Category: இதழ் 30

அறிமுகப் படைப்பாளி -மூடுபனி கோபுரங்கள் (சிறுகதை) – முகில் தினகரன்

 images (4)

இரவு உணவை சற்று முன்னதாகவே முடித்து விட்டு, கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன்.  ஏனோ கவனம் புத்தகத்தினுள் செல்ல மறுத்தது.  ‘ச்சை!”. புத்தகத்தை மூடி தலை மாட்டில் வைத்து விட்டு ஓட்டுக் கூரையையே பார்த்தபடி படுத்திருந்தேன்.  எங்கோ தொலைவில் ஒரு நாய் குரைக்கும் ஓசை விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

‘அந்த வாத்தியார் சொல்வதுதான் சரியோ?…நான்தான் முட்டாள்தனமாய் வலியப் போய் “இந்தக் கிராமத்துக்கு மாற்றல் வேணும்!” னு கேட்டு…வாங்கி…மாபெரும் தப்புப் பண்ணிட்டேனோ?”

 

அந்தச் சிவகிரி கிராமத்துப் பள்ளிக்கு தலைமையாசிரியராக மாற்றல் பெற்று வந்த நான் அந்த ஊரைப் பற்றியும்….ஊர் மக்களைப் பற்றியும் …பள்ளியில் படிக்கும் மாணவ…மாணவியரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் பொருட்டு நீண்ட காலம் அந்த ஊர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் கல்யாண சுந்தரத்திடம் விசாரித்தேன்.  அதற்கு அவர் சொன்ன விளக்கம்தான் என்னை இந்த அளவிற்கு இடிந்து போகச் செய்திருந்தது.

 

‘ஊரா சார் இது?…ஹூம்….சரியான முட்டாப்பய மக்க ஊரு சார்….அந்த ஆண்டவன் இந்த ஊரு ஜனங்க தலைல மூளைய வைக்க மறந்திட்டான் போலிருக்கு சார்”

 

எடுத்த எடுப்பில் அவர் அப்படிச் சொன்னது எனக்கே கொஞ்சம் சங்கடமாய்த்தான் இருந்தது. ‘அட…என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க…?”

 

‘ஆமாம் சார்…நான் சொல்றது சத்தியமான நெஜம்…இங்க எவனுக்குமே சராசரி அறிவு கூட இல்லை சார்….அதை நான் சொல்றதை விட பேசிப் பாருங்க நீங்களே புரிஞ்சுக்குவீங்க..நீங்க ஒண்ணு கேட்டா அதை வேற மாதிரிப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு வேற மாதிரி பதிலைச் சொல்லுவானுக…விளக்கம் கேட்டு தொடர்ந்து பேசினீங்கன்னு வெச்சுக்கங்க….அவ்வளவுதான் உங்களுக்கு தலையே சுத்த ஆரம்பிச்சிடும்…”

 

நான் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவரையே ஊடுருவிப் பார்க்க,

 

‘இவனுகளுக்கு என்ன தெரியும்கறீங்க?…காட்டிலும் மேட்டிலும் நல்லா மாடு மாதிரி வேலை செய்யத் தெரியும்….நல்லாத் திங்கத் தெரியும்….கோயில் மண்டபம்…பஞ்சாயத்துத் திண்ணைகள்ல உக்காந்து வாய் கிழிய வம்பளக்கத் தெரியும்…திருவிழா சமயங்கள்ல கூட்டமாச் சேர்ந்து குடிச்சிட்டு ஆட்டம் போடத் தெரியும்….அப்பப்ப வெட்டுக்குத்து நடத்தி ஒண்ணு ரெண்டு பேர்த்த காலி பண்ணத் தெரியும்…அவ்வளவுதான்….பச்…மத்தபடி…” உதட்டைப் பிதுக்கிக் காண்பித்தார் ஆசிரியர் கல்யாண சுந்தரம்.

 

ஒரு நீண்ட யோசிப்பிற்குப் பின் கேட்டேன் ‘நீங்க இந்த ஊர்ல எத்தனை வருஷமா இருக்கறீங்க?”

 

‘ஆச்சு…பத்து வருஷம்!…இந்தக் கிராமத்துக்கு வந்து…இந்தப் பள்ளிக்கூடத்துல வாத்தியாராச் சேர்ந்து!” அவர் பேச்சில் எக்கச்சக்க வெறுப்பு. ஏகமாய்ச் சலிப்பு.

 

‘இப்ப நம்ம ஸ்கூல்ல எத்தனை ஸ்டூடண்ட்ஸ்?”

 

‘அது…பாத்தீங்கன்னா…பதிவேட்டுல ஒரு எழுவத்தஞ்சு காட்டும்….ஆனா வகுப்புக்கு தெனமும் வந்து போறதென்னவோ ஒரு பத்தோ…பதினஞ்சோதான்”

 

‘அதான் ஏன்?னு கேட்கறேன்”

 

‘சார் குழந்தைகளை ஸ்கூல்ல சேர்த்தா ரெண்டு செட் யூனிபாரமும்…நோட்டு புத்தகங்களும் இலவசமாத் தர்றோம்…அதுக்காக வருஷ ஆரம்பத்துல குழந்தைகளை அழைச்சுக்கிட்டு வந்து ஸ்கூல்ல சேர்ப்பாங்க….அப்புறம் அவ்வளவுதான்…அதுகளை வயல் வேலைக்கோ…மாடு மேய்க்கவோ அனுப்பிடுவாங்க…சிலதுக கொஞ்ச நாளைக்கு வரும்க…அப்புறம் பாடங்க கஷ்டம்னுட்டு அதுகளும் வேலை வெட்டிக்குப் போய்டும்க”

 

‘பச்….நீங்கதான் சார் அதுகளைத் தக்க வைக்கணும்…எப்படின்னா…அதுகளுக்கேத்த முறைல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கணும்”

 

‘சார்..நான்தான் சொல்றேனே இந்த ஊர் ஆட்களுக்கு அறிவு மந்தம்னு…அதே மாதிரிதான் அதுகளோட குழந்தைகளும் இருக்குதுக…ஞானசூன்யங்க….எத்தனை தடவ சொல்லிக் கொடுத்தாலும் ஒரு பிட்டு கூட மண்டைல ஏறாது…..மக்குன்னா மக்குக…அப்படியொரு மக்குக….வெந்ததைத் தின்போம்….விதி வந்தாச் சாவோம்…ன்னு கெடக்குதுக சார்”

 

அந்த கிராமத்து மக்களையும் குழந்தைகளையும் அந்த ஆசிரியர் மகா கேவலமாய்ப் பேசியது எனக்குள் மாபெரும் ஆத்திரத்தையே மூட்டியது.  தொடர்ந்து அவருடன் பேச்சு வைத்துக் கொள்ளவே பிடிக்காமல் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

 

மறுநாள் காலை மணி பத்தரையிருக்கும் பள்ளி விடுமுறை தினமானதால் வயல் வெளிப் பக்கம் காலாற நடக்க ஆரம்பித்தேன்.

 

இஞ்சி படருமலை!…..ஏலம்சுக்கு காய்க்குமலை!….

மஞ்சி படருமலை!……மகத்தான சுருளிமலை!….

ஆக்கடிக்குந் தேக்குமரம்!….அலை மோதும் சொம்பைத் தண்ணி!

நீரோட நெல்விளையும்!…..நீதியுள்ள பாண்டி நாடு!…

 

கோரஸாய்க் கேட்ட பாட்டுச்சத்தம் என் கவனத்தை ஈர்க்க நின்று திரும்பிப் பார்த்தேன்.  நாற்று நடும் பெண்கள் பாடிக் கொண்டே நடவு செய்ய ‘ஆஹா….படிப்பறிவே இல்லாத இந்த ஜனங்க துளியும் அட்சரம் பிசகாம இவ்வளவு தெளிவாப் பாடுறது…பெரிய ஆச்சரியந்தான்”

 

யோசித்தபடியே அவர்கள் நடவு செய்யும் அந்த வயலுக்கு வந்து வரப்பில் நின்றேன்

 

‘ஆரது,…தம்பி…புதுசாயிருக்கு?” நடவுக்காரியொருத்தி உரத்த குரலில் வினவ,

 

பக்கத்திலிருந்தவள் பதில் சொன்னாள். ”அட…நம்மூரு பள்ளிக்கோடத்துக்கு புதுசா வந்திருக்கற பெரிய வாத்தியாரு…”

 

நடவு தொடர்ந்தது வேறொரு பாட்டுடன்,

 

‘அடிக்கொரு நாத்தை நடவங்கடி…அடி

ஆணவம் கெட்ட பெண்டுகளா!!

பிடிக்கொரு படி காண வேணுமடி…அடி

பிரிச்சுப் போட்டு நடவுங்கடி!!

பொழுதும் போச்சுது பெண்டுகளா…

போகணும் சீக்கிரம் புரிஞ்சுக்கடி

புளிய மரத்துக் கிளையிலதான்

புள்ள அழுவுது கேளுங்கடி”

 

என்னால் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. ‘எழுதப் படிக்கத் தெரியாத கூலிக்காரப் பொம்பளைகளே இவ்வளவு சுலபமா நெறைய பாட்டுக்களை மனப்பாடம் செஞ்சு வெச்சிருக்காங்கன்னா…இவங்களையெல்லாம் சாதாரணமா எடை போட்டுட முடியாது” அங்கிருந்து நகர்ந்தேன்.

 

‘என்ன புது வாத்தியாரு தம்பி!…எதுத்தாப்பல வண்டி வர்றதைக் கூட கவனிக்காம அப்படியென்ன ரோசனையாக்கும்?” வண்டியை நிறுத்தியவாறே வண்டிக்காரன் கேட்க,

 

சொன்னேன் என் வியப்பின் விலாசத்தை.

 

‘அட…இதென்ன சாமி பெரிய விஷயம்…நம்ம கைவசம் கூட நெறைய வண்டிப்பாட்டுக இருக்கு…”

 

‘அப்படியா?…எங்கே அதுல ஒண்ணை எடுத்து விடேன் பார்க்கலாம்”

 

”பருப்பு பிடிக்கும் வண்டி…இது பட்டணந்தான் போகும் வண்டி….

பருப்பு வெலை ஏறட்டும்டி தங்கரத்தினமே!!

பதக்கம் பண்ணி;ப் போடுறண்டி பொன்னுரத்தினமே!!

அரிசி பிடிக்கும் வண்டி…இது அவினாசி போகும் வண்டி…

அhpசி வெலை ஏறட்டும்டி தங்கரத்தினமே!!

அட்டி பண்ணிப் போடுறண்டி பொன்னுரத்தினமே!!

கொள்ளு பிடிக்கும் வண்டி…இது கோட்டைக்குப் போகும் வண்டி

கொள்ளு வெலை ஏறட்டும்டி தங்கரத்தினமே!!

கொலுசு பண்ணிப் போடுறண்டி பொன்னுரத்தினமே”

 

மலைத்துப் போய் நின்ற என்னிடம் ‘அப்ப வாரேஞ் சாமி…நேரமாச்சு” சொல்லி விட்டுப் பறந்தான் வண்டிக்காரன்.

 

‘அடேங்கப்பா…இவனுக்கு இத்தனை ஞானமா?” வியந்தபடியே நடை போட்டேன் வீடு நோக்கி.

 

மதியம் 3.00 மணியிருக்கும்,

 

அறையினுள் அரைத் தூக்கத்தில் கிடந்த என்னை சிறுவர்களின் ‘காச்…மூச்” சத்தம் உசுப்ப எழுந்து தெருவுக்கு வந்து பார்த்தேன். ஏழெட்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து மற்றவர்களிடம் ‘குசு…குசு”வென்று ஏதோ சொல்ல எல்லோரும் ‘கப்..சிப்” பென்று அமைதியாயினர்.

 

சிநேகிதமாய்ச் சிரித்து அவர்களை அருகினில் அழைத்துப் பேசிய போது அவர்களனைவரும் பள்ளிக்கு வராத பிரகஸ்பதிகள் என்றும் காலை முதல் மாலை வரை மலை சரிவினில் ஆடு…மாடு மேய்ப்பதே அவர்களின் உலகம் என்றும் தெரிந்து கொண்டேன்.

 

சட்டென்று அந்த யோசனை வர கேட்டேன். ‘நீங்கெல்லாம் ஆடு மேய்க்கும் போது பாட்டுப் பாடுவீங்களாமே….அப்படியா?”

 

அவர்கள் மேலும் கீழுமாய்த் தலையாட்ட,

 

‘அப்ப…நீ ஒரு பாட்டுப் பாடு கேக்கலாம்…” இருப்பதிலேயே சிறுவனான ஒருவனிடம் கேட்டேன்.  அத்தனை பேரையம் விட்டு விட்டு நான் அவனிடம் மட்டும் கேட்டது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கி விட, சந்தோஷமாய் ஆரம்பித்தான்.

 

குளத்துக்கு அந்தப்பக்கம்…ஆடு மேய்க்கும் கூளைப் பெண்ணெ

குளத்துலதான் தண்ணி வந்தா என்ன செய்வே சொல்லாத்தா….

கொல்லனைத்தான்.கூப்பிடுவென்…குறிஞ்சிக் கப்பல் செய்திடுவான்

ஆத்துலதான் தண்ணி வந்தா என்ன செய்வே சொல்லாத்தா…

ஆசாரியக் கூப்பிடுவேன் அரிஞ்சுக் கப்பல் செய்திடுவான்

புள்ளத்துல தண்ணி வந்தா  என்ன செய்வே சொல்லாத்தா…

பன்னாடியக் கூப்பிடுவேன் பரிசலத்தான் பொட்டிடுவான்

 

அந்தச் சிறுவன் பாடி முடிக்கையில் என் கண்களில் நீரே திரண்டுவிட்டது. ‘ச்சே…இந்த ஊர் ஜனங்களையும்…குழந்தைகளையும் பத்தி அந்தப் பழைய வாத்தியார் சொன்னது அத்தனையும் தவறான கருத்துக்கள்…ஒரு எழுத்துக் கூடப் படிக்கத் தெரியாத இந்தச் சிறுவர்கள் வெறும் கேள்வி ஞானத்தை மட்டுமே வெச்சுக்கிட்டு நெறையப் பாடல்களை அற்புதமாப் பாடறாங்கன்னா…இவங்களொட ஞாபக சக்தி சாதாரணமானதல்ல….நிச்சயம் இந்தப் பசங்களைப் படிக்க வெச்சா…நல்லா பெரிய ஆளா வருவானுக” எனக்குள் ஒரு வெறித் தீர்மானம் உருவானது.

 

மறுநாள்  சற்று முன்னதாகவே பள்ளிக்குச் சென்று தாமதமாக வந்த அந்த ஆசிரியரை அழைத்து ‘பத்து வருஷமா  பசங்களுக்குப் பாடம் எடுக்கறதாச் சொன்னீங்களே….என்ன சப்ஜெக்ட்?” கேட்டேன்.

 

‘அட…நீங்க வேற…இதென்ன டவுன் ஸ்கூலா?…ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு வாத்தியாரைப் போட…எல்லாத்துக்குமே நான் ஒருத்தன்தான்”

 

‘அப்ப…தமிழ்ப்பாடமும் பத்து வருஷமா எடுத்திட்டிருக்கீங்க,….அப்படித்தானே?”

 

‘ஆமாம்…அதிலென்ன சந்தேகம?,”

 

‘சரி…நாலடியார்ல ஒரு செய்யுள் சொல்லுங்க…”

 

அவட் யோசிப்பது போல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பின் மண்டையைச் சொறிய,

 

‘போகட்டும்…புறநானூற்றுல ஒரு செய்யுள் சொல்லுங்க…”

 

‘……………………………”

 

‘பெரிய புராணத்துல?……கலிங்கத்துப் பரணில?…..பச்…என்ன சார் பத்து வருஷமா…அதே பாடத்தை…அதே செய்யுளை…திருப்பித் திருப்பி சொல்லித் தர்றீங்க….அதுல ஏதாவது ஒரு செய்யுளாவது மனப்பாடம் ஆகியிருக்குமே?”

 

‘என்ன சார் நீங்க இப்படியெல்லாம் கேட்கறீங்க….புத்தகத்தைப் பார்த்து செய்யுளைப் படிப்போம்….அப்புறம் அதுக்கு அர்த்தத்தை உரையாடலா எளிய தமிழ்ல அதுகளுக்குப் புரியற மாதிரி சொல்லிக் குடுப்போம்…அவ்வளவுதான்…அதுக்காக செய்யுளையெல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்க முடியமா என்ன?” அந்த ஆசிரியர் திக்கித் திணறி சமாளிக்க,

 

‘பட்டப் படிப்பு படிச்ச ஆசிரியர் உங்களுக்கே பத்து வருஷமா திருப்பித் திருப்பி படிக்கற செய்யுள் ஒண்ணு கூட மனசுல ஒட்டலை….ஆனா படிப்பு வாசனையே இல்லாத இந்தக் கிராமத்து மக்கள் வெறும் கேள்வி ஞானத்துல எத்தனையோ நாட்டுப் பாடல்களை மனப்பாடம் செஞ்சு வெச்சுக்கிட்டு…வெகு ஈஸியா…துளியும் சறுக்காம…சரளமா பாடறாங்க…அவங்களைப் போய்…நீங்க…’மக்குக…மரமண்டைக…ஞானசூன்யங்க”…அப்படின்னு சொல்றீங்க…எப்படி சார்…எங்கியோ இடிக்குதே”

 

‘அது…வந்து…திரும்பத் திரும்ப அதே பாட்டைக் கேட்கறதினால அது அவங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும்”

 

‘பெரியவங்க மட்டுமல்ல சார்…பள்ளிக் கூடப் பக்கமே ஒதுங்காத மாடு மேய்க்கற சிறுவர்கள் எத்தனை நாட்டுப் பாடல்களை மூளைல பதிவு செஞ்சு வெச்சிருக்கானுக தெரியமா?”

 

‘அவனுகளோட அப்பன் ஆத்தா பாடியிருப்பாங்க…அதைக் கேட்டுட்டு இதுகளும் பாடுதுக…இதிலென்ன பெரிய அதிசயம்?”

 

‘என்னமோ அன்னிக்கு சொன்னீங்க…இந்த ஊருல பெருசு…சிறுசு…எல்லாத்துக்கும் மூளையே வெச்சுப் படைக்கலைன்னு!….நல்லா யோசிச்சுப் பாருங்க…யாருக்கு மூளையே வைக்கப் படலைன்னு….யாரு அறிவு சூன்யம்ன்னு புரியும்”

 

அந்த ஆசிரியர் ‘திரு…திரு” வென விழிக்க,

 

‘சார்..யாரையும்…சட்டுன்னு எடை போட்டுடக்கூடாது… எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும்…ஒரு ஞானம் இருக்கும்…அதைத் தோண்டியெடுக்க முடியாத பாட்டுக்கு அவங்களுக்கு மூளையே இல்லைன்னு மூடத்தனமா ஒரு முடிவு பண்ணிடக்கூடாது…போங்க சார்….போயி குழந்தைகளுக்கு ஒரு நம்பிக்கையோட பாடம் எடுங்க சார்…இங்கிருநது கூட ஒரு அப்துல் கலாம் உருவாகலாம்…ஆச்சரியப்படுவதற்கில்லை”

 

அவர் என்னைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல, பள்ளிக்கூடப் பக்கமே வராத அந்தக் கிராமத்துச் சிறுவர்களை எப்படியாவது பள்ளிக் கூடத்திற்குள் கொண்டு வந்து அந்தப் படிக்காத மேதைகளை ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் சென்றே தீருவது என்கிற குறிக்கோளோடு நானும் எழுந்தேன்.

 

•••• 

இலையுதிர்காலத்து யாத்திரீகன் – ‘சினிமா பாரடைசோ’ இயக்குநர் நேர்காணல் – தமிழில் ஜா.தீபா

download (7)

இயக்குனர் Guiseppe tornotore வின் வளர்ச்சியை இத்தாலிய மக்கள் அவரது பதின் பருவத்தில் இருந்தே பார்த்து வருகிறார்கள். ஒரு மேடை நாடகத்துக்காக முதன் முதலில் ஒரு கதை எழுதிய அவர் அதை அப்படியே குறும்படமாக எடுத்தார். அத்தக குறும்படத்தைப் பார்த்து ராய் தொலைக்காட்சி நிறுவனம் அவரை தங்களின் முழுநேர ஊழியராக பணிக்கு அமர்த்திக் கொண்டது. அந்நிறுவனத்திற்காக சிசிலிய மக்கள் குறித்து அவர் எடுத்த ஆவணப்படங்களும், மற்றும் குறும்படங்களும் இத்தாலியின் முக்கிய தயாரிப்பாளர்களை அவரது பக்கம் ஈர்க்கத் துவங்கியது. சிசிலியாவின் தாதாக்களின் நிழல் உலகத்தை வைத்து இவர் எடுத்த முதல் படம் ‘இந்த நபரிடம் என்னவோ இருக்கிறது’ என்று இத்தாலிக்கு வெளியில் பேசவைத்து. பிறகு இவர் இயக்கிய ‘சினிமா பாரடைசோ’ திரைப்படம் அந்தக் கருத்தினை உறுதி செய்தது. ஆஸ்கர் விருது மட்டுமல்லாமல், சிறந்த உலகத் திரைப்பட விருது வரிசையில் இந்தப் படத்திற்கு இன்று வரை கிடைத்திருக்கும் இடம் மரியாதைக்குரியது.

உங்களுடையத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்? குறிப்பாக ‘மெலினா’ படத்திற்கு மோனிகா பெலுச்சியை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

மோனிகாவைப் பார்ப்பதற்கு ஐந்து வருடத்திற்கு முன்பிருந்தே மெலினா கதை எனக்குள் இருந்தது. ஆனால் அதைப் படமாக எடுக்கவேண்டும் என நான் நினைத்ததே இல்லை. முதன் முதலில் மோனிகாவைப் பார்த்தபிறகு தான் இந்தக் கதையை திரைப்படமாக எடுக்கும் எண்ணம் எனக்கு வந்தது. மோனிகாவை மெலினாவாக நினைத்துக் கொண்டே தான் திரைக்கதையை எழுதி முடித்தேன். யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற தீர்மானத்திற்கு வந்தபிறகு அந்த கதாபாத்திரத்தைப் பற்றி எழுதுகிறபோது என்னால் உற்சாகமாக எழுத முடிந்தது. இப்படி நிறைய தடவை நடந்திருக்கிறது. அது ஒரு நல்ல அனுபவம்.
அதே போல் படத்தில் சிறுவனாக நடித்த சல்ஃபாரோ மேசினா என்ற ஊரில் இருந்து அவன் எங்களுக்கு கிடைத்தான். நாங்கள் மூவாயிரம் பையன்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம். எல்லோருமே சிசிலியாவைச் சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு மிகத் தீவிரமாக பலவித பயிற்சிகளைக் கொடுத்தோம். கடைசி கட்டத்திற்கு ஒன்பது பையன்கள் வரைத் தேர்வானார்கள். இவர்களுக்கு படத்தின் உடைகளைக் அணிவித்துக் காட்சிகளை படம்பிடித்தோம். அதில் தேர்வான ஒரு பையன் தான் சல்ஃபாரோ. ஏனென்றால் அந்த வயதில் தொழில்முறை நடிகனைத் தேர்ந்தெடுப்பது என்பது முடியாத காரியம். புதுமுக சிறுவனைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நான் 99.9 சதவிகிதம் உறுதியாக இருந்தேன். வேண்டுமென்றால் அவன் சர்ச் நாடகத்தில் நடித்திருக்கலாம். நடிப்பில் அவனுடைய தகுதி அவ்வளவு இருந்தால் போதும் என நினைத்தேன்.
சிறுவயது நினைவுகளை ஞாபகப்படுத்தும் படங்களாகவே எடுக்கிறீர்கள். பலரும் இதை ஒப்பிட்டுப் பேசி இருப்பார்களே?

என்னுடைய எல்லாப் படங்களையுமே ஒப்பிட்டுத் தான் பேசுகிறார்கள். ஆனால் என்னுடைய படங்கள் ஒவ்வொன்றுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானது தான். சில சூழல்கள் ஒற்றுமையாக அமைந்திருக்கலாம். அதைத் தான் ஒப்பிடுவார்கள். இது பொதுவானது தான்.
Cinema Paradiso படம், திரைப்படத்தின் மாயாஜாலத்தைக் கண்டு அதிசயப்படுகிற ஒரு பையன் தனது காதலை அதிலேயே செலுத்துவது தான் கதை. The Legend of 1900 படத்தை வெளியிடும் போது, Cinema Paradiso படத்தில் உள்ள திரையரங்கை அப்படியே கப்பலாக மாற்றினேன் என்று சொன்னார்கள். ஆனால் இரண்டுமே வெவ்வேறு காலங்கள். வெவ்வேறு கதைகள்.

தெளிவான கதை சொல்லல் முறையினால் தான் Cinema Paradiso படம் பெரிய வெற்றி பெற்றது. எங்கே, எப்போது முதன் முதலில் இதற்கான முதல் விதை விழுந்தது?

பல வருடங்களாகவே எனக்குள் இருந்த கதை இது. ஒரு சிறு நகரம். அதிலும் நாற்பது ஐம்பது வருட பின்னணிச் சூழல். நகரத்தின் மையத்தில் இயங்குகிற ஒரு திரையரங்கு அந்தப் பகுதிக்கே இதயத் துடிப்பு போல இருக்கிறது. இந்த ஐடியா எனக்குப் பிடித்திருந்தது. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்கும், நேரத்தைப் போக்குவதற்கும் மகிழ்வதற்கும், கனவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் மையமாக இருந்த அந்தப் புனிதமானத் திரையரைங்கை அந்த சமயத்தில் இருந்தது போல திரும்பவும் காட்ட நினைத்தேன். திரைப்படங்களைப் பாதுகாப்பவர்களுக்கும் ப்ரோஜெக்டர் இயக்குபவர்களுக்கும் நெருக்கமான அடைக்கலம் தர வேண்டும் என நினைத்தேன். ஏழாம்கலை என சொல்லப்படுகிற சினிமாவை அவர்கள் தான் கற்றுத் தந்தார்கள். கலாசார கல்வியை அவர்கள் தான் மொத்த தலைமுறைக்கும் எடுத்தும் சென்றார்கள்.
இத்தாலியன் சினிமாக்களில் மட்டும் எப்படி குழந்தைகள் உலகத்தை அற்புதமாக பதிவு செய்து விடுகிறீர்கள்?
இது எப்படி நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மறுக்கமுடியாதது. குழநதைகள் சினிமா என்பதைப் பொறுத்தவரை இத்தாலிய சினிமா முழுவதுமே டிசிகா, ரோசெலினி, விஸ்காண்டி போன்ற மேதகைளால் கவரப்பட்டுள்ளது. குழந்தைகள் உலகத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள் என்பதை விட முக்கியம், அவர்கள் அதனை கேமெரா லென்சின் முன்னே பதிவு செய்தார்கள் என்பது தான்.

‘சினிமா பாரடைசோ’ படத்தில் நடித்த சிறுவன் சல்வடோர் கதாப்பாத்திரத்தை நடிக்க தேர்ந்தெடுத்ததே கஷ்டமான ஒன்றாக இருந்திருக்குமே?
ஆமாம். கொஞ்சம் கஷ்டம் தான். என்னுடன் வேலை செய்கிறவர்கள் கையில் காமெராவைக் கொடுத்து ஊரெல்லாம் போய்த் தேடச் சொன்னேன். எட்டு வயதில் இருந்து பதினோரு வயது வரைக்குமான குழந்தைகளின் விதவிதமான புகைப்படங்கள் எங்களிடம் இருந்தன. கடைசியில் டோடோவைத் தேர்ந்தெடுத்தேன். அவனுக்கு எலி போன்ற மூக்கு இருந்தது. அது அப்படியே Noiretன் யானை உருவத்துடன் பொருந்திப் போனது. இதோடு அவன் கனவுகள் காண்கிற பையனாகவும் இருந்தான். அது எனக்குப் பிடித்திருந்தது.

முக்கிய கதாபாத்திரத்திரங்களுக்குக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும்போது வேறு என்னென்ன விஷயங்களில் எல்லாம் நீங்கள் கவனம் செலுத்தினீர்கள்?

குறிப்பாக எதுவும் இல்லை. முழுக்கவே இது இயக்குனரின் உள்ளுணர்வைச் சார்ந்த விஷயம் தான். தொடக்கத்தில் இருந்து இயக்குனருக்கும், அந்த குழந்தைக்கும் இருக்கும் உறவு தான் முக்கியம். யதார்த்தத்திலிருந்து நடிப்பை அந்தக் குழந்தை எப்படி வேறுபடுத்திக் கொள்கிறது, எவ்வளவு தூரம் அதற்கு நடிப்பில் ஈடுபாடு இருக்கிறது, பெற்றோர்களிடமிருந்து தன்னை சுயமாக எப்படி வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் நாம் கவனிக்க வேண்டும். புத்திசாலித்தனமும், கிரகிக்கும் திறனும் நிச்சயம் இருக்க வேண்டும். இதெற்கெல்லாம் மேலே, நீங்கள் எந்த மாதிரியான கதாபாத்திரமாக அவனை மாற்ற நினைக்கிறீர்களோ, அதனுடைய சாயல் ஏற்கனவே அவனுள் இருக்க வேண்டும்.

சினிமா பாரடைசோ’ திரைப்படத்தில் தான் நீங்கள் இசையமைப்பாளர் Ennio Morricone உடன் முதன்முதலில் வேலை செய்தீர்கள். அந்த அனுபவத்தில் சிறப்பாக எதை நினைக்கிறீர்கள்?
அவருடன் வேலை செய்யும்போது, படத்தில் எங்கெல்லாம் இசைப் பின்னணியை பயன்படுத்துகிறோமோ, அதைப் பற்றியும், எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் விரிவாக பேசிவிடுவோம். இசையின் நுணுக்கமான மொழியில் அவரிடம் நான் பேச மாட்டேன். ஆனால் இந்த இடத்தில் இது மாதிரியான இசை வேண்டும் என்பதைச் சொல்வேன். அவரும் இசை குறித்த என்னுடைய மொழியைப் புரிந்துகொள்வார். எனக்கும் இசைத் தெரிந்திருந்தால், நானும் இசையின் மொழியிலேயே விளங்க வைத்திருப்பேன். திரைக்கதை எழுதத் தொடங்கும்போதே இசைப் பற்றியும் பேசிவிடுவோம். இதனால் இரண்டு முக்கிய வேலைகளும் ஒரே சமயத்தில் நடந்து கொண்டிருக்கும். Ennioவிற்கு சிறுவயதிலிருந்தே இசையில் பெரும் ஆளுமை இருக்கிறது.

ஒரு தேர்ந்த ஓவியனின் நுட்பமான வண்ணக்கீற்றுகளின் கோர்வை போல கதை சொல்கின்றன இவரது காட்சியமைப்புகள். தத்துவங்களின் மேல் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இவரது படங்களில் aதாக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அழகான பெண் மேல் ஒரு சிறுவன் கொண்டிருக்கிற காதல் என ‘மெலினா’ படம் புரிந்துகொள்ளப்பட்ட போதிலும் , தங்களுக்குக் கிடைக்காத ஒரு அழகான பெண்ணை மனித மனங்கள் எப்படியெல்லாம் அடையத்துடிக்கிறது என்பதாகவே சித்தரிக்கிறார் Guiseppe tornotore.
இசைபற்றி தனக்கு நுணுக்கமாக தெரியாது என்று சொல்கிற GUISEPPE –ன் இசை ரசனை மேம்பட்டதாகவே இருக்கிறது. இதனை குறிப்பாக இவரது The Legend Of 1900 படத்தில் நம்மால் உணரமுடியும். Alessendro Barrico எழுதிய Novecento நாவலான இது மிகப் பிரபலமடைதிருந்தது. நாவலை சிதைக்காமல் திரைப்படமாக எடுக்க வேண்டுமென்பது சவாலான ஒன்று. கப்பலிலேயே வளர்ந்த ஒரு பியானோ இசைக் கலைஞனைப் பற்றிய இந்தப் படத்தின் இசையமைப்பும், அதைக் காட்சிப்படுத்தியிருந்த விதமும் அனைவருமே விரும்பியிருக்கக்கூடும்.
தான் நினைத்ததை எப்படியாவது திரையில் காண்பித்துவிடக்கூடிய சமரசமற்றக் கலைஞனாகவே விமர்சகர்கள் இவரைக் குறிப்பிடுகிறார்கள். அவரும் இதை ஒவ்வொரு படங்களிலும் ஆமோதிதப்படி இருக்கிறார்.

 

மைலோ ஹென்னெச்சியின் புலனாகா இலக்கியம் – ஜான் செக்ஸ்டன் – ஸ்ரீதர் ரங்கராஜன்

download (6)
(அ) மைலோ ஹென்னெச்சி தன்னுடைய ஏழாவது வயதில் ‘புலனாகா இலக்கியம்’ எனும் கருத்தைக் கண்டறிந்தார். ஒரு மதிய நேரத்தில் படுக்கையறை யன்னல் கண்ணாடியின் ஆவிப்படலத்தில் தன் பெயரின் முதல் பகுதியை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருந்தார். எழுதி முடித்ததும் ஆவிப்படலத்தைத் துடைத்து 20 முறை எழுதப்பட்டிருந்த தன் பெயரை அழித்தார். இரண்டு நாட்கள் கழிந்து அங்கே உருவான ஆவிப்படலத்தில் தன்னுடைய பெயர் மீண்டும் தோன்றுவதைக் கண்டறிந்தார்.  கையிலிருந்த எண்ணெய், கண்ணாடியில் படிந்து அப்புலனாகா எழுத்தை உருவாக்கியிருந்தது, பின்பு எப்போதெல்லாம் கண்ணாடியில் நீராவி படிந்ததோ அப்போதெல்லாம் அவ்வெழுத்துகள் புலனாக ஆரம்பித்தன. இச்சம்பவம் மூலம் எழுதப்பட்ட எழுத்துகளின் இறவாமையை மைலோ உணர்ந்தார்.

 

(ஆ) பதின்மூன்று வயதாகையில், ஒரு நாள் காலை வேகவைக்கப்பட்ட முட்டையின் நடுவே ஒரு துண்டுத் தாளினைக் கண்டெடுத்தார். அதில் “am ov” என்று எழுதப்பட்டிருந்தது. மைலோ இதனை “அண்ட மனத்தின் உள் உணர்வு” அனுப்பிய செய்தி என்கிறார். அப்போது அவரின் அம்மா ‘முட்டையோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு அதை உண்ணும்படி’ அறிவுறுத்தியதை நினைவு கூர்கிறார். மைலோ இவ்வார்த்தைகளால் உந்தப்பட்டு தான் செய்ய வேண்டியது என்ன என்று உணர்ந்து அவ்வார்த்தைகளை மென்று தின்றார்.

 

(இ) தனது இருபத்திமூன்றாம் வயதில் மைலோ ‘கைவிடப்பட்ட மொழி’களைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்தார், செய்தித்தாள்களில் இருந்து தன்போக்கில் வார்த்தைகளைக் கிழித்து அவற்றை கண்டபடி அடுக்குவதன் மூலம் கவிதைகளை உருவாக்கினார். அப்போது உருவாக்கப்பட்ட ”கிழித்து உண்ண வியட்நாம் லண்டன் எதுவுமில்லை” எனும் கவிதை வரி மிக முக்கியமானது.

 

(ஈ) தன் இருபதுகளின் முடிவில் வானொலி ஒலிபரப்பிலிருந்து வார்த்தைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து நிலையங்களை மாற்றி மாற்றி வைப்பது மூலம் கேட்கும் வார்த்தைகளைப் பதிவு செய்வார். அதே காலகட்டத்தில்தான், எழுதியவுடனேயே கவிதைகளைக் கிழித்து விடும் முறையையும் ஆரம்பித்தார். கவிதைகள் தடுக்கப்படும்போது மட்டுமே சால்புறும் என்று அவர் நம்புகிறார்.

 

(உ) 1991ல் நியூக்ரேஞ்ச் கேப்ஸ்டோனில் அவர் ‘ஊடாடும் கவிதை’ ஒன்றை உருவாக்கியபோது நான் உடனிருந்தேன். இதைச் சாதிக்க  நாங்கள் அதிகாலையில் முள்வேலிகளை ஏறிக் குதித்து ரகசியமாகச் செல்ல வேண்டியிருந்தது. மைலோ அப்போது ஒரு போத்தலில் தண்ணீரும் ஒரு ப்ளாஸ்டிக் பையில் நெளியும் புழுக்களையும் கொண்டுவந்திருந்தார். தரையினைத் தண்ணீரால் நனைத்து, புழுக்களை ஒரு வட்டமாக கொட்டியபின் இருபது கெஜம் தள்ளி நாங்கள் நின்று கொண்டோம். விடிந்து சில நிமிடங்களே ஆகியிருந்த அந்நேரத்தில் வானம் காக்கைகளால் கருமையடைய ஆரம்பித்தது. விரைவில் காக்கைகள் கல்லில் இறங்கி புழுக்களுக்காகச் சண்டையிட ஆரம்பித்தன. புழுக்களைத் தங்கள் அலகுகளால் பற்றி இழுத்துத் துண்டாக்கின. புழுக்கள் அழிந்து அவை விலகியபின் மைலோ கற்களின் அருகில் சென்று புழுக்களின் சிதறிய உடல்களின் சீழ் மற்றும் புண்வடிநீரினால் உருவாக்கப்பட்ட வடிவங்களை ஆராய்ந்தார். நுணுகி ஆராய்கையில் சில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. அவ்வெழுத்துகள் தெளிவாக இரு வார்த்தைகளை உருவாக்கின ‘canc cosm’ , இதை மைலோ ஒரு துண்டுத் தாளில் எழுதி தான் தொலைபேசிப் புத்தகத்தின் மூலமாக ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருந்த முன்பின் அறியா நபரின் முதுகில் ஒட்டினார். இச்செய்கையின் மூலமாக அவர் அக்கவிதையை ‘வெளியிட்டதாக’ அறிவித்தார்.

 

(ஊ) மைலோ இது வரையில் தன் கவிதைகள் எதையும் வெளியிட்டதில்லை, எனவே தன் பெயரைத்தாங்கிய கவிதைகள் எதுவும் தன்னுடையதில்லை என்கிறார், தன் கைப்பட அவர் எழுதியவற்றைக் கூட. மேலும் அவர் எப்போதுமே கவிதைகள் எழுதியதில்லை என்றும் அதில் அவருக்கு ஆர்வமேதுமில்லை என்றும் தெரிவிக்கிறார். என்ன செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு மட்டும் அவர் எப்போதும் சொல்லும் பதில் “நான் ஒரு கவிஞன்”.

 

 

 

ஸ்டான்ஃபோர்ட் லெஸ்ஸிங்டனின் உள்ளுரை

ஸ்டான்ஃபோர்ட் நாற்காலியிலிருந்தபடி சோம்பல் முறித்தான். நெற்றியில் அரிப்பை உணர்ந்து நகத்தால் கீறிக்கொண்டதும் உடனே ரத்தம் வந்தது.

குளியலறைக்குச்சென்று கண்ணாடியில் பார்க்கையில் நெற்றியின் நடுவில் ஒருபுள்ளி தெரிந்தது. பொறுக்க முடியாமல் அதைக் கிள்ள ஆரம்பித்தான்.

இப்போது அது சுண்டுவிரல் உள்ளே செல்லுமளவுக்கு ஆழ்ந்ததுளையாக மாறியிருந்தது. கூர்ந்து கவனித்ததில் ஆச்சரியப்படும் விதமாக தலையில் இருந்த அது ஒரு சாவித்துவாரம்.

கைக்கருகில் குனிந்து பார்க்கையில் மித்தத்தின்  அருகில் ஒரு சாவி இருந்தது, இதற்குமுன் அதைப் பார்த்ததில்லை, எங்கிருந்து வந்திருக்குமென்றும் தெரியவில்லை. கண்ணாடியில் பார்த்தவாறு சாவியைத் துவாரத்தில் பொருத்திப்பார்த்தான். சரியாகப்பொருந்தியது.

சாவியைத் திருகியதும், உடனடியாக முகம் சுழலாணியில்  பொருந்தியதைப்போன்று லேசாக  நகர்ந்தது. திகிலடையும்படியாக கதவினைப்போல் முகத்தைத்திறக்க முடிந்தது.

முகத்தினுள் நிலைப்பேழை போன்று சிறுஇடம், மேல்தட்டில் இருந்தது ஓர் ஆமை. அதன் சிமுகம் அவனை நோக்கியவாறு இருந்தது. அதன்கீழே இருவண்டுகள், எப்படியென்று தெரியவில்லை ஆனால் அவன் அதன் மூலமாகப் பார்த்துக்கொண்டிருந்தான், அவைதான் அவன் கண்கள். அடுத்த தட்டில்மூக்கின் உள்பக்கம் இருக்கவேண்டிய இடத்தில் ஓர் எலி, கடைசித்தட்டில் வாய் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பறவை. ஒரு குருவி மெலிதாக நடுங்கியபடி அமர்ந்திருந்தது.

திடீரென, குருவி அவன் முகத்திலிருந்து பறந்து சென்றது, அறைக்குள் அலைந்தது. ஸ்டன்ஃபோர்ட் கத்த நினைத்தும் எந்த ஒலியும் எழவில்லை. அந்தப்பறவைதான் அவன் குரல், இப்போது அது அவனிடம் இல்லை. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த எலி கீழே குதித்து ஓடி மறைந்தது. ஸ்டான்ஃபோர்ட் பயத்தில் முகத்தை மூடி, பூட்டினான். அவனால் பேசமுடியவில்லை, வெறுமனே மூச்சு மட்டும் விடமுடிந்தது.

திடீரென தலைக்குள் இறுக்கம் தொடங்கியது, ஆமை நகர ஆரம்பித்திருந்தது.
Author’s Bio

John W. Sexton (Republic of Ireland) is a poet, short-story writer, dramatist, children’s novelist, radio scriptwriter, and broadcaster. He is the author of three collections of poetry, The Prince’s Brief Career (Cairn Mountain Press, 1995); Shadows Bloom / Scáthanna Faoi Bhláth, a book of haiku with translations into Irish by Gabriel Rosenstock; and, most recently, Vortex(Doghouse, 2005). He also created and wrote The Ivory Tower for RTE radio, which ran to over one hundred half-hour episodes. His novels based on this series, The Johnny Coffin Diaries and Johnny Coffin School-Dazed are both published by The O’Brien Press, and have been translated into Italian and Serbian. Under the ironic pseudonym of Sex W. Johnston he has recorded an album with legendary Stranglers frontman, Hugh Cornwell, entitled Sons Of Shiva, which has been released on Track Records.

 

 

 

இருட்டின் இதழ்கள் எபிரேயம் – அகரான் ஆப்பெல்ஃபெல்டு ஆங்கிலம் – ஜெஃப்ரே எம். கிரீன். தமிழ் – ச.ஆறுமுகம்.

 

images (3)

( அகரான் ஆப்பெல்ஃபெல்டு முந்தைய ருமேனியாவின் ஜடோவா என்ற நகரத்தில் 1932ல் பிறந்த யூதர். இந்த நகரம் இப்போது உக்ரேனில் உள்ளது. அவருக்கு எட்டு வயதிருக்கும்போது 1941ல் ருமேனிய இராணுவம் தாக்கியதில், அவரது அம்மா இறந்து போனார். அவரும் அவரது அப்பாவும் நாஜி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர். ஆப்பெல்ஃபெல்டு மட்டும் வதை முகாமிலிருந்து தப்பி மூன்றாண்டுகள் ஒளிந்து வாழ்ந்த போது, சோவியத் படையினர் அவரைக் கண்டெடுத்து ஒரு சமையல்காரராகச் செம்படையில் சேர்த்துக்கொண்டனர். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் அவர், இத்தாலியிலுள்ள ஒரு அகதிகள் முகாமில் பல மாதங்கள் தங்கி, இஸ்ரேல் சுதந்திரம் பெறுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர், 1946ல் பாலஸ்தீனம் வந்து சேர்ந்த அவர், தற்போது இஸ்ரேலில் வசிக்கிறார். இருபது வருடங்களுக்குப் பின்னர் அவரது தந்தையுடன் இணைந்தார். அந்த நேரத்து உணர்ச்சிகளைத் தன்னால் இதுகாறும் எழுத்தில் வடிக்க முடியவில்லையென்கிறார், ஆப்பெல்ஃபெல்டு.

ஆப்பெல்ஃபெல்டின் தாய்மொழி ஜெர்மன். அவர் தனது இருபதாவது வயதுக்குப் பின் இஸ்ரேலில் ஹீப்ரு மொழியைக் கற்று, அந்த மொழியிலேயே இருபத்தைந்தாவது வயதில் எழுதத் தொடங்கினார்; ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் படிப்பினை முடித்து அங்கேயே ஹீப்ரு இலக்கியம் கற்பிக்கவும் செய்தார். இதுகாறும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை ஹீப்ரு மொழியில் படைத்துள்ள அவரிடம் நீங்கள் ஏன் தாய்மொழியான ஜெர்மனில் எழுதுவதில்லையென ஒரு பேட்டியாளர் கேட்ட போது ` அது ஒரு கொலைகாரர்களின் மொழி (My mother-toungue is a murderer`s language. Hebrew is my mother-language) எனப் பதிலளித்தார்.தற்போது மேவசெரெட் ஜியான் நகரில் வசிக்கும் அவர் இப்போது 81வது வயதிலும் நெகெவ் பென்குரியான் பல்கலைக்கழகத்தில் ஹீப்ரு இலக்கியம் கற்பிக்கிறார்.

ஹீப்ரு இலக்கிய முன்னணிப் படைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் இவருக்கு யுகோஸ்லேவியன், உக்ரேனியன், ருஷ்யன், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளும் தெரியும்.

ஆப்பெல்பெல்டின் படைப்புகளில் மவுனம், செயலற்ற நிலை மற்றும் துன்பங்களே கருக்களாக இருக்கின்றன. இயலாமையே வாழ்வின் வலிமையாக மாறுவதை எடுத்துக்காட்டும் இவரது படைப்புகள் பியாலிக் விருது, இஸ்ரேல் விருது, ப்ரிக்ஸ் மெடிஸிஸ், நெல்லி சாச்ஸ் விருது, ப்ரென்னர் விருது தேசிய யூத இலக்கிய விருது எனப் பல விருதுகளை வென்றுள்ளன.

மிகச்சிறந்த 200 இஸ்ரேலியர்களில் 157 வது நபராகச் சிறப்பிக்கப்படுகிற இவரையே பிலிப் ராத் என்ற படைப்பாளர் அவரது ஆப்பரேசன் ஷைலாக் என்ற நாவலில் ஒரு பாத்திரமாகப் படைத்துள்ளார்.

புக் டிரஸ்டின் அயலகப் படைப்புகளுக்கான 2012 விருது பெற்ற Blooms of Darkness என்ற நாவலின் முதல் ஐந்து அத்தியாயங்களிலிருந்து இந்தக் கதைப் பகுதி தமிழாக்கம் செய்யப்படுகிறது)

1

நாளையோடு ஹ்யூகோவுக்குப் பத்து முடிந்து பதினொன்று ஆகிறது. அன்னாவும் ஓட்டோவும் நாளை அவன் பிறந்தநாளுக்கு வருவார்கள். ஹ்யூகோவின் நண்பர்கள் அநேகமாக எல்லோரும் தூரத்துக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். எஞ்சியிருக்கும் சிலரும் விரைவில் அனுப்பப்பட்டுவிடுவார்கள். யூதர் முகாமான கெட்டோவில் நிலவுகின்ற பதற்றம் பயங்கரமானது. ஆனாலும் அங்கே யாரும் அழுதுவிடவில்லை. தமக்கு என்ன நிகழப்போகிறதென்பதை குழந்தைகள் ஒருவாறு உணர்ந்தே இருந்தார்கள். பயத்தை ஏற்படுத்திவிடக்கூடாதென்றே பெற்றோர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். ஆனாலும் கதவுகளையும் சன்னல்களையும் யாரால் மூடமுடியும்? அவை தாமாகவே அடித்துக்கொள்கின்றன, அல்லது, பட்டென்று திறந்துகொள்கின்றன. காற்று நடைபாதைகளினூடே சாட்டைகளால் விளாசிக்கொண்டே இருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்புதான் ஹ்யூகோவை மலைகளுக்கு அனுப்புவதாக இருந்தார்கள். ஆனால், அவனை அழைத்துச்செல்வதாக இருந்த விவசாயி வரவேயில்லை. இடையில் அவன் பிறந்தநாள் வரவே, ஹ்யூகோ தன் வீட்டையும் பெற்றோரையும் என்றென்றும் நினைவுகொள்ளும்படியாக ஒரு விருந்து நடத்த வேண்டுமென அவனது அம்மா விரும்பினாள். நாளைக்கு, ஏன், இந்தக் கணத்தில்கூட என்ன நிகழுமென்று யாருக்குத் தெரியும்? அந்த நினைப்புதான் அவளுக்குள் தகித்துக்கொண்டிருந்தது.

ஹ்யூகோவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அம்மா ஜூல்ஸ் வெர்னின் மூன்று புத்தகங்களையும் கார்ல் மேயின் ஒரு தொகுதியையும் ஏற்கெனவே வெளியேற்றப்படவிருந்த நண்பர்களிடமிருந்து வாங்கி வைத்திருந்தாள். அவன் மலைகளுக்குச் செல்வதாக இருந்தால் இந்தப் புதிய பரிசுகளையும் எடுத்துச் செல்லுவான். டோமினோக் கட்டைகளையும் சதுரங்கப்பலகை, காய்களையும், ஒவ்வொரு இரவிலும் அவன் தூங்கும் முன்பு படித்துக் காட்டும் அந்தப் புத்தகத்தையும் அவனுக்கே கொடுத்துவிடுவதாக இருந்தாள்.

மலையிலும் அவன் படிப்பதாகவும் கணிதங்களைச் செய்துபார்ப்பதாகவும் இரவுகளில் அம்மாவுக்குக் கடிதம் எழுதுவதாகவும் மீண்டும் ஒருமுறை உறுதியளித்தான். அவன் அம்மா கண்ணீரை அடக்கிக்கொண்டு, வழக்கமான குரலில் சாதாரணமாகப் பேச முயற்சித்தாள்.

அன்னா, ஓட்டோவின் பெற்றோர்களோடு, ஏற்கெனவே மலைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த சிறுவர்களின் பெற்றோர்களும் பிறந்தநாள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அக்கார்டியனோடு வந்திருந்தார்.

வாழ்க்கை என்னவோ சாதாரணமாக இருப்பது போலவே, எல்லோரும் அவரவர் அச்சங்களையும் கவலைகளையும் முடிந்தவரை மறைக்க முயற்சித்தனர். ஓட்டோ உயர்வான ஒரு பரிசோடு வந்திருந்தான்; அது முத்துப் பதித்து அழகுபடுத்தப்பட்டிருந்த ஒரு பேனா. அன்னா சாக்லேட் கட்டி ஒன்றும் அல்வாப் பொட்லம் ஒன்றும் கொண்டுவந்திருந்தாள். இனிப்புகளும் மிட்டாய்களும் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தின. பெற்றோர்களின் துயரம் கூட ஒரு கணம் மறைந்து இனிமை தோன்றியது; ஆனாலும் அக்கார்டியனால் உணர்வுகளைத் தட்டியெழுப்பி உற்சாகத்தைக் கொண்டுவர முடியவில்லை. அக்கார்டியன் வாசிப்பவர் என்னவோ மிகுந்த பாவத்தோடு இராகங்களின் முழுப்பரிமாணங்களுக்கும் பயணித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சித்தார்தான்; என்றாலும் அது, துக்கத்தையே அதிகமாக்கியது.

`நடவடிக்கை`களைப்பற்றியோ, எங்கே, என்னவென்று எதுவும் கூறாமல் அழைத்துச்செல்லப்படும் கட்டாய உடலுழைப்புக் குழுக்கள் பற்றியோ, அனாதை இல்லம், முதியோர் விடுதி பற்றியோ, அவற்றில் தங்கியிருப்போர் திடீர்த்திடீரென எவ்விதத்தகவலுமின்றி நாடுகடத்தப்படுவது பற்றியோ, ஏன், ஒரு மாதத்துக்குமுன் ஹ்யூகோவின் அப்பாவை வீட்டிலிருந்தும் பலவந்தமாக இழுத்துச் சென்றார்களே, அதைப்பற்றியோகூட யாரும் வாய்திறக்கவில்லை. ஹ்யூகோவின் அப்பா எங்கே? அவர் என்னவானார்? எதுவுமே தெரியவில்லை.

எல்லோரும் புறப்பட்டுச் சென்றபிறகு ஹ்யூகோ கேட்டான், ‘’ அம்மா, நான் எப்போது மலைக்குப் போக வேண்டியிருக்கும்?’’

‘’தெரியவில்லை. என்னென்ன முடியுமோ, அத்தனையிலும் பார்க்கிறேன்.’’

`என்னென்ன முடியுமோ, அத்தனையிலும் பார்க்கிறேன்` என்பதன் பொருளை ஹ்யூகோவால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. அம்மா இல்லாமல் தன்னந்தனியாகத் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளுவதும், மிகுந்த பணிவுடையதுமான ஒரு வாழ்க்கையை அவன் கற்பனைசெய்து பார்த்தான். அவன் அம்மா திரும்பவும் கூறினாள், ‘’ நீ எதையும் கெடுத்துவிடக்கூடாது. அவர்கள் உன்னை என்ன செய்யச் சொன்னாலும், அவை எல்லாவற்றையும் நீ செய்யவேண்டியிருக்கும். அம்மாவால் முடிந்தவரை உன்னைப் பார்க்க வருவதற்கு முயற்சிப்பேன். ஆனால், அது என் கையில் இல்லை. எல்லோரையும் எங்கெங்கோ அனுப்புகிறார்கள். எது எப்படியிருந்தாலும் நீ என்னை அதிகம் எதிர்பார்க்கக்கூடாது. என்னால் முடிகிறபோதெல்லாம் வந்துவிடுவேன்.’’

download (5)

‘’அப்பாவும் வருவாரா, அம்மா?’’

அம்மாவின் முகம் ஒருகணம் இறுகிப்போனது. அவள் சொன்னாள்: ‘’உடலுழைப்பு முகாமுக்குக் கூட்டிப்போன நாளிலிருந்தே அவரைப்பற்றி எந்தத்தகவலும் தெரியவில்லை.’’

‘’அவர் எங்கே இருக்கிறார்?’’

‘’அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.’’

`நடவடிக்கை`களுக்குப்பிறகு, அம்மா, அவளுடைய துயரத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாக, ‘’அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.’’ என்று அடிக்கடி சொல்லிப் பெருமூச்சு விடுவதை அவன் கவனித்தான். `நடவடிக்கை`கள் தொடங்கிய பிறகு உயிரோடிருப்பதையே ரகசியமாக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அம்மா எல்லாவற்றையும் விவரமாகக்கூறி அவனை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறாள். ஆனால் கண்முன் நடக்கிற எல்லாமே, இனந்தெரியாத ஒரு பயங்கரத்தை அவனுக்கு உணர்த்துகின்றன.

‘’ எல்லோரையும் எங்கே கூட்டிப்போகிறார்கள்?’’

‘’கட்டாய உடலுழைப்புக்கு,’’

‘’அப்படியென்றால், எப்போது திரும்பி வருவார்கள்?’’

அவன் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் அம்மா முன்புபோல் பதில் சொல்வதில்லையென்பதை அவன் உணரத்தொடங்கினான். சில கேள்விகள் காதில் விழாததுபோல இருந்துவிடுகிறாள். சிலவற்றை அலட்சியம் செய்கிறாள். அவன் இப்போதெல்லாம் கேள்வி கேட்காமலிருக்க முயற்சிக்கிறான்; பதிலாக வார்த்தைகளின் நடுவே உறைந்து கிடக்கும் மவுனத்தைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்குள்ளிருந்த குழந்தைமை! ஒருசில மாதங்கள் முன்புவரை பள்ளிக்குச் சென்றுகொண்டும், வீட்டுப்பாடங்களை எழுதிக்கொண்டுமிருந்த அவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்பான், ‘’அம்மா, எல்லோரும் வீடுகளுக்கு எப்போது திரும்பி வருவார்கள்?’’

அநேகமாக எல்லாநாட்களிலும் அவன் தரையில் உட்கார்ந்து டோமினோக்களை அல்லது சதுரங்கத்தைத் தனியொருவனாகவே ஆடிக்கொண்டிருப்பான். சிலநேரங்களில் அன்னா வருவாள். அவள் ஹ்யூகோவைவிட ஆறுமாதம் சிறியவள். ஆனால், அவனைவிடச் சிறிது உயரமாக வளர்ந்திருந்தாள்; கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பாள். அவள் மிக நன்றாகப் பியானோ வாசிப்பாள். நிறையப் புத்தகம் படிப்பாள். அவளின் மதிப்பைப் பெற்றுவிட வேண்டுமென்று ஹ்யூகோ விரும்பினான். ஆனால் அது எப்படியென்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. அவன் அம்மா அவனுக்குப் பிரெஞ்சு கற்றுத் தந்திருந்தாள். ஆனால், அதிலும் அன்னாவே அவனைவிடத் திறமையாக இருந்தாள். அவள் பேசும் முழுமையான பிரெஞ்சு வார்த்தைகளைக் கேட்கும்போது, அன்னாவால் எதை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ள முடியுமென்று அவனுக்குத் தோன்றும். பதிலுக்கு எதுவும் செய்ய முடியாமல் அவன் துள்ளுகயிற்றை இழுப்பறையிலிருந்தும் எடுத்துக் கயிறுதுள்ளிக்கொண்டிருப்பான். அதில் அவன் அன்னாவைவிடக் கொஞ்சம் திறமையாக இருந்தான். அன்னா அதில் வெகுவாக முயற்சித்தாளானாலும் அந்த விளையாட்டில் அவளது திறமை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளேதான்.

‘’உனக்காக ஒருவரை, உன் அப்பா,அம்மா கண்டுபிடித்துவிட்டார்களா?’’ ஹ்யூகோ மிகுந்த எச்சரிக்கையுடனேயே கேட்டான்.

‘’ இல்லை; இன்னும் இல்லை. வந்து கூட்டிச் செல்வதாகச் சொன்ன விவசாயி இந்தப்பக்கம் இன்னும் தலையைக்கூடக் காட்டவில்லை. அந்த ஆளின் முகம் கூடத் தெரியாது.’’

‘’ என்னுடைய விவசாயியும் அப்படியேதான்.’’

‘’ நாம் எல்லோருமே கிழவர்களோடுதான் போகவேண்டியிருக்கும் போல.’’

‘’ அது ஒரு விஷயமே இல்லை.’’ என்ற ஹ்யூகோ ஏதோ வளர்ந்து நிரம்பவும் தெரிந்துவிட்டவன் போலத் தலையைக் குனிந்து கொண்டான்.

ஒவ்வொரு இரவிலும் அம்மா அவனை ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து ஒரு அத்தியாயத்தையாவது படிக்கச் செய்துவிடுவாள். கடந்த சில வாரங்களாக அவள் பைபிளிலிருந்து சில கதைகளை வாசித்துக்காட்டுகிறாள். மதநம்பிக்கையாளர்கள் தாம் பைபிள் வாசிப்பார்களென ஹ்யூகோவுக்குத் தெரியும். ஆனால், அம்மா! அவள் பைபிள் வாசிப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. அவன் கதைகளைத் தெளிவான காட்சிகளாகக் காண்கிறான். தெருமூலையில் மாவுப்பலகாரம் விற்கும் கடைக்காரரைப்போல, ஆபிரகாம் மிகவும் உயரமாகத் தெரிகிறார். அந்தக் கடைக்காரர் குழந்தைகளை நேசித்தார். அவர் கடைக்குள் நுழையப்போகிற ஒவ்வொரு குழந்தைக்குமாக ஏதாவது ஒரு ஆச்சரியமான பரிசு அங்கே காத்துக்கொண்டிருக்கும்.

பலியிடுவதற்காக ஈசாக் கட்டப்படுவதை அம்மா வாசித்து முடித்ததும், ஹ்யூகோ வியப்புடன் கேட்டான்:

“ அம்மா! இது நீதிக்கதையா? இல்லை, வெறுங்கதையா?’’

‘’ அது…., கதைதான்’’ – அம்மா மிகுந்த கவனத்தோடு சொன்னாள்.

ஈசாக் பலியிடப்படாமல் காப்பாற்றப்பட்டதைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்; ஆனால் பலியான ஆட்டுக்காகத் துயரம் கொண்டான்.

‘’ கதை, ஏன் அப்படியே நின்றுவிட்டது, மேலே போகவில்லை?’’ என்று கேட்டான் ஹ்யூகோ.

‘’ நீயே கற்பனை செய். முயற்சித்துப்பார்.’’ என அறிவுறுத்தினாள், அம்மா.

அம்மா சொன்ன அறிவுரை வேலைசெய்ய ஆரம்பித்தது. கண்களை மூடியதும் உயரமான, பசுமை போர்த்திய கார்பாத்தியான் மலைகள் கண்முன் வந்தன. அடேயப்பா! ஆபிரகாம் எவ்வளவு உயரம்! அவரும் அவரது சிறிய மகன் ஈசாக்கும் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பின்னாக ஆடு, அதன் விதியைத் தெரிந்துகொண்டது போலத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே தொடர்கிறது.

 

 

( தொடரும் )

•••••

 

இருட்டின் இதழ்கள்

(Winner of the INDEPENDENT FOREIGN FICTION PRIZE 2012 of Book Trust)

எபிரேயம் – அகரான் ஆப்பெல்ஃபெல்டு

ஆங்கிலம் – ஜெஃப்ரே எம். கிரீன்.

தமிழ் – ச.ஆறுமுகம்.

 

தமிழ்த் திரையிசையில் பொங்கஸ் ( Bongo Drums ) – அ.கலைச்செல்வன். சிட்னி, ஆஸ்திரேலியா.

 

 தமிழ்த் திரையிசையில்  பொங்கஸ் ( Bongo Drums ) 

 

                                        Inline image 1

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலத்தில் அவர் இசையமைத்த திரையிசைப் பாடல்களில்பிரபலமாகக் காணப்பட்டு, இசைஞானியால் தப்லா  வுடன் சேர்த்து புதுமையாக பாவிக்கப்பட்டு, ஏ.ஆர்.ரஹ்மானால் அதிரடியாக முழக்கப்பட்ட  இசைக்கருவி பொங்கஸ்  ( Bongo Drums) ஆகும்.

 

பொங்கஸ் ட்றம் என்றழைக்கப் படும்  இந்த வாத்தியம் காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும்தரத்திலும் மாற்றமடைந்து வந்தாலும் அது இசை  உலகின் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டது. 19ம்நூற்றாண்டின் இறுதியில்  உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும் இதன் பூர்வீகம் கியூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான அழவு கொண்ட இரண்டு ட்றம்ஸ் களை ஒன்றோடு ஒன்று சேர்த்துப்பொருத்துவதன் மூலம் பொங்கஸ் வடிவமைக்கப் படுகிறது. இரண்டு மேளத்திலும் அழவில் பெரிதாக உள்ள மேளத்தை ( Drum ) , ஹெம்ப்றா ( hembra) என்று அழைக்கிறார்கள். . இது ஸ்பானிய மொழியில்பெண்பாலைக் குறிக்கும். சிறிய Drum மஹ்கோ (macho ) என்று ஸ்பானிய மொழியில் ஆண்பாலாகஅழைக்கப் படுகிறது. இதன் அழவு 6 – 7inch  தொடக்கம் 7 – 8.5 inch   ஆகும்.  ( சிறுவர்களுக்காகசெய்யப்படுவது அழவில் சிறியதாகக் காணப்படும்

 

1900இன் ஆரம்பத்தில் கியூபாவில் வாழ்ந்த ஆபிரிக்க ஸ்பானிய மக்களால் “changui`என்ற இசைக்கு/பாடலுக்கு இசையாக இது பயன்படுத்தப் பட்டதாதாகவும் காலப்போக்கில் அதுவே மருவி இப்போதையசல்சா ( Salsa ) ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

 

1900 தின் நடுப்பகுதியில் இந்த வாத்தியம்,  பொங்கோ மற்றும் ஜக் கோஸ்ரன்சோ என்பவர்களால்மிகப்பிரபலமாகி உலகின் எல்லா இசைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.  தற்போதும்உலகெங்கும் பிரபலமாகவுள்ள jazz ற்கு அடித்தளம் இந்த வாத்தியமென்றால் அது மிகையல்ல.

 

 

 

Inline image 3

 

இதை இசைப்பவர்கள் தங்களின் இரு கால்களிற்கிடையிலும் தாங்கிப்பிடித்தபடியே விரல்களால்லாவகமாக  இசைக்கவேண்டும்.

1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது.  அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

 

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

 

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன்  குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.

 

மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல்  நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப்  பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.

 

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப,  தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச்  சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

 

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில்  மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில்  மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில்  காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

 

அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.

 

கே. மகாதேவனும் பொங்கசை நன்றாகப் பாவித்துள்ளார். வசந்தமாளிகையில் குடிமகனே.. பெரும் குடி மகனே .. என்ற பாட்டில் பொங்கஸ் மிகச் சுதந்திரமாக விளையாடுவதைக் கேட்டு மலைக்கலாம்..

 

இந்தி இசையமைப்பாளர்களான ஆர்.டி. மற்றும் எஸ்.டி. பர்மன்கள் இறுதிவரை இந்த இசைக்கருவிமேல்எம்.எஸ்.விஸ்வநாதனைப் போலவே அதிக வாஞ்சை கொண்டிருந்தார்கள். அடிக்கடி தங்களின் பாடல்களில்பயன்படுத்தத் தவறியதில்லை.

                     Inline image 4

76 – 80 களில் இசைஞானியின் காலத்தில் பொங்கசை அவர் பாவித்த விதம் மிகப் புதுமையானது. அவரின் அனேகமான மெலடிப்பாடல்களின் ஆரம்ப மற்றும் இடையிசையில் களம் புகும் இந்த வாத்தியம் கூட்டுச் சேர்வது தப்லாவுடன். அது இசைஞானியின் அதீத கற்பனையின் வெளிப்பாடு. அனேகமாக தப்லாவும் பொங்கசும் சேர்ந்து இசைக்கும் போது ஒன்றின் கேள்விக்கு மற்றொன்று பதில் சொல்வதைப்போல அச்சு அசலாக இருப்பதுதான் அதன் சிறப்பு. இந்தக் கூட்டணியில் பல பாடல்கள் வந்திருந்தாலும் நான் சிவப்பு மனிதனில் இடம் பெற்ற,  பெண்மானே சங்கீதம் பாடவா, என்ற ரஜினி பாடல்..  தென்றலே என்னைத் தொடுவில் இடம்பெற்ற தென்றல் வந்து எனைத் தொடும் என்ற பாடல் மற்றும் புன்னகை மன்னனில் இடம் பெற்ற என்ன சத்தம் இந்த நேரம் போன்ற பாடல்களைக் கேட்டுப்பார்த்தால்  இசைஞானி என்ன விதமாக இந்த வாத்தியத்தை உபயோகித்துள்ளார் என்பது புரியும். இதில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய இன்னொரு விடயம் இசைஞானியின் இரண்டாவது படத்தில் இடம் பெற்ற ஒருநாள்.. உன்னோடு ஒருநாள்.. என்ற பாட்டில் பொங்கஸிற்கே தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அதை வாசித்த நோயல் கிராண்ட் என்பவரால் வாசிப்பில் சேர்க்கப்பட்ட புதுமைகள் பாடலின் போக்கையே மாற்றிவிட்டிருந்தது. இதை சமீபத்தில் இசைஞானியே ஒரு கலந்துரையாடலில் கூறியிருந்தார்.

 

     Inline image 2

 

 

90களின் நடுப்பகுதி வரை இசைஞானி இளையராஜா என்ற ஜாம்பவானால் கட்டிப்போடப்பட்டு, அவரின்ஆதிக்கத்தில் சுகமான மெலடிப்பாட்டில் சங்காரித்துக் கொண்டிருந்த தமிழ் இசை ரசிகன் குடும்பஸ்தனாகிவாழ்க்கையில் பிசியாகிப்போனான்.

 

அந்த இடத்துக்கு புதிதாய் வளர்ந்த இளம் ரசிகனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது, அந்த நேரத்துஅரசியல், சமூக  மாற்றத்துக்கு ஏற்ப, புதிதாய் தென்னாசியாவில் புகுந்து கொண்ட எம்.ரீ.வியைப் பார்த்தபாதிப்பினால் ஏற்பட்டதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மாற்றம் , மாற்றான் தோட்டத்துமல்லிகையான உலக இசையை ரசித்துப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டதுதான்.

அதுவரை அமைதியான மெல்லிசையான தமிழ்த்திரையிசையைப் போற்றிப் புகழ்ந்தவர்களின் வழிவந்தவாரிசுகள், அட்டகாசமான கொம்பியூட்டர் இசையில் கவனத்தைத் திருப்பத் தொடங்கியதுடன் நில்லாது,உலகமயமாக்கலுக்கேற்ப உலகிலுள்ள வித்தியாசம் வித்தியாசமான இசைகளை நோக்கி எட்டிப்பார்க்கத்தொடங்கினர். இந்த வேளையில் காலமாற்றத்துக்கு ஏற்ப மணிரத்னத்தால் அறிமுகமானர் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

                  Inline image 5

 

ரஹ்மான் அறிமுகமாகும் போது மிகச்சிறிய வயது. எனவே இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிவதில்அவருக்குக் கஷ்டம் இருக்கவில்லை. அதனால் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உலகின் பல விதமானஇசைச்சேர்க்கைகளையும் ,இசைக்கருவிகளையும் தமிழிசையுலகில் அறிமுகப் படுத்தினார். அப்படி அவர்jazz ஐயும் அறிமுகப்படுத்தினார். அந்தப் பாட்டுத்தான் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் சக்கைபோடுபோட்ட முக்காலா ..முக்காபுலா..

இந்தப் பாட்டில் பொங்கசையே போன்ற ஆனால் பொங்கசிலும் பார்க்க நவீனமானதும் பெரிதானதுமான ஒருஇசைக்கருவியை பயன்படுத்தினார் அதன் பெயர்  Tumba (drum) ஆகும். முக்காலா பாட்டுக்கு இந்த Tumba (drum) ஆற்றிய பங்கிருக்கே… அப்பாடா அதைப் பற்றி விளக்கத்தேவையில்லை, காரணம் அது உலகத்துக்கேதெரிந்த விடயம்.

 

இந்தப் பாட்டுப் பெற்ற அமோக வரவேற்பின் பின் மீண்டும் அனேகமான இசையமைப்பாளர்கள் பொங்கொஸ்போன்ற ஆனால் அதைவிட நவீனமான கொங்கோ, ரும்பா போன்ற இசைக்கருவிகளை அதிகமாக துள்ளலிசைக்கு பாவிப்பதைக் கேட்ட்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் எனக்கென்னமோ எம்.எஸ்.வி.மற்றும் இசைஞானி அழவுக்கு அவற்றை ஆழமாக ஒருவரும் இப்போ பயன்படுத்துவதில்லை என்றஎண்ணம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.