Category: இதழ் 159

மணல் நடிகை ( சிறுகதை ) அகமது ஃபைசல் ( இலங்கை )

ஐயா இன்டைய பேப்பர் பாத்திங்களா..?”
“இல்ல தம்பி”
அம்மா..இன்டைய பேப்பர் பாத்திங்களா..”
“இல்லப்பா”
“சார் இன்டைய பேப்பர் பாத்திங்களா..?”
“இல்லடா..ஏன் கேக்கிற?”
“என்ற தங்கச்ச காணோம் என்னு பேப்பர்ல வந்திருக்காம”
“போய்த் தேடிப்பாபாரு”
என்று அய்மனிடம் சொல்லிவிட்டுச் சென்றவர் எதிரே வந்த சிறு பாதையோரமாக நின்றிருந்த வயது முதிர்ந்து தோலும் சுருங்கிப்போன மரத்தில் சாய்ந்துகொண்டு சட்டைப் பைக்குள்ளிருந்து எடு்த்த சிகரெட்டை பற்றவைக்க தீப்பெட்டியைத் தேடினார்.
அவர் அணிந்திருந்த சட்டையில் இடது பக்கம் மாத்திரமே ஒரு பை இருக்கிறது. அதில் இருந்தது அந்த ஒரு சிகரெட்டு மட்டும்தான்.

காற்சட்டைப் பைக்குள் ஒன்றுமில்லை. அடிக்கடி இரு கைகளையும் இடுவதற்காகவே வைத்திருக்கிறார்.
சிகரெட்டை பற்றவைக்க தீப்பெட்டி கிடைக்காவிட்டாலும் அவர் அதை பெரிசுபடுத்தாமல் சிகரெட்டை ஒரு முறைக்கு பல முறை முகர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் சட்டைப் பைக்குள் வைத்துவிடுவார்.
அவர் அன்றாடம் அந்த தெருவை வலம் வரும் மனநோயாளி காத்திம்.
“டே..காத்திம்” என்று பெயரைச் சொல்லியே சிறுவர்கள் சேட்டை செய்வர்.

“மாமா இன்டைய பேப்பர் எடுத்திட்டீங்களா?”
“இல்ல மருமகன்”
கதறி அழு- என்று சொல்லும் மனதுடன் அடுத்தாற்போல் உள்ள கடைக்குத் தாவுகிறான் அய்மன்.

“தீப் பெட்டிய கொஞ்சம் கொடுங்களன்”
“ஆ..பொது எடத்தில சிகரெட்டு பிடிச்சா போலீசு பிடிக்கும் தெரியாதா நோக்கு. உனக்கும் சேத்துத்தான் இந்த சட்டம் போ..அங்கிட்டு”
என்றார் அரிசிக் கடைக்காரர்.

காத்திம் மீண்டும் சிகரெட்டை முகர்ந்து பார்த்துவிட்டு சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு நடந்தான்.

“முதலாளி..இன்டைய பேப்பர கொஞ்சம் பாத்துட்டு தாரேன் தாங்களன்…”என்று கேட்டான் அய்மன்.
“நேரமில்லப்பா. பேப்பர் வாங்கி வரயும் ஆளில்ல” என்றார் வாழைப்பழக் கடை முதலாளி.
“காசத் தாங்க முதலாளி நான் போய் வாங்கி வாரன்” என்றான் அய்மன்.
அதொன்னும் தேவல நீ போ..” என்றார் முதலாளி.

பக்கத்து தார் வீதியில் அடிக்கடி போலீசு ஜீப்பும் போய்க்கொண்டுதானிருக்கிறது. தங்கச்சி காணமல்போனது பற்றி போலீஸிடம் வாப்பா கொடுத்த புகாரை விசாரிக்கச் செல்கிறதோ ஜீப்பு.
தன் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள் என்பதால், தன் பேச்சை தானே கேட்டுக்கொண்டு நடக்கிறான் அய்மன்.
வியர்வையால் முதுகு நனைந்திருப்பது சட்டைக்கு மேலால் தெரிகிறது.

“நெருப்பு இருக்கா?”
“நான் சிகரெட்டு பத்திரல்ல அந்த ஹோட்டலுக்குப் போ..” என்றார் காத்திமிடம் மற்றொருவர்.

பகலிலே இத்தனை மின் விளக்குகள் எரியவிட்டிருக்கும் ஹோட்டல் அது.
சாப்பாடு என்ன விலை இருக்கும்?. மின் விளக்கின் சாப்பாட்டுக் காசையும் சேர்த்துத்தான் எடுப்பான் போல கடைக்காரன். எனும் தோரணையில் பசியோடும் முகத்தை வைத்துக்கொண்டு நின்ற அவரிடம் போய்
“கொஞ்சம் தீப்பெட்டி இருந்தா கொடுங்க” என்றான் காத்திம்.
“அங்க போடாப்பா ரொட்டிக் கல்லுக்கு நெருப்பு வச்சிருக்கி கண்ணுக்குத் தெரியலியா..போ..” என்றார் அவர் பசியின் கோபத்தில்.
ரொட்டிக்கல் பக்கமாகச் சென்ற காத்திம்
எதிரில், கொஞ்சம் கசங்கிக் கிடந்த பேப்பரை கூன் விழுந்தவன் போல் இடுப்பை வளைத்துக் குனிந்து எடுத்து முதலில் அதன் சுருக்கங்களை நிமிர்த்திவிட்டு வாசிக்கத் தொடங்கினான்.

காணவில்லை : ஒரு முழு தெளிவான கலர் புகைப்படத்துடன். படத்தில் உள்ள பெண்ணை கடந்த இருபதாம் திகதி முதல் காணவில்லை. வயது பதினேழு. பெயர் சுமைரா. இந்த பெண் பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ் காணும் தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத் தரவும்.
என்று மட்டும் வாசித்தார்.
அவர் தொலை பேசி இலக்கங்களை வாசிக்கவில்லை.

பேப்பரை நீளவாக்கில் மடித்து ரொட்டிக் கல் அடுப்பில் எரியும் நெருப்பில் நனைத்தார். நெருப்பில் நனைந்த பேப்பர் தீப்பற்றிக்கொண்டது. சிகரெட்டின் தலையை தீயிடம் காட்டி பற்றவைக்கும் அதே கணம் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர் மற்றெரு சிகரெட்டை அவனிடம் நீட்டினார். உடனே தன் கையில் இருந்த சிகரெட்டை சட்டைப் பைக்குள் இறக்கிவிட்டு அதை வாங்கி பற்றவைத்ததோடு பேப்பரும் தன் கடைசி உயிரை கையில் பிடித்தபடி தரையில் விழுந்து கருகி மாய்ந்தது.

தீயினால் சிவந்த ஒற்றைக் கண்ணுடனிருக்கும் சிகரெட்டை லாவகமாக வாயில் வைத்து புகையை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். போரில் வெற்றி கண்டவன் நினைப்பு காத்திமின் முகத்தில் தென்பட்டது. திடீரென பேப்பரில் பார்த்த முகம் நினைவில் வர எரிந்து கிடக்கும் சாம்பலை தனது ஆட்காட்டி விரலினால் கிளறுகிறான். அங்கும்
“அவளைக் காணவில்லை”.

மிகுந்த கவலையுடன் அவளைத் தேடுபவன் போல் எதிரில் வரும் இளம் பெண்களைக் கொஞ்சம் உற்றுப் பார்க்கத் தொடங்கிவிட்டான் காத்திம்.
அது பொதுச் சந்தை என்பதால் எண்ணிலடங்காத ஆண்களும், பெண்கள் சற்றுக்குறைவாகவும் அவனின் கண்களில் அகப்படுவதும், தப்பிச் செல்வதுமாக இருந்தனர்.
சந்தை பன்னிரெண்டு மணி வெய்யிலை அவனுடன் கூட்டிக்கொண்டு திரிகிறது.

“பேப்பர்….பேப்பர்…”
“தம்பி…தம்பி….நில்லு இன்டைய பேப்பர் ஒன்னு குடு..” என்று ஆவலுடன் காசை நீட்டினான் அய்மன்.
“இது பழைய பேப்பர்..நான் பழைய பேப்பர் வாங்குறன்..” என்றான் பேப்பர்க்காரன்.

யாரை நோவது என்று தெரியாமல்;
அது பஸ் தரிப்பிடம் என்பதால் பயணிகள் காத்திருக்கும் படிக்கட்டில் போய் சற்று அமர்ந்தவன் புறப்படத் தயார் நிலையில் நின்று ஹாரன் அடிக்கும் பஸ்ஸைப் பார்த்ததும் எழுந்து அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏறிக் கொண்டான். அவன் தங்கச்சியின் வயதில் உள்ள குமர் பெண்களை உற்று உற்று பார்த்துவிட்டு வெளியே இறங்கியவன் கண்களிரண்டிலிருந்தும் நீர் வடிந்து கொண்டிருந்தது.

வாப்பா சந்தையில் மூட்டை தூக்கும் கூலி நாட்டாமி. சந்தையில் எல்லோரும் கேவலமாகப் பேசுவதால் வேலைக்குப் போகாமல் இருப்பதை வைத்து தின்றுகொண்டு வீட்டில் இருக்கிறார்.

மூன்று நாட்களாகிவிட்டன.
உம்மா மறு பக்கம்.
போனவள் போனவளாகவே இருக்கட்டும் அவள் இனித் தேவையில்லை என்ற உள் அன்போடு பிடிவாதமாய் இருக்கிறாள். ஆனால் தனியே அழுது அழுது மூக்கினால் வடியும் சளியை எடுத்து வாசலில் நிற்கும் பூச் செடிகளின் இலைகளின் மேல் வீசியடிக்கிறாள்.

பஸ் நிலையத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் சுவர்களில் கோதுமை மாவுப் பசை பூசி ஒட்டப்பட்டிருக்கும் விளம்பர நோட்டீசுகளை வாயினால் உரித்து தின்றுகொண்டிருக்கும் ஆடுகளுக்குப் பக்கத்தில் போய் நின்று விரலிடுக்கில் இருந்த கடைசிச் சொட்டு சிகரெட்டையும் உறுஞ்சி இழுத்துவிட்டு சில வினாடிகள் வாய்க்குள் புகையை பிடித்து வைத்து வெளியே ஊதிவிட்டு ஆடுகளை ரசித்தபடி ஆடுகள் கிழிக்கும் நோட்டீசுகளில் கீழே விழுகின்ற துண்டுகளை எடுத்து நேர்த்தியாக மடித்து சுவரின் மேல் வைத்துக்கொண்டிருக்கிறான் காத்திம்.

“கண்ணு இருட்டுறாப்போல இருக்கி ஒரு ரொட்டியும் டீயும் குடுங்க” என்றான் அய்மன் அங்குள்ள சிறிய தேனீர்க் கடைக்குள் புகுந்து.
“தம்பிக்கொரு ஸ்ரோங் டீ..ஈ…போடு” என்றார் கடை நடத்துணர்.
“ஏன்டாம்பி உன்ட தங்கச்ச காணல்லியாம மூனு நாளா? யாருடா கடத்தின?.. இப்பெல்லாம் பொம்புள புள்ளயள வீட்டுல வச்சிக்கிறதென்டா.. என்ற உம்மோ..எங்க இருந்தெரியா வாரானுகள் புதுசு புதுசா ஆட்களெல்லாம். வந்து ஊருக்குள்ள திரிகிறானுகள். நம்ம புள்ளயள நாமதான்டா பாதுகாக்கனும். அந்தக் காலம் போல இல்லடா இப்ப. அதானாக்கும் எனக்கு பொறந்தது மூனும் ஆம்புளப் புள்ளயளா தந்துட்டான் அந்த இறைவன்.
என்று பேசிப் பேசியே தன் வியாபாரத்தில் கண்ணாய் இருக்கும் கடை நடத்துனரிடம் எதுவும் பதில் பேசாமல் ரொட்டியை சாப்பிட்டுவிட்டு டீயையும் குடித்துக் கொண்டு கேஸ் கவுண்டரில் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த அய்மன் மற்றுமொரு பஸ்ஸினுள் ஓடிப் போய் ஏறி அங்கிருக்கும் இளம் குமர் பெண்களின் முகத்தில் தன் தங்கையைத் தேடுகிறான்.

தங்கை மீது மிகுதியான பாசம் வைத்திருப்பவன். அவளின் இழப்பை அய்மனால் தாங்கக் கூடிய சக்தி கொஞ்சம் இல்லாதிருந்தது.

அந்த பஸ் நிலையத்தில் கொதிக்கும் சொற்கள், நசுங்கும் ஓவியங்கள் என்று; குழந்தை ஒரு கையில், பிச்சைத் தட்டு ஒரு கையில், அழுக்குத் துணி அணிந்த ஊனமுற்றவர்கள் அவதி, பார்வை அற்ற சிலரின் இரவு, திருடர்களின் தந்திரம், உடல் சூம்பிய நாயின் வேதனை வெளிப்பட்ட முகம், பஸ் ரைவர்கள் அடிக்கடி போடும் ஹார்ன் ஒலி, இடையில் சில அழகிய குமர் பெண்களின் லிப்டிக் உதடுகள், மிட்டாய்க் கடையின் நிறங்கள், ஆஸ்பத்திரியில் பல நாட்கள் தங்கியிருந்து பாய் படுக்கையுடன் ஊர் செல்ல வரும் சிலரிடமிருந்து வரும் ஆஸ்பத்திரி வாசம். எல்லாம் அய்மனின் மூளையைச் சலவை செய்துகொண்டிருந்தது.
சட்டென ஒரு திசையிலிருந்து காற்று உறுட்டி வந்து விட்ட நீரில்லாத வெறும் பிளாஸ்டிக் போத்தல் அய்மனின் கண்களையும் சில வினாடிகள் கூடவே உறுட்டிக்கொண்டு சென்றது.

ஒன்றுக்குப் பின்னால் மற்றொன்று என ஒழிந்து கொள்வதுபோன்ற வரிசையில் நின்றிருந்த பஸ்ஸிற்குப் பின்னால் அய்மனின் தங்கை மறைந்து செல்கிறாள். மூச்சுப் பிடித்து அவ்விடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தான் அவளை. அது வேறு ஒரு குமர். அவன் தங்கையிடம் இருக்கும் அதே சல்வார் காமிஸை அணிந்திருக்கிறாள்.

அழுக்குத் துணி முடிச்சொன்றை வலது தோளில் இட்டபடி அவர் வயதைக் காட்டிக் கொடுக்கும் உடல் தோல் சுருக்கம் அவர் வைத்திருந்த பித்தளைப் பீங்கானிலும் இருந்தது. தன் பாட்டிற்கு பீங்கானில் தட்டித் தட்டி பாடிக்கொண்டிருக்கும் அவர் முன்னால் சென்ற காத்திம் அவரின் பாடலுக்கு ஆடத் தொடங்கினான். இவன் எந்த சினிமா நடிகனின் ஆட்டத்தை பிரதிபலிக்கிறான் என்பதை சரியாக சொல்ல முடியாதிருக்கிறது. ஆங்கிலப் படத்தில் வரும் பிறந்த நாள் பார்ட்டிகளின் மெல்லிய போதை நடனம்போலும் இருந்தது.

சாப்பாட்டு ஹோட்டல்களில் இருந்து வரும் சமையல் வாசனை மட்டும்தான் இவர்களின் பாடலையும், ஆடலையும் கேட்டு ரசிக்க வந்து நிற்கிறது. சனக் கூட்டம் இல்லை.
நல்ல பசி கிளம்பும் நேரம் பகல் ஒன்று முப்பது. இவர்களின் பகல் உணவு செத்துவிட்டது அதன் ஆவி மட்டும் சுற்றித் திரிகிறது.
தார் வீதிகளில் இருந்து தெறிக்கும் வெய்யில் வெளிச்சம். சிறுநீர் கழிக்க இடம் தேடி அலையும் சிலரின் அணை உடையத் துடிக்கும் சிறுநீர்க் கதவு, அதனால் அடி வயிற்றில் ஏறிய பாரம். தன் தங்கையைக் காணவில்லை என்ற செய்திப் பேப்பருக்காக அலையும் அய்மன்.
அந்த சந்தைத் தொகுதியையும், பஸ் நிலையத்தையும் என்னவென்று சொல்வதற்காக மேலே ஆகாயத்தில் வட்டமிடுகிறது ஒரு பருந்து.

லொத்தர் சீட்டுக்காரன் வேற “அதிஸ்டம் இருக்கு அதிஸ்டம் இருக்கு” என்று கூவுகிறான். அந்த அதிஸ்டம் இந்த பிச்சைக்கார பாடகனுக்கும் இருக்கலாம். அதையும் ஒரு பணக்காரன்தான் தட்டிச் செல்வான்.
அடி அறுந்த மரம் போன்று ஆடி அலுத்த காத்திம் சுவரில் போய் மெதுவாக சாய்கிறான். சுவர் ஓரமாக வரும் மூத்திர வாசம் ஏதோ போதையை ஏற்றிவிட்டாற்போல் இருந்ததால் எழுத்து ஒரு திசை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சமையல் வாசனை வந்த ஹோட்டலாகத்தான் இருக்கும் இது என்று ஒரு முடிவை எடுத்துக்கொண்டு ஹோட்டல் முன்னால் நிற்கத்தொடங்கிய காத்திம்; கால் வலித்தால் தாங்கும். வயிறு வலித்தால் தாங்குமா? வயிறுக்குத்தான் கால்களை வைத்து படைக்கவில்லையே ஆண்டவன். என்ற கேள்விகளையும் பதில்களையும் தனக்குள் கேட்டவன்போல் இன்னும் நிற்கிறான். ஹோட்டல் முதலாளியின் முகத்தையும் கேஸ் கவுண்டர் மேசையில் வரிசையாக வைத்திருக்கும் டொபி நிறைத்த பிளாஸ்டிக் போத்தல்களுக்கு மேலாக கண்களை உயர்த்திப் பார்க்கிறான்.

இதை அறிந்த முதலாளி ஒரு கையை உயர்த்தி பின்னால் சமையல் அறைப்பக்கம் நோக்கி சைகை காண்பித்தார். சில நிமிடங்களின் பின்னர் ஒரு சோற்றுப் பார்சல் வெளியே காத்திமுக்காக வந்து சேர்ந்தது. கையில் கிடைத்த சோற்றுப் பார்சலை வாங்கிக்கொண்டு முதலாளியை கருணையாக ஒரு பார்வை மீண்டும் பார்த்துவிட்டு பிச்சைக்கார பாடகன் இருக்கும் அந்த இடத்தை நோக்கி நடக்கிறான் காத்திம்.
அவரின் வயது முதிர்ந்த தட்டில் ஒரு பங்கை கொடுத்துவிட்டு தன் பங்கை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்குச் செல்கிறான். அவ்வளவு கேவலமான பைத்தியகாரனல்ல அவன் படித்தவன் போல்தான் இருக்கிறான் பார்ப்பதற்கு. என்ற மன உறுதியுடன் சோற்றைப் பிசைந்து சாப்பிடுகிறான் பாடகன்.

தன் இடம் வருவதை அண்மித்ததும் காத்திமுக்கு வந்தது ஒரு பைத்தியகாரச் சிரிப்பு. “ஹி…ஹி…உ…ஊ…”
அந்த இடம்தான் கடற்கரை.
மீன்வாடி நிழல். வெய்யிலில் வறுபட்ட மணலில் அவன் கால்கள் புதைகின்றன. ஹி….ஹி….” மீண்டும் சிரிப்பு.
மீன்வாடி நிழலில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
அவ்வப்போது கை நீட்டும் கடலுக்கும் சில பருக்கையை வீசிக்கொண்டு, எதிரில் வந்து நிற்கும் நாய், காகங்களையும் கவனித்து சாப்பிட்டு முடித்தான்.

அவனை ஒரு முதலாளியாகவும் நாய், காகங்கள், மற்றும் கடல் இவைகளை ஒரு மனநோயாளியாகவும் அவன் நினைத்ததேயில்லை.

சட்டைப் பைக்குள் இருந்த சிகரெட்டை எடுத்து முதலில் முகர்ந்துகொண்டு இடது பக்கம் திரும்பினான்.
ஒரு தீப்பெட்டி. அது வெற்றுப் பெட்டி.
வலது பக்கம் எரிந்துபோன குச்சிகள். சற்றுத் தொலைவில் கிடந்த அந்த ஒரு பெட்டிதான் நம்பிக்கை ஊட்டியது. எழுந்துபோய் எடுத்தான்,
திறந்தான்.
கதவை அடைத்துக்கொண்டு கட்டிலில் உறங்கும் ஒரு காதல் சோடி போல் இரு குச்சிகள்.
ஒன்றை வெளியே எடுத்து பற்றவைத்தான்.
“சீச” என்ற சத்தமுடன் எரிந்தது குச்சி.
ஒரு குச்சி தனியறையில்.

அதில் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு ஈரமான மணல் பகுதில் போய் அமர்ந்து தொடங்குகிறான் மனதில் பதிந்துவிட்ட அவளை சிற்பமாக செதுக்க.

நெஞ்சு முட்டிய கவலையுடன் திரிந்த அய்மன் கால் போன போக்கில் போனதும் வந்து முட்டியது அந்த கடற்கரையே.

வெய்யில் இளகிய மாலை.

காத்திம் எதிர் பாராத அடி முதுகில் விழ முதுகை நெழித்துக்கொண்டு திரும்பினான்.

“என்ற தங்கச்ச நீதானாடா கடத்தி வச்சிருக்க? எங்கடா என்ற தங்கச்சி..சொல்லு சொல்லுடா நாயே.. சொல்லாம உன்ன விடமாட்டன். உன்ன பைத்தியமென்டு நெனச்சா இத்தனக்கும் நீதானாடா காரணம் நாயின்ட மவனே..”

என்று சத்தமிட்டு காத்திமின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து குலுக்கினான் அய்மன்.
தன் தங்கையை அச்சுப் பிசகாமல் அப்படியே மணலால் செதுக்கி வைத்திருப்பதைக் கண்ட பேராத்திரம்.
கொதித்தெழுந்தான். காத்திமை திரும்பவும் அடித்துக் கேட்டான். அழுதுகொண்டு பல்லைப் பல்லைக் காட்டி இழித்தான் காத்திம். தங்கை மணல் சிற்பமாக ஒருக்களித்து படுத்திருப்பதை முட்டுக் காலில் நின்று பார்த்து அழுகிறான். அவனால் அந்த சிற்பத் தங்கையை உடைக்க மனது வரவில்லை.
காத்திம் அடியை வாங்கி வாங்கி பல் இளித்துக் கொண்டே இருந்தான் பைத்தியகாரன்.

அந்த இரவு கடற்கரை மணலிலே கழிந்தது.
நிலை குலைந்த படுக்கை.

பொழுது விடிந்தாச்சு.

மீன்வாடிக்குள் இரண்டு பைத்தியகாரர்கள்.

வந்த மீனவர்களில் ஒருவன் இருவரையும் முதுகில் தட்டியெழுப்பிவிட்டான்.

“என்னடா இது கோலம்? நீ அந்த மூட தூக்கிற நாட்டாம மகன்தான..”ஏன் இங்க படுத்துக்கிற?
இன்டைய பேப்பர் செய்தி பாத்தியா?..உன்ட தங்கச்சி புத்திசாலிடா..நீதான் பைத்தியமா இருக்க…”என்றான்.

காத்திம் எழுந்து மீன்வாடியைவிட்டு வெளியேறி அவளின் மணல் சிற்பத்தைப் பார்க்கச் செல்கிறான்.

“என்ன செய்தி” இது அய்மன்.
“உன்ட தங்கச்சி சினிமாவுல நடிக்கிறாளாம்..ஹிரோயினியாம்டா போட்டோவோட செய்தி வந்திருக்கு” என்றான்.
“அந்த பேப்பர் எங்க” என்றதும் கழுவாத வாய் கொஞ்சம் நாற்றமடித்தது.
“போடா போய் வாயக் கழுவிட்டு முன்னுக்குள்ள தேயிலக் கடையில பேப்பர் இருக்கி போய்ப் பாரு..” என்றார் அவர் பொறுமையாக.

*******

தமிழ் நதி / நாகரத்தினம் கிருஷ்ணா ( பிரான்ஸ் )

நாகரத்தினம் கிருஷ்ணா

‘நீரின்றி அமையாது உலகு ‘ என்ற உண்மையை உணர்ந்து, நிலக்குடத்தை நிரப்ப வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும் உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற நதியென்னும் அற நூல். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின் இவ்வினையையே நாம் ஆறு, புனல், நதியென அழகு தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.

பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும் மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம். மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.

காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் » என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம், நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.

பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி, பண்புகளின் கண்ணாடி, கலை இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த மெசொபொத்தோமியா ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு.

இன்றைய மனிதர்கள் நீரைத்தேடி எதற்காக நாம் போக வேண்டும், அது ஆட்சியாளர்கள் உறங்கினாலும், அண்டைமாநிலமும் கைவிரித்தாலும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதவாவிட்டாலும், வானம் கருணைகாட்டும், தன் வாசல்தேடி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். ஆனால் அன்றைக்கு, தன்னைத் தேடி நீர் வராதென்ற நிலையில் தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது. அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிற மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும் வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .

பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி
மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி
தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்
கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !

காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை
தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி
தாணு தெற்பை சிறுபீளை சாடிணை
வெங்கோரை பொருதலை வெள்ளமே !

என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால் நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.

நதியைக் கண்ட தும் நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே தங்கலாயினர். ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ; அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும் என்று நம்பினான், அன்றிலிருந்து நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.

எனவேதான்,

பூவார் சோலை மயில் ஆல
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி !

என்று காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில் இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது.

உழவர் ஓதை, மதகோதை
உடைநீர் ஓதை, தண்பதங்கொள்
விழவரோதை, சிறந்தார்ப்ப
நடந்தாய், வாழி காவேரி !

காவிரிக்கரையில் காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.

உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்
பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை, இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம். அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில் செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்ட தோர் வையை பொருனைநதி-என
மேவியாறு பலஓடத்- திரு
மேனி செழித்த தமிழ்நாடு !

என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும் ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில் இந்த ஐந்து அல்லாது பல நதிகளின் பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.

தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும் நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில் « …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது. அவ்வாறே துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.

‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள
நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘

‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’
என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம், நீர் நிலம் என்பதால்.

ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும் அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.

ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று
ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை எனமாட்டார் இசைந்து.

நல்குடிப்பிறந்தோர், தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும் அடுத்தவர் கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.

தமிழே தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால் மிகையில்லை.

குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான வைகையும் இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும் பின்னிப்பிணைந்தவை. காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.

நீராடல் நீர் விளையாட்டு வேறு என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, « நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும் தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல். நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும் ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு. புதுப்புனல்விளையாட்டில் பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி, நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த கதையை

“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. « கன்னியர் ஆகி நிலவினில் ஆடிக் களித்த தும் இந்நாடே- தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே ! » என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர் விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும் வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய கவலை.

வித்யாஷங்கர் கவிதைகள்

வித்யாஷங்கர்.

••

அலைந்து திரிந்து

ஆசையாய் அம்மாவுக்கென்று

கதர் பட்டு வாங்கி வருவேன்

“இத்துப்போன

எனக்கெதுக்கு

பட்டும் பளபளப்பும்

இதக் குடுத்துட்டு

இரண்டு நூல் சேலை

வாங்கிவா

சாதி சனமில்லாமை

வீடு வீட்டுக்கு திரியுற

சண்முக ஆச்சிக்கு

ஒன்று குடுகனும்“

என்பாள் கோக்கையாய்

கூடவே

“இத்தனை வெடி வந்திருக்கே..

கம்பி மத்தாப்புக்கே

கட்டிலுக்கடியிலே ஒழியிறாள்

உம்மகன்

மூணாவது வீடு

சாலமன் வீட்ல குடுத்திரு

வளந்த பிள்ளைக வெடிக்கட்டும்

என்பாள் யோடனையாய்

காலைலே கறியெடுக்க

போகும் போது-

“நாதியத்து பொட்டப்புள்ளைய

வச்சிக்கிட்டு மருகுதே

அந்த பர்வீனு

அதுகிட்ட கொஞ்சம் பணம்குடு

கறியுஞ் சோறும் திங்கட்டும்

என்பாள் கரிசமையாய்

தெருக் கவலை நிறைந்த அம்மாவை

பண்டிகை நாளில்

ஒரு போதும் புதுப்புடவையில்

பார்த்த்தில்லை

இறந்து இத்தனை வருமாகியும்

இருள்கலையா அதிகாலையில்

“நல்ல நாளும் பொழுதுமா

சீக்கிரம் எந்திச்சு

குளிக்க்க் கூடாது”

என்று எழுப்பி தூக்கம் கலைப்பாள்

இல்லாமல் இருந்து

இப்போதும்.

-வித்யாஷங்கர்.

2.

யாரோடு

உண்ணும் போது

ஒரு கவளம் சோறு

அதிகம் உண்ணமுடிகிறதோ

அவளே/அவனே

அம்மா

-வித்யாஷங்கர்

3.

பக்கத்து ஊர் பாரதி மீது

அப்பாவுக்கு ஏராளம் பாரதி

“ராஜாஜி மாதிரி

ஜெயிச்சு காட்டணும்

பாட்டுக் காட்டுக்கிட்டு

பட்டினியா திரியக் கூடாது”

என்பார் வர்த்தகசபை நிர்வாகியாய்

“எழுத்து தரித்திரியம்

சொன்னா கேளு என்று

முதல் கவிதை வெளிவந்த

பத்திரிகையை கூரைமேல் எறிந்து

எச்சரித்தார்

அக்னிக்குஞ்சாய் பாரதி

எனக்குள் கூடுகாட்டினார்

திருமணத்தின் போதே

சொன்னேந்

எனக்கு எந்த பிள்ளை பிறந்தாலும்

பாரதி தான் என்று பெயர் வைத்தேர்

சாவின் கடைசி தருணத்தில்

‘பாரதி.. அய்யா பாரதி’

என்று பிதற்றி

இறுதி மூச்சை விட்ட்தாக

அப்பாவின் பெருமை கூறும்

ஊர் உறவு

-வித்யாஷங்கர்

5.

யாரின் நிழல்கள் நாம்..?

மௌனி கேட்டார்

பணப்பூதம்

காமப்பைசாசம் துரத்த

ஓடி ஓடி ஓடிக்களைத்து

ஓயாமல் யோசித்தும்

பதிலறியமாட்டா

பதற்றத்தில்

நான் யாரென அறிய

நாலா திசையும் திரியும்

என்னை

யாரென்று

எவர் சொல்வார்

எனக்கு ..?

••••

உங்கள் இரகசியங்களைப் பாதுகாத்தல் ( அறிமுக கவிஞர் ) / ம.இல.நடராசன்

கொலை செய்யும் கவிதைகள்

கவிதைகள் எனக்குள்
கலந்துரையாடி,
தினமும்
ஒன்றிரண்டு கவிதைகளை
என்னுள் எழுதுகின்றன.
ஆனால்,
என் கவிதைக்கான இறைவி
நான் கவிதைகள் எழுதுவதையோ
அல்லது
கவிதைகள் சேர்ந்து என்னுள்

எழுதுவதையோ விரும்புவதில்லை என்பதால்,
என் கவிதைகள் அனைத்தையும்
நான் கருணையே இன்றி
கொலை செய்து விடுகிறேன்
இல்லை
கவிதைகள் அனைத்தும்
சேர்ந்து என்னைக்
கொன்று விடுகின்றன.

•••
வேலை முடியும் நேரம்
அறியவோ
இல்லை
இரயிலைப் பிடிப்பதற்காகவோ
இல்லை
பேருந்து பயணத்திலோ
இல்லை
டீ/ காபி குடிக்க
செல்வதற்காகவோ
இல்லை
வெறுமனே தெரிந்து
கொள்ளவோ,
வயது முதிர்ந்த தொழிலாளியோ,
எதிர்வருபவரோ,
அருகில் உள்ளவரோ
“நேரம் என்ன?”
என்று கேட்கும்போது,
கடிகாரம் பார்த்து
நேரத்தைக் கூறியவுடன்
அவர்கள் புன்னகைத்து
செல்லும் கணம்
சாலச்சுகம்.
•••
ரொட்டித் துண்டு

குப்பை மேட்டில்,

கோயில் வாயிலில்,

வீட்டுக் கொல்லையில்,

எங்கோ ஒரு இடத்தில்
கார், கூதிர்,
முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில்
காலங்கள் அனைத்திலும்
உணவு, உடை, உறைவிடம்
ஏதும் இல்லாமல்
கிடைத்ததை உண்டு
வாழும்,
எந்நேரமும் வெறித்துப்
பார்க்கும்,
பசியோடு இருக்கும்,
சத்தம் போடும், சண்டையிடும்,

அழுக்கான தெரு நாய்க்கு,
தேநீர் கடையில் அவ்வப்போது

கிடைக்கும்,
அதே ஒரேயொரு

ஒரேயொரு
ரொட்டித் துண்டாக
கிடைக்கலாம்
உன் முத்தம்.

•••

உங்கள் உள் மனதில்
நீண்ட காலமாக இருக்கும்
யாரிடமும் சொல்லாத
தனிப்பட்ட செய்திகளை,
அழிந்து விட்ட காதலை,
சிறுபிள்ளைத்தனமான குணங்களை,
குடும்பச் சச்சரவுகளை,
தனியுரிமை கொள்கைகளை,
உணர்ச்சிப் பெருக்கிலோ
இல்லை
ஏதோ சஞ்சலத்திலோ
இல்லை
நம்பிக்கையிலோ
மறந்தும்
என்னிடம் கூறிவிடாதீர்கள்.
அந்த இரகசியங்களை
வெளியே கசியாமல்
பாதுகாப்பது,
வரப்போகும் ஊழிக்காலத்தை
அறிந்தும் உங்களிடம்
சொல்ல முடியாமல்
காப்பதை விடவும்
கடினமாக இருக்கிறது.

•••

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

ரவிசுப்பிரமணியன்.

பெருங்கவலையும் சமாதானமும்

நீண்ட பயணத்தின்
இடை நிறுத்தத்தில்
தேநீர்க் கடையிலிருந்து
புறப்பட இருந்த பேருந்துக்கு அவசரமாய்த் திரும்பிய இளைஞன்
இத்தனை தண்ணீர் கலந்த ஒரு தேநீருக்கு
இருபது ரூபாய் வாங்கிவிட்டான்,
சூடாக இல்லை, கொஞ்சமாய் இருந்தது,
பேப்பர் கப்பில் தரவில்லையென்றல்லாம்
வெவ்வேறு விதமாய்
திரும்ப திரும்ப புலம்பிக்கொண்டே வந்தான்.
பக்கத்தில் கண்மூடி சாய்ந்திருந்த சக பயணி விழித்து
இந்த சின்ன வயதில்
உங்களுக்கு இப்படி ஒரு துயரமா எனக்கேட்டுவிட்டு
கண்களை மூடிக்கொண்டான்.

***

லபித்தல்

செல்லமாய் ஒரு நாய்குட்டி
வளர்க்க நினைக்கிறீர்கள்
வாசலுக்கு வரும் வாசனையுணர்ந்து
வாலசைத்து ஓடி வர வேண்டுமென ஆசை
நடக்கும்போதெல்லாம்
பின்னாலே வரவேண்டுமென
படுத்திருக்கும்போது காலடியில்
கிடக்கவேண்டுமென

விருந்தினர்களிடம்
அதன் இனத்தைச் சொல்லிப் பெருமைபடவேண்டுமென
இப்படி ……
மகனும் மகளும் விரும்பாத
அடுக்கக வீடு அனுமதிக்காத நாய்
சுவரில் ஒவியமாய் மாட்டப்பட்டிருப்பதை
அவ்வப்போது பார்த்துக்கொள்கிறீர்கள்
சில சமயம்
அது குரைக்கும் சப்தம்
உங்களுக்கு மட்டும் கேட்கிறது.

***

கவிழ்ந்துகிடக்கும் தானியக்குதிர்கள்

வயிற்றிலடித்துவிட்டது புயல்

எல்லாம் சரிந்த பாரந்தாளாது
அரற்றும் குரல்கள்

நிலமெங்கும் திரிந்த
ஆவினங்களும் மறிகளும்
புதைக்கப்பட்டுவிட்டன

பழக்க தோஷத்தில்
தென்னைகளை அண்ணாந்தவன்
வீழ்ந்துகிடப்பதை கணத்தில் உணர்ந்து
செய்வதறியாது பாழில் வெறித்தபடி
ஈரத்தாலான உள்ளங்கால் கொப்புளங்களுடன்
மழையில் நிற்கிறான்

தண்ணீருக்கும் அரிசிக்கும்
பிஸ்கெட்டுகளுக்கும் மெழுகுவர்த்திகளுக்குமாக
நீள்கின்றன நெல்லும் உளுந்தும் தெளித்த கரங்கள்

நிவாரணமுகாமின்
மெழுகுவர்த்திச் சுடர் விழும் சுவரில்
கைகளின் சைகைகளால்
மருதநிலத்தின் நிழல் சித்திரங்கள் காட்டும்
சிறுவனின் நிலத்தில் ஒரு மரமும் இல்லை

ஒடுகள் பறந்த தன் வீட்டு வாசலில் தொங்கிய
நெற்கதிர் பிடியின் முன் எடுத்தத் தற்படத்தை
மீன்னூட்டம் கரைந்துகொண்டிருக்கும்
அலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கிறாள்
சிறுமியொருத்தி

கொடுத்தே பழகிய அன்பின் பெருநிலத்தின்
நிர்மூலத்தைக் காணச் சகியாமல்
நடவுப்பாடல்கள் கேட்ட மண்ணில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது ஒப்பாரி.
***
நிறையும் இரவு

உதிரப்போக்கு நாளில்
கேட்க யாருமில்லா இரவில்
மரங்களடர்ந்த கொல்லைப்புறத்திண்ணையில் அமர்ந்து
சன்ன வலி மறக்க கிறங்கும் குரலில்
கஜலைப் பாடுகிறாள் தங்கை ஹஸீனா
ஆழ்விழிகள் மூடிய லயிப்பின் தன் மறத்தலில்
துலங்கி மிளிர்கிறது கவிதை
திரும்பத் திரும்ப அழைக்கும் வரிகள்
கடந்ததில் கிடந்து விம்மும்
நிறைவுறா மனசு திறக்கிறது அசைவுகளில்
துவண்டிருக்கும் அவள் தோளணைத்து
இதம் செய்கிறது பாடலின் கருணை
திகைத்துப் பார்க்கிறது
கொட்டில்ப் பசு
பஞ்சாரத்தில் அடைந்த கோழிகளும்
சப்தமின்றி கிடக்கின்றன
எப்போதோ வந்தமர்ந்து
பின் வராமலே போன பறவையின் நினைப்பில்
மெல்ல அசைகிறதொரு தருவின் கிளை
பாடப்பாடச் சுரக்கிறது கனிவு
அநித்திய வாழ்வின்
தரிசனக் கணங்கள்

உருவின்றி நிறையும் அற்புதத்திற்காய்
காற்று வீசியிறைக்கிறது பூக்களை
அந்தக் கருங்கல் பதித்த தளமெங்கும்.

••••••••

இணையாக் கோடுகள்- யாழ்க்கோ லெனின் ,நெய்வேலி.

” இனியா… இனியா… எங்க இருக்க?”

“என்னங்க… என்ன ஆச்சு? … ஏன் இப்படி கத்துறீங்க…?”

” ஆமாம் , நான் கத்துறேன் தான்… ! எவ்வளவு நேரமா உனக்கு கால் பண்ணிட்டிருக்கேன்… வெயிட்டிங் லயே இருக்க… நடுவுல கொஞ்சம் என்னன்னு என்ட கேட்டுட்டு, பேசக் கூடாதா…?”

” சாரிங்க… !கொஞ்சம் முக்கியமான கால்… பாஸ்ட பேசிட்டிருந்தேங்க…!”

“சரி … சரி… அத விடு , லோன் கட்ட இன்னைக்கி தான் கடைசி தேதி… அதனால தான் நீ வீட்ல இருந்தன்னா, பணத்தை உன்ன எடுத்துட்டு வர சொல்லலாம்னு ஃபோன் பண்ணினேன்…”

” இருங்க , பணத்தை இதோ எடுத்திட்டு வர்றேன்…!”

” சரி, சீக்கிரமா கொண்டா… ஆமாம்,ஆதவன் எங்கே?”

” இங்க தான் எங்கயாவது விளையாடிட்டிருப்பான்…!”

அவள் பணத்தை கொண்டு வந்து கொடுக்க,” சரி அவன் வந்ததும், எனக்கு பேச சொல்லு … ”

தன் பைக்கில் வேகமாகக் கிளம்பினான் வங்கிக்கு.

வீட்டில் – மறுபடியும் இனியா செல்பேசியில் யாருடனோ கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

” என்னவாம் உன் புருஷனுக்கு…? எதுக்கு இப்ப வந்துட்டு போறான்…?”

” அந்தாளு கிடக்கிறார்…. !இந்த நேரத்தில ஏன் அவர ஞாபகப் படுத்துறீங்க…?!வேற ஏதாவது பேசுங்க…”

” ஓ.கே டியர்… ! சாரி… நாம நாளைக்கு எங்கயாவது வெளிய போகலாமா?”

” முடியாதுப்பா… ஆதவனுக்கு எக்ஸாம்பா… நான் இல்லைனா ரொம்ப அடம் பிடிப்பான், படிக்க மாட்டான்…”

” சும்மா, ஏதாவது சொல்லாத இனியா… நாளைக்கு நீ வர்ற… நாம கோவளம் போறோம்…!”

” இல்ல , ராபர்ட்…” அவள் சொல்லி முடிப்பதற்குள் எதிர்முனை கட் செய்தது.

மறுநாள் காலை 7 மணி –

” டேய் ஆதவா… !எழுந்திரு, எக்ஸாமுக்கு நேரமாச்சு… சீக்கிரமா கிளம்பு…”

” என்னம்மா…. நீ இன்னைக்கி லீவு போட்டுட்டு என் கூட இருக்கேன்னு சொன்ன… எங்க அதுக்குள்ள கிளம்புற…?”

” சாரி செல்லம்…! இன்னைக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங்பா… நான் போயே ஆகணும்பா… ”

” அடப்போம்மா… உனக்கு என்னைவிட ஆபீஸ்தான் முக்கியம் …!”

அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, ” நல்லா எக்ஸாம் எழுதிட்டு வருவியான், அம்மா உன்ன சாயங்காலம் பார்க்குக்கு கூட்டி போவனாம்…. ஓ.கே….”

வேகமாகக் கிளம்பினாள் ஸ்கூட்டியில், வழியில் ஜாகிங் முடித்துவிட்டு வந்த தன் கணவனிடம், ” முகில், டிபன் எடுத்து வச்சிருக்கேன், ஆதவன கொண்டு போய் விட்டுடுங்க… ப்ளீஸ்…”

” இன்னைக்கு என்ன சீக்கிரமே கிளம்பிட்ட…?!”

” ஆடிட்டிங் முகில்… அதான்…”

” சரி… கிளம்பு… பாத்து பத்திரமா போமா…”

சிறிது நேரத்தில் அலைபேசி ஒலிக்க, எதிர்முனையில் , ” முகில், நான் ராகவன் பேசுறேன்… எங்க இருக்கீங்க… ஒரு சின்ன உதவி…”

” வீட்டில இப்ப தான் கிளம்பிட்டிருக்கேன் …சொல்லுங்க சார்… ”

” என் கார் கொஞ்சம் ரிப்பேர்… என்ன தக்ஷின் சித்ராவில் கொஞ்சம் விட முடியுமா..?”

” கண்டிப்பா சார்… இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வர்றேன் சார்… ரெடியா இருங்க… ”

முகிலன் தன் மகனை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு , ராகவன் வீட்டிற்கு விரைந்தான். இவனுக்காக காத்திருந்த ராகவன் காரில் ஏற கிளம்பினர் இருவரும் . இளையராஜா இன்னிசை பின்னணியில் பழைய நினைவுகளை அசைப் போட்டனர். வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தவன் திடீரென ப்ரேக்கை அழுத்த , ராகவனின் அழகான பளிங்கு நெற்றியில் ஒரு ரத்தக் கட்டு சட்டென்று உதயமானது.

அவர் நெற்றியை தேய்த்துக் கொண்டே, ” ஏன் முகில்…?என்ன ஆச்சு…? என் நெத்திய பார்… !”

அவன் கன்னங்களை கண்ணீர் நனைத்திருந்தது. அவர் புரியாமல் விழிக்க , எதிரே நின்றுகொண்டிருந்த காரைக் காட்டினான். அங்கே, இனியா யாருடனோ நெருக்கமாக இருந்தாள்.

” முகில், அது இனியா தானே…! என்னப்பா இதெல்லாம்…?” அவர் இதயமும் சற்று நின்று துடித்தது.

“…………” மெளனம் மட்டுமே குடிகொண்டிருந்தது காரில் சற்று நேரம் .

” சொல்றனேன்னு கோவிச்சுக்காதே முகில்… !இது எவராலயும் தாங்க முடியாதது தான்… பக்குவமா பேசிப் பாருபா… உன் மகனப் பத்தியும் நினைச்சுப் பாரு… எதுவும் அவசரப்பட்டுடாதே…!”

அவன் கண்ணீர் மட்டுமே பதிலாய் கிடைக்க, ” சரி … நான் ஆட்டோல போயிக்கறேன், நீ பாத்து பள்ளிக்கு போ முகில்… பாத்து பக்குவமா நடத்துக்க…! ” கண்ணீருடன் விடைபெற்றார் ராகவன்.

பள்ளிக்கு போக மனமில்லாமல் , வீடு வந்து சேர்ந்தான். அவன் கண்ட அந்த காட்சியே ,அவன் மனதை கோடாரி கொண்டு சுக்குநூறாய் வெட்டிக் கொண்டிருந்தது. தற்கொலை எண்ணம் வந்து போக, ” நான் ஏன் சாக வேண்டும்…? தப்பு செய்த அவளே வாழும் போது, நான் ஏன் சாக வேண்டும்…? என் மகன் என்னாவான்…?” இப்படி எண்ணங்கள் அவன் மனதில் கூறாவளியாய் தாக்கியதில், ஆதவன் வீட்டிற்கு வந்தது கூட தெரியாமல் அசைவற்று கிடந்தான் படுக்கையில்.

” அப்பா…” என்றவாறு ஆதவன் அவன் மேல் கைவைத்ததும் தான் நினைவு வந்தவனாய், ” ஆதவா…!” கதறி அழுதான் அவனைக் கட்டிப்பிடித்தபடி. ஏதும் விளங்காமல் ஐந்து வயது ஆதவனும் அழுதான்.

” அப்பா… அப்பா … என்னப்பா ஆச்சு… ஏன் அழறீங்க…?”

” ஒண்ணுமில்லே கண்ணு….! நீ வா ,வந்து சாப்பிடு….” ஒருவகையாய் சமாளித்தான் முகிலன்.

இரவு நெடுநேரம் கழித்தே வந்து சேர்ந்தாள் இனியா.

” ஏன் இவ்வளவு லேட் இனியா…?” கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டான் முகிலன்.

” அதான் காலைலேயே சொன்னேனே … ஆடிட்டிங்னு …! ”

” அப்படியா… !இந்தா இந்த லெட்டர உங்க மேனஜர்ட கொடுக்கச் சொல்லி ஆடிட்டர் தொடுத்துட்டுப் போனார்…!”

” எப்ப… எப்ப வந்தார்…?” சற்றே பதட்டமானாள் இனியா.

” அதுவா, மதியம் நீ ஃபோன் பண்ணி ஆபீஸ்ல ஆடிட்டர் கூட லஞ்ச் சாப்பிடறோம்னு சொன்னீல்ல அப்பதான்…. !” சற்றே முரைத்தான். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் விட்டான் ஒரு அறை. அவள் கன்னம் சிவந்தேவிட்டது. கண்கள் சொருக, மயங்கி தப்பித்தாள் அப்போது .

சிறிது நேரங்கழித்து எழுந்தவள், ” அப்படின்னா என்ன சந்தேகப்படுறீங்களா முகில்…?”

” சந்தேகமே இல்லை … நீ தடம் மாறிட்டனு எனக்கு நல்லாவே தெரியுது…!”

” என்ன முகில் , என் மேல அபாண்டமா குறை சொல்றீங்க…? இது ஆண்டவனுக்கே அடுக்காது…! புரிஞ்சுக்குங்க…”

” அதெல்லாம் எனக்குத் தெரியும்டி…. நடிக்காத…. ஆடிட்டிங்குனு பொய் சொல்லிட்டு ஈசிஆர் ரோட்ல ஒருத்தன் கூட கார்ல அவ்வளவு நெருக்கமா உக்காந்திருந்தியே அதுக்கு என்னடி அர்த்தம்…?”

” அவர் என் கூட வேலை பார்க்கிறவர்… ரொம்ப நல்லவர்… அவர தப்பா நினைக்காதீங்க முகில்…!”

” அவர் ரொம்ப நல்லவர்னா, ஏன்டி மணிக்கணக்கில உன்கிட்ட ஃபோன் பேசிருக்கார்….?”

” அப்படின்னா , என்ன நம்பாம என் மொபைல் நம்பர டிராக் பண்ணிருக்கீங்களா…? உங்களுக்கே அசிங்கமாயில்ல…?”

” நான் எதுக்குடி அசிங்கப்படணும், நீ பண்ற துரோகத்திற்கு…?”

” அப்ப என்ன நம்ப மாட்ட… அப்படித் தான…?” சற்றே உக்கிரமானாள்.

” ஆமாடி… !”

” ஆமாயா… நான் என் கூட வேலை பார்க்கிற ராபர்ட்ட தான் விரும்பறேன்…! உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க போ… ”

அவளிடம் இந்த அனல் வார்த்தைகளைக் கேட்டதும் அதிர்ந்து விட்டான். சத்தம் கேட்டு தூக்கம் தெளிந்த ஆதவன் அங்கே வர, ” ஏன்டி, இந்த பிஞ்சு முகத்த பார்த்தும் கூட உனக்கு புத்தி வரலயா?”

” ஆமா யா… உன் கூட வாழ்ந்ததுக்கு ஒரே காரணம் இவன் மட்டும்தான். காதலிச்ச, கல்யாணம் பண்ணின இருந்த பணம், நகை எல்லாத்தையும் புதுசு புதுசா பிஸினஸ் பண்றேன்னு விட்டுத் தொலைச்சே… இப்ப , வெறும் பத்தாயிரம் ரூபா சம்பளத்துக்கு ஒரு பள்ளிக்கூடத்துல பி.டி வாத்தியாரா போற. இதுக்கா உன்ன நம்பி வந்தேன். உனக்கு இருந்த பல லட்ச ரூபாய் சொத்துக்காக தான் உன் கூட ஓடி வந்தேன். ஆனா நீ தரித்திரம் பிடிச்ச மாதிரி உங்கப்பாவ எதிர்த்திட்டு எல்லாத்தையும் விட்டுட்டு வெளிய வந்து புட்ட. உன்ன மாதிரி வெறும் பய கூட இது வரைக்கும் வாழ்ந்ததைய அவமானமா நினைக்கிறேன். நீலாம் ஆம்பளைனு வெளிய சொல்லிக்காத… புரியுதா…!”

நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டான் முகிலன். அருகே அழுதபடி ஆதவன். இது எதையும் கண்டுகொள்ளாமல் இனியா , ” ராபர்ட், உடனே கிளம்பிவா… அந்த ஆளுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு.. ரொம்ப கேள்வி கேட்கிறான்…. என்ன எங்கயாவது கூட்டிட்டு போ…!”

அவள் பெட்டியில் தன் பொருட்களை எடுத்து வைக்க, ” அம்மா… எங்கள விட்டுட்டு எங்கம்மா போறே…?! அப்பா பாவம்மா… நெஞ்சுவலியால துடிக்கிறார்மா … ! ” கையை பிடித்து இழுத்தான்.

” போடா… நீயாச்சு உங்கப்பனாச்சு… அந்தாளு ஒரு வேஸ்ட்… ஒழுங்க என்கூட வந்திடு… இல்லைனா இங்கயே கிடந்து வீணாயிடுவடா… “கத்திக் கொண்டே அவனை இழுத்துச் சென்றாள். ஆதவன் வர மறுக்கவே ,அவனை அடித்தாள்.

” என் மேல உள்ள கோவத்த ஏன்டி புள்ள மேல காட்டுற…? ஊர் உலகத்திலாம் பெண்கள் எப்படி இருக்காங்க, தன் குடும்பத்துக்காக எவ்வளவோ தியாகம் பண்றாங்க…. ஆனா நீ…?, சாரி, நீ தான் பொம்பளயே இல்லயே…! உன்ன போய் அந்த புனிதமான பெண்களோட கம்பேர் பண்றதே பெரிய தப்புடி…!”

” ஆமாயா , அவங்கலாம் என்ன பொறுத்தவர பிழைக்கத் தெரியாதவங்கயா… ”

” இப்பயும் சொல்றேன், இந்த பச்சப்புள்ளக்காவது எல்லாத்தையும் விட்டுபுட்டு வீட்ல ஒழுங்கா இருடி… உன்ன மன்னிச்சிடறேன்டி…. நாலு பேருக்கு தெரிஞ்சா காரி துப்புவாங்க… நல்லா யோசி இனியா…”

” நான் நல்லா யோசிச்சிட்டேன்யா … எனக்கு என் வாழ்க்கை சந்தோசம் தான் முக்கியம். அத ராபர்ட்டால மட்டும் தான் கொடுக்க முடியும்… !நான் கிளம்புறேன்… ” அவள் படிதாண்டி அங்கே காத்திருந்த கருப்பு காரில் ஏறினாள். குழந்தை கதறி அழுவதைக் கூட கண்டுகொள்ளவில்லை. பறந்தே போய் விட்டாள்.

“இப்படி தான்டா ஆதவா, உன் அம்மா உங்களலாம் அம்போன்னு விட்டுட்டு எங்கயோ ஓடி போனா இருபது வருசத்துக்கு முன்னாடி… !அவ நல்லாவே இருக்க மாட்டாடா…. என் மனசு இன்னும் ஆறவேயில்லைடா… ” பொங்கிய கண்ணீரை முந்தானையில் அடக்கினார் பாட்டி மயில்தோகை.

” அத்தை, சும்மா இருங்க… !அவன் கிட்ட ஏன் இதெல்லாம் சொல்றீங்க…. போனவ போயிட்டா…. அவளப் பத்திப் பேசி என்னாவப் போகுது…?!”

” மாப்ள… தீரா மனவேதனை எனக்கு இருக்குங்க… ஒரே பொண்ணுன்னு செல்லமா வளத்தோம்.ஆனா அவ இப்படி பண்ணுவான்னு நாங்க கொஞ்சங்கூட எதிர்பார்க்கவே இல்ல… உங்க நல்ல மனச புரிஞ்சிக்காம தன் சந்தோசம் மட்டுமே முக்கியம்னு போயிட்டாளே.அதத்தான் தாங்கிக்க முடியல…” மீண்டும் கண்ணீர் வெள்ளம்.

” விடுங்க அத்தை…. கவலைப்பட்டு கவலைப்பட்டு கண்ணீர் வத்தி போய் பட்ட மரமாயிட்டேன்… !அவ என்னை விரும்பிய காலம் மட்டுமே என் மனசுல பசுமையா இன்னும் இருக்கு…. மத்த நினைவுகள எல்லாம் அழிச்சிட்டேன்….! என்ன பொறுத்தவரை என்ன உயிரா நேசிச்ச என் தேவதை 20 வருடங்களுக்கு முன்னயே செத்துட்டா….!இனிமே இதப் பத்தி பேசறத நான் விரும்பல…” வெளியே கிளம்பிவிட்டான் .

” அப்பாவ பாத்தா ரொம்ப பாவமா இருக்கு பாட்டி….”

” ஆமாம்டா… அவ போனபிறகு உனக்காக மட்டுமே வாழுறார்… நீ தான் அவர் உயிர் … அவர நல்லா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு… புரியுதா?!”

“சரி பாட்டி… அது என் கடமை…”

அப்போது வந்தான் நண்பன் செழியன்.

” ஆதவா, இன்னும் கிளம்பலயாடா …?!”

” எங்கடா …?”

” அடப்பாவி மறந்துட்டியா… நீ தானடா சொன்ன இன்னைக்கு “முல்லை ஆதரவற்றோர் இல்ல”த்துக்கு மெடிக்கல் கேம்புக்கு போகணும்னு…”

” ஆமா மச்சி…. !பாட்டிகிட்ட பேசிட்டிருந்ததிலே மறந்தே போயிட்டேன்… இரு பத்து நிமிடத்தில வந்திடறேன்…”

” என்ன செழியன்… இப்பலாம் இந்தப் பக்கமே வர மாட்ற… ?”

” அப்படில்லாம் ஒண்ணுமில்லே பாட்டி…. ரெட் கிராஸ் சொசைட்டில கொஞ்ச பிஸியாயிட்டேன்… அதான்…!”

” என்னமோபா… ஆதவனும் நீயும் ,இல்லாதவங்க பலருக்கு நிறையா உதவிகள பண்றிங்கன்னு கேள்விப் பட்டேன்… ரொம்ப பெருமையா இருக்கு…” நெகிழ்ந்தார் பாட்டி.

” ஏதோ, எங்களால முடிஞ்சது … ”

” செழியன், வா கிளம்புவோம்… டாக்டர்ஸ்லாம் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க….”

இருவரும் வந்து சேர்ந்தனர் கேம்புக்கு.

” என்ன ஆதவா…. நீயே தாமதமா வந்த எப்படி…? உன்ன ரொம்ப நேரமா கேட்டிட்டிருக்கார் டாக்டர் பொழிலன்…” அவனை துரிதப்படுத்தினார் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் முத்துரத்தினம் .

” இதோ, போய் பார்க்கிறேன் சார்… !” கிட்டத்தட்ட ஓடினான்.

” வாங்க ஆதவன்… எப்படி இருக்கீங்க…? பாத்தே ரொம்ப நாளாவுது…”

” நல்லா இருக்கேன் சார்… நீங்க …? இன்னைக்கு எத்தன பேர கண் அறுவை சிகிச்சைக்கு தயார் பண்ணிருக்கீங்கனு சொன்னீங்கன்னா,அதுக்கு ஏத்த மாதிரி நான் வேன் ரெடிப் பண்ணிடறேன் சார். ”

” கண்டிப்பா… !ஒரு முக்கியமான விஷயம் அதுக்காகத் தான் உங்கள தேடினேன்…”

” என்ன சார்… ?சொல்லுங்க…”

” இந்த இல்லத்துல இருக்கிற ஒரு அம்மாவுக்கு கண்ணுல பெரிய பாதிப்பு இருக்குது….!”

” என்ன பாதிப்புனு தெரிஞ்சிக்கலாமா சார்…?”

” அவங்க வலது கண் வீங்கி இருக்கு, பார்வை ரொம்ப குறைவா தெரியுதுன்னு சொல்றாங்க… கண்ணுக்குள்ள புற்றுநோய்க்கட்டி இருக்க வாய்ப்பிருக்கு ஆதவன்….!அதனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அவங்கள மருத்துவமனைக்கு கூட்டிப் போகணும்…!”

” சரிங்க சார்… இதோ சீக்கிரமா வேன் ரெடி பண்ணிடறேன் … ”

வேனுக்கு ஏற்பாடு செய்து விட்டு , நோயாளியை அழைக்கச் சென்றான் ஆதவன். கண்களில் வீக்கத்துடன் முகம் சுரந்தபடி அங்கே பரிதாபமாக உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தவன் , “ஐயோ… அம்மா… !” அழக்கூட முடியாமல் நெஞ்சடைத்து விம்மினான். அவன் தன் அப்பாவின் வேதனையை நினைக்க, அம்மா அவன் எண்ணத்தில் இருந்து தூரமாய்ப் போனாள். ” இப்போது, எதிரே இருப்பது ஒரு நோயாளி… அவ்வளவு தான்… ” அவன் மனம் சொல்ல, ” நீங்க தான் இனியாங்களாமா… உங்கள டாக்டர் கூட்டி வரச் சொன்னார்… வாங்கம்மா…” அழைத்துச் சென்றான்.

மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும் –

” ஆதவன்… நான் சந்தேகப்பட்டது சரிதான், இது ‘மெலனோமா ‘ னு சொல்லக் கூடிய ஒரு வகையான புற்றுநோய். பொதுவா இது தோல்ல வரக்கூடியது… அரிதா கண்ணுக்குள்ளும் வரும். கொஞ்சம் ஆபத்தானதும் கூட…! ”

” இதுக்கு என்ன தான் சார் தீர்வு…?” குரல் கம்மியது.

“ஒரே தீர்வு வலது கண்ணையே மொத்தமாய் எடுத்துவிட்டு, கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி பண்றது தான்…”

” உயிருக்கு ஏதும் ஆபத்தில்லையே…?!”

” முயற்சி செஞ்சு பார்ப்போம்… அப்புறம் இறையருள் தான்…!”

” அப்படின்னா , சீக்கிரமா ஆபரேஷன் பண்ணிடுங்க டாக்டர்… ”

” இது மேஜர் ஆபரேஷன் ஆதவன்…. யாராவது உறவினர்கள் கையெழுத்து போடணுமே… !”

” கொடுங்க டாக்டர்… நானே கையெழுத்து போடுறேன்… !”

” நீங்க எப்படி…?” யோசித்தார் டாக்டர்.

” இவங்களும் எனக்கு அம்மா மாதிரி தானே….! எப்படியாவது அவங்கள காப்பாத்துங்க டாக்டர்…! ”

புத்தி கோபித்தாலும், தாய்ப் பாசம் வென்று விடுகிறது சில நேரங்களில்.மறுநாளே கண் அறுவை சிகிச்சை முடிந்தது. புற்றுநோய் மருந்துகள் செலுத்தத் தொடங்கினர். ஆதவன் அருகிலேயே இருந்து இனியாவை நன்றாக கவனித்துக் கொண்டான்.

” என்ன இனியாம்மா…. எப்படி இருக்கீங்க… ? ”

” நல்லா இருக்கேன் டாக்டர்… ரொம்ப நன்றி டாக்டர்… ”

“இந்த அளவுக்கு உங்க உடல் நிலையில் முன்னேற்றம் வந்ததுக்கு முக்கிய காரணமே ஆதவன் தான்மா… நன்றி சொல்ல வேண்டியது அவருக்கு தான்…”

“நன்றி தம்பி… ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்னு நினைக்கிறேன் தம்பி நமக்குள்ள…!”

” இந்த ஜென்மத்திலயே தான் பந்தம் இருக்கே… !” மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.

” சரிம்மா… நீங்க ஓய்வெடுங்க… நான் காலைல வர்றேன்…”

காலை உணவுடன் வந்தான். கூடவே பாட்டி.

” எதுக்குடா என்னை இங்க கூட்டிட்டு வந்த…?”

” இரு பாட்டி, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்… ” சொல்லிக் கொண்டிருந்தவன் இனியாவைக் காட்டினான். மூச்சடைத்தது பாட்டிக்கு. ” யாருடா அது…? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு…”

” கிட்டதான் போய் பாறேன் பாட்டி…!”

அருகில் சென்ற பாட்டியை இனங்கண்டுகொண்ட இனியா, ” அம்மா, என்ன மன்னிச்சிடும்மா…!” கதறினாள்.

” டேய், இந்த ஓடுகாலிய பாக்கவா என்ன கூட்டி வந்த…?! ச்சீ …இவள பாத்தா இந்த கட்டைக்கு மோட்சமே கிடைக்காதுடா… ” கோபத்தில் காரி உமிழ்ந்து விட்டு வேகமாய் வெளியேறிவிட்டார்.

ஆதவன், தான் யாரென்பதையும் அப்பா பாட்டியைப் பற்றியும் சொல்லி முடிக்க அழுது துடித்தாள்.

” ஒரு மோசக்காரன நம்பி இந்த நல்ல வாழ்க்கையையே தொலைச்சிட்டேனே…” தேம்பித் தேம்பி அழுதாள்.

“அழாதீங்க….”

” நீ என் மகன்றதனாலத் தானா, உன்ன பாக்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு எனக்குள்ள…?”

” அப்பா … எப்படி இருக்கார்…?”

” நடைபிணமா இருக்கார்…. ரெண்டு முறை மாரடைப்பு வந்துடுச்சு…!”

” என்னப்பா சொல்ற…. ?நான் அவர உடனே பார்க்கணுமே… ”

” வேணாம்மா… உங்கள பார்க்க விரும்ப மாட்டார்…. ”

” எங்கயாவது ஒரு மூலைல நின்னு பாத்திடறேன்பா… ப்ளீஸ்…” கெஞ்சினாள்.

அவள் அழுது கெஞ்ச, மனம் கேட்காமல் அழைத்துச் சென்றான் .

முகிலன் வீடு –

சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி தினமணி படித்துக் கொண்டிருந்தார். தூரத்தில் நின்று ,தன் ஒற்றைக் கண் பார்வை கொண்டு அவனை தரிசித்தாள். “இந்த மேன்மைமிகு ஆத்மாவையா விட்டு , அந்த கேடுகெட்டவனை நம்பிப் போனேன்…. ?அந்த பாவத்தின் சம்பளமே இந்த புற்றுநோய் போல…!” மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அப்போது, தூண் மறைவில் நின்றிருந்த அவளை கண்டு விட்ட பாட்டி , ” டேய் எதுக்குடா இவள இங்க கூட்டி வந்த … ? இவ கால் வச்சா இந்த வீடு விளங்குமாடா…?” அர்ச்சித்தார் கண்டபடி.

” என்ன சத்தம் அங்க…. ? ஆதவா…?” வெளிய வந்த முகிலன் , இனியாவைப் பார்க்க விரும்பாதவனாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

” எங்கள எல்லாம் துச்சமா தூக்கி எறிஞ்சிட்டு போன… இப்ப எதுக்குடி இங்க வந்த … ?”

” ஐயோ…. என்ன மன்னிச்சிடுங்க முகில்… என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ்…!” அவன் காலைப் பற்றி அழுதாள். கொஞ்ச நேரங் கழித்தே உணர்ந்தாள் அந்த வித்யாசத்தை . அது கட்டைக் கால்.

” ஆமாம் இனியா… உன் மனசு மாதிரியே என் இடது கால் மரக்கட்டை தான்… !” விரக்தியாய் சிரித்தான்.

” எ… எப்டி… ஆச்சு…?” சற்றே குழறினாள்.

” நீ போன மறுநாள், மனசு ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் ஏற்பட்ட விபத்து என் இடது காலை பலி வாங்கி விட்டது…!”

” அப்பா… ஒரு நிமிடம்…” என்று அவரை தனியே அழைத்தவன் , இனியாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் விபரீதத்தை கூறினான். மனம் சற்றே நெகிழ்ந்தது.

” பாவம் இனியா… அவளுக்கா இந்த நிலை… ?!” தன்னிலை மறந்து முணுமுணுத்தார்.

வீட்டின் உள்ளே போன அவள், தன் படத்திற்கு மாலையிட்டிருப்பதை பார்த்தாள்.

” சரி தான்… படி தாண்டிய போதே செத்து விட்டேன்…இன்னும் கொஞ்ச நாளில் உண்மையிலேயே சாகப் போகிறேன்… இது சரிதான்…!” தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.

” இனியா… நீ இங்கேயே இருக்கலாம்.. ஆதவன் எல்லாவற்றையும் சொன்னான்… என் இதயக் கூட்டை உடைத்து என்னைக்கு நீ வெளியே போனியோ, அப்போதே நான் இதய நோயாளி ஆயிட்டேன்… நானும் நாட்களை எண்ணிக் கொண்டு தான் இருக்கிறேன்… அன்பு என்பதே உலகின் உயிர்… அதை கொன்னுட்டு போன அன்னைக்கு. வருடங்கள் இருபது கடந்து விட மீண்டும் வந்திருக்கிற… மன்னிப்பதற்கு பெரிய மனது வேண்டுமா என்ன…? அன்பினால் மறந்தே விட்டேன்,அன்று நடந்ததை….!மீண்டு வா நோயிலிருந்து நாம் மீண்டும் வாழ்வோம்… !”

“…….” மெளனமாய் திரும்பியவள் அவன் மடியில் விழுந்து கதறினாள். “நான் எத்தனை கோயில் ஏறி இறங்கினாலும் தீராத பாவத்த செஞ்சிருக்கேன். ஆனா உங்க இதயக்கோவில் ல எனக்கு ஒரு நிரந்தர இடம் கொடுத்திருக்கீங்களே அது போதும்… அதுவேபோதுங்க எனக்கு…!”

அவன் மடிமீது நிரந்தரமாக மூச்சை விட்டிருந்தாள் , மாலையிட்ட அவள் படத்தை நெஞ்சில் அணைத்தபடி.

” இனியா….! இனியா…. ! என்னைக்குமே நம்ம வாழ்க்கை இப்படி இணையாக் கோடுகளா ஆயிடுச்சே….!”

மனுசங்கடா – வெளி ரங்கராஜன்

மனுசங்கடா

அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.

அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.

அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.

இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.

நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.

எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய்எனபாத்திரங்கள்மிகவும்உயிர்ப்புடன்வெளிப்படுகின்றன.பிணத்தைவீட்டுக்குள்எடுத்துச்சென்றுதாழிட்டுக்கொள்வது,காவல்துறைஅச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது,இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.

இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.

வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.

—–

அரவிந்தனின் சிறுகதைகள் : ஒரு பார்வை மறதியற்ற மனதின் சுமைகள் / இமையம்

தொலைக்காட்சி, இணையம், முகநூல், பிளாக், தினசரி, வார மாத இதழ்கள் மனிதனின் நேரத்தையும் மூளையையும் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய வாழ்க்கையில் எதுவும், எல்லாமும் உடனுக்குடன் என்றாகிவிட்ட நிலையில், எதையும் கேளிக்கையான பொருளாக மாற்றலாம், மாற்ற முடியும் என்ற சமூகச் சூழலில் கதைகளைப் படிப்பது, விவாதிப்பது சாத்தியம்தானா என்ற கேள்விகள் அதிகரித்துவரும் நிலையில் – எல்லாவற்றையும் மீறிக் கதைகள் எழுதப்படுகின்றன. கதைகள் படிக்கப்படுகின்றன. விநோதம்தான். எந்த மாதிரியான கதைகளைப் படிக்கிறோம்?

வார, மாத இதழ்கள் போய் தினசரிகளும் இன்று கதைகளை வெளியிடுகின்றன. வாரத்திற்குத் தமிழ்மொழியில் எத்தனை சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன? மாதத்திற்கு எவ்வளவு? ஆண்டுக்கு? மலைப்பாக இருக்கிறது. மலைமலையாகக் குவிக்கப்படும் கதைகளில் எதைப் படிப்பது, எப்படி படிப்பது, ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கிறது. மலைபோன்று குவியும் இந்தக் கதைகளில் எது நம்மைப் பாதிக்கிறது, எது நம்மை அலைக்கழிக்கிறது, நினைவில் நிற்கும் கதைகள் எவை, மற்றவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாம் விரும்பும் கதை எது என்று பார்த்தால் மலைபோல் குவிந்திருக்கும் கதைகளில் ஒரு கடுகு அளவு தேறும்.

இந்தக் கடுகு அளவுக் கதைகளில்தான் மனித வாழ்வு எதிர்கொள்ளும் அவலங்கள் நேர்மையாகப் பேசப்படுகின்றன. சமூகம் குறித்த உண்மையான அக்கறைகள் இருக்கின்றன. நேர்மையாகவும் உண்மையாகவும் அக்கறையுடனும் இருப்பதால் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கடுகு அளவு கதைகளில் அரவிந்தனின் கதைகளும் இருக்கின்றன.

‘கடைசியாக ஒரு முறை’ தொகுப்பைப் படித்து முடித்தபோது தோன்றியது, அரவிந்தன் கற்பிப்பதற்காக எழுதவில்லை; கற்பதற்காக எழுதியிருக்கிறார் என்று. இலக்கியப் படைப்பின் அடிப்படை கற்பதுதானே. இக்கதைகளில் வாசகர்கள் அவரவர் திறனுக்கேற்பக் கற்றுக்கொள்ள இருக்கிறது. இது எதனால் சாத்தியமாகிறது என்றால் கதையைச் சொன்ன விதம், கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த மொழி, வடிவம், வாழ்க்கையைப் பார்த்த விதம்.

அரவிந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் சென்னை வாசிகள். குறிப்பாகப் பல்லாவரம், சேத்துப்பட்டு, மாம்பலம், குரோம்பேட்டைக்காரர்கள்; நடுத்தரக் குடும்பத்து மனிதர்கள். நகரத்து மனிதர்கள் இயந்திரத்தனமாக இருப்பார்கள் என்பதைப் பொய் என இக்கதைகள் நிரூபிக்கின்றன. நிறையவே காதலிக்கிறார்கள். மனைவியை, குழந்தைகளை, முக்கியமாக நண்பர்களை. மனித உறவுகளைப் பொக்கிஷமாக மனதிற்குள் வைத்திருக்கிறார்கள். அன்பை, நட்பைத் தேவைப்படும் இடங்களில்கூட மறைத்தே வைத்திருக்கிறார்கள். அன்பின் வெளிப்பாடு, மரியாதையின் வெளிப்பாடு மௌனமாக இருக்கிறது. ஒரு சொல் கூடுதலாகப் பேசினால் உறவுகள் உதிர்ந்துவிடும் என்பது மாதிரி இருக்கிறார்கள். நகரம் குறித்த, நகரத்து மனிதர்கள் குறித்த நமது நம்பிக்கைகள் பொய் என்று இக்கதைகள் நிரூபிக்கின்றன. கிராமப்புறங்களில்தான் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள் என்பதெல்லாம் கற்பனை. மாநகரத்து மனிதர்களுக்கும் அதுதான் பெரும் கவலை.

இத்தொகுப்பில் மலையும் மரணமும் முக்கியப் பாத்திரங்களாக இருக்கின்றன. மலையைப் பற்றி, மரணத்தைப் பற்றிச் சொல்வதற்காகவே இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? செத்துக்கொண்டிருக்கிறார்களா? வாழ்ந்தபடியே செத்துக்கொண்டிருக்கிறார்கள், செத்துக்கொண்டே வாழ்கிறார்கள். இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் இக்கதைகள். மரணம்குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். அரவிந்தன் சற்று வித்தியாசமாக மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார். மரணம் எப்போது, யாருக்கு வரும்? அதைப் பற்றி கவலைப்படாதவர்கள் உலகில் உண்டா? வாழ்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளைவிடச் சாகாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள்தான் அதிகம். இயற்கைகுறித்த அறிவு அற்றவர்கள்தான் மனிதர்கள். மரணம்பற்றிய அரவிந்தனின் கதைகளில் ஒரு துளிக் கண்ணீர் சிந்தப்படவில்லை. கண்ணீருக்கு வலிமை உண்டு. அதைவிட அறிவுக்கு.

அரவிந்தனுடைய மனிதர்கள் பேச வேண்டியதைக்கூடப் பேச மாட்டார்கள். சந்தர்ப்பம் வந்தாலும் பேச மாட்டார்கள். பேசுவார்கள். மனதிற்குள். பேசிப்பேசிக் களைத்துப்போய்விடுவார்கள். ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன், ‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் வரும் நந்தினியின் புருஷன், ‘கடைசியாக ஒரு முறை’ கதையில் வரும் சாம்பசிவன், ‘குமிழி’ கதையில் வரும் ஹயக்ரீவன் எல்லாருமே மனதிற்குள்ளேயே பேசி, விவாதித்து, தர்க்கம் செய்து ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள். காரியங்கள் அதன் போக்கில் நடந்துவிடும். நடந்து முடிந்த காரியம், நடக்கிற காரியம், நடக்க இருக்கிற காரியம் எல்லாவற்றையும் பற்றி மனதிற்குள்ளேயே ஆராய்ந்துஆராய்ந்து பார்த்துவிட்டு ஒடுங்கிப்போவார்கள். இவர்கள் மனநோயாளிகளா என்றால் அதுவும் இல்லை. தர்க்கம் செய்கிறவர்கள்.

தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம். நான் இல்லாவிட்டால் வீடு, சொந்தம், உறவு, கணவன், மனைவி, அலுவலகம், நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம். நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் –

இதற்குப் பின்னாலும் மரணம்தான் இருக்கிறது. மலையைப் பார்க்கும்போது, கடலைப் பார்க்கும்போது மனிதனுக்கு ‘தான் ஒன்றுமில்லை’ என்பது ஏன் தோன்ற மறுக்கிறது? சிறுமைப்படாத மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், தான் இல்லாத வீடு, தான் இல்லாத வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. அந்தப் பயத்தில் அலறும் மனதின் அவஸ்தைகள்தான் இக்கதைகள். மறதியற்ற மனதின் சுமைகள்.

‘மயான நகரம்’ அரசியல் கதை. சமூகக் கதை. கடந்த காலக் கதை மட்டுமல்ல, நிகழ்காலக் கதையும்தான். சக்தி ராஜ்ஜியத்தின், பெரும்திரளான மக்கள் கூட்டத்தின் கதை. அதிகாரம், கீழ்ப்படிதல், சுரணையற்ற மக்கள் கூட்டம் ஆகியவற்றின் கதை.

அதிகாரம் என்பது என்ன? அதிகாரத்தை அடைவதற்கு, அதிகாரத்தைக் காப்பாற்றிகொள்வதற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? கவிஞர்கள், சிந்தனாவாதிகள், உயர்குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள், குடிமக்கள் என எல்லாரும் எப்படி அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள், மண்டியிட எப்படி போட்டிபோடுகிறார்கள், மண்டியிடுவதைப் பிறவிப் பயனாக எப்படிக் கருதுகிறார்கள் என்பதுதான் கதை. மர்மம். புதிர்.

நாமே நமக்காக உருவாக்கிய அதிகார அமைப்புகள் எப்படிப்பட்டவை? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது? மண்டியிடுதல் எப்படி நாகரிகமாக, ஒழுக்கமாக, பெருமையாக மாறியது? அதிகாரத்தைத் துறந்த மனம், அதிகாரத்திற்காக விழையாத மனம் யாருக்கு வாய்த்திருக்கிறது? சூழ்ச்சிகள், தந்திரங்கள், கபட நாடகங்கள், துரோகங்கள், கொலைகள், சுரண்டல், வன்முறை இவற்றால் அதிகாரம் உருவாக்கப்படுகிறது. இத்தனையும் நடப்பதால்தான் சக்தி ராஜ்ஜியத்தில் இளவரசன் கொல்லப்பட்டு ரகசியத்தின் கூடாரமாக இருந்த – பிறப்பு விவரம் அறியாத ஓர் இளம்பெண் இளவரசியாக்கப்படுகிறாள். அதிகாரம் வேண்டி எதையும் செய்வார்கள் மனிதர்கள். மனிதர்களுக்கு மட்டும்தான் அதிகாரம் வேண்டியிருக்கிறது. முதலமைச்சர், பிரதமர், கவர்னர், மந்திரி வேண்டியிருக்கிறது. பூனைக்கு, நாய்க்கு, பன்றிக்குப் பிரதமர், முதல்வர் தேவையில்லை. முதல்வர், பிரதமருக்கு அவை பயப்படாது என்பதை ‘மயான நகரம்’ கதையில் பார்க்க முடியும். கதை புதிது. கதை சொன்ன விதம் புதிது. கதை சொல்லத் தேர்ந்தெடுத்த சொற்கள் புதியவை. சின்னச் சின்ன செறிவான வாக்கியங்கள் ஈர்ப்பைத் தருகின்றன.

அரவிந்தனுடைய மனிதர்கள் ஒரு நிலையில் பார்த்தால் மன நோயாளிகள்தான். ஒரு சமயத்தில் ஒருவரைப் பிடித்திருக்கிறது. அதே நபரை மற்றொரு சமயத்தில் பிடிக்காமல் போகிறது. ஏன்? காரணம் தெரியாது. காரணம் இல்லை. நாம் செய்கிற பல காரியங்களும் அப்படித்தான் இருக்கின்றன. தோன்றியது, செய்தேன். காரணம் இல்லை. தெரியாது என்று சொல்கிற மனிதர்கள். அப்படியான ஒரு நபர்தான் ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன். சுயசரிதைத் தன்மைகொண்ட கதை. குற்றவுணர்ச்சியால் பேசப்படும் கதை. கதைசொல்லிக்கும் கே. ராமமூர்த்தி என்ற மனிதருக்குமான கதை. இவன் குழப்பமான பேர்வழி. அவர் அவனுக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறார்.

அவர் திறந்துவிட்ட கதவு ஒன்று புத்தகம். அவன் தன் கஷ்டங்களை, சிரமங்களை, ஏன் மகிழ்ச்சியைக்கூடக் கொட்டித் தீர்க்கிற இடமாக இருக்கிறார் ராமமூர்த்தி. அவரைப் போன்ற மனிதர்களை அடையாளம் காணவும், நட்புறவைப் பேணவும் சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு அப்படி நிகழ்வதில்லை. எல்லாருக்குமே கொட்டித் தீர்ப்பதற்கு மலை போன்று விஷயங்கள் குவிந்திருக்கின்றன. இறக்கிவைக்க, கொட்டித் தீர்க்க. அதற்கான இடம் வேண்டும். இடம் கிடைக்காதவர்கள் பாவப்பட்டவர்கள்.

கதையின் கேள்வி மனித உறவுகள் உண்மையில் மேம்பட்டதுதானா என்பதுதான். இல்லையென்ற பதில் கதைக்குள்ளேயே இருக்கிறது என்று கருதலாம். மனிதர்கள் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை? இருக்க முடிவதில்லை? புனிதர்களைத் தேடி மனித மனம் ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் கல்லின் மீது, மரத்துண்டின் மீது, பாம்புப் புற்றின் மீது, நம்பிக்கைகளின் மீது புனிதத் தன்மையை ஏற்றுகிறது. ‘உருமாற்ற’த்தின் கதைசொல்லிக்கு ராமமூர்த்தி.

பல நேரங்களில் நாம் ஏற்றிவைத்த புனிதங்களே நம்மைப் பார்த்துக் கேலி செய்யும். ‘உருமாற்றம்’ கதையில் நிகழ்வது அதுதான். மனிதர்கள் மாறுகிறார்கள். ஏன், எப்படி, எதனால்? தெரியாது. சூழல், சந்தர்ப்பம். புனிதங்கள் நிறமிழக்கும்போது புனிதத்தை ஏற்றிய மனம் நிஜத்தை ஏற்க மறுக்கிறது. மறுபக்கம் புனிதத்தை ஏற்றியவனும் கயமைத்தனம் கொண்டவன்தான். தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டே கடைசிவரை உட்கார்ந்தே இருக்கிறான். புலம்புவதால் பலன் உண்டா? உருமாற்றம் யாருக்கு? கதைசொல்லிக்கா, ராமமூர்த்திக்கா? மனித மனத்தின் விசித்திரங்களை இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது.

‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் மலைதான் பிரதானப் பாத்திரம். மலை பேசுவதில்லை. எதையும் வெளிப்படுத்துவதில்லை. உணர்ச்சிகளைக் கொட்டுவதில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது. மலை ஒவ்வொரு நிமிடமும் மனிதர்களுக்கு ரகசியமாக ஒன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. நாம்தான் அதைக் கேட்பதில்லை. மனிதன் எவ்வளவு அற்பமானவன். மனைவி, கணவன், நண்பர்கள், குழந்தைகள் என்று இருந்தாலும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததே இல்லை. அப்படி இருப்பதாக நடிக்கிறார்கள். மலை நடிப்பதில்லை.

மனிதர்கள் மாறக்கூடியவர்கள். பிரிந்து போகக்கூடியவர்கள். நந்தினி இறந்துபோகிறாள். அவள் நேற்று மனைவி நந்தினி. இன்று பிணம். எது உண்மை? எது சரி? எது நித்தியம்? எது அநித்தியம்? வாழ்வின் விநோதம் இது. வாழ்வின் பிரம்மாண்டத்தைப் பார்த்துப் பரிதவிக்கும் மனித மனதின் அவஸ்தை இந்தக் கதை. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் மனிதனின் நிலையாமையையும் அழகாகத் தனக்கான மொழியில் அரவிந்தன் எழுதியிருக்கிறார். தற்காலத் தமிழ் படிப்பதற்குச் சுவையாகத்தான் இருக்கிறது.

மரணத்தை முன்னிறுத்திப் பேசும் மற்றொரு கதை ‘கடைசியாக ஒரு முறை’. மரணம் நிகழவில்லை. நிகழ்ந்தால் என்னாகும் என்பதுதான் கதை. விபத்து நடக்கிறது. அந்த விபத்தின் வழியே வாழ்வின் நிஜத்தன்மையை உணர்கிறான் சாம்பசிவன். தனிமனித வாழ்க்கை, குடும்ப, சமூக வாழ்க்கையில் ஒரு மனிதனின் இடம் என்ன? கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் எல்லாருமே கொடுக்கல் வாங்கல் உறவால் பின்னப்பட்டவர்கள். கொடுக்கல் வாங்கலில் சிறு பிசிறு ஏற்பட்டால் அத்தனை உறவுகளும் விரிசல்கள் காண்கின்றன. இந்த விரிசல்களை மேலும் பெரிதாக்குவது போலவே காரியங்கள் நடக்கின்றன. எந்த உறவாக இருந்தாலும் மனிதர்கள் கண்ணாடி போன்றவர்கள். கைதவறினால் கண்ணாடி உடையத்தானே செய்யும்? இதுதான் கதையின் மையம். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி பிணமாகத் தெரிகிறாள். குழந்தைகள் பிணமாகத் தெரிகிறார்கள்.

சற்றுச் சிந்திக்கும் திறனுள்ள, தூக்கத்தில் திடீரென்று விழிப்புக் கொள்ளும் மனிதனுக்குத் தோன்றுவது இது. இன்றைய நவீன குடும்ப அமைப்பு, உறவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் போதனையில்லாமல் சொல்கிறது ‘கடைசியாக ஒரு முறை’ கதை. பவித்ராவுக்குச் சாவு பற்றிய பயம் இல்லை. பவித்ராவுக்கு மட்டுமில்லை, அரவிந்தனுடைய பெண்களில் யாருக்கும் அந்தப் பயம் இல்லை. ஆனால் எல்லா ஆண்களுக்கும் இருக்கிறது. மரண பயத்தில் தூங்காமல் கிடக்கிறார்கள்.

அரவிந்தனின் பாத்திரங்கள் அதிர்ந்து பேசாதவர்கள் மட்டுமல்ல. அன்பைச் சொல்லத் தெரியாதவர்களும்கூட. ஒருவகையில் தங்களுக்குள்ளேயே சுருங்கிப் போனவர்கள். குறிப்பாக ஆண்கள். பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சக்தி ராஜ்ஜியத்தின் ராணி, பவித்ரா, ஸ்ரீமதி என்று. ‘குமிழி’ கதையில் ஸ்ரீமதிதான் பலகாரம் கொடுக்கிறாள். அவனைப் பற்றி வீட்டில் சொல்கிறாள். கல்யாணத்தைத் தைரியமாக எதிர்கொள்கிறாள். அதே மாதிரி தன் குழந்தைக்குக் காதலனின் பெயரை வைக்கும் தைரியம் அவளிடம் உண்டு.

ஹயக்ரீவனுக்கு ஒன்று மட்டும்தான் தெரியும். அது என்னவென்றால் புலம்புவது. ‘குமிழி’ கதையின் நாயகன் மட்டும் இப்படியில்லை. அரவிந்தனுடைய எல்லா ஆண்களுமே அப்படித்தான். கிருஷ்ணா, நந்தினியின் புருஷன், சாம்பசிவன் என்று பலரும் புலம்புகிறவர்கள். ஆண்களின் வீராப்பு, திறமை எல்லாம் மனதிற்குள் புலம்புவதில்தான் இருக்கிறது. ஆண்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள். ‘குமிழி’ காதல் கதை. தமிழ் சினிமாவில் வருவது மாதிரி காதல்ன்னா என்னா தெரியுமா என்று கேட்டு பக்கம்பக்கமாக வசனம் இல்லை. பிரிவு இருக்கிறது. ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. கூடுதலாக ஒரு வார்த்தை இல்லை.

தொகுப்பின் கடைசிக் கதையான ‘தனியாக ஒரு வீடு’ மற்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நடைமுறை வாழ்க்கைச் சிக்கலைப் பேசுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று மனிதனை இயற்கையிடமிருந்து பிரித்துவிட்டன. அதே மாதிரி இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்தும் மாற்றிவிட்டன. விவசாயம் இன்று இழிவான தொழில். அதைச் செய்வதற்கு யாருக்கும் விருப்பமில்லை. கம்ப்யூட்டரின் கான்பிகரேசன் தெரிந்தவனே மேதை. மென்பொருள் தயாரிப்புக் கம்பெனியில் வேலை பார்ப்பவனே மனிதன். எல்லாருக்குமே வெள்ளைக்கார துரைமார்களாக மாற வேண்டும் என்பதே லட்சியம். ஏரி, குளங்கள் மண் மேடாக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய விவசாய நிலங்கள் வீட்டு மனைவிரிவுகளாக மாற்றப்படுகின்றன. எல்லாம் சரி, மனிதர்கள் எதைச் சாப்பிடுவார்கள்? கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களையா? இதுதான் இக்கதையின் கேள்வி. கம்ப்யூட்டர், இணையம், மின்சாரம் ஏன் உடைகூட இல்லாமல் மனிதனால் இருக்க முடியும். உணவு இல்லாமல் இருக்க முடியுமா? இது ஏன் மெத்தப் படித்தவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் அரவிந்தனின் ஆதங்கம். நாகரிகம், வளர்ச்சி என்று நாம் வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிட்டோம்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் உணவுக்கான செலவைவிட ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்கான தண்ணீருக்காகச் செலவிடப்படும் தொகை அதிகம். ஒரு லிட்டர் தண்ணீரின் விலை இருபது ரூபாய். ஒரு லிட்டர் பால் விலை நாற்பது ரூபாய். நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? வாட்டர் பாட்டில் பெருமையின் அடையாளமாக, நாகரிகத்தின் அடையாளமாக மாறியது, மாற்றியது யாருடைய குற்றம்? இதுகுறித்த குற்ற உணர்ச்சி யாரிடம் இருக்கிறது என்ற கவலை அரவிந்தனுக்கு மட்டுமே உரியதல்ல என்று சொல்கிறது ‘தனியாக ஒரு வீடு’ கதை.

எங்கோ கேட்டோம், எங்கோ படித்தோம், இன்னாருடைய சாயல் இருக்கிறது என்றெல்லாம் இல்லாமல் இருப்பது நல்ல படைப்புக்கான அடையாளம். அந்த அடையாளம் இத்தொகுப்பில் இருக்கிறது.

இலக்கியம் என்பது வெறும் கதை அல்ல. படிப்பு. வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கான சொத்து என்று சொல்கிறது அரவிந்தனுடைய ‘கடைசியாக ஒரு முறை’ கதைத் தொகுப்பு.

••••

கடைசியாக ஒரு முறை (சிறுகதைகள்)
அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை ரூ: 100