Category: இதழ் 49

நவீன தமிழ் இலக்கிய மேதமை பிரமிள் (75ஆவது பிறந்த நாள் : 20.4.2014) / கால சுப்ரமணியம்

download

 

 

பிரமிள், இலங்கையின் திருக்கோணமலையில் 20.4.1939இல், தருமராஜன்-அன்னலட்சுமி தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர்; இலங்கையில் பிறந்தாலும், அறுபதுகளின் இறுதியிலேயே இந்தியா வந்து, தமிழ் நாட்டு எழுத்தாளராகவே வாழ்ந்து, 1971லிருந்து சென்னையில் தமது பெரும்பாலான வாழ்நாளைக் கழித்தவர். புற்றுநோய்ப் பாதிப்பால், தமிழ் நாட்டில் வேலூரை அடுத்துள்ள  கரடிகுடி என்னும் ஒரு சிறு கிராமத்தில் 6.1.1997இல் அடக்கம் பெற்றார்.

இவர், தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், விதவிதமாகத் தன் பெயரை மாற்றி எழுதிக்கொண்டே இருந் தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. நவீன தமிழின் முதன்மையான கவிஞராகவும் முதன்மையான விமர்சகராகவும் சிறுகதையாசிரியராகவும் ஓவியராகவும் களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் பிரமிள் விளங்கினார். படிமக் கவிஞர் என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். இவரது கவிதையும் உரைநடையும், தமிழ் மொழிக்கு நவீன தொனியையும், தமிழ் அறிவுலகுக்கு அதுவரையில்லாத பரிமாணத்தையும் அளித்தன. ஓவியராகவும் சிற்பியாகவும் தொடங்கிய இவரது படைப்பு வாழ்க்கை, 1960இல் சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய பிறகு, புதுக்கவிஞராகவும் இலக்கிய விமர்சகராகவும் மாற்றம் கொண்டு, உயர்ந்தபட்சக் கற்பனைத் திறனும் உள்ளூடுருவும் பகுப்பாய்வுச் சக்தியும் கொண்ட எழுத்தாளராக அவரை நிலை நிறுத்தியது.

இலங்கையில் பல்வேறு இடங்களில், இவர் சிற்சில காலம் வசித்திருக்கிறார். இந்தியாவிலும் டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர் கோயில், மதுரை, சென்னை போன்ற இடங்களில் வாழ்ந்திருக்கிறார். சி.சு.செல்லப்பா, மௌனி, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன்நம்பி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன், கி.அ.சச்சிதானந்தம், டேவிட் சந்திரசேகர், ராஜமார்த்தாண்டன், விஷ்ணு நாகராஜன், அழகியசிங்கர், கால சுப்ரமணியம், முன்றில் மகாதேவன், வி.எஸ்.சத்யா போன்ற பலரிடமும் அவர் பழகி வந்திருக்கிறார். இவர்களில் பலரைப் பின்பு கருத்துரீதியில் கடுமையாகச் சாடியுமிருக்கிறார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மேல் அவருக்கு அபாரமான ஈடுபாடு இருந்து வந்துள்ளது. இளமையில் அவரை அதிகம் பாதித்தவர் திருக்கோணமலை இல்லறத்துறவி, சாது அப்பாத்துரை. யோகி ராம்சுரத் குமார், பேடா போன்ற பல ஞானிகளின் தொடர்பும் குறிப்பிடத்தகுந்தது.

நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு ‘இன்பாந்த் டெரிபிள்‘ ஆக விளங்கியவர் பிரமிள். ஆரம்பத்தில்எழுத்து பத்திரிகையும் இடையில் கொல்லிப்பாவையும் இறுதியில் லயம் பத்திரிகையும் அவரது படைப்பியக்கத்துக்குக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள், லயம் வெளியீடுகளாகவே வெளிவந்தன. 1995இல் கும்பகோணம் ‘சிலிக்குயில்’, பிரமிளுக்குப் ‘புதுமைப்பித்தன் வீறு’ வழங்கியது. 1996இல் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் ‘விளக்கு‘ அமைப்பு, புதுமைப்பித்தன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

பிரமிளின் மறைவுக்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பராகவும் ஆய்வாளராகவும் வெளியீட்டாளராகவும் அவரது அனைத்துப் படைப்புகளுக்கும் பிரமிளாலேயே உரிமை வழங்கப்பட்டவராயும் விளங்கும் கால சுப்ரமணியம், பிரமிளின் அனைத்து எழுத்துக்களையும் திரட்டி, 6 நூல் தொகுதிகளாகப் பிரித்துத் தொகுத்துள்ளார். முன்பு லயம் பத்திரிகையிலும் லயம் வெளியீடு பதிப்பகத்திலும் பிரமிளின் படைப்புகளை வெளியிட்டதுபோலவே, இதுவரை தனித்தனி நூல்களாக (4 தொகுதிப் படைப்புகளும்) பல பதிப்பகங்கள் வழியாக வெளிவந்துள்ளன. இன்னும் 2 தொகுதிகள் முழுமையாக வெளியாகாமலேயே உள்ளன.  பிரமிளின் இந்த 6 தொகுதிகளும் ஒட்டுமொத்தமாக விரைவில் நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட உள்ளன.

 

பிரமிள் நூல் வரிசை : (தொகுப்பாசிரியர் : கால சுப்ரமணியம்)

  1. பிரமிள் கவிதைகள் (முழுத்தொகுதி), லயம்வெளியீடு, 1998.

/ (சிறப்புப் பதிப்பு), அடையாளம், 2007.

  1. தியானதாரா. லயம் வெளியீடு,1989.

ஆகாஷ் பதிப்பகம், 2006 / கவிதா பப்ளிகேஷன் (2006) 2008.

3. மார்க்சும் மார்க்ஸீயமும். பீட்டர் வோர்ஸ்லி, லயம் வெளியீடு, 1999,

4. பிரமிள் படைப்புகள். (கதைகள். அடையாளம், ) 2003,

5. வானமற்ற வெளி: கவிதை பற்றிய கட்டுரைகள். அடையாளம், 2004.

6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக, மறைமுகஞானப்  படைப்புகள். வம்ஸி, 2007

7. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், வம்ஸி புக்ஸ், 2011.

8. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள், வம்ஸி புக்ஸ், 2011.

9. காலவெளிக் கதை: விஞ்ஞானக்  கட்டுரைகள். உள்ளுறை, 2009.

10. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புகள். விருட்சம் வெளியீடு, 2009.

11. யாழ் கதைகள். லயம் வெளியீடு, 2009.

12. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். நற்றிணை பதிப்பகம், 2011.

13. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்), நற்றிணை பதிப்பகம், 2011.

14. நட்சத்ரவாஸி, திரிகோணேஷ் பதிப்பகம், 1993

15. லங்காபுரிராஜா, லயம் வெளியீடு, 1988.

 

 

  1. எதிர்ப்புச் சுவடுகள்: பேட்டிகள் & உரையாடல்கள்2. அறைகூவல்: இலக்கிய அரசியல் கட்டுரைகள்ஆகிய 2 தொகுதிகள் வெளிவராதவை.ஓவியங்களும் கடிதங்களும் பிரமிள் பற்றி பிறர்எழுதிய மதிப்பீடுகளும் தொகுக்கப்பட வுள்ளன.

 

பிரமிளின் நூல்கள் கிடைக்குமிடம்: 1. மலைகள்.காம் 2. அகநாழிகை புத்தக நிலையம் 3. கே. சுப்ரமணியன் (லயம் வெளியீடு), 155, கிழக்கு வீதி, நேரு நகர், சத்தியமங்கலம் 638 402.  செல்: 9442680619 / kasu.layam@gmail.com

 

பிரமிள் கவிதைகள்

 

விடிவு

 

பூமித் தோலில்

அழகுத் தேமல்

பரிதி புணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ

இருளின் சிறகைத்

தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்

மிதக்கும் குருவி.

(எழுத்து, டிச. 1961)

 

 

மின்னல்

ககனப் பறவை

நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்

எறியும் பார்வை

கடலுள் வழியும்

அமிர்தத் தாரை

கடவுள் உன்றும்

செங்கோல்.

(எழுத்து, பிப். 1962)

 

 

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கஙங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது,

(1973)

 

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்

பூந்தோட்டத்து மலர்களிலே

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி.

வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல்நோக்கிப் பறந்து

நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்

உவர்த்த சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.

(கொல்லிப்பாவை, ஆகஸ்ட் 1980)

சுஜாதாவின் கதைகள் ___ கவிஞர் ராஜசுந்தரராஜன்

 

images (17)

 

 

 

ஏப்ரல் 24-ஆம் தேதி, தமிழ்நாட்டிலே, பாராளுமன்றத்துக்குத் தேர்தல். சரிதானே? 22, 23, 24 ஆகிய தேதிகளில்… சரிதானே?… ‘டாஸ்மாக்’ கடை லீவு.

 

ஆக, ஏப்ரல் 21-ஆம் தேதி எனக்குச் செய்து முடிக்கவேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது. பைக்கில் புறப்பட்டுப் போனேன். சாலையில், எனக்கு முன்னே ஒரு டி.வி.எஸ் 50 போய்க்கொண்டு இருந்தது. அதைக் கடந்து போக விலகினேன். அப்போதுதான் கவனித்தேன், அதன் கேரியரில் இரண்டு அதை ஓட்டிக்கொண்டு போனவர் கால்களுக்கு இடையில் இரண்டு என நான்கு மூட்டைகள். அரிசி மூட்டைகள் போலத் தெரிந்தன.

 

இப்படி உங்களுக்குத் தோன்றுவதுண்டா? இப்படி நீங்கள் செய்தது உண்டா? அதாவது, அரிசி மூட்டைகள் காரணம், அந்த வண்டியைக் கெலித்து முன்னேறாமல் வேகம் குறைத்து அதன் பின்னாலேயே சென்றேன். எல்லாம் ஒரு மரியாதைதான்.

 

 

சுஜாதாவின் எழுத்துகளில் அவரது சிறுகதைகளை எனக்குப் பிடிக்கும். “சிறுகதை எழுதுவது எப்படி?” என்று யாராவது என்னைக் கேட்கையில், “சுஜாதாவைப் படியுங்களேன்!” என்று பரிந்துரைப்பது வழக்கம். அப்படிக் கச்சிதமாக இருக்கும் அவருடைய கதைகள்.

 

முதல் வாக்கியத்திலேயே கதையைத் தொடங்கிவிடுவார். முதல் பத்தியிலேயே, பிரச்சனை இன்னதென்றும் சொல்லிவிடுவார். பிறகு, ஒரு போக்காக அதை வளர்த்தெடுப்பார். அதற்காக அவர் வைக்கிற சுவையான தர்க்கங்கள், உரையாடல்கள் நம்மை அதன் போக்கில் ஈர்த்துவிடும். அப்படியே கொண்டுபோய், கடைசி வரியில், ஒரு கல்தோசைத்திருப்பம் திருப்புவார் பாருங்கள், நமக்கு அது ஏற்புடையதோ இல்லையோ, ரசிக்காமல் இருக்க முடியாது.

 

“வீடு” என்று ஒரு கதை, ‘அண்ணா வீட்டை விற்கப் போகிறானாம். வக்கீல் எழுதி இருக்கிறார்,’ என்று தொடங்குகிறது. நாயகியே சொல்வது போலக் கதை அமைப்பு. இவள் இருப்பதோ தில்லியில். பரம்பரை வீடு இருப்பது சென்னை மாம்பலத்தில். கணவர் டிஃபென்ஸ் மினிஸ்ட்ரியில் ஜாயின்ட் செக்ரெட்டரி. அலுவலகத்தில் இருக்கும் கணவரைப் போனில் பிடித்து, அந்த வீட்டை விற்கவிடாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறாள். அவர் சாக்குப்போக்குச் சொல்லி, “அதை விடு, உனக்கு ஒரு தாஜ்மஹால் கட்டித் தருகிறேன்,” என்கிறார். இவள் எரிச்சலுற்று, “கைமாறுவதற்குள் அந்த வீட்டை ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டாவது திரும்புகிறேன்” என்று புறப்பட்டு வருகிறாள்.

 

வந்தால், வீடு திறந்து கிடக்கிறது. வெள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். வீடு, கடனில் முங்கி, கைமாறிவிட்டது. அண்ணா குடும்பம் எங்கேயோ போய்விட்டது. இதுதான் நிலைமை. இவள் வீட்டுக்குள் நுழைகிறாள். ‘இந்த இடத்தில்தானே அண்ணா தன் சிநேகிதர்களோடு கிரிக்கெட் விளையாடுவான். இந்தத் திண்ணையில் எத்தனை பேர் தண்டச்சோறு சாப்பிட்டு இருப்பார்கள். இந்த ரேழியில்தானே அப்பாவைக் கொண்டுவந்து கிடத்தி அழுதார்கள். அப்புறம் பாட்டி, அப்புறம் அம்மா. இந்த ஊஞ்சலில் நான், அண்ணா, அவன் – அவன் பேரென்ன? ஹாங், ராஜு ஒன்றாக ஆடினோமே. இன்று ஊஞ்சல் இல்லை; கொக்கிகள் இருக்கின்றன. இந்தக் கூடத்தில்தானே நான் பரதம் படித்தேன்.’ இப்படியே சுவரில் தொங்கிய படங்கள் உட்பட, பழைய ஞாபகங்களை மீட்டெடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குப் போகிறாள்.

 

இங்கே ஒரு தகர ஷெட் இருக்குமே? இருக்கிறது. இந்த தகர ஷெட்டுக்கும் காரைச் சுவருக்கும் இடையில் ஒரு ரகசிய இடம். எனக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த இடம். அதை நெருங்க நெருங்க என் வயதின் வருடங்கள் உதிர்ந்து, பதினெட்டு வயதை மறுபடியும் அடைகிறேன். நானும் அவனும் மட்டும்தான். நானும் ராஜுவும்.

 

“சித்ரா!”

 

“சொல்லு!”

 

“நான் உன்னைத் தொடலாமா?”

 

“தொடு!”

 

தொட்டான்.

 

“இன்னும் தொடு!”

 

உபயோகமில்லாத நாற்காலிகள், நடைவண்டி, தகர டின் எல்லாவற்றையும் விலக்கினேன். அந்தக் காரைச்சுவரும் அதில் ஆணிகொண்டு அவன் கிறுக்கிய அந்த எழுத்துகளும் தெரிந்தன: “சித்ரா! நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் – ராஜு.” இரண்டே இராண்டு வாசகர்களுக்கு மட்டுமான காவியம்.

 

அம்மா இல்லை. அப்பா இல்லை. அண்ணா எங்கிருக்கிறான்? தெரியவில்லை. ராஜுவும் இல்லை. (தோற்றம் 4-5-1935; மறைவு 14-9-1956).

 

இதற்கு அடுத்த வரியில்தான் கதை முடிகிறது, ஆனால் இப்படி: அவன் சுவரில் எழுதிய கிறுக்கலைப் பார்க்க ஆயிரம் மைகள் பிரயாணம் செய்து வந்து மொட்டை மாடியில் தனியாகச் சற்றுநேரம் நின்று அழுதேன்.

 

இந்த இடத்தில் நமக்கு, கதையின் முற்பாதியில் அவளுடைய கணவர் சொன்ன, “அதை விடு, உனக்கு ஒரு தாஜ்மஹால் கட்டித்தருகிறேன்,” என்றது ஞாபகம் வந்தால், சுஜாதாவின் எழுத்துக்கலை ஓரளவுக்குப் புரிகிறது என்று அர்த்தம்.

 

இப்படி, கடைசி வரியில் ஒரு திருகல் கொடுத்து முடிப்பதில், உலகிலேயே நம்பர் ஒன் என்று கருதப் படுபவர் ஓ ஹென்றி. அவருடைய ஒரு கதையில், பென் என்றொரு பொலீஸ் அதிகாரி இருக்கிறான். அவன் ஜிம்மி என்றொரு திருடனைப் பிடித்து உள்ளே தள்ளுகிறான். ஆனால் குற்றம் சரிவர நிரூபிக்கப் படாததினால் ஜிம்மி வெளியே வந்துவிடுகிறான். பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்துத் திருடுவதில் அவன் நிபுணன். அவன் உள்ளே இருந்த போது நடக்காத பெட்டகத் திருட்டுகள் அவனை வெளியே விட்ட பிறகு தொடங்கி இருக்கின்றன. இந்தமுறை அவனைக் கையும் களவுமாகச் சாட்சிகளோடு பிடிக்க பென் தயாராகிறான்.

 

திருடன், ஒருநாள், தெருவில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள் மீது காதல் கொள்கிறான். அவள் ஒரு வங்கி உரிமையாளரின் மகள். அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. திருடன், பொலீஸ் அதிகாரி பென்னுக்கு, தான் களவுத்தொழிலை விட்டுவிட்டதாகவும் தன்னுடைய டூல் பாக்ஸை அவனிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் தகவல் அனுப்பி, அவனை அந்த வங்கி முகவரிக்கு வரச் சொல்லுகிறான்.

 

வங்கியில், அவனோடு அவன் காதலி, காதலியின் அப்பா, காதலிக்கு அக்கா அக்காவின் இரண்டு குழந்தைகள் கூடியிருக்கிறார்கள். அன்றுதான் புதிதாக வங்கிக்கு வந்துசேர்ந்த பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றைப் பற்றிப் பெருமையாக விளக்கிப் பேசுகிறார் காதலியின் அப்பா. பொலீஸ்காரன் வாசல் நிலையில் வந்து சாய்ந்து காத்திருக்கிறான். அவர்கள் கவனக் குறைவாக இருந்த ஒரு வேளையில், அக்காவின் குழந்தைகளில் ஒன்று இன்னொன்றை அந்த பெட்டகத்துக்குள் வைத்துப் பூட்டி விடுகிறது. திறக்கமுடியவில்லை. இன்னும் நம்பர்கூட செட் பண்ணவில்லையே, அவ்வளவுதான், திறக்கவே முடியாது என்கிறார் அப்பா. குழந்தையின் தாய் கதறுகிறாள். இளையவள் தன் காதலனிடம், “ஏதாவது செய்ய முடியாதா?” என்கிறாள். அவன் திருடன் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்தமட்டில் அவன் ஒரு ஷூக் கடை உரிமையாளன்.

 

இந்த இடத்தில் கதையின் முடிவை யூகிக்க முடிகிறது இல்லையா?

 

திருடன் அவளிடம், “அந்த ரோஜாப் பூவை எனக்குத் தருவாயா?” என்கிறான். அவள் எடுத்து நீட்டுகிறாள். அதைத் தன் கோட்டில் செருகிக்கொண்டு, டூல் பாக்ஸைத் திறந்து, பெட்டகத்தில் ஒரு ஓட்டை குடைந்து, தன் பழைய சாதனைகளை முறியடிக்கிற வேகத்தில் அதைத் திறந்து, மயங்கிச் சரிகிற குழந்தையை வாரியெடுத்து அதன் தாயிடம் ஒப்படைக்கிறான். அவர்கள் எல்லாரும் குழந்தையைச் சூழந்திருக்க அவன் மட்டும் தனியாக வாசலை நோக்கி நடக்கிறான். பொலீஸ்காரனிடம், “Let’s go. There’s no point.” என்கிறான்.

 

கதையை இங்கே முடிக்கவில்லை. முடிவாக, ஓ ஹென்றி இப்படி எழுதுகிறார்:

 

And then Ben acted rather strangely. “Guess you’re mistaken,” He said, “Don’t believe I recognize you.”

 

 

ஓ ஹென்றியின் கதையை இங்கே ஏன் எடுத்துக்காட்டுகிறேன் என்றால், அவருடைய கதைகள் எல்லாமே இப்படி பாஸிட்டிவாகத்தான் முடியும். ஆனால் சுஜாதாவின் கதைகள், கிட்டத்தட்ட எல்லாமே, நெகெட்டிவாக அல்லது ஒரு நக்கலாக முடிபவை. அது ஏனென்று பகுத்துப் பார்த்தால், சமுதாயத்தின் மீது அவர் வைக்கிற விமர்சனமாக அவை செயல்படுகின்றன. ஆகவே, பாஸிட்டிவாக முடித்தால் அது ஒரு ரொமான்ற்றிக் முடிவாக மாறிவிடக் கூடிய சிக்கல் இருக்கிறது.

 

பாஸிட்டிவான கதைகளே இல்லையா என்றால், ஒன்றிரண்டு இருக்கின்றன. “எல்டொராடோ” அப்படிப்பட்ட ஒரு கதை. காணாமல் போன ஒருவன் வீடு திரும்புகிறான். அப்பா முடியாமல் கிடக்கிறார். அவனுடைய அண்ணன்கள் இருவரும், சொத்தில் பங்குதேடி வந்திருப்பதாக அவனைக் குற்றப்படுத்துகிறார்கள். அவனோ ஒரு அறைக்குள் தனியாகக் கிடக்கிற அப்பாவைப் பார்த்து அவரை உணர்ப்பித்து, அவரோடு பழைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்கிறான். கிட்டே வா என்று, அவர் அவனிடம் ஒரு ரகசியம் சொல்கிறார். இரவு முழுவதும் அவரோடு தனித்திருக்கிறான். இரவு மூன்றுமணி வாக்கில் அவர் உயிர் பிரிகிறது. அதற்கும் திட்டு வாங்குகிறான்: “வந்தான் முடிச்சிட்டான்,” என்று. அவன், மூத்த அண்ணாவைத் தனியே அழைத்து, “அப்பா, வீடு நிலபுலன்களை எல்லாம் என் பேர்ல எழுதிவெச்சிருக்கிறதாச் சொன்னார். காரியம் எல்லாம் முடிஞ்சப்புறம் இந்த அட்ரஸுக்கு எழுது. எல்லாத்தையும் பாத்து சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேன்.” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்காமல் நடக்கிறான்.

 

இந்தப் பாஸிட்டிவ் முடிவு, கதையை ரொமான்ற்றிசைஸ் பண்ணிவிடும் என்பதால், அதை மட்டுப்படுத்தவே ‘எல்டொராடோ’ (தங்கப் புதையல்) என்னும் தலைப்பும் அதில் அவன் தோற்றுத் திரும்புவதான கதை அமைப்பும். சுஜாதா எழுதிய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது.

 

 

சுஜாதா ஒரு திறமையான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது. அது என்ன திறமை என்றால், மிகச் சுருக்கமான சொற்களில் ஒரு இடத்தை அல்லது சூழ்நிலையை அவரால் விளக்க முடியும். எடுத்துக்காட்டாக, மயிலாப்பூர் குளத்தருகில் ஒரு மாலைப் பொழுதை, ‘ஹேர்பின், ஸ்டிக்கர்பொட்டுக் கடை, சிவசிவ நியான் பிம்பம், காற்றில் விரவி இருந்த மிளகாய் பஜ்ஜி, லாட்டரிச் சீட்டுக்குப் பணம் கொடுக்காமல் விரையும் காரைத் துரத்தி தெற்கத்திக் கெட்ட வார்த்தையில் திட்டும் சிறுவன், ஸ்கூட்டரை நடத்தி அழைத்துச் செல்லும் சாஸ்திரி,’ என்றிப்படி மிகச்சில சாராம்சங்களில் முழுமையைத் தொட்டு விடுவார்.

 

சுஜாதாவின் சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் முகநூலில் எழுதிக்கொண்டு இருக்கிறது. அந்தக் கூட்டம் சுஜாதாவிடமிருந்து என்ன கற்றுக்கொண்டிருக்கிறது என்றால், ‘அது ஹால் இல்லை, ஹா….ல்’ என்று ‘ஹ’வுக்கும் ‘ல்’லுக்கும் இடையில் மூன்று நான்கு துணை எழுத்துகளைப் போடுதல். போன் ரிங்……..கியது என்று ஏழு எட்டு ‘ங்’ போடுதல். அல்லது கிளுளுப்பாக எழுதுதல். அவர்களை என்ன செய்ய? ஊன்றி வாசித்தால் தெளியும், சுஜாதா கிளுகிளுப்புக்காக ஒரு கோட்டிக்காரத்தனமும் பண்ணியதில்லை என்று. எடுத்துக்காட்டாக, “மெல்லிசை” என்னும் கதையின் முதல் பத்தியில், ‘ரொம்பக் கற்புடன் லேயர் லேயராகச் சுற்றியிருந்த பட்டுப் புடவைகளை மீற முயன்ற அங்கலட்சணங்கள்’ என்கிறார். இது ஒன்றும் கிளுகிளுப்புக்காகச் சொல்லப்பட்டது இல்லை. கதையின் முடிவில் அவள், கொண்ட கணவனையும் குழந்தையையும் விட்டுவிட்டு இனோருவனோடு ஓடப் போகிறாள். அந்த மீறல்தான் இங்கு இப்படி முன்னுணர்த்தப் படுகிறது. சுஜாதாவின் இந்த இலக்கியத்தரம் இன்னதென்று அறியாத ஏனோதானோக்கள் அவரை ‘வாத்தியார்’ என்று சொல்லித் திரிவதும் வேதனைதான்.

 

“பார்வை” என்னும் கதையில் சுஜாதாவே ஒரு கேரக்டராக வருகிறார். இன்னொரு கேரக்டரான ஒரு குருடன் இவரிடம், “உங்கள் கதைகளில் பாதி குப்பை; மீதிதான் தேறும்,” என்கிறான். இது சுஜாதா தன் மீது வைத்துக்கொண்ட விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளலாமா? நான் அப்படி நினைக்கவில்லை. அவருடைய எழுத்தில் காட்சிப்படுத்துதல் பாதி என்றால் ஓசைப்படுத்துதல் மீதி என்றே அதற்கு அர்த்தம். எடுத்துக்காட்டாக, மயிலாப்பூர் குளக்காட்சி பற்றிச் சொன்னேன் அல்லவா, அதில் கார்க்காரனைத் திட்டும் அந்த லாட்டரிச் சிறுவன், //“உங்கம்மாளை நான் ஓ…” என்று அழுதுகொண்டே திட்டினான்,// என்று அவர் எழுதுகையில், அந்த முடிவுபெறாத ‘ஓ…’ அழுகையாக நீளுவதோடு, அந்த வசவுச் சொற்கள் தென்மாவட்டங்கள் ஒன்றிலிருந்து வந்தவன் அந்தச் சிறுவன் என்றும் உணர்த்துகின்றன. மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் இருந்து வந்தவன் சென்னை ஆட்களைப் போல சட்டென்று கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட மாட்டான் என்றும் அவன் வேதனை உணர்த்தப் படுகிறது.

 

இப்படி சுஜாதாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ உள்ளன என்றாலும் வணிக வீதியின் சில்லறைகளுக்கும் செக்குமாடுகளுக்கும் இதெல்லாம் புரியப்போவதில்லை என்று கூறி…

 

 

எனக்கு முன்னே ஒரு டி.வி.எஸ் 50 போனது என்று சொன்னேன் அல்லவா, அது நான் போக இருந்த அதே ‘டாஸ்மாக்’ கடை வாசலில் போய் நின்றது. நானும் என் வண்டியை நிற்பாட்டி, இறங்கி, நெருங்கிப் பார்த்தால், அதில் இருந்தவை அரிசி மூட்டைகள் அல்ல, தலையணைகள்.

 

 

(மே 1, 2014 அன்று, ‘ஈரோடு இலக்கியச் சுற்றம்’ கூட்டத்தில் பேசியது.)

அழகான ஓர் ஏப்ரல் மாதத்துக் காலையில் 100% பொருத்தமான பெண்ணைப் பார்த்தபோது / ஹருகி முரகாமி / தமிழில் – ஸ்ரீதர்ரங்கராஜ்

images

 

 

 

அழகான ஓர் ஏப்ரல் மாதத்தின் காலைநேரத்தில், டோக்கியோவின் ஹராஜூகு குடியிருப்புப் பகுதியின் குறுகிய துணைச்சாலையில், 100% பொருத்தமான இளம்பெண்ணைக் கடந்து சென்றேன்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அப்படி ஒன்றும் அழகானவளில்லை. எதிலும் தனிப்பட்டுத் தெரிகிறவளுமில்லை. சிறப்பான உடைகளேதும் அணிந்திருக்கவில்லை. கூந்தலின் பின்புறம் தூங்கியெழுந்ததால் இன்னமும் வளைந்து நெளிந்துதானிருக்கிறது. இளமையானவளுமில்லை – முப்பதுக்கருகில் இருக்கலாம், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ”இளம்பெண்” என்பதற்கு அருகில் கூட வரமாட்டாள். இருந்தாலும் ஐம்பதடி தூரத்திலேயே எனக்குத் தெரிந்துவிட்டது; அவள்தான் எனக்கு 100% பொருத்தமான பெண். அவளைப்பார்த்த அந்தக்கணத்தில், என் நெஞ்சுக்குள் ஒரு களேபரம், என் வாய் உலர்ந்து பாலைவனம் போலாகிவிட்டது.

ஒருவேளை உங்களுக்கென்று ’பிடித்தவகை’ப் பெண்கள் இருக்கலாம் – மெலிந்த கணுக்கால்களுடைய பெண், அல்லது பெரிய கண்கள், அல்லது அழகான விரல்கள் அல்லது சிறப்பான காரணம் எதுவும் இல்லாமலேயே உணவுக்காக அதிகநேரம் ஒதுக்கும் பெண்களாக இருக்கலாம். எனக்கும் தனிப்பட்ட ரசனை இருக்கிறதுதான். சமயங்களில் உணவகத்தில் அமர்ந்திருக்கும்போது, நான் அடுத்த மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்வேன், ஏனென்றால் அவள் மூக்கு எனக்குப் பிடித்திருக்கும்.

ஆனால் யாருமே தனக்குப் பிடித்த பெண் 100% முன்னமே தீர்மானிக்கப்பட்ட வகைகளை ஒத்திருக்கிறாள் என்று அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது.

அவள் மூக்கு எனக்குப் பிடித்திருந்தது, ஆனால் அதன் வடிவத்தை என்னால் நினைவில் வைக்க முடியவில்லை – அல்லது அவளுக்கு அது இருந்ததா என்றே இப்போது தெரியவில்லை. என்னால் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்ததெல்லாம், அவள் அவ்வளவு அழகானவளில்லை என்பது மட்டுமே. இது விநோதமானது.

“நேற்று தெருவில் 100% பொருத்தமான பெண்ணைக் கடந்து சென்றேன்.” யாரிடமாவது சொல்வேன்.

“அப்படியா?” என்பான் அவன். “அழகாயிருந்தாளா?”

“உண்மையில் இல்லை.”

“உனக்குப் பிடித்த வகைப் பெண்ணாக இருக்கும்?”

“எனக்குத் தெரியவில்லை. அவள் கண்களின் வடிவம் அல்லது முலைகளின் அளவு – அவளைப் பற்றி எதையும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.”

“விநோதம்தான்.”

“ஆமாம். விநோதம்தான்.”

”சரி, எப்படியோ,” ஏற்கெனவே அலுப்பாகிவிட்ட அவன், “என்ன செய்தாய்? பேசினாயா? பின் தொடர்ந்து சென்றாயா?”.

“இல்லை. தெருவில் அவளைக் கடந்து சென்றேன்.”

அவள் கிழக்கிலிருந்து மேற்காகச் சென்றாள், நான் மேற்கிலிருந்து கிழக்காகச் சென்றேன். அது ஓர் அழகான ஏப்ரல் மாதத்துக் காலை.

அவளிடம் பேசமுடிந்தால் நன்றாக இருக்கும். அரைமணி நேரம் போதும்; சும்மா அவளிடம் அவளைப் பற்றிக்கேட்டு, என்னைப்பற்றி அவளிடம் சொல்லி, அப்புறம் – நான் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறேன் – விதி என்பதின் சிக்கலான அமைப்பைப் பற்றிச்சொல்லி, எப்படி அது நம்மை இந்த 1981ம் வருட ஏப்ரல் மாதத்தின் அழகான காலையில் ஹராஜூகுவின் துணைச்சாலையில் ஒருவரையொருவர் கடக்க வைத்திருக்கிறது என்று விளக்கலாம். உலகில் அமைதி நிறைந்திருக்கும்போது கட்டமைக்கப்பட்ட ஒரு பழமை வாய்ந்த கடிகாரம்போல இது நிச்சயமாக அழகான ரகசியங்களை தனக்குள் பொதித்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

பேசிக் கொண்டதும், எங்காவது மதிய உணவு சாப்பிடுவோம், அல்லது ஒரு வூடி ஆலன் திரைப்படம் பார்க்கலாம், ஏதாவது விடுதியில் காக்டெயில் சாப்பிடலாம். அதிர்ஷ்டமேதும் இருந்தால் அது படுக்கையிலும் முடியலாம்.

சாத்தியக்கூறுகள் என் இதயத்தின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

இப்போது எங்களுக்கிடையே பதினைந்தடி தூரம்தான் இருக்கிறது.

எப்படி அவளை அணுகுவது? என்ன பேசுவது?

“காலை வணக்கம் மேடம். உங்களால் ஒரு அரைமணி நேரம் பேசுவதற்கு ஒதுக்க முடியுமா?”

கேவலம்! இன்ஷூரன்ஸ் விற்பவன் போலத் தெரியும்.

“மன்னிக்கவும். அக்கம்பக்கத்தில் எங்கேயாவது இரவு முழுவதும் துணிவெளுக்கிற கடை ஏதாவது இருக்கிறதா?”

இல்லை, இதுவும் அதே அளவு கேவலம்தான். முதலில் வெளுப்பதற்குத் துணி எதுவும் என் கையிலில்லை. மேலும் யார்தான் இப்படிப்பட்ட கேள்வி கேட்பவனைக் கவனிப்பார்கள்?

அல்லது நேரடியாக உண்மையைச் சொல்லலாம். “காலை வணக்கம். நீங்கள்தான் 100% எனக்குப் பொருத்தமான பெண்.”

இல்லை, நம்பமாட்டாள். அப்படியே நம்பினாலும் என்னோடு பேச விரும்பமாட்டாள். ‘மன்னிக்கவும், உங்களுக்கு 100% பொருத்தமான பெண் நானாக இருக்கலாம், ஆனால் எனக்கு 100% பொருத்தமான ஆண் நீங்கள் இல்லை’ என்றும் சொல்லிவிடலாம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நான் நொறுங்கிப் போய்விடுவேன். என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது. இதுதான் வயதாவதில் உள்ள சிக்கல். எனக்கு இப்போது முப்பத்தியிரண்டு வயது.

ஒரு பூக்கடைக்கு முன்னால் கடந்தோம். மெல்லிய வெதுவெதுப்பான காற்று என்னைத் தொட்டது. தார்ச்சாலை லேசான ஈரத்துடன் இருக்கிறது, ரோஜாவின் மணத்தை உணர்ந்தேன். அவளுடன் என்னால் பேசமுடியவில்லை. வெள்ளைநிற ஸ்வெட்டர் அணிந்திருக்கிறாள், வலதுகையில் வெள்ளைநிறத்தில் கடிதஉறை வைத்திருக்கிறாள், அதில் தபால்தலை மட்டும் குறைகிறது. எனவே: அவள் யாருக்கோ கடிதம் எழுதியிருக்கிறாள், அநேகமாக இரவு முழுதும் விழித்திருந்து எழுதியிருக்கலாம், கண்களில் தூக்கம் இன்னமும் இருக்கிறது. அந்தஉறை அவளின் ஒவ்வொரு ரகசியத்தையும் உள்ளடக்கியிருக்கலாம்.

இன்னமும் சில அடிகள் நடந்தபின் திரும்பிப் பார்த்தேன்: கூட்டத்தில் காணாமல் போயிருந்தாள்.

இப்போதுதான், நிச்சயமாக, அவளிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அது நீண்ட பேச்சாக இருந்தாலும் நான் நினைப்பதைச் சொல்வதாக இருந்திருக்கும். எனக்கு வரும் யோசனைகள் எப்போது நடைமுறைக்கு ஒத்துவந்து தொலையாது.

சரிதான். நான் “முன்னொரு காலத்தில்” என்று ஆரம்பித்து “எவ்வளவு சோகமான கதை. நீங்களும் அப்படித்தானே நினைக்கிறீர்கள்?” என்று முடித்திருக்க வேண்டும்.

முன்னொரு காலத்தில், ஒரு பையனும் பெண்ணும் வசித்து வந்தார்கள். அந்தப் பையனுக்கு பதினெட்டு, பெண்ணுக்குப் பதினாறு வயது. அவன் குறிப்பிடும்படி ஆணழகனல்ல, அவளும் பேரழகியல்ல. தனிமையிலிருக்கும் சாதாரணமான பையன், அவளும் தனிமையிலிருக்கும் சாதாரணமான பெண், மற்றெல்லோரையும் போலவே. ஆனால் அவர்கள் முழுமனதோடு நம்பினார்கள், இந்த உலகத்தில் எங்கேயோ அவர்களுக்கான 100% பொருத்தமான ஆணும், 100% பொருத்தமான பெண்ணும் வாழ்வதாக. ஆம், அவர்கள் ஒரு அதிசயத்துக்காகக் காத்திருந்தார்கள். அந்த அதிசயம் உண்மையில் நடந்தது.

ஒருநாள் அவர்களிருவரும் தெருமுக்கில் சந்தித்துக் கொண்டார்கள்.

“இது அற்புதமானது,” என்றான் அவன். “என் வாழ்க்கை முழுதும் உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். நீ இதை நம்பாமல் போகலாம், ஆனால் நீதான் 100% எனக்குப் பொருத்தமான பெண்.”

”நீதான்,” என்றாள் அவள். “எனக்கு 100% பொருத்தமான ஆண், நான் உன்னைக் கற்பனை செய்து வைத்திருந்தபடியே இருக்கிறாய். இது கனவைப்போல் இருக்கிறது.”

அவர்கள் ஒரு பூங்காவின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, கைகளைக் கோர்த்துக் கொண்டு, மணிக்கணக்கில் தங்கள் கதையைப் பரிமாறிக்கொண்டார்கள். அவர்கள் இனி தனிமையில் இல்லை. அவர்கள் தங்களுக்கான 100% பொருத்தமான மற்றவரைக் கண்டுகொண்டார்கள். தங்களுக்கான 100% பொருத்தமான மற்றவரைக் கண்டுகொள்வதுதான் எவ்வளவு அற்புதமானது. இது ஓர் அதிசயம், பிரபஞ்சத்தின் அதிசயம்.

உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்களின் இதயத்தில் சின்னச் சின்னதாய் சந்தேகம் வந்தது: ஒருவரின் கனவு இவ்வளவு சுலபமாய் நிறைவேறுவது நல்லதுதானா?

எனவே, இருவரின் பேச்சிலும் ஒரு மௌன இடைவெளி வந்ததும் அவன் சொன்னான், “ஒரே ஒருமுறை – நம்மைச் சோதித்துக் கொள்வோம். உண்மையிலேயே நாம் இருவரும் ஒருவருக்கொருவர் 100% பொருத்தமான காதலர்கள் என்றால் மீண்டும் எங்கேயோ, எப்போதோ தவறாது சந்தித்துக்கொள்வோம். அப்படி நடக்கும்போது நாம் 100% பொருத்தமானவர்கள் என்று நமக்கு உறுதியாகும், அங்கேயே அப்போதே திருமணம் செய்து கொள்ளலாம். என்ன நினைக்கிறாய்?”

“ஆமாம்.” என்றாள் அவள். ”நாம் அப்படித்தான் செய்ய வேண்டும்.”

எனவே அவர்கள் பிரிந்தார்கள், அவள் கிழக்காகப் போனாள், அவன் மேற்காகப் போனான்.

அவர்கள் ஒத்துக்கொண்ட சோதனை உண்மையில் அவசியமில்லாதது. சொல்லப்போனால் அவர்கள் அதில் இறங்கியிருக்கவே கூடாது, ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக மற்றும் உண்மையாக ஒருவருக்கொருவர் 100% பொருத்தமான காதலர்கள், அவர்கள் சந்தித்துக் கொண்டதே ஒரு அதிசயம்தான். ஆனால் இருவருக்கும் வயது குறைவு என்பதால் இது அவர்களுக்குத் தெரியச் சாத்தியமே இல்லை. இரக்கமற்ற, கொடூரமான விதியின் அலை அவர்களைக் கருணையற்றுப் பந்தாடக் கிளம்பியது.

ஒரு குளிர்காலத்தில், அந்தப் பையனுக்கும் பெண்ணுக்கும் அந்தப் பருவத்தில் வரக்கூடிய பயங்கரமான இன்ஃப்ளுயன்சா வந்தது, பலவாரங்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஊசலாடியதில் இருவருக்கும் பழைய வருடங்களில் நடந்தது அத்தனையும் மறந்து விட்டது. கண்விழித்தபோது அவர்களின் மண்டை, இளவயது D.H.லாரென்சின் உண்டியல் போலக் காலியாக இருந்தது.

அவர்கள் இருவரும் புத்திசாலிகள், ஊக்கமுள்ள இளவயதினர் என்பதால், தங்களின் விடாமுயற்சியால் மீண்டும் இந்த சமுதாயத்தில் முழுவீச்சுடன் அங்கம் வகிக்கும் உறுப்பினராகத் தேவையான அறிவினை மீண்டும் அடைந்தனர். இறைவனுக்கு நன்றி, அவர்கள் நல்ல குடிமக்களாக, ஒரு சுரங்கப்பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு எப்படி மாறுவது என்று தெரிந்தவர்களாக, அஞ்சல் நிலையத்தின் துரித சேவையில் தபால் அனுப்ப முழுத்தகுதி படைத்தவர்களாக பரிணமித்தனர். உண்மையில் இருவருக்கும் சில காதல் அனுபவங்களும் ஏற்பட்டது, சிலசமயம் 75%, சமயத்தில் 85% காதல் கூட வந்தது.

காலம் அதிர்ச்சியான வேகத்தில் நகர்ந்து, சீக்கிரமே அந்தப்பையனுக்கு முப்பத்தியிரண்டு வயதானது, அவளுக்கு இப்போது முப்பது.

ஒரு ஏப்ரல் மாதத்தின் அழகான காலை, நாளை ஆரம்பிப்பதற்கான ஒரு கப் காஃபியைத் தேடி, அந்தப்பையன் மேற்கிலிருந்து கிழக்காகப் போனான், அந்தப்பெண்ணோ, ஒரு தபாலைத் துரிதசேவையில் அனுப்புவதற்காகக் கிழக்கிலிருந்து மேற்காக நடந்தாள், ஆனால் இருவருமே டோக்கியோவிலுள்ள ஹரஜூகு குடியிருப்பின் குறுகிய பாதையில் நடந்தனர். இருவரும் மிகச்சரியாக தெருவின் நடுமத்தியில் ஒருவரையொருவர் கடந்தனர். மிகவும் மங்கிப்போன இருவரின் இழந்த நினைவுகளும் மிகச்சிறு கணத்திற்கு இதயத்தில் சுடர்விட்டன. இருவருக்குமே நெஞ்சில் களேபரம். அவர்களுக்குத் தெரியும்:

அவள்தான் எனக்கு 100% பொருத்தமான பெண்.

அவன்தான் எனக்கு 100% பொருத்தமான பையன்.

ஆனால் அவர்களின் நினைவுச்சுடர் கொஞ்சம் மங்கிப்போயிருந்தது, அவர்களின் எண்ணங்கள் பதிநான்கு வருடங்களுக்கு முன்னால் இருந்ததுபோலத் தெளிவாக இல்லை. ஒருவார்த்தைகூடப் பேசிக்கொள்ளாமல், ஒருவரையொருவர் கடந்து, கூட்டத்தில் காணாமல் போயினர், என்றென்றைக்குமாக.

எவ்வளவு சோகமான கதை, நீங்களும் அப்படித்தானே நினைக்கிறீர்கள்?

ஆமாம், இதுதான், இதேதான் நான் அவளிடம் சொல்லியிருக்க வேண்டியது.

 

••••

சிறுவர் சிறுகதை : மழைக்குருவி / கே. பாலமுருகன் ( மலேசியா )

images (16)

 

‘எப்படியாவது இன்னிக்கு இந்த ஆத்துலே என் கப்பையெ விட்டுரணும்’ என மனத்தில் நினைத்தவாறு கால் முட்டிகளை ஒன்று சேர்த்து தாடைக்குக் கீழ் வைத்தான்.

ஒரு கொக்கு அப்பொழுதுதான் பறந்து வந்து ஆற்றின் நீர்ப்பரப்பிற்குள் தன் நீண்ட அலகை நுழைத்தது. சட்டென முகிலனுக்கு அது மழைக்குருவியைப் போல தெரிந்தது. தலையைத் தூக்கி உற்றுக் கவனித்தான். கொக்குத்தான். இங்கிருந்து இந்த ஆற்றைக் கடந்து போனால் மூசாங் கம்பம் வந்துவிடும் எனப் பாட்டி முன்பு சொல்லியிருக்கிறார். முகிலன் வழக்கம்போல ஆற்றோரத்திலிருந்த பலகை குவியல்களைச் சேகரித்து அவனுடைய முக்கால்வாசி செய்து முடிக்கப்பட்ட கப்பல் தயாரிக்கும் பணியைத் தொடங்கினான்.

முகிலனின் வீட்டைத் தாண்டி அரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் அந்த ஆறு இருக்கிறது. பெரும்பாலும் அந்தக் கம்பத்தில் வாழும் எல்லோரும் அந்த ஆற்றைக் காட்டி சிறுவர்களைப் பயமுறுத்தியே வைத்திருக்கிறார்கள்.

“ஒரு பெரிய முதலை அங்க இருக்கு தெரியுமா? அது வாயைத் தொறந்தா ஒரே நேரத்துல பத்து பேரை முழுங்கும்”

“அந்த மரத்துலெ உள்ள பெரிய வீட்டு அம்மாச்சி ஆவி அந்த ஆத்துலதான் அடிக்கடி குளிக்குமாம்”

“டே..முகிலா! ஆத்து பக்கம் மட்டும் போயிடாதெடா”

முகிலன் ஒருமுறை அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அந்த ஆற்றைப் பார்த்தான். இரண்டு மாதத்திற்கு முன்பு இதே ஆற்றோரத்தில் அவனுக்கு கிடைத்த அந்தவொரு நாளை மீண்டும் நினைக்கலானான்.

‘சோஓஓஒ’ என மழை கம்பத்தை நனைத்துக்கொண்டிருந்த நாள். மழை நாளில் மழை குருவிகள் ஆற்றோரத்திற்கு வரும் என பாட்டி சொன்னதை முகிலன் எப்பொழுதும் நம்பினான். மழைக்குருவிகள் மழையை இரசிக்கவும் மழையில் நனையவும் கம்பம் கம்பமாக அலைந்து திரியும் எனப் பாட்டி வெளியே பார்த்தவாறு கூறுவார்.

பாட்டிக்கு இரண்டு கால்களும் செயலிழந்து போய்விட்டன. வெளிக்கதவுக்கும் அவரின் அறைக்கும் தரையைத் தேய்த்து தேய்த்துதான் போவார் வருவார். பாட்டியின் மூக்கு மழைக்குருவியைப் போல் கூர்மையாக இருக்கும். அவருடைய தாடைக்குக் கீழ் கழுத்து மழைக்குருவியைப் போலவே வெளுத்துப் போயிருக்கும். பாட்டிக்கும் மழை என்றால் விருப்பம். கம்பத்தில் மழைப் பெய்யத் தொடங்கினால் அதன் முதல் துளி தகரத்தில் விழுந்து அதுவரை இருந்த அமைதியைக் களைக்கும். பாட்டி உடனே தரையைத் தேய்த்துக்கொண்டு எப்படியாவது ஊர்ந்து வெளிக்கதவிற்கு வந்துவிடுவார். மழை அவருக்கு ஏதோ புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அவரால் முடியாத கணத்தில் முகிலன் அவரை இரு கைகளையும் பிடித்து வெளியே இழுத்து வருவான்.

அன்று பாட்டி சொன்னதைப் போல இந்தக் கம்பத்திற்குக் கண்டிப்பாக மழைக்குருவிகள் வரும் என வெகுநேரம் காத்திருந்தான். தூரத்து வானம் வெறிச்சோடி போயிருந்தன. ‘பப்பரப்பே’ என ஆற்றில் ஆங்காங்கே குப்பைகளும் டின்களும் மிதந்து வந்தன. முகிலனின் தோழி கமலா மூச்சிரைக்க ஓடி வந்தாள்.

“முகிலா, உங்க பாட்டியை உங்க பெரியப்பா காடிலெ வச்சித் தூக்கிட்டுப் போய்ட்டாருடா” எனக் கத்தினாள்.

அந்த மழை நாளில் மழைக்குருவிகள் வராது என்கிற உண்மை அவனுக்கு அப்பொழுதும் புரியவில்லை. தலைத்தெறிக்க வீட்டை நோக்கி ஓடியதுதான் மிச்சம். பாட்டியைப் பெரியப்பா வீடு இருக்கும் மூசாங் கம்பத்திற்குத்தான் கொண்டு போய்விட்டார்கள்.

மழைத்துளியொன்று அவன் மூக்கைத் தொட்டு வழிந்ததும் நினைவுகள் திரும்பின. அருகாமையிலிருந்த டின்களை எல்லாம் கப்பலுக்குக் கீழே வைத்து இறுகக் கட்டினான். ஏறக்குறைய கப்பல் மிதப்பதற்குரிய தன்மையைப் பெற்றிருந்தது. இந்தக் கம்பத்தில் வசித்த முன்னால் சிறுவர்கள் எல்லோரும் எப்பொழுதுதாவது ஒருமுறையேனும் இந்த ஆற்றில் கப்பல் செய்து விட்டிருப்பார்கள்.

கப்பலை மெல்ல ஆற்றில் இறக்கினான். மழை வேகமாகப் பெய்யத் துவங்கியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். கப்பலால் மிதக்க முடிந்தது. கையில் வைத்திருந்த நீண்ட கட்டையை ஆற்றுக்குள் விட்டான். தரையைக் குத்தி தன் பலகை கப்பலை ஆற்றின் நடுப்பகுதிக்கு நகர்த்தினான். கப்பல் ஆற்றின் ஓட்டத்திற்கேற்ப மெல்ல நகர்ந்தது. ஆற்று நீர் சலசலவென பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

“பாட்டி.. நான் வந்துட்டேன்.. எப்படியாவது வந்துடுவேன்” என வானத்தை நோக்கிக் கூச்சலிட்டான். மழைத்துளிகள் அவனது முகத்தில் அறைந்து வழிந்தன. எங்கிருந்தோ ஒரு குருவி சட்டென அவனுடைய பலகை கப்பலின் மீது வந்தமர்ந்தது. முகிலன் உற்றுக் கவனித்தான். நீண்ட வால். கூர்மையான அலகு. கழுத்துக்குக் கீழ் வெண்மை. மழைக்குருவியேதான்.

 

கே.பாலமுருகன்

வேட்டை — விநாயக முருகன்

 images (78)

அடி கிழித்திருந்தார்கள் என்று பார்க்கும்போதே தெரிந்தது. என்ன இருபத்தைந்து வயது இருக்குமா? தரையில் அமர்ந்திருந்ததால் உயரம் தெரியவில்லை . ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து ஐஸ்கட்டிகளை இழுத்து வந்து போடுவது போல சற்று முன்னர்தான் லாக்கப்பிற்குள்ளிருந்து வெளியே கொண்டுவந்து போட்டிருக்க வேண்டும். உள்ளே இருந்து இழுத்து வந்த அடையாளம் தரையில் தெரிந்தது. லாக்கப் கதவு திறந்து கிடந்தது. உள்ளே இருட்டை தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆள் பார்க்க ஜிம்முக்கு எல்லாம் போய் உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்தது தெரிந்தாலும் சோர்வாக தெரிந்தான். ஜட்டியோடு அமர்ந்திருந்ததை கூச்சமாக உணர்கின்றானா என்பதை அவன் முகத்திலிருந்து கண்டுப்பிடிக்க முடியவில்லை. உடம்பெல்லாம் வரி வரியாக சிவப்புப்பட்டைகள் தெரிந்தன. கன்ணிமைகள்  புடைத்து முகம் வீங்கி உதடு லேசாக கிழிந்து தொங்கியது. வலது கையை தூக்கும்போது இரண்டு மூன்று விரல்களில் நகங்கள் பிய்த்தெறிப்பட்டு கொழகொழவென்று குங்குமம் அப்பியது போல இருந்தது. இடது கையிலும் நகங்கள் பிய்த்தெறிப்பட்டு இருந்தன. ஆனால் அது ஏற்கனவே பிடுங்கியெறிப்பட்டு பல மணி நேரங்கள் ஆனதை அந்த விரல்களில் இருந்த உறைந்த கரும் ரத்தம் சொல்லியது. அவன் முகத்திலிருந்து எந்த உணர்ச்சியையும் என்னால் கண்டுப்பிடிக்க முடியாவிட்டாலும் எனக்கென்னவோ அவன் முகத்தில் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக உட்கார்ந்திருப்பது போலவே தோன்றியது.

 

எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் தினத்தந்தி படித்துக்கொண்டிருந்தார் சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்தார். தினத்தந்தியின் அடுத்தப்பக்கத்‌தை புரட்டும்போது கிடைத்த அந்த சிறு இடைவெளியில் அவன் முகத்தை கவனித்தார். தாயோளி என்று கோபமாக எழுந்து போய் வலது பூட்ஸ் காலால் அவனது முகத்தில் ஓங்கி மிதித்தார். மூக்கில் ஏற்கனவே உறைந்து கட்டியாக தெரிந்த ரத்தம் இப்போது மீண்டும் புதுச்சிவப்பின் உருக்கொண்டு வழிய ஆரம்பித்தது. தாயோளி என்று இன்னொரு முறை சொல்லிவிட்டு மீண்டும் வந்து சேரில்அமர எனக்கு சொரேலென்றது.வயிற்றை கலக்கியது.  அப்படியே வீட்டுக்கு ஓடிவிடலாமா என்று கூட தோன்றியது. அவன் அமைதியாக நான் காலில் அணிந்திருந்த இட்டாலியன் ஷூவை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அழுத்தக்காரன்தான் என்று தோன்றியது. இவ்வளவு அடிக்கும் ஒரு சொட்டு ஒரு சொட்டு தண்ணீராவது வந்திருக்க வேண்டுமே. ம்ஹூம். இறுகிப்போன முகத்தோடு அமர்ந்திருந்தான். நான் அவனது கண்களை பார்ப்பது தெரிந்ததும் அவன் என்னை பார்ப்பதை தவிர்த்து தலையை தாழ்த்திக்கொண்டான். ஆர்-எயிட் காலிங் ஆர்-எயிட் காலிங் என்று காக்கை பிளேடுத் துண்டை விழுங்கியது போல கொரகொர சத்தம் கேட்டது. இப்போது அந்த ஏட்டுச்சாமி வயர்லெஸ் ரேடியோவை கையில் எடுத்துக்கொண்டு பின்பக்க வாசலுக்கு நகர்ந்தார். இங்கிருந்து பார்க்கும்போது அவர் காவல்நிலையத்திற்கு பின்பக்கம் இருந்த கழிவறைக்குள் கையில் ரேடியோவுடன் நுழைவதை பார்க்க முடிந்தது. பின்பக்க ஜன்னல் வழியாக காட்சிகள் தெரிந்தன. முன்பக்க வாசலில் ஒரு இன்னோவா கார் நின்றுக்கொண்டிருந்தது. ஐந்து நிமிடங்கள் கழித்து அவர் கழிவறையிலிருந்து திரும்பினார்.

 

டீ சாப்பிடுறீயாடா என்று அதட்ட அவன் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு வெளியே போனார். இனோவா காருக்கு அந்தப்பக்கம் சென்றார். கார் கருப்புநிற கண்ணாடி வழியாக உள்ளே இருந்த மனிதரை பார்க்க முடியவில்லை. டீக்கடை பையன் கையிலிருந்த இரும்பு தூக்குக் கொக்கியில் நான்கு கண்ணாடி கிளாஸ்கள் தொங்கிக்கொண்டிருந்தன. இன்னோவா அந்தப் பக்கம் நின்றிருந்த ஏட்டையாவை முழுவதும் பார்க்க முடியவில்லை. தொப்பி தெரிந்தது. குரல் மட்டும் கேட்டது. அதோ உள்ள ஒன்னு உட்கார்ந்திருக்கு. அதுக்கு ஒன்னு கொடு.

 

“சரிங்க சார்”

 

இதுவரை அமைதியாக எதையோ எழுதிக்கொண்டிருந்த ரைட்டர் இப்போதுதான் நிமிர்ந்தார். அப்படி வை என்றார். இதோ இதுக்கு ஒன்னு கொடு.. என்று அவருக்கு வலதுப்பக்கம் சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த அவனை கைகாட்டினார். என்னிடம் நீங்க சாப்பிடுறீங்களா? என்று கேட்டார்.  ஏற்கனவே அடிவயிற்றைக் கலக்கும் உணர்வு.

 

“இல்ல வேண்டாம்”

 

“பரவாயில்ல..சாப்பிடுங்க”

 

“இல்ல..நான் டீ சாப்பிடுறது இல்ல”

 

அவர் தேநீரை  குடித்துக்கொண்டே பக்கத்தில் பார்த்தார். அவன் பக்கத்தில் வைத்துவிட்டுச்சென்ற டீ கிளாசை பார்த்து ஏதோ முணுமுணுத்தது சரியாக காதில் விழவில்லை. ரைட்டருக்கு கோபம் வந்துவிட்டது. குடித்துக்கொண்டிருந்த பாதி தேநீர் கிளாசை மேசையின் மீது வைத்துவிட்டு எழுந்தார். கீழே கிடந்த லத்தியை எடுத்து இஷ்டத்திற்கு விளாசினார்.    வாசலில் இன்னோவா கார் புறப்பட உள்ளே நுழைந்த ஏட்டு சாமி சரணம் என்றார்.

 

“போனாப்போகுதுன்னு  டீ வாங்கிக் கொடுத்த திட்டுறான் ஏட்டையா”

 

ஏட்டையாவும் இப்போது ஜோதியில் சேர வெளுத்துக்கட்டினார்கள். ஒரு வெளியாள் நான் பார்க்கும்போதே இப்படி அடிக்கிறார்களே. நான் வருவதற்கு முன்பு எப்படி அடித்திருப்பார்கள். ஏட்டையாஅடித்து ஓய்ந்த பிறகு தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினார். ரைட்டர் இன்னமும் அடித்துக்கொண்டிருந்தார். அவன் ஒரு சின்ன கேவல் சத்தம் கூட எழுப்பவில்லை

 

“நீங்க வேணா போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க” என்று ரைட்டர் என்னைப்பார்த்து

சொன்னார்.

 

“என்னோட ஆபீஸ் வேளச்சேரில இருக்கு. நான் வேணா சாயங்கலாம் வர்றேன்”

 

“சரி..வாங்க”

 

விட்டால் போதுமென்று காவல்நிலையத்தை விட்டு வெளியே ஓடிவந்தேன். நான் சாலைக்கு வந்து பார்க்கும்போது போக்குவரத்து நெரிசலில் அதுவரை நின்றிருந்த இன்னோவா கார் பிறகு வலதுப்பக்கம் திரும்பி மறைந்தது. நான் வேளச்சேரி செல்ல வேண்டும். மனம் அழுத்தமாக இருந்தது. பக்கத்து தேநீர்க்கடைக்கு சிகரெட் பிடிக்கலாமென்று சென்றேன். அங்கு காவல் நிலையத்துக்கு டீக்கொண்டு வந்த சிறுவன் பயந்தபடி நின்றிருந்தான். டீக்கடைநாயரும், டீமாஸ்டரும் சிரித்தார்கள். சின்ன பையன் இல்ல பயந்துட்டான் என்று மாஸ்டர் சிரித்தார். கடைக்கு பின்பக்கம் நடந்துப்போனால் ஐந்து நிமிடங்களில் எனது வீடு வந்துவிடும்.

 

“நீங்க எங்க ஸ்டேஷன்க்குள்ள இருந்து வர்றீங்க?”   மாஸ்டர் கேட்டார்.

 

“பாஸ்போர்ட் என்கொயரி வரச்சொல்லியிருக்காங்க ..அதான் வந்தேன்”

 

இரண்டு வாரங்கள் முன்பு பாஸ்போர்ட்டில் எனது மனைவியின் பெயரை இணைக்கக் கோரி விண்ணப்பித்திருந்தேன்.  விசாரணைக்கு வீட்டுக்கு வரும்போது வீடு பூட்டியிருக்க எனது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னார்கள். ஆனால் நான் இன்று வரும்போது அந்த கடவுச்சீட்டு விசாரணைப்பிரிவில் பணியாற்றும் அதிகாரி அங்கு இல்லை. எங்கோ வெளியில் சென்றிருந்தார்.

 

 

 

கடைப்பையன் பக்கத்தில் இருந்த எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு டீ எடுத்துக்கொண்டு போனான். மாஸ்டர்  எனக்கு டீ போடும்போது நாயரிடம் விசாரித்தேன்.

 

“என்ன ஸ்டேஷன்ல  ஒருத்தனை அடிச்சு உட்கார  வச்சிருக்காங்க”

 

“பார்த்தீங்களா.. அடி பின்னிட்டாங்க.. நேத்து நைட்டு எல்லாம் தலைக்கீழா கட்டி லாடம் அடிச்சாங்க. இங்க வரைக்கும் சத்தம் கேட்டுச்சு.”

 

அவனை பார்த்துட்டுத்தான் கடைப்பையன் தேநீர் கிளாசை காவல்நிலையத்தில் வைத்துவிட்டு பயந்து ஓடிவந்த விஷயம் விளங்கியது.

 

“எதுக்கு அந்த சின்னப்பையனை  போட்டு இப்படி அடிக்கறாங்க?”

 

“பின்ன மூர்த்தி பொண்ணு மேல கையை வச்சா சும்மா விடுவாங்களா?”

 

“எந்த மூர்த்தி?”

 

“அதான். உங்க பக்கத்துத் தெருவுல இருக்க கல்யாணமண்டபம் ஓனர். இந்த மெயின் ரோட்டுல ஜவுளிக் கடைக் கூட இருக்கே.

 

“அட ஆமாம். ரியல் எஸ்டேட் கூட இருக்கே. அவரு காரா இப்ப போச்சு?”

 

“ஆமாம். புதுசு. இப்பத்தான் எடுத்திருக்காரு போலிருக்கு”

 

“நீங்க பார்த்த அந்த பையன் வேற யாருமில்ல. மூர்த்திகிட்ட டிரைவரா வேலை செய்றான்”

 

மாஸ்டர் கொடுத்த தேநீரை வாங்கிக்கொண்டு சிகரெட்டை பற்ற வைத்தேன். மூர்த்திக்கிட்ட வேலை பார்த்தானா? நான் இவனை இதுவரை  பார்த்ததே  இல்லையே. அது சரி. அந்தாளு என்ன ஒன்னு இரண்டு காரா வச்சிருக்கான்? வீடே இரண்டு இருக்குன்னு கேள்விப்பட்டேன். பத்து ஆபீஸ் இருக்கு. இவன் எங்க வேலை பார்த்தானோ?

 

“இரண்டு வாரம் முன்னாடி மூர்த்தி பொண்ணும், இவனும் திருப்பதி ஓடிப்போயி கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. எப்படியோ ஆந்திரா போலீஸ் வழியா ஆளுங்களைப் பிடிச்சு இங்க இழுத்துட்டு வந்துட்டாங்க”

 

“அது சரி.. அதுக்கு எதுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிக்கறாங்க?” கேட்டேன்

 

“அட நீங்‌க என்னங்க? பத்தாங்கிளாஸ் படிக்கற பொண்ணு. அதை இல்ல கூட்டிட்டு ஓடிப்போயிருக்கான்”  என்று மாஸ்டர் சொன்னார்.

 

“பத்தாங்கிளாஸ் படிச்சாலும் பொண்ணுதானே. புது வண்டி. பையன் இரண்டு வாரம் வச்சிருந்து ஓட்டியிருப்பான். இப்ப எல்லாம் பத்தாங்கிளாஸ் படிக்கறது கூட காலேஜ் போற பொண்ணுங்க மாதிரியில்ல திமிறிக்கிட்டு நிக்கிறாளுங்‌க. இவனுங்களும் என்ன செய்வானுங்க பாவம்?” நாயர் சொல்ல

 

“சரிதான் மைனர் பொண்ணை கூட்டிட்டு போனா அடிக்காம கொஞ்சுவாங்களா?”  மாஸ்டர் கேட்டார்

 

“யார் பத்தாங்கிளாஸ்? நீ மூர்த்தி பொண்ணை பார்த்தது இல்லையே? அது காலேஜ் முடிச்ச பொண்ணுப்பா” எனக்கு பக்கத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த பெரியவர் யாரென்று தெரியவில்லை. டீக்கடை நாயருக்கு வேண்டப்பட்டவராக இருந்திருக்கலாம். அவர் சொன்னார்.

 

“அப்படியா நெசம்தானா?”

 

“பணம் தம்பி பணம். நாயை நரியாக்கும். நரியை பெருமாளாக்கும்.. பணம் இருந்தா எதையும் மாத்தி எழுதலாம்”  பெரியவர் டீயைக் குடிச்சுட்டு சிறிது இடைவெளி விட்டு  சொன்னார்

 

“ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா?”

 

“என்னதான் இருந்தாலும் திருப்பதி போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. சாட்சி எல்லாம் இருக்கு. அந்த பையனுக்கு யாரும் எதுவும் உதவி செய்யவில்லையா என்ன?”

 

அவன் சொந்த ஊவார் எங்கேயோ திருநெல்வேலி பக்கம் போலிருக்கு தம்பி. ஆள் பார்க்க நல்ல வாட்டசாட்டமா இருப்பான். அதான் நீ ஸ்டேஷன்க்குள்ள பார்த்திருப்பியே.. பெருசா வசதி எல்லாம் இல்லை. அப்பா இல்லை.. சித்தி எவன் கூடயோ ஓடிப்போயிட்டா. இவன் இங்கே வந்து மூர்த்தி வீட்லேயே தங்கி வீட்டு வேலையோட டிரைவர் வேலையும் சேர்ந்து செஞ்சுக்கிட்டு இருந்தான். எப்படியோ அந்தப்பொண்ணு இவனை பலவந்தப்படுத்தி மயக்கி விழ வச்சுடுச்சி..திருப்பதில கூட அவங்க கல்யாணம் செஞ்சுக்கல…இரண்டு பேரும் ரூம் எடுத்து தங்கி இருந்திருக்காங்க. அந்தப்பையன் கல்யாணம் கல்யாணம்ன்னு நச்சரிக்க அவ அவளோட பிரண்ட்சை விட்டு அப்பனுக்கு போன் செஞ்சு அவங்க திருப்பதியில இருக்கற விசயத்தை லீக் செஞ்சிருக்கா. மூர்த்தி லோக்கல் போலீசோட போய் பொண்ணை நாலு அப்பு அப்பி தூக்கிட்டு வந்திருக்கான். இதுவும் அழுதுக்கிட்டே நடிச்சு அவங்களோட இங்க சென்னைக்கு வந்துடுச்சு. மைனர் பொண்ணை கடத்திட்டான்னு புகார் தந்திருக்காங்க”

 

“உங்களுக்கு எப்படி இவ்வளவு விபரம் தெரியும்?” கேட்டேன்.

 

“அந்த பையனோட தோஸ்த் இங்க தெருமுக்கில சலூன் வச்சிருக்கான். நமக்கு தெரிஞ்சப்பையன்தான்.   அவன்தான் சொன்னான். பையன் மேல மிஸ்டேக் இல்லை.. எல்லாம் பொண்ணு மேலத்தானாம். திருப்பதியில அவங்க ரூம் எடுத்து தங்கினப்ப இவன்தான் அவனுக்கு ஐடியா கொடுத்து எதுக்கும் இருக்கட்டுமுன்னு அவங்க ரூம்ல பேசினது அங்க நடந்த அந்தரங்க சமாச்சாரம்எல்லாத்தையும் செல்போன்ல எடுத்து வச்சிருந்துக்கான். அதுவும் எப்படியோ போலீசுக்கு தெரிஞ்சு போய் அவங்களுக்கு குஷியா போச்சு. என்ன மூர்த்திக்குத்தான் கொஞ்சம் செலவு அதிகம். ஆனா அவனுக்கு இதெல்லாம் அவன் வீட்டு நாய்களுக்கு கறி வாங்கி போடுற காசு இல்ல?”

 

“நீங்க நேத்து நைட்டு அவன் கத்தினதை  கேட்டிருக்கனும். மிருகத்தை கொன்று கிழிக்கறப்ப அது கத்துமே. அப்படி ஒரு சத்தம். நைட்டெல்லாம் தூக்கமே வரலை. அப்புறம் இரண்டு மணிக்கு அப்படியே நடந்து போய் நம்ம பாய் பிரியாணிக்கடையில தூங்கினேன். அப்பவும் தூக்கம் வரலை. பாய் கொஞ்சம் சரக்கு வச்சிருந்தார். அதை போட்டபிறகுதான் கொஞ்சம் தூக்கம் வந்துச்சு. நம்ம கடைப்பையன் வந்து சொன்னான். அம்மணமா மாட்டை உரிச்சு தொங்க விடுற மாதிரி தலைக்கீழா மாட்டி வச்சிருந்தாங்களாம்” நாயர் சொன்னார்.

 

“வாஸ்தவம்தான் நீ மூர்த்தி பொண்ணை பார்த்தது இல்லையே?“  பெரியவர் கேட்டார். மாஸ்டர் உதட்டை பிதுக்கினார். நாயர் அவருக்கு அவளை தெரியுமென்று சொன்னார். பார்க்க அழகாக புதுமுக சினிமா நடிகை போல இருப்பாள் என்று சொன்னார்.

 

அவங்க அடிச்சே கொன்னுடுவாங்க போலிருக்கே. அவனை என்ன செய்வாங்க? என்று தோன்றியது.

 

“ஏதாவது திருட்டு கேஸை போட்டு உள்ளே தூக்கி வச்சுடுவாங்க” என்று நாயர் சொன்னார்.

 

“அப்படியெல்லாம் நடக்காதுப்பா…அந்த செல்போன் போலீஸ் கைக்கு வந்தாச்சு. இன்னும் இரண்டு நாள் வச்சிருந்து அடிச்சுட்டு அப்புறம் விட்டுடுவாங்க” என்று பெரியவர் சொன்னார்.

 

“எப்படி உறுதியா சொல்றீங்க?”

 

“இந்த மாதிரி கேஸ்ல எல்லாம் பையன் ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்தா கூட எப்படியாவது பொண்ணு வீட்டுக்கு திரும்பி வந்து தொல்லை தருவானுங்க. ஜெயில்ல போட்டா பழி வாங்குற வெறி  வரும். ஆனா காதல் தோல்வி அப்படி இல்ல பாரு. கொஞ்ச நாள்ல தாடிய மழிச்சுட்டு இன்னொரு பொண்ணை பார்த்துட்டு போயிடுவானுங்க”

 

அது சரி. பெரியவர் அவர் அனுபவத்தில் எவ்வளவு பார்த்திருப்பார்? எவ்வளவு கேட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றியது.

 

“நீ வேணா பாரு. சாயங்காலம் அவனுக்கு மருந்துப்போட்டு கட்டுக்கட்டி அனுப்பி வச்சுடுவாங்க” என்று பெரியவர் சொன்னார். அது சரி. நாம் பொழைப்பை பார்க்கலாம் என்று டீக்கு காசு கொடுத்துவிட்டு அலுவலகம் வந்துவிட்டேன். அலுவலகத்தில் வேலையேதும் ஓடவில்லை. எங்கு திரும்பினாலும் அவன் முகமே வந்தது. இப்படியா போட்டு அடிப்பார்கள். மனிதன் என்றாலும் எங்காவது ஒரு ஓரத்தில் கருணை இருக்குமல்லவா? மனதின் ஓரத்திலாவது ஈரம் இருக்குமல்லவா? இப்படி அடித்தும் எப்படி ஒரு மனிதனால் அவ்வளவு அடியை தாங்க முடிகிறது? நான் யாரையாவது இதுவரை அடித்துள்ளேனா? பள்ளிக்கூடத்தில் சில முறை சண்டைப் போட்டுள்ளேன். கல்லூரியில் ஒருமுறை. பிறகு நினைவு தெரிந்து எதுவும் இல்லை. மனைவியை அடித்தது இல்லை. மகளை இரண்டொரு முறை அடித்துள்ளேன். அதுவும் காலையில் அடித்தால் மாலை தூக்கி கொஞ்ச ஆரம்பித்துவிடுவேன். என்னை யாராவது அடித்துள்ளார்களா? வாத்தியார்கள் அடித்த நினைவு வந்தது. அதிகபட்சம் நான் எவ்வளவு வலியை தாங்கியுள்ளேன். இரண்டு மூன்று பேர் இரண்டு நாட்கள் தொடர்ந்து என்னை அடித்தால் என்னால் வலியை தாங்க முடியுமா? இரண்டு மூன்று பேர் என்றால் கூட பரவாயில்லை. போற வர்றவன் எல்லாம் நினைத்த நேரத்தில் அடித்தால்?யோசிக்க யோசிக்க குழப்பமாக இருந்தது. தான் அடிப்பது மனிதன் என்ற உணர்வு சிறிதும் இன்றி இப்படி அடிக்க முடியுமா? காலை நான் காவல் நிலையத்தில் பார்த்த அத்தனைப்பேரும் அவனை அது என்றே சொன்னார்கள். அதை அடி. அதுக்கு டீ கொடு. அதுக்கு தண்ணீர் கொடு. அது மயங்குது பாரு. லாக்கப் வெளியே அதை தூக்கிட்டு போங்க. அதுக்கு காத்‌து வரட்டும். கொஞ்சம் நேரம் கழித்து அதை அடிக்கலாம்.

 

மாலை அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி விட்டேன். வீட்டுக்கு கூட செல்லாமல் நேராக காவல் நிலையம் சென்றேன் இருந்தாலும் எங்கள் பகுதிக்கு வருவதற்குள் இருட்டி விட்டது. வழியெங்கும் கடும் போக்குவரத்து. தெரு முனையில் நடந்து வரும்போது சலூன் பூட்டி இருப்பதை பார்த்தேன். வழக்கத்துக்கு மாறாக தேநீர்க்கடையும் மூடிக்கிடந்தது. காவல்நிலையம் வாசலில் எப்போதும் நின்றிருக்கும் காவல் வாகனத்தை காணவில்லை. மஞ்சள் நிற வெளிச்சத்தில் காவல் நிலையம் மந்தமாக இருந்தது. காலையில் பார்த்தது போலில்லை கரகரவென்று தெளிவற்ற வயர்லெஸ் சத்தம் இரைச்சலாக கேட்டது. உள்ளே நுழைந்து ஏட்டை பார்த்தேன். வந்துட்டார். அவர்தான் என்று கைக்காட்டினார். அவர் காக்கி உடை எதுவும் அணிந்திருக்கவில்லை. மப்டியில் தெரிந்தார். அவர் இருந்த இடம் நோக்கி செல்லும்போது தரையை பார்த்தேன். சுத்தமாக கழுவி துடைக்கப்பட்டிருந்தது. லாக்கப்பில் யாரும் இல்லை. காலையில் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நாலு நல்ல புத்தி சொல்லி அனுப்பி வச்சுட்டாங்களா?

 

“நீங்கதானான்னு செக் பண்ண கூப்பிட்டோம். ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காட்டுங்க தம்பி” . ஜெராக்ஸை சரிபார்த்துவிட்டு “சரி தம்பி.. நீங்க கிளம்புங்க. ஒன்னும் பிரச்சினை இல்லை” என்றார். நான் எதுவும் பேசாமல் அவர் கையில் நூறு ரூபாயை கொடுத்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து வெளியேறி வீட்டை நோக்கி வேகமாக நடக்க  முதுகுக்கு பின்னால் எஸ்ஐ பேசுவது கேட்டது.

“ஏட்டையா அது என்னாச்சு?”

 

“அது அப்பவே போயிடுச்சு”

 

 

இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் (Stanly Kubrick) Full Metal Jacket (1987) திரைப்படம் – வருணன்

images (77)

Full Metal Jacket – இரும்பு இதயங்களின் உலைக்களம்
============================================
எண்ணற்ற திரைப்படங்கள் உலகினைப் புரட்டிப் போட்ட இரண்டு உலகப் போர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. திரையுலகினைப் பொருத்தவரை இப்பெரும் போர்களுக்குப் பிறகு பலரது கவனத்தினை ஈர்த்த மற்றொரு இருபதாம் நூற்றாண்டுப் போர் எழுபதுகளில் நடந்தேறிய விய்ட்நாம் போரே. பெரும்பாலும் போர் திரைப்படங்களில் இரண்டு தளங்கள் இருக்கும். ஒன்று மேலோட்டமான சாகசத் தன்மை ஏற்றப்பட்ட ஒரு வெகுசன் ரசிகனை ஈர்க்கும் தளம். இன்னுமொன்று நம்மில் அநேகரின் கவனத்திற்குத் தப்பும் ஒரு நுண்ணிய அரசியல் தளம். மனித கண்டுபிடிப்புகளில் மிக மோசமானது போர்களே. வெகு சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காகவும் அதிகார வேட்கையிலுமே போர்கள் உருக் கொள்கின்றன. சில தனிமனித விருப்பங்களை, தேசங்களின் கருத்தியல் ரீதியான போட்டியை தேசிய நலனாக சாயம் பூசும் சூட்சுமத்தில் பொதிந்திருகிறது அரசியலே.

ஒரு போர்வீரன் வீரன் கொடூரமானவன். எதிரிகளை ஈவிரக்கமின்றி கொல்பவன். தேசத்தின் நலனுக்காக தன்னுயிரை துச்சமாய் எண்ணி சாகத் துணிந்தவன். தியாகி. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் இராணுவ வீரனைப் பற்றிய எண்ண ஓட்டம் இப்படித்தான் இருக்கும். தனது தேசத்தின் வீரன் செய்பவற்றை சாகசமெனக் கொண்டாடிடும் அதே மனம், இதே செய்கைகளை எதிரி நாட்டு வீரன் செய்யும் போது மிருகத்தனமென்கிறது. இந்த இரட்டை மனநிலைகளுக்குப் பின்னால் இருப்பது அந்தந்த நாடுகளில் தலைமுறை தலைமுறையாய் உருவேற்றப்பட்ட தேசப் பற்று குறித்த கருத்தாக்கங்களே. நாம் பார்த்திருக்கும் அநேக திரைப்படங்களில் போர்வீரன் என்பவன் யுத்த களத்திலேதான் நமக்கு அறிமுகமாகிறான். அவனது ஆக்ரோஷமும்,எதிரிகளின் போர்த் தந்திரங்களை முறியடித்து அவர்களின் வெல்ல அவனெடுக்கும் முயற்சிகளும் சாகசங்களுமே நமக்கு பரிச்சயமான இவ்வகை படங்களில் அதிகபட்ச திரைப்பட நேரத்தினை (Film Time) எடுத்துக் கொள்கின்றன. அறிந்தவரையில் ஒரு மனிதன் ஒரு இராணுவ வீரனாக உருவாக்கும் பெறுமந்த- நாம் அறியாத- வாழ்க்கையின் பக்கங்களை மேம்போக்காக அல்லாமல் சமரசங்களின்றி முன்வைத்தது இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் (Stanly Kubrick) Full Metal Jacket (1987) திரைப்படம். ஒரு வகையில் பார்த்தால் இப்படம் மிக மிக காலந்தாழ்த்தியே திரை கண்டது. வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது 1974 வாக்கில் என்பது நாம் அறிந்ததே. Apocalypse Now (1979), Platoon (1986) போன்ற திரைப்படங்கள் வியட்நாம் போரை களமாகக் கொண்ட முக்கியமான இதர படைப்புகள். ஆனால் குப்ரிக் தனக்கேயுரிய தனித்துவமான பார்வையை இப்படத்தில் மூலம் பதிவு செய்திருப்பார்.

நாகரிக வளர்ச்சியில் மனித இயல்பு நிறைய பரிணாமம் அடைந்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு சீவனுக்குள்ளும் ஒரு மிருக வெறி ஊறிய ஆதி மனிதனொருவன் புதைந்து கிடக்கிறான். ஒரு வகையில் இராணுவ பயிற்சி முகாம்கள் இந்த புதைந்து கிடக்கும் சுபாவங்களை தட்டியெழுப்பி அவ்வெறியை தேசிய நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது. மனித இயல்பில் நாம் பொதுவில் அறிவுறுத்தும் இரக்கம், நியாயம், மன்னித்தல் போன்ற அற விழுமியங்கள் எதுவும் ஒரு போர்வீரனிடம் கோரப்படுவதில்லை. மாறாக அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை அவன் எடுக்க வேண்டிய நிர்பந்தங்களையே தனது பயிற்சியில் எதிர்கொள்கிறான். போர் நடவடிக்கைகள் அத்துணையும் கூட்டு நடவடிக்கைகளே. அதனால் தனி மனித விருப்பங்கள் மழுங்கடிக்கப்பட்டு, குழுவிற்கு இடப்பட்ட பணியும் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளைகளையும் முன்வைத்த கூட்டு முன்னெடுப்புகளே பிரதானமாக்கப்படுகின்றது. அவனுள் மண்டிக் கிடங்கிற ம்னிதத்தையெல்லாம் உலரச் செய்து அவன் தசைகளாலான இதயத்தை இரும்பிலானதாக்கும் ஒரு உறுப்பு மாற்று அறுவசிகைச்சைக் கூடமாகவே பயிற்சிக் களம் இருக்கிறது. எதையும் தாங்குபவனாக மாற்ற அவனை உட்படுத்தும் பயிற்சிகள் அத்தனையும் முற்றிலும் மனிதத்தன்மையற்றவையே.

Full Metal Jacket திரைக்கதையை இரண்டு பாகங்களாய் பிரித்துக் கொள்ளலாம். முதலில் ஒரு பயிற்சி முகாமில் ஒரு இராணுவ வீரன் உருவாவதும் பின்னர் அவன் வியட்நாம் யுத்த களத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என இரண்டு கதைக் களங்கள். படத்தின் முதல் காட்சியே வீரர்கள் முகாமில் சேரும் தினத்தில் அவர்கள் தலைமுடி முழுமையாக மழிக்கப்படும் காட்சியில் துவங்குகிறது. பேரிஸ் ஐலேண்ட் எனுமிடத்தில் உள்ள இராணுவ பயிற்சிக் களத்தில் அவர்களுக்கான முகாம் துவங்கிறது. US Marine Corps படையில் வீரராக வேண்டுமெனில் அவர்கள் யாவரும் இக்கடினமான முகாம் நாட்களை கடந்தாக வேண்டும். அதற்கு ஈவிரக்கமற்ற அவர்களது தலைமை பயிற்சி அதிகாரியான ஹார்ட்மெனின் (R.Lee Ermey) கடுமையான பயிற்சிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். துளியும் இரக்கமில்லாதவராய் பயிற்சி வீரர்களை புழுக்களை விட கேவலமாக நடத்துபவராகவும், மனிதாபிமானமே இல்லாதவராகவும் இருக்கிறார் ஹார்ட்மென். வீரர்களை அவர் முதன் முதலில் சந்திக்கும் காட்சியிலேயே தனது கறாரான அணுகுமுறையில் இளைஞர்களை பீதிக்குள்ளாக்குகிறார். ஒரு பார்வையாளராய் நம்மால் சகித்துக் கொள்ள இயலாத வசவுகளையும் பேச்சுகளையும் மட்டுமே பேசுபவராக இருக்கிறார். வீரர்களின் சொந்தப் பெயர்களுக்கு பதிலாக வேறு வேறு பெயர்களால் அவர்களை தரக்குறைவாக அழைக்கிறார்.

செயல்பாட்டளவில் ஒரு வகையில் இராணுவப் பயிற்சி முகாமிற்கும், வதை முகாமிற்கும் பெரிய வித்தியாசங்களில்லை. வழங்கப்படும் பயிற்சியானது ஒரு மனித உடலின் வாதைகளைத் தாங்கும் எல்லைகளை விஸ்தரிப்பதாகவும், மனதை யதார்த்தத்தை மீறிய இயல்புடையதாக மாற்றும் விதமாகவுமே இருக்கிறது. ஒரு ஆண் உடல் வதைக்கப்படுவதன் மூலமாக போர் முனையில் எதையும் தாங்கும் வகையில் புடமிடப்படுகிறது. படத்தின் கதை முழுவதும் ஜோக்கர் (Matthew Modine) என்றழைக்கப்படும் வீரனின் பார்வையில் விரிகிறது. சிறு வயதில் பல குழந்தைகள் ,’நீ பெயவனானதும் என்னவாகப் போகிறாய்?’ எனும் கேள்விக்கு பெரும்பாலான குழந்தைகள் நான் ஆர்மி மேனாகப் போறேன், என பதில் சொல்வார்கள். அது முன் சொன்னதைப் போல வெகுசன சினிமாக்களில் காட்சிப்படுத்தப்படும் போர்களின் சாகசத் தன்மையை மட்டுமே கண்டு வளரும் இளம் பருவத்தினரிடம் இப்பதில் வருவது சகஜம் தானே.

குப்ரிக்கின் இப்படம்- பொதுவாகவே அவர் படங்கள் எல்லாமே- குரூரமாக இருக்கும். அதே நேரத்தில் அவை உண்மைக்கு வெகு நெருக்கமாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. இப்படத்தில் பயிற்சி முகாம்களில் மனித உடலின் மீது பயிற்சியின் பெயரால் பிரயோகிப்படும் வன்முறையையை அசலாக பதிவு செய்திருப்பார். பருத்த உடலுடைய பிரைவெட் பைல் (’Private’ Pyle) என்ற அப்பாவி இளைஞன் வந்த நாள் முதல் பயிற்சியின் கடுமையை தாக்குப் பிடிக்க முடியாமல் துவள்கிறான். அதனால் பயிற்சியாளர் அவனுக்கு உதவுமாறு ஜோக்கரைபணிக்கிறார். இருப்பினும் அவன் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு தண்டனை மொத்த குழுவிற்கும் கிடைக்கிறது. இதனால் வெறுத்துப் போன சகாக்கள் இரவில் அவன் உறங்குகையில் குளியல் துண்டிற்குள் சோப்பு கட்டிகளை சுருட்டி தாக்குகின்றனர்.

அதிலிருந்து நாளுக்கு நாள் ஒரு பக்கம் பைல் சிறப்பாக பயிற்சிகளில் முன்னேற்றம் கண்டாலும் அவனுடைய மன உளைச்சலும் பிறரறியா வண்ணம் அதிகமாகிறது. பயிற்சி முடிந்த இறுதி இரவில் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜோக்கர் கழிவறையில் சலசலப்பு கேட்கவே அங்கு செல்ல தனது துப்பாக்கியுடன் பைல் அமர்ந்திருக்கிறான். அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் வழமை போல அங்கு வந்து ஹார்ட்மனை பைல் சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொள்கிறான். கதையின் முதற் பகுதி நிறைவுறுகிறது.

இதில் மிகச் சிறப்பாக ஹார்ட்மன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் R.Lee Ermey சொந்த வாழ்க்கையில் நடிகராவதற்கு முன்னர் உண்மையிலேயே US Marine ஆக 11 வருடங்கள் பணியாற்றியவர். மேலும் வியட்நாம் களத்திலும் 14 மாதங்கள் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைப்பான உடலும், இறுகிய முகபாவனையும், கர்ஜிக்கும் குரலுமாய் அவர் திரையில் அத்தனை உயிர்ப்போடு அப்பாத்திரத்தை மெருகேற்றியிருந்தார்.

இரண்டாம் பகுதியில் நமது கதைசொல்லியான ஜோக்கர், பயிற்சிக்குப் பிறகு வியட்நாம் யுத்த களத்தில் இராணுவ செய்தியாளனாக (War Correspondent) பணியாற்றத் துவங்குகிறான். கதையின் இந்த இரண்டு பகுதிகளையும், கதைக் களங்களையும் வேறுபடுத்திக் காட்டிடும் ஒரு முக்கிய அம்சமாக இசை இருக்கிறது. முற்பாதியில் மேற்கத்திய இசையும், இருண்மையான இசையும் பிண்ணனி இசையாகின்றன என்றால், பிற்பாதியில் அவ்வப்போது வீரர்களுக்கு இடையே நிகழும் காட்சிகளில் அதே மேற்கத்திய இசை முழங்கினாலும், வியட்நாமியர்கள் வேட்டையாடப்படும் தருணத்திலும் அந்த கதாபாத்திரங்களும் பங்கேற்கும் காட்சிகளிலும் கிழக்கத்திய இசைகோர்வைகள் பிண்ணனியிலுமென நுணுக்கமாக வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கும்.

வீரர்க்கள் தங்கள் முகாம்களில் போரை நிசத்தில் எதிர்கொள்ளும் ஆவலோடு காத்திருப்பர். போர்முனை என்பது நமக்கு கதைகளிலும், புனைவுகளிலும், செய்திகளிலும் மட்டுமே அறிமுகமான ஒரு பிரதேசமாகவே இருக்கிறது. போரின் வலியோ அதன் இழப்போ, நமக்கு நேரிடையான வாழ்வனுபவத்தின் மூலமாக வாய்ப்பதில்லை. எனவே போரைக் குறித்த நமது மன பிம்பங்கள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஏறக்குறைய இந்த வீரர்களின் நிலை நமதுடையதிலிருந்து பெரிய அளவில் வேறானதல்ல. அவர்கள் தங்களது தங்களது பயிற்சியை விட போர் என்ன பெரிய கடுமையாக இருந்துவிடப் போகிறதெனும் எண்ணமே அவர்களது அணுகுமுறையில் மேலோங்கி இருப்பதை துவங்கத்தில் நாம் காண முடிகிறது. யுத்த களத்தில் அவர்களது உடற்தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் பாலியல் தொழிலாளிகளை நாடுகின்றனர் அவ்வப்போது.மூன்றாம் தரமான உரையாடல்களும், சில வேளைகளில் மூளும் யார் பெரியவன் எனும் உரசல்களும் அவர்களுக்கிடையே மிக சகஜமாக நடக்கின்றன.

ஏனைய போர் படங்களிலிருந்து இந்த தளத்தில் தான் இப்படைப்பு தனித்த பார்வையை முன் வைக்கிறது. இப்படம் ஒரு இராணுவ வீரனை யுத்த முனையில் ‘வீரனாக’ அல்லாமல் ஒரு ‘மனிதனாகவே’ முன்னிறுத்துகிறது. இதனால் போர்முனையின் இக்கட்டான சூழலில் அவர்களது உளவியலை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. போர் ஒரு ஆயுதமேந்திய வீரனை சர்வ வல்லமை படைத்தவனாகவும், பிற மனிதர் உயிரை தான் தோன்றித் தனமாக எடுக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறது. உயிருக்கு பயந்து சிதறி அகண்ட சமவெளிகளில் ஓடும் வியட்நாமியர்களை கேட்பாரற்ற காட்டு விலங்குகளைப் போல பறந்து கொண்டிருக்கும் ஹெலிக்காப்டரிலிட்ருந்து கண்மூடித்தனமாக சுட்டபடி ஜோக்கருக்கு பேட்டி கொடுக்கும் அவ்வீரன், போரின் கொடூரத்திற்கு ஒரு சோறு.

மற்றொரு காட்சியில் ஒரு ஊருக்குள் இராணுவ வீரர்களும் டாங்குகளும் நுழையும் அதே வேளையில் ஊரை விட்டு வெளியேறும் நிற்கதியான மக்கள் கூட்டம். சொந்த நிலங்களையும் வாழிடங்களையும் விட்டு மக்களை வெளியேற்றும் போரின் நிர்பந்தமும் அதற்குப் பின்னே ஒளிந்திருக்கும் சொல்லவியலா வலியும் இந்த ஒற்றைக் காட்சியில் கவித்துவமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கும்.

போரின் அசல் முகத்தினைப் பதிவு செய்ய முனைந்தே இப்படத்தை குப்ரிக் உருவாக்கினார். அதனாலேயே பிரமாண்டமான போர்காட்சிகளை பார்வையாளனுக்கு முன்னே பரப்பாமல் ஒரு சிறு குழு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து துப்பாக்கியால் தாக்கும் நபரை/நபர்களை எதிர்கொள்ள படும் சிரமங்களை அதனால் வரும் உயிரிழப்புகளை நம் முன்னே வைக்கிறார். மூன்று உயிர்களை பலிகொடுத்த பின்னர் அவர்கள் தங்களை மறைந்திருந்து தாக்கியது ஒரே ஒரு பெண் என தெரிந்து கொள்கின்றனர். அவளைச் சுடும் இறுதி கணத்தில் தான் சுற்றி வளைக்கப்பட்டதை உணர்ந்து அப்பெண் திரும்பித் தாக்க முயலும் நொடியில் அந்த கண்களில் பெருக்கெடுக்கும் ஆக்ரோஷத்திலும், மின்னும் அந்த வெறியிலும் அத்துணை மூர்க்கம்.அந்த கண்கள் கேட்கின்றன ஆயிரம் கேள்விகள் அதிகாரத்தினை எதிர்த்து. அந்த ஒற்றைப் பார்வை ஒட்டு மொத்த வியர்நாமியர்களின்- தங்கள் மீது திணிக்கப்பட்ட போருக்கு எதிரான- எதிர்ப்பை ஆழமாக பதிவு செய்கிறது. வீரர்கள் அந்த நகரைக் கடந்து செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது.
வியட்நாம் போரினை மையப்படுத்திய எண்ணற்ற அமெரிக்கத் திரைப்படங்கள் வந்துள்ள போதிலும் இப்படத்திற்கென ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.

திரைக்கதை சில குறிப்புகள்./ B.R.மகாதேவன்

திரைப்படம் ஒரு நவீனக் கலை.

எழுத்து (கதை, திரைக்கதை, வசனம்), ஓவியம் (ஒளிப்பதிவு), இசை, நடிப்பு, அரங்க நிர்மாணம், ஆடை அலங்காரம், ஒப்பனை எனப் பல கலைகள் சேர்ந்து உருவாகியிருக்கும் புதிய கலை. இந்தக் கலைகள் தனித்தனியாக இருக்கும்போது உருவாக்கும் உணர்வைவிட ஒன்று சேர்ந்து உருவாக்கும் உணர்வு அபாரமானது. தனித்தனி கலைகளின் தூய வாசகர்களுக்கு/ரசிகர்களுக்கு இந்தக் கூட்டுக்கலை தரும் அனுபவம் மாற்றுக் குறைவானதாகத் தோன்றலாம். ஆனால், நுட்பமான ரசனை கொண்ட இந்தக் குழுவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு திரைப்படக்கலை தரும் அனுபவம் அலாதியானது.

பல கலைகளை உள்ளடக்கிய திரைப்படத்தில் எந்தக் கலை அதிக செல்வாக்கு உடையது?

திரைப்படத்தில் இடம்பெறுபவற்றை தொழில்நுட்பம் சார்ந்தவை, கலை சார்ந்தவை என்று ஒரு வசதிக்காகப்பிரிக்கலாம். எல்லாக் கலைகளுமே குறிப்பிட்ட அளவு தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவைதான். எல்லாத் தொழில்நுட்பங்களும் ஒருவகையில் கலைகளே. என்றாலும் ஒவ்வொன்றிலும் அதிகப்படியாக இருக்கும் அம்சத்தை அடிப்படையாக வைத்து சிலவற்றைத் தொழில்நுட்பப் பிரிவுக்குள் அடைக்கலாம். சிலவற்றை கலை என்ற வகைப்பாட்டுக்குள் அடக்கலாம். திரைப்படத்தைப் பொறுத்தவரை, இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ், எடிட்டிங், ஆடை அலங்காரம். அரங்க நிர்மாணம் போன்றவை தொழில்நுட்பம் சார்ந்தவை. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, நடிப்பு, இசை போன்றவை கலையம்சம் சார்ந்தவை.

என்னதான் திரைப்படம் தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் நவீன கலை என்றாலும் கலையம்சத்துக்குத்தான் அதிலும் அதிக இடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்காவிட்டாலும் ஒரு திரைப்படம் அதன் கலை வலிமையாலேயே நம்மில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஆனால், கலை நயம் இல்லாமல் தொழில் நுட்பத்தில் என்னதான் ஜாலங்கள் செய்தாலும் அது தாமரை இலையில் ஊற்றிய நீராக நம் மனத்தில் ஒட்டாமல் ஓடிமறைந்துவிடும். ரேயின் படங்களில் ஆரம்பித்து இரானியப் படங்கள் வரை கலைத்தரத்தினால் முக்கியத்துவம் பெற்ற படங்களே அதிகம். எந்தவொரு பார்வையாளரையோ திரையுலகப் பிரமுகரையோ அழைத்து அவர்களுக்குப் பிடித்த 10 காட்சிகள் எவையென்று கேட்டால் அவர்கள் சொல்பவற்றில் பெரும்பாலானவை கலை நயத்தினால் முக்கியத்துவம் பெறுபவையாகவே இருக்கும்.

அப்படியாக, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, நடிப்பு, இசை இவையே ஒரு திரைப்படத்துக்கான ஆதார கலைகள். இவற்றில் எது முதலாவது இடத்தைப் பெறும்?

இன்றைய திரைப்பட வணிகத்தில் நடிகருக்கு முதலிடம். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் வருவார்கள். இது வணிகம் சார்ந்த தரவரிசை. திரைப்படத்தில் கலை சார்ந்து பங்களிப்பவர்களில் தயாரிப்பாளருக்கு பெரிய பங்கு எதுவும் கிடையாது. அவர் பணத்தை முதலீடு செய்பவராகவே இருப்பார். படத்தின் அனைத்து விஷயங்களிலும் அவருடைய ரசனைக்கும் தீர்மானத்துக்கும் இடம் உண்டு என்றாலும் அவர் படைப்பாளி அல்ல. எனவே, அவரை இந்தப் பட்டியலில் இருந்து கெளரவமாக விலக்கியேவைக்கிறேன். எஞ்சியவற்றில் முக்கியமானது எது? இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவேண்டுமென்றால் திரைப்படத்தின் வரையறை எது என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால்போதும்.

காட்சிகளால் சொல்லப்படும் கதை – இதுதான் திரைப்படத்தின் அடிப்படை வரையறை. இந்த வரையறையில் இரண்டு கலைகள் வருகின்றன. ஒன்று ஒளிப்பதிவு. இன்னொன்று கதை. ஆக, பல கலைகள் சேர்ந்த திரைப்படத்தின் ஆதாரமானவை இவை இரண்டே. தலைக்கு மேலே இருக்கும் கேசத்தில் ஆரம்பித்து காலின் நகம் வரை அனைத்தும் சேர்ந்துதான் ஒரு நபரைப் பற்றிய பிம்பத்தை நம் மனதில் உருவாக்குகின்றன. அதுபோல் திரைப்படத்தின் அனைத்துக் கலைகளும் சேர்ந்துதான் ஓர் அனுபவத்தை உருவாக்குகின்றன. இருந்தாலும் மனிதர் என்றால் அவருடைய முகமும் மூளையும் முக்கியத்துவத்தைப் பெறுவதுபோல் திரைப்படமென்றால் ஒளிப்பதிவும் திரைக்கதையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த இரண்டிலும் எது முக்கியமானது… ஒளிப்பதிவா… திரைக்கதையா… முகமா… மூளையா..? முகம் ஒருவருடைய முக்கிய அடையாளமாக இருக்கும் நிலையிலும் ஒரு மனிதருடைய வெற்றி என்பது பெரிதும் மூளையையே சார்ந்தது. ஒருவருடைய வெற்றி மட்டுமல்ல. ஒருவருடைய ஒவ்வொரு செயல்பாடுகளுமே மூளையையே சார்ந்தது. அப்படியாக மூளைக்கே முதலிடம் வரும். அதுபோல் ஒரு திரைப்படத்தில் இருக்கும் அனைத்து கலைகளையும் மூளையாக இருந்து இயக்கும் கலை எது என்று பார்த்தால் திரைக்கதைதான்.

ஒரு மரத்தில் மிக முக்கியமானது எது வேரா… தண்டா… கிளைகளா… இலைகளா? நான்கும் சேர்ந்ததுதானே ஒரு மரம். எந்த ஒன்று இல்லாவிட்டாலும் ஒரு மரம் மரமாக இருக்கமுடியாது. எனினும், வேர்தான் அனைத்துக்கும் ஆதாரம் என்று சொல்ல முடியும் அல்லவா… அதுபோலவே திரைப்படத்திலும் ஆதாரமான ஒன்று உண்டு. அதுதான் திரைக்கதை.

அப்படியாகத் திரைப்படத்தில் முதல் இடத்தைத் திரைக்கதை பெறும். இரண்டாம் இடத்தை ஒளிப்பதிவு (காட்சி மொழி) பெறும். தமிழ்-இந்திய சூழலைப் பொறுத்தவரையில் இசைக்கு இவற்றைவிடக் கூடுதல் அங்கீகாரம் உண்டு. ஆனால், திரைப்படக் கலையை அதனளவில் அளவிட்டுப் பார்த்தால் கதை-திரைக்கதை-வசனத்துக்கு முதலிடம். ஒளிப்பதிவுக்கு இரண்டாம் இடம். நடிப்புக்கு முன்றாம் இடம். இசைக்கு நான்காம் இடம் என்று சொல்லலாம். அரங்க நிர்மாணம், ஆடை அலங்காரம், ஒப்பனை ஆகியவையெல்லாம் இந்த நான்குக்கு அடுத்ததாகவே வரும்.

திரைக்கதையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் திரைக்கதை என்று எதைச் சொல்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

த கலர் ஆஃப் பாரடைஸ் என்ற படத்தில் ஒரு காட்சி வரும். பார்வையில்லாத சிறுவன்தான் அந்தப் படத்தின் நாயகன். அவன் பள்ளி ஹாஸ்டலில் தனியாக அமர்ந்திருப்பான். அப்போது கீச் கீச் என்று மெல்லிய அலறல் கேட்கும். குரல் வரும் திசை நோக்கிக் காதைக் குவித்தபடியே நடந்து செல்வான். சிறிது நேரத்தில் பூனை ஒன்றின் சத்தமும் கேட்கும். பார்வை இழந்த சிறுவன் பதறியபடியே பூனையின் குரல் வரும் திசை நோக்கி கையை வேகமாக அசைப்பான். அது பயந்து ஓடிவிடும். சிறுவன் தட்டுத்தடுமாறியபடியே கீச் கீச் என்ற சத்தம் வரும் திசை நோக்கி நடப்பான். மரங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் கரடு முரடாக இருக்கும். தரையெங்கும் சருகுகள் நிறைந்து கிடக்கும். சிறுவன் கைகளால் துழாவியபடியே எதையோ தேடுவான். சட்டென்று அவன் முகம் மலரும். அங்கே சருகுகளுக்குள் ஒரு பறவைக் குஞ்சு ஒன்று கீச் கிச் என்று கத்தியபடியே துடி துடித்துக் கொண்டிருக்கும். பயத்தில் அவனுடைய கைகளைக் கொத்தும். சிறுவன்  சிரித்தபடியே அதை வாஞ்சையுடன் பையில் போட்டுக்கொண்டு மரத்தின் மீது சிரமப்பட்டு ஏறி அதனுடைய கூட்டில் வைப்பான்.

முதலில் நமக்கு வெறும் கீச் கீச் என்ற குரல் மட்டுமே கேட்டிருக்கும். அது பறவைக் குஞ்சின் அபயக் குரல்என்பதுகூடத் தெரிந்திருக்காது. ஆனால், காதுகளால் உலகைக் காணும் அவனுக்கு உலகின் பிற குரல்களைவிட அந்த நிராதரவான உயிரின் குரல் துல்லியமாகக் கேட்கும். கண்ணிருந்தும் நாமெல்லாம் குருடர்கள். கண்ணில்லாத நிலையிலும் அவனே பார்வைத்திறன் கொண்டவன். இதையெல்லாம் அந்தக் காட்சி வெகு அழகாகச் சித்திரித்துவிடும்.

நேசத்துக்குரியவனாக நாயகனைச் சித்திரிக்கவேண்டும் என்பதுதான் இந்தப் படத்துக்கும் இலக்கு. ஆனால், அதை எந்த அளவுக்கு நம்பும்வகையில் அழுத்தமாகச் சித்திரிக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்துவது எதுவோ அதுவே திரைக்கதை.

ரன் என்ற தமிழ் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு காட்சி வரும். நாயகன் மாதவன் அழகான, அப்பாவியான தோற்றம் கொண்டவர். குடும்பத்துக்குக் கட்டுப்பட்ட நல்ல பையனாகத்தான் திரைப்படத்திலும் அறிமுகமாவார். நாயகி மீரா ஜாஸ்மினைக் கண்டதுமே காதல் கொண்டுவிடுவார். ஆனால், மீராவின் அண்ணனோ பயங்கர ரவுடி. தங்கை பின்னால் ஒருவன் சுற்றுகிறான் என்று தெரிந்தால் கொன்றேவிடுவான். மாதவன் அது தெரியாமல் மீரா பின்னால் சுற்றுவார்.

ஒருநாள் இருவரும் சப்வேயில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது அண்ணனின் அடியாட்கள் அந்தப் பக்கமாக வந்துவிடுவார்கள். ”அவர்கள் கண்ணில் நீ பட்டால் உன்னைக் கொன்றுவிடுவார்கள், தப்பி ஓடிவிடு’ என்று மாதவனை மீரா விரட்டுவாள். மாதவனும் அவள் சொன்னதைக் கேட்டுப் பதறியடித்து ஓடுவான். அவன் ஓடுவதைப் பார்த்ததும் வில்லனின் ஆட்கள் அவனைத் துரத்துவார்கள். வேகமாக ஓடும் மாதவன் சப் வேயின் படிக்கட்டுகளை நெருங்கியதும், சட்டென்று மேலே இருக்கும் ஷட்டரைப் பாய்ந்து இழுத்து மூடியபடி கம்பீரமாகத் திரும்பி நிற்பான். அதைப் பார்த்ததும் பின்னால் துரத்திவந்தவர்கள் அதிர்ச்சியில் உறைவார்கள்.

அதன் பிறகு மாதவன் ஒரு கதாநாயகன் தமிழ் படங்களில் என்ன செய்வாரோ அதைச் செவ்வனே செய்துமுடிப்பார். அதை அவர் ஓடிப் போகாமலேயே செய்திருக்கலாம். அவருக்கு முந்தைய கதாநாயகர்கள் எல்லாம் காலகாலமாகச் செய்து வந்தது அதுதான். ஷட்டரை இழுத்து மூடும் காட்சிகூட பழைய படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், பயந்து ஓடுவதுபோல் ஓடி சட்டென்று திரும்பித் தாக்கும் காட்சி எதிலும் இடம்பெற்றிருக்கவில்லை. சங்க காலப் பாடலொன்றில் ஒரு மன்னருடைய வீரத்தைப் பற்றிப் பேசும்போது, மான் ஒன்றை நாய் துரத்திவந்ததாகவும், பயந்து ஓடிய மானானது, நமது மன்னருடைய எல்லைக்குள் நுழைந்ததும் சட்டென்று வீரம் பெற்று நாயைத் திருப்பி நின்று விரட்டியதாகவும் இடம்பெற்றிருக்கிறது. இந்தக் காட்சிக்கான வேர் அதில் இருக்கிறது.

மாதவனுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான காட்சிகள் என்று பட்டியலிட்டால் இந்தக் காட்சிக்குமுதல் இடம் கிடைக்கும். தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த ஆக்ஷன் காட்சிகளைப் பட்டியலிட்டால் அதில்கூட இந்தக் காட்சி இடம்பெறும். விஸ்வரூபம் படத்தில் கமல் இதை இன்னும் திறமையாகக் கையாண்டிருப்பார். ஆரம்பத்தில் பெண் தன்மை கொண்டவராக அறிமுகமாவார். வில்லன்களால் கொல்லப்படப் போகும் தருணத்தில் சட்டென்று விஸ்வரூபம் எடுப்பார். இதுதான் திரைக்கதை. வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் பல மோதல்கள் நடக்கின்றன. அதில் கடைசியில் கதாநாயகன் ஜெயிக்கிறான் என்பது எல்லா வணிக திரைப்படங்களின் அடிப்படை ஃபார்முலா. என்னென்ன மோதல்கள் நடக்கின்றன. அதில் நாயகன் எப்படியெல்லாம் ஜெயிக்கிறான் என்பதைச் சொல்வதுதான் திரைக்கதை.

 

 

 

 

 

 

•••

வாழ்க்கை என்று பேர் / சே.பிருந்தா

images (2)

 

இது  கவிஞர் சே.பிருந்தாவின் முதல் கட்டுரை

•••

பல வர்ண நிறமுடைய பகலை விட, ஒரே நிறமுடைய இரவு மர்மமும் வசீகரமுமானது. அப்படித்தான் மரணமும்.
மரணத்திற்குப் பின் என்ன? அது வாழ்வின் இருண்மைப் பக்கமே. அதை யாரும் அறிந்தது இல்லை. மரணித்தவர் சொல்லக் கூடும். ஆனால், சொல்ல அவர் இல்லை. மரணம் வலி மிகுந்ததாகவும் துன்பம் மிகுந்ததாகவுமே சொல்லப்படுகிறது. உணரப்படுகிறது. உண்மையிலேயே அது அப்படித்தானா? பகலில் இருக்கிற அதே உலகம்தான் இரவிலும். ஆனாலும் இரவை முற்றிலும் வேறாகவே உணருகிறோம். இரவு பயம் கொடுக்கிறது.
த்ரில்லாக இருக்கிறது. அசட்டு தைரியத்தையும் தருகிறது. இரவு என்றால் செயற்கை வெளிச்சங்களற்ற இரவு. அடர்ந்த வனத்துள் காணப்படுகிற இரவு. எந்தப் பூச்சுகளுமற்ற இரவு. பகலில் நாம் அறிந்த விசயங்களின், மனிதர்களின் மறுபக்கத்தை இரவுதான் காட்டுகிறது. சுழலும் பூமியில் பகலை இரவும், இரவை பகலும் ஒன்றை ஒன்று விரட்டிப் பிடிக்கின்றன. நைட் ஷிப்ட் டே ஷிப்ட் போல இந்த ஆட்கள்
அவர்களையோ, அவர்கள் இவர்களையோ சந்திப்பதே யில்லை. வேலை அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

எல்லாரும் சாவை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறோம். எனில் வாழ்வின் அர்த்தம் தான் என்ன? பிறந்த எல்லாரும் சாகத்தான் போகிறோம் என்றால், ஏன் பிறந்தோம்? எதற்காகப் பிறக்க வேண்டும்? சாப்பிட்டாலும் மறுபடி மறுபடி பசிப்பது போல, இந்த ப்ராஸஸ் சலிப்புறாமல் ஏன் தொடர்ந்து கொண்டே யிருக்கிறது? எதற்கிந்த சுழற்சி? இதனால் என்ன ஆகப் போகிறது?

கேள்வி எங்கிருந்து வருகிறது? நமக்குள்ளிருந்து. அப்படியெனில் பதிலையும் அங்கிருந்துதான் பெற முடியும். பதில் என்ன? அது அவரவருக்கான ப்ரத்யேகம். முளைத்த இடத்திலே அதன் வேர். வானளாவும் அதன் கிளைகள்.

வாழ்க்கை ஏன் போதவில்லை? எவ்வளவு வாழ்ந்தாலும், மரணம் ஏன் பயமுள்ளதாக இருக்கிறது? மனமுதிர்ச்சி கொண்ட, சுய அலசல் உடைய யாருக்கும் தன் மரணத்தைக் கண்டு பயமில்லை: தன் மரணம் குறித்து எந்தவித அச்சமும் பரிதவிப்பும் இல்லை. ஆனால் மற்றவர்கள் – தன்னைச் சார்ந்தவர்கள் மரணங்குறித்து மனது பெரும் பதற்ற மடைகிறது.

அப்பா எனது ஆறரை வயதில் இறந்து போனார். அதற்கு முன்பே இருமுறை மரண வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு மரணம் பற்றிய கேள்விகளை என்னுள் எழுப்பியிருந்தது. அப்பா இறந்ததைப் பற்றி நினைக்கும் போது இப்பவும் எனக்கெழும் பிம்பம் கடலில் அலை நடுவே நிற்கையில் காலடியில் உலகம் நழுவுமே அதுதான். அப்பா அப்படியே அந்தரத்தில் நிறுத்திப் போனார்.

அப்பாவின் மரணம் வீட்டை உலுக்கியது உண்மைதான். ஆனால் நான் வாழ்வின் எந்தப் பிரச்சினைக்கும் அப்பாவின் மரணத்தையே காரணமாக நினைக்கத் தொடங்கினேன். டீச்சர் ஸ்கூலில் ஹோம்வொர்க் பண்ணலை என்று திட்டினால் கூட அப்பா மரணம்தான் காரணமாக இருந்தது. சக பிள்ளைகள் சண்டை போட்டால், சீமாட்டி என்கூட டூ விட்டால், மலைச்சாமி என்னை அடித்தால், மழை பெய்து வகுப்புக் கூரை ஒழுகினால்,
காய்ச்சல் வந்தால், எதிர்த்த வீட்டு ஆச்சி வைதால், தாத்தா ஊருக்கு வந்தால் (அவர் எப்பவும் கண்ணை உருட்டி மிரட்டிக் கொண்டே யிருப்பார்), அம்மா பிடிக்காத டிஃபன் செய்தால் எல்லாவற்றுக்குமே அப்பா மரணம்தான் காரணமாக இருந்தது. எனக்கு அப்பா இருந்திருந்தால், இதெல்லாம் நடக்குமா?

அப்பா உடலை எடுத்துப் போகும்போது கடைசி முறையாகப் பார்த்து விடட்டும் என்று யாரோ பெருங் கருணையில் தூக்கிக் காண்பிக்க, நான் அப்பாவின் பாடையில் – அப்பா எங்கோ விட்டு விட்டுப் போகிறார் என ஏற முயற்சிக்க……………….... அது மிகவும் செண்டியான ஸீன்! நிறையபேர் கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.

அப்பா வாழ்ந்து மடிந்தவர். அவருடலை எரித்தார்கள். சாம்பல் கரைக்க பவானி கூடுதுறை ஆற்றங்கரைக்கு நாங்களெல்லாரும் போனோம். இனி அவர் உடல் இல்லை – இது தெள்ளத் தெளிவாக விளங்கியது.

செத்துப் போன அப்பா எங்கிருப்பார்? இதே உலகத்தின் இன்னொரு மூலையிலா, இல்லை இறந்தவர்களுக்கென்று இன்னொரு உலகம் இருக்கிறதா? இறப்பிற்கு பின் என்ன? இதை யாரிடம் கேட்பது?

நமக்கு ஒப்புக் கொள்ள பிரியமில்லை என்றாலும் கூட நிதர்சனம் இதுதான். உணர்வு ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ சௌகர்யங்களின் அடிப்படையில் யாரைச் சார்ந்திருக்கிறோமோ அவர்களின் பிரிவை, அவர்கள் மரணத்தை நம்மால் தாங்க முடிவதில்லை.  தேவையின் அடிப்படையிலேயே மனிதர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்’ என்கிற விசயந்தான் இதற்கும் பொருந்தும். தேவைகள்
புரிந்துகொள்ளப் படாதபோது, நிறைவேறாத போது சேர்ந்து வாழ்தலில் அர்த்தமில்லை. நாம் எவ்வகையிலும் சம்பந்தப்படாத மரணம் நம்மை பாதிப்பதில்லை.

நாம் தனியாக இருக்கிறோம்: இந்த உலகம் தனியாக இருக்கிறது. உலகத்தோடு சம்பந்தப்படுத்த, நம்மைப் பிணைத்துக் கொள்ள சில மனிதர்கள், உயிர்கள், செடிகொடிகள், பொருள்கள் உதவுகின்றன(ர்). அவர்களைப் பிரியும்போது உலகத்துடனான நம் பிணைப்பு அறுகிறது. வலிக்கிறது. வருத்துகிறது. அழ வைக்கிறது. ஒவ்வொருத்தரைப் பிரியும் போதும் பிணைந்த கயிற்றின் ஒவ்வொரு நூலாக அறுந்து விடுபடுகிறது.
நாம் தனிமைப் படுத்தப்படுகிறோம். தனிமை மரணத்தின் சாயல். தனிமையைக் கொண்டாடவோ, விரும்பவோ ஹேண்டில் பண்ணவோ தெரியாதவர்கள்தான் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். தனிமையின் மிதமிஞ்சிய சலிப்பின் உச்சத்தில்தான் வாழப் பிடிக்காமல் போகிறது. நம் மரணத்தின் போது உலகிடமான பிணைக்கயிறிலிருந்து மொத்தமாக அறுபட்டு விடுகிறோம்.

தனிமை போலவே நோய் – மரணத்தின் இன்னொரு முகம். ஒரு சாதாரண காய்ச்சலுக்கே செத்துப்போய் விடுவோமோ என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. சிறிய வலிக்கும் செத்துவிட மாட்டோமா என்றிருக்கிறது.

நோயின் கொடுமையை கொடூரத்தை அறிய வேண்டுமெனில், நோய்வாய்ப்பட்ட தன் குழந்தையோடு தனிமையில் இருந்து பார்க்கவேண்டும். அப்போது மரணம் பயமுறுத்துவது போல எப்போதும் இருக்காது. உலகமே நம்மைக் கைவிட்ட கதறல் ஆழ் நெஞ்சிலிருந்து எழும். எதைச் செய்யவும் சித்தமாயிருப்போம். நம் கொள்கைகள் என்று இதுவரை நாம் கட்டிக் காத்த எல்லாவற்றையும் இழக்கத் தயாராயிருப்போம். சத்தியங்கள்,
மீறல்கள் அதன் அர்த்தங்கள் எல்லாம் தொலைத்திருக்கும். ஒரு குழந்தையின் உயிருக்கு ஈடாக நாம் நம் உயிரைத் தரவும்  துணிவோம்.

என் மகள் ‘அப்புறம்’  என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், கேட்டுக் கொண்டே இருப்பாள். ஏன் சாப்பிடணும், சாப்பிட்டப்புறம், படிச்சப்புறம், நாளைக்கு குளிச்சப்புறம், சாப்பிட்டப்புறம், கல்யாணமானப்புறம்…… என்று தானறியாமல் கேள்வி மரணம் வரை போய்விட்டது. அவள் மரணம் பற்றி கேட்ட கேள்விக்கு, இந்த உலகில் பிறந்த எல்லாரும் இறந்துதான் ஆகவேண்டும்: பச்சை இலை பழுத்து உதிரும்:
மீண்டும் புதிய இலை பிறக்கும் என்றெல்லாம் சொல்லியிருந்தேன்.

அவள் தனது வயதொத்த வகுப்புத் தோழன் செத்துப் போய்விட்டதாக சொன்ன அன்றைக்கு, வாழ்க்கை என்பது எழுதி வைத்து, நேர்த்தியாக, துளியும் பிசகாது நடத்தப்படுகிற பைத்தியக்கார நாடகம் என்று தோன்றிற்று

ஏன் நல்லவர்கள் எல்லாம் சிறிய வயதிலேயே இறந்து போகிறார்கள்? விவேகானந்தர், பாரதியார், புரூஸ்லீ, மேடம் க்யூரி, பகத்சிங்…. இன்னும் நாம் நம் நேரடி வாழ்க்கையில் பார்க்கிறவர்களில் கூட ஊருக்கு உழைக்கிற, எல்லாரிடமும் நல்லவர் என்று பெயரெடுத்தவர்கள் ஏன் இள வயதிலேயே இறந்து விடுகிறார்கள்?

என் (அக்கா) மகன் சொல்கிறான் ‘ஒரு செடி இருக்கு சித்தி. அதுல நல்ல பூவ பறிப்பமா, கழிந்த பூவையா? அப்படித்தான் கடவுள் தன்கிட்ட இருக்கிற செடில இருக்கறதுலயே நல்ல பூக்கள முதல்ல பறிச்சுக்கறார்’னு. வாழ்க்கைதான் மரணங்கள் மூலமாக எப்படி எல்லாம் பாடம் படிக்க வைக்கிறது.

நல்லவர்கள் எல்லோரும் இள வயதிலேயே இறந்து விடுகிறார்கள். இதை அப்படியேவும் ஏற்றுக் கொள்ள முடியாது. அன்னை தெரசா, வள்ளலார், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வயதாகித்தானே இறந்தார்கள். என் நண்பர் சொன்னது – அவரவர்க்கான வேலை முடிந்ததும் செத்து விடுகிறோம். இன்னும் சாகலைன்னா நாம் செய்ய இன்னும் நமக்கு வேலை பாக்கி யிருக்கிறது என்று அர்த்தம்.

தனிமைக்கும் நோய்க்கும் அலட்டாமல் இருந்தவர்கள்கூட முதுமை நெருங்க நெருங்க முதுமையைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். முதல் நரையைக் கொண்டாடியவர் யார்? பார்த்தவுடனே சட்டென பிடுங்கத்தான் தோன்றுகிறது. பிறகு தலை’ மை அடித்துக் கொள்கிறோம். அப்புறம் முக சுருக்கங்கள். விளம்பரங்களின் அத்தனை க்ரீமும் நம் முகச் சருமத்தைப் பாதுகாக்கத்தான்.

ஒரு பறவையோ மிருகமோ இல்லை மரங்களோ இந்த இயற்கை நியதிகளை எப்படி எதிர்கொள்கின்றன. மரத்தில் கூடு கட்டும் பறவைகள் இலையுதிர்காலத்தில் முட்டை போடுகின்றனவா? இரவு வரை எங்கு தங்குகின்றன? இலையுதிர் காலத்தில் மழை பெய்தால் எப்படி தற்காத்துக் கொள்கின்றன? தனது காதலை, காமத்தை, இறப்பை, வாழ்வை இயற்கையோடு எங்ஙனம் ஒழுங்கு செய்து கொள்கின்றன?

மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும் தன் இனத்தை தானே அழிக்கிறதா? உணவிற்காக என்பதைத் தவிர ஏனைய காரணங்களுக்காக வேட்டையாடுகிறதா என்று பார்த்தால்….. இல்லை! ஒருபோதும் இல்லை. இயற்கை மறுதலிப்புகள் மனிதரிடமே அதிகம். அதுவே வாழ்க்கையை- வாழும்போதே சிக்கலானதாக ஆக்கி விடுகிறது.

மனிதர்களுக்கு எப்பவும் சாகாமலிருக்க விருப்பம். மரணத்தை மனிதர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறந்தும் வாழ்வதான ஒரு விருப்பம் அல்லது கனவே பேய்களைப் பற்றிய கற்பனைகள்! எப்படி தெய்வங்கள் மனிதரை மனித வாழ்வை ஒத்திருக்கின்றனவோ, பேய்களும் மனித வாழ்வையே பிரதிபலிக்கின்றன. கடவுள்களோடு போலவே பேய்களைப் பற்றிய கதைகள் செமத்தியானவை.
மனதின் நீள அகலங்கள் அளவிடவே முடியாதவை.

மனிதருக்கு அவர் மனமே சத்ரு. மரணத்தைப் பற்றி, முதுமை பற்றி மனம் நினைத்து நினைத்து – வாழும் வயதை விட, பெறும் அனுபவங்களை விட மனதால் அதிகம் வயதாகிறோம். மனம் பழுத்து, வெதும்பி, சுவை குன்றி, இதேன் இப்படி?

கோடி கோடி ஆண்டுகளாக இந்த பூமி இருக்கிறது. விதவித உயிரினங்கள் உருவாவதும் மறைவதுமாக இருந்திருக்கின்றன. இந்த பூமியின் வயதோடு ஒப்பிடுகையில் நம் ஆயுள், நொடிக்கும் நூறில் ஒரு பகுதி. அதை வைத்து இந்த அண்ட பேரண்ட வெளியின் ரகசியத்தை அறிய முயல்வதென்பது ஒரு எறும்பு மலையைத் தாண்ட முயல்வதற்கு சமானம்.

நிஜத்தில் நம்மால் முடிந்தது என்ன? நம் கையில் இருப்பது என்ன?
இந்த ஒரு நாளை நாம் அளவிட முடியும். அது நம் கையில்தானே இருக்கிறது. இதை நாம் விரும்பிய வகையில் வடிவமைப்பது நமது சாத்யத்தில்தானே இருக்கிறது. ஒவ்வொரு நாளாக அளவிடுவோம்; கட்டமைப்போம். ஒருநாளின் நீட்சிதான். நமது ஆயுள்.
நம் கடமை வாழும்வரை வாழ்ந்து தீர்ப்பதே! சாகும்போது புலம்பாமல் விருப்பத்துடன் செத்துத் தொலைவதே!

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

ஒரு தனிமைப் பெண்ணும்
மாலைநேரச்சூரியனும்
கடற்கரைக்குப் போனார்கள்
யாருக்கு அதிக தனிமை
என்று பேச்சு வந்தது
யார்தான் தனியா யில்லை
என்று முடிவானது

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

மரணம் கண்டு
மரணம் கேட்டு
மரணம் நுகர்ந்து
மரணம் ருஸித்து
மரணம் தின்று
மரணம் புணர்ந்து
மரணம் உணர்ந்து
மரணத்தோடு
வாழ்வதற்கு
‘வாழ்க்கை’ என்று பேராம்

…………………………………………………………

பொன்.வாசுதேவன் கவிதைகள்

 

images (82)

01

வேட்டைக்குப் பின்பான வனாந்தரமாய்
நட்சத்திரங்களற்று வெறிச்சோடியிருக்கிறது கருநீல வானம்

இறந்துதிர்ந்த சில நட்சத்திரங்கள் சருகுகளாகிக் கிடக்க
காலில் மிதிபட்டு மினுங்கி ஒளிர்கிறது
மிச்சமிருக்கிற நட்சத்திரத் துணுக்குகள்

வெளிச்சத்தை விழுங்கிய நீல இருளை
வேட்கையின் அபிலாஷைகளோடு
யாசிக்கிறது ஒற்றை நிலவு

நகர்ந்து கொண்டிருக்கிற காலம்
விடியலின் பூச்சை எதிர்பார்த்து
துளிர்க்கும் செடி போல மெல்ல நிகழ்த்துகிறது
தனது உரையாடலை.

02

சாந்தமானதொரு முகம்
தாளவியலா முத்தத்தின் துடிப்பிலும்
ஏந்திக்கிடத்தும் துயரத்தின் தவிப்பிலும்
தணலறியவியலாத பார்வைக் காட்சியில்
அசையும் சுடரின் நுனி போல

என்றோ மலர்ந்துதிர்ந்து உலர்ந்த
காற்றின் இச்சைக்கு தனை ஒப்புக்கொடுத்த
ஒரு முன்னாள் மலரின்
நினைவுத் துணுக்குகளிலிருந்து
மீட்டிக் கொண்டிருக்கும் வசீகரம்
அம்முகத்தில் புதைந்திருக்கிறது

காற்றின் திரிகளில் இழையோடும்
வெம்மைச் சுழற்சியில் ஆழ்ந்தாழ்ந்து
அசைந்தாடியபடியிருக்கும் அம்முகம்

இரகசியச் சிமிழின் ஒற்றை இதழ் திறந்து
கைகளிலெடுத்து பிரகாசிக்கிற
ஒன்றுமில்லாத ஒன்றை
உள் பொதித்துக் கொண்டேன்
அது அம்முகத்தின் பிரதியாக இருந்தது

பிறந்த கணத்தில் துடிப்புற்றுப் புரளும்
செவ்வெண்ணிற எலிக்குஞ்சைப் போன்ற
மிருதுவான அம்முகம்
என் முகத்தில் படர்ந்து பரவி
பளபளத்து ருசிக்கச் செய்கிறது.

03

பற்றியெரியும் சருகிலிருந்து
தன்னை விடுவித்து எழும் புகையென
காற்றில் கலக்கிறது ஆன்மா

தரையை நோக்கித் தாழாத கிளைகள்
வானோக்கி இறுமாந்து செழித்து நிற்கிறது

நெஞ்சடைந்த கூடொன்றில்
அன்பின் பாடல் இசைக்கப்படுகிறது

வேலிகளற்று வறண்ட நிலத்தை
கவ்விப் படர்கிறது உச்சி வெய்யில்
வாடாத புற்கள் காற்றிற்கிசையாமல்
நிலைத்து நிற்கப் பார்த்துத் தோற்கின்றன

காற்றைப் பூசிய முகத்தை
தந்திரத்தோடு கடக்கிறது நீ.

காரிடார் இடைவெளி- குறுநாவல் -சத்தியப்பிரியன்

images (3)

 

ஒன்று.

சுழற்றி அடித்தது காற்று. மலையுச்சியில் டிராபோஸ்பியர் முழுவதிலும் ஆக்ஸிஜென் வந்து குவிந்தது மாதிரி.குதியங்காலை உயர்த்தி நீலம் 360 டிகிரியில் ஒரு சுற்று முழுவதும் வட்டமிட்டாள். பைல் நோட்டு புத்தகம் பயிற்சி மையத்தில் கொடுத்த கம்ப்யூட்டர் பிரிண்ட்-அவுட் பேப்பர்கள் எல்லாம் சிதறின. கீழே விழுந்து சிதறியவைகளைப் பொறுக்கும்பொழுது ப்ரூச்சிலிருந்து விலகிய முந்தானையின் ஊடே புகுந்த காற்று அவளைக் கிறங்கடித்தது. மீண்டும் காகிதங்களை பைலில் திணித்தபொழுது காகிதங்களைப் பிணைத்திருந்த ஸ்டேப்ளர் பின் விரலில் ஏறி உச்சிமண்டையில் சுரீர் என்று வலித்தது. சின்னஞ்சிறு பூவாய் ரத்த மொட்டு மலர்ந்தது.

“ உனக்கு சுதந்திரம் “ வெளியில் பரவிய ரத்தத்தைப் பார்த்து சிரித்த நீலத்தை ரோகிணி விநோதமாகப் பார்த்தாள். ரோகிணி பைல் பயிற்சி சாதனங்கள் எல்லாவற்றையும் நெஞ்சோடு அணைத்தபடி நடந்தாள். காலேஜ் கோயிங் கர்ல் போல ஒரு பாவம். பின்னால் ரெண்டு விடலைப் பசங்க பைக்கில் விசில் அடிச்சுக் கிட்டு வந்தால் நல்லாத்தான் இருக்கும். பயிற்சியில் மொத்தமே 23 பேர் மட்டும். 17 ஆண்கள் 6 பெண்கள். காலத்தைப் புரட்டி போட்ட கணினி காலதாமதாமாக இவர்கள் வங்கியில் அறிமுகப் படுத்தப்பட்டதால் முதல் நிலை இரண்டாம் நிலை என்று கொடுக்கப்படும் பயிற்சிகளில் சற்றேறக் குறைய 40 வயது கடந்தவர்களே பயிற்சிக்கு வந்திருந்தனர்.

பயிற்சிக்கு வந்த 17 ஆண்களுக்கும் வயது 50க்கு அருகில். தொப்பை; தண்ணி; சிகரட். விசில் அடிக்கக் கூடாத குரல் வளம். பெண்களில் நான்கு பேருக்கு உள்ளூரில் நாத்தனார் வீடு தம்பி வீடு என்று ஒவ்வொரு பொந்து. இவளுக்கும் ரோகிணிக்கும் மட்டும்தான் வங்கிக் கடன் கொடுத்துத் திரும்பி வராத ஹோட்டலில் ஒரு வாரத் தங்கல். விடுதியிலிருந்து பயிற்சி மையம் பத்து நிமிட நடை. ஒன்பது மணிக்கு எழுந்திருந்து பல் தேய்த்து டிவி பார்க்கலாம். கூப்பிட்ட குரலுக்கு காபி பலகாரம்.குளித்து உடை மாற்றிக் கொள்ள அறை அறையாகத் தேடி எல்லோரையும் வெளியேற்றி உள்தாழ்ப்பாள் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை .நடு ஹாலில் வஸ்த்ர விசர்ஜனம்.

ஹோட்டலின் மூன்றாவது தளம். மேலே இன்னும் இரண்டு தளம். வரிசைக்கு ஏழு என ஒரு தளத்திற்கு மொத்தம் பதினான்கு அறைகள். நடுவில் உள்ள காரிடரின் இடைவெளி பத்தடிதான் இருக்கும். 90 டிகிரி கோணத்திலேயே ஹோட்டல்கள் எழுப்பப் படுகின்றன. செங்குத்துக் கோடுகள். வளைவுகளற்றவை. அவர்களைப் போல. அவன்களைப் போல.

அறையின் முன்னால் மீண்டும் ஒரு முழு வட்டம் அடித்தாள். ஒரு குடி. பரவசம் தலைக்கேற “ அற்புதமான காத்து “ என்றாள்.

“ சென்னையில் அற்புதமான காத்துன்னு நீ சொல்லித்தான் தெரியுது. “ என்றாள் ரோகிணி.

“ இந்த காத்துக்குப் பேர் வாடையோ தென்றலோ இல்லை. சுதந்திரம். நீ மட்டும் இல்லேன்னா நான் ஒரு முழு பாலே ஆடி இருப்பேன். “ என்றாள் நீலம்.

உள்ளே நுழைந்ததும் ரோகிணி ஏ.சி யை இயக்கி மின் விசிறியை முழு வேகத்தில் சுழல விட்டாள். நீலம் பைல், பயிற்சி மையத்தில் கொடுத்த மெடீரியல் தோல்பை எல்லாவற்றையும் படுக்கை மேல் விசிறி எறிந்தாள். ஒழுங்கு கட்டுப்பாடு இவையெல்லாம் ஒருவித ஷாவனிசம் என்பான் திலீப். எளிமையான சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாமல் போனால் நெறிகளும் கட்டுப்பாடுகளும் மதிப்பிழந்து போய்விடும் என்பார் அப்பா. பெண் பார்க்க ராஜாராமனும் அவர்களுடைய மொத்தக் குடும்பமும் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது அவளுடைய வீடு இயல்பாக இருந்தது. மல்லாந்து கிடக்கும் நட்டுவாக்கிளி போல அம்மா உரித்துப் போட்ட வாழைப்பூ முறத்தில் குவிந்து கிடந்தது. அப்பா மடித்துப் போட்ட ஆங்கில தினத்தாள் தரையில் பரந்து கிடந்ததது. திறந்த மைப் பேனா ஷேக்ஸ்பியர் புத்தகத்தின் வெளியில் துருத்திக் கொண்டிருந்தது. நாற்காலி மீது துளசியின் பிரேசியர் தொங்கிக் கொண்டிருந்தது. திரும்பிப் போகும்பொழுது ராஜாராமன் “ என் வீட்டில் உன் பழக்க வழக்கங்கள் பலவற்றை நீ மாற்றிக் கொள்ள வேண்டிவரும் . “ என்று சொல்லிவிட்டுப் போனான்.

செவ்வாய் வெள்ளி கிழமைகளில் வீடு பெருக்கி மொழுக வேண்டும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீடு முழுவதும் தூசி தட்டி வைக்க வேண்டும.
வாரம் ஒரு முறை டாய்லட் சுத்தம் செய்ய வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அலமாரியில் உள்ள துணிகளி அடுக்கி வைக்க வேண்டும்
“ நூறு ரூபாய் கூட போட்டுக் கொடு தாயீ “ என்றாள் நீலம், திருமணம் முடிந்த பிறகு ஒரு நாள் பிறந்த வீட்டுக் கூடத்தில். துளசி கையில் ஒரு பிரம்பை வைத்து அவளை ஏவிக் கொண்டிருந்தாள். துளசி முகத்தில் எஜமானன் கணவன் மாமியார் எல்லாமாக கலந்த பாவம்.

“ நல்ல காபி கிடையாது. ஒரு வேளைதான் பலகாரம். ஐநூறு ரூபாதான் சம்பளம். வேணுமின்னா மிச்சம் மீதி இருக்கறதைச் சாப்பிடத் தர்றோம். “, என்றாள் துளசி. மோவாயைத் தூக்கி 110 டிகிரி விரிகோணத்தில் பார்த்ததோ என்னவோ அப்படியே ராஜாராமனின் அம்மா நேரில் நின்றது போலிருந்தது. உள்ளே சிரித்தாலும் எல்லோருக்கும் உள்ளே ஒரு வேதனை குடைந்தபடி இருந்தது.

ரோகிணி குளியலறையிலிருந்து வெளியில் வந்தாள். அவள் நைட்டியின் முன் பகுதி முழுவதும் ஈரம் பரவியிருந்தது. நைட்டி ஈரத்துடன் உடலோடு ஒட்டி மார்பகங்கள் செழுமையாகத் தெரிந்தன. மேல் துண்டை உதறி எரிந்து விட்டு “ உஸ்ஸ் . ரொம்பப் புழுங்குது. “என்றாள்

அடுப்படி ஒரு உலைக்களம். செங்கச் சூளை. சுண்ணாம்புக் காளவாய். பழைய வீடு. குறுகிய சமையல் கட்டு. சின்ன ஜன்னல். புகை தழல் என்று எப்பொழுதுதான் சமையலை முடித்து விட்டு வெளியில் ஓடி வருவோம் என்றிருக்கும். ஒன்பது மணிக்குள் பலகாரம் சாப்பாடு இரண்டும் பண்ணி இறக்கியாக வேண்டும். மாமியார் சமையலறை வாசலில் இரும்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பூத சாட்சி. உத்தரவுக் குரல். தினம் ஒரு பலகாரம். தினம் ஒரு சமையல். உப்பு புளி அளவு சொல்ல மாமியார்.” ருசி கூட ஒரு வகை ஷாவனிசம் “ என்றாள் நீலம் திலீப்பிடம். நாகரீகம் கருதியோ என்ன மண்ணாங்கட்டி கருதியோ அவளுக்கும் ராஜாராம்னுக்கும் திருமணம் முடிந்ததும் வாட அமெரிக்காவின் ஒரு நெய்தல் மாநிலத்தில் வேலை நிமித்தம் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டான். அவனுடைய அமெரிக்க மனைவியுடன் ஹாம்பெர்கில் ருசி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கலாம். மாமியாரின் அண்மையும் திலீபின் சேய்மையும் நீலத்தின் கொதி நிலை உச்சங்கள். உடலெல்லாம் எரியும். இரண்டு வேளை குளித்தாலும் தீராது. இரண்டு வேளை குளிக்கவும் முடியாது. “ இழவு வீட்டில்தான் இரண்டு வேளை குளிப்பார்கள். “ என்று சுவற்றைப் பார்த்து சொல்லுவாள் மாமியார். பிறந்த வீட்டில் இரு முறை என்ன வெயில் காலங்களில் மூன்று முறை கூட குளிக்கலாம். எல்லாக் குழாயிலும் திறந்தால் குற்றாலம். காவேரி தண்ணீர்.

“ புழுக்கம் மனம் சார்ந்த விஷயம் “ என்றாள் நீலம்.

“ நான் யோசிப்பதில்லை நீளம் “ என்றாள் ரோகிணி பட்டென்று.

ரோகிணி பட்டன் ஒன்றை அழுத்த ஹோட்டல் சிப்பந்தி ஒருவன் ஒரு தட்டில் இரண்டு குவளைகளில் தேநீர் கொண்டு வந்தான்.அவனிடம் தேநீர் வாங்கும்பொழுது ரோகிணி முகம் துடைத்துக் கொண்ட துண்டை மாபுக்கு மேலே தொங்க விட்டுக் கொண்டிருந்தாள். நீலம் அம்மா வீட்டில் தேநீர்தான் விரும்பிக் குடிப்பாள். காபி கிடையாது. இங்கே தலை கீழ். தேநீர் குடிக்காததோடு குடிப்பவர்களை மாமியார் நிசுத்தமாக ஒதுக்கி விடுவார். ஒவ்வொரு முறை காபிக் குடிக்கும்பொழுது உமட்டிக் கொண்டு வரும். வெளியில் காட்ட முடியாது, காட்டக் கூடாது.

தேநீரைக் குடித்து விட்டு ரோகிணி “ மட்டமான தேநீர் “என்றாள்.

“ அற்புதமான தேநீர் “ என்றாள் நீலம்.

“ உனக்கு நல்லா கிறுக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் “ என்றாள் ரோகிணி.

“ எஸ். சுதந்திரக் கிறுக்கு “ என்ற நீலத்தைக் கவனிக்காமல் ரோகிணி குப்புறப் படுத்துக் கொண்டு தலையணையில் மார்புகள் அழுந்த ஒரு வாரப் பத்திரிகையைப் புரட்ட ஆரம்பித்தாள்.

நீலம் டிவி ரிமோட்டை கையில் எடுத்து இயக்கினாள்.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உயிரே

தமிழகம் முழுவதும் இன்று வறண்ட வானிலையே காணப்படும்

அம்மா நம்ம வீட்ல ராஷஸ் ப்ராப்ளம் இருக்கா/

சின்னத் திரைகளில்ள் வண்ணக் கோலங்கள் படைப்பது

அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்?

தாரா சந்திரிகை உலாவும் வெளியில்

Before ending the main points are

Oh he was caught

A complete planned food

ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே

மாயா பஜார். படமா பாட்டா தெரியவில்லை அப்பாவுடன் பேலஸ் தியேட்டரில் போய்ப் பார்த்தப் படம். அப்பாவுக்கு சாவித்திரி என்றால் பிடிக்கும். பெரிய சைசு மார்பு காரணமாக இருக்கலாம் என்றான் ராஜாராமன் வக்கிரத்துடன். பட்டியல் வேண்டாம். இவன் கெட்டவன்; அவர் நல்லவர். வரைமுறை வேண்டாம். இவை நல்ல செயல்கள்; அவை கேட்ட நடவடிக்கைகள். சத்தியராஜ் நல்லா நடிக்கிறான் என்றாள் அம்மா ஈசிச் சேரில் சாய்ந்தபடி. இரவு படுக்கை விரிப்பைச் சரி செய்தபடி அவள் அதற்கு பதில் சொன்னாள். “ சிவப்பு உடம்பு. கழுத்துக்குக் கீழ எல்லா எடத்திலயும் முடி. அதான் சத்தியராஜை உங்கம்மாவுக்குப் பிடிச்சிருக்கு. “ பளார் . மின்னல் வேக எதிர்வினை.குறி தப்பாது பறவை வீழ்ந்தது. நீலம் மனதிற்குள் கைகொட்டி சிரித்தாள்.

டிவியை அணைத்தாள்.

ரோகிணி புத்தம் புதுப் புடைவை ஒன்றைக் கட்டிக் கொண்டு “ என் மொபைலில் ரீசார்ஜ் பண்ணனும். கீழ ஒரு கடை இருக்கு. வரியா நீலம்? என்றாள்.

அவளிடம் ஒரு சிங்கிள் சிம் மட்டும் போடும் மொபைல் உண்டு. அதற்கு ஒரு இன்கமிங் சிம் ஒன்று மட்டும் போட்டுத் தந்திருக்கிறான். அவன் கூப்பிடுவான் அவள் பேச வேண்டும். அவளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறானாம். திருவள்ளுவரின் குறள் படித்ததில்லையோ என்னவோ? அவனை மீறும் ஒவ்வொரு செயலும் எதிர் செயலை அவள் கன்னத்தில் இறங்கும். முதுகில் இறங்கும். இடுப்பில் இறங்கும்.

“ நீ வரியா? “ என்றாள் ரோகிணி.

இடம் வலமாக நீலம் தலையாட்டினாள்.

“ கதவை உள்பக்கமா தாழ் போட்டுக்கோ “ என்றாள் ரோகிணி.

“ நாப்பது வயசு தாண்டினவளை எவனும் கற்பழிக்க தப்பு தப்பு பாலியல் வன்முறை பண்ண வரமாட்டான்.”

வாசலில் நிழலாடக் கதவைத் திறந்தால் திலீபன்.முன்பக்க நெற்றியில் முடி கொட்டி கண்கள் ஒருவித சாம்பல் நிறத்தில் வெளிறி சிவந்த தோலும் தடித்த உடலுமாய் முற்றிலும் தன் அடையாளத்தை இழந்து நின்று கொண்டிருந்தான். ஹாய் சொல்ல மாட்டியா நீலா? ஆர்.எஸ் புரம் புத்தகக் கண்காட்சி; கிராஸ்கட் ரோடு; போரூர் கோவில்;மருதமலை என்று நினைவு ஒரு ரங்கராட்டினம் அடித்தது. எங்கே ஹாய் சொல்வது மாமியாரின் நிழல் மேலே படரும்பொழுது? ஹிந்தி சீரியல் ஹீரோ போல மாமியார் கால்களைத் தொட்டு ஒரு முத்தம். பால்ய ஸ்நேகிதன் என்று அறிமுகம். பழைய காதலன் என்றா அறிமுகம் படுத்த முடியும்? இதற்கே மாமியார் முடிந்த அளவு கண் காது மூக்கு வைத்து விடுவாள். விசா நீட்டிப்பினால் சொந்த ஊரையும் பழைய நண்பர்களையும் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பம் என்று திலீபன் காரணம் சொன்னான். முற்றிலும் வேறாகிப் போன செல்வன். திலீபனும் செல்வி. நீலமும் கடந்து போனவற்றில் நல்லதை மட்டும் பேசி விட்டுப் பிரிந்தனர். அவனுக்கு ஒரு வாய் தண்ணீர் மட்டும் தர முடிந்தது. மாமியார் ரேஷன் கடையில் வேறு சப்ளை கிடையாது. கண்ணியம் கருதி நான்கு வருடங்களுக்கு முன்பு தாண்டப் படாத கோட்டினைத் தாண்டியிருக்கலாமோ என்று அப்பொழுது நீலத்திற்குத் தோன்றியது. இந்த நான்கு வருடத்திற்குள் இரண்டு பஞ்சாயத்து ஒரு கற்பூரம் அணைத்தல் ஜட்டி போடாத லுங்கியுடன் விரைகள் இரண்டும் ஆட ராஜாராமனின் உதை என எல்லாம் நேர்ந்து விட்டது. அவன் பாஷையில் விதி மாறியது. EVERY REACTION HAS AN EQUAL AND OPPSITE REACTION. முடிவே இல்லாத எதிர்வினை. முடிவே இல்லாத வினை.திலீபன் போய்விட்டான். அவனுக்கு அவசரம்.அவன் போகும் வரையில் ராஜாராமன் வரவில்லை. மாமியார் திரித்துச் சொன்னாள். “ அவன் பார்வையே சரியில்லை. –– சொல்லாமல் விட்டது அவன் நீலம் மாரையேப் பார்த்துண்டு இருந்தான்.—-தனியா இருக்கற நேரத்தில் கதவைச் சாத்திக் கையைப் பிடிச்சு இழுத்திருந்தா பாவம் நீலம் என்ன பண்ணியிருப்பா? பயந்த பொண்ணு அவ.” சினிமாவும் சீரியலும் பார்த்து பார்த்து வக்கிரமாகிப் போன மூளை வேறு விதமாக யோசிக்குமா ? அவனுக்கு புத்தி வேண்டாம்? வரம்பில்லாமல் புரளும் நாக்கை இழுத்து பெட்டியில் வைத்துப் பூட்ட வேண்டாம்? கதவு என்பதும் ஒருவகை ஷாவனிசம் என்றான் திலீபன்.

உங்களுக்குத் திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம் தாம் தோம் தீம்

சாவித்திரி உடலில் புகுந்து கொண்டு விடும் ஆஜானுபாகுவான எஸ்.டி ரங்காராவின் உருவம். ஒரு சுழற்சியில் சாவித்திரி; ஒரு சுழற்சியில் ரங்காராவ். இனிமையான ரசவாதம்.

மிகைக் கற்பனைதான் என்றாலும் உற்சாகமாகத்தான் இருக்கிறது.பிடிக்காதக் கணவனை ராட்சசக் கால் கொண்டு மிதித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஒரே ஒரு முறை ராஜாராமனைப் பிடித்துத் தள்ளியிருக்கிறாள். அவனைக் குடி நிராயுதபாணியாகியிருந்தது. மொத்தமாகப் பிடித்து தள்ளினாள். ஸ்பரிசம் கூட அவன் அனுமதியின் பெயரில் அளந்து விடப்படும் ரேஷன் சீமண்ணை. இந்த இந்த இடத்தில் மட்டும் தொட அனுமதி. சொத்தென்று கீழே விழுந்தவனைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது. பெண் என்ன சம்பாதித்து என்ன? புருஷன் என்பவன் அச்சமூட்டுபவனாகவே இருந்து தொலைக்கிறான். சிக்கல் நிறைந்த விவாகம். சிக்கல் நிறைந்த சமூகம்.சிக்கல் நிறைந்த உடல் பேதம். weaker sex என்பதால் ஏன் ஆண்கள் தங்களை விடவும் அதிக வயதுள்ள பெண்களை திருமணம் புரிந்து கொள்ளக் கூடாது?

திரும்பவும் வாசலில் நிழலாடியது. அசைவா? குரலா? ரோகினி வரும் சமயமில்லை. விடுதியில் கால் வைத்த நேரத்திலிருந்து வீடும் வீடு சார்ந்ததுமான பேச்சாக இருந்தது ரோகிணிக்கு. அவள் சொன்னதன் பிரகாரம் அவள் தன் கணவனுக்கு குண்டி கழுவி ஜட்டி மட்டும் போட்டு விடுவதில்லை என்று பட்டது. கணவன் மாமியார் நாத்தனார் பிள்ளைகள் நகை புடைவை என்று ஒரே வட்டத்தில் சுழன்ற பேச்சு. பாதுகாப்பு கருதியா இவ்வளவு பேச்சு?. வேறு பிரக்ஞைகள் இல்லாத நிலையில் ரோகிணியின் பேச்சுவெளியில் தானும் கரைந்து போகலாம். பொய்மையான பாவங்களில் அமிழ்ந்து அமிழ்ந்து போனாலும் உள்ளே உள்ளே எனத் துழாவும்பொழுது சீழும் சிரங்கும் சிக்காமலா போகும் ?

வாசலில் நின்ற நிழல் போகவில்லை. பேசியது.

நிழலைப் பேச அனுமதித்தாள். ஆண் நிழல்.

“ ஒருங்கிணைக்கப் பட்ட அமைப்பு நிகழ்வரைப் பயிற்சிக்கு இன்று காலையில் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.என் நெருங்கிய உறவினரின் மரணம் காரணமாகக் காலதாமதமானது. என் தாமதத்தின் காரணம் மண்டல அலுவலகத்திலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் இன்று மதியம்தான் என் சொந்த ஊரிலிருந்து கிளம்பி வர முடிந்தது. எனக்கு ஒதுக்கப் பட்ட அறையின் சக ஊழியர் வெளியில் சென்று விட்டார். என் அறைத் தோழர் வரும் வரையில் என் பெட்டியை உங்கள் அறையில் வைத்துக் கொள்ள அனுமதி கிடைக்குமா? “ நிழல் தெளிவான ஆங்கிலத்தில் பேசியது.

ராஜாரமனுக்கும் அட்சரம் பிசகாத ஆங்கிலம். சுழற்றி மயக்கும் நாக்கு. முகம் பார்த்து குறிப்பறிந்து பேசும் நாக்கு. அதே நாக்கு ஆங்கிலத்திலும் சுழன்றால் காலடியில் கிடக்கலாம். பிள்ளைகள் இரண்டும் அப்பாவின் காலடியில்தான் கிடக்கின்றன. அம்மா ஒரு பூச்சி. பனிரெண்டு வயது மகனை ஒரு திருடனைப் போல ஒளிந்திருந்து பள்ளிக்கூடத்தில் போய்ப் பார்த்தபொழுது ராஜாராமன் பத்தே நாட்களில் பேசிப் பேசியே மகனை மாற்றியிருந்தது தெரிந்தது. அப்படி ஒரு நாக்கு அவனுக்கு. இதோ இன்னொரு நாக்கு.

“ ரிசப்ஷனில் கேளுங்களேன் “ என்றாள் நீலம்.

நெக்கு விட மனம் இல்லை. மனம் இல்லை என்பதல்ல. நெக்கு விட இடமில்லாமல் மனம் பாறையாக இறுகிக் கிடக்கிறது. இருப்பினும் பாறைப் பிளவுகளில் முட்டி வெளி வந்த எத்தனை செடிகளைப் பார்த்தாகி விட்டது? அணித்து மகளிர் காவல் நிலையத்தின் வாசலில் போடப் பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த பொழுது பசிக்கோ பரிவுக்கோ எதற்கென்று தெரியாமல் குழைந்து வாலாட்டிக் கொண்டு வந்த நாயின் தலையில் எறிந்த கல் இன்னும் சிறுமைப் படுத்திக் கொண்டே இருக்கிறது. எத்தனை குழைவு ? உன் நகைகள் கிடைக்குமா? ஸ்பெகுலஷன்தான் என்றாலும் வருணுக்கும் ஸ்வேதாவுக்கும்தானே சேரப் போகிறது? நகைகள் இறங்கியபடியே இருந்ததே தவிர ஒரு நாளும் கழுத்தில் ஏறவே இல்லை. ஆயிரம் காரணம் சுழலும் நாக்கு சொன்னது. எல்லாம் நம்பும்படியாக. ஜீரா தடவிய பேச்சு. மீற முடியாது . மீறினால் தேன் தெளித்த நாக்கு மலம் தூற்றத் துவங்கி விடும். குடியில் புலி வேஷம். அம்மாவின் ஜதியில் ருத்ர தாண்டவம். இறுகி இறுகி எந்த வேரும் துளைக்க முடியாமல் போனது.

ரோகிணி வந்து விட்டால் தேவலை ராஜாராமனின் சூட்சுமக் கயிறு ஆடிக் கொண்டே இருந்தது. நிழலை விரட்டப் போய் நிழல் கருப்பு கைகளில் தொற்றிக் கொண்டு விரல் கறையானது. நீலம் கைகளை உதறினாள். வாடிக்கையாளர்கள் வருவதில்லையா என்ன? பாஸ் புக் என்ட்ரியா கொடுங்க சார் போட்டுத் தரேன். முதிர்வு தேதியைத் தாண்டி ரெண்டு மாசம் ஆயிடுச்சு பழைய தேதியிலிருந்து டெபாசிட்டை நீட்டிக்க முடியாதேம்மா. அப்பொழுதெல்லாம் ஆடாத நிழல். வழித்து வாரிய தலை. கவலையும் மீட்சியின்மையும் பெருவெள்ளத்தினால் அரிக்கப்பட்டு அரிக்கப்பட்டு முள்காயம் பட்டது போல ஒரு முகம். பயமும் ஆர்வமின்மையும் மிதக்கும் கண்கள் என்பதால் நிழல் எதுவும் இதுவரையில் தொடர்ந்ததில்லை. இப்பொழுது மட்டும் ஏன்?

“ நான் பாண்டிச்சேரி கிளையில் பணிபுரிகிறேன். பணிக்காலம் பதினெட்டு வருடங்கள். என் முதல் பணியிடம் வந்தவாசி. ஆறு வருடம் போராடி பாண்டிசேரிக்கு மாற்றல் வாங்கினேன். என் மனைவி பாண்டிச்சேரியில் ஆசிரியையாக இருக்கிறாள். இரண்டு மகள்கள். சென்ற முறை உயர் அதிகாரி பதவிக்கு தேர்வில் வெற்றி பெற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. உயர்பதவிக்குரிய மாற்றல் சிரமங்கள் காரணமாக யோசிக்க வேண்டியுள்ளது. “

தேவையில்லா தகவல்கள் வந்து குவிந்தன. மாவு மெஷின் அகன்ற வாயினில் கொட்டப்படும் கோதுமை அரிசி மிளகாய்.

ரோகிணி விருப்பக் கதாநாயகனின் முதல் காட்சி திரைப்படம் பார்த்த ரசிகனின் மலர்ச்சியுடன் உள்ளே நுழைந்தாள். அதுகாறும் அவள் தன் குடும்பத்தின் மேல் கொண்ட பற்றுதலை ஸ்பெக்ட்ரம் அலைகள் வழியாக வெளிப்படுத்திய விதத்தை நீலத்திடம் கொட்ட நினைத்து உள்ளே திரும்பியிருப்பாள். சிந்தனைத் தொடர் ஒரு திருப்பத்தில் நிழலைக் கண்டதும் அறுந்து தொங்கியது.

“ எனக்கு திருச்சியில் மொத அப்பாயின்மென்ட். பலவேசம் சார் இப்ப உங்க பாண்டிக் கிளையில் ஸ்கேல் டூவா இருக்காரே அவரு என்னோடதான் ஜாயின் பண்ணினாரு.ஒரே பாட்ச். கல்யாணம் ஆனா பிற்பாடு நான் வேலூர் கிளைக்கு மாற்றல் வாங்கிட்டு வந்திட்டேன். சிவமணி கூட பாண்டியிலிருந்து வந்த பொண்ணுதான். ரெண்டாவது வீ ஆர் எஸ் வருமா? என்ன சொன்னாங்க யூனியனில் யாரும் வீஆர்எஸ் கொடுக்கக் கூடாதுன்னுதானே? . திருச்சி ரீஜனில் முதல் வீஆர்எஸ் அப்பிளிகேஷனைக் கொடுத்தது ரீஜனின் யூனியன் செகரட்டரி ராமலிங்கம்தான். இதுக்கு என்ன சொல்றீங்க? “

ரோகிணி விடாமல் பேசித் தள்ளினாள். அவளுக்குத்தான் ஒரு சின்ன விஷயத்தைக் கூட எப்படி இவ்வளவு பந்தல் போட்டு பேச முடிகிறதோ? மள மளவென கற்களும் பாறைகளும் –எல்லாமே மிதப்பவை. ராமர் கைப்பட்ட பாறைகள்— போட்டு நிரப்ப இரண்டு நிலப் பரப்புகளுக்கு இடையில் ஒரு பேச்சு ஜலசந்தி.

நீலம் மெல்ல விலகி அமிழத் தொடங்கினாள்.

“ நீலம் உனக்கு போன் “ ரோகிணி உலுக்கினாள். புரியவில்லை.

“ உன் மொபைலுக்கு என்னாச்சு? கீழே ரிசப்ஷனில் கூபிட்டாங்க.” என்றாள் ரோகிணி. மொபைலில் பாட்டரி சார்ஜ் இல்லாமல் உயிரிழந்து கிடந்தது. நீலம் அவசரமாகக் கீழே ஓடினாள்.

வாசல் மூடியிருந்தது.நிழல் இல்லை.போயிருக்க வேண்டும். கீழே அவள் வரவுக்காக காத்திருந்த ரிஸீவரின் முனையைத் தேடி ஓடினாள்.அவனாகத்தான் இருக்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை அவன் அவளை அழைத்த வண்ணம் இருப்பான். அவளை அவன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறானாம். ரயில் ஏறும் வரையில் உடன் வந்தான். அவன் பிடி விலகியது எப்பொழுது என்றால் ரயில் வேகமெடுத்து ஓட இவனால் ஜன்னல் கம்பிகளின் ஊடே இவளைத் துரத்தி வர முடியாமல் போனபிறகுதான். கூடவே சூட்சுமக் கயிறு மொபைல் மூலம் . ஈரோடு வந்தாச்சா? சேலம் வந்தாச்சா? ஜோலார்பேட்டை வந்தாச்சா? காட்பாடி வந்தாச்சா? அரக்கோணம் வந்தாச்சா? அதன் பிறகு பாட்டரியில் சார்ஜ் இல்லாமல் போயிருக்க வேண்டும்.இங்கே விடுதி தொடர்பு என்னைக் கொடுத்துவிட்டு வரவில்லை. இவள் வேலை செய்யும் கிளையில் புரளும் நாக்கின் மூலம் விடுதி எண் வாங்கியிருப்பான்.

“ ஹலோ “

“ அவுத்துப் ,போட்டதை உடுத்திட்டு வர நேரமாயிடுச்சா?

“……………….”

“ பதில் சொல்லித் தொலையேன்.”

“ ஒரு ஹலோ மட்டும் போதாது? “

“ எதுக்கு? “

“ நான் இருக்கேனா செத்தேனான்னு தெரிஞ்சிக்க. “

“ வேற எவனோடயாவது படுத்துக்கிட்டிருக்கியா கழுவிக்கிட்டிருக்கியான்னு எனக்கு எப்படி தெரியும்? உசிரோட இருக்கறது ஒரு பெரிய விசயமே இல்லை. “

“……………..”

“ பதில் சொல்லுடி “

“ ஒரு ஹலோ மட்டும் போதாது? “

“ மொபைல் சார்ஜரை எடுத்துட்டு போகலியா? “

“ இல்லை “

“ அப்புறம் உன்னை எப்படி காண்டாக்ட் பண்ணுறது? “

“ ஒரு ஹலோ மட்டும் போதாது? “

“ உனக்கென்ன பையித்தியமா? “

“ நான் என்னிக்கு தெளிவா இருந்திருக்கேன் ? “

“ உன் முடி என் கைக்கு பக்கத்தில இல்லைங்குற திமிராடி ?”

“ ஒரு ஹலோ போதாது? “

“ என்னிக்கு ட்ரைனிங் முடியுது ? “

“ சனிக்கிழமை “

“ அது வரைக்கும் உன்னை எப்படிடி காண்டாக்ட் பண்றது? நீ எவனோடயாவது ஓடி போயிட்டா? “

மாமியார்க்காரி பெண்ணின் வீட்டிற்குப் போயிருந்தாள். நீலம் அலுவலகம் விட்டு வரும்பொழுது வேறு ஒரு பெண் அடுப்படியில் காபி போட்டுக் கொண்டிருந்தாள். அவளது பேச்சு சிரிப்பு ஒய்யாரம் எல்லாமே வேறு ஒரு வாடை அடித்தது. அப்பாவோட வேலை செய்யற ஆன்டியாம். ரெண்டு நாள் தங்கப் போறாங்களாம்.”என்று தான் நம்பியதை சொன்ன தனது மகளை நீலம் நம்பவில்லை. நள்ளிரவில் அவள் எதிர்பார்த்த சிணுங்கலும் முனகலும் அவன் அறையிலிருந்து வந்தது.

“ என்னடி பதிலைக் காணும் ? “

“ ஒரு ஹலோ போதாது? “

“ சனிக்கிழமை டிரையினைப் புடிச்சு ஒழுங்கா வந்து சேரும் வழியப் பாரு.”

“ ஒரு ஹலோ போதாது ? “

அவன் போனை வைத்து விட்டான்.

சாலையில் அரவம் அடங்கத் தொடங்கி இருந்தது. எல்லா இயக்கங்களும் ஒரு பொந்திற்குள் ஒரு மறைவிற்குள் சென்று முடிந்து விட்ட பிறகு சந்தடி அடங்கிய பின்னிரவுச் சாலையின் வழியே சென்று நிச்சலமான இருளில் கரைந்து விட வேண்டும்.

********

( தொடரும். )