Category: இதழ் 42

சிறுகதை – ராஜ்ஜா – எலி வேட்டை

 download (24)

எலிக்கு பூனை மட்டும்தானா ஜென்ம விரோதி? நாங்களுந்தான். அதுவும் வயல்வாழ் எலிகளுக்கு நாங்கள் சிம்ம சொப்பனம். நிஜ வேட்டை நாய்கள்.

நாங்கள் என்றால் யார் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா!

சாமிநாதன்…முருகேசன்…இவர்களோடு நான். மூவருமே நல்ல கலர். வெயில்ல ஆடி ஆடி சூரிய பகவானிடமிருந்து பெற்ற வரம். இருட்டில் நாங்கள் ஒருத்தருமே தெரியமாட்டோம்.

கறுப்புப் பூனையைக்கூட கும்மிருட்டில் தேடிக் கண்டு பிடித்து விடலாம்…பூனை தன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திராவிட்டால். ஆனால் எங்களைக் கண்டு பிடிப்பது என்பது முடியாத காரியம். எங்கள் இரு கைகளாலும் வாயை இறுக்கப் பொத்திக்கொண்டு நின்று விட்டோமேயானால் அவ்வளவுதான். எங்களை இருட்டில் காட்டிக் கொடுப்பவை பளபளக்கும் எங்கள் பற்கள்தான்.

எங்க ஜோடி பசங்களெல்லாம் என்னென்னவோ பற்பசை போட்டு பல் விலக்கும் காலத்தில் நாங்கள் மட்டும் ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த திண்ணைப் பள்ளிக்கூட ஊத்தப்பல் வாத்தியாரை மனதில் நிறுத்தி பல் விலக்கியதாலே இன்றும் கூட எங்கள் பற்கள் வெள்ளை வெளேரென கெட்டியாய் ஆலம் விழுதுகளைப் போலே ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்துக் கொண்டு முகத்தில்; டொக்கு விழுந்து கிழடு தட்டாமல் இந்த வயதிலும் காபந்து செய்து கொண்டிருக்கிறது.

நாங்கள் கேட்காமலே பெற்ற பகலவனின் வரத்தைத்தான் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போனது. பாதகத்தையும் எங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் வல்லவர்கள் நாங்கள்.

எலி வேட்டைக்கு நாங்கள் புறப்படுகிறோம் என்றால் முரசறைந்து, எக்காளம் முழங்கி ஊரார் பாhக்க நாங்கள் கிளம்புவதில்லை. அப்படி கிளம்பத்தான் முடியுமா? போவது எலிக்கறி தின்பதற்கு. இதிலென்ன பந்தா வேண்டிக்கிடக்கிறது, தாரை தப்பட்டை அடித்து ஒலி எழுப்ப!

என் கையில் மட்டும் இங்கிலாந்து நாட்டு 7 மணி பிளேடு. என்னோட அப்பா தனக்குத் தானே முகச்சவரம் செய்து கொள்பவர். ஒரு பக்கம் ஆங்கிலேயர்கள் மறு பக்கம் பிரெஞ்சுக்காரார்கள். ஒரு பக்கத்தினர் சொல்வதை மறுபக்கத்தினருக்கு அவர்களுக்குத் தெரிந்த மொழியில் எடுத்துச் சொல்வது, தமிழ் மொழி மட்டுமே தெரிந்த ஆலைத் தொழிலாளர்களின் ஆதங்கங்களை ஒளிவு மறைவில்லாமல் இரு அந்நிய மொழிகளிலும் எடுத்துச் சொல்வது அப்பாவின் வேலையானதால் அப்பா என்றுமே ‘நீட்’ தான். முகச்சவரம் செய்து கொண்டு மீசையை அழகாக நறுக்கி வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டை அணிந்து, அதன் மேல் கறுப்பு நிற கோட் அணிந்து இங்கிலாந்து ரலே சைக்கிள் ஏறி மிதித்து ஊரே பொறாமைப்படும் வேலையை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுச் செய்தவர் அவர்.

தினமும் முகச்சவரம் செய்து கொண்டதால் அப்பா எந்த பிளேடையும் நான்கு தினங்களுக்கு மேல் உபயோகப்படுத்த மாட்டார். அப்பாவின் முகமும் என்றுமே பளபளதான்.

ஓய்வு பெற்ற பிளேடுகள் அட்டைப் பெட்டி கல்லறைக்குள் புகுந்து கொள்ளும். இன்னும் வேலை செய்ய தகுதியானவர்கள்தான் நாங்கள் என்று நான் எடுத்து பென்சில் சீவும் போது என் கைகளுக்கு உணர்த்தும். சில சமயங்களில் ரணகளமாக்கி வேடிக்கை பார்க்கும்.

அந்தக் கல்லறையில் இருந்து ஒரே ஒருவரை மட்டும் தட்டி எழுப்பி என் கால்சட்டை பையினுள் அடைக்கலம் கொடுத்துவிடுவேன். ஆக எலி வேட்டைக்கு நான் எடுத்துச் செல்லும் ஒரே ஆயுதம் ஒரே ஒரு பிளேடுதான்.

அதை காலத்தின் கோலம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? எங்கோ வெள்ளைக்கார நாட்டிலே பிறப்பெடுத்து உருப்பெற்று கப்பலேறி இந்தியா வந்து புதுச்சேரி குடி புகுந்து என் அப்பாவின் முகம் மழித்தபின் என்னொடு எலி வேட்டைக்குச்; செல்ல வேண்டும் என்று அந்த பிளேடின் தலையில் எழுதப்பட்டிருக்கும் விதியை என்னவென்று சொல்வது!

சாமிநாதனும் முருகேசனும் கால்சட்டையை மாட்டிக் கொண்டார்கள் என்றால் எலி வேட்டைக்கு தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். மற்ற நேரங்களில் அவர்கள் மலைக் கோயில்களில் காட்சியளிக்கும் சாட்சாத் முருகப் பெருமானேதான். என்ன ஒன்று…வேலாயுதம் மட்டும் இருக்காது. எலி வேட்டைக்கு உப்பும் மிளகாய்த்தூளும் வேண்டுமே. தங்கள் வீட்டு அடுப்பங்கரையில் அம்மாவுக்குத் தெரியாமல் சுட்டவைகளை யார் கண்ணிலும் படாமல் வயல்வெளிக்குக் கடத்திப்போகத்தான் இந்த கால்சட்டை ஏற்பாடு.

மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து கைகோர்த்தனர் என்;றால் சேர சோழ பாண்டியரே எலி வேட்டைக்கு கிளம்பிவிட்டனர் என்று அர்த்தம்.

போவது என்னவோ மூன்று பேர்தான். அங்கே போய் வயல் வெளியில் நுழைந்தால் ஒரு கும்பலே எங்களுக்காகக் காத்துக் கிடப்பது தெரியும். எங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே சிதறிக் கிடக்கும் கும்பல் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சிக் கூத்தாடும். ஆரவாரிக்கும்.

அவர்கள் அனைவருமே எலி வேட்டையை வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்கள். கையலாகாதவர்கள். பயந்தாங்கொள்ளிகள். எலி வளைக்கும், நண்டு வளைக்கும், பாம்பு வளைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். நாங்களோ முற்றும் அறிந்த மும்மூர்த்திகள்;. அறிவிலிகள் அறிவாளிகளைப் பார்த்து வியந்த போவதுதானே வாழ்க்கையே.

தேடிப் பெறுவதுதானே ஞானம். நாங்கள் பெற்றதும் அப்படித்தான். தேடாமலேயே கிடைப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அறிவுரை. அது யாருக்குத் தேவை? முட்கள் கொட்டிப் போன கைக்கடிகாரம். இதை வைத்து என்ன செய்ய?

இயற்கை அன்னையிடமிருந்து கிடைக்கும் ஞானம் இருக்கிறதே…அதன் வலிமையே தனிதான். யாரும் அதற்கு சான்றிதழ் ஏதும் கொடுத்துவிட முடியாது. செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அன்னையோடு ஒன்றிவிட வேண்டும். சிறுவயதில் அம்மாவின் சேலை முந்தானையில் ஒன்றிவிடுவதைப்போல.
கொடுக்காப்புளி மரத்தை கொடுக்கும் புளி மரமாக மாற்றும் கலையை கற்றவர்கள் நாங்கள். காக்கைக்கு வேண்டுமானால் தன் முட்டைக்கும் குயில் முட்டைக்கும்; வித்தியாசம் தெரியாமல் போகலாம். அண்டங்காக்கையின் நிறத்தில் இருக்கும் எங்களுக்கோ நியாயங்களும் தெரியும், தர்மங்களும் தெரியும். காக்கைக்கு சிரமம் கொடுக்காமல் அனைத்து முட்டைகளையும் அபேஸ் செய்து கொண்டு வந்து எங்கள் வீட்டு அருங்காட்சியகத்தில் வைத்து முட்டைகள் பொரிக்காமல் இருக்கச் செய்யும் கலையும் எங்களுக்கு கைவந்ததே. மீன் குஞ்சுகளும் தவளைக் குஞ்சுகளும் ஒரே ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள் நட்போடு நீந்தினாலும் தலைப்பிரட்டை எது மீன் குட்டி எது என்று பார்த்த பார்வையிலேயே சொல்லும் ஞானிகள் நாங்கள்.
எங்களுக்குத் தெரியாதா எந்த புத்தில் எந்த பாம்பு என்று.
எலி வளை ஈரமாயும் இருக்காது…வரண்டு போயும் இருக்காது. இரண்டும் கெட்டான் நிலைதான். கொளுத்துகின்ற கோடை வெயிலில் தங்களுக்கென்று தனி ஏ.சி. போட்டு வாழும் வளை வாழ் வெள்ளை எலிகள்.
நண்டு வளை முழுக்க முழுக்க ஈரம்தான். வளையின் வாயில் உழைமண்ணை கொலுறு கொண்டு பூசியதைப் போல இருக்கும். ஈரமாகவே இருப்பதால் நண்டின் காலடிச் சுவடுகள் நன்றாகவே வாயிலில் தெரியும், நான் உள்ளேதான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு…தங்களுக்கென்று தனி நீச்சல்குளம் கட்டி வாழும் நண்டுகள்.
பாம்பு வளை…பாவம் பாம்புகள்! இனப்பெருக்கம் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாதவை. இவைகளுக்கென்ன நண்டைப்போல் எலியைப் போல் வளை அமைத்து வாழவா தெரியும்? இவைகளை லாவகமாக பிடித்து வேண்டுமானால் தின்னத் தெரியும். யாரும் வீட்டில் இல்லாதபோது அந்த வீட்டிற்குள் நுழைந்து இனிமேல் இது என் வீடு என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப்போல இவை ஆட்டம்போடும். சில சமயங்களில் கரையான் களிடமும் பெரிய்ய நண்டுகளிடமும் மாட்டிக் கொண்டு நரக வேதனை அனுபவிக்கும் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள். பாதாள லோகத்தை கட்டிக் காக்கும் வேதாளங்கள் போல இவை எந்த வளையில் இருந்தாலும் தெரிந்துவிடும். முழு உடம்பையும் வளையினுள் நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வளை வாயிலில் வைத்து எப்போது யார் தன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விடுவார்களோ என்று நடுங்கிப்போய் படுத்துக் கிடப்பதால்; பாம்பு வளையை சுலபமாகக் கண்டு பிடித்துவிடலாம்.
எலி வேட்டைக்குப் போகும்போது நாங்கள் கிடுக்கிப் பிடி போடும் நண்டுகளையும் வேட்;டையாடுவது உண்டு. சீரிப்பாயும் பாம்புகளையும் வேட்டையாடுவதுண்டு. முயல் வேட்டைக்குப் போகிறவர்கள் சிங்கம், புலி போன்ற மிருகங்களைக் கொன்று விடுவதைப்போல.
கோடை விடுமுறை மூன்று மாதம். மூன்று முழு மாதங்கள். எந்த பின்னமும் இல்லாமல். விடுமுறையின் ஆரம்ப நாளில் நாங்கள் எங்கள் வாலை அவிழ்த்து விட்டு விட்டோம் என்றால் அது மூன்று மாதமும் அனுமார் வால் போல நீண்டு கொண்டுதான் போகும்.
ஏரி, கம்மாய், ஓடை, குளம், குட்டை, கால்வாய், கிணறு என்று தண்ணீர் இருக்கும் இடங்களெல்லாம் நாங்கள் டேரா போடும் இடங்கள்…எருமை மாடுகள் போலே…அவ்வளவு சுத்தமாக இருப்போம்.
எலி வேட்டையாடுவது தனி திறமை. எங்கள் ஊரிலேயே எங்கள் மூன்று பேரையும் விட்டால் வேறு யாருக்கும் அந்தத் திறமை கிடையாது என்று பாண்டு பேப்பரில் எழுதிக் கொடுக்கலாம்.
வெயில் தாங்காத வெள்ளைக்கார எலிகள் தங்கள் ஏ.சி. வளையில் ஆயாசமாக படுத்துக் கிடக்கும் நேரம் காலை பதினொன்றிலிருந்து மதியம் நான்கு மணிவரை. நாங்கள் இவைகளை வேட்டையாடும் நேரம் மதியம் வீட்டில் நன்றாக தீனி தின்றுவிட்டு தோப்பிற்குச் சென்று பூவரச மரத்தடியிலோ வேப்பமர நிழலிலோ படுத்துக்கொண்டு கால்மேல் கால் போட்டு, கைகளை மடக்கி தலையணையாக மாற்றி, கதைபேசி, சிலசமயம் தூங்கி, பல சமயம் விழித்திருந்து சரியான நேரத்திற்காகக் காத்திருந்து…ஆஹா! இந்த காத்திருத்தலில்தான் எத்தனை சுகம்!
சூரியன் இருக்கும் இடத்தை வைத்தே நேரத்தை மிகத்துள்ளியமாகக் கணக்கிட்டு பட்டென்று சொல்லும் கலை பயின்றவர்கள் நாங்கள்.
‘சரி! எலி வேட்டைக்கு கிளம்பலாமா?’ என்று குரல் கொடுப்பான் சாமிநாதன். ‘ம்…ம்…’ என்பேன் நான். ‘நீங்கள் இருவரும் சென்று எந்த கோட்டையை சுற்றி வளைக்கப்போகிறோம் என்று தெரிந்து வாருங்கள். நான் இன்னும் சற்று இளைப்பாருகிறேன்,’ என்று நாடகத்தில் வரும் அரசனைப் போல பேசுவான் முருகேசன்.
நாங்கள் எழுந்திருப்பதைப் பார்த்த மட்டிலே தோப்பிலும் மரங்களிலும் தண்ணீரிலும் கோடை விடுமுறையை குதூகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எங்கள் ஜோடிப் பையன்கள் கும்பல்கூட ஆரம்பித்துவிடுவார்கள்.
‘எழுந்து வாடா முருகேசா’ என்பேன் நான். கும்பல் அமைதி காக்க ஆரம்பித்துவிடும். எல்லாம் முருகேசனின் உதைக்கும் குத்திற்கும் பயந்துதான். அவன் விடும் ஒரு குத்து ஜென்மத்திற்கு தாங்கும். அவனிடம் குத்து வாங்கியவன் எவனுமே அவனிடம் பேசும்போதுகூட ‘வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே’ என்ற பாடலை மனதில் நிறுத்திக்கொண்டுதான் பேசுவான்.
நம் வீட்டிற்கு முன்வாசல் பின்வாசல் இருப்பதைப்போல, எலி வளைக்கும் உண்டு. ஒரு வாயிலில் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்று ஒரே ஒரு எலி உணர்ந்தாலே போதும். தன் உற்றார் உறவினரோடு மறு வாசலின் வழியே வெளியேறிவிடும்.
எலிகளின் என்ஜினீயரிங் டெக்னாலஜி எங்களுக்கு அத்துபடி. இரண்டு வாயில்களையும் எலிகள் ஒரே நேர்க்கோட்டில் அமைக்கும். நமது வீட்டு வாயிலில் நின்றால் கொள்ளைப்புறம் தெரிவதைப் போல. நமது வீட்டில் கூடம் நடுவீடு என்கிறோமே அதுதான் நாம் புழங்கும் இடம். அதிகமாக உபயோகப்படுத்தப்படும் இடமும் இதுதான். அந்த கூடத்தின் நடுவில் நின்று கொண்டு அங்கிருந்து அளந்து பார்த்தோமாயானால் முன் வாசலும் பின் வாசலும் ஏறக்குறைய ஒரே தூரம்தான். எலியும் இப்படித்தான் தன் வளையினை அமைத்துக் கொள்கிறது.
நிச்சயம் மனிதப் பயல்களிடமிருந்து அவை கற்றுக் கொண்டவை அல்ல. மனித இனம்தான் பிட் வைத்து காப்பி அடித்து டிகிரி வாங்கி என்னைப் போன்று உழைப்பவன் இந்த ஊரில் யார் உள்ளான் என்று பெருமை பேசிக் கொள்ளும் இனமாயிற்றே.
சாமிநாதன் முன் வாசலைக் கண்டுபிடிப்பான். வளையின் பின் வாசலை நான் கண்டு பிடிப்பேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்போம். சரியாக நேருக்கு நேர். ஒரே நேர்க்கோட்டில் நாங்கள் இருவரும். எலிகளை வளைத்தாகிவிட்டது என்று அர்த்தம்.
அடுத்து முருகேசனின் வேலை ஆரம்பமாகிவிடும். சாமிநாதனின் கால்கட்டை விரலிலிருந்து அளக்க வேண்டும். அதை மிகத் துள்ளியமாகச் செய்வான் முருகேசன். குத்துக்காலிட்டுக் கொண்டு தன் கையினை அகலவிரித்து ஜான் போட்டுக் கொண்டே என் கால் கட்டைவிரல் நோக்கி நகர்வான். ஒரு ஜான் என்பது கையை விரித்து வைத்தால் கட்டைவிரல் நுனிக்கும் சுண்டு விரல் நுனிக்கும் உள்ள தூரம். இப்படியாக முருகேசன் ஜான் போட்டுக் கொண்டு அதை எண்ணிக்கொண்டே நகர்ந்து என் கட்டை விரலைத் தொடும்போது அறுபது எழுபதையும் தாண்டும்.
எழுபத்தி மூன்று என்று சொல்லி முடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ‘எழுபத்து மூன்றில் பாதி என்னடா ராஜா?’ என்று கேட்பான் முருகேசன். நானோ கணக்கில் புலி. ஒவ்வொரு ஆண்டும் கணக்கு ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தை படுவது எனக்குத் தானே தெரியும்.
‘டேய்! அவன் சும்மாதானடா இருக்கிறான். அவன்கிட்டயே கேளேன்,’ என்று சொல்லி சாமிநாதனை காட்டிவிடுவேன்.
‘அவன்கிட்டயா? தினம் தினம் கணக்கு வாத்தியார் அவன் சூத்தாம்பட்டெய பிரம்பால பழுக்க வைக்கிறாரேன்னு ஒரு நாள் ஆத்திரமடைஞ்ச நம்ம சாமிநாதன் சப்பாத்திக்கள்ளி பழத்துல ஒரு நாலைஞ்செ பறிச்சிக்கிட்டுப் போயி வாத்தியார் உட்கார்ர நாற்காலியில வெச்சவன். வாத்தியாரும் அன்னைக்கு பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டு வந்தாரோ என்னவோ, தேக்கு மரப்பலகையில செக்கச்செவேலென சப்பாத்திக்கள்ளிப் பழங்கள் இருப்பது அவரோட கண்களுக்குத் தெரியல. ஆத்திரம் கண்களெ மறைச்சிடுத்துப்போல. பொத்துன்னு உட்கார்ந்தார் வாத்தியார். நசுக்குன்னு நசுங்கிப்போச்சு பழங்கள். பழத்தோட ஒவ்வொரு கொட்டையும் ஒரு விஷமுள்ளாச்சே. எல்லாம் அவரோட பட்டக்செ குத்தி ரணகளமாக்கிடுச்சி. அய்யய்யோ… அய்யய்யோன்னு அவரு குதிச்சுத் துள்ளினது இப்ப நெனெச்சாலும் பாவமா இருக்குது. நுணலும் தன் வாயால் கெடும்னு படிச்சிருக்கிற இல்ல. நம்ம சாமிநாதனும் முதல்ல சிரிச்சி மாட்டிக்கிட்டான். அதுக்கப்புறம் நடந்தது வேற கதை. அவன் கிட்ட போயி கணக்கு போடச் சொல்றியெ,’ என்று சொல்லிக் கொண்டே, ‘எழுபதுல பாதி முப்பத்தெஞ்சு. மூனுல பாதி ஒன்றரை. ஆக மொத்தம் முப்பத்தொன்ர ஜான். சரி! அளந்துடறேன்.’ என்று சொல்லி, என் கால் கட்டை விரலிலிருந்து பின் நோக்கி ஜான் போட்டுக் கொண்டே நகர்ந்து எலி வளையின் நடு வீட்டிற்கு மேல், தன் ஆட்காட்;டி விரலாலே ஒரு பெரிய வட்டம் போட்டான். அந்த வட்டத்திற்குள் ஓங்கி ஒரு குத்து விட்டான்…தொம்மென்று ஓசை எழுப்பியது அவன் விட்ட குத்து.
‘இப்போ குனிஞ்சி மோந்து பாருங்கடா,’ என்றான் முருகேசன். முன் வாசலை சாமிநாதனும் பின் வாசலை நானும் முட்டி போட்டுக் குனிந்து முகர்ந்து பார்த்தோம்.
எலி வாசனை வந்தது. ‘எலி இருக்குது,’ என்று இருவருமே ஒரே சமயத்தில் கத்தினோம்.
எலி மூத்திர நாற்றம், எலி புழுக்கை நாற்றம்…இரண்டுமே ஒன்றல்ல. வேறு வேறுதான். அதே போல எலி வாசனையும் வேறு. மனித கப்பு, ஆட்டு மொப்பு, மீன் கவுச்சி என்று வேறு வேறு வாசனைகள் இருப்பதைப்போல எலிக்கும் தனி வாசனை உண்டு. அதற்கெல்லாம் நாய் மூக்கு வேண்டும். எங்கள் மூவருக்குமே அந்த மூக்கு உண்டு.
‘சாமிநாதா! உன்னோட வளையெ அடைச்சிடு,’ என்று கத்தினான் முருகேசன்.
சாமிநாதனும் வரப்பு ஓரத்தில் இருந்த களிமண்ணை கைநிறைய தோண்டி வளையில் போட்டுத் திணித்தான். அது லொடக்கென்று உள்ளே ஓடிவிட்டது. எழுந்து நின்று வளை வாயிலை ஒரே ஒரு உதை விட்டான். வளையின் வாய் ஏறக்குறைய மூடிக்கொண்டது. கணிமண்ணை மீண்டும் கைநிறைய தோண்டி எடுத்து, கொஞ்சம் நஞ்சம் திறந்திருந்த வாயையும் மூடிவிட்டான்.
எலியின் கோட்டையில் ஒரு வாயிற்புறம் சாத்தி சீல் வைக்கப்பட்டுவிட்டது. எலிகள் தப்பித்துச் செல்ல வேண்டும். இல்லையேல் உள்ளேயே செத்து மடிய வேண்டியதுதான்.
செய் அல்லது செத்து மடி என்று சொன்னால் நாங்கள் செத்து மடியும் ஜாதி இல்லை என்று சொல்லி செய்ய வேண்டியவற்றை நிதானித்து முடிவு எடுத்து செயல்படுத்தும் எலிகள்.
‘வாயெ மூடிட்டியா? நல்லா கிடி…கிடிச்சுட்டு ராஜாகிட்ட ஓடு,’ என்றான் முருகேசன். சாமிநாதனும் அவன் சொன்னபடியே செய்தான்.
நானும் சாமிநாதனும் தவளைகள் போல் உட்கார்ந்து கொண்டோம். ‘ம்…இப்போ குத்துடா,’ என்றோம்.
முருகேசன் தன் பலங்கொண்ட மட்டும் தான் இருந்த வட்டத்தில் ஓங்கி ஓங்கி குத்தினான். இப்படி மூன்று முறை குத்திவிட்டு நிறுத்தினான்.
உள்ளே இருக்கும் எலி குடும்பத்தினருக்கு தொடை நடுக்கம் கண்டிருக்கும். ஏதோ பூகம்பம் வருகிறதோ என்றெண்ணி கலக்கம் அடைத்திருக்கும். ஏதோ இயற்கையின் சீற்றம் என்று தெரிகிறது. ஆனால் என்னவென்று திட்டவட்டமாகத் தெரியவில்லையே என்று பீதி அடைந்திருக்கும். எது எப்படியானாலும் அடுத்த முறை பூமி அதிரும்போது தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள யார் யார் எந்தெந்தப் பக்கம் விழுந்தடித்து ஓடவேண்டும் என்று முடிவு செய்திருக்கும்.
நான் இருந்த இடத்திலிருந்து இரண்டடி பின்னாலேயே நகர்ந்து கொண்டேன். சாமிநாதன் தன் எலி வளையின் வாயிலை பாதி மூடியபடி கையை வைத்து பொத்திக் கொண்டான்.
முருகேசன் குத்து…தொடர்ந்து விழுந்த குத்தில் எலிகள் வெளியேற ஆரம்பித்தன. வாயில் பாதி மூடப்பட்டிருந்தாலும், இருந்த சந்தின் வழியே சாமிநாதனின் கைக்கிடையே நெளிந்து புகுந்து ஒன்று வெளியேற முயற்சித்தது.
என் வேலை அதை ஒரு கையால் இழுத்து, மறு கையால் அதன் வாலைப் பிடித்து தலை கீழாக தொங்கவிட்டுப் பிடித்துக் கொள்;வதுதான்.
வெள்ளை எலி தலைகீழாக தொங்கினால் தாம் மேலோகம் போய்விட்டதாக எண்ணிக் கொள்ளுமாம். வெள்ளைத்தோல் சித்தாந்தமும் அதுவே.
இப்படி ஒவ்வொன்றாய் சாமிநாதனின் கையிடுக்கில் வெளியேற வெளியேற, எல்லாம் என் கையில் தலைகீழாக…எமலோகப் பயணத்திற்கு சித்தமாகிப் போயிருப்பர்.
சில வளைகளில் பத்து பதினைந்து எலிகள்கூட கிடைக்கும். குறைந்தது ஆறு.
வெள்ளை நிற பட்டாடை உடுத்தி ரத்தினம் போன்ற கண்களால் அவை பயந்தபடி பார்க்கும் போது பாவமாய் இருக்கும். இவ்வளவு அழகாய் மொசுக் மொசுக்கென்று இருக்கிறதே… பாவம் என்று ஒரு மனம் சொல்லும். மற்றொரு மனமோ எவ்வளவு மொழுக் மொழுக்கென்று இருக்கிறது….அவ்வளவும் கறி என்று சொல்லி நாக்கை சப்புக் கொட்ட வைக்கும்.
எலிகள் எல்லாம் வெளியேறிவிட்டனவா என்று எப்படி முடிவு செய்ய? நமது நாய்மூக்கு பதில் சொல்லும்.
எல்லா எலிகளும் பிடிக்கப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்ட பின், சாமிநாதன் எழுந்து தன் கைவிரல்களை மடக்கி, ஒவ்வொரு வெள்ளை எலியின் தலையிலும் ஒரு கொட்டு கொட்டிக் கொண்டே வருவான். சாமிநாதன் கொட்டு நேரே எமலோகத்திற்கு செல்ல ஒரு வகையான விசா.
அடுத்து என் பிளேடு வெளிவரும். ஒவ்வொரு எலியாகக் கீழே வைத்து கழுத்திலிருந்து வால்வரை ஒரே ஒரு இழுப்பு இழுத்து, வாலையும் கழுத்தையும் பின்னோக்கி மடித்து, சட்டையை கழட்டுவது போல அதன் தோலை உரித்து, தலையோடு கிள்ளி எறிவது என் வேலை. அத்தோடு எலி வயிற்று குடல் வகையறாக்கள் பிளேடின் ஒரே இழுப்பில் சரிந்து வெளிவரும். அப்படியே அவற்றையெல்லாம் இழுத்துப் போட்டுவிட்டு எலியைப் பார்த்தால், கசாப்புக் கடையில் தோலுரித்து குடல் பறிக்கப்பட்ட ஆடுகள் தொங்கவிடப்பட்டிருக்குமே அதே போல் மைக்ரோ சைஸில் தெரியும்.
தலையில்லாத முண்டமாய், குடலைப் பறிகொடுத்த அப்பாவியாய், வாலில்லாமல் பரிதாபத்திற்குரிய ஜீவனாய் தெரியும்.
இரு வரப்புகளுக்கிடையே ஓடும் பம்பு கொட்டாய் தண்ணீர்pல் தோலுரிக்கப்பட்ட பிரேதங்களை நன்றாகக் குளிப்பாட்டி எடுக்கும்போது பக்கத்தில் இருப்பாள் கருங்குரங்கு காத்தாயி. அவள் கையில் சுள்ளி, வைக்கோல், சருகாகிப்போன இலைகள்…இவைகளோடு தீப்பெட்டி.
எங்கள் வீடுகளிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்து வந்துவிடலாம்…தீப்பெட்டியைத் தவிர. அது காணாமல் போய் மீண்டும் அடுப்பங்கரையில் தரிசனம் கொடுக்கும்போது, தம்பி சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிட்டானோ என்ற சந்தேகம் அம்மாவிற்கு ஏற்பட்டு விட்டால், அப்பா நம்மை கழுவேற்றிவிடுவாரே என்ன செய்ய!
சுத்தம் செய்யப்பட்ட எலிகளின் மீது மிளகாய்த்தூள் உப்பு கலவையை சரியான அளவில் சந்தனாபிNஷகம் செய்து சுள்ளியின் அடுப்பிற்கு அர்ப்பணம் செய்தால் அக்னி தேவனும் உண்டு சுவை பார்த்து, நாம் சுவாஹா செய்ய அனுமதியளிப்பான்.
அப்படியொரு அற்புதமான சுவையுணர்வை தயாரித்து வழங்கிய காத்தாயிக்கு இரண்டு. சாமிநாதன், முருகேசன், நான்…ஆளுக்கு இரண்டு. மீதமுள்ளவை வேடிக்கை பார்த்து எங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்த பொதுஜனத்திற்கு.
எங்களுக்கு வேண்டியவர்களாகப் பார்த்து நாங்களே பிய்த்துப் பிய்த்து ஆளுக்கு ஒரு கால், ஒரு தொடை. ஒரு மார்கண்டம், ஒரு முதுகு என்று கொடுத்து விடுவோம்.
எப்போதாவது எங்களுக்கு தலைகணம் ஏறிவிடும். நாங்களும் மனிதர்கள்தானே. மீதமிருக்கும் எலிகளை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் முருகேசனிடம் குத்துச் சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
சொன்ன வாக்கிலேயே கும்பல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முருகேசன் குத்து என்ன சும்மாவா? வாங்கியவன் சும்மா இருப்பானா! ஒரு நூறு பேரிடமாவது சொல்லி தான் பிறந்த பலனை அடைந்;திருக்க மாட்டானா?
அப்புறம் என்ன? நாங்களும் காத்தாயியும் சமமாகப் பங்கு போட்டு வாயில் போட்டுக் கொள்வோம். பக்குவமாக சுட்டு சமைக்கப்பட்டதாலே எலிக்கறி பசு நெய் போலே வாயினுள் கரையும். மீண்டும் எலி வேட்டை எப்போது என்று நாக்கு கேட்கும்.

!!!!!!!
ராஜ்ஜா
88, புவேன்கரே வீதி
உழந்தை கீரப்பாளையம்
புதுச்சேரி- 605 004
செல்: 9443617124

கோ.நாதன் கவிதைகள்

download (21)

01.
சலனமற்ற குளத்தின்
மையத்தில் பட்ட மரத்து நிசப்தத்தின் மேல்
வெண்கொக்கும்,நீர்க்காகமும்
எச்சங்களால் வெள்ளை நிறத்து வர்ணம் பூசுகின்றது
முகம் கழுவாத நீர்த் தாவர இலைகளில்
குதூகலிக்கும் பூச்சிகளை
குளத்தை ஆளுகின்ற பறவைகள்
கொலை அலகு கொண்டு வதைக்கும் படலம்.
குளத்தின் கோட்டை ஒரு அரசனால்
திரும்புகையில்
இறக்கப்படும் நீரில் துள்ளுகிறது மீன்கள்
விரித்திருந்த வலையில் அடங்குகிறது குளம் .

02.
கால்களைக் கழற்றிய நதி
ஊர்ந்து ஊர்ந்து நிறைந்து செல்லுகின்றது.
நீரில் இருந்து விழும் பாதச் சுவடு
இடது,வலது கரங்களில் கொழுவி இழுக்க
நதியின் முகம் மௌனமாய் நீள்கிறது.

03.
நீரின் அடர்த்திக்குள்
செதில்களை அழகாக மிளிர வைத்த
வாழ்ப்பட்ட மீனொன்று
ருசித்த பின்னரும் நிலத்தில்
பொற் காசுகளின் சிதறல்களைப் போல்
வெண்மையாய் மின்னுகிறது.

04.
ஓடும் நதியில் தன்னை இறக்கிய அத்வைதம்
இடுப்பளவு நீரை ஏற்றி
நீரில் தொலைந்திருக்கும் விம்பத்தை
பிய்ந்து போன வலையில் தேடி
பொழுதெல்லாம் விரித்து விரித்து மூழ்குகின்றான்.
நீரின் மூலத்தை பெறமுடியாமல்
வலையிலிருந்து சிக்கியிருந்த சிறகு
பறவையொன்றின் முகத்தின் விம்பத்தை
இளகிய இலையின் இரு பக்க வடிவங்களுடாக
ஆழ்ந்து தற்கொலை நிகழ்த்த விழைகின்றது.

05.

வீட்டுக் குப்பை மேட்டிலிருந்து
இறைச்சி வகுந்தெடுத்த எழும்புத்துண்டை
கடித்து குதறுகிறது சொறி நாயொன்று…
தூக்கி வீசிய கடதாசியூடான இரத்தத்தை
நக்கி ருசித்து குடிக்கையிலே
நிமிர்த்த முடியாத வாலில் இசை மீட்டி
அருகினில் படுத்து வாசித்துக் கொண்டிருக்கிறது.
தனதான ”நாய் தின்ற புலால்” உயர் கவிதை.

06.
காடுகளுள் அமைதி மிக மிகுந்த
மரங்களின் சருகுகள் குவிந்திருக்கும்
குகையின் கீழ்
ஒரு போரின் வரலாறு எழுதிய
வீரனின் ஒய்வு ஆழ்ந்த உறக்கத்தில் உறங்குகின்றன
சில வண்ணத்துப் பூச்சிகளும்,
பல அழகிய பூக்களும்
காற்றில் அசைந்து அசைந்து உதிக்கின்றது.

07.
சூரியனின் ஒளியை ஊடறுத்து
உயரப் பறந்து செல்லும் பறவையின்
உதிர்ந்த இறகொன்று
வான்வெளியில் அசைந்தசைந்து
இறங்குகின்ற தருணம் அலகில் கோதி
வலியெறி பாடலால் காடுறைகிறது பறவை.

றியாஸ் குரானா கவிதைகள்

images (10)

 

 

 

 

பேக்காட்டுதல்
(இந்தச் சொல் விளங்காதவர்களுக்கு புரியும்படி சொல்ல தெரியவில்லை)

 

பின்வருமாறுதான்
இந்தக் கவிதை எழுதப்பட்டது.

கவிதை ஒன்று எழுதனும்
நெடுநாளாக காத்திருக்கிறேன்
அதற்குரிய தருணம் மனதில் தோன்றவில்லை.
கவிதை மனம் என்பார்களே
அந்த மண்ணாங் கட்டியெல்லாம் நம்மிடமில்லையே
என சலித்துக்கொண்டிருந்த போதுதான்,
எங்கோ பறந்து கொண்டிருந்த குருவி
வீட்டுக்குள் நுழைகிறது
திண்ணையில் கிடந்த நெல் மணியை பொறுக்கி
பறப்பதற்கு தயாரானது.
உன்னை வைத்துதான்
கவிதை ஒன்றை எழுத தி;ட்டமிடுகிறேன்
நில் எனச் சொல்ல விரும்புகிறேன்
குருவிகளோடு பேசும் ஆளில்லையே
அதனால் தோல்வியடைகிறேன்
என்ன நினைக்கிறது
எங்கு செல்கிறது
எதற்காகப் பறக்கிறது என
அதன் செயல்களைக் கண்டுபிடித்து
சோதிடம் சொல்பவர்கள் நினைவுக்கு வர
பாக்கியசாலிகள் என்று சொல்விட்டேன்
வாய்தவறிக்கூட வேறொன்றும் சொல்லவில்லை
இதைக்கூட கிண்டல் என்றே
அவர்கள் கருதக்கூடும் என சிரிக்கிறேன்
அதன் பாட்டுக்கு பறக்கும் பறவைகளுக்கு
முண்டியடித்துக்கொண்டு உதவி செய்ய
முயற்சிக்கும் பலர் நினைவில்
முகங்காட்டிச் செல்கின்றனர்.
பெயர்களைச் சொன்னால் என்ன நடக்கும்
உங்களுக்குத் தெரியும்தானே
ஆகவே, பெயர்களைக் கேட்க்க வேண்டாம்
நிற்க, குருவி பறக்கப்போகிறது
அதனிடம் வாருங்கள்
வெளியே செல்லாமல் அடைத்து வைப்போமா
அல்லது, மீண்டும் உள்ளே வராமல் இருக்க
கதவை மூடிவைப்போமா
இரண்டும் ஒரே அர்த்தம் தருகிற செயல்தானே
வீட்டுக்குள் வந்த குருவி கவிதைக்கான
அடியெடுத்துத் தரவில்லை.
மீண்டும் வந்து கவிதைக்கான தவத்தை
கலைத்துவிடவும் கூடாது
இப்படி யோசிக்கும்போதே
குருவி பறந்துவிடுகிறது
கதவை மூடிவிடுகிறேன்
நெடு நேரமாகியும் குருவி வரவில்லை
யாராவது வந்து கதவைத் தட்டினால் நல்லது
அது நிகழவில்லை
வீட்டுக்கு வெளியே வந்து
கதவை மூடிவிட்டு காத்திருக்கிறேன்
களைப்போடு ஒரு வழிப்போக்கன்
நடந்து வருகிறான்
கதவைத் தட்டுங்கள் உள்ளே ஒருவர்
அதற்காகவே நீண்ட நேரம் காத்திருக்கிறார் என்றேன்.
கதவைத் தட்டினான்.
திறந்து கொண்டது
எட்டிப் பார்க்கிறான்
வீட்டினுள் யாருமே இல்லை
உள்ளே காத்திருந்தது யார் என வினவினான்
அது நான்தான் என்றேன்
மரியாதை செய்வதுபோல குனிந்து
செருப்பைக் கழற்றி
அடிக்கத் தொடங்கினான்
அப்போதுதான்,இரண்டாவது நெல் மணியைப் பொறுக்க
பறந்து வந்த குருவி
திரும்பிச் சென்றுவிட்டது

மேலுள்ளவாறு
அந்தக் கவிதை எழுதப்படவில்லை என்ற
இரண்டு வரிகளை மாத்திரம்
அந்தத் தாள்களில் எழுதிவைத்தேன்.

 

***

 

( புது எழுத்து வெளியீடாக வரவிருக்கின்ற “செய்வினை” தொகுப்பிலிருந்து. )

 

 

நட்சத்திரா கவிதைகள் – மான்சியின் பிங்க்

images (6)
வெள்ளை நிறத்தின் தேவதையான
மான்சி பிங்க் நிறத்தின்
பைத்தியக்காரியாக இருக்கிறாள்
பிங்க் டாப்
பிங்க் பாட்டம்
பிங்க் வளையல்கள்
பிங்க் காதணிகள்
பிங்க் ஸ்டிக்கர் பொட்டுகள்
பிங்க் நெகபாலீஸ்
பிங்க் வார் செருப்புகளென
தினம் ஒன்றை அணிந்தவளாக
ஃபேஸ்ட்வீல் மூடில்
திழைக்க செய்கிறாள்
செர்ரி பழத்தின்
சுவை ஏற்படுத்துகின்ற
அவள் உடலில்
பழுத்திருக்கும் மயக்கு மூடுச்சுகள்
பிங்க் நிறத்தில்
இந்த நாளில் புதிதான
கட்ஸூக்களை
அணிந்து வந்து கழட்டி
ஏறிந்தவளின்
பளிங்கு கால்கள்
பிங்க் நிறத்தில்
வியர்த்திருக்கிறது.

•••

தியேட்டரில் ஸில்வியா
.
அவன் என்ன திரைப்படம் யென்று
கூட பார்த்திரமால்
அழைத்து சென்றதை பற்றி
அவன் உதடுகளை குவித்துக்காட்டி
நெருக்கமான ஒன்றை
நிகழ்ந்தி விட
முனைந்ததை பற்றி
அவனுக்கு ஏதுவான காட்சிக்காக
காத்திருந்ததை பற்றி
அவன் கைகளை
என் தோளில் படர்ந்த போதும்
நான் மறுக்காததும்
நிமிர்ந்து  ஒத்துழைத்ததை பற்றி
என் கண்கள் சந்தித்ததும்
அவன் கண்கள் தடுமாறி
பின் வாங்கியதை பற்றி
நான் சிரித்து சிரித்து
நிலைமையை
ஏதுவாக்க முயன்றதை பற்றி
அவன் திரும்ப
மெல்லியதாக நெருங்கி
பின்னும் தடுமாறியதை பற்றி
திரைப்படம் முடிந்து
எதுவும் நிகழ்ந்தி விட முடியாத
இயலாமையை நடையில்
காட்டியதை பற்றி
விடைபெறுகையில்
அவன் வார்த்தைகளில்
தடுமாறியதை பற்றி
யாஸ்மினிடம் குறிப்பிடுதல்
“அவன் இதுக்கு ஆக மாட்டான் டி
சரியான டியூப்லைட் ”
என்பதோடு சேர்த்து.
.
••
ஸில்வியாவின் டேலியா இதழ்கள்
.
டேலியாவின் ஒவ்வொரு இதழ்களிலும்
நீ விரும்பும்
ஒவ்வொரு இளம் ஆண்களின் பெயர்கள்
ஒவ்வொரு இதழும் அத்தியாவசியமாகின்றது
முதல் இளம் ஆணே
உனக்கு நல்ல பொருத்தமென
தோழிகள் சொல்ல கேட்டு இருந்து
அவன் இல்லாத நாட்களை
ஒரு போதும் நினைக்க முடியாதாகி
அவனை யாருக்கும்
விட்டுக்கொடுக்கமால்
அவனுக்காக எதுவும்
செய்ய துணிந்திருந்தாய்
கொஞ்ச நாட்களில் சலிப்பாகி
சின்ன சின்ன சங்கடங்களை
அரிதாரம் பூசி
சண்டைகளை மெருக்கூட்டினாய்
அவனை முழுதாக விலக்கமால்
நெருங்கவும் விடமால் வைத்திருக்கும்
சூட்சமத்தை கற்று இருந்து
இதையே தான் நீ
ஒவ்வொரு இளம் ஆண்களுக்கும்
செய்கிறாய்
டேஸ்டி பேக்கரியின்
கண்ணாடி கதவுகளை திறந்த படி
யாரோ ஒரு இளம் ஆண்னோடு
நுழைவதை
எங்கே யிருந்தோ பார்க்கும்
நமீனுக்கு துரோகம்
மண்டைக்குள் கிறுகிறுக்கிறது
உன் மனம்
நீ வீற்றிருக்கும்
கண்ணாடி சுவர்களை போலனதே உணர்கிறான்
எப்படியும் சமாளித்து விட
உனக்கு தெரியும்.

••••
.

 

நிச்சயம் நீ நினைவில் வைப்பாய் – டாலியா ரேவிகோவிச் – இஸ்ரேல் – தமிழில் – இந்திரன்

 download (20)

அவர்கள் எல்லோரும் போன  பிறகு

நான் கவிதைகளோடு தனிமையில்  இருக்கிறேன்.

சில கவிதைகள் என்னுடையவை;சில  மற்றவர்களுடையவை.

மற்றவர்கள் எழுதிய கவிதைகளை நான் தேந்தெடுக்கிறேன்.

நான் அமைதியாய் இருக்கிறேன்.

மெதுவாக எனது தொண்டையில்

இருக்கும் முடிச்சு மறைகிறது.

நான் மீதம் இருக்கிறேன்.

 

எல்லொரும் போய்விடவேண்டும்  என்று சில நேரங்களில் நான்

விரும்புகிறேன்.

கவிதைகள் எழுதுவது, ஒரு  விதத்தில் நல்லதாக இருக்கலாம்.

நீ அறையில் அமர்ந்திருக்கிறாய். சுவர்கள் உயரமாய் வளர்கின்றன.

வண்ணங்கள் அடர்த்தியாகின்றன.

ஒரு நீல கைகுட்டை ஒரு ஆழமான  கிணறாக மாறுகிறது.

 

எல்லோரும் போக வேண்டும் என்று நீ விரும்புகிறாய்.

உனக்கு என்ன நடந்தது என்று  உனக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை நீ எதையோ நினைக்கிறாய்.

பிறகு எல்லாம் போய்விடுகின்றன,

நீ ஒரு தூய்மையான படிகமாகி விடுகிறாய்.

அதன் பிறகு , காதல்.

நார்சிசஸ் தன் மீது அதிக காதல் கொண்டிருக்கிறான்.

அவன் ஒரு நதியையும்  காதலித்தான் என்பதை ஒரு முட்டாள் மட்டுமே

புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்.

 

நீ தனிமையில் அமர்ந்திருக்கிறாய்.

உனது இதயம் வலிக்கிறது ஆனால் உடைந்து போவதில்லை.

வெளிறிப்போன காட்சிகள்  ஒவ்வொன்றாக கழுவி விடப்படுகின்றன.

பிறகு அவை தாவி விடுகின்றன.

சூரியன் நள்ளிரவில் அஸ்தமனமாகிறது

இருண்ட மலர்களும் கூட  என்பதை நினைவில் கொள்.

 

நீ மரணித்தோ அலலது உயிருடனோ

அல்லது யாரொவாகவோ இருக்க விரும்புகிறாய்.

நீ விரும்பும் ஒரு நாடு இருக்கிறதா? ஒரு வார்த்தை?

நிச்சயமாக உனக்கு நினைவிருக்கும்.

 

சூரியன் அது நினைக்கும் நேரத்துக்கு அஸ்தமனமாவதற்கு

ஒரு முட்டாள் மட்டுமே அனுமதிப்பான்.

அது மிக விரைவாக மேற்கு நோக்கித் தீவுகளில் மறைந்து  விடுகிறது.

 

சூரியன் சந்திரன், பனி கோடை

உன்னிடம் வரும்

எல்லைகளற்ற புதையல்களாக.

•••

மேதைகளின் குரல்கள் – ஜா.தீபா

 

 download (13)

ஒரு திரைப்படத்தினை எதற்காக பார்க்க விரும்புகிறோம்? பொழுதுபோக்கவா.. மகிழ்வான தருணத்திற்காகவா… குழந்தைகளை குதூகலப்படுத்த வேண்டியா…

எதற்காக வேண்டுமானாலும் இருக்கலாம் அது போலவே படம் இயக்குபவர்களும். ஆனால் சில இயக்குனர்கள் மட்டும் எறும்பு எப்படி தனக்கான உணவை கால்களுக்கு  நடுவே பாதுகாத்து எடுத்துக்  கொண்டுபோகிறதோ அதேபோல தனது திரைப்படத்தையும் பத்திரமாக  கையாளுகிறார்கள் .அது தன்னுடைய மன வலியின் பதிவாகவோ, தன் மக்களின் குரலாகவோ என பல வித கூறுகளாக இருந்தாலும் அத்திரைப்படத்தை தனது உயிருக்கு நிகராகவே வைத்து அதிகாரத்திற்கு எதிராக போராடுகிறார்கள். எந்த நேரமும் எழும்பக்கூடிய வாய்ப்புள்ள மரணத்தை தங்கள் காலடிக்குள் அழுத்தி வைத்துக் கொண்டு தன் குரலை அப்படத்தின் வழியாக  நமக்குள் ஊடுருவச் செய்கிறார்கள்.

சினிமா  மிக மிக சக்தியும், பொறுப்பும் வாய்ந்தது. நிறைய அர்ப்பணிப்புகளைப் பெற்றுக் கொண்ட பிறகே தன வசீகரத்தை அது நமக்குக் காட்டுகிறது. சினிமாவில் காட்சிகளை ஓவியமாக காண்பிக்கக் கூடியவனும், தற்காலத்தில் கூட வசனமே இல்லாமல் தன படங்களில் நம்மை தொலைந்து போகச் செய்கிறவனும் இலக்கியம் போல தீவிரமான பதிவை ஏற்படுத்துபவனும், நம்மை மகிழ வைப்பதின் மூலம் நமது சிந்தனையை சோதித்துப் பார்ப்பவனும், படைப்புக்காகவே சாகிறவனும் தருகிற  படைப்புகளைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது தான் அவர்களது உரையாடல்களும்.

பல்வேறு மொழிகளைக் கொண்டு உலகம்  முழுவதும் பரவிக்கிடக்கிற இந்த உலக இயக்குனர்களின் உரையாடல்கள் தீவிர சினிமா விரும்பிகளின் சொத்து என்றே நான் கருதுகிறேன். சினிமா குறித்து பேசுகிறபோது இந்த உரையாடல்களும் தவிர்க்க முடியாதவை. இதைத் தமிழில் மொழிபெயர்த்தது  எனக்காக நான் செய்துகொண்டதாகவே இருக்கலாம். ஆனால் இதனுடைய தேவையும், விருப்பமும் மலைகள்.காம் இதழுக்கு தேவைப்பட்டது என்கிறபோது எனக்கு சந்தோசமாக இருந்தது. மலைகள் இணைய இதழில் முதல் நேர்காணலை மொழிபெயர்த்தபோது பெரிய வரவேற்பு கிடைத்தது. முகம் தெரியாத போதும் கூட தொடரைத் தொடர்ந்து வாசித்தவர்கள் நேரிலும், தொலைபேசியிலும், முகநூலிலுமாக காட்டிய உற்சாகம் ஒவ்வொரு இதழிலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ‘எப்போது புத்தகமாக கொண்டு வரப்போகிறீர்கள்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்த அந்த நண்பர்களின் உற்சாகம் தான் சிரமங்களுக்கிடையிலும் இந்தப் புத்தகம் வருவதற்கு காரணமாய் இருந்திருக்கிறது. சினிமாத் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் தீவிர சினிமா ரசிகர்களும் தொடர்ந்து படித்து அதைப் பற்றிப் பேசுகிறபோது அந்த படைப்பாளிகளைப் பற்றி பேசிய மனநிறைவே கிடைத்தது.  அந்த வகையில் எனக்கு இது முக்கியமான புத்தகம். சக உதவி இயக்குனர்களுக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் இது விருப்பமுடைய ஒன்றாகவே இருக்குமென நம்புகிறேன்.

download (12)

இதை எழுதுவதற்கு  வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல்  புத்தகமாக வெளியிடுகிற  மலைகள்.காம் ஆசிரியர் சிபிச்செல்வன்  அவர்களுக்கு நன்றிகள்.

காட்சிகளைப் பற்றி உரையாடவும், அதனை உருவாக்கவும் கற்றுக் கொண்டதன் மூலம் எனது படைப்பு சார்ந்த நம்பிக்கையை நான் பலப்படுத்திக் கொண்டது இயக்குனர் திரு.நாகா அவர்களிடத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்த பிறகுதான். அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

சிறுகதை – அழுகுரல் – நாகரத்தினம் கிருஷ்ணா

 images (9)

 

அடுத்த அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல், விசுக்கென்று கையைபிடித்து இழுத்ததுபோலவிருந்தது. செங்குத்தான பாதையில் பயணித்து, சட்டென்று வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததுபோல குரல் விசும்பலும் தேம்பலுமாக நொண்டியபொழுது, புரிதல் ஒரு செம்மறி கிடாவென நெஞ்சை முட்ட பதட்டத்துடன் விழித்தேன். சுற்றிலும் ஆழ்கிணற்றின் நீர்போல இரவு உறைந்துக் கிடந்தது. கண்கள் தங்கள் இயல்புக்கு வந்ததன் அடையாளமாக இருள் பூசிய சுவர்; நாற்காலி, மேசையும் அதில் இறைந்துகிடந்த புத்தகங்களும் பிறவும் மெல்ல மெல்ல பார்வையை நிரப்புகின்றன. இழுத்து மூடப்படாத சன்னல் திரையின் நெளிவுகளில் விழுந்து கட்டிலில் தெறித்த நிலவொளி கொஞ்சம் தரை, கொஞ்சம் சுவரென சிந்திக்கிடந்தது. நிசப்தத்தின் அவ்வளவு குரல்களையும் முந்திக்கொண்டு குழந்தையின் அழுகுரலில் இரவின் சுதியாகவும் தாளம்போலவும்  வழமையாக ஒலிக்கிற மனவியின் குறட்டையும்  சுவர்க்கடிகாரத்தின் இயக்கமும் தமது முக்கியத்துவத்தை இழந்திருந்தன.

 

ஒருவாரமாக தொடரும் அனுபவம். குழந்தையின் அழுகைக் கேட்டுப் பழகியதென்றாலும் அடர்த்தியான இரவுதோப்பில் ஒற்றையாக அழுகுரலை கேட்கிறபோது இதய துடிப்பு அதிகரிக்கிறது, மூச்சை அடைக்கிறது, அறையின் குளுமை வெப்பமாக உடலைக் கவ்வுகிறது. உறக்கத்தை தொடரமுடியாத எரிச்சலில் கண்கள். மிச்சமிருந்த உறக்கத்தின் சுமையை இறக்கிவைக்க கண் இரப்பைகள் தோளை உயர்த்தின. மூடிய அறைக்கதவிற்கும் தரைக்குமான இடைவெளியை எதிர் அறையிலிருந்த வந்த மின்சார ஒளி நிரப்புகிறது.  இரு கைகளையும் தலைக்குப் பின்புறம் கொண்டுசென்று கைவிரல்களை பிணைத்து நெட்டைமுறித்து, போர்வையை விலக்கி வலது காலை தரையில்வைத்து கட்டிலைவிட்டு இறங்கினேன். மின்சாரவிளக்கைப் போடவேண்டுமென்ற அவசியங்களில்லை. கண்களிரண்டும் மென்மையான இருளுக்குப் பழகிக்கொண்டிருந்தன. தலைகீழாக உள்வாங்கப்படும் நிழல்பிம்பங்களை நேராக நிறுத்தி அடையாளப்படுத்த பார்வைக்கு முடிந்தது. இறங்கி கதவை நோக்கி நடந்தேன்.

 

தனக்காக அழும் எந்தக்குரலையும் வெறுக்கும் மனநிலைக்கு வந்திருந்தேன். அதில் யாசிக்கும் மனோபாவம் இருக்கிறதென்பது காரணம். அதற்காக மற்றவர்களுக்காக அழுகிறவன் என்பதெல்லாமில்லை. அழுது மட்டுமே தனது தேவையை பூர்த்திசெய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திலிருந்த குழந்தையின் பின்னிரவு அழுகை ஓர் அதிர்வாக என்னுள் இறங்ககாரணமென்ன என்பதை கடந்த ஒரு கிழமையாக பால்கணியின் நின்று மௌனத்தில் ஆழ்ந்திருக்கிற மரங்களைப் பார்க்கிறபோதும், உரக்கமற்ற முன்னிரவுகளிலும், குளித்து முடித்து துவட்டிக்கொள்ளும்போதும் யோசிக்கிறேன். பதில்களின் இருப்பு அடிவானம்போல காட்சிக்குக் கிடைத்தது. அருகாமையில் இருப்பதுபோல தோற்றம் தரினும் நெருங்க நெருங்க விலகிச் செல்கிறது. அழுகையை ஊரில் பெய்யும் மழையோடு ஒப்பிட்டிருந்த கவிஞன் போல் வெர்லன் நினைவுக்கு வந்தான். குழந்தையின் அழுகுரல் மழையா சாரலா?

 

எங்கள் அறைக்கு எதிர்பக்கத்தில்தான் மாப்பிள்ளையும் மகளும் அவள் குழந்தையும் இருக்கிறார்கள். ஏற்கனவே நான்கு முறை குழந்தை அழுதிருக்கிறான். அப்போதெல்லாம் திடுக்கிட்டு எழுந்திருப்பதும், குரல் ஓயும் வரை அமைதியின்றி உட்கார்ந்திருப்பதும், சிற்சில நேரங்களில் எழுந்து இரு சுவர்களுக்கான இடைவெளிகளை தன்னிசையாக அளப்பதுமென்று கழிந்திருக்கிறது. அழுகையைத் தொடர்ந்து அவ்வழுகைக்கான காரணத்திற்கேற்ற காரியங்களை அவனைப்பெற்றவள் செய்கிறாள். கைகால்களை உதைத்து, கண்களை சுருக்கி, நெற்றி தசைகள் நெளிய அழுகிறபோது திறந்திருக்கும் குழந்தையின் வாயைப்பார்க்க சூல்தண்டுதெரிய இதழ்விரித்த பூப்போல இருப்பான். அண்மை தொடும் மனிதர் நடமாட்டத்தையும், சமாதான வார்த்தைகளின் தராதரமறிந்தும் குழந்தையின் குரல் குறையவோ கூடவோ செய்யும். அர்ச்சகர் தரும் புஷ்பங்களை கைகளில் வாங்கிக்கொள்வதுபோல குழந்தையை எனது மனைவியும் மகளும் கையாளுவார்கள். குழந்தையின் இமைமயிர் முனைகளில் கோர்த்திருக்கும் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் அப்புஷ்பங்களில் சொட்டும் தீர்த்தம்போல.

 

ஊரிலிருந்த வந்த முதல் நாள் இப்படித்தான் பின்னிரவில் திடீரென்று குழந்தை வீறிட்டு அழுதது. பதறிக்கொண்டு கண்விழித்தேன். எழுந்தவன் மின்சாரவிளக்கைப்போட்டுவிட்டு அடுத்த அறைக்கதவைத் தட்டி மகளை எழுப்பலாமா? என்று யோசித்தேன். நள்ளிரவில் எதற்காக அழுகிறான்?  பசியாக இருக்கலாமா? குழந்தை அடிக்கடி பாலெடுக்கிறான், ஒழுங்காய் பாலைக்குடிப்பதில்லையென்று மகள் கூறியிருந்தாள். ஒரு முறை இந்திய ரயிலில் பயணித்த பொழுது இரவு முழுக்க குழந்தையொன்று வீறிட்டு அழுததும், பயணத்தொடக்கத்தில் குழந்தையை எடுத்துக்கொஞ்சிய நானே பின்னர் எரிச்சலுற்றதும் நினைவுக்கு வந்தது. மனித இயல்புப்படி அவ்வாறான மனப்பிடுங்கல்கள் இப்போதில்லை. ஒரு குழந்தை அழ ஆயிரத்தெட்டு காரணங்கள், நாம்தான் ஊகித்தறியவேண்டும்: பசியாக இருக்கலாம், அறையில் நிலவும் வெப்பம் அல்லது குளிர் காரணமாக இருக்கலாம், டையப்ப்பர் மாற்ற வேண்டியதாக இருக்கலாம் அல்லது ‘இத்தனைபேர் என்னைச் சுற்றி நிற்கிறீர்களே? என்னைத் தூக்கக்கூடாதா? என்பதுகூட காரணமாக  இருக்கலாம். உடல்நலத்தில் பிரச்சினையா? கிரைப் வாட்டர் கைவசமிருக்குமா? பிரான்சுநாட்டில் நேரங்காலம் பார்க்காது தவிர்க்கமுடியாத அவசரமெனில் வீட்டிற்கு மருத்துவர் வருவார் அமெரிக்காவில் எப்படி? நாம்தான் மருத்துவமனைக்கு போகவேண்டுமா?  நிறைய எனக்குள் கேள்விகள். வழக்கம்போல பதில்களின்றி  மேலும் மேலும் கேள்விகளின் எண்ணிக்கையை மனதிற் பெருக்கிக்கொண்டிருந்தேன். எல்லா கேள்விகளுக்கும் எப்போதும் ஏதேனும் ஒரு பதிலை தயாராக வைத்திருக்கும் என் மனைவி அமைதியாக உறங்கிகொண்டிருக்கிறாள். அவளுடைய நிம்மதியான உறக்கம் என்னை எரிச்சலடைய செய்தது.

 

– ஏம்மா.. குழந்தை அழறானே?

 

– —

 

– உன்னைத்தான். ச்சே இப்படியா தூங்கறது. குழந்தை அழறான். என்னண்ணு போய்ப் பாரு?

 

– கொஞ்சம் மெதுவாப் பேசுங்க. எல்லோரையும் எழுப்பிடுவீங்க போலவிருக்கு.

 

– எழுந்திருக்கட்டும். குழந்தை இப்படி அழவிட்டு உங்களுக்கு என்ன அப்படித்தூக்கம் வேண்டிகிடக்குது.

 

– சும்மா படுங்க, பெற்றவங்களுக்குத் தெரியும் குழந்தையோட அருமை. நாள்பூரா ஏதோ நீங்கதான் குழந்தையை சுமக்கிறமாதிரி..

 

– ச்சே.. என்று சலுத்துக்கொண்டேன்.. எத்தனை நேரம் கட்டிலில் உட்கார்ந்திருந்தேனோ நினைவில்லை. எதிர் அறையில் மின்சாரவிளக்கின் ஒளியும், தொடர்ந்து மகளின் நடமாட்டமும் குழந்தையை சமாதானப்படுத்தும் அவள் குரலையும் கேட்ட பின்பு படுத்திருப்பேனென நினைக்கிறேன்.

 

இன்றும் மனைவியை எழுப்பினால் என்ன பதில் வருமெனதெரியும். எழுந்துசென்று எதிர் அறை கதவைத் தட்டலாமா என நினைத்து நெருங்கியபொழுது, வெளிச்சம் தெரிந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிக்கொள்வதும் கேட்டன. கதவிடுக்கு ஒளியில் நிழல்கள் வந்துபோகின்றன.

 

ஒன்றிரண்டு நொடிகள் தயங்கிய பிறகு கதவைத் தட்டினேன்.

 

கதவு திறந்தது. எதிரே மகள். பால் மாவைக் கலப்பதற்காக மேசைமீது பாட்டில்-வார்மரில் தண்ணீர் சுட்டுக்கொண்டிருந்தது.

 

– என்னப்பா?

 

– குழந்தை வெகுநேரம் அழுதிருப்பான் போலிருக்கிறதே?

 

– இருக்காதே! உடனே எழுந்துட்டேனே.

 

– அம்மாவை வேண்டுமானா எழுப்பட்டுமா.

 

– வேண்டாம்பா நான் பார்த்துப்பேன். அம்மா தூங்கட்டும். பகலெல்லாம் அவங்கதானே பார்த்துக்கிறாங்க. இராத்திரியிலே நான்கைந்து தடவை எழுந்திருக்கவேண்டியிருந்தது. அதனாலே கொஞ்சம் அசந்து தூங்கிட்டிருக்கேன்.

 

– முகத்தைப் பார்த்தேன். கண்களைச் சுற்றி மையில்போட்டதுபோல வளையம், வெண்படலம் சிவந்திருந்தது. கண்களில் அரிப்பு இருக்கவேண்டும் புறங்கை ஆட்காட்டிவிரலை பூமொக்குபோல மடித்து ஒருமுறைக்கு இருமுறையாக வலது கண்ணைத் தேய்த்தாள். எனக்கும் நெஞ்சில் எவரோ பாரத்தை இறக்கியதுபோல இருந்தது. கண்களில் நீர்கோர்த்தது, அதைக்காட்டிக்கொள்ள மனமின்றி திரும்பினேன். எனக்குப் பின்புறம் கதவு மூடப்படும் சத்தம்.

 

விளக்கைப்போடாமல் தட்டுதடுமாறி நடந்தேன். அறைகளுக்கான நடைபாதை தரை விரிப்பில் பைய கால்  புதைய நடந்து வரவேற்பறை சோபாவை நெருங்கி கால் நீட்டி உட்கார்ந்தேன். நெஞ்சத்தில் இதுவரை காணாத இறுக்கம். மூச்சுமுட்டியது. நீராவிபோல சுவாசத்தை உணர்ந்தேன். உடல்கொள்ள குளிர்காற்றை இட்டு நிரப்பவேண்டும்போலிருந்தது. வரபேற்பறையை பால்கணியுடன் பிரித்திருந்த தள்ளு கதவை உபயோகித்து பால்கணிக்கு வந்ததும் அங்கே நிரந்தரமாக விரித்திருந்த நிழற்குடையின் கீழ் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருள்பிரியாத வெளியில் மனித வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் படித்த இறுமாப்புடன் ஆனைக்கூட்டம்போல மரங்கள். தலைக்கெதிரே கட்டிடங்கள் தொடுவானத்தில் பசைபோட்டு ஒட்டப்பட்டதுபோல தெரிந்தன. எனது மனநிலைக்கு முரண்பட்டவைபோல மேகக்கூந்தலில் பிறை நிலா. மல்லிகைச்சரம்போல நட்சத்திரங்கள். இரவு பறவைகள் ஓய்வெடுத்திருக்கவேண்டும், இல்லையெனில் அப்படியொரு நிசப்த அனுபவத்தை காண நேர்ந்திருக்காது. நாள் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டதன் சாட்சியாக வாகனங்களின் ஓட்டம். ஆம்புலன்ஸ் ஒன்றின் சைரன் ஒலி, கொடிய வனவிலங்கிடமிருந்து தப்பியோடும் அப்பிராணிபோல அபயக்குரலெழுப்பிக்கொண்டு பாய்ச்சலிடுகிறது. ஆம்புலன்ஸைத் தொடர்ந்தும் அழுகை ஒரு கேவலாகவோ, விசும்பலாகவோ பின் தொடரக்கூடும்.  குழந்தையின் அழுகையில் சுயநலம்? குழந்தையை பெற்றவள் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும் எனக்குள் அடைபோல ஊமுட்கள். ட்விக் ட்விக்கென்று சத்தமிட்டுக்கொண்டு சடசடவென்று  பறந்து அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே இடம் தேடும் இரவு பட்சி. சட்டென்று எனது முதுகு மனிதர் சுவாசத்தின் வெப்பத்தை உணர்ந்தது.    திரும்பினேன் -மனைவி.

 

– என்னது? எதற்காக பனியில் நிற்கறீங்க, தூக்கம் வரலையா?

 

– இல்லை. என்ன ஜென்மம் நீ? கண்ட கண்ட நேரத்திலெல்லாம் குழந்தை விழித்துக்கொண்டு அழறான். நீ என்னடான்னா தூக்கத்தையே காணாதவ மாதிரி தூங்கற.

 

ஒன்றிரண்டு நொடிகள் தலையை நேரிட்டு என்கண்களப் பார்த்தாள்:

 

– ம். உங்க கவலை எதைப் பத்தினது? உங்கப் பெண்ணும் குழந்தையாய் இருந்தப்போ இப்படி அர்த்தராத்திரியில் அழுதவள்தான், அப்போதெல்லாம் நீங்கள் இதுபோல விழித்துக்கொண்டதில்லை.

 

———————————————————————–

 

 

 

 

கபடவேடதாரியின் காலக்குறிப்புகள் – கிருஷ்ணமூர்த்தி

download (19)
எழுதவிருக்கும் நூல் சார்ந்த இப்பதிவிற்கு கபடவேடதாரியின் கலைக்குறிப்புகள் என்றே பெயர் வைக்க நினைத்தேன். ஆனால் அப்படி வைத்தால் எழுதவிருக்கும் நாவல் சார்ந்த நடுநிலையான பார்வையாக இக்கட்டுரை இருக்க முடியாது. (இடைச்செருகல் : இந்த நடுநிலைமை என்பதையும் எழுதவிருக்கும் நாவலின் ஆசிரியர் பகடி செய்கிறார் – ஒரே ஒரு கருத்தை உள்மனதில் ஆழமாக பற்றிக் கொண்டு அதை சுற்றியே அரை வட்டம், கால்வட்டம் முழுவட்டம் என்றெல்லாம் போட்டுக் கொண்டே சென்றால் நடுநிலைமை என்பது எப்படி வரும்)

இந்த தலைப்பு குறிக்கும் கபட வேடதாரி யார் எனில் சாம் நாதன் எழுதிய “களவு காமம் காதல்” என்னும் நாவலின் நாயகன் ரகுவர்தன்.

மனிதன் இருவகையாக பிளவுபட்டு இருக்கிறான். ஒன்று தான் உணரும் எல்லா விஷயங்களையும் பகுப்பாய்ந்து அவற்றின் மீது அதிகாரத்தை நிலைநிறுத்தி அதை ஆண்டு அதன் மேல் சர்வாதிகாரம் செய்யும் குணம் கொண்டவன். மற்றொருவன் காண்பன எல்லாவற்றையும் ரசிப்பது மட்டுமே. பகுப்பாய்தல் என்பது இந்த குணம் கொண்டவனின் புரிதலுக்கு அப்பால் இருக்கிறது. சிலையை கண்டால் அவன் ரசிக்கிறான். இசையை கேட்டால் உடன் பாடுகிறான் அல்லது நடனமாடுகிறான். நடனத்தை காணும் போது மெய்மறந்து வைத்த காண்வாங்காமல் அவர்களின் கால் அசைவுகளை கண்டு குதூகளிக்கிறான். இலக்கியம் வாசிக்கும் போது சில பக்கங்களில் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு நூலை மூடி வைத்து தனக்குள் அப்பிரதியை வியாபிக்க முனைகிறான். முன்னவனை Apollonian என்றும் பின்னவனை Dionysian என்றும் சொல்லலாம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் இரண்டாகவும் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். இரண்டாம் கட்ட மனிதனாக யாருமற்ற சூழலிலும் இரவுகளிலும் பிறர் அறியாவண்ணமும் வாழ்ந்து அனுபவித்துவிட்டு வாழ்ந்த அனுபவத்தை சொல்கிறேன் பேர்வழி என்று Apollonian ஆக மாறி கண்டதை சொல்லி அவனுக்குள் ஏற்பட்ட அனுபவத்தை உடைத்து சுக்கு நூறாக்கி வாழ்வது. இரண்டுமே ஒரு மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. நிகழ்கிறது. ஒன்று நான் என்னும் தன்மையை தேடி அறிந்து கொண்டாடுகிறது மற்றொன்றோ நான் என்பதற்கு விளக்கம் கொடுக்க அல்ல தேடுதலையே பயணக்கட்டுரையாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டும் கலந்த சராசரி மனிதன் தான் ரகுவர்தன் என்னும் கபடவேடதாரி. அவன் எழுத்தாளன் ஆக நினைக்கிறான். இது சமூகத்தின் மதிப்பீட்டில். மனதளவிலோ அவன் எழுத்தாளன். இலக்கியம் அவனை புரட்டி போட்டு அவனுள் ஏதேதோ மாயத்தை செய்திருக்கிறது. அதனை வெளிக்காட்ட எழுதுகிறான். எப்படி என்பது இன்னமும் சுவாரஸ்யமான கதைப்போக்கு.

ரகுவர்தன் காயத்ரி என்பவளை காதலிக்கிறான். காமுறுகிறான். உச்சத்தை அடைய யத்தனித்துக் கொண்டே இருக்கிறான். நண்பர் ஒருவர் சொன்ன விஷயத்தை இங்கே சொல்ல நினைக்கிறேன். ஆண்களுக்கு காமம் என்பது ஒரு பிரமிட்டை போன்றது. உச்சம் ஒரு புள்ளியாய் சிறு இடத்தில் கண நேரத்தில் பறந்துவிடுகிறது. உணர்வுகளாய் நினைவுகளாய் மட்டுமே அவை நீட்சி கொள்கிறது. அதே பெண்ணுக்கு அது முடியாத் தன்மையை பெற்றிருக்கிறது. இந்த இருவேறு தன்மையை நாவலில் தெளிவாக காட்டியுள்ளார்.

அப்படியெனில் இது போர்னோ நாவலா ?

போர்னோவில் இருவகை உள்ளது. ஒன்று வாசித்து கரமைதுனம் செய்ய எடுத்து செல்லக் கூடிய ஒரு பிரதி. மற்றொன்றோ காமத்தை அரசியலாக மாற்றுவது. காமம் கிளர்ச்சி என்னும் உணர்வை மட்டும் எடுத்து செல்வது முன்னது. பிற உணர்வுகளையும் கடத்தி செல்வது பின்னது. அங்கே ஒரு அரசியல் எப்போதும் சூழப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இங்கே இருப்பது காமம் சொல்லும் மென் உணர்வுகள்.

ஆழ்மனதினுள் இருக்கும், சமூகம் புறம்பாக பழிக்கும் மென் உணர்வுகள் இங்கே புனிதமாய் கொண்டாடப்படுகிறது. மேலும் புனிதம் என்று சொல்வதும் இந்நாவலைப் பொறுத்தமட்டில் முற்றிலும் தவறு. அதற்கு காரணம் சாம் நாதன் இந்நாவலில் வைக்கும் மாபெரும் பகடி.

நாம் எதை சிலாகிக்கிறோமோ அதை தெய்வத்தன்மையுடன் பொருத்திப் பார்ப்பது நமது அன்றாட வழக்கங்களில் ஒன்றாகி போய்விட்டது. இதை மாற்றுவது என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சவாலான விஷயம். ரகுவர்தன் அப்படிபட்ட சமூகத்திலிருந்து வந்திருந்தபடியால் காயத்ரியை ஆரம்ப அத்தியாயங்களில் கடவுளோடு ஒப்பிட்டு அவளை கொண்டாடுகிறான். சிலபத்திகள் கடந்து ஒரு அத்தியாயம் வருகிறது.

இதை வேறொரு பதத்துடன் ஒப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது. அஃதாவது நம் தமிழ் இலக்கியங்களை உற்று அவதானித்தால் குறியீடு சார்ந்து எழுதும் பத்திகளை அதிகம் காண முடியும். நாம் வேறு ஒரு உணர்வுகளை வைத்தே சொல்ல வரும் உணர்வுகளை வாசகனுக்கு கொடுத்துக் கொண்டிருப்போம். இங்கும் அப்படி ரகுவர்தன் கோவில் விதானங்களை அதிகம் சிலாகிக்கிறான். அப்படியே கோவில் விதானங்கள் கண்முன் வருகிறது. கடைசியில் காயத்ரியை கோவில் விதானமாக்கி கலவி கொள்கிறான். காதலை கடவுளுடன் ஒப்பிடுவது அபத்தமானது. இந்த அபத்த செயலை ஒரு சமூகமே பெரிதாக நினைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ரகுவர்தன் அதனை அறியாமலேயே செய்து கொண்டிருக்கிறான். அந்த குறிப்பிட்ட அத்தியாயத்தை வாசிக்கும் போது கலையை புணர்கிறான் ரகுவர்தன் என்றே சொல்லத் தோன்றியது.

இது போன்ற பிரதிக்குள் பிரதி எனும் கோட்பாட்டை மிக அழகாக பல இடங்களில் கையாண்டுள்ளார். ஆனால் அவையுள் அதிகம் தெயவத் தன்மை நோக்கி செல்வது தான் ஏன் எனத் தெரியவில்லை. கரமைதுனத்தை சிலாகிக்கையில் அப்படியே சென்று கிறித்துவ மதத்தில் நிகழும் பூர்ஷ்வாத் தனங்களை சொல்கிறார். அதை அப்படியே நீட்டிக் கொண்டு மதங்கள் என்னும் பெயரில் தனி மனிதனின் மனதில் நிறுவப்பட்டுள்ள பொய்யான கோட்பாடுகளை அறச்சீற்றத்துடன் எதிர்க்கிறார். மீண்டும் பழைய பகுதிக்கே வாசகனை இழுத்து செல்கிறார். இந்த Contextually contextual பதத்தை இன்னமும் வீரியமாக வைத்திருக்கலாம் என்பது என் குறுகிய எதிர்பார்ப்பு.

ஒரு இடத்தில் வீரியமாகவே இருக்கிறது. தெருநாய்களின் காமத்தை தெளிவாக சொல்கிறார். எதற்கு சொல்கிறார் என்பதே புரியாமல் இருக்கும் தருணத்தில் மனித இயல்புகளை, அதில் பெண் நாய்களின் காம ஆதிக்கத்தை சொல்வதால் இங்கும் மனித வர்க்கத்தின் இடையில் பெண்ணின் காம ஆதிக்கத்தை சூசகமாக சொல்லி செல்கிறார்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் ரகுவர்தனின் இருவேறு உருவங்களை சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற் போலவே தான் நாவலும் அமைந்திருக்கிறது. காயத்ரியை காதலிக்கும் மோகிக்கும் பகுதிகள் நிறைந்து சென்று அத்தியாயங்களை அதுவாகவே முடிக்கிறது. அதே நேரத்தில் அகவுலகில் வாழும் ரகுவர்தன் களமிறங்கி பல வித விஷயங்களை சொல்லிப் போகிறான். இருவரையும் பின்தொடர்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் தெள்ளத் தெளிவாகிறது இலக்கியவாதியாக காட்சிபடுத்த நினைக்கும் ரகுவர்தன் கொண்டாடும் ரகுவர்தனை பகுப்பாய்கிறான். அதை அவன் நிரூபிக்கும் வரிகள்

“வார்த்தைகள் வராமலில்லை, குறைக்கப்படுகிறது. எண்ணங்கள் சிதறாமலில்லை, சீராக்கப்படுகிறது. என்னோடு போர்புரிந்து என்னை நானே சிருஷ்டித்துக் கொள்ளும் பிரம்மனாகிறேன்.

ஆம் நான் பிரம்மனாகிறேன்”

எனக்கு இதில் துளியும் நம்பிக்கையில்லை. ஆனால் இந்த இருவேறு முரண்பாடுகளை வைப்பதில் தான் நாவல் சிறப்பு பெறுகிறது. தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை நோக்கினால் அவர் ஒரு கருவை நிலையாக நிறுத்துவார். பின் அவரே வேறு கதாபாத்திரத்தின் மூலமாகவோ அல்லது அதே கதாபாத்திரத்தின் மூலமாகவோ அதை உடைத்தெறிவார். இந்த இழிநிலை தான் ரகுவர்தன் வாழ்வில் அவனின் புரவயத்திற்கும் அகவுலகத்திற்கும் இடையில் தெளிவாக நிகழ்கிறது. எழுத்து அதன் போக்கில் இதை சொல்வது அழகாக இருக்கிறது.

சொல்வது அழகாக இருக்கிறது என்னும் பொழுது தான் கதைசொல்லியை பற்றி கொஞ்சம் எழுத நினைக்கிறேன். அநேக இடங்களில் இவர் சொல்லும் கதை முகம் சுழிக்க வைக்கிறது. கதை சொல்லி கதையை நிகழ விடாமல் அதிகமான இடங்களில் தன்னை நிறுவிக் கொள்ள யத்தனிக்கிறார். இது ஆரோக்கியமான ஒரு எழுத்து முறை தான். ஆனால் அதற்குண்டான கரு இதுவல்ல என்பதால் முகம் சுழிக்க வைக்கிறது.

கதைசொல்லி ரகுவர்தனை மேலே எழுப்பாமல் சரியான இடங்களில் அவனின் உணர்வுகளை நிறுத்தி காயத்ரியின் உணர்வெழுச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனாலும் அநேக இடங்களில் ஆணாதிக்க படைப்பாக மாறிவிடுகிறது. அதற்கு காரணம் ஆரம்பத்தில் சொன்னது போல் ரகுவர்தன் என்னும் சராசரி சமூகப் பிரதிநிதியின் வாழ்க்கை குறிப்பே களவு காமம் காதல்.

சாம் நாதனுடன் நிறைய இலக்கிய பேச்சுகளை நிகழ்த்தியிருக்கிறேன். அவற்றை வைத்து பாழாய் போன மனம் ஒருவகை எழுத்தை நிலை நிறுத்தி வைத்திருந்தது. வாசிக்கும் போது மனம் தோற்று பிரதி வென்றது. முடிக்கையிலேயே அறிந்து கொண்டேன் என் தோல்வியை நானே கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் என. என்ன செய்ய எல்லோருக்குள்ளும் ரகுவர்தன் போன்றொரு முரண்பாட்டு வாழ்நிலை நம்மையறியாமல் கனன்று கொண்டே இருக்கிறது.

 

***

கலாப்ரியா கவிதைகள்

images (8)
பூக்கள்

உதிர்கின்றன

நாட்களின்

ஊமை ஓசையோடு

 

இலைகள்

உதிர்கின்றன

பருவங்களின்

காற்றோசையோடு

 

வெட்டுகிறாய்

பெருமரத்தின் கிளை

ஒடிகிறது

வருடங்கள்

முறியும் ஓசையோடு

-கலாப்ரியா

(2)

வெளிச் சொன்ன

வேகத்தோடு

சம்மதங்களை

 

உள்ளிழுத்துக்

கொள்ளுகிறாய்ப்

பாம்பென

 

நான் வேண்டுsoவது

நாவின்

வருடலையல்ல

விஷமேற்றும்

கூடலின்

கடித் தடங்களை

 

அடுத்து நீங்கள் கேட்கவிருப்பது – ஜார்ஜ் சம்னர் ஆல்பி (மொழிபெயர்ப்புக் கதை) – அசதா

download (18)

 

 

மார்ச்  மாதத்தின் முதல் திங்கட்கிழமை  இரவு சரியாக 9.38 மணிக்கு  அதிசயமான, கம்பீரம்மிக்க  அந்தக் குரல் முதன் முதலாக  ரேடியோவில் கேட்டது. குறிப்பாக  அந்த நாளும் அந்த நேரமும்  அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டது  ஏன் என்று யாராலும் சொல்ல  இயலவில்லை. எப்படியிருப்பினும்  உடனே மக்கள் அதை நம்பி  விடவில்லை. அவர்கள் காதுகளை  அவர்களாலேயே நம்ப முடியவில்லை.

 

அமெரிக்காவில்  டோயல்ஸ்டவுனில் தன் வீட்டுக்  கீழ் அறையில் தன் மகன்  லிமானின் எலக்ட்ரிக் ட்ரெய்னுடன்  விளையாடியபடியே கையில்  வைத்திருந்த சிறிய டிரான்சிஸ்டரில்  வினாடி வினா நிகழ்ச்சியைக்  கேட்டு கொண்டிருந்தார்  ஃப்ளாயிட் உஃபல்மேன். ரேடியோவில்  திடீரென வினாடி வினா  நிகழ்ச்சி தேய்ந்து அந்தக்குரல் ஆழமாக நளினமாக நட்புத் தோரணையுடன் அதே சமயம் உறுதியாக ஒலித்தது.

 

“கடவுள்  பேசுகிறேன். வீணாகக் குறுக்கிடுவதற்கு  மன்னிக்கவும். ஒரு படைப்புத்திட்டம்  நியதிப்படி தன் சட்டங்களுக்குட்பட்டு  முன்னேறிச் செல்லவேண்டும்.  ஆனால் நீங்கள், சூரியனின்  மூன்றாவது கோளின் குழந்தைகள், உங்களை நீங்களே அழித்துக்  கொள்ளும் நிலைக்கு மிக  அருகே வந்துவிட்டீர்கள். நான் தலையிட்டே ஆகவேண்டும். எனவே இந்த வாரத்தை நான்  உங்களோடு கழிக்க விரும்புகிறேன்.”

 

ஃப்ளாயிட்  ஒரு கணம் அதிர்ந்துபோய்  நின்று விட்டார். பின்  தன் மகன் லிமான்தான்  அவனது அறையில் இருந்தபடி  மைக் ஏதாவது வைத்துக்  கொண்டு சில்மிஷம் செய்துகொண்டிருக்க  வேண்டும் என நினைத்தவராய்  மேலேயிருந்த அவனது அறைக்கு  வந்தார். லிமான் இடது  கை மேல் வலது கால் பாதத்தை  வைத்தபடி தீவிரமாக பள்ளிக்கூட  கணக்கில் மூழ்கியிருந்தான்.

 

“ரேடியோவில்  என்ன செய்தாய் நீ?” எனக்  கேட்டார். “நானா, ஒன்றும்  செய்யவில்லையே! ஏன் அது  உடைந்து  போய்விட்டதா?”  என்றான் லிமான், அப்பாவியாய்.  ஃப்ளாயிட் மிகவும் குழம்பிப்  போனார். பக்கத்தில் குடியிருக்கும்  ஜீன் ஹக்கிள் வீட்டுக்குப்  போனார்.

 

“ஜீன் கொஞ்சம்  முன்னாடி ரேடியோவில் வினாடி  வினா நிகழ்ச்சி கேட்டுக்  கொண்டிருந்தீர்களா?” என்றார்  ஜீனிடம். “இல்லையே, நான்  லக்ஸ் ரேடியோ தியேட்டர்  நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்தேன்”  என்றார் ஜீன். “அப்படியானால்  நீங்கள் அதை கேட்டிருக்க  வாய்ப்பில்லையென்று நினைக்கிறேன்”  என்றார் ஃப்ளாயிட் தளர்வாய். “அட, நீங்கள் கூட அதைக்  கேட்டீர்களா, ரொம்ப அதிசயமாக  இல்லை அது!” என்று ஆச்சரியப்பட்டார்  ஜீன் ஹக்கிள்.

 

இவ்வாறு  ஆச்சரியம் அடைந்து அமெரிக்காவின்  டோயல்ஸ்டவுன் மட்டுமில்லை.  மறுநாள் காலை செய்தித்தாள்  பார்த்தபோது அந்தக்குரல்  உலகெங்கிலும் பல்வேறு மொழிகளிலும் கேட்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. அராபியர்கள் அதை அராபிய மொழியிலும், தென்னாப்பிரிக்கப் பழங்குடி மக்கள் அதைத் தங்களது ‘ஷி ரோங்கா’ மொழியிலும்கூட கேட்டிருந்தனர்.

 

உலகெங்கும்  மக்கள் ஒருவரையொருவர்  பார்த்து அதுபற்றி பேச  ஆரம்பித்தனர். “எனக்கு ஒன்றும்  புரியவில்லை” என்ற வார்த்தைகள்  அந்த மார்ச் மாத செவ்வாய்க்கிழமையைத்  தவிர வேறெப்போதும் அத்தனை  அடிக்கடி பேசப்பட்டதில்லை.  மாலை வந்தது. சூரியன் மேற்கில்  விழுந்தது. மணி எட்டானது. மின் நிலையங்களில் அம்மீட்டர்கள்  அதிக மின் அளவைக் காட்ட  ஆரம்பித்தன. சரியாக மணி  9.38க்கு நிஷ்களங்கமான, அன்னியோன்யமான  அந்தக் குரல் மறுபடி  ஒலித்தது: “பயப்பட வேண்டாம். நான் கடவுள் தான் என்பதனையும்  இந்த வாரம் நான் உங்களை  சந்திக்க வருகிறேன். என்பதனையும்  மட்டும் இப்போது உறுதி  செய்துகொள்ள விரும்புகிறேன்.”

 

இந்த முறை  ரேடியோவில் ஒலித்த குரலின்  அலைவரிசையை வைத்து அது  எங்கிருந்து வருகின்றது  என்று சிலர் ஆராய முற்பட்டனர்.  ஆனால் அவர்களால் அதைக்  கண்டறிய முடியவில்லை. அது  ரஷ்யாவின் வேலையாக இருக்குமோ  என்ற சிலரது சந்தேகம்  தற்காலிகமாகத் தீர்ந்தது.

 

புதன்கிழமை  செய்தித்தாள்கள் அந்த  அனாமதேய குரல் பற்றிய  செய்திகளைப் பக்கம் பக்கமாக  வெளியிட்டிருந்தன. அந்தக்  குரல் பற்றி விளக்கம்  கேட்டிருந்ததற்கு சில  விஞ்ஞானிகள் (புகைப்படத்தில்  சிலர் தங்களையே மறைத்துக்  கொண்டிருப்பதாக தோன்றியது)  அது ஒரு மனிதனின் குரலாகத்தான்  இருக்க வேண்டும் என்ற  தங்களது பொதுவான கருத்தைத்  தெரிவித்திருந்தனர்.

 

தருக்கவியல்  பேராசியர் ஒருவர் கீழ்க்கண்ட  வினா ஒன்றினை எழுப்பியிருந்தார்:  “உண்மையிலேயே பேசுவது  கடவுளாக இருப்பின் அவர்  ஏன் பேசுவதற்கு ரேடியோவை  தேர்ந்தெடுக்க வேண்டும்?”

 

மதகுருமார்கள்  யாரும் இதுபற்றி கருத்துத்  தெரிவிக்க முன்வரவில்லை. ஆங்லிக்கன் பிஷப் ஒருவர்  மட்டும் இவ்வாறு சொன்னார்: ”அந்தக் குரல் கடவுளுடைய  குரலாக இல்லாமல் போனாலும்கூட  நாம் மறந்து போன பலவற்றை  அது நமக்கு நினைவூட்டுவதாய்  இருக்கிறது”.

 

புதன்கிழமை  மாலை அமெரிக்கா முழுவதும்  செபக்கூடங்களுக்கு மிகுந்த  ஆர்வத்துடன் மக்கள் சென்றனர். ஏறக்குறைய எல்லா தேவாலயங்களிலும்  ரேடியோ கேட்க ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. கடவுளின்  மூன்றாவது பேச்சில் இரண்டே  வார்த்தைகள் மட்டும் அடங்கியிருந்தன. கடவுள் இயக்கமற்றவர், சவம்  போன்றவர் என நினைத்திருந்தவர்கள்  கோபம் கொள்ளும்படியாக  அந்த வார்த்தைகள் ஒரு  தந்தைக்குரிய மெல்லிய  சிரிப்புடன் வெளிப்பட்டன.  அவை: “அது நான்தான்”.

 

முந்தைய  பேச்சுக்களைப் போலவே இந்த  மூன்றாவது முறையும் யாருக்கும்  புலப்படாத வகையில், எங்கிருந்து  வருகிறது எனக்  கண்டறிய  இயலாத வகையில் எப்படியோ  அந்தக் குரல் ரேடியோவின்  கம்பிச் சுருள்கள், கடத்திகள்  வழியாக ஊர்ந்து வந்தது. கடலில் – கப்பலில் சங்கேத  பாஷைகளைப் பரிமாறிக்கொள்வதற்காக  வைக்கப்பட்டிருந்த ரேடியோக்களிலும்  கூட அந்தக் குரல் கேட்டது.  கடவுள் ஏன் ரேடியோ மூலமாகப்  பேச வேண்டும் என்பதற்கு  ஒரு தோதான பதிலும் சொல்லப்பட்டது.  திறந்தவெளியில் வானத்திலிருந்தபடி  கடவுள் பேசியிருப்பாரேயானால்  அது மக்களிடையே பீதியை  ஏற்படுத்தியிருக்கும். மக்கள்  தினசரி கேட்கும் ரேடியோ  வாயிலாகாப் பேசுவது இத்தகு  பீதி ஏற்படுவதைத் தவிர்க்க  உதவும் என்பதே அது. இது  கடவுள் மக்கள் மேல் கொண்டுள்ள  கரிசனத்தைக் காட்டுகிறது.  மனிதனது மனோநிலை பற்றிய  கடவுளது அறிவு அற்புதமாயிருந்தது  (அதொன்றும் அவ்வளவு ஆச்சிரியப்படத்தக்க  விஷயம் இல்லை). “அது நான்தான்”  என்ற இரத்தினச் சுருக்கமான  வார்த்தைகள் எளிமை விரும்பிகளையும்  வாக்குமூல விரும்பிகளையும்  அந்தக் குரல்மீது நம்பிக்கை  கொள்ளவைத்தன.

 

வியாழக்கிழமை  கடவுள் புதிய யுக்தியொன்றைக்  கையாண்டார். அறியாமையும்,  மூடநம்பிக்கையும் கொண்ட  மக்களுக்காக நடந்த அதிசய  நிகழ்சிகளே அந்த யுக்தி. ஏறக்குறைய எண்பது கிலோ  மீட்டர் சுற்றளவுக்கு  ஒன்று என்ற வீதத்தில் உலகெங்கும் அற்புதங்கள் நிகழ்ந்தன. பெரும்பாலும் எளிய சம்பவங்கள்: விஸ்கான்ஸினில் ஒரு தெரு அங்காடியில் ஆரஞ்சுப் பழங்கள் தாமாகவே சுவர் ஒன்றில் உருண்டு ஏறி “மனிதர் என் மக்கள். எனவே அவர்கள் சகோதரர்கள்” என்ற வாக்கியமாக மாறி நின்றன. கோபன்ஹேகனில் மிருகக்காட்சி சாலையினின்றும் வெளிவந்த சிங்கம் ஒன்று நாட்டுப்புறத்திற்கு சென்று அங்கே வயல்வெளியில் இருந்த ஆட்டுமந்தையில் தானும் ஒரு ஆடாகப் படுத்துக்கொண்டது. கலிஃபோர்னியாவில் பாஸடோனியாவில் ஒரு பெண்மனி, தன் கணவன் படுக்கையில் பல்லை நறநறவென்று கடித்ததனால் கோபமுற்றவளாய் அர்ரோயோ சிகோ பாலத்தினின்றும் கீழே குதித்து விட்டாள். தீயணைப்புப் படை வந்து ஏணியொன்றை இறக்கி அவளைக் காப்பாற்றும் வரை ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிடங்கள் அவள் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள்.

 

சிறியனவாக  இருந்தபோதிலும் இந்த அதிசயங்கள், கடவுளின் குரலால் வெகுவாக  அலைகழிக்கப்பட்டு வந்தவர்களிடையே  பெரும் கோபத்தை ஏற்படுத்தின.  பிரெஞ்சு பாராளுமன்றத்தில்  ஒரு கலகமே நடந்து விடும்போல்  இருந்தது. ‘ஒட்டகம்’ போன்ற  வார்த்தைகள் எழுதப்பட்ட  அட்டைகளை பாராளுமன்றத்தில்  ஒருவர் மீது ஒருவர் கோபமாக  வீசிக் கொண்டனர். மதவாத  எதிர்ப்புக்கும் புரட்சிக்கும்  இது அடையாளம் என ஒருவரையொருவர்  குற்றம் சாட்டிக்கொண்டனர்.

 

எல்லாரையும்  விட அதிகக் கோபமுற்றிருந்தவர்  அமெரிக்காவின் நியூயார்க்கைச்  சேர்ந்த வால்டர் வாலேரியன்  ஆவார். அவர் நாத்திக வளர்ச்சி  இயக்கத்தின் தலைவர். அமெரிக்காவில்  இருந்த அந்த இயக்கத்தின்  உறுப்பினர்கள் அனைவரையும்  ஒரு பெரும் எதிர்ப்புப்  போராட்டம் நடந்த உடனே  நியூயார்க் புறப்பட்டு  வரும்படி செய்தியொன்றை  அனுப்பினார்.

 

கடவுளது  வியாழக்கிழமை பேச்சு சற்றே  நீளமாக தத்துவார்த்த தொனியுடன்  இருந்தது. “உங்கள் காலடியில்  இருக்கும் ஒவ்வொரு கூழாங்கல்லும்,  ஒவ்வொரு துளி நீரும்  அதிசயமே. ஆனால் இந்த அதிசயங்களை  அனுபவித்து உணரும் திறமையை  நீங்கள் இழந்ததனால் இயற்கையை  மீறிய சில அதிசயங்களை  உங்களுக்கு நான் நிகழ்த்திக்காட்ட  வேண்டியதாகி விட்டது. இயற்கை  நியதிகளை உடைத்து நான் புரிந்த அச்செயல்கள் நான் உங்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளேன் என்பதைக் காட்டும். மகாவல்லமை பொருந்திய கடவுள்கூட இத்தகு விஷயங்களில் தனது சக்திகளை அடக்கிக்கொண்டு செயலாற்ற வேண்டியுள்ளது. இருப்பினும் சிலர் இன்னும் என்னை நம்ப மறுப்பர். எனவே நாளை வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன் பெரும் அதிசயங்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டுவேன். சரியாக நண்பகல் வேளையில் ஆஸ்திரேலிய கண்டம் முழுவதையும் ஒரு நிமிடநேரம் கடலுக்குள் மூழ்க வைத்து வெளிக்கொணர்வேன்”.

 

இந்த வியாழக்கிழமை  பேச்சுக்கு பின்னர் மக்களிடம்  இருந்த அவநம்பிக்கை முற்றிலுமாக  அகன்றுவிட்டது. கோடிக்கணக்கான  மக்கள் உண்மையிலேயே அது  கடவுளின் குரல்தான் என்று  நம்பினார்கள். உலகின் மொத்த  முஸ்லீம்களும் மானசீகமாக  மெக்காவை நோக்கிய சாலைகளில்  நடக்க ஆரம்பித்தார்கள்.  சீனாவின் மஞ்சள் தரையெங்கும்  இரவு பகலாக பட்டாசு வெடிச்சத்தம்  கேட்க ஆரம்பித்தது. தென்  அமெரிக்காவின் ஓசார்க்  மலைகளில் வாழும் குறிப்பிட்ட  ஒரு மதத்தைச் சேர்ந்த  மக்கள் தங்கள் உடல்களில்  வெள்ளைத்துணியை சுற்றிக்  கொண்டு மலை உச்சியில்  ஒன்றாக் கூடி வரப்போகிற  உலக முடிவை எதிர்பார்த்துக்  காத்திருக்க ஆரம்பித்தனர்.

 

அதன் பின்னர்  ஆஸ்திரேலிய ரேடியோ நிலையங்கள்  முழுவீச்சில் ஒலிபரப்பில்  இறங்கின. கடவுள் தனது  கடைசி அதிசயத்தை நிகழ்த்திக்  காட்ட சரியான நாட்டைத்தான்  தேர்ந்தெடுத்திருந்தார். வேறொரு நாட்டு மக்களாய்  இருந்திருந்தால் இந்நேரம்  பயந்து போய் அடித்துப்  பிடித்துக் கொண்டு படகுகளில்  உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.  இந்த ஆஸ்திரேலியர்களோ  ஒன்றுக்கும் பயந்தவர்களாய்த்  தெரியவில்லை.

 

நகைச்சுவை  உணர்வு மிக்க ஆஸ்திரேலிய  ரேடியோவின் அறிவிப்பாளன்  பின்வருமாறு குறிப்பிட்டான். “யாரும் பயப்படவோ, பீதியடையவோ  இல்லை. மக்களிடையே நிலவும்  பொதுவான அபிப்ராயம் யாதெனில்  ஒரு நிமிட நேரம் தண்ணீருக்கு  அடியில் இருப்பதனால் யாருக்கும்  எந்தவிதத் தீங்கும் நேரப்  போவதில்லை. மாறாக நம்  மக்கள் சிலருக்கு அது  மிகுந்த நன்மையே பயக்கும்”.  உலகின் இரண்டாவது பெருவெள்ளம்  பற்றிய நேரடி விவரங்களை  உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு மெல்போர்ன், ஸிட்னி ஆகிய நகரங்களைச் சுற்றி சிறிய கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 

வெள்ளிக்கிழமை  நண்பகலுக்கு முன் பெரிய  அதிசயங்கள் பலவற்றை நிகழ்த்திக்  காட்டுவதாக கடவுள் வாக்களித்திருந்தார்.  நிகழ்ந்தவை யாவும் உண்மையிலேயே  பெரும் அதிசயங்களாகவே  இருந்தன. அமமெரிக்காவின்  இராணுவம், கடற்படை மற்றும்  விமானப் படை இவற்றிடம்  இருந்த ஆயுதங்கள், தளவாடங்கள்  அனைத்தும் அவற்றுக்குரிய  இடத்திலிருந்தும் காணாமல்  போயிருந்தன. அவையெல்லாம்  மொத்தமாக, சிறிய குண்டூசி  முதல் போர்க்கப்பல் வரை  பெரும் குவியலாக முழுவதுமாக  சிதைக்கப்பட்டு ஓரிடத்தில்  குவிக்கப்பட்டிருந்தன. சில  மணி நேரங்களில் உலகமே  அஞ்சுமளவுக்கு ஆயுதங்களைக்  குவித்து வைத்திருந்த  வேறொரு தேசத்தின் ஆயுதங்களும்  அது போலவே அழிக்கப்பட்டிருந்தன.  இதைக் கேள்வியுற்ற ரஷ்யாவிற்கு  கடும் பீதி ஏற்பட்டது.  சற்று நேரத்தில் பளபளப்புடன்  வரிசையாய் நின்றிருந்த  ரஷ்ய டாங்குகள், விமானங்கள், கண்காணிப்புப் பீரங்கிகள்  எல்லாம் காணாமல் போய்  அந்த இடத்தில் சாணம்  ஏற்றிய மாட்டுவண்டிகள்  நின்றிருந்தன. ஒவ்வொரு வண்டியிலும்  என்னவோ எழுதிய அட்டையொன்று  இருந்தது. அருகே சென்று  பார்க்க, லெனினின் புகழ்பெற்ற  மேற்கோள் அதில் எழுதப்பட்டிருந்தது. “அமைதி, ரொட்டி மற்றும்  நிலம்”.

 

எதிர்ப்புப் போராட்டம் நடத்த வந்திருந்த நாத்திக வளர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்கள் டைம்ஸ் சதுக்கத்தில் கூடினார்கள். உடனே அவர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தேவதூதர்களாக மாற்றிவிட்டார். அவர்களது தோள்பட்டைகளினின்று நீண்ட வெண்மையான சிறகுகள் வளர்ந்தன. தலைகளைச் சுற்றிலும் தங்கநிற ஒளிவட்டம் தோன்றியது. அவர்கள் அச்சமும் நாணமும் கொண்டவர்களாய் டாக்ஸிகளில் ஏறி உடன் அவ்விடத்தைவிட்டு நீங்கினர்.

 

வெள்ளிக்கிழமை  மதியம் மணி பன்னிரண்டை  நெருங்க நெருங்க ஆஸ்திரேலியாவின்  மீது விமானத்தில் பறந்தபடி  கீழே கவனித்துக் கொண்டிருந்த  செய்தியாளர்கள் பரபரப்பு  அடைந்தனர். பி.பி.சி செய்தியாளர்  மட்டும் சற்றும் கலவரமடையாமல்  பேச ஆரம்பித்தார். அவருடைய  தொனி ஏதோ ஒரு கிரிக்கெட்  வர்ணனையாளருடையதைப் போன்று  இருந்தது.

 

“முன்னறிவித்தபடியே  ஆஸ்திரேலியக் கண்டம் கடலுக்குள்  மூழ்கிக் கொண்டிருக்கிறது.  வெகுவேகமாக அது தண்ணீருக்கடியில்  போய்க் கொண்டிருக்கிறது.  நவீன பயணிகள் லிஃப்ட்  அளவே நிலம் இன்னும் மீதமிருக்கிறது. மிதக்கும் பொருட்கள் எல்லாம்  நீர்ச்சுழலோடு சேர்ந்து  சுழன்றபடி மிதக்கின்றன.  அட, இந்த மக்கள்தான் எத்தனை  அனாவசியமான பொருட்களையெல்லாம்  வீட்டிற்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.  இதோ மலை உச்சிகள் கூட  கீழே போகின்றன. ஐம்பது  வினாடிகள்… ஐம்பத்தி ஐந்து.  ஆமாம்… இதோ மறுபடி ஆஸ்திரேலியா  வருகிறது. நேரே மேலே வருகிறது. அதே பழைய ஆஸ்திரேலியா  மூழ்கியிருந்த கொஞ்சநேரத்தில்  எந்த மாற்றமும் ஏற்படாமல்  வெளிவந்திருக்கும் அதே  பழைய ஆஸ்திரேலியா”.

கரையோரமாக  ஒரு விமானம் தரையிறங்கியது.  ரேடியோ அறிவிப்பாளர் ஓடிச்  சென்றார். அவர் சந்தித்த  முதல் நபர் ஒய்வு பெற்ற  இராணுவ கர்னல் ஹம்ப்ரி  ஆர்பத்னாட். அறிவிப்பாளருக்கு  மூச்சு வாங்கியது. “நேயர்களுக்கு  சொல்லுங்கள், உண்மையிலேயே  நீங்கள் கடலுக்கடியில்  போனீர்களா?.

“ஈரம் சொட்டச்  சொட்ட நனைந்திருக்கிறேனே,  தெரியவில்லை.” கோபமாகக்  கத்தினார் கர்னல். “சனியன்  இந்தக் கடல் நேராக வந்து  என் அறைக்குள்ளாகவா பாயும்”  என்று அலுத்துக் கொண்டவர்  அறிவிப்பாளரை பார்த்துக்  கேட்டார். “உங்களிடம் ஒரு  டவல் இருக்குமா?”

கடவுளது  வெள்ளிக்கிழமை பேச்சு  இவ்வாறு இருந்தது. “என்  வருகை என்பது உலக முடிவாகத்தான்  இருக்கவேண்டுமா. கடவுளின்  பெயரால், உங்கள் மனசாட்சிக்கு  செவிசாயுங்கள். அது சொல்கிறபடி  நடங்கள். குட் நைட்”.

சனிக்கிழமை  மிக மிக பரபரப்பானதாக  இருந்தது. புதைபட்டிருந்த  மனசாட்சிகள் எல்லாம் மெல்லிய  பசுமை நிறத்தண்டுகளை மேலெழுப்பின,  டூலிப் மலர்களைப்போல. லத்தீன்  அமெரிக்காவைச் சேர்ந்த  அரை டசன் சர்வாதிகாரிகள்  தங்கள் பதவிகளை ராஜினாமா  செய்தனர். சர்வதேச வங்கி  நிறுவனம் ஒன்று தான்  தொடர்ந்து செயல்படப் போவதில்லையென்று  அறிவித்தது. அந்நிறுவனம்  அதுவரை பின் பற்றி வந்த  வியாபார நெறிமுறைகள் அத்துணை  நேர்மையானவை அல்ல என  அதன் இயக்குனர்கள் தீர்மானித்ததே  காரணம். ஆயிரக்கணக்கான சிறு  தொழிலதிபர்களும் இதே போன்ற  ஒரு மனமாற்றத்தை அடைந்தனர்.  ஒரு காரேஜ் முதலாளி தன்  மெக்கானிக்குகளை அழைத்து  பின் வருமாறு சொன்னார். “இனி நம் வாடிக்கையாளர்  ஒருவரிடம் டிஸ்ட்ரிபியூட்டர்  காயிலுக்காக கட்டணம் வசூலிக்கும்போது உண்மையிலேயே அந்தக் காயிலை அவர் வண்டியில் பொருத்துவோம்”.

மக்கள்  தெரியாமல் எடுத்து வந்த  புத்தகங்களை மறுபடியும்  நூல்நிலையங்களுக்கே கொடுத்துவிட்டனர். பழைய கடன்களை நினைத்துப்  பார்த்து அவற்றைத் திரும்ப  அடைத்தனர். முதியோர் இல்லங்களில்  இருந்த தங்களது உறவினர்களுக்கு  மலர்க்கொத்துகள் அனுப்பினர். ஏறக்குறைய தொண்ணூற்று  ஒன்பது சதவீத மக்களுக்கு  அந்த சனிக்கிழமை இரவு  உலகம் மிக இன்பமயமானதாகவும், நட்பு நிறைந்ததாகவும், ஆனந்தமயமானதாகவும்  மாறிவிட்டதாய் தோன்றியது.

கடவுளது சனிக்கிழமை  இரவுப்பேச்சு அவர்களது  கடைசிப் பேச்சாக அமைந்தது. அந்த வழக்கமான நேரத்திற்கு  முன் உலகெங்கும் ரேடியோக்கள்  மெளனமாக இருந்தன. பின்  மெல்ல அந்த இனிய குரல்  ஒலிக்க ஆரம்பித்தது.

“இதோ நான்  விடைபெறப் போகிறேன். உங்களது  பிரச்சினைகளில் அனேகம்  அப்படியே இருப்பதை நீங்கள்  உணர்வீர்கள். உங்களிடையே  இன்னும் வலியும், மகிழ்ச்சியின்மையும்  உள்ளன. இன்னும் நீங்கள்  உடுத்தவும், உண்ணவும், உங்களையே  அடக்கி ஆளவும் வேண்டிய  தேவைகள் இருக்கின்றன. எதற்கென்று  நான் சொல்லத் தேவையில்லை. இந்த பூமி ஒரு பள்ளிக்கூடம். வாழுங்கள், என் இனிய குழந்தைகளே, கற்றுக்கொள்ளுங்கள். இதோ  நாம் மறுபடியும் நாம்  சந்திக்கும்வரை விடைபெறுகிறேன். குட் பை”.

ஏழாவது நாளும்  மக்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கப்புறம் கடவுள்  பேசவில்லை.

———

ஜார்ஜ் சம்னர் ஆல்பி :1905ல் அமெரிக்காவின் விஸ்கான்ஸினில் பிறந்தார். தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து குடும்பம் கலிஃபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தது. சில காலம் பிரான்ஸ், வடஆப்பிரிக்கா இங்கெல்லாம் பயணங்கள் மேற்கொண்டபின் லாஸ் ஏஞ்சலீஸ் திரும்பி திரைப்படங்களுக்கு எழுதினார். Not In a Day (1935), Young Robert (1937), Girl on the Beach (1953),  The Boys (1957)ஆகியவை இவரது நாவல்கள். Saturday Evening Post, McCall’s, Cosmopolitan  மற்றும்  Collier’s ஆகிய பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதினார். 1964ல் ஃப்ளோரிடாவில் காலமானார். இச்சிறுகதை 1950ல்வில்லியம் ஏ.வெல்மன் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

நன்றி: கணையாழி, அக்டோபர் 1996.

 

•••

விரைவில் வெளிவரவிருக்கும் அசதாவின் ‘நீலநாயின் கண்கள்’ மொழிபெயர்ப்புக் கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதை.

நீலநாயின் கண்கள்

(மொழிபெயர்ப்புக் கதைகள்)

அசதா

வெளியீடு:

நாதன் பதிப்பகம்,

72/43, காவேரி தெரு,

சாலிகிராமம்,

சென்னை – 24;

விலை ரூ. 100.