Category: இதழ் 152

ஜே.பிரோஸ்கான் கவிதைகள் ( இலங்கை )

ராத்திரி யாசகன்

நிசி நாய்களின் கத்தலினால்
சலனப்பட்டுக்கிடக்கிறது இரவு
எனதறையின் சன்னல் வழியாக
எதிர் வீட்டு மொட்டை மாடி மேலாக
நட்சத்திரத்தை ரசிக்க வாய்ப்பளித்த
தெரு நாய்களுக்கு நன்றி.
விழிப்பை உற்சாகப்படுத்திய தேநீர்
எனதறையை விட்டு கீழுறங்கி வர செய்தது.
ஊரே உறங்கிப் போன நடு நிசியில்
நான் சாலையோரமாக நடக்கிறேன்.
மனசின் நோவு குறைய குறைய
நான் இன்னுமின்னும் சாலையை கடக்கிறேன்
அந்த நீலக் கண்களுடைய நாய்கள்
என்னை பின் தொடர்கிறது
தனது கத்தலை விரித்தவாறு.
நான் பயம் கொண்டு வேகமாக நடக்கிறேன்
நாய்கள் ஒன்றுக்கு இரண்டாக சேர்ந்து கொள்கிறது.
இனியும் அந்த சாலையை கடக்க முடியாது
முட்டுச் சந்துக்குள் மாட்டிக் கொண்டேன்.
பின் வந்த நாய்கள் எனக்கு முன்பாக
படுத்துக் கொண்டது.
தனது வாலை சுருட்டி மண்டியிட்டு.
ஆச்சரியப்பட்டு வலது பக்கமாக திரும்புகிறேன்
இரவு யாசகனொருவன் மீதமான சாப்பாட்டு இலையுடன்
நாய்களுக்காக காத்திருந்தான்.

பட்டாம்பூச்சியாகி பறக்கிறேன்.

அந்த பட்டாம்பூச்சி தனது இறக்கையில்
எனது தனிமையை சுமந்து செல்கிறது.
மணம் வீசும் மலர்ச்செடிகளின் பக்கம்
என்னை சுமந்து அலைகிறது.
என்னை பின் தொடர்கின்ற சக
வண்ணத்துபூச்சுகளும்
சில அறிமுகமில்லாதவர்களின் தனிமையை
சுமந்து வருகின்றன.
இப்போது அந்த மலர்த் தோட்டத்திற்குள்
பட்டாம் பூச்சிகள் பசி தீர்ப்பதற்கெனவும்
இளைப்பாறவும் என்னை இறக்கி விட்டு
மலர்களை சுற்றிச் சுற்றி தேனருந்தும் காட்சிகளினூடே
எனது இருத்தலை ரசித்தலாக மாற்றிக் கொண்டு
மகிழ்கிறேன் தனிமையை மறந்து.
இப்போது எனது உடல்களை ஓவியங்களாய்
தனது வண்ணங்களைக் கொண்டு நிறம் தீட்டு விட்டு
என்னை பறக்கச் சொல்கிறது பட்டாம்பூச்சி.
வானத்தை நோக்கி பறப்பதென்பது எப்படிப்பட்ட
கனவனெக்கு சிறுபராயத்தில்.
இப்போது பறக்கத் தொடங்குகிறேன் ஒரு பட்டாம்பூச்சியாய்
எனது அறையில் என் தனிமையை விட்டு விட்டு.

வெயில்

பகலின் ஒரு நட்ட நடுப் பொழுதில்
மரங்களற்ற தெருவில்
சைக்கிள் மிதிக்கிறேன்.
தொண்டை வரண்டு தாகத்தின் வலியால்
அவதியுற்றுயிருக்க எச்சில் ஈரம்
ஆறுதல் தருகிறது.
வெயில் பொழுதை கடக்க இன்னும்
பல தெரு கடக்க வேண்டியிருந்தது.
நான் கட்டிடங்களின் நடுவில் பயணிக்கிறேன்
எனது அடையாளப்படுத்த முடியாத விலாசத்தை
தேடியலைந்து.
வியர்வை நெடி வீச
உடலின் எல்லாப் பாகங்களிலிருந்தும்
துளி துளியாக சொட்டி வியர்வை
என்னை நனைக்கிறது.
பயணம் இன்பம் என்பது
இந்த மரங்களற்ற நகர வாசிகளுக்கு
பொருத்தமற்றது.
மனசு நொந்து தொடரும் பயணம்
நிச்சயமாக எனக்கு இன்பத்தை தந்துவிட முடியாது.
மழையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் நான்
வெயிலை வெறுத்துதான் இருக்க வேண்டுமென்பதல்ல.

அகம் புறம்
………………….
வாழ்க்கையின் அகப் பிரதியென்பது
உழைப்பு
அதனை விருப்பத்தோடு
செய்யும் காலமெல்லாம்
புறப் பிரதியை அழகாக்கிவிடும்.
துண்புறுத்தலுக்குள் சிக்காத வாழ்க்கையை
நிச்சயமாக பணத்தோடு பயணப்படுதலே
நிர்ணயப்படுத்தி நிற்கிறது.
மனைவியின் உச்சக் கட்ட மகிழ்ச்சி
ஆடம்பரத்தில் மட்டும் நிறைந்து விடாதவொன்று.
தின வாழ்க்கைப்படுதல் கணவனினது
அலுவலகம் விட்டால் வீடு
வீடு விட்டால் அலுவலகம் என்பதாக
நீளுகின்ற சலிப்புமிகு பயணம்
ராத்திரிகளை தூங்கிக் கழிக்க மட்டுமே செய்து விடுகிறது.
கூடலை எதிர் பார்க்கும் மனையாள்
எப்போதும் திருப்தி பட்டுட முடியாத சிணுங்கள்
வீட்டில் சந்தோசத்தை பறித்து விடுகிறது.
இப்போது தான் சண்டைகள்
நாளாந்தம் தொடர்கிறது.
பணம் நிறைந்த வாழ்க்கை
மன நிறைவை கொடுக்க தவறியதை
எப்போதும் குறையாகவே அவனை
பார்க்கும் அவளுக்கு
இவனது அலுப்பு மிக்க பணி தான்
எனது ஆத்ம அவையக தேவையை
தடுக்கிறது.
புரிந்து கொண்ட நான்
விடுமுறை சொல்லி விடுங்கள்
ஞாயிறு வரை காத்திருக்க முடியாது
வரும் போது மல்லிகைப் பூவும்
அல்வாவும் வாங்கிடு வாங்க என்ற
வார்த்தையை அவரிடம்
நானே சொல்லிடப் போறேன்.

தீர்ப்பு
…………
நண்டுகள் வரைந்த ஓவியங்களை
கடல் அலைகள் அழித்து விட்டுத்
திரும்பும் போதெல்லாம்
நான் கவலை கொண்டுள்ளேன்.
நண்டுகள் தன்
நடை பயணத்தின் போதெல்லாம்
வரைந்து விட்டுச் செல்கின்ற ஓவியங்களனைத்தும்
நிறங்களற்றவையாகவே இருக்கின்றன.
அது வர்ணங்களை இழந்திருப்பதால்
கடல் அலைகள் அதனை ரசிக்க தவறுகிறது.
இதையறியாத நான் கவலை கொள்வது
நியாயமில்லையென்கிறது மீன்கள்.

****

விருட்சம் நினைவுகள் 8 / அழகியசிங்கர்

அழகியசிங்கர்

இரண்டாவது இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன். இத்தனைக்கும் காலாண்டுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை. ஏன் கொண்டு வரவேண்டாம்? கோபிகிருஷ்ணன்தான் காரணம்.

அவரிடம் ஏதோ குழப்பம். விருட்சம் மூலம் எல்லோரிடமும்
சண்டைப் போடுவோமோ என்ற பயம். அதேபோல் விருட்சத்தில் ஒருத்தரை ஒருத்தர் கவிதைகள் மூலம் தாக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கோபியால் அதைத் தாங்க முடியவில்லை. üநாம் இருவரும் நண்பர்களாக இருப்போம். ஆனால் பத்திரிகை விஷயமாக நான் இணை ஆசிரியராக இருந்து செயல்பட விரும்பவில்லை,ý என்று ஒரு கடிதத்தை டைப் அடித்து அனுப்பியிருந்தார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வெறும் வாயால் சொன்னால் போதாதா? ஏன் டைப் அடித்து அனுப்ப வேண்டும். அப்போது என்னுடன் நெருக்கமாக நண்பராக இருந்த ஸ்ரீனிவாஸனிடம் இந்தக் கடிதத்தைக் காட்டினேன். üüஇப்படித்தான் இந்த கோபிகிருஷ்ணன்…அவருக்கு யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாது,ýý என்றார் ஸ்ரீனிவாஸன்.

இரண்டாவது இதழுக்கு வந்தப் படைப்புகளை பார்த்தேன். ஒரே குழப்பமாக இருந்தது. பத்திரிகைக்கு வந்த கவிதைகள்தான் என்னைக் குழப்பின. உதாரணமாக தேவதச்சனின் ஒரு நிமிஷம் என்ற கவிதை. அக் கவிதையை இங்கே தர விரும்புகிறேன்.
உயிர் பிரிவதற்கு
எப்போதும்
ஒரு நமிடம்தான் இருக்கிறது

மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
துயரத்தில் சாய்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.

இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
இருண்ட சரிவில் உருள்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.

இவ்வொரு
நிமிஷத்தில்
அண்ட சராசரம் ஆடி
ஒரு நிமி1ம்
வளர்ந்து விடுகிறது

சில வரிகளே கொண்ட சின்ன கவிதைதான் இது. ஆனால் என்னை யோசிக்க வைத்தது. நாம் ஏதோ சந்தோஷத்திற்கு பத்திரிகை நடத்துகிறோம். ஏன் இதுமாதிரி கவிதைகளைப் பிரசுரம் செய்து நம் மனசோடு, படிக்கிறவர்கள் மனசையும் கெடுக்க வேண்டும். இப்படி ஒரு கவிதை என்னைச் சலனப்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

அதேபோல் நடராஜ் என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். கவிதையின் பெயர் தங்கச் சிலந்தி. செங்குளவியால் செத்து விழுந்தது தங்கச் சிலந்தி என்று எழுதியிருப்பார். என்னடா இது சாவை ஞாபகப்படுத்துகிற மாதிரி கவிதைகள் என்று நினைத்தேன். மெய்நெறிப்பித்தன் என்பவரின் கவிதை இந்த நூற்றாண்டில் இந்தியாவில்… பாசத்தை தலை முழுகியாயிற்று என்று ஆரம்பிக்கும்.

பிரம்மராஜன் ஒரு கவிதை எழுதியிருப்பார். மண்டையின் விசிறிகள் என்ற தலைப்பில் ஒரு கவிதை. என்னடா இது மண்டையில் விசிறியா என்றெல்லாம் யோசிப்பேன். ஆனால் எழுதியவர் பிரம்மராஜன் என்பதால் பிரசுரம் செய்தேன்.

அதே போல் கவிதைக் குறிப்புகள் என்ற தலைப்பில் ரா ஸ்ரீனிவாஸன் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். படிக்கிறவர்களுக்கும் தலையும் புரியாது காலும் புரியாது. ஒரு சிறுபத்திரிகை என்றால் என்ன? அதன் பிரச்சினைகள் என்னன்ன என்றெல்லாம் யோசித்து அப்போது குழம்பிப் போயிருக்கிறேன்.

(இன்னும் வரும்)

வீட்டிலிருந்து கடிதம் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்ட் தமிழில்: சமயவேல்

Jamaica Kincaid

நான் பசுக்களில் பால் கறந்தேன், நான் வெண்ணெய் கடைந்தேன், நான் பாலடைக்கட்டியைப் பத்திரப்படுத்தினேன், ரொட்டி சுட்டேன், தேநீர் தயாரித்தேன், குழந்தைகளுக்கு உடைகள் போட்டுவிட்டேன்; பூனை மியாவ் என்று கத்தியது, நாய் குரைத்தது, குதிரை கனைத்தது, எலி கிறீச்சிட்டது, ஈ ரீங்கரித்தது, ஒரு குவளைக்குள் வசிக்கும் தங்கமீன் அதன் தாடைகளை விரித்தது; கதவு பலமாக அடித்து மூடியது, படிகள் கிரீச்சிட்டன, குளிசாதனப்பட்டி ஹம் ஒலி எழுப்பியது, திரைச்சீலைகள் அலைந்து உயர்ந்தன, அடுப்பிலிருந்து எரிவாயு உஸ் என்று சீறியது, உறைபனியால் கனத்த மரக்கிளைகள் ஒடிந்து கூரை மேல் விழுந்தன; எனது இதயம் தட்! தட்! என்று சப்தமாகத் துடித்தது, தண்ணீரின் மிகச்சிறிய மணிகள் எனது மூக்கின் மேல் துளிர்த்தன, எனது முடி துவண்டது, எனது இடுப்பு மடிப்புகளை வளர்த்தது, நான் எனது தோலை உதிர்த்தேன்; உதடுகள் நடுங்குகின்றன, கண்ணீர் வழிகிறது. கன்னங்கள் ஊதிவிட்டன, வயிற்றுக்குள் வலி புரள்கிறது; நான் ஊர்ப்பக்கம் போனேன், எனது கார் பழுதாகி நின்றது, நான் திரும்ப நடந்தேன்; படகு கிளம்பியது, அலைகள் விட்டுவிட்டு எழுந்தன, அடிவானம் கவிழ்ந்திருந்தது, துறைமுகத் தளம் சிறிதாகிக் கொண்டே போனது. காற்று பயமூட்டியது, சில தலைகள் குலுங்கின, சில கைக்குட்டைகள் படபடத்தன. இழுப்பறைகள் மூடப்படவில்லை, குழாய்கள் ஒழுகின, பெயிண்ட் உரிந்திருந்தது, சுவர்கள் கீறல் விட்டிருந்தன, புத்தகங்கள் குலைந்து கிடந்தன, தரை விரிப்பு இனியும் வெளியே சமதளத்தில் கிடக்காது; நான் எனது உணவைச் சாப்பிட்டேன், ஒவ்வொரு கவளத்தையும் முப்பத்து இரண்டு முறைகள் மென்றேன், நான் கனமாக விழுங்கினேன், எனது குதிங்கால் குணமாகிவிட்டது; அங்கு, ஒரு இரவு இருந்தது, அது இருட்டாக இருந்தது, அங்கு ஒரு நிலவு இருந்தது, அது பூரணமாக இருந்தது, அங்கு ஒரு படுக்கை இருந்தது, அது தூக்கத்தைப் பிடித்து வைத்திருந்தது, அங்கு அசைவு இருந்தது, அது விரைவாக இருந்தது, அங்கு ஒரு உயிர் இருந்தது, அது அசையாமல் நின்றது, அங்கு ஒரு வெளி இருந்தது, அது நிறைந்திருந்தது, பிறகு அங்கு எதுவுமே இல்லை; ஒரு மனிதன் வாசலுக்கு வந்து கேட்டான், “குழந்தைகள் இன்னும் தயாராகவில்லையா? அவர்கள் தங்களது அம்மாக்களின் பெயர்களைக் கொண்டிருப்பார்களா? அடுத்தற்குப் பிறகு வரும் திங்கட்கிழமை எனது பிறந்தநாள் வருகிறது என்பதை ஒருவேளை நீ மறந்துவிட்டாயோ? என்னைப் பார்க்க நீ மருத்துவ மனைக்கு வருவாயா?”; நான் எழுந்து கொண்டேன், நான் உட்கார்ந்தேன், நான் மீண்டும் எழுந்து கொண்டேன்; கடிகாரம் மெதுவாக ஓடியது, தபால் தாமதமாக வந்தது, மதியம் குளுமையாக மாறியது; பூனை அவனுடைய கோட்டை நக்கியது, நாற்காலியைக் கிழித்துக் குதறியது, மூடியிருக்காத ஒரு இழுப்பறையில் படுத்துத் தூங்கியது; நான் ஒரு அறைக்குள் நுழைந்தேன், எனது தோல் நடுங்குவதை உணர்ந்தேன், பிறகு மறைந்தது, நான் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தினேன், ஏதோ நகர்வதை நான் பார்த்தேன், நிழல், எனது சொந்தக் கையாக இருப்பதை நான் அறிந்து கொண்டேன், நான் என்னையே ஒரு பொருளாக இருப்பதாக உணர்ந்தேன்; காற்று கடினமானதாக இருந்தது, வீடு ஆடியது, தோல்மூடிய விதைகள் செழித்து வளர்ந்தன, பாலூட்டிகள் போன்ற ஊர்ந்து செல்லும் ஜந்துகள் மறைந்தன ( சொர்க்கம் மேலே இருக்க வேண்டுமா? நரகம் கீழிருக்கிறதா? ஆட்டுக் குட்டிகள் இன்னும் சாதுவாகக் கிடக்கின்றனவா? சிங்கம் கர்ஜிக்கிறதா? ஓடைகள் எல்லாம் தெளிவாக ஓடுகின்றனவா? பின்னர் நாம் ஒருவரை ஒருவர் ஆழமாக முத்தமிட்டுக் கொள்ளலாமா?); தீபகற்பத்தில் சில புராதனக் கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்கின்றன, வயலில் எருமை அசையாமல் நிற்கிறது, கிராமத்தில் சிறுத்தை அதன் இரையைத் துரத்துகிறது; கட்டிடங்கள் உயரமாக இருக்க வேண்டும், கட்டுமானங்கள் திடமுடன் இருக்க வேண்டும், படிக்கட்டுகள் வளைந்து வளைந்து இருக்க வேண்டும், அறைகளில் சிலநேரங்களில் அங்கொரு பிரகாசம் இருக்க வேண்டும்; தொப்பிகள், தொப்பி-தாங்கி மேலேயே இருக்க வேண்டும், கோட்டுகள் கொக்கிகளிலேயே இறந்து தொங்க வேண்டும், பூங்கோரைகள் பூக்கப் போவது போலத் தோன்றும்—அவைகளின் நறுமணம் தோற்கடித்துவிடும் என்பதை நான் அறிவேன்; பூமி அதன் அச்சில் சுழல்கிறது, அச்சு கற்பனையானது, பள்ளத்தாக்குகள் மலைகளுடன் உரையாடும், மலைகள் கடலுடன் உரையாடும், கடல் உலர் நிலங்களோடு உரையாடும், உலர் நிலங்கள் இப்பொழுது கைகால்கள் தரிக்கப்பட்ட பாம்புகளுடன் உரையாடும்; நான் ஒரு மனிதனைப் பார்த்தேன், அவன் ஒரு போர்வைக்குள் இருந்தான், நான் ஒரு துடுப்புப் படகில் உட்கார்ந்திருந்தேன், எனக்காக அவன் இனிமையாய் விசிலடித்தான், நான் எனது கண்களைச் சுருக்கிக் கொண்டேன், அவன் எனக்கு சைகை செய்தான், வா இப்பொழுது; நான் திரும்பினேன், நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாதவள் போல நான் துடுப்பைச் செலுத்தி வெளியேறினேன்.

௦௦௦௦௦௦ .

மேரி ( சிறுகதை ) – ஜீ. முருகன்

ஜீ. முருகன்


“ஒவ்வொரு ஞாயிறன்றும் உங்களைப் பார்க்கிறேன். பேருந்தை விட்டு இறங்கி இதே திசையில் இதே வழியில் நடந்து செல்கிறீர்கள். எங்கே போகிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?”
“இதே திசையில் இதே வழியில் நான் நடந்து செல்வது என் காதலியைப் பார்ப்பதற்காக.”
இவர் குழுப்பமடைந்தார். எனென்றால் அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம்.
“எத்தனை ஆண்டுகளாகக் காதல்?”
“முப்பது ஆண்டுகளாகக் காதல்.”
“திருமணம்?”

“அவள் கணவனுடன் நடந்துவிட்டது.”

இவர் திகைத்து நின்றார்.

“மன்னிக்கவும், எனக்கு நேரமாகிவிட்டது” என அவர் வேகமாக நடந்து மறைந்தார்.

அந்த சாலை பனை மரங்களுக்கு நடுவே புகுந்து, ஒரு கிராமத்தைக் கடந்து மலையடிவாரத்தில் போய், பாறைகளுக்கு நடுவே கிளை பிரியும் தொலைவு மட்டுமே கொண்டது. இந்த காதல் கிறுக்கன் இதில் எங்கே போய் எவளை சந்திக்கிறான் என்ற ஆவல் இவருக்கு. அரை மணி நேரம் கழித்து இவரும் அச்சாலையில் நடந்தார், ஒரு பத்து நிமிட நடையில் அவரையும் பார்த்துவிட்டார்.

ஒரு வாராவதியின் மேல் அவர் தனியாக அமர்ந்திருந்தார். எதிரே ஒரு பொன் நிற மது நிறைந்த நெகிழிக் கோப்பை, கால் அளவு பிராந்தி பாட்டில், இரண்டு திராட்சைக் கொத்துகள்.

இவர் போய் அருகில் நின்றார்.

அவர் சங்கடத்துடன் பார்த்தார்.

“காதலியைக் காணோம்.”

“அவளுக்குக் கணவனோட வாழ விருப்பமில்லை, தூக்கில் தொங்கிவிட்டாள்.”

“பிறகு”

“நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டேன்.

ஆனால் அவளை மறக்க இயலவில்லை. திருமணத்துக்கு முன் ஒவ்வொரு ஞாயிறன்றும் பேருந்து ஏறி இங்குதான் வருவோம். இந்த வாராவதியில் உட்கார்ந்துதான் திராட்சை சாப்பிடுவோம்.”

“மது?”

“அப்போது பழக்கமில்லை.”

“ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?”

“நான் ஏழை, அவள் பணக்காரி”

“நீங்கள் கீழ்சாதி, அவள் மேல் சாதி?”

“ஒரே சாதிதான்.”

“ஓடிப்போகக்கூட காசில்லை?”

“போனோம், ஒரு நண்பன் வீட்டில் தங்கியிருந்த இரண்டாம் நாளில் எங்களை வளைத்துவிட்டார்கள், என்னிடமிருந்து அவளைப் பிரித்துவிட்டார்கள், வேறொருவனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.”

இவர் ஏதோ யோசனையுடன் நின்றார், தயக்கத்துடன் கேட்டார்,

“உங்கள் காதலியின் பெயர்?”

“மேரி.”

இவர் திகைத்தார்.

0

நகரத்துக்கு வெளியே இருவரும் ஒரே பேருந்திலிருந்து இறங்குகிறார்கள். அதாவது கணவனும் காதலனும். இருவர் கையிலும் பூச்செண்டுகள்.

காதலன் சொல்கிறான், “கல்லறைத் தோட்டம் போகவேண்டும்”
கணவன் சொல்கிறான், “என் மனைவியின் கல்லறையும் அங்குதான்”

இருவரும் அத்திசையில் நடக்கிறார்கள்.

கணவன் சொல்கிறான், “இன்று அவளுக்கு நினைவு நாள்.”
காதலன் சொல்கிறான், “இன்று என் காதலிக்குப் பிறந்த நாள். அவள் கல்லறையும் இங்குதான் இருக்கிறதெனச் சொன்னார்கள். 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வெளிநாட்டில் இருந்தேன்.

இப்போதுதான் முதன்முதலாக இங்கு வருகிறேன். அவளைக் காதலித்த ஆண்டுகளில் அவளுடைய ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஒன்றாகவே இருந்திருக்கிறோம்.”

“இது என் முதல் மனைவி. என்னோடு ஒரு மாதம் மட்டும் வாழ்ந்தவள். அந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. மன அளவிளும் உடலளவிலும் மனைவியாக அவள் ஒப்புக்கொடுக்கவே இல்லை. ஒரு நாள் தூக்கில் தொங்கினாள், அந்த நரகத்தை முடித்து வைத்தாள்.”

“கன்னியாகவே…?”

“ஆமாம்.”

இருவரும் நடந்தார்கள்.

காதலன் சொன்னான், “நாங்கள் பழகிய ஐந்தாண்டுகளில் ஒரு முறைகூட நாங்கள் சேரவில்லை. ஓடிப்போய் நண்பன் வீட்டில் இருந்த நாட்களில் கூட முத்தங்கள் மட்டுமே.”

கணவன் வியப்புடன் கேட்டான், “கன்னியாகவே…?”

“ஆமாம்”

கணவனும் காதலனும் நடந்தார்கள்.

காதலன் தயக்கத்துடன் கேட்டான், “உங்கள் மனைவியின் பெயர்?”
“மேரி.”

காதலன் திகைத்தான்.

கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைவதற்கு முன் கணவன் சொன்னான், “பிரேதப் பரிசோதனையில் அவள் கற்பமாக இருந்தாள்.”

0