Category: இதழ் 54

கலைஞன்./ பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி )

24572_1252937045631_3453253_n

 

 

 

 

 

 

 

 

 

அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப்புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்றுஅருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து கணைப்படுக்கை ( Hammock – கன்வேஸ் தூளி) ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடுவெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்குவெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல்முழுவதும் அவன் தூளி காலியாக இருந்தது.

 

மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் நிலையத்தின் Gold-regen மரங்களோடு தொடரும்வடக்குப்புற மதிலின் சிதிலமான பகுதியைத் தாண்டிக் கடந்துகொண்டு கையில் ஒரு சாப்பாட்டுப்பொதியுடன் மீண்டும் அவன் வருவதைப்பார்த்தேன். வந்ததும் அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழற்றித்தூளியில் போட்டுவிட்டு, சப்பாத்துகளையும் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டு வெறுங்காலுடன்நடந்துபோய் மேடையின் மறுகோடியில் இருந்த தண்ணீர்க்குழாயில் முகம் கைகால் கழுவிவிட்டுவந்துநிலத்தில் சம்மணமிட்டமர்ந்து பொதியை அவிழ்த்துச் சாவகாசமாகச் சாப்பிட்டான். பின்ஜாக்கெட்டுப்பையிலிருந்து ஒரு பியர் கானை எடுத்துக்கொஞ்சம் குடித்துவிட்டு அதையும்இரும்புவாங்கில் ஒரு பக்கமாக வைத்துவிட்டு தானும் அதில் சற்றே தள்ளி அமர்ந்து சிகரெட் ஒன்றைஅனுபவித்துப்பிடித்தான். அப்போது நாலாவதோ ஐந்தாவதோ மேடையில் நகரத்துள் மட்டும் ஓடும் S – Bahnஎனப்படும் விரைவு தொடருந்து ஒன்று நூறு கி.மீட்டர் வேகத்தில் கடந்து போனதை வேடிக்கைபார்த்தான். பின் பியர்க்கானைக் கையில் எடுத்துக்கொண்டு அம் மேடையின் முழு நீளத்துக்கும் ஆறேழுதடவைகள் நடந்தான். அவன் நடந்து அணுக்கமாக வந்தபோது தெருவிளக்கின் வெளிச்சத்தில் இன்னும்அவனைத்தெளிவாகப் பார்க்கமுடிந்தது. உயர்ந்த ஒல்லியான தேகம். சதா சிந்தனை வயப்பட்டவன்போல்தோற்றமளித்தான். சாயம்வெளிறியும் அங்கங்கு தேய்ந்துமிருந்த டென்னிம் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.தலையை வாரிவிடுவதில் அக்கறை எதுவுமில்லை, ஒரு கிழமை வயதான தாடி, கண்வலயத்தில்லேசான ஐரோப்பியச்சுருக்கங்கள். அவனுக்கு 35-க்கும், 50-திற்கும் இடையில் அகவைகள்எத்தனையுமிருக்கலாம்.

 

மறுநாள் அவன் வெளியேபோய் வரும்போது தொல்பொருள் ஆய்வாளர் கண்டால் அக மிக மகிழவல்லதோற்பை ஒன்றைக் கொண்டுவந்தான். தினமும் இரவில் ஏதாவது சாப்பாடு வெளியிலிருந்துகொண்டுவருவதும், சாப்பிட்டுவிட்டுத்தூங்குவதும், பின் மறுநாள் பகல்வெளியேறுவதும் தினப்படிநடவடிக்கைகளாக இருந்தாலும் எங்கேயும் வேலை பார்ப்பவன் போலவுந்தெரியவில்லை. சில நாட்களில்மதியம்வரை தூளியைவிட்டிறங்காமல் படுத்திருப்பான். வெளியில் சென்று கவனிக்கவேண்டியகாரியங்கள் ஒன்றுமில்லாமலிருக்கவேண்டும் அல்லது ஆர்வமில்லாமலிருக்கவேண்டும். தொடருந்துநிலையத்துக்கு குடிவந்து ஒருமாத மேலாகியும் அவன் தன் காற்சட்டையையோ ஜாக்கெட்டையோமாற்றாததிலிருந்து அந்தத்தோற்பையில் ‘மாற்றுடுப்புக்கள் ஏதாவது வைத்திருப்பான்’ என்ற என் ஊகமும்நசித்துப்போனது. தினமும் இரண்டு மணிநேரம் ஒரு பூக்கடையில் வேலைசெய்தாலோ,செய்திப்பத்திரிகை விநியோகித்தாலோகூட இப்படித் தூளிகட்டித் தூங்கவேண்டிய அவசியமின்றிராஜகுமாரனாகவே வாழலாம்.

 

Inline மற்றும் Roller Skates படுவேகமாக இளசுகளிடையே ஒரு மோஸ்தர் போலப்பரவியபோது 70அகவைக்கும் மேலிருக்கக்கூடிய பெண்கள் பலர் தலைக்கவசமும், முட்டி மற்றும், பிட்டக்கவசங்கள்அணிந்துகொண்டு பார்க்குகளிலும், நடைமேடைகளிலும் Skates ஓடப்பழகியதைக்கண்டிருக்கிறேன்.மனிதன் வாழ்வுபூராவும் எதையாவது செய்துகொண்டு பிஸியா இருந்துவிட்டால் சோர்வும் விரக்தியும்விச்ராந்தியும் அணுகாதாம். ‘வயசு எழுபதாகிறதா…..பரவாயில்லை உடனே பரதநாட்டியம் கற்கஆரம்பித்துவிடு.’ என்பாராம் ஒஸ்கார் வைல்ட். மனிதனின் மரபான வாழ்வுமுறை சலிக்கும்பொதுதான்அநேகமான ஐரோப்பிய இளைஞர்கள் சிலர் வேறொரு வாழ்க்கைமுறையை முயன்று பார்க்கின்றனர்.இவ்வாறு மரபுவாழ்க்கையை உதறி வித்தியாசமான வாழ்வுமுறையைத் தேர்பவர்கள் தனியனாகவும் ,ஆண்களும் பெண்களுமாக இருபது முப்பதுபேர்கொண்ட கூட்டமாகவும் வாழ்வதுண்டு. எடுத்துக்காட்டாக‘ஒட்டோநோம்’ குமுகாயத்தினரைக்கூறலாம். இவர்கள் தங்கள் கூட்டுவாழ்வுக் குமுகங்களில்நாய்களையும் வேறுபிராணிகளையும் விரும்பிச் சேர்த்துகொண்டுமிருப்பார்கள். இவனும் ஒரு‘ஒட்டோநோம்’ குமுகாயத்திலிருந்து விலகி வந்தவனைப் போலிருந்தான்.

 

 

 

ஒருநாள் இரவு சாப்பாட்டைமுடித்துக்கொண்டு Warshau விலிருந்து Paris க்குச் செல்லும் நடுஇரவு Intercityதொடருந்தை ஜன்னலிலிருந்து வழியனுப்பிவிட்டு படுக்கை, தலையணை உறைகளைமாற்றிக்கொண்டிருந்தேன். Johann Sebastian Bach இன் பிரசித்த மெலோடியான ‘Jesus Christus meine Verlangen’ இன்அருமையான பல்லவி ஸோலோவாக சக்ஸபோனில் புறப்பட்டு மிதந்து வந்தது. யாரோ சவுண்ட்சிஸ்டத்தையோ, தொலைக்காட்சியையோ சத்தமாக வைக்கிறார்கள் என்று இருந்தேன். ஒரு Contrad bass ன்ஒத்திசைவுகூட இல்லாமல் சக்ஸபோன் தனித்தே பல சுருதிகளிலும் பிளிறுவது மெலிதானசந்தேகத்தையுண்டுபண்ண ஜன்னலுக்கு வந்து பார்த்தேன். அவன் Dressel வீதியின் சோடியம் ஆவிவிளக்கில் மேடையின் இரும்புவாங்கில் ஆரோகணித்தமர்ந்து ஒரு சக்ஸபோனை வைத்துவாசித்துக்கொண்டிருந்தான். அதன் பின்னும் பீத்ஹோவனின் ஒரு அழகான கோர்வையைஅரைமணிக்கும் மேலாக உற்சாகம் ததும்ப வாசித்தான். அவனது கற்பனைகளும் அலாதியான கமகப்பிரயோகங்களின்போது அக்கருவியில் மட்டும் வரும் இனியபிளிறல்களும் செறிந்த இசை மிகவும்வித்தியாசமாக சுகமாக இருந்தது. அது முடிந்தபின் ஷம்பேன் போத்தலைத்திறந்து தொண்டையைநனைத்தபின் வேறொரு கோர்வை. அந்த இரவு வெகுநேரம் ஆனந்த பரவசத்துடன்நெளிவுசுழிவுகளுடன்கூடிய மிகநுட்பமான இசை அவனது சக்ஸபோனிலிருந்து பொங்கிப்பிரவகித்துCharlottenburg பள்ளத்தாக்கு முழுவதையும் நிறைத்து மேவியது.

 

பாவம்………… இவனும் ஒரு கலைஞன்!

கலை மனிதனை ஆகர்ஷிக்க வல்லதுதான், அதுவே போதையாகி அதற்கே அடிமையாகி அதைத்தவிரவேறெதுவுமில்லையாகி அதைக்கொண்டு வாழ்வை நகர்த்தமுடியாத நிலை வந்தபின்னாலும் அதையேகட்டிப்பிடித்துக்கொண்டும் விலக்கமுடியாமலும் தவித்துச் சோம்பேறியாகிப்போகும்பட்டினிக்கலைஞர்கள் உலகம் முழுவதும்தான் உள்ளனர். வாழ்க்கையின் மறுபரிமாணங்களைக்காணத்தவறுவது, தவறவிடுபவை பற்றிய பிரக்ஞை இன்றி இருப்பதுவும் இவர்களின் பொதுக்குணங்கள். ஊரிலும் இப்படித்தான் ஒரு மிருதங்கவித்துவான் இருந்தார். அடுப்பங்கரை நிலமை அடுப்புக்கால்களைநாய் நகர்த்தி விளையாடும் அளவுக்கு இருக்கும். மனிதன் விடிந்ததிலிருந்து மிருதங்கத்தைஎடுத்துவைத்து அதைத்தடவித்தடவி ‘குமுக்கு’ ‘குமுக்கு’ என்று கும்மிக்கொண்டிருப்பாரே தவிரஇந்தண்டையிருக்கிற துரும்பை எடுத்து அந்தண்டை போடமாட்டார். கர்ப்பிணி மனைவிவிறகுடைப்பாள். இவர் திண்ணையில் ஒருகாலை மடித்துத் தொடையின்மேல் போட்டுக்கொண்டுபான்பராக்கோடு வெற்றிலையைச் சேர்த்துக் குதப்பியபடி சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார். “விடுங்கோமாமி” என்றுவிட்டு கோடலியை வாங்கி நான் உடைத்துக்கொடுத்தால் ” கடினவேலை செஞ்சா அப்புறம்எனக்கு விரல்கள் ஜதிக்கட்டுக்களுக்கு வசையிறதில்லையடா அம்பி.” என்பார். குடல் காயத்தொடங்கினபிறகும் என்ன சாம்பலுக்குத்தான் ஜதி வேண்டிக்கிடக்கோ?

மறுநாள் இந்த சக்ஸபோன் கலைஞன் மேடையில் ஒரு புல்லை வைத்துக்கடித்துக்கொண்டுஅணில்களும் புலுணியும் ஓடிப்பிடித்து விளையாடுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அவனிடம் போய் ஒரு ‘ஹலோ’ சொல்லவேணும் போலிருந்தது. என்ன செய்வானோ…………பேசுவானோ முறைப்பானோ தெரியவில்லை. கிறுக்கர்களாகவும் சில கலைஞர்கள் இருப்பதுண்டு.பாவம், குளிர்காலம் வர என்னதான் செய்யப்போகிறான்? என் அறையில் ஒரு கட்டிலைப்போடவிடலாந்தான், அதற்கு வீட்டுச்சொந்தக்காரியிடம் அனுமதி பெறவேண்டும், அவளும் இந்தச்சாக்கில்வாடகையை உயர்த்திவிடலாம். அறையைக் கொடுத்தபின்னால் அவன் ஷாம்பேன் போத்தல்களையும்,பியர் புட்டிகளையும் கொண்டுவந்து நிரப்பினால்? உடுப்பையே மாற்றிக்கொள்ளாதவன்குளிப்பதில்லையென்று ஒரு கொள்கையைக்கூட வைத்திருக்கலாம், யார் கண்டா? பின்னர் கிடாய்மொச்சை கமழும் பெம்மானுடன் மானுஷன் உறைவதெங்கனம்? வானத்தால் போன பிசாசைஏணிவைத்து இறக்கின கதையாகிவிடலாம். அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவவேண்டும் என்கிறசிந்தனை தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒரு வாரம் ஆகியிருக்கும். திடீரென அந்தக் கலைஞனைக் காணவில்லை. அவனுக்கு வேறெங்காவதுஇதைவிட நல்ல ஜாகை வாய்த்திருக்கலாம் அல்லது வேறெங்காவது பரதேசம் புறப்பட்டிருக்கலாம்; தன்கூட்டத்தினருடன் போதை வஸ்த்தின் லாகிரியில் அமிழ்ந்து மீள்வதில் காலம் எடுத்திருக்கலாம் எனஎண்ணிக்கொண்டிருக்கையில் மீண்டும் ஒருநாள் திரும்பவும் வந்தான். அன்றும் இளம் நெல்வயலில்இளங்காற்றடித்ததுபோல இசை நளின அலைகளைக் கொண்டு சுகமான சந்தங்களுடன் குதித்துக்குதித்துப்பரவசப்பட்டது. விமானம் ஒன்று இறங்குவதைப்போல தாழ்சுருதியில் பதிந்துசமதரையைத்தொடுவதுபோல இறங்கிப் பின் திடுப்பெனக் ‘கொங்கோடெ’னச் சிலிர்த்துப்பிளிறிச்செங்கோணத்தில் மேலே எழுந்து உயர்ந்து வித்தாரங்காட்டியது.

 

 

அவன் பசி எடுத்தால்தான் இசைப்பானோ, இல்லை வயிறு நிரம்பியுள்ள குஷியில் இசைப்பானோவென்றுஒன்றுந்தீர்மானமாகச்சொல்ல முடியாது. ஷாம்பேன்போல ஒன்று தொண்டையை நனைக்கப்போதுமாயிருந்தால் போதும். அவனது சக்ஸபோன் குதிகொள்ளும். குளிர் காற்று மிதமாகவீசத்தொடங்கவும் இசைக்குச் சிறிய ஒரு இடைவெளிவிட்டுவிட்டு பெரியதொரு அட்டைப்பெட்டியைமூலைவிட்டமாக வெட்டி அதன் ‘ட’ ஒதுக்கில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைத்துஅலுமினியத்தாளில்சுற்றி வைத்திருந்த ‘கலமாறிஸை’ (கணவாய்மீன் பஜ்ஜி) ‘ஸோஸ்’ ஒன்றில்தொட்டுச்சாப்பிட்டான். பின் ஷாம்பேன். அன்று வழக்கத்தைவிட முன்னதாக ஆரம்பித்திருந்தும்அடிக்கொருதடவை கடந்து செல்லும் தொடருந்துகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாது பாரிஸ் தொடருந்து சென்ற பின்னாலும் வெகுநேரம் இசைவேள்வி நடத்தினான். மீண்டும் ரேவதியின் சாயலில்நிறைய ஏக்கமும், பெற்றோரைத் தவறவிட்டுவிட்ட ஒரு பிள்ளையின் தவிப்பும் கலந்திருந்த ஒருசாஸ்திரீயக் கோர்வையை அனுபவித்து அனுபவித்து வாசித்தான். அடுத்து ‘Lilly was here’. இப்படியாகத்தொடர்ந்தது அவ்விரவு. மறுநாள் மதியம் வரையில் ஒருகாலை வெளியே தொங்கவிட்டபடிதன் தூளியுள் படுத்திருந்தான். பின் எப்போ எழுந்து போனானோ தெரியாது.

 

அவனது இசை கேட்டு ஒருமாதமாவது ஆகியிருக்கும். ஆளை அந்தப்பக்கம் காணவே இல்லை. ஒருநீண்ட சனிக்கிழமை (மாதத்தின் முதலாவது) மாலையில் Ku’Damm Karrie Passage இனுள் அவனைக்கண்டேன். அன்று வியாபாரஸ்தலங்கள் எல்லாம் மாலை 22.00 மணிவரை திறந்திருக்கும்.அதற்குள்ளிருந்த ஒரு மதுவகத்தின் வாசலில் நின்று இவன் தன் சக்ஸபோனைவாசித்துக்கொண்டிருந்தான். அருகில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தொப்பியுள் அவ்விடத்தைக்கடந்துபோவோரும் , அம்மதுவகத்திலிருந்து வெளிப்படுவோரும் காசுகள் போட்டனர்.பரட்டைத்தலையுடன் அநாதைபோல் தென்பட்ட ஒரு பத்துவயதுச்சிறுவன் வத்தகைப் பழக்கீறல் ஒன்றை(தர்ப்பூசணி) நாடியால் தண்ணீர் சொட்டச்சொட்டச் சுவைத்துக்கொண்டு இவன் சக்ஸபோன் வாசிப்பதைவேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கலைஞனோ சேரும் சில்லறையில் கருத்தின்றிக்கண்களைமூடித் தன் சங்கதிகளில் ஒன்றி ஸ்வரப்ரதாபங்களில் உருகியுருகி வாசித்துக்கொண்டிருந்தான்.

 

இந்த Ku’Damm Karrie Passage இனுள் உணவகங்களும், மதுவகங்களும் நிறைந்துள்ளன. அதன்சுற்றுவட்டத்திலும் அநேகம் ஷொப்பிங் மோல்களும் இருப்பதால் அந்த இடம் எப்போதும்ஜனநடமாட்டத்துடன் ஜே’ஜே’ என்றிருக்கும். எனக்கும் மெல்ல வயிற்றைக்கிள்ளவே அங்கிருந்த ‘Imbiss’ஒன்றில் சூடாக உருளைக்கிழங்கு சிப்ஸும் பியரும் வாங்கிக்கொண்டு சீமெந்து பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துஅவனை நானும் ரசித்தேன். Herbert-Von-Karajan இன் சில கற்பனைகளைத் தந்துவிட்டுத் திடுப்பெனச் ‘Sailing’என்ற ஜனரஞ்சகமான றொக் பிட்டுக்கு சுழன்றுவந்தபோது கும்பல் கணிசமாகவே சேர்ந்துவிட்டது. அவன்வாசிப்பில் கிறங்கிப்போவிட்ட சுவைஞர் ஒருவர் பெரிய கிளாஸில் நுரை ததும்ப ததும்ப பியர்வாங்கிவந்து கொடுத்தார். அதில் தொண்டையைக் கொஞ்சம் நனைத்துவிட்டு சில ‘அண்டர்கிரவுண்ட்’இசைச்சித்தர்களுடன் சஞ்சரிக்கலானான். எதுவுமே முன்பொருநாளுந்தான் கேட்டறியாதஇசைக்கோலங்கள். கேட்பவர் அனைவரையும் கிறங்கடித்தான்.

 

 

தெருப்பாடகர்கள், வயலின்வாசிப்போர்களென்று எத்தனையோ வீதிக்கலைஞர்களைச்சந்தித்திருக்கிறேன். சீமான்களது இசை அரங்குகளில் சீமான்கள்போலவே மெட்டாக உடுத்திப்போய்எத்தனையோ சிம்போனிகளைக் கேட்டிருக்கிறேன். இருந்தும் அவனது காயலான்கடை ரக (லுண்டாரக)வாத்தியத்திலிருந்து கிளம்பும் நாதத்தில் தோய்ந்துள்ள மாயலாகிரி எனக்குள் ஏற்படுத்தும்அதிர்வுகளைப்போல் முன்னொரு வாத்தியமும் ஏற்படுத்தியதில்லை. அவனது இசையோடு சேர்ந்துஏதோவொரு அலைவரிசையில் வரும் விபரிக்க முடியாத காந்தக்கதிர்கள் என்னை அவனோடுகட்டிப்போடுகிறது, கிளர்த்துகிறது, பஞ்சாகக்கிளப்பி மேலே மேலே முகில்களோடு மிதக்கவைக்கிறது.

 

வாசித்து நன்றாகவே களைத்தபின்னால் ‘Udo Lindenberg’ இன் ‘Auf wiedersehen’ என்ற மெலோடியை (மீண்டும்சந்திப்போம்) மென்சோகம் தோய்த்து மங்களமாக வாசித்தபோது சுவைஞர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து”தயவுசெய்து மீண்டும் ஒரு முறை ” “மீண்டும்” என்று கேட்கவும் சம்மதித்து மீண்டும் ஒருமுறைவாசித்தான். ‘இத்தனை வித்தகனுக்கு சொந்தமாய் ஒரு கூரை இல்லை’ என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

 

அவனை அன்று பார்த்ததுதான். உயிர்தரித்திருக்க ஒரு மனுஷனுக்குத் தேவையான உணவு, உடை,படுக்கை, சூடான ஒருவதிவிடம் இவற்றைத்தேடி அக்கலைஞன் உலகத்தின் எக்கோடிக்குக்குத்தான்சென்றாலும் பரவாயில்லை என்று மனம் விரும்பினாலும் தினமும் காலையில் எழுந்ததும் கண்கள்அவன் வந்திருக்கிறானா, தூளியுள் தூங்குகிறானா என்றே தேடுகின்றன.

 

அதன் பின் வந்த ஒவ்வொரு வசந்தத்திலும் நிலையத்தின் வளவின் நிற்கும் Gold-regen (தங்கமழையென்றுஅர்த்தம்) மரங்களின் மெலிந்தடர்ந்த நீண்ட கிளைகளின் பொன்மஞ்சள் பூம்பாளைகள் எல்லாம்ஏககாலத்தில் மலர்வதால் பூக்களின் பாரந்தாங்காமல் அவை தலைகீழாக விழுதுகள்போலத்தொங்குகின்றன. கஸ்டானியன் மரங்களும் தவறாமல் பழுத்துத் தம் விதைகளை நிலமெங்கும்இறைத்துவிடுகின்றன. அவனது தூளியும் தோற்பையும் அவனுக்காகக் காத்துக்கொண்டு இன்னும்அங்கேயே இருக்கின்றன. அணிலும் புலுணியும் மேடைகள் பூராவும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன.பாரீஸ் தொடருந்தும் தவறாது 23.05க்குக் கடந்து விடுகிறது.

 

இசை மட்டும் இல்லை.

*

’( காலச்சுவடு’ வெளியீடாக வெளிவந்துள்ள பொ.கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் நினைவுகள்’ நினைவலைகளிலிருந்து ஒரு அத்தியாயம். )

 

காரிடார் இடைவெளி-அத்தியாயம்-6 / சத்தியப்ரியன்

images (78)

 

ஏழு நாளும் ஏழு நிமிடம் கூட இல்லை ஏழு நொடியில் ஓடி போய்விட்டது. என்னவோ ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் இன்று காலையில்தான் வந்திறங்கியது போல ஒரு பிரமை. மனம்விரும்பும் எதுவுமே நடப்பது தெரியாமல் நடந்துவிடுகிறது. புலன்வழி போகக்க்கூடாது என்ற பெரியவர்களின் வேதாந்தம் இதற்குத்தானா? புலன்வழி செல்வது என்றால் என்ன? பெண்களுக்குப் புலன் ஏது? RECEIVING END. மாத்திரை,வளையம்  லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் இருந்தாலும் பிசகினால் வயிறும் இடுப்புமல்லவா பாழ்? புலன்வழி செல்லாதே. யாருக்கு? ஆண்களுக்கு. அது பெண்களுக்குச் சொல்லப்படவில்லை. ஆண்களே தங்களைத் தங்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள இந்தப்புலன்வழி செல்லாமை. கர்ப்பத்தடை கூடாது என்கிறது ஒரு நாடு. ஒழுக்கம் பாழாகிவிடுமாம். யார் ஒழுக்கம் பாழாகும் என்பதுதான் கேள்வி.

போலீஸ் ஸ்டேஷன் டிராமாதான் கடைசியாக போட்ட டிராமா. பஞ்சாயத்து ஹாஸ்டல் ஸ்டே போன்றவை ட்ராமாவின் காட்சிகள். பிள்ளைகளைப் பிரிந்து ஏழுநாள் அஞ்ஞாதவாசம். இன்ஸ்பெக்டர் தடிச்சிதான் காரணம்.நீள அட்வைஸ். அவள் முன்னால் அழுது , வாய்திக்கி,எனக்கு என்மனைவியை விட்டால் கதியில்லை என்று டிராமா ஆடியிருப்பான்.மீண்டும் சேர்ந்திரு என்ற கீதோபதேசம் நாலாபக்கத்திலிருந்தும்.. ஊரிலிருந்துவந்த அம்மா அண்ணன் ஆகியோரின் உபதேசமும் சேர்ந்துகொண்டது. படிப்பு பெண்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்துகிறது என்ற ப்ராஜக்ட் ரிப்போர்ட். யாரும் இவள் பக்கமில்லை என்பது புரிந்தது. திருமணமான பெண்களுக்கு கணவனைத் தவிர கதிமோட்சமில்லை என்பது முகத்திலறைந்தது. கல்லானாலும் கணவன் என்பதன் வேறொரு அர்த்தம் புரிந்தது.யார் சொல்லியும் கேட்காமல் பெட்டிபடுக்கையுடன் ஒருவாரம் ஹாஸ்டல்வாசம். ஊர்முழுவதும்- அவனம்மா பாஷையில் சொல்வதென்றால் புடைவையை வழிச்சிண்டு-சிரிச்சாச்சு. தனிச்சம்பவங்களை நம்பி உருளாத உலகம் வேறுசம்பவங்களில் அச்சின் சுழற்சியை மாற்றிக்கொண்டு சுழன்றது. தனிச்சம்பவங்களால் உலகம் சுழல்வது நிற்கப்போவதில்லை என்பது விளங்கியது. வாழக்கிடைக்கும் நாட்களின் எண்ணிக்கை அரிதாகிப்போனது. பிள்ளைகளின் மிரண்டு போன முகங்கள், அவனுடைய பொய்யான இரைஞ்சல் ( இந்த முறையும் சிறந்த நடிகருக்கான முதல்பரிசு திரு.ராஜாராமன் அவர்களுக்கே வழங்கப் படுகிறது. )

இவற்றில் ஏதோ ஒன்றை நம்பி மீண்டும் சிறைவாசம். கூண்டுக்குள் அடைதல்.

நடுவில் ஒருநாள் கதவுதட்டப்பட்டது. நிழலில்லை.நிஜம்.ரோகிணி வெளியில் கடைவீதிக்கோ உறவினரில்லத்திற்கோ சென்றிருந்தாள். அன்றிரவுதான் ரோகிணி அவளுக்கு நல்லவிலையில் ஒரு நிழற்படம் எடுக்கும் வசதியுடன்கூடிய கைப்பேசியை தனது பரிசுப்பொருளாக வாங்கித்தந்திருந்தாள். ரோகிணிக்கு அவள்கதை முழுவதும் விளங்கியது. அதுதான் காரணமா என்றுதெரியவில்லை. கையில் அந்த கைப்பேசியை வைத்துக் கொண்டு ஆயிரம்யோசனையுடன் சும்மா படுத்துக்கிடக்க வேண்டியதாயிற்று. வெறுமை புரிந்தது. பிடிப்பில்லாமல் இருப்பதன் அசுகம் புரிந்தது.

நிழல் ஆறுநாளும் முயற்சியில் இருந்தது.இலக்கிய அறிவை வெளிப்படுத்தும் முகம். கிடைக்கும் சின்ன இடைவெளியில் தோகையின் மடிப்பை விரித்துஆடும்.ஒருவித அடிக்குரலில் சிரிப்பும் கனிவுமாக ஆன்மிகம் பேசும் முகம்.தோழர்களுக்குக் குரல்கொடுக்கும் ஒரு இடதுமுகம். சொத்துமதிப்பு பட்டியல்போடும் ஒருவலதுமுகம். பெண்விடுதலை முழங்கும்ஒருமுகம். வாயே திறவாமல் ஆடும் மயிலின் தோகைவிரிப்பை ரசிப்பது நீலத்திற்குப் பிடித்திருந்தது. பகுத்தாராய்ந்து புள்ளிவிவரங்களுடன் மயக்கும் குரலில் பேசும்பொழுது எங்கே அசைந்துவிடுமோ என்று பயமேற்பட்டது. நிஜமே அசைக்கமுடியவில்லை நிழல் என்னசெய்துவிடும் என்ற தைரியம்.அறிவுரை,நட்புரை,இளகிய உரைஇவையெல்லாம் பொதுவானவை. ஜாதகம் பார்ப்பது மாதிரி. பொதுவானபலன்.எதிர்பாராத பணவரவு; குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவும்.

மீறினாலும் மீறவில்லை என்றாலும் அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. நெருப்பில் குதித்துக் கொண்டிருந்த பெண்களை தடுத்த ராஜாராம் மோகன்ராய்களாலும், மண்ணுக்குள்ளே சிலமூடர் நல்லமாதர் அறிவைக் கெடுத்தார் என்றுமுழங்கிய பாரதியும் குடும்பம் என்ற அமைப்பில் பெண்கள்தான் சமரசம் செய்துகொள்ள நேர்வதை எதிர்க்க முடிந்ததா? நிழலின் தோகை இவள்முன்னால் முற்றிலும் விரியாமல் போனது. இருப்பினும் அது விக்கிரமாதித்தியனின் தோகை போல. விரிந்து ஆடியபடியே இருந்தது.ஆறுநாளும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி தோகை ஆடியவண்ணம் இருந்தது.எந்த நேரமும் கதவு தட்டப்படலாம் என்று நினைத்திருந்த அவளுக்கு கதவு திறக்க அலுப்பாகி ஐந்தாறு நிமிடம் கழித்துதான் எழச் சொன்னது.

நிழலென நினைத்து கதவுதிறந்தால் அங்கே நிஜம். நீலம் விலகி சுவரோடு நின்றாள். மற்றவர்கள் எதிரில் அவள் எதிர்கொள்ளும் அவன் முகத்திற்கும் தனிமையில் அவள் சந்திக்கநேரிடும் முகத்திற்கும் நிறையவேறுபாடு இருக்கும். சீறும் பாம்பின் படம். அழகு மற்றவர்க்கு. சீற்றம் மட்டும் இவளுக்கு.

உள்ளே போனவன் வார்ட்ரோப் கதவைத் திறந்து பார்த்தான். பர்ஸ் விழுந்தது போல பாவித்து கட்டிலுக்கடியில் குனிந்து பார்த்தான்.குளியலறையின் கதவைத் தட்டிக் காண்பித்தாள் நீலம். அவன் செய்கைக்கு அவள் பதில். அவனும் அசரவில்லை. “ பாத்ரூம்போகணும். உள்ள யாருமில்லையே? “

“ என் ரூம்மேட் ஒருநாள் முன்னாடியே பெர்மிஷனில் போயிட்டா” என்று கடைசிச்சொல்லை அழுத்தி உச்சரித்தாள்.எவ்வளவு சொல்லாடல்.

“ நீ என்னிக்கு கிளம்பற? “

“ சனிக்கிழமையோட பயிற்சி முடியுது. இரவு ஒரு கெட்-டுகெதர் பார்ட்டி இருக்கு. நான் ஞாயித்துக்கிழமை ரெண்டுமணி வண்டியில் வர்றேன். “

கெட்-டுகெதர் எதுவுமில்லை. ஓர்இரவுச் சுதந்திரம். அனைவருக்குமே சனிக்கிழமை பெட்டிதூக்கல்தான். இருப்பின்சுவடு எதுவுமில்லாமல் ஓடிபோய்விடலாம்.ஊரூராக சுற்றிக்கொண்டு காற்றைப்போல, பறவையைப்போல நிம்மதியாக இருக்கலாம்.  சீரில்லாமல் மேலும் கீழும் ஏறியிறங்கும் சுவாசம் என்றாவது நிலைப்படாதா?

அவனிடம் எதற்காக என்னுடைய பணிநிமித்தம் உள்ள இடங்களுக்கு வந்தாய் என்று கேட்க முடியாது. இது போன்று வேவுபார்க்கும் வேலைகள் நிறைய நிகழ்ந்துள்ளன. அவன் கடைவிரிக்கப்போகும் பொய்களை வாங்க அவள் தயாராக இல்லை. ஏற்றுக் கொள்ளுதல் வாழ்க்கை. யார் யாரை ஏற்றுக்கொள்ளுதல் என்பதில்தான் சிக்கல்.அவனுடைய பொய்களை இவளே கற்பிதம் செய்துகொள்ளலாம்.ரெமிட்டன்சுக்காக சென்னை வந்தேன். மண்டலஅ ளவிலான யூனியன் மாநாடு.இது மாதிரி ஒரு பொய்க்காரணம். நிஜமாக சொல்வதென்றால் என் பிடியிலிருந்து நழுவிப்போன உன் கற்பின் திண்மையை பரிசோதிக்க என்றுதான் இருக்கவேண்டும்.கற்பென்பது வெறும் வெற்றுடல் சேர்க்கை தொடர்புடையதன்று. ஓர் ஆண்மகனுடன் ஒரே கூரையின் கீழ் வாழ்வது. ஓர் ஆண்மகனின் குடும்பத்தில் உழல்வது; பாரம்பரியமும் கலாச்சாரமும் மிக்க ஒரு சமுதாயத்தின் சுவர்களில் முட்டிக்கொள்ளாமல் பயணிப்பது.கோகிலாவின் வார்த்தைகளிலிருந்த அர்த்தம் புரிவது போலிருந்தது. எதிர்ப்பதில் பிரயோஜனமில்லை என்றாலும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.எதிர்ப்பைக் காட்டாமலும் இருக்க முடியவில்லை.

இவள் கற்பிற்கு அக்மார்க் முத்திரையில் பங்கமெதுவும் இல்லைஎன்பதை புரிந்துகொண்ட நிஜம் கிளம்பிப் போய்விட்டது. வெறித்தனமான உடற்சேர்க்கையை  முடித்துக்கொண்டு கிளம்பிப் போனது. சுயவிளக்கம், வார்த்தைஜாலம், எள்ளல் என்று பல்வேறு பரிமாணங்கள். உடற்சேர்க்கை ஆதிகாலம் தொட்டே பாவச்செயலாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. பந்தம்,தாம்பத்யம் போன்றவை இந்தப்பாவத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட குற்றவுணர்வுகள்தாம் . பயத்தையும் குற்ற உணர்வினையும் மட்டுமே ஏற்படுத்தும் கற்பும்,கடவுள் நம்பிக்கையும் இன்னும் எத்தனை நாட்கள்தாம் தொடரப்போகின்றனவோ?

காலம்,சூழல் எதுவுமே தெரியா மயக்க நிலை.நாளை மதியம் வந்துசேர் என்ற ஆணையுடன் சுவாமி புறப்பாடு.

மக்கி உளுத்து வருவதாக நினைப்பு.எழுந்து நின்றால் நிற்க்முடியாமல் உளுத்துப்போன மரக்கட்டை போல பொலபொலவென பொடியாக உதிந்துவிடுவோமோ என்ற அச்சம்.. தனிமை,கையறுநிலை,ஆவேச நினைவு,அது தரும் உபாதை.தன்னை முற்றிலும் மனச்சிதைவுக்கு ஆளாக்காமல் தடுத்து வைத்திருப்பது எதுவெனத் தெரியவில்லை.

“நீலம் நீலம் நீலம் “

கிணற்றின் அடியிளிருந்து கிளம்பியதைப் போல முனகலான விளி ஒன்று சுவர்களில் முட்டிமோதி சுழன்று எதிரொலித்து காதுகளில் மெலிதாக இறங்கியது.

“ நீலாம்பாள். “

நிழலின் குரல். ஒரு புனித ஆயரின் கருணையை முகத்தில் ஏற்றியபடி நிழலின் அசைவு. ஒளி ஊடுருவாமல் போகும்பொழுதே பொருள்களின் உருவம் கண்ணுக்குப் புனலாகிறது என்பது விஞ்ஞானம். ஒளி ஊடுருவும் பொருட்களுக்கு நிழலற்றதன்மை இருக்கவேண்டும் அன்றோ? அப்படிப்பட்ட பொருட்களைக் கண்டறியும் புலன் மனித உயிர்களுக்கு உள்ளதா?

நீலம் ஒளிஅடர்த்திகூடிய விளக்கை எரியவிட்டாள். மேசை ,நாற்காலி, ஜன்னல், கம்பிகள்,வார்ட்ரோப்,கட்டில் ஆகியவற்றின் நிழல் தரையில் படர்ந்தன. நிழலின் நிழல் கட்டில்மேல் படர்ந்தது. அதன் அதீத உரிமை எடுத்துக்கொள்ளும்தன்மை நீலத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்ததால் அதிக ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. நீலம் தன்னிச்சியாக கட்டிலின் ஓரத்தில் எழுந்துசெல்ல வசதியாக அமர்ந்துகொண்டாள். நியான்விளக்கின் அடர்த்தியான ஒளி கண்களை உறுத்தியது. நிழல் அசைந்து விளக்கினடியில் அமர்ந்து குடைபிடித்தது.

“ உங்கள் கணவர் என்னை சந்தித்தார். “என்றது நிழல்.

நீலம் நிழலைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.

“ பயிற்சி முடிந்து கெட்—டுகெதர் போன்ற சம்பிரதாயங்களுண்டா என்று கேட்டார் “

“நீங்க என்ன சொன்னீங்க? “ நீலம் விளையாட்டில் புகுந்துகொண்டாள்.

“ இன்று இரவு இருக்கிறது. இது இந்த பயிற்சி மையத்தின் சொல்லப்படாத விதி என்றேன் “

“ அதற்கு மிஸ்டர் ராஜாராமன் ஒண்ணும் சொல்லலியா? “

“ குடும்பப்பெண்களுக்கு இதுபோன்ற கெட்—டுகெதர் தேவையா என்றார்”

“ பதிலுக்கு நீங்க என்ன சொன்னீங்க? “

“ குடும்ப ஆண்களுக்கு இருக்கலாம் என்றால் குடும்பப்பெண்களுக்கு இருப்பதில் என்ன தப்பு என்றேன்? ஹா ஹா” சொல்லிவிட்டு தான் சொன்னதை ஹாஸ்யம் என்று நம்பி நிழல் தானே சிரித்துக் கொண்டது. ஆண்களின் நிழல் நிஜம் எல்லாவற்றிற்கும் ஒரேமுகம்தான். ஊடுருவுதல் ஒளியின்தன்மை என்றால் ஊடுருவப்படாமலிருப்பது பொருளின் தன்மையாகிறது.

“ உங்கள் கணவர் ரொம்ப பொசஸிவ்வா? “ என்று நிழல் அடுத்தநிலைக்கு ஊடுருவியது. ஒளியின்ஊடுருவலை பாதி அனுமதித்து பாதியை தடுத்துவிட்டால் புலன்சார் உலகில் அந்தப் பொருளின் ஊடுருவல் எப்படி இருக்கும்?

“ சந்தேகப்பேர்வழியாங்கிறதை ரொம்ப பாலிஷா கேட்கறீங்க போல? “ என்று அவளும் ஊடுருவத்தொடங்கினாள்.

நீலத்திற்கு கோகிலாவை வழிமறித்த வாட்ச்மேன் முகம் நினைவில் மின்னிமறைந்தது.வண்டி வண்டியாக பெண்களுக்குப் பரிந்து எழுதும் பலகோடி ஆண்எழுத்தாளர்களின் முகங்கள் மின்னி மறைந்தன. எத்தனை சீரியல்கள் எத்தனை படங்கள் எத்தனை நாவல்கள். நான்குபக்கமும் அடிக்கப்பட்ட சுவர்களில் பெண்ணுரிமைக்காகப் பரிந்து எழுதும் ஆண் சிந்தனையாளர்கள் எழுப்பிய சாளரங்கள் எத்தனை. சுவர் முழுக்க சாளரங்கள் என்றாலும் கூட சுவர் இடியாமல் பாதுகாக்க எத்தனை முயற்சிகள்.

கட்டிலைப்பிளந்து விஸ்வரூபம் எடுத்ததுபோல ராஜாராம் சிரிக்கிறான். உடலெங்கும் விதவிதமான அங்கிகள், குகை எழுத்துக்கள், பனையோலை எழுத்துக்கள், மணிப்பிரவாளம் சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், வங்கம், மலையாளம், தெலுங்கு,உருது,பிரெஞ்சு,ஜெர்மனி,ருஷ்யா என்ற பன்மொழி எழுத்துக்கள் அடங்கிய அவனது அங்கியில் பல்வேறு அறிஞர்கள் அமர்ந்திருந்தனர். வியாசர்,பிளாட்டோ,அரிஸ்டாட்டில்,ஆதிசங்கரர்,காளிதாசர்,ஷேக்ஸ்பியர்,  பைரன், ஷெல்லி,தாகூர்,,கம்பர்,பாரதியார்,கண்ணதாசன்,புதுமைபித்தன், என பலரும் அமர்ந்திருந்தனர்.

அந்நியமாதல் நிகழ நிகழ சூழல் மாறிக்கொண்டே வந்தது. நிழலின் பிதற்றல் காதில் விழும்; மறையும். சுயமற்றதனமையை அறிய ஆடும் கண்ணாமூச்சி இது. சுயமற்றதனமையை அடைய உடல் என்பது கடக்கப் படவேண்டும். உடல் தாண்டி சிந்திப்பது என்பதுகூட ஆணியல் சிந்தனை.

நீலம் வேகமாக எழுந்து நின்றாள். நிழல் உடலெல்லாம் வாயாகமாறிப் பேசியவண்ணமிருந்தது.

“ மீட்சி என்பது நிகழவேண்டுமேன்றால் சில எல்லைகளைத்தான்டாமல் முடியாது. “ என்றாள்.

“ சுயவிடுதலை என்றுகூட சொல்லலாம். “ நிழல் கணிதநோட்டு புத்தகத்தை ஆசிரியரிடம் காட்டும் மாணவனைப் போல பேசியது.

நீலம் மிகத் தீர்மானமான குரலில்பேச ஆரம்பித்தாள்.

“ அவனுடைய அராஜக ஆண்மையை என்னால் வீழ்த்தவே முடியவில்லை. காலத்தின் நீட்சி,ஆதிக்கத்தின் நீட்சி, கலாசாரத்தின் நீட்சி, குற்ற்வுணர்வின் நீட்சி,மனஅழுத்தத்தின் நீட்சி,சௌகரியங்களின் நீட்சி போன்ற இன்னபிறவற்றின் நீட்சிதான் அவன். வீழ்த்துவது என்பது வெறும் எதிர்ப்புக்குரல் எழுப்புவதோ கோஷம்போடுவதோ இல்லை. எல்லைதாண்டுவது, மீறிச்செயல்படுவது வன்முறையில் இறங்குவது போன்றவைகூட ஒரு பயங்கரவாதத்திலிருந்து இன்னொரு பயங்கரவாதத்திற்குத் தாவுவதுதான். பொதுவிடுதலை என்பதலிருந்து இது சிலநேரம் தனிவிடுதலையில் கொண்டுவிட்டுவிடும். தற்சமயம் என்னளவில் எனக்கு ஒரு மாற்றம் நிகழவேண்டுமேன்றால் தனிவிடுதலையைத் தவிர வேறு வழி தெரியவில்லை.” நிறுத்திவிட்டு நிழலின் முகத்தைப்பார்த்தாள்.

நிழல் கொஞ்சம் தடுமாறிப்போயிருந்தது. மறுபடியும் ஒருமுறை விளக்கச் சொல்லிக்கேட்டுக் கொண்டது.

“ நான் உன்னுடன் சேர்ந்திருக்க சம்மதிக்கிறேன்.ஆனால் அப்படி ஒரு கோலத்தில் நாமிருவரும் இருப்பது போன்ற நிழற்படம் ஒன்றை இதோ இந்த புதிய கைப்பேசியில் பதிவு பண்ணவேண்டும் . சம்மதமா? “என்றாள் ஆங்கிலத்தில்.ஆங்கிலத்தில் சொல்வது எவ்வளவு தன்னம்பிக்கையைத் தருகிறது. ஜெயகாந்தன் நினைவுக்கு வந்தார்.

நிழல் நிழலற்றதாகிப் போனது.

“ ஏன் நிழற்பட சாட்சி? “ என்றது. நிழலுக்கும் வியர்த்தது.

“ அவனுடைய ஒழுக்கக்கோட்பாட்டில் நான் அந்நிய ஆடவனுடன் ஏற்படுத்திக் கொள்ளும் கள்ளத்தொடர்பின் நிரூபணமே அவனிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ள நானெடுக்கப்போகும் கடைசி முயற்சி இது முயற்சிதான். இதிலும் அவனே வெற்றிபெற்று தன் பிடியை மேலும் இருக்குவானா என்று தெரியாது.”

“இதன் மூலம் அவன் உன்னைக்கொல்ல முயன்றால்? “

“ கொலை என்னிக்குமே தீர்வு கிடையாது.அது அவனுக்குத் தெரியும்.”

“நிழற்படம் வேண்டாம் உன் மன ஆறுதலுக்குக் கொஞ்சநேரம் உல்லாசமாக இருப்போம் “ என்று வேறு ஒரு தோகையை நிழல் ஆட்ட முயற்சித்தது.

“ பாலியல் தேவைக்காக நான் உன்னுடன் படுக்க சம்மதிக்கவில்லை. இது மிக உச்சமான வேதனை. அவன் எனக்குப் போட்டுவைத்துள்ள தாண்ட முடியாத கோடுகளில் இதுவும் ஒன்று என நினைக்கிறான். இதைத்தாண்டுவதன் மூலம் அவனுடைய பிடிதளருமா என்று பார்க்கிறேன். நான் எல்லா முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். அவன் பிடியிளகவில்லை. என்னை சிறுமைப்படுத்திகொண்டுதான் அவன் பிடியைத் தளர்த்தவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளபட்டுள்ளேன். நான் சொன்னதற்கு சம்மதித்தால் வருகிறேன் “ என்றாள்.இதைச் சொல்லும்பொழுது அவள்முகம் சிறுமைப்பட்டுத் தோன்றியது.

நிழல் வேறு என்னனவோ தேவையில்லாதவற்றைப் பேசியது. நீலத்தின் முடிவில் மாற்றமில்லைஎன்பது தெரிந்தபொழுது நிழலின் அனைத்து தோகைகளும் கீழே உதிர்ந்து வெறும் நரம்புகளுடன் நிழல் நின்றது. நிழல் முடிவாக தனது ஆகிருதியை சுருக்கிக்கொண்டு சாக்கடையில் ஓடிமறையும் பெருச்சாளியைப் போல காரிடார் இடைவெளியைக் கடந்து தனது  அறைப்பொந்துக்குள் ஓடிமறைந்தது.

 

கடக்கபடவேண்டிய  பயணத்தின் நீளம் அதிகமிருந்ததால்  வெறும் ஐந்தடி தூரமே  இடைவெளியுள்ள அந்த இரண்டு  எதிரெதிர் அறைகளின் நடுவிலிருந்த  காரிடார் இடைவெளி நீலம்  போன்ற பெண்களுக்குக் கடக்கமுடியாததாகவே  இருந்தது.

 

பையன் கதைகள் 3. ( திக்விஜயம் ) மலையாளத்தில் : வி.கெ.என். தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா  

images (80)

அமெரிக்காவில் ஸிராக்யூஸ் நகரத்தில் நடந்த புத்தக செமினாரில் இந்தியாவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட இரண்டு பிரபலங்கள்:

இட்டூப்பு முதலாளியும் பையனும்.

ஆங்கிலத்தை சரளமாகக் கையாள முடியும் என்கிற குறைபாடு பையனுக்கு இருந்தது. கருவூலத்தில் கிட்டத்தட்ட இருபது இங்கிலீஷ் சொற்களை மூலதனமாக வைத்திருக்கும் இட்டூப்புக்கு எதுவும் பிரச்னையேயில்லை. கருத்துப் பரிமாற்றம் சுலபமாக நடந்தது. அவர் எங்கேயும் பிரகாசித்தார். தனித்துத் தெரிந்தார். கமிட்டிக் கூட்டங்களிலும் குழு விவாதங்களிலும் ஆராய்ச்சிக் குழுவிலும் பிரசங்க மேடையிலும் கலக்கித் தள்ளினார். தலைவரின் வாய்ச்சாதுர்யத்துக்கு முன்னால் செமினார் பலமுறை ஸ்தம்பித்து நின்றது.

என்ஜாய் என்கிற புதிய பதத்தையே அவர் அமெரிக்காவுக்குக் கொண்டு போயிருந்தார்.

புத்தக விற்பனையின் டெக்னிக்குகளை விவாதிக்கிற செஷனில் பேச இந்தியப் பிரதிநிதிகளை சேர்மேன் அழைத்தார். இட்டூப்பு ரகசியமாகப் பையனிடம் கேட்டார்:

நீ பேசறியாடா?

பையன் சொன்னான்: வேண்டாம்.

இட்டூப்பு எழுந்தார்.

மி வாண்ட் ஸ்பீக். (நான் பேச விரும்புகிறேன்.)

உலகெங்குமிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் இந்தியக் கதாபாத்திரத்தை ஆர்வமாய்ப் பார்த்தார்கள். இட்டூப்பு வெள்ளமாகப் பிரசங்கித்தார்:

சேல்ஸ்-பெஸ்ட்-லைப்ரரி சீசன்-ஸ்கூல் சீசன்-ஃபிஃப்டி கமிஷன்-சேல் அன்ட் என்ஜாய்.

ஆழமான இந்தச் சொற்பொழிவின் பொருளை ஓரளவு இவ்வாறு தொகுக்கலாம்:

புத்தகம் விற்பதற்கு சிறந்த காலம் லைப்ரரிக்காரர்கள் மார்க்கெட்டுக்கு வருகிற சீசனும், பள்ளிகள் திறக்கும் காலமும்தான். இந்தக் காலத்தில் கொஞ்சமும் நேரத்தை வீணாக்காமல் பரபரப்பாய் விற்று லாபம் சம்பாதியுங்கள். ஐம்பது சதவீதம்கூட கமிஷன் கொடுக்கலாம். (குறிப்பு: என்ஜாய் என்றவார்த்தை இங்கே லாபம் என்று பொருள்படும்.)

இட்டூப்பு வார்த்தைகளை நேராகவும் தலைகீழாய்த் திருப்பியும் பிரயோகித்தார். புத்தகத்தை உயர்த்திக் காண்பித்தார். விற்பதைப் போல் அபிநயம் பிடித்தார். காசு வாங்கி பாக்கெட்டில் போடுகிற விதத்தையும் காண்பித்தார். சொற்பொழிவு முடிந்தபோது அரங்கில் கரகோஷம்.

இட்டூப்பு பையனிடம் கேட்டார்: எப்டிடா இருந்துச்சு?

பையன் சொன்னான்: நீ கலக்கிட்டே.

அப்ப நீ ஏறிப் பேசீருக்க வேண்டீதுதானேடா?

பையன் சொன்னான்: நீ இருக்கும்போது நான் சோபிக்க மாட்டேன்.

மாலை நேர செஷன் முடிந்தபோது செமினாரே பிரவாகமாக வந்து இட்டூப்பை மூடியது. மஹாராஜாக்களுடைய, மணிநாகங்களுடைய, அரைகுறை ஆங்கிலம் பேசுபவர்களின் நாடான இந்தியாவிலிருந்து வந்த இட்டூப்பை அவர்கள் வாரியெடுத்துக் கொண்டார்கள்.

அவருடைய கையைக் குலக்கி, தோளில் தட்டி, கையெழுத்து வாங்கினார்கள். டின்னருக்கும் லஞ்சுக்கும் காக்டெய்லுக்கும் அவரை அழைத்தார்கள். அல்லோ, அல்லோ என்றும் என்ஜாய் என்ஜாய் என்றும் இட்டூப்பு கூவினார்.

(இங்கே அல்லோ (ஹலோ) என்பதற்கு சந்தோஷம் என்பதும் என்ஜாய் என்பதற்கு அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பதும் பதவுரை.)

டி.எஸ். எலியட்டின் கவிதைகளைப் பற்றி டைம்ஸ் லிட்டரரி சப்ளிமென்டில் கட்டுரை எழுதிய பையன் இந்த நேரம் முழுவதும் ஃபோயரின் ஒரு மூலையில் சப்ளீஸாக நின்றுகொண்டிருந்தான்.

கூட்டம் கலையத் துவங்கியபோது இட்டூப்பு பையனைத் தேடி வந்தார்.

நீயேண்டா மூலையில வந்து நிக்கறே?

பையன் சொன்னான்: ஒண்ணுமில்ல.

ஒன் மூஞ்சியேண்டா சோந்துபோயிருக்கு?

பசிக்குது.

இட்டூப்பு சொன்னார்: வாடா. ம்ம ஓட்டலுக்குப் போயி கொஞ்சம் கஷாயமும் எறச்சியும் அடிக்கலாம்.

பையன் எதிர்ப்பைத் தெரிவித்தான்: அதெப்படி? ஏழு மணிக்கு ஹவாய் ஹோட்டல்ல காக்டெய்லுக்கு வர்றதா பஹாமாஸ் க்ரூப்கிட்ட நீ சொன்னதை கேட்டேனே?

இட்டூப்பு சொன்னார்: டே, நீ, இங்கிலிசு பேசி இங்கயே கெட. இவனுக கூட குடிச்சா நம்முளுக்கெல்லாம் என்னடா ஏறும்?

அப்ப நீ போகலியா?

இட்டூப்பு பையனின் கையைப் பிடித்து இழுத்தார்: நீயி வாடா. ம்ம ஓட்டலுக்குப் போலாம்.

வசந்த காலம். பனியும் கொடுங்குளிரும். இரவு விரைவாகவே வந்தது. அறையின் சாவிகளை வைத்திருந்த ஹோட்டல் பெண் குட்நைட் வெல்கம் எல்லாம் கூறியபடி சாவிகளை நீட்டினாள்.

இட்டூப்பு பையனிடம் கேட்டார்: குட்டி எப்டிடா?

பையன் சொன்னான்: சரக்கெல்லாம் இல்ல.

அவனின் அறிவுப்பு சரிதான். ஒரு சராசரி அமெரிக்கப் பெண். செம்பட்டை முடி. வெள்ளைத் தோல். தோலின் மேல் கறுப்புப் புள்ளிகள். மொத்தமாக அவளிடம் அனுகூலமாயிருந்தது அவளுடைய வயசு மட்டுமே. இருபது வசந்தங்களுக்கு மேல் போகாது. அப்படிப் போனால், பையன் நினைத்துக் கொண்டான்: அப்புறம் வசந்தங்களுக்கே அர்த்தமில்லை.

சாவியை வாங்கி எதிரில் லாபியிலிருந்த சோஃபாவில் அமர்ந்த பிறகு இட்டூப்பு கேட்டார்: ஒனக்கு குட்டிய பிடிக்கல, இல்லடா?

பையன் உணர்த்தினான்: அவ்வளவொண்ணும் நல்லாயில்ல.

இருந்தாலும், நம்முளுக்கு ஒராளு வேணுமில்லடா?
எதுக்கு?

குளுருதில்லடா?

என்ன குளிரு? ஏர் கண்டிஷன் செஞ்ச ஹோட்டல்ல மிதசீதோஷ்ண நிலைதானே?

இட்டூப்பு கோபித்தார்: டேய், நீயி சாகித்தியம் பேசினேன்னு வச்சுக்கோ! மித சீதோஷ்ணத்தில தனியாப் போத்திட்டுப் படுத்துக்கறதுக்காடா இம்மாந் தூரம் வந்திருக்கோம்?

வேறென்ன வேணும்?

குட்டிகிட்ட போயி கேளுடா.

பையன் சிரித்தான்: நீ கேட்டாலே போதும்.

இட்டூப்பு எழுந்தார்: ஒனக்கு தகிரியம் பத்தாதுடா, வா.

பாருக்குப் போனார்கள். இட்டூப்பு இரண்டு பேர்பன் விஸ்கியும் இரண்டு கிலோகிராம் பன்றியிறைச்சியும் அடித்தார். பையன் இரண்டு விஸ்கியும் ஐநூறு கிராம் வாத்துமுட்டையும்.

இட்டூப்பு கேட்டார்: கிளம்பலாமாடா?

மீண்டும் லாபியையே வந்தடைந்தார்கள்.

பையன் சொன்னான்: நீ போகாம இருந்தது சரியில்ல. பஹாமாக்காரங்க உன்னை எதிர்பார்த்து நின்னுட்டிருப்பாங்க.

சாவிக் கவுன்ட்டரிலிருந்த பெண்ணின் மேல் கவனத்தைத் திருப்பி இட்டூப்பு சொன்னார்: அதுககிட்டப் போயி வேலயப் பாக்கச் சொல்லுடா.

பையன் சொன்னான்: சரி, ரூமுக்குப் போலாம்.

இட்டூப்பு கேட்டார்: ஒன்னால கேக்க முடியுமாடா?

யாருகிட்ட?

அந்தக் குட்டிகிட்ட.

முடியாது.

இட்டூப்பு சொன்னார்: அப்டின்னா, நாங்களே கேட்டுக்கறோம்.

பையன் தடுத்தான்: வேண்டா, இட்டூப்பு!

போடா!

இட்டூப்பு கவுன்டரை நோக்கி நடந்தார். அந்தப் பெண் சிரித்தபடி முன்னால் வந்தபோது தொண்டையைக் கனைத்துக் கொண்டு கெஞ்சுகிற குரலில் சொன்னார்:

சிஸ்டர் – இந்தியா ஹாட் – அமெரிக்கா கோல்ட் – வாண்ட் கம்பெனி – ஐ பே – ரூம் 635 – யெஸ் – கம் – நோ – சாரி.

கீர்த்தனைமாலையின் பரிபாஷை:
சகோதரீ, இந்தியா சூடான தேசம். அமெரிக்காவோ குளிர் தேசம். எனக்கு துணை தேவைப்படுகிறது. பணம் தருகிறேன். என்னுடைய ரூம்நம்பர் 635. சம்மதமென்றால் வாருங்கள். இல்லையென்றால் மன்னித்து விடுங்கள்.

பையன் விழித்து நிற்கையில் அந்தப் பெண் கன்னங்களில் மத்தாப்பூ பூக்க சிரித்து நாக்குக்குள் இட்டு உருட்டி விழுங்கும் அமெரிக்கன் ஆங்கிலத்தில் கேட்டாள்:

வை வோன்ட் யூ கால் மி ஆஃப்டர் எய்ட், படீ?

இட்டூப்பு கெஞ்சும் குரலில் பையனிடம் கேட்டார்: என்னடா சொல்லுது குட்டீ?

பையன் சொன்னான்:

எட்டு மணிக்கப்புறம் அவளைக் கூப்டறதாம்.

இட்டூப்பு தலை வணங்கி அவளைத் தொழுதார். (நான் கூப்டறேன்.)

எட்டரை மணியளவில் பையன் தன் அறையில் மாலை நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் ஒலித்தது. இட்டூப்பு!

டேய்…

என்ன?

குட்டி வந்திருக்குடா.

நல்லது.

வாடா.

நான் வரல.

உனக்கு வேண்டாமா?

வேண்டா.

ஏண்டா?

பையன் சொன்னான்:

பொறாமை.

****

பதில் கிடைத்தது ( சிறுவர் கதை ) ஷண்முகநாதன் ஸ்வாமிநாதன்.

images (79)

 

அந்த பிள்ளையார் கோவிலுக்கு பெரிய மவுசெல்லாம் இல்லை. பரிட்சை சமயத்தில் மட்டும், சில குட்டி பையன்கள் வந்து போவார்கள். லீவு விட்டால், அதுவும் போச்சு..! பக்தி பழமெல்லாம் பம்பரம் ஆட போய் விடும்.

 

சதாசிவத்தின் கதை வேறு மாதிரி. ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் ஆஜராகி விடுவார். அப்புறம், நெய் தீபம் போடுகிற கடமை என்னாவது..?

 

இந்த பழக்கமெல்லாம் அவருக்கு முப்பது வருஷத்து பழசு. கல்யாணம் ஆன கையோடு, மனைவி ஆரம்பித்து வைத்தது.

 

‘ இதையெல்லாம் எதற்கு செய்கிறேன் ..?’

 

கோவிலுக்குள் நுழைகிற போதே, யோசிக்க ஆரம்பித்தார்.

 

மனைவி இருந்த வரைக்கும், இந்த மாதிரி கேள்வியெல்லாம் அவரிடம் இல்லை. தனி ஆள் ஆனதும்தான், ஆராய்ச்சி அதிகமாகி விட்டது.

 

குழப்பத்தோடவே நெய் தீபத்தை ஏற்றினார். மெதுவாக வெளியே வந்தவர், அங்கிருந்த எலி விக்ரகத்தை உற்று பார்த்தார்.

 

நேருக்கு நேராய் பிள்ளையாரை பார்க்கிற அதன் கண்களில்தான் எத்தனை பக்தி..? ஓடி போய், எஜமானருடன் ஒட்ட போகிற மாதிரி அப்படி ஒரு பாவனை.

 

‘ ஹூம்…! உனக்கெல்லாம் கூட துணை கேட்குது..!’

 

சிரித்து கொண்டே திரும்புகிற போதுதான், அதை கவனித்தார்.

 

முதலில் பார்ப்பதற்கு, கசங்கின துணி மாதிரிதான் தெரிந்தது. எங்கேனும் காரிலோ, லாரியிலோ மாட்டியிருக்க வேண்டும். அதன் பின் பாதி உடம்பு நசுங்கி நாராகியிருந்தது.

 

அந்த பரிதாப நிலையிலும், போராட்டத்தை அது கை விடுவதாய் இல்லை. ஒரு குப்பை தொட்டியிடம் மெதுவாக ஊர்ந்து போய், எச்சில் இலைகளை தேடி கொண்டிருந்தது.

 

சதாசிவத்தால் அதை பார்க்கவே முடிய வில்லை. காரணம் தெரியாமலேயே, ஆத்திரம் பொங்கியது.

 

‘ இந்த சனியனெல்லாம் வாழ்ந்து என்னாகிறது..? இதெல்லாம் எதற்குதான் பிறந்ததோ..? ‘

 

திடீரென்று அவருடைய கோபம் பரிவாக மாறியது. சில ரொட்டிகளை வாங்கி, அது இருந்த திசையில் வீசினார்.

 

எத்தனை நாள் பட்டினியோ..? அந்த அகோர பசியிலும் கூட, அவரை பார்த்து கொண்டேதான் சாப்பிட்டது. அதனுடைய கண்களில் நீர் வடிந்த மாதிரி கூட தோன்றியது.

 

‘இந்த நாய் இங்குதான் இருக்கிறதா..? இத்தனை நாள் பார்த்ததில்லையே..?’

 

குழாயடியில் இருந்த கிழவியை கேட்டார்.

 

‘கொஞ்ச நாளாகவே இங்குதான் திரிகிறது. ரொம்ப நல்ல நாய் ஐயா ! நீங்கள் கூட்டி போக போகிறீர்களா?’

 

‘இல்லையம்மா ! பார்த்து கொள்ள ஆளில்லை ! ‘

 

தலையை குனிந்து கொண்டே பதில் சொன்னவர், நாயை இன்னொரு முறை ஊன்றி பார்த்தார். உடனே பரிதாபம் மறைந்து, ஆத்திரம் பொங்கியது.

 

‘பார்த்து கொள்ள ஆள் இருந்தால் மட்டும்..? ஒரு சப்பாணி நாயை கட்டி கொண்டு அழ, எனக்கென்ன பைத்தியமா…?’

 

தனக்குள்ளே பேசி கொண்டவர், உடனே மனைவியை நினைத்தார்.

 

அவளுக்குதான் நாயென்றால் கொள்ளை ஆசை. இவரிடமும் கூட எத்தனையோ முறை வேண்டியிருக்கிறாள்.

 

‘ஏங்க..! எனக்குதான் பிள்ளை குட்டி இல்லைன்னு ஆயிடுச்சு..! ஒரு நாயாவது வளர்க்கிறேனே..? நீங்க ஆபீஸுக்கு போனதும் தனிமை கொல்லுது..!’

 

‘ ஏன் வளர்க்க மாட்டே..? நாய்க்கு சேவை பண்றதுக்கு பிறவி எடுத்திருக்கோம் பாரு..!’

 

‘பிறகு எதுக்குதான் பிறவி எடுத்திருக்கோம் சொல்லுங்க..!’

 

மனைவி சலிக்கிற போதெல்லாம், சதாசிவத்துக்கு பகீரென்றிருக்கும். அவருக்கு எப்பவுமே விடை தெரியாத கேள்வி அது.

 

மெதுவாக வீட்டை நெருங்கின போது, எதிர் வீட்டிலிருந்து டாக்டர் கிளம்பி கொண்டிருந்தார்.

 

‘ அட..! இவர் எதற்கு இங்கே..?’

 

குட்டி பெண் தாரிணி நினைப்பில் வந்தாள்.

 

‘ இரண்டு நாட்களாகவே அவளை காண வில்லையே..?’

 

திறந்த கேட்டை மறுபடியும் மூடி விட்டு, எதிர் வீட்டின் பக்கம் நகர்ந்தார்.

 

‘என்னாச்சும்மா.?’

 

‘இரண்டு நாளாய் தாரிணிக்கு காய்ச்சல் அங்கிள்..! கட்டு பட மாட்டேங்குது..!’

 

அவளுடைய அம்மா துக்கத்தோடு திக்கி திணறினாள்.

 

‘முந்தா நாள் அவளுக்கும், எங்களுக்கும் ஒரு பிரச்சினை அங்கிள்..! கோபித்து கொண்டு படுத்தவள் இப்படி ஆகி விட்டாள்..!’

 

சிரிப்பான சிரிப்போடு வளைய வரும் அந்த சிறுமி, காய்ந்த சருகு போல கிடந்தாள். பக்கத்தில் போகிற போதே, உஷ்ணம் வீசியது.

 

‘ பிள்ளையார் கோவில் பக்கத்திலே ஒரு சப்பாணி நாய் திரிகிறது. பார்த்திருக்கிறீர்களா அங்கிள்..?’

 

சடாரென்று நிமிர்ந்து பார்த்தார்.

 

‘ஆமாம்..! அதற்கென்ன..?’

 

‘ முந்தா நாள் கோவிலுக்கு போன போது , இவள் அதை பார்த்து விட்டாள். அதிலிருந்து ஒரே கெஞ்சல்.!’

 

‘கெஞ்சலா..?’

 

‘ நீங்களே சொல்லுங்கள் அங்கிள்..! அதையெல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து பார்த்துக்கிறது ஆகிற காரியமா..? இதெல்லாமா எங்களுக்கு வேலை..?’

 

படபடப்புடன் சதாசிவம் கேட்டு கொண்டிருந்த போதே, தாரிணி லேசாக கண்ணை திறந்து பார்த்தாள்.

 

‘ அம்மாகிட்டே நீங்களாவது சொல்லுங்க தாத்தா..! பாவம் அது..! ஏன்தான் பிறந்ததோ..?’

 

தெளிவில்லாமல் பிதற்றிய அந்த சிறுமி, திடீரென்று விசும்ப ஆரம்பித்தாள்.

 

சதாசிவத்தின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. இத்தனை நாள் மறைத்திருந்த திரை விலகின மாதிரி தோன்றியது.

 

அவளிடம் மெதுவாக குனிந்தார் சதாசிவம். உணர்ச்சி பெருக்கினால், வார்த்தைகள் தடுமாறின.

 

‘ அதை பற்றிய கவலை வேண்டாம் தாரிணி ! அந்த நாய் உங்க வீட்டில் இருந்தால் என்ன..? தாத்தா வீட்டில் இருந்தால் என்ன..? இப்பவே பிள்ளையார் கோயிலுக்கு கிளம்புகிறேன்.’

 

‘நிஜமாகவா தாத்தா..? நீங்கள் சொல்வது பொய்யில்லையே..?’

 

‘இல்லை அம்மா…! நான் வருவதற்குள்ளே, ஒரு நல்ல பெயரை மட்டும் யோசித்து வை..!’

 

தாரிணியின் தாயோ ஸ்தம்பித்த நிலையில் இருந்தாள். அவளுடைய கைகள் தானாகவே குவிந்தன.

 

‘உங்களுக்கு பெரிய இதயம் அங்கிள்..!’

 

‘ பெரிய இதயமா..? அதெல்லாம் அங்கே இருக்கிறது அம்மா..! ‘ தாரிணியை காட்டி சிரித்தவர், அவளுடைய நெற்றியை தொட்டு பார்த்தார்.

 

காய்ச்சல் போயிருந்த இடம் தெரிய வில்லை.

என் புத்தகம் ( கவிதைகள் )  -உலக வாசிப்பு தினம்+உலக மகளிர் தினம்                           -மேமன்கவி  

images (10)

 

 

 

என் புத்தகம் என்னால்

வாசிக்கப்படாமலே இருக்கிறது

காலம் காலமாக.

 

என் புத்தகத்தின

ஒவ்வொரு பக்கத்தையும்

வேறு ஒருவரோ-இன்னொருவரோ

வாசித்து கொண்டிருக்கிறார்கள்

என் அனுமதியின்றி.

 

சிலர் என் புத்தகத்தை

படித்து படித்து கிழிக்கிறார்கள்.

வேறு சிலரோ

கிழித்து கிழித்து படிக்கிறார்கள்

என் புத்தகம்

எதை கொண்டும்

உறையிடபட்டிருப்பினும்.

 

அவர்களின் கண்களால்

;நிஜமாகவோ கற்பனையிலோ

அவர்களுக்கான பிரதிகளாய்

என் புத்தகத்தை வாசிக்கிறார்கள்.

 

என் புத்தகத்தை எழுதியது

நான் என்பதை

ஏற்க மறுப்பதே

மரபாய் கொண்டிருகிறார்கள்.

 

அவர்களின்குறிப்புக்களால்

என் புத்தகத்தை

சிதைத்து சிறைப்படுத்தி

தங்களுக்கு

சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்

அல்லது தூரவீசி விடுகிறார்கள்.

 

என் புத்தகத்தை

காலம் காலமாக.

வெவ்வேறு பதிப்புக்களாய்

அவர்கள் வாசிக்கிறார்கள்.

என் புத்தகத்தை

மலின-மலிவு பதிப்புக்காக்கி

விற்பனை பண்டமாக

விளம்பரப்படுத்துகிறார்கள்.

 

அவர்களுக்கான

எல்லா தீர்வுகளும்

வீழ்ச்சிகளும் எழுச்சிகளும்

என் புத்தகத்தில்

இருப்பதாய் மாயை விதைத்து

என் புத்தகத்தை

புனித- ஆபாச

நூலாய் அடையாளப்படுத்துகிறார்கள்.

 

அவர் தம் தேவைக்கு ஏற்ப

என் புத்தகத்தின் முழுமையிலிருந்து

பச்சை சிவப்பு

நீலம் மஞ்சள்

என பல்வேறு நிறங்களால்

என் புத்தகத்தின் வரிகளை

Highlight   பண்ணி

பிறரின் கவன ஈர்ப்புக்கு

ஆளாககுகிறார்கள்.

 

என் புத்தகத்தை போன்று

பல்லாயிரம் புத்தகங்களை

போஷித்தும் வாசித்தும்

புத்தகப் பூச்சிகளாய்

(கறையானும் ஒரு வகை பூச்சிதான்)

தங்களை தாங்களே

பிரகடனப்படுத்தி

என் புத்தகத்தை அரிக்கிறார்கள்.

அழிக்கிறார்கள்

காலமாக காலமாக.

06062014

நம்பர் விளையாட்டு ( சிறுகதை ) / கீழை.அ.கதிர்வேல்

download

பத்து மணி வேலைமுடித்து லாரியில் வந்து ராஜேந்திரன் டொர்மிட்டரியில் அறைக்குள் நுழைந்த போது மணி 10.45 குக்கரில் அரிசியைப்போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தவன் அப்போதுதான் போனைப் பார்த்தான்.
இன்றைக்கும் ஊரிலிருந்து ஏழெட்டு மிஸ்டு கால்கள் பார்த்து என்ன பதில் சொல்வதென்றே தெரியாத நிலையில் வீட்டுக்குபோன் செய்தான் ராஜேந்திரன்
” அலோ நான் சரளா பேசறேன்…”
” நல்லா இருக்கியா பசங்க எப்படி இருக்காங்க சாப்பிட்டார்களா?”
“இருக்கேங்க நீங்க போன் செஞ்சு பத்து நாள் ஆகுது தெரியுமா?”
“மன்னிச்சுக்கடா தினமும் பத்து மணி வேலை ஓடுது… நான் ரூமுக்கு வர 10.45 ஆயிடுது… போன் நாளைக்குதான் ஞாயிற்றுக்கிழமை ரீ சார்ஜ் பண்ணிட்டு பேசலாம்னு இருந்தேன். அதுக்குள் நீ இத்தனை மிஸ்கால் கொடுத்து வச்சிருக்கே!”
“ஞாயித்துக்கிழமை போன்ல காசு போட்டால் கூடுதலா ஏறும்னு சொல்லுவீங்களே!”
“ஆமாம்டா…ஆறு வெள்ளி வரைக்கும் போனசா கொடுப்பாங்க உங்கூட நான் இரண்டு மணி நேரம் கூடுதலா பேசலாம் பாரு…ஊரு காசுக்கு முன்னூறு ரூபாய் தெரியும்ல…”
“இரண்டு மணி நேரம் கூடுதலா பேசறது இருக்கட்டும் இந்த மாசமும் சம்பளப் பணம் ஏன் இன்னும் அனுப்பலை.சிங்கப்பூரில் சம்பளப்பணம் எப்பவும் கரெக்டா கொடுத்திடிவாங்கன்னு எங்க தாத்தா சொல்லும்!”
“யாரு தருமக்கப்பல் ஏறி வந்து சிங்கப்பூரில் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு சம்பாரிச்ச காசுல கொஞ்சமும் ஊருக்கு அனுப்பாமல் கடைசி காலத்தில் ஒரு பெரிய தகரப் பெட்டியோட ஊருக்கு வந்ததா சொல்லுவியே அந்தத் தாத்தாவா?”
” இந்தக்கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இருக்காது சம்பளப் பணம் என்ன ஆச்சு?”
இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென்று முன்னதாகவே யோசித்து வைத்துக்கொண்டுதான் எப்பவும் போன் செய்வான் வழமை போல் சொல்லிட வேண்டியதுதான்
“பொறுடா செல்லம் முதலாளி சைனா போயிருக்கார் இந்த வாரம் வந்துடுவார்.எங்களோடது சப்ளை கம்பெனிங்கிறதால் அவங்களுக்கு பில்லு வர்றது முன்னே பின்னே ஆகும்போது சம்பளமும் லேட்டாகுது…” இப்போதெல்லாம் இதுமாதிரி சரளமாக பொய் சொல்ல பழகிக்கொண்டான் அவன்
” ரெண்டு மாசம் முன்புதான் யாருகிட்டேயோ சீட்டு கட்டியிருந்தேன் அவன் ஊருக்கு போயிட்டான் அட்ரஸ் கூட வாங்காமல் இருந்திட்டேன் ஆயிரம் வெள்ளி நஷ்டம்னு சொன்னீங்க அது மாதிரி இல்லாமல் இந்தப் பணத்தையாவது வாங்கி பத்திரமா உண்டியல்காரர்கிட்டே அனுப்பி வையுங்க…”
” நீ கவலையே படாதே இந்த மாசம் பணத்தை நான் வெஸ்டர்ன் யூனியன் மூலமாவே அனுப்பி வைக்கிறேன்.” பின்னே உண்டியல்காரர் மூலமா பணம் அனுப்பறேன்னா அவர் தன்னோட பழைய பாக்கியை கேட்பாரேன்னு அவன் உள்மனம் சொன்னது.
” பத்திரமா இருங்க நீங்க பணம் அனுப்பலேன்னா கூட பரவாயில்லே.. நாலு நாளைக்கு ஒருதரம் போன் பண்ணியாவது பேசிடுங்க!”
சரளா இப்படி சரளமாக சொன்னதைக்கேட்டதும் அவனுக்கு ஒருமாதிரி கஷ்டமாக இருந்தது மனசில்லாமலேயே போனை துண்டித்தான்.
இரவு சாப்பிடவே பிடிக்கவில்லை மனதை என்னவோ செய்தது ராஜேந்திரனுக்கு இந்தப் பாழாய்ப்போன பழக்கம் எப்படி வந்தது என்பதை மறுபடியும் அசை போட்டு பார்த்தான் அவன் சிங்கப்பூர் வந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றது.பதினெட்டு வெள்ளி சம்பளம் ரெண்டு மணி நேரம் ஓவர் டைமுக்கு உத்திரவாதம்னு வந்தவனுக்கு முதல் மூன்று மாசம் எல்லாம் நல்லாத்தான் போனது அன்று ஒரு நாள் தேக்கா மார்க்கெட்டில் அவனை சந்தித்த பழைய ஊர் நண்பன்
“என்ன ராஜி நல்லா இருக்கியா வேலையெல்லாம் எப்படி போகுது” ன்னு சாதாதாரணமாகப்பேசியவன்
“உனக்குதான் குடி கூத்துன்னு எந்த பழக்கமும் கிடையாது நம்பராவது எடுக்கிறதுண்டா?” என்றான்.
“என்னடா இது நம்பர்னு புதுசா சொல்றே நான் என்னத்தைக்கண்டேன்!” என பதிலளித்தான் வெள்ளந்தியாக
” ஹும்.. உனக்கு நாலு நம்பரே தெரியாதாக்கும்…” என்றவன் ஒரு கிளாஸ் எடுக்கிற மாதிரி விலாவாரியா விளக்கிச்சொன்னான்.
ஒரு வெள்ளிக்கு நாலு நம்பர் எடுத்து அது ஏறிட்டா இரண்டாயிரத்து ஐனூறு ரூபாய் கிடைக்கும்னு சொன்னவன். பத்து ரூபாய்க்கு ஒரே நம்பர் எழுதி ஒரு ராத்திரியில் பணக்காரன் ஆகி ஊருக்கு போய் தொழில் செய்து ஓகோவென்று வந்தவர்கள் கதையைச் சொன்னான்.
நல்ல யோசனையாக இருக்குதேன்னு அவனையும் கூட்டிட்டு போய் ஐந்து வெள்ளிக்கு ஐந்து நம்பர்களை எழுதினான்.
பிறந்த வருஷம், பாஸ்போர்ட் நம்பரின் கடைசி நாலு நம்பர், திருமண ஆண்டு இப்படியாக நண்பன் குருவாகச்சொன்ன ஆலோசனையை வேத வாக்காக கேட்டு எழுதியவனை அதிர்ஷ்ட லட்சுமி அன்புடன் அழைத்தாள் அவனோட பாஸ்போர்ட் நம்பருக்கு ஆறுதல் பரிசு அறுபது வெள்ளி ஏறி இருந்தது.
அதை எப்படி வாங்குவதென்பதற்கும் அவன் நண்பனை சந்திக்கவும் மறு வாரம் சீக்கிரமாகவே தேக்கா வந்து விட்டான்.
“ராஜி.. நான் சொன்னேன் பார்த்தியா நம்பர் ஏறினால் ஒரே ராத்திரியில் ஊருக்கு பிளைட் ஏறிடலாம்னு… இது மட்டும் பர்ஸ்ட் பிரைசில் ஏறி இருந்தால் உன்னோட நாலு மாச சம்பளம் மாதிரி சுளையா ஒரு அமௌண்ட் வந்திருக்கும் ஊரில் ஒரு கொல்லையோ குடிகாடோ வாங்கிப் போட்டிருக்கலாம்.”என்றான்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேக்கா கூட்டம் கும்பகோணம் மகாமகாக்கூட்டத்தைவிடவும் கூடுதலாக இருந்தது. நம்பர் கடை கூட்டம் அன்று வெகு நீளமாக இருந்தது. அன்றைய குலுக்கலுக்கு டிக்கெட் வாங்க முடியுமா என்பதே அவனுக்கும் அவன் நண்பனுக்கும் சந்தேகமாக இருந்தது. நல்லவேளையாக க்யூ கிடு கிடு வென நகர்ந்தது அவன் முறை வந்த போது டிக்கெட்டை எடுத்து நீட்ட மறு நிமிடமே அறுபது வெள்ளி சலவை நோட்டுக்களை அங்கிருந்த சீனப் பெண்மணி அவனிடம் தந்தார். நண்பனின் ஆலோசனைப்படி சென்ற வாரம் எழுதிய அதே ஐந்து நம்பர்களுக்கும் ரெண்டு ரெண்டு வெள்ளி எழுதி கூடுதலாக இன்னும் ஒரு ஐந்து நம்பர்களுக்கு பத்து வெள்ளிக்கு சீட்டு எழுதினான்.
பத்து வெள்ளியில் நண்பர்களுக்கு குடைக்கேண்டீனில் பலகாரம் வாங்கிக் கொடுத்து விட்டு
இன்னிக்கு எடுத்த சீட்டுக்களில் ஏதாவது ஒரு சீட்டு முதல் பரிசா ஏறணும்னு காளியம்மன் கோவிலில் வேண்டிகிட்டு அறைக்கு திரும்பினான்.
அதன் பிறகு அவனுக்கு அதிர்ஷ்ட லட்சுமி பார்வை விழ ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இதற்குள் லாட்டரிச் சீட்டு பைத்தியமாகி பரிசை எப்படி பெறுவது என்பதற்கான எல்லா உத்திகளையும் கையாள ஆரம்பித்தான்.
ஆக்ஸிடெண்ட் ஆன வாகனத்தின் நம்பரை எழுதிப்பார்ப்பது.
ஒரே நம்பரை 21 வெள்ளிக்கு சுற்றுமுறையில் எழுதிப்பார்ப்பது. இதற்கென்றே வெளிவரும் ஆங்கில பத்திரிக்கைகளைப் படித்து அதில் வருகின்ற ஆலோசனைப்படி நம்பர் எடுப்பது என்றாகிப் போனது.
வாங்குகின்ற சொற்ப சம்பளத்தில் பாதிக்குமேல் சீட்டு தின்றது.
நாலு நம்பர் வாங்கறதைவிட சிங்கப்பூர் ஸ்வீப் விழுந்தால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிவிடலாமென்று கட்டு கட்டாக அந்த சீட்டுகளையும் வாங்க ஆரம்பித்தான்.
நம்பர் அவன் வாழ்க்கையுடன் விளையாட ஆரம்பித்தது அவன் களைக்க ஆரம்பித்தான்.ஒவ்வொரு மாதமும் ஊருக்கு அனுப்பும் பணம் குறைய ஆரம்பித்த போது புதுப் புது பொய்களை வீட்டில் சொல்ல ஆரம்பித்தான்.
ஓவர் டைம் இல்லேன்னு ஒரு மாசம், சம்பளம் லேட்டுன்னு ஒரு மாசம், சீட்டு கட்டறதால் பணம் குறைச்சி அனுப்பறதா சொல்லி கடைசியில் சீட்டு சேர்த்தவன் ஓடிப்போயிட்டதா சொல்லி கதையை முடிக்கிற அளவுக்கு தயாராகிவிட்டான். இந்தியப்பொருளாதாரம் வீழ்ந்து டாலர் மதிப்பு எக்கு தப்பா ஏறாமல் இருந்திருந்தால் அவன் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.
டிர்ரிங்க்….டிர்ரிங்க்…டிர்ரிங்க்… நாராசமாக ஒலித்த அலாரம் சத்தம் கேட்டு அரக்க பரக்க எழுந்து குளித்து விட்டு ஹீட்டரில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு காபி மிக்சை கலந்து பாக்கெட்டில் எடுத்துக் கொண்டு கம்பெனி லாரி வரும் இடத்துக்கு விரைந்தான் ராஜேந்திரன். ராத்திரி ரொம்ப நேரம் தூங்க வில்லை போலும் என்று நினைத்துக்கொண்டான்.கண்களை ஒரு மாதிரி எரிகின்ற மாதிரி இருந்தது! வழ்க்கமாக அவன் அலாரம் வைத்திருப்பானே தவிர அந்த அலார நேரத்துக்கு சற்று முன்னதாக எழுந்து அதனை நிறுத்தி விட்டு வேலைக்கு புறப்பட ஆரம்பித்து விடுவான் இன்றுதான் இப்படி?
பர்ஸில் இருந்த அன்றைய குலுக்கல் சீட்டை ஒருமுறை எடுத்துப் பார்த்தான் ஒரே நம்பரை பத்து வெள்ளிக்கு எழுதியது இந்த நம்பர் மட்டும் இன்று ஏறினால்…
” லே ராஜி…கம்பெனி லாரி வந்தது கூட தெரியாமல் அப்படி என்னடா ரோசனை… ஊரு ஞாபகம் வந்திட்டா..”
என்ற சக நண்பனிடம்.
“இல்லடா..சின்னதா நினைவுச்சிதறல்…”
” லே…இதெல்லாம் இங்கிட்டோட விட்டுரு வேலை பார்க்கிற இடத்தில் நினைச்சுகிட்டு பிரச்சினை ஆக்கிடாதே… சாரம் கட்டற வேலைங்கிறது எல்லா நேரமும் நம்மை நம் கன்ட்ரோலில் வச்சுக்க வேண்டிய ஒரு வேலை.” என்றான் கரிசனமாக.
” தெனைக்குமா அப்படி இன்னிக்குதாண்டா இப்படி! ஹூம் வேலை இடத்தில் நான் எப்பவும் பக்காவா இருப்பேன்!”
என்றான் ராஜேந்திரன்.
“அது?” என்றபடி வண்டியை கிளப்பினார் லாரி ஓட்டுனர்.
” ஹாலோ.. சரளா… இன்னிக்கு பத்தாயிரம் ரூபாய் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பி இருக்கேன். பாஸ்வேர்டை உனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணி விடறேன். இப்போ சந்தோசம் தானே?”
“என்ன விளையாடறீங்களா? ரெண்டுமாச சம்பள பாக்கி குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் வரணும். நீங்க இரு நூற்றி பத்து வெள்ளி அனுப்பிட்டு கணக்கு சொல்றீங்க!”
என்னடா இது இவள் தமிழ் முரசில் பேங்க் ரேட்டை பார்த்துட்டு பேசற மாதிரி துல்லியமா பேசறா என்று அரண்டவன் சுதாரித்துக்கொண்டு
” நான் தான் உங்கிட்டே அன்னிக்கே சொன்னேன்ல முதலாளி சைனா போயிருக்கார்னு. அவர் இன்னும் வரலை இருனூற்றி ஐம்பது வெள்ளி கம்பெனியில் அட்வான்ஸா வாங்கினேன்” என்றான்.
இப்போதெல்லாம் அவனுக்கு உண்மையை விட பொய் பேசுவது சுலபமாகிப் போயிருந்தது.
“உங்களுக்கு விஷயம் தெரியுமா? நீங்க சிங்கப்பூர் போன மறு வருஷம் அங்கே வந்தாரே பக்கத்து தெரு அம்பலவாணன் அவரு முடிச்சுகிட்டு ஊருக்கு வந்திட்டாராம்!”
“ஹூம்.. ஏதாச்சும் நம்பர் ஏறி இருக்கும் இல்லேன்னா விரலை மெஷினில் குடுத்து இன்ஷூரன்ஸ் பணம் வாங்கிட்டு வந்திருப்பான்.அதை விடு…”
“உங்களுக்கு ஏங்க இப்படி குறுக்கு புத்தியா போகுது. மாசா மாசம் அனுப்பின பணத்தை பேங்கில் வச்சிருந்து இப்போ ஊருக்கு வந்ததும் கீழே கடையும் மாடியில் வீடும் வச்சு கட்டப்போறாராம்.அவர் மனைவி சொன்னாங்க!”
அவன் மண்டையில் அப்போதுதான் சுருக்கென்று உரைத்தது.அட ஆமா.. நாம கூட மாசா மாசம் பேங்கில் ஒரு சிறு தொகை சேர்த்திருந்தால் இன்னிக்கு அது பெருந்தொகை ஆகியிருக்குமே!
” ஒண்ணு சொன்னா திட்ட மாட்டீங்களே?”
“அட உன்னை நான் எண்ணிக்கு திட்டி இருக்கேன் சும்மா சொல்லு?”
“கடவுள் எல்லோருக்கும் வாய்ப்புகளை சமமாத்தான் கொடுக்கிறார் அதை சரியா பயன் படுத்திக்கிறவங்கதான் அம்பலவாணன் மாதிரி ஆட்கள்! நீங்க என்னிடம் சொல்றதில் முக்கால்வாசி பொய்ன்னு எனக்கு தெரியுது. ஆனா எல்லாத்துக்கும் ஆமா போட்டுகிட்டிருக்கேன் ஏன்னா எப்படியும் கஷ்டப்பட்டுகிட்டிருக்க நீங்க நான் கேள்வி கேட்டு நீங்க மேலும் கஷ்டப்படக்கூடாதேன்னு…”
“ம்…சொல்லு..”
“சிங்கப்பூரில் பணம் சம்பாதிக்க எவ்வளவு வழிகள் இருக்கோ அதை விட அதிகமா செலவு பண்ணவும் வழிகள் இருக்குன்னு எங்க தாத்தா சொல்வார்.இனியாவது நம்ம பொட்டப்புள்ளைகள் ரெண்டு பேரை நினைச்சு சூதானமா சேமிக்கிற வழியை பாருங்க…சரியா..”
எதுவுமே தெரியாதென்று நினைத்திருந்த சரளா எவ்வளவு வெவறமா பேசறா நாமதான் விபரம் புரியாமல் நம்பரைத்தொலைத்து நாசமாகப் போனோம் போலும் என்று எண்ணிய படி
“மன்னிச்சுடு சரளா..இனிமேல் மாசம் ரெண்டு வாட்டி நான் பணம் அனுப்பறேன்!”
என்றான்.
“என்னங்க இப்படி பேசறீங்க சம்பளம்னா அது மாசத்துக்கு ஒருக்கா தானே!” சரளா
“திருப்பூர்ல வாரா வாரம் சம்பளம் போடுவாங்கன்னு சொல்வேன்ல அது மாதிரி எங்க கம்பெனியிலும் இரண்டு வாரத்துக்கு ஒருக்கா சம்பளம் போடுவாங்க!”
“அடி ஆத்தீ ஏழு வருஷமா இதை ஏன் எங்கிட்டே சொல்லலே ” என்றவளிடம்.
“இது எங்க கம்பெனியில் இந்த மாசத்தில் இருந்துதான் அமுலுக்கு வருது…”
முதன் முதலாக ஒரு பொய்யை சொன்னான். ஏழு வருடங்களாக மாசம் ரெண்டு முறை சம்பளம் வாங்கிய ராஜேந்திரன்.

நந்தன் ஸ்ரீதரன் கவிதைகள்

images (81)

 

 

••
எல்லோர்க்கும் பெய்யும் மழை..

 

நேற்றைய மழையில்
கரைந்துபோன ஒரு கதகதப்பான அணைப்பை
இன்று தேடிக்கொண்டிருக்கிறான்
ஒரு குடிகாரன்

ஒற்றைக்கால் தடத்தை
புலனாய்வு செய்த அதிகாரி
இருபுறமும் தொடர்ந்த மர்ம இணைப்பள்ளங்களை
கணக்கில் கொள்ளாமல்
நொண்டியடித்து ஓடும் கொலைகாரனைப் பற்றிய
பயங்கரமான ஆய்வறிக்கையை எழுதுகிறான்

வாகன சத்தங்களுக்கு திடுக்கிடாத
பிச்சைக்காரக் குழந்நதை
அடுத்தவேளைக்கான
கடுகளவு அபினில்
பசிமறந்து, நிம்மதியான உறக்கம் கொள்கிறது

நடன வகுப்பு முடிந்து
அபினயங்களோடே
காரில் ஏறும் குழந்தையை முத்திட்டு
ஏசியைப் போட்டு அழைத்துச் செல்கிறான்
செல்ல டாடி, முத்து டாடி, அம்மு டாடி

மழை
எல்லோர்க்கும்தான் பெய்கிறது

•••
பஞ்சுக்குட்டியும், அதன் சின்னஞ்சிறு பற்களும்..

 

ஆபீஸ்விட்டு அவள் வருவதை
அதுதான் முதலில் கண்டுபிடிக்கும்..

முதுகு வளைத்து, வால் உயர்த்தி
காலில் உரசி
புர்ரிட்டுக் கொஞ்சும்

பச்சைக் கண்ணி,
புஸ்புஸ் மொட்டராஸ்,
பஞ்சுக்குட்டி
இன்னும் சில பேர்களால்
தினந்தோறும் முத்திடுவாள்
செல்வி அதை..

ஒரு பக்கம் கொஞ்சம் சுருண்டு
செல்வி உறங்குகையில்
பின்னங்கால் மடிப்புக்குள்
சுருட்டிய பூந்துவாலைத் துண்டுபோல்
உறங்கும் அது..

பிள்ளை போன்றது
பிரியம் மறவாதது
இது பூனையல்ல என்றே
நம்பியிருந்தாள் செல்வி,
கிளையுதிர்ந்த அணிற்குஞ்சை
தன் கூரிய சிறுபற்களால்
பஞ்சுக்குட்டி கிழித்துண்பதைப்
பார்க்கிற வரைக்கும்..

•••

திரைக்கதை சில குறிப்புகள். ( பாகம் 5 ) / B.R.மகாதேவன்

images (82)

மனித இனத்துக்குக் கைவரப் பெற்றிருக்கும் பிற கலைகளோடு ஒப்பிடும்போது திரைப்படக் கலை மிகவும் நவீனமானது. சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாறு மட்டுமே உடையது. ஓவியத்தை எடுத்துக்கொண்டால், அரை மனிதர்களாக வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தே அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே குகை ஓவியங்களாக அவை தோன்றியிருக்கின்றன. இசைக்கும் நடனத்துக்கும்கூட இதுபோல மிக நீண்ட நெடிய வரலாறு உண்டு. ஆனால், திரைப்படமானது 19-ம் நூற்றாண்டில் தோன்றியது. அந்தவகையில் கலைகளின் குழுமத்தில் பிறந்திருக்கும் பச்சிளம் குழந்தை. ஆனால், சாதா குழந்தை அல்ல. ராட்சஸக் குழந்தை. உலகில் இதுவரை தோன்றிய அனைத்துக் கலைகளையும்விட அதிக சக்தி வாய்ந்தது.
கலையின் இலக்கு அல்லது நோக்கம் என்ன என்று பார்த்தால், ஒரு படைப்பாளி நேரடியாகவோ கற்பனையாகவோ தான் பார்த்த அல்லது அனுபவித்த ஒன்றை, தன்னுடைய கலைப்படைப்பில் பதிவு செய்வார். அதைப் பார்க்கும் அல்லது கேட்கும் பார்வையாளர் எந்த அனுபவத்தின் மூலம் படைப்பாளி அந்தப் படைப்பைப் படைத்தாரோ அதே அனுபவத்தைப் பெறும்போது அந்தக் கலைப்படைப்பின் லட்சியம் நிறைவேறுகிறது. ஒரு நாகத்தைப் பார்த்து மிரண்டுபோய் ஒரு படைப்பாளி ஓவியமாக வரைகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஓவியத்தைப் பார்க்கும் பார்வையாளருடைய மனதிலும் பாம்பைப் பார்த்ததுபோன்ற பய உணர்வு எழும் என்றால் அந்தக் கலைப்படைப்பின் நோக்கம் முழுமை பெற்றுவிட்டிருக்கிறது என்று சொல்ல்லாம். உலகில் இதுவரை தோன்றிய கலைகளில் இந்த ’அனுபவக்’ கடத்தலைப் பெரும்பான்மையான மக்களுக்கு மிக அதிக அளவுக்கு சாத்தியப்படுத்த முடிந்த கலை திரைப்படக் கலையே.
உதாரணமாக, ஒரு மழையைப்பற்றி ஓர் ஓவியம் வரையப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஓவியத்தைப் பார்க்கும் மக்களில் அதிகபட்சமாக பத்து சதவிகிதம் பேருடைய மனதில் மட்டுமே அந்த மழை பொழிய வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்கு அது வெறும் வர்ணத் தீட்டல்களாகவே இருக்கும். ஒரு நடனக் கலைஞர் உரிய இசைக் கருவிகளோடு அந்த மழையை மேடையில் ’பொழிய வைக்கிறார்’ என்றால், அதிகபட்சமாக 30-40 சதவிகிதம் பேர் மட்டுமே அந்த மழையில் நனைவார்கள். ஒரு தேர்ந்த எழுத்தாளர் பூ விற்கும் சிறுமியின் வருத்தம் தோய்ந்த விற்பனைக் குரலில் ஆரம்பித்து மேகங்கள் இருண்டு வருவதையும் இடி இடிப்பதையும் மின்னல் வெட்டுவதையும் கோழிக் குஞ்சு நடுங்கி ஒடுங்குவதையும் எழுதிக்காட்டி 50-60 சதவிகித வாசகர்கள் மனத்தில் ஒரு மழையை அவர் பெய்ய வைக்கக்கூடும்.

ஆனால், திரைப்படத்தால் மட்டுமே அதைப் பார்க்கும் 100 பேரையும் சொட்ட சொட்ட நனையவைக்கமுடியும் (கண் தெரியாத, காது கேளாத பார்வையாளர்கள் இல்லாதபட்சத்தில்). படைப்பாளி-பார்வையாளர் இடையிலான உச்சபட்ச அனுபவப் பரிமாற்றம் திரைப்படக் கலையில் மட்டுமே சாத்தியம். அப்படியாகக் குழந்தைப் பருவத்திலிருக்கும் கலை என்றாலும் அனைத்துக் கலைகளின் தோளில் ஏறி நிற்பதால் அதி உயரத்தில் இருப்பது திரைப்படக்கலையே. இந்தத் திரைப்படக் கலையின் அஸ்திவாரம் போன்றதுதான் திரைக்கதை.
அடிப்படையில் திரைக்கதை என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவது, என்னவெல்லாம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பானது. இரண்டாவது, எப்படிக் காட்சிப்படுத்தவேண்டும் என்பது தொடர்பானது. இந்த இரண்டாவது விஷயத்தை ஒளிப்பதிவாளர் பணி என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், ஒளிப்பதிவாளர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது திரைக்கதைதான். அப்படியாக ஒளிப்பதிவின் வெற்றிக்கும் காரணமாக இருப்பது திரைக்கதைதான்.
சைக்கோ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஷவரில் குளிக்கும் ஒரு பெண் கொலை செய்யப்படுவாள். அந்த விடுதியின் உரிமையாளர் இறந்த பெண்ணின் உடலை ஒரு கார் டிக்கியில்போட்டு பக்கத்தில் இருக்கும் ஏரிக்குள் தள்ளிவிடுவார். சுமார் ஏழெட்டு நிமிடங்கள் நீளும் இந்தக் காட்சியின்போது ஒரு வசனம் கூட இடம்பெற்றிருக்காது. காட்சி மொழிக்கான மிகச் சிறந்த உதாரணம் இந்த சீக்வென்ஸ். அதில் கேமராவின் கோணங்கள், நகர்வுகள் எல்லாம் மிகவும் அடிப்படையான தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தியே அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த அறையில் அவள் மட்டுமே இருப்பாள் என்பதால் எந்தவித பேச்சு சத்தமும் இருக்காது. அது ஒருவித சஸ்பென்ஸை இயல்பாகவே உருவாக்கிவிடும். கொலையாளி யார் என்பது தெரியாமல் இருக்கவேண்டும் என்பது சஸ்பென்ஸ் த்ரில்லர்களின் அடிப்படை விதி. அதன்படியே பாத் டப்பில் அந்தப் பெண் குளித்துக்கொண்டிருக்க திரைச்சீலையில் நிழல் போல் கொலையாளியின் உருவம் வருவது மட்டுமே காட்டப்படும்.
கொல்லப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து ரத்தம் பாத் டப்பின் கீழ்ப்புற வடிகால் வழியாக சுழித்தோடும் நீருடன் கலந்து வெளியே செல்லும். கறுப்பு வெள்ளை படம்தான்.

எனவே, சிவப்பு வண்ணம்கூட படத்தில் காட்டப்பட்டிருக்காது. இருந்தும் அந்தக் காட்சி நம் ஈரக்குலையை நடுங்கவைக்கும். இதை எப்படி வேண்டுமானாலும் காட்சிப்படுத்தலாம். நேரடியாக ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்தப் பெண்ணின் உடலைக் காட்டலாம். டாப் ஆங்கிளில் காட்டலாம். முதலில் முகத்தை டைட் க்ளோசப்பில் காட்டி அதன் பிறகு ஜூம் பேக் செய்து உடல், பாத் டப், அறை என முழுவதுமாகக் காட்டலாம். அல்லது விசாலமான அறையில் இருந்து ஆரம்பித்து பாத் டப், பெண்ணின் உடல், கத்தி குத்தப்பட்ட பகுதி என ஜூம் இன் செய்தும் காட்டலாம். ஹிட்ச்காக் இதை வித்தியாசமாகக் காட்டியிருப்பார். கேமரா மெள்ளச் சுழலும். முதலில் என்ன காட்டப்படுகிறது என்பதே தெரியாது.சுழன்றுகொண்டேயிருக்கும் கேமரா கொல்லப்பட்ட பெண்ணின் நிலை குத்திய விழிகளில் சென்று முடியும்.
பயங்கரம், மர்மம், அதிர்ச்சி, மரணம், நிராதரவு என பல உணர்வுநிலைகளைக் கொண்ட அந்தக் காட்சியானது ஹிட்ச்காக்கினால் கலாபூர்வமாக அந்த ஒரு ஷாட்டில் அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து அந்த விடுதியின் உரிமையாளர் வந்து இறந்த பெண்ணின் உடம்பை திரைச்சீலையில் பொதிந்து ஒரு காரில் வைத்து ஏரிக்குள் தள்ளிவிடுவதுவரை நிதானமாக காட்டப்படும்.

ஒரு பத்து நிமிடங்களுக்கு எந்தவித வசனமும் இல்லாமல் காட்டப்படும் அந்தக் காட்சியின் முதல் பாதியில் பார்வையாளர்கள் தாமே அந்த விடுதியில் மாட்டிக்கொண்டதுபோலவும் இரண்டாவது பாதியில் தாமே கொன்றதுபோலும் உணர்வார்கள்.
ஆளரவமற்ற கெஸ்ட் ஹவுஸில் தனியாகத் தங்கும் ஒரு பெண் “மர்ம நபரால்’ கத்தியால் குத்திக் கொல்லப்படுகிறாள் என்ற கதையும் அது எப்படி நடக்கிறது என்பதை விவரிக்கும் திரைக்கதையும்தான் இந்தக் காட்சியின் கலை நயத்துக்கு ஆதாரம்.
கேமரா கோணங்கள், கேமரா நகர்வுகள் இவற்றைப் பொறுத்தவரையில் பெரிதாக எந்தக் கலை நுணுக்கமும் கிடையாது. அவற்றில் இருப்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமே. அடிப்படையாக 15-20 வகை கேமரா நகர்வுகள், கோணங்களே உண்டு. இவற்றில் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை திரைக்கதையும் அதில் காட்சிப்படுத்தப்படும் விஷயமுமே தீர்மானிக்கும்.
ஒரு சிறிய மலைக்குன்றும் அமைதியான ஏரியில் பிரதிபலிக்கும் அதன் பிம்பமும் என பிளிஸ் (Bliss) என்ற திரைப்படத்தின் முதல் காட்சி ஆரம்பமாகும். கேமரா மெதுவாக டாப் ஆங்கிளிலேயே சுழலும். இப்போது ஃபிரேமுக்குள் செம்மறி ஆட்டு மந்தை ஒன்று சின்னதாகத் தென்படும். கேமரா மெள்ளச் சுழன்று ஏரியின் கரையோரமாக நகரும்.

முதலில் ஒரு வெண்ணிற கால் தென்படும். ரத்தம் உறைந்துகிடக்கும் தொடை, அலங்கோலமாகக் கிடக்கும் உடல், ரத்தம் கசிந்த முகம், கலைந்துகிடக்கும் கேசம் என மெள்ள காட்சிப்படுத்தப்படும். அமைதியான ஏரிக்கரைக் குன்றில் ஆரம்பிக்கும் காட்சி, கரையோரமாக இறந்ததுபோல் கிடக்கும் ஒரு பெண்ணின் உடலில் வந்து முடியும். முதல் காட்சியிலேயே ஒரு அதிர்ச்சியை ஊட்டி பார்வையாளர்களைப் படத்துக்குள் இழுத்துவிடுவார் இயக்குநர்.
இந்தக் காட்சிக்கான க்ரெடிட் யாருக்குச் செல்லவேண்டும். கேமராமேனுக்கா..? திரைக்கதை ஆசிரியருக்கா..? படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள்ளாகவே பார்வையாளர்களின் மொத்த கவனத்தையும் படத்தில் குவியவைத்தாகவேண்டும் என்பது முக்கியமான ஒரு விதி. இந்த துருக்கி மொழிப் படத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவிடுவார். அவருடைய குடும்பத்தினர் அந்த அவமானம் தாங்க முடியாமல் அவளைத் தற்கொலை செய்துகொள்ளும்படித் தூண்டுவார்கள். அந்த முயற்சியில் அவள் தயங்கிப் பின்வாங்கிவிடவே, ஊருக்குள் அவளைப் பற்றிய செய்தி பரவிவிடும். ராணுவத்துக்கு (துருக்கியில் அந்த கிராமத்தில் காவல் துறைக்கு பதிலாக ராணுவமே அதிக சக்தி வாய்ந்தது) அந்த விஷயம் தெரியவந்திருக்கும்.

அந்த நிலையில் அவளைக் கொல்லவோ அவளாகவோ தற்கொலை செய்துகொண்டாலோ ராணுவம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால், அவளை அந்த கிராமத்தில் இருந்து நகரத்துக்கு அழைத்துச்சென்று கொன்றுவிடும்படி அந்தப் பெண்ணின் முறைப்பையனிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள். நகரத்துக்குச் சென்ற அவர்களுடைய வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை.
படத்தின் ஆதார அம்சம் கெளரவக் கொலை. அந்தப் பெண் தூக்குப் போட்டுக்கொள்ள முயற்சி செய்வதில் இருந்து படத்தைத் தொடங்கலாம். அல்லது அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

அல்லது அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனையைக் குடும்பத்தினர்/கிராமத்தினர் வழங்குவதில் இருந்து ஆரம்பிக்கலாம். எல்லாமே ஓர் அதிர்ச்சியான ஆரம்பம் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும். ஆனால், இவையெல்லாமே கொஞ்சல் அலட்டலான, செயற்கையான, திட்டமிட்ட அதிர்ச்சியாக இருக்கும். எனவே, திரைக்கதை ஆசிரியர் ஏரிக்கரையோரம் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் பெண்ணைக் காட்டுவதன் மூலம் படத்தை ஆரம்பிக்கிறார்.
நேரடியாகவே அந்தப் பெண்ணைக் காட்டிவிடாமல், அழகான மலை, அமைதியான ஏரி, வட்டமாக நிற்கும் செம்மறி ஆடுகள் என்று காட்டி மனத்தில் சந்தோஷமான உணர்வுகளை ஏற்படுத்துகிறார். அந்த உணர்வுகளுக்கு நேர்மாறாக, அமைதியான குளத்தில் கல் ஒன்றை எறிவதுபோல், பாதிக்கப்பட்ட பெண்ணைச் சட்டென்று காட்டி முதல் காட்சியை முடிக்கிறார். இரு எதிர்நிலைகளை அருகருகே வைத்ததன் மூலம் ஒரு சுவாரசியத்தைக் கொண்டுவருகிறார்.
சீக்ரெட் விண்டோ படத்தின் நீளமான முதல் காட்சி ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கும். முதலில் கேமரா ஏரிப் பரப்பின் மீது மெதுவாக நகரும். அதன் பிறகு கரையில் இருக்கும் ஒரு மர வீட்டை நோக்கிச் செல்லும். வேலித் தடுப்பு, மரக்கிளை இவற்றினூடே வீட்டின் ஜன்னல் வழியாக கேமரா உள்ளே பதுங்கியபடியே நகரும். கட்டிலில் படுத்துத் தூங்கும் நாய், அணைக்கப்படாத கம்ப்யூட்டர் என நகர்ந்து கீழே இறங்கிச் செல்லும். மிகப் பெரிய கதவு ஒன்று குறுக்கிடும். அதன் வழியாக நகர்ந்து ஒரு சோபாவில் போய் நிற்கும். சோபாவில் ஜானி டெப் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பார். கேமரா பதுங்கிப் பதுங்கி அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை நம்மில் தோற்றுவித்தபடியே நகர்ந்துவந்திருக்கும். பிரமாண்ட பாஸ் (Bass) வயலின் இசை வேறு மர்மத்தை அதிகரித்தபடியே செல்லும். அதற்குக் காரணம் என்னவென்றால், அது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.
படத்தின் அந்த ஆதாரமான அம்சத்தை முதல் ஷாட்டிலேயே அழுத்தமாகக் காட்டியிருப்பார்கள். ஏரிக்கரை, மர வீடு, மாடி, கதவு, அறை, சோஃபாவில் படுத்திருக்கும் நபர் எனத் துண்டு துண்டாகக் காட்டியிருந்தால் எந்தவித சஸ்பென்ஸும் எழுந்திருக்காது. அந்தவகையில் ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியைக் காட்டவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தவர் எவரோ அவரே அந்தக் காட்சியின் கலை நயத்துக்குக் காரணம்.
இந்தக் காட்சிகளை இப்படிச் சித்திரித்தது ஒளிப்பதிவாளரா, இயக்குநரா என்பது முக்கியமில்லை. யாராக இருந்தாலும் அவர்கள் ஒரு திரைக்கதை (மொழி) ஆசிரியராகத்தான் இந்த இடத்தில் செயல்பட்டிருக்கிறார்கள். அடிப்படையில் அது திரைக்கதை ஆசிரியர் எழுதியிருக்கவேண்டிய காட்சியே. அதைத்தான் திரைக்கதை என்றும் குறிப்பிடுகிறேன்.
பரதேசி படத்திலும் சீக்ரெட் விண்டோ போலவே முதல் காட்சி நீண்ட ஒற்றை ஷாட்டாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கிலப்படத்தில் அந்தக் காட்சி எப்படி படத்தோடு பொருந்தி இருந்ததோ அதுபோல் தமிழில் இருக்கவில்லை. ஏனென்றால், அந்த கேமரா நகர்வு ஒருவித சஸ்பென்ஸ் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. கதையில் அப்படியான ஒரு இடத்துக்குத்தான் அது பொருத்தமாக வரும்.
நான் பார்த்த ஆங்கிலப் படத்தில் அந்த கேமரா கோணம் இருந்தது. அது பார்க்க அபாரமாக இருந்தது. எனவே, எனது படத்துக்கு அதைப் பயன்படுத்திக்கொண்டேன் என்ற குழந்தைத்தனத்துக்கு எல்லா இடங்களிலும் மரியாதை கிடைக்காது. ஒருவேளை அந்த கேமரா நகர்வை அடிப்படையாக வைத்து ஒரு கிராமத்தின் பன்முக சித்திரத்தை உருவாக்கியிருந்தார்கள் என்றால் அந்த நகலெடுப்பை, வேறொன்றின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட கலை நயம் மிகுந்த காட்சி என்று ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.என்ன செய்ய… தொழில்நுட்பத்தை மட்டும்தானே காப்பியடிக்க முடியும்.

 

எலியைப் பிடித்து கறி சமைக்கும் காட்சி… தனது மகனுக்கு சாப்பாடு ஊட்டியபடியே மன நிலை குன்றிய பிச்சைக்காரர் ஒருவருக்கும் உணவிடும் காட்சி, கோவில் பூசாரி நைவேத்தியத்துக்கு அரிசி இல்லாமல் நாலைந்து கல்லை பாத்திரத்தில் போட்டு, பயந்தபடியே எடுத்துச் செல்லும் காட்சி, மேல்சாதிக்காரர் ஒருவருடைய வீட்டு எரவானத்தில் சொருகி இருந்த தட்டை எடுத்து தலித் ஒருவர் குத்துக்காலிட்டு கஞ்சி கேட்டு அமரும் காட்சி, கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வெகு சிரமப்பட்டுத் தொலைவில் இருந்து சுமந்து வந்த குடத்து நீரில் இருந்து இரண்டு கோப்பையை காகம் குடிப்பதற்காக கல் தொட்டியில் விட்டுச் செல்லும் காட்சி, எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து சென்றபடி அது சேகரித்து வைத்திருக்கும் உணவைத் தோண்டி எடுக்கும் காட்சி, பசுமாடு ஒன்று உணவு கிடைக்காமல் மலத்தைச் சாப்பிடும் காட்சி என அந்த கிராமத்தின் வறுமையையும் மனிதாபிமானத்தையும் சாதி உணர்வையும் நீளமான அந்த ஒரே ஷாட்டில் காட்டியிருந்தால் அது பொருத்தமான கலாபூர்வமான ஆரம்பக்காட்சியாக இருந்திருக்கும். ஆனால், பரதேசியிலோ ”ராசா வண்டியை விடு’ என்று கதாநாயகன் வெறுமனே தெருவழியாக நடந்துகொண்டேயிருக்கிறான். ஒரு திரைக்கதை ஆசிரியர் கிராமத்தின் பன்முக சித்திரத்தை ஓரிரு பக்கங்கள் எழுதிக் கொடுத்திருந்தாரென்றால், அந்தக் காட்சி உயிரோட்டம் மிகுந்த காட்சியாகப் பரிணமித்திருக்கும்.

சுவரொட்டிகளை மெல்லும் நகரவாசிகள் / கே.ஜே. அசோக்குமார்

images (83)

 

 

 

 

 

 

 

 

வெளிமாநிலத்திலிருந்து வரும் ஒருவர் அல்லது கொஞ்சநாள் வெளிமாநிலங்களில் இருந்துவிட்டு வரும் ஒருவருக்கு சென்னை அல்லது தமிழகத்தின் வேறு எந்த நகரத்திற்கும் நுழையும்போது குப்பைகளுக்கு, சாக்கடைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக அதிர்ச்சியடைவது சுவரொட்டிகளை கண்டுதான். நகரமே இந்த சுவரொட்டியால் சுவாசிக்கிறது என்று நினைக்கும் அளவிற்கு எங்கும் சுவரொட்டிகள். காலை மாலை இரவு என்று எல்லா நேரங்களிலிலும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன‌ இந்த சுவரொட்டிகள். மாடுகளும் மனிதர்களும் கலைந்தது போக மிச்சம் இருப்பதை தானே கழ‌ற்றி புதிய ஆடைகளை தினம் இந்த போஸ்டர்கள்மூலமாக‌ நகரங்கள் தங்களை உடுத்திக்கொள்கின்றன‌.

சினிமா சுவரொட்டிகள், பத்திரிக்கை வால்போஸ்டர்களையும் தாண்டி மூலம் பவுத்திரம் முதல் இரங்கல் செய்திகள் வரை இந்த சுவரொட்டிகள் பயன்படுகின்றன. இந்த சுவரொட்டிகள் என்ன சொல்கின்றன என்று புரியும் முன்பே அவைகளின் மாதிரிகளும், நோக்கங்களும் ஒன்றுதான் என்று தொடர்ந்து கவனித்து வரும் ஒருவருக்கு ஒரு சம‌யத்தில் புரிந்துவிடும். மணவிழா காண அழைப்பதிலிருந்து மணவிழா அழைப்பில் வந்ததற்கு நன்றி தெரிவித்தும், காதுகுத்து, மஞ்சள்நீராட்டுவிழா தொடங்கி ஆழ்ந்த இரங்கள் செய்திகள் வரை இந்த சுவரொட்டிகளில் ஒரு தொடர்ச்சி இருப்பதை கவனிக்க முடியும். எல்லா காலங்களிலும் எல்லா சுவரொட்டிகளையும் நாம் கவனிப்பதில்லை என்பதை ஒரு நேரத்தில் கண்டுகொள்கிறோம்.. ஒரு பருவகாலத்தில் கவனிக்கும் ஒருசில சுவரொட்டிகளை அடுத்த ந‌ம் பருவங்களில் நாம் கவனிப்பதேயில்லை.

சுவரொட்டிகளின் பணிகள் அசாத்தியமானவைகள்தாம். கொஞ்சம் யோசித்துபார்த்தால் இந்த சுவரொட்டிகள் நம் ஆழ்மனதில் சென்று நம்மோடு உறவாடுகின்றனவா என தோன்றும். நம் நினைவுகளில் இருந்து எல்லா காலங்களிலும் மறந்துவிடாதபடி நம்மை முழ்கும் நோக்கத்தோடு தொடர்ந்து அவைகள் செயல்படுகின்றன‌. அவைகளின் பணி அதுதான் என்றாலும்கூட சுவரொட்டிகள் இல்லாமல் ஒரு நகரத்தில் ஒரு மனிதன் வாழவே முடியாதா? தினசரி வார இதழ்களுக்காக அடிக்கப்படும் வால்போஸ்டர்கள் ஏன் அச்சடிக்கப்படுக்கின்றன என்று யாரும் யோசித்ததாக தெரியவில்லை. ஒரே செய்தி எத்தனை கோணத்தில்தான் சொல்லிவிடமுடியும். வால்போஸ்டர்களில் இன்றைய ராசிபலன் என்ற ஒற்றை செய்தி ந‌ம் மனதில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது, இரண்டாவது மனைவியின் கள்ளகாதலனை கொன்றவனின் தூக்கு ரத்து என்ற செய்தியின் பொருள் என்ன‌, இப்படியெல்லாம் யோசிப்பவனை கள்ளகாதலனின் மனைவி கோர்ட்டில் சரண் என்ற செய்தி அவனை மறக்கடித்து விடுகின்றன‌ இந்த சுவரொட்டிகள்.

எனக்கு தெரிந்து தமிழகம் தவிர கேரளா, ஆந்திரா மாநில நகரங்களில் மட்டுமே சுவரொட்டி விளம்பரங்களை காணமுடியும். அதுவும் பெருநகரங்களில் மட்டும் கொஞ்சம் மட்டும்தான் காணப்படுகிறது. பத்திரிக்கை விளம்பரங்களோ சினிமா விளம்பரங்களோ இல்லாத பல இந்திய நகரங்களை அந்த நகரில் சென்று வருபவர்கள் கவனித்தே வருகிறார்கள். வாசிப்பவர்களும், சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அங்கெல்லாம் குறைவு என்று சொல்ல முடியாது. தமிழகத்தைவிட அதிக எண்ணிக்கையே அங்கே உள்ளன என்று சொல்லலாம். பின் எதற்கு இந்த விளம்பரங்கள்? யாருக்காக செய்யப்படுகின்றன இந்த விளம்பரங்கள்? ஏன் தமிழகத்தில் மட்டும் இந்த விளம்பரங்கள்? இந்த விளம்பரங்களில் உள்ள உளவியல் அல்லது அரசியல்தான் என்ன? சொல்லப்போனால் புதிதுபுதிதாக வரும் இந்த விளம்பரங்கள் அந்த சிந்தனையைகூட‌ செய்ய நம்மைவிடுவதில்லை. பத்திரிக்கை, சினிமா, இன்னபிற‌ விளம்பரங்கள் இல்லா ஒரு நாளை தமிழகத்திலுள்ள‌ ஒருவர் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

எது பரப்பரப்பாக இல்லையோ, எது பரபரப்பாக பேசப்படவில்லையோ அது வெற்றிபெறவில்லை என்ற‌ மாயை பொதுவாக‌ தமிழர்களிடையே அதிகம் உண்டு என தோன்றுகிறது. ஒருவரின் வாழ்வின் வெற்றி அல்லது தோல்வி என்பது அவரின் பிரபல்யத்தை பொருத்தது. எப்படி நகைகளும் உடைகளும் ஒரு திருமண சந்தையை தீர்மாணிக்க அவசியமானதோ அதுபோல‌. இன்றைய அரசியலின், சினிமாவின், தனிவாழ்வின் ஒரு செய்தியை ஒருவர் அந்த நாளில் அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டால் அவரின் மொத்த வாழ்வில் சேர்த்துவைத்த சொத்தை இழந்ததாக நினைக்கிறார்கள். ஓடிஓடி எல்லாவற்றையும் சேர்த்து பின் மறக்க வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் பாவம் இந்த மனிதர்கள்.

மாடுகள் மட்டும் சுவரொட்டிகளை மெல்வதில்லை. மனிதர்களும் தங்கள் தினப்படி செயல்களோடு சேர்த்து சுவரொட்டிகளையும் மெல்கிறார்கள். அதிகம் மெல்பவர்கள் அதிகம் தங்களை சிறந்த கனவானாக எண்ணும் வாய்ப்பை பெறுகிறார்கள். வெளியேற்றுவதில் கூட அதே தீவிரத்துடன்.

நான் ஒரு முறை பேருந்தில் சென்று கொண்டிருந்த போது சன்னலுக்கு வெளியே ஒரு திருமணவிழாவின் போஸ்டரில் மணமகன் கையை உயர்த்தி மணமகளுக்கு நிலவை சுட்டும் ஒரு 50 அடி நீள போஸ்டரை தலையை இடவலமாக திருப்பி மேலும் கீழுமாக கவனித்து அது என்ன என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. என் விடாமுயற்சியை கவனித்த‌ பக்கத்து இருக்கை ம‌னிதர் சட்டென சிரித்துவிட்டார்.

மெதுவாக‌, ‘ஆமா தமிழ்நாடே இந்த மோகத்திலதானே இருக்கு…’ என்றார் சன்னமாக‌.

விருந்தா – ஜி. விஜயபத்மா

download (45)

 

 

 

 

 

 

 

 

கைலாசத்திற்கு போகும் வழியெல்லாம் விஷ்ணுவுக்கு குழப்பமாகவே இருந்தது .. “என்றுமில்லாமல் எதற்க்காக பார்வதி தன்னை அழைக்கவேண்டும். :” என்ற சிந்தனையினூடே ,,எதுவோ தவறாக நடக்கப்போகிறது என்ற கலக்கம் அவருள் தோன்றியது . கைலாசத்தில் பார்வதி ஒரு இடத்தில் உட்காராமல் இங்கும் அங்கும் நடந்தவாறே இருந்தாள் .. அவள் நிலைகொள்ளாமல் தவிக்கிறாள் என்பதை அவள் நிலை உணர்த்தியது . விஷ்ணுவைப் பார்த்ததும் கண்களில் கலக்கத்துடன் பார்த்தாள் . எனக்காக இதை செய்வியா என்ற கேள்வியும், கெஞ்சலும் அவள் முகத்தில் விரவி இருந்தது . அன்பு தங்கையின் முகத்தைப் பார்த்ததுமே அவள் எதை யாசிக்கிறாள் என்பது விஷ்ணுவுக்கு புரிந்தது .அவர் மிக தயக்கத்துடன் பார்வதியை ஏறிட்டார் .

 

அவர் பேச துவங்குமுன் பார்வதி ,
‘ தயவு செய்து முடியாது என்று சொல்லி விடாதே! ஜலேந்திரன் சிவனின் நெற்றிகண் நெருப்பில் பிறந்தவன். முருகனைப்போல் அவனையும் யாரும் எதிர்க்க முடியாது. அவன் சிவபாலன் ,, அதே சமயம் அவன் விருந்தாவின் கணவன். விருந்தா ஜலேந்திரன் ஒவ்வொரு முறை போருக்கு போகும்போதும் தன் கணவன் வெற்றி பெறவேண்டும் என்று தீவிர யோகம் உன்னை நோக்கி தான் செய்கிறாள். உன்னுடைய முழு அருளும் பெற்றவள் அவள் .அவள் ஜெலேந்திரனின் மனைவியாக இருக்கும் வரை, ஜெலேந்திரனை ஒருவரும் வெற்றி கொள்ள முடியாது, அவன் சிவன் மேல் மிகுந்த கோபத்துடன் போருக்கு வந்து கொண்டிருக்கிறான்.உன்னைத்தவிர இந்நேரத்தில் வேறு யாரும் உதவி செய்ய இயலாது.”

 

பார்வதி தேவியின் உடைந்த குரலும், கலக்கமும் விஷ்ணுவை கலங்கசெய்தன. எதற்கும் கலங்காத வீர மங்கை பார்வதி கலங்குகிறாள் என்றால் விசயம் ஒதுக்கி தள்ள கூடிய சாதாரண விசயமல்ல. ஆனால் பார்வதியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமானால், ஒரு பாவமும் அறியாத அல்லும் பகலும் கணவனின் நலம் மட்டுமே விரும்பி அவனுக்காகவே தியானமும் யோகமும் செய்து கொண்டிருக்கும், தன்னுடைய தீவிர பக்தை விருந்தாவை பலி கொள்ள வேண்டும் .

 

தன் இளம்பிராயம் முதற்கொண்டு விஷ்ணுவை வணங்கி வருபவள் விருந்தா , கணவனுடன் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் விஷ்ணுவை தியானிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து வருபவள் . விஷ்ணுவின் கண்முன் ஒரு நிமிடம் விருந்தாவின் உருவம் வந்து போனது. பார்வதியின் கோரிக்கையை தன்னால் நிச்சயம் நிறைவேற்ற இயலாது என்று அவருக்கு தோன்றியது . தன் முழு ஆத்மாவையும் அர்ப்பணித்து தன்னை தியானிக்கும் தன் பக்தைக்கு தானே துரோகம் செய்ய வேண்டுமா ? அவருக்கு அந்த சிந்தனையே தவறாக தோன்றியது .
” போரின் வெற்றிக்காக , ஒரு நல்ல விசயத்துக்காக எதையும் செய்யலாம். எந்த தர்மத்தையும் மீறலாம் என்று சொன்னவன் நீதானே கண்ணா ?
இதுவும் போர்தான் .. தேவர்களை காக்க ,மனைவியின் தவத்தினால் உன் சக்தியையும், சிவஜோதியே குழந்தையாக உருவாகி, சிவனின் சக்தியை பெற்று சிவனையே எதிர்க்கும் ஜலேந்திரனை சிவனால் கூட அழிக்க இயலாது .நீ என் கோரிக்கையை நிறைவேற்றிதான் ஆகவேண்டும் ”

பார்வதியின் கெஞ்சலும் கலக்கமுமான தொனி மாறி அது இப்பொழுது விஷ்ணுவுக்கு கட்டளையாக வெளிப்பட்டது .விஷ்ணு நிமிர்ந்து பார்வதியை பார்த்தார். அவள் கண்கள் ,” இது என் மேல் ஆணை நீ செய்கிறாய் “என்று கட்டளை இட்டது . பார்வதிக்கு பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து வெளியேறினார் விஷ்ணு. அவர் மனம் முழுக்க குற்ற உணர்வு ஆக்கிரமித்தது . விஷ்ணுவின் முகத்தில் தெரிந்த வேதனையும் குற்ற உணர்வும் கண்ட பார்வதி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். விஷ்ணு அவள் கோரிக்கையை ஏற்று கொண்டார் அதனால்தான் இந்த குற்ற உணர்வு என்று அவளுக்கு புரிந்தது

விருந்தா உலகையே மறந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தாள். அவள் முன் விஷ்ணு ஜலேந்திரன் உருவில் தோன்றினார் . விஷ்ணுவாக இருந்து பார்க்கும்போது விருந்தாவின் அன்பும் பக்தியும் விஷ்ணுவை ஆட்கொண்டு அவள் விரும்பும் வரத்தை கொடுத்து விடுவார் . இப்பொழுது ஜலேந்திரனாக உருமாறி , அவளைப்பார்க்கும்போது அவள் அழகு அவரை கிறங்கடித்தது ..

 

அவளை ஒரு முறை சுற்றி வந்து அவள் பின்னால் நின்று கொண்டு அன்பொழுக ,”விருந்தா ” என்று அழைத்தார் . விருந்தா கணவனின் குரல் கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளி எழுந்து , அவனைக்கட்டிக்கொண்டு , போர் முடிவு என்ன ஆனது? என்று அவன் மார்பில் முகம் புதைத்துகொண்டு காதலுடன் கேட்டாள் . ஜலேந்திரனாக இருந்த விஷ்ணுவுக்கு அவள் அணைப்பின் வேகத்தில் ,உடல் முழுவதும் மோகம் ஏறி கொதிக்க துவங்கியது .

விருந்தாவுக்கு அந்த மாறுதல் புரிந்து என்னாச்சு உங்களுக்கு என்றபடியே தலை நிமிர்ந்து விஷ்ணுவை பார்க்க முயற்சித்தாள். அவள் தன் கண்ணை ஏறிட்டு பார்த்தால் உருமாற்றம் தெரிந்து கொள்வாள் என்று அவள் தலையை நிமிருமுன் அவளைக்கட்டி தூக்கி கொண்டு அதைக்கொண்டாடத்தானே நான் வந்து இருக்கிறேன் என்று சொல்லியபடி அவள் பின் கழுத்தில் தன் முகத்தை புதைத்து கொண்டார் .கணவனின் பதிலால் பெரும் மகிழ்வுற்ற விருந்தா அவன் விரும்பிய வண்ணம் தன் உடலைகுழைத்து அவனுக்கு ஒத்துழைத்தாள் .

விருந்தாவுக்கு என்றுமில்லாமல் இன்று என்னவென்று, இனம்புரியாத சங்கடம் ஒன்று உடலுக்குள் உருவாகி அவளுக்கு குமட்டலை உருவாக்கியது . எங்கே தன் உணர்வு புரிந்தால் கணவனின் தீவிர காதல் தடைபடுமோ என்று கண்களை இறுக மூடிக்கொண்டு குமட்டலை தனக்குள் கட்டுபடுத்திக்கொண்டாள் .அவளுக்கு எதுவோ ஒன்று தவறாக நடக்கிறது என்பது புரிந்தது . தன் கணவனின் அணைப்பிலும் ,இயக்கத்திலும் எதுவோ ஒரு மாறுதல் தெரிவதை அவள் உள்ளுணர்வு உணர்ந்தது . மூடியிருந்த கண்களை மெல்ல திறந்து கணவனின் கண்களுக்குள் ஊடுருவிப் பார்க்க அந்த கண்கள் காமம் வழியும் கண்ணனின் கண்களாக இருந்தது .

வேகமாக பெரும் கோபத்துடன் விஷ்ணுவை பிடித்து தள்ளினாள் . கோபத்தில் சிவந்த முகத்தில் அருவெறுப்புடன் விஷ்ணுவை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தாள் .
விஷ்ணு அவமானத்தில் தலை குனிந்து, உன் கணவனை போரில் தோற்கடிக்க வேறு வழி தெரியவில்லை. என்னை மன்னித்துவிடு விருந்தா என்றார் . தன் தவறை உணர்ந்து கண்களில் நீர் மல்க மன்னிப்பு கோரி நிற்கும் விஷ்ணுவைப்பார்த்து அவளுக்கு பாவமாக தோன்றவில்லை .

மேலாக கோபம் இன்னமும் அதிகமாகி , கண்ணா உன்னை வணங்கியதற்கு வெட்கப்படுகிறேன். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை ஆட்கொள்வது உன் ஆண்மைக்கே அவமானம் . கற்பழிப்பு எப்படிப்பட்ட புனிதத்தின் பேரால் நடத்தப் பட்டாலும் அது மன்னிக்க முடியாத குற்றம். பெண்களை பழிவாங்க வேண்டும் என்றால் அவளை கற்பழிப்பது என்பது உங்கள் ஆண் உலகில் நீங்கள் எழுதிக்கொண்ட விதியா ?

 

கற்பழிக்கும் ஒவ்வொரு ஆணும் அவன் அப்பாவச்செயலில் ஈடு படும்போது , தன் தாயையும், அவன் பிறந்த பூமியையும் சேர்த்தே கற்பழிக்கிறான். அதற்கு நீயும் விலக்கல்ல கண்ணா ..நீ ரொம்ப சுலபமாக மன்னிப்பு கேட்கிறாய் . எனக்கு என் ஒவ்வொரு மயிர்க் கால்களிலும் புழுக்கள் புகுந்து உடல் முழுவதும் மொய்ப்பது போல் உணர்கிறேன் . என் எலும்புகள் உடைந்து, என் சதையை பிய்த்துக்கொண்டு வெளிவரத்துடிப்பது போன்ற வேதனையை உணர்கிறேன். இரத்த நாளங்கள் வழியே அந்நியனான உன் துர் நாற்றம் புறப்பட்டு என்னை மூச்சடையச் செய்கின்றன .

 

எந்த கண்ணனை நான் ஆராததித்து வணங்கினேனோ …அந்த கண்ணனை இப்பொழுது என் கால் கட்டவிரலின் கீழ் நெளியும் புழுவை விட கேவலமாக பார்க்கிறேன் .நீ தொட்ட இந்த உடலை இனி நான் சுமந்து வாழ இயலாது .. என் அவயங்கள் ஒவ்வொன்றையும் பிய்த்து உன் மேல் விட்டெறிய ஆவலாக இருக்கிறது . எவற்றை எல்லாம நீ மோகித்து உன் விரல்களால் வருடி சுகம் கண்டாயோ அவற்றை உன் முகத்தில் எறிந்து வைத்து கொள் என்று சொல்லதுடிக்கிறேன் ..ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நான் உன்னை என் கடவுளாக ஏற்றுக்கொண்டு வணங்கி உன் அருளால் என் கணவனுக்கு நிறைய வெற்றிகளை கண்டிருக்கிறேன் .

அதனால் உன்னை சுமந்த இந்த உடலை தீக்கு இரையாக்குகிறேன் . நீ மானிடப்பிறவி எடுத்து உன் காதல் மனைவியை இன்னொருவன் பெண்டாள எடுத்து போகும் இழி நிலை உனக்கு உருவாகட்டும் . ஒவ்வொரு நாளும் உன் மனைவியை வேறு ஒருவன் உடமையாக்கி இருப்பானோ என்று நீ உனக்குள் புலம்பி புலம்பி சாகும் வாழ்க்கை உனக்கு வரவேண்டும் . என்னை போலவே உன் மனைவியும் உன்னை நிராகரித்து தீக்குளிக்க வேண்டும் .. இது உனக்கு நான் கொடுக்கும் சாபம் . என் கணவன் தவறு இழைக்கிறான் என்றால் நீ என்னிடம் எடுத்து சொல்லியிருக்கலாம் , அதை விட்டு இவ்வளவு ஈனத்தனமாக நீ நடந்திருக்க கூடாது . என்று கூறியபடி விருந்தா விஷ்ணுவின் கண் முன்னால் எரிந்து சாம்பலானாள் .

 

விக்கித்து போய் சாம்பலை கைகளில் ஏந்தி கதறி அழுதார் விஷ்ணு தேவர்கள் அனைவரும் கூடி விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறினர் . ஆனாலும் விஷ்ணுவின் மனம் ஆறுதல் அடையவில்லை … தன் கைகளில் உள்ள சாம்பலை சிறிது நேரம் வெறித்து பார்த்தார் . அவமானத்தில் அவர் உடல் கூனிகுருகியது . சாம்பலை கை நிறைய அள்ளி தன் முகத்தில் அறைந்து பூசிய படி விருந்தா உலகில் தலை சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்ட துளசியாக நீ பூமியில் பிறப்பெடுப்பாய். நான் செய்த தவறினால் நீ அவமானச் சின்னமாக ஆகி விடவில்லை . பூவுலகில் வாழும் ஒவ்வொரு சுமங்கலியும் தன் வீட்டில் உன்னை தெய்வமாக வைத்து வழிபடுவார்கள் . எனக்கு நடக்கும் பூசைகள் இனி துளசி இல்லாமல் நடக்காது .. என்று கூறியபடி விருந்தாவின் சாம்பலில் தன சிரம் தாழ்த்தி வணங்கினார் விஷ்ணு .

***