Category: இதழ் 139

அபிராமி சுரேஷ் ( அறிமுகப் படைப்பாளி ) கவிதைகள்

null

சுயம்

காரிருள், பேரமைதி
அளவில்லா இறுக்கம்
ம்… இப்போது சுழற்சி

துகள் துகளாய் கூடிக் கூடி
துள்ளிய சீர்மையில்
சுழல் விளையாட்டு

உரசல்களால் விரிந்து
செல்லும் அலைகள்
கூட்டம் கூட்டமாய் சுழற்சி
ஈர்க்கும் விலக்கும் ஆற்றல்கள்

காலம் உண்டாகும் முன் காலம்
ஒவ்வொன்றாய் அண்டங்களின் உயிர்ப்பு

எங்கும் யாவற்றுள்ளும்
ஆர்ப்பரிக்கும் சுயம்
தொடராய் விரிந்த படி
பிரபஞ்சம் அளவும் சுயம்
அட நுணுகிப்பார்த்தால்
நான் எனும் இச்சிறு பிம்பத்திற்குள்ளும்
அதே சுயம்…

மரண ஒத்திகை

புற்றுப் பரவாத குணம் கொண்டதே
மருத்துவரின் கூற்றுக்குப்பின்
வீட்டிற்குப் படை எடுக்கும்
சொந்தங்கள்

சாக முடிவெடுத்தவனுக்கு
புற்று என்ன வகையாயிருந்தால்
என்ன கவலை

மரணத்தையும் அதன் பின்னும்
உடலிருந்தே பார்த்துவிட
எத்தனித்தபின்

பதறிப்போய் பார்க்க வரும்
சொந்தங்களை எல்லாம்
துன்புறுத்த துவங்கினேன்
வாராத கடன் என நான்
முடித்து சுழித்தவையெல்லாம்
ஒரே வாரத்தில் வசூலாயின
இறக்க போகிறவனிடம் கடன் வைத்தால்
நிம்மதியாய் இருக்காதாம்

பழங்களும் ரொட்டிகளும் ஆயுதமாய் ஏந்தி
வந்தவர்களின் அடிமனத்தில்
கனன்று கொண்டிருக்கும்
என் மீதான கங்குகளை
களை எடுக்க
அவர்களின் மேல் காறி உமிழ்ந்தேன்
கடும் சொற்களால் குத்திக் கிழித்தேன்

இனியும் அவர்கள்
எனக்கு ஏதேனும் நன்மையளித்தால்
அது அவர்களின்
மனிதாபிமானமும்
பிற உயிர் மீதான
கருணையுமே
என்பதைக் கண்டு கொண்டேன்

நீ என்ன எனக்குச் செய்வது என்ற
விதண்டாவாதத்தை
வயோதிகம் வலுவிழக்கச் செய்தது
என் தோல்வியே

அதற்காக ஆண்டவனை திட்டினேன்
மரணத்தை யாசித்தும் இன்னும்
கொடுக்கப்படாமல் இருப்பது
நெருடவே செய்கிறது

இருக்கும் வரை
இனி அருகில் வரும் எவருக்கும்
வசை ஈட்டிகளை
வலிமையாய் எய்யக் காத்திருக்கிறேன்
என் இறப்பு வீரமாகக் கம்பீரமாக இருக்க வேண்டும்

வெறுப்பைத் துணிவுடன் தாங்கப்பழகிய நான்
பக்கத்திலோ தள்ளிச்சென்றோ
அன்பின் வெளிப்பாடாய்
எனக்காக அழும் ஓலத்தைத் தாங்கிக்கொள்ள
முடியாத என் மென்மனம்
அவர்கள் அனைவருக்கும்
புரியாமலே போகட்டும்
என் இறுதி மூச்சு வரை

தன்னம்பிக்கை

தொடர் தோல்விகள் வரிசையில் வந்து
நலம் விசாரித்துப் போனபோதும்
அடுக்கு ஏமாற்றங்கள்
வாழ்வில் கூடாரமிட்டு
வாழ்ந்த போதும்

விருப்பமில்லா சுற்றம் இருந்த போதும்
தேர்ந்த தில்லுமுல்லு உலகத்தில்
சுற்றி வர நேர்ந்த போதும்
பேராசையும் போட்டி பொறாமைகளும்
சூழ்ந்து அழுத்திய போதும்
நிதானம் இழக்காமல் முயற்சிக்குத் துணையாய்
கையில் இருந்ததும் இருப்பதும் இருக்கப் போவதும்
ஒன்றே ஒன்று தான்
தன்னம்பிக்கை

பாரம்

வேண்டாம் இது பிறந்துவிடட்டுமே
விட்டு விடுவோம்
என் ஓலங்களைச் செவி மடுக்க யாரும் தயாரில்லை
கண்ணில் மின்னும் கனவுகளுடன்
ஓரு வயது தலைப்பிள்ளை
கண்டிப்பாகத் தனியாக உன்னால்
பார்த்துக் கொள்ள முடியாது
நிறைய வாந்தி
எடுக்க வேண்டியிருக்கும்
நிறைய மயக்கம் வரும்
சத்து குறைந்த ரத்தம்
எப்போது கண்களை
இருட்டித் தள்ளிவிடுமென தெரியாது
சோறு ஊட்ட தினமும்
அவனுடன் மல்லுகட்ட முடியாது
இது இப்போது வேண்டாம்

அனைவரும் இருந்தும்
ஆதரவற்ற நிலையில் ஒரு
மௌன மரணம்
ஒரே பிழையில்
சுமை நீங்கி
இலகுவான வயிற்றின் பாரம்
நிரந்தரமாய் நுழைந்தது
மனதிற்குள்

***

ஜமாலன் கவிதைகள்

ஜமாலன்

(வெவ்வேறு பாணியில் எழுதிப் பார்த்த கவிதைகள்)

1. கண்ணாடி

கண்ணாடியைக் காணவில்லை
புதிதில்லை என்றாலும்
நேற்றும் இன்றும் நாளையுமாயிருந்த
கண்ணாடியைக் காணவில்லை

கைமறதி கண்மறதியாகி
காட்சிகள் மறைந்தாடும் மாயைக்குள்
வைத்தென்னை ஆட்டும்
கண்கட்டு வித்தையாக
கண்ணாடியைக் காணவில்லை

கண் ஆடும் ஆடியில்
கண் இருக்கிறது ஆடியபடி
களவுபோக கண்ணாடி ஒன்றும்
கைப்பேசியில்லை
கண்ணாடியைக் காணவில்லை

கண்ணாடியில்லாமல்
காணும் உலகில்
கண்ணே ஓர் உலகாய்
காட்சியாடிச் செல்கிறது
கண்ணாடியைக் காணவில்லை

கனவில் அணிந்திருந்த கண்ணாடி
விழிப்பில் காணாமல் போனதெப்படி?
கனவிற்கும் விழிப்பிற்கும்
இடையில் உள்ள தூரம்
கண்ணாடி கண்மறைந்த கணநேரமே
கண்ணாடியைக் காணவில்லை

தூரத்தை காலத்தால் அளக்க
தூக்கத்தை விழிப்பால் அளக்க
கண்ணாடி தேவையில்லை
என்றாலும்
நேற்றும் இன்றும் நாளையுமாயிருந்த
கண்ணாடியைக் காணவில்லை

கண்ணே கண்ணாடியாகிவிட்ட
காலத்தில்
கண்ணில்லாமல் வாழலாம்
கண்ணாடியில்லாமல் வாழமுடியுமா?
கண்ணாடியைக் காணவில்லை

2. ஏதுமற்றது

ஏதுமற்றது
ஏதும் அற்றதுலகிலோ
ஏதும்முள்ளது உலகாய்
ஏதுமில்லாதிருப்பதே
ஏதுமாக
ஏதுமாகி
ஏதாகிவிடுகிறது
எல்லாம்
இவ்வுலகில்.

3. மொழி

நீரை
கவிதையாக்குவதற்குள்
தழும்பி
தழும்பி
தப்பிக் கரைந்துவிடுகிறது
காற்றில்

4. இயற்கை

எட்டாம்நாள்
கடவுளை படைத்தவன்
ஒன்பதாம் நாளில்
என்னைப் படைத்தான்.
என்னிலிருந்து கிளைத்த பல
நான்களின் நாண்கள் பாய
என்னை தன் கீழ்அடக்க
தன்னைப்பிரித்து
எனக்கிட்ட பெயரே
இயற்கை.

5. மொழிபெயர்ப்பு

நிறமற்ற ஒன்று
முற்றத்தில் புதிதாய்…
அகராதிகளின் கிடங்கிலிருந்து
நிறங்களைப் பொறுத்தி
பறக்கவிட்டேன் முற்றத்தில்…
சிலவேளை
குயிலாகலாம்
காக்கையகாலாம்
மயிலாகலாம்
ஏன்
மான்கூட ஆகலாம்
நிறமற்ற முந்தைய ஒன்றை
நிறங்களில் பொருத்த முடியுமா?

கவிதா மண்டலம்: கவிதை-1

கவிதை செய்ய கண்ணாடி வேண்டும்
கண்ணாடி செய்ய களிமண் வேண்டும்
களிமண் செய்ய……
கவிதைதான் வேண்டும்
என்மனார் புலவர்

கவிதா மண்டலம்: கவிதை-2

உள்ளது உள்ளபடி
இல்லது இல்லாதபடி
அல்லது அல்லாதபடி
அப்படி இப்படி எப்படி
கவிதை படி
சங்கத் தமிழ் கவிதைபடி
இல்லாவிட்டால் என்ன
எங்கத் தமிழ் கவிதைபடி
இருந்துவிட்டால்தான் என்ன
மங்காத் தமிழ் கவிதைபடி
உச்சம் தொட
ஒருபடி இரண்டுபடி
உருப்படியாக இருக்கப்படி
உள்ளது உள்ளபடி….
கற்றது கைம்மண் அளவு
கல்லாதது களிமண் அளவு
என்மனார் புலவர்.

கவிதா மண்டலம்: கவிதை-3

ஒற்றை ஒழித்து வைத்தபின்…
கவிதை கணணீர் உகுதது
கால இடறியதால்
கெபுரா உசசியிலிருநது
தலைகுபபுற வீழநதது
தமாரைத தாடகததில
கதவிடுககில ஒழிததுவைககபபடட ஒற்றை
கொண்டுவந்து கவிதைக்குள் இட்டவுடன்
கண்திறந்து பார்த்து
கண்ணீர் உகுத்தது…
…..
ஒற்றை ஒற்றாகவும்
இடறிய காலை இடறாதும்
உணர்ந்து கற்றால்
கவிதையும் கைவசமாகும்
என்மனார் புலவர்

கவிதா மண்டலம்: கவிதை-4

பச்சை வயலின்
இச்சைக் கேட்டு
கச்சைக் கட்டினார்
மிச்சமுள்ள விவசாயிகள்
சொச்ச பணத்தைக்கொண்ட
மொச்ச பயிர்வளர்த்து
பிச்சை எடுக்க
பரிந்துறைத்தார்கள்
கார்பரேட்டுகளும்
கட்சிகளும்.

கவிதா மண்டலம்: கவிதை-5

தூரிகை கொண்டு
காரிகை வரைந்தேன்
காரிருள் படர
கருமையுள் கரைய
கருப்பு மைவிரலுடன்
செருப்பிடுக்கில் நுழைந்தது
செல்லமாய் வளர்ந்த
கள்ளப் பூனை
கருமையை ஊடுறுவி
காரிகையை அடைய
கள்ளப் பூனைகளை
கொல்வதே நலம்
என்மானர் புலவர்.

கவிதா மண்டலம்: கவிதை-6

மயிர் ஒட்டிக்கிடக்கும்
நீர்க்குவளைகளில்
நீரைவிட்டு மயிரையோ
மயிரைவிட்டு நீரையோ
அருந்தமுடிவதில்லை.

கவிதா மண்டலம்: கவிதை-7

அறையில் கிடக்கிறது ஆப்பிள்
அழகிப்போனது தெரியாத
வேக்ஸ் பளபளப்புடன்

SIBICHELVAN’S POEM IN ENGLISH – 5 / Rendered in English by Latha Ramakrishnan

PLEASE FASTEN YOUR SEATBELT CAREFULLY

Sir, please fasten your seatbelt carefully.
This is the time when the sun plays with the mirage in gay abandon
making this golden-hued four-lane highway slide, glide and fly off.
May I increase the AC slightly to be more soothing?
May I play your favourite song, increasing the volume a little more?
Or run the movie of your choice in the video?
If you need surveillance of your office while travelling, please tell me
I’ll connect the web and you can monitor all the ‘controls’ of Indian branches
May I tilt the seat and turn it into a bed for you to relax stretching your limbs for a while?
May I halt the car near some roadside motels for you to drink some fruit juice or quench your thirst and take rest?
You can clean your bladder here.
Let me also remind you sir of what the doctor has said
of the need or your skin to feel the sun
as you are constantly spending your time in AC!
I beseech you, Sir, as soon as you get inside the car please fasten your seat belt.
Despite the speedometer-needle vibrate beyond hundred I will drive the car with no jerks.
In six-lane, four-lane highways I would take you like a delicate blossom to your destination.
The roads shine so gloriously wide, gleaming like a dream, Sir,
Now and then zebras whizz past en route
But we or they, mutually unconcerned, rush onward
But, know what,
these bloody dogs
run across the road as suit their whims and fancies
Are we to stop the car worth several millions as not to hit these?
I take your ‘No’ as a command and accelerate crushing it to death, sir.
In blood-spilled road, cars countless go past
Sir, I beseech you, please fasten your seatbelt carefully.
Our car is empowered with the energy of hundreds of stallions
that fly along the roads in lightning speed
I won’t reduce their strength sir.
Even if a commoner happens to cross the road I won’t slow down sir.
Dashing against and disintegrating him we can continue travelling,
faster than bloodspread.
Sir, please fasten your seatbelt carefully
More than the dogs, ore than the commoner
Your life is valuable; Invaluable.
Therefore,I beseech you, Sir
please fasten your seatbelt with extra care.


உங்கள் சீட் பெல்ட்களைக் கவனமாக அணிந்துகொள்ளுங்கள்

அய்யா நீங்கள் முதலில் உங்கள் சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள்
இந்த சாலை தங்க நாற்கர சாலை
தரை வழுக்கிக்கொண்டு பறக்கும்படியும்
சூரியன் சாலைகளில் கானல்நீரோடு விளையாடிக்கொண்டுமிருக்கிற நேரம்
ஏசியைக் கொஞ்சம் இதமாக இன்னும் கூட்டி வைக்கட்டுமா?
உங்களுக்குப் பிடித்த பாடலை இன்னும் கொஞ்சம் வால்யூம் வைக்கட்டுமா?
அல்லது உங்களுக்குப் பிடித்த சினிமாவை விடியோவில் போட்டு விடவா ?
பயணத்தின்போது அலுவலகத்தைக் கண்காணிக்க வேண்டுமானால் சொல்லுங்கள் இணையத்தை இயக்குகிறேன் அதில் மொத்த இந்திய கிளைகளின் கட்டுப்பாடுகளையும் நீங்கள் கண்காணிக்கலாம்.
பயணத்தின் அலுப்பில் கை கால்களை நீட்டி சற்றே ஓய்வெடுக்க இந்த சீட்டை சாய்த்து படுக்கையாக மாற்றி விடவா?
சாலையோர மோட்டல்களில் நிறுத்தி பழச்சாறு அருந்தவோ அல்லது தாகசாந்தி செய்து இளைப்பாறவோ செய்வதற்கு காரை சற்றே நிறுத்தட்டுமா?
உங்கள் சிறுநீர் உபாதையை இங்கே கழித்துக்கொள்ளலாம்
எப்போது பார்த்தாலும் ஏசியிலேயே நீங்கள் கழிப்பதால் கொஞ்சம் உங்கள் தோலின் மீது வெயில் படவேண்டும் என மருத்துவர் சொன்னதையும் நினைவூட்டுகிறேன் அய்யா!
அய்யா முதலில் காரில் ஏறி அமர்ந்ததும் உங்கள் சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ளுங்கள்
நூற்றுக்கும்மேலாக மைல்காட்டும் முள் துடித்தாலும் உங்களுக்கு உடல்குலுங்காமல் பயணத்தை செலுத்துவேன்
ஆறுவழி
நான்குவழி சாலைகளில் உங்களை பூப்போல கொண்டுபோய் சேர்ப்பேன்.
சாலைகள் அகலமாகவும் விசாலமாகவும் கனவுபோல மின்னுகின்றன அய்யா.
அவ்வப்போது சாலைகளில் வரிக்குதிரைகள் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றன
அவற்றைப்பற்றி நாமோ நம்மைப் பற்றி அவையோ கவலையில்லாமல் கடக்கிறோம்
ஆனால் பாருங்கள்
சாலையின் குறுக்கும் நெடுக்குமாக
இந்த நாய்கள் ஓடித் தொலைக்கின்றன
இவற்றை மோதாமல் இருப்பதற்கு பல லட்சங்கள் செலவளித்து வாங்கிய காரை நிறுத்தலாமா அய்யா?
உங்கள் மறுதலிப்பை உத்தரவாகக் கருதி அதனையேற்றி கடக்கிறேன்
இரத்தம் தெறித்த சாலையில் கடந்து செல்கின்றன பல கார்கள்
அய்யா தயவுசெய்து சீட் பெல்ட்டை கவனமாக அணிந்து கொள்ளுங்கள்
நமது கார் மிக வேகமாக மிகமிக வேகமாக சாலைகளில் பறக்கும் பல நூறுகுதிரைகளின் சக்தியைக் கொண்டவை
அவற்றின் சக்தியை உடனே குறைக்கமாட்டேன் அய்யா
சாலையை ஒரு சாதரண மனிதன் கடந்தாலே நிறுத்தமாட்டேன் அய்யா
மோதி சிதைத்துவிட்டு தெறிக்கிற ரத்தத்தை விட வேகமாக சாலைகளில் பயணிக்கலாம் அய்யா
தயவுசெய்து சீட் பெல்ட்டை கவனமாக அணிந்துகொள்ளுங்கள்
உங்கள் உயிர் நாய்களின் உயிரைவிட
சாதரண மனிதனின் உயிரைவிட மேலானது
ஆகையால் முதலில் உங்கள் சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளுங்கள்.

•••

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1. எது நல்ல கவிதை?

எது நல்ல கவிதை என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வந்தவரிடம்
முகவரி மாறி வந்துவிட்டீர்கள் என்று எடுத்துச்சொல்லி
அதற்கென்றே யொரு அருவத் துலாக்கோலைச்
சுருக்குப்பையில் பொதிந்துவைத்துக்கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல சொல்லேருழவரை அடையாளங்காட்டி
விடைபெற்றுக்கொண்டபோது
தன்னிச்சையாய் வாயுரைத்த தொரு ‘பின்குறிப்பு –
’வழியும் அனுபவமும் நமதேயாவதே நல்லது’.
நன்றி தெரிவித்து ஒன்றிரண்டு அடிகள் முன்னோக்கி நகர்ந்தவர்
நின்று திரும்பி
எது நல்ல கவிதையில்லை என்று வினவ
அதையும் எடைபோடும் அதே அருவத் துலாக்கோல் _
அடியில் சிறிது புளி ஒட்டப்பட்டு
முடியில் ஒரு சில பட்டங்கள் கட்டப்பட்டு —
என்ற பின்குறிப்போடு
மேலதிகத் தகவலையும் தந்தபோது
அன்புமிகச் சிரித்தவர்
மண்ணில் எத்தனை வண்ணங்களென
என்றைக்குமான ஒற்றைவரிக்கவிதையைச்
சொன்னவண்ணம் சென்றார் தன்வழியில்.

உன் தலையென்றால் அதுவுன் தலைதானென்று கொள்வார்
தன் கையென்றாலது விண்ணினது மண்ணினது வெனப்
பன்னிப் பன்னிச் சொல்கிறார்!

அந்தரத்தையும் சொந்தங்கொண்டாடும் விந்தைமனிதர்கள்
நந்தமிழ்கவிதைவெளியில்
எந்தரோ மகானுபாவர்களாய் தமக்குத்தாமே
முந்திக்கொண்டு ஒளியூட்டியபடி

கெக்கெக்கே என்றும் பிக்கெக்கே என்றும் கைபோன போக்கில்
மக்குப் பிளாஸ்த்திரிகள், மடசாம்பிராணிகள் எழுதுவதெல்லாம் கவிதையாகிவிடுமோ என்று காட்டமாய்க் கேட்டவர்
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா என்று மட்டுமே அரைவட்டமா யெழுதி
யதற்கு அரைநூறோ அறுநூறோ ‘லைக்கு’கள் வாங்கி
திக்கெட்டுமதை நிலைநட்டிவிட்டார்
நவீன கவிதையென!

2. தந்திரமாவது சொல்

வார்த்தைகளை மாயக்கோல்களாக்கி மேலும் கீழும் ஆட்டியபடி
வித்தை காட்டிக்கொண்டிருப்பவர்கள்
கையிலுள்ள கருப்புத்தொப்பிக்குள்ளிருந்து
லாகவமாய் வெளியே எடுத்துக்காட்டுகிறார்கள்
குருதிவழியும் மனிதத் தலைகளை
முண்டங்களை.
அவசரமாய் மிக அவசியமாய் செய்யவேண்டிய
அறுவைசிகிச்சை யென
திரும்பத் திரும்ப பார்வையாளர்களை வசியம் செய்ய
உருப்போட்ட உச்சாடனமாய் உரக்கச்
சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.
அறுபட்டவைகள் பின்னொருபோதும்
உறுப்பமைவோடு ஒருங்கிணைந்து
உயிர்த்தெழுவதேயில்லை.

நாவின் கால்களால் நாலாயிரம் மைல்களைத் தாண்டிப்
போய்க்கொண்டேயிருக்கிறார்கள் சிலர்.
அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் நெருஞ்சிமுட்கள்
குறுவாள்முனைகளைக் காட்டிலும் அத்தனை கூராக முளைத்தெழுகின்றன.
உலகமே யொரு விளையாட்டுமைதானமாய்
அயராமல் அந்தக் கால்கள் எத்தித்தள்ளிவிட்டுக்கொண்டே செல்லும்
எத்தனையெத்தனையோ காற்பந்துகள்
மனிதத்தலைகளாக உருள்வது காட்சிப்பிழைதானோ
என்று என்னை நானே கிள்ளிப்பார்ப்பதற்குள்
இன்னும் சில இடறுகின்றன பாதங்களில்
நடப்பதையெல்லாம் கலவரமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
பறிபோய்விடக்கூடுமென் சிரசும்
பிறிதொரு காலில் மிதிபடவும் சிறிதும்
இரக்கமின்றி யெட்டியுதைக்கப்படவும்.

புதுசட்டை ( சிறுகதை) ( அறிமுகப் படைப்பாளி ) / அரிசங்கர்

நான் அறைந்த அறையில் அவர் இரண்டு அடி பின்னால் சென்று விழுந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் என்னை நான்கைந்து முறை அறைந்திருந்தார். அதில் என் உதடு கிழிந்து இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. நான் அவரை அடித்தவுடன் அங்கு ஒரு கூட்டம் கூடியது. அங்கு இருந்த அனைவரும், அவர் பக்கமே இருந்தனர். அடிவாங்கியவருடைய பெண் வீட்டிலிருந்த அருவா மனையை எடுத்துக்கொண்டு, கத்திக்கொண்டே என்னை நோக்கி ஓடிவந்தாள்.

அதற்கு மேல் அங்கிருப்பது நல்லதல்ல என்று நான் ஓட ஆரம்பித்தேன். சற்று வயதானவர்கள் அங்கேயே கத்திக்கொண்டே இருந்தார்கள், இளைய வயதுடையவர்கள் மட்டும் என்னை துரத்திக்கொண்டே வந்தார்கள். நான் இரண்டு தெருத்தள்ளி ஓடி ஒரு முள்வேலியை தாண்டி ஊரின் மற்றொரு பிரிவினர் இருக்கும் பகுதிக்கு ஓடினேன். துரத்திக்கொண்டு ஓடி வந்தவர்கள் பாதி பேரை காணவில்லை. முன்று அல்லது நான்கு பேர் மட்டும் விடாபிடியாக துரத்திக்கொண்டு ஓடி வந்தனர். நான் வேகமாக ஓடி ஒரு வீட்டை அடைந்தேன். வீட்டு வாசலில் இருப்பவரை கண்டதும் துரத்தி வந்தவர்கள் சென்றுவிட்டனர்.

என் கோலத்தை பார்த்தவுடன் அங்கு ஒரு கூட்டம் கூடியது. என்ன நடந்தது என்று விசாரித்தனர், பிறகு ஆளுக்கு ஒரு நியாயம், ஆளுக்கு ஒரு தீர்ப்பு என கூறிக்கொண்டனர். நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அவர்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள் என் எண்ணம் அங்கில்லை, நான் ஏன் இங்கு வர வேண்டும், அடிவாங்க வேண்டும். இவர்களுக்கு எதுவும் முக்கியமில்லை எதிர் அணியை, எதிர் ஜாதியை வம்பிழுக்க நான் கிடைத்துவிட்டேன்.

நம்ம வீட்டுல கொஞ்சம் வசதியில்லைன்னா, பக்கத்து வீட்டுகாரவங்க, சொந்தகாரங்க, தெரிஞ்சவங்க எல்லாம் நம்மல ஏதாவது வேலை வாங்கிக்கொண்டே இருப்பாங்க. எதனா கடையிலயோ அல்லது சொந்த தொழில் செஞ்சிட்டு இருந்தாங்கனா அங்கயோ நம்மல வந்து வேலை செய்ய சொல்லுவாங்க. நம்ம வீட்டுலயோ சொந்தகாரங்க்கிட்ட தான்ன்னு போக சொல்லுவாங்க. அப்படிதான் எங்க பெரியம்மா (அம்மாவோட அக்கா) பையனோட கேபிள் டிவில பத்தாவது படிக்கும்போது வேலைக்கு போனேன். எங்க பெரியம்மா, எங்க அண்ணனோட பழைய பத்தாத சட்டை பேண்ட்லாம் எடுத்து தந்தாங்க. ரொம்பநாள் கழிச்சி எனக்கு. போட்டுக்க துணிக்கிடைச்சிது. பெருசா ஒண்ணும் இல்ல, தினமும் பள்ளிகூடம் முடிந்ததும் சாயங்காலம் போய் வீடுவீடா கேபிள் காசு வாங்கனும். மாசம் ஆயிரம் ரூபா தரதாப்பேச்சு, நானும் அப்ப ஒரு குறுகுறுப்புல போனேன்.

போய் கேட்டவுடன் கொடுத்துவிடும் நிலையில் அங்கு யாருமில்லை. பாதிபேருக்கு மேல் வேலை இல்லை, கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் வாழ்பவர்கள். பல வீடுகளில் 100 ரூபாய் பணத்தை தவணை முறையில் வாங்கியிருக்கிறேன். பெரும்பாலும் அதிகாலை தான் அவர்கள் வீட்டில் இருப்பார்கள். 7மணிக்கு மேல் போனால் கூட யாரும் இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் வயல் வேலை தான். சில பேர் அருகில் உள்ள கிருமாம்பாக்கம் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகளில் வேலை பார்த்தனர். புதுச்சேரி கடலூர் சாலையில் இரண்டு மருத்துகல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் இருந்தது. அதில் தான் பெரும்பாலன பேர் வேலை பார்த்தனர். ஏற்கனவே பல பேர் கிருமாம்பாக்கம் அட்டை கம்பெனியில் தான் வேலை பார்த்தாக கேள்விப்பட்டிறுக்கிறேன். ஆனால் அது இழுத்து மூடி சில ஆண்டுகள் ஆகிறது.

சரியாக யார் காசுக் கொடுப்பார்களோ அவர்களிடமெல்லாம் என் அண்ணனணே வாங்கிவிடுவார். மாசாமாசம் கொடுக்காமல் இழுத்தடிகரவர்களிடம் நான் தான் தினமும் நடக்க வேண்டும். கொஞ்ச கொஞ்சமாக எனக்கு அவர் அணுகுமுறை புரிய ஆரப்பித்தது. ஆனாலும் என்னால் அவர்போல் வசூல் செய்ய முடியாது.

தொடர்ந்து மூன்று நாட்கள் எந்த வீட்டிலும் காசு தரவில்லை. அதனால் அவர் என்னை மோசமாகத் திட்டிவிட்டார். போய் எச்ச கிலாஸ் கழுவு என கூறிவிட்டார். தாங்க முடியாத ஆத்திரம் வந்த்து, இன்று எப்படியாவது ஒரு 5 வீட்லாவது வசூல் செய்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். அது தொடர் அடுக்களாக இருக்கும் வீடுகள். அரசு கட்டிக்கொடுத்தது. ஒரு சமையல் அறை, ஒரு படுக்கையறை அவ்வளவு தான். எட்டிப்பார்த்தாலே முழுவீடும் தெரியும். மற்றவர்களை போல் உள்ளே இருந்துக்கொண்டே இல்லை எனக்கூறமாட்டார்கள்.

காசு இல்லைனா, “காசு இல்லை” என தைரியமாக சொல்வார்கள். ஆனால் சில மாடிவிடுகளில் உள்ளே இருந்துக்கொண்ட்டே “சார் இல்லை அப்பறம் வா” என்பார்கள்.
காலம் என்னைப் போகவிட்டு புற மண்டையில் அடித்தது. எந்த வீட்டிலும் பணம் தரவில்லை, எரிச்சல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒருவர் என்னைத் தாண்டி சென்று ஒரு விட்டில் உள்ளே நுழைந்தார். சட்டென கையில் உள்ள அட்டையில் கதவு எண்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். அவர் நுழைந்த வீட்டின் எண் 151. அந்த வீட்டின் அட்டை இருந்தது. நான்கு மாதங்களாக பணம் தரவில்லை. நேராக அவர் விட்டுக்கு சென்று “கேபிள்” என குரல் கொடுத்தேன். வெறும் மார்போடு அவர் வந்தார்.

“என்னப்பா”

“கேபிள் காசு”

“அதான் உங்க அண்ணகிட்ட சொல்லிட்டேனே. அப்புறம் ஏன் நீ வந்து நிக்கற”

“என்னங்க எப்பவந்தாலும் அவர்கிட்ட சொல்லிட்ட, அண்ணகிட்ட சொல்லிட்டன்னு கதவுடறீங்க. அவர் என்னனா போறிய, போகலயன்னு என்ன கேட்டு திட்டறாரு, முதல்ல காச எடுத்து வைங்க”

உள்ளிருந்து அவர் மனவி வந்து, “பாதி நேரம் படம் ஓட மட்டுது. மாசாமாசம் கரெக்டா காசுக்கு மட்டும் வந்துடுங்க”

“நீங்க என்னவோ மாசாமாசம் கரெக்டா காசு தர மாதிரி தான் கேக்கறீங்க, முதல்ல காசக்குடுங்க அப்பறம் கேளுங்க”
உடனே அவர் வேகமாக என் அருகில் வந்தார்.

“டேய் தேவையில்லாம பேசன உதத்தான் வாங்குவ. போய் உங்கண்ணன வரச்சொல்லு போ” என்றார்.

அவர் மனைவி தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார். ஏற்கனவே பயங்கர எரிச்சலில் இருந்தேன். அவர் மனவி தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது எனக்கு மேலும் கோபத்தை அதிகபடுத்தியது. நானும் கத்த ஆரம்பித்தேன்.

“ஒழுங்கா காச கொடுங்க… இல்லனா ஒயர கட் பண்ணிடுவேன்.” என்று கூறினேன். அது அவருக்கு மானப் பிரச்சனையாகிவிட்டது என்ன இருந்தாலும் அவர் பிறந்தது முதல் 48 ஆண்டுகளாக அங்கேயே வாழ்பவர். நான் சின்ன பையன் அப்படி பேசியது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்ப்படுத்தியது.

“டேய் ஆப்பளயா இருந்தா ஓயரத் தொடுராப்பாக்கலாம்” என்றார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேகமாக அருகில் இருந்த மரத்தில் ஏறி அவர் வீட்டுக்கு பிரிந்து போகும் கேபிள் ஓயிர கையில் இருந்த கட்டரைக் கொண்டு வெட்டினேன். உடனே பாய்ந்து வந்த அவர் நான் போட்டிருந்த பனியனை பிடித்து இழுத்தார். அவர் இழுத்த வேகத்தில் பனியன் முன்புறமாக கிழிந்து விட்டது.

அதன்பிறகு நடந்ததுதான் நான் மேலே சொன்ன அந்த அறைகளும், ஓட்டங்களும்.

ஊர் தண்ணி டேங்க் முன்பு கூடுயிருந்தோம். கூட்டத்தில் ஒருத்தர் (ஆவரும் பணம் தரவில்லை).

“ஏம்பா உங்கண்ணனுக்கு போன் போட்டு வரசொல்லாப்பா” என்றார்.
“போன் போகலங்க” என்றேன்.

எப்படியும் அவருக்கு விஷயம் தெரிந்திருக்கும். தெரிந்துதான் போனை அணைத்துவிட்டார். அப்போது தான் செல்போன் வந்த புதுசு. அங்க யாரிடமும் இன்னும் வரவில்லை. இருந்திருந்தால் எல்லோருமே அவர் எண்ணிற்க்கு அழைத்திருப்பார்கள்.

என்னை அடித்தவர் அழைத்து வரப்பட்டார்.அவருடன் அவர்கள் ஆட்கள் முப்பது பேராவது வந்திருப்பார்கள். நான் ஓடி நின்ற வீடு அந்த பகுதி முன்னால் மந்திரியின் தம்பி வீடு. அவர்தான் அப்போது இந்த பஞ்சாயத்தை நடத்தினார். அவர் அடித்தவரிடம்,

“யோவ், உன் வீட்டுக்கு காசு கேட்க வந்தா இப்படித்தான் அடிச்சி தொறத்துவீயா…”

“ஏங்க அவன் தான் வயசுக்கு மரியாதையில்லாம பேசுறான், பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?”

உடனே நான் “இல்லீங்க அவர் நாலு மாச பணம் தரல, எப்ப கேட்டாலும் அண்ணன் கிட்ட சொல்லிட்டன்னு சொல்றாரு. அண்ணன் என்னதான் திட்டறாரு என்றேன்.”

“சும்மா இருப்பா நீ” என்றார். பிறகு அவரிடம் திரும்பி,
“இங்க பாரு அவன் போய் இப்ப போலிஸ்ல கேசு குடுத்தான்னா நீதான் உள்ள போகனும். அடிச்சு அவன் சட்டையிலாம் வேற கீழிச்சி விட்டீங்க” என்று அவர் மிரட்டினார்.

அடித்தவரின் பக்கம் இருந்த ஒருவன் “கேசு குடுக்க சொல்லுங்க, ஏன் எங்களுக்கு கேசு குடுக்கத் தெரியாத. பொம்பள குளிக்கறத பாத்தான் அதான் அடிச்சோம்ன்னு நாங்களும் கேசுக் குடுக்கிறோம்” என்றார்.

உடன் இருந்தவர்கள் உடனே பதறினார்கள். “ஏம்பா சும்மா இருக்க மாட்டீயா நீயி” என்று அவரை அதட்டினார்கள். இருதரப்பும் மாற்றி ஒருவரை ஒருவர் மிரட்டிக்கொண்டேயிருந்தார்கள். நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. அவர்களுக்கே ஒரு கட்டத்தில் வெறுப்பாகி சமாதானத்திற்கு வந்தனர். இப்போது என் பக்கத்திற்கு திரும்பி,

“ஏம்பா நீ பண்ணது ரொம்ப தப்பு…”
ஒரு பெரிய மனுசன கை நீட்டியிருக்க. அவரு உள்ளுர்காரர். ஏதனா பண்ண என்ன பண்ணுவ சொல்லு” என்று தோசையை என் பக்கம் திருப்பினர்.

“நீ அவரிகிட்ட மன்னிப்பு கேட்டு அவங்க வீட்டு கனக்சென் குடு. காச பத்தியும், கனக்சென புடுங்கறது பத்தியும் உங்கண்ணன் வந்து பேசிக்கட்டும்”.

எனக்கு வேறு வழியில்லை இங்கிருந்து தப்பித்து வீட்டிற்க்கு போனால் போதும் என்றிருந்தேன். “சரி” என்றேன். கூட்டத்தில் யாரோ ஒருவர், “ஏம்பா, நீங்க பாட்டுக்கு அவன் சட்டைய கீழிச்சி வீட்டீங்க. அவன் எப்படி வீட்டுக்கு போவான்” என்றார்.

மீண்டும் ஒரு பத்து நிமிடம் கூட்டம் பேசி எனக்கு ஒரு புது சட்டை வாங்கி தருவது என முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் கூட்டத்தில் ஒருவர் முன்னால் வந்து என்னை மேலும் கீழும் ஒருமுறை பார்த்து விட்டு தன் டி.வி.எஸ்.50யில் சென்று, 30 நிமிடம் கழித்து வந்தார்.

அவர் கையில் ஒரு புதுசட்டை இருந்தது. அதை வாங்கி என்னிடம் தந்துவிட்டு அவர்கள் கலைய ஆரபித்தார்கள். நான் அந்த புதுச்சட்டையை அணிந்துக்கொண்டேன். மூன்று வருடங்களுக்கு பிறகு நான் அணியும் புதுசட்டை.

***

சூரர்பதி கவிதைகள்

images (8)

என்னை பலிகொடுத்த நாளை நினைக்கிறேன்

இந்திரியம் திரளும் காலம்
உன்னை என் குடிசைக்கு வெளியே
காண்பித்தது என்னை
மதியத் தேர்வெழுதும் சூரியனாய்
கடிகார முட்களில் அது உன்னை
எதிர்புறமாகக் காட்டியது
நானோ கிழக்கின் கோபுரமுமில்லை
வடக்கின் ஓடையுமில்லை
சாதரணன் நான்
எனை ஆட்கொள்ள வந்தாய்
புளியம் இலைகளையுதிர்க்கும் மாக்கோடை
அம்மரக்கிளையோடு தலைகீழாக நடந்தேன்
தவிட்டுச் சூரியனே!
கல் மண் செடி கொடி யெலாம் புதிராக உருக்கொள்ள
செவ்வெருக்கும் நுணாவும் பித்தம் கொள்ள
அன்றைய கிரகணம் நீ
செல்ல நடைக்கு அன்னமிட்டு அண்மித்திருந்தாய்
மங்கள் பிரகாசவெளி
முன்னோர்களின் பாவமாய்
ருதுவாகா உன்னில்
ஆணவத்தின் ஒரு துளி கசிந்ததில்
கபோதியானேன்.

***

கோட்டுக்கு வெளியே

எல்லோரின் தொடர்கண்ணியாய்
மாணவனொருவன் எப்போதும் வரைகிறான்
முதலில் அதன் அடிமரம் இரண்டு கோடுகளாய்
பின் கிளைகள் அனாயசமாய்
ஜன்னலுக்கு வெளியே காற்று
மரத்தை கிச்சு கிச்சு மூட்ட
மரமோ குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறது
பின்ணணியில் மலை வளர்கிறது
ஓங்கியுயர்ந்து வளைகோடாய்
பின்பு எவராலும் சுட்டு வீழ்த்த முடியாத
மூன்று பறவைகளை
பின்பு வட்டமாக முயன்று
ஒடுக்கல் விழுந்த நெளிகோடாய் சூரியன்
குச்சி குச்சியாய் அதன் ஒளிக்கதிர்கள்
சூரியனோ தன் ஒளியைச் சாய்த்து அழிகம்பி வழி அனுப்பி
விரல்களால் தடவிப் பார்க்கிறது
அடிவாரத்தில் ஒரு வீடு
அருகே தோராயமான நிலத்தில் குனிந்தவாறு தந்தை
தோராயமான விவசாயி
தலைக்கு மேலே குட்டிகுட்டியாய் மேகங்கள்
கோட்டினுள்ளே ஓர் இளமையான அமைதி குன்றாமல் ஒளிந்திருக்க
கோட்டுக்கு வெளியே,
குத்திக் கிழிக்க நொந்தித் தள்ள
குந்த வைத்து காத்திருக்கிறது வாழ்வு
அவன் வளர்ந்து வாலிபனாகும் வரை.

*********

விவாகநிதி ஒப்பந்தம் / அமர்நாத்

images (6)

ஐந்தரை மணிக்கே பத்மாவின் தூக்கம் கலைந்தது, கவலையினாலோ ஷிகாகோவின் குளிரினாலோ அல்ல. ஒருவழியாக திவ்யாவின் எதிர்காலம் முடிவானதில் வந்த நிம்மதியினால். பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என தினமும் கவலைப்பட்ட அனந்துக்கு அவளைவிட அதிக சந்தோஷம்.

அந்த மகிழ்ச்சியில் அவன் இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும் என அவள் ஓசைப்படாமல் எழுந்து நடந்தாள். அவர்களுக்குத் தெரிந்த பல இந்தியப்பெண்கள் நாற்பது வயதுக்கு மேலும் சரியான துணை கிடைக்காமல் தனித்துவாழ நேரிட்டிருக்கிறது. பல் மருந்தகம் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தும் அனிதாவின் திருமணம் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை முரண்டுபிடித்ததால் நின்றுபோனது. இன்னொரு மாப்பிள்ளை இன்னும் அவளைத்தேடி வரவில்லை.

ஒரு உணவு விடுதி சங்கிலிக்கு,பாஸ்டனில் இருந்து சான்டியாகோ வரை மாதம் இரண்டு தடவை சுற்றும் மீனாவை ஓரிடத்தில் நிறுத்திவைக்க கணவன் அமையவில்லை. மொனீகாவின் நிலமை இன்னும் மோசம். அவள் அழகாகத்தேடிப்பிடித்த வெள்ளைக்கணவன் ஆறுமாதங்களுக்குள் அவளுடைய கடன் அட்டையில் நாற்பதாயிரம் டாலர் ஏற்றிவிட்டான். அவனைக் கழற்றிவிட இன்னொரு நாற்பதாயிரம் டாலர். முப்பத்தியோரு வயதில் திவ்யாவுடன் வாழ்க்கை நடத்த பொறுப்பான ஒருவனுக்கு சரி, சம்மதம், சந்தோஷம். திருமணத்துக்கு திட்டமிட அவர்கள் முந்தைய தினம் நாஷ்வில்லில் இருந்து வந்தார்கள். விருப்பப்படி எங்கே எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளட்டும். குழப்பம் இல்லாமல் காரியம் நடந்துமுடிந்தால் சரி.

மாடி நடைவழியை ஒட்டியமூன்று அறைகளில் இரண்டின் கதவுகள் சாத்தியிருந்தன. திவ்யாவும் ரைலனும் தனித்தனி அறைகளில். அவர்கள் ஒரே அறையில் தூங்கியிருந்தாலும் பத்மாவுக்கு ஆட்சேபம் இல்லை. திருமணத்துக்குமுன்னால் தொடுவதே ஆபத்தில் முடியும் என்று இருந்த அவள்காலம் வேறு,விரல்நுனியில் விவரங்கள் தேடும்அடுத்த தலைமுறை வேறு. சென்ற ஆண்டு அவள் படித்த கல்லூரிக்கு விஜயம் செய்தபோது, அங்கே ஜோடிஜோடியாக மாணவர்கள்.

அவர்கள் உறவின் எல்லை எதுவோ?
சமையலறையின் மேஜைமேல்,அம்மாவுக்கு காப்பி பிடிக்கும் என திவ்யா வாங்கிவந்த கே-கப் தட்டு.அதில் முப்பத்தியாறு சிமிழ்கள், ஆறு ரகங்களில். வெரி வெனிலா, ஹேஸ்டி ஹேஸல்நட்,மெட்ராஸ் மேட்னஸ்…
மெட்ராஸ் மேட்னஸை நுழைத்து கூரிக் இயந்திரத்தை இயக்கினாள். பெயருக்கேற்றபடி டிகாக்ஷன் கள்ளிச்சொட்டாக இறங்கியது. குடித்து முடித்தபின்புதான் கசப்பு தெரிந்தது. அவளுடன் பலகாலம் பணிசெய்து நெருங்கிய தோழியாகவும் ஆன ஸ்வெட்லானாவின் எச்சரிக்கையும் நினைவுக்கு வந்தது.

‘லானா! திவ்யாவின் திருமணம் நிச்சயம் ஆனமாதிரி தான்.”

“பர்ஃபெக்ட் குட்! டிவ் எப்படி அவனை சந்தித்தாள்?”
ஃபார்ம். டி. பட்டம் வாங்கிய திவ்யா ஒரு வால்க்ரீன்ஸ் கடையில் மருந்துப்பகுதியின் மேனேஜர்.

“அவன் அம்மாவுக்கு தினம் நாலு மருந்து. அவற்றை வாங்க அடிக்கடி வந்தவன் மருந்துகளை எப்போது சாப்பிட வேண்டும், எவற்றைக் கலக்கக்கூடாது போன்ற விவரங்களைத் தேவைக்கு அதிகமாகவே அவளிடம் கேட்டு,சிரித்துப்பேசி…”

“சரி, கல்யாணம் எப்போது?”

“அடுத்த மாதம்.”

“எங்கே?”

“இருவரும் இப்போது நாஷ்வில்லில். அங்கே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நீ நிச்சயம் வர வேண்டும்.”
“ஷூர்! ஷூர்! யார் அவன்?”

“ஒரு வயலினிஸ்ட்.”

“பெயர்?”

“ரைலன் பிஷப்.”

சோவியத் யூனியனின் பொருளாதாரம் சீர்குலைந்தபோது அல்லல்பட்டு, யூ.எஸ். வந்த ஸ்வெட்லானாவுக்கு கையில் கிடைக்கும் வரை எதுவும் நிச்சயம் கிடையாது. தன்அதிபுத்திசாலி அலைபேசியியில் தேடி, அதில்கிடைத்த விவரங்களை ஜீரணித்து…

‘ப்ரீ-நப்- (ஷியல் அக்ரிமென்ட்) செய்தாகிவிட்டதா?”
“திருமணத்துக்கு முந்தைய நிதி ஒப்பந்தம் வேலையற்ற வக்கீல்கள் விரித்த வலை.”

“அப்படி ஒரேயடியாகச் சொல்லாதே! பட்மா!”
“சரி, இது முதல் கல்யாணம். ரெண்டு பேரும் கீழ் முப்பதுகளில்.”

“வயசு எவ்வளவு இருந்தால் என்ன?அவன் நிதி நிலமை?”
“விவரம் தெரியாது. ஆனால்எங்களைவிட சற்று குறைவாக இருக்கலாம்.”

அலைபேசியில் இன்னொரு தேடல். ‘‘நீ சொல்வது சரி.அவன் தன் பெற்றோர்களுடன் தங்கியிருக்கிறான். அவர்களும் வாடகை வீட்டில். ப்ரீ-நப் நிச்சயம் அவசியம்.”
“ஒப்பந்தம் வசதியானவர்கள் கீழே இருப்பவர்களை அவமதிப்பதாக இல்லை?”

“என் பணத்தைத் தொடாதே என்று தடை போடுவது ரொமான்டிக் காதலைக் கொன்றுவிடும்,
ஒப்புக்கொள்கிறேன். கல்யாண தினத்தில் இருந்து அது முடிகிறவரை – எந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் – இருவரும் குடும்பப் பொறுப்புகளைப் போல வருமானத்தையும் பகிர்ந்துகொள்வதும் நியாயம். ஆனால், அதற்கு முன்பும், பின்னாலும் வரும் செலவுகள் அவர் அவர் பொறுப்பு. இதை எழுத்தில் பதிப்பதுஎப்படி தவறாகும்?”
பத்மா யோசித்தாள். முடிபோடுவதற்கு முன்னால் என்பது நியாயமாகப்பட்டது. பின்னால் என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு என்கிற நம்பிக்கை. மொனீகா பட்ட கஷ்டமும் ஞாபகம் வந்தது.

“நீங்கள் வாழ்நாள் முழுக்க சிரமமப்பட்டுச் சேமித்துவைத்த பணத்தில் அவன் கைவைக்கமாட்டான் என்று உங்களுக்கும் நிம்மதி.”

“ப்ரீ-நப் செய் என்று திவ்யாவிடம் நான் சொல்ல முடியாது. ரைலனுக்கு தெரியவந்தால் என்னை வாழ்நாள் முழுக்க வெறுப்பான். மாமியார் பட்டத்துடன் இந்தபொல்லாப்பும் எனக்கு ஏன்?”

“சரி,நான் சொல்கிறேன்.”

திவ்யா தனியாக இருக்கும்போது, லானாவுடன் ஒரு வார்த்தை பேசு, என்று சொல்ல வேண்டும்.
பத்மாவின் நாக்கு,கசப்பு கரைந்துபோனதால் இன்னொரு கோப்பை காப்பிக்கு ஆசைப்பட்டது. இன்னொரு மெட்ராஸ் மேட்னஸ்?

கணவன் மனைவிக்குள் நிதிநிலைமை மட்டும் அல்ல,பத்மா அனந்தைப்போல் பணத்தைப்பற்றிய நோக்கும் அவர்களுக்குள் மாறுபடலாம். அனந்த் அவளுக்கு தூரத்து உறவு என்றாலும் அவளுக்கு எட்டு ஆண்டுகள் முந்திப்பிறந்து, ஷிகாகோவுக்கு ஐந்து ஆண்டுகள் முன்னால் வந்து குடியேறியதால் வந்த சமத்காரம்.

பத்மாவின் தூக்கம் முதன்முறையாக சென்னை நேரத்துக்கு பத்தரை மணி பின்னால்போகத் தடுமாறியபோது, அனந்த்,
“நாளைக்கு நீ சரியான நேரத்துக்கு எழுந்திருக்கணும். வீட்டுக்குக் கையெழுத்து போடப்போறோம், ரெண்டு பேருமா சேர்ந்து. கல்யாணத்துக்கு முன்னாடியே இடம் பார்த்துவச்சுட்டேன். கச்சிதமா மூணு பெட்ரூம்.வீட்டன்ல நல்ல (கறுப்பு நிறத்தவர்கள், தெற்குநாட்டினர்கள் அதிகம் கண்ணில்படாத) நெய்பர்வுட். உனக்கு நிச்சயம் பிடிக்கும்.”
“வீடா?”

அஷோக் நகரில் வீட்டுவாரியம் கட்டிய நான்கு அறை வீட்டில்இருபத்தியோரு ஆண்டுகள் வசித்தவள் அவள்.
“இந்த அபார்ட்மென்ட்டே சௌகரியமாத்தானே இருக்கு.”

“ஏன்? சொந்த வீடு வேண்டாமா நமக்கு?”

‘விலை எவ்வளவு?”

“120 000 டாலர்.”

அவ்வளவு பணம் அவனிடம் இருக்கிறதா?

“நாம கொடுக்கறது 6 000 தான், மீதி கடன்.”

“கடனா?”

கடன்பட்டார் நெஞ்சம்போல்…

“பயப்படாதே! மாசாமாசம் வாடகை கொடுக்கறமாதிரி மார்ட்கேஜ். கொடுக்கற பணத்திலியும் வட்டியின் பங்கை வரியில கழிச்சுடலாம்.”

மறுநாள் வக்கீல் அலுவலகம் போனார்கள்.

“நீ இன்னும் நம்ம ஊர் மத்தியக் குடும்பத்தில இருக்கே. காலையில எழுந்ததும் காப்பிப்பொடி கடன் வாங்காட்டா, நல்ல நாள். மாசம் முடியற வரைக்கும் சம்பளப்பணம் கையில தங்கினா, சொர்க்கம். இங்கே மிடில் க்ளாஸ் எதிர்பார்ப்புகள் வேற. சொந்தமா வீடு, ரெண்டு கார்…” என்று அனந்த் தைரியம் கொடுத்தான்.

வக்கீல் காட்டிய இடங்களில் பத்மா பயத்துடனே கையெழுத்திட்டாள். முப்பது வருஷக்கடன். அவள் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை விட அதிக காலம். கடன் தீரும்போது அவள் எப்படி இருப்பாள்?
அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் இன்னொன்று.
“இதில ஒரு கையெழுத்து போடு!”

அனந்த் ஏற்கனவே அவன் கையெழுத்தைப் பதித்திருந்தான்.
எதற்கு விண்ணப்பம் என்று அவள் கேட்கவில்லை. அவனாகவே சொன்னான். “ஸ்டாக் வாங்கப்போறோம்.”
அவள் தந்தை இன்டியன் வங்கியில் கணக்கர்.

“செலவு போக மிச்சத்தை சேவிங்ஸ் பாங்க்ல போடலாமே.”
‘மிஞ்சிப்போனா எட்டு பர்சன்ட் தூக்கிக்கொடுப்பான். மியுசுவல் ஃபன்ட்ல சில வருஷம் இருபதுக்கு மேல கூட டிவிடென்ட் கிடைக்கும்.”

முதல் வாரம் முடிவதற்குள் சிறில் அலெக்ஸான்டர் அவளை அழைத்தார்.
‘’வெல்கம் டு ஷிகாகோ!”

‘‘தாங்க்ஸ் சார்!”

‘‘சார் எல்லாம் சென்னையில தான்.”

கல்லூரியில் அவளுக்கு ஃபிஸிகல் கெமிஸ்ட்ரி நடத்தியவர். ஒருமுறை அவரை அவர் மனைவியுடன் எதிர்ப்பட்டபோது,
‘‘என் மாணவர்கள் எல்லாரிலும் இவள் அதிபுத்திசாலி” என்று பத்மாவைத் தன்மனைவிக்கு அறிமுகம் செய்து அவளை சங்கடத்தில் ஆழ்த்தியவர். முந்தைய ஆண்டு அவர் ஷிகாகோ பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். அவள் அனுப்பிய திருமண அழைப்பிதழைப் பார்த்து,அனந்துவின் தொலைபேசி எண்ணைத் தேடி…

‘‘என்ன செய்யறதா இருக்கே?”

‘‘இப்பத்தானே ஷிகாகோ மண்ணில கால் வச்சிருக்கேன்.’

‘‘நீ மேலே க்ராஜுவேட் ஸ்கூல் சேரணும்னா நான் இங்கே ஏற்பாடு செய்யறேன்.”

‘‘அனந்துவைக் கேட்டு சொல்றேன், சார்! சாரி, சாரை திருப்பி வாங்கிக்கறேன்.”

அதற்கும் அனந்தின் ஏற்பாடு.

‘‘நம்ம பி.எஸ்ஸி. மூணு வருஷம் தான். அதனால எம்.எஸ். பண்ணிட்டு அப்பறம் தான் பிஎச்.டி. ஆகமொத்தம் ஆறு வருஷம். முடிச்சதும்மிஞ்சிப்போனா 20 000 டாலர். நீ வர்றதக்கு முன்னாடியே நார்தர்ன் இல்லினாய்ல (யூனிவெர்சிடி) மெடிகல் டெக்னாலஜிக்கு அப்ளிகேஷன் வாங்கிவச்சிருக்கேன். நாலு செமிஸ்டர். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, ஸ்பெக்ட்ராஸ்கோபி, செல் பயாலஜி எல்லாம் நீ ஏற்கனவே படிச்சதுதான். ஒண்ணரை வருஷத்தில முடிச்சிடுவே.”

தெரிந்த விஷயங்களை இன்னொரு தடவை ஏன் படிக்க வேண்டும்?

‘‘மெடிகல் டெக்குக்கு ஹாஸ்பிடல்ல 30 000 டாலர் வேலை சுலபமா கிடைக்கும்.”

அப்படியே நடந்தது. கணிசமான சம்பளம் மட்டும் இல்லை, நேரத்துக்குப்போய் நேரத்துக்கு திரும்பிவரலாம். சனி ஞாயிறு கிறிஸ்மஸ் சமயங்களில் வேலை செய்தால் இரட்டிப்பு வருமானம். காரில் பதினைந்து நிமிடப்பயணம். அதை நிறுத்த இடம்…

மாடிப்படியில் இறங்கிவரும் ஓசை.

‘‘குட் மார்னிங், ரைலன்!”

‘‘குட் மார்னிங், மிசஸ் ராம்!”

‘’நன்றாகத் தூங்க முடிந்ததா?”

‘‘ஓ! அறுபத்தைந்து டிகிரி. அடக்கமாக இருந்தது. என் பெற்றோர் வீட்டில் அறுபது தான். குளிர் நடுக்கும். காலை நாலுமணிக்கே போக்குவரத்து ஓசை எழுப்பிவிடும். இங்கே என்ன அமைதி!”

‘‘காஃபி தரட்டுமா?”

‘‘ஓ! ஷூர்.”

அவனுக்கு வெரி வெனிலா, அவளுக்கு மறுபடி மெட்ராஸ் மேட்னஸ்.

பத்மாவின் காப்பியைப் பார்த்து பால், க்ரீம் கலவாமல்,
‘‘கறுப்பாக இருக்கிறதே!”என்று ஆச்சரியப்பட்டான்.

‘‘நான் மருந்தகத்தில் வேலை தொடங்கியபோது அது தான் கிடைக்கும். அலுப்பைக் குறைக்க அதைக் குடிக்க ஆரம்பித்தேன்.”

‘‘அலுப்பு இல்லாத வேலை எது?”

‘‘மருந்தகத்தில் நோயாளிகளின் உடல் திரவங்களை அளவிடுவது அவசியம் தான். ஆனால், அறிவியல் ஆய்வில் எனக்கு இன்னும் திருப்தி கிடைத்திருக்கும். ஒரு நாளைப்போல இன்னொரு நாள் இராது.”

‘‘அதில் வருமானம் குறைவாக இருந்திருக்கும்.”

‘‘சரிதான்.”

காப்பி குடித்துமுடித்ததும் கோப்பையைக் கையில் பிடித்து அழகுபார்த்தான்.

‘‘சின்னது, பிடிக்க வாகு, மோனா லிஸாவின் படம். இதுபோல இங்கே கிடைக்கிறதா?”

‘‘இல்லை. நாங்கள் பாரிஸ் போனபோது வாங்கிவந்தது.”
கணிசமான சமையலறை, அதையொட்டிய சாப்பிடும் இடம், நீண்ட குடும்ப அறை. ரைலன் பார்வையை ஓட்டினான். பளிங்குக்கல் மேஜைகள், விலையுயர்ந்த அடுப்பு, நான்கு கதவுகளுடன் ஃப்ரிட்ஜ், நினைத்த மாத்திரத்தில் காஃபி தயாரிக்கும் கூரிக்,பத்மாவும் அனந்தும் பயணம் போன நாடுகளைக் காட்டும் வகையில், இத்தாலியில் இருந்து கண்ணாடிச் சிலைகள், ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கற்கள்…

‘‘பெரிய சௌகரியமான வீடு.”

பத்மா ஷிகாகோ வந்தவுடன் வாங்கிய வீட்டை விற்று, அதில் வந்த லாபத்தில் அடுத்ததை வாங்கி, அதையும் விற்று மூன்றாவதாக…

‘‘தாங்க்ஸ். கொஞ்சம் பழசாகிவிட்டது.”

ரைலனுடன் என்ன பேசுவது? பத்மாவுக்கு கர்னாடக சங்கீதமே தகராறு, சிம்ஃபனி என்பது, ஒட்டு மொத்தமாக கும்பலாக ஒருவரின் கையசைவுகளுக்கு…

‘‘ம்யுஸிக்கில் எப்படி ஆர்வம் வந்தது?”

‘‘ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாஷ்வில்லுக்கு இடமாறும் வரை என் தந்தை ப்ரூக்லினில் சங்கீத ஆசிரியர். ப்ரூக்லின் சிம்ஃபனியில் அவர் ச்செல்லோ வாசித்ததும் உண்டு. இசையில் இலவச ஆரம்பப்பாடம்” என புன்னகைத்தான்.

‘‘காலேஜ்…”

‘‘பெர்க்லீ காலேஜ் ஆஃப் ம்யுசிக். இந்த பெர்க்லீ பாஸ்டனில்.”

உரையாடலில் ஒரு இடைவெளி. ஏதோ யோசனைக்குப்பிறகு,ரைலன் தயக்கத்துடன் ஆரம்பித்தான்.
‘‘டிவ்யாவின் கீழ்பட்டப்படிப்புக்கு நீங்கள் கடன் வாங்கவில்லை என்று அவள் சொன்னாள்.”

‘‘அவள் இல்லினாய் (பல்கலைக்கழகம்) போனா
ள். உனக்குத்தான் தெரியுமே மாநிலக் கல்லூரி, சம்பளம் குறைச்சல்.”

‘ஃபார்ம்.டி?”

‘‘அதுவும் இல்லினாய்.”

‘‘நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து நூறாயிரம் டாலர் ஆகியிருக்குமே.”

‘‘இன்னும் கொஞ்சம் அதிகம்.”

‘‘அதற்கும்அவள் கடன் வாங்கவில்லை.”

‘‘நாங்கள் வாங்கினோம், வீட்டின் பேரில். திருப்பிக்கொடுத்தாகி விட்டது.”

பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியுசிக் தனியார் நிறுவனம் என்பதில் சந்தேகம் இல்லை. அதில் பட்டம் வாங்க அவனுக்கு நிச்சயம் கல்விக்கடன் தேவைப்பட்டு இருக்கும். பத்மாவின் மூளையில் அடங்கிக்கிடந்த ஒரு சிந்தனைப்பொறி. அதைத்தொடர்ந்து திடீரென ஒரு தீர்மானம்.

‘‘ரைலன்! நான் சொல்லப்போவதை நீ கவனமாகக் கேட்கவேண்டும்.”

அவள் குரலின் கனம் அவனை நிமிரவைத்தது.
‘‘இதைப்பற்றி பல காலமாக நான் யோசித்து இருக்கிறேன். அதை ஒருவர் விரிவாக, எண்களுடன் மனதில் படியும்படி எழுதியதை சென்ற வாரம் படித்தேன்…

**

ராபர்ட் பால் வுல்ஃப் எழுதிய ‘ஒரு முன்னாள் வௌ;ளை மனிதனின் சுயசரிதையில் இருந்து…
உலகப்போர் முடிந்து 1950-ஆம் ஆண்டு.

யூ.எஸ்.ஸின் கீழ்-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள். ஒவ்வொன்றிலும் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள். இரண்டுக்கும் ஒரே வருமானம், ஆண்டுக்கு ஆண்டு ஒரே சம்பள உயர்வு. ஒரே மாதிரியான உணவு, உடை, மனமகிழ்வுக்கான செலவுகள்.

ஒரு பக்கம் வெள்ளைநிற ஸ்மித். இன்னொரு பக்கம் கறுப்பு ராபின்சன்.
ஸ்மித் 500 டாலர் முன்பணம் போட்டு ஒரு வீடு வாங்குகிறார், மீதி 10 000 டாலர் நிலையான 6 சதம் வட்டியில் 30 வருஷ அரசாங்கக் கடன். ஒவ்வொரு ஆண்டிற்கும் மார்ட்கேஜ் தொகை 720 டாலர். கடன் காலம் முடிந்தபோது, ஒவ்வொரு மாதம் கட்டிய தொகை, சொத்துவரி, இன்ஷுரன்ஸ், பழுதுபார்க்கும் செலவு ஆகியவற்றைக் கழித்து, வீட்டு மதிப்பின் உயர்ச்சி, வீட்டுக்கடனின் வட்டிக்கு வரிவிலக்கு இவற்றைக் கூட்டினால்… அந்த காலக்கட்டத்தில் வசிப்பதற்கு ஸ்மித் குடும்பம் செய்த மொத்த செலவு 36 000 டாலர்.

இராணுவத்தில் இருந்து விலகிய ராபின்சனிடமும் வீட்டுக்கு முன்பணம் கொடுக்க 500 டாலர் இருந்தது. ஆனால், ஊரின் கௌரவமான பகுதிகளில் அவர் வீடு வாங்காமல் தடுக்க மத்திய மாநில மாவட்ட சட்டங்கள், கடனை மறுப்பதற்கு வர்த்தக நிறுவனங்களின் மறைமுக வஞ்சகம். அதனால், அவர் குடும்பம் வாடகை வீட்டியேயே வசிக்க நேர்கிறது. மற்ற பொருள்களின் விலை போல் மாத வாடகையும் முப்பது ஆண்டுகளில் 120 டாலரில் இருந்து 350 டாலராக அதிகரிக்கிறது. ஆனால், அந்த வீட்டின்மேல் அவருக்கு எந்தவிதமான பாத்தியதையும் கிடையாது. ராபின்சன் குடும்பத்தின் வீட்டுக்கான மொத்த செலவு 82 000டாலர்.
அப்பட்டமாகச் சொல்லப்போனால்,முப்பது ஆண்டுகளில் ராபின்சன் குடும்பத்தில் இருந்து ஸ்மித் குடும்பத்துக்கு அரசின் அங்கீகாரத்துடன்46இ000 டாலர் மாற்றப்பட்டது.

**

“வேதியியல் சமன்பாட்டில் இரண்டு பக்கங்களின் பொருட்களும் சரிசமமாக இருந்தாக வேண்டும்.அதன்படி பார்த்தால்,வீட்டுக்கடனின் வட்டியை ஒருவர் வருமானவரியில் கழித்தால், வாடகை கொடுக்கும் வேறு யாரோ அதை சரிக்கட்ட வேண்டிவரும்.அனந்தின் எண்ணங்கள் வேறு.‘சட்டப்படி நடந்தோம். சாமர்த்தியமாகப் பணம் சேர்த்தோம். யாரையும் ஏமாற்றவில்லை. யாருக்கும் துரோகம் செய்யவில்லை’ என்று சொல்வான். நான் அப்படி நினைத்தது இல்லை. யூ.எஸ். சட்டங்கள் எல்லாமே கறுப்புகளின் சுதந்திரங்களைப் பறித்து, வெள்ளை மக்களுக்கு, அதிலும் சொத்து வைத்திருக்கும் வெள்ளைகளுக்கு சாதகமாக காங்க்ரஸ் இயற்றியவை. உன் குடும்பம் வெள்ளை என்றாலும் உன் தந்தை வீடு வாங்கவில்லை.”

‘‘அவர் ஒரு ஃப்ரீ ஸ்ப்ரிட். கார், வீடு, ஸ்டாக் எல்லாம் அவருக்கு வேண்டாத தளைகள்.”

‘‘சட்டம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. சட்டப்படி நாங்கள் திருடாவிட்டாலும், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் சொந்த வீடு என்கிற போர்வையில் ஏறக்குறைய 100 000 டாலரை நாங்கள் அபகரித்து இருக்கிறோம். இதற்கு அரசாங்கமும் உடந்தை. அந்தப்பணம் சொத்து இல்லாத பல குடும்பங்களில் இருந்து வந்தது. மனசாட்சி தெளிவாக இருப்பதற்கு நான் அதைத் திருப்பிக்கொடுக்க விரும்பினாலும் முகம்தெரியாத அவர்களைத் தேடிக்கொடுக்க முடியாது.”
உரையாடல் ஒரு முக்கியமான முடிவு நோக்கிப் போவதை உணர்ந்த ரைலன் பத்மாவின் முகத்தையே உற்றுப்பார்த்தான்.

‘’அதனால்… நாங்கள் உன் ஒரு குடும்பத்தில் இருந்து பணத்தை எடுத்ததாக வைத்துக்கொள்வோம். உன் கல்விக்கடன் எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. அதை அடைப்பதற்கு உதவியாக நான் 50 000 டாலர் தரப்போகிறேன். எங்கள் மகளுடன்வரதட்சணையையும்நீ ஏற்றுக்கொள்! ஒரு அநியாயத்தை நியாயப்படுத்திய திருப்தி எனக்கு.”
மருந்துகளை வாங்குகிறவர்கள், அவற்றின் விவரங்களைக் கேட்பவர்கள் எல்லாருக்கும் பொறுமையாக, சிரித்த முகத்துடன் பதில்சொன்ன திவ்யாவின் குணநலன்களால் அவன் கவரப்பட்டான். அவள் தாயின் எதிர்பாராத அன்பளிப்பைக் கேட்டு ரைலனுக்கு அதிர்ச்சி. அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு,

‘‘முதலில் ஒரு விஷயத்தை முடித்துவிடுவோம். என் பெற்றோர்களுக்கு ஓய்வுக்கால சேமிப்பு அதிகம் கிடையாது. சொந்த வீடு இல்லை. என் தாயின் மருந்துகளுக்கு அரசாங்கத்தின் நிச்சயமற்ற தயாள குணத்தைத்தான் நம்பி இருக்கிறோம். உங்கள் வீட்டையும், சொகுசான வாழ்க்கையையும், தாராளமான நிதிநிலைமையையும் பார்த்து எனக்குப் பொறாமை வந்தது உண்மை. அதற்காக நான் மனம் வருந்துகிறேன். என் மன்னிப்பை ஏற்க வேண்டும், மிசஸ் ராம்!” என்றான் குற்றம் தோய்ந்த குரலில்.

‘‘முடியாது!” என்று பத்மா முகத்தை இறுக்கிக்கொண்டாள். பிறகு,தளர்ந்த புன்னகையில் சொன்னாள்.

‘‘மாம் என்று என்னை அழைத்தால் நான் ஏற்றுக்கொள்வேன்.”

••

ஏ.ஆர். ரஹ்மான் – புதிய இசையின் மெசையா / பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஏ.ஆர். ரஹ்மான்

ஒரு மாதம் முன்பு முடிந்த வருடம் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்து கால் நூற்றாண்டு. வருடங்களை நூற்றாண்டுகளாகச் சொல்வது அவற்றை ஒரு காலகட்டமாகத் தொகுக்கிறது. ரஹ்மானை இந்திய சினிமா இசையில் ஒரு காலகட்டமாகத் தொகுத்து, தனித்து உள்வாங்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவுமான கால அளவை அவரது இசைப்பயணம் எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் பாப்புலர் இசையை தீவிரமாக அணுகுவதில் தொடர்ந்து தவறுகின்றவர்களான நாம் இக்கால் நூற்றாண்டு முடிவை குறைந்தபட்சம் கொண்டாடவும், பரிசீலனை செய்யவும், அவருடைய ஆக்கங்களின் அழகியல் நுட்பங்களை, பன்மையை, ஈர்ப்பை, விலகலை ஒரு தலைமுறையின் இசை நுகர்வின் மீது அவர் செலுத்திய செல்வாக்கை இசைத் துறையிலும் அறிவுத் துறையிலும் உள்ளவர்கள் தயாராகவில்லை என்பது துயரகரமானது.

ஜூலியன் பா(ர்)ன்ஸின் The Sense of an Ending நாவலில் காலகட்டங்களை உள்வாங்குவதைக் குறித்து ஒரு சித்திரம் இவ்வாறாக அளிக்கப்பட்டிருக்கும்: “people did not experience the “Sixties” until the Seventies. Which meant, logically, that most people in the Sixties were still experiencing the Fifties or in my case, bits of both decades side by side. Which made things rather confusing.

கடந்த காலத்திற்குத் திரும்பும் ஏக்கத்தின் காய்ச்சல் குறையவே குறையாதவர்களான நமக்கு இக்குழப்பம் மிக அதிகம். கால் நூற்றாண்டுகளின் பாதி வருடங்கள் வரை அதாவது 2000ங்களின் துவக்க வருடங்கள் வரை நாம் இளையராஜாவோடு ஐய்க்கியப்பட்டிருந்தோம். அதே சமயத்தில் ரஹ்மானின் இசை நமது உறைநிலையில் பெரிய உடைவுகளை உருவாக்கியது. இளையராஜா எனும் பனிமூட்டத்தை விலக்கிக் கொண்டிருந்தது. 2010களின் இறுதிப் பகுதிகளில் ரஹ்மான் அவருக்குப் பின்னெழுந்த இசையமைப்பாளர்களின் புகை மூட்டத்தால் சூழப்பட்டவராகிவிட்டிருக்கிறார்.

அறிவுப்புலத்தில் நாம் ரஹ்மானின் இசையை விவாதிக்கவே இல்லை. நமக்கு ஆராதனைக்கு மேலாக ஒன்றுமே தெரியாதென்பதோடு, இசையை தத்துவார்த்தமாக, விமர்சனப் பூர்வமாக அணுகும் விற்பன்னர்கள் பற்றாக்குறையும் உடையவர்களாக இருக்கிறோம். இசையின் நோக்கங்களில் ஒன்று நமது உணர்வுகளைக் கையாளுதல். இசையை அணுகுவது என்பதே இசைக்கும் நுகர்கின்றவர்களின் உணர்வுகளுக்கும் இடையே நிகழும் உறவை சிந்தனைக்கு உட்படுத்துதல். கட்டுப்பாடுகளை உடைத்து உணர்வுகளில் எதிர்பாராத சலனங்களை தோற்றுவிப்பதே இசை எனும் பட்சத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை மில்லினியல் தலைமுறையின் உணர்வுகளில் ஏற்படுத்திய சலனங்களை நமது சிந்தனையால் அளவிடுவது அவருடைய கால் நூற்றாண்டுப் படைப்புகளுக்கு அளிக்கும் மரியாதையாகவும், அறிவார்ந்த பணியாகவும் இருக்கும்.

இசையை நுகர்பவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடே வெறுமனே கடந்து போவதற்கும், தீவிரமாக அணுகுவதற்கும் உள்ள வேறுபாடு. தமிழ்நாட்டில் இசையை அதிலும் குறிப்பாக சினிமா இசையைத் தீவிரமாக அணுகும் இசை அறிந்தவர்கள் மிகக் குறைவு. பாப்புலர் ஊடகங்களில் அப்படியொரு விமர்சனக் கண்ணோட்டமே வளர்த்தெடுக்கப்படவில்லை. நாமறிந்த இசை விமர்சகர்களென இருக்கும் ஒன்றிரண்டு பேர் சாஸ்திரிய இசையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். “பார்த்தாலே பரவசம்” ஆல்பத்திற்கு ஆங்கில இந்து நாளேட்டில் வந்த விமர்சனமே அந்த ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ஜாஸ் இசையமைப்பை பயன்படுத்தியிருக்கிறார் என எனக்கு அறிமுகம் செய்தது இன்னும் நினைவில் உள்ளது. அறிவுப்புலத்தில் பிரேம்:ரமேஷ் எழுதிய “இளையராஜா: இசையும் தத்துவமும்” என்கிற ஒரு நூலைத் தவிர என்னால் எதனையும் சுட்ட முடியவில்லை. ரஹ்மானின் இசைக்கு அப்படியொரு தலைப்பைக் கூட நம்மால் இந்த கால் நூற்றாண்டின் இறுதியில் கூட அளிக்க முடியவில்லை என்பது நமது இயலாமை. இரண்டாயிரங்களில் இருப்பவர்கள் தொண்ணூறுகளில் இருக்க, தொண்ணூறுகளின் மீது எண்பதுகளின் ஆதிக்கம் இன்னுமே நீங்காமல் இருக்கிறது.

ரஹ்மானின் கால் நூற்றாண்டை ஒட்டி இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து கேட்க அந்த அனுபவம் ஒன்று மட்டுமே சொல்கிறது. அவர் தொண்ணூறுகளின் இடையில் இரண்டாயிரங்களில் நின்றவர். இரண்டாயிரத்துப் பத்துகளின் பின்பகுதியில் தனது கால்கள் பாவிய நிலத்தில் எழும் அதிர்வுகளோடு போட்டியிடுகிறார். மாடர்னிடி என்பது ஒரு தொடர்ச்சியிலிருந்து முழுதுமாக விலகி புதிய ஒன்றைப் படைத்தல் என்றால் தமிழ் சினிமா இசையின் மாடர்னிடி ரஹ்மானிலிருந்தே துவங்குகிறது. அவருடைய “தீ தீ தித்திக்கும் தீ”, “வீரபாண்டி கோட்டையிலே” பாடல்களைக் கேட்கையில் Kraftwerk குழுவினரின் இசையில் உணரக் கூடிய எதிர்காலத் தன்மையை என்னால் உணர முடிகிறது. இது ஓர் அவசர உதாரணம் மட்டுமே. அந்தப் பாடல்களில் மட்டுமல்ல அவருடைய இசையின் துவக்க வருடங்களில் இந்த எதிர்காலத்தன்மையே முக்கியமான ஒன்றாகத் தெரிகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வந்த ஆண்டுகளில் நம்மில் பொரும்பாலோனிரடத்தில் நல்ல இசைக்கேட்புச் சாதனங்கள் கூட இல்லை. ஆனால் அவரிடம் சிறந்த இசையமைப்புத் தொழில்நுட்பச் சாதனங்கள் இருந்ததாக இசையமைப்பாளர் தாஜ் நூர் “தமிழ் இந்து” தொடரில் குறிப்பிடுகிறார். அவருடைய இசையின் துவக்க காலத்தில் நாம் உணர்ந்த அந்நியத்தன்மைக்கும், கட்டுக்கடங்காத மனவெழுச்சிக்கும் தொழில்நுட்ப இடைவெளியும் ஒரு காரணம். Bass என்ற ஒன்றையே நாம் அப்போதுதான் எட்ட முடிந்தது. Intel நிறுவனத்தின் Curie தொழில்நுட்பத்தை ஒரு நேரடி இசைநிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்.

இணையம் நம்முடைய அழகியல் நுகர்வில் ஏற்படுத்திய மாற்றங்களின் தாக்கத்தோடு நாம் ரஹ்மானின் இசையை அணுகினால் அவருடைய இசையை ஆங்கிலப் பாப் இசையோடு ஒப்பிடலாம். ஆனால் பாப் இசையின் நுட்பக்குறைவான மேலோட்டமான உணர்வுத்தளத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்களாக இருந்தால் ரஹ்மானின் இசையில் ஆழமில்லை என்று அவசரப்பட்டு சொல்லி விடலாம். நுட்பக்குறைவான மேலோட்டமான உணர்வுத்தளமென்பது ஒரு குறையல்ல. செவ்வியல் இசையின் அழகியல் வேறுவகை. பாப் இசையின் அழகியலை அதற்கு இணைவைத்து வாதிப்பதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பூமி ஒரு பாதையில் சுற்றினால் வியாழன் வேறொரு பாதையில்தான் சுற்றும்.

ரஹ்மானின் இசையின் உள்ளார்ந்த தன்மையென்பது அமைதிதான் என்று நினைக்கிறேன். பீறிட்டுத் தெறிக்கும் இசையின் பின்னே அமைதியை எட்ட முனையும் ஓர் உள்ளார்ந்த தொடர்ச்சி அவருடைய படைப்புகளில் நிறைந்திருக்கிறதென்றும் நம்புகிறேன். பீறிட்டுத் தெறித்தலுக்கும் உள்ளார்ந்த அமைதியை எழுப்ப முனைவதற்குமான முயற்சிகளே அவருடைய படைப்புகள். மனதையும் உடலையும் ஒருங்கே அணுகுவதாகத் தோன்றினாலும் மனதை மட்டுமே எழுச்சியுறவும், அமைதி பெறவும் முயலுகின்ற ஒன்று அவருடைய இசை. EDM இசையின் கூறுகளை அவர் பயன்படுத்தியிருந்தாலுமே கூட அவருடைய படைப்புகள் நிச்சயமாக ஹவுஸ்பார்ட்டிகளில் ஆடுவதற்கானவையல்ல. மாறாக மார்த்தா கிரஹாமின் நடனக் காட்சிக்கு ஒப்பிடலாம் (ஸ்ட்ராவின்ஸ்கியின் Rite of Spring இசைக்கோர்வைக்கு மார்ஹ்த்தா கிரஹாம் அமைத்த நடனத்தை அல்லது Take me to Church பாடலுக்கான Sergei Polunin நடனத்தையும், புகழ்பெற்ற மின்னணு நடன இசையின் ஆரம்பகால அணுக்களில் ஒன்றான Hot Butter குழுவினரின் Popcorn பாடலுக்கான நடனத்தையும் ஒப்பிட்டால் நான் ஓரளவாவது நெருக்கமான ஒன்றைச் சொல்கிறேன் என்று எடுத்துக் கொள்ளலாம்). தாளத்தின் பின்னணியிலும், இணையாகவும் தந்தி வாத்திய, பியனோ, குழல் ஒலிகளை ரஹ்மான் அதிகமாகப் பயன்படுத்துவதும் இதன் காரணமாக இருக்கலாம். ஒருவேளை இசையின் நோக்கமே அமைதியை எழுப்பக்கூடியதாக இருக்கும். ஆங்கிலப் பாப் பாடல்களில் அடையாளம் காணப்பட முடியாத ஆழத்தில் இருப்பதாகப் படும் அமைதி ரஹ்மானின் இசையின் மெலடியில் சட்டென காண முடிவது முக்கிய வேறுபாடு (இத்தருணத்தில் சாம் ஸ்மித்தின் I am Not the only one பாடலும் Passengerன் Let Her Go பாடலும் நினைவுக்கு வருகின்றன). கூடுதலாக மென் ராக் இசையோடு பாப் இசைக் கலைப்பையும் ஒத்திருப்பது என்றும் சொல்லலாம்.

இசையைப் பொறுத்தவரை தன்னிலைப்பட்ட அணுகுமுறை மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு சாத்தியம் என்றாலும் அதனையும் கடந்து ஒரு சமூகத்தின் பொதுத்தளத்தில் இசை விமர்சனம் முக்கியமான ஒன்றாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் சுந்தர ராமசாமி சொன்னதைப் போல தமிழர்களால் ஏதேனும் சாதனை செய்ய முடிந்தால் அது இசையில் மட்டுமே சாத்தியம். அச்சாதனையை ரஹ்மான் செய்ததற்கான ஓர் ஒப்புதலே ஆஸ்கர் விருது. நம்மால் அச்சாதனையை முறையாக உள்வாங்கவும், அதனால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாமலும் போய்விட்டது.

ரஹ்மானின் இசையமைப்புப் பாணியென்பது ஓர் இசை ஒலித்தொடரை உருவாக்கி அது முதிர்ந்து மறையும் நிலையை எழுப்ப முனைவதே. ஆர்க்கெஸ்ட்ரா பாணியில் பல்வேறு இசை ஒலித்தொடர்களின் கலவைக்குப் பதிலாக முன்னணியில் நகரும் ஓர் இசை ஒலித்தொடருக்கு துணை செய்வதாகவே கலப்பிசையைப் பின்னணியில் பயன்படுத்துவார். அதுவே அவரது படைப்புகளில் மெலோடியை எழுப்பும் நுட்பம். மெட்டுக்களைக் குறித்துப் பேசுகிற அளவிற்கு நான் துணியப்போவதில்லை (இவ்வளவு துணிந்ததே என்னுடைய இசையறிவிற்கு அதிகம்). இந்திய சினிமா இசையில் ரஹ்மான் ஏற்படுத்திய மாற்றம் அதற்கு முன்பு அறியப்படாதது. “ரங்கீலா” திரைப்படத்தின் இசைக்குப் பிறகு, “ரங் தே பசந்தி”யின் இசைக்குப் பிறகு முழு இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தி சினிமா இசை அடைந்த மாற்றத்தைப் பாருங்கள். பெரும் திரையிசைக் கலைஞர்கள் பென்சனோ, பத்ம விருதுகளோ வாங்கும் நிலையை அடைந்தனர்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும் இங்கே அளிக்க விரும்புகிறேன். என்னுடைய தங்கையிடம் ரஹ்மானின் இசை, ராஜாவின் இசையைக் குறித்து சொல்லச் சொன்னால் அவள் இப்படி பதில் அளித்தாள்: “முழு நிலவின் அழகிற்கும், பிறையின் அழகிற்கும் அளவைத் தவிர அழகில் ஒன்றும் வேறுபாடில்லை”. ஆனால் என்னுடைய அம்மாவிடம் இதே கேள்வியைக் கேட்க அவரோ ராஜாவின் இசை பிடிக்கவேயில்லை என்கிறார். எனக்கு அது ஆச்சரியம்தான். நானோ ரஹ்மானின் ஆதிக்கத்தாலும், அவருடைய மாயாஜாலத்திற்கான ஏக்கத்தோடு பொறுமையில்லாமலும் இருப்பவன். ரஹ்மானும் நாஸ்டால்ஜியாவாக மாறிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மனதும் ஒவ்வொரு விதத்தில் இசையை உள்வாங்க ஒரு சமூகமோ வேறொரு வகையில் உள்வாங்கிக் கொள்கிறது. இந்த இடைவெளியை அவ்வளவு எளிதாக நம்மால் அறியவோ அளக்கவோ முடியாதென்பதே இசையின் மாயம்.

•••••••••••••••••

தியேட்டர் இல்லாத ஊரில் / ஜிஃப்ரி ஹாஸன் ( இலங்கை )

செய்யது அகமதுவைக் காத்துக் கொண்டு நின்றேன். நாங்கள் ஓதும் மதரசாவிலிருந்து ஒரு இருபது முப்பது மீற்றர்கள் தள்ளி ஒரு சந்தி வளைவில் ஏற்கனவே நாங்கள் திட்டமிட்ட இடத்தில் ஒரு இரகசியச் சந்திப்புக்கு காத்திருப்பவனைப் போல செய்யது அகமதுக்காக நான் காத்துக் கொண்டு நின்றேன். இன்று மதரசாவுக்கு களவடித்து விட்டு வெலிங்டன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்று இருவரும் முடிவெடுத்திருந்தோம். இதற்கு முன்னும் அவன் சில தடவைகள் அங்கு சென்று படம் பார்த்திருக்கிறானாம். எனக்கு இதுதான் முதல் முறை. அதனால் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது.

எங்கள் வீட்டாருக்குத் தெரியாமல் இதை லாவகமாகச் செய்ய வேண்டும். முக்கியமாக இந்த மவுலவிக்கு தெரிந்துவிடக்கூடாது. தெரிந்தால் மதரசா தூண் ஒன்றில் இரண்டு பேரையும் பிணைத்துக் கட்டிவிட்டு செம அடி அடிப்பார். அதனால் மதரசாவிற்கு சற்றுத் தள்ளி நின்று செய்யதகமதுவைக் காத்துக்கொண்டு நின்றேன். காலில் வெந்நீர் ஊற்றுப்பட்டவன் போல் நான் அப்போது பரபரப்பும் பதட்டமும் கொண்டிருந்தேன். செய்யதகமது வருகிறானா என நிமிடத்துக்கொருதடவை வீதியை நோட்டமிட்டுக் கொண்டு வெயிலில் வாடியும் வதங்கிக் கொண்டும் நின்றேன். தியேட்டரில் படம் பார்க்கப் போகும் ஆர்வ மிகுதியினால் வெயிலின் சூட்டை அப்போது எனக்கு உணர முடியவில்லை.

ஊரில் இன்று எஞ்சி இருக்கும் இரண்டு தியேட்டர்களில் ஒன்று வெலிங்டன். எங்கள் ஊரின் ஒரு கோடியில் மெயின் வீதிக்கு அருகில் அந்த தியேட்டர் இருந்தது. தியேட்டரின் இடப்பக்கமாக சவக்காலை ஒன்றிருந்தது. அங்குதான் நான் முதன்முதலாக கல்லறைகளைக் கண்டேன். நான் தொழப்போகும் பள்ளிக்கருகில் இருக்கும் மையவாடியில் அது போன்ற கல்லறைகளை நான் கண்டதில்லை. கல்லறைகளுக்கு பதிலாக அங்கு மீஸான் கட்டைகளே நடப்பட்டிருந்தன.

கல்லறைகளில் மீந்திருக்கும் சோகத்தையும், ஒரு வித அச்சத்தையும் நான் மீஸான் கட்டைகளில் கண்டதில்லை.
ஊருக்குள் தியேட்டர் இருக்கக்கூடாது என பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானம் எடுத்து அறிவித்த பின்னர் தியேட்டர்கள் இல்லாத ஊராக எங்கள் ஊர் ஆனது. ராபின் அனிபா என்றொருவர் ஊரின் இன்னொரு கோடியில் ஒரு சிறிய தியேட்டர் வைத்து நடத்தி வந்தார். அதை தியேட்டர் என்றே சொல்ல முடியாது. அது ஒரு சிறிய கொட்டகைதான். அதுதான் ஊரின் இரண்டாவது தியேட்டர். அவரது தியேட்டருக்கருகில் பொலிஸ் நிலையமும், புகையிரத நிலையமும் இருந்தன. ராபின் அனிபா என்றால் சண்டியன் அனிபா என்று பொருள். நல்ல உயரமான வாட்டசாட்டமான ஆம்பிளை. யாரும் அவருடன் வம்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இதனால் அவரால் தியேட்டரை சிறிது காலம் தடைகளை சமாளித்துக் கொண்டு நடத்த முடிந்தது.

ஆனாலும் இந்த இரண்டு தியேட்டர்களிலுமே திரை இல்லை. 21 இன்ஞ் டீ.வியில்தான் படம் காண்பிக்கப்பட்டது. எங்களுக்கு திரை எல்லாம் முக்கியமில்லை. படம்தான் முக்கியம். செய்யதகமதைப் பொறுத்தவரை கைக்கடிகாரத்தின் வட்டத்துக்குள் கூட படம் ஓடினால் பார்த்து களிப்புறக் கூடியவன். படம் பார்ப்பதில் அவன் என்னைவிட இரண்டு மடங்கு ஆர்வமுள்ளவன். அவன் படம் பார்க்கும் போது அருகிலிருப்பவர்கள் இறுமினால் கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருப்பான். ஆனால் எங்கள் இருவரையும் விஞ்சுமளவுக்கு அப்போது எங்கள் மதரசாவில் படம் பார்க்கும் ஆர்வத்துடன் யாரும் இருந்தார்களா என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. சிலவேளை என்னையும், செய்யதகமதுவையும் போல் திரைப்படம் பார்ப்பதற்கான ஆர்வத்தையும், அதற்கான முயற்சியையும் வெளிப்படுத்துவதற்கான தையரியம் அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.

எனது நண்பர்களில் செய்யதகமதுதான் முதன் முதல் மதராசாவுக்கு களவடித்துவிட்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றான். அவன் மதராசாவிற்கு வந்த நாட்களை விட வராத நாட்களே அதிகம். மதராசாவிற்கு வராத நாட்களிலெல்லாம் அவன் தியேட்டருக்குத்தான் சென்றிருக்கிறான். இப்போது தனியே செல்வதில் அவனுக்கொரு தயக்கமிருந்தது. அந்த தயக்கத்துக்கான காரணத்தை அவன் பின்னர் எனக்குச் சொன்னான். அவன் ஒரு நாள் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இவன் அருகில் படம் பார்த்துக்கொண்டிருந்தாராம். அன்று தியேட்டரிலும் பெரிய கூட்டம் எதுவும் இல்லையாம்.

இவனும் படத்தில் மிகவும் மூழ்கி இருந்தபோது திடீரென்று ஒரு பாடல்காட்சியின் போது இவன் கன்னங்களைக் கிள்ளி இவனை முத்தமிட முனைந்த போது இவன் அவரைத் தட்டிவிட்டு தியேட்டரை விட்டும் வெளியேறிவிட்டானாம். அன்று முழுமையாகப் படம் பார்க்க முடியாமல் போனதாக செய்யதகமது மிகவும் வருத்தப்பட்டான். துணைக்கு இன்னுமொருவர் இருந்திருந்தால் கிழவனுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை என்று சொன்னான். இந்த சம்பவம் நடந்ததன் பின் தியேட்டருக்குத் தனியாகச் செல்ல அவன் விரும்பவில்லை. அப்படியான ஒரு நாளில்தான் என்னை அழைத்தான்.

”டேய்..படம் பார்க்கப் போவமாடா..? எந்த நாளும் ஓதிறந்தானே..” செய்யதகமது ஒரு நாள் என்னிடம் பேச்சுத் தொடுத்தான்.

எப்படி அந்தக் கூட்டத்தில் என்னை சரியாக அடையாளங் கண்டானோ தெரியவில்லை. அப்போது அவன் முகத்தில் தெரிந்தது ஆர்வமா அலட்சியமா என தெரியவில்லை. செய்யதகமதுவின் கேள்வி இன்பத்தேன் போல் என் காதில் பாய்ந்தது.

எனக்குள்ளும் படம் பார்ப்பதில் தீராதவெறி உள்ளடங்கிக் கிடந்தது. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அதை நனவிலி மனதில் கொண்டு போய் அமுக்கி வைத்திருந்தன. அதற்கு இப்போது ஒரு திறப்பாக செய்யதகமது வந்திருக்கிறான். நனவிலி மனதில் அமுங்கிக் கிடந்த திரைப்பட வேட்கை நனவு மனதுக்கு புதிய விசைகொண்டு மேலெழுந்து வந்தன. செய்யது அகமது எனக்கு ஒரு மீட்பனைப் போல் அப்போது தெரிந்து கொண்டிருந்தான். நான் சற்றும் யோசிக்காமல் அவனுக்கு என் சம்மதத்தைத் தெரிவித்து விட்டேன்.

“செரிடா போவம்…எங்க பார்க்கலாம்..”

“சவுக்காலைக்குப் பக்கத்தில வெலிங்டன்னு ஒரு தியெட்டர் இரிக்கிடா..டீ.வில அங்க படம் போடுவாங்க…பத்துருவாத்தான்..பார்ப்பமா…?”

“எத்தின மணிக்குடா..?”

“இரண்டரைக்கெல்லாம் தியேட்டருக்குப் பெயித்திரனும்..நீ நாளைக்கு ஓதுற பள்ளிக்கு அங்கால இரிக்கிற வீனச்சி பாரிட சந்தில நில்லு..நான் வந்து கூட்டிப் போறன்..”
நான் அந்த சந்தியில்தான் இப்போது அவனுக்காக காத்துக்கொண்டு நிற்கிறேன்.
2.
அப்போது எங்கள் வீட்டில் டீ.வி. இருந்ததில்லை. இருந்திருந்தாலும் பிரயோசனமுமில்லை. அந்நாட்களில் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் பெரிதாக ஒளிபரப்பப்படுவதில்லை. சிங்கள நிகழ்ச்சிதான். அதனால்தான் அப்போது எங்களது ஊரில் அதிகம் பேர் டீ.வி. வாங்கவில்லை.

ஒரு ஆறுதலுக்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை 2.30க்கு ஒரு 15 நிமிட தமிழ் நாடகமும், 3 தமிழ்த் திரைப்பாடல்களும் ஒளிபரப்பாகும். அந்த நிகழ்ச்சிக்கு பொன்மாலைப் பொழுது என்று பெயர். உண்மையில் அது எங்களுக்கு ஒரு பொன்மாலையாகத்தான் இருந்தது. அன்று எப்படியும் மதரசா கட்தான். வேறு தமிழ் நிகழ்ச்சி என்றால் மாதத்தில் ஒரு தமிழ்ப்படம் ஒளிபரப்பாகும். அதனால் அதனை “மாத்தையப் படம்“ என நாங்கள் அழைத்தோம். அதுவும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் படங்கள்தான். யாரோ எவரோ எனக்கு படம் என்றால் சரி. அதை பழைய படம் என்றுதான் நாங்கள் அழைப்பது வழக்கமாக இருந்தது.
எனக்கு ஏழுவயதாக இருக்கும் போதே இந்த மாத்தையப்படத்துக்கு நான் அடிமையானேன். இரவு 9.30க்குத்தான் மாத்தையப்படம் ஒளிபரப்பாகும்.

அப்போது எங்களிடம் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. பக்கத்து ஊரில் வசித்து வந்த எங்கள் மாமி வீட்டில் ஒரு கறுப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஐந்து, ஆறு கிலோமீற்றர் தூரத்தில் அவருடைய வீடு இருந்தது. மாத்தையப் படம் ஒளிபரப்பப்படவிருக்கும் அன்றைய இரவை முன்னிட்டு அன்று பின்னேரமே நான் மாமியின் வீட்டுக்குப் புறப்பட்டு விடுவேன். இந்தப் பயணத்தில் என்னுடன் என்னிலும் மூத்த சகோதரியும், சகோதரனும் இணைந்துகொள்வார்கள். எனது சகோதரன் படம் பார்ப்பதற்காக என்னை விட கடுமையாக முண்டக்கூடியவனாக இருந்தான். சத்தமில்லாமல் ஒரே நாளில் ஒன்பது படம் ஒரு முறை பார்த்திருந்தான்.
ஆனால் சிலவேளைகளில் இந்த மாத்தையப் படமும் கைகொடுக்காமல் விட்டு விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அப்போதெல்லாம் மனம் ஒரு எரிமலைபோல் வெடித்துக் குமுறும்.
சிலநேரங்களில் மாத்தையப் படம் ஓட இருக்கும் இரவாகப் பார்த்து கரண்ட் போய் விடும்.

அப்போது உலகமே இருண்டு விட்டது போல் ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் மனதைப் பிசையும். இலங்கை மின்சார சபையை தூஷணத்தால் திட்டத் தொடங்கி விடுவேன். எனது சகோதரனோ அல்லாவையும் சேர்த்து திட்டுவான். அல்லாதான் கரண்டை போக வைத்திருக்கிறான் என அவன் அப்போது உறுதியாக நம்பினான். நானும் அப்படித்தான் நம்பினேன். ஆனால் நான் அல்லாவைத் திட்டுவதில்லை. மரணத்துக்குப் பின் அல்லா நெருப்பால் நம்மைச் சுடுவான் என்ற அச்சம் என் மூளை முழுவதும் குடிகொண்டிருந்தது. படம் ஓட இருக்கும் அன்றைய இரவு மின்சாரமின்றி இருண்டதும் நான் நெஞ்சை அடைக்கும் வெப்பிசாரம் வெடித்து கதறி அழுவேன். அதையிட்டு எனக்கு பல தடவைகள் காய்ச்சலும் கண்டிருக்கிறது.

இன்னும் சில சந்தர்ப்பங்களில் மாத்தையப் படம் பார்ப்பதற்காக தூரத்திலிருந்து நடந்து வந்த களைப்போ என்னவோ சரியாக படம் தொடங்கும் நேரம் பார்த்து தூக்கம் வந்து அப்படியே தூங்கி விடுவேன். காலையில் எழுந்து கத்திக் கூச்சலிட்டு காய்ச்சல்வயப்பட்டு விடுவேன் என்ற பயத்தில் எனது சகோதரங்கள் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கும் என்னை எழுப்பிப் பார்த்துக் கொள்வார்கள். நித்ராதேவி அரவணைத்து விட்டாளென்றால் இடையில் எழுவதை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது.

தூக்கத்தில் ஏதேதோ உளறி விட்டுத் தூங்கி விடுவேன். படத்தை விடவும் தூக்கத்துக்கு வலிமை அதிகம் போலும். இருந்தாலும் காலையில் எழும்பி அழுதுகொண்டே வீடு போய்ச் சேருவேன். போகும் வழியில் சகோதரங்களுக்கு மண்ணள்ளி எறிந்து காறித் துப்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு தாங்க முடியாமல் அழுது கொண்டே செல்வேன். அவர்கள் என்னை எழுப்பவில்லை என்பதுதான் என் நிலைப்பாடாக இருந்தது. அவர்கள் எழுப்பியதாக மக்காவில் அடித்துச் சத்தியம் செய்தாலும் நான் நம்பாமல் பிகு பண்ணிக்கொண்டே செல்வேன். ஆனால் வீட்டுக்குச் செல்லுமுன் அமைதியாகி விடுவேன். அங்கும் அமளி பண்ணினால் இனி படம் பார்க்க போக வேண்டாம் என்று உம்மா தடுத்து விடுவார் என்ற அச்சம் என்னை அடக்கிப் போட்டு விடும். ஆனாலும் உள்ளுக்குள் வெப்பிசாரம் வெடித்துக்கொண்டே இருக்கும்.

எங்கள் மாத்தையப்படத்துக்கு மூன்றாவதாகவும் ஒரு எதிரி இருந்தது. மாத்தையப்படம் ஓட இருக்கும் அன்றைய நாளில் வழமை போன்று முன்கூட்டியே மாமி வீட்டுக்குச் சென்று நேரம் வந்ததும் தூக்கத்தை வெற்றி கொள்வதற்கான ஒரு சிறு ஆயத்தத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் டீ.விக்கு முன்னால் உட்கார்ந்துவிடுவேன். தூக்கம் வரும் போது கண்களில் ஒத்திக்கொள்வதற்காக ஒரு சிறிய கோப்பையில் தண்ணீர் கொஞ்சம் வைத்திருந்தேன். இப்படி முன்னெச்சரிக்கையாக இருந்தால்தான் தூக்கத்தை ஒரு வழி பண்ணலாம் என முடிவெடுத்திருந்தேன். இந்த டெக்னிக்கை எங்கள் மவுலவிதான் சொல்லித் தந்தார். இரவில் பழைய பாடங்கள் ஓதும் போது தூக்கம் வந்தால் கண்களில் நீரை ஒற்றிக்கொண்டால் தூக்கம் கலைந்துவிடும் என்று அவர் சொன்ன உத்தி இப்போது மாத்தையப்படத்துக்குத்தான் உதவியாக அமைந்து விட்டது.

இப்படியாக டீ.விக்கு முன்னால் குந்தி இருக்கும் போது, மாத்தையப்படம் ஓட வேண்டிய அந்த நேரமாகப் பார்த்து டீவியில் ஒரு ஹாமதுருவின் (பௌத்த பிக்கு) சிங்கள நேர்காணலொன்று ஒளிபரப்பாகும். அன்றைக்கு படம் இல்லை. இனி அடுத்த மாதம்தான். அதைத் தாங்கமாட்டாமல் நான் ஓவென்று அழுவேன். என் சகோதரனின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழியத் தொடங்கும். அவன் என்னைப் போல் வெளிப்படையாகவன்றி உள்ளூர அழத் தெரிந்தவன். எனக்கோ சத்தமிட்டு அழுது ஆர்ப்பரித்தால்தான் என் மனப் பாரம் இறங்கும். மறுநாள் அங்கிருந்து வீடு செல்லும் போது வழிநெடுகிலும் அந்த ஹாமதுருவை திட்டிக்கொண்டும் அழுதுகொண்டும் செல்வேன். எங்களில் யார் யாரைத் தேற்றுவது எனத் தெரியாது வீடு போய்ச் சேர்வோம்.

3.

இப்போது வயதும் மாத்தையப்பட வயதிலிருந்து கொஞ்சம் கூடிவிட்டது. செய்யது அகமதுவின் நட்பும் கிடைத்துவிட்டது. இந்த அலைக்கழிப்புகளும், மனத்தாங்கல்களுமின்றி அவன் சுதந்திரமாகப் படம் பார்த்து வந்தான். சுதந்திரமாக படம் பார்க்க முடியாமல் உள்ளூர அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு செய்யது அகமது ஒரு மீட்பனாகத் தெரிந்தான். அவன் முதன் முதல் படம் பார்க்கப் போவோமா எனக் கேட்டபோது அவன் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியில் கைகால் புரியாமல் கண்களால் எங்கே என்பதைப் போல் சாடைசெய்து கொண்டு நான் துள்ளிக் குதித்தேன்.

அதிலிருந்தே அவனுக்கு மிகவும் பிடித்தவனாக நானும், எனக்கு மிகவும் பிடித்தவனாக அவனும் ஆகி இருந்தோம்.
இன்று எங்கள் திட்டப்படி இருவரும் தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்ல இருக்கிறோம். வெலிங்டன் தியேட்டருக்குத்தான். படத்துக்கு டிக்கற் தலைக்குப் பத்து ரூபாய் என்று செய்யதகமது முன்னமே சொல்லிவிட்டான். இதனால் இருவருமே வாப்பாமாரின் பக்கெட்டுகளிலிருந்து ஆளுக்கு பத்து ரூபாய் திருடி இருந்தோம். மதரசாவுக்குச் செல்லும் போது எங்களுக்கு வீட்டில் காசு எதுவும் தருவதில்லை. இதனால் முதல்நாள் நான் பத்து ரூபாய் திருட வேண்டி வந்துவிட்டது. பின்னர் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போகத் தரும் பத்து ரூபாயை படத்துக்காக சேமிக்கத் தொடங்கினேன். பள்ளிக்கூட பக்கெட் மணி எனக்கு படத்துக்கான பக்கெட் மணியாக மாறியது.

செய்யதகதுவை இன்னும் காணவில்லை. ஒருவேளை மவுலவியின் கண்களில் சிக்கி மாட்டிக்கொண்டு விட்டானோ எனவும் உள்ளுர ஒரு பயம் எனக்குள் புதிதாக முளைவிட்டது. மதரசாவில் சேர்க்கும் போதே மவுலவியிடம் கண்ணையும், மூக்கையும் விட்டுட்டு மற்ற எல்லாத்தையும் உரிங்க என்ற வாசகத்தோடுதான் பெற்றோரால் பிள்ளைகள் மதரசாக்களில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்படிச் சொல்லாவிட்டாலும் இந்த மவுலவிமார் அப்படித்தான் உரிப்பார்கள் போல் இருந்தது.
பயப்பட்டதைப் போல் எதுவும் நடக்கவில்லை. செய்யதகமது வந்துவிட்டான். குர்ஆனை மதராசவிலேயே வைத்து விட்டு வருவதனால் குர்ஆனைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. தொப்பியைக் கழற்றி இடுப்புக்குள் சொருகிக் கொண்டு வெலிங்டன் தியேட்டரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

“என்ன படம்டா போட்டிருப்பாங்க..?” நான் ஆர்வமிகுதியால் கேட்டேன். மாத்தையப்படத்தில் பார்த்த பழைய படங்களாக இருந்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்தது.
“தெரியலடா..போய்ப் பார்ப்போம்..” என்பான். ஊரில் இருந்த இரண்டு தியேட்டர்களிலுமே எந்தப் படமானாலும் ஒரு நாளைக்குத்தான் அது ஓடும். நூறு நாள் இல்லை மூன்று நாளுக்கும் ஓடாது. புதிதாக வெளிவரும் படங்கள் மட்டும்தான் போடுவார்கள் என்றும் விதிகள் எதுவும் இல்லை. இடைக்கால படம்தான் அதிகம் போடுவார்கள். அநேகமாக ரஜினி, பிரபு, சத்யராஜ், சரத் குமார், கார்த்திக் இவர்களோடு அஜித், விஜய் படங்கள் தான் இரண்டு தியேட்டர்களிலும் மாறி மாறி ஓடும்.

“என்ன படமெண்டாலும் பார்க்குரான்..” நான் வாயில் எச்சிலூறச் சொல்லிவிட்டு எச்சிலை துப்பாமல் விழுங்குவேன். ஆனாலும் செய்யதகமதுவின் கண்களில் எப்போதும் ஒரு பதட்டம் தெரிந்து கொண்டே இருக்கும். பல நாள் கள்ளன் ஒரு நாள் மாட்டுவான் என்பதைப் போல தான் மாட்டப் போகும் அந்த நாளை எண்ணித்தான் அவன் பதட்டம் இருந்திருக்க வேண்டும். எனினும் மாட்டிக்கொண்டால் கிடைக்கும் தண்டனையில் பங்குபெற இப்போது ஒரு துணை இருக்கிறது என்ற தெம்பும் அவனுக்குள் வந்திருந்தது. இப்படி எந்த இடையூறுமின்றி மிக சுதந்திரமாக பத்துப் பதினைந்து படங்களளவில் வெலிங்டனில் பார்த்திருப்போம். வெலிங்டன் தியேட்டருக்கருகில் ஓர் இராணுவக் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டதையடுத்து அந்த தியேட்டர் மூடப்பட வேண்டிய நிலை உருவானது.
பின்னர் ராபின் அனிபாவின் தியேட்டர் மட்டுமே எஞ்சி இருந்தது. அதுவும் அவர் திடீரென்று சமயப்பற்றாளனாகி இஸ்லாமிய இயக்கமொன்றின் தீவிர ஊழியனாக மாறும் வரைதான் நீடித்தது. அந்த சம்பவம் வெகு சில நாட்களில் நடந்தது. ஒரு விதத்தில் சொல்லப் போனால் ராபின் அனிபாவினுடையதை தியேட்டர் என்று சொல்ல முடியாது. கூடிய பட்சம் ஒரு 30 பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய மாதிரி பாங்குகள் போடப்பட்டிருக்கும். இடமும் போதாது. அது ஒரு சிறுகொட்டகை.

வெலிங்டன் தியேட்டர் மூடப்பட்டதையடுத்து அனிபாவின் கொட்டகைக்கு படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டிருந்தது. இதனால் இடநெருக்கடியும் அசௌகரியமும் அங்கு ஏற்பட்டிருந்தது. அதனால் சிலர் பின்னால் நின்று கொண்டும் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனினும் நானும் செய்யதகமதுவும் அந்த தியேட்டர் மூடப்படும் வரை எல்லாவித இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு அங்கு படம் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். சில நாட்களில் பின்னால் இடம் கிடைத்தால் அந்த டீவியை எங்களது கண்களால் பார்க்கவே முடியாமல் சனக்கூட்டம் இருக்கும். அப்போது சத்தம் மட்டுமே எங்களுக்கு கேட்கும். அவ்வாறாக படக்கதையை மட்டுமே கேட்பதற்கென்றே மூன்று நான்கு தடவைகள் அந்த தியேட்டருக்குச் சென்றிருக்கிறோம். அதன் பின் எங்கள் இருவருக்கும் அதில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

நாங்கள் அந்த தியேட்டரில் படம் பார்ப்பதில் சலிப்புற்ற நாளும், அந்த தியேட்டரின் மூடு விழாவும் ஒரே நாளில்தான் நடந்தது. ராபின் அனிபா தீவிர சமயப்பற்றாளராகி படம் போடும் தொழிலை விட்டும் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீண்டு விட்ட செய்தி சிலநாட்களில் எங்களை வந்தடைந்தது. அதன் பின் நானும் செய்யதகமதுவும் மதரசாவிலிருந்தும் பிரிந்து விட்டோம். செய்யதகமதுவை அவனது தந்தை அவனைப் பெரிய மவுலவியாக்குவதற்காக பெரிய மதரசா ஒன்றில் சேர்த்துவிட்டார். அதில் அவனுக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாத போதும் அவன் அங்கு சேர்க்கப்பட்டான். இப்போது செய்யதகமதுவை நினைத்து எனக்குள் பெருங்கவலை உண்டானது. செய்யதகமதுவால் மதரசாவில் படம் எதுவும் பார்க்க முடியாது. அவனால் மதரசாவின் சுவர்களை மட்டும் தான் பார்க்க முடியும். அவனால் அப்படி எத்தனை காலத்துக்கு இருக்க முடியும் என்றுதான் நான் அப்போது யோசித்தேன்.

இந்த விடயத்தில் அவனை விடவும் அவனுக்காக நான்தான் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். படம் பார்ப்பது கூடாது பாவம் என்றெல்லாம் மவுலவிமார்கள் பிரச்சாரம் செய்வார்கள். படம் பார்ப்பவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கு மதரசாவில் சரியான பூசையும் விழுந்தது. ஆனால் அதிலிருந்து நானும் செய்யது அகமதும் மிக லாவகமாக தப்பித்துக் கொண்டிருந்தோம். பலநாள் கள்ளன் ஒரு நாள் மாட்டுவான் என்ற முதுமொழி எங்கள் விசயத்தில் பொய்த்துப் போனது. செய்யது அகமது மவுலவியாகி படம்பார்ப்பது பற்றி என்ன சொல்வான் என்பதுதான் இப்போது எனது ஒரேகேள்வியாக இருந்தது. படம் பார்ப்பது ஹராம் என்று சொல்வானா? அப்படிச் சொல்வதற்கான அருகதையை மதரசாவால் அவனுக்குக் கொடுத்துவிட முடியுமா? அப்படி அவன் சொன்னால் எனக்கு அது வேடிக்கையாகத்தான் தோனும். எதற்கும் பதில் அகப்படுவதாக இல்லை. சிரிப்பு மட்டுமே வந்தது.

4

பல வருடங்கள் கழித்து சொல்லி வைத்தாற் போல் நான் செய்யது அகமதுவை ஒரு பெரிய மவுலவிக் கோலத்திலேயே சந்தித்தேன். நீண்ட சடைத்த தாடி வளர்த்திருந்தான். நெற்றியில் தொழுகை வடு பாரித்திருந்தது. அவன் கண்களில் அதே பதட்டத்தின் சாயல் இன்னும் தேங்கி நிற்கத்தான் செய்தது. இப்போதும் செய்யது அகமது படம் பார்ப்பானா? என்று எனக்குள் ஒரு சிந்தனை ஓடத் தொடங்கிற்று. அதை அவனிடம் கேட்பதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. பெரிய மவுலவியான செய்யது அகமதுவை நான் அவ்வப்போது எனது போக்குவரத்துப் பாதைகளில் எதேச்சையாக காணுவேன். அப்போதெல்லாம் ஒரு புன்னகையுடனும் ஒரு சலாத்துடனும் என்னைக் கடந்து செல்வான். அவனைக் காணும் போதெல்லாம் செய்யது அகமது இப்போதும் படம் பார்ப்பானா? அல்லது ஹராம் என்று சொல்வானா என்ற நான் வழிநெடுகிலும் சிந்தித்துக் கொண்டே செல்வேன். அந்தக் கேள்விக்கான பதில் எனக்கு அகப்படுவதே இல்லை.

நான் தொடர்ந்தும் படம் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஊரில் தியேட்டர் எதுவும் இல்லாததனால் எனது ஊரிலிருந்து 20 KM தொலைவிலிருந்த பெரிய தியேட்டர் ஒன்றுக்கு படம் பார்க்கச் சென்று விடுவேன். முன்பு போல் அடிக்கடி அல்லாமல் அவ்வப்போது போய் பார்த்து வருவேன். கமலின் ஆளவந்தான் திரைப்படம் பெரிய ஆரவாரங்களோடு அந்த திரையரங்கில் அன்று போடப்பட்டிருந்தது. படத்துக்கு டிக்கெற் எடுப்பதற்கென தியேட்டர் வாசலில் பெரிய கூட்டம் ஒன்று வரிசைகட்டி நின்றது. தியேட்டர் அமைந்திருந்த பிரதான வீதியின் ஓரமாக சுமார் 200 மீற்றர் நீளமான வரிசை அது. நானும் அந்தவரிசையில் ஒருவனாகப் புகுந்து வரிசையின் நீளத்தை சற்றுக் கூட்டினேன்.

வரிசை இன்னும் நீண்டு கொண்டே சென்றது. எல்லோருக்கும் டிக்கட் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. படிப்படியாக வரிசை நகர்ந்து டிக்கட் கவுண்டரை நான் நெருங்கினேன். என் முறை வந்த போது என் முதுகில் சடுதியாக ஒரு கை என்னைத் தட்டியது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். “எனக்கும் ஒரு டிக்கட் எடு மச்சான்” என்று சிரித்துக்கொண்டே காசை நீட்டிக் கொண்டு நின்றான் செய்யது அகமது. அப்போதும் நான் அவன் கண்களில் அதே பதட்டத்தைக் கண்டேன்.

சாண்பிள்ளை ( சிறுகதை ) – ஆலிஸ் மன்ரோ (கனடா) – தமிழில் – எஸ். சங்கரநாராயணன்

ஆலிஸ் மன்ரோ

ஆலிஸ் மன்ரோ

ஆலிஸ் மன்ரோ விமரிசகர்களால் கனடா நாட்டு ஆன்டன் செகாவ் என அன்புடன் கொண்டாடப்படுகிறார். தனது கிராமத்தின் எளிய மனிதர்களை, அதன் பழமை வாசனையோடு அவர் கொண்டாடுகிறார். 2013ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவரது ‘டியர் லைஃப்’ (அட கடவுளே!) சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது.

***
அப்பா நரிப் பண்ணை வைத்திருந்தார். அதாவது, ‘வெள்ளி’ நரிகள். வெண்திட்டுகள் கொண்ட செந்தாய்கள். நீள் முற்ற வெளியில் வரிசையாய் நரிக் கூண்டுகள். இலையுதிர் காலத்திலும், குளிர்காலத் துவக்கத்திலும் அவற்றின் தோல் திரட்சியடைந்திருக்கும். அப்பா அவற்றைக் கொன்று, தோலுரித்து, தொலிகளை ஹட்சன்ஸ் பே கம்பெனிக்கோ, மான்ட்ரியல் தோல் வியாபாரிகளுக்கோ தருவார். வருடம் பிறந்தால் இந்தக் கம்பெனிகளில் இருந்து எங்களுக்கு சாகசப்படங்களுடன் காலண்டர்கள் வந்தன. சமையல் அறைக் கதவில் தொங்கவிட்டு அவைகளை நாங்கள் அழகு பார்ப்போம். குளுமையான நீல மேகப் பின்னணியில் கருப்பான பைன்மரக் காடு. வடபுலத்தின் ஆபத்தான காட்டாறுகள். அத்தனை உயரமேறி நாட்டிய ஆங்கில, அல்லது பிரெஞ்சுக் கொடிகள். மலையேறிகள் முதுகு பாரத்தில் ஙப்போல் வளைந்திருப்பார்கள்.

கிறிஸ்துமஸ்சுக்கு பல வாரங்கள் முன்னிருந்தே அப்பாவுக்கு ராத்திரிஉணவு கொண்டபின் கூட, நிலவறையில் வேலையிருக்கும். நிலவறை வெள்ளையடித்த கீழறை. மேஜைக்கு வாகாக வயரில் தாழத் தொங்கும் நூறு வாட் பல்பு. தம்பி லெயர்துவுடன் நான் நிலவறையின் மேற்படியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.

அப்பா நரியின் தொலியை உரித்து அதன் உட்புறத்தைப் பிதுக்கி வெளித் திருப்பும்போது அது ஆச்சர்யப் படும்படி இத்துனூண்டாய்க் காணும். நரியா இது, பாவம், குட்டி எலி என்பதாய்க் காணும். இந்தத் தோல்தான் அதன் எடை, உள்ளே மத்ததெல்லாம் ஜுஜுபி, என்று தோன்றும். வழுவழுப்பான அவற்றின் வெற்றுடல்களை ஒரு சாக்குப்பையில் கொட்டி புதைத்து விடுவோம். எடுபிடி வேலை செய்கிற ஹென்ரி பெய்லி ஒருமுறை இந்தச் சாக்கை எடுத்துப்போகையில் என்னை அதால் ஒரு உரசு உரசிச் சென்றான். கிறிஸ்துமஸ் பரிசாக்கும் உனக்கு, என்கிற நக்கல் வேறு. அம்மாவுக்கு அவன் செய்தது வேடிக்கையாயில்லை.

வாஸ்தவத்தில் அவளுக்கு இந்த மொத்தக் கச்சடாவுமே, சாவடிப்பது, தோலை உரிப்பது, சீர்ப்படுத்துவது… அதுவும் வீட்டில் வைத்து இதையெல்லாம் செய்வது பிடிக்கவேயில்லை. என்ன ஒரு வாடை! தொலியை உரித்துத் திருப்பி பலகையில் போட்டு அப்பா அதை நறுவிசாகச் சுரண்டி தொலியின் உட்பக்கமாய் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்த நாள திரட்சிகளை, சிறு சதைக் கதுப்புகளை நீக்குவார். இரத்தமும் மிருக ஊனுமாய் ஒரு வாடை. அத்தோடு நரிகளுக்கே இருக்கிற அந்த வாடையும் கிளம்பும். மொத்த வீட்டையுமே ஆக்கிரமித்து நெடிதுயர்ந்த நெடி. தோலுரிக்கிறதுக்கும் ஒரு பருவம் இருந்ததால், பைன் குச்சிகளின் தாவரநெடியைப் போல, ஆரஞ்சுப் பழ வாசனை போல, அந்த நெடியும் ஒரு பருவகாலத்தை நினைவூட்டும்.

பெய்லிக்கு மூச்சிழுப்பு இருந்தது. முடிவே இல்லாமல் முகத்தில் சிவப்பு கொப்பளிக்க இருமி, வெறுப்பைச்சொல்கிற வெளிர்நீலக் கண்களில் ஜலம் ததும்பும். சற்று எட்ட நின்று கணப்பில் ஒரு கொத்து சளியைக் காறி உமிழ்வான். நினைத்த மாத்திரத்தில் இப்படி அடிவயிற்றில் இருந்து புரட்டி அவன் உமிழ்வதே ஆச்சர்யம். அவன் சிரிப்பே விநோதமானது. நெஞ்சுக்கூட்டின் உள்ளே சளிச் சதங்கை. லொடலொடத்த மிஷின் சத்தங்கள். அவன்பாட்டுக்குச் சிரிப்பான் அடிக்கடி. என்ன காரணம் தெரியாது. ஒருவேளை எங்களை நக்கலடிக்கிற எதும் யோசனையோ என்னவோ!

நாங்கள் படுக்க அனுப்பப் பட்ட பிறகும் அந்த வாடையும், அவனது சிரிப்பும் எங்கள் கூடவே இருக்கும். என்றாலும் மேலே இங்கே இருக்கும் கூதல்காற்றைக் காட்டிலும் கீழே நிலவறையின் கதகதப்பும் வெளிச்சமும் பாதுகாப்புணர்வும் தேவலாம்.

குளிர்கால இரவுகளில் எங்களுக்கு பயமாய் இருக்கும். பனிப்பொழிவான காற்று எங்கள் வீட்டை உறங்கும் சுறாபோல சுற்றிப் படரும். ராப்பூராவும் வீட்டுக்குவெளியே இடுகாட்டில் இருந்தும், சதுப்பு நிலங்களில் இருந்தும் காற்று சீழ்க்கையடித்துச் சுற்றி வரும். போதாக்குறைக்கு துயரமும் மிரட்டலுமாய் பூச்சியிரைச்சல்கள்… ஆனால் இப்படி வெளி உபத்திரவங்களால் அல்ல, வீட்டுக்கு ‘உள்ளே’ இரவு கலவரப்படுத்தியது எங்களை. நாங்கள் அப்போது மேலே மாடி கட்டிக்கொண்டிருந்தோம். வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. ஒரு சுவர் உயரம் செங்கல் புகைபோக்கி. தரையின் நடுப்புறத்தில் பெரும் துவாரம். மரப்பிடியுடன் அங்கே மாடிப்படிகள். இந்தக் குழியோடு ஒரு பக்கமாய், யாரும் பயன்படுத்தாத தட்டுமுட்டுச் சாமான்கள் கிடந்தன. லினோலியத் தகடுபோர்த்திய குதிர். சுள்ளி அள்ளிவரும் பல்லக்கு, பாசி சேகரிக்கும் கூடை. கீறல் விட்ட பீங்கான் பாத்திரங்களும் ஜாடிகளும். பலாக்லவா யுத்தக்காட்சியுடன் சித்திரம் ஒன்று, அதைப் பார்க்கவே துக்கமாய் இருக்கும்.

லெயர்து கொஞ்சம் விவரப்பட்ட நாளில் நான் சொன்னேன் அவனிடம். மேலே வௌவால்களும் எலும்புக்கூடுகளும் வசிக்கின்றன அப்பா. கிராமத்து சிறைச்சாலையில் இருந்து யாராவது கைதி தப்பித்ததாகத் தெரிந்தால், எப்படியோ அவன் எங்கள்வீட்டு ஜன்னல்வழியே உள்ளே புகுந்து அந்தக் குதிருக்குள் பதுங்கிக்கொண்டிருப்பதாக எனக்கு பிரமை.

ஆனால் எப்படி எங்களைக் காபந்து பண்ணிக்கொள்வது என்கிற தீர்மானங்கள் எங்களிடம் இருந்தன. வெளிச்சம் இருந்தால் அதுவே எங்களுக்குப் பாதுகாப்பு. படுக்கையறையை அடையாளப்படுத்தும் இந்த கிழிந்த தரைக்கம்பளம், அதைத்தாண்டி நாங்கள் போகக்கூடாது. விளக்கு மட்டும் அணைஞ்சதோ, இந்தப் படுக்கை, இதைத் தவிர வேறு எந்த இடமும் பத்திரம் கிடையாது. படுக்கையில் தவழ்ந்தபடி கையை நீளவிட்டு வயர்வரை அலைந்து விளக்கை அணைப்பது என் வேலை. அவன் தம்பியாச்சே.

இருட்டு. நாங்கள் எங்கள் படுக்கையில் படுத்துக் கிடக்கிறோம். இரவைக் கடக்கும் லைஃப் போட்டுகள் அவை, எங்கள் படுக்கைகள். மேல்கூரையின் மாடிப்படி துவாரத்தில் இருந்து கிணற்றுக்குள் போல வரும் மிதமான வெளிச்சம். எங்கள் கண் அங்கே. மெல்ல வாயில் பாடல்கள் கிளம்பின. லெயர்து, ஜிங்கிள் பெல்ஸ், எனப் பாடினான். கிளிஸ்துமஸ் என்றில்லை எப்ப வேணாலும் நாங்கள் அந்தப் பாடலைப் பாடுகிறது உண்டு. டேனி பாய், என்று நான் பாடினேன்.
என் குரல் எனக்கே பிடித்திருந்தது. கரகரப்பான பணிந்த குரல் இருட்டில் எழும்பி வளையவந்தது. உயரமான பனிப்படலமான வெண்மைநிற ஜன்னல்கள். அந்தப் பாடலின் ஒரு வரி, நான் இறந்துவிட்டால்… என் சப்தம் அடங்கி, சப்தநாடியும் ஒடுங்கிவிட்டால்… உடம்பில் சிறு நடுக்கம். போர்வைக்குள் குளிரால் வந்த நடுக்கம் இல்லை. வார்த்தைகளின் உணர்ச்சித் தீவிரம் என் வாயை அடைத்துவிட்டது. பாடலின் அடுத்த வரி… நீ மண்டியிட்டு, என்மேல் ஒரு ‘ஏவ்’ பிரார்த்தனை வைப்பாய் – என்ன பிரார்த்தனை அது? ஒவ்வொருநாளும் யோசிக்கிறேன். தெரியவே இல்லை.

லெய்ர்து பாடி முடிச்ச ஜோரில் தூங்கிவிடுவான். உறிஞ்சி இழுத்த திருப்தியான அவனது ஈர மூச்சுகளைக் கேட்டபடி நான் படுத்திருப்பேன். அந்த கணங்கள். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு மிக நெருக்கமான கணங்கள் அவை. அந்த முழு நாளின் அற்புதமான கணம் அதுவே. இறுக்கமாய்ப் போர்த்திக்கொண்டு இப்படிக் கிடக்கிறேன். ராத்திரிக்கு ராத்திரி இக்கணங்களில் நான் எனக்குள் எத்தனையோ கதைகள் பின்னிக்கொண்டிருப்பேன். என்னைப் பற்றியதான கதைகள். ஆனால் அந்தக் கதைகளில் நான் இன்னும் பெரிய பெண்! அது எனக்கேயான, எனக்குப் பிடித்த உலகம். அதில் நான் தைரியமாய் காரியங்கள் செய்ய முடிந்தது. சாகசங்கள். வீரதீர பராக்கிரமங்கள். தியாகம் நிரம்பியவளாய் நான் இருந்தேன்.

வெடி விபத்தான கட்டடத்தில் இருந்து சனங்களை நான் மீட்டேன். (அப்போது எங்கள் பகுதி அமைதிப்பட்டு யுத்தம் வேறொங்கோ நடந்து கொண்டிருந்தது. எனக்கு வருத்தம் தந்தது அது. இங்கே இல்லையே!) வெறிபிடித்துத் திரிந்த இரு நரிகளை என் பள்ளி வளாகத்தில் நான் சுட்டுக் கொன்றேன். என் முதுகுக்குப் பின் பம்மிய, பயந்த வாத்திமார்!) ஜுபிளியின் பிரதான சாலையில் நான் குதிரையேறி ஓட்டிவந்தேன். ஜனங்கள் என்னை வாயைப் பிளந்து பார்க்கிறாப் போலாச்சு. (யாரும் பெருவீதியில் அப்படி குதிரை ஓட்டி பார்க்க முடியாது. ஆரஞ்சுமனித திருநாள்ப் பேரணியில் மாத்திரம், அரசர் பில்லி மாத்திரம் அப்படி குதிரையில் வருவாராக்கும். அதற்கு அடுத்த நபர்… நானே!)

என் கதைகள் பூராவிலும் இப்படி நிறைய குதிரைப் பாய்ச்சலும், டுமீல்களும் இருந்தன. வாஸ்தவத்தில் நான் குதிரையில் ஏறியதே ரெண்டே முறை தான். எங்கள் வீட்டில் குதிரைமேல் போட்டு அமர சேணம் எதுவும் இல்லை. அதிலும் ரெண்டாம் தடவை நான் குதிரை மேலிருந்து வழுக்கி நேரே குதிரையின் காலடியிலேயே தொபீரென்று விழுந்தேன். என் மேல் குதிரையின் கால் பட்டது. நல்லவேளை அது மிதித்துவிடவில்லை. அப்போது நான் சுடவும் பழகிக்கொண்டிருந்தேன். வேலிக்குச்சிகளில் காலி டின்களை தொப்பிபோல் தொங்கவிட்டு, குறிபார்த்து, ஒண்ணைக்கூட சரியாய்ச் சுடவில்லை!

சரி. விஷயத்துக்கு வருவோம். அப்பா அமைத்துக்கொடுத்த கூண்டுகளில் அந்த நரிகள் ஒரு ஒழுங்கில் வாழ்ந்தன. கடுமையான காவல் போடப்பட்ட சுற்று வேலி. ராத்திரி அரண்களைப் பூட்டிவிடுகிற கோட்டைகளைப் போன்ற களம். உள்ளே பாத்திகளாகப் பிரிக்கப்பட்டு இரு மருங்கும் வலிமையான நரிக் கூண்டுகள். அந்தக் கூண்டு கதவுவழியே பெரியாள் ஒருத்தன் குனியாமல் நுழையலாம். நரிகள் ஓடித் திரிய உள்ளே ஓரமாய் மரத்தில் சாய்தளம். தவிர தனி சிற்றறையும். சிறு காற்று துவாரங்களுடன், துணிமணி வைக்கிற அளவிலான சிற்றறைகள் அவை.

அவற்றில்தான் நரிகள் குடித்தனம் பண்ணி குழந்தைகள் பெற்றன. வெளியில் இருந்து தண்ணீரோ உணவோ வைக்க, திரும்ப தட்டை எடுக்க, சுத்தம் செய்ய என கூண்டில் சிறு கதவுத்திறப்பு. பழைய தகர டின்னில் செய்த தட்டுகள். பழைய மர மிச்சத்திலும் ஓட்டை உடைசலை வைத்தும் அமைத்த சாய்தள மேடை. எல்லாமே சுத்தமாகவும் சமத்காரமாகவும் அப்பாவால் கையாளப்பட்டன. அப்பா அடிக்கடி எதாவது பயனுள்ள மாற்றங்களைச் செய்கிறவராக, ஓய்வில்லாமல் அதையே சிந்திக்கிறவராக இருந்தார். அவருக்குப் பிடித்த புத்தகம் ராபின்சன் குரூசோ.

தகர டிரம் ஒன்றில் சக்கரப்பலகை மாட்டி கூண்டுகளுக்கு தண்ணீர் எடுத்து வருவார். கோடையில் தண்ணீர் எடுத்துவரும் வேலை என்னுடையது. கோடையில் நரிகள் நாளைக்கு ரெண்டுமுறை நீர் அருந்தும். காலை ஒன்பது, பத்து மணி வாக்கில் ஒருதரம். ராத்திரி உணவுக்குப் பின் இன்னொரு தரம். குழாயடியில் இருந்து தண்ணீர் சுமந்து கூண்டுகளுக்கு எடுத்து வருவேன். அந்தப் பக்கம்தான் தண்ணீர் வண்டியை விட்டிருந்தேன்.

பெரிய தகரப் பாத்திரத்தை நான் எடுத்துவந்தால், கூட லெயர்து, சின்ன டப்பாவில் அவனும் தண்ணீர் மொண்டுவருவான். டப்பா வழிய வழிய நீரை நிரைத்து சிந்தச் சிந்த ஷுவை நனைத்துக்கொண்டு வருவான். என் தண்ணீர் கேன் பெரியது. அப்பா அதில்தான் தண்ணீர் சேந்தி வருவார். என்னால் அதன் முக்கால் பங்குதான் தூக்க முடிந்தது.

நரிகள் ஒவ்வொண்ணுத்துக்கும் பேர் தனித்தனியே உண்டு. தகரத்தில் பேர் எழுதி கூண்டு உள்ளே தொங்கவிட்டிருந்தது. பிறந்தபோது அவைகளுக்குப் பெயர் வைக்கிறது இல்லை. முதல் வருடத்தில் நரிகள் தோலுரிபடும் போது அவை தப்பித்த பின், உடல் தேறித் திரள, அவைகளுக்குப் பெயர் அமையும். அப்பா வைக்கும் பெயர்கள், பிரின்ஸ், பாப், வாலி, பெட்டி… இப்படி. செல்லமாய் அழைக்கிற பெயர்கள். நான் வைத்த பெயர்கள், ஸ்டார், தர்க், மௌரீன், டயானா… இப்படி. கொஞ்சம் படிப்பு வாசனை தட்டின.

எங்கள் லெயர்து, அவனும் பெயர் வைத்தான். மாத். அவன் குழந்தையாக இருந்தபோது எங்களிடம் வேலைக்கு இருந்த சிறுமியின் பெயர் அது. ஹெரால்ட். அது அவனது பள்ளிக்கூட சிநேகிதன். மெக்சிகோ என்று கூட ஒரு பெயர். அதை எப்படி வைத்தான் அவனுக்கே தெரியவில்லை.

பெயர் வைப்பதால் அந்த மிருகங்களோடு பிரியங் கொண்டாடுவது, அது மாதிரியெல்லாங் கிடையாது. சொல்லப்போனால் அப்பா மாத்திரமே அந்தக் கூண்டுகளுக்குள் போவார். நரி கடித்து ரெண்டுமுறை அவர் ரத்தத்தில் விஷமேறி அவஸ்தைப்பட்டார். கூண்டுகள் பக்கமாய் நான் தண்ணீர் கொண்டுபோகும் போது அவை உள்ளே சாய்தளத்தில் இங்குமங்குமாய் ஓடியபடி என்னையே பார்த்தன. கூம்பெடுத்த முகத்தில் அந்தக் கண்கள் சொக்கத் தங்கமாய் ஒளிர்ந்தன.

உருமல் கிருமல் இல்லை. (ராத்திரிகளில் தான் அவை ஒட்டுமொத்தமாய் ஒரு ஊளை எடுத்தன.) மெலிந்த அழகான கால்கள். அடர் குஞ்சம் வைத்த வால். வெண்புள்ளி தெரித்த பளிச்சென்ற முதுகுத் தோல். அதனால் தான் அவற்றுக்கு வெள்ளி நரி என்று பெயர். குறிப்பாக அந்த செதுக்கினாப் போன்ற கூரிய முரட்டுத்தனமான முகமே அழகு. ஆ அந்தப் பொன்னிறக் கண்கள்.

தண்ணீர் எடுத்து வருவது மாத்திரம் அல்ல. அப்பாவுக்கு புல் வெட்டவும் நான் உதவி செய்வேன். கூண்டுகளின் இடைப்பகுதிகளில் அழகான பூச்செடிகள். அவற்றுக்கும் தண்ணீர் ஊற்றுவது என் வேலை. அப்பா புல்வெட்டியால் புல்லை சர்ரக் சர்ரக் என்று வெட்ட நான் அவற்றை கோபுரமாய்க் குவிப்பேன். அப்பா ஒரு புல்வாரியால் அந்தப் புற்களை அள்ளி கூண்டுகளின் கூரைமேல் பரசிப் போடுவார். உள்ளே குளிர்ச்சியாய் இருக்கும். அதேசமயம் நரிகளின் மேல்தோலுக்கும் சூடுதட்டாது நிழல் கிடைக்கும். இல்லையோ அதிகப்படியான வெயிலில் அவை ஒருமாதிரி பழுப்பாய் ஆகிவிடும்.

வேலை தவிர வேறு பேச்சு அப்பா என்னிடம் பேச மாட்டார். அம்மா அப்படியில்லை. அம்மாவுக்கு உற்சாகம் வந்துவிட்டால், வாய் ஓயவே மாட்டாள். எல்லா விஷயமும் அவள் பேச்சில் கலந்துகட்டும். அவளது சிறுவயதில் அவளோடு இருந்த நாய். கொஞ்சம் பெரியாளாய் ஆனதும் அவளோடு பழகிய பையன்கள். அவளிடம் இருந்த அழகான உடைகள்.

அவையெல்லாம் எங்கே எப்படிப் போச்சு என்றே தெரியலைடி, என்பாள் அம்மா. அப்பாவின் எண்ணங்களோ, அவர்பற்றிய கதைகளோ என்னிடம் பகிர முடியாத அளவு அவருடைமையாக இருந்தன. அவரிடம் கதைபேச எனக்குக் கூச்சம். அவரைப்பற்றி நான் அவரிடம் பேச்சு கொடுத்ததே இல்லை. ஆனால் அவர்பார்வையில் வேலைசெய்ய எனக்கு ரொம்பப் பெருமிதம் உண்டு.

ஒருசமயம் தீவனக்காரன் ஒருவன் வந்தபோது அப்பா அவனிடம், பாரப்பா, எங்கவீட்டின் புதிய வேலைக்காரி. நீ பாத்ததில்லை இல்லையா? சட்டென முகம் திருப்பிக் கொண்டேன். முகத்தில் ஜிவுஜிவுத்த கோபம். ஆனால் நான் வேலை செய்கிறவளாக, என்னை அவர் சொன்னதில் சந்தோஷமும் இருந்தது.

இவளா? பண்ணைவேலை தெரிஞ்சவளா? சின்னப்பொண்ணுன்னில்ல நினைச்சேன், என்றான் அவன்.

புல்லை வெட்டியதும் அந்தப் பிரதேசத்தின் முகமே மாறி வேறு பருவத்துக்கு வந்துவிட்டாப் போலிருந்தது. அந்தி மயங்குகிற வேளை. புல் கழித்த கூளத்தில் நடந்தேன். மேல வானம் சிவந்து கொண்டிருந்தது. சப்தங்கள் அடங்க ஆரம்பித்திருந்தன. இலையுதிர் காலம். தண்ணீர் வண்டியை படலுக்கு வெளியே ஓட்டியபடி, நாதங்கியைப் போட்டேன். இருட்டு நன்றாகக் கவிந்திருந்தது இப்போது. இப்படியொரு நாளில் முற்றத்தின் எதிர்வாடையில் சிறிய மண்மேட்டில் அப்பாவும் அம்மாவும் நின்று எதோ பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்பா கசாப்புக்கூடத்தில் இருந்து அப்பதான் திரும்பியிருந்தார். இரத்தம் உறைந்து விரைத்த அழுக்கு மேல்துணி. கையில் வாளியில் மாமிசம்.

அம்மா முற்றம் வரை வருவதே அபூர்வம். அநேகமாய் அவள் வீட்டைவிட்டே வெளியே வருவது கிடையாது. தோய்த்த துணிகளைக் காயப்பபோட என்றோ, தோட்டத்தில் உருளைக்கிழங்கு தோண்ட என்றோ தான் வெளியே வருவாள். காலில் எப்பவும் செருப்பு வேண்டும் அவளுக்கு. சூரியன் படாத, மொத்தையான அவள் கால்கள் செருப்பு இல்லாமல் பார்க்க என்னவோ போலிருக்கும். அவளுக்கு அப்படித் தோணியது. வீட்டுவேலை யுடையைக் கழற்றாமல் இருந்தாள்.

வயிற்றுப் பக்கம் அவள் பற்றுப் பாத்திரங் கழுவிய ஈரம். தலைமுடியை கைக்குட்டை கட்டி மூடியிருந்தாள். என்றாலும் அந்த அந்தியில் அந்த முடிப் பிசிர்கள் தெரிந்தன. காலைகளில் கூந்தலை இம்மாதிரி அள்ளி முடிவது உண்டு. ஒழுங்கா வாரிக்க நேரம் எங்கே என்பாள். பகல் பூராவும் தலையை சீர் பண்ண அவளுக்கு ஒழியவே ஒழியாது. அந்தத் தலையின் முடி(ச்சு) அப்படியே தான் காணும்.

இந்நாட்களில் எங்கள் பின்கட்டில் பீச் பழங்கள், திராட்சை. பியர் பழங்கள் என்று கூடை கூடையாய் இருக்கும். நகரத்தில் இருந்து வாங்கி வந்தவை அவை. வெங்காயம், தக்காளி, வெள்ளரி எல்லாம் வீட்டில் விளைந்தவை. எல்லாத்தையும் குழைய அடித்து, ஜெல்லியாக, ஜாமாக ஆக்குவோம். கார சாஸ், ஊறுகாய் மற்றும் சிரப் செய்வோம். சமையல் கூடத்தில் எப்பவும் நெருப்பு அணையாது. கெட்டிலில் நீர் கொதித்தபடி யிருக்கும். திராட்சை வடிகட்டிய துணி சிலசமயம் நாற்காலி மேல் அப்படியே கிடக்கும்.

சமையல்கட்டில் எனக்கு வேலைகள் இருந்தன. வேக வைத்த பீச் பழங்களை நான் தோலுரித்துத் தருவேன். வெங்காயம் நறுக்கிக் கொடுப்பேன். கண்ணே அப்போது பெரிதாகி வீங்கி நீர்பொங்கும். வேலை முடிந்து நான் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடுவேன். இருந்தால் அம்மா அடுத்த வேலை வைப்பாள். ஐய கோடைகாலங்களில் அந்த சமையல்க்கூட இருட்டை நான் வெறுத்தேன். சன்னல் பச்சைவண்ணத் தட்டிகள். பூச்சி ஒட்டிக்கொள்கிற எண்ணெய்க் காகிதம். எண்ணெய்ப் பிசுக்கான மேசைத் துணி. ரசம் போன கண்ணாடி. அறையில் பதித்த லினோலியம் அநேக இடங்களில் ஆணி உருவி பொம்மித் தெரிந்தது.

அந்நாட்களில் அம்மா ரொம்ப அலுப்பாய் இருப்பாள். என்கூட பேசக்கூட தெம்பு இருக்காது அவளிடம். பள்ளி ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிகள் பற்றியோ, இன்ன பிறவோ பேசமாட்டாள். எப்பவும் அவள் முகம் வியர்த்து கசகசத்துக் கிடக்கும். மூச்சிரைக்கிற அளவு பரபரப்பாய், பழ எசன்ஸ், சிரப் செய்கிற மும்முரத்தில் இருப்பாள். வேலை ஆக ஆக, வேண்டிய சர்க்கரை, வேண்டிய ஜாடிகளை எண்ணிக்கொண்டிருப்பாள். ஐய இந்தவீட்டு வேலை, இதற்கு முடிவே இல்லையோ என்றிருக்கும். ஓய்வு ஒழிச்சல் இல்லாத கடுப்பான வேலைகள். வீட்டுக்கு வெளியேயான வேலைகள். ஆனால் அப்பாவைப் பொறுத்தவரை இதெல்லாம் அத்தனை ஒழுங்காக சடங்காகச் செய்ய வேண்டியிருந்தது.

தண்ணீர் வண்டியை முற்றத்தில் வழக்கமான இடத்தில் விட்டேன். அம்மா பேசுகிறது கேட்டது. லெயர்து கொஞ்சம் பெரியவனாகட்டும். அதுவரை பார்க்கலாம். அப்ப அவன் உமக்கு உதவிகரமா இருப்பான்…

அதற்கு அப்பா என்ன சொன்னார் எனக்குக் கேட்கவில்லை. அம்மாபேச்சை அவர் கேட்டபடி அப்படி நின்றதே எனக்குப் பிடித்திருந்தது. வியாபாரியிடமோ, புதிய நபரிடமோ அவர் அப்படித்தான் பவ்யம் பேணுவார். தலைபாட்டுக்கு ஆட, வேலை பாட்டுக்கு ஓடும். இங்க இப்ப அம்மாவுக்கு வேலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்பா அம்மாவை அனுப்பிவிடலாமாய் நான் நினைத்தேன். லெயர்து பத்தி என்ன சொல்ல வருகிறாள்? யாருக்கும் அவன் என்ன உதவியும் கிடையாது.

இப்ப எங்க என்ன பண்ணிட்டிருக்கானோ. தட்டாமாலை தாமரைப்பூ சுத்திச் சுத்தி சுண்ணாம்புன்னு ஆடிட்டிருப்பான். காடுகளில் புழுப் பூச்சிகளைப் பிடித்துக்கொண்டிருப்பான். உதவின்றாப்போல என்னுடன் வந்தாலும் கடைசிவரை இருக்க மாட்டான். அதற்குள்ளே கவனம் மாறி வேறெங்கோ ஓடிவிடுவான்.

அதுக்கப்புறம் இவளை நான் வீட்டு வேலைக்குன்னு அதிகமா கூட்டிக்குவேன், என்கிறாள் அம்மா. என்னைப் பற்றி எப்பவுமே அப்படித்தான் சிறிது தொண்டையடங்கிய தொனியில் அவள் பேசுகிறாள். என்னையிட்டு அவளுக்கு உற்சாகம் இல்லையோ என நினைக்க எனக்கு என்னவோ போலிருக்கும். அம்மா தொடர்கிறாள்… உள்வேலையில் நான் சித்த இப்பிடித் திரும்பக் கூடாது, அவ வெளிய ஓடிர்றா. நம்ம வீட்ல எந்தப் பொண்ணுமே இப்பிடி இருந்ததே கிடையாது…

மூலையில் கிடந்த தீவனச் சாக்கில் போய் அமர்ந்துகொண்டேன். அவர்கள் பேசும்போது எந்த நேரத்தில் நான் உள்ளேநுழைந்து கலந்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஹ அம்மா என்னை நம்பவில்லை. அப்படித்தான் இருந்தது. அப்பாவை விட அம்மா என்னிடம் பிரியமானவள். அம்மாவை டபாய்த்துவிடலாம். என்றாலும் ஒரு அமயஞ் சமயத்துக்கு அவள் நம்மை அனுசரிப்பாள் என்று சொல்லேலாது. என்னைப்பத்தி இப்ப எதுக்கு அப்பாவாண்ட இந்த வத்தி, அதன் அவசியம் என்ன காரணம் என்ன தெரியவில்லை.

அம்மாவுக்கு என்னைப் பிடித்திருந்தது. நான் பிரியப்பட்ட மாதிரி எல்லாம் ராத்திரி தூக்கம் முழித்து எனக்கு உடைகள் தைக்கிறாள். அதைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போகிறது அம்சமாய்த் தான் இருக்கிறது. இன்னாலும் அவளுக்கும் எனக்கும் ஆகவில்லை. என்னை எப்பவுமே அவள் அதிகாரம் செய்கிறவளாய் இருந்தாள். இப்பகூட என்னை வீட்டோடு இருத்திக்கொள்வதாக ஒரு திட்டம். எனக்கு வீட்டுள் முடங்க இஷ்டங் கிடையாது என்பது தெரியும் அவளுக்கு. நல்லாவே தெரியும். நான் அப்பாவோட வேலைசெய்யாமல் அவளோடு வைத்துக்கொள்ள நினைக்கிறாள்.

ஏன் அவள் அப்படிச் செய்கிறாள்? வக்ரம் தான். அதிகாரம் செய்ய அவளுக்குக் கீழே ஆள் வேண்டும். இதற்கு அவள் தனிமையோ, பொறாமை உணர்வோ காரணமாய் இருக்குமா? சேச்சே. பெரியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்படி விஷயஙகள் அவர்களை அண்டுவது இல்லை, என்றே பட்டது. காலை உதைத்ததில் தீவனத் தவிடு புகையாய்ப் பொங்கியது. அம்மா போகும்வரை நான் எழுந்துபோகவே இல்லை.

அம்மா சொல்றதை இந்தக் காதில வாங்கி அந்தக் காதில அப்பா விட்டுறணுமாய் இருந்தது. என் வேலையை லெயர்து செய்வதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. வேலி நாதங்கியைப் போடவே அவனுக்கு எட்டாது. எதும் மரக்குச்சியை இலையோடு ஒடித்து எட்டிப்போட வேண்டும். தண்ணீர் ஊற்றவேண்டும். சிந்தாமல் அந்த வண்டியைத் தள்ளிவர அவனுக்கு எப்படி முடியும். இதெல்லாம் அத்தனை சுலபமான வேலைன்னு அம்மா நினைக்கிறாப் போலிருக்கிறது. அவளுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.

நரிகளுக்கு என்ன தீவனம், அதைச் சொல்ல விட்டுவிட்டது. அப்பாவின் அந்த ரத்தம் தோய்ந்த வேலையுடை எனக்கு அதை ஞாபகப்படுத்தி விட்டது. அவைகளுக்கு குதிரை மாமிசம் தான் உணவு. இந்தக் காலங்களில் எல்லா பண்ணையாட்களிடமும் குதிரைகள் இருந்தன. அவற்றுக்கு மூப்பாகி வேலைசெய்யக் கொள்ளவில்லை என்றாலோ, காலை கீலை (கால் முட்டியின் கீலை) ஒடித்துக்கொண்டாலோ, விழுந்துவாரி எழுந்து நிற்கவே நொண்டினாலோ, சில சமயம் அப்படி ஆகிப்போகிறது அவைகளுக்கு… அவர்கள் அப்பாவைக் கூப்பிட்டனுப்புவார்கள். அப்பாவும் ஹென்ரியுமாய் வண்டி யெடுத்துக்கொண்டு போவார்கள். பொதுவாக அந்தக் குதிரையை அங்கேயே சுட்டு, கூறு போட்டு, ஒரு அஞ்சு முதல் பன்னெண்டு டாலருக்கு அவற்றை வாங்கி எடுத்து வருவார்கள். ஆனால் கைவசம் ஏற்கனவே மாமிசம் நிறைய இருந்தால், அந்தக் குதிரைகளை அப்படியே உயிரோடு ஏற்றிவருவதும் உண்டு. அவை சில நாட்களோ வாரங்களோ எங்கள் லாயத்தில் இருக்கும். அதன் மாமிசம் தேவைப்படும் வரை.

யுத்தத்திற்குப் பிறகே, சம்சாரிகள் டிராக்டர் வாங்க, குதிரைகளை ஏறக்கட்ட ஆரம்பித்திருந்த காலம் அது. அவைகளுக்கு வேலை இல்லை, அவைகள் தேவை இல்லை என்றான நிலை. குதிரைகள் குளிர்கால அளவில் இங்கே வந்தால் சில சமயம் வசந்த காலம் வரை கூட எங்கள் லாயத்தில் இருக்கும். வெளியே கடும் பனி. எங்களிடமும் காய்ந்த புல்லும் வைக்கோலும் தாராளமாய் இருந்தது. தெருக்களில் பனியைச் சுரண்ட தோண்ட அத்தனை சலபமாய் முடியாது. குதிரையை அப்படியே பட்டணத்துக்கோ, கறிபோடவோ அழைததுப் போக வேண்டியிருந்தது.

எனக்கு பதினோரு வயசாய் இருக்கையில், அப்ப எங்கள் லாயத்தில் ரெண்டு குதிரைகள் இருந்தன. இங்க வந்தடையு முன்னால் அவற்றுக்கு என்ன பெயர் தெரியாது. இப்ப அவற்றுக்கு மேக் என்றும் ஃப்ளோரா என்றும் பெயர் நாங்கள் வைத்திருந்தோம். வயசான கருத்த, சவாரிக் குதிரை மேக். கரிக்கருப்பு. முரடு. பழுப்பு நிற பெண் குதிரை ஃப்ளோரா துடிப்பு மிக்கது. மேக் சாவகாசமானது. அதைக் கையாள எளிது. ஃப்ளோரா தான் உள்பதட்டமாய் உடல் நடுங்கியது. கடக்கும் வண்டிகளை, பிற குதிரைகளைப் பார்த்து அலைபாய்ந்தது. என்றாலும் அதன் பாத வீச்சையும் வேகத்தையும் நாங்கள் ரசித்தோம். இயல்பான அதன் துள்ளல் துடுக்கும் கயிறுஉதறி ஓடுவதும் நன்றாய்த் தான் இருந்தது.

சனிக்கிழமை யானால் நாங்கள் லாயத்துக்குப் போவோம். புல்லும் மிருக நெடியுமான அறையைத் திறக்கையிலேயே ஃப்ளோரா துள்ளி மூக்கை நீட்டும். கண்ணால் பெரு முழி முழிக்கும். அதற்கேயான புர்ர் பெருமூச்சு ஓசை. அதன் மொத்த உடம்புமே பயந்து ஒரு சிலிர்ப்பு ஓடும். அப்படியே அவளது கொட்டடியில் நுழைந்துவிட முடியாது.
சவட்டி விடும்.

அந்தக் குளிர்காலத்தில், அப்பாவிடம் அம்மா பொழுதன்னிக்கும் வலியுறுத்தி வந்தாளே, அதே எண்ணத்தினை இன்னும் தீவிரமாகவே கேட்க நேர்ந்தது. இதற்கு விமோசனம் தான் என்ன தெரியவில்லை. இங்கே சனங்களுக்கு எப்பவுமே உள்ளூற யோசனை ஒரே மாதிரியே இருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பு அது. அதை யாரும் மீறி தாண்டி வெளியே நழுவ முடியாது. சிறுமி என்கிற வார்த்தை, எத்தனை மாசு மருவற்ற சுத்தமான வார்த்தை என நினைத்திருந்தேன். குழந்தை என்கிறாப் போல. சுமை அறியாத வார்த்தை. இப்ப, அப்டில்லாம் இல்லையாய்ப் படடது.

பெண் என்றால், நான் நினைத்து வைத்திருந்தேனே, அதுமாதிரியான விஷயம் அல்லவாக்கும் அது. அது முன்தீர்மானம் கொண்டது. அந்த முன் தீர்மானம் என் தீரமானம் அல்ல. பந்தம் செய்த நிர்ப்பந்தமாக அது இருந்தது. சமுதாயத்தில் பெண் என்பதற்கு ஒரு வகைமாதிரி, அச்சு இருக்கிறது. உன்னை அழுத்தக் கூடிய வருத்தக் கூடிய ஏமாற்றக் கூடிய பிம்பம் அது. அந்த பிம்பம் நிசமான உன்னை கேலிக் கூத்தாக்கி விடுகிறது. அவ்வாறன்றி, நீ அபத்தமாகிப் போகிறாய்.

லெயர்துவும் நானும் ஒருமுறை கைகலந்தோம். என் பலம் அனைத்தும் திரட்டி நான் அவனை எதிர்கொண்டேன். என்றாலும் என்னை அவன் மேலமுக்கி என் கையை ஒருவிநாடி தரையோடு அழுத்திவிட்டான். ச். என்னால் தாளவே முடியவில்லை அதை. ஹென்ரி இதைப் பார்த்துவிட்டான். சிரிச்சிகிகிட்டே அவன் சொன்னான். ஏய் போகப்போக உனக்குத் தெரியும். ஆம்பளைங்க எவ்வளவு முரடுன்னு நீயே தெரிஞ்சிக்குவே. லெயர்து உருத் திரண்டு பெரியாளாகி வந்தான். நானும் தான்.

சில வாரங்கள் எங்களோடு பாட்டி வந்து இருந்தாள். அவள் தொணதொணப்பு தனி மாதிரி. பொம்பளையாட்கள் அப்படி அறைந்து கதவைச் சாத்துவாங்களா? பொட்டைப்பிள்ளையா லெட்சணமா காலை ஒடுக்கி உட்காருடி. இதுல ரொம்ப மோசமான விஷயம், நான் எதாவது கேள்வி கேட்டுறக் கூடாது அவளிடம். பொட்டச்சிக்கு அதெல்லாம் தேவை இல்லை! எனக்கு ஆத்திரம். நான்பாட்டுக்கு கதவுகளை அப்படி அடித்துச் சாத்திவிட்டுத் தான் போவேன். கன்னாபின்னான்னு தான் உட்கார்வேன். என் இஷ்டம் அது. யார் கேட்கிறது?

வசந்த காலத்தில் குதிரைகளைக் களத்து வெளியில் விட்டுவிடுவோம். மேக் சற்றுச் சுவரில் கழுத்தை முதுகை தொடையை உரசி சொறிந்துகொள்ளும். ஃப்ளோரா தான் அங்குமிங்கும் வேலி வரை அலைந்து திரியும். வேலி பட்டைகளைக் குளம்புகளால் அசைக்கும்.

பனி விழுதல் அடங்கி தரை இளகி இப்போது மண் அதன் இறுக்கத்துடனும் பழுப்பு நிறத்துடனும் தெரிய ஆரம்பித்தது. குளிர்கால அழகுகள் விலகி இப்போது, அந்தப் பிரதேசமே மேடு பள்ளம் சமவெளி என்பதான இயல்புக்கு மீண்டன. கட்டுத்தளர்ந்த ஆசுவாசம் எங்கும். இப்போது ரப்பர் நடையன்கள். கால்கள் எத்தனை லேசாய் உணர்கின்றன!

சனிக்கிழமை லாயத்துக்குப் போனோம். எல்லா கதவுமே சன்னல்கள் உட்பட பப்பரக்கா! உள்ளே நல்ல காற்று. வெளிச்சம். ஹென்ரி இருந்தான். அவனிடம் இருந்த காலண்டர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். லாயத்தின் பின்பக்கப் பொந்துகளில் அவற்றை அவன் அம்மாவுக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருப்பான்,

”ஏய் உன் பழைய சிநேகிதன் மேக், அவனுக்கு குட்பை சொல்ல வந்தியா?” என்று கேட்டான் தம்பியிடம். ஒரு கொத்து ஓட்ஸ் அள்ளிக் கொடுத்தான். ”உன் கையால மேக்குக்குக் கொடு.” லெயர்து மேக்கிடம் போனான். மேக்கின் பற்கள் மகா மொண்ணை. சாவகாசமாய் மேக் அதைத் தின்றது. அதன் வாயில் இங்கும் அங்குமாக தானியங்கள் புரண்டன. அதை அரைக்க சிரமப்பட்டது மேக்.

”மேக் பாவம்” என்றான் ஹென்ரி. ”ஒரு குதிரைக்குப் பல்லு போனால் எல்லாமே போனாப் போலத்தான்.” ஹென்ரியிடம் நான் கேட்டேன். ”இவனை இன்னிக்குச் சுட்டுருவீங்களா?” ரொம்ப காலமாக ரெண்டுமே அங்கே இருந்ததில் அவைகளைச் சுடும் வேளையே எங்களுக்கு ஞபாகத்தில் தட்டவில்லை.

ஹென்ரி பதில் சொல்லவில்லை. அவன்பாட்டுக்கு நடுங்கும் குரலில் போலி துக்கத்துடன் பாட்டெடுத்தான். ஐயகோ நெத் மாமாவுக்கு இல்லே சோலி. பாரு இனி அவர் ஆளே காலி… மேக்குடைய கருத்த கெட்டியான நாக்கு லெயர்துவின் கைகளை நக்கித் துழாவியது. அவன் பாட்டு முடியுமுன்னால் நான் லாயத்துக்கு வெளியே வந்துவிட்டேன்.

குதிரை எப்படி சுடப்படுகிறது நான் பார்த்ததே இல்லை. ஆனால் குதிரைகள் சுடப்படும் இடம் தெரியும். போன கோடை. நானும் லெயர்துவும் குதிரையின் மிச்சங்களை புதைக்கு முன் பார்க்க வாய்த்தது. பெரிய கருத்த பாம்பு போல் வெயிலில் சுருண்டு. கிடந்தது. களத்துப் பின்பக்க வெளி அது. லாயத்தில் இருந்து எதுவும் குறுக்குப் பலகையில் கீறலோ துவாரமோ இருந்தால் அதுவழியே துப்பாக்கி சூட்டை எங்களால் ஒருவேளை பார்க்க முடியும். பார்க்க விரும்பும் காட்சி அல்ல அது. ஆனால் ஒண்ணு நடந்தால், அதை எப்படி நடக்கிறதுன்னு தெரிஞ்சிக்காம எப்படி?

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் அப்பா. அவர் கையில்… துப்பாக்கி. ”இங்க என்ன பண்ணிட்டிருக்க?” என்று கேட்டார். ”சும்மா.” ”போ. வீட்டுப் பக்கமா போய் விளையாடு. போ.” லெயர்துவை லாயத்துக்கு வெளியே அனுப்பிவிட்டார். ஏய் மேக்கை எப்பிடி சுடறாங்க, நீ பாக்கணுமா?… என்று லெயர்துவை நான் கேட்டேன். கேட்டபடியே அவனை அப்படியே களத்தின் முன்வாசல் பக்கமாக இழுத்துப் போனேன். மெல்ல நாதங்கியை நீக்கினேன். ஷ். சத்தம் வரப்டாது. அவங்க காதுல விழுந்துரும், என்று எச்சரித்தேன். லாயத்தின் உள்ளே ஹென்ரியும் அப்பாவும். பேச்சுக்குரல். வெளியே மேக் இழுத்து வரப்படும் சத்தம்.

கொட்டகை மேல்பலகை. ஜில்லென்று இருட்டாய்க் கிடந்தது. குறுக்குப் பட்டைகள் வழியே வெளிச்சக் கீற்றுகள் குறுக்கு மறுக்காக விழுந்திருந்தன. சுற்றுச் சுவரைத் தடவியபடியே தவழ்ந்து போனோம். சுவரில் நிறைய பொத்தல்கள், எனக்கு வாகாய் ஒன்று. முற்ற ஓரம், கதவு அருகே. தளவாட மூலை. லெயர்து பார்க்கத் தோதாக துவாரம் கிடைக்கவில்லை. அவன் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான். ரெண்டு பலகைகளின் இடைவெளியை அவனுக்குக் காட்டினேன். ஷ். சத்தம் போடாமப் பொறுமையாப் பாரு. அவங்களுக்கு உன் சத்தம் கேட்டால் நாம ரெண்டு பேருமே மாட்டிக்குவோம்.

அப்பா. கையில் துப்பாக்கி. ஹென்ரி கயிறைப் பிடித்து மேக்கை இழுத்து வருகிறான். கயிறை விட்டுவிட்டு பெட்டியைத் திறந்து சிகெரெட் சுருள் காகிதத்தையும் புகையிலையையும் எடுத்தான். தனக்கும் அப்பாவுக்கும் சிகெரெட் அடைத்தான். இதுபாட்டுக்கு நடக்கிறது. மேக் காய்ந்த புல்லை குனிந்து முகர்ந்து கொண்டிருந்தது. திடல்பக்கக் கதவை அப்பா திறந்து மேக்கை வெளியே விட்டார். மேக் வெளியே போய் ஈரமான புதுப் புல்லை மேய ஹென்ரி வெளியே அனுப்பினான். அப்பாவும் அவனும் எதோ பேசிக்கொள்கிறார்கள். எங்களுக்கு என்ன பேசுகிறார்கள் கேட்கவில்லை. குனிந்தபடி ஈரப் புல்லைத் தேடியபடி மேக்.

ஒரு நேர்கோட்டில் போல அப்பா நடந்து வசம் பார்த்து நின்றுகொண்டார். ஹென்ரி மேக்கின் பக்கவாட்டில் நகர்ந்து தள்ளிப் போனான். கையில் இன்னும் குதிரைக் கயிறு. தளர்வாய்ப் பிடித்திருந்தான். அப்பா துப்பாக்கியை உயர்த்தினார். மேக் எதையோ கவனித்து தலையை உயர்த்தியது. அப்பா சுட்டார்.

அப்படியே மேக் அடங்கிவிடவில்லை. லேசான தள்ளாட்டம். ஒரு பக்கமாய்ச் சரிந்து பக்கவசத்தில் விழுந்து, அப்படியே உருண்டு, ஆகா, காற்றை அப்படியே உதைத்தது. பெரிய சர்க்கஸ் காட்சிபோல அதைப் ரசித்து ஹென்ரி சிரித்தான். துப்பாக்கியின் டுமீல் சத்தத்தைக் கேட்டதுமே லெயர்து ஹா என நீளமாய் மூச்செடுத்தான். அது சாகல்ல, என்று கத்திவிட்டான். எனக்கும் அது சரி என்றுதான் பட்டது. ஆனால் அந்தக் கால்கள் அப்படியே நின்றன. அப்படியே திரும்ப பக்கவசத்தில் சரிந்தது. உடம்பெங்கும் நடுக்கம் குதிரை துவண்டு அடங்கியது. அவர்கள் இரண்டு பேரும் அதன் கிட்டேபோய் நிலவரம் பார்த்தார்கள். வருத்தம் கிருத்தம் எதுவும் இல்லை அதில். குனிந்து அதன் நெற்றியைப் பார்த்தார்கள். குண்டு பாய்ந்தது அங்கே தான். இப்போது அதில் இருந்து காய்ந்த புல்லில் குபுக்கியது ரத்தம்.

இப்ப அதைத் தோலுரித்து மாமிசத்தைத் கூறுபோடப் போறாங்க, என்றேன். வா, நாம போலாம். என் கால்கள் வெடவெடத்துக் கொண்டிருந்தன. மெத்தென்ற வைக்கோல் புடைப்பில் குதித்தேன். இப்ப நீ குதிரையைச் சுடறதைப் பாத்தாச்சி இல்லியா? அவனை ஊக்கப்படுத்த இப்படிச் சொன்னேன். என்னவோ நான் இதைப் பலமுறை பார்த்திருக்கிறாப் போல. புல்வெளியில் பூனையோ அதோட குட்டிகளோ இருக்குதா தேடுவோம், என்றேன். அவனும் கூளத்தில் குதித்தான். திரும்பவும் சிறு பையனாக அடங்கி ஒடுங்கி என்னுடன் வந்தான்.

சின்ன வயசில் அவனைக் கூட்டிவந்து ஏணி வழியாக உத்திரம் வரை ஏறுவதை அவனுக்கு நான்தானே சொல்லிக் கொடுத்தேன் என்று சட்டென்று ஞாபகம் வந்தது. அதுவும் வசந்த காலம்தான். அப்பவும் புல் அடர்த்தியற்று தான் இருந்தது. அந்த வயசில் எதாவது சுவாரஸ்யமா வேண்டியிருந்தது எனக்கு. எதையாவது நான் செய்து நாலு பேரிடம் அதைச் சொல்லி சந்தோஷப்படும் துறுதுறுப்பு. பழுப்பும் வெளுப்புமான கட்டங்களுடன் புஸ்சென்ற கோட் அணிந்திருந்தான் அவன். என்னுடைய பழைய கோட்டை வெட்டி அவனுக்குப் பொருத்தமாக்கியது. நான¢ சொல்லித்தந்து ஊக்கப்படுத்தினேன். அவன் மேலே மேலே ஏறி மேல் கட்டையில் போய் உட்கார்ந்துகொண்டான். கீழே ஆழத்தில் புல்தரை. மத்த பக்கத்தில் வைக்கோல் போருக்கான களம், கூட தளவாட தோட்டவேலை சாமான்கள். அப்படியே திரும்பி உற்சாகமாய் அப்பாவிடம் ஓடினேன். அப்பா, நம்ம லெயர்து பாருங்க, மேல் பலகை வரை ஏறியாச்!

அப்பா வந்தார். அம்மாவும் ஓடிவந்தாள். அப்பா தணிந்த குரலில் பேச்சு கொடுத்தபடியே ஏணியில் ஏறி அப்படியே லெயர்துவைக் கையில் ஏந்தி கீழே கொண்டுவந்தார். அம்மா அப்படியே ஏணியில் சாய்ந்தபடி அலறினாள். ஏட்டி, அவன் என்ன காரியம் பண்ணீர்க்கான்? என்ன பாத்துக்கறே நீ?

அவர்கள் யாருக்குமே உண்மை தெரியாது. நான்தான் அவனை மேலே ஏற்றிவிட்டேன், என்பதே தெரியாது. லெயர்துவுக்கும் அத்தனை சுத்தமா தெளிவா எதையும் சொல்கிற வயது வந்திருக்கவில்லை. ஆனால் அன்னிலேர்ந்து இன்னிவரை அந்த பழுப்பு வெள்ளை கட்டம்போட்ட கோட், ஆணியில் தொங்கும்போதோ, பழந்துணி பெட்டியிலோ எப்ப அதைப் பார்த்தாலும், என அடிவயிறு கனக்கும். எனக்கு மட்டுமே தெரிந்த, நான் பண்ணிய ஏடாகூடம் அல்லவா அது! மனதைவிட்டு வெளியே துப்ப முடியாத தப்பு.

லெயர்து, என்னுடன் வந்துகொண்டிருந்தவனைப் பார்த்தேன். பழைய அந்த நிகழ்ச்சி அவன் மனதில் இல்லை. இந்தக்காட்சி, குதிரை சுடப்பட்டதை அவன் தாளவில்லை. அவன் முகம் சத்தற்று வெளிறியிருந்தது. கலவரமாகவோ, திகைத்தாப் போலவோ அது இல்லை. ஆனால் உள்ளே அவனில் அது வேலைசெய்து கொண்டிருந்தது. பார்றா, என்றேன் உற்சாகமும் சிநேகமும் த்வனிக்க. நாம பார்த்தோம்ன்றதை நீ யாராண்டையும் சொல்லாதே. சொல்லமாட்டே, இல்லே?

”மாட்டேன்” என்றான் சுரத்தில்லாமல். ”சத்தியமா?” ”சத்தியம்” என்றான். அவன் கையை அப்படியே முதுகோடு பிடித்துக்கொண்டேன். சட்டென கை விரல்களை மாத்தி மடித்து பொய் சத்தியம் பண்ணிவிடுவானோ, என்று பயம். ஆனாலும் ராத்திரி தூககத்தில் அலறி கிலறி குட்டை உடைத்துவிடக் கூடும்!

எப்படியாவது, அவன் என்ன பார்த்தானோ, அதை அவன் மனதில் இருந்து வெளிய தள்ளிவிட்டால் நல்லது. சட்டுனு அவன் கவனத்தை வேற எங்காவது மாத்திட்டால் இதை மறந்துருவான். சினன மனசு. நிறைய விஷயத்தை அது ஞாபகம் வெச்சிக்காது, என்றிருந்தது. கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருந்தேன் ஏற்கனவே. ஜுபிலிக்குப் போய் ஒரு நிகழ்ச்சி பார்த்தோம். ஜுடி கனோவாவோட அதில் ஒரே சிரிப்பு. அத்தோட இதெல்லாம் அவனுக்கு மறந்துரும்னு எனக்கு இருந்தது.

ரெண்டு வாரமாயிற்று. இப்ப அவர்கள் ஃப்ளோராவை சுடப்போகிறார்கள் என்று தெரியும் எனக்கு. போதிய அளவு புல் இருக்குதா, என்று அம்மா கேட்டதும், அதற்கு அப்பா, போதும். நாளைக்கு அப்புறம் பசு மட்டும் தான்… அடுத்த வாரம் அதை வெளிய மேய விடலாம், என்று பதில் சொன்னார். நான் புரிந்துகொண்டேன். அதாக்கும் சங்கதி. ஃப்ளோராவை காலையில் சுடப் போகிறார்கள்.

இப்ப நான் அதைப் பார்க்கலாம் என்று யோசிக்கவில்லை. திரும்ப வேடிக்கை பார்க்கிற சமாச்சாரம் இல்லை அது. நிசத்தில் அதை நான் அடிக்கடி நினைக்கிறது கிடையாது. ஆனால் சில சமயம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், அல்லது கண்ணாடி முன்னால் தலை வாரியபடி பெரிய பெண்ணாய் ஆனால் நான் எத்தனை அழகாய் இருப்பேன் என்கிற கனவில் மிதக்கும் போதும், சட்டென அந்தத் திகில் முன்வந்து குதிக்கும். அப்பா எத்தனை சகஜபாவனையோட அந்தத் துப்பாக்கியை உயர்த்துகிறார். மேக் காற்றில் காலை உதைக்கிறபோது ஹென்ரி இளிக்கிறான். இதில் எனக்கு திகிலோ, எதிர்ப்பு உணர்வோ கூட இல்லை.

பட்டணத்துப் பெண்ணைப் போலவே நான் இதனால் பெரியதாய் பாதிக்கப் படாமலேயே தான் இருந்தேன். மிருகங்களின் மரணத்தை வைத்து தான் எங்கள் வாழ்க்கைப் பாடே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுசார்ந்து எனக்கு லேசான குற்றவுணர்வு இருந்தது. அப்பாவும், அவர் பண்ணும் காரியங்களும் பற்றி ஒரு சங்கடம் இருந்தது.

அழகான நாள். கூதல் பெருங்காற்றில் ஒடிந்து விழுந்த சுள்ளிகளை பண்ணையில் பொறுக்கி சிறு விறகுக்கூம்புகளாக அங்கங்கே குவித்து வைக்கிறதும் எங்கள் வேலைதான். ஃப்ளோராவின் சிணுக்கம் கேட்டது. கூடவே அப்பாவின் குரல். ஹென்ரி சத்தம் போடுகிறதும் கேட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்க, தடதடவென்று ஓடினோம்.

லாயத்தின் கதவு திறந்து கிடந்தது. ஹென்ரி அப்போதுதான் ஃப்ளோராவை வெளியே நடத்தி வந்தான். குதிரை முற்றத்தில் அதுபாட்டுக்கு இங்குமங்குமாய்த் திரிந்து கொண்டிருந்தது. நாங்கள் வேலி ஏறினோம். குதிரை ஓடுவது பார்க்க ஜோராய் இருந்தது. அவ்வப்போது கனைப்பு. முன்காலைத் தூக்கி ஜிங்குஜக்கா அசைவுகள். மேற்கத்திய சினிமா போல. உடல் சேதாரம் எதுவும் இல்லாத பட்டிக் குதிரை. மேய்ந்து திரியும் வயசான பழுப்பு சவாரிக்குதிரை..

அப்பாவும் ஹென்ரியும் அதன்பின்னால் ஓடி அதன் கயிறைப் பிடித்து ஒருமாதிரி ஒரங்கட்ட முயற்சி செய்தார்கள். கிட்டத்தட்ட செய்தாகிவிட்ட நிலையில் திடுதிப்பென்று அது அவர்கள் நடுவே புகுந்து கண்தெரிக்க பண்ணையின் முடுக்கு எங்கோ மறைந்துவிட்டது. வேலிப்பக்கமாக அது வந்து மோதியபோது பட்டைகள் அதிர்ந்து கிறீச்சிட்டன. ஹென்ரி கத்தினான். அது கரடு பக்கமா போயிட்டது.

வீட்டைத் தாண்டி வெளியே ஒரு எல் வடிவ கட்டாந்தரை. அதன் நடுப்பகுதிக்கு அது வந்திட்டால், வாயில் திறந்துதான் இருக்கிறது. காலையில் சரக்குவண்டி உள்ளேவர திறந்ததை அடைக்கவில்லை. நான் வேலியின் வெளிப் பக்கமாய் இருந்தேன். அப்பா என்னைப் பார்த்துக் கத்தினார். ஏய் போ வாசல் கதவைச் சாத்து.

நான் சூப்பரா ஓடுவேன். தோட்டத்துள் ஓடி ஊஞ்சல் கட்டியிருந்த மரத்தைத் தாண்டி, சிறு பள்ளம். அதையும் ஒரே தாவு, பாதைக்கு வந்தாச். குதிரை இன்னுமாய் பாதையில் தட்டுப்படவில்லை. வேறு பக்கம் எங்கும் ஒடியிருக்குமா. (அந்தப்பக்கம் இதைவிட கனமான கிராதிக்கதவு.) கதவு தரையோடு அழுந்திக்கிடந்ததைத் தூக்கி தெருவுக்குத் தள்ளி நகர்த்தினேன். பாதி திறந்திருப்பேன். ஆ அதோ குதிரை. என்னைப் பார்த்து ஓடிவந்தது அது. கதவைச் சாத்தி சங்கிலி போட வேண்டியிருந்தது. அப்பதான் அந்தக் குழியைத் தாண்ட முடியாமல் தாண்டி தள்ளாடி லெயர்து வந்தான்.

கதவை அடைக்கவில்லை நான். விரியத் திறந்து விட்டேன். அதுபத்தி பெரிய யோசனை யெல்லாம் இல்லை. அட சட்டென அதைச் செய்தேன். ஃப்ளோரா ஓரே ஓட்டமாய் ஓடிவந்தது. என்னைத் தாண்டி.. லெயர்துவானால், கதவைச் சாத்து, சாத்து, என்று குதித்தான். அது அவன் கத்தி முடிக்குமுன் ஓடிவிட்டது. அப்பாவும் ஹென்ரியும் அதற்கு அப்புறமாகத் தான் பாதையில் தட்டுப்பட்டார்கள். ஃப்ளோரா நகரச் சாலையில் ஓடிக்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். நான் கதவருகே வருமுன் அது தப்பித்திருக்க வேண்டும், என்றுதான் அவர்களுக்குப் பட்டிருக்கும்.

விசாரிக்க நேரம் இல்லை. திரும்ப உள்ளேபோய் துப்பாக்கியும், கத்தி கபடாக்களும் எடுத்து வண்டியில் அள்ளிப்போட்டு, ஒரு உருமலான சுற்று அடித்து கிளம்பி கதவை நோக்கி வந்தார்கள். நானும் வரேன். நானும்… என லெயர்து கத்தினான். ஹென்ரி வண்டியை நிறுத்தி அவனையும் ஏற்றிக்கொண்டான். அவர்கள் போனதும் நான் கதவைச் சாத்தினேன்.

லெயர்து நடந்ததைச் சொல்லிருவான் என்றிருந்தது. என் கதி என்ன தெரியவில்லை. ஃப்ளோரா கதி என்ன, தெரியும். வண்டிக்கு அது எப்படி தப்பிக்க முடியும்? அட இவங்க கண்ணுக்கு அது தப்பினாலும், அதை வழியில் பார்க்கிற யாராவது மதியமோ காலையிலோ தொலைபேசியில் தகவல் சொல்லி விடுவார்கள். ஒளிந்து அது தப்பிக்க அடர் புதர்கள் இநதப் பக்கங்களில் இல்லை.

அதன் மாமிசம் எங்களுக்கு வேண்டும், நரிகளுக்குப் போட. நரிகள் வேண்டும், எங்கள் பிழைபபே அதை நம்பித்தான். நான் செய்தது என்ன? அப்பாவுக்கு அதிக சிரமம் வைத்துவிட்டேன். ஏற்கனவே அவர் கடுமையாய் உழைக்கிறார். நடந்ததை அவர் கேள்விப்பட்டால், இனி அவர் என்னை நம்புவாரா? மாட்டார். நான¢ அவர்கட்சி அல்ல. ஃப்ளோரா கட்சி, என அவர் உணர்வார். அதனால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை, அந்த ஃப்ளோரா உட்பட. எல்லாம் ஒண்ணுதான். ஆனால், எனக்கு நான் செய்த காரியத்தையிட்டு வருத்தம் இல்லை. அது என்னைப் பார்த்து ஓடிவந்தது. அபயம். நான், எனக்கு வேறு வழியில்லை, நான் கதவை திற்ந்து விட்டுவிட்டேன் அதை.

வீட்டுக்கு வந்தேன். அம்மா கேட்டாள். அங்க என்ன கலாட்டா? நான் சொன்னேன். அம்மா, ஃப்ளோரா வேலியை மிதிச்சி தாண்டிப் போயிட்டது. பாவண்டி உங்க அப்பா, எனற்£ள் அவள். பட்டி தொட்டியெல்லாம் இப்ப அவர் அதைத் தேடிப் போகணும். அவங்க ஒருமணிக்குள்ளாற வருவாங்களா சந்தேகம். சாப்பாட்டுக்கு இப்பவே மெனக்கெட வேண்டியது இல்லை.

ரொம்ப சமத்தாக நான் வீட்டுக்காரியங்களில் இறங்கினேன். கரையிட்ட பழைய திரைச்சீலைகளை படுக்கைமீது விரித்தேன். எனக்கான அலங்கார மேஜை தயார் செய்தேன். பாவாடை தைத்த மிச்ச ஜரிகையெல்லாம் வைத்து அதை அழகுபடுத்திக் கொண்டேன். என் படுக்கைக்கும், லெயர்துவின் படுக்கைக்கும் இடையே சிறு தடுப்பு மறைப்பு வைக்கலாமாய்ப் பட்டது.

வெளி வெளிச்சத்தில் அந்த திரைச்சீலை லேஸ்கள் லாலி பீலி என்று அசிங்கமாய்த் தெரிந்தன. இனி ராத்திரி ஒண்ணா அவனோடு நான் பாடமாட்டேன். ஒருநாள் நான் பாடும்போது லெயர்து சொன்னான். கண்றாவியா இருக்குடி. நான் பாட்டுக்கு அன்னிக்கு தொடர்ந்து பாடித்தான் முடிச்சேன். ஆனால் அடுத்தநாள் நான் பாடவே இல்லை.

ஆனால் பாட்டு கீட்டுல்லாம் இப்ப தேவையும் இல்லை. எங்களுக்கு பயம் போயாச்சி. மேல பழைய மர சாமான்கள் தான் இருக்கு. ஓட்ட உடசல் அடசல். ஒழுங்கா அதை அடுக்குவார் இல்லை. லெயர்து தூங்கட்டும் என நான் அதுவரை படுக்கைக்கு வரவேயில்லை. இப்ப எனக்கே எனக்காய் நான் கதைகள் சொல்லிக்கொண்டேன். ஆனால் இந்தக் கதைகளிலும் என்னென்னவோ நடந்தன.

திடுக் திருப்பங்கள். அது வழக்கம்போல ஆரம்பித்து, அதில் ஒரு ஆபத்து கணம், நெருப்பு, காட்டு விலங்கு… நான் சனங்களைக் காப்பாற்றி… அத்தோடு விஷயம் மாறிவிடுகிறது. ஐயோ இப்ப என்னை யாரோ காப்பாத்துகிறார்கள். என் வகுப்பில் அல்லது பள்ளியில் என்னோடு படிக்கும் பையன், பெண்பிள்ளைகளை முட்டிக்குக் கீழ் கிள்ளுவாரே அந்த காம்ப்பெல் சாராகக் கூட இருக்கலாம். அந்தக் கட்டத்தில் அந்தக் கதை, நிசத்தில் என்னைப் பத்தி எனக்கு உணர்த்தியதாகப் பட்டது. அதோ நான். என் கூந்தல் நீளத்தை கவனிக்கிறேன். என் உடைகளை கவனிக்கிறேன். இதெல்லாம் தெரிய ஆரம்பித்தபோது, அந்தக் கதையின் சுவாரஸ்யம் அடிபட்டே போனது.

வண்டி திரும்பிவர ஒருமணிக்கு மேலேயே ஆகிவிட்டது. பின்பகுதியை தார்ப்பாலின் ஏற்றி மறைப்பு. உள்ளே மாமிசம் இருக்கிறது என்பது புரிகிறது. அம்மா உணவை திரும்ப சுடவைக்க வேண்டும். ஹென்ரியும் அப்பாவும், ரத்த மேலாடைகளை மாற்றி, வேலைக்கான வேறு மேலாடைகளில் வந்தார்கள். கை கால் கழுத்து முகம் எங்குமான கறைகளை அவர்கள் கழுவிக் கொண்டார்கள். தலையில் தண்ணீரடித்து படிய வாரிக்கொண்டார்கள். லெயர்து தன் கையை உயர்த்தி ரத்தக்கறையைக் காட்டினான். கிழட்டுக்குதிரை ஃப்ளோராவை சுட்டாச், எனற்£ன் அவன். அதை அப்படியே 50 துண்டா போட்டோம்.

அதெல்£ம் எனக்குக் கேட்க வேண்டாம், என்றாள் அம்மா. அடேய், கையக் கழுவாமல் கொள்ளாமல் சாப்பிட வந்து உட்காராதே. அப்பா அவனை அழைத்துப்போய் அலம்பி விட்£ர்.

அப்பா சாப்பிட உட்கார்ந்து, கடவுளின் கருணை, என்றார். ஹென்ரி முள்கரண்டியில் தனது சூயிங்கம்மை அப்பினான். அதை அவன் உரித்தெடுக்கும்போது என்னமாச்சும் உருவம் போலத் தெரியும். நாங்கள் ஆச்சர்யப்படுவோம், என்கிற அவன் விளையாட்டு அது. கிண்ணங் கிண்ணமாய் குழைந்த காய்கறிக் கூட்டுகள், கொதியுடன் ஆவிபறந்தன அவற்றில் இருந்து, கைமாறின

லெயர்து என் கண்ணை நேராகப் பார்த்தான். பெருமிதமான அழுத்தமான குரலில் அவன் பேசினான். ச், அப்பா, இவளால ஃப்ளோரா ஓடிட்டது. ம்?… என்றார் அப்பா. ஆமாப்பா, அக்கா, கதவை மூடியிருக்கலாம். அவள் செய்யவில்லை. இவள் என்ன பண்ணினாள், கதவை பப்பரக்கான்னு திறந்து விட்டாள், ஃப்ளோரா ஓடிட்டது.

என்னடி? அப்பிடியா, என்று கேட்டார் அப்பா. மேஜையில் எல்லாருமே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் என்ன சொல்ல? மெல்ல தலையாட்டினேன். தொண்டைக்குள் சண்டித்தனம் செய்யும் உணவு. இறங்க மறுத்தது. அவமானமாய் இருந்தது. கண்ணில் கண்ணீர் பொங்கி வழிந்தது.

ஹ்ரும், என்கிற மாதிரி கனைத்தார் அப்பா. ஏண்டி அப்பிடிப் பண்ணினே? எனக்கு பதில்சொல்ல முடியவில்லை. கரண்டியை நழுவ விட்டேன். இதோ என்னை வெளிய அனுப்பி விடுவார்கள், என எதிர்பார்த்தேன். தலை தாழ்ந்தே யிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. யாருமே கொஞ்சநேரம் எதுவும் பேசவில்லை. அப்பா, அவ அழறா, என்றான் லெயர்து. அதில் ஈவு பச்சாதாபம் எதுவும் இல்லை.

அழட்டும், என்றார் அப்பா. கசப்பான குரல். எகத்தாளமாய் அவர் என்னை எள்ளியதாய்க் கூட இருக்கலாம். பொட்டைப்பிள்ளை தானேடா அவள், என்றார் அப்பா.

நான் ஆட்சேபிக்கவில்லை. அது நிசந்தானோ என்னவோ.

***