Category: இதழ் 141

மின்மினி கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி )

காரணமல்லாக் காரணம்

மழித்துச் செதுக்கிய
மலை உச்சியிலிருந்து வழிகின்ற நீர்த்திவலைகள்

வெம்மையின் சிரிப்பில்
எங்கும் வெப்பச்சலனமழை
என் திசை எதிரில் மட்டும் தோன்றாக் காற்றின் விசை

விரவியழித்த
குழிகள் தோறும்
தாழ்நில ஊற்றுக்கள்

வழி மறித்துச் சொரியும்
பாணத்தில் கசிந்துருகும் செவ்வாற்றில்
நனைகின்ற ஓடமாய்
மிதக்கிறது நேசம்

தேசமில்லா வரைபடத்தில்
காகிதம் துயிலும் கரை
வெறுமையின் வெளி

நேசமல்லாக்கடலில்
வலைஞனின் நெடுங்கனவு துடிதுடித்து மாயும் மீன்

ஆர்ப்பரிப்பில்லாமல் நிகழ்கின்றது நிகழ்தகவு
கொடுக்குகளில்லாமல் தீண்டப்படும் விஷம்
மெல்ல மெல்லக்கொல்லும்

வனங்களின் வனப்பு
வரிவரியாய் மறைகின்றது
அறியாமல் விலகிக்கொள்ளும் ஆன்மாவின் உடலம்
அறியாமலே மணலாகிவிடுமானால்
இப்பொழுதே
சரிந்துகொள்ளும் தருக்கள்

கொடுத்துப்பறித்த
அன்பின் தீங்கனியதுவே
அழிவு நிகழ்த்தும் பேரழிவு

-மின்மினி

#000000000000000000

செவ்வகஅறையினுள்
ஆர்ப்பரித்து அடங்கிய
விளிம்புகளிலிருந்து கசிந்துகொண்டிருக்கும்
இளகிய மந்தகாசம்

பின்னல் கலைந்த
சுருண்ட பன்பாயின் கேசம்
புழுதி குடித்த பனைவிசிறி
ஒளியை மறந்த சிமிழ் விளக்கு
இடறி விழுந்த பித்தளைக்
குவளையின் கணீரொலி
நிரம்பிய அதிர்வுகள்
விடை பெறுதலின்றி
பெறப்பட்ட வினாக்களுடன்
ஊர்ந்து கொண்டிருக்கும்
சில சருகுகள்

மூலையின் ஓரமாய்
வழியும் சாளரத்தின்
பெருமழைத் தாரைகள்
காலச்சுவட்டில் மீந்திருக்கும்
நீர்க்கோலம்

வெற்றிலையின் செந்நிறக்களிம்பு
ஊறியிருக்கும்
சிதிலமடைந்த சுவரின்
தள்ளாடும் கால்கள்

சூழ்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிப்படை
அரவமொத்த நீண்ட உரையாடல்கள்
சங்கிலிப் புனைவுகள்
அலைபுரண்ட சிரிப்பொலியின்
எதிரொலிகள்
இரண்டு வெற்றுக்கதிரைகள்
இப்போதைக்கு காட்சிக்குள் அடங்கா
நேரெதிர்த் துருவங்கள் நீயும் நானும்

-மின்மினி

#0000000000000

ஓவியனை நிகர்த்த தத்ரூபமொழியில்
சுயாதீனமாய் அலையும் பட்டாம்பூச்சி உணரிகள்

பிரபஞ்ச அசைவில்
தொக்கி நிற்கும்
நெகிழ்ச்சியின் மதகுகள்

ஊடலில் விலகிய எழுதுகோலில் படிந்திருக்கும்
ஒளிக்கும் நிழலுக்குமான கூடலை
சிலாகிக்கும் சிதிலமடைந்த சுவர்

படர்க்கைப்பகல்
விழுங்கிய பொழுதுகளைக்
காவிச் சென்று
உயவும் அடர்இருள்
சாம்பலாகிக் கரைகின்றது

பொளியும் உளிகள்
உழிஞ்சில் மரவுரி களைய
ஒரு உருபு மயங்கி நிற்க
அந்தியின் மந்தகாசம்
மெல்ல விரவும் திசையில்
வேய்ங்குழல் இசைக்கின்றது
காற்று

கரித்த மனதின் எக்களிப்பு
கடல் நனைந்த முத்தங்களால்
நிரம்பியிருக்க தொடுவானப்புள்ளிகளின்
கரைகளில்
கால் நனைக்கின்றது மேகம்

உன் பின்னங்கழுத்தின் நிழல் / வே.நி.சூர்யா

உன் பின்னங்கழுத்தின் நிழல்

இருப்பிலிருந்து இன்மைக்கு செல்ல

உன் பார்வையால்

ஒரு ஏணியை செய்திருக்கிறேன்

அந்த ஏணியில் ஏறி இன்று இன்மைக்குள் போனேன்

இன்மைக்குள்ளிருந்தபடி இருப்பை பார்க்கும்போது

உன் பின்னங்கழுத்தின் நிழல் ஒரு மரமாகி நிற்பதை காணமுடிகிறது

கிளைகளில் இலைகளென எண்ணற்ற வளையல்துண்டுகள்

கறுப்பு நிற தூக்கம்

நெடுநாளைக்கு பிறகு ஒரிரவு சாலையோரத்தில் குட்டித் தூக்கம் போட்டேன்

நாளை அப்பாவிடம் என் இரவைப் பற்றி எவரோ சொல்லக்கூடும்

ஏன் அவ்விரவுக்காக மனித உருவெடுத்து வீடு என்னை உதைக்கவும் செய்யலாம்

அதைபற்றி எனக்கு எந்த கவலையுமில்லை

ஆனால் சமீபமாக வீட்டில் தூங்குவதற்கும் சாலையோர துயிலுக்குமான வித்தியாசம் ஒரே நிறமாகிக்கொண்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது

பச்சை விளக்குகள்

இருசக்கரவாகனமாகி விரைகிறது ஒரு வளைவுப்பாதை

அதை பார்க்கிறேன்

அதில் செல்லும் காதல்ஜோடிகளும் என்னை பார்க்கிறார்கள்

அவர்களுடைய மண்டையோடுகளின் கீழ்பகுதியை காணவில்லை

எனினும் அவர்கள் விரைகிறார்கள் சிரித்தபடி

மலையடிவாரத்தை நோக்கி நாக்கை தூண்டிலென வீசிவிட்டு காத்திருந்த கிழவர் அந்த ஜோடியை பார்க்கிறார்

பின்பு கலைந்திருந்த தலை முடியை சரிசெய்துகொள்கிறார்

அநேகமாக அவருக்கு தனது இளமைக்காலம் நினைவுக்கு வந்திருக்கவேண்டும்

உள்ளிருந்து தன்னை தாழிட்டுக்கொள்கிறது வீடு

கண்சொடுக்கும் நேரத்தில் வீடு ரோந்துசெல்லும் காவல் அதிகாரியாக

தன்னை உருவகித்துக்கொள்கிறது

தாமதங்களை என்றுமே மன்னிக்காத

அது சின்னஞ்சிறிய மதுவின் நெடியை எப்பொழுதும் குற்றவாளியென்றே சுற்றிவளைக்கிறது

இரவு நாய்கள் கோரமான நிழலுடன் இணைந்து குரைக்கின்றன

செடிகள் நான் மறக்க துடிகொள்ளும் ஞாபகங்களை உச்சரிக்கின்றன

நட்சத்திரத்தில் தெரிகிறது இறந்துபோன நண்பனின் முகம்

திரும்பத்திரும்ப கதவை தட்டுகிறேன்

எனது செவிட்டு வீடோ உள்ளிருந்து தன்னை தாழிட்டுக் கொண்டிருக்கிறது

எளிய மனிதர்களின் கதைகள் / பாலகுமார் விஜயராமன்

கடிகாரத்தைச் சுற்றி ஓடுகின்ற வழமையான அன்றாடங்களில் இருந்து இளைப்பாறிக் கொள்ளவும், கொஞ்சம் வேறு யுகங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் சென்று புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் உதவுகின்றன செல்லப் பறவைகள் வளர்ப்பு. தொடர்ச்சியாக உற்றுக் கேட்கும் பொழுது அவற்றின் மொழி நமக்கும் புரியத் துவங்கும். அவற்றுடன் ஆத்மார்த்தமான உரையாடல்கள் கூட சாத்தியமாகும். பறவை வளர்ப்பின் நீட்சியாக, வளர்ப்பு விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான புனைவுகளை வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. அந்தத் தேடலினூடாக, நண்பன் கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்த்த, மோ யானின் “எருது” சிறுகதையை வாசித்தபின், அக்கதையின் சூழலில் ஈர்க்கப்பட்டு, மோ யானின் மற்றொரு படைப்பான “கன்றுக்குக் காயடித்தல்” சிறுகதையின் ஆங்கில வடிவத்தை தேடத்துவங்கினேன். அந்தக் கதையின் ஆங்கில மொழியாக்கம் கிடைக்கவில்லை. ஆனால், அதிலிருந்து, அடுத்தடுத்த கண்ணியாய் பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் என்று தேடல் தொடர்ந்தது. வாசித்து மனதில் தங்கிய கதைகளை, தமிழில் மொழியாக்கம் செய்வது பிடித்த பொழுதுபோக்காகி, இன்று அவற்றை இணைத்து ஒரு தொகுப்பாகப் பதிப்பிக்கும் அளவு வளர்ந்திருக்கின்றது.

ஹங்கேரி, இத்தாலி, தென்கிழக்கு ஆப்ரிக்கா, மொராக்கோ, ஜப்பான், பிரேசில், போர்ட்டோரிகா, அமெரிக்கா என்று பல்வேறு நிலப்பரப்புகளையும், அவற்றில் வாழ்ந்த பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்த எளிய மனிதர்களின் வாழ்வையும் பேசும் பத்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றன. கிடை போடும் இடையர்கள், வாழ்வாதாரத்திற்குச் சிரமப்படும் படகோட்டி, விளிம்பு நிலையில் வாழும் இளம்பெண், ஓய்வின்றி உழைக்கும் வேசி, தத்தம் துணைகளையும், குடும்பத்தையும் விட்டு விட்டு வேறு தேசம் சென்று ஓவியம் வரைந்து சிறுபொருளீட்டும் நடுத்தர வயது இணையர், ஊர் முழுக்க நிறைந்திருக்கும் திருடர்கள், தன் ஒரே மகனை கொடுநோய்க்குப் பறிகொடுக்கும் குடியானவன், வனதேவதையுடன் பேசும் ஆடுமேய்ப்போன், முகாம்களில் வசிக்கும் கூலிகள், தங்களுக்கான புதிய தேசத்தைத் தேடி அலையும் அடிமைகள்… இப்படி சமூகத்தின் கீழடுக்குகளில் வாழும் எளிய மனிதர்கள் மற்றும் அவர்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகள், அதன் மூலம் அவர்களுக்குள் ஏற்படும் உறவு இணக்கம் அல்லது முரண் ஆகியவற்றைப் பேசுகின்ற கதைகளாக இவை அமைந்திருக்கின்றன.

இக்கதைகளின் ஊடாக, மொழி, பண்பாடு, தேசம், சூழ்நிலை, காலம் கடந்து எளிய மக்களின் வாழ்வும் பாடும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும் சித்திரம் கிடைக்கின்றது. அவர்கள் தங்களுக்கே உரிய மேன்மையையும், சிறுமையையும் பெரிதாக பொருட்படுத்தாமல், தங்கள் வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.

சூழலியல் சாந்த உலகச் சிறுகதைகளை கண்டடைவதற்கும், அவற்றை மொழிபெயர்த்து தொகுப்பாக கொண்டுவருவதற்கும் அண்ணன்கள் எஸ்.அர்ஷியா, நேசமித்ரன் மற்றும் நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன் மற்றும் ஸ்ரீதர் ரங்கராஜ் ஆகியோரின் உதவியும் மிக முக்கியமானது. தொடர் உரையாடல்கள் மூலமும் சரியான உள்ளீடுகள் மூலமாகவும் எனது மொழிபெயர்ப்புப் பணியை தொடர்ந்து செம்மையாக்குப்வர்கள் இவர்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சில கதைகள், இதழ்களில் வெளியாகிய பொழுது, எனது மொழிபெயர்ப்பை அங்கீகரித்து தொடர்ந்து மொழியாக்கங்களில் ஈடுபட உற்சாகமூட்டிய இலக்கிய முன்னோடிகள் எழுத்தாளர் பாவண்ணன், கவிஞர் சம்யவேல், கவிஞர் சிபிச்செல்வன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் மற்றும் சக பயணிகளும் நண்பர்களுமான, போகன் சங்கர், இராமசாமி கண்ணன், ”எதிர் வெளியீடு” அனுஷ், “பாதரசம்” சரோலாமா, தருமி அய்யா, மதுரை சுந்தர் ஆகியோருக்கும் மிக்க நன்றி. ஆரோக்யமான விவாதங்கள் மூலமாக, என்னையும் என் எழுத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் தோழர்கள் கருப்பையா, சங்கையா, நேரு, “புத்தகத் தூதன்” சடகோபன் உள்ளிட்ட வாசிப்போர் களம் நண்பர்களுக்கு தீராத என் அன்பும், நன்றியும். தொகுப்புக்கு மெய்ப்பு பார்த்து, செறிவான அணிந்துரையும் வழங்கியிருக்கும் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களுக்கு மீண்டுமொரு முறை நன்றியை உரித்தாக்குகிறேன். மிகக் குறுகிய காலத்தில், இத்தொகுப்பினை பதிப்பது மட்டுமின்றி, எனது எழுத்துப்பணிக்கு பக்கபலமாய் நிற்கும் “நூல்வனம்” மணிகண்டன் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கென்றே இருக்கும் கரடுமுரடான எழுத்து நடையின்றி, வாசிப்பதற்கு எளிதாக, நேரடிப் படைப்புகளைப் போன்ற இயல்பான நடையில் இருக்க வேண்டும் என்பதே எனது மொழியாக்கத்திற்கென நான் வகுத்துக் கொள்ளும் ஒரே நிபந்தனை. அது போலவே, இத்தொகுப்பிலும் கதைகள் நடைபெற்ற காலம், சூழ்நிலை, பண்பாடு போன்றவற்றை கவனத்தில் கொண்டு, மூலப்படைப்புகளுக்கு உண்மையானதும், மிக நெருக்கமானதுமான எளிய மொழியாக்கத்தை வழங்க நூறு சதவீதம் உழைத்திருக்கிறேன். மொழியாக்கம் குறித்து, இத்தொகுப்பை வாசிக்கும் உங்களின் மேலான கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன். உங்களின் கருத்துக்கள் எனது எழுத்துக்களை இன்னும் செழுமைப்படுத்தும் என்று நிச்சயமாக நம்புகிறேன், வணக்கம் !

பாலகுமார் விஜயராமன்

டிசம்பர் 2017

ஓசூர்

மறைக்கப்படவில்லை… ( சிறுகதை ) / அரிசங்கர்

கிரகபிரவேசத்துக்கான பத்திரிக்கைகளை தந்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார் சந்திரன். வெயில் கடுமையாக இருந்தது. இருந்தாலும் அவரே எல்லோர் வீட்டுக்கும் சென்று பத்திரிக்கைகளை தந்தார். அந்த பெருமையை அவர் யாருக்கும் விட்டு தர தயாராக இல்லை. முக்கியமாக சொந்தங்களை அழைக்க மட்டும் அவர் தன் மனைவி அரசியை அழைத்து சென்றார். சில சமயம் அவரும் அவர் மகன் பலராமும் சென்று வந்தனர்.

அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டினுள் இருந்த அமைதி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவர் எப்போதும் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பினாலும் முதலின் கவனிப்பது வீடு அமைதியாக இருக்கிறதா இல்லை தொலைக்காட்சி அல்லது பேச்சுக்குரல் கேட்கிறதா என்று தான். ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்துக்கொண்டிருந்தால் அவர் நிம்மதி அடைந்துவிடுவார். அதற்கு மாறாக இருக்கும் அமைதி அவருக்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்தும். அமைதி எப்போதும் ஆபத்தானது என்பது அவர் கருத்து. அந்த அமைதி அவரின் அன்றிய உறக்கத்தை விழுங்கிவிடும் என்று அவருக்கு தெரியும். அவர் நுழையும் போது வீடு மிகவும் அமைதியாக இருந்தது.

மயான அமைதியை கண்டதுமே அவர் உள்ளே நுழையும் போது இருந்த மகிழ்ச்சியின் அளவு குறைய துவங்கியது. உள்ளே சென்றதும் முதலில் அவர் தன் மகனை தேடினார். ஏதேனுன் சண்டை துவங்குமானால் அதை தடுத்து இவரை காப்பாற்ற இப்போதெல்லாம் அவன் தான் உதவினான். மகன் இல்லாததை கண்டதும், கையில் இருந்த பையை அடுக்கில் வைத்துவிட்டு, சட்டையை ஆணியில் மாட்டிவிட்டு, கட்டியிருந்த வேட்டியை சரி செய்து கொண்டு அமைதியாக சென்று நாற்காலியில் அமர்ந்துக்கொண்டார். மெதுவாக ஓரக்கண்ணில் பார்த்தார்.

அவர் மனைவி அறையில் கட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது. மணி சரியாக 1:20 ஐ காட்டியது. சாப்பாடு கேட்கலாமா வேண்டாம என்று யோசித்தார். பிறகு வேண்டாம் பலராம் வரட்டும் என்று காத்திருந்தார். அவர் மனைவி இவரை பார்த்தும் பார்க்காதது போல் படுத்தே இருந்தார். மணி இராண்டானது. இவருக்கு பசி அதிகமானாலும் கேட்கவும் பயம், எடுத்துப் போட்டு சாப்பிடவும் பயமாக இருந்தது. சரி இருக்கட்டும் என்று எதிரில் இருந்த டீ.வி. யை இயக்கினார்.

பொத்தானை அழுத்தியது தான் தாமதம். அறையில் இருந்த மனைவி வேகமாக வந்து சத்தமாக இவரை நோக்கி,

“உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க” என்றாள்.

அவள் வந்த வேகத்தை கண்டு ஒரு கணம் இவர் பயந்தே விட்டார். அடிக்கத்தான் வரிகிறாளோ என்று. சில சமயம் அதுவும் நடந்திருக்கிறது. ஆனாலும் இப்போதெல்லாம் இல்லை. அவர் பதில் சொல்ல வாயெடுத்த நொடி பலராம் உள்ளே நுழைந்தான். ஒரு சேர இருவரும் அவனை பார்த்தார்கள். அவரும் முகத்தில் நிம்மதி ஒரு நொடி தோன்றி மறைந்தது. அவள் அவரை “தப்பிச்சிட்டியா” என்பது போல் பார்த்தாள். பலராம் உள்ளே நுழையும் போதே அதை கேட்டிவிட்டதாள் தன் அம்மாவை நோக்கி,

“இப்ப என்னம்மா?” என்றான்.

“எங்க மனுசங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்தனும்னே இரண்டு பேரும் இருக்கீங்களா” என்றாள்.

பழி பலராமின் மீதும் சேர்ந்து போடபட்டதால் அவர் முழுக்க நிம்மதி அடைந்தார். இனி எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்.

“இப்ப என்ன ஆச்சினு கத்தறீங்க” என்றான்.

“அமாண்டா, எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சி, அதான் கத்தறன்”

“என்னனு சொல்லுமா”

“இரண்டு பேரும் தான பத்திரிக்கை வைக்க மெட்ராஸ் போனிங்க, ஏண்ட என் தாய்மாமா பையனுக்கு பத்திரிக்க வைக்கல” என்றாள் இருவரையும் ஒரு சேரப் பார்த்து. அவர் இருவரை பார்க்காமல் வேறுப் பக்கம் திரும்பிக் கொண்டார். இருவரும் தன்னை தான் பார்க்கிறார்கள் என்று திரும்பாமலே தெரிந்துக்கொண்டார். பலராமன் சமாளிக்க துவங்கினான்.

“ஏம்மா, நாங்க இரண்டு பேரு அங்க எத்தின பேருக்கு பத்திரிக்கை வைக்கறது. இன்னும் கூடத்தான் நிறையப் பேரு விட்டுப்போச்சி. அதுக்கு இப்ப என்ன பண்றது” என்றான்.

அரசி கோபமாக “நான் எத்தன வாட்டி சொன்ன” என்றாள்.

“சரிம்மா, இப்ப என்ன பண்ணனும்ன்ற”

“எனக்கு தெரியாது, நீயே போய் பத்திரிக்க வச்சிட்டு வா” என்றாள்.

பலராமன், சந்திரனை முறைத்தப்படி “சரி” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான். அவனுக்கு தெரியும் சரி என்று சொல்லும் வரை இந்த சண்டை முடியாது என்று.

சந்திரன் ஏன் பத்திரிக்கை வைக்க வில்லை என அங்கிருந்த மூன்று பேருக்குமே தெரியும். சந்திரனுக்கும் அரசிக்கும் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே அவர் தெரிந்துக் கொண்டார், அவருக்கு முன் அரசியை அவள் தாய் மாமன் மகன் கோவிந்தனுக்கு தான் கட்டி கொடுக்க யோசித்தார்கள் என்று. அரசிக்கும் அதில் விருப்பமாகத் தான் இருந்தது. ஒருவேளை காதலாகவும் இருந்திருக்கலாம். அரசியின் அண்ணனுக்கு அதில் விருப்பமில்லை. அரசியின் அண்ணன் தான் அப்போது குடும்பதுக்கு வருமானம் ஈட்டியவர் என்பதால் அவரின் முடிவே இறுதி முடிவு.

பிறகு ஒரு சொந்தக்கார அத்தையின் மூலமாக இந்த வரன் அமைந்தது. அரசிக்கும், சந்திரனுக்கும் எழு வயது வித்தியாசம். இவர்களுக்குள் எப்பொது சண்டை வந்தாலும் அரசி இவரை நிலைகுலையச் செய்ய அரசி இரண்டு யுக்திகளை பயன்படுத்துவாள். ஒன்று கிழவனுக்கு தன்னை கட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்பாள், அல்லது தன் தாய்மாமன் மகனை திருமண செய்திருந்தாள் தனக்கு இத்தனை துன்பம் இல்லை என்பாள்.

அரசி இரண்டாவது அஸ்திரத்தை பயன்படுத்தும் போது சந்திரன் மிகவும் நொந்து போவார். இதனாலயே அவருக்கு அந்த கோவிந்தன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. மற்றப்படி கோவிந்தன் தன்னை விட நல்லவர் என்று சந்திரனுக்கே தெரியும்.

மறுநாள் பலராமன் மட்டும் தனியே சென்னைக்கு புறப்பட்டான். இவரை அழைக்காதவரை நல்லது என்று நினைத்துக்கொண்டார். அரசி திருப்தியுடன் தன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்.

****

கிரகபிரவேசத்துக்கு முதல் நாள் இரவே நெருங்கிய சொந்தங்கள் வந்திருந்தனர். சந்திரன் தற்போது இருக்கும் தெருவில் இருந்து இரண்டு தெருத்தள்ளி தான் புதுவீடு இருந்தது. விடியகாலையே ஹோமம் என்பதால் தொலைவில் உள்ளவர்கள் வந்திருந்தனர். கோவிந்தனும் வந்திருந்தார். என்றைக்கும் செய்யாத சில பலகாரங்களை அரசி செய்திருப்பதை சந்திரன் கவனித்தார். கோவிந்தனுக்கு தேவையான அனைத்தையும் சந்திரனே முன்னின்று கவனித்தார். அது குறை இது குறை என்று அரசியை கோவிந்து பக்கமே நெருங்கவிடவில்லை சந்திரன். பல வேலைகள் இருந்தாலும் பலராமன் சந்திரனை கவனித்துக் கொண்டேயிருந்தான். அவனுக்கு உள்ளுக்குள் அவரை நினைத்தால் பாவமாக இருந்தது.

மறுநாள் காலை ஹோமங்கள், பூஜைகள், விசாரிப்புகள், காபி, டிபன், என எல்லாம் முடிந்து சில புறப்பட்டனர். சிலர் பேசிக்கொண்டிருந்தனர். காலையில் சந்திரனால் கோவிந்தனை கவனிக்க முடியவில்லை. அந்த சமயத்தை அரசி நன்றாக பயன்படுத்திக் கொண்டாள். காலையிலிருந்து அரசி கோவிந்தனையே கவனித்துக் கொண்டாள். ஆனால் கோவிந்தன் சற்று ஒதுங்கியே இருந்தார். அவர் சந்திரனின் நிலையை புரிந்துக் கொண்டார். அரசி பலராமை பார்க்கும் போதெல்லாம்

“மாமாவுக்கு என்ன வேணும்னு கேளு” என்றாள்.

அவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

அங்கு நடந்த அதிசையமே ஒருவரை ஒருவர் புரிந்திருந்தனர். யோசித்துப் பார்த்தால் சந்திரனுக்கு உண்மையில் கோவிந்து மேல் வெறுப்போ, கோபமோ இல்லை. அது ஒரு சிறு பொறாமை என்று வேண்டுமென்றால் சொல்லலாம். அரசிக்கு தன் கணவரை ஓசித்தியாக கோவிந்தை நினைக்கவில்லை. அவளுக்கு தெரியும், கோவிந்து எப்போதாவது ஒரு வந்து போகும் மழை என்று. அவ்வபோது ஜன்னலுக்கு வெளியே தெரியும் அந்த மழையை அவள் ரசிக்கிறாள் அவ்வளவு தான். திறந்தே இருக்கும் ஜன்னலை நாம் எப்பொதும் பார்த்துக் கொண்டிருப்பதில்லயே.

சந்திரன் தன் நண்பரகளை வழியனுப்பிட்டு உள்ளே நுழையும் போது கோவிந்தும், அரசியும் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அருகில் பலராமனும் இருந்தது அவருக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அவர் மற்றவரகளை வழியனுப்ப வாசலுக்கு சென்றார். கண்களை இங்கேயே விட்டுவிட்டு.

அரசி கோவிந்தனிடம் நலம் விசாரித்தாள், குழந்தைகளை பற்றி கேட்டாள். குடும்ப விஷயங்களை பற்றி பேசினார்கள். மறந்தும் இருவரும் தங்கள் பாலயத்தை பற்றி பேசவில்லை. பலராமனுக்கு இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கோவிந்து புறப்பட எழுந்தார். அரசியிடமும், பலராமனிடமும், கடைசியாக சந்திரனிடமும் சொல்லிக் கொண்டார். சந்திரனின் முகம் அப்போது தான் பிரகாசமானது. அரசி பலராமிடம், சந்திரனை பேருந்து நிலையத்தில் விட்டு வருமாறு கூறினாள். அவன் சரி என்று கோவிந்தை நோக்கி போகலாம் என்று சைகை செய்தான். இருவரும் வாசலை நோக்கி போக அரசி

“அப்பு” என்று அழைத்தாள். ஒரே நேரத்தில் இருவரும் அரசியை நோக்கி திரும்பினர். ஆனால் சட்டென கோவிந்து தன் பார்வையை வேறு திசையை நோக்கி திருப்பிக் கொண்டார். அரசி பலராமை செல்லமாக “அப்பு” என்று தான் அழைப்பாள். திரும்பிய பலராமிடம்,

“மாமா பஸ் ஏத்திவிட்டு வா, அப்படியே விட்டுட்டு வந்துராத” என்றாள்.

அவன் “சரி” என்றான். இருவரும் புறப்பட்டனர். அவர்கள் இருவரும் போவதை இவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். சந்திரனின் மூலை “அப்பு” பெயர் ரகசியத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தது.

பேருந்தில் கோவிந்து ஏறியதும், பலராமன் அவரிடமிருந்து விடைப்பெற முற்பட்டான். அப்போது அவனை அழைத்த கோவிந்து தன் பையிலிருந்து ஒரு சிறு உறையை எடுத்து அவனிடம் தந்து அதை அரசியிடம் தந்துவிடும் படி கூறினார். அவன் சரி என்று வாங்கிக் கொண்டான். சற்றி யோசித்தவாறு பலராமிடம்,

“அப்பாக்கு தெரிய வேண்டாம்” என்றார். அவன் சரி என்று புறப்பட்டான். பேருந்தும் புறப்பட்டது. அதை போகும்வரை பார்த்துக் கொண்டிருந்த பலராமன் பேருந்து போனதும் அந்த உறையை பிரித்து பார்த்தான். அதில் ஒரு பழைய கருப்பு வெள்ளை புகைப்படம் இருந்தது. அதில் பாவடை தாவனி போட்ட அரசி ஒரு ஊஞ்சலில் சிரித்தவாறு அமர்ந்திருந்தாள்.

***

கோபாலகிருஷ்ண அடிகா (1918-1992) / மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார் / தமிழில் : தி.இரா.மீனா

கோபாலகிருஷ்ண அடிகா (1918-1992)

மொகேரி கோபாலகிருஷ்ண அடிகா கன்னட கவிதை உலகில்” நவ்யா’ இலக்கிய இயக்கத்தின் முன்னோடி. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் இலக்கிய உலகைப் படைப்புகளால் பெருமைப்படுத்தியவர். ஆங்கிலப் பேரா சிரியர், முதல்வர் என்று முக்கிய பொறுப்புகள் வகித்தவரெனினும் சாட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து கன்னட இலக்கியத்தை பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற போற்றுதலுக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மண்ணின் வாசனே, அனந்தே, பூமி கீதா, வர்த்த மானா,பாவதரங்கா ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா

ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார்

தமிழில் : தி.இரா.மீனா

விமர்சகர்

நான் ஏறிய உயரத்திற்கு நிழல்போல நீயும் ஏறினாய்,
தாழ்வு ஆழங்களில் நான் குதித்து நகர்ந்தேன்,
உன் சிறகுகளை என்னுடைய சிறகுகளோடு உராய்ந்தபடி
நீயும் நான் பறக்கும் தொடுவானத்தில் பறக்கிறாய்.
என்னைப் போல புதிய எல்லைகளை தேடுகிறாய் ;
இன்னமும் நீ தனியாகவே நிற்கிறாய் ,
தீண்டப்படாமல், உன்னைப் பரத்தியபடி,
மேலே ,கீழே , சுற்றி வானத்தை ஊடுருவியபடி
நிலத்தைத் துளையிட்டபடி

தலையிலிருந்து கால்வரை நான் என்னைத் திறந்து கொண்டேன்.
உள்ளிடத்தை உப்பால் நிரப்பினேன்

காயங்களைத் ஆற்றிக்கொண்டேன்
நிலத்தடிக்குப் போய் காட்டேரியானேன்
மேலே வந்து சூரியனை நோக்கிக் குதித்து ,
சிறகுகளை எரித்துக் கொண்டேன்,
மண்ணில் விழுந்தேன்.
அந்த இடத்தைச் சுற்றி குகை அமைத்துக்கொண்டேன்
அந்தக் குகையின் கும்மிருட்டானேன்
பதினான்கு வருடங்கள் போராடினேன்,கசந்து போனேன்
பழுத்து, நெருப்பைப் போல வெடித்தேன்,
சிற்குகள் மீண்டும் கிடைத்தது , காணும் சிறகாக ஒன்றும்
காணாததாக மற்றொன்றும்.
இசைவானவனாக மாறிக் கொண்டிருந்தேன்.
ஸ்தூலத்திலிருந்து சுருக்கத்திற்கு
சுருக்கத்திலிரு!ந்து உண்மைக்கு ––இவை எல்லாமும்
உன்னாலும் பார்க்கப்பட்டிருக்கிறது,
என்றாலும் நிழலைப் போல
இன்னமும் நீ முழுமையாக , இடையீடின்றி…

நீ மனக்கண்ணில் எழுகிறாய்; நீ வெளியே இல்லை,
ஆனால் எனக்குள் இருக்கிறாய்;
சோதித்து ,அளந்து,எடைபோட்டு,சரிபார்த்து—இவையெல்லாம்
உன் பணிகள்.நான் உறங்கும் போது ஊசியால் குத்தினாய்
எனக்குள் வீங்கியிருந்த தேவையற்ற
காற்றை வெளியேற்றினாய்.
நீ உள்ளிருக்கும் நிழலா?அல்லது,
சித்ரகுப்தனின் ஒரு தூதனா?
உணர்ச்சியுள்ள எந்த விலங்கும் செய்ய விரும்புகிற
அலைந்து திரிதலுக்கு நீ என்னை அனுமதிக்கவில்லை.

நீ என்னை இரங்கலுக்குட்படுத்தினாய், இரங்கலால் என்னை எரித்தாய்,
சரி ,தவறு என்ற சக்கரத்தில் என்னைப் பிடித்துக் கொண்டாய்
என்னை அவமதித்து,தெருக்களில் இழுத்துச் சென்று கொன்றாய்,
கொன்றதன் மூலம் எனக்குப் புத்துணர்ச்சி தந்தாய்,
நீ ,ஒரு சனி, ஒரு அட்டைப் பூச்சி, இருப்பினும் ஒரு சினேகிதன் .என் ஆசான்.
உன் கண்கள்

உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !

அவைகளின் தங்க இழையில் என்னிதயம் சிக்கிக்கிடக்கிறது.

அவற்றின் நீலவானில் என்நெஞ்சு பறக்கிறது.

பனியின் வெண்மைக்கிடையில்

ஒளிரும் நீலக்கற்களா அவை ?

அல்லது வெண்தாமரையின் கருவறையிலிருந்து

எட்டிப் பார்க்கும் ஒரிரு குழந்தை தேனீக்களா?

உன் இதயக் கடைசலிலிருந்து தெறிக்கும் திவலைகளா?

ஒவ்வொன்றிலும் இத்தனை காதலை நிரப்பிக் கொண்டும்

எப்படி அவைகளால் இவ்வளவு பேசமுடிகிறது?

உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !

அவற்றின் நினைவுகளில் மூழ்கி

என் இதயம் தனிப்பயணியாகிறது

என் செந்தாமரை

வழிப்போக்கர்களுக்காக, பிரகாசமாக செந்தாமரை

இன்று மலர்ந்திருக்கிறது என்ன நறுமண விருந்து !

காற்று, தேனீக்கள், அல்லது மெலிதான திவலை

விருந்திற்கு அழைப்பு வேண்டுமா, என்ன?

பொன் கதிர்களால் கிச்சுகிச்சு மூட்டப்பட்டு

தண்ணீர் களிப்புடன் தெறித்துக் கொள்கிறது

எத்தனை வழிகளில் நான் இவற்றை காதலிக்க முடியும்?

தேனீ சுறுசுறுப்பாக வழிகளைக் கணக்கிடுகிறது….

தாமரை நாணுகிறது:

இதழ்கள் கருஞ்சிவப்பாகின்றன.

கவனி! அவனுடைய ஏழு குதிரைகள் பூட்டியதேர்

கிழக்கு வானத்தில் ஊடுருவுகிறது..

அவனுடைய ஒவ்வொரு லட்சக் கணக்கான கைகளிலும்

சிக்கலான காதலின் வலைப் பின்னலைச் சுமக்கிறான்.

அந்தத் தாமரை மகிழ்வுக்குள்ளானது.

தேனீக்களின் ரீங்காரம் தேய்ந்தது;

அது எப்படியோ வெளிறிப் போனது

தன்னைச் சுற்றியுள்ள தேனீக்களை அவள் புறக்கணிக்கிறாள்

என் செந்தாமரை கதிரவனுக்காகக் காத்திருக்கிறாள்,

நாளைய கனவு கதிரவனின் உருவமாகுமா?

பேட்டி :

யு.ஆர்.அனந்தமூர்த்தி கோபாலகிருஷ்ண அடிகாவின் மாணவரும், விமர்சக ருமாவார். அவர் அடிகாவோடு நிகழ்த்திய பேட்டியின் சில முக்கியமான பகுதிகள் இங்கே.இது ’உதயவாணி ’என்னும் கன்னட தீபாவளி சிறப்பிதழில் 1980 வெளிவந்துள்ளது.எந்த மொழிக் கவிஞனுக்கும் ஆர்வமூட்டுவதான பார் வையை யு.ஆர். மற்றும் அடிகா வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கது.

யு.ஆர்: உங்கள் இளம்பருவத்து நினைவுகளையும்,அனுபவங்களையும் அடிப் படையாகக் கொண்டே உங்கள் பெரும்பாலான கவிதைகளின் வெளிப் பாடுள்ளது. ஏன் அப்படி ?உங்களைக் கவிதை எழுதத் தூண்டிய ஓரிரு சமபவங்களைச் சொல்ல இயலுமா?

அடிகா: உங்களுடைய கேள்விக்கான பதில் சுலபமானதில்லை.ஆனால் அந்த பதிலைத் தேடுவதும் பொருத்தமானதுதான். குழந்தையின் ஆவலான பார் வைக்கு முன்னால் உலகத்திலிருக்கும் எல்லாமும் புதியதாகவும், மலர்ச்சி யானதாகவுமிருக்கும்.குழந்தையின் மனம் மெழுகுப் பந்து போன்றது.அதில் உலக அனுபவங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் பதிவாகிவிடும்.அவை பின்னாளில் சரியான நேரத்தில் வெளிப்படும்.இது எல்லா மனித உயிர்களுக் கும் பொருந்தும்.இளம்பருவத்தின் அனுபவத் தொகுப்புகள் யாருடைய [கவிஞன்] மனதிலும் புதிய கோணத்தை கறபனைகளோடு உருவாக்கும்.இந்த அனுபவங்களும்,கற்பனைகளும் சாதாரண கருத்து என்பதை மீறி காலவெளி கடந்தவையாகின்ற அந்த உணர்வில் வெளியானவைதான் என்னுடைய சில சிறந்த கவிதைகள்.இளம்பருவ அனுபவங்களை குறைவாகவோ ,கூடுதலா கவோ மதிப்பீடு செய்வதென்பது சிறிது கடினமானதுதான்.நான் இப்போது அந்த நாட்களை நினைக்கும் பொழுது உடனடியாக கேட்க முடிவது –காக்கை யின் அலகில் சிக்கிக் கொண்டு தப்பிக்கப் போராடும் தவளையின் குரல் தான்.அந்த தவளையை காப்பாற்றத் தவறிவிட்ட வேதனையில் நெஞ்சு துடித்ததைக் கேட்க முடிகிறது.மழைக்குப் பின்னால், சம்பிரதாயம் போல வீட்டின் மிக அருகிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் குரல் கொடுத்ததைப் பார்த்தும்,கேட்டும் கழிந்த நாட்கள்… இது போல பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.எதுவும்முக்கியமானதோ,முக்கியமற்றதோ இல்லை. ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு முக்கியமா னதாகத் தெரிந்திருக்கிறது.

யு.ஆர் :உங்களின் தொடக்க காலக் கவிதைகளில் நகரக் குறியீடும், பிற்காலக் கவிதைகளில் கிராமம்சார் வெளிப்பாடும் உள்ளது போலத் தெரிகிறதே! இதற்குக் காரணம் உங்களின் கிராமம் சார்ந்த இளம்பருவத் தாக்கம் எனலாமா? ? மொழித் தடை [கன்னடம்] என்பதற்கு இதில் பங்குண்டா?

அடிகா: இந்தியச் சுதந்திர காலகட்டத்தில் நாங்கள் [கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் ] உடனடி கடந்த காலவெளிப்பாட்டிற்கு முதன்மை தந்தது உண்மைதான்.நாங்கள் நகர்ப்புற குறியீட்டுத் தளைகளிலிருந்து தப்பிக்க முயன்றோம். என் தொடக்க காலக் கவிதைகளில் கவனக் குறைவாக நான் நகர்ப்புறக் குறியீடுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.அன்று மேற்கத்திய நாகரி கம் சார்ந்த ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் அதிகமிருந்தது என்பதையும் நான் ஒப்புக் கொண்டாக வேண்டும்.எப்படியிருப்பினும், கவிதை எழுதுவதென் பது ஒருவரின் வாழ்வுச் சூழல் என்பதை மட்டும் உள்ளடக்கியதில்லை. இலக் கிய உணர்வுநிலை என்பது வாழ்க்கையின் பன்முகத்தன்மையை அறிவதும், அடையாளம் காட்டுவதும் மட்டுமின்றி ,மாறுபட்ட ,உயர்ந்த அகம்சார் அனுபவங்களின் தேடலுமாகிறது.

யு.ஆர்: மக்கள் ஏற்கும் முறையில் , அணுகுவதற்கு எளிதான வகையில் கவிதைகள் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அடிகா: நீங்கள் மக்கள் என்று சொல்லும் போது உடனடியாக எழும் கேள்வி ’எந்த மக்கள்’ என்பது. எந்தக் கலையும் எவருக்கும் எளிதல்ல. பொது ஜனங் களை விட்டு விடுவோம்.படித்தவர்கள்,அறிவாளிகள் என்று நாம் சொல்பவர் களில் பலர் கலையின் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாதவர்களாகவோ அல்லது கலையுணர்வே அற்றவர்களாகவோ இருப்பதை நாம் பார்க்கவில் லையா? கவிதைகளில் வெளிப்படும் எளிய அனுபவங்கள் எளிமைத் தன் மையை வெளிப்படுத்துவதும் முக்கியமானது.அதே நேரத்தில் மிகச் சிக்கலான அனுபவங்களை காட்டும்போது அந்த வெளிப்பாடு அதிநவீனம் சார்ந்த நிலை யில் அமைவதும் முக்கியமானது.

அணுகுவதற்கு எளிமையான நிலையில் இருப்பதுதான் கவிதை என்று சொல்வது எப்படித் தவறானதோ அது போலவே கடினமாக இருந்து புரிந்து கொள்ளமுடிவதுதான் கவிதை என்று சொல்வதும் – இரண்டும் தவறுதான். இலக்கியத்தில் ஒலிநயம் என்ற தளையை உடைத்துக் கொண்டு வருவது மிக அவசியமானது. வடிவத்தை ஆழமாக புரிந்து கொண்டவரால் அது முடியும்.

தளையை உடைப்பதென்பது ’கட்டுத் தளர்வான செய்யுளை’ உருவாக்கும் வேட்கையல்ல.நம்மைப் புதிய வடிவில் அமைத்துக் கொள்ள நாம் ஓர் இறுக்கமான வடிவத்தை உடைத்து இன்னொன்றை உருவாக்குகிறோம் அவ்வளவுதான்.இன்றைய சூழலில் நாம் – கவிஞர்கள் மக்கள் அணுகும் வகையிலான படைப்புகளைத் தரும் வகையி லான பொறுப்பிலிருக்கிறோம்.

•••

நன்றி :உதயவாணி –கன்னடம் தீபாவளிச் சிறப்பிதழ் –1980

சே தண்டபாணி தென்றல் கவிதைகள்

1.வெண்மைக் கடலில்
தண்ணீர் இல்லை
அதனால் நீச்சலறியாத
குரங்குகள்
மரத்தைவிட்டு திடீரெனக்
குதிக்கிறது
அதைப்பார்த்த மற்றொரு குறளி
செம்மறி ஆடாகிறது
இப்போது
அலைகளென்ற பதங்களை
அவற்றின் வால்கள்
நிரூபணம் செய்கின்றன
தனது வாழ்க்கையை துய்த்து
உப்பு முட்டைகளுக்காக
ஒற்றை விரலேந்தும்
அவைகளுக்கு
இப்போது ஒரே தேவை
நீலக் குஞ்சுபொரித்து
பீப்பென கொக்கரிக்கும்
இன்குபேட்டர்கள்
——————–

2.முழுமையை நோக்கித்
தவறி விழும்
திருப்தி
ஆங்கொரு
கொடு மரமாகிறது.
இலைகள்
காற்றுகளுக்கு வாய்க்கட்டு
கட்டிவிட்டு
வழிவிடுகின்றன.
பறவை
வெள்ளைக் கொடி காட்டினாலும்
அதே இடத்தில்
அத்தகு சிக்கலில்
கவிதையொன்று
கிணற்றில் விழும் நிலவைப்போல விழுமாயின்
தயாராகவே இருக்கிறது
தூக்க வாளி

3.துப்பாக்கிகள்
விளையும் பூமியில்
எந்த அயோக்கியன்
விதைகளைக் கொண்டு வருவது
விதைகள் செத்துப்போன
தாவரத்தின்
உயிருள்ள புழுக்கைகள்
அதன் தொப்புள் கொடியை
அறுக்கத்தான்
ஆய்வுக் கத்திகள்
இனிமேல் நீங்களும்
நானும் துப்பாக்கிகள்
குண்டுகள் வட்ட வட்டமாய்
வண்ணமயமாய்
விழுங்க வேண்டும்
விழுங்கியபின் தண்ணிக்கு
விக்க
புறக்கணிக்கப்பட்ட விதைக்கு
குடும்பக் கட்டுப்பாடு
செய்பவன்
எதிர்த்த அறையில்தான் அருள்பாலிக்கிறான்
மறக்காமல் வரப்போகும்
சந்ததியின் கையில்
கொடுத்தனுப்ப
ஏடுகளைக் கடத்துங்கள்
புத்தி
பேதலிக்கும் முன்பாகவே.

4.மேகங்கள் அவ்வளவு
ருசி செறிந்தவை.
உப்புத் தடவிய
கறியை யாருக்குத்தான்
பிடிக்காமல் போகும்.
கொஞ்சம் கொஞ்சமாக
அவை மறு ஜென்மத்தில்
அடியெடுத்து வைக்கையிலும் சரி
எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப மீள்கையிலும் சரி
நினைக்கும்போதே
எச்சில் காளைகள் காற்றைக் குத்திப் பிளக்கும்
விரல்களால் பொரித்தெடுத்து
வெள்ளை நாவுகள்
சுவைக்கயில்
சமாதானம் பாதையின்றி
நடந்து செல்கிறது
இருபத்தி மூன்று ஒருபாதி
எறும்புகளாய்..

5.காக்கைகள் வெண்மையானவை
உங்களைப்போலவே
நானும் பொய் சொல்ல மாட்டேன்
முன்னோர்களாக பாவிப்பதால்
வயது அதிகரிக்க அதிகரிக்க
மனிதனைப்போல
அவையும் நரைத்துப் போகின்றன
மேலும் தனது இறந்துபோன
முடிகளை யாருக்கும் தெரியாமல்
எச்சமாக உதிர்க்கின்றன
சூரிய வெளிச்சம்
பட்டு நிரந்தர
நிழல்களாகிவிட்ட
அவைகள் கூடிக் கரையும்
இறுதி ஊர்வலம்
நிஜமாகிவிடக் கூடாது
என்பதும் அடங்கும்

•••

பெண்கைதிகளின் படைப்புவெளி. / தமிழில் : லதா ராமகிருஷ்ணன்)

If there are images in this attachment, they will not be displayed. Download the original attachment

எழுதுவது உயிர்வாழ்வதற்கான உந்துதல்; உயிர்த்திருப்பதற்கான உத்திகளில் ஒன்று. சிறைக்கைதிகளுக்கும். சிறைக்குச் செல்பவர்கள் எல்லோருமே ‘சீரியல் கில்லர்கள்’ அல்ல. சில நேரங்களில் சில மனிதர்களாகவே நம்மில் பலரும்….

முன்பொரு முறை ஏறக்குறைய ஒரு வருடம் சிறார்கள் கூர்நோக்குப்பள்ளிக்கு வாரம் ஒருமுறை சென்று அங்கிருந்த இளங்குற்றவாளிகளிடம் ஆறுதலாகப் பேசி அவர்களுக்குள் இருக்கும் கலைத்திறமைகளை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்ட காலத்தில் ‘என் பிள்ளை வெளியில் இருந்தால் கெட்டுப்போய்விடுவான் – அதனால் இங்கே சேர்த்தேன்’ என்று தெரிவித்த தாயைப் பார்த்தேன். திரைப்படங்களில் பார்த்த சென்னைக் கடற்கரையைப் பார்க்கவேண்டும் என்று வீட்டில் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து கிளம்பிவந்து வழி தெரியாமல் இறுதியில் கூர்நோக்குப்பள்ளியில் வந்துசேர்ந்தவர்கள் இருந்தார்கள். “அப்பாவியாப் பேசுவான்மா – மூணு பெண்களை பலாத்காரம் செஞ்சு இரண்டு கொலைகளைச் செஞ்சவன் – தன் செயலுக்குக் கொஞ்சம்கூட வருத்தப்படாதவன்” என்று காவல்துறை உயர் அதிகாரி சொன்னதிலும் உண்மையிருந்தது.

சிறைவாசம் சீர்திருத்துமா? சீர்திருத்தவேண்டும் என்பது எதிர்பார்ப்பு; நம்பிக்கை. சிறைத்தண்டனை என்பது பெண்கள் விஷயத்தில் இருமடங்கு தண்டனையாகி விடுவது உலகெங்கும் ஒரேபோலத்தானா? இன்று தமிழின் சின்னத்திரை மெகாத்தொடர்களிலெல்லாம் சிறையும் அதில் நடக்கும் அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது. இதை விலாவரியாகக் காண்பிப்பதற்கென்றே ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த நாடகக்குழுக்களில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

பல்வேறு காரணங்களால் சிறைக்குச் செல்ல நேரும் பெண் கைதிகளின் எழுத்தாக்கங்களை ஒரு தொகுப்பாகக் கொண்டுவர விரும்பி சில வருடங்களுக்கு முன்பு சந்தியா பதிப்பகம் நடராஜன் என்னிடம் அந்தப் பணியையும் அதற்கான சில நூல்களையும் தந்தபோது சரி என்று சொல்லி ஆர்வமாகச் சிலவற்றை மொழிபெயர்த்தும் கொடுத்தேன். ஆனால், ஏனோ அந்த வேலையைத் தொடர்ந்து செய்ய இயலவில்லை. இப்போது மலைகள்.காம் இணையதளத்தில் இதைச் செய்யலாம் என்று தோன்றுகிறது. சந்தியா பதிப்பகம் எனக்கு இட்ட பணியையும் தொடர முடியும். மலைகள்.காம் ஆசிரியர் இதற்கு இடமளிப்பார் என்று நம்புகிறேன். சந்தியா பதிப்பகத்தைச் சேர்ந்த திரு. நடராஜன் அனுமதியளிப்பார் என்றும் நம்புகிறேன்.

இதற்காக நான் படிக்கும் சம்பந்தப்பட்ட பெண்கைதிகளைப் பற்றிய கட்டுரைகளை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் அவற்றின் சாராம்சத்தை சுருக்கமாகத் தந்து அவர்களுடைய படைப்புகளில் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துத் தரலாம் என்று எண்ணம். போகப்போக இந்த வடிவம் மாறுபடலாம்.

MILA D. AGUILAR (1952 – )

க்ளாரிட்டா ரோஜா என்ற பெயரில் எழுதியவர்

பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த மிலா டி அக்யிலார் இதழியலாளர் கவிஞர் ஆசிரியர், போராளி. அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸின் ஆட்சியை எதிர்த்ததால் தலைமறைவாக நேர்ந்தது. பின், 1984,ஆகஸ்ட் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார். க்வீஸான் நகரிலிருக்கும் காம்ப் க்ரேம் ராணுவச் சிறையில் ஒரு மாத காலம் தனிமைச்சிறைவாசம் அனுபவித்தார். பின் பிகுடானில்(Bicutan) சிறைவைக்கப்பட்டார். பிலிப்பைன் நாட்டின் இராணுவ ஆட்சி காலத்தில் (1972) இடதுசாரிக் கடையில் உறுப்பினர் என்று குற்றம்சாட்டப்பட்டு 12 வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் 1984இல் ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டவர். அப்படியில்லை என்று மறுப்பு தெரிவித்தார் அவர். இருந்தும் கலகக்காரர் என்பதாய் அவர் சிறையில் தள்ளப்பட்டார்.

அவருடைய கைது தொடர்பாய் உலகளாவிய கண்டனமும் எதிர்ப்பும் எழுந்தது. 1985 இல் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவர் மீதான நடவடிக்கையைக் கைவிடும்படி ராணுவ ஆட்சிக்கு உத்தரவிட்டது. ஆனாலும், 1986இல் அக்வினோ ஆட்சி வந்தபிறகே அவர் விடுதலையானார்.

1984 இல் அவருடைய கவிதைத்தொகுப்பு வெளியாகியது. இதன் இரண்டாவது பதிப்பில் சிறையில் எழுதப்பட்ட கவிதைகளடங்கிய ‘புறாக்களை ஏன் கூண்டிலடைக்கிறீர்கள்?’ என்ற தொகுப்பிலிருந்து பன்னிரண்டு கவிதைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் சில 1985இல் உயிர்த்துடிப்பு என்ற பொருளைத் தரும் Pintig என்ற தலைப்பில் வெளியான அரசியல் கைதிகளுடைய எழுத்தாக்கங்களடங்கிய தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. Journey: An Autobiography in Verse (1964-1995) என்ற தலைப்பில் அவருடைய கவிதைகளின் முழுமையான தொகுப்பை பிலிப்பைன்ஸ் ப்ரஸ் வெளியிட்டது. 1989 முதல் 1997 வரை 48 காணொளி ஆவணப்படங்களை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறார் மிலா.

நூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். பிலிப்பைன்ஸ் நாட்டின் இடதுசாரிக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக ஆரம்பித்து அதன் தேசிய ஒருங்கிணைந்த முன்னணி ஆணையத் தலைமைப் பொறுப்பு வகித்தார். 1984இல் அப்பதவியிலிருந்து விலகினார். பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஒப்பாய்வு இலக்கியத் துறையில் கற்பித்தவர் மிலா. எட்டு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய முழுமையான தன் வரலாறு The Nine Deaths of M கிண்டில் நூலாக அமேஸானில் இடம்பெற்றுள்ளது.

தன்னுடைய பேட்டி ஒன்றில் “எப்பொழுதுமே நான் ஒரேயொரு நோக்கத்துடன் தான் எழுதியிருக்கிறேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உதவவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்” என்று கூறியிருக்கிறார் மிலா.

மிலா டி அக்விலாரின் கவிதைகள் சில:

தனிமைச்சிறையில் பிறந்த குறுங்கவிதைகள்:

கடல்

கால்நிலவின் ஒளியிலும்

ஒளிர்கிறது.

ஒற்றைப் பூ

நினைவில் வைக்கப்பட்டால்

ஒருபோதும் வாடிவதங்குவதில்லை.

மரம் வாழ்கிறது

சூரியக் கிரணங்களால்.

ஆனால் மரநிழலில் தான்

என்றுமான இதமெனக்கு.

சமயங்களில் தோன்றுகிறது _

எஞ்சியிருக்கும் ஒரே தற்காப்பு

தாயின் கருவறையிலான

அமைதிக்குத் திரும்பிவிடுவதுதான்.

சிறை

சிறையென்ப தொரு

இரட்டைச்சுவர்

ஒன்று செங்கற்சுவர்.

இன்னொன்று

பற்பல அடுக்குகளாலான

முள்கம்பியாலானது.

இரண்டுமே கடக்கவியலாதவை.

வெளிச்சுவர்

காவல்கோபுரங்களிலிருந்து

கண்காணிக்கப்படுகிறது.

மற்றொன்று

உள்வயமாயுள்ள சிறை,

அங்கு அவர்கள் தம்மைப்போலவேயான பிம்பத்துள்

உங்களை அடித்து நசுக்கித் திணிப்பார்கள்,

அவர்கள் யாராக இருந்தாலும்.

புறாக்கள் – என் பிள்ளைக்கு

என் மகனுக்குத் தந்தேன்

என்னுடைய கடுஞ்சிறையில் பிறந்து வளர்ந்த

ஒரு ஜோடிப் புறாக்களை.

அவை ’பசைப்பட்டை’ ஒட்டப்பட்ட இறக்கைகளைப் பெற்றிருந்தன.

தங்களுடைய புதிய கூண்டுகளுக்குப் பழக்கப்படும்வரை

பல வாரங்கள் அந்த பசைப்பட்டைகள் அப்படியே இருக்கட்டுமென

பிரத்யேகமாகச் சொல்லப்பட்டிருந்தது.

நான், அவனுடைய அம்மா சிறையிலிருக்கும் நினைப்பு

அவனுக்கு ஒருபோதும் உவப்பாயிருந்ததில்லை.

அதிகநேரம் இருந்ததேயில்லை, வரும்போதெல்லாம்.

அதனால்தானோ என்னவோ,

நான்.ஞாபகார்த்தப் பொருள்களைத் தர நினைத்தேன்.

ஆனால் அவனுடைய புறாக்களின் பசைப்பட்டைகளை

ஒருநாள் அவன் அகற்றிவிட்டு

அவற்றை விட்டுவிடுதலையாகிப் பறக்கச் செய்தான்.

அது என்னைக் கோபப்படுத்தியிருக்கும்

அல்லது குறைந்தபட்சம் துயரத்தையாவது அளித்திருக்கும்

என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் எங்களிருவருக்கும் ஒரே எண்ணம்தான்போலும் -.

அகன்றி விரிந்த, அதிக நீலமான ஆகாயங்களில்

சுதந்திரமாகப் பறப்பதையே அதிகம் விரும்பும்

புறாக்களை ஏன் கூண்டிலடைக்கவேண்டும்?

சுதந்திரப் புறாவாகச் சிறகடிப்பேன் நான்

(For Sylvia Mayuga)

*ஸில்வியா மயூகா – பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த சக-படைப்பாளி)

அவள் எனக்குத் தந்த கிறிஸ்மஸ் பரிசு

வலைப்பின்னலிட்டு விறைப்பாக்கப்பட்ட

வெண்கூண்டிலிருந்து

விடுதலையாகிப் பறக்க முயற்சித்துக்கொண்டிருந்த

ஒரு குட்டி மஞ்சள் புறா.

அவள் எண்ணியதைவிட அதிகப் பொருத்தமானது

(என்று தோன்றுகிறது)

தாற்காலிகமாக

அந்தப் பறவையின் எடை

அதன் கூண்டை தன்னோடு சுமந்துசெல்கிறது,

வால் கதவில் சிக்கிக்கொண்ட நிலையில்.

நானும் அப்படித்தான் சுதந்திரமனிதராயிருப்பேனா

என் வாலில் கூண்டு சிக்கிக்கொண்டவாறு?

அப்படியெனில் நான் வியந்துகொள்வேன்

அதற்குக் காரணம் குறுகிய கதவா?

அல்லது எனது

என்றுமான-இன்றின் சிறை சிறிதாயிருப்பதா?

அல்லது. என் மீதுள்ள மேலங்கியின்

நிறமா–

அல்லது, முக்கியமாக

அந்தளவுக்கு விறைப்பாக்கப்பட்டிருப்பதா?

தமிழ் உதயா கவிதைகள் ( லண்டன் )

சொல்

01

இரண்டு கைகளையும்
ஒரு சேர அள்ளிப் பருகிய நீரில்
நீ மூழ்கிய மூச்சு குமிழ்த்தது என் சுவாசமாய்

கொத்தி உடைத்து
ஆயுள் புடைத்த மனக்காகம்
ஈர மொழியில் கூடு கட்டியது வாழும் குயிலுக்கு

கரையொதுங்கியஉயிருக்குள்
பாய்மச் சுழியில் மழையின் நீர்மை

ஒன்றுமே இல்லை நைந்திருப்பினும்
நிறம் அழியாத பூக்களில்
வேரின் இதயம் நீயென
துடித்துக் கொண்டே இருந்தது

உள்ளங்கையணையில்

சாய்ந்துறங்கும் எழுத்துக்களின் இதயத்தில்
உன் நினைவுகளின் ஈர உடல்

மிதந்து வரும் அலைநுரையெங்கும்
கால்த்தடம் கலைந்த மீதியாய்
உலரும் வெண்மதிமுக நிழல்

பலவந்தமாக அபகரித்துப் போன
காற்றின் மொழியில் மிதந்து மூழ்கும்
ஒரு காதல் புழுத்தூண்டில்

வளர்த்த சிறைச் செட்டையில்
ஒரு வண்ணத்துப் பூச்சியின்
வெல்ல முடியாத எட்டுநாள் சுவாச முடிச்சு

தேங்கிய பள்ளத்தில் வளர்ந்து பெருகிய
தவளை முட்டைகள்
அடை மழையின் புழுதியேறிய புயல்

கொஞ்சம் நீரும் கொஞ்சம் மண்ணும்
இன்னும் சித்திக்காத துளிர் விடும்
பிஞ்சு வனாந்தரத்தில்கனவு ராத்திரி

கவிழ்த்துக் கொட்டிய எழுத்துக் கூடையில்
கடலா அலையா நுரையா
எது நீ “சொல்” ஆதித்யா!

02

அடர் மழையில் சிதறி
அல்லாடும் நிலம் வானத்தில்
சுருக்கிட்டுக் கொள்கிறது
ஆழ்கடல் நடுங்கி கனம் தாங்காது
கதறி கதறி தள்ளாடுகிறது
பூவரசமரக்கிளையில்
கூடும் குஞ்சுகளும் பிய்ந்து
பரிதவித்துத் தொங்குகின்றன
ஞாபகக் குமிழிகளில்
உடையும் அபாயங்களை
கொத்திக்கிளறி
கீற்றின் அனல் புயல்
அன்பைச் சாகடிக்கிறது
சருகென அசையும்
ஓர் இலை உதிர்த்த கிளையை
தொட்டுத் தொட்டு
வாதை துடைக்கிறது
ஒரு குவளையில் பருக
தாகமுடைய கடல் தன்னை
பதற்றங்களின்றி ருசிக்கிறது,
மனிதச் சொற்களை
என் மௌனம் பிசைகிறது,
கண்களில் பிரமாண்ட
கலம் உருவாகுமா ?
இரண்டு திராட்சைகள்
சொற்களை பிழிகின்றன,
நீ வருடிக் கொடுக்கிறாய்
உன் முகவட்டமொளிர
நான் உயிருடன் மீள்கிறேன்.
அந்தக்கடலோரத்தில்
சிப்பியின் இதயம் கனிகிறதை
நீயும் பார்த்தாயா ஆதித்யா?

03

நீட்சியான இரவுகளை மென்று
உறங்கும் வனத்தின் மூச்சு
பதுங்கிக் கொள்கிறது
உனை இறுகப் பொத்தி உள்ளங்கைக்கு
சூரியனால் தாழிடுகிறேன்.
மௌனத் துருவஉடு எரிந்து வீழ்கிறது
எதிரெதிர் திசையில்
நட்டு வைத்த முகங்களுக்குள்
இரண்டு சாவித்துவாரங்கள்
இருளகன்ற அதன்
தற்கொலை நினைவுகளை பருகிய படி
மௌனத்திற்குள் மௌனத்தால் பேச
எந்த மொழியாக இருந்தாலென்ன,
மிதக்கும் உயிரை
நார் நாராய் கிழித்தன,
முடிச்சுகளை நனைத்து
பிழிந்து கொளுத்தும்
உணர்வைக் காண்கிறேன்.
குரலை வேறோரிடத்தில் நிறுத்தி
சொற்கள் தாவிப் பாய்ந்தன,
உலர்ந்த திராட்சைகளை
உதட்டின் நுனியில் பிரதியிட்டன,
துப்புத்துலங்க கிளைத்த பறவைகள்
இறகுகளை உதிர்த்தி
காலடியில் நடுகற்களை நட்டன,
மீன்கள் கடலையும் உப்பையும் மட்டுமே
அறிந்தவை என்பது எவ்வளவு முட்டாள்தனம்
ஆழமும் அதனுள் அமுங்கிய
முத்துக்களும் அறியாதவையா
முதுமையை படர்த்தி
விழுதுகள் வேர்களில் முட்டிக் கொள்கின்றன
வேர்களின் முகவரி ருசிகரமானது
ஓர் உயிர்ப்பின் பழுத்த இலை
துடி துடித்து வீழ்ந்தது வாதையில்
சேர்ந்தே ஒரு துளி மேற்கு வானமும்
உடைந்து விழுந்து
துடித்துக் கொண்டே இருக்கிறது
அது நீயா அன்றி நிழலா ஆதித்யா. ..?

04

கோளத்தின் நுனியில்
சுட்டுவிரலின் ரேகைப்படிவு,
நகரும் சிலைகளில்
வடியும் வாசனையோடு
குழந்தை முகத்தின் அழகு
பூத்தெழும் ஒரு பரிதியின்நிழல்.
தடம் மிதித்து நடக்கிறேன்
நீ மேலேறிப் படர்ந்து இருளின்
விஷம் கடைந்து உண்கிறாய்.
புருவ நெளிவுகளில் இரண்டு
அரவ ஆச்சரியங்கள்,
பாலை நிலவும் அதன் சலங்கைகளும்
ஊர்தியில் உன்னை ஏற்றி
பிரபஞ்சம் நனைக்கிறது.
நீலப்பாசி படர் சமுத்திரத்தினவு
வசீகர சங்குகளின்
ரகசியப் பின்புலத்தில்

விலகிப் போய் விடுகின்றன
துருவேறிய வாழ்வதிர்வின் கருநிழல்.
மடிப்புக் குலையாத நீருள்
புவியீர்ப்புக் கரைய
பிரியத்தின் திசையேறி
புதுப்பித்த அர்த்தங்களில் பூர்த்தியாகி
உளம் பார்க்க ஏவியது
ஒரு சிறங்கை ஒளிமௌனம்.
வட்ட முடிச்சிறுகிய
காலத்தின் நுனியில்
பதுங்கி இருந்தது
நீ அனுப்பிய ஏதேன் தோட்டத்து
ஆதித் தனிமையின் கனி.
பதிவைத்துப் பெருகிய
ஒற்றைக் கனியின் வேர் முனைகளில்
உன் நரம்புகளின் சுவாசம்,
நீவி நீவித் துடிக்கிறது
உடைந்தும் பிளந்து போகாது
மெல்ல மெல்ல இழந்த மர்ம இதயம் !
அது உன்னுள்ளா
அன்றி என்னுள்ளா ஆதித்யா. .?

05

நிசப்தத்தை நிகழ்த்திய
குழந்தைக் காலத்தை
சற்று முன் வளர்க்கத் தொடங்கினாய்.
வெளிச்சம் துளிர் விட சரிகிறது சூரியன்
கசங்கிய ஒரு புன்னகை மட்டும் மிச்சமாயிருந்தது.
சில சமயங்களில் காலமொன்று
திறந்த கதவுகளைக் கண்டதும்
குழந்தையாக மாறி விடுகிறது
ஒரு சொல் சறுக்கி இடறி வீழ்கிறது
அது மௌனத்தை பாதை அமைக்க
ஆறுகளில் குவிகின்றன
பிரியத்தின் மிகப்பெரிய காடு முளைக்கிறது
வலியின் உன்மத்தத்தில்
என் பக்கத்தில் அமர்ந்திருக்கும்
என் உணர்வுகளை
கால் பின்னி கட்டிக் கொண்டது.
சிற்பி செய்த மீன்களை பிடித்து
பாறைகளற்ற கடலுக்குள் விடுகிறேன்
அவை பெருங்கனவுகளோடு
நீந்தத் தொடங்குகின்றன.
கண்ணாடியில் தன்னைக் கொத்திக்கொண்டு
சிறகுகளை படர்த்தி நெகிழ்கின்ற
தேன்சிட்டு சிறைப்படுவதில்லை
இருந்தாலும் கூட,
வாக்குறுதிகளை வீட்டில் வைத்து விட்டு
துண்டங்களாகி சிதறும் வாளரிந்த நாவில்
மூளை முற்றியிருக்கவில்லை
இரத்தமும் சதையுமாய்
வார்த்தைகள் மட்டும் தைத்திருந்தன.
படிகங்களில் உறைந்து கொண்டிருந்தேன்
இரண்டு மலர்கள் சுமையோடு பூத்து வாடின.
அதன் வாசனையை அனாதியான என் உயிர்
உப்பென மொய்த்து புகைந்து குமைந்தது
கடல் எது
நீயா, உப்பா, நதியா சொல் ஆதித்யா !

06

இன்னும்
மென்மையான காதலை
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
கீழுதட்டை மெதுவாக கடித்தபடி
நழுவிக் கொண்டிருந்தது
முனை மழுங்கிய திரியில் நனைந்த சுடர்.
அப்பொழுது தான்
பொழியப் பழகிக் கொண்டிருந்தது
மெழுகுக்கரத்தால் பூவரும்புகள்.
மயங்கி மயங்கி நூலளவு குதூகலத்துடன்
மிதந்து சிதறும் மாதுளங்கனி முத்துக்கள்
அடிவானில் கிளைத்தன.
பொய்யற்ற மின்னலொன்று பறவையென
கலவரமின்றி கண்களை சுழன்று வட்டமிட்டது.
வானளவு மண்ணில்
புழுதியேறிய வெயிலை பிளந்து
நிழல்தேடி சாரலுக்குள்
ஓடிப் பிடித்து விளையாடின.
உயிரைத் திருகி
வாழ்தலுக்கும் சாதலுக்கும் இடையில்
புருவமொன்றை வரைந்து
கண்களைப் புதைத்தன.
விண்மீன்கள் அதனுள் நுழைந்ததால்
வனத்தை உழுது வானத்தை விதைத்து
பூவளவு முறைத்து இமைகள் புகுந்தன.
நீர்ச்சுழிகளால் குமிழ்ந்தெழும் புனல் சிறகில்
மேகத்திரள் ஆரஞ்சுப்பொட்டிட
குரல் ஓடையில் பாடல்கள் முணுமுணுத்தன.
சுண்டக் காய்ச்சிய குவளையில்
சொற்களின் கதவுகள் பூரிப்படைந்தன.
மயங்கி இரண்டு பகல்கள் உதித்தன.
மயில்த்தோகையொன்றும்
சிவப்பு ரத்தினமொன்றும்
விரல்களைப் பூட்டின.
அஞ்சல் செய்த தபாலொன்று
மெதுவாக நெஞ்சில் வீழ்ந்து எழுந்தது
பத்திரமாய் வைத்துப் பூட்டினேன்.
மெல்ல மெல்ல
இருட்டைத் துழாவி துளித்தது மழை.
ஒரு காதலை
இன்றேனும் உனக்கு
எழுதி விட வேண்டும் ஆதித்யா

07

நெஞ்சில் நெரிந்திருந்த
சொற்களால் ததும்பி
உயிரைக் கீறி
உயிரை ஊற்றி வளர்க்கிறேன்

பேச்சயர்ந்திருக்கும் கவிதையாய்
கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று
மன முகடுகளிடையே
நுரைத்த நொடிகளோடு
செரித்துக் கிடக்கிறாய்

தடங்களின் முனகல் ஒலியின்
மெல்லிய கணத்தில்
ஏக்கம் கலைந்த ஞானசொற்கேசமாய்
சிரித்துச் சுடர்கிறாய்

நான் மிகுந்த கனவுகளை நிரப்பிக்கொண்டு
சிந்திக் கொண்டிருந்த
பல்லாயிரம் சுடர்களின் ஒளியை
ஏந்திக் கொண்டிருந்தேன்

மண்ணின் துயரப்பாடலை
நதி நீலாம்பரி இசைத்தபடியே
கடலை உறங்க
வைத்துக் கொண்டிருந்தது

ஒரு குழந்தையாய் திகைத்து
என்னுள் நிரவி
உறைந்து போன விரல்கள்
துளித்த மழையின் பின்னான
மண்ணின் இறுதி உறக்கம் என்கிறேன்

ஆழத்தின் முடிச்சவிழ்த்தி
உமிழ்ந்ததும் என்னைக் கொல்வதற்கான
நங்கூரத்தை உயிர்ச்சுழலுள்
பாய்ச்சுதல் இலகு தான். ஆதித்யா

•••

மிஷேல் ( சிறுகதை ) / நோயல் நடேசன் ( ஆஸ்திரேலியா )

ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்

கையை நீட்டி கடன் அட்டையைத் தந்தபோது மிஷேலின் முன் கையில் பச்சை குத்தியிருந்த வார்த்தைகள் ஆங்கிலம் போலிருந்தது.

” இது என்ன எழுதியிருகிறது? வார்த்தைகள் புரியவில்லை.” எனக் கேட்டேன். அவளது கையை நீட்டிப் பிடித்தபடி என்னைப் பார்த்தாள். அவள் மட்டுமல்ல. எனது நேர்ஸ், அவளது தாய், தந்தை, அவரது கையிலிருந்த சிறிய பிறவுன் நிற சுவாவா (Chihuahua) நாயும் பார்த்தது.

“இந்தப் பச்சை குத்தியதை நான் இதுவரையும் பார்க்கவில்லையே. இதன் என்ன அர்த்தம் என்ன?” என்றேன்
“நான் உங்களுக்கு லத்தீன் புரியும் என நினைத்தேன் ” என்றாள் ஆச்சரியத்துடன்.

“ஆங்கிலமே கஸ்டப்பட்டு படித்தது இதில் எப்படி லத்தீன்? புரியவில்லை.”

“கடைசி சுவாசம் வரும் வரையில் நான் உயிர் வாழ்வேன் ”
“உண்மையாகவா? ”

“போன கிழமைதான் இதைக் குத்தினேன். ”

வார்த்தைகள் எதுவும் என்னிடமிருந்து வெளிவரவில்லை.லத்தீன் மட்டுமல்ல, தெரிந்த ஆங்கிலமும் கை கொடுக்க மறுத்தது.

அவளுக்கு ஆறுதலாக என்ன வார்த்தைகள் சொல்வது? இன்றா, நேற்றா? கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக மிஷேலைத் தெரியும். ஒவ்வொன்றாக சரிந்து விழுந்த அவளது வாழ்வின் பல அத்தியாயங்களை எனக்கு, அவள் நேரடியாகவும் எனது நர்ஸ்கள் மூலமும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொண்டவள். வாழ்க்கையின் இறுதித் தருணத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர் கொள்வதன் சாட்சியாக அவள் தனது கைகளில் எழுதியது.

மற்றய பெண்கள் போல் தன்னை அழகு படுத்தவோ, அடையாளத்தை வெளிப்படுத்தவோ, இல்லைக் காதலனது பெயரையோ எழுதவில்லை. நாற்பத்தைந்து வயதில் – அவளது நிலையில் பச்சை குத்திக் கொண்டது, அவளுக்காக. ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்து மனஉறுதி பெறுவதற்காக. தன்னைத் திடப்படுத்தி அதையே மனதுக்குள் சொல்லிக் கொள்ள விரும்பியிருந்தாள் என்பது எனக்குப் புரிந்தது.

வார்த்தை பஞ்சத்தை சமாளித்தபடி “இந்த கைகளை போட்டோ எடுக்கட்டுமா? ” என்றேன்.
எனது கேள்வியை கேட்டுச் சிரித்தபடி, அவளது அழகிய கண்களை சிமிட்டிவிட்டு எனக்காகப் பச்சை குத்திய கையை உயர்த்தினாள்.

எனது மேசையில் இருந்த அலைபேசியை எடுத்து போட்டோவை எடுத்தேன். முதல் போட்டோவில் பின்புலத்தில் மிஷேலின் தந்தை தெரிந்தார்.அவரை விலகச் சொல்லிவிட்டு மீண்டும் அவளது கையைப் போட்டோ எடுத்தேன்.

பதினைந்து வருடங்களுக்க முன்பாக நான் சந்தித்தபோது அவள் திருமணமாகியிருந்தாள். 30 வயதிருக்கும். கோல்ஸ் என்ற பெரிய கொம்பனியில் விற்பனைப்பகுதியில் நல்லவேலையில் இருந்தாள். என்னிடம் இரண்டு லாபிரடோர் நாய்களை வைத்தியத்திற்காகக் கொண்டுவருவாள்
சாதாரணத்திலும் உயர்ந்தவள். பெரிய நீல நிறமான கண்கள். தங்க நிறமான கேசம். செதுக்கிய கூர்மையான மூக்கு. அகலமான உதடுகளுடன் சிரித்தபடியே இருப்பாள். அளவுக்கு அதிகமாக அழகு அவளிடமிருந்தது.

அவளுடைய கறுத்த லாபிறடோர் நடக்க முடியாமல் வந்து நான் கருணைக்கொலை செய்தேன். அன்று மட்டுமே அவளிடம் சிரிப்பில்லை. அதன் பின்பு சந்தனக்கலர் லாபிறடோரரிடம் மிகவும் பாசமாக இருந்தாள்.அந்த நாய்க்கு ஒரு நாள் உணவருந்தாதபோதுகூட என்னிடம் அழைத்து வருவாள். ஒரு நாள் கண்கலங்கியபடி நாயைக் கொண்டு வந்தபோது “என்ன விடயம்? ” எனவிசாரித்தேன்.

ஏதாவது சிறிய விடயமாக இருக்கும் என நினைத்துக் கேட்ட எனக்கு அவளது பதில் எதிர்பாராதது. திகைத்துவிட்டேன்.
கணவனிடமிருந்து பிரிந்து விட்டதாகக் கூறினாள். எனது நேர்சுடன் மேலும் கதைத்தபோது கருப்பையில் பிரச்சனையால் குழந்தை வாய்ப்பு இல்லை என்றதால் கணவன் பிரிந்து விட்டதாகக் கூறினாள். இந்த நாய் மட்டும் இப்பொழுது என்னுடன் உள்ளது என்றும் அந்த நாயின் தோலில் சில கட்டிகள் உள்ளது. அவற்றை அகற்றவேண்டும் என்றாள்

அவை சாதாரணமான கொழுப்புக்கட்டிகள் என்றபோதும் பிடிவாதமாக அவற்றை அகற்றச் சொன்னாள். பலகாலமாக அந்தக்கட்டிகள் இருந்தன. இதுவரையும் அவற்றைப் பற்றி கவனிக்காமல் இருந்தவள் பொம்மையோடு தூங்கும் குழந்தையின் மனநிலையில் இப்போது நாயின்பால் கவனத்தைத் திருப்புகிறாள்போல என நினைத்து நாங்கள் அவற்றை அகற்றினோம்

தனது வந்த வேலை முடிந்தாலும் ஐந்து நிமிடத்திற்கு ஆறுதலாக நின்று பேசுகிறதும் சிரிப்பதும் மிஷேலது வழக்கம் என்பதால் எனது நேர்சுகள் இருவருக்கும் அவளைப் பிடித்துவிட்டது. அந்தரங்கமான விடயங்களைப் பரிமாறும்போது நான் விலகிவிடுவேன்.

ஒரு நாள் கறுத்த லாபிறடோருக்கு முடக்குவாதம் வந்தது அதை அதற்காக வைத்தியம் செய்தோம். இறுதியில் அதுவும் இறந்தது. நாய்கள் இல்லாததால் சில வருடங்கள் எங்களுக்கு மிஷேலுடன் தொடர்பற்றுப் போய்விட்டது
ஒருநாள் எனக்கு எனது நேர்ஸ் ஷரன் வந்து ‘மிஷேலுக்கு கான்சர்.இப்பொழுது வேiலையை விட்டுவிட்டாள் ” என்று சொன்னதும் நான் திகைத்துவிட்டேன்.

இந்த வயதிலா? அதுவும் ஏற்கனவே நமது நாடுகளில் குழந்தை இல்லையென்பதால் புறக்கணிப்பதுபோல் கணவனால் விலத்தப்பட்டிருப்பவளுக்கு ஏன் இந்தச் சோதனை?

மிஷேலின் பெற்றோர் குரோசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள். ஒரே பிள்ளையானதால் வயதான பெற்றோர்கள் மட்டுமே அவளது சொந்தங்கள்
ஒரு நாள் அது மெல்பேனின் கார்த்திகை மாதம். மெதுவான காலைநேர இளவெயில்.

நானே கதவைத் திறந்தேன். அவளது முகத்தில் இருளாக இருந்தது. புதியவர்களாக இருக்கிறார்களே என உள்ளே அழைத்தேன். காலை ஒளிக்கு கண் மெதுவாக இசைவாக்கமடைந்ததும் என்னால் நம்பமுடியவில்லை. அவளது ஒரு கையில் சிறிய சுவாவா எனப்படும் நாய்க் குட்டியிருந்தது. மறுகையில் கைத்தடியிருந்தது அவளது பின்னால் பெற்றோர் நின்றனர். அதே முகம் ஆனால்!

உருவத்தைப் பார்த்தபோது எங்களுக்கு நம்பமுடியவில்லை முன்பு இருந்த மிஷேல் அந்தக் காலை நேரத்தில், மாலை நேரத்து நிழலாக நின்றாள். அழகு, இளமை, மற்றும் ஆரோக்கியம் தற்காலிகமான கொடைகள். அவை நமது பெற்றோரால் தோம்பாகத் தரப்பட்ட சொத்துக்கள் அல்ல. ஓடும் நதியிலிருந்து கையால் அள்ளிய நீர்போல் நிரந்தரமற்றது என்பதற்கு சான்றாக இருந்தாள்.
ஆனால் அவளது சுபாவம் மட்டும் மாறவில்லை.

புன்னகையை எங்களது சிறிய கிளினிக்கில் விதைத்தபடி அந்த நாய்க்குட்டி கைகளில் கீறிவிடுகிறது எனச் சொல்லி நகங்களை வெட்டும்படி கேட்டாள்.

இப்போது அவளுடன் பெற்றோர்கள் எழுபதை தாண்டியவர்கள் இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் மகளை பாராமரிக்கிறார்கள்.அவளுக்காக அவளது நாய்க்குட்டியையும் பராமரிக்கிறார்கள்.

தனது நோய்க்காக தொடர்ச்சியான மருத்துடன் சிகீச்சையையும் பெறுவதாகச் கூறினாள். நாங்கள் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. எந்த ஒளிவுமறைவுமற்று அவளே சகல விடயத்தையும் சொன்னாள்
தற்போது ஐந்து வருடங்களாகி விட்டது.

சில நாட்களில் கைத்தடியுடன் வருவாள். “இப்பொழுது ஓரளவு பரவாயில்லை என்றும் ஆனால் கார் ஓட்டமுடியாது.
அன்றாட சொப்பிங் மற்றைய தேவைகளுக்கு பெற்றோரை நம்பிருப்பதாகவும், அந்தச் சிறிய நாய் தன்னை விட்டு விலகுவதில்லை ” என்றாள்.

கடைசியாக வந்தபோது அவளில் நல்ல மாற்றம் தெரிந்து” ” உற்சாகமா இருக்கிறாய்” ” என்றேன். அழகான புன்சிரிப்புடன் ஒவ்வொரு நாளும் வாழ்வதாகத் தனது கையை உயர்த்திக் காட்டினாள்.

***

ஜுனைத்ஹ ஸனி கவிதைகள்

காத்திருத்தல்

காத்திருத்தலின் அதீதம்
வெற்றுப் பார்வைகளில் ஒழுகும்
மணிப் பொழுதுகளைமெய்பட வைக்கிறது
யதேச்சையாகவோ
எவருக்காகவோ
மூக்குக் கண்ணாடியை
அழுந்தத் துடைக்கவேண்டியதிருக்கிறது
கால்காசு பெறாதவனையும்
அருகழைத்துகுசலம் கேட்ட படியோ
வெண்திரள் மேகக் கூட்ட நடுவாய்
ஓர் குட்டி மேகத்தைஉருவமிட்ட படியோ
அடர்ந்து பெருகியபுங்கை மரக்கிளைகளின்
காகங்களை எண்ணிய படியோ
ஒரு ஹாரன்
ஒரு சைரன்
தலைக்கு மேலான ஒரு விமானம்
இன்னும் இது போன்றதொரு
இத்தியாதிக் கூப்பாடுகளின் நடுவே
ஓசையின்றிஎன்னோடு ஒட்டிக் கொண்டு நிற்கிறது
என் காத்திருத்தலும்

முகமூடிவிற்பவன்

பொம்மைகளுக்குள்ளாய்
அமிழ்ந்து விட்டிருந்தஓர் நிஜ உருவத்தின் வழியாய்
தங்களை பறைசாற்றிக் கிடந்தன பொம்மைகள்
அழுக்கடைந்த பழுப்பு நிறவேட்டி சட்டையில்
அவ்வளவு அமானுஷ்யனாகத் தெரியவில்லை
அந்த ஸ்பைடர்மேன்
கரிய தேகமுடைத்தமுகமூடி விற்பவனின்
உடல் மொழி கூறுகளுக்கு
ரஜினி அடங்கிப் போனாலும்
கமல்ஹாசன் ரொம்பவே அவனை இம்சிக்கிறார்
நாயாய்
பேயாய்
நரியாய்
திடீரென்று குரங்காய் மாறி
மனிதப் பரிணாமத்துவத்தைபின்னுக்காய் நகர்த்தியிழுக்கிறான்
அந்தமுகமூடிக்காரன்
எலும்புகள் வெளித்தொங்கும்
அவன் ஏழரை சாண் சரீரத்தில்
இரும்பு மனிதனின் முகமூடி
பெரும் நகையூட்டல்
ஆனாலும் எப்போதுமான நிதர்சனமாய்
காந்தி மற்றும் காமராசர் போன்ற முகமூடிகள்
நடிகர்களுக்குப் பின்னால்
அவனது பெட்டியில்
அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

மழை
இரவுமழையின்வலுத்த
வன்புணர்வுகளிலிருந்து
அதிகாலைபூமி
மீளத்தொடங்கியிருக்கும்தருணம்
திடீரென்றுமேகதூதனின்
சொல்லண்ணாத்துயரங்களோடு
மீண்டும்தன்னைபரிணமிக்கத்தொடங்கியது
கடுஞ்சினத்தாலானசிம்மகர்ஜனைகளின்
கொடுமபாயஆக்ரோஷங்களாய்
தன்முந்தியைக்களைந்து
நிர்வாணித்துநின்றபூமியின்மேனியை
ஆக்ரோஷமாய்மழைபுணரத்தொடங்கும்தருணம்
மேகப்பதாதைகளின்கீழ்
வெட்கிஅமிழ்ந்துகொண்டதுசூரியன்.

பூட்டியவீடு
வலுத்துருண்டபூட்டுதொங்கும்
அந்தபிரம்மாண்டவீட்டைக்கடக்கையிலெல்லாம்
நின்றுபின்கடக்கின்றன
பாதங்களுடனாய்சிந்தனைகளும்
இன்றும்அதேநம்பிக்கையில்
அவ்வீட்டின்மேலாய்கரைந்துகொண்டிக்கின்றன
காகங்கள்
யதார்த்தநம்பிக்கையின்வெளிப்பாடாய்
பிரயாசையொழுக
வெற்றுப்பார்வைகள்வழிஅவ்வீட்டை
உள்வாங்கிக்கொள்கிறான்
ஓர்யாசகன்
இன்றாவதுஇருக்கலாமென
அந்தப்பூட்டைஇன்னுமொருமுறைசோதித்துக்கொள்கிறான்
நித்தமும்ஓர்பால்காரன்
ஏன்எங்கேஎன்னாச்சுஎன்றெல்லாம்
தங்களறியாஅனுமானமொழிகளில்
நித்தமும்உரையாடிக்கொள்கிறார்கள்
அண்டைவீட்டார்கள்
இருக்கும்சுவாரஸ்யங்களோடு
இந்தவீடுமொன்றாய்கூடிப்போனது
என்தெருவாசிகளுக்கு.

***