Category: இதழ் 135

விசித்திரம் – கன்னடமொழி சிறுகதை மூலம் : யு.ஆர்.அனந்தமூர்த்தி – ஆங்கிலம் : தீபா கணேஷ் – தமிழில் : தி.இரா.மீனா

யு.ஆர்.அனந்தமூர்த்தி

யு.ஆர்.அனந்தமூர்த்தி

ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன்தான் அவள் இங்கு வந்திருக்கிறாள்.தன் காரை நிறுத்த முயன்றபோது அவள் பார்த்த காட்சிகள் :வைக்கோல் மூடிய குடிசை,அதன் முன்னால் இருக்கும் தற்காலிக கடை,கடையில் உள்ள குண்டுபெண்மணி ,அவள் மடியில் ஒரு குழந்தை, இரண்டுகுலை வாழைப்பழங்கள், பீடியைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர்.

ஏரியில் படர்ந்திருக்கும் பச்சை இலைச் செடி..
அங்கிருக்கும் சிறுகுன்றின் வலது புறத்திலிருந்து சாலை தெளிவாகத் தெரிய விளக்கு வெளிச்சத்தோடு வந்த ஒரு கார் பிறகு கண்ணிலிருந்து மறைந்து விட்டது.பௌர்ணமியின் போது கூவுமே,கீச்சென்று ஒலிக்குமே! அது என்ன பட்சி? ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இப்படியே நான் உட்கார்ந்தி ருந்தால் ,என்னால் பார்க்கமுடியும்,கேட்கமுடியும்.விரைவில் விடிந்துவிட என்னைப் பார்த்து சூரியன் எழுவான்.நான் இறந்து விட்டால் ,இவை எதுவு மில்லை.

இதற்குப் பின்னாலுள்ள புதரில் காரநெடியுடைய இலைகளிருக்கின்றன. அதற் குப் பின்னால் யாரோ உட்கார்ந்திருக்க வேண்டும்.அவர் சீக்கிரமாக வரமாட் டார்.ஓர் ஆணாக இருக்கவேண்டும்.அல்லது என்னைப் போல நவீனமான பெண்ணாக இருக்கலாம்.நான் முடித்ததற்குப் பின்னால் அந்த ஆள் வந்திருந் தால்,எனக்கு காலடிச் சத்தம் கேட்டிருக்கும்.இப்போது அந்தப் பக்கத்திலிருந்து சிகரெட் புகை நெடி.
அவள் தன் தலைமுடியை முதுகில் விரிந்திருக்கும்படியாக தளர்வாகக் கட்டியிருந்தாள்.

தண்ணீரில் மூழ்கி இறக்கும்போது பிணத்தின் முகம் வீங்கி விடும்.அவள் சிறுமியாக இருந்தபோது எல்லோரையும் கவர்ந்த இடதுகன் னத்தில் இருக்கும் மச்சம் முகவீக்கத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும்.உடல் மேலிருந்து கீழாக மிதக்கும்;அவளுடைய கருமையான தலை முடி தண்ணீரின் மேல் படரும்.அனாதை கால்நடையின் அசைபோடும் தொலை பார்வையைப்போல அவள் கண்கள் ஒன்றுமில்லாததை வெறித்தி ருக்கும். நிர்வாணம் –ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் அதைச் சொல்வது எளிதல்ல.
அந்த உறுதியான கணத்தை ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை;அப்படி ஒன்று இருந்ததாக நினைவு;அது நித்திய நிலையாகவும் தெரிந்தது. மனைவி யின் கன்னத்தில் கணவன் அறைவது பெரிய விஷயமில்லை; காதலிக்கும் ஒருவரை அடித்து கூட விடலாம்.செத்துப் போ,செத்துப் போ,செத்துப் போ—அவன் அந்நியமான தொனியில் சொன்னான்.அந்தச் சத்தம் அவளுக்குள்ளி ருந்து வெளிப்பட்டு வந்ததைப் போலிருந்தது.அவன் கண்கள் கொலை வெறி யோடு உற்றுப் பார்த்தன.அந்தக் கத்தலுக்குப் பிறகு அவன் தளர்ந்துசரிந்தான். அவன் முகம் பிணம்போல வெளிறிக் கிடந்தது. காதுளை சம்மட்டியால் அடித் தது போலானான்.அவன் மீசை,வில் போன்ற புரு வங்கள்,இன்னமும் பெண்க ளைக் கவரும் அழகான முடி ஆகியவை உல்லாசமானவனாகக் காட்டின.

அவனிடமிருந்து சிரிப்பு எழுந்து மறைந்தது. மகன்? ஊட்டியில் படிக்கிறான். முன்னாள் டென்னிஸ் சாம்பியனான தந்தையை அவனுக்கு மிகவும் பிடிக் கும்.அவன் எப்படியோ வளர்ந்து விடுவான். மெதுவாக எல்லாவற்றையும் மறந்து விடுவான்.
இவற்றிற்கெல்லாம் காரணம் ?கண்டுபிடிக்க முடியவில்லை.யாருடைய தவறு?அவன்தானே என்னைக் காதலித்தான்?தன் தந்தையோடு சண்டை போட்டு என்னைத் திருமணம் செய்து கொண்டான்.தனது சொத்தில் பாதியை விற்று என்னை அமெரிக்காவிற்கு அழைத்துப் போய் நாடகக் கல்லூரியில் படிக்கவைத்தான்.யார் முதலில் தவறு செய்தது?அது குறித்து நாங்கள் நூறு தடவை சண்டை போட்டுக் கொண்டாகிவிட்டது.

அந்தத் தவறுகள் எங்களை பதினைந்து வருடம் பின்னிப் பிணைய வைத்திருந்தது.இப்போதும் கூடநான் இல்லாதபோது அவன் எப்படி மனம் விட்டுச் சிரிக்கிறான். அவனுடைய ஆரோக்கியமான பற்கள் கருப்பு மீசையின் பின்புலத்தில் ஒளிரும்.பெண்கள், எங்கள் இருவரையும் அறிந்தவர்கள் என்னை மட்டுமே பொறுப்பாக்கினர்கள். வெறுப்பும் கூட காதலைப் போல களங்கமற்ற உணர்ச்சிதான் என்பது அவளுக்கு ஆச்சர்யம் தருவதாக இருந்தது.வைரத்தைப் போல.

அவள் தன் முடியைத் தொங்கவிட்டாள். அவள் கண்கள் நிலவொளியில் மிளிர்ந்தன; அவைகளைச் சுற்றி கோடுகளிருந்தன.அவளுக்கு முப்பத்தி ஐந்து வயது.இன்னும் இளமையாகத்தானிருந்தாள்.கடந்த இரண்டு வருடங்களாக அவர்களிடையே எதுவுமில்லை.இந்தக் வெறுப்பின் கொடூரத்தில் அவள் உடல் வேறுவிதமான பொலிவு பெற்றது.அவள் மற்றவர்களால் பார்க்கப்பட்டாள். அதை அவள் அழுத்தமாகவும் சொன்னாள்.அது ஒருவிதமான கர்வத்தையும் அவளுக்குத் தந்து.கணவனுக்கு அவளைக் கொல்லவேண்டும் போலிருந்தது என்பது ஞாபகத்தில் வந்தது.

.புதரின் பின்னாலிருந்த மனிதன் அணைக்காமல் சிகரெட்டைத் தூக்கிப் போட் டான்.அத்துண்டு நிலவு வெளிச்சத்தில் இன்னமும் ஒளிர்ந்தது.அவள் தன் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். ஆனால் அவளிடம் நெருப்புப் பெட்டியில்லை
தூங்கும் பறவைகளைப் போலஅவள் கைகள் மடியின் மீது இன்னமும் இருந் தன.அந்த மனிதனிடம் நெருப்புப் பெட்டி கேட்கலாமா?சாவது பொருத்தமற் றது என்று திடீரென அவள் நினைத்தாள்.

இது புதிய உணர்வில்லை., ஆனால் அவள் எப்போதும் உணர்வதுதான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண் டாள்.வியந்தவளாக அவள் அசைவற்றிருந்தாள்.இன்னொருகார் மேலே போகி றது.பறவை கூவுகிறது..ஏரியின் தண்ணீர் நிலவொளியில் லேசாக நடுங்குகி றது.அந்த முதியவர் பீடி பற்ற வைத்ததை நினைக்கிறாள்.சிறுமியாக இருந்த போது படர்ந்திரு!ந்த செடியின் இலையை பறித்து முகர்ந்து பார்த்தது பட மாக நினைவில் ஓடுகிறது.பிறப்பு,இறப்பு இரண்டும் அர்த்தமற்றது.நான் இருக்கிறேன் என்று நினைத்தால்தான் இருக்கிறேன் ,இல்லையா?

திரும்பவும் யாரிடமாவது நெருப்பு பெட்டி வாங்கலாமா என்று நினைத்தாள். ஆனால் அதில் அவ்வளவு வேகம் இல்லை என்பதால் தன் கைகளை மடியில் வைத்தபடி தலையைக் குனிந்து அமைதியாக நிலவொளியில் உட்கார்ந்திருந் தாள்.அவளது கருங்கூந்தல் முதுகில் பரவியிருந்தது.அவளது இடதுகால் பெருவிரல் மண்ணில் அரையாகப் புதைந்திருந்த மெல்லிய கல்லைத் துழா விக் கொண்டிருந்தது.அதன் வடிவத்தை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக் கிறாள்.அது தவறும் போது வலது பெருவிரல் அதன் கசட்டைத் துருவி எடுத்தது.
பத்துவயதுச் சிறுமி.இரட்டைச் சடை. சிவப்பு கவுன்,சிவப்பு ஷு கறுப்பு ரிப்பன் கள் இதுதான் அவள்.

அவள் எல்லோரையும் கவர்ந்தாள். அவளுடைய சதைப் பற்றான மச்சம் இருக்கிற கன்னத்தைக் கிள்ள்ளுவார்கள்.அது இன்னமும் நினைவிலிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. அவள் அப்போதும் கூச்முடையவ ளாக இருந்தாள்;பயமும்,அவமானங்களும் இருந்தாலும் யாருடனும் அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.இவையெல்லாம் நடக்கிறதே நான் உண்மை யானவளா, இதுதான் என்னுடைய பெயரா—அப்போதும் நிகழ்வுகள் அவளைக் குழப்பின.
நான் அப்பாவுடன் ராட்சஸ ராட்டினத்திலிருந்தேன்.அவர் பட்டு குர்தாவும் வேட்டியும் – தன்னுடைய பண்டிகை ஆடையை அணிந்திருந்தார். சந்தனம் வைத்திருந்த பெட்டியில் இருந்ததால் குர்தா நல்ல வாசனை உடையதாக இருந்தது.முதல்முறையாக பயத்தோடும் ,ஆர்வத்தோடும் நான் ராட்டினத்தில் உட்கார்ந்திருந்தேன்.அதன் சக்கரம் சுற்றத் தொடங்கியவுடன் என்பயம் மும் மடங்கானது.

அது மேலே போகப்போக வேகம் அதிகமாக தான் இறப்பது போன்ற உணர்வில்,அவள் அப்பாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் இறக்கி விடுங்கள் .. இறக்கி விடுங்கள்..என்று கத்தினாள்.அப்பா அதை நிறுத்த வில்லை.எதையும் செய்துவிட முடியும் என்று நான் நினைத்திருந்த அப்பா வால் அந்தச் சக்கரத்தை நிறுத்த முடியவில்லை.அப்பா சிரித்திருக்க வேண் டும்.அவர் என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.குளிர்காற்றுப்பட, நான் சில்லிப்பாக உணர்ந்தேன். கவுனை நான் ஈரப்படுத்தி விட்டால் அம்மா கத்து வாள். அப்பாவையும்தான்.வயிறு வெடித்துவிடும் போல உணர்ந்தாள். கவுனை ஈரப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பயம் அவளை விட்டுப் போயி ருந்தது.
ஏன் இப்போது அவளுக்கு கடந்தகாலம் நினைவில் வரவேண்டும்?அதுவும் இந்த வகையிலான ஒரு மனநிலையில்?அவள் உள்ளங்கைகள் ஈரமாகியி ருந்தன.கடந்த சில மாதங்களாகவே அவள் தன்னை விட்டேத்தியான ஒரு மனநிலைக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்பா இப்போது மிகவயதான மனிதர்.தளர்ந்து போன அவரிடம் தன்னைப் பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியைக் கேட்பது கூட அர்த்தமற்றது.வாரா வாரம் அவள் அவருக்கு எழு தும் கடிதம் வராத போது அவள் அவர் பிரிவை உணரலாம். பம்பாயிலிருக் கும் என் தங்கையின் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக நான் வாங்கிய கொலுசு மேஜையில் இருக்கிறது.பல கடிதங்களுக்கு பதில் அனுப்பவேண்டும்.;திட்டக் கமிஷனிலிருந்து வந்த அழைப்பிதழ், மரம்நடும் அமைப்பு,குதிரைப் பயண அமைப்பு –ஆனால் எல்லாம் அர்த்தமற்றவை.
***
அவன் என் சங்கடமான நிலையை உணர்ந்திருக்க வேண்டும்; அவன் என் சிகரெட்டைப் பற்றவைத்தான்.
“நீங்கள் தினமும் காலையில் குதிரை சவாரி செய்வதை நான் பார்த்திருக் கிறேன். ஆங்கில நாடகங்களில் நடிப்பதையும் பார்த்திருக்கிறேன்..”
நகரத்திற்கு வெகு தொலைவில் ,தனியான மூலைப் பகுதியில் ஏரியருகே ஒரு பெண் இருப்பது மிகச் சாதாரணம் என்பதுபோல அவன் நடந்து கொண் டான்.அவள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உட்கார்ந்தாள்.அவள் வசதியாக உட்காரும் வகையில் அவன் சிறிது நகர்ந்து உட்கார்ந்தான்.அந்த உரையாட லைத் தொடர்வதில் அவன் எந்த வேகமும் காட்டவில்லை.

எந்த விவரத்தை யும் எதிர்பார்க்காத, நட்பின் அமைதியான தன்மையைக் காட்டுவது போலி ருந்தான்.அவனுக்குத் தன்னைத் தெரிந்திருப்பது சிறிது அமைதியைத் தந்தது என்றாலும் தனது அடையாளம் தெரியப்படாத நிலை மறைந்து விட்டது வருத்தம் தந்தது. அவன் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாதது பெரியதா கப் படவில்லை. அவள் தன்பழைய மனநிலைக்குத் திரும்பவிரும்பி, தோற்று தன் அமைதியைத் தானே உடைத்தாள்.
“இது மிகச் சின்னஉலகம்”

அவன் இயல்பான சிரிப்போடு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.அவளுக்கு அமைதி தேவை என்பதை புரிந்து கொண்டவன் போல இருந்தான்.தன் வாழ்க் கையை முடித்துக் கொள்ள அங்கு வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் இயல்பாகத் தன்னால் சொல்ல முடியுமென்று அவளுக்குத் தோன்றியது.அதே நேரத்தில் அவனிடம் சொன்னாலும் ,சொல்லாவிட்டாலும் எந்த மாறுதலும் வரப்போவதில்லை என்றும் தோன்றியது
அவள் சிகரெட்டைப் புகைத்தாள்.பறவையொன்று கெஞ்சுவது போல அவர்க ளைப் பார்த்து ஒலித்தது.அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“திருமதி…”

வியப்போது அவளைப் பார்த்த அவன் ,அவள் பேச விரும்பாததைப் புரிந்து கொண்டவன் போல பாதியில் பேச்சை நிறுத்திவிட்டான்.அவன் ஆழமான அமைதியில் ஆழ்ந்து விடுவான் என்றும் அவன் பேசவேண்டும் என்றும் நினைத்து அவள் “ஷைலி என்று கூப்பிடுங்கள்” என்று சொன்னாள்.

அவள் காத்திருந்தாள்.தன் அடர்த்தியான கூந்தலை முதுகில் பரவவிட்டு அவனைப் பார்த்துத் திரும்பி இயல்பாகச் சிரித்தாள்.ஓ.. தன் கணவனுடன் சேர்ந்து, இப்படி நிம்மதியாகச் சிரித்து பல ஆண்டுகளாகி விட்டன! அவனு டைய அமைதியான முகம் ,நிலவொளியில் ஒரு மென்மையான உணர்வை வெளிப்படுத்தியது. அவன் கண்கள் மினுமினுத்தன.

“ஷைலி, என் மனைவி இறந்திருக்கலாம்’

அவன் அவளிடமிருந்து பதிலை எதிர்பார்க்கவில்லை.அவன் எந்தவித அனுதா பத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் குரல் வெளிப்படுத்தியது. அவள் அதிர்ந்தாள்.
“விசாரணைக்காக வரும் போலீசிடம் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.ஆமாம். தொடக்கத்தில் எங்களிடையே இருந்த காதல் மெல்ல ,மெல்ல மறைந்து விட்டது.அது யாருடைய தவறு என்று கண்டுபிடித் துச் சொல்வது அசாதாரணமானது.நாம் சொல்லக் கூடமுடியாது.காதல் மறை கிறது.—அது பரஸ்பரம் காணமுடிகிற ஒன்றல்ல.

அது மந்திரமான மயக்கம், சிறிது நேரத்திற்குப் பிறகு அப்படி உணர்வது நின்றுவிடும்.பிறகு இந்த ஏரி, குன்று,இந்த வானம்..எல்லாம் மரணித்துவிடும்.நீங்கள் இதை வேடிக்கையாக உணரலாம் ஷைலி —ஆனால் இந்தப் பறவை ஒலித்தபோது நான் ஆச்சர்யப் பட்டேன். நீங்களும்தான்.அது மிகவும் அற்புதம் .இல்லையா?நீங்கள் உங்கள் கூந்தலைப் பிரித்து முதுகில் பரவவிட்டுச் சிரித்த போது நான் வியப்படைந் தேன்., ஏன் என் மனைவியால் இது போல் இனிமையாகச் சிரிக்க முடியாது என்று நினைத்தேன்.இந்த நாட்களில், நான் ஆச்சர்யப்படுவதும் கூட நின்று விட்டது.இல்லாவிட்டால் நான் ஒரு கலைஞனாக வாழும் தைரியம் பெற்றி ருப்பேன்.எனக்கு அந்த தைரியம் இருந்திருந்தால் ஒருவேளை அவள் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டாள்.எங்களுக்குத் திருமணமான புதிதில் கல் போன்றி ருந்த படுக்கையில்தான் படுப்போம்.பிறகு வறுமை வந்துவிட்டது.

எனக்கு ஏராளமான கனவுகளிருந்தன.ஆனால் இப்போது எதுவுமில்லை.அது போய் விட்டது.ஏன் போனது என்று எனக்குத் தெரியவில்லை. அவமானகரமான அந்த நாட்கள் போய்விட்டன.இவை எல்லாவற்றோடும், என்னுடைய , காரண மின்றி சந்தோஷப்படும் இயல்பும் கூடப் போய்விட்டது அதிகத் தேவை நமக் கிருக்கிறது என்று எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கும் எல்லைக்கு அவள் போய்விட்டாள்..எதுவும் வேண்டாமென்று சொல்பவனில்லை ..நான்
நான் என் மனைவியை இன்று கொன்றிருப்பேன்.எதற்கு சண்டை போடத் தொடங்கினோம் என்பது கூட எனக்கு நினைவில்லை.பயங்கரம்.. இல்லையா? தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள்.செய்துகொள் என்று சொல்லி அவளைத் தள்ளினேன்.செத்துப் போ..செத்துப் போ.. நான் கத்தினேன் அவள் தன் அறைக்குள் போய் பூட்டிக் கொண்டாள்.அப்போது எனக்கு எந்தவித உணர்வும் ஏற்படாதது குறித்து அதிர்ந்தேன்.அவள் ஒரு நாற்காலி யின் மீதேறி மேலே கயிற்றைப் போட்டு சுருக்குவதை கதவின் ஓட்டை வழியாக நான் பார்ப்பதை அவள் பார்த்தாள்.அல்லது அவள் பார்க்காமலும் இருந்திருக் கலாம்.! ஆனால் அவள் கதவு இருந்த திசையைப் பார்த்தாள்.எங்களுக்கு இரு குழந்தைகள் –ஓர் ஆண்,ஒரு பெண்—அவர்கள் விளையாடிவிட்டுத் திரும்பும் போது என்ன விதமான வேதனைக்கு ஆளாவார்கள் என்று நினைத்து வெந்து போனேன் .அவளுக்கு அப்படித் தோன்றவில்லை என்பது ஆச்சர்யம் தந்தது.

அவள் சாவு பற்றிய சிந்தனையை நான் உணர்ந்த போது என் முழு உலகமே மாறிப் போனது.நான் எழுந்து வீட்டை விட்டு வெளியேறி, நடந்து இங்கு வந்து உட்கார்ந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நடந்திருக்கிறேன். நடந்து வரும் போது நான் நானாக இல்லை ,வேறு யாரோ என்பதாவும் உணர்ந்தேன்.”

“இப்போது அவள் உடல் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.குழந்தைகள் அழுது கொண்டிருப்பார்கள்.போலீசார் வந்திருக்கலாம்.வீட்டிற்கு முன்னால் அக்கம்பக்கத்தவர்கள் கூடியிருப்பார்கள்.எதுவெனினும், வேறு யாருக்கோ இது நடந்திருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்”.
“என் திருமணத்திற்கு முன்பான கதையைக் கேளுங்கள்.அவளுக்கு பதினெட்டு வயது.அவர்கள் கிராமத்தில் நான் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களது ஒரே வீடுதான் அந்தக் காட்டில்.ரப்பர் செடியால் வீடு சூழப்பட்டி ருந்தது.இரண்டு புறத்திலும் வரிசையாக குன்றுகள்.நாங்கள் சுள்ளிபொறுக்கச் சேர்ந்து போவோம். அவள் கிணற்றில் தண்ணீர் இறைப்பது,காய்கறிகள் நறுக் குவது ,துணிகள்துவைப்பது வரிசையாக காயவைப்பது என்றுசெய்யும் எல்லா வேலைகளிலும் ஒரு நடனப் பாங்கிருக்கும்
.

காரணமின்றி நாங்கள் சிரித்துக் கொண்டிருப்போம்.அவள் தன் தாய்க்கு உதவியாக சமையலறையில் இருக் கும்போது நான் பேச விரும்பமாட்டேன்.அவள் எனக்காக சுடுதண்ணீர் வைத் துத் தருவாள். தாய் அறியாமல் முதுகு தேய்த்துவிடுவாள் இரவில் நான் எழுந்திருக்கும் போது தான் விழித்திருப்பதைக் காட்டுவாள். இரவு நேரத்தில் சாணக் கிடங்கிற்குப் போகும்போது துணைக்கு அழைப்பாள். சிறிதுநேரம் தனியாக நெருக்கமாக நின்றிருப்போம்.அவள்தான் இது எல்லாவற்றையும் செய்தாள் என்று சில சமயம் எனக்குத் தோனறும்.
அவளுக்கு ஒரு தாத்தா இருந்தார்.

ரப்பர் தோட்டம் அமைப்பதற்காக அவர் காட்டைச் சமப்படுத்தினார். நாங்கள் சந்திப்பதற்கு ஐந்து வருடங்கள் முன்ன தாகவே அவர் இறந்து விட்டாலும் எல்லோரும் அவரைப் பற்றி தினமும் பேசிக் கொண்டிருப்பார்கள்.உண்மையில் அவர் சிறிது குறும்புகாரர் காதல் கடிதங்கள் எழுதுவதில் திறமைசாலி. அந்தப் பழக்கம் சிறுவயது தொடங்கி அவர் சாகும்வரை இருந்தது. கடிதங்கள் எழுதுவது மட்டுமில்லை தனது ஆதாரத்திற்காக அதன் பிரதிகளையும் வைத்திருந்தார். அந்தக் கடிதங்கள் தன் காதலியைச் சந்தித்தையும், கவனமற்ற வார்த்தைகளால் வர்ணித்ததையும் விவரிக்கும்..காதலியின் போக்கு வித்தியாசமாக இருந்தால் கடிதத்தின் தொனி யும் மாறுபடும்.

சில கடிதங்கள் எளிமையாக –நெஞ்சு,பூக்கள் ,பட்டாம்பூச்சிகள், அழகான வெள்ளை உடையுடனான இளம்பெண் என்ற வர்ணனைகளோடு.
அவள் மாடிக்கு வந்து அந்தக் கடிதங்களை படித்துக் காட்டி சிரிப்பாள். அந்தத் தாத்தாவின் மனைவிக்கு எப்போதும் எங்கள் மீது ஒரு கண்.ஒருதடவை கடி தங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது வந்துவிட்டாள்.புண்ணாக இருந்த தன் முதுகை பெருமையாகக் காட்டி அது தாத்தாவின் வேலை என்றாள். நாங் களிருவரும் விழுந்துவிழுந்து சிரித்தோம்.தன் கணவனின் சாகசங்கள் ,பில்லி சூனியத்தில் அவர் காட்டிய ஈடுபாடு,அவருடைய பிடிவாத குணம்,அதை அவள் பொறுத்துக் கொண்டவிதம் என்று எல்லாவற்றையும் சொன்னாள். ஷைலி,உங்கள் முகத்தைப் பார்த்ததும்,எனக்கு இவையெல்லாம் ஏன் ஞாபகம் வந்த்து என்று எனக்குத் தெரியவில்லை.அவள் உங்களைப் போன்றில்லை. வீடே அவள் உலகம்.நன்றாகப் பாடுவாள்.இப்போது அதையும் நிறுத்தி விட் டாள்.

அவர்கள் வீட்டில் ஓர் ஆடு இருந்தது. கண்ணில் பட்டவை எல்லாவற்றையும் மேய்ந்துவிடும். கட்டியிருக்கும் கயிறையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடும். ஒரு தடவை அது என் நிக்கரையும் கூடச் சாப்பிட்டுவிட்டது.கட்டுப்படுத்த முடியா மல் அவள் சிரித்தாள்.என் இறுகிய முகத்தைப் பார்த்து விட்டு இன்னும் அதிக மாகச் சிரித்தாள்.நானும்தான்.அவள் ஏன் சிரிக்கிறாள் என்று தெரியாமல் சிரித்தேன்.அது அல்ப விஷயம்தான்.ஆனால் அதுபற்றி நினைத்து நாங்கள் இரண்டு மூன்று வருடங்கள் சிரித்திருக்கிறோம்.

“நான் உங்களிடம் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது—நான் இப்படிப் பேசுவேன், நினைப்பேன் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது.என் வெறி அதிகமாகிப் போனது. உங்களைப் பார்க்கும் வரை அது எனக்குத் தெரியவில்லை.”
அவன் இடைவெளியில்லாமல் பேசிவிட்டு அமைதியானான்
அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவன் தன் கைகளை அவள் கை மேல் வைத்தான்.மீண்டும் அவள் ஆச்சர்யமடைந்தாள்.ஈரப்பதமான மேகங்கள் நிலாவின் மேல் மிதப்பதைப் பார்த்தாள்.காற்று வீசியது.
“வாருங்கள்,நாம் போகலாம்..”சொல்லிவிட்டு எழுந்தாள்.காரில் ஏறி உட்கார்ந்த பிறகு அவன் வீடு இருக்குமிடத்தைக் கேட்டாள்.காரின் பின் இருக்கையிலி ருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து “உங்களுக்கு வேண்டுமா?”என்று கேட்டாள். அவன் சிறிது உறிஞ்சி விட்டு “நன்றி” என்றான்.அவள் பாட்டிலை மூடினாள்.

”வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்”என்று சொல்லிவிட்டு காரை கிளப்பினாள்.”உங்கல் மனைவி இறந்திருக்க மாட்டாள் என்று நம்புகிறேன்” என்று கார் ஓட்டும் போது சொன்னாள்.

ஆனால் எதுவும் மாறியிருக்கப் போவதில்லை”என்று சொன்னான் அமைதி யாக.”ஆமாம். மாறப் போவதில்லை”என்று அவள் தனக்காகவும் சேர்த்துச் சொன்னாள்.அவனுடைய அமைதியான, மென்மையான முகம், மெலிந்த உதடுகளைப் பார்த்தாள்.எதுவும் பேசவில்லை.அவன் வீட்டின் முன்பு காரை நிறுத்தினாள்.தன் மகன் அமைதியாக பாடம் எழுதுவதை அவனால் பார்க்க முடிந்தது.அவள் கைகளை அவன் அழுத்தினான்.அவள் அவன் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “குட்பை “என்றாள்.
*****
Apoorva [ Uncanny ] first appeared in the collection Akasha Mattu Bekku (Akshara Prakashana, Sagar, 1981)

பெரும் நாவலாசிரியன் எழுதிய சின்னஞ்சிறு கதை. / பொ. கருணாகரமூர்த்தி ( பெர்லின் )

Hemingway

Hemingway

பெரும் நாவலாசிரியன் எழுதிய சின்னஞ்சிறு கதை.

*

Hemingway அமெரிக்காவின் Illinos இல் Oak Park எனும் இடத்தில் ஜனித்தார்.
அங்கேயே உயர்பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டவர் பல்கலைகழகங்கள் எதிலும் சேர்ந்து படித்ததாகத்தெரியவில்லை. அங்கேயே The Kansas City Star எனும் பத்திரிகையில் பணிசெய்தார்,
பின் அமெரிக்காவைவிட்டு பாரீஸூக்கு வந்தவர் பாரீஸிருந்துகொண்டு அமெரிக்கப்பத்திரிகைகளின் வெளிநாட்டுச்செய்தி சேகரிப்பாளராகப் பணியாற்றினார். அப்போதுதான் முதலாம் உலகப்போர் ஆரம்பிக்கவும் இத்தாலியப்போர்முனையில் தன்னார்வத்தில் சேர்ந்து அம்புலன்ஸ் சாரதியாகப்பணியாற்றினார். போரின்போது அடுத்தடுத்து பலத்த காயமடைந்தார்.

அவ் அனுபவங்களின் விளைச்சலே 1940 இல் A Farewell to Arms, To Who the Bell Tolls ஆகிய நாவல்களைப்படைக்க முடிந்தது.
1921 இல் தன் 22 வது வயதில் Hardley Richardson என்கிறவரைத் திருமணம் செய்துகொண்டார்.
Hemingway க்கு The Old Man and the Sea என்ற நாவலுக்காக அவருக்கு 1954 இல் நோபல் பரிசு கிடைத்தது.
தன் வாழ்நாளில் மேலும் 4 தடவைகள் திருமணம் செய்துகொண்ட Hemingwayக்கு மணவாழ்க்கையும் இனிக்கவில்லை.
1961ம் ஆண்டு Ketchum எனும் இடத்தில் ஒரு ஹொட்டலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோகிறார்.

On the Quai at Smyrna

Hemingway எனும் அற்புத கதை மாந்தன் எழுதியவற்றுள் எல்லாம் மிகச்சிறிய கதை இதுதான். ஒண்ணரைப்பக்கங்கள் மாத்திரம். ஒரு நாவலில் தரக்கூடிய உணர்வுகளையும், மனவெழுச்சியையும் ஒரு சிறுகதைக்குள்கூட தன்னால் பொதித்துவிடமுடியுமென்பதை இப்படைப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார். முதல் வாசிப்பில் சத்தியமாய் எனக்கொன்றும் புரியவில்லை. அவ்வளவுக்குத் தெளிவாகக் குழப்பிவிடுவார் வாசகனை.

On the Quai at Smyrna என்பது கதையின் தலைப்பு. தலைப்பில் வரும் Quai எனும் வார்த்தை Quay ஆகத்தனிருக்கும் என்பது என் அனுமானம். தேடியதில் இறங்குதுறையையும் நீர்நிலைக்கு அண்மித்தாக அல்லது தொடர்ந்து செல்லும் பாதையையோ மேடையையோ சுட்டும் அப்பிரெஞ்சுவார்த்தை மத்தியகாலத்தில்தான் ஆங்கிலத்துக்கு வந்ததும் தெரியவந்தது. முதலாம் உலகமகா யுத்தகாலத்தில் பெரும்பகுதி கிரேக்கத்தின் முற்றுகைக்குட் பட்டிருந்த நகரமும் அது. கிரேக்கத்தை விரட்ட அமெரிக்கப்படைகளுடன் இணைந்திருக்கிறது துருக்கி. இந்த விபரங்கள் எதுவும் கதைக்குள் தராமல் வாசகனை மேலும் குழப்பிவிடுகிறார் Hemingway.
Snows of Kilimanjaro எனும் தொகுப்பில் வந்த இக்கதையை அடுத்துவந்த கதைகளைப் படித்தபோதுதான் கதையின் பகைப்புலத்தையும் காலத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது. கதைசொல்லி ஒரு கடற்படை அதிகாரி.

அவர்களின் கப்பல் Smyrna Quai யில் தரித்து நிற்கும்போது இவருக்கு அடுத்தபடியிலுள்ள ஒரு அதிகாரி ‘சிப்பாய் ஒருவன் தன்னை அடிக்கடி கேலி பண்ணி அவமதிப்பதாக’ முறையிடுகின்றான். இவர் அச்சிப்பாயை அழைக்கிறார், பார்த்தால் அவனோ இயல்பிலேயே மிகவும் பணிவுள்ளவனும், இலேசில் வம்புதும்புகளுக்கும் போகாத ஒருவன். ‘விசாரித்ததில் அச்சிப்பாயோ அந்த அதிகாரியுடன் தான் இதுவரை பேசியதே இல்லை’ என்கிறான். ஆனாலும் இவர் அவனுக்கு “நீ கப்பல் புறப்படும்நாள் மாலைவரை கப்பலால் இறங்கவேகூடாது” என்று தண்டனை வழங்குகிறார்.(By Cancelling his shore-leave)
Smyrna வில் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களும், விமானத்தாக்குதல்களும் தொடர்கின்றன. ஏராளம் துருக்கிப் பெண்கள் தமது இறந்துபோன குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். சில பெண்கள் அந்த இறங்குதுறையில் ஒதுக்கான இடங்களில் தம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறர்கள். எங்கும் மரணத்தைப் பார்த்து மரத்துப்போயிருந்த கதைசொல்லிக்கு பிறந்த சிசுக்களை பெண்கள் எடுத்துவருவதைப் பார்ப்பது பரவசம் தருகிறது. இந்த Smyrna நகரம்தான் இப்போது Izmir என அழைக்கப்படுகிறது.ஏதோ ஆடுகளைப் பிடிப்பதற்காகத்தான் படையெடுத்தவர்களைப்போல Smyrna வின் ஆடுகளையெல்லாம் கிரேக்கர்கள் பிடித்துச் சாப்பிடுகிறார்கள். அவ்வேளை கிரேக்கர்களுக்கும், அமெரிக்ககூட்டுப்படைக்குமிடையே ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்யப்பட ஆக்கிரமித்திருக்கும் கிரேக்கர்கள் Smyrna வைவிட்டு வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம். கிரேக்கர்கள் அருமையானவர்கள்.

தாம் பிடித்துவைத்திருந்த ஆடுகளின் கால்களை எல்லாம் அடித்துமுறித்துக் Smyrna குடாக்கடலுக்குள் வீசிவிட்டுச் செல்கிறார்கள். இறுதிவரியிலும் கிரேக்கர்கள் மிகவும் நல்லவர்கள் என்றுதான் முடித்திருப்பார் Hemingway.
[The Greeks were Nice Chaps too.]
கதையை வசித்து முடித்த பின்னாலும் எனக்கு குழப்பமாயிருந்தது. இக்கதையின் மூலம் Hemingway வாசகனுக்கு தரமுனையும் செய்திதான் என்ன? அவர் காட்டிய காட்சிகள் அனைத்தையும் கூட்டிச்சித்திரமாக்கிப் பார்த்தபோதுதான் இந்த ஒண்ணரைப்பக்கக் கதைக்குள் எத்தனைவிதமான மனிதர்களையும் மனதைத்தைக்கக்கூடிய சம்பவங்களையும் சொல்லிவிடுகிறார் என்கிற பிரமிப்பு ஏற்பட்டது.

அப்பாவி ஒருவனைக் குற்றஞ்சாட்டும் அதிகாரி.
அவனுக்கு தன் மனம் விரும்பாமலே தண்டனை அளிக்க வேண்டிய நிலையிலிருக்கும் கதைசொல்லி.
குற்றமேதுமிழைக்காமலே தண்டனை பெறும் சிப்பாய்.
அரசின்/கட்டளை அதிகாரிகளின் ஆணைக்காகவே குழந்தைகளையும் பெண்களையும் இன்னபிற உயிர்களையும் குடிக்கும் எறிகணைகளை ஏவவேண்டிய கட்டாயத்திலிருக்கும் சிப்பாய்கள்.
இறந்த குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அலையும் தாய்மார்கள்.
கிரேக்கர்களால் கால்கள் ஒடித்துக்குற்றுயிராக வீசப்பட்டுத்துடிக்கும் ஆடுகள்.
துன்பம் மனிதர்கள்மேலும் ஆடுகள்மேலும் சமமாகவே பிரவகிக்கின்றது.
தமிழர்களாகப் பிறந்ததுக்காவே துன்பங்களை அனுபவிக்கும் எம் உறவுகள்தான் மனக்கண்ணில் நிழலாடினார்கள்.
*

ராகவபிரியன் கவிதைகள்

பனைமட்டை

பனைமட்டை

என் பின்னே என் நிழல்

எனக்கும் நிழல் இருக்கிறது.

வெயில் திசைகளை வெறுத்தபடி

எதிரே போய்கொண்டே இருக்கிறது..

என்னால் மிதிக்க முடியா பொழுதுகளில்

என்னில் மறைந்துகொள்கிறது..

காவிரியின் கரையமர்ந்தபோது

நீரில் என் நிழல் பழிப்புக்காட்டியபடியிருந்தது..

கைகளால் நீரில் அறைய

என்முகமெங்கும் நீரின் வலிகள் திவலைகளாய்..

கால்களால் நீரை அலச

நிழல் விலகுவதாயும் சலசலப்புக்காட்டியபடியும்

நர்த்தனமிட்டபடியிருக்க…

நிழல்பிடிக்க உள்குதித்தேன்..

ஈரமான பின்னும் நிழல்

தலைதுவட்டியபடியிருக்க..

வெகுண்டெழுந்தேன்..

நனைதலும் உலர்தலும் குனிதலும் நிமிர்தலும்

வளைதலும் நீள்தலும்

நிழலுக்கில்லை..

அலையென அடுத்த அடிவைத்து நகர

என் பின்னே இப்போது என் நிழல்..


கிளிமனூர் ரவிவர்மன்

பதினான்கு வயதான

சின்னத் தூரிகையின் மீது

ஆயில்யம் திரு நாளின்

வெளிச்சக் கண்விழுந்தது…

தியோடார் ஜான்சனின்

வெள்ளைத் துரோகம்

தோய்த்து அப்பிய

தூரிகையின் மேலை நடனங்களை

மனமேடையிலிருந்து

கண்டிப்புடன் இறக்கிவிட்டான்

இந்திய ரவிவர்மன்..

அடங்கா சினத்துடன்

தன் தூரிகைகளை

இந்திய வண்ணத்தில் தோய்த்தெடுக்க..

ஆயில்யம் திருநாள்

அங்கீகாரப் பூக்கள்

தொடுத்துக்கோர்த்த மாலையை

திருவிதாங்கூர் ராணியின்

தங்கைக்கு அணிவித்தான்..

ரவிவர்ம மயில் தன் வண்ணத்

தோகைவிரித்தாடத் தொடங்கியது..

ரவிவர்ம மேகம்

வண்ணம் வண்ணமாய்

தோய்த்த மழைத்துளிகளை

வாரிவழங்கி பெய்யத்தொடங்க…

இந்தியத் தூரிகை

மகுடம் சூடியபடி

உலக ஓவிய அரங்கை

ஈரமுடன் நனைத்தபடி

ஆளத் தொடங்கின..

ஆங்கில ஏகாதிபத்தியம்

கலைஞனின் முன்னால்

கைகட்டி நின்றது..

துஷ்யந்தனும் நளனும்

சகுந்தலையும் தமயந்தியும்

மலையாளப் பெண்ணின்

முகமணிந்து

உலகம் முழுவதும்

சுற்றுலா புறப்பட்டார்கள்..

ரவிவர்மாவின் தூரிகை

ஓய்வெடுக்கும் நொடிகளில்

கண்இமைக்க மறந்த

உலக ஓவியப்பிரபலங்கள்

வியப்புடன்

பொறாமை மெளனம் கொள்ள…

அந்த இருண்ட சின்ன நொடியில்

ஒரு புதுஓவியயுகம் புறப்படும்

அதிர்வலைகளை

உலகம் உள்வாங்க முடியாமல்

திணறத்தொடங்கியது…

நிமிரமுடியாத வில்லெழுத்து

எனக்கென எழுதமுடியவில்லை..

எனது எழுத்துக்களுக்கு

மொழிகட்டுப்படுவதில்லை..

மொழியின் நாக்குகள்

என் எழுத்துக்களை

பல்லிடுக்கில் அதக்கிக்கொள்கின்றன..

எதை எழுதுவது

எதை விடுவது

எதை அணிவது

எதை நிர்வாணமாக்குவது

எனும் வானவில்

என் வானில் திடீரென

முளைக்கிறது..

வண்ணங்களைப் பிரித்தெடுக்கும்முன்

கண நேரம் நிமிர்ந்துவிட்டு

சட்டென

மறைந்து போய்விடுகிறது..

வண்ணங்களை

நான் உருவமுடியாதவனாகி

எழுதமுடியாமலாகிறேன்..

நிமிர்தல் எழுத்திலும்

வில்லிலும்

நாணில் பிணைக்கப்பட்டிருக்கலாம்…

அதனால்தான்

குனிந்தபடி

எனக்கென எழுதமுடியவில்லை…


நரிக்குரவ நிஜம்

பனைமட்டையில்

நரிக்குரவப்பெண்

சிறுநீர் கழிக்கும்

நிர்வாணச் சப்தம்

இன்னமும்

இசையாக்கப்படவில்லை..

திறந்திருக்கும்

அவளின் மார்புகளை

நீலப்படங்களின்

புகைப்படக் கருவிகள்

பொருட்படுத்துவதில்லை..

அவளின் குட்டைப்பாவாடை

படம் பதித்த

விளம்பர தட்டிகள்

பன்னாட்டு நிறுவன்ங்களால்

பயன்படுத்தப்படுவதில்லை..

அவளின் அழுக்குமேனியும்

அரை நிர்வாணமும்

அவளைக் காணும்

ஆண் விடலைக் கண்களில்

சுய இன்பத்திற்காகவாவது

பயன்படுகிறதா தெரியவில்லை..

ஒரு சிலரால்

அவள் நிஜமாகவே

துய்க்கப்படுவது மட்டும்

நிஜம்…

••••

-நா.வே.அருள் கவிதைகள்

download (2)

குதிரைகள் குத்தகைக்கு அல்ல

குதிரைகளைக் குத்தகைக்கு எடுக்க வேண்டாம்

சவாரிகளைச் சமாளிக்க முடியாது

உனது சொற்களை

உனது செவிகளில் விழவைப்பதற்கான

கவிதைக் கருவிகளைத்தான்

என் கைகள் முடைந்து கொண்டிருக்கின்றன

மேலும்

உனக்கொன்று சொல்ல வேண்டியிருக்கிறது

உனது உதடுகளுக்குள் பொருத்தப்பட்ட

ஒலிவாங்கியிலிருந்து வழியும் வார்த்தைகள்

என் இதயத்தில் விழுகிறபோது

ஏதோ ஓர் விலங்கின் சாண வீச்சங்களாய்த்

தரையில் சிதறிக் கிடக்கின்றன

அவற்றை ஓவிய உச்சப் பிசிறல்கள் என்றுப்

பிளிற்றிக்கொண்டிருக்கிறாய்

யானையின் கால்களால்

பட்டாம் பூச்சிகளை மிதிக்கிற கலையை

உனது சுயப் பிரதாபங்கள்

சொல்லிவிடுகின்றன.

குதிரைகளைக் குத்தகைக்கு எடுக்க வேண்டாம்

சவாரிகளைச் சமாளிக்க முடியாது.

கொத்து குண்டுகள்

எனது பேனாவை

ஏன் எடுத்து உதறுகிறாய்

சுவரெங்கும்

குருதித் துளிகள்

மின்சாரக் கம்பியை

வெறுங்கால்களுடன்

தரையிலிருந்து

தொட்டுப் பார்க்க விழைகிறது

எனது கவிதைக் கணங்கள்

மிகப்பெரிய கோபுரமொன்று

சாக்கடையில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது

யாரால் தூக்கிவிட முடியும்?

பேரரசே

உங்கள்

மந்திரிமார்களை

அவசியம் கேட்டுத் தொலையுங்கள்

மாதம் மும்மாரி பொழிகிறதா?

மேலும்

தனிக் குடை ஒன்றைத்

தயாரித்துக்கொள்ளுங்கள்

எங்கள்

கவிதைத் தோலாலான

கறுப்புக் குடை

பேரரசே

குடியில் மூழ்கிக் கிடக்கிறது

குடியரசு

இதனால் சகலமானவர்களுக்கும் என்று

முரசறைகிறது

உங்களின் ஓர் உளறல்.

அதனாலென்ன?

மெள்ளப் புரள்பவர்களுக்கு

மேலும் ஒரு போதை

உங்களின் ஆணைக்கு

சாராயக்கடை என்று பெயர் வைக்கலாம்

அல்லது

இனிக் கவிதைகளை

பார்களில் வாசித்துவிடலாம்.

துக்கித்துப்போன

எனது சொற்களை

எந்தக் குப்பை லாரியில்

கொண்டுபோகலாம்?

புழுதியில் கிடந்துழலப்

பிரியப்படும் வீணை

பாவம் பாரதி

சக்கரவர்த்திகள்

சண்டைக்கு அழைக்கிறார்கள்

சந்தோஷம்

போருக்குப் போகிறவர்கள்

சாதாரணப் பிரஜைகள்தான்

வெகு சாதாரண

வெட்கங்கெட்டப் பிரஜைகள்.

கட்சியொன்று தொடங்கலாம்

கொடிமரங்களில் கட்டிவைக்க

ஏராளமான கோவணங்கள்

நாங்கள்

தமிழை வாசித்துத்

தமிழையே சுவாசிப்பவர்கள்தாம்

அதற்காக

அட்சயப் பாத்திரங்களைத்

தூக்கிக்கொண்டு

பிட்ஷாந்தேகி என்று

உன் பின்னால் வர முடியாது

அவனுடன் போகும்போதே

ஐயுற்றோம்

சிங்கராஜாவின் நரிநடை

இனி கூட்டம் போடு

சேராது

கூட்டம்.

***

மணற்காடர் கவிதைகள்

ஆழிப்பேரலை

ஆழிப்பேரலை

நாம் வீடற்று வெளியில் வாழ்வதால்

தெரு நாய்கள் என்கிறீர்கள்

எம்மைப்போல் மனிதர்களை ஏன்

தெரு மனிதரென்று நீங்கள் சொல்வதில்லை?

—-

அம்மா படித்த அந்தப் பள்ளிக்கூடம்

இடிந்து துவைந்துவிட்டது

அவள் ‘ஆனா’ எழுதிப் பழகிய மண்தரை

இப்போதும் அங்கே இருக்கிறது

அந்தப் பூந்தோட்டத்தின் மத்தியில்

—-

நான் பள்ளிக்கூடம் சேர்ந்தபோது அப்பா தொலைந்துபோனார்

சைக்கிள் ஓட்டப் பழகியபோது அவர் நினைவாகவே இருந்தது

உயர் கல்வி கற்றபோதும் உத்தியோகம் பெற்றபோதும்

திருமணமானபோதும் அப்பாவின் நினைவாகவே இருந்தது.

தொலைந்தவர்கள் திரும்பி வருவதுண்டு என்பார்கள்

அப்பா மட்டுமேன் திரும்பி வராமலிருக்கிறார்

என் மகன் அவரைப்போல் இருப்பதாலா?

—-

இந்த ஆண்டு

ஆழிப்பேரலை வரலாம் என்கிறார்கள்

வரட்டும்.

அழிப்பதற்கு நிலமும்

கொல்வதற்கு உயிர்களும் இருக்கின்றன.

இதே வேலையைத்தானே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள்

இயற்கை எப்போதாவது ஒரு நாள் செய்துவிட்டுப் போகட்டும்.

—-

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கிறதே

யாருடைய வேலையாக இருக்கும் இது?

ஆ.ஜீவானந்தம் கவிதைகள்

images

1.சொல்நாறும் இசை

சர்ப்பத்தின் தடங்கள் பதிந்த ஆட்டுமந்தை

நேற்றைய அமைதிக்கு ஏங்குகிறது.

இன்னும் திறக்கப்படாத

தூக்குவாளிக்குள்ளிருந்து கசிகிறது

கைவிடப்பட்ட பிரண்டை கொடிகளின்

சொல் நாறும் இசை.

வறுமையின் நிறம் பச்சையென பதிக்கப்பட்ட

ஒரு நெடுவாசல் முற்றத்தில்

தயக்கத்துடன் நின்றிருக்கின்றன

வயோதிகனின் தளர்ந்த கால்கள்.

நீரலைந்தேறும் பொட்டல்வெளியில்

ஊண் குழைத்துண்ண காத்திருக்கிறாள்

கொய்யாப் பிஞ்சுகளுடன்

ஒரு சிறுமி.

**

2.நித்யப்ரவாகம்

பழுத்த இலைகள் பழுத்தபடி

உதிரும் இலைகள் மிதந்தபடி

மென்னயமாய் சன்னதம் கொண்டு

சுழித்தோடும் நித்யப்ரவாகம்.

மனநாவெங்கிலும் தாகத்தின் நீலம் பாரித்து

முற்றுறா வெயிலின் கவிதையுடன்

சூன்யத்தின் மென்மையை

முத்தமிட யெத்தனிக்கிறேன் பேருயிர்ப்பே

அருளும் புங்கமர நிழல்விரிப்பில்

முனகும் அத்தெருநாயின் சிநேகித எச்சிலுடன்

இருள் புணரும் சாபங்கள் தீர

எனை நீ பார்க்கவும்

சில நெற்கதிர்கள் முற்றி

மேகங்கள் திரண்டதும்

மெய்யே மெய்யாகவா…

செங்குருதி மேவிய சொற்தீவுகள்

மோனத்தில் கரைய

உச்சிமலை கற்குகை தனிமையில்

சுனைஜீவித கொடிப்பூக்கள் போன்றே

நற்பிராண வெண்நரம்புகள் குளிர குளிர

உன் ஆழ்விழிகள் எனைக்கண்ட தரிசனம்

அறியாதா அவ்வந்தியும்…

நீர்மதிச்செடிகள் கால்சுற்றிக்கிடக்கவும்

கரையோர நாவல்மரம் பெயர்கூவி அணைக்கவுமாய்

மீண்டும் இந்த புதைமணல் உள்ளிருந்து

தேம்பியழும் அழுகுரலே நீ மேகமாய் நீர்க்கக் கடவாய்…

எவ்வுணர்ச்சியமற்றதென தெரிவதாய்

எங்கிருந்தோ எனை நோக்கி ஈர்ப்பதாய்

திசையெல்லாம் தமக்குள்ளே விரிய விரிய

மிதந்தபடி ஒளிர்கின்றன உன் கண்கள்

பொய்யே பொய்யெனவும்

மெய்யே மெய்யெனவும்.

**

3. பசி அதன் உணவு

பசிக்கு பசியை உணவென்று இட்டபின்

தொட்டி பூச்செடிகளின் பாஷை அறிந்த நாயொன்று

கழுத்து சங்கிலி குரல்வளை அழுத்த

காம்பவுண்ட் சுவர் மீது முன்னிருகால்கள் பாவி

எம்பி எம்பி பார்த்தபடி முணுமுணுக்கிறது

பெருந்தவிப்பின் ரகசிய சொல்லொன்றை.

இதோ என் நெஞ்சின் ஈரம் பேரன்பே

உன் செந்நாவால் நக்கிக்கொள்…

இயலாமையால் ஜோடிக்கப்பட்ட ஒரு பூங்கிண்ணத்தை

உன்முன் என்னால் வைக்கமுடியும்…

வெற்று வார்த்தைகள் ஒழுங்கற்று மிதக்கும்

நீர்த்த திரவமன்றி வேறென்ன அதில் நீ காணமுடியும் சொல்…

உயிர்க்கூட்டின் பசும்கிளிகள்

ஜீவரஸம் தேடி ரெக்கையுறிந்தபின்

தம் செவ்வலகில் ஏந்திவருகின்றன

பிரார்த்தனையின் சிறுதான்யம் ஒன்றை

திசைகளை உனக்கே சமர்ப்பித்து

வழிக்கொடிகள் அறுபட்டு

அம்மணமாய் நிற்கிறேன்

பசிக்கு பசியை உணவென்று இட்டபின்.


4. இசை நிறையும் பூக்காடு

தத்துவங்களின் புதைமேடு

ஓவியவொளிச்சிதறல்

அருமலர் கிளர்ச்சி

செவ்வான நல்லூற்று

மழைநின்ற நற்பொழுது

மண்சட்டி நெய்சோறு

பனங்காய் உருண்டோட

மாம்பிஞ்சு கோதல்

அத்திமர கள்

ஆலமர் செல்வி

இப்படியும் ஒரு குரல்

இங்கேயும் ஒரு வானம்

இவை நிறைந்த உன் கூடு

இசை நிறையும் பூக்காடு.

**


5.ஆயிரம் நீர்வீழ்ச்சிகள்

யாருமற்ற நதிக்கரையில்

ஒரு பட்சியுமற்ற மரத்தடியில்

கருநீல சிலையொன்று.

கூர்கொண்டு கடையப்பட்ட

என் தனிமையின் உதிரத்தை

ஒரு கிண்ணத்தில் நிரப்பி படையலிடுகிறேன்

வற்றா துரோகத்தின் தேநீரை

சுயமோகத்தின் பச்சிலை மிதக்க அருந்தியாடுகிறேன்.

பின்வந்தப் பொழுதில்

சிலையாகும் யெத்தனங்கள் தோல்வியடைய

நுண்மணல் அப்பிய பாதங்களை

வாஞ்சையுடன் தடவும் நுரையெடுத்து

ஊதி ஊதி மந்தரித்து

ஆழ்மன கேவலுடன் சபித்தபடி மௌனிக்க

நானாகும் யெத்தனத்தை கைவிடாத அச்சிலையோ

மெதுமெதுவாய் என்னை நெருங்குகிறது.

சொட்டி சொட்டி சிதறும்

மெய்ம்மையின் பாரம் பொறாமல்

சுழன்றாடும் தலையே

சற்றே திடம் கொள்…

ரமணரின் புன்சிரிப்பில் மிதக்கும்

புத்தனின் தாமரை

உனை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது

ஆயிரம் நீர்வீழ்ச்சிகளுடன்.

**

கவிஞர் திலீப் குமார லியனகே / அவர்கள் நம் அயல் மனிதர்கள் 14 / பத்திக் கட்டுரைத் தொடர் / – எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் திலீப் குமார லியனகே

கவிஞர் திலீப் குமார லியனகே

இக் கால கட்டத்தில் போட்டிகள் மலிந்து விட்டன. அனைத்திலுமே போட்டி. எல்லாவற்றிலும் வென்று விட வேண்டுமென மக்கள் ஓய்வெடுக்க நேரமற்று ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். நவீன காலம் அனைத்தையும் இலகுவாக்கித் தந்திருக்கிறது. ஆனால் அது இலகுவாக்கித் தந்த அனைத்தும் மனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

இவற்றுள் முக்கியமானது கல்வி. மூன்று வயது சிறு குழந்தையின் மூளைக்குள் திணிக்கப்படும் ஆரம்பக் கல்வி தொடக்கம், முதுகலைக் கல்வி முடிக்கும் மத்திய வயது மாணவர் வரைக்கும் கல்வியானது வேட்டை விலங்கொன்றென பின்னால் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அது தரும் அழுத்தமானது, மனிதர்களை இயல்பாக வாழ்வதற்கோ, பொழுதுபோக்குகளுக்கோ, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தவோ அனுமதிப்பதேயில்லை.

தற்கால பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்விக்கென கடன் பட்டேனும் எவ்வளவு பணம் கூடச் செலவழித்துவிடத் தயாராக இருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டுள்ள பாடசாலைக் கல்விக்கு மேலதிகமான பிரத்தியேகக் கல்வி வகுப்புக்கள் அநேகமானவை, பணம் சம்பாதிப்பதையே தமது இலக்காகக் கொண்டுள்ளதை இக் காலத்தில் காணக் கூடியதாக இருக்கிறது.

பல ஆசிரியர்கள், தாம் பணம் சம்பாதிப்பதற்காக வைக்கும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு வருகை தராத, தாம் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை கடுமையாகத் தண்டிப்பது குறித்தும், பரீட்சைகளில் புள்ளிகளைக் குறைத்து இட்டு அம் மாணவர்களைத் தோல்வியடையச் செய்வதையும் தினந்தோறும் செய்திகளில் பார்க்கிறோம். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு அடுத்தபடியாக உயர்ந்த ஸ்தானத்தில் மதிக்கும் குருவின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது. பணத்தின் பின்னால் நேரம் காலமற்று அவர்களில் பலரும் ஓடத் தொடங்கி விட்டார்கள்.

அவ்வாறான ஒரு ட்யூஷன் ஆசிரியரின் நிலைப்பாட்டையே கவிஞர் திலீப் குமார லியனகே சிங்கள மொழியில் கவிதையாக எழுதியிருக்கிறார். இந்த டியூஷன் ஆசிரியருக்கு கவிதை எழுதும் இளகிய மனம் வாய்த்திருக்கிறது. தினந்தோறும் கவிதை எழுதி விட நினைக்கிறார். ஆனால் நேரம் வாய்ப்பதில்லை. அவரது நேரமெல்லாம் பிரத்தியேக வகுப்பின் வெற்றிக்காக ஓய்வற்று செலவழிந்து கொண்டேயிருக்கிறது. அந்த மன அழுத்தம் இங்கு கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

இன்றொரு கவிதை எழுத வேண்டும்
சொல்லும்பொழுதே தாளொன்று
பாதி நிறுத்தப்பட்ட குறிப்பேடொன்று
உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச்சாலையில்
எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்
கவிதைத் தலைப்புகளே இங்கு
சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை

கரும்பலகையில் வெண்கட்டிபோல
தேய்ந்து போகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்

இலக்கிய வானில் கவிதையொன்றை
கற்பனை செய்கிறேன்
இரவில் வந்து அரைமயக்கத்தில்
நித்திரை கொள்கிறேன்
கண்களில் வீழ்கின்றன நிலாக் கிரணங்கள்
எவ்வாறு நாளை
கவிதையொன்றை எழுதுவேன்

—–

பிரத்தியேக வகுப்பின் ஆசிரியராக ஆக முன்பு, கவிதைத் தொகுப்பொன்றைக் கூட வெளியிட்டுள்ள கவிஞர், ட்யூஷன் ஆசிரியராக ஆன பின்பு, ஒரே ஒரு கவிதையையேனும் எழுதிடவோ, தனது திறமையை வெளிப்படுத்தவோ, தனது பொழுதுபோக்குக்கோ, தனக்குப் பிடித்ததைச் செய்யவோ நேரமும், வழியுமற்று நிற்பதை எடுத்துரைக்கிறது இந்தக் கவிதை.

இது அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். வேலை நெருக்கடி உருவாக்கும் இந்த மன அழுத்தம்தான் மாணவர்கள் மீது தண்டனையாகவும், குடும்பச் சண்டைகளாகவும், வன்முறைகளாகவும் பரிணமிக்கின்றன. இந்த மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் தைரியம் அனைத்து இளகிய மனங்களுக்கும் அத்தியாவசியமானது.

•••

mrishanshareef@gmail.com

அன்பாதவன் கவிதைகள் ( துபாய் )

download (4)

1.புலம் பெயர்த் தனிமையோடு சம்சாரிப்பவன்

புலம் பெயர்த் தனிமையோடு சம்சாரிப்பவன்
தினமும் வைக்கிறான் தீனி
புறாக்களுக்கு…
சில போது.. பருப்பு வகை அல்லது
கோதுமை ரவா..அரிசி மணிகள்
கூட்டமாய் வருபவை…
குதூகலமாய்த் திரும்பும்
”குர் குர்” சப்தம்…இசையா..ஓசையா
சாப்பிடும் போது சண்டை எதற்கு.. செல்லங்களே…

கொஞ்சலைக் கொஞ்சம் குறையுங்க மக்கா
தனியேக் கிடந்து தத்தளிப்பவனிந்த கவி

எது வைத்தாலும்.. பிசிறு விடாமல்
தின்று தீர்க்கும் பட்டுப் புறாக்கள்
என் சமையலில் உருவான குழம்பு சாதங்கள்
மட்டும் தீண்டப்படாமலே..கிடக்க
காய்ந்த சோற்றுக்குமியலை..வெறிக்கிறான்
நிராகரிப்பின் காரணம் புரியாத..கவி

2.ஏழு கடல் அவள் வண்ணமடா!

இவள் வங்கியில் பணிபுரிகிறாள்
“ஆம்பளங்களோடு பேசிக்கிட்டே
இருக்குமோ அந்தப் பொண்ணு”

அவள் ஊடகத் துறையில் ஒருத்தி
”எப்பப்பாரு ஆம்பளப்பசங்க கூடத்தான்
குடும்ப மானம் போகுது”

அவள் அரசியலுக்கு வருகிறாள்
”ம்ம்.. இந்தப் பதவி எப்படி கெடச்சதுன்னு
எங்களுக்குத் தெரியாதாக்கும்.”

அவள் முகநூலுக்கு வருகிறாள்
”சபாஷ்…
அருமை…
சூப்பர்…!
அழகுச் சிலை…
ஐ லவ் யூ!
எங்கு சந்திக்கலாம்
என்று சந்திக்கலாம்.”

இவள் இலக்கிய உலகில் நுழைகிறாள்
”எழுதுறாளாம் படிக்கிறாளாம்
மேடைப்பேச்சு வேற
பொட்டக் கோழி கூவியா
பொழுது விடியப்போவுது”

இவள் கலைத்துறையில் காலடி வைக்கிறாளாம்
”பொம்பள சிரிச்சாப் போச்சு
பொகயல விரிச்சாப் போச்சு”

அவளின் கற்பை சந்தேகி
உடலைச் சூறையாடு

பொதுவெளியில் ஆபாசப் படம் தெளித்து
தற்கொலைக்குத் தூண்டு

நடுச்சாலையில் அடித்துத் துவை

பொது இடத்தில் கொலை செய்
அந்தரங்கங்களில் சிகரெட்டால் சுடு
கடப்பாரை செருகு
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்து

சொற்களால் காயப்படுத்து
கடித்துக் குதறு

அனைத்தையும் சமாளிப்பாள்
ஒரு புன்னகைக் கீற்றுடன்
ஆனால்… தெளி!
உன் முனை அங்குல ஆணதிகாரமும்
நுழைய முடியாது
அவள் சம்மதமின்றி…

களித்தொகை

க.

பாலை நெய்தல்,முல்லை,குறிஞ்சியெனப்
பயணிக்கும் பாணன்
வெக்கை வெயிலில் காத்திருக்கிறான்
மருதத்தின் வாசல் திறக்குமென…
அறைந்து சாத்தப்பட்டதே கதவம்.. அந்தோ!
சுவடிகளில் சுமந்து வந்த காதலை
முற்றத்தில் வீசி வெளியேறியவனுக்கது
கசந்த காலம்

வருவதாய்.ச் சொன்னவன் விழிகளில் நிற்க
வெளி.. உள்ளில் புழுக்கம் சுழல
கதவமாய்க்காத்திருக்கிறாள் பாடினி
சுவடிக் கவிதைகள் காய்ந்து சருகாக….
க உ
.காற்றில் திறந்தது கதவம்
தென்றலாய் பரவினான் கூத்தன்
போர்க்களத்து புரவிக்குண்டோ வேகத்தடை
பசியா[ற்]றி பகிர்ந்த பாடல்களில் சொக்கி
பாதம் பிடித்து போதம் பொங்க
மோக விரல்கள் தீண்ட
முனகல்களில் தெறிக்குமோ கவிப்பரல்
கிறக்க இறுக்கத்தில் கசங்கிக் கிடக்கிறாள் விறலி…
கவிதைகள் வழியும் சுவடிகள் சொல்லுமிது
இசைந்த காலம்

ஒற்றைச் சொல்
ஒற்றைச் சொல் தான்..!
பொங்க வைத்தது சுனாமியாய்
பூகம்பமாய்ச் சிதைத்தது..

க்‌ஷண நொடியில் மறைந்த வசீகரம்
வெளிப்பட்ட நம் சுயம்
சூனியக்காரியும் பெரும்பூதமுமென..
புல்லட்டைப் போல சீறி வந்த சினத்தில்
கவனிக்கத் தவறினோம் கொடுநாக நஞ்சனலை

அருவருப்பில் சிந்திய வார்த்தைகள்
பாதரசமாய் உருண்டோடி பற்ற வைத்தன
இத்தனை நாளும் அடைகாத்த அந்நியோன்யத்தை..

அம்பறாவிலிருந்து பறந்த கணைகள் கருகி வீழ
வதைத்த வார்த்தைகளால் கலைந்த கனவு
இடைவெளியின் இருட்டாழத்தை அளக்க ஏலுமோ
கரைகளில் பிரிந்து தவிக்கும் மனசால்..

வெப்பந்தாங்காமல் மவுனக்குளத்தில் சிறைப்புக
வியர்க்கிறது ஞானம்:
துப்பியிருக்க வேண்டாமோ வெறி மிருகமாய் நம்மை
விழுங்கிய அந்த ஒற்றைச் சொல்லை…?

****

பள்ளியறை ( சிறுகதை ) அறிமுகப்படைப்பாளி / ( பிரவின் குமார்.S

images (2)

அந்த அறைக்குள் நுழைந்து பத்து நிமிடங்களுக்கு மேல் தாண்டிவிட்டது. படபடப்பும் பயமும் என்னை நச்சரித்துக்கொண்டிருந்தன. என் மணிக்கட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் கை கடிகாரத்தின் வினாடி முட்களை பார்க்கும் ஒவ்வொரு சமயமும் இங்கிருந்து நகர்ந்து விடலாமா…? என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றி தோன்றி மறைந்தது. குடித்தனம் செய்வதற்கான எந்த ஒரு உபகாரணங்களும் இல்லாமல் காட்சியளித்தது அந்த அறை. பாதியாக திறந்து விடப்பட்டிருந்த சாரளத்தின் வழியாக உள்ளே நுழைந்த சூரிய கதிர்கள் மட்டுமே அந்த அறையை முகாமிட்டுகொண்டிருந்தது. படிய வாரிய என் தலைமுடியை சரி செய்வதாய் நினைத்து திரும்ப திரும்ப வாரிக்கொண்டிருந்த சம்பவங்கள் என் எதிரில் மாட்டப்படிருந்த கண்ணாடியை பார்த்ததும் ஞாபகத்திற்கு வந்தன. இப்போதைய சூழலில் வீட்டின் நினைவுகள் எதுவும் தோன்றாமல் இருப்பதே நல்லது. அவள் வருவதற்கு முன்பு கண்ணாடி முன் நின்று உன்னை நீயே புதுபித்துக்கொள் என்று மனது உசுப்பேற்றிக்கொண்டிருந்தது. என் முகத்தில் வழிந்துகொண்டிருக்கும் வேர்வையையும் பதற்றத்தையும் கண்ணாடி முன் நின்று பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன…?

நொடிப்பொழுதில் சூரிய வெளிச்சம் அந்த அறையை தாக்கியது. அவளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேனா…? இல்லை எனக்காக அவள் காத்துக்கொண்டிருந்தாளா…? என்பதை அந்த அறை எனக்கு கற்று தரும் என்று நினைத்துக்கொண்டேன். விரித்த தலைமுடியுடன் அமைதியாக உள்ளே வந்தவள் சிறிதும் யோசிக்காமல் சுவர் ஓரமாக வைக்கப்படிருந்த பாயை விரித்து தரையில் கிடத்தினாள். பல தலைகளை தாங்கிய தலையணைகள் இரண்டை சுவற்றின் அலமாரியில் இருந்து எடுத்து கீழே போட்டாள். அவள் முகம் பார்க்க முடியாதவனாய் அவள் உள்ளே வரும் பொழுது எந்த நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேனோ அதே நிலையில் தான் இன்னமும் அமர்ந்திருந்தேன். அவள் தயாராகிக்கொண்டிருந்தாள். கூந்தலை பின்னந்தலையில் சுற்றி அதோடு சேர்த்து ஹேர் பேண்ட் ஒன்றை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். அவளின் செய்முறை ஆப்ரேஷன் தியேட்டருக்கு செல்ல ஆயுத்தமாகும் டாக்டர் போலவும், பாவடையை தூக்கிக்கொண்டு சேற்றில் இறங்கி நாற்று நடுவதற்கு தயாராகும் பெண்களின் செய்முறை போலவும் இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சுடிதார் ஒன்றை அணிந்துகொண்டு அதற்கு தோதுவாக பச்சைநிற பேண்டையும் அணிந்திருந்தாள். துப்பட்டாவை யாருக்கு தானமாக கொடுத்தாளோ…! வளையல், தோடு, சங்கிலி, மூக்குத்தி ஏன் நெற்றிபொட்டை கூட அவள் அணிந்திருக்கவில்லை ஆபரணங்கள் அற்ற ஒரு பெண்ணை முதல் தடவையாக என் வாழ்க்கையில் பார்க்க நேர்ந்தது. எந்த ஒரு அம்சமும் தேவையில்லை அவள் கண்விழி கவர்ச்சியே என்னை ஆக்கிரமித்துகொண்டிருந்தன.

“அங்கேயே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படி…? இங்க வா”

அதிகாரத்தின் உச்சஸ்தாயில் அவளின் குரல் என்னை நிமிர்ந்து பார்க்க செய்தது. மெதுவாக நடந்துசென்று அவள் எதிரில் நின்றேன். இரு கால்களையும் மடிக்கி அவள் அமர்ந்திருந்த நிலை தரையோடு தரையாக வழுக்கி செல்லும் டால்பீனை போல் இருந்தது. அந்த நிலையிலேயே நான் எதிர்பாராத வண்ணம் என் கையை பிடித்து அமர வைத்தாள்.

“ஆரம்பிக்கலாமா…?”

முழுமையாக அவள் கண்களை வெறித்து பார்த்தேன். என் உடல் உஷ்ணத்தை தனித்துவிடும் அருவியின் குளிர்ச்சியை என் மேல் தெளித்தது போல் இருந்தது அவளின் பார்வை. ஆரம்பிக்கலாமா…? என்று அவள் எதை சொன்னாள்…! அவளிடம் பேச எத்தனித்த பொழுது என்னிடம் பேசுவதற்கு யாரோ என் கைபேசிற்க்கு அழைத்தனர்.

வகுப்பறைக்குள் செல்வதற்கு முன் தாமாகவே கைபேசியை அணைத்துவிட்டு செல்லும் பழக்கத்தை இன்று ஏனோ இவ்வறையில் செல்வதற்கு முன் கடைபிடிக்க மறந்துவிட்டேன். என் கைபேசியை எடுத்து பார்த்தேன். பின்னால் இருந்து என் கழுத்தை நெருக்கிக்கொண்டு எடுத்த புகைப்படத்துடன் கைபேசி திரையில் பிரதிபலித்துக்கொண்டே அழைத்திருந்தான் என் தம்பி. நான் எங்கு இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்டு தான் என்னை அழைக்கிறானோ…! என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள போதிய நேரம் என்னிடம் இல்லை.

“ஹலோ”

“டேய் அண்ணா ஒரு சின்ன டவுட் C++ புரோகிராம்ல அல்கோரித்தம் எப்படி எழுதுறது…?”

“நான் M.E. படித்துகொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறானா எனபது தெரியவில்லை ஆனால் அவன் பேசிய திசையில் இருந்து வந்துகொண்டிருந்த சலசலப்பை வைத்து தன் நண்பர்களுடன் குழுவாக படித்துகொண்டிருக்கிறான் என்பதை மட்டும் என்னால் யூகிக்க முடிந்தது.

“C++ புரோகிராம் அல்கோரித்தம் எழுதனுமா? டேய் அது நான் எப்போவோ படிச்சது இப்போ கேட்டா எப்புடிடா ஞாபகத்துல இருக்கும்”

“ஸ்டார்டிங் வித் கோடிங் லாஜிக் ப்ளஸ், அண்ட் எண்டிங் வித் சின்டாக்ஸ்”

“எழுத முடியாத நிலையில் நின்று போன பேனாவை மையை பீய்ச்சி வெளியே சிதறிவிட்டது போல் அவளிடமிருந்து பதில் வந்தது. எதை தேடி நான் வந்தேன் என்பதை இத்தருணத்தில் என்னால் உணரமுடியவில்லை இவள் படித்த பெண்தானா என்கிற கேள்வி மட்டுமே என் மூளைக்குள் சுழன்றுகொண்டிருந்தது.

“உங்களுக்கு எப்படி தெரியும்?”

“நான் பர்ஸ்ட்டு இயர்ல படிச்சு இருக்கேன்”

மறுமுனையில் என் தம்பி “ஹலோ… ஹலோ…” என்று கத்திக்கொண்டிருந்தான். அவள் சொன்ன பதிலையே அவனுக்கு திருப்பி கொடுத்தேன். “தேங்க்ஸ் டா அண்ணா” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். ஒவ்வொரு வேசிகளுக்கும் ஏதோ ஒரு வரலாறு அவர்களின் வாழ்க்கை பெட்டகத்திற்குள் அடைக்கப்படிருப்பதை முதல் முறையாக உணர்ந்தேன்.

“நீங்க இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்ஹா…?”

நானும் படித்த பெண் தான் என்கிற கர்வம் அவள் உதட்டை சுழிக்கும் அசாத்திய சிரிப்பில் தெரிந்தது.

“ஆமா”

என்னிடமிருந்து அடுத்து வர இருக்கும் கேள்வியை அவள் யூகித்துகொண்டிருப்பாள். அவளை ஏமாற்ற நான் விரும்பவில்லை… நான் கேட்ட நினைக்கும் கேள்வியை மட்டுமல்ல அவள் நான் அடுத்து கேட்பதாக நினைத்துகொண்டிருக்கும் கேள்வியையே கேட்டேன்.

“இன்ஜினியரிங் படிச்சு இருக்கீங்க நீங்க எப்புடி இங்க…?”

“அது உனக்கு தேவ இல்லாத விஷயம். உனக்கு ஒரு மணி நேரம் தான் டைம் இருக்கு அதுக்குள்ள நீ வந்த வேலைய முடிச்சுட்டு போ…”

நான் எதற்காக வந்தேன்…? அதை தான் அவள் எனக்கு நினைவுபடுத்தினாள். கடிகாரத்தை வட்டம் அடித்துகொண்டிருக்கும் வினாடி முட்களின் ஒவ்வொரு நகர்வையின் முக்கியத்துவத்தை அவள் அறிந்திருப்பாள் போலும். கழுத்தை திருப்பி கடிகாரத்தை கூர்ந்து பார்த்த தொனியிலேயே தெரிந்தது.

“என் கூட படுக்கனும்னு தானே வந்த… அப்புறம் என்ன?”

என் நெற்றியில் வடிந்த வேர்வையை துடைத்துக்கொண்டேனே தவிர அவளுக்கு எந்த ஒரு பதிலையும் நான் கொடுக்கவில்லை.

“இது தான் முதல் தடவையா…?”

தலையை தொங்கவைத்துகொண்டு “ம்” என்று தலை அசைத்தேன்.

“சரி விடு நான் சொல்லி தரேன்”

அருகே வந்து என் சட்டை பொத்தான்களை கழற்ற தொடங்கினாள். நான் சட்டென்று சுதாகரித்துக்கொண்டு எழுந்து நின்றேன். சாய்வாக இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்திருந்த நிலையிலேயே நிமிர்ந்து என்னை பார்த்து சிரித்தாள்.

“ஐயோ…! இது என்ன சின்ன கொழந்த மாதிரி காசு கொடுதுருக்கல அது வேஸ்ட் ஆனா பரவாலையா…?”

“பரவால நான் கிளம்புறேன்”

அவ்விடத்தை விட்டு நகர தொடங்கினேன் அவள் திரும்பவும் என் மணிக்கட்டை பிடித்து கீழே அமர வைத்தாள்.

“சரி போறது தான் போற ஒருமணி நேரம் கழிச்சுட்டு போ”
அவள் உடலை தீண்டாமல் வெறும் அறையுடன் எப்படி அந்த ஒருமணி நேரத்தை நான் காலம்கடத்துவது. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தேன் விழிகளில் கெஞ்சல் தாண்டவமாடிக்கொண்டிருந்தது.

“ஏன்…?”

“இன்னும் பத்து நிமிஷத்துல அந்த வார்ட் மெம்பெர் காளிதாசு கைல பாட்டலோட வந்துடுவான். அவனுக்கு அஞ்சு மணிநேரம் கொடுத்தா கூட பத்தாது. அவன் குடிக்குறதுமட்டுமில்லாம என்னையும் குடினு இம்ச பன்னுவான்”

“சரி நான் ஒருமணி நேரம் கழிச்சு போனதுக்கு அப்புறம் அவரு திரும்பி வரமாட்டாரா?”

“அப்படி இல்ல பக்கத்து ரூம்ல பிருந்தா இருக்கா அவளுக்கு இந்நேரம் டியூட்டி முடிஞ்சிருக்கும். அவ ஓரளவு சமாளிச்சுடுவா ஆனா என்னால முடியாது. அதுவும் அந்த ஆளு என்ன பார்த்தான்னு வெச்சுக்க நான் தான் படுக்க வரனும்னு ரொம்ப தொல்ல பன்னுவான்”

நான் கீழே குணிந்துகொண்டு உதடு மட்டும் அசையும்படி மெளனமாக சிரித்தேன். அதை அவனிக்கவும் அவள் தவறவில்லை.

“என் நிலமைய நினைச்சா உனக்கு சிரிப்பா இருக்குதுல”

“ச்ச… ச்ச… அப்பிடியெல்லாம் இல்ல சும்மா தான் சிரிச்சேன் தப்பா எதுவும் நினைக்காதீங்க”

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு, ஐயோ பாவம்னு…! பொய்யா நடிக்காம இருந்தியே அதுவரைக்கும் சந்தோசம்”

இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் மறுபடியும் கேட்க வேண்டும் என்று நினைத்த அந்த கேள்வியே என் மனதுக்குள் சுழன்றுகொண்டிருந்தது. இனி அந்த கேள்வியை கேட்க எனக்கு துணிவில்லை. அவ்வப்போது கை கடிகாரத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இன்ஜினிரியரிங் படிச்சுட்டு இவ ஏன் இந்த தொழில்க்கு வந்தானு யோசிச்சுட்டு இருக்க அதானே”

காரணம் தெரிந்தால் போதும் என்றிருந்தது. இதை நினைத்து வீட்டிற்கு சென்றும் குழம்ப்பிக்கொண்டிருக்க தேவையில்லை. அவளை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே ஆம் என்று தலையாட்டினேன்.

“உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா படிக்காதவங்கள விட படிச்சவங்க தான் நிறைய பேரு இங்க வராங்க, படிச்சவங்க எல்லாம் எதுக்கு இங்க வராங்கனு நாங்க யாரும் நினைக்குறது இல்லையே. ஏன்… நீ கூட படிச்ச பையன் தானே…”

ஓராயிரம் ஊசிகள் ஒன்று சேர்ந்து என் ஆண்மையையே குத்தி பிய்த்தெடுப்பது போல் இருந்தது. படித்தவள் இத்தொழிலை செய்கிறாள் என்று இருக்கும் பொழுது அதில் ஆச்சரியம் கலந்திருக்குமென்றால் அவளை தேடி தானே படித்தவனும் வருகிறான் இதில் ஆச்சரியபடுவதற்கு என்ன இருக்கிறது என்று எப்படி புறம் தள்ள முடியும்…?

“இல்ல என் ப்ரண்ட்ஸ் தான் இந்த இடத்துக்கு அனுப்புனாங்க”

“சும்மா உன் ப்ரண்ட்ஸ் மேல பழிய போடாத. உனக்கு செக்ஸ் வேனும் அதனால இந்த இடத்துக்கு வந்திருக்க அது தான் உண்ம”

உண்மை தான்… இந்நேரத்தில் மனதிற்குள் என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. படித்த பெண் என்று தெரிந்தும் இவளிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மனமில்லையே அது ஏன்..?. கலவிக்கும் கல்விக்கும் இடையில் கையசைத்துகொண்டிருக்கும் முற்றுபுள்ளியை வரையறுத்துகொடிண்டிருப்பத்தில் தான் மனிதனின் ஒழுங்கீனம் முழுமை அடைந்திருக்கிறதோ… ஆனாலும் எனக்கு விடை வேண்டும் இவள் எதற்காக இத்தொழிலுக்கு வந்தாள். வேலையின்மை திண்டாடத்ததின் பிரதிபலிப்பாக இவள் இயங்கிக்கொண்டிருக்கிறாளா…?

“உங்களுக்கு எவ்வளவோ ஜாப் ஆப்பர்டூனிடிஸ் வந்திருக்குமே அது எல்லாம் விட்டுட்டு ஏன் இந்த தொழில் செய்யுறீங்க…?”

“என்னோட சேர்த்து இந்த காம்பௌண்ட்ல எட்டு பேரு இருக்கோம், நாங்க எட்டு பேருமே இந்த தொழில் தான் செய்யுறோம். அதுக்காக எங்களுக்கெல்லாம் படிப்பறிவே இருக்காதுனு முடிவு பண்ணிட்டா அதுக்கு நாங்க பொறுப்பு ஆகா முடியுமா…? ஒவ்வொரு தாசிக்கும் ஒரு இஸ்டிரி இருக்கு எவ்ரிதிங் வில் பி ஹாபண்ட் இன் டெஸ்டினி”

அவள் சொல்வதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இன்று கால் விரித்துகொண்டிருக்கும் தாசிகள் ஏதோ ஒரு காலகட்டத்தில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளாக தானே வளர்ந்திருப்பார்கள்.

“விதி தான் உங்கள தாசியா மாத்தி இருக்குனா அப்பிடி உங்க லைப்ல என்ன தான் நடந்தது?”

“என் அப்பா வாங்குன கடன அடைக்குறதுக்காக இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம், வைத்துல புள்ளைய கொடுத்துட்டு ஓடி போனவனோட குழைந்தைய படிக்க வைக்குறதுக்காக இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம், என்ன கேள்வி கேட்க ஆளில்லாத அனாதையா இருக்குறதுனால இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம் இல்ல பணத்தாசைல இந்த தொழில்ல இறங்கி இருக்கலாம். இதுல எந்த காரணம் எனக்கு பொருந்தும்னு நினைக்குறியோ அத நீயே தேர்ந்தெடுதுக்கோ…”

“ஐ டோன்ட் அக்ரி திஸ்”

“ஐ டோன்ட் மைன்ட் இட், மணி வில் பி ஹோல்ட் எவ்ரிதிங். ஐ யம் நாட் ஒன்லி ய எக்ஸ்சப்ஷன்”
அவள் முகபாவனையிலும் குரலிலும் ஆதங்கத்தின் வெளிபாடுகள் மேலோங்கியிருந்தது. அவளுடன் விவாதித்து என்ன பயன் சற்று மௌனமாகவே உட்கார்ந்திருந்தேன். பின்பு அவளாகவே பேச்சை தொடர்ந்தாள்.

“ம்… எதுவும் பன்னாம ஒன் அவர் வெட்டியா உட்கார்ந்துட்டு போற முதல் கஸ்டமர் நீ தான். சரி ரேவதி அக்கா கிட்ட சொல்லி நான் வேணும்னா உன் பணத்த திருப்பி கொடுத்துடுறேன் சரியா. ஐ யம் எ ஜஸ்டிபிகல் பேர்சன்”

“இல்லைங்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”

இம்முறை அவள் சிரிப்பின் ஒலியை அந்த அறை சுவறுகள் உள்வாங்கிக்கொண்டு மீண்டும் எதிரொலித்தது. தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தாள். நான் கொடுத்த தொகை அந்த சிரிப்பிற்கு ஈடாகி இருக்காது என்பதை மட்டும் என் உள்மனம் உணர்த்தியது.

“நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் வாங்க… போங்கனு… ரொம்ப மரியாத கொடுக்குற. ஓ…! பர்ஸ்ட் டைம்ல…. அதான். நாலஞ்சி தடவ வந்துட்டேனு வெய்யி ஏ தேவ்டியா இப்படி திரும்பு அப்பிடி திரும்புனு நீயே என்ன வெளுத்து வாங்குவ”

“இல்லைங்க நான் அப்படி எல்லாம் பன்னமாட்டேன்”

“அப்போ அடுத்த தடவ வரதுக்கு ரெடியா இருக்கேனு சொல்லு”

அசட்டு சிரிப்பை உதறிக்கொண்டே மீண்டும் கடிகாரத்தை பார்த்தாள்.

“சரி… சரி… ஒன் அவர் முடிஞ்சுடுச்சு இப்போ நீ கிளம்பலாம்”

அந்த அறையை விட்டு சமதளத்திற்கு வந்தும் கூட ஏதேதோ திசையில் இருந்து அவளின் பேச்சுக் குரல் என்னை பின்தொடர்ந்துகொண்டே இருந்தது. தெரு முனையில் நிறுத்திவைத்திருந்த எனது காரை ஸ்டார்ட் செய்து வீட்டிற்க்கு புறப்பட்டேன். என்னை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களிலும் அவள் ஸ்தாபித்து கொண்டிருந்தாள். இமை மூடி திறப்பதற்கு முன்பே அவள் நினைவலைகள் என் மூலைக்குள் அவ்வப்போது கடந்துகொண்டிருந்தன. அடுத்த நாள் என் கல்லூரி வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போதே அவள் வாழ்ந்துகொண்டிருக்கும் இல்லை… புரண்டுகொண்டிருக்கும் அறையை ஒப்பிட்டு பார்த்தேன். தியானம் செய்வதற்கோ… சங்கீதம் படிப்பதற்கோ… எந்த ஒரு விருந்தாளியும் அவள் அறையை குத்தகைக்கு எடுப்பதில்லை. முனகல்களினூடே கானும் இச்சைக்கு அவளை மட்டுமல்லாமல் அந்த அறையையும் சேர்த்து அல்லவா வாடகைக்கு எடுத்துகொள்கிறார்கள். அவளை சந்திக்க வேண்டும் என்று தோன்றிய அடுத்த நொடி என் வகுப்பறைக்கு வெளியே இருந்தேன்.

மற்றவர் பார்வைக்கு தரகராக தெரியும் ரேவதி என் கண்ணிற்கு மட்டும் பாதுகவலாளியாக தெரிந்தாள். நேற்று சந்தித்த அதே பெண் தான் வேண்டும் என்று விடாப்படியாக நின்றிருந்தேன். பெரிய கஷ்டமரிடம் டியூட்டியில் இருப்பதால் திரும்பி வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்றும் வேறொரு பெண்னை அனுப்புவதாக அவள் வாஞ்சையுடன் கூறினாள். நேரத்தின் கட்டுப்பாட்டில் நான் இயங்கிக்கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பதாக சொல்லிவிட்டேன். அவ்வப்போது ஒரு சில செக்ஸ் விரும்பிகள் ரேவதியை அழைத்து அவளிடம் பணத்தை திணித்து சென்றுகொண்டிருந்தனர் அவள் பம்பரமாய் சுழன்றுகொண்டே கஸ்டமர்களை கவனித்துக்கொண்டிருந்தாள்.

நீண்ட நேரத்திற்கு பிறகு நான் தேடி வந்தவளின் அறை காலியானது இப்பொழுது அந்த அறையை ஒருமணிநேரத்திற்கு நான் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்றும் ரேவதி கூறினாள். ரேவதியின் கையில் ஆயரத்து ஐநூறை திணித்துவிட்டு அந்த அறையினுள் செல்வதற்கு தாயாராக நின்றிருந்தேன். குண்டு உடம்பை பேணிகாத்தவன் தனது காலை மடக்கி வெள்ளை வேஷ்டியை இறுக முடித்துக்கொண்டே வெளியே வந்தான். அரசியல்வாதி என்னும் அறிகுறியுடன் பட்டையான மோதிரத்தை தனது விரல்களில் விளம்பரம் செய்திருந்தான். மயிரற்ற வழுக்கை தலை பிரகாசித்தது “வரேன் ரேவதி” என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்றான். நான் எந்த தயக்கமுமின்றி உள்ளே சென்றேன்.

துண்டு செய்தித்தாளில் ஏதோ ஒன்றை பொட்டலம் செய்து சுவர் ஓரமாக வைத்திருந்த பாலத்தீன் கவரில் அதை திணித்துகொண்டிருந்தாள். அநேககமாக வாடிக்கையாளர்களின் வருகை கணக்கை பதிவு செய்வதற்கு அந்த பொட்டலங்கள் சாட்சி கூறலாம். அந்த அறை முழுவதும் பிராந்தி வாடம் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவள் நேற்றைவிட இன்று சோர்வாக காணப்பட்டாள் கீழே சிதறிக்கிடந்த காரா பூந்தி துகள்களை துடைப்பத்தால் தூரே துறத்திக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து என்னை பார்த்தாள் ஒரு கணம் நேற்றைய தினம் பார்த்த முகம் இதுவல்லவே என்று தோன்றியது. மண்டியிட்டே கிரிவலம் சுற்றிய சோர்வு அவள் முகத்தில் அடிக்கோடிட்டுகாட்டியது. அதற்கு காரணம் சற்று முன் வந்தவன் அவள் உடலை தன் வசமாக்கி பிராயணம் செய்து கொண்டிருந்ததாக தான் இருக்கும்.

“வா ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க… எனக்கு தெரியும் இன்னைக்கு நீ வருவேனு”

“எப்புடி தெரியும்..?”

“நேத்து தான் எதுவும் நடக்கலியே… அதான் இன்னைக்கு எப்புடி இருந்தாலும் என்ன அனுபவிச்சே ஆகனும்ங்குற முடிவோடு வருவேனு நினைச்சேன் கரக்ட்டா வந்துட்ட..”

“அதுக்காக தான் இன்னைக்கு வந்ததிருக்கேனு நீங்க நினைக்குறீங்களா…?”

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை கதவை தாழ்ப்பாளிட்டு உரிமையுடன் என் கையை பிடித்து கீழே அமரச் செய்தாள். பிராந்தி வாடம் என்னையே சுற்றிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன் அவள் உடம்பில் இருந்து தான் வருகிறதா என்பதை என்னால் சரியாக கணிக்கமுடியவில்லை. இன்று அவள் கருப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள் அதுவும் தொலதொலவென்று இருந்தது.

“தோ பார்… இனிமே இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம். என் பேரு முத்தரசி என்ன முத்துனு கூப்பிடு சரியா…?”

அவள் சொன்ன பெயர் என் பாட்டியின் நினைவலைகளை என் மனதிற்குள் சிறு சிறுவாக தோண்டிக்கொண்டிருந்தது.

“முத்தரசி” என் பாட்டியோட பேரு எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும் இப்போ அவங்க இல்ல இறந்துட்டாங்க..”

“ஓ…! அதுக்காக என்ன உன் பாட்டியா நினைக்குறேனு சொல்லாத எனக்கு ஒன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகல… சரி உன் பேரு என்ன…?”

“என் பேரு பாரிவேந்தன்”

என் பெயரை மட்டுமல்ல என்னையும் சேர்த்து ரசித்துக்கொண்டிருப்பது அவள் பார்வையில் தெரிந்தது.

“பாரிவேந்தன் நல்ல தமிழ் பேரு, சரி இன்னைக்கும் நீ என்ன மேட்டர் பன்ன போறது இல்ல… அப்போ எதுக்கு தான் வந்த?”

“நான் எதுக்கு வந்தேனோ அத நான் கேக்குறதுக்கு முன்னாடி நீயே சொல்லிட்ட”

நகம் முளைக்காத கட்டை விரலை கடிப்பது போல் பாவனைசெய்துகொண்டே யோசிக்க தொடங்கினாள்

“அடப் பாவி…! என் பேரு தெரிஞ்சுகவா என்ன பார்க்க வந்த… ஃப்ராடு பையா…”

வலித்தும் வலிக்காததுமாக தனது முஷ்டியால் நங்கென்று என் மண்டையில் கொட்டினாள். உரிமையாக அவள் பெயர் சொல்லி அழைக்கவேண்டுமென்று தோன்றியது. எனது சங்கோஜத்தை தூரே வீசி எரிய முடியாமல் தவித்துகொண்டிருந்தேன் எப்படியோ முயற்சி செய்து அவளை பெயர் சொல்லி அழைத்தேன்.

“முத்து…!”

“ம்… சொல்லு பாரி”

நான் பெயர் சொல்லி அழைத்ததை அவள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் சகஜ நிலையில் பேசுவாள் என்று நினைக்கவில்லை. அவள் எதிர்பார்த்ததும் அது தானோ…!

“சரி என்ன பத்தி என்ன நினைக்குற…?”

“என்னடா கட்டிக்கப்போற போற பொண்ணுகிட்ட கேக்குற மாதிரி கேக்குற… சரி சொல்லுறேன். நான் இந்த அறைய விட்டு வெளியே போனது இல்ல பாரி ஆனா பல மனிதர்கள நான் சந்திச்சிருக்கேன். நாலஞ்சு தடவ என் கூட படுத்தவன் கூட என் பேரு தெரிஞ்சுக்க விரும்புறது இல்ல. ம்… அது எதுக்கு அவங்களுக்கு. அதுக்காகவா என்ன தேடி வரங்க.. என்னோட பேர தெரிஞ்சுக்க தான் என்ன பார்க்க வந்தேனு சொன்ன பார்த்தியா அதுல தான் உன்னோட கேரக்டர் தெரியுது. நீ நடிக்க விரும்பாத மனுஷன்னு..”

“ஆனா ஆரம்பத்துல நானும் அதுக்காக தான் வந்தேன் முத்து.. இப்போ தோனமாட்டேங்குது”

“தெரியும் பாரி நானும் அதையே தான் சொல்லுறேன். மத்தவங்க பார்வைக்கு நீ வெகுளியா இருக்குற மாதிரி தெரியலாம் ஆனா என்ன கேட்டா நீ வெளிப்படையா இருக்கேனு தான் சொல்லுவேன். உன்கிட்ட சொல்லுறதுக்கு என்ன இந்த இடத்துக்கு வராத ஆளுங்களே இல்ல. கூலி வேல செய்யுறவனும் வந்துருக்கான், லட்ச லட்சமா சம்பாதிக்குறவனும் வந்துருக்கான். கண் டாக்டரும் வந்துருக்கான், கண்ணு தெரியாதவனும் வந்துருக்கான், பத்தாம் கிளாஸ் படிக்குற பையனும் வந்துருக்கான், காலேஜ் பிரபோசரும் வந்துருக்கான். பார்த்துட்டேன் பாரி இது தான் மனுஷங்கன்னு நான் பார்த்துட்டேன்… ஆனா என் கிட்ட முகம் கொடுத்து பேசுற மனுஷன இப்போ தான் பாக்குறேன்”

சொல்லிமுடித்துவிட்டு தன் பார்வையை வேறு எங்கேயோ திருப்பிக்கொண்டாள். விழிகளில் கண்ணீர் சுரந்து எத்தனை வருடங்கள் ஆகிறதோ. வெளி வருவதற்கு முன் சுதாகரித்துக்கொண்டு சிரித்து பேச தொடங்கினாள்.

“அது சரி எல்லாரும் ஏன்டா என்னையே தேடி வரீங்க நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் சொல்லு…”

சட்டென்று எழுந்து நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் சாயலில் சிரித்த முகத்துடன் நின்றாள். அவள் அழகை வர்ணிப்பதற்கு நான் கவிஞனாக பிறக்கவில்லையே என்று முதல் தடவையாக வருந்தினேன்.

அவளுடனான சந்திப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. தோன்றும் நேரங்களில் எல்லாம் அவள் அறையை தஞ்சம் அடைந்தேன். என்னென்னவோ பேசினாள். ரேவதி அக்கா அங்குள்ள தாசிகளை கவனித்துகொள்வதாகவும் மாதந்தோறும் போலீஸ்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து விபச்சார விடுதியை பேணிகாப்பதாகவும் கூறினாள். அனைவருக்கும் சேர்த்து சமையல் செய்து அவளே ஒவ்வொரு அறைக்கும் எடுத்து வந்து கொடுத்து, அவரவர் பங்கை பிரித்துகொடுப்பதாகவும் கூறினாள். ரேவதி தான் இங்கு கணக்காளர், பங்குதாரர், பாதுகாவலர் எல்லாமும். ரேவதியை பற்றி அவள் சொன்ன எந்த ஒரு காரணமும் என் மனதிற்கு ஏற்புடையதாக தோன்றவில்லை ஏதோ ஒரு வகையில் அனைவரையும் பார்த்துக்கொள்கிறாளே என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

“ஏன்டா தினமும் இவ்ளோ காசு செலவு செஞ்சு என்ன வந்து பாக்குறியே… உங்க வீட்ல ஏன் இவ்ளோ காசு செலவழிக்குறனு கேட்க மாட்டாங்களா…?”

“எனக்கு பணம் ஒரு விஷயமே இல்ல முத்து. அப்பா திருச்சில இன்ஸ்பெக்டரா இருக்காரு. பேஸிகளாவே நாங்க வசிதியான ஃபேமிலி தான் அதனால பணம் ஒரு பிராப்லமா என் ஃலைப்ல இருந்ததே இல்ல. எனக்கும் என் தம்பிக்கும் அக்கௌன்ட் இருக்கு அதுல எவ்ளோ இருக்குனு இப்போ வரைக்கும் எனக்கு சரியா தெரியாது. எவ்ரி மந்த் அப்பா எங்க ரெண்டு பேரு அக்கௌன்ட்லியும் கேஷ் போட்டுடுவாரு”

“ம்… கேட்க ஆள் இல்லாததுனால தான் உன் இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு திரியுற என் ஃலைப்லியும் ஒரு இன்ஸ்பெக்டர் வந்தான் பாரி. விடியுறவரைக்கும் செஞ்சுட்டே இருந்தான்டா அவன் பர்ஸ்ல இருந்த மொத்த காசையும் என்கிட்ட கொடுத்துட்டு தான் போனான். அதோட விட்டானா செயின கழட்டி கொடுக்குறான், மோதிரத்த கழட்டி கொடுக்குறான், மனசுல பெரிய வள்ளல்னு நினைப்பு”

இரண்டு கைகளையும் வில்லாய் வளைத்து சோம்பல் முறித்தாள். அவள் உடல் வளைவுகள் கவர்ச்சியின் உச்சிற்கு சென்றது. அதை ரசிக்க வேண்டும் என்று நினைத்தும் கூட என் பார்வையை வேறு திசைக்கு திருப்பினேன். சிறிது நேரத்திற்கு பிறகு அவளாகவே பேச்சை தொடர்ந்தாள்.

“பாரி உன் ஃபேமிலி பத்தி சொல்லுறியா. எனக்கு உன் ஃபேமிலி மெம்பெர்ஸ் எல்லாரையும் பார்க்கனும் போல இருக்கு…”

அவள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரங்களில் மட்டும் எனது செல்போனை ஒரு சவப்பெட்டியாகவே நினைத்து சுவர் ஓரமாக அடக்கம் செய்துவிடுவேன். இப்பொழுது என் செல்போனிற்க்கு உயிர்த்தெழும் வாய்ப்பை அவளாகவே கொடுத்துவிட்டாள். அவ்வப்போது எனது நண்பர்களுடன் எனது குடும்பத்தாருடனும் எடுத்த புகைப்படங்களை எனது செல்போனில் ஒவ்வொன்றாக காட்டிக்கொண்டே வந்தேன். என் நண்பர்களின் சிலர் முகத்தோற்றத்தை பார்த்து அவர்களை நக்கல் அடிக்கவும் செய்தாள் சிலர் அழகை வர்ணிக்கவும் செய்தாள். நான் தனித்தனியே என் தம்பியுடன் என் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை காட்டினேன். என் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை குறைந்தது பத்து நிமிடத்திற்கு மேலாகவும் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டிற்கு சென்று என் அம்மாவிற்கு திஷ்டி கழிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டாள். அடுத்து முறுக்கிய மீசையுடன் என் அப்பா என்னுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை காட்டினேன். அதையும் அவள் இருபது நிமிடத்திற்கு குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் என் அப்பாவை வர்ணிக்க வார்த்தைகள் தேட முடியாத நிலையில் அவள் அவதிப்பட்டுகொண்டிருப்பதாக நான் நினைத்தேன்.

“நிஜமாலுமே இவரு தான் உன் அப்பாவா…?”

“அது என்ன நிஜமாலுமே…! சத்தியமா இவரு தான் என் அப்பா”

அவள் விழி ஓரத்தில் கண்ணீர் துளி தேங்கி நின்றுகொண்டிருந்தது. அதை நான் கவனிக்ககூடாது என்பதற்காகவே எழுந்து சென்று ஜன்னல் அருகே போய் நின்றுகொண்டாள்.

“என்ன ஆச்சு முத்து…!”

“ஒன்னும் இல்ல பாரி”

“சம்திங் ராங் இவ்ளோ நேரம் ஜாலியா தானே இருந்த என்ன ஆச்சு சொல்லு”

தொண்டைக்குழிக்குள் சிக்கி தவிக்கும் எச்சிலை மிழுங்குவதற்கு கூட சக்தியற்ற நிலையில் அவள் நின்றுகொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது.

“என் ஃலைப்லியும் ஒரு போலிஸ்காரன் வந்துருக்கான்னு சொன்னேன்ல அது வேற யாரும் இல்ல உங்க அப்பா தான்”
ஒவ்வொரு வினாடி நகர்த்தலுக்கு பின்னும் எதிர்பாராத விஷயங்கள் வரிசையில் நின்றுகொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அவள் சொன்ன விஷயம் கனவில் காட்சிகுரியதிற்குட்பட்டாலும் என் மனசுழிப்பே அக்கனவில் இருந்து என்னை விடுவித்துவிடும். அப்பிடியொரு நிகழ்வை தான் அவள் உறக்க சொன்னாள். பத்து நிமிடத்திற்கு மேல் அவள் பார்த்துகொண்டிருந்த பார்வையே ஊர்ஜினமாயிற்று என் அப்பா அவள் தேகத்தை தின்று இருக்ககூடும் என்று.

“ஸாரி முத்து என் அப்பா இப்படி எல்லாம் நடந்துபாருனு சத்தியமா எனக்கு தெரியாது”

“ச்சச… நீ எதுக்குடா ஸாரி சொல்லுற. நான் தான் ஆரம்பத்திலே சொல்லிட்டேனே எல்லாருக்கும் செக்ஸ் வேனும் அதுக்கு என்ன மாதிரி ஒரு பிராஸிடியூட் வேனும். தட்ஸ் இட்”

“நீ இங்க இருக்க வேணாம் முத்து ப்ளீஸ்…! நீ வெளி உலகத்த பாரு நல்ல விஷயம் எவ்வளவோ இருக்கு உனக்கு இந்த அற வேண்டாம்”

“ஐயோ பாரி உனக்கு புரியலியா…? நான் ஒரு விலைமாது விலைக்கு போறவ உன் அப்பன் கூப்டாலும் சரி உன் பாட்டன் கூப்டாலும் சரி நான் போவேன். என் ஃலைப்ல பீலிங்க்ஸ்குற பேச்சுக்கே இடம் இல்ல”

வலியின் உச்சநிலை கண்ணீரில் வெளிப்படும் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். இவள் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா…? அவள் அழுதாள் எந்த ஒரு முக மாறுதலோ கதறலோ இல்லமால் சிலையின் கண்களில் இருந்து கசியும் அருவியை போல் அழுதாள்.

“என்ன சொன்ன பாரி, வெளி உலகத்துல எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கா…? ம்க்கும்.. பெண்களுக்காக கொடி தூக்குவேன், பெண்களுக்காக போராடுவேன்னு சொல்லுற சொல்லுற எழுத்தாளன் கூட என்ன தேடி வந்திருக்கான். விர்ஜினா வூல்ப் எழுதுன “A Room of One’s Own” புக்க கைல வெச்சுகிட்டே என் கூட படுக்க வந்தான். நான் அந்த புக்க படிச்சிருக்கமாட்டேனு நினைச்சுட்டு இருந்தானா இல்ல எனக்கு விர்ஜினா வூல்ப் யாருனே தெரியாதுனு நினைச்சுட்டு இருந்தானானு தெரியல. அந்த புக்க பத்தி நாலு விஷயம் நான் பேசுன உடனே துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடிட்டான். மனுஷங்களோட நிஜ முகத்தையே இந்த அறைக்குள்ள தான் பார்க்குறேன். வெளியுலகத்துல பார்க்குற முகம் எல்லாம் நிஜம் இல்ல அது ஒரு முகமூடி. பெமினிஸ்ட்னு சொல்லிட்டு திரியுற விபச்சாரிங்க கூட இந்த உலகத்துல இருக்காங்க…”

ஒவ்வொரு கணமும் அந்த அறை அவளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. மனிதர்களின் சுயரூபத்தை பளிச்சிடும் அறை, சமுதாயத்தின் பரிமாணத்தை அளவுகோலிட்டு காட்டும் அறை, தன் உடலை கொடுத்து மனபூதங்களை வெளிக்கொண்டுவரும் அறை இப்படியே அந்த அறையில் அவள் ஒவ்வொறு நாளும் படித்துக்கொண்டிருக்கிறாள்.

“நீ எதுக்குடா ஃபீல் பண்ணுற… நீ என்ன தேடி வந்ததுக்கும் உன் அப்பா என்ன தேடி வந்ததுக்கும் ஒரே காரணம் தான் பாரி. ஒரு வேல உங்க அப்பாக்கு அவரோட அம்மா பேரு தான் எனக்கும் இருக்குனு தெரிஞ்சிருந்தா என் கூட படுத்திருக்க மாட்டாரோ என்னமோ…”
சோகம் என்னும் வனாந்தரத்தில் தான் அவளது வாழ்கை ஊஞ்சலாடிகொண்டிருக்கிறது அவிழ்ந்து விழும் நேரத்தையோ தாங்கி பிடிக்கும் விழுதையோ நினைத்து அவள் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை என்பது அவள் பேச்சின் சாயலில் இருந்து தெரிந்து கொண்டேன். அவளாகவே என் கண்ணீரை துடைத்துவிட்டாள்.

“சரி முத்து நான் கிளம்புறேன். இன்னொரு விஷயம் அடுத்த மாசம் செமஸ்டர் ஸ்டார்ட் ஆகுது என்னால கொஞ்ச நாளைக்கு இங்க வர முடியாது நிறைய படிக்கனும். செமஸ்டர் முடிஞ்சவுடனே உன்ன மீட் பன்ன வந்துடுவேன் சரியா..?”

“ம்… ஆல் த பெஸ்ட் பாரி நல்லா எழுதனும் எதையும் நினைச்சு குழம்பிக்காத”

கிளம்பும் நேரம் சட்டென்று மண்டைக்குள் அவ்விஷயம் விசாலமடைந்தது. நீண்ட நாட்களாகவே அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து வெட்கி வேறொரு நாள் கேட்கலாம் என்று காலம் கடதிக்கொண்டிருந்த விஷயத்தை அவளிடம் கேட்க துணிந்தேன்”

“முத்து உன்கிட்ட ஒன்னு கேட்கடுமா…?”

“ம்ம் கேளு பாரி”

“கேட்டா கோச்சிக்கமாட்டியே”

“உன்கிட்ட கோச்சிக்க என்னடா இருக்கு தைரியமா கேளு”

“உன் கூட ஒரு செல்பி எடுத்துக்கட்டுமா…?”

“அடப்பாவி இதுக்கா இப்படி வெட்கப்படுற உனக்கு இல்லாத உரிமையா… வா எனக்கும் உன் கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கனும்னு ஆசையா தான் இருக்கு”

தனது கூந்தலை சரி செய்து முன்பக்கமாக பரவவிட்டாள். மங்கிய சூரிய வெளிச்சம் இருவர் முகத்திலும் ஸ்பரிசித்து கொண்டிருக்க லேசாக சிரித்தவாறே எனது ஐ போனில் வித விதமான தோற்றத்தில் கிளிக் செய்தேன். தேங்கஸ் என்று சொல்லிவிட்டு நகரும் நேரத்தில் சட்டென்று என் மணிக்கட்டை பற்றினாள்.

“என்ன முத்து”

“என்ன டிரஸ்சோட போட்டோ எடுத்த முதல் ஆள் நீ தான்”

நான் அவன் கரங்களை பற்றினேன் அவளது விழிகளின் மீது என் விழிகளை புதைத்தேன். நிர்வாணத்தில் காணமுடியாத கவர்ச்சி அவளது பார்வையில் மின்னியது. என்னை முழுவதும் அந்த பார்வை ஆட்கொண்டதாக உணர்ந்தேன். ஏதோ கேட்க நினைத்து வாய் பேச முடியாமல் தவிப்பது போல் இருந்தது அவளது பார்வை.

“நான் திரும்பி வருவேன் முத்து… எவ்ளோ சீக்கிரம் வரமுடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுவேன்”

விருட்டென்று அவளது பிடியில் இருந்து நகர்ந்தேன். வர இருக்கும் நாட்கள் எனக்கு எதையோ கற்றுத்தர போவதாக நினைத்துக்கொண்டேன். எனது செமஸ்டர் பரீட்சையும் தொடங்கியது அவ்வப்போது அவளுடன் நான் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். முதல் பரீட்சையின் தொடக்கத்திலிருந்தே கடைசி பரீட்சையின் நிமிடங்களுக்காக காத்துக்கொண்டிருந்தேன். இன்று அப்பா டிரான்ஸ்பர் ஆகி சென்னைக்கு வருவதாக அம்மா கூறினாள். இனி அவ்வப்போது அப்பாவின் முகத்தை பார்க்க நேரும் முடிந்தவரை அப்பாவின் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன்.

கடைசி பரீட்சையின் முடிவின் நேரம் நான் வினாத்தாளில் வைக்கும் முற்றுப்புள்ளியில் நிறைவடைந்தது. முடிந்தது சாகாப்தம் என்பது போல் வினாத்தாளை மடித்து கொடுத்துவிட்டு நேராக முத்துவை பார்க்க விரைந்தேன்.

என்றும் இல்லாததுபோல் இன்று முத்து வசிக்கும் காம்பெளன்ட் வாசலில் ஏகப்பட்ட ஜனக்கூட்டம் திரண்டிருந்தது. ஒரு சில போலிஸ் ஜீப்களும், மைக்கை கையில் ஏந்திய பத்திரிக்கை நிருபர்களும் முகாமிட்டிருந்தனர். நான் தெரு முனையில் காரை நிறுத்தி உட்கார்ந்தபடியே அங்கு நடந்துகொண்டிருப்பதை கவனித்தேன். முகத்தை துப்பட்டாவால் மூடியபடி ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் எறும்புகளை போல் ஒவ்வொரு பெண்களாக போலிஸ் வேனில் ஏற்றப்பட்டனர். முகத்தை பளிச்சிடும் துவாரம் கிடைக்காதா என்று போட்டி போட்டுகொண்டு பல கேமிராக்கள் அப்பெண்களின் முகத்தை கிளிக் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தன. அதில் எத்தனை கேமிராக்கள் வெற்றிபெற்றதோ…!

முத்துவும் அந்த போலிஸ்வேனில் ஏறியிருக்கக்கூடும் கூட்ட நெரிசலாலும், தொலைவில் இருந்ததாலும் என்னால் சரியாக முத்துவின் முகத்தை அடையாளங்கொள்ள முடியவில்லை. என் அப்பா தான் தலைமையர் போலும் உறக்க கத்தியபடி அப்பெண்களை போலிஸ்வேனில் ஏறச்சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தார். என் உடலில் உள்ள ரத்த ஓட்டம் ஸ்தம்பித்து எங்கேயோ ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதாக தோன்றியது. ஸ்டியரிங்கை பிடித்தபடி அதில் தலை சாய்த்து அழுதேன். அதிலிருந்து மீள எத்தனை நேரம் அவகாசம் வேண்டுமோ எனக்கு தெரியவில்லை. முத்துவின் அறைவாழ்கை சிறை அறையில் முற்று பெறட்டும் என்று வீட்டிற்கு திரும்பினேன்.

மறுநாள் காலையில் சோபாவின் மேல் இருந்த செய்தித்தாளை புரட்டி கொண்டிருந்தேன். நான்காம் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களாக நேற்று நடந்த சம்பவம் ஒருப்பெற்றிருந்தது. விபச்சார விடுதி நடத்தி வந்த பெண் உள்பட 11 விபச்சாரிகள் கைது. அதற்கு கீழ் குணிந்த தலை நிமிராமல் வரிசையாக நிற்கவைத்து முகத்தை துப்பட்டாவால் போர்த்தியபடி எடுத்த புகைப்படம் இருந்தது. வலது பக்கமாக கடைசியில் நின்று கொண்டிருக்கும் பெண் தான் முத்தரசி என்பதை தெரிந்துகொண்டேன் காரணம் நான் பார்த்த இவ்வுலகில் முகமூடி அணியாத ஒரே உருவம் அது.


வெளியே நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த என் அப்பா வியர்த்த முகத்துடன் உள்ளே வந்தார். நான் செய்தித்தாளை படித்துக்கொண்டிருப்பதை பார்த்து என்னை அனுகினார்.

“ஓ….! இந்த நியூஸ் தான் படிச்சிட்டு இருக்கியா நேத்து என்னோட தலைமைல தான்டா பாரி இந்த ரைட் நடந்தது. நாய்ங்க… பொழைக்குறதுக்கு வேற வழியா இல்ல நாட்ல… இவங்களால தான் ஒழுங்கா இருக்க ஆம்பள பசங்களும் கேட்டு போறான்க”

“அவங்கள தேடி போறது நம்மள மாதிரி ஆம்பிளைங்க தாங்குறத மறந்துடாதீங்க… பழிய அவங்க மேல போட்டா எப்புடி?”

செய்தித்தாளை மேசையின் மேல் எறிந்துவிட்டு என் அறைக்கு சென்றேன். ஏதோ ஒரு தூண்டுதல் முத்து வாழ்ந்த அந்த அறையை பார்க்கவேண்டும் என்று மனதிற்குள் முந்தித்தள்ளியது என் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாரானேன்.

***

இலங்கை – ரோஷான் ஏ.ஜிப்ரி யின் கவிதைகள்

download (1)

சில குறிப்புகள்

நம்பிக்கைக்கு
துரோகங்கள்தான்
துணை நிற்கின்றன
நற்சான்றை வழங்கியும்
பொய் சான்றை புதுப்பித்தும்

வியாபார சந்தையில்
விசுவாசம் நல்ல
விலைபோகிறது
நிறுவையின் தராசு முள்
நடு நிலைக்கு வருவற்குள்
பொதியாகி விடும்
பொட்டலங்களாய்

எவ்வளவு துலக்கினாலும்
சிரித்து பேசும்
உதடுகளின் ஓரத்தில்
காவிபோல் ஒரு வக்கிரம்
களற்ற முடியாத கறையாய்
பாசியாக படிந்து விடுகிறது

பரிதாபமாக உயிர் துறக்கும்
பட்டினிச் சாவுகளை
அன்மித்திருக்கும் ஆலைகளில்தான்
அரைபட்டு பதப்படுத்திய உணவுகளை உலகம்
பந்தியில் இருந்து
பசி ஆற்றுகின்றது

இயலாமையின் ஏற்ற இறக்கங்களை
தாண்டித்தான் செல்கின்றது
விளை நிலமும் விமோசனமும்
ஆரோக்கியமான அறுவடைகளும்

காயத்தில் கண்ணீர் கண்டால்
துயரத்தை துடைத்து விடுவதான
பாசாங்குகளோடுதான்
விளம்பரத்திற்காக
விரல்களை நீட்டுகின்றன கைகள்

உலகமகா நடிப்புகள் யாதென
சம்பந்தப் பட்டவரை அணுகினால்
சம்பவம் புலனாகும்
குருடாக்கி விடும்
கொலைவெறி பற்றி
குறிப்புகளுடன்..

**


அடங்காப்பிடாரி

தொடங்கிய அன்றிலிருந்தே
கூடவே இருக்கும் கொள்கையால்
பேர் பெற்றுவிட்டான்
பின் தொடர வேண்டாமென
பல தடவை
எச்சரிக்கை விட்டு
ஏசியும் பார்த்தாச்சு
அவனுக்கு எல்லாம் ஒரு மயிர்
அடி பணிதல் அவன் அறியாத பொருள்
அத்து மீறல் அவன் பெற்ற
அருள்
நீங்கள் நினைக்கும்
எந்த ஆயத்தமும்
இல்லை அவனிடம்
நிலம் பற்றுதல்
கூடவே கூடத ஒரு கொள்கை
எவரின் சோற்றுக்குள்ளாவது
மாங்காய் போட்டு பிசைவது
பதுக்கி வைத்தலுடன்
ஊரின் கண்ணீரை
மொத்தமாக குத்தகைக்கு எடுத்து
குடித்து கும்மாளமிடும்
விசித்திரமான
சித்திரக் குள்ளன்

ஆடு,மாடு,கோழி கொக்கு
அடுதவன் பொருள் எல்லாம்
இன்னும்
இளம் சூடு இடுக்கு முடுக்கு
தேடியபடி
கொம்பு தீட்டிக்கொண்டு
ஒரு கோடாரிக் காம்பு
கொள்கையுடன் அலையும்
அடங்காப்பிடாரி!