்கு தனக்குப் பிடிக் கும் போது கர்ஜிக்கும் உரிமையாவதுண்டு.அவளால் மெல்லியதாகக் கூட குரல் எழுப்பமுடியாது.ஒரு சத்தமும் எழுப்பமுடியாமல் எப்படி வாழ முடி யும்?எவ்வளவு மூச்சுத் திணற வைக்கும் செயல் இது!

நாள் முழுவதையும் இப்படி வெறுமே,உட்கார்ந்து,படித்துக் கடத்துவதென்பது சுவையற்ற ,சலிப்பான இருப்பாக அல்லவா இருக்கும்?அவன் மாலை திரும்பி வந்தபிறகு இதைக் கேட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பான்!

நான்கு சுவர்களுக்குள் இங்குமங்கும் அலைவதிலும்,சுற்றுவதிலும் ஏதாவது சுதந்திரம் இருக்கிறதா? சுதந்திரமென்பது அவள் கதவைத் திறந்து, தெருவில் நடந்து, உவகையோடு தடையின்றி இருப்பது.ஹரீனா, மூதாட்டி, கல்லூரி மாணவன் ,மற்றவர்கள் என்று எல்லோர் பார்வையிலும் முழுவதுமாகப் படுவது.சுதந்திரம் என்பது தனிமைப்படுத்துதலா?சுதந்திரத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் விலை கொடுக்கப்படவேண்டிய தேவையுடையவையா இரகசியங்கள்?எவ்வளவு சுய ஏமாற்றமும் ,மாயையும்!

கை தன்னிச்சையாக வரவேற்பு அறையின் லைட்டைப் போட்டது. உடனடி யாக மூளை தந்த ஆணையால் மனம் லைட்டை அணைத்தது.

அவள் எரிச்சலடைந்தாள்.

அறையிலுள்ள அவன் அலமாரியைத் திறந்தாள். அவனுடைய சட்டையை யும், டிரவுசரையும் போட்டுக் கொண்டாள்.அவளை யாரும் இந்த உடையில் பார்த்துவிடக் கூடாதா?

வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது.ஜன்னல் கதவைத் திறந்து ஹரீனாவைக் கூப்பிடலாமா?அவள் பூட்டிய கதவு பற்றிக் கேட்டால் விளக்கம் சொல்லியாகவேண்டும்.பொய் சொல்வது எளிதல்ல.உண்மையைச் சொன்னா லும் இப்படிப்பட்ட “மனநிலைகள் ” அவளுக்குப் புரியாது.

இதழின் வாட்டமாய் ,மனம் வாடியது.

அவள் சட்டையையும், டிரவுசரையும் கழற்றித் தூக்கியெறிந்தாள்.வாழ்க்கை மிகமிக கட்டுப்பாடுகள் உடையது என்று நினைத்தாள்.தனக்காக வாழாமல் தான் யாருக்காகவோ வாழ்வதாக நினைத்தாள்!

பச்சாதாபம் எழ அவள் கண்கள் கருமையாயின.எந்தக் கணமும் அவளுடை தல்ல.ஒவ்வொன்றும்,எல்லாமும் கடனாகப் பெறப்பட்டவை.

துல்லியமாக அதற்கு என்ன விலை? சுய கடனாளியாவது…

இந்த மாதிரியான எண்ணங்கள் மனதில் கனமாக ஏற கண்கள் மூடிக் கொண் டன. தலையணையை அணைத்துக் கொண்டு ,விலகி அவள் தூக்கத் திரை யில் ஆழ்ந்தாள்.

அவள் கண் விழித்தபோது மாலை ஐந்தாகியிருந்த்து.சுதந்திரக் கணங்கள் மேற்கை நோக்கிப் பறந்திருந்தன.கையிலிருப்பது பத்து பதினைந்து நிமிடங் கள் தான்.அவன் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம்.அவன் கதவைத் திறக்கும்போது அவளுடைய தற்போதை நிலையைப் பார்ப்பான். படுக்கை யில் மல்லாக்க கிடந்தபடி. .கதவு திறந்திருக்கிறது. ஓ, பெரிய கண்ணாடி அவளுடைய தற்போதைய நிலையைக் காட்டியது.அது சிரிப்பிற்குரியது. கேலிக்குரியது.அவள் திடுக்கிட்டாள்.படுக்கையில் ஒரு காபரே பெண் போல.

வேகமாக எழுந்து புடவையை அணிந்தாள். தலையைச் சீவிக் கொண்டு அலங்கரித்துக் கொண்டாள்.கண்ணாடியைப் பார்த்தாள்.

கடைசியில்.பரிச்சயமான முகமும், உருவமும் .நிம்மதியாக இருந்தது. கையில் அன்றைய செய்தித்தாளோடு சோபாவில் உட்கார்ந்தாள். பூட்டு திறக்கும் ஓசைக்காக காத்திருந்தபடி.

ஹரீனா,மூதாட்டி,புல்லி ஆகியவர்களின் அருகாமை இல்லாதபோதும் அவள் தன் சுதந்திர கணங்களைச் வேகமாகச் சுருக்கிக்கொண்டது ஏன் என்பது ஆச்சர்யமாக இருந்தது.

கழிக்கப்படாத கணங்கள் நழுவிப் போவதை அறியாமல்.

——————-

நன்றி :Katha Bharati Series The Library of Indian Classics, Sahithya Akademy — An

Afternoon With Shakunthala and Other Stories

எம் ஜி சுரேஷ் சில நினைவுகள்… / அழகியசிங்கர்

எம்.ஜி சுரேஷ்

எம்.ஜி சுரேஷ்

ஒரு எழுத்தாளரைப் பற்றி யாராவது எதாவது ஒன்று சொல்ல வேண்டுமென்றால், அவர் எதாவது பரிசு பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மரணம் அடைந்திருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு எழுத்தாளரின் சிறுகதைத் தொகுதி 5000 பிரதிகள் மேல் விற்றது. காரணம். அவர் சாகித்திய அக்காதெமி விருதையும், விஷ்ணுபுர விருதையும் ஒரு சேரப் பெற்றதால்.

வித்தியாசமான பல புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்த எம் ஜி சுரேஷ் என்ற எழுத்தாளர் சிங்கப்பூரில் அவர் பெண் வீட்டில் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு இன்னும் அதிகமாக எழுத வேண்டுமென்ற தணியாத தாகம் அதிகம் உண்டு. அவர் கடைசியாக எழுதிய நாவல் தந்திர வாக்கியம். NOVAL IN FRAGMENTS என்று இந் நாவலைப் பற்றி சுரேஷ் எழுதியிருப்பார். அதேபோல் 37 என்ற நாவலில் பல குரல்களில் ஒரு அறிவியல் புனைகதை என்று எழுதியிருப்பார். சிலந்தி என்ற நாவலை ஒரு துப்பறியும் கதையாக எழுதியிருப்பார். கனவுலக வாசியின் ஒரு நனவுக் குறிப்புகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வந்திருக்கிறார்.

சுரேஷ் ஒரு வித்தியாசமான எழுத்தாளர். சாதாரணமாக யோசிக்காமல் அசாதாரணமாக யோசித்து கதை எழுதுபவர். கோட்பாடு ரீதியாக சிந்திக்கவும் எழுதவும் தெரிந்தவர்.

இவருடைய பின் நவினத்துவம் என்றால் என்ன? என்ற புத்தகம் முக்கியமானது.

கோட்டபாடு ரீதியாக சிந்தித்த சுரேஷ், தனியாகத்தான் இயங்கி உள்ளார். அவர் யாருடனும் கூட்டு சேரவில்லை என்றே தோன்றுகிறது. அவர் எழுத்துக்களை திரும்பவும் எடுத்து தூசித் தட்டும்போதுதான் ஒரு அற்புதமான மனிதரை இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

எப்போதும் தன்னைப் பற்றி பெருமை அடித்துக்கொள்ளத் தெரியாதவர் சுரேஷ். ஆனால் அவர் சாதனைகளை நாம் உற்று நோக்கினால், பெருமை அடித்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ
விஷயங்கள் அவரிடம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அவர் கடைசியாக எழுதிய தந்திர வாக்கியம் என்ற நாவலைக் குறித்துப் பேசுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. வெகு ஆண்டு கழித்து அப்போதுதான் ýசுரேஷ்ஷை திரும்பவும் சந்திக்கிறேன். அதே சிரித்த முகம், மெலிதான பேச்சு. யாரையும் அவர் கோபப்படும்படி பேசி நான் பார்த்ததில்லை. அவர் நாவலைக் குறித்து நான் பேசியடதை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் சொல்லவில்லை.

கோட்பாடு ரீதியாக சிந்திக்கத் தெரிந்தவர் என்றாலும் யாருடனும் அவர் ஒன்ற மாட்டார். தன் போக்கிலேயே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு போவார். பின் நவீநனத்துவம் என்றால் என்ன என்பது அவருடைய முக்கியமான புத்தகம். அந்தப் புத்தகத்தில் அமைப்பியல் என்றால் என்ன, பின் அமைப்பியல் என்றால் என்ன என்பதையயெல்லாம் ரொம்ப சுலபமாக படிப்பவருக்குப் புரியும்படி விளக்கிக் கொண்டு போவார். யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தைப் படித்து பலவற்றை புரிந்து கொண்டு விட முடியும்.

கோட்பாடு ரீதியாக சிந்திப்பவர்கள் எல்லோரும் படிப்பவர்களை ஒரு குழப்பு குழப்புவார்கள். ஆனால் சுரேஷ் வேற விதம். அவர் அதிகம் படித்தவர். அடலாண்டிஸ் மனிதன் என்ற நாவல் மூலமாகத்தான் அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.

எம் ஜி சுரேஷ் அவருடைய கட்டுரைத் தொகுப்பில் அடலாண்டிஸ் மனிதன் என்ற நாவலை எழுத என்ன முயற்சி செய்துள்ளார் என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்:

“மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டுமென்றால், எளிமையான நடையில் சரளமாக எழுதப்பட வேண்டும் என்று தோன்றியது. எனவே, எளிய நடையில் எழுதினேன். அப்போதுதான் வாசகனால் சலிப்படையாமல் வாசிக்க முடியும். ஆல்பெர் காம்யூ வெகுஜனப் பத்திரிகைக்கான எளிய நடையில்தான் அந்நியன் போன்ற நாவல்களை எழுதினார் என்று பிரெஞ்ச் அறிந்த நண்பர்கள் முலம் அறிந்திருக்கிறேன். அந்த நடையில் எழுதியே அவரால் சர்வதேச அங்கீகாரம் பெறக்கூடிய அளவுக்கு உலகத்தரமான இலக்கிய அந்தஸ்தைப் பெற முடிந்தது. ஆதலால் இந்த எளிய நடை இந் நாவலின் இலக்கிய மதிப்பை நீர்த்துப் போகச் செய்யாது என்று நம்பினேன்.” என்று விவரித்துக் கொண்டு போகிறார்
.
உண்மையில் இந்த நாவல் வந்தபோது சில மாதங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு இந்த நாவலுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.

இந்தக் கட்டுரையை எழுதும்போது திரும்பவும் இந்த நாவலை நான் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அவர் கட்டுரையில் நான் சொன்ன விஷயத்தை சுரேஷ் பதிவு செய்திருக்கிறார்.

இந் நாவலை நகுலனின் நாவலோடு ஒப்பிடலாம் என்று நான் நவீன விருட்சத்தில் எழுதியிருப்பதாக சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். இப்போது அவருடைய கட்டுரை தொகுதியைப் படிக்கும்போதுதான் இதுமாதிரி நான் குறிப்பிட்டிருப்பதை சுரேஷ் எழுதி உள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

எம்.ஜி. சுரேஷ்

எம்.ஜி. சுரேஷ்


சுரேஷ் பற்றி குறிப்பிடும்போது அவர் பல முயற்சிகளை தன் எழுத்தின் முலம் கொண்டு வந்துள்ளார்.

அரூபங்களாகக் கைகோர்த்துக் கனவுகளுடன் அலையும் என் முன்னோடிகளான போர்ஹேவும், கோஸின்ஸ்கியும் என் முதுகுக்குப் பின்னால் நின்று மௌனமாக நான் எழுதுவதைக் கவனிக்கிறார்கள். மீசை மழிக்கப்பட்ட அந்த முகங்களில் புன்னகை அரும்புகிறது.
ஆனால், என் கையோ தொடர்ந்து எழுதிச் செல்கிறது.. என்கிறார் பரவசத்துடன்.

தந்திர வாக்கியம் என்ற நாவலைப் படித்துவிட்டு நான் சில குறிப்புகளை எழுதியிருக்கிறேன். அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தந்திர வாக்கியம் என்ற நாவலும் துண்டாடப்பட்ட விவரணைகளைக் கொண்ட நாவல்தான்.

இந் நாவலில் இரண்டு விதமான வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார். ஒன்று தற்கால வாழ்க்கை முறை. இன்னொன்று புத்தர் வாழ்ந்த கால வாழ்க்கை முறை. ஐடி துறையில் படுகிறபாட்டை ரொம்ப சுலபமாக சுரேஷ் விவரித்துக்கொண்டு போகிறார். நிகண்டன் என்பதுதான் நிக்கியின் நிஜமான பெயர். அப்பா ஜெயராமனுக்கும், இருளாயிக்கும் பிறந்த பையன்.

இருட்டு ஒரு தருணம். வெளிச்சமும் ஒரு தருணம். இது ஒரு நிகழ்ச்சி. மாறி மாறி நடக்கிறது என்கிறார் எம்.ஜி சுரேஷ். இந் நாவலைப் படிப்பது கூட ஒரு நல்ல தருணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந் நாவலைப் படிக்கக் கொடுத்து என்னை மதித்து என் அபிப்பிராயங்களைக் கேட்ட சுரேஷ் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள என் மனது தயங்குகிறது. ஆனால் அவர் உண்மையில் அவர் எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

•••

கருத்தியல் – பரிசோதனை – புனைவு / எம்.ஜி.சுரேஷ் நேர்காணல் / சிபிச்செல்வன்

எம்.ஜி சுரேஷ்

எம்.ஜி சுரேஷ்

சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்


கருத்தியல் – பரிசோதனை – புனைவு / எம்.ஜி.சுரேஷ் நேர்காணல் / சிபிச்செல்வன்

••••

உங்களுக்கு இலக்கியம் எப்படி பரிச்சயம் ஆனது என்பதைப் பற்றி சொல்லுங்கள்.

முதலில் எனக்கு எழுத்துக்கள் பரிச்சயம் ஆனது. ஸ்கூலில் போய்ப் படித்த பிறகு போர்டுகளைப் படித்தல் சரியாகப் படித்துவிட்டால் ஆனந்தமாக இருக்கும். அப்போது எங்கள் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் வாங்கினார்கள். அதையெல்லாம் படிக்க ஆரம்பித்தேன். பல வார்த்தைகள் புரியாது. இருந்தாலும் தொடர்ந்து படித்துக்கொண்டேயிருந்தேன். பிறகு புரிய ஆரம்பித்தது. பலருடைய கதைகள் படித்த பிறகு ஜெயகாந்தன் கதைகள் படிக்க ஆரம்பித்தேன். வெகுஜன பத்திரிக்கைகளில் முதலில் என்னைக் கவர்ந்தது ஜெயகாந்தன் கதைகள். இதற்குப் பிறகுதான் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற வேறுவகையான எழுத்துக்கள் அறிமுகமாயின. சோவியத் இலக்கியமும் அப்போது வெகுவாகக் கவர்ந்தது.

இவையெல்லாம் எந்த வயதில் நடந்தவை?

நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த்தபோது. ஸ்கூல் முடித்த பிறகு வேலையில்லாமல் இருந்தேன். அப்பா இறந்துவிட்டார். அப்போது நான் ஏதாவது ஒரு வேலைக்குப் போய்த்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்; இரண்டு தம்பிகளைப் படிக்க வைக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் நூலகத்திற்குப் போய்ப் படிக்கும் பழக்கம் வந்தது. சோவியத் இலக்கியங்களை முதலில் தமிழில் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு ஆங்கிலத்திலும் படிக்க ஆரம்பித்தேன். எதைக் கண்டாலும் படுப்பதுதான் என் இலக்கிய ஆரம்பத்திற்கு அடிப்படை. எல்லாவற்றையும் படித்தபோதுதான் எது நல்லது, எது கெட்டது என்று இனங்காண முடிந்தது. அப்படித்தான் புதுமைப்பித்தனைச் சென்றடைந்தேன்.

இது எப்போது நடந்தது?

பின்னாட்களில்தான் புதுமைப்பித்தனைப் படித்தேன். அதற்கு முன்னால் ஜெயகாந்தனைத்தான் படித்தேன். ஜெயகாந்தனிடம் நேரிடையாகப் பேசிப் பழகிய பிறகு அவர் பல நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதனால் எனக்கு கம்யூனிஸத்தின் தாக்கம் வந்தது. ஒரு கம்யூனிஸ சிந்தனையாளனாக இருந்தேன். செம்மலர் முத்தையா, தி.க.சி. இவர்களையெல்லாம் பார்த்தேன். ஷோல்ஷெனிட்ஸின் போன்ற ஆன்டி-கம்யூனிஸ எழுத்தாளர்களையும் படித்தேன். எப்போதும் ஒரு தேடலோடுதான் நான் இருந்திருக்கிறேன். கம்யூனிஸ்டுகளோடு பழகினாலும், ஆதரவாக இருந்தாலும், எனக்குள் ஒரு சந்தேகம். அது நான் கம்யூனிஸ்டுதானா என்பதுதான். அது ஒரு ஐடியலிஸம் என்று எனக்குத் தோன்றியதனால்தான். இது போஸ்டு மாடர்னிஸ கான்செப்ட். ஆனால் என்னிடம் இது முதலிலேயே இருந்தது. அதாவது போஸ்ட் மாடர்னிஸம் படிப்பதற்கு முன்பே. கோட்பாடுகள் எல்லாவற்றின் மீதும் ஒரு சந்தேகம் உண்டு எனக்கு. இது ‘குட்டி பூர்ஷ்வா’ மனோபாவமாக இருக்கலாம். சார்த்தர் சொல்கிறார் எந்த ஒரு தத்துவமும் நிறுவனமயமாகும்போது அது corrupt ஆகிவிடுகிறது என்கிறார்.

எந்த ஒரு சிறந்த கொள்கையும் நான்கைந்து பேர் சேர்ந்து நிறுவனமாகும்போது, அது நீர்த்துப்போய் விடுகிறது. ஒரு தனிப்பட்ட முறையில் மாரிக்சியம் சரியாக உள்ளது. அதுவே ஒரு நிறுவனமாகும்போது ஆன்டி-மார்க்சியமாகி விடுகிறது. அதுவே அதற்கு எதிராக மாறிவிடுகிறது. இதைதான் நாம் காலம் முழுவதும் பார்த்து வருகிறோம். இன்னமும் மார்க்ஸீயத்தின்பால் எனக்கு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. மார்க்ஸியம் தன்னை hypermarxism என்றோ meta-marxism என்றோ வேறு ஒரு பெயரில் வேறு ஒரு காலத்தில் தன்னை மீட்டுருவக்கம் செய்யும் என்று நம்புகிறேன். எனது கோட்பாடு இலக்கியம் சார்ந்து அரசியல்; அரசியல் சார்ந்து இலக்கியம் என்கிற மாதிரி இருக்கிறது.

நீங்கள் எப்போது எழுத ஆரம்பிதீர்கள்? பொதுவாகக் கவிதை எழுதுவதில்தான் பலர் தங்கள் எழுத்துலக வாழ்வைத் தொடங்குகிறார்கள். நீங்கள் எப்படி?

முதலில் நானும் புதுக்கவிதைதான் எழுத ஆரம்பித்தேன். 1970களில் கணையாழி, தீபம், கசடதபற பத்திரிகைகள் வந்துகொண்டிருந்த நேரம். ‘எழுத்து இதழ்களை கன்னிமாரா நூலகத்தில் அப்போது பார்க்கலாம். மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம் போன்ற இதழ்களையும் அங்கே வாசிக்க முடிந்தது. அப்போது எனக்குப் புதுக்கவிதை மீது கொஞ்சம் பிரியமாக இருந்தது. எழுதுவதும் சுலபமாக இருந்தது. பிரச்சினைகளும் இருந்தன. நான் எழுதிய கவிதைகள் தீபம், கணையாழி, போன்ற பத்திரிகைகளிலும் அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து சிறுபத்திரிக்கைகளிலும் வெளிவந்திருக்கின்றன. அப்போது இளவேனில் ’கார்க்கி’ என்று ஒரு பத்திரிக்கை நடத்தினார். அவர் ஒரு சிறுகதை கொடுங்கள் என்று கேட்டார். அது வரை எனக்குச் சிறுகதை எழுதுகிற யோசனை இல்லை. கவிதை எழுதுவேன். வாசகனாக இருந்தேன் . அவர் கேட்டதற்காக அவநம்பிக்கையுடன் ஒரு சிறுகதை எழுதிக் கொடுத்தேன்.

உங்கள் கவிதைகளைத் தொகுப்பாகப் போட்டிருக்கிறீகளா?

என்னுடைய கவிதைகளை நானே disown செய்துவிட்டேன். அவை எனக்குத் திருத்திகரமாக இல்லை. மற்றவர்கள் நன்றகாக இருப்பதாகச் சொன்னார்கள். என்னுடைய ஸ்டேண்டர்டின்படி அவை திருப்திகரமாக இல்லை. என்னுடைய தனித்தன்மைகளோடு இல்லை. அதாவது என்னுடைய பெயர் இல்லையென்றால் கூட என்னுடைய கவிதைகள் என்று அடையாளம் கண்டுபிடிக்கிற அளவிற்குத் தனித்தன்மைகளோடு இவை இல்லை. பல சாயல்கள் அதில் இருந்தன. ஞானகூத்தன், பிரமிள் போன்றவர்களின் சாயல்கள் இருந்தன.

அசோகமித்திரன்

அசோகமித்திரன்


முன்னோடிகளின் சாயல்கள் இருப்பது ஒன்றும் தவறான விஷயமில்லையே?

அது இப்போது தான் தெரிகிறது. ஒன்றிலிருந்து ஒன்று பெறப்படுகிறது. எனவே அவற்றை நான் disown செய்திருக்க வேண்டியதில்லையோ என்றும் தோன்றுகிறது. எழுதப் பழகிய கவிதைகளாக இவற்ரை நினைத்துக்கொண்டேன். இப்போது அந்த கவிதைகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன.

அப்போது எழுதிய பத்திரிக்கைகளில் தேடத் தொடங்கினால் கிடைத்துவிடுமே?

அவற்றைத் தான் என் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். அது நன்றாக இருக்கிறது. தொகுப்பாகப் போடுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் அப்படித்தான் இருந்தோம் என்று சொல்லிக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இப்போது எவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்கிறோம் என்பது தான் முக்கியமில்லையா?

மோசமான எழுத்தைக் கூட போட வேண்டும் என்பது நவீன இலக்கியக் கோட்பாடு. எப்படி எல்லாம் வந்தோம் என்பதற்கான பதிவு அது. ஒரு எம்பீரியோவாக (embryo) இருந்தோம். பிறகு தான் இரண்டு செல் மூன்று செல் என்று வருகிறது. எம்பீரியோவாக இருந்ததில் எனக்கு அவமானம் இல்லை. புதுப்புனல் ரவிகூட அந்தக் கவிதைகளைப் போடுவதற்கு எனக்கு நெருக்குதல் கொடுத்தார். நான் தான் வேண்டாம்; வேறு மாதிரியான பயணங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்று தவிர்த்துவிட்டேன். அந்தக் காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் என்ன மாதிரியான கவிதைகள் வந்ததோ அதைப் போன்றே என் கவிதைகளும் இருந்தன. ஞானகூத்தனுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு ஹ்யூமர், சட்டையரிக்கல் தன்மை உண்டு. அப்படி ஒவ்வொரு கவிஞனுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு. பிரமிள், தேவதேவன் என்று அனைவருக்கும் உண்டு. அந்த மாதிரி எனக்கு இல்லை. இப்போது மறுபடியும் கவிதை எழுதும் ஆசை இருக்கிறது. அதைத் தொகுப்பாகவும் வெளியிட ஆசை உண்டு. இப்போது வேறு மாதிரி எழுத முடியும்.

’கார்க்கி’யில் சிறுகதை எழுதிய பிறகு தொடர்ந்து சிறுகதைகள் எழுத அரம்பித்தேன். பிறகு நாவல்களும் எழுத ஆரம்பித்தேன். தாஜ்மகாலுக்குள் சில எலும்புக்கூடுகள், கான்கிரீட் வனம் போன்ற நாவல்களை எழுதத் தொடங்கினேன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பும் நாவல்களும் அப்போது பேசப்பட்டன. கணையாழியில் அசோகமித்திரன் கவனப்படுத்தியிருந்தார். க.நா.சு. முன்னுரை எழுதியிருந்தார். பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இப்போது தமிழ்ச் சூழலில் கவிதைகளுக்கும் கவிதை எழுதுபவர்களுக்கும் மரியதையே கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் திரும்பவும் ஏன் கவிதை எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நான் போஸ்ட்-மாடர்னிஸக் கூறுகள் உள்ள கவிதைகள் எழுத விரும்புகிறேன். நடுவில் கொஞ்சம் பிலாசபி படித்தேன். எப்போதும் நான் ஒரு தீவரமான வாசகன்…………. கவிதைகள் எழுத ஆரம்பித்த பிறகு நாவல் எழுதுவதை விட்டுவிட மாட்டேன். நாடகம் எழுதவும் ஆசை உண்டு. இந்திரா பார்த்தசாரதி என்னிடம் ஒருமுறை கேட்டார். நீங்கள் சினிமாத் துறையில் ஆர்வமாக வேலை செய்கிறீர்கள். எப்படி நாடகம் எழுதாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார். நாடகத்தின் நீட்சி தான் சினிமா என்பதும் உண்மை. எழுத்தின் பல்வேறு சத்தியங்களையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.


முதலில் வந்த உங்கள் சிறுகதைத் தொகுப்புகளைப் பார்த்தால் உங்களின் evolution நன்றாகத் தெரிகிறது. கம்யூனிசம், தத்துவங்கள், வேலையற்ற இளைஞனின் பிரச்சினைகள் எல்லாம் இருக்கின்றன. இவற்றைப் பற்றி…?

தகப்பனாரால் கைவிடப்பட்ட குடும்பம் என்னுடையது. எங்கள் அம்மாவோடு நானும் சகோதரர்களும் மதுரையிலிருந்து சென்னைக்குத் தனியாக வந்துவிட்டோம். மாமா வீட்டில் இருந்தோம். நான் மேற்படிப்பு படிக்க முடியவில்லை. குடும்பத்திலும் வறுமை. இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய இளைஞர்கள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ப்ரன்ஸிஸ்கீஸோப்ரனியா என்று ஒரு மனநோய் வருகிறது. விரக்தியினால் நிகழும் அவநம்பிக்கை, நம்பிக்கை வறட்சி, கோபம், எவனையாவது உதைக்கலாமா என்பது போன்ற வன்முறை எண்ணங்கள் எல்லாம் இதனால் வருகின்றன. இந்த மனநிலையில் நான் இருந்தேன். இதை வைத்து ஒரு குறுநாவல் எழுதினேன். ’விரலிடுக்கில் தப்பிய புகை’. அதை நல்ல நாவல் என்று பலர் சொன்னார்கள். தாஸ்தாவெஸ்கி மாதிரி எழுதியிருப்பதாக க.நா.சு. சொன்னார். உளவியலைத் தாஸ்தாவெஸ்கிதான் நன்றாக எழுதுபவர். தமிழில் யாருக்கும் சரியாக எழுதவரவில்லை. உங்களுக்குச் சரியாக வருகிறது என்றார். இந்தக் குறுநாவல் தி.ஜனாகிராமனுக்கும் பிடித்தது. அந்த நேரத்தில் இதை work of art என்று சொன்னார்கள்.

அப்போது துணிக்கடை நகைகடை என்று நிறைய வேலைகள் செய்தேன். சர்வீஸ் கமிஷன் பாஸ் செய்து ஹெல்த் டிபார்ட்மெண்டில் பணியில் சேர்ந்தேன். மார்க்சியம் அப்போது நடைமுறை அரசியலில் காலாவதியாகிவிட்டது. சோவியத்திலும் அது மறுபரிசீலனைக்கு உள்ளாகிவிட்டது. ஒரு விஷயம் பலவிதமாக மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. பிரபஞமே முரண்பாடுகளால் ஆனது. இருள் × வெளிச்சம், குளிர்ச்சி × வெப்பம்….

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்


பைனரி (0,1) லாஜிக்கைச் சொல்கிறீர்கள். இல்லையா?

ஆமாம். பைனரி இல்லையென்றால் கம்பூட்டர் இயங்காது. 0,1 இதுதான பைனரி. 0,1 இருந்தால் தான் கணினி இயங்கும். 0 தனியாகவோ 1 தனியாகவோ இயங்காது. இரட்டைத் தன்மைகளும் முரண்பாடுகளும் இருந்துகொண்டேயிருக்கும். பூமியே இந்த அடிப்படையில்தானே சுழல்கிறது.

எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தில் ஈடுபாடு வந்து சார்த்தர் எல்லாம் படித்தேன். பிறகு டெரிடா, லக்கான், ஃபூக்கோ இவையெல்லாம் போஸ்ட் மாடர்னிசத்தில் ஈடுபாடு வந்தபிறகு படித்தேன். வேறு ஒரு தெளிவு கிடைத்தது. மாடர்னிசத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று நினைத்தேன். நிறைய நீதி நூல்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். திருடாதே, பொய்சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாம் அதைச் செய்துகொண்டா இருக்கிறோம். நீதி நூல்கள் எல்லாம் வேஸ்ட். அதன் பிறகு மனதை நெகிழ வைக்கும் நூல்கள் வந்தன. நீ திருடினால் இவ்வளவு கஷ்டப்படுவாய், நீ குடித்துவிட்டு அடித்தால் அந்தப் பெண் இவ்வளவு துன்பப்படுகிறாள் என நெகிழ வைக்கிற எழுத்துக்கள் வந்தன. உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்கள் ரொமாண்டிசம். அதிலேயும் மனிதனுக்குத் திருப்தி வரவில்லை. நெகிழ்ந்தாலும் திரும்பவும் பழையபடித் திரும்பிவிடுகிறான். அடுத்ததாக கேள்விக்குள்ளாவது வருகிறது. ஒருவர் உங்களைக் கிண்டல் செய்தால் அவமானம் வருகிறது. உடனே பரிசீலிக்கிறோம். போஸ்ட் மாடர்னிசம் எதையும் கேள்விக்குள்ளாக்குகிறது. கிண்டல் செய்கிறது. மீண்டும் வேறு மாதிரி வாசித்துப் பார்க்கச் சொல்கிறது. இது ஒரு method of analysis. இதனால் எனக்கு போஸ்ட் மாடர்னிசம் பிடித்திருக்கிறது.

ரியலிஸம், ரொமண்டிசிசம், மாடர்னிசம், ஸ்ட்ரக்சுரலிசம், போஸ்ட் மாடர்னிசம் என்று அந்த அந்தக் காலகட்டத்தில் என்ன ‘இஸம்’ இருக்கிறதோ அவற்றிற்கேற்ப நம்மையும் நம் எழுத்தையும் மாற்றிக்கொள்வது…?

நம்மை நாம் மாற்றிக் கொள்கிறோம் என்பதை விட இதை evalution என்று சொல்லலாம். ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்துக்கு மாறுவது பரிணாம வளர்ச்சி. காலத்தில் நாம் தேங்கிவிடக்கூடாது என்பதற்காக நிகழ்த்தும் பயணம். உலகமே பயணம் சம்பந்தப்பட்டது. ஹெராக்ளிட்டஸ் சொன்னதுபோல, “ நீ வலது காலை வைத்து இறங்கிய ஆறு வேறு; இடது காலை வைத்து இறங்கும் ஆறு வேறு”. ஏனெனில் ஆறு ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆறு தேங்குவதில்லை. ’எரியும் தீ ஒரே தீயா அல்லது பல தீக்களா?’ என்று புத்தரும் இதைதான் சொன்னார். இது dialectics இயங்கியல். அப்போது நான் மட்டும் எப்படி தேங்கிப் போக முடியும். ஒரே கருத்தை வைத்துக் கொண்டு எப்படி மாறாமல் இருக்க முடியும். போச்ட் மாடர்னிசம் போய் வேறு ஒரு ‘இஸம்’ வந்தால் அதையும் எடுத்துக்கொள்வேன். போஸ்ட் போஸ்ட் மாடர்னிசம் என்று வரலாம். அதாவது பின் நவீனத்துவம் போய் பின்னைய பின்நவீனத்துவம் வரலாம். இதை ஒரு ஹேஷ்யமாகச் சொல்கிறேன்.

தமிழ்ச்சூலில் புதிதாக ஒரு விஷயம் வந்தால் அதை எதிர்க்கிறார்கள். ஆனால் அதைத் தெரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும். புதுக்கவிதையைக்கூட அப்படித்தான் எதிர்த்தார்கள். ஆனால் இன்று புதுக்கவிதை தன்னை ஸ்தாபித்துக்கொண்டுவிட்டது.

உங்கள் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள், உறவுகள் சார்ந்ததாக இருக்கிறது. இதைப் பற்றி…?

எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளுக்குள்ளும் சுயசரிதைக் கூறுகள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. அது எனக்கும் பொருந்தும். ஒரு சூழலில் ஒரு மாதிரியும் வேறு சூழலில் வேறு மாதிரியான பிரச்சினைகளையும் எழுதினேன். என் முதல் சிறுகதை வெளிவந்தபோது ’கதையிலிருந்து கதையை நீக்குதல்’ என்ற உத்தி அப்போது இருந்தது. வண்ண நிலவன், வண்ணதாசன் போன்றவர்கள் அந்த நேரத்தில் அப்படி எழுதினார்கள். நானும் எழுதினேன். பொதுவாக ஒரு கதைக்கு ஆரம்பம், நடு, முடிவு என்று இருக்கும். அப்படியில்லாமல் நான் எழுதினேன். அதாவது ஒரு கதை திடீரென்று தொடங்கும். திடீரென்று முடிந்துவிடும். இதை அந்த காலகட்டத்தில் அவர்கள் எழுதினார்கள். முன்பெல்லாம் தீவிர எழுத்து தனி வெகுஜன எழுத்து தனி என்று இருந்தது. இந்தச் சிறுபத்திரிக்கையின் கோட்டை மீறிப் பலர் வெகுஜனப் பத்திரிகைகளுக்குப் போனார்கள். ஜெயகாந்தன், லா.ச.ரா., மாலன், பாலகுமாரன் ஆகியோர் இந்தக் கோட்டைத் தாண்டிப் போய்விட்டார்கள். எனக்குள் ஒரு ஊசலாட்டம் இருந்தது. என்னுடைய ஆரம்பகாலக் கதைகளில் இந்தத் தன்மைகள் இருந்தன. அதாவது சிறுபத்திரிகைக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும், வெகுஜனப் பத்திரிகைக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும். சிறுபத்திரிகையின் உயரமும் வெகுஜனப் பத்திரிகையின் உயரமும் மீட் பண்ணுகிற இடம் அது. கல்கி போன்ற இதழ்களில் வந்த கதைகளும் என் தொகுப்பில் உள்ளன.

நோபல் பரிசு பெற்ற சால்பெல்லோ ஒரு மோசமான பத்திரிகையான ப்ளே பாய் இதழில் எழுதியிருக்கிறார். அது மாதிரி நாமும் எழுதலாம். மார்க்குவெஸ், ஜான் அப்டைக் போன்றவர்கள் பத்திரிகையாளர்களாகவும் இருந்தவர்கள்.

அந்தக் கதைகளைத் தானே சுஜாதா பாராட்டி இருக்கிறார். உங்களுடைய இந்தக் கதைகளில் சுஜாதாவின் தாக்கம் கூட இருக்கிறது. உதாரணமாக, ஸாப்ட்வேர் இல்லாத கம்யூட்டர் நீங்கள் சொல்வது போல வெகுஜன பத்திரிக்கைகளுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் இடையில் இயங்கிக் கொண்டிருந்தவர் சுஜாதா. ஒரு வேளை உங்களுடைய இந்த ஆசைகூட சுஜாதாவின் தொடர்ச்சியாகக்கூட இருக்கலாம். சுஜாதாவைப் போல ஆகணும் என்று நினைத்தீர்களா?

சுஜாதா மாதிரி ஆக நினைக்கவில்லை. இன்றுவரை நான் என்ன ஆகணும் என்று நினைக்கவில்லை. அதுதான் உண்மை. ஆழமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. சல்மான் ருஷ்டியைப்போல எழுத வேண்டும். Midnight children என்ற போஸ்ட் மாடர்னிச நாவலை எழுதியிருக்கிறார். அது ஒரு பெஸ்ட் செல்லர். உலகப் புகழ்பெற்றிருக்கிறார். இடாலோ கால்வினோ எழுதியது போன்ற கதைகளை எழுத வேண்டும். என்னுடைய கதை சோப்பு, ஷாம்பு போல நுகர்வுப் பொருளாக இருக்கக்கூடாது. சுஜாதாவை எனக்குப் பிடிக்கும் தமிழில் புதிய prose கொண்டு வந்தார். அந்தப் பாதிப்பு என்னிடமும் உண்டு. அதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

சுஜாதாவிடம் புதுமைப்பித்தனின் பாதிப்பு இருக்கிறதே?

ஆமாம். அது கை மாறி கை மாறி வருவது. சுஜாதா விஞ்ஞானக் கதைகளின் பாதிப்பு என்னிடமும் உண்டு. அந்த வாசனை என்னிடமும் உண்டு. பெருங்காய டப்பா மாதிரி. ரேபிராட்பரி, ஆர்தர் சி கிளார்க், ஜார்ஜ் ஆர்வெல் போன்றவர்களின் சயன்ஸ் ஃபிக்‌ஷன் படித்திருக்கிறேன். தமிழில் அந்த அளவிற்கு சுஜாதா ஒருவர்தான் எழுதுகிறார். அடுத்தது இப்போது நான் எழுதுகிற நாவல் சைன்ஸ் ஃபிக்ஸன், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸை வைத்து நாவல் எழுதுகிறேன். நான் பின்னால் சயன்ஸ் ஃபிக்‌ஷன் எழுதுவதற்கான முன்னோட்டமாக ’சாப்ட்வேர் இல்லாத கம்யூட்டர்’ சிறுகதையை எழுதிப் பார்த்தேன்.

அந்தக் கதைக்குப் பிறகு அது போன்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன்களை நீங்கள் எழுதவில்லையே, என்ன காரணம்?

கோப்பர் நிக்கஸ்ஸின் கதைத் தொகுப்பு என்று ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். சயன்ஸ் ஃபிக்‌ஷனை வெறும் பொழுதுபோக்காக எழுதவிரும்பவில்லை. சுஜாதா எழுதிய கதைகளில் பொழுது போக்குத் தன்மை தூக்கலாக இருக்கும். நான் பிலாசபிக்கலாக சயன்ஸ் ஃபிக்‌ஷனை எழுத நினைத்துள்ளேன்.

பல இலக்கியங்கள் படித்தபோது அதில் சயன்ஸ் ஃபிக்‌ஷனும் அடக்கம். பலருடைய சயன்ஸ் கதைகள் படித்தபோதும் எழுதத் தோன்றவில்லை. காரணம் தமிழுக்கு அது அன்னியமாகத் தோன்றியது. சுஜாதாவின் கதைகள் வந்தபோது நம்பிக்கை வந்தது. தமிழிலும் எழுத முடியும் என்று. நான் எழுதிய இரண்டு சிறுகதைகளைப் பலரும் பாராட்டினார்கள்.

நான் இதற்கு முன் எழுதிய எல்லாவற்றிலுமே வணிகத் தன்மையிலான விஷயங்களை இலக்கியமாக மாற்றியிருக்கிறேன். துப்பறியும் வணிகக் கதையை ‘சிலந்தி’ நாவலாக எழுதியுள்ளேன். அதேபோல விஞ்ஞான நாவலையும் எழுத உள்ளேன். அடுத்த நாவல் அப்படித் தான் வரும். இதில் மூன்று விஷயங்களை இணைக்கிறேன். மனித குலத்தை இணைக்கத்தக்கதாக இருப்பவை கலை இலக்கியம், விஞ்ஞானம். அதுதான் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோவது. ஆதியில் ஒன்றாக இருந்த இந்த மூன்றும் பிரிந்திருக்கின்றன. அவற்றை ஒரு புள்ளியில் சந்திக வைப்பதே இந்த நாவல்.

கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்தீர்கள். சிறுகதையிலிருந்து நாவலுக்கு வந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?

சிறுகதை எழுதிக்கொண்டிருந்தபோது நாவல் எழுதும் ஆசை வந்தது. முதலில் குறுநாவல் எழுதிப் பார்த்தேன். விரலிடுக்கில் தப்பிய புகை தான் அந்தக் குறுநாவல். அதன் பிறகுதான் என் முதல் நாவல் வந்தது.

வடிவங்களில் ஏற்பட்ட மாற்றம் பற்றி கேட்கிறேன். அந்த வடிவத்திலிருந்து (சிறுகதை) வேறு வடிவத்திற்கு (நாவல்) மாறுவதில் என்ன செளகரியங்கள் அல்லது அசெளகரியங்கள் என்று கேட்கிறேன்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு சில வருடங்கள் நான் எழுதாமல் இருந்தேன். உலக இலக்கியங்கள் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பில். அவர்கள் சிறுகதையையும் நாவலையும் வேறு தளத்திற்கு நகர்த்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் வேறு மாதிரி இருக்கிறது. அடுத்து நாம் எழுதும் போது இது மாதிரி எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன். உம்பர்ட்டோ ஈக்கோ, இடாலா கால்வினோ பொன்றவர்கள் மாதிரி. பெயர்களைப்போல ‘கதை மீறும் கதை’ எழுத விரும்பினேன்.

ஒரு பிரதியில் இன்னொரு ஊடிழைப் பிரதி (inter text) என்பது போல எழுதுகிறார்கள். இது மாதிரி நானும் எழுத நினைத்தேன். அந்த மாதிரி தான் வடிவப் பரிசோதனை செய்யும் ஆசை வந்தது. அதே சமயத்தில் இது சர்க்கஸ் மாதிரியோ, கழைக்கூத்தாடியின் வித்தை மாதிரியோ ஆகிவிடக்கூடாது. இன்றைய நவீன மனிதன் போஸ்ட் மாடர்னிச மனிதன் என்பதை அட்லாண்டிஸ் மனிதனில் சொல்கிறேன்.

உங்கள் முதல் இரண்டு நாவல்களில் இஸங்களின் தாக்கம் பெரிதாக இருக்கவில்லையே?

அப்போது மார்க்சியத்தில் இருந்தேன். அவை எழுத்தில் வரவில்லை. நீங்கள் ஒரு விஷயத்தை நேரிடையாகச் சொல்லிவிட்டால் அது கோஷம், பிரச்சாரமாகிவிடும். சொல்லாமல் உணர்த்த வேண்டும். அந்த நேரத்தில் ஒரு கருத்து இருந்தது. அரசியல்வாதிகள் எல்லாருமே அயோக்கியர்கள். கம்யூனிஸ்டுகள் மட்டும் கொஞ்சம் நேர்மையானவர்கள் என்று. பதினைந்து வருடங்களுக்கு முன்பு கம்யூனிஸ்டு யூனியன்கூட கொஞ்சம் கரப்ட் ஆகிவிட்டது. அவர்களும் மற்ற அரசியல்வாதிகளைப்போல ஆகிவிட்டார்கள் என்று எழுதியதற்குத் தோழர்கள் கோபப்பட்டார்கள். எதிர்த்தார்கள்.

எம் ஜி சுரேஷ்

எம் ஜி சுரேஷ்

முதல் இரண்டு நாவல்கல் பெறாத கவனத்தை அட்லாண்டிஸ் மனிதன் பெற்றது. அது க்யூபிஸ நாவல் என்று சொன்னதாலா?

’க்யூபிஸம்’ பிகாசோவின் ஓவியப் பாணி. அதற்கு முன்னிருந்த ஓவியங்கள் எல்லாம் யதார்த்தத்தை நகலெடுக்கிற பாணி. க்யூபிஸமோ சிந்தனையிலிருந்து ஓவியத்தை எழுதும் பாணி. ஒரு பொருளை ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் அதுவரையிலான முறை. ஒரு பொருளை ஏக காலத்தில் பல கோணங்களில் பார்க்கும் முறை வந்தது. மலை மேலிருந்து பார்ப்பவர்களுக்கு எல்லா பாதைகளும் தெரியும் என்று நம்முடைய ஒஷோ சொல்கிறார். சமண ஓவியங்கள் இத்தன்மையுடையன. ஏக காலத்தில் பார்ப்பதை பிக்‌ஷனில் கொண்டுவர வேண்டும். ஐரோப்பாவில் ஒரு கதைக்கு இரண்டு மூன்று முடிவுகளை வைத்து எழுதி இருக்கிறார்கள். சார்த்தரிடமிருந்து ஒரு க்யூபிஸ்ட் நாவல் வந்திருக்கிறது. ரன் லோலா ரன் என்ற ஜெர்மன் படம் மூன்று முடிவுகளைக் கொண்டது. இந்தப் படம்தான் தமிழில் 12-பி என்ற படமாக வந்தது. அது க்யூபிஸக் கதை. தத்துவமாக என்ன சொல்கிறேன் என்றால் நவீன மனிதன் பல நான்களால் ஆனவன். கிராமத்திற்குப் போனீர்கள் என்றால் அங்குள்ள மனிதன் ஓடிவந்து உங்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வான். அல்லது உதைப்பான். அது ஒற்றை நான். ஆனால் நவீன மனிதன் பல நான்களாய் உடைத்துவிட்டான். பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஓர் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்… ஓர் எதிரியை நடித்து ஏமாற்றி ஜெயிக்க வேண்டியிருத்தல்…. இதுபோன்ற பல்வேறு சமயங்களில் பல நான்கள் தேவையாயிருக்கின்றன. மனிதனின் உடைந்த நான்களைப் பற்றி எழுதுவதற்கு நேரான கதை வடிவம் தேவைப்படாது. நான் – லீனியராக எழுதுவது சரியாக இருக்கும். ஒழுங்கற்ற ஒழுங்காக எழுதுவது. இது புதுப்பாணி என்பதால் நாவல் வெற்றி பெற்றது.

‘க்யூபிஸம்’ என்ற அடைமொழியில்லாமலே அந்த நாவல் தன்னளவிலேயே ஒரு சிறப்பான நாவலாகத்தானே இருக்கிறது.

வாசகர்களின் கவனத்தைக் கவர்வதற்காக அப்படிப் பெயர் கொடுத்தேன். அப்படி வைக்காமல் இருந்தாலும் அது சிறந்த நாவல்தான். அந்தக் காலத்தில் பிளாக் & ஒயிட் படங்கள் வந்துகொண்டு இருந்தபோது கலர்ப் படத்துக்கு ஈஸ்ட்மென் கலர் படம் என்று போடுவார்கள். இப்போது யாரும் போடுவதில்லை. அதுமாதிரி காரியத்தைத் தான் செய்தேன். மற்றபடி க்ளைம் வைப்பதற்காக அல்ல.

இந்த நாவல் நன்றாக இருப்பதால் வரவேற்பு கிடைத்ததா? அல்லது ‘க்யூபிஸ’ கவன ஈர்ப்பினால் வந்ததா?

படைப்பு நன்றாக இருப்பதால் வந்ததுதான். சொல்லப்போனால் ‘க்யூபிஸம்’ என்ற அடைமொழியில் எரிச்சலும் எதிர்ப்பும்தான் வந்தன. அசோகமித்ரன், இ.பா. போன்றவர்கள். இதுபோன்ற நல்ல நாவலுக்கு ‘க்யூபிஸ’ கவசம் தேவையில்லை என்றார்கள். பலர் அப்படியென்ன ‘க்யூபிஸத்தில்’ இவன் செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே படித்தார்கள். இந்த அடையாள மொழி கொடுக்காமல் இருந்திருந்தாலும் இவர்கள் படித்திருப்பார்கள். ஆனால் கொஞ்சம் தாமதமாகப் படித்திருப்பார்கள்.

பல்வேறு இஸங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதினாலும் உங்கள் மொழியில் சரளம் இருக்கிறது. ‘இஸம்’ பேசுகிற, எழுதுகிற பல தமிழ் எழுத்தாளர்களின் மொழி கடுமையாக, சிக்கலாக இருக்கிறது. ஆனால் உங்கள் மொழி எளிமையாகவும் சரளமாகவும் இருக்கிறது எப்படி?

இறுக்கமான பூடகமான மொழி ஒரு காலகட்டத்தில் இருந்தது. போஸ்ட் மாடர்னிசம் அதை நிராகரித்தது. நிறைய பேர் உலிஸிஸ் போல புரியாமல் எழுத வேண்டும் என்றே எழுத வருகிறார்கள். மேற்கே அவன் மொழியைப் பூடகமாக எழுதினால் நானும் எழுதுவேன் என்று அடம் பிடிக்கிறார்கள். அதுபோலவே லத்தின் அமெரிக்கச் சிறுகதை – லத்தின் அமெரிக்க நாடுகள் எப்போதுமே சர்வாதிகார நாடுகளாகவே இருந்து வந்துள்ளன. எப்போதுமே அடக்குமுறைகள் மிகுந்த நாடுகள் அவை. அவர்கள் பூடகமாகத் தான் எதையும் சொல்ல முடியும். யூலியோ கொர்த்தஸாரின் சிறுகதையில் ஒரு வீடு. அந்த வீட்டில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். என்ன குரல் என்று தெரியாது. அது நேரிடையாக டாமினேட் செய்துகொண்டே இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் புழங்கும் பகுதியைக் குறைத்துக் கொண்டே போவார்கள். ஆனாலும் குரல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். வேறு வழி இல்லாமல் சகித்துக்கொள்வார்கள். அது அமெரிக்காவின் குரல். இதைப் பூடகமாகச் சொல்வார் கொர்த்தஸார். இந்தியாவில் எதையும் நேரிடையாகவே சொல்லலாம். வாஜ்பாயி பற்றி நீங்கள் நேரடியாக எழுதலாம். பூடகம் தேவையில்லை.

ஆனால் கலை வடிவம் என்ற வகையில் பூடகத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். போஸ்ட் மடர்னிசம் பல விதமான வகைகளில் எழுதலாம் என்கிறது. புரிவது போல எழுதலாம். குழப்பமாக எழுதலாம். இரண்டும் கெட்டானாக எழுதலாம். Prose போல fiction எழுதலாம். Fiction போல prose எழுதலாம். இப்படி உங்களுக்குப் பலவிதமான வாய்ப்புகளைக் கொடுக்கின்றன. நவீன வாழ்க்கையின் பிரச்சினைகளில் ஒன்று பெருக்கம். மக்கள் பெருக்கம், நிறைய பிரதிகளின் பெருக்கம் இப்படி… எழுத்திலும் பலவிதமான பிரதிகளைப் பெருக்கலாம். தப்பேயில்லை. ஆனால் இருத்தலுக்கான தர்க்கம் வேண்டும். ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தர்க்கம், ஒரு நியாயம் இருக்கிறது. நீங்கள் சொல்கிற புரியாத, விளங்காத எழுத்துகளில் தர்க்க நியாயம் இல்லையென்று நினைக்கிறேன். மொழியின் மீதும், வாசகனின் மீதும் வைக்கப்படும் வன்முறை என்று நினைக்கிறேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் மீதும் எனக்கு இந்தக் குற்றக் குற்றச்சாட்டு இருக்கிறது. அவர் இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதியிருக்கலாம். அவர் ஏன் அப்படி எழுதுகிறார் என்றால் அது ஒரு வன்முறை. அறிவுஜீவி பயங்கரவாதம் (intellectual terrorism). முன்னுரையிலேயே ரொம்பத் திமிராக வேறு பேசுகிறார். ரொம்ப கவனமாகப் படியுங்கள் என்று சொல்வது வாசகனை அவமதித்தல். இது போன்ற விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. பிரட்ரிக் நீயட்ஷே ‘மேதை தன்னை எளிமையாக வெளிப்படுத்திக்கொள்வான்; மேதை போல நடிப்பவன் தன்னை சிக்கலாக வெளிப்படுத்தவே விரும்புவான்’ என்கிறார்.

‘அட்லாண்டிஸ் மனிதன்’ எழுதுவதற்கு முன்பே பத்து வருடங்களாக எழுதிக்கொண்டிருந்தீர்கள். அப்போது கிடைக்காத பிரபலமும் அங்கீகாரமும் இந்த நாவலை எழுதிய பிறகு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதை எப்படி நீங்கள் எதிர்கொண்டீர்கள்?

இது எதிர்பாராததுதான். அட்லாண்டிஸ் மனிதன் எழுதி முடித்த பிறகு இதைப் புத்தகமாகப் போடலாமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. இந்த நாவல் எதிர்ப்புக்குள்ளாகும். ஒரு நாவலுக்கு ஒரு முடிவு வைத்து எழுதினாலே எதிர்ப்பு வரும். மூன்று முடிவுகள் வைத்து எழுதினால் என்ன சொல்வார்களோ என்று தயங்கினேன். ஆனால் அசோகமித்ரன், இ.பா., கோவை ஞானி ஆகியோர் பாராட்டினார்கள். அந்தப் பாரட்டுக்கள் அந்த நாவலுக்குக் கிடைக்காது என்று நினைத்தேன். இந்த நாவல் நிராகரிக்கப்படும் என்று கூட நினைத்தேன். பப்ளிஷரிடம் ஒரு குற்ற உணர்வோடுதான் பிரதியைக் கொடுத்தேன். வழக்கமான பதிப்பாளர்தான். வேறு பதிப்பாளர் என்றால் இந்நாவலைப் போடமாட்டார்கள். இதில் உள்ள அத்தியாயங்களைச் சிறுகதைகளாகவும் படிக்கலாம். தனி அத்தியாங்களாகவும் படிக்கலாம். ஸ்போர்தா (sporta) என்றொரு சமஸ்கிருத மரபு இருக்கிறது. அதைத் தமிழில் நான் தான் முதலில் இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். மூன்று பேர் கதை சொல்லும் மரபு அது. ஒருவன் கதையை ஆரம்பிப்பான். வேறொருவன் கதையைத் தொடர்ந்து சொல்வான். மூன்றாவது ஆள் கதையை முடிப்பான். இப்படியொரு முறையை அந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். இதில் கிழக்கு – மேற்கு இரண்டையும் இணைத்திருக்கிறேன். மற்ற பின் நவீனத்துவ எழுத்தாளர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்கள் மேல்நாட்டு நாவல்களை அப்படியே நகல் எடுத்துவிடுவார்கள். The name of a rose என்ற நாவலைத் தமிழில் அப்படியே நகல் எடுத்திருக்கிறார்கள். நான் எதையும் அப்படியே நகல் எடுக்கவில்லை. சில கான்செப்ட்களை வைத்துக்கொண்டு, இந்திய மரபுக்கேற்பவும் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்பவும் செய்கிறேன். ஒரு செடியை அப்படியே பிடுங்கி இங்கே வைத்துவிட்டால் இங்கே அது செத்துவிடும். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு விதையை இங்கே நம் மண்ணில் போட்டால் அது முளைக்காது. நம்முடைய மண் காற்று தட்பவெப்பம் வேறு.

இந்த நாவல் வந்து முதல் ஆறு மாதம் பேசப்படவில்லை. அப்போது என் பப்ளிஷரைப் பார்க்கும் போதெல்லாம் வருத்தமாக இருக்கும். குற்ற உணர்வு இருக்கும். பின்பு நாவல் படிப்படியாகக் கவனம் பெற்றது. இந்த நாவல் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நாவல் விற்ற பணத்தில்தான் ’பன்முகம்’ பத்திரிகை தொடங்கினோம். ஒரே பதிப்பில் இரண்டாயிரம் பிரதிகள் இரண்டு வருடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இது தமிழ்ச் சூழலில் (250 விலையுள்ள நூல்) பெரிய வெற்றி. இது நான் எதிர்பாராதது. எல்லா இலக்கியவாதிகளும் இந்த நாவலை ஏற்றுக் கொண்டார்கள். கோணங்கி வேறு ஸ்கூல், எஸ்.ராமகிருஷ்ணன், சு.ரா., ஜெயகாந்தன் இவர்கள் எல்லாம் வேறு வேறு ஸ்கூல். எல்லோரும் இதில் ஒன்றுபட்டார்கள். இது ஒரு break through என்று ஒப்புக்கொண்டார்கள். இது நான் எதிர்பார்க்காதது. இது லாட்டரியில் பரிசு விழுந்ததுபோல அதிர்ஷ்டம்தான்.

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்-நாவலை auto fiction என்று அடைமொழி கொடுத்துள்ளீர்கள், ஏன் கியூபிஸம், ஆட்டோ பிக்‌ஷன், வெர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற அடைமொழிகள் கொடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள்?

இவையெல்லாம் ’இஸம்’ கிடையாது. இவையெல்லாம் வகைமைகள். சிறுகதை, நாவல் என்று சொல்வதைப் போன்றது. இது போஸ்ட் மாடர்னிசம் என்பதில் மேல் நாட்டு எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியது. ஜெர்சி கோஸின்ஸ்கி எழுதிய the hermit on 69th street நாவலின் auto fiction கோட்பாடு. அவரின் கோட்பாட்டை முன்னிறுத்தி தமிழில் நான் எழுதினேன்.

Ego, alter Ego, என்று இரண்டு தன்மைகள் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கின்றன. ஆயிரம் ரூபாய் சட்டை வாங்க வேண்டும் என்று மனதில் நினைப்போம். ஆனால் 200 ரூபாய் சட்டையை வாங்கிவந்துவிடுவோம். இது மனதுக்குக்கூட பிடிக்காதுதான். ஆனால் செய்துவிடுவோம். இது போன்ற தன்மை ஒட்டிய மனப்போராட்டம். Ego – வைப் பிரிப்பதே ego, Alter ego ஆகும். இந்த ego – கள் மனதிற்குள் யுத்தம் நடத்துகின்றன. இவற்றைப் பற்றி தான் எழுதியிருக்கிறேன். கண்ணில் பட்ட எல்லாவற்றையும் ஜெயிக்க வேண்டும் என்ற அலெக்ஸாண்டரின் கதை இதற்குப் பொருந்தமானது என்று நினைத்தேன்.

ஒரு கோப்பை தேநீர் ஒரு ஜென் கதை. ஒரு சீடன் முக்தியடைய என்ன வழி என்று குருவிடம் கேட்பான். அப்போது தேநீர் சாப்பிடும் நேரம். எனக்குத் தேநீர் ஊற்று என்பார் குரு. அவன் ஊற்றிக் கொண்டேயிருப்பான். தேநீர் நிரம்பி வழிந்துபோகும், குரு போதும் என்று சொல்லாமல் பார்த்துக் கொண்டேயிருப்பார். இந்தக் கோப்பையில் நீ எவ்வளவுதான் ஊற்றினாலும் கொள்வதுதான் கொள்ளும். ஞானமும் அப்படித்தான். அலெக்ஸாண்டருக்கும் இது பொருந்தும். எவ்வளவோ அடையத் துடித்தான். கடைசியில் ஒரு கொசு கடித்துச் செத்துவிட்டான். அவன் செத்த பிறகு அவன் ஜெயித்த நாடுகள் எல்லாமே திரும்ப உலகத்திற்கே சொந்தமாகிவிட்டன. அதுதான் ஒரு கோப்பைத் தேநீர். அவனுடைய மாசிடோனியாதான் அவனுக்கு மிச்சமாச்சு.

இதில் நவீன வாழ்க்கையைப் பற்றிய கிண்டல் இருக்கிறது. அந்தக் காலத்தில் உங்கள் ஊருக்கு யாரவது உங்களைப் பார்க்க வந்தால் சிபிச்செல்வன் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் இந்த ஊரில் இரண்டு சிபிச்செல்வன்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி இரண்டு பேரின் அடையாளங்களை எளிதாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் இன்று நான் ஒரு சிபிச்செல்வனைத் தேடவேண்டும் என்றால் டெலிபோன் டைரக்டரில் எளிதில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. ஓராயிரம் பேர் அதில் இருக்கிறது. அலெக்ஸாண்டருக்கும் இப்படித்தான். நான் விரும்பாத பல அலெக்ஸாண்டர்களின் பெயர்களைப் படிக்க வேண்டியிருக்கிறது.அதனால் இது ஒரு அலெக்சாண்டரின் கதை சொல்லப்போய் பல அலெக்ஸாண்டர்களின் கதையாக மாறிவிடுகிறது. இது நவீன வாழ்க்கையின் பெருக்கத்தால் விளைந்தது. இதைக் கிண்டல் செய்கிறேன்.

அதே சமயத்தில் வேறு காலகட்டத்தில் உள்ள அலெக்ஸாண்டர்களின் வரலாறாகவும் இதைக் கொள்ள முடியும் அல்லவா?

இது பெரிய கேன்வாஸ். Ego, alter Egoவைச் சொல்லப் பல பேர் வேண்டும். ஒரு அலெக்ஸாண்டருக்குள் Ego – alter Ego இருக்கிறது. அதேபோல் ஒரு காலகட்டத்தில் அலெக்ஸாண்டருக்கு இன்னொரு காலகட்ட அலெக்ஸாண்டர் alter Ego. அலெக்ஸாண்டரின் வரலாற்றை அப்படியே படித்து எழுதினேன். அவன் பாலைவனத்தில் போகும்போது தண்ணீரே கிடைக்காது. ஒரே ஒரு தோல் பையில் இருந்த தண்ணீரைக் கொடுப்பார்கள். கொடுத்தால் குடிக்காமல் கொட்டிவிடுவான். எல்லோரும் தாகமாக இருக்கும்போது நான் மட்டும் எப்படிக் குடிப்பது என்பான். இதை ஒரு பொலிட்டிக்கல் ஸ்டேண்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். அவன் குடித்தாலும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அவன் ஊற்றி விட்டால் போர்வீரர்களுக்கு வெறி வரும் இல்லையா? இது மாதிரி விஷயங்கள் எல்லாம் உண்மையில் நடந்தன. இந்த நிகழ்ச்சியின் போது அவனது Ego – Alter Ego நடத்தும் விவாதம் வரலாற்றில் விடுபட்டிருக்கிறது. நான் எழுதியிருக்கிறேன்.

இந்த நாவலில் ஒரு மேப் இருக்கிறது. இது டால்ஸ்டாய் காலத்திலிருந்து செய்யப்படுகிறது. இப்போது போஸ்ட் மாடர்னிச நாவல் உலகிலும் ஒரு நம்பகதன்மையைக் கொண்டு வருவதற்காகத் தமிழிலும் செய்கிறார்கள். அந்த முறையில்தான் இந்த நாவலுக்கு ஒரு மேப் கொடுத்திருக்கிறார்களா?

நான் மேப் போட்டத்தற்குக் காரணம் ஞானகூத்தன். முதலில் வடிவமைப்பில் இந்த மேப் இல்லை. ஞானகூத்தனின் விசிறி நான். அவருக்கும் என்னுடைய படைப்புகள் பிடிக்கும். என்னுடைய படைப்புகளை அசோகமித்ரன், இ.பா., கா.நா.சு., ஞானகூத்தன் போன்றவர்களிடம் படிக்கக் கொடுப்பேன். அவர்கள் படித்துவிட்டு சில ஆலோசனைகளைச் சொல்வார்கள். ஞானகூத்தன் படித்துவிட்டு இந்த நாவலில் நிறைய வரலாற்றுத் தகவல்கள் வருவதால் இந்த மேப் போட்டால் படிக்கிறவர்களுக்கு ஒரு ஆத்தன்டிசிட்டியாக இருக்கும் என்றார். அவர் ஆலோசனையின் விளைவுதான் இந்த மேப். மற்றபடி தமிழ்ச் சூழலில் இருக்கும் போக்குகளின் தன்மையைப் பிரதிபலிப்பதற்காக வலிந்து சேர்க்கப்பட்டதல்ல.

Virtual Reality என்ற வகையில் ‘சிலந்தி’ நாவலை எழுதியுள்ளீர்களே?

இந்த நாவல் துப்பறியும் நாவல். 15 வருடங்களுக்கு முன்பு சென்னையில் க.நா.சுவை அடிக்கடி பார்ப்பேன். அப்போது ஒரு சமயம் துப்பறியும் கதைகளைப் பற்றிப் பேச்சு வந்தது. தாஸ்தாவ்ஸ்கியின் crime and punishment ஒரு துப்பறியும் நாவல் தானே என்று சொல்லி என்னைத் திடுக்கிட வைத்தார். கா.நா.சு. அப்போது தான் ஒரு துப்பறியும் நாவல் எழுதவேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. துப்பறியும் நாவல் எழுத வேண்டும்; ஆனால் எந்த மாதிரி பாணியில் எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. Virtual Reality என்ற பாணியை நான் தேர்ந்தெடுப்பதற்கு 15 வருடங்கள் ஆகி இருந்தன.

‘நான்’ ‘நான்’ என்று ஒரு டெக்ஸ்ட். ‘நீங்கள்’ நீங்கள்’ என்று ஒரு inter டெக்ஸ்ட். பிறகு நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் பிணத்தைப் பார்க்கிறீர்கள் என்று வரும். அதை parady பண்ணியிருப்பேன். ஆண் பிரதி, பெண் பிரதியென்று சொல்லி இருப்பேன். இன்று எழுதப்படுபவை எல்லாம் பெரும்பாலும் ஆண் பிரதிதான். அதைப் பெண் எப்படி வாசிப்பாள் . இதனால் பெண் வாசகிகளும் படிப்பது போல எழுதியிருப்பேன் – பெண் பிரதியென்று. தவிரவும் வாசகனும் ஆசிரியரும் கதாபாத்திரங்களாக மாறுவது இந்த நாவலில் ஒரு கூறு. இதுதான் virtual reality என்பது. virtual reality என்பது quantum physics-ல் வருகிறது. Computer science-லும் வருகிறது. உண்மை போன்ற உண்மை என்கிறது புத்த மதம்.

நீங்கள் இந்த நாவலில் ஆரம்பிக்கிற ஸ்டைல் இடாலோ கால்வினோவினுடையது இல்லையா?

ஆமாம். இடாலோ கால்வினோ இந்த ஸ்டைலில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். என் நாவலிலும் ஆரம்பத்தில் அப்படி ஒரு ஸ்டைல் இருக்கும். அதன் பிறகு மாறிவிடும். அவர் ஆரம்பத்தில் நீங்கள் நீங்கள் என்று சொல்லிக் கொண்டிருபார். வாசகரின் பார்வையில் இருக்கும். கால்வினோ மட்டுமல்ல பல எழுத்தாளர்களும் இப்படி எழுதியிருக்கிறார்கள். பிரெஞ்ச், ஜெர்மனியிலும் இப்படிப் பலர் எழுதியுள்ளார்கள்.

‘சிலந்தி’ நாவல் எந்த அளவிற்கு வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது?

தமிழில் இந்த நாவலின் இடம் மிக முக்கியமானது என்று பலர் சொல்கிறார்கள். அட்லாண்டிஸ் மனிதன், அலெக்சாண்டர் நாவலைப் படித்தவர்களுக்கு இந்த நாவல் கொஞ்சம் சிடுக்குகளுடன் இருப்பதாகப்படுகிறது.

பொதுவாக உங்கள் படைப்புகள் சரளமாக இருக்கின்றன.

சிலர் மற்ற நாவல்களை விட இது முக்கியமான நாவல் என்கிறார்கள். போஸ்ட் மாடர்னிச நாவல் என்கிறார்கள். நோயல், கோவை ஞானி ஆகியோர் பாராட்டினார்கள். கோவை ஞானி சிலந்தி நாவலை எதிர்ப்பார் என்று நினைத்தேன். அவர் பாராட்டியது ஆச்சர்யமாக இருந்தது. யாரும் துப்பறியும் நாவலாகப் பார்க்கவில்லை. துப்பறியும் நாவல் என்பதும் ஒரு வடிவம் தான். எல்லாமே வடிவம் தான். கூடுதலாக ஒரு அடர்த்தியும் ஆழமும் வேண்டும். வார்த்தைகளுக்குப் பின் நிலவும் மெளனம் தான் இலக்கியம். படித்து முடித்த பிறகு உங்கள் சமநிலையைக் குலைக்கவேண்டும் அல்லது வாசகனை முன்பைவிட மேன்மையடையச் செய்ய வேண்டும். அல்லது பிரமிக்க வைக்கவும் அதிசயிக்க வைக்கவும் வேண்டும். களிப்படைய வக்க வேண்டும். இந்த நாவல் இப்படிச் செய்கிறது.

துப்பறியும் நாவலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் துப்பறியும் நாவலைப் படித்த உடன் தூக்கியெறிந்து விடுவோம். மீண்டும் படிக்கமாட்டோம். ஆனால் சிலந்தி நாவலைப் படித்தவுடன் மீண்டும் படிக்க விரும்புவோம். சிலந்தி நாவலை மீண்டும் மீண்டும் படிக்கலாம். படிக்கிறார்கள். துப்பறியும் நாவல்கள் light reading வகைச் சேர்ந்தவை. போர்ஹேஸின் ஒரு கதை எனக்கு இன்ஸ்பிரேஷன். குறுக்கு வெட்டுப் பாதைகளால் ஆன தோட்டம். மிகப் பெரிய இலக்கியம் அது. ஒரு ஒற்றன் வெளி நாட்டில் இருக்கிறான். அடுத்து அவன் நாட்டில் குண்டு போடப் போகிறார்கள். அது எந்த நகரத்தின் மீது என்பது தெரிய வேண்டும். அது அவனுக்குத் தெரிந்துவிடும். அவனுக்குத் தெரிந்துவிட்டதால் அவனைக் கொல்ல எதிரிகள் துரத்துகிறார்கள். அவனைக் கொல்வதற்குள் தன் நாட்டிற்குத் தகவலைச் சொல்லிவிட வேண்டும். என்ன செய்வது? டெலிபோன் டைரக்டரியை எடுத்துப் புரட்டிப் பார்ப்பான். பக்கத்தில் ஆல்பர்ட்னு யாராவது இருக்கிறார்களா என்று பார்ப்பான். ஒருவன் இருப்பான், அதை நோட் செய்துகொண்டு ஒரு ட்ரெயின் ஏறி விடுவான். எதிரியும் அவனைத் தேடி வருவான். குறிப்பிட்ட இடம் வந்ததும் இறங்கி நடந்து போவான் ஒற்றன். அங்கே மரவீடு ஒன்று இருக்கும். அதில் ஆல்பர்ட் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பின்னடைவு நேரும். அவனை கொல்வதற்காகத்தான் போனான். அவன் தாத்தா ஒரு இலக்கியவாதி. அதனால் ஆல்பர்டைக் கொல்ல முடியவில்லை. இவன் தாத்தாவின் ரசிகன்.

தாத்தாவினுடைய புத்தகத்தைப் பதிப்பிக்கிற முயற்சியில் ஆல்பர்ட் இருப்பான். அவனை எப்படிக் கொல்வது? இருந்தாலும் அவனைச் சுட்டு விடுவான். இவனைப் பின்தொடர்ந்து வந்தவன் ஒற்றனை அரெஸ்ட் செய்து விடுவான். இதுதான் கதை. இவன் ஏன் ஆல்பர்டைக் கொன்றான் என்றால் எதிரி நாடு குண்டுபோடப் போகிற விஷயத்தை தெரியப்படுத்துவதற்காக. ஆல்பர்ட் என்பனைக் கொன்றுவிட்டான் ஒற்றன் என்ற செய்தி வரும். உடனே ஆல்பர்ட் என்ற நகரத்தின் மீது படையெடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வார்கள் என்பது இதனுள் இருக்கிற விஷயம். எவ்வளவு நுட்பமாக சொல்கிறார் பாருங்கள். அவனுடைய ego கொல்ல மறுக்கிறது. Alter ego கொன்றுவிடுகிறது. இது துப்பறியும் கதை. நான் 100 முறை படித்து விட்டேன். அவ்வளவு தத்துவம் ,அவ்வளவு சாகஸம்.

போர்ஹேக்கு ஃபிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்பு இருந்தது அல்லவா?

ஆமாம். அதனால் அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. ஆசியாவின் மிகப் பெரிய சேரியாக தாராவி இருப்பது போல் உலகின் மிகப்பெரிய சேரி பியூனஸ் அயர்ஸில் இருக்கிறது. பியூனல் அயர்ஸ் சேரி பற்றி அவர் எழுதவில்லை. சர்வாதிகாரி பெரோன் பற்றி ஒரு மூச்சு விடவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு உண்டு. அவர் ஒரு கலைஞர். தாகூர்மீது கூட ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இல்லையா? அவர் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. பிரபுகளுடன் குலாவினார் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. அதற்காக அவர் கலைஞன் இல்லையென்று நிராகரிக்க முடியாது.

உங்கள் புது நாவல் ‘யுரேகா என்றொரு நகரம்’ நியோ ரியலிசம் என்ற வகையில் வந்திருக்கிறதே… அதைப் பற்றி?

நான் அந்த நாவலை நியோ ரியலிசம் என்று சொல்லவில்லை. ஒரு பேச்சுக்காகச் சொன்னேன். Written claim வைக்கவில்லை. அதனால் விட்டுவிடலாம். மூன்று நாவல்களையும் நல்ல போஸ்ட் மாடர்னிச நாவல்கள் என்று சொல்கிறார்கள். இப்போது ரியலிசம் என்பது செத்துவிட்டதாக போஸ்ட் மாடர்னிஸ்டுகள் ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரியலிஸத்திலும் சொல்லவேண்டிய விஷயங்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் நான் ஒரு ரியலிஸ நாவலை எழுதினேன். அது போச்ட் மாடர்னிச நாவலும் கூட. ஏனெனில் பழைய விஷயங்களைக் கொட்டிக் கவிழ்த்தல், கேள்விக்குள்ளாக்குதல் இதெல்லாம் போஸ்ட் மாடர்னிசக் கூறுகள். இதில் வரலாற்றைக் கொட்டிக் கவிழ்த்தல் நடக்கிறது. வரலாற்றின் மீது நான் சந்தேகம் கிளப்பியிருக்கிரேன். ஆகையால் இது போஸ்ட் மாடர்னிச நாவல்தான்.

வரலாறு என்பதே புனைவு என்கிறேன். மொழி எவ்வளவு சிக்கலானது. மொழி நம்மை அடிமையாக வைத்திருக்கிறது. மொழிக்கு நாம் அடிமையாகிறோம். எல்லாம் புனைவு என்று பொருள் சொல்கிறேன்.

எழுதுகிற எழுத்தாளன் வேறு; கதைச்சொல்லி வேறு என்று எழுதியிருக்கிறீர்கள். எழுதுகிற எழுத்தளனின் வழியாகத்தான் கதைசொல்லி பேசுகிறான். அதே சமயம் கதைசொல்லியின் குரலுக்கு எழுத்தாளன் பொறுப்பாக மாட்டானா?

அட்லாண்டிஸ் மனிதனில் ‘நான், நான்’ என்று எழுதியிருப்பேன். அந்த ’நான்’ கதாபாத்திரம். அந்த ‘நான்’ எம். ஜி. சுரேஷ் என்று நினைத்துவிட்டார்கள். அதில் வரும் நான் கதைச்சொல்லி. எழுத்தாளன் எதை எழுதினாலும் அதில் ஒரு சுய சரிதைக் கூறு இருக்கும். அசோகமித்திரன் 18-வது அட்சகோடு எழுதினால், அதில் அவரின் ஹைதராபாத் வாழ்வும் இருக்கத்தான் செய்யும். கதைசொல்லியின் குரல் ஆசிரியருடைய குரலாகவும் இருக்கும். அதை நான் மறுக்கவில்லை. அதே சமயத்தில் ஆசிரியன் (author) வேறு கதைசொல்லி (narrator) வேறு என்பதும் உண்மையே.


நீங்கள் கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் என்று பன்முகங்களைக் கொண்டவர். இப்போது ‘பன்முகம்’ என்ற சிறுபத்திரிக்கையையும் தொடங்கியிருக்கிறீர்கள். இப்போது ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுக்குக்கென்று ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நீங்களும் ஆரம்பித்தீர்களா?

போஸ்ட் மாடர்னிசத்திற்காக ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். ஏற்கனவே ‘நிறப்பிரிகை’ இருந்தது. ஆனால் எனக்கு அந்தப் போஸ்ட் மாடர்னிசத்தில் நம்பிக்கை இல்லை. அ. மார்க்ஸ் தலித் இயக்கம் என்பதற்கான அரசியல் இயக்கமாக அதை மாற்றிவிட்டார். போஸ்ட் மாடர்னிசம் பொலிட்டிகல் மூவ்மெண்ட் இல்லை. அது method of analysis. கலை இலக்கியத்தில், ஒவ்வொரு கட்டமாக மாறி வரும் போக்குகளைப் பிரிக்கிறோம். இல்லையா? இந்த மாதிரி சோவியத் யூனியன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு கட்டம். வரலாற்று அறிஞர்கள் அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், பிறகு கேபிட்டலிஸம், சோஷலிஸம் என்று பிரிக்கிறார்கள். அடுத்தக் கட்டம் கம்யூனிஸத்திற்குப் போய்விடும் என்றார்கள். ஆனால் உண்மையில் சோசலிஸம் வீழ்ந்து மீண்டும் கேபிட்டலிஸம் வந்துவிட்டது.

பிரான்சிஸ் புக்குயமா என்பவர் end of history என்ற நூல் எழுதினார். History has come to an end. வரலாறு தேங்கிவிட்டது என்று எழுதினார். இதைப் போஸ்ட் மாடர்னிசத்தின் ஆரம்ப நூல்களில் ஒன்றாகச் சொல்லலாம். பூக்கோ, லகான் கட்டுரைகள் மாதிரி ஆழமான நூல் இல்லையென்றாலும் ஒரு அடையாளக் கல்லாக இந்த நூலையும் சொல்லலாம். மாடர்னிசம் எழுதி எழுதி கெட்டித்தட்டிப் போய்விட்டது. நவீன யுகத்தில் வாழும் மனிதன் போஸ்ட் மாடர்னிச மனிதன் என்று சொல்வதைப் போல. மாடர்னிசம் என்பது ஒரு லட்சிய வாதத்திற்காக உயிரைக் கொடுப்பதை முன் வைத்தது. இப்போது அதெல்லாம் வீணாகப்போய்விட்டது. காந்தியின் உழைப்பு எல்லாம் வீணாகப் போய்விட்டதே. இந்த ஐரனியைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா? வ.ஊ.சி., சிவா போன்றவர்களின் உழைப்பிற்கு என்ன அர்த்தம் இப்போது இருக்கிறது. இந்த மாடர்னிட்டி இவ்வளவு கேவலமாக இருக்கிறது. இவ்வளவு விரோத பாவத்துடன் இருக்கிறது. சக மனிதனை வெறுக்கிறார்கள். சக மனிதனை நேசி என்று ஜீஸஸ் சொன்னது வேடிக்கையாக இருக்கிறது. கோட்பாடுகளின் வீழ்ச்சியைக் கிண்டல் செய்கிறோம்.

போஸ்ட் மாடர்னிசம் மையம் கூடாது. விளிம்பு நிலையும் வேண்டாம் என்று சொல்கிறது. டெமாக்ரசி வேண்டும் என்கிறார்கள். அ. மார்க்ஸ் போன்றவர்கள் ஒரு மையத்தைத் தகர்த்துவிட்டு தன்னைச் சுற்றி இன்னொரு மையத்தை உருவாக்குகிறார்கள். ஜெயமோகனைக் கடுமையாகச் சாடும் அ. மார்க்ஸ் ஜெயமோகனுக்கு எதிராக முன்னிறுத்தப்படவேண்டிய என் எழுத்துக்கள் பற்றி மூச்சுவிடவில்லை. ஏனெனில் அவரது மையத்தில் எனக்கு இடம் இல்லை. இந்த மாதிரியான சூழலில் ஒரு சரியான பின் நவீனத்துவத்திற்கான பத்திரிகை வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது 100 சதவிகித பின் நாவீனப் பத்திக்கை அல்ல. ஏனெனில் நானும் முன்பே சொன்னதுபோல எல்லாவற்றின் மீதும் சந்தேகம் கொண்டவன் என்பதால் எந்த இலக்கிலாவது மாட்டிக் கொண்டால் நான் ஒரு கலைஞனாக இருக்க முடியாது. ஒரு கலைஞன் எந்தக் கோட்பாடினுள்ளும் சிக்கிக்கொள்ள முடியாது. இது ஓர் இயல்பான விஷயம் என்றே தோன்றுகிறது. அதில் மாட்டிக்கொண்டால் அதனுடைய பிரச்சார பீரங்கிகள் ஆகி விடுவோம். நம்மைச் சுற்றிலும் கதவுகள் அடைத்துக்கொள்வோம்.

போஸ்ட் மாடர்னிசத்திற்கு எதிரான படைப்புகள் கூட பன்முகத்தில் வரும் – டெமாக்ரசியின் விளைவு இது. அதற்கு எதிரானதும் கூட வரும். பன்முகம் என்று ஏன் சொல்கிறோம் என்றால் எல்லாருமே ஒவ்வொரு பம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பன்முகம் என்பது ‘க்யூபிஸம்’ என்பதையும் குறிக்கும். இது பரிசோதனை முயற்சிகளுக்கான பத்திரிக்கை.

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிற போக்கு ஒன்று இருந்ததால்தான் நீங்கள் பத்திரிகை ஆரம்பித்தீர்களா என்று கேட்கிறேன்.

சுந்தரராமசாமி

சுந்தரராமசாமி


வேறு யாரும் ஆரம்பிக்கவில்லை என்றால்கூட நான் ஆரம்பித்திருப்பேன். சு.ரா. காலச்சுவடு ஆரம்பித்தபோது சிறுபத்திரிக்கைகளுக்கும், வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கும் ஒரு முரண் இருந்தது. அந்த முக்கியத்துவம் பன்முகத்திற்கும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மற்றவர்கள் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு எடிட்டராக இருக்க வேண்டும் புகழ் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் பத்திரிக்கை ஆரம்பிக்கிறார்கள். நோயல் கட்டுரையை நான் போடுகிறேன் என்றால் அவர் ஒரு சரியான போஸ்ட் மாடர்னிஸ்ட் என்பதால் தான்.

தமிழில் விமர்சனத்துறை எப்படி இருக்கிறது?

தமிழில் கா.நா.சு. ஆரம்பித்துவைத்தார். அவருக்கு முன்பு விமர்சனம் என்பது தமிழில் துதிபாடுவதாகத்தான் இருந்தது. ஏதாவது ஒரு புத்தகம் வந்தால் வேப்பிலை அடிப்பதுதான் நடந்து கொண்டிருந்தது. இவர்தான் மு.வ. இலக்கியவாதி இல்லை என்று சொன்னார். திருக்குறள் இலக்கியம் இல்லை என்று சொன்னார். அவருக்குப் பிறகு இலக்கிய விமர்சனம் வளர்த்தெடுக்கப்படவில்லை. ஓரிரு விமர்சகர்கள் இப்போதும் இருக்கலாம். ஆனால் பெரியளவிற்கு விமர்சகர் வரவில்லை. இங்கே விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவும், இருட்டடிப்பு நடவடிக்கையாகவும் இருக்கிறது. விமர்சனங்கள் உள்நோக்கங்களோடு செய்யப்படுகின்றன. அரசியலாக இருக்கின்றன.

ஒரு நாவலில் அதிருப்தி ஏற்படுவதால்தானே இன்னொரு நாவல் எழுதுகிறேன். பிரபஞ்சம் குறை உடையது. பிரபஞ்சத்தின் கூறு நாம். எனவே, காதல் என்பதே குறைபாடு உடையது. I MISS YOU என்று சொல்கிறோமே. நீ இருந்தால்தான் நான் முழுமையடைகிறேன் என்பதுதான். அதுபோல் ஒரு இலக்கியப் பிரதி குறையற்றதாக இருக்க முடியாது. குறை சொல்வது creative ஆக இருக்க வேண்டும். எழுத்தாளனுக்கு உதவுகிறதுபோல விமர்சனம் இருக்க வேண்டும். பிரதியின் மீதான வன்முறையாக இருக்கக்கூடாது.

ப. சிங்காரம் ‘புயலிலே ஒரு தோணி’ எழுதினார். அது 20 வருடங்களாகப் பேசப்படவில்லை. இன்று பேசுகிறார்கள். திருத்தக்கதேவரை உ.வே.சா. கண்டுபிடித்துப் போடுகிறார். ஒரு நல்ல பிரதி என்பது வீணாகப் போகாது. இப்போது விமர்சிப்பது நம்மை மேம்படுத்திக்கொள்ளத்தான். விமர்சனம் தமிழில் முறையாக, நியாயமானதாக இல்லை.

பொதுவான தமிழ் இலக்கியச் சூழல் எப்படியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பொதுவாக மோசமானதாக இருக்கிறது. இலக்கியச் சூழலில் அரசியல் நிறைய இருக்கிறது. ப்ரெஞ்ச்சில் சார்த்தர்க்கும் காம்யுக்கும் ஆகாது. ஒளவையார்க்கும், ஒட்டக்கூத்தருக்கும் ஆகாது. போர்ஹேக்கும், நெரூடாவுக்கும் ஆகாது. இது அனைவருக்கும் தெரியும். நம்மவர்கள் இப்போதோ பின்னால் திட்டுகிறார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். விரோதம், கோபம், அரசியல், நயவஞ்சகம் இரண்டு குழுவிலும் சேர்ந்து ஏமாற்றுதல் ஆகியவையும் இங்கே நடக்கிறது.

உங்களின் மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பற்றி?

’நான் – பிக்‌ஷன்’ தான் மொழிபெயர்த்திருக்கிறேன். ரோலான் பார்த் கட்டுரைகள் செய்திருக்கிறேன். முழு புத்தகம் செய்ததில்லை. அவகாசம் கிடைக்கும் போது செய்யவேண்டும். மொழிபெயர்ப்புகள் மூலமாகத்தான் பல விஷயங்களை நானே தெரிந்துகொண்டேன். உலக இலக்கியங்கள் எல்லாமே நான் இப்படித்தான் தெரிந்துகொண்டேன். பலர் என்னிடம் டெரிடா, பூக்கோ ஆகியோரை மொழிபெயர்க்கும்படி கேட்கிறார்கள். அதிலும் நான் கவனம் செலுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு, நவீன நாடகம், கவிதை, இதையெல்லாம் செய்ய வேண்டும். குறைந்த அளவிற்குத்தான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். நிறையச் செய்ய ஆசை.

கட்டுரைகள் எழுதுவதில் உங்கள் அனுபவம் எப்படி? எம். ஜி. சுரேஷின் கட்டுரைகள் என்ற நூல் சமீபத்தில் வந்திருக்கிறதே?

ஜவகர் என்பவர் வசந்தம் என்று ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தார். அவர் கேட்டதற்காக ஒரு கட்டுரை எழுதினேன். சினிமா சம்பந்தப்பட்டது அது. எல்லா சினிமாக்காரர்களும் ஒரு உத்வேகத்தில் வருகிறார்கள். பின்னால் அவர்களேதான் ஒரு மோசமான சினிமா எடுக்கிறார்கள். முதலில் அவர்கள்தான் ஒரு டிரெண்டை உருவாக்குகிறார்கள். பின்னால் ஏன் அவர்களே அதை உடைக்கிறார்கள் என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதன் பிறகு பலர் கட்டுரை கேட்க ஆரம்பித்தார்கள். அதனால் தொடர்ந்து எழுதினேன். எழுதிய கட்டுரைகளில் கொஞ்சம்தான் இப்போது நூலாக வந்திருக்கின்றன.

சினிமா துறையில் உங்கள் அனுபவங்கள்?

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த போதே சினிமாத்துறையின் அறிமுகம் கிடைத்தது. கமல்ஹாசன், சந்தானபாரதி, பாரதிராஜா போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் கதை விவாதத்திற்கு அழைத்தார்கள். பிலிம் சொசைட்டியில் உலகின் சிறந்த பல படங்கள் பர்த்தேன். தமிழில் மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்றவர்கள் அப்போது நன்றாக செய்தார்கள். இவர்களைப்போலவே நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றுகிறேன். அழகி பொன்ற மிடில் சினிமாவில் என் பங்களிப்பு இருக்கிறது.

ஒரு இலக்கியவாதியை சினிமாக்காரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள். இதில் உங்கள் அனுபவம் என்ன?

சினிமாவிலும் இலக்கியவாதிகளை இப்போது மதிக்கிறார்கள். ஒரு காலத்தில் எழுத்தளான் என்றாலே சினிமாவில் மரியாதை இல்லை. சினிமாவிற்கு சம்பந்தமில்லாதவன்; அவன் நம்மைக் கொன்றுவிடுவான் என்று பயந்தார்கள். இப்போது பாபாவில் எஸ். ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டார்களே. சினிமாவிலும் எழுதாளனின் பங்களிப்பு தேவை என்று நினைக்கிறார்கள். இலக்கியவாதி சம்பந்தப்பட்டால் ஒரு மேஜிக் நிகழும் என்று நினைகிறார்கள்.

கதை விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை எடுத்துக் கொள்கிறார்கள். சினிமாவில் எல்லோர்க்கும் பணம் முழுமையாகக் கொடுக்கமாட்டார்கள். இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

உங்கள் படைப்புகள் சினிமாவுக்கு ஒத்துவருமா?

என்னுடைய படைப்புகள் சினிமாவிற்கானதும் இருக்கிறது. இப்போது எழுதுகிறவை போஸ்ட் மாடர்னிசம் சார்ந்தவை என்பதால் இவை சினிமாவுக்கு ஏற்றவை அல்ல. போட்டோகிராபி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நகல் எடுக்கும் வேலை கிடையாது என்று சொன்னார் பிக்காசோ.

ஓவியத்தின் ஒரு வேலையை போட்டோகிராபி செய்துவிட்டது. இதன் பிறகு ஓவியம் தனக்கென்று ஒரு வழியைத் தேட வேண்டியதாகிவிட்டது. அதனால்தான் மாடர்ன் ஆர்ட் வந்தது. அதே மாதிரி பின்நவீன நாவல்கள் சினிமாவாக நகல் எடுக்கமுடியாத தன்மை கொண்டவை. மார்க்வேசின் ‘நூற்றாண்டு தனிமை’ நாவலை சினிமாவாக்குவதற்குக் கேட்டார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மார்க்வேஸ்.

வருடைய படங்கள் சினிமாவாக்கப்பட்டு தோல்வியடைந்தவை இல்லையா?

ஆமாம். அதனால்தான் அவர் சினிமாவாக்கக்கூடாது என்றார். சினிமா துறைக்கான கதை வேறு. படிப்பதற்கான கதை வேறு. படிப்பதற்கான கதையை சினிமாவிற்கான format-இல் அடைக்கக்கூடாது. அதேபோல சினிமா என்பது visual media. அதைப் படிக்கும்படி எழுத வேண்டாம்.

உங்கள் கட்டுரைகளில் உலக சினிமா பற்றி எழுதியிருக்கிறீர்கள்? உலக சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு அல்லது தொடர்பின்மை இது பற்றி உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

ஆரம்ப காலத்திலிருந்தே தமிழில் மேலை நாட்டு சினிமா தாக்கம் இருக்கிறது. வாயில் கத்தியை வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனில் தாவியது மேலை நாட்டு சினிமாவின் தாக்கத்தால். சார்லி சாப்ளினின் தமிழ் வடிவம் தான் சந்திரபாபு. நாகேஷ்க்கு ஜெரி லூயிஸ் தாக்கம் உண்டு. பெலினியின் தாக்கம் பாலுமகேந்திராவிடம் உண்டு. பொலான்ஸ்கி மாதிரி சினிமாக்களை செய்கிறார்கள். கமல் தமிழ் சினிமாவை முன்னெடுத்துப் போகிறார். தமிழ் சினிமாவில் ஐரோப்பாவின் தாக்கம் தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கிறது. இனியும் ஏற்படுத்தும். மணிக்கொடி எழுத்து எப்படி எல்லா பத்திரிக்கைகளிலும் தாக்கத்தை இப்போது ஏற்படுத்துகிறதோ அப்படி பிலிம் சொசைட்டியின் படங்கள் தமிழ் சினிமா மீதும் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தும். உதிரிப்பூக்கள் போன்றவை அந்த மாதிரி வந்தவைதான். அதன் பிறகு மணிரத்னம், பாலா ஆகியோர் தொடர்ச்சியாக வருகிறார்கள். மணிரத்னம் கமர்சியலையும் ஆர்ட்டையும் இணைத்து செல்கிறார். ரோஜா, பாம்பே எல்லாம் இப்படியான படங்கள்.

எழுத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

‘நாங்கள் எல்லோரும் கோகோலின் மேற்கோட்டு (overcoat) பாக்கெட்டிலிருந்து வந்தவர்கள்’ என்று தன்னையும் தன் தலை முறை எழுத்தாளர்களையும் பற்றி ஆண்டன் செக்காவ் ஒரு முறை கூறினார். அதேபோல் எண்பதுகளில் தமிழில் எழுதிக்கொண்டிருந்த தீவிர இலக்கியவாதிகளான நாங்கள் எல்லோரும் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற ஜிப்பா பாக்கெட்டிலிருந்து குதித்தவர்கள் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. ஜே.ஜே. சில குறிப்புகள் என்னை பிரமிக்க வைத்த நாவல். நான் மதுரைக்காரன். மதுரையில் பாண்டிய வெள்ளாளர் தெருவில் குடியிருந்தேன். அங்கிருந்து மேலமாசி வீதிக்கு வரும் போதெல்லாம் அந்த அகன்ற சாலையைப் பார்த்து பிரமிப்பேன். அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். அண்ணா சாலையைப் பார்த்து பிரமித்தேன். பின்பு மும்பை டெல்லி போன்ற நகரங்களுக்குப் போன போது துரிதச் சாலைகள் இன்னும் வியப்பூட்டின. பின்னர் மீண்டும் மதுரைக்குப் போனபோது மேலமாசி வீதியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்பாக இருந்தது. இந்தத் தெருவைப் பார்த்தா பிரமித்தோம் என்று எனக்கு வெட்கமாக இருந்தது. அதே மாதிரி ஆரம்ப நாட்களில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், போன்றோரின் எழுத்துக்கள் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. பின்னாளில் போர்ஹே, கால்வினோ, கொர்த்தஸார், மிலன் குந்தேரா போன்றவர்களைப் படித்த பின்னர் மீண்டும் ஜெ.கா., தி.ஜா., போன்றவர்களின் எழுத்துக்களைப் படித்துப் பார்த்தபோது இவற்றைப் பார்த்தா நாம் பிரமித்தோம் என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சர்வதேச இலக்கியங்களைப் படிப்பதற்கு முன் என்னை வியப்படையவைத்த சு.ராவின் பல சிறுகதைகளும் ஜே.ஜே. சில குறிப்பு நாவலும் இப்போதும் என்னை வியப்பிலாழ்த்தவே செய்கின்றன. என்னைப் பரிசோதனை நாவல் எழுதத் தூண்டியது ஜே.ஜே. சில குறிப்புகள்தான்.

ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு நவீன நாவல் தானே?

அது நவீன நாவலா பின் நவீன நாவலா என்பதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. அசோகமித்திரனின் பல கதைகள் பின் நவீனத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி எப்பொதுமே மகத்தான கதைகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து வைக்க முடியாதவை. அதே மாதிரி ஜே.ஜே. சில குறிப்புகளை முன் – நவீனத்துவம் பின் – நவீனத்துவம் என்ற அளவுகோல்களால் அளக்க வேண்டிய வசியம் இல்லை. அது ஒரு சிறந்த நாவல் அவ்வளவு தான். காம்யூவின் தீர்க்கமான மொழி; மிலன் குந்தேராவின் கிண்டல்; மிலோராட் பவிக்கின் கவித்துவம் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தால் கிடைக்கும் அனுபவத்தை ஜே.ஜே. சில குறிப்புகளில் அனுபவித்து உணர முடியும். பின் நவீனத்துவ எழுத்து இல்லை என்பதால் ஷேக்ஸ்பியரையும் செகாவையும் தாஸ்தாயெஸ்கியையும் புறக்கணித்துவிட முடியுமா?

நகுலனின் சோதனை எழுத்துக்கள் உங்களைப் பாதித்ததுண்டா?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நகுலனை வாசித்தபோது ஏற்பட்ட அனுபவம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. மெளனிக்கு வாரிசாக உருவானவர் நகுலன். மெளனியின் மாறுதல் என்ற ஒரே ஒரு சிறுகதையை ஒரு தட்டிலும் நகுலனின் எல்லாக் கதைகளையும் மறு தட்டிலும் வைத்துப் பார்த்தால் மெளனியின் தட்டுதான் தாழும். நகுலனின் சோதனைக் கதைகள் உள்ளீடற்ற நடையில் எழுதப்பட்டவை. பல சிறுகதைகள் வெகுஜனப் பத்திரிகைகளின் தரத்தில் எழுதப்பட்டவை. இபோது வாசிக்கையில் நகுலன் கலாவதியாகிவிட்டார் என்றே தோன்றுகிறது. மெளனியின் மாறுதல் காலாவதியாக முடியாத கதை. மரணம் என்பது மாறுதல் என்கிறார் மெளனி. இது இயங்கியல் (dialectics) சிந்தனை. ஹெராக்ளிடஸ், புத்தர் முதல் இன்றைய அறிவியல் கோட்பாடுகள்வரை காலங்காலாமாக அறிவுறுத்தப்பட்டுவரும் ஒரு உண்மை எப்படி காலாவதியாக முடியும்? அதே போல் தான் ஜே.ஜே. சில குறிப்புகளும். ‘செய்ய விரும்புவதை செய்ய முடியாமல் போகிற கையாலாகாத்தனம் செய்ய விரும்பாததை செய்ய வேண்டிய நிர்பந்தம். இந்த இரண்டு அவஸ்தைகளாலும் நெருக்கப்படும்போது ஏற்படும் வலி என்னுடையது’ என்று மார்லன் ப்ராண்டோ ஒரு சமயம் கண் கலங்கக் கூறினார். இந்த வலி எல்லாக் கலைஞர்களுக்கும் பொதுவானது. கலைஞன் என்பவன் இருக்கும் வரை இதே வலியும் சாசுவதமாக இருக்கும். சசுவதமான இந்த வலியைப் பற்றிப் பேசும் ஜே.ஜே. சில குறிப்புகளும் சாசுவதமாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. நகுலனின் கதைகளில் இதுபோன்ற சாசுவதமான அம்சங்கள் ஏதும் இல்லை.

கோணங்கியின் சோதனை எழுத்துக்களைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

கோணங்கி ஒரு அற்புதமான எழுத்தாற்றல் மிக்க கலைஞன். அவர் தனது திறமைகளை வீணடித்து வருவதாகவே எனக்குப் படுகிறது. அவரால் மார்க்வெஸூக்கு இணையாகத் தமிழில் ஒரு நாவல் எழுத முடியும். அதற்கான மொழியும் தனது மண் மக்கள் சார்ந்த வாழ்க்கை அனுபவம் வாய்க்கப் பெற்றவர் கோணங்கி. ஆனால் அவரது பாணி வாசகனை பயமுறுத்துவதாகவே இருக்கிறது. அவரது எழுத்து முன் நவீனத்துவ (pre modren) எழுத்து என்றே எனக்குப் படுகிறது. 1919 இல் பிரான்ஸில் ஆந்த்ரே பிரதான் (andre breton) ஆரம்பித்து வைத்த சர்ரியலிஸ்ட் இயக்கத்தின் கோட்பாடுகளில் ஒன்று தானியங்கி எழுத்துமுறை (automatic Writing). தர்க்கத்தை எதிர்ப்பது சர்ரியலிஸத்தின் கூறுகளில் ஒன்று. தர்க்கரீதியான சிந்தனை இல்லாமல் ஹம்ப்டி டம்ப்டியைப் போல் வார்த்தைகளைப் பெருக்கிக் கொண்டே போவது; மூளையின் கட்டுப்பாட்டிலிருந்து கைகயை விடுவிப்பது; கை தானாகவே எதையாவது எழுதிச் செல்ல அனுமதிப்பது. ‘Evading to imposed meaning, combining with one another in obedience to no laws of rational discourse or poetic fancy’ என்று சர்ரியலிஸ்டுகள் பிரகடனம் செய்தார்கள். Auto writing என்பது எதிர் கலை எழுச்சி. மரபைக் கேலி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இன்றைய தேதிகளில் அவற்றுக்கு இலக்கிய மதிப்பு ஏதும் இல்லை. இப்போது auto writing காலாவதியாகிவிட்டது. பின் நவீனத்துவம் வாசிப்பு ஜனநாயகத்தைக் கோரும் இன்றைய யுகத்தில் கோணங்கி auto writing – ஐத் தேர்ந்தெடுத்திருப்பது துரதிஷ்டவசமானது. ‘இருண்மை’ (obscurity) என்பது உண்மைதான். அதற்காக வாசகனை இருட்டில் பிடித்துத் தள்ளிவிடக்கூடாது அல்லவா?

இப்போது தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் சக படைப்பாளிகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

இப்போது பலரும் பலவிதமான எழுதுகிறார்கள். பா. வெங்கடேசன், அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றோரின் எழுத்துக்களை வைத்தே ஒன்றுக்கொன்று மாறுபட்ட தளங்களில் நமது எழுத்தாளர்கள் இயங்கிவருவதை அனுமானிக்க முடியும். ரமேஷ் ப்ரேம் முக்கியமான படைப்பாளிகள். மெளனிக்குப் பின் அகவுலகம் சார்ந்த பிரச்சினைகளை வெற்றிகரமாக எழுதிவருபவர்கள். தமிழவன், தமிழ்ப் பின் நவீன எழுத்துக்கு முன்னோடி. குறிப்பிடத்தக்க படைப்பாளி. பாமா, யூமா வாஸூகி, ஜே.பி.சாணக்யா, அழகிய பெரியவன் போன்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் இளம் படைப்பாளிகள்.

கெளதம சித்தார்த்தன் புதுவகை முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவை என்ற போதிலும் அவரது புதுவகை எழுத்து என்பது வெறும் மொழிப் பிரயோகத்துடன் நின்றுவிடுவது துரதிருஷ்டவசமானது. சாதாரண கதைகளை வித்தியாசப் படுத்தப்பட்ட மொழியில் எழுதுவது புதுவகை எழுத்து ஆகிவிடாது. இந்த பலவீனம் அவரது கதைகளில் காணப்படுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இது பொருந்தும். கலை இலக்கியத்தின் முக்கியமான கோட்பாடு Avoid Cliche என்பது. இதைத் தமிழிலும் கூறியது கூறல் குற்றம் என்பார்கள். சித்தார்த்தனிடம் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லும் repetition தன்மை இருக்கிறது. மேலும் எதையும் இயல்பாக இல்லாது வலிந்து சொல்லும் போக்கும் அவரிடம் இருக்கிறது. இவற்றையெல்லாம் நீக்கிய நல்ல கதைகளை அவரால் எதிர்காலத்தில் எழுத முடியும் என்று நான் நம்புகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ‘நடந்தான்’ என்பதைக் கூட ’கால்களை முன்னசைத்து அலைவுற்றான்’ என்று எழுத விரும்புபவர்கள். இது ஒரு இயல்பான பெண் அதீத மேக்_அப் பூசி, உதட்டில் சிவப்புச் சாயம் தடவிக்கொண்டு சிரிப்பதைப் போல் வாசகனைப் பயமுறுத்துகிறது.

போஸ்ட் மாடர்னிசம் பற்றிச் சொல்லுங்கள்?

டெரிடா, பூக்கோ ஆகியோரை முதலில் படிக்க ஆரம்பித்தேன். போஸ்ட் மாடர்னிஸம் பேசியவர்களில் இடதுசாரிப் பின்னணி உள்ளவர்கள், ஆக்டோவியா பாஸ் போன்றவர்கள் இருந்தார்கள். சாவைக் கொண்டாடுகிறது போஸ்ட் மாடர்னிசம். ஓர் ஆக்கப்பூர்வமான போஸ்ட் மாடர்னிசம் இடதுசாரி சார்புடையதுதான் என்ற கருத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். மீன் சாப்பிடுகிறவர்கள் முள் இருப்பதற்காக மீனை விலக்குவதில்லை.

போஸ்ட் மாடர்னிசம் தமிழில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. லகான், பூக்கோ, டெரிடா ஆகியோரின் கட்டுரைகள் எளிய தமிழில் வரவேண்டும். பூக்கோ ஸாதேயை எதிர்த்தார். அவரின் செக்ஸ் பர்வெர்ஷனை எதிர்த்தார். செக்ஸ் பர்வெர்ஷன் என்பது ஆன்டி – போஸ்ட் மாடர்னிசம். ஆனால் போஸ்ட் மாடர்னிசத்தைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதுவது ஒரு முரண்பாடு. பின் – நவீனத்துவத்தை இதற்கு தவறாக தமிழில் புரிந்துகொண்டதுதான் காரணம். சாரு தன்னை ஒரு புத்திஸ்ட் என்று சொல்கிறார். ஆனால் எழுதும்போது பர்வெர்ஷன், சேடிஸம்என்று எழுதுகிறார். புத்தர் அகிம்சையைச் சொல்கிறார். சேடிஸம் பற்றி எழுதுவது ஹிம்சை பற்றி எழுதுவது இரண்டும் நேர் எதிர் துருவங்களைக் கொண்டவை. ஹிம்சையும் அஹிம்சையும் எப்படி ஒரே தட்டில் இருக்க முடியும்? அப்போது இதைப் பற்றி சந்தேகம் வருகிறது. இதைத்தான் முரண்பாடு என்று சொல்கிறேன். இவர்களால் மக்களும் ஏமாந்து போகிறார்கள். குழப்பம் வருகிறது.

எம்.ஜி. சுரேஷ்

எம்.ஜி. சுரேஷ்

ஆனால் இந்த எழுத்தாளர்கள் பூக்கோவையும், டெரிடாவையும் சொல்லிதானே பேசுகிறார்கள்?

இவர்கள் யாரும் பின் நவீனத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்த போதிலும் அக்கறையுடன் நடந்துகொள்லவில்லை.

இப்போது அமெரிக்காவில் போஸ்ட் மாடர்னிசத்திலிருந்து நகர்ந்து நியோ ரியலிசத்திற்குப் போய்விட்டார்கள் என்று சொல்கிறார்களே?

சொல்கிறார்கள். ஆனால் இன்னும் அது ஒரு டிரெண்டாக உருவாகவில்லை. ரியலிசத்திற்குப் பிறகு தான் நியோ ரியலிசம் வந்தது. அதன் பிறகுதான் போஸ்ட் மாடர்னிசம் வந்தது. மீண்டும் பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. ஆனால் இப்போது அதுதான் அங்கே நடக்கிறது. இந்த முயற்சி பெரிய வெற்றியடையவில்லை.

பன்முகப் பார்வை என்பதை எளிமையாக எப்படிச் சொல்வீர்கள்?

ஜென்னில் நீ ஒரு மரத்தைப் பார்க்கிறாய் என்றால் அதை வெறும் மரமாகப் பார்க்காதே. மரம் என்பது வெறும் ஒருமைத்தன்மை. இந்த மரம் செடியாக இருந்தது அதுவரை அதற்கு இவ்வளவு தண்ணீர் தேவைப்பட்டது. சூரிய வெளிச்சம் தேவைப்பட்டது. இதெல்லாம் சேர்ந்ததுதான் இந்த மரம். ஒரு வீட்டில் ஒரு நாற்காலியைப் பார்த்தேன். இந்த மரத்தின் ஞாபகம் வந்தது. மரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு விஷயங்களோடு அந்த மரத்தை நீ பார்க்க வேண்டும். அதுதான் முழுமையான பார்வை என்கிறது ஜென். பன்முகப் பார்வை என்பது இதுதான்.

என்னுடைய நாவல்களில் இதைப் பார்க்கலாம். சைக்காலாஜி, ஆந்த்ரபாலஜி, ஆன்தாலஜி போன்றவற்றை இது ஒற்றைத் தன்மையைத் தவிர்க்க உதவும். போர்ஹே கதையில் இப்படி இருக்கும். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு கையை வைத்தால் அங்கே ஒரு அரிய தகவல் இருக்கும். அவர்தான் இதை ஆரம்பித்து வைத்தார். அந்த உத்தியைக் கலைக் களஞ்சிய எழுத்து முறை என்பார்கள். அதை நானும் ஸ்வீகரித்துக் கொண்டேன். கொடி அசைந்ததா காற்றசைந்ததா என்றால் மனம்தான் அசைகிறது என்கிறது ஜென்.

லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா பொன்ற நாடுகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்து இருக்க வேண்டும். தமிழில்தான் எழுத்தாளர்களுக்கு இலக்கியம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஸ்டீபன் ஹாக்கிங்கை தமிழில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறார்கள். தமிழில் பிலாசபி படிப்பதில்லை. விஞ்ஞானிகள் அளவிற்கு பிரைமோ லெவி, இடாலோ கால்வினா போன்றவர்கள் கெமிஸ்ட்ரி பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். தமிழில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழில் தமிழ் நூல்களைக் கூட படிக்க மாட்டேன் என்கிறார்கள். பிரகு எப்படி வெளி நாட்டில் எழுதுபவற்றைப் படிப்பார்கள்.

சமகாலத்தில் வெளிநாட்டில் எழுதுகிற முறைகளை உத்திகளைப் படிப்பதில்லை. இதை யாராவது படித்து விட்டு பரிசோதனை முயற்சியாக எழுதினால் உடனே எதிர்க்கிறார்கள். இது தமிழ்த் தன்மையில்லை என்றோ நம்பகத் தன்மையில்லை என்றோ, போஸ்ட் மாடர்னிசம் 35 வருடங்களுக்கு முன்பே இறந்து போய்விட்டது என்றோ எழுதுகிறார்கள். இந்தப் பொறுப்பற்ற திண்ணைப் பேச்சுத்தான் தமிழனின் பூர்வீக சொத்து.

எம்.ஜி சுரேஷ்

எம்.ஜி சுரேஷ்


போஸ்ட் மாடர்னிசம் வந்த புதிதில் நம்மூர்க்காரர்களைப் போலவே மேற்கேயும் ஈகிள்டன் போன்றவர்கள் எதிர்த்தார்கள். அதையெல்லாம் மீறி போஸ்ட் மாடர்னிசம் இப்போது இங்கே ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. இப்போது அடுத்த கட்டமாக உலகமயமாக்கல் புலம் பெயர்தல், கலாச்சாரக் குறுக்கீடுகள் போன்ற பல்வேறு தளங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்துவருகிறது. போஸ்ட் மாடர்னிசத்தைச் சுருக்கமாக போ.மோ. என்றழைக்கிறார்கள். இன்றைக்கு எந்த ஒரு பிரச்சினையையும் பின் நவீனத்துவ ரீதியில் மட்டுமே அலச முடியும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மற்ற மொழிகளில் பேராசிரியர்கள் இலக்கியவாதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன இலக்கியம் தெரிவதால் வெளியுலகுக்குப் பரவலாகக் கொண்டு போகிறார்கள். தமிழில் இப்படியில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலப் பேராசிரியர் ஆங்கிலம் மட்டும் படிப்பார். தமிழ் படிக்க மாட்டார். தமிழ்ப் பேராசிரியர் ஆங்கிலம் படிக்க மாட்டார். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. இங்கேயிருந்து யாரையும் முன்வைப்பதில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் அந்தந்த மொழிப் பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியம் தெரியும். இங்கே அப்படியில்லை. நாமே ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதில்லை. சிலப்பதிகாரமே இப்போதுதான் வெளியில் தெரிந்தது.

சமஸ்கிருதம் தான் இந்திய இலக்கியம் என்ற பார்வைதான் உலகத்தில் இருக்கிறது. தமிழில் நமக்கு முன்வைப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இல்லை. முன்வைப்பதற்குத்தான் மனம் இல்லை. தமிழில் அரசியல்வாதிகள் அரசியல் வாதிகளைத்தான் முன்வைக்கிறார்கள். குறள் பீடம் விருதை சுந்தரராமசாமி போன்றவர்களுக்குத் தராமல் கலைஞர் அவருக்கே கொடுத்துக் கொண்டார். அரசியல்வாதியும் ஆதரிக்கவில்லை. அகடமிசியென்களும் ஆதரிக்கவில்லையென்றால், வேறு எப்படி நவீனத் தமிழ் வெளியில் போகும்?

•••

(நன்றி : உலகத்தமிழ்.காம் இணைய இதழ், நவம்பர் – டிசம்பர் 2003)

ரோபெர்தோ போலான்யோ / தமிழில் : ஆகி

ரோபெர்தோ போலான்யோ

ரோபெர்தோ போலான்யோ

பாதாளமொன்று உனக்கான என் அன்பளிப்பாயிருக்கும், என்றாளவள்,

ஆனாலிது மிகவும் நுட்பமானதாயிருக்கு மென்பதால்

வருடங்கள் பல கடந்த பிற்பாடு

மெக்சிகோவையும் என்னையும் நீ விட்டகன்று

தொலைவிலிருக்கும் பொழுதே நீயிதை அறிந்து கொள்வாய்.

உனக்கிது மிகவும் அவசியப்படுகையில் நீயிதை கண்ணுறுவாய்,

ஆனால் அந்நிகழ்வு மகிழ்ச்சிகரமான முடிவாயிருந்திடாமல்

இன்மை மற்றும் இன்பத்தினோர் கணப்பொழுதுதாயிருக்கும்.

ஒருவேளை அப்பொழுது நீ என்னை நினைவுகூர்வாய்,

சற்றைக்கே யெனினும்.

இலக்கியதினூடாகவொரு சிற்றுலா (பத்திகள் 31-46)

31.

பூலோகம் முடிவுற்றதாய் நான் கனவுற்றேன். மற்றும் அம்முடிவை

கருத்தில் கொண்டிருந்த ஒரே மனித இருப்பாய் பிரான்ஸ் காஃப்கா.

பரலோகத்தில் மரணிக்குமட்டும் டைட்டன்கள் போரிட்டனர்.

செண்ட்ரல் பார்க்கின் தேனிரும்பு இருக்கையொன்றிலிருந்து

உலகம் பற்றியெரிவதை காஃப்கா அவதானித்தார்.

32.

கனவுறுவதாய் கனவுற்று மிகவும் தாமதமாய் நான்

வீடு வந்தடைந்தேன். என் படுக்கையில் மார்ஜு டி ச-கர்னிய்ரு

எனது முதற்காதலுடன் படுத்திருப்பதைக் கண்ணுற்றேன்.

போர்வையை நான் அகற்றியதும் அவர்கள் மரணித்திருப்பதை

அவதானித்து, என் உதடுகளை குருதியொழுகுமட்டும்

கவ்விக்கொண்டு, நான் தெருக்களுக்குத் திரும்பினேன்.

33.

பொட்டல் குன்றொன்றின் முகட்டில் தன் அரண்மனையை

அனக்கிரியான் எழுப்புவதை, பிறகதை அழிப்பதை நான் கனவுற்றேன்.

34.

என்னை மிகவும் வயதானவொரு லத்தீன் அமெரிக்க

துப்பறிவாளனாய் நான் கனவுற்றேன்.. முகமற்ற ஒருவரின் உயிரைப்

பாதுகாக்க நியூயார்க்கில் வாழ்ந்த என்னை மார்க் ட்வைன்

பணியிலமர்த்தினார். நான் அவரிடம் ”திருவாளர் ட்வைன் அவர்களே,

இதொரு மிகக் கடினமான வழக்காயிருக்கப் போகிறது” என்றேன்.

35.

ஆலிஸ் ஷெல்டனிடம் நான் காதலுறுவதாய் கனவுற்றேன். அவர்

என்னை விரும்பிடவில்லை. ஆதலால் மூன்று கண்டங்களில்

நான் உயிர்துறக்க முயற்சித்தேன். வருடங்கள் கடந்தன. முடிவில்,

எனக்கு மிகவும் வயதானபோது, நியூயார்க் உல்லாசவீதியின்

மறுமுனையில் அவர் தரிசனமளித்து சமிக்ஞைகளால் (விமானிகள்

இறங்க விமானத்தளக்கப்பல்களில் கையாளப்படுமே அவ்வண்ணம்)

அவர் தெரிவித்தார் என்னை அவர் எப்பொழுதும் காதலித்ததாய்.

36.

மிகப்பெரிய எரிமலைப்பாறையினாலான கொடிக்கல்லொன்றின்மீது

நான் அனாய்ஸ் நின்னுடன் 69 நிலையில் துய்ப்பதாய் கனவுற்றேன்.

37.

மங்கலாய் ஒளியூட்டப்பட்ட அறையொன்றில் கார்சன்

மெக்கல்லர்ஸை நான் புணர்வதாய் கனவுற்றேன். மற்றும் நாங்கள்

இருவரும் மகிழ்ச்சியாய் உணர்ந்தோம், காரணமேதுமின்றி.

38.

மீண்டும் என் பழைய உயர்நிலைப்பள்ளியில் நானிருப்பதாய்

அல்ஃபோன்ஸ் டூடேயை எனது ஃப்ரெஞ்ச் ஆசிரியராய் நான்

கனவுற்றேன். புலப்படாத ஏதோவொன்று நாங்கள் கனவுறுவதாய்

எங்களை உணரவைத்தது. ஜன்னலினூடே நோக்கியவண்ணம் டூடே

டார்டாரினது குழாயைப் புகைத்துக் கொண்டிருந்தார்.

39.

நான் உறக்கத்திலாழ்ந்திருக்க என் வகுப்பர்கள் தெரெஸின்

வதைமுகாமிலிருந்து ரோபேர் டிஸ்னூஸை விடுவிக்க

முயற்சிப்பதாய் நான் கனவுற்றேன். எனக்கு விழிப்புத்தட்டவும்

குரலொன்று என்னிடம் ஆயத்தமாக சொன்னது. ”விரைவாக,

போலான்யோ, விரயமாக்க நேரமில்லை.” நானங்கு சென்றபோது

கண்டதென்னவோ தாக்குதலால் புகையும் இடிபாடுகளூடே வயதான

துப்பறிவாளனொருவன் பொறுக்கியெடுத்துக் கொண்டிருப்பதையே.

40.

பூலோகம் முடிவுற்று மூன்று பில்லியன் வருடங்கள் கடந்த

பிற்பாடு பூத எண்களின் புயலொன்றே மனித இருப்புகளின்

எச்சமாயிருப்பதாய் நான் கனவுற்றேன்.

41.

கனவுறுவதாய் கனவுற்று அக்கனவுச் சுரங்கங்களில் ரோக்கி

டால்டோனின் கனவை நான் கண்ணுற்றேன்: பாழாய் போனவொரு

மாயைக்காய் தங்கள் உயிர்களை ஈந்த வீரர்களின் கனவு.

42.

என்னை 18 வயதினனாய் நான் கனவுற்று, வால்ட் விட்மனுடன்

கலவி செய்தபடியிருந்த, எனது அச்சமயத்து 18 வயதின

உயிர்த்தோழமையை கண்ணுற்றேன். புயலார்ந்த

சிவிட்டவேக்கிய அந்திப்பொழுதைக் கருத்தில் கொண்டவாறு,

அவர்கள் கை நாற்காலியில் கலவியிலிருந்தனர்.

43.

என்னையொரு கைதியாய் போயிதியஸை என் சிறைத்தோழராய்

நான் கனவுற்றேன். ”போலான்யோ, இதோ பார்,” என்றவர்,

நிழல்களினூடே தனது கையையும் எழுதுகோலையும் நீட்டி: ”அவை நடுங்கவில்லை! அவை நடுங்கவில்லை!” என்றார். (சற்றைக்கு பின்,

அவர் தன் மென்குரலில் தொடர்ந்தார்: ”ஆனால் அவ்வேசிமகன்

தியோடொரிக்கை அவை கண்டுணர்ந்ததும் அவை நடுங்கும்.”)

44.

கோடரி வீச்சுகளால் மார்க்கி து ஸாதை நான் மொழிபெயர்ப்பதாய்

கனவுற்றேன். நான் கானகத்தில் வாழ்ந்து வந்தேன்,

மனப்பிறழ்வுற்றவனாய்.

45.

சிவிட்டவேக்கியா மதுவகமொன்றில் பாஸ்கல் அச்சம் குறித்து

தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் கதைப்பதாய்

நான் கனவுற்றேன்: அற்புதங்கள் நிலைமாற்றுவதில்லை,

அவை கண்டனம் செய்கின்றன, என்றாரவர்.

46.

என்னை வயதானவொரு லத்தீன் அமெரிக்க துப்பறிவாளனாய்

நான் கனவுற்றேன் மற்றும் பறக்கும் ஸ்பானியர்களின் இறப்புச்

சான்றிதழ்களைக் கண்டுபிடிக்க புதிரான நிறுவனமொன்று என்னை

பணியிலமர்த்தியது. உலகமெங்கும் நான் பயணித்தபடியிருந்தேன்:

மருத்துவமனைகள், போர்க்களங்கள், பூல்கே மதுவகங்கள்,

கைவிடப்பட்ட பள்ளிக்கூடங்களென்று.

……

ஸ்பானியம் வழி ஆங்கிலத்தில்: லோரா ஹீலி (Laura Healy)