Category: இதழ் 29

மலைகளின் நண்பர்கள் – சிபிச்செல்வன்

download (9)

மூன்று இதழ்கள் கழித்து இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். ஒரு பக்கம் சோம்பேறித்தனம் என்றாலும் இன்னொரு பக்கம் நான் எழுதுவதை அதிகமாக என்னையறியாமல் பேஸ்புக்கில் புரோமோட் செய்கிறேனோ என்ற சுயவிமர்சனமும் ஒரு காரணம்.அப்படி செய்வது சரியாக இருக்காது என்கிறதாலும் எழுதுவதைக் குறைத்துக்கொள்கிறேன். ( இப்படி ஒரு சமாதானம் என ஒரு நண்பர் சிரிக்கிறார்).

மலைகள் இணைய இதழைத் தொடங்கி 29 ஆவது இதழ் வெளிவருகிறது என்பது உங்களைப் போலவே எனக்கும் சந்தோஷம். பலரும் மலைகள் இதழ் என்பது ஒரு பெரிய நிறுவனம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பெரிய அலுவலகத்தில் நிறைய கணிணிகளோடும், நிறைய பணியாளர்களோடும் இயங்குவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்..அது உண்மையல்ல. இப்படி நினைத்துக்கொண்டு மலைகள் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்ற வாய்ப்பு கேட்டு எனக்கு மெயில்களும் போன்களும் வருகிறது. உண்மையில் அப்படி மலைகள் இதழ் ஒரு பெரிய நிறுவனம் அல்ல.

இங்கே நானேதான் எல்லாப் பணிகளும் செய்ய வேண்டும். நான் இருக்கும் இடம்தான் என் அலுவலகம். நான் இயக்கும் இந்தக் கணிணிகூட எனக்கானது இல்லை. ( என் மகன் போனால் போகிறது எனக் கொஞ்சம் உபயோகப்படுத்திக்கொள்ள விட்டுக் கொடுக்கிறார் ). மலைகள் இதழை நடத்த எனக்கு யாரும் சம்பளம் கொடுக்கவில்லை. அல்லது மலைகள் இதழை நடத்த நான் யாருக்கும் சம்பளம் கொடுக்கும் நிலையில் இல்லை.யாரவது புரவலர்கள் நிதி உதவி அளித்தால் அப்படி எல்லாம் யோசிக்கலாம். குறைந்தது நான் செய்கிற பணிக்காக மதித்து நிதி உதவி அளிக்கலாம். ( கேட்பது பிச்சை இதில் கௌரவமான சொற்களைப்போட்டு அசத்துவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை என நண்பர் ஒருவர் முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்.. முதலில் மலைகள் இதழை நடத்துவதே வெட்டி வேலை அதை இழுத்து மூட வேண்டி பல நண்பர்கள் என் மேல் இருக்கிற அக்கறையில் என்னைத் தூண்டுகிறார்கள்.)

இதுதான் இருக்கிற யதார்த்தமான சூழ்நிலை. ஆகையால் இதைப் புரிந்துகொண்டு என்னிடம் மலைகள் இதழில் பணி செய்ய வாய்ப்பு கேட்பதை நண்பர்கள் தவிர்க்க வேண்டுகிறேன். சரி நான் இலவசமாக பணியாற்றுகிறேன் என்பவர்களுக்கு என்ன சொல்ல என்றால் அதற்கும் இங்கே பெரிதாக வாய்ப்பு இல்லை.  ஒரு காரியம் செய்யலாம் நண்பர்களே. அது மலைகள் இதழில் எழுத படைப்பாளிகளிடம் தொடர்பு கொண்டு படைப்புகளை வாங்கிக் கொடுக்கலாம். புதிய படைப்பாளிகளை எழுதச் சொல்லி அறிமுகப்படுத்தலாம்..

•••

மலைகள் இதழ் இரண்டு முறை நண்பர்களிடம் குட்டு வாங்கியிருக்கிறது.முதலில் எழுத்தாள்ர் ஜீம்பா லகரியின் படத்தைப் போட்டு இவர் யார் எனத் தெரிகிறதா-? இவர் மலைகள் இதழில் எழுதுகிறார் எனப் போட்டேன். அவர் ஆங்கிலத்தில் எழுதுபவர் என்பதால் கொஞ்சம் கவர்ச்சியான உடையணிந்திருந்த ஒரு படத்தைப் போட்டு பேஸ்புக்கில் விளம்பரம் போட்டேன். அவ்வளவுதான் . மலைகளின் வாசக நண்பர்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள் . மலைகள் இணைய இதழ்  என்பது ஒரு இலக்கியப் பத்திரிகை அது இது மாதிரி தரம் தாழ்ந்து போவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றார்கள். அமெரிக்காவில் வசிக்கிற ஒரு இணைய வழி அறிமுகமான நண்பர் ஒரு மெயில் உடனே அனுப்பி தன் வேண்டுகோளை வைத்தார்.அவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக அதே எழுத்தாளரின் வேறு ஒரு படத்தை போட்டு அவர்களின் அன்பை மற்றும் அக்கறையைக் காப்பாற்றிக்கொண்டேன்.

தற்போது நான்கு இதழ்களாக நான் இதழை பதிவேற்றம் செய்வேதோடு என் பணியை முடித்துக்கொண்டு முன்போல பேஸ்புக்கில் அதிகமாக விளம்பரங்களைப் போடாமல் இருக்கிறேன். நண்பர்கள் நான் மலைகள் இதழைத் தவிர வேறு எந்த நிலைத் தகவலையும் பதிவதில்லை என ஒரு பெரிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து என்மேல் வைத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் கொடுக்கும் விதமாகவும் அதே சமயத்தில் கடந்த இரண்டு மாதங்களாக என் தனிப்பட்ட பணிகளின் நெருக்கடிகளாலும் பேஸ்புக் பக்கம் வருவதைக் குறைத்துக்கொண்டேன்.

மலைகள் இதழைக் குறிப்பிட்ட சதவீகிதத்தினர் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் பல நாடுகளில் வசிக்கிறார்கள் . வாசிக்கிறார்கள் என்பதும் தெரியும். இருப்பினும் மலைகள் இதழில் வெளியாகிற படைப்பகளைப் பற்றிய பெரிய விமர்சனங்கள் வருவதில்லை. அப்படியே வருகிற விமர்சனங்களும் நன்றாக இருப்பதாக ஒற்றை வரியில் ஒரு போனில் முடித்துக்கொள்கிறார்கள். எந்த விமர்சனமாக இருந்தாலும் அதை எழுத அந்தந்த பக்கத்திலே உங்கள் கருத்துகளைப் பதியலாம் என ஒரு சுதந்திரம் இருக்கும்போது அவற்றை எதற்காக வீண் செய்ய வேண்டும். ஆனால் நண்பர்கள் எதையும் எழுதுவதில்லை. அப்படியே எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் நண்பர்கள் அவருடைய படைப்பைப் பற்றிய பதிவுகளைதான் செய்கிறார்கள் என்பதையும் நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இது ஒரு ஆரோக்கியமான போக்கு என நான் நினைக்கவில்லை.தொடர்ந்து நண்பர்களின் படைப்பகள் வெளி வர வேண்டும் அதே சமயம் அவர்களின் படைப்புகளைப் பற்றிய விமசர்னங்களை வைக்க வேண்டும்.

நேற்று மலைகள் இதழைப் பதிவேற்றப் பணிகளைத் தொடங்கிய போது மலைகள் இதழைப் பற்றிய எந்த ஒரு விமர்சனமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார்களே என்ற நினைப்பில் ஒரு காரியம் செய்தேன். அது மலைகள் இதழுக்கு மதுமிதா எழுதிய ஒரு கட்டுரையை பேஸ்புக்கில் புரோமோட் செய்ய ஒரு நடிகையின் படத்தைப் போட்டு வைத்தேன். கொஞ்ச நேரத்திற்கு எந்த சலனமும் இல்லை. உடனே யாராவது லைக் போடுவார்கள் என்பது வழக்கம். ஆனால் நமது நண்பர்கள் அனைவரும் ரகசியமாக லைக் செய்வதை வெளிப்படையாக செய்ய மாட்டார்கள் இல்லையா? மற்ற பதிவுகளையும் அதைப் பற்றிய விளம்பரங்களையும் பேஸ்புக்கில் பதிந்தபடியே இருந்தேன். மற்ற படங்களுக்கு அதற்கான லைக்குகள் விழுந்தன. அவற்றைப் பார்த்து சிரித்துக்கொண்டே நான் என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.. சுமார் ஒரு மணி நேரம் கழித்து சென்னையிலிருந்து ஒரு போன் வந்தது. அழைத்தது ஒரு பத்திரிகையாசிரியர்.

அவரின் குரல் பதட்டமாக இருந்தது. அந்த நடிகையின் படத்தை முதலில் எடுத்துவிட கோரினார். மலைகள் இதழுக்கு இது போன்ற படங்கள் போட்டுதான் விளம்பரங்களைத் தேட வேண்டியதில்லை அது ஏற்கனவே அதற்குரிய கவனிப்பை இலக்கியவாதிகளிடமும் வாசகர்களிடமும் பெற்றிருக்கிறது. அதே சமயத்தில் சினிமா உலகத்தினரிடமும் பெற்றிருக்கிறது. மலைகள் இதழில் வெளியாகும் உலக சினிமா இயக்குநர்களின் நேர்காணல்களை தமிழ்சினிமாவில் பெரும்பாலானவர்கள் வாசிக்கிறார்கள்.

மலைகள் இதழில் என்ன படைப்புகள் வருகிறது என்பதை பொதுவாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும் அதற்கென வாசகர்கள் இருப்பதாகவும், இந்தப் படம் மலைகளின் கண்ணியத்தையும் தரத்தையும் குறைப்பதாகவும் உடனே அந்தப் படத்தை நீக்கிவிடவும் கோரிக்கை வைத்தார். அவர்தான் அந்த நடிகையின் நேர்காணலை ஒரு வெகுசன இதழுக்காக எடுத்ததாகவும் அப்போது அந்த நடிகை  எந்த ஆணும் தன் முகத்தைப் பார்த்துப் பேசியதில்லை என்றும் மாறாக தன் கழுத்துக் கீழே பார்த்துக்கொண்டுதான் பேசுவார்கள் எனச் சொன்னதையும்  சொல்லி வருத்தப்பட்டார்.

அவர் மலைகள் மேல் வைத்திருக்கிற மரியாதையை நான் அறிவேன். அவர் தன் தொழில் முறையாக பழகுகிற சினிமாக்காரர்களிடம் மலைகள் இதழை வாய்வழியாகவே விளம்பரப்படுத்தியதன் விளைவாக தமிழ் சினிமாவில் இயங்கிக்கொண்டிருக்கிற பல புகழ்பெற்ற இயக்குநர்களிலிருந்து நாளைய இயக்குநர்கள் வரை வாசிக்கிறார்கள் என்பதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சென்னையில் நேரில் சந்திக்கிற சினிமா சார்ந்த நண்பர்களுக்கு இன்னார் வழியாக மலைகளை அறிந்து கொண்டு தற்போது தொடர்ந்து வாசிப்பதாக சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.அவர்கள் சினிமா பற்றிய பகுதிகளை மட்டும் வாசிக்காமல் மொத்த இதழையும் வாசிக்கிறார்கள் என்பதையும் கவனித்து வந்திருக்கிறேன்..

இப்படி மலைகள் இதழை பல நண்பர்களிடம் அறிமுகம் செய்கிற மலைகள் இதழின் மேல் அக்கறை கொண்ட அதே சமயம் என்மேல் கொண்ட தனிப்பட்ட அன்பினாலும் அவர் வைத்த வேண்டுகோளை உடனே செயல்படுத்தும் விதமாக அந்த நடிகையின் போட்டோவை பேஸ்புக் பதிவிலிருந்து நீக்கிவிட்டேன்.

கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இது நடந்தது மதியம் 2 மணி. மாலை வரை வேறு பணிகள் இருந்ததால் அவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தேன். மாலை சுமார் 7 மணியிருக்கும் ஒரு பெண் கவி போன் செய்தார். குரலில் கோபம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. என்ன விஷயம் எனப் பொறுமையாகக் கேட்டேன். எப்படி இது மாதிரி ஒரு நடிகையின் கேவலமான படத்தைப் போடலாம். அப்படி மலைகள் இதழ் கேவலமான ஒரு விளம்பரம் தேட வேண்டுமா? சிபிச்செல்வன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே? எதனால் இப்படிப் பெண்களை இழிவுபடுத்துகிற விதத்தில் ஒரு படத்தைப் பதிய வேண்டும் எனக் கொதித்தார். சிபிச்செல்வன் இந்தப் படத்தைப் போட்டுதான் விளம்பரத்தையும் புகழையும் தேடிக்கொள்ள வேண்டுமா என்றார்.

நான் ஏற்கனவே பிரபலமானவன்தான் அப்படிப்போட்டுதான் என்னை பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்றேன். மலைகள் இதழ் ஒரு கண்ணியமான இலக்கிய இதழ் அதில் எழுதுகிற படைப்பாளிகளிலிருந்து வாசிக்கிற வாசகர்கள் வரை அதை ஒரு முக்கியமான இதழாகக் கருதுவதாகவும் உடனே அந்த நடிகையின் படத்தை நீக்கிவிட வேண்டுமென மிரட்டலாகவும் அதே சமயத்தில் அன்போடும் கோரினார். நான் அதை மதியம் 2 மணிக்கே ஒரு நண்பர் வேண்டுகோளை வைத்ததால்  அதை நீக்கி விட்டேன் என்றேன்.

அந்தப் பெண் கவிஞர் ஒரளவு சமாதானமடைந்ததாகவே கருதினேன். தான் இவற்றைப் பற்றி பேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலைப் பதிவதாக சொன்னார். நான் தாரளமாக திட்டியே ஒரு பதிவைப் போடலாம். எந்த விமர்சனத்தையும் தாங்குவேன் என்று பதிலை சொன்னேன். இதை எழுதுகிற இந்த அதிகாலை 6 மணி வரை அது போல ஒரு நிலைத்தகவல் வரவில்லை.

சேலத்தில் பழைய மாவட்ட அலுவலகத்தின் வளாக சுவற்றில் கடந்த 20 ஆண்டுகளாக எம்எம்எம் கார்னர் என்ற பெயரில் வாரம் ஒரு முறை பொன்மொழிகளை எழுதிக்கொண்டு வருகிறார் ஒருவர். அவர் என்ன காரணத்திற்காக அப்படி ஒரு செயலை செய்து கொண்டு வருகிறார் என யாராவது தெரிந்தவர்கள் கேட்டு சொல்லலாம். அவர் தொழில் நுட்ப வளர்ச்சியின் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பேஸ்புக்கிலும் இந்த சேவையைச் செய்து வருகிறார். இப்போது சேலத்தின் முக்கியமான நான்கைந்து இடங்களில் சுவற்றில் கருப்பு வண்ணத்தில் எழுதுவதைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் எழுதுகிற உழைப்பு போக அவர் வாங்குகிற கருப்பு வண்ணத்திற்குக்கூட இந்த பொன்மொழிகள் எழுதுவது ஒரு பைசா கூட சம்பாதித்துக்கொடுக்காது. இதைத் தெரிந்ததுதான் அவர் தொடர்ந்து தன் பணியை செய்கிறார். ஆனால் தன் பணியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து ஒருவர் பைத்தியக்காரத்தனமாக செய்து வருகிற பணி இப்போது மரியாதைக்குரியதாக நான் நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட நான் மலைகள் இதழைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பதும் இதே போன்ற ஒரு பைத்தியக்காரத்தனம்தான் என நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால் அதை வாசிக்கிற வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அப்படி நினைக்கவில்லை என்பதை அவர்கள் கொடுத்து வருகிற ஆதரவிலிருந்தும் நான் வேண்டுமென்றே செய்கிற குட்டி கலாட்டாக்களைக்கூட புரிந்துகொண்டு என் தலையில் குட்டி என்னை நேர்வழிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்லுவதை விட வேறு என்ன செய்துவிட முடியும்?   இரண்டுமுறையும் அக்கறையோடு என்னை வழிநடத்திய நண்பர்களுக்கும் நன்றிகள்.

இவர்கள் தவிர நான் இன்னொரு முக்கியமான நண்பர்க்கும் நன்றி சொல்ல வேண்டும் . அவர்தான் ஈரோடு தாமோதர் சந்துரு. அவரை நேரில் சந்திக்கிறபோதும் சரி அல்லது தொலைபேசியில் பேசும்போதும் சரி மலைகள் இதழின் முக்கியத்துவத்தைச் சொல்வதோடு அதை நடத்திக்கொண்டிருக்கிறவரின் அக்கறையையும் சொல்லி பாராட்டிக்கொண்டிருப்பார்.. இதுபோன்ற பாராட்டுகள்தான் தொடர்ந்து உற்சாகமாக இயங்க பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. தொடர்ச்சியாக மலைகள் இயங்க இதுதான் காரணம். இவர்களைப்போலவே மௌனமாக ஆதரவளித்துக்கொண்டிருக்கிற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

•••

ஒரு அறிவிப்பு

சேலத்தில் இனி ஒவ்வொரு மாதமும் மலைகள் இதழும் சேலம் தமிழ்ச் சங்கமும் இணைந்து கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை அந்த அந்த மாதம் இணைத்திலும் பேஸ்புக்கிலும் அறிவிக்கப்படும்.வளமைபோலவே இந்தக்கூட்டங்களுக்கும் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி

உலகமொடு பொரும்கொல் என் அவலமுறு நெஞ்சே! – 3 தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: செ.ச.செந்தில்நாதன்

download

அபு சையத்  (பாரசீகம்)

என் காதலியிடம் கேட்டேன்,
நீ ஏன் உன்னை இவ்வளவு அழகு படுத்திக்கொள்கிறாய்?

அவள் சொன்னாள்:
“என்னை மகிழ்வித்துக்கொள்ளவே நான் செய்கிறேன் .

நான்தான் கண்,
நான்தான் கண்ணாடி,
நான்தான் அழகு

நான்தான் காதலன்,
நான்தான் காதலி,
நான்தான் காதலும்.”

 

எமிலி டிக்கின்ஸன்  (ஆங்கிலம்)

நீ இலையுதிர்காலத்தில் வருவதாக இருந்தால்

நீ இலையுதிர்காலத்தில் வருவதாக இருந்தால்
இக்கோடையை நான் துடைத்தெறிவேன்,
நகைமுகம் பாதி, கடுமுகம் பாதி கொண்டு,
இல்லத்தரசியர் ஈயை விரட்டுவதைப் போல.

ஆண்டுக்கு ஒருமுறைதான் உன்னைக் கண்ணுறமுடியும் என்றால்
மாதங்களை பந்துகளாக சுருட்டி,
ஒவ்வொன்றையும் மேசையின் தனி்த்தனி இழுப்பறைகளில் போட்டு மூடுவேன்
அவற்றுக்கான நேரம் வந்துவிழும்வரை.

சில நூறாண்டுகள் மட்டுமே
தாமதமாகும் எனில்
என் கையிலேயே அதை எண்ணிவிடுவேன்.
என் விரல்கள் தென்புல தேசத்தில் விழும்வரை
கழித்துக்கொண்டே வருவேன்.
நிச்சயம்தான் எனில், உன்னுயிரும் என்னுயிரும்
எப்படியும் ஒரு நாள் அவியப்போகிறதென்பதால்
இந்த உயிர் நீங்கும்போது
படிந்த ஆடையை வழித்து எறிவதை போல அதை எறிவேன்,
நித்தியத்தை சுவைப்பேன்.
என்றாலும் இப்போது,
காலத்தின் அநிச்சய இறக்கை
எவ்வளவு நீளமென அறியா நிலையில்,
பைசாச தேனீ போல, அது என்னை விரட்டிச்செல்கிறது,
எப்போது அது கொட்டும் எனவும் அறியேன்.

 

மீரா பாய்
(ராஜஸ்தானி இந்தி)

நான் காதல் பித்துற்றிருக்கிறேன்.
என் வாதை யார் அறிவார்?
ஊசி முனையில் நான் படுத்துக்கொண்டிருக்கிறேன்,
எப்படித் தூங்குவேன்?
அந்தப் பிரியமானவனின் படுக்கையோ
விண்ணில் பரந்திருக்கிறது,
நான் எப்படி அவனைச் சந்திப்பேன்?
புண் உடைய ஒருவனே புண் வலியை உணர்வான்,
அல்லது புண்ணை உருவாக்கியவனே
புண் வலியை அறிவான்.
பொற்கொல்லன் அறிவான் பொன்னின் ரகசியத்தை,
அல்லது பொன்னாகவே இருப்பவனுக்கே அது தெரியும்.

வலியுண்டு கானகங்களில்  அலைகிறேன்.
ஒரு வைத்தியனையும் காணேன்.
தலைவா, நீயே வைத்தியனாக வந்தால் மட்டுமே
மீராவின் வலியெல்லாம் நீங்கும்.

 

ஓவிட் (லத்தீன்)

நுண்ணிய அம்புகள் என் இதயத்தில் குத்தி நின்றன.

ஆக்ரமித்த இதயத்துக்குள்
துன்பம் விளைவித்தது காதல்.

அதனிடம் சரணடைவதா,
அல்லது அணைக்கப்போராடி

அந்த பொறிபறக்கும் நெருப்பை
மேலும் கனலவைப்பதா?

நான் சரணடைவேன் –
விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டால்
கனமான சுமையும் இலேசாகிவிடும்.

 

 

பர்த்திருஹரி (சமஸ்கிருதம்)

அவள் என்னைக் கண்டு  சினத்தால் சிவக்கவில்லை.
அவள் அறையில் நான் நுழைவதையும் தடுக்கவில்லை.
கோபத்துடன் ஒரு வார்த்தை பேசவில்லை.
என் மீது பொங்கவில்லை, பொரியவில்லை.
காதலனாகிய இந்த பரிதாபியைக் கண்டு
புருவம் நெரித்து கசக்கவில்லை.
அவள் செய்ததெல்லாம் இதுதான்:
வேறு யாரையோ பார்ப்பது போல
என்னையும் பார்த்தாள்.

***

உண்மைக்குப் பக்கத்தில் ஒரு சினிமா: ஆந்த்ரே வெய்தாவின் வாக்களிக்கப் பெற்ற பூமி – அ.ராமசாமி

269498_486741001362530_1294528916_n

பழைய படம் தான். 1975 இல் வந்த அந்த போலிஷ் படத்தின் தலைப்பு ஜெமியா ஒபிஜியானா. ஆங்கிலத்தில் ப்ரொமிஸ்டு லேண்ட் (Promised Land) என மொழி பெயர்க்கப் பெற்றதைத் தமிழில் வாக்களிக்கப் பெற்ற பூமி என பெயர்த்துச் சொல்லலாம். தொழிற்புரட்சி மற்றும் நகர்மயமாதலின் பின்னணியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தை எனது மாணவிகளோடும் மாணவர்களோடும் சேர்ந்து பார்த்தேன். எனக்கு நம்பிக்கையுள்ள கலை இலக்கியக் கோணத்தில் இந்தப் படம் முக்கியமான படம் என்று நான் சொன்னேன். உடனே அவர்களில் ஒருத்தியும் ”ஆமாம்; இது எங்களுக்கும் முக்கியமான படம்” என்று பலரையும் உள்ளடக்கிச் சொன்னாள். மற்றவர்களும் அதை மறுத்துச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி விட்டு இந்தப் படமும் அதன் இயக்குநரும் போலந்து சினிமாவுக்கும் முக்கியம் என்றும் சொல்லிப் பெருமைப்பட்டார்கள். சோசலிசக் காலத்தில் (1975) எடுக்கப்பட்ட ஒரு சினிமாவை எனது மாணவர்கள் பாராட்டியதும் நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியமாக இருந்தது.

போலந்து தேசம், சோசலிசக் கட்டுமானத்தைப் பின்பற்றிக் கொண்டு சோவியத் யூனியனின் நட்பு நாடாக இருந்த காலத்தைப் பற்றிப் பேசத் தொடங்கும்போதெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டாத என் மாணவிகளும் மாணவர்களும் இந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னதும் பாராட்டியதும் ஏன் என்பதைப் படம் பார்த்தபோதும் உணர்ந்தேன். படத்தைப் பார்த்த பின் நடந்த உரையாடல்களும் பிந்திய நிகழ்வுகளும் எனக்கு உணர்த்தியது.. மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் 1990 க்கு முந்திய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு மேல் வெறுப்பு இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்களில் பலரும் சோசலிசத்திலிருந்து முதலாளித்துவக் கட்டமைப்புக்கு மாறிய போலந்தில் பிறந்தவர்கள். கொஞ்சப் பேர் அதற்கு முன்பே பிறந்திருந்தாலும் மாற்றத்தின் போது குழந்தமைப் பருவத்தில் இருந்தவர்கள். மாற்றம் நிகழ்ந்த பின் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் கடந்த காலத்தைப் பற்றிச் சொன்ன எதிர்மறைக் கருத்துகளை மட்டுமே கேட்டு வளர்ந்தவர்கள். முடிந்து போன கொடுங்கனவாகச் சோசலிசத்தைக் காண்பித்துச் சொல்லப்பட்ட கதைகள் தான் அவர்களுக்குத் தெரியும்.

சோசலிசக் காலத்தில் அன்றாட உணவும் குளிருக்குக் குடிக்க வேண்டிய வோட்காவுக்குமே திண்டாட்டம் இருந்ததாகவும், அவற்றை வழங்கும் கடைகளின் முன் நீண்டு வளர்ந்த மனித வரிசைகளே சோசலிசத்தைத் தூக்கித் தூர எறிந்ததாகவும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். வயிற்றுப்பாடுகள் அடிப்படையான உணர்ச்சிகளை எழுப்பும் என்பது உண்மை என்றாலும், அரசியல் மாற்றத்துக்கு அது ஒன்று மட்டுமே போதாது. சித்தாந்த முகம் ஒன்றும் அதற்கு எப்போதும் தேவை. அதை வழங்கிய அமைப்பாக 1980 களில் தோன்றி வளர்ந்த ஒற்றுமைக்கும் வலிமைக்குமான இயக்கம் (Solidarity movement) இருந்துள்ளது. நான் பணியாற்றும் வார்சா பல்கலைக் கழகத்தின் முன் செல்லும் அந்தச் சாலையில் தான் வலேசா போன்றவர்கள் விடாப்பிடியாக ஊர்வலங்களையும் போராட்டங்களையும் நடத்தி மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் கதைகளின் பாத்திரங்களாக வலேசா மட்டும் இருந்ததில்லை. சுதந்திரத்தை விரும்பிய எழுத்தாளர்கள், சினிமா, நாடகம், ஓவியம் முதலான கலைகள் சார்ந்த படைப்பாளிகளும் பொதுமக்களின் குரலோடு இணைந்திருக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன் மாற்றத்தை நோக்கிப் போலந்து மக்களைத் திசை திருப்பிய நிகழ்வுகளைப் பசுமையாக நினைவு கூறும் மனிதர்கள் இப்போது 50 வயதைத் தாண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்குள் யாராவது ஒருவர் சோசலிசக் காலத்தில் நடந்த நேர்மறை நிகழ்வுகளை நினைவுபடுத்தி யாராவது சொல்ல முன் வந்தால், விநோதப் பிறவிகளாகவும் சுதந்திரமான எண்ணங்களுக்கும் வேகமான வளர்ச்சிக்கும் எதிரானவர்களாகக் கருதப் படும் வாய்ப்பே அதிகம் என்பதால் பெரிய அளவில் அதைப் பற்றிப் பேசும் குரல்களைக் கேட்க முடியவில்லை. .

இப்போதும் கூட எதிர்மறையான கருத்துக்களே சொல்லப்படுகின்றன. சோசலிசத்தின் நல்ல அம்சம் எனப் பேசக்கூடிய ஒருவரையும் இந்த இரண்டு ஆண்டுகளில் சந்திக்க முடியவில்லை. கசப்பான அனுபவங்களைச் சுமந்தவர்களாகவும், சுமப்பவர்களின் கதைகளைக் கேட்டவர்களாகவும் இந்த போலந்து பூமி நிறைந்து கிடக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்திய வீரம் செறிந்த போரில் பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பலி கொடுத்த நாடு போலந்து. அதன் பண்பாட்டுத் தலைநகரமான க்ராக்கோவுக்குப் பக்கத்தில் பெருங்கூட்டத்தைச் சிறைப்படுத்தி அடைத்து வைத்து விஷ வாயுவைச் செலுத்திக் கொன்ற கொலைக்கூடம் இப்போதும் காட்சிப் படுத்தப்பட்டுக் காட்டப்படுகிறது. ஹிட்லரின் ஜெர்மனியின் மீது கொள்ள வேண்டிய கோபத்தின் அடையாளமாக அவை இருப்பதுபோல ஸ்டாலினின் ரஷ்ய அடக்குமுறையின் அடையாளமாக அவன் கட்டிக் கொடுத்த பண்பாட்டு மாளிகையும் கருதப்படுகிறது. ஜெர்மனியர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தங்கள் தலைநகரான வார்சா தரைமட்டமாக்கப்பட்டது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நகரம் திரும்பவும் அதே அடையாளங்களோடும் அதே அழகோடும் கட்டடங்களாக வளர்ந்து நிற்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட காலம் சோசலிசக் கட்டுமான காலம் தான். ஆனால் கட்டடங்களையும் கலைகளையும் அழகையும் திரும்பக் கொண்டு வந்த சோசலிசத்தின் காவலர்கள் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்; இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற அடிப்படையை மறந்திருக்கிறார்க்கிறார்கள் என்பதைப் பலரோடும் உரையாடும்போது கேட்க முடிகிறது. உறையும் பனிக்கட்டிகள் உடைக்கப்படாததாலும் உருக்கப்படாததாலும் வீட்டிற்குள்ளேயே முடக்கப் பட்ட மக்களின் தேவையை ஆட்சியாளர்கள் உணரவில்லை. அதுதான் எதிர்ப்புணர்வின் வலிமையாக மாறியது. சுற்றியுள்ள நாடுகளின் அதிகாரப் போட்டியில் காணாமல் போன தங்கள் தேசம் திரும்ப உருவாக்கப் பெற்ற கதையை நினைவு கூரும் இளைய தலைமுறையிடம் சோசலிசம் ஒரு கொடுங்கனவாகவே படிந்துள்ளது. ஆனாலும் அது உருவாக்க நினைத்த மனிதாபிமானமும், பண்பாட்டுக் கவலைகளும் திரும்பக் கொண்டுவரப் பட வேண்டியவை என்ற நினைப்பு இன்னும் இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்களிக்கப் பெற்ற பூமியைப் பெருமையாகக் கருதும் மனநிலையைப் புரிந்து கொண்டேன்.

வாக்களிக்கப் பெற்ற அந்த பூமி என்ற சினிமாவில் காட்டப்பெற்ற பூமி இன்றும் போலந்தில் இருக்கிறது அந்த பூமியும் அந்தப் பூமியில் உருவானதாக இயக்குநர் காட்சிப் படுத்திக் காட்டிய அந்த நகரமும் கூட இப்போதும் இருக்கிறது. அந்த நகரத்தின் இப்போதைய பெயர் ஊஜ். இயக்குநர் அதே நகரத்தில் தான் தனது படத்தை எடுத்திருக்கிறார். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடும் எனக் குருட்டுத் தனமாக நம்பிய முதலாளித்துவத்தின் தொடக்கக் காலத்தில் இயற்கையும் எளிமையான வாழ்க்கை முறைகளும் அழிக்கப்பட்டதைப் பேசுபொருட்களாக்கியுள்ள படம் அது. பெரும் தொழிற்சாலையும் அதன் இருப்புக்காக உருவாக்கப் பெற்ற நகர வாழ்க்கையையும் விரிவாகச் சித்திரித்துள்ளது. அப்படத்தில் மூன்று பேர் முக்கியக் கதாபாத்திரங்களாக வருகின்றனர். அவர்கள் மூவரும் வெவ்வேறு பின்னணியில் – ஒருவர் போலந்து நாட்டவன்; இன்னொருவன் ஜெர்மானியன்; மூன்றாமவன் யூதன் – இருந்து வந்தவர்கள் நண்பர்களாக ஆனதே தொழிற்சாலையை உருவாக்கவும் பணம் சேர்க்கவுமான வேட்கையால் தான். மூவரும் தொழிற்சாலையை வளர்த்தெடுப்பதில் காட்டும் அக்கறையால் எப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானக் குணத்தை இழக்கிறார்கள் என்பதைப் படம் அடுக்கிக் கொண்டே போகிறது. பிரமாண்டமான தொழிற்சாலை உருவாகும்போதே வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான நல்ல வீடு, போக்குவரத்து, மருத்துவம் போன்றன கவனம் பெறாமல் ஒதுங்கிப் போகிறது என்பதைச் சொல்வதோடு, கலை, அழகியல், பண்பாட்டு நடவடிக்கைகள் எனப் பலவற்றின் மீதிருந்த அக்கறைகளும் விலகிக் கொண்டே போவதையும் படம் சத்தமில்லாமல் வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

இந்தப் படத்திற்கான அடிப்படைக் கதையை விவாடிஸ்வாரெய்மண்ட் என்பவரின் நாவலிலிருந்து இயக்குநர் உருவாக்கியிருக்கிறார் என்றாலும், இரண்டு நகரங்களின் கதைகளை எழுதிய சார்லஸ் டிக்கென்ஸ், ஐரோப்பிய நடுத்தர வர்க்க மன உருவாக்கத்தை எழுதிக் காட்டிய எமிலி ஜோலா, தொழிற்சாலை உருவாக்கத்தோடு உருவாகும் தொழிலாளி வர்க்கத்தை எழுதிக் காட்டிய மார்க்சிம் கார்க்கி போன்றவர்களோடு ஜெர்மானிய வெளிப்பாட்டியல் இயக்கத்தின் தாக்கமும் கொண்ட படைப்பாக அந்தப் படத்தை உருவாக்கித் தந்துள்ளார். உண்மையான நகரத்தை மட்டுமே பின்னணியாகக் கொள்ளாமல், அந்த நகரம் அதன் உருவாக்கக் காலத்தில் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதைக் காட்டுவதற்காக ஓவியங்களையும் கலை இயக்கத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி எடுக்கப்பெற்ற அந்தப் படம் தெரியாத மொழியில் இருக்கும் படம் என்ற உணர்வே இல்லாமல் எனக்குள் எளிமையாக நுழைந்து கொண்டது. அதற்கேற்றவாறு காட்சிகளை அடுக்கியிருப்பதோடு நடிகர்களின் பொருத்தமான உணர்வு வெளிப்பாடும் நடிப்பாற்றலும் பார்வையாளர்களைச் சென்றடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த படமாக இந்தப் படத்தை நினைக்கிறேன்

இந்தப் படத்தைப் பார்த்தபின் மாணவிகளோடு நடத்திய உரையாடலும் ஒருநாள் பயணமும் மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைகளை உருவாக்கும் நோக்கமும் பணத்தை ஈட்டுவதில் ஏற்படும் அளவுக்கடங்காத ஆசையும் மனிதாபிமான உறவுகளைச் சிதைக்கிறது என்பதைப் பேசும் இந்தப் படம் இப்போதைய போலந்துப் பொது மனநிலைக்கு எதிரானதாக இல்லையா? எனப் படம் பார்த்தபின் கேட்டேன். தொழிற்சாலைகளை விட மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய உறவும், பண்பாட்டின் மீது வைக்க வேண்டிய பற்றும் ஒரு விதத்தில் சோசலிசக் கலை இலக்கியவாதிகளின் மையமான கருத்தோட்டங்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லி விட்டுத் தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அதற்குக் கிடைத்த உதிரி உதிரியான பதில்களிலிருந்து தொகுத்துப் புரிந்து கொள்ள வேண்டியன பல இருக்கின்றன..

போலந்து அடிப்படையில் கத்தோலிக்கக் கிறித்தவ நாடு. கொஞ்சம் பழைமையின் மீது – குறிப்பாகச் சடங்குகள் மீதும், மூதாதையர்களின் மீதும் கொண்டுள்ள பாசம் ஆசியச் சமூகங்களை ஒத்தது எனச் சொன்னாள் ஒரு மாணவி. இந்தக் கூற்று முழுமையாக உண்மையானது என்பதை ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கல்லறைத் தோட்டங்களும், அக்கல்லறைகளின் அருகில் புதிது புதிதாக வைக்கப்படும் படையல் பொருட்களும் இப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. வருடத்தில் ஒரு நாள் உயிரோடு இருக்கும் தங்கள் குடும்பத்து மூத்தவர்களைத் தேடிச் சென்று வாழ்த்தைப் பெறும் சடங்கை இளைய சமுதாயம் மறந்து விடவில்லை. ஆண்களும் பெண்களும் திருமணம் முடித்துக் கொள்வதும் பிரிந்து வாழ்வதும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இங்கும் இயல்பாக இருக்கிறது என்றாலும் மூதாதையர்களுக்கான இடம் என்பது பண்பாட்டோடு தொடர்புடைய தனித்தன்மை என நினைக்கிறார்கள் போலந்துக்காரர்கள்.இந்த அடையாளத்தை அந்தப் படம் ஆழமாக உணர்த்திய படமாக நினைக்கப் படுகிறது. தொழில் வளர்ச்சிக்காக அந்த அடையாளத்தைப் போலந்துக்காரர்கள் விட்டுத் தரத் தயாரில்லை.

எப்போதும் போலந்து நாட்டுப் பொதுமனநிலை மற்றைய ஐரோப்பியப் பொது மனநிலையோடு முற்றிலும் ஒத்துப் போகும் தன்மை கொண்டதல்ல என்பதில் அவர்களுக்கு கொஞ்சம் பெருமிதமும் இருக்கிறது. பொது வாழ்க்கையிலும் தனிமனித வாழ்க்கையிலும் பெண்களின் இடம் கேள்விக்குரிய ஒன்றாக ஆவதற்குத் தொழிற்சாலைப் பெருக்கம் காரணமாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டிய வாக்களிக்கப் பெற்ற பூமி, அதற்காகவும் முக்கியமான படமாக இருக்கிறது என என் மாணவிகள் சொன்னார்கள். தொடர்ந்து அவர்கள் தந்த தகவல்களின் வழியாக அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளைப் பெற்றவர்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். படத்தின் இயக்குநர் ஆந்த்ரே வய்த [Andrzej Wajda (Polish pronunciation: ˈandʐɛj ˈvajda]போலந்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலச் சினிமா வரலாற்றில் மட்டும் அல்லாமல் அரசியல் பொருளாதார மாற்றங்களோடும் தன்னை இணைத்துக் கொண்டவர். லெக் வலேசாவோடு சேர்ந்து சாலிட்டாரிட்டு இயக்கத்தில் பணியாற்றியவர். வாழ்நாள் சாதனைகளுக்காக ஆஸ்கர் குழுவின் பாராட்டையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராட்டையும் பெற்றுள்ள ஆந்த்ரே வய்த போலந்து சினிமாவின் இன்னொரு முக்கியப் பெயரான ரோமன் போலன்ஸ்கியின் நகர்வுகளோடு சேர்ந்தே நினைக்கப்படுகிறார். அந்தக் குறிப்புகளைச் சொன்ன எனது மாணவி ஒருத்தி நீங்கள் விரும்பினால் நாம் அந்த நகரத்துக்குப் போகலாம் எனச் சொன்னாள். மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டு ஒருநாள் அந்நகரத்துக்கு என் மாணவிகளோடு போனேன்.

தலைநகர் வார்சாவிலிருந்து ரயிலில் பயணம் செய்தால் 4 மணி நேரத்தில் வாக்களிக்கப் பெற்ற அந்த பூமியில் உருவாகியிருக்கும் ஊஜ் என்னும் அந்த நகரத்தை அடைந்து விடலாம். ஒரு பழைய நகர் மையம்; அதிலிருந்து சுற்றிச் சுற்றி விரியும் விரிநிலைத் தன்மையில் அமைப்பாகும் புதிய நகரப்பகுதி என்பதுவே போலிஷ் நகரங்களின் பொதுக்கட்டமைப்பு.. ஆனால் ஊஜ் ஒரு நதியைப் போல நீட்டு வாக்கில் நீண்டு கொண்டே போகிறது. நடுவில் செல்லும் ரயில் பாதையின் ஓரங்களில் பல தொழிற்சாலைகள் நிரம்பிய நகரமாக இப்போது இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட அந்த நகரம் கொஞ்சம் அழுக்கடைந்த நகரமாகவே இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற தொழிற்சாலை அமைந்திருந்த கட்டடத்தை மட்டுமல்லாமல் அந்த முதலாளிகளின் மாளிகைகளையும் கூடப் பார்த்தோம் தொழிற்சாலை இப்போது கண்காட்சிக் கூடமாக ஆக்கப் பட்டிருக்கிறது. படத்தில் காட்சிக்கு மெருகூட்டிய பொருட்கள் அந்த மாளிகையில் நிரந்தரக் காட்சிப்பொருட்களாக வைக்கப் பெற்றுள்ளன. அவற்றைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். போலந்தின் சுற்றுலா வரைபடத்தில் ஊஜ் நகரத்தை ஆக்கியதில் இந்தப் படம் முக்கியப் பங்காக இருக்கிறது. அந்த மாளிகைக்குள் ஒரு அறையில் இயக்குநர் வய்தா பெற்ற பரிசுகளும் பட்டங்களும் பாராட்டுகளும் அடுக்கப்பெற்றுள்ளன.

ஊஜ் நகரம் ஆந்த்ரே வய்தவின் வாக்களிக்கப்பெற்ற பூமி என்ற சினிமாவோடு மட்டும் தொடர்புடைய நகரமாக இல்லாமல், போலிஷ் சினிமாவின் முக்கிய மையமாகவும் இருக்கிறது. போலிஷ் திரைப்பட அகாடெமி அங்கே தான் இருக்கிறது. சினிமாவின் அனைத்துப் பிரிவுகளையும் கற்பிக்கும் அந்த நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல விரிந்து கிடக்கிறது. அத்துடன் ஊஜ் நகரத்தின் முக்கியமான தெரு ஒன்றில் பித்தளையால் ஆன பெரும் நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்றுள்ளன. அந்நட்சத்திரங்களில் போலந்து சினிமாவுக்குப் பெயர் வாங்கித் தந்தவர்களின் விவரங்கள் பதிவு செய்யப் பெற்றுள்ளன. நூற்றுக்கும் அதிகமான நட்சத்திரங்களில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சினிமாவில் பங்கு பெற்றுச் சிறப்பிடம் போலந்துக் கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் எழுதி வைக்கப் பெற்றுள்ளன. இசைக்கலைஞர்கள், ஒளியமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிப்புக் கலைஞர்கள் என ஒவ்வொரு துறையிலும் சிறப்புப் பெற்ற ஒவ்வொருவருக்காகவும் தனித்தனி நட்சத்திரம். அந்த நட்சத்திங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை வாசித்துக் கொண்டே நடக்கும் ஒரு போலிஷ் யுவதியும் இளைஞனும் தங்கள் தேசத் திரைப்படக் கலையின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு அந்தப் பூமியை – வாக்களிக்கப் பெற்ற அந்தப் பூமியை மனதில் பதித்துக் கொண்டே வளர்கிறார்கள்..

இறந்த காலத்தின் தகிக்கும் வெய்யில் – விஞ்ஞானச் சிறுகதை – குமாரநந்தன்

download

அவன் வெள்ளிக் கிழமையைத் தவற விட்டுவிட்டான். அதை அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. அந்த வெள்ளிக் கிழமை பூமியிலிருந்து மொத்தமாகவும் தவறி விழுந்துவிடவில்லை. அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவன் இப்படி ஒரு கதையைப் படித்திருக்கிறான். அது மிகவும் அபத்தமாய் இருந்தது. ஆனால் இப்போது அப்படி ஒன்று நடந்திருப்பதை அபத்தமாக நினைக்க முடியவில்லை. இந்த நிகழ்வை யாரிடம் சொல்ல முடியும் என்று யோசித்தான். யாரிடமும் சொல்ல முடியாது என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. என்னதான் மணிக்கணக்காகப் பேசினாலும் யாரும் நம்பப் போவது இல்லை. சரி உங்களிடம் யாராவது வந்து (உங்கள் நண்பர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.)நான் வியாழக்கிழமை நைட் தூங்கப் போனேன். காலையில எந்திரிச்சப்போ சனிக்கிழமையா இருந்திச்சி வெள்ளிக்கிழமை எங்க போச்சுன்னே தெரியல என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள். அதே தான் நரேனின் பிரச்சனை. சரி ஒரு வெள்ளிக் கிழமைதானே போகட்டும் என்று முடிவெடுப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.

காபி கொண்டு வந்த சுகாசினியிடம் நேத்து நான் எங்க போயிருந்தேன் என்று மெதுவாகக் கேட்டான். அவள் அவன் தலையைத் தொட்டுப் பார்த்துவிட்டு “நல்லாத்தானே இருக்கீங்க ஏன் காச்சல் வந்தவராட்டம் உளர்றீங்க” என்றாள்.

இதை கடவுள் செயலாகவோ மாய மந்திரமாகவோ நினைத்துப் பயந்து போகும் அளவுக்கு அவன் முட்டாள் இல்லை. தனக்கு மனநோய் கண்டுவிட்டது எனவும் அவன் சந்தேகிக்கவில்லை. நிச்சயம் இது அறிவியல் விசயம்தான். ஜட உலகில் காலத்திற்கு ஒரு திசை உண்டு. அதில் புழுத்துளைகள் எனப்படும் காலத்துளைகளின் வழியாக ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்குள் தாவிச் செல்லும் சாத்தியங்கள் உண்டு. அவன் இதைப் பற்றி பிராட்பெரியின் கதை கூட ஒன்றைப் படித்திருப்பதாக நினைவு.

அந்த சனிக்கிழமையில் அவன் காலத்தைப் பற்றியும் அதன் திசை பற்றியும் புழுத்துளைகள் பற்றியும் ஏராளமான கட்டுரைகளை இணையத்திலிருந்து தரவிறக்கிப் படித்துக் கொண்டே இருந்தான். அவனால் ஓரளவிற்கு நம்பகமான முடிவிற்கு வர முடிந்தது. அன்றிரவு அவன் எங்கேயோ ஒரு நுண்ணிய புழுத்துளைக்குள் தவறி விழுந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவனது படுக்கை அல்லது அந்த அறை பிரபஞ்ச சலனத்தில் தானே புழுத்துளையாக மாறியிருக்க வேண்டும். அந்த இடத்தில் அவனும் இருந்ததால் அது அவனைப் பாதித்திருக்கிறது. அவனை வெள்ளிக் கிழமைக்கு கொண்டு செல்லும் வழக்கமான நடைமுறையில் இருந்து மாற்றி சனிக்கிழமைக்குள் கொண்டு சென்றிருக்கிறது. இப்படி யாராவது புழுத்துளைக்குள் தவறி விழுந்து வேறு காலத்திற்குச் சென்ற செய்தி எங்கேயாவது இருக்கிறதா என ஞாயிற்றுக் கிழமை முழுவதும் இணையத்தில் தேடிக் கொண்டே இருந்தான். ஆனால் அப்படி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தன் வீட்டில் ஒரு புழுத்துளை இருக்கும் விசயம் மட்டும் உறுதியாகிவிட்டால் உலகமே இதைக் கொண்டாடித் தீர்த்துவிடும். நிலாவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் மாதிரி இவனும் உலக வரலாற்றில் பதிவாகிவிடுவான். அன்று இரவு முழுவதும் அவனுக்கு இதே மாதிரியான இனிமையான கனவுகள் வந்து கொண்டே இருந்தன. தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அச்சத்தோடு படுக்கையைப் பார்த்தான். ஒருவேளை புழுத்துளை தன்னை இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு அப்பால் வீசிவிட்டால்? நினைக்கவே நடுக்கமாய் இருந்தது. படுக்கையை இழுத்து தள்ளிப் போட்டுக் கொண்டான்.

அந்த சம்பவம் அவனை வேறு ஒருவனாக மாற்றி விட்டது. எந்திரத் தனமாக அலுவலகத்துக்குப் போவது வேலைகள் செய்வது ஏதோ ஒரு சிந்தனையில் எப்போதும் நிலைத்திருப்பது என்று அவன் தனக்குள்ளிருந்து வெளியேறியவனைப் போல இருந்தான். வெய்யில் காலம் முழுவதும் அவனை இம்சித்து வந்த இந்த உணர்வு படிப்படியாகக் குறைந்துவிட்டது.

குளிர்காலத்தின் வெள்ளிக் கிழமை இரவு ஒன்றில் அவன் தன்னுடைய காஷ்மீரக் கம்பளியை நன்றாகப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வியர்த்துக் கொட்டி மூச்சு முட்டியது. தூக்கத்திலிருந்து அடித்து எழுப்பப் பட்டவனைப் போல எழுந்தவன் எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அந்தக் கம்பளியை வீசி எறிந்து விட்டு உட்கார்ந்தான். அவன் கண்கள் அணிச்சையாய்க் காலண்டரைப் பார்த்தது. காலண்டிரில் அது மே மாதம் பதினைந்தாம் தேதியாய் இருந்தது. ஒருவேளை தான் முன்னைப் போல ஒருவருடத்தை இழந்துவிட்டோமோ என்று பீதியோடு வெறித்துப் பார்க்கையில் அது கடந்து சென்ற மே மாதமாய் இருந்ததை அவன் மூளை கொஞ்சநேரம் கழித்துதான் புரிந்துகொண்டது.…

மீண்டும் ஒரு கோடை காலத்தை அனுபவிக்க வேண்டுமா என்கிற கேள்விதான் அவனுக்கு முன் எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு நின்றது. அல்லது ஏற்கனவே நடந்தது போல இன்று ஒரு நாள் மட்டுமா தெரியவில்லை.

அது பழைய நாளாய் இருந்தாலும் குறுக்கே மூன்று மாதங்கள் கடந்து சென்றிருந்ததால் அந்த நாளைப் பற்றிய ஒரு இம்மி அளவு கூட எதுவும் நினைவில் இல்லை. அந்த நாளுக்கே உரித்தான விசயம் என்று எதுவும் இல்லாததால் வெறுமனே போய்க் கொண்டிருந்தது. வெய்யில் மட்டும் தான் அந்த நாளின் பழமையை முகத்தில் அறைவது மாதிரி உணர்த்திக் கொண்டிருந்தது. சுகாவிடம் அவன் பேசிய வார்த்தைகள் கூட ஏற்கனவே பேசியதாய்த்தான் இருக்கும். ஒரு வேளை புதியதாய் எதாவது பேசியிருப்போமா என்பதை அனுமானிக்க முடியவில்லை. தான் குளிர் காலத்தில் இருந்து மீண்டும் இங்கே வந்துவிட்டதைப் பற்றிப் பேசினால் அது புதியதாய் இருக்கும் ஆனால் அது தேவையில்லாத குழப்பங்களை விளைவித்துவிடும்.

ஏதாவது ஒரு ஆதாரப் பூர்வமான விசயத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான் இதைப் பற்றி யாரிடமும் பேச வேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாய் இருந்தான். பெரிய விசயங்கள் கைகொடுக்காவிட்டாலும் சின்ன விசயங்கள் ஏதாவது ஒன்று அவனுக்குக் கை கொடுக்கும் என்று ஆணித்தரமாக நம்பினான்.

பேப்பரில் அவனுடைய அபிமான நடிகர் நடித்த படம் அடுத்த வாரம் வெளிவரவிருப்பதாக விளம்பரம் வந்திருந்தது. இவனுக்குத் தெரியும் அந்தப் படம் ரிலீசாகி ரெண்டே நாளில் எடுத்துவிட்டார்கள். இவன் இன்னும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்தப் படத்தை தான் பார்த்துவிட்ட விசயத்தைச் சொல்லி தான் எதிர்காலத்திலிருந்து இங்கே வந்திருப்பதை எளிதாகப் புரிய வைத்துவிடலாம். அந்தப் பக்கத்தில் விளம்பரம் செய்திருந்த எல்லாப் படங்களுமே ரிலீசாகிவிட்டிருந்தது. ஆனால் அவன் தான் ஒன்றைக்கூடப் பார்க்கவில்லை.

இந்த மூன்று மாதத்தில் வரலாற்றுச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை அப்படி நடந்திருந்தால் அதைப் பற்றி செய்தியைப் பரப்பி எதாவது சாகசம் செய்து ஒரே இரவில் உலகம் பூராவும் பிரபலம் ஆகிவிடலாம். ஆனால் அந்தக் கொடுப்பினை அவனுக்கு இல்லை. இதே ரீதியில் என்னவாவது ஞாபகம் வருகிறதா என்று சிந்தித்து சிந்தித்தே அவன் சோர்ந்துவிட்டான். கடைசியில் எல்லா ஆர்வங்களும் வடிந்துவிட்டது. ஒன்றும் நடக்கவில்லை. அவன் வேறு ஒரு காலத்திலிருந்து ஒரு மூன்று மாதம் பின்னோக்கி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இவ்வளவு சாதாரணமாக அவலமாகக் கழிந்துகொண்டிருக்கிறது.

images (2)

கிட்டத்தட்ட அவன் கைவிடப் பட்டவனைப் போல கையாலாகாதவனைப் போல என்ன செய்வது என்று தெரியாதவனாய் மறத்துப் போன மூளையோடு அந்த நாளை எதிர் கொண்டான். அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் உலகத்தில் யாருக்கும் கிடைக்காத இந்த வரம் தனக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. இது மீண்டும் ஒரு முறை தன் வாழ்வில் நடக்கும் அப்போது அவன் கையில் உலகம் முழுவதும் சென்று சேரும் படியான அதிசயமான செய்தி சிக்கும். அப்போது இந்த உலகமே தன்னைத் திரும்பிப் பார்க்கும் என்று சமாதானம் செய்து கொண்டான்.

அன்று இரவு அவனால் சரியாக தூங்க முடியவில்லை. தூங்காமல் உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. ஒருவேளை தூங்காவிட்டால் பழையபடி தன்னுடைய காலத்திற்குத் திரும்பும் நிகழ்வு பாதிக்கப்பட்டுவிடுமோ எனப் பயமாய் இருந்தது. காலையில் எழுந்தபோது அவன் அதே கோடை காலத்திலேயேதான் இருந்தான். ஏமாற்றமாக இருந்தது. இதைப்பற்றி யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்றும் தெரியவில்லை. ஏதாவது சின்ன விசயத்தை வெளிப்படுத்தினால் கூட பரபரப்பை உண்டாக்கிவிடலாம். ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை.

 

பேப்பரைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த யோசனை வந்தது. நிச்சயம் ஏதாவது கொலை பற்றியும் கொலை செய்த நபரைத் தேடுவதாகவும் செய்தி வந்திருக்கும் கொலைகாரனைப் பற்றி நாம் திரும்ப ஐந்தாறு நாளில் செய்தியைப் படித்திருப்போம். ஏதாவது ஞாபகம் வந்தால் நாமே போய் கொலைகாரனைப் பற்றிய விவரத்தைச் சொல்லி அதன் மூலம் தான் இந்த நாளை ஏற்கனவே வாழ்ந்துவிட்டதை உலகத்துக்கு நிரூபித்துவிடலேமே?

அவன் எதிர் பார்த்தமாதிரியே ஒரு கொலைச் செய்தி வந்திருந்தது. ஆனால் அந்தச் செய்தியை ஏற்கனவே படித்த மாதிரி கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை. அதிலும் கொலைகாரனைத் தேடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அது சம்பந்தமாக எந்த ஞாபகமும் வரவில்லை. “தினமும் எந்திரிச்ச உடனே அரை மணிநேரம் அந்தப் பேப்பர்ல அப்படி என்னதான் பாப்பீங்களோ?” என்கிற சுகாவின் குரல் இப்போது திடீரென்று காதுக்குள் கேட்டது

வெய்யில் வறுத்தெடுத்தது. இந்த வெய்யில் காலத்தைத் திரும்ப அனுபவிக்க மட்டும்தான் நான் இந்தக் காலத்துக்கு வந்தேனோ என்று வெறுப்பாய் இருந்தது. அலுவலகத்துக்குப் போய்விட்டு வருவதற்குள் அப்பா எக்கச் சக்கமான வேக்காடு இன்னிக்கி மழ வந்தாலும் வரும் என்று அவன் காதுபட ஒரு நூறு பேராவது சொல்லியிருப்பார்கள். ஆமாம் கோடையில் ஒருநாள் திடீரென்று எதிர்பாராத விதமாக மழை வந்தது உண்மைதான் அது இந்த நாள்தானா அல்லது வேறு எந்தக் கருமம் பிடித்த நாளோ தெரியாததால் அப்படிச் சொல்பவர்களிடம் அமாம் என்பது போல மையமாகத் தலையை ஆட்டி வைத்தான். (உள்ளுக்குள் தலை தலையாய் அடித்துக் கொண்டான்.)

ஏற்கனவே குடியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரனான மோகனைக் கடைவீதியில் சந்தித்த போது அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றான். ஒருமாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்பது நரேனுக்குத் தெரியும் சூன் மாதத்தில் ஒரு நாள் இவனேதானே இழவுக்குப் போய்விட்டு வந்தான்‘. ஆனால் இந்த விசயத்தை அவனிடம் எப்படி சொல்வது? என்று யோசித்தவனாய் அப்படியா என்றான்.

தினம் தினம் தான் பழையபடி குளிர்காலத்திற்குச் சென்றுவிடுவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டே தூங்கச் சென்றான். ஆனால் அந்த பாழாய்ப் போன வெற்றுக் கோடைக் காலம் திரும்ப சாவகாசமாய் அவன் வாழ்க்கையில் மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. தனக்கு நடந்துகொண்டிருக்கும் விசயத்தை வெளியில் சொல்ல முடியாத அழுத்தம் அவன் மனதை அச்சம் தரும் வகையில் பாரமாக்கிக் கொண்டு வந்தது. நாளுக்கு நாள் இப்படியே கழியும் போது தன்னுடைய மூளை வெடித்துச் சிதறிவிடும் போல பயந்தான் மனதைச் சகஜமாக வைத்துக் கொண்டு தன்னுடைய பழைய காலத்திற்குப் போய்ச் சேருவோமா அல்லது இந்தக் காலச் சுழலிலேயே சிக்கி செத்துப் போய்விடுவோமா என்று பேரச்சமாய் இருந்தது. சுகா “நீங்க என்னமோ மாறிப் போயிட்டீங்க. ஏதோ ஒரு விசியம் உங்கள ரொம்ப தொந்தரவு செய்யுது ஆனா அது என்னன்னு எங்கிட்ட கூட சொல்ல மாட்டீங்கறீங்க” என்று ஒருநாள் திடீரென்று பிடித்துக் கொண்டாள். அவன் நடந்ததைச் சொல்லிவிட துடித்தான். ஆனால் அதற்குப் பின் கட்டாயம் மனநோய் டாக்டரைச் சந்திக்க வேண்டிவரும் என்பதால் அவன் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு ஒண்ணுமில்லையே என்றான்.

தூக்கத்தில் ஏதாவது உளறியிருக்க வேண்டும் அல்லது தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் இரண்டு நாளில் சுகா சரி நாம இன்னைக்கி ஒரு டாக்டரைப் பாக்கலாமா என்று கேட்டாள். நரேன் கையிலிருந்த காபி கோப்பையை டிவியைக் குறிபார்த்து வீசியெறிந்தான் “எதுக்கு என்ன இப்ப டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகனும்ன சொன்ன?” என்று காட்டுத் தனமாய்க் கத்தினான். அவன் கைகள் நடுங்கியது. சுகா பேயறைந்தது போல நின்றாள். “உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி நடந்துக்கற? எனக்கு ரொம்ப பயமா இருக்கு கட்டாயம் நாம ஒரு சைக்கியாரிஸ்ட பாத்தே ஆகனும் இல்ல ஊருக்குப் போன் பண்ணி எங்க அப்பம்மா உங்க அம்மா எல்லாத்தையும் வரச் சொல்லப்போறேன்”. என்று அவளும் அழுதுகொண்டே கத்தினாள். இவனுக்கு கோபம் உச்சியைப் பிளந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டான். அந்த நிலையிலும் இது ஏற்கனவே நடக்கவில்லையே எனில் இந்த சூனியம் பிடித்த நாட்கள் எந்தக் காலத்தில் இருந்துதான் வருகின்றன என்று குழம்பினான். என் வாழ்க்கை இரண்டாகப் பிளந்து கொண்டதா இனி அந்த அமைதியான வேலையை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த பழைய காலத்திற்குத் திரும்பவே முடியாதா? ஒரு பைத்தியக் காரனுக்கு நிகரான பட்டத்தோடுதான் மீதி வாழ்க்கையா?

டாக்டர் அன்புச் செல்வத்திடம் சுகா நேரம் வாங்கியிருந்தாள். முதலில் அவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தான். ஆனால் அவர் அவனை உட்காருங்க என்ற உடனேயே கடகடவென்று எல்லா விசயங்களையும் கொட்டிவிட்டான். டாக்டர் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு நீண்ட நேரம் யோசித்தார். என்ன படிச்சிருக்கீங்க எங்க வேல பாக்கறீங்க எந்த நடிகரப் பிடிக்கும் என்பது போல சட் சட்டென்று சின்னச் சின்ன கேள்விகள் கேட்டார். கடைசியாக “சரி இந்த மூணு மாசத்த நீங்க ஏற்கனவே வாழ்ந்துட்டதா சொல்றீங்க அப்ப இப்படி ஒரு சம்பவம் நடந்ததா நீங்க என்ன வந்து சந்திச்சீங்களா இல்லையே அப்ப இது எப்படி பழைய நாள் ஆகும். இது வேற ஒரு புதுநாள்தானே?” என்று ஒரு கொக்கிக் கேள்வியைக் கேட்டு அவனை மூச்சுத் திணற வைத்தார்.

“அதான் டாக்டர் எனக்கும் புரியல”. என்றான். “சரி இந்த மூணு மாசத்துல நடந்த முக்கியமான விசயம் ஏதாவது ஒண்ணு சொல்லுங்க”. அங்கதானே டாக்டர் பிரச்சனை மூணுமாசமா சொல்லிக்கிற மாதிரி பெரிய விசயம் எதுவும் நடக்கல சின்னச் சின்ன விசயம் நிறைய நடந்திருந்தாலும் அது எதுவுமே எனக்கு சரியா நினைவில்ல. சரி நீங்க சொல்லுங்க நாலு நாளைக்கி முன்னாடி உங்க வீட்ல என்ன டிபன்?” டாக்டர் வாய்விட்டுச் சிரித்தார். உண்மைதான் உங்க நிலைமை எனக்குப் புரியுது. ஆனா ஆதாரம் இல்லாம நான் எப்படி இத நம்பறது. நீங்க சொல்றீங்க அப்படீங்கறதுக்காக நான் நம்பனுமா?”

எனக்கு ஒரு விசயம் ஞாபகம் வருது டாக்டர் போன வாரம் என்னோட பிரண்ட் ஆனந்த்தப் பாத்தப்போ அவிங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னான். ஆனா அவரு ஒரு மாசத்துல இறந்துட்டார் அது எனக்குத் தெரியும். அவர் இறந்துடுவார்னு நான் எப்படி அவன் கிட்ட சொல்ல முடியும். அதனால நான் எதுவும் சொல்லல. இப்ப சொல்றேன். அதுதான் ஆதாரம் அவரு இறந்துடுவார். ஆனா இப்ப ரொம்ப நல்லாவே இருக்கார்”.

டாக்டர் திரும்பவும் யோசித்தார். “ஒகே நாம இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனா என்னால இதை ஒரு ஆதாரமா ஏத்துக்க முடியல. நீங்க கோச்சுக்கலைன்னா ஒண்ணு சொல்வேன். உலகத்தில நடக்காத ஒரு கற்பனையான விசயம் தனக்கு நடந்துட்டதா நம்பறதும் ஒரு மனநோய்தான். கவலைப்படாதீங்க கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடலாம்.”

டாக்டரின் முகத்தில் ஓங்கிக் குத்தாமல் தான் எப்படித் திரும்பி வந்தோம் என்று அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இந்தக் கருமம் பிடித்த காலம் எனக்கு இப்படி பைத்தியக்காரப் பட்டத்தை வாங்கித் தரவா என்னை இங்கே அனுப்பியது என்று நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான். இப்பொழுது புதிய விசயங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டதைப் பார்த்தால் இனி ஏற்கனவே நடந்தது என நான் அனுபவித்தது கூட இனி நடக்குமா என்னவோ தெரியவில்லை. ஒருவேளை ஆனந்தின் அப்பா சாகாமல் கூட இருந்துவிடலாம். அப்போது தன்மீது லேசாக விழுந்திருக்கும் மனநிலை சரியில்லாதவன் என்கிற முத்திரை பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிடும். எவ்வளவு யோசித்தும் இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. தன்னுடைய காலம் இரண்டாகப் பிளந்துகொண்டதா? காலம் இரண்டாகப் பிளந்து கொள்ளுதல் பற்றி அவன் இதுவரை எங்கேயும் படிக்கவில்லை. ஒருவேளை இப்படியே போனால் தானே அது பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி விடலாம் என்று தோன்றியது. இது என்னுடைய நல்ல காலமா அல்லது கெட்ட காலமா? என்று தன்னையே அச்சத்தோடு கேட்டுக் கொண்டான்.

அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்து கொண்டிருந்த இந்தக் குழப்பங்கள் எல்லாம் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. டாக்டரைப் பார்த்துவிட்டு வந்து இரண்டு நாள் கழித்து பழைய படி குளிர்கால விடியற்காலையில் எழுந்தான். நிம்மதியாய் இருந்தது. இனி எந்தக் காலத்துக்குள்ளும் நழுவிப் போகாமல் என்னை எல்லோரையும் போல நிலை நிறுத்திப் பிடித்துக் கொள் கடவுளே என்று கதறி அழுது வேண்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

சாப்பிடும் போது சுகாவிடம் கேட்டான் “ஆமாம் நாம எப்பவாவது சைக்யாரிஸ்ட்டப் பாக்கப் போனமா?” அவள் மேலும் கீழும் பார்த்துவிட்டு “இதென்ன கேள்வி உங்களுக்கு என்ன ஆச்சி” என்றாள். இவன் சிரித்துக் கொண்டு அப்ப அது கனவா இருக்கும்னு நினைக்கிறேன் என்று சமாளித்துவிட்டான்.

நகரத்தில் டாக்டர் அன்புச் செல்வன் என்று யாராவது இருக்கிறார்களா என முகவரிப் புத்தகத்தில் தேடிப் பார்த்தான். இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் போலத் தோன்றியது. அலுவலகத்திலிருந்து அன்று மாலையே அவரிடம் அப்பாய்மெண்ட் செய்து கொண்டான்.

images (1)

அதே அலுவலக அறைதான். அவரேதான். இவன் போகும் போது அறை அதீத சுத்தமாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் “டாக்டர் உங்களுக்காகத் தான் வெய்ட் பண்ணிகிட்டிருக்கார்” என்று ரிசப்சன் பெண் சொல்லவும் உள்ளே நுழைந்தான். டாக்டர் எழுந்து நின்று ஏற்கனவே அறிமுகமானவரைப் போலக் கை குழுக்கினார். இவனும் ஏற்கனவே பழகியவனைப் போலவே சிரித்துக் கொண்டிருந்தான். “நாம ஏற்கனவே சந்திச்சிருக்கோம் இல்லையா?” என்றான். டாக்டர் அதே புன்னகையோடு கருவிழிகளை மேலே உயர்த்தி இறக்கி எஸ் அப்கோர்ஸ் நாம ஏற்கனவே சந்திச்சிருக்கோம்னு சொல்லலாம் என்றார். திடீரென்று அவர் முகத்தில் வியப்பு பெருகியது.

இவனுக்கு ஆர்வத்தில் நெஞ்சு குதிக்க ஆரம்பித்தது. “நான் உங்ககிட்ட ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தேன் இல்லையா?” ஆமாம் என வேகமாய்த் தலையசைத்துக் கொண்டு வியப்பாய் இவனைப் பார்த்து “ஆனா அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றதும் வியப்பு இவனையும் தொற்றிக் கொண்டது. “என்ன சார் கேக்கறீங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தது நான்தானே?” “இருக்கலாம் ஆனா நீங்க வந்தது என் கனவுல தானே அத எப்படி நீங்க கரெக்டா சொல்றீங்க?”

ஒரு நிமிடம் இருவரும் ஸ்தம்பித்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். “சரி கனவுல நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றான். “இருக்கு நேர்ல நடந்தது மாதிரி அப்படியே இருக்கு” “அப்ப நான் வேற வேற காலத்துக்கு ஜம்ப் ஆகிப் போறத நம்பறீங்களா?” டாக்டர் யோசனையோடு நெற்றியைக் கீறிக் கொண்டார். “கனவு கண்டத வச்சி ஒரு புது தியரிய உருவாக்கச் சொல்றீங்களா?” “ஆனா நான்தான் நேர்லயும் வந்திட்டேனே?” “எல்லாம் ஒரே விசித்திரமா இருக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியலை. நீங்க என்னையும் ஒரு மனப்பிறழ்வு ஆளா மாத்திடுவீங்க போல இருக்கு. ஒண்ணு செய்யலாம் எனக்குத் தெரிஞ்ச எழுத்தாளர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட நாம ரெண்டு பேருமே நடந்ததைச் சொல்லுவோம் ஒரு இன்ட்ரஸ்டிங்கான கதை கிடைக்க வாய்ப்பு இருக்கு” என்றார். அவர் சகஜமாகத்தான் சொன்னார். ஆனால் கதையில்தான் இதெல்லாம் நடக்கும் என்கிற தொனி அதில் தொக்கி நிற்பது இவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தாலும் ஒரு நல்ல நகைச்சுவையோடு விசயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக மனம் விட்டு சிரித்து வைத்தான்.

“எனக்கென்னவோ நம்பிக்கையில்லை டாக்டர் அந்த எழுத்தாளர் நல்லாத்தான் இருக்கு ஆனா நம்பறமாதிரி இல்லை இதை எழுதினா என் பேர் பஞ்சர் ஆயிடும்னு சொல்லுவார்னு நினைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கிளம்பும் விதமாக அவர் கைகளைப் பற்றிக் குலுக்கினான். டாக்டர் அட்டகாசமாகச் சிரித்தார்.

குறிப்பு:- புழுத்துளைகள் (wormholes) பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தப் பக்கத்தில் காணப்படும் விபரங்களை ஒரு முறை பார்த்துக் கொள்ளவும். http://www.eegarai.net/t93790-topic

 

பதுமையும் ராஜகுமாரியும் – 3 நாவல் பத்மராஜன் தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

 

images

 

 

3. திறப்பு விழா

 

மீறிப்போனால் அரைமணி நேரம் என்று ஆரம்பித்த அந்த திறப்புவிழா ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீண்டு போனது. அவ்வளவு நேரமும் தீருலால் அனுபவித்த மனப்பதட்டம் அவருக்கு மட்டுமே தெரியும். ‘ தயவு செய்து என்னைத் தொடாதீர்கள் ‘ என்றெழுதப்பட்டட ஒரு ’ப்ளக்கார்ட்’ தொங்கவிட்டிருந்ததால் நல்ல வேளையாக யாரும் தொடாமல் காப்பாற்ற முடிந்தது. ராஜாவுடன் ஒரு கூட்டமே வந்திருந்தது. அவருடைய அதிகாரபூர்வ வைப்பாட்டியான அருந்ததி என்னும் உலகப்பேரழகி தொடங்கி படிப்படியாக விதூஷகர்கள் வரையிருந்த அந்தப் பெரிய குழுவில் எல்லாவருக்கும் பதுமையை மிகவும் பிடித்துப்போனது. சிலைத்திறப்பு வைபவம் முடிந்தபிறகு, அவர்களில் பெரும்பாலானவர்களும் பதுமையுடன் நின்று தனித்தனியே போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்றதுதான் காலதாமத்துக்குக் காரணம். தன் திட்டம் வெற்றி பெற்றதில் மனதுக்குள் மட்டற்ற மகிழ்ச்சி தோன்றினாலும். இடையில் எங்காவது குட்டு வெளிப்பட்டுவிட்டால் ஏற்படும் அவமானத்தையும் கெட்ட பேரையும் நினைக்கும் போது தீருலாலின் மனம் பெரும்பீதி அடைந்தது. லைட்டுகளின் கண்கூசும் வெளிச்சமும் பின்னணியில் செவிட்டில் அறையும் சங்கீதமும் தாராளமாய் கரை பொங்கி வழிந்த போதையும் எல்லாம் சேர்ந்து பித்துப்பிடித்ததைப் போல ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த அந்த ராஜாவின் கும்பலை அங்கிருந்து பத்திக்கொண்டு போவதற்குள் படாதபாடு பட்டுவிட்டது தீருலால் குடும்பம்.

 

ஓரளவு ஆளொழிந்த பிறகு பதுமையில் சில சில்லறை வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லி திரை மூடச் செய்தார்.

 

ஒரு மாதத்துக்குப் பிற்கு மீண்டும் திரை விலகியபோது, அங்கே சில்லறை  வேலைகள் பூர்த்தியான துவாரபாலகனின் பதுமை நின்றது. அது சுப்பன்தான்.

 

இந்த  ஒரு மாத காலத்தில் தீருலாலும் சுப்பனும் தீவிரமாகக் கணக்குப் பேசி முடித்தார்கள்; கடுமையான பயிற்சியும் சோதனைகளும் நடத்தினார்கள்; ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டன. எல்லா அக்னிப்பரீட்சைகளையும் வெற்றிகரமாகக் கடந்து வந்த சுப்பன் அவன் வைத்த நிபந்தனைகளெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுத்தான் நியமிக்கப்பட்டான்.

 

மூன்று  நிபந்தனைகளின் பேரில் பதுமையின்  நியமனம் நடந்தது.

 

சுப்பன் கேட்ட சம்பளத்தை கொடுத்துவிடலாமென்று தீருலால் ஒப்புக்கொண்டார். அவன் செய்யும் வேலையின் கடுமையை வைத்துப் பார்க்கையில் அது அத்தனை பெரிய தொகையொன்றுமில்லை.

 

இரண்டாவது நிபந்தனை, சுப்பனுக்கு தினமும் போய் வர வேண்டும் என்பது. பதுமையின் ரகசியம் வெளியே தெரிந்துவிடும் என்று தீருலால் சிறிது நேரம் போராடிப் பார்த்தார். ஆனால், சுப்பனுக்கு தினமும் போய்த்தான் தீர வேண்டும். போய் வருவதிலிருக்கும் கஷ்டங்களையெல்லாம் அவன் எப்படியவது சகித்துக்கொள்வான். தன் சைக்கிளிலேயே போய் வந்து விடுவான். ஆனால் அவன் தினமும் போய் அவனுடைய சொந்தங்களையும் நண்பர்களையும் பார்த்தே ஆகவேண்டும்.

 

யார்  இநத சொந்தங்களும் நண்பர்களும் என்று கேள்விக்குத் தெளிவான விடை வரவில்லை. நிர்ப்பந்தித்துக் கேட்கத்துவங்கியபோது, ‘அதெல்லாம் முதலாளிக்குத் தெரியவேண்டியதில்லை’ என்று அவன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய் சொல்லிவிட்டான். அதனாலேயே அவனுடைய வீடு எங்கேயிருக்கிறதென்று கேட்க அவருக்கு தைரியம் வரவில்லை. தினமும் போய் வரவேண்டுமென்றால் இந்தப் பாலைவனத்துக்குள் எங்கோதான் வீடு இருக்கவேண்டுமெண்று யூகித்துக் கொண்டார். அவனுடைய பேரைக் கேட்டபோது முதலாளிக்கு விருப்பமான பேர் சொல்லி அழைத்து கொள்ளுமாறு அனுமதி கொடுத்தான். அப்படிதான் சுப்பன் என்ற பெயர் அவனுக்கு வந்து சேர்ந்தது.

 

பதுமையின் மூன்றாவது நிபந்தனையைக் கேட்டபோது தீருலாலுக்கு உள்ளுக்குள்  சிரிப்பு வந்தது.

 

’சொர்க்கத் தீவு’க்கு ஒரு முறையவது போக வேண்டுமாம். அனுமதி இலவசமாக்கப்பட்டதன் மறுநாள் முதலாக சுப்பன் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். யாராரோ சொல்லக் கேட்டு அவன் சொர்க்கத்தைப் பற்றி அறிந்து வைத்திருந்தான். என்றாவது ஒரு நாள், ஒரே ஒரு முறை போதும், அவனை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்.

 

அவனுடைய விருப்பத்தின் தீவிரத்தை முதலாளி உணர்ந்து கொண்டார். இதுதான் அவனைக் கட்டிவைப்பதிற்கான முளைக் கம்பு என்பதை அவர் அப்போதே மனதில் பதியவைத்துகொண்டார்.

 

’சொர்க்கத்  தீவு’க்குப் போய்வருவதின் நடைமுறைப் பிர்ச்னைகளை தீருலால் மிகைப்படுத்திக் கூறினார். ஹெலிகாப்டரின் இருக்கைகள் எல்லாம் சில ’ஸ்டார் கோவில்’களின் பூஜையைப் போல பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்யப்பட்டவை என்றும் அதன்படிதான் ஒவ்வொரு ஹெலிகாப்டரும் மேலே எழுகிறது என்றும் சுப்பனுக்கு அப்படியொரு ஆசை இருந்தால் இப்போதே ஒரு பெரிய தொகை செலுத்தி பெயரைப் பதிவு செய்யவேண்டுமென்றும் தமாஷ்கோட்டையில் எந்த விதிகளும் எப்போதும் மீறப்படமுடியாதவை என்பதால் இப்போது பதிவுசெய்தால்கூட எத்தனையோ வருடங்கள் அவன் காத்திருக்கவேண்டும் என்றும் அவர் அவனுக்குப் புரியவைத்தார். பரவாயில்லை என்பதாகவும் தான் காத்திருக்கத் தயார் என்பதாகவும் இருந்தது அவனுடைய எதிர்வினை.

 

தன்னுடைய பிடி இறுகுகிறது என்று தெரிந்தவுடன் தீருலாலின் வியாபார மூளை இன்னும் விழித்துக்கொண்டு செயல்படத்துவங்கியது. ’சொர்க்கத்து’க்கு ஒரு முறை போய்வருவதன் பிரம்மாண்ட செலவைப்பற்றி அவர் வர்ணிக்கத் துவங்கினார். கணக்குகளைப் பற்றிய எந்தவிதப் புரிதல்களும் அவனுக்குக் கிடையாது என்று தெரிந்ததும், கணக்கில் மன்னனான தீருலால் இடியாப்பச் சிக்கல் பிடித்த கணக்குகளைச் சொல்லி அவனைக் குழப்பினார். சுப்பனைப் போன்ற ஒரு நபரால் அங்கே போய் வருவதற்கான பணத்தைச் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான காரியம் என்று அவர் அறுதியிட்டுக் கூறினார். ஆனாலும் ’பரவாயில்லை, போய்த்தானாகவேண்டும்’ என்ற தன் நிலைப்பாட்டிலிருந்து சுப்பன் அணுவளவும் அசைந்துகொடுக்கத் தயாரில்லை.

 

இறுதியில் ’ரேட்’டிலும் மற்ற வகைகளிலும் மேனேஜ்மெண்டுக்குத் தெரியாமல் சில தில்லுமுல்லுகளும் விலக்குகளும் செய்தாவது ஒரு நாள் ’பதுமை’யை தீவுக்கு கூட்டிப் போவதாக தீருலால் வாக்களித்தார். ஆனாலும் சுப்பன் ஒரு பெரிய தொகையைக் கட்டியே ஆக வேண்டும்.

 

சுப்பனுக்கு சந்தோஷமாகிவிட்டது. சம்பளத்தின் முக்கால் பங்கையும்  பிடித்துக் கொள்ளுமாறு அனுமதி அளித்தான். காலை முதல் இரவு வரை நீர் கூட அருந்தாத பதுமைக்கு, என்ன செலவு வந்துவிடப் போகிறது என்று அவன் இலகுவாகக் கேட்டபோது, அதுவும் சரிதானென்று தீருலாலும் ஒப்புக்கொண்டார். கூடவே சுப்பன் தனி ஆள் என்றும் குடும்ப பாரங்கள் ஏதும் இல்லாதவன் என்றும் அவர் உற்சாகத்துடன் புரிந்துகொண்டார்.

 

சம்பளம் வாங்குவதற்காக  சுப்பன் எங்கேயும் செல்ல  வேண்டியதில்லை என்று தீருலால் கூறினார். எல்லா மாதமும்  முதல் தேதி காலை அறைக்கு  வரும்போது அன்று எடுத்துச்செல்லவேண்டிய  கம்பின் மேல் அது கட்டித்  தொங்கவிடப்பட்டிருக்கும்.

 

எலா நிபந்தனைகளும் பரச்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டபிறகு பதுமைக்கு பால்காரனின் அடையாள அட்டை அளிக்கப்பட்டது. அதில் எஸ். சுப்பன் என்று அவனுடைய பெயர் எழுதப்பட்டிருந்தது.

 

கிட்டத்தட்ட ஒரு  வருடம் முழுக்க சுப்பன்  பதுமையாய் நின்றால் மட்டுமே  போதுமானதாய் இருந்தது.

 

ஒரு வருடம் முடிந்தபோது பரபரப்பான விளம்பர அறிவிப்புகளுடன் தீருலால் அந்த ரகசியத்தை உடைத்தெறிந்தார்,

 

ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வருடம் முழுக்க ஏமாற்றி  பதுமையாய் நின்ற மனிதனைக் காண அந்த வருடம் வந்து  போன பயணிகள் அனைவரும் திரும்பி வந்தார்கள். உலகெங்குமுள்ள  செய்தி ஊடகங்கள் ‘பதுமை’க்கு பெருமளவு முக்கியத்துவம் அளித்தன.

 

பதவி மாற்றத்தோடு சுப்பனின்  சம்பளத்திலும் கணிசமான  மாற்றம் ஏற்பட்டது.

 

எதற்காக அந்த ரகசியத்தை  உடைத்தீர்கள் என்று ஆச்சர்யத்தோடு  கேட்ட சுப்பனிடம் தீருலால், இந்த ஒரு வருடம் ப்ரொபேஷன்  பீரியட் என்பதாகவும் இப்போதுதான்  சுப்பனிடம் தனக்கு நம்பிக்கை வந்துள்ளதாகவும் சொன்னார்.

 

ஆனால், உண்மை அதுவல்ல.

 

 

 

(தொடரும்)

கவிதைகள் – சே.பிருந்தா

 images (3)

 

 

 

 

 

 

 

1.

 

 நம்பகத் தன்மை

 பிறழ்ந்தபோது

 

 ஒரு வேலைக்காரர்

 எவ்வளவு நம்பகத் தன்மை

 யுடையவர்

 எனில்

 அவரை நம்பி நீங்கள்

 வீட்டுச் சாவியையும்

 கொடுக்கலாம்

 

 

 ஒரு நண்பர்

 எந்தளவு நம்பகத் தன்மை

 யுடையவர்

 எனில் அவரோடு

 உங்கள் மனைவியையும்

 தனியே

  அனுப்பலாம்

 

 மனைவியுடனான

 நம்பகத்தன்மையில்

 வாழ்வையே

 ஒப்படைக்கலாம்

 

 சகோதரியிடமான

 நம்பகத்தன்மையில்

 சிறுமைகளெல்லாம்

 செய்யலாம்

 

 குருவிடம் உண்டாகிற

 நம்பகத்தன்மையில்

 தன்னையே கொடுக்கலாம்

 

 அந்நியர்

 எவ்வளவு நம்பகத் தன்மை

 யுடையவர்

 எனில்

 அவர் சொல்லும் வழியை

 நம்பி

 முகவரி யடைந்து

 விடலாம்

 

 பக்கத்து வீட்டினர்

 எந்தளவு நம்பகத் தன்மை

  யுடையவர்

 எனில் –

 நம் குழந்தைகளை

 விளையாட விடலாம்

 

 குழந்தைகளிடமான

 நம்பகத் தன்மையில்

 வீட்டை ஒப்படைக்கலாம்

 

 வீட்டிடமான

 நம்பகத்தில்

 நம்பிக் கண்ணயரலாம்

 

 கடவுள் மீதான நம்பகத்

 தன்மையில்

 உங்கள் குற்றங்களை

 யெல்லாம்

 ஒப்புக் கொள்ளலாம்

 

 ஒரு நம்பகத்

 தன்மை பிறழ்கிற

 முதல் நொடியில்………

 

 உங்களின் எல்லா

 நம்பகத்

  தன்மைகளையும்

 உடைத்தெறிகிறீர்கள்

 

 பிறகு

 தனிமைப்படுகிறீர்கள்

 

 கடைசியில்

 உங்களையே நீங்கள்

 சந்தேகிக்கத்

 துவங்குகிறீர்கள்.

 

 

 

 2.

 

 

 இன்னொரு  அப்பா

 

 

 பால்யத்தில் – அப்பா’

 என்றால்

 பதின்மத்தில் உங்கள்

 சிறகுகளுக்கு

 வண்ணம் கொடுத்தவர்

 இவர் –

 பறக்கச் சொல்லிக்

 கொடுத்தவரும்

  …..

 திசைகள் அறிய

 வைத்தவரும் …..

 

 இரை தேடவும்

 கூடமைக்கவும்

 உதவிய அக்கா

 இன்னொரு அம்மா எனில்

 இவர் இன்னொரு அப்பா

 

 இனி இல்லை

 இனி அவர் இல்லை

 இனி அவர் எப்போதும்

 இல்லை யென்பதை

 நீங்கள்தான் முதலில்

 அறிகிறீர்கள்

 

 உங்கள் துக்கத்தை ஆழப்

 புதைத்து

 மரணச் செய்தியை

 எல்லோரிடமும்

 தெரிவிக்கிறீர்கள்

 எல்லோரையும்

 ஆற்றுப்படுத்துகிறீர்கள்

 எல்லாருக்கும்

  தோளாகிறீர்கள்

 மீதமிருக்கிற

 வாழ்க்கையை

 உணர்த்துகிறீர்கள்

 

 அழும்போது அழாமல்

 உங்கள் துக்கம் –

 தீராத் துக்கமாகிறது

 

 உயிர் வாழ்வதே

 வதை யாகிறது

 

 ஒரு நீண்ட வரும்காலம்

 அழுது தீர்க்கவே.

 

 மரமாகிக் கனியாகுமா

 இறுகி வைரக் கரியாகுமா

 எரிமலைக் குழம்பாகி

 எல்லாரையும்

 தீய்க்குமா

 ஆழப் புதைந்த உங்கள்

 துக்கம்.

 

 (கோபிண்ணா’ என்கிற என்

 அக்காள்

  கணவருக்கு)

சிற்பத்துறையில் காலத்தால் வாழும் ஒப்பற்ற ஈழத்துக்கலைஞன் கலைஞன் ஏ.வி.ஆனந்தன் – எஸ்.ரி.குமரன்


download (3)சிறந்த சிற்ப்ப மேதையாக விளங்கிய ஏ.வி.ஆனந்தன் அவர்கள் 50 வருடங்களுக்கு மேலாக சிற்ப்பத்துறையில் சிறந்து விளங்கி சிற்ப்பத்துறைக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒப்பற்ற பெரும் கலைஞராக விளங்ககியவர். மரச்சிற்பத்தினை வடிவமைப்பதில் தனித்துமாக ஆற்றல் பெற்ற இவர் இலங்கையளயில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் புகழ் படைத்தவராக விளங்கினார்;. திருமறைக்கலாமன்றத்தின் மூத்த உறுப்பினராக விளங்கி கலைப்பணி ஆற்றியதுடன் மல்லாகம் அரிமாக்கழகத்தின் தலைவராக விளங்கி சமூகப்பணியாற்றிய பெருந்தகை. தெல்லிப்பழை துர்க்காபுரம் சிற்ப்பாலயத்தினை ஸ்தாபித்து அதன் இயக்குநராக விளங்கி சிறபத்துறையில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியவர் ஏ.வி.ஆனந்தன். ஈழத்து கலைத்துறை வரலாற்றினைப் பொறுத்வரையில் சிற்பத்துறையில் தன்னுடைய ஆழ்ந்த புலமையின் காரணமாக எமது மண்ணில் தலைசிறந்த சிற்ப்ப மேதையாக விளங்கியதுடன் வெளிநாடுகளிலும் தன்புகழை நிலைநாட்டிய ஒப்பற்ற கலைஞராக விளங்கிய ஏ.வி. ஆனந்தன் அவர்கள் இவ்வுலகை விட்டு நீத்து விட்டார். இவருடைய இழப்பானது சிற்பத்துறையினை பொறுத்தவரையில் பேரிழப்பாகும்.

ஈழத்தின் புகழ் படைத்த சிற்ப்பியான ஏ.வி.ஆனந்தன் ஜனாதிபதி விருது ஆளுநர் விருது உட்பட இலங்கை அரசின் கலாபூசனம் விருதினையும் பெற்றுள்ளார். துர்க்காபுரத்தில் சிற்ப்பாலயம் அமைத்து மரத்தால் உருவங்களை அமைக்கும் சிற்ப்பக்கலைஞராக விளங்கியவர். ஒரு கலைப்பரம்பரையின் வாரிசான இவர் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பங்களை செதுக்கியும் இருபத்தைந்தி;ற்க்கு மேற்பட்ட தனி மனித சிற்ப்பக் கண்காட்சிகளையும் இலங்கையின் பல பாகங்களிலும் நடாத்தியதுடன் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் நடாத்தி பல பட்டங்களை பெற்றவர்

download (5)
இவரால் செதுக்கப்பட்ட பனைமரத்திலான சிற்ப்பம் ரோமாபுரி வத்திக்கான் கலைக்கூடத்திலும் மாபெரும் புறப்பாடு எனப்படும் பெரிய அளவிலான சிற்ப்பம் ஜேர்மன் ஆன்மீக கலாச்சாரப் பணியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுனாமிப்பேரலை கோரத்தாண்டவமாடிய சோக நிகழ்வுகளை சித்தரிக்கும் ஒரே மரத்தில் செதுக்கப்பட்ட சிற்ப்பமானது மபெரும் சோக நிகழ்வை வெகு அற்ப்புதமாக ஆவணமாக இவரால் படைக்கப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியது.
சுனாமி இலங்கையின் கரையோரங்களில் ஏற்படுத்திய அழிவுகளை என்றும் நினைவில் கொள்ளத்தக்க ஆவணங்களாகப் பலர் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் சுனாமிப்பேரலையின் கோரத்தாண்டவங்களை ஒரு தனி மரக்குற்றியில் சிற்ப்பமாக செதுக்கி சிற்ப்பக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். சிற்ப்பக்கலைஞன் ஏ.வி.ஆனந்தன் சிற்ப்ப சாஸ்த்திரத்தில் மேற்கொள்ளப்படும் உயர்புடைப்பு தாள் புடைப்பு கோதிச்சிதை முப்பரிமாணம் போண்ற அம்சங்கள் சேர்ந்து சிற்ப்பத்தை முழுமைப்படுத்துகின்றது.

download (4)
சுனாமிப்பேரலலையில் காவு கொள்ளப்பட்ட கரையோரப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று கரையொதுங்கும் புதைந்து கிடந்த சடலங்களையும் இருந்த சுவடே தெரியாமல் சிதைந்து கிடந்த வதிவிடங்களையும் அவற்றினைப்பார்த்து பதறி ஓலமிடும் உற்றார் உறவினையும் கண்டும் கேட்டும் உணர்ந்தும் துயருற்ற கலைஞனின் ஆவேச வெளிப்பாடாக எட்டடி உயரமும் பத்தடி சுற்றறளவும் கொண்ட மிகப்பிரமாண்டமான ஒரு தனிக்குற்றியில் செதுக்கல் படிமங்களாக இச் சிற்ப்பத்தைப் பொறித்துள்ளார்.
எவராலும் கற்ப்பனை செய்து பார்;க முடியாத கலை வடிவமாகவும் உலகின் மாபெரும் சோக நிகழ்வை ஒரு ஆவணமாக ஆனந்தன் அவர்கள் வடித்துத் தந்து விட்டுச்சென்றுள்ளார். பொதுகட்புலனில் படிவத்திலிருந்து உய்த்துணர்ந்து பார்த்து புரிந்து கொள்ளும் பாங்கிலான சிற்பச் செதுக்கல்கள் அம் மரக்குற்றியில் கலாபூர்வமாகப் பதிந்;துள்ளன. சுனாமி அவலத்தை நினைவு கூருவதற்கு ஏற்ற சிற்பமாக இச்சிற்ப்பம் விளங்குகின்ற வகையில் இச்சிற்பத்தினை சிறப்பி அவர்கள் வடித்துள்ளார்.

 

download (6)
தன்னுடைய காலத்தில் கலைமரபினை பேண வேண்டும் என்ற அவாவின் காரணமாக இளம் தலைமுறையினருக்கு தனது சிற்பத்துறைசார் கலைச்செயற்பாடுகளினை பயிற்றுவித்து சிற்பாலயம் என்னும் கலைக்கூடத்தினை நடாத்தி வந்துள்ளமை சிறப்பிற்குரியது. சிற்பத்துறை வளர்சிக்காக பலர் பணியாற்றியுள்ள நிலையில் ஏ.வி.ஆனந்தனுடைய பங்களிப்பானது சிறப்பிடம் பெறுவதுடன் காலத்தால் நினைவு கொள்ளப்பட வேண்டியதொன்றாக விளங்குகின்றது. இவருடைய இழப்பானது சிற்பத்துறையைப் பொறுத்தவரையில் ஈடு செய்ய முடியாததொன்றாக விளங்குகின்றது. தன்னுடைய வாழ்வினை கலைக்காக அர்ப்பணித்து சிற்பத்துறையில் மீது கொண்ட அதீத ஈடுபாட்டின் காரணமாக சிறப்பத்துறைக்கு பங்காற்றிய மாபெரும் கலைஞனுடைய கலைச்செயற்பாடானது காலத்தால் என்றும் போற்றப்பட வேண்டியதொன்றாகவும் நினைவு கொள்ளப்பட வேண்டி தொன்றாகவும் விளங்குகின்றது.

***.

கள்ளூறும் சுனை-கவிதை – இளையநிலா ஜான்சுந்தர்

images (5)

 

 

 

 

 

 

 

கள்ளூறும் சுனை

 

பழைய வருடங்களின் இனிப்பை

எச்சில் கூட்டி அருந்தும்

ஈக்களின் இறகுகள் காய்வதில்லை

நம்தன  நம்தன  நம்தன  நம்தன…..

அஅ..அஅ…. அஅ..அஅ….

தித்திப்பின் ஈரத்தில் நனைந்த

கழுத்துப்பட்டைகள்

நாயின் நாக்கென  நீள

கால்சட்டைகளின் கீழ்ச்சுற்றளவோ

தேவாலய மணியளவு

விரிந்து வளர்கிறது

அசட்டை செய்து திரிகிறதொரு பித்துக்குளி.

தய்யரத்தய்யா தய்யரத்தய்யா

தய்யரத்தய்யா தய்யரத்தய்யா

இசைகசியும் டீக்கடையின்

குறுகிய இருக்கைகளில்

ஈக்கள் மொய்க்கின்றன.

பால்பாத்திரத்தில் துடுப்பை போடுகிற

தேநீர்க்காரா கொஞ்சம் ஓய்வெடு

வா என் பரிசலில் வந்தேறு.

ஏ குரியா குரியா குரியா தந்தேலா பாலி

குரியா குரியா குரியா தந்தேலா வாலம்

மதுக்கூடத்தில்

நாம் ராஜாவுக்கும் மன்னருக்கும்

வேண்டுமட்டும் செலவு செய்வோம்.

கைத்தாளமிட்டோர்

அவரவர் சாப்பிட்ட விவரம் சொல்லி

பொற்காசுகளைப் பெற்றுச்செல்க.

இதோ இதோ போதையின் உச்சத்தில்

ஆர்மோனியப் பெட்டியைத் திறக்கிறார் மன்னர்

அமைதிகாக்கச்சொல்லி பிச்சைக்காரனைப் போல்

கட்டளையிடும் பித்துக்குளியின் காது மடலை

உரசியுறுமுகிறது ராஜாவின் பேஸ் கிடார்

தம்தம்தம் தம்தம்த தம்தம்

தம்தம்தம் தம்தம் ததம்

ஐயோ மூடர்களே

இசை நுரைத்துப்பொங்கி வழிந்த நாட்களில்

செவியை மறைத்து மயிரை வளர்த்தீர்கள்.

கர்ஜனை எதிரொலித்த திக்குகளில்

இப்போது நரிகளின் மூத்திர வாடை

இந்த தேசத்தின் தண்ணீர் கறுத்துப் போவதை

எச்சரித்துப் போகிறது தேவ மின்னல்.

சுழலில் சிக்கிய பரிசலென

சுற்றத் துவங்குகிறது கிராமபோன் தட்டு

ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்………………

ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்


 

கவிதை – உமா ஷக்தி

 

images (4)

 

 

 

 

 

 

 

(1)
முன்பு போல் இல்லை எதுவும்
என்கிறாய்
அப்படி இருந்துதான்
என்னவாகப் போகிறது?
விதை செடியாகும் பின் மரமாகும்
பூக்கும் ,காய்க்கும் .
முடிந்ததாய் நீ சொன்னதை
ஒரு பாறாங்கல் கொண்டு
முற்றுப் புள்ளி வைத்ததை
ஏன்தான் தொடரவேண்டும்?
ஓர் வாழை இலை மேல்
பனியின் முதல் சொட்டாக
உன்னில் வீழ்ந்தவள் நான்.
அன்பின் சாலையின் இரு மருங்கும்
பூக்களால் நிறைந்திருந்தன மரங்கள்.
எந்த சாத்தான் ஏவிய பறவை
ஓர் கருக்கல் பொழுதில்
உன் மரக்கிளையில் வந்தமர்ந்தது
என அறியேன்..
கரையில் உன் கையருகில்
இருக்கும் என்னைக் கவனியாமல்
நீரில் சுருண்டு ,நெளிந்து, செல்லும்
என் நிழலைப் பின் தொடர்கின்றாய்.
அதுவல்ல நான் என அறியாமல்
உன் கோடரியின் முதல் வீச்சு
மரத்தில் வீழ்ந்தது.
பட்டை கிளம்பிய வலியின் வாசனை
என் மனமெங்கும் பரவியதை நீ அறியாய்!
நீ கற்பனை செய்யும்
கொடிய விலங்கின் கண்களல்ல என்னுடையவை.
அன்பின் குளிர்ச்சியைப் பொழியும்
இரண்டு நிலவுகள் அங்கே உண்டு.

(2)
மறுபடியும் ஒரு நாள்
அமைதியான ஓர் ஆறு போல்
என் முன்னே விரிந்து கிடக்கின்றது.
பரபரப்பான திரைகாட்சியின் ஓட்டம்
இதோ ஆரம்பித்து விட்டது
இன்னும் சற்று நேரத்தில்
பிரிக்க முடியாததாகிவிடும்
அளவுக்கு வேலை சூழ்
வாழ்க்கைக்குள்
அனுப்பப் படுவேன்
ஒவ்வொரு பயணமும்
நிர்ணயிக்கிறது
இறுதிக் கட்டத்தின்
நகர்வுகளை!
இன்றோ நாளையோ
அதற்குப் பின்னொரு நாளோ
கண்டடைவேன்
என் நீல நிறத்தை
மற்றும்
தரிசிக்க
நினைத்த யாவற்றையும்!

ஆப்பிள்பூவாய் பூத்த கடல் – கவிதை – ஈழக்கவி

images (6)

ஆப்பிள்பூவாய் பூத்த கடல்

அவள் நிலவுக்குள்லிருந்து
ஒரு அழகு தேவதையாய்
இறங்கி வந்தாள்

என்னுடைய பனிக்குமிழி மனம்
கடலாய் விரிந்தது

என் தேவதை கடலில்
நீந்தத் தொடங்கினாள்

நெய்தல் நிலம்
சந்தோச அலைகளால்
குளிர்ந்து துளிர்த்தது

நண்டு புலவர்கள்
அகத்திணையின் களவியலை
வெண்மணல் பனைஓலைகளில்
பதியம் செய்தனர்

அவள் மீன் தோழிகளுடன்
கடலின் அடிஆழத்துக்குள் நீந்திப் போனாள்
அந்த அற்புத அழகுகளை எல்லாம்
அணுஅணுவாய் அனுபவித்து உண்டாள்
விழிவாயால்

உவர் நீரும் நன்னீரும் பிரிந்திருக்கின்ற
அந்த அதிசய இடத்திலே
நான் மறைத்து வைத்திருந்த
என் உணர்வுகளின் கற்களால்லான குகையை அவதானித்தவள்
ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்
அவளின் மொத்தஅழகையும்  அதற்குள் பார்த்து

நெய்தலின் உரியை கொன்றவள்
குறிஞ்சியின் உரியுடன்
என்னை அணைத்தவாறு அந்தகுகைக்குள் நுழைந்தாள்
நான் இருத்தலின் பயனை உணர்ந்தேன்
என் கடல் பொங்கி
ஆப்பிள்பூவாய் பூக்கத் தொடங்கியிருந்தது

29062013 காலை 8.39 மணி

– ஈழக்கவி