Category: இதழ் 167

மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு / தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். பிரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் ‘பண்பாடும் பெண்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி – சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ‘ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்.

தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.

இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர்.

மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.

இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும் வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.

பக்கம் 108 இல் நாவல் துறையிலும் சிறுகதைத் துறையிலும் பெயர் பெற்றவர் சுலைமா சமி இக்பால் அவர்கள். வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசைமாறிய தீர்மானங்கள், ஊற்றை மறந்த நதிகள், நந்தவனப் பூக்கள், உண்டியல் ஆகிய நூல்களை வெளியி;ட்டுள்ளார். ஊற்றை மறந்த நதி என்ற அவரது நாவல் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. இவரது கணவர் இக்பால் மௌலவி அவர்கள் எக்மி பதிப்பகத்தின் மூலம் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வருபவர். இவர்களது மூத்த மகளான இன்ஷிராவும் (பக்கம் 242) ஒரு இலக்கியவாதி. தற்போது தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியராகக் கடiமாற்றும் இவர் பூ முகத்தில் புன்னகை, நிழலைத் தேடி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 112 இல் ஸக்கியா சித்தீக் பரீத் அவர்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது தனித்துவம் தனது நூல் வெளியீடுகளின் மூலம் கிடைக்கக் கூடிய பணத்தொகையை ஏழை மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நன்கொடையாகக் கொடுத்து தனது மறுமை வாழ்வுக்காக நன்மையைப் பெற்றுக் கொள்வதே. அவர் பலருக்கும் உதவக் கூடிய இளகிய மனம் படைத்தவர். ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 153 இல் புன்னியாமீன் என்றமா பெரும் இலக்கியவாதியின் மனைவியான மஸீதா புன்னியாமீன் அவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் காலியைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட கணித விஞ்ஞான ஆசிரியர். புதிய மொட்டுக்கள், ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகள் (கூட்டு முயற்சி), மூடு திரை ஆகிய நூல்களோடு கல்வி சார்ந்த பல நூற் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

குருநாகலை மல்லவப்பிட்டியைச் சேர்ந்த சுமைரா அன்வர்; பற்றிய தகவல்கள் பக்கம் 158 இல் இடம்பிடித்துள்ளது. சுமைரா அன்வர்; ஒரு கலைப் பட்டதாரி ஆசிரியர். இரண்டு நாவல்களையும் ஒரு கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற இவரது நாவல் இன்னும் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

களுத்துறையைச் சேர்ந்த நாவலாசிரியை ஸனீரா காலிதீன் அவர்கள் பற்றிய தகவல்கள் பக்கம் 190 இல் காணப்படுகிறது. ஒரு தீபம் தீயாகிறது, அலைகள் தேடும் கரை என்ற இரு நாவல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ள இவர், களுத்துறை முஸ்லிம் மகளிர் கலலூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

பக்கம் 234 இல் கண்டி தெஹிதெனிய மடிகேயைச் சேர்ந்த மரீனா இல்யாஸ் ஷாபியின் தகவல்கள் நூலை அலங்கரித்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாபி ஓய்வுபெற்ற ஆசிரியராவார். கட்டுரை, சிறுகதை, கவிதை, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர். தற்போது நியூசிலாந்தில் வாழும் இவர் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர் பிறை நிகழ்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார்.

மின்னும் தாரகைகள் என்ற இந்த நூலில், ”நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..”, ”புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்..” மற்றும் ”பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்” ஆகிய தலைப்புகளில்தான் நூலின் மூன்று அத்தியாயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். கோடிட்டுக் காட்டக்கூடிய சில முக்கியமானத கவல்களையும் ஷஷமின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்|| என்ற தலைப்பில் அவற்றை நூலாசிரியர் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுவரை இலக்கியம் படைத்திருந்தாலும் நிறைய வாசகர்களுக்கு அறிமுகமில்லாத பலர், மின்னும் தாரகைகள் என்ற இந்நூலின்; மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இத்தகையதொரு ஆத்மார்த்தமான சேவையைச் செய்திருக்கும் நூலாசிரியர் நூருல் அயினுக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது கணவர் கவிமணி நஜ்முல் ஹூசைன் அவர்கள்.

இனிமையான தம்பதியராகவும், இலக்கியத் தம்பதியராகவும் திகழும் இவர்கள் எனது நூல் வெளியீடுகளிலும் கலந்துகொண்டு என்னை கௌரவித்து இதயம் மகிழ்பவர்கள். மக்களளோடு ஐக்கியமாகப் பழகக் கூடிவர்கள். மென்மேலும் இலக்கியப் பணியாற்ற எனது வாழ்த்துப் பூக்கள் என்றென்றும் இவர்களுக்கு உண்டு!!!

நூல் – மின்னும் தாரகைகள்
நூல் வகை – ஆய்வு
நூலாசிரியர் – நூருல் அயின் நஜ்முல் ஹுசைள்
விலை – 1000 ரூபாய்
வெளியீடு – ஸல்மா பதிப்பகம்

சோலைமாயவன் கவிதைகள்

1

ஆள் உயரத்திற்கு எழும்பிய நீரானது
நதியில்ஓடிக்கொண்டிருக்கிறது
வேடிக்கைப் பார்க்க வந்தவன்
தண்ணீர்ப் புதையலுக்குள் பாதங்களை ஊடுருவி
தண்ணீரின் குளிர்க்கொடி படர
ஒரு மரமானேன்
நீரின் போக்கிலே என் கால்கள்
கால்விரல்களுக்கு இடையில்
ஓரிரு மீன்குஞ்சுகள்
தாயின் மார்பகத்தைச் சப்பும் குழந்தையைப் போலவே கடிக்கத் தொடங்கின
எங்கிருந்தோ வந்த நூறாயிரம் கோடி
மீன்குஞ்சுகள்
என் கால்விரல்களில் தொடங்கி
என்னைச் செதில் செதிலாக
கபளீகரம் செய்துகொடிருந்தன
உலர்ந்த நாவினை ஈரப்படுத்த
திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறேன்
என் உடம்பெங்கும்
தண்ணீரின்றி இறந்துகிடக்கும்
மீன்குஞ்சுகளின் கவிச்சை….

2

வயிற்றைப் புரட்டும் புடைநாற்றத்தைச் சுவாசித்தப்படி
அவன் நுழைந்து கொண்டிருந்தான்
கிழக்கிலிருந்நு மேற்கே நகரத் தொடங்கியிருந்தது வெயில்
அவனுக்கு முன்பாகவே பலர் கூடியிருந்தார்கள்
அவர்களுக்கெல்லாம் அவன் சாயல்
வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டான்
நவம்பர் 8இரவு 7:55வரை
அவன் கனவுகளைப் பாறைகளில்செதுக்கியிருந்தான்
விபத்தொன்றில் சிக்கிய அம்மாவை
காப்பாற்றிட அங்கும் இங்கும் புரட்டி
கையில் வைத்திருந்தான்
ஓர் ஆயிரம் ரூபாய் பணமாக
ஒற்றைச் செய்தியில் அம்மாவையும் பணத்தையும் இழந்து நிர்கதியானவன்
நான்கு முறையாக வாந்தி எடுத்திருந்தான்
வெயில் தீர்ந்த வானம் போல் அவன் வாழ்விலும் இருள் சார்ந்திருந்தது
தள்ளாடி தள்ளாடி அவன்
நெடும்புனலுள்
நீந்திக்கொண்டிருந்தான்

~~

-3

பெரும்சினத்தை
ஏழு கூறுகளாக்கி வைத்திருக்கின்றேன்
பஞ்சுமூட்டையாய் என்னுள் ஊறிக்கிடக்கிறது
ஒரே சமயத்தில்
கரைத்தல் என்பதுசாத்தியமில்லை
சினத்தைச் சுமந்த காலம் ஏதென்று அறியவில்லை
புயலொன்று சூறையாடியப்பின்
உணவுக்காக ஏந்திய கைகளில் விழுந்திருக்கலாம்
சாலைகளே வேண்டாமென அழுதுபுரண்டப்பொழுது
என் உடம்பில் ஒட்டியிருக்கலாம்
எங்கள் காற்றை
எங்கள் நீரை
எங்களுக்கே விட்டுவிடெனத்
தோட்டாக்களில் வெடித்த உதட்டின் குருதியாக்கூடம் இருக்கலாம்
கனவுகளைத் உடைந்தபின்
தூக்கில் தொங்கிய என் மகளின்
கண்களாக கூட இருக்கலாம்
என் விரலில் வருகைக்காக
நதியொன்று வருகிறது
சினத்தின் சாம்பலைக் கரைத்துக் கொள்கின்றேன்

—-

கடவுச்சொல் – குறும்கதை – சுருதி

சுரேந்தருக்கு 15 வயதாகிவிட்டது. கடந்த மாதம் தான் அவன் தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். நீண்ட நாட்களாகத் தனக்கொரு ஐ – போன் வாங்கவேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்தான். அவனது தாயார் அதற்கெனவே சிறுகச் சிறுகப் பணம் சேமித்திருந்தார். அவனது பிறந்தநாள் அன்று, சுரேந்தர் ஆச்சரியப்படும் விதத்தில் அவனது பரிசுப்பொருள், ஐ – போன் கிடைத்தது. அது முதல் கொண்டு, உறங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய பொழுதுகளில் எல்லாம் அவனது கைகளில் ஐ-போன் தவழ்ந்து விளையாடியது.

நேற்று, சனிக்கிழமை அவனது பள்ளி நண்பன் சுதேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவனது வீட்டிற்குச் சென்றிருந்தான். சுதேஷ் பிஜி தேசத்தைச் சேர்ந்தவன். அவனின் வீட்டிற்கு, முன்பும் பல தடவைகள் சென்றிருக்கின்றான். பிறந்தநாள் கொண்டாட்டம் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக அவனது வயதையொத்த நண்பர்கள் கூச்சலும் கும்மாளமுமிட்டவாறே இருந்தார்கள். கேக் வெட்டியாயிற்று.

அதன்பின்னர் டிஸ்க்கோ நடனம் ஆடுவதற்காக கராஜ் சென்றார்கள். வெளியே இருட்டு மெல்ல ஆக்கிரமித்திருந்தது. சுதேஷ் கராஜ் கதவை றிமோற் கொன்ரோலரினால் திறந்து வைத்தான். கீச்சாமாச்சா என்று சத்தமிட்டவாறே நண்பர்கள் உள்ளே சென்றார்கள். அங்கே டிஸ்க்கோ ஆட்டத்திற்கான மின்விளக்குகள் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல வர்ணங்கள் கொண்ட – அதற்கென வடிவமைக்கப்பட்ட, வட்ட வடிவமான பெரிய மின்குமிழ்கள் கூரையின் மேலே தொங்கிக் கொண்டிருந்தன. பட்டை தீட்டப்பட்ட இரத்தினக்கற்கள் போல ஒளிர்வதற்காக அவை காத்திருந்தன. அவற்றை ஒளிரவிடுவதற்காக ஏற்கனவே ஒளிர்ந்துகொண்டிருந்த மின்விளக்கை அணைத்தான் சுதேஷ். ‘டிஸ்க்கோ லைற்’றின் ஆளியை அழுத்துவதற்குள் இடைப்பட்ட நொடி நேரத்தில், ஏழெட்டு அந்நிய இளைஞர்கள் சரசரவென உள்ளே நுழைந்தார்கள். இருளோடு இருளாகக் கலந்தார்கள். அவர்களின் நிறமும் இருளை ஒத்திருந்தது. டிஸ்க்கோ வெளிச்சத்தில் சிவப்பு பச்சை நீலம் மஞ்சள் என்று கடும்கலரில் அவர்களின் ஆடைகள் இருந்தன.

கராஜ்ஜின் உள்ளேயிருந்தவர்கள் திகைப்பில் இருந்து விடுபட முன்னர், வந்தவர்கள் அன்பாக அவர்களின் முதுகை அணைத்துத் வருடியபடி அவர்களின் ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் கையை நுழைத்துத் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். சலசலப்பு ஆரம்பிக்கத் தொடங்குகையில் சிலரின் ஐ – போன்கள் மாயமாய் மறைந்தன. சுதேஷ் சத்தமிட்டவாறு வீட்டிற்குள் ஓடினான். பொலிஷிற்கு போன் செய்வதற்குள் அவர்கள் நழுவி விட்டார்கள். நிராயுதபாணியாக வந்தவர்கள், போகும்போது ரொக்கத்துக்கு அதிபதியாகப் போய்விட்டார்கள்.

சுரேந்தருக்கு எங்கிருந்தோ துணிவு பிறந்தது. நாலாபக்கமும் சிதறி ஓடியவர்களின் பின்னால் துரத்தியபடி ஓடிச் சென்றான். சுரேந்தருக்கு தனது பொக்கற்றுக்குள் கையை நுழைத்தவனை நன்றாக ஞாபகம் இருந்தது. அவனின் திசை நோக்கி மன்றாடிக் கெஞ்சியபடி ஓடினான்.

“அண்ணா! எத்தனையோ வருஷமாகச் காசைச் சேர்த்து வாங்கின போன். தயவு செய்து தா அண்ணா!” ஆங்கிலத்தில் அழுதழுது துரத்தினான் சுரேந்தர். கல்லையும் கரைக்கும் அவனது குரல் கேட்டு ஓடியவன் நின்றான். ஆடவில்லை, அசையவில்லை. சுரேந்தர் கிட்ட வரும் வரைக்கும் பொறுமையாக நின்றான் அவன். கிட்ட வந்ததும் கன்னத்தைப் பொத்தி ஒரு அறை போட்டான். சுரேந்தர் நிலை குலைந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கி நிறுத்தியவன்,

“பாஸ்வேர்ட்டைச் சொல்லு” என்றான்.

கடவுச்சொல் என்பது கடவுள் மாதிரி. அதை எப்படிச் சொல்ல முடியும்? அங்குமிங்கும் பார்த்தான் சுரேந்தர். “முடிஞ்சால் தேடிப்பிடி” சொல்லிவிட்டு, அவனை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு சுதேஷின் வீடு நோக்கி திரும்பி ஓடினான்.

`இந்நேரம் சுதேஷ் பொலிஸை வரவழைத்திருப்பான்’.

இருளிற்குள் ஒரு மரத்தின்கீழே முனகல் சத்தமொன்று கேட்டது. குனிந்து பார்த்தான். சுதேஷ் தலையைப் பிடித்தபடி இருந்தான். அவனது காதிற்குள்ளால் இரத்தம் வடிந்தபடி இருந்தது.

“ஓடி வாருங்கோ…. எல்லாரும் ஓடி வாருங்கோ” சத்தமிட்டான் சுரேந்தர்.

“என்ன நடந்தது?” சுரேந்தர் அவனைக் கேட்டான்.

“ஐ – போனின்ரை பாஸ்வேர்ட் கேட்டான். சொல்லேல்லை. அதுதான் அடிச்சுப்போட்டு ஓடிவிட்டான்” என்றான் சுதேஷ். சுரேந்தர் தன் காதுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

••

வாழ்வின் வாசல்களால் நிறைந்த கதைகள் ( கவிதா சொர்ணவள்ளியின் பொசல் ) / யாழன் ஆதி

கடந்த ஓராண்டுக்கு மேல் உடல்நல்க்குறைவால் நெடுந்தொலைவுப் பயணங்களையும் கூட்டங்களையும் கொஞ்சமாய் தள்ளிவைத்து இருக்கின்றேன். அதனால் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குக் கூட போக முடியாத சூழல்தான் ஏற்பட்டது. புதிய புத்தகங்களை வாங்குவது நதீம் போன்ற அன்பு நண்பர்களால் சாத்தியமானது. தேவையானப் புத்தகங்களைப் பட்டியல் போட்டுக்கொடுத்தால் தோழர் அவற்றை வாங்கித் தந்துவிடுவார்.

சில பதிப்பக நண்பர்களைக் கேட்க அவர்களும் புத்தகங்களை அனுப்பி உதவினார்கள். நிறைய புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்புதான் மிக முக்கியமாக பலமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதன் அத்தனை ஆற்றலும் உடலுக்குள் புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் எழுதத் தூண்டுகிறது. புதியதாக வந்திருகும் தமிழ்க்கவிஞர்கள் நிகழ்த்தும் மொழிசார்ந்த விளையாட்டுகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கதைகள் , புதிய புத்தக வடிவாக்கங்கள் என எல்லாம் மனத்தைக் கவர்கின்றன.

நான் படித்த சில புத்தங்கங்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக்கொள்வது தான் என் கட்டுரையின் நோக்கம்.

பொசல் என்னும் கவிதா சொர்ணவள்ளியின் தொகுப்பு. டிஸ்கவரி வெளியீடு

முகநூலில் கவிதா பொசலைப் பற்றிப் பேசிய ஒரு காணொளியைக் கண்டேன். அவர்களிடத்தில் பேசி தொகுப்பினைக் கேட்டுப்பெற்றேன். பொசல் என்னும் சொல்லுக்கு புயல் என்று அர்த்தம். ஒருவகையில் இச்சொல்லை எங்கள் பகுதியில் பயன்படுத்துகிறோம். புயலுக்கு பொசல் போல முயலுக்கு மொசல் என்னும் சொல் எங்கள் வழக்கில் இருக்கிறது.

நவீன வாழ்வு வாழக்கூடிய படைப்பாளர் தன் வாழ்நாளில் தான் அனுபவித்த வாழ்க்கையை மிகவும் அப்பட்டமாக கதையாக்கி இருக்கிறார்கள். தனக்குக் கிடைத்த வாழ்க்கையை யாருக்கும் பயப்படாமல் அதே நேரத்தின் வாழ்வின் எந்தக் கணத்திற்கும் துரோகம் இழைக்காமல் இந்தக் கதைகள் வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வாழ்வு என்பது கல்வி சாத்தியப்பட்ட ஐந்தாம் தலைமுறை பெண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. வாசிப்பும் நூல்களும் வசப்பட்ட ஒரு வாழ்க்கை, நிலம் நீர் என பணம் கொழிக்கும் வாழ்வு. அதன் சுற்றுச்சூழல் ஆண் பெண் உறவு நிலை எல்லாம் கதைகளில் மிக இயல்பாக வந்துபோகிறது. ஒருபெண்ணுக்குள்ள ஆணின் உறவு அப்படியே ஆணுகும் அமைந்துவிடுகிறது என்பதுதான் மிக யதார்த்தமான உண்மை. அண்ணனைக் காதலிப்பதும் அக்காவைக் காதலிப்பதும் சமுக யதார்த்தம் என நாம் கவிதா சொர்ணவள்ளியின் கதைகளைப் பேசிக்கொண்டே போகலாம்.

ஆனால் அதுமட்டுந்தான் அந்தக் கதைகளில் இருக்கிறதா என்றால் மிக நுட்பாமான அரசியல் எல்லாக் கதைகளிலும் இருக்கிறது/ அது கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்த்தப்பட்ட திராவிட அரசியல் இந்தச் சமூகத்தின் மிக கமுக்கமாக நடத்தியிருக்கிற சமூக மாற்றங்களுக்கானக் குறியீடுகள் இக்கதைகளில் ஒரு காபி ஷாபில் கிடைக்கும் அருமையான முந்திரி கலந்த பிஸ்கட்டைப் போலவே நமக்குக் கிடைக்கிறது. பொசலின் முதல் கதையிலிருந்து கடைசிக் கதை வரை இதை நாம் காணலாம். முதல் கதையில் கிராமத்து சிறுதெய்வங்களைப் போல அவ்வளவு அன்பாக பிரமாண்டமானக் கோயில்களில் இருக்கும் பெருநகர பெருந்தெய்வங்களிடம் இல்லை. கோயிலை அணுகுவது என்பது பெண்களுக்கான ஒன்றா என்றால் அது சில ஆண்களுக்கானதாகவே கூட இல்லை என்பது தான் உண்மை. ஆனால் படித்த அந்தப் பெண்ணுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

தன் தாயின் பெயரைக் கண்டறியும் மகளின் தேடல், அது திராவிட செல்வி என்று அறியப்படும்போது அம்மா அதை எப்போதும் காட்டிக்கொள்ளாதவளாக இருந்தது எண்ணியும் அவளுக்கு ‘பொசல்’ன்னு ஒரு பெயர் இருக்க தாயின் வாழ்வு எத்தகைய அரசியலைக்கொண்டிருக்கிறது என்பெதெல்லாம் நாம் அறிய வேண்டிய உண்மைகள். பெட்டி நிறைய புத்தகங்கள், சான்றிதழ்கள் என அம்மாவின் உடைமைகளைப் பார்த்த அவள் விழி அவள் மணிமேகலையப் போல வருவாள் என்று நினைத்திருந்த நேரத்தில் அவளுக்கு நேர்ந்தத் திருமணம் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டிருக்கிறது. எத்தகைய வாழ்விலிருந்து ஒரு பெண்ணைத் தூக்கி அடித்திருக்கிறார்கள். பொசலாக இருந்திருக்க வேண்டியவள்.

யட்சி ஆட்டம் பாலியியல் வன்கொடுமைகளுக்கு எதிரானக் கதை. அரளிப்பூவின் வாசத்தில் ஒருவனை வேரறுக்கும் யட்சியின் ஆட்டம் மகளுக்குப் புதுகதைதான்.

கவிதா சொர்ணவள்ளியின் கதைகளில் ஆண் பெண் உறவுகுறித்த இருமை மிகவும் லாவகமாக்க் கையாளப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் ஒருகாதல் தற்காலிகமாக ஏற்படும் இன்னொரு காதல் அதை ஒப்புக்கொள்ளும் பெண்மனம், தன் காதலால் தன் வேலைகளை இழக்கிறேன் என்று சொன்னவனுக்குச் சரிசொல்லும் இன்னொரு காதல் என இந்த உறவுநிலையைத் தன் சுயம் என்ற இடத்தில் பாராமல் பொது என்னும் சமூகத்தின் ஊடாகப் பார்த்து விடைதேர்வது கதைகளாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.

கவிதாவின் எழுத்து சில இடங்களில் அபாரமாக வந்து விழுகிறது. தேர்ந்த கதைச்சொல்லிக்கான அத்தனைக் கூறுகளையும் அவர் அவ்விடங்களில் காட்டி விடுகிறார்.

”யாருமற்ற அந்த வீடு இருட்டைத் தின்றுகொண்டிருந்தது. வேர்த்து வழிந்திருந்த உடலில் இருட்டின் வாசம் படர்ந்து இலேசான நடுக்கத்தைக் கொண்டிருந்தது.”

கதைகளை முடிக்கும்போது அவற்றிற்கான ஒரு முத்தாய்ப்போடு கதைகளை முடிக்கும் போக்கும் நன்றாகத்தான் இருக்கிறது.

பொசலை படித்து முடித்தபிறகு இந்தக் கதைகள் சுட்டுகின்ற வாழ்க்கை யாருடையது. யாருடையதாகினும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் என்னும் பொதுநிலை அடையாளத்தைத் தாண்டி சில குறிப்புகளில் சொல்லப்படும் தனித்த அடையாளங்களில் இது ஒரு தலித் வாழ்க்கை என்னும்போது இத்தகைய கொண்டாட்டங்களிலும் அம்மக்கள் இருந்திருக்கிறார்கள், பத்துபேர் உட்கார்ந்து சாப்பிடும் சமையலறைக்கொண்ட வீடு, சாரட் வண்டியில் போன தாத்தா, சமையல் நன்றாக வருவதற்காக பச்சைப்பாம்பினை நீவும் பெண்கள் அவர்களின் உரையாடல் என எல்லாவற்றையும் பார்க்கையில் கவிதா சொர்ணவள்ளியில் கதைகள் தலித் வாழ்வின் கொண்டாட்டங்களைப் பேசுகின்ற பான்மைக் கொண்டவை.

••

ஹா ஜின் ( மூடுபனிக் கவிகள்-6 ) – தமிழில்: சமயவேல்

ஹா ஜின்

ஹா ஜின் 1956ல் சீனத்தில் லியவோனிங்கில் பிறந்தார். இவரது அப்பா ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தார். பள்ளி மாணவராக இருந்த போது, 13 வயதில், சீனக் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் மக்கள் விடுதைப் படையில் (செஞ்சேனை) சேர்ந்து மூன்று ஆண்டுகள் தந்தி அடிப்பவராகப் பணி புரிந்தார். ராணுவத்தில் இருந்த போது, தனது படிப்பைத் தானே படித்து, 16 வயதுக்குள் பள்ளிக் கல்வியை முடித்தார். 19வது வயதில் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஹைலாங்ஜியாங் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்தார். பிறகு ஷாண்டோங் பல்கலைக் கழகத்தில் ஆங்கில-அமெரிக்க இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஜின், முந்தைய கம்யூனிஸ்ட் சீனாவில் குழப்பமான காலகட்டத்தில் வளர்ந்தார். 1989ல் தியானமென் சதுக்கப் போராட்டம் நிகழ்ந்த போது அமெரிக்காவில் ப்ராண்டைஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தார். இவரது ஆய்வு பவுண்டு, எலியட்ஸ், ஆடன், யீட்ஸ் ஆகிய கவிஞர்களைப் பற்றியது. இந்த நால்வரிடமும் சீனப் பிரதிகளுடனும் கவிதைகளுடனும் கலாச்சாரத்துடனும் தொடர்புடைய கவிதைகள் இருந்தன. சீனப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கு வேலைக்குச் செல்லும் திட்டத்துடன் இருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரும் அவரது மனைவியும் தொலைக்காட்சியில் தியானமென் சதுக்க நிகழ்வுகளைப் பார்த்த பிறகு, அவர்கள் சீனாவுக்குத் திரும்ப வேண்டாம் என்ற முடிவு செய்தார்கள். அமெரிக்கவிலேயே புலம்பெயர்ந்தவர்களாக இருக்க முயற்சி செய்தார்கள். 1992ல் அவர் முனைவர் பட்டம் பெற்றார். இதற்கிடையில் 1990ல் “மௌனங்களுக்கு இடையில்” என்னும் அவரது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். 1996ல் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு “நிழல்களை எதிர்கொள்ளுதல்” வெளியாகியது. அண்மையில் 2018ல் வெளியாகிய இவரது “ஒரு தூரத்து மையம்” தொகுப்புடன் சேர்த்து மொத்தம் ஏழு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. மூலத்தில் சீன மொழியில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்ட “ஒரு தூரத்து மையம்” தொகுப்பு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

1990களின் மத்தியில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். பிறகு நாவல்களும் எழுதினார். முக்கியமான பல இலக்கிய விருதுகளைப் பெற்றார்.

சொற்களின் சமுத்திரம் (1996)- சிறுகதைத் தொகுப்பு- பென்/ஹெமிங்வே விருது.

சிவப்புக் கொடிக்குக் கீழ்(1997) – சிறுகதைத் தொகுப்பு – ஓ’கானரி விருது.

மணமகன் (2000) – சிறுகதைத் தொகுப்பு – ஆசியன் அமெரிக்கன் இலக்கிய விருது.

காத்திருத்தல் (1999) – நாவல் – தேசிய நூல் விருது மற்றும் ‘பென்/ஃபாக்னர் விருது’

யுத்தக் குப்பை (2004) – நாவல் – பென்/ஃபாக்னர் விருது.

கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிகமாக எழுதும் நாவலாசிரியராக ஜின் மாறியிருக்கிறார்.

ஜின்னுடைய புனைவின் களம் சீனாவாக இருந்தாலும், சிறுகதைகளும் நாவல்களும் கம்யூனிச ஆட்சிக்குக் கீழுள்ள வாழ்க்கையின், வெறும் சமூக அரசியல் இழைகள் மட்டுமல்ல. ஒரு அபத்தமான சமூகத்தில் தனது அடையாளம், பாதுகாப்பு, சுயமரியாதை ஆகியவற்றை நிறுவ ஒரு தனிமனிதன் நடத்தும் போராட்டம், அரசியல்-கலாச்சார-பூகோள எல்லைகளையும் தாண்டியவை. சில வழிகளில் இவரது எழுத்து குந்தர் கிராஸ், ஃப்ரான்ஸ் காஃப்கா ஆகியவர்களின் எழுத்து போல இருக்கிறது எனக் குறிப்பிட்டார்கள். இவரது முதல் நாவல் “குளத்தில்” கம்யூனிச சீனாவையும் தாண்டி உலகளாவிய புதிர்களையும் சிக்கல்களையும் பற்றிப் பேசுகிறது. “உன்மத்தம் பிடித்தவர்கள்” நாவல் ஜ்யார்ஜ் ஆர்வெல்லின் “1984” நாவலின் நீட்சியாக இருக்கிறது. இவரது “காத்திருத்தல்” நாவல் சாமுவெல் பெக்கட்டின் “கோடார்டுக்குக் காத்திருத்தல்” நாடகத்தை விடவும் பெரிய அபத்ததைச் சித்தரிக்கிறது. சமூக மரபு அல்லது அரசியல் மட்டுமே சரி தவறுகளைத் தீர்மானிப்பதையும் கட்டளையிடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆண்களும் பெண்களும், வாழ்வை எதிர்கொள்ளும் இருத்தலியல் தவிப்பைப் பேசும் நாவலாக இருக்கிறது “காத்திருத்தல்”.

ஜின்னைப் பொறுத்தவரை வாழ்வின் மதிப்பு, அதை வாழ்பவர்களால் மட்டுமே உருவாக்கப்படுவது, அநீதியான விதிகளுடன் கூடிய ஒரு மூடிய அமைப்பை எதிர்த்துப் போராடுவது அவரது கதபாத்திரங்களுக்கு ஒரு கௌரவத்தைத் தருகின்றன என்கிறார். மேலும் ஜின் கூறுகிறார்: “வாழ்க்கை, இயல்பாகவே பல துயரங்களை உள்ளடக்கியது. தங்களது வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள தாங்களே முயற்சிப்பதும் போராடுவதும் தவிர்க்க முடியாதது என்னும் உண்மையை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இத்தகைய எழுத்துக்கள் வாசகர்களுக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று எழுதுவதற்கான தகுதி கொண்டது, இந்த வகையான இலக்கியம் மட்டுமே என்பதை உறுதியாகக் கூறுவேன்.”

”நான் புலம் பெயர்ந்தவன், நாடு கடத்தப்பட்டவன் அல்ல” என்கிறார் ‘பாரிஸ் ரெவ்யூ’ இதழுக்குக் கொடுத்த நேர்காணலில். “ ஒரு நாடு கடத்தப்பட்டவருக்கு ஒரு அர்த்தமுள்ள கடந்த காலம் இருக்கிறது: அவர் பெரும்பாலும் கடந்த காலத்திலேயே வாழ்கிறார். அரசியல் அதிகாரத்தின் சூழலுக்கு உள்ளே அவர், அவரையே வரையறை செய்ய வேண்டியிருக்கிறது.” என்கிறார். ஆனால், 1980களின் மத்தியில் சீனாவை விட்டு வந்தவர் மீண்டும் சீனாவுக்குப் போகவே முடியாதவாறு ஆனது. அவரது அம்மா இறந்த போது கூட சீன அரசு விசா தர மறுத்தது. புலம்பெயர்ந்தவர், நாடுகடத்தப்பட்டவர் என இரண்டுமாகவும் வாழ நேர்ந்தது.

அதிகாரத்தை எல்லைக்கோடுகளாகக் கொண்ட வல்லரசுகளின் ரத்தப் பசிக்குத் தப்பி, ஒரு கவிஞன்/கதைசொல்லியின் ஆத்மா எவ்வளவு காலம் தான், உறைபனியில் கறுத்த அன்னிய நிலத்தில் அலைய வேண்டும்?

000

பிரிக்கப்பட்டவர்கள்

அந்தப் பிரிக்கப்பட்டவர்களை இன்னும் நான் புகழ்கிறேன்

எந்த நிலத்திலிருந்தும், அவர்கள், பிறந்ததிலிருந்து,

தொலைதூரங்களுக்குப் பயணிக்கத் தீர்மானித்துவிட்டார்கள்

வீட்டைத் தேடி. அவர்கள், அவர்களுடைய நிலையை

நட்சத்திரங்களால் அடைகிறார்கள். அவர்களது வேர்கள்

கற்பனை ஆகாயத்தின் கடைசி முனையில் வளர்கின்றன.
அவர்களுக்கு, வாழ்க்கை ஒரு கோணலான பயணம்

மேலும் ஒவ்வொரு நிறுத்தமும் ஒரு புதிய புறப்பாடு. அவர்களுக்குத்

தெரியும், அவர்கள் சாலையில் மறைந்து விடுவார்கள் என்று,

ஆனால் அவர்கள் உயிருள்ள வரைக்கும்

அவர்கள் மரணத்துடன் பயணம் செய்தாக வேண்டும்

அவர்கள் கற்பனையில் கண்ட சேருமிடம் வரை

அவர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்றாலும்

அவர்களது நிலவரைபடங்களை அவர்களது காலடித்தடங்கள் புதுப்பிக்கலாம்.

தொலைந்த நிலா
உன்னைப் போலவே, நானும் கூட எனது நிலவைத் தொலைத்தேன்.

விரிந்த கண்ணுடன் ஒரு புன்னகைக்கும் முகம் கொண்டேன்

எல்லா ஒளியின், நம்பிக்கையின் மூலாதாரமாக இருப்பதற்காக

அது என்னை ஒரு இருண்ட காட்டிற்குள் அழைத்துச் சென்றது.

அதற்குப் பிறகு, நான் ஒருபோதும் பார்க்க முடியாமல் போனது

ஆகாயத்தின் ஆச்சர்யங்களை.

எவ்வளவு கடினமாய் இருந்தாலும் நான் பிரயாசையுடன் நடந்து தேடினாலும்,

நான் ஏறி விளையாடிய குன்றுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்பொழுது, இரவுக்கும் பகலுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

—நான் அவற்றை எனது கணினியிலும் அலைபேசியிலும் செலவழிக்கிறேன்.

உண்மையில், வெகுகாலம் முன்பே நான் அறிவேன்

புன்னகைக்கும் முகம் வெறும் ஒரு கானல் நீரே.

எனினும் என்னால் ஒருபோதும் நிலவை ஏறிட்டுப் பார்க்க முடியாது

எனது மூதாதையர்கள் செய்தது போல

சாலையோரம் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு

வீட்டுக்கு அல்லது ஒரு நண்பனுக்கு ஒரு வார்த்தையை அஞ்சல் செய்ய.

நானொரு இடத்தில் இறங்கிவிட்டேன்

எனது மூதாதையர்கள் ஒருபோதும் கேள்விப்படாத—

ஒரு புதிய முதுகெலும்பை நான் வளர்க்க வேண்டும்.

முற்காலம்

எனது முற்காலம் என்னின் ஒரு பகுதி என எண்ணிக் கொள்ள வேண்டும்.

நான் வெயிலில் இருக்கும் போது எனது நிழல் தோன்றுவது போல

முற்காலத்தைத் தூக்கி எறிய முடியாது மேலும் அதன் கனத்தை

நான் தாங்கிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் நான் வேறொரு மனிதாகி விடுவேன்.

ஆனால் யாரோ ஒருவர் அவரது முற்காலத்தை ஒரு தோட்டத்துக்குள் பாதுகாப்பதை

நான் பார்த்தேன்,

அதன் உற்பத்தி எப்போதும் நாகரிகமாக இருந்தது.

நீங்கள் அனுமதி இல்லாமல் அவரது சொத்துக்குள் நுழைந்தால்

உங்களை ஒரு வெறி நாயுடன் அல்லது ஒரு துப்பாக்கியுடன் அவர் வரவேற்பார்.

யாரோ ஒருவர் அவரது முற்காலத்தை ஒரு துறைமுகமாக அமைத்திருந்ததை நான்

பார்த்தேன்.

எங்கு பயணித்தாலும், அவரது படகு பாதுகாப்பாக இருந்தது—

ஒரு புயல் வருகிறது என்றால், எப்போதுமே அவர் வீட்டுக்கு வந்துவிட முடியும்.

அவரது கடற்பயணம் ஒரு பட்டத்தின் சாகசமாக இருந்தது.

எவரோ ஒருவர் அவரது முற்காலத்தை குப்பையைப் போலக் கொட்டுவதைப் பார்த்தேன்.

அவர் அதைப் புதைத்து ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்தார்.

முற்காலம் இல்லாமலே ஒருவர் முன்னேறிச் செல்லவும்

எங்காவது சென்றுவிடவும் முடியும் என அவர் எனக்குக் காண்பித்தார்.

ஒரு சவச்சீலையைப் போல முற்காலம் என்னைச் சுற்றியிருக்கிறது,

ஆனால் நான் அதைக் கத்தரிப்பேன் மேலும் அதைத் தைப்பேன்,

அதைக் கொண்டு ஒரு நல்ல காலணியைச் செய்வதற்கு,

எனது பாதங்களுக்குப் பொருந்தும் காலணிகள்.

உயிர்த்தியாகத்தை நோக்கி நடத்தல்

படைத் தலைவர் ஆணைகள் பிறப்பித்தார்

நாங்கள் நடையைத் தொடங்கினோம்.

நாங்கள் எங்களது இரண்டாவது பித்தான்கள் வரை பலமாக எங்கள் கைககளை வீசினோம்,

மேலும் எங்கள் கண்களின் மூலைகள் வழியாக ஒருவரையொருவர் கவனித்தோம்

எங்கள் உடல்களை ஒரு நேர் கோட்டில் வைத்திருப்பதற்கு.

நாங்கள் அணிவகுப்பில் இருப்பது போல நடந்தோம்,

இவை பயிற்சிகள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

ஆனால் நாங்கள் ஒரு ஆழமான குப்பைக் குழியின் முன் நிறுத்தப்பட்டோம்,

அதன் விளிம்பில் கொண்டு போய் எங்கள் நடையை வைத்தோம்.

“முன்னேறிச் செல்லுங்கள்! யார் உங்களை நிறுத்தச் சொன்னது?

நீங்கள் உங்களைக் கொன்று கொண்டால்

நீங்கள் உயிர்த்தியாகிகள் என்று உங்களது குடும்பங்கள் அறியும்!”

நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.

ஒரு உயிர்த்தியாகியாக மாறுவது மிக எளிதாக இருந்தது,

மேலும் அங்கே பற்பல வழிகள் இருந்தன.

ஏனெனில் நான் மௌனமாக்கப்படுவேன்

ஒருமுறை எனக்குப் பேசுவதற்கான சுதந்திரம் இருந்தால்

எனது நாக்கு அதன் சக்தியை இழந்துவிடும்.

எனது கவிதைகள் மக்களின் குரல்களைத் துண்டிக்கும்

அந்த சுவர்களை உடைக்கப் போராடியதால்,

துளைப்பான்களாகவும் சுத்தியல்களாகவும் மாறின.

ஆனால் நான் மௌனமாக்கப்படுவேன்.

எனது கழுத்தைச் சுற்றியிருக்கும் நட்சத்திரப் பட்டை

எந்தக் கணத்திலும் ஒரு நல்ல பாம்பாக மாறி இறுகலாம்.

எவ்வாறு நான் காஃபியைப் பற்றியும் பூக்களைப் பற்றியும் பேச முடியும்?

அவர்கள் வருகிறார்கள்

சிலவேளைகளில் நீங்கள் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது,

வீட்டுக்குத் திரும்புகையில் அல்லது ஒரு நண்பரைப் பார்க்கக் கிளம்புகையில்,

அவர்கள் வருகிறார்கள். மரங்களுக்கும் தூண்களுக்கும் பின்னாலிருந்து அவர்கள்

தோன்றுகிறார்கள்,

ஒரு மானைக் கவ்வும் ஒரு வேட்டை நாய்க் கூட்டம் போல உங்களை நெருங்குகிறார்கள்,

ஓடிப் போவதிலோ ஒளிந்து கொள்வதிலோ பயனில்லை என்று நீங்கள் அறிவீர்கள்,

எனவே நில்லுங்கள் ஒரு சிகரட்டைப் பற்ற வையுங்கள், அவர்களுக்காகக் காத்திருங்கள்.

சிலவேளைகளில் நீங்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,

உங்களுடைய சூப் பரிமாறப்பட்டது உங்கள் உண்வு இன்னும் தயாராகவில்லை,

அவர்கள் வருகிறார்கள். ஒரு திடமான கை உங்கள் தோள் மேல் விழுகிறது.

அத்தகைய ஒரு கை உங்களுக்குப் பழக்கமானது தான்

முகத்தைச் சந்திப்பதற்காக நீங்கள் திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.

பயந்து போன சாப்பிடுபவர்கள் ரகசியமாக எட்டிப் பார்க்கிறார்கள்,

பரிமாறுகிறவள் பேசும் போது அவளது தாடை நடுங்குகிறது,

ஆனால் நீங்கள் அங்கே பில்லுக்காகப் பொறுமையாக காத்திருக்கிறீர்கள்.

அதைக் கணக்கு முடித்து, நீங்கள் அவர்களோடு நடந்து வெளியேறுவீர்கள்.

சிலசமயங்களில் நீங்கள் உங்கள் அலுவலகத்தைத் திறக்கும் போது,

ஒரு கட்டுரையை மூன்று மணி நேரத்துக்குள் முடிக்கும் திட்டத்துடன்,

அல்லது ஒரு மதிப்புரையை வாசிப்பது, ஆனால் முதலில் கொஞ்சம் தேநீர் தயாரிக்கையில் அவர்கள் வருகிறார்கள். கதவுக்குப் பின்னாலிருந்து அவர்கள் முளைக்கிறார்கள்,

பேய்கள் தஙகளது குகைக்கு ஒரு குழந்தையை வரவேற்பது போல,

நீங்கள் தரையில் கப்களும் காகிதங்களும் சிதறிக் கிடப்பதைப் பார்த்து வெளியேறுகிறீர்கள்.

எவ்வாறு ஒரு செய்தியை வீட்டுக்கு அனுப்புவது என்று கற்பனை செய்கிறீர்கள்.

சிலசமயங்களில் நீங்கள் இரவும் பகலுமாக வேலை செய்து விட்டு,

நாய்க் களைப்பு, ஒரு நல்ல தூக்கத்திற்காக ஆசைப்படுகிறீர்கள்

ஒரு குளியலுக்குப் பிறகு கூடுதலாகக் கொஞ்சம் மதுவருந்தல், அப்போது

அவர்கள் வருகிறார்கள். உங்கள் கனவின் வண்ணத்தையே மாற்றிவிடுகிறார்கள்:

உங்களது உடம்பில் உள்ள காயங்களுக்காக முனகுகிறீர்கள்,

மற்றவர்களின் விதியை எண்ணி அழுகிறீர்கள்,

இப்பொழுது மட்டுமே உங்கள் கைகளைக் கொண்டு திருப்பி அடிக்க விரும்புகிறீர்கள்,

ஆனால் ஒரு துப்பாக்கி வெடிக்கும் சப்தம் அல்லது ஒரு “ஊச்”

உங்களை மீண்டும் மௌனமாக்குகிறது மேலும் மீண்டும் தூக்கமில்லாமல் செய்கிறது.

தொலைந்த காலம்

எனது நோட்டுப்புத்தகம் பல மாதங்களாகக் காலியாகவே கிடக்கிறது

என்னைச் சுற்றிலும் உனது ஒளிப் பொழிவுக்கு

நன்றி. எனது பேனாவுக்கு என்னால்

ஒரு பயனும் இல்லை, அது வருத்தம் இல்லாமல்

தளர்ந்து கிடக்கிறது.

எழுதாமல் இருப்பது தேவைப்படும் அர்த்தமற்ற,

ஒரு கதையற்ற வாழ்வை வாழ்வதை விடச் சிறந்தது

எதுவுமில்லை—

நான் போய்விட்ட பிறகு, மற்றவர்கள் கூறட்டும்

அவர்கள் ஒரு மகிழ்ச்சியான மனிதனை இழந்துவிட்டார்கள்,

நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதை எவராலும் கூற முடியாது எனினும்.

மீண்டும், இந்த நாட்களில் நான் உன்னைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்

1

ராணுவத்திற்குச் செல்ல நாம் வீட்டைவிட்டுக் கிளம்பிய போது

ரயிலில் நீ கண்ணீரில் வெடித்தாய்.

நீ கூறினாய்: “நான் எனது பெற்றொர்களைத் தேடுவேன்,

இவ்வளவு தொலைவு நான் ஒரு போதும் பயணித்ததில்லை.”

ஆனால் நீயே உரிமை கொண்டாடினாய்

தேசத்தைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை,

ருஷ்யத் திருத்தல்வாதிகளுடன் நீ கடைசி வரையிலும்

போரிடுவாய் என்று.

நான் எனது தலையைத் தாழ்த்திக் கொண்டேன், அழவில்லை.

ஆனால் கன்ணீரில் மங்கிய எனது அம்மாவின் கண்கள்

குளிர் காற்றுடன் போராடியது

வடக்கு நோக்கிச் செல்லும் ரயிலை நிறுத்துவதற்கு.

2

வடக்கத்தி நிலத்தில்

நமது காலடித் தடங்கள்

உறைபனியில் மறைந்தன.

கடினமான பனிக்கட்டி மெள்ள

அதன் பாளங்களை இழந்து கொண்டிருந்தது.

நாம் கம்பளித் தொப்பிகளை அணிய வேண்டியதில்லை

எல்லைக்கோடு நெடுக நமது ரோந்தின் போது,

சிறிய நீரூற்றுகளீல் நமது குதிரைகளுக்கு நீர் அளித்தோம்.

3

கடைசியாக மழை கறுப்பு பூமியை குழைய வைத்தது.

மலைச் சரிவுகளில் அஸலியாக்கள் பூத்தன.

வனங்கள் யுத்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை.

மலைகளும் ஆறுகளும் யுத்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால் ஒவ்வொரு இரவிலும் நாம் தூங்கினோம்

நமது ஆடைகளை அணிந்து கொண்டே.

நாம் போரிடத் தயாராக இருந்தோம்.

4

பகைவருடன் மோதிக் கொண்டிருந்த டாங்குகள்,

பள்ளத்தாக்கு வழியே ஓடிக் கொண்டிருந்தன.

மரக் கையெறி குண்டுகளும் அண்மை-ஏவுகணைகளும்

அவர்களை நோக்கிப் பொழியத் தொடங்கின.

ஒவ்வொன்றும் பிழையாக இருந்தது,

ஆனால் நாம் அதைத் தீவிரமாகச் செய்தோம்.

ஒரு பிரம்மாண்டமான அரிவாள் போலச் சுழலும் பீரங்கிக் குழல் கொண்ட

அந்தப் படையூர்தியை ஏன் தேர்ந்தெடுத்தாய்

அதன் முதுகில் ஒரு வெடிகுண்டுச் சிப்பத்தை நிரப்ப?

அது உன்னை மண்ணில் சாய்த்தது

அதன் கம்பளிப் பூச்சி உன் கால்கள் மேல் ஓடியது.

நாங்கள் உன்னைக் குன்றுக்குக் கீழே கொண்டு சென்றோம்

உனது ரத்தம் கீழ் நோக்கி ஒரு சிறிய ஓடைக்குள்

ஆமூரை நோக்கிப் பாய்ந்தது.

5

வெள்ளைக் கூரை,

வெள்ளைச் சுவர்கள்,

வெள்ளைச் செவிலியர்கள்.

உனது கறுப்பு விழிகள் மட்டும் மெள்ளச் சரிகின்றன

நமது கண்கள் மோதிக்கொண்டன.

நீ என்னை வெறித்துப் பார்த்தாய்

கொடிய அமைதியில்.

உன்னால் பேச முடியுமா?

மற்றவர்கள் கூறுவதை நீ கேட்க முடிகிறதா?

நீ முன்பைவிட இரண்டு அடிகள் குள்ளமாகிவிட்டாய்.

நீ வார்டுக்குள் மந்தமாகத் தலையைத் திருப்பிக் கொள்கிறாய்

ஒரு திடுக்கிட்ட ஆமை போல.

உனது வளைந்த முதுகைக் கவனித்தவாறே

ஒரு சகாப்தத்தை நான் வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.

6

நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயா?

எனது மனசாட்சியின் கதவில்

அடிக்கடி வலியில் முனகும்

ஒரு கைவிடப்பட்ட நாய்க்குட்டி நீ.

000

இன்றிரவு, நீண்ட அமைதியில்

நான் மீண்டும் உன்னைப்பற்றி நினைக்கிறேன்.

பேசுதலின் வழிகள்

துக்கம் பற்றிப் பேசுதல் நமக்குப் பழகிப்போனது

இழப்புகள், குற்றச்சாட்டுகள், துயரங்கள் ஆகியவற்றால்

நமது இதழ்களும் எழுத்துக்களும் நிரம்பியிருந்தன.

எந்தத் துக்கமும் அங்கு இல்லாமல் இருந்தால் கூட

வருந்துவதை நாம் நிறுத்தப் போவதில்லை

ஒரு துயர்படும் முகத்தின்

அழகுக்காக ஏங்குதல் போல.

பிறகு நாம் துக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது

எச்சரிக்கை செய்யாமல் ஏராளமான விஷயங்கள் இறங்கின:

வீணாகிய உழைப்பு, இழந்த காதல், வீடுகள் அழிந்தன,

திருமணங்கள் உடைந்தன, நண்பர்கள் பிரிந்தார்கள்,

உடனடித் தேவைகளால் லட்சியங்கள் வெளிறிப் போயின.

நமது தொண்டைகளில் சொற்கள் அணிவகுத்து நின்றன

ஒரு நல்ல அழுகைக்காக.

துக்கம் ஒரு முடிவற்ற நதி போலக் காணப்பட்டது—

வாழ்வின் ஒரே அநித்திய ஓடை.

ஒரு நிலத்தை இழந்துவிட்ட பிறகு, ஒரு நாக்கையும் கொடுத்துவிட்ட பிறகு,

நாம் துக்கம் பற்றிப் பேசுவதை நிறுத்தினோம்

புன்னகைகள் நமது முகங்களை ஒளிர்விக்கத் தொடங்கின.

நாம் நிறையச் சிரித்தோம், நமது சொந்தக் குளறுபடிகள் மீது.

பொருட்கள் அழகாக மாறின,

ஸ்ட்ராபெர்ரி வயல்களில் விழும் ஆலங்கட்டி மழை கூட.

****