Category: இதழ் 28

கோவை இலக்கியச் சந்திப்பு 31 ஆவது கூட்டம்

literal meet

புடாபெஸ்ட் – நோ வயலெட் புலவாயோ ( No Voilet Bulawayo ) – தமிழில் ச.ஆறுமுகம்.

download(நோ வயலெட் புலவாயோ ஜிம்பாப்வேயில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் ஏ அண்டு எம் வணிகவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், சதர்ன் மெத்தேடிஸ்ட் பல்கழைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்ற இவர், கர்னேல் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியப் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். தற்போது அதே கல்லூரியில் இலக்கியம் கற்பிக்கிறார்.

அவரது Hitting Budapest என்ற தலைப்பிலான இச்சிறுகதை ‘ஆப்பிரிக்கன் புக்கர்’ எனக் கருதப்படும் ஆப்பிரிக்கப் படைப்புகளுக்கான கெய்ன் விருதினை ஜூலை11, 2011ல் பெற்றது. கெய்ன் விருது ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்கும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு 10000 பவுண்டு தொகையும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில்( Writer in Residence) ஒரு குடியிருப்பு எழுத்தாளர் என்ற பதவியும் வழங்கப்படுகிறது.

‘எங்களுக்குப் புதிய பெயர்கள் வேண்டும்’ என்ற நாவலை இவர் சமீபத்தில் எழுதி முடித்துள்ளார். )

**********

 

நாங்கள் புடாபெஸ்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம்: வேசிமகன், சிப்போ, கடவுளறிவார், ஸ்போ, ஸ்டினா, நானும்.

ஜிலிக்காஜி சாலையைத்தாண்டிச் செல்லக்கூடாதென எங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்களென்ற போதிலும், வேசிமகன் அவனது குட்டித் தங்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற போதிலும் அம்மாவுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்றேபோடுவார்களென்ற போதிலும் நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். புடாபெஸ்டில் களவாடுவதற்குக் கொய்யாக்கள் இருக்கின்றன. அதிலும், எது எப்படியானாலும், கொய்யாவுக்காக என்றால் நான் உயிரைக்கூட விட்டுவிடுவேன். அந்தநேரம் என்வயிற்றினுள்ளிருந்த எல்லாவற்றையும் யாரோஒருவர் மண்வெட்டியால் தோண்டியெடுத்துவிட்டது போலிருந்தது.

சொர்க்கத்தைவிட்டு வெளியேவருவதொன்றும் கடினமானதல்ல; அதிலும் அம்மாக்களெல்லாம் தலைமுடியைச் சிக்கெடுத்துக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும்போது இன்னும் எளிது. நாங்கள் எல்லோரும் ஒவ்வொருவராகக் கூட்டமாக ஒன்றுசேரும்போது, அவர்கள் என்னமோ பார்க்கத்தான் செய்வார்கள். ஆனால், உடனேயே வேறுபக்கம் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஜகரண்டாமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கும் ஆண்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதேயில்லை; அவர்கள் டிராட்ஸ் விளையாட்டிலிருந்து பார்வையைச் சிறிதுகூட அக்கம்பக்கம் திருப்புவதேயில்லை. குட்டிக் குளுவான்கள்தாம் எங்களைப் பார்த்துவிட்டு எங்கள் பின்னாலேயே வரப்பார்த்தன. அம்மணமாயிருந்த ஒன்றின் பெரியதலையில் வேசிமகன் ஒருகுத்துவிட்டதும் எல்லாம் பின்வாங்கிவிட்டன.

நாங்கள் புதர்களுக்குள்ளாகவே ஓடிக்கொண்டிருந்தோம். வேசிமகன்தான் முன்னால் சென்றான். இன்றைய உள்ளூர் விளையாட்டில் அவன்தான் ஜெயித்திருந்தான். அதனாலேயே இன்று அதிகாரம் செய்பவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னால் நானும், கடவுளறிவாரும் ஸ்டினாவும் ஓடினோம். கடைசியாக சிப்போ; சிப்போ எப்போதுமே சொர்க்கத்திலுள்ள எல்லோரையும் தோற்கடித்துவிடுவாள். ஆனால் இனிமேல் அது முடியாது. ஏனென்றால், அவளது தாத்தா அவளை கர்ப்பமாக்கிவிட்டார். ஜிலிக்காஜியைக் கடந்தபிறகு நாங்கள் வேறொரு புதர்ப்பாதை வழியாக `நம்பிக்கைவீதி`க்குள் குதிரையோட்டம் ஓடிக்கொண்டிருந்தோம். நாங்கள் ஒருபோதுமே உட்கார்ந்து பார்க்காத பளபள இருக்கைகள் கிடக்கும் பெரிய ஸ்டேடியத்தைக் கடந்து நாங்கள் ஒருவழியாக புடாபெஸ்டை அடைந்துவிட்டோம். இடையில், சிப்போ இளைப்பாறுவதற்காக நாங்கள் ஒருமுறை நிற்கவேண்டியிருந்தது.

“நீ எப்போது குழந்தை பெறப்போகிறாய்?” என்று கேட்டான் வேசிமகன். அவளுக்காக நாங்கள் தாமதிப்பதை அவன் விரும்பவில்லை. நாங்கள் அவளோடு கலந்துவிளையாடுவதைக்கூடத் தடுக்க முயற்சித்தான்.

“என்றைக்கோ ஒருநாள் பெற்றுப்போடுவேன்.”

“அது என்ன ஒருநாள்? நாளைக்கா? வியாழக்கிழமையா? அடுத்தவாரமா?”

“அவளுடைய வயிறு சிறிதாக இருப்பது உனக்குத் தெரியவில்லையா, குழந்தை வளர வேண்டாமா?”

“குழந்தை வெளியேதான் வளர்கிறது. அதனால்தான் அவை பிறக்கின்றன. அதனால் வளர்கின்றன.”

“சரிதான், இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. அதனால்தான் இன்னும் அது வயிறாகவே இருக்கிறது.”

“அது பையனா, பெண்ணா?”

“அது பையன்தான். முதல் குழந்தை எப்போதும் ஆணாகத்தான் இருக்கும்.”

“ஆனால் நீ ஒரு பெண். நீ முதல் குழந்தைதானே?”

“நான் சொன்னது அப்படிச் சொல்வார்கள் என்றுதான்.”

“நீ வாயைமூடு, அது ஒன்றும் உன்னுடைய வயிறல்ல.”

“அது பெண்குழந்தை என்றுதான் நினைக்கிறேன். அது உதைப்பதாகவே எனக்குத் தெரியவில்லை.”

“பையன்கள்தான், உதைப்பதும், குத்துவதும், தலையால் முட்டுவதும்.”

“உனக்குப் பையன்தான் வேண்டுமா?”

“இல்லை, ஆமாம், இருக்கலாம், எனக்குத்தெரியாது.”

“குழந்தை உண்மையில் எந்தவழியாக வெளியே வருகிறது?”

“அது எப்படி வயிற்றுக்குள் போனதோ, அதே வழியில்தான்.”

“அது எப்படிச் சரியாக வயிற்றுக்குள் போய்ச் சேர்ந்தது?”

“முதலில் கடவுள்தான் அதற்குள் வைத்தார்.”

“இல்லை, கடவுள் இல்லை. ஒரு ஆண்தான் உள்ளே வைக்கிறான். என் மைத்துனன் மியூசா எனக்குச் சொன்னான். உன்வயிற்றில் உன்தாத்தாதானே குழந்தையை வைத்தார், சிப்போ?”

அவள் `ஆமாம்` எனத் தலையாட்டினாள்.

“அப்படி ஒருமனிதன் உள்ளே வைத்தான் என்றால், ஏன் அவனால் அதை வெளியே எடுக்கமுடியவில்லை?”

“மரமண்டை! அது ஏன் என்றால் பெண்கள்தான் குழந்தைபெறுகிறார்கள். அதனால் பால் கொடுக்க மார்பகங்கள் இருக்கின்றன.”

“ஆனால் சிப்போவின் மார்புகள் கல்மாதிரி சிறிதாகத்தானே இருக்கின்றன?”

“குழந்தை பிறக்கும்போது அவைபெரிதாகும். அப்படித்தானே சிப்போ?”

“எனக்கு மார்பு ஒன்றும் பெரிதாக வேண்டாம், எனக்குக் குழந்தையும் வேண்டாம், எனக்கு எதுவும் வேண்டாம், எனக்குக் கொய்யாதான் வேண்டும்” சொல்லிக்கொண்டே சிப்போ ஓட்டமெடுத்தாள்.

நாங்கள் அவள் பின்னால் ஓடினோம். புடாபெஸ்டின் மத்தியில் வந்தபோது நாங்கள் நின்றோம். புடாபெஸ்ட் வேறுமாதிரியான பூமி. அது எங்களைப்போல் அல்லாதவர்கள் வாழும் தேசம்.

ஆனால் அது சாதாரண தேசம் அல்ல. அங்கே எல்லோரும் காலையில் கண்விழித்ததும், வாசல், கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் மூடுகிறார்கள். கார்டுகள், கடவுச்சீட்டுகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, வேறு நல்ல நாடுகளுக்குக் கிளம்புகிறார்கள். காற்று கூட வெறுமையாக இருக்கிறது. எதுவும் எரிவதில்லை. சமையல்வாசனை இல்லை. ஏதாவது அழுகும்பொருள்கூட இல்லை. காற்றின் முதுகின்மேல் எதுவுமில்லை. அது எதையும் சுமந்துவரவில்லை.

புடாபெஸ்ட் பெரியது. பெரிய பெரிய வீடுகள். சுற்றுச்சுவர்கள். தளமிட்ட முற்றங்கள். உயர உயரமான வேலிகள். திடமான சுவர்கள். பூக்கள். நாங்கள் பறிப்பதற்காகவே பழங்கள் கனத்திருக்கும் பசுமை மரங்கள். பழங்கள் எதற்காக இருக்கின்றன என அங்கே யாருக்குமே தெரியாதுபோல. பழங்கள் மட்டும் இல்லையென்றால் நாங்கள் அங்கே வரத் துணிந்திருக்கவே மாட்டோம். தெருக்கள் எங்களைச் சந்தைக்குத் திரும்பிச்செல்லுமாறு துரத்திவிடுமென எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.

நாங்கள் வழக்கமாக சிப்போவின் மாமா மரத்தில்தான் திருடுவோம். ஆனால் அது திருடிச் சேர்த்ததைத் திருடுவது போன்றதாகாது. அவருடைய மரத்தில், கொய்யா பூராவையும் நாங்கள் காலிசெய்து விட்டோம். அதனால் வேற்று ஆட்களின் வீடுகளைத் தேடிப் போனோம். நாங்கள் நிறைய இடங்களில் இருந்து எக்கச்சக்கமாகத் திருடிவிட்டோம். என்னால் எண்ணக்கூட முடியாது. கடவுளறிவார்தான் அந்தத்தெருவுக்குப் போய் எல்லாவீடுகளையும் நாங்கள் முடிக்கும்வரை அங்கேயே இருப்பதெனத் தீர்மானம்செய்தான். அதனால்தான் நாங்கள் எங்கே இருக்கிறோம், எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற குழப்பங்களெல்லாம் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட வகைமாதிரி. இப்படிச் செய்தால்தான், நாங்கள் நல்ல திருடர்களாவோம் எனக் கடவுளறிவார் சொல்கிறான்.

இன்று நாங்கள் ஒரு புதுத்தெருவில் தொடங்கினோம். அதனால்தான் கவனமாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டோம். நாங்கள் எஸ்ஏடிசி(Southern African Development Community) தெருவைக் கடந்தோம். அங்கே இரண்டு வாரங்களுக்கு முன்புதான் எல்லா கொய்யாமரங்களையும் மொட்டையடித்திருந்தோம். இறக்கைகள் உள்ள சிறுநீர் கழிக்கும் ஒரு பையன்பொம்மை இருந்த, பாலேட்டுநிற வீட்டின் ஜன்னலின் வெள்ளைத் திரைகளை விலக்கி, எங்களை நிற்குமாறு ஒருமெல்லிய குரல் சொன்னது. அங்கே ஒருமுகம் எங்களை உற்றுப்பார்த்ததை நாங்கள் கண்டோம். அந்த முகம் எங்களை என்னசெய்துவிடுமென்று நாங்கள் ஒருநிமிடம் நின்று கவனித்துப் பார்த்தோம். அந்தக்குரல் நிற்கச் சொன்னதற்காக ஒன்றும் நாங்கள் நிற்கவில்லை. எங்களில் யாருமே ஓடத் தொடங்கவில்லை. அதோடு அந்தக்குரலும் அபாயகரமானதாகத் தோன்றவில்லை. அதனால் நாங்கள் அப்படியே நின்றோம். ஜன்னலுக்குள்ளிருந்து பாட்டு ஒன்று தெருவுக்குள் வந்துகொண்டிருந்தது. அது க்வைட்டோவும் இல்லை; நடனஅரங்கும் இல்லை. எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று.

வளர்ந்த ஒல்லியான ஒருபெண் கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவள் எதையோ தின்றுகொண்டிருந்தாள். எங்களை நோக்கிக் கையை அசைத்துக்கொண்டே வந்தாள். அவளின் ஒல்லியான உடம்பைக் கண்டே நாங்கள் ஓடவில்லை என்று சொல்லமுடியும். நாங்கள் அவளுக்காகக் காத்துநின்றோம். அவள் எதற்காகவோ எங்களை நோக்கிச் சிரித்ததை எங்களால் பார்க்கமுடிந்தது. எப்போதும் சிரிக்கும் எலும்பம்மா (எலும்பு அம்மா) தவிர, சொர்க்கத்தில் யாருமே எங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை. அந்தப்பெண் வாசலுக்கு வந்துவிட்டாள். வாசல் பூட்டியிருந்தது. அதைத் திறப்பதற்கான சாவியை அவள் கொண்டுவந்திருக்கவில்லை.

“குட்டிகளா, இந்தக் கட்டாந்தரையில் என்னால் நிற்கக்கூட முடியவில்லை: தரை கொதித்துக் கிடக்கிறது; என்னால் தாங்கவே முடியவில்லை. நீங்கள் எப்படி நிற்கிறீர்கள்?” என்று அவள் கேட்டாள். அவளது குரலில் பயப்படும்படியாக எதுவுமில்லை.

அவள் கையிலிருந்ததைக் கௌவி மென்றுகொண்டே புன்னகைத்தாள். அவள் கழுத்தில் ஒரு அழகான இளஞ்சிவப்பு நிழற்படக்கருவி தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய நீண்ட பாவாடையின் அடியில் நீட்டிக்கொண்டிருந்த பாதங்களை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். ஒரு குழந்தையுடையதைப்போல எவ்வளவு அழகான பாதங்கள்! அவள் கால் பெருவிரல்களை அசைத்துக்கொண்டே இருந்தாள். அவள் பாதங்களைப் போல என்னுடையது எப்போதாவது இருந்ததா என எனக்கு நினைவில்லை. ஒருவேளை, நான் பிறந்தபோது அப்படி இருந்திருக்கலாம்.

நின்றுகொண்டிருந்த அந்தப்பெண்ணின் சிவந்தவாயைப் பார்த்தேன். அவள் கழுத்து நரம்பிலிருந்தும், பெரிய உதடுகளை அசைத்ததிலிருந்தும் அவள் நல்ல ருசியான ஒன்றைத் தின்றுகொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அவளுடைய நீண்ட கையில் வைத்து அவள் தின்று கொண்டிருந்ததை நான் உன்னிப்பாகப் பார்த்தேன். அது தட்டையாக, வெளிப்பக்கம் மொறுமொறுப்பாக இருந்தது. மேற்புறம் பாலேட்டுப் பிசுபிசுப்புடன் மென்மையாகஇருந்தது. அதன்மீது நாணயங்கள் போல ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தன. அவை ஆழ்ந்த சிவப்பில் தீப்புண் நிறத்தில் இருந்தன. அதோடு மஞ்சள், பச்சை, சிவப்பு தூவியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. கடைசியாக முகப்பருக்கள் போலத் தவிட்டுநிறம் பொங்கியிருந்ததைக் கண்டேன்.

அதைநோக்கி ஒருகையை நீட்டி “அதுஎன்ன?” என்று சிப்போ கேட்டாள். அவளுடைய மறு கை வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தது. இப்போது அவள் பிள்ளைத் தாய்ச்சியாக இருக்கிறாள். பேசும்போதெல்லாம் வயிற்றைத் தடவிக்கொண்டே இருக்க விரும்புகிறாள். வயிறு சாக்ஸர் விளையாட்டின் பந்து (கால்பந்து) போல, ஆனால் அந்த அளவுக்குப் பெரிதாக இல்லாமல் இருந்தது. அவள் என்ன சொல்லப் போகிறாளென நாங்கள் எல்லோரும் அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘’ஓ, இதுவா? இது படம்பிடிக்கும்பெட்டி’’ என எங்களுக்குத் தெரிந்ததையே சொன்னாள். கையைச் சட்டையிலேயே துடைத்துக்கொண்டு நிழற்படக்கருவியைத் தடவிக் காட்டினாள். பின்னர் கையிலிருந்ததைக் கதவருகிலிருந்த குப்பைக்கூடையைக் குறிபார்த்து எறிந்தாள்; அது தவறிக் கீழே விழுந்தது; அவள் சிரித்தாள்; இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் எங்களைப் பார்த்தாள்; அவள் சிரிப்பதால் நாங்களும் சிரிக்கவேண்டுமென எதிர்பார்த்தாள்போல. ஆனால், நாங்கள் அவள் எறிந்த அது, இறந்த பறவை தரைநோக்கி விழுவதைப்போலக் கீழே விழுந்து சிதறிக் கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சாப்பிடுவதை இப்படித் தூக்கியெறிகிற யாரையும் நாங்கள் பார்த்ததேயில்லை. நான் சிப்போவை ஓரக்கண்ணால் பார்த்தேன்.

பிள்ளைத்தாய்ச்சிப் பெண் யாரையுமே பார்த்திராததுபோலச் சிப்போவின் வயிற்றைப் பார்த்துக்கொண்டே ‘’உனக்கு இப்போது வயது என்ன ஆகிறது?‘’என்றாள். ஆனால், சிப்போ அதைக் கவனிக்கவேயில்லை. அவள் தரையில் கிடந்த அதையே, சாப்பிடுகிற அதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் புடாபெஸ்டில் வாழ்ந்தால் தினசரி உடம்புக்குக் குளித்துத் தலைசீவி, சரியான இடத்துக்குத் தக்கபடியான, சரியான நபர் எனக் காட்டிக்கொள்வேன்.

“அவளுக்குப் பத்துவயது” சிப்போவுக்காக கடவுளறிவார் பதில் சொன்னான்.

“நாங்கள் இரட்டைக் குழந்தைகள்போல, நானும் இவளும், ஒன்பது வயது” என்றான். என்னையும் அவனையும் சொல்கிற மாதிரி. ‘’ வேசிமகனுக்குப் பதினொன்று, ஸ்போவுக்குஎட்டு, ஸ்டினாவுக்கு எத்தனையென்று எங்களுக்குத் தெரியாது.’’

“ஓ!” என்றாள் அவள், காமிராவோடு விளையாடிக்கொண்டே.

“உங்களுக்கு என்ன வயது?” என்று கேட்டான், கடவுளறிவார். “உங்கள் சொந்த ஊர்?” கடவுளறிவார் எப்படி, இப்படி வாயாடலாமென்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

“எனக்கா, 33 வயது. நான், லண்டன். என் அப்பாவின் ஊருக்கு முதல்முறையாக இப்போதுதான் வந்திருக்கிறேன்.”

“நான் ஒருமுறை லண்டன் இனிப்புகளைத் தின்றிருக்கிறேன். `இனியவர்` மாமா அனுப்பியிருந்தார். ஆனால் அதெல்லாம் ரொம்பநாளைக்கு முன்னால் நடந்தகதை. இப்போதெல்லாம் அவர் கடிதம் கூட எழுதுவதில்லை.” என்றான், கடவுளறிவார். அந்தப் பெண்ணின் வாய் மெல்லுவதை நிறுத்தியது. நான் அவளோடு சேர்ந்து விழுங்கினேன்.

“நீங்கள் பதினைந்து வயதுக் குழந்தைபோல இருக்கிறீர்கள்” என்றான், கடவுளறிவார். அவனுடைய பெரிய வாயிலேயே அடி வாங்கப்போகிறானென நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவள் ஏதோ பெருமைப்படத்தக்க ஒன்றை அவன் சொல்லிவிட்டது போலச் சிரித்துவிட்டு, “நன்றி” என்றாள்.

இதில் நன்றி சொல்வதற்கு என்ன இருக்கிறதென்று அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மற்றவர்களைப் பார்த்தேன். அந்தப்பெண் வித்தியாசமானவளாக இருப்பதாகமற்றவர்களும் நினைப்பார்களென எனக்குத் தெரியும். அவள், சடைபிடித்தது போல் தெரிந்த அவளின் தலைமுடிக்குள் கையைவிட்டுச் சிக்கெடுப்பது போல் கோதினாள். நான் மட்டும் புடாபெஸ்டில் இருந்தால் தினசரி உடம்புக்குக் குளித்து, அழகாகத் தலைசீவி, சரியான இடத்தில் இருக்கும் சரியானநபர் எப்படி இருக்கவேண்டுமெனக் காட்டுவேன்.

“நான் ஒரு படம் எடுத்துக்கொள்ள நீங்கள் சம்மதிப்பீர்கள்தானே?” நாங்கள் பதிலேதும் சொல்லவில்லை. பெரியவர்கள் எங்களை எதுவும் கேட்பது வழக்கமானதல்ல. அவள் பின்னோக்கிச் சில அடிகள் நகர்வதை, அந்தப் பயமுறுத்தும் தலைமுடியை, அவள் நடக்கும்போது தரையைப் பெருக்கும் பாவாடையை, அவளுடைய அழகிய பாதங்களை, அவள் அணிந்திருந்த அந்தப் பெரிய ஆபரணநகையை, அவளின் பெரிய கண்களை, உயிருள்ள மனுஷி என்பதற்கடையாளமாக ஒரு தழும்புகூட இல்லாத வழுவழுப்பான செம்பழுப்பு நிறத் தோலை, அவள் மூக்கில் அணிந்திருந்த காதுவளையத்தை, `Save Darfur` எனச் சொல்லிக்கொண்டிருந்த டி.சர்ட்டை, நாங்கள் பார்த்துக் கொண்டேயிருந்தோம்.

“இங்கே பாருங்கள், `ச்சீஸ்` சொல்லுங்கள், ச்சீஈஈஸ்`. அவள் எங்களை உற்சாகப்படுத்தப் படுத்த, எல்லோரும் `ச்சீஸ்` என்றார்கள். நான்மட்டும் உண்மையில் சொல்லவில்லை. `ச்சீஸ்` என்றால் என்ன என்பதை நான் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒரு அர்த்தம் தெரியாத புதுப்பாடலைக் கற்றுக்கொண்டு, அதையே திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருந்த டூடூ பறவையின் கதையை எலும்பம்மா நேற்று சொன்னாள். அந்தப் பாட்டின் வார்த்தைகளின் பொருள்புரியாமலேயே அந்தப்பறவை பாடப்பாட, அதனைப் பிடித்துக் கொன்று சமைத்துவிட்டார்கள். ஏனென்றால், அந்தப்பாட்டில், அது எல்லோரிடமும் தன்னைப் பிடித்துக் கொன்று சமையுங்கள் என்று உண்மையாகவே கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது.

அவள் என்னைச் சுட்டிக்காட்டித் தலையசைத்து, `ச்சீஈஈஈஸ்` எனச் சொல்லுமாறு சொன்னாள். அவள் என்னை நன்கு தெரிந்தது போலக்காட்டிச் சிரித்ததால். நானும் அப்படிச் சொன்னேன். முதலில் நான் மெதுவாகச் சொன்னேன். பிறகு, ச்சீஸ், ச்சீஸ் என்றேன். பின்னர் நான் `ச்சீஸ், ச்சீஈஈஈஸ் எனச்சொல்ல எல்லோரும் ச்சீஸ்ச்சீஸ் என்றார்கள். நாங்கள் எல்லோரும் அந்த வார்த்தையைப் பாடிக்கொண்டிருக்கக் காமிரா கிளிக்கிக் கிளிக்கிக் கிளிக்கிக் கொண்டேயிருந்தது. எப்போதும் எதுவுமே பேசாத ஸ்டினா கிளம்பி, நடக்கத்தொடங்கினாள். அந்தப்பெண் படம்பிடிப்பதை நிறுத்திவிட்டு, “எல்லோருக்கும் திருப்திதானே?”என்றுகேட்டாள். ஆனால், ஸ்டினோ நிற்கவில்லை. ஸ்டினோவைத் தொடர்ந்து சிப்போ வயிற்றைத் தடவிக்கொண்டே நடந்தாள். நாங்களும் அவர்களின் பின்னே நடந்தோம்.

அந்தப்பெண்ணை அங்கேயே படமெடுக்க விட்டுவிட்டு, நாங்கள் கிளம்பினோம். எஸ்.ஏ.டி.சி. முனையில் நின்றுகொண்டு வேசிமகன், அவளைப்பார்த்து, கெக்கெக்கே என வலிச்சம் காட்டிக் கூச்சலிட்டான். அவள், கையில் வைத்திருந்த மீதியை எங்களுக்கு வேண்டுமா எனக்கூடக் கேட்காமல் தூரஎறிந்ததை நான் நினைத்துக்கொண்டேன். நானும் கூச்சல் போட்டுக் கத்தினேன். எல்லோரும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். நாங்கள் கூச்சல்போட்டுக் கூச்சல்போட்டுக் கூச்சல்போட்டுக் கத்தினோம். அவள்தின்ற அதை, நாங்களும் தின்ன விரும்பினோம். நாங்கள் புடாபெஸ்டில் கூச்சலிட்டுக் கலகம் செய்ய விரும்பினோம். எங்கள் பசி இல்லாமலாக வேண்டும். அந்தப்பெண் எங்களை வெறுமனே பார்த்தாள்; திகிலடைந்து, அவசரமாக வீட்டைநோக்கித் திரும்பினாள். அப்போதும் நாங்கள் கூச்சலிட்டோம். நாங்கள் ஆங்காரமாகக் கத்தினோம். எங்கள் தொண்டை கரகரத்து வலித்தது. அவள் வீட்டுக் கதவைச் சார்த்தி, மறைந்ததும் எங்கள் கொய்யாவைத் தேடி மெல்ல நடக்கத் தொடங்கினோம்.

பெரியவர்களான பிறகு கொய்யா திருடுவதை விட்டுவிட்டு, வீடுகளுக்குள்ளிருக்கும் வேறு நல்லவற்றைத் திருடவேண்டுமென்று வேசிமகன் சொன்னான். “அப்படிப்பட்ட ஒருகாலம் வரும்போது நான் இங்கேயே இருக்கமாட்டேன், போஸ்டாலினா அத்தையோடு அமெரிக்காவில் நல்லமுறையில் இருப்பேன். ஆனால், இப்போதைக்குக் கொய்யாதான்.” ஐ.எம்.எப்.(IMF) தெருவில் மலையைப் போலத் தோற்றமளித்த ஒரு வெள்ளை மாளிகையைக் குறிவைத்தோம். காலியான இருக்கைகள் சுற்றிக்கிடக்க, ஒரு பெரிய நீச்சல்குளம் அந்தமாளிகை முன்னால் இருந்தது.

அந்த அழகான மாளிகையின் நல்லதொரு அம்சம் என்னவென்றால், மலை பின்பக்கமாக இருந்ததுதான். எங்கள் கொய்யாக்களோ, நாங்கள் வருவதை முன்னமேயே தெரிந்துகொண்டு, எங்களைச் சந்திக்க ஓடிவந்தவை போலக் கைக்கெட்டும் தூரத்திலேயே தொங்கின. சுற்றுச்சுவரில் கால்வைத்து மரம் மீதேறி எங்கள் பைகளை நல்ல குண்டுப்பழங்களாக நிரப்பிக்கொள்ள அதிக நேரமாகவில்லை. இந்தக் கொய்யாப்பழங்கள் மனிதர்களின் முட்டிக்கை அளவுக்குப் பெரிதானவை. அவை மற்றக் கொய்யாக்களைப் போல் முற்றினாலும் மஞ்சளாவதில்லை. வெளிப்பக்கம் பச்சையாகவே இருக்கும். ஆனால், உள்பக்கம் இளஞ்சிவப்பாக நல்ல சதைப்பற்றாக இருக்கும். அவை நல்ல ருசியாக இருக்கும். அந்த ருசியை விவரித்துச் சொல்ல என்னால் ஆகாது.

000

சொர்க்கத்துக்குத் திரும்பும்போது நாங்கள்ஓடுவதில்லை. புடாபெஸ்ட் என்னவோ எங்கள் சொந்த ஊர் மாதிரி, கொய்யாக்களைக் கடித்துத் தோலை வழியெல்லாம் துப்பிக் குப்பையாக்கிக் கொண்டு சாவதானமாக நடந்தோம். ஏ. யூ.(African Union) மூலையில், சிப்போ வாந்தியெடுப்பதற்காகச் சிறிது நின்றோம். வாந்தி சிறுநீரைப்போல, ஆனால், பிசுப்பிசுப்பாகத் தெரிந்தது. அதை மூடாமல் அப்படியே விட்டுவிட்டோம்.

“ஒருநாள், இந்த வீடு மாதிரியே ஒன்றில் குடியிருப்பேன்” என்றாள், கல்லுமாதிரி ஒரு கொய்யாவைக் கடித்துக்கொண்டிருந்த ஸ்போ. இடதுபக்கம் நீண்ட வரிசைப் படிக்கட்டுக்களுடன் சுற்றிலும் பூக்கள் பூத்துக்கிடந்த பெரிய நீலநிற வீடு ஒன்றை அவள் காட்டிக் கொண்டிருந்தாள். என்ன பேசுகிறோமெனத் தெரிந்து பேசுவது போலத்தான் அவள்குரல் இருந்தது.

“அதை எப்படிச் செய்யப் போகிறாய்?”என்று நான் கேட்டேன்.

“எனக்குத் தெரியும், அவ்வளவுதான்” என்றாள், ஸ்போ, கொய்யாத் தோலைத் தெருவில் துப்பிக்கொண்டே. அவள்கண்கள் அகன்று விரிந்திருந்தன.

“கனவில்தான் அப்படி நடக்கும்” என்றான், வேசிமகன், வெயிலைப் பார்த்துக்கொண்டே. அப்படியே ஸ்போவின் வீட்டுச் சுற்றுச்சுவர்மீது ஒரு பழுத்த கொய்யாவை வேகமாக விட்டெறிந்தான். அது பிளந்து சிதறிச் சுவரில் இளஞ்சிவப்புக் கறைபடிந்தது.

நான் ஒரு இனிப்புக் கொய்யாவைக் கடித்தேன். நன்கு பழுத்த கொய்யாவின் விதைகளை மென்று தின்ன எனக்குப் பிடிப்பதில்லை. அது ரொம்பவும் கடினம். அதோடு அப்படித் தின்றால் நேரமாகும். அதனால், மெதுவாக உதப்பி மென்று சிலவேளைகளில் விதைகளை முழுதாக விழுங்கிவிடுவேன். அப்படிச் செய்வதால் என்ன ஆகுமென்றும் எனக்குத் தெரியும். இருந்தாலும் அப்படித்தான் விழுங்குவேன்.

கடவுளறிவாரின் பின்பக்கம் காற்சட்டைக் கிழிசலைப் பார்த்தேன். அவனுடைய கறுப்புப் புட்டங்கள் அழுக்கடைந்த வெள்ளைநூல் திரடுகளின் நடுவில் பெரிய கண்கள் போல வித்தியாசமாகத் தோன்றின.

“ஏண்டா, அப்படிச் செய்தாய்?” சுவரின் கறையைப் பார்த்துவிட்டுப் பின் வேசிமகனைக் கேட்டாள் ஸ்போ. அவன் பகட்டாகச் சிரித்துக்கொண்டே இன்னொரு கொய்யாவை எறிந்தான். அது சுவற்றில் படாமல் முன்வாயில் இரும்புப் படலில் பட்டது. உண்மையான படலைப்போல் அது சத்தமிடவில்லை.

“ஏனென்றால், என்னால் முடியும். நான் நினைத்ததைச் செய்யமுடியும். அது மட்டுமில்லை, இதனால் என்ன கெட்டுப் போயிற்று?”

 

“அந்த வீட்டை எனக்குப் பிடிக்குமென்று நான் சொன்னதைக் கேட்டுத்தானே அப்படிச்செய்தாய், அதனால் நீ நினைத்ததையெல்லாம் செய்துவிடக்கூடாது. எனக்கு அக்கறையில்லாத வேறு வீடுமீது எறிய வேண்டியதுதானே?”

“சரிதான், அது உன்வீடு மாதிரி ஆகுமா?”என்றான், வேசிமகன், ஒருபோதும் கழற்றவே கழற்றாத ஒரு கறுப்புமுழுநீளக் காற்சட்டையும் `கார்னல்` என எழுத்துக்கள் தெரிகிற வெளிறிய ஆரஞ்சுநிற டி-சர்ட்டும் அணிந்திருந்தான். அந்தக் கார்னல் டி-சர்ட்டைக் கழற்றித் தலையில் கட்டிக்கொண்டான். அது அவனுக்கு அழகாயிருந்ததா அல்லது அசிங்கமாயிருந்ததாவென்று எனக்குத் தெரியவில்லை. அவன் ஒரு ஆண்போலவும் தெரியவில்லை; பெண் போலவும் தெரியவில்லை. அவன் அப்படியே திரும்பி ஸ்போவை நேருக்கு நேராகப் பார்த்தவாறு பின்பக்கநடையாக நடக்கத் தொடங்கினான். அவன் எப்போதுமே, சண்டையிடுகிற எல்லோரையுமே நேருக்குநேராக, அப்படித்தான், பார்ப்பான். அவன் ஸ்டினாவைத் தவிர எங்கள் எல்லோரையும் அடித்தான்.

“அது மட்டுமல்ல, புடாபெஸ்ட் என்ன, கழிப்பறையா? யார் வேண்டுமானாலும் உள்ளே போக, வெளியே வரவென்று, நீ இங்கு வசிக்கவே முடியாது.”

“புடாபெஸ்டிலிருந்து ஒருஆளைக் கல்யாணம் செய்துகொள்வேன், அவன் என்னைச் சொர்க்கத்திலிருந்து, சொர்க்கவாசல், பாம்பெகி, எல்லாவற்றிலிருந்தும் கூட்டிக்கொண்டு போய்விடுவான்” என்றாள், ஸ்போ.

“ஹஹ்ஹா, இந்த ஓட்டைப்பல்லோடு உன்னை ஒருவன் கல்யாணம் செய்வான் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நானேகூட உன்னைக் கலியாணம் செய்யமாட்டேன்” என்று, அவள் தோளுக்கு மேலாக எம்பிக்கொண்டு கடவுளறிவார் கத்தினான்.

அவன், சிப்போ, ஸ்டினா மூவரும் எங்களுக்கு முன் வேகமாக நடக்கத் தொடங்கினார்கள். நான் கடவுளறிவாரின் காற்சட்டையைப் பார்த்தேன். பின்பக்கம் கிழிசலாகி, அழுக்கடைந்து, பிரிந்து கிடந்த வெள்ளை நூல்களின் நடுவே விசித்திரமான விழிகளைப்போல அவனது கறுத்தபுட்டங்கள் துருத்தியிருந்தன.

“மரமண்டை, நான் உன்னிடம் பேசவில்லை” ஸ்போ, கடவுளறிவாரிடம் கத்தினாள். “அது மட்டும் இல்லடா, என் பல் திரும்பவும் வளரும். நான் இன்னும் அழகாக ஆகிவிடுவேன் என்று அம்மா சொன்னாள்.”

கடவுளறிவாருக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவன் கைகளை விரித்து, `அடேயப்பா, அப்படி ஆகிவிட்டாலும்` என்றவாறு ஒரு வலிச்சம் காட்டினான். எங்கள் எல்லோரைவிடவும், சொர்க்கத்திலுள்ள குழந்தைகள் எல்லோரையும் விட, ஸ்போதான் அழகு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது எங்களுக்குத் தெரியாத மாதிரி அவள் பேசிக்கொண்டே போவதை நிறுத்தாதபோது அவளோடு நாங்கள் விளையாட மறுப்பதுண்டு.

“சரி, இதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை. நான், நானாகவே ஊரைவிட்டு, ஏன் நாட்டை விட்டே போகப் போகிறேன். நிறையச் சம்பாதித்துத் திரும்பவந்து இதே புடாபெஸ்டில் அல்லது லாஸ்ஏஞ்செல்ஸில், ஏன், பாரீஸில்கூட ஒருவீடு வாங்குவேன்” என்றான், வேசிமகன்.

“பணம் சம்பாதிக்கவேண்டுமெனால், படிக்க வேண்டுமென்று, நாம் பள்ளிக்கூடத்துக்குப் போனகாலத்தில், எங்க வாத்தியார், திரு. கோனா சார் சொன்னார்’’ வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள் சிப்போ, கோனா என்னவோ அவள் அப்பா மாதிரி, அவர் என்னமோ ஒரு தனிப்பட்ட முக்கியம் மாதிரி, அவள் வயிற்றுக்குள்ளிருப்பதே அவர்தான் என்கிற மாதிரி, அப்படியொரு பெருமையோடு திரு. கோனாவின் பெயரை உச்சரித்தாள்.

“நாம் பள்ளிக்கூடம் போகாதபோது, நீ எப்படி அப்படிச் செய்யமுடியும்?”என்றாள். சிப்போ.

“எனக்குப் பணம் சம்பாதிக்கப் பள்ளிக்கூடம் தேவையில்லை. நீ எந்த பைபிளில் அதைப் படித்தாய்?” சிப்போவின் மூக்கைக் கடித்துவிடுவது போல் அவள் முகத்தருகே போய்க் கூச்சலிட்டான் வேசிமகன். வயிற்றைத் தடவிக்கொண்டே, சிப்போ மீதியிருந்த கொய்யாவை அமைதியாகத் தின்றுமுடித்து எங்களை விட்டு வேகமாக நடந்தாள்.

“போஸ்டாலினா அத்தையோடு நான் அமெரிக்காவில் போய் இருக்கப் போகிறேன். அதற்கு ரொம்பநாள் ஒன்றும் ஆகாது, வேண்டுமானால் பாருங்களேன்.” எல்லோருக்கும் கேட்கிறமாதிரியில் நான்சத்தம் போட்டுச்சொன்னேன். நான் ஒரு புதுக் கொய்யாவைக் கடிக்கத் தொடங்கினேன். மூன்றேகடியில் அதைமுடித்துவிட்டேன். அது, அப்படியொருஇனிப்பு. அதன் விதைகளைக் கூடக் கடித்து அரைத்துத் தின்ன வேண்டுமென நான் கவலைப்படவில்லை.

வேசிமகன் சலித்துப் போயிருக்கவேண்டும். அவன், “அமெரிக்கா ரொம்பத்தூரம்’’ என்றான். “வானத்தில் போகுமளவுக்குத் தூரமான எங்கும் நான் போகமாட்டேன். அது வழியிலேயே நின்றுபோனால், திரும்பிவர முடியவில்லையென்றால், நீங்கள் என்ன ஆவீர்கள்? நான் தென்னாப்பிரிக்கா அல்லது போஸ்ட்வானாவுக்குப் போவேன். நிலைமை மோசமானால், யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சாலை வழியாகவே திரும்பிவந்து விடுவேன். எங்கே வேண்டுமானாலும் போகலாம், ஆனால், அது எளிதில் திரும்பிவரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.”

நான் வலதுபக்கமாகத் திரும்பினேன். என்னுடைய அமெரிக்காவைப் பழித்துப் பேசிய வேசிமகனைக் கடித்துவிடலாமா என்று யோசித்தேன்.

வேசிமகனை மீண்டும் பார்த்தேன், அவனுக்கு என்ன பதில் சொல்லலாமென்று யோசித்தேன். ஒரு கொய்யா விதை ஈறுக்கும் கடைசிப்பல்லுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டது. அதை நாக்கால் தடவி எடுக்கப் பார்த்தேன். கடைசியில் ஒருவிரலை விட்டுத் தோண்டியெடுத்தேன். அது காதுக்குறும்பி போல ருசித்தது.

வேசிமகனோடு சேர்ந்துகொண்டு, சிப்போ, “அமெரிக்கா ரொம்பத்தூரம்” என்றாள், வயிற்றைத் தடவிக்கொண்டே. எங்களுக்காகச் சிறிது நின்றாள். “நீ விமானத்திலிருக்கும் போது அதற்கு ஏதாவது ஆகிவிட்டால்? தீவிரவாதிகள் வேறு?” என்றாள்.

சப்பை முகத்துக் காரி, சாக்ஸர் பந்து வயிற்றுச் சிப்போ, அந்த வேசிமகனைச் சமாதானப்படுத்தவே அப்படிப்பேசினாள். அவன் ஏற்கெனவே அவளிடம் கூச்சலிட்டான், இல்லையா? நான் அவளை முறைத்துப் பார்த்தேன். அப்போதும் என் வாய் அரைத்துக்கொண்டே இருந்தது.

“அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நான் போகத்தான் போகிறேன்” என்று சொல்லிவிட்டு, கடவுளறிவாரையும் ஸ்டினாவையும் பிடித்துவிட வேகமாக நடக்கத் தொடங்கினேன். சிப்போவும் வேசிமகனும் சேர்ந்து என்னை மடக்கினால் பேச்சு எங்கு போய் முடியுமென்று எனக்குத் தெரியும்.

“சரி,சரி, போ, அமெரிக்காவுக்குப் போய் மருத்துவமனையில் சேர்ந்து கழிப்பறைகளைக் கழுவு. அங்கே உள்ள கதை எல்லாம் எங்களுக்குத் தெரியாதென்று நினைத்தாயா?” வேசிமகன் என் முதுகுக்குப் பின்னால் கத்தினான். நான் எதுவும் பேசாமல் நடந்துகொண்டேயிருந்தேன்.

என்னுடைய அமெரிக்காபற்றிப் பேசியதற்காக வலதுபக்கம் திரும்பி வேசிமகனை அடித்துவிடலாமா என நினைத்தேன். அவனை அறைந்து, அந்தப் பெரியமண்டையில் குத்தி, அவன் வாயிலேயே என் மணிக்கட்டால் இடித்துப் பல்லைத் தட்டவேண்டும். அவன் தின்று முடித்த கொய்யா முழுவதையும் வாந்தியெடுக்கும்படி அவன் வயிற்றிலேயே குத்தவேண்டும். அவனைக் கீழேதள்ளி, முதுகில் என்கால் முட்டியைவைத்து இறுக்கி, இரண்டு கைகளையும் பின்பக்கமாக வளைத்துத் தலையைப்பிடித்து இழுத்து, அவனாகவே “என்னைவிட்டுவிடு, விட்டுவிடு” எனக் கதறும்படி அடிக்கவேண்டும். ஆனாலும் நான் வாயை மூடிக்கொண்டு நடந்தேன். எனக்குத் தெரியும், அவனுக்குப் பொறாமை. அமெரிக்காவில் அவனுக்கு யாருமே இல்லை. அத்தை போஸ்டாலினா அவனுக்கு அத்தையில்லை. ஏனென்றால், அவன் வேசிமகன். நான் `கண்மணி`.

000

நாங்கள் சொர்க்கத்துக்குத் திரும்பும்போது கொய்யாக்களெல்லாம் தீர்ந்துவிட்டன. எங்கள் வயிறுகள் நிறைந்து உப்பி, நாங்கள் மெல்லத் தவழாக்குறையாக ஊர்ந்துகொண்டிருந்தோம். இரவுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு எலும்பம்மாவிடம் கதை கேட்டுவிட்டுத் தூங்க வேண்டியதுதான். நாங்கள் புதர்மறைவில் மலம்கழிப்பதற்காக நின்றோம். நன்கு இருட்டும் முன்பே அதைச் செய்துவிடுவது நல்லது. இல்லையென்றால், உங்களுக்குத் துணைக்கு யாரும் வரமாட்டார்கள். நீங்கள் தனிமையில் இடுகாட்டுப்பாதையில் நடந்துவரவேண்டும். அங்கே நீங்கள் பேயைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

எல்லோரும் இடம் பிடித்து விட்டோம். நான் ஒரு பாறையின் பின்னால் குத்துக்காலிட்டேன். இந்தக் கொய்யாக்களில் மோசமான விஷயம் இதுதான். நீங்கள் அதிகமாகச் சாப்பிடும்போது விதைகள் எல்லாம் சேர்ந்து மலச்சிக்கலை ஏற்படுத்தும். மலங்கழிக்கும்போது, ஒரு கிராமத்தையே பெற்றுப் போடுவது போல் ரொம்ப ரொம்ப வலிக்கும். நிமிடம் நிமிடமாக நேரம் கடந்துகொண்டிருந்தது. “நான் முடித்துவிட்டேன். எல்லோரும் கிளம்புங்கள்” என்று யாரும் கத்தவில்லை.

அப்படியாக எல்லோரும் வெவ்வேறு இடத்தில் குத்துக்காலிட்டிருக்கும்போது, நான் என் பின்பக்கத்தில் கடைசியாக ஒட்டிக்கொண்டிருந்ததை வீழ்த்திவிடத் தொடையைத் தட்டிய நேரத்தில். யாரோ கத்தும் குரல் கேட்டது. கொய்யாவிதை குதத்தில் சிக்கியதால் எழும் சப்தம்போல அந்தக்குரல் இல்லை. அது, “வா, வா, வந்துபாரு.’’ என்றது. நான் கழிப்பதை நிறுத்திவிட்டு, உள்ளாடையை இழுத்து மேலேற்றி என் பாறை மறைவிலிருந்து வெளியேவந்தேன். அங்கே குத்துக்காலிட்டுக் கிசுகிசுக்குரலில் கிறீச்சிட்டது, கடவுளறிவார்தான். அவன் அடர்ந்த மரங்களுக்குள் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தான். அங்கே மரமொன்றிலிருந்து உயரமான ஏதோ ஒன்று தொங்கி அசைந்து கொண்டிருந்தது.

“அது என்னது?” யாரோ கிசுகிசுத்தார்கள். அது யாரென்று எனக்குத் தெரியவில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அது என்னவென்று எங்கள் எல்லோருக்கும் புரிந்தது. ஒரு பெண் பச்சைக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறாள். சூரிய வெளிச்சம் இலைகளை ஊடுருவி எல்லாவற்றையும் ஒரு வினோதமான நிறத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணுக்குள் கனலும் நெருப்புத்துண்டுகள் இருப்பதுபோல அவளின் மெல்லிய தோல் போர்த்த உடல் மின்னிக் கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் ஒடுங்கிய கைகள் இரு பக்கங்களிலுமாகத் தொங்கிக்கிடந்தன. அவளை யாரோ எதுவோ பாரமாக இழுப்பதுபோல அவள் கால்களும் கைகளும் தரையைப் பார்க்கத் தொங்கின. காற்றில் தொங்கும் ஒரு நேர்கோடு போல அது இருந்தது. அவள் வாய் பிளந்து, கண்கள் பளீர் வெள்ளையாகப் பயமுறுத்தியது. அவள் ஒரு மஞ்சள்நிற ஆடை அணிந்திருந்தாள். புற்கள் அவளது காலணியின் முனைகளைத் தொட்டு அசைந்து கொண்டிருந்தன.

நான் பயந்து விட்டேன். பிதுங்கிய வெள்ளைக் கண்களின் ஓரமாக அவள் என்னையே பார்ப்பது போலிருந்தது.

“ஓடி விடலாம்” என்றாள், ஸ்டினா. உள்ளூர் விளையாட்டுக்குப் பின் அவள் பேசிய முதல் வார்த்தை அதுதான். ஸ்டினா பேசினாளென்றால், அது முக்கியமானது. அதனால், நானும் ஓடத் தயாரானேன்.

“கோழைகளா! அவளே தூக்குப் போட்டுத் தொங்கி, இப்போது செத்துப் போனது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்ற வேசிமகன் ஒரு கல்லையெடுத்து எறிந்தான். அது சரியாக அவளது தொடை மீது பட்டது. ஏதோ ஒன்று நடக்கப்போவதாக நான் பயந்துகொண்டிருந்தேன். ஆனால் அவள் அசையவே இல்லை.

“பாரு, அவள் செத்துப்போனதாக நான் சொன்னேனில்லையா?”வேசிமகன் சொன்னான். அவன்தான் தலைவன் என்பதை நினைவுபடுத்துவதாக அவன்குரல் இருந்தது.

“கடவுள் இதற்காக உன்னைத் தண்டிப்பார்’’ என்றான் கடவுளறிவார்.

வேசிமகன் இன்னொரு கல்லை எறிந்தான். அது அவள் கால்களை `க்கூ` என்ற சத்தத்துடன் தாக்கியது. ஆனாலும் அவள் அசையவில்லை. நான் அதிகம் பயந்துவிட்டேன். அவளுடைய பிதுங்கிய வெள்ளைவிழிகளின் ஓரங்கள் என்னையே பார்ப்பது போலிருந்தது. எனக்குத் தெரியாத ஏதோ ஒன்றை நான் செய்வேனென அது காத்திருப்பதுபோலத் தோன்றியது.

“கடவுள் இங்கே எங்கும் வசிக்கவில்லை, முட்டாளே”’ என்றான், வேசிமகன். அவன் மீண்டும் ஒரு கல்லையெடுத்து எறிந்தான். அது அவள் மஞ்சள் ஆடையை உரசிச்சென்றது. அந்தக் குறி தவறியது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

“நான் போக வேண்டும், அம்மாவிடம் சொல்ல வேண்டும்.” என்றாள், ஸ்போ. அவள் அழுதுவிடுவாள் போலத் தோன்றியது.

ஸ்டினா கிளம்ப ஆயத்தமானாள். அப்படியே ஸ்போவும், கடவுளறிவாரும். நான் கடவுளறிவாரைப் பின் தொடர்ந்தேன். வேசிமகன் சிறிது நின்றான். ஆனால் நான் அவனை ஓரக்கண்ணால் என் தோளுக்கு மேலாகப் பார்த்தபோது, எனக்கு நேர் பின்னால் நின்றதைக் கண்டேன். சொர்க்கத்தின் பிரதமர்போல அவன் காட்டிக்கொள்ள விரும்பினாலும் இறந்த ஒரு பெண்ணுடன் அவனால் புதர்க்காட்டுக்குள் இருக்கமுடியாதென்று எனக்குத் தெரியும். நாங்கள் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம். வேசிமகன் திடீரென்று எங்கள் முன்னால் குதித்தான்.

“கொஞ்சம் பொறுங்கள், யாருக்கு ரொட்டி வேண்டும்?”என்றான் அவன். கார்னல் டி-சர்ட்டைத் தலையில் இறுக்கிக் கொண்டான். வேசிமகனின் மார்புக்குறிக்கு நேர்கீழாக இருந்த காயத்தைப் பார்த்தேன். அது கொய்யாவின் உட்புறத்து இளஞ்சிவப்பு போலவே இருந்தது.

“எங்கே? எப்படி?”என்றேன், நான்.

“கேட்டுக்கொள், அந்தப் பெண்ணின் காலணிகள் புதிதாக இருந்ததை நீ கவனித்தாயா? அதைமட்டும் நாம் எடுத்துவிட்டால், அவற்றை விற்று ஒன்றோ, ஒருவேளை ஒன்றரையோகூட ரொட்டி வாங்கலாம். என்ன சொல்கிறாய்?”

நாங்கள் எல்லோரும் அப்படியே திரும்பினோம். வேசிமகனைத் தொடர்ந்து புதருக்குள் மீண்டும் புகுந்தோம். நாங்கள் வேகமாக ஓடினோம், ஓடினோம், சிரிப்பு, சிரிப்புதான், எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

0

நன்றி : http://bostonreview.net/bulawayo-hitting-budapest

ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீர்..- கவிதைக்காரன் டைரி

imagesஓடும் நதியிலிருந்து ஒரு கை நீர்..

*
என்னை நோக்கி மரணம் வந்துக் கொண்டிருக்கிறது
நீயென் கைகளை இறுகப் பற்றிக்கொள்

இந்த உலகை விட்டு நீங்கும்போது
உன் கைகளில் என்னைக் கொஞ்சம்
மிச்சம் வைத்துவிட்டுப் போக விரும்புகிறேன்

உன்னிடமிருந்து தான் அந்த விடைபெறல்
நிகழ வேண்டும்

இதுவரை நாம் பேசித் தீர்த்த இரவுகள்
மொத்தத்தையும் நீயுன் பார்வையில்
தைத்து வைத்திருப்பதை கண்ணுற்று விலகுதல்
ப்ரியமென்கிறேன்
துணை செய்

ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி
வார்ப்பதைப் போல்
என்னைத் தூக்கிக் கொடு
நான் விரும்பும் என் மரணத்திடம்

அப்போது
உன் கைகளில் சொட்டும் நதியில்
கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுப் போகிறேன்

*******

நீண்ட பாதையின் முடிவில் உயரும் சுவர்கள் 

*
முற்றுப் புள்ளியிலிருந்து மீளும் பேனா
எழுதி முடித்த வாக்கியத்தை நோக்கி
வீசுகிறது தனது பெருமூச்சை

தத்துவமொன்றின் சாடலாக
கட்டுடைந்து சிதறும் கோட்பாட்டுக் கனவாக
சிக்கலுற்ற வேர் நெடுக வழியும் நீர்த்துளியாக

பற்றுதலுக்கு தயங்கும் மௌனத் தவிப்பெனவும்
உள்ளூரக் கிளர்த்தும் பன்முகச் சிலிர்ப்பெனவும்
நீண்ட பாதையின் முடிவில் உயரும் சுவரெனவும்

புள்ளியிலிருந்து பெயர்ந்து
மறுபுள்ளி நோக்கித் தொடங்கும் பயணத்தின்
ரகசியங்களோடு திணறும் மொழியின் தருணங்கள்
கண்ணாடிப் பேழையாகி வீங்குகிறது
பெருமூச்சின் உயிர்ப்பை மையமிட்டு

*******

வழித்துணைப் பூவின் சிவந்த இருள்..

*
மையிருட்டு பூசிக் கிடந்த
இரவில்
பாதையைக் காணோம்

சட்டெனப் பூத்த
சிகப்பு பூவொன்று நெருங்கியது

சிகரெட் நுனியின் கங்கு சிவக்க
எங்க போகணும்
என்ற குரல் வழித்துனையாயிற்று

இருட்டு என்பது மிகக் குறைந்த ஒளி
என்றானே பாரதி

******

சாவிகளும் பூட்டுகளும் – பாண்டூ

download (1) 

பூட்டுகள்…

பூட்டியே வைக்கப்படுகின்றன!

 

காக்கும் பொறுப்பைச் சுமத்தி

கட்டியே வைக்கப்படுகின்றன!

 

சாவிகளின் உத்தரவிற்கே

வாய் திறக்க அனுமதிக்கப்படுகின்றன!

 

வாசலோடும் மூலையிலுமாய்

ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு

செருப்பென ம(மி)திக்கப்படுகின்றன!

 

ஏனோ?

சாவியின் காதுகளுக்குள்

அவைகளின் ஈனக்குரல்

நுழைவதேயில்லை!

 

இ(அ)ற்றுப்போன சாவிக்காய்

உடன்கட்டையும் ஏற்றப்படுகின்றன!

 

சாவிகளை நம்பியே

காலம் தள்ளக்

கட்டாயப் படுத்தப்படுகின்றன!

 

சாவிகளின் தவறுகளுக்காய்

எப்போதும் தண்டிக்கப்படுகின்றன…

பூட்டுக்கள் மட்டுமே!!

 

ரியாத்தின் பெண்களும் பெண்களின் ரியாத்தும் – சவூதிய எழுத்தாளர் ராஜா அல் சானியா ஓர் அறிமுகம் எச்.பீர்முஹம்மது

Rajaa Alsanea

 

ஆண்கள் மட்டுமே சமூக இயங்கியலில் சுதந்திரமாக உலவ முடிந்த சவூதி அரேபியாவில் பெண்கள் இயங்கா நிலை அற்றவர்கள் தான். இஸ்லாமிய அடிப்படைகளை மேற்கோள் காட்டி அவர்களுக்கான சுதந்திர உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இரத்தபந்த உறவின் துணையில்லாமல் அவள் வெளியே செல்ல முடியாது. சமூக உறவு என்பது அவளுக்கான இடத்தில் இல்லை. அது ஆண்களின் முழு உரிமையாக மட்டுமே இருக்கிறது. சவூதியின் இந்த பெண் விலக்கல் (Taboo of women)அடிப்படையிலிருந்து மாற்றாக ஒரு பெண் உருவாகிறாள். அதன் விலக்கல்களை கேள்விக்குட்படுத்துகிறாள். சவூதிய அதிகாரத்தை நோக்கி இந்த ஒடுக்கப்பட்ட பெண்ணின் பிரதிநிதி தான் ராஜா அல் சானியா.

 

பெண்கள் சார்ந்த அதீத கட்டுப்பாடுகள் வழக்கில் இருக்கும் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் சற்று தொலைவில் ஒரு கிராமத்தில் 1981 ல் பிறந்தார் ராஜா அல் சானியா. அவரின் குடும்பம் முழுக்கவும் மருத்துவ பின்னணியை சார்ந்தது. பள்ளிப்படிப்பை தன் கிராமத்தில் முடித்த சானியா ரியாத்தின் கிங் பஹத் பல்கலைகழகத்தில் 2005 ல் பல் மருத்துவ பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மேற்படிப்பை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முடித்தார். இதனிடையே சிறிது காலம் சவூதிய அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். மேலும் இளமைகாலத்திலேயே இலக்கிய ஆர்வமும் பிரக்ஞையும் நிரம்பிய சானியா அதனை முன்னோக்கி நகர்த்தினார். கல்லூரி காலத்தின் ஆரம்பகட்டத்தில் பல கதைகளை எழுதினார். அவற்றில் சில அரபு இதழ்களில் பிரசுரமாயின. சானியாவின் மாணவர் பருவம் சவூதியின் பெண் கட்டுப்பாடு சார்ந்து மிகவும் சலனமுற்றது. ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், அது பெண்கள் விஷயத்தில் கடத்தப்படுவதையும் கூர்ந்து அவதானித்தார். அது கொஞ்சம் கொஞ்சமாக அவரின் படைப்பு மனத்தில் ஆட்கொண்டது. இதனின் தொடர்ச்சியில் 2005 ல் Banat Al -Riyadh என்ற நாவலை எழுதினார். அது அரபு மொழியில் லெபனானிலிருந்து அதே காலகட்டத்தில் வெளிவந்தது. மேலும் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2007 ல் Girls of Riyadh என்ற பெயரில் வெளிவந்தது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் இது கவனம் பெற்றது. இதன் கதைவெளி சார்ந்த பிரதிபலிப்புகள் சவூதி அரேபியாவின் பொதுப்புத்தியில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது சவூதி பெண்களை அவமதிப்பதாக அங்குள்ள பழமைவாதிகள் குரல் உயர்த்தினர். ஆனாலும் உள்ளார்ந்தோ அல்லது வெளிப்படையாகவோ இது சவூதி அரேபிய பெண்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கள் நீண்டநாள் ஏக்கம் சானியா வடிவில் வந்திருப்பதாக அங்குள்ள பெண்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர். தொடர்ச்சியில் அங்குள்ள மத குருமார்கள் இந்த நாவலுக்காக சானியா தண்டிக்கப்பட வேண்டும் என்றனர். ஆனால் சானியா அமெரிக்காவில் வசிப்பதால் இது சாத்தியமில்லை. மேற்கண்ட எல்லா எதிர்ப்புகளையும் மீறி சானியா தன் எழுத்தியக்கத்தை தொடர்ந்து வருகிறார்.

 

Girls of Riyadh என்ற சானியாவின் நாவல் பெரும்பாலும் கல்விச்சூழல் மற்றும் பெண்கள் வாழ்வியக்கம் சார்ந்த கதை வெளியோடு நகர்கிறது. சவூதியின் இயல்பான பெண்கள் சார்ந்த வாழ்க்கை முறையில் இருந்து இது வித்தியாசப்படுகிறது. இந்த நாவலின் கதையம்சம் சவூதியின் பல்கலைகழகத்தில் படிக்கும் நான்கு மாணவிகளை பற்றியது. அவர்களின் வாழ்வியல் இயக்கத்தோடு அது இயைகிறது. சதீம், கம்ரா,மசால், லமீஸ் ஆகியோரே அந்த நால்வர். இதில் மசால் சவூதி அமெரிக்கன். மசாலின் தாய் ஓர் அமெரிக்கர். இதில் கதைசொல்லி அடையாளமற்றவராக இருக்கிறார். நண்பர்கள் மீதான கொடுங்கோன்மையை முடிவுக்கு கொண்டுவருவதே அவரின் நோக்கம். அந்த நான்கு நண்பர்களும் அவர்களுக்குள் பல வேறுபாடுகள் இருந்த போதும் ஒன்றாக பின்னிப்பிணைந்தவர்கள். இதில் லமீஸ் தவிர மற்ற அனைவரின் வாழ்க்கையும் தோல்வியில் முடிந்தது. இதில் லமீஸ் அந்த குழுவின் வரும் முன் கணிப்பாளர். நண்பர்களின் எதிர்காலம் பற்றியும், அவர்களின் உணர்வுகள் பற்றிய சரியான கணிப்பும் லமீஸிடம் இருந்தது. மேலும் லமீஸ் மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு தன் தோழியின் சகோதரரும், உடன் மாணவருமான ஒருவரை காதலிக்கிறார். அவர்கள் இருவருக்கிடையேயான உறவுமுறை ஒருகட்டத்தில் முறிந்து போகிறது. அடிப்படையில் லமீஸ் தயையான மனம் படைத்தவர். தன் தோழிகளுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குபவர். அவசர காலங்களில் அவர்களுக்கு உதவுபவர். மேலும் தன் சக தோழியான கம்ராவிற்கு உதவுகிறார். அவருக்கு இணையதளம், இமெயில் , அரட்டை போன்றவற்றைப் பற்றி கற்றுக்கொடுக்கிறார்.இதில் கம்ராவின் கதை துன்பியலானது. அவருக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பொதுவாக சவூதியில் ஆண் தனக்கு பிடித்தமான பெண்ணை பார்த்தவுடன் அவனுக்கு விருப்பமாகும் பட்சத்தில் அவன் திருமணத்திற்கு சம்மதிக்கிறான். ஆனால் அந்த தருணத்தில் இருவருக்குமிடையே கருத்து பரிமாற்றத்திற்கு அனுமதியில்லை. பார்வையிலே சம்மதிக்க வேண்டும். அதன் படியே கம்ரா ராஷித் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். திருமணத்திற்கு பின் ராஷித் தன் மனைவி பர்தா அணிவதை நிறுத்துமாறு கூறுகிறார். இதன் காரணமாக, தன் கணவனின் இதயத்தை வென்றெடுப்பதற்காக கம்ரா பர்தா அணிவதை நிறுத்துகிறாள். பின்னர் தான் அருவருப்பான தோற்றத்தை உடையவளாக இருப்பதை பிரக்ஞைபூர்வமாக உணர்கிறாள் கம்ரா. பின்னர் தன் கணவரிடம் இதை விளக்கும் போது அவர் மீண்டும் அதை அணிய சம்மதிக்கிறாள். பின்னர் கம்ராவின் கணவன் மேற்படிப்பிற்காக அமெரிக்க செல்கிறார். அதன் பின் அவரின் நடவடிக்கைகள் மாறுகின்றன. அவர் ஜப்பானிய அமெரிக்க பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொள்ள தொடங்குகிறார். இதை கண்டிக்கிறாள் கம்ரா. குறிப்பிட்ட அந்த பெண்ணோடான தொடர்பை நிறுத்த சொல்கிறாள் கம்ரா. அதனையும் மீறி அந்த உறவை தொடர்கிறாள் ராஷித். இதற்காக தன் கணவனை கொதியுணர்வோடு பழிவாங்கும் விதமாக கம்ரா கருத்தடை மாத்திரைகளை உட்கொணர்வதை நிறுத்துகிறாள். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் கருவுறுகிறாள் கம்ரா. இதனால் கோபமுற்ற கணவன் அவளின் கன்னத்தில் அறைகிறான். பின்னர் அவளை சவூதி அரேபியாவிற்கே திருப்பி அனுப்புகிறான். அதன் பின்னர் விவாகரத்து கடிதம் அவனிடமிருந்து வருகிறது. பின்னர் விவாகரத்து அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக அவள் தனிமையில் விடப்படுகிறாள். கர்ப்பம் காரணமாக வெளியே செல்வதற்கு யோசிக்கிறாள். இதனால் அவளின் வாழ்க்கை வீட்டிலே முடக்கப்படுகிறது. பின்னர் அவளின் தோழிகள் தான் அவ்வப்போது அவள் வெளியே செல்வதற்கு உதவி செய்கின்றனர்.

 

நாவல் கதை வெளியின் மற்றொரு பெண்ணான சதீமின் கதை மிகவும் சோகமானது. இளம்வயதிலேயே தாயை இழந்து விடுகிறாள் சதீம். அதனால் அவளின் தந்தையால் வளர்க்கப்பட்டாள். அவளின் திருமண வாழ்க்கை முழுவதும் மிகுந்த துயரம் மிக்க ஒன்றாக மாறுகிறது. அவளுக்கு முதலில் வலித் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. நிச்சயிக்கப்பட்டதற்கும் திருமண ஒப்பந்தத்திற்கும் இடைப்பட்ட கட்டத்தில் சதீம் அவருடன் உடலுறவு கொள்கிறாள். அதன் பின்னர் அவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடைபெறுகிறது. ஆனால் வலித் திருமணத்திற்கு பிறகு முன் உறவால் ஏற்பட்ட மனசஞ்சலம் காரணமாக திருமணம் முடிந்த உடன் காணாமல் போகிறார். ஒரு மாதம் மட்டுமே அவர்களுக்கிடையே உறவு முறை நீடிக்கிறது. பின்னர் சில காலம் கழித்து வலித் விவாகரத்து கடிதத்தை அனுப்புகிறார். இதனால் சதீம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறது. சில மாதங்களுக்கு பிறகு இயல்புநிலைக்கு திரும்பிய சதீம் பிரஸ் என்பவரை லண்டனில் சந்திக்கிறார். பின்னர் அவருடன் காதல் ஏற்படுகிறது. ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதனால் தன் முதல் மனைவியுடன் இவரை இரண்டாம் திருமணம் செய்ய விரும்புகிறார். இதனை விரும்பாத சதீம் திருமணம் பற்றிய விருப்பத்தை விட்டு விட்டு திருமணம் சார்ந்த நிறுவனத்தை தொடங்குகிறார். அதற்கு அவரின் நண்பர்கள் உதவி செய்கின்றனர். பின்னர் சிறிது காலம் கழித்து தன் உறவுக்காரரான தாரிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சதீம்.

மசாலின் வாழ்க்கை மேற்கண்ட மூவரை விட சற்று மேம்பட்டதாக இருந்தது. அவளுக்கு மற்ற எல்லோரையும் விட சுதந்திரமும், சகவாசமும் இருந்தது. மசால் அமெரிக்க தாய்க்கும், சவூதிய தந்தைக்கும் பிறந்தவர். ஆக தூய சவூதிய வாசி அல்ல. ஆங்கிலம் கலந்த அரபி பேசுபவர்.மசால் பைசல் என்பவரை காதலிக்கிறார். மால்களில் சந்திக்க இருவரும் விரும்புகின்றனர். ஆனால் சவூதிய சட்டப்படி அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாது. பெண்களுக்கான மால்களில் சந்திக்க அனுமதியில்லை. பின்னர் காதலர் தினத்தில் சந்திக்க விரும்புகின்றனர். ஆனால் காதலர் தினம் சவூதி அரேபியாவில் கொண்டாட அனுமதி இல்லை. இதன் காரணமாக சானித்தியமற்ற உறவாகவே அவர்களின் காதல் இருக்கிறது. திருமணம் என்ற நிலையை அது அடையவில்லை. இதன்காரணமாக மன முறிவுற்ற மசால் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிற்கு செல்கிறார். அங்கு அமெரிக்கர் ஒருவரை காதலிக்கிறார். ஆனாலும் அதுவும் தோல்வியில் முடிகிறது. இதனால் மீண்டும் சவூதி அரேபியாவிற்கே திரும்பி தன் தந்தையிடம் துபாய்க்கு செல்ல பணிக்கிறாள் மசால். தன் மகளின் விருப்பத்தை ஏற்ற அவளின் தந்தை துபாய்க்கு செல்கிறாள். அங்கு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்த மசால் பின்னர் அங்குள்ள ஒருவரை காதலித்து திருமணம் செய்கிறார். அவளின் வாழ்க்கையோடு சானியாவின் இந்த நாவல் முழுமையடைகிறது.

சானியாவின் ரியாத்தின் சிறுமிகள் என்ற இந்த நாவல் சவூதி அரேபிய பெண்கள் குறித்த எதார்த்த நிலைமையை பிரதிபலிக்கிறது. அவர்களின் வாழ்க்கை நகர்வுகள், நெழிவு சுழிவுகள், எண்ணங்கள், மனச்சார்பு, துக்கம், துயரம், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், தவிப்புகள் போன்ற அனைத்து வித உணர்வுகளையும் இந்த நாவல் சித்திரப்படுத்துகிறது. அதன் காட்சி வெளி முழுவதும் கல்வி வாழ்க்கையில் சவூதிய பெண்கள் எவ்விதமாக துயரார்ந்து கடந்து போகின்றனர் என்பதாக விரிகிறது. சவூதியின் மன்னர் பரம்பரை ஆட்சியில் ஒவ்வொரு மன்னரும் ஒவ்வொரு விதமாக இந்த விஷயத்தை கையாளுகின்றனர். சவூதி பெண்கள் குறித்த விஷயம் உலகம் முழுவதும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எல்லோருமே பெண் சார்ந்த விலக்கல் முறையை விமர்சிக்கின்றனர். சமீபத்தில் சவூதியின் இளஞ்கவிஞரான கம்ஸா ஹஸ்கர் “வூதிய பெண்களை இறைவன் நரகத்தில் தள்ளுவதில்லை. காரணம் ஒரு குற்றத்திற்காக இறைவன் ஒருவரை இருமுறை தண்டிப்பதில்லை”என்றார். இது சவூதிய மதக்குருக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை கிளப்பி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இளம் எழுத்தாளரான சானியா இந்த நாவலின் மூலம் மத்திய கிழக்கு மற்றும் மேற்கின் இலக்கிய உலகின் கவனத்திற்கு ஆட்பட்டுவிட்டார். இதன் தொடர்ச்சி அவரை சவூதியின் மிகப்பெரும் பெண்ணியவாதியாக உருவாக்கக்கூடும்.

 

 

லிண்டா தாமஸ் – கார்த்திக் பாலசுப்ரமணியன்

images (1)

” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” – இதுதான் லிண்டா என்று அழைக்கப்படும் லிண்டா தாமஸ் அலுவலக விஷயம் தாண்டி என்னிடம் கேட்ட முதல் கேள்வி. பேசிய முதல் விஷயம். பெரும்பான்மையான நாட்கள் அவர் வீட்டிலிருந்தே வேலை செய்வார். 17 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனம் அவருக்கு இந்தச் சலுகை கூட தராமல் போனால்தான் ஆச்சர்யம். அந்த நிறுவனத்தில் தனது 25 ஆம் வயதில் ஒரு கால் அட்டண்டராக சேர்ந்தவர். படிப்படியாக முன்னேறி, இன்று அவர்தம் 42ஆம் வயதில் அந்நிறுவனத்தில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தார்.

 

தோள்களைத் தாண்டி முதுகில் படரும் செம்பழுப்பு நிற முடிக்கற்றைகள்; கொஞ்சமே கொஞ்சமாய் ஏறிய நெற்றி; கூரிய நாசி; மேக்கப்பை மீறித் தெரியும் கன்னச் சுருக்கங்கள்; ஆறடி உருவம்; குளிரைத் தாங்கும் மெரூன் நிற ஓவர்கோட். இத்தனையையும் கற்பனை செய்தாகிவிட்டதா? இதுதான் நான் லிண்டா தாமஸ். இப்படித்தான் நான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். இதுவரையில் அவரது புகைப்படத்தைக் கூட நான் பார்த்ததில்லை.

 

எடுத்துக் கொண்ட வேலையைச் செய்து முடிப்பதில் அவர் காட்டும் அக்கறைக்கும், அர்ப்பணிப்புக்கும் முன்னால் நேற்று வேலைக்குச் சேர்ந்த புதியவர்கள் கூட பக்கத்தில் நிற்க முடியாது. செய்யும் வேலையை நேசித்து, ரசித்துச் செய்பவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அவருடன் ஃபோனில் உரையாடும் பொழுதுகளில் பெரும்பாலான சமயங்களில் பின்னால் இருந்து நாய் ஒன்றின் குரைப்புச் சத்தம் கேட்டபடியே இருக்கும். எங்கள் பக்கமிருந்து வரும் சின்னச் சின்ன ‘ஹஸ்கி’ சத்தங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாத லிண்டா, அந்த நாயின் ஹை டெசிபல் குரைப்புகள் பற்றி கொஞ்சம் கூட சட்டை செய்ததில்லை.

 

ஒரு முறை அப்படி குரைத்துக் கொண்டிருந்த பொழுது, “பாவம் அவளுக்குப் பசிக்கிறது போலிருக்கிறது. என்னை மன்னித்துக் கொள். ஐந்து நிமிடத்தில் நானே திரும்ப அழைக்கிறேன்” என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். அப்போது அங்கே ‘நாஷ்வில்’லில் காலை 9. இங்கே, சென்னையில் இரவு 10:30. எனக்கு பசியில் கண்களைக் கட்டிக் கொண்டு வந்தது. எழுந்து, காஃபே சென்று எதையாவது கொரித்துவிட்டு வரலாம் என்றால் லிண்டா எப்போது திரும்ப அழைப்பார் என்று சொல்வதற்கில்லை. அவர் அழைத்து நான் இல்லாது போனால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாது.

 

நாங்கள் இங்கே செய்ய வேண்டிய வேலை குறித்து எங்களுக்கு விளக்க வேண்டியது அவரது பொறுப்பு. அவரது நிறுவனத்தில் அவரும் அவரின் கீழ் பணிபுரிபவர்களும் செய்யும் வேலையை சுலபமாக்க மென்பொருள் ஒன்றைத் தயார் செய்யும் வேலை என்னுடையது. அவர் தரும் தகவல்களை வைத்தே என் வேலையை என்னால் செய்ய முடியும். அவரிடமிருந்து அவரைத் தொந்தரவு செய்யாமல் தகவல்களைப் பெறவே நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் என் இந்திய இரவுகளை அமெரிக்கப் பகல்கள் தின்று கொண்டிருந்தன.

 

அவருடனான எனது முதல் தொலைபேசி அழைப்பை என்னால் மறக்கவே முடியாது. அவர்களது காலை 8 மணிக்கு எங்கள் இருவருக்கிடையேயான கலந்துரையாடல் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்திய நேரப்படி இரவு 9:30 மணி. நான் ஐந்து நிமிடம் முன்னதாகவே அழைப்பில் காத்துக் கொண்டிருந்தேன். மணி 9:40 ஆன போதும் அவர் வரவேயில்லை. பொதுவாக அமெரிக்கர்கள் நேரத்தை மிகச்சரியாக கடைபிடிப்பவர்கள். அதில் மாற்றம் இருப்பின் முன்னரே தெளிவாக தெரிவித்தும் விடுவார்கள். எனவே இணைப்பைத் துண்டித்துவிட்டு அவருக்கு நான் காத்திருந்தது குறித்து ஒரு மெயில் அனுப்பலாம் என்று மெயில் பெட்டியைத் திறந்தேன். இன்பாக்சில் முதல் மெயிலாக லிண்டாவின் மெயில் இருந்தது. கொஞ்சம் பெரிய மெயில். முழுக்க முழுக்க என்னைத் திட்டியும், எனது காலம் கடைபிடிக்க இயலாமை குறித்தும் ஒரு பக்கத்திற்கு நீண்டிருந்தது. அந்த மெயில் எனது மேலாளர், அவரது மேலாளர், இன்னபிற பெரிய தலைகள் என அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நண்பர்களிடம் காட்டி விசாரித்த பொழுதுதான் உண்மை புரிந்தது. அதற்கு முந்திய வாரத்திலிருந்துதான் அமெரிக்காவில் “டே லைட் சேவிங்” என்னும் பகல் வெளிச்சத்தை மிச்சப்படுத்தும் முறை முடிந்துவிட்டிருந்தது தெரிய வந்தது. அதன்படி நான் லிண்டாவை இரவு 9 மணிக்கே அழைத்து இருந்திருக்க வேண்டும். அவர் எனக்காக கால்மணி நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு நான் வராமல் போகவே அத்தனை கோபத்தையும் உள்ளடக்கி ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார்.

 

அந்த மெயிலுக்கு நான் அளித்த விளக்கங்கள் அவரை மேலும் கோபப்படுத்தவே செய்தது. முதல் கோணல், எல்லா இடங்களிலும் இடித்தது. அன்றிலிருந்து கிட்டதட்ட ஒரு மாதமாக நாங்கள் தினமும் ஒரு மணி நேரம் பேசுகிறோம். பேசவேண்டிய அலுவல் விஷயத்தைத் தவிர கூடுதலாக ஒரு வார்த்தை கூட அவர் பேசியதில்லை. நான் முன்னால் கூறியபடி ஆச்சர்யமாக அன்று தன் நாய்க்கு உணவிட்டு வந்து ஐந்தே நிமிடங்களில் திரும்ப அழைத்தார். மிகவும் பரிவுடன் ” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” என்று என்னைக் கேட்டார்.

 

அமெரிக்கர்கள் வளர்ப்பு பிராணிகளிடம் காட்டும் அன்பு பற்றி நான் அறிவேன். எனவே “பிடிக்கும்” என்ற ஒரு வார்த்தை அவரிடம் என்னைப் பற்றிய பிம்பத்தை மாற்ற உதவும் என்பதையும் நான் அறிவேன். இருந்தாலும் நான் சொன்னேன் ” இல்லை லிண்டா. எனக்கு நாய்கள் என்றால் எனக்குப் பயம் “. அவரிடமிருந்து ஒரு ஆச்சரியப் பெருமூச்சு வெளி வந்தது.

 

” உங்களுக்கு எப்படி நாய்களைப் பிடிக்காமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை ” இதில் ‘உங்களுக்கு’ என்பதை ‘உன்னைப் போன்றவர்களுக்கு’ என்ற தொனியிலேயே அர்த்தப்படுத்தினார்.

 

சக மனிதனையே பிடிக்காத இவ்வாழ்வில் அது ஒன்றுதான் குறை என்று மனதில் நினைத்துக் கொண்டாலும், ” அறுதியிட்டுக் கூற வேண்டிய காரணம் ஒன்றுமில்லை. ஆனால், அது அப்படித்தான் ” என்றேன்.

 

இதற்கு முகத்தில் அடித்தாற் போன்ற பதிலை எதிர்பார்த்தேன். ஏமாற்றமாக, அவரிமிருந்து கனிவுடனே வார்த்தைகள் வெளிவந்தன. ” நாய்களைப் போன்ற உற்ற தோழர்கள் வாழ்வில் கிடைக்க மாட்டார்கள். அவைகளைப் பார்த்து பயப்பட என்ன இருக்கிறது? என் அன்பு மகளையும், அன்பற்ற கணவனையும் பிரிந்து வாழும் எனதிந்த 8 வருட வாழ்வில் என் தனிமையை இட்டு நிரப்பியவள் இந்த டெஸ்ஸா .கோல்டன் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்தவள். மிக மிக நட்பானவள். இரண்டு நாட்கள் பழகிப் பார்த்தால் உனக்குக் கூட இவளை மிகவும் பிடித்துவிடும். இப்போது கூட என் கால்களையேச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். ”

 

இதைச் சொல்லும் பொழுது லிண்டாவின் குரலில் ஒரு குழந்தையின் குதூகலம் தொற்றிக் கொண்டது. இவர் இப்படியும் பேசுவாரா என்ற ஆச்சர்யத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை.

 

அன்றிலிருந்து லிண்டாவிடம் மிகப் பெரிய மாற்றம். அதன்பின் ‘குட் மார்னிங்’ சொல்லி, நான் என்ன சாப்பிட்டேன் என்று கேட்காமல் அவர் பேச ஆரம்பிப்பதே இல்லை. சில சமயங்களில் என்னிடம் அவர் சமையல் குறிப்பெல்லாம் கூட விசாரித்ததுண்டு. இந்தியன் மசாலாக்கள் அவருக்கு மிகவும் விருப்பம். அவரிடம் பேசியவரையில், அவர் தனியாக டெஸ்ஸாவுடன் வசித்து வருகிறார். அவரின் மகள் கரோலின் கலிபோர்னியாவில் வசிக்கிறார். அவரின் கணவர் குறித்து அவர் எந்தத் தகவல்களையும் பகிர்ந்ததில்லை. அவர்களாகப் பகிராமல் கேட்டுத் தெரிந்து கொள்வது முறையல்ல. அது அத்தனை முக்கியமுமில்லை. அவர் ஏன் முதலில் அப்படி நடந்து கொண்டார்? அவரிடம் இந்த மாற்றம் ஏற்பட என்ன காரணம் என்பதை எத்தனை யோசித்தும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கூட ஒரு வகையான முட்டாள்தனம் தானே.

 

இப்படியாக மூன்று மாதங்களில் நாங்கள் செய்து முடிக்க வேண்டிய மென்பொருள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. பின்பு, அவரிடம் கேட்டு அறிந்து கொள்வதற்குப் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. தினசரி 1 மணி நேரம் நடந்த கலந்துரையாடல், 5 நிமிட தகவல் பரிமாற்ற அழைப்பாக மாறியது. பின்னர் அதுவும் படிப்படியாகக் குறைந்து தினம் என்பதிலிருந்து வாரம் ஒரு முறை என்றாகிவிட்டது. ஆனாலும் அவ்விடைப்பட்ட காலங்களில் எங்கள் இருவருக்கிடையேயான நட்பு பலப்பட்டிருந்தது.

 

அப்படியான ஒரு நாளில் எங்கள் டீமில் இருந்த அனைவருக்கும் லிண்டாவிடம் இருந்து கீழ் கண்டவாறு மெயில் ஒன்று வந்திருந்தது.

 

அன்பு நண்பர்களே,

 

இதுதான் இந்த நிறுவன ஐ.டியிலிருந்து நான் உங்களுக்கு எழுதும் கடைசி மெயிலாக இருக்கக் கூடும். ஆம், இன்று இங்கு எனக்கு கடைசி நாள். சிலருக்கு இது முன்பே தெரிந்திருக்கக் கூடும். சிலருக்கு இது அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.

 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களின் வருங்கால வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்.

 

லிண்டா.

 

மூன்றே வரிகளில் மிகத் தெளிவாக தான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டிருந்தார். எனக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை. குறைந்தது பத்து முறையாவது திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு பேசும் போது கூட எனது திருமண ஏற்பாடுகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்த அவர், இதைப் பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லை. இது ஒன்றும் திடீரென்று எடுத்த முடிவு போலவும் தெரியவில்லை. முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று போன்றுதான் தோன்றியது. ஆனால் அவரே அறிவிக்கும் வரையில், இதுபற்றி எந்தத் தகவலோ, சிறு குறிப்போ கூட அவர் வெளியிடவில்லை. முதல் நாளில் பேசிய அவர் குரலின் கடுமை ஒரு முறை நினைவில் தோன்றி மறைந்தது.

 

இத்தனை நாட்கள் குரலில்தான் பரிவும், கனிவும், குழைவும் இருந்ததே தவிர, உள்ளத்திலிருந்து வரவில்லை போலும். என்னிடம் ஒரு வார்த்தை கூற வேண்டும் என்று கூடத் தோன்றாத அவரைப் பற்றி நான் மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறேன். தேவையில்லை.

 

எத்தனை சமாதானப்படுத்தினாலும் ‘அவர் ஏன் திடீரென்று 17 வருடமாக இருந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். அவருக்கு ஓய்வு பெறும் வயதுமில்லை. பின் ஏன்? அவரின் மகள் நலமாக இருக்கிறார் தானே? அவர் கணவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? ‘ இது போன்ற கேள்விகள் என்னில் துருத்திக் கொண்டேயிருந்தன. அவரிடமோ, அவரது நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்வதும் சாத்தியமில்லை. எனவே ‘நாஷ்வில்’லில் தங்கியிருக்கும் எங்கள் நிறுவன மேலதிகாரியிடம் கேட்டால் நிச்சயமாக ஏதேனும் பதில் கிடைக்கக் கூடும்.

 

அதுவாக அமையாத போதும், அப்படியொரு வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டேன். அலுவல் சம்பந்தமாக சில விசயங்களைப் பற்றி விசாரித்துவிட்டு, மிகவும் இயல்பாக இலக்கண பிழையற்ற ஆங்கிலத்தில் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ” பிரசாத், ஏன் மிஸஸ் லிண்டா தாமஸ் திடீரென்று அவரது நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார்? ”

 

” அவர் விலகவில்லை. விலக்கப்பட்டிருக்கிறார். ”

 

இது நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில் என்ற பொழுதும் அந்த அதிர்ச்சியை என் குரலில் வெளிப்படுத்திக் கொள்ளாத லாவகத்துடன், ” ஏன் ஏன் பிரசாத்? அவரை விலக்கும்படி என்ன நேர்ந்தது ? ” என்று கேட்டேன்.

 

” உண்மையைச் சொல்லட்டுமா? அவரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் நாம்.. இன்னும் சரியாகச் சொன்னால் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் ”

 

* * *

 

மு.கோபி சரபோஜி கவிதைகள்

images (2)பின் வாசல்

கிழிசல்களை

முன் வாசலில்

திரையாய் மாற்றும்

உன் கைங்கர்யத்தை

உற்று நோக்கி நிற்கிறேன்

உன் கிழிசல்களின் வழியே!

வெளிக்கொணர முடியா

இரகசியங்களாய்

பூங்காக்கள் தோறும்

இறைந்து கிடக்கிறது.

சிலரின் ஏமாறுதல்களும்

 

பலரின் பரிமாறல்களும்!

—-

 

சித்த பிரமையோடு

காத்திருக்கின்றன

போதிமரங்கள்.

 

சித்தார்த்தனை

நோக்கிய படி!

 

 

உனக்கும்

எனக்கும்

ஒரே அலுவலகத்தில் தான் வேலை.

ஊதியம் கூட

ஒரே மாதிரி தான்.

ஒரே வித்தியாசம்…

நான் வேலைக்காக

ஊதியம் பெறுகிறேன்.

நீ ஊதியத்திற்காக

வேலை செய்கிறாய்!

 

செயற்கையை

தனக்குள் வாங்கி

உந்தி எழுந்த நீர்திவலை

இயற்கையோடு

கைகோர்த்து புணர்ந்த கணத்தில்

அடங்கி மறைந்தது

 

மீண்டும் நீர்திவலையாய்!

—-

 

ஆதிமனுஷியின்

அருவமாய்

ஊருக்கு மத்தியில்

உருவம் தாங்கி நின்றாள்.

இடுப்பு சேலையை

கை விரித்து

பறக்க விட்டபடி

 

விளம்பரபெண்.

———

 

அருண் செல்வராஜ் மற்றும் ராமலட்சுமி புகைப்படங்கள்

அருண் செல்வராஜ்   புகைப்படங்கள்

டுலீப் திருவிழா

 

download (4)

 

 

 

 

 

 

 

தியானம்

download (3)

 

 

 

 

 

 

 

ராமலட்சுமி சேலத்தில் எடுத்த படங்கள்

 

download (2)

 

 

 

 

 

 

download (1)

,

 

 

 

 

 

download

எழுத்தின் வேட்கை – கிருஷ்ண மூர்த்தி

download

Who can ever hold the essence of fire ? who can ever know the alchemy of desire ?  –

உன்மத்தமான இலக்கிய அனுபவங்கள் நமக்கு எப்போதும் கிடைப்பதில்லை. சில நாவல்கள் மட்டுமே நமக்கு அந்த அனுபவத்தினை தருகிறது. நரம்புகளின் ஊடாக யாரோ ஒரு தூர தேசத்தின் கலைஞன் செய்யும் யாத்திரை. அவனுக்கு உறுதுணையாக இருப்பது அவன் கையினில் இருக்கும் வார்த்தைகளும் எழுத்துகளும் மட்டுமே. அதனை வைத்து வாசகனை ஆட்கொள்கிறான். இருத்தலை அபகரிக்கிறான். மீள்வாசிப்பு செய்ய வைக்கிறான். அப்படி என்னை செய்ய வைத்த ஒரு நாவல் தான் தருண் ஜே. தேஜ்பால் எழுதிய the alchemy of desire.

இலக்கிய அனுபவங்கள் அனைவருக்கும் வாய்த்திருந்தால் இந்நேரம் அனைத்து நாவல்களும் லட்சக்கணக்கில் விற்கப்பட்டிருக்கும். அந்த இழிநிலை இன்னமும் நம் நாட்டில் வரவில்லை. அநேக நாவல்கள் நமக்கு தெரியாமலேயே, கண்களுக்கு புலப்படாமலேயே இருக்கிறது. எனக்கு தமிழில் வந்திருக்கும் பலரின் நாவல்கள் கூடத் தெரியாது. தெரிய வரும் போதெல்லாம் அறிந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதன்படி இதுவும் சாரு நிவேதிதாவின் இணையம் வழியே அறிந்து கொண்ட அற்புதமான ஓர் இலக்கியம்.

இலக்கியம் எனில் என்ன ? இந்த கேள்வியினை எழுத்தாளரிடம் கேட்காத சமூக ஊழியர்களே கிடையாது. அதே நேரம் இதே கேள்வி இல்லாதவர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியாது. கேள்வியே ஒரு தேடலின் துவக்கமாக காலம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. அப்படி எனக்குள்ளும் இந்தக் கேள்வி தோன்றியது. ஆரம்பத்தில், ஒரு விஷயத்தினை நாம் எப்படியெல்லாம் பதிவு செய்கிறோம் என்பது தான் இலக்கியம் என புரிதல் கொண்டிருந்தேன். பின் தான் அறிந்து கொண்டேன், பல நாவல்களின் ஊடாக இலக்கியம் என்பது புனிதமான பதிவுகள். அந்தப் பதிவுகள் மனிதன் என்பதன் உண்மையான அர்த்தங்களை எடுத்து மனிதர்களுக்கு சொல்கிறது. வாழ்க்கைக்கான தேடல்களை ஒரு கேள்வியிலோ அல்லது தன்னை மறந்து அவன் சிந்திக்கும் வாக்கியத்திலோ இலக்கியம் ஆரம்பிக்கிறது. சில இடங்களில் கேள்விகளாக மட்டுமே மனிதர்களின் மனதில் பதிந்து விடுகிறது. தனக்குள்ளே கண்டறிய முனைபவர்கள் எழுதுகிறார்கள். அது டைரி அல்லது பத்திரிக்கை என பலதரப்படுகிறது. ஆனால் கடைசி வரை அவர்களின் தேடல் முழுமையடைவதில்லை.

இலக்கியம் ஒரு இன்பமயமான நரகம். அப்படி நரகமாவது எழுதப்படும் விதத்தில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகளில் பொதிந்து இருக்கிறது. பருக பருக நம்மை அதனுள் ஆழ்த்தி நம் சுயநிலையினை மறக்க செய்கிறது. அது தான் உன்மத்தமான இலக்கியம். பரிசுகளோ விருதுகளோ அந்த நூல் வாங்குகிறதா என்பதைத் தாண்டி அதனுள் இருக்கும் மாந்திரீக சக்தி மனிதனை மறக்க செய்கிறது.

என்னுடைய ஆங்கில நாவல்கள் அல்லது இலக்கியத்தின் அறிவு தமிழினை விட மிகக் குறைவு. அதில் இதனைப் போல் நான் ஆழ்ந்து வாசித்த நாவல்கள் எதுவும் இருக்க முடியாது. இங்கே நாவல் அல்லது நாவலுக்குள் இருக்கும் தனிமனிதனின் தேடல் நாவலின் முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுகிரது. love is not the greatest glue between two people. sex is.

காமம் நிறைந்ததா ? ஆம். உலக இலக்கியத்தில் காமத்தினை இருவகையாக பிரிக்கிறார்கள். ஒன்று கிளுகிளுப்பிற்காக எழுதுவது. சுய இன்பத்திற்காக இந்நூல்கள் உலகம் முழுக்க பயன் படுகிறது. ஆனால் இலக்கியம் பொழுதுபோக்கிற்கான சாதனம் அல்ல. அது அகழ்வாராய்ச்சியினைப் போல. ஏதேனும் ஒரு வகையில் ஒரு ஆய்வினை தேடலினை தன்னுள் கொண்டிருக்க வேண்டும். அது தான் இரண்டாம் ரகம்.

காமத்தில் இந்த இரண்டாம் ரகம் எப்படி இருக்கிறது என பார்த்தால் உடல் அரசியலினை பேசுகிறது. ழார் பத்தாய், ஜெனே, ஆல்ஃப்ரெட் ஜெலினெக் போன்றோரை நான் வாசித்ததில்லை. ஆனால் அவர்கள் இலக்கியத்தில் முன்வைத்த உடல் அரசியலினை கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் சாரு நிவேதிதாவின் எழுத்துகளில் இதனை காண முடியும். வா.மு. கோமுவின் எழுத்தும் இதனை பேசுகிறது. நான் இதுவரை வாசித்ததில்லை.

இந்த நாவல் அந்த உடல் அரசியலினை அழகுற நீண்ட கவிதையினைப் போல் சொல்கிறது. மேலும் நம் சமூகத்தில் இந்த நாவல் எப்படியும் செல்லுபடியாகாது. அதற்கு மூலக் காரணமாக இருப்பது சமூக அமைப்பே. நாம் பெண்களின் காமம் சம்மந்தமான எந்த கருத்துகளையும் வெளிப்படையாக சொல்ல வெளி கொடுப்பதில்லை. அப்படி சொன்னால் அவர்களை தவறாக பார்க்கும் கண்ணோட்டத்தினையே வளர்த்திருக்கிறோம். இந்நாவலோ ஒரு பெண்ணினை பற்றிய ஆராய்ச்சியாகவே இருக்கிறது.

இந்நாவலின் கதைச் சுருக்கம் யாதெனில் எழுத்தாளர் சிஞ்ச்போக்லி. அவருடைய மனைவி ஃபிஸ். இருவருடைய மணவாழ்க்கை மலைகளினூடே இருக்கும் ஜியோக்லைட் என்னும் இடத்தில் இன்பமயமாக காமத்தின் ஊடாக கொட்டும் காதலால் நிறைந்திருக்கிறது. அப்போது கதாநாயகனுக்குள் ஒரு பிரச்சினை. மனக்குழப்பங்கள். காமத்தில் ஈடுபடமுடியாத ஒரு நிலை. தன்னால் எந்த ஒரு சரியான எழுத்தினையும் கொணர முடியவில்லையே என மனதினை துளைத்து எடுக்கும் கவலைகள். இருவரும் சமரசமாக பேசி வேறு ஒரு மலைக்கு குடிபெயரலாம் என முடிவு செய்கின்றனர். நாயகன் தன் வேலையினை விட்டுவிடுகிறான். அங்கே சென்று தன் நாவலினை எழுதலாம் என. அங்கே இருக்கும் ஒரு வீட்டினை புதுப்பிக்கிறான். அப்போது அங்கே அவனுக்கு சில நோட்டு புத்தகங்கள் கிடைக்கிறது. அது உண்மையில் டைரி.

அந்த டைரி கேத்ரீன் என்பவளின் வாழ்க்கை வரலாற்றினை சொல்கிறது. வெளிநாட்டில் பிறந்து இச்சைகளின் வழியினூடே பயணித்து இந்திய நவாபினால் இப்போது கதாநாயகனும் ஃபிஸ்ஸும் தங்கியிருக்கும் அந்த பங்களாவிற்கு வந்து அங்கு கொண்ட கள்ளக்காதலால் மாட்டிக் கொண்டு காதலின் வரிகளால் டைரி முடிகிறது. இந்த அறுபட்ட கதை என்னவாக இருக்கும் என யோசிக்கும் போது தான் நாயகனுக்கு பிரக்ஞை வருகிறது ஃபிஸ் தன்னை பிரிந்து சென்று இரண்டரை ஆண்டுகள் ஆகிறது என. இரண்டு கதைகளின் முடிவு என்ன என்பதே ஐநூறு பக்க நாவலின் முடிவு.

ஃபிஸ், கேத்ரீன் இருவரின் பாத்திரமும் என்னை அப்படியே ஒரு ஈ.ஸி.ஜி கிராஃபினைப் போல எங்கெங்கோ அழைத்து செல்கிறது. அதுவும் நாவலின் ஆரம்பமே இருவருக்கும் இடையில் இருக்கும் ஊடலில் தான் தொடங்குகிறது. அப்போதெல்லாம் அவள் தன்னுடன் சுமந்து செல்லும் மௌனம் என்னிடம் எத்தனையோ காதல் பாஷைகளை பரிமாறிக் கொள்கிறது.

எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி இருவரின் காதலினையும் சொல்ல நினைக்கிறார். அங்கோ சம்போகம் மட்டுமே அவர்களிடையே இருக்கும் அவர்களுக்கே உண்டான ஒரு பாஷை. அந்த பாஷையில் மௌனம் மட்டுமே ஆரம்ப பக்கத்தில் வருகிறது. அவர்களின் தேகத்தில் இருக்கும் மணம். அதனை ஒருவர் மற்றொருவரிடம் முகர்ந்து அவர்களின் இருத்தலை உணர்தல் போல சென்று கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த முகர்ச்சியெல்லாம் தன்னிடம் மரத்துவிட்டதோ என நாயகனுக்கு தோன்றுகிறது. அவனால் காமத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. தன்னையே தனக்குள் கேள்விக்குட்படுத்துகிறான். நாவல் சார்ந்து அவனின் தேடல் மனதினை நிறைத்திருந்தது. வேலையினை விட்டு எங்கு செல்வது என ஃபிஸினை கேட்கிறான். அவள் சொல்லும் பதில் மலைப்பிரதேசங்களுக்கு செல்வோம். அவனோ உனக்கு கடல் சார்ந்த இடங்கள் தானே அதிகம் பிடிக்கும் இதில் என்ன அதிசயமாக என்னை மலைப்பிரதேசங்களுக்கு அழைக்கிறாய் என. அவள் சொன்ன பதில் என்னை அந்த பக்கத்திலேயே நிறுத்திவிட்டது. “என்னால் இரண்டு restless தன்மைகளுடன் வாழமுடியாது”.

ஒருக்கணம் நாவலினை மூடி வைத்து இந்த அறுபட்ட நாவலுடனேயே, ஃபிஸ்ஸின் நினைவுகளின் ஊடாகவே வாழ்ந்துவிடலாமா எனவும் தோன்றியது. ஆனால் மீதமே எனக்கு நானூறு பக்கங்களுக்கு அருகில் இருந்தது. ஃபிஸ் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் வார்த்தைகளின் மூலமாக பயணிக்க ஆரம்பித்தாள்.

நாவல் தனக்குள்ளேயே ஐந்து புத்தகங்களாக பிரிந்து நிற்கிறது. முதலில் இருவருக்கிடையே ஊடலிலிருந்து பிறக்கும் காதல். பின் அவர்களுக்கு கிடைக்கும் பணம் என அடுத்த இரண்டு நூல்கள் பயணம் சார்ந்ததாகவே இருக்கிறது. இந்தப்பயணங்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒரு இடத்தினை எழுத்தாளன் தன் பிரதியில் எழுதுகிறான் என்னும் பட்சத்தில் அதன் வெற்றி அந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்னும் வாசகனின் ஆசையில் தான் முடிவடைகிறது. இந்த உணர்வினை எனக்கு முதன் முதலில் ஏற்படுத்தியது அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல். அதன் பின் இந்த நாவல் தான். இதன் வீரியமோ என்னால் மறக்கவே இயலாது.

நைநிதால், போவாலி, அல்மோரா, கத்கோடம், ஜியோலிகோட் பள்ளத்தாக்கு, பூமியதார் பள்ளத்தாக்கு அதன் அருகில் இருக்கும் கடைகள் வழியில் இருக்கும் மரங்கள் செடிகள் கொடிகள் , அவர்களின் வீட்டினுள் வளர்க்கப்படும் பல செடிகள் அவற்றின் அழகு, நாய்கள், அங்கு குடி கொண்டிருக்கும் குளிர், பனி, புயல் அடிக்கப்படும் வீட்டின் மேற்கூரை, சண்டிகர், டில்லி, நவாப்பின் இடம், அங்கு வளர்க்கப்படும் நூறுவிதமான நாய்கள் என அனைத்தும் அப்படியே என் கண்களினை குளிர்வித்துக் கொண்டிக்கிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த இரண்டு பள்ளத்தாக்கிற்கும் செல்ல ஆசைப்படுகிறேன். இந்த ஆசைகளெல்லாம் சாதாரணமாக ஒருவருக்கு வந்துவிடாது. அதற்கேற்றாற் போல பயன் படுத்தப்பட்டிருக்கும் மொழி தான் ஆச்சர்யமே. எழுத்து உயிர்பெற்று தன் இருத்தலை ஒவ்வொரு வார்த்தையிலும் வாசகனுக்கும் காட்டுகிறது.

சண்டிகருக்கும் டில்லிக்கும் பலமுறை இருவரும் பயணிப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் எனக்கு புதுமையாகவே இருந்தது. அதே பள்ளத்தாக்குகள் ஆனால் அவனின் மனதிற்கும் எழுதப்படும் மொழிக்கும் ஏதோ ஒரு நுண்ணுணர்வு சார்ந்த தொடர்பு. அங்கே இடையிடையில் வரும் சிறுத்தைப்புலி, பேருந்தின் திடிர் விபத்து என அவர் ஒரே இடத்தினை எழுத்தில் கொடுத்து காட்டும் வித்தியாசம் மீண்டும் மீண்டும் என்னை அந்த சண்டிகருக்கு புதிய மனிதனாக இழுத்து செல்கிறது.

கதையின் நாயகனை இச்சை ஆட்டி வைக்கிறது. இச்சையின் படியெல்லாம் அவன் தன் மனதினை கட்டுப்படுத்தாமல் அவளின் மீதும் சுற்றியிருக்கும் சமுகத்தின் மீதும் முடிவுறாத் தேடலைக் கொள்கிறான். முடிவுகளை அறிந்து கொள்ளும் ஆசையும் அவனை தொற்றவில்லை. தேடலை மட்டுமே கொள்கிறான். இச்சை அறிதலுக்கு அப்பால் அவனை அழைத்துக் கொண்டே இருக்கிறது. வாசிக்க வாசிக்க என்னையும் அழைத்துக் கொண்டே இருந்தது.

அந்த வழியில் தான் கேத்ரீனின் கதாபாத்திரம் கதையில் வரும் எழுத்தாளனுக்கும் நூலினை வாசித்துக் கொண்டிருந்த வாசகனான எனக்கும் கிடைத்தது. ஃபிஸ்ஸினை விட கேத்ரீனே என்னை அதிகம் கவர்கிறாள். ஃபிஸ்ஸிற்கும் கேத்ரீனுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் பொதிந்திருக்கிறது. ஃபிஸ் ஒரு ஞானி. அதே கேத்ரீன் ஞானத்தினை தன்னை வைத்தே தேடிக் கொண்டிருப்பவள். அவளின் வாழ்க்கை முழுக்க இந்த இச்சையானது எப்படி இருக்கும் என்னும் கேள்வியிலேயே அடங்கி இருக்கிறது. விட்டினை விட்டு கிளம்புகிறாள்.

ருட்யார்ட் என்பவனுடன் உறவு கொள்கிறாள். அவன் கொண்டாட்டத்தின் பசியில் இருப்பவன். அவனின் பசி இவளால் நிறைந்து கொண்டிருந்தது. இவளும் புதிய அனுபவங்களால் தன் தேகத்தினை உருவம் பெற செய்து வந்தாள். ஆனால் இது தான் காமமா என அவளுக்குள் சந்தேகம் வர ஆரம்பித்தது. அவள் தன் அப்பாவின் கடைகளில் பார்த்த காமசூத்ரா நூலில் இருந்த புகைப்படங்கள் அவளுள் புது விதமான எண்ணங்களை விதைக்க ஆரம்பித்தது. அவளுக்குள்ளேயே இது காமம் இல்லை என முடிவினைக் கொள்கிறாள். சையத் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டு இந்தியா வருகிறாள்.

இந்தியா அவளுடைய வறட்சியினை அதிகபடுத்துகிறது. காமம் காமம் காமம் காமம் என அவள் தன்னை மறந்து தேடுகிறாள். அப்படியே கதையாக நீள்கிறது.

இந்தப் பகுதிகளில் சொல்லப்படும் காமம் வேட்கை இச்சை ஆகியவற்றின் ஒரே ஆங்கில வார்த்தை ‘desire’. உடல் தகிக்கும் கதாபாத்திரங்கள் அதிகம் இல்லையெனினும் இருப்பது போன்ற ஒரு மாயை நாவலினை சூழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பக்கங்களிலும் தேகம் சார்ந்த ஒரு உணர்வு பதிவு செய்யப்பட்டு கொண்டே நாவல் செல்கிறது. நவாப்பின் பகுதிகளிலும் நாயகனின் சிறுவயது கதைகளிலும் காட்டப்படும் தேகங்கள் வதையினையே அனுபவிக்கிறது. சதைத் துணுக்குகளை இந்த உலகம் தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதனை சொல்லியே ஆக வேண்டும் எனில் அனைத்து இடத்திலும் காதல் காமத்துடன் கலக யத்தனிக்கிறது. காமமும் காதலும் நாவலுக்குள் முரண்பிடிக்கிறது. எங்கு இணையும் என ஒரு ஆர்வத்தினை ஏற்படுத்துகிறது. நாயகனுக்கோ காதல் காமம் வாழ்க்கை இந்தியா கேத்ரீன் அவளின் வாழ்க்கை அவளின் வாழ்வில் அவள் தொலைத்த குழந்தை அனைத்துமே மர்மம் தான். அவனால் அவிழ்க்க முடியாத முடிச்சுகள்.

ஃபிஸ்ஸினை இழந்தவுடன் அவன் கொள்ளும் தவிப்புகள் என் உணர்ச்சிகளை அப்படியே எழச் செய்கிறது. அவன் கேத்ரீனின் வாழ்க்கை சுவடுகளுக்குள் சிக்கி அதனுள்ளேயே மூழ்கிக் கிடக்கிறான். அவனால் மீள முடியவில்லை. அப்போது அவன் சொல்லும் வார்த்தைகள் “in the night i dreamt a girl i knew – i couldn’t tell who – had fallen into the river while we were rafting and drowning. desperate, i did everything to save her, even jumping into the water, but i lost her. i was holding on to the edge of the raft screaming her name – fizzzz” இது அப்படியே கேத்ரீன் தன் டைரியில் எழுதிய குறிப்புகள். பைத்தியமாகிறான். டைரியில் இருக்கும் பாத்திரங்களை தன்னை மறந்த நிலையில் ஒப்பிக்கிறான். தன்னையே அவர்களிடத்தில் சரணடையச் செய்கிறான்.

சம்பவங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பினும் அது எழுதப்படும் போது வார்த்தைகள் கடத்தப்படவையாகவே இருக்கிறது. நாவலில் கூட ஒரு இடத்தில் அவனே சொல்கிறான் – write without fear and without artifice. conceal nothing. and do not fret about how you write. write in the knowledge that what you write is not literature, but the raw material of literature. out of it someone may make literature one day.

எழுதுவது அனைத்தும் அவனின் அற்ப தேகத்திற்கே தவிர அவனின் தேகத்திற்கு ஒரு உயிர் இருக்கிறது. அதற்கென ஒரு இச்சை இருக்கிறது. ஒரு மொழி இருக்கிறது. கட்டுப்படுத்தமுடியாத தொனி இருக்கிறது. அவையனைத்தும் ஃபிஸ்ஸிடம் இருக்கிறது. அவளிடம் தேடினான். அவளைத் தேடுகிறான். இதைத் தாண்டி, இந்த தேடல்களினைத் தாண்டி என்னால் நாவலில் எதையும் கண்டறிய முடியவில்லை.

மீண்டும் முதல் வரியினை வாசியுங்கள். . .

காலச்சுவடு கண்ணன் – கேள்வி – பதில்கள்

184484_381178501987966_338359199_n  கேள்விகள்  :  கருணாகரன் ( இலங்கை )
1. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழஆதரவுச் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டு அரசியலும் ஓரளவுக்குச் சினிமாவும் ஊடகங்களும் ஈழ அரசியலைத் தமது தேவைகளுக்காக – நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இந்தத் தரப்புகளின் பங்களிப்பு பயனுடையதாக இல்லை என்பது என்னுடைய அவதானம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் இவர்கள் மடத்தனமாக்கியிருக்கிறார்கள் -அவமதித்திருக்கிறார்கள் என்று சொல்வேன். இதுவரையிலான தமிழ்நாட்டின் ஈழ ஆதரவினால் எத்தகைய நன்மைகளையும் ஈழத்தமிழர்கள் பெற்றதில்லை. பதிலாக தமிழ் நாட்டின் மாபெரும் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு இருப்பதால் தமக்கு எப்போதுமே ஆபத்து என இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களைக் கண்டு அச்சப்படவும் அதன்காரணமாகப் பழிவாங்கவும் ஒடுக்கவுமே படுகிறார்கள். இதைக்குறிதது உங்கள் (கண்ணனின்) அனுபவம் – அவதானம் என்ன?

காலச்சுவடு கண்ணன் பதில் :

தமிழகத்தின் ஈழ ஆதரவுச் செயல்பாடு என்பது மிகப்பரந்த தளம். ஈழப் போராட்டத்தை இந்தியத் தமிழ் தேசியத்திற்கான பதிலிப் போராட்டமாக அணுகும், உரத்த குரலுடைய, ஊடகங்களில் செல்வாக்குடைய, ஐந்து சதவீதத்திற்கு அதிகமான வாக்காளர் ஆதரவு இல்லாத சில குழுக்கள், கட்சிகள், இதில் ஒரு பகுதி.

தமிழக நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை, மாணவர்கள், ஐ.டி. நிறுவனப் பணியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனப் பரந்துபட்ட தளத்தில் செயல்படும் உணர்வலைகளும் ஈழ ஆதரவு அரசியலின் பகுதிதான். இந்தப் பெரும்பான்மை ஆதரவாளரிடையே ஈழ ஆதரவு என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கை அல்ல. ஈழத் தமிழர் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என விரும்பும் சகோதரத்துவ உணர்வின் வெளிப்பாடு.

தமிழகத் தமிழர்களின் இருப்பு சிங்களவர்களை ‘சிறுபான்மையினராக உணரும் பெரும்பான்மை’யினராக்கியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இலங்கைக்கு அருகில் தமிழ் பேசும் பலகோடி மக்கள் வாழ்வது யாருடைய பிழையும் அல்ல. வரலாற்று நிகழ்வு. சிங்களவருக்குச் சிக்கல் தமிழகத்தின் இருப்புதான் எனில் இன்று முஸ்லிம்களை தாக்கத் துவங்கியிருப்பது ஏன்? வளைகுடா நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருப்பதாலா? இலங்கையினுள் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கியிருந்தால், அல்லது அதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருந்தால் தமிழகத் தமிழர்களைக் கண்டு அஞ்சவேண்டிய அவசியம் சிங்களவர்களுக்கு இருந்திருக்காது. இலங்கையை சிங்களவர் நாடாகவும் பிற மக்கள் அனைவரையும் அதில் உரிமையற்றவர்களாகவும் பார்க்கும் அணுகுமுறை மிகப் பிழையானது.

சிங்களவர்களின் மனநிலைக்கு பின்னிருக்கும் வரலாற்று, உளவியல் காரணங்களை மிக நுட்பமாக ஆராய வேண்டும். (திசராணி குணசேராவின் கட்டுரைகள் மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன). யாழ்பாணத் தமிழர்கள் பெருமளவுக்கு கல்வி கற்று காலனியாதிக்க காலத்தில் பெரும்பான்மைப் பதவிகளிலிருந்ததும் தமிழ் மாணவர்கள் பெருபான்மையாக கல்லூரிகளில் கற்றுவந்ததும் கூட காரணங்கள்தான். இத்தகைய ஆதிக்கம் பற்றிய அச்சங்கள் இனப்படுகொலைக்கு நியாயம் செய்துவிடுமா?

சிங்களவர் உளவியலைப் பற்றி கவனம் செலுத்துமிடத்து 2009க்குப் பிந்தைய இலங்கைவாழ் தமிழர்களின் உளவியல் பற்றிய புரிதலும் முக்கியமானது. ஈழத் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்கு இந்திய அரசு, தமிழக அரசியல், ஈழத்தமிழர் தலைமை, புலிகள், இலங்கை அரசு, இலங்கை முஸ்லிம்கள், உலக நாடுகள் என்று எல்லோர் மீதும் குற்றங்காண முடியும். ஈழத் தமிழர்களில் ஒரு அணியினரின் பட்டியலில் புலிகள் நீங்கலாக எல்லோரும் குற்றவாளிகள் ஆகின்றனர். மற்றொரு பட்டியலில் சிங்களவர் இன்று காணாமல் போகின்றனர். இந்தப் பெரும் சோகத்திற்கு யாரைவிடவும் சிங்கள அரசும் பௌத்த தலைமையும் சிங்கள சமூகமும்தான் முழு முதல் காரணம். இன்று சிங்கள அரசை எதிர்த்துப் போராட வாய்ப்புகள் இல்லாத நிலையில், யார் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத சூழ்நிலையில், சிங்கள அரசின் நியாயப்பாடுகளை – அதாவது புலிகள்தான் காரணம் அல்லது தமிழகம்தான் காரணம் – அப்படியே உள்வாங்கிக் கொள்வதும் நம்புவதும் ஒரு உளவியல் நிலை. இம்மனநிலை பற்றிய விழிப்புணர்வு முக்கியமானது.

‘தமிழ் நாட்டின் ஆதரவினால் எத்தகைய நன்மைகளையும் ஈழத்தமிழர்கள் பெற்றதில்லை’ என்ற உங்கள் கூற்றை மிகக் கசப்பான மனநிலையின் வெளிப்பாடாகவே புரிந்துகொள்கிறேன்.

1983 கலவரத்திற்குப் பின்னர் பல ஈழத் தவைர்கள் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்து தமிழக அரசின் மக்களின் ஆதரவைத் திரட்டினார்கள். தமிழக ஆதரவுச் செயல்பாடுகளின் துவக்கம் இதுதான். கடந்த 30 ஆண்டுகளில் இங்கு தஞ்சமடைந்த போராளிகளும் அகதிகளும் இங்கிருந்து எதையும் பெறவில்லையா? ஈழத் தமிழர் பிரச்சனையை தமது அரசியலுக்கான கச்சாப் பொருளாக பாவித்துவருபவர்கள் மீதான நியாயமான கோபத்தை மொத்த தமிழக மக்கள் மீதோ தமிழகம் மீதோ வெளிப்படுத்துவது பொருத்தமானது அல்ல.

தமிழகம் இல்லை என்றால் இலங்கையில் இனப்படுகொலைத் திட்டம் மேலும் துரிதமாக முன்னெடுக்கப் பட்டிருக்கும் வாய்ப்பும் இருக்கத்தானே செய்கிறது?

இன்னொரு முக்கிய விஷயம், ‘தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மடத்தனமாக்கும்’ செயல்பாடுகளுக்கு பின்னர் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் ஆவேசமான ஆதரவு இருக்கிறது. பெருமளவுக்கு பணம் அனுப்பப்படுகிறது. இனவெறியர்களுக்கு மேற்கு முழுவதும் சுற்றுப் பயணங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

தமிழ் இனவாதிகளுக்கு ஐரோப்பிய தமிழ் தொலைக் காட்சிகளில் கொடுக்கப்படும் வாய்ப்பு நிச்சயமாக தமிழக ஊடகங்களில் இல்லை. இவர்களின் பாசிச உரைகளை நேரடி ஒலிப்பரப்பு செய்கின்றன ஐரோப்பிய தமிழ் தொலைகாட்சிகள். ஈழத் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்று கிளி ஜோசியர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நகைச்சுவை லட்சணங்கள் பொருந்திய தமிழக சேகுவேராக்கள், ஹிட்லர்கள், முகநூல் புரட்சியாளர்கள் ஆகியோரிடம் கேட்கப்பட்டு அவர்களுடைய பதில்கள் தேவதூதர்களுக்கு உரிய முக்கித்துவத்துடன் பெறப்படுகின்றன.

புலம் பெயர் தமிழர்களின் இத்தகைய செயல்பாடுகளால் தமிழகத்தில் கருத்துச் சுரந்திரத்திற்கான இடம் சுருக்கப்பட்டு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. காலச்சுவடின் ஒரு கூட்டம் தடைசெய்யப்பட்டு மற்றொரு கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டமை புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதலில், அவர்களை குளிர்விக்கும் நோக்கோடு செய்யப்பட்டவையே. மாற்றுக் கருத்தை போராளிக் குழுக்கள் எதிர்கொண்ட சகிப்பின்மைப் பண்பாடு இங்கு விதைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இங்கு சகிப்புத்தன்மை தழைத்தோங்கவில்லை என்றாலும் சகிப்பின்மையின் பாசிச வெளிப்பாடுகள் இப்போது வலுப்பெற்றுள்ளன.

இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுப்பது அதே நேரம் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது என்று சமநிலை தவறாது போராட்டத்தை காலச்சுவடு மேற்கொண்டு வருகிறது. அத்தோடு துப்பாக்கி இல்லாத புலிகளாக பல சமயங்களில் செயல்படும் புலி எதிர்ப்பாளர்களின் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

புலிகளை ‘பாசிஸ்ட்டுகள்’ என விளித்து அரசியல் நடத்தும் புலி எதிர்ப்பாளர்கள் தம் கையில் கிடைக்கும் புல்பூண்டுகளையும் துஷ்பிரயோகம் செய்யும் வேகத்தைப் பார்க்கையில் புலிகள் தமது அதிகாரத்தை ஒப்பிட்டளவில் பொறுப்புடன் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் மெச்சத் தோன்றிவிடுகிறது. புலி ஆதரவு ஜ் புலி எதிர்ப்பு அணிகளின் மோதல் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் அறிவுலகை சீரழித்து வருகிறது. மதுரையில் தமிழன்னைக்கு சிலை வைக்க வேண்டுமோ என்று விவாதம் முன்வந்தாலும் புலி ஆதரவு, எதிர்ப்பு அணியினர்தான் மோதிக்கொள்வார்கள். என்ன அபத்தம் இது!

 

2. தமிழக – ஈழ மீனவர் பிரச்சினையானது, இலங்கை மீனவர் -இந்திய மீனவர் பிரச்சினையாகவும் அதையும் கடந்து இந்திய மீனவர் இலங்கைப் படையினர் மற்றும் இலங்கை அரசு சார்ந்த பிரச்சினையாகவும் தமிழகத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், ஈழமீனவர்களின் தொழிற்பிரதேசத்துக்குள்ளே அத்துமீறும் செயல்களே அதிகமாக நடைபெறுவதாக இலங்கையின் தமிழ் மீனவர்களாலேயே பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட போருக்குப் பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் தாம் கடலில் இறங்கித் தொழில் செய்யக் கூடியநிலை ஏற்பட்டிருக்கும்பொழுது அதற்கு இடமளிக்காமல் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் தமிழக மீனவர்களின் தொழில்முறையானது கடல்வளத்தை அழிப்பதாகவும் ஈழ மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே முன்னர் தாம் இலங்கை அரசினால் பாதிக்கப்பட்டதைப்போல தற்போது தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த உண்மையை மறைக்கும் விதமாக தமிழத்தில் பேசப்படுகிறது. ஈழ ஆதரவுக் குரல் எழுப்பும் தமிழகம் இப்படி தொழில் விசயத்தில் முறையற்று நடந்து கொள்ளலாமா? உண்மையில் இது ஈழ மீனவருக்கும் தமிழக மீனவருக்குமிடையிலான பிரச்சினை. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையாகக் காண்பிக்கப்படுவதன் பின்னணி என்ன?

 

 

தமிழர், சிங்களவர் (மற்றும் முஸ்லிம்கள்) இடையே இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மோசமான இன முரண்பாடு தமிழகம், இலங்கை உறவில் கடும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் இந்த முரண்பாட்டில் பலிகடாக்கள் ஆக்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடிப்பதை காலங்களாக மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இலங்கை ராணுவம் அவர்களைக் கொல்வது 1983க்குப் பிறகுதான் நடக்கிறது. ஆக மீனவர் பிரச்சனையில் இன முரண்பாடு மிக முக்கியமான அம்சம்தான். ஆனால் இதற்கு வேறு பரிமாணங்கள் உள்ளன. ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான முரண்பாடும் உள்ளது. இனவாதிகள் தமிழர் ஜ் சிங்களர் என்ற முரண்பாட்டில் எல்லாவற்றையும் அடக்க விரும்புகின்றனர். ஈழப்பிரச்சனையை தமது அரசியலுக்கான கச்சாப் பொருளாக்கும் மனோபாவத்தின் வெளிப்பாடு இது.

நீங்கள் குறிப்பிடும் முரண்பாட்டை குறிப்பிட்டு வி.சூரியநாராயணன் காலச்சுவடு மார்ச் 2001 இதழ் நேர்காணலில் பேசியிருந்தார். இதற்கான பழிவாங்கலாகத்தான் மே 17 என்ற தமிழ் இனவெறி இயக்கம் ஐ.நா.தீர்மானத்தை விவாதிக்க காலச்சுவடு ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தை தடை செய்தது. பா. செயப்பிரகாசம், இராசேந்திரச் சோழன், ச.பாலமுருகன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டு அக்கூட்டத்தில் பேசவிடாமல் தடுக்கப்பட்டனர். இதையொட்டி நடந்த விவாதங்களை நீங்கள் பார்த்தால் மீனவர் பிரச்சனையை தமிழ் சிங்கள இன முரண்பாட்டில் அடக்க வேண்டும் என்ற மனோபாவம் தமிழகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் ஈழத்தமிழ் இனவாதிகளிடமும் உக்கிரமாக இருப்பதைப் பார்க்கலாம்.

தமிழக மீனவர்கள் மற்றும் புலிகள் இடையிலான உறவு, முரண்பாடு பற்றியும் விரிவாகப் பேச வேண்டும். உண்மைகளை அறிந்தோர் பேச வேண்டிய தருணம் இது.

 

3. ஈழத்தமிழர்களினால் அதிக பொருளாதார நலன்களைப் பெறும் மையமாக தமிழகமும் கேரளாவும் இன்று மாறியுள்ளன. ஒட்டு மொத்தத்தி?ல் இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களின் மூலமாக பல பொருளாதார நன்மைகள் கிட்டுகின்றன. புலம்பெயர் ஈழத் தமிழர்களின் பொருட்கொள்வனவு முதல் அவர்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவது, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை தமிழகத்தில் நடத்துவது, முதலீடுகளை மேற்கொள்வது என இது பல வகையில் உள்ளது. இலங்கையில் நிலவும் இன முரண் இதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த லாபத்தைப் பெறுவதற்காகத்தானா இலங்கையில் தொடர்ந்தும் இன முரணை வளர்க்கும் விதமாக ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் போர்வையில் காரியங்கள் நடக்கின்றன?

 

 

ஈழத்தமிழர்களின் பங்களிப்பு இந்தியப் பொருளாதாரத்திலோ தமிழகப் பொருளாதாரத்திலோ குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கும் என நான் நம்பவில்லை. சென்னை உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு நகைக்கடை, துணிக்கடைகள், புத்தகக் கடைகள் ஒருகால் குறிப்பிடத்தகுந்த அளவு பயன் பெறலாம். இங்கு இன முரண்பாட்டை வளர்க்கும் செயல்பாடுகள் பொருளாதாரப் பயன்களைக் கருதியும் அரசியல் நலன்களுக்காகவும் செய்யப்படுகின்றன. பொருளாதார நலன் இத்தகைய வியாபாரத்தில் இருந்து கிடைப்பது அல்ல. மாறாக புலம் பெயர் ஈழத்தமிழர்களின் நிதி உதவியால் பெறப்படுவதாகும்.

2003இல் அமைதிக் காலத்தில் நான் இலங்கையில் பயணம் செய்தபோது அங்கு பலரிடம் ஈழத்தமிழர்கள்தான் தமிழக பதிப்புலகத்தை வாழவைப்பதான எண்ணம் இருப்பதைக் கண்டேன். மிகையான கற்பனைகள் இவை.