Category: இதழ் 157

பாராட்டு பத்திரம் வாசிப்பதல்ல விமர்சனம் – இமையம்

இமையம்

அக்டோபர் 21,2018 – வல்லினம் யாவரும் கூட்டுப் பதிப்பகத்தின் சார்பில் மலேசிய எழுத்தாளர்களின் மூன்று நூல்கள் வெளியிட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மா.சண்முகசிவா எழுதிய சிறுகதை நூலினை வெளியிட்டு எழுத்தாளர் இமையம் பேசியது:

தமிழ்நாட்டில் தற்போது எழுதப்படுகின்ற விமர்சனங்கள் என்பது அரசாங்க ஊழியர் ஒருவர் ஓய்வுப்பெறும்போது ‘பணிநிறைவு பாராட்டு விழா’ பத்திரம் வாசித்து அளிப்பது போல்தான் இருக்கிறது. நூல் வெளியிட்டு விழாவில் பேசப்படும் உரைகள், உரை வீச்சுகள் எல்லாம் புகழ் உரைகளே.

பாராட்டு பத்திரம் வாசிப்பவர் விமர்சகன் அல்ல. பாராட்டுப் பத்திரம் வாசிப்பதை ரசிப்பவன் எழுத்தாளன் அல்ல. படைப்பு குறித்து பேசாமல், படைப்பை எழுதிய எழுத்தாளன் குறித்து பேசுவதை புகழ்வதைதான் விமர்சனம் என்று கூறுகிறார்கள். நவீன நாவல், சிறுகதை, கவிதை என்று பேசுகிறார்கள். ஆனால் நவீன விமர்சனம் குறித்துப் பேசுவதில்லை. நான் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளைப்பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். கதைகளை எழுதிய மா.சுண்முகசிவாவைபற்றி அல்ல. சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள், நவீன எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் எல்லாம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவையே.

மா.சண்முகசிவா ‘சாமி குத்தம்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அரசியல் கதை. சாமிகுத்தம் கதையில் நடக்கும் அரசியல் குறித்துத்தான் தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளுக்கு மேல் பேசப்பட்டிருக்கிறது. அந்த ஒற்றைப் புள்ளியை வைத்துத்தான் தமிழ்நாட்டு அரசியலே நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் விஷயங்கள் கதையாகியிருக்கிறது. ஆனால் இலக்கியமாகவில்லை. மா.சண்முகசிவாவின் சாமிக்குத்தம் கதை இலக்கியமாகியிருக்கிறது.

‘மலேசியா குறித்தும், மலேசிய இலக்கியம் குறித்தும் தமிழக மக்களும், தமிழக வாசகர்களும் வைத்திருக்கும் மனக்கற்பனைக்கு எதிரானதாகவே மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் இருக்கின்றன. மலேசியா என்றாலே இரட்டை கோபுரத்தின் பிரமாண்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால் மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் அந்த இரட்டை கோபுரத்தின் பின்னால் இருக்கும் இருளைக் காட்டுவதாக இருக்கிறது. தொகுப்பில் உள்ள எட்டு கதைகளில் 5 கதைகள் குழந்தைகளைப் பற்றியது.. எல்லாம் சரி தான் என்ற கதை மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அன்பைப் பற்றி சொல்கிறது.

மா.சண்முகசிவாவிற்கு குழந்தைகள் மன உலகமும், சமூக அரசியல், உளவியல் உலகமும் தெளிவாக தெரிந்திருக்கிறது. செய்திகளை, தகவல்களை எப்படி ஒரு கதையாக மாற்றுவது என்ற நுட்பம் தெரிந்திருக்கிறது’

1998ல் வீடும் விழுதுகளும் என்ற சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்து புத்தகங்கள் என்று கொத்தாக வெளியிடுகிற தமிழ்ச்சூழலில் 20ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிடுகிறார் என்பதிலிருந்தே அவர் தனித்துவம் மிக்கவர் என்று தெரியவருகிறது.


சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை. கூச்சல் இல்லை. தன்முனைப்பு இல்லை. எதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை நல்ல தமிழில் தெளிவாக எழுதிருக்கிறார்.

கதாசிரியர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது கதைகளை படிக்கும்போது தெரியும். சமயம் சார்ந்த சடங்குகள் மீது ஓயாமல் கேள்விகளையும், கிண்டல்களையும் வைத்தபடியே இருக்கிறார். தமிழ் மொழியை புதுப்பிக்க வந்தேன். மீட்டெடுக்க வந்தேன். என்னால்தான் நவீன தமிழ் இலக்கியம் செழித்திருக்கிறது என்ற ஆணவப்பேச்செல்லாம் கதையாசிரியரிடம் இல்லை.

’மலேசியாவில் வாழக்கூடிய தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இந்த சிறுகதைகள் நிச்சயமாக உதவும். அதோடு இந்த தொகுப்பை படிக்கும்போது நல்ல சிறுகதைகளைப் படித்த உணர்வு ஏற்படும்.’ என்று தொகுப்பில் உள்ள எட்டு சிறுகதைகள் குறித்தும். விரிவாகப் பேசினார்.

*****

“தளை மீறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்…” – சம்பு.

சம்பு

சம்பு

இதுகாறுமான கெட்டிதட்டிப்போன பத்தாம்பசலித்தனமான சமூக அபிப்ராயங்களின்மீது சம்மட்டி வீசும் தீர்ப்புகளை சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இந்தியா போன்ற பன்முகப்பட்ட கலாச்சாரம் பண்பாட்டு அசைவுகளை உள்ளடக்கிய ஒரு நாட்டில் சரியுந்தவறுமான அரையுங்குறையுமான புரிதல்களுடன் வாழ்கிற மக்கள் திரள் அதிகம்.

நீண்டகாலச் சட்டப் போராட்டங்கள் வழி பெறப்பட்ட இத்தீர்ப்புகள் இன்று சமூகவெளியில் உண்டாக்கியிருக்கும் விளைவுகள் பாரதூரமானவையாகும்.நமது கற்பிக்கப்பட்ட திணிக்கப்பட்ட பிரித்தறிய இயலாமல் வெகுமக்கள் பின்பற்றும் கலாச்சார மற்றும் பண்பாட்டு அரசியல் இதற்குப் பின்புலக் காரணிகளாகும்.இந்தத் தளைகளிலிருந்து ஒரு தனி நபர் சுலபமாக எந்த விதிமீறலையும் நிகழ்த்தவியலாவண்ணம் அவர் மனம் பூஞ்சைச் சிந்தனைகளால் வனையப்பட்டிருக்கிறது.

தனிமனித விருப்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் இந்திய சமூகம் அவ்வளவு சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், பொதுச்சூழல் கலாச்சார மற்றும் மரபார்ந்த நம்பிக்கைகள் என அது விரிவான தளங்களில் பல்லாயிரம் இண்டு இணுக்குகளுடனே கூடிய கருத்துருவாக்கங்களைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து மீளவோ புதிய விடியலை கற்பிதங்கொள்ளவோ அது ஒருபோதுமே தானாக முயல்வதில்லை.கற்பிக்கப்பட்ட பிற்போக்குக் கருத்துகளின் வழிநின்றே எல்லாப் பிரச்சனைகளையும் பண்பாட்டு அசைவுகளையும் அது அணுக முயல்கிறது.

இப் பின்புலத்திதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 3 முக்கியத் தீர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதனை நம்பிக்கை மற்றும் மதப் பின்னணியில் வைத்து எதிர்த்துப் போராடுகிற அரசியல் சாரா தனி அமைப்புகள் மற்றும் ஆதாயத்தின் கனிகளைக் கொய்யக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தச் சமூகத்தை இன்னுமொரு நூற்றாண்டு பின்னோக்கி இழுக்கிற கெடுவேலையை அவ்வளவு குதியாளமிட்டபடி செய்து வருகின்றன.தவிர அதை அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அணுகிக் கொண்டிருக்கின்றன.எவ்வித சிறு நெருடலுமின்றி சட்ட மதிப்புமின்றி மாபாதகமாக இந்தத் தீர்ப்புகளைச் சித்தரித்து அதிலிருந்து இச்சமூக மக்களை மீட்பதற்கான தூதர்களாக தம்மை முன்னிருத்தித் தெருவிலிறங்குகின்றன.

தவிர, கலவையான மனநிலையில் குழம்பிக் கிடக்கிற இம்மக்களைப் பெரிதும் நம்பி அவர்களிடம் உணர்வு ரீதியான தூண்டலை எளிதில் உண்டாக்கி அதன்மூலம் தமக்குத் தேவையான அரசியலதிகாரத்தை வென்றெடுக்கும் மலினமான யுக்தியை சில ஓட்டுக்கட்சிகள் கைக்கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலை இயன்றவரை குரூர யுக்தியுடன் சரியாகப்பயன்படுத்திக் கொண்டு தமது எதிர்காலத்தை அக்கட்சிகள்
திட்டமிடுகின்றன.வேறு எவ்வகையான முற்போக்கு அம்சங்கூடிய மாற்றங்களுக்கு சமூகத்தை தயார்செய்வதை விடவும் சகமனித வெறுப்பை பல்வேறு காரணிகளை முன்வைத்து விதைப்பதன் வழி பெரும்பான்மையான மக்கள் திரளை ஒருங்கிணைக்க முடியுமெனவும் அவைகள் நம்புகின்றன.
சில நேரங்களில் அதில் வெற்றியடையவும் செய்கின்றன.

இவ்வளவு குளறுபடியான ஒரு பின்புலத்தில் இம்மண்ணில்
மக்கள் தாம் விரும்பிய வாழ்வினை சுதந்திரமாக வாழவும் தம் கருத்துக்களை கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் வைத்து உரையாடவும் விவாதிக்கவுமான அரசியல் சாசன உரிமைகளையும்
நாம் பெற்றே இருப்பதையும் ஞாபகங்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஓர் சுதந்திர வழிப்பட்ட சமூகத்திற்கான முன்மொழிதலை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

தீர்ப்பு: 1.

நமது உச்சநீதிமன்றம் IPC 377ல் உள்ள பிரிட்டிஷ் காலத்திய கடும் விதிமுறைகளின் சில ஷரத்துகளை சிறிய அளவு ரத்து செய்து ஓரினச்சேர்க்கையை குற்றவிலக்குடைய நடவடிக்கை என அங்கீகரிக்கிறது.

இதன்படி ஓரினச்சேர்க்கையாளர்கள்,பெண்களிடையே பாலுறவு கொள்பவர்கள் மற்றும் மாறிய பாலினத்தவரிடையே ஒப்புதலுடன் ஏற்படும் தன்பாலின நடவடிக்கைகளுக்கு இந்த ஷரத்தின் கடுமை பொருந்தாதெனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதைக் குற்றவிலக்குடைய ஒன்றாகக் கருதும் 125வது நாடாகத் திகழ்கிறது இந்தியா.எனினும் விலங்குகள் அல்லது சகமனித ஒப்புதலின்றி யாரோடும் மேற்கொள்ளும் பாலியல் செயல்களை IPC377 ,வழமைபோல் கட்டுப்படுத்தவே செய்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் பாலியல் விழைவுகள் கட்டுப்பெட்டித்தனத்துடன் அடக்கிவைக்கப்பட்ட, சந்தர்ப்பங்களில் மோசமாக அத்துமீறுகிற என்ற எதிரெதிர் கோணங்களில்தான் அணுகப்பட்டு வந்திருக்கின்றன. மட்டுமல்லாமல் பால் மாறுபட்ட மனிதர்களைப் புரிந்து கொள்வதில் மொத்த சமூகமே வெகுவாகப் பின் தங்கியிருக்கிறது.

நாம் வாழும் இதே மண்ணில் சில உயிரிகள் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளுடன் ஜீவித்துக் கிடக்கின்றன. ஏந்துவார் கரங்களை தவம்போல் எதிர்பார்த்தே கண்ணீருடன் அவர்தம் காலங்களும் கடந்துபோனதைக் கருத்திற்கொண்டு இத்தீர்ப்பு அவர்களை வெகுவாக ஆறுதல்படுத்துகிறது.

தீர்ப்பு:2

விதிக்கப்பட்ட வாழ்வைக் கொண்டாடும் நிர்ப்பந்தத்தை காலம்காலமாய் பெண்களின்மீது திணித்துவைத்திருக்கிறது நம் சமூகம். அதிலிருந்து சிறிய விடுதலையோ அல்லது சிறு விருப்பமோ ஒன்றும் சட்டக்குற்றமாக கருதவேண்டியதில்லையென அறிவிக்கிறது மற்றொரு தீர்ப்பு.(IPC497).
சநாதானத்தின் வழிவந்த ஆகப்பெரும் ஆகிருதி பொருந்திய நம் மூத்தகுடிகளை விக்கித்துப்போகச் செய்யும் வல்லமை கொண்டதுதான் இந்த அறிவிப்பு. எனினும்,நம் புரிதல்களில் தீமை நேர்ந்துவிடக்கூடாது.

மிக அதிகமாக நையாண்டியுடன் உரையாடல்களிலும் சமூக ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாகவுமிது பார்க்கப்பட்டது.
யாரும் யாரோடு வேண்டுமானாலும் போகலாம் வரலாமென்பதைச் சொல்ல உச்சநீதிமன்றம் எதற்கு?
இந்த நீதிபதிகள் நம் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டுதான் தீர்ப்புகளைச் சொல்கிறார்களா?
தீர்ப்புக் கொடுத்த நீதிபதியின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பிலிருந்தால் மனைவி வரும்போது வந்து சேரட்டும் அதுவரை சற்று தூங்கி எழுந்தால் தேவலையென அவர் நினைப்பாரா?

இந்த நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தலைதூக்கி நிற்கும்போது யார் யாரிடம் ட்ரவுசரைக் கழட்டுவது அல்லது சேலையை அவிழ்ப்பது என்பதுதான் பிரதானப் பிரச்சனயா என்றெல்லாம் வெகுவாக அலசி ஆராயப்பட்டது இந்தத் தீர்ப்புதான்.

ஆனால்,
உண்மையாகவே முறைதவறிய உறவுகளை இத்தீர்ப்பு ஊக்குவிக்கவுமில்லை.தாங்கிப் பிடிக்கவில்லை. ஆனால் அப்படி மட்டுமே பார்க்கும்படி மூளை சுருங்கிய ஆணாதிக்க மனம் கருதுகிறது.

அசந்தர்ப்பமான ஆண் பெண் உறவுகளில் பெண்ணை மட்டும் குற்றவாளியாகக் கருதுகிற சமூகத்தின் குறுகிய புரிதலுக்கும் அபிப்ராயத்துக்கும் இத்தீர்ப்பு முட்டுக்கட்டை போடுகிறது.

பரஸ்பரம் ஆண்/பெண் இருவரும் நற்புரிதலுடன் வாழ்தலின் அவசியத்தையும் ஒழுக்கத்தின் தேவையையும் நிர்ப்பந்திக்கிறது.

பெண்ணை மட்டும் குற்றம் சுமத்தி நிர்ப்பந்திப்பதிலிருந்து விலக்களிப்பதன் மூலம் இந்த உறவிலிருந்து சட்டப்படி ஆண் தப்பித்து வெளியேற இருக்கின்ற வாய்ப்புகளை முற்றிலும் நிராகரிக்கிறது.

எனவே, எல்லோர் வீட்டிலிருந்தும் பெண்களெல்லாம் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி அடுத்தவருடன் போய்விட்டால் என்கிற மலினப்பட்ட சிந்தனையை ஆண்மனம் கற்பிதங்கொள்ள வேண்டியதில்லை.

தீர்ப்பு:3

அணிலும், மானும், குரங்கும்,எருமையும், பசுவும், நாயும்கூட கடவுளை வழிபட பெற்றிருக்கும் உரிமையை சற்றே விரிவுபடுத்தி நமது பெண்களுக்கும் அதையளிக்க முன்வருகிறது இன்னொரு தீர்ப்பு. பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்தும் விதமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபடலாம் என்ற உத்தரவுக்குப் பிறகு சகிக்கவியலாத பிற்போக்கு கருத்துகளும் மோசமான எதிர்வினைகளும் இத்தீர்ப்பின் அசல் நோக்கத்தைத் திசைதிருப்பும் வகையில் சமூக மற்றும் அரசியல் ரீதியான இழிநடவடிக்கைகளாக மாறியிருக்கின்றன.

நம் முன்னோர்கள் எதற்காக சிலவழிமுறைகளைக் கடைப்பிடித்தார்களெனச் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் கீழ்த்தரமான கருத்துக்களை முன்வைத்து அடுத்தடுத்த நகர்வுளுக்குச் சென்றது.

பிஜேபி இதில் அவ்வளவு அப்பட்டமாக தீர்ப்பின் எதிர்பலனை அறுவடை செய்யக் களமிறங்கியது.
கேரள இடது முன்னணி அரசு தீர்ப்பை அமல்படுத்தமுயலும்,ஒரு சமத்துவத்திற்கான புதிய திறப்பாக இதனைப் பார்க்குமென்பது நீதிபதி தீர்ப்பு வாசித்து முடித்தவுடனே பிஜேபி கணக்குப்போட்டு விட்டது.

பார்ப்பனீய மயப்பட்ட சடங்குகளிலிருந்து அப்போதே விதிமீறல்களை நடத்திக்காட்டிய ஸ்ரீ நாராயண குரு,அய்யன்காளி, சட்டாம்பி சுவாமிகள் பாரம்பரியத்தின் வழிவந்த கேரளாவில் இன்றைய ஆளும் அரசு முற்போக்கான இத்தீர்ப்பை செயல்படுத்த முனையுமென்பதை வேறு எவரைக்காட்டிலும் முதலில் பிஜேபி யினர்தான் புரிந்து கொண்டார்கள்.

தவிர, 24*7 காவல்துறை பாதுகாப்புடன் பெண்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்யமுடியாது.நடைமுறைக்கு அவ்வளவாகச் சாத்தியமற்றது என நுணுக்கமாகப் புரிந்துகொண்டதுபோல தமது பிரச்சாரத்தை பிஜேபி அவிழ்த்து விட்டது.

“சபரிமலை இட அமைவு பெண்கள் சென்று வர அவ்வளவு உகந்ததல்ல…” என்ற ரீதியில் பொன்.ராதாகிருஷ்ணன் முனகத் தொடங்கினார்.

இந்தச் சூழலில்தான் 16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிணராயி விஜயன் “சமூக சீர்திருத்த மரபுதான் நம்முடைய மகத்தான மரபு.அதுவே நம் அடிப்படை.. எந்தக் காலகட்டங்களில் எல்லாம் சமூக மாற்றக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அப்போது அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கித்தான் இருக்கிறார்கள்.

இதுவொன்றும் புதிதல்ல…சதிக் கொடுமை,விதவை மறுமணம், சிறுமிகளைக் கிழவர்களுக்கு மணமுடித்தல்,மனிதப்பலி சடங்கு,ஈரத்துணியுடன் மட்டுமே கோவில் நுழைதல், மாதவிடாயின் போது தனித்திருத்தல்,பிரசவத் தீட்டு, சாவுத் தீட்டு,பெண்கள் மார்பு மறைக்கத் தடை,பெண்களுக்குச் சொத்து மறுப்பு,பிராமணர்களிடமிருந்து 64 அடிகள் தள்ளி பறையர் நிற்பது என அனைத்து சமூக கீழ்மைகளிலிருந்தும் நாம் ஓர் மேம்பட்ட சமூகத்தை படைக்கவில்லையா…?”
என்று நம்பிக்கையின் வார்த்தைகளை ஆழமாக விதைத்திருக்கிறார்.

சமத்துவத்தை ஏந்திப்பிடிக்கும் எண்ணம் கொண்ட முற்போக்கு சிந்தனையை முன்மொழிகிற
ஓர் சமூகத்தில் பொதுமக்கள்திரளின் மீது சதா இந்த அரசியல் வயப்பட்ட அல்லது சமூக வயப்பட்ட பிற்போக்குத்தனமான கருதுகோள்களை பழமைவாதிகள் ஏவுகின்றனர்.
புதிய வெளிச்சம் நோக்கி மக்கள் நகர்ந்துபோகும் பாதைகள் திரிந்து குழம்புகிறபடி பாசிச சக்திகள் தீர்ப்புகளை கையிலெடுக்காவண்ணம் தடுக்கவேண்டும்.

ஒரு பொதுச்சமூகத்தின் சாதாரண பிரஜை என்கிற வகையில் ஒரு தனிமனிதர் இந்தத் தீர்ப்புகள் குறித்த விரிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ளவும், இயல்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் நாம் துணை நிற்கவேண்டும். தவிர,என்றென்றைக்கும் சமத்துவ சமூகத்தை கனவுகாணவும் உருவாக்கவுமான நகர்வுகளுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும் பாரபட்சமற்ற உரையாடல்களை மேலும் விரிவான தளங்களில் நாம் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டியிருக்கிறது.

(((((((((((((())))))))))))

திரும்புதல் ( சிறுகதை ) – ரமேஷ் கண்ணன்


ரமேஷ் கண்ணன்

கணேஷும் நானும் அந்த வீட்டின் முன் நிற்கையில் பிற்பகலாகி விட்டிருந்தது.காலை 9 மணிக்கு பேசுவதற்காக பாய் வீட்டிற்கு நாங்கள் வந்து சேர்ந்ததிலிருந்து இப்போது வரை பேசிக்கொண்டே இருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.ராணி அத்தையும் கோபால் மாமாவும் சண்டை போட்டபடியே இருந்தனர்.உண்மையில் சொல்லப் போனால் கோபால் மாமா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.கோபால் மாமா ரசனையான மனுஷன். அரசு உத்தியோகம்.பேண்ட் சர்ட் மட்டுமே உடுத்துவார்.கையில் எப்போதும் ஒரு லெதர் பேக் இருக்கும்.அதைப் பிடிப்பதிலும் அவருக்கென ஒரு ஸ்டைல் இருந்தது.எங்கள் சொந்த பந்தத்தில் சினிமா,பாட்டு எனப் பேசிக்கொள்ளும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். ஏதாவது விசேஷ வீடுகளில் பார்த்தவுடன் நலம் விசாரிப்பார்.

அவருக்கும் ராணி அத்தைக்கும் தான் சண்டை. அத்தையும் உத்தியோகஸ்தி நல்ல ஜோடி பொருத்தம் தான்.வீட்டுக்காரரின் பெயரை சத்தமாகவே சொல்லும் அத்தை. சமயத்தில் அது இங்கிட்டு தான் போயிருக்கும் என்று கூடச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அப்பா அது என் காதில் விழுந்து விடக்கூடாதென வேறு பேச்சைத் தொடுவார்.எனக்கு அது நன்கு புரிந்து கொண்டதால் நானும் கீழேயோ மேலேயோ பார்த்து சமாளிப்பேன்.

இப்போது எல்லாம் கைமீறி போய் விட்டது. ஆசையாய் வளர்த்த பெண் பிள்ளை யாரையோ விரும்பி உடன்சென்று விட்டாள்.இத்தனைக்கும் பக்கத்திலேயே அக்கா அக்கா என்று குடும்பமாய் பழகிய குடும்பம் தான்.சரிதானே என நினைத்துக் கொண்டேன்.

உறவுக்காரர்கள் கூடி என்ன செய்யலாம் எனப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.நான் கணேஷ் ,குமார் ,ராஜா ,வாசன் எல்லாரும் இளவயதுப்பையன்கள்.நெருக்கடியான சூழல்.அவமானம் பொறுக்கமாட்டாமல் வீட்டைப்பூட்டி விட்டு எங்களது குடும்ப நண்பர் அப்துல் பாய் வீட்டில் இருந்தாள் அத்தை.மாமி காலையிலிருந்து வருபவர்களுக்கும் போகிறவர்களுக்குமாய் டீ போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

தப்பை வைத்த வீடு அது.எப்போதுமொரு குளிர்ச்சி நிறைந்திருக்கும்.ரோட்டை ஒட்டியபடி இருந்ததால் வேடிக்கை பாக்க நல்ல வசதி.வராந்தாவில் தான் அமர்ந்திருந்தோம்.பக்கச்சுவர் உயரம் அதிகம்.அதனால் நாங்கள் அமர்ந்திருப்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது.சைக்கிள்கள் அதிகம் நிற்பதில் அக்கம் பக்கம் கவனத்திற்குச் சென்று விஷயத்தையும் பேசத்தொடங்கி விட்டார்கள்.பிள்ளையைப் பேசி சமாதானம் செய்து கூப்பிடுவது என முடிவானது.

நாங்கள் இன்று வருவதற்கு முன்பே நேற்று ஒரு முயற்சி நடந்து தோற்றுவிட்டிருந்தார்கள் என்பது எனக்கும் குமாருக்கும் அரை மணி கழித்தே இருந்தது.ஆகப் பிள்ளை கிளம்பி இன்றோடு மூணாவது நாளாகி விட்டது.

குமாருக்கும் எனக்கும் விஷயம் தாமதமாய் தெரிந்ததில் ஒன்றும் வருத்தமில்லை.

அத்தையும் மாமாவும் அரசு உத்தியோகம் என்பதால் நல்ல வருமானம். கோபால் மாமாவுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை.அவர்கள் வீடு பெரியதாகக்கட்டி மாடி போர்ஷனை வாடகைக்கும் விட்டிருந்தார்கள்.பெண்ணுக்கு நூறு பவுன் நகையும் பாத்து பாத்து வாங்கி வைத்திருந்தாள் அத்தை.

குமாருக்கும் ,வாசனுக்கும் அவர்கள் வீட்டு மருமகனாகி விட வேண்டுமெனும் ஆசை மனதிற்குள் இருந்தது.

வாசன் நல்ல கலர்.ராணி அத்தையும் பெண்ணை அவனுக்குத்தான் கொடுக்க வேண்டுமென நினைத்திருந்தாள்.குமாருக்கும் இது தெரியும்.இப்போது குமாருக்கு இதில் சின்ன சந்தோஷமிருந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆரம்பத்தில் இருந்தே இதுமாதிரி துளி நெனைப்பு வருவதைப் போல எங்கள் குடும்ப வாழ்க்கையில்லை.

கோபால் மாமா ஓங்கி சத்தம் போட்டார்.கண்டிப்பாக முக்கு பலசரக்கு கடை வரை கேட்டிருக்கும்.எங்களைப் பிரிச்சு விடுங்க முதல்ல பிள்ளையப் பத்தி அப்புறம் பேசுங்க என்றார்.

பாய் தான் முதலில் கோபால் மாமாவை சமாதானப்படுத்தினார்.விடுங்க மாப்ள சின்ன பிள்ளையாட்டமென. இதற்குள் அத்தை கெட்ட வார்த்தைகளைப் பேசத் தொடங்கினாள்.நிலமை கை மீறிக்கொண்டிருந்தது.பெரியவர்களை அமைதியாக இருக்கச்சொல்லிவிட்டு நான் பேசத்துவங்கினேன்.உங்களுக்கு விடுதலை வாங்கி தர்றோம் மாமா.முதல்ல பிள்ளைய பார்க்கனுமா வேணாமா என்றேன்.அத்தை ஓவென அழத்தொடங்கினாள்.அவளை பின்கட்டுக்கு மாமி அழைத்துச் சென்று முகம்கழுவி விட்டு ஆசுவாசப்படுத்தினாள்.பாயின் பேத்திகள் குறுக்கு மறுக்காய் ஓடினார்கள்.நொக்கோ நொக்கோ எனச் செல்ல அதட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் பாய்.அவர் கண்கள் விரிந்தபடி நாக்கைத் துருத்தி பயமுறுத்தினார்.இப்படித்தானே எல்லா வீடுகளிலும் செய்கிறார்கள்.அதுவொரு அவுட்டேட்டட் வெர்ஷனாகி விட்டது.

பிள்ளைகளை கைக்குள்ளே வைத்துப் பார்த்துக் கொள்ள பல்வேறு யுக்திகளைப் பெற்றோர்கள் செய்கிறார்கள்.அந்த கொடுப்பினையும், திறமையுமில்லாதவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு யார் வீட்டிலாவது அழுது புலம்ப வேண்டியது தான்.அத்தை என்னமோ தெரியவில்லை கண்ணைத் துடைத்தபடி தன் பெண்ணை வைதபடி “கண்ணுகளா !டீ சாப்பிட்டீகளா ,காலையிலிருந்து வயசு பயக அவ செஞ்சதுக்கு இதுக வேலைய விட்டுட்டு உக்காந்திருக்குக ” என்றாள்.

எங்களுக்கு என்னவோ போலாகி விட்டது. நான் கேட்டேன்.நாங்க வேணாப் போய் பேசி கூப்பிடுறோம் அத்தைனேன்.

வாசன் சொன்னான் அவனுங்க ஒரு குரூப்ல பேசி வச்சிருக்காய்ங்கன்னான்.

எனக்கு ஒன்னும் புரியல அதான் அந்த ஏரியா சிவான்னு ஒரு பய இருக்கான் ல.அவன் தான் பாதுகாப்பாம்.அவன்ட்ட பேசனுமாம்.போலீஸிடம் போவதில்லையென ஏற்கனவே பேசியாகி விட்டது. இதை அவர்களும் தெரிந்து வைத்திருந்தனர்.

சிவா காவல் துறையில் உயர்பொறுப்பில் பணிபுரிபவரின் மகன்.கடந்த சில வருடங்களாக அந்தப்பகுதியில் நடக்கும் அடிதடி கட்டப்பஞ்சாயத்துகளில் அவனுடைய பெயர் தான் அடிபடும்.ஒவ்வொரு பகுதியிலும் சின்ன பெட்டிக்கடைக்கு அருகே அவனுடைய கார் வந்து நிற்கையில் சிறு பதட்டம் தொற்றிக் கொள்ளும்.

நாங்கள் எனது நண்பனின் வீட்டின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கையில் சைக்கிளில் பாரா வரும் போலீசார் எங்களை இரண்டு மூன்று முறை எச்சரித்து உள்ளே போகச் சொன்னதுண்டு.

ஆனால் சிவா வை ஒருமுறை கூட அவர்கள் நேருக்கு நேராக பார்த்ததோ எச்சரித்ததோ இல்லை.

சிவாவை, சிவா என நான் சொல்லுவதே ஆச்சரியமாய் படும்.ஆனால் அதற்கொரு காரணமுண்டு.நானும் ,அவனும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.சிவா நல்ல உயரம் கை கால்களும் திடகாத்திரமாக உள்ளவன்.இதை விட யாரையும் சடாரென கைநீட்டி அடித்துவிடும் பழக்கம் அவனை எல்லோரும் வியந்து பார்க்க வைத்தது.அது புது ஸ்கூல்.பழைய ஸ்கூலில் இருந்து இளங்கோ மட்டுமே உடன்படித்தவன்.ஆனால் நான் அவனிடம் சரியாகப் பேசியது கூட இல்லை.நூற்றிநாலு மாணவர்கள் ஆறாம் வகுப்பில்.வாத்தியார் பிரம்பெடுத்து அடித்தால் யாருக்கு விழுகுமென்பதே தெரியாது.ஒவ்வொரு நாளும் பயந்தபடியே தான் பள்ளி செல்வேன்.ஐந்தாம் வகுப்பு வரை ஃபர்ஸ்ட் ரேங்க்.டீச்சர்ஸுக்கு செல்லப்பிள்ளை.அதன் பின்பு ஒருபோதும் ஆசிரியர்களுக்கு இணக்கமானவனாக இருக்க முடியவில்லை.

இளங்கோ ஆசிரியர் வராத பாடவேளையில் தனது குறியை டிரவுசரை விலக்கிக் காண்பித்தான்.என்னைப் பார்த்து பழிவாங்குவதைப் போல கொஞ்சம் மிரட்ட ஆரம்பித்தான்.நான் சிவாவை நெருங்க இதுவே போதுமானதாக இருந்தது.நாங்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து சுத்துவோம்.சிவா பெரியவகுப்பு பையன்களோடு வம்பிழுப்பான்.நாங்கள் கைபாம் ஆனோம்.சிவா செட்டில் சுமாராக படிக்கக்கூடிய பையன் நான்.சிவாவுக்கு இது பிடித்துப்போனது.நான் சிவாவிடம் பாராட்டைப் பெற கணக்குகளை விரைவாக முடித்து ஆசிரியரிடம் காண்பிப்பேன்.என்னுடைய ஒவ்வொரு முயற்சி வெற்றி அடைகையில் சிவா பூரித்து பாராட்டுவான்.

நான் அவனோடு நெருக்கமாவதைத் தடுக்க சாதியைப் பற்றிய பேச்சை இழுத்து விட்டார்கள்.எனக்கு அதுவரை சாதியைப்பற்றி ஒரு மண்ணும் தெரியாது. இன்று வீட்டில் கேட்டு வருகிறேன் சிவா என்றேன்.அந்த சாதியாகவே இருந்து தொலைத்தால் நல்லது என்று வேண்டிக்கொண்டேன்.நான் நினைத்தது போலவே வேறு சாதி.இதை சிவாவிடம் சொல்லவில்லை.பின்பொரு நாள் பேச்சு வருகையில் நீ சத்தியமா எங்காளு இல்லை என்றான் சிவா.அவனுடைய குரலில் ஓர் விலகல் இருந்தது.நான் என்ன செய்ய முடியும்.ஒட்டுதல் குறையத் துவங்கியது.நான் நன்றாக படிக்கும் மாணவர்களோடு பேச ஆரம்பித்தேன்.அவர்களும் அவ்வளவு நெருங்கவில்லை.ஏற்கனவே ஒரு வலைப்பின்னலை உருவாக்கி அதற்குள்ளாகவே புழங்கியபடி இருந்தனர்.

இதற்கிடையில் ஒரு விளையாட்டு பாடவேளையில் இளங்கோவுக்கும் எனக்கும் சண்டை.நான் அவனை நான்கைந்து அடிகள் அடித்திருப்பேன்.என்னை நையப்புடைத்து பனியனையும் கிழித்து விட்டான்.அவமானமாய் போய் விட்டது. சிவா இளங்கோவை இரண்டு அடி அடித்ததாகச் சொன்னார்கள்.ஒரே ஆறுதல். சிவா தேர்வறையில் எனக்கு அடுத்து பின்னால் அமர்ந்திருப்பவன்.இது நல்ல வாய்ப்பானது.எழுதி எழுதி முடித்தவுடன் சிவா போதும் போதுமெனச் சொல்லும் வரை விடைத்தாளைக் கொடுப்பேன்.இதில் எனது மன தைரியம் அவனைக் கவர்ந்தது.சிவா என்னை மனதிற்குள் வைத்து கொண்டாடத் துவங்கி விட்டான்.

எனது சட்டை காலர்கள் மீண்டும் மிடுக்கானது.

ஆனால் எட்டாம் வகுப்பு வரை தான்.பைசல் என்பவனுக்கும், சிவாவுக்கும் பெரிய தகராறு .சைக்கிள் செயின் கத்தியோடு நடந்த சண்டையில் பைசல் பெயில் ஆனான்.சிவா அவுட் பாஸ் வாங்கி கொண்டு கொடைக்கானலில் படித்தான் என்று சொன்னார்கள்.

இப்போது அவனது வீட்டின் முன் தான் நானும் கணேஷும் நின்று கொண்டிருக்கிறோம்.லேசாகந் தூறல் போட ஆரம்பித்திருந்தது.சைக்கிளை அழுத்திக்கொண்டு ஆறு கி.மீ வந்தது போதும் போதுமென்றாகி விட்டது.

சிவா முதலில் ஏரியாவில் செய்த செய்கை மாரியப்பன் எ மாரியை.அவன் தான் சிவாவின் வண்டி பெட்டிக்கடைகளில் வந்து நின்று சென்றபின் தகராறு செய்வான்.ஒருநாள் காலை எட்டு மணியிருக்கும் மாரியை லஷ்மி ஸ்டோர் படிக்கருகில் வெட்டி போட்டிருந்தார்கள்.சிவாவைப் பற்றிய பேச்சுகள் அடங்கி ; சிவாவை பெரிய தாதாவாக்கி விட்டான் மாரி.போலீஸ் வழக்குப்பதிவு செய்து எல்லாம் ஆனது.பிறகு பத்திரிக்கைகளில் அவ்வப்போது பெயர் வெளிவர பெரிய பிரபலமானான்.

இளங்கோவும் பைசலும் கூட அவனுக்காக சில ஏரியாக்களில் வேலை செய்தார்களென நண்பர்கள் கூறினார்கள்.இவன் பக்கமும் சில உயிரிழப்புகள். அவனுக்காக உயிரையே கொடுக்க புதிது புதிதாய் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.தியேட்டர்கள் ஆட்டோ ஸ்டேண்டுகளில் பெரும் செல்வாக்கு சிவாவுக்கு.பெரிய குரூப்புகளோடு மோதுவது வாடிக்கையாகி அவன் ஏரியாக்களைத் தாண்டி நகரின் திருஉருவாய் மாறினான்.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் சிவாவின் கனைப்பு சத்தம் கேட்டது.நானும் கணேஷும் வணக்கம் வைத்தோம்.கணேஷ் வேஷ்டியை இறக்கி விட்டதில் சிவாவின் பார்வையை ஈர்த்துக்கொண்டான்.நான் லேசாக சிரித்து வைத்தேன்.என்னப்பா இங்க உனக்கு என்ன வேலை இவரு யாரு என்ன விஷயம் எனக் கேட்டபடி சிகரெட்டை பற்ற வைத்தான்.நான் விஷயத்தை சொல்லத் தொடங்கினேன்.

முதலில் எடுத்த எடுப்பில் சொன்ன வார்த்தை எங்களிருவரையும் தூக்கி வாரிப்போட்டது.இந்நியாரம் எங்காளுகன்னா தொங்க விட்டிருப்போம்.சரி சரி அவனுகளுக்கு நாமதான்னு உறுதி கொடுத்துட்டோம்.நீ நம்ம பிள்ளைன்ற ஒரு வழி இருக்கு. அத வேணாச் செய்யலாமென்றான்.

பேட்டை பயக நம்ம தோஸ்து தான் அவிங்கள விட்டு நம்ம பயலுகள ரெண்டு தட்டு தட்டி பிள்ளையத் தூக்கிருவோம்.ஆனால் அதுக்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் என்றான்.

சரி சிவா கேட்டுட்டு வந்துடுறேன்னு திரும்புனோம்.அன்பு விலாஸ் டீக்கடைல டீயக்குடிச்சிட்டு சைக்கிள உருட்டிக்கிட்டே பாய் வீட்டிற்கு வந்து விஷயத்தை சொன்னோம்.

அதற்குள் அவர்கள் வேறொரு முடிவை எடுத்திருந்தனர்.

நேற்று நல்ல மழை .மாமா , மழை பெய்து முடிந்த சடுதியில் நீங்கி வெளியேறுபவர்களில் அதே ஸ்டைலோடு புது சினிமாப்பாடலை சீழ்க்கையடித்தபடி பேரப்பிள்ளைகளுக்கு இனிப்பு காரம் வாங்கியபடி லஷ்மி விலாஸ் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.அவர் ஒரு கையை லெதர் பேக்கின் காதுக்குள் விட்டு இறுக்கிப் பிடித்தபடி இருந்தார்.

சிவா அன்று சொன்னது என் காதைத்துளைத்தபடியே இருந்தது.அதைத் தூசாகத் தட்டியபடி எட்டு வைத்துக் கொண்டிருந்தார் வீட்டை நோக்கி கோபால் மாமா.

*********

வாழ்வின் பரமபதம் சரவணன் சந்திரன் எழுதிய “சுபிட்ச முருகன்” புதினம் குறித்து – பாலகுமார் விஜயராமன்

தனக்குப் பிடிப்பதை, எந்தத் தடையையும் மீறி நிறைவேற்றுக் கொள்கின்ற ஒருத்தி, தனக்குரியவனின் ஒரு சுடுசொல்லைத் தாங்க முடியாமல் தன்னைப் பொசுக்கிக் கொள்கிறாள். அபாண்டமாய் மாண்ட அவள் அரூப ராஜநாகமாய் மாறி, தன் வாழ்வை வீழ்த்திய தன் மாமனின் குடும்பத்தை அழிப்பது ஒரு கண்ணி.

வாழ்ந்துகெட்ட குடும்பத்தில் இருந்து, மேலெழுந்து வரும் ஒருவன், தன் பால்யத்தின் நினைவுகளோடும், தொன்மத்தின் மீதுள்ள ஆழ்ந்த ஒட்டுதலோடு அதே நேரம் அதிலிருந்து விலகி ஓடும் எத்தனிப்போடும் அலைவுற்று, இறுதியில் மீண்டு தன் வாழ்வுக்கான மொட்டெடுக்க முனையும் ஒரு கண்ணி.

நிகழ்வாழ்வின் சுயத்தைத் தொலைத்து, துறவறத்தில் விட்டேர்த்தியாய வெறுமையைக் குடித்து, கசப்பேறி வன்சொற்களாய் உமிழும் எச்சலில் இருந்து, சுற்றியிருப்பவர்களுக்கான சுபிட்சத்தை அருளும் அஞ்ஞானவாசியின் இருப்பும் மறைவும் ஒரு கண்ணி.

இப்படி, கதைசொல்லியின் உள்ளொடுங்கிய மனப்பிரவாகத்தின் மூலமாகவும், பாவங்களுக்குள்ளும் அவற்றிற்கு உண்டான தண்டனைகளுக்குள்ளும் தன்னைத் தானே புதைத்துக் கொள்ளவும், ஒரு மொட்டெடுப்பின் மூலம் உள்ளிருந்து முட்டித் தள்ளி வெளிவரத் துடிக்கும் எத்தனத்தையும், மேல்சொன்ன கண்ணிகளின் சரடாகக் கோர்த்து புனையப் பட்டிருக்கிறது சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்”.

சரவணன் சந்திரனின் கதை சொல்லிகள், சட்டகத்துக்குள் அளந்து வைத்திருக்கும் கதை சொல்லல் முறையிலிருந்து மாறுபட்ட வகையில் கட்டத்துக்கு வெளியே இருந்து தம் அகத்தின் சாகச உணர்வையும், அதன் களிப்பையும், பின் அதனூடாக உண்டாகும் குற்றவுணர்ச்சியின் மூலம் தம்மை சுருக்கிக் கொள்வதையும், பின் அரூபத்தில் இருந்து நீளும் ஒரு கையைப் பற்றிக் கொண்டு அந்தக் குற்றவுணர்வில் இருந்து மீண்டு எழும் மீட்சி என்பதாகவும் உருவாகி இருப்பவர்கள்.

அவரது இதுவரையான புதினங்களில் இதே குணவார்ப்புள்ள நாயகன் தான் கதைசொல்லியாக இருப்பான். ஆனால் முந்தைய புதினங்களில், வாசிப்புக்கு பெருந்தடையாய் இருந்தது, அத்தியாயங்களுக்கு இடையேயான தொடர்ச்சியின்மை. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியாய் தொக்கி நிற்பது போலவே தோன்றும். ஒரு அத்தியாயத்தில் ஒரு பாத்திரத்தைப் பற்றிய அறிமுகம், அப்பாத்திரத்திற்கு கதைசொல்லியுடனான உறவு அல்லது தொடர்பு, அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் ஒரு சம்பவம். அதோடு அந்த அத்தியாயம் முடியும்.

ஒரு அத்தியாயத்தின் நிகழ்வுகள், கதையோட்டத்திற்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்துகின்றன அல்லது அது புதினத்தை எப்படி நகர்த்துகிறது என்பதில் சில குழப்பங்கள் இருந்தன. ஆனால் ”சுபிட்ச முருகனில்” அந்த தொடர்பின்மை மறைந்து, கண்ணிகளை புனைவுச் சரடில் இணைக்கும் லாவகம் வாய்த்திருக்கிறது.

சுபிட்ச முருகனின் முதல் மூன்று அத்தியாயங்கள், இளங்கா என்னும் இளம்பெண்ணின் தனித்தன்மையான வாழ்வையும், சாவையும், அடர்த்தியான விவரிப்புகள் மூலமும் பேசுகிறது. அவள் கதைசொல்லியின் மனதுக்குள் தொன்மமாய் பதிந்து, தனது வீழ்ச்சிக்குக் காரணமானவர்களை அலைக்கழித்து பலிவாங்கிய துர்நிகழ்வுகள் அவனைக் கொடுங்கனவாய்த் துரத்த, அதில் அவன் வீழ்கிறானா இல்லை விதியின் இந்த சாபத்தில் இருந்து அவளே அவனை விடுக்கிறாளா அல்லது அவளையும் தாண்டி அவன் தான் கண்டுணரும் தரிசனங்கள் மூலம் இறுதியில் மொட்டெடுக்கிறானா என்ற கேள்விகளை முன்வைத்து, புதினத்திற்கு மிகப்பலமான அஸ்திவாரம் நட்டு வைக்கப்படுகின்றது.

ஆனால் புதினத்தின் இந்த பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் இரண்டாம் பகுதி மிகப் பலவீனமாக எழுந்திருப்பது துரதிர்ஷ்டம். ஒரு புனைவின் போக்கு, நம் மனம் நினைக்கின்றபடி தான் செல்லவேண்டும் என்று நினைத்து வாசிப்பது அபத்தம், ஆனால் முதல் மூன்று அத்தியாங்களில் கட்டமைக்கப்பட்ட இளங்கா என்னும் பெண்ணின் பிம்பம் அப்படியே நட்டாற்றில் ஆதரவின்றி விடப்பட்டு, அதன் பின்னான அத்தியாயங்கள் கதைசொல்லி தன் அகம் சார்ந்த பிரச்சனைகளின் புலம்பலையும், தன் இயலாமையையும், தன் வாழ்க்கை முறை மாற்றத்தையும் அன்றாடம் எழுதிச் செல்லும் டைரிக்குறிப்பைப் போன்று சுருங்கி விடுகின்றன. உண்மையில், இப்புதினத்தின் மையப்பகுதி, இளங்காவுக்கும், கதைசொல்லிக்குமான பரமபத விளையாட்டாகவும், சமராகவும், போராட்டமாகவும் அமைந்திருந்தால் முன் அத்தியாயங்களின் அடர்த்தி, புதினம் முழுக்கப் பரவியிருக்குமோ என்று தோன்றுகிறது.

இளங்கா தன் மாமனின் குடும்பத்தை புல்பூண்டு இன்றி பஸ்பமாக்கும் ரௌத்திரத்தில் தனக்குப் பிரியமான ஐந்து வயது சிறுவனை மட்டும் தன் நஞ்சின் வீரியத்தில் இருந்து காப்பது என்ற பதைபதைப்போடு அவனை நெருங்குவதும், ஆனால் கதைசொல்லிக்கு இளங்கா என்பவள் தன் குடும்பத்தை கருவறுக்க வந்த யட்சியா அல்லது தன் மீதிருக்கும் சாபத்தின் வினையை அறுக்க வந்த கன்னிமார் தெய்வமா என்ற கலக்கத்துடனும் இதே கதையை இன்னொரு கோணத்தில் யோசித்து, புனைவின் திசையை மாற்றிப் பார்க்கையில் “சுபிட்ச முருகன்” இன்னும் செழுமையான சித்திரமாகத் துலக்கமாகிறது.

மாறாக, முன்பு நன்கு கட்டமைக்கப்பட்ட இளங்கா என்ற ஒருத்தியின் பிம்பமே மறந்து போய், கதைசொல்லி, தன் இயலாமையையும், எச்சில் சாமியின் இடத்தில் அல்லறும் படிமங்களும் மீண்டும் மீண்டும் வரும் போது, புதினத்தின் இரண்டாம் பகுதி தனியான வேறு காட்சியாக, வெறும் புலம்பலாக தோற்றம் கொள்ள வைக்கின்றது.

வாழ்வின் ஒன்றின் மீதான மோகம், அதனை அடையத்துடிக்கையில் நிகழும் வேட்கை, பின் பிடித்தது தரும் சலிப்பு அல்லது பிடித்தது கைநழுவிப் போகையில் எழும் குரோதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது புதினத்தின் முதல் பகுதி. சாகச மனம் கொண்ட ஒருவன் உச்சத்திலிருந்து அதளபாதாளம் நோக்கி விழுகையில் தோன்றும் ரோகம், அதன் மூலம் தனக்குள் சிற்றெரும்மாக ஊறல் எடுக்கும் கழிவிரக்கம், அதனூடே கிடந்து உழலுதல், அந்த பாதாளத்திலிருந்து மேலெழுந்து வர முடியாமல் மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே தன்னைச் சுருக்கி சுருக்கி சுற்றியுலவும் வட்ட எல்லை ஆகியவை இரண்டாம் பகுதி.

பின் தன் கீழ்நிலையிலிருந்து தன்முனைப்போடோ அல்லது மேலிருந்து நீளும் ஒரு ஒளிக்கற்றையைத் தொடர்ந்தோ வான் நோக்கி ஏகி, மொட்டெடுத்து, போகம் பெருக எழும் முயற்சி முடிவுப் பகுதி. இப்படி மோகத்தில், துவங்கி, ரோகத்திலிருந்து மீண்டு போகம் பெருகி வரும் படைப்பாக வந்திருக்கிறது “சுபிட்ச முருகன்”.

உண்மையில், இந்த புதினத்தை வாசிக்க எடுக்கும் போது, இணையத்தில் இப்புத்தகம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்புகளினாலும், வாசிக்க நேர்ந்த நான்கைந்து விமர்சனக் குறிப்புகளினாலும், இருவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றின. ஒன்று, “சரவணன் சந்திரன் பெயர்சொல்லக்கூடிய தனது முதல் நாவலை எழுதிவிட்டார்” என்ற நம்பிக்கை.

இன்னொன்று, “இந்த தெர்மாக்கோலைத் தான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தீங்களா” என்ற பரவை முனியம்மாவின் வசனம். புதினத்தை வாசித்து முடிக்கையில் இவற்றில் எந்த எண்ணம், நிலைபெறப்போகிறது என்று எந்த யோசனையும், முன்முடிவுகளின்றியே வாசிக்கத் துவங்கினேன். ஆனால் ஒற்றை வரியில் வீசிச் செல்லும் வெற்று விமர்சனச் சொற்களைத் தாண்டி, இந்த புதினத்தின் முதல் சில அத்தியாயங்கள் ஏற்படுத்திய அதிர்வு நாவலை முடித்த பின்பும் நிலைத்திருக்கிறது. பின் வந்த அத்தியாயங்கள், முதல் சில அத்தியாயங்களுக்கு நியாயம் சேர்க்கத் தவறியிருந்தாலும், முடிவில், கரும்பானை உடைத்து பெருமழை பொழிந்து மனம் நிறைக்கும் சுபிட்ச முருகனின் அருளால், இப்புதினம் தனக்கான இடத்தைத் தக்க வைக்கிறது.

எழுத்தாளர் சரவணன் சந்திரன் அவர்களுக்கும், புத்தகத்தை வெளிட்ட “டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்தினருக்கும் வாழ்த்துகள்.

****

சுபிட்ச முருகன் (நாவல்)

சரவணன் சந்திரன்

டிஸ்கவரி புக் பேலஸ்

பக்கங்கள்: 127

விலை: ரூ. 150

***

பின்தங்கிய படையணியிலிருந்து ஒரு அபயக்குரல்..! / நிஷாமன்சூர்

நிஷாமன்சூர்

1.

பேருண்மையை நேருக்குநேர் கண்டபிறகே
குதிரைகளிலிருந்து கீழறங்கும்
வைராக்கியப் போர்வீரர்கள் கொண்ட
தார்மீகப் படையணி ஒருபுறம்

ஒருபோதும் தீராத விரகதாப திரவம்
கொதிநிலையில் பொங்கிவழிந்து
இச்சைகளின் துளைவழிக் கரைந்துருகும்
போகமா மனுக்கூட்டம் மறுபுறம்

வந்த வழியிலேயே வழிந்து வெளியேறுவது
அல்லது
வழிகளைக் கடந்து பிரபஞ்ச ஐக்கியம் கொள்வது

சபலங்களை தற்காலிகமாக வெல்ல
இனியும் உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொள்ள இயலாதெனக் கைவிரித்து விட்டது
மனசாட்சியின் கடுங்குரல்

இச்சைகளுக்கெதிரான போரில் முழுமையாக ஈடுபட்டு வெற்றிகொள்ள இன்னுமேன் தயக்கமென முடுக்குகிறது ஆன்மாவின் தாகித்த நாவு

விரைந்து முன்னேறும் சூஃபியின்
கடைக்கண் பார்வையை யாசித்தபடி
பீற்றற் துருத்திதனை தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறேன்

*நற்தவமும் முத்தியும் சித்தம்வைத் தருள்செய்ய
நாற்செல்லுமோ அறிகிலேன்
நற்குணங்குடிகொண்ட பாதுஷாவான குரு நாதன் முஹையத்தீனே.

2.

காதலின் உன்னதம் என்பது
தம் சுயத்தை மரணிக்கச் செய்வதுதான்.
தன் விருப்பங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு
காதலியின் விருப்பத்தோடு
முற்றிலுமாக இணங்கி விடுவதுதான் என்றார் சூஃபி

மாபெரும் கப்பல் வணிகம் செய்துகொண்டும்
உயர்தர ஆடைகள் உடுத்திக் கொண்டும்
எப்படி பற்றற்ற நிலைகுறித்து பேசமுடிகிறது என்ற ஃபகீரிடம்
அகல்விளக்கு அணையாமல் நகரைச் சுற்றிவரப் பணித்து
தன்னிலை உணர்த்தினார் சூஃபி

எல்லா சுகபோகங்களையும் விட்டுவிட்டு
எப்படி மரணிப்பீர்கள் என்று வினவிய ஃபகீரிடம்
“இப்படித்தான்” என்று
துண்டை உதறித் தரையிலிட்டுப் படுத்து
அக்கணமே மரணித்தார் சூஃபி

*ஏங்காம லங்குமிங்கும் மேகாந்த மாகவுனைக்
காண்கவந்து பாங்கருள் செய் கண்ணே ரகுமானே.

3.

முறிந்து வீழும் இதயத்துள் பொதிந்திருக்கும்
நம்பிக்கைகளைப் பார்

அறிவு எச்சரிக்கிறது
“கவனம், உன்னைப் பாதுகாத்துக் கொள்”
இதயம் ஆணையிடுகிறது
“முன்னேறிச் செல்,பின்தங்கி விடாதே”

நீ செய்யவேண்டியதெல்லாம்
இதயத்தைப் பாதுகாக்க வேண்டியதையே

அறிவின் அனுமானங்கள் வெறும் பொருட்களைச் சார்ந்தவை
இதயமோ நூறாண்டுகளுக்கும் நிலைத்துநிற்கும்
அதிர்வுகளைப் பரிந்துரைக்கிறது

இருபுறமும் கூர்மையான அறிவின் வாளல்ல,
இதயத்தின் பொக்கிஷங்களிலிருந்து ஒளிரும்
சூரியனே என் இலக்கு.

*மற்றவர்கள் எத்தகையினராகினும் என்கொடிய
வல்வினை அகற்ற வசமோ
மலையிலக்கென நம்பினேன் நம்பினேன் நம்பினேன்

•••

*குணங்குடி மஸ்தான் அப்பா பாடல் வரிகள்.

‘தான்ஸ்ரீ சோமா புத்தகப் பரிசு’ இலக்கிய விருது அறிவிப்பு.- டாக்டர் மு. ராஜேந்திரன் இஆப

டாக்டர் மு. ராஜேந்திரன் இஆப எழுதிய 1801 நாவலுக்கு மலேசியாவின் உயரிய விருதான ’ ‘தான்ஸ்ரீ சோமா புத்தகப் பரிசு’ இலக்கிய விருது அறிவிப்பு.

விருது வழங்கும் நிறுவனம் : மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் தான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அறக்கட்டளை.
விருதுத் தொகை: 10000 டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 8 லட்சம்)

இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.

தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே.

சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே 1801.

***

மலையெங்கும் பூக்கும் மலர் அய்யனார் விஸ்வநாத் எழுதிய “ஓரிதழ்ப்பூ” புதினம் குறித்து – பாலகுமார் விஜயராமன்

ஒரு தாமரை மொக்கை விரிக்கும் போது, பூவின் இதழ்கள் ஒவ்வொரு அடுக்காக மலர்வது போல, ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதினம் தன்னைத் தானே அழகாக விரித்துக் கொள்கிறது, அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள “ஓரிதழ்ப்பூ” புதினம். சமீபத்தில் கோவில்கள், மாளிகைகள் போன்ற புராதானச் சின்னங்களை 360 பாகை கோணத்தில் சுற்றிச் சுழற்றிக் காட்டும் காணொளிகளைப் பார்த்திருப்போம். இப்புதினத்திலும், ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் மேலோட்டமாகச் சொல்லப்படும் ஒரு காட்சி, அதில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு கதாபாத்திரத்தின் பார்வையில் வேறு ஒரு கோணத்தில் சொல்லப்படும் போது, ஒரே நிகழ்வின் பல்வேறு அடுக்குகளை கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. இந்த யுக்தி மேம்போக்காகச் சொல்லப்பட்டிருந்தால், சொன்ன விஷயத்தையே மீண்டும் சொல்வது போல, வாசிக்கையில் அலுப்புத் தட்டி இருந்திருக்கும். ஆனால் அய்யனாரின் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையினால், ஒரே நிகழ்வின் பல படிமங்கள், உயிரோட்டமான முப்பரிமான நிகழ்வுகளாக உயிர்பெறுகின்றன.

ஓரிதழ்ப்பூ என்று கருத்தாக்கத்தை யதார்த்தம், புனைவு, மீபுனைவு என்று பல்வேறு தளங்களில் பரவவிட்டு, சுழற்சியான ஒரு புனைவுப் பின்னல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புள்ளிமான் உடலில் மனித முகம் கொண்டவன் கனவில் வரும் சித்திரம், தாலிகட்ட அருகில் அமர்ந்திருப்பவனுக்கு நரிமுகம் போன்ற தோற்றம் எழுவது, அகத்தியரும், ரமணருக்குமான உரையாடல் போன்றவற்றோடு திருவண்ணாமலை என்ற ஊரின் வரைபடமும் அதில் வாழும் மனிதர்களைப் பற்றியதுமாக, உள்ளும் வெளியுமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது.

ஓரிதழ்ப்பூ என்பது என்ன என்பதற்கான தேடலில் துவங்கும் புதினம், அதனை மாமுனிவர் கண்டுணரும் இடத்தில் முடிந்து விடுவது போலத் தோன்றினாலும், அது ரவியின் மனதில் அச்சுறுத்தும் அக்கினிப் பிழம்பாக தொடர்ந்தபடியே இருக்கிறது. மாய யதார்த்தத் தளத்தில், மாமுனிவர் உலவுவது போல தொடங்கும் சரடு, அவரைத் தேடி அவரது மனைவி வரும்போது, அவர் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மனப்பிறழ்வு என்ற இணைப்பில் சரியாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சங்கமேஸ்வரன் தொடர்பான அங்கையுடைய நினைவுகள், சங்கமேஸ்வரன் மற்றும் மலர்க்கொடி இடையேயான நிகழ்வுகள் அனைத்தும் நிகழில் கலந்த மாய யதார்த்தக் காட்சிகளே.

மலர் சங்கமேஸ்வரனை அடர்கானகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுவது எல்லாம் மீபுனைவுத் தளத்தில் சொல்லப்பட்டு, அவன் அவளைக் கூட்டிச் செல்கையில் அவள் அணிந்திருந்த நைட்டியோடு டூவீலரில் ஏறிச் செல்கிறாள் எனும் போது திடீரென அக்காட்சி மீபுனைவல்ல ஒரு யதார்த்த நிகழ்வு என்று வாசிக்கும் மனம் அலைவுறுகிறது. இத்தகைய இடறல் புதினத்தின் பல பகுதிகளில் வருகிறது. அய்யனார் இதனை பிரஞ்கையோடு விரும்பியே செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. புனைவுக்கும், யதார்த்தத்துக்குமான இந்த அலைச்சல் தான் புதினத்தை அடர்த்தியாக்கவும் செய்கிறது.

தான் கனவில் கண்ட மானின் நினைவிலேயே மூழ்கியிருக்கும் அங்கை, கையாலாகாத தனது கணவனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனியாளாய் அவனையும் வைத்துக் காப்பாற்றும் துர்கா, கானகத்துக்குள் மறைந்து போகும் மலர், தன்னிடம் வந்து தஞ்சமடைபவனை அவன் வாழ்க்கைக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, வெளியுலகில் சுதந்திரமாய்ப் பறக்க நினைக்கும் அமுதா, இந்த நான்கு பெண்களையும் மையமாகக் கொண்டதே “ஓரிதழ்ப்பூ”. இவர்களை நெருங்க அஞ்சுகிறவர்களாக, இவர்களிடம் சரணாகதி அடைந்தவர்களாக, இவர்களுக்குள் பிரபஞ்சத்தின் பேருண்மையை உணர்ந்து தெளிபவர்களாக, இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வேட்கை மிகுந்தவர்களாக, இவர்களை நினைத்து உள்ளுக்குள் மருகுபவர்களாக இப்படி இவர்களின் வாழ்வை ஒட்டியவர்களாகவே இப்புதினத்தில் வரும் ஆண்கள் இருக்கிறது.

ஆண்களின் பராக்கிரமங்கள் மற்றும் வீழ்ச்சி, அதற்குப் பின்னிருக்கும் பெண்கள் எனும் ஆண்மய புனைவுகள் மத்தியில், ” ஓரிதழ்ப்பூ”வின் ஆண்கள், பெண்களின் பகடைகளாகவே சுழற்றப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வும் தாழ்வும் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன. சொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரின் நிகழ்வாழ்வும் கூட இப்படி பெண்களை மையப்படுத்தியதாகவே இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புனைவு மற்றும் யதார்த்தக் களங்களில் பயனித்தாலும், புதினத்தின் எழுத்துநடை, மிக எளிமையானதாகவே இருக்கிறது. தீவிர வாசகர்களுக்கு இது ஒரு குறையாகவும், அதேநேரம் சுவாரஸ்மான வாசிப்புக்குத் துணையாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் முக்கோணக் கதைகளில் ”ஓரிதழ்ப்பூ” இரண்டாவது என்று அய்யனார் குறிப்பிட்டிருக்கிறார். முதல் பகுதியான “இருபது வெள்ளைக்காரர்கள்” இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் வாசிக்க வேண்டும். அடுத்து வரவிருக்கும் மூன்றாவது பகுதிக்காகவும் காத்திருக்கிறேன். எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கும், இதனை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******

ஓரிதழ்ப்பூ (நாவல்)

அய்யனார் விஸ்வநாத்

கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள்: 166

விலை: ரூ. 150

******