Category: இதழ் 134

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

download (14)

பெயர்ப்பலகைகளுக்கு அப்பால்….

பின்கட்டிலிருந்த மராமரத்தில் வழக்கம்போல்

துள்ளிவிளையாட வந்த குட்டி அணிலைத்

தடுத்துநிறுத்தினாள்

கத்துக்குட்டிப் பெண்ணொருத்தி.

வீட்டின் உரிமையாளர்கள் மாறிவிட்டார்களாம்.

?இனி நான் சொல்லும் நேரத்தில்தான்

மராமரம் பக்கம் வரவேண்டும் தெரியுமா?

என்னிடம் அனுமதி பெற்றே இதில் ஏறவேண்டும்.

வருபோதெல்லாம் எனக்கு ‘சலாம்’ போடவேண்டும்.

உன் புட்டத்தை ஆட்டியாட்டி நடனமாடி

என்னை மகிழ்விக்கவேண்டும்.

இதிலுள்ள பழத்தை என்னைக் கேட்காமல் பறிக்கக் கூடாது;

இன்னொரு மரத்தின் பழத்தைக் கவ்வி வந்து

இதில் அமர்ந்து கொறிக்கக்கூடாது.

தெரியுமா? தெரியுமா? தெரியுமா….? வென

அடுக்கிக்கொண்டே போனவளை

துடுக்காகப் பார்த்தச் சொன்னது குட்டி அணில்.

வீட்டுரிமையாளர் காட்டுரிமையாளரல்ல;

காட்டிற்கும் மரத்திற்கும்

பெயர்ப்பலகைகளுக்கு அப்பாலான வாரிசுமையாளர்கள்

நாங்கள்.

வாலுள்ள என்னிடமே வாலாட்டுகிறாயே –

எதற்கிந்த வீண்வேலை?

என் முதுகிலுள்ள மூன்றுகோடுகளுக்கும்

மராமரங்களுக்கும் உள்ள பந்தத்தைப்

புரிந்துகொள்ள முயன்றுபார்.

முடியவில்லையென்றால்

முசுக்கொட்டைப் பழம் பறித்துவருகிறேன்

தின்றுபார்.

download (43)


மராமரமும் மராமத்துவேலையும்

இரு மரமென நின்றிருந்த உடல்களுக்கிடையில்

பெருகிக்கொண்டிருந்தது

சிற்றோடையோ

சாகரமோ

சுட்டெரிக்கும் எரிமலைக்குழம்போ…

கண்விரியப் பார்த்துக்கொண்டிருந்த கேனச்சிறுக்கியொருத்தியின்

காணெல்லைக்கு அப்பாலான

மாயவெளியொன்றில்

அவ்விரு தருக்களும் என்னென்னவோ பறவைகளின்

சரணாலயமாய்,

கிளைகளும், இலைகளும் காய்கனிகளுமாய்

உயிர்த்திருந்தன வண்ணமயமாய்.

சட்டென்று அற்புதங்கள் நிகழ்த்திவிட முடியும்

மாயக்கோல்கள் சில

அவற்றின் வேர்களில் இடம்பெற்றிருப்பதை

பிறரால் காணவியலாது.

போலவே அவளாலும்.

வண்டுதுளைத்த கர்ணன் மடிவலியை

வாழ்ந்துதான் அனுபவிக்கமுடியும்.

புகைப்படக்கருவிக்குள் சிறைப்பிடிக்கவியலாக்

காலத்துணுக்குகளை

தன் சிறுபிள்ளைத்தனமான செயல்களால்

கோர்க்க முடியுமென்று நம்பியவள்

தன் அகன்ற விழிகளால் அத இரண்டு மரங்களையும்

திரும்பத் திரும்பப் படமெடுத்துக்கொண்டிருக்கிறாள்

பலகோணங்களில்.

வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த புள்ளினங்களால்

வந்திறங்க முடியவில்லை.

விதவிதமாய்க் கீச்சிட்டன.

அண்ணாந்துபார்த்தவள்

துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவதுபோல் அவற்றையும்

படம்பிடிக்கத்தொடங்க

அலறியடித்து அப்பால் சென்றுவிட்டன பறவைகள்.

’இவள் காலைக் கட்டெறும்பு கடிக்காதா’ என்று

ஆற்றமாட்டாமல் முனகிக்கொண்டிருந்திருக்கக்கூடும்

அடிவேர்கள்.

இளந்தென்றல் வீசினாலே போதும் _

இருமரங்களின் கிளைகளும், இலைகளும் உரசிச் சிலிர்க்க

வழிபிறக்கும்……

கேனச்சிறுக்கியோ தன்னை யொரு காங்க்ரீட் தடுப்பாக

நடுவில் நிறுத்துக்கொண்டு

இருமரங்களின் நீளமான கிளைகளை

எக்கியெக்கித் தேடி

அவற்றைப் பிணைத்து முடிச்சிடப் பிரயத்தனப்படுகிறாள்

முழுமனதுடனோ முக்காலுக்கும் கீழான மனதுடனோ…

அவள் இழுக்க

சில இலைகள் கிழிபடுகின்றன

சில கிளைகள் முறிந்துவிடுகின்றன.

வார்தாப் புயலால் விழுந்தாலும்

ராட்ஷஸ ரம்பத்தால் வெட்டுப்பட்டுச் சரிந்தாலும்

சாவு நிச்சயம்தானே….

இரண்டு மரங்களையும் வெட்டி

ஒன்றின் மீது ஒன்றைக் கிடத்தி

இணைத்துவிட முடியுமே என்ற விபரீத எண்ணத்தில்

கோடரியைக் கொண்டுவந்துவிடுவாளோவென

விசனப்பட்டுப்பட்டு

என்றைக்குமாய் பட்டுப்போய்க்கொண்டிருக்கிறது

இரண்டிலொன்று.

என் புதிய நாடகம் / வெளி ரங்கராஜன்

courtesy K.S.Rajendran

courtesy K.S.Rajendran

ஆண்டாள் குறித்த நாடகத் தயாரிப்பொன்றில் நான் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.ஆண்டாளின்
கவிதைத்திறன்,கட்டற்ற நேசம்,உடல் கொண்டாட்டம் ஆகிய கூறுகளுக்குள் கவிதை,இசை மற்றும்
நடனம் சார்ந்த ஒரு பின்புலத்தில் ஊடாடிச் செல்லும் ஒரு நாடகம் இது.

இன்றைய பெண் கவிதை மொழியின் ஒரு வரலாற்றுக்குரலாகவே நான் ஆண்டாளை அனுமானித்தி-
ருக்கிறேன்.ஆண்டாளின் நேயமிக்க தீர்க்கமான பெண் குரலை வெளிப்படுத்தும்விதமாக முழுக்கவும்
பெண்கள் கொண்ட ஒரு வடிவத்தையே நான் திர்மானித்திருக்கிறேன்.ஆனால் அதற்கான மன அமைப்பும்
நடன உடலும் கொண்ட பெண்களைத் தேர்வது சுலபமானதாக இருக்கவில்லை.என்னுடைய நாடகங்களுக்கு
அடிப்படையாக நான் பெரும்பாலும் க்ளாசிகல் கதையாடல்களையே தேர்வு செய்கிறேன்.அவைகளில்
சமகால நுண்ணுணர்வுக்கான தளங்களை முன்னெடுப்பதே என்னுடைய நாடக செயல்பாடாக உள்ளது.ஒரு
நிகழ்தளத்தில் காப்பியங்களின் மறுவாசிப்பு என்பது இன்று உலகம் முழுவதும் முக்கிய அரங்க செயல்பாடாக
உள்ளது.அத்தகை நாடகங்களுக்கு இசையும் நடனமும் ஒரு வலுவூட்டும் அழகியல் பின்புலங்களாக இருந்து
வருகின்றன.

நவீன நாடகத் தளத்தில் செயல்படும் எனக்கு இத்தகைய நாடகங்களுக்குரிய நடிகர்களைத் தேர்வு செய்வது
என்பது எப்போதும் கடினமான செயலாகவே உள்ளது.நவீன நாடகத்தில் செயல்படும் கலைஞர்கள் பெரும்பாலும்
க்ளாசிகல் நாடகங்களுக்கு தேவையான இசை நடனப் பயிற்சி கொண்டவர்களாக இல்லை.அதனால் இத்தகைய
நாடகங்களுக்கு க்ளாசிகல் அடிப்படை கொண்ட நடிகர்களையே நாடும் நிலை உள்ளது.ஆனால் இக்கலைஞர்கள் நவீன நாடக அறிமுகம் பெற்றவர்களாகவோ,தாங்கள் பெற்ற கலைத் திறன்களின் நவீன பிரயோகங்கள் குறித்த பார்வை அற்றவர்களாகவோ உள்ளனர்.முக்கியமாக இலக்கிய வாசிப்பு மற்றும் நவீன சொல்லாடல்கள் குறித்த பரிச்சயங்கள் அற்றவர்களாக உள்ளனர்.இலக்கிய அடிப்படையும்,நுண்ணுணர்வும் தாங்கள் தேர்ந்துள்ள கலை
செயல்பாடுகளுக்கு மேலும் வலுவூட்டும் என்கிற பார்வை அவர்களிடம் இல்லை.இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதால் அவர்களைக் கண்டடைவது என்பது எனக்கு ஒரு
தொடர்ந்த தேடலாகவே உள்ளது.

இந்த பிரச்னையை ஒருவகையில் சமாளித்து இந்த நாடகத்தைத் துவக்கியிருக்கிறேன்.கவிதை,இசை,நடனம்
என ஆண்டாளின் உலகத்தில் ஊடுறுவிச் செல்லும்போது நாடகத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது.
நாடகத்தில் வரும் ஆண்டாளின் ஒரு கவிதை-
என்புருகியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந்தா பலநாளும்
துன்பக்கடல்புக்கு வைகுந்தனென்பதோர்
தோணிபெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறுநோயது
நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக்கருள கொடியுடை
புண்ணியனை வரக் கூவாய்.

வழிப்போக்கனின் குறிப்புகளிலிருந்து / நிஷா மன்சூர்

கவிஞர்  நிஷா மன்சூர்

கவிஞர் நிஷா மன்சூர்

****
ஒருமுறை திருவண்ணாமலைக்கும் அரூருக்கும் இடைப்பட்ட தண்டராம்பட்டு எனும் சிற்றூரை மாலைத்தொழுகை நேரம் கடக்க நேரிட்டது.பள்ளியைத் தேடித் தொழுதுவிடலாம் என்று பைக்கில் வந்துகொண்டிருந்த ஒரு இளைஞனிடம் மசூதி எங்கிருக்கு தம்பி என்று கேட்க,அவன் தெரிலண்ணா என்றுவிட்டு விரைந்தான்.பின்னர் ஜோடிபோட்டுக்கொண்டு எதிர்ப்பட்ட மூவரிடம் கேட்கலாமென்றால் அவர்கள் நெருங்கும்போதே டாஸ்மாக் வாடை காற்றில் ஆக்ரோசமாகக் கலக்க,இவங்ககிட்ட கேக்க வேணாம்ப்பா என்று முன்னகர்ந்து சாலையோரம் புர்கா அணிந்து நடந்துகொண்டிருந்த ஒரு பெரியம்மாவிடம் கேட்டபோது,
” திருவண்ணாமலை ரோட்டாண்ட போனீங்கன்னா லெஃப்ட்ல ஒரு ரோடு வரும் அது உள்ற போனா ஒரு பிரிட்ஜத் தாண்டுனதும் இருக்கு” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றபிறகும் பாலமேதும் வந்தபாடில்லை.அடுத்திருந்த பெட்ரோல் பங்க்கில் விசாரித்தபோது “இந்தாண்ட ஒரு கிலோமீட்டர் போனா இருக்கு,இல்லேன்னா நீங்க வந்த ரோட்டுலயே போனா தண்டராம்பட்டுலயும் இருக்கு” என்றாள் அங்கிருந்த சிறுமி.மீண்டும் வந்தவழியே திரும்பியபோது தாடிவைத்த ஒரு குடும்பஸ்தர் பைக்கில் புர்கா அணிந்த இரு பெண்குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தார்.அவரை மறித்துக் கேட்டபோது ” என்னை ஃபாலோ பண்ணுங்கோ பாய்” என்று முன்னே சென்றார்.
அவர்வழி சென்றபோது நாங்கள் வந்த ரோட்டுக்கு இடதுபக்கம் மறைவாக ஒரு சிறுபாதை சரேலெனப் பிரிந்தது.அதைத்தான் அந்தப் பெண்மணி சொல்லியிருக்கிறார், நாங்கள் கவனிக்காமல் மெயின் ரோட்டிலேயே சென்றிருந்திருக்கிறோம்.

கொஞ்சதூரத்திலேயே ஒரு சிறு சந்தைக் காண்பித்து “கடைசீல இருக்குங்க மசூதி” என்றுவிட்டு நன்றியையும் புன்னகையையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றார். அந்தச் சந்தின் கடைசியில் பள்ளி இருந்தது.ஆனால் கேட் இழுத்துச் சாத்தப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.சமயங்களில் சில பள்ளிகளில் பூட்டை வெறுமனே பூட்டிவிட்டு தாழ்ப்பாளைத் திறந்து வைத்திருப்பார்கள்.பரிசோதித்துப் பார்க்கையில் அப்படியெல்லாம் இல்லாமல் தெளிவாகப் பூட்டியிருந்தார்கள்.தலை முக்காடிட்டு ஒரு இளம்பெண் ஒருகையில் குழந்தையுடனும் இன்னொரு கையில் குழந்தைக்கான சோற்றுக் கிண்ணத்துடனும் வந்துகொண்டிருக்க ” என்னம்மா மசூதி பூட்டியிருக்காங்களேம்மா” என்றேன்.
“நமாஸ் படிச்சுட்டு ஹஜ்ரத் பூட்டிட்டு போயிட்டிருப்பாரு” என்றாள் அந்தப்பெண்.
” எங்களை மாதிரி வழிப்போக்கருங்க கொஞ்சம் லேட்டா வந்தா எங்கம்மா நமாஸ் படிக்கறது,உள்ள போறதுக்கும் வேற வழி ஏதும் இருக்கா..??இல்லன்னா வேறு யார்கிட்டயாவது ஸ்பேர் சாவி இருக்கா இவ்வளோ பெரிய மதில் சுவரா இருக்கே ஏறியும் குதிக்க முடியாதேம்மா” என்றதுக்கு
” அதெல்லாம் கெடையாது, ஒரு தடவ மைக் காணாமப்போச்சு அது அப்புறம் பைக் காணாமப்போச்சு அதுனால இப்பல்லாம் நமாஸ் படிச்சதும் பூட்டிடறாங்க” என்றாாள்.
காருக்கு வந்து தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு கொஞ்சம் பின்பக்கம் லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திவிட்டு கிளம்பும்போது பார்த்தால் அந்தப்பெண் தன் சோற்றுக்கிண்ணத்தை காரின் பேனட்டில் வைத்துவிட்டு மடியிலிருந்த குழந்தைக்கு வேடிக்கை காண்பித்தபடி சோறூட்டிக்கொண்டிருந்தாள்.
” ஏம்மா பதினாலு லட்ச ரூபா காரு உம்புள்ளைக்கு சோறு வைக்கற ஸ்டேண்டாம்மா,இதுக்கு நீ ஆயிரம் ரூபா ஃபீஸ் கொடுக்கணும் இப்போ” என்றேன் சிரித்தபடி.
” ஆய்ரம் ரூபா போதுமா,ஐயாயிரமா வாங்கிங்கண்ணா” என்று வெட்கப் புன்னகையுடன் சோற்றுக் கிண்ணத்தை எடுத்து நகர்ந்தபோது மடியிலிருந்த குழந்தை என்னைப் பார்த்து கெக்கலிபோட்டுச் சிரித்தது .வானில் ஒளிர்ந்த முழுநிலவு வெளிச்சத்தில் குழந்தையில் ஈர உதடுகளிலிருந்து நட்சத்திரங்கள் ஒளிர்ந்து மின்னின.

நேரம்தான் எல்லோரையும் பாடாகப் படுத்துகிறது. எதற்கும் நேரமில்லாதது போல பாவனை செய்துகொள்வது நாகரீகமாகவே மாறிவிட்டது.

ஒரு சுருக்கு வழியில் தினமும் கடக்கும் ஒரு எளிய ஈமுகோழி கொட்டகைக் காவலாளியிடம் ஈமுகோழிகள் அளிக்கும் மிகைப்படுத்தப்பட்ட வருமானம் குறித்துக் கேட்கவேண்டும் ஒருநாள் என்று நினைத்திருந்தேன். அப்படிக் கேட்பதற்கு ஒரு வாய்ப்பளிக்காமல் சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குடிசையும் அகற்றப்பட்டு கொட்டகையையும் சிதிலமாகிக் கிடந்தது

அடுத்திருந்த சின்னஞ்சிறு கிராமமொன்றில் இடப்புறம் என்னமோ சுவாமிகள் என்று மிச்சமான பெயிண்ட்டில் எண்ணெய் டின்னில் எழுதப்பட்ட சிறு குடிலில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பார்.சமயங்களில் அவரை கண்ணுக்குக் கண் சந்திக்க நேர்ந்தால் புன்னகைத்த முகத்துடன் இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதிப்பதுபோல சைகை செய்வார்.நவீன கார்ப்பரேட் சுவாமிஜிகளின் அதீத பாவனைகளின்றி இயல்பான கிராமத்துக் குறிசொல்லியின்/ சாமியாடியின் உடல்மொழியுடன் காலில் ஏதோ நோவுடன் தத்தித்தத்தி நடக்கும் நெற்றி முழுக்க திருநீறணிந்த அந்த பெண்மணியை என்றாவது ஒருநாள் வாகனத்தை நிறுத்திச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசி கைச்செலவுக்குப் பணமோ அல்லது போர்வை சேலை எதாகிலுமோ கொடுக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. நேர நெருக்கடியில்லாத அந்த ரிலாக்ஸான நாள் வராமலே போய்விட்டது.
கடந்த சில வாரங்களாக அந்தச்சிறு குடில் பூட்டப்பட்டு குப்பைகளண்டிக் கிடக்கிறது. அந்தக் குறிசொல்லி இறந்து மாசக்கணக்குல ஆச்சே என்று யாரும் சொல்லிவிடுவார்களோ என்று பதட்டமாக இருக்கிறது.

யாரைக் கடக்கிறோம் எதனைக் கடக்கிறோம் என்கிற புரிதல் இல்லாமலேயே வாழ்வின் நுணுக்கமான நெகிழ்வான எல்லாப் பகுதிகளையும் கடந்துசென்று கொண்டிருக்கிறோம்.என்றாவது ஒருநாள் ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கும்போது வெறுமையின் நிராதரவில் அரவமற்றுக் கிடக்கும் நெடுஞ்சாலையை மட்டும்தான் பார்க்கமுடியும் என்று தோன்றுகிறது.

#வழிப்போக்கனின் குறிப்புகளிலிருந்து……

சூரர்பதி கவிதைகள்

download (31)

1.வலசை

======

பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருப்பது இந்தப்பாதைதான்

எனக்கும் இந்த சூரியனுக்கும்

சத்தியத்தைத் தேடும் பாதையற்ற பயணமில்லை

பிழைப்பு நாடும் அன்றாடம்தான்

ஒரு நாளும் ஒரு குழந்தைக்கும் கையசைத்ததில்லை

வழித்துணையாய் ஒருவரும் ஏற்பில்லை

எதையும் பிரசவிக்காத நிலங்களின் மௌனம் திகைப்பூட்ட

காலை முதல் மாலை வரை

மலைகளை கலைத்து அடுக்குகிறேன்

எருக்கிலையில் ஓளிந்திருக்கும் சீமத்தம் வண்டுகளைத் தவிர

வழியெங்கும் இறைந்து ஓலிக்கும் சீத்தளாங் குருவிகளைத்தவிர

ஆறுதலாய் முளைத்துள்ள புற்களைத் தவிர

ஆயிரமாயிரம் பார்வைக்கரங்களை வீசீக்கொண்டேதான் செல்கிறேன்

பாழடைந்த வீடுகளின் இண்டு இடுக்கின் இருளைத் தாண்டி

பார்வைக்கரங்கள் பீதிக்குள்ளாகித் திரும்புகின்றன

பள்ளிகளின் கோரஸும்

கோயில்களின் பஜனையும்

கட்சிகளின் கோஷங்களும்

வானை முட்டி என்னை எட்டுகிறது

நீர் வற்றியும் காத்திருக்கும் கொக்காய்

என்னினிந்த பாதைதான்

எத்தனை குழிகள் மேடுகள் பள்ளங்கள் சரிவுகள்

அன்றாடங்களை அன்றாடங்களே அன்றாடமும் உற்பவிக்குமிந்த

சூரியனை துணைக்கழைத்து

ஓரேயோரு நாளாவது சுடுகாட்டில் வண்டியை நிறுத்தி

கரமைதுனம் பழக வேண்டும் – அப்போதாவது இந்த

வாழ்வு சுவாரசியமளிக்கிறதா என்று.


2. யாப்புக்குள் அடங்கா வாழ்வு

1

கண்ணில் நிறையுது வானம் – அதன்

கீழே உறைவது அடவி – அதன்

உள்ளிருந்து கேவுவது மயிலின் அகவல்

ஓரத்தே தெரிவது ஒரு குளம்

அங்கே துணிகளை வெளுப்பது வண்ணாத்தி

ஆங்கே அலை உசுப்பி கெளுத்தி – ஓரத்தே

நுணல் நிரம்பி ஓய்வெடுப்பது நீர்ப்பாம்பு

2

யாப்புக்குள் அடங்கா வாழ்வு

துள்ளத் துவள

தற்செயலாய் அணில் பிள்ளையை

பிடித்து விட்டது காகம்

கால்களுக்குள் இடுக்கி

குதறிக் குதறி

இதோ இந்த நண்பகலை

உண்டு பசியாறத் தொடங்கிவிட்டது

3

இதோ இந்தக் கவிதையின்

தாழ்வான மின்கம்பியில் கூடுகட்டி

அந்தரத்தில் ஊசலாடும் சிலந்திதான் என்ன செய்யும்

மழை பிசுபிசுத்து தூறி

இருள் கவியும்

இந்த மாலை ஒரு சாம்பல்மேடு

வயதேறிய பறக்க இயலா கினிகோழியே

மரத்தின் மேலிருந்து துயர சிம்பொனி ஒலிக்கத் தொடங்கிவிட்டது

முள்காட்டில் கைவிடப்பட்ட பூனைக்குட்டியாய்

இந்த இரவுக்கு இதுபோதும்

இதயத்தின் மீது பாறாங்கல்லை ஏற்றி வைக்க

4

என் செல்வக்குழந்தையே

இனிய பொன்வண்டே

செல்வ மூசே

பிரிய தேசமே

உன்னை அருகணைந்து விட்டேன்

பதறாதே உன்னைச் சமீபிப்பேன்

உன் பிஞ்சுப்பாதம் தொட்டுத்தூறுவேன்

அதுவரை கண்ணுறங்கு மகளே

சுழிக்கும் உன் அதரச் சுனையில் மீள

வரும் வழியில்தான் பார்த்தேன்

எனையீன்ற குட்டி நாயொன்றை

இந்தத் தார்ச்சாலை கூளமாக்கி புசிப்பதை

==

ரெட்டைவால்குருவி ( குறுநாவல் ) – ஆத்மார்த்தி

ஆத்மார்த்தி

ஆத்மார்த்தி

ரெட்டைவால்குருவி

1
இந்தக் கதையின் நாயகன் பெயர் ராஜராஜசோழன்.அவன் பிறந்த வருடம் 1970.அவருடைய தந்தையும் தாயும் அன்பில் குலாவியதன் எட்டாவது சாட்சியம் சோழனாகப் பிறப்பெடுக்க நேர்ந்தது.இதில் வேடிக்கை என்னவென்றால் நாலு அண்ணன் மூணு அக்காள்கள் என்று எப்போதும் கூச்சலும் கும்மாளமுமாக இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் அவரொரு விளையாட்டுப் பொம்மையாகவே வளர்ந்தார்.செல்வந்தத்துக்குக் குறைவில்லை என்பது ஒரு பக்கம்.அவருக்குப் பின்னால் அந்த வீட்டில் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்பதால் அவரது வருகைக்குப் பிற்பாடு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன் நிலை என்பது ஒரு கடைக்குட்டி என்றே பார்க்கப்படுவதை அவர் உணர்ந்து கொண்ட போது ராஜராஜசோழனுக்கு வயது பதினாறு ஆகி இருந்தது.
சோழன் அந்த வருடம் தான் எஸ்.எஸ்.எல்.சி எழுதி பெருத்த தோல்வி ஒன்றை அடைந்திருந்தார்.அந்த ரிசல்ட் மே பதினாறாம் தேதி வெளியாகி இருந்தது.தன் தோல்வி துக்கத்தை இரண்டு தினங்கள் கொண்டாடி விட்டு பதினெட்டாம் தேதி தான் வெளியே வந்தார் சோழன். தமிழில் மாத்திரம் எழுபத்து ஏழு மார்க்குகள் வாங்கிய சோழன் ஆங்கிலத்தைத் தன் உயிர் மூச்சைக் கொண்டு எதிர்த்திருந்தார்.வெறும் ஏழு மார்க்குகள் தான்.அதும் அந்தப் பட்டியலிலேயே கம்மி மார்க்குகள் அந்த ஏழு தான்.கணக்கு அவருக்கு வருமா வராதா என்பதைப் பற்றிய பிணக்கு அவருக்கு இருந்தது.அதில் முப்பத்தோரு மார்க்குகள் பெற்றிருந்தார்.ஒருவேளை கூட்டல் மிஸ்டேக் ஆகியிருக்கும் என்று ஒரு தரப்பாரும் இல்லை இல்லை.இது பரீட்சைகளைத் திருத்துவதில் ஒரு மெத்தட் என்று ஒரு தரப்பாரும் பேசினர்.அவர்களது சொந்த ஊரான நல்லூர்க்கோட்டையில் அதுவரைக்கும் எத்தனையோ பேர் எசெல்ஸி எழுதிப் பாஸ்களும் ஃபெயில்களும் ஆகி இருந்தாலும் இப்படி முப்பத்தி ஒரு மார்க்கு வாங்கி ஃபெயிலான ஒரே ஒருவராக சோழனைத் தான் சுட்டினர்.அதனாலேயே சோழன் இன்னம் நாலு மார்க்குக்குப் படிக்காமல் போனது பெரும்பிழை என்று வாதிட்டனர்.இன்னொரு தரப்பு இது அதிகார வர்க்கத்தின் ஆணவம் என்றது.இதைக் கேட்டதும் சில்க் ஸ்மிதா படத்தை மறைத்துக் கொண்டு சிங்கப்பூர் சலூன் பெஞ்சியில் அமர்ந்தபடி அப்படித் தனக்கு ஆதரவான பெரும் கூற்றினைப் பகர்ந்தது யார் என்று ஆவலோடு பார்த்தார் சோழன்.
அதான் நான் சொல்லிட்டேன்ல..?அவம் பாஸ் தாம்லே..அவன் விதி அவனோட பேப்பர் போய்ச்சேர்ந்த எடம் கெரகம்குறேன்.அந்த வாத்திக்கு பொஞ்சாதிக்கும் சண்டையா இருந்திருக்கும்.அவன் சின்ன வயசில எத்தனை டேக்கு வாங்குனாம்னு யாரு கண்டது..?அதுமில்லாட்டி தங்கத்துக்கு பதிலா கவரிங்க சாட்டிருப்பான் மாமன்மச்சினன்..அங்கன எதுத்து பேச வக்கில்லாம இந்தப் பய்யன் பேப்பர்ல காட்டிட்டான் அவனொட கோபத்தை..அதாம்லே விசயம் என்றார் ஆர்ப்பாட்டமாக..
எலே இங்கன வாடா எட்டாவதா பொறந்தவனே என்று அழைத்ததும் போய் நிற்க வேண்டியதாயிற்று.அவன் கேட்காமலேயே அவன் வழக்கை எடுத்து வாதிட ஆரம்பித்திருந்தவர் வேறு யாருமில்லை.சோழனின் அப்பாவோடு பியூஸி வரை படித்த கார்மேகம்.நல்லூர்க்கோட்டைக்கு அருகாமை நகரமான உலகளந்த ராஜபுரம்என்கிற ராஜபுரம் கோர்ட்டில் பேர் போன வக்கீலான சம்சுதீன் அகமதுவின் ஆஸ்தான குமாஸ்தா என்கிற பதவியில் பல காலமாய் இருந்து வருபவர் என்பதால் நல்லூரில் அவருக்கு சம்சுதீன் அகமதுவிற்கு நிகரான சபை மரியாதைகள் கிட்டி வந்தன.
உங்களுக்குத் தெரியாதா..?எவ்ளோ பெரிய ஆளோட இருக்கீர் என்று கும்பிடுவார்கள்.சம்சுதீன் பாய்க்கு சற்றும் தெரியாமல் அந்தக் குறுநிலத்தை ஆண்டுகொண்டிருந்தார் கார்மேகம்.அதாவது நல்லூர்க்கோட்டைக்குள் நுழைந்து விட்டாரானால் தானொரு வக்கீல் என்ற எண்ணம் கூட அல்ல தானொரு ஜட்ஜ் என்ற எண்ணம் தான் அவருக்குள் மேலோங்கும்.அவர் அப்பியர் ஆகிறார் என்றால் பெரும்பாலான வழக்குகள் அவரிடமே சரண்டர் ஆகும்.நீங்க சொல்றது தான் சரி என்று திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு அவருக்குள்ளேயும் ஆமாம்ல நாஞ்சொல்றது தான் சரி என்றே தீர்மானமாயிருந்தது.வாரா வாரம் சனி ஞாயிறுகளில் மாத்திரம் தான் அவர் நல்லூருக்கு வருவார்.,கார்மேகமும் பெரிய சம்சாரி தான்.வசதி கொஞ்சம் சோழன் குடும்பத்தை விடக் குறைச்சல்.ஆகவே விவசாய வியாஜ்ஜியங்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்.எலே என்னை ஏமாத்த பாக்குறியா..?இத்தனை மாமரம் இத்தனை மாங்காய் எதும் தப்பக் கூடாது தெரியுதா என்று அதட்டிக் கொண்டே இருப்பார்.என் மேல நம்பிக்கை இல்லையா ஆண்டவரே என்று குத்தகை தாரன் சொல்லும் வரை அவனை சந்தேகப் பட்டுவிட்டு அதுக்கில்லடா ஈஸ்வரா போன வாரம் ஆழ்வார் அக்ரகாரத்துலேருந்து பங்கஜம் மாமி வந்து மாயெலை வாங்கிட்டு போனாங்களா இல்லையா..?அது கணக்குலயே வர்லியே என்று சன்னமான குரல்ல கேட்க என்னங்கய்யா சும்மா பறிச்சிட்டு போன மா எலைய எண்ணனும்னா சொல்றீக என்று திருப்ப அடப்பாவி எட்டணாவாச்சும் வாங்கிருக்க வேண்டாமாடா என்று அங்கலாய்த்தவர் இனிமே யாராச்சும் கேட்டா மா எலை எட்டணா வெலை குடுத்தாத் தான் தருவேன்னு கண்டிப்பா சொல்லிடு என்று அவனை ஒருதடவை மா இலைகளை ரெண்டு மூணுதடவை எனப் பார்த்துக் கொண்டே இதுகளை எல்லாம் எப்படிக் கணக்கு வச்சிக்கிறது என்று தன்னை நொந்தபடி திங்கட்கிழமை அதிகாலை கிளம்பி ராஜபுரம் செல்வார் கார்மேகம்
தோட்டத்தைப் பராமரிக்கிறவனுக்கு சமர்த்துப் போதாது என்பது அவரது முதல் நம்பிக்கை.மாவிலைக்கும் ஒரு விலை உண்டு என்பது இரண்டாவது.எப்படியானாலும் தனக்குப் பிதுரார்ஜிதமாக வழங்கப்பட்ட ஏழு ஏக்கர் நிலம் அதன் உள்ளே இருக்கக் கூடிய ஆழத்தின் மறுபகுதி உலகத்தின் எந்த நாட்டின் எந்த இடத்தின் ஏழு ஏக்கரைப் போய்ச் சேர்கிறதோ அதுவரைக்குமான கனிம வளம் தாதுக்கள் எரிவாயு பெட்ரோல் டீஸல் க்ரூடாயில் என எல்லாமும் தனக்குத் தான் சொந்தம் என்பது அவரது மூன்றாவது மாபெரும் நம்பிக்கை.மேலும் அந்த ஏழு ஏக்கருக்கு சமமான வானமும் அவருடையது தானே..?தனக்குச் சொந்தமான பல கோடி பெறுமிதமுள்ள அந்த நிலத்திலிருந்து கிடைப்பது எதுவானாலும் அது சொற்பசொச்சம் தான் என்பது குறித்து மாபெரும் அங்கலாய்ப்பு அவருக்குள் உண்டு.அதன் விளைவாகவே கிடைத்த வரைக்கும் லாபம் என்று அலைவார்.எதெதையோ கண்டுபிடிக்கிறாங்கியள் இந்த மா இலையிலிருந்து தைலம் சோப்பு என்று எதாவது உருவாக்கத் திராணி இருக்கிறதா.?மட சாம்பிராணிகள் என்று உரக்க வைதார்.யாரை வையுறீய என்று சேர்மக்கனி எதிர்த்துக் கேட்டாள்.கார்மேகத்துடன் வாழ வந்த இல்லற நல்லாளான சேர்மக்கனிக்கு எப்போதும் ஒரே நம்பகம் தான்.அது கார்மேகத்துக்குத் துப்புப் பற்றாது.அல்லது துப்பே கிடையாது என்பது அது.
உன்னை இல்லட்டீ.நா கெடந்து மொனகுறேன் என்றதும் சமாதானமாகாமல் எங்க வீட்டாளுகளை வையுறதே உங்களுக்கு ரசமாப் போச்சி என்று விளக்குமாற்றை அதனிடத்தில் இருத்தி விட்டு வெடுக்கென்று தோளில் முகத்தை வெட்டியவாறு உள்ளே போனாள்.அடுத்து காப்பி தரவேண்டிய ஸ்தானாதிபதியாக சேர்மக்கனி இருந்தபடியால் அவசரமாக ஒரு சமாதானத்தை உண்டுபண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்த கார்மேகம எடீ நாஞ்சொன்னது எதெதையோ கண்டுபிடிக்கிறாங்கியள்ல அந்த விஞ்ஞானிகளை.உன் சொந்தக்காரங்களை இல்லட்டீ என்றார்.இதை இறைஞ்சுகிற பிரார்த்தித்தலாய்த் தான் சொன்னார்.அதற்கு காப்பியை ஆற்றிக் கொண்டே எதிர்ப்பட்ட மனையரசி க்கும்…எல்லாந்தெரியும் என்னை வாயடைக்க எதாச்சும் ஞானி கோணின்னு பேசிடுவீகளே என்று மேலும் கோபத்தோடு அவர் முன் வட்டையையும் தம்ப்ளரையும் வைத்து விட்டுக் கிளம்பினாள்.

இனி அவளைச் சமாதானம் ஆக்க நேரம் பிடிக்கும் என்பதை தன் அத்தனை வருஷ சம்சார அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்ட கார்மேகம் சரித்தான் கெளம்பி சாவடிப் பக்கம் சென்று வரலாம் என வந்தார்.அவருக்கு எப்போதெல்லாம் மனசு ஈரங்குறைந்து நடுக்கம் கொள்கிறதோ அப்போதெல்லாம் தன்னை வணங்கும் ஊர்ச்சாவடிக்கு வருவதும் சார்ஜ் செய்து கொள்வதுமாய் பல வருடங்களை அப்படித் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.இன்னிக்கு என்னவே ப்ராது எனக் கேட்காத குறையாய் வந்ததும் வராததுமாய் சின்னப்பய்யன் .ராஜராஜசோழனது பத்தாப்பு மார்க்கு குறித்த பஞ்சாயத்தில் நுழைந்து தான் அப்படியொரு அதிரடி ஸ்டேட்மெண்டை தந்து சூழலைத் தகர்த்தார்.
உங்கொப்பன் எப்படி சவுக்கியமா என்று கேட்பதன் மூலமாய்த் தனக்கு நெடுநாள் வேண்டப்பட்டவன் எதிரே நிற்கும் குமரன் என்பதை ஊருக்கு உணர்த்தினார்.அவனை அடையாளம் தெரியாத சிலரும் கூட ஓரிரு புன்னகைகளை நல்கினர்.அது சோழனுக்கு பெரும் கூச்சத்தை உண்டாக்கிற்று
நல்லா இருக்கார் மாமா என்ற சோழன் சரி நா கெளம்புறேன் என்றான்.இர்றா போலாம்.நாஞ்சொல்றது புரியுதா..?மத்த எல்லாத்துலயும் பாஸ் ஆன நீ சரியா கணக்குல அதும் முப்பத்தொண்ணு எடுத்திருக்கேன்னா என்ன அர்த்தம்..?திருத்தினவன் சரியாத் திருத்தலை.எளவு எட்டு மார்க்கை குறைச்சு இருபத்தியேளுன்னு போட்டிருந்தான்னா சரி பெயிலுன்னு சமாதானம் ஆகலாம்.இல்லை நாலைக் கூட்டி பாஸ்னுல்ல போட்டிருக்கணம்..?இவன் பாக்கெட்டுலேருந்தா தாரான்..?இன்னம் ரசிக்கத் தேடிருந்தாம்னா எதாச்சும் எடங்கள் இல்லாமயா போயிருக்கும்.?பரீச்சப் பேப்பரை கருணையோட பார்த்தா நூத்துக்கு எரனூறு மார்க்குக் கூடத் தரலாம்..எல்லாம் கெரகம் காலநேரம் சரியில்லாட்டி இப்படித் தான் நடக்கும்.நீ விடக் கூடாது.உங்கப்பன் கிட்ட சொல்லி மறு கூட்டுக்கு அப்ளை செய்யி..எல்லாம் நல்ல ரிசல்ட் வரும்.நம்பிக்கையா இருக்கணும் என்ன எனும் போது அவர் தான் லேசாய்த் தழுதழுத்தார்.அந்தக் காலத்தில் பியூசி ரெண்டு அட்டை வாங்கிய தன் ஜாதகம் அவருக்கு தோணிற்றோ என்னவோ.

கல்லுளி மங்கன் போலத் தான் நின்று கொண்டிருந்தான் சோழன்.தமிழ்ல எவ்ளோ என்றார் கார்மேகம்.எழுபது மாமா என்றான்.குரல் ஜாக்கிரதையாயிற்று.கணக்கில் காய்த்ததும் தமிழில் பழுத்ததும் இருவேறு நிஜங்கள்.இனி மிச்ச மூணு சப்ஜெக்டுக்குள் போனால் தன் லட்சணம் நல்லூர்க்கோட்டை முச்சூடும் பரவிக் கெடுமே என்று பதற்றமானான்.இன்னொரு பக்கம் நாம சொல்லாட்டி அட்டையை வாங்கியா பார்க்கப் போறாங்க..?சும்மா மிச்சத்துல எல்லாம் பாஸ்னு சொல்லிட வேண்டியது தான் என்று முடிவு செய்தான்.
இங்கிலீசுலே என ஆரம்பிக்கும் போது சரியாக ஜீப் வந்து நின்றது.வக்கீல் சம்சுதீன் பாயின் அலுவலக ஜீப்பை அவரது ட்ரைவர் மணி கொணர்ந்திருந்தான்.
ஐயா வரச்சொன்னாவ என்றான்.சொற்சிக்கன மணி அவன்.
இவர் எதும் பேசாமல் எல்லாரையும் பொதுவாய்ப் பார்த்து வணக்கம் வைத்தவாறே ஜீப்பில் முன்பக்கம் ஏறிக் கொண்டார்.வழக்கமாக எப்போதும் எந்த ஸ்டாஃபாக இருந்தாலும் ஜீப்பில் முன் ஸீட்டில் ஏற மாட்டார்கள்.கார்மேகமும் அப்படித் தான்.இருந்தாலும் மணியை அப்பைக்கப்போது சிகரட் எல்லாம் தந்து தயாரித்து வைத்திருந்தார்.தனக்கு அனுசரணையாக ஒருவன் வேண்டும் அதும் அய்யாவின் ஆஸ்தான வாகன ஓட்டி மணி தன் ஆளாக இருக்கணும் என்பது அவரது கனவின் திட்டம்.அதனால் தன் ஊரிலிருந்து ராஜபுரம் செல்லக் கிளம்புகையில் முன் பக்கம் ஏறிக் கொள்வார்.ஊர் தாண்டியதும் சரியாக ஒரு மைல் தாண்டியதுமே ஒண்ணுக்கிருக்கணும் என்று மரத்தடி எங்கேயாவது நிறுத்தி விட்டு பின்னால் மாறிக் கொள்வார்.எதற்குமே ஏன் எனக் கேட்க மாட்டான் மணிப்பயல்.ஊரார்கள் கண்ணுக்கு ஏதோ சம்சுதீன் பாய்க்கு அடுத்த ஸ்தானாதிபதி கார்மேகம் என்றாற் போல தோற்றமளிக்கும்.அது தானே அவர் லட்சியம்.
நல்லவேளை கிளம்பினார் ஹப்பா என்று தனக்குள் மூச்சு விட்டுக் கொண்ட ராஜராஜசோழனுக்கு அடுத்த கண்டம் பகவதியண்ணன் ரூபத்தில் வந்தது.
நீ எங்கப்பே இருக்க உன்னை உங்கப்பார் உடனே அளச்சிட்டு வரச்சொன்னார் என்றதும் சட்டென்று நியாபகம் வந்தவனாய் நா அப்பறம் வரேன்.முடி வெட்டணும் என்று
சிங்கப்பூர் சலூனுக்குள் நுழைந்து முதல் ரொடேசன் சேரில் அமர்ந்து கொண்டான்.கட்டிங்கா சேவிங்கா என்று பழக்க தோசத்தில் கேட்டான் புதிதாக வேலைக்கு சேர்ந்தவன்.இவன் ஙே என விழிக்க முதலாளி கிட்டு வந்து அவனை சிவபார்வையால் எரித்துவிட்டு கேக்கான் பாரு கொளந்தை கிட்ட என்றவாறே உக்காரும் துரைவாள்..இதோ வந்தாச்சி என்று சொல்லி விட்டு கத்திரி இத்யாதிகளை எடுக்க உள்பக்கம் சென்றார்.
கண்ணாடியில் இன்னமும் பெரிய தோற்றத்துக்கு வந்துசேராத தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சோழன் திடீரென்று ஒலித்த ரேடியோ செய்தியால் ஒரு கணம் தடுமாறினான்.
தமிழ்நாட்டில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரியப்படுத்துகிறார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி எம்.எல்.சியாக இருப்பதாலேயே மேலவையைக் கலைத்திருப்பதாகவும் இது முழுவதுமாக அதிமுக அரசின் விஷமத்தனம் என்றும் பேராசியர் அன்பழகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரியப்படுத்தினர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்ஜி.ராமச்சந்திரன் இது நெடுங்காலமாக பரிசீலிக்கப் பட்ட ராஜாங்க முடிவு என்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக எடுக்கப் பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் திரு கருணாநிதி உள்ளிட்ட யாரும் தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவைக்கு வருவதைத் தான் ஆட்சேபிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…..”
இவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தன் அலங்காரவித்தையைத் தொடங்கினார் கிட்டு.
எதிரே வாசலுக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த பரசுராமன் வாத்தியார் என்னமா பதில் சொல்லிருக்கார் பார்த்தீங்களா என்றார்.கிட்டு திமுக அனுதாபி என்னத்தை வாத்தியாரு.?வாத்தியாருன்னா ஒழுங்கா நேர்மையா மார்க்கு போடணும்வே.எடுத்த மார்க்கை குறைக்கிறதா நல்ல வாத்திக்கு அளகு..?என்ன இருந்தாலும் கருணாநிதி எம்மெல்சியா இருக்கச்சே மேலவையைக் கலைச்சது எந்த வகையிலயும் நாயமில்லை.நாளைக்கு ஒர்த்தருக்கொருத்தர் முளிச்சிக்கிடணும்ல..?ஒரு நட்புக்காகவாச்சும் இப்பிடி பண்ணாம இருந்திருக்கலாம் என்று லேசாய்க் கலங்கினார்.
அப்போது அங்கே வந்து சேர்ந்த எஸ்.எம்.மில்ஸ் யூனியன் லீடர் ஜேம்ஸூம் சேர்ந்து கொண்டார்.நாங்க மறுபடி வராமயா போவம்..?திரும்பவும் மேலவையைக் கொண்டாந்தே தீருவம்..பார்க்கத் தானே போறீங்க என்று ஆளே இல்லாத திசையில் சொல்லிக் கொண்டிருந்தார்.
சோழனுக்கு எம்ஜி.ஆரும் மார்க்கு கம்மியா போடும் வாத்தியார் என்ற தகவலே அதிர்ச்சியாக இருந்தது.அதற்கு முன்பே கார்மேகம் சொன்னதிலிருந்தே தனக்கு வழங்கப்பட்ட்ட அநீதியாகவே கணக்கில் தனக்களிக்கப்பட்ட முப்பத்தி ஒரு மார்க்கைக் கருத ஆரம்பித்திருந்தார்.எதிர் வீட்டு ஜக்கு என்கிற ஜகன்னாதனில் தொடங்கி ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் வரைக்கும் பலரின் பன்னெடுங்காலச் சதி தான் தனக்குக் கணக்கில் இழைக்கப் பட்ட அநீதி என்பது சோழனுக்குத் தோன்றிய நம்பகம்.அதே நேரம் அதை விடக் குறைவாகத் தான் எடுத்த மிச்ச பேப்பர் மார்க்குகள் எந்த நாட்டின் சதித் தலையீடும் இல்லாமல் பெற்ற தன் சொந்த ஜாதக விசேசங்களின் பலாபலன் தான் என்பதையும் அவர் மனம் ஒத்துக் கொள்ளாமல் இல்லை.
முடி வெட்டிக் கொண்டு வேறொரு புதிய மனிதனாக அவதரித்த சோழன் நேரே தன் தந்தை முன் சென்று நின்றார்..வாடா எட்டுக்குட்டி என்றார் தந்தை.அவரது வாஞ்சை சோழனை எரிச்சலூட்டியது.தந்தை மகாலிங்கம் மாபெரிய ரசனைக்காரர்.நல்லூர்க்கோட்டை தாண்டி உலகளந்த ராஜபுரம் வரைக்கும் அவர்கள் குடும்பம் அதிபிரபலம்.எப்படி என்றால் தன் பிள்ளைகளுக்கு மகாலிங்கம் சூட்டிய பெயர்களாலே தான்.
குண்டப்பா விஸ்வநாத் வெங்கட்ராகவன் கவாஸ்கர் மதன்லால் என நாலு அண்ணன்கள்.லலிதா பத்மினி ராகினி என மூன்று அக்காக்கள்.என ஏழுக்கு அப்பால் எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததும் என்ன பேர்வைக்கலாம் என்று நிசமாகவே குழப்பமானார்கள்.தன் விருப்பப் படி கிரிக்கெட் வீரர் பேர்களை வழக்கம் போல முன் வைத்தார் மகாலிங்கம்.இல்லையில்லை தம்பிக்கு நாங்க தான் பேர் வப்பம் என நாலு அண்ணாஸ் ஒரு அக்காஸ் எனப் பேசத்தெரிந்த பேச்சுரிமையாளர்கள் கொடி பிடித்து ஆளுக்கொரு பேரை டப்பாவில் போட்டுக் குலுக்கினர்.அதிலிருந்து வெளிப்பட்ட பேர் தான் ராஜராஜசோழன் எனும் நாமகரணம்.இந்த இடத்தில் தான் படத்தில் பேர் போடும் படலம்.
இதில் தன்னை எட்டுக்குட்டி என்று அழைப்பது எந்த விதத்தில் நியாயம் என்றறியாத சோழன் அப்பா முன் உர்றென்று நிற்க ஏண்டா குட்டி உம்முன்னு இருக்கே..?என்றதும் என்னவோ நியாபகத்தில்
யப்பா எம்ஜி.ஆர் வாத்தியாராப்பா..?என்றார் சோழன்..
அவரை வாத்தியாருன்னு செல்லமா கூப்டுவாங்கப்பா…பள்ளிக்கூட வாத்தியாரு இல்லை.அவரு வாத்தியாருக்கெல்லாம் வாத்தியாருடா என்ற மகாலிங்கம் எம்ஜி.ஆர் பற்றித் தன் மகனுக்கு சொல்லக் கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பூரித்தார்.
என்னைய எந்த வாத்தியாரு மார்க் கம்மியா போட்டு பெயிலாக்குனாருன்னு தெரிஞ்சுக்க முடியுமாப்பா.?என்றார் சோழன்.
தெரிஞ்சு என்ன பண்ணப் போற..?
அதை விடுப்பா மறு கூட்டுக்கு அப்ளை பண்ணட்டா?கார்மேகம் மாமா சொன்னாப்டி
மறுகூட்டுக் கூட்டி ஒருவேளை இருக்கிற முப்பத்தி ஒண்ணும் கொறஞ்சிட்டா..?பணம் வேஸ்ட்டு மனசும் வலிக்கும்ல
அதும் சரியாத் தான் பட்டது 1989 ஆமாண்டு மே மாதம் வெளியான எஸ்.எஸ்.எல்.சி ரிசல்டுகள் குறித்து உங்கள் யாருக்கும் எந்தவிதமான அபிப்ராய பேதங்கள் இருக்கலாம் இல்லாமல் போகலாம்.ஆனால் அது ஒரு உலக அதிசயத்தின் தோற்றுவாய்.ஒரே அட்டெம்டில் நாலு பேப்பர்களிலும் நாற்பதுக்கு அதிகமான மார்க்குகள் பெற்றுத் தன் இரண்டாவது அட்டையோடு பத்தாப்பு படிப்பை முடித்திருந்தார் சோழன்.தனது மதிப்பெண் சான்றிதழில் இருக்கும் தன் பெயர் உள்ளிட்ட விபரங்களை எல்லாம் பல முறைகள் சரிபார்த்த பிற்பாடும் கூட நம்பிக்கை வராமல் இது தன் சர்ட்டிபிகேட்டுத் தானா.?இதிலிருக்கும் மார்க்குகள் தனக்கு சொந்தமாய் வழங்கப்பட்டவை தானா என்றெல்லாம் பலவிதமாய் சிந்தித்து அதன் நம்பகத் தன்மை குறித்த எந்தவிதமான முடிவுகளுக்கும் வர இயலாமல் சரி இதான் உண்மையா இருக்கும் போல என்று நம்பத் தொடங்கினான்.

2.ஒருவழியாகப் பதினோறாம் வகுப்பு படிக்கிறதற்காக ராஜபுரம் ஹைஸ்கூலில் விண்ணப்பித்து வக்கீல் சம்சுதீன் பாய் லெட்டர் கொடுத்த ஒரே காரணத்துக்காக அந்தப் பள்ளியின் சட்ட ஆலோசகர் அவர் என்பது மாத்திரமல்ல.அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும் கூட.அடுத்து பள்ளியின் தலைவராக அவரைத் தான் அன் அபோஸ்ட் ஆக தேர்ந்தெடுக்க உள்ளதாக அப்பா யாரிடமோ ஃபோனில் சொல்லி விட்டு அப்படியான பெருமைகளைக் கொண்ட அவரது சிபாரிசுடன் படிக்கத் தொடங்கி இருப்பதனால் தன் எட்டுக்குட்டி பிரமாதமாக வருவான் என்று தானே சொல்லி விட்டு எதிராளியின் பதில் பற்றி யாதொரு அபிப்ராயமும் கொள்ளாமல் கட் செய்தார்.
ராஜபுரம் ஐஸ்கூலில் நாலாவது க்ரூப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்ட சோழன் இயல்பாகவே தன் உயரம் காரணமாக கடைசி பெஞ்சியில் சென்று ஸெட்டில் ஆக அங்கே உடன் வந்தமர்ந்தான் நடேசன்.உன் பேரென்ன எனக் கேட்ட போது நட்டேஷ் என்றான்.இரண்டொரு ஷ் அழுத்தியே சொன்னான்.எழுதும் போது நடேசன் என்று தான் எழுதினான்.பதிலுக்கு தன் பெயரைச் சொன்ன சோழனைப் பார்த்து இதான் நெசம்மாவே உன் பேரா ஆமடா நா என்ன பொய்யா சொல்றேன் என்றதற்கு கோச்சுக்காத…எத்தினியோ பேர் இருக்கு.இதும் ஒரு பேர்னு விட்டுறமுடியுமா..?எம்மாம் பெரிய ராசா பேரு தெரியும்ல என்றான்.அப்போது தான் தன் பெயரைச் சுமக்க முடியாமல் திணறினான் சோழன்.
ஒரு நாள் ராஜராஜ சோழன் நான் என்று பாட்டுப் பாடினான் நடேஷ்.ஏண்டா கிண்டல் பண்றே என்றதற்கு நீ இந்தப் படம் பார்த்ததில்லயா..மோகன் ஒரு புளுகுணி.கல்யாணம் ஆகலைன்னு பொய் சொல்லி ராதிகாவோட காதலாய்டுவாப்ல…அர்ச்சனா மொதல் தாரம்.ஏக தமாஷா இருக்கும்.ஒரே நேரத்ல ரெண்டு பேரும் கர்ப்பமாய்டுவாங்க…என்று கெக்கெக்கே எனச் சிரித்தான்.ரெண்டு பேரும்னா..?என அப்பாவியாய்க் கேட்ட சோழனுக்கு நீ வளர்ந்தியா இல்லை வளராம அதே எடத்துல நிண்டுட்டிருக்கியா எனக் கேட்டவாறே அந்த கணம் முதல் இரு உன்னைய நான் பலவிதமாக் கெடுத்துப் பட்டையக் கெளப்புறேன் என நல்லாசானாக மாறினான் நடேஷ்.
அது முதல் நடேஷே தன் கூட்டுக்காரன் என்றானான் ராஜராஜசோழன்.பன்னிரெண்டாவது வகுப்பு எழுதி எப்படியோ தக்கி முக்கி பாஸ் ஆன பிறகு மதுரையில் அஜ்மா கல்லூரியில் பி,ஏ சேர்ந்தார்கள் இருவரும்.ஆச்சர்யமாய் பீ.ஏ பாஸ் செய்து எம்.ஏ சேர்ந்தது வரை காலம் உருண்டு உருண்டு ஓடியது.
ஆஸ்டலில் தங்கிப் படிக்க வேண்டி இருந்தாலும் எப்போதெல்லாம் லீவு கிடைக்குமோ அப்போதெல்லாம் நல்லூர் போய்விடுவார்கள்.அதில் மாத்திரம் நடேஷூம் சோழனும் ஒரு பொழுதும் முரண்பட்டதில்லை.மற்ற எதுவாக இருந்தாலும் இரண்டு பேரும் சண்டை தான் சச்சரவு தான்.எம்.ஏ முடித்தது 1996 ஆமாண்டு ஏப்ரலில்.சரி போதும் படித்தது என்றான பின் ஊரிலேயே எதாச்சும் வேலை பார்க்கலாமா எனக் கிளம்பினான்.பெப்ஸி ஏஜன்சி பெட்ரோல் பங்க் சிமெண்ட் டீலர்ஷிப் என பட்டையைக் கிளப்பி வந்த நவரத்தின பாண்டியன் என்ற தொழில்மேதை தன் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க ஒரு தளபதி வேண்டும் எனத் தன் வக்கீலான சம்சுதீன் பாயிடம் அங்கலாய்த்தது ஒரு கிருஷ்ணாஷ்டமி அன்று.அதென்னவோ பாய் அன்றைக்கு ரொம்பவே நல்ல மூடில் இருந்தபடியால் அவர் தன் சொந்தத் தளபதியான கார்மேகத்தை அழைத்து யாராச்சும் நம்பிக்கையான ஆள் இருக்கானாவே எனக் கேட்டது யாருக்கு எப்படியோ ராஜராஜசோழனுக்கு நல்ல நேரமாய் இருந்திருக்க வேண்டும்.
நம்ம மகாலிங்கம் மகன் ராஜான்னு ஒரு பய்யன் இருக்கான்.நல்லா படிச்சவன்.நல்ல பய்யன் ஒரு கெட்டபளக்கமும் இல்லை அதிர்ந்து பேசமாட்டான்.ஜம்முன்னு இருப்பான் என்று அடுக்கிக் கொண்டே போனார் கார்மேகம்.அதற்குத் தன் கையிலிருந்த ஃபில்டர் சிகரட்டை சுண்டியபடியே “ஸ்டுப்பிட் நானென்ன நவரத்தின பாண்டியன் மகளுக்கு மாப்பிள்ளையா பார்க்க சொன்னேன்..?சம்பளத்துக்கு தக்கன வேலை பார்ப்பானா ஒளுக்கமானவனா..தட்ஸ் மை நீட்.சரியா..?ஸ்டுப்பிட்” என்றார்.இதுவரை அவர் கார்மேகத்தைப் பார்த்துச் சொன்ன ஒவ்வொரு ஸ்டுப்பிடுக்கும் நாலணா வீதம் அவரே மறுபடி கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு நூறு ஸ்டுப்பிட் வீதம் லீவு நாளெல்லாம் கழித்தாலும் வருஷத்துக்கு முன்னூறு நாட்கள் ஆக முப்பதாயிரம் ஸ்டுப்பிட் இதோடு நாற்பது ஆண்டுகளாக வேலை பார்ப்பவர் என்பதால் கிட்டத் தட்ட பன்னெண்டு லச்சம் ஸ்டுப்பிட் சொல்லி இருப்பார்.அதற்கு மூணு லச்சமாவது தந்தாக வேண்டும்.சம்மந்தமே இல்லாமல் கார்மேகத்துக்குத் தான் விற்றுக் கை மாற்றிய மாந்தோப்பின் உதிர்ந்த இலைகள் மனமுன் ஆடின.அந்த இலைகளைப் போலத் தான் இந்த ஸ்டுப்பிட் என்ற பதமும்.என்ன பிரயோசனம்…தண்டமாய் யாதொரு பயனுமில்லாமல் அல்லவா இதைக் கேட்க வேண்டி இருக்கிறது..?
ஆனால் அவர் அறியாத உண்மை என்னவென்றால் ராஜா என்று அவர் சுருக்கிச் சொன்ன ராஜராஜசோழனை மாப்பிள்ளையாக இந்தப் பிறவியில் அடைய வேண்டிய பாக்கியமோ அல்லது எதோ ஒன்று நவரத்தின பாண்டியனின் மகள் ஜாதகம் வழியாக அவரது ஜாதகத்திலும் எழுதப்பட்டிருந்ததோ என்னவோ.வேலைக்கு சேர்ந்த ரெண்டாவது நாளே சாவி கொடுக்க சென்றவன் வீட்டு வாசலில் கதவைத் தட்டி விட்டு நிற்க திறந்தது அவள்.நீங்க என்று தயங்கியவளிடம் நான் ராஜா என்றான்.என்னவோ பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஜார்ஜ் என்றாற் போல் அவன் சொன்னான்.ஏன் என்றே இந்த உலகத்தில் அறுதியிட முடியாத விசயங்களில் ஒன்று கதையின் நாயகி நாயகன் அறிமுகக் காட்சியில் மாத்திரம் அவனைக் கண்டதும் கொள்கிற வெட்கம்.அதும் முகமெல்லாம் அலர்ஜி வந்தாற் போல சிரித்துக் கொண்டே பாதி மூஞ்சை பொத்திக் கொண்டு மிச்சத்தாலும் முழுசாகவும் சிரித்தபடி சடசடவென்று ஓடிப் படாரென்று எதன் பின்னாலாவது மறைந்து நின்று கொண்டு பாதி முகம் தெரிகிறாற் போல் பார்த்து அப்போதும் இன்னும் கொஞ்சம் சிரித்து மகா கன்றாவியான பல முகபாவங்களின் அடுக்குத் தொடர்ச்சியாகச் செய்து காண்பிக்கிற கொனஷ்டைகளின் தொகுப்பே வெட்கம் என்றழைக்கப்படும்.அப்படித் தான் அவளும் ஓடிக் காணாமல் போனாள்.இவன் நானென்ன பிழை செய்தேன் என்றாற் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
ரெண்டு நிமிஷம் கழித்து அவளே திரும்பி வந்து சாவியை வாங்கிக் கொண்டு நீங்க தான் புதுசா சேர்ந்திருக்கிற மேனேஜரா எனக் கேட்டாள்.அப்போது தான் தானொரு மேனேஜர் என்ற விஷயமே தெரிந்துகொண்ட ராஜராஜசோழன் அடடே நாம எடுத்த எடுப்பிலேயே மேனேஜர் ஆகிட்டமே என்று தனக்குள் வியந்துகொண்டு வெளியே காட்டிக் கொள்ளாமல் பார்டன் என்றான்.96இல் பார்டன் என்பதெல்லாம் மாபெரும் இங்கிலீஷ்.,அதற்கு பதிலாக அவள் ஐம் ராதா என்றாள்.ராஜா ராதா என்றெல்லாம் இன்னமுமா காம்பினேசம்ன்கள் அமைகின்றன என்றெல்லாம் தனக்குள் வியந்தவாறே தேங்க்ஸ் என்று எதற்குமற்ற நன்றியை நவின்று விட்டு நேரே சிங்கப்பூர் சலூனுக்கு வந்து சேர்ந்தான் சோழன்.
டெல்லிக்குப் போறேன்.கலெட்டர் ஆகப் போறேன் என்று கிளம்பிய நடேசனை இதோ பார் நடேஷா நீ பல நாட்களாக பரீட்சைகளில் காபி அடித்துத் தான் பாஸ் ஆனது உன் வரலாறு.இந்த லட்சணத்ல ஐயேஎஸ் ஒன்றும் சாதா பரீட்சை கிடையாது.வேணாம் போகாத சொல்லிட்டேன் என்றதும் ஒரே ஒரு நிமிடம் யோசித்தவன் சரி அப்டின்னா நீயே எனக்கொரு வேலை வாங்கித் தந்திடு என்றான்.
முதலில் எனக்கு வேலை கிடைக்கட்டும் என்று அஸால்டாக எடுத்துக் கொண்டான் சோழன்.ஆனால் யாரோ மந்திரம் போட்டாற் போல் நாலே நாட்களில் அவனுக்கு வேலை கிடைத்து அதும் மேனேஜர் பதவியில் சேர்ந்து விட்டான் என்று தெரிந்து கொண்டு அமைதியாக தினமும் சாயந்திரங்களில் சிங்கப்பூர் சலூனுக்கு வந்து இரண்டொரு மணி நேரங்கள் காத்திருந்துவிட்டு போவதை ஒரு வழக்கப்பழக்கமாக வைத்திருந்தான்.இன்னிக்கும் வராட்டி நாளைக்கு அவன் வேலை பார்க்கும் பெப்ஸி ஏஜன்ஸிக்கே நேரே சென்றுவிட வேண்டியது தான் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டிருந்த போது தான் தன் புது சமுராயில் அங்கே வந்து சேர்ந்தான் சோழன்.
என்ன மாப்ளே ஆளே மாறிட்ட என்றான் நடேஷ்.என்னடா அப்டி மாற்றத்தை கண்டே என சிரித்த சோழன் கிட்டண்ணே டீ சொல்லுங்க..அப்டியே பஜ்ஜி எதுனா கொண்டாரச் சொல்லுங்க என்றான்.ஆள் இல்லாத நேரங்களில் சலூனுக்குள் டீ பஜ்ஜி தொடங்கி பொங்கல் ப்ரோட்டா வரை எல்லாம் சப்ளாய் ஆகும்.கிரிக்கெட் என்ற வஸ்து வந்த பிற்பாடு அங்கேயே நாலு பேர் குளித்து தலைதுவட்டி நீங்க எதுனா ஊருக்கு போகணும்னா போயிட்டு வாங்க கிட்டண்ணா நாங்க பார்த்துக்குறோம் என்று சொல்லும் அளவுக்கு ஜொலித்தார்கள்
வழக்கமா ஃபங்க் கட்டிங் தான் உன் அடையாளமே இப்ப அட்டாக் அடிச்சிருக்க என்றான்.அதாவது பிடரியில் வழிந்த கூந்தல் இப்போது ஒட்ட வெட்டப் பட்டிருக்கிறதல்லவா அதைச் சொல்கிறான்.அதற்கு காரணம் ராதா.முந்தைய தினம் பின் முடியை ஒட்ட வெட்டிக் கொள்ளவும் நல்லாவே இல்லை என்று எழுதி ஒரு துண்டுச் சீட்டை அவன் சாவி தரும் போது கையில் திணித்தாள்.இவன் என்னவோ லவ் லெட்டராயிருக்கும் என அதிலிருந்த ஒவ்வொரு லெட்டரையும் துப்பறிந்து உளவறிந்து எந்தெந்த விதங்களிலெல்லாமோ முயன்றுவிட்டு மறு நாள் காலை சாவி வாங்கச் சென்றான்.
ஏன் முடி வெட்டலை என்றாள்.அவன் அதற்கு நேத்து மாத்திரம் எழுதிக் குடுத்தீங்க..?இப்ப பேசுறீங்க என்றான்.ஏன் எழுதினா பேசக் கூடாதா அப்டி இல்லைங்க..நேத்தே பேசி இருக்கலாமே நேத்து நா மௌனவிரதம் அதான் எழுதிக் கொடுத்தேன்.இவனுக்கு சப்பென்றாகி விட்டது.தனக்குத் தரப்பட்ட முதல் கடிதம் அது துண்டுக்கடிதமாக இருந்தாலும் பரவாயில்லை பொறுத்துக் கொள்ளலாம்.இதென்னடா என்றால் எல்லாருக்குமே எழுதித் தருவாள் எனத் தெரிந்த பிற்பாடு அவனுக்குள் ஏற்கனவே கனிந்த ஒரு இதயம் உடைந்தது.
நாளைக்கு வெட்டிர்றேங்க என்றான்..ஏன் இன்னிக்கு நீங்க எதும் விரதமா.?போயி வெட்டிட்டு வாங்க.எங்கப்பாவுக்கு ஃபங்க் வச்சிருந்தா சுத்தமா பிடிக்காது என்றவாறே உள்ளேகினாள்.
அவனது கவனத்தை கலைத்த நடேஷ் என்னடா சிந்தனை?ஒண்ணுமில்லடா நானும் வந்ததுலேர்ந்தே பாக்குறேன்.எதுமே பேச மாட்டேங்குறே என்றான்.என்ணடா வம்பா போச்சி வந்து பத்து நிமிஷம் கூட ஆகலியேடா என்றதற்கு முந்தியெல்லாம் ஒத்தை நிமிஷத்துக்குள்ள ஒலகத்தையே பேசிருப்ப இப்ப முழுசா பத்து நிமிசமாகியும் எதுமே பேச மாட்றேடா…நீ மாறலைன்னு நீயே சொன்னாக் கூட எப்டி நம்புறது என்ற நடேஷின் நா லேசாகத் தழுதழுத்தது.
எனக்கு வேலை என்னடா ஆச்சு என்றான்.
இர்றா இவன் ஒருத்தன்..நானே நாலு நாளைக்கு முந்தி தான் சேர்ந்திருக்கேன்.அதுக்குள்ள சிபாரிசு பண்ண முடியுமா..?கொஞ்ச நாள் ஆகட்டும்.செய்வம்..என்றவன் சட்டென்று நடேஷ் மனம் கோணக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் நீ கவலைப் படாத மாப்ளே நாந்தானடா மேனேஜர்…உன்னைய உள்ள இழுத்துற மாட்டேனா..?
சம்சுதீன் பாயின் ஜீப்பில் வந்து இறங்கிய கார்மேகம் சுற்றிலும் பார்த்துக் கொண்டே நேரே சிங்கப்பூர் சலூனுக்கு வந்தார்.
வாங்கி வந்த டீயை அப்பு எல்லாருக்கும் தர எதும் சொல்லாத கார்மேகம் தானும் ஒரு குவளையை ஏந்தி சர்ரென்று உறிஞ்சிக் குடித்தார்.
ஏம்டே மருமகனே…உங்காளு அரசியலுக்கு வருவாரா..?என ஆரம்பித்தார்.விஷயம் இது தான்.எதிலுமே ஒத்துப் போகாத நடேஷூம் சோழனும் ஒத்துப் போவது ஒரு அல்லது இரண்டு விஷயங்களில் மாத்திரமே.அவற்றுள் முதன்மையானது ரஜினி.இருவருமே வெறியர்கள்.
உற்சாகமான சோழன் அதெல்லாம் வந்துருவார்..பாருங்க..என்றான்.
டக்கென்று ஆமா வருவேன் வருவேன்னு சொல்வாரு..வரமாட்டாரு என்றான் நடேஷ் படக்கென்று.மின்னல் வெட்டி கடல் கொந்தளித்து மேகம் உருண்டு நிலம் பிளந்தது சோழனுக்குள்.அட துரோகியே என நம்ப முடியாமல் பார்த்தான்.
இவன் ஏன் இப்படி மாற்றிப் பேசுகிறான் எனத் தெரியாமல் கிட்டண்ணன் முதற்கொண்டு அப்பு வரதன் என எல்லாருமே ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் மௌனிக்க நான் பந்தயமே கட்டுறேன் வரவே மாட்டாப்ள..இன்னும் இருபது வருஷம் ஆனாலும் ரஜினி பாலிடிக்ஸ்க்கு வரமாட்டாப்ள..ஒருவேளை கமல் வந்தாக் கூட வரலாம் என்றான்.
நிறுத்துடா என பொங்கினான் சோழன்.. நீயெல்லாம் ஒரு ரஜினி ரசிகனாடா..? என ஆரம்பிக்க ஸ்டைலாக அவன் முன் தன் தலைமுடியை அதும் பின்னால் வழிந்த தன் ஃபங்க் கூந்தலை நீவிக் கொண்டே யார் சொன்னது ஐம் எ கமல் ஃபேன் என்றான்.
நொறுங்கிப் போன சோழனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.என்ன காரணம் என்றே தெரியாமல் நடேஷூக்கு பைத்தியம் எதும் பிடித்து விட்டதா என்று தீவிரமாக யோசித்தான்.பைத்தியமே பிடித்தால் கூட ரஜினி தானே பிடிக்கும் அந்த அளவுக்குத் தன்னை விட அவன் உற்றபற்றாளன் ஆயிற்றே எனக் குழம்பினான்.அன்றிரவு வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.
இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்க நானும் பல அடுக்கு மாடி ஓட்டல்களைக் கட்டி என கனவில் அண்ணாமலை கெட் அப்பில் கமல் சவால் விட்டுக் கொண்டிருந்தார்.எதிரே செய்வதறியாது சரத்பாபு விழித்துக் கொண்டிருக்க கமல் கூடவே சிரித்தபடி ரஜினி நின்றுகொண்டிருந்தார்.இவனுக்கு மிச்ச சொச்ச தூக்கமும் விட்டுப் போயிற்று.
அடுத்த ஆறாவது நாள் கள அலுவலர் ஜானகிராமன் முதலாளியைப் பார்க்கணும் என்று பொங்கிப் போய் வந்தான்.இவன் தனது அறையில் எதோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து வர உள்ளே வா சோழா என்றார் நவரத்தினப் பாண்டியன்.
என்ன ஜானி என்றதும்
இதென்ன மொதலாளி நியாயம்..?நம்ம கூலரை எடுத்து வச்சிட்டு கொக்கோகோலா ஃப்ரிஸரை வச்சிட்டுப் போயிருக்கானுங்க..நாம பத்து சிப்பத்துக்கு ஒண்ணுன்னு ஆஃபர் குடுத்தா அவன் இருபது சிப்பத்துக்கு மூணுன்னு குடுக்குறான்..எப்பிடி தொளில் பண்றதுன்னே தெரியலை.இத்தனைக்கும் நம்ம சேல்ஸ் ரெப்புகள்ல ஆறேழு பேரு கோக்குல போயி சேர்ந்துட்டாங்க மொதலாளி என்றான்.
அவனை அமரச்சொல்லி அமைதியா இரு ஜானி என்ற முதலாளி என் தங்கச்சி புருஷன்னு ரொம்பத் தான் விட்டுக் குடுத்துப் போயிட்டிருக்கேன் சோழா…ஒரு அளவுக்கு மேல பொறுமை கிடையாது எனக்கு தெரியும்ல என்று அவனைத் தன் சிவந்த விழிகளால் எச்சரித்தார்.
இதெல்லாத்துக்கும் காரணம் புதுசா கோக்கு ஏஜன்ஸில மேனேஜரா சேந்திருக்கிற ஒரு ஒன்றைக் கண்ணன் தான் மொதலாளி…அவனை நம்ம பசங்க கிட்ட சொல்லி ரெண்டு தட்டு தட்டிட்டா எல்லாம் மறுபடி கட்டுக்குள்ள வந்திரும் என்று ஆத்திரமாய் கூவினான் ஜானி
அட இருய்யா…நான் என் மச்சானையே மெண்டு திண்டுறலாமான்னு யோசிக்கிறேன்..மேனேஜர் எம்மாத்திரம்..?அவன் யாரு எந்தூருக்காரன் என்றார்.
நம்ம நல்லூர்க்காரன் தான் முதலாளி பேரு நடேசனாம் என்றதும் சோழனின் இதயம் சுக்கு நூற்றி இருபத்தி ஐந்தாக உடைந்தது.

download (27)

அதே சிங்கப்பூர் சலூன்
நல்லாருக்கியா
இருக்கேன்
எப்ப வந்தே
இப்பத்தான்
ஏன் இப்டி
வேலை
நட்பை யோசிச்சிருக்கணும்
இதையே நானுஞ்சொல்லலாம்ல
முடிவா என்ன சொல்றே
முடிச்சிக்கலாம்னு சொல்றேன்
பழசை நினைச்சிப் பாரு நடேஷ்
என் பேரை சொல்லக் கூட உங்களுக்கு அருகதை இல்லை மிஸ்டர் முன்னாள் நண்பரே…அதெப்படி..?எனக்கு நீ மேனஜரா வர ஆசைப்பட்டேல்ல..?நானும் ஒரு மேனேஜர் தான்னு உனக்கு தோணலைல்ல..?உனக்குள்ள தூங்கிட்டிருக்கிற அதே மேனேஜர் தான் எனக்குள்ள முளிச்சிட்டும் இருந்தான் மிஸ்டர் முன்னாள் நண்பன்…அதான் பெப்சிக்கு கோக்கு ரஜினிக்கு கமல் உனக்கு ஹஹஹ என்று கமல் குரலில் சிரித்து விட்டு நானு என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
நில்லுடா..என்னையப் பார்த்து எழுதின மக்குப்பய தானே நீ என்றான் சோழன்.
செய்த உதவியை சொல்லிக் காட்டிட்டேல்ல..?அடுத்து நீ எந்தப் பரீட்சை எழுதுறதா இருந்தாலும் சொல்லு.நானும் அப்ளை பண்றேன்.நீ என்னையப் பார்த்து எழுதிக்க.இனி உனக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று அன்றைய காலை நாளிதழை எடுத்து சிம்பாலிக்காக டர்ரென்று இரண்டாய்க் கிழித்து விட்டுக் கிளம்பினான் நடேஷ்,ஒற்றுமையாக இருந்த இரண்டு நண்பர்கள் பிரிந்துவிட்டார்களே என்று நல்லூரே கண் கலங்கிற்று.
அடுத்த நாலாவது நாள் சோழனை அழைத்த நவரத்தின பாண்டியன் ஏம்பா சோழன்…நாளைக்கு வீட்ல ஒரு சின்ன விசேசம்..மதிய சாப்பாட்டுக்கு வந்திரு என்றார்.
இவனும் வேலை நிமித்தத்தில் மறந்து விட சரியாக ஒரு மணிக்கு ஃபோன் வந்தது மேனேஜர் சோழனா..?வர்லியா இன்னம்..?அப்பா கேக்குறாங்க என்றது கிளிக்குரல்.அதாவது கிளிராதா.
இதோ வரேங்க என்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் சென்று இறங்கினான்.அங்கே ஏற்கனவே நவரத்தின பாண்டியனின் மைத்துனரும் நல்லூர்க்கோட்டை கொக்கோகோலா ஏஜன்சி உரிமையாளருமாகிய சந்தனராஜவேலுவும் அவரது ஒன் அண்ட் ஒன்லி மேனேஜருமாகிய நடேஷூம் அமர்ந்திருந்தனர்.
வா சோழா என்ற நவரத்தின பாண்டியன் உக்காரு உக்காரு என உபசரித்தார்.எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்க
அதான் அயித்தான் நம்ம பசங்க ரெண்டு பேரும் துடியானவனுக தான்.வெட்டியா ஒருத்தனுக்கொருத்தன் வெட்டிக்கிடக் கூடாதேன்னு தான் உண்மையைச் சொல்லிப்புடலாம்னு முடிவெடுத்தேன் என்றார் சந்தனம்
இரு சந்தனம் நானே சொல்றேன் என்ற நவரத்தினப்பாண்டியன் இந்தாருங்க மேனேஜருங்களா..நானும் என் மச்சானும் எப்பவுமே ஒண்ணுமண்னு தான்.ரெண்டு பேரும் சேர்ந்து பெப்ஸி ஏஜன்சியை எடுக்க போனம்..அப்ப எனக்குத் தெரிஞ்ச ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் சொன்னாப்டி எப்பிடியும் அதே ஊர்ல கோக்கும் ஏஜன்சி குடுப்பான்..அதை வேற ஒருத்தன் எடுப்பான்.ரெண்டு பேருக்கும் முட்டும்.பிசினஸூம் லாபமும் நட்டமா மாறுர வரைக்கும் எல்லாமே தீர்மானிக்கப் பட்ட ஆட்டம் இது….அதுனால நீயே உனக்கு எதிரியா இருந்தாத் தான் உனக்கு நல்லது.நட்டமில்லாம வாழ முடியும்னாப்டி..அன்னைக்கு தான் கோக்கு ஏஜன்ஸியை எம்மச்சானுக்கு எடுத்துக் கொடுத்தேன்.நானும் அவனும் சண்டை போடுறாப்ல காமிச்சிக்கிட்டம்..இந்த மாதிரி விசேசம்ன்ற போர்வைல எப்பனாச்சியும் சந்திச்சுக்குவம்.அதும் நாலாவது ஆளுக்குத் தெரியாம…இதை உங்க ரெண்டு பேருக்கும் ஏன் சொல்றம்னா…நீங்க ரெண்டு பேரும் இதை புரிஞ்சுக்கணும்..வெளில விட்டுக் குடுத்திறாம சண்டை போடுறாப்ல நடிச்சிக்கங்க..ஒருத்தருக்கொருத்தர் அண்டர்ஸ்டாண்டிங்குல இருந்துக்கங்க..விசாரிச்சப்ப ரெண்டு பேரும் போன மாசம் வரைக்கும் எல்லாத்திலயும் ஒண்ணாத் தான் இருந்தீகளாம்..என்னமோ ரஜினி கமல் அபிமானத்துல மாத்திரம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்குன்னு கேள்விப்பட்டம்..இதான் விசயம்..என்ன புரிஞ்சுதா..?
டக்கென்று எழுந்துகொண்டான் சோழன்.எதிரே நடேஷூம் எழுந்து கொண்டான்.
ஐயா நீங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்க…அதாவது ரிலேஷன்ஸ்.பட் நாங்க நண்பங்க.அதாவது ஃப்ரெண்ட்ஸ்..ரிலேஷன்ஸ்க்குள்ளே உறவும் பிரிவும் சகஜமா இருக்கலாம்.ஏன்னா அது சப்பாத்தி மாவும் தண்ணியும் மாதிரி..ஒட்டிக்கும்.பட் நட்புன்றது பைக்ல இருக்கிற ரியர் மிரர் மாதிரி.ரசம் போயிடுசின்னா பார்க்க முடியாது.என்னை மன்னிச்சிடுங்க..நீங்க சேர்ந்தே இருங்க…எங்களை சேர்க்க நினைக்காதீங்க..என்னோட நாடி நரம்பு ரத்தம் புத்தி சதை எல்லாத்துலயும் பெப்ஸி வெறி ஊறிப் போச்சி.”எனக் கிளம்ப எத்தனிக்க
நடேஷ் கமல் ஸ்டைலில் “ஐயா பெப்ஸியும் கோக்கும் காந்தத்தோட ரெண்டு துருவங்கள்.கின்லேயும் அக்வாஃபினாவும் உங்களைப் பொறுத்தவரைக்கும் வெறும் தண்ணியா இருக்கலாம்.பட் அது ரெண்டும் ரெண்டு துருவங்கள்.என்னிக்குமே சேராது.சேரவும் முடியாது.நான் கெளம்புறேன்.பெப்ஸிக்கும் கோக்குக்கும் நடக்குற தர்ம யுத்தத்துல ஒண்ணு நான்..இல்லைன்னா”என்று முறைத்துவிட்டு கிளம்பினான்.
இரண்டு பேரும் கிளம்பி ஆளுக்கொரு பைக்கில் ஏறி ஆளுக்கொரு திசையில் நகர்ந்தார்கள்.
அயித்தான்.நெசம்மாவே ரெண்டு பேரும் எதிரிங்க தான் போல…இனி ரஜினி கமல் சேர்ந்து நடிச்சா கூட இவனுங்க சேர்ந்து அந்தப் படத்தப் பாக்க போமாட்டானுங்க..என்ற சந்தனத்தின் தோளைத் தட்டிய நவரத்தின பாண்டியன் டே மச்சான் நல்ல வேலைக்காரனுங்க டா..இவனுகளை அப்டியே தக்க வச்சிக்கணும்.அடுப்புகளை அணையாம பார்த்துக்க அது முக்கியம்..அவன் சொன்னது சரி தாண்டா பெப்ஸியும் கோக்கும் சேர்ந்தாக் கூட அக்வாஃபினாவும் கின்லேயும் சேர முடியாதுடா…எனத் தன் மீசையை முறுக்கிக் கொண்டார்.
நல்லூர்க்கோட்டையிலிருந்து உலகளந்த ராஜபுரம் செல்வதற்கு வடக்கே சென்றால் ரயில்வே கேட்டுக்காக காத்திருக்க வேண்டி வரும்.அதனால் நடுநதிக்குக் குறுக்கே சிறு ஊர்ப்பாலம் கட்டப்பட்டிருந்தது.அதன் கீழ்ப்புறம் தான் அரசல் புரசல்களுக்கான அண்டர்வேல்ட்.அங்கே அடுத்த நாள் மதியப்பொழுது.டல் லைட்டிங்கில் எதிரெதிரே இரு உருவங்கள்.
ரெண்டு பேரும் இன்னைக்குத் தாண்டா இண்டர்வ்யூவிலயே பாஸ் ஆயிருக்கம்..இனி இவனுகளை வச்சி நாலு காசு பார்த்துக்குற வரைக்கும் இப்டியே ரெண்டு பேரையும் கொளப்பிட்டே இருக்க வேண்டியது தான் என்ன மச்சி என்றான் நடேஷ்.
பெரிய பைப்புகளில் ஒன்றில் அமர்ந்து இன்னொன்றின் மேல் கால்களை நீட்டியபடி தம் அடித்து புகையை வெளியேற்றிய சோழன்..எல்லாம் ராதாவுக்குத் தாண்டா நன்றி சொல்லணும்..அவ மாத்திரம் என்னை அலர்ட் செய்திருக்காட்டி நம்ம ரெண்டு பேருக்கும் வேலை போயிருக்கும்டா மச்சி..
ஆமா நீ அவளை உண்மையாவே லவ் பண்றியாடா என்றான் நடேஷ்.
அவ என்னைய நெசம்மா லவ் பண்றா…நானும் பண்ணிருவேன்னு நினைக்கிறேண்டா…என்றவாறே கண்களை மூடிக் கொண்டான் சோழன்.
இங்க யாரும் வரமாட்டாங்கள்லடா…..இங்க யார்றா சோழா வரப்போறா என்று சிரித்தான் நடேஷ்
அவர்களின் தலைக்கு மேல் அதாவது ஊர்ப்பாலத்தின் மேற்புறம் மிகச்சரியாக கார்மேகம் பயணித்து வந்த சம்சுதீனின் ஜீப் பஞ்சராகி நின்றுவிட சீக்கிரம் ஸ்டெப்னியை மாத்து மணி என்றவாறே இரு ஒண்ணுக்கிருந்திட்டு வந்திர்றேன் என்று பாலத்தின் சைடில் இறங்கிய மண்சரிவில் நெடுநெடுவென்று நடந்து கீழ்ப்பக்கம் இறங்கினார் கார்மேகம்.

****

மூன்று கவிதைகள் / கருணாகரன் ( இலங்கை )

download (25)

துயரின் இனிய கீதம்

மழைக்காற்றில்
வாழைகள் சரிந்து வீழ்கின்றன
இல்லையில்லை எழுந்து பறக்கின்றன.

முப்பதாண்டுகளின் முன்னே நான் விட்ட காகிதக்கப்பல்
ஏற்றிச் செல்ல வந்திருக்கிறது என்னை.

பெய்து கொண்டிருக்கிறது மழை
காலடியில் பொங்கிய ஈரத்தில்
முளைத்து நிற்கிறாள் அன்புச் செடி

அக்கணத்தில்தான்
சொல்லாமல் சென்றவள்
பேசத் தயங்குகிறாள்

காயத்தின் வலி என்னவென்று கேட்கிறேன்
மழை பாடிக் கொண்டிருக்கிறது அவளைப் பற்றி

ஈர விறகுகளை எரிக்கும் வித்தையை
அறிந்திருந்த அம்மாவிடம் நான் கற்றதென்ன? பெற்றதென்ன?
என்ற கேள்வி எழுந்து மழையில் நனைகிறது.

நீரின் குரலை நீ அறிய வேண்டும்
என்று சொன்ன தேவதையை நினைக்கிறேன்.

மழையில் முளைத்துக் கொண்மேயிருக்கிறாள்
காயமுடையாள்

முடிவேயில்லாமல்
இனிய துயரின் சங்கீதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறது மழை.

00

அன்பின் சிறகு

சைக்கிளில் வந்திறங்குகிறது புறா
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

கடையோரமாக அதை நிறுத்தி விட்டு
பறந்து போய்த் தன்னுடைய இணையுடன் சேர்கிறது மரத்தில்

பொங்கியுற்றும் காதல் ரசத்தில்
பழங்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன
கிளைகளெங்கும்

எனக்குப் பழங்களும் மலர்களும் ருசிக்கின்றன
அன்பின் வாசனையைக் கொண்டலைகிறேன்
தெரு முழுதும் காலந்தோறும்

அதோ சேர்ந்து பறக்கின்றன புறாக்கள்
ஓ…..
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளும் கூடவே பறந்து கொண்டிருக்கிறது

அது அதிகாலையா அந்தி மாலையா
என்று குழப்பமாகவுள்ளது

அந்த ஓவியனுக்கு எல்லாமே நன்றாகத் தெரியும்.

ஆனால், அவன் அந்தப் புறாக்களோடு பறந்து போய்விட்டானே!

00
உலகின் முதல் ரகசியம்

அவர்கள் வந்து விட்டனர்
நானின்னும் வரவில்லை

அவளும் வந்து விட்டாள்
நானின்னும் வரவில்லை.

ஆனால், அவர்களுடனேயே நானிருந்தேன்

அது ஒரு சிறிய முற்றம்
பிறகு அதை வசதிக்கேற்றவாறு பெருக்கிக் கொண்டோம்
அங்கே ஒரு மரம் முளைத்துப் பழங்களை நிறைத்தது
புக்களைச் சூடினாள் அவள்
வாசனையை உண்டாக்கினேன் நான்
தோட்டமும் முற்றமுமாகிய அந்த இடத்தில்
ஒரு படகின் வடிவத்தில் அமர்ந்திருந்தோம்

மெல்ல அசைந்தபடி நகர்ந்தன எல்லாம்

எல்லோரும் கூடி
ஒன்றாகவே விருந்துண்டோம்
ஒன்றாகவே சேர்ந்து பாடினோம்.
ஒன்றாகவே ஆடி மகிழ்ந்தோம்
இரவின் ஆழத்துள் சென்று
ஒன்றாகவே கனவுகள் கண்டோம்

அவள் என்னை முத்தமிட்டது மட்டும்
தனித்து நடந்தது

யாருமறியாத அத்த முத்தமே
ரகசியமாகியது இந்த உலகத்தில்

அவள் சென்று விட்டாள்
அவர்களும் சென்று விட்டனர்

நான் எங்கே செல்வது?

அந்த ரகசியத்தோடு நானிருக்கிறேன்
யாருமறியாத தொரு ரகசியமாக.

00

விட்டில் பூச்சி / கன்னடத்தில்: கனகராஜ் ஆரணக்கட்டை / தமிழிற்கு : கே. நல்லதம்பி

கனகராஜ் ஆரணக்கட்டை

கனகராஜ் ஆரணக்கட்டை

பெருமாயி கிழவி எப்படி இறந்தாள்? அவளைக் கொல்லப்பட்டது. அவளை மட்டுமல்ல, அவள் பேத்தியையும். இருவர்களையும் கொன்றது யார்? நானா!

டீ குடித்துக் கொண்டிருக்கும் போதுதான் நான் அவளைப் பார்த்தேன். அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வந்திருந்தேன். ரூம் மெட்டுக்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. சலிப்புடன் வெளியே வந்து, காமாட்சி பாலையத்தின் ‘நியூ கணேஷ் பவன்’ இல் டீ சாப்பிட்டுக்கொண்டு நின்றிருந்தபோது அவள் வந்து படியில் உட்கார்ந்தாள். எழுபது – எண்பது வயதுக் கிழவி அவள். முப்பது வருடங்களிற்கு முன்பு நான் பார்த்த அந்தப் பெருமாயம்மாவை பொருந்தும் அசல் முகம். சோர்வடைந்திருந்தாள்.

அவள் அருகில் சென்று ‘ஏதாவது சாப்பிடுகிறாயா அம்மா?’ கேட்டேன். அவள் முந்தானையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டே என்னைப் பார்த்தாள். குளிர்காலத்து இளம் வெயிலில் கூர்ந்து எதையோ கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு ப்ளேட் சித்திரான்னம் வாங்கி அவளிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டாள்.

அவள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. அறைக்கு வந்து கைபேசியை எடுத்து முகநூலில் அமர்ந்தேன். ஆனால் எனக்குள் அந்தக் கிழவியும், அவள் நினைவூட்டிய பெருமாயிக் கிழவியும் என்னைத் தடுமாறச் செய்தனர். முப்பது வருடங்களிற்கு முன்பு நான் பதினைந்து வருடப் பையனாக இருந்தபோது பார்த்த பெருமாயிக் கிழவியின் வாழ்க்கை மற்றும் சாவு என் கண்முன் விரிந்துகொண்டிருந்தது. நெஞ்சு படபடத்தது! அவளைக் கொன்றது நான்தான் எனத் தோன்ற அதிர்ந்து போனேன்!

பெருமாயி என் ஊர்க்காரி. அவள் இருந்தது எங்கள் ஊரின் வடக்கில். அவள் வீடுதான் கடைசி. பக்கத்தில் எங்கள் ஊரின் வண்ணான் வீடு. தன் வாழ்க்கையின் அதிக நேரத்தை அவள் அந்த வண்ணான் வீட்டில்தான் கழித்திருப்பாள் போல! நான் பார்க்கும் போதெல்லாம் அங்கேதான் இருப்பாள். எங்கள் வீட்டிற்கு அவள் வருவது சாவிற்கோ அல்லது திருமணத்திற்கோ மட்டும் தான். அவள் பிரமலைக் கள்ளர் குலத்தைச் சேர்ந்தவள்.கருநாத்தத்தின் எங்கள் ஊரில் இருந்த பிரமலைக் கள்ளர் வீடு அவளுடையது மட்டும்தான்.

எங்களுக்கும் பிரமலைக் கள்ளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆண் – பெண் கொடுத்து எடுக்கும் வழக்கமும் கிடையாது. ஹிரியூர் தாலுக்காவில் அணை கட்ட வெள்ளைக்கார்களால் தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆட்களில் அவளும் ஒருவள் என்றும் மதுரைப் பக்கம் ஏதோ ஊரைச் சேர்ந்த இவள் அங்கு கொலை செய்து கர்நாடகாவிற்கு வந்திருக்கிறாள் என்றும் அவால் பூர்வீகத்தைப் பற்றி பலபேர் பலவிதமாக பேசிக்கொண்டார்கள். புதிதாகக் கட்டிய மாரி அணையைப் பற்றி அறிந்த எங்கள் முன்னோர்கள் நூறு வருடங்களுக்கு முன்பு விவசாயத்திற்காக கன்னட நாட்டின் ஹிரியூருக்கு வந்த போது பெருமாயி திண்டாவரம் மேட்டாங்காட்டில் குடிசை போட்டுக்கொண்டிருந்தாளாம்.

மாரி அணையைக் கட்ட வந்த அனேகம்பேர் தமிழ் நாட்டிற்கே திரும்பிப்போய் விட்டார்கள் என்றும் தான் மட்டும் இங்கேயே தங்கிவிட்டதாகவும் சொன்னாளாம். ஆதிவாள என்ற ஊருக்கு நாமக்கல் கௌண்டார்கள் விவசாயத்திற்கு வந்ததாக தெரிந்து வந்தவள், அங்கே தங்கமுடியாமல் யளநாட்டுப் பக்கம் வந்திருக்கிறாள். அங்கிருக்கும் நாயக்கர்கள் குடிசைவாழ் மக்களுடன் கலந்து கன்னடம் கற்றிருக்கிறாள். உப்பளக்கரை பக்கம் கூலிக்குச் சென்றபோது காதில் உறுமிச் சத்தம் கேட்டு உயிர் துடிக்க அந்தப் பக்கம் ஓடினாளாம். வேதவதி குளத்தின் அருகே எங்கள் குலத்தோர் கருப்புசாமி உற்சவங்கள் நடத்திக் கொண்டிருந்தாராம். இவர்கள் தன் குலத்தவர்கள் இல்லை என்றாலும் தன் இனம்தான் என்று அன்றிலிருந்து எங்கள் ஊரில் வந்து நிலைத்துவிட்டாள்.

கதை கேட்காமல் சாப்பிமுடியாத எனக்கு என் பாட்டி அவ்வப்போது பெருமாயி குலத்து மக்களின் கதையைச் சொல்லி எனக்குள் அவள் மீது தீராத ஆர்வத்தைத் தூண்டியிருந்தாள். பிரமலை கள்ளர் குலத்தவர்களின் வழக்கம் விசித்திரமானாது! ஆண்பிள்ளைகளுக்கு முஸ்லிம்கள்போல சுன்னத் செய்கிறார்கள். கொலை செய்யத் தயங்காதவர்கள். திருட்டில் கைதேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் குடியானவர்கள் அதிகமாகத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தார்களாம். யாருக்கும் பயப்பட மாட்டார்களாம். மதுரை நாயக்கர் பாளையக்காரர்களை நடுங்கவைத்தவர்கள். ஆங்கிலேயர்களையே எதிர்த்து நின்று கடைசியில் அது ஏதோ ஒரு புது சட்டத்திற்கு அடிபணிந்தார்களாம்…இப்படி எனக்கு எதேதோ சொல்லி அந்த பெருமாயிக் கிழவியை பற்றி தீராத ஆர்வத்தை என் பாட்டி எனக்குள் ஏற்படுத்தியிருந்தாள். ஆனால் இந்தப் பெருமாயிக் கிழவியை நினைத்தால் எனக்கு ஒருவித பயம் ஏற்பட்டது.

தென்னங்கீற்றுகளால் அமைக்கப்பட்ட குடிசையைச் சுற்றி முள்வேலி போட்டு வாழ்ந்துகொண்டிருந்த அவளின் வீட்டு ஒரத்தில் இனிப்பான புளியமரம் ஒன்று இருந்தது. அதிலிருந்து விழும் பழங்களைப் பொறுக்கிக்கொள்ள நாங்கள் வீண் முயற்சி செய்துகொண்டிருந்தோம். அவள் வீட்டிலில்லாத சமயம் பார்த்து முள்வேலியைத் தாண்டிப் போவோம். பழங்களை அவசரமாகப் பொறுக்கும்வரை அவள் வீட்டிலிருந்த புத்தி மந்தமான பிள்ளையொன்று கத்திக்கொண்டு ஓடிவரும். நாங்கள் அவளை கிண்டலும், கேலியும் செய்துகொண்டு பழங்களைப் பொறுக்கிக்கொண்டு ஓடுவோம். எங்கள் கூட்டத்திலிருந்த நந்தீசன் ட்ரௌசரைக் கழட்டி குண்டியை அந்தப் பிள்ளைக்கு காட்டி கேலிசெய்வான்.

பழங்களைத் தின்ற பிறகு எனக்கு அந்த புத்திமந்தமான பிள்ளையை பார்க்கவேண்டுமென்று மனம் தவிக்கும். தாத்தாவிடமிருந்து 25பைசா கேட்டு வாங்கிக்கொண்டு, கடையில் பன் வாங்கிக்கொண்டு அங்கே ஓடுவேன். நான் போகும்போது பெருமாயிக் கிழவி கூலி வேலை முடித்து திரும்பிக்கொண்டிருப்பாள். அந்தப் பிள்ளை என்ன சொன்னதோ, அந்தக் கிழவி என்ன புரிந்துகொண்டாளோ, கிழவி வீதியில் நின்று கத்துவாள். அக்கம் பக்கத்து வீட்டாரை திட்டித் தீர்ப்பாள். “எங்களுக்கு என்ன தெரியும்மா இப்படித் திட்டரே” என்பாள் கொல்லர் பெண் நாகவ்வா. எங்கள் சொந்தக்காரப் பெண்கள் அவள் சேதிக்கே போகமாட்டார்கள். பெருமாயிக் கிழவி அதிகமாக திட்டுவது எங்களைத்தான். என்னவெல்லாமோ சொல்லித் வசைபாடுவாள். எனக்கு எதுவும் புரியாது. நான் தூரமாக நின்று பார்ப்பேன்.. வண்ணாத்தி வள்ளி அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்வாள்.

அவள் எப்பவும் இப்படித்தான், தன் வீட்டிலோ அல்லது வாசலிலோ ஏதாவது காணாமல் போனாலோ இல்லை தன் ஒரே கோழி கூண்டிற்குத் திரும்பாவிட்டாலோ வீதிக்கு வந்து ரகளை செய்வாள். தன் பொருள்களை எடுத்துச் சென்றவர் யார் என்று தெரிந்தால் அவ்வளவுதான், அவர்களை உண்டு இல்லை என்று பண்ணி, அந்த வீட்டாரின் மானத்தை மூன்று காசுக்கு ஏலம் போட்டுவிடுவாள். சில சமயங்களில் அவளே மம்மிட்டியையோ, கருக்கரிவாளையோ எங்கேயோ மறந்து வைத்து, யாரோ திருடிவிட்டார்கள் என்று கத்துவாள். எங்கள் வயலிற்கு வேலைக்கு வந்தபோது கத்தி, மம்மிட்டியைப் பார்த்திருந்தேன். அவளுடைய கருக்கரிவாள் மிக நன்றாக இருக்கும் என்று எல்லோரும் சொல்வார்கள்.

அவளுடைய மம்மிட்டியையும் அப்படித்தான், ஆண்களின் மம்மிட்டிகளும் அவ்வளவுகூர்மையாக இருக்காது என்று தாத்தா பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை இப்படித்தான் எங்கள் வயலில் கரும்பை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவள் மறந்து கருக்கரிவாளை எங்கேயோ வைத்துவிட்டாள், அதை ஒத்துக்கொள்ளாமல் யாரோ திருடிவிட்டதாக கூச்சலிட்டு ரகளை செய்வாள். இவளைப் பார்த்து பயப்பட எனக்கு இந்தக் காரணங்களைவிட மற்றொரு பெரிய காரணம் இருந்தது. சாவு வீட்டில் அவள் பாடும் ஒப்பாரிச் சத்தம் எனக்குள் பயங்கரமான பீதியைக் கிளப்பும்.

எங்கள் யார் வீட்டிலாவது சாவு விழுந்தால் ஊர்ப் பெரியவர்கள் இவளை அழைப்பார்கள். சிறுவர்களான நாங்களும் அந்தச் சாவு வீட்டில் இருப்போம். எங்கள் குலத்தின் யார் வீட்டிலும் சமைக்க மாட்டார்கள். எல்லோரும் இழவு வீட்டிலேயே இருப்போம். பிணத்தை எடுத்துச் சென்ற பின்தான் எல்லோருக்கும் சாப்பாடு. சாவு வீட்டில் முப்பது நாட்களிற்கு அடுப்பு எரிக்கக் கூடாதாம், அதனால் உறவுக்காரர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டுபோய் கொடுப்பார்கள். அந்தச் சமையலில் இனிப்புப் பலகாரங்களும் இருக்கவேண்டும்.

இந்தக் காரணங்களிற்காக எங்களுக்கு உறவுக்காரர்களின் வீட்டில் சாவு விழுந்தால் ஒரே கொண்டாட்டம். எங்கள் கூட்டத்துப் பசங்க வீட்டில் சாவு விழுந்தால் எங்கள் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. சாவு வீட்டார் சிறுவர்களான எங்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள். முப்பது நாட்களில் பத்து நாட்களாவது எங்கள் வீட்டிற்குத் தெரியாமல் அங்கே போய் ஒரு வெட்டு வெட்டிவிட்டு வருவோம். இந்தக் காரணத்திற்காக சாவு விழுந்த நாள் நாங்கள் தவறாமல் அங்கு ஆஜராகிவிடுவோம். பிணத்தின் முன் பெண்கள் தலைவிரித்து உட்கார்ந்துகொண்டு அழுவதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம். ஆங்காங்கே மூன்று நான்கு கும்பல்களாக உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.

ஒப்பாரி என்றால் சாவுப் பாட்டு. இறந்தவர்களைக் புகழ்ந்து கொண்டாடி அவர் விட்டுச் சென்ற நினைவுகளை, பேசிய பேச்சுக்களை, செய்ய வேண்டிய வேலைகளை பாட்டுக் கட்டிப் பாடுவார்கள். ஒப்பாரி வைத்து அழாவிட்டால் இறந்தவர்கள் ஆத்மா சொர்க்கம் சேராதாம், ஆதலால் ஒப்பாரி இட்டு அழுவது எழுதப்படாத வழக்கமாக இருந்தது. எங்கள் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவதில் கைதேர்ந்தவர்கள். இறந்தவர்களின் நினைவுடன் தங்கள் கஷ்ட நஷ்டங்களையும் சேர்த்து அழுது மனதிற்கு ஆறுதல் தேடிக்கொள்வார்கள். ஆனாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு சமாதானமில்லை, ஒப்பாரி வைத்து அழுவதற்கு பெருமாயிக் கிழவிக்கு சொல்லி அனுப்புவார்கள்.

ஒப்பாரி வைத்து அழுவதில் அவளை மிஞ்ச யாராலும் முடியாது. அவள் பாடிக்கொண்டு அழ ஆரம்பித்தால் வெளியே முகத்தை இறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஆண்கள் கண்களிலும் நீர் சொட்டும். அவள் பாடும் தமிழ் அங்கிருந்தவர்களிற்கு புரியுமோ என்னமோ எனக்குப் புரியாது. ராகமாகப் பாடுவாள். எல்லோரையும் அதிகம் அழவைத்து, மூக்கில் ஒழுகும் நீரைத் துடைத்துக்கொண்டு அவள் பிணத்தைப் பார்த்து சில விநாடி சும்மா இருந்து மறுபடியும் ஒப்பாரி வைப்பாள்.

தமிழ் நாட்டிலிருந்து இறந்த வீட்டாரின் உறவினர்கள் வந்தால் அவ்வளவுதான், துக்கத்தின் உச்சிக்குப் போய் குரலை உயர்த்தி “ ஏஏஏஏஏ..” என்று உச்சத்தைத் தொடுவாள். அழுவதற்காகவே பிறந்தவள் போல அழுவாள். அதைப் பார்த்து நானும் அழுவேன். இறுதிச் சடங்குகள் முடியும்போது அவளுக்கு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து அனுப்புவார்கள். சாவு வீட்டு வாசலைத் தாண்டவேண்டியதுதான் அவள் முகம் மலரும். நான் அந்தக் கிழவியின் பின்னால் யாருக்கும் தெரியாமல் போவேன்.

வேலிக்குப் பின்னால் நின்றுகொள்வேன். அவள் தன் பேத்தியுடன் எதையோ பேசுவாள். அந்த புத்தி சுவாதீனமில்லாத பிள்ளை திக்கிக்கொண்டு எதையோ சொல்வாள். அந்தப் பிள்ளைக்கு எங்கள் சித்தி வயசாம்! பார்க்க ஹைஸ்கூல் போகும் பெண்களைப் போலத் தெரிவாள். இடது கை, கழுத்து ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டிருக்கும். அவளுக்குப் பேசத் தெரியாது. எதை எதையோ திக்குவாள். அவள் சொல்வது பெருமாயிக் கிழவிக்கு மட்டும் புரியும். பெருமாயி பேசும் தமிழே எனக்குப் புரியாது. இனி அந்தப் பெண் பேசும் தமிழ் எப்படிப் புரியும். அவ்வப்போது பெருமாயிக் கிழவிக்குப் பின்னால் ஓடிக்கொண்டே மெதுவாக கிழவியிடம் பேச்சுக்கொடுப்பேன். அந்தப் பெண்ணிற்கு மிட்டாய் வாங்கிக்கொடுப்பேன்.

பக்கத்தில் போன பின்புதான் தெரிந்தது அவள் எங்களைப் போல சின்ன வயசுக்காரி அல்ல என்பது! அப்போதே அவளுக்குப் பெண்களைப் போல முலைகள் இருந்தது. அவள் வாயும் கை கழுத்தைப் போல ஒரு பக்கம் இழுத்துக்கொண்டிருந்தது. அவளைப் பார்க்க சிலசமயம் எனக்குப் பயமாக இருக்கும். நானும் ராஜாவேலுவும் ஆவலுடன் விளையாடுவோம். எங்கள் நண்பர்களில் சிலர் ‘அந்தப் பைத்தியக்காரியை …ம்… ம்… ம் நீங்கள் இருவரும் …ம்…தெரியும்டா எங்களுக்கு’ என்று கேலிசெய்வார்கள். எனக்கும் ஒரு விதமான ஆர்வம்! அவள் தேகத்தைப் பார்ப்பதற்கு. இந்த செக்ஸைப் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும்.

எங்கள் ஊரில் விநாயக பண்டிகையின் போது பத்தாவது பைல் ஆனா வெங்கடேசன், ராஜசேகரன், மதுசந்திரன் போன்ற பையன்கள் அது ஏதோ ஒரு செக்ஸ் புத்தகத்தை உரக்கப் படித்து சிரித்துக்கொண்டு எனக்குள்ளான உணர்வுகளை சீண்டிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து ஆரம்பமான என் செக்ஸ் அறிவு நாங்கள் டியூசனிற்கு போய்க்கொண்டிருந்த லதா அக்காவின் வீட்டில் மற்றொரு நிலையை அடைந்தது. லதா டீச்சருக்கு இரண்டு தங்கைகள். அவர்கள் இருவரும் காலேஜிற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். நானும் ராஜாவேலுவும் ஞாயிற்றுக் கிழமையன்றும் அவர் வீட்டில் விளையாடிக்கொண்டிருப்போம்.

டீச்சரின் தங்கைகள் எங்களுடன் சேர்ந்துகொள்வார்கள். கண்ணாமூச்சி, ஐஸ் பைஸ் விளையாடுவோம். அப்போது டீச்சரின் பெரிய தங்கச்சி புஷ்பக்காவும் நானும் ஒரே இடத்தில் ஒளிந்துகொள்வோம். அவள் என்னை பக்கத்தில் அழைத்து முத்தமிட்டு, உதட்டைக் கடித்து, அவள் மீது படுக்கவைத்துக்கொள்வாள். ஏதேதோ செய்வாள்.

சுவற்றின் ஒருபக்கம் ராஜாவேலு ஒரே மூச்சில் ஒன்று…இரண்டு…மூன்று… எண்ணிக்கொண்டிருப்பான். சுவற்றின் மறுபக்கம் புஷ்பக்காவின் இறுக்கமான பிடியில் சிக்கிக்கொண்டு நான் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பேன். ஆனால், உடம்பும் மனதும் ஒருவிதமாக புல்லரிக்கும். இப்படி என் மர்ம அங்கத்தை முடுக்கிவிட்டிருந்தாள் புஷ்பக்கா. அடுத்த வாய்ப்பு ராஜேஷ், ஜகதீஷ் அவர்களுடையது. என் தேகம் மென்மையாகவும், முகம் உருண்டையாகவும், குண்டி குண்டாகவும் இருந்ததாலோ என்னமோ அந்த இருவரும் என்னை நிலத்தில் சாய்த்து தங்கள் இயலாமையின் வலியை என் மீது தீர்த்துக்கொள்வார்கள். லதா டீச்சரின் தங்கைகளைப்பற்றி கேட்டாலே என் உடம்பும் மனதும் பிழியும். இந்த வகையில் செக்ஸைப்பற்றிய பலவித முகங்களைப் பார்த்த நான் எல்லாவகையிலும் பலியாகி இருந்தேன் என்று தோன்றுகிறது. அதனால் நான் யாராவது ஒருவர் மீது சவாரி செய்யவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன். புரியாத அந்த வயதில் என் மர்மாங்கம் விசித்திரமாக துடித்துக்கொண்டிருந்தது. அந்தத் துடிப்பை அனுபவிக்கவேண்டுமென்ற ஆசை ஏனோ நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. என் நண்பர்களின் மீது அந்தத் துடிப்பைப் பிரயோகம் செய்ய முடியவில்லை. பெண்தான் வேண்டுமென்று தோன்றியது. புஷ்பக்கா டிக்ரீ படிக்க பெங்களூருக்குப் போயிருந்தாள். பெண்ணின் நெருக்கத்திற்குத் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்தப் பெருமாயிக் கிழவி வீட்டிற்குள் நான் நுழைந்தேன்.

பெருமாயிக் கிழவி அந்த பெண்ணை குளிப்பாற்றும் பொழுது ஓலைக்கதவை நகர்த்திப் பார்த்தேன். அவள் ‘ஜூ,ஜூ,ஜூ’ தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய மார்பு பெருத்திருந்தைப் பார்த்து எனக்குள் பூரிப்பு உண்டானது. இப்படி ஒரு நாள் கிழவி இல்லாத நேரம் அவள் மார்பை என் ஆள்காட்டிவிரலால் தொட்டேன். அவள் ‘ஹிஹிஹிஹி’ என்று சிரித்தாள். என் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரபித்தது. ஒருவிதமான பயம். அடிவயிற்றில் ஓணான் ஓடிக்கொண்டிருந்தது. மெதுவாக அவள் உதட்டோடு உதட்டை வைத்தேன். அவளுடைய கோணலான வாய் வெதுவெதுப்பாக இருந்தது. புஷ்பக்கா செய்வது நினைவிற்கு வந்து அதை செய்யத்தொடங்கினேன். உத்வேகமடைந்தேன். ராஜேஷ், ஜகதீஷ் அவர்களின் வரிசையை இவள் மீது சோதிக்கத் துடிப்பு. ஆதுரத்தால் நடுங்கிகிக்கொண்டிருந்தேன். அவள் வேகமாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள், அவள் வாயிலிருந்து ஜொள்ளு ஊற்றியது.

அவள் கண்கள் விரிந்து படபடவென்று அடித்துக்கொண்டது. என்னை இறுக்கமாக தழுவிக்கொண்டு ‘ஏய், ஏய், ஏய்’ என்றாள். விநாடிக்குப் பிறகு நான் எழுந்து நின்றேன், அவள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாள். கைகால், முகம் வலது பக்கம் இழுத்துக்கொண்டிருந்தது. உடனே எனக்கு வீழ்ச்சியின் அனுபவம் ஏற்பட்டது. தவறு செய்தேன் என்று தோன்றி அழவேண்டும்போலிருந்தது. அவளைப் பார்க்க பாவமாகத் தோன்றியது. அவள் கால்களைப் பிடித்து மன்னிப்புக் கேட்கவேண்டும் போலிருந்தது. நெஞ்சை புல்டோஜர் பிளந்து வெளியே எரிந்ததுபோல இருந்தது. அபரிமிதமான பயம் நெஞ்சுக்குள் புகுந்து தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது. நெற்றியிலிருந்து வேர்வை கொட்டியது. அந்தக் குடிசை தகதகவென்று எரிவதுபோலத் தோன்றி ஒரே ஓட்டத்தில் வெளியே ஓடிவிட்டேன்.

அன்றிலிருந்து ஒருவாரத்திற்கு அந்தப்பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. ஒவ்வொரு விநாடியும் பயம் அதிகமாகிக்கொண்டே போனது. பெருமாயிக் கிழவிக்கு இந்த விசயம் தெரியவந்து வீட்டுக்கு வந்தால்! அவள் பெரிய சண்டைக்காரி, இது தெரிந்தால் விடுவாளா!? தன் வாசலின் இனிப்பு புளியம்பழத்திற்கே சண்டைப்போடுபவள். கடவுளே காப்பாற்று என்று கிடுகிடுவென்று நடுங்கினேன். இரவு-பகல்களை நடுங்கிக்கொண்டே கழித்தேன்.

அந்தப் பெண் எதற்காகவோ கிழவியிடம் எதையும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மறந்து போயிருக்கவேண்டும்! ஒருநாள் எங்கள் பசு கன்று போட்டிருக்கிறதென்று தெரிந்து சீம்பால் எடுத்துச்செல்ல வந்தவள் என்னை விடாமல் கூட்டிக்கொண்டு சென்றாள். ஆதங்கமும், மகிழ்ச்சியும் ஒன்றாக என்னை நடுங்கவைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பெண் என்னைப்பார்த்ததும் சந்தோசத்தால் குதித்தாள். பெருமாயிக் கிழவி சீம்பாலில் ஏதோ இனிப்பு செய்துகொடுத்தாள். அந்த நேரம் எனக்கு அழவேண்டும்போல தோன்றியது. அந்த பெண் என்னை ஒட்டிக்கொண்டு உட்கார்ந்தாள். நான் நகர்ந்து நகர்ந்து உட்கார்ந்தேன். பெருமாயிக் கிழவியின் பக்கத்தில் உட்கார வேண்டும்போல இருந்தது, அவளுடைய அருகாமை ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. எப்படியோ அந்த பெண்ணைத் தள்ளிக்கொண்டே, தூரமாக அமர்ந்துகொண்டேன். கிழவியின் வீட்டுக்கு மறுபடியும் போக்கத்தொடங்கினேன். ராஜூவேலுவும் என்னுடன் சேர்ந்துகொண்டான்.

பெருமாயிக் கிழவி பணியாரம் செய்து எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாள். அவள் இழவு வீட்டுக்குப் போனால் நானும் அவனும் அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து கொள்வோம். சில பெண்கள் அழுதுகொண்டே எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘இந்த ரெண்டு பசங்களும் ஏந்தான் இந்த கிழவி பின்னாலயே விழுந்திருக்காணுங்களோ’ என்று முணுமுணுப்பார்கள். நாங்களோ அவள் ஒப்பாரி வைப்பதை ஆழ்ந்து கேட்டுக்கொண்டே மெய்மறந்துபோவோம். அவள் பாடும் ஒப்பாரியின் தலைவால் புரியாமல் நாங்கள் இருவரும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் ஒன்றுமட்டும் புரியும்: சாவு-மரணம். இவைகளைத் தாண்டி எங்களுக்கு தலைவால் புரியவில்லை.

ஒப்பாரி வைத்து இறந்த வீட்டுக்காரர்களின் துன்பத்திற்கு குரல்கொடுத்து பணம் வாங்கிவந்த நாள் அவளுடைய முகம் விசித்திரமாகத் தெரியும். இழவு வீட்டிற்குப் போகும்போது அவள் தன் இரும்புப் பெட்டியைத் திறந்து துணியில் சுத்திவைத்திருக்கும் தங்கத் தோட்டை போட்டுக்கொண்டு புறப்படுவாள். வெகு கனமான அந்தத் தோடு காதில் ஏறியவுடன் அவள் நம் வரலாற்றுப் புத்தகங்களில் இருக்கும் எகிப்து நாட்டுப் பெண்களைப் போலத் தெரிவாள். அந்த தோட்டின் கனத்திற்கு அவள் காது தொங்கும். பெரிய ஓட்டை ஒன்று தோன்றி அவள் காது கிணறுபோலாகும். அவள் ஒப்பாரிவைத்துப் பாடிக்கொண்டே உடலை அங்கிங்கும் ஆட்டும்போது அவளுடைய தொங்கும் காதுகளின் கீழ்பகுதி அரைக்கிலோமீட்டர் போய்த் திரும்பும் அழகைப் பார்க்க துடித்துக்கொண்டிருப்போம். சுய்யென்று தோட்டுடன் அவளுடைய காதுகள் பறந்ததும் நான் சட்டென்று எகிறி ராஜாவேலுவின் தலையில் பலமாக அடித்து ஹாஹாஹா என்று சிரிப்பேன்.

அந்தத் தோடு எப்படி இருக்கும் என்றால், எங்கள் வயலின் தண்ணீர் பைப் ஒன்றைக் கத்தரித்து அடுக்கிவைத்ததைப் போலத் தெரியும். சாவு வீட்டிற்கு தங்கநகைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாதென்று நம் வீட்டுப்பெண்கள் கழட்டிவைத்துவிட்டு வந்தால் இவள் மட்டும் கால்படி அரைப்படி போல இருக்கும் தோட்டை போட்டுக்கொண்டு பளபளவென்று மின்னிக்கொண்டிருப்பாள். அவள் உடுத்தும் வெள்ளைச் சேலை மற்றும் தங்க ஜோடித் தோட்டில் அவள் பேயைப்போலத் தெரிவது சிலசமயம் பயமாக இருக்கும். ‘பாட்டி, இழவுக்குப் போகும்போது இந்தத் தோட்டை ஏன் போட்டுக்கறீங்க?’ என்று நான் கேட்டதற்கு அது தன் அம்மாவின் தோடு என்றும் அதைப் போட்டுக்கொள்ளும் போது அவள் அம்மாவின் நினைவு வந்து அழ ஆரம்பிக்கிறேன், அப்படியே தன் வீடு, ஊர், சொந்தபந்தம் எல்லாம் நினைவிற்கு வந்து அழுகிறேன் என்று சொல்லி என்னைப்பார்த்து சிரித்தாள். அப்படி சிரித்த ஒருவாரத்தில் இறந்துபோனாள். அந்த சாவிற்கு நான் காரணமானேனா என்பது தெரியவில்லை.

அன்று கிழக்கு வீதி பெரியசாமி தேவர் வீட்டில் இழவு அங்கிருந்து திரும்பி வந்து வாசலில் காலை நீட்டி தோட்டைக் கழற்றிக்கொண்டிருந்தாள். இருமிக்கொண்டிருந்தாள். “டேய், சிறுக்கி தண்ணி கொண்டுவாடி’ என்று கூவிக்கொண்டிருந்தாள். அவளுடைய பேத்தி வரவே இல்லை. நான் உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன். அந்த சிறுக்கி என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று என்னைக் கேட்டாள். சும்மா உக்காந்திருக்கா என்று பொய் சொன்னேன். ஆனால் அந்த சிறுமி ஆடைகளை கழற்றிவிட்டு படுத்துக்கொண்டு தொடைகளுக்கு இடையில் கைவைத்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் வா என்பதைப்போல சமிக்ஞை செய்தாள். அவள் பக்கம் திரும்பாமல் வெளியேவந்தேன். பெருமாயிக் கிழவியை உள்ளே போகவிடாமல் நான் அவளைப் பார்த்து ‘எதுக்கு பாட்டி இப்படி இழவு வீட்டுக்குப்போய் அழுவுர? அழுது அழுது உடம்புக்கு சரியில்லாம படுத்துக்கர?’ என்றேன். அவள் தன் கைப்பையிலிருந்து பாக்கை எடுத்து வாயில் வீசி, வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவி அதை கடைவாயில் நுழைத்து ‘அழுகறதுதான் என் வருமானம்டா’ என்று ‘இந்த சிறுக்கிக்கு ஒரு கலியாணம் பண்ணலாமுன்னு பாக்கறேன், நடக்கவே மாட்டேங்குது! நான் சாகரதுக்குள்ள இந்த முண்டையை கரை சேக்கணும்னு நினைக்கிறேன்…..போகட்டும், இந்தத் தேவடிய சாவாளான்ன சாகவும் மாட்டேங்கிகிறா’ என்று தன் பேத்தியைக் காட்டி அவள் வாயை முந்தானையால் மூடிக்கொண்டு கிளுக் என்று சிரித்தாள். நான் கிழவியைப்பார்த்து ‘பெரியவனானதும் நானே கலியாணம் கட்டிக்கிறேன் பாட்டி’ என்றேன். அவள் தாவாக்கட்டையில் கைவைத்து ‘ஆத்தாடி, வீரத்தேவன் பேரனா கொக்கா!?’ என்று என் தலையைக் கோதி, தன் விரல்களை மடித்து சொடுக்குப் போட்டாள்.

அப்போது கொக்கரக்கோ…கொக்…கொக்… அவளுடைய ஒரேஒரு கோழி வந்துகொண்டிருந்தது. கிழவி அந்தக் கோழியையே முறைத்தாள். அதுவும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றது. கொக்கை தாழ்த்தி அங்கே விழுந்திருந்த தானியங்களைப் பொறுக்கி தின்றுகொண்டு அவ்வப்போது அவளைப் பார்த்து கொக், கொக் என்றது. அவள் ‘ஏய், வாடி இங்க’ கூப்பிட்டாள். கோழி எந்த பதிலையும் சொல்லாமல் அதுபாட்டிற்கு தானியங்களை பொறுக்கிக் கொண்டிருந்தது. அது பெருமாயி நேற்றுப் போட்ட மேவு. கிழவி மறுபடியும் கூப்பிட்டாள். அந்தக் கோழி மெல்ல அவள் பக்கம் வந்தது. எனக்கு வியப்பு, கோழிகளுக்கும் மனிதர்களின் மொழி தெரியுமா! பெருமாயி கிழவி கோழியின் கண்களைப் பார்த்துக் கேட்டாள்: ‘முட்டைய எங்கடி வச்ச? இந்தத் தடவையும் எங்கயோ வச்சு இங்க வந்திருக்கயா! திங்கறது மட்டும் நா போடற மேவு, முட்டைங்களை மட்டும் போடறது யார் வீட்லயோ, அல்ல? ஏன், என் வீட்டில வைக்கத் தெரியாதா? என்னுது குடிசையின்னு சங்கடமா? உனக்குன்னு அந்தக் கூட்ட கட்டியிருக்கேந்தானே! ஏன் அங்க வைக்கத் தெரியாதா?! பேசராள பாரு …….எங்கடி வைச்ச?….தேவடியா, சொல்லு’ என்று சொல்லிக்கொண்டே கையில் கிடைத்ததை எடுத்து அதன் மீது எறிந்தாள். அது ஓடிக்கொண்டே கொக்கரக் ..கொக் என்று பட்டென்று தாவி வெளியே போனது.

பெருமாயிக் கிழவியின் தொண்டை திறந்துகொண்டது. நெற்றிக்கு மேலே வானம் மெல்ல கருப்புக் கட்டியது. மழை வருவது உறுதியாகத் தெரிந்தது. பெருமாயிக் கிழவி கோழியை திட்டும் சாக்கில் சுற்றியுள்ள வீட்டுக்காரர்களை திட்ட ஆரம்பித்தாள். அவள் கோழி அவர்கள் வீட்டில் முட்டை இட்டால் முட்டை அவர்களுடையதாகி விடுமா? திருட்டுப் பசங்க, பொம்பள தனியா இருக்கான்னு என்னைய ஏமாத்தப் பாக்கராங்க…ஏய் பாழாப்போன கோழி, எங்க முட்டைய வச்சுத் தொலைச்ச? ஏய் வண்ணாத்தி வள்ளி, உங்க வீட்ல வைச்சதாடி? என்னம்மா, அலமேலு உன் வீட்ல? சுந்தரி, உன் வீட்ல காணா…? என்று அக்கம்-பக்க வீட்டுக்காரர்களை எல்லாம் வம்புக்கிழுத்தாள். அந்தக் கோழி நடந்துபோன இடங்களை எல்லாம் நினைவுப்படுத்திக்கொண்டு தேடினாள். நான்கு வீடுகள் தாண்டி இருப்பதுதான் அந்த நல்லமுத்து தேவர் வீடு. அவன் பிள்ளைகள் ஒருமுறை அவள் வீட்டுப்பக்கத்தில் இருந்த கருவேப்பிள்ளை மரத்தை வெட்டிக்கொண்டுபோயிருந்தார்கள். அது தெரிந்த இவள் அவர் வீட்டுக்கு முன்னால் நின்று பெரிதாக சண்டைப்போட்டிருந்தாள். நல்லமுத்துவின் இரண்டு பசங்களும் இவள் மீது பாய்ந்து அடிப்பது ஒன்றுதான் மீதம். அங்கிருந்தவர்கள் தடுத்து பஞ்சாயத்து கூட்டி நல்லமுத்துவிற்கு அபராதம் விதித்தார்கள். அன்றிலிருந்து நல்லமுத்துவின் பசங்களுக்கு இவள் மீதான கோபம் அதிகமாகிக்கொண்டே போனது. சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்கள். தன் மீது பாய்ந்த அந்த சேர்வை (அகமுடித் தேவர்) நாய்களை கொன்றுவிடவேண்டுமென்று பெருமாயி அன்று இரவு தூங்காமல் குத்தவைத்து உட்கார்ந்துகொண்டே விளக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் இரும்புப்பெட்டியில் இருந்த கத்தியை எடுத்து இடுப்பில் சொருக்கிக்கொண்டு, தன் வீட்டைத் தாக்க அந்தப் பொட்டப்பயல்கள் வந்தாலும் வரலாம் என்று இரவு முழுதும் உட்கார்ந்தே இருந்தாள். அவர்கள் கிடைப்பார்கள் என்ற முழு நம்பிக்கையில் இவளும் காத்துக்கொண்டிருந்தாள். அவர்கள் மீதான பழியை தீர்த்துக்கொள்ள நேரம் வந்துவிட்டதா? இல்லை மற்றொரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கவா? என்ற குழப்பத்தில் நல்லமுத்து வீட்டு வாசலில் வந்து நின்றாள். தலை கிர்ரென்று சுற்றியது. வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டதைப் போலாகி கேட்பது வேண்டாம் என்று தீர்மானித்து முன்னால் நடந்தாள். இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்த நல்லமுத்துவின் சின்ன மகன் வெங்கடேசன் சலிப்புடன், வெளியே வந்து தூ என்று துப்பினான். பெருமாயி கிழவி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முன்னால் நடந்தாள். சரசாத்தாவின் வீட்டில் கேட்டு முட்டைகள் எங்கேயும் கிடைக்காமல் கோழியை வாய்க்குவந்தபடி வசைபாடிக்கொண்டே வீட்டுப்பக்கம் நடந்தாள். ‘இந்த வாரமெல்லாம் முட்ட வச்சிருக்கணும். குறஞ்சது பத்துப்பதனஞ்சு முட்டயாவது இருக்கணும்…….எங்கவைச்சுத் தொலைஞ்சதோ, பாழாப்போன கருப்பாயி!? அந்தக் கோழிக்கு என் பாட்டி பேர வச்சிருக்கக்கூடாது..அவளப் போலவே ஊருக்கு உபகாரி, வீட்டுக்கு வஞ்சகி! என் தாத்தாவின் பேரை வச்சிருக்கணும்…அந்த வெள்ளைக்காரன் வீட்டையே கொள்ளையடிச்சவன்..தூ…. எங்க போயறப்போற, வந்தே வருவ, வா, கொக், கொக், என்று குண்டியத் திருப்பிக்கிட்டு வருவியல்ல ..அப்பா வைச்சுக்கறேன்….திங்கறதுக்கு எங்கிட்டத்தானே வந்தாகனும்….உங்கழுத்தத் திருவி அடுப்பல போடலன இவ கள்ளச்சியே இல்ல!’ பெருமாயிக் கிழவி தன் வீட்டு வாசலுக்கு போய்க்கொண்டிருக்கும் போது வானம் கருத்து மழைத் துளிகள் பட படவென்று தூறல்போட ஆரம்பித்தன. வாசலில் போட்டிருந்த விறகுகளை பொறுக்கிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே தன் பேத்தியைக் கூப்பிட்டாள். காயப்போட்டிருந்த துணிகளை அவசரவசரமாக எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினாள். உள்ளே கும்மிருட்டு. பேத்தியை கூப்பிடபடியே விளக்கை ஏற்றினாள். அங்கே திரும்பியவள் ஒருவிநாடி அதிர்ந்து போனாள். பேத்தி துணியில்லாமல் அம்மணமாக படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். உடனே அவளைக் காலால் உதைத்து எழுப்பி, அவளுக்கு உடுப்பை உடுத்திக்கொண்டே வைதுகொண்டிருந்தாள். மழைத் துளிகள் குடிசையின் மீது ஒரேடியாக படபடவென்று விழுந்துகொண்டிருந்தது. அங்கங்கே ஒழுக்கிக்கொண்டிருந்தது. பேத்தியைத் திட்டிக்கொண்டே, அப்படியே கோழியையும் சபித்துக்கொண்டு எழுத்து அடுப்புப் பக்கம் போய் காலையில் வடித்த சோத்துக்கு ரசத்தை பிசைந்து பேத்திக்கு ஊட்டி தானும் கொஞ்சம் தின்று மழை ஒழுகாத இடம் பார்த்து பாயை விரித்தாள். பேத்தியை வந்து படுக்க கூப்பிட்டாள். ‘இந்தப் பாழாப்போன கோழி எங்க போச்சோ! மழைல எங்க நின்னிருக்கோ! நனைஞ்சு தொப்பையாயிருக்கும்….பாவம்! அஞ்சு மாசமா நான் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன், ஒரு முட்டை வைக்குதான்னா இல்ல! இந்தத் தடவையாவது வைக்கும்னு பாத்தா அதுவும் இல்ல. இல்ல, வேற எங்கேயாவது வைச்சிருக்கணும், சேவல் ஒண்ணு இதுக்குப் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தத அன்னைக்கு நான் பாத்தனல்ல! நாளைக்கு வரட்டும், கழுத்த அறுத்து கொளம்புவைக்கலன்ன நான் கள்ளச்சியே அல்ல!’

பெருமாயிக் கிழவி பேத்தியைப் பார்த்தாள். அவள் கண்ணைத் திறந்துகொண்டே படுத்திருந்தாள். அடிவயிறு களுக் என்றது. ‘கடவுளே, இவள எதுக்குப்பா இப்படி தண்டிக்கிற!’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழத் தொடங்கினாள். ‘இவ பிறந்தப்பவே கள்ளிப் பால குடிக்கவச்சு சாகடிச்சிருந்தா இந்த ரோதனையே இருந்திருக்காது….அய்யோ..அய்யய்யோ… இவள என்ன செய்ய? நான் பெத்தவ ஒன்னப்பெத்து என்கிட்ட குடுத்துட்டுப் போயிட்டா, அவளக் கட்டிக்கிட்டவனோ குடிச்சுக் குடிச்சு அவனும் மண்ணா போயிட்டான்.’ திக்கில்லாத தனக்கு இந்தக் குழைந்ததான் துணைன்னு அவள் வளர்வதை பார்த்துக்கொண்டு நாளைத் தள்ளிக்கொண்டிருந்த பெருமாயி இப்போது உண்மையாகவும் நடுங்கிக்கொண்டிருந்தாள். கொதித்துக்கொண்டிருக்கும் மனதை அடக்கமுடியாமல் எழுந்து அடுப்பைப் பற்றவைத்து புகையிலை, வெல்லம் மற்றும் இன்னும் சிலதை நீரில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்து பெரியதொரு ஏப்பம் விட்டாள். ‘நீ கள்ளச்சிடீ, எதுக்கும், யாருக்கும் பயப்படாதவ, தைரியமா உன்ன கரை சேத்தாம இந்தப் பெருமாயி செத்துப் போகமாட்டா…விடிஞ்சதும் புறப்புடு, பேச்சி ஆத்தாளுக்கு வேண்டுதல் போட்டுட்டு வரலாம்..உனக்கு அவ கலியாணம் பண்ணிவைக்காம இருக்கட்டும், அப்புறம் அவளுக்கு இருக்கு…எங்கம்மா…எங்கம்மா அவ…நம்பள கைவிட்டட மாட்டா..ஆம்பள வாரிசு இல்லைன்னு சொத்தை எல்லாம் அவன் பிடுங்கிக்கிட்டான் …..யாரு? என் சித்தப்பா மகன்! உனக்கு ஒரு வழி கிடைச்சதும் போறேன், திரும்பி நம்ம ஊருக்கு போயி அவனைக் கொன்னு போடறேன்.’

மழை விட்டதுபோல இருந்தது. எழுந்து போய் வெளியே பார்த்தாள். ‘ஒண்ணுக்குப் போறயா’ கேட்டாள். பேத்தி இல்லை என்பதைப்போல தலையை ஆட்டினாள். பெருமாயிக் கிழவி வாசலைத் தாண்டி வேலிக்குப் பக்கத்தில் போய் நின்று மூத்திரம் அடித்துக்கொண்டு தன் கோழி தெரிகிறதா என்று அங்கிங்கும் கண்ணாலேயே தேடினாள். எங்கேயும் காணவில்லை. பாழாப்போன கோழி என்று கதவுப்பக்கம் திரும்பினாள்.

யாரோ தூரத்தில் நின்று தன் குடிசைப் பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல நினைத்து சத்தம் போட்டாள், ‘யார்ரா அவன்?’ இருட்டில் அந்த உருவம் மறைந்ததுபோலத் தெரிந்தாலும் ‘நிம்மம்மன்….மூடிக்கிட்டு போயிரு, நீ எந்த ஊருப் பேயா இருந்தாலும் நான் பயப்பட மாட்டேன்…. நான் கள்ளச்சி பெருமாயி, கருத்தம்மா பேத்தி, முனியாண்டித் தேவனின் மகள்..யாருக்கிட்ட உன் விளயாட்டு’ தமிழ் கன்னடம் இரண்டையும் கலந்து விசித்திரமான மொழியில் பேசிக்கொண்டு உள்ளே போனாள். பேத்தியை இறுக்கமாக அணைத்துக்கொண்டு படுத்தாள். கண் இமைகள் கனத்து ஊஞ்சலாடியது. மனது அலைபாயத்தொடங்கி தூக்கத்தை எவ்வளவு தடுத்தாலும் அழுத்தியது. நீரின் மீது மிதந்து கொண்டிருப்பதைப்போல எண்ணி கைகால்கள் விரைத்துக்கொள்ளத் தொடங்கியது. ஒருமுறை பேத்தி எழுந்து போவது தெரிந்தாலும் எழ முடியவில்லை. மூத்திரம் கழிக்கப் போனவள் எப்போது வந்து படுத்தாளோ, ஒன்றும் தெரியவில்லை. அப்படி ஒரு பிணத் தூக்கம்.

பெருமாயிக் கிழவி கண் திறந்தபோது கிழக்கு வெளுத்து மிக நேரமாகி இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த பேத்தி காணவில்லை. எழுந்து வாசலுக்கு ஓடினாள். கூப்பிட்டாள். வண்ணாத்தி வள்ளியைக் கேட்டாள், நாகவ்வாவைக் கேட்டாள். யாரிடமிருந்தும் பதில் இல்லை. எங்க போன இந்தச் சிறுக்கி என்று எதிர் அங்கேயும் இங்கேயும் அலைந்தாள். பின் வீட்டு அலமேலு கூச்சலிட்டாள். எல்லோரும் அங்கே ஓடினார்கள். பெருமாயி பேத்தி அங்கே விழுந்திருந்தாள். அவளுடைய பாவாடை கிழிந்திருந்தது. இரத்தம் தொடையில் உறைந்திருந்தது. வள்ளி, அலமேலு மற்ற சில பெண்கள் கத்திக்கொண்டு அவளை தூக்கிக்கொண்டு குடிசைக்குள் போனார்கள். ‘எந்தப் படுபாவி இப்படிப் பண்ணானோ’ என்று கத்தினார்கள். சிலர் அழுதுகொண்டிருந்தார்கள்.

கூட்டம் கூடியது. பெருமாயிக் கிழவி உள்ளே போனாள். பேத்தியை பார்த்தாள். ‘மூச்சு நின்னுருச்சு விடுங்கம்மா’ என்றாள். வண்ணாத்தி வள்ளி சிறுமியின் மூக்கின் மீது விரல் வைத்துப் பார்த்தாள். ‘முடிஞ்சிருச்சு’ என்றாள். அலமேலு அழத் தொடங்கினாள். சின்னக்கண்ணு அழுதுகொண்டே ‘அடிப்பாவி மகளே, இப்படியா சாவ’ என்று கத்திக்கொண்டிருந்தாள். பெருமாயிக் கிழவி அவள் தொடையில் முள் கீறிய அடையாளத்தை கவனித்து அவள் முகத்தைப் பார்த்தாள். எப்படி செத்திருப்பாள் என்று யோசிக்கத் தொடங்கினாள். கிழக்கு வீதி, மேற்கு வீதி என்று எல்லா வீதிகளிலிருந்தும் மக்கள் வந்து சேர்ந்தார்கள். ஆண்கள் ஒவ்வொருவாக வந்தார்கள். நல்லமுத்து தன் பிள்ளைகளுடன் வந்திருந்தான். பிணத்தை எடுக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. உள்ளே பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள். ஒப்பாரி வைத்துப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

பெருமாயிக் கிழவி மௌனமாக உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீரும் காணவில்லை. ஒன்றும் பேசாமல் பேத்தியின் பிணத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் ராஜாவேலுவும் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தோம். அவள் எங்களை ஒருமுறை பார்த்து நிலத்தை கூர்ந்து பார்த்தாள். பிணத்தை எடுத்துக்கொண்டு போகும் போதும் அவள் அழவில்லை. மக்கள் பலவிதமாகப் பேசினார்கள். பணம் கொடுத்தால் மட்டும் பெருமாயிக் கிழவி அழுவாள், நூறு ரூபாய் நோட்டு கிடைத்தால் மட்டும்தான் அவள் ஒப்பாரி வைப்பாள் என்றும் அவள் பேத்தி இறந்தால் போதும் என்றிருந்தாள் என்றும் பேசிக்கொண்டார்கள்.

நான் மறுநாள் அவள் குடிசைக்குப் போனேன். அவள் கீற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய இழுத்த காதில் தோடு தொங்கிக்கொண்டிருந்தது. அது அவளுடைய அம்மாவின் தோடு என்று சொன்னது நினைவிற்கு வந்து எனக்கு சங்கடமானது. ‘பாட்டி, பாட்டி’ அழைத்தேன். அவள் பேசவில்லை. எனக்கு பயமானது. கொக் கொக் என்று கோழி வாசலுக்கு வருவது கேட்டது. எனக்கு பயம் அதிகமாக வெளியே வந்தேன்.

கோழி பெருமாயிக் கிழவியை தேடிக்கொண்டிருந்ததோ என்னமோ , அங்கிங்கும் கழுத்தைத் திருப்பி கொக் கொக் என்றுகொண்டிருந்தது. ஆச்சரியமாக அதன் பின்னால் ஐந்து குஞ்சுகள் குய்ங் குய்ங் என்று தங்கள் அம்மாவின் பின்னால் ஓடின. அந்தக் கோழி வாசலை எல்லாம் தேடி வீட்டுக்குள் போனது. இதைப் பார்த்த அலமேலம்மா ‘பாத்தயா இந்தக் கோழி செஞ்ச வேலைய!’ என்று சுற்றி இருந்த பெண்களிடம் எதையோ சொல்லிக்கொண்டே ‘ஆத்தா பெருயாயி ஆத்தா உன் கோழி எப்பிடி வந்திருக்கு பாரு! முட்டை வக்கவே இல்லேன்னு இந்தக் கோழிய திட்டி தீத்த இல்ல. இப்பப் பாரு’ என்று உள்ளே போனாள். நான் குடிசைக்கு வெளியே நின்றிருந்தேன். அலமேலம்மா கத்தினாள். அங்கிருந்த பெண்கள் அங்கே ஓடினார்கள். நானும் ஓடினேன். பெருமாயிக் கிழவி கீழே விழுந்திருந்தாள். இறந்துவிட்டாள் என்று எனக்குத் தெரிந்தபோது பெரிதாக அழத்தொடங்கினேன். கோழி தன் குஞ்சுகளுடன் பெருமாயி உடம்பில் ஏறி கொக் கொக் என்றுகொண்டிருந்தது. பெண்கள் அதை துரத்தினார்கள். நான் அழுதுகொண்டே இருந்தேன். இந்தப் பெருமாயிக் கிழவி எப்படி இறந்தாள். ஏன் இறந்தாள் என்று எனக்கு அப்போது தெரியாது.

பெருமாயி கிழவியைக் கொன்றது நானா!? நெஞ்சு வெடித்துவிடும் அளவிற்கு துடிக்கிறது. நான் ஒரு கொலைக்காரனா?

.

***

கவிதாயினி யஷோதா சம்மானி விக்ரமரத்ன. / அவர்கள் நம் அயல் மனிதர்கள் 13 – எம்.ரிஷான் ஷெரீப்

கவிதாயினி யஷோதா சம்மானி விக்ரமரத்ன.

கவிதாயினி யஷோதா சம்மானி விக்ரமரத்ன.

திருமணம் எனப்படுவது இரு மனங்கள் ஒன்றாக இணைந்து வாழ்நாள் முழுவதும் பயணிக்கத் துவங்கும் ஜீவித பந்தம். ஒவ்வொரு இளைஞர் யுவதியுனுள்ளும் தமது திருமண நாள் குறித்த கனவுகள் இருக்கும். அது யதார்த்தமானது. வாழ்நாளில் ஊரும், உறவுகளுமறிய தாம் கதாநாயகனாக, கதாநாயகியாக பரிணமிக்கும், மின்னும் அந் நாளைப் பற்றிய எண்ணங்கள் திருமண வயதைக் கழிப்பவர்களிடமிருப்பது இயல்பானதுதான்.

அக் கனவுகளை நனவாக்குவதாகக் கூறிக் கொண்டு, அத்தியாவசியமான ஒன்றை ஆடம்பரமாகக் காட்சிப்படுத்தி, மணமக்கள் சிக்கனமாகத் தொடங்க வேண்டிய திருமண வாழ்க்கையை, கடனாளிகளாகத் தொடங்கச் செய்யும் வியாபாரங்கள் இக் காலத்தில் மிகைத்துள்ளதையும் பரவலாகக் காண முடிகிறது.

எவ்வளவுதான் கல்வியறிவு இருந்த போதிலும், திருமண விழாக்கள் குறித்த ஊடக விளம்பரங்களின் மாயைகளில் மனம் தொலைத்து திருமணப் பேச்சுவார்த்தை, தரகர் கூலி, நிச்சயதார்த்தம், நண்பர்களுக்கான விருந்துகள், அழகு நிலையச் செலவுகள், ஒப்பனை, ஆடை அலங்காரங்கள், நகைகள், மண மேடை அலங்காரங்கள், உணவு, பரிசுகள் என வாழ்நாளின் ஒரு நாள் நிகழ்வுக்காக கடன் வாங்கி கணக்கு பார்க்காது செலவளித்துவிட்டு வாழ்நாள் முழுவதும் கடன் செலுத்தியே ஓய்ந்து போகும் மணமக்கள் பலரையும் இக் கால கட்டத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

இந் நிலையில் கணவனுக்கு மனைவியையும், மனைவிக்கு கணவனையும் பார்க்கும்போதெல்லாம் தமது திருமணத்துக்காக தாம் பட்ட கடன்தான் நினைவுக்கு வரும். அன்பாகப் பார்க்கும் பார்வைகள் மறைந்து இவனால் அல்லது இவளால்தான் நானின்று கடனாளியாக நிற்கிறேனென தோன்றிக் கொண்டேதான் இருக்கும். திருமண வாழ்க்கை நரகமாவதும், விவாகரத்துக்கள் அதிகமாகவதும், ஜீவிதம் பிடிப்பின்றி நகர்வதும் இதனால்தான்.

திருமண வாழ்க்கையின் ஊடல், கூடல்களை எடுத்துச் சொல்ல அக் காலத்தைப் போல கூட்டுக் குடும்பங்கள் இன்று இல்லை. அனைத்தும் கையடக்கத்துக்குள் சுருங்கி விட்ட இளந் தலைமுறையினரிடத்தில் உபதேசங்களுக்கும் பலனில்லை.

இவ்வாறு, அழகுநிலையமொன்றில் பணி புரியும் பெண்ணொருத்தி தனது திருமண வயது கடந்து சென்றும் திருமணச் செலவுக்கு வழியற்று கல்யாணக் கனவுகளோடு காலந் தள்ளுவதைக் குறித்த கவிதையொன்றை மிக யதார்த்தமாக எழுதியிருக்கிறார் கவிதாயினி யஷோதா சம்மானி விக்ரமரத்ன. அந்தக் கவிதை இதுதான்.

மணப்பெண்களின் பூங்கொத்துகளைச் செய்பவள்

கூந்தலின் சுருட்டை சிக்குகளகற்றி
நேராக்கி பளபளக்கச் செய்வாள்
தோல் வரட்சி சுருக்கங்களகற்றி
உதட்டுச் சாயமிட்டு ஒப்பனை செய்வாள்

செல்வந்தப் பெண்ணொருத்தியின் வதனத்தில்
இருண்ட நிழலகற்றி வெண்மை பரப்பி
மெல்லிய புருவமாகச் சீர்படுத்தும் அதிசயம்
வானிலிருந்து இறங்கியது போன்ற
காசுத்தாளின் உரையாடலற்ற வேண்டுகோளை
சுருட்டியெறிய இயலுமா என்ன?

நுனி வெடித்த குட்டைக் கூந்தல்
குத்தினால் வலிக்கும் நுரையீரல்
சாயமிட்டு மறைக்கும் நரை முடிகள்
குத்தாவிட்டாலும் முள்ளெனத் துளைக்கும் நெஞ்சம்
சொப்பனக் கறைகளையும் தழும்புகளையும் நீக்க
ஒப்பனை நீக்கிகள் எவ்வளவு தேவையாகும்?

பரந்து சென்ற வெல்வட் ரோஜாப் பூ இதழ்களை
சேகரித்து கம்பியொன்றில் பூவாகக் கோர்ப்பவள்
விழிநீரால் பனித்துளிகளை இதழ் மீது விசிறுபவள்
கனவிலும் மணப்பெண்களின் பூங்கொத்துகளைச் செய்பவள்

—-

தினந்தோறும் மணப்பெண்களை அலங்கரித்தும், அவர்களுக்கு ஒப்பனையிட்டும் காலம் தள்ளும் யுவதியொருத்தி, அம் மணப் பெண்களின் இடத்தில் நிற்க எவ்வளவு தூரம் ஆசைப்படுவாள், கனவு காணுவாள்? வாழ்வின் யதார்த்தம், ஒரு நாள் ஆடம்பரத்திலல்ல என உலகம் புரிந்திடும் நாளில்தான் அக் கனவு நிஜமாகக் கூடும்.

– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

வான்மதி செந்தில்வாணன் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி

download (26)

1. பச்சைக் காரத்தின்

பழிச்சொல் தாளாமல்

தலைகவிழ்ந்தே பூக்கின்றன

மிளகாய்ப் பூக்கள்.

2.

தெரியவில்லை

இத்தனை அழகாய்

ஓவியம் தீட்டும் மேகம்

எங்கு ஒளித்து வைத்திருக்கிறதோ

அதன் தூரிகையென!!!

3.

நெடுஞ்சாலையின் நடுவே

குருதிப் பிரவகித்தோட

குடல்சரிந்து வீழ்ந்து கிடந்த

ஒரு செவலை நாயை

எவரோ

சாலையோரமாய் பூத்திருந்த

அந்தச் செவ்வரளிச் செடிக்குக் கீழாக

இழுத்துப் போட்டிருக்கக்கூடும்.

தகவல் தெரிவிக்கும் பொருட்டு

அலுவலகம் விரைகையில்

வழியெங்கும் செத்துக் கிடந்தது

மா நகராட்சி.

4.

இருவரித் தண்டவாளம் ஒன்றினை

தற்காலிகமாய் வானில்

புகைத்துப் போனது

உயரம் தாங்கிய

ஜெட் விமானமொன்று.

ஒரு பறவை

தனக்குத் தெரிந்த ஆகாயத்தை

அதில் எழுதிக்கொண்டிருந்தது.

5.

எழுத அமர்ந்தேன்

வீட்டினுள்

ஒரு கவிதை.

வராமலே நிற்கிறது

வெளிவாசல் கோலமாக!!!

6.

எதிர்பாரா

கை விசுறலில்

வீழ்ந்து கிடக்கிறது

வெண்காகிதத் தாள்மீது

என்னவென்றே தெரியாத

ஒரு எழுத்தாய்

“கொசு”

7.

அலைகள் ஆர்ப்பரிக்காத

வானத்தை

அவசரமாய் விழுங்கியதில்

ஆர்ப்பரித்துக் கிடக்கிறது

ஒரு கடல்

8.

இப்போதைக்கு

நான் எங்கு செல்லவேண்டும் என்பதை

உறுதி செய்தது

பேருந்துப் பயணச்சீட்டு.

ஒருவேளை

எனக்கான

நிறுத்தத்தைத் தாண்டி

இந்தப் பாழும் தூக்கம்

பயணித்துக் கொண்டிருக்குமாயின்

எழுப்பிட வேண்டாம்

என்னை எவரும்.

ஏனெனில்

இதுவே

என் பயணத்தின்

இறுதிச்சுற்றாகவும் இருக்கலாம்

9.

வறண்ட நாவுடன்

சிறிதளவே தண்ணீர் தேங்கிய

அக் குளத்தின்

படித்துறையில் அமர்ந்து

ஒவ்வொரு கல்லாய் வீசிக்கொண்டிருந்தேன் .

கற்குவியலை விழுங்கியும் நிரம்பவில்லை

அதன் வயிறு .

நெடுநேர முயற்சிக்குப் பின்

கல்லடிபட்டுக் கசிந்த

சிற்றுயிர்களின் குருதி கலந்து

செங் குட்டையாய்க் காட்சியளித்தது

மேலெழும்பிய குளத்து நீர் .

சொட்டு உமிழ்நீர்கூட

விழுங்கத் திராணியற்று

ஓடுகிறேன் இப்போது

குளத்திலிருந்து ஆதிக் குளத்திற்கு

சில கற்களுடன்….

10.

வேறொன்றுமில்லை.

திசையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பயணிக்கவென

நொடிக்கொரு திசையை

சுட்டுகின்றன கைகள்.

மறுத்தலித்து எப்போதும்

பாதைகளற்ற திசையில்

பயணிக்கத் துணிகின்றன கால்கள்.

எட்டாத திசைக்கு ஏணி வைக்க

சிரத்தை கொள்கிறது

எப்போதும் மனது.

முடிவு செய்துவிட்டேன்.

திசைகள் பலவாய் இருந்தால் என்ன?

இருக்கும் இந்த ஒற்றை வானின்கீழ்

சளைக்காமல்

வாழ்ந்துவிட்டுப் போவதென.

••••

_

நஸ்ருதீன் ஷா – தமிழில்-க்ருஷாங்கினி

download (44)

நஸ்ருதீன் ஷா

இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான், நஸ்ருதீனுக்கு தான் எப்போது பிறந்தோம் என்பது தெரியாது. பாரூக் சுல்தானாவுக்கும்தான் தெரியாது நஸ்ருதீன் (தன்மகன்) எப்போது பிறந்தான் என்பது. நமது சினிமா உலகில் பிரபலமா யிருக்கும் நஸ்ருதீன் ஷா எப்போது பிறந்தார் என்பது எனக்கும் உங்களுக்கும் கூடத்தான் தெரியாது. இதுவும் வேடிக்கைதான். அவர் சப்தமில்லாமல் இந்த உலகிற்குள் நுழைந்துவிட்டாரா? உத்திரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னௌவின் அருகிலுள்ள ஒரு சிறு நகரமான பாராபங்கி என்ற ஊரில் ஆலே முகம்மதுவிற்கும் பாரூக் சுல்தானாவிற்கும் 1949 ஜூலை மாதத்திலோ அல்லது 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலோ பிறந்தார். வாலீத் சாஹேப், நஸ்ருதீன் ஷாவை பள்ளியில் சேர்க்கும் போது 16 ஆகஸ்ட் 1950ல் பிறந்தார் என்று எழுதி வைத்தார். பிறந்த தேதியில் ஏன் இவ்வளவு குழப்பம் என்று நஸீரிடம் கேட்ட பொழுது அவர் சொன்னார், ‘அம்மா எப்போதும் ஒரே மாதிரித்தான் சொல்லுவாள் நீ ரம்ஜான் அன்று பிறந்தாய் என்று. அப்படி ரம்ஜான் அன்று பிறந்த நசீரின் வருடம் என்ன என்று எப்படி கணிக்க முடியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும், நடிப்பதற்காகவே அவர் பிறந்தார் என்று. சினிமா உலகில் ‘ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நட்சத்திரமாக நஸ்ருதீன் ஷா என்றுமே இருந்ததில்லை. ஆனால், ஸ்டார் என்றழைக்கப் படுபவருக்கு உரிய வெளிச்சமும் புகழும் நசீருக்கு எப்போதுமே உண்டு. சமீபத்தில் நஸ்ருதீன் ஷா தனது தன் வரலாற்றை ‘அண்ட் ஒன் டே’(And One Day-மற்றும் ஒரு நாள்) என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். அதில் நஸீர் நிறைய சொல்லி இருக்கிறார். அது இவரைப் பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. அது எழுதிய காலம் சூழல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவும் அது உதவி செய்கிறது. அதிலிருந்து சில பக்கங்களை நாமும் புரட்டலாம்.

இந்த தன் வரலாறு எழுதியதைப் பற்றி சொல்லத் தொடங்குவதற்கான கதை கூட சுவாரஸ்யமானதுதான். 2002ம் ஆண்டில், நஸ்ருதீன் ஷாவை ஹாலிவுட்டின் பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனம் தனது பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தது. அந்தப் படத்தை ஒப்புக்கொள்ள இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. அந்தப் படத்தில் ஸீன் கார்னரியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ‘பலகாலம் அவரை என் குருவாக எண்ணியிருந்தேன். இரண்டாவதாக அவர்கள் எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். வேலை ஆரம்பித்த சில வாரங்களிலேயே நான் ஒரு லாப்டாப் வாங்கிவிட்டேன். அதை எனக்கு ஆன், ஆப் செய்ய கற்றுக் கொடுக்க ஒரு ஆளையும் காசு கொடுத்து ஏற்பாடு செய்து விட்டேன். ஷூட்டிங்கிற்கு இடையிடையே எனக்கு செய்ய ஒன்றுமில்லாத போது லாப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தேன். அப்புறம் பார்த்தால், ஏறக்குறைய இருபத்தி ஐந்து பக்கங்கள் நான் டைப் செய்து விட்டேன். அதன் பிறகு எழுதுவது கொஞ்சம் தளர்வடைய ஆரம்பித்தது. ஏன் எனில் நான் யோசித்து முடிவெடுத்து ஒன்றும் எழுத ஆரம்பிக்கவில்லை. அப்புறம் எனக்கு ஏதாவது எழுத வருகிறதா என்பது பெரிய சந்தேகமாக இருந்தது. இப்படியே பத்து வருடங்கள் கழிந்துவிட்டன. நான் இப்படி எழுதியது எல்லாமே ஷூட்டிங் இல்லாத நாட்களிலும், இரு காட்சிகளுக்கு இடைவெளியில், வண்டிக்குள் காத்திருக்கும் போதும்தான். சரி, எல்லாவற்றையும் லாப்டாப்பில் இருந்ததை பென் ட்ரைவுக்குக் கொண்டு வந்தேன். எத்தனை முறை பென் ட்ரைவ்வை தொலைத்திருப்பேன் தெரியுமா? திரும்பவும் எல்லாவற்றையும் எடுப்பேன். எழுதியது என்னவோ என் சந்தோஷத்திற்காகத்தான். ஆனால், இதைப் படிப்பதால் யாருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது? இதை எப்படி தெரிந்து கொள்வது? ஒரு நாள் நான் எழுதியவற்றில் பாதிப் பகுதியை ராமச்சந்திர குஹாவிடம் ஒப்படைத்து விட்டேன். இவரின் அறிவாற்றலைக் கண்டு நான் நீண்ட நாட்களாக பிரமித்துக் கொண்டு இருக்கிறேன். அவர் இப்போது என் நண்பர் என்ற வட்டத்திற்குள் நெருங்கி வந்து விட்டார். ராமச்சந்திர குஹா என்னை தவறான வழிக்கு கொண்டு சென்றார். அதாவது நான் எழுதியது நன்றாக இருப்பதாகவும், அதை முழுவதுமாக முடிக்கும்படியும் கூறிவிட்டார். அப்புறம் என்ன? நான் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன். நான் எழுதியதற்கும் அதை புத்தகமாக்குவதற்கும் இடையே நிறைய மனிதர்களின் உழைப்பு இருக்கிறது.அவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதில் ஒருவருக்கு நான் மிக மிக கடன் பட்டிருக்கிறேன். நிறைய முத்தங்களுடன் கூட நன்றி. அவரால்தான் நான் இன்று நானாக இருக்கிறேன். அவள்தான் ரத்னா. அவள் நல்லது கெட்டது, ஏற்றம்-இறக்கம், சந்தோஷம்-துக்கம் என் எல்லாவற்றிலும் என்னைக் கைவிடாமல் என்னை பின்னடைய விடாமல் என்னை என் பாதையில் முன் செல்ல வைத்தவள் என்றால் அது மிகையல்ல. ஆண்டவன் அவளை வாழ்த்தட்டும்.’

பாகிஸ்தான் இந்துஸ்தான் இடையே

—————————————————-

நஸ்ருதீனின் அப்பா, நிறைய அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து கடைசியில் பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு கம்பெனியில் நிரந்தரமாகப் பணியாற்றினார். சுதந்திரம் வந்தவுடன் கூடவே இந்தக் கேள்வியும் எழும்பியது. இந்தியாவில் வசிப்பதா? அல்லது பாகிஸ்தானிலா? நிச்சயமற்ற தன்மை விரைவிலேயே விலகி விட்டது. அப்பா இந்தியாவில் வசிப்பது பொருத்தமானது என முடிவெடுத்தார். தன்னுடைய மூன்று மக்களுடன் இரண்டு சகோதரர்களுடன் அம்மாவின் உறவினர்கள் ஒரு பத்துப்பேரையும் கூட்டிக்கொண்டு பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுவிட்டார். நஸீர் தீர்மானிக்க எதுவுமே இல்லை. அவன் அம்மாவுடனேயே தங்கிவிட்டான். ஏன் எனில் அப்போது நஸீர் பிறக்கவே இல்லை. அப்பாவிற்கு இந்தியாவில் சொத்துக்கள் எதுவும் இல்லை. எல்லையின் அந்தப் பக்கத்திற்கு சென்று வாழவும் அங்கும் ஏதுமில்லை. இங்கு கிடைத்திருக்கும் நிரந்தர வேலையை விட்டுவிட்டு அங்கு போய் பிழைப்பிற்காக புதிய வேலை தேடி ..வாழ்க்கையின் இறங்கு முகத்தில் ஏன் நிச்சயமற்ற நிலையை தானே கொண்டுவர வேண்டும்? இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, புத்தம் புதிதான சுதந்திர நாட்டில், இந்தியாவில் தங்கி விட தீர்மானித்து விட்டார். எதிர்கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்தியாவில் தங்குவது என்ற முடிவு தவறானதல்ல என்று படுகிறது.

நஸ்ருதீனுக்கு இளமைக்கால நினைவுகள் என்று தோன்றுவது இருபுறமும் மரங்கள் அடந்த, நடுவில் பரந்து இருக்கும் சாலையில், ஏறக்குறைய வெறுமையான சாலையில் தொடர்ந்து காரில் நீண்டு பயணம் செய்து கொண்டே இருப்பதைதான். அரசு அதிகாரி ஒருவர் எத்தனை எத்தனை சாலைகளை அளவிடுகிறார். இடப்பெயர்ச்சியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள மூலை முடுக்குகளிலிருந்தும், பெயர் தெரியாத இடங்களிலிருந்தும் மக்கள் நீண்ட நேரம் ரயிலின் வருகைக்காகக் காத்துக் கொண்டு கிடந்தனர். தங்களின் உடமைகள் மீது அமர்ந்தபடி காத்திருந்தனர். இதுவும் நஸீருக்கு நினைவிலிருக்கும் ஒரு காட்சி.

‘அம்மா ஐந்து பிள்ளைகள் பெற்றெடுத்தாள். அவற்றில் நாங்கள் மூவர் மிஞ்சினோம். அப்பா, பல சமயங்களில் மிகுந்த வருத்தத்தோடு தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று எத்தனை ஆசைப்பட்டேன் என்றும் அது வாய்க்கவே இல்லை என்றும் சொல்லுவார். எனவே, என் பிறப்பின் போது அவர் தனக்குப் பிறக்கப்போவது பெண் குழந்தைதான் என்று சர்வ நிச்சயமாய் இருந்தார். ஆனால்., திரும்பவும் அவருக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. அதனால்தானோ என்னவோ எனது பிள்ளைப் பருவத்தில் கொஞ்சகாலம் அவர் என்னை மிகவும் அன்புடன் கொஞ்சுவார். ஆனால், பின் வரும் நாட்களில் அது மெல்ல குறையத் தொடங்கியது. 14வது வயது ஆரம்பிக்கும் போதே பெண்களுக்கு திருமணம் போன்றவை நடைபெற்றுவிடும். அவர்கள் பிள்ளைகளும் பெற்று வளர்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆசையும் இருக்கும். ஆனால் என் அம்மாவிற்கு திருமணம் தாமதமாக நடை பெற்றது. அம்மாவும் அப்பாவும் ஒரே பாரம்பரியத்தில் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்தவர்கள். இந்த செய்தி எல்லாம், பத்தொம்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் என்று கொள்ளலாம். காபூலிலிருந்து சையத் முஹம்மது ஷா என்ற சிறுவன் இந்தியா வந்தடைந்தான். அவன் 1857ல் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர் பக்கத்திலிருந்து பங்கெடுத்துக் கொண்டான். பிறகு வெற்றிக்குப் பின் கருணையின் பேரில் அவனுக்கு சர்தனா பகுதி தானமாகக் கொடுக்கப்படுகிறது. என் அம்மா அப்பாவின் திருமணம் நடைபெறும் பொழுது அப்பா காபூலில் வசித்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு அப்பா இங்கிலாந்து சென்றுவிட்டார். இவையெல்லாம் ஏன் நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் ராஜா அமானுல்லா மகனின் ஆங்கில ஆசிரியரின் கை இதற்குப் பின்னால் இருந்தது என்றும் தோன்றியது. ஆனால், எனக்கு அப்பாவின் நினைவுகளும் அவரின் முகத் தோற்றமும் அவரை சந்திக்கும் போது மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. என்னவோ ஆகட்டும். ஆப்கானி ராஜா இங்கிருந்து ஓட வேண்டி வந்தபோது தனக்கென இருக்கும் ஒரு குழுவில் அப்பாவையும் சேர்த்துக்கொண்டு போய்விட்டார். இப்படி ராஜ குடும்பத்து மக்கள் ஓடி சாடி சென்று கொண்டிருக்கும் பொழுது தனக்கென ஒரு கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டுதான் ஓடுவார்கள். இப்படி அப்பா அவர்களுடன் இணைந்து ஓடிக்கொண்டிருந்த போது அவரின் திருமணமும் முறிந்தது. நசிந்துக் கொண்டிருக்கும் ரஜ்வாடா வம்சத்தின் கடைசி அங்கத்தினர்களை பாதுகாக்க அவரின் அப்பா அம்மாவின் பராமரிப்புப் பணியே என் அம்மாவின் வாழ்க்கையாக மாறிப்போனது. இவை எல்லாமே நடக்கும் பொழுது அப்பா இங்கிலாந்திலேயே இருந்தார். தனது மற்றொரு திருமண உறவையும் மறைத்துக் கொண்டு. தாசில்தார் என்ற பதவியை வெளிக்காட்டினார். என் அம்மாவின் வாழ்க்கையில் அவர் மறுபடியும் இணையவே இல்லை. அப்பாவின் வயது அப்போது நாற்பதும். அம்மாவின் வயது முப்பதும் இருக்கும். இருவரும் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளும் போது தாத்தா பாட்டி ஆகிவிட்டிருந்தனர்.

அம்மாவின் உலகம்

—————————

‘பிறந்த குழந்தைக்கு இவ்வளவு அடர்த்தியான கூந்தல் நான் இதுவரை பார்த்ததே இல்லை, அத்தனை அழகான முடியுடன் நீ பிறந்தாய்’ என்பார் அம்மா. இது ஜமீர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது. ஜஹீருடன் இரட்டையில் பிறந்த உயிரோடிருந்த ஒற்றை, ஜமீர். இதற்கு முன்பு முதன் முதலாகப் பிறந்த அலி அஹமத்துவும் இறந்தான். இப்போது புதிதாய்ப் பிறந்த குழந்தையின், அதன் மரணத்தை அதன் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார் அம்மா. இரண்டு இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் அம்மா இருந்தார். அம்மாவிற்கு இது மிகவும் கடினமாக இருந்தது. ஜமீரை சர்தனாவிற்கு அனுப்பி வைத்தார். அங்கு அம்மாவின் சகோதரிகளுடன் இருந்த அக்கா ஒருவர் -ரஃபத் சுல்தான்- பராமரித்தார். அவர் அம்மாவின் அப்பா அம்மாவையும் கவனித்துக் கொண்டு இருந்தார். அந்த அக்காவிற்கு ஆண்குரல். அவர் ஆண்மை நிறைந்த பெண்மணி. அவர் முகத்தில் ரோமத்தைக் கூட அவ்வப்போது மழித்து வந்தார். அவரின் ஆண் குரலைக் கேட்டால் பெரியவர்களும் கூட அதிர்ந்து போவார்கள். ஜமீருக்கு நான்கு வயதாகும் வரை அவன் இந்தப் பெண்ணுடன் விளையாடி உண்டு வளர்ந்தான். அவன் எங்களுடன் வசிக்க ஹத்லானி வந்தபோது மிகவும் வித்யாசமாகத் தெரிந்தான். அவனின் பழக்க வழக்கங்கள் ஆடை அணியும் முறை எல்லாமே கிராமத்து பையனை போல இருந்தது. அப்படித்தான் இருக்கவும் இருந்தான்.

‘ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்கள் அப்பாவின் மீது மிக ஆழமாகப் படிந்திருந்தது. அவர் ஒரு ட்ராக்டர் ட்ரைவருடன் வீட்டை விட்டு வெளியில் கிளம்பினாலும் கூட தலையில் தொப்பி இல்லாமல் கிளம்ப மாட்டார். அவர் பெரிய பணக்காரரெல்லாம் கிடையாது. ஆனால், சர்தானாவின் முன்னோர்களின் சொத்தை விற்றதில் கிடைத்த அவரின் பங்கை பத்திரமாக எங்கோ வைத்திருந்தார். அந்தப் பணத்தை கொண்டு எங்களுக்கு மிக நல்ல தரமான கல்வியை அளித்தார். அவர் ஆங்கிலத்துடன் பெர்ஷியா மற்றும் பஷ்தோ மொழியும் நன்றாக அறிவார். அந்த இரண்டு மொழிகளையும் நாங்கள் கற்க வேண்டும் என்று விரும்பவே இல்லை. அது எனக்கு இன்றுவரை ஆதங்கம்தான். அவர் ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டிருந்தார். அதனால், எங்களையும் ஆங்கிலேயர் மூலமாகக் கற்க வேண்டும் என விரும்பினார். அவருடைய மிகப் பெரிய ஆசை என்ன என்றால், இன்னொரு முறை தான் லண்டன் செல்ல வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்பதுதான். இதற்காகவே அவர் தனது ஆங்கிலேய உடையையும் தொப்பியையும் கூட பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அவற்றை அணிந்து கொண்டு லண்டன் மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். மேலும், லண்டனிலேயே நிரந்தரமாகத் தங்கி ஒரு இந்திய உணவகம் திறக்க வேண்டும் என்றும் கூட எண்ணினார். பேரர்களாக நாங்களும், அம்மா உணவு தயாரிப்பவராகவும் அந்த ரெஸ்டரொண்டில் இருக்க வேண்டும் என்ற திட்டமெல்லாம் வகுத்திருந்தார். ஆனால், அவையெல்லாம் வெறும் கனவாகவே தங்கிவிட்டன.

‘அம்மாவிற்கு மட்டும் அரபு மொழி எழுதப் படிக்க தெரியும். எனவே அம்மாவிற்கு உருதுவும் தெரியும். கொஞ்சம் கொஞ்சம் பெர்ஷிய மொழியும் பேசுவாள். ஆனால், மற்றவர்களுக்கு பணி செய்வதே தன் வாழ்க்கை எனக் கொண்டிருந்தாள். அம்மா எப்போதும் அப்பாவை, ‘ஷாஹ்’ என்றே அழைப்பாள். அப்பா, அம்மாவின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு நான் கேட்டதில்லை. உணவு தயாரிப்பது, தையல் வேலை செய்வது, குரான் வாசிப்பது, இதுவே அம்மாவின் வேலையாக இருந்தது. இவற்றில் அம்மா கைதேர்ந்த நிபுணியாக இருந்தார். அவள் தன் குரலின் உச்ச ஸ்தாயியில் குரான் பாடம் செய்யும்போது, கெட்டிப் போர்வையில் புதைந்து படுத்துக் கொண்டு கிடக்கும் எங்களுக்கு எதோ பறவை தன் இனியகுரலில் பாடிக் கொண்டிருப்பதைப் போல இருக்கும். ஆனால், அதே அம்மாவின் குரல் கோபத்தில் உயர்ந்து ஒலிக்கும் போது ஏதோ புயல் வீசுவது போல இருக்கும். எப்போதாவாதுதான் அம்மா கோபித்துக் கொள்வாள். ஆனால் கோபப்படும் போது எல்லோருக்கும் அம்மா சீறும் பாம்பு போல இருப்பதாகத் தோன்றும். அப்பாவும் ஒதுங்கிச் சென்றுவிடுவார். நாங்கள் அல்ல, அவளின் கோபத்துக்கு ஆளாவது அப்பாதான். அம்மா தனது இறுதிக்காலம் வரை என்னுடைய வேலையைப் பற்றி மிகவும் பெருமை கொண்டிருந்தாள். நான் அம்மாவை வெளிநாட்டிற்கெல்லாம் கூட்டிக் கொண்டு போயிருக்கிறேன். ராஷ்ட்ரபதி பவனுக்கும் கூட்டிச் சென்றிருக்கிறேன். இந்த இடங்களில் எல்லாம் மக்கள் என்னைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என பெருமையாக இருப்பாள். ஆனால், நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிறகு இதைப் பற்றி அறியும் முயற்சியைக் கைவிட்டு விட்டாள். என் அப்பாவுடன் இளம் பருவம் முழுவதும் பேச்சு வார்த்தையை நான் துண்டித்துக் கொண்டுவிட்ட பிறகு, அம்மா மட்டுமே நான் தஞ்சம் புகும் ஆளாக இருந்தாள். நான் இன்றைக்கும் அம்மாவின் துப்பட்டா ஒன்றை என் அலமாரியில் வைத்திருக்கிறேன். அதிலிருந்து அம்மாவின் மணம் வீசுகிறது. அம்மாவின் துப்பட்டாவை என் கட்டிலில் தொங்கவிட்டுக் கொண்டு என்மீது அது உரசும் அந்த ஸ்பரிசம்தான் எனக்கு உலகிலேயே மன அமைதியையும், மெய்சிலிர்ப்பையும் ஏற்படுத்தும் தொடல் என உணர்கிறேன். என் அம்மாவை விடவும் அருமையாக சமைப்பவர் இந்த உலகிலேயே வேறு யாரும் கிடையாது என்று எனக்குத் தோன்றுகிறது.’

1951ம் ஆண்டிற்குப் பிறகு நசீரின் குடும்பம் லக்னௌவிற்கு, லக்னௌவிலிருந்து பரேலி, அங்கிருந்து ஹலத்வானி, கடைசியாக நைனிடால் என்று சுற்றி வந்தது. இங்குதான் நசீர் நர்சரி பள்ளியில் சேர்க்கப்படுகிறார். அப்போதுதான் முதன் முதலாக நசீருக்கு ஒரு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த நாடகத்தின் பெயர் ‘த ஷூ மேக்கர் ஷாப்’ என்பது. அதில் நசீருக்கு செருப்புத் தைப்பவன் வேடம். ஆனால், நாடகம் மேடை ஏறும் நாளன்று உடல் நம் சரியிலாமல் போக இந்த எதிர்கால நடிகனுக்கு நீண்ட நெடும் நாட்கள், ஆண்டுக் கணக்கில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று. நசீர் தன்னுடைய முதல் நாடகத்தைப் பார்க்கிறார். அவருக்கு அப்போது தான் இருக்க வேண்டிய இடம் பார்வையாளர் மத்தியில் இல்லை, மேடையில்தான் நசீர் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பிறகு கட்டுப்பாடுகளுடன் கூடிய பெரிய பள்ளிகளின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

“அது ஒரு மழையும், குளிரும் நிறைந்த காலைப் பொழுது. அல்ல மூடுபனிக் காலை. என்னை டக்பேக் ரெயின் கோட்டிற்குள் நுழைத்து விட்டார்கள். தலையில் ரப்பராலான தொப்பியும் போடப்பட்டது. கையில் என்னுடைய பள்ளிப் பை. அப்பா என்னுடைய கையை எடுத்து தன் கைக்குள் அடக்கிக் கொண்டார். அவர் என்னை பள்ளியின் நுழைவாயில் வரை கொண்டு வந்து விட்டார். அதிலிருந்து மூடுபனியைப் பற்றிய என் உணர்வு ஆழமானது .நான் பள்ளி செல்ல அழுதேனா என்பது எனக்கு நினைவில்லை. ஆனால், நான் மிகுந்த கலவரம் அடைந்தேன். கிண்டர் கார்டனில் என்னுடைய டீச்சர், மிஸ் ப்ரெண்டிஷ். அவர் ஒரே ஒரு ஆண்டுதான் எனக்கு டீச்சராக இருந்தார். ஆனால், நான் ஒரு நல்ல டீச்சர் என்று கற்பனை செய்யும் போது அவரின் உருவம்தான் என் கண்முன்னே மேலெழும்பும். மிகவும் நல்லவர். மிக அழகானவரும் கூட.”

செருப்பின் சங்கடம்:

———————————-

நசீர் படிப்பில் மிகுந்த கெட்டிக்காரனாகத்தான் இருந்தார். ஆனால் கவனம் சிதறத்தொடங்கிய போது, சாதாரண மாணவன் போல ராங்க் எடுத்தார். நசீருக்கு பள்ளிக்கால நினைவுகள் என்றதும் ஒரு சில விஷயங்கள் தான் நினைவுக்கு வருகிறது. அதில் ஒன்று ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் உட்கார்ந்து கொண்டு எது வலது கால் ஷூ, எது இடது கால் ஷூ என்று அம்மா சொல்லிக்கொடுக்க கற்றுக் கொண்டதுதான் முதலில் நினைவுக்கு வரும். இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தலை இப்போதுதான் படியப்படிய வாரி இருந்தாலும், அது கலைந்து படர்ந்து பம் என்று தூக்கி இருக்கும். நசீர் தெருவில் நடந்து செல்லும் போது தன்னுடைய நிழலைப் பார்த்தால், தலையிலிருந்து முடி பொங்கி வழிந்து விழுவது போல தோன்றும். நசீருக்கு பள்ளிக்கால நினைவுகளில் இன்னமும் ஒன்றுகூட நினவுக்கு வருகிறது. பள்ளியின் ஆண்டுவிழா பரிசுகள் பங்கிட்டு வழங்கப் பட்டுக் கொண்டிருந்தன பரிசு பெற்ற அனைவரும் வந்திருந்தார்கள். கைதட்டல் காதைப் பிளக்கிறது. நசீரும் கைதட்டிக் கொண்டிருந்தார். அவர் எந்த விளையாட்டிலும் பங்கு பெறவில்லை. அவருக்கு பரிசு ஏதும் கிடைக்கப் போவதில்லை. அப்படியிருக்க, திடீரென்று நசீரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டனர். என்ன ஏது என்று புரியும் முன்பாக யாரோ நசீரை மேடையை நோக்கி தள்ளிவிட்டனர். ‘டேய், உன்னைத்தான் கூப்பிடுகிறார்கள் அடுத்த கணம் அங்கு வந்திருந்த முக்கிய விருந்தாளி என் கையில் ஒரு சிறிய மின்னும் கேடயத்தைக் கொடுத்தார். அந்தப் பரிசு இன்னமும் என்னிடம் இருக்கிறது. எனக்கு அது எதற்காக கொடுக்கப்பட்டது என்பது இன்னமும் தெரியவில்லை. அது வேறு ஒரு ஷா விற்கு கிடைக்க வேண்டியதாக இருக்கலாம். என்கையில் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால்தானோ என்னவோ என்னிடம் சேர்ந்திருக்கும் பட்டங்கள், பரிசுகள் மீது எனக்கு ஈடுபாடோ பெரிதாக எண்ணும் நினைப்போ இல்லாமல் போய்விட்டது. ஆனால், அன்று என் கையில் கிடைத்த பரிசு வேறு ஒருவருக்குக் கிடைக்க வேண்டியதுதான். ஆனாலும் கால் தரையில் பாவாமல் அன்று பறந்து கொண்டிருந்தேன். எத்தனை மெய்சிலிர்ப்பு, அன்று அதே போன்ற ஒரு சிலிர்ப்பு எனக்கு இருபது ஆண்டுகள் கழித்து ஏற்பட்டது. ஷ்யாம் பெனகலுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு அது. அதே சிலிர்ப்பு. அவர் என்னிடம் ‘நிஷாந்த்’ படத்தில் நீ என்னுடன் பணியாற்ற வேண்டும். அது முதல் படம்’ என்று சொன்னபோது ஏற்பட்டது.’

நசீர் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் போது சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டார். அந்த ஆண்டின் ஸ்கூல் ரிப்போர்ட் கார்ட் கொடுக்கும் போது சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது. நசீர் தன் வகுப்பில் படிக்கும் ஐம்பது மாணவர்களில் ஐம்பதாவது இடத்தில் இருந்தார். இப்படியாக ஒரு வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது? நசீரின் உலகில் மிஸ்.ப்ரெண்டிஷின் இடத்தை ஆர்ட் டீச்சர், மிஸ் லுட்விகா பிடித்திருந்தார். அவர் நசீரின் உள் புகுந்துவிட்டார். நசீர் வகுப்பறையில் அமர்ந்து கொண்டு மிஸ். லுட்விகாவின் செருப்பையே பார்த்துக் கொண்டிருப்பார். மிஸ். லுட்விகா உட்கார்ந்திருக்கும் போதெல்லாம், அவர் செருப்பு மிகவும் விசித்திரமாக பார்வைக்கு வரும். அவர் தனது ஷூவை காலிலிருந்து கழட்டி அதை அசைத்துக் கொண்டே இருப்பார். அது எப்போதுமே கீழே விழாது. அது காற்றில் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டே இருக்கும். அது அவர் விரல்களில் ஒட்டிக் கொண்டு காலிலிருந்து சுழன்று இருக்கும். இதிலிருந்து தான் நசீருக்கு மக்களின் குணச்சித்திரத்தை ஆராய்தல் ஏற்பட்டது எனலாம். மற்றவர்களின் சிறு சிறு விஷயங்களையும் கப்பென பிடித்துக் கொள்ளுதல் எல்லாம் துவங்கின. யார் என்ன படிக்கிறார்கள், யார் எப்படிப் படிக்கிறார்கள் ஏதும் கவனத்தில் இல்லை. அவருக்கு கவனிப்பதற்கு வேறு பல விஷயங்கள் வந்துவிட்டன. அதற்கான பலன் பரீட்சையில் கிடைத்தது. நசீருக்கு ஆங்கிலம் நன்றாக வரும். ஆனால், மற்றவற்றைப் பற்றி எல்லாம் கேட்கக் கூடாது. நசீருக்கு இன்னமும் நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஒரு மாணவன், ஆங்கில இலக்கியத்திலும், கட்டுரை எழுவதிலும், அதிக மதிப்பெண் எடுக்கிறான். ஆனால், அவனே இலக்கணத்தில் பெயிலாகிறான். அது எப்படி என்று ஏன் ஒரு டீச்சரும் கவனிக்கவில்லை? நசீர் தன்னைப் பற்றிய இன்னொரு விஷயத்தையும் கண்டுபிடித்தார். நாடகம் பார்க்க ஒருவன் உட்காந்திருக்கும் போது எப்போது திரை தூக்குவார்கள் என்றுதானே நினைப்பார்கள்? திரை விலகியவுடன் என்ன பார்க்கப் போகிறோம் என்றும் காத்திருப்பார்கள். திரை விலகியதும் அது அதிகமாகும். நசீருக்கு இத்துடன் கூடவே மூடிய திரைக்குள் என்ன நடந்து கொண்டிருக்கும் என்று கற்பனை செய்வதிலும் அதிக விருப்பம். நசீர் எட்டாவது படிக்கும் போது, அது 1961ம் ஆண்டு, நசீரின் வயது பன்னிரெண்டு, அல்லது பதினொன்று என்று வேண்டுமனாலும் சொல்லிக் கொள்ளுங்கள்- அன்றைய மனோ நிலைக்கு தக்கபடி வயதும் இருக்கும். எல்லா நாடகங்களிலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க நசீருக்கு ஆசைதான். ஆனால், நசீருக்குக் கிடைக்கும் வேடங்களோ வேறு மாதிரியானவை. திருமணம் நடத்திவைக்கும் ஏஜெண்ட்டின் கடையை வளர்ப்பு மிருகங்கள் விற்கும் கடை என்று எண்ணி, உள்ளே புகும் ஒருவனின் வேடம்தான் அது. ‘நாள் முழுக்க குரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்களின் மூக்கை நக்க வேண்டும், யாராவது உள்ளே நுழைந்தால் விரட்டி வீட்டை பாதுகாக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு குட்டி கொடு’ என்று கேட்க வேண்டும் ஆனால் இந்த சமயம் வரும் போதெல்லாம் நசீரின் வண்டி மக்கர் செய்ய ஆரம்பித்துவிடும். இத்தனை மக்களுக்கு முன்னால் இவ்வளவு பெரிய வசனத்தை எப்படி பேசுவது? அதுவும் எல்லோருக்கும் கேட்கும்படியாக? எல்லோருக்கும் சலிப்பு ஏற்பட்டிருக்கலம். ஆனால் நசீருக்கு சலிப்பே ஏற்பட வில்லை இதை சரியாக சொல்லி முடிப்பதில். இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் நசீருக்கு வாய் திக்க ஆரம்பித்தது. ஐந்து வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் நினைவுக்கு வந்து வேதனைப் படுத்தியது. இதிலிருந்து விடுபட நசீர் ஒரு உத்தியை மேற்கொண்டார். அதாவது எத்தனை முடியுமோ அத்தனை வேகமாகப் பேசி முடித்துவிட வேண்டும், வசனத்தை. வண்டி எங்கேயாவது நின்றுவிட்டால் என்ன செய்வது? எனவே, அவசர அவசரமாக வசனம் பேசி முடிக்க வேண்டும் என்ற உபாயத்தைக் கையாளத் தொடங்கினார். இப்படி ஆரம்பித்து படிந்து விட்டதுதான் ‘கட கட’ என்று வசனத்தைப் பேசத் தொடங்கியது. நசீருக்கு தான் மட்டும் தனியாக நின்று வசனம் பேச வேண்டும் என்றால் அது அல்வா சாப்பிடுவது போல. ‘கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறதெனில் அது பொங்கிப் பெருகட்டும்’ என்பது போன்ற வசனத்தைக் கூட அட்டகாசமாகப் பேசி உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தி சொல்லி விட முடியும். ஆனால், எதிரில் யாராவது ஒருவர் இருந்தாலும் போச்சு. மணி போல ஒலிக்கும் அந்தக் குரல் எங்கு போய் ஒளிந்து கொள்ளுமோ தெரியாது. அதனால் எதிரில் யாருமில்லாமலேயே அவரின் காலம் ஓடிக்கொண்டிருந்தது.எதிரில் யாருமில்லாத வேடமா, கூப்பிடு நசீரை என்று கொடுத்துவிடுவர்கள். நசீரும் தானே பேசிப் பேசி காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார். ஆனாலும், தெளிவாகப் பேசு, மூக்கால் பேசாதே, ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்? போன்ற இயக்குனரின் கட்டளைகளோடு பொழுது நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நசீரின் உள்ளிருந்த வேதனை, துக்கம், பயம் எல்லாம் காணாமல் போகத் தொடங்கியது. அவர் எத்தனை பெருங்கூட்டதிலும் முன்னால் நின்று இயல்பாக பேச ஆரம்பித்தார்.

தன்னுடைய முதலாவது வேடம் ஏற்று நசீர் மேடையை அடைந்த போது, அதாவது மேடையின் பின்புறம் அடைந்தபோது ‘இப்போது நான் இங்கிருக்கிறேன். அந்த கணம் மிகச் சிறந்ததாக இருந்தது எனக்கு. நான் இங்கிருக்கிறேன். அந்தப் பக்கத்தில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அது நான் அறிந்தது. நான் இங்கிருக்கிறேன். அந்தப் பக்கத்தில் திரைக்குப் பின் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று பல நாட்கள் யோசித்திருந்த அந்த இடத்தில் இப்போது நான் இருக்கிறேன். கொஞ்சமாக திரையை விலக்கிப் பார்க்கிறேன். அங்கிருந்த மக்களுக்கு உற்சாகம் கூடிப் போயிற்று. அம்மாவின் கருப்பையில், பாதுகாப்பாக வெதுவெதுப்பாக சுகமாக இருப்பதைப் போன்று திரைக்குப் பின் இருப்பதை உணர்ந்தேன். எந்த சுமையும் அற்று இருந்தேன். பிறகு திரை மேலெழும்பியது. நான் பெரும் இருட்டில் இருந்தேன். இது போன்று மேடையில் நான் இதற்கு முன்பு நின்றிருந்ததில்லை. பெரும் வெளிச்சத்தில் என் கண்கள் கூசத் தொடங்கின. பிறகு என் காலுக்கு அடியில் இருந்த பூமியை உணர்ந்தேன். நீண்ட பெருமூச்சு இழுத்து விட்டேன். இதன் பிறகு ஒளியுடன் கூடிய அந்த இருண்ட பிரதேசத்தைத் தாண்டி அமர்ந்திருந்த மக்களின் தலைகள் மேலெழுந்தன. அவர்கள் மிகவும் உற்சாகமக, மகிழ்ச்சியாக கவனிக்கத் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் யாரும் ஆயுதத்தோடு சண்டைபோடும் நிலையில் இருக்கவில்லை. நீதிமான்களைப் போல உட்கார்ந்திருந்தனர். அப்படித்தானே வாழ்க்கையும்? எனக்கு அங்கிருக்கும் ஒவ்வொருவரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. எனக்கு வசனத்தின் முதல் வரியைப் பேச வேண்டிய நேரம் அது. கொஞ்சம் நிறுத்தி, சில வினாடிகளுக்குப் பிறகு. இது போன்ற ஒரு பயத்தை நான் இதுவரை அனுபவித்ததில்லை- அப்படியான ஒரு பயத்திலிருந்து மீண்டு, கடைசியில் நான் வசனத்தைப் பேசத் தொடங்கினேன். சுத்தமாக தெளிவாக, இடையில் திக்குவாய் ஏற்படாமல், கொஞ்சம் கூட ஒலியை மூக்கினால் வெளிப்படுத்தாமல்—- அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் நான் சொல்வதைக்கேட்டு அதற்கு எதிர்வினையும் ஆற்றினார்கள்—-இந்த பிரம்மாண்டமான பூமியில் என்னை விடவும் வேறு யார் மீதும் பார்வையாளர்கள் இத்தனை அன்பு வைத்திருக்க மாட்டார்கள் என்ற பெருமிதமும் ஆழமான உணர்வும் அந்தக் கணம் என்னுள் நிறைந்திருந்தது. இது என்னுடைய வாழ்க்கையின் ஆத்மாவை உணர்ந்த கணங்கள். அப்போதுதான் எனது இருப்பிற்கும் ஏதோ மதிப்பிருக்கிறது என்ற எண்ணம் மேலோங்கியது. பள்ளிப் பாடத்தில் எனது இடம் கீழே போய்க்கொண்டே இருந்தது. எனது டான்ஸில்ஸ் அகற்றப்பட்டுவிட்டது. நான் பெரியவனாகிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான அடையாளங்கள் உடலில் அங்கும் இங்குமாக வெளிப்படத் துவங்கின. ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாவாக இருந்தது, நூறு நயாபைசாவாக சேர்ந்து ஆயிற்று. மைலின் இடத்தை கிலோ மீட்டர் பிடித்தது. பெண்களின் மீது ஏதோ இனம் புரியாத பரவசம் என்னைப் படுத்தி எடுக்கத் தொடங்கியது. நான் எனக்குள்ளேயே அதிகமாக ஒடுங்கத் துவங்கினேன். அம்மா, அப்பாவிடமிருந்து எனது விலகல் அதிகமாகிக் கொண்டே போனது. அந்த விடுமுறை நாட்கள் பள்ளிக்கு செல்வதைவிடவும் அதிகம் அலுப்பை தந்தன. அப்போது சர்தானில் எல்லா உறவுக்காரர்களும் ஒன்றாய்க் கூடினார்கள். அது ஏதோ சந்தோஷமான நிகழ்வுக்காக அல்ல. அனைவருக்கும் இடையிலான நட்பு, பிரியம், எல்லாம் காணாமல் போயிருந்தது. பழைய சுவர்கள் இடிந்து விழத் தொடங்கின. அதிகாரம் அல்லது பரம்பரைச் சொத்தில் இடையில் புதிய புதிய கோர்ட் பிராதுகளும், எழும்பத் தொடங்கின. —- மேலும் அஜ்மீர், விடுமுறை போன்றவற்றிற்கெல்லாம் பொருள் வேறாக மாறின. கண்ணாடிக்குப் பின் இருந்த அப்பாவின் கண்கள் என்னை கூர்ந்து பார்ப்பது, அதன் மூலம் என் எதிர்காலம் பற்றிய கவலையும் சொல்லாமல் வெளிப்படுத்துவதும். அந்த சவாலில் நான் சிக்கியிருப்பதுவும் தான் பொருள். இந்த சமயத்தில் கிரிக்கெட் ஒரு போதையைப் போல் என் மீது கவியத் தொடங்கியது. அது சினிமா ஆசையுடன் போட்டி போடத் துவங்கியது. இப்போது வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் எதன் மீதும் எனக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை. நான் கிரிக்கெட் விளயாடவும் ஆரம்பித்திருந்தேன். இதையே எனது வாழ்க்கையாகவும் தொழிலாகவும் ஏற்றுக் கொள்ளும் எண்ணமும் எனக்கு ஏற்பட்டத் தொடங்கி இருந்தது. — ஆனால், வெகு விரைவிலேயே இந்த முடிவிலிருந்து விடுபட்டேன். பிரபாத் கபில் என்ற பெயருடைய பௌலர் ரவுண்ட் த விக்கெட் பௌல் செய்து ஹாட்ரிக் அடித்த அந்த நாளில்தான் என் கிரிக்கெட் கனவும் தகர்ந்தது. அதில் மூன்றாவது விக்கெட்டாக நான் விழுந்தேன்.

9ம் வகுப்பின் மற்றொரு தேர்வின் ரேங் கார்ட் கிடைத்தது. அதில் நான் பெயிலாகி இருந்தேன். எனக்கு ஒரே குழப்பம். அப்போது. வீட்டுக்குப் போவதா, இந்த செய்தியை வீட்டிற்குத் தெரிவிப்பதா என்றெல்லாம் தோன்றியது. சைக்கிளை எடுத்தேன். கிளம்பி விட்டேன் நேரே. என் மனதில் எந்த விதமான எண்ணமும் இல்லை. நான் வருத்தப்படவில்லை. தற்கொலையைப் பற்றிய எண்ணம் மனதில் தோன்றவே இல்லை. வேறு எதுவும் இல்லை. உடம்பில் தெம்பு இருக்கும் வரை சைக்கிள் ஓட்டுவோம். அப்படித்தான் தோன்றியது. ஆனால் எது நடந்ததோ அது நடந்ததுதான். அதை சொல்லித்தான் ஆக வேண்டும். நான் வீட்டை நோக்கி சைக்கிளைத் திருப்பினேன். சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. அத்துடன் என்னுடைய மனதும் ஓடிக்கொண்டிருந்தது. இந்தத் தடவை என்ன சொல்லி நடித்து, நான் பெயிலான விஷயத்தை அதன் வீரியத்தை குறைக்கலாம், என்று என் புத்தி யோசித்துக் கொண்டு இருந்தது. அப்பாவின் கவலை படிந்த முகத்தில் என்னைக் கண்டதும் ஒரு அமைதிக் கீற்றுத் தோன்றியது. அதுதான் எனக்கு முதலில் கண்ணில் பட்டது. நான் வழக்கமாக வீட்டிற்கு செல்லும் நேரத்தைவிடவும் மூன்று மணி நேரம் தாமதமாகச் சென்றிருந்தேன். அடங்கிய குரலில் ‘சுத்தம் செய்து கொள்’ என்று சொல்வதில் சிறிதும் கவனமின்றி என்னை விரைவாக உள்ளே போய் சாப்பிடு என்றுதான் சொன்னார். உண்மையிலேயே அன்று அப்பாவின் பரிதாமான தோற்றம் கண்டு எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று. அதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

நசீரின் முதல் சிகரெட்

——————————-

நஜ்ருல் ஹக்தான் முதன் முதலாக நசீரை சிகரெட் பிடிக்க வைத்தான். பிறகு அந்த எரியும் புகையிலையின் வாசனையில் எத்தனை எத்தனை கதைகள் உருவாயின? சிக்ரெட்டை பிடித்து முடித்த பிறகு அதன் மீதித் துண்டை எறிய சரியான இடம் கிடைக்கவில்லை. எனவே நசீர் அதைத் தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டிருந்தான். அதன் பிறகு அந்த ஷர்ட் மேட்ரனின் கைகளில் மாட்டிக் கொண்டது. அதனால் நசீரை அந்த இடத்தை விட்டு வெளியேற்ற நேரம் வந்தது. ஆதாரம் திடமாக இருந்தது. ஆனால் நசீர் அதைப் பொய்யாக்க முயன்றான். காரியம் மிகவும் கடினமாய்க் கொண்டிருந்தது. மேட்ரன், தனது தீர்ப்பை சொல்லிவிட்டார். இதை இங்கு இப்படியே முடித்துக் கொள்வோம். விஷயத்தை பிரின்சிபால் வரைக்கும் கொண்டு போக வேண்டாம். அவர்கள் எல்லோரும் நசீர் சரியான முட்டாள் விலங்கு அவனால் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியும் என்று எண்ணக்கூட முடியாத மூடன். சீனியர் மாணவன் சிகரெட் பிடித்துவிட்டு, நசீரின் சட்டைப் பையில் போட்டிருப்பான். யாராவது ஒருவன் நசீரின் சட்டைப் பையில் துண்டு சிகரெட்டைப் போட்டிருப்பான், அப்படி ஒரு முடிவில் விஷயத்தை முடித்துவிட்டர்கள்.

நசீருக்கு படிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கீழே நழுவிக் கொண்டே இருந்தது. ஆனால், அப்பாவோ தனக்குத் தானேவும், நசீருக்கும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தார். பையன் என்னவோ அடிப்படையில் புத்திசாலி என்று சொல்லிக் கொண்டும் இருந்தார். இப்படி சொல்லிச் சொல்லி தனக்குள்ளும், தன் மகனுக்குள்ளும் நம்பிக்கையை ஏற்றப் பார்த்தாரோ என்னவோ? யார் கண்டது? ஆனால், இங்கு நசீருக்கோ ஒரே இடத்தில் ஒரே வேலையில் தொடர்ந்து இரண்டு நிமிடம் கூட கவனத்தை ஒருங்கிணைத்துச் செலுத்த முடியவில்லை. தனக்குப் பிடிக்காத விஷயங்களைக் கேட்காதவனாக, தனக்குத்தானே மூழ்கிப் போவது வழக்கமாகி விட்டிருந்தது. வகுப்பில் எல்லாவற்றுடனும் முழுதாகப் போராடும் வேளை வந்தது. நசீரை அஜ்மீரில் ஒரு பள்ளியில் நுழைத்து விட்டார், அப்பா. என்ன வருத்தம் என்றால், எல்லா பள்ளிகளிலும் ஏறக்குறைய பாதிப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இன்னமும் மூன்று மாதங்களில் முழு ஆண்டு தேர்வு. ஆனாலும் அப்பா அப்பாதானே? அவர் எதோ கொடுத்து, வாங்கி நசீரை பள்ளி இறுதி தேர்வுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து பரீட்சையில் உட்கார்த்துவதை சவாலாக எடுத்துக் கொண்டு செய்தும் விட்டார். நசீர் என்றைக்காவது சவால்களிலிருந்து பின் வாங்கியது உண்டா?— முழுத் தயாரிப்புடன் பரீட்சை எழுதினார். பெயில் ஆனார்.

அந்த கிழவனும் கடலும்

———————————-

தன்னைத்தானே பார்த்துக்கொண்டும், தன்னையே கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்த நாட்கள் அவை. ‘நான் எப்படி இருக்கிறேன்? என் தோற்றம் எப்படி இருக்கிறது’ எப்போதும் எல்லா நேரத்திலும் நசீருக்கு இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதிலேயே காலம் கழிந்தது. யாராவது எப்போதாவது தன்னை கண்ணாடியின் பிரதிபலிப்பில் முழுமையாக கண்டுணர்ந் திருக்கிறார்களா என்ன? நசீர் தன்னைத்தானே கண்டு கொண்டு கொள்ள? கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு தனது முகத்தில் எல்லா வித உணர்வுகளையும் கொண்டு வருவார். பின் இந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் நடிகனாகவே முடியாது என்ற முடிவுக்கும் வருவார். — இப்படியே இருந்து கொண்டு இருக்கும் பொழுது நசீர் ஒரு சினிமா பார்த்தார். அதன் பெயர் ‘த ஓல்ட் மேன் அண்ட் த ஸீ’. அந்தப் படத்தில் இரண்டு பாத்திரங்கள். ஒன்று அந்த மீன்காரன். அந்த வேடத்தை ஏற்றிருந்தவர் ஸ்பென்ஸர்ஸ் ட்ரேஸி. இன்னொரு கதாபாத்திரம் பெரிய மீன். தான் பிடித்த அந்த பெரிய மீனை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு செல்ல கடுமையாக முயன்று கொண்டு இருந்தார். இது எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் உலகப் புகழ் பெற்ற புத்தகம் என்றோ, இறவா படைப்புகளின் ஒன்று என்றோ தெரியாது. இந்த வேறுபாடுகள் ஏதும் அன்று தெரியாது, நசீருக்கு.—ஆனால், அந்த மீன்காரக் கிழவன் அவரைப் பார்த்து நசீர் பிரமித்துப் போய்விட்டார். இன்று நசீருக்கு அந்தக் கிழவனின் தோற்றத்தில் காமிரா வித்தையும் இருக்கிறது என்று தெரியும். ஆனால், அந்த நடிப்பிருக்கிறதே அது ஸ்தம்பிக்க வைத்துவிடக் கூடிய ஒன்றுதான். அன்று நசீருக்கு அந்த நடிப்பைப் பார்க்கும் பொழுது கடலின் வாசமும் கூட அங்கு இருப்பதாகத் தோன்றியது. — நசீர் ‘நல்லது’ என்றார். அப்போதிலிருந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்து சுயப்பரிசோதனையில் ஈடுபடும் பொழுது இன்றில்லாவிட்டாலும், இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின் நானும் கிழவனாகும் போது இது போல என்னாலும் நடிக்க முடியுமா என்ன? அதன் பிறகு ஸ்பென்ஸர்ஸ் டிரேஸியின் இன்னும் சில படங்களையும் பார்த்து நசீர் ஆச்சரியம் அடைந்தார். ஒரு குழப்பமான மனோ நிலையில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இந்த ஆள் கிழவனில்லை. ஆனா, கோணல் மாணலாக தொப்பியைப் போட்டுக் கொண்டு கையில் துப்பாக்கியை சுழற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் புரிந்து கொண்டர்.

‘இது எனக்கு இழப்பும் பெறுதலும் என இரண்டுமானது. என்னையும் அறியாமல் அந்த அனுபவத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை.—–எனக்கு நானே பயிற்சி அளித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. படிகள் ஏறும் போது மலை ஏறுபவன் என எண்ணிக்கொண்டேன் நான். படுக்கையில் படுத்திருக்கும் பொழுது படகில் படுத்திருப்பதாகத் தோன்றும். மிதந்து கொண்டிருக்கிறேன் என தோன்றும். பள்ளியின் குறுகிய தெருக்களில் பயணப்படும் போது நான் ஏதோ ரகசிய புதையலைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். கொள்ளைக் காரர்களின் துப்பாக்கி குண்டு மழையிலிருந்து தப்பி மீண்டுக் கொண்டிருக்கிறேன் இப்படி எத்தனை எத்தனையோ கற்பனை உலகில் நிஜ உலகில் என ஒரே நேரத்தில் வசிக்கத் தொடங்கினேன். இப்போது எனக்கு நானே நல்ல நண்பனாகி விட்டிருந்தேன். நான் என்னை இப்போது ஒரு பையனாக இல்லாமல் வளர்ந்த ஆளாக என்னை நானே பார்த்துக் கொள்ளத் தொடங்கி இருந்தேன். வீட்டில் தொடர்பு விடுபட்டிருந்தது. இதன் விளைவாக என்னவாயிற்று என்றால் எனக்கு வாராவாரம் வீட்டிற்கு கடிதம் எழுதுவது என்பது ஒரு பாரமாக ஆகிவிட்டது.’ ‘த ஓல்ட்மேன் அண்ட் த ஸீ’ படம் பார்த்த பிறகு நசீர் தன் அப்பாவிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதற்கு பதிலாக அப்பா அலுவலக தாளில் டைப் செய்த நான்கு பத்தியில் ‘படத்தையும் அதைப் பற்றியும் கதைகளிலும் எனக்கு சிறிதளவும் நாட்டமில்லை. நீ உனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.’ எங்கள் யாருக்கும் உருது நன்றாக தெரியாது. அதனால், அம்மாவுடனான உரையாடல் நின்று போயிருந்தது. அப்பாவுடனான தொடர்பில் தான் ஏதாவது அறிய முடிகிறது. வருடத்தில் ஒரு முறை ஜூன் மாதத்தில் அப்பா அம்மா என்னைப் பார்க்க வருவார்கள். அப்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம் அது. அந்த சாக்கில் பள்ளியை விட்டு வெளியே கிளம்ப எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்.’

ஆங்கில- ஹிந்தி திரைப்படங்களின் உலகம்

————————————————————

‘என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து 25வது வயது வரை எண்ணிலடங்கா படங்கள் பார்த்திருக்கிறேன். என் வரை அதன் பொருள் வேறு. இந்திய நடிகர்கள் யாருமே அப்போது எனக்கு அப்படி இருந்தார்களா இல்லையா என்பதல்ல, அதன் பொருள். தாராசிங்கின் ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அவரை நான் மிகவும் விரும்பினேன். ஷம்மி கபூர் எங்கள் காலத்தில் மிகப் பெரிய நட்சத்திரம். பயம் அல்லது வெட்கம் கலந்த உணர்வை தன் உடல் மொழியில் உணர்வு பூர்வமாக உழைத்து அதை வெளிப்படுத்துவார். அதற்கு இணையாக ஹிந்தி சினிமா உலகில் கிஷோர் குமார் இருந்தார். இந்த இருவரையும் நடிகர் என்ற முறையிலும், நான் மிகவும் சாமான்யர்கள் என்றே நினைத்தேன். இவர்கள் இருவரும் எப்போதாவது சில வேளை அப்படி இல்லாமலும் கூட இருக்கலாம். அர்த்தமுள்ள படம் செய்திருக்கலாம். இன்றைய கண்ணோட்டத்தில் பார்த்தோமெனில் எப்போதுமே இருவருமே மிகைப் படுத்தப்பட்ட நடிப்புதான் நடித்தனர். ஆனால், கேள்வி என்னவென்றால், அந்தக் காலத்தில் யார்தான் மிகைப்படுத்தி நடிக்கவில்லை? பால்ராஜ் சஹானியின் மீதும் இந்த குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. திலீப் குமாரையும் இப்படி சொல்லிக் கொண்டார்கள். டைரக்ஷனும் செய்து கொண்டு இருந்தனர். இவர்கள் இருவரிடமும் தைரியமும் ஆழமும் இருந்தது. தனது நடிப்பில் இவர்கள் எத்தனை ஒருமித்திருந்தனர் எத்தனை திறமையும் ஈடுபாடும் கொண்டு இவர்கள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் கும்பலில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் எனில், ‘கைட்’ படத்தில் நடித்த தேவ் ஆனந்தின் அற்புதமான நடிப்பும் அப்படித்தான் இருந்தது. திறமையான நடிகர்களில் ஒருவரான மெஹமூத்தைக் கண்டேன். அவர் சார்ளி சாப்லினுக்கு இணையாக மாட்டார் என்றாலும், தன்னை மறந்து மூழ்கி நடிப்பதில் அவரை விடவும் யாஹூப் மேலானவர் ஈடு இணையற்ற நடிகர். அவர் சொஹ்ராப் மோதியை பின்பற்றி நடித்தார். காப்பி அடித்தார் என்ற பேச்சும் எழலாம். மோதிலாலின் ஒப்பிட முடியாத நடிப்பு. தூள் எழுப்பும் புயல் என தன்னை மறக்க வைத்தது. மேலும் அமிதாப் பச்சன். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், அவர் தனக்கென தேர்வு செய்யும் படங்கள் அதைப் பற்றி பேசவே முடியாது. ஒரு திரை நட்சத்திரமாக அவருடைய ஈடுபாடு பற்றி யாரும் கேள்வி கேட்கவே முடியாது. அவர் தனது ஆரம்ப காலப் படங்களில் ஹிந்தி சினிமா உலகில் கண்டிராத வகையில் மாறுபட்டு நடித்தார். அதை யாரும் மறுக்க முடியாது. நான் சத்யதேவ் துபே சொன்ன கருத்துடன் ஒன்றுபடுகிறேன். ஸ்ரீமான் ப்ராண் சிகந்த ‘உலகில் மிகச் சிறந்த கெட்ட நடிகர்’ என்றார். -.-. மேலும் எத்தனை எத்தனை சுடர் விடும் பெண் நட்சத்திரங்கள்?-.-.ஹிந்தி திரை உலகில் மிகப் புதுமையான நடிகைகள் வஹிதாரஹ்மானும், நர்கீஸும், லட்சுமி கடாட்சமான அழகை உடைய மதுபாலா, செதுக்கியதைப்போன்ற மீனா குமாரி, மிக உயரத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்த, தாங்கமுடியாத தொந்தரவு கொடுத்த செக்ஸியான நடிகையான நூதன், உங்களை மனம் மகிழச் செய்யும் தனுஜா -.-.இப்படி பலர். இன்னமும் படபடவெனப் பொரியும் ஆஷாபரேக், ராஜஸ்ரீ, மும்தாஜ், கல்பனா, அதிரவைத்துக் கொள்ளை கொள்ளும் நாதிரா சசிகலா, பேளா போஸ், குக்கூ இப்படி இன்னும் பலர். வானத்தில் சுடர் விட்ட இவர்கள் அனைவரையும் எனக்குப் பிடிக்கும். எவரோடும் ஒப்பிடமுடியாத அழகு படைத்த ஹெலன் இவர்கள் அனைவருமே திரையில் மின்னிய நட்சத்திரங்கள். இவர்கள் அனைவராலுமே உலகின் எந்தப் படத்திலும் மின்னவும் முடியும். ஆனால், இவர்களில் ஒருவர் கூட என்னுள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மூல ஊற்று என்று இவர்கள் யாரையுமே என்னால் சொல்ல முடியவில்லை.

‘நான் ஹிந்தி திரைப்படங்களை மிகவும் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன். நான் சினிமாவில் நடிக்க வரும் முன்னதாக அம்மா சினிமாவே பார்த்தது கிடையாது. அப்பா யுத்தம் சார்ந்த ஆங்கிலப் படங்கள் எப்போதாவது பார்ப்பார். திலீப்குமார் நடிக்கும் ஹிந்திப் படங்களைப் பார்ப்பது வழக்கம். இவற்றையே நானும் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. காரணம் எப்படியாயினும், திரை நடிகர்கள் சிலரின் பெயர் என் நினைவில் முன்னமே படிந்துவிட்டது. அவைகள் ஏலன் லாட், ஷைலி விண்டர்ஸ், தேவ் ஆனந்த், ஜானி வாக்கர். மதியம் காட்டப்படும் மேட்னி ஷோவில் தரமற்ற நிலையில் உள்ள படங்களே அடிக்கடி காண்பிக்கப்படும். நான் இந்நிலையிலுள்ள படங்களைத்தான்- தாராசிங்கின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அவைகள் நல்ல நிலையில் இல்லாத படங்கள். இவைகள் படங்களே அல்ல. ஆனால், பாரட்டத்தான் வேண்டும், நிறைய மல்யுத்தம் இருக்கும். அந்த மல்யுத்தம் ஒரு கதையில் கட்டப்பட்டிருக்கும்.

கேண்டல்

————-

‘அன்றைக்கு நான் பள்ளியை விட்டு வெளியேறத்தான் விரும்பினேன். சிவப்பு வண்ணத்தில் மேற்புறம் திறந்த ஒரு ஜீப் உள்ளே நுழைந்தது. அதை ஒரு வெள்ளைக்காரர் ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த மனிதரின் முகம் ஏற்கனெவே மிகவும் அறிமுகமானதாகத் தோன்றியது. இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணி களும் உடன் இருந்தனர். அதில் ஒருவருடையது இந்திய முகமாக இருந்தது. எனக்கு அந்த வண்டி ஓட்டியை அடையாளம் காண ஒரு நிமிடமே தேவையாக இருந்தது. அவர், ஜியாஃப்ரி கேண்டல். அவருடன் அவர் மனைவியும், மகளும் இருந்தனர். இந்திய சாயலில் இருந்தவர், மார்க்வஸ் மூர்ச் கேண்டல். அவர் நடத்தி வந்த நாடகக் குழுவின் பெயர், ‘ஷேக்ஸ்பியாரானா’. நான் செயிண்ட் ஜோசப்பில் அவருடைய பல நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். எட்டு திக்கும் புகழ் பரப்பிய அவருடைய பல நாடகங்களை நான் திரையில் கண்டிருக்கிறேன். அவருக்கு சமமானவர், கேண்டல். நடிப்பைப் பற்றிய எனது உயர்ந்த கனவு இந்த மனிதரிடமிருந்துதான் துவங்கியது. ஷேக்ஸ்பியரானா நாடகக் குழு நிறுவனர் கேண்டல். அவருக்கு ஷேக்ஸ்பியரை ஒவ்வொரு மனிதனிடமும் கொண்டு செல்ல வேண்டிய பெரும் கற்பனை இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அவர், சிப்பாய்களை மகிழ்ச்சிப்படுத்த இந்தியா வந்தார். இந்தியாவின் மீது பற்று வைத்து விட்டார். ஆசியாவின் ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் இவர் நுழைந்தார். அடிக்கடி, தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவர் எப்போதுமே நாடகத்தை வியாபாரமாகப் பார்த்தவர் கிடையாது. ஒரு நிலையான இருப்பிடம் கிடையாது என்றுதான் நான் சொல்லுவேன். கேண்டல், இப்போதும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு மூலையில் நாடகம் நடத்திக் கொண்டே இருக்கும் ஒரு புதிர் நிறைந்த மனிதராகத்தான் தோற்றம் தந்தார்.

‘அவரைத்தான் நான் அன்றைய தினம் சிவப்பு நிற திறந்த ஜீப்பில் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். எனக்கு ஓடிப்போய் அவரிடம் செல்ல வேண்டும் என்று தோன்றியது. நான் சைக்கிளைத் திருப்பினேன். அவர்கள் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த இடத்தை சென்றடைந்தேன். ஜீப்பில் கொஞ்சம் பொருட்கள் இருந்தன. நான் வலிய சென்று அவற்றை இறக்கி வைக்கத் துவங்கினேன். அவ்விதம் புகுந்து பொருட்களை எடுத்து வைப்பது அவருக்குப் பிடிக்க வில்லை என்பது அவரின் முகத்தில் இருந்து தெரிந்தது. நான் அவரை பேசவே விடாமல் வேலையில் இறங்கி விட்டேன். பொருட்கள் என்ன? எல்லாம் நாடகத்திற்கானவைகள். மாளிகை உருவாக்கத் தேவையான அலங்காரப் பொருட்கள் கொஞ்சம், ஒரு சிம்மாசனம் போல தோற்றம் கொடுக்கக் கூடிய ஒரு நாற்காலி ஒரு சிறிய ஸ்டூல் இவ்வளவுதான். எல்லாவற்றையும் இறக்கிவிட்டேன். அவற்றை அந்த வீட்டின் ஹாலில் கொண்டு வைத்தும் விட்டேன். அவர் என்னைப் பார்த்து போகச் சொல்லி செய்கை செய்தார். ‘அவ்வளவுதான். அவ்வளவுதான் இறக்கி வைக்க வேண்டியவை. ஆயிற்று உனக்கு நன்றி’ என்றார். தன் கையை நீட்டினார். நானும் என் கையை நீட்டினேன். அவ்வளவு பெரிய மேதை நடிகனுடன் நான் கைகுலுக்கினேன். எனக்கு நேர் முன்னால் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜமாகவே கனவல்ல, நின்று கொண்டிருக்கிறார். மனசே இல்லாமல் நான் அங்கிருந்து கிளம்பினேன். அடுத்த தடவை சந்திக்கும் போது, நான் அவரின் நாடகக் குழுவில் இணைய ஆசைப்படுகிறேன் என்பதைத்தான் முதலில் சொல்வேன்.

‘எனக்கு நினைவுக்கு வருகிறது, 80 களில் கேண்டல் தம்பதியினரை நான் திரும்பவும் பார்த்தேன். இப்போது அவருடைய நாடகக் குழு மிகவும் சிறுத்து விட்டது. ஜியாஃபரியும், லோராவும் மட்டுமே எஞ்சியிருந்தனர். இது இந்தியாவில் அவருடைய கடைசி நாடகம். அவருடைய மனதில் சிறிதளவு கூட நிராசையின் சாயல் இல்லை. அவர் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் அவர்கள் மிகுந்த மனத் திருப்தியோடு இருந்தனர். இந்த உலகிற்கு என்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் நாங்கள் செய்து முடித்துவிட்டோம் என்ற பூரண உணர்வோடு வாழ்க்கையின் இறுதி முனையின் மகிழ்ச்சியிலேயே நின்று விடை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் மேடையில் ஒவ்வொரு வசனத்தையும் முழு உணர்வோடு சொல்லித் தான் செய்யும் செயலில் முழு ஆனந்தத்தையும் அடையும் மனிதர்களை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. நான் இன்றும் கேண்டல் தம்பதியினருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். அன்று அந்த இறுதி நாடகக் காட்சிக்குப் பின் அவர்கள் களைத்திருக்கலாம். வெய்யிலினால் துன்பம் அடைந்திருக்கலாம். தன்னைப் புகழ்ந்து பாராட்டும் சொற்களைக் கேட்கும் அளவிற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. அவர் உடை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நான் எப்படியோ நுழைந்து அறைக்குச் சென்றுவிட்டேன். அவரிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று முன் தயாரிப்பு செய்து கொண்டு சென்றேனோ அத்தனையும் காற்றில் கரைந்து போயிற்று. அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்து விட்டேன்.

‘அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என் கையிலிருந்த ஆட்டோகிரப் புத்தகத்தை எடுத்தார். கையெழுத்துப் போட்டுவிட்டு மறுபடியும் தனது ஆடைகளை மாற்ற ஆரம்பித்தார். அவர் திரும்பினார். என் முதுகு அவரின் பக்கம் இருந்தது. என் கையில் என் உலகில் முதலாவாதும், கடைசியுமான ஆட்டோகிராப் இருந்தது. இதன் பிறகு கேண்டல் சாஹேப்பைப் பற்றி நான் எதுவும் கேள்விப்படவே இல்லை. விவரமும் தெரியவில்லை. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரைப் பற்றி எந்த செய்தியும் எனக்கு இல்லை. ஆனால், நான் தைரியமாக அவருடன் கைகுலுக்கி ஒரு ஷாக் போன்று என்னை அதிர வைத்த அந்தக் கணம், எனக்கு என் வாழ்க்கை கைக்குக் கிட்டிவிட்டது போன்றும் நானும் ஏதாவது சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கையும் உண்டாக்கியது, அந்த ஸ்பரிசம்.’

முதல் நாடகத்தின் முன்னேற்பாடு

————————————————

‘அந்த நாளும் எல்லா நாளையும் போல சாதாரண நாளாகத்தான் இருந்தது. ஆனால், அன்று பள்ளியில் நாடகப் போட்டியின் அறிவிப்பு வெளியானது. ஒவ்வொரு வகுப்பும் அரை மணி நேரத்திற்கு நாடகத்தைத் தயாரித்தளிக்க வேண்டும். அதில் எல்லாவற்றையும் விட சிறந்ததாகக் கருதி தேர்வு செய்யப்பட்ட நாடகம், பள்ளியின் ஆண்டு விழாவில் பார்வையாளர்கள் முன்னால் நிகழ்த்தப்படும். உடனேயே எனக்கு சரியான நேரம் வந்து விட்டதாக உணர்ந்தேன். என் வகுப்பில் வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே என் முடிவே இறுதியானது. என் மனதில் கேண்டல் போட்ட ஷெர்லக் இன்னமும் பசுமையாக பதிந்திருந்தது. ஒரு புதிய நண்பனும் கிடைத்தான். அவன் பெயர் ஜெ.ஆர். கான். மேலும் என்னுடன் எப்போதும் எல்லாவற்றிற்கும் ஈடுகொடுக்க தயார் நிலையில் இருந்தான், நண்பன் கிரீஷ்.’

‘நாங்கள் மூவருமாக பள்ளியின் பொருட்கள் வைக்கும் அறையில் புகுந்து விளையாடினோம். பழைய, உபயோகப்படுத்தாத ஆடைகள் இருந்த அலமாரியை குடைந்து தேடினோம். நீண்ட தேடுதலுக்குப் பிறகு பயங்கரமான தோற்றம் தரக்கூடிய ஒரு கத்தியும், ஒரு வளைந்த குறுங்கத்தியும், வக்கீல்கள் அணியும் நீண்ட அங்கியும் சில முழுக்கால் சட்டைகளும் கிடைத்தன. மேல் ஜாக்கெட் ஒன்றும் கிடைத்தது. நாங்கள் ‘மர்செண்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்திலிருந்து சில காட்சிகள் உருவாக்க நினைத்தோம். என்னுடைய அண்ணன் ஜாஹிருக்கு எப்போதோ நல்ல நடிகன் என்ற பட்டமும். ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் தொகுப்பு ஒன்றும் பரிசாகக் கிடைத்தது. அது இருந்தது. அது ஒரு மூலையில் தூசி படிந்து கிடந்தது. அதை தூசு தட்டி துடைத்து எடுத்துக் கொண்டேன். நான் பள்ளிவாசலில் ஒரு தொப்பியும் வாங்கிக் கொண்டேன். எங்கள் நால்வர் குழுவில் எனக்கு மட்டுமே மேடை ஏறிய அனுபவம் இருந்தது. நான் சொல்வதையே கேட்கச் செய்தேன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இதை நினைவு படுத்திக் கொண்டே இருந்தேன். பிறகு அந்த நாளும் வந்தது. நாங்கள் ஜெயிக்கத்தான் போகிறோமென்று எனக்குத் தீர்மானமாகத் தெரியும். மேடையின் மீது ஏறும் போது ஏதோ ரோஜா மனம் கமழும் வெதுவெதுப்பான நீரில் மூழ்கி இருப்பதைப் போல உணர்ந்தேன். நான் மேடையிலிருந்து வெளியேறவே இல்லை. எப்போது எங்கள் நாடகம் துவங்கியது, எப்போது முடிந்தது எதுவும் எனக்குத் தெரியவில்லை. எனக்கு, ‘அட இத்தனை சீக்கிரம் நாடகம் முடிந்துவிட்டதா என்ன?’ என்று மட்டுமே தோன்றியது. நான் மிக மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேற நினைத்தேன், அல்லது அங்கேயே தங்கியிருக்க நினைத்தேன். என்னவாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.’

‘அன்றக்கு நான் நிகழ்வை நன்றாக செய்தேனா, அல்லது இல்லையா, அதெல்லாம் ஏதும் என் மனதில் இல்லை. என் மனம் முழுக்க நிரம்பி இருந்தவர், கேண்டல் அவர்கள்தான். அதனால் எந்தக் குழப்பமும் நேர்ந்திருக்காது. ஆனால், மேடையின் மேல் ஏறி நின்ற போது என் மனதில் ஊற்றுப் போல பீரிட்ட சக்தியை நான் முழுவதுமாக உணர்ந்தேன். உணர்ந்து கொண்டேன். அது என் ஆயுள் முழுவதும் இணைந்து விட்டது. இன்றும் கூட நான் மேடையின் மீது ஏறும் போதெல்லாம், அதே சக்தியைத்தான் அதே மாற்றத்தைத்தான் உணர்கிறேன். நான் அந்த நாளில் எல்லாப் பணியையும் செவ்வனே செய்து முடித்திருந்தேன். நான் இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்று நான் எனது முழு தன்னம்பிக்கையோடு, முழு திறமையோடு பார்வையாளர்களுக்கு நடிப்பை நிகழ்த்திக் காண்பித்தேன். யாரோ ஒருவரின் கை என்னை வழி நடத்தி எல்லாவற்றையும் சரியாக செய்ய வைத்ததைப் போல செய்து முடித்திருந்தேன். இன்று வரைக்கும் எனக்கு அன்று உணர்ந்த அனுபவம் ஆழமாக என்னுள் தங்கிவிட்டது. மக்களின் புகழுரை கேட்க மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனாலும் கூட நான் வெற்றியையும் சரி, தோல்வியையும் சரி மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொள்வதில்லை. மேடையின் கடவுள் ஒருபோதும் என்னைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார் என்று மட்டும் மனதிற்குள் எப்போதும் தோன்றும். ஆண்டு விழாவின் நாடகப் போட்டியில் அன்று நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால், தலை நிமிர்ந்து நடக்கும் அந்தப் பெருமிதம், கர்வம், சித்த சலனமும் கூட இன்றும் எனக்குள் அப்படியே படிந்து உள்ளது. அந்த நாடகப் போட்டியில் ரெவெரண்ட் செட்ரிக் பெர்ணாண்டஸ் இயக்கிய ‘த ரெஃபரி’ நாடகம் ஜெயித்தது. போட்டி முடிந்த அடுத்த நாள், பெர்ணண்டஸ் எங்கள் வகுப்பறைக்கு வந்து என்னைத் தனியே அழைத்து ‘நீ நடத்தியது சிறந்து இருந்தது,’ என்றார். அந்தக் கணம் இன்றும் என் மனதில் நிலை கொண்டு இருக்கிறது. ரெவெரெண்ட் பெர்ணான்டஸ் என்னை தூக்கி நிலை நிறுத்திவிடுவார் என்பதல்ல. அன்றுதான் முதன் முதலாக என்னையும் பார்த்து எதோ நானும் மற்றவர்களிடமிருந்து உயர்ந்து இருக்கிறேன் என்னாலும் ஏதோ சாதிக்க முடியும் என்றும் சொன்னார். அதுதான் மனதில் படிந்துவிட்டது. அந்தக் கணத்தில் நான் நடிப்பதற்காகவேதான் பிறப்பெடுத்திருக்கிறேன் என்று நிச்சயித்தேன். இனிமேல் இந்தப் பாதையில் செல்வதை யராலும் தடுத்து நிறுத்த முடியாது. திடீரென வாழ்க்கைக்கு ஏதோ பொருள் கிட்டினாற்போல இருந்தது. அன்றிரவு தூக்கம் என்னை ஆட்கொள்ள வில்லை. இன்றும் கூட நான் மேடை ஏறும் நாட்களில் எல்லாம் உறக்கம் வராது.

நீண்ட பின்னலை உடைய அந்தப் பெண்

———————————————————

‘உலகம் தனக்கான வேகத்துடன் இயங்கிக் கொண்டேதான் இருந்தது. இப்போதெல்லாம் திலீப் குமாரின் படங்கள் வருடத்திற்கொன்று என்று இல்லாமல், சில வருடங்களுக்குப் பிறகே வெளி வரத் தொடங்கின. ஜவஹர்லால் நேரு மறைந்தார். இளைஞர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். பழைய கிழட்டு ஆந்தை சானிலிஸ்டன் மண்ணைக் கவ்வ, காசியஸ்கிளே குத்துச் சண்டையின் அரசனானான். பள்ளியில் எனது கௌரவமும் மேலும் உயரத் தொடங்கியது. இப்போதெல்லாம் என்னை நடிகன் என்று சொல்லி புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். என்னுடன் நட்புக் கொள்ள மக்கள் தானே முன் ஓடி வந்தனர். இதை தவிர இன்னமும் சில ஸ்பெஷல் நிகழ்வுகளும் நடந்தன. சில நல்ல கிரிக்கெட் மேட்ச் ஆடியிருந்தேன். நீளப்பின்னல் கொண்ட செயிண்ட் மேரி எனக்கு மிகவும் அழகாகத் தோன்றினாள். அவள் என்னை சிரித்துக் கொண்டே பார்க்கத் துவங்கினாள். எங்களிடையே கடிதப் போக்குவரத்தும் நடந்து கொண்டு இருந்தது. இப்படி போய்க்கொண்டே இருக்கும் போது, ‘அடேய் ஷாவுக்குக் கூட ‘கேர்ள் ஃப்ரண்ட்’ கிடைத்துவிட்டாள்’ என்ற பேச்சும் ஆங்காங்கே கிளம்பி இருந்தது.

‘இதற்கிடையில் நான் மனப்போராட்டத்தில் சிக்கித் தவிக்கத் தொடங்கினேன். என் எண்ணங்கள் முட்டி மோதி வெளியிலும் வரத் துவங்கின. நான் என்ன பேசுகிறேன் என்பது எனக்கே தெரியாமல், சொற்கள் வெளிவரத் துவங்கின. நீண்ட நாட்களுக்குப் பிறகு வதோதராவில் ஒரு தேசிய போட்டியில் என் கேரக்டர் வெளிப்பட்டுவிட்டது. வீட்டிலும் என் உறவு சற்றே மேம்படத்துவங்கி இருந்தது. நான் ஒரு நடிகனாக மிளிரவும் முடியும் என்றும் தோன்றத் துவங்கியது. ஆனால், என் பிரச்சனை என்னவென்றால், ஒரு நடிகனாவதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்ன முன்னேற்பாடுகள், பயிற்சிகள் தேவை என்பதெல்லாம் ஒன்றும் புரிபடவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளவதற்கும் யாரும் இல்லை. எனக்குத் தெரிந்து என் சகோதரர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் என்னுடைய நடிகனாகும் விருப்பத்தை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். என் முழு விருப்பத்தோடும் முழு கவனத்தோடும் அப்போது நான் செய்து கொண்டிருந்தது இது ஒன்றே ஒன்றுதான். அதாவது, அக்கம் பக்கம் இருக்கும் மக்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி இருக்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் இவற்றை தீர்க்கமாக கவனித்து வந்தேன். இது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாக கேட்ட சொற்கள், குரல்கள் இன்னும் என் நினைவிலிருக்கிறது. ஆனால், வீடோ வேறு விதமாக மாறிக் கொண்டிருக்கிறது. அப்பாவின் அலுவலகக் காலம் அஜ்மீரில் முடியப்போகிறது. நான் பத்தாவது படிப்பதற்காக மறுபடியும் ஹாஸ்டலுக்கு வந்து விட்டேன். என்ஜினியரிங், அல்லது மருத்துவம் படிக்கத் தேவையான திறமையும், புத்திசாலித்தனமும் என்னிடம் இல்லை என்பது என் அப்பாவுக்கும் எனக்கும் நன்கு தெரியும். பட்டாளத்திற்கு போய் சேவை செய்யும் அளவிற்கு திடமும் மனத்துணிவும் உடல் கட்டும் என்னிடம் கிடையாது. இதுவும் தெரியும். ஒரு நல்ல பெயரெடுக்கும் வேலை எதுவும் தேடும் முயற்சியும் என்னிடம் இல்லை. அப்புறம் எனக்கு என்ன வழி இருக்கிறது? நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. அவர்களுக்கு கலைக்கான வழிகள் பற்றிய அறிமுகம் கிடையாது. அது மாதிரி உலகம் ஏதும் இருக்கிறதா என்ன அதைப் பற்றிய சிந்தனையும் கிடையாது. எந்தப் பாதையுமே பிடிபடாதபோது என் முன் எது இருக்கிறதோ, அதில் தான் நான் செல்ல வேண்டும். என் பாதையைத் தேடுவதற்கு பூரண சுதந்திரத்துடன் இருந்தேன் நான் என்றும் சொல்லலாம்.

‘அஜ்மீரை என்றென்றைக்குமாக விட்டுவிட்டு அம்மாவும், அப்பாவும் சர்தனா சென்றுவிட்டனர். அங்கு பரம்பரை சொத்து இருந்தது. அதில் அப்பாவிற்கும் அந்த வீட்டில் முன்னோர்களுடையதில் பங்கும் இருந்தது. அப்பாவும் அம்மாவும் அங்கு முன்பு வசித்த இடம் அங்கு இருக்கும். ஆனால், இத்தனை நாட்களில் அங்கு நவாப் பஹதூர் ஷாவின் வம்சம் உறவு என அனைவரும் அந்த இடத்தில் வந்து வசிக்கத் தொடங்கிவிட்டனர். தன் பங்கைக் கேட்க உரிமையை நிலை நாட்ட இவன் வருவான் என்றே எதிபார்க்காதபோது எதிரில் வந்து நிற்கின்றனர். சண்டை போட்டு, வாத விவாதம், உரிமைக் குரல் என எல்லாம் நடந்தது. இந்த சமயத்தில் அப்பாவும், அம்மாவும் முழு கோபத்தோடும், போராட்டத்தோடும் தைரியத்தோடும் கடைசி வரை போராடிப் பார்த்தனர். பாபர், காலிம் மாமுவுடன் சொத்துப் பற்றிய தகராறும் உண்டாயிற்று. உறவுகளும் கசந்து போயிற்று. குடும்ப அரசியல், ஏமாற்று வித்தை, வேலை செய்யாத சோம்பேறி வேலையாட்கள், சலித்துப்போன உறவுக்காரர்கள் என நேரடியாக மோதல்களிலும் ஏற்ற இறக்கங்களிலும் தொடர் போராட்டத்தை செய்து கொண்டிருந்தனர். அம்மாவின் வைரங்கள் நிறைய திருட்டுப் போயின. அஜ்மீரை விட்டு செல்லும் போது அப்பா மிகவும் கசந்து போய்விட்டார். எதுவும் வேலைக்காகவில்லை. அவர்கள் யாருமே நம் உறவினர்கள் இல்லை என்ற மொத்த முடிவுக்கு வந்து விட்டார்.

மேடையே எனது உலகம்

————————————

‘நான் இப்போது சுதந்திரமாக இருந்தேன். நான் தாடி வளர்த்துக் கொண்டேன். இதற்காக நான் எத்தனை காலம் பித்தனாக இருந்தேன் தெரியுமா? அப்பாவிற்கு இது பிடிக்கவில்லைதான். நான் ஒரு முஸ்லீம் என்பதை ஏன் வெளிப்படுத்த வேண்டும் என் எண்ணினாரோ என்னவோ. இப்பொது நான் ஜீனா லோலா பிரிகேடா, மர்லின் மன்ரோ, போன்ற ‘வயசு’ படங்களைப் பார்க்கவும், தொடங்கினேன். என் வயதுள்ள ஆண்களும் பெண்களும் எப்படியெல்லாம் நினைப்பார்களோ, அதே போன்ற என் மனமும் முழக்கமிடத் தொடங்கியது. நாட்டின் நிலையும் மாறத் தொடங்கியது. இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா , ‘வுமன் அண்ட் ஹோம்’ ஆகிய புத்தகங்களுக்கு இடையில் மறைத்து வைத்து ‘பிளே பாய்’ கிடைத்தது. இன்னமும் படங்களுடன் கூடிய நூல்களும் கிடைத்தன. அவைகளை எல்லாம் பார்த்து எனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஏனெனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை.’

அதற்குப் பிறகு நசீரானவன் மேடையில் ஏறுவதற்கு எல்லா வகையிலும் முயன்று கொண்டிருந்தார். ரெவெரண்ட் செட்ரிக்குடன் தொடர்பு ஏற்படுகிறது. அவருடைய வற்புறுத்தலின் பேரில் நசீர் ஷேக்ஸ்பியரைப் படிக்கத் துவங்குகிறார். ‘இப்போதுதான் முதன் முதலாக படிக்கத் துவங்குகிறேன் என்பதல்ல. வேறு விதமாக சொல்வதென்றால், சோபாவில் உட்கார்ந்து ஆற அமர ஹாயாக படிப்பதல்ல இது. அதன் சொற்களை உரக்கப் பேசி உரையாடல் முறையில் வெளிப்படுத்தி குரலை ஏற்றி இறக்கி அந்தக் காட்சிகளை மனதில் கொண்டு வந்து படிக்கவேண்டும். சிறிது காலத்திற்குப் பின் நாடகம் என் முன்னால் விரியத் தொடங்கியது. அவைகள் உருவெடுக்கத் தொடங்கின ஷெர்லாக் ஹோமின் உரையாடல் எனக்கு மனப்பாடமாயிற்று. பேசும் முறையும் மிகவும் பெயர் பெறும் அளவிற்கு வந்து விட்டது. அப்போதுதான் முடிவெட்டும் சலூன் கடையில் திரையில் ஒட்டியிருந்த அந்த அறிவிப்பைப் பார்த்தேன். அது ‘பிலிம் பேர் யுனைடெட் ப்ரொட்யூசர்ஸ்’ டேலண்ட் காண்டஸ்ட் பற்றியது. நான் அந்த விளம்பரத்தை கத்தரித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். ஆனால், அதில் காபினெட் சைஸ் புகைப்படம் மூன்று கேட்டிருந்தார்கள். அந்தப் பணத்திற்கு நான் எங்கே போவேன்? விஷயம் அங்கேயே நின்று போயிற்று. இதற்கிடையில் நான் பள்ளியின் இறுதி ஆண்டை முடித்துவிட்டு வெளியிலும் வந்துவிட்டேன். பிறகு சில நாட்களுக்குப் பின் அதே சலூனில் அந்த விளம்பரத்தின் தேர்வையும் அச்சடித்து ஒட்டி இருந்தனர். நட்சத்திரத் தேடலில் அந்த போட்டியில் வென்றவனின் புகைப் படத்தைப் பார்த்து நான் பிரமித்துவிட்டேன். அந்த நபர் நடிகராவதற்காகவே பிறப்பெடுத்தது போலத் தோன்றினார். நான் பெருமூச்சு விட்டு சொல்லிக் கொண்டேன். என் பணம் மிச்சமாயிற்று. இவருக்கு முன்னால் நான் எந்த மூலை? ஆனால், மனதில் பிறகு ஒரு கேள்வியும் பிறந்தது. பார்க்க எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நடிப்பு? அதுவும் வந்துவிடுமா என்ன? அப்புறமும் இன்னொன்றும் தோன்றியது, இத்தனை பெரிய போட்டியில், பலப்பரீட்சையில் இத்தனை பேருடன் போட்டி போட்டு வெற்றி பெற்றவன் சாமான்யமானவனாக இருக்க முடியுமா என்ன? வயது அவருக்கு 21, பெயர் ராஜேஷ் கன்னா.

கிளம்பு போகலாம் பம்பாய்க்கு:

——————————————

‘என் மனதில் பம்பாய் செல்ல வேண்டும் என்ற விதையை முதன் முதலில் யார் விதைத்தது என்பது நினைவில் இல்லாவிட்டாலும் கூட, ஒரு பெண் எஸ்.எம் என்ற பெயருடைய ஒரு பெண் பம்பாயில் வசிக்கிறாள். அவள் ஜே.ஆரின் கேர்ள் பிரெண்டாக இருந்தாள் என்பதும் மட்டும் நினைவில் நிற்கிறது. அவளின் அப்பா வெற்றி பெற்ற ஒரு சினிமா குணச்சித்திர நடிகர். எனவே, என் சினிமா ஆசைக்கு எப்படியாவது வழி காட்டுவார் என்ற நம்பிக்கை இருந்தது. நான் எஸ். எம்மிற்கு ஒரு கடிதம் எழுதினேன். எப்படியோ விலாசம் கண்டுபிடித்திருந்தேன். எஸ்.எம் ,எனது பம்பாய் வருகைக்கு மகிழ்ந்து ஆமோதித்தும், தனது பிரபல குணச்சித்திர நடிகரான அப்பா, எனக்கு தன்னால் ஆன உதவியை கண்டிப்பாக செய்வார் என்றும் தங்களுடனேயே தங்கிக் கொள்ளலாம் என்றும் கூட எழுதியிருந்தாள் .பிறகென்ன ? தங்கு தடை ஏது பம்பாய் செல்ல? நான் என்னிடமிருந்து விற்க முடிந்த எல்லாப் பொருள் களையும் விற்று பணம் திரட்டத் தொடங்கினேன். பம்பாயில் குளிருமே. எனவே என்னுடைய கடிகாரம்,சைக்கிள், புத்தகங்கள் எல்லாவற்றையும் விற்று வந்த ஐநூறு ரூபாய் ரொக்க சொத்துடன் குளிர்கால உடைகளுடன் கூட டெஹ்ராடூன் எக்ஸ்பிரெஸ்ஸில் நேராக பம்பாய் சென்றேன். சென்ற உடனே ஆட்டோகிராப் போட்டேன், பத்திரிகையில் வெளியான என் புகைப்படங்களை கண்டேன். ஏன் எனில் நான் ஒரு பிரபல குணச்சித்திர நடிகரின் வீட்டில் தங்கப் போகிறேன். அவர் எனக்கு எல்லாமே செய்யப் போகிறார். ரயில் பம்பாயைச் சென்றடைந்ததும் அவர்கள் எல்லோரும் என்னை வரவேற்க ரயில் நிலையம் வந்திருந்தனர். அவளும் வந்திருந்தாள். அவளின் சகோதரனும் வந்திருந்தான். யூசூப்பும் வந்திருந்தான். அவனுடன் தான் தங்கி இருக்க வேண்டும். நான் சென்றிறங்கிய உடனே ஒரு நீளமான கார் பெரிய கார் காற்றில் மிதந்து வந்து என்னை ஏற்றிக் கொண்டு அவர்கள் மாளிகைக்கு செல்லும். அங்குதான் நான் வசிக்கப் போகிறேன். என்றெல்லாம் எண்ணியிருந்தேன். அப்பொழுதெல்லாம் சினிமா நடிகர் எனில் மிக ஆடம்பரமான வாழ்க்கைதான் வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், எந்த வண்டியும் காற்றில் பறந்து அசைந்து வரவில்லை. ஒரு ஈரானிய உணவகத்தில் எனக்கு கீமா- பாவ் வாங்கிக் கொடுத்து சாப்பிடச் செய்தனர். பம்பாயின் முதல் சுவை அனுபவம் இது. பிறகு என்னை ஒரு வண்டியில் உட்கார்த்தி- அதற்குப் பெயர் லோக்கல்,- அந்த வண்டி எங்களை பாந்திராவுக்குக் கூட்டி வந்தது. அதன் பிறகு ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு நான் எங்கு தங்கப் போகிறேனோ அந்த மாளிகைக்கு வந்து சேர்ந்தது. நான் முதல் முதலாக அரபிக் கடலை பார்க்கிறேன். பிறகு மவுண்ட் மேரி சர்ச் பிறகு, பிறகு— மஹ்பூப் ஸ்டுடியோ. எத்தனை தூரம் கழுத்தை வளைத்துப் பார்க்க முடிகிறதோ அந்த ஸ்டுடியோவைப் பார்த்துக் கொண்டே வந்தேன். கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே வந்தேன். என்னுடைய கனவுகள் எல்லாம் அட்டகாசமாக நிறைவேறிக் கொண்டு வருகின்றன. டாக்சி வந்து நின்றது. அங்கு எந்த மாடமாளிகையும் இல்லை. கூட கோபுரமும் இல்லை.ஆனால், ஒரு பங்களா இருந்தது. இங்குதான் நீ தங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. எனக்கு செய்யபட்ட அத்தனை உதவிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணிய போது நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி வெளியே வந்தாள். அவள் எஸ்.எம்மின் அத்தை. அந்தப் பெண்மணிக்கு என்னை ஒரு வீட்டு எஜமானிக்கு அறிமுகப்படுத்தும் பாங்கில் பணிவுடன் செய்தாள். எஸெம்மின் அத்தை வீடே இத்தனை அழகாக சுத்தமாக இருக்கிறதென்றால், அவளுடைய வீடு எப்படி இருக்கும்?’

‘நாங்கள் உள்ளே நுழைந்தோம். காற்று வீசியது. நான் எஸ்.எம்மிடம் நானும் நீயுமாக கடற்கரையில் உலாவி விட்டு வரலாம் என்று கூப்பிட்டேன். அவள் உடனே தயாராகி என்னுடன் வந்தாள். மவுண்ட் மேரியில் எந்த மாதிரி பங்களா வாங்கலாம்? என்றெல்லாம் பேசி முடிவெடுத்துக் கொண்டு கற்பனையில் பறந்து வீட்டிற்கு வந்தால், வீட்டின் சூழலே மாறிப் போயிருந்தது. குடும்பப் பஞ்சாயத்து கூடிவிட்டிருந்தது. நான் திரும்பி வருவதற்கு முன்னமேயே அவர்கள் நான் நல்ல பையன் அல்ல, உருப்படாதவன் என தீர்மானித்திருந்தது, அனைவரின் கவலை படிந்த முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. எஸ்.எம்மின் தந்தையான நடிகரும் கூட என்னை ஆழ்ந்த பார்வையுடன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். அவர் அந்த அந்த குடும்ப நீதிமன்றத்தில் தனது தீர்ப்பையும் சொன்னார். 16 வயதுடைய இந்தப் பையனை இந்த வயதில் பெரியவன் என்ற இடத்திலும் வைக்க முடியாது. குழந்தை என்ற ஸ்தானத்திலும் இருத்த முடியாது. நான் உடனே அவருக்கு அப்போது வெற்றி பெற்ற படமான ‘தோஸ்தி’ படத்தை நினைவுபடுத்தி அதில் என் வயதுடைய இரு குழந்தைகள் கதையின் நாயகர்களாக நடித்தனர் என்றேன். எனது பதிலினிடையிலேயே அவர் ‘ முகமெல்லாம் கொஞ்சம் நன்றாக இருந்தால்’ என்று ஏதோ முணுமுணுத்தார். எனக்கு அது சரியாக காதில் விழவில்லை. அதன் பிறகு அமைதியான குரலில், ‘நான் எடுக்கப்போகும் படத்தில் உனக்கு கண்டிப்பாக வாய்ப்புக் கொடுப்பேன். ஆனால், அது பின்னாளில் நடக்கப் போவது. இப்போதைக்கு நீ உன் வீட்டுக்கு திரும்பிப்போ சரியான நேரம் வந்தவுடன் நான் உன் அப்பாவிடம் பேசி உன்னைக் கூட்டிக் கொள்கிறேன். அவ்வளவுதான் பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. எனக்கு எப்படி அந்த சமயத்தில் அப்படி ஒரு கோபம் வந்தது என்றே தெரியவில்லை. இன்றும் கூட அந்த விஷயம் நினைவிற்கு வந்தால் அதிர்ச்சி அடைகிறேன். ஆனாலும் நான், ‘இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை’ என்றேன். அவர் ஒரு பெருமூச்சுவிட்டுப் பின் அமைதியாகி விட்டார். இடையே ஒன்றுமே பேசாமல் இருந்தாள், எஸ்.எம். இன்றளவும் அவளுக்கு என் மனதில் ஒரு சிறப்பான இடம் உண்டு. அன்றும் அதற்குப் பின்னும் நான் இருந்த ஒரு மாதம் முழுவதும் ஒரு முறை கூட நான் அவளது முழுக் குடும்பத்திற்கும் ஒரு அசந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிட்டேன் என்று கூறவில்லை. கடைசியாக அவர்கள் ஒரு கதை சொல்லி வெளியேற்றி விட்டார்கள். இந்த வீடு இடிக்கப்படப் போகிறது. நான் வேறு வசிப்பிடம் பார்த்துக்கொண்டு போக வேண்டும் என்றும் சொன்னார்கள்.’

எனது முதல் படப்பிடிப்பும், நிஜ காமிராவும்

————————————————————-

‘‘நட்ராஜ் ஸ்டுடியோ’ காலை ஏழரை மணிக்கெல்லாம் கூட்டமாக மக்கள் அங்கு குழுமியிருந்தனர். நானும்தான். தினமும் ஏழு ரூபாய் ஐம்பது பைசா சம்பளம் என்று பேசி முடிவு செய்யப்பட்டது. மனதிற்குள்ளே பெரும் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. ஒரு நாளைக்கு ஏழு ரூபாய் கிடைத்தால் போதுமே. நான் ராஜாதான். உண்மையிலேயே எங்களுக்குக் கிடைக்க வேண்டியது பதினைந்து ரூபாய். யூனியன் எல்லாம் அப்போது உருவாகவில்லை. அந்த பளபள சட்டைக்காரன் எங்களின் பாதிக் கூலியை தரகாக முழுங்கிக் கொண்டிருந்தான். உண்மையான சினிமாவில் நான் நடிக்கப் போகிற முதல் வாய்ப்பு இது. இது அது எதையும் நினைக்கவில்லை நான். அதற்கு தயாரும் இல்லை நான். உண்மையிலேயே காமிரா. நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். மேலும், அந்தக் காமிராவிற்கு ஊழியம் புரிய எத்தனை மக்கள். எங்களை ஒரு வரிசையில் நிற்க வைத்து விட்டனர். ஒளி வெள்ளத்தில் நாங்கள் குளித்துக் கொண்டிருந்தோம். மெதுவாக காமிரா சுழன்று எங்களையும் முன் நிறுத்தியது. — நானே என் கண்களால் பார்த்தேன். கேமிராவின் உள்ளே— எங்களின் இயக்குனர் மிகக் கடுமையானவர். அவர் எங்களை சிரிக்க சொன்னார். ஆனால் மகிழ்ச்சி அடையக் கூடாதென்றார். காமிராவிற்குள் பார்க்கக் கூடாதென்றார். விஷயம் என்ன வென்றால், நாங்கள் ஒரு சவ யாத்திரையில் இணைந்திருந்தோம். ஒரு கருப்பு மெர்சடீஸ் கார் . அதிலிருந்து எங்கள் ஹீரோ ராஜேந்திர குமார்- அவருடைய இறுதி யாத்திரை தான் அது. அந்த பகட்டு சட்டைக்காரன் அவருக்கு மிகவும் பிடித்தமானவன். இதுவும் பின்னால் எனக்குத் தெரியவந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த டிரக்கில் தான் சவமாகப் படுத்துக் கொள்ள வேண்டிய படுக்கையைப் பார்த்தார். பிறகு டிரக் செல்லத் தொடங்கியது. —-காமிரா சுழலத் தொடங்கியது. நாங்கள் துயரம் மிகுந்தவர்களாக காண்பித்துக் கொண்டிருந்தோம். நான் இன்னமும் முன்னுக்கு சென்று முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தேன். எப்படியாவது இந்த ஷாட்டில் என் முகம் தெரிய வேண்டும்.-.-.- எனவே நான் வரிசையில் முதலாவதாக இடம் பிடித்திருந்தேன். இன்று என்னுடைய சினிமா உலக பிறப்பு துவங்கி விட்டது. பிறகு எங்களுக்கு மதிய உணவும் அளிக்கப்பட்டது. கூடவே நாளைக்கு நாங்கள் தேவையில்லை என்ற அறிவிப்பும் -.-.- ஆனால் வெகு விரைவிலேயே இன்னொன்று கிடைத்தது. எங்கள் இணைப் பையன்களுடன் அந்த நாள் இனிதே கழிந்தது. ஏழு ரூபாயில். மூன்று ரூபாய்க்கு அதிகமாக செலவாகிப் போனது. சரிகை பாக்டரியின் மேல் தளத்தில் இருந்த பொழுது எனக்கு ஒரு மாத வாடகை கொடுக்க வேண்டும் என்பது நினைவிற்கு வந்தது-.-.- அதுதான் அந்த பகட்டு சட்டைக்காரன் கூடிய சீக்கிரம் ஏதாவது செய்வான். -.-. ஆம் அவன் செய்தான். கூலி என்னமோ அதே தான். வேலை மூன்று நாட்களுக்கு கிடைக்கும். அப்படியென்றால் இருபத்தியோரு ரூபாய் கிடைக்கும். -.-. என் சட்டைப் பை நிறைந்து விட்டது. இரண்டு மாதத்திற்கான வாடகைப் பணமும் பல சிகெரெட் பாக்கெட்டுகளுக்கான பணமும் கிடைத்துவிடுவது உறுதி.-.-சாப்பிட வேண்டும் என்று கூட தோன்றவில்லை எனக்கு-. ஷூட்டிங் மோஹன் ஸ்டுடியோவில் நடந்தது. படத்தின் பெயர் ‘சப்னோங் கா சௌதாகர்’ என்பது. இந்த முறை கதா நாயகன் ராஜ்கபூர்-.-.அவருடைய பிறந்த நாள் பார்ட்டி அதற்கு இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் கூடியிருந்தனர். -.-. அதில் நானும் ஒருவன்.-.- எங்கள் அனைவரின் கைகளிலும் கோகோ கோலா நிறமுடைய திரவம் நிரம்பியிருந்த டம்ளர் கொடுக்கப்பட்டது. -.-. பின் கட்டளையும் இடப்பட்டது, பருகக் கூடாது என. இந்த முறை காமிரவில் நான் தெரியவர ஏதும் செய்ய முடியவில்லை. நான் படத்தைப் பார்த்த போது நான் எங்கும் காணக்கிடைக்கவில்லை. இரண்டு மாத வாடகையைக் கொடுப்பது முட்டாள் தனமாகத் தோன்றியது. அந்தப் பணத்தை மகிழ்ச்சிக்காக செலவழிப்பதே சரி எனப்பட்டது. ரயிலில் டிக்கேட் எடுப்பதில்லை என்ற கொள்கையை நான் இன்றளவும் உறுதியாக கடைபிடித்துக் கொண்டு வந்து கொண்டுமிருக்கிறேன். -.-. சில வேளை கடைசி ரயிலும் போய்விட்டதெனில், பஸ்ஸ்டாண்டில் படுக்கை. போலீஸ் வந்து போ போ என விரட்டி அடித்தால், பக்கத்தில் இருக்கிறவே இருக்கிறது, பார்க். தொந்தரவில்லாமல் நல்ல தூக்கத்திற்கென. நன்றாகத் தூங்கினேன். ஒரு மாத வாடகை கொடுத்தப்புறமும் 12.50 மீதம் இருந்தது. அது எங்கே எப்படி மாயமாக மறைந்தது? ஒன்றும் புரியவில்லை. அந்த பகட்டுச் சட்டைக்காரன் எங்கே என்றும் எனக்குத் தெரியாது. எதுவும் நடக்கவில்லை. ஆனால் குடலுக்குள் பெரும் பசி நெளியத் தொடங்கியது. ஒரு நாள் பம்பாய் ஹோட்டலின் வெளிப்புறம் இருக்கும் நடைபாதையில் நின்று கொண்டிருந்தேன்.ஒரு பளபளப்பான கார் அங்கு வந்து நின்றது-.-.-. பின்பக்கக் கதவு திறந்தது-.-.மெல்ல கால் எடுத்து நடந்துவந்த பெண் ‘நீ நசீர்தானே’ எனக் கேட்டாள்.’

பெரிய நடிகரின் வீட்டில்

———————————-

‘நான் ‘ஆம்’ என்று தலை அசைத்த பின் தலையைத் தூக்கிப் பார்த்தால்,. நல்ல உடை அணிந்திருந்த அவள் முகம் பார்த்ததாக பட்டது. மங்கலாக நினைவில் வந்த ஒரு பெண்ணின் முகம் என்று நினைத்தேன். அவள் என்னை காரின் முன் சீட்டிலமரும் படி கட்டளை இட்டாள்.-.-.-. நானும் உட்கார்ந்தேன். -.-.-. ஏர்கண்டிஷன் கார். சிலுசிலுப்பு, காற்று என்னுடைய வியர்வையில் நனைந்த சட்டை இன்னமும் உடலோடு ஒட்டிக் கொண்டது. கார் சென்று கொண்டிருந்தது. ஆனால், இது கனவா அல்லது நிஜமா என்று கூட புலப்படவில்லை. பின்னால் உடகார்ந்திருப்பவளிடமிருந்து வசவும் திட்டும் ஆரம்பித்த போது சட்டென்று எனக்கு புரிபட்டது. இந்தப் பெண் புகைப்படத்தை நான் எங்கோ பத்திரிக்கையில் பார்த்திருக்கிறேன். அவர் சயீதா கான், அந்த சமயத்தில் புகழ் பெற்ற நட்சத்திரமான திலீப்குமாரின் சகோதரி. இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்துவிட்டது. திலீப்குமாரின் பெரிய அக்கா சகீனா எந்த சூஃபியின் சிஷ்யையாக இருந்தாளோ, அந்த சூஃபியின் சமாதி அஜ்மீரில் இருந்தது. அதனுடைய பாதுகாப்பு என் அப்பாவின் வசம் இருந்தது. எனவே அவர் அடிக்கடி அஜ்மீருக்கு வருவார். எங்கள் அறிமுகம் கிடைத்துவிட்டது. ஒரு முறை அவர் எங்களுடன் எங்கள் வீட்டில் வந்து தங்கியும் இருந்தார். எனவே, நான் இரண்டு மாதமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். அப்பா இந்த மக்களுடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். என்னுடைய போக்கு வரத்து முகவரி ஏதும் அவர்களிடம் இல்லை. குடும்பப் பெயர், எனது கடிதப் போக்குவரத்து, இவைகள் போதும் இறைதூதப் பெயரான குமார் வம்சத்தினருக்கு. சின்ன அடையாளமே போதுமானது. யாரையும் கண்டுபிடித்து விடப் போதுமானது. அவர் என்னையும் தேடி கண்டு பிடித்து விட்டார். அந்தப் பெண்மணியின் குடும்ப பெயர் தாங்கியதாக என் கடிதப் போக்குவரத்தும் இருந்தது. அந்தப் பிரபலமான குடும்பத்திற்கு அது போதாதா? எங்கள் கார் திலீப்குமாரின் பங்களா முன்பு நின்றது. என்னை சகீனா அக்காவின் முன்னால் கொண்டு நிறுத்தி வைத்தனார். அவர் சாந்தமான குணம் உடையவர். ஆனால் அன்று முகத்தில் கோபம் நெருப்பாகக் கழன்று கொண்டிருந்தது. என்னனமோ சொன்னார். கடைசியில் நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். கண்களிலிருந்து கண்ணீர் கடல் உடைந்து எழுந்தது. மன்னிப்பு சமாதானமென எல்லாம் கேட்டுக் கொண்டேன். குடும்ப மானத்திற்கு எதிராக சினிமா ஆசை கொண்ட சிறு பையனால் வேறு என்ன செய்ய முடியும்? அது, அதான் எனக்கும் ஆயிற்று. எதுவும் அதிகமாக நான் சொல்லவும் எழுதவும் வேண்டி இருக்காது. கடைசியில் என்னை திரும்ப வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். என்னுடைய உடைமைகள் என கொஞ்சம் பொருட்கள், மதன்புராவிலிருந்து அந்த பாலி ஹில்ஸுக்கு கொண்டுவரப்பட்டது. என்னை பங்களாவின் வேலைக்காரர்களோடு தங்க வைத்தனர். மற்றபடி எல்லா ஏற்பாடுகளும் சரியாகவே இருந்தன. நான் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்குள் வரலாம் போகலாம் என அனுமதியும் அளித்திருந்தனர்.’

‘நான் அவர்களின் வரவேற்பறையில் வரிசையாக ஆறு அல்லது ஏழு பிலிம்பேர் அவார்டுகள் நிற்கக் கண்டேன். அவற்றிலிருந்து ஒன்றை எடுத்துப் பார்த்தேன். அவ்வளவு கனமாக இருந்தது. -.-.-.கடைசியாக ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். ஒரு கையில் அதைப் பிடித்தபடி முன்னாலிருந்த கூட்டத்தை நோக்கி கையசைத்தேன். போஸ் கொடுத்தேன். ஒரு வெற்றி பெற்றவரின் மேடைப் பேச்சையும் கொடுத்தேன். குமார் சாஹேப்பின் பிரதான பங்களாவிற்கு கொஞ்சம் தள்ளினாற் போல ஒரு காட்டேஜும் கட்டியிருந்தது-.-.அந்த பெரிய மனிதனின் தனிப்பட்ட இடம் அது. -.-.-அவர் யோசிப்பார். வேலை செய்வார்-.-. மற்றவர்களை சந்திப்பது, ஓய்வெடுப்பதற்கான அறை, அறையில் விரித்திருந்த படுக்கை விரிப்புகள், நிறைய புத்தகங்களின் குவியல் சுவரில் மாட்டியிருந்த ஓவியங்கள், ஒரு நட்சத்திரத்தின் இருப்பிடம். விஷேசமான அந்த இடத்திற்குள் செல்ல என்னை யாரும் தடை செய்யவில்லை. ஆனால், ‘அவர்’ அங்கிருக்கும் போது நான் நுழையக் கூடாது. எப்போதாவது தான் அவர் வீட்டில் இருப்பார். இந்த திலீப்குமாரின் காட்டேஜில் நான் மணிக்கணக்காக இருந்திருக்கிறேன். இதற்கு முன்பாக எனக்கு சினிமா, இலக்கியம் என்பது பிலிம்பேரும், பிக்சர் போஸ்டும்தான். எப்போதாவது எனக்கு ஹாலிவுட்டின் போட்டோ ப்ளே புத்தகமும் கிடைத்திருக்கிறது. ஆனால், இங்கோ எத்தனை எத்தனை புத்தகங்கள், என்ன என்ன பெயரில், எத்தனை விதம் விதமான முகங்கள் அப்பப்பா -.- அப்படியும் ஒரு நாள் ஏற்பட்டுவிட்டது, தப்புவதற்கு வழியின்றி நான் அங்கு இருக்கும் போது ‘அவர்’ வந்து விட்டார். நான் ஏன் அங்கிருக்கிறேன், என்றும் கேட்கவில்லை. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் நான் ஒருவன் அங்கிருக்கிறேன் என்பதையும் பொருட் படுத்தவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதிலேயே மூழ்கி இருந்தார். -.-.-. சில நாட்களுக்குப் பின் அவர் தனியாக தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது நான் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் அருகில் சென்றும் விட்டேன். -.-.- எனக்கு ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என்று கேட்க விரும்பினேன். அவர் எதாவது செய்வாரா என்றும்-. அப்போது என்னால் எண்ணத்தை சரியாக சொல்லவும் முடியவில்லை. அவர் பெரிய சொற்பொழிவாற்றத் தொடங்கினார். ‘நல்ல குடும்பத்தைச் சார்ந்த பையன்கள் சினிமா உலகிற்குள் நுழையக் கூடாது’ இத்துடன் என்னுடைய எல்லா ஆசைகளும் முடிவுக்கு வந்துவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் திலீப்குமாருடன் ஒரு படத்தில் பணியாற்றினேன். அதை இப்போது நினைக்கவும் விரும்பவில்லை. அப்போது நான் இந்த சந்திப்பைப் பற்றி நினைவுபடுத்தவும் விரும்பவில்லை. அவருக்கு இவையெல்லாம் நினைவில் நின்றிருக்காது.

‘பின், இன்னொரு நாள் அவர் வந்தார். சகீனா அக்கா எனக்கு டெஹ்ராடூன் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கட் எடுத்து என்னிடம் கொடுத்தார். வழிச் செலவுக்கு பணம் கொடுத்தார். கூடவே ஒரு ஆளையும் என்னுடன் அனுப்பி, என்னை ரயிலேற்றி என் இருப்பிடத்தில் அமர்த்தவும் கட்டளை இட்டார். ஒரு பெரிய சுற்று சுற்றிவிட்டு நான் மறுபடியும் மீரட்டிற்கு வந்துவிட்டேன்.’

பம்பாயிலிருந்து மீரட்டிற்குத் திரும்பிய நசீருக்கு தன்னைத்தான் அறிய ஒரு வாய்ப்பாயிற்று. வாழ்க்கையில் எங்கெங்கு எப்படிப்பட்ட நிலைகளில் குறைகளைக் கொண்டு இருக்கிறோம் என்பதை ஆழமாக அறிந்து கொள்ளவும், எந்த எந்த நிலைகளில் தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு மட்டுமல்லாமல் உயர்ந்தும் இருக்கிறோம் என்பதை எல்லாம் அறிந்து கொள்ளவும், சமயம் கிடைத்தாற்போலிருந்தது. சொல்லப் போனால் நசீர் இழந்தது திரும்பக் கிடைத்தாற்போலிருந்தது. மீரட்டின் கேண்ட் ஸ்டேஷனை நசீர் மதியம் வந்தடைந்தார். ஆனால், இரவாவதற்காகக் காத்திருந்தார். ஏனெனில் இரவில் யார் கண்ணிலும் படாமல் தனது வீட்டை அடைந்து விடலாம். இதற்காக இரவு பதினோரு மணிக்கு அவர் வீட்டை அடைந்தார். அப்போது அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள், அது உறங்கும் நேரம் என்றெண்ணினால், அம்மா இன்னமும் விழித்துக் கொண்டு சமையலறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். பேசிக் கொண்டும் இருந்தாள். நசீருக்கு அம்மாவின் குரல் கேட்டதும் எல்லாமே உருகத் தொடங்கியது. ஒரு ஆசுவாசம், ஒரு அமைதி ஒரு தளர் நிலை என்று உணர்வு பொங்கி வழிந்தது. அப்போது ஆழ்ந்த இரவின் கடைசி ஒளிக்கதிரும் அணைந்து போயிற்று.-.-.-. இப்போது சமையல் அறையின் ஜன்னலின் கீழே படுத்துக் கொண்டார். விடிவதற்காக காத்துக் கிடந்தார். விடிந்தது. விடிந்ததும் எப்போதும் வீட்டில் முதல் ஆளாக சீக்கிரம் எழுந்து கொள்ளும் அப்பா எப்போதும் போல வாசல் கதவை திறந்ததும் அவர் நசீரைப் பார்த்தார். குளிரிலிருந்து தப்பிக்க தன்னுடைய கடைசி கம்பிளியை போர்த்திக் கொண்டு சுருட்டிக் கொண்டு படுத்துக் கிடந்த மகன் நசீர் மன்னிப்பும் கின்னிப்பும் கேட்பதற்கு முன்னதாகவே அப்பா, ‘எழுந்திருந்து அம்மாவைப் போய்ப்பார்’ என்று சொல்லி விட்டார். உள்ளே அம்மா நமாஸ் செய்ய ஆரம்பித்து விட்டாள். அவள் தன் வாழ்க்கையில் முதல் முறையாக நமாஸை பாதியில் விட்டு எழுந்திருந்திருப்பாள். அவள் விரைந்து வந்து அப்படியே கலங்கித் தவித்து நசீரை எட்டிப் பிடித்து கட்டிக் கொண்டு விட்டாள். நசீர் திடுக்கிட்டான். அவள் அழுது கொண்டே இருந்தாள். அவ்வப்போது இடையிடையே அல்லாவிற்கு நன்றி சொல்லிக்கொண்டுமிருந்தாள். இறைவன் தனது மகனை காப்பாற்றி திரும்பக் கொடுத்ததற்கும் நன்றி சொன்னாள். நனைந்து ஒட்டிய உடையின் வாசம் தெரிய நசீர் நின்று கொண்டே இருந்தான். எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அப்படியே இருந்தார். நசீருக்கு இன்றைய நாளைப் போல காலை உணவு கிடைத்து அறுபது நாட்களுக்கும் மேலாகிறது. பிறகு முடி திருத்தப்பட்டது. குளியல் முடிந்தது, எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்த பிறகு மசூதிக்கு சென்று அல்லாவிற்கு நன்றி சொல்லிவிட்டு வருமாறு கட்டளை இடப்பட்டது. அல்லாவிற்கு கோபம் உண்டாகும் பாதையில் போகக் கூடாத வழியில் சென்று வந்திருப்பதாகவும் ஆண்டவனிடம் சென்று தொழுது விட்டு வருமாறும் கூறினார்கள். நசீர் மசூதிக்கு சென்றார். கேட்கவும் கேட்டார், எதை? மறுபடியும் எப்படியாவது பம்பாய்க்கு செல்ல வேண்டும் அப்படி எனக்கொரு வழி செய்து கொடு என்று கேட்டார்.

இப்போது நசீருக்கு முன்னே திரும்பவும் படிப்பு எதிரே வந்து நின்றது. புதியதாக ஒரு காலம் உருவாகப்போகிறது. அலிகாட் மட்டும்தான் ஒரே மாற்றம். இப்போது படிப்பு கல்லூரியில். விண்ணப்பப் படிவங்கள், புத்தகங்கள், செமெஸ்டர், லெக்சர் என்ற உலகம் எதிரில் வாய் பிளந்து நிற்கிறது. இன்னமும் மூன்று மாத கால அவகாசம் இருக்கிறது. இதற்குள் அப்பாவின் பார்வையில் பட்டுவிட நசீர் எல்லாவிதமான முயற்சியும் செய்தார். ஆனாலும், அது நடைபெறவில்லை. காலையில் எழுந்திருப்பது, அடுப்பைப் பற்ற வைத்து டீக்கு கெட்டிலை வைப்பது, படுக்கை முதலியவற்றை சரியாக்கி வைப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பதில் உதவி செய்வது செய்தித்தாள் படிப்பது இப்படியே-.-. அரபி மொழி படிப்பது நசீருக்கு ஒரு பெரிய தலைவலி. இதனால் நசீர் குரான் கூட படிப்பதற்கு தைரியம் இல்லாமல்தான் இருந்தார். ஆனாலும் முழு ஈடுபாட்டோடு படித்து முழு ஈடுபாட்டோடு மலை உச்சியை ஏற முயன்றார். குரான் முழுக்க படித்து முடித்த குழந்தைகள் வீட்டில் இருக்கின்றவர்களால் கொண்டாடப்படுகின்றனர். ஆனால், இங்கு அது ஒன்றும் வேகவில்லை. அப்பா குரலை உயர்த்தி அதட்டி சொன்னார். அம்மாவோ சிரித்துக்கொண்டே சொன்னார். ‘உனக்கு இனி குரான் படிக்க ஒரு மௌல்வியை ஏற்பாடு செய்வதுதான் சரியான வழி’ அன்றிலிருந்து இன்றைக்குவரைக்கும் குரான் படிப்பது நின்று போய்விட்டது. மறுபடியும் தொடங்கவும் இல்லை. ஆனால், நசீர் நமாஸ் செய்வதில் குறை வைக்க மாட்டார். குரல் எடுத்தும் சொல்வார். மதியத்தில் அம்மாவும் அப்பாவும் தூக்கத்தில் இருக்கும் போது சிகெரெட் பிடிக்க சென்றுவிடுவார். வீட்டில் கடவுளறையை சூஃபி கவனித்துக் கொள்வார். அவரின் இயற்பெயர் என்ன என்று வீட்டில் யாருக்கும் தெரியாது. ஆனால், நசீருக்கு வாழ்க்கையின் பல நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பின் நசீருக்கு மரிஜுவானா பழக்கம் ஏற்பட்ட போது இந்த மணம் சூஃபி ஜியின் பக்கத்தில் இருக்கும் போது நுகர்ந்திருக்கிறேன் என்று நசீருக்கு நினைவிற்கு வந்தது.

சர்தானாவில் சினிமா எல்லாம் பார்க்க முடியாது. அது சினிமா இல்லாத பாலைவனம். ஒரு டெண்ட் கொட்டகை மட்டும் இருந்தது. அதை எப்படியோ ஒரு டெண்ட் போல கட்டி வைத்திருந்தார்கள். எல்லோரும் தரையில் ஜமக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு சினிமா பார்ப்பார்கள். பிலிம் ரோலை மாற்றும் போது இடைவேளை போல இருக்கும். ஆனால் எல்லோரும் மூச்சடக்கிக் கொண்டு எப்போது படம் ஆரம்பிக்கும் என்று காத்திருப்பார்கள். -.-. இதில் நசீருக்கு வீட்டு மனிதர்களுடன் சண்டை ஏற்பட்டதே இல்லை. பயமும் இல்லை-.-. இதில் மாமா பையன் மீர் அஹமது மிகவும் உதவியாக இருந்தான். இதே சினிமா ஹாலில்தான் தாராசிங்கின் ‘ருஸ்தம் ஏ-பக்தாத்’ படம் பார்த்திருக்கிறார். இன்னும் எத்தனை எத்தனை படம் பார்த்திருக்கிறார்-.-.-.ஆனாலும் அலிகாட்டிலுள்ள முஸ்லீம் யுனிவர்சிடிக்கு படிக்கப் போக வேண்டி வந்தது. இங்கு வந்த பின் நசீர் நாடகங்களில் பங்கு கொள்ளத் துவங்கினார். அதில் அதிக ஆவலும் கொண்டார்.

இங்குதான் நசீருக்கு பர்வீன் என்ற பெண் நட்பானாள். வயது 34. அவள் எம்.பி.பி.எஸ் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். மிகுந்த கர்வத்துடன் யுனிவெர்சிடியில் திரிவாள். நீண்ட நாட்களாக இந்தியாவில் தங்கியது பற்றிய சர்ச்சை இருந்தது. அவள் பாகிஸ்தான் குடிமகள். தன்னுடைய அப்பாவுடன் கராச்சியில் ஐந்து வயதாக இருந்த போது அவளுடைய அம்மாவை விட்டுப் பிரிந்திருந்தாள். இப்போது அவள் தன்னுடைய ஸ்டூடண்ட் விசாவை முழுவதுமாக உபயோகிக்க தொடங்கினாள். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக படித்து படித்துக் கொண்டே இருக்கத் துவங்கினாள். அம்மா யுனிவெர்சிடியில் அனைவருக்கும் பிடித்தமான ஆசிரியை. அதன் பயனும் அவளுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது. அவள் தன்னுடைய மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தாள். அவள் இனியும் வேறு எந்தப் படிப்பும் தொடங்கவும் முடியாது. இப்போது அவள் தன் அப்பாவுடன் கராச்சிக்கு செல்ல விரும்பவில்லை.-.-.நசீருடனான அவளுடைய முதல் சந்திப்பு, சினிமா ஹாலில் ஏற்பட்டது. பிறகு தொடர்ந்தது. நட்பும் அதன் பிறகு அதற்கு மேலுமென மாறியது. பிறகு நசீரின் நாட்கள் ஹாஸ்டலை விட்டு வெளியிலும் அதிலும் அதிக நாட்கள் பர்வீனுடனும் கழியத் துவங்கியது. அவள் வீட்டிலேயே தங்கினார். பர்வீன் மனதில் படரத் தொடங்கினாள். வேறு ஒருவரை தனதெனக் கொள்வதும்,தான் வேறு ஒருவர் வசம் ஆவதும் நசீரை வேறு உலகத்திற்கு இட்டுச் சென்றது. அலிகாட்டில் இவர்கள் இருவரையும் பற்றி பேச்சு பரவத் தொடங்கியது. நிறைய சந்திப்புகள், நாடகத் தயாரிப்புக்கும் இடையில். நவம்பர் 1ம் தேதி 1969ம் ஆண்டு இருவரும் தனியாக சென்று திருமணம் செய்து கொண்டனர். இருவருமே இந்த திருமண விஷயத்தை தங்களுக்குள் வைத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டுக் கொண்டு சொல்லிக் கொண்டும் இருக்கும் போதே யுனிவெர்சிடியில் இதன் விஷயம் தெரியத் தொடங்கி பரவியும் விட்டது. எப்போது அலிகாட்டில் இவ்வளவு பரவி விட்டதோ, அங்கிருந்து மீரட் போவதற்கு எத்தனை நேரம் ஆகப் போகிறது? வீடு அமைதியாகி விட்டது. வீட்டினருக்கு நசீரின் மேல் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை. என்றாலும் கூட இவன் இப்படி ஒரு காரியம் செய்வான் என்று வீட்டில் உள்ள யாருமே கற்பனை கூட செய்திருக்கவில்லை. நசீருக்கு அப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘உன்னைப் போன்ற ஒரு முட்டாளை நான் என் வழ்நாளில் பார்த்ததே இல்லை. இனி உன் வாழ்க்கைக்கு எது நல்லது கெட்டது என்று நீயே தீர்மானித்துக் கொள். எனக்கு எதுவுமில்லை.’ அம்மா ஒரு கடிதம் எழுதி இருந்தாள். அது உருதுவில் .’இதை இப்படி ஒளித்து மறைத்து வைப்பதற்கான அவசியம் என்ன? எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்கள் என்ன வேண்டாமென்றா சொல்லியிருப்போம்?-.-. நசீர் எல்லாவற்றையும் பார்த்தார், படித்தார். தன் வழியில் தொடர்ந்து சென்றார். வீட்டின் உறவை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக பர்வீனை வீட்டிற்கும் கூட்டிச் சென்றார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை.

பர்வீன், அவரின் அம்மா, நசீர் மூவருமாக வேறு வீடு பார்த்துக்கொண்டு வசிக்கத் தொடங்கினார்கள். நசீர் ஹாஸ்டலை விட்டு வெளியேறி விட்டார். ‘ சீக்கிரமே அம்மா ஆகப்போவதாக’ பர்வீன் நசீரிடம் சொன்னாள். அவள் சொல்வதை நசீர் புரிந்து கொள்ளவே இல்லை. குழந்தையின் அவசியம் . குழந்தைக்கான அவசியம் எதைப் பற்றியும் நசீர் எச்சரிக்கையாய் இருக்க வில்லை. மண்ணாந்தை என்றும் சொல்லலாம் தப்பில்லை. முட்டாள் எனலாம். இதே நேரத்தில் தான் நசீர் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் இணைந்தார். தில்லி வந்தடைந்தார். அலிகாட்டில் மூடியிருந்த கதவுகளும், ஜன்னல்களும் என்.எஸ்.டி.யில் திறந்தன. பெண்களும் ஆண்களுமாக கலந்து பழகும் விதம், இணைந்திருந்த ஹாஸ்டல் வாழ்க்கை சுதந்திர காற்றை சுவாசித்தாற் போல உணர்ந்தார். வீடு வாசல் மனைவி வரப்போகும் குழந்தை எல்லாவற்றையும் இந்த சூழலில் மறந்தார். பிறகு தந்தி கிடைத்தது. நசீர் டெல்லியிலிருந்து அலிகாட் செல்வதற்காக பஸ்ஸைப் பிடித்து வீட்டிற்கு சென்றால், அதற்குள் ஹீபாவைப் பெற்றெடுத்திருந்தாள், பர்வீன். சில மணி நேரமும் ஆகிவிட்டிருந்தது. குழந்தை, அதுவும் பெண்-.-.-. நசீருக்கு இது இரண்டாவது அடி. நான்கு நாட்களுக்குப் பிறகு பர்வீனின் அப்பாவும், அம்மாவுடனும் ஹீபா சகிதம் வீடு திரும்பினாள். -.-.நசீருக்கு பஸ் பிடித்து டெல்லி செல்ல வேண்டி இருந்தது. -.-.-.நசீரால் இந்த உறவைத் தொடர முடியவில்லை. காப்பாற்றவும் முடியவில்லை. டெல்லிக்கும் அலிகாட்டிற்கும் இடையேயான தொலைவு என்னவோ எப்போதும் போலத்தான் இருந்தது. ஆனால்,, இப்பொது அந்த தூரத்தைக் கடக்க முடியவில்லை. கடினமாக இருந்தது. அவ்வப்போது அலிகட் சென்று கொண்டும் இருந்தார், நசீர். ஆனாலும், ஒட்டவில்லை. இந்த சமயத்தில்தான் நசீருக்கு மஹா குரு இப்ராஹிம் அல்காசியுடன் சந்திப்பு உண்டாயிற்று .நசீரின் திறமையை அவர் மனம் திறந்து பாராட்டினார். இங்குதான் ராஜேந்திர ஜஸ்பாலை சந்தித்தார் , நசீர். இருவரும் விரைவிலேயே நெருங்கிய தோழர்கள் ஆனார்கள். இங்குதான் ஓம் புரியை சந்தித்தார். நட்புக் கொண்டார். பர்வீனுடனான நட்பு பின்பு இணையவே இல்லை. தனது முட்டாள்தனம், தனது மேடை, தனது ஆசைகள், தனது உலகம் என்று இருந்த நசீருக்கு, ஹீபாவும் பர்வீனும் தனது வாழ்க்கையிலிருந்து எப்போது நழுவிப் போனார்கள், லண்டன் கிளம்பினார்கள் என்பது கூட தெரியவில்லை.

புனேவில் திறந்த புதிய கதவு:

—————————————-

நசீரின் வாழ்க்கைப் பயணம் அலிகட்டிலிருந்து தில்லியை அடைந்தது. பிறகு, அங்கிருந்து புனேவை சென்றடைந்தது. புனாவில் பிலிம் இன்ஸ்ட்டிடியூடில் சேர்ந்தார், நசீர். இங்கு நசீருக்கு உலக சினிமாவின் புதுக் கதவு திறந்தது. அவற்றை பற்றி யோசிக்க வைத்தது. அறிந்து கொள்ளவும் வைத்தது. எத்தனையோ ஏற்ற தாழ்வுகளுக்கும் பின்னால், அவருக்கு என ஒரு அடையாளமும் கிடைத்தது. பிறகு, ‘ஜூ ஸ்டோரி’ என்ற படம் செய்தார். அதன் காரணமாக நசீருக்கு பிரின்சிபால் கிரீஷ் கர்னாட்டின் இதயத்தைத் தொட முடிந்தது. அவர் ஷ்யாம் பெனகலிடம் நசீரைப் பற்றி சொல்ல -.-. ஷ்யாம் பெனகல் ‘அங்குர்’ படத்தில் நசீரை நடிக்க வைத்து அவருக்கு ஒரு பெரிய பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்-.-.பிறகு இன்னொரு நாளும் வந்தது. கிரீஷ் கர்னாட், நசீரை அலுவலகத்திற்கு அழைத்து ஷ்யாம் பெனகல் தனது மற்றொரு தயாரிப்பிற்காக நடிகர்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார். முடிந்த வரை விரைவில் சென்று அவரை பம்பாயில் பார்க்கவும் என்றும் சொன்னார்.

‘நான் புனாவிலிருந்து பம்பாய் செல்லும் முதல் பஸ்ஸில் ஏறி ஷ்யாம் பெனகல் வசிக்கும் பீட்டர் ரோடைச் சென்றடைந்து விட்டேன். இத்தனை அதிகாலை யாரும் யாரையும் காண செல்ல மாட்டார்கள். ஆனால் நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஷ்யாம்பெனகலுக்கும் அவருடைய மனைவி நீராவிற்கும் சொல்லாமல் சென்றுவிட்டேன். இந்த அதிகாலை நேரத்தில் யாரும் வீட்டிற்கு வருவார்கள் என்று கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். நீரா பால்கனியில் உடகார்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். நான் அங்கு சென்றுவிட்டேன். நீராவின் சுட்டெரிக்கும் பார்வை பற்றி நிறைய பேசப் பட்டிருக்கிறது. அதை நான் முதன் முதலாக எதிர்கொண்டேன். அந்த எரிக்கும் கண்களுக்குப் பின்னால் இருக்கும் அன்பை அறிந்து கொள்ள எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அந்த சமயத்தில் அந்தக் கண்கள் என்னை அப்படியே நிற்க வைத்து விட்டது. மண்டியிட்டு தள்ளாடி நடுங்கும் குரலில் இந்த அதிகாலையில் வந்து தொந்தரவு கொடுப்பதற்கு மன்னிப்பு கேட்டு ஓரிரு சொற்கள் சொல்ல துவங்கும் முன் அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விட்டார். அவர் அங்கிருந்து அகன்றவுடன் எனக்கு கொஞ்சம் அப்பாடா என்றிருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டேன். பார்த்தால் என் எதிரே ஷ்யாம் பெனகல் நின்று கொண்டிருக்கிறார். அவர் குளித்து தெளித்து புத்தம் புது மலர் போல இருந்தார். தனது அறையின் முன்னால் நின்று கொண்டிருந்தார். நீராவின் சுட்டெரிக்கும் பார்வையைப் போலவே ஷ்யாம் பெனகலில் சிரித்த முகமும் அதிகம் பேசப்பட்டிருக்கிறது. அவருடைய சிரித்த முகமும் ஸ்நேகமான பார்வையும் என்னை கூடுதலாக ஆசுவாசப்படுத்தியது. அவருடன் கைகுலுக்கும் தைரியத்தை அளித்தது. அவர் சிறிது இயல்பான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். என்னை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தார். நான் கௌபாய் ஷூக்கள் அணிந்து கொண்டு கார்டிராய் டெனிம் சட்டை அணிந்து கொண்டு இருந்தேன். அவர் என்னிடம் ஒரு ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த எதோ ஒரு கிராமத்து ஜமீந்தாரின் பஞ்சகச்ச வேஷ்டியையும் குர்தாவும் அணிந்த தம்பி பாத்திரம் உனக்கு -.-. என்றார். நானோ அதற்கு முற்றிலுமெதிரான கோலத்தில் நின்றுகொண்டிருந்தேன். நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது தான் எனது தாடியை மழித்துக் கொண்டென். அதனால், என் முகம் பார்க்கும் படியாக தோற்றமளித்தது. எனவே, அவர் ‘வயதை வைத்துப் பார்க்கையில் நீ எனது பாத்திரத் தோற்றத்திற்கு நன்கு பொருந்திப் போகிறாய். உன்னைப் பற்றி கிரீஷ் கர்னாடும் நல்லவிதமாக கூறினார். இந்த ரோல் உனக்குத்தான் என்று எண்ணிக் கொள்’ என்றார். ஏதாவது ஸ்க்ரீன் டெஸ்ட் அல்லது நடிப்பு என்று பார்க்க விரும்புகிறீர்களா என்று சொல்லும் பொழுதே அதை எல்லாம் மறுத்து அவர் மேலே பேசிக் கொண்டே போனார். எனக்கு இந்தப் படம் கிடைத்துவிட்டது என்றே தோன்றியது. கொஞ்சம் அந்தக் கதையையும் அவர் சொன்னார். எனது வேடத்தையும் விலாவாரியாக எடுத்துரைத்தார். இந்தப் பாத்திரம் திருமணம் ஆனவன் தான். கிராமத்து ஒரு வாத்தியாரின் மனவியின் மீது மோகம் கொண்டு விடுகிறான். அவன் தம்பி அவனுக்காக அவளை அபகரித்து வருகிறான். படத்தின் இன்னொரு பாத்திரமான டீச்சரின் வேடத்தை கிரீஷ் கர்னாட் ஏற்கிறார். ஷபான ஆஸ்மி இதில் இருக்கிறார். அவருடன் நான் அங்குரில் இணைந்து நடித்திருக்கிறேன். பழக்கமுண்டு. பிறகு அம்ரீஷ் புரி. மோஹன் அகாஷே இவர்கள் இருவரையும் நான் மேடையில் பலமுறை பார்த்திருக்கிறேன். இத்தனை பெரிய பெரிய ஆளுமைகளுடன் நான் எங்கே பொருந்தப் போகிறேன்? ஷ்யாம் பெனகல் என்னிடம் சொன்னபடி அந்த வேடம் நாயகனுக்கு நிகரானது. இப்போது என் மனதில் வீசும் புயலை கற்பனை செய்து பாருங்கள். ஷ்யாம் மேலும் என்னிடம் அடுத்த வாரம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் என்றார்-.-. இவை எல்லாமே மிக விரைவில் நடந்துவிட்டது. எனக்கு தலை சுற்றத் தொடங்கியது. இது கனவா அல்லது நிஜமா? வெளியில் வந்த பிறகு எல்லாமே நிஜம் என்று விளங்கியது. நான் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் என் உள் மனம் இது ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஷ்யாம் பெனகலுக்கு இன்னமும் நல்ல வடிவுடைய யாராவது கிடைத்துவிடுவார்கள். என் இடம் எனக்குத் தெரியும். நானே இதை மறுக்கவும் மறுத்தேன். காசைப் பற்றிய பேச்சே எழவில்லை. ஆனால் இங்கு வாய்ப்பும் நன்றாக இருக்கும், பணமும் நன்றாக கிடைக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். நான் மேகத்தில் நீந்தி புனா வந்து சேர்ந்தேன். நான் இந்த வாய்ப்பைப் பற்றி இன்ஸ்டிடியூடில் லவுட் ஸ்பீக்கர் வைத்து ரிக்க்ஷாவில் அமர்ந்து சொல்லிக் கொண்டே வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கிரீஷ் கர்னாடிற்கு நன்றி சொல்ல நான் சென்ற போது அவர் ‘இதைப் பற்றி எல்லாம் இப்போது வெளியில் பேச வேண்டாம். ரகசியமாகவே இருக்கட்டும்’ என்றார். நான் கொஞ்சம் தயங்கிக் கேட்டேன் ‘ ஒரு வேளை நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனக்கு இரண்டு மாதம் விடுமுறை வேண்டுமல்லவா? அது கிடைக்குமா?’ என்றேன். அவர் கண்ணடித்துக் கொண்டே ‘அட நானும் தான் இரண்டு மாதம் லீவெடுக்க வேண்டி வரும்’ என்றார். நான் மறுபடியும் பம்பாய் வந்த பொழுது இந்தப் படத்தில் நடிப்பதற்காக எனக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தெரிய வந்தது. அந்த சமயத்தில் எனக்கு இந்த பணத்தில் பம்பாயில் வசிக்க ஒரு வீடு கிடைக்குமா? எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், இத்தனை நடந்துவிட்டது, மேலும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஆகாய விமானத்தில் டிக்கெட்:

——————————————–

‘எங்களின் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருந்தது. எனவே எனக்கு விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. விமான பயணம் செய்வது கிடக்கட்டும், நான் விமான டிக்கெட்டையே பார்த்தது கிடையாது. டிக்கெட் புக்கா செக் புக்கா? எந்தனை ஜாக்கிரதையாக அதை நான் அலமாரியில் விரித்திருந்த செய்தித்தாளின் கீழே வைத்தேன். அப்பாவிற்கு எல்லாவற்றையும் எழுதி அனுப்பினேன். -.-.-. அப்புறம் உருப்படுபவனாக நான் மாறிவிட்டேனே. சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டேன். எல்லாவற்றையும் நினைத்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன். என்னுடைய இந்த நல்ல சேதி இன்ஸ்டிடியூட் முழுக்க பரவி விட்டது. ஆனால், ஜஸ்பால் ஒன்றுமே சொல்லவில்லை. என்னை எதிர்கொள்ளும் போதெல்லாம் கோணலான ஒரு புன்னகையை முகத்தில் வெளிப்படுத்துவான். -.-. பம்பாய் சென்று ஹைதராபாத்திற்கு செல்ல விமானம் பிடிக்க வேண்டும். எல்லாவற்றையும் மிகுந்த ஸ்டைலுடன் செய்ய வேண்டும். இவையெல்லாம் என்னுடைய தினசரி செயல்பாடு என்பது போல தோற்றம் கொடுக்க வேண்டும். ஆனால், நான் பஸ்பிடித்து விமான நிலையம் செல்லாமல் டாக்ஸியில் சென்றேன். அதிகாலை நாலே முக்கால் மணிக்கெல்லாம் நான் சாந்தா க்ரூஸ் விமான நிலையம் வந்தடைந்து விட்டேன்.என்னுடைய விமானம் கிளம்ப இன்னமும் நான்கு மணிநேரம் இருக்கிறது. எனக்கென்ன வந்தது அதைப்பற்றி? நான்தான் தினமும் விமானத்தில் சென்று வருபவனாயிற்றே? ஒரு பழக்கப்பட்ட விமானப் பயணியை போல் நான் விமான நிலையத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் விமான நிலையத்தையே இப்போது தான் நான் முதன் முதலாக பார்க்கிறேன். விமான நிலையத்தில் யாரும் இல்லை. ஆனாலும் விமான நிலையம் எத்தனை அழகாக பாந்தமாக இருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் அறிமுகம் ஆகவில்லை. ரெக்ஸின் உறையுடன் கூடிய ஃபோம் சோபாதான் எங்கும். அவற்றில் ஒன்றில் நான் பந்தாவாக அமர்ந்தேன். சிகெரெட் எடுத்து புகைக்கத் தொடங்கினேன். எனக்கும் ஹ்யூஜ் ஹெப்னர் போல சொந்தமாக விமானமும் விமான நிலையமும் இருக்கும் நாளை கற்பனை செய்து பார்த்தேன்.-.-. பிறகு என் சூட்கேஸை எடுத்து தலைக் கடியில் வைத்துக் கொண்டேன். (என்னுடைய இவ்வளவு பெரிய சொத்துக் குவியலை அப்படியே விட்டு வைக்க முடியுமா என்ன?) என் எதிரில் இருக்கும் கற்பனை ஆளிடம் சரியான நேரத்தில் எழுப்பிவிடும்படி கட்டளையிட்டு விட்டு சோபாவில் படுத்துவிட்டேன். -.-. விக்ரம் மெஹ்ரோத்ரா என்னுடன் முதல் விமானப் பயணத்தில் வந்தார். எந்த கவுண்டரில் ஹைதராபாத் என எழுதியிருக்கிறது என்று காண்பித்தார். நான் கொஞ்சம் கலவரப்பட்டுக் கொண்டே அங்கு சென்றேன். -.-.-. என்னுடைய டிக்கெட்டில் குழப்பம் ஏதாவது நேர்ந்திருக்கும் என்றெல்லாம் எனக்குத் தோன்றியது. ஆனால், அப்படி எல்லாம் ஒன்றுமே நிகழவில்லை. என்னுடைய போர்டிங்க் பாஸை கொடுத்தனர். நான் மறுபடியும் என்னுடைய இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன். என்னுடைய பெட்டியின் நிலையைப் பார்த்தேன். அது ஹைதராபாத் வந்து சேருமா என்று கவலைப் பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக படத்தின் மற்றவர்களும் அங்கு வந்து விட்டிருந்தனர். அவர்களுக்கு எல்லா விவரமும் முன்னமேயே தெரிந்திருந்தது. -.-.- நான் என் சூட்கேஸுடன் அவர்களுடன் ஒட்டிக் கொண்டேன்.’

‘ஒரு மிக நல்ல ஏர்கண்டிஷன் ஹோட்டலில் அறை ஒதுக்கி இருந்தனர். -.-. தினமும் ஷேவ் செய்து கொள்ள வேண்டும் என முதல் கட்டளை பிறந்தது. இன்று வரையில் நான் அப்படி செய்தவனில்லை. -.-. முதல் நாளே எனக்கு ஷூட்டிங்க் இருந்தது. அதுவும் அம்ரீஷ் புரியுடன்.அவரை நான் மிகவும் மதிப்பவன். நான் மிகவும் கலக்கமடையவில்லை, கலவரப்படவுமில்லை.-.-. நல்ல நடிப்பு எனபது அதிர்ஷ்டத்தினால் வருவது கிடையாது. மேலும் ஒரு படத்தில் ஒரு நடிகனின் நல்ல நடிப்பின் வெளிப்பாடு என்பது நடிகனின் திறமையினால் உருவாவது மட்டும் அல்ல. திரைக்கதை எழுதியதில் இருக்கும் உண்மைநிலை, நடிக்கும் போது கற்பனையைத் தூண்டிவிடும் விதமாக இருக்கும் இயக்குனரின் திறமை, நடிகனின் திறமை இவை எல்லாமாக சேர்ந்துதான் விளைவை உண்டாக்குகிறது. இயக்குனருக்கு தன் பணியைப் பற்றிய புரிதல் இல்லை என்றால், படத்தை ஒரு நடிகனால் காப்பாற்றி கரை சேர்க்க முடியாது. இதனால்தான் பெயர் பெற்ற நல்ல நடிகனின் படம் கூட ஒரேடியாக விழுந்து விடுகிறது. தோல்வி அடைகிறது. படத்தின் கதை இயக்கம் இரண்டுமே பலவீனமாக இருந்தால் படம் தேறாது.-.-. நான் என்னை முழுமையாக ஷ்யாம் பெனகலிடம் ஒப்படைத்துக் கொண்டு விட்டேன். அவர் ஒரு ஷாட்டில் இதை செய்யாதே என்றால், நான் அதை அப்படியே செய்யாமல் மற்றதை செய்துவிடுவேன். நிறைய தடவை இதை நான் சற்று கஷ்டமாக உணர்ந்தேன். ஆனால், பின்னாளில் அதைப் பார்க்கும் போது, அவர் அதை நல்ல முறையில்தான் காட்சிப்படுத்தி இருந்தார். இதிலிருந்து நான் அறிந்து கொண்டது, நடிகனுக்கு ஒரு ஷாட் சரியென்று பட்டால் மட்டும் போதாது என்பதைத்தான். சினிமா ஒரு நல்ல படமாகத் தோன்றுவது என்பது ஒரு கைவேலைக்காரன் துண்டு துண்டாக இருப்பவற்றை இணைத்து சரியாக ஒரு உருவத்தை உருவாக்குவதற்கு சமம். ஷ்யாம் பெனகல் என்னை எல்லாவிதத்திலும் செதுக்கி உருவாக்கினார். -.-. நானும் அவருக்குப் பிடித்தமானவனானேன். -.-.இந்த நிலை தக்கவைத்துக்கொள்ள இன்னமும் வலிமையானதாக்க வேண்டும் என்று நான் என் மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டேன்.-.-.ஒன்றரை மாதம் ஷூட்டிங்க். புனேயின் மழை நாட்களைப்போல எப்போது ஆரம்பித்தது, எப்படி முடிந்தது ஒன்றும் புரியவில்லை. இந்த நாற்பத்தி ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் நான் நடிப்பைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. -.-.எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை-.-.’நிஷாந்த்’ படப்பிடிப்பில் இடையே என் பெயரை மாற்றுவது குறித்தும் பேசப்பட்டது. இத்தனை பெரிய பெயரை உச்சரிப்பது கடினமாக இருக்கிறது என்ற பேச்சும் எழுந்தது. நான் இது அம்மா அப்பா வைத்த பெயர் சரியாகத்தான் இருக்கிறது என்றேன். எனக்கு நஸ்ருதீன் ஷா என்ற பெயர் மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது என்று நீரா வெளிப்படுத்தவும் என் பெயர் தப்பிப் பிழைத்தது. அப்பா மசூரி மாலில் ‘நிஷாந்த்’ சுவரொட்டியைப் பார்த்திருக்கிறார். உடனே நேராக சினிமா கொட்டகைக்கு சென்று முதன் நாள் முதல் ஷோவுக்கு சென்று உட்கார்ந்து படமும் பார்த்துவிட்டார். மகிழ்ச்சியும் அடைந்தார். நேரே அம்மாவிடம் வந்து அவன் தன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார். அம்மா வறுத்தெடுத்துவிட்டாள். தன்னை விட்டுவிட்டு எப்படி படம் பார்க்கலாம் என்று. அப்பா தன்னுடைய வாழ்நாளில் இரண்டாம் தடவையாக பார்த்த படம் ‘நிஷாந்த்’தாகத்தான் இருக்கும். அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு நீண்ட கடிதம் வந்தது. படத்தின் டைட்டிலில் என் பெயர் நஸ்ருதீன் ஷா அறிமுகம் என்று போட்டிருந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் என்று, படம் நன்றாக இருந்தது என்றும், இப்படியெல்லாம் கூட படம் எடுக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டும் எழுதியிருந்தார்.

கவனத்தை ஈர்த்த பெண்

———————————

‘ஷ்யாம் பெனகலின் இந்தக் குழுவில்தான் நசீருக்கு சத்யதேவ் துபேயின் அறிமுகம் கிடைத்தது. அவர் பம்பாயில் ஹிந்தி மேடை நாடகத்தின் மறுமலர்ச்சியாளர் அல்காஜியை குரு என்று சொல்லிக்கொண்டே சமயம் கிடைக்கும் போதெல்லாம் கலாட்டா செய்து கொண்டிருக்கும் துபேயுடன் நசீருக்கு நட்பு ஏற்பட்டது. நசீருக்கு வேலை வேண்டி இருந்தது. துபேயுக்கு அவர் புதிதாகத் தயாரிக்கும் நாடகத்தில் நடிக்க நடிகர்கள் தேவைப்பட்டது. துபே அவர்கள் சந்த் கொலம்பியா பள்ளியில் நாடகம் பற்றிப் பேசுவதாக தகவல் கிடைத்ததும் நசீர் அங்கே சென்றார். அங்கு துபே அவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஆனால், மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த அமோல் பாலேகருடன் சந்திப்பு நிகழ்ந்தது. கடைசியாக துபே பந்தராவின் நேஷனல் காலேஜில் முன்னால் இருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த கரும்பு ஜூஸ் கடையில் கண்டார். அவர் நசீருக்கு கரும்பு ஜூஸ் வழங்கி, தான் விரைவில் தாயாரிக்க இருக்கும் ‘சம்போகத்திலிருந்து சந்யாசி வரை’ என்ற பெயருடைய நாடகத்தை துவக்கப்போவதாகவும், அதில் நசீருக்கு வேலை இருப்பதாகவும் கூறினார். இவைகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போதே கவனத்தை ஈர்க்கும் அழகான வாட்ட சாட்டமான ஒரு பெண் துபேயின் அருகில் வந்தாள். -.-.- என் கண்கள் அவள் மேல் அப்படியே ஒட்டிக் கொண்டன. எனக்கு அவளைப் பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றியது. அவளுடன் வாழ்க்கை முழுவதையும் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. எங்கள் இருவருக்கும் இடையே இன்னமும் பரிச்சயம் கூட ஏற்படவில்லை. அவளைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனாலும் அவளும் என்னைப் போலவே ஒருத்தி என்று தோன்றியது.. வெய்யிலில் அவளுடைய வெள்ளை நிறம் மின்னியது. அவள் இனிமையானவளாகத் தோன்றினாள். அப்போதுதான் துபே அவர்கள் அவளைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தத் துவங்கினார். மிகவும் சுருக்கமாக என்னைப் பற்றி சொன்னார். அவள் அதைக் கேட்டு என் பெயர் ஷிவேந்திர சின்ஹா என்று எண்ணிக் கொண்டாள். நல்ல அதிர்ஷ்டமான படங்களில் நடித்து கொஞ்சம் பேரும் பெற்றிருந்தவர் ஷிவேந்திர சின்ஹா. -.-. இதற்குள் எனது தாடி மறுபடியும் முகத்தில் இடம் பெற ஆரபித்திருந்தது. நான் எந்தக் கோணத்திலிருந்தும் ஒரு நடிகனாகவே தோன்றவில்லை போலும். ஒரு கலைப்பட நடிகன் என்று வேண்டுமானால் மிகுந்த சங்கடத்திற்கிடையே ஏற்றுக் கொள்ளலாம். பிறகு எனக்கு அவள் பெயர் ரத்னா என்று தெரிந்தது. தைரியமான தீனாபாட்டக்கின் பெண் என்றும் தீனாபாட்டக் நிறைய குஜராத்தி படங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர், இப்போது ஹிந்தி படங்களில் மிகப் பிரியமான பாட்டி என்றும் தெரிய வந்தது. துபேயின் நாடகத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தார் ரத்னா. சொர்க்கத்தில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பவள் அப்ஸரஸ்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அவைகளை இவளும் செய்தாள். மேலும் அவள் நல்ல நடத்தையுடன் இல்லை( என்னுடன்). பிறகு எங்களுடைய மறு ஜன்மம் பூமியில் உண்டாகிறது. அந்த உளறல் நாடகத்தைப் பற்றி அதிகம் நினைவில்லை-.-. ஆனாலும் நானும் ரத்னாவும் நண்பர்களானோம். நட்பு வளர்ந்தது. எனக்கு தடையின்றி உணவு கிடைத்தது. அதுவும் சுத்தமான சைவ உணவு சாப்பாடு உண்டு மகிழத் தொடங்கினேன். -.- ஒரு .பக்கம் நிஷாந்த் வெளியாவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. -.-. ஷபானா ஆஸ்மி தன் மனம் திறந்த கணங்களில் ‘இந்தப் படத்திற்குப்பின் நீ பெரிய நடிகனாக வருவாய்’ என்று உறுதியாக சொன்னார். ஆனால் பம்பாயின் பட உலகம் உண்மையை அல்ல போலிப் படங்களைத்தான் விரும்புகிறது. இதை நான் நன்கு அறிவேன். இந்தப் படத்திற்குப் பின் எந்த மாதிரியான வேடம் எனக்கு கிடைக்கும் என்பது பற்றி எல்லாம் தெரியாது. இது மட்டும் தான் எனக்குத் தெரியும், ‘நான் வாய்ப்பைத் தேடி யாருடைய வீட்டுக் கதவையும் தட்ட மாட்டேன்’ என்று மட்டும் உறுதியாக தெரிந்தது. அதுவே தான் நடந்தது. ‘நிஷாந்த்’ பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. அதற்கு பாராட்டும் நிறையவே கிடைத்தன. ஷபானா ஆஸ்மி முதலிலேயே நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகை. தீவிரமான நடிகை என்ற உருவில் அவருடைய இடம் இன்னமும் உறுதியாற்று. ஸ்மிதாவிற்கு நல்ல பட்டமும் இடமும் கிடைத்தது. அம்ரீஷ் புரி தனது திடமான உடலும் மற்றும் ஈர்க்கும் குரல் மூலமும் பம்பாயின் வெகு ஜன சினிமாவை சென்றடைந்தார். நல்ல வருமானமும் கிடைக்கத் தொடங்கியது. கிரீஷுக்கு இப்போது நினைவிருக்குமோ இருக்காதோ அவருக்கும் நாயகனாக நடிக்க நிறையப் படங்கள் கிடைத்தன. குல்பூஷண், மோஹன் அகாஷே மற்றும் சவீதா பஜாஜ் ஆகியோரின் நிலையும் உறுதியாகி படங்கள் கிடைத்தன. ஆனால், என் கணக்கில் ஆஹா, அற்புதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சேரவில்லை. நான் எதோ ‘நிஷாந்த்’ வெளியன உடனேயே படங்களில் நடித்து மூழ்குவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனாலும், இப்படி வறண்ட நிலையா வரும்? இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடுத்த வருடம் எனக்கு வருமானக் கிட்டிய இரண்டு இடங்கள் ஒன்று குலாப் ஊதுவத்தி, மற்றொன்று பிரிட்டானியா டிலைட் பிஸ்கட். இந்த இரு விளம்பரப்படங்கள் மூலம்தான்.’

‘நிஷாந்த்’ ஷூட்டிங்க் தொடங்கப்போகிறது. அப்போது என்னை நடிக்க வைக்கும் போது அற்புதமான வாக்கியம் ஒன்றை ஷ்யாம் சொன்னார், ‘காமிராவின் கண்களால்தான் எல்லா மக்களும் சினிமாவைப் பார்க்கிறார்கள்’ என்பதே அது. ‘நிஷாந்த்’ படத்திற்குப்பின் நான் தூர்தர்ஷனுக்கு சென்றேன். ஹிந்தி, ஆங்கில செய்தி வாசிப்பாளராக வேலை கிடைக்கும் என்று. ஆனால் என்னை விலக்கி விட்டார்கள். இது புதிய அனுபவம். ஏன் எனில், இதற்கு முன்னமே மராட்டி செய்தி வாசிப்பாளராக மிக நல்ல பெயர் எடுத்திருந்தார், ஸ்மிதா பாட்டீல். அதை அனைவரும் அறிவர்.’

மிர்ஜா காலிப்

——————

‘இன்ஸ்டிடியூட்டில் படித்துக் கொண்டிருக்கும் போதே, மிர்ஜா காலிப் வாழ்க்கையை ஒட்டி படம் எடுக்கப்போகிறார் குல்ஜார் என்ற செய்தி கிடைத்தது. அந்த செய்தி கிடைத்தவுடன் எல்லாருக்குமே மிகுந்த சலனம் ஏற்பட்டது. குல்ஜாருக்கு விருப்பமானவர், சஞ்சீவ் குமார்தான். அவர்தான் முக்கிய வேடம் ஏற்கிறார் என்றும் தகவல் பரவிற்று. சில சண்டைப் படங்களில் நடித்த பிறகு சஞ்சீவ் குமார் தன்னை ஒரு பெரிய நடிகர் என்று சொல்லிக் கொள்ளத் தொடங்கி இருந்தார். இப்போது அவரை பெரிய நட்சத்திரங்களுடன் இணைக்கத் தொடங்கினார்கள். நிறைய தீவிரமாக சிந்தித்த பிறகு, எனக்கு என்னமோ அவர் தன்னைத்தானே கட்டுபாட்டு சிறையில் அடைத்துக் கொண்டுவிட்டார் என்று தோன்றியது. பெரும்பாலான நட்சத்திரங்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட பிம்பத்திலேயே சிறைப்பட்டுப் போகிறார்கள். நான் மிர்ஜா காலிப்பை ஒரு சிங்கம் என்ற தோற்றம் கொண்டவர் என படித்திருக்கிறேன். சஞ்சீவ் குமார் அந்த வேடத்திற்கு நியாயம் செய்வாரா என்று எனக்குத் தீர்மானமாகத் தோன்றியது. குல்ஜார் பெரிய தவறு செய்கிறார் என்றும் தோன்றியது. பின்பு ஒரு நாள் சஞ்சீவ் குமார் உடல் நலம் சரியில்லாமல் படுத்திருக்கிறார் என்ற செய்தி படித்தேன். எனவே சினிமா ஷூட்டிங் நின்றுவிட்டிருந்தது. நான் எப்படியோ தேடி குல்ஜாரின் விலாசம் கண்டு பிடித்தும் விட்டேன். ஒரு கடிதமும் எழுதினேன், ‘நான் மீரட்டில் வசிப்பவன் அங்கு மிர்ஜா காலிப்பின் சொந்தக் காரர்கள் வசிக்கிறார்கள் .(உண்மை. நான் பழைய தில்லியின் அதே காசின் ஜான் சந்தில் வசித்து வருகிறேன் (பொய்). மிர்ஜா காலிப் இங்குதான் வசித்தார்.( நான் அந்தத் தெருவைப் பார்த்தது கூடக் கிடையாது). நான் சரளமாக மிக நல்ல முறையில் உருது படிப்பேன் பேசுவேன் (ஒரு பகுதி சரி, எனக்கு உருது பேச வரும்) மேலும் நான் இந்த மஹானின் இலக்கியம் முழுவதையும் படித்திருக்கிறேன்,(முழுப்பொய்) என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர் ஒரு போதும் வருந்த மாட்டார். ஏனெனில் நான் ஒரு பிரபல நன்கு பயிற்சி பெற்ற ஒரு நல்ல நடிகன் என்றெல்லாம் அந்தக் கடித்தத்தில் எழுதி இருந்தேன். அதற்கு பதில் வரும் என்றெல்லாம் நான் காத்திருக்கவும் இல்லை. பதில் வரவும் இல்லை. என் கடிதம் என்ன ஆயிற்று என் தெரியாது. சும்மா முயன்று பார்ப்பதால் ஒன்றும் கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில்தான் செய்தேன். ஏதோ ஒரு மூலையில் மனத்திற்குள் ஒன்றும் ஆகாவிட்டாலும் கூட குல்ஜார் அவர்களுக்கு இந்தக் கடிதம் கொஞ்சம் உறைத்திருக்கும் என்றும் அவர் என்னை நினைவில் வைத்திருப்பார் என்றும், ஒரு வேளை அவர் நான் நடித்த ‘நிஷாந்த்’ படத்தைப் பார்த்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். பிறகு ஒரு நாள் அவர் வசிக்கும் பாலிஹில்லில் இருக்கும் அவருடைய அலுவலகத்திற்கும் சென்றேன். மிகுந்த மகிழ்ச்சியடன் அவர் என்னை வவேற்றார். ‘நிஷாந்த்’ படத்தில் என்னுடைய நடிப்பை மிகவும் பாராட்டினார். பேசினார். ஆனால் இணைந்து வேலை செய்வதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. என்னுடைய கடிதத்தைப் பற்றி கேட்பது முட்டாள்தனம் என்று தோன்றியது. அவர் அதைப் பற்றி பேசவே இல்லை. பின் வெகு நாட்களுக்குப் பின் அவருடைய மிர்ஜா காலிப் தொலைக்காட்சியில் மிர்ஜா காலிப் வேடமேற்று நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் நான் மிகுந்த துணிவைத் திரட்டிக் கொண்டு நான் எழுதிய கடிதம் பற்றிக் கேட்டதும் அவருக்கு கடிதம் போய் சேரவே இல்லை என்பது தெரிய வந்தது.’

போதை உலகம்

———————-

இதன் பிறகு, நசீர் சில நாட்கள் சுற்றித் திரிந்தலைபவனாக மாறினார். அப்போது அவர் போதைப் பொருட்களைப் பயன் படுத்தத் துவங்கி இருந்தார். பார்க்கில் ஒரு சூன்யமான மூலையில் இருட்டில், புகை விட்டுக் கொண்டும், கனவுகளுடன் அலைந்து கொண்டும் இருந்தார். எல்.எஸ்டி., ஹஷீஷ் போன்ற பொருட்களளின் போதையில் மிதந்து திரிந்தார். ஜஸ்பால் நசீர் இருவரின் உறவும் இந்த இருட்டு மூலைகளில் காணாமல் போயின. போதை பழக்கம் அத்தனை எளியதல்ல. அதை உபோயிப்பதில் தோல்வியும் வெற்றியும் என முயன்ற பிறகு, அதன் வசமானவனாக ஆகிவிட்ட பின் பிடிபடாமல் தப்பிப்பதற்கான முயற்சிகள், ஆகியவை நடந்தேறும். ஒரு நாள் சுவற்றின் மீதமர்ந்து இருவரும் போதைக்கான தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது போலீஸ் வந்து அமுக்கிப் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் இழுத்து சென்றார். நாங்கள் இருவரும் போதைப் பொருள் என்ற தளத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதை அறிந்து மெல்ல போகும் வழியில் உள்ளங்கையை சுத்தம் செய்து விட்டார், நசீர். அந்தக் கையில்தான் இப்போது ஹஷீஷ் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

நசீர் தன் ஜேப்பில் இருக்கும் போதைப் பொட்டலத்தையும் வெளியே வீசி விட்டார். போலீஸ் ஸ்டேஷனில் கௌரவமாக நடத்தினார்கள். பிறகு நாளையிலிருந்து பார்க்குக்கு வர வேண்டாம் என்றும் சொன்னார்கள். பார்க்கில் பிள்ளை பிடிப்பவர்கள் இருப்பதாகவும், அதனாலேயே போலீஸ்காரர்கள் மிக தீவிரமாக சோதனைகள் நடத்துவதாகவும் இவர்களையும் அந்த சந்தேகத்தின் பேரில்தான் பிடித்திருக்கின்றனர் என்றும், சொன்னார். பேச்சோடு பேச்சாக ‘நிஷாந்த்’ படத்தைப் பற்றியும் பேச்சு வந்தது. அந்த அதிகாரி ‘நிஷாந்த்’ படம் பார்த்திருக்கிறார்.எனவே அவர் நசீரை அடையாளம் கண்டு விட்டார். இருவருக்கும் தேநீர் கொடுத்து மரியாதையுடன் விடை கொடுத்து அனுப்பினார்.

இதன் பிறகு மாற்றங்கள் நடந்தேறின. நசீர்-ஜஸ்பால் இணை பிரியத் தொடங்கியது. நசீரே எல்லா நல்ல வேடங்களையும், நல்ல வாய்ப்புகளையும் பிடுங்கிக் கொள்கிறான், மிச்சம் மீதி இருப்பதை அவனுக்குக் கொடுக்கிறான் என்றெல்லாம் எப்படியோ ஜஸ்பாலுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்த ஆதாரமில்லாத சந்தேகமும், போதைப் பொருட்களின் உபயோகத்தாலும், மிகவும் சரிந்துவிட்டார், ஜஸ்பால். நசீருக்கும் அதில் பங்கு உண்டு. ஷ்யாம் பெனகலின் படமான ‘மந்தன்’-னிலும் இருவரும் இணைந்து நடித்தனர். இப்போது இருவருக்கும் இடையே நட்பு மீதமில்லை. இதை யூனிட்டின் மொத்தமும் அறிந்து கொண்டது. நசீருக்கும் ஜஸ்பாலுக்கும் இடையே பழைய மாதிரியான உறவு ஏதுமில்லை என்பதை யூனிட் உணர்ந்தது. திடீர் திடீர் என்று ஜஸ்பால் நசீரைத் தாக்கவும் செய்தார். அவருக்குப் பின்னால, ‘ஏ.பியின் கையும் இருந்தது. அவருடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்வதற்காக, அதற்கான முயற்சியில் ஜஸ்பால் நசீரைத் தாக்கத் தொடங்கினார். தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். ‘மந்தன்’ இந்தப் படம் ஒரு விதத்தில் சிறப்பான படம். இதில் ஐந்து லட்சம் மக்கள் பங்கு பெற்றிருந்தனர். குஜராத் கோவாப்பரேடிவ் மில்க் சொசைடி மார்க்கெட்டிங்க் பெடரேஷன் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் ஆளுக்கு இரண்டு ரூபாய் வீதம் பணம் போட்டு பத்து லட்சத்தை சேர்த்திருந்தனர். அதில்தான் இந்தப் படம் சாத்யமாயிற்று. படம் தாமதமாக வெளியிடப்பட்டது. பால்காரர்களின் படம் என்று முகம் சுளிப்பவர்களுக்கு, கோபப்படுபவர்களுக்கு என எல்லாதரப்பினருக்கும் மிகவும் பிடித்திருந்தது. மல்டிப்ளெக்ஸ் போஸ்டர்கள் அதிகம் இல்லாத அந்த நாட்களில் அரங்குகளில் துணியால் செய்யப்பட்ட திரை ஓவியங்கள் பத்து வாரங்கள் வரை தொங்கவிடப்பட்டிருந்தது.

மந்தன்’ படம் முடிந்த பிறகு நசீர் பம்பாய்க்குத் திரும்பினார். பிறகு வேலை தவறாமல் நல்ல சாப்பாடு கிடைத்துக் கொண்டிருந்தது. சில சமயங்களில் ரத்னா வீட்டிலும், சில சமயங்களில் சுநீல் வீட்டிலும், இன்னமும் சிலவேளைகளில் ஷிஷீர் வீட்டிலும் என குறைவில்லாமல் கிடைத்தது. -.-.-.ரத்னா அப்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையே ஏழு ஆண்டுகள் வித்யாசம், ‘அந்த வித்யாசம் எல்லாம் நாங்கள் உணரவில்லை. நட்பில் இருவருக்கும் இடையில் நட்பு என்று அறிமுகமாகி அது வளர்ந்தும் விட்டது. ‘நாம் நம் உறவை எப்போதும் மறைக்கக்கூடாது. ரத்னாவின் அம்மா இந்த விஷயத்தை மிகக் கூர்மையாக கண்காணித்துக் கொண்டிருந்தார். என் மீது ஒரு கண்ணும் வைத்திருந்தார். ரத்னாவின் தங்கை சுப்ரியா என்னுடன் இருந்தாள். ரத்னாவின் நண்பர்கள் பலரை அவர்கள் எப்போதும் பார்க்கிறார்கள். அதில் நானும் ஒருவன் என எண்ணினார்கள். அதனால் நான் எளிதில் அவர்களின் இல்லம் செல்ல முடிந்தது. மார்ட்டின் வில்லாவில் இல்லத்தில் ரத்னாவின் பெண் நண்பர்கள் சந்திப்பிற்கே தடை விதிக்கப்பட்டிருந்தார், மிஸச் மார்ட்டின். அவர் என் விஷயத்தில் இறுக்கம் தளர்த்தியிருந்தார். இந்த நேரத்தில் சில பத்திரிக்கைகளில் என் புகைப்படமும் வெளியாகி இருந்தது. அந்த வீட்டுப் பெண்கள் ‘நிஷாந்த்’ படம் பார்த்துவிட்டிருந்தனர். நான் ஒரு நல்ல பையன் என்ற இடமும் கிடைத்திருந்தது. ஒரு திரை நட்சத்திரத்துடன் தனக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று நெகிழ்ந்திருந்தார்கள். எனவே எனக்கு சிறப்பான இடமும் கிடைத்திருந்தது. நாங்கள் அநேகமாக தினமும் சந்தித்துக் கொண்டோம். அவள் வீட்டில் அல்லது என் இருப்பிடத்தில். இவை எல்லாமே அவளின் அப்பா அம்மாவீட்டில் இருப்பது அல்லது இல்லாமலிருப்பதைப் பொறுத்தது. இதற்கிடையில் நான் அவளுடன் உலகத்தின் அனைத்து விஷயங்களைப்பற்றியும் பேசினேன். நிறைய சினிமாவைப் பற்றி-.-. கடந்த கால நிகழ்வுகள் பற்றி இதுவரை அவளுக்கு ஒரு முழுமையான பார்வை கிடைத்திருக்கவில்லை. அவள் என்னுடைய நடிப்பின் மீது பைத்தியமாக இல்லை. ஆனால், அப்படி தான் ஆகவேண்டும் என விரும்பவும் இல்லை. என்னுடைய குரல், என்னுடைய சுத்தமான உச்சரிப்பு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாள். நான் அவள் மீது ஈடுபாடு கொண்டிருந்தேன். இப்போது ஆழமான அன்பு ஏற்பட்டுவிட்டது. அம்மா தீனாவுடன் எதிர்ப்பு, அப்பா பலதேவின் மறுப்பு என எல்லாவற்றிற்கும் பிறகும் எங்கள் இருவருக்கும் இணைந்து வாழ வேண்டும் என்றே தோன்றியது.’

‘ஒரு நாள் மாலை நானும் ரத்னாவும் ஜுஹு பீச்சில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நான் ‘ஒரு வேளை வாய்ப்பிருந்தால், என்னை திருமணம் செய்து கொள்வாயா கேட்டேன். அவள் வெட்கத்துடன் ‘ஆம்’ என்றாள். நான் மிகுந்த வியப்படைந்தேன். எனக்கு அவள் உண்மையில் துணிச்சலான பெண்ணா அல்லது அடி முட்டாளா என்று தெரியவில்லை. எனக்கு அப்போது வேலையில்லை. மிகக் கொஞ்சமே காசிருந்தது என்னிடம். மேலும், பிரகாசமான எதிர்காலத்திற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை. இன்னமும் இருள்தான் அதிகமாகலாம். ஆனால், இந்த பெண்ணோ வாழ்நாள் முழுவதையும் என்னுடன் கழிக்கத் தயாராயிருக்கிறாள். அவளின் இந்த நம்பிக்கை எனக்கு ஓரிரு வருடங்கள் தைரியமூட்டிக் கொண்டிருந்தது.அப்போது எனக்கு மனோஜ் குமார், சோட்டா, ஜாவேத் அக்தர் ஆகியோரிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனாலும் கைக்கு ஒன்றும் கிட்டவில்லை. இந்த நேரத்தில் முழு மூச்சுடன் ரத்னா வீட்டிலுள்ளோருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அது ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்தது. ஆனாலும், எங்கள் இருவரில் ஒருவர் கூட ஒரு முறை கூட சரி இதை முடித்துக் கொண்டுவிடுவோம் என்று நினைக்கவும் இல்லை. எதிர் காலத்தின் கையில் என்ன இருக்கிறது என்பதை யாரறிவார்? இதையெல்லாம் எண்ணாமல் நாங்கள் இருவரும் அந்தந்த கணத்தின், நிகழ் காலத்தில் மிகிழ்ச்சியில், திளைத்துக் கொண்டிருந்தோம். ஹஷீஷ் தீய பழக்கத்திலிருந்து என்னை மீட்டெடுக்க ரத்னா எவ்வளவோ முயன்று பார்த்தாள். பிறகு இதனால் அவளுக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று விட்டு விட்டாள். தீனா அவர்களுக்கு கடைசி வரை நான் சிகெரெட் பிடிப்பதில் வருத்தம் இருந்தது. நான் அருகில் வரும் போதெல்லாம் புகை நாற்றம் வருகிறதென்று சொல்லுவார். அவரும் ஒரே ஒரு முறையாவது புகை இழுத்துப் பார்க்கட்டும், பிறகு இது உங்களுக்கும் கொஞ்சம் டென்ஷனைக் குறைக்கும் என்பேன். இது எல்லாம் வெறும் விளையாட்டுத்தான். ரத்னாவின் வீட்டில் டி.வி இருந்தது. கிரிக்கெட் மாட்ச் அல்லது டென்னிஸ் மேட்ச் பார்ப்பதற்கான பாவனையுடன் நான் நாள் முழுவதும் ரத்னாவீட்டில் இருப்பேன். ‘மந்தன்’ படத்தில் டப்பிங்கின் போது தீனா படத்தின் மொழி ஆலோசகராக இருந்தார். அப்போது எனது திறமையை கண்டு என்னிடமும் ஏதோ இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டார். -.-.-. அதன் பிறகு ஷ்யாம் பெனகல் , ஹம்சாவாட்கர் அவர்களின் வாழ்க்கையை ஒட்டி ஒரு படம் எடுக்க ஆரம்பித்தார். எனக்கும் வேலை கிடைத்தது. ‘பூமிகா’ என்ற பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் ஷ்யாம் பெனகலின் குழுவினர் அனைவரும் இருந்தனர். நான், அம்ரீஷ், குல்பூஷண், மோஹன் ஆகாஷே, அனந் நாக், -.-.-புதிய ஒரு பெயரும் இணைந்திருந்தது. அதுதான் அமோல்பாலேகர். அவருக்கு, எங்கள் எல்லோருக்கும் முன்னதாகவே ஸ்டார் அந்தஸ்து கிடைத்துவிட்டது. இதில்தான் ஒம்புரி ஒரு சிறிய வேடத்தில் நடித்த முதல் படம். ஷ்யாம் பெனகல் ஒரு நல்ல தொகையை அனைவருக்கும் கொடுத்தார்-.-.நான் எனக்கு என ஒரு அறையை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு பணம் கிடைத்தது. இங்கு கேர்ள் பிரண்ட் கூடாது. என்னுடைய வீட்டு ஓனர் ரத்னாவை சந்தித்தபின் கட்டுப்பாட்டைத் தளர்த்தி விட்டாள். நீங்கள் இருவரும் கதவைச் சார்த்திக் கொள்ளாமல் உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி விட்டாள். அங்கிருந்து கார் ஸ்டேஷன் ஒரு நூறு மீட்டர் தூரம் தான். அந்த ஸ்டேஷனின் முன்னால் சிந்த் பஞ்சாப் தாபா கடையிருந்தது. எங்கள் உணவு எல்லாம் அங்குதான்’.

‘‘பூமிகா’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. நானும் ஓம்புரியும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். -.-.ஜஸ்பால் உள்ளே நுழைந்தான். ஓம்புரிக்கு ஒரு ‘ஹாய்’ சொன்னான். என்னை பார்க்காதது போல என் அருகில் வந்து என்னைக் கடந்து சென்று என் பின்னால் இருந்த ஏதோ ஒருடேபிளில் உட்கார்ந்தான். அப்படித்தான் நான் நினைத்தேன். -.-. என்னைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் எழுந்த கோபம், கண்களில் கனல், எல்லாவற்றையும் பார்த்த பின்னால் நான் அவனை கவனிக்கவே இல்லை. அவன் எனக்கு பின்னால் எங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்பதையும் நான் கவனிக்கவில்லை. நான் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். -.-.-.என் முதுகில் ஒரு கூரிய ஏதோ ஒன்று சொருகியது. -.-.ஜஸ்பாலாகத்தான் இருக்க வேண்டும்-.-. சரியான பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது என்று தீர்மானித்தேன். -.-.-நேருக்கு நேர் மோதல்தான்.-. நான் என்னிடத்திலிருந்து எழத் தொடங்கினேன்.- ஓம்.புரி பெரிய குரலில் ஏதோ சப்தமாக சொன்னார்.-.-.-. நான் பின்னால் திரும்பிப் பார்த்தால் -.-. ஜஸ்பால் கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு கத்தி -.-.அவன் இன்னொரு முறை என்னை குத்த முயற்சி செய்தான். அதற்கு பின் ஓம்புரியும் இன்னமும் சிலரும் சேர்ந்து அவனைப் பிடித்து சாந்தப் படுத்த முயன்றனர். -.-. தீடீரென்று எனது கால்கள் பலவீனமாயின. நான் ஜஸ்பாலின் வெறித்தாக்குதலிலிருந்து விலகிப் போக முயன்ற பொழுது டேபிள் அப்படியே கவிழ்ந்தது. தட்டுக்கள் காற்றில் பறந்தன. -.-.நான் அங்கு நிறைய கூச்சலும் குழப்பமான குரல்களைக் கேட்டேன். யாரோ எனக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். மானேஜர் போலீஸுக்கு போன் செய்து இங்கு சண்டை நடப்பதையும், அதுவும் கத்தியால் குத்தப்பட்டிருப்பதையும் புகார் அளித்துக் கொண்டிருந்தார். அப்பொது ஓம்புரி, ‘ஜஸ்பால் சமையல் அறையில் இருக்கிறான், என்றும், என்னை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டியது மிக மிக அவசரம்’ என்றும் சொன்னார். ஆனால், ஹோட்டல் முதலாளி இதற்கெல்லாம் தயாராயில்லை. போலீஸ் வருவதற்குள் யாரோ எங்கேயோ போங்கள் என்றார் -.-. இதற்குள் பெரிய கூட்டம் கூடிவிட்டது. இந்த தள்ளு முள்ளில் யாருக்கோ அடிபட்டுவிட்டது -.-. என்னுடைய சட்டையை நனைத்து ரத்தம் நிற்காமல் கொட்டி என் கால் சட்டையையும் நனைத்துக் கொண்டிருந்தது. -.-. வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. -.-. மூச்சு இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தேன். -.-. எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. -.-.எனக்கு படுத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.-.-.ஆனால் ஓம்புரி நான் தூங்கிவிடக் கூடாது என்று தடுத்துக் கொண்டிருந்தார். -.-.சைக்கிளில் இரண்டு கான்ஸ்டபிள் வந்தனர். -.-. கொஞ்சம் விசாரித்துவிட்டு ஜஸ்பாலை டாக்சியில் கொண்டு சென்று விட்டனர். -.-. பிறகு சைரன் எல்லாம் ஒலித்துக் கொண்டு கருப்பு நிற வண்டி வந்தது. -.-.போலீஸ்காரர்களின் குழு ஒன்று வந்திறங்கியது. கூட்டம் எங்கோ மாயமாக மறைந்து விட்டது. போலீஸ்காரர்கள் எனது சட்டையை காலரைப் பிடித்து மிகவும் வலிமையாக எழுப்பினர். என் அம்மா அக்கா ஆகியோரை பரிகாசம் செய்தனர். என்னை அவர்கள் வேனில் ஏதோ அடிதடி செய்தவன் போல அதட்டி நுழைத்தனர். அப்படி சொல்வதை விட எறிந்தனர் என்று சொல்லலாம். ஓம்புரியும் என்னுடன் வேனில் ஏறிக்கொண்டார். போலீஸின் பெரிய அதிகாரி என்னிடம் அவர்கள் மிகவும் மென்மையாக என்னிடம் நடந்து கொண்டதாக சொன்னார். -.-. நான் மனதிற்குள் போலீஸ் ஸ்டேஷனுக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போகக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். ரத்தம் கொட்டுவது இதுவரையிலும் நிற்கவே இல்லை. வலியும் கடுமையாக கூடிக்கொண்டே இருந்தது. -.-.போலீஸுக்கு என் நிலையைப் பற்றி கவலை ஏதும் இல்லை. கொஞ்சம் விசாரித்துவிட்டு பின் வயர்லெஸ் போனில் பேச்சு மராட்டியில். இதற்கு பின் அவர்கள் என்னை ஜுஹூவின் கூபர் மருத்துவ மனைக்குக் கூட்டிக்கொண்டு சென்றனர். இதற்குள் எல்லோருக்கும் இந்த நிகழ்வு சென்றடைந்துவிட்டிருந்தது. வேனிலிருந்து இறங்க போலீஸ்காரர்கள் எனக்கு உதவி செய்தனர். என்னை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த ‘கடுமையற்ற’ போலீஸ்காரர்களின் நடவடிக்கை நீண்ட நாட்கள் என் மனத்தை விட்டு அகலவில்லை.

மருத்துவ மனையில்

—————————–

எனக்கு மறுநாள் காலையில் படப்பிடிப்பு இருந்தது. எனவே ஷ்யாம் பெனகலுக்கு இயல்பாகவே செய்தி சென்றுவிட்டது. இதற்குள் நடுநிசி ஆகி விட்டது. இந்த நேரத்தில் ஷ்யாமுக்கு போன் செய்யும் கலாட்டாவெல்லாம் ஓம்புரி செய்திருக்க மாட்டார். அந்த இடத்திலிருந்து அகன்ற கோவிந்த் நிஹ்லானிக்கு தகவல் சொல்லி அவரை ஷ்யாம் பெனகலுக்கு விவரத்தைத் தெரிவித்து எனக்கு ஒரு மாற்று சட்டையயும் வாங்கி வந்திருந்தார். சுனில் அல்லது ஷான்பாக் யாராவது தகவல் சொல்லியிருக்க வேண்டும். மறு நாள் காலையில் ஒரே கூட்டம் சேர்ந்துவிட்டது. ஷ்யாம் பெனகல் வந்தவுடன் என்னை ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்த்தார். எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார். படப்பிடிப்பு சில காலம் ஸ்தம்பித்து விட்டது, வேறு என்ன? அவ்வளவுதான்.

‘நான் மருத்துவ மனையில் இருந்த பொழுது ஜஸ்பாலை இரண்டு நாட்கள் சிறைச் சாலையில் வைத்த பிறகு சையத் மிர்ஜா அவருக்கு ஜாமீன் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எடுத்து விட்டான் என்ற தகவல் எனக்கு வந்து சேர்ந்தது. அரவிந்த் தேசாய்யின் படமான ‘அஜீப் தாஸ்தான்’ என்ற படத்திற்காக என்னை அழைத்த போது என்னால் அங்கு போக முடியாத சூழலில் இதே சயத் மிர்ஜா அப்படத்திலிருந்து என்னை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஜஸ்பால் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தான். சயத் மிர்ஜா ஆரம்பம் முதலே ஜஸ்பால் பக்கம்தான் இருந்தான்.-.என் வாழ்நாளில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவமனையில் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கிருந்து என்னை நீராவும் ஷ்யாம் பெனகலும் தங்கள் வீட்டிற்கு கூட்டிச் சென்றுவிட்டனர். என்னை சுவீகரித்துக் காப்பாற்றிய அவர்கள் இருவரும் என்னை முழுமையாக கவனித்துக் கொண்டனர். -.-.நான் என் அறைக்குத் திரும்பினேன்.

‘இப்படி இருக்கையில் ஒரு நாள் மதியம் நான் கண்ணயர்ந்து கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட்டது. நான் கதவைத் திறந்தால், எதிரே ஜஸ்பால் நின்று கொண்டிருக்கிறான். -.-.அவன் முகத்தில் புன்சிரிப்பு இருந்தது. எனக்கு என்ன சொல்வது, என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை. அவன் உள்ளே நுழைந்தான். என்னுடன் கைகுலுக்க முயற்சித்தான். சிகெரெட்டை எடுத்து பற்ற வைத்தான். பிறகு ஆர அமர உட்கார்ந்து கொண்டு விட்டான். என்னைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை. அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஏதும் சொல்லவுமில்லை. அவன் முகத்தில் மண்டிக் கிடக்கும் ஏதோ உணர்வுடன் அவன், ‘அன்றைக்கு நடந்த செயலில் என் பங்கு ஏதுமில்லை. நான் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்யவில்லை. சையதுதான் அது எனக்கு வகுப்பறை சண்டை என்று சொன்னான். இன்ஸ்ட்டிடியூட்டில் படிக்கும் போதே சையத் மார்க்க்சீயவாதி அடுத்த சில நிமிடங்கள் அப்படியே நான் நின்று கொண்டிருந்தேன். அவன் எப்போது என்ன செய்வான் எதுவும் புரியவில்லை எனக்கு. பிறகு நான் அவனை வெளியில் போகச் சொன்னேன். உடனே அவன் முணுமுணுக்கத் தொடங்கினான். ஏன் கோபப்படுகிறாய் என்றான் -.-. நான் ஒன்றுமே சொல்லாமல் இருந்தேன். அவன் அறையை விட்டு வெளியேறினான். உடனே நான் அவன் முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தினேன். அவன் வெளியில் நின்று கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தான். பிறகு சென்று விட்டான் -.-.சில நாட்களுக்குப் பின் நானும் ஜஸ்பாலும் சந்திக்கும் பொழுது கோர்ட்டில் வழக்குத் தொடங்கி இருந்தது. நான் யாரையும் குற்றம் குறை சொல்வதாகவோ எதுவும் சொல்லாமல் இருந்தேன். நீதிபதி தீர்ப்பை வழங்கினார். ஜஸ்பால் கேலி செய்வதைப் போல பார்த்தான்.’

ரத்னாவும் லண்டன் சென்று விட்டாள்

————————————————–

‘‘மந்தன்’ படம் வெளியாகி இருந்தது. நானும் ரத்னாவும் அப்போது பிரியாமல் இருந்தோம். இது அவள் வீட்டு மனிதர்களுக்கு மிகவும் கவலை அளித்தது. இந்த போதைக்காரனிடமிருந்து அவளை மீட்டெடுப்பது அவசியம் என்று கருதினர். எனவே அவர்கள் ஒரு உத்தியை செய்தனர். அவள் மிக நல்ல முறையில் பரீட்சை எழுதியதற்கு பரிசாக லண்டன் பயணம் என்றனர். ஆனால், இது எங்கள் இருவரையும் பிரித்து வைக்கும் காரியம் என்று எனக்குத் தெரியும். அங்கு லண்டனில் வசிக்கும் ஏதாவது குஜராத்தி பையனுக்கு ரத்னாவை மணம் முடித்து வைத்துவிட்டால் கணக்கு வழிக்கு வந்துவிடும் என்ற எண்ணி செய்திருக்கிறார்கள். இதே நேரத்தில் என்னுடைய நான்காவது படத்தின் படப்பிடிப்புக்காக நான் பெங்களூர் செல்ல வேண்டி வந்தது. இந்தப் படத்தின் பெயர் ‘கோதூலி’ .அது ஹிந்தி மற்றும் கன்னடத்தில் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. ஹிந்தியில் இது சரியாக நடந்து விட்டது. ஆனால், இதற்காக நான் மிகுந்த சிரமப்பட வேண்டி வந்தது. 25 நாட்கள் கன்னடத்தில் படப்பிடிப்பு முடிந்து நான் பம்பாய் வந்தால், என்னை அலேக் பத்மசி என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. அவர் நாட்டின் மிகப் பெரிய விளம்பர நிறுவனமான ‘லிண்டாஸன் முக்கிய பதவியில் இருப்பவர். அலேக்கிற்கு லிண்டாசில் பெரும் பங்கிருந்தது. அவருக்கென தனி மரியாதை இருந்தது. விளம்பர உலகில் அவரை ஆண்டவன் ஸ்தானத்தில் வைத்து அழைத்துக் கொண்டிருந்தனர். அவர் கிரீஷ் கர்னாட்டின் ‘துக்ளக்’ நாடகத்தைப் படமாக தயாரிக்க விரும்பினார். அதை அவர் நாடகமாக முன்னமே தயாரித்து இருந்தார். நிறைய பாராட்டுகளும், குவித்திருந்தார். நான் அவரை சந்தித்தேன். மனமும் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. மூளையும் மிகவும் பாரமாக இருந்தது. அலேக் கொஞ்சம் அப்படி இப்படி என்று பேசிக்கொண்டிருந்துவிட்டு, கடைசியில் என்னைப் போல ஒரு ஆழமான நடிகன் தனக்குத் தேவை என்றார். அவர் துக்ளக் பற்றிய தனது எண்ணம், கற்பனை முழுவதையும் எனக்குள் இறக்கி வைத்தார். தாடி வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும் என்றும், குதிரை ஏற்றம் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் என் உடலின் சதை நிலையைப் பார்த்து இன்னமும் எடை கூட வேண்டும் என்றார். நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன். காற்றில் பறந்து கொண்டிருந்தேன் நான். அவர் என்னை ஒரு கபீர் பேடியாக கூடிய சீக்கிரம் உருமாற்ற விரும்பினார். நான் அலேக்கின் உரைகல்லில் உரசி இணைய ஆவல் கொண்டேன். ஆனால், அந்த கனவு நினைவாகவில்லை.’

‘மந்தன் நாலாபுறத்திலிருந்தும் பாராட்டப்பட்டது. நல்ல வசூலும் ஆனது. இதனால் பலருக்கு என் மீது கவனம் குவிந்தது. அதில் ராஜ்யஸ்ரீயும் அடக்கம். அந்த நட்பும், அந்த அனுபவமும் நினைவில் நிற்கும் சினிமா அனுபவமாக ஆயிற்று.. நான் அவரை சந்தித்தேன்.அவர் என்னை வைத்து சார்ளி சாப்ளினின் ‘சிட்டி லைட்’ எடுக்க விரும்பினார். திரைக் கதை ஏறக்குறைய எழுதி முடித்தாகி விட்டது என்றும், நான் இதற்கு தயாரா என்றும் கேட்டனர். நானும் ஒரு கண்டிஷன் போட்டேன். நடிக்கிறேன், படம் தொடர்ச்சியாக எடுத்து முடிக்கப் பட வேண்டும் என்றும் கேட்டேன். உடனே ஒப்புக் கொண்டார். அப்போது என் மனதில் துக்ளக் படமும் சுழன்று கொண்டிருந்தது. என்னுடைய வழவழப்பான முக தளத்தில் தாடி வளர்ந்து கொண்டிருந்தது. முழுமூச்சாக உடலைத் தேற்ற இறங்கினேன். துக்ளக் படமும் கூடவே வளர்ந்து கொண்டிருந்தது அலேக்கின் மனதில்.’

‘‘துக்ளக்’ படம் எப்படியோ போகட்டும். இதற்குள்ளாக ஷ்யாம் பெனகல் ரங்கின் பாண்டிட்டின் சிறிய கதை ஒன்றை 1857ல் சுதந்திர போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை படமாக்கும் செயலில் ஈடுபட்டார். எனக்கு அந்தப் படத்தில் முக்கியமான வேடம் கிடைத்தது. காலம் என்னை வேகமாக இழுத்துக் கொண்டு கட்டற்று சென்று கொண்டிருந்தது. மிஸஸ் ரோமோடோச் என் அறைக்குள் நுழைந்தார். அப்படி எல்லாம் இதுவரை அவர் நுழைந்தவரில்லை. என் அறைக்கு அவர் வந்ததுமல்லாமல், என் கையில் ஒரு தந்தியையும் கொடுத்தார். ‘அப்பா நம்முடன் இனி இல்லை சர்தானாவில் இறுதிச் சடங்கு நடை பெறுகிறது.’ என்ற வாசகம் கொண்ட தந்தி அது. வேறு நான் என்ன செய்ய முடியும்? டில்லிக்கு விமானத்தில் செல்வதற்காக நான் ஐநூறு ரூபாய் ரத்னாவிடம் கேட்டு வாங்கிக் கொண்டு ஏர் போர்ட் சென்றடைந்தேன். அதற்குள் ‘ஹைஜாக்’ என்ற சொல் அறிமுகமாகி அது நடைமுறைக்கும் வந்துவிட்டது. ‘இண்டியன் ஏர் லைன்ஸின்’ தரையில் பணியாற்றும் ஆட்கள் மிகக் கடுமையாக பயணிகளிடம் நடந்து கொண்டனர். ரத்னா என்னிடம் ‘உனக்கு வீட்டிலிருந்து வந்த இந்த தந்தியைக் காண்பித்து கட்டாயம் செல்ல வேண்டியதை சொல் அப்போது அவர்கள் புரிந்து கொள்ளலாம். டிக்கெட் கிடைக்க எளிதாக இருக்கலாம்’ என்றாள். பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவு தீவிரமாக இருந்தன. நான் ரத்னாவை ஏர்போர்டிற்குள் அழைத்துச் செல்ல முடியவில்லை. அவள் தான் வந்து அனைத்தையும் செய்து கொடுத்தவள். ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை. எத்தனை கடுமையாக நடந்து கொள்ள முடியுமோ அத்தனை கடுமையாக நடந்து கொண்டனர். என்னிடம் ஒரு சீட் கூட கிடையாது என்று சொல்லி விட்டனர். நான் என் தந்தை இறந்து விட்ட தந்தியை காண்பித்தேன். மனமோ அவனின் தாடையில் ஒரு குத்து விட்டு உடைக்க சொன்னது. ஆனாலும், அவனும்தான் ஒரு சீட் கூட இல்லை என்றான பின்பு எனக்காக ஒரு சீட் எப்படி உருவாக்குவான்? அப்படியும் எண்ணிக் கொண்டேன். நான் காரணத்தை சொல்லவில்லை, தந்தியை காட்டவில்லை, கெஞ்சிக் கொண்டும் இருக்கவில்லை. அப்பா இறுதிச் சடங்கு முடிந்து அவர் தன் முன்னோர்களுடன் இணைந்த பொழுது அந்த மாலையில் நான் அங்கிருக்க முடியவில்லை. -.-.வீட்டிற்கு சென்ற பொழுது அம்மா அதிர்ந்து போகுமளவுக்கு உருவத்தில் மாற்றம் அடைந்திருந்தாள்.-.-. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மனிதரே தன் வாழ்க்கையின் அச்சு என சுழன்று கொண்டிருந்தவள் அவள். அவர் மறைந்து விட்டார். எங்கள் எல்லோருக்குமே அவளின் ரணம் எத்தனை ஆழமானது என்பதும் தெரியும். ஆனால், இப்படி துயரத்திலேயே மூழ்கிக் கிடப்பது அவளுக்கு நல்லதல்ல என்பதும் எங்களுக்கு தெரியும். அப்பா இல்லாமல் அவளாலொன்றும் இயலாது என்று எண்ணி இருந்தோம். அம்மாவின் மனோதைரியம் எங்கள் அனுமானத்திற்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அப்பா மறைந்த பிறகும் இருபது ஆண்டுகள் வாழ்ந்திருந்த அம்மா தனது கட்டுப்பாடுகள் எல்லாவற்றுடனும் வாழ்ந்தாள். தன் பிள்ளைகளின் வெற்றியின் சாரத்தை முழுமையாக அனுபவித்தாள்.’

அப்பாவின் சமாதியில்

——————————

‘சர்தானா சென்றவுடன் நான் அப்பாவை புதைத்திருந்த அந்த மண் குவியலுக்கு சென்றேன். -.-. அன்று நான் என் அப்பாவுடன் மனம் திறந்து பேசினேன்.-.எத்தனை எத்தனை விஷயங்கள்-.- என்னுடைய படங்களைப் பற்றி மொட்டை அடிக்க பட்ட தலையுடன் ஒரு ஹிந்து பூஜாரியைப் போல் நான் நின்ற போது அவர் அதிசயித்தது, -.-. அவரின் கலகல என்ற சிரிப்பு என எல்லாவற்றையும் நான் அங்கு உணர்ந்தேன். -.-.நான் எனது கனவுகள் மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றை சொன்னேன். ரத்னாவை பற்றி சொன்னேன். அவர் அவளைப் பார்த்ததே கிடையாது. நான் இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறேன், அதையும் சொன்னேன். அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். இப்படி சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருக்கும் போதே திடீரென எனக்கு உறைக்க ஆரம்பித்தது. நான் எதை இழந்திருக்கிறேன், எது எனக்குத் திரும்பக் கிடைகாதது என்பதையும்கூட-.-. நான் திடுக்கிட்டேன். நான் அவரை எவ்வளவு தீவிரமாக நேசித்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.’

‘அம்மா சில நாட்கள் அலகாபாத்தில் ஜஹீருடன் இருந்தாள்.ஆனால், விரைவிலேயே தன் இருப்பிடத்திற்கு வந்துவிட்டாள். பிறகு வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தாள். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன் விருப்பம் போல் வாழ்ந்தாள். அவளுக்கு குளிரின் உபாதை ஏற்பட்ட போதுதான் அவள் எங்களில் யாராவது ஒருவருடன் வசித்தாள். -.-. பிறகு மறுபடியும் திரும்பி விடுவாள். பம்பாயில் கொட்டும் மழையில் நான் திடுக்கிடும் மனதோடு அம்மா அங்கே மசூரியில் எப்படி இருப்பாள் தனியாக என நிறைய யோசித்திருக்கிறேன். -.-.ஆனால்,எங்கள் எல்லோரிடமும் அவள் மிகக் குறைந்த நாட்களே தங்கி இருந்திருக்கிறாள். எப்போதாவாது பேசுவாள்.’

என்னுடைய கனவு நினைவானது:

———————————————

‘‘துக்ளக்’ படத்திற்காக நான் வளர்த்த தாடி மீசை, ஷ்யாம் பெனகல் படத்திற்கும் உபயோகமானது. ‘ஜுனூன்’ படம் -.-.சசிகபூரினால் சாத்யமாயிற்று. சசிகபூர் அப்போது வியாபாரப் படங்களில் உச்சத்தில் இருந்தார். எல்லா பக்கங்களிருந்தும் அவரை அணுகிக் கொண்டிருந்தனர். எல்லா பக்கங்களிலிருந்தும் பணமும் கொட்டிக் குவிந்து கொண்டிருந்தது என்றும் சொல்லலாம். அப்போது அவரும் அவரது மனைவி ஜெனிஃபர் கேண்டலும் தன் தந்தை ப்ருத்விராஜ் கபூரின் பெயரில் ஒரு தியேட்டர் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையில் இருந்தனர். நினவில் நிற்கும்படியான நல்ல திரைப்படங்கள் அதன் மூலம் எடுக்க வேண்டும் என்றும் யோசித்தனர். பிலிம் வாலாஜ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார்கள். அப்போது இருந்த நல்ல பட இயக்குனர்கள் அனைவரையும் படங்கள் இயக்க அழைப்பு விடுத்தனர். கம்பெனியின் ஆரம்பம் ஷ்யாம் பெனகலின் இரு படங்களுடன் துவங்கியது. ‘ஜுனூன்’ படப்பிடிப்பு காகோரியிலும், மலிஹாபாத்திலும் நடைபெற இருந்தது. நாங்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் க்ளார்க்ஸ் அவத்தில் தங்க வைக்கப் பட்டோம். அப்போது நான் ஆர்வம் உள்ளவன் என்றறியப்பட்டேன். -.-. நானும் ரத்னாவும் எல்லோருக்கும் தெரியும்படி வளைய வந்தோம். அவள் இப்போது புனே இன்ஸ்டிடியூட்டில் இருந்தாள். நான் வேடத்துடன் அலைந்து திரிந்து கொண்டு இருக்கும் போது கலாட்டா செய்து கொண்டிருப்பாள். அங்கிருந்த மூன்றாவது நாள், நான் ஜெனிஃபருடன் பார்த்தது வேறு யாரையுமல்ல, கேண்டல் தம்பதியினரைத்தான். அதிசயம் அதிலென்ன இருக்கிறது? அவர்கள் ஜெனிஃபரின் அப்பா, அம்மா. . ஆனால் அதிசயம் என்ன வென்றால், அவர்களும் ஜுனூன் படத்தில் நடிக்கும் நடிகர்கள். அதற்காக இங்கு வந்திருக்கின்றனர். படத்தில் சில ஆங்கில கதா பாத்திரங்களும் இருந்தன. அந்த வேடம் ஏற்பதற்காக அவர்கள் வந்திருந்தனர். ஆனால், இது எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்க எனக்குத் தெரியவில்லை. எனக்கு என்னவோ என் கனவு மெய்ப்பட்டதைப் போல தோன்றியது. ஜெனிஃபருக்கு ஷேக்ஸ்பியர் எனக்கு எத்தனை விருப்பம் என்று தெரியும். அவள் என்னை கேண்டல் தம்பதியினருக்கு அறிமுகம் செய்துவைத்தாள். இப்போது நான் அவருடன் இரண்டாம் தடவையாக கைகுலுக்கினேன். அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற அவா இருபது ஆண்டுகள் கழித்து நிறைவேறப் போகிறது. இதில் அவர் ஒரு பாதிரியாக நடித்தார். அவர் எதோ ஒரு சர்ச்சில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தாக்கப் படுகிறார். அந்த தாக்குதலுக்கு தலைமை ஏற்று நடத்துபவன் நான். நீண்ட காத்திருப்புக்குப் பின் இது போன்ற ஒரு நாள் எனக்கு கிடைத்தது. நானும் கேண்டல் அவர்களும் ஒரே பிரேமில் இணைய வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. அந்த ஒரு சீனில்தான் நான் அவரை நெருங்குகிறேன்.கத்தியை எடுத்து ஒரே போடு போட்டு அவரின் தலை துண்டாக்குகிறேன். ஆனால் கேண்டல் அவர்கள் லக்னௌவில் இருக்கும் வரை அவரை தினமும் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் அனுபவமும் ஆசை தீர கிடைத்தது. அவருக்கு தன்னைப் புகழ்ந்து பேசுவது பிடிக்காது, உடனே பேச்சை மாற்றிவிடுவார்.’

‘ஒரு நாள் அவரைப் பார்த்து கேட்டேன் ‘நீங்கள் இங்கிலாந்திலேயே வசித்திருந்தால், ஒரு நைட், அல்லது ஒரு லார்டாக வாந்திருப்பீர்கள். நீங்கள் இதற்காக வருத்தப்படவில்லையா? என்று கேட்டேன். இப்படி கேட்டு விட்டாலும் கூட அவர் மீது எனக்கு இருந்த பற்றும் மரியாதையும் அளப்பரியது. என் கேள்வியைக் கேட்டு விட்டு அவர், ‘வருத்தமா? -.-. நான் தேர்ந்தெடுத்ததைதான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு தபஸ்வி .நான் ஷேக்ஸ்பியரை ஒவ்வொரு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஷேக்ஸ்பியர் தபஸ்வி. பாருங்களேன் வாழ்க்கை என்ன என்ன செய்கிறது என்று. சில ஆண்டுகளுக்குப் பின் நானும் அவரும் ஒரே விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டோம். மேடை நாடகத்தில் சாதனை புரிந்தததற்காக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டோம். சங்கீத நாடக அகடெமி விருது வழங்கும் விழாவில் நான் அவர் அருகில் உட்கார்ந்திருந்தேன். உட்கார்ந்திருக்கும் பொழுதே நான் என் மனதிற்குள் இதுவோ அல்லது வேறு ஏதாவது விருதோ அவருக்கு ஒரு பொருட்டா என்ன? இந்திய அரசும் எத்தனை தாமதமாக இந்த விருதை அவருக்குக் கொடுக்கிறது. ஆசியாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மேடை நாடகத்தைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியதில் கேண்டல் தம்பதியினருக்கு உள்ள தகுதிக்கு இணையாக, சமமாக எந்த இந்தியனும் செயலாற்ற முடியாது. அவரைப் போல பாடுபடவும் முடியாது.’

ஹிந்தி திரைப் படங்களைப் பார்க்காத குறை:

————————————————————-

‘பிலிம் பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. நான் அப்போது லக்னௌவில் இருந்தேன். ரத்னா எனக்கு டெல்லியிலிருந்து போன் செய்து நீயும் பரிசு பெற்றிருக்கிறாய் என்றாள். எனக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை. என்னையும் தேர்வு செய்திருக்கிறார்களா? நான் சிறந்த துணை நடிகன் என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன். அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். பிலிம்பேர் பத்திரிக்கையில் என் பெயரும் வரும் என்ற நினைப்பு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பிறகு ‘மந்தன்’ திரப்படத்திற்கான வேடத்திற்காக, சிறப்புப் பரிசு கிடைக்கிறது என்றறிந்தேன். அந்த வருடம் சிறந்த துணை நடிகருக்கான பரிசு டாக்டர் ஸ்ரீராம்லாகூவிற்கு கிடைத்தது. அதை நானும் ஒப்புக் கொண்டேன். ஸ்மிதா பாட்டீல் எனக்கு இந்தப் பரிசை மிகவும் மென்மையுடன் வழங்கினார். நான் திலீப் குமாரின் வீட்டிலிருந்து எடுத்து வந்த விருதைப் போலவே கனமாக இருந்தது, எனக்கு வழங்கப்பட்ட விருதும். -.-. ‘ஜுனூன்’ முடிந்த கையோடு நான் ராஜ்ஸ்ரீ அவர்களின் படம் செய்தேன். வெகுஜன விருப்பப் படம் இது. இது போன்ற வியாபார படங்களில் நடிப்பது ஒரு புது பாடமென்று கொள்ளுங்கள். பாட்டு, ஆட்டம், மரத்தைச் சுற்றி ஓட்டம், ஓடிப் பிடிப்பது என எல்லாமே அதில் இருந்தது. ஆனால், அது எனக்கு வெகு விரைவிலேயே அலுப்புத் தட்டத் துவங்கிவிட்டது.’

‘‘என்னிடம் இப்போது இன்ஸ்டிடியூட்காரனின் தீவிரத்தன்மையும் இல்லை. இதைப் போன்ற ஆட்டம் பாட்டம் படங்களில் இயல்பாக இருக்கவும் முடியவில்லை. எல்லா நடிகர்களைப் போலவே நானும் எல்லாமும் செய்தேன். ஷம்மிகபூரின் பல படங்களை பார்த்திருக்கிறேன். எனக்கு இந்த மாதிரி ஆடுவது பாடுவதெல்லாம தனி சமாச்சாரம் என்பது நீண்ட நாட்களுக்கு பின்பே புரிய வந்தது.-.-.-.ஆரம்ப காலங்களில் ஹிந்தி படங்களைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் தவறாக எண்ணியிருந்தேன் .இவற்றை எல்லாம் பார்ப்பதனால் எனக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என எண்ணியிருந்தேன். தாராசிங் நிற்கவில்லை. நான் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் நிற்கவில்லை. திலீப்குமார், ஷம்மி கபூர்,தேவ் ஆனந்த் என எல்லோருமே தனது உச்சத்திலிருந்து வீழ்ச்சி அடையத் தொடங்கும்போது, அவர்களின் இடத்தைப் பிடிக்க புதிய நடிகர்கள் முன்னுக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் அப்போது இரண்டாமிடத்தில் இருந்தார்கள். நான் அதே சமயத்தில் அந்தக் காலக்கட்டத்தின் க்ளாசிக் படங்களையும் பார்த்திருக்கிறேன். ரேஷ்மா ஔர் ஷேர், உப்கார், மேரா நாம் ஜோக்கர், அபிமான். ஆனால் யாரும் என் மனத்தைத் தொடவில்லை. நான் ஹிந்தி படங்களை கொஞ்சம் கீழ் நோக்கி பார்க்கத் தொடங்கினேன். ஒரு வேளை இவற்றில் எல்லாம் என்னால் இடம் பிடிக்கமுடியவில்லை என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கலாம்.’

‘இன்ஸ்டிடியுட்டில் படிக்கும் பொழுது நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கமாட்டேன் ‘அங்குர்’ போன்ற படங்களைக் கொண்டு சமாளித்துக் கொள்வேன் என எண்ணினேன். அல்லது இப்படிக்கூட இதை சொல்லலாம். வெகுஜன ஹிந்தி சினிமா கதாநாயகனாக நடிக்க தகுந்தவனாக நான் இல்லை என்ற எண்ணம், என் மனதில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது. இந்த நம்பிக்கைக் குறைவினால் நான் என்னுடைய பாதுகாப்பு கவசத்தை இப்படியும் அணிந்திருக்கலாம். இதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற படங்களில் நடிப்பதெல்லாம் வேறு மாதிரியானது. அந்த ‘வேறு மாதிரி ’என்பது என்ன? அது எனக்கு புரிபடவே இல்லை. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பின் நான் எனக்கான பாணி ஒன்றை உருவாக்கிக் கொள்ள இருட்டில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் இப்போது கவனமாக ஆராயும் பொழுது புரிய வருகிறது. ஒரு வேளை நான் ஹிந்தி வெகுஜன சினிமாக்களில் வெற்றி பெறவோ, மக்களுக்கு பிடித்தமான நடிகராகவோ எப்போதும் ஆக முடியாது என்ற எண்ணம் என் மனதில் அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருந்ததோ என்னவோ’

‘இன்ஸ்டிடியூட்டில் படித்துக் கொண்டிருந்த போது எனது தனித் தன்மையினாலும், நடிப்பினாலும் அமர்க்களப்படுத்தி, தூள் பரத்திக் கொண்டிருந்தேன். பிறகு இப்போதும் அதையே எனதாக்கிக் கொள்ள முயல்வதும், ஏதாவது ஒரு நிலையில் அது இயலாதது என்று ஏற்றுக் கொண்டும் இப்படியாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பிறகு அந்த படங்களில் உண்மையைக் கண்டடைய முயற்சி செய்தேன். அதன் கதை, அவர்களின் பாத்திர உருவாக்கம். அவற்றின் சேர்க்கை, ஆடை அணிகலன்கள் அவர்களின் நிலை எல்லாமே போலி என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தேன்.-.-.சுநயனா படத்திலும் கூட அதுவே நடந்தது. இது போன்ற ஹிந்தி சினிமாக்களில் கதாநாயகனின் பிம்பம் மாறும். அப்போதுதான் என்னுடையதும் உருவாகும். தாஹிர் பஹதூர் எனது மானேஜர் ஆன பிறகு அழுத்தத்துடன் என்னிடம் உரக்கச் சொல்லுவார்- இது கண்டிப்பாக ஹிட் படம்தான். நசீர் பாய் ஆனால், முதல்நாளே தியேட்டரில் இதைப் பார்க்க ஆளே இல்லை. அதுதான் நிலை’ என்பார்.’

‘ ‘ஜுனூனிற்கு பின் என்னுடைய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாயின. என்னையும் பார்க்கத் தகுந்தவன் என ஏற்றுக் கொண்டனர். ‘ஷாயத்’என்ற படமும் ‘க்வாப்’ என்ற படமும்தான் அது .க்வாப் படத்தின் மூலம் எனக்கு என்ன வருமானம் வந்தது? அது வேறு விஷயம். அவற்றை எல்லாம் விடவும் முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் என்னவென்றால், நான் மிதுன் சக்ரவர்த்தியுடன் நாட்டியம் ஆட வாய்ப்புக் கிடைத்தது என்பதுதான். அப்போதுதான் நான் அறிந்தேன், இந்த நாட்டியம் என்ன பிரமாதம்? என்னிடம் இரண்டு கால்கள் என்ன மூன்று கால்கள் இருக்கின்றன என்று எனக்குத் தோன்றியது. -.-. இந்தப் படங்களால் வேறு என்ன நிகழ்ந்ததோ இல்லையோ நான் 18000 ரூபாயில் என்னுடைய முதல் வண்டியை வாங்கினேன். அதற்கு நான் மிஸ் மேரி என்று பெயரும் இட்டேன். இந்தக் காரில் என் நண்பர்களுடன் டெல்லி சென்றேன். செகண்ட் ஹாண்ட் பிரிமியர் பத்மினி வண்டி அது. ‘ஸ்பர்ஷ்’ படத்தில் நடிப்பதற்காக சென்றேன். நான் இந்த வண்டியை எடுத்துக் கொண்டு முதலில் என்.எஸ்டி.யில் ரத்னாவிற்கு காண்பிக்க பந்தாவாக சென்றேன். அவள் காரைப் பார்த்த உடனேயே இதற்கு நீ அதிகமான பணம் கொடுத்து விட்டாய் என்று கூறிவிட்டாள் ‘

‘ ‘ஸ்பர்ஷ்’ கதையை எழுதியவர் சயீ பராம்பஜே. அவராலேயே இயக்கப்பட்ட படம் ஒரு பார்வையற்ற ஆண் ((நசீர்) ஒரு பார்வயுள்ள பெண் ( ஷபானா ஆஸ்மி) இருவருக்கும் இடையே முளைவிடும்காதல், அதை சுற்றிய கதை அது. பார்வையற்ரவரான நசீருக்கு அந்த குழந்தைகளுடன் பணி புரிய வேண்டும். உண்மையிலேயே அவர்கள் பார்வையற்றவர்கள் அவர்கள். நான் அந்தக் கதையைக் கேட்டவுடனேயே இதை வேறுமாதிரி செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். முன்னால் படபடத்து மூடி திறக்கும் கண்கள், கைகளை நீட்டித் துழாவியபடியே மேலே நடப்பதற்கான முயற்சி, சுவர்களில் இடித்து கொள்ளுதல் அய்யோ, பாவம், என்று கருணைப் பார்வை -.-.

அப்படிப்பட்ட முட்டாள் தனமான விஷயங்கள் எல்லாவற்றையும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு வேறு ஏதாவது செய்ய வேண்டும் -.-. சயிபிற்கு ஆண்டவன் தைரியத்தைக் கொடுக்கட்டும். திரைக்கதையும் ஏதுவும் செய்யத் தேவையில்லாமல் உருவாகி இருந்தது. என்னை கருப்பு கண்ணாடி அணிவதை தடுத்து விட்டார். -.-. அதிகமான படப்பிடிப்பு ப்ளைண்ட் ரிலீப் அசோசியேஷனில் தான் நடந்தது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மிட்டல் அவர்கள் எனக்கு முன் மாதிரியானார். அவரும் பார்வையற்றவர்தான். இந்தப் படம் ஓரளவிற்கு அவரது வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. இந்தப் படத்திற்குப் பின் அந்த அழகான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மிட்டல் அவர்களையும் நான் பார்த்திருந்த சில பார்வையற்றவர்களையும் அடிப்படையாகக் கொண்டே இந்தப் பாத்திரத்தின் முழு வடிவத்தையும் கற்பனை செய்திருந்தேன் நான். மிட்டல் அவர்கள் தன் நண்பரான அத்வானி வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். அவரும் பார்வையற்றவர். அவர் இந்திய அரசாங்கத்தின் கல்வித் துறையின் அண்டர் செக்ரெட்டரியாக பணியாற்றினார். அன்று மாலை எங்களை அவர் சாப்பிட அழைத்திருந்தார். நான் மிட்டலிடம் விசாரித்து விசாரித்து, அத்வானியின் விருப்பம் பற்றி கேட்டறிந்து ஒரு முழு தட்டையும் தயார் செய்திருந்தேன். அவருக்கு பரிமாறினேன். அவர் மிகவும் இயல்பாக தட்டை எடுத்தார். ஆனால், தட்டுக்காக காத்து கொண்டிருந்தார். எங்களுடன் சாப்பிடவில்லை. எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஏன் என்று அவரிடம் கேட்டேன்.ஆனாலும் அவர் தட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்தே இருந்தார். பிறகு அவருக்கு உதவும் நபர் வந்தவுடனேயே தட்டிலிருந்த முள் கரண்டியை எடுத்து விட்டு ஸ்பூன் வைத்தார். உடனே அத்வானி சாப்பிட ஆரம்பித்தார். அப்போதுதான் எனக்கு பார்வயற்றவர்கள் முள் கரண்டியினால் சாப்பிட மாட்டார்கள் என்பது புரிந்தது. இதை போல பல விஷயங்களை நான் புரிந்து கொண்டேன். இந்த மக்கள் மதுபானங்களை விருப்பமாக அருந்துகிறார்கள். இவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. அடிப்படை நிறங்களைப் பற்றிய அவரவர்களின் புரிதலின் படி புரிந்து கொள்கிறார்கள். இவர்கள் வளர்ப்பு மிருகங்களை ஒரு போதும் வைத்துக் கொள்ளுவதில்லை. ( பாதை காட்டும் நாய் வளர்ப்பு மிருகம் என கணக்கில் கொள்ளப் படுவதில்லை) இந்த மக்கள் இடுப்புக்கும் மேலே ஒரு விதமான சமிக்ஞை வைத்திருக்கின்றனர். இதனால், அவர்கள் மின்கம்பங்கள் அல்லது மரங்களில் மோதிக் கொள்ளுவதில்லை. ஆனால், தரையில் கிடக்கும் எந்தத் தடைகளானாலும், அதில் இடித்துக் கொள்ளுகின்றனர். சாப்பிட்டு முடிந்தவுடன் நாங்கள் படியிறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது மின்சாரம் போய் விட்டது.எங்கும் அடர்ந்த இருட்டு. மிட்டலை தவிர நாங்கள் எல்லோரும் தட்டுத் தடுமாறி வந்தோம். அவர் ஜாலியாக படியிறங்கினார். மகிழ்ச்சியுடன் நீங்கள் எல்லோரும் என் பின்னால் வாருங்கள் என்றார்.’

‘இத்தனை சுலபமாக இத்தனை மகிழ்ச்சியோடு மனக்குறை ஏதும் இன்றி இந்தப் படம் தயாராகி முடிந்தது. என்னுடைய மிகச் சிறந்த சில படங்களில் இதுவும் ஒன்று என சொல்வேன். ஷபானா ஆஸ்மி எப்போதையும் போலவே மிகுந்த உதவும் உள்ளமும், மிகுந்த உற்சாகமும் கொண்டிருந்தார். நான் இந்த வேடத்தில் ஏற்றதை எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன் .மிட்டல் அவர்களும் அந்த பிள்ளைகளும் துன்பமற்ற ஒரு இன்பமயமான வாழ்க்கையின் ஒரு புதிய ஜன்னலை திறந்து விட்டனர். அவர்கள் எப்போதும் இதைப் போலவே கலகலப்பை வழங்கத் தயாராய் இருந்தனர். தான் பெற்ற சாதனையை குறித்து அவர் பெருமிதம் கொண்டிருந்தார். தனது அடர்ந்த அடிப்படையான இருளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து தேடி முயன்று ஒரு பாதையை கண்டுபிடித்து எத்தனை ஊக்கம் கொடுத்தது. -.-.ஒரு உரையாடல் நிகழ்ந்த பொழுது இந்தப் படத்தில்முக்கியமான வேடம் ஏற்று நடித்த பார்வையற்ற மாணவன் என்னிடம் இயல்பாகக் கேட்டான்’, ‘ நான் இந்தப்படத்தைப் பார்க்க முடியுமா’ என்று ஆம் என்று சொல்ல இருந்த பொழுது என் நினைவிற்கு இவனால் பார்க்க முடியுமா என்று தோன்றியது. தன்னை இந்தப் படத்தில் எப்படி இவன் அடையாளம் காணப்போகிறான்? ஏன் எனில், அவன் குரலும் டப் செய்யப்படப் போகிறது. இத்தகைய ஆண்பிள்ளைகளுக்கு (பெண் பிள்ளைகளுக்கென்று தனியாக கல்விக் கூடம் இருக்கிறது. ஏனெனில் பார்வையற்றவரகள் ஸ்பரிசம் மூலம்தான் உலகத்தை அறிகிறார்கள்.) யாரையும் குரல் மூலமோ, தொடுதல் மூலமோ அடையாளம் காண்பதில்லை. காலடியின் ஒலியின் மூலம்தான் அறிந்து கொள்கின்றனர். இவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது, போன் டயல் செய்வதையும் பார்த்து வாழ்க்கையைப் பற்றிய விரிவு அதிகம் உண்டாகிறது. ஒரு பார்வையற்றவர் போக்குவரத்து ஒளியை எப்படி அடையாளம் காண்கின்றனர். விளக்கின் வண்ண மாற்றத்தை எப்படி அறிகின்றனர், தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது அதை எப்படி அடையாளம் காண்கின்றனர், அவர்கள் எப்படி சிகெரெட் பற்ற வைக்கின்றனர், எப்படி கையெழுத்துப் போடுகிறார்கள், என எல்லாவற்றையும் நான் மிட்டல் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். அவர்களுடைய எழுத்துக்களை கற்றேன். ஆனால், கண்ணுள்ளவர்கள் ஒரு போதும் ப்ரெயில் எழுத்துக்களை படிக்க முடியாது . விரல்களின் கணுப்பகுதி உணரும் படியானது கிடையாது என்று மிட்டல் சொன்னார்.’

‘இந்தப் படத்தைத் தயாரித்த பாசு சட்டர்ஜிக்கு பொறுமை கொஞ்சம் குறைவு. படம் முடிந்த பிறகு நான் என் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தேன். இப்போது உடன் வரும் நபர்கள் வேறு. என்னுடன் ரேணு சலூஜா,விது வினோத் சோப்டா ஆகியோர் இருந்தனர். விது வினோத் சோப்டா, ரேணுகாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். நாற்பத்தி ஐந்து நாட்கள் படப்பிடிப்பு கூட அத்தனை சோர்வடைய செய்யவில்லை. திரும்பும் போது ஏற்பட்ட பயணம் மிகுந்த சோர்வை அடைய செய்தது. விது வினோத் சோப்டாவை அறிந்தவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்வார்கள். இந்தப் படத்தில் பணியாற்றியது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுத்தது. பம்பாய்க்குத் திரும்பும் வரை எனக்கு இந்தப் படத்தில் நடித்ததற்கான சம்பளமே கொடுக்கப்படவில்லை என்ற உணர்வே இல்லாமல் இருந்திருக்கிறேன். இந்த செய்தி தாஹிருக்கு தெரிந்தது. இந்த வாட்டசாட்டமான உயரமான மனிதருக்கு சண்டை சச்சரவெல்லாம் பிடிக்காது. அவருடன் எனக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டுவிட்டது. பாசு பட்டாச் சாரியாவிடமிருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தைத் தான் வாங்கிக் கொடுப்பதாக தாஹிர் சொன்னார். அதிலிருந்து அவர் தினமும் பாசு பட்டாச்சாரியா காலை உணவு சாப்பிடும் நேரத்தில் வீட்டிற்கு சென்று ‘நசீருக்கு பேமேண்ட்’. என்பார். ஒவ்வொரு நாளும் இதேதான். கடைசியில் பாசு தோற்றுப் போனார். எனக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமும், பெட்ரோலுக்கு இரண்டாயிரம் ரூபாயும் தாஹிரிடம் கொடுத்தனுப்பினார். அந்த நாளிலிருந்து அவருக்கு தாஹிர் இல்லாமலேயே காலை உணவு முடிந்தது. இது கடைசி முறையல்ல. இது போன்ற வியாபார சினிமாக்காரர்களிடம் காசே இல்லை பாட்டு என்னிடம் எப்போதும்தான். இவர்களிடம் பணமே இல்லையென்றால், எதற்காக படம் எடுக்க கிளம்புகிறார்கள்? என நான் யோசித்திருக்கிறேன். இதே வியாதி பின்னாட்களில் தீவிர சினிமாக்காரர்களுக்கும் பரவி விட்டது. அதன் பலனாக எனக்கு பலரோடு தொடர்பு முறிந்தது.’

ஷபானாவும் நானும்

—————————————–

‘ ‘ஸ்பர்ஷ்’ க்குப் பிறகு ‘அங்குர்’ வந்தது. அதன் மூலம் ஓம்புரிக்குஒரு நிலையான அங்கீகாரம் கிடைத்தது. நசீருக்கு ஏற்கனெவே கிடைத்திருந்த இடம் தக்கவைக்கப்பட்டது. இதற்கிடையில் நசீர் ஏ,வி. மோஹனுடன் ஒரு தென்னிந்திய படம் நடித்தார். அதில் கொஞ்சம் பணம் கிடைத்தது. ஆனால், படம் எப்போது வந்தது, எப்போது போனது, யாருக்கும் தெரியாது. நசீருக்கு வியாபாரப் படங்களில் ஓர் இடம் உண்டானது. ஹதாஸா, தஜுர்பா, ஸ்வாமி தாதா கனஹையா, ஷத்ருதா என ஐந்து ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் அரிய பட வாய்ப்புக்கள் கிடைத்தன. கூடவே அர்த்தமற்ற படங்களிலும் நடித்தார். நசீரை விட்டு விட்டு ஜஸ்பாலை போட்டு சயத் அரவிந்த் தேசாய் படம் எடுத்தான். நல்ல முறையிலும் எடுத்திருந்தாலும் ஆனாலும் படம் வெளியிடப்படவில்லை. பிறகு அவர் ‘ஆல்பெர்ட் பிண்டோ கோ க்யோ குச்சா ஆதா ஹை’ என்ற படத்தின் பேச்சை எடுத்த சயத் நசீரிடம் வந்தார். இந்த ஆங்கிலோ இந்திய பாத்திரத்தின் மீது நசீருக்கும் ஒரு கவர்ச்சி இருந்தது. ஷபானா ஆஸ்மியை இந்த படத்திற்காக சயத் ஏற்பாடு செய்திருந்தார். ‘நானும் ஷபானாவும் இந்த பத்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். நடிப்பில் அவரது திறமைக்கு நான் சான்றிதழ் தர வேண்டியது அவசியமில்லை. அவர் ஒரு முழு தன்னிறைவை எட்டிவிட்டார். ஆனாலும் பணியில் ஈடுபாடுள்ள அவரைப் போன்ற ஒரு தன்னம்பிக்கை நிரம்பிய, தயாள குணமுடைய பொருந்திப் போகும் தன்மையுடைய இன்னொரு நடிகை இங்கு கிடையாது. எனவே அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு எப்போதுமே மனமகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது. எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருடன் இணைந்து நடிக்கும் போது நான் எப்போதுமே பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறேன். நான் என் மனதிற்கு பிடித்த படங்களில் என்னை இணைத்துக் கொண்டதில் அதிகப் படங்கள் ஷபானா ஆஸ்மியுடன் கூட நடித்தவைதான். அப்படிப்பட்ட பிரபலமான அவர் பெயரற்ற என்னுடன் பணி ஆற்றினார். அது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது.’

‘இது மட்டுமே இணையக் காரணம் இல்லை. இத்தனை படங்களில் இணைந்து நடித்ததற்கு இன்னமும் காரணங்கள் உண்டு. ஒரே மாதிரியான மன மிகிழ்ச்சியும், பாத்திரம் பற்றிய நோக்கும் இருக்கிறது. இதில் நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் திறமையை, அதன் உட்ச பட்ச ஒளியை, அழகை வெளிப்படுத்த, பொங்கிவர இடம் அளிப்போம். அவருடன் எனக்கு குட் கெமிஸ்ட்ரி இருக்கிறது என்றே எண்ணுகிறேன். மக்கள் என்னுடைய நடிப்பிறகு எத்தனை மதிப்பு வேண்டுமானாலும் கொடுக்கட்டும், நான் அவருடன் நடித்த நடிப்பிற்கு, அது அவரில்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் சாத்யமாயே இருக்காது. எனக்கு அது நிச்சயமாய் தெரியும். அவரும் என்னைப் போலவே நினைப்பார் என்றுதான் நான் நினைக்கிரேன். ஆனால் மற்றவர்களைப் பற்றி என்னால் இப்படி வெளிப்படையாக சொல்லக்கூட முடியாது. இத்தனை நாட்கள் கூடவே இருந்தாலும் நாங்கள் நிஜத்தில் நெருங்கவில்லை. இதனால் கேடு ஒன்றுமில்லை என நான் நினக்கிறேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நண்பர் என்று அறிந்திருந்த போதிலும், ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறை அடுத்தவர் வீட்டிற்கு சென்றிருப்போமோ என்னவோ.’

நசீருக்கு மறுபடியும் இரண்டு விதமான படங்களும் கிடைக்கத் தொடங்கின. சஜா-ஏ- மௌத், கதா, சக்ரா, ஹம் பாஞ்ச், பேஜுபான், வோ சாத் தின், பாஜார், ஹோலி மற்றும் அதார் ஷிலா ஆகியவை. பணமும் கிடைக்கத் தொடங்கியது. கூடவே விதம் விதமான பாத்திரங்களும். எல்லாவிதமாகவும் முயன்று பார்ப்பது. இரண்டு விதமான படங்களிலும் நடிப்பது என நசீர் தனது வேரைத் தேடிக் கண்டறிய முயன்றார். நசீர் இதற்கிடையில் தனக்கென ஒரு வீடும் வாங்கினார். அதில் ரத்னாவுடன் இணைந்து தன் வாழ்க்கையை வாழத் தொடங்கினார். ‘‘நாங்கள் இருவருமே சேர்ந்து வாழ வேண்டும் என்பதை உணரத் தொடங்கினோம். தினமும் இரவு ரத்னாவை அவள் வீட்டிற்கு கொண்டு போய் விடுவது கடினமாக எனக்கு தோன்றத் தொடங்கியது.’ ரத்னா என்.எஸ். டி. படிப்பை முடித்து விட்டாள். எல்லா பொருளாதார நெருக்கடியையும் தீர்க்க தொடங்கினாள்.அவள் அப்பாவின் திடீர் மரணம் அவள் மீது சுமையை ஏற்றியது. கணக்கு வைத்துக் கொள்வது, வரவு செலவு சரி பார்ப்பது என எந்த அனுபவமும் இல்லாவிட்டாலும் கூட ரத்னா திறமையாய் செயலாற்றினாள். நசீருடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே நசீரின் கணக்கு வழக்குகளையும் ரத்னாவே பார்த்துக் கொண்டாள்.

அது ஒரு கடிதம்:

—————————–

‘கடைசியாக நான் ஹீபாவைப் பார்த்து பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பர்வீன் லண்டனிலிருந்து ஈரான் சென்று விட்டாள் என்பது மட்டுமே எனக்குத் தெரிய வந்தது. எனக்கு ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. கடிதம் பார்சி மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதை என்னால் படிக்க முடியவில்லை.. அதைப் படித்துக் காட்டவும் எனக்கு யாரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக அந்தக் கடித்தத்துடன் ஒரு குறிப்பும் எழுதி இருந்தாள்’ ‘நீங்கள் அனுமதி அளித்தால், உங்கள் மகள் உங்களைப் பார்ப்பாள். அவள் உங்களைப் பார்க்க விரும்புகிறாள் ’என்றிருந்தது. அப்போது அம்மா எங்களுடன் இருந்தாள். அவளிடம் எனக்காக உருதுவில் கடிதம் எழுதச் சொன்னேன். ‘எப்போது வேண்டுமானாலும் வரலாம்’, என்று பதில் எழுதினேன். நிறைய குழப்பமாக இருந்தது. நான் என் பெண்ணை எப்படி சந்திப்பது? அவளை நான் பார்த்தது கூட கிடையாது. அவளை எனக்கு தெரியவே தெரியாது -.-. என்னுடன் ரத்னா இங்கிருக்கிறாள்.அவள் என் வாழ்க்கைக்கு எத்தனை உதவி செய்திருக்கிறாள். என்னை அமைதி படுத்தியிருக்கிறாள். என்னிடம் வீடு குடும்பம் என்ற உணர்வை உண்டாக்கினாள். அம்மா, சகோதரர்கள் ஆகியோரை நெருங்கச் செய்தாள். என்னையும் தவிர அவள் எல்லோருக்கும் தலைவியானாள். நான் ஒவ்வொரு நாளும் அவளுடைய செயல்களின் மூலம் புதிய புதிய அனுபவத்தை அடைந்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு இடையே இனிமையான உறவு எத்தனை காலமாக இருக்கிறது என்பதும் அம்மாவிற்கும் தெரியுமே. ரத்னா அவற்றை எத்தனை மரியாதை மதிப்புடனும் கூட கொண்டு செலுத்துகிறாள் என்பதையும் அம்மா அறிந்திருக்கிறாள். நான் அவளை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்ன போது ‘அவளை முஸ்லீம் மதத்திற்கு மாற்றப் போகிறாயா?’ என்று கேட்டபோது நான் இல்லை என்று சொன்ன போது அம்மா என்னை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்புறம் மெல்ல தலை அசைத்து சம்மதமும் தெரிவித்தாள். பிறகு அம்மா சந்தோஷமாக லட்சுமி சதன் சென்றாள். தீனாவிடம் சென்று பெண் கேட்டாள். நாங்கள் முன்னமே எந்த சடங்கும் கிடையாது என்று தீர்மானித்து விட்டோம். வெகு நாட்களுக்கு முன்னதாகவே இருவரும் ஒருவருக்கொருவர் சத்யமும் செய்து கொடுத்திருக்கிறோம்.-.-.-.ஒரு பக்கம் இவை எல்லாம் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு புறம் படங்களும் போய்க் கொண்டிருந்தன. ஒரு அசட்டுப் பிசட்டு படத்தில் நடிக்கும் கொடூரத்தையும் நான் செய்தேன். பிறகு எனக்கு தெளிவாக இது நமக்கான படம் கிடையாது என்பது புரிந்து போனது. பிறகு இஸ்மாயில் எனக்கு ’தில் ஆகிர் தில் ஹை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அது ரொமாண்டிக் படம் அது போன்ற படங்கள் எனக்குப் பிடிக்காது. ஆனாலும், இரண்டு பெரிய நட்சத்திர நடிகைகளான ராக்கி- பர்வீன் பாபியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. நான் சரியென்றேன்.-.-. அதற்கு பிறகு என்முன் வந்தார் தோல்வி நடிகர் சேகர் கபூர். அவரை நான் ஷபானா அஸ்மியின் பாய் பிரெண்ட் என்ற முறையில் அறிவேன். எரிக் சேகலின் ஒரு கதையை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார். நான் அதைக் கொஞ்சம் படித்தேன். கதையில் ஏதோ இருந்தது. சரியான முறையில் எடுத்தால் இது நல்லபடி வரும் என்று எனக்குத் தோன்றியது டில்லியில் பிடித்தமான குளிரில், நைனிடாலில் நான் படித்த செயிண்ட் ஜோசப் பள்ளியில் படம் எடுப்பது பற்றி பேசப்பட்டது. நான் ஒப்பு கொண்டேன். ‘ஸ்பர்ஷ்’ முடிந்த பிறகு சேகர் என்னிடம் நடிக்க வேண்டாம், இயல்பாக இருங்கள் என்றும் சொன்னார். எனக்கு சேகர் கபூரை அப்போது நன்கு தெரியாது. ஆனால், அவரின் பேச்சு எனக்கு திருப்தி அளித்தது. நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன். முதல் ஷாட் எடுத்த உடனேயே எனக்கு சேகருக்கு படம் எடுப்பது மிகத் தெளிவாக தெரிகிறது என்று புரிந்து கொண்டேன். அந்தப் படம்தான் ‘மாசூம்.’ படப்பிடிப்பு துவங்கியது.’

‘எங்கள் திருமணம் நடந்தேறியது. தீனாவின் வீட்டில் திருமணம் நடந்தது. அங்கு ரிஜிஸ்டர் வந்தார். முக்கியமான வீட்டு உறவினர்கள் முன்பாக நாங்கள் உறுதி செய்து கொண்டோம். பிறகு எல்லா நண்பர்களுடனும் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்திருந்தோம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹீபா எங்களுடனேயே தங்கி விட்டாள். நான் முதலில் ஏற்படுத்திய பள்ளத்தை இட்டு நிரப்ப கடுமையாக முயன்றேன், அது அவளின் பிறப்பின் போது நான் ஏற்படுத்தியது. அவள் குழந்தைப் பருவத்தைப் பற்றி எப்போது பேசும் போதும் அந்த துயரத்தைக் கொடுக்கும் நினைவுகள் பற்றி பேச மாட்டாள். அவள் துயரத்தை அழுத்தி வைத்திருந்தாள் என்பதை நாங்கள் அறிவோம். பர்வீன் மகள் ஹீபா, பர்வீனுடைய சகோதரி புஷ்ரா எல்லோருமே அயெதுல்லா கொமேனியின் புரட்சிப் புயல் வீசும் போது ஈரானில்தான் இருந்தார்கள். எங்கும் செல்ல முடியாத நிலை. நெருக்கடிகளுக்கிடையே இருவரும் அவளை வளர்த்து எடுத்திருக்கிறார்கள். அவள் தலை, காது எல்லாவற்றையும் துணிக்குள் மூடி இருந்தாள். எங்களுடன் வந்த பிறகு அவள் அந்த துணியை எடுத்தாள். கொஞ்ச நாட்கள் நமாஸ் படித்தாள். பிறகு அதையும் விட்டாள். -.-.ஹீபா பள்ளிக்குச் செல்லவே இல்லை.பார்சி மட்டுமே பேசினாள். அவளின் குழந்தைப் பருவத்தில் சில ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்திருக்கிறாள். அங்கு அவள் முதலில் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டுள்ளாள். இப்போதும் அவள் ஆங்கிலம் புரிந்து கொள்கிறாள். சீக்கிரம் அவள் திரும்பவும் பிடித்துக் கொண்டு விட்டாள். இங்கு வரும் பொழுது அவளுக்கு பதினான்கு வயது. புதிய இடம், புதிய மக்கள், புதிய நண்பர்கள், இவ்வளவு இயல்பாக பழகி கலந்து கொள்வதில் இவளைப் போல வேறு எந்தப் பெண்ணையும் நான் பார்த்ததில்லை.அவளை ஆறாம் வகுப்பில் சேர்த்தோம். அதிலிருந்து அவள் படித்து தன் பட்டப் படிப்பையும் முடித்தாள். அவள் இப்போது ஒரு திறமையான நாடக நடிகையாக தனது தனித்துவத்துடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறாள். அவள் எங்கள் குழுவில் விலை உயர்ந்த ஒரு அங்கத்தினர். இங்கு அவள் தனது இரண்டு தம்பிகளுடன் நல்ல அக்காவாக இருக்கிறாள். அவளுக்கு ஆரம்ப காலத்தில் நான் இழைத்த எல்லா காயங்களையும் நான் என் வாழ்நாள் முழுக்க சுமந்து இருக்க வேண்டியதுதான். ஆனால், என்னைப் பற்றி இப்போது அவளுக்கு அவ்வளவாக புகார் சொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். அவளின் இந்த புதிய வாழ்க்கைக்கு ரத்னாவே காரணம்.’

‘வாழ்க்கை நூல் இப்போது இதுவரை வந்து விட்டது. வர இருக்கும் பக்கங்களில் என்ன இருக்கப் போகிறதோ? யார் அறிவார்? சரி நான் இப்போது அனைவரும் நலம், நலத்துடன் வாழ்ந்தார்கள் என்று சொல்லி முடிக்கலாம் இதை.’

ஹிந்தியில்: குமார் ப்ரஷாந்த்.

தமிழில்: க்ருஷாங்கினி.

நன்றி ஆஹா ஜிந்தஹி-மாத இதழ்- ஜூன் மற்றும் ஜூலை 2015.