Category: இதழ் 155

பொன் தாலி (சிறுகதை ) – சுரேஷ் பரதன்

எஸ்தர் அழகாய்ச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கருகே தலையைக் குனிந்த நிலையில் வைத்தபடி, வலக்காலைச் சம்மணமிட்டும் இடக்காலைக் குதிக்காலிட்டும் அமர்ந்தபடி இரண்டாம் முறையாகக் கழுத்தில் தாலி வாங்கிக் கொண்டாள். இம்முறையும் நடேசன்தான் அவளுக்கு தாலி கட்டினான்.

ஒரு மே மாத வெயில் சுள்ளென்று சுட்டெரித்த மதிய வேளையில், ஒரு அம்பாசடர் காரின் பின்னிருக்கையில் நடேசனும் எஸ்தரும் அமர்ந்திருக்க, அவன் சுண்டுவிரல் அளவிலிருந்த ஒரு விரலி மஞ்சள்த்துண்டு கோர்த்திருந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் அணிவித்தான். அப்படித்தான் அவர்களிருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

அந்தத் தாலியை அவன் கட்டிய போது காருக்குள் அவர்களிருவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. தாலியின் மூன்று முடிச்சுகளையும் நிதானமாகக் கட்டி முடித்த நடேசன் காரின் முன்பக்கக் கண்ணாடி வழியே தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபரைக் காண்பித்து அவர் அவனுடைய நண்பனின் அப்பா என்றும், அவரை அவனும் அப்பாவென்றே அழைத்து வருவதாகவும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்குக் கொஞ்சமும் சம்பந்தமேயில்லாமல் சொன்னபோது அவளுக்குச் சிரிப்பாக வந்தாலும் அவள் அதை சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள். பின்னர் நடேசனுடைய நண்பர்கள் அவனுக்குப் புதிதாய் முழுக்கைச் சட்டையொன்றை காரின் கண்ணாடிச் சன்னலைத் திறக்கச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

காருக்குள் அமர்ந்தவாறே அவன் அணிந்திருந்த பழைய சட்டையைக் கழற்றிவிட்டு, புதுச்சட்டையை அணிந்து கொண்டான். இவளுக்கு மாற்றுவதற்கென துணிகளெதுவும் இல்லை. அதைப்பற்றி அவனுடைய நண்பர்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. அப்படியே அவர்கள் வாங்கியிருந்திருந்தாலும் அவளால், அவனைப் போல காருக்குள் மாற்றியிருக்க முடியாதுதான். மூன்று நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வந்த சேலையிலேயே தான் அவளுக்கு திருமணமென்ற அந்த சுப நிகழ்வு நடந்தேறியது.

எஸ்தருக்கு அவளின் மற்ற தோழிகளுக்கிருந்த மாதிரி, திருமணத்தைப் பற்றிய பெரிய பெரிய கனவுகள் எதுவும் எப்போதுமே இருந்ததில்லையெனினும், இப்படி மூன்று நாடகள் முன்னர் அணிந்த அழுக்குச் சேலையில் அது நிகழுமென்று அவள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. நடேசனை அவள் கடந்த ஒன்றரை வருடமாகத்தான் அறிவாள். அதிலும் அவன் தன் காதலை இவளிடம் சொல்லி இன்னும் முழுதாக ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை.

முந்தைய வருடத்தின் திசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் மாலையில் அவன் தன் காதலைச் அவளிடம் சொன்னபோது அவள் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தாள். அதனாலேயே அவள் அவனுக்கு சரியென்று சம்மதம் தெரிவிக்கவே இல்லை. ஆனால் மறுப்பாகவும் எதுவும் சொல்லவில்லை. அதையே அவன் அவளின் சம்மதமாக நினத்துவிட்டான். பின்னர் தினசரி திருமணத்தைப் பற்றிப் பேசிப்பேசியே இவளையும் சம்மதிக்க வைத்துவிட்டான்.

பேருந்து பயணத்தில் பக்கத்திலமர்ந்து வரும் அந்நிய நபரை ஒரு இரண்டு மணி நேரம் கூடச் சகிக்க முடியாமல் போகிறதென்றால் வாழ்நாள் முழுவதும் எப்படி ஒரு முன்பின் தெரியாத பெண்ணுடன் அல்லது ஆணுடன் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பது என்பதே அவன் அடிக்கடி இவளிடம் சொன்ன ஒரு விசயமாக இருந்தது. அவன் பேசுவதும், அவனோடு பேசுவதும் எஸ்தருக்கு பிடிக்கவே செய்தது. இருப்பினும் அவர்களிருவருக்கும் இடையில், அவர்கள் பெரிதென மதிக்காத, மதமும் சாதியும் ஊடாடிக் கிடந்ததை யோசிக்கும் வேளைகளிலெல்லாம் எஸ்தர் ஓரடி தன்னைத் தனக்குள் பின்னோக்கிச் சுருக்கிக் கொண்டவளாய் இருந்தாள்.

இத்தனைக்கும் நடேசனின் குடும்பம் மிகவும் தெய்வ பக்தி நிரம்பிய ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் பக்தி நடேசனுக்கும் இருக்கவே செய்தது. எஸ்தரிடம் தன் காதலைச் சொன்ன திசம்பருக்கு அடுத்த ஜனவரியில் பழனியிலுள்ள முருகன் கோவிலுக்குப் போவதற்கென்று ஒரு நாள் காலையில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டு தனக்குத் தானே மாலை போட்டுக் கொண்டு வந்து நின்றான்.

நடேசனின் இப்படியன பல விசயங்கள் எஸ்தருக்கு இந்த ஆறு மாதங்களில் மனதில் பெரும் போராட்டங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தன. இனி பூஜையறையில் முருகப் பெருமானுடன் ஜீஸஸுக்கும் இவன் இடந்தருவானா. அதை அவன் குடும்பத்தார் ஏற்றுக் கொள்வார்களா என்றெல்லாம் அவள் யோசிக்க ஆரமபித்தாள். ஜீஸஸை விடுங்கள், அவன் குடும்பத்தினர் முதலில் தனக்கு இடம் தருவார்களா என்பதே அவளுக்கிருந்த பெரும் கேள்வி.

அதற்குள் ஜீஸஸின் இடத்திற்கு என்ன அவசரம். ஆனால் அவனோ பிடிவாதமாக அனுதினமும் எஸ்தரிடம் வா நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய வண்ணமே இருந்தான். சில சமயங்களில் நடேசன் உண்மையாகவே தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறானா அல்லது எஸ்தர் சம்மதம் சொல்லவே மாட்டாள் என்கிற தைரியத்தில்தான் இப்படிச் சொல்லிக் கொண்டு திரிகிறானா என்றெல்லாம் சந்தேகங்கள் அவளுக்கு வந்ததுண்டு. சரியென்று சொன்னால் நம் பக்கமே வரமாட்டான் என்றும் சில சமயங்களில் தோன்றியும் இருந்தது.

ஆனால் நடேசனோ எஸ்தர் சரியென்று சொன்ன அந்த நாளில் தன் நண்பர்களின் துணையோடு அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டான். அப்படி போன நாளிலிருந்து மூன்றாம் நாளில் சப்-ரிஜிஸ்திரார் அலுவலகத்தின் அருகிலிருந்த மரத்தினடியில் நிறுத்தப்பட்ட காருக்குள் அமர்ந்தபடி நடேசன், எஸ்தர் கழுத்தில் முதன் முறையாக தாலி கட்டினான். தாலி கட்டும்பொழுது இதெல்லாம் மற்றவர்களுக்காகத் தான் என்றும் கூறினான்.

அதற்கு என்ன அர்த்தம் என்று எஸ்தருக்கு புரிபடவேயில்லை. அதன் பின்னர் இருவரும் காரை விட்டிறங்கி, சப்-ரிஜிஸ்திரார் அலுவலகத்தினுள் சென்று, அங்கே நடேசனின் நண்பர்கள் முன்பே வாங்கி வைத்திருந்த ரோஜா மாலைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டார்கள். பின்னர் அந்த சப்-ரிஜிஸ்தரார் அவர்களிருவரையும் குறுகுறுவென்று பார்த்த வண்ணமிருக்க, அவர்முன் வைக்கப்பட்டிருந்த ஒரு தடிமனான நோட்டுப் புத்தகத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.

அப்போது நடேசனின் நண்பனொருவன் தன் கேமராவில் இவர்கள் இருவரையும், மாலை மாற்றும் பொழுது ஒருதரமும், கையெழுத்திடும் பொழுது ஒரு தரமும் என புகைப்படங்கள் பிடித்துக் கொண்டான். அன்றிரவு நடேசனின் நண்பரான இராமலிங்கம், அவர்களிருவரையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார்.

இராமலிங்கமும், அவர் மனவியைக் காதலித்துத்தான் திருமணம் செய்திருந்தாரென்று அவர் வீட்டிற்குப் போனபோது எஸ்தருக்குத் தெரிய வந்தது. அவர் வீட்டிற்குச் சென்ற இருவரும் மூன்று நாட்களுக்குப் பின்னர் குளித்தனர். அவர் நடேசனுக்கு ஒரு கைலியும் ஒரு டீ சர்ட்டும் கொடுத்தார். இராமலிங்கத்தின் மனைவி எஸ்தருக்கு ஒரு நைட்டியைத் தந்தார். எஸ்தரும் நடேசனும் அவற்றை வாங்கிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்து, இனியெல்லாம் இப்படி இரவல் பொருட்களைக் கொண்டுதான் வாழ்க்கையை வாழ வேண்டியிருக்குமோ என்று கண்களாலேயேக் கேட்டுக் கொண்டனர்.

வாழ்நாளில் அந்நாள்வரை அடுத்தவர் ஆடைகளை உடுத்தியேயிராத எஸ்தருக்கு முனுக்கென்று கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதுவரை இருந்திராத பயமொன்று நடேசனின் கண்களில் உருள்வதையும் எஸ்தர் முதன் முதலாய் பார்த்தாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இராமலிங்கம் “அட எல்லாம் சரியாப் போகுங்க” என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்னார்.

ஆனால் எல்லாம் அத்தனை சுளுவாக சரியாகப் போகிற மாதிரி தெரியவில்லை. திருமணமான இரண்டாம் நாள் இராமலிங்கம் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். இராமலிங்கம் அவர் வீட்டிலிருந்து கிளம்பும் போது வெள்ளியிலான காமாட்சி விளக்கொன்றை எஸ்தரின் கையில் கொடுத்தார். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று யோசித்தாள் எஸ்தர்.

நடேசனோ வாங்கிக்கொள் என்பது மாதிரி பார்த்தான். அவளும் வாங்கிக் கொண்டாள். இராமலிங்கத்தின் மனைவி எஸ்தரைப் பார்த்துப் மெல்லிசாய் புன்னகைத்தாள். அந்த புன்னகை, அவள் நேற்றிரவு எஸ்தரையும் நடேசனையும் அவர்களது படுக்கையறைக்கு அனுப்புவதற்கு முன்னர் எஸ்தரைத் தனியாக அழைத்துச் சொன்ன ஒரு விசயத்தை மீண்டும் நினைவுபடுத்துவதைப் போல இருந்தது.

இந்தக் கல்யாணமெல்லாம் சரிப்பட்டு வராது. பேசாமல் உன் வீட்டிற்கே போய்விடு. இதற்கு முன்னால் அவனுடன் கூடியிருக்கிறாயா.. இல்லையா.. அப்படியென்றால் சரிதான். அந்த சுகத்தினை ஒருமுறை அனுபவித்து விட்டாயானால் அப்புறம் சட்டென்று விட்டுவிட முடியாது. என்னைப் பார். என் கல்யாணத்தில் நான் அடைந்த சந்தோசங்களை விட துக்கங்களே அதிகம். என் வீட்டிலிருந்தால் நான் இவ்வளவு கஷ்டங்கள் பட்டிருக்க மாட்டேன். இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

நீ மட்டும் சரியென்று ஒரு வார்த்தை சொல். இராமலிங்கத்திடம், உன்னைக் கொண்டுபோய் உன் வீட்டிலேயே விட்டுவிடச் சொல்கிறேன். நடேசன் கையில் காசு பணமெல்லாம் வைத்திருக்கிறானா.. தெரியாதா.. உன் வீட்டிலிருந்து உன்னை பணம் காசு நகை நட்டெல்லாம் எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னானா. இல்லையா. எவ்வளவு சம்பாதிக்கிறான். என்னது அதுவும் தெரியாதா.. நான் நினைச்சது சரியாகத்தான் இருக்கிறது. வேளாவேளைக்குச் சோறாவது போடுவானா.. பசியெடுக்குமேம்மா நாள் தவறாம மூணு வேளையும்.. எவ்வளவு நாள் பட்டினியாய் இருப்பே. எப்படித்தான் இவர்கள் அத்தனை பேரும் இப்படிச் சொல்லி வைத்த மாதிரி ஒன்றுபோல் இருக்கிறார்களோ தெரியவில்லை.

அவள் இடைவெளியின்றி நிறுத்தாமல் எஸ்தரின் மறுமொழிகளுக்கெல்லாம் காத்திருக்காமல் பேசிக்கொண்டே இருந்தாள். எஸ்தருக்கோ அவள் மேல் வெறுப்பாகவும் அதே சமயம் பரிதாமாகவும் இருந்தது. என்ன பெண் இவள். எவ்வளவு நம்பிக்கையாய் புதிதாய் ஒரு வாழ்க்கை வாழ முடிவெடுத்த தன்னிடம் அந்த வாழ்க்கை ஆரம்பமான முதல் இரவன்றே இவளால் இப்படியெல்லாம் எப்படி பேச முடிகிறதென்று யோசித்தாள் எஸ்தர். இருப்பினும் அவள் சொன்ன சில விசயங்கள் எஸ்தரின் மனதிலும் பல கேள்விகளை எழுப்பவே செய்தது.

இதுவரை கூடவே வேலை பார்த்தாலும் நடேசனின் வருமானம் என்னவென்று எஸ்தருக்குத் தெரியாது. திடீரென்று செய்துகொண்ட திருமணத்தால் நாளையிலிருந்து இருவரும் பழைய கம்பனிக்கு, பழைய மாதிரியே வேலைக்குப் போகமுடியுமா. முடியாதா. இல்லை வேறு இடத்திற்கு வேலைக்குப் போனாலும் இதே சம்பளம் கிடைக்குமா.. நடேசனும் தொடர்ந்து வேலைக்குப் போவானா இல்லையா.. இராமலிங்கத்திற்கு தொடர்ந்தாற்போல் வருமானம் வருவதில்லையோ.

அதனால் தான் அவர் மனைவி வேலைக்குப் போகிறாளா.. அவளைச் சம்பாதிக்க அனுப்பிவிட்டு அவர் எந்த வேலைக்கும் போகாமல் இருப்பதினால் தான் இப்படி வெறுப்பாய் இருக்கிறாளா.. காசில்லாமல் போகும்போது இப்போதிருக்கும் காதலெல்லாம் கசப்பாய் போய்விடுமா. நடேசன் அப்படியெல்லாம் சம்பாதிக்காமல் இருந்து விட மாட்டான். ஏதாகிலும் செய்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. நான் இவளை மாதிரி இந்தக் கல்யாணத்தை வெறுக்க மாட்டேன்.

என்னதான் நடேசன் பேசிப் பேசி என்னைச் சம்மதிக்க வைத்து விட்டாலும் இதில் என் பங்களிப்பும் இருக்கிறது. நான் எடுத்த இந்த முடிவு தவறாகவே இருந்தாலும் அதை சரி செய்வேன். என்னுடைய இந்த முடிவால் மற்றவர்கள் யாரும் என்னைக் குறை சொல்லும்படி ஒரு நாளும் நான் விட மாட்டேன் என்ற முடிவுக்கு வந்தவளாய் இராமலிங்கத்தின் மனைவியிடம் அதெல்லாம் வேண்டாம்.

நான் இவருடன் தான் வாழப் போகிறேன் என்று சொல்லியிருந்தாள். ஆனாலும் அன்றிரவு எஸ்தரும் நடேசனும் தனித்து விடப்பட்ட அறையில் அவள் அவனை வெறுமென கட்டிக் கொண்டு படு என்று மட்டும் சொல்லிவிட, நடேசனும் சரியென்று சொல்லி அவளை பின்புறத்திலிருந்து கட்டிக்கொண்டு படுத்துறங்கினான். அவன் முகத்தில் அந்த மங்கிய விளக்கொளியில் மிகப்பெரிய சந்தோசத்தையும், பெரிய கடினமான செயலொன்றை வெற்றியுடன் முடித்த ஒரு நிம்மதியையும் ஒரு சேரப் பார்த்தாள் எஸ்தர்.

நடேசன் செய்யும் எல்லா காரியங்களும் எஸ்தருக்கு அவன் மேல் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை தருவனவாய் இருந்தன. மறுநாளே சின்னதாய் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திய நடேசன் முதன் முதலாய் ஒரு விநாயகர் படத்தையும் ஒரு ஜீஸஸ் படத்தையும் வாங்கி வந்தான். இராமலிங்கம் தந்த காமாட்சி விளக்கை அந்தப் படங்களின் முன் வைத்து தினமும் அந்திப் பொழுதில் எஸ்தரை ஏற்றும் படி சொன்னான். அதனால்தான், அவளால்தான் அவன் வாழ்க்கை இனி வெளிச்சமாய் இருக்கும் என்றும் கூறினான்.

பழைய கம்பனிக்கே தான் வேலைக்குப் போகப் போவதாகவும் எஸ்தரை அந்த வேலைக்குப் போக வேண்டாமென்றும் சொன்னவன் வேண்டுமானால் அவள் விருப்பப்பட்டால் வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் என்றும் சொன்னான். மாதச் சம்பளத்தினை இனி அவன் எஸ்தரிடம் தான் கொடுப்பானென்றும் வீட்டின் வரவு செலவுகளை அவள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னான். அவளுக்கு பயமாயும் இருந்தது. சந்தோசமாகவும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மலர ஆரம்பித்தாள் எஸ்தர்.

நடேசனின் உறவில் ஒருத்தர் ஒரு நாள் அவர்களைத் தேடிக்கொண்டு வந்தார். அவனும் அவரைப் பார்த்ததில் சந்தோசமடைந்தான் என்பதை அவன் முக மாறுதல்களில் எஸ்தர் புரிந்து கொண்டாள். அவரைத் தன் அண்ணன் முறை என்று அறிமுகப்படுத்தி வைத்தவன் அவரிடம் அவனுடைய அம்மா அப்பாவைப் பற்றி விசாரிக்கத் துவங்கினான். அவர்களெல்லாம் நடேசன் மீது அளவுகடந்த கோபத்தில் இருப்பதாகக் கூறியவர் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று கல்யாணம் செய்ய என்ன காரணம் என்று கேட்டார். அதையெல்லாம் இப்போது பேசி என்னவாகப் போகிறது என்று எஸ்தர் நினைக்கும் பொழுதில் அதையே நடேசனும் அவரிடம் சொன்னான். நடந்தது நடந்தாகி விட்டது. இனி மேற்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி பேசலாமேண்ணே என்று அவரைப் பார்த்து கேட்டான் நடேசன்.

சித்தி தாண்டா ரொம்ப சங்கடப்பட்டுட்டே இருக்காங்க நடேசா. இராப்பகலா அழுதழுது கண்ணெல்லாம் வீங்கிப்போய் இருக்கு. சித்தப்பா யார்கிட்டேயும் பேசுறதேயில்லை. வேலைக்கும் போகலை. லீவு போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்தப் பொண்ண நான் விரும்புறேன், இவளைத்தான் கட்டிப்பேன்னு ஒரு வார்த்தை வீட்டிலே சொல்லியிருக்கலாம். இல்ல எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே. நான் சித்திகிட்ட சித்தப்பாகிட்ட பேசியிருப்பேனே. அவங்க கேக்கலைன்னா, ஒத்துக்கலைன்னா அப்புறமா இப்படி முடிவெடுத்துருக்கலாமே.

பொசுக்குன்னு இப்படிப் பண்ணீட்டியேப்பா. என்று பேசிக்கொண்டே போனார். வீட்டில் சொல்லியிருந்தால் எல்லாரும் சேர்ந்து எப்பாடு பட்டாவது இந்தக் கல்யாணத்தை நடத்தவிடாமல் இருப்பதிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்திருப்பார்கள் என்று அவருக்கும், நடேசனுக்கும், எஸ்தருக்கும் தெரிந்திருந்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவர் நீ வாப்பா உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்ன்னு நடேசனை வெளியே அழைத்துக் கொண்டு வெளியே போனார்.

வீட்டை விட்டு வெளியே போய் என்ன பேச வேண்டியிருக்கிறது.. எதைச் பேசவேண்டுமோ அதை இங்கேயே பேசினால் ஆகாதா. எனக்குத் தெரியாமல் பேச வேண்டும் எனில் என்னைப் பற்றி வேண்டாததாகத் தானே இருக்க வேண்டும் என்று வந்தவர் மேல் ஒரு இனம்புரியாத கோபம் வந்தது. அவர்தான் கூப்பிட்டார் என்றால் நடேசனும் ஏன் போனான். இங்கேயே சொல்லச் சொல்லியிருக்கலாம் தானே. வரட்டும் கேட்போம் என்று காத்திருக்கத் துவங்கினாள் எஸ்தர்.

பத்து நிமிடத்தில் தனியாய்த் திரும்பி வந்த நடேசனோ முகத்தில் ஒன்றுமே காட்டிக் கொள்ளாதவனாய் இருந்தான். கொஞ்ச நேரம் அமதியாய் இருந்தவன் தனியாய்ப் போய்ப் பேசி வந்ததிற்கு முதலில் அவளிடம் மன்னிப்புக் கேட்டான். அதுவரை கோபமாய் இருந்த எஸ்தருக்கு மனம் லேசாய் இளகிப்போனது. எப்படி இவன் என்னுடைய எல்லா உணர்ச்சிகளையும் சொல்லாமலேயே புரிந்து கொள்கிறான் என்று சற்று ஆச்சர்யமாக கூட இருந்தது எஸ்தருக்கு. அவர் சொன்ன விசயம் இதுதான். நடேசனை அவனம்மா வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் இவளில்லாமல் தனியாக. இவனோ வந்தால் எஸ்தரோடுதான் வருவேன். அவளை தனியாக விட்டு விட்டு வர மாட்டேன். அதற்காக அவளை அவன் திருமணம் செய்யவில்லை என்று தீர்மாணமாகச் சொல்லியிருக்கிறான்.

வந்த நடேசனின் அண்ணனுக்கோ ஏமாற்றமாய்ப் போய்விட்டதாம். என்றெல்லாம் சொல்லியவன் அவளை அவனருகே அமரச் சொல்லி அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். தன் மடியில் கண் மூடிப் படுத்திருந்தவனைக் கொஞ்ச நேரம் கண் கொட்டாமல் பார்த்திருந்த எஸ்தர் மெல்லக் குனிந்து அவனை முத்தமிட்டாள். அவன் அவளைப் பார்த்த பார்வையில் அவளுடைய இளமையெல்லாம் மொத்தமாகப் பிரவாகமெடுத்து ஆறாய் பாயத் தொடங்கியது.

நடேசனின் அண்ணன் அதிலிருந்து அடிக்கடி வந்து போகத் துவங்கினார். நடேசனுக்குத் துணிமணிகள் எடுத்து வந்து கொடுத்தார். எஸ்தருக்கும் நடேசனின் அம்மா அவளின் பழைய சேலைகளை அவரிட்ம் கொடுத்தனுப்பியிருந்தாள். எஸ்தரிடமும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசிப் பழகினார். வரும் பொழுதிலெல்லாம் எப்படியாவது நடேசனையும் எஸ்தரையும் நடேசன் வீட்டிற்கு அழைத்துப் போவது ஒன்றைப் பற்றியே பேசினார்.

அவருடைய சித்தி பற்றி சித்தப்பா பற்றி பேசினார். அவருடைய பேச்சே அவர்களிருவரையும் பற்றி எஸ்தருக்கு புரிந்து கொள்ள போதுமானதாக இருந்தது. இங்கே அவர்களைப் பற்றி பேசுபவர் அங்கே போய் இவர்களைப் பற்றியும் பேசியிருப்பார் என்று எஸ்தருக்குப் புரிந்து கொள்ள வெகுநேரம் பிடிக்கவில்லை. அவர் ஒருநாள் வந்திருந்த வேளையில் நடேசனின் நண்பனொருவன் திருமணத்தன்று எடுத்த புகைப்படங்களோடு வீட்டிற்கு வந்தான்.

நடேசன் புகைப்படங்களை முதலிலேயே பார்த்திருப்பான் போல. அவற்றைப் பார்க்க அவன் அவ்வளவு அக்கறை காட்டாமலிருந்தான். எஸ்தருக்கு முன்னால் நடேசனின் அண்ணன் வாங்கிப் பார்த்தார். பார்த்தவர் மாலைகளை கழுத்தையொட்டிப் போட்டிருக்கக் கூடாதா.. நார் மட்டும் இவ்வளவு நீளம் தொங்கிக் கொண்டிருக்கிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

பின்னரே அந்த புகைப்படங்களை எஸ்தரிடம் தந்தார். வாங்கிப் பார்த்தவளுக்கு சின்னதாய் ஒரு சிரிப்பும் கூடவே ஒரு பூரிப்பும் வந்தது. நடேசனின் அண்ணனும் நண்பனும் போன பின்னால் அந்த புகைப் படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்தவள் எப்ப பாரு நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லைன்னு சொல்றியே .. இந்த மாலை மாத்துற போட்டோவில என்னோட சிரிப்பைப் பாத்தியா.. என்னோட அந்த சந்தோசம் சொல்லலையா நான் உன்ன எவ்வளவு காதலிக்கிறேன்னு.. என்று சொன்னாள். அதை அன்றைக்கே கவனித்துவிட்டதாகச் சொன்ன நடேசன் அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

நடேசனின் அண்ணன் இவர்களைத் தேடி நடையாய் நடந்தது வீண் போகாமல் ஒரு நாள் நடேசனின் அம்மா அவர்கள் இருவரையும் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள். நடேசனின் அண்ணன் அவரே அழைத்துக் கொண்டு போவதாயும் சொன்னதும் எஸ்தருக்கு கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. நடேசனுடன் குடித்தனம் செய்த இந்த ஐம்பது நாட்களில் அவன் தன் வீட்டில் உள்ளவர்களின் குண நலன்களைப் பற்றி ஓரளவு சொல்லியும் இருந்தான். அவன் அவளிடம் சொன்ன ஒரு விசயம் எங்க வீட்டு ஆட்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசுவாங்க. அவங்க அப்படித்தான்.

அவங்க என்ன சொன்னாலும் உன்னை ஏசினாலும் பேசினாலும் இல்லை என்னை ஏசினாலும் பேசினாலும் நீ அதைப் பெருசா எடுத்துக்காதே. அவங்களுக்கு நம்மோட காதலைப் பத்தி ஒன்னும் தெரியாது. அவங்களுக்கு இப்போ அவங்க பையன் அவங்களை ஏமாத்திட்டாங்கிறதைத் தவிர வேற ஒன்னும் புத்திக்குள்ள இருக்காது. அதனால நாம அவங்களை அவங்களோட மன நிலையைப் புரிஞ்சு நடந்துக்கணும்.

அவங்க திட்டினாங்க இவங்க திட்டினாங்கன்னு எதையும் மனசுல வைச்சுக்காதே நான் யாருக்காகவும் உன்னை விட்டு விட்டு எங்கும் போகமாட்டேன் என்று எஸ்தரை சமாதானம் செய்தே அழைத்துப் போனான். அவன் சொல்லிய மாதிரியே எல்லாமும் நடந்தது. ஆளாளுக்கு இருவரையும் திட்டினார்கள். எல்லாரையும் விட நடேசனின் அம்மாதான் அதிகமாகத் திட்டினார்கள். அப்புறம் அழுதார்கள். தன் அம்மா அழுவதைப் பார்த்து நடேசனும் அழுதான். நடேசனின் அப்பா ஒன்றுமே சொல்லாமல் இருந்தார்.

எஸ்தர் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டிருந்தாள். அன்றிரவு அங்கேயே சாப்பாடு சாப்பிடச் சொன்னார்கள். தன்னை நடேசன் அன்றிரவு அங்கேயே தங்கச் சொல்லிவிடுவானோ என்று எஸ்தருக்குப் பயமாய் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை. சாப்பிட்டுமுடித்த பின் என் வீட்டிற்குப் போகிறேனென்றான். ஏன் இது உன் வீடில்லையா என்று அவன் வீட்டில் அவனை யாருமே கேட்காதது குறித்து அன்றிரவுக் கூடலுக்குப் பின் சொல்லி சின்னதாய்க் கண்ணீர் சிந்தினான் நடேசன். உன்னையாவது உன் அம்மா பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டார்களே.

என் அன்னையையும் அக்காவையும் பார். நம் கல்யாண நாளன்று நாமாகப் போன் செய்து சொன்ன நேரத்திலிருந்து இன்று இப்போதுவரை எஸ்தருக்கு என்னாயிற்று ஏதாயிற்று, அவள் உயிரோடிருக்கிறாளா இல்லையா என்று பார்க்கக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லையே என்று சொல்ல வாய்வரை வந்ததை சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். அவளுக்கும் கண்ணீர் வடிந்தது. அவள் கண்ணீர் வழிந்த அவள் கன்னத்தைக் கையால் துடைத்து முத்தத்தால் நிறைத்தான்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வந்த நடேசன் அவனையும் எஸ்தரையும் அவனுடைய அம்மா அழைத்திருப்பதாக சொன்னான். எதற்கு என்று கேட்டதற்கு இதுவரை மஞ்சளில் எஸ்தர் கழுத்தில் இருந்த தாலிக்குப் பதிலாக தங்கத்தில் தாலி அணிவிக்க வேண்டுமென்றும் அதற்காக நல்ல நாள் பார்த்திருப்பதாகவும் அதற்காகவே வரச் சொன்னதாகவும் கூறினான்.

கண்டிப்பாய் செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு தன் மகன் தாலி கட்டுவதை அம்மா பார்க்க விரும்புவதாகவும் கூறினான். எஸ்தரால் மறுக்க முடியவில்லை. மறுநாள் இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

நடேசனின் அம்மா எஸ்தரை சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கருகே அமரச் சொன்னார்கள். இரண்டு கால்களையும் சம்மணமிட்டு அமர்ந்த எஸ்தரை வலது காலை சம்மணமிட்டும் இடது காலை குதிக்காலிட்டும் அமரச் சொன்னார்கள். அப்படியே அமர்ந்தாள் எஸ்தர். தலையைக் குனிந்தவாறு அமரச் சொன்னார்கள். குனிந்தாள். வெட்கப் படச் சொன்னார்கள். அறுபது நாட்கள் குடித்தனம் செய்த பெண் எப்படி வெட்கப் படுவாள். அவளுக்கு வெட்கம் வரவேயில்லை.. இருந்தாலும் குனிந்தவாறு அமர்ந்தாள்.

நடேசன் அவனம்மா கொடுத்த புது மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த பொன்னாலான தாலியை எஸ்தர் கழுத்தில் அணிவித்தான். அவனம்மா கண்ணீர் வடித்தாள். அருகிலிருந்த நடேசனின் அண்ணன் சித்தி தாலி கட்டுற நேரத்தில நல்ல வார்த்தை சொல்லாம ஏன் அழுறீங்க என்று கேட்க, நடேசன் கல்யாணத்தை நான் எப்படியெல்லாம் நடத்தனும்ன்னு நினைச்சிருந்தேன். இப்படி ஆகிப்போச்சே என்று மேலும் அழுதாள். எஸ்தரின் கழுத்தில் ஏறிய புது பொன் தாலி ஏற்கனவே இருந்த மஞ்சள் தாலியை விட கனமாய் இருந்தது அவளது மனதைப் போலவே. நல்லவேளை யாரும் அப்போது புகைப்படம் எடுக்கவில்லை. அவளின் அந்நேரத்துச் சிரிப்பில்லாத முகத்தை யாரும் மீண்டும் பார்க்கப் போவதில்லை.

*****

ஆசீர்வாதத்தின் வண்ணம் ( ஆசீர்வாதர் ரங் ) – சாளை பஷீர்

“ பிரம்மாவின் மகன், அப்துல் கனியின் மகன் இருவரும் கழுத்தை கட்டிக் கொண்டு நதி நீரில் விளையாடுவோம். இது ஹிந்து நதி இல்லையா ! பிரம்மா எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்று பார்க்கிறேன்! அவரே நேரில் வந்து ‘ இந்த நதியில் உன் மகன் நீராடக் கூடாது, இது ஹிந்து நதி ‘ என்று சொல்கிறாரா, பார்க்கிறேன்….”

“இப்போது அவளுடைய பார்வை ஹஸினாவின் நெற்றிக் குங்குமத்தின் மீது சென்றது. ஒரு முஸ்லிம் பெண்ணின் நெற்றிப் பொட்டு. தன்னுடைய முதல் ஆசீர்வாதத்தின் சின்னம். அவள் தன் நடுங்கும் உதடுகளை ஹஸீனாவின் நெற்றிப் பொட்டின் மீது பதித்தாள்!…. “

—- ’ஆசீர்வாதத்தின் வண்ணம் ‘

‘ நீலகண்ட பறவையை தேடி ‘ புதினத்தின் அஸாமிய நீட்சி என்று கூட ‘ஆசீர்வாதத்தின் வண்ணம்’ புதினத்தை சொல்லலாம் . நாட்டு பிரிவினையின் வேர்களில் ஊறிக் கிடக்கும் நச்சை உரித்து போடும் எழுத்து.

இணைந்தெழும் காலையும் கதிரவனும் போல ஹிந்துக்களும் முஸ்லிம்களும் விரவி பிணைந்திருக்கும் வாழ்க்கையற்ற பெங்காலையும் அஸாமையும் ஏன் முழு இந்தியாவையும் நினைத்து கூட பார்க்க முடியாது.

வன்மத்துடன் வெட்டி பிளக்கப்பட்ட தாய் மண்ணின் காயங்களின் வேர்களில் உள்ளோடிய வெறுப்பின் நச்சு படிமங்கள் சிதையாமல் அப்படியே அழுந்திக் கிடக்கின்றன. திறப்பு தேடி மண்ணில் விழும் புத்தன் விதைகளை தன் அழுகிய விரல்களின் கூர் நகங்களால் துளைத்திடும் ஒரு கொடுந்தருணத்திற்காக அவை காத்துக் கிடக்கின்றன.

இந்த புதை கிடங்கின் நச்சு தேக்கமானது அரசியல் சமூக அறிவுத்தள செயல்பாடுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இவைகள் செய்யத் தவறிய பெரும்பணியை இலக்கியத்தின் வழியாக படைப்பு மனதின் வழியாக செய்திருக்கிறார் அருண் சர்மா. இதற்கு மலையை ஒத்த மனம் தேவை.

பிரம்மபுத்ரா நதியில் பயணிக்கும் மன்ஸூர், தற்செயலாக ஒரு நிலப்பரப்பை கண்டடைகின்றான். பிரம்மபுத்ரா நதியின் கிளை நதியான குரயீ நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கின்றது அந்த புதிய நிலப்பரப்பு. அவனுடன் பல முஸ்லிம்களும் அந்த பூமியில் குடியேறுகின்றனர். அந்த நிலத்தை கொத்தி திருத்தி வளங்கொழிக்கும் ஒன்றாக மாற்றுகின்றனர். பின்னர் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக நேபாளிகளும் குடியேறுகின்றனர்.

அந்த புதிய நிலப்பரப்பிற்கு குரயீகுடி என்று பெயரிடப்படுகின்றது. இதனருகிலேயே அமைந்திருக்கும் இன்னொரு கிராமமான ஸோனாரூச்சுக் கிராமத்தில் ஏற்கனவே ஆட்கள் வசித்து வருகின்றனர்.

ஸோனாரூச்சுக்கில் கஜேன் என்கிற ஹிந்து இளைஞனும் அவனது வயதான பாட்டியும் வசித்து வருகின்றனர். கஜேனுக்கு தாயுமில்லை தந்தையுமில்லை. பாட்டியோ பழஞ் சடங்குகளில் ஆழ்ந்த பற்றுள்ளவள். வாட்டசாட்டமான கஜேன் காணாமல் போன தனது தந்தையைப்போலவே துணிச்சலானவன். கண் முன்னே நடக்கும் அநீதியை உடல் வலுவுடன் தட்டிக் கேட்பவன்.

ஸோனாரூச்சுக் கிராமத்தின் தலைவரான கர்க்கீ, அனைத்து போக்கிரித்தனங்களையும் உடைய ஆசாமி. அவருக்கு அதே போல துர் நடத்தைகளுடைய யாதவ் பௌரா, மோத்தி மிஸ்த்திரி , தீன் துத்திராம் போன்ற ஆட்களும் இயல்பான கூட்டாக அமைகின்றனர். துர்நடத்தையுடன் கூடவே கள்ளும் விற்கும் மோத்தி மிஸ்த்திரியின் மனைவியுடன் யாதவ் பௌரா பகிரங்கமாக முறையற்ற தொடர்பபையும் பேணி வருகின்றான்.

கிராமத்திற்கு பொதுவான குளத்தை கர்க்கீ தனது செல்வாக்கினாலும் வலிமையினாலும் அபகரிக்கின்றார். அதை கஜேன் தட்டிக் கேட்கின்றான். அன்றிலிருந்து கிராமத்தின் தீய கூட்டணியினருக்கும் கஜேனுக்கும் இடையிலான உறவு வெளியில் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் உள்ளுக்குள் முறுகிக் கொண்டே செல்கின்றது

மீன் பிடிப்பதற்காக குரயீகுடி கிராமத்திற்கு வழமையாக கஜேன் செல்லுமிடத்தில் மன்ஸூரும் அவனது குடும்பத்தினரும் நட்பாகின்றனர். ஒரு நாள், காலில் காயம்பட்ட மன்ஸூரின் மகளான சிறுமி ஹஸீனாவை கஜேன் தனது வீட்டில் தங்க வைக்கின்றான். முஸ்லிம்கள் விஷயத்தில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் கஜேனின் பாட்டிக்கு இது ஒவ்வாமையை அளித்தாலும் மனதின் ஆழத்தில் சிறுமி ஹஸீனாவின் மீதான பாசமும் நேசமும் துளிர் விடுகின்றது. தீண்டாமையை மென்மையாக கடைபிடித்துக் கொண்டே ஹஸீனாவிடம் அன்புமும் செலுத்தி வருகின்றாள் பாட்டி.

இதற்கிடையே இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் இருண்ட கரங்கள் குரயீ குடீ, ஸோனாரூச்சுக் கிராமங்களையும் எட்டுகின்றது.

குரயீகுடியும் குரயீ நதியும் அவர்களது உள்ளங்களிலும் உணர்விலும் இரண்டற கலந்த நிலையில் முஸ்லிம் லீக் போதகர்களின் பாக்கிஸ்தான் கோரிக்கையை குரயீகுடி முஸ்லிம்கள் திடமாக நிராகரித்து விடுகின்றனர். தங்களது வேர்கள் எங்கயோ இல்லை. அவை ஊன்றியிருப்பது தங்களது கால்களுக்கு கீழேதான் என்பதை அவர்களின் ஆன்மாவின் உள்ளுறை குரல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் ஸோனாரூச்சுக் கிராமத்திலோ பிரிவினையின் வெறுப்பானது தனது கூட்டாளிகளை சரியாக இனங்கண்டு கொண்டது. கர்க் கும்பலானது வீர் சாவர்க்கர், கோல்வல்கர், ஆர்.எஸ்.எஸ் ஆகியோரின் வெறுப்பு போதனைகளின் பால் மனங்கொள்வதுடன், அவர்களே அதன் பாத்திரங்களாகவும் பரப்புரையாளர்களாகவும் மாறி விடுகின்றனர்

ஊர் குளத்தை வளைத்து வாயில் போட்ட கிராமத்தலைவர் கர்க்கிற்கும் அவரது கும்பலுக்கும் நீண்ட நாட்களாக குரயீகுடி கிராமத்தின் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கின்றது. பிரிவினையின் கரிய நிழலானது இந்த இரு கிராமங்களையும் தீண்டியவுடன் குரயீகுடியை நாட்டுப்பற்றின் பெயரால் கைப்பற்ற கர்க் விழைகின்றார். அதை அவரின் வாயும் உறுதிப்படுத்துகின்றது. கஜனோ, இந்த அநீதியை நடந்தேற விட மாட்டேன் என ஆக்கிரமிப்பாளர்களின் முகத்திற்கு நேராகவே அறைகூவல் விடுக்கின்றான்.

இதற்கிடையில் கர்க், யாதவ் பௌரா கும்பலானது குரயீகுடி கிராமத்தை தீக்கிரையாக்குகின்றது. நேபாளிகளின் வீடுகளைத் தவிர அனைத்து முஸ்லிம்களின் குடிசைகளும் தீய்ந்தழிந்து விடுகின்றன. நெருப்பின் கருக்கும் கரங்களுக்கு தப்பிய முஸ்லிம்கள் அனைவரும் வெட்டிக் கொல்லப்பட்டு ஆற்றில் போடப்படுகின்றனர். அவர்களின் நகையும் பணமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. இதனை கேள்விப்பட்ட கஜேன் கையாலாகாமல் உன்மத்தங்கொள்கின்றான். கொலைத்தாண்டவத்தின் குற்றவாளிகளை வாளின் மூலம் தண்டிக்க விழைகின்றான். மனதின் கொந்தளிப்பு அடங்கியதும் வாளேந்தியதின் தவறை உணர்ந்து வருந்துகின்றான்.

குரயீகுடி கிராமத்தை கொளுத்திய கொலையாளிகளை சிறையிலடைக்காமல் வெறுமனே நிற்கின்றது காவல்துறை.

கொலையாளிகளை மிரட்டியது, அவர்களின் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் நடந்தது, மோத்தி மிஸ்த்திரியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது என மூன்று பொய் வழக்குகளில் கஜேனை விரைந்து சிறைபிடித்து வதைக்கின்றது காவல்துறை.

வழக்கு விசாரணைக்கு வரும்போது, இரண்டு வழக்குகளில் ஒன்றில் விடுதலையும் மற்றொன்றில் சிறிய தண்டத்தொகையுமாக தீர்ப்பாகின்றது. பாலியல் வன்கொடுமை வழக்கில் மோத்தி மிஸ்த்திரியின் மனைவி, கஜேன் மீதான குற்றச்சாட்டை உறுதியாக மறுத்து விட்டாள். வழக்கறிஞரின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பணியாமல் , கஜேன் மிகவும் நல்லவன் என நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை பதிவு செய்தாள். எனவே இவ்வழக்கிலும் கஜேனுக்கு விடுதலை கிடைத்துவிட்டது .வெளிவரும் கஜேன் ஓய்ந்திருக்கவில்லை. தொடர்ந்து வெறுப்பு அணிக்கு எதிராக இயங்குகின்றான்.

குரயீகுடியில் மன்ஸூரும் அவனது மனைவியும் கொல்லப்பட்டு விட்டனர். மன்ஸூரின் மகளாகிய ஹஸீனா, கஜேனின் வீட்டில் அடைக்கலம் புகுகின்றாள். முழு ஆதுரத்துடன் அவளை தன் மெலிந்த கரங்களில் பொதிந்து கொள்கின்றாள் பாட்டி..

குரயீகுடி அழித்தொழிப்பின் ஒரே நேர் சாட்சியான ஹஸீனாவையும் வெறுப்பு மனிதர்கள் குறி வைக்கின்றனர். அவள் தற்சமயம் சிறுமி இல்லை. அவளை தனது வீட்டில் வைத்து தொடர்ந்து பாதுகாப்பதில் உள்ள பலமுனை நெருக்கடிகளை பற்றி சிந்தித்ததில் அவளுக்கு மணமுடித்து வைப்பதுதான் ஒரே பாதுகாப்பு என தீர்மானிக்கின்றான் கஜேன். குரயீகுடியில் ஒரு முஸ்லிம் கூட உயிருடன் எஞ்சியிருக்கவில்லை. தொலைவான இடத்தில் போய் தேடியதிலும் பொருத்தமான வரன் அமையவில்லை.

யாரோ தெரியாத ஒருவரிடம் ஹஸீனாவை திருமணம் என்ர பெயரில் தள்ளி விடுவதை விட தானே முஸ்லிமாகி அவளை மணந்து கொண்டால் என்ன ? என்ற கோணத்திலும் சிந்திக்கின்றான் கஜேன். அப்படி மதம் தழுவி அவளை திருமணம் செய்து கொள்ளலாம்.என்ற தன் விருப்பத்தை பாட்டியிடம் தெரிவித்தான். அவளோ அதைக்கேட்டு அருவருப்படைகின்றாள்.

சரி, கடைசியாக ஒரு வழி, ஹஸீனாவை ஹிந்துவாக மதமாற்றினால் ஒரு ஹிந்து இளைஞனை கட்டி வைக்கலாம்தானே? என்று புதியதாக மனதில் கஜேனுக்கு தோன்றுகிறது. ஹிந்து மத விற்பன்னர்கள் இருவரிடம் போய் சம்மதம் கேட்கின்றான். அவர்களோ அதற்கு வழியில்லை என மறுத்து விடுகின்றனர்.

நீதியின் பக்கம் எப்போதும் சார்ந்திருக்கும் அவனுடைய மனதானது ஹஸீனாவின் உயிரையும் மானத்தையும் எதைக் கொடுத்தாவது காப்பாற்றியே தீருவது என்ற தீர்க்கமான முடிவிற்கு வருகிறது. கஜேன் அப்துல் கனியாகின்றான்.

முஸ்லிம்கள் விஷயத்தில் விலகல் மன நிலை கொண்ட பாட்டிக்கு இந்த மதமாற்ற, திருமண நிகழ்வுகள் நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் பேரனையும் அவனது மனைவி ஹஸீனாவையும் வெறுக்க அவளால் இயலவில்லை.

தங்களுக்கு எதிரான சிறு முணுமுணுப்பையும் தேய்த்து நசுக்கும் வெறுப்புக்கும்பல் மோத்தி மிஸ்த்திரியின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை. வெளிப்பார்வைக்கு அறம் பிறழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் உள்ளுக்குள் அறத்தின் நீதியின் மீதான பிடியை தனது ஆன்மாவின் மையத்துடன் பிணைத்து வைத்திருந்த அவளை அவளது கணவன் மோத்தி மிஸ்த்திரியே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்று விடுகின்றான். இவ்வழக்கு காவல்துறையினரால் தற்கொலை என பதியப்படுகின்றது.

மாபாதக தேசபக்த வெறுப்புக் கும்பலுக்கு கஜேன் ஒரு தொடர் தடங்கலாகவே இருக்கின்றான் என்றவுடன் ஓர் இரவின் மறைவில் அவனையும் அழித்தொழித்து விடுகின்றனர். பேரனின் கொலையானது பாட்டியின் மனதிற்குள் ஒட்டியிருந்த முஸ்லிம் விலகலை முற்றிலுமாக துடைத்தெறிந்து விடுகின்றது.

‘ஆசீர்வாதத்தின் வண்ணம்’ புதினத்தில், வாழ்வின் வண்ணமிகு முரண்கள் சேர்க்கைகளுக்கிடையே வெறுப்பாற்றின் பெரு ஓட்டத்திற்கிடையே வாழ்க்கை தளிரானது தீய்க்கப்பட இயலாத சாசுவத மென்னிதழ்களுடன் தாரகையைப்போல இளம் நகையுடன் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது

புரோகிதர், அவரின் இளம் விதவை மகள், மருத்துவர், விடுதலைப்போராளி & வழக்கறிஞர் & நீதிபதி என கதையின் கிளையோட்டங்களில் வாழ்வின் எண்ணற்ற சொல்லி முடியாத தருணங்கள் அமர்ந்திருக்கின்றன. சிற்பங்களுக்குரிய உள்செதுக்கலாக நிற்கின்றன. அந்த செதுக்கல்களின் வளைவும் நெளிவும் நிமிர்வும் புது புது விரிவுகளுக்காக காத்திருக்கும் புழைகள். வாசகர்கள் உள்தேடல் விரிவுகளுக்கான தாவு தளங்கள்.

சாஹித்ய அகாதமி விருது பெற்ற இந்த புதினத்தின் ஆசிரியரான அருண் சர்மா பிராமண சமூத்தில் பிறந்து வளர்ந்தவர். அகில இந்திய வானொலியில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். கல்விப்புலம் சார்ந்தும் சிறப்பாக இயங்கியுள்ளார். சாதிய, வகுப்பு ஓர்மை, மேட்டிமை, அரசு ஊழியர்களுக்கே உரிய எண்ணெய் படல குணம் போன்றவற்றையெல்லாம் மிக நேர்மையாக தன் படைப்பில் கடந்திருக்கின்றார் ஆசிரியர்.

கஜேனின் பாட்டி தன் முதிர்ந்து கனிந்த வயதின் படையலாக ஹஸீனாவின் துளிர் கரங்களில் உவந்தளித்த தேங்காய், சோளப்பொரி, பொரியுருண்டை, வெல்ல அவல், லட்டு, இனிப்பு அதிரசத்திற்காக மனமும் வாயும் ஏங்குகின்றது.

***

ஆசீர்வாதத்தின் வண்ணம் ( ஆசீர்வாதர் ரங் )

அஸாமி மொழி புதினத்தின் தமிழாக்கம்

ஆசிரியர் : அருண் சர்மா

விலை ரூ.225/=

வெளியீடு: சாஹித்ய அகாதமி, தொலைபேசி: 044 24311741, 24354815

88888888888
&&&

Shalai_basheer@yahoo.com

முதற்காதல் ( சிறுகதை ) – சொ பிரபாகரன்

சென்னைச் சித்தப்பா, அன்னியோனியம் காட்டுகிறார் என்றால், ஏதோ வில்லங்கத்தில் நம்மைச் சிக்க வைக்கப் போகிறார் என்று அர்த்தமாம். சித்தப்பாவின் ஏகப்புத்திரி செளந்தரியாதான், இதை அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள்.

நான் அப்போது சென்னைக் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

எனக்கு ஒரு டாக்டர் பெண்ணை மணம் முடிக்க, சித்தப்பா ஏக காலமும் தேனீச்சி போல் அலைந்து திரிந்தார். “பண்பாடுள்ள குடும்பம்டா! அவங்களுக்கு வாடகை மட்டுமே மாசம் லட்சத்துக்கு மேலே வரும்.. அந்தப் பொண்ணு மகாலஷ்மி! குடும்பத்துக்கு ஒரே வாரிசு.. நம்ப செளந்தரியா மாதிரியே..” என்று மட்டும் சித்தப்பா சொல்லி விட்டிருந்தால் பரவாயில்லை..

மேலும் சேர்த்துச் சொன்னதுதான் இடித்தது: “அவங்களுக்கு வருற வாடகை மட்டும், இப்ப நீ வாங்கும் ஈத்தச் சம்பளத்தை விட, பத்து மடங்கு அதிகம்.. அதோட பொண்ணு, நம்ப செளந்தரியா மாதிரி டிகிரி கூட முடிக்காத பொண்ணு இல்லை; எம்.பி.பி.எஸ். முடிச்சவள்.”

பெண் வீட்டாரின் பெருமை பேசி, என்னையும், என்னுடன் பாந்தமாய் இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக செளந்தரியாவை, தன் மகளேயானாலும் சித்தப்பா சிறுமைப்படுத்துகிறார் என்றாலும், இந்த டாக்டர் பொண்ணை மட்டும் இழந்துடக் கூடாது என்பதில் உறுதியானேன்.
செளந்தரியா, சித்தப்பாவின் நல்லெண்ணத்தையும், அன்னியோனியத்தையும், துளியும் நம்பவில்லை. “இவ்வளவு பணம் வரும்னு தெரிஞ்சா, அப்பா பேசாம அம்மாவை டைவர்ஸ் பண்ணிட்டு, அந்தப் பொண்ணை அவரே கல்யாணம் பண்ணியிருந்திருப்பார்; இதில் நமக்கு விளங்காதது எதோ இருக்கு. ஒருவேளை டாக்டர் பொண்ணு, அப்பா வயசாளினு நிராகரித்து இருப்பாளோ?” என நெற்றிச் சுருக்கி, என்னிடமே சந்தேகம் கேட்டாள்.

“சித்தப்பா இயல்பில் நல்லவர்தாம்.. சில சூழ்நிலைகளில் நல்லா நடந்துக்க முடியாம போய் இருந்திருக்கலாம். அதுக்காக அவரை மொத்தமா அலட்சியம் செய்றது சரியில்லை,” என போதி புத்தன் மாதிரி நான் சொல்ல, செளந் காதுகளை மூடிக் கொண்டு, கண்களை விரித்து, திருஷ்டிப் பூசணி மாதிரி வாயைப் பிளந்து, சிரித்தாள். என்னை அவமதிக்கிறாளாம்..

செளந்தரியா தனக்கு தோன்றுவதைக் கல்மிஷம் இல்லாமல் பேசுவாள்; எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்திலும், அவளது நம்பிக்கைக்குரியவன் (அவளது கணவனையும் விட) நான் ஒருவனே என்ற முறையில், அதிக உரிமை எடுத்துக் கொண்டு, அதிஉண்மைகளைச் சொல்லி, எல்லோரையும் தர்மச் சங்கடத்துக்குள் உள்ளாக்குவாள்.

அவளது பேச்சு பெரும் அசெளகரியங்களைக் கிளப்புகிறது என்பதினால், அவள் டிகிரி முடிப்பதற்குள் திருமணம் முடித்து, சைதையில் தனிக்குடித்தனம் வைத்தார், சித்தப்பா. கல்யாணத்துக்குப் பிறகு, கிறங்கிய கண்களுடன், கணவனை விழுங்குவதை முழுநேர வேலையாய், செளந் செய்து கொண்டிருக்கிறாள்.

“கல்யாணத்துக்குக் காதலெல்லாம் அவசியமில்லை. ஆண்-பெண் உடல் இருந்தால் போதும்..” என தனது ஆராய்ச்சி முடிவை ஒருநாள் வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள்.
இப்படி அப்பட்டமாய் அனைத்தையும் அம்மணமாக்கித் தோலுரித்துப் பேசுபவள், சித்தப்பாவை அனுசரித்துப் போவதென தற்காலிகமாக முடிவெடுத்துள்ள என்னைக் கேலி மட்டும் பேசி, சும்மா விட்டுவிடுவாள் என எதிர்பார்க்க முடியாதுதான்.

“பிரபா! பிராய்டின் இட் பற்றி உனக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால், உன் சித்தப்பா (என் அப்பா என்று சொல்ல மாட்டாள்) உள்ளிட்ட எல்லா மனிதர்களும், நீ நினைப்பது போல, நல்லவரில்லை என்பது எப்பவோ உனக்குப் புரிஞ்சிருக்கும். சதா சர்வகாலமும் வன்முறை, பாலுணர்வு எண்ணங்களுடன் அலைந்து கொண்டிருக்கும் உயிர்ஜீவிதான், இன்று மனிதன் என்ற பெயருடன் அலைந்து கொண்டிருக்கும் இந்த ஹோமோசெபியன். அதற்கு விதிவிலக்கு நீயுமில்லை; நானுமில்லை.

மற்ற உயிரினங்களுக்கு இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பாலுணர்வு வரும். ஆனா உயிரினங்களில் மனுஷனுக்குள் மட்டுமே, சர்வசதா காலமும் பாலுணர்வு மட்டுமே மீந்து நிற்கிறது. பாலுணர்வுதான் மனிதனின் இயல்பான இட் என்பது புரிந்ததும், எனது சூப்பர்ஈகோவை எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுட்டு, எனது கணவனையே விழுங்க ஆரம்பித்தேன்.”

அவள் சொன்னதில், பாதிக்கு மேல் எனக்குப் புரியவில்லை. ஆனால் அதை, அவளிடம் அப்பட்டமாக ஒப்புக்கொண்டால், முதுகு மேலேறி, இன்னும் புரியாத விஷயம் பேசி, சிவத் தாண்டவமாடி விடுவாள்.

“உனக்கு நீ செய்யும் காரியங்களை நியாயப்படுத்த, ஒரு காரணம் வேண்டும். அக்காரணம் மற்றவர்களுக்குப் புரியாத மாதிரியும், புரியாததினாலேயே மிரட்டுற மாதிரியும் இருந்தால், ரொம்ப உத்தமம். அதற்கு வசதியாய், உனக்கு பிராய்ட் கிடைத்து விட்டார். அவரைப் பிடித்துக் கொண்டு, பாலுணர்வுடன் இருக்கும் மனுஷிதான் இயல்பாய் இருக்கிறாள் எனச் சாதிக்கிறாய். அந்த உணர்வுடன், உனது கணவனையும் கையாள்கிறாய். என்னால் உன்னை மாதிரி எல்லாம் இயல்பா இருக்க முடியாதம்மா! ஆளை விடு!” எனக் கைக்கூப்பி கெஞ்சினேன்.

“போடா போ! உன்னிடம் போய் பிராய்டைப் பற்றி பேசினேன், பார்! என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும்..”

#

செளந்துடன் கூடுதல் ஒட்டு வைத்தால், எனக்கு வாய்ப்பிருக்கும் டாக்டர் பெண்ணை முயற்சிக்காது சித்தப்பா கைவிடலாம் எனக் கருதி, அவளிடம் இருந்து சற்று விலகி நின்றேன்; சித்தப்பாவிடம் பாந்தமாய் நடந்து கொண்டேன். என்னப் பாந்தமாய் இருந்து, என்னச் செய்ய? கடைசியில் சித்தப்பா பற்றிய செளந்தின் அனுமானம்தான், சரியென நிரூபணமாகி விட்டது.
சித்தப்பாவின் வில்லங்கம் அப்பட்டமாய் அம்பலமாகி விட்டது.

விஷயம் தெரிந்ததும், செளந்துக்குப் போன் செய்தேன். போனை எடுத்தவள், தான் ரொம்ப பிஸியாக இருப்பதாகவும், அரை மணி நேரம் கழித்து அழைப்பதாக கூறி விட்டு, நான் என்ன சொல்ல வந்தேன் என்பதைக் காது கொடுத்துக் கூட கேட்காமல், கட் செய்தாள்.

சித்தப்பா என்னை நடுத்தெருவில் விட்டு விட்டு, செளந்துக்கு 24×7 எனச் சர்வ சதா காலமும் வீரியமாய் செயல்புரியும் கணவனை, ஏற்பாடு செய்துள்ளார். கணவன் களைத்துப் போகும் வரை, அவள் பிஸியாதான் இருப்பாள். தலையில் கையை வைத்துக் கொண்டு செளந்தின் போன் எப்போது வருமென காத்திருந்தேன். விட்டால் அழுது விடுவேன் போலிருந்தேன். கடைசியாக போனில், அவள் வந்த போது, “என்ன பிரபா? குடி முழுகுனது போல், பரபரப்பாய் பேசினே? என்ன விஷயம்?” எனப் பெருமூச்சுடன் கேட்டாள். .

“சித்தப்பா பாத்து வைத்திருந்த பொண்ணை விசாரித்தேன். அவ யாரு கூடவோ ஒரு வாரம் ஒடிப் போயிட்டு, திரும்பி வந்தவளாம்..”
“இருக்கட்டும்.. அதுக்கென்ன? உனக்கு டாக்டர் பொண்ணு வேணுமென்பதுதானே முக்கியம்? அவ ஓடிப்போன பொண்ணா இருந்தா என்ன? ஓடிப்போகாத பொண்ணா இருந்தா என்ன? இவ்வளவு தூரம் வந்த பிறகு, ஓடிப் போகாத டாக்டர் பொண்ணுதான் வேணும்னு, டிமாண்ட் பண்றது, ஓவரா தெரியலை?”

“உனக்குப் பைத்தியம் பிடிச்சுப் போச்சா? தான் கல்யாணம் பண்ணப் போற பொண்ணு சுத்தமா இருக்கணும்னுதானே, யாருமே எதிர்பார்ப்பாங்க?”
“சுத்தமான பொண்ணுதான் வேண்டும் என்றால், இங்கே பாரதத்தில் நடந்த எழுபத்தஞ்சு சதம் கல்யாணம் நடந்தே நடந்திருக்காது. நான் உங்கிட்டே ஒரு கேள்வி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.. நீ மொதல்ல சுத்தமானவனா, மனசாட்சியைத் தொட்டுப் பதில் சொல்லு..”

செளந்தா இப்படிப் பேசறா? சித்தப்பாவை விட வில்லங்கமான ஆளாய் இருப்பாள் போலிருக்குது.. நான் தவித்துப் போய் நின்றேன். கைகளைப் பிசைந்து கொண்டேன்.
எனது மனதின் குரல் செளந்துக்கு எப்படியோ அப்படியே கேட்கி்றது. அனதால்தான் எனது உள்மனம் எழுப்பும் கேள்விகளுக்கு அப்படியே பொருத்தமாய் பதில் சொல்கிறாள்.

“வில்லங்கம் என்று நான் சொன்னது, உனது ஆத்மாவின் தேவை என்ன, உனது மற்ற தேவைகள் என்ன, அவைகளை இந்தத் திருமணம் நிறைவேற்றுமா என்று பார்க்காமல், இந்தத் திருமணம் நடந்தால் தனக்கு என்ன லாபமென பார்க்கும் அப்பாவின் திருட்டுத் தனத்தை. தனக்கு லாபம் ஒன்றும் இல்லையென்றால், பெண்ணின் கடந்த காலத்திற்குள் அவரே போய், இந்நேரத்துக்குள் இக்கல்யாணத்தைக் குலைத்து, உனக்கு எந்த ஆதயமும் இல்லாது செய்து இருந்திருப்பார். இந்த திருமணத்தை முடித்து வைத்தால், ஏதாவது பெரிய கமிஷன் தருவதாக, பெண் வீட்டில் அப்பாவுக்கு ஆசைக் காட்டி இருந்திருக்கலாம். இல்லையெனில் அவர் ஏன் உன் கல்யாணத்தில் தலையிட போகிறார்?”
அவள் இப்படி நீட்டி முழங்குவது, எனக்கு எரிச்சலை மூட்டியது. “அப்ப நீ எனக்குப் பண்ணும் அட்வைஸ்தான் என்ன?”

“உனக்கு டாக்டர் பொண்டாட்டி எதுக்கு வேணும்? அவ சம்பாதிச்சு, வீட்டைக் கவனித்துக் கொண்டால், நீ வீட்டில் சோம்பேறித்தனமாய் உன் அத்தான் மாதிரியே புருஷ பணியை மட்டும் பாத்துட்டு இருக்கலாம். சரியா? அப்படி நினைப்பதில் தப்பு ஒன்றும் இல்லை.”
என்னைப் பற்றியும், அவளது புருசனைப் பற்றியும் எவ்வளவு கேவலமா எடை போட்டு வைத்திருக்கிறாள். அவ்வளவு கேவலமான என்னையும் அவள் புருசனையும அவள் வெறுக்க வில்லை என்பதுதான் இதில் ஆறுதலான விசயம்..

அவள் யோசித்தாள். இந்தப் பிரசினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என தீவிரமாய் சிந்திக்கிறாள். நிச்சயம் அவள் என் நலனை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர் விட்டது.
“உன் பிரசினையைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்றேன் கேளு! நேரா அவளைப் போய் பாரு! அவ மூஞ்சியைப் பார்த்துப் பேசு. வழக்கமா நீ செய்றது போல, மாரைப் பாத்துப் பேசாதே! அவளிடம் சொல்: உனது கடந்த காலத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. கல்யாணத்துக்குப் பிறகாவது, எனக்கு உண்மையாய் நடந்து கொள்வாயா என்று கேள்!” என்றவள் பிரேக் போட்ட பேருந்தைப் போல் பேச்சை திடீரென நிறுத்தி, தனக்குள் எதையோ மறுபடியும் தீவிரமாக யோசித்தாள்.

சிந்தனையின் தொடர்ச்சி லாவகப் பட்டதும், தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்: “உண்மையா நடந்து கொள்வாயா என்று ஏன் கேட்க வேண்டும்? உண்மைக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கு. அதெல்லாம் உனக்குப் புரியாது! அதனால் இப்படி நேரடியா பச்சையாய் கேள்! கல்யாணத்துக்குப் பிறகு, அவ உன்னுடன் மட்டும்தான் படுத்துக்கணும் என்று சொல்லு. நீயும் அவளைத் தவிர, வேறு யாருடனும் உறவு வைத்துக்க கொள்ள மாட்டேன் என்று உறுதி கொடு, எல்லாம் சரியாயிடும்!”

“அப்படிச் சொல்லி விட்டு, பின்னால் சொன்ன மாதிரி அவள் நடந்து கொள்ளா விட்டால்?”

அவளுக்கு என் கேள்வி கடுமையான ஆத்திரத்தை மூட்டியது.. “மடையா! அப்படின்னா நீயும் சொன்ன மாதிரி நடந்து கொள்ளாதே! நம்ப தெரு முட்டுச் சந்தில், ஒரு பைத்தியக்காரி ராத்திரி நிர்வாணமாய் படுத்துக் கிடப்பா தெரியுமா? அவளுடன் போய், உனக்கு எய்ட்ஸை வர வாய்ப்பிருக்கிறது என்றாலும், படுத்துக்கோ! அதுதான் உன் டாக்டர் பொண்டாட்டிக்குக் கடுமையான எரிச்சலைத் தரும்…. ”

அவள் பதிலால் இடி விழுந்தது போல், சோர்ந்து போய், ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்.
என் நிலையைப் பார்த்து, அவளுக்கே பரிதாபம் ஏற்பட்டு இருந்திருக்க வேண்டும்.. என்னைச் சமாதானப் படுத்த அவளே பேசினாள். ”பிரபா! வார்த்தைகளுக்கு மந்திரசக்தி உண்டு! சொன்ன வார்த்தைகளை மீறுவது அவ்வளவு எளிதல்ல… என் கவலை எல்லாம், அந்தப் பொண்ணு எதாவது உன்னிடம் சொல்லி, சொல்லிய சத்தியத்துக்கு நிற்பாள். ஆனால் உன்னால்தான், அப்படி முடியாது. உன்னைப் பற்றி எனக்கு நல்லா முழுமையா தெரியும். அதான் சொல்றேன்..”

#

இறுக்கமாய் ஜீன்ஸிம், பிடித்த மாதிரியான டைட் டாப்ஸில், திமிர்ந்த குதிரையைப் போல் இருந்தாள். என்னருகே வந்ததும், அவள் எனது கண்களை நேரடியாகப் பார்த்தாள். எனக்குதான் என்னவோ அவளது பருத்த மார்பையே பார்க்க வேண்டும் போலிருந்தது. செளந் என்னைப் பற்றி சரியாதான் எடைப் போட்டு வைத்திருக்கிறாள்.
“ஹாய்!” என்றவள், தனக்கு ஒரு சூடான பில்டர் காபி ஆர்டர் செய்து விட்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டு, என்னையே ஆர்டர் செய்ய விட்டு விட்டாள்.

அவள் பெர்ப்யூம் போடவில்லை. ரொம்ப இயல்பாய் இருந்தாள். எந்த மேக்கப்பும் இல்லாமல், அன்று மலர்ந்த புஷ்பம் போல புத்துணர்வுடன் இருந்தாள்.
“மிஸ்டர் பிரபா! எனக்குச் சுற்றி வளைத்துப் பேச தெரியாது. நேரா விஷயத்துக்கு வரேன்.. புரோபோஸ் பண்றதுக்காக, நீங்க என்னைப் பார்க்க விரும்புவதாக உங்க சித்தப்பா சொன்னார். சரிதானா?”
அவளது நேரடியான பேச்சு பிடித்திருந்தாலும், பயமாக இருந்தது. இவள் இன்னொரு செளந்தரியா! தனக்குத் தோன்றும் உண்மைகளை அப்படியே புட்டு வைத்து விடுவாள் போல் இருந்தது..

குற்றால அருவி போல தனது மனதைக் கொட்டினாள்: “பட், புரோபோஸ் செய்யணும்னா, அதுக்கு முன்னாடி என்னைப் பற்றி முழுசாய் தெரிஞ்சுக்கணும்.. உங்களைப் பற்றியும் முழுசா சொல்லணும். அப்பதான் சரியான முடிவு எடுக்க முடியும்.. முதலில் நான் என்னைப் பற்றி சொல்லட்டுமா?…” என்றவள், சிறிதாகச் செருமிக் கொண்டு, நெற்றியில் முத்திட்டிருந்த வியர்வையைத் தனது கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.

நெற்றியைச் சுருக்கி தான் பேச நினைத்ததை மனதுக்குள் ஒருமுகப் படுத்திப் பேசத் துவங்கினாள். “நான் ஒருத்தனை லவ் பண்ணினேன். அவன் நம்ப சாதி பையன் என்பது மட்டுமே, அந்த லவ்வை எங்க வீட்லே அக்சப் பண்ணதுக்கான காரணம்னு சொல்ல மாட்டேன். அவன் ரொம்ப வசதியானவன் என்பது, அந்த லவ் அக்சப் ஆனதுக்கு முக்கிய காரணம்.

இவ்வளவு ஈஸியா ஆப்ரூவ் ஆனதினால்தான் என்னவோ, அது சுவாரசியமில்லாத காதலா போயிடுச்சு.” சன்னமாய் தனக்குள் புன்னகைத்தாள்
“நான் எனது தோழிகளைத் தேர்ந்தெடுக்கும் போது கூட, சின்னதா ஏதாவது சோதனை வைத்துப் பார்த்து, அதில் தேறினாதான் பிரெண்டாவே வச்சுக்குவேன்.. அப்படிப்பட்ட நான், லைப் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கும் போது, எப்படி சும்மா ஓ.கே. சொல்ல முடியும்? அவரைச் சோதிக்க விரும்பினேன். இந்த மாதிரியான சோதனைகள்தாம், அவரை நமக்குப் புரிய வைக்கும்,” என்றவள் சன்னமாய் இருமிக் கொண்டாள்.

“எங்காவது ஒரு வாரம் ஓடிப் போலாமெனச் சொல்லி, அவரை வலுக்கட்டாயமாய் புலிகெட்டுக்கு, யாரிடமும் சொல்லாமல் இழுத்துச் சென்றேன். குட்டிப் போட்ட தாய் நாய், குட்டிகளை விட்டு தயங்கி தயங்கி வருவது மாதிரி, என் பின்னால் வந்தான். புலிகெட் ஒரு லவ்வர் பாரடைஸ்.”

எந்தவித தயக்கமுமின்றி, தனது காதலை தனது எதிர்கால கணவனிடம் மூடி மறைக்காமல் சொல்லும் அவளது தைரியத்தைக் கண்டுண, அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உறைந்து போய் இருந்தேன். இதே போல், நான் திருட்டுத் தனமாய் புணர்ந்த தேவடியாக்களைப் பற்றி, பட்டவர்த்தனமாய் அவளிடம் சொல்ல முடியுமா?

அதை விடுங்கள்! செளந் சொல்லச் சொன்ன கோரிக்கையையாவது (என்னைக் கல்யாணம் பண்ணிய பிறகு, வேறு யாருடனும் படுத்துக் கொள்ளக்கூடாது) குறைந்த பட்சம், என்னால் அப்படியே அவளிடம் சொல்ல முடியுமா?.
என்னால், யதார்த்தத்தில் செளந்தரியாவுடன், எப்போதும் பொய்யே பேச முடிந்ததில்லை. அப்படியொரு வலுவான பர்சனாலிடி அவள். அதுபோலதான் இவளும்.. இல்லை, இல்லை இவள் செளந்துடன் வலுவானவள். இவளுடன் என்னால் பேசவே முடியாது! அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி..

“அங்கே இருந்த ஒரு வாரமும், அவன் சாமியார் மாதிரி இருந்தான். அவரம்மா, நாங்க பழக ஆரம்பிச்சதும், ஏங்கிட்டே இருந்து விலகி இருனு அறிவுரை சொல்லி இருந்தாளாம். விலக முடியாமல், என் மீது அப்சஷனாகி விட்டால், எங்களிடம் இருந்து அவங்களால் எதுவும் கறக்க முடியாது இல்லையா? அம்மாவை அவரால் மீற முடியலை. மீற முடியாதவங்க, வான்னதும் என்னுடன் ஏன் ஓடி வரணும்?னு கேட்டேன். ‘அம்மா உன்னோட ஓடிப் போகக்கூடாதுனு ஒரு போதும் சொன்னதில்லை’, என்றார்.

அன்வர் புஹாரி கவிதைகள்

1.

உண்மை வளர்த்தல்

என்னுடைய தாத்தா
மரம் வளர்ப்பது போல மிக நூதனமாக
இந்த உண்மையை வளர்த்துவந்தார்
அதன் உடலில் சிறு துரும்பு பட்டாலும்
தாங்கிக்கொள்ள திராணியற்ற அவர்
இந்த உண்மையை வளர்ப்பது பற்றியும்
உண்மையின் உயிர் பிடுங்கும்
பொய்யின் கொடூரம் பற்றியும்
அவர்தம் பிள்ளைகளுக்கும்
குடும்பத்திற்கும் கற்றுக்கொடுத்தார்

எனது அப்பா
எங்களுடைய வசதிக்காக
இந்த உண்மையை
ஆடு மாடு கோழி வளர்ப்பது போல வளர்த்து
அதன் மேல் ஒரு ஈர்பை
எங்களுக்கு உண்டாக்கினார்
இப்போது நாங்கள் இந்த உண்மையை
ஒரு பிள்ளையை வளர்ப்பது போல
உள்ளங்கையில்
நெருப்புத் தணலை ஏந்துவதைப்போல
மிகக் கவனமாகவும்
மிகக் கடினமாகவும் வளர்த்து வருகின்றோம்
எங்கள் சந்ததிக்கும் அதனை
கட்டாய கடமையுமாக்கியிருக்கின்றோம்
இருந்த போதும்
விழுந்துவரும் ஓசோன் ஓட்டை போல
அழிந்துவரும் இந்த உண்மையின்
எதிர்காலம் பற்றித்தான்
முழுக் கவலையும் எங்களுக்கு

2.

ஆதலால் நாம் தண்ணீரை காதலிப்போம்

எனது அப்பாவின் அப்பாவிடம்
மழை இருந்தது
அதையவர்
நாய்க்குட்டி போல வளர்த்து வந்தார்
அப்பாவிடம்
ஒரு கடல் இருந்தது
அதற்கு பூனைக்குட்டி யென்று பெயர்
அவர் காலையது சுற்றிச் சுற்றி வந்தது
அம்மா புளியாணம் காய்ச்சினால்
அது ஆறு போலது ருசித்தது
நான் முங்கிக் குளித்தேன்
அந்த இடம் தன்னை குளம் என்றது
நண்பன் நீச்சல் பழக
ஏரிக்குப் போனான்
என் மனைவிக்கு
நீர்வீழ்ச்சி பிடித்திருந்தது
நேற்று நான் எனது பிள்ளைகளுக்கு
கிணறொன்றை பரிசளித்தேன்
இன்றது அவர்களிடம்
இல்லாமல் போயிருந்தது
நாளை என் பேரப்பிள்ளைகள்
ஒரு மிடர் தண்ணீருக்காக கண்ணீர் சுமந்து
விண்வெளி செல்லும் ஒரு கெட்டகனவை
சூரியன் வந்தென்னிடம் சொல்லிச் சொல்லி
அழத்தொடங்கியது இன்று
ஆதலால் நாம் தண்ணீரை காதலிப்போம்

3

பொறுமையை தின்றவனின் அருமையான அனுபவங்கள்

அம்மாவின் சமையல் குறிப்பின்படி
பொறுமையை
நெய் ஊற்றி
தாளித்துக் கொட்டினாள் மனைவி
நான் அதை
சிறு சிறு பொட்டலங்களாக கட்டிக்கொன்டு
கூடவே
தனிமையெனும் பூனைக் குட்டியொன்றையும்
கையில் பிடித்துக்கொண்டு
காலாற கடலோரம் நடந்தேன்
அங்கு
விளையாடிக் கொண்டிருந்த மீன்கள்
என்னிடம் பசியென்றதும்
என் நிழலை அதற்கு தின்னக் கொடுத்துவிட்டு
மீண்டும்
என்னை மட்டும்
கையில் பிடித்துக்கொண்டு நடந்த நான்
அங்கு
பட்டம் விட்டுக் கொண்டிருந்த
நண்டுகளோடு அமர்ந்து
பொட்டலங்களை பிரித்து
பொறுமையை
அருமையாய் தின்று முடித்ததும்
என்னை தூக்கிக்கொண்டு
குதிரை சவாரி போக ஆயத்தமானது காற்று

4.

கனவில் கணவனாகிய மனைவியொருத்தி பற்றிய
கணவனொருவனின் சில கனவுக்குறிப்புகள்

நான் அவளாகவும்
அவள் நானாகவுமாகிய ஒரு கனவில்
வேலை முடிந்து
வீட்டுக்கு வரும்போதவள்
என்னைப்போல
லைட்டாகவோ
ஹெவியாகவோ குடித்திருக்கவில்லை
பின்பு
மூடவுடென்று
மணிக்கொருதரம்
புகைக்கவுமில்லை
கொத்துக் கொத்தாய்
சாப்பாட்டில் முடி கிடக்கின்றதென்று
எரிந்து விழவோ
அல்லது
சோற்றுப் பீங்கானை முகத்தில்
தூக்கி வீசவோ இல்லை
அன்ட்ரோயிட் போனை
படுக்கையறைக்கு கொண்டு வராதவள்
இரவெல்லாம் என்னை
புன்னகையால் குளிப்பாட்டி
ஒரு பூவைப் போல பார்த்துக்கொண்டாள்
மீண்டும்
காலையில் எழுந்து
வேலைக்கு போகும் முன்
ஒரு காபியோடு
இனிப்பான முத்தங்களையும்
அன்புப் பரிசாயெனக்கு தந்துவிட்டுப் போக
மறக்கவுமில்லை அவள்

5.

புனைவுப் பாடம்

அறிவை கழற்றிவைத்துவிட்டு
யானையை பறக்கவைத்தல் மிக மிக இலகு
தும்பிக்கையோடு சேர்த்து
அழகான வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளையும்
நம்பிக்கையோடு இணைத்துவிடலாம்
அது பறக்கும் அழகை படம்பிடித்து
புனைவுக் கதை சொல்ல
பள்ளிப் பிள்ளைகளின்
பாடப்புத்தகத்தில் அச்சடிக்கலாம்
மலர்களிலது போயமர்ந்து
தேனருந்தும் அழகைச் சொல்லி
குட்டி நட்டிகளை குஷிப்படுத்தலாம்
கதைக்குள் போயமர்ந்து
யானை பிடித்து நூலில் கட்டி
பறக்கவிட்டு விளையாடும் சிருசுகளிடம்
பாவமது என்று சொல்லி
ஜீவகாருண்யம் நாம் வளர்க்கலாம்

***

அசாமிய கவிதை மூலம் : நீலிமா தாகுரியா ஹக்- ஆங்கிலம் : பி.எம்.ரஸ்தான் – தமிழில் : தி.இரா.மீனா

சாம்பல் வீடு

சாம்பல்,சாம்பலால் மட்டுமே

நாங்கள் வீடுகளைக் கட்டுகிறோம்

ஜன்னல்கள் புகையால் உருவாக்கம் பெறுகின்றன.

காற்று உட்புகுவதில்லை,புகை மட்டும் தங்குகிறது

நம் இதயங்களைச் சுண்டியபடி.

உள்ளே போகிறோம் வெளியே வருகிறோம்

அக்னிக் கதவுகளின் மூலமாக

இரவு முழுவதும்

புகையின் இதயத்தை ஈரப்படுத்துகிறோம்

இரவில் மழை பெய்கிறது.

* * *
2
மாடுகள் சாம்பல் கொட்டகையில் வசிப்பதில்லை

அவை கயிறுகளை இழுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகின்றன.

மாடுகளின் பரிதாபமான அலறல்

நாற்றுகளை நடுங்கச் செய்கின்றன.

நாற்றுகளும் அலறுகின்றன.

சொந்தக்காரர் தொலைந்து போனார்

கேட்க முடியாமல், பார்க்க முடியாமல்..

இருண்ட காற்று கிரீச்சிடுகிறது.

அனாதை அலறுகிறது…

எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.

சாம்பல் இப்போதுதான் ஒரு குழந்தையைப் பிரசவித்திருக்கிறது

அவனுடல் கரிக்கோலால் ஆனது

கண்கள் எரிகோல்

பாலை உறிஞ்சுவதற்கு பதிலாக அவன் புகையை உறிஞ்சுகிறான்.

சாம்பலின் குவியலிலிருந்து அவனைத் தூக்குவதற்கு,

எங்கள் கைகள் மிகக் குட்டையானவை

ஆம்,நாங்களும் புகை மனிதர்கள்தான் என்று

குறுகிய மூச்சு சொல்கிறது.

பஞ்சாபி கவிதைகள்: பஞ்சாபி கவிதை: மூலம் : மன்ஜித் திவானா ஆங்கிலம் : பி.எம்.ரஸ்தான் – தமிழில் : தி.இரா.மீனா

நினைத்துப் பார்

ஒருவருடைய பாதையை

ஒருவர் எப்படித் தேர்ந்தெடுப்பார்

என்று நினைத்துப்பார்,

சூரியனும் சந்திரனும்

கண்பாரவையற்றுப் போனால்..

ஒருவர் சாயும்போது

தான் எழுந்து விடுவோம் என்று

நாற்காலி அச்சப்படுமானால்

எப்படி ஒருவர் ஓய்வெடுக்க முடியும்?

இறுதிச் சடங்கு ஜூவாலைக்கும்

வேள்வியின் ஜூவாலைக்கும்

எந்த மாறுபாடும் இல்லையெனில்

ஒருவரால் என்ன செய்ய இயலும்?

ஆடைகளைக் களைந்தால்

மட்டும் ஒருவர்

நிர்வாணமாக முடியுமா?

நினைவுகளின் சேர்க்கை

எந்தப் பொட்டலங்களில் தங்கும்?

சகுந்தலையின் மோதிரத்தை

விழுங்கிய மீன்

கடலால் விழுங்கப்பட்டதே ,

கடலுக்கு ஒரு

விமோசனம் இருக்கிறதா?

காலம் காலமான கடவுள்

கடல் என்கின்றனர்

எனில் ஏன் என்

மூச்சு மூழ்குகிறது.

மனதின் கண்ணாடியை

நீ எப்படி மறந்தாய்,

எவ்வளவு காலம் பார்வையற்றவனாய்க்

நீ காட்சி தருவாய்?

படைப்பின் நான்கு முனைகளை

நீ உறுதியாகப் பற்றிக் கொண்டாலும்,

எல்லாமும் தண்ணீரைப் போல

உன் விரல்களினூடே நழுவும்…

என்றேனும் இதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறாயா?

*

பூமி

பூமி கண்ணாடி

மூலம்தான்

தங்கள் முகங்களை ஆத்மாக்கள்

அடையாளம் காண்கின்றன.