Category: இதழ் 164

குற்ற வாசனை ( சிறுகதை ) / செந்தூரன் ஈஸ்வரநாதன்

பெரு நகரங்கள் இரவுகளில் முழித்துக்கொள்கின்றன. கண்களில் வெறிசரியக் காத்திருக்கின்றன; அச்சத்தையும் உலைச்சலையும் ஒருசேர உண்டாக்கும். பரிமாணமடையும் இரவுகள். ஒவ்வொரு இரவும் மாற்றமடைகின்றன.

மாநகரப் பேருந்து நிறுத்தங்கள்; பிரபல மதுபானக் கடைகள்; இருளடர்ந்த சில அபூர்வமான திருப்பங்கள்; ஆள்நடமாட்டமற்ற ஆற்றுப் பகுதிகள், சாக்கடைகள்; எல்லாவற்றிலும் வன்முறை தூங்கிக் கிடந்தது. அகலக் கண்களை அது விரிக்கிறபோது மனிதர்கள் அதில் சிக்கினார்கள். இடம் மாறி இடம் மனிதர்களே அந்த வன்முறைகளை உருவாக்கினார்கள். அவர்களே அதன் தோற்றுவாய். இரவுக் காவலர்கள் பெரும் போதையுடன் உலவித் திரிந்தார்கள். வோக்கியில் ஒலிக்கும் கட்டைளைகள் எந்தப் பரபரப்பையும் உண்டாக்காமல் உறைய வைத்துவிடுகின்றன. ஒரு நடு இரவில் அந்தக் குரல் ஒலித்தது. ஆணும் ஆணுமாக இரு காதலர்கள் சிக்கிக்கொண்டார்கள்; கெக்கலிப்புடன் அயர்ச்சியாக அது அலறியது.

துயரமே, கேளுங்கள். மன்றாடுவதைத் தவிர என்னிடம் வேறு வழிகள் இல்லை. உங்களிடம் தவிர அந்த அல்பினிச வியாதிக்காரனான விசாரணையாளனிடமும் சிறை அதிகாரியிடமும் – அவர் குற்ற நுண்ணறிவுப் பிரிவில் இருந்தவர், தவறாக நிகழ்த்திய எண்கவுண்டருக்காக சிறை அதிகாரியாக மாற்றப்பட்டிருந்தார் – உளறிக்கொண்டியிருக்கிறேன். மிகுந்த அச்சத்தை உண்டுபண்ணும் உயர்ந்து நெடிந்த அந்த அதிகாரி சில்லறைத்தனங்களை மட்டும்தான் பெறுமதியான குணங்களாகக் கொண்டிருந்தார்.

சிறையில் இருப்பவர்களுக்கென கிறித்தவச் சபைகளிலிருந்து எடுத்து வரப்படும் பொருட்களையும் திருடிக்கொள்வார். பாகுபாடெல்லாம் பார்த்து அவர் எதையும் எடுத்துக்கொள்வதில்லை. பள்ளிகளிலிருந்து சிறைக் கைதிகளுக்கு கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் குட்டிக்குட்டி எழுத்துக்களிலும் வண்ணவண்ண நிறங்களிலும் வந்து சேரும். சாரைக் கண் வர்ணத்தில் பொம்மைப்படம் வரைந்து ஒரு குழந்தை அனுப்பியிருந்தது. சிலவேளை கடிதங்களோடு எழுதுபொருட்களும் வந்துசேரும். வருபவற்றை ஏமான் எடுத்துக்கொண்டு மிஞ்சியதுசொஞ்சியதெல்லாம் கைதிகளிடமும் கையளிக்கப்பார். அதிலும் அந்த அதிகாரிக்கு வேண்டப்பட்ட கைதிககளிடமே அவற்றை அவர் கையளிப்பார்.

எல்லோருக்கும் ஒரேவிதமான முறைதான் அவரது சிறப்பம்சம். அவரின் ஆடைகளைக் கைதிகள் சீரான முறையில் துவைத்து உலர்த்திக் கொடுத்தோம். சிறை அதிகாரியை; அச்சத்தை உருவாக்கும் இங்கு, கைதிப் பெண்ணொருத்தி காதலித்தார் என்பது எங்களிடையே உண்மையில் ஒருவித அதிர்ச்சியையும் விடுப்புப் பிடுங்கும் உணர்வையும் உருவாக்கியது. யாராவது ஒருவர் ஏதாவது ஒரு செய்திக்காக வாயை அகலத் திறந்து மூடியபடியும்; துணிகளை நீரில் அமிழ்த்தி எடுக்கும்போதும் வெண்ணிறச் காற்சட்டைக்குள் கைகளை நுழைத்து ஒரு பாட்டம் உணவுக்குக் காத்திருக்கிறபோது, சிறைத் தொழிலாளிகளின் முடையப்பட்ட பாய்களை ஏற்றும்போதும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அவர் கவர்ச்சிகரமான மனிதரொன்றும் இல்லை.. ஆனால் அவரிடம் சிறைகுறித்த சுவாரசியமான கதைகள் இருந்திருக்கலாம். அந்தப் பெண் துயரம் நிரம்பிய கண்களோடு சோகத்துடன் கிழிந்துபோன வழிதெரியாக் கருமையான ஒரு வரைபடத்தைப் பார்ப்பதாக கண்ணைத் தின்கிற இரவுகளில் கற்பனை செய்தேன். வெகு விரைவிலேயே எனது சதத்திற்குதவாக் கற்பனைக்குள் நீரேறி அது இற்றுப் போய்க்கொண்டிருந்தது.

விசாரணை : 1: ஹெல்த் லைன் முதலாம் மாடி

ஐயா, அந்த உயிர்கொல்லி உங்களை மிகக் கவர்ந்தவன். அவனுக்காக இந்தச் சிறையில் நீங்கள் உருவாக்கிய வசதிகளைப் பற்றியும் தெரிந்திருக்கிறேன். ஆனால் அவன் உங்களை மதிப்பதே இல்லை. ஏன்? திரும்பிக்கூடப் பார்ப்பதுமில்லை; ஐயா, என் உருவத்தைப் பார்த்து என்னால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. நான் மிகத் திறமையானவன். ஆளில்லாக் கட்டடங்களில் ஏறி இறங்குவேன். மிக உயர்ந்த சுவர்களை மிக இலகுவாக என்னால் தாண்டிவிட முடியும். ஆனால் உங்கள் பாதுகாப்பில் இருக்கும் வரைதான் பாதுகாக்கப்படுவேன்.
விஷமமான அந்தக் கைதி திறமைசாலி அவனை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அவனது கண்கள்; என்றென்றைக்குமாக அதில் பூத்துக் கிடக்கும் மஞ்சளும் சாம்பலும் அவனை மிகுந்த கவர்ச்சிகரமானவனாக ஆக்கியிருந்தன. உறங்குகிற நேரங்களில் அவன் உறுமல், ஒடுக்கமான அறைக்குள் பட்டுத் தெறித்து அடங்கும். பசிகொண்ட ஒரு விலங்கின் அமைதியற்ற கண்கள். சரியாகச் சொன்னால் தீப்பற்றியெரியும் ஒருசோடிக் கண்கள்; உறக்கத்தைக் கெடுத்து இல்லாமலாக்கிவிடும்.

விசாரணை:2 : சவுத் எக்ஷ்டென்ஷன் ஹர்

அன்று அறைக்கு வீரக்குட்டியார் வந்திருந்தார்; கைகளில் பயணப் பொதியும் ஒரு சோடாப் போத்தலும். அவர் குறித்து அப்போதே ஐமித்திருந்தேன். அவர் நெருங்கப்படக்கூடாதவர் என்ற எண்ணம் காரணமின்றியே எனக்குள் படர்ந்திருந்தது. அவரின் உடல்; மிக லேசானதாகத் தோன்றவில்லை. மிகுந்த ஒல்லியான தோள்கள்; குறுகின கஜூப்பழத்தை ஒத்த ஒடுக்கமான அந்த மனிதரின் வளவளப்பான கறுத்த முகத்தில் தொக்கையாகக் கத்து முடிகள் ஒட்டப்பட்டிருந்தன. கரிய ஆழமான அந்த முகத்தில் சிரிக்கும்போது குழைவு தெரியும். அறைக்கு வந்தவுடனேயே புறுபுறுக்கத் தொடங்கியிருந்தார். பழைய சோகம் நிரம்பிய பாடலைப் புனையும் பாணன்.

‘அழிவான்’ என ஆரம்பித்துப் பச்சைத் தூஷணத்தோடு அவர் முடித்துக் கொள்வார். நானும் வேலையின்றி யாரைத் திட்டித் தீர்க்கிறார் என்று ஆராய்ச்சியும் செய்துகொண்டிருந்தேன். பதில்கள்; குறுகின வட்டாரங்களிருந்தே கிடைத்துவிடும். 360 பாகையிலிருந்து 180 பாகைக்கு வர முன்னரே எதிரிலிருப்பவரின் ஆடை அவிழ்க்கப்பட்டிருக்கும். நிறுத்தல் குறிகளைக் கூட அச்சமயத்தில் மட்டும்தான் பயன்படுத்திக் கொள்வார். ‘‘ஏன் சாமி இப்படி கத்திக்கொண்டிருக்கிறீங்கள்?‘ என்றால் அவரிடமிருந்து எவ்விதப் பதில்களும் வராது. ஒரு சிரிப்புடன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள்ளோ அல்லது மேற் தளத்திற்கோ கடமையுணர்வுடன் விரைந்து வெளியேறிச் செல்வார்.

ஒரு மாலை நேரம்; சூரியன் பதிந்து இறந்ங்கிக்கொண்டிருந்தது. அழுத்தம் நிறை மாலை. மூலையில் சுழன்றாடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறை பச்சை ஏறிப்போயிருந்தது. தொளதொளத்துப் போன ஆடைகளை ஒவ்வொன்றாய் கழற்றி அவர் எறிந்தார். அப்போது அவரின் செய்கைகள் எனக்கு எவ்வளவு அருவெறுப்பை உண்டாக்கின? அவரது வழமையான சுற்றாடல் அன்றைக்கு இல்லாது போய்விட்டதைப்போல் எதையும் அண்டாமல் அங்குமிங்குமாக அலைந்தார்.

அவர் என்னைப் பார்த்தபோதும்கூட தன் புலம்பலை நிறுத்திக் கொள்ளவில்லை. நீர்மையான வன அலரிகளாய் அப்போது என் கண்கள் பூத்துப் பீழை தள்ளின; உண்மையில் அவ்வாறுதான் எண்ணிக்கொண்டேன். எங்கள் கண்கள் ஈரலிப்புடன் சந்தித்துத் திரும்பின. அப்போதே அங்கிருந்து வெளியேறிவிடமேண்டுமெனத் தவித்தேன், உள்ளங்கால்கள் வியர்த்தன. குடலைப் புரட்டியது. கண்ணீருடன் வெளியேறிப் போனேன்.

அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் ஏறத்தாழ ஓடினேன். அன்றைக்கு நான் வெளியேறாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நீங்கள் இந்த முடுக்கில் வைத்து என்னைக் கேள்வியெழுப்பியிருந்திருக்க முடியாது ஐயா.
விசாரணை: 3 : மஹாராஷ்ட்ரா டெஸ்க்
இதற்குமேல் அறையை வெறிக்க முடியாது. மூன்றாம் இலக்க ஜில்ஜில்லே வழி. வீரக்குட்டி இன்றைய இரவை புதிய தன் இளம் நண்பர்களுடன் ஆரம்பித்திருந்தார். கொண்டாட்ட நாளொன்றை அவர் தயாரித்துக்கொண்டிருந்தார். தொந்தி பெருத்த மனிதர்; வேகமான அந்த மனிதரின் கைகளில் ஏதாவதொன்று உழன்றுகொண்டேயிருக்கும்.

வீட்டுச் சாவி, கைபேசி, மெழுகுவர்த்தி, சிகரெட், சாராய கிளாஸ், பிளாஸ்டிக் கிளாஸ், சாகஸக் கதைப் புத்தகம், பாஸ்போர்ட், அடகுச் செயின், திருட்டு மோதிரம் இன்ன பிற திருட்டுச் சாமானுகள் இப்படி எதையாவது ஒன்றை வைத்து கதையளந்துகொண்டிருப்பார். புதியவர்கள் அவரைக் கூடி இருப்பார்கள். ஏதாவது ஒரு கதையை உழப்ப ஆரம்பிப்பார். ஆனால் அவருடைய புதிய இளம் நண்பர்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்கள் அவரை ஒரு பெரிய அதியமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அந்த மனிதர் அற்புதம்.

விசாரணை: 4 : ஔரா மேல் பாலம்

வீரக்குட்டி வீடு நிரம்பிப் போயிருந்தது. எனக்குத் தெரிந்து வீரக்குட்டியை அந்த வீட்டின் டீ மாஸ்டராகத்தான் அறிந்திருந்தேன். யாராகினும் சம்பளம் கொடுப்பார்கள்; என்றாலும் அதற்கும் வாய்ப்பு அரிதுதான். தாமதமாகத்தான் அந்த வீடு வீரக்குட்டியுடையதுதான் என்பதை அறிந்துகொண்டேன். அதேபோல் இந்த ஆள் பெயர் வீரக்குட்டி தானா? இல்லையென்றால் வேறு யாரிடமாவது கேட்கலாம். ஆனால் அங்கிருந்த மூத்த இளம் தலைமுறையினர் எல்லோருமே இயக்கத்தில் இருந்திருந்தார்கள். மேஜர். கப்டன், சென்றி, ரவுண்ஸ், சொரியன்கள், அட்டை, துண்டு, வெளிநாடு, துரோகி, வெஸ்ச, புண்டயாண்டிகள் என்ற மாதிரியே குழப்பமாகவே திரும்பத்திரும்பக் கதைத்தார்கள்.

வீரக்குட்டியிடம் இரண்டு முறையான பொருட்கள் இருந்தன. ஒன்று, அவரின் டமாரம் ஏறின வாய்; முழங்கும். இரண்டு, அவர் கையில் என்றென்றைக்குமாக தங்கி நின்ற ஃபைல்.
அந்த ஃபைலை அவரிடமிருந்து திருடிக்கொள்ளும் ஆண்டவரே என்று ஊளைச் சத்தமிட்டு அலறிக் கெஞ்சுமளவிற்கு மோசமான ஆனால் வீரக்குட்டியின் சத்துள்ள சாமான். ‘‘எல்லாம் ஃபைல்லதான் இருக்கு. அவாவிட்ட சொல்லு’’ நிறைபோதையில் தெரு முழுக்க இரைச்சலிட்டுக் கோடு கீறுவார். வீரக்குட்டியின் ஃபைலில் என்ன இருந்தன என்பது புதிர். கொத்துக் கடைகளில் வீரக்குட்டி ஃபைல் பற்றி சில புராணக் கதைகளும் சேர்ந்துகொண்டன. ‘வீரக்குட்டி கிசுகிசுக்கள்’ எழுதுமளவிற்குத் தகவல்கள் பரம்பலடைந்துகொண்டே இருந்தன.

வீரக்குட்டி ஜிம்மிலிருந்துகொண்டு ப்ரான்ஸ் போய்விட்டேன் என்று ஸ்கைப்பில் சொல்லுமட்டும் ஏதோ ஒரு வதந்தி சுடுதீயைப்போல் வளர்ந்திருக்கும். அவருக்கு நகரைப் பற்றி அலையும் வேடிக்கையான மனிதர்கள் கடும் தோழர்களாயிருந்தார்கள். அவரது உணவுப் பழக்கமும் மூன்றிலிருந்து இரண்டாக மாறிப்போனது. உணவிலும் வித்தியாசமான மனிதர்தான்.

வீரக்குட்டியின் ‘எல்லாம்’ ஃபைலில் சில ஆவணங்களைத்தான் அவர் வைத்திருந்தார். அரசிடம் மன்னிப்புக்கோரி, தண்டனையின் அடிப்படையில் நாடு கடத்தக் கேட்டு எட்டுத் துண்டாய் மடிக்கப்பட்ட கி-4 தாள்; அவற்றைப் பிரதிகளெடுத்து குடியேற்ற – குடியகல்வுத் துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என யார் யாருக்கோ அனுப்பி அவர்கள் புரிந்தும் புரியாத மாதியும் சில கடிதங்களை அனுப்புவார்கள். அவர் அவற்றையும் சேர்த்து வைத்திருந்தார். ஒரு முறை இவரின் கடிதம் வீகேஎஸ் என்ற ஆள்பிடிக் கம்பெனிக்குப் போய் அவர்கள் இவரைக் கடத்தாத குறை மட்டும்தான். அதேபோல் கொஞ்சம் சேர்டிபிக்கேடுகள்; இலங்கை போலீஸ் ஐசி, ஆர்மி ஐசி, நேவி ஐசி, உள்ளூர் பொலிஸ் நிலையப் பதிவு அவரிடம் கைக்காவலாக இருந்தன.

அதையும் விட மனிதர் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற சில சான்றிதழ்களையும் வைத்திருந்தார். பொலிஸ் நிலையத்தில் அவர் அடையாள அட்டைகள் தொடங்கி பல்வேறு ஆவணங்களையும் காண்பிக்கும் வேளையில் தன் விளையாட்டுச் சான்றிதழ்களையும் காண்பிப்பார். முக்கியமாக, அந்த ஃபைலின் ஓரத்தில் கங்காருப் பை அடுக்கில் தன் வயதுவாரிப் படங்களையும் அவர் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

பழுப்பு, கறுப்பு – வெள்ளை, கொஞ்சம் சாயம் போன கலர் படங்கள். ஒரு ஐந்தாறு வகைப் படங்கள். அவற்றின் பின்புறங்களில் திகதிகள் காலக்கிரமமாக எழுதப்பட்டிருக்கும். இலகுவாகச் சொன்னால் அவர் ஒரு தகவல் மய்யம். அவரிடம் ‘பன்னிரெண்டாம் தேதி அறுபத்தேழாம் ஆண்டு என்ன நடந்தது?’ என்று கேட்டால், ‘சிவராசன் பாம்பு கடிச்சு கண் பொட்டையாகிச் செத்துப் போனான்; இதில ரெண்டு சிவராசன்கள் இருக்கிறாங்கள். ஒருவன் ஊரிலேயே செத்துப் போனான். இன்னொருத்தன் நாயில அடிபட்டு வண்டியேறிச் செத்தான். உதில நீ ஆரைக் கேக்கிறாய்’ என அதிர்ச்சியளிக்கக்கூடிய மனிதர்.

விசாரணை: 5 : பெங்களூர் சிவா இண்டஸ்ரியல்

மூன்று நாட்கள் கழித்து முத்துக்குமார் இறந்தபோது பனகல் பார்க் மூலையில் ஏதோவொரு அமைப்புக்காரர்களோடு நின்று கத்திக்கொண்டிருந்தாகச் சொன்னார். சில பதாகைகள் தயார் செய்யப்பட்டதாம். அமைப்பு மூத்த உறுப்பினர்கள் பாடல்களைப் பாடினார்களாம்; கோஷங்கள் எழுப்பப்பட்டதாம். ‘‘கூட்டம் ஒன்றுபோல் எழுந்து கூவியது. போர் முழக்கம்; நாங்கள் கூவிக்கொண்டிருந்தோம்.

முற்றிலுமாகப் போர் முடிந்துபோனது; சனம் இராணுவத்திடம் தஞ்சமடைந்திருந்தார்கள். பாரிய படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ’வெளியேறு… வெளியேறு… இந்தியாவே வெளியேறு’ ’புலிகளைக் கொல்வதை நிறுத்து’’‘, தமிழக அரசே மாநில அரசே தமிழ்ஈழ ஆதரவாளர்களைக் கைது செய்வதை நிறுத்து’, ஈழத்தமிழர்கள் மீதான இனவெறிப் போரை நிறுத்து.’’ முழுதாக வீரக்குட்டியார் சொல்லி முடித்தபோது நான் இடியப்பத்துக்கு என்ன கறி என்று யாப்பாணத் றமிழ்ஸ் ஒருவரிடம் படு அக்கறையாக விசாரித்தேன்.

விசாரணை: 6 : திலக் மார்க் ஸி ஸ்கீம்

நான் பொய் சொல்லவில்லை. என் கண்கள் மருட்சியில் இமைக்க மறந்திருந்தன. நம்ப முடிகிறதா? ஆனால் பயமுறுத்தும் பல இரவுகளை அவரோடு ஒடுங்கிய அறையில் கழித்தேன். கோடைகாலங்களில் உணவுண்டு சுருள்கிற பாம்பின் வயிறை ஒத்ததாய் அறை வெப்பமேறியிருக்கும். நான் சாப்பாடு எடுக்கப் போகவில்லை. மூன்றுநாளாகவே அரைபோதையும் அரைப்பட்டினியுமாக பெத்தாய்ச்சிச்சிக் கிழவி வீட்டுக்குப் போகாமலே அறையிலேயே ஒடுங்கினேன். பெத்தாய்ச்சிச்சி அறைக்கே சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தார். ‘‘அங்க வாரதுக்கு உமக்கு என்ன ஐசே, வெளிக்கிட்டு வீட்ட வாறீங்கள் என்ன?’’ நான் என்ன சொல்லப் போகிறேன், கேட்காமலேயே வெளியேறிப் போனார்.

பெத்தாய்ச்சிச்சிக் கிழவி ஆடித் தொங்குகிற திரைச்சீலைகளை தைத்துத் அறையில் தொங்க விட்டிருந்தார். அம்பரல்லாக் காய்களின் நிறத்தில் தூய்மையாக இருந்த திரைச்சீலைகள். அவை அந்தக் கிழமைக்கானது. தேந்தெடுத்துக் கொழுவியிருந்தார். மஞ்சள் வெளிச்சத்தில் தகரங்கள் பளபளக்கும் சமையலறையை அவர் நித்திரைக்குப் பயன்படுத்தினார். அவருக்காக மட்டுமே அந்த அறை உருவாக்கப்பட்டிருக்கும். நாலுக்குப் பத்தடி அறையில் அவர் எப்போதையும் போல சமைத்துத் துவைத்து வாழ்ந்துகொண்டிருந்தார்.

பெத்தாய்ச்சிச்சிக் கிழவி பாக்கோவனுக்கு வீடுமாறிப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரே வீட்டில் அவர் பல காலம் வாழ்ந்தார் என்பது எனக்கு அப்போது பெரிய ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருந்தது; ஒரு வருடத்தில் 14 வீடுகள் மாறினேன். ஏறத்தாழ என்னிடமிருந்த வீட்டு முன்பணத்தில் பாதியை வீட்டு உரிமையாளர்களிடம் கொஞ்சம்கொஞ்சமாக இழந்திருந்தேன். பெத்தாய்ச்சிச்சி இங்கே வந்து 17 வருடங்கள் ஆகியிருந்தன. நீண்ட குன்றுகளையும் பவளம் நிறைந்த கடற்கரைகளையும் தாண்டி அவர் வந்து சேர்ந்திருந்தார்.

‘‘தனியவா வந்தனீங்கள்?‘‘

அவரின் புன்னகையான முகம் ஒருமுறை ஒளிர்ந்து அடங்கியது.
‘‘இல்லை.’’

விசாரணை: 7 : சௌவக், ராய்பூர்

அறைக்குள் வேண்டா விருந்தாளியாய் ஒரு பெண் நுழைந்தாள். அரை மண்டைத் தலை அவளுக்கு நரையேறிக் கிடந்தது. பார்வைக்கு பெத்தாய்ச்சிச்சியைப் போலவும் இருந்தாள். அது பிரமையாகவும் இருக்கலாம். திடீரென்று கண்களை மூடித் திறந்தபோது என்னைக் கடந்து பெத்தாய்ச்சிச்சிக் கிழவியை அவள் நெருங்கியிருந்தாள். தேன் நிறப் பெண்ணின் கண்கள் பெத்தாய்ச்சிச்சியிடம் கடுமையாக நடந்துகொண்டன. பெத்தாய்ச்சிச்சியை அவர் மிரட்டினாள். பெத்தாய்ச்சி தன் எதிரிலிருந்த மேஜையில் தட்டி சப்தம் எழுப்பிக் கூவினார். அவள் சோர்வுறாமல் பெத்தாய்ச்சிவோடு மல்லுக் கட்டினாள். திட்டியபடி கதவை இழுத்து அறைந்து வெளியேறினாள். பெத்தாய்ச்சி அதிர்ச்சியுற்று அவள் வெளியேறியதை வரவேற்பதைப்போல் கண்களைச் சிமிட்டினார்.

‘அவள் என்னுடைய மகள்’

முகத்தை அவர் தொங்க விட்டிருந்தார். என்னை அழைப்பதற்கும் சிரிப்பதற்கும் பலமுறை முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்ப்பதற்கோ அவரை நோக்கித் திரும்புவதற்கு தைரியமற்று அமர்ந்திருந்தேன்.

அறையில் பெத்தாய்ச்சிவும் நானும் தனித்திருந்தோம். பெத்தாய்ச்சி பூக்கும் மலரைப் பார்க்கக் காத்திருக்கும் சிறுமியாக ஏக்கமடைந்திருந்தார். நான் குளத்தின் கரையில் அமர்ந்திருந்து பார்க்கும் செங்காந்தள் நிறக் கண்களைக் கொண்ட சிறுவனாயிருந்தேன்.

இரு சிறுவர்களுக்கும் பேசிக்கொள்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. “அன்றிரவு இவளின் அப்பா விவாகரத்தினை உறுதி செய்வதற்கான ஆவணங்களுடன் வந்திருந்தான். என்னைப் போலவே அவன் முகமும் இறுக்கமடைந்து கிடந்தது. அவனிடம் எதைப் பேசினாலும் எரிந்து விழுவதற்குத் தயாரானவனாயிருந்தான். அன்றைக்கு அவன் கொஞ்சம் வெளுத்தும்தான் போயிருந்தான்.’’

பெத்தாய்ச்சிவை அவன் ஏச ஆரம்பித்தான். ‘‘உன் அகதி ஆவணங்களைத் தாரை வார்த்துவிட்டு இரவுகளில் வருகிறாய். ஒருநாள் இரவு திடீரென திருடியைப்போல் நுழைந்தாய். அன்று என்ன கோலத்தில் இருந்தாயென உனக்கு நினைவில் இருக்கிறதா?’’ மெல்லிய ஆடைகளை அன்று அவன் அணிந்திருந்தான்.

அவரை அவன் உருக்கினான். பெத்தாய்ச்சிவின் கண்கள் நிறைந்து கிடந்தன. ஆவேசமாய் கையிலிருந்த ஆவணங்களைப் பெத்தாய்ச்சிமீது எறிந்தான். பெத்தாய்ச்சி அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். அவன் செய்கைகள் அவருக்கு பயத்தையே உருவாக்கியிருந்தன.

‘‘அன்றிரவு அவனைக் கொல்வதென தீர்மானித்தேன். உண்மையில் என்றைக்கும்விட அன்றைக்கு அவன் பேசியவை தெளிவாய் இருந்தன. அவன் உயிர்ப்பாய் இருந்தான், ஒரு நீல மலரைப்போல. அவன் அவசரத்தில் அச்சம் இருப்பதாய்த் தென்படவில்லை. ஆச்சர்ய வளைவுடன் முதுகோடு ஒட்டி, செவிமடல் ரோமங்கள் சிலிர்க்கும் ஒரு கணம் அருகிலேயே நின்றிருந்தான். அவனுக்குப் பூராய்ந்து பார்க்கிற குணம் உண்டு.’’

விசாரணை: 8 : ராஜ்பவன் மூன்றாம் மாடி

அவன் பரபரப்பாய் இயங்கும் நாட்கள், வேதனையோடு ஒரு புன்னகையில் அல்லது பெரிய கத்தலோடு பெத்தாய்ச்சிஅவனைக் கடந்துகொண்டிருந்தார். ஆடைகளை எறிந்தான்; கிழித்து நடமாட்டமற்ற தெருக்களில் வீசினான். கட்டிலில் பெத்தாய்ச்சி ஆடைகளைக் காணவில்லை; இவன்தான் கிழித்தான் என்பதை அறிந்தேயிருந்தார்.

பெத்தாய்ச்சிவின் காதுகளில் அவன் கிசுகிசுப்பான். மிக நெடிய நீண்ட மௌனமான இரைச்சலற்ற இரவுகளில் அவர்கள் இருவரும் கூடினார்கள். பெத்தாய்ச்சி பரந்த மூச்சோடு வெளியேறிப் போவார். ஆனாலும் மீண்டும்மீண்டும் அவனை அவர் சீண்டிப் பார்க்கவே விரும்பினார். தொடர்ந்து அவனைப் புணர்ச்சிக்கு வற்புறுத்தினார். அவன் சோர்ந்து விழுகிற நேரங்களில் முகத்தைக் கோணலாக்கி அவனை அவமானமடையச் செய்தார்.
‘‘அந்த நாள் எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கிறது. அவன் ஆடைகளைக் களைந்து கழிப்பறை சென்று வெளியேறிய ஒரு தருணத்தில் அவனை இல்லாமலாக்குவதென முடிவு செய்தேன். கழிப்பறையிலிருந்து வெளியே வந்து தன் ஆடைகளைப் போட்டுக்கொண்டான். நாற்சதுரமான மெல்லிய என் கண்ணாடி முன்நின்றான். மூன்றாம்தரமான பளிங்குகளாலும் அரிக்கப்பட்ட சிப்பிகளாலும் அமைக்கப்பட்டிருந்தது அந்தக் கண்ணாடி. நான் அவனைப் பார்த்துச் சிரிப்பதற்கு தயாரித்துக்கொண்டிருந்தேன். தொலைவிலிருந்தே கத்தினான். மூன்று தெருக்களைத் தாண்டியும் அந்தக் குரல் அன்றிரவு ஒலித்தது மகன். அவன் கத்தினான். ‘வேசையாடப் போ.’’
றெக்கைகள் அடிபட கழுத்தறுந்த தவிப்புடன் வெளியேறினேன்.

விசாரணை: 9 : ACB போபால் சதுக்கம்

அவன் உடல் பிரேதக்குழியில் வீழ்த்தப்பட்டபோது எந்த வருத்தமுமின்றி நுழைந்தேன். காவலதிகாரி நல்லவனாக இருந்தான். என்னிடம் சமத்தான ஒரு தொகையை பெற்றுக்கொண்டான். அவனிடம் வழக்குக்கான பத்திரம் எப்போதும் கூடவே இருந்தது. புழுத்த அவன் உடல் விரைவிலேயே அழிந்தது. அவனை சந்திரன் நாயரின் லாட்ஜில் ஒழிப்பது என்ற எனது எண்ணம் நிறைவேறாமலேயே அழிந்துபோனான். ‘சமாதானத்தின் விடுதலை’ என உச்சரித்து அந்தச் சவத்தின் படுகுழியை மூடினார்கள்.

பருவங்கள் மாறிக்கொண்டிருந்தன, கூதிர்காலத்தின் இரவொன்றில் அந்தச் சங்கடங்களை எல்லாம் மறந்திருந்தேன் மகன்.’’

நான் மறுத்தபோது அவன் எந்தச் சிந்தனையுமின்றி நிற்பவனைப்போல, தன் கையிலிருந்து அந்த மொபைலை தூக்கிப் பிடித்து விளையாடினான்; அல்லது அதை அவன் விளையாட்டாக விளையாடினான். ஒற்றை, இரட்டை எண்கள் பற்றிய நம்பிக்கை ஒன்று அவனிடம் இருந்தது. அது சுவாரசியமான எண் விளையாட்டு; அவனைப் பரிசோதித்துக் கொள்வதற்காகவும் சாரல் மழையோ பேருந்துகள் வருகிற நேரத்தைக் கணிப்பதற்காகவும் அவன் முயல்வான். மகன் இந்த நாட்டிலிருந்து, கனம்பொருந்திய மூன்றாம் உலக நாட்டிலிருந்து நான் வெளியேற்றப்படுவேனாம்; அந்த நேரங்களிலெல்லாம் அவனது கண்களிலும் எச்சில் தெறித்த உதடுகளிலும் வன்மம் பிசாசாய் அமரும்.

இறுக்கம் குலையாமல் என்னைக் கூராய்வான். அந்த இறுக்கத்தை இன்றைக்கு வரையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை மகன். அவன் கண்களில் வெண்மைபோல ஏதோவொன்று அடர்ந்து பரவும். அவன் உருவம் முன்னும்பின்னுமாய் நகர்ந்து கன்னங்கள் உப்பியும் உள்நோக்கி நடுங்குவதைப் போலவும் மாறும். அவனைத் தள்ளினேன்.

“உனக்குப் பைத்தியமா? எங்கே ஓடுகிறாய்?”.

‘‘அவன் பதற்றத்துடன் அன்றிரவு முழுக்க முழித்திருந்திருப்பான். அவனுடன் இரவும் கூடவே விழித்துக்கொண்டிருந்திருக்கும். அப்போது முழுமையாக அறையை விட்டு நீங்கியிருந்தேன்.’’
பெத்தாய்ச்சி சொல்லி முடித்துத் தன் தலையை சிலுப்பிக்கொண்டு மெதுவாக தன் இருக்கையைப் பிடித்தபடி எழுந்து நின்றார். கால்கள் நடுங்க கடந்துபோனார். ”உண்மையில் இப்போது நேரம் என்ன?.”

’இரவில் மணிக்கு அவசியம் இருக்கிறது மகன். ’

நான் புரியாது அந்தக் குடிகாரக் கிழவியை மருண்டு பார்த்தேன்.
கண்களைச் சிமிட்டிச் சிரித்து, மீண்டும் இரண்டு குவளைகளிலும் ஊற்றினார். மூன்றாவது குவளையிலும் அவர் ஊற்றினார்.

சுழன்றுகொண்டிருந்தார். சில வேளைகளில் திடீர்திடீரென்று அறைக்குள் நுழைந்தார். “நான் இதை மறந்துவிட்டேன்” எனச் சிரித்தபடி அறைக் கதைவை அடிக்கடி திறந்தும் மூடிக்கொண்டும் இருந்தார். அறை நீலமாய் ஆகியிருந்தது. தூசு படிந்திருந்த மேசை, நீல ஒளியில் புராதனப் பேரெழில் சிற்பமாய் ஒளிர்ந்தது. அதனுடன் கூடவே பொருத்தமான இருக்கையொன்றும்.

பெத்தாய்ச்சி அதுக்கும் ஒரு கதை சொல்லாமலிருக்க வேண்டும். ‘‘தோடம் பழத்தைப் பிழிந்துகொள்” அவர் எதைஎதையோ அலுமாரிக்கு அடியிலும் கதிரைக்குக் கீழும் கிளறிக்கொண்டிருந்தார். அகப்படவில்லையென்ற புன்னகை. அவர் ப்லோவா கைக்கடிகாரத்தை அவசரஅவசரமாக அணிந்துகொண்டு அருகே வந்தார்.

உடலுக்கு மேலே தலை கனத்தது. என் தலை பெரிய பொதியாக ஆகியிருந்தது.

விசாரணை: 10 : ஹஸார்டகன் தெரு, கைவிடப்பட்ட மாளிகை.

நகரம் எப்போதுமே முழிப்பாய்த்தான் இருக்கிறது. பரபரப்பாக மின்னிமறைகின்றன வாகன வெளிச்சம் பட்டு மனிதர்களின் கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. நகரத்துள் அச்சத்துடன் அலைகிற சில மனிதர்கள் மட்டும் கொக்குகளாய் நின்று கிடந்தார்கள். நகரத்தின் ஓட்டத்திற்குத் தேவையில்லாத லும்பன்கள் மட்டுமே அந்த நகரத்தை திரும்பித் திரும்பி ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

“இவையெல்லாம் தேவையா?”

“ஐயா, விசாரனை என்ற் வந்துவிட்டால் அனைத்தையும் தெரிவிக்க வேண்டுமென்றூம் அப்படித் தெரிவித்தால்தான் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அந்தப் பெத்தாய்ச்சிக் கிழவியும் எதற்கும் உதவாத அந்த அசட்டுக் கிழவ்னும் என்னைத் தெருவில் அந்தரிக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். நீங்கள்தான் இப்போது எனது ஆபத்தாந்தவர். நான் கூறுகிறேன் கேளுங்கள்.”
கறுப்பிலிருந்து பழுப்பு நிறமடைந்துவிட்ட தன் முடிகளைக் குறித்து சில குறைபாடுகள் பெத்தாய்ச்சியிடம் எப்போதுமிருக்கும். ஆனால் தன் ஆடைகள் குறித்துத்தான் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டிருந்தார்.

தன்னைப் பற்றிய எவ்விதமான சந்தேகங்களும் மற்றையவர்களுக்கு (குண்டுப் பெண்ணின் குடியிருப்பில் பெத்தாய்ச்சியோடு சேர்த்து 13பெண்கள் இருந்தார்கள். அவர்கள் நகரச் சதுக்கத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்களாய் இருந்தார்கள்.) ஏற்பட்டு விடக்கூடாதென்பதில் படு அக்கறையுடனிருந்தார். அதற்கு காரணங்கள் சிலது இருந்தன அவரிடம்.

’நான் இங்கேயே இருந்துவிடப் போகிறேன். போலிச் சான்றிதழ்களை உருவாக்கிவிடலாம். என்ன சொல்கிறாய்?’ எனக் கண்களைப் பெத்தாய்ச்சி சிமிட்டியபோதும் எனக்கு எதுவும் சொல்வதற்கிருக்கவில்லை. அந்த இரவில் தேவையில்லாத விருந்தாளியைப்போல் அங்கு அமர்ந்திருந்தேன்.

இருவருக்குமாகச் சேர்த்து பெத்தாய்ச்சிச்சி தேநீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். ஜன்னல்களைத் தாண்டி எப்போதாவது ஒரு சிறு வெளிச்சம் கடந்து போகும். அதைத் தவிர மாநகரத்தில் இதைப் போன்றதொரு அபூர்வமான தொல்லைகள் அற்ற இயல்பான வீதிகள் அரிது. இரவுகளில் போக்கிரிகளைத் அனாதரவானவர்களை, உதிரிகளைத் தேடித்திரிகிற காவலர்களின் வாகனத்தை எங்கள் குடியிறுப்புப் பகுதியின் முன் நிறுத்தியிருப்பார்கள். அவலமான சிரிப்புகள், சன்னதம் வந்தாடும் சில எதிர்ப்புக் குரல்கள், பச்சாதாபத்துடன் ஏறிஇறங்கும் குரல்கள் என்று நிச்சாமத்தில் மட்டும் அந்தத் தெரு குரல்களின் தெருவாகிவிடும் மாயம் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கும். இரவுகளில் ஜன்னல்களில் சிவப்பு நீல விளக்கு மின்னும்போது பெத்தாய்ச்சி முற்றாக, ஏறத்தாழ நம்மை விட்டால் அவருக்கு வேறு வழியே இல்லை என்பதுபோல கழிவிரக்கத்தில் மூடுண்டுபோவார்.

அவரின் முகத்திலும் கைகால்களிலும் இருக்கும் பூனை மயிர்கள் குத்தி சிலிர்த்து அவரின் உடல் ஒருமுறை துள்ளலெடுத்து அடங்கும். அந்நேரங்களிலெல்லாம் குடியிருப்புப் பெண்கள் யாராவது அருகே வந்தால் அவரின் உடல் கூச்சமெடுத்து நடுங்க ஆரம்பிக்கும். பதைபதைப்பில் அவர் நீர்முட்டியைத் தேடுவார். அந்தப் பகுதி கட்ட்டப்பட்டதிலிருந்தே மாற்றப்படாத, ஒரு இடத்தைவிட்டு அகற்றப்படாத அதே நீர்முட்டியை அவர் தேடிக்கொண்டிருப்பார். அவரின் மூளை ஒரேடியாக எல்லாவற்றையும் மறந்துபோயிருக்கும். அவரையும் சேர்த்து, உண்மையில். இது மிகையில்லை.

வண்டி இரவுகளில் அங்கு நிற்கும்போது அவரது வாய் முணுமுணுக்கும். அந்த உரையாடலை வேறு ஒன்றின் மூலம் ஆரம்பித்தாலும் அது இறுதியில் காவலர்களிடம் வந்து முடிந்தன. ஆனால் அடர்மழை பொழிகிற நேரங்கள் அவருக்கு மிகுந்த இலகுவான தருணங்கள் போல் தொடர்ந்து அமைந்தன. அப்போது அவர் என்றைக்கும் இருப்பதைப்போலன்றிச் சற்றும் பதற்றமும் இல்லாமல் இருப்பதையும் நீர்க்குடத்தைத் தேடாமலிருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

வெளிப்பதிவு அகதிப் பெண்கள் பலரும் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்கள் வெளிநாடுகளிற்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டு இருந்தார்கள்; அல்லது அவர்களுக்கு பெருமளவில் மேற்கிலிருந்தும் சிறிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் பணம் வந்துகொண்டிருந்தது. பின்பொரு காலத்தில் பிரபலக் குற்றவாளியின் இடமாக அந்தப் பகுதி முத்திரை குத்தப்பட இருக்கிறது.

விசாரணை: 11 : EVK சம்பத் வீதி, தில்லைராஜன்.

நகரின் அதளபாதாள வீதிகளில் அலைந்துகொண்டிருந்தேன். மம்மல் பொழுதுகளில் அந்தத் தெருவில் பாங்கொலி கேட்கும்; ஒரு சூரிய அஸ்தமனத்தை வரவேற்பதைப்போல். மிக ஆழமான அந்த முகத்தில் இரு கண்கள் உறைந்து போயிருக்க, பள்ளியிலிருந்து குல்லாயைக் கழற்றிச் சட்டையில் செருகியபடி அஹமத் அருகில் வந்தான்.

‘‘இன்னிக்கு நா சொல்லி வுட்றே… நீ போவியா?”

முதலில் அவனுக்கு வலியுறுத்த விரும்பினேன். நேசமான அஹமத் நான் வேலைக்குச் செல்வதில்லை; குறிப்பாக இந்த நாசமத்த நகரத்தைவிட்டு வெளியேற வேண்டும். தப்பித்து வெளியேற வேண்டும். ஒரு குளிர் அங்கியோடு மட்டும் மேல் நகரத் தெருக்களில் அலைந்தாலும் பரவாயில்லை. இங்கு இருக்கவே நான் விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது லூசன்போல் என்னை பணிக்குத் திரும்ப அனுப்புவதில் குறியாக இருக்கிறான்.

விசாரணை: 12 : பண்ட்ரா கிழக்கு இல்லம்

பெத்தாய்ச்சியிடம் நான் உன்னைப்போல் இங்கே தங்கிக்கொண்டிருக்கப்போவதில்லை. நான் இப்போதே தொலிந்துபோவேன் என்று அவரிடம் உருக்கமான குரலில் தெரிவித்துக்கொண்டிருந்தேன். அவர் என் தலையில் சிநேகமாகக் கைகளை வைத்துத் தடவிக்கொடுத்தார். ஏறத்தாழ அந்தத் தொடுதலில் நான் ஒரு குட்டிநாயாக மாறிப்போயிருந்தேன். பெத்தாய்ச்சியின் வசியமான விரல்கள் என்னிடம் சில கதைகளைச் சொல்ல ஆரம்பித்தன.

”குற்றம் நடக்கத் தயாரான மஞ்சள் ஒளிபொருந்திய நாளை எண்ணிப் பார்க்கிறேன். அவன் ஒன்றும் பெரிதாகக் கத்திக் கொண்டிருக்கவில்லை. மிக ஒடுக்கமான அந்தப் பழைய பொருட்கள் வைக்கக்கூடிய அறையில் ஒளிந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்தபோது நிதானத்தை இழந்தேன். அவன் உடலை அப்போது பார்த்ததைப்போல் என்றைக்கும் பார்த்ததாக நினைவுகளிலில்லை. ஆனால் அவனின் உடலைச் சுற்றி கதகதப்பான ஒரு சுகந்தம் பரவியிருந்தது. அழுக்கேறிய கண்ணீர் தாண்டியும் அந்தச் சுகந்தம் வியாபிக்கத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்தத் துயரார்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

நாங்கள் இருவர் இருந்த அறையில் நான் மட்டுமே தனித்திருந்ததைப்போல், என் கால்களின் கீழ் நிலம் வழுக்கிக் கொண்டிருந்தது. தலையும் உடலும் மாயக் கைகள் தள்ளி விளையாடுவதைப்போல் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தன. ஆண்டுக் கணக்கில் தன்னிலையற்று நிற்பதைப்போல் என்னைச் சுற்றி ஒரு அவமான உணர்வும் கெக்கெரிப்புச் சப்தங்களும் எழுந்தன. இப்போது நான் என்றென்றைக்குமாகச் சரிந்தேன். அப்போது எனக்கான துயரமும் கண்ணீரும் சேர்ந்த அந்த அதளபாதாளமும் ஆவெனத் திறந்துகொண்டது.”

வீட்டிற்குத் திரும்பினேன். துயரமும் கருணையும் நிரம்பிய பெத்தாய்ச்சிவின் முகம். வஞ்சிப்பின் கோடுகளும் அதில் பரவிக் கிடந்தன. மெல்லிய விசும்பல் அவரிடம் அடிக்கடி வெளியேறும். ஒரு நடு இரவு; அன்று கடுமையான மழை. மஞ்சள் நிரம்பிய எங்கள் அறை வெறிச்சோடிக் கிடந்தது. பகல் புழுக்கம்; அறையை நிறைத்துக் கிடந்தது. கழுத்தில் வடிந்த வியர்வையுடன் எழுந்து வெறித்தேன். மின்சாரம் போயிருந்தது. மழையே பொழிந்தாலும் எங்கள் அறை குளிராது. உள்ளிருக்கும் சூடு வெளியே போகாது; வெளியிலிருந்தும் எதுவும் வராது.

விசாரணை: 13 : CGO விருந்தினர் மாளிகை பின்புறம்

துக்ககரமான இரவில் பாடும் பெண் அவள் பெத்தாய்ச்சி இல்லை. அந்தப் பெண் குரல் மூன்று கடல்களின் தூரத்தில் இருந்து சன்னமாய் வழிவதைப்போல் இருட்டில் கரையும். அவள் அந்த ராவைப் பழிப்பாள். பாரதூரமானவை இரவுகள் எனச் சாபமிடுவாள். உழைவை ஏற்படுத்தும் பாடலில் அவள் கூறுவாள்: என் மகளே, உன் சிறிய விரல்களைப் பற்றி இழுத்துச் சென்றேன். நீ எண்ணியிருக்கமாட்டாய். நான் உன்னை இல்லாமலாக்குவேன் என்று. ஆனாலும் கடவுளின் சாட்சியாய் நிகழ்ந்தது அதுதான். உடைந்துபோன இதயத்தோடு நான் உன்னைத் தேடினேன். நீ என்றென்றைக்குமாக என்னிடம் இருந்து விலகிப் போவாய் என நான் எண்ணியதே இல்லை மகளே.’’

விசாரணை: 14 : SC – II, A பிரிவு இல்லம்

வீரக்குட்டியாரின் யாரோ கூறிய கதைகளையும் பெத்தாய்ச்சி என்னிடம் மட்டும் கூறிய கதைகளையும் மட்டுமே அதுவரை அறிந்திருந்த எனக்கு வீரக்குட்டியார் சொன்ன பெத்தாய்ச்சியின் கதை ஆர்வத்தை தூண்டியது. மேலும் அவரின் வாயையே நான் பார்த்துக் கிடந்தேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”அந்த நாளில் அந்த ஊரே படபத்திரகாளிக் கோவிலின் முன்பு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தது. பதினெட்டிலிருந்து இருபது வயதுக்காரர்கள் தனி லைனில வாங்க என்றபோது தக்காளியரோட மூத்த மகன் விசர் முருகன் ‘89ஆம் ஆண்டு பிறந்தவங்க எங்க நிக்கோனும்’, என்று கடைக்காரியைப் பார்த்து ஒரு இளிப்பு இளித்தான். மூன்றாவது நிமிடம் பனை வடலிகளுக்கிடையில் அவன் செருகப்பட்டுக் கிடந்தான்.

மற்றையவர்கள் எந்த மூச்சுப் பேச்சுமின்றி லைனிலேயே புதைந்து போயிருந்தார்கள். ஊரின் ஏழு பிள்ளைக்காரி வீட்டில் பெத்தாய்ச்சி ஏழாவது பிள்ளை. அவரின் தாய் நான்கு பிள்ளைகளைப் பறி கொடுத்திருந்தார். பெத்தாய்ச்சி கடைக்குட்டியென்று இருந்தார். தெத்திப்பற்கள் தெரிய அவர் சிரித்தால் தாய்க் கிழவிக்கு கனிஞ்சு நெஞ்செல்லாம் பூரிச்சுப் போன மாதிரி இருக்கும்.

பெத்தாய்ச்சிச்சிட்ட இருந்து அவள் காசக் களவெடுத்துப் பிள்ளையளோட சேர்ந்து ஐஸ்பழம் வேண்டிக் குடித்துத் திரிந்தாள்.
தாய்க்கும் பிள்ளையெண்டால் ஒரே கொண்டாட்டம். பிள்ளைக்கு ஐஸ்கிரீமும் சொக்லேட்டும் என்று பாத்துப் பாத்துச் செய்தாள். பிள்ளையின் முடி நன்றாகக் கறுப்பாக வளர வேண்டுமென்று ஒலிவொயிலையும் தேங்காயெண்ணெயையும் ஒன்றாகக் கலந்து பிள்ளையின் தலையில் வைத்துவிடுவாள்.

தாய்க்கிழவிக்கு பெருசா யாரோடயும் தொடர்பில்ல சொந்தக் காரங்கள் என்டு நானும் யாரையும் கேள்விப்படேல. ஆனால் கிழவி ஆரோ ஒரு சின்னப் பெடியோட தொடர்பாம். தாயும் மோளும் பெருசா கதை வார்த்தைகளில்ல. அதுவும் அங்க ஊர்ல வச்சாம். அவன் ஏதோ சிப்பித்திடல் பொடியனாம்.”

இப்போது என் மண்டைக்குள் சிப்பித்திடல் (ஊருக்கு ஒதுக்குப் புறமான தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி) என்ற வார்த்தை கணத்தே கேட்டது.

வீரக்குட்டியார் கதைக்கிறதெல்லாம் ‘ நானும் மனுசன் நீயும் மனுசன் எல்லாரும் மனுசன்தானேயடா?’’. லோ கதையள் கதைக்கிறதெண்டால் இவர அடிக்கிறதுக்கும் ஆளில்லை. விசம். இனிமேல் பெத்தாய்ச்சியைப் பற்றி இந்த வெங்காய மனிசனிடம் கேட்கக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன்.

ரிச்சி ஸ்ரீட்ஸ் தாண்டிப் போயிருந்தேன். அறைக்கு வந்தபோது இருட்டியிருந்தது. முதலில் அறை மாற வேண்டும்; இந்தக் கதைகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்தே கிட்டத்தட்ட ஆறேழு தடவைகள் மாற வேண்டும், மாற வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.

விசாரணை: 15 : சீமாட்வார், டெஹ்ரான் சதுக்கம்

பெத்தாய்ச்சிச்சியைப் பற்றி அறிய முயற்சி செய்து ஏறத்தாழ அகழ்வராய்ச்சியின் சாகசத் திகீர் முடிவுகளைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் கிழவி கதை சுவாரசியம் அதிகமாகும் பாம்பு வளையாக மாறிவிட்டிருந்தது.

விசாரணை: 16 : ஹபூர் சிங்கி, மூன்றாம் இலக்க வீடு

வீரக்குட்டி சாமானை என்ன மாதிரி சோதிக்கலாம் என யோசித்தேன். இறுதியில் ரூமில் இரண்டு பெரிய ஸ்பீக்கர் பெட்டிகளைப் பொருத்தினேன். அது ஓரளவுக்கு வேலை செய்யவே செய்தன. அந்த அறையில் சோகமான பாடல்களை ஒலிக்க விட்டேன்; நான் நினைத்ததே நடந்தது. இறுதியில் பெத்தாய்ச்சிக் கிழவி சொன்னதால் அந்த ஸ்பீக்கர்களைக் கடன் வாங்கியவனிடமே திருப்பிக் கொடுத்தேன்.

விசாரணை: 17: ஹபூர் சிங்கி, மூன்றாம் இலக்க வீடு

எலிகள் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தன. அடுத்த நாள் அதிகாலையில் எலிப் பீதியில் அச்சடிக்கப்பட்டிருந்தன பத்திரிகைகள். ‘எலிகள் அட்டகாசம்-பொதுமக்கள் பீதி‘ திகில் தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது. நகர் முழுக்க பாண்டையான வாசனை எழத் தொடங்கியிருந்தது.

இரவுகள் குளிர்ந்து ஒடுங்கிக் கிடந்தன. பரபரத்துக் கிடந்த நகரம் சிவந்தும் மஞ்சளும் நீலமும் பாரித்து ஒரு விடியாத விநோதமான அமைதியில் துவண்டு கிடந்தது. செய்திப் பேப்பர் விற்கும் ரோஸ் கடைக்காரி மட்டும் அன்றைக்குக் கடையைத் திறந்து வைத்திருந்தாள். அவளும் சிறிது நேரத்தில் கடையை அடைக்கப் போவதாகவும் நகரமே அழியப் போகிறது எனவும் கைகளை ஆட்டி ஆட்டி ஒரு ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சிகரட்டுகளும் ஒரு தண்ணீர் போத்தலும் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்தேன். ஊரே ஓடித்திரிகிறது. ஸ்பீக்கர்ப் பெட்டி உதவியால் வெறிக்குட்டியைத் துரத்தியது துரத்தியதுதான். ஆள் இன்று வரைக்கும் இல்லை.

கட்டாயம் கிழவியைப் போய்ப் பார்க்கத்தான் வேண்டும். ஏற்கனவே கிழவிக்கும் எலிக்கும் ஏழாம் பொருத்தம். பெத்தாய்ச்சிச்சி குசினிப் பைப் அடைத்துவிட்டதென்று அதற்குள் கையைவிட உள் சிக்கிக் கிடந்த எலி ஏதோ பெரிய விசக்கிருமிதான் தன்னைக் கொல்லப் போகுதென்டு நினைச்சு ரெண்டு முன்னங்கையாலையும் பிடிச்சு கொய்யாப்பழத்த கடிச்சிப் பிய்ச்சு இழுக்கிற மாதிரி கொரண்டி இழுத்துவிட்டது.

கிழவி நப்பி; ஆசுப்பத்திரிக்கு போனால் செலவெண்டு இங்கயிருந்து நடந்துபோய் எம்ஜிஆர். ஆசுப்பத்திரிக்கு போயிட்டு வந்த கதையை கிழவியே என்னிடம் ஒருநாள் சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை அவரிடம் வீரக்குட்டியார் பற்றிப் பேச்செடுத்தபோது ‘‘கேட்டிக்கம்பு பிய்யும் ஐசே உமக்கு. அந்தத் தேவாங்கு பற்றி நீர் என்னட்ட ஒண்டும் சொல்லாதயும். விசரன்…’’ என்று புறுபுறுத்தார்.

யாரைத் திட்டுகிறாரெனத் தெரியாமல் முழித்தது மட்டும்தான் மிச்சம்.

நகரில் எலிகள் ஒடுக்கப்பட்ட பிறகு நகரம் சற்றுப் பரபரப்போடு இயக்க ஆரம்பித்திருந்தது. அமைச்சர்மார்கள் மக்கள் கலங்க வேண்டாம்; எலிகள் மட்டுமல்ல கரப்பான்களையும் ஒழிப்பதற்கான டொனிக் ஒன்றும் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அதை மனிதர்கள் குடித்தாலே போதுமான கரப்பான்கள் நீங்கள் இருக்கும் பக்கமே நுழையாது என மாறிமாறிச் சேனல்களில் கூவிக் கொண்டிருந்தனர்.

விசாரணை: 18 : நுங்கம்பாக்கம், ராஜ்பவன்

தொப்பிகளையும் தோல்பொருட்களையும் மட்டும் கடிக்கும் எலி குறித்த குறிப்புகளை லிட்டன் எழுதியுள்ளார். 1878இன் லிட்டனின் ‘28நூற்றாண்டுக் கப்பல் பயணக் குறிப்பு’களில் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை திகதி வாரியாக குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. லிட்டனின் தொப்பியை கடித்த எலியைக் குறித்து அவர் புகார்கூட அளித்திருக்கிறார். தொப்பியை ஒழித்த எலியை ஒழிப்பவர்களுக்கு கம்பனி அரசிலேயே மூன்று தலைமுறைப் பணி உறுதி செய்யப்படும் எனவும் தந்தி அடித்தார். அதன்படி பிரிக்கப்படாத மதுரை ஜில்லாவில் தற்போதிய இராமநாபுரத்திலிருந்து சின்னான் என்கிற விசமுறிவு வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மூன்றரை அடி உயரமும் கால்களும் கைகளும் வளைந்த அந்த மனிதர் தோம்ஸன் மன்ஹட்டன் கில்லர் என்ற அந்த எலியைக் கொல்ல பாஷாணத்தைத் தயாரித்தார். கடைசியில் சின்னான் டிஎம்கே (சுருக்கப் பெயர்) வைக் கொன்று தன் ஏழு தலைமுறைக்குமான சாபத்தைத் தேடிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சின்னான் நன்கு கறுத்துத் துண்டும் கோவணமும் மட்டும் கட்டியிருந்த அவர் புளித்த வாடையான ஒரு திரவத்தை அடிக்கடி குடித்துக்கொண்டிருந்ததாகவும் அந்தச் சுரைக்குடுவை மிகுந்த கலை ரசனை மிகுந்ததாகக் காணப்பட்டதாகவும் லிட்டன் குறிப்பிடுகிறார்.

இறுதியில் இறந்த எலியைக் காண்பித்து ‘இதுதான் எம்எச்கே என்று எப்படி நம்புவது?’ எனக் கேட்டு சின்னானைத் துரத்தி விட்டதாகவும் லிட்டன் தெரிவிக்கிறார். மூன்று நாட்கள் எதுவும் உண்ணாமல் இருந்த சின்னான் டிஎம்கேவுக்குத் தயாரித்த நீலப் பாஷானத்தை மென்று தின்று இறந்தார். சுத்தநாகமும் சிறிது காலங்களிலேயே இறந்து போனார். சுத்தநாகம் – சின்னான் தம்பதியினரின் இரு குழுந்தைகள்; ஆணும் பெண்ணும், விஷமுறிவு வைத்தியமும் வரலாற்றின் இருள் மூலைக்குள் கருநாகமெனச் சுருண்டு போனது. இன்றும் ஏழரைக்கோயிலில் சின்னானுக்கு வழிபாடும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மார்கழி மாசமும் நல்ல குளிரான காலையில் சின்னான் இறங்குவதாக ஒரு உபரித் தகவல்: ஏழரைக்கோயில் கல்வெட்டு இந்தியாவின் புகழ்பெற்ற கல்கத்தா அருங்காட்சியகத்தில் இல்லை. அது அடால்ப் ஹிட்லரைப் படையில் இணைத்த மூன்றாம் லுட்வி மன்னனின் நிலச்சுவாந்தார் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று குறிப்புகள்:

வீரக்குட்டியார் : வீரக்குட்டியார் பன்னிரண்டு வருடம் இந்தியாவில் கல்கத்தாவிலும் சென்னையிலுமாக இருந்துவிட்டு தற்போது மனுஸ்தீவு நலன்புரி முகாமில் தொண்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்.

பெத்தாய்ச்சி : பாகிஸ்தான் அரசுக்கு நேரடியாக துப்புக் கொடுத்ததாக இந்துமுன்னணியின் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மூன்று சிம் கார்டுகளும் நோக்கியா உயர்ரகத் தொழிற்நுட்ப செல்போனும், 1200 ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது. கிடைத்த மூன்று சிம்மிலும் இருந்த பதினான்கு நபர்களும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மூன்று சிம்மிலும் பொதுவாகப் பதிக்கப்பட்டிருந்த இருவருக்கு பெத்தாய்ச்சிவோடு நெருங்கிய தொடர்பிருந்திருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் கண்காணிப்பில் சிக்கியுள்ளார்கள்.

‘தினத் தந்தி’ 2014 – செப்டம்பர் – 07

* * * * * * * *

கசப்பு ( சிறுகதை ) / பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி

சாலையில்தான் எத்தனை வாகனங்கள்
இங்கே மின்விசிறி சுழல்கிறது
புத்தக மேலட்டை நடுங்குகிறது
அதைக் கட்டியணைத்து
ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை
என்று தேற்றவேண்டும்போல
பூமி சுழலும் வேகத்தில்
தலை கிறுகிறுத்து, வியர்த்து
பாதங்கள் நழுவி முடிவற்ற
இருள்வெளியில் தள்ளுகிறது
கொஞ்சம் ஞாபகங்கள்
சில கண்ணீர்த் துளிகள்தவிர
விட்டுச்செல்பவை ஏதுமில்லை

ஒடுக்கமான அந்த நீண்ட நடைக்கூடம் ஒவ்வாமையைத் தந்தது. தான் பார்ப்பவை எல்லாம் ஏன் இப்படி இந்த உலகத்தில் இருக்கத் தகாததாகவே இருக்கின்றன என்று அவன் வியந்துகொண்டான். ‘இதோ, முன்னால் காத்திருக்கும் இருவரில் முதல்பெண் படபடப்புடன் இருக்கிறாள். அப்படியே கொப்பளித்துச் சிந்திவிடுபவள் போல. இரண்டாவது பெரியவர் இருக்கையின் மேல்முனையைத் தாண்டி நீண்டிருக்கும் பின்னந்தலை சுவரில் சாய்ந்திருக்க (வழுக்கைத்தலை) சுவரில் எண்ணெய்த்தடம் தெரிகிறது. உள்ளேயிருந்து கசப்பு எதுக்களித்துக்கொண்டு வருகிறது.

வாந்தியாய் எடுத்துவிட்டால் எத்தனை நிம்மதியாய் இருக்கும். ஒவ்வாமை, ஒவ்வாமை, ஒவ்வாமை. மனிதர்களும், மனிதர்களால் அறிவுறுத்தியும், அறிவுறுத்தாமலும் கடைபிடிக்கப்படும் நாகரீகங்கள், அது கண்டுகொள்ளாது விட்டுச்செல்லும் மனித உணர்வுகளை ஸ்மரணையற்றுப் போகச்செய்யும் மொண்ணைத்தனம், இவையெல்லாம் சேர்ந்து வயிற்றில் சுழன்று சுழன்று மேலேற முடியாது தவிக்கும் அந்தக் கசப்பு.

சுப்புராஜ் சொன்னதுபோல இது செய்வினையாக இருக்கும் என்று வி.கே.புரத்திலிருக்கும் ஒரு சாமியாரைப் போய்ப் பார்த்தான்.
பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்துசெல்லும் நீண்ட தெருவில், வடிவ ஒழுங்கில்லாத வீடுகளைக் கடந்து, மீண்டும் இடதுபுறம் திரும்பினால் ஒதுக்குப்புறமாய் வரிசையாய் காம்பவுண்டு வீடுகள். காம்பவுண்டுகளை ஒட்டி சின்ன வாய்க்கால் பன்றியின் நிறத்தில் நிலைத்திருந்தது. சின்ன சிமிண்டுப் படிக்கட்டுகளைத் தாண்டி காம்பவுண்டுக்குள் நுழைய இடமும் வலமுமாய் இரண்டிரண்டு வீடுகள். வலதுபுறம் முதல்வீட்டு வாசலில் காவித்துண்டை மேலே போட்டபடி புருவமத்தியில் குங்குமக் கீற்றுடன் சாமியார் டெஸ்கில் ஒரு நோட்டில் ஏதோ கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தார். சுப்புராஜ் விவரங்கள் சொன்னான். அவர் அவனையே இமைமூடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று இங்கு என்ன செய்கிறோம் என்ற உணர்வும், எதற்குமே அர்த்தமோ நோக்கமோ அற்ற வெயில்போல் மரத்த உணர்வு மேலிட, அப்போது அது மீண்டும் நடந்தது. கசப்பு.

பொங்கிப்பொங்கித் திரண்டு, மாதங்களை நொடியில் தாண்டும் குதிரைபோல மனம் ஓட்டமெடுத்து ஓட, அவ்வேகத்தில் வளரும் மரம்போல கசப்பு வளர்ந்து எல்லாவற்றையும் இருளைப்போல மூடிக்கொள்ள, சாகப்போவதுபோல, பிடியில்லாமல், நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் தத்தளிக்க, இங்கே இருக்கக்கூடாது, எதுவும் சரியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே வாந்தியெடுத்தான். வெறும் எச்சில் மட்டும்தான் வந்தது. ஐந்து நிமிடத்தில் சரியாயிற்று. காற்று வியர்வையில் பட்டு குளிர்ந்தது. மரக்கிளைகள், செடிகள், பளிச்சென்று சிரிக்கும் வெயில் ‘என்ன, இதுக்குப்போயி இத்தனை அமர்க்களமா’ என்று கேலி செய்வதுபோல் இருந்தது. சாமியார் திருநீறை வாயில்போட்டு தண்ணீர் குடிக்கச் சொன்னார்.

இரண்டு அரக்குநிற உருண்டைகளைக் கொடுத்து இரவு படுக்கப்போகுமுன் ஒன்றுவீதம் சாப்பிடக் கொடுத்தார். ‘செய்வினைதான். செய்வினைங்கறது தகடு இல்லை. நீங்க இருக்கதை நினைச்சி, அவங்க முன்னாடி நீங்க இல்லாட்டியும் உங்களை மனசிலே கறுவிக்கிட்டிருக்கவங்களோட, இறந்த ஆத்மாக்களோட கோபம் எல்லாமாச் சேந்து பண்றதாக்கும். மூதாதைகளுக்கு தவறாம திதி குடுங்க. சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்ளு வச்சிக் கும்பிடுங்க. பைரவருக்கு பூசணிக்காயில விளக்கேத்துங்க. எல்லாம் சரியாப் போவும்’
இது நடந்தது போனமாதம். போய் வந்த ஒருவாரத்திலேயே மீண்டும் ஆரம்பமாயிற்று. அவனுக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையுமில்லை. ஆனால் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.

‘அப்பா, நான் பார்த்திராத என் தந்தைகளே, மூதாதைகளே, உங்களின் ஒரு துளி நான். என் மீது கருணை கொள்ளுங்கள். என்னை இங்கே இருக்க அனுமதியுங்கள். வேரறுத்துவிடாதீர்கள். தெய்வங்களே, என் மனதை எனக்குத் திருப்பித் தாருங்கள்.’ யாருமே இல்லாமல், மனதின் நூற்றுக்கணக்கான குரல்களில் இதுவும் ஒன்றோ என்று தோன்றியது. மிகுந்த மனச்சோர்வை அடைந்தான். இரவுகள் தான் மோசம். பகல் முழுக்க மேலாண்மை பார்த்த புத்தி உறங்கும் நேரம். மனதிலிருந்து அவர்கள் கல்லறை மீட்புப் போல எழுந்து வருவார்கள். தர்க்கமே இல்லாமல் ஓடும் எண்ணங்கள் நெடுநேரம் நீளும்.
சாமியாரைப் பார்த்துவந்த பத்து நாட்களில் மீண்டும் அவனுக்கு ஒவ்வாமை தாக்கியது.

அம்மா, அண்ணன், தங்கை, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பொருட்கள், இடங்கள், கடவுள் எல்லாம் யாரோ கத்தரியால் வெட்டிவிட்டதுபோல் அந்நியமாக அந்தரத்தில் இருளில் மிதக்கும் அனுபவம். வானவீதியில் வெகுதொலைவில் மீண்டும் மனிதர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா என்றே தெரியாத நிலையில் ஒருவரை நிறுத்திவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அனுபவம். பிறரெவரும் உள்ளே நுழையமுடியாத தனிமை. தனிமை. தனி…..மை.

ஏகமனதாக மனோதத்துவ நிபுணரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து, டவுணில் மேலரத வீதியில் இருக்கும் கிளினிக்குக்கு வந்தான். அந்தப் பெரியவர் போய் ஒருமணிநேரமாகிறது. மீண்டும் ஒரு தாக்குதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது. முன்னெல்லாம், இதைப் போக்க கம்ப்யூட்டரில் கேம் விளையாடினான்.

ஒவ்வொரு குறிக்கோள்களையும் தாண்டிச் செல்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டான். ஒருகட்டத்தில் அது அபத்தமாகத் தெரிய ஆரம்பிக்க நிலைமை இன்னும் மோசமானது. யாரோ தன்னை ஏமாற்றுகிறார்கள். அர்த்தமேயில்லாமல், போலியாய் ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கொண்டு காலத்தைக் கடத்த இப்படிச் செய்கிறார்கள்.

இந்த வாழ்க்கையும் இதைவிட மோசமான விளையாட்டு. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பெரும் பித்தலாட்டம். எந்த அர்த்தங்களுக்கும் பொருளில்லை. அர்த்தங்கள் தனியொருவரிடம் தொடங்கி, அவரிடமே முடிந்துவிடுகிறது. அர்த்தங்கள் குறித்து இந்த உலகுக்கு அக்கறையில்லை. நரகம்.

‘இதோ அருகிலிருக்கும் இவரை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சுவரில் அந்தப் பல்லி எதற்கு அரைமணிநேரமாய் நின்றுகொண்டிருக்கிறது? இந்த மருத்துவரைத்தான் புரிந்துகொள்ள முடியுமா? அவருக்கு கொஞ்சமும் மனதளவில் ஒட்டாமல் கேள்விகள் கேட்டு சில தீர்வுகளை, அல்லது மருந்துகளைக் கொடுப்பார். நான் காசு கொடுக்க வேண்டும்.

தொழில். என்னை நானாகவே எடுத்துக்கொள்பவர் யார்? ஒரு நண்பனால் முடியுமா? எத்தனை கழித்தும் மீதமிருக்கிறது வெறுமை’. உள்ளே அந்தப் பெரியவர் அழுவது கேட்கிறது. எல்லோருமே பரிதாபத்துக்குரியவர்கள்.

அவனுக்கு வாலிபவயதில் காதலித்த பெண்ணின் ஞாபகம் வந்தது. அவள் பெயர் தமிழ்ச்செல்வி. ஒளிர் கருமை நிறம். பார்த்துத் தீராத முகம், கோவில் சிலைபோல. அவனுக்கு 2 அக்காவும், ஒரு தம்பியும் உண்டு. 16 வயதில், 11வது படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வியை காதலிக்க ஆரம்பித்தான்.

இந்த வயதில் தான் காதலிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, யாரைக் காதலிக்கலாம் என்று யோசித்து தற்செயலாய் அவளைப் பார்க்கையில் அவளும் அவனைப் பார்த்தாள். சந்தோசமாக இருந்தது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் கவனிக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் ஒரே தெருவில்தான் வீடு. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தெருக்கோடியைக் காட்டுவதுபோல் அவனை நோக்கி விரல்நீட்டுவாள். குழந்தையை முத்தமிடுவாள். பொங்கிப் படர்ந்துகொண்டிருந்தான். மணம்வீசும் பூப்பூத்த செடியைப் போல வாழ்க்கை நிரம்பி வழிந்தது. ஆனால் கடைசியில் இது ஒத்துவராது வேண்டாம் என்று அவள் விலகிவிட்டாள். காரணம், இருவருக்கும் 1 வயதே வித்தியாசம்.

தனது அக்காக்களுக்கு திருமணம் முடிந்து அவனுக்கு வருவதற்குள் பல வருடங்கள் ஓடிவிடும். அவன் நொறுங்கிப் போனான். எப்படியிருப்பினும் ஏற்றுக்கொள்ளும் தாய்மைக்குப் பிறகு, பால்யகாலம் கடந்து வாலிபத்தை எட்டிப்பிடிக்கையில் ஒரு செடி தானாக வளர முயலும் முயற்சியைப் போலத்தான் காதல். அது உலகில் தன்னைப் பிடித்துவைத்துக்கொள்ள ஆதார சக்தியின் இயக்குவிசை. காதல் மறுக்கப்படும்போது வாழ்க்கை ஒருவகையில் மறுக்கப்படுகிறது. இரண்டு உயிர்களுக்குள் ஏற்படும் தொடர்பும், அதன் நிமித்தம் பூரிக்கும் காதலும் மறுக்கப்படும்போது அவர்கள் அந்நியப்படுகிறார்கள்.

தனிமை. தனிமை. தனி…மை. காதலைத் தவிர்த்து இன்னொரு உயிரிடம், ஒன்றாகிவிடுவதுபோல் கலப்பது எப்படி சாத்தியம்? இந்த அந்நியம் பிறகு உலகோடு ஒட்டவைக்கவே முடியாதபடி அந்தரத்தில், பூமியில் தங்காது தொங்க ஆரம்பிக்கிறது. எந்த உறவும் நெருங்கமுடியாதபடி சுருங்கிக் கொள்கிறது. காதல் நிராகரிக்கப்படுவது குரூரமானது. எவ்வகையிலேனும் மனிதன் காதலிக்க வேண்டும். அவனது தனிமை இந்தக் காதல் நிராகரிப்பிலிருந்துதான் தொடங்கியது என்பது அவனது எண்ணம்.

‘காதல் காதல் காதல், காதல் போயின், சாதல், சாதல், சாதல்.’
இருப்பதற்கான நியாயங்கள் வேண்டும். தான் இங்கே, இவ்விதம் இருப்பதில் மகிழக்கூடிய மனிதர்கள் சூழ இருப்பது வரம். எல்லோரும் சுயநலமிகளாய் இருக்கும் உலகில், இருத்தலுக்கான நியாயம் சுரண்டுவதும், சுரண்டப்படுவதுமாய் அமைந்துவிடுகிறது. எல்லா உறவுகளிலும் அவனால் இப்படியான சுரண்டலை மட்டுமே பார்க்கமுடிகிறது. கண்ணில் வழியும் கண்ணீர் கூட சுயத்தைப் பறைசாற்றியபடி வருவதால், இரக்கமும் மரத்துப் போய்விடுகிறது. அழகான நாய்க்குட்டி வாங்கி வளர்த்துப் பார்த்தான், மீன்தொட்டி, கிளி. எல்லா உயிரினங்களும் தன்னுடைய வாழ்க்கையைக் கொண்டாடுகின்றன.

ஓர் உயிரின் மீது அன்பு செலுத்த என்ன காரணம் தேவை. அது இருக்கிறது அவ்வளவுதான். தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு மனிதன் எப்படித் தொடர்பு கொள்வது. அவனுக்கு எதிலும், யாரிடமும் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. இந்த மூன்றாவது மாடியிலிருந்து குதிக்க நினைத்தால் குதித்துவிடலாம். மரணமடைய நிறைய வாய்ப்புண்டு. அல்லது பிளேடால் மணிக்கட்டில் கீறிக்கொள்ளலாம். கயிறு மாட்டிக் தொங்கலாம். அது வலி மிகுந்த சாவு. மரணம் வாழ்க்கைக்கு எத்தனை அருகில் இருக்கிறது. பைனரியின் அடுத்த ஒரு வாய்ப்பாக அதன் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. எந்த நியாயமுமே இல்லாமல் உலகில் வாழ்வது பெரும் கோழைத்தனம்.

அவன் டெலி மார்க்கெட்டிங்கில் மூன்றாண்டுகளாக வேலை பார்த்துவருகிறான். பணம் என்ற ஒன்றுக்காக, ஓர் அபத்தமான பொருளை, அபத்தமான மனிதர்களிடம் விற்க, அபத்தமாய்ப் பேசவேண்டியிருப்பதுவும் பெரும் ஆயாசத்தைத் தந்தது. கடந்த ஆறு மாதங்களாக அவனது நாற்காலியில் உட்கார்ந்ததும் இந்தக் கசப்பு பொங்க ஆரம்பித்துவிடுகிறது. பரந்துவிரிந்த புறவுலகு எங்கும் அவனை நெருக்கியடித்தபடி, மூச்சுக்குத் தவிக்கும்படி செய்கிறது. அதே இடம்தான், ஆனால் தொடமுடியாத கிரகத்தின் தூரம். ஒழிந்து போவென்று அழுத்துகிறது.

இம்மாதிரி சமயங்களில் வியர்த்து ஊற்றும். மலம் கழிக்க வேண்டும்போல, சிறுநீரும் முட்டிக்கொண்டு, கையைக்கூட தூக்கமுடியாத பலவீனத்தோடு, அடுத்த நொடி மயங்கிவிழுந்துவிடுவோம் அல்லது இறந்துவிடுவோம் என்ற பீதியைக் கொடுக்கும். ஆனால் உடல் இப்படி அவஸ்தையில் இருக்கையில் மயக்கமடைய முடியுமா என்றும் தோன்றும். அவன் அறிந்தவரை மயக்கம் ஒரு தூக்கத்தைப் போல அவஸ்தையின்றி வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். மரணம் அவஸ்தையோடு தான் வரும். எப்போது அது வந்தாலும் தன்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை இதுதான் நரகம். இந்தத் தண்டனைகளெல்லாம் முடிந்துவிட்டால், இந்தக் கனவு தெளிந்துவிட்டால் பதற்றமில்லாத, தனக்கே தனக்கான ஓர் உலகத்தில் நுழைந்துவிட முடியும். அதற்கெல்லாம் உத்தரவாதம் தருவது யார்?

இரவைப்போல வெளியை இருளுள் மூழ்கடிக்கும் பகல்களும் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும். தான் மட்டுமான நிஜம். கண்ணை மூடிக்கொள்ளும் பூனையுலகம். இதுவும் பொய்யென்று அவனுக்கும் தெரியும். ஆயினும் இருள் அவனுக்குக் கசப்பிலிருந்து சற்று ஆறுதல் அளிக்கிறது. மனைவி இவனை நோக்கி நகர்கையில், ரொம்ப எச்சரிக்கையாய்த் தானியத்தை எடுக்கவா வேண்டாமா என்று தயங்கும் ஒரு குருவி படக்கென்று கொத்தித் திரும்புவதைப் போல ஓடிவிடுகிறான். மற்றவையெல்லாம் ஓர் ஆழ்ந்த கருணை. இரவில் வெளியெங்கும் ஒரே நிறம். வெளிதான் முழுமை போலும். தான் மட்டும் ஊர்ந்துகொண்டே இருக்கும் பூரானைப் போல சதா மனதின் அரிப்பு. தன்னிருப்புதான் இங்கு பிரச்சினை. தானற்ற உலகு முழுமையானது.

ஆனால் அவனுக்கு தற்கொலை செய்யுமளவுக்குத் திராணியில்லை. மரணம் பிறப்பைப்போல அருவாகி, கருவாகி, உருவாகி வந்து பிறப்பதுபோல், இந்த இயக்கம் தானாய் செயல் சுருங்கித் தேய்ந்து ஓய்ந்து இயல்பாய் நிற்கவேண்டும். அந்த மரணம் மட்டுமே ஏற்கத்தக்கது. தன் கட்டுப்பாடின்றி நிகழும் விபத்துக்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இதையெல்லாம் யாரிடம் முறையிடுவது? கடவுள் பேசாமலேயே போனதினால் அறிவியல் கடவுளின் இடத்தைத் தானே எடுத்துக் கொள்கிறது.

நோயென்றால் யாரும் மந்திரிப்பதில்லை. மருத்துவரிடம் போகிறார்கள். அறிவியலும் கடவுளைப் போலத்தான். நோய்முதல் நாடி எல்லாம் அதற்குத் தேவையில்லை. தொந்தரவு தரும் பிரச்சினை எதுவோ அதைச் சரிப்படுத்தும் வரம் தருகிறது. எந்த வரமும் அதற்கு மாற்றான தீதை உள்ளே வைத்துத்தான் இருக்கிறது. எல்லா புராணக் கதைகளிலும் வரம் பெறுபவர் பெரும்பாலும் வரத்தால் தவறு செய்கிறார். அது அவரை அழிவுக்குத்தானே இட்டுச் செல்கிறது. – இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் இரவில் ஓடுகின்றன. எந்த இடத்திற்கும் இட்டுச் செல்லாத வீணான எண்ண ஒழுக்கு. ஆயினும் இரவுகள் ஆறுதலளிப்பவை.

அவனுக்கு ஒரு புத்தகக்கடையில் பார்த்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்தது: ‘Truth is a Pathless Land’. எல்லோருக்குமா இந்த அவஸ்தை இருக்கிறது? பாதையற்ற பாதை எனில் எப்படிச் செல்வது. அவனுக்கு வரும் துர்கனவுகளில் ஒன்று (இன்னொன்று பாம்புகள்) உயரமான மலையுச்சியில் ஒற்றைப் பிடிமானத்தில் தொங்கிக் கொண்டிருக்க பட்டென்று கைநழுவி கீழே ஆழமறியா இருளுக்குள் விழுவது. ஒவ்வொருமுறையும் அவனை இந்தக் கனவு நடுங்கச் செய்யும்.

உயிர் பயம் அது. அப்படித் தொங்காமல் துணிந்து அந்த இருளுக்குள் குதிக்க வேண்டுமோ? இருள்தான் எத்தனை அழகானது. கண்ணை மூடினால் போதும். உள்ளே வந்துவிடலாம், தன்னுடைய வீட்டுக்குள் நுழைவதுபோல. எப்போதும் இருள், ஆம் அது தான் தீர்வு. கண்களைத் திறந்தான். வாகனங்கள் பரபரப்பாக இடதும் வலதும் பதட்டத்துடன் ஓடிக் கொண்டிருந்தன. கீய்ங் கீய்ங் ஹாரன் இப்போது தொந்தரவாய் இல்லை. சடாரென்று வேகமாய்ப் பாயும் கார் முன்னால் விழுந்தால் போதும். சாலைக்குச் செல்ல 10 நொடிகள். காரையும் நேரத்தையும் கணக்கிட 10 நொடிகள். பாய ஒரே நொடி. 21 நொடிகள். 21 நொடிகளில் மரணம். சாசுவதமான இருள். அவன் எழுந்தபோது பெரியவர் வெளியே வந்தார். அவன் உள்ளே நுழைந்தான்.

••

சோலைமாயவன் கவிதைகள்

கேள்விகளால் வடிவமைத்த ஆடைகளில் வரிசையாக தைத்து
இருக்கிறார்கள் பட்டன்களை
நாம் திறக்கும் பட்டன்கள்
ஒருபொழுதும் திருப்திபடுத்தியதில்லை
கேள்வியின் குகையில் பின்தொடர்ந்து
நுழைந்துதால்-அது
சிறுநூறு குகைகளை காட்டி பம்மாத்துச்செய்கிறது
எல்லோரிடமும் ஒரு கேள்வியும்
எல்லோரிடமும் ஒரு பட்டனுமும் இருக்கத்தான் செய்கின்றது
இரயில் தண்டவாளம் போல
ஆடையும் பட்டனையும் தொலைத்த பொழுதொன்றில்
என் தலைக்கும் மேல் இருந்து ஆகாயம்
அவ்வளவே…..
~~

எவ்வளவு எவ்வளவு
உயர்ந்த சிலையிலிருந்து
வெளியேறுகிறதுபசியின் வாதை
நெகிழிகளிலான் சிலையை செதுக்கியிருந்தால்
தேசத்தின் தாய்மடி உயிர்த்திருக்கும்
இரும்புசத்தற்ற குழந்தைகள் பிறக்கும்
இந்தேசத்தில் தான்
வானவளவு சிலையை நிறுவுகிறார்கள்
இரும்புகளால்..
இருள் கவிழ்ந்திருந்திருக்கும்
இவ்விரவில்
உங்களில் ரசனைகள் குமட்டுகிறது
பலகோடிகளால் ஆடையை நெய்யும்
உங்கள் அதிகாரத்திற்கு தெரியாது
தெருவெங்கும் அலையும்
ஏழைகளின் கண்ணீர்
இறங்கி வந்து பாருங்கள்
உங்கள் ஆட்சியின் கரும்புள்ளி
சிலையை….

~~

நாளுக்குநாள்
கடைகள் முளைக்கின்றன
நாளுக்குநாள்
வாகனங்கள்பெருகுகின்றன
நாளுக்கு நாள்
மக்கள்நெருக்கம் கூடுகின்றன
நாளுக்குநாள்
விபத்துகள் அதிகரிக்கின்றன
நாளுக்கு நாள்
இவ்வூர் விரிந்து போகுகின்றன
நாளுக்கு நாள்
குற்றச் செயல்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன
மாநகரத்திற்கு
குடிபெயர்ந்த பின்
நாளுக்கு நாள்
உறக்கத்தில் துரத்துக்கிறது
யானைகள் பிச்சையெடுக்கும் கனவொன்று

~~

எங்கள் ஊருக்கு வெயில் என்று பெயர்

அதிசயமாய் பெய்த மழையில் முளைத்தை புல்லுகளை
ஆடு மாடுகளோடு மேயும்
வெயில்

கூரையில்அடைக்காக்கும் அவ்வெயில்
இரவெல்லாம் நட்சத்திரங்களை முட்டையிடும்

வெயிலுக்கு தாகம் தீர்க்க முடியாத
வருத்தத்தில்
பசித்த குழந்தையின் வயிறென
வற்றிக்கிடக்கிடக்கின்றன
எங்கள் ஊரின் கிணறு குளம் குட்டைகள்

எங்கள் ஊரில்
பேருந்துநிறுத்தம் இரண்டு
நியாய விலை கடை இரண்டு
பால்வாடி இரண்டு
ஏன்
செத்தால் புதைக்கும் சுடுகாடு இரண்டு
வஞ்சனையில்லாம் படரும்
வெயில் மட்டும் ஓன்று

எங்கள் ஊரின் சிறப்பு கேட்கும்
நண்பர்களுக்கு
எங்களின் ஊரின் பெயர் வெயில்…

~~

கோமாரி நோயால்
மாடுசெத்துப்போச்சினு
மூச்சிரைக்க ஓடி வந்து சொன்னார் மாமா
ஞாயிற்றுக்கிழமையின் வாசம் உடம்பெங்கும் பரவியது
எறவானத்துல சொருகி வச்சிருந்த
சூரி கத்தியால்
தலை
குடல்
கொழுப்பு
ஈரல்
கறியென தனித்தனிய பிரிச்சி எடுத்து
எல்லாத்தையும் கலந்துக்கட்டி கூறுப்போட்டோம்
கடையெழுவள்ளல்களில் வாரிசென வாரி வாரி
கொடுத்துக்கொண்டிருந்தார்
பின்னால் ஓரமாக
அத்தை அழுதுகொண்டிருந்திச்சி
அதுக்கு எங்க அம்மா பேரு வைச்சிருந்தேன் மருமவனே

~~

கைகளிலிருந்து களவாடப்படுகிறது காணிநிலம்
உள்ளங்கைகளால் பிசைந்த சோறு விரல்களின் இடுக்குக்களின் வழிய
பிதுங்குகிறது
அதிகாரத்தின் துஷ்பிரயோகம்
பறவைகளின் பசியை நசுக்கிய
கனரக வாகனங்கள் மேல் தேசியக்கொடி
யாருக்காக அழுவான்
முதுகெலும்பு வேரானவன்
மாட்டுப்பொங்கல் விழா ருசிக்காது
பாம்பு பூரானைப் பார்க்க முடியாது
பறவைகளின் கீச்சொலிகள் ஒலிக்காது
வழி தவறி வரும் மானுக்கு தாகம் தீர்க்கமுடியாது
நடுராத்திரியில் வயலில் இருந்து நிலா பார்க்கும் அபூர்வம் நிகழாது
தொலைந்த காலமொன்றில்
எங்கள் அப்பனுக்கு காடொன்றிருந்தன
கதைகள் ஊரெங்கும் சுற்றித்திரியும்
விரைந்து செல்லும் மகிழுந்து கண்ணாடியின் மீது
பறவையின் எச்சமாக
கண்ணீர் காய்ந்துகிடக்கும்……..

••

பொடிப்பொடி பொடி கவிதைகள் பத்து – லக்ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணன்

ஏராளம் ஈசல்கள் வந்து நிறைகின்றன
அதற்குத் தக்க பல்லிகள்
எல்லா ஈசல்களும் ஒரு ஈசல் தான் என்பது போல
தொட்டு நக்கி
எல்லா பல்லிகளும்
சுவரிலிருந்து காணாமற் போகின்றன
நாங்கள் அத்தனை பல்லியும் ஒரே பல்லி தான் என்பது போல

2

அடித்துப் பெய்கிறது பேய்மழை
அனைத்தும் நிறைகிறது
ஊற்றின் தாய்மடி நிறைகிறது
ஊருணி நிறைகிறது
எண்ணங்கள் நனைகிறது
அடுத்து எறும்புப் புற்றுக்குள்
காலடி எடுத்து நனைக்கையில்
மொத்த மழையையும்
தடுத்து நிறுத்துகிறது
சிறிய எறும்பு
புற்றின் வாயிலில்

3

அசுரர்கள் எப்படி அசுரர்கள் ஆனார்களோ
அப்படியே
தேவர்களும் தேவர்கள் ஆகிறார்கள்
அனுபவம் கிளர்ந்து
அடிக்க அடிக்க அசுரனாகிக் கொண்டே இருக்கிறான் அசுரன்
வலிக்க வலிக்க தேவனாகிக் கொண்டேயிருக்கிறான் தேவன்

4

நானொரு கைப்பிடியளவு சாம்பல் பேசுகிறேன்
வாழ்க்கையென்பது தித்திக்க தித்திக்க தேன் .
நானொரு துளி தேன் பேசுகிறேன்
கைப்பிடியளவு சாம்பலின்
வயிற்றுக்குள்
எவ்வளவு ருசி

5

கடைசியாகத் திரும்பிய பல்லியிடம்
நான் கேட்டேன்
இப்போது நீங்கள் எடுத்துக் கொண்ட ஈசல்களையெல்லாம்
எவ்வளவு நாட்களாக வைத்துச் சாப்பிடுவீர்கள்
வயிற்றுக்குள் ?

அடுத்த முறை இவர்கள்
வருவது வரைக்கும்
பதில் சொல்லிற்று
பல்லி
அவ்வளவு பசிப்பதில்லை
பசி

6

விவாதம் தானே
இப்படியும் வாதாடலாம்
அப்படியும் வாதாடலாம்
மத்தியிலும் வாதாடலாம்
உங்கள்
வசதியைப் பொறுத்து

மற்றபடி
அதில் ஒன்றும் இல்லை

7

முரண்பட்டுக் கொண்டே
இருப்பவன்
கூரிய கத்தியால்
தன்னை அறுக்கத் தொடங்குகிறான்
கத்திக்கு அவனை அறுப்பது
பிடித்துப் போகிறது
இப்படி மொத்த உடலையும்
யார் தான் ஈர ஈரமாகத்
தின்னத் தருவார்கள் தானமாக
என

8

தன்னை எளிமையாக்கிக் கொண்டிருப்பவனிடம்
முளைக்கக் கீறி
எத்தனிக்கின்றன தானியங்கள்
கடுமையாக்கிக் கொண்டிருப்பவனிடம்
கணந்தோறும்
இறக்கின்றன பறவைகள்

9

எடுத்துக் கொடுக்குந்தோறும்
எதுவுமே குறைவதில்லை
பரிமாறப்படாதவிடத்தே
பதுங்கி நிற்கிறது
விஷம்

10

எனது துயரத்தைப் பாருங்கள்
என்று பொதுவில்
தனது புண்ணை எடுத்து காண்பிப்பவளின்
தோளில் இரண்டு விதவையர்
ஏறி அமர்ந்து கொள்கிறார்கள்
அவளோ பாவம்
ஆசையின் தேவதைகள் என
அவர்களை
நினைத்து விடுகிறாள்

•••

ஐங்குறு நூறு—-1 ( மருதம் ) / வளவ.துரையன்

பனைமட்டை

ஐங்குறு நூறு—-1
மருதம்

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து பல்வேறு தலைப்புகளில் அடக்கப்பட்டுள்ளன. அவற்றில் மருதத்திணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு நூலின் முதலில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் ஓரம்போகியார்.

இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. இவர் கொங்கு நாட்டைச் சேர்ந்த ஆதன் அவினி என்னும் சேர மன்னனின் ஆதரவைப் பெற்றவர். வட கொங்கு நாட்டில் கானப்படும் அவினியாறு இவனால் வெட்டப்பட்டதென்பர்.

வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் ஆகும். இங்கு வாழ்பவர் உழவர் மற்றும் உழத்தியர் ஆவர். உழுதல், நடுதல், களைகட்டல் போன்றன இங்கு நடைபெறும் தொழில்கள் ஆகும். ஊடல் என்பது மருதத்திணையின் பொருளாகும்.

மருதத்திணைப் பாடல்களை எழுதியவர் ஓரம்போகியார் என்பவராவார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் உள்ளன. இவர் ஆதன் அவினி என்னும் சேர மன்னனின் ஆதரவு பெற்றவர். வட கொங்கு நாட்டில் காணப்படும் அவினியாறு இந்த மன்னனால் வெட்டப்பட்டதாகும்.

வேட்கைப் பத்து

முதல் பத்துப் பாக்களும் “வேட்கைப்பத்து” எனும் தலைப்பில் அடங்குவனவாகும். வேட்கை என்பது விருப்பத்தைக் குறிக்கும். எதன்மேல் விருப்பமெனில் பொருள் செல்வத்தின் மீதுதான். தலைவனும் தலைவியும் சந்தித்தாயிற்று. இனி குடும்பம் நடத்தப் பொருள் வேண்டும் அல்லவா? எனவே அதன் மேல் பற்று வைக்கிறார்கள்
=
வேட்கைப் பத்து–1
”வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே”

அந்தக் காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்காம அவ தோழிகிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா;

”நாட்டை ஆளற ராஜா நல்லா இருக்கணும்; நெல்லு நல்லா வெளயணும்; பொன்னு நெறய கெடைக்கணும்; காஞ்சிப்பூவும், செனையாயிருக்கற சின்ன மீனும் இருக்கற ஊர்க்காரனான நீ நல்லா இருக்கணும்; அத்தோட ஒன் தோழனும் நல்லா இருக்கணும்” னுதான் நாங்க நெனச்சிக்கிட்டிருந்தோம்.

இதுலேந்து என்னா தெரியுது? வந்தவன தோழி நல்லா குத்திக் காட்டறா; ஒனக்கு வாசனையான காஞ்சிப் பூவும் ஒண்ணுதான்; சென மீனும் ஒண்ணுதான்; அதாவது பொண்டாட்டியும் ஒண்ணுதான்; பரத்தையும் ஒண்ணுதான்னு அரசல் புரசலா சொல்லிக் காட்டறா

வேட்கைப்பத்து—2

”வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்குத்
தண்டுறை ஊரன் கேண்மை
வழிவழிச் சிறக்க எனவேட் டேமே”

ரெண்டாவது பாட்டும் அதேபோலதாங்க; மொதல்ல ராஜா நல்லா இருக்கணும்னு சொல்றாங்க; இதுவும் தோழி பேசறாப்லதான்; அங்க போய்ட்டு வந்தவன்கிட்ட அவ சொல்றா, “நீ அங்க இருந்தப்போ வீட்டுக்குப் பணம் வரணும்ல; அதுக்காக வயல் நல்லா வெளயணும்; வந்த பொருளை வாங்கிட்டுப் போகறதுக்குப் பிச்சை கேக்கறவங்க வரணும்; இதையேதான் அவ நெனச்சிக்கிட்டிருந்தா”

ரெண்டுபேரும் சேர்ந்து என்னா நெனச்சோம் தெரியுமா? ’நீலநிறமான கருங்குவளையோடு நெய்தலும் இருக்கற குளமுள்ள ஊரை உடைய நீ எல்லாப் பொறப்புலயும் சேர்ந்திருக்கணும்னு நெனச்சோம்”

இதுலயும் சிறப்பான கருங்குவளை குலப்பொண்ணையும், நெய்தல் பரத்தையையும் காட்டுது; அதோட ”நீ அங்க போறதால ஒன் அன்பு இவகிட்ட சுருங்குது; அது கூடாதுன்னு சொல்றாப்பலதான் எல்லாப் பொறப்புலயும் நீ இருக்கணும்னு நெனச்சோம்”னும் சொல்றா.
=

வேட்கைப்பத்து—3

”வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞ லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக எனவேட் டேமே”

இது மூணாவது பாட்டு; மொத அடியில ஆதன்னு சொல்றது சேர மன்னனோட குடிப்பெயரு; அவினின்னு சொல்லப்படறது சேர மன்னனாம். இது எல்லாப்பாட்டுலயும் இருக்கும்; இதுல மொத மூணு அடியெல்லாம் தலைவி நெனச்சுது. ஆனா சொல்றதெல்லாம் தோழிதான்; யாய்னா தலைவி; “நீ அங்க போயி இருந்தபோது அவ ராஜாவெல்லாம் நல்லா இருக்கணும்; பசுவெல்லாம் நெறய பால் கறக்கணும்; எருமைமாடு எல்லாம் நெறய இருக்கணும்”னு நெனச்சா.

அடுத்த மூணுஅடி ரெண்டு பேரும் சேந்து நெனச்சத சொல்றா; அதாவது, “ஒன் ஊர்ல ஒழவங்க நெலத்துக்கு வெதைவெதக்கப் போவாங்க; அப்படிப் போறவங்க அங்க முன்னமே வெளஞ்சிருக்கற நெல்லை எடுத்துக்கிட்டு வருவாங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தோம்”

வீட்டுக்கு வர்றவங்களுக்குத் தர்றதுக்குப் பால் நெறய வேணும்; செல்வம் பெருக எருமை நெறய வேணும்; பகடுன்னா எருமன்னு கூட வச்சுக்கலாம்; வெதைக்கப்போனவங்க வெளஞ்சத எடுத்துக்கிட்டு வருவாங்கன்னு சொல்றதுல என்னா மறஞ்சிருக்கு தெரியுமா? ”நீ வரப்போற பரத்தைக்கு வருவாயும் தேடற; இப்ப இருக்கறவளோட இன்பமாயும் இருக்கற” இதுதான் அவ நெனக்கறது.

அவன் செய்யறது குத்தந்தாம்; ஆனா இவ ஒழுக்கமா இருக்கல்ல; அதால குடும்பம் நல்லா இருக்கும்னு சொல்ற பாட்டு இது.

=

வேட்கைப்பத்து–4

”வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல்லார்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி ஊரன் மார்பு
பழன மாகற்க எனவேட் டேமே”

நாலாவது பாட்டுலயும் மொதல்ல “வாழி ஆதன் வாழி அவினிதான்”; நாடு நல்லா இருக்கணும்னா ஆளறவங்க நல்லா இருக்கணும்ல; அதனாலதான் “எங்க தலைவி, “எப்பவும் ஆதனும் அவினியும் நல்லா இருக்கணும்; அவங்களோட எதிரிங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம புல்லத் தின்னணும்; மழை பொழியணும்; அதுக்காக பார்ப்பார் வேதம் ஓதணும்”னு நெனச்சிருந்தாங்க;

நீ அங்க இருக்கேன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்; அப்ப நாங்க என்னா நெனச்சிருந்தோம் தெரியுமா? ஒன்னைப் பத்திப், ”பூத்துப் பயன்படாத கரும்பையும், காய்த்துப் பயன்படும் நெல்லையும் உடைய ஊரைச் சேர்ந்தவன் நீன்னு நெனச்சிருந்தோம்;” இப்படி சொல்றது வழியா அந்தத் தோழி பயன்படாத பூத்த கரும்பு போலப் பரத்தையர்னும், பயன்படும் நெல்லுபோல குலமகளிர்னும் குறிப்பா சொல்லிக் கட்டறா; மேலும் சொல்றா,” சில ஊர்ல எல்லாருக்கும் பொதுவான பொறம்போக்கு நெலம் இருக்கும்ல; அதுபோல ஒன் மார்பு எல்லா மகளிர்க்கும் பொதுவா இருக்கக் கூடாது”
=

வேட்கைப்பத்து—5

”வாழி ஆதன் வாழி அவினி
பசியில் லாகுக பிணிசேண் நீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண்டுறை ஊரன் தேரெம்
முன்கடை நிற்க எனவேட் டேமே”

அஞ்சாவது பாட்டுலயும் தோழி சொல்றா, ”நீ அங்க அவங்க வீட்ல இருக்கச்சே என்தலைவி குடும்பம் நல்லா இருக்கணும்னு நெனச்சா; அதுக்காக பசி இல்லாம இருக்கணும்; நோய் இல்லாம இருக்கணும்னு நெனச்சா; பசியும், நோயும் இல்லாம இருந்தாத்தானே குடும்பம் நல்லா இருக்கும்”

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து, ”ஒன் ஊரைத்தான் நெனச்சோம்; ஒன் ஊர்ல தண்ணியில இருக்கற நல்ல முதிர்ந்த மீனையெல்லாம் அங்க இருக்கற முதலை தின்னுடும்; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்த ஒன்னோட தேர் எங்க ஊட்டு முன்னாலதான் நிக்கணும்; வேற பொம்பளங்க ஊட்டு முன்னால நிக்கக் கூடாதுன்னு நெனச்சோம்”

முதிர்ந்த மீனத் தின்ற முதலன்னு தோழி சொல்றது அவனைத்தான். இவளப் பாக்காம அங்க போறயேன்னு மறைச்சு
சொல்றா.

=

வேட்கைப்பத்து—6

”வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக ஆண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுரை ஊரன் வரைக
எந்தையும் கொடுக்க எனவேட் டேமே”

ஆறாவது பாட்லயும் தோழி பேசறா, “ நீ அங்க அவ ஊட்ல இருக்கச்ச என் தலைவி என்ன நெனச்சா தெரியுமா? நாட்டை ஆளறவங்க நல்லா இருக்கணும்; அவங்களோட பகைவரெல்லாம் அழியணும்னு நெனச்சா; ஏன்தெரியுமா?

பகைவருங்க இருந்து போர் வந்தா நீ சண்டைக்குப் போய்விடுவேல்ல; அதாலதான் பகை ஒழியணும்னு நெனச்சா; சரி, போனாலும் நீ திரும்பி வந்து பல்லாண்டு வாழணும்னு நெனச்சா.
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னா நெனச்சோம் தெரியுமா? ஊர்ல எல்லாருக்கும் பழக்கம் தெரிஞ்சு போச்சு; அதால தாமரைப் பூ இருக்கற குளங்கள் உள்ள ஊர்க்காரனான நீ சீக்கிரம் வந்து இவளப் பொண்ணு கேக்கணும்; இவங்க ரெண்டு பேரும் மொதல்லயே ஒருத்தரை ஒருத்தரு நெனச்சு நல்லா பழகிட்டாங்க; அதால இவங்க அப்பா தவறாம இவள அவனுக்கே கொடுக்கணும்”னு நெனச்சோம்”.
=

வேட்கைப்பத்து—7

”வாழி ஆதன் வாழி அவினி
அறநனி சிறக்க அல்லது கெடுக
எனவேட் டோளெ யாயே யாமே
உளைப்பூ மருதத் துக்கிளை குருகிருக்கும்
தண்டுறை ஊரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க எனவேட் டேமே”
இது ஏழாவது பாட்டு; தலைவன் நான் அவ ஊட்ல போயிருக்கச்ச நீங்க எல்லாரும் என்ன நெனச்சீங்கன்னு கேக்கறதுக்குப் பதில்தான் இதுவும்; தோழி சொல்றா, “ஒன்னை மொதமொத பாத்தபோதே என் தலைவி ஒன்னக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதாய் நெனச்சா; ஊட்ல அறம் நல்லா நடக்கணும். அதால பாவம் கெடணும்” னுநெனச்சா. ஏன்னா அவ இல்லறமே பெரிசுன்னு நெனக்கறவ;.

நாங்க எல்லாரும் என்ன நெனச்சோம் தெரியுமா? உளைப்பூக்களெல்லாம் இருக்கற மருதமரத்துல குருகு வந்து சொந்தங்களோட தங்கியிருக்குமாம். அப்படிப்பட்ட தண்ணித்துறை இருக்கற ஊர்க்காரனான நீ சீக்கிரம் வந்து இவளைக் கொண்டு போவணும்னு நெனச்சோம்”

இந்தப்பாட்டுல வர்ற உளைப்பூன்றதுக்கு உரை எழுதறங்க “மேலே துய்யினிடைய பூ”ன்னுன் எழுதிட்டுப் போயிட்டாங்க; துய்னா என்னான்னு அகராதியில பாத்தேன். அதாவது ’நூற்கும் பஞ்சின் தொடர் நுனி’ ன்னு போட்டிருக்குது. அது வேற ஒண்ணும் இல்ல; ரொம்ப மெலீசா இருக்கற மகரந்தத்தாளுதான் அது. மருதமரம் குருகு தங்கறதுக்கு ஆதாரம். அதேபோல இவள் உயிர் வாழறதுக்கு நீதான் ஆதாரம்னு மறைவா தோழி சொல்றா.

வேட்கைப்பத்து—8

”வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்
பூக்கஞ லூரன் சூளிவண்
வாய்ப்ப தாக எனவேட் டேமே

இந்தப்பாட்டும் தலைவன்கிட்ட தோழி சொல்றதுதான். ”நான் அங்க போயிருந்தபோது நீங்க என்ன நெனச்சீங்க” ன்னு அவன் கேட்டதுக்கு பதிலா தோழி பேசறா; “என் தலைவி வீட்டோட ஒழுக்கமா இருக்கறவ; குடும்பம் நல்லா நடக்கணும்; அதுக்கு நாட்டை ஆளறவங்க நல்லா இருக்கணும்; நாட்ல களவு போன்ற குற்றங்கள் இல்லாம இருக்கணும்”னுதான் அவ எப்பவும் நெனச்சா”

நாங்க என்ன நெனச்சோம் தெரியுமா? ”ஒன் ஊர்ல சோலையில இளந்தளிரெல்லாம் இருக்கற மாமரத்துல மயில் வந்து இருக்கும்; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்த நீ இவள அன்னிக்கு வந்து சந்திச்சபோது சொன்னியே அந்த உறுதி வார்த்தைய மறந்து போகாம இருக்கணும்”

ஏன் அப்படி சொல்றா? அவளுக்குச் சந்தேகம் இத்தினி நாளா காணலியே மறந்துட்டானான்னு.
=
வேட்கைப்பத்து—9

”வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீதில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்விற் சேக்கும்
தண்டுறை ஊரன் கேண்மை
அம்பலா கற்க எனவேட் டேமே”

இந்த 9-ஆம் பாட்டு அருமையான பாட்டு;

தோழி சொல்றா, “நாரை ஒண்ணு நல்லா மீனையெல்லாம் தின்னுது; அப்புறம் போயி வைக்கப்போருல தங்குது. அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன்தான நீ; உன்னோட கொண்ட தொடர்பு நீ இன்னும் வராம இருந்தா கொஞ்சம் கொஞ்சமா வெளியில வந்துடும். எனவே நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது”ன்னு நாங்க ரெண்டு பேரும் நெனச்சோம்.

ஆனா இவ என்னா நெனச்சா தெரியுமா? உன்னைப் பாத்தபோதே ஒன்னோட கல்யாணம் ஆனதுன்னு நெனச்சா; அதாலே குடும்பத்துல நல்லது நடக்கட்டும்; கெடுதல் வராம இருக்கட்டும்னு நெனச்சா”

ஒங்க ஊர் நாரையைப்போல தங்கிடாதேன்றது மறைபொருளாம்; இந்த நாரை வைக்கபோர்ல தங்குறது, “கயலார் நாரை போர்விற் சேர்க்கும்”னு புறநானூறுலயும் [24] வருது; அதே மாதிரி புறநானூறுல ‘பொய்கை நாரை போர்விற் சேர்க்கும் நெய்தலங் கழனி”ன்னு இன்னொரு பாட்டுலயும் [209] இருக்குது

=
வேட்கைப்பத்து—10

”வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்டுறை ஊரன் தன்னொடு
கொண்டன

இதுவும் தோழி சொல்றதுதான். போனபாட்டுல சொன்னதுதான்; “இவ ஒன்னைப்பாத்த அன்னிக்கே கல்யாணம் நடந்துட்டுதுன்னு நெனச்சுட்டா; குடும்பம் நல்லா நடக்க, நாட்டை ஆளற ஆதனும் அவினியும் நல்லா இருக்கணும்; மழை நல்லா தப்பாம பேஞ்சாத்தான எல்லா வளமும் கிடைக்கும்; அதால மழை பெய்யணும்; செல்வம் சேரணும்னு நெனச்சா;

ரெண்டு பேரும் என்னா நெனச்சோம் திரியுமா? ஒன் ஊர்ல குளிர்ச்சியான சோலை உண்டு; அங்க கொளம் உண்டு; அதுல நாத்தம் கொடுக்கற மீனுங்க நெறய இருக்கும்; அந்த சோலையில வாசனை கொடுக்கற பூ பூக்கற மாமரங்கள் நெறய இருக்கு: அதேபோல ஒங்கிட்ட ரெண்டு கொணமும் இருக்கு; இவ ஒன்னையே நெனச்சிட்டிருக்கா; எல்லாருக்கும் தெரிஞ்சிடும்; அதால நீ இவள கட்டிக்கறதா இருந்தா கட்டிக்க; இல்ல இப்படியே இருந்துடலாம்னு நெனச்சா வந்து ஒன்னோட கூட்டிக்கிட்டுபோயிடு”

•••

பேயரசாண்டால்… ( சிறுகதை ) – சத்யா

யாருமற்ற அந்த சாலையில் தன்னந்தனியனாக யட்சன் மிதந்து வந்துகொண்டிருந்தான், தூரத்தில் ஒரு நாய் இவனைக்கண்டு காது ரெண்டையும் தூக்கி மிரண்டு குரைக்கத்துவங்கியது. அதன் குரலைக்கேட்டு இன்னும் சில நாய்கள் குரைத்தது இவன் காதுக்கு இனிமையாக இருந்தது. வழியில் சுற்றிலும் ஏழு புளிய மரங்கள் நின்ற சுடுகாடு குறுக்கிட்டது. அதுதான் இவனுக்கு மிகவும் பிடித்தமான சுடுகாடு, அங்கேதான் முதன்முதலில் அவன் தன்னை யட்சனாக உணர்ந்தான். ஒருநாள் இவன் சாதாரண மனிதனாக வாயில் சிகரெட் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தான்.

லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு ஒரு வேப்பமரத்தின் அடியில் சிறுநீர் கழிக்கும்போதுதான் அவன் அந்த உருவத்தைப் பார்த்தான். வெள்ளை வெளேரென ஓட்டை விழுந்த கண்களுடன் மொழுமொழுவென்று மூக்கிலிருந்து தலைவரை வழுக்கிக்கொண்டு போனபடியான உருவம் திடீரென இவன் முன்பு குதித்து நின்று “ஊஊ…..” என ஊளையிட்டதில் இவன் மயங்கிப்போனான். முழித்துப்பார்த்தபோது இவனைச்சுற்றி ஏழு எருமைமாட்டு கொம்புகளை நட்டுவைத்து அதில் அண்டங்காக்கை ரத்தத்தை ஊற்றி இவனை சுற்றிச்சுற்றி இல்லாத கால்களால் குதித்து குதித்து அழுகையிலும் சிரிப்பிலும் சேராத பாஷையில் எதோ சொல்லிக்கொண்டிருப்பதைக்கேட்கும்போதே இவன் உடல் நடுங்கத்தொடங்கியது.

கடைசியில் ஏழு கொம்புகளிலுமிருந்த ரத்தத்தை இவன் வாயில் ஊற்றி குடிக்க வைத்தது. அப்போது உடலெல்லாம் சிவ்வென்று நடுங்க கண்கள் இரண்டும் வெளியே வந்து விழும் போல் தொண்டையெல்லாம் அடைத்துக்கொண்டு வந்து அப்படியே மயங்கிப்போனான். முழித்துப்பார்க்கும்போது தான் ஒரு யட்சனாயிருந்ததை உணர்ந்தான். பின்பு தன்னை இழுத்துச்சென்றது ஒரு அமாவாசை ஆகாவளி என்பதை அறிந்துகொண்டான். சாதாரண மனிதர்களை இருள் உலகிற்கு கொண்டு செல்வதுதான் ஆகாவளியின் வேலை.

அந்த நாளின் நினைப்பில் இப்போதும் ஒருமுறை “ஊஊ…” என ஊளையிட்டான். தூரத்தில் நாய்களும் இவனுடன் ஊளையிடத்துவங்கின. நாயின் ஊளையைக் கேட்டு வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டு படுத்திருந்த ரெண்டு மூன்று மனிதர்கள் பயந்து போர்வையை இழுத்து இறுக்கமாக போர்த்திக்கொண்டனர், இவனுக்கு மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது. சுடுகாட்டின் உள்ளே ஒரு பிணம் எரிந்துகொண்டிருந்தது. அருகில் ஒருவன் ஒரு கையில் நீண்ட தடியோடும் இன்னொரு கையில் குவாட்டர் பாட்டிலோடும் அமர்ந்திருந்தான். போதையில் கண்கள் சொருகியிருக்க வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. “ஊஊ…” என்று இவன் குரல் கொடுக்க சுடுகாட்டில் தூங்கிக்கொண்டிருந்த நாய்கள் எழுந்து இவனுடன் ஊளையிட்டது.

பிணத்தின் அருகில் இருந்தவன் லேசாக கண்ணைத் திறந்து பார்க்கும்போது இவன் மெதுவாக பிணத்தை தூக்கினான். அது விடைத்து எழுவதைப் பார்த்தவன் அலறியடித்தபடி எழுந்து கையிலிருந்த கட்டையால் பிணத்தை வேகமாக அடித்தான். அவன் கண்களிலிருந்து போதை காணாமல்போய் பயம் வந்திருந்தது. யட்சன் சிரித்தபடி பறந்தான். எரிந்து விழுந்த ஒரு எலும்பை எடுத்து தன் வாயில் சொருகி கொள்ளிக்கட்டையை எடுத்து பற்றவைத்தான். சதை எரிந்து கருகும் ஓசை இதமாக இருந்தது. புகைத்து முடித்து எலும்பை தரையில் தேய்த்து சுடுகாட்டின் சுவற்றில் எழுதினான் “இருட்டாண்டி போற்றி” என்று.

“இப்படியே விளையாட்டுத்தனமா இரு” பின்னால் குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தால் கன்னங்கரேலென்று ஓட்டைப்பல்லும் ஒடுக்கல் விழுந்த கன்னமுமாய் மண்டையோட்டு மாயாண்டி நின்றது. இவனைப்பார்த்து தன் ஓட்டைப்பல் தெரிய சிரித்தது. இவனும் தோழமையுடன் “வணக்கம் கருப்பு, உங்களுக்கு தீமை உண்டாகட்டும்” என்றான். தன்னை மரியாதையாக முகமன் கூறியவனை ஆமோதித்து சிரித்தபடி “இன்னும் பேய்க்கூட்டத்துக்கு கிளம்பலியா?” என்று மண்டையோட்டு மாயாண்டி கேட்டது.
“போகணும் கருப்பு. அமாவாசை ஆகாவளி எங்க?” என்றான் யட்சன்.

“அந்த கருப்பு போயிடுச்சே? அதுக்கு ரெண்டு ராத்திரிக்கு முன்னாலேயே கூட்டம் இருக்கு, அதுதான் பெரும்புடுங்க பேயாண்டிங்க கூட்டத்துல இருக்கே அது முடிஞ்சுதான் நீ போற நாசமாபோன நாரவாயனுங்க கூட்டம்” என்றது மண்டையோடு. பெரும்புடுங்க பேயாண்டிகள் கூட்டம்தான் ஒட்டுமொத்த பேய்களுக்கு தலைமை இயக்கம், அதன் இப்போதைய தலைவர் தீவட்டி தீஞ்சமூஞ்சி. அதன் கீழ் இயங்கும் பல நாசமாப்போன நாரவாயர்களின் கூட்டங்களில் ஒன்றுதான் இவன் இருக்கும் பகுதியில் வரும் தகரகுழாயர்களின் நாசமாப்போன நாரவாயர்கள் கூட்டம்.

“ஹ்ம்… நானும் கிளம்ப போறேன் கருப்பு” என்றபடி கிளம்பினான் யட்சன்.

“பொறுமையாக நடந்துகொள்ளவும், அங்கிருப்பவர்கள் உன்னை தூண்டிவிடுவார்கள் ஜாக்கிரதை, நாசமாப்போகவும்” என்று வாழ்த்தி அனுப்பியது மண்டையோடு.

மிகுந்த யோசனையோடு மாரிநோய் சுடுகாட்டுக்கு செல்லத்தொடங்கினான் யட்சன். தகர குழாயர்களின் தலைமை சுடுகாடு மாரிநோய் சுடுகாடுதான். அந்த காலத்தில் மாரிநோயும் கொள்ளை நோயும் வந்து செத்த பிணங்களை எரிக்கக்கூட மனமில்லாமல் மொத்தமாக போட்டுவிட்டு போன இடம் என்பதால் மாரிநோய் சுடுகாடு என்று பெயர்பெற்றது. பேய்க்கூட்ட தலைவர் காலரா வாயன் கூட பாதி எரிந்த பிணமாகவே இன்னும் நடமாடிக்கொண்டிருக்கிறார். தலைவர் காலராவாயனை எல்லோரும் சுருக்கமாக கா.வாயன் என்று அழைப்பதுண்டு, காலப்போக்கில் அவர் காவாயன் என்று அழைக்கப்பட்டார்.

**

முதன்முதலில் மாரிக்காட்டுக்கு இவன் சென்றது நினைவு வந்தது.அப்போதைய யட்சாதிபதி காமாலைக்கண்ணனைப் பார்க்க போனான். இவனைப்போன்ற யட்சர்கள் பேய்கள் கூட்டத்தில் மிகவும் குறைவு. யட்சர்கள் ஒரே நேரத்தில் பேயாகவும் மனிதனாகவும் இருப்பவர்கள். பேய்கள் யட்சர்களை பூதம், என்று கிண்டல் செய்வதுண்டு. மனிதர்களின் பூத உடலில் வசிப்பதால் அவர்களை இழிவு படுத்த பூதம் என்பார்கள். ஆனால் யாருக்கும் காமாலைக்கண்ணனை பூதம் என்று கூப்பிட தைரியம் இல்லை.

அப்படி மீறி யாராவது கூப்பிட்டால் உடனே அது அழுதுகொண்டே போய் காவாயனிடம் சொல்லிவிடும். காவாயன் பேயாகும் அந்த தருணத்தில் பிறந்த மகனான காமாலையிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தது. அதனால் காமாலையனை வம்பிழுத்த பேயை ஒருமாதம் எந்த சுடுகாட்டிலும் ரத்தம் குடிக்க தடை விதித்துவிடும். அதற்கு பயந்தே யாரும் காமாலையனிடம் வம்பு வைத்துக்கொள்வதில்லை, அப்படி கெத்தாக இருந்த காமாலையனிடம் யட்சனுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. காமாலையனுக்கும் யட்சனைப் பிடிக்கும், பாசமாக, “நாசமாய்ப் போனவனே” என்று அழைக்கும். காமாலையன்தான் தூங்கும் பிணத்தை தூக்கும் வித்தையையும், எலும்பை எரித்துப் புகைக்கும் வித்தையையும் சொல்லிக்கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் சுடுகாட்டு சுவற்றில் எழுதவும் காமாலைதான் சொல்லிக்கொடுத்தது. அப்படி முதன்முதலில் யட்சன் எழுதிய வாக்கியம், “காவாயன் காக்க”. இப்படி எழுதியதில் காவாயனிடமும் அதனுடனேயே திரியும் பிடாரியிடமும் நன்மதிப்பு பெற்றான் யட்சன். நாசமாய்ப்போன நாரவாயர்கள் கூட்டத்தில் பிடாரிக்கு பெரு மதிப்பு உண்டு. அது சொல்வதை யாராவது எதிர்த்துப் பேசினால் கூந்தலை விரித்துப்போட்டு கூச்சலிடத்தொடங்கிவிடும். அதுபோக பெரும்புடுங்க பேயாண்டிகளின் உயர்ந்த குழுவான கொள்ளிவாய் குந்தாணிகளின் கூட்டத்தில் வேறு பிடாரி இருந்தது. அதனால் தன்னை யாராவது எதிர்த்துப் பேசினால் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என அஞ்சி பிடாரியை யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை. காவாயன் உட்பட.

ஒரு யட்சன் முழு பேயாக வேண்டுமென்றால் முப்பத்தாறு முள்ளம்பன்றி முடியை கழுத்தில் சொருகி, பூனை முடிகளை பொசுக்கிய புகையை உடலெல்லாம் மேயவிட்டு தன் பூதவுடலை துறந்து வரவேண்டும். அத்துடன் தன் பழைய பேரை விட்டு புதிய பெயர் சூட்டிக்கொள்ளவேண்டும். யட்சனும் மனப்பூர்வமாக தயாராகியிருந்தான்.

யட்சாதிபதியிடம் பேசி அவனுக்கு சூட்டிக்கொள்ள பேய்க்காமன் என்ற பெயரை முடிவு செய்திருந்தான். யட்சன் பேயாக மாற சனிய நீராட்டு விழா நடத்த இருள் குல முப்பாட்டன் நரகாசுரன் நினைவுநாளான கார்த்திகை மாத அமாவாசை தேர்ந்தெடுக்கப்பட்டு பல பேய்கள் கூடியிருந்தன. உயர் பதவியிலிருந்த பேய்களுக்கு ஆமையோட்டில் ஆக்காட்டி ரத்தம் பரிமாறப்பட்டது. மற்ற பேய்கள் ஆளுக்கொரு கோழியைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தன. கோழிகள் சிறகடித்து கதறி தப்பிக்க முயன்றுகொண்டிருந்தன. ஒல்லியான தேகத்துடனும் ஒடுக்கு விழுந்த கன்னத்துடனும் காட்டேரி எழுந்தது. காட்டேரிதான் தலைமை நாசாரி. பெரிய அளவிலான சடங்குகள் அனைத்தையும் காட்டேரிதான் செய்யும். தன் வாயிலிருந்து வழிந்து தாடையைத்தடவி ஒன்றாய் இணைந்திருந்த பற்களை விரித்து பேசத்தொடங்கியது.

“சுடுகாட்டில் கூடியிருக்கும் சூலப்பிடாரிகளே, சூனியப்பேய்களே, உங்கள் அனைவருக்கும் என் சாபம், இங்கே நாம் அனைவரும் இதோ இங்கே மிதக்கிறானே இந்த யட்சனின் சனிய நீராட்டுவிழாவுக்கு வந்திருக்கிறோம். இவன் நமது இருட்டாண்டியின் தீய வழியில் சேர தன் பூத உடலில், உலகில் நம்பப்படும் பொய்யான கடவுள்களான முப்பது முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படக்கூடிய பொய்யர்களும் நமது ஒரே உண்மையான கடவுளான இருட்டாண்டியின் எதிரிகளுமானவர்களைப் புறக்கணித்து இந்த சபையின் முன்பு வந்துள்ளான். அவனது சனிய நீராட்டு விழாவில் அவனோடு பேரழுக்கு ஆவிகள் அனைத்தும் துணை நிற்க உங்கள் சார்பாக நான் இருட்டாண்டியை வேண்டுகிறேன்.”
காட்டேரி சம்பிரதாய கேள்விகளை கேட்கத்தொடங்கியது.
“இருட்டாண்டியின் முன்னிலையில் பேயாக மாற சம்மதமா?” என்றது காட்டேரி.

“சம்மதம்” என்றான் யட்சன்.
“இனி உன் கேவலமான பூத உடலுக்கு திரும்ப முடியாது, புரிகிறதா?” என்றது காட்டேரி.
“புரிகிறது”

“இனி பேயாண்டிகள் கூட்டமோ கூட்ட தலைவர்களோ சொல்வதுபோல் கேவலமான பூத மனிதர்களின் உடலில் ஏறிக்கொண்டு அவர்களை சித்தரவதை செய்வாயா?”
“செய்வேன்”

“இதுதான் இருட்டாண்டியின் சனிய உத்தரவு என்பதை அறிவாயா?”
“அறிவேன்”

“இருட்டாண்டியின் முன்னிலையில் உன் பூத உடலையும் ரத்தத்தையும் அர்ப்பணிக்க சம்மதமா?”

“பரிபூரண சம்மதம்”

“இனி பூதம் என்ற இழி நிலையிலிருந்து பேய் என்ற உயர்ந்த நிலைக்கு நீ மாறக்கடவது” என்று நாசாரி சொல்லி முடித்ததும் இவனுக்குள் சந்தோசம் பொங்கியது. கொஞ்ச நேரத்தில் காணாமல் போகப்போகும் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.
முப்பத்தாறு முள்ளம்பன்றி முடிகளும் இவன் முன்னால் வைக்கப்பட்டது. அவற்றை எடுத்து தன கையாலேயே கழுத்தில் சொருகிக்கொண்டான். பின்பு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான், அனைத்துப் பேய்களும் இவனைப் பார்த்து வாயைக் குவித்து “ஊஊ…” என்று ஊளையிட்டன. இவனும் வாயைக் குவித்து தலையை வானை நோக்கி நிமிர்த்தி ஊளையிட்டான், கழுத்திலிருந்து ரத்தம் முள்ளம்பன்றி முடிகள் மூலமாக வழிந்தது, அதை நண்டுசிண்டுப் பேய்கள் நக்கிக்குடித்தன.

அப்படியே மெதுவாக நடந்து பூனை முடிகள் பரப்பப்பட்ட மேடைக்கு வந்தான். இனி அவ்வளவுதான் கொஞ்ச நேரத்தில் பொசுங்கும் பூனை முடிகளின் புகையோடு புகையாக இவனுடைய ஆவியும் முழு பலத்தோடு வெளியேறும், பின்பு படுத்துக்கிடக்கும் இவனுடைய பழைய உடலிலிருந்து இதயத்தை எடுத்து பேய்க்காமனாகும் இவன் திங்க வேண்டும், பின்பு மற்ற அனைவரும் இவன் பழைய உடலைப் பிய்த்து தின்பார்கள். அவ்வாறாக சடங்கு முடியும். இவனும் பல சக்திகளோடு முழு பேயாக உருவெடுப்பான்.

இதையெல்லாம் யட்சன் கற்பனை செய்யும்போதே “உஷ்…” என்றது நாசாரி. தொடர்ந்து பல “உஷ்..” கள் கடைசி வரிசை வரை எழுந்து அடங்கியது. அதற்கு சடங்கு ஆரம்பித்தது என்று அர்த்தம். இருள் உலகின் எந்த ஒரு சடங்கும் மயான அமைதியில்தான் நடக்கவேண்டும். இவனது மேடை கொளுத்தப்பட்டது. பூனை முடிகள் பொசுங்கும் இனிமையான வாசனை இவன் மூக்கை நிறைத்தது. தன் மனித உடலின் சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து தீர்ந்துகொண்டிருப்பதை யட்சனால் உணர முடிந்தது தான் இனி பேய்க்காமன் என்று மனதுக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்டான். அப்போது எதோ வித்தியாசமாக உணர்ந்தான், திடீரென புகையில் எதோ மாற்றம் தெரிந்தது. எதோ காட்டமான புகை சூழ்ந்தது. இவனுக்கு இருமல் வரும்போல் இருந்தது.

மூச்சை அடக்கிக்கொண்டான். இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் என்று சொல்லிக்கொண்டான். கடைசி சில நிமிட நெருப்பு மிச்சமிருக்க “அஹ்ஹ… அஹ்ஹ…” என இருமினான். சுற்றிலுமிருந்த அனைத்துப் பேய்களும் அதிர்ந்துபோய் பார்த்தன. இருமல் அதிகமாகி மயானமே அதிரும் வண்ணம் இருமினான். அவ்வளவுதான், சடங்கு தடைப்பட்டது. இருமியபடி மேடையிலிருந்து தடுமாறி கீழே விழுந்தான். “துரோகி”, “தகுதியற்றவன்”, “வீணன்”, “பலவீனன்” என்று பல பல குரல்கள் சுற்றிலுமிருந்து ஒலித்தன. குரல்களின் சத்தம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. சத்தத்தை கேட்க முடியாமல் காதுகளை அடைத்துக்கொண்டான்.
“கருப்பு பெயரிலி, நீங்கள் ஒரு பூதம்.

இதை ஒப்புக்கொள்கிறீர்களா?” முனியன் கேட்டது, சுற்றிலும் நாசமாப்போன நாரவாயன்களின் முப்பத்திரண்டு பேய்கள் இருந்தன. அவைகள்தான் வழக்குகளில் ஜூரியாக செயல்படும். மொத்த முப்பத்தி மூன்று பேர்களில் வழக்கீடு தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டுபேர் பேசுவார்கள்.

“நான் ஒரு யட்சன், பாதி மனிதன், பாதி பேய்” என்ற யட்சன் தொடர்ந்து, “மேலும், நான் பெயரிலியல்ல. என் பெயர் சத்யா.” என்றான்.

“கேட்டுக்கொள்ளுங்கள் ஜூரிகளே. இதோ இங்கு நிற்கும் பூதம் நம் அமைப்புக்கு எதிராக, இதுவரை நம் அமைப்பில் யாருமே சொல்லத்தயங்கும் வண்ணம், தன்னை ஒரு மனிதன் என்று சொல்லிக்கொள்கிறது, மேலும் கீழ்த்தரமான தனது மனிதப் பெயரை இந்த சபையோரிடம் சொல்லி அப்படி அழைக்கவேண்டும் என்று நம்மை நிர்பந்திக்கிறான்” என்றது முனி.

“நீங்கள் எதற்கு என்னைப் பெயரிலி என்று சொல்ல வேண்டும்? என்னை அவமதிக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.” என்று கோபப்பட்டான் யட்சன்.

“நான் உன்னை எப்படி வேண்டுமானால் அழைப்பேன், எனக்கு சொல்லித்தரத் தேவையில்லை” என்ற முனியைக் குறுக்கிட்டு, “கருப்புகளே இங்கே எப்படி அழைக்க வேண்டும் என்பதைத்தாண்டி பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன” என்றது அமாவாசை ஆகாவளி.

“சரி” என்று ஆமோதித்தது முனி, யட்சன் பக்கம் திரும்பி “நீங்கள் கடந்த கார்த்திகை அமாவாசையன்று சனிய நீராட்டு எடுத்து பேயாக மாற முயன்றது உண்மையா?”
“ஆம், அன்று நரகாசுர நினைவுதினம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றான் யட்சன்.
“எனக்கு நீங்கள் தலைவர் நரகாசுரனைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று கத்தியது முனி.

“உங்களுக்கு நினைவூட்டவில்லை, நீங்கள் அந்த நாளின் முக்கியத்துவம் குறித்து சபையோரிடம் சொல்லாமல் தவிர்த்ததை என் சார்பாக சொல்லிக்கொண்டேன். இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன், எல்லாருக்கும் தலைவர் நரகாசுரன் நினைவுநாளில் சனிய நீராட அனுமதி கிடைக்காது, அதற்கு வீட்டோ அதிகாரம் படைத்தவர்களின் அனுமதியும் சாபமும் வேண்டும்” என்று யட்சன் காவாயனைப் பார்த்தபடி கூறவும் காவாயன் பதறி, “தேவையில்லாத சமாசாரங்களை சபையில் பேசவேண்டாம்” என்று தடுத்தது.

“தேவையும் தேவையில்லாததும் சம்பவத்தின் முக்கியத்துவம் குறித்தது” என்றான் யட்சன்.

கோபமான பிடாரி பின்னிய தன் தலைமுடியை அவிழ்த்தபடி “ஏ.. என்ன? கருப்பு காவாயனையே எதிர்த்துப் பேசுகிறாய்.” என மிரட்டவும் அனைவரும் மிரண்டனர்.

கொஞ்சமும் சளைக்காத யட்சன், “ஏ பிடாரி, வாயை மூடிக்கொண்டு இரு. தலையை விரிக்கும் வேலையை என்னிடம் வைத்துக்கொண்டால் வேப்பிலையால் அடித்து விரட்டிவிடுவேன்” என்றான். பிடாரியிடம் யாரும் அப்படிப் பேசியதில்லை, அதுபோக யட்சன் பாதி பூதம் என்பதால் அவனால் வேப்பிலை பறித்து அடிக்க முடியும் என்ற உண்மை தெரிந்து அத்தனை பேய்களும் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டன, பிடாரி உட்பட.
“பார்த்தீர்களா ஜூரிகளே. இப்படிதான் தான் பாதி பூதம் என்ற திமிரால்…” என்று ஆரம்பித்த முனியை திரும்ப குறுக்கிட்டு, “கருப்பு முனி… நீங்கள் விசாரிக்கும்போது மற்றவர்களை குறுக்கிடாமல் இருக்கச் சொல்வதுதான் இந்த விசாரணை நாசமாப்போக ஒரே வழி. தேவையில்லாத குறுக்கீடுகளால் விஷயம் தடம் மாறிப் போகிறது” என்று அமாவாசை ஆகாவளி எச்சரித்தது. அது சரிதான் என்பதுபோல மற்ற ஜூரிக்களும் கசமுசவென்று பேசிக்கொள்ள பிடாரியும், காவாயனும் அமாவாசை ஆகாவளியை முறைத்தபடி பேசாமலிருந்தனர்.

வேறு வழியின்றி கேள்விகளுக்குள் திரும்பிய முனி, “அன்றைய சனிய நீராட்டை நீங்கள் தடை செய்தது உண்மையா?” என்று கேட்டது.

“அது தடைபட்டது என்று சொல்வதுதான் சரி என்று கருதுகிறேன், அதற்கு நாசாரியான காட்டேரிதான் சாட்சி” என்றான் யட்சன்.
திடீரென தன்னை சாட்சிக்கு அழைத்ததில் அதிர்ச்சியான நாசாரி ஒரு நிமிடம் தடுமாறி, “அதாவது…” என்று இழுத்துவிட்டு, “யட்சன் இருமியதால் யட்சன் தடைசெய்தான் என்றும் சொல்லலாம், அதேநேரம் இருமல், தும்மல், விக்கல் போன்றவை கட்டுப்பாடன்றி வருவதால் தடை நிகழ்ந்தது என்றும் சொல்லலாம்” என்று மய்யமாக சொல்லி வைத்தது.

“சரி தடை நிகழ்ந்தது என்றே வைத்துக்கொள்வோம், அந்த தடையால் நீங்கள் தடை செய்யப்பட்டு முருங்கைக் காடுகளுக்கு விரட்டப்பட்டது உண்மையா?” என்றது முனியன்.
கோபமாக குறுக்கிட்ட அமாவாசை ஆகாவளி, “நிறுத்துங்கள். விரட்டப்படவில்லை, பணியிடமாற்றம் செய்யப்பட்டது” என்றது.
நக்கலாக முகத்தை வைத்துக்கொண்டு, “விரட்டுதலைதான் பணியிடமாற்றம் என்று கௌரவமாக சொல்லிக்கொள்வார்கள் என்று சபைக்குத் தெரியும்” என்றது முனியன்.

“அப்படியென்றால் கொஞ்ச நாள் முன்பு ஒட்டகம் மேய்க்கும் உங்கள் மகனை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள பாலைவனத்துக்கு பணிமாற்றம் பெற்றீர்களே, அதுவும் உங்களை விரட்டியது என எடுத்துக்கொள்ளலாமா?” என மடக்கியது ஆகாவளி.

அதிர்ந்துபோய் திருதிருவென முழித்தபடி, “அது வந்து…” என்று ஆரம்பித்த முனியனை குறுக்கிட்ட காட்டேரி, “தேவையில்லாத விவாதம் வேண்டாம், முனியா, நீங்கள் பேயாளுமன்றதால் அனுமதிக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளுங்கள். சபையில் பேயாளுமன்ற நடத்தை முக்கியம்” என்று உறுதியான குரலில் சொன்னது. இவர்களின் சம்பாஷணையில் கலந்துகொள்ளாத யட்சனுக்கு நினைவுகள் முருங்கைக் காடுகளுக்கு சென்றது.
மாரிக்காட்டில் சனிய நீராட்டுவிழா தடைபட்ட பிறகு ஏழு இரவுகளுக்கு யட்சனால் எழுந்திருக்க முடியவில்லை. அவனுடைய மனித தாய், ஏதேதோ மருந்துகளை புகட்டி அவனை உறங்க வைத்திருந்தார்.

ஏழு இரவுகள் கழித்து முழித்தபோது அவன் தனித்துவிடப்பட்டிருந்தான். அவனை எந்தப் பேயும் தொடர்புகொள்ளவில்லை. இவன் பார்த்த சிலவும் தலைகீழாக கவுந்தபடி பறந்தே போயின. கட்டக்கடைசியில் பொழுது விடியும் நேரத்தில் ரகசியமாக வந்த மண்டையோட்டு மாயாண்டி “கருப்பு, உங்களைப்பற்றிய விவாதம்தான் ஏழு இரவுகளாக நடந்துகொண்டிருக்கின்றது, கவலைப்படாதே, ஆகாவளி எப்படியும் உங்களுக்கு தீய உத்தரவோடு வரும்” என்றது. சொன்னதுபோல் எட்டாம்நாள் இரவு ஆகாவளி வந்தது, யட்சனை தள்ளிவைக்கவேண்டும் என்ற கருத்தை தோற்கடித்து ஒரு வழியாக முருங்கைக்காட்டுக்குப் பணியிடமாற்றம் செய்யும் உத்தரவை பெற்று வந்திருப்பதாக சொன்னது.

காமாலைக்கண்ணனிடம் சென்று விடைபெற சென்றது. காமாலையை சுற்றி நின்ற பேய்கள் யட்சனைப் பார்த்து, “பெயரிலி, பூதம்” என்று கத்தின. அவற்றை அதட்டிவிட்டு கண்களில் சோகம் இழையோட, “நாசமாப்போறவனே” என்று பாசமாக விளித்தது காமாலை. யட்சனைக் கட்டிக்கொண்டது. சிறிதுநேரம் மௌனத்தில் கழிய, “நீ ஒன்றும் கவலைப் படாதே, இன்னும் ஒரு வருடம்தான் பின்பு நீ எப்போதும்போல சனிய நீராட்டு எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

இவன் ஒன்றும் சொல்லவில்லை. பின்பு அவன் தோளைப் பற்றி “ஆனால் ஒன்று, முருங்கைக்காட்டு வேதாளத்திடம் நீ எச்சரிக்கையாக இரு, அது ஒண்டிப்புளி ஓரிக்களிடம் தொடர்பு வைத்திருக்கிறது” என்று எச்சரித்தது. ஒண்டிப்புளி ஓரி எனப்படுவது பெரும்புடுங்க பேயாண்டிகளிடம் சேராமல் தனியாக திரிவது. பல பேய்கள் ஓரிகளின் ஆசை வார்த்தையை நம்பி அதனுடன் சென்றுவிடுவதால் பேயாண்டிகள் கூட்டம் பலவீனமடைந்துகொண்டே இருந்தது. அதனால் ஓரிகளை தடை செய்ததோடு அவற்றுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று தீவட்டி தீஞ்சமூஞ்சி சொல்லியிருந்தார்.

யட்சன் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து மிகவும் வருத்தத்தில் இருந்தான். ஏனெனில் இடமாறுதல் என்பது கௌரவமாக கொடுக்கப்படும் ஒரு தண்டனை என்பது இவனுக்கு தெரியும். இருப்பினும் பேயாண்டிகள் கூட்டத்தின் முடிவை ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஓரியுடன் திரிகிறதோ ஓரியாக திரிகிறதோ அதன் கீழ் வேலைபார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தான். வரும்போது யட்சாதிபதி பாசமாய், “நாசமாய்ப்போடா” என்று அனுப்பி வைத்ததை நினைத்துக்கொண்டான்.

கடைசியாக காணப்போன பிடாரி காறித்துப்பி கழுத்தில் கட்டிவிட்ட பேயத்தினை எடுத்துப்பார்த்தான். இன்னும் ஒரு வருடத்தை இந்த வேதாளத்தின் பிடியில் சிக்காமல் ஒட்டிவிடவேண்டும் என்று முடிவு செய்தான். நடுவில் ஓரிகள் எதனையும் சந்தித்தால் காமாலையிடம் சொல்லவேண்டும் என்று முடிவுசெய்தபடி முருங்கை வேதாளத்தை சந்திக்க சென்றான். அது மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத, அல்லது கண்டுபிடிக்க விரும்பாத அடர்ந்த பிரதேசத்தில் நட்டநடுக்காட்டில் ஒரு முருங்கை மரத்தில் வசித்து வந்தது.

முருங்கை வேதாளம் ஒரு வித்தியாசமான பேயாக இருந்தது, மற்ற பேய்களைப்போல் இல்லாமல் இது எப்போதும், “தலைகீழாகத்தான் தொங்குவேன்” என்று தொங்கிக்கொண்டிருக்கும். யாரேனும் வரும்போது அவர்களின் தோளில் ஏறிக்கொண்டு கொஞ்சதூரம் போய் அங்கே உள்ள முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும். அதுபோக முதுபெரும் பேயான அது வித்தியாசமான காரியம் செய்தது, தினமும் ஏதாவது ஒரு பிணத்தின் மண்டையோட்டை பொறுக்கி வந்து, அதன் நெற்றியை மட்டும் செதுக்கி எடுத்து அதை ஓட்டைபோட்டு ஒரு நூலில் கோர்த்து புத்தகம்போல் செய்து வைத்துவிடும். பின்பு தினமும் இரவில் வேதாளத்தின் கேள்விகளை அந்த புத்தகத்தில் எழுதி எல்லோருக்கும் அனுப்பிவைக்கும். மண்டையோட்டில் செய்யப்பட்டதால் மண்டைநூல் என்று அது குறிப்பிடப்பட்டது. அதன் எழுத்துக்கள் எப்போதும் புரியாதபடியே இருக்கும்.

எல்லாவற்றுக்கும் கடைசியில் “இருட்டாண்டி பார்த்துக்கொள்வான்”, “பேய்கள் முடிவு செய்வார்கள்”, “நதி தன் போக்கில் செல்லும்”, “யாருக்கும் பயப்படாமல் பிறரை பயமுறுத்துபவனே பேய்” என்பன போன்ற தத்துவப்பூர்வமான வசனங்கள் இருக்கும். முதலில் மண்டைநூல் குறித்து கண்டுகொள்ளாத பேய்க்கூட்டத்தின் பெரும் முண்டங்களான பிடாரி, காமாலையன் போன்றோரெல்லாம் பின்னாளில் ஆளுக்கொரு மண்டைநூல் வைத்துக்கொண்டனர். போட்டிக்கு மண்டைநூல் வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்பதால் எதுவும் எழுதாமல் புதியதாகவே வைத்திருந்தனர்.

இப்படி கௌரவத்துக்காக வைத்துக்கொண்ட மண்டைநூல்களை கௌரவ மண்டைநூல்கள் என்று அழைத்துக்கொண்டனர். ஆனால் வேதாளம் அவர்களெல்லாம் ஆணவத்தால் மண்டைநூல் வைத்துள்ளார்கள் என்று ஆணவ மண்டைநூல்கள், ஆணவ மண்டையர்கள் என்று சொல்லும். ஆணவமோ, கௌரவமோ, இரண்டுமே உருப்படாதது என்று யட்சன் கருதினான். மிகவும் நல்லவர்களான பிடாரியும் காமாலையனும் இப்படி உருப்படாத வேலை செய்வதை அறிந்து யட்சன் ஆச்சரியப்பட்டான்.

ஒருநாள் வேதாளம் கேட்டதற்காக சுடுகாட்டிலிருந்து சுண்டுவிரல் எலும்புகளை பொறுக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது “பெயரிலி, பூதம், கோழை” என்று குரல்கள் கேட்டன. வழக்கமாக இவனை பேய்கள் கிண்டல் செய்வதுதான் என்றாலும் அன்று அவன் போகும் பாதையில் ஒரு பூனை கூட குறுக்கிடாமல் இருந்ததால் ஒருவித அபசகுனமாகவே இருந்தது. அதற்கேற்றார்போல் சுண்டுவிரல் பொறுக்கும்போது இவனுக்கும் காளாமுகன் ஒருவனுக்கும் சண்டை வந்தது. இவைகளால் ஏற்கனவே கோபத்தில் இருந்த யட்சன் மேலும் கோபமாகி அந்த பேய்கள் ஒளிந்திருந்த புளியமரத்தைப் பிடித்து உலுக்கினான்.

அதில் அமர்திருந்த பறவைகளெல்லாம் அலறியடித்துக்கொண்டு பறக்க, பேய்களெல்லாம் தடுமாறி விழுந்து பயத்தோடு பறந்தன. ஒரேயொரு பேய் மட்டும் தடுமாறிக்கொண்டிருக்கும்போது, யட்சன் அதன்மீது தாவிக்குதித்து அதன் கழுத்தை மிதித்துக்கொண்டான்.
“எதற்கு நான் போகுமிடமெல்லாம் தொந்தரவு செய்கிறீர்கள்” என்று காதுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் புகை வெளிப்பட கோபமாக கேட்டான் யட்சன்.

“என்னை விட்டுவிடு” என்று பலவீனமாக புலம்பியது அந்த பேய்.
“மரியாதையாகச் சொல், இல்லாவிட்டால் உன்னைபிடித்து இதே புளியமரத்தில் வைத்து ஆணியால் அடித்துவிடுவேன்” என்று மிரட்டினான் யட்சன்.
பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டது அந்த பேய், “எனக்கு ஒன்றுமே தெரியாது…” சிணுங்கியது, “எல்லாம் யட்சாதிபதிதான்” என்று முனங்கியது.

“என்னது?” என்று குழப்பமும் கோபமுமாக கேட்டான் யட்சன்.
“காமாலையன்தான் இப்படி பண்ண சொன்னார்” என்றது அந்த பேய்.

அதிர்ச்சியில் இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பேயை உற்றுப்பார்த்தான். ஆம். அந்தப் பேயை யட்சாதிபதியின் கூட சுற்றும் தொண்டரடிப்பொடிகளுடன் பார்த்திருக்கிறான்.
“உன்… உன் பெயர் என்ன?” என்று குழப்பத்துடன் கேட்டான்.
“உடுக்காடி…”

குழப்பத்துடன் காலை எடுக்க அது பறந்து மறைந்தது.
வேதாளத்திடம் சுண்டுவிர்ல்களை கொடுக்கும்போது மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு நடந்ததை சொன்னான். “ஹஹஹா..” என்று சிரித்தபடி “என் கேள்விகளுக்கு பதில் சொல்” என்று கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தது.

“நீ சனிய நீராட்டு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னது யார்? உனக்கு சனிய நீராட்டு தேதி முடிவு செய்தது யார்? அந்த தேதி கிடைக்க லாபி செய்தது யார்? மேடை அமைத்தது யார்? முள்ளம்பன்றி முடிகள் கொண்டுவந்தது யார்? பூனை முடிகள் போட்டது யார்? உன்னை இங்கே அனுப்பும் முடிவை சொன்னது யார்? இதற்கு பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாக சிதறும்” என்றது வேதாளம்.

வேகமாய் கேட்டதில் பதில் சொல்ல திணறினான். யோசித்துப்பார்த்ததில் “காமாலையன்” என்று உதடுகள் முனுமுனுத்தன.

“ஹஹஹா…” என்று சிரித்தபடி பறந்து வேறு மரத்துக்கு சென்றுவிட்டது வேதாளம்.

வேதாளம் போனதும் யோசனையில் ஆழ்ந்த யட்சன் கண்ணில் வேதாளத்தின் மண்டை புத்தகம் தெரிந்தது. அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். வழக்கமான கேள்விகளைத்தாண்டி போன பிறகு காவாயன் பற்றி எதோ எழுதியிருந்தது தெரிந்தது. அதில் வேதாளத்துக்கும் காவாயனுக்கும் நடந்த விவாதங்களும் பின்பு நடந்த சண்டைகளும் பார்த்தான். காவாயன் தனக்கு எதிராக பேசிய அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியிருப்பதை அறிந்துகொண்டான். மற்றவர்களெல்லாம் தனித்தனியாக பிரிந்துபோய்விட வேதாளம் மட்டும் அவமானங்களைத் தாண்டிக்கொண்டு பெரும்புடுங்க பேயாண்டிகள் சங்கத்திலேயே அனைவராலும் ஒதுக்கப்பட்டு தன்னந்தனியனாக வந்திருப்பது புரிந்து பரிதாபமாக வேதாளத்தைப் பார்த்தான். அது அமைதியாக முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.

மண்டைப் புத்தகத்தில் கடைசி பக்கத்தை எடுத்துப்பார்த்தான். “வேதாளம் தன் போக்கில் மரத்தில் தொங்கும்” என்று எழுதியிருந்தது.
பின்பு ஒருநாள் வேதாளத்திடம் அது குறித்து கேட்டதற்கு “அவர்கள் பழிவாங்க முடிவெடுத்தால் அப்படித்தான் செய்வார்கள். ஒரு பேயின் வெறுமையை இட்டு நிரப்ப எத்தனையோ சூழ்ச்சிகளை செய்வார்கள் அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம் முந்நூறு அமாவாசைகளாக என்னிடம் செய்துவருவதை மூன்று அமாவாசைகளாக உங்களிடம் செய்கிறார்கள் அவ்வளவுதான்” என்றது.

“ஆனால் என்னிடம் ஏன் செய்யவேண்டும்? நான் அவர்களுக்கு விருப்பமானவன்தானே?” என்று கேட்டான் யட்சன்.
“நீ அமாவாசை ஆகாவளியிடமிருந்து வந்தவன் என்ற ஒரு காரணமே போதும்” என்றது வேதாளம்.

“என்னிடம் பாசமாக நடந்துகொண்டிருந்தார்களே”
“திருதராஷ்டிர ஆலிங்கனம் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு திரும்ப தலைகீழாக தொங்கப்போனது வேதாளம். இந்த பேய் கேள்விகளுக்கு பதிலே தருவதில்லை என்று நினைத்துக்கொண்டான் யட்சன்.
“கேள்விகளுக்கு பதில் கேள்விகளே கேட்டுக்கொண்டிருந்தால் புத்திசாலி என்று பொருளில்லை” முனியனின் குரல் யட்சனை நினைவுகளிலிருந்து இழுத்துவந்தது. இதற்கும் பதிலாக ஒரு கேள்வி தோன்றினாலும் மேலும் இந்த விவாதத்தை நீட்டிக்க இவன் விரும்பவில்லை.

சொல்லப்போனால் இவனுக்கு இந்த கூட்டத்தில் நிற்பது எரிச்சலாக இருந்தது. இது வெறும் சம்பிரதாய கூட்டம் என்பதை அறிந்தேயிருந்தான். இந்த கூட்டத்தில் பிணநாயகமோ பேயாளுமன்ற நடத்தையோ எதிர்பார்க்க முடியாது. எனவே நடப்பதைப் பார்ப்போம் என்று அமைதியாய் இருந்தான்.
அமைதியாய் இருப்பதைப் பார்த்ததும் முனியன் தொடர்ந்தது, “நீங்கள் தலைவர் காவாயனைப்பற்றி அவதூறாக உங்கள் மண்டைப் புத்தகத்தில் எப்படி எழுதலாம்?” என்றது.
“நான் என்ன சொன்னாலும் நீங்கள் ஏற்கப்போவதில்லை, ஏற்கனவே கடித்து அனுப்பிய காதுகளை நீங்கள் புறக்கணித்ததுபோலதான் இப்போதும் செய்யப்போகிறீர்கள். உங்களிடம் எப்படி பிணநாயகம் எதிர்பார்க்க முடியும்?”

“நிறுத்து…” கோபமாக கத்தியது பிடாரி. சுற்றிலுமிருந்த பேய்களுக்கு பயத்தில் சப்த ஓடுகளும் ஒடுங்கின.
“சபையோர்களே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை, இருப்பினும் கூறுகிறேன். நமது கூட்டத்தில் ஒரு பேயின்மீது குற்றம் சுமத்தப்பட்டால் முதலில் அந்தப் பேயின் காது கடிக்கப்பட்டு கேள்வி எழுப்பப்படும், அதற்கு விளக்கம் கொடுக்க பதிமூன்று காதுகளைக் கடித்து தோரணமாக்கித் தொங்கவிட்டு அதில் பதிலைக் கோர்த்து அனுப்ப வேண்டும். ஆனால் இதோ நிற்கிறானே யட்சன், இவன் காதுகளை சரியாக கடிக்கவேயில்லை. சில காதுகளில் ரத்தம் சொட்டிக்கொண்டேயிருந்தது. அதனால் அதை பதிலாக ஏற்க முடியாது.” என்று கத்தி முடித்து மூச்சு வாங்கியது.

“அந்த பதிலில் யட்சாதிபதியாகிய காமாலைக்கண்ணன் மனித உலகத்தில் தொழில்முறை பேயோட்டியாக இருந்துகொண்டு, நம் கூட்டத்தில் சில பேய்களை மனிதர்கள் மீது ஏவிவிட்டு, அதை வெளியேற்ற பணம் பெற்று லட்சாதிபதியாக வாழ்கிறது என்று குறிப்பிட்டிருந்தேனே அதை விவாதிக்கலாமே?” என்றான்.
“முடியாது. உன் பதிலில் காது சரியாக கடிக்காததால் ஏற்கப்படாது. நீ கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாய். உன் மண்டைப்புத்தகத்தைப் படித்ததால் அமுக்குவான் பேயையும், வேதாளத்தையும் சேர்த்து விலக்குகிறேன்.” என்றது பிடாரி.
அமுக்குவான் பேய் நாசமாய்ப்போன நாரவாயர்கள் கூட்டத்தில் பிரசித்திமிக்கது.

மனிதர்களை தூங்கும்போது, முழிப்பு வந்தும் வராத நேரத்தில் அமுக்கி நடுநடுங்க வைப்பதுதான் அதன் வேலை. அவ்வபோது காவாயனையும் அதன் தொண்டரடிப்பொடிகளையும் வம்பிழுத்துக்கொண்டே இருக்கும். அதுப்போக ஒருநாள் முனியன் வெட்டியானாக இருக்கும் தன் மகனைப்பற்றி பெருமை பேச, அதையும் கலாய்த்து விட்டது. அந்த கோபத்தை முனியனும், காவாயனும் பிடாரியும் சேர்த்துவைத்து இப்போது பழிவாங்கிவிட்டதாக பேய்கள் முணுமுணுத்தன. அமுக்குவானையும் வேதாளத்தையும் வெளியேற்றுவதாக சொன்னது பல பேய்களுக்கு வருத்தமாக இருந்தது. மற்றவை வெளிக்காட்டவில்லை என்றாலும் அவற்றின் வேண்டப்பட்ட விரோதியான காட்டேரியால் சும்மாயிருக்க முடியவில்லை.

“ம்க்கும்…” என்று ஒருமுறை தொண்டையை செருமிக்கொண்டே உதடுகளை ஒட்டி வழிந்து தாடையில் இணைந்திருந்த பற்களை ஒருமுறை தடவிக்கொடுத்தது.

“என்னதான் இருந்தாலும் இப்படி திடீரென வெளியேற்றுவது நல்லதல்ல. பேயாளுமன்ற நடைமுறைப்படி கொஞ்ச நாள் புளியமரத்தில் கட்டிப்போட்டுவிட்டு பிறகு முடிவெடுக்கலாம்” என்றது. அதும் சரிதான் என்று அமாவாசை ஆகாவளி உட்பட சில பேய்கள் ஆமோதித்தன.

பிடாரி எழுந்துநின்று தலைமுடியை விரித்தது. “பெயாளுமன்ற நடைமுறையா?” என்று ஒருமுறை சுற்றி வந்தது. “சரி வாக்கெடுப்பு எடுப்போம், நீக்க விரும்புபவர்கள் கையைத் தூக்குங்கள்” என்றது. சரியாக சொல்லிவைத்ததுபோல் காவாயனின் ஜால்ரா பேய்கள் தயாராக வைத்திருந்த பிணத்திலிருந்து பிடுங்கிவரப்பட்ட கைகளை உயர்த்தியது. எதிர்த்தரப்போ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்று சாதாரண கூட்டம் என்பதால் கை எடுக்காமலே வந்திருந்தன. அவை எதுவும் பேச வாயெடுப்பதற்குள், “வாக்கெடுப்பு முடிந்தது, எல்லோரும் கலையலாம்” என்றது காவாயன். அதைக்கேட்டதும் பள்ளி மணியடித்த பிள்ளைகள் போல எல்லா பேய்களும் பறந்து போயின.

அதன் பிறகு பிணநாயகம் வென்றதாக அறிவித்த காவாயன் மூன்று அமாவாசைகளுக்கு விடுப்பில் போனதாக கேள்வி.

•••

ஜெயாபுதீன்( கவிதைகள் ) கோவை

திரும்புதல்
************

வெள்ளைநிற ஓவியமொன்றை~
வரையத் தொடங்குகிறான்

******

சட்டமிட்ட தாளிலிருக்கும்
நிறங்களைத்~
திரும்பவும் மைக்கூடுகளில்
ஏற்றத் தொடங்குபவனின்
பெயர்தானென்ன.?

******

வண்ணம் பூசுவதால்
தூரிகையாகிறவன்~
நிறங்களைக் கழுவும்போது
என்னவாக இருப்பான்.?

******

வானத்தைக் கழுவுகிறான்~
நீலந்தொலைத்த
வெள்ளையாகிறது ஆகாயம்.

******

ஒற்றைத்துளிக் கறுப்பு மையைத்
திரும்பப் பெறுகையில்~
மைக்கூடு திரும்புகின்றன
வலசைப் பறவைகள்.

******

நீலச் சாயக்குப்பிக்குள் நதியையும்~

பச்சை மைக்கூட்டுக்குள் வனத்தையும்~

திரும்பவும் நுழைக்கிறான்.

******

வெள்ளைநிற ஓவியத்தை
வரைந்து முடிக்கிறவனின்
பால்யம்~

அவனைத் திரும்பவும் அழைத்துக்கொள்கிறது~~

தனக்குள்ளேயே.

***

கதிருவேலனின் அட்டகாசம் ( சிறுகதை ) – வா.மு.கோமு

கொழந்தையப் பாருக்கா!
அப்பிடியே அச்சு அசலு
மோடியாட்டம் செவப்பு,
அவராட்டமே மூக்கு
அந்த ஒதடுகள சித்த பாருங்களேன்
அடேஞ் சாமி! பொன்னாயா
பையன் நாளைக்கி பிரதமராத்தான்
வருவாம் பாரேன்!
இன்னிக்கே கதிருவேலஞ் சொன்னான்னு
எழுதி வச்சுக்கோ பொன்னாயா!
ஐநூறு ரூவா நோட்டை எப்பிடி
வவுக்குனு புடுங்கி கைக்குள்ள
சுருட்டி வச்சிக்கிட்டாம் பாருக்கா!

000

சுற்றிலும் நின்றிருந்த உள்ளூர் பொம்பளைகள் தாவாங்கட்டைக்கு கையைக் கொண்டு சென்று வைத்துக் கொண்டார்கள். ‘அடப் பாப்புருக்கு பொறந்தவனே! பொன்னாயா பையனைப் பாக்க வந்துட்டு இப்பிடியா ஒரு சொல்லு சொல்லி பணங் குடுப்பே!’ என்றே நினைத்தார்கள் அவர்கள். ‘ஐநூறு ரூவா நோட்டை குடுத்துப்போட்டு பேச்சைப் பாரு தண்டுவனுக்கு! தண்ணியப் போட்டுட்டு வந்துட்டானோ? இந்தப் பேரெழவு புடுச்சவன் தண்ணியப் போட்டாலும் சுத்தமாத்தான் பேசுவானே! இன்னிக்கி இவுனுக்கு என்ன வந்துச்சு? நோட்டுக புழக்காட்டத்தப் பார்த்தா சம்பளம் வாங்கீட்டானாட்ட இருக்குது மில்லுல இன்னிக்கி!’
கதிருவேலனோ ஐநூறு ரூவாயைக் குழந்தை கையில் கொடுத்த பிறகு மற்றவர்கள் குழந்தையைப் பார்க்க வழி விட்டு வீட்டின் ஓரமாய்ச் சென்று நின்று கொண்டு எல்லோரையும் பார்த்து புன்னகைத்தான். அந்தப் புன்னகை தான் அவனை தண்ணி போட்டவனாக காட்டிக் கொடுத்தது.

கதிருவேலனுக்கு இன்று சம்பள தினம் தான். மதியமே மில்லில் இவன் வேலையில் இருந்த போது பொன்னாயாவுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் அவனுக்கு அலைபேசி வழியாக கிடைத்து விட்டது. அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த நன்னாள் இது தானே! இதுவெல்லாம் பழைய பகை. பகையாக இவன் தான் நினைத்துக் கொண்டிருந்தான் இத்தனை காலம் வரை.

பொன்னாயாவின் அம்மா கண்ணாத்தா தான் எல்லாவற்றிற்கும் காரணம். கதிருவேலன் உள்ளூரில் துணி வெளுக்கும் குடும்பத்தில் பிறந்தவன். அவன் பிறப்புக்கு வந்திருந்த கண்ணாத்தா வாழ்த்திய வாழ்த்து தான் அப்போது உள்ளூரில் பிரசித்தம். இவன் பெரியவனாகியும் அதையே சொல்லிச் சொல்லி சிரித்தார்கள். அது அவன் மனதில் வேர் விட்டு பூதாகரமாய் வளர்ந்து விட்டது. ‘பொக்கவாயி சிரிப்பப் பாரு ராசாவுக்கு! அப்பிடியே கலெக்டராட்டமே சிரிக்கான்!’ இது தான் கண்ணாத்தா இவன் பிறந்த போது சொன்ன வார்த்தை. இவன் உள்ளூரில் சிரிக்கும் சமயமெல்லாம் கலெக்டர் சிரிச்சுட்டாருடோய்! என்றே நக்கலும் நையாண்டியுமாகப் போயிற்று!

கதிருவேலன் படிப்பும் ஒன்பதாவதோடே நின்று போனதற்கு அவன் தந்தையார் இறந்து போனது காரணமாயிற்று. வீட்டுக்கு ஒத்தைப் பிள்ளை கதிருவேலன். அம்மா துணி வெளுத்து பொட்டி போட்டு தேய்த்துக் கொடுத்து சம்பாதித்து இவனை படிக்க வைக்க இயலவில்லை. அம்மாவுக்கு சிலகாலம் ஒத்தாசையாக இருந்தான். கலெக்டர் துணி வெளுக்க வந்து விட்டதாய் ஊர் பேசிற்று. கண்ணாத்தா இறந்த அன்று தான் கதிருவேலன் கோட்டர் அடிக்க கற்றுக் கொண்டான். அன்று அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் முக்குளித்தான். அவனது மிக நீண்டகால பகையாளி இறைவனடி சேர்ந்து விட்டள்.

அம்மாவும் போன பிறகு கதிருவேலன் அனாதையானான். துணி வெளுக்கும் வேலையை விட்டொழித்து விட்டு நூல் மில்லுக்கு சென்று சேர்ந்து கொண்டான். அவனுக்கென்று ஒரு வீடு மட்டும் அவன் படுத்துறங்கிச் செல்ல உள்ளூரில் இருந்தது. உள்ளூர் குடிகார ஆட்களுக்கெல்லாம் மிக நெருங்கிய நட்புடையவனான் கதிருவேலன். அவனது உள்ளூர இருந்த பகையை இன்று கண்ணாத்தாவின் பெண் பொன்னாயாவுக்கு பிறந்த பையனை வாழ்த்தியதோடு முடிவுக்கு வந்தது. நிம்மதியாய் கூட்டத்தினரைப் பார்த்து மீண்டுமொரு புன்னகையை தவழ விட்டு விட்டு வீட்டை விட்டு வெளி வந்தான் கதிருவேலன்.

இதைப்பற்றி அவனது குடிகார நண்பர்களுக்கு எதுவும் தெரியாது. கதிருவேலனுக்கு அதை தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கலெக்டர் கதிருவேலன் என்கிற பேச்சே உள்ளூரில் இப்போது அழிந்து போயிருந்தது. பொன்னாயாவுக்கே அது தெரியுமோ என்னவோ! ஆனாலும் தன் வாழ்வில் இனிமேல் தனக்கு எல்லாமும் நல்லதாகவே நடக்குமென நம்பி சாலையில் நடையிட்டான் கதிருவேலன். மாலைநேரமாகையால் சாலையில் வாகனங்களின் அணிவகுப்பு அதிகமாயிருந்தது. இவன் சிறுவனாய் இருந்த போது இந்தச் சாலையில் இத்தனை வாகனங்களைக் கண்டதேயில்லை.
மேற்கே குருடி மலையிலிருந்து மழை பெய்யுங்காலத்தில் தண்ணீர் வரும் பள்ளம் இன்று வீடுகளாய் நிரம்பியிருந்தது. நாளையோ அல்லது சில வருடங்கள் கழித்தொ ஒரு பெருமழை கொட்டினல் லபோ லபோவென் மக்கள் வீடுகளை இழந்து நெஞ்சில் அடிட்த்ஹுக் கொள்வதை நியூஸ் சேனல்களில் பார்க்கலாம். காலமாற்றத்தில் இவன் துணிமணிகளை துவைக்கும் பாறையை காணவில்லை. அந்த இடத்தில் ஒரு கம்பெனி முளைத்திருந்தது. பாறை இருக்குமிட்த்தில் இளநீலவர்ண உடையில் காவலாளி நின்றிருந்தார்.

சாலையோரத்தில் இருபுறமும் நின்றிருந்த பெரிய பெரிய புளியமரங்கள் ஒன்றுகூட இல்லை. இருவழிப் பாதையாக கோவையிலிருந்து பெரியநாய்க்கன் பாளையம் வரை சாலை படர்ந்து செல்கிறது. இருவழியிலும் வாகனங்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றன எந்த நேரமும். வெளியூர் ஆட்கள் உள்ளூரில் குவிந்து கிடக்கிறார்கள். யாரையும் இவனுக்கு அடையாளம் தெரியவில்லை. உள்ளூர் ஆட்கள் ஆங்காங்கு கடைவீதிகளில் தட்டுப்படுகிறார்கள்.

சாலையில் இவன் நடந்து சென்று கொண்டிருக்க இவனை ஒட்டினாற்போல் கணேசனின் பைக் வந்து நின்றது.
“எங்கடா வெக்குடு வெக்குடுன்னு போயிட்டு இருக்கே? சரக்கு கடைக்கி தானே!” என்ற கணேசனுக்கு பதிலேதும் சொல்லாமல் அவன் வண்டியில் தொற்றிக் கொண்டான்.

“இன்னிக்கி சம்பளம் வாங்கிட்டியா? அப்ப இன்னிக்கி உன்னோட சப்ளை தான். காடைக்குஞ்சு கறி சாப்பிடுவோம்! எனக்கு ஒரு பீரு மட்டும் போதும். முருகேசனுக்கு ஒரு போனை போட்டு துடியலூர் கடைக்கி வரச் சொல்லிடலாமா?”

“பேசாம வண்டிய நேராப் பாத்து ஓட்டு மாப்ள! போயி கடையில உக்காந்துட்டு அவனை வரச் சொல்லுவோம்! ” என்றான் கதிருவேலன்.

சாலையோரமெங்கும் காம்ப்ளெக்ஸ்கள் முளைத்து நின்றிருப்பது இந்த உலகம் படுவேகமாக எங்கோ வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறது, என்பதையே கதிருவேலனுக்கு சொல்லிக் கொண்டிருந்தது. உலக வேகத்துக்கு இணையாக இவனால் எதுவும் செய்ய முடியாதது வேதனையாயிருந்தது. வேகத்துக்கு தண்ணி மட்டுமே போட முடிகிறது என்பதே இப்போதைக்கு தீர்வாய் மாறிப் போயிற்று.

அரசாங்கம் எல்லோரையும் தண்ணி போட வேண்டாம் என்கிறது. ஆனால் தண்ணிக்கடையை திறந்து வைத்திருக்கிறது. சிகரெட் குடிக்காதே, பான்பராக் போடாதே, ஹான்ஸ் போடாதே என்று சொல்கிறது. ஆனால் கடைகளில் அவற்றை விற்பதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த விசித்திரம் மட்டும் புரியாதவனாகவே வாழ்கிறான் கதிருவேலன். அவனுக்கென்று ஒரு துணை கிட்டி விட்டால் அமைதியடைந்து வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வான் என பலர் நினைக்கிறார்கள். நினைப்பதற்கென்ன காசா பணமா? இதை வாசிக்கும் நீங்கள் கூட நினைத்துக் கொள்ளுங்கள்! இந்த வாலிபன் ஏன் தன்னை குடியால் மாய்த்துக் கொள்கிறான்? என்றும், வீணாகப் போய்விடுவானே! என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். கவலைப்படுவதற்கு நேரமிருந்தால் அதையும் செய்யுங்கள் சில நிமிடம்.

கணேசன் வழக்கமாய் நிறுத்தும் மரத்தடியில் தன் டூவீலரை நிறுத்தி சாவியை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். ‘வணக்கம் சாரே!” காதில் செருகியிருந்த பால்பாய்ண்ட் பேனாவை கையில் எடுத்துக் கொண்ட ஒருவர் பேப்பரில் இவர்கள் சொல்லும் ஆர்டரை எழுதிக் கொள்ள ஃபாரின் வாயிலிலேயே காத்திருந்தார். கணேசன் ஆர்டர் சொல்ல கதிருவேலன் ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை அவர் கையில் கொடுத்து விட்டு மாடிப்படிகளில் ஏறினான். கீழே கசா முசாவென கூட்டமாயிருக்க இவர்கள் வழக்கமாய் மேலே மாடியில் சென்று தான் அமருவார்கள்.

முருகேசனுக்கு கணேசனே டேபிளில் அமர்ந்ததும் போனைப் போட்டுச் சொல்லி விட்டான். சில நிமிடங்கள் பேசியதும் போனை பாக்கெட்டில் வைத்தான்.

“முருகேசன் என்ன சொல்றான்?” என்றான் கதிருவேலன்.
“மதியமே ரெண்டு பீரு குடிச்சிட்டானாம். யாரோ அவன் மாமன் பையன் ஈரோட்டுல இருந்து வந்திருந்தானாம்.”
“வர்றானா இல்லையா?”

“வர்றேனுட்டான். நாம ஆரம்பிப்போம்” இவர்கள் முதல் ரவுண்டை முடித்த சமயத்தில் முருகேசன் அவன் மாமன் பையனோடு மாடிக்கு வந்து விட்டான். அவனை இவர்களுக்கு அறிமுகப் படுத்தினான் முருகேசன். அவன் பெயர் குணசேகராம். ஊதுகாமாலை வந்தது போல கன்னம் இரண்டும் உப்பிப் போயிருந்தது அவனுக்கு.
“ஈரோட்டுல இருந்து பஸ்சுல படியில தொங்கீட்டு வந்தீங்களா இல்ல பின்னாடி ஏணி இருக்குமே அதப் பிடிச்சு நின்னுட்டே வந்தீங்களா?” என்றான் கதிருவேலன். குணசேகரனுக்கு அது குழப்பமாயிருந்தது. சிரிக்காமல் கேட்கிறானே மனுசன்!

“இல்ல பஸ்ல உள்ளார உக்கோந்துட்டு தான் வந்தனுங்க!”
“கல்யாணம் ஆயிடுச்சா உங்களுக்கு?” என்றான் கதிருவேலன் அவனிடம்.

“ஆயிடுச்சுங்க. ஒரு வருசமாச்சி!”
“விதவையைக் கல்யாணம் பண்டுனீங்களா? இல்ல இழுத்துட்டு ஓடி காதல் கல்யாணம் பண்டுனீங்களா?”
குடித்துக் கொண்டிருந்த முருகேசன் ‘உட்றா மாப்ள அவனை! ஏம் போட்டு வறுத்து எடுக்குறே?” என்றான்.

“இல்ல நண்பரைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்னு தான். குணசேகரு, அவனுங்க குடிக்கட்டும். நாம மெதுவா குடிப்பம். சொல்லுங்க நீங்க, ஈரோட்டுல தண்ணி வசதியெல்லாம் எப்படி? உங்க மனைவி பைப்புல புடிக்கிறாங்களா இல்ல காவேரி ஆத்துக்கு போயி மோந்துட்டு வர்றாங்களா? இல்ல தெரிஞ்சிக்கறதுக்குத்தான்!”
“மாப்ள நீ கம்முன்னு குடிக்கிறியா இல்ல என்ன கேக்குறே இப்போ? வந்த நண்பரை போட்டு வாட்டி எடுத்துட்டு!”

“அடப் பேசுறக்கு உடுங்கடா சித்தெ! நீங்க குடிங்கடா! அப்புறம் குணசேகரு முதலிரவுல அவங்க மொதல்ல கையை வச்சாங்களா? இல்ல நீங்க மொதல்ல கையை வச்சீங்களா?”
“இதென்ன இப்படி பேசிட்டு இருக்காரு இவரு?” குணசேகர் முருகேசனிடம் எடுத்து இயம்பினான்.

“அவன் அப்பிடித்தான் கேப்பான். மனசுல ஒன்னும் தப்பா நெனச்சுட்டு கேக்க மாட்டான். அவன் பழக்கமே அதான். சைக்கிள் ஓட்டத் தெரியுமான்னு அவனை நீ கேளு!” என்ற முருகேசன் பீர் பாட்டிலை உயர்த்தி அன்னாந்து ரெண்டு மடக்கு குடித்து டேபிளில் வைத்தான். காடைக் குஞ்சின் தொடைப்பகுதியை தேடி எடுத்து வாயிற்குள் தள்ளினான்.

“கதிருவேலன் உங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா?” என்றான் குணசேகரன்.

“எனக்கு சைக்கிளு, காரு, பைக்கு ஒன்னும் ஓட்டத் தெரியாது. பஸ்சுல ஏறி போவேன் வருவேன். என்கிட்ட சைக்கிள் இருந்தாத்தானே ஓட்டுறதுக்கு? என்கிட்டத்தான் ஒன்னுமில்லையே! இப்படி நண்பர்கள் வண்டி எடுத்தாங்கன்னா உக்கோந்துட்டு ஊருல போயி இறங்கிக்குவேன்!”

“அதிசியமா இருக்குது உங்களோட! இந்தக்காலத்துல பைக்கி ஓட்டத் தெரியாதுங்கறீங்க?”

“ஆமா! அதிசியந்தான் எனக்குமே. சரி ஈரோட்டுல இருந்து வந்திருக்கீங்களே உங்க சம்சாரத்தோட சண்டெக் கட்டீட்டு வந்துட்டீங்களா? இல்ல சண்டை கட்டாம சும்மாநாச்சிக்கும் வந்துட்டீங்களா?”

“ஏனுங்க ஊருல இருந்து வந்தா சண்டையாத்தான் இருக்கணுமா?”
“தெரியாமத்தான கேக்குறேன் நானு! பொண்டாட்டிய உட்டுப்போட்டு தனியா வந்தா பின்ன என்ன கேப்பாங்க ஃபார்ல உக்கோந்துட்டு?”

000

அவர்கள் பார் மூடப்படும் நேரத்தில் வெளியே தள்ளாடிக் கொண்டு வந்தார்கள். வழக்கமாக பத்து மணிக்கு மேல் தான் அங்கிருந்து அவர்கள் கிளம்புவார்கள். அதேபடித்தான் இன்றும் ஆயிற்று.
“சரி மாப்ள, நான் குணசேகரனோட கிளம்புறேன். நீங்க பார்த்துப் போங்க! இன்னிக்கி என்ன உனக்கு தள்ளாட்டம் எச்சா இருக்குது கணேசா? பேசாம வண்டிய பார்ல தள்ளீட்டு ஆட்டோல போயிக்கறீங்களா? சுந்தரண்ணனை கூப்பிடவா?”
“அதெல்லாம் வேண்டாம் மாப்ள! நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு”
முருகேசன் விடை பெற்றுக் கொண்டு தன் டூவீலரில் குணசேகரனோடு கிளம்பிப் போனான். கணேசன் வண்டியை சாலைக்கு நகர்த்தி ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். வண்டி உறுமியதும் கதிருவேலன் தாண்டுக்கால் போட்டு அமர்ந்து கொண்டான். கீழே விழுவேன் இப்போ, என்று கிளம்பிய டூவீலர் சற்று தெம்பாகி சாலையில் பயணிக்கத் துவங்கியது.
துடியலூரிலிருந்து வெளிவந்த வண்டி வடமதுரை தாண்டியதும் வேகமெடுத்தது.

காலனி கேட்டை சடக்கை போடும் நிமிடத்தில் புயலாய்க் கடந்த வண்டி தொப்பம்பட்டி பிரிவு அருகே அனத்திக் கொண்டு மெதுவாக மேற்கே தொப்பம்பட்டி நோக்கி திரும்பியதும் வர்ர்ர்ரென வேகமெடுத்தது. இரவு பதினொன்று என்பதால் சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாமலிருந்தது. இரண்டாவது முக்கு திரும்புகையில் வண்டி சாலையில் இழுத்துக் கொண்டு போய் டொமீரென அடங்கியது!

கதிருவேலன் சாலையில் நீச்சலடிப்பவன் போல விழுந்தான். பின் உருண்டு எழுந்தவன் வண்டியைத் தேடினான். அது சாலையின் மறுபுறம் போய் படுத்திருந்தது. வண்டியிலிருந்து எந்த சப்தமும் வரவில்லை. தன் பின்பாகத்தை கைகளால் தட்டி துடைத்துக் கொண்டு சாலையில் தொப்பம்பட்டி நோக்கி நடக்கத் துவங்கினான் கதிருவேலன்.

விடிகாலையில் முருகேசன் அலைபேசியில் கதிருவேலனை அழைத்தான். குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டிருந்த கதிருவேலன் மில்லுக்குப் போக தயாராகிக் கொண்டிருந்தான்.
“சொல்றா மாப்ளே! வீட்டுக்கு நேத்து பத்திரமா போயிட்டியா?” என்றான்.

“நீயும் கணேசனும் தான ஃபார்ல இருந்து கிளம்பிப் போனீங்க?”
“ஏண்டா உனக்கென்ன தலைகண்ட போதையா நேத்து? இப்பிடிக் கேக்குறே? நீயும் அந்த ஈரோட்டு தம்பியும் போன பொறவு தானடா நானும் கணேசனும் கிளம்பினோம்”

“அப்ப சரி, தொப்பம்பட்டி பிரிவுல இருந்து உள்ளார போனதீம் ரெண்டு பேரும் வண்டில இருந்து உழுந்துட்டீங்களா?”
“யாரு? நானும் கணேசனுமா?”

“ஆமாண்டா மண்டையா! இப்ப வேணுகோபால் ஆஸ்பத்திரில கட்டுப் போட்டுட்டு பெட்டுல கிடக்காண்டா கணேசன்! தாயோலி என்னதாண்டா பண்ணினே நேத்து நீயி?”

“இதென்ன அழும்பா இருக்குது உன்னோட! நான் ஊட்டுல வந்து தூங்கி எந்திரிச்சேன். அவன் ரோட்டுல தூங்கினான். இப்ப எதுக்கு ஆஸ்பத்திரில போயி கிடக்கான் கணேசன்? அவன் வண்டி எங்கே?” என்று கதிருவேலன் கேட்ட போது முருகேசன் போனை கட் செய்திருந்தான்.

000

தமிழ் உதயா கவிதைகள் ( லண்டன் )

விலங்குடைந்த கைதி

00

ரயில்
பறவையைப் போல
ஷ்டேஷனில் நின்றுவிட்டு பறக்கிறது
அருகே சணல் பூக்களின் கணகணப்பு
மறுகரையில் உப்பரிகையில்
பாகம் பிரிந்த ஏரிப்பரபரப்பு
வரைபடத்தில் நிலமற்ற தேசத்தின் உதிர்சிறகு
முன்னமே கிளறி ஆறிய
நெஞ்சின் நிழலில் அயர்ந்துறங்குகிறேன்
ஆலமரமெல்லாம்
அரசமரமாகிக் கொண்டிருந்தது
சந்தடியின்றி யாரோ
ஒருவர் பதனமாகிக் கொண்டிருந்தார்
பள்ளத்து மேட்டில் போகப்போக
என் ஊர் குறுகுகிறது
முகடுகளிடையே
மலைகள் அவிழ்கின்றன
காக்கைகள் உயிரொலிக்கின்றன
அலை தன் நுனியிலேறிப் பாடுகிறது
அவ்வளவே
கடல் தணிவதில்லை
எனக்கு இப்போது ஒரு படகு வேண்டும்

00

எனது இரத்தம் உறைய ஆரம்பித்திருந்தது
அதன் துடிக்கும் வலிமையை
அவர்கள் உற்றுக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்

இழந்துபோன மேகம்
மீண்டும் மழையை உற்பவித்துக் கொண்டிருக்க
கடிகார மனிதர்களின்
நொடிப்பூச்சிகள் தாகமாயிருந்தன

இடையிலுள்ள உயிர் நலிதங்கள்
கொடுக்கத் தெரிந்த கைகளை
விலங்கு பூட்டி நசிக்கிறது
அவர்கள் உதடுகள் ஒட்டாது
நீர் மேல் மிதக்கும்
தாமரை இலைகளாயின

கழிப்பறையில் இரு நீர்க்குழாய்கள்
பருகவும் கழுவவும்
பங்குபோட்டு அமர்ந்திருக்க
பாவ மன்னிப்பு கேட்டுக் கொ‌ண்டிரு‌க்கு‌ம்

யேசுபிரான் ஐரோப்பாச்சந்தில்
சிலுவையைத் தாங்கிக் கொண்டிருந்தார்

வேலை தேடிப் போன இடத்தில்
என்னைத் தேடிக் கொண்டிருந்தேன்
உற்றுக் கவனியுங்கள்
நானும் மனிதன் என்பது
அப்பட்டமாகத் தெரிந்து விடும்

00

மலை உச்சியை அண்ணாந்து பார்க்க
பள்ளத்தாக்கில் நுழைந்து வெளியேறினேன்
அதன் எதிரொலி மௌனமாயிருந்தது
சற்றே விலகி வீட்டின் வாசலில் அமர்ந்தேன்
நிசப்தம் நிசப்தமற்றும்
அசைவும் அசைவின்மையும்
எனைப் பார்த்து முறுவலிக்கின்றன
பலவர்ணப் பூச்சிகளை
அனுப்பி வைத்திருக்கும்
நீங்களாவது சொல்லுங்களேன்
முன்னொரு காலத்தின் கதையை
ஆறு சலசலக்க
தூங்க மறுக்கிறது உதிரிச்சிறகு

00

சிறைச்சாலைகள் இங்கிருக்கவில்லை
கடலுமல்லாத கரையுமல்லாத நிலம்
நழுவ விடப்பட்ட தோணி
அமைதியாய் இருக்கும் பாறை
அதில் கட்டப்பட்ட
நிரந்தரமல்லாத
நூற்றுக்கணக்கான வீடுகள்
சின்னஞ்சிறு பூட்டுகள்
சின்னஞ்சிறு திறப்புகள்
தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கு
எரிய ஆரம்பிக்கும் உலகம்
அவ்வப்போது பறக்கத் தடுக்கும் நிசப்தம்
பொழிந்து சிந்திய மழைத்துளியாய்
தெறித்துக் கொண்டிருந்தேன்
பின் தொடர்ந்து
ஏகப்பட்ட தவளைகள்
ஏகப்பட்ட ஈசல்கள்

00

துயரமும் அவலமுமான பின்னணியில்
உயிர் தேடியலையும் பறவை
கிளைகளைக் கூடென அறிகிறது
அது அமரவும் உறங்கவும்

சலசலக்கும் கணங்களில்

புத்தன் சாலையில்
நிஷ்டையில் இருக்கிறான்
சின்னஞ்சிறு
தோட்டங்களிலும்
பெரிய மயானங்களிலும்
புழுவைப்போல துடிதுடிக்கும்
மனிதர்களை நுகர்ந்து
காற்று பீதியடைகிறது
நிகழ்ந்து கொண்டிருக்கிற

சுவாரஸ்யமான மனிதச் சிதைவுகள்
அவர்களைக் கூறுபோடுகின்றன
துயரமும் அவலமுமான அப்பின்னணி

சிலர் பலருக்கு வாய்ப்பாயிருக்கிறது
அப்பறவையின் நிழலிலும்
சிறகுகள் பறக்க முனைகின்றன
இப்போது நிஷ்டையில் இருந்த புத்தன்

என் மரணத்தறுவாயில்

தெருவைக் கடந்து கொண்டிருந்தான்

00

எவ்வளவு தூரம் என்றால் என்ன
இருப்பு நிலைக்கும்
அதன் இல்லாமைக்கும்
இடையே ஒரேயொரு கணம்

தொடங்கும் போது துலங்கும் எதுவும்
முடியும் போது பார்வையற்ற கண்களின்
கனவு விம்பங்கள் ஆகின்றன

துண்டு துண்டான அவர்களின்

விம்பங்களை ஒட்ட வைத்து
என்னை அடையாளம் காண வைக்கிறேன்

இதுவரை அந்த நிச்சய கணத்தில்
சாத்தியமாகாத நான்
வேறொருவராக இருக்க வேண்டும்

00

பூச்சிய வெப்பநிலைக்கு குறைந்த
நாட்கள் தவிர
என் ஒற்றை ஜன்னல்
பூட்டப்படுவதே இல்லை

சிறுகச் சிந்திய ஜன்னல்வழி
உருகி வழிகிறது
ஒரு துண்டு பூமியில்
வானளவு மழை

பெருந்தெருவைப்போல
வாசலற்றுத் திறந்தே இருக்கிறது
இதயத்தின் நான்கு அறைகளும்
எனது ஐந்தாவதும்

யாரும் வராத
யாரும் வந்து திரும்பாத
அறைகளின் கதவுகள்
ஒருபோதும் துருவேறுவதில்லை
மசகிடப்படுவதுமில்லை
உங்களுக்கும் தெரிந்தது தானே

00

வெகு சுலபமில்லை
நமக்குள் நுழைவதைத் தவிர்த்து
நம்மை அறிவதை விடுத்து
அவர்களைப் பெற்றுக் கொள்வது

யார் திண்ணையிலும்
அமர மறுத்த மைனாக்கள்
மதில் மேல் குந்தி அருகில்
சின்ன மரமொன்றைத் தூக்கிச்சென்றது

அவர்கள் பறவைத் தீன்களை
விற்றுக்கொண்டிருந்தார்கள்
இன்னும் பூனைக்கும் நாய்க்கும்

நான் மைனாவைக் கொத்திக்
கொத்தித் தின்றுகொண்டிருந்தேன்

••

அந்தரவாசல்..! ( கவிதை ) / நிஷாமன்சூர்

இரு பிடிவாதங்களுக்கு மத்தியில்
நேசத்துடன் வாழ்வது
அல்லது சுயமின்றிச் சார்ந்திருப்பது

இரு விட்டுக் கொடுத்தல்களுக்கு மத்தியில்
பிடிவாதமாக வாழ்வது
அல்லது தன்முனைப்புடன் இயங்குவது

இரு அநீதிகளுக்கு மத்தியில்
நீதத்துக்காகப் போராடுவது
அல்லது விட்டு வெளியேறித் துயர்நீங்குவது

இரு அதிகார பீடங்களுக்கு மத்தியில்
நசுங்கிச் சிதைவது
அல்லது எளியோர் கை ஊன்றுகோலாவது

கோலங்களை அல்ல குணங்களை கவனியென்கிறது
அறிவின் தீட்சண்யம்
மனசு சொல்வதை மறுக்காமல் கேளென்கிறது
ஞானத்தின் சூட்சுமம்

••

*வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக்
காட்டிற் புகலாமோ கண்ணே ரகுமானே.

*குணங்குடி மஸ்தான் சாஹிபு அப்பா பாடல் வரிகள்…