Category: இதழ் 151

இலக்கிய கூட்டங்களின் தற்கால நிலவரங்கள் / சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்

இலக்கிய கூட்டங்களில் உருப்படியாக எதுவும் நடப்பதில்லை என்பது ஒரு உண்மை. அதே சமயம் அதில் எதாவது நடக்கிறது என்பதும் உண்மை.

ஆம்

உருப்படியாக எதுவும் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பினும்,

நிறைய புது இலக்கியவாதிகளை எழுத்தாளர்களை சந்திக்க அது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்பது ஒரு மிகப்பெரிய உண்மைதான்.

யாரோ சிலர் மேடையில் அமர்ந்து உரையாற்றுவார்கள் . பலர் அதைக் கேட்டு கம்மென உட்கார்ந்திருப்பார்கள். எந்த எதிர்வினைகளும் இருக்காது . மாறாக ஆமாம் சாமிகள் , குழுமனப்பான்மையில் முதுகு சொறிதல், சாமியாடுவது போன்ற நற்காரியங்களை நிகழ்த்துவதற்காக ஞாயிறுகளை விழுங்குவார்கள்.
தமிழகத்தின் பல கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடக்கிறது. இப்படிதான் இன்ன ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத சட்ட விதியாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கூட்டங்களுக்கு வருகிற பலர் வாயையே திறப்பதில்லை. எதற்கு நமக்கு வம்பு என்ற மனப்பான்மையே இதற்கு காரணமாக சொல்கிறார்கள். அப்புறம் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருந்துவிட்டுப் போய்விடலாமே என்பது இன்னோரு காரணம்.
கேள்விகளைக் கேட்டால் அவர்கள் திருப்பி எதிர் கேள்வி கேட்பார்கள். அதற்கு நம்மிடம் பதில் இருக்க வேண்டும். நாம் பதில் சொல்லவில்லை என்றால் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்க வேண்டும்.

மேலும் அவர் நமது குழுவைச் சார்ந்தவராகவோ அல்லது நாம் அந்தக்குழுவில் இணைவதற்காகவோ நெடுநாளாக துண்டுபோட்டு இடம் பிடித்து விட காத்திருப்பவர்களாகவோ இருப்போம். எதற்கு வம்பு.

மேடையில் உரையாற்றுவோர் ஒரு பிரபல பத்திரிகையின் ஆசிரியராகவோ அல்லது ஆசிபெற்றவராகவோ இருந்துவிட்டால் அவரின் தயவு எப்படியாவது தேவைப்படும் . ச்சும்மா அவரைப் பகைத்துக்கொள்வதால் நமக்கு இழப்புதானே என்ற சுயலாப நட்டக் கணக்குகளும் பெரும்பாலும் காரணங்களாக அமைந்து விடுகின்றன.

மேலும் மேடையில் பேசுபவர்கள் ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடித்துவிடுவார். அவர் பேசுவது சரியானதா அல்லது தவறானதா என எதிர்கேள்வியே எழாது. காரணம் அவரின் ஆகிருதியைப் பார்த்து பலர் மிரண்டு போயிருப்பதே காரணம்.

கடந்த சில பத்து ஆண்டுகளுக்குமுன் இலக்கிய கூட்டங்களில் பேச வருபவர்கள் பல முன் தயாரிப்புகளோடு வருவார்கள். காரணம் கூட்டத்தைக் கேட்க வந்திருப்பவர்கள் பேச வந்திருப்பவரைவிட கூடுதலாக ஞானம் உடையவராக அதுவும் பல்துறை வித்தகர்களாக இருப்பார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயத்தோடுதான் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

ஆனால் இன்றைய நிலைமை அப்படியில்லை. அப்படி கேள்வி கேட்பவர்கள் பெருங்குடிக்கு அடிமையானவர்கள் என்ற முத்திரையை சகஜமாக குத்திவிடுகிறார்கள். இன்னொரு காரணம் மேடையில் பேசுபவர்களைப் போல இவர்கள் உழைத்து வாசித்திருப்பதில்லை என்பதையும் தற்போதைய கூட்டங்களில் காண முடிகிறது.
ஒரு பயிற்சிபட்டறையில் கலந்துகொண்ட ஒரு மூத்த எழுத்தாளர் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.


அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல இளம் எழுத்தாளர்களும் தங்களுக்குள் எந்த உறவும் இன்றி தனித்தனி தீவுகளாக இருந்ததைப் பற்றியும், எல்லோரும் தங்கள் செல்போன்களில் மூழ்கியிருந்ததைப் பார்க்க இயன்றது என்பதையும் வருத்தத்தோடு சொன்னார்.
தொடுதிரை மீது எதனால் இத்தனை மோகம் ஏற்பட்டது என்பது தனக்கு பெரும் வியப்பளிக்கிறது எனவும் வருத்தப்பட்டார்.
அவர்களோடு உரையாடினார் இவர்கள் அதாவது சக எழுத்தாளர்கள் சொல்லாத எதையும் கூகுள் ஆண்டவர் தனக்கு கற்றுக் கொடுப்பார் என்ற அபாரமான நம்பிக்கை அவர்களிடம் காண்பதாகவும் அவர் சொன்னார்.

மேலும் சமீபத்திய இலக்கிய வாதிகள் மற்றும் வாசகர்களின் மனோபாவம் ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க வகையில் வெளிப்படுத்துகிறது.

இவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கிறோம். இத்தனை ரூபாய்களை செலவழித்து வந்திருக்கிறோம். ஆகையால் அதற்கான பலன்களை அல்லது தகவல்களை அல்லது இலக்கிய அறிவை கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அறிந்து கொள்ளவேண்டும் எனவும் இருப்பதையும் காண முடிகிறது.

இவர்களுக்கு நேரெதிராக இன்னொரு வாசகர் மற்றும் எழுத்தாளர் கூட்டமும் தற்போது உருவாகி வருகிறார்கள்.
இப்போதைய இலக்கிய கூட்டங்களில் நடக்கிற விஷயங்களை முழுமையாக தங்களது செல்போன்களில் அல்லது வீடியோ பதிவாளர்களை அல்லது யூடியூப் சேனல் நடத்துபவர்களை கொண்டு பதிவு செய்து அவற்றை இணையத்தில் வெளியிடுகிறார்கள்.
அதைப் பார்த்துகொண்டால் தாங்கள் தொலைதூரங்களுக்கு பயணம் செய்து இலக்கிய கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதே சமயங்களில் அங்கே நடக்கிற எந்த கவனத்திருப்பல்களும் இல்லாமல் மேடையில் என்ன பேசினார்களே அதை மட்டும் கனகச்சிதமாக கேட்டு விடாலாம். இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது.

ஆம் .

நாம் விருப்பப்பட்டவர்களின் உரையை மட்டுமே தேர்ந்தெடுத்து கேட்கலாம் என்பது ஒரு சௌகர்யம். மேலும் கூடுதல் சௌகர்யம் என்னவென்றால் அந்தக் குறிப்பிட்டவர்களின் உரையையும் குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடம் வரைக்கும் அல்லது குறிப்பிட்ட ஒரு கருத்தை மட்டுமே கேட்டுக்கொள்ளலாம் அல்லது பார்த்துக்கொள்ளலாம் என்பது எவ்வளவு பெரிய வசதி.

இவ்வளவு வசதிகளை இழப்பதற்கு யாருக்குதான் மனம் வரும்.சரி இப்படியாக இணையத்திலேயே பல கூட்டங்களை நடத்திக்கொள்ள திட்டமிடலாமே என்றால் அதற்கும் யாரும் பெரிதாக தயராகயில்லை.
ஆம் . யாராவது இப்படி பல கூட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருந்தால்தான் அதை இவர்களும் கையெடுப்பார்கள். தாங்களாகவே முன்வந்து ஒரு புதிய விஷயத்தினை செய்து பார்த்துவிடமாட்டார்கள்.

அப்புறம் இதில் இன்னொரு அசௌகரியமும் இருப்பதாக சொல்கிறார்கள். ஆயிரமிருந்தாலும் நேரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்கிற அனுபவமே தனிதான்.
நமது ஆதரவாளர்களின் நட்பை பெறுவதற்கோ அல்லது அவரின் தயவை பெறுவதற்கோ இந்த மாதிரி இணைய காணொளிகள் உதவாது என்பதும் இவர்கள் கூறும் காரணங்கள்.

இலக்கிய கூட்டங்கள் எல்லாமே லாப நட்டக்கணக்குகளை பார்க்கிற இடத்தில் வந்து முட்டி நிற்கிறது,

இலக்கிய கூட்டத்தை நடத்தினால் நடத்துபவர்களுக்கு எந்த வகையில் அது லாபத்தை ஈட்டும் என அவர்கள் தனியாக கணக்குப் போட்டு பார்த்து தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே பேசவும் ,பங்கேற்கவும், அவ்வளவு ஏன் குறைந்தபட்சம் பார்வையாளர்கள் யார் என்பதையும் அவர்களே தீர்மானித்து அவர்களுக்கு மட்டுமே அழைப்பை அனுப்புவார்கள். அவர்களும் தங்களது சுற்றம் சூழ வருகை தந்து விடுவார்கள்.

அதேபோல எல்லா இலக்கிய கூட்டங்களுக்கும் எல்லோரும் போய்விட மாட்டார்கள். தங்களுக்கு வேண்டியவர்கள் நடத்துகிற இலக்கியகூடடங்கள் என்றால் அவர்கள் போகிறார்கள். இல்லையெனில் கம்மென்றிருக்கிறார்கள்.

இந்த இலக்கிய கூட்டங்களை அறிவிக்கவென்ற சில இலக்கிய ஆர்வமுள்ள தினசரிகள் இருப்பதாக ஒரு நம்பிக்கையை சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களும் தங்களுக்கு வேண்டியவர்களின் நிகழ்ச்சிகள் என்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவார்கள். புகைப்படங்களை வெளியிடுவார்கள். அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
அந்தப் பத்திரிகை வேண்டாதவர்கள் நடத்துகிற கூட்டங்கள் என்றால் தப்பித் தவறிகூட ஒரு விஷயத்தை வெளியிட்டுவிடமாட்டார்கள்.

இப்படியாக இலக்கிய கூட்டங்கள் பல நடந்துகொண்டிருப்பதை நீங்களும் காண முடிந்தால் அது உங்கள் பாக்கியமா அல்லது துர்பாக்கியமா என்பதை உங்கள் இலக்கிய அனுபவங்களை வைத்துதான் கணித்துக்கொள்ள வேண்டும்.

பாட்டி மரம் ( சிறுகதை ) – கவிப்பித்தன்

ஆறு மாதங்களுக்கு முன்னால் சொந்தமாக வீடு கட்டத் தொடங்கியதிலிருந்தே ஊர் ஊராகப் போய் பாட்டி மரத்தைத் தேடி வருகிறான் கணேசன்.

பல வருடங்களாக அவன் கனவு கண்ட வீடு… மேஸ்திரிகளின் கைகளிலிருந்து சிதறும் சிமெண்ட் கலவையில் மளமளவென வளர வளர… வாழ்க்கையில் தானும் ஏதோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்குள் சூல் கொள்ளத் தொடங்கியிருந்தது.

ஆனால் பலரும் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிப் போவதையே லட்சியமாக வரித்துக்கொண்ட இந்நாளில்… வேலிகளும் கட்டாந்தரைகளும் சூழ்ந்த அந்த இடத்தில் அவன் வீடுகட்டத் தொடங்கிய போதே எல்லோரும் அவனை ஏளனமாகத்தான் பார்க்க ஆரம்பித்தனர்.

நகரத்திலிருந்து சற்றுத் தள்ளி இருந்தது அந்த இடம். கைவிடப்பட்ட ஒரு வயோதிகனின் கிழிந்த போர்வையைப் போல கிராமத்தின் சில மிச்சங்களை பிடிவாதமாய் இன்னும் தன் மேல் போர்த்தியிருந்தது. முன்னொரு காலத்தில் ஏர் கலப்பைகள் புணர்ந்த அந்த நிலத்தில்… அதன் கற்பப் பைகள் தோறும் எண்கள் இடப்பட்ட மஞ்சள் நிறக் கற்கள் முளைத்திருந்தன. அந்த வீட்டுமனைகளைப் பார்க்க கணேசன் மஞ்சள் வெயில் காய்ந்த ஒரு பின் மாலையில் போயிருந்தான்.

ஒரு நூறு வெள்ளை நிறக் கைக்குட்டைகளை வானத்தில் பறக்க விட்டதைப்போல… வெள்ளையும் சொள்ளையுமான உள்ளுர் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு அரசியல் கூட்டத்துக்குப் போவதைப் போல… அப்போது அவன் தலைக்கு மேலாக ஒரு கொக்குக் கூட்டம் நிதானமாகப் பறந்து போனது, மஞ்சளும் சிவப்புமாய்ப் பூத்திருந்த தூரத்து வேலியோரம் தாவிக்கொண்டிருந்த நான்கைந்து பழுப்பு நிற மைனாக்களும், ராக்கெட்டைப் போல விர்ரென எழும்பி ஜோடியாகப் பறந்துபோய் ‘தொபீர்’ என தூரத்தில் குதித்து ஓடிய கோதுமை நிறக் கௌதாரிகளும்… கண்ணுக் கெட்டிய தூரத்தில் பச்சையாய் ஏதோ சில பயிர்கள் இருப்பதும்… பார்க்கிறபோதே கிளர்ச்சியைத் தந்தன அவனுக்கு.

வீட்டுமனைகளுக்குப் பக்கத்தில் காய்ந்து கிடந்த ஒரு வயல் வரப்பில் வளை தோன்டி ஒரு கூடை செம்மண்ணை வெளியே தள்ளி வைத்திருந்த எலி வளையைப் பார்த்ததும் முடிவே செய்துவிட்டான்.

மைனாவின் வசீகரிக்கும் கண்களையும்… ஆகாயத்தின் நிறத்தை கழுத்தில் தீட்டிக்கொண்ட பாளைக் குருவிகளின் அழகையும்… எலி வளையின் நுட்பத்தையும் பிள்ளைகளுக்குப் புரியவைக்க இனி அவன் எந்த இணைய தளத்தையும் தேட வேண்டியதில்லை.

அந்த வீட்டுமனையை வாங்கி வீடு கட்டத் தொடங்கிய பிறகுதான்… முன்னிருட்டு வானத்தில் தனித்தலைகிற ஒரு ஒற்றைக் குருவியைப் போல… அவன் மனதின் ஆழத்திற்குள்ளிருந்த அந்த ஏக்கத்துடன் பாட்டி மரத்ததைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினான்.

வீட்டுக்கான வரைபடம் தயாராவதற்கு முன்பிருந்தே அவன் பிள்ளைகள் தங்களின் ஆசைகளையும் கனவுகளையும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

வீட்டில் மொத்தம் எத்தனை அறைகள் கட்ட வேண்டும்… குளியலறை, கழிவறைகளுக்கான கதவின் வண்ணங்கள்… எங்கே கணிப்பொறி வைக்க வேண்டும்… எந்த இடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை மாட்ட வேண்டும்… சோபா போடும் இடம்… சன்னல் கண்ணாடிகள் எப்படி இருக்க வேண்டும்… என ஓயாமல் அவர்கள் ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தனர்.

பிள்ளைகள் மூவருக்கும் மூன்று விதமான ஆசைகள். சுவைகளும் கூட வேறு வேறாகவே இருந்தன. அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வேறு. மூன்று பேரின் உடம்பிற்குள்ளும் ஓடும் ரத்தம் ஒன்றாக இருந்தாலும் அவர்களின் ரசனை மட்டும் ஒன்றாக இல்லை.

“முட்டப் போடற கோழிக்குதாங் நோவு தெரியும். உங்களுக்கு இன்னா… வாய் நோவாம சொல்றீங்க… அதெல்லாம் கட்டறவங்களுக்குத் தெரியும்… நீங்க போயி படிக்கற வேலயப்பாருங்க…” என்று கணேசனின் மனைவி லட்சுமி மட்டும் அவர்களை அதட்டிக்கொண்டே இருப்பாள்.

அதையெல்லாம் புன்முறுவலோடும்… பட்ஜெட் கைமீறிப் போகிற பதைபதைப்போடும் கேட்டுக் கொண்டிருப்பான் கணேசன்.

“அப்பா… வாசல்ல கலர் கலரா நெறைய்ய குரோட்டன்ஸ் வைக்கணும்பா…” என்றாள் பெரிய மகள் வினோதினி. அப்போது அவள் கண்களில் இருந்த குரோட்டன்ஸ்களின் வண்ணங்களும் அழகும் அறையெங்கும் மிதந்தது.

“ம்ஹூம்… வாசல்ல நெறைய்ய ரோஸ் செடி வைக்கணும்பா…” என்றாள் சின்னவள் ரேவதி. ரோஜா என்றால் அவளுக்கு உயிர். ரோஜா இதழ்களின் மென்மையும் நிறமும் அவளின் கன்னங்களில் படர்ந்து உதடுகளில் வழிந்தது.

“அப்பா… இதுங்களுக்கு எப்பப் பாத்தாலும் பூவு… பொட்டுதாம்பா. படி ஓரத்துல ஒரு நாட்டு நெல்லிச் செடி நடலாம்பா… காட்டு நெல்லி வேணாம். அது ஒரே புளிப்பு. நாட்டு நெல்லி தான் அடி மரத்திலிருந்து சரம் சரமா காய்க்கும். உப்பு போட்டுத்தின்னா சூப்பரா இருக்கும்…” என்றான் கடைக்குட்டி அகிலன். சொல்லும்போதே நெல்லியின் புளிப்பும் துவர்ப்பும் மனதில் ஊர… உமிழ்நீரைக் கூட்டி விழுங்கினான். அதைக் கேட்டபோது இவனுக்கும் உமிழ்நீர் சுரந்தது.

“ஒரு கொய்யாச்செடி… ஒரு சப்போட்டாச்செடி… மாதுளம் ஒண்ணு படி ஓரமா நடலாம். தொட்டியில ஒரு துளசிச் செடி கட்டாயம் வைக்கணும்” என்று தன் பங்கிற்குப் பட்டியல் போட்டாள் லட்சுமி. துளசி மாடமும் அதன் எதிரில் புகையும் ஊது வத்தியின் மணமும் அவள் கண்களில் தெரிந்தது.

“ஆளாளுக்கு இவ்ளோ செடிங்கள சொன்னீங்களே… ஒரு முருங்கைச் செடி வைக்கணும்னு யார்னா சொன்னீங்களா….?” என்று அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டான் கணேசன்.

“அப்பா… நீ ஒரு நாட்டுப்புறன்றது சரிதாம்பா… முருங்க மரம்லாம் இப்ப அவுட்டாப் பேக்ஷன்… தொட்டியில வளக்கற ஆலமரம், தென்ன மரம்லாம் வந்திட்ச்சி… இப்பப் போயி முருங்க மரம் நடணும்னு சொல்றியேப்பா…” என்றாள் கிண்டலாகச் சிரித்துக்கொண்டே பெரியவள் வினோதினி.

அவள் சிரித்தாலே கரைந்து விடுபவன் கணேசன். கையில் பிடித்திருக்கிற குச்சி ஐஸ் கரைந்து கரைந்து காணாமல் போவதைப்போல… அவள் சிரிப்புக்குள் கரைந்து கரைந்து காணாமல் போய்விடுவான். ஆனால் உள்ளங்கையில் குத்திய கற்றாழை முள்ளைப்போல சுருக்கென்று மனசுக்குள் குத்தியது அவளது அன்றைய சிரிப்பு. அது அவனை கசப்பில் பிடித்துத் தள்ளியது.

முருங்கை மரம் அவுட் ஆப் பேக்ஷனா…? எதைக் கொள்ள வேண்டும்… எதைத்தள்ள வேண்டும் என்று கூடத் தெரியாத இந்தத் தலைமுறைப் பிள்ளைகளின் அறியாமையை நினைத்ததும் மேலும் மனசு கசந்தது அவனுக்கு.

அந்த நொடியில்… தான் பிறந்து வளர்ந்த கிராமத்து வீட்டின் முன்னால்… நாலாபுறமும் கிளைகளைப் பரப்பி விரிந்திருந்த அந்த முருங்கை மரத்தின் கிளைகளில் போய் ஒட்டிக்கொண்டது கணேசனின் மனம்.

அடேயப்பா… எவ்வளவு பெரிய மரம். ஊரில் அவனது தாத்தா இரண்டு தூலங்கள் வைத்துக் கட்டிய மஞ்சுப்புல் கூரை வீட்டிற்கு வடக்குப் பார்த்த வாசல். வாசலுக்கு மேற்கில் எப்போதும் ஒரு ஆள் நின்றிருப்பதைப் போல சாந்தமாக நின்றுகொண்டிருக்கும் அந்த மரம். அவன் பாட்டி அன்னம்மா நட்ட மரம்.

அவள் பிறந்தது சோளிங்கருக்குப் பக்கத்தில் சூரை என்றொரு குக்கிராமம். அங்கிருந்து திருமணமாகி இவர்கள் ஊருக்கு வந்த போது ஒரு கிளையைக் கொண்டு வந்து இங்கே நட்டு அதிலிருந்து விருட்சமாய் வளர்ந்த மரம். அது தன் தாய் வீட்டுச் சீதனம் என்று அடிக்கடி பெருமையாகச் சொல்வாள் பாட்டி.

எப்போதும் பூவும் பிஞ்சுமாய் நிறைமாத கர்ப்பிணியைப்
போலவே குலுங்கிக்கொண்டு நிற்கும். அடி வயிறு பெருத்து, தனங்கள் தளர்ந்து, மஞ்சள் குழைந்த முகத்தோடு, பற்களைக் கடித்தபடி சுகமாய் அலுத்துக் கொள்கிற நிறைமாத கர்ப்பிணிகள் வசிக்கிற வீடுகளில் தாய்மையின் வாசனை நாலாபுறமும் வீசிக்கொண்டிருப்பதைப் போல… இவர்கள் வீட்டுக் காற்றில் அந்த முருங்கையின் தாய்மை வாசம் எந்நேரமும் கலந்திருக்கும். அதன் மனமே ஏகாந்தத்தைத் தரும்.

திருவிழாவில் விற்கிற பொறியை மூட்டை மூட்டையாய் வாங்கி வந்து கொத்துக் கொத்தாய் கோர்த்துத் தொங்கவிட்டதைப் போல… வெள்ளை நிற முருங்கை அரும்புகளும் பூக்களும் மரமெங்கும் கொத்துக் கொத்தாய்ச் சிரிக்கும். முழங்கை நீளத்துக்கும் நீள நீளமான காய்கள் எந்நேரமும் காய்த்துத் தொங்கும்.

மொச்சைக் கொட்டை, நெத்திலிக் கருவாட்டுடன் அந்தக் காயைத் துண்டுத் துண்டாக நறுக்கிப் போட்டுக் குழம்பு வைத்தால்
சாப்பிடுகிறவர்கள் அதற்கு அடிமை. காரக்குழம்பு வைக்கிறபோது முருங்கைக் காயை பொடிப் பொடியாக வெட்டிப்போட்டு… குழம்பு கொதிக்கிறபோது ஒரு பிடி கடலைப்பருப்பை எடுத்து மத்தில் லேசாக இடித்து அதை உதிரி உதிரியாக குழம்பில் தூவி… ஒரு கொதி வந்ததும் இறக்கி விடுவாள் பாட்டி. அந்த ஊரிலேயே அப்படி ஒரு குழம்பை யாரும் வைப்பதில்லை. அன்றைக்கு மேலும் ஒரு உருண்டைக் களியை கூடுதலாகச் சாப்பிடுவார் தாத்தா. கணேசன் கூட அன்றைக்கு ஒரு குத்துக் களியை மிச்சமாகச் சாப்பிடுவான்.

வீட்டுக்கு ஆனது போக மிச்சத்தை அறுத்து ஆறு ஆறு காய்களாகக் கட்டி ஒரு கூடையில் வைத்து கணேசனிடம் கொடுத்து அனுப்புவாள் பாட்டி. ஒரு கட்டு ஒரு ரூபாய். அவர்கள் ஊரில் ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் போதும். மொத்தமும் விற்றுவிடும். அந்த முருங்கைக் காய்க்கு ஊரில் எப்போதுமே கிராக்கிதான்.

மஞ்சளும் வெளிர் பச்சையுமாய் துளிர்க்கிற இளம் கீரையை மரத்துக்கு நோகாமல் ஒடித்து உருவி… துவரம்பருப்புடன் சேர்த்து வேகவைத்து… கடைந்து வடகம் போட்டு தாளித்து வைத்தால் களிக்கு தேவாமிர்தமாக இருக்கும். இன்னும் இரண்டு வாய் களியைக் கொண்டாடா என்று வயிறு கெஞ்சும். அதிலேயே அடர் பச்சை நிறத்திலிருக்கிற சற்று முற்றிய கீரையை உருவி மண்சட்டியில் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவைத்து, வறுத்த வேர்க்கடலையோடு உப்பையும் காய்ந்த மிளகாயும் சேர்த்து இடித்து அதில் தூவி வைத்தால்… சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும். கணேசனின் மனைவி லட்சுமி ஒவ்வொரு வேளையும் தொட்டுக்கொள்ள வித விதமாய் பொரியல், கூட்டு, அப்பளம் என எது வைத்தாலும் அந்த ஒற்றை முருங்கைக் கீரைக்கு ஈடாகாது என்பான் கணேசன்.

அவர்கள் நிலத்தில் கேழ்வரகு, கம்பு, சோளம், நெல் நடவோ களையெடுப்போ எது நடந்தாலும் அத்தனை கூலியாட்களுக்கும் கூழுக்குக் கடித்துக்கொள்ள அந்த முருங்கைக்கீரை கூட்டுதான் சரியான கூட்டு. நான்கு பிடி கீரை போதும். பத்தே நிமிடத்தில் ஒரு ஊருக்கே தொட்டுக் கொள்ள கீரைக்கூட்டு செய்து விடுவாள் பாட்டி.

வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் யாராவது வந்துவிட்டால் ஒரு பிடி இளம் கீரையை உருவிப்போட்டு வெங்காயத்துடன் வதக்கி, அதில் நான்கு நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஊற்றி முட்டைப் பொறியல் செய்துவிட்டால் போதும். வானலியில் முட்டையயைக் கிளறுகிற போதே தெருவே மணக்கும். விருந்தாளிகள் வெட்கத்தை விட்டு இன்னும் ஒரு பிடி கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

சித்திரை, வைகாசியில் நடக்கிற கெங்கையம்மன் ஜாத்திரையின் போது காலையில் கரகத்திற்குப் பின்னால் பித்தளைக் குடங்களில் கரைத்த கூழும், படையல் சோறும் எடுத்துப்போகும் ஊர்ப் பெண்கள், படையல் சோற்றோடு அம்மனுக்குப் படைக்க அந்த மரத்துக் கீரையைத்தான் உருவி கூட்டு வைத்துப் படைப்பார்கள். திருவிழா நேரம் தவிர மற்ற நேரங்களில் ஊரில் யாரையும் அந்த மரத்தில் கை வைக்க விடமாட்டாள் பாட்டி.

பாட்டி இல்லாத நேரத்தில் யாராவது மரத்திலிருந்து ஒரு இனுக்கு கீரையை உருவி விட்டாள் கூட அவ்வளவுதான். அவர்கள் வீட்டு வாசலுக்கே போய் பேய் ஆடிவிடுவாள்.

தனது தலைச்சன் பிள்ளையே அந்த முருங்கை மரம்தான் என்பாள். அவளின் மூத்த பிள்ளையான கணேசனின் அப்பா நடேசனின் மீது கூட அவளுக்கு அவ்வளவு பாசம் இருந்தது கிடையாது.

காய் அறுப்பதற்கென்றே ஒரு நீளமான தொரடு வைத்திருந்தாள்.யாரையுமே மரத்தில் ஏற விடமாட்டாள்.உயரத்தில் இருக்கிற தொரடுக்கும் எட்டாத காய்களை அறுப்பதற்கு மட்டும் கணேசனை மரத்தில் ஏறச்சொல்வாள். கணேசனுக்கும் அந்த மரத்தின் மீது பாசம் அதிகம். தன் பிஞ்சுக் கால்களை வைத்துத் தாத்தாவின் தோள்மீது ஏறுகிற பேரக்குழந்தையைப் போல மரத்துக்கு வலிக்காமல் மெதுமெதுவாய் கால் வைத்து ஏறி காயறுப்பான்.

கணேசனின் தம்பி சுந்தரத்தை மரத்தில் கால் வைக்கவே விட மாட்டாள் பாட்டி. எப்போதாவது அவன் ஏறிவிட்டால் ஒரு கிளையையாவது உடைத்துத் தள்ளாமல் கீழே இறங்க மாட்டான்.

தினமும் அதிகாலையில் தூங்கி எழுந்ததும் அந்த மரத்தின் முகத்தில்தான் விழிப்பாள் பாட்டி.முதல் வேலையாக ஒரு பானை குளிர்ந்த நீரை அதன் வேரில் ஊற்றி விட்டுத்தான் வாசல் தெளித்து கோலம் போடவே தொடங்குவாள்.

ஒரு முறை ஒரு ஆடி மாத இரவில் ஊரையே அலற வைத்தபடி சூரைக் காற்று சுழன்று சுழன்று அடித்தது. இடியும் மின்னலுமாய் வானம் கோர தாண்டவம் ஆடியபடி பேய் மழை கொட்டியது. ஊரிலிருந்த அத்தனை முருங்கை, புங்கன், புளிய மரங்களும் அடியோடு முறிந்து விழுந்தன.

தவறிப்போய் தண்ணீரில் விழுந்துவிட்ட கோழிக்குஞ்சுகள் நடுங்குவதைப்போல பயத்தில் வெடவெடத்துக் கொண்டிருந்த கணேசனையும் சுந்தரத்தையும் கட்டிப் பிடித்துக்கொண்டு, சாத்திய கதவுகளுக்குள் கைகளைக் கூப்பி “அர்ஜூனா… அர்ஜூனா…” என்று வேண்டிக் கொண்டிருந்தாள் பாட்டி.

அந்த நேரம் ‘டமார்’ என ஒரு பெரிய இடி ஓசை. தலையின் மீதே இடி இறங்கி விட்டதைப் போல காதுகள் அதிர… வீட்டின் கூரை மீது ‘தொபீர்’ என ஏதோ விழுந்து உருளும் பயங்கரமான சத்தம்.

பயத்தில் உடல் அதிர அதிர கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு பாட்டியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அலறினர் பிள்ளைகள்.

“முரங்க மரம் வேரோட ஊட்டு மேல சாய்ஞ்சிட்ச்சி போல
கீதே…” என்றார் பதைபதைப்போடு தாத்தா.

அதைக் கேட்டதும் துடிதுடித்துப் போனாள் பாட்டி. தாத்தா அதட்ட அதட்ட அதை காதில் வாங்காமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினாள் பாட்டி.

மரத்தின் உச்சிக்கிளை ஒன்று மட்டும் முறிந்து கூரையின் மீது விழுந்திருந்தது. கூரைக்கு எந்த சேதாரமும் இல்லை. மரத்துக்கும் பெரிதாக சேதாரமில்லை.

“கெங்கம்மா தாயே… எங்க ஊட்டயும்… நண்டும் சிண்டுமா கீற எங்க கொயந்திங்களயும்… எங்கம்மா ஊட்டு சீதனத்தயும் எந்த சேதாரமும் இல்லாம காப்பாத்திட்ட… வர்ற ஜாத்திரைக்கி உனுக்கு பட்டுப்பொடவ வாங்கியாந்து சாத்தறன்டி அம்மா…” என்று கொட்டுகிற மழையில் நின்றபடியே பஜனை கோயிலைப் பார்தது கை தொழுதபடி வேண்டிக்கொண்டாள் பாட்டி.

அன்று மழை விட்டதும் கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே வந்த ஊர் மக்கள்… ஊரும் கழனிக்காடும் வெள்ளக் காடாய் மிதப்பதையும், அந்த ஒரே மழையில் ஏரி நிரம்பி வழிவதையும் அதிசயமாய்ப் பார்த்தனர்.

அடுத்த கெங்கையம்மன் திருவிழாவின்போது வேண்டுதலைப் போலவே பச்சைச் சரிகை போட்ட சிவப்பு நிறப் பட்டுப்புடவையும், ஆளுயர சாமந்திப்பூ மாலையும் வாங்கி வந்து அம்மனுக்குச் சாத்தினாள்.

அப்போது ஒடிந்த அந்த முருங்கைக் கிளையை துண்டு துண்டாக வெட்டி ஊரில் பல பேர் தங்கள் வீடுகளுக்குப் பின்னால் நட்டுக்கொண்டனர் .அப்படித்தான் அந்த ஊரில் பலபேரின் வீடுகளில் பரவியது அந்த மரம். இப்படி தானாக ஒடிகிற கிளைகளைக் கொண்டுபோய் நட்டுக் கொண்டால்தான் உண்டு.

வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு வருகிற விருந்தாளிகள் கூட கொஞ்சூண்டு கிளையை வெட்டிக் கொடுக்கச் சொல்லி எவ்வளவோ கெஞ்சுவார்கள். ம்கூம். அவர்களும் எப்போதாவது தானாக ஒடிகிற கிளைகளைக் கொண்டுபோய் நட்டுக் கொள்வார்கள். அப்படித்தான் வெளியூர்களில் வாழப்போன பெண்களும் ஊர் சீதனமாக அந்த மரத்தின் கிளைகளைக் கொண்டுபோய் நட்டு வளர்த்தார்கள்.

ஊரில் சின்னக் குழந்தைகள் யாருக்காவது சளி பிடித்துக்கொண்டால்… அந்த முருங்கை மரத்தின் அடிமரத்துப் பட்டையை லேசாக சீவியெடுத்து அதை வெள்ளைத் துணியில் சுற்றி குழந்தைகளின் மூக்கில் வைத்து பலமாக உறிஞ்சவைப்பாள். அவ்வளவுதான். அடைத்துக்கொண்டிருக்கிற மூக்கு மறு பேச்சில்லாமல் திறந்து கொள்ளும். மூக்கில் சளி அடைத்துக்கொண்டு மூச்சு விட முடியாமல் கொர் கொர்ரென மூச்சு வாங்குகிற குழந்தைகளுக்கு அந்த முருங்கைப்பட்டை தான் கைகண்ட மருந்து.

“ஊட்டுக்கு ஒரு முரங்க மரம் இர்ந்தாவே போதும்டா… அந்த குடும்பமே கரயேறிடும்” என்பாள் பாட்டி.

வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் முருங்கைக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் கருவாட்டுக்குழம்பு, முருங்கைக்கீரை கடைசல் என காய்கறிச்செலவில்லாமலே ஓட்டிவிடுவாள் பாட்டி. ஊரிலிருக்கிறவர்களும் அப்படித்தான்.

கணேசன் எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது ஊரில் இட்லி சுற்று விட்டுக்கொண்டிருந்த கௌரம்மா கிழவி செத்துப்போனாள். அன்று அந்த முருங்கையின் அடிமரத்தின் மீது தனது மிதிவண்டியைப் பூட்டாமல் சாத்திவிட்டுப்போன கணேசன், சாவருகே ஒப்பாரி பாடி மார்பிலடித்து அழுகிறவர்களையும், பட்டைச் சாராயத்தின் போதையில் பறையின் தாளத்திற்கேற்ப குத்தாட்டம் போடுகிறவர்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் சாவுக்கு வந்த யாரோ அவனது
மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். அதைக் கண்டுபிடிக்க அப்பாவோடு ஊர் ஊராக அலைந்தான். கடைசியில் பத்து மைல் தூரத்திலிருக்கிற ரெண்டாடியில் ஒரு மளிகைக் கடைச் சந்தில் மிதிவண்டி நிற்பதைக் கண்டுபிடித்தனர். அந்த ஊரிலிருந்து சாவுக்கு வந்த எவனோ ஒரு குடிகாரன் திரும்பிச் செல்ல பணமின்றி மிதிவண்டியை எடுத்துப் போயிருக்கிறான். போதை தெளிந்ததும் மீண்டும் போதை ஏற்றிக் கொள்ள மளிகைக் கடைக்காரனிடம் நூறு ரூபாய்க்கு அதை அடமானம் வைத்திருக்கிறான். கெஞ்சிக் கூத்தாடி நூற்றைம்பது ரூபாயை அழுது மீட்டுக்கொண்டு வந்தனர். தனது மிதிவண்டியை பொறுப்பாக பார்த்துக்கொள்ளாத மரத்தின் மீது அன்றிலிருந்து கோபமான கோபம் கணேசனுக்கு. அந்தக் கோபம் தீர நீண்ட நாட்களானது.

ஒரு முறை அவன் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஏதோ வாய்த்தகராறு வந்து இரண்டு நாட்களாக பேசாமல் இருந்திருக்கிறார்கள். அப்போது கணேசன் நண்டைப்போல நான்கு காலில் குடுகுடுவென ஓடிக்கொண்டிருந்த நேரம். ஒரு இடத்தில் நிற்க மாட்டான். அவனைப் பிடித்து வைக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டும். தாத்தா திட்டிவிட்ட வருத்தத்திலேயே பாட்டி வேறு ஏதோ வேலையாய் இருந்திருக்கிறாள். அந்த நேரத்தில்… கண் இமைக்கிற கணத்தில் ஓடிப்போய் அணைக்காமல் விட்டிருந்த அடுப்பில் காலை வைத்துவிட்டான் கணேசன். பஞ்சு போன்ற இளம் பாதம் நெருப்புப் பட்டுப் பொசுங்கிவிட்டது. தாத்தாவுக்கு மனசு பதைபதைத்துவிட்டது.

அவனோடு விளையாடுகிற போதெல்லாம் மெத்தென்ற அந்தப் பாதங்களை எடுத்து அடிக்கடி தன் கன்னத்தில் ஒத்திக்கொள்வார். காற்று நிரம்பி தளதளக்கிற பலூனை விடவும் மெத்தென்றிருக்கிற அந்த உள்ளங்கால்களில் தான் வாஞ்சையோடு முத்தமிடுவார்.

அதில் புண்ணாகி குழந்தை துடிப்பதைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் தலைக்கேற… கிழவியை சாத்து சாத்தென்று சாத்திவிட்டார். அத்தனை வருட இணை வாழ்வில் ஒரு முறை கூட கை நீட்டியதில்லையாம் அவர்.

அவளை அடித்துவிட்ட அன்று இரவு அவருக்கு தூக்கமே வரவில்லை. அவசரப்பட்டு கை நீட்டிவிட்டதற்காக மனசுக்குள்ளேயே புழுங்கியிருக்கிறார்.

முன்னிரவு கடந்தும் தன் சொந்தங்களோடு வீட்டு வாசலில் அமர்ந்து கதைபேசிக் கொண்டிருக்கிற ஊர் மக்களைப்போல… வானத்தில் நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நட்ட நடு இரவில், தனது வேட்டியை முறுக்கி அந்த முருங்கை மரத்தின் அடிக்கிளையில் தூக்கு மாட்டிக் கொண்டிருக்கிறார் தாத்தா.

அவரின் பாரம் தாங்காத முருங்கைக்கிளை மளுக்கென்று உடைத்துக்கொண்டு சரிய… கிளையோடு சேர்ந்து ‘தொபீர்” என கீழே விழுந்திருக்கிறார்.

சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் திகைத்து நிற்க… பாட்டி மட்டும் வாயிலும் வயிற்றிலும் ‘லபோ திபோ’ என அடித்துக்கொண்டு அழுதிருக்கிறாள்.

பாட்டியின் அழுகையைப் பார்த்த பின்னர் தாத்தாவுக்கு
தற்கொலை செய்து கொள்கிற எண்ணம் அடியோடு போய்விட்டது.

அன்று அந்த முருங்கை மரம் தன் ஒரு கிளையை இழந்து தனக்கு மாங்கல்யப் பிச்சை கொடுத்ததற்காக அதை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதிருக்கிறாள் பாட்டி.

இதெல்லாம் அவன் பாட்டியே கணேசனிடம் பின் நாள்களில் சொன்னது. அதனாலேயே கணேசனுக்கும் அந்த மரத்தின் மீதான பாசம் மேலும் அதிகமாகி விட்டது.

பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் போய்ச் சேர்ந்த பிறகும் பாட்டியாக, தாத்தாவாக, அம்மாவாக வாசலில் நின்று அவர்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டது அந்த மரம். பாட்டியின் நினைவாக அதைப் ‘பாட்டி மரம்’ என்றே சொல்ல ஆரம்பித்தான் கணேசன்.

கணேசனுக்குத் திருமணமாகி பெரியவள் வினோதினி கைக்குழந்தையாக இருந்த நேரம். அன்று வெள்ளிக்கிழமை. வேலைக்குப் போய்விட்டு பொழுது சாய வீட்டுக்குத் திரும்பிய கணேசன் வீட்டுவாசல் வெறிச்சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனான்.

“நாந்தான் மரத்த வெட்டிட்டேங்… வாஸ்துப்படி ஊட்டு வாசல்ல முருங்க மரம் இருக்கக் கூடாதுனு எம்பிரண்டு சொன்னாங்… அதனால தாங் நமக்கு இவ்ளோ கஸ்டம் வருதுன்னும் சொல்றாங்… அதான் வெட்டித் தள்ளிட்டேங்…” என்றான் சுந்தரம் சாதாரணமாக. பாட்டிமரம் வீட்டின் பின்புறம் துண்டு துண்டாக கிடந்ததை அவனால் தாங்க முடியவில்லை. அதன் மீது புரண்டு ஓவென்று அழவேண்டும் போல அவன் மனசு துடித்தது.

அன்று அவர்களுக்குள் பெரிய சண்டையே நடந்து விட்டது. அதை ஊரே நின்று வேடிக்கைப் பார்த்தது. அதற்குப் பிறகு அந்த வீட்டிலிருக்கவே பிடிக்கவில்லை கணேசனுக்கு. ஈரம் சொட்டச் சொட்ட நனைந்த உடைகளோடு அசூசையாகப் படுத்திருப்பதைப் போல… அன்று இரவெல்லாம் உடல் கூசக் கூச படுக்கையில் கிடந்தான். மறுநாளே ஊரைவிட்டுக் கிளம்பி குடும்பத்தோடு இந்த நகரத்துக்கு வந்தவன்தான்.

எப்போதாவது திருவிழா, காது குத்து, கல்யாணம் என ஊருக்குப் போவதோடு சரி. பாட்டி மரம் இல்லாத வீட்டுக்குள் நுழையவே மனசு வலித்தது. பழைய கூரை வீட்டை இடித்துவிட்டு புதிதாக சிமெண்ட் சீட்டு வீடு கட்டிவிட்டான் தம்பி. அவனுக்கு அதில் எந்த உறுத்தலும் இல்லை.

வாடகை வீட்டில் இருந்துகொண்டு, சிறுகச் சிறுகச் சேமித்து, சொந்தமாக வீடுகட்டத் தொடங்கியதிலிருந்தே பாட்டி மரத்தின் ஒரு கிளையைக் கொண்டு வந்து புதிய வீட்டின் வாசலில் நட்டுவிடவேண்டும் என்று ஊரில் போய் வீடு வீடாகத் தேடிப்பார்த்தான். எந்த வீட்டிலும் அந்த மரத்தின் மிச்சம் இல்லை. ஊரில் பெரும்பான்மையான வீடுகளில் முருங்கை மரமே இல்லை.

ஆனால் நகரத் தெருக்களில் கூட சில வீடுகளில் முருங்கை மரங்கள் நிற்பதை கணேசன் பார்த்திருக்கிறான். அவை கண்ணைக் கொத்தும் பச்சைப் பாம்புகளைப் போல நீள நீளமான காய்களை மரமெங்கும் தொங்க விட்டபடி நிற்பதை எரிச்சலோடு பார்த்திருக்கிறான். அவை மரபணு மாற்றப்பட்ட ஹைபிரிட் முருங்கைகள். பிரம்மாண்டத்தைக் காட்டி மனிதர்களை மயக்கி நாசமாக்கிவிட்டவை.

சின்னதாய் காய்க்கிற கத்தரி, முருங்கை, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் என எல்லாவற்றையும் பெரிதாய் காய்க்க வைத்து அதில் கிரங்கிக் கிடக்கிறது இந்தத் தலைமுறை. அல்லது பிரம்மாண்டமாய் வளர்கிற ஆலமரம், தென்னைமரம், ஈச்ச மரம் போன்றவற்றைச் சுறுக்கி தொட்டியில் வளர்த்து பீற்றிக் கொள்கிறது.

இதையெல்லாம் நினைத்து நினைத்து எரிச்சலடையும் கணேசன் அதற்காகவே எப்படியாவது பாட்டி மரத்தைக் கொண்டுவந்து வைத்துவிடவேண்டும் என நினைத்துக்கொண்டு ‘புதுமனை புகுவிழா’ அழைப்பிதழ் கொடுக்கப் போகிற உறவினர்களின் ஊர்களில் கூட விசாரிக்க ஆரம்பித்தான். எல்லா ஊர்களிலுமே ஏமாற்றம் தான் மிஞ்சியது.

குழந்தைகளும் மனைவியும் கேட்ட செடிகளையெல்லாம் வாங்கி வந்து நட்டுவிட்ட கணேசனுக்கு பாட்டி மரம் மட்டும் கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. கிரகப் பிரவேசம் நெருங்க நெருங்க அவனுக்குள்ளிருந்த நம்பிக்கை தேயத் தொடங்கியது.

விசேசத்துக்கு முன் நாள். அதுவரை அழைப்பு கொடுக்காமல் விட்டுப்போனது கடைசி நேரத்தில் நினைவுக்கு வர… திருத்தணிக்குப் பக்கத்தில் கிழவனத்தில் இருக்கிற அவனது சின்னத் தாத்தாவின் பேத்தி பூங்கொடியின் வீட்டுக்கு அழைப்பிதழோடு ஓடினான் கணேசன். கணேசன் மீது பூங்டிகொடிக்குப் பாசம் அதிகம். அழைக்காமல் விட்டால் அவ்வளவுதான். கண்களில் பொலபொலவென கண்ணீர் உருள அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவனால் தாங்கவே முடியாது.

மற்ற வேலைகள் கெட்டாலும் பரவாயில்லை என்றுதான் கிளம்பி கிழவனம் போனான். அவளிடம் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பின்னாலேயே வரச் சொல்லிவிட்டுக் கிளம்பிய கணேசனை பிடிவாதமாக உட்கார வைத்து பொன்னி அரிசிச்சோறும், முருங்கைக்காய்ச் சாம்பாரும் பரிமாறினாள் லட்சுமி.

நேரம் பறக்கிற பதைபதைப்பில் ஏதோ பேசிக்கொண்டே ஒரு கை சோறள்ளி வாயில் வைத்தான். குழம்பின் ருசி நாக்கில் பட்டதுமே மூளைக்குள் பளீரென ஒரு மின்னலடித்தது. அதன் ருசி ஏற்கனவே பழக்கமானதாக தெரிந்தது. நெருங்கிய சொந்தத்தைப் பல ஆண்டுகள் கழித்துத் திடீரென பார்த்ததைப் போன்ற பரவச உணர்வு.

அவன் முக மாற்றத்தை கவனித்த லட்சுமி சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“நம்ப ஊர்லயிருந்து எட்த்தாந்து நட்ட மரத்துல காய்ச்ச முருங்க்காணா… மரம் ஊட்டுக்கு பின்னால நிக்கிது. நம்ப பாட்டிமா நட்டு வெச்சிருந்திச்சே ஊர்ல… அந்த மரம்தாங்…” என்றாள் சிரித்துக்கொண்டே.

துள்ளி எழுந்து எச்சில் கையோடு பின்பக்கம் ஓடினான். அதே மரம். அதே கீரை. அதே காய்கள். தலைக்குக் குளித்துவிட்டு முடியை விரித்துக் கோதிக்கொண்டு நிற்கிற அவன் பாட்டியைப்போல கிளைகளை விரித்துக் கொண்டு சாந்தமாக நின்றிருந்தது.

அப்பயே அந்த மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழவேண்டும்போல மனசு துடித்தது. எச்சில் கையாலேயே அடி மரத்தை ஆசையாகத் தடவிப்பார்த்தான். சுருக்கங்கள் விழுந்து கரடு முரடாக இருந்த மரத்தைத் தொட்டதும் அவன் பாட்டியின் கைகளைத் தொட்டது போல விரல்கள் சிலிர்த்தன. மனசு நனைந்தது.

பரவச நிலையிலேயே சாப்பிட்டு முடித்தபின் மரத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, அதிலிருந்து ஒரு சிறிய கிளையை வெட்டி எடுத்துக்கொண்டு உற்சாகமாகக் கிளம்பினான்.

முதல் வேளையாக புதிய வீட்டு வாசலில் ஆழமான குழி வெட்டி அதில் அந்தக் கிளையை நட்டான். விரல் முனைகளில்வைக்கப்படும் மருதாணி தொப்பியைப் போல வெட்டப்பட்ட கிளையின் முனையில் பசும் சாணம் வைத்து… குழியில் குளிரக் குளிரத் தண்ணீர் ஊற்றினான்.

கிரகப் பிரவெசம் முடிந்த மறுநாளே அந்த வீட்டுக்கு குடி வந்ததும் வசதியாகிவிட… அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு நாளும் அதன் முகத்தில் தான் விழித்தான்.

இரண்டு வாரங்கள் கழித்து அந்த ஞாயிற்றுக் கிழமையும் வழக்கம்போல தண்ணீர் குடத்தோடு அதைப் பார்க்கப் போனான். சூரியன் தலைகாட்டாத கீழ் வானம் வெற்றிலைச் சாற்றின் நிறத்திலிருக்க… கோட்டோவியமாய்த் தெரிந்த முருங்கைக் கிளையில் அப்பிவைத்திருந்த சாணத்திற்குக் கீழே வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு துளிர் விட்டிருந்தது. அதில் பச்சிளம் குழந்தையின் மூடிய கண் இமைகளைப்போல மூன்று சின்னஞ்சிறிய இலைகள்.

அப்போதுதான் பிறந்த குழந்தையை சற்றுத் தள்ளி நின்று தொடாமல் பார்த்து ரசிப்பதைப்போல… ஆசை தீர அதைப் பார்த்து ரசித்தான். மனசுத் துள்ள சட்டென்று வீட்டுக்குள் ஓடி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை உசுப்பி எழுப்பினான்.

“எழுந்திருங்க குட்டிங்களா… சீக்கிரமா எழுந்திருங்க… எங்க பாட்டியம்மா நம்ப வீட்டுக்கு வந்துட்டாங்க… வந்து பாருங்க….” என்று உற்சாகத்தோடு கூவினான்.

நிரம்பி வழியக் காத்திருக்கும் ஏரியைப் போல… மகிழ்ச்சியில் தளும்பத் தொடங்கியது அவன் மனம்.

****

முத்தொள்ளாயிரம் 3 – வளவதுரையன்

முத்தொள்ளாயிரம்—76

பேய் விளக்கயரும் பெற்றி
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி—எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம்

பேயெல்லாம் வெளக்கேத்தற பாட்டு இது. போர் கடுமையா நடக்குது. சோழனோட பையன்தான் சண்டை போடறான். எதித்த மன்னரோட கிரீடம் போட்டு இருக்கற தலையெல்லாம் ஒடையுது; மண்டை ஓடெல்லாம் வெள்ளையா கெடக்குது. எங்க பாத்தாலும் தலையிலேந்து வந்த மூளை சிதறிக் கெடக்குது. வயித்திலேந்து வெளி வந்த கொடலெல்லாம் கெடக்குது. இதப் பேயி பாத்துதுங்க. ஒடனே அதுங்க அதையெல்லாம் வச்சு வெளையாட நெனச்சுதுங்க; ஒடைஞ்ச மண்டை ஓட்டை அகலா வச்சு, அதுல மூளை எடுது நெய்யாக வச்சு. கொடலுங்களத் திரியாப் போட்டு வெளக்கேத்தி வெளையாடிச்சுங்களாம்.

இதை விடப் பயங்கரமாப் பேயிங்க செய்யறதைப் பாக்கணும்னா கலிங்கத்துப் பரணி படிக்கணும்.

முத்தொள்ளாயிரம்—77

ஊமன் பாராட்டல்
இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரிஇளஞ் செங்கால் குழவி–அரையீரலின்
ஊமன்பா ராட்ட உறங்கிற்றே செம்பியன்தன்
நாமம்பா ராட்டாதார் நாடு

[இரியல் மகளிர்=போர்க்களத்தில் ஊரிலிருந்து விலகிச் சென்ற பெண்கள்; இலைஞெமல்=இலைச்சருகு; வரிஇளஞ் செங்காற்குழவி=வரிகள் உள்ள செம்மையான காலை உடைய குழந்தை; ஊமன்=கூகை]

”தோழி! அன்னிக்கு அவங்கள்ளாம் நம்ம சோழனோட பேரைப் பத்திப் புகழ்ந்து பேசாம இருந்தாங்க இல்ல; அவங்களோட கதி இன்னிக்கு என்னாச்சு பாத்தியா? அவங்க நாட்டு மேல நம்ம படை எல்லாம் போச்சு; ஒடனே அந்த ஊர்ல இருந்த பொம்பளைங்க எல்லாம் ஊரை உட்டுட்டுப் போயி காட்டில போயித் தங்கிட்டாங்க; அந்தப் பொண்ணுங்கள்ள சில கர்ப்பிணிகளும் இருந்தங்க; அவங்களுக்கு எல்லாம் அங்க கொழந்தை பொறந்துடுச்சு; கொழந்தைகளைப் போடறதுக்கு ஒரு பாயி கூட இல்ல; கீழே நெறைய இலைங்களோட சருகெல்லாம் கெடந்துச்சு; அந்த சருகு மேலதான் கொழந்தைகளைப் போட்டாங்க; ஒரு நாள் நடு ராத்திரி; அந்தக் கொழந்தைங்கள்ளாம் அழுவுதுங்க; எல்லாருக்கும் ஒரே பயமாயிருக்குது; கொழந்தைகளைத் தூங்க வைக்க யாரு தாலாட்டுப்பாடறது? மரத்து மேல இருந்த கூகை அதாவது கோட்டான்னு வச்சுக்கலாம் இல்ல, ஆந்தைன்னு வச்சுக்கலாம்; அதுங்கதாம் கத்துதுங்க; அதுவே தாலாட்டு மாதிரி இருக்குது. அப்படி அதுங்க பாடற தாலாட்டுலதான் அந்தக் கொழந்தைங்க தூங்குதுங்க.

அதாவது சோழனப் பாராட்டதவங்க நாடு என்னாகும்றதை இப்பாட்டு நல்லா அழுகை வர்ற மாதிரி சொல்லுதாம்.

முத்தொள்ளாயிரம்—-78

நூறாயிரம்

பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவால்
முன்னர் அசைந்து முகுளிக்கும்—தன்னேர்
பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை
அரவிந்த நூறா யிரம்
[முகுளிக்கும்=குவியும்; பொரவந்த=போர் செய்ய வந்த; அரவிந்தம் தாமரை]

”தோழி! நம்ம சோழ அரசனோட பல அரசருங்க சண்டை போட வந்தாங்க; கிட்ட வந்து அவனோட படைகளையும் அவனையும் பாத்துட்டுப் பயந்துட்டாங்க; எல்லாரும் போயி அவனைக் கையெடுத்துக் கும்பிடறாங்க; எத்தனை பேரு தெரியுமா? நூறாயிரம் பேரு இருக்கும்; அப்படிக் கும்பிடறவங்கள்ளாம் அவங்க கையில கடகம் போட்டிருக்காங்க. அதாவது பொண்ணுங்க போடற வளையலு மாதிரி அது இருக்கும்; கொஞ்சம் தடிமலா இருக்கும். அவங்க கையெல்லாம் நல்லா செக்கச் செவந்து தாமரைப் பூப் போல இருக்குதுங்க. ஆனா அவை எல்லாம் பூக்காம குவியுதுங்க; தாமரைப் பூ எப்பவும் சூரியனைப் பாத்தாதான் மலரும். சந்திரனைப் பாத்தா குவிஞ்சுடும். நாட்டை ஆளற அந்த வேல் நிலவு போல குளிர்ச்சியானதாம். அதனோட குளிர்ச்சியால நூறாயிரம் தாமரைப் பூவும் பயந்து போயி குவிஞ்சு போச்சாம்”

முத்தொள்ளாயிரம்—79

தேரடிக்கூர் வெம்படை

போர்வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம்—–நீர்நாடன்
தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம் செங்கண்மால்
ஓரடிக்கீழ் வைத்த உலகு
[தேர்க்கால்”ஆழி; அதாவது ஆணை; திண்புயம்=வலிமையான தோள்]

இந்தப்பாட்டு சோழனை இகழ்ச்சியாப் பேசறமதிரி புகழற பாட்டு. அதாவது பெருமாளு ஒருகாலத்துல எந்தத் துன்பமுமில்லாம அவரோட காலடியால இந்த ஒலகத்தை அளந்தார் இல்லியா? அந்த ஒலகத்தைத்தான இப்ப அந்த சோழன் ஆளறான்னு ஒரு வீரன் அவனோட நண்பன்கிட்ட சொல்றான். அவனோட அரசன் இந்த ஒலகம்பூரா ஆளறான்னு அவன் பெருமையா சொல்றான்.
”நண்பா! நம்ம சோழனுக்கே நீர்நாடன்னு பேரு; அவன் எந்த ஒலகத்தை ஆளறான் தெரியுமா?போர் செய்யற வேலால எதிரிங்களை வென்றதும், இன்னும் நெறைய புகழ் அடைஞ்சவருமான, மாலையெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கற பலமான தோள்கள் இருக்கறவருமான, தேர்க்கால்னு பேரு வச்சிருக்கற சக்கரத்தால காப்பத்தறவருமான, செவந்த கண்ணொட இருக்கற பெருமாளு அவரோட காலோட ஓரடியால அடக்கிக் கீழே வச்ச ஒலகத்தைத்தானே”
இதான் இந்தப் பாட்டோட பொருளாம்.

முத்தொள்ளாயிரம்—80

தளைபட்ட தாள்

ஏங்கா முகில் பொழியா நாளும் புனல்தேங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா—நீங்கா
வளைபட்ட தாளணிகள் மாறெதிர்ந்த தென்னர்
தனைபட்ட தட்டா மரை.
[ஏங்கா=ஏங்கி; மாறி=பகை; தளை விலங்கு; மதமா=மதமுள்ள யானைகள்; தாளணிகள்=காலணிகள்; வளைபட்ட=வளைத்திடப்பட்டன; தாள்தாமரை=கால்களாகிய தாமரை; தளைபட்ட=விலங்கிடப்பட்டன]

இந்தப் பாட்டும் சோழனோட வீரத்தைப் பத்திதான் சொல்லுது.
அவன் ஒரு நாட்டு மேல படையெடுக்கணும்னு நெனச்சா அவனோட யானைப் படையில இருக்கற யானைகளுக்கு எல்லாம் கால்கள்ள வீரக் கழல் போடுவாங்களாம்; அதை அதுங்களுக்குப் போட்ட ஒடனேயே அவனோட எதிரிங்களோட காலுக்கெல்லாம் விலங்கு போட்ட மாதிரி ஆயிடுச்சாம்.

”நண்பா! மானமே மழை பெய்யாட்டா கூட தண்ணிவளம் கொறையாத நாடு நம்ம சோழனது. அவன் சண்டைக்கு யானைகளைத் தயார் செய்யச்சே அதுங்களோட காலுக்கெல்லாம் வீரக் கழல் பூட்டுவாங்களாம்; அதைப் பூட்டின ஒடனேயே அவனோட எதிரிங்களோட தாமரைபோல இருக்கற காலுக்கெல்லாம் விலங்கு பூட்டின மாதிரி ஆயிடுச்சாம்.

முத்தொள்ளாயிரம்—81

பொருள்நசையால் பாரா

செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம்
பெருமான் முகங்கண்ட பின்னர்—ஒருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையாற் பாராவாம்
காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்.
[செரு=போர்; மானவேல்=வெற்றிதரும் வேல்; தென்னுறந்தை=தெற்கே உள்ள உறந்தை;
நசை =ஆசை]

சோழ மன்னனை நமக்குப் பொருள் வேணும்ற நெனப்போட பாத்தாலே போதுமாம். கேக்கக் கூட வேண்டாமாம். ஒடனே நமக்கு அவன் வேணும்ற அளவுக்குப் பொருள் தருவானாம். அதவது வேற எவர்கிட்டயும் போய்க் கேக்க வேணாத அளவுக்குத் தருவானாம். அதால அவனைப் பாத்த கண்ணுங்க வேற எவரையும் பொருள் வேணும்ற நெனப்போட பாக்காதாம்.

”நண்பா! பொருள் வேணும்ற நெனப்போட தாழ்ந்துபோயிப் பாக்கறவங்களோட கண்ணுங்க, ’சென்னி’ன்ற பேரோட இருக்கற, தெற்க இருக்கற ஒறையூர்ல வாழற சோழ அரசனோட மொகத்த பாத்ததக்கு அப்புறம் ஒருநாள் கூட இந்த ஒலகத்துல பொருள் வேணும்னு யாரையும் பாக்காதாம்”. இதான் இந்தப் பாட்டோட பொருளாம்.

முத்தொள்ளாயிரம்—82

இரேவதித் திருநாள்

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார்—எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு
[சிலம்பி=சிலந்தி]

இலை போல வேல் வச்சிருக்கற சோழ அரசனுக்குப் பொறந்த நாளு வருது. அதுக்காக மக்கள் எல்லாரும் அவங்க அவங்க ஊட்டை எல்லாம் சுத்தமாக்கறாங்க; ஒட்டடை அடிக்கறாங்க; சிலந்தி கூட்டை எல்லாம் கலைக்கறாங்க; செவுத்துக்கெல்லாம் சுண்ணாம்பு அடிக்கறாங்க; அரசன் பொறந்த நட்சத்திரம் இரேவதி. அந்த இரேவதித் திருநாளில் அரசன் எல்லாருக்கும் பரிசு அளிக்கறான். அந்தணர்கள் பசுமாடுகள் பொன்னெல்லாம் வாங்கிக்கறாங்க; நாவன்மை இருக்கர புலவரெல்லாம் மலையளவுக்குப் பெரிசான யானை வாங்கிக்கறாங்க; எல்லாரும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கறாங்க; ஆனா பாருங்க தன் கூட்டை இழந்த சிலந்தி மட்டும் வருத்தமா இருக்குதுங்க; அதைத்தான் இந்தப்பாட்டு சிலம்பி தன் கூடிழந்தவாறுன்னு சொல்லுது.

முத்தொள்ளாயிரம்—83

அறிவரிதாய் நிற்கும்

கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்
என்றும் வறிஞர் இனங்கவர்ந்தும்—ஒன்றும்
அறிவரிதாய் நிற்கும் அளவினதாய் அம்ம
செறிகதிர்வேல் சென்னி திரு
[கன்றும்=மனம் மாறுபட்ட; வய வேந்தர்=வலிய மன்னர்; வறிஞர்=ஏழைகள்; செறிகதிர் வேல்=நிறைந்த ஒளி உள்ள வேல்]

தலைவி தன் தோழிகிட்ட சொல்ற பாட்டு இது. இந்தப் பாட்டுல அவ அரசனோட கொடை, வீரம், செல்வம் எல்லாம் சொல்றா. அவ சொல்ற மாதிரியே பாக்கலாம்.

”தோழி! நல்லா ஒளியோட இருக்கற வேலு வச்சிருக்கற சோழ அரசன் இருக்கானே; அவன் செல்வம் நாளுக்கு நாள் அவனோட வெற்றியால வளருது; அதை ஏழைங்க தாமே வந்து எடுத்துக்கிட்டுப் போறாங்க; அதால அது கொறையுது; தெனம் இதே மாதிரி நடக்கறதால அந்தப் பணத்தை அளந்து கணக்கிடவே முடியல”.

முத்தொள்ளாயிரம்—84

படை வீரமோ கொடை வீரமோ
சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட் டுயர்துலைதான் ஏறினான்—- நேர்ந்த
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோசென்னி பண்பு

”இதைக் கேளுடா ஒருகாலத்துல ஒரு புறாவொட எடைக்காக தன் ஒடம்புத் தசையையே தராசுத் தட்டில அறுத்து வச்சான்; ஆனாலும் தட்டு நேரா நிக்காததால தானே போய் ஏறி ஒக்காந்தானாம். ஒடம்பை அறுக்கும்போது வச்ச பொறுமையும், அதைக் குடுத்த கொடையும், நாம அவ்னோட கொடை வீரம்னு சொல்லலாமா: இல்ல, படை வீரம்னு சொல்ல்லாமா? இரண்டும் இல்ல இது அவனுக்கு எப்பவுமே இருக்கற ஒரு சாதரண தன்மைதான்”
சிபின்ற சோழன் எப்பவோ செஞ்சதை அந்தப் பரம்பரையில வந்ததால இவனுக்குச் சொல்றாங்க; அத்தோட இதே வரலாற்றைக் கம்பரும், “புறவொன்றின் பொருட்டால் யாக்கை புண்ணுற அரிந்த புத்தேள்” னு சொல்லுவார்.

முத்தொள்ளாயிரம்-85

கைக்கிளை

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடிற் பெரிதாம் ஏதம்—உறந்தையர்கோன்
தண்ணார மார்பில் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு

சோழ அரசன் குதிரை மேல ஊர்வலம் வரான். ஏற்கனவே அவனைப் பாத்துக் காதலித்து மனத்தைக் கொடுத்த பொண்ணுங்க மறுபடியும் பாத்தா அவங்களுக்குத் தீமை வந்துடும்னு அவனைப் பாக்கவிடாம கதவை எல்லாம் அடைச்சுட்டாங்க; ஆனா செவிலித்தாய்ங்க சொல்றாங்க, “கதவைத் திறந்துவிடுங்க; அதால் தீமை வந்தா அப்பறம் பாக்கலாம். அதைப் போக்கிக் கொள்ளலாம்; ஆனா கதவை அடைச்சு வச்சு அதால உள்ள இருக்கற பொண்ணுங்க செத்துப் போயிட்டா பொண்ணைச் சாகடிச்ச பாவம் வந்து சேரும்” அதால அந்தப் பொண்ணுங்க கண்ணாரப் பாக்கட்டும் கதவைத் தெறந்து உடுங்கன்னு இந்தப் பாட்டுல சொல்லப்படுது.

முத்தொள்ளாயிரம்—86

நீணிலத் தார்வளவ னின்மேலா னாகவும்
நாணிண்மை யின்றி நடத்தியால்—நீணிலங்
கண்டன்ன கொண்டல் வருங்கா விரிநாட்டுப்
பெண்டன்மை இல்லை பிடி
[நீலம்=குவளைப் பூ; தார்=மாலை; பிடி=பெண் யானை]

ஒரு பெண்யானை மேல ஏறி சோழன் வரான்; அப்ப ஒரு பொண்ணு அவனைப் பாக்கறா;
அவ அந்த யானையை பாத்துக் கேக்கற மாதிரி இந்தப் பாட்டு இருக்குது.

பெண்யானையே! நீலப்பூக்களான குவளைப் பூவெல்லாம் வச்சுக் கட்டி இருக்கற மாலையைப் போட்டிருக்கற சோழன் ஒன் மேல ஏறி வரான். நீ கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம நடந்து போறயே! இது சரியா? இந்தக் காவிரி நாட்டுக் கொளத்துல அதிகமா பரந்துப் பூத்து இருக்கற நீலமலரைப் போல மேகமெல்லாம் இருக்கும்; இந்த நாட்டின் பொண்ணுங்களுக்கு இருக்கற பெண்தன்மை ஒனக்கு இல்லையே! இந்த நாட்டுப் பொண்ணுங்க பெய்யின்னா மழை பெய்யும்; அதாலதான் இந்த நாட்டுல நீர்வளம் இருக்கு;

அப்படிப்பட்ட நாட்டுல இருக்கற நீ இந்த நாட்டுப் பொண்ணுங்களுக்கு ஏத்த படிக்கு நடக்க வேண்டாமா?”

அந்தப் பெண்யானை ரொம்ப வேகமாப் போகுதாம்; அது கொஞ்சம் மெதுவாப் போனா இவ சோழனோட அழகை இன்னும் கொஞ்ச நேரம் பாக்கலாமாம்; அதாலதான் அந்த யானையைப் பழிச்சுப் பேசறா.
முத்தொள்ளாயிரம்—87
வலையில் கயல்போல்
சுடரிலைவேல் சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத்—தொடர்புடைய
நீல வலையில் கயல்போல் பிறழுமே
சாலேக வாயில்தொறும் கண்
[பாடகம்-சோழனது குதிரை; கயல்=கெண்டை; சாலேகம்=சன்னல்]

சோழன் வீதியிலே உலா வரான்; சிறந்த அவனோட குதிரை மேல வரான்; கையில நல்ல ஒளி மின்னறதும் இலை போல இருக்கறதுமான வேலு வச்சிருக்கறான்; அழகான பச்சையான வளையலு எல்லாம் போட்டு இருக்கற பொண்ணுங்க எல்லாம் பாக்கற மாதிரி வீதியில வரான்; ஒவொரு ஊட்டிலும் இருக்கற சன்னலுங்க வழியா பொண்ணுங்க எல்லாரும் நல்லாப் பாக்கறாங்க; அப்ப அவங்க கண்ணு எப்படி இருக்கு தெரியுமா? மீனுங்க வலையில மாட்டிக்கிட்டா எப்படி அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்குமோ அப்படிப் பிறழுகின்றன. சோழனோட அழகான நீர்க்குளத்தில பொய் விழுவோமான்னுத் துள்ளிக் குதிக்குதாம்.

முத்தொள்ளாயிரம்—88

கண்டன உண்கண் கலந்தன நன்னெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்—-கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்[கு]
எலாஅ முறைகிடந்த வாறு
[உண்கண்= மை பூசப்பட்ட கண்; தட=பெரிய; எலாஅ=எல்லா]

சோழ மன்னனைப் பார்த்த ஒருத்தித் தன் தோழிக்கிட்ட சொல்றா.
”அன்னிக்கு ஒரு நாளு வளவன் நம்ம வீதியில உலா வந்தான். அப்ப எம் மனசும், மை தீட்டிய கண்களும் அவனை நல்லாப் பாத்தன. அதுமட்டும் இல்லடி; அவனோடயே போய் ரெண்டும் கலந்திடுச்சுங்க; சரி. இது குற்றந்தாம்; அதுக்கு அதுங்க ரெண்டையும் தானே தண்டிக்கணும்; அதுங்களை உட்டுட்டு ஏன் மெலிசா இருக்கற என் தோளு ரெண்டையும் தண்டிக்கணும்; ஐயோ பாவம்டி; தோளு ரெண்டும் ஒரு குத்தமும் செய்யலயே! அப்படி இருக்கச்சே அதுங்களைத் தண்டிக்கலாமா? இது முறையா? அவன் உலா வர்ற அளவுக்கு அகலமாயும். பரந்தும் இருக்கற இந்த உறையூர்ல இந்த சோழனுக்கு முறையில்லாதன எல்லாம் முறையாப் பொருந்துதடி; நீயே பாரு; நான் சொல்ல என்னா இருக்கு? இப்படி அவன் செய்யற முறைகேட்டுக்கு நா என்ன செய்யறது?”

அதாவது குத்தம் செய்யறவங்களை உட்டுட்டு குத்தமே செய்யதவங்களைத் தண்டிச்சுட்டானாம் சோழன். ஆன அவன் எது செஞ்சாலும் அதான் முறையாம்; இந்த ஒலகமே அவன் செய்யறது எல்லாம் முறைன்னு சொல்லுது. இதால அவ மறைவா சோழனுடைய நீதிமுறையைச் சொல்றா; பழிப்பது போலப் புகழறா அவ.

முத்தொள்ளாயிரம்—89

நாணும் நலனும்

என்நெஞ்சு நாணும் நலனும் இவைஎல்லாம்
மன்னன் புனனாடன் வௌவினான்-என்னே
அரவகல் அல்குலாய் ஆறில்ஒன்[று அன்றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்
[புரவலர்=அரசர்; புனல் நாடு=காவிரி பாயும் சோழ நாடு]

இதுவும் தோழிகிட்ட அவ சொல்ற பாட்டுதான்;
மொதல்ல தோழியை அவ வர்ணிச்சு சொல்றா.
“பாம்போட அகலமா படம் போல தொடையோட மேற்புறம் அழகா அமைஞ்சிருக்கற தோழியே! அரசன்லாம் மக்கள்கிட்ட ஆறில் ஒரு பங்குதான வரியா எடுத்துக்கணும்; ஆனா காவிரி பாயற நம்ம சோழ நாட்டு மன்னன் என்னோட மனசு, வெக்கம், அழகும் எல்லாத்தயும் எடுத்துக்கிட்டானே! இது சரியா? முறைகேடா இருக்குதே! நான் என்னா செய்யறது?

முத்தொள்ளாயிரம்—90

பொங்கோதம் போழும்

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன்விலக்கு நாணும்—இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்பச் சென்று
[வங்கம்=கப்பல்; பொங்கோதம்=பொங்குகின்ற கடல்; போழ்தல்=பிளத்தல்; புகார்=காவிரிப்பூம்பட்டினம்]

அவ தன் தோழிகிட்ட பொலம்புறா
“ஏண்டி, அந்த சோழ அரசனக் கண்ணால பாத்தாலயாவது என் கலக்கம் தீரும்னு நெனச்சேன்; அவனும் என் கனவுல வந்தான்; அப்ப என்னாச்சு தெரியுமா? என் கண்ணு ரெண்டு பாக்காம மூடிக்கிச்சு; அப்பறம் ஒருநாளு அவன் தெருவுல உலா வந்தான். அப்ப நேரே பாத்திருக்கலாம்தான்; ஆனா வெக்கம் வந்து அதால என்கண்னு மூடிக்கிச்சு; நெறைய கப்பல்கள் அலைகளை எல்லாம் கிழிச்சுக்கிட்டுப் போற காவிரிப்பூம்பட்டினத்துக்கு மன்னன்டி அவன்; அவனுடைய ஆட்சியில செங்கோல் தவறாது; குத்தம் எதுவும் நடக்காதுன்னு சொல்றாங்க எல்லாரும்; ஆனா இந்தக் கண்ணும் வெக்கமும் இப்படிக் குத்தம் செஞ்சுபோட்டு அவனைப் பாக்க முடியாம என்னை செஞ்சிடுத்துங்களே! என்னாடி செய்வேன்?”

முத்தொள்ளாயிரம்—91

வண்தடக்கை

தானைகொண் டோடுவ தாயிற்றன் செங்கோன்மை
சேனை அறியக் கிளவேனோ—யானை
பிடிவீசும் வண்டடக்கைப் பெய்தண்டார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது
[தானை=ஆடை; பிடி=பெண்யானை; வண்தடக்கை=வள்ளல் தன்மையுள்ள பெரிய கை; பெய்தந்தார்=மலர்கள் மிகுதியாக வைத்துக் கட்டப்பட்ட குளிர்ந்த மாலை;கிள்ளி சோழன்]
இந்தப்பாட்டை அவ அவளோட தோழிகிட்ட சொன்ன மாதிரியும் வச்சுக்கலாம். இல்லை, தன் மனசுகிட்ட சொன்ன மாதிரியும் வச்சுக்கலாம்.

தோழீ! இதைக் கேளு, இந்தச் சோழன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவன் வந்து பரிசு கேக்கறவங்களுக்கு ஆண்யானையும், பெண்யானையும் தந்து அனுப்புவானாம். அவன் கிட்ட அப்படி குடுக்கற பெரிய கையிருக்கு; ஆனா அவன்கிட்ட சரியான முறையில்லடி. என்னா செய்தான் தெரியுமா? கனவுல வந்து என் ஆடையெல்லாம் கவர்ந்து போய்ட்டாண்டி; அப்படி செஞ்சு என் பெருமை அழிச்சிட்டானே; நாளைக்கு நாம தெருவுல உலா வருவான்ல; அப்ப எல்லார் முன்னாலயும் அவன் சேனையெல்லாம் கேக்கற மாதிரி நான் அவன் செஞ்ச அந்தச் செயலை சொல்லாமலா விடுவேன்? சொல்லத்தான் போறேன்.

கனவுல வந்து அவன் என் பெருமையைக் குலைச்சான்; நான் நனவுல எல்லார் முன்னாலையும் அவன் பெருமையை குலைக்காமல் இருப்பேனா?”

முத்தொள்ளாயிரம்—92

காவானோ?

தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன்
மண்ணகங் காவலனே என்பால்—மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்
[மண்ணகம்=மண்ணுலகம்; காவலன்=அரசன்; கோவலர்=ஆயர்]

அவ அவளோட நெஞ்சுகிட்ட சொல்ற பாட்டு இது
”ஏ நெஞ்சே! நல்லா தெளிஞ்சிருக்கற தண்ணியிலேந்து கொண்டுவந்த மாலையால கட்டின மாலை போட்டிருக்கற இளமையான சோழன் இந்தப் பூமியெல்லாம் காக்கறதுல வல்லவன்தான்னு எல்லாரும் சொல்றங்களே! அப்படி அவன் இந்தப் பூமியைக் காக்கறதுல வல்லவனாய் இருந்தா இதோ இந்தக் கொடுமையான மாலையில் அதோ அங்க இந்த ஆயரெல்லாம் அவங்க வாயில வச்சுக் குழல் ஊதுறாங்களே! அது என்னைக் கொல்லாம காக்க மாட்டானோ?”

குழல் ஊதறதைக் கேக்கறதுக்கு இன்பமாத்தான் இருக்கும் ஆனா அவ அவளோட தலைவனைப் பிரிஞ்சிருக்கா; அதால அந்த ஓசை அவளுக்குத் துன்பமாய் இருக்காம்.
”அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை”
இந்தக் குறளை இங்கப் பொருத்திப் பாக்காலாம்.

முத்தொள்ளாயிரம்—93

அணிவளையே சொல்லாதோ?

அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பால் தோழி—இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு
[அலங்குதார்=அங்கும் இங்கும் அசைகின்ற மாலை; செந்நின்றவாறு=செம்மையாக நிற்கும் நெறி]

இந்தப் பாட்டும் சோழனைப் பழிப்பது போல அவ தன் காதலை வெளிப்படுத்தற பாட்டுதான்.

”தோழீ! அதோ சோழன் வர்றான்; எல்லாரும் வெலகிப் போங்கன்னு பறையறிவிக்கிறாங்க; அதுக்குப் பின்னால மதம்புடிச்ச யானைப்படைகளையும், நல்லா அசையற மாலைகளயும் போட்டுக்கிட்டு வர்ற அந்தச் சோழ மன்னன் நல்லா முறையா நடக்கறான்னு எல்லாரும் சொல்றாங்க; அப்படியா அவன் நடக்கறான். இதோ இந்தக் கையில இருக்கற வளையெல்லாமே அவன் முறையைச் சொல்லுமே?”

அதாவது அவன் அவளோட மனசு, வெக்கம், அழகு, கைவளை எல்லாத்தயும் எடுத்துக்கிட்டுப் போயிட்டான். இதுதான் அவன் செய்ற முறையான்னு கேக்கறா?

முத்தொள்ளாயிரம்—95

களிமயங்கிக் காணேன்

புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாணிநிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் —நிலவியசீர்
மண்ணாளும் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு
[புலவி=ஊடல்; புறங்கொடுப்பன்=புறங்காட்டி நிற்பேன்; கலவி=கூடல்]
ஒருத்தி அவளோட தலைவிகிட்டப்போயி, “நீ உன்னோட தலைவனான சோழனை கண்ணாரப் பாத்திருக்கிறாயா”ன்னு கேக்கறா? அதுக்கு அவ பதிலா சொல்ற பாட்டு இது.

”தோழீ! நான் எங்கடி அவனைப் பாத்தேன்? அவனோட செல்லமா கோபிச்சுக்கிட்டு ஊடலா இருக்கறபோது நான் வேறபுறமா திரும்பி நிப்பேன். அவன் வந்து என்னைக் கட்டித் தழுவும்போது வெக்கத்தால குனிஞ்சு நிப்பேன்; கூடி ஒண்ணா இருக்கற காலத்தில அந்த இன்பத்துலயே மயங்கிக் கிடப்பேன். அதால நான் எப்பவுமே அவனைச் சரியா பாத்ததில்லடி”

முத்தொள்ளாயிரம்—96

கரையுரிஞ்சி மீன்பிறழும்

செங்கான் மடநாராய்! தென்னுறந்தை சேறியேல்
நின்கான்மேல் வைப்பனென் கையிரண்டும்—நன்பால்
கரையுரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்[கு]
உரையாயோ யானுற்ற நோய்
[சேறியேல்=செல்லுதியேல்; தென்னுறந்தை= தெற்கே உள்ள உறையூர்]

அவ சோழனை நெனச்சுக்கிட்டுத் தனியா கெடக்கறா; அப்ப அங்க ஒரு நாரை வருது; அதுகிட்ட நீ போயி எனக்கு வந்திருக்கற இந்தக் காதல் நோயைச் சொல்லுன்னு கேக்கற பாட்டு இது.
”செவந்த கால் இருக்கற நாரையே! ஒன் கால்மேல என் கையைவச்சுக் கெஞ்சிக் கேக்கறேன். நீ தெக்கே இருக்கற ஒறையூருக்குப் போனா அங்க வயல்லாம் நெறைய இருக்கற எடத்துல காவிரி ஆறு ஓடிவருது. அதனோட கரையெல்லாம் உராயறபடி மீனுங்க நெறய வரும். அந்தக் காவிரி நாட்டைச் சேந்தவன்கிட்ட என் காதல் நோயைச் சொல்லமாட்டாயா?’

நாரைக்கு நீ போற எடத்துல நெறைய மீனு இருக்கும்னு ஆசை காட்டறது ரொம்ப நல்லா இருக்கு

முத்தொள்ளாயிரம்–97

மாமருட்டி

குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை பெறுகின்றாள் என்அன்னை—-அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த்
துளங்குநீர் மாமருட்டி அற்று
[குதலைப் பருவம்=இளம்பருவம்; கோழிக்கோமான்=சோழ மன்னன்; வதுவை=திருமணம்; வியன்கானல்=அகன்ற பாலைவனம்; வெண்டேர்=பேய்த்தேர்; அதாவது கானல்நீர்]

சோழ அரசன் மீது அவ காதல வச்சுட்டா. அப்ப அவ தன் மனசுகிட்ட சொல்ற பாட்டு இது.

”ஏ மனசே! ஒனக்குத் தெரியுமா? சின்ன வயசுல அதாவது எளமப் பருவத்தில நான் இருக்கச்சே என் அம்மா என்னா சொல்வா தெரியுமா? “நீ ஒறையூரை ஆளற சோழ மன்னனைத்தான் கட்டிக்கப் போற” ன்னுவா. ஆனா இப்ப நான் பெரிய பொண்ணா ஆயிட்டேன். அம்மா மாறிட்டா. அந்த சோழனை நான் பாக்கவே கூடாதுன்னு சொல்றா . தண்ணியே இல்லாத பாலை நெலத்துல கானல் நீர் அதாவது தண்ணி போலத் தெரியற எடம் இருக்கும். அங்க போயித் தண்ணி குடிக்கலாம்னு நெனச்சு வெலங்கெல்லாம் போயிப் பாத்தா வெரும் வெட்ட வெளிதான் இருக்கும். அதுபோல மயங்கின நெலயில்தான் நான் இப்ப இருக்கேன்”

அம்மா அப்ப சொன்னதை அவ நம்பி இருந்தா; ஆனா இப்ப அம்மா அவனப் பாக்கவே கூடாதுன்னு சொல்றதால கானல் நீரை நம்பின கதையாப்போச்சேனு சொல்றா.

முத்தொள்ளாயிரம்-98

நீர்மேல் நெருப்பு

அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி
விலங்கியான் வேண்டா எனினும்—நலம்தொலைந்து
பீர்மேல் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மேல் எழுந்த நெருப்பு
[அலங்குதார்=அங்கும் இங்கும் அசையும் மாலை; பீர்=பீர்க்கம் பூ நிறத்தைப் போன்ற பசலை நிறம்; விலங்கி=குறுக்கிட்டு]

அந்தப் பொண்ண வளத்த செவிலித் தாய் தன் மனசுகிட்ட சொல்லிக்கிற பாட்டு இது.
“ஏ மனசே! நான் ஓடிப் போய் குறுக்க நின்னுக்கிட்டு, வேணாண்டி, போய்ப் பாக்க வேணாம்னு சொன்னதையும் கேக்காம அவ போயிப் பாத்தா. அங்கயும் இங்கயும் அசைஞ்சிகிட்டே இருக்கற ஆத்தி மாலையைப் போட்டிருக்கற அந்த சோழனோட அழகான தோளைப் பாத்தா; அதால அவன் மேல காதல் வச்சா; அந்தக் காதலால அவளோட அழகெல்லாம் போயிடுச்சு; அவ ஒடம்பு முழுசும் பீர்க்கம் பூவோட நெறமான பசலை வந்திடுச்சு; நான் சொன்னதைக் கேக்கல; என் வாயால நான் சொன்ன சொல்லு தண்ணி மேல திரிவச்சுப் பத்த வச்ச நெருப்பு போல ஆயிடுச்சே”

செவிலித்தாய் இந்த வயசிலும் அவன் தோள் அழகாயிருக்குதுன்னு சொல்றா; அப்ப அவன் எவ்வளவு அழகு!

முத்தொள்ளாயிரம்—99

பாளையில் தேன் தொடுக்கும்

ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉங்
கூடல் இழைத்தேன் கொடியன்னாய்—நீடெங்கின்
பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுள் பெற்று
[அலர்தல்=விரிதல்; அதாவது அளவுகடந்து பரத்தல்]

இது அவ தன் தோழிகிட்டச் சொல்ற பாட்டாகும்.
“பூங்கொடி போல இருக்கற என் தோழியே! சோழன் எப்படிப்பட்டவன் தெரியுமா?

அவன் நாட்டுல இருக்கற மரத்துல தென்னம்பாளையில் தேனீக்கள் எல்லாம் தேனடையைச் சேத்து வைத்திருக்கும். அந்த அளவுக்கு அந்தத் தென்னை மரத்துக்குத் தண்ணி பாய்ந்து ஓடும். அப்படி வளமா இருக்கற நாட்டை ஆளறவன்டி சோழன். அந்தச் சோழன் என் கனவுல வந்தான்டி. கட்டிப் புடிச்சாண்டி, எல்லாம் முடிஞ்சு ஒண்ணா சேர இருக்கயில திடீர்னு எங்களுக்குள்ள ஊடல் வந்திருச்சுடி; அதுவும் ரொம்ப நேரம் நீடிச்சே இருந்துட்டுதுடி, அதால அவன் என்னோட கூடறதே இல்லாம போயிட்டுதுடி நான் என்ன செய்வேன்?”

முத்தொள்ளாயிரம்—100

திரிதரும் பேரும்

நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற—யாமத்[து
இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு
[வாங்க=இழுக்க; நலன்=காதல் நலன்; கவற்ற=கவலையை உண்டாக்க]

சோழன் உலாவரச்சே ஒருத்தி அவனைப் பாக்கப் போறா; ஆனா அவள வெக்கம் வந்து தடுக்குது; அதால திரும்பி ஊட்டுக்குள்ளப் போறா; அப்ப அவ அவளோட மனசுகிட்ட சொல்ற பாட்டு இது

”ஏ மனமே! சோழனைப் பாக்கணும்னு நெனச்சு என மனசு தெருக்கதவுகிட்டப் போகுது; ஆனா பாரு அப்ப என் பின்னாடியே வர்ற வெக்கம் குறுக்க வந்து தடுக்குது. அது என்ன ஊட்டுக்குள இழுக்குது. ஆனா மறுபடியும் அந்தச் சோழன் மேல நான் வச்சிருக்கற காதல் மனசைப் போகச்சொல்லுது. இப்படி எனக்குச் சோழனோட என் கண்ணும் சேந்து அவனைப் பாக்கணும்னு கவலைதான் உண்டாகுது. என் மனமோ போகுது; திரும்பி வருது; எறும்பு ஒண்ணு ரெண்டு பக்கமும் நெருப்பு உள்ள கொள்ளிக்கட்ட நடுவில மாட்டிக்கிட்டமாதிரி திரியுதடி”

இதே மாதிரி திருவாசகத்திலும் வருதுங்க.
”இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய்”

திருமங்கையாழ்வாரும் இதேபோல பாடியிருக்கார் பாருங்க.
”இருபாடெரி கொள்ளியினுள் எறும்பேபோல்
உருகாநிற்கும் என்னுள்ளம் ஊழிமுதல்வா”
அகநாnனூற்றில் நரைமுடித்தலையார் பாடல் ஒண்ணு இதேமாதிரி இருக்குது.

”இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றன
நோங்கள் அளியள் தானே யாக்கைக்கு…”

***

ஈவா ( சிறுகதை ) / ச. விசயலட்சுமி

சூரியன் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.வெயில் கொஞ்சம் அதிகம்தான்.சன்னலோர வேப்பமரத்துக்காற்று அவ்வப்போது உடலில் பட்டது .மரங்கள் குளிர்ச்சாதனப் பெட்டிகளை ஒளித்து வைத்திருக்கிறதோ…அழைப்பு மணியின் ஓசை கேட்டது. அம்மா கதவைத்திறந்து தபாலை வாங்கி பிரித்துப் படித்தபடியே வந்தாள்.வக்கீல் நோட்டிஸ் எனப் புரிந்து கொண்ட அம்மா பதறினாள்.என்னடி இது விவாகரத்துனு போட்டுருக்கு நீ லீவுக்குதான் வந்திருக்கேன்னு பார்த்தா இதென்னடி கூத்து வெளிய தெரிஞ்சா வெக்கக் கேடு மாப்பிள்ளையக் கூப்பிட்டு நான் பேசுறேன்மா இதுவரைக்கும் சண்டை சச்சரவுண்ணு எதுவும் வந்ததில்ல . அப்புறம் ஏண்டி இப்படி கோர்ட்டுக்கு போற முடிவு எனக்கு பேசக்கூட முடியல …ஒரே மூச்சில் பேசி விட்டு படபடப்பாக அமர்ந்தாள். மின் விசிறியைப்போட்டு விட்டேன்.

அம்மா இதை நான் பாத்துகறேன் . மூளையப்போட்டு குழப்பிக்காதிங்க. அது அப்படிதாம்மா பெருசா சண்ட போட்டாதான் பிரியனும்னு யார் சொன்னா சின்ன சண்டை கருத்துவேறுபாடு கூடபோதும்மா…வெளிநாட்டுல என்னடான்னா குறட்ட விடற கணவனைக் கூட விவாகரத்து பன்றாங்க, இங்க எவ்வளவு பிரச்சனைன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்னு சொல்றீங்க.இரண்டுபேர் வாழ்க்கையையும் தொடர விடாம சமாதானம், ஊர், உலகம்னு பேசியே வீணாக்கறிங்க. பிளாஸ்டிக் குடத்த பத்தவச்சி ஒட்டவைக்கலாம்மா. ஆனா கண்ணாடி டம்ளர் உடஞ்சா தூக்கித்தான போடறோம்…

என்ன நடந்தது எனக் கேட்டுக்கொள்ளும் பொறுமையையும் இழந்துவிட்டாள் அம்மா. நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. சமாதானப் படுத்த முயன்றாலும் அம்மா சமாதானமடையவில்லை. பூஜை அறைக்குச் சென்று அங்கிருந்த அத்தனை சாமிகளையும் கும்பிட்டாள். அழுது புலம்பினாள். அவளை அப்படிப் பார்க்கவே பிடிக்கவில்லை. நான் பேசப்பேச அப்பாகிட்ட இன்னும் சொல்லலயே என ஃபோனைக் கையிலெடுத்தவளைத் தடுத்தேன். ஏம்மா இப்படி அவசரப்படுற எனக் கடிந்துகொண்டேன். வெளியபோன மனுஷன் வீட்டுக்கு வரட்டும்னு பேசேம்மா ஏன் இப்படி அவரையும் டென்ஷனாக்க நினைக்கற என்றதும் ஓவென்று இனம்புரியாமல் அழுதாள். அம்மாவுக்கு புரிய வைக்க முயற்சி செய்தாலும் அவளால் உள்வாங்க முடியாது. அம்மா இப்படி உணர்ச்சி வசப்படுவாள் என் தரப்பில் சொல்வதைக்காட்டிலும் சேர்ந்து வாழனும் என நினைப்பாள். எல்லாம் தெரிஞ்சவமாதிரி வக்கனையா பேசு இப்படி வாழத்தெரியாம இருக்கியேடி எனத் தேம்பினாள்.

அம்மா வாழத்தெரியலன்னு சொல்றயேம்மா வாழறதுன்னா என்ன? முழுக்க முழுக்க நான் என்னை மாத்திக்கறதா? அம்மா கல்யாணம் என்பது இரண்டுபேரும் புரிஞ்சிகிட்டு வாழறதுமா. கணவனுக்கு என்னபிடிக்கும்னு மனைவிக்கு தெரியறது போல மனைவிக்கு பிடிச்சது பிடிக்காதது கணவனுக்கும் தெரியனும். இரண்டுபேரும் பரஸ்பரம் பேசி திட்டமிட்டு வாழனும்மா. ஒருத்தருக்கு பிடிச்சபடி எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வாழறதுக்கு பேரு வாழத்தெரிஞ்ச வாழ்க்கையா? ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் அதிகாரத்துக்கு பணியறத நான் ஏத்துக்க மாட்டேன். விட்டுக் கொடுத்து வாழறது, புரிஞ்சிகிட்டு வாழறது போல இல்ல அதிகாரத்துக்கு பணிஞ்சு வாழறது… அம்மா ப்ளீஸ் லிமிட் அழுது என்ன ஆகப்போகுது. அமைதியா பேசுமா. கொஞ்சம் சத்தமாகவே கத்திவிட்டேன். அம்மா மனசு நிகழ்காலத்திற்குள் இல்லை என்பதை அவள் கண்கள் உணர்த்தின.

மாலை அப்பா வீடுதிரும்பினார் வந்ததும் வராததுமாக அம்மா ஆரம்பித்தாள். இப்போதே மாப்பிள்ளையப் பார்த்து பேசனும். கைல கால்ல விழுந்தாவது இவங்கள சேர்த்துவைக்கனும். மாப்பிள்ளை நல்லவர்தானேங்க. மாப்பிள்ளைக்கு எடுத்து சொல்ல யாருமில்ல நாம சொன்னாத்தான் கொஞ்சமாவது புரியும் எனச் சுடச்சுட காப்பியை முகத்தில் கவிழ்த்தது போல பேசிக் கொண்டிருந்தாள்.
தொட்டிகளில் அம்மா வளர்த்த துளசிச் செடி, வெங்காயத்தாள், மிளகாய்ச் செடிகளைப் பிய்த்து கையில் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான் மகன் செல்லக் குட்டி மனோஜ். அம்மாவின் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இதுவரை பிரச்சனை என எதையும் அம்மாவிடம் பேசியதில்லை திடீரென கேள்விப்பட்டால் அவளுக்கு இப்படித்தான் இருக்கும். அப்பா அம்மாவிடம் மங்கா நம்ம மகளுக்கு எல்லாம் தெரியும்மா. அவ குழந்தையில்ல . அவளுக்கு உலகம் தெரியும் . அவ என்ன சொல்றான்னு கேட்போம்.அவ முடிவுபண்ணினா சரியாதானிருக்கும்மா அப்பா பேசப்பேச அம்மா தலையிலடித்துக்கொண்டு அழுதாள்.

உங்களாலதா இவ இப்படிபோயிட்டா நல்லது கெட்டது எடுத்து சொல்லாம அவளுக்கு தெரியும்னு சொல்றீங்களே என்ற வழக்கமான அவளின் புலம்பல். இருட்டும் நேரம் வீட்டுக்குள் கொசுக்கள் வந்துவிடும் என சன்னலை மூடிக்கொண்டிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த மனோஜ் பூக்களை என்னிடம் கொடுத்துக்கொண்டே சிரித்தான். கண்சிமிட்டிக்கொண்டு அவன் கொடுத்த அழகை ரசித்துக் கொண்டே அணைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் வழக்குமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது. ரமேஷீக்கு பேங்கில் கடந்த ஆண்டு மாறுதல் கிடைத்ததால் தான் பிரிந்திருக்கிறோம் என்பது எல்லாரும் நம்பும் உண்மை இதற்குமேல் ஒன்றாக இருந்து முட்டிக்க வேண்டாமென இரண்டுபேரும் முடிவு செய்தோம். பிரிந்திருந்தாலும் இனி ஒருநாளும் சேர்ந்து வாழமுடியாதென முடிவானது. சமரசமாக பிரிவதாக வழக்குமன்றத்தை நாடினோம்.சிலமுறை எங்களை இணைத்து வைக்க கோர்ட் முயன்றது.வக்கீலும் தெரிந்தவர் தான். அங்கு ரமேஷ் பேசியவைதான் மிக அதிகமாக என்னைப் பாதித்தது.

2
நான் பரபரப்பான பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து வந்தேன். மனோஜீக்கு தேவையானதைக் கவனிப்பது வீட்டுவேலை இப்படியிருக்க.வீட்டு வேலைகளில் பையனைத் தயார் செய்வதில் உதவுகிற ரமேஷ் மொத்தமாக சில மாதங்களில் விலகிவிட்டார்.ஏதும் உதவி என கேட்டாலும் கடித்துத்துப்ப ஆரம்பித்தார்.ஆபிஸ் டென்ஷன்தான் இருக்கும் என நினைத்து அமைதியாக இருந்தேன். கொஞ்சம் மனசு விட்டுப் பேசுங்க ரமேஷ் எனக் கேட்டாலும் பேசுவதில்லை. வாயை இறுக மூடிக்கொண்டவராக எதையும் பேசக்கூடாது என முடிவெடுத்தவராகத் தெரிந்தார்.

நானா வேறு எதைப்பற்றி பேசினாலும் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் கோவப்படுவதும் சண்டையை வலிய வரவழைப்பது என மொத்தமாக மாறிக்கொண்டிருந்தான். காரணம் தெரியாமல் மனசு அலைபாய்ந்தது. நான் என்ன செய்தேன். அருகருகே இருந்தாலும் மனம் மிகப் பெரிய விரிசலை ஏன் வளர்த்துக் கொண்டிருக்கிறது. என்பக்கம்தான் ப்ரச்சனை என நினைத்தால் வெளிப்படையாகப் பேசலாமே. புரிந்துகொள்வதற்காக முயன்ற இடமெல்லாம் மனசு காயம் பட்டதுதான் மிச்சம். அவ்வளவு புறக்கணிப்பும் பாராமுகமும்.நானோ அலுவலகமோ காரணமில்லை வேறேதோ காரணம் என முடிவுக்கு வந்தேன். ரமேஷை வேறுகோணத்தில் பார்க்கத் தொடங்கினேன்.

ரமேஷ் உடன் பணியாற்றியவள் ஷோபனா. கணவனோடு விவாகரத்து வாங்கிய கையோடு இந்த பிரான்ஞ்சுக்கு வந்தவள். அவளுக்கு வீடு பார்க்க அவள் குழந்தைக்கு க்ரச்சில்சேர்க்க என ரமேஷ் உதவினார்.

ரமேஷையும் ஷோபனாவையும் பற்றி ஆபிசில் அரசல் புரசலாக பேசிக்கொண்டபின் தான் என் காதுக்கு வந்தது. அருவருப்பில் குமட்டியது. இருந்தாலும் என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன்.
விஷயத்த ஓபனா பேசற தைரியம் கூட ரமேஷீக்கு இல்லை. நான் கேக்கும்போது வாயைத்திறக்காமல் கல்லுமாதிரி இருந்தவன். எவ்வளவு பேசினேன். ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஏன் இதே வீட்டில் இருக்க வேண்டும்.பேசிப் பார்ப்பதில் தவறில்லை.

இதெல்லாம் விட்டுடுங்க சரிவராது. இதுவர ஏதோ.. போகட்டும். பேசிக்கொண்டிருக்கும்போதே மனோஜ் அப்பாவிடம் போகத் துள்ளினான். அவனை வாங்கக்கூட இல்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன். அடுத்த நாள் அவனுக்கு நான் ஏற்றவள் இல்லை என பேச ஆரம்பித்தான். அதோடு அவனுக்கும் எனக்கும் எல்லாம் முடிந்தது. அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.

அம்மாவிடம் சொல்லலாமென்றாலும் தாங்கிக் கொள்ள மாட்டாள். இதோ ரமேஷ் என்ற பாத்திரம் வாழ்க்கையில் முடிந்தது . கணவனின் பிரிவிற்காக கவலைப்பட, அழ, ஆறுதல் கேட்பதெல்லாம் செய்கிற மற்றப் பெண்களைப் பார்க்கிறபோது கவலையாக இருக்கிறது. இவர்கள் ஏன் மாறாமல் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவகாசமோ அவசியமோ இல்லை. அப்படியான இடத்தில் ரமேஷ் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றானபின் நடைமுறையைப் பார்க்க வேண்டியதுதான். மகனை என்னோடு வைத்துக்கொள்ளலாம் என கோர்ட் சொல்லிவிட்டது. தன்னை நோக்கி ஓடிவரும் குழந்தையைத் தூக்கிக் கொள்ளாமல் நகருபவன் மனோஜீக்கு அப்பாவாக இருக்க முடியாது. இப்போதும் என்னிடம் அன்புகாட்டுகிற என் அப்பாவுக்குமுன் இப்படிப்பட்டவர்களை மனம் ஒப்பிட்டுப் பார்த்தது .

அம்மா மனோஜை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள். அவனுக்கு இணையாக அம்மா விளையாடுவதைப் பார்க்கும்போது அம்மா மழலையாக மாறிவிட்டதாகத் தோன்றும். பொம்மை யானையையும் குதிரையையும் வைத்துக் கொண்டு அதைப்போல பாவனை செய்து காட்டுவாள். மனோஜ் யானையோடும் குதிரையோடும் இருப்பதாக குரலெழுப்பியபடி மகிழ்ச்சியாக விளையாடுகிறான் .
அலுவலம் முடிந்து மனோஜ் கூட விளையாடி தூங்க வைத்துவிட்டு அலுவலகம் தாண்டிய உரையாடலுக்காக முகநூலில் கொஞ்சம் நண்பர்களோடு பேசி, நாட்டு நடப்புகளைப் பார்த்துவிட்டுப் படுத்தால் அடுத்தநாள் காலை மீண்டும் மனோஜீடன் தொடங்கும்.

3

எளிமையாகத்தான் அறிமுகமானோம் முகநூலில்.அவளது மிக விரிந்த கண்கள் பேசும்போது கூடக்கூட பேசியது.இத்தனை நெருக்கமாவோம் என ஒருபோதும் நினைக்கவில்லை. வாசனை திரவியங்கள் அதிகம் புழங்குகிற ஊருக்கு சொந்தக்காரி, இங்கு நான் மிகத் தீவிரமாக என் சுவரில் எழுதிக்கொண்டிருப்பேன். அவளோ உள்பெட்டியில் எடக்குமடக்கா விமர்சிப்பாள். புரட்சிக்குப் பெயர்போன நாட்டிலிருந்து இங்கு நாங்கள் பேசுகிற உரிமையை நையாண்டி செய்யாதே எனத் தொடங்கி கடுமையாகச் சீறினேன். அன்றிலிருந்து அவளது விளையாட்டுத்தனம் மறைந்தது. மிக முக்கியமான உரையாடலை பல சமயங்களில் பேசியிருக்கிறோம்.
அவளது புகைப்படம் தாங்கிய மாத இதழுக்காக சில லகரங்களில் பணம் வாங்கியிருந்தாலும் புகைப்படத்தின் ஒற்றைப் பிரதியைக் கூட கையில் வைத்திருக்காதவள். இலக்கிய வனாந்தரத்தின் அத்தனை உயிர்ப்புகளையும் அறியத்துடிக்கிறாள்.இரண்டு நாட்டின் கலாச்சாரம் குறித்தும் மரியாதையோடு விமர்சிப்பவள்.இதோ இன்று காலை அன்போடு உருகி உருகி அவள் வாழுகின்ற நாட்டிற்கு அழைக்கிறாள் .

உடனடியாக என்னைப்பார்க்க விரும்புகிறாள். பயணச் செலவை அவளது நண்பன் ஒருவன் கவனித்துக் கொள்வான். போய்வருவதற்கான அத்தனை செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். உன் வருகையைத்தவிர இந்த நொடி வேறெதுவும் பிரதானமில்லை பட்டு இப்படி தினந்தினம் அழைப்பின் காற்று நுகரச்செய்த சுகந்தங்களில் அன்பின் முடிச்சு வலுவாகிக் கொண்டே இருந்தது. தமிழகத்தின் தென்கோடியில் கடலருகே அணுவுலைகளை அமைக்கும் பணி நடந்தபோது அதன் ஆபத்தை உணர்ந்து அணுவுலைக்கு எதிரான குரல்கொடுத்தோம். அப்போது என்னைக்காட்டிலும் என் செயல்பாடுகள் எப்படியிருக்கவேண்டுமென விவரிப்பாள். எனது எழுத்துகள் பிரசுரமாகும் முன் அவளது பார்வைக்குச் செல்லும். யாரும் கண்டுபிடிக்கமுடியாத ஆயிரத்து ஒன்றாவது கோணத்தைக் கண்டுபிடித்து பேசுவாள். கண்விழிக்கும்போதே உள்பெட்டிச் செய்தி மினுங்கியது. எனக்காக

வா நீ மூன்றுமாத சுற்றுலாவிசாவில் வந்தால் மீண்டும் உன் தேசம் செல்லத் தோன்றாது.கட்டற்ற சுதந்திரத்தின் ஜ்வாலையை இங்கே அறிவாய்.உணரவும் முயன்றுபார்.

அன்பு ஈவா

அவள் தினமும் அழைப்பு அனுப்புவதும் அதற்கு வர இயலாத காரணம் சொல்வதுமாக இருந்தேன்.ஒரே தன்மையில் பயணிகளாக உணர்ந்ததற்கு இடையில் அவள் என்னை முழுமையாகக் கவர்ந்தாள். ஒருமுறை போய்ப்பார்க்கலாம்.ஆனால் மனோஜையும் அழைத்துச் செல்ல வேண்டும். புது இடத்தில் அவனுக்கு சரிவருமா? அவனுக்கான உணவு தட்பவெட்பநிலை எல்லாம் சரியாக அமைய வேண்டுமே ! அவனை அம்மாவிடம் விட்டுச் செல்வதுதான் நல்லது. வேலைக்கு விடுப்பு சொல்லிக்கொள்ளலாம். துறையின் அனுமதி பெற்று செல்லும் வேலைகளைப் பார்ப்போம் என பலவாறாக யோசித்தேன்.பதில் எழுதினேன்.

அன்பின் ஈவா,

உனது அழைப்பை ஏற்கிறேன். குழந்தையை அழைத்து வரவில்லை.இப்படி பதில் அனுப்பியதற்கு மறுமொழியாக இதயக்குறிகளை அனுப்பினாள். அவளது உற்சாகத்திற்கு அளவில்லை.எனக்கும் அங்கு செல்வதின் மீதான பேராவல் .ஒரு வாரம் பயணம். பிரான்ஸ் நாட்டின் முழுத்தோற்றத்தையும் விமானத்தில் பார்க்கப் பார்க்க மனம் துள்ளியது. ஈவாவைப் பார்க்கும்போது எப்படியெல்லாம் இருப்போம். கை குலுக்குவோமா? அணைத்துக் கொள்வோமா? நினைக்கும் போதே இது தேவையற்றது என விட்டுவிட்டேன். அன்பு தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்வதுதானே.

அங்கு சென்று இறங்கியது முதல் ஈவாவுடன் பல இடங்களுக்குச் சென்றேன்.அவளின் சில நண்பர்களைப் பார்த்தேன்.தோழிகளை அழைத்து ஒரு கலந்துரையாடலுக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்தாள்.புதிய சூழலும் அதைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் புதிய அனுபவமாக இருந்தது.

இதோ மீண்டும் விமானமேறுகிற இந்த நொடிவரை ஒவ்வொரு நொடியும் புத்தம்புதிதாக இருந்தது.உரிமையின் திசை நோக்கிய பயணம் .அதன் மீதான உடனடி விசாரணைகளை மனம் நிகழ்த்த மனதிற்கு பதில் சொல்வது பெரும் அவஸ்த்தையாய் இருந்தது.
ஈவா அங்கு சில ஆண்டுகள் பணிபுரிவது பற்றிப் பேசினாள். ஐரோப்பாவின் மிகப்பெரிய மூன்றாவது நாடு இது. அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நாடு இது. இலக்கியமும் நிறைய எழுத்தாளர்களும் செழித்த நாடு அதனால் எனக்கேற்ற எழுத்து வேலையைத் தேடுவதாகச் சொன்னாள்.

4

மொழிபெயர்ப்புப் பணிக்கு மின்னஞ்சலில் அழைப்பு வந்திருப்பதைப் படித்ததும் அம்மா, அப்பாவிடம் சொன்னேன்.அவர்களும் உன் விருப்பம் என்று சொல்லிவிட்டார்கள்.அம்மா அவ்வப்போது என் வாழ்க்கை போனதாக பயப்படுகிறாள்.அவளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொன்னேன்.அவளுக்கு இன்னும் கொஞ்சம் காலம் போனால் மெல்ல புரியும். ஒரு பெண் தனியாக வாழ்வதை நினைக்க்க்கூட யோசிக்கிற பெண்கள் உலகம் அம்மாவுடையது. பெண்ணுக்கான தகுந்த துணையாக ஆண்களை மட்டுமே பார்க்கிற சிந்தனை.
அம்மாவுக்குப் புரிதல் வரும்வரை பொறுத்துதான் இருக்க வேண்டும்.அம்மாவின் வாழ்க்கைக்கு நெருக்கமான சில தகவல்களைச் சொன்னேன்,அம்மா பிரான்சில் அல்லிப்பூ தான் தேசிய மலர் தெரியுமா? சேவல் அவங்க தேசியப் பறவை. நம்ம ஊரில் பார்க்கிற பலவும் அங்க இருக்கு.அம்மா கொஞ்சம் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தாள்.

மனோஜை அனுப்ப அப்பாவிற்கு விருப்பமில்லை. அவளுடைய பணிகளுக்கு இடையூறாகி விடுவான் என்றார். என்னோடு குழந்தை இருக்கவேண்டும் அப்பா. நீங்க என்னைப் பார்த்துக்கொண்டதுபோல நானும் அவனைப் பார்த்துக்குவேன் என்பதைக் கேட்ட அப்பா சமாதானமடைந்தார்.

ஈவா விமானநிலையத்திற்கு வந்திருந்தாள்.பாஞ்சோர் என சொல்லிக்கொண்டே மனோஜை வாங்கிக் கொள்ள முயற்சி செய்தாள் .மனோஜ் பிடிவாதம் பிடிக்கத்தொடங்கினான்.என்னைத்தழுவி முத்தம் பதித்தாள்.நாங்கள் வருவதை முன்னிட்டு அவளுடைய வீடு முழுமையாகத் தயார் செய்யப்பட்டிருந்தது. மனோஜ்,ஈவா ,நான் அத்தனை உயிராகக் கலந்திருந்தோம்,மனோஜ் க்கு ஈவாவை மிகவும் பிடித்துவிட்டது.இப்போதுதான் வந்தது போல இருக்கிறது. ஒரு மாதம் ஓடிவிட்டது. இதற்குள் ஈவாவும் நானும் மிகநெருங்கி இருந்தோம். என்னைப்பற்றி அவளுக்கு நிறைய தெரிந்திருந்தது.

இவள் எப்படி என்னை நெருக்கமாக அறிந்திருக்கிறாள்? ஆச்சர்யமாக இருந்தது.நான் அவளிடம் சொல்லாத பள்ளிக்காலங்கள் குறித்து திடீரென பேசியபோது பலகேள்விகள் என்னுள் எழுந்தது. ஈவா அவளைப்பற்றி விடிய விடிய சொன்னாள்.

ஈவாவிற்கு என்னை முழுமையாகத்தெரிந்திருக்கிறது. . என்னை இளம்பிராயத்தில் அருகிருந்து பார்த்திருக்கிறாள். என் பள்ளியில் என்னோடு படித்தவள். அன்று அவள் பெயர் அருண். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? பெண்ணுக்கு ஆணின் பெயரை வைத்திருக்கிறார்களே என யோசிப்பது புரிகிறது. முன்பு அருண் என்கிற ஆணாக வளர்ந்தாள். அப்போது என் உயிர் நண்பன்; காலம் எங்களை சந்திக்க விடாமல் செய்தது; பள்ளிக்காலத்தில் தொடங்கிய பாலின மாற்றம் கல்லூரிக்காலத்தில் அவளுக்கு வேகமாக நடந்தது. அருணின் குடும்பம் உள்ளூரில் இருக்கமுடியாமல் நகரம் நோக்கி ஓடத்தொடங்கியது. அவர்கள் குடும்பத்தை நோக்கி எழுந்த கேள்விகள் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் காயப்படுத்தியது.

நகரத்தில் இருந்த அருண் அங்கிருந்து எல்லை தாண்டி ஈவாவாக இங்குவந்து சேர்ந்திருக்கிறாள். மனதளவிலிருந்த பெண் தன்மைக்கு ஏற்ப உடலுக்கும் முழு சிகிச்சை எடுத்து பெண்ணாக மாறியிருக்கிறாள்.

அவளது கடந்த காலத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டேன்.அவளது தோற்றம் ,உருவம்,குரல் எல்லாம் புத்தம்புதிதாக மாறியிருக்கும் உண்மையை வியப்போடு அறிந்து கொண்டேன். அப்பா, அம்மாவிடம் எனக்கும் ஈவாவிற்கும் உள்ள அன்பை விளக்கினேன்.இந்த முறை அம்மா நாட்டுல நடக்காததெல்லாம் சொல்றியேடீ . பொம்பளையா மாறினவங்க கூட வாழப்போறயா? அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை . இதெல்லாம் சரிவராதுமா இப்படியெல்லாம் யோசிக்காத என்றாள்.அப்பா எப்போதும் போல உனக்கு சரின்னு பட்டதைச் செய் என்றார்.

ஆணின் மனதையும் பெண்ணின் மனதையும் நெருக்கமாக அறிந்துகொள்ளக் கூடிய அருண் என்கிற ஈவாவோடு சேர்ந்து பாரிஸில் புது வாழ்க்கையை வாழ்கிறேன். மனோஜ்க்கு இரண்டு அம்மாக்கள். வாழ்க்கையில் எதிர்பார்க்காத புதிய கோணத்திற்கு நகர்ந்திருக்கிறேன்.இயற்கையின் எல்லா சுவாரஸ்யங்களும் மனிதர்களிடமுமிருக்கின்றன.அன்பு அத்தனை வலுவாக பிணைத்துக் கொள்ளக்கூடியது.

லங்காராணி : பேரழிவுகளுக்கான வெள்ளோட்டத்தில்…. – மிஹாத் –

இலங்கையிலிருந்து வெளிவந்த போரிலக்கிய நாவல்களில் “லங்காராணி ” குறிப்பிடப்பட வேண்டியதாகும். 1978 ல் பதிப்பான இதனை எழுதியவர் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆங்கில ரெப் பாடகி மாதங்கி அருள்பிரகாசத்தின்
(M I A) தந்தையுமான அருளர்தான். தமிழ் ஆயுதப் போராட்டத்தின் தேவையை பேசிய முதல் நாவல் இதுவென கூறலாம்.

இடதுசாரி கொள்கைகளின் பின்புலத்தில் உருவான கற்பனைகளை தமது எதிர்கால கனவு தேசம் ஒன்றுக்கான அபிலாஷையாக்கிய கதைதான் “லங்காராணி “. 1977 ல் இடம்பெற்ற இன வன்செயல்களில் பாதிக்கப்பட்ட கொழும்பு வாழ் யாழ்ப்பாணத் தமிழர்கள் இலங்கையின் சரக்குக் கப்பலான “லங்காராணி”யில் அகதியாகி யாழ் நோக்கிப் பயணிக்கும் போது நிகழும் சம்பவங்களே இந்நாவலின் கதைப் பின்னணி.

சிங்கள அரசின் விரோதப் போக்கு, சிங்கள மக்களின் வன்முறை மனோபாவம், தமிழருக்கு எதிரான நிருவாக பாரபட்சங்கள் போன்றவற்றை பிரச்சாரமாக்கி போகிற போக்கில் முன்வைக்கும் கதைக்குள் தனிநாட்டுக்கான அபரிமிதமான ஆசைகளும் வழிந்தபடி இருக்கிறது.

இந்தக் கதை வெளிவந்து நாற்பதாண்டுகள் நிறைவு பெறும் தருணத்தில் எத்தனையோ மாற்றங்களும் அழிவுகளும் கடந்து சென்று விட்டன. ஆனால் பிரிவினைக்கான விருப்பமானது இந்த விதமான நாவல்களுக்குள் நங்கூரமிட்ட படியேதான் இருக்கிறது.

நாம் கப்பலில் நிகழும் கதைகளை சினிமாவாகப் பார்த்துப் பழகியவர்கள்தான். புதிய பறவை (1964) , சிரஞ்சீவி (1983) , டைட்டானிக் ( 1997) , குட்லக் (1999) என ஏகப்பட்ட மசாலாக்களை கப்பல் பயணக் கதைகளாக பார்த்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் Nicholas Wedimoff இயக்கிய சுவிஸ் நாட்டு படமான Clandestine (1997) எனும் அருமையான படம் கூட கப்பலில் நிகழ்வதுதான். இப்படியான வித்தியாசமான கதைச்சூழலை எப்போதோ ஒரு பிரதிக்குள் கொண்டுவர எண்ணிய வகையில் அருளர் பாராட்டுக்குரியவர்.

விடுதலை என்பதை வார அங்காடியில் தட்டுமுட்டுச் சாமான் வாங்குவதைப் போல அவசரமாக பெற அங்கலாய்க்கும் சராசரிப் புரிதலுடன் நகரும் இதன் கதைமொழியையும் பின்னணிகளையும் எனது வாசிப்புக்கூடாக எழுத விரும்புகிறேன்.

ஒரு நிகழ்வின் புலப்பாட்டை அதன் ஏகத் தோற்றத்திலிருந்து சிதைத்து பலதரப்பட்ட கருத்து மையங்களால் சிந்திப்பதே ஊக எதார்த்தம். இந்தப் புனைகதையில் கூட அவ்வகைப்பட்ட ஊக எதார்த்தங்கள் உருக்கொள்ளும் தருணங்கள் நிரம்பியுள்ளன. வாசிப்பின் போது அவ்வகையான dissociated objective அனுமானங்களை கண்டுபிடித்து முன்வைப்பதே இப்பிரதியின் முக்கிய பணியாக அமைகிறது.

தமது தனிநாட்டுக் கோரிக்கையை நியாயப்படுத்துவதற்கான தனிச்சிறப்புகளை முன்வைக்க முனையும் கதை சொல்லி அந்தத் தனிச்சிறப்புக் கதைகளினாலேயே ஜனநாயக விழுமியங்களுக்குப் புறம்பான சதிக் கிளைக்கதைகளை உருவாக்கிச் செல்வது வாசிப்பை தொய்வில்லாமல் நிலைப்படுத்த உதவுகிறது.

யாழ் நிர்வாக மேலாதிக்கத்தின் திமிர்த்தனம் குறையாத விவரிப்புகளினால் சிங்கள பொதுமக்கள்வெளி தொடர்பான எடுத்துரைப்புகள் கலவரத்துக்குப் பிந்திய கோபிப்புகளாக வளர்க்கப்படுகின்றன. // டாக்டர் திருமுருகன் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிரதம வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்தவர். இவருடன் மேலும் மூன்று தமிழ் டாக்டர்கள் கடமை புரிந்தனர். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த அந்த இடத்தில் ஏராளமான நோயாளிகள் இவரிடம் வந்து செல்வதுண்டு. பௌத்த பிக்குகள், பெரும் முதலாளிகள், தேர்தலில் நிற்பவர்கள், அங்கு திரியும் காடையர்கள், அந்தப் பகுதியிலுள்ள எல்லோரும் டாக்டரிடம் வந்து செல்பவர்கள்தான். அவர்களின் உடல் நோவை டாக்டரே முன்னின்று குணப்படுத்தி அனுப்பி விடுவார். // அங்கு வேலை பார்த்த சிங்களக் கங்காணிமார், எடுபிடிகள் டாக்டரின் உத்தரவுகளை முகத்தைச் சுழித்துக் கொண்டு செய்தனர். // அங்கு பணியாற்றிய இரு சிங்கள டாக்டர்களும் வேறு பணிகளில் இருந்த மற்றவர்களும் தமிழர்களை விரட்டி அடித்தால் தங்களுக்கு அந்தப் பதவிகள் வரும் என்பதை உணராமலுமில்லை.// என்பதன் மூலம் சிங்களப் பிரதேசங்களில் நிலவிய யாழ் தமிழ் அதிகாரிகளின் மேலாதிக்கம் மறைமுகமாக சித்தரிக்கப்படுகிறது. இக்கதையின்படி “லங்காராணி ” கப்பலின் கேப்டன் கூட ஒரு தமிழர்தான் என்பதும் கூடுதல் தகவல்.

இந்தக் கதையின் போக்கு முழுவதும் கப்பலுக்குள் நிகழும் சம்பவங்களாக அமையவில்லை. மாறாக பயணத்தின் சில தருணங்களை மட்டும் காட்சியாக விபரிப்பதும் பிறகு பிரிவினை நோக்கத்திற்கு வலு சேர்ப்பதுமான வரலாற்றுத் திரிபுகளை உணர்ச்சிகர மேடைப்பேச்சு வடிவில் கொட்டுவதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குத் துணையாக சரவணன், குமார், வேட்டி கட்டிய இளைஞன் போன்ற இளம் விடுதலை வேட்கை கொண்ட பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாத்திரங்களின் பிரச்சார வெள்ளம் மூலம் பல்வேறு வரலாறுகள் தமது நியாயங்களுக்கு ஏற்ற வகையில் கால ஒழுங்கற்று எடுத்தாளப்படுகின்றது. மன்னர் காலத்து பெருமைகள் தொடக்கம் சுதந்திரத்திற்குப் பிறகான தேக்கம் வரைக்குமான அரசியல் சங்கதிகள் பிரசங்கமாகின்றன. பெரும்பாலான எடுத்துரைப்புகள் யாவும் பொதுவுடமையின் தயவில் சீர்செய்யப்படுவதற்கான நம்பிக்கைகளாக விதைக்கப்படுகின்றன. ஆனால் அந்த எடுத்துரைப்புகளுக்குள் மார்க்சீய சித்தாந்தம் தழுவிய அறிவுபூர்வமான பரிசீலிப்புகள் எதுவுமில்லை. முந்திய காலங்களில் மொஸ்கோ பதிப்பாக வந்த புத்தகங்களை மனனம் செய்து யாரோ ஒப்புவிப்பது போல இருக்கிறது.

கதையின் ஆரம்பப் பகுதிகளில் 1977 கலவரத்தின் சம்பவங்கள் கப்பலில் பயணிக்கும் பல்வேறு நபர்களின் தொடர்புப் பின்னணியோடு வெளிப்படுகிறது. டாக்டர் திருமுருகன், அவர் மனைவி சுகிதா, மலையகத்தைச் சேர்ந்த அவர்களது வீட்டு வேலையாள் முனியாண்டி ஆகியோரின் அல்லல் சம்பவங்களோடு முதலாவது கலவரச் சூழல் காட்சியாகிறது. அதில் தம்மைச் சுற்றி வாழும் சிங்களவர்கள் அனைவரும் நெருக்கடியான சமயம் வாய்க்கும் போது தம்மோடு பழகிய தமிழர்களைக் கொல்லத் துணிகிறார்கள் என்பது போல எடுத்துரைப்புகள் அமைகின்றன. இதேபோல கொழும்பு மத்திய தபால் நிலைய உத்தியோகத்தரின் அனுபவப் பகிர்வாக வெளிப்படும் கதையில் தன்னோடு கூட வேலை செய்த சிற்றூழியர்களே இரவு வேளையில் தேடி வந்து தாக்குதல்கள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அதேவேளை அப்போதைய யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவர் மூலம் தபால் திணைக்களத்தில் வேலை கிடைத்த தகவலும் எடுத்துரைக்கப்படுகிறது. அதாவது சிங்கள அசாங்கத்தில் வடமாகாண தமிழர் சகஜமாக வேலை பெற்ற தகவல் வெளிப்படுவது மிக முக்கியமானதாகும். அது போல ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் சகபாடியை கொல்லத் துணியும் சிங்கள ஊழியரை விபரிக்கும் இடமும் கவனிப்பைப் பெறுகிறது. சிங்களவர்கள் கூடி வாழ்வதற்குப் பொருத்தமற்றவர்கள் எனக் கூற வந்த இடத்தில் சிங்கள அரசு தமிழர்களுக்கு உத்தியோகங்களையும் வழங்குவதும் எதிர்பாராத வகையில் நிரூபணமாகி விடுகிறது. ஆனால் பல்வேறு கலவரங்களையும் முன்னின்று செயல்படுத்தும் அக்கிரமக்காரர்களையும் சாதாரண பொது மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க கதைச்சூழல் அனுமதிக்கவில்லை. அல்லது அவ்வாறு வகைப்படுத்தி விட்டால் முழு சிங்கள இனத்திற்கும் எதிரான உணர்வெழுச்சியைக் கட்டமைப்பதில் சிரமம் ஏற்படுமென கதை மாந்தர்கள் திட்டமிட்டிருக்கக் கூடும். எதுவான போதும் கலவரத்தில் எத்தனையோ அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றிய நற்குணம் கொண்ட சிங்களவர்களை நினைவு நீக்கம் செய்வதில் புனைவுத் திட்டம் அக்கறை கொண்டிருக்கிறது.

அடுத்த பகுதியில் இளைஞர்கள் தன்னிச்சையாக ஒன்றுபட்டு கப்பலில் உள்ள அகதிகளுக்குத் தொண்டுப்பணிகள் புரிவது போலவும், அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பது போலவும் கதை நகர்கிறது. அப்போது கப்பலில் உள்ள கழிவிடங்களை துப்பரவு செய்வதற்கு ஊழியர்கள் இல்லையென்பது தெரிய வருகிறது. அதனை நிவர்த்திக்க போராட்ட குணமுள்ள இளைஞர்களில் ஒருவனான குமார் தெரிவு செய்யும் நபர் மிக முக்கியமான கவனிப்பைப் பெற வேண்டியவராகிறார். மலையகப் பூர்வீகம் கொண்ட ராணி என்னும் தொண்டுப் பணிப்பெண் நியமிக்கப்படுகிறாள். இது வாசிப்பை சஞ்சலப்படுத்தி பல்வேறு சிந்தனைகளையும் கோரியபடி புதிய திடீர் விவாதங்களை உருவாக்கி விடுகிறது. மேலும் அந்த ராணி என்னும் பாத்திரம் போராட்ட குணமுள்ள இளைஞர்களின் எதிர்காலச் செயல்பாடுகள் முழுவதிலும் தொடர்ந்து பங்கேற்பதற்கான விருப்புறுதி கொண்டதாக கதை நெடுகிலும் வளர்த்தெடுக்கப்படுவது சமூகஒதுக்கல் பற்றிய ஐயங்களை உருவாக்கி விடுகிறது.

இந்த நாவலின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு அம்சம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் அரசியல் உரிமைகளில் ஏற்பட்ட பின்னடைவு என்பது 1948 களின் பின்னர்தான் ஏற்பட்டதாக அநேக இடங்களில் வருவதுதான் அது. அப்படியானால் இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் சிறப்பாக அரசியல் உரிமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஒரு புரிதல் உருவாக்கப்படுகிறது. இலங்கைச் சுதேசிகள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய போது தமிழர்கள் அரசியல் உரிமைப் பொலிவுடன் வாழ்ந்ததாக உருவாக்கப்படும் புரிதலானது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்ப வல்லது. அவ்வாறு தமிழர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சுபீட்சமாக வாழ்ந்தார்கள் என கருதப்படுமாயின் அது முழு தமிழ் சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியாதது. ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த எண்ணற்ற தமிழ் மக்கள் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் நலிவடைந்து போனதற்கான சான்றுகள் பல உள்ளன. ஆனால் சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலக் கல்வியிலும், நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறியவர்கள் யாழ்ப்பாண சிறு மேட்டிமைக் கூட்டமே. சுதந்திரத்திற்குப் பிறகான அவர்களின் திடீர்ச் சரிவானது மொத்த தமிழினத்தினதும் பின்னடைவாக மாற்றி பிரபலப்படுத்தப்பட்டது என்பதே நிஜம்.

ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகான சிங்கள அரசாங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகள் இலங்கையின் சமூகங்களைப் பாதித்திருக்கிறது என்பதும் உண்மை. அது தமிழர்களுக்கு மட்டும் எதிரானதாகச் செயல்பட்டது என “லங்காராணி ” கூற முற்படுவது ஏற்க முடியாதது. அதேநேரம் சுதந்திரத்திற்குப் பிறகான சிங்கள அரசாங்கங்களின் மக்கள் நலத் திட்டங்களையும் இருட்டடிப்புச் செய்து விட முடியாது. சில வேளைகளில் தமிழ் பிரிவினைவாதத்திற்கு வலு சேர்க்கும் எனும் நோக்கில் பொதுக்கருத்தாக மாற்றப்பட்ட சிங்கள அரசாங்கங்களுக்கு எதிரான வாதங்கள் தமிழர்கள் உட்பட்ட அனைத்துப் பின்தங்கிய மக்களுக்கும் பலனளித்திருக்கிறது. தனிநாட்டுப் பசிக்காக அவை மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவலில் அரசியல் அடிப்படையில் கடுமையான எதிர் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் காலங்கள் சில முக்கியமானவை. அதில் பண்டாரநாயக்கவின் காலத்தில் சிங்களம் அரச மொழியாக கொண்டுவரப்பட்டமை, ஸ்ரீமாவின் பிந்திய ஆட்சிக் காலத்தில் இலங்கை குடியரசாக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து உருவான மாவட்ட தரப்படுத்தல் முறையில் அமைந்த பல்கலைக்கழக மாணவர் தெரிவு முறை, ஜே.ஆரின் காலத்தில் தீவிரமடைந்த அரசியல் குரோத மனோபாவம் என்பவை குறிப்பிடத்தக்கவை. இதில் ஸ்ரீமாவின் காலத்தில் துளிர்விட்ட வன்முறை மனோபாவமானது உள்ளூரக் கிளர்வான அனுபவமாக வெளிப்படுகிறது. உரும்பராயில் உதவி மந்திரிக்கு குண்டு வைத்தமை, அமைச்சர் குமாரசூரியரையும், மேயர் அல்பிரட் துரையப்பாவையும் துரோகிகளாக காட்டுவதற்கும் இந்த நாவலின் பாத்திரங்கள் துணை புரிகின்றன. சிவகுமாரன் என்னும் வன்முறைக்கு முன்னோடியான இளைஞனின் செயல்கள் கப்பலில் இடம்பெறுகின்ற பிரிவினைவாத அரட்டைக்குள் மகத்துவமானதாக வர்ணிக்கப்படுகின்றன. வேட்டியணிந்த இளைஞன் எனும் பாத்திரத்தின் பிரசங்கத்தில் தேசியக்கொடியைச் சிதைத்த சிவகுமாரன் புகழப்படுவது போலவே தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறை நிகழ்வுகளும் அரசாங்கத்தின் சதியாக எடுத்தியம்பப்படுகிறது. அத்துடன் புதிய இளைஞர்கள் சிவகுமாரனின் வன்முறைப் பாதையைத் தொடர்வதாகவும் அது நாளைக்கு நல்ல விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது.

இந்தக் கதையின் விடுதலை வேட்கைத் தொனியானது இடதுசாரி அபிலாஷை கொண்டதாக இருந்த போதும் இதன் அரசியல் பரிசீலனைகளுக்குள் பொதுவுடமைத் தத்துவச் சாரங்கள் எதுவும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள பாத்திரங்கள் இலங்கையின் அரசியலை அணுகும் விதமானது கீழ்மையான அறிவுப் பதட்டத்துடன் நெருக்கமுற்றதாக இருக்கிறது. பொதுவுடமைச் சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசொன்றை அமைக்க ஆசைப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆளுகைப் பிரதேசத்திலுள்ள மக்களை எவ்வாறு வர்க்க முறையில் அக்கறை கொள்வது என்பதில் கூடத் தெளிவற்றுப் போனார்கள். பல இனக் குழுக்களைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து இன்னொரு இனம் பிரிந்து செல்வதற்கான பிரத்தியேக நியாயங்கள் வர்க்கப் போராட்ட நியமங்களூடாக அணுகப்படவேயில்லை. இங்குள்ள மூன்று இனங்களையும் வர்க்க அடிப்படையில் எவ்வாறு ஒருங்கிணைப்பதெனும் சிந்தனை கூட விவாதிக்கப்படாமல் லங்காராணிப் பயணம் தொடர்கிறது. இங்கு இடம்பெறும் கருத்துப் பகிர்வில் தமிழ் இனவாதத்தை வளர்ப்பதற்காக சிங்கள இனவெறுப்பைக் கூர்மைப்படுத்தும் பாத்திரங்களே அழுத்தமான செல்வாக்குச் செலுத்துபவையாயுள்ளன.

பல்லினங்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் போராட்டங்களானவை இனவெறுப்பினூடாக தீவிரமாக்கப்படுவதால் பயனேதும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர லங்காராணி முப்பதாண்டுகள் பயணிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் ஒரு சமூகத்தின் தனிப்பட்ட விருப்பம் மட்டும் தழுவியதாக வடக்கிலும், கிழக்கிலும் முன்னெடுக்கபடும் யுத்தமானது மறு பிரதேசங்களிலுள்ள பிற சமூகங்களின் ஒத்துழைப்பைப் பெறாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. அதனால் பிற இனங்களும் தென்னிலங்கையும் அனுசரித்துக் கொள்ளும் வகையில் செம்மையாக்கம் பெறாத போராட்டங்கள் பயனளிக்காதவை எனும் முன்கூட்டிய புரிதல் மார்க்சீய சித்தாந்தம் தழுவிய விமர்சன வழியில் ஆராயப்பட்டிருக்குமானால் தமிழர் போராட்டத்திற்கு விரிந்த அனுதாபம் கிடைத்திருக்கும். ஆனால் நாடு தழுவிய அளவில் உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்ற இனவெறுப்பற்ற போராட்டமொன்றை உருவாக்கத் தவறும் விவாதமாகவே லங்காராணி அரட்டைகள் அமைந்திருக்கிறது.

ஏனெனில் வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெறும் போராட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுக்கும் இராணுவமானது தென்னிலங்கையிலிருந்துதான் உருவாக்கம் பெறுகிறது. அப்படியானால் அங்குள்ள மக்களுக்குள் தமிழர் அரசியல் விடுதலைக்கான தேவையை உணர்த்தும் பட்சத்திலும், அதற்கான அரசியல் உபாயங்களை வகுக்கும் பட்சத்திலும் செயல்பட்டிருக்க முடியுமானால் யுத்தத்தின் மூன்று தசாப்தக் கொடுமைகளை ஓரளவு நீர்த்துப் போகச் செய்திருக்கலாம். அத்தோடு தென்னிலங்கையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் தவிர்த்திருக்க முடியும். அதன் மூலம் போராட்டமானது பிரத்தியேகமான ஒரு சூழலில் இராணுவம் × பிரிவினைவாதிகள் என்ற எல்லைக்குள் மட்டுப்பட்டிருக்கும். இந்த அணுகுமுறை ஆக்கபூர்வமான விடுதலையைப் பெற்றிருக்கும். ஆனால் பல்வேறு கலவரங்களிலும் சிங்கள அரச செல்வாக்குடன் அரங்கேறிய காடையர்களின் வன்முறைக்குப் பிரதியுபகாரமான தமிழர் வன்முறை மனோபாவமே போராட்டம் என்ற போலி முகமூடியினால் மறைந்து செயல்பட்டது. இது போன்ற வெறுப்புப் புள்ளியிலிருந்துதான் தென்னிலங்கை சிங்களவரைக் கொல்வதற்கான தர்மங்கள் உருவாக்கப்பட்டதற்கான பின்னணிகளைத்தான் லங்காராணியில் நிகழும் கலவரத்திற்குப் பின்னரான விவாதங்கள் சுட்டி நிற்கின்றன. இந்த அரசியல் தெளிவற்ற நலிவான உபாயங்கள்தான் சிங்கள வெகுமக்கள் மத்தியில் தமிழர் போராட்டம் மூர்க்கமாகச் சிதைக்கப்படுவதற்கான புதிய அறமொன்றை சிந்திக்கச் செய்தது.

இலங்கைச் சுதேசிகள் காலனிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிய காரணங்களினால் வெள்ளையரின் அனுசரிப்புக்குள் அகப்படவில்லை. குறிப்பிட்ட கரையோர மக்களே அக்கால சுகங்களை அனுபவித்தனர். அந்த குழுவினரின் வம்சங்களே அதிகாரங்களை தம்வசப்படுத்திக் கொண்டு செழித்து வளர்ந்தன. அந்தச் செழிப்பில் யாழ்ப்பாண சமூகப் பிரிவும் அடங்கும். அந்தப் பிரிவினரின் சுக வாழ்வானது எல்லாத் தமிழருக்கும் வாய்த்திருக்கவில்லை. ஆனால் “லங்காராணி ” நாவலானது அதனை எல்லா மக்களுக்கும் பொதுவான செழிப்புக் காலம் போல மடைமாற்றம் செய்து விடுகிறது. // ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் இருந்தான். உத்தியோகத்திற்குப் போனோம், கடைகளைப் போட்டோம் பாதுகாப்பாக இருந்தது. அந்தப் பாதுகாப்பு இப்ப இல்லை பாருங்கோ. நாங்கள் கெட்டித்தனமாகப் படிச்சம், வேலை செய்தம் // ( பக்கம் 78) இந்த சுகமானது காலனிய காலத்தில் எல்லாப் பிரதேசத்திலுள்ள தமிழருக்கும் வாய்த்திருக்கவில்லை. ஆனால் காலனிய ஆட்சிக் காலத்தில் எல்லாத் தமிழரும் கல்வியிலும், வர்த்தகத்திலும் முன்னேறி இருந்தது போன்ற சித்தரிப்பை இந்த உரையாடல் ஏற்படுத்தி விடுவதனால், சுதந்திரத்திற்குப் பிந்திய அரசியல் சீர்திருத்தங்களினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண உயர் குடிகளின் துயரங்களை எல்லாப் பிரதேச தமிழர்களினதும் அவஸ்த்தை போல பரப்பி விடுவது இலகுவாகி விடுகிறது.

தமிழர்கள் ஏன் தனியான அரசை அமைக்க வேண்டுமெனும் காரணமும், அக்காரணத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னரான ஜம்ப வியாக்கியானமும் நிஜமான அரசியல் களத்தின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சிரிப்பையே வரவழைப்பவை. இந்த ஒப்பீட்டை இலங்கையின் எந்தக் காலச்சூழலோடு பொருத்தி நோக்கினாலும் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. முதலில் ஜம்ப வியாக்கியானத்தையும் பிறகு தனி அரசு தேவைப்பாட்டுக்கான காரணத்தையும் பார்க்கலாம். // டாக்குத்தர் என்ஜினியராக வர முடியவில்லை என்பதாலேயோ, அரசாங்க உத்தியோகத்திற்குச் சிங்களம் படிக்க வேண்டும் என்பதாலேயோ, சிங்களவன் யாழ்ப்பாணத்திலேயும் திருகோணமலையிலும் வந்து வாழ்கிறான் என்பதாலேயோ, ……, ….., நாங்கள் தனி நாடு கேட்டுப் போராட வேண்டிய அவசியமில்லை. உனது வீட்டின் பின்னாலுள்ள அரச மரத்தைப் புத்த கோவிலாக்கி விட்டார்கள் என்பதற்காகத் தனிநாடு கேட்கக் கூடாது. // ( பக்கம் 95) . தமிழர் பிரிவினைக்கான முனைப்பு என்பது இது போன்ற பல்வேறு நடைமுறைக் கோஷங்களால்தான் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றது. இந்தக் கோஷங்களைப் புறக்கணிக்கும் புனைவுச்செயல் மூலம் மரபான தமிழ் அரசியலுக்கு காயடிப்பு நிகழ்கிறது.
மேலும் தனிஅரசு அமைக்கப்படுவதற்கான காரணம் இவ்வாறு அமைகிறது. // “இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் வறுமையைப் போக்கிச் செல்வத்தை வளர்க்கவும், தங்கள் மொழியை, கலாசாரத்தை, பாரம்பரியத்தைப் பேணிக் காத்து வளர்க்கவும் தங்கள் நிலத்தில் ஒரு அரசை நிறுவ விரும்புகிறார்கள். //
( பக்கம் 96)
இந்த உரைகள் வழியாக தமிழர் பிரிவினைவாதத்தின் தெளிவற்ற கருத்தியல் தளம் உறுதிப்படுத்தப் படுவதாகவே கருத முடியும். ஏனெனில் இலங்கையின் ஒற்றையாட்சியிலிருந்து விடுபடுவதற்கான நியாயங்களை சிங்களவரினால் நிகழ்த்தப்படும் அநீதிகளுக்குள் இருந்து கட்டமைக்கும் கள அரசியலும், வலுவற்ற காரணங்களினால் கற்பனைப் பிரிவினைவாதம் பேசும் கதைகளுக்கும் இடையில் நிர்மாணம் பெறும் கும்பல் தனிநாட்டுப் பற்றானது அற்பமான அழிவுகளை உற்பத்தி செய்ய வல்லது.

பிரிவினைப் போராட்டத்துக்கான ஆயுதங்களை எந்தப் பிரிவினர் கையில் ஏந்துவார்கள் என்ற விபரத்தினை வேட்டியுடன் இருந்த இளைஞன் அடையாளப்படுத்தி விடுகிறான். இந்த வகைப்படுத்தலானது தமிழ் மக்களைப் பிரதேசவாரியாகவும் தொழில்முறை ஜாதியாகவும் அனுமானித்து அறிந்து கொள்ளவும் முடியுமாகிறது. // ” யார் கரங்கள் வேலெடுக்கும் ?”…
“உண்டு கொழுத்து திரண்டு போய்க் கிடக்கும் கரங்கள் இதைத் தொடாது! இதைத் தொடவும் முடியாது.
உழைத்து உழைத்து முறுகிப் போன கரங்கள்தான் இதை முதலில் எடுக்கும்.
ஏர் பிடித்துக் காய்ந்த கரங்கள்தான் இதை எடுக்கும்.
பேனா பிடித்துச் சோற்றுக்கு ஏங்கும் வெற்றுக் கரங்கள்தான் இதை எடுக்கும்.
இனத்தின் வீழ்ச்சியை நினைத்து நினைத்துத் துடிக்கும் கரங்கள்தான் இதை எடுக்கும் // (பக்கம் 97)
ஆக, இந்த அப்பாவிகளின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு உண்டு கொழுத்துத் திரண்டவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் குடியேறுவது போர் காலத்தின் வாடிக்கை என்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இனத்தின் வீழ்ச்சியை நினைத்துத் துடிக்கும் உண்டு கொழுத்துத் திரண்ட உடல்கள் பிரிவினைவாதத் தலைமைகளாகவும், மிதவாத அரசியல் தலைமைகளாகவும் உயர்வு பெறும் என்பதும் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்கள்தானே.

சிங்கள இனவாத அரசியலின் மீது வழமையாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சில எவ்வித வித்தியாசங்களுமின்றி இங்கு ராணிக்காக காத்துக் கொண்டு கப்பலின் மேல் தளத்தில் நிற்கும் சரவணனின் சிந்தனை வழியாக எடுத்து விடப்படுகிறது. //வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளுடன் பேரம் பேசி நாட்டை விற்று வெளிநாட்டு வங்கிகளில் தங்கள் செல்வங்களைப் பெருக்கிக் கொள்ள பழகிக் கொண்ட சிங்களத் தலைவர்கள். … என்றொரு இடத்தில் (பக்கம் 142) வருகிறது. பிற சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளை இந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டமைக்கு வேறு நியாயங்கள் இருக்கக் கூடும்.

இலங்கை அரசின் தமிழர் ஒழிப்பு நடவடிக்கைகள் சிலவும் பட்டியலிடப்படுகின்றன. (பக்கம் 142) . தமிழர்களுக்கு குடியுரிமை இல்லாமல் செய்தது, மலைத்தமிழர்களை நசுக்குவது, வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திப் புறக்கணிப்பு செய்வதும் சிங்களவர்களைக் குடியேற்றுவதும், தமிழர் பாராளுமன்ற உறுப்புரிமையைக் குறைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் வழியாக இனநெருக்கடி வழியே பிரிவதற்கான அரசியல் எல்லை நோக்கி நகர்த்தும் காரியங்கள் திட்டமிடப்படுகிறது. இங்கு பட்டியலிடப்படும் தமிழருக்கெதிரான சிங்கள அரசின் வேலைத்திட்டங்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மீள் பரிசீலனை செய்யப்படாமல் மரபுத்தன்மையாக நம்பப்பட்டு பிரிவினைக்கான பேருண்மையாக மாற்றப்பட்டவை.

மலையகத் தமிழருக்காக சில பாத்திரங்கள் அக்கறை கொள்வது வலிந்து செருகப்பட்ட அரசியல் நேயம் என்றே கொள்ள வேண்டும். தமிழர் போராட்டங்களின் களச் செயல்பாடுகளில் மலையகத் தமிழர்களுக்கான அக்கறைகள் ஒரு போதும் இருந்ததில்லை. அவர்கள் உதிரியான போராடும் உடல்களாக மட்டுமே உள்வாங்கப்பட்டனர். அந்த மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதில் யாழ் தமிழருக்கும் பங்குண்டு. அதே போல கலவரங்களுக்குப் பயந்து வடக்கில் குடியேறிய மலைத்தமிழர்கள் போராட்ட இயக்கங்களாலும், வடக்கின் உயர் ஜாதியினராலும் சுரண்டிச் சீர்குலைக்கப்பட்டதற்கான தடயங்களை லங்காராணிப்பாத்திரங்களின் அக்கறைகள் அமுங்கச் செய்ய முயல்கின்றன.

” துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது ” என்னும் மாஓ வின் மேற்கோளை உருவகித்து மகிழ்வது போன்ற உரையாடலொன்றில் ஆயுதங்களின் மேன்மை உணர்த்தப்படுகிறது. // அகிம்சை, நீதி நியாயம் பேசும் ; மொழியை விளங்காதவன் விளங்கிக் கொள்ளும் மொழியைப் பேசுவது இந்தத் துப்பாக்கிதான். துப்பாக்கி பேசும் போது இலகுவில் புரிந்து கொள்கிறார்கள். //( பக்கம் 154)
துப்பாக்கி பேசும் மொழி கூட எல்லாக் காலத்திலும் ஒரே விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதை அழிவின் அனுபவங்கள் வந்து உணர்த்தி விட்டுச் செல்லும் வரை அந்த வார்த்தைகளைச் சரவணன் என்னும் பாத்திரம் வழியாக எத்தனை பேர் கேட்க வேண்டியதாயிற்று.

ராணி என்னும் பெண்ணிடம் கைத்துப்பாக்கியைக் காண்பித்து சரவணன் புரட்சி ஹீரோவாகும் தருணத்தில் அவள் “யாழ்ப்பாணத்தில் எல்லாப் பெண்களும் சுடப் பழகிக் கொண்டார்களா ” என்று கேட்கும் போது பேரழிற்கான விதைகள் தூவப்படுவதை உணர முடிகிறது. பெண்களை போராட்டத்தோடு இணைத்து விடுதல் என்பது மேலோட்டமான பார்வைக்கு முற்போக்கான நடவடிக்கை போல தோன்றினாலும் அது உருவாக்கும் விளைவுகள் கடுமையானவை. ஒரு கட்டத்தில் போராடும் உணர்வு சோர்வாகும் போதும், அரசியல் ரீதியான பின்னடைவுகள் ஏற்படும் போதும் நடைமுறை ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். இயக்கங்களுக்குள் நிலவுகின்ற குடும்ப நடத்தைகளுக்குப் புறம்பான சூழலானது சுதந்திரம் போன்றதொரு உணர்வைக் கொடுப்பதனால் பாலுறவுக் கலாசாரம் துரிதப்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் போராட்ட உணர்வின் பெயரால் பாலியல் சுரண்டல் பெருக வாய்ப்புமுள்ளது. அத்துடன் ஒரு கட்டத்தில் ஆண்களின் பற்றாக்குறையை நிவர்த்திக்க பெண்களே முழுமையான போராட்டத்தையும் தோழில் சுமக்கும் அவலம் உருவாகி விடலாம். அது மட்டுமல்லாமல் போராட்டம் வெற்றியடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும் போராடும் பெண்ணுடல்களை இங்குள்ள பண்பாட்டுவெளியானது விசாலமான புரிதலுடன் அனுசரித்துக் கொள்ளுமா எனும் கேள்விகளையும் செரித்துக் கொண்டதாகவே ராணியின் உரையாடலை நோக்க வேண்டியிருக்கிறது. ஹஸீனின் அண்மையில் வெளிவந்த முன்னாள் பெண் புலி போராளிகள் குறித்த ஆவணப்படமானது இந்த பார்வைக்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளதைக் குறிப்பிட வேண்டும்.

சிங்களவருக்குப் புறம்பாக தாமும் ஒரு தனிநாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டுமெனும் ஆசையில் தமிழ் பாரம்பரியத்தை ஒருதலைப்பட்சமாகப் புகழும் சந்தர்ப்பங்கள் இந்நாவலில் பல இடங்களில் வருகின்றன. //தமிழர்களுடைய நாட்டில் பட்டினங்களும் கிராமங்களும் செழிப்புற்றிருந்தன. பிற நாடுகளுடன் வாணிபம் செழித்தோங்கி செல்வம் கொழித்தது. மேற்கே வெகு தூரத்திலுள்ள எகிப்து கிரேக்கம் ரோமம், கிழக்கே சீனம் முதலிய நாடுகளுடன் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தனர்.

தமிழர்கள் அரண்மனைகளையும், கோட்டைகளையும் கட்டினார்கள். கால்வாய்களையும், குளங்களையும் வெட்டினார்கள். சாலைகளையும், சத்திரங்களையும் உருவாக்கினார்கள். ….(பக்கம் 156)
இந்தப் புகழ்ச்சியானது இலங்கையின் ஏனைய புராதன சமூகங்களை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அப்படியானால் அன்றிருந்த ஏனைய புராதன சுதேசிகள் மேற்குறித்த பணிகளை மேற்கொள்ளும் திறன் அற்றவர்களாக இருந்தார்களா என்று சிந்திப்பதற்கான சாத்தியங்களை இந்தப் புகழ்ச்சி உருவாக்குகிறது. அப்படியானால் சிங்களப் பண்பாடானது அக்காலப்பகுதியில் வளர்ந்திருக்கவில்லையா? இங்கிருக்கும் மிக அதிகமான புராதனச் சின்னங்களும், சிற்பங்களும், குகை ஓவியங்களும், எண்ணற்ற பண்டைய கோபுரங்களும் எந்தப் பண்பாட்டின் பெருமையை வலியுறுத்துகின்றன. இன்று சிங்களவர்கள் தமக்கு உரித்துடையதாகக் கருதும் பண்டைய சின்னங்களைப் போல தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் காணாமல் போனதன் மர்மம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பும் சூழ்நிலையும் இந்தப் புகழ்ச்சிக்குள் புதையுண்டிருக்கிறது. இது போன்ற பழம்பெருமை பேசும் நீண்ட வர்ணனைகள் கதையின் உணர்வெழுச்சியைச் சூடு தணியாமல் வைத்திருப்பதற்கான உத்தியாக பயன்படுத்தப்படாமல் கதையை நீட்டிக் கொண்டு செல்வதற்கான திட்டமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் பிணக்குகள் வழியாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் தமிழர் தரப்புகளின் பிரதான குற்றச்சாட்டைத்தான்
” லங்காராணி ” யில் பயணிக்கின்ற பிரிவினை எண்ணம் கொண்டவர்களும் கூறுகிறார்கள். ஒன்று எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கு எதிரானது. மற்றையது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு எதிரானது. முதலாமவருடைய சிங்கள அரச மொழிக் கொள்கையும், இரண்டாமவருடைய பல்கலைக்கழக தரப்படுத்தல் கொள்கையும் இடம்பெற்றிருக்கா விட்டால் பிரிவினைக்கான அரசியல் முனைப்புகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பது போன்ற எண்ணப்பாட்டையே இந்த விவாதங்கள் அனைத்தும் தோற்றுவிக்கின்றன.

இந்த விவாத நியாயங்களின் அசல் தன்மைகளை அறிந்து கொள்ளாமல் போனால் தமிழ் பிரிவினைவாதம் குறித்த சரியான புரிதலுக்கு நாம் வந்து சேர்ந்து விட முடியாது.

தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பெரும்பான்மையினரால் நடத்தப்பட்டு வரும் பாரபட்சங்கள் காரணமாகவே 1977 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி வேறு வழியின்றி தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்ததாக சொல்லப்பட்டது. நாடு முழுவதும் தற்செயலாக இடம்பெறும் கலவரங்களை அரசியல் ரீதியிலான பாரபட்ச நடவடிக்கைகளோடு தொடர்பு படுத்தி நோக்குவது பொருத்தமானதா? எனும் கேள்விக்கு பதில் தேடுவதற்குப் பதிலான ஒரு புள்ளியை நோக்கி நகர்வதே எனது பார்வையாகும்.

ஒரு நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் பாரபட்சமான ஒதுக்கல் நடவடிக்கைகள் பல வகையான வழிகளில் இடம்பெற வாய்ப்புள்ளது. சட்டவாக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரச நிருவாக ரீதியாக, கல்விச் செயல்பாடுகள் ரீதியாக, மொழி ரீதியாக, சமூக ரீதியாகவும் இந்தப் புறமொதுக்கல்கள் நடைபெற முடியும். இலங்கையைப் பொறுத்தவரை ” லங்காராணி ” முன்னிறுத்துகின்ற பாரபட்சங்களுக்குள் இந்த விதமான தவறுகள் எந்த வகையில் இடம்பெற்றதனால் அவர்கள் பிரிவினை அரிதாரம் பூசிக்கொள்கிறார்களென்பதை பரிசீலிப்பது அவசியமாகிறது.

சட்டம் சார்ந்த அடிப்படையில் இலங்கையில் தமிழர்கள் ஓரவஞ்சனைக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்பதனை ஆராய்ந்தால் அது வலுவற்ற குற்றச்சாட்டாகவே இருப்பதைக் காணலாம். தனித்துவமான சமூகம் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான விசேட சட்ட திட்டங்கள் எதுவும் இலங்கையில் இல்லை. பாராளுமன்ற அதிகாரத்திலிருந்து உள்ளூராட்சி அதிகாரம் வரையான அனைத்துச் சட்டவாக்க மன்றங்களிலும் தமிழர்கள் பங்கேற்பதற்கான சம வாய்ப்புகளையும், அவற்றில் வாக்களிப்பதற்கான உரிமையையும் சட்டம் உறுதிப்படுத்தியிருப்பதோடு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பையும் வழங்குகிறது. தென்னாபிரிக்காவில் நிலவிய நிற ஒதுக்கல் கொள்கை போலவோ, ஐம்பது சத விகித சனத்தொகையைக் கொண்ட பிஜி தீவின் இந்திய வம்சாவளியினருக்கு நிலம் வாங்குவதில் இருந்த சட்டச் சிக்கல்கள் போலவோ, அல்லது மலேசியாவில் நிலவும் மலாயர்களுக்கு சாய்வான “பூமிபுத்ர ” கொள்கைகள் போலவோ இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான விசேட சட்டங்களில்லை. சட்டங்களை அமுல்படுத்துகின்ற நீதித்துறைகளில் கூட பணியாற்றுகின்ற உயர் அதிகாரிகளின் தொகையை ஆய்வு செய்தால் தரவுகள் வேறாகவே உள்ளன. “லங்காராணி ” நாவல் வெளிவந்த காலத்தை அண்மித்த சமயத்தில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரத் தகவல்களின் பிரகாரம் இலங்கையில் 112 நீதித்துறை வல்லுனர்களில் 19 பேர் தமிழர்கள் என குறிப்பிடப்படுகிறது. இது 17% வீத அளவானதென கூறப்படுகிறது.

வணிகம் சார்ந்த துறைகளில் கூட தமிழர்களுக்கான இடம் மிக அதிகமாகவே இருந்துள்ளது. வர்த்தக விதிமுறைகள், காணிகளைக் கையாளும் உரிமை, பொதுப்பணித்துறை நுழைவு, தொழில்துறைகள் போன்ற எதிலும் தமிழர்களை இனப்பாகுபடுத்தலுக்கு உள்ளாக்கும் புறம்பான சட்ட விதிகள் எதுவும் இருந்திருக்கவில்லை.

தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதாக
“லங்காராணி “பாத்திரங்கள் அனைத்தும் தமக்கு வாய்க்கின்ற தருணங்களில் குற்றச்சாட்டாகப் புலம்புகின்றன. அடிப்படை ஜனநாயக உரிமை என்பது, ஒரு நாட்டின் சட்டவாக்க சபையில் உறுப்பினராக பங்கேற்பதற்கும் மற்றும் அதற்கான உறுப்பினரைத் தெரிவு செய்ய வாக்களிக்கும் உரிமையுமாகும். இது தமிழர்களுக்கு மறுக்கப்படவேயில்லை.

பொருளாதார ரீதியில் இலங்கையில் தமிழர்களுக்கு பாகுபாடு இடம்பெறுகிறதா என ஆராய்ந்தால் அதற்கான சட்டபூர்வச் சான்றுகள் எதுவுமில்லை. பெரும் கைத்தொழில் துறையிலிருந்து சிறு குறு வணிகம் வரை இதில் தமிழர்கள் மிக வலுவாகவே உள்ளனர் என்பது பல வகையிலும் நிரூபிக்கப்பட்டது.

அதேபோல தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதாகவும் “லங்காராணியில் “பேசப்படும் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கும் விதத்தில் 1982 ல் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டம் அமைந்திருந்தது. அதில் வட மாகாணத்திற்கு மட்டும் பிற மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இங்கு பாத்திரங்கள் அரசியல் ரீதியிலான வெறுப்பை அதிகப்படுத்துவதற்குத் தேவையான குற்றச்சாட்டுகளை உருவாக்கின என்பது தெளிவாகிறது.

தொழில்துறை ரீதியில் கூட தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. இலங்கையின் உயர் தொழில்துறைகளில் தமிழ் ஆண்களும் பெண்களும் அதிகமாகப் பணிபுரிவது மறுக்க முடியாதது. வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், உயர்கல்வித்துறையினர், பொறியியலாளர்கள், கணக்காய்வாளர்கள், விலங்கு மருத்துவர்கள் மற்றும் இதர உயர் பதவிகள் அனைத்திலும் போதியளவு தமிழர்கள் பணி புரிந்து வந்திருக்கிறார்கள். இந்தத் துறைகள் எதிலும் தமிழர்களுக்கு எதிராக சட்ட ரீதியான தலையீடுகள் இருந்திருக்கவில்லை. பின்வரும் தொழில்துறை பிரிவுகளில் 1980 காலத்தில் 12.6 °/° வீதமாக இருந்த தமிழ் சமூகத்தினர் மொத்த சனத்தொகையிலும் எந்த அளவில் உள்ளீர்க்கப்பட்டிருந்தனர் என்பது இதோ :

பொறியாளர் – 34.9%
நில அளவையாளர் 29.9%
வைத்தியர்கள் 35.1%
பல் மருத்துவர்கள் 24.7%
மிருக வைத்திய நிபுணர்கள் 38.8%
கணக்காய்வாளர்கள் 33.1%

“லங்காராணி ” வெளியான அதே காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் தகவல்கள் பிரகாரம் பெறப்பட்ட புள்ளி விபரங்களை அடியொற்றியதாகவே இந்தப் பரிசீலனை அமைந்திருக்கிறது.

எண்பதாம் ஆண்டு காலப்பகுதியில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அரச நிருவாகத் துறையில் உள்ள 2303 உயர் பதவி இடங்களில் 367 பதவி நிலைகளுக்கு தமிழ் உயரதிகாரிகள் பணியாற்றுவதாக கூறப்பட்டிருக்கிறது. இது விகிதாச்சாரப்படி 15.9% ஆகும். குறிப்பிடக் கூடியளவு அரச திணைக்களங்களில், வெளிநாட்டு தூதுவராலய ராஜதந்திரப் பணிகளில், அரச நிறுவனங்களின் உயர் பதவிகள் உட்பட பல தளங்களிலும் தமிழர்கள் தமது விகிதாச்சாரத்திற்கு குறையாத வகையில் நியமிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் சிங்களப் பெரும்பான்மையினரின் அளவையும் தாம் சுதந்திரத்திற்கு முன்பு சுரண்டி அனுபவித்தது போல தொடர்வதற்கு அனுமதிக்கப்படாததை இனப்பாகுபாடு எனும் பிழையான அர்த்தப்படுத்தல் மூலம் பிரச்சாரம் செய்யவே “லங்காராணி “உரையாடல் பயன்படுகிறது.

ஆரம்ப பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரையான அனைத்து மட்டங்களிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளும் பாரபட்சமான ஒதுக்கல் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக வகுப்புவாத அரசியல்வாதிகள் கூறிவருகின்ற அதே தொனியை “லங்காராணி ” கப்பலில் பயணிப்பவர்களும் பிரதிபலிக்கிறார்கள். 1982 ம் ஆண்டு இலங்கையின் பாடசாலைகள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்று இவ்வாறு கூறுகிறது. அதில் மொத்தம் 3.37 மில்லியன் அரசாங்க பாடசாலை மாணவர்கள் இன அடிப்படையில் பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளார்கள்.

சிங்கள மாணவர்கள் – 77 %

தமிழ் மாணவர்கள் – 15 %

முஸ்லிம் மாணவர்கள் – 8 %

தமிழ் மொழியில் கல்விப் பொது தராதர உயர்தரம் பயில்கின்ற மாணவர்களின் தொகை 14.4 % ஆக இருக்கிறது. இரண்டாம் நிலைக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் இலங்கையில் இல்லை. 1977 ல் இருந்து 1981 வரையிலான ஐந்து வருட காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் தொகை 22109 ஆகும். இதில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 18.5 வீத மாணவர்கள் தமிழர்கள்.

1971 க்கு முந்திய பல்கலைக்கழக அனுமதி முறைமையில் ஒருதலைப்பட்சமாக அதிகமான வரப்பிரசாதங்களை அனுபவித்த யாழ் மாவட்ட தமிழ் மாணவர்கள் பிறகு நாடு தழுவிய மாவட்ட தரப்படுத்தலினால் மிகையான பல்கலைக்கழக அனுமதியிலிருந்து மட்டுப்பட்டது போல சில நகர்ப்புற சிங்கள மாணவர்களும் மட்டுப்படுத்தப்பட்டனர். அதனை சிங்கள சமூகமும் ஏனைய மாவட்ட மக்களும் அனைத்து நாடு தழுவிய மக்களுக்குமான சீர்திருத்தமாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் யாழ்ப்பாணிகள் மாத்திரமே அதனை பகையுணர்வுக்கான செயற்கைச் சாதனமாக மாற்றினர்.

அப்போது நாடளாவிய அளவில் வேலைவாய்ப்பு பெற்ற முதன்மை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விடயத்தில் கூட பாரபட்சம் இடம்பெற்றிருக்கவில்லை. அதில் தமிழர்கள் 12.9 % என்ற அளவில் உள்வாங்கப்பட்டிருந்தனர். அதே காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களிலும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றிய ஆசிரியர்களில் 25.3 % தமிழர்கள் இருந்தனர். எனவே கல்வித்துறையிலும், கல்விசார் வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் புறமொதுக்கப்படவில்லை என்பது கண்கூடு. ஆனால் தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் 41 வீதமான இட ஒதுக்கீடுகளைப் பெற்று வந்தனர். பின்னாளில் அந்தத் தொகையானது சிங்கள அரசினால் தடுக்கப்படுவதாக 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான குற்றச்சாடாக முன்வைத்தது. 12 வீதமான தமிழர்கள் எவ்வாறு ஏனைய சமூகங்களுக்குமான இட ஒதுக்கீடுகளை நியாயமற்ற முறையில் பெற முடியும் என எழுந்த வாதங்களை தமிழர் தரப்புகள் இனப்பாகுபாடாக காட்ட முற்பட்டன. அந்த மிகையான இட ஒதுக்கீடு கூட யாழ் மாவட்டத்திற்கு மட்டுமே வாய்ப்பாக அமைந்ததும் வேறு கதை.

மொழி அடிப்படையில் இலங்கையில் பாகுபாடு இடம்பெறுவதான சூழ்நிலை சட்ட வரம்புகளுக்குள் இருக்கிறதா என பார்த்தாலும் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகவே அமையும். “லங்காராணி ” கதையில் அநேக இடங்களில் இந்த குற்றச்சாட்டு பரிமாறப்படுகிறது. ஆனால் இங்கு பாலர் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை தாய்மொழியில் கல்வி கிடைக்கிறது. அரசியலமைப்பின் 19 வது சரத்தின் பிரகாரம் சிங்களமும், தமிழும் தேசிய மொழிகளாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு விசேட அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரச அறிவுறுத்தல்களும், அலுவலக ஆவணங்களும், சுற்றுநிருபங்களும் அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் இடம்பெற வேண்டுமெனவும் அரச ஆணை இருக்கிறது. ஆனால் நிருவாக ரீதியில் சில தடங்கல்கள் இடம்பெற்றதனை நீதித்துறை வாயிலாக தீர்க்காமல் பிரிவினைவாதத்திற்கான எரி நெருப்பாக மாற்றி விடுவதில் அனைவரும் கவனமாக இருந்தனர்.

சமூக ரீதியில் தமிழர்களுக்கு எதிரான விசேட சட்டங்கள் இலங்கையில் இருந்திருக்கவில்லை. பிரிவினைவாத கொள்கைகளை வலியுறுத்தும் “லங்காராணி” வெளியான தறுவாயில் கூட தமிழர்களை இன அடிப்படையில் நசுக்கும் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என பலரும் வாழ்கிறார்கள். இங்கு சமூகங்களுக்கிடையில் பெரும்பாலும் சுமூகமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் நலவுகளுக்குக் குறையாத வகையில் தமிழர்களும் அனுபவிக்கிறார்களென்பது உண்மை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் சமூகக் குழுக்களுக்குள் பிணக்குகளும், ஓரவஞ்சனைகளும் தற்செயலாக உருவாகி விடுவதுமுண்டு. இது உலகம் முழுவதும் நடைபெறக் கூடிய நிகழ்வாகவே இருக்கிறது. இலங்கையின் சமூகங்களுக்குள் உள்ளக ரீதியில் இடம்பெறும் ஓரவஞ்சனைகள், சாதிப் பாகுபாடுகள் மற்றும் மத பாகுபாடுகள், பிரதேச பாகுபாடுகள் சகஜமாக உள்ளன. அந்த ஓரவஞ்சனைகள் அனைத்தின் பின்னாலும் பல அரசியல் அதிகாரக் கெடுபிடிகள் செயலாற்றுவதாயுள்ளன. அவற்றை ஒவ்வொரு நிகழ்வுக்குமான பிரத்தியேக பார்வை மூலமாக அணுகுவதே நியாயமாகும். இலங்கையின் சிங்கள அதிகார வர்க்கமானது 1971 லும், 1988 லும் தீவிரவாதத்தை முன்னெடுத்த பல்லாயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்றொழித்த அனுபவத்தோடுதான் தமிழ் பிரிவினைவாதத்தையும் எதிர்கொண்டதென்பது மறக்க முடியாதது.

ஆனால் 1956 ல் தொடங்கி 2009 வரையான அரை நூற்றாண்டு காலத்திலும் தமிழ் அரசியல் களம் உருவாக்கிய சிங்கள அரசுக்கு எதிரான பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய தேவை உருவான போது அங்கு சட்டத்திற்குப் புறம்பான வன்முறைகளும், மனிதாபிமானத்திற்குப் புறம்பான சட்டங்களும் கொண்டுவரப்பட்டதும் நிகழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அவை பெரும்பாலும் “லங்காராணி ” யின் வரவுக்குப் பிறகான காலத்திலேயே கொண்டு வரப்பட்டன. அதாவது தமிழ் பிரிவினைவாதமானது தீவிர வன்முறை வடிவம் எடுத்ததற்குப் பிற்பாடுதான் ஜே.ஆர். அவசரகாலச் சட்டத்தையும், பயங்கரவாத தடைச் சட்டத்தையும் கொண்டு வந்தார். ஆக, தமிழ் தீவிரவாதமே இவ்விரு கொடிய சட்டங்கள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாய் அமைந்தது. தமிழ் ஆயுதக் குழுக்களின் ஒவ்வொரு செயல்பாட்டின் விளைவாகவும் சிங்களப் படைகள் தம்மை நவீன முறையில் வளப்படுத்திக் கொண்டு எதிரிகளைக் கொன்றொழிக்க முனைந்தன. எனவே இலங்கையின் இராணுவம் நவீனமயப்படுவதற்கும் தமிழ் தீவிரவாதமே தூண்டுதலாய் அமைந்தது. ஆரம்ப காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்களின் வதிவிடப்பரம்பலானது மிக மந்தமாகவே இருந்தது. ஆனால் தமிழர் பிரிவினைவாதம் தலைதூக்கியதிலிருந்து வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள இனப்பரம்பலை ஊக்குவிக்கும் தேவையை சிங்கள அரசு உணர்ந்தது. அதன் காரணமாகவே பல்வேறு திட்டமிட்ட குடியேற்றங்களையும் அரச உதவியுடன் முன்னெடுத்தது. ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள மக்களின் தொகை மிகையாக அதிகரித்ததற்கு தமிழ் பிரிவினைவாதமே காரணமாகும்.

1983 ற்குப் பிறகு போர் மெதுவாகத் தீவிரமடைந்து தொண்ணூறில் அது கடும் போக்கை எட்டிய போது வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள இராணுவத்தின் பிரசன்னமானது மலையளவாக மாறியிருந்தது. இதன் மூலம் இவ்விரு மாகாணங்களிலும் சிறுபான்மை மக்களின் சனத்தொகை வீதம், பொருளாதார நிலை, பண்பாட்டுத் தனித்துவங்கள் அனைத்திலும் நெருக்கடிகள் உருவாகின. இராணுவத்தின் தயவில் புதிய சிங்கள குடியிருப்புகள் உருவாகின. அந்தக் குடியிருப்புகளுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியதோடு உள்ளூர் கிராமவாசிகளும் ஆயுதமயப்படுத்தப்பட்டனர். இராணுவம் நிலைகொண்ட பிரதேசமெங்கும் பௌத்த மதத்தலங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை இராணுவமே பராமரித்தது. இதனால் வடக்கிலும், கிழக்கிலும் சிறுபான்மையினருக்கு நிகரான அளவில் சிங்களமும், பௌத்த கலாசாரமும் பேணப்படும் நிலை உருவானது. எனவே தமிழ் பிரிவினைவாதமும், போரும் தொடர்ந்தேர்ச்சியாக அதிகரித்துச் சென்ற காலம் முழுவதும் சிங்கள ஆதிக்கமானது அதிகரித்திருக்கிறது. இதனை தமிழ் பிரிவினைவாதத்தின் உப விளைவாக நோக்காமல் விடுவது தவறாகும்.

“லங்காராணி ” கதையில் கூறப்படும் சிங்கள அரசாங்கங்களின் தமிழர் விரோத நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் குறைவானதுதான். அதற்குப் பழியாக வீராப்புக் கொண்டு பிரினைவாதப் போராட்டத்தை முன்னெடுத்த போது அனுபவித்து இன்றுவரை தொடரும் அழிவுகளும், கொடுமைகளும் மிக அதிகமானது.

அவசரகால சட்டமும், பயங்கரவாத தடை சட்டமும் மேலோட்டமான பார்வைக்கு நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் பொதுவான சட்டம் போலவே தோன்றினாலும், தமிழ் பிரிவினைவாதத்தை கடுமையாக நசுக்க கொண்டு வரப்பட்ட கருவியாகவே கருத வேண்டும். ஆனால் 1977 வரை இந்தச் சட்டங்கள் தமிழரை நசுக்க உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பது முக்கியமானது. இந்தச் சட்டங்களின் மூலமாக கொடூரமான அரச பயங்கரவாதம் நிகழாத காலத்தில்தான் “லங்காராணி ” பிரிவினைக்கான விதையை ஊன்றுகிறது.

பிரிவினைப் போராட்டத்தை தமிழ் இயக்கங்கள் ஆரம்பித்ததற்குப் பிற்பாடு தோன்றிய இக்கட்டான சூழலை சிங்கள அரசு தமிழ் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளூடாக அணுக முற்பட்டது. அந்த இன ஒதுக்கல் நடவடிக்கைகளுக்குத் துணை போன சட்டங்களாக அவசரகால சட்டமும், பயங்கரவாத தடைச் சட்டமும் அமைந்திருந்தன. அந்தச் சட்டங்களின் மூலம் இலங்கைச் சமூகங்களிலிருந்து தமிழர்கள் தனியாக வேறுபடுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். அந்த வகையில் தமிழர்களுக்கு எதிரான சமூக அடக்குமுறைச் சட்டங்களை இலங்கையரசு உருவாக்கிப் பிரயோகித்தமை உண்மை. ஆனால் அவற்றுக்கான தார்மீக உந்துதல்களை உருவாக்கியது தமிழ்ப்பிரிவினைவாதமே . “லங்காராணி” யின் விவாதங்களும் அதற்கு உரமூட்டுபவையாகவே அமைந்திருக்கின்றன.

எனவே எந்தவொரு பிரதிபலனையும் கொடுக்காத போர்க்களத்தை அகதிப் பயணத்தில் திட்டமிடுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும் ? இந்த வகையாகப் பல்கிப் பெருகும் அனுபவங்களின் அர்த்தத் திரட்சிகளினால் சிதறும் கேள்வியுடன் வாசிப்பை முடிப்பதுதான் பொருத்தமானது.

(சில தகவல்களும், தரவுகளும் Centre for Ethnic Amity எனும் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட, THE ETHNIC PROBLEM IN SRILANKA, A Collection of Articles and Essays எனும் நூலில் இருந்து பெறப்பட்டவை.)

மிக நீண்ட முடிவில்லாத முத்தம். – அரிசங்கர்.

நிச்சயமாக நினைவில்லை. கடைசியாக எப்போது நீண்ட ஒரு முத்தத்தை பகிர்ந்துகொண்டோம் என்று. முத்தம் என்பதே இல்லாமல் போய்விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. உடல்கள் ஒட்டி உரசியபடி அருகருகே அமர்ந்து, சிரித்துப்பேசி, சட்டென ஒரு நொடியில் இருவர் விழிகளும் சந்தித்து அந்த நொடியே அசாதாரணமான ஒரு அமைதி உருவாகி மெல்ல மிக மெல்ல இருவரும் நெருங்குவது தெரியாமல் நெருங்கி இரு உதடுகளும் உரசும் அந்த நொடியில் இருவரும் கண்களை மூடி நீண்ட முடிவில்லாத ஒரு முத்தத்தை பகிர்ந்துகொண்டு, மூச்சு விடுவதற்காக மட்டுமே பிரிந்து பிறகு மெல்லச் சிரித்து அடுத்த முத்தத்திற்கு நெருங்கும் அந்தத் தருணத்தை அனுபவித்தது கடைசியாக எப்போது என்று இப்போது அவள் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.

தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த முத்தக்காட்சி முடிந்து வெகு நேரம் ஆகியிருந்தது. முத்தம் கொடுத்த இருவரும் யாரோ ஒரு எதிரியுடன் மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இவளுக்குத் தோன்றியது நாம் மட்டும் ஏன் முத்தமிட்டவனுடனேயே சண்டையிடுகிறோம் என்று. குழந்தையும் கணவனும் மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தனர். கணவன் கைகளில் காய்ந்த துணிகளும், குழந்தை கையில் கிளிப்களும் இருந்தன. இவள் ரிமோட்டை அழுத்தி வேறு சேனலுக்கு மாற்றினாள். ஆனால் இவன் மனம் அதே சேனலில் சுற்றிக்கொண்டிருந்தது.

மீனா முப்பத்தைந்து வயதை நெருங்கிவிட்டாள். ஐ.டி. மொழியில் இனி வேலைக் கிடைக்காது. இருக்கும் வேலையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அனுப்பப்படலாம். மேலும் மீனாவுக்குச் சற்று கருப்பாக இருப்பதும், கொஞ்சம் பூசினாற்போல் இருப்பதும் குறையாகவே தோன்றியது. அவளை விடப் பார்ப்பதற்கு அழகாகப் பலர் அவள் அலுவலகத்தில், அதுவும் அவள் டீமிலேயே இருப்பதால் அவளின் தேவை அங்கு ஒன்றுமில்லை. ஆனால் மீனாவிற்கு இது மட்டும் பிரச்சனையாக இல்லை. சொல்லப்போனால் இது ஒரு பிரச்சனையே இல்லை.

கொஞ்சம் சிரித்து பேசிச் சமாளித்துவிடலாம். ஆனால் சமாளிக்க முடியாத பிரச்சனை ஒன்றுக்கு அவள் தீர்வை இப்போது தேட வேண்டும். அதற்காகவே இன்று விடுப்பு எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கிறாள். விடுப்புக்கு அவள் சொன்ன காரணம் முதுகுவலி. அவள் அக்காரணத்தைச் சொன்னால் அவளைத் தெரிந்த எவரும் எதிர்க் கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார்கள். ஒரு நாளைக்கு அவ்வளவு தூரம் பயணிக்கிறாள்.

மாலை சரியாக ஆறு முப்பதுக்கு தன் வீட்டிலிருந்து கிளம்புவாள். ஆறு நாற்பதுக்கு களத்தூரிலிருந்து செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ். அதைவிட்டால் 7.30க்கு தான். 7.30 பஸ்ஸையெல்லாம் நம்ம முடியாது. ஆட்கள் வரும் வரை காத்திருந்து தான் கிளம்பும். 6.40 அப்படித்தான். ஆனால் பெரும்பாலும்.அதில் சீக்கிரம் கூட்டம் ஏறிவிடும். அங்கிருந்து செங்கல்பட்டு வர எப்படியும் 7.15 லிருந்து ஏழரை ஆகிவிடும். அதன் பிறகு ரயிலேறி வர வேண்டும். எக்ஸ்பிரஸ் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால் லோக்கல் தான். அங்கிருந்து தி.நகர் வந்து தி.நகரிலிருந்து நடந்தே தேனாம்பேட்டை அலுவலகம் வருவாள். 9.30 உள்ளே இருக்க வேண்டும். அதற்குள் அவள் இதயத்துடிப்பு பல மடங்கு ஏறிவிடும். மறுபடும் காலையில் இதே பொழப்பு தான். எப்படியும் 10.30 யிலிருந்து 11 ஆகிவிடும் வீடு வந்து சேர. தி.நகரிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் பயணத்தில் தான் உறக்கமெல்லாம். பல சமயங்களில் ரயிலில் விற்கும் டீயும், வெங்காய சமோசாவும் தான் காலை உணவாகவே இருக்கும். அதற்கு மேல் சென்று உறங்கி எழுவதற்கெல்லாம் ஏது நேரம். சனி ஞாயிறு தான் உறக்கமெல்லாம்.

வார நாட்கள் முழுக்க வெறும் ஆறேழு மணி நேரம் அதுவும் வேலையும் சற்று ஓய்வுமாக இருந்துவிட்டு வார இறுதியில் வந்து சிரித்தால் குழந்தை ஏதோ ஒரு விநோத உயிரினத்தைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு போகும். குழந்தைக்கு என்ன தெரியும் அவள் யாருக்காக உழைக்கிறாள் என்று. குழந்தைக்கு எப்போதும் உடன் இருப்பவர் தான் வேண்டும். இவளை விடக் கணவனிடமே அதிக ஒட்டுதலாக இருந்தது குழந்தை. கணவன் எதுவும் அவளிடம் சொல்வதுமில்லை, கேட்பதுமில்லை. அதே ஊரில் ஒரு வேலை. காலைப் போய் மாலை வந்துவிடுவான். அவன் வரும் வரை அவன் அம்மாவிடம் இருக்கும். பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டதால் சிரமம் கொஞ்சம் கம்மிதான். அன்பான பேச்சுக்கள், விளையாட்டுக்கள், குடும்பமாக வெளியே செல்வது என எல்லாம் குறைந்துகொண்டே வருவதை அவள் உணர்ந்து தான் இருந்தாள். அவனும் இப்போதெல்லாம் முன்பு போல் சரியாகப் பேசுவதில்லை. முன்பு “இந்த வேலையை விட்டுவிடு” என்று சண்டையிடுவான். ஆனால் இப்போது அவனும் நிலைமையை புரிந்துகொண்டான். லோன், கிரிடிட் கார்ட் என அவள் வருமானம் இப்போது கண்டிப்பாக தேவைப்பட்டது. அவனாலும் ஊரைவிட்டு வர முடியாது. இருப்பது சொந்த வீடு. அதை விட்டு நகரத்தில் வாடகைக்கொடுத்து சாமளிக்கவெல்லாம் முடியாது. அதனால் அவனும் மெல்ல ஒதுங்கியே இருக்கிறான். கூடல் கூட ஒரு கடமையாகவே மாறிவிட்டது. சிரிப்போ, விளையாட்டோ, ஆசையாக ஒரு முத்தமே எதுமே இல்லை. மனம் எவ்வளவு கணமாக இருந்தாலும் முத்தம் அதைக் காற்றில் பறக்கும் இறகாக மாற்றிவிடுகிறது. ஆனால் இப்போதெல்லாம் அவள் மனம் கனமாகவே இருக்கிறது.

அவளிடம் யாராவது இப்படிக் கேட்பார்கள்,

“ஏன் மீனா எதாவது பக்கத்துலயே ஒரு வேலை பாத்துக்கக் கூடாதா?”

“தாம்பரத்த தாண்டுனாதான் இந்த சம்பளம்லா கிடைக்கும். அதுவும் வயசு முப்பதுக்கு மேலப் போனா, வேலை கிடைக்கறதுலாம் ரொம்ப கஷ்டம். என்னையே எப்ப தூக்குவானுங்கனு தெரியாம இருக்கன்” என்பாள்.

கிட்டதட்ட ஒரு ஆண்டாக மீனாவின் இயல்பு வாழ்க்கை இது தான். ஆனால் இப்போது இதற்கும் ஒரு பிரச்சனை. வெங்கட், புதிதாக வந்துள்ள மேனேஜர். வந்தவுடன் புதிதாக எதாவது செய்ய வேண்டும். பழையதைக் கண்டிப்பாக மாற்றவேண்டும் என்று இவர்கள் கை அரித்துக்கொண்டே இருக்கும். இது எல்லாத் துறையிலும் உண்டு. மீனாவின் போதாத காலம் இவன் கண்ணில் சிக்கிவிட்டாள். மீனாவின் மொத்த விவரத்தையும் ஆராய்ந்து, டீம் லீடரிடம்,

“அவங்க மட்டும் ஏன் தொடர்ந்து நைட் ஷிப்ட்டா வராங்க” என்றான்.

“அவங்க ரொம்ப லாங்கலருந்து வராங்க. அவங்க ஃபர்ஸ்ர்ட் ஷிப்ட் வரது கஷ்டம். அதான் ரொக்வஸ்ட் பண்ணி ஷிப்ட் வாங்கிருக்காங்க.” என்றான் டீம் லீடர்.

“அது எப்படி ஒருதவங்களுக்கு மட்டும் கண்டினியூஸா ஒரே ஷிப்ட் போடுவீங்க, எங்கிட்ட பர்ஸ்னலா வந்து ரெண்டு பேர் கப்ளையண்ட் பண்ணிருக்காங்க. நீங்கச் சிலருக்கு பேவரா பண்றீங்கன்னு” என்றான்.

உண்மையில் அப்படியாரும் செய்யவில்லை என டீம் லீடருக்கு தெரியும். இருந்தாலும் அமைதியாகச் சொன்னான் “வெங்கட், அவங்க பழைய மேனேஜர் கிட்ட பர்மிஷன் வாங்கிருக்காங்க. எனக்கு எதுவும் தெரியாது” என்றான்.

வெங்கட், “சரி, நைட் அவங்க வந்தா என்ன பாக்க சொல்லுங்க” என்றான்.

இரவு உள்ளே நுழைந்ததும் மீனாவிற்கு விவரம் சொல்லப்பட்டது, அவள் வெங்கட்டை சென்று சந்தித்தாள். அவளைப் பார்த்ததும் பெரிதாகச் சிரித்தான். மீனாவும் பதிலுக்கு சிரித்தாள்.

“சொல்லுங்க மீனா, ஒர்க்லாம் எப்படி போகுது” என்றான்.
இவர்கள் எப்போதும் விஷயத்துக்கு நேராக வரமாட்டார்கள் என்று மீனா நினைத்துக்கொண்டாள். டீம் லீடர் மேலோட்டமாக விஷயத்தைச் சொல்லியிருந்தான். “நல்லா போகுது” என்றாள்.

சிறிது அமைதி நிலவியது. அடுத்து என்ன கேட்பது என்று அவன் யோசித்து எதுவும் கிடைக்காததால் நேராக விஷயத்துக்கு வந்தான்.
“டீம்ல சில இஷ்யூஸ் இருக்கறதா எனக்கு ரிப்போர்ட் வந்தது. அதான் எல்லார்கிட்டயும் தனித்தனியா பேசறன். நிறையப்பேர் நிறைய சொன்னாங்க. சிலர் உங்களுக்கு மட்டும் ரெகுலரா ஒரே ஷிப்ட் போடறாங்க. நாங்க ஹெல்த் பிராப்லம்னு சொன்னாக்கூட தரமாட்றங்கனு சொல்றாங்க. இது டீம்க்கு நல்லதில்ல. நாம் எல்லாருமே வேலைக்குத் தான் வந்திருக்கோம். ஒருத்தர விட்டு ஒருத்தருக்கு ஃபேவரா பண்ண முடியாது. இது டீம் யூனிட்டிய பாதிக்கும். அதனால் அடுத்த ஷிப்ட் ரோஸ்ட்டர்லருந்து எல்லாரும் எல்லா ஷிப்ட்டும் வரணும்” என்றான்.

மீனா அமைதியாகப் பதில் சொன்னால் “வெங்கட், நான் ரொம்ப லாங்லருந்து வரேன். மத்தவங்க மாதிரி இருந்த பிரச்சனை இல்லை. காலையிலலாம் எங்க ஊருக்கு பஸ்ஸே இல்ல. மார்னிங் ஷிப்ட் வரது ரொம்ப கஷ்டம்”

“நீங்க சொல்றது எனக்கு புரியுது, ஆனா டீம்ல மத்தவங்க ஒத்துகணும் இல்ல” என்றான்.

“நான் வேணும்னா மத்தவங்க கிட்ட பேசிப்பாக்கறன்” என்றாள்.
அவன் முகம் மாறியது. கோவத்தை வெளிக்காட்டிக்காமல் சொன்னான், “இதோ பாருங்க மீனா, அதெல்லாம் அலோ பண்ண முடியாது. அப்பறம் ஆளாளுக்கு நாங்களே பேசிக்கிறோம்னா, அப்பறம் நாங்க எதுக்கு இருக்கோம். இதுதான் மேனேஜ்மேண்ட் டிசிஷன். நான் ஒண்ணும் பண்ணமுடியாது.” என்று தன் கடைசி அஸ்திரத்தை ஏவினான்.

மீனா தன் இருக்கையில் வந்து அமர்ந்தால். சுற்றி உடன் வேலை செய்பவர்களை ஒரு முறைப்பார்த்தால். அனைவரும் இப்படி ஒருத்தி அருகில் இருக்கிறாள் என்ற நினைப்பே இல்லாமல் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ’இதில் யார் போய் கேட்டிருப்பா’ என்று யோசித்தால். ஒருவர் மாற்றி ஒருவர் என அனைவருமே சந்தேக அடுத்த வட்டத்திற்குள் வந்தார்கள். ஒரு கட்டத்தில் அனைவரின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ஷிப்ட் ரோஸ்டர் மாறுவதற்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தது. அதற்குள் எதாவது செய்தாக வேண்டும். வேலைச் சுத்தமாக ஓடவில்லை. என்ன செய்வது. திரும்பத் திரும்ப தன் இன்னும் அடைக்க வேண்டிய லோன் மற்றும் கிரிடிட் கார்ட் கடன்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மறுநாள் வேலைக்கு வந்துவிட்டு அடுத்த நாள் முதுகுவலி என்று விடுப்பு எடுத்து வீட்டிலே யோசித்துக்கொண்டிருந்தாள். வீட்டிலும் எந்த வேலையும் ஓடவில்லை. கடைசியாகத் தான் எப்போது தன் கணவனுடனும், குழந்தையுடனும் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று நினைவுகளைத் தேடிக்கொண்டிருந்தாள். ஆனால் அது அவள் தூண்டிலில் சிக்காமலே நழுவிக்கொண்டிருந்தது.

திடீரென்று தன் தோல் மீது கைப்பட்டதும் சுயநினைவுக்கு வந்து திரும்பிப்பார்த்தாள். அவள் கணவன் நின்றிருந்தான். அவன் நெற்றிச்சுருங்கி ஒருவித சந்தேகமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்,

“ஏன்னாச்சி”

அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தால்.
“ரொம்ப வலிச்சா சொல்லு ஆஸ்பத்திரிக்கு பேலாம்” என்றான்.
அவள் இல்லை என்று தலையசைத்து விட்டு, அவனை அழைத்து அருகில் அமரச்சொன்னால். அவனும் இவள் ஏதோ சொல்லப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் வந்து அமர்ந்து அவள் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தயங்கியவாறே அனைத்தையும் சொன்னால். அனைத்தையும் கேட்டுவிட்டு அவளிடம்,

“நீ என்ன பன்னாலாம்னு இருக்க” என்றான்.

அவள் “தெரில” என்றாள்.

“வேலை விட்டுடறதுனா விட்ரு. பக்கத்துல எதனா பாத்துக்கலாம். கொஞ்சம் கஸ்டம்தான் சமாளிச்சிகலாம். கொஞ்ச நாள் தான, போய்த்தான் ஆகனும்னாலும் போ. காலையில் நான் செங்கல்பட்டில விட்டுவிட்டு வரன். உன் இஷ்டம் தான்.” என்று சொல்லிவிட்டு வாசலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். குழந்தை அவனை அழைக்க எழுந்து இவளைப் பார்க்காமல் சென்றுவிட்டான்.

மீனா யோசித்தவாறு அமர்ந்திருந்தாள். வேலைவிட்டாள் என்ன ஆகும் என்று நினைத்தாள். முன்பு போல் செலவு செய்ய முடியாது. குழந்தை கேட்பதை வாங்கிக்கொடுக்க முடியாது. ஆனால் குழந்தைகூடவே இருக்கலாம். கணவன் கூடவே இருக்கலாம். தன் பழைய மகிழ்ச்சியான நாட்களை நினைவுகூர்ந்தாள். அன்பான வார்த்தைகள், ஆசையாகச் சிரிப்பு, நெருக்கம், கூடல், முத்தம், சந்தோஷம் எனப் பசுமையான ஒரு கிளை வான்நோக்கி மெல்ல வளர்ந்தவாறு போய்க்கொண்டிருந்து. அதில் பலவிதமாக வண்ணத்துப்பூச்சிகள் பறந்தவாறு இருந்தன. மெல்ல தனகுள்ளே சிரித்துக்கொண்டாள் மீனா. அருகில் இருந்த போன் இரண்டு பீப் ஒலிகளை எழுப்பி அவள் பட்டாம்பூச்சிகளை சிதறடித்தது. எடுத்துப்பார்த்தால், அடுத்த மாதம் கட்ட வேண்டிய கடனை நினைவூட்ட பேங்கிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் போதே தொடர்ந்து கிரிடிட் கார்ட் பில்லும் வந்தது. போனை மேஜை மீது வைத்துவிட்டு உள் அறையில் இருந்த கணவனிடம், அடுத்த வாரத்திலிருந்து தன்னை காலையில் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட்டுவிட்டு வரும்படி சொல்லிவிட்டு வந்து டீவி முன் அமர்ந்தாள். சுற்றி சுற்றி மீண்டும் அதே படம் வந்தது. கதாநாயகன் சண்டையெல்லாம் முடிந்து கதாநாயகிக்கு முத்தம்க் கொடுத்துக்கொண்டிந்தான். அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள், ‘இனி எப்போது தனக்கு கிடைக்கும் மிக நீண்ட முடிவில்லாத முத்தம்’.

சங்க்ராம் ஜெனா – ஒடியா கவிதைகள் -nn தமிழில் : சுப்ரபாரதிமணியன்

1 நாடோடி

இங்கு, அங்கு, எங்கும்
நாடோடியின் பயணம் முடிவதேயில்லை.
சாலையின் இரு புறமும்
நதிகளைப் பார்க்கிறான்,
மலைகளை, வயல்களை, காடுகளை,
கிராமங்களை, மரநிழலை,
பகலில்
இரவில் நட்சத்திர ஒளியையும்
நடக்கும் போது, சாலை நீளும் போது
காலம் தொடரும் போது,
தனிமையில்
சிலசமயம் உறவினர்கள் கீழே விழுந்தும்
நிலத்தில் ஊன்றிய
மரங்கள், வீடுகளைப் போல்.

ஆனால் சக்கரங்கள் சுழல்கின்றன
புதிய முகங்களைப் பார்க்க,
புதியவர்களை,
உறவில் புதிய அத்தியாயங்களை.

கூட இருப்பது
தொடுகைக்கு
சாலைபோல் நினைவு
பனியின் இடையில்
சூர்ய உதயம் முதல் அஸ்தமனம் வரை
உன் இருப்பின்மையை
நான் சுமந்து கொண்டிருப்பது போல
இந்த வாழ்விலும், பிறகும்.

2 புலி

எனக்கு மூன்று வயது இருக்கும்போது
நான் உன்னை என் பாடப்புத்தகத்தில் பார்த்தேன்.
கண்கள் சிவந்திருக்க, வாய் திறந்திருக்க
மூன்றுமுறை பார்வை தவறிப் போனபின்புதான்
நான் உன்னை நேரடியாகப் பார்க்க முடிந்தது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது
நந்தன்டகன் மிருகக் காட்சி சாலையில்
உன்னைப் பார்த்தேன்.
இரும்புவேலிக்கு வெளியிலிருந்து
பார்வையாளர்கள் மீது அலட்சியப் பார்வையுடன்
ஒரு சிறு மரத்தடி நிழலில்
நீ தூங்கிக் கொண்டிருந்தாய்.

என் அப்பாவின் கைகளைப்பற்றிக்கொண்டு
நான் உன்னைப் பார்த்தேன்.

பல ஆண்டுகள் கடந்து விட்டன.
நான் ஐம்பதுகளின் மத்தியில்
இருந்தபோது ஒரு சர்க்கஸில்
காலரியில் உட்கார்ந்து கொண்டு
என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு
உன்னை பார்த்தேன்
கட்டக்கில் மகாநதியின் கரையில்.

உன் நிறம் மினுங்கவில்லை
உன் வாயைத் திறந்த போது
சில பற்களைப் பார்க்க முடிந்தது
உன் கண்கள் களையிழந்திருந்தன.

பணிவான மாணவனைப் போல
உன் தலைவனின் கைத்தடியின் ஆணைக்கு
இணங்கி நடந்தாய்

கூட்டத்தின் கைதட்டலுக்கு
நீ தலையைக் குனிந்தாய்
உன் கண்களில் மினுக்கம் இல்லை
எங்களைப் போல நீ ஆகிவிட்டாயா?

3 குறி

குறியில்லாமல் ஏதாவது இடம் உண்டா?
சூரிய அஸ்மனத்திற்குப் பின் வானில்
மழைக்குப் பிறகு பூமியில்
துக்கத்திற்குப் பின் இதயத்தில்
வழிபாட்டிற்குப் பின் சிலையில்
புணர்ச்சிக்குப் பின் உடம்பில்.

குறியை அழிக்க முடிகிறதா?
அழித்தபின் மறைகிறதா?
இந்திரனின் குறி
அகல்யாவின் உடம்பில் ஆனது
கடம்பா மரத்தின் விளைவை
யமுனா கைக்கொண்டது
என் கவிதைகளின் பக்கங்களில்
உன் ரேகைக்குறி இருப்பது போல்.
மோதிரத்திற்காக சகுந்தலை தேடல்
பயனுள்ளது போல்
நதியில்
மீன்களின் கூட்டத்தில்
அரச சபையில்
யாரோடையதன் நகத்தை
சந்திரசேனா தேடியவகையில்,
ராதாவின் உடம்பில்
பல்குறிகள்…..

குறிகள் ஆன்மீகத்தின்
அயர்ச்சியில்லாமல்
நாம் குறிகளைத் தேடி எப்போதும்
காதலிப்பது முதல்
மரணத்தைச் சந்திப்பது வரை.

****

விருட்சம் நினைவுகள் 7 – அழகியசிங்கர்

1988 ஆம் ஆண்டு ஜøலை மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன். இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன. இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.

இதில் எழுதிய பலர் காணாமல் போய்விட்டார்கள். ஞானக்கூத்தன் முதல் இதழிலிருந்து கவிதை எழுதியவர். என்னிடம் ஒரு முறை அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. üஉங்கக் கையில் தங்கக் காப்பு போடவேண்டும்,ý என்று.

1988ஆம் ஆண்டு இருந்ததுபோல் இன்றைய நிலை இல்லை. இன்று ஒரு சிறுபத்திரிகை தேவையில்லை. ஏன் எந்தப் பத்திரிகையும் தேவை இல்லை. எழுதுபவர்கள் எல்லோரும் நேரிடையாக தன் எழுத்தை முகநூலில் பதிவு செய்கிறார்கள். தோன்றும்போதெல்லாம் முகநூலில் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதுதான் கவிதை. யாரும் அது குறித்து விமர்சனம் செய்ய முடியாது. முன்பு அப்படி இல்லை. வரும் கவிதைகளைப் படித்து அவை பிரசுரம் செய்யத் தகுதியானதுதானா என்ற தேர்வு இருக்கும்.

புதிய நம்பிக்கை ஆசிரியர் பொன்விஜயன் அவர் பத்திரிகையில் விருட்சம் பற்றி எழுதியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. கறாரான பத்திரிகை என்று. எனக்கு ஆச்சரியம். ஏன் அப்படி எழுதினார்?

பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஆனால் அவருக்குத் தோன்றியது. ஏன்?

பெரிய பத்திரிகைகளில் கவிதைகள் வராத தருணம் அது. சிறுபத்திரிகைகளில்தான் வரும். அதனால் சிறுபத்திரிகைகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. ஏன்? அப்படி சொல்வது சரியா? இந்தக் கருத்தை என்னால் நம்ப முடியவில்லை.

என் மனதில் ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் பல காலமாய் குடிக்கொண்டிருந்தது. இதற்கு சிறுபத்திரிகைகளை நடத்தும் நண்பர்கள்தான் காரணம். அவர்களுடன் ஏற்பட்ட பழக்கம்தான் காரணம்.

ழ பத்திரிகையை ஆத்மாநாமிற்குப் பிறகு தொடர முடியாமல் நிறுத்தியே விட்டார் அதன் இணை ஆசிரியர். நினைத்தால் அவரால் தொடர்ந்து கொண்டு வர முடியும். ஏன் அவர் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கெல்லாம் காரணம் அறிய முடியவில்லை.

நாங்கள் ஒரு கூட்டம் போட்டோம். நாங்கள் என்றால்? கோபிகிருஷ்ணன், ரா ஸ்ரீனிவாஸன், கண்ணன் எம், இளம்பரிதி போன்ற நாங்கள்.

கூட்டம் நடந்த இடம் மெரீனா கடற்கரை கண்ணகி சிலை அருகில். பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பதுபற்றி பேசினோம். ஒரு பத்து பெயர்களைக் குறிப்பிட்டு அதை ஒரு டைரியில் எழுதினேன்.

அந்தப் பெயர்களில் ஒன்றுதான் விருட்சம். ஆரம்பத்தில் நான் ஆசிரியரானாகவும், கோபிகிருஷ்ணன் துணை ஆசிரியராகவும் இருப்பதற்கு ஒப்புக்கொண்டோம். பின் படைப்புகளை இந்த ஐவர் குழு தீர்மானிப்பதாக திட்டம் தீட்டினோம்.

இப்படித்தான் விருட்சம் ஆரம்பித்தது. அதற்கென எல்லா செலவையும் நான் ஏற்றுக்கொண்டேன். முதல் இதழ் 500 பிரதிகள் அச்சடித்தேன். பத்திரிகையை அனுப்புவதிலிருந்து எல்லாப் பிரச்சினைகளும் அதில் ஏற்பட்டது.

பல படைப்பாளிடமிருந்து படைப்புகள் கேட்டோம். படைப்புகளும் வந்தன. ஆனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு. மேலும் படைப்புகள் எல்லாம் ஒரு படைப்பாளியை இன்னொரு படைப்பாளி தாக்கும் படைப்புகளாக இருந்தன.

படைப்பாளிக்ள பலர் ஒருவரை ஒருவர் திட்டுவதற்கு கவிதை முலம் எழுதத் தொடங்கி விட்டார்கள்.

கோபிகிருஷ்ணனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் எழுதினார் : நான் துணை ஆசிரியர் பதவியிலிந்து விலகிக்கொள்வதாக. எனக்கோ திகைப்பு. அடுத்த இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன்.

(இன்னும் வரும்)

இரவில் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்ட் – தமிழில் : சமயவேல்

ஜமைக்கா கின்கெய்ட்

இரவில், நடுநிசிக்குச் செல்லும் வழியில், இரவு, மிகச்சிறிய மிடறுகளாக வகுக்கப்படாத ஒரு இனிப்புப் பானமாக இருந்தபோது, நடுநிசி, நடுநிசிக்கும் முன்பு இப்போது என்பது அங்கு இல்லாதபோது, அல்லது நடுநிசிக்குப் பின்பு இப்போது, சில இடங்களில் இரவு உருண்டையாக இருந்தபோது. சில இடங்களில் தட்டையாக, மற்றும் சில இடங்களில் ஒரு ஆழத்துளை போல, விளிம்பில் நீலநிறத்தில், உட்புறம் கறுப்பாக, இரவுக்-கழிவுத் துப்புரவாளர்கள் வருகிறார்கள்.

அவர்கள் வரவும் போகவும், ஈரத்தரை மேல் வைக்கோல் காலணிகளுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். வைக்கோல் காலனிகளுக்குள் இருக்கும் அவர்களது பாதங்கள் ஒரு கிறுக்குகிற சப்தத்தை எழுப்பின. அவைகள் எதையும் சொல்வதில்லை.

இரவுக்-கழிவுத் துப்புரவாளர்களால் மரங்களில் ஒரு பறவை நடப்பதைப் பார்க்க முடியும். அது ஒரு பறவை இல்லை. அது தனது தோலைக் கழற்றியிருந்த பெண், அவளது ரகசியப் பகைவர்களின் ரத்தத்தைக் குடிக்கப் போய்க் கொண்டிருக்கிறாள். அது ஒரு பெண், மரத்தால் செய்யப்பட்ட ஒரு வீட்டின் ஒரு மூலையில் தனது தோலை விட்டுவிட்டு வந்திருப்பவள். அது ஒரு பெண், அவள் நியாயமானவள் மற்றும் செம்பருத்திகளின் தேனீக்களைப் புகழ்கிறவள். அது ஒரு பெண், அவள், ஒரு நகைச்சுவையாக, தாகமாக இருக்கும்போது ஒரு கழுதையைப் போலக் கனைக்கிறாள்.

அங்கு ஒரு சிள்வண்டு சப்தமிடுகிறது, அங்கு ஒரு தேவாலயத்தின் மணியோசை கேட்கிறது, அங்கு இந்த வீடு கிறீச்சிடும் சப்தம், அந்த வீட்டின் மற்றும் பிற வீடுகளின் கிறீச்சிடல், அவை தரைக்குள் நிலைத்து இருப்பதால் கிறீச்சிடுதல்கள். அங்கு தூரத்திலிருந்து ஒரு வானொலியின் ஒலி—ஒரு மீனவர் மெரெங்க்யூ1 இசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு ஒரு மனிதன் தூக்கத்தில் குறட்டைவிடும் சப்தம்: அங்கு அவனது குறட்டையால் வெறுப்படைந்த பெண் கத்தும் சப்தம். அங்கே அந்த ஆள் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தும் சப்தம்,

தரையை மோதும் அவளது ரத்தத்தின் சப்தம், பாதுகாவலர் திரு.ஸ்ட்ராஃபி அவளது உடலை வெளியே எடுத்துச் செல்லும் சப்தம். அங்கே இறப்பிலிருந்து மீண்ட அவளது ஆவி, குறட்டை விடும் வழக்கமுள்ள ஆளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சப்தம்; அவனுக்கு எப்போதும் ஒரு காய்ச்சல் அடித்துக்கொண்டே இருந்தது. அங்கு ஒரு பெண் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் சப்தம்; அங்கு வெள்ளைத் தாளில் அவளது பேனா முள் எழுதும் சப்தம்; அங்கு மண்ணெண்ணெய் விளக்கு மங்கிக் கொண்டிருக்கும் சப்தம்; அங்கு அவளது தலை வலித்துக் கொண்டிருக்கும் சப்தம்.

மழை விழுந்து கொண்டிருக்கிறது தகரக் கூரைகளில், மரங்களில் உள்ள இலைகளில், முற்றத்தில் இருந்த கற்களின் மேல், மணல் மேல், தரை மேல். இரவு சில இடங்களில் ஈரமாகவும் சில இடங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கிறது.

அங்கு திரு.ஹிஸார்டு இருக்கிறார், முழுவதும் பூத்திருக்கும் ஒரு செடார் மரத்தின் அடியில் நின்றுகொண்டு, அந்த நேர்த்தியான வெள்ளை சூட்டை அணிந்திருந்தார், அதற்குள் அவர் புதைக்கப்பட்ட நாளில் இருந்த அதே புத்தம் புதியதாக அது இருந்தது. வெள்ளை சூட் இங்கிலாந்திருந்து பழுப்பு நிற பொட்டலத்தில் வந்தது: “ஏற்பு: திரு.ஜான் ஹிஸார்டு,” மற்றும் இத்யாதி இத்யாதி. திரு.ஹிஸார்டு மரத்துக்குக் கீழே நிற்கிறார், அவரது நேர்த்தியான சூட்டை அணிந்துகொண்டு மற்றும் அவரது கையில், முழுவதும் ரம் நிரம்பிய ஒரு கோப்பையைப் பிடித்தவாறு—அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் கையில் பிடித்திருந்த, முழுக்க ரம் நிரம்பிய அதே கோப்பை—மற்றும் அவர் வாழ்ந்து வந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு.

இப்பொழுது வீட்டில் வசிக்கும் மனிதர்கள், திரு.ஹிஸார்டு அவரது அருமையான சூட்டை அணிந்து கொண்டு மரத்துக்கு அடியில் நிற்பதை அவர்கள் பார்க்கும் போது, பின்வாசல் வழியே நடக்கிறார்கள். திரு.ஹிஸார்டு அவரது அக்கார்டியனைத் தேடுகிறார்; அவரது பாதத்தை அவர் தாளமிட்டுத் தட்டிக் கொண்டே இருக்கும் சீரை வைத்து உங்களால் கூறமுடியும்.

௦௦௦௦௦௦

எனது கனவில் ஒரு குழந்தை பிறந்து கொண்டிருப்பதை நான் கேட்க முடிகிறது. நான் இதன் முகத்தைப் பார்க்க முடிகிறது, ஒரு கூர்ந்த குட்டி முகம்—மிக அருமை. நான் இதன் கைகளைப் பார்க்க முடிகிறது—மிக அருமை, மீண்டும். இதன் கண்கள் மூடியிருக்கின்றன. இது சுவாசிக்கிறது, குட்டிக் குழந்தை. இது சுவாசிக்கிறது. இது ஆட்டுக்குட்டி போலக் கத்துகிறது, குட்டிக் குழந்தை. இது ஆட்டுக்குட்டி போலக் கத்துகிறது. குழந்தையும் நானும் இப்பொழுது புல்வெளியை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். குழந்தை அதன் மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளால் பசும்புல்லைச் சாப்பிடுகிறது. அம்மா எனது தோள்களைத் தொட்டு என்னை உலுக்குகிறார். எனது அம்மா கூறுகிறார், “ குட்டிப் பெண்ணே, குட்டிப் பெண்ணே.” நான் எனது அம்மாவிடம் கூறுகிறேன், “ஆனால் இது இன்னும் இரவாக இருக்கிறதே.” அம்மா கூறுகிறார், “ ஆமாம், ஆனால் நீ உனது படுக்கையை மீண்டும் நனைத்துவிட்டாய்.” மற்றும் எனது அம்மா, இன்னும் இளமையாக இருப்பவர், இன்னும் அழகாக, மற்றும் இன்னும் இளஞ்சிவப்பு உதடுகளுடன் எனது ஈரமான நைட்கவுனைக் கழற்றுகிறார், படுக்கையிலிருந்து ஈரமான விரிப்பை அகற்றுகிறார். எனது அம்மாவால் எலலாப் பொருள்களையும் மாற்ற முடியும். எனது கனவில் நான் இரவில் இருக்கிறேன்.

“மலைகளில் இருப்பது என்ன வெளிச்சங்கள்?”

“மலைகளில் உள்ள வெளிச்சங்களா? ஓ, அது ஜப்லெஸ்ஸி2.”

“ஒரு ஜப்லெஸ்ஸி! ஆனால் ஏன்? ஜப்லெஸ்ஸி என்பது என்ன?”

“எதுவாகவும் மாற முடிகிற ஒரு ஆள் அது. ஆனால் அவர்களது கண்கள் காரணமாக அவர்கள் உண்மையில்லை என்பதை நீ கூறிவிட முடியும். அவர்களது கண்கள் விளக்குகள் போல ஒளிரும், உன்னால் பார்க்க முடியாதவாறு மிகப் பிரகாசமாக இருக்கும். அதைக் கொண்டு தான் அது ஒரு ஜப்லெஸ்ஸி என்று உன்னால் கூற முடியும். அவைகளுக்கு மலைகளில் ஏறவும் ஊர்சுற்றித் திரியவும் பிடிக்கும். ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது நன்கு கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஜப்லெஸ்ஸி எப்போதும் ஒரு அழகான பெண்ணைப் போல இருக்க முயற்சிக்கிறது.”

௦௦௦௦௦௦

ஒருவரும் எப்போதும் என்னிடம் சொல்லியதில்லை, “எனது அப்பா, ஒரு இரவுக்-கழிவுத் துப்பரவாளர், மிக அருமையானவர் மற்றும் மிக அன்பானவர். அவர் ஒரு நாயைக் கடக்கும்போது அதற்கு ஒரு உதையை அல்ல, மெல்லத் தட்டிக் கொடுக்கிறார். அவருக்கு ஒரு மீனின் எல்லாப் பாகங்களும் பிடிக்கும் ஆனால் தலையை விசேஷமாகப் பிடிக்கும். அவர் மிக ஒழுங்காக சர்ச்சுக்குச் செல்கிறார் மற்றும் அவர், அவருக்குப் பிடித்தமான பாட்டான “ஒரு பலமான கோட்டை எங்கள் பரமபிதா”வை ஊழியக்காரர் அறிவிக்கும்போது எப்போதும் சந்தோஷமடைவார். இளஞ்சிவப்பு சட்டைகளையும் இளஞ்சிவப்பு கால்சராய்களையும் அணிவதற்கு அவர் விரும்புவார் ஆனால் அந்த நிறம் ஒரு ஆணுக்குரியதல்ல என்பதுவும் அவருக்குத் தெரியும், ஆகையால் பதிலாக, அவருக்குப் பிடிக்கவே பிடிக்காத அடர்நீலத்தையும் பழுப்பையும் அணிகிறார். அவர் எனது அம்மாவை ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு இங்கே பேருந்து என்ற மாறுவேடத்தில் அலைவதில் சந்தித்தார், இன்னும் அவர் விசிலடிப்பதை விரும்புகிறார்.

ஒருமுறை ஒரு பேருந்தைப் பிடிக்க ஓடுகையில் அவர் கீழே விழுந்து அவரது மணிக்கட்டு உடைந்து, ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியாகியது. இது அவரை மிகப் பரிதாபகரமாக ஆக்கியது, ஆனால் அவரது வெள்ளைக் கட்டில் அருகில் நானும் அம்மாவும் மஞ்சள் ரோஜாக்களின் கொத்தோடு நின்று குனிந்து அவரைப் பார்த்துப் புன்னகைப்பதைக் கண்ட போது அவர் ஒரு சிறிது உற்சாகம் அடைந்தார். பிறகு அவர் கூறினார், “ ஓ, என்னோட, ஓ, என்னோட.” அவர், எனது அப்பா, இரவுக்-கழிவுத் துப்புரவாளர். ஒரு பெரிய சீமைநூக்கு மரத்தடியில் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்து, சோற்றாலும் ரத்தப் பொரியலாலும் நிரப்பப்பட்ட மிருகங்களின் குடல்களைச் சாப்பிட்டுக் கொண்டும் ஜிஞ்சர் பீரை அருந்திக் கொண்டும் குழந்தைகள் விளையாட்டுக்-கிரிக்கட் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதையே அவர் மிக அதிகம் விரும்புகிறார்.

அவர் என்னிடம் இதைப் பல முறை கூறியிருக்கிறார்: “என் அன்பே நான் மிக அதிகம் செய்ய விரும்புவது,” மேலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருகிறார். அவர் எப்பொழுதும் தாவரவியல் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருகிறார் மேலும் ரப்பர் தோட்டங்களையும் ரப்பர் மரங்களையும் பற்றி மிக அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்; ஆனால் இது நான் விளக்க முடியாத ஒரு ஆர்வம், ஏனெனில் அவர் எப்போதும் பார்த்திருக்கிற ஒரே ஒரு ரப்பர் மரம், தாவரவியல் பூங்காவில் விசேஷமாக வளர்க்கப்பட்ட ஒன்று தான். எனது பள்ளிக் காலணிகள் வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்கிறதா என அவர் பார்த்துக் கொள்கிறார். இரவுக்-கழிவு மனிதரான எனது அப்பாவை நான் நேசிக்கிறேன். இரவுக்-கழிவு மனிதரான எனது அப்பாவை எனது அம்மா நேசிக்கிறார்.

ஒவ்வொருவரும் அவரை நேசிக்கிறார்கள் அவரைப் பார்க்கும் போதெல்லாம் கையசைக்கிறார்கள். அவர் மிகவும் அழகு, தெரிந்து கொள்ளுங்கள், பெண்கள் அவரை இரண்டு முறை பார்ப்பதை நான் கண்டிருக்கிறேன். விசேஷ தினங்களில் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு பழுப்பு மென்கம்பளித் தொப்பியை அணிகிறார். மேலும் ஒரு பழுப்பு தோல் சூவையும் அணிகிறார் அதுவும் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டது. சாதாரண நாட்களில் வெறும் தலையுடன் செல்கிறார். அவர் என்னை அழைக்கும்போது நான் கூறுகிறேன், ‘ஆமாம், அய்யா.’ எனது அம்மாவின் பிறந்த நாளில் அவர் எப்பொழுதுமே ஒரு புது உடைக்கான ஏதாவது அருமையான துணியை வாங்கிப் பரிசளிக்கிறார். அவர் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறார், எனது அப்பா, இரவுக்-கழிவுத் துப்புரவாளர், மேலும் அவர் வாசித்திருக்கும் சர்க்கஸ் என்னும் ஏதோ ஒன்றுக்கு ஒருநாள் எங்களை அழைத்துச் செல்வதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.”

௦௦௦௦௦௦

இரவில் பூக்கள் கூம்பிக் கனத்துப் போகின்றன. செம்பருத்திப் பூக்கள், தீக்கொன்றைப் பூக்கள், பட்டன் பூக்கள், வானவில் பூக்கள், வெண்தலைப் புதர்ப் பூக்கள், லில்லிகள், கத்தாழைப்புதர்ப் பூக்கள், ஆமை இலந்தைப்புதர் மேல் உள்ள பூக்கள் முள்ளு சீத்தாமரத்தில் இருக்கும் பூக்கள், சீத்தாப்பழ மரம் மேல் இருக்கும் பூக்கள், மாமரத்தின் மேல் இருக்கும் பூக்கள், கொய்யா மரத்தின் மேல் இருக்கும் பூக்கள், செடார் மரத்தின் மேல் இருக்கும் பூக்கள், அழுகிய குதிங்கால் மரம் மேல் இருக்கும் பூக்கள், டம்ப் மரப் பூக்கள், பப்பாளி மரப் பூக்கள், எங்கெங்கும் கூம்பியும் கனத்தும் போன பூக்கள் வெறுத்துவிட்டன.

எவரோ ஒருவர், ஒரு கூடை செய்து கொண்டிருக்கிறார், எவரோ ஒருவர் செய்து கொண்டிருக்கிறார் ஒரு பெண் ஒரு உடை அல்லது ஒரு பையன் ஒரு சட்டை, எவரோ ஒருவர் அவளது கணவருக்கு நாளைக்கு கரும்பு வயலுக்கு எடுத்துச் செல்வதற்காக மரவள்ளிக்கிழங்கு சூப் செய்து கொண்டிருக்கிறார், எவரோ ஒருவர் அவரது மனைவிக்கு ஒரு அழகிய சீமைத்தேக்குப் பெட்டி செய்கிறார், எவரோ ஒருவர் ஒரு மூடிய கதவுக்கு வெளிப்புறம் ஒரு நிறமற்ற பொடியைத் தூவிக் கொண்டிருக்கிறார் எவரோ ஒருவருடைய குழந்தை இறந்து பிறக்குபடியாக, எவரோ ஒருவர் பிரார்த்தனை செய்கிறார் வெளிநாட்டில் செழிப்பாக வாழும் கெட்ட குழந்தை நல்லதாக மாறும் என்று மேலும் புதிய துணிகள் நிரம்பிய ஒரு மூட்டையை அனுப்புகிறார், எவரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

௦௦௦

இப்பொழுது நான் ஒரு இளம்பெண், ஆனால் ஒருநாள் நான் ஒரு பெண்ணையே திருமணம் செய்வேன்—முட்புதர் போல் அடர்ந்த முடியும் பழுப்பு நிறக் கண்களும் கொண்ட ஒரு சிவப்புத்-தோல் பெண், மிகப்பெரிய ஸ்கர்ட்களை, அவற்றுக்குள் எனது தலையை எளிதாகப் புதைக்க முடியும், அணிபவள் அவள்.இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புவேன் மேலும் கடலுக்கு அருகில் உள்ள ஒரு மண் குடிசையில் அவளோடு வாழ்வேன். மண் குடிசைக்குள் இரண்டு நாற்காலிகள், ஒரு மேஜை, மண்ணெண்ணெய்யில் எரியும் ஒரு தீபம், ஒரு மருந்துப் பெட்டி, ஒரு பானை, ஒரு படுக்கை, இரண்டு தலையணைகள், இரண்டு விரிப்புகள், ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி, இரண்டு சாஸர்கள், இரண்டு சாப்பாட்டுத் தட்டுகள், இரண்டு முட்கரண்டிகள், இரண்டு குடி-நீர்த் தம்ளர்கள், ஒரு சீனக்களிமண் பானை, இரண்டு தூண்டில்கள், எங்கள் தலைகள் மேல் சுடும் சூரியனை மறைக்கும் இரண்டு வைக்கோல் தொப்பிகள், நாங்கள் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் பொருட்களை வைப்பதற்காக இரண்டு டிரங்குப்பெட்டிகள், ஒரு கூடை, வெற்றுத் தாள்கள் கொண்ட ஒரு நோட்டுப்புத்தகம், பன்னிரண்டு வெவ்வேறு நிற மெழுகுப் பென்சில்கள் நிரம்பிய ஒரு பெட்டி, ஒரு பிரவுன் காகிதத் துண்டில் சுற்றப்பட்ட ஒரு ரொட்டி, ஒரு நிலக்கரிப் பானை, ஒரு துறைமுகத் தளத்தில் நிற்கும் இரண்டு பெண்களின் படம் ஒன்று, அதே இரண்டு பெண்கள் தழுவிக் கொள்ளும் ஒரு படம், அதே இரண்டு பெண்கள் குட்பை சொல்லிக் கையசைக்கும் ஒரு படம், குச்சிகள் நிரம்பிய ஒரு தீப்பெட்டி. ஒவ்வொரு நாளும் இந்த சிவப்புத்-தோல் பெண்ணும் நானும் காலை உணவுக்கு ரொட்டியும் பாலும் சாப்பிடுவோம், புதர்களில் ஒளிந்து கொண்டு எங்களுக்குப் பிடிக்காத ஆட்கள் மேல் பசுஞ் சாணிக் கட்டிகளை எறிவோம், தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களைப் பறிப்போம், நாங்கள் பறித்த தேங்காய்களின் நீரைக் குடித்து தேங்காயைத் தின்போம், கடலில் கற்களை எறிவோம், ஜான் காளை முகமூடிகளை அணிந்து கொண்டு பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பாதுகாப்பற்ற குழந்தைகளைப் பயமுறுத்துவோம், மீன் பிடிக்கப் போய் எங்களுக்குப் பிடித்தமான நான்கே நான்கு மீன்களை மட்டும் இரவு உணவுக்கு வறுப்பதற்காக பிடித்து வருவோம், இரவு உணவில் வறுத்த மீனுடன் சேர்த்து உண்பதற்காக பச்சை அத்திப்பழங்களைத் திருடுவோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் இதைச் செய்வோம்.

ஒவ்வொரு இரவும் இந்தப் பெண்ணுக்காக நான் ஒரு பாடலைப் பாடுவேன்; சொற்களை எனக்குத் தெரியாது இன்னும், ஆனால் மெட்டு இருக்கிறது என் தலைக்குள். நான் மணக்க விரும்பும் இந்தப் பெண் பல விஷயங்களை அறிவாள், ஆனால் என்னை அழச் செய்வதற்கு ஒருபோதும் கனவு காணாத விஷயங்களைப் பற்றி மட்டும் எனக்குக் கூறுவாள்; மேலும் ஒவ்வொரு இரவும், மேலும் மேலும் என்னிடம் எதையாவது கூறுவாள் அது தொடங்குகிறது, “நீ பிறப்பதற்கு முன்னால்.” இதைப் போன்ற ஒரு பெண்ணையே நான் மணந்து கொள்வேன், மேலும் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு இரவும் நான் முழுவதுமாக மகிழ்ச்சியாய் இருப்பேன்.

௦௦௦௦௦௦

குறிப்புகள்:

Merengue music…19ம் நூற்றாண்டின் மத்தியில் டொமினிகன் குடியரசில் தோன்றிய இசை லத்தீன் அமெரிக்க இசையாக மாறியது. அமெரிக்காவுக்குப் பரவி இன்று உலகம் முழுவதும் தெரிந்த பிரபல இசையாக இருக்கிறது.

Jablessee…கரீபிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு பெண் பேய். அழகிய பெண் வடிவில் வரும் இதன் பக்கத்தில் செல்பவர்கள் இதன் கால்களில் பிளவுபட்ட குளம்புகளைக் காண முடியும். ஆனால் அதற்குள் அவர்கள் சிக்கிவிடுவார்கள்.
. . .