Category: இதழ் 70

பிணவாடை ( சிறுகதை ) :   கே.ஜே.அசோக்குமார்

 

images (3)

 

 

 

 

 

 

 

இது நானல்ல அவன் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எப்போதும் போல நான் என்று சமயங்களில் நினைத்து கொள்வதுபோல‌‌வே நினைத்துக் கொள்கிறேன். அவன் பெயரான பரந்தாமன் மிக அன்னியமாக மாறிவிட்டது. இதை இத்தனை எளிதாக நான் எடுத்துக் கொள்வேன் என நினைக்கவில்லைதான். ஏனெனில் நான் வெறுக்கும் என் பல‌ குறைகளையும் தாண்டி, பெயரையும், உடலையும் நேசித்தேன் என்பது உண்மை. என் தோள்களை அழுத்திய‌ அறுபத்துஐந்து கிலோ எடையுள்ள அவனது உடல் இன்று பிணகன‌ம் கன‌க்கிறது. பெரிய எடை ஒன்றை தூக்குவதில் இருக்கும் சிரமத்தை தாண்டி, எதை இழக்கப்போகிறேன் என்பதில் இருக்கும் துக்கத்தின் வலி மனதின் அடுக்குகளில் இன்னும் இருக்கிறது. ஆம் இனிமேல் அவன் பிணம்தான். அவனை இனி வைத்துக் கொள்ள முடியாது. அவனை முற்றிலும் மறக்கப்பட, அழிக்கப்பட வேண்டியவன். இந்த முடிவும் சங்கடமாகத்தான் இருக்கிறது. வீடு மாறியதும் பழைய வீட்டின் பாதைகளும், அங்கு நடந்த சம்பவங்களும் நினைவுகளும் எளிதில் மனதிலிருந்து மறைந்துவிடுவதுபோல இதையும் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.. ஆனால் பரந்தாமனின் நினைவுகளை தனியாக பிரித்து என்றோ நம்மையறியாமல் நிகழ்ந்துவிட்ட‌ கொடும் கனவுகளைப் போல மனதில் ஒதுக்கி, கசியவிடாமல் கவனமாகத்‌ தேக்கிக் கொள்வது பெரும் சுயவதையாகவே இருக்கிறது.

தூக்க கலக்கத்தில் இரவு மூன்று மணிக்குகூட முழுபிரஞ்சையுடன் இருக்கிறேன் என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை. சத்ய‌பிரகாஷாக‌ இரவு மூன்றுவரை இருந்து பார்த்ததில்லை. அதனால் உடலும் மனமும் ஒன்று சேரவில்லையோ என நினைக்க தோன்றுகிறது.. இதுவரைக் கண்டிராத‌ இந்த‌ இரவின் சின்ன ஒலிகள்கூட மனதை கலங்கடித்தும் உடலை சிலிர்க்கவும் வைத்துக் கொண்டேயிருக்கிறது. இந்த நிலையை சாதாரண மனிதர்கள் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும், இந்த சூழ்நிலைகளை சமாளிப்பது இதைவிட அவர்களுக்கு கடினம் என்றும் பயத்தை வெல்லும் பொருட்டோ என்னவோ இந்த நேரத்தில் அப்படி நினைத்து மகிழ்ச்சியடைக்கிறேன்.

சத்யபிரகாஷ் மூர்த்தி என்கிற பெயரில் இருக்கும் வசீகரம் பரந்தாமன் மாணிக்கம் என்ற பெயரின் முன்னால் ஒன்றுமில்லைதான். வசீக‌ரம் பெயரில் மட்டும்தானா? உடல், உள்ளம், பொருள் அதைத் தாண்டி இந்த சமூகம் அளிக்கும் மதிப்பும், அங்கீகாரமும், செல்வாக்கும் அவைகள் மூலம் கிடைக்கும் புகழும்தானே? சத்யபிரகாஷ் என்று விளித்ததும் விழித்துக் கொள்ளும் என் பிரஞ்சை அலுவலக தலைவர் அமித் முன்னாலும், இப்போதைய‌ மனைவி ரிதுவின் முன்னாலும் தயங்கி நின்றுவிடுவதை பல‌சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இவர்களை எந்தவகையில் திருப்திபடுத்துவது என்பது பெரிய கேள்வியாக எப்போதும் உணர்ந்தே என் அகம் விழிப்புடன் இருப்பதாகவும்கூட‌ தோன்றும்.

தனியாக நடந்து செல்லும் கண்களில் வெறிகொண்ட‌ நாய் ஒன்றின் இறுகிய அடிபாகம் சிமெண்ட் சாலையில் படும்தோறும் பற்களிடையேபட்ட‌ இரும்பு போல உடலை விதிரச்செய்வதாக‌ இருக்கிறது. முதலில் பார்த்தபோது இருந்த நாயின் கண்களின் பதற்றம் இப்போது இல்லை. லேசாக முகர்ந்து முகத்தை தாழ்த்தியபடி ஒதுங்கி சென்றது. இது இயல்புதான் என அது நினைத்திருக்கலாம். கூடவே என்மனதில் பதற்றம் இல்லாமல் ஆசுவாசமாக இருப்பது நிறைவாக அதேவேளையில் முன்பே நினைத்து வைத்திருந்த‌ இந்த காரியம் முடியும்வரையில் ஆசுவாசம் இருக்கவேண்டும் என்ற‌ நினைப்பும் கூடவே வந்துகொண்டே இருந்தது. மக்கள் நடமாட்டம் மிக்க பகுதி அல்ல இது. நகரத்தின் கடைசியாக புதியதாக வளர்ந்துவரும் பெரிய ப்ளாட்கள் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதி. ப்ளாட்டுக்கு பின்பக்கம் சிலமரங்களுடன் அமைந்த சேரிகள் போன்ற‌ பழைய நகரத்து வீடுகள் அங்காங்கே சில‌ மட்டுமே உண்டு. அத்தனை எளிதாக நடந்துசெல்லும் ஒருவர் யாரென்று அடையாளம் காணமுடியா இருட்டு சூழ்ந்திருப்பது வசதியாக இருக்கிறது.. அதுவும் இந்தநேரம் குடிகாரர்களின் நேரம். எதிரே நின்றாலும் அவர்களால் அவர்களே இருக்கும் இடம் இன்னதென்று அறிந்துகொள்ளமுடியாத போது என்னை அடையாளம் காண்பது கடினம். மேலாக நான் நானாக இல்லை. சத்யபிரகாஷாக இருக்கிறேன். நானே பிணமாக என் தோளில் இருக்கிறேன். என்னை அடையாளம் காணும்போது நான் பிணமாக இருப்பதால் போலிஸ், கிரிமினல் வழக்குகளில் சத்யாபிரகாஷ்தான் மாட்டுவான் நான் பிறகு உருமாறிக்கொள்ளலாம் என்ற மேம்போக்கான ஒரு நினைப்போ அல்லது மதுவின் மயக்கத்தால் வந்த ஒரு குழப்பச் சிந்தனையால் என்னவோ எளிதாக நடந்து செல்லமுடிகிறது என நினைக்கிறேன்.

என்னையே நான் சுமந்து செல்வது என்பது மீனாவிற்கு தெரியாமல் புதியதாக வாடகைக்கு எடுத்திருக்கும் ப்ளாடில் இருந்தபோது தோன்றாத ஒரு அதிசய நிகழ்வாக இப்போது தோன்றுகிறது. பளிச்சென்று தெரியும் என் அம்மண உடலை சுமந்து செல்லும் காட்சியை நானே மேலிருந்து காண்பதுபோலிருக்கிறது. அந்த காட்சியில் சூழ்ந்திருக்கும் அதிபயங்கரத்தை இருட்டில் கண்கள் ஒளிர அமர்ந்திருக்கும் ஒரு மருண்ட‌ பூனையைப் போல உணர்கிறேன்.

உருமாறிய பிறகு அலுவலக பிரச்சனைகளை நான் நினைத்ததைவிட ஓரளவு சமாளிப்பதாக முடிவதாக‌ தோன்றுகிறது. பெரிய பிரச்சனைகள் என வரும்போது, வயது ஏறஏற பிரச்சனைகளை சமாளிப்பதில் ஏற்படும் தெளிவின்மையாக அதை எடுத்துக்கொண்டு விடலாம் என்கிற ஒரு சின்ன‌ துருப்புச்சீட்டு சற்று ஆறுதலை அளிக்கிறது. இதற்குமுன்பில்லாதபடி, சமய‌ங்களில் அமித் குழ‌ப்பம் அடைவதும், ரிது மனவருத்தம் கொள்வதும் மீனாவின் சந்தேகம் வளர்வதும் அவ்வப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. போதாததற்கு சித்தார்த்தும் இருக்கிறான். அவன் என்மகன் எனும்போது உடலின் உள்ளே ஏதோ ஒன்று புரள்வது போலிருக்கும். அவன் கண்களில் தெரியும் சின்ன தயக்க‌அதிர்வுகூட மனதை நாளெல்லாம் பதைக்கசெய்தபடி இருக்கும். பிறகு ஏன் இதை தொடரவேண்டுமென‌ என்னையே கேட்டிருக்கிறேன், என் வாழ்க்கையின் நிறைவின்மையை, சத்யபிர‌காஷ் வாழ்வின் மூலம் முழுமையைத் தாண்டிச் செல்லும் அலுப்பில்லாத‌ எளிய‌ சுவாரஸ்யம் எனக்கு பிடித்திருப்பதால் இருக்கலாம்.

சத்யபிரகாஷூம் நானும் கிட்டதட்ட‌ ஒரே சமயத்தில்தான் அலுவலக வாழ்க்கையை ஆரம்பித்தோம். நீண்ட உடல்வாகுடன் சற்று தடித்த உருவம் கொண்டவன். அவன் உயரமும் பருமனும் சரியானவிகிதத்தில் கலந்திருப்பதனால் சராசரி உயரத்தைவிட‌ உயரமானவனாகவும் பருமனானாகவும் அவன் தெரிவதில்லை. சமீபத்திய முடி உதிர்வுகளுக்கு முன்னால் தலைமுடியை சீவியும் சீவாமலும் கைகளால் கோதி வைத்திருப்பது அவனுக்கு பிடித்த செய்கைகளில் ஒன்று.. சற்றுதடித்த மீசையை கீழ்நோக்கிவிட்டு, ஆழ்ந்து சிந்திக்கும் சமயங்களில் பற்களால் அதை கடித்துக் கொண்டிருப்பான். எனக்கு நீளமாக விடுவது பிடிப்பதில்லை. இருந்தாலும் இப்போது அதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரே மாதிரி உடைகளை எப்போதும் அவன் அணிவதில்லை. புதுப்புது பிராண்டுகள் தேர்ந்தெடுப்பவன் எந்த சட்டையாக இருந்தாலும் கைகளில் இரண்டு மடிப்புகள் மடித்திருப்பான். நான் மூன்று மடிப்புகள் அல்லது நீளமாக வைத்துக் கொள்ள விரும்புவேன். இதையும் அவனுக்காக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நாங்கள் வேலைசேர்ந்த ஆரம்ப நாட்களில் எங்களிடையே இருந்த முதிரா வயதின் அன்யோன்ய‌ம் மற்ற எல்லா நட்புகளைப் போல‌ பின்வந்த‌ நாட்களில் மாறத்தொடங்கியது. அந்த மாற்றம் இருவருக்கும் நேரடியாக மனத்தாங்கலை ஏற்படுத்தியதாக இருந்தது. சாதாரண பேச்சு வார்த்தைகளில்கூட வேண்டாத வெறுப்புகள் மெதுவாக‌ கலந்ததாக தோன்றியது. பொதுவாக அலுவலக‌ நட்புகளில் இடையே பல்வேறு காரணங்களால் இப்படி நடக்ககூடியதுதான். அலுவலகம் என்றால் கூட்டு முயற்சி பயிலும் ஒரு இடம் தானே? ஆனால் இப்படி நடக்கும் என்றோ, அதை சரிசெய்ய முடியும் என்றோ நினைப்பதற்குள் அதை சரிசெய்ய முடியாதபடி இருவர் மனங்களும், சூழ்நிலைகளும் ஒருகட்டத்தில் மாறிவிட்டிருந்தன‌.

எரிநட்சத்திரம் ஒன்று சட்டென‌ கிடைமட்டமாக பாய்ந்தோடியது. அதன் வேகம் கண் இமைக்கும் வேகத்திற்கு ஈடாக இருந்தது. ஒரு வேளை அது பிரமையாக இருக்கலாம். இருண்ட கரியவானில் சாம்பல்நிற மேகங்கள் அடர்த்தியாக குவித்துவைத்த கரியமலர்போல் எல்லா இடத்திலும் இருப்பது கூர்ந்து கவனிக்கும்போது மட்டுமே தெரிந்தது. சேற்றில் மின்னும் சிறு நீர் துளிகள்போல நட்சத்திரங்கள் சில தெரிந்தன. பாதைமிக நீண்டு தூரத்தில் வளையும் இடத்தில் உயர்ந்த மதில் சுவர்களோடு தகர வளைகளில் எழுதப்பட்டிருந்த அந்த கட்டிடம் அமைதியாக நின்றிருப்பதும். அது நடக்கநடக்க அதன் தூரம் அதிகரிப்பதுபோலவும் தெரிந்தது.

ஆரம்பத்தில் என்னுடன், பெண்களிடமோ, உயரதிகாரியிடமோ, சக ஊழியர்களிடமோ ஒரளவிற்குமேல் பேச்சு தொடருமானால் சற்று பதற்றம் அடைந்தவனாக என்னை நோக்க ஆரம்பித்தான் சத்யபிரகாஷ். அதன் பொருள் அலுவலகத்தில் அவனுடைய ஆளுமை மட்டும் உயரவேண்டும் என்கிற முனைப்பும் அதன் தொடர்ச்சியாக அடிப்படையான அன்பை, நட்பை அவன் இழக்க தயாராக இருப்பதையும் அப்போதே புரியவைத்துவிட்டது. அவனிடம் என்னைத் கடந்து செல்லவேண்டும் என்கிற துடிப்பு நாளுக்குநாள் அதிகரித்ததாக தோன்றியது. எந்த இடத்திலிருந்து ஆரம்பித்தான் என சரியாக நினைவில்லை என்றாலும், சம்பளஉயர்வு வரும்போதெல்லாம் அவன் பதற்றம் மேலும் அதிகரிப்பதை யூகிக்க முடிந்தது. எனக்கு எத்தனை சதவிகித உயர்வு என்பதை என் மூலமாகவோ அல்லது மற்றவர்களின் மூலமாகவோ அறிந்துகொள்ளாமல் அவனால் அதிகநேரம் இருக்கமுடிந்ததில்லை. இது சாதாரணமான மனஉந்துதல் தான் என்றாலும் இருவர் மட்டுமே எதிர் எதிர் திசைகளில் வந்துவிட்டதாகவும் என் உயர்வு அவனுடைய தாழ்வாகவும், அவனுடைய உயர்வு என்னுடைய தாழ்வாகவும் பார்க்கப்பட்டது அங்கேயே ஆரம்பித்துவிட்டது. பிறகு எனக்கு அவனும், அவனுக்கு நானும் மட்டுமே அந்த அலுவலகத்தில் எதிரி என்பதுபோல நினைக்க வைத்தது போல சம்பவங்கள் நடந்தன‌.

இதெல்லாம் தாண்டி, அவனின் பல முயற்சிகளுக்குபின், சட்டென கட்டத்தில் அவன் கை மேலுயருவதும், என்னை அவன் முதல் எதிரியாக நினைப்பதும், அவன் ஆளுகைக்குள் அவனை இருத்திக்கொள்வதும், தலைதூக்கிய‌ பாம்பு ஒன்று மெல்ல படம்விரிவதுபோல இயல்பாக நடந்தேரியது. அப்போது அவன் முகவடிவங்கள் மாற்றம் கொள்வதையும், உடல்மொழியில் ஒரு நிறைவு கொள்வதையும் இப்போதும் என்னால் நினைவு கூறமுடிகிறது.

அதன்பின் வேகமாக கடந்துவந்த‌‌ பத்தாண்டுகளில் சம்பளஉயர்வு, பதவிஉயர்வு, ஊக்க தொகை என்று அவனுக்கு போட்டியாக இருந்த என்னையும் மற்றவர்களைவிட‌ எதிலும் அவன் முதன்மை இருப்பதை கண்டேன். அதில் இருந்த அரசியல் இன்றுவரை எனக்கு புரிந்ததில்லை. அவனைப்போல் அதிகம் தன்னைப்பற்றியே தன்உயர்வைப்பற்றியே நினைத்துக்கொள்ளும் எளிய மனநிலை உடையவனாக‌ இல்லாமல், முதிர்ந்த மனநிலையுடன் இருப்பவன்போல‌ என்னை தேற்றியும், அவனின் முதிரா செயல்களை கவனிக்காது இருந்தாலும் என் மனம் சஞ்சலத்தில் துடித்துக் கொண்டேதான் இருந்தது. அவனைவிட அதிக உழைப்பை நான் செலுத்தியும் அவன் மிக எளிதாக தன் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவது புறவயமான ஒரு சக்திக்கு உட்பட்டதாக நினைத்தேன். என்னால் அவன் வேகத்திற்கு செல்லமுடியவில்லை என்கிற புரிதலையும், என் வேகத்தை அவனே வேண்டுமென்றே மட்டுபடுத்தினான் என்கிற நினைப்பையும் வேறுபடுத்தி பார்க்க‌ முடியவில்லை.

பாதையில் திடீரென்று தோன்றிய மரத்தில் சில அசைவுகள் தெரிந்தன. என் சிந்தனை தடைப்பட்டதும் அப்போது முதுகுதண்டில் சில்லென்ற ஒரு பரவலை உணரமுடிந்தது. அது ஒரு விலங்கின் அல்லது பறவையின் அசைவால் ஏற்பட்டது என தெரிந்ததும் மனம் ஆசுவாசமானது. தடைப்பட்ட நடை தொடந்தது, ஆனால் அந்த மரத்தில் இருந்து வந்த ஒலிகள் விசித்திரமான சிர்ர்ர்உர்ர்ர் என்ற ஒலிகள் தொடர்ந்து கேட்டன. பூச்சிகள் இந்த மரத்தில் மட்டும் மிக அதிகமாக குடிகொண்டுள்ளன. அந்த ஒலிகள் பரந்தாமனின் கால்க‌ள் முன்னும்பின்னுமான அசைவுகளுக்கு ஒத்துவந்தபோது ஆச்சரியமாக கவனித்தேன்.

என்னுடைய ஒவ்வொரு அசைவுகளும் அவனுக்கு தெரிந்திருந்தது. எதிலாவது சிக்க வைக்க, என்னை வேலையிலிருந்தேகூட வெளியேற்ற அவன் மூளை முயன்றுகொண்டிருப்பதாக‌ சற்று அதீதமாக இருந்தாலும், பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். ஏன் நான் அவனைப் போல் சிந்திக்க முயல்வதில்லை என்றும், ஒருகட்டத்தில் அவனை வெல்வது இப்போதைக்கு முடியாது என்றும் யோசித்திருக்கிறேன். நான் நிறுவனத்தின் வழக்கபடி சில கிரேட்கள் உயர்ந்து ஒருங்கினைப்பாளராக மட்டுமே உயர்ந்த‌போது, அவனோ இரண்டு இரண்டு படிகளாக ஒருங்கினைப்பாளர், குழுதலைவர், தலைவர் ஆகி கடைசியாக உதவி மேலாளர் ஆகிவிட்டிருந்தான்.

இப்போதெல்லாம் அவன் சகஊழியர்களிடையே வந்து நிற்கும்போது அவன் உயிரற்ற அவனின் உடல் மட்டும் வந்திருப்பதாக தோன்றும். அப்படி ஒரு பாவனை அலுவலகத்தில் சேர்ந்தபோது இல்லாத‌ ஒன்று அவனிடம் கூடியிருந்தது. குறிப்பாக‌ அப்போது அவன் முகம் வேறு ஒன்றில் நிலைத்திருப்பதாக பாவனை செய்வான். அதில் தெரியும் பூரணம் ஆச்சரியம் அளிப்பது. அப்படி செய்தான் என்றால் பக்கத்தில் இருக்கும் நபர் அவனை கவனிக்க வேண்டும், அச்சம் கொள்ளவேண்டும் என்று பொருள். அப்படி அச்சப்படாமல் போகும்பட்ச‌த்தில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உள்ளே இருக்கும் மற்றொரு பொருள். மிக மெதுவாக முகத்தை திருப்பி கண்களால் ஊடுறுவ சம்பந்தப்பட்டவனை நோக்குவதும், உதடுகளின் சுழிப்புகளோடு மிக குறைந்த வார்த்தைகளால் அவனை காயப்படுத்துவது என்கிற நாடகத்தை என‌ மிகச் சரியாக செய்தான்.

அவன் கற்று தேர்ந்த இந்த‌ உடல்மொழிகள் என்மீது தாக்குதல் நடத்தும்போது, சகவயதும் நீண்ட பழக்கமும் நட்பும் கொண்டவனை அவ்வாறு செய்ய முடிவதே பெரிய அவமானமானதாக‌ தோன்றியது. அந்த சமயத்தில் அவன் மேல் இருந்த வெறுப்பு பலமடங்கு அதிகரித்தது. அப்போது வெறுத்தாலும் மற்ற சமயங்களில் உள்ளுர அதை ரசித்தேன் என நினைக்கிறேன். இந்த சமூகமும் அதைதான் விரும்புகிறது என சமாதானமும் கொண்டிருக்கிறேன்..

அவன் செய்த நீண்ட தாக்குதல்களில் ஒன்று எனக்கு சாதகமாக அமைந்தது. சரியாக செயல்படாதவர்களை அலுவலகமே மேம்படுத்தும் ஒரு தனியார் சுயமுன்னேற்ற வகுப்பிற்கு தேர்வு செய்வதற்கு பணிக்கப்பட்ட ஒன்றில் என்னையும் தேர்வு செய்து அமித்திற்கு கொடுத்திருந்தான். நான் இன்னும் தீவிரமாக செயல்படாத முன்னேற்றங்களை அளிக்காதவனாக இத்தனை ஆண்டுகள் உழைத்த என்னை மற்றவர்களுக்கு காட்ட முயற்சித்தது என்னை ஆத்திரம் கொள்ளவைத்தது.. இது அமித் தேர்வு செய்தது என்று பின் என்னை அவன் சமாதானப் படுத்தியதாக நடித்தாலும் நான் இன்றைய நிலையில் இவ்வளவு உயரம் வந்ததற்கு அந்த நிகழ்ச்சியே காரணமாக அமைந்தது ஒரு முரண்நகை.

அந்த வகுப்புகள் மூலம்தான் வேவ்வேறு இடங்களில் இருந்து முக்கிய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பதை சத்யபிரகாஷ் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியில் அதன் ஒரு ஆசிரியர் வெங்கட் பலவகை ஆர்வமுடைய மனிதனான அறிமுகமானான். அமித்திற்குகூட‌ நண்பனான அவன் எல்லா விசயங்களை அறிந்த ஒரு பெட்டகமாக உடனே எந்த‌ உதவியையும் அளிப்பவனாக இருந்தான். அவன் மூலமாக ஷிப்போ அறிமுகமும் நெருக்கமும் ஏற்ப்பட்டது.. நீண்ட சடைமுடியும், உடலில் பல இடங்களில் பச்சை குத்திக் கொண்டவனும், கையில், காலில், காதில் வளையத்துடன் முக்கில் வளையல் அணிந்தவனும், பின்பக்கம் தெரிய பேண்ட் அணிந்தவனும் பார்க்க வித்தைகாரன் போலிருந்தான். முதலில் நம்பிக்கை ஏற்படுத்துவது அவன் பேச்சுதான். எந்த வாழ்க்கை விழுமியங்களுமற்ற‌ அவன்தான் எனக்கு கூடுவிட்டு கூடு பாயும் இந்த‌ வித்தையை கற்றுத்தந்தான்.

பாதைகள் குறுகலாகி வருவதுபோல் இருந்தது. ஒருவேளை அப்படி நினைக்கிறேனோ தெரியவில்லை. தார்சாலையின் விளிம்புகள் அடர்கருப்பாக, மண்தரைகள் வெளிர்ப்பாகவும் பாதையின் அகலத்தை காட்டியது. வெளிச்சபுள்ளிகள் தூரத்தில் தங்கிவிட குளிரில் உடல் நடுங்கியது. இப்போது பத்தடிமட்டுமே சரியாக தெரிந்தது. அதற்குபின்னால் மழைநாளில் ஜன்னல் கண்ணாடிக்கு பின்னால் தெரியும் காட்சிகள் போல் கோடுகளாக அதன் தூரத்தை கணிக்க முடியாதவையாக இருந்தன‌.

கைவைத்திருந்த‌ பரந்தாமனின் இடைபகுதியில் சொரசொரப்பை உணரமுடிந்தது. உள்ளாடைகளின் இறுகத்தால் ஏற்ப‌ட்ட அச்சாக இருக்கும் என தோன்றியது. உட‌னே அப்படி இருக்க முடியாது என்றும் தோன்றியது. கடந்த நான்கு நாட்களாக ஐஸ்பெட்டியில் தான் இருக்கிறான். இனி நான் என்பது இருக்கப்போவதில்லை என்று தோன்றிய கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் அதை நினைத்துபார்க்க போகிறேனா? நான் இல்லாத நானை நினைத்துப் பார்க்க அச்சமாக இருந்தது. ஆனால் முன்பே இதை நினைத்துப்பார்த்து சமாதானம் ஆகிவிட்டது கூடவே நினைவிற்கு வந்தது.

சத்யபிரகாஷால் தொலைந்துவிட்ட‌ வாழ்வை, அவனை பழிவாங்க நினைத்து யாரும் நம்பாத, மீளமுடியாத அனுபவமும் துயரமும் நிறைந்த இம்முடிவை பலநாள் மன உளைச்சலுக்குபின் ஒருநாள் எடுக்க முடிந்தது. ரிதுவின் பிறந்தநாள் விழாவிற்கு சத்யபிரகாஷ் அழைத்திருந்த சந்திப்பில்தான் அந்த முடிவை எடுத்தேன் என நினைக்கிறேன்.

நான் சத்யபிரகாஷை கொன்று அவனுடலில் உட்புகவேண்டும், ஒருமுறை பழகிவிட்டால் எத்தனைமுறை வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். பலநாள் காத்திருப்புக்குபின் முழுபோதையில் இருந்த சத்யபிரகாஷை இந்த புதிய‌ ப்ளாட்டிற்கு அழைத்து வந்து எந்த சேதாரமும் இல்லாமல் மயக்கத்தேலேயே அவனை கொன்று, பின் உறுமாறி என் உடலை ஐஸ்பெட்டியில் பாதுகாக்க‌ உதவி செய்தான். ஷிப்போ ஒரு சுயநலமில்லா மனிதன் அவனுக்கு பிடித்த சிலரில் ஒருவனாக எனக்கு கற்று கொடுத்துவிட்டு இந்தோனேசியாவிற்கு எங்கேயோ பறந்து போய்விட்டான். அவன் போனதுமே நான் செய்த முதல் காரியம் இந்த‌ நிறுவனத்திலிருந்து பரந்தாமனாக வேலையைவிட்டு வெளியேறியதுதான்.

அமித்தை சத்யபிரகாஷின் திற‌மைகளின் மீதான நம்பிக்கையை இழக்காவண்ணம் வைத்திருந்தேன். அமித்தை எளிதாக என்வசமாக்க சத்யபிரகாஷ் செய்யாத அல்லது தவறிய விஷ‌யங்களை தேடி செய்துமுடித்தேன். அதுவே அவனை திருப்திபடுத்த போதுமானதாகவும் சந்தேகப்படாத‌ வகையில் கடைசிவரை வைத்திருந்தது. சில சறுக்கல்களுக்குப்பின் அலுவலக வளர்ச்சியில் என் பங்கும், முயற்சியும் உயர்ந்தபோது, சகஊழியர்களிடையே மதிப்பும், செல்வாக்கும் உயர்ந்தது, அது சத்யபிரகாஷ் அடையாத இட‌த்தை அடைந்ததாக தோன்றியது. கூடவே அவன் அனுபவிக்காத, விட்டுதவறிய பணம், சொகுசு, உடலின்பம், புகழ் என்று அனைத்தையும் அடைந்தேன்.

***வாரத்தின் கடைசி இருநாட்கள் அலுவலக பயணமாக பெங்களூர் செல்கிறேன் என்று சொல்லி பரந்தாமனாக பின் சத்யபிரகாஷாக‌‌ மாறிமாறி மனைவி மீனாவையும் ரிதுவையையும் வேவ்வேறு சமயங்களில் அனுபவித்தேன் என்றால் மிகையில்லை. எவ்வளவுதூரம் என்றால் எனக்கே சலிப்படையும் வரையில். ஆனால் அந்த சலிப்புகளை ஒரு உற்சாக பிண்ணனியில் என்னை மாற்றிகொண்டதால் உலகநட‌ப்பு பற்றி கவலையின்றி உலாவ முடிந்தது.

ஒரு நீண்ட காலஇருப்புக்குபின், இந்த சின்ன சலிப்பிலிருந்து மீற‌ ரிதுவையும், மீனாவையும் ஒருங்கே சேர்க்க நினைத்தேன். பரந்தாமனால் ரிதுவை கவரமுடியவில்லை ஆனால் சத்யபிரகாஷால் மீனாவை கவரமுடிந்தது என்பது துரதிஷ்டம்தான்.. மீனாவுடனான சலிப்பூட்டும் வாழ்க்கையிலிருந்து விடுபட நினைத்த எனக்கு அவளின் சத்யபிரகாஷுடன் கொண்ட தொடர்ப்பில் அவளின் மறைவுவாழ்வை ரசிக்கமுடிந்தது. ஆகவே மீனாவை வெறுக்க ஒரு நல்ல காரணம் கிடைத்துபோலாகியது. அவளிடமிருந்து விலகப்போகும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன்..

ஆனால் ரிதுவை மீனாவுடன் ஒப்பிடமுடியாத பேரழகி. எப்போதும் வெறுக்கவே முடியாத பேரழகி ரிதுவின் உடலை ஒரு இசைக்கருவிபோல் உருவகப்படுத்திக் கொள்கிறேன். எப்போதும் புல்லரிப்புடன் இருக்கும் அவள் உடலின் அசைவுகளை ஒரு மெல்லிய மனம் படைத்தவனுக்கு ஏற்புடையதல்ல. எந்த சங்கடமும் இல்லாமல் அவள் முலைகாம்புகள் பின்னிர‌வுகளில் அவளை நெருங்கும்தோறும் நீண்டுவிடும். தொப்புளின் கீழ் ஒரு வெட்டு கீழிரங்கி பள்ளம் நோக்கி சென்றடையும். அவளின் நேரடியான செய்கைகள், அணுகுமுறைகள் எனக்கு பிடித்தே இருந்தன. பாவனையற்ற பெண்ணாக தன்னை பாவனை செய்கிறாள் என ஒவ்வொரு சமயமும் அவளை நினைக்கும்போது தோன்றும். கூடலில் ரிது காட்டும் தன்னமிக்கை அசாத்தியமானது. கலவி முடிந்தபின்னும் மீனா உடலில் அதே சிலிப்புடன் துடித்து கொண்டிருப்பாள். பின் கைகளையும் கால்களையும் ஒருபக்கமாக‌ விசப்பட்டவள்போல் குறட்டையும் தூங்கிவிடுவாள். ரிது அப்படியல்ல கைவசம் உள்ள எல்லா வித்தைகளையும் நிதானமாக முடித்துவிட்டு கால்களை விரித்து மிக நிதானமாக‌ தூங்கிபோவாள்.

அப்போது அவளின் பேச்சில் உறுத்தியது ஒன்று உண்டு.. என்னிடம் ‘ஏன் உன் உடலில் வாசனை மாறுகிறது’ என்பதுதான். இங்கே கொஞ்சநாள் அங்கே கொஞ்சநாள் என மாறும்போது ஐஸ்பெட்டியில் சத்யபிரகாஷின் உடல் இருந்தாலும் சில்லிட்டு ஒருமாதிரி ஆகிவிடுகிறது. அதனால் உடலில் ஒருவித நமட்டு வாடையை உணரமுடிகிறது என்பதை நானே அறிந்திருக்கிறேன். ஆனால் அதை அவள் பிணவாடை போன்றிருக்கிறது என்றாள். மேலும் சிலநாட்களுக்குபின் தன்னால் பொறுக்க முடியவில்லை என்றும், நேற்று இது தொடர்ந்தால் உன்னை விவாகரத்து செய்யவேண்டியிருக்கும் என்றாள். அப்போது அவள் போதையில்கூட இல்லை.

இதே மாதிரியான சத்யபிரகாஷை முழுவதும் நம்பியிருந்த அமித்தின் வாயிலிருந்து இந்த வார்த்தைவரும் என்று நினைக்கவில்லை. நல்ல சென்ட்டுகளை உபயோகப்படுத்த வழியுறுத்தினான். முக்கியமான மீட்டிங்கின் போதும், நான்கூட இருக்கும்போது சகஊழியர்களிடம் ஒருவித முகசுழிப்பை மற்றவர்கள் என் வாடையின்மூலம் பெறுவதாக வருத்தப்பட்டான். பொறுக்கமுடியாமல் சிலநேரங்களில் இருப்பதால் சகஊழியர்களின் நட்பையும், மோசமான மீட்டிங்கின் மூலம் ப‌ல புராஜக்டுகளை இழக்க நேரிடும் என்றும் கூறினான். ஏன் இதே நிலை தொடர்ந்தால், ரமேஷ்பாபுவை உன் இடத்தில் கொண்டுவரப் போவதாகவும் ஒருசமயம் மிரட்டினான்.

இதில் இருக்கும் உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்னதான் ஐஸ்பெட்டியில் வைத்தாலும் உடலின் மட்கியதன்மை உயிர் பெறும்போது உடனே மாறிவிடுவதில்லை. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மாணிக்கத்தை முழுவதும் கொல்வதுதான். இந்த முடிவை எடுத்திருப்பது ஒன்றும் பெரியதாகப் படவில்லை. பரந்தாமனைவிட‌ சத்யபிரகாஷே அதிக பணபலமும் பெண்பின்புலமும் உடையவன். அவனே கார், பங்களா, சமூக அந்தஸ்து என்று சகலமும் கொண்டு இந்த சமூகத்தில் நிலைபெற்றிருக்கிறான். அவன் நினைத்தால் எதையும், மீனாவை வசப்படுத்தியதுபோல, வசப்படுத்த முடியும். ஆகவே அவன் தான் இருக்க வேண்டும் என கடைசியாக‌ முடிவு செய்தேன்.

பத்துஅடி உயர மதில் சுவர்களைக் கொண்ட‌ சுடுகாட்டை நெருங்கியபோது சாம்பல் புகை எல்லா இடங்களிலும் எழுந்தது போலிருந்தது. முன்பே பார்த்து வைத்திருந்த இடத்தை எந்த தடைகளும் இன்றி நிதானமாக‌ சென்றபோது, அங்கே முன்பே எரியூட்டப்பட்ட உடல் ஒன்று எரிந்து பொசுங்கி காலியாகிக் கொண்டிருந்தது மெல்லிய நிலவொளியில் தெரிந்தது. கண்கள் பழகிவிட்டதும் சின்னகூரையின் கீழ் நடுவில் உடலைவைத்தேன்.

ரிதுவின், அமித்தின் கடும் வார்தைகளை நினைத்துக் கொண்டேன். வாடையின் காரணமாக இருவரின் உடலிலும் பேச்சிலும் உடலில் ஒரு தடிப்புதன்மை சமீபகாலமாக சேர்ந்துவிட்டதாக நினைக்க தோன்றியது. மாற்றம்தான் இந்த உலகில் மாற்றமில்லாதது. இப்போது நான் தோற்றதாக நினைக்கவில்லை. மாறாக சத்யபிரகாஷாக மாறியபோதே வென்றுவிட்டதாக நினைக்கிறேன். இந்த மாற்றம் சின்னதோல்வி என்றால்கூட‌ மீண்டும் இதைவிட அவனே பெறாத‌ பெரிய‌ வெற்றியாக சத்யபிரகாஷ் மூலமாக‌ பெறமுடியும். அம்மணமான உடலை கிடத்தி பேண்ட்பாக்கெட்டின் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினேன். மெல்ல உடல் ஈரத்தில் ஊறியது. கணநேரம் மட்டுமே தயங்கியதாக நினைவு. என் உடலை நான் எரியூட்டிவதை அந்த மங்கிய நிலவுமட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. சற்று அடங்கியதும் திரும்பி பாராமல் வீடு வந்து சேர்தேன்.

மறுநாள் வாடகைக்கு எடுத்திருந்த‌ வீட்டை காலிசெய்து பொருட்கள் சிலவற்றை குப்பையில் வீசினேன். சிலவற்றை இலவசமாக சிலருக்கு அளித்தேன். எப்போதும் போல வேளையில் முழ்கினேன். பணமும் பதவியும், அங்கீகாரமும், உயர்புணர்ச்சியும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. சில சமயங்களை தவிர எல்லா சமயங்களிலும் அவைகளை விரும்பினேன். அமித்தை கூடியவிரைவில் தாண்டி உயர்பதவியையும் இந்த தனியார் நிறுவனத்தின் முக்கிய கூட்டாளியாக ஆகிவிடும் கன‌வு என்னை துரத்திக்கொண்டேயிருந்தது. ரிதுவை புணர்ந்தேன். மீனாவை புணர்ந்தேன். வேவ்வேறு அனுபவங்கள் வேவ்வேறு நாளை மகிழ்ச்சிபடுத்தின. ரிதுவின் உடலின் பூரிப்பை மகிழ்ச்சியுடன் ருசித்தேன். அவள் இல்லத்தின் சொகுசுகளை ஒவ்வொன்றையும் அணுஅணுவாக ருசித்தேன்.

முன்பு சத்யாபிரகாஷ் செய்ததுபோல ரிதுவின் பிறந்தநாள் பார்டியில் என்றென்றும் நினைவில் நீங்கா இடம்பிடிக்கபோகும், அலுவலக பங்குதாரனாகமாற அச்சாரமாக‌ ஆகபோகும் இந்த விழாவிற்கு அலுவலகத்தில் அனைவரையும் அழைத்திருந்தேன். மதுவின் மயக்கத்தில் நானும் ரிதுவும் மேலதிகாரிகளும் நண்பர்களும் தள்ளாடியபடி கொண்டாடினோம். மிகப் பெரிய விழாவாக முன்னதைவிட சிறப்பாக அமைந்தது. கடைசியாக மேடையில் நன்றியுரை முடித்து அவளை அணைத்து முத்தமிட வந்த என்னை உதட்டில் குறுக்காக விரல்வைத்து முகம் சுளித்து இன்னும் பிணவாடை அடிக்கிறது என்றாள். அருகிலிருந்த‌ அமித்தும் வேகமாக‌ அப்போது தலையசைத்து அதை ஆமோதித்தான்.

நிகழ்வுகள் ஆளுமைகள் போக்குகள் / அ.ராமசாமி / முகநூல் பதிவுகள் – இலக்கிய சேவைகள் – தமிழ் ஆய்வுகள் – நெஞ்சு நனைக்கும் நினைவுக்குறிப்புகள்

 

download (4)

 

 

 

 

 

 

13 – 03-2015 அன்று இரவு 9 மணி வாக்கில் முகநூலில் நண்பர் பௌத்த அய்யனார் இப்படி ஒரு நிலைத்தகவல் போட்டார்.

ஆண்டுக் கணக்கு முடிவு வந்து விட்டால் பேராசிரியர்கள் இலக்கியம் வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதைப் படித்த உடன் அதற்கு உடனடியாக நான் ஒரு எதிர்வினையைத் தர வேண்டும் என நினைத்து இப்படி எழுதினேன்:

ஆண்டுக் கணக்கு இல்லை அய்யனார். மார்ச் 31 இல் முடியும் நிதியாண்டு முடியும் போது இலக்கியம் வளர்க்கும் பேராசிரியர்கள் மட்டும் தான் தெரியுமா உங்களுக்கு. வரலாறு விலங்கியல் உயிரி தொழில் நுட்பம் வளர்ப்பவர்களும் அப்போது தான் கிளம்புவார்கள். ஐனவரி புத்தகச் சந்தையில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இலக்கியம் வளர்க்கக் குவியும் கணக்கு போல இதுவும் ஒரு கணக்கு தான்.

உடனடியாக எதிர்வினையாக எழுதியதற்குக் காரணம் அவர் இந்த நிலைத்தகவலைப் போட்ட 2 மணி நேரத்திற்கு முன்பு

உலகத்தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிவர்த்தனைக் கருத்தரங்கம் ஒன்று மதுரையில் தமிழக அரசு அமைப்பான உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சங்கம் விடுதியில் நடக்கும் கருத்தரங்கில் நாளை பிற்பகல் அமர்வில் நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இடம் பெறும். தலைமை உரைக்காக மதுரை நோக்கி பயணம். கவிதை, சிறுகதை அமர்வுகளும் நாளைக்கு உண்டு. இன்று சங்க இலக்கிய ஆய்வுகள், அயலகத் தமிழ் படைப்புகள் பற்றிய அமர்வுகள் முடிந்திருக்கலாம்.
என்றொரு நிலைத்தகவலைப் போட்டிருந்தேன். எனவே அய்யனார் என்னை நோக்கித்தான் இப்படி எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் பௌத்த அய்யனாருக்கு என்னைத் தெரியும்; அவரையும் எனக்குத் தெரியும். என்னைக் குறிவைத்துப் போட்டிருக்க மாட்டார் என்று ஏன் நினைத்துக் கொண்டேன் என்பதற்கான விடை இப்போதும் தெரியவே இல்லை.

நான் மட்டும் அல்ல; கடந்த இரண்டு மாதங்களாகக் குறிப்பாக ஜனவரி முதல் பல கருத்தரங்குகள் பற்றி நிலைத்தகவல்கள் போடப்படுகின்றன. என்னைப் போலப் பல பேராசிரியர்களும் தாங்கள் கலந்து கொண்டு கட்டுரை வாசித்த கருத்தரங்குகள், பொறுப்பேற்று நடத்திய கருத்தரங்குகள் பற்றிப் படத்துடன் முகநூலில் பதிவுகள் போடவே செய்கிறார்கள். பேராசிரியர்கள் மட்டுமல்ல; பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், செயலாளிகள் எனப் பலரும் தங்களின் அன்றாட நடவடிக்கைகளின் ஆவணமாகவும் நாட்குறிப்பாகவும் முகநூலைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். தாங்கள் பங்கேற்று விவாதிக்கும் தொலைக்காட்சி விவாதங்களைக் கேட்கும்படி தினசரி 10 -க்கும் குறையாமல் நிலைத்தகவல்கள் வரவே செய்கின்றன. பத்திரிகையாளர்கள் கூடத் தாங்கள் பணிபுரியும் பத்திரிகையில் எழுதும் கட்டுரையை முகநூலில் இணைத்துப் படிக்கும்படி கேட்கின்றனர். சமையலில் நிபுணத்துவம் கொண்ட பெண்கள் தாங்கள் சமைத்த பண்டங்களைப் படத்தோடு போட்டு நாக்கில் எச்சில் ஊறும்படி செய்வதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள். தினசரி கவிதை சமைக்கும் கவிகளும் கவிதாயினிகளும் உளிகொண்டு தாக்கும் உக்கிரக் கவிதைகளையும் நெஞ்சு நனைக்கும் நினைவுக் குவியல்களையும் வரிசைப்படுத்தவும் தயங்குவதில்லை.

 

download (5)

இவ்வளவு ஏன்? அய்யனாரும் அவரது பணியின் பொருட்டு மருத்துவ முகாம்கள் நடத்தும் ஊர்களுக்குச் செல்லும் பயணங்கள் பற்றிய குறிப்புகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. அத்தோடு இலக்கியவாதியாக/பத்திரிகையாளராக அவர் சந்தித்த நடிகர்கள், எழுத்தாளர்கள், எனப்பல ஆளுமைகளோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிரவே செய்கின்றார். ஆனாலும் அவருக்குத் தர்மாவேசம் வரத் தவறுவதே இல்லை. அதற்குக் காரணம் அவருக்குள் இருக்கும் சுந்தரராமசாமியின் ஆவியென்பது எனது கணிப்பு.

சுந்தர ராமசாமி தான் இலக்கியம் என்பது புனிதமான வஸ்து. அது உன்னதத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துக் கொண்டே இருந்தவர். மலினமான படைப்புகளையும், படைப்பாளிகளையும் தீவிரமாக எதிர்த்துக் கருத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார். பரிசுகளுக்காக – பரபரப்புக்காக- பதவிகளுக்காக எழுத்தாளன் அலையக்கூடாது என்றும் அவ்வப்போது கருத்துச் சொன்னவர். இலக்கியம் சார்ந்த சகல தரப்பினர் மீதும் விமரிசனங்களை வைத்தாலும், அந்த எதிர்ப்பில் எப்போதும் முதலில் எய்யும் அம்பு கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்களை நோக்கித்தான். மொழி,இலக்கியம் கற்பிப்பதற்காகக் கைநிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டு மலினமான வேலைகளைச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எனும் விஷம் தடவிய அம்புகளைத் தனது அம்பறாத்தூணியில் சுமந்தபடி அலைந்தவர். ஆனால் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிவியல், சமூகவியல், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் வேலை செய்யும் பேராசிரியர்களும் இதே போன்றுதான் இருக்கிறார்கள் என்பதையோ, அவர்களையும் பொறுப்பான எழுத்தாளர் என்ற முறையில் கண்டனங்கள் எழுப்ப வேண்டியது அவரது கடமை என்றோ அவர் நினைத்ததில்லை. காரணம் அவருக்குத் தெரிந்த உலகம் இலக்கிய உலகம் மட்டும் தான். கல்வி என்றாலே இலக்கியக் கல்வி என்று தான் இன்றும் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி இலக்கியக் கல்வியைச் சரிசெய்துவிட்டால், தமிழகம் உன்னதமான மாநிலமாக ஆகிவிடும் என்ற நினைப்பில் தான் அறிக்கைகள், கருத்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான கருத்துகளைச் சொல்லியாக வேண்டிய கடமை சுந்தரராமசாமியின் நேரடிச் சீடரான அய்யனாருக்கு இருப்பதாக நினைப்பதில் தவறொன்றும் இல்லை. அவையெல்லாம் சொல்ல வேண்டியனதான். சொல்லட்டும். ஆனால் தங்களின் கவனிப்பு எல்லைக்குள் வருகிறவர்களைப் பற்றி மட்டும் குறைசொல்லிக் கொண்டிருந்தால் அது விமரிசனமாகக் கருதப்படாமல் “ பொறாமை” யில் சொல்லப்படும் கூற்றுகளாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு. தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படித்தான் புலம்புவார்கள் என்று நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்படும்போது சுந்தரராமசாமியின் எதிர்ப்புகளை அப்படித்தான் எடுத்துக் கொண்டார்கள் என்பதைப் பல நேரங்களில் நானே பார்த்திருக்கிறேன். அய்யனாரின் பல முகநூல் குறிப்புகளை அப்படி எடுத்துக்கொள்ளவே தோன்றுகிறது. அய்யனாரையும் அவருக்குள் அலையும் சுந்தரராமசாமியையும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அவர் கருத்தரங்குகள்/ பேராசிரியர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கவனித்தில் எடுத்துப் பரிசீலனை செய்யலாம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் சமகால இலக்கியங்கள், அவற்றைப் பின்னின்று இயக்கிய சமூக அரசியல் சிந்தனைகள் பற்றி விரிவான கருத்தரங்குகள் நடந்தன என்பது நினைவுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. பொதுவுடைமை இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றனவற்றை நவீனத்துவ, பின் நவீனத்துவப் புரிதல்களோடு மார்க்சிய, உளவியல், மானிடவியல், அமைப்பியல் என்னும் விமரிசனக் கருவிகள் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய்விட்டது.

கடந்த ஆறேழு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களின் ஆய்வுப் போக்கைத் தீர்மானிப்பதில் செம்மொழி நிறுவனம் முக்கியமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அந்நிறுவனம் செம்மொழி இலக்கியங்கள் சார்ந்து குறிப்பிட்ட வகையான கருத்தரங்குகளுக்கு மட்டும் ஏராளமான நிதியை வழங்குகிறது. மனநிறைவளிக்கும் வகையில் கட்டுரைக்கு மதிப்பூதியம், பயணப்படி, தங்குமிடம், நினைவுப்பொருள் வழங்குவதற்குப் பணம் எனத் தருவதோடு, கேட்பவர்களுக்கும் கூட உணவு, நினைவுப்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. ஒவ்வோராண்டும் நடந்த கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விளைவுகளை மதிப்பிட்டுப் பார்த்தால் மகிழ்ச்சி அடைய முடியாது.

நவீனத் தமிழ் இலக்கியங்களான கவிதை, நாடகம், புனைகதைகள் சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த நான் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் எனத் திசைமாறி ஒவ்வோராண்டும் குறைந்தது 10 கட்டுரைகளை வாசித்திருப்பேன். 2007 -08 ஆம் கல்வியாண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் மார்ச் வரை ரயிலிலும் பேருந்திலும் பயணம் செய்வதே வேலையாகிவிட்டது. இடையில் 2 வருடம் (2012,2013) வார்சாவுக்குப் போன நானே இதுவரை 75 கட்டுரைகளை வாசித்துவிட்டேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் சதத்தைத் தாண்டியிருக்கவே செய்வார்கள். செம்மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் இரட்டை சதம் கூடப் போட்டிருக்கலாம். 6 ஆண்டுகளில் நான் செவ்வியல் இலக்கியங்களை – சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் என்பன பற்றி நான் எழுதிய கட்டுரைகளைத் திரும்ப வாசித்தபோது மனம் குற்றவுணர்வால் நிரம்பி வழிகிறது. வாசித்த கட்டுரைகளிலிருந்து கல்விப்புல ஆய்வுக்கட்டுரைகள் என ஒரு தொகுப்பு கொண்டுவரலாம் என நினைத்தபோது முழுத் திருப்தியாக ஒரு கட்டுரை கூட இல்லை. திரும்பவும் அவற்றில் வேலை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் எந்த இலக்கியவியல் கோட்பாட்டையும், ஆய்வுமுறையையும் பின்பற்றாத கட்டுரையாளர்கள் நூல்களாக அச்சிட்டுத் தமிழ் இலக்கிய ஆய்வுலகத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வேதனையோடு ஒத்துக் கொள்ளவே வேண்டும். இந்த வேதனைதான் செம்மொழி ஆய்வுகள் அதன் போக்கில் போய்க் கொண்டே இருக்கட்டும்; அவற்றை விட்டுவிட்டுத் திரும்பவும் நவீன இலக்கியங்களின் பக்கம் திரும்பி விடு என மனம் சொல்கிறது.

நமது காலத்தின் இலக்கியங்களான புனைகதைகளும் சமகால வாழ்வைக் கவலையோடும் புலம்பலாகவும் எழுதிக் குவிக்கும் கவிதைகளும் பேசப்படாமல் தவிர்க்கப்பட்ட அவலத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பே சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் புனைகதைகள், கவிதைகள் சார்ந்த கருத்தரங்குகளை நடத்தத் தூண்டியது. பல்கலைக்கழக நிதிநிலைக்குள் தரப்படும் நிதியிலிருந்து ’வளமான கருத்தரங்குகள்’ சாத்தியமில்லை என்பது தெரியும். ஆனால் எந்தப் பண எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்தரங்குகளில் பங்கேற்கும் சிறுபத்திரிகை மரபும் நான் அறிந்த ஒன்று.

முதல் நாள் அமர்வுகள்:

பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பெற்ற அடுத்த நாளே அவரது படைப்புகளை மையமிட்டு அண்மைக்கால நாவல்களை விரிவாகப் பேசும் கருத்தரங்கொன்றை நடத்தும் திட்டத்தைத் துறைக்கூட்டத்தில் முன் வைத்து அனுமதிபெறப்பெற்றது. பூமணியிடமும் ஒப்புதல் பெறப்பட்டது. விருது பெறச் செல்லும் முன்பு அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு செல்கிறேன் எனச் சொல்லி மார்ச் 4, 5 தேதியை ஒத்துக் கொண்டார். கடந்த 25 ஆண்டுகளில் எழுத்தின் வழி நிலை நிறுத்திக் கொண்ட ஜெயமோகன், கோணங்கி, இமையம் ஆகியோரின் பங்கேற்பை உறுதிசெய்தபின் புதிதாக நாவல் எழுத்துக்குள் நுழைந்துள்ள புதியவர்களையும் அழைக்க வேண்டும் என்ற திட்டப்படி இரண்டு நாள் கருத்தரங்கம் முடிவானது. அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கலந்து கொண்டு பங்களிப்பை நிறைவாகச் செய்தனர்.

பல்கலைக்கழகங்களில் இக்கால இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்குகள் நடத்த வேண்டிய தேவையை வலியுறுத்திய எனது உரையைத் தொடர்ந்து,. முதல் கட்டுரையாளராக இமையம் பேசினார். 2000 -க்குப் பின்னான தமிழ்நாவல்களின் விரிவான பரப்பையும் போக்குகளையும் நபர்களையும் தேர்ந்த ஒரு இலக்கிய வரலாற்றாசியரின் பார்வையில் தந்த அவரது கட்டுரைக்கு திரளாக வந்த கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

திறந்த மனத்தோடு விரிந்த தமிழ் நாவல்களின் தளங்களை அறிமுகப்படுத்தினார் இமையம் எனப் பாராட்டோடு தொடங்கிய கோணங்கித் தன்னுடைய எழுத்துமொழியில் தனித்துவத்தைக் கைவிட்டுவிடாமல் பேசத்தொடங்கி நாடோடி, குறத்தியாறு போன்ற ஒரு சில நாவல்களைக் குறிப்பிட்டதோடு தனது நாவல்களும் தனது மொழியும் இயங்கும் தளத்தை விளக்க முயற்சி செய்தார்.அவரைத் தொடர்ந்து,
நவீனத்துவத்தை எழுதுவதில் தொடங்கிய தமிழ்நாவல் இலக்கியம் 2000 -க்குப் பிறகு பெருநாவல்களை எழுதும் உலகப்போக்கோடு இணைந்து கொள்ளத் தொடங்கியுள்ளதை விளக்கிய ஜெயமோகன் வரலாற்றையும் காவியத்தையும் இணைத்து எழுதத் தொடங்கியுள்ளதை அடையாளப்படுத்தி உரையாற்றினார்.
பூமணிக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நினைவுப்பரிசை நெல்லையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தோப்பில் முகம்மது மீரான் வழங்க எழுத்தாளர்களும் மாணவர்களும் எழுப்பிய கரவொலியும் ஆரவாரமும் உற்சாகத்தால் நிரம்பி வழிந்தது பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை அரங்கு. இம்மூவரின் உரைக்குள்ளும் ” 2000 -க்குப்பின் தமிழில் எழுதப்படும் நாவல்கள் உலக இலக்கியங்களுக்கு இணையாக இருக்கின்றன” என்ற கருத்தோட்டம் உள்ளோடியது. இந்தக் கருத்தைப் பல்வேறு காரணங்களை முன்வைத்து உறுதிசெய்து பேசினர்.

இரண்டாவது அமர்வில் பூமணியின் நாவல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பேசவும் விமரிசனம் செய்யவும் ஆய்வாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். சாகித்திய அகாடெமி விருதுபெற்ற அஞ்ஞாடி பற்றிய விரிவான உரையை வழங்கிய பேரா. தர்மராஜ், ரோலாந்த் பார்த்தின் பனுவல் பற்றிய அடிப்படைகளோடு பேசினார். அதற்குள் பழக்கம் பண்ணுதல், கதை சொல்லுதல், பதிவு செய்தல் கூறுகளின் உள்ளார்ந்த திறன்களை விரிவாகப் பேசினார்.தலித் விமரிசகராக அறியப்படும் ஸ்டாலின் ராஜாங்கம் பூமணியின் முதல் நாவலான ‘ பிறகு’ வைப்பற்றிய உரையில் நவீனத்துவத்தின் நுழைவைத் தென் தமிழ்நாட்டின் ஒரு கிராமம் எப்படி எதிர்கொண்டது என்பதைச் சாதியமுரண்களின் இயல்போடு எழுதிக் காட்டியிருக்கிறார் என்ற மையத்தைக் கொண்டு விவாதித்தார். வாய்க்கால், வரப்புகள் என்ற இரு குறுநாவல்களின் இயல்பான விவரிப்பில் இழையோடும் கிராமிய வாழ்வின் முடிச்சுகளையும் முரண்களையும் தடையற்ற ஓட்டமாகச் சொல்லி முடித்தார் முனைவர் அ. இருதயராஜ்.

download (2)

 
இரண்டாம் நாள் அமர்வுகள்;
முதல் நாள் வாசிக்க வேண்டிய வெக்கை பற்றிய கட்டுரையை நான் வாசித்தேன். 80 களின் அரசியல் சொல்லாடாக இருந்த நிலக்கிழார்கள் அழித்தொழிப்பு என்பதோடு இணைத்து வாசிக்க வேண்டிய பிரதி வெக்கை என்பதை முன் வைத்தது அந்தக் கட்டுரை. பூமணியின் சிறுகதைகளை வாசிப்பதற்கான பின்புலங்களைத் தொட்டுக்காட்டினார் விமரிசகர் ந.முருகேச பாண்டியன். நிறைவாகப் புதிய நாவலாசிரியர்களுடனான உரையாடல் அரங்கு கலகலப்பாகத் தொடங்கியது. இந்த அமர்வில் இரா.முருகவேள்(மிளிர்கல்) குமாரசெல்வா(குன்னிமுத்து)ஏக்நாத் (கிடைகாடு), செல்லமுத்து குப்புசாமி (கொட்டுமுழக்கு), முஜிப். ரகுமான் ( மகாகிரந்தம்), அறிமுகத்துக்குப் பின் ஒவ்வொருவரும் தாங்கள் எழுத வந்த பின்னணியைச் சுவாரசியமாகச் சொன்னார்கள். தங்களுக்குக் கிடைத்த தூண்டுகோல், கவனிப்பு, விருது வழங்கல் போன்ற கவனிப்புகள் தொடர்ந்து எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லிவிட்டு எழுத வேண்டும் என நினைத்துவிட்டால் அனைவரும் எழுதலாம் என மாணவர்களுக்கு உற்சாகமூட்டினர். தொடர்ந்து நடந்த விவாதத்தில் சமகாலத்தமிழ் நாவலுக்குள் எவையெல்லாம் எழுதப்படுகின்றன; எவையெல்லாம் எழுதப்படாமல் இருக்கின்றன; எவை கலையாக ஆகின்றன; எவை ஆகாமல் ஆவணமாக, நீல எழுத்தாக, வெற்று அரசியல் விவாதமாக இருக்கின்றன என்பன குறித்துப் பேசப்பட்டதில் பார்வையாளர்களின் பங்களிப்பு இருந்தது. செம்மொழி சார்ந்த பழைய பெருமையோடு நவீன இலக்கியம் புதிய பெருமைகளைக் கண்டுசொல்லும் கருத்தரங்குகளின் தேவையை இந்த இரண்டு நாள் நிகழ்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

பின்னிணைப்பாக மதுரையில் நடந்த உலகத்தமிழ்ச் சங்கக் கருத்தரங்கம் பற்றி ஒரு குறிப்பு

போன வாரம் (மார்ச் 13, 14) மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நடத்திய கருத்தரங்கம் – இதுவும் பெருங்கணக்குப்படி நடந்த ஒரு கருத்தரங்கம் தான். ஆனால் ஒரு ரகசியக்கூட்டம் போல நடந்தது தான் ஏனென்று தெரியவில்லை. அழைக்கப்பட்டவர்கள் பலதரப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் முறையான அழைப்பிதழ்கள் இல்லை. மதுரையில் இருந்த பலருக்கும் தெரியவில்லை. நடந்த பிறகும் பெரிய அளவில் பேச்சில்லை.பத்திரிகைகளில் செய்தி இல்லை. இத்தனைக்கும் ஊடகத்துறை சார்ந்த குமுதம் மணா, கடற்கரை மத்தவிலாச அங்கதம், தமிழ் இந்து அரவிந்தன், அமுதசுரபி திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்களும், கவிஞர்கள்/ எழுத்தாளர்கள் யவனிகா ஸ்ரீராம், கரிகாலன், தேவேந்திரபூபதி, கர்ணன், தமிழ்ச் செல்வி, முத்துகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன் போன்றவர்களும், என்னைப் போன்ற பேராசிரியர்கள் பா. ஆனந்தகுமார், வெற்றிச் செல்வன், உதயசூரியன் முதலானவர்களும் வெளிநாடுகளிலிருந்து லண்டன் இளைய அப்துல்லா, சிங்கப்பூர் மா. அன்பழகன், மலேசியா வே.சபாபதி, வீரலெட்சுமி, பிரான்ஸ் சச்சிதானந்தன் எனக்கலவையாகக் கலந்து கொண்டனர். மதுரையில் நட்சத்திர விடுதியான சங்கம் விடுதியின் கருத்தரங்க அறையில் அதிகாரபூர்வ அரசு நிகழ்வாக நடந்தது. தொடக்க மற்றும் நிறைவு விழாவில் அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இடையில் அம்மா பெயரும் புகழும் உச்சரிக்கப்பட்டன. அரசின் நேரடிப் பார்வையில் நடந்த இலக்கியக் கருத்தரங்கம் என்பதால் இப்படி இருக்கிறது என நினைத்துக் கொண்டு கொடுத்த சன்மானத்தை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன். பெற்ற தொகை எவ்வளவு என்று சொன்னால் பௌத்த அய்யனார் இன்னொரு பதிவு போடக்கூடும். அதற்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை.

 

 

 

 

 

வேம்பு ( சிறுகதை ) விநாயகமுருகன்

images (9)

 

 

 

 

 

 

 

 

பெயரையாவது மாடர்னாக வைத்து தொலைத்திருக்கலாம் செத்துப்போன அப்பா என்று வேம்புவுக்கு தோன்றியது. எதிரே மார்க்கும், லாராவும் சிரித்தார்கள். வேம்பு என்றால் ஆங்கிலத்தில் நீம் என்றும், நீம் மரத்தின் பெயரையா ஒரு பெண்ணுக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் ஆச்சர்யப்பட்டு போனார்கள். அது சரி. ரோஜாச்செடியின் பெயரை நம்மூரில் பெண்களுக்கு வைப்பதில்லையா என்று லாரா நினைத்துக் கொண்டாள். வேம்பு உடம்பை குறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கை அன்னிச்சையாக கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட கழுத்துப்பட்டியின் முனையில் இருந்த அடையாள அட்டையை வருடியது.

கிளையண்ட் முன்பு அமர்ந்திருக்கும்போது அப்படி செய்யக்கூடாது. இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும்முன்னரே வேம்பு படித்த பொறியியல் கல்லூரியில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் மொழி வகுப்பில் அமெரிக்கர்கள் முன்பு எப்படி பேச வேண்டும், எப்படி அமர வேண்டும். எப்படி சிரிக்க வேண்டும். எப்படி கைகுலுக்க வேண்டும் என்று எல்லாத்தையும் அவ்வளவு துல்லியமாக சொல்லி தந்திருந்தார்கள். எதுவும் மறந்துவிடவில்லை வேம்புக்கு. ஆனாலும் இந்த பாழாப்போன நகம் கடிக்கும் பழக்கத்தைப் போலவே இந்த கழுத்துப்பட்டியின் முனையில் இருக்கும் அடையாள அட்டையை அடிக்கடி கைவிரல்களால் வருடிக்கொண்டு பேசுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

கிளையன்ட் முன்பு பேசும்போது இயல்பாக உடலை விறைப்பின்றி பக்கத்து வீட்டுத்தோழன் முன்பு பேசுவது போல அதே நேரம் கண்ணியத்துடன் பேச வேண்டும் போன்ற நுட்பங்கள் எல்லாம் வேம்புவுக்கு அத்துப்படி. பத்து வருடங்களாக இந்த மென்பொருள் துறையில் வேலை செய்வதால் மட்டுமல்ல அவளே சீனியர் மேனேஜராக இருப்பதாலும் மட்டுமல்ல. ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்துக்கு வரும் புதிய பணியாளர்களுக்கு பயிற்சி கொடுப்பதாலும் அவளுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் ஏனோ அவளுக்கு ஏதோ இனம்தெரியாத பதற்றம் அடிக்கடி வந்துவிடுகிறது. வேம்புவுக்கு எதிரே அமர்ந்திருந்த லாராவும், மார்க்கும் கையில் இருந்த பிரின்ட் அவுட் பேப்பர்களோடு ஏதோ அவர்களுக்குள் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

வேம்பு அமர்ந்திருந்த கான்பரன்ஸ் அறையின் வெளியே ஸ்வேதாவும், சிவாவும் நடந்துச் செல்வது கண்ணாடித் திறப்பு வழியாக தெரிந்தது. வேம்பு இங்கிருந்து அவர்கள் போவதையே அமைதியாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனந்த் அவளை பெண்பார்க்க வந்த தினம் நினைவுக்கு வந்தது. மாப்பிளையிடம் தனியாக பேச வேண்டுமென்று வேம்பு கேட்கவில்லை. அவனேதான் நான் கொஞ்சம் பொண்ணுகிட்ட தனியா பேசலாமா என்று கேட்க வேம்புவின் அம்மாவுக்கு நெருப்பை மிதித்தது போல இருந்தது. கவலையுடன் மொட்டை மாடிக்கு தனியாக அனுப்பி வைத்தார்கள். அதுவும் இதே போல ஒரு கோடைக்காலம்தான். மொட்டை மாடிக்கு பக்கத்தில் நிறைய வேப்பமரங்கள் அவளை தலையை உயர்த்தி ஆச்சர்யத்துடன் பார்த்தன. இருக்காதா பின்ன? அந்த மரங்கள் எத்தனை நாட்கள் அவளின் கண்ணீரை பார்த்திருக்கும்?

ஆனந்த் ஏதேதோ கேட்டான். அவளது பதில் பெரும்பாலும் ம் என்று இருந்தது. காலால் மொட்டை மாடி தரையை நோண்டிக்கொண்டிருந்தாள். ஆதாம் கையில் ஆப்பிள் வந்ததாக சொல்லப்பட்ட தினத்திலிருந்து மனிதர்களின் சில அடிப்படை குணங்கள் மாறாமல்தானே இருக்கின்றன. ஆண் உடலை பெண் மிரட்சியாக பார்ப்பதும், பெண் உடலை ஆண் வியந்து பார்ப்பதும் இன்னும் எத்தனை காலம்தான் தொடருமோ? அவன் தேநீர் அருந்தியபடியே பக்கவாட்டில் கோடைக்கு இதமாக காற்று வீசும் வேப்பமரங்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஆடு தங்க புழுக்கைகளை போட்டது போல பழங்கள் தரையெங்கும் சிதறிக்கிடந்தன. அவன் காபி தம்ளரை மாடியின் கைப்பிடி சுவரில் வைத்துவிட்டு குனிந்து ஒரு பழத்தை எடுத்து ஆச்சர்யத்துடன் பார்த்தான். அதை இரண்டு விரல்களால் நசுக்க அது பிதுக்கென்று முகத்தில் வந்து அடித்தது. வேம்பு சிரித்துவிட்டாள். அவன் அசடு வழித்தான்.

“இது எத்தனை கிரவுண்டு?”

தூரத்தில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் கோடையை சமாளிக்க முடியாமல் வேகமாக ஓட்டம் எடுக்கும் சத்தம் கேட்டது.

“இரண்டு கிரவுண்டு”

“அடேங்கப்பா..இரண்டு கிரவுன்ட்னா ஒரு கோடிக்கு மேல வரும் போல”

“ம்..ம்”

“லோன் போட்டு வாங்கியதா?”

“இடம் கைக்காசு போட்டு வாங்கியது. வீடு கட்ட மட்டும் லோன் போட்டிருந்தேன்”

அதெல்லாம் வேம்புவின் சொந்த உழைப்புதான். வேம்பு பத்தாவது படிக்கும்போது அவளது அப்பா லாரியில் அடிப்பட்டு இறந்தார். அப்போது வேம்புவின் குடும்பம் மேல்மருவத்தூரில் இருந்தது. வேம்புவின் அம்மா தீவிர மேல்மருவத்தூர் பத்தை. வேம்புவும்தான். அப்பாவுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. பிறகு வேண்டாவெறுப்பாக சிவப்பாடை கட்டிக்கொண்டு கோவிலுக்கு போக ஆரம்பித்தார். அப்பா இறந்தபிறகு எப்படியோ வேம்பு அங்கேயே பொறியியல் கல்லூரி படித்து சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.

பொறியியல் கல்லூரியில் கோல்டு மெடல் வாங்கினாள். வேலை கிடைத்ததும் அம்மாவை அழைத்துக்கொண்டுப் போய் சென்னையிலேயே தங்கிவிட்டாள். வேம்புவுக்கு உறவினர்கள் அவ்வளவாக இல்லை. அம்மாவழி உறவினர்கள் மட்டும் காஞ்சிபுரத்தில் இருந்தார்கள். ஒரு வருடம் சென்னையிலேயே வேலைப் பார்த்தாள். பிறகு ஒருநாள் அமெரிக்கா போக சொன்னார்கள். அம்மாவையும் அழைத்துக்கொண்டு போக அவளுக்கு விருப்பம்தான். ஆனால் வேம்புவின் அம்மா பார்வதி காஞ்சிபுரத்தையும், மேல்மருவத்தூரையும் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டார். வாரம் இரண்டு முறையாவது சென்னையிலிருந்து மேல்மருவத்தூர் போகாமல் இருக்க முடியாது பார்வதிக்கு. வேம்பு இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாள். அந்த பணத்தில் வாங்கியதுதான் இந்த கூடுவாஞ்சேரி இடம். பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து லோன் போட்டு வீடுகட்டும்போதுதான் அம்மா வழி மாமா மூலமாக ஆனந்த்தின் ஜாதகம் வந்தது.

பொண்ணோட போட்டோ அனுப்பி வைங்க என்று முதலில் கேட்டார்கள். ஆனால் பார்வதிக்கு தயக்கமாக இருந்தது. வேம்புவோ எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று உறுதியாக நின்றாள். அவளை அவளுக்கு தெரியாதா? எனக்கெல்லாம் எங்க கல்யாணம் ஆகப்போகுது? எத்தனையோ வரன்கள் தட்டி தட்டி போய் ஆனந்த் வந்திருந்தான். முதலில் நம்பிக்கையில்லாமல்தான் அவனுடன் மாடியேறி சென்றாள். கோடை பிழியும் மாலை நேரத்தில் மொட்டைமாடிக்கு வந்தமர்ந்து வேப்பமரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த மரங்களை பார்க்க பார்க்க வெட்கம் பிடுங்கி தின்றது. அந்த மரங்கள் எல்லாரும் அவளது தங்கைகள்தானே? தங்கைகள் முன்பு காதலனுடன் எப்படி பேசுவது?

ஆறடி சிவப்பாக நெஞ்சில் சுருள் முடிகளோடு நிறைய பாக்கெட் வைத்த கார்கோ டவுசரும், உடற்பயிற்சி செய்த திரட்சியான புஜங்களை காட்டிக்கொண்டிருக்கும் டிஷர்ட்டையும் அணிந்திருந்தான். அவள் வீடு கட்டி வரும்போது நட்டு வைத்த வேப்பமரங்கள் அவளது தங்கைகள் எல்லாரும் அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பது போல மொட்டைமாடி தாண்டி கிளைகளை வளைத்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. வேம்புவுக்கு அந்த மரங்களை தினமும் தொட்டு தடவி பார்க்க மிகவும் பிடிக்கும். மழை பெய்தால் கூட அந்த மரங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது அவள் வழக்கம்.

“எனக்கு சம்மதம். உங்களை பிடிச்சுருக்குங்க. உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று ஆனந்த் கேட்டான்.

வேப்பமரங்களிலிருந்து காற்று சில்லென வீசியது. கிளையில் அமர்ந்திருந்த ஒரு காகம் ஏதோ சொல்லிக்கொண்டே அங்கிருந்து பறந்து வடக்குப்பக்கமாக போனது.

ம்..ம் சொல்லிவிட்டு வேம்பு அவசரமாக கீழே சென்று அவளது அறைக்குள் நுழைந்து முகத்தை இரண்டு கைகளால் பொத்திக்கொண்டாள். வெட்கம் பிடுங்கி தின்றது. எத்தனை யுகங்கள் எத்தனை எத்தனை தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும் பெண்களின் வெட்கம் அப்படியேத்தானே இருக்கின்றது? சலிக்காத மழை ஒவ்வொரு முறை மண்ணுக்குள் இறங்குவது போல.

வேம்பு முகத்திலிருந்து மூடிய கைகளை விலக்க எதிரே ஆளுயர பீரோவின் கண்ணாடி தெரிந்தது. அவளுக்கு இப்போது அவள் மீது சந்தேகம் வந்தது. அவன் மீதும்தான். ஏன் எல்லார் மீதும்தான். ஒருவேளை இது கனவா? எதிரே ஆடியில் விழுந்திருந்த உருவம் கருப்பாக குண்டாக ஐந்தரையடிக்கு குறைவாக தெரிந்தது. புடவை மட்டும் இல்லாவிட்டால் அது பெண் என்று தெரியாது போலிருந்தது.

எனக்கும் ஒரு வாழ்க்கையா? என்னையும் காதலிக்க ஆட்கள் உள்ளார்களா?

அவசர அவசரமாக திருமணம் முடிந்து முடிந்த வேகத்திலேயே விவாகரத்தும் ஆனது. திருமணம் ஆன ஒரு வருடத்தில்தான் தெரிந்தது. ஆனந்த் தன்னை பெண் பார்க்க வந்த தினத்தன்று தனது வங்கி சேமிப்பையும், சொந்த வீட்டையும் பற்றியே அதிகம் பேசியது. விவாகரத்து வாங்கி இன்றோடு இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. முப்பத்திமூன்று வயது ஒன்றும் அதிகமில்லைதான். சினிமா நடிகைகள் எல்லாம் முப்பத்தி ஐந்து வயதுக்கு பிறகுதானே திருமணம் செய்துக்கொள்கிறார்கள்? ஆனால் இருபது வயதிலிருந்தே வேம்புக்கு ஆண்கள் என்றால் கசந்துப்போகத்தான் ஆரம்பித்திருந்தார்கள்.

அவளுக்கு நினைவு தெரிந்து ஐந்தாவது படிக்கும்போதுதான் கருவாச்சி என்றோ கருவண்டு என்றோ கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவேளை தொட்டிலில் கிடக்கும்போது அம்மா தன்னை கருப்பு என்று தூக்கி கொஞ்சியிருக்கலாம். தெரியவில்லை. ஆனால் முதன் முதலில் தாமரைக்குளம் அருகே ஓணான் அடித்துக்கொண்டிருந்த வகுப்புத்தோழனிடம் சண்டைக்கு போக அவன் போடி கருவண்டு உன் வேலையை பார்த்துக்கிட்டு என்றான். வேம்பு வீட்டுக்கு வந்து அவளது கைகளை, கால்களை பார்த்துக்கொண்டாள். அது கருவண்டு போல இல்லை. கருக்கி போட்ட விறகு கரி போல இருந்தது. ஆமை ஓடு போன்று வயிறு இருந்தது.

அடுத்த வாரம் கடைக்கு சென்றுக்கொண்டிருந்தபோது பெரிய மாமா ஏண்டி கருவாச்சி.. அக்கா வீட்ல இருக்காளா? என்று கேட்டார். அவளுக்கு அழுகை வந்தது. நான் ஒன்னும் கருவாச்சி இல்லை என்று அம்மாவிடம் சொல்லி அழுதாள். வேம்பு வளர வளர கசப்பின் வெம்மையும் ஊறி பெருகுவது போல அவள் வளர வளர கருப்பும் பொலிவேறிக்கொண்டே போனது. வேம்பு அப்போதெல்லாம் குண்டாக இல்லை. எங்கே. ஒருவேளை சாப்பாடே பெரிய விஷயமாக இருக்கும். சவாரி போன அப்பா திரும்பி வந்து ஏதாவது கொடுத்தால்தான் உலை கொதிக்கும். இந்த மென்பொருள் நிறுவனம் வந்து கூட அவள் அவ்வளவு ஒல்லியாகவில்லை. அமெரிக்கா சென்றுதான் திரும்பி வரும்போது உடம்பு பெருத்து வந்தாள். அவளால் அதுவரை அவள் வாழ்க்கையில் பார்த்தறியாத நிறத்துடன்,மணத்துடன் இருந்த உணவு வகைகளை பார்த்ததும் கட்டுப்படுத்த முடியவில்லை. வெளுத்து கட்டினாள். போதாக்குறைக்கு அலுவலகத்தில் தினம் தினம் யாராவது விருந்து கொடுத்தார்கள்.

இன்னமும் வேம்புவுக்கு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அதெப்படி ஸ்வேதா கச்சிதமாக உடம்பை பரமாரிக்கிறாள்? ஸ்வேதாவை பார்க்கும்போதெல்லாம் அவள் இந்த மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்கு வராமல் ஏதாவது ஹிந்தி படத்துக்கு போனால் கண்டிப்பாக அவள் இந்தியாவின் முன்னணி கதாநாயகியா மாறிவிடுவாள் என்று தோன்றும். அதேநேரம் ஸ்வேதாவை சிவாவுடன் சேர்ந்து பார்த்தால் மட்டும் அவளுக்குள் ஏதேதோ உணர்வுகள் தோன்றி அவளை அலைகழிக்கும்.

“எக்ஸ்கியூஸ்மி. நான் இப்ப வந்துடறேன். நீங்க இந்த பவர்பாயின்ட்டை பார்த்துட்டு இருங்க”

“உங்கள் குரல் உண்மையில் தேன் போலவே இருக்கின்றது” என்று லாரா சொன்னாள். அவளுக்கு சின்ன வெட்கம் கலந்த புன்னகையுடன் நன்றி சொன்னாள். வேம்புவின் குரல் இனிமை பற்றி பலரும் அவளிடம் இப்படி பாராட்டியுள்ளார்கள். ஆனால் ஆளை பார்த்தால்தான் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்கிறார்கள். வேம்பு அவசரமாக வெளியே வந்து பார்த்தாள்.

அவர்களை காணவில்லை. எங்கே போனார்கள் அதற்குள்? இந்தப் பக்கமாகத்தானே நடந்துச் சென்றார்கள்.

வேம்பு கொஞ்ச தூரம் நடந்து வலதுப்பக்கம் திரும்பி தேநீர் இயந்திரம் பகுதிக்குள் நுழைய அங்கு நின்றிருந்தார்கள் அவர்கள்.

“என்னடி டெமோ முடிஞ்சுடுச்சா? ஏன் இப்படி ஓடிவர்றே?” ஸ்வேதா கேட்க வேம்பு சமாளித்தாள்.

“இல்லையே ஓடி வர்றலையே”

“வேம்..ஈவ்னிங் நாங்க பிக்சர் போறோம். நீ வர்றீயா?” சிவா கேட்டான்.

“இல்ல..நீங்க போங்க”

சிவா எத்தனையோ முறை வேம்புவை சினிமாவுக்கு அழைத்துப்பார்த்து விட்டான். அழைத்தான் என்றால் தனியாக அழைத்ததில்லை. குழுவோடு அல்லது ஸ்வேதாவோடு செல்லும்போது அழைப்பான். இரண்டு மூன்று முறை வற்புறுத்தி அழைப்பான். அப்படியும் வேம்பு அவர்களோடு சென்றதில்லை. ஆனால் ஷாப்பிங், உணவு விடுதிக்கு அழைத்தபோது சென்றிருந்தாள். இன்று அவர்களோடு சினிமாவுக்கு செல்ல வேண்டுமென்று மனம் சொன்னது. வழக்கம்போல நான் வரவில்லை என்று சொன்னாள். அவர்களும் வழக்கம்போல வற்புறுத்தி அழைக்க சரி வர்றேன் என்று அரைமனதாக சொன்னாள். மழைதான் வர்ற போகுது என்று சிவா வேம்புவை பார்த்து சிரித்தான்.

“ஒகே வேம். கேட் ரெடி. சாயங்காலம் போறோம்” என்று சிவா சொல்லிவிட்டு அவனுக்கு வேலை இருப்பதாக அவனுக்கு இருக்கைக்கு நகர்ந்தான். ஸ்வேதா வேம்புவை பார்த்து,

“அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளி. வேலை இருக்கு. வர்ற நேரமாகும்ன்னு சொல்லிடு. ஒன்பது மணிக்கெல்லாம் படம் முடிஞ்சுடும்”

“அது நான் பார்த்துக்கறேன். ஆமா நீங்க எப்படி தியேட்டர் போவீங்க?”

“ஏன் சிவா பைக்குலதான்”

“இல்ல வேணாம். என்னோட கார்ல போகலாம். நான் உங்களை திரும்பி வந்து ஆபீஸ்ல டிராப் செஞ்சுடறேன்”.

வேம்பு சொந்தமாக கார் வைத்திருந்தாள். ஸ்வேதாவும்,சிவாவும் மேற்கு தாம்பரத்தில் அருகருகே இருந்த அபார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக அலுவலகத்தில் அரசால் புரசலாக ஒரு பேச்சு. இருவரும் ஒன்றாகத்தான் சிவாவின் பைக்கில் தினமும் அலுவலகம் வந்து போனார்கள்.

“ஓகே வேம்.. எனக்கு மீட்டிங் இருக்கு. லஞ்ச்ல சந்திக்கலாம்” என்று சொல்லிவிட்டு ஸ்வேதாவும் நகர்ந்தாள்.

எனக்கு ஏம்மா வேம்புன்னு பேர் வச்ச? எல்லாரும் கிண்டல் செய்றாங்க என்று பொறியியல் கல்லூரி படிக்கும்போது வேம்பு அவளது அம்மாவிடம் கேட்டாள்.

“ஏண்டி. அது சாமி பேரு. நல்லாத்தானே இருக்கு?”

“போம்மா… எல்லாரும் ப்ரியா, ஐஸ்வர்யான்னு எவ்வளவு மாடர்னா பேர் வச்சுட்டு காலேஜ் வர்றாங்க?”

“செத்துப்போன உங்கப்பாத்தான் வச்சார்டி. எட்டு வயசுல உனக்கு அம்மைப்போட்டு படுக்கையில கிடந்தப்ப ஜன்னி வந்து தூக்கி தூக்கி போடுது. வீட்டுக்கு வெளியே எவ்வளவு வேப்பயிலை கட்டினாலும் மகாமாயி இறங்கமாட்டேன்னு தீவிரமா இருந்தா. அப்பத்தான் எங்கிருந்தோ ஒரு அம்மா வந்தாங்க. அவங்க கையில இரண்டு கட்டு வேப்பிலை இருந்துச்சு. அதை வீட்டுக்கு முன்னாடி கட்டச் சொல்லிட்டு போனாங்க. மூணாம் நாள் முத்தெல்லாம் பொலபொலன்னு கொட்டிடுச்சு. அந்தம்மா போகும்போது அவங்க பேரு வேம்புன்னு சொன்னாங்க. அதான் உங்கப்பா அந்த பேரையே வச்சுட்டார்”

அம்மா சொல்லும்போது வேம்பு நினைத்துக்கொண்டாள். அப்படின்னா எட்டு வயசு வரைக்கும் தனக்கு வேறு பெயர் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒருபோதும் அம்மாவிடம் தனக்கு எட்டு வயசுக்கு முன்பு என்ன பெயர் இருந்தது என்று வேம்பு கேட்டதில்லை. அம்மாவும் சொன்னதில்லை. அது கண்டிப்பாக வேம்பு என்று இருந்திருக்காது. ஏன் ஸ்வேதா என்று கூட இருந்திருக்கலாம். அவளுக்கு சிரிப்பு வந்தது. காலி தேநீர்க்கப்பை குப்பைக்கூடையில் வீசிவிட்டு அவள் கழிவறைக்கு சென்றாள். கழிவறையில் யாரும் இல்லை. அப்போதுதான் யாரோ அங்கு வந்து சுத்தம் செய்துவிட்டு சென்ற அடையாளங்கள் அங்கு தெரிந்தன. வேம்பு திரும்பி வந்து கழிவறை கண்ணாடியில் அவளது முகத்தை பார்த்தாள். அப்படி ஒன்றும் கருப்பாக அவளுக்கு தோன்றவில்லை. என்ன ஸ்வேதாவுடன் ஒப்பிட்டால் மட்டும் கருப்பு. மத்தபடி சாதாரணம்தானே. அவளும் பூசாத அழகுசாதனங்கள் இல்லை. போகாத பியூட்டி பார்லர் இல்லை.

வேம்பு ஐந்தடிக்கு கொஞ்சம் உயரம் அதிகம். அது கூட பிரச்சினை இல்லை. ஹைஹீல்ஸ் போட்டு சமாளித்தாள். முடி கொஞ்சம் சுருட்டை. அமெரிக்கா சென்றபோது அங்கு சுருள் முடியை நீளமாக்கி கண்களின் புருவங்களை தீட்டிக்கொண்டாள். திரும்பி வரும்போது அம்மா பார்த்து ஆத்துப் போனாள். முடியை பராமரிக்க ஒவ்வொரு வாரமும் நேரத்தையையும், பணத்தையும் செலவழிக்க வேண்டியிருந்தது. இங்கு தாம்பரத்தில் அழகுநிலையத்தில் ஐயாயிரம் வாங்கிக்கொள்கிறார்கள். வேம்புவுக்கு இப்போது பணம் ஒரு பிரச்சினையில்லை. அவளது பிரச்சினையே உடம்பு எடை. திருமணத்துக்கு பிறகு ஆனந்துக்காக ஒரு வருடம் கடுமையான டயட்டில் இருந்து உடற்பயிற்சி நிலையம் சென்று எடையை குறைத்திருந்தாள். உடம்பு எடையும் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த கருப்பு நிறத்தைதான் என்ன செய்வதென்று அவளுக்கு இறுதி வரை தெரியவே இல்லை. செல்போனுக்கு விதவிதமான வண்ணங்களில் மாற்றிக்கொள்ள உறை இருப்பது போல இந்த உடம்புக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒரேயொரு வண்ணம். இளஞ்சிவப்பு மட்டும் இருந்தால் கூட போதும். பாம்புச்சட்டையை உரித்து போடுவது போல இந்தத் தோலை உறித்து வீசிவிட்டு அதை மாட்டிக்கொள்ளலாம்.

வேம்பு அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கிருந்த உயர்தர அழகு நிலையத்துக்கு சென்றிருந்தாள். அங்கு சுவற்றில் விதவிதமான பெண்களின் புகைப்படங்கள் இருந்தன. அதில் பாதிக்கு பாதி மட்டுமே சிவப்பான பெண்களாக இருந்தார்கள். மீதி கருப்பான சுருள்முடி கொண்ட பெண்கள். அங்கு சிலர் கருப்பர்களை வெறுத்தாலும் கருப்பையும் எப்படி சந்தைப்படுத்தி பணம் ஈட்டுவது என்று அவர்கள் கற்று தேர்ந்திருந்தார்கள். கருப்பான பெண்களும் அங்கு விளம்பர மாடல்களாக வந்தார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி கருப்பு நிறம் எடுபட மாட்டேங்குது என்று அவளுக்கு புரியவில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களும், பாப் பாடகர்களும் கருப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றிக்கொண்ட செய்திகளை அவளும் கேள்விப்பட்டிருந்தாள். தயங்கி தயங்கி அங்கிருந்த வேலை செய்த பெண்மணியிடம் கேட்டபோது அவள் சிரித்துவிட்டாள். கருப்பு நிறத்தில் என்ன இருக்கிறது? அதை ஏன் மாற்ற வேண்டும்? இந்த ஊரில் வருடத்தில் இரண்டு மாதங்கள்தான் சூரிய ஒளி கிடக்கிறது. வெள்ளைத்தோலை எப்படி பழுப்பாக்குவது என்றுதான் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடம்பெல்லாம் க்ரீம் பூசிக்கொண்டு கடற்கரையில் வெயில் குளிப்போம். உண்மையில் வெள்ளைத்தோலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்று ஏதேதோ அறிவுரைகள் வழங்கிக்கொண்டே சென்றவளை வேம்பு எரிச்சலுடன் பார்த்தாள். நீ ஒருநாள் ஒரேயொருநாள் எங்க ஊருக்கு வந்து கருப்பான பெண்ணாக வாழ்ந்து பார் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். இந்த நிறத்துக்கு வேறு வழியே இல்லையா?. ஆனந்துடன் விவகாரத்து ஆனபிறகு அவளது உடம்பு மீண்டும் பழையபடி பெருத்துவிட்டது. அவளும் எதுவும் செய்யாமல் உடம்பை ஒரு சித்தர் போல அது இஸ்டத்துக்கு அப்படியே விட்டுவிட்டாள். ஆனால் சிவாவை பார்த்ததும் ஏனோ தெரியவில்லை. அவளுக்குள் ஏதேதோ ஊற்றெடுத்து மீண்டும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள்

மதியத்துக்கு மேல் அம்மாவிடம் பொன் செய்து நான் வர்ற லேட்டாகும். நீ எனக்காக காத்திருக்காதே என்று சாப்பிடச்சொன்னாள். பொய் சொன்னது வேம்புவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்குள் அறைக்குள் அடைந்து கிடப்பதை எந்த தாய்தான் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பாள். இவள் வயது பெண்கள் எல்லாரும் தங்கள் மகன்களை, மகள்களை பள்ளிக்கோ, பாட்டு வகுப்புக்கோ, நடன பயிற்சிக்கோ அழைத்துக்கொண்டு போகிறார்கள். இவளுக்கு முப்பத்தி மூன்று வயதாகிறது. இருந்திருந்து வந்த மாப்பிளையையும் அப்படி தவற விட்டுவிட்டாளே என்று கோபம். அப்படி என்ன கேட்டுவிட்டான் மாப்பிள்ளை. இந்த வீட்டை எனது பெயருக்கு எழுதி வை. உன்னோட பேங்க் பேலன்ஸ்ல பத்து லட்ச ரூபாய் லோன் போட்டு கொடு. நான் பிசினஸ் செய்ய போறேன்னுதானே. கொடுத்து தொலைத்திருக்கலாமே என்று நினைத்துக்கொள்வாள்.

அதே நேரம் அப்படி கொடுத்திருந்தால் தனது மகளுக்கு இப்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் சுத்தமாக போயிருக்குமே என்றும் நினைத்துக்கொள்வாள். பாவிப்பய போனான் சரி. ஒரு குழந்தையாவது அவளிடம் விட்டுச்சென்றிருக்கலாம் என்று நினைத்தாள். அடுத்த வினாடியே அந்த நினைப்பும் கலைந்தது. குழந்தை இருந்திருந்தால் இப்போது வரும் சம்பந்தம் கூட வராமல் போயிருக்குமே. அவ்வளவு மோசமில்லை. ஒன்றிரண்டு சம்பந்தம் வருகின்றது. வேம்புவுக்குதான் பிடிப்பில்லை. வந்தவர்கள் எல்லாரும் அந்த வீட்டையும், காரையும், வேம்புவின் சீனியர் மேனேஜர் பதவியையுமே பார்த்தார்கள். வேம்பு தீர்மானமாக சொல்லிவிட்டாள். இனிமே யாராவது பெண் பார்க்க வந்தால் நான் அமெரிக்காவுக்கே போய்விடுவேனென்று.

அவர்கள் தியேட்டர் சென்றபோது அங்கு அவ்வளவாக கூட்டம் இல்லாததை கவனித்தார்கள். வேம்பு பக்கத்தில் ஸ்வேதாவும், ஸ்வேதா அடுத்த இருக்கையில் சிவாவும் அமர்ந்திருந்தார்கள். தியேட்டரில் படம் ஆரம்பிக்குமுன்னர் விளம்பரம் வந்தது. மூன்றே வாரங்களில் மேனி சிவப்பழகு. ஸ்வேதா ஏதோ கிசுகிசுவென்று சிவா காதில் சொல்வது போல வேம்புவுக்கு பட்டது. வேம்பு அதிர்ந்து திரும்பி பார்த்தாள். ஏசி போட்டிருந்தாலும் இருட்டும்,புழுக்கமும் பிசுபிசுவென்று தியேட்டர் முழுவதும் உருகி ஓடியது. அவர்கள் மும்முரமாக படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ச்சே..இதென்ன பிரமையோ? ஸ்வேதாவும்,சிவாவும் அப்படி மனிதர்களை கிண்டல் செய்பவர்கள் அல்ல. நாம்தான் அவர்கள் மேல் வீணாக சந்தேகமும், பொறாமையும் படுகிறேமோ? சமீப காலமாக ஏன் இப்படி பார்க்கும் மனிதர்கள் எல்லாருமே எனது கண்களுக்கு கெட்டவர்களாகவோ, என்னை கேலி செய்பவர்களாகவோ தெரிகிறார்கள்? இது போன்ற பிரமை அவளுக்கு கல்லூரி காலத்துக்கு பிறகுதான் உக்கிரம் கொண்டது. சரியாக சொல்லப்போனால் இந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்த நாள் முதல்தான் அதிகமாக உணர்ந்தாள். பள்ளிக்கூடம், கல்லூரி படிக்கும்போது வெளிப்படையாக அவளது கருப்பு நிறத்தை கிண்டல் செய்துவிடுவார்கள். ஆனால் இந்த மென்பொருள் நிறுவனத்தில் இதுவரை யாரும் அவளது நிறத்தை கிண்டல் செய்தது இல்லை. சொல்லப்போனால் நிறத்தையோ, ஜாதியை பற்றி யாராவது பேசினால் அவர்களுக்கு கடும் தண்டனை உண்டு. ஏன் வேலையில் இருந்து கூட நீக்கப்படலாம். இருந்தாலும் எல்லாரும் தனது முதுகுக்கு பிறகு தன்னையே கிண்டல் செய்கிறார்களோ என்று அவளுக்கு தோன்றும்.

இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொண்ணூறு சதவீதம் பெண்கள் அப்படி அழகாக இருக்கிறார்களோ இல்லையோ சிவப்பாக இருக்கிறார்கள் என்று அவளுக்கு வியப்பாக இருக்கும். ஒருவேளை கருப்பாக இருக்கும் பெண்கள் எல்லாரும் வேறு வேலைக்கு சென்று விடுகிறார்களோ. நாம்தான் தெரியாமல் இங்கே வந்து மாட்டிக்கொண்டோமா? ஒரு சில கருப்பான பெண்களை அவள் பார்த்திருக்கிறாள். அனால் அவர்கள் எல்லாரும் ஒன்று உயரமாக இருந்தார்கள். இல்லை கவர்ச்சியாக இருந்தார்கள். எப்படியோ தன்னைப்போல யாரும் இல்லை என்பது அவளுக்கு தெரிந்தது. அதே நேரம் அவள் அலுவலகத்தில் ஆண்களில் பாதிக்கு பாதி பேர் கருப்பாக இருந்தார்கள். அது சரி. ஆண்கள் கருப்பாக இருந்தால்தானே பெண்களுக்கு பிடிக்கும் என்று அவள் பார்க்கும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். கருப்பாக இருக்கும் எத்தனை கதாநாயகர்கள் இருக்கிறார்கள்.

கருப்பாக எத்தனை கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்று யோசித்தாள். அவளுக்கு தெரிந்து ஒன்றிரண்டு பேர்களே பெண்களில் தேறினார்கள். அவர்களும் அட்டைக்கரி என்று சொல்லமுடியாது. மாநிறம் அவ்வளவுதான். மாநிறத்தையே கருப்பு என்று சொன்னார்கள். திரைப்படங்களில் கூட மாநிற பெண்கள் இருந்தார்கள். ஆனால் இந்த தொலைக்காட்சி விளம்பரங்களில் மட்டும் ஏன் மருந்துக்கு கூட கருப்பான பெண்கள் ஏன் மாநிறமானவர்கள் கூட வருவதில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

இடைவேளையில் சிவா என்ன வேண்டுமென்று கேட்டான். வேம்பு பாப்கார்ன் சொன்னாள். ஸ்வேதா டயட் கோக் மட்டும் சொன்னாள். சிவா இரண்டு பாப்கார்னும் ஒரு டயட் கோக்கும் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான். ஒன்றை வேம்புவிடம் கொடுத்துவிட்டு ஒன்றை அவன் எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

“ஏண்டி நீ பாப்கார்ன் சாப்பிடலை?”

“ஐயோ..நான் டயட்ல இருக்கேன்”

வேம்புவும் எத்தனையோ முறை டயட் இருந்து பார்த்தாள். ஒன்றிரண்டு முறை சரியாக வந்தது. ஆனால் பசியை அடக்க, அடக்க அது மேலும் பெருகிக்கொண்டே போனது. இவள் டயட் இருப்பதை அறிந்து பார்வதி திட்டிவிட்டாள்.

“ஏண்டி..சின்ன வயசுலத்தான் சாப்பிட எதுவும் இருக்காது. உங்க அப்பனை கட்டிக்கிட்டு சோத்துக்கு செத்தேன். நீதான் கை நிறையை சம்பாதிக்கற இல்லையா? வாய்க்கு ருசியா பிடிச்சத சாப்பிடேன். ஏன் இப்படி முனிவர் மாதிரி வீட்டுக்குள்ள அடைஞ்சு பட்டினி கிடக்குற?”

அம்மா சொல்வதும் சரிதான். சிட்டியிலேயே பிறந்து சிட்டியிலயே வளர்ந்தவங்க எல்லாத்தையும் பார்த்து எல்லாத்தையும் தின்னுருப்பாங்க. அவங்களுக்கு டயட் ஒத்து வருது. நாம டயட்ல உட்கார்ந்தா கண்ணுக்கு முன்னாடி பீட்ஸா, பர்கர்ன்னு வருது. ஒருமுறை வேம்பு டயட்டிசியனை போய் பார்த்தாள். அவர் சில உணவு முறைகளை சொல்லி கொடுத்தார். பிறகு யோகா வகுப்பு சென்றாள். உடம்பு சிக்கென்று இருந்தது. ஆனால் யோகாவாலோ, டயட்டிசியனாலோ அவளது கருப்பு நிறத்தை மட்டும் மாற்ற முடியவில்லை. யோகா செஞ்சாலும் அவ்வளவுதான் உயரம் இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அவள் சலித்துப்போய் யோகாவையும், டயட்டிசினையும் பார்க்க செல்வதில்லை.

இளைத்த உடம்பு மீண்டும் திமிர்ந்து ஏறியது. வேம்பு சிவாவை பார்க்கும்போது அவன் திரைப்படத்தில் வந்த ஏதோ நகைச்சுவை காட்சிக்கு வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தான். ஸ்வேதாவின் இடத்தில் நான் அமர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து அடுத்த விநாடியே ச்சீ..ச்சீ…இது என்ன நினைப்பு என்று உதறினாள்.

படம் முடிந்ததும் அவர்களை அலுவலகத்தில் இறக்கிவிட்டுவிட்டு வேம்பு வீடு திரும்பும்போது மணி பத்து. அம்மா தளர்வாக எழுந்து வந்து கதவை திறந்தாள். நீ சாப்பிட்டியா என்று கேட்டுவிட்டு அவள் சாப்பிட்டேன் என்று சொன்னதும் அவள் அறைக்கு வந்து கதவை தாழிட்டு வெளிச்சத்தை அணைக்காமல் ஆடைகளை களைந்து கண்ணாடியில் முன்பு நின்று பார்த்தாள். உடம்பில் பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவளது பெரிய முலைகளை பார்த்து அவளுக்கே சிரிப்பாக வந்தது. பழுத்த பனம்பழங்கள் போல திம்மென்று இருந்தன. சரியாக மோகித்தறியா உடலின் திமிர்ப்பு பார்க்கும் இடங்களில் எல்லாம் தெரிந்தது. ஆளப்படாத உடலின் ஊடே அவளது கரங்கள் படர்ந்து அவளை கிறங்கவைத்தன.

குள்ளமா இருக்கறவங்களுக்கு முலை பெருசா இருக்கும். ஒருவேளை அதான் ஆனந்துக்கு உன்னை பிடிச்சிருக்கும் என்று அவளது முன்னாள் தோழி திருமண நாளின் முன்னிரவில் கிண்டல் செய்ததை வெட்கத்துடன் நினைவுக்கூர்ந்தாள். அவளுக்கு ஸ்வேதாவின் உடல் நினைவுக்கு வந்தது. அவளுக்கும் இதே போன்று முலைகள் சீராக இருக்குமா அல்லது பேட் வைத்திருப்பாளா என்று நினைத்துப்பார்த்தாள். சொல்லப் போனால் நான் கொஞ்சம் உயரமாக இருந்து உடம்பை இளைத்து விட்டால் ஸ்வேதா போலவே இருப்பேன். ஆனால் இந்த நிறம்தான். எப்படி மறைப்பது என்று தெரியவில்லை. விளக்கை அணைத்துவிட அவள் இருளில் கரைந்தாள். கருப்பாக இல்லாதவர்கள் இருட்டில் படுத்துறங்கும்போது அவர்கள் மனதில் என்னவிதமான கனவுகள் வருமென்று தெரிந்துக்கொள்ள அவளுக்கு ஆவலாக இருந்தது. சிவா தியேட்டர் இருட்டில் வேம்புவின் கையை தடவுவது போல கனவு வந்தது.

வேம்பு எழுந்து பல்துலக்கி அம்மா தந்த காபியை கொடுத்துவிட்டு காம்பவுண்ட் சுவர் பக்கத்தில் சுற்றி நின்றிருந்த வேப்பமரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டு ஆறுமுக தாத்தா வந்தார். அவருக்கு வேம்புவிடம் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிடிக்கும். அவர் வேம்புவை பார்த்து சொன்னார்.

“பரவாயில்லையே. மரமெல்லாம் பெருசா ஆகிடுச்சு. உங்க வீட்டுல வேப்பமரம் இருக்கறதாலத்தான் இந்த தெருவே குளிர்ச்சியா இருக்கு”

“போங்க தாத்தா. இங்க இருக்கற வேப்பமரம் நம்ம இரண்டு பேர் வீட்டுக்கும்தான் நிழல் கொடுக்குது. தெருவே எப்படி குளிரும்?”

“என்னடியம்மா இப்படி கேட்டுட்டே? தெருவுக்கு ஒரு வேப்ப மரம் இருந்தாலே போதும். ஆனா உங்க வீட்டை சுத்தி நாலு மரங்கள் இருக்கு. இப்ப எல்லாம் சிட்டியில யாரு வேப்ப மரம் வளர்க்குறாங்க? மீறி வளர்த்தாலும் ஈபிக்காரன் வந்து கிளையை ஒடிச்சு விட்டுட்டு போறான். எல்லாரும் ஆபத்து இல்லாத ஏதாவது பூ மரம் இல்ல வளர்க்க ப்ரியப்படுறாங்க”

மரங்கள் பற்றி தாத்தா பேச ஆரம்பித்தால் நாள் போறது தெரியும். தாத்தா சொல்லித்தான் வேம்புவுக்கே தெரியும். வேப்ப மரம் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா மாதிரியான கிழக்கத்திய நாடுகள்ல மட்டும்தான் வளரும். வெளிநாடுகள்ல வேப்ப மரங்கள் எல்லாம் இல்லை என்பது. ஆமாயில்ல. யுஎஸ் போனோமே அங்கு வேப்ப மரங்களை பார்த்தோம் என்று வேம்பு நினைத்துப்பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. இங்க இருந்துதான் வேப்பமர இலைகளை பறிச்சுட்டு போய் வெளிநாடுகள்ல அழகுசாதன பொருட்களை செய்றாங்க என்ற தகவலையும் தாத்தாத்தான் சொன்னார். வேம்புவுக்கும் தெரியும். அழகு நிலையத்தில் பார்த்திருந்தாள். அதெப்படி நினைத்தாலே குமட்டும் கசப்பை கொண்ட இந்த வேப்பமரங்களிளிருந்து இவ்வளவு அழகுசாதன பொருட்களை செய்றாங்க என்று. அது சரி. பூனையின் கழிவுதானே புனுகு? சாமிக்கு மேலே ஊத்தி குளிப்பாட்டுறாங்க. பாம்பின் விஷம்தானே மருந்து? எல்லா மருந்தும் கொடுங்கசப்புதானே?

வேம்பு மேல்மருவத்தூரில் வசித்தபோது அவளது பள்ளிக்கூட நாட்களில் வேப்பமரங்களை பற்றிய பல சுவையான விஷயங்களை கதை கதையாக கேட்டிருக்கிறாள். பார்த்துமிருக்கிறாள். அதில் அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம். கோடையில் கண்மாய் வற்றும்போது வேப்பமரத்துக்கும், அரசமரத்துக்கும் கல்யாணம் செய்து வைப்பது. ஐம்பத்தேழு தாம்பாளத் தட்டுகளில் கல்கண்டு, ஆப்பிள், வெற்றிலை, சீவல், குங்குமம் தாலி பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி எல்லாம் வைத்து சீர் எடுத்து வருவார்கள். அப்படி செய்தால் மழை கொட்டுமென்பது ஐதீகம்.

அரச மரத்துக்கு பட்டு வேஷ்டி கட்டிவிடுவார்கள். வேப்பமரம் பெண். அதனால் அதற்கு பட்டுப்புடவை கட்டி விடுவார்கள். ஐயர் தாலி எடுத்து அரசமரம் சார்பாக வேப்பமரத்தில் கட்டிவிடுவார். கோடைக்காலம் வந்துவிட்டால் வேம்புவின் அம்மா சும்மாவே இருக்க மாட்டாள். வேப்பபழங்களை பொறுக்குவது, வேப்பம்பூக்களை பறித்து வெயிலில் உலர்த்துவது என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவாள். வேப்பம்பூவில் அம்மா பச்சடி, ரசம் வைப்பாள். அவ்வளவு வாசனையாக இருக்கும். இன்னமும் வேம்புவுக்கு ஏனோ அம்மா வைக்கும் அந்த ரச பக்குவம் வரவில்லை.

தாத்தா அடிக்கடி பெருமையாக சொல்வார். “அப்பவெல்லாம் கூடுவாஞ்சேரியில ஏது இவ்வளவு வீடுங்க. இப்ப இதுவும் சென்னைக்குள்ள வந்துடுச்சு? அப்ப எங்க வீட்டு கொல்லையில சஞ்சீவி வேம்பு ஒன்னு இருந்துச்சு. எங்க தாத்தாவுக்கு தாத்தா வச்சது. என்னோட பேரப்பசங்க பிளாட் கட்ட இடைஞ்சலா இருக்குன்னு வெட்டிட்டானுங்க ”

“அது என்ன தாத்தா சஞ்சீவி வேம்பு?”

“வேப்பமரம் நூறு வயசு தாண்டிட்டா அது சஞ்சீவி வேம்பா மாறிடும். வீட்ல சஞ்சீவி வேம்பு இருந்தா போதும். எந்த நோயும் வராது. சித்தர்களே தேடி அலைஞ்ச மரமில்லையா சஞ்சீவி வேம்பு?”

தாத்தா சொல்வார். எந்த வீட்ல அரசமரம் இல்லாட்டி வேப்ப மரம் இருக்கோ அங்க காத்து கருப்பு அண்டாது. அது மனவியாதியை கூட குணப்படுத்திடும்.

“போங்க தாத்தா. அதெப்படி வேப்பமரம் மனவியாதியை குணப்படுத்தும்?”

“இந்தக்கால பிள்ளைங்களுக்கு எதிலேயும் நம்பிக்கை இல்லை. எதுக்கு அந்தக்காலத்துல ஆஸ்பத்திரி, கோவில், தர்கா, பேய் ஓட்டுற இடம் பக்கத்துல எல்லாம் வேப்பமரம் வளர்த்தாங்க?”

வேம்புவுக்கு நம்புவதா வேண்டாமா என்று இருக்கும். வேம்பு கையில் நீர் நிறைந்த பிளாஸ்டிக் வாளியோடு நகர்ந்து பின்பக்கம் வந்தாள்.

அம்மா அம்மா இங்க வாயேன். மரத்துல பால் வடியுது. இவள் கத்துவதை கேட்டு அம்மா உள்ளிருந்து அடுப்பை கூட நிறுத்தாமல் ஓடிவந்தாள். தாத்தாவும் காம்பவுன்ட் அந்தப்பக்கமிருந்து வந்து கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே வந்து பார்த்தார். அம்மாவுக்கு பரவசம் தாங்க முடியவில்லை. தாத்தா கன்னத்தில் போட்டுக்கொண்டு சொன்னார்.

“வெள்ளிக்கிழமை பால் வடிஞ்சா நல்ல விஷயம்தான். இதுவே ஊராக இருந்தால் ஊர் அமர்க்களப்பட்டிருக்கும். சிட்டியில யார் இதையெல்லாம் நம்பப்போறாங்க?”

“சாயங்காலமா மஞ்சப்புடவை எடுத்து மரத்துக்கு சாத்தும்மா. அப்படியே சர்க்கரைப்பொங்கல் வச்சு தெருவுல இருக்கறவங்களுக்கு கொடு” தாத்தா சொல்லிவிட்டு போனார். எங்க… இந்த தெருவில் அம்மாவுக்கு நாலைந்து வீடுகள் மட்டும்தான் தெரியும். நாலைந்து வீடுகளுக்கு மட்டும் வர்ற மாதிரி சர்க்கரைப் பொங்கல் செய்யனும். அந்த அம்மாதான் மகளுக்கு ஏதாவது வழி செய்யனும் என்று அம்மா நினைத்துக்கொண்டாள்.

வேம்புவுக்கு மனதெல்லாம் சந்தோஷமாக இருந்தது. இன்று ஏதோ நல்ல விஷயம் நடக்கும் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டாள். வேம்பு காரை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் செல்லும்போது அங்கு வரவேற்பறையில் நின்றிருந்த பெண் அழகாக சிரித்தாள். அது ஏன் எல்லா அலுவலகங்களிலும் இப்படி அழகான பெண்களையே வரவேற்பறையில் நிற்க வைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டாள், அந்தப்பெண் பவ்யமாக வேம்புவுக்கு காலை வணக்கம் சொன்னாள். வேம்புவும் பதிலுக்கு வணக்கம் சொன்னாள். லிப்ட்டுக்குள் செல்லும் வழியில் எதிர்பட்ட ஆட்கள் எல்லாரும் வேம்புக்கு பவ்யமாக வணக்கம் சொன்னார்கள். என்னதான் தான் அழகாக இல்லையென்றாலும் தன்னையும் எல்லாரும் இப்படி மதிக்கிறார்களே என்று அவளுக்கு கர்வமாக இருந்தது. அதே நேரம் எல்லாம் இந்த சீனியர் மேனேஜர் பதவிக்குத்தானே என்று நினைத்துக்கொண்டாள். கோல்டு மெடலில் அல்லவா தேறி வந்தவள்.

வேம்பு லிப்ட்டிலிருந்து வெளியே வந்து அவளது இருக்கையில் அமர்ந்ததும்தான் அந்த இடமே அமர்க்களமாக இருந்ததை கவனித்தாள். என்னவாம்? அப்புறம்தான் நினைவுக்கு வந்தது. இன்று மாலை பதவி உயர்வு அறிவிப்பு செய்யப்போகிறார்கள் அல்லவா? வேம்புவுக்கு கண்டிப்பாக பதவி உயர்வு கிடைக்கும். அது பெரிய விஷயமில்லை என்று அவளுக்கு தோன்றியது. இல்லையா பின்ன? போன வருடம் மூன்று பெரிய பிராஜக்ட் அல்லவா முடித்திருந்தாள். இந்த முறை அசோஸியேட் டைரக்டராக உயர்வு கிடைக்கும். முப்பத்தி மூன்று வயதுக்கு நியாயமான பதவி உயர்வுதான். காலையில் வேப்பமரம் பால் விட்டது நினைவுக்கு வந்தது. இந்த பதவி உயர்வு கிடைத்தால் மாதச்சம்பளம் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரிக்கும். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஹேமாவிடம் விஷயத்தை சொன்னாள் வேம்பு.

“சாயங்காலமா வீட்டுக்கு வாடி. வீட்டுல சின்ன பங்சன்”

“என்ன விஷயம்டி?”

“அம்மா சாமி கும்பிடுறாங்க”

ஹேமாவுக்கு சப்பென்று போனது. ஹேமாவின் வீடு வேம்பு வீட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் இருந்தது. வேம்பு பார்க்கும்போது சிவா,ஸ்வேதாவின் இருக்கைகள் காலியாக தெரிந்தன.

“எங்கடி அவங்க?”

“தெரியலடி. இன்னும் வரலைன்னு நினைக்கறேன்”

வேம்புவுக்கு தன்னை யாராவது சிவப்பான அழகான ராஜகுமாரன் பல்சரில் கடத்திக்கொண்டு சென்றுவிட மாட்டானா என்றும், எங்காவது ஊருக்கு வெளியே சென்று அவனோடு நடனம் ஆடவேண்டுமென்றும் தோன்றியது. ஸ்வேதா வார இறுதி நாட்களில் டிஸ்கதோ செல்வாள். சில நேரம் சிவாவுடன் செல்வாள். சில நேரம் வேறு சில ஆண் நண்பர்களுடன். வேம்பு அதையெல்லாம் சினிமாவில் பார்த்ததோடு சரி. கல்லூரி படிக்கும்போது கூட அவளுக்கு ஆண் தோழர்கள் அமைந்தது இல்லை. ஆனால் இந்த நிறுவனத்துக்கு வந்தபிறகுதான் உடன் பணிபுரியும் ஆண்கள் எல்லாரும் அவளிடம் இயல்பாக பழகினார்கள். நீயும் வாயேண்டி என்று ஸ்வேதா ஒன்றிரண்டு முறை வேம்புவை அழைத்திருக்கிறாள். சிவாவும் அழைத்திருக்கிறான். வேம்புவுக்கு தயக்கமாக இருக்கும். அங்கு வந்து நான் என்ன செய்யுறது என்று அவளுக்குள் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவாள்.

மதியத்துக்கு மேல் சிவாவும், ஸ்வேதாவும் வந்தார்கள். அவர்கள் கையில் இனிப்புப்பெட்டிகள் இருந்தன. ஸ்வேதா ஸ்லீவ்லெஸ்சும், லெக்கிங்க்சும் அணிந்திருந்தாள். அது அவளது சருமத்தின் ரோஸ் நிறத்தை அழகாக வெளிப்படுத்தியது

“என்ன விஷயம்டி?” வேம்புவும்,ஹேமாவும் கேட்டார்கள்.

“உங்களுக்கு விஷயமே தெரியாதா? நம்ம ஸ்வேதாவுக்கு அசோசியேட் டைரக்டர் புரமோஷன் கிடைச்சிருக்கு” சிவா சிரித்தபடி சொல்ல ஹேமாவுக்கு குழப்பமாக இருந்தது. நிலம் அதிர்வது போல உணர்ந்தாள். அவள் வெளிக்காட்டாமல் இனிப்பை வாங்கிக்கொண்டு எழுந்து அணில்குமார்ரெட்டியின் அறைக்குச் சென்றாள். அவர்தான் அந்த குழுவுக்கு சீனியர் டைரக்டர். தமிழ் நன்றாக பேசுவார்.

“சார். புரமோஷன் லிஸ்ட் வந்திருச்சாமே?”

“ஆமாம்மா. நான் எவ்வளவோ முயற்சி செஞ்சேன். இந்த முறை ஸ்வேதாவுக்கு கொடுக்கச்சொல்லி மேல இருந்து சொல்லிட்டாங்க”

“சார். நீங்கதானே என்னையப் பத்தி பீட் பேக் கொடுக்கனும்?”

“நான் நல்லவிதமாத்தான் பீட்பேக் கொடுத்தேன். ஆனா எச்.ஆர்ல பில்டர் செஞ்சுட்டாங்க. நான் என்ன செய்யுறது? ஸ்வேதாவுக்கு கொடுக்க சொல்லிட்டாங்க”

“சார் ஸ்வேதா இரண்டு வருஷம் முன்னாடித்தானே புரமோஷன் வாங்கினா?”

“நீங்க கூடத்தான் மூன்று வருஷம் முன்னாடி புரமோஷன் வாங்கினீங்க. என்ன செய்யுறது? இதென்ன ரயில்வே ரிஷர்வேஷன் சார்ட்டா? வரிசைப்படி தயார் செய்ய?”

அதற்கு பிறகு ரெட்டியிடம் நின்று என்ன பேசுவதென்று தெரியாமல் வேம்பு இருக்கைக்கு திரும்பினாள். அவள் திரும்புபோது அங்கு சிவாவும்,ஸ்வேதாவும் இல்லை. அவளுக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை. தலை வலிக்கறதென்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினாள்.

வேம்பு வீட்டுக்கு திரும்பும் வழியில் எதிரே ஏதோ சாமி ஊர்வலம் வந்துக்கொண்டிருந்தது. செம்புச்சிலையை அலங்காரம் செய்து பல்லக்கில் தூக்கி சுமந்து வந்துக்கொண்டிருந்தார்கள். காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கும்பிடும்போது சிவப்பான அந்த சிலையின் நிறத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் கோவிலுக்கு வெளியே கூட சிவப்பு சிலை வருவதைதானே எல்லாரும் விரும்புகிறார்கள். கர்ப்பத்தை தாண்டி கருப்புக்கு ஏது மதிப்பு?

அவள் வீட்டுக்குச்சென்ற அரைமணி நேரத்தில் ஹேமாவும் அங்கு மஞ்சள் நிற புடவையில் வந்தாள். அவர்கள் இருவரும் மொட்டைமாடிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஹேமா மொட்டைமாடி சுவற்றில் புடவையில் கறையேதும் படாமல் கவனமாக சாய்ந்துநின்றபடி பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கீழே பால் வடிந்த வேப்பமரத்தில் மஞ்சள் துணி சுற்றி அதில் குங்குமம் கரைத்து அப்பியிருந்தார்கள். மரத்தடியில் மூன்று செங்கல்லை முக்கோண வடிவில் சரித்து அதில் மண் அகல்விளக்கை ஏற்றியிருந்தார்கள்.

செங்கல்லின் மேல் மல்லிகைச்சரம் சார்த்தியிருந்தர்கள். அந்த மரத்தை மேலிருந்து பார்க்கும்போது கிளைமாக்ஸ் சண்டையில் குத்துப்பட்ட கதாநாயகன் ரத்தம் வடியும் வயிற்றில் துண்டைக்கட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக எதிரிகளை பார்த்து வாங்கடா என்று அறைகூவல் விடுப்பது போல தெரிந்தது. மரத்தின் கிளைகள் எல்லாம் கதாநாயகன் கையில் இருக்கும் ஆயுதங்கள் போல தெரிந்தன.

“என்னடி இப்படி ஆச்சு? கடைசியில அவளுக்கு புரமோஷன் கொடுத்திட்டாங்க”

ஹேமா சக்கரை பொங்கல் தட்டை கீழே வைத்துவிட்டு காபி டம்ளரை எடுத்தபடி கேட்டாள். அதுவரை அடக்கி வைத்திருந்த வெறுப்பெல்லாம் பொங்கியது. உறைந்து கிடந்த எரிமலை அழன்று பொங்கி விண்ணுயர எழுந்தது.

“அவளைப் பத்தி எனக்கு தெரியாதா? அவ எப்படி அந்த புரமோஷனை வாங்கியிருப்பான்னு…” சொன்ன வேம்புவை பார்த்து வேம்புதானா வேம்புதானா சொன்னாள் அப்படி என்று திகைத்துப்போய் பார்த்தாள் ஹேமா.

மொட்டைமாடி தாண்டி சுற்றிலும் நின்றுக்கொண்டிருந்த வேப்பமரக்கிளைகள் காற்றில் அலைந்துக் கொண்டிருந்தன. மேற்கிலிருந்து கோடைக்காற்று பலமாக வீசியது. காற்று வீசும்போது அந்த மரங்களிலிருந்து வேப்பம்பூக்கள் உதிர்ந்தன. மண்ணில் உறைந்து கிடந்த வெக்கை எல்லாம் கிளம்பி வேப்பமர மணத்துடன் கலந்து சொல்ல தெரியாத ஏதோவோர் மணம் அங்கு வீசியது. அந்த மணத்தில் நூற்றாண்டுகளின் கொடுங்கசப்பு கலந்திருந்தது.

•••

 

மறந்து போன நாதம் / கிருஷ்ணமூர்த்தி

 

download (1)

 

 

 

 

 

 

 

 

ஆத்ம மத்ய கதா: பிராண:
ப்ராண மத்ய கதோ த்வனி:
த்வனி மத்ய கதோ நாத:
நாத மத்யே சதாசிவ:
(உடம்பின் நடுவுள் உயிர்
உயிரின் நடுவுள் ஓசை
ஓசை நடுவுள் நாதம்
நாதத்துள் சதாசிவம்)

சக நண்பர்களின் அலைபேசிகளை ஆராயும் போது அவர்களின் இசை கோப்புகளை பார்ப்பது வழக்கம். அதன் மூலம் அவர்களின் குணத்தை ஆராய முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவர்களின் ரசிகத்தன்மையை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். தமிழ் திரைப்பட பாடல்களை மட்டும் கண்டால் கூட மெல்லிய இசையா, குத்துப்பாடல்களா, இளையராஜா இசையில் இருக்கும் கிராமத்து பாடல்களா, வெளிநாட்டு இசையெனில் ராக், ஜாஸ் என எந்த வகையறா அல்லது எமினெம், ஏகான், இயாஸ் போன்ற கர்த்தாக்களைக் கொண்டு அவரவர்களின் ரசனையை எளிதில் தரம் பிரித்துவிடலாம். எல்லோரும் ஏதோ ஒரு வகையறாவில் ஒன்றிணைந்து லயிக்கும் போது பாரம்பரியமாக இருக்கும் சாஸ்திரிய சங்கீதம் ஏன் சிறுபான்மையினருக்கான பகுதியாக மாறியது என்பது என்னவோ புரியாத புதிராக இருக்கிறது. பெரும்பகுதி இளைஞர்களால் சங்கீதத்தை கேட்க முடியவில்லை. அவர்களுக்கு உறக்கத்தையோ அல்லது பொறுமையை சோதிக்கும் விஷயமாகவோ தான் சங்கீதம் என்னும் வகையறா மாறியிருக்கிறது. இது ஏன் என்னும் கேள்வி என்னுள் எப்போதும் உறுத்திக் கொண்டிருந்தது. இதற்கு வார்த்தைகள் தான் பிரதானமா என்னும் உபகேள்வியும் என்னுள் எழுந்தது. வெறும் இசையை இக்காலத்தியவர்களால் கேட்க முடிவதில்லை. இருந்தும் திரைப்படங்களில் வரும் பிண்ணனி இசை அல்லது நாயகனுக்கென வரும் பிரத்யேக இசையை ரசிக்கிறார்கள். இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது எங்கோ செய்யப்பட்ட பிழையானது வம்சவம்சமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிழையை சரிசெய்ய இயலுமா என்பது என்னவோ மீண்டும் சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

இசையானது பக்திமார்க்கமாகவே நம் கலாச்சாரத்தினுள் நுழைந்திருக்கிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களை நோக்கினாலும் அவை செய்யுள் அல்லது பாடல்களின் வடிவத்தில் திகழ்கின்றன. மற்றுமொரு பார்வையில் பழங்குடியினங்களின் அல்லது தொன்மை வாய்ந்த நாட்டுப்புற பாடல்களாக இருந்திருக்கின்றன. இவற்றிலிருந்து பக்திக்கு இசை மாறும் போது கடவுளின் வழிப்பாட்டிற்கு பாடல் வடிவம் தேவைப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாடல் என்றாலே அது கடவுளை வழிபடுதல் என்னும் நிலை தமிழகத்தில் நிலவியிருக்கிறது. அப்போது புரந்தரதாஸர் என்றொருவர் இருந்திருக்கிறார். சங்கீதத்தின் வேர்கள் தமிழகத்தில் ஊன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இந்த புரந்தரதாஸர் தான். இசை வழிப்பாட்டிற்கு மட்டுமல்ல அது தனியானதொரு அனுபவம் என்பதை உணர்ந்திருக்கிறார். சில ராகங்களை உருவாக்கவும் செய்திருக்கிறார். ஆனால் அவரது காலத்தில் முன்னெடுப்பாக மட்டுமே அவை அமைந்திருக்கின்றன.

அவருக்கு பின்வந்த வேங்கடமகி தாளங்களை நிர்ணயம் செய்ய முயற்சித்திருக்கிறார். 72 வகையான மேள ஓசைகளை அவர் நூலாக்கியிருக்கிறார். இவருடைய இந்த ஆவணம் தான் அவருக்கு பின்வந்தவர்களின் சங்கீத ஞானத்திற்கு முக்கிய தேவையாக அமைந்திருக்கிறது. இந்த இருவருக்கு பின் சின்ன சின்னதான அறிமுகங்களும் கண்டறிதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. இருந்தாலும் இவர்வரையில் சங்கீதம் அறிவார்த்த நிலையில் மட்டுமே நின்றிருக்கிறது. ஞானம் என்னும் மார்க்கத்திற்கும் உன்னதம் என்னும் உணர்ச்சி நிலைக்கும் செல்லவில்லை. இவர்களுக்கு பின் வந்தவர்களான சங்கீத மும்மூர்த்திகள் தான் இந்த ஞான மார்க்கத்திற்கான பிரதான வழிகாட்டிகளாக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தான் சியாமா சாஸ்திரி, தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர்.

மூவரும் வெவ்வேறு காலகட்டத்தில் ஜனித்தவர்கள். ஆனாலும் சமகாலத்தவர்களே. இவர்களின் ஆய்வுகளை சரிவர பராமரிக்க இயலவில்லை. கர்ணபரம்பரை கதைகளின் மூலமாகவும் அவரவர்களின் சிஷ்யப்பிள்ளைகளின் வம்சத்தவர்களின் மூலமாகவும் கிடைக்கப்பெற்ற கதைகள் தான் மூவரின் வரலாற்றையும் சொல்லுகின்றது. இதனை சரிவர ஆவணம் செய்திருக்கின்றனர் நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா. மூவரின் வாழ்க்கை வரலாறும் தனித்தனியே கிடைக்கின்றன.

சியாமா சாஸ்திரி – வித்யா சங்கர் – தமிழாக்கம் : நெல்லை எஸ்.வேலாயுதம்
தியாகராஜர் – பி.சாம்பமூர்த்தி
முத்துஸ்வாமி தீட்சிதர் – டி.எல்.வெங்கடராம ஐயர் – தமிழாக்கம் : கே.வி.தியாகராஜன்

இந்திய இசைகள் மதம் சார்பாக பிரிவினையை கொண்டிருந்தாலும் இந்து மதத்தின் அடிப்படையில் கண்டால் ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக சங்கீதம் என இருவகைப்படுகின்றன. சூஃபிகளின் இசையும் பழங்குடியினர்களின் இசையும், நாட்டுப்புற இசையும் தனிப்பட்டவையாகும். அவை இந்த கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் விட்டுவிடுவோம். இந்த இரண்டும் இருவேறு துருவங்களாகவே இந்தியாவில் திகழ்ந்திருக்கின்றன. ஹிந்துஸ்தானி இசையின் வளர்ச்சிக்கொப்ப தென்னிந்தியாவில் கர்னாடக சங்கீதமும் வளர்ந்திருக்கிறது.

கர்னாடக சங்கீதத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது அதற்கு முன்னிருந்த கடவுள் வழிபாட்டு பாடல்களே ஆகும். இசையே இரண்டு பெரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. ஒன்று ராகம். மற்றொன்று சாஹித்தியம். கடவுளை வழிபடும் பாடல்களில் வார்த்தைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கேட்போருக்கு இறையின் அருள் கிடைக்க வேண்டுமெனில் நல்வாக்கு சொல்ல வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். ஆக அங்கே இசை என்பது வார்த்தைகளின் துணையாக நின்று கொண்டிருந்தது. வேங்கடமகியின் காலத்திலிருந்து இந்த இரண்டு விஷயங்களின் தன்மைகள் இடம் மாறத்துவங்கின. ராகத்தின் முக்கியத்துவம் மேலேறப்பெற்று பேசப்படும் வார்த்தைகள்(சாஹித்தியம்) குன்ற ஆரம்பித்தன. இந்த நிலையில் வெளியாகும் இசையினை கேட்கும் போது நம்மால் அந்த ராகத்தையே உணர முடிகிறது. இசையினை பற்றி வர்ணிக்கும் போதெல்லாம் இழை என்னும் பதத்தை உபயோகப்படுத்துவதை கண்டிருப்பீர்கள். இதன் உள்ளார்ந்த அர்த்தம் வார்த்தைகளை பின்தொடராமல் அர்த்தத்தை அறியாமல் உணரமட்டுமே முடியும் ராகத்தை மனம் பின்தொடர்வது. இந்த நிலையை பெருவாரியாக கொண்டு செல்ல ஆரம்பித்தனர். அதற்கு பெருந்துணை புரிந்தவர்கள் மும்மூர்த்திகள்.

மூவர்களின் வரலாற்றை பார்க்கும் போதும் அதனூடே நிறைய மாய விஷயங்கள் இருக்கின்றன என்பதை காணமுடிகிறது. அதே போல் மூவருக்குமான ஒற்றுமைகளும் இருக்கின்றன. மூவரும் பிறக்கும் முன்னர் அவரவர்களின் தந்தையாரின் கனவுகளில் தெய்வத்தின் வாக்கு தோன்றியிருக்கிறது. மேலும் மூவருக்கும் இறக்க போகும் நாள் தெரிந்திருக்கிறது. இதுமட்டுமின்றி இசைக்காக வாழ்க்கையையே அர்பணிக்கும் திராணி கொண்ட மூவரின் வீட்டிலும் ஏழ்மை குடிகொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் யாரிடமும் செல்வத்தை கேட்கவில்லை. அவரவர்களின் இசையின் தன்மையாலும் தெய்வத்தின் அருளாலும் வீட்டில் செல்வமும் உணவும் நிரம்பியிருக்கிறது. இதனை முதலில் நம்பமுடியவில்லை. ஆனால் அவர்களின் இசை ஞானத்தை உணரும் போது நிகழ்ந்திருக்கக்கூடுமோ எனவும் அல்லது அவர்களின் ஞானத்தை உணர்த்த இப்படி கூறப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது.

மூவரின் இசையும் தனித்துவம் வாய்ந்தவையாகவும் அவரவர்கள் அதனின் சில நுட்பங்களை எடுத்து அதில் ஐயந்திரிபுற கற்க முனைந்தவர்களாகவும் தெரிகிறது. சியாமா சாஸ்திரி தாளத்திலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கிறார். தாளம் எனில் வார்த்தைகளும் எழுத்துகளும் எத்தனை அமைப்பெற வேண்டும் எவ்வளவு இடைவெளியில் இருக்க வேண்டும் என முடிவெடுப்பது. இதில் பல கடினமான ராகங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சில கணிதவியல் முறைமையில் அமைத்திருக்கிறார். பலருடனான போட்டிகளில் கடினமான ராகங்களில் பாடியே வென்றிருக்கிறார் சியாமா சாஸ்திரி. இந்த தாள அமைப்புகளில் அவரின் சிஷ்யர்களில் சிலரால் மட்டுமே பாட முடிந்தது எனவும் கூறப்படுகிறது.

அடுத்ததான தியாகராஜரோ ராகத்திலேயே முழுக்கவனமும் கொண்டிருந்தார். இவருக்கு துளசிதாஸரின் ராமகாதை பிடித்துப் போனது. அதனால் அதனுள் இருக்கும் இடைவெளிகளை தன் பாடல் கொண்டு நிரப்பியிருக்கிறார். பல கதைகளையும் தன் இசையினில் இட்டு நிரப்பி தன் மனதுள் முழுமையான ராமாயணத்தை மக்களிடம் சேர்ப்பிக்க முனைந்திருக்கிறார்.

அடுத்தவரான முத்துஸ்வாமி தீட்சிதரோ சற்று சுவாரஸ்யமான ஆள். அவருடைய காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் இசையை தமிழகத்தில் பரப்ப முனைந்திருக்கிறார்கள். அப்போது பிரபல சங்கீத வித்வானாக இருந்தவர் தீட்சிதர் தான். அதனால் அவரிடமே சென்று தங்களின் இசை மெட்டுகளுக்கு வேறு வார்த்தைகளை இட்டு மக்களிடம் சேர்ப்பிக்க கேட்டிருக்கின்றனர். அவரும் அதை செய்திருக்கிறார். இதன் விளைவு என்ன எனில் புதிய ராகங்களை அவர் உருவாக்க ஆரம்பித்திருக்கிறார். பிற்காலத்தில் வந்த ஆய்வாளர்கள் அவரின் ராகங்கள் இந்துஸ்தானி இசையுடன் ஒன்றுகிறதே என கேள்விகளை எழுப்பியிருகின்றனர். ஆனால் அவர்களைப் போலவே இருக்கும் பிற ஆய்வாளர்கள் இந்துஸ்தானி இசையுடன் வேறுபடும் நுண்ணிய அம்சங்களை எடுத்துக்கூறி கர்னாடக சங்கீதத்தின் தனித்துவத்தையும் அதில் தீட்சிதரின் பங்கையும் விளக்கியிருக்கின்றனர். சியாமா சாஸ்திரி தேவியையும், தியாகராஜர் ராமரையும் வழிபட்டது போல தீட்சிதர் யாரையும் பின்தொடரவில்லை. மாறாக அத்வைதத்தில் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். எல்லாம் பரம்பொருளே என்பதில் கவனமாக இருந்து மையத்தை நோக்கிய இசையையே அவர் வழங்கியிருக்கிறார்.

இசை கலையின் ஓர் வடிவமே. அந்த வடிவத்திற்கு பயணங்களும் அனுபவங்களும் எவ்வளவு முக்கியமானவை என்பதை இம்மூவரிடமிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மூவரின் வரலாற்றையும் தொகுக்க அவரவர்களின் கீர்த்தனங்களே முக்கியமாக உதவியிருக்கின்றன. அதனூடே அவர்கள் கூறியிருக்கும் வாழ்க்கை அனுபவங்களும் மேற்கொண்ட பயணங்களும் தான் ஆவணங்களாகவும் மாறியிருக்கின்றன. தியாகராஜரின் வறுமையும் தீட்சிதரின் பயணமும் சியாமாவின் அறிதலுமே இசைக்கான வித்துகளாக அமைந்திருக்கின்றன.

இவர்களின் கடின உழைப்புகளெல்லாம் அந்த பாடல்களில் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கீர்த்தனங்களிலும் இரண்டு இலக்கணங்கள் மோதுகின்றன. ஒன்று மொழிக்கான இலக்கணம். அந்த கீர்த்தனங்கள் யாவுமே தெலுங்கு அல்லது சமஸ்கிருத மொழிகளில் இயக்கப் பட்டிருக்கின்றன. ஆக அம்மோழிகளில் இருக்கக்கூடிய பெரியளவிலான அறிவும் கவிப்புலமையும் சாஹித்தியத்திற்கு தேவையாக இருந்திருக்கிறது. ஆனால் ராகத்திற்கேற்ப மொழியிலக்கணத்தில் சில தளர்ச்சிகள் செய்யப்பட்டன. இதை சில ஆய்வாளர்கள் எதிர்த்தனர். குறிப்பாக சியாமாவின் கீர்த்தனங்களில். அவர் தாளலயத்திற்கு ஏற்ப மொழிக்கான இலக்கணத்தில் நானாவித சமரசங்களை செய்திருக்கிறார். மொத்தமான வடிவில் அவர் செய்திருப்பதோ மாபெரும் மொழி விளையாட்டு!

மேலும் இந்த மூவரும் கர்னாடக சங்கீத வித்துவான்கள் என்னும் கர்வத்தை யாரிடமும் காண்பித்ததில்லை. ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் மீது இவர்களுக்கிருந்த மரியாதை வியத்தகு விஷயமாக அக்காலத்தில் அமைந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி கலைஞர்கள் தென் தமிழகத்திற்கு விஜயம் செய்யும் போதெல்லாம் அவர்களின் இசையை கேட்டு தங்களை சாமான்யனாக மாற்றுவது இயல்பான விஷயமாக இருந்திருக்கிறது. தமிழில் தி.ஜானகிராமன் இயற்றிய மோகமுள் நாவலிலும் சில கதாபாத்திரத்தில் இந்த தன்மையை காணலாம். இருந்தாலும் வாழ்க்கை வரலாறும் நாவலும் அதனதன் தொனியில் வாசிப்பின் போது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மூன்று நூல்களுமே செறிவான தகவல்களுடன் நல்ல மொழியுடனும் அமைந்திருக்கிறது. தியாகராஜரின் நூலில் மட்டும் பத்து பக்கங்கள் அவரின் வழிபடுதலாக அமைந்திருக்கிறது. முத்துஸ்வாமி தீட்சிதரின் நூல் சங்கீதம் சார்ந்த பல நுண்ணியமான பொருள் விளக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. மேலும் இம்மூவரின் வாழ்க்கை வரலாறுகளும் சரிவர ஆவணமாக இல்லாமல் இருப்பதால் நிச்சயமாக பல தகவல்களை ஆசிரியர்களால் சொல்ல இயலவில்லை. அதை தர்க்கமாகவும் பயணமாகவும் மாற்றி இயற்றியிருப்பது வாசிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் தொய்வின்றியும் இருக்கிறது.

மூன்று நூல்களையும் வாசித்து முடிக்கும் போது காரணமற்று ஏமாற்றப்பட்டதன் உணர்வே மேலோங்கியது. அதிகாரத்திற்கும் பசிக்கும் சுற்றத்தாருக்கும் இணங்காமல் இசைக்காகவும் அதனூடே கண்டுகொண்ட உன்னதத்திற்காகவும் வாழ்ந்த மக்களை நம்மால் வரும் தலைமுறையினருக்கு எளிதில் அடையாளம் காட்ட முடியவில்லை. திருவாரூர், திருவொற்றியூர், காஞ்சீபுரம், திருத்தணி என கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள இடங்களில் இவர்கள் செய்த அற்புதங்கள் எல்லாம் காற்றுடன் கரைந்து காணாமல் போயிருக்கின்றன. சுவர்கள் முழுக்க கருத்தடை சார்ந்த விழிப்புணர்வு செய்வதற்கு பதில் அவ்வூரின் வரலாற்றுகளை ஓவியமாக வரையலாம். கருத்தடை சார்ந்த விழிப்புணர்வுகள் பெருந்தீனிக்காரனின் பொழுதுபோக்கு சித்திரங்கள். அதை குறைகூறவில்லை. இருந்தாலும் பள்ளிகளில் கூட முழுமையாக கூறப்படாத வரலாறுகளை கண்டுகொள்ளாமலே இருந்தால் வரலாறு என்பதே மீமாயப் புனைகதையாகிவிடும். மொசார்ட், பாக், பீத்தோவன் முதல் எமினெம் வரை அவரவர்களின் நாடுகளில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாம் இங்கே இசையையே வாழ்வாக வாழ்ந்தவர்களை மறந்து சயனித்துக் கொண்டிருக்கிறோம். எந்த சங்கீதத்தின் இழைகளைக் கண்டு அஞ்சுகிறீர்களோ அதுவே விஞ்ஞான ரிதியான இசை என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் மீண்டும் சாஹித்தியங்களை நோக்கி பயணம் செய்து கொண்டிருகிறோமோ என்பதையே இந்த பெருவாரியான மறத்தல் எனக்குள் நினைவூட்டுகிறது. சங்கீதத்தை கேட்கவில்லையெனினும் பரவாயில்லை வாங்கியோ பதிவிறக்கம் செய்தோ வைத்துக் கொள்ளுங்கள். நாளை அவையும் காணாமல் போகலாம் அதுவும் நாம் அறிவதற்குள்ளேயே!

••••

 

ரொம்பத்தூரம் / கே .எஸ் .தமிழ்க்கவி   ( இலங்கை )

images (5)

 

 

 

 

 

 

பெண்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமை உண்டு வேலைக்குப் போகும் உரிமை உண்டு.சில இடங்களில் உயர் பதவிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இன்னும் ஏன் பெண் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்இஅவர்களுக்கு என்னகுறை என்ற குரல் பரவலாக பேசப்படுகிறது.

 

கையிலே விலங்கிட்டுஇ நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடந்து இதான் நினைத்ததைப் பேசவும் ;தனது கருத்தைச் சொல்லவும் பெண்களில் எத்தனைபேருக்கு சுதந்திரம் உள்ளது?அன்றாட வாழ்க்கையில் எல்லா பெண்களாலும் தாம் வரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறதா? வேலை செய்யும் இடங்களில்இ போக்குவரத்துக்களில்இவீடுகளில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளில் எத்தனை சதவீதம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுகிறது.? சம்பவங்களின் அடிப்படையிலும் சட்டரீதியான நடவடிக்கைகளிலும் எத்தனைவீதமான அடக்குமுறைகளையும் சந்திக்கிறோம்.

 

சமத்துவம் அன்று முதல் இன்றுவரை பெண்களுக்கு கனவுலகில்தான் சாத்தியமாகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் ரீதியாக அமைந்துள்ள பலம் பலவீனம் என்பதே பெண்களை இன்றும் முடக்கிப் போடுகிறது. இன்றும் வீட்டு வன்முறைகளில் பெண்மீது ஆண்கள் காட்டும் வன்முறைகளில் பெரும்பாலானவை அவர்கள்மீது கையாளப்படும் பலப்பிரயோகமேயாகும்.

ஆவைபற்றி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களும் பரப்புரைகளும் யாருக்கு வழங்கப் படுகின்றன. ? அகில உலகமும் பெண்விடுதலை பற்றிய கருத்தரங்குகள்

பெண்களுக்கே நடத்தப்படுகின்றன. இம்மாதிரியான கருத்தரங்குகளில் கருத்துரைகள் விரிவுரைகளை நடாத்த சில ஆண்கள் வருகின்றனர். மகளிர் முன்னேற்றத்திற்கான எந்த நிகழ்ச்சிகளிலும் இவர்களது மனைவி மகள் சகோதரி போன்றோர் இந்த நிகழ்சிகளில் பங்கெடுப்பதில்லை. காரணம் ‘ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லமகளே’ என்ற நிலைப்பாடுதான்.

 

பெரிய பெரியஅமைப்புகள் பெண்விடுதலை பற்றி பேசும் போது ‘மண் விடுதலையோடு பெண் விடுதலையையும்இ ஒடுக்குமுறைகளுக்கான விடுதலையையும் வென்றெடுப்போம்’ என்று அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறியப் புறப்பட்டவர்களால்இ இவர்களால் இவற்றுள் எதைத்தானும் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் அதற்காக அவர்கள் முயலவில்லை என்பதாகும்.

பெண்கள் நாடாளுகின்றனரே என்ற உதாரணம் எமக்கும் பேசப்பட்டது. சிறிமாவோ அம்மையார் பண்டாரநாயகா இருந்தவரையில் பவ்வியமான குடும்பப் பெண்தான். விஜயகுமாரணதுங்கவின் அருகே அடக்கமாக நின்றவரே சந்திரிகா. பெண்களின் பக்கத் தூண்களாக ஆண்கள் அவர்களை மறைத்தே நின்றார்கள். ராஜீவ் இறந்த பின்னர்தான் சோனியாவுக்கும் சிரிக்கத் தெரியும் என்பதை உலகம் அறிந்தது. பூட்டோ தூக்கிலிடப்பட்டதன் பின்னர்தான் பெனாசீரை உலகம் அறிந்தது. ஜியாவுல் ஹக் மறைந்தபின்தான் காலிதாவை உதயமானார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். விதி விலக்காக மேல்நாட்டில் கோல்டாமேறர்இ மாகிரட் தட்சர் என்போரைக் குறிப்பிடலாம்.

நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தவரைஅவரது இயக்கத்தை சாகாமல்; காப்பாற்றி நெல்சனின் விடுதலைக்கு பாடுபட்டவர் வின்னி. நெல்சன் விடுதலையானதும்இ வின்னிமீது வன்முறைக் குற்றம் சுமத்தப்பட்டது.

 

இப்படி உலகம் முழுதும் ஆராய்ந்து வரும்போது தமிழீழப் பெண்கள்தான் வீரம் செறிந்த விடுதலை வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். சென்ற இடமெங்கும் வெற்றி வாகை சூடியுள்ளார்கள். களங்களில் எதிரிக்கு எதிராகஆயுதம் ஏந்தி சாதனை செய்தார்கள். இவர்களே விடுதலை பெற்ற பெண்கள். என்ற கோஷம் விண்ணை முட்டியது. உண்மை முக்காலும் உண்மை. போராடத்தில் இணைந்து தம்மை ஆகுதியாக்கிய பெண்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள்.

 

‘பட்டுப்புடவைகள் கட்டும் அழகினை

விட்டு துறந்தவரே -ஒரு

சிட்டுக்குருவியைப்போல உயிரினை

தொட்டுப்பறந்தவரே என்றும்இ

 

‘உலகம் தாய்மையின் காலடியில் உருளுகிறது’ என்றும் ‘ வானம் உன் கைகளில்’ என்றும் வாழ்த்தப் பெற்ற பெண்கள்இ உண்மையில் பெண்விடுதலையை அனுபவித்தார்களா………? இது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே எழுந்து நிற்கிறது.

 

அவர்கள் தமது கருத்தை வெளிப்படையாக பேச முடிந்ததா? அவர்களால் தனியாக படை நடத்தி செல்ல முடிந்ததா? அவர்களுக்கான வாழ்க்கைத்துணையை பணம்இகுடும்பப் பின்னணிஇஉயர் பதவிஇஅழகு இஇளமைஇ இவற்றின் செல்வாக்கில்லாமல் பெற முடிந்ததா?. திருமணத்தின் பின் கணவன் அவனுடைய வீட்டாரின் தலையீடில்லாமல் வாழமுடிந்ததா?

பெற்ற குழந்தையின் பராமரிப்பில் கணவனது ஒத்துழைப்பைப் பெறமுடிந்ததா?.

 

கணவனது வன்முறையை எதிர் நோக்கியோர் எத்தனைபேர்? பெண்களை பெண்களே அடக்கி வைத்த சம்பவங்கள் எத்தனை எத்தனை?

ஓவ்வொரு கேள்வியும் பதில் தேட வேண்டியவைதான். இது ஓர் இராணுவக் கட்டமைப்பு. இங்கே உத்தரவுக்கு கீழ்ப்படிதல் மட்டும்தான். இங்கே கட்டளை இடுபவர் மட்டுமே பேசலாம். என்ற நிலை படையணியில் இருந்தது. திருமணத்தின் பின்னும் இருவருக்கும் பொறுப்பாளர் தலைவர்தான் என்ற நிலை இருந்தது.

 

பெண்கள் தனியாகப் படைநடத்திச் சென்று முதல் தாக்குதலாக கட்டைக்காட்டில் ஆயுதக்கிடங்கை அழித்து சாதனை படைத்தது 1992ல். அதன்பின் அவர்களுக்கு அப்படிச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

 

1986ல் முதற் பெண்கள் படையணி பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இவர்களது முதற்களப்போர் விக்டர் தலைமையில் அடம்பனில் நடந்தது. இங்குதான் முதல்முதல் இரு ராணுவத்தினர் உயிருடன் கைது செய்யப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றனர்.

 

ஆடவர்களைத் தொடர்ந்து அடுத்த அணிக்கான ஆட்சேர்ப்பு நடந்தபோது யாழ்ப்பாணத்துப் பெண்களை உள்வாங்க தலைமை முடிவு செய்தது. முதல் அணியில் பயிற்சி பெற்ற இரண்டு பெண்கள் இதற்காக யாழ்ப்பாணம் சென்றனர். அங்கே கிட்டுவைச் சந்தித்து தமது விருப்பத்தைக் கூறிய போது அவர் தன் முன்னிருந்த மேசையில் ஓங்கிக் குத்தி ‘ என்ன? பெட்டையள் துவக்குத் தூக்கிறதா? நான் இருக்கும் வரைக்கும் யாழ்ப்பாணத்துப் பெட்டையள் சண்டைக்கு வரமாட்டாளவை நீங்கள் போகலாம்’ எனறு அதட்டினான். பெண்கள் அவமானத்துடன் திரும்பஇ ‘திலீபனுக்குப்பின்னால கொஞ்சம் பெட்டையள் திரியிறாளவை அங்க கேக்கச் சொல்லு’என்றொருவர் சொன்னார்.

 

படையணியின் முதற்குழு வன்னியைச்சேர்ந்த பெண்களுடன்இயாழ் பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதமிருந்தவர்கள் கடத்திவரப்பட்டனரே அவர்களில் மதிவதனி தவிர மற்றவர்கள் முதலாம் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

 

இரண்டாம் அணியில் திலீபனுடன் இயங்கிய சுதந்திரப் பறவைகள் அமைப்பினர் பலர் பெருவிருப்போடு சேர்ந்து கொண்டனர்.விடுதலைப்புலிகள் இயுக்கத்தில் இரண்டாம் மூன்றாம் அணியில் பெருமளவு பெண்கள் இணையவில்லை. எனினும் இரண்டாம் அணியில் பல தளபதிகள் உருவாகி சாதனை படைத்தனர்.

 

மூன்றாவதாக காதலிக்கவில்லை. மணமுடிப்பதில்லை என்ற கட்டுப்பாடு உடைந்த பின் முதலாவது தலைவருக்கு அடுத்தபடியாக ஒரு போராளிக்காதல் ஜோடி திருமணம் செய்தது. வரிப்புலிச் சீருடையில் மணமக்கள் திருமணம் செய்தனர். தொடர்ந்தும் சில திருமணங்கள் அப்படித்தான் நடந்தது. ஆனால் இதை ஒரு தளபதி தனது திருமணத்தின் போது மறுதலித்தார். ‘அண்ணை நான் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய விரும்புகிறேன். அவை மணமேடையிலாவது சேலை கட்டவேணும். நாங்களே எங்கட கலாச்சாரத்தை கைவிட்டா சனமும் மாறாதே…’ என கேள்வி எழுப்பினார்.

 

சரி சேலை தான் என உறுதியாயிற்று. ஆனால் வசதியுள்ள மணமகள் வறிய குடும்பத்து மணமகள் என்பது மணமேடையில் வெளியாயிற்று. ஆக அதற்கு ஒரு ‘மீட்டிங்’போட்டோம் அதில் சில தீர்மானங்களை மகளிர் எடுத்தோம். அதாவது மணமகள் இரண்டாயிரத்து ஜநூறு பெறுமதியான காட்டன் சேலை மெல்லிய சரிகைக்கரையுடன் அணியலாம் ஒற்றைப்பட்டு சங்கிலி ஒரு சோடி காப்பு மட்டும் போடலாம். மணமகளை நாம் தான் (போராளி) அலங்கரிப்போம் இதில் பெற்றோர் தலையிட முடியாது. இதிலும் எங்களுக்கு தோல்வி தான்.

தாலி கட்டிய பின் மணமக்களுக்கு ஒருமாத விடுமுறை உண்டு. தாலி கட்டி அவள் வீட்டுக்கு போனதும் சர்வாலங்கார பூஜிதையாக நிறைய நகைகளும் விலை உயர்ந்த சேலைகளுமாக மணமகளை மாற்றினார். அது பெற்றோரது விருப்பமானது.

 

திருமண வயதில் பெண்கள் தேர்வு செய்யப் படாமல் முதிர்கன்னிகளாயினர். அழகும் இளமையும் உள்ள பெண்களை முப்பத்தைந்து வயது கடந்த ஆண் போராளிகள் தேடினர். அப்படி மூத்த ஆண்களை மணந்த இளம் பெண்களை அவர்கள் சந்தேகத்துடன் நடத்தியதும்இ சில பெண்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டதும் உண்டு.

 

பொருத்தம்இ மதம்இ குடும்ப பிண்ணனி இவைகள் பெரும்பாலான திருமணங்களில் செல்வாக்கு செலுத்தின. பெரிய பொறுப்பாளர்களை மணந்த போராளிப் பெண்கள் முற்றாக மாறினர். அடக்க ஒடுக்கமாக பதிவிரதைகளாக வாழ்ந்தனர். அவர்கள் வெளியே வருவதே அருகிப்போனது. சாதாரண போராளிகளோ பிரசவத்தின் பின் முற்றாக பெற்றோரை நம்பி வாழவேண்டியதாயிற்று. குழந்தைக்காக ஒரு வருட விடுமுறை பெண்ணுக்கு இருந்தது. அதன் பின் அவள் கடமைக்கு வந்தாக வேண்டும். தன் பிள்ளைகளை யாரிடமும் விட்டுவிட்டு வர முடியாதவர்கள் பிள்ளைகளை முகாமுக்கே கொண்டு வரவேண்டியதாயிற்று. பெரிய விழாக்களிலோ கூட்டங்களிலோ பங்கு பற்றும் போது பிள்ளைகளை தம்முடன் வைத்திருக்க தளபதிகள் பொறுப்பாளர்கள் என்று பார்த்தால்…. தலைவரைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை.

குழந்தை பற்றிய எந்த பாதுகாப்பையும் தீர்மானத்தையும் தாயே எடுக்கவேண்டியிருந்தது. தந்தையர் வீடுகளிலிருந்து தொலைவான களங்களில் இருப்பதும் ஒரு காரணம்.

 

கணவனால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்தாலும்இ ஒரே யொரு பெண் தளபதிக்கணவனை தூக்கி யெறிந்து விட்டு வெளியேறி மீண்டும் களம் புகுந்து களப்பணியின் போது சாவடைந்தாள்.

திருமணம் செய்வதாக வாக்களித்து பழகிய பின் விலகுதல் சட்டப்படி குற்றமாகும் .தமிழீழச் சட்டமும் அதை எழுதியிருந்தது. ஆனால் தமிழிழ விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் பலர் அவ்வாறு ஏமாற்றமடைந்தனர். இவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப் படவில்லை. விசாரணை பேச்ச வார்த்தை என இழுத்தடிக்கப் பட்டாலும் பெண்களுக்கு நிவாரணங் கிடைத்ததில்லை. இவை தனிக் கதைகளாக எழுதப்பட வேண்டியவை.

பெண் போராளிகளின் வீர மிகு சாதனைகளும்இ கடற்புலியாய்இ களப்புலியாய்இ கரும்புலியாய் அவர்கள் ஆற்றிய பெரும் வீரதீரச் செயல்களும் உலகமே வியந்து நின்ற அரிய செயல்கள் பெண்ணால் எதுவும் முடியும் என நிரூபித்தனர் தமிழிழப் பெண்கள். சொந்த வாழ்க்கை என்று வந்த போது சாதாரணப் பெண்கள் எதிர் நோக்கிய அத்தனை பிரச்சனைகளையும் அவர்களும் எதிர் நோக்கினர் என்பது வெள்ளிடைமலை. இதுவரை போராளியாக இருந்து நாற்பது வயது கடந்து வெளியே வந்து இன்றும் தனியாக வாழ்கின்றனர் பல பெண்போராளிகள். பெண்விடுதலை என்பது இன்னும் வெகு தூரத்தில்தான் உள்ளது.

 

 

மண் மிட்டாய் ( சிறுகதை ) சாளை பஷீர்

images (14)

 

 

 

 

 

 

 

“ கண்ண தொறந்து எங்கள பாத்த ஆண்டவன் எங் கொழந்தைட கண்ண மூடிட்டானே “ என்ற அலறல் பேறுகால வார்டையும் தாண்டி அரசு மருத்துவமனை வளாகம் முழுக்க முட்டி அலைந்தது.

“ யம்மா , இங்க கூப்பாடு போடக்கூடாது. இது ஆஸுபத்திரி. இனிமே கூச்சல் போட்டீங்கன்னா பெரிய டாக்டர் வீட்டுக்கு அனுப்பிடுவார் “ என்ற தலைமை நர்ஸின் மிரட்டலினால் வாயைப்பொத்திக்கொண்டு குலுங்கினாள் சுப்பைய்யாவின் மனைவி.

பிரமை பிடித்தது போல நின்றார் சுப்பைய்யா.

. சுப்பைய்யாவின் வீடு எங்களூரிலிருந்து எட்டு கிலோ மீற்றர் தொலைவு உள்ள திருச்செந்தூரில் இருந்தது. மண் சுவருடன் மேலே பனை ஓலையால் வேயப்பட்ட வீட்டில்தான் அவர்களின் வாழ்க்கை தவழ்ந்து கொண்டிருந்தது .

சுப்பைய்யா தம்பதியினருக்கு திருமணம் முடிந்து பதினைந்து ஆண்டுகளாகியும் குழந்தை பேறு இல்லை. எல்லா வாய்ப்புகளின் கதவுகளையும் தட்டிப்பார்த்த பிறகு பிள்ளைப்பேறுக்கான நம்பிக்கை முற்றிலும் தகர்ந்த ஒரு கணத்தில்தான் குழந்தை உண்டானாள் சுப்பைய்யாவின் மனைவி .

“ தெய்வமே வந்து நம் மடிய பாத்து போட்ட பிச்சை “ என்று ஆனந்தக்கூத்தாடிய சுப்பைய்யா தன் மனைவி உண்டான நாளிலிருந்து தொழிலுக்கே போகவில்லை. கழிப்பறை போகும் நேரம் தவிர அவளை நார்க்கட்டிலை விட்டு இறங்கவே அவர் அனுமதிக்கவில்லை. தொழிலுக்கு போகாததினால் மனைவின் நகை , வீட்டில் நின்ற ஆடு , மாடுகளை விற்றுதான் ஒரு வருடமாக குடும்பத்தின் செலவு கழிந்தது .

மாதங்களின் நிறைவில் மகன் பிறந்தான். மகன் பிறந்த மகிழ்ச்சி துளி நேரத்தில் நெருப்பில் பட்ட பஞ்சு போல கருகி விட்டது . பிறந்த பிள்ளைக்கு கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் இறுக மூடிய இரண்டு இமைகள் மட்டுமே இருந்தன. பிள்ளையின் நிலையைக் கண்டும் எங்கே கணவர் தன்னை நிராகரித்து விடுவாரோ என்ற கலக்கத்திலும் சுப்பைய்யாவின் மனைவிக்கு நிரந்தரமாகவே மனம் பேதலித்து விட்டது.

வாழ்க்கையானது ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளை மடேர் மடேர் என அவர் தலையில் போட்ட போதும் தன்னை நம்பி நிற்கும் இரண்டு உயிர்களுக்காக தன்னைத் தானே நிலை குலைய விடாமல் காத்துக் கொண்டார். தொடர் அதிர்ச்சியின் எல்லையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தொழிலுக்கு மீண்டார்.

கையில் சல்லிக்காசு இல்லை. செல்லக்கண்ணுவிடம் தினசரி வட்டியின் அடிப்படையில் கடன் பெற்று சவ்வு மிட்டாய் தொழிலை தொடங்கினார். வீட்டில் மிட்டாயை செய்து எடுத்துக் கொண்டு சைக்கிளில் தினசரி காலை நேரம் எங்கள் ஊருக்கு வருவார். எல்லாம் விற்ற பிறகு இரவு ஊர் திரும்புவார். வட்டி போக மிஞ்சும் லாபத்தில்தான் அன்றைய தினம் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்,

விற்காமல் சவ்வு மிட்டாய் மீதமிருந்தால் கையிலுள்ள காசானது செல்லக்கண்ணுவின் வட்டிக்கே சரியாகப்போய் விடும். அன்றைய தினம் வயிறு காய வேண்டியதுதான்.

ஊரின் வட்டித்தொழிலில் செல்லக்கண்ணுதான் ஏக போகமாக இருந்தார். அடாவடிப்பேர்வழி. முறுக்கு மீசையுடன் தடித்து உருண்ட கைகால்களை கொண்ட அவரை எதிர்க்கும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை.

கொடுக்க வேண்டிய வட்டியை ஒரு நாள் பாக்கி வைத்தால் கூட செல்லக்கண்ணு கடன் வாங்கியவன் வீட்டின் முன் தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்று கொண்டு , “ இனிக்க இனிக்க பேசி காசு வாங்கத்தெரியுதுல . வட்டி கொடுக்க மட்டும் ஒடம்பு வலிக்குதோ ? “ எனத் தொடங்குவார்.

வேளை ஆகவில்லை என்றால் மிரட்டுவார் . கொஞ்ச நேரத்தில் பச்சை பச்சையாக திட்டி தீர்ப்பார். இவரின் கெட்ட வார்த்தையின் உக்கிரத்தை தாங்கவியலாமல் வீதியில் நிற்கின்ற ஆணும் பெண்ணும் கூசியவாறே அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள் . கடைசியில் கடன் வாங்கியவனின் வீட்டிலுள்ள பொருட்களை வட்டியையும் முதலையும் கணக்கு பண்ணி செல்லக்கண்ணு எடுத்துக் கொண்டு போய் விடுவார்.

செல்லக்கண்ணுவின் இந்த அடாவடியினால் காய்ச்சல் , இருமல் என்று வந்தாலும் கூட ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் உழைத்தாக வேண்டிய கட்டாயம் சுப்பைய்யாவிற்கு இருந்தது.

 

வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி . ஆறாம்பள்ளித்தெரு.

டேய் …குட்டி லெப்ப பந்த அன்வருக்கு பாஸ் பண்ணுடா “

குட்டி லெப்பை தவற விட்ட பந்தை சுரேஷ் லாகவமாக தனது நெட்டைக்கால்களால் கொக்கி போட்டு வளைத்து எடுத்தான். சற்றும் தாமதிக்காமல் அதே வேகத்தில் பந்தை உதைத்தான்.

“ கோல்ல்ல் … “ என எதிர்தரப்பு கத்த “ ஏண்டா தடிப்பயலே நான் மாடு மாதிரி கத்துறேன் நீ என்னடான்னா பந்த கவுட்டுக்குள்ள ஓட விட்டுட்டியே “ என வெறியாக கத்திய முத்து குட்டி லெப்பையின் தலையில் குட்டினான். வலி தாங்க இயலாத குட்டி லெப்பை முத்தின் செவுளில் அறைய முத்து திரும்ப குட்டி லெப்பையின் வயிற்றில் ஓங்கிக் குத்தினான்.

“ யம்மா “ வென்று கத்திய குட்டி லெப்பை வயிற்றை பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் சுருண்டான்.

மொத்த கால்பந்து அணியும் விக்கித்து நிற்க முத்தின் முகத்தில் கிறுக்கு கலந்த சிரிப்பு மெல்ல படர்ந்தது. அவன் நிற்பதை பார்க்கும்போது இன்னும் நான்கைந்து பேரின் வயிற்றில் குத்துவதற்கான மன நிலையில் நின்றுக்கொண்டிருந்தான். டீமில் உள்ள அனைவரும் அவன் முகத்தை பார்க்கும் துணிவு இல்லாமல் தலையை தொங்கப்போட்டனர்.

“ டேய் வெளாடுனது போதுண்டா “ என சொல்லிக்கொண்டே கோல் போஸ்டுக்காக நட்டிருந்த தன்னுடைய ரப்பர் செருப்பை ஈஸா காலில் போட்டுக் கொண்டான்.

அனைவரும் குட்டி லெப்பையை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். “ டேய் தள்ளுங்கடா அவனே வயித்துல அடிபட்டு கெடக்குறான் அங்க என்னத்தடா வேடிக்க பாக்குறிய “ என சொல்லிக் கொண்டே மணி நாடார் கடையில் வாங்கிய உப்பு சோடாவை குட்டி லெப்பையின் வாயில் ஊற்றினான் அன்வர் .

“ மச்சான் எழும்பி நின்று முன்னக்க குனிஞ்சி ரெண்டு பெரு வெரலால கால் பாதத்த தொடுடா . வயத்து வலி சரியா போயுடும் “ என்றான் அகமது .

ஹாஜி காக்கா வீட்டின் மடையின் வெளிப்புறக்குழாய் சின்ன கதலி வாழைப்பழத்தை போல நீட்டிக்கொண்டிருந்தது. அதில் வாயை வைத்து “ஊய்ய்ய் “ என ஊளையிட்டான் மூர்த்தி .

இதற்கெனவே காத்திருந்தது போல முன் வாசல் கதவை படீரென திறந்து “ நாய்ப்பயலே “ என ஒற்றை செருப்பை எடுத்துக் கொண்டு பனியன் போடாத மேனியுடன் பாய்ந்தார் ஹாஜி காக்கா . வெள்ளை வெளேர் என்று இருந்த அவரது உடம்பில் குட்டி பப்பாளிப்பழத்தைப்போல இருந்த தொங்கு சதைகள் ஓட்டத்தின் வேகத்தில் தாறுமாறாக ஆடின.

மூர்த்தி எதிர்த்த சந்துக்குள் ஓடினான். பின் தொடர இயலாத கடுப்பில் ஒற்றை ரப்பர் செருப்பை எடுத்து அவன் மேல் ஹாஜி காக்கா வீச அது குறி தப்பி பனங்கிழங்கு விற்கும் பாட்டியின் வட்ட பெட்டியினுள் போய் விழுந்தது.

கிழவிக்கும் ஹாஜி காக்காவிற்கும் புதியதாக மூண்ட சண்டையை தெருக்காரர்கள் தலையிட்டு விலக்க வேண்டியதாயிற்று.

கால்பந்து , கபடி , புளியங்காய் பறிப்பு , நாயடித்தல் , காக்கை முட்டை எடுத்தல் என வாலிப வயது கடமைகளில் ஈஸா , அகமது , மூர்த்தி , குட்டிலெப்பை , அன்வர் , சுரேஷ் , முத்து என்ற பதினைந்து வயது இளசுகள் கூட்டம் தவறாமல் ஒன்று சேர்ந்து விடுவர்.

இந்தக் குழுவிற்கு முத்துதான் தலைவன் . கறுத்து உயர்ந்த வலிய உருவம் , வட்ட தொட்டி போல இருக்கும் கண்கள் , விரிந்த தாடை எலும்புடன் கேடய முகம் என காண்போரை மிரட்டும் அவனின் இந்த உடல் அமைப்பு தானாகவே தலைமைப்பதவியை அவனுக்கு பெற்றுத்தந்தது.

ஒரு வீட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த குட்டி லெப்பை தன் வயிற்றை நீவி விட்டுக் கொண்டிருந்தான். வலி பாதியாக குறைந்திருந்தது.

“ட்ர் ட்ர் ட்ர்…

சவ் ரவ் முட்டேய்.. “

கொட்டாப் புளி போல இருந்த மர திருகையை சுழற்றியவாறு மறு கையில் ஆள் உயர மூங்கில் கழி ஒன்றை சுமந்து கொண்டு வந்தார் சுப்பைய்யா .

வெளுத்த டவலை தலையில் சுற்றிக் கொண்டு வந்த சுப்பைய்யாவிற்கு ஒன்றாம் எண்ணை லேசாக வளைத்தது போல இளங்கூன் முதுகு . கறுப்பான ஒல்லிக்குச்சி போன்ற அவரது உடலும் மூங்கில் கழிக்கு துணை போல வளைந்து வளைந்து நடந்து வந்தது.

அவருடைய மரத்திருகையின் ட்ர் ட்ர் ட்ர் ஓசையில் அடித்தவன் , அடி வாங்கியவன் என அனைத்து பேதங்களும் உருகி மொத்த கால்பந்து குழுவும் சுப்பைய்யாவை சுற்றி வளைத்துக் கொண்டது.

இனிப்பின் பிசுபிசுப்பால் கறுத்து பள பளப்பாக மின்னிய மூங்கில் கம்பின் உச்சியில் மொத்த சவ்வு மிட்டாயையும் சுற்றி அதன் மேல் பாலித்தீன் உறை போட்டு மூடியிருந்தது.

மிட்டாய் கேட்பவர்களுக்கு அதன் அடியில் இருந்து மாட்டின் ஒற்றைக் காம்பை மெல்ல நீவிக்கொடுப்பது போல பக்குவமாக இழுத்து பிய்த்தெடுத்து கொடுப்பார் சுப்பைய்யா. பருத்த தலையும் இழுத்த வாலுமாக இருக்கும் சவ்வு மிட்டாய் திரட்டை தொலைவில் இருந்து பார்க்கும்போது குட்டைச் சடை பெண் போலவே இருக்கும்.

ஐந்து , பத்து , காலணா என சில்லறைக்கு ஏற்ப சுப்பைய்யாவின் சவ்வு மிட்டாயானது மயில் , மான் , கைக் கடிகாரம் என உருப்பெற்று கால்பந்து அணியினரின் கைகளிலும் வாயிலுமாக இழுபட்டுக் கொண்டிருந்தது.

மூர்த்தி மயில் வாங்கிய கையோடு காசு கொடுக்காமல் மெல்ல நழுவினான். அத்தனை பரபரப்பிற்கும் இடையில் இதைக்கவனித்த சுப்பைய்யா “ ஏல களவாணி காச தராம எங்கல போற “ என பழுப்பேறிய ஓட்டைப்பல்லைக்காட்டி மூர்த்தியை பார்த்துக் கத்தினார்.

“ கையில காசு கொண்டு வர்ல அண்ணாச்சி. எங்க அம்மாட்ட போய் வாங்கிட்டு வாரேன் “

“அதச் சொல்லிட்டு போவேண்டியதுதானே . ஏன் திருடன போல போறே. சரி சரி வேகமாப் போய் காச வாங்கிட்டு வா “

எல்லாரும் வாங்கி முடிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முத்து சுப்பையாவின் அருகில் போய் கையை நீட்டினான்.

“ எவ்வளவுக்கு தம்பி ? “

“ ஓசிதான் “

“ கடக்காரன் எனக்கு சும்மாவா சீனியும் , எஸன்சும் தாரான். ? “

“ அப்போ தர மாட்டியா ? “ என்றவாறே தன் அழுக்கு கையை அந்த மிட்டாய் உருண்டையில் தேய்க்க போனான் முத்து .

அவனது கையை தட்டி விட்ட சுப்பைய்யா “ தம்பி மரியாதையா பேசு . வயசுல ஒன்ன விட பெரிய பையன் எனக்கு உண்டு “

“போடா “ என்று சொல்லியபடியே அவரின் தலைப்பாகையை பிடித்து இழுத்தான் முத்து . அவனின் முரட்டு இழுப்பில் வாயைப்பிளந்தவாறே வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணல் குவியலில் மிட்டாய் கம்புடன் போய் விழுந்தார் சுப்பைய்யா. மிட்டாய் உருண்டையை சுற்றியிருந்த பாலித்தீன் உறை காற்றில் பறக்க ஆற்று மண் அப்படியே படலம் போல மிட்டாய் முழுக்க அப்பிக் கொண்டது.

புறப்படும் அவசரத்தில் எதுவும் சாப்பிடாமல் வந்திருந்த சுப்பைய்யாவிற்கு தலை கிறு கிறுவென சுற்றியது. தலை சுற்றல் குறைந்து சற்று நிதானித்தபோது மண் அப்பிய மிட்டாய் உருண்டைதான் கண்ணில்பட்டது .

மண்ணாகிப்போன முதலும் கட்ட முடியாத வட்டியும் மானத்தை சந்திக்கு இழுக்கும் செல்லக்கண்ணுவின் சுடு சொற்களும் உடல் நலமில்லாத மனைவி மகனின் முகங்களும் மிட்டாய் உருண்டையின் மேல் மாறி மாறி தோன்ற சுப்பைய்யாவிற்கு நெஞ்சு அடைத்தது . நாதியற்ற உணர்வில் அவரின் கண்களில் நீர் பெருகியது .

பசியின் வேகமும் ஆதரவற்ற உணர்வும் அவமானமும் சரிவிகித கலவையில் வயிற்றிலிருந்து கிளம்பி நெட்டுக்குத்தாக நெஞ்சைக்கடந்து அவரின் தலையில் சுடு நீர் போல நிரம்பியது.

மிட்டாய் கம்பும் தலைப்பாகையும் மண்ணின் மீது கிடக்க மொட்டைத்தலையோடு வெறி பிடித்த வேகத்தில் தரையிலிருந்து எழுந்து நின்றார் சுப்பைய்யா . கை நிறைய ஆற்று மணலை எடுத்து மீண்டும் தரையில் எறிந்தார். “ ஏல கேட்டுக்க அடுத்த வாரத்துக்குள்ள ஓன் வாயில மண் விழுதா இல்லியான்னு பாருல “

“ போடா கெழட்டுப்பயலே “ என்று அலட்சியமாக சொல்லியவாறே நடந்தான் முத்து .

 

முந்தின தினம் பேசியபடி வாட்ச் ரிப்பேர் கடை முன்பு நின்ற வேப்பமரத்தடியில் காலை ஏழரை மணிக்கு முதலில் வந்து சேர்ந்தான் முத்து . கொஞ்ச நேரத்தில் சுரேஷும் வந்து விட்டான் .

“டேய் சுரேஷ் , மத்தவனல்லாம் எங்கடா “

“ வந்துக்கிட்டு இருக்கிறானுங்க மச்சான் “

ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து பேரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் நான்கு சைக்கிள்கள் இருந்தன. முருகன் சைக்கிள் கடையில் அரை நாள் வாடகைக்கு எடுத்திருந்தனர்.

இஸ்மாயில் காக்கா கடையில் ஏழு உளுந்து வடை ஏழு பருப்பு வடை என தாளில் பொதிந்து வாங்கி வந்த அகமது அதை முத்தின் கையில் கொடுத்தான்.

“ நாம குளிச்ச பின்னாடி நல்ல பசிக்கும் “ என சொல்லியவாறே வடை பொதியை சைக்கிளின் ஹேண்டில் பாரில் தொங்கிய பையினுள் போட்டான் முத்து.

“ ஆளுக்கொரு சைக்கிள்ல ஏறுங்கடா. நான் முன்னால போறேன் “ என்று சொல்லியவாறே முத்து சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான் .

தாயிம்பள்ளி , ஓடக்கரை தாண்டி வீரபாண்டியன்பட்டினம் எல்லையில் கிட்டதட்ட மூன்றரை கிலோ மீற்றர் பயணத்திற்குப்பிறகு காட்டு மொகுதூம் பள்ளி வந்து சேர்ந்தது. திருச்செந்தூர் செல்லும் தார் சாலையிலிருந்து வலது பக்கம் ஒற்றையடி பாதை விலகி சென்றது. பாதையின் முடிவில் குளத்தைக்கண்டதும் சைக்கிள்களை ஸ்டாண்ட் கூட போடாமல் அப்படியே குளத்தோரம் உள்ள மணல் மேட்டில் சாய்த்தனர் .

ஒரு வாரமாக பெய்த மழையில் குளம் நிரம்பி தாம்பாளத்தில் ஆறப்போட்டிருந்த பச்சை ஹல்வா போல பார்ப்போரை ஈர்த்தது. பச்சை , மண் நிறங்களில் தவளைகள் குளத்திற்கும் கரைக்கும் இடையே தம் வசதி போல வந்து போய் கொண்டிருந்தன.

காட்டு மொகுதூம் பள்ளியில் வருடத்திற்கு ஒரு தடவை பெரும் ஏற்பாடுகளுடன் நடக்கும் கந்தூரி விழாவிற்கு ஊரிலிருந்து சாரி சாரியாக ஆண்களும் பெண்களும் நடந்தே வருவார்கள் . மற்ற நாட்களில் உடல் நலன் தேறுவதற்கு நேர்ந்து கொண்டு தங்குபவர்களைத் தவிர வேறு யாரும் பெரிதாக வருவதில்லை. அதனால் அங்கு எப்பொழுதும் அமைதி நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும் . தர்காவை ஒட்டியவாறே நிற்கும் வேப்பமர வாசிகளாகிய குருவிகளுக்கும் காகங்களும் எழுப்பும் ஓசையில் நிறைந்த அமைதியின் மேற்பரப்பில் சிறு சலனம் அலைந்து கொண்டே இருக்கும்.

“தொம்மடீர் “ என ஓசையுடன் குளத்திலிருந்து நீர் தெறித்து மீண்டும் குளத்திற்குள்ளேயே விழுந்தது. முத்துவின் கண வேக பாய்ச்சலில் குளத்தின் அமைதியானது பேரமளியாய் மாறியது.

அவனைத் தொடர்ந்து மள மள வென சட்டையையும் லுங்கியையும் பனியனையும் கழற்றி எறிந்த மற்ற நண்பர்கள் அரை டிரவுசருடன் குளத்திற்குள் பாய்ந்தனர்.

மூர்த்தி மட்டும் கரையிலேயே நின்று கொண்டிருந்தான்.

“ ஏண்டா , தடி மாடு மாதிரி நிக்கிறே. குதியேண்டா “ என முத்து கத்தினான்.

“குளிரும் மச்சான் “

“ நல்லதாப்போச்சி . நீ தண்ணிக்குள்ள எறங்காதே. ஒன் அழுக்குலாம் எறங்கி தண்ணி நாறீடும் “

இதைக்கேட்டு அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. தொண்டைக்கு கீழே பலூன் மாதிரி புடைக்க வைத்துக் கொண்டிருந்த தவளைகளை வேடிக்கை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். அவன் அறியாத வண்ணம் குளத்திலிருந்து மெல்ல எழும்பி பின்பக்கமாக வந்த முத்து தண்ணீருக்குள் மூர்த்தியை ஒரே தள்ளாக தள்ளினான்.

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன மூர்த்தியின் வாய்க்குள் தண்ணீர் போகவே அவனுக்கு மூச்சு திணறியது . பின்னர் ஒருவாறாக சமாளித்துக் கொண்டு முத்துவைப் பார்த்து கெட்ட சொற்களில் திட்டி தீர்த்தான்.

திட்டும் படலம் நடந்து கொண்டிருக்கவே நீந்திக் கொண்டிருந்த ஈசாவின் காலைப்பிடித்து குளத்தின் அடிப்பக்கத்தை நோக்கி முத்து இழுக்க அவன் இவனை அடிக்க என குளத்து நீரின் திவலைகளும் ஆரவாரமும் நாலாபுறமும் கலந்து தெறித்துக் கொண்டிருந்தது.

ரொம்ப நேரம் குளித்ததினால் வெளுத்து விறைத்த தனது கை விரல்களை பார்த்த அகமது , “ டேய் ரொம்பக்குளிச்சா உடம்புல ரெத்தம் செத்துருண்டா . வீட்ல தேடுவாங்கடா . வாங்கடா போவோம் “ என குரல் கொடுக்க ஒன்றன் பின் ஒன்றாய் நண்பர்கள் கரையேறினர்.

முத்தின் சைக்கிள் ஹேண்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்த வடை பொதியை காக்கை கூட்டம் ஆளுக்கொன்றாய் பிய்த்து எடுத்து சிதறடித்துக் கொண்டிருந்தன.

காக்கை கூட்ட்த்தை விரட்டத்தொடங்கிய சுரேஷ் “ டேய் முத்த எங்கடா “ என மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

“ நம்மள தண்ணிக்குள்ள தள்றதுக்காக எங்கயாவது புதருக்குள்ள ஒளிச்சிக் கெடப்பான் இல்லன்னா நம்மள பைத்தியக்காரனாக ஆக்குறதுக்காக தண்ணிக்குள்ள மூச்சு பிடிச்சிக்கிட்டு கெடப்பாண்டா “ என மற்றவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

எல்லாரும் தலை துவட்டி லுங்கி சட்டைகளை அணிந்த பிறகும் முத்து வரவில்லை என்றதும் பதட்டம் மெல்ல பரவியது .

“ தண்ணிக்குள்ள மூச்சு புடிச்சுக்கிட்டு இருந்தாலும் மூணு நிமிஷத்துக்கு மேல இருக்க முடியாதேடா “ என குட்டி லெப்பை சொன்னதும் “ டேய் சுரேஷ் நீ நல்ல நீச்சலடிப்பால்லே . என்னாச்சுனு உள்ள போய் பாருடா “ என அனைவரும் சொல்ல “ யம்மாடி நா மாட்டேன்பா “ என அவன் ரோட்டைப்பார்த்து ஓடினான்.

பச்சை ஹல்வா தட்டு போல செல்லமாக காட்சியளித்த குளமானது அனைவரின் கண்களுக்கும் இப்போது இருண்ட பெரும் பள்ளம் போல தெரிந்தது.

குளத்தைப் பார்க்க பிடிக்காமல் “ முத்தேய் முத்தேய் “ என கத்தியவாறே புதர் , மரம் என ஆளுக்கொரு திசைக்கு சென்று தேடினர். அவர்களுடன் சேர்ந்து அந்த விளிகளும் வெறுமையின் கனத்துடன் திரும்பி வந்தன.

முத்தின் உடைகள் குளத்தங்கரையின் மண் மேட்டில் பந்து போல சுருட்டியவாறே இருக்க நடந்து முடிந்த விபரீதம் உடனே புரிந்து விட்டது. அனைவரின் அடிவயிறும் கலக்கியது.

பயத்தின் உருள் பிரட்டலில் சுரேஷ் மயங்கி விழ ஈசா தன்னையறியாமல் உளறத் தொடங்கினான்.

செய்வதறியாது திகைத்த நண்பர்கள் சுரேஷையும் ஈசாவையும் அங்கேயே விட்டு விட்டு சைக்கிள்களில் ஏறி ஊர் நோக்கி பறந்தனர்.

ஆறாம் பள்ளித்தெருவின் முனையில் வேன் வந்து நின்றது. ஆறு பேர் தாங்கலாக முத்தின் உடல் இறக்கப்பட்டது.

வயிறு உப்பிருக்க வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் மண் கலந்த நீர் மெல்லிய கோடு போல வழிந்துக் கொண்டிருந்தது. கண்கள் திறந்தபடியே இருக்க ஒரு கண்ணில் ரத்தக்காயமாக இருந்தது. மீன் கடித்திருக்கும் போலும். கைகளும் கால்களும் வெவ்வேறு திசையில் கோணியிருந்தன.

முத்துக்கு வலிப்பு நோய் இருந்திருக்கின்றது. குளத்தின் ஆழத்தில் நீந்தும்போது வலிப்பு வந்து நிறைய தண்ணீரும் மண்ணும் வாய்க்குள்ளே சென்றதால் மூச்சு திணறி மரணம் நேர்ந்திருப்பதாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொன்னது .

இறுதிச்சடங்குகளுக்காக அன்று மாலை முத்துவின் வீட்டின் முன் ஆட்கள் திரளாக நின்றிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முத்துவின் நண்பர்களும் நின்றிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியே மிட்டாய் கம்பை தூக்கிச் சென்ற சுப்பைய்யா முத்துவின் நண்பர்களை கண்டார். தினமும் அவரைக்கண்டதும் ஓடி வரும் பையன்களின் கூட்டம் இன்று முகங்களில் சோகத்தை அப்பியபடி மௌனமாக நிற்பதைப்பார்த்ததும் அவருக்கு குழப்பமாக இருந்தது. அதை தீர்ப்பது போல மெல்ல சுப்பைய்யாவை நோக்கி நடந்து வந்த அகமது அவரின் காதுகளில் நடந்தவற்றைப் பற்றி கிசுகிசுத்தான்.

தான் உதிர்த்த ஒரு சொல்லின் விளைவாக முடிந்து போன முத்துவின் இறப்பு செய்தியின் கனத்தை தாங்க இயலாத சுப்பைய்யா ஒரு வீட்டின் படியில் தளர்ந்து அமர்ந்தார். தன் மனம் முழுக்க மணல் ஒட்டிக்கொண்டதைப்போல உணர்ந்தார்.

அன்றைய தினம் வெள்ளிக்கிழமையாக இருந்தது.

•••

 

 

நம்மாழ்வாரின் பாசுரங்களின் ஊடே ஒரு பயணம். / வரகுணமங்கை/ சத்தியப்ரியன்

images (10)

 

 

 

 

 

 

 

 

 

நம்மாழ்வார் காலம் குறித்து முடிவான முடிவுக்கு வர முடியாத நிலையில்தான் உள்ளோம். ஸ்ரீவைனவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் நம்புவது நம்மாழ்வாரின் காலம் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்பதாகும் . ஆழ்வார்த் திருநகரியில் சதுர்வேதி வீதியில் அமைந்துள்ள ராமாசுஜர் சன்னதியில் போய் கேட்டால் பட்டர் சொல்லும் கதை பெரும் ஆச்சரியங்களை அளிக்கும்.ராமானுசருக்கு மொத்தம் நான்கு திருமேனிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் தானான திருமேனி . ஸ்ரீபெரும்புதூரில் தான் உகந்த திருமேனி. மேலக் கோட்டையில் தமர் உகந்த திருமேனி. ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் உகந்த பவிஷ்யதாசார்யன் திருமேனி. பின்னால் பிறக்கப் போகும் ஒருவருக்கு முன்னால் சிலை வடிக்க இயலுமா? அப்படி ஒரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது ஆழ்வார்த்திருநகரி இன்று அழைக்கப்படும் அன்றைய திருக்குருகூரிலே. மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வார் மேல் குருபக்தியை விடவும் அதிகமான பற்று. இல்லையென்றால் அயோத்தி வரை தனது குரு எங்கே என்று தேடிச் சென்றவர் மீண்டும் தனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள திருக்குருகூரில் அவதரித்த வேளாளர் மரபில் உதித்த நம்மாழ்வாரை குருவாக ஏற்றுக் கொண்டிருப்பாரா? மதுரகவி ஒருமுறை நம்மாழ்வாரிடம் அவரது சாயலில் ஒரு திருமேனி ( உலோகச் சிலை ) வேண்டும் என்று கேட்கிறார். நம்மாழ்வார் தாமிரபரணி நீரைக் காய்ச்சுமாறு மதுரகவியை பணிக்கிறார். மதுரகவியும் நம்மாழ்வார் கூறியது போல தாமிரபரணி அற்று நீரை காய்ச்சுகிறார். தாமிரமும் கனிம வளமும் மிகுந்த தாமிரபரணியை காய்ச்சியதும் அதிலிருந்து அழகாக ஒரு திருமேனி கிடைக்கிறது. ஆனால் அந்தத் திருமேனி நம்மாழ்வாரை போல தோன்றாமல் போகவே இது யாருடைய திருமேனி ? என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார் பின்னாள் ஆசாரியன் என்ற பொருளில் “ பவிஷ்யதாசார்யன் “ என்று சொல்லி கொடுத்த திருமேனிதான் ராமானுசரின் நான்காவது திருமேனியான நம்மாழ்வார் உகந்த பவிஷதசார்யன் திருமேனியாகும். இது போன்ற நம் சிற்றறிவுக்கு புலப்படாத விஷயங்கள் நிறைந்த சமயம் வைணவம். ஒன்று மட்டும் உறுதியாகிறது. பிறந்த உடனேயே சடம் என்ற வாயு தன்னை போர்த்தாமல் ஊதித் தள்ளியவர் என்பதால் பிறவியிலேயே ஞானியாக அவதரித்தவர் நம்மாழ்வார் என்பது புரிகிறது.

நம்மாழ்வார் நான்கு வேதங்களையும் முறையாக கற்றுணர்ந்து வியாச பகவானுக்கு இணையாக பேசப்படுகிறார். “மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ் “ என்று மட்டுமே நாதமுனிகள் கூறுகிறார். வேறு குறிப்புகள் இல்லை. வழுதி என்ற பெயர் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களைக் குறிப்பிடுவதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது. குருபரம்பரை, அதிகார சங்கிரம் போன்ற நூல்களில் நம்மாழ்வாரின் காலத்தை சரியாகக் குறிப்பிடவில்லை. ஆழ்வார்களில் கடைபட்டவராகவே கூறுகின்றன. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் சில சொற்பிரயோகங்கள் கற்பனைகள் நம்மாழ்வாரின் பாசுரங்கள் சிலவற்றில் காணப்படுவதால் அவர் ஆண்டாளின் காலத்திற்கு பின்பட்டவர் என்ற முடிவுக்கு வருவோமேயானால் வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் மூலம் பெரியாழ்வாரின் காலத்தை எட்டாம் நூற்றாண்டு என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நம்மாழ்வாரின் காலம் எட்டாம் நூற்றாண்டிற்கு பிறகு என்று முடிவு கொள்ளலாம்.

இந்த இடத்தில் இரகுநாத பட்டர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு புலவர் பாடியுள்ள குழைக்காதர் பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கிய நூலில் நம்மாழ்வாரை பற்றிய குறிப்புகள் உள்ளன. தென்திருப்பேரையில் உள்ள எம்பெருமானுக்கு நம்மாழ்வார் தனது நாயகி பாவத்தில் சூட்டிய பெயர் மகர குழை காதர் என்பதாகும். திரு வாய்மொழி யோர் நாலாயிரஞ் செய்த
குருகை முனி என்பதால் சடகோபன் வேதம் அறிந்தவர் திருக்குருகூரில் அவதரித்தவர் என்பது புலனாகிறது .மாறன் கலம்பகம்,ஆதிநாதன் வாகனமாலை , நம்மாழ்வார் பதம் போன்ற இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களில் மாறன் வழுதி நாடன் என்ற சொற்பிரயோகம் மீண்டும் மீண்டும் வருவதால் நம்மாழ்வார் அரச குலத்தைச் சேர்ந்தவர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது. இதற்கு மேல் ஆராய்ந்து கொண்டு செல்ல நான் விழையவில்லை. எனக்கு அவருடைய பாசுரங்களும் அதன் உட்பொருளும் மட்டுமே முக்கியம் என்பதால் அடுத்து நாம் வரகுணமங்கை தலத்திற்கு செல்லலாம்.

இந்தத் திருத்தலத்திற்கும் சத்தியவான் சாவித்திரி கதைக்கும் முக்காலத்தில் தொடர்பு இருந்திருக்க வேண்டும்.அதை அறிந்து கொள்ளும் முன் இருப்பிடம் தெரிந்து கொள்வோம்.

வரகுணமங்கை என்று இப்போது இந்தத் தலம் அழைக்கப்படாமல் நத்தம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 3 கி.மீ] தொலைவில் உள்ளது. தேவப்ரஷ்னம் மூலம் கோவில் புஷ்கர்ணியை அகழ்ந்து வெளிக் கொண்டு வந்துள்ளனர்

சில புராண நிகழ்வுகளுக்கு நம்முடைய பகுத்தறிவை பயன்படுத்துவதால் ஒரு பயனும் கிட்டப் போவதில்லை. தத்துவம் என்பது வேறு நடைமுறை நிகழ்வுகள் என்பது வேறு. அகமும் புறமும் உள்ள பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த பிரபஞ்சம் மூலம் என்பதை ஞானிகள் சொல்லி விட்டு போயிருக்கின்றனர் என்றால் வேறு வழியே கிடையாது அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அறிஞன் ஞானி என்று இரண்டு சொற்கள் உள்ளன. நம் புலன்கள் மூலம் எட்டப்படுவதை நமக்கு சொல்பவன் அறிஞன். நம் புலன்களுக்கு அப்பாற்பட்டதை சொல்பவன் ஞானி. இருவரும் சந்திக்கும் மையப்புள்ளி இதுவரையில் நாம் கண்டதில்லை. அறிஞன் ஞானியின் அருகில் வருவதற்கு அவனுடைய அகங்காரமும், மமகாரமும் இடம் கொடுக்கவே செய்யாது. ஆனால் இந்த பூவுலகம் அறிஞர்களால் நிரம்பியது. ஞானிகளால் அன்று. எனவே ஞானிகளும் புண்படும்விதத்தில் அறிஞர்கள் கூறும் கூற்றைத்தான் இந்த உலக மக்கள் நம்புவார்கள். யோக நிஷ்டையில் ஞானிகள் வெளிக் கொணரும் தத்துவங்களே இங்கே புராணங்களாக உள்ளன. நமது சிற்றறிவின் காரணமாக நாம் தத்துவத்தை விட்டு விட்டு புராணத்தை மட்டும் கொள்வதால் நம்மால் அபத்தமாக அறிவுபூர்வமாக சிந்தித்து இவற்றை கேலி செய்ய முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகம் தொடர்புடைய எந்த ஒரு புனைவும் வெறும் கேலிக்குரியது இல்லை. அதன் பின்னால் உள்ளுறை பொருளாக நிச்சயம் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கும். அதை நாம் தேடித் போய்க் கொண்டே இருக்க வேண்டும். இதோ இந்த வரகுணமங்கை தல புராணக் கதையை போல.

திருமாலை உணரக் கூடிய மந்திரம் ஆசணதை என்ற மந்திரம் என்று முன்பு கருதப்பட்டு வந்துள்ளது. அந்த ஆசணதை மந்திரத்தை உச்சரிக்க சிறந்த இடம் எதுவென்று ஒரு அந்தணன் –வேதவித் என்ற பெயரை உடையவன்- மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா நதிக்கரையில் இடம் தேடிக் கொண்டிருந்தான். அப்போது அவனது யோகத்தில் வந்து நின்ற எம்பெருமான் சகயம், மகேந்திரம் என்ற இருமலைகளுக்கு நடுவில் அமையபெற்றுள்ள தக்ஷிண பிரதேசத்தில் உள்ள வரகுண மங்கை தலத்திற்கு சென்று தவம் செய்யுமாறு பணிக்கிறார். அந்த அந்தணனும் இங்கு வந்து அந்த மந்திரத்தை உச்சரித்து முக்தி பெறுகிறார். அதனால் திருவரகுணமங்கையில் எம்பெருமானுக்கு விசயாசனர் என்ற பெயரும் உண்டு.

சத்தியவானின் குரு ரோமச முனிவர் என்ற ரிஷியாவார். ஒருமுறை வலைவீசி மீன் பிடிக்கும் வலைஞன் ஒருவனை பாம்பு தீண்டி இறந்து விட அவனை மோட்சத்திற்கு கொண்டு செல்ல தேவர்கள் வருவதை சத்தியவான் காண்கிறான். மோட்சம் செல்ல எவ்விவித பிரயத்தனமும் செய்யாத வலைஞன் மோட்சம் பெற்றகாரணத்தைத் தனது குருவிடம் கேட்க குரு வரகுண மங்கையில் உயிர் விடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் மகிமையைக் கூறுகிறார்.

ரோமேச முனிவருக்கும், அக்னி பகவானுக்கும், பஞ்ச கன்யைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் எம்பெருமான் காட்சி கொடுத்த திருத்தலம் இது.

அப்படிப்பட்ட புண்ணிய பூமியின் காற்றை சுவாசிக்கவாவது ஒரு முறை வரகுணமங்கை சென்று வரலாம்.

பெருமாளின் திருநாமம் விஜயாசனர்.பரமபத நாதன் என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்ரீவைகுண்டத்தில் ஆதினாதனுக்கு ஆதிசேடன் நின்ற கோலத்தில் குடை பிடித்தால் இங்கே விஜயாசனரின் அமர்ந்த கோலத்திற்கு ஆதிசேடன் குடை பிடிக்கிறார். தாயாரின் திருநாமம் வரகுணமங்கை. தாயாருக்கு தனி சன்னதி கிடையாது.வைகானச ஆகமத்தில் கிழக்கு திருமுக மண்டலமாக எழுப்பப்பட்ட கோவில். தென்கலை சம்பிரதாயக் கோவில்.

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னையாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்
கனிவாய் சிவப்ப நீ காணவாராயே
(3571) திருவாய்மொழி 9-2-4

 

யானைகள் தேடும் சவக்காலை / நடேசன். ( ஆஸ்திரேலியா )

images (11)

 

 

 

 

 

 

 

காட்டில் வாழும் மற்றைய மிருகங்களிலும் பார்க்க யானைகள் பற்றிய விடயங்கள் எனக்கு ஆவலானவை. அதற்குக் காரணம் அவற்றைப்பற்றி அரைகுறையாக தெரிந்ததால்தான் என நினைக்கிறேன்.

மிருக வைத்தியராக இலங்கையில் யானைகளை பற்றி படித்திருப்பதுடன், அவற்றிற்கு வைத்தியம் பார்க்கும் வேலைகளையும் ஓரளவு செய்திருக்கிறேன். தந்தத்திற்காக கொலை செய்த யானைகளை பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். குட்டிகளை பிடிப்பதற்காக, வெட்டிய குழிகளில் விழுந்த ஓரிரு மாதங்களேயான, யானைக் குட்டிகளை இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பில் எடுத்தால், அவற்றை வளர்ப்பதற்கு உதவுவது மிருகவைத்தியர்களான எங்கள் கடமை. அப்படி பல குட்டிகளுக்கு குழந்தை பால்மா ஊட்டி வளர்க்க உதவினேன்.

இப்படியான அனுபவம் இருந்த போதும் ஆபிரிக்க காட்டு யானைகள் அருகே சென்று பார்க்கவேண்டும் என்ற உந்தல் பலகாலமாக இருந்தது. அந்த நெடுங்கால ஆவல் சிம்பாப்வேயிலும் தென்னாபிரிக்காவிலும் விடுமுறைக்கு சென்றபோது எனக்கு நிறைவேறியது. ஆசிய யானைகளோடு ஓப்பிடும்போது தோற்றத்தில் பெரிதாகவும் கம்பீரத்தில் சிறந்தும் இருந்ததுடன் அவற்றை அங்கு காட்டில் பார்க்கும்போது அவைகளை மரியாதையுடன் பார்க்கத் தோன்றியது.

யானைகளைப் பற்றி காலம் காலமாக பல விடயங்கள் மனிதர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்திருக்கிறது. சில சுவையானவை. சில வதந்தி போன்றவை. என்னைப் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே நான் பதில் தேடிய விடயம் ஒன்று உள்ளது. பிற்காலத்தில் மனதைவிட்டு மறைந்தாலும் இம்முறை ஆபிரிக்கா சென்றதும் அந்த விடயம் எங்கிருந்தோ கடலில் மிதந்து கரையில் ஒதுங்கிய தேங்காயாக மனதில் வந்தது.

ஆபிரிக்காவில் யானைகள் இறப்பதற்காக தங்களுக்கான நமது சவக்காலைக்கு ஒப்பான ஒரு இடத்தை தேடுமென்று அறிந்திருந்தேன். அதைப்பற்றி தென்னாபிரிக்காவில் நிபுணர் ஒருவரிடம் பிரஸ்தாபித்தபோது அதில் பாதி உண்மை பாதி பொய் என்று கூறி விளக்கினார்.

‘வயதான யானைகள் தங்கள் மதி நுட்பத்தால் எதிரிகள் அற்ற மற்றும் உணவு அதிகமான இடங்களில் ஒதுங்குவதாகவும் பிற்காலத்தில் வயதாகி இறக்கும்போது அவற்றை சிங்கங்களும் கழுதைப்புலிகளும் தின்பதால் எலும்புகள் அந்த இடத்தில் சிந்தப்படுகிறது. அதுவே யானைகளின் சவக்காலையாக கருதப்படுகிறது. சில ஹொலிவூட் படங்களால் இந்த விடயம் பிரபலமானது. ஆனால் யானைகள் இறப்பதற்காக இடங்களைத் தேடிப்போவதில்லை’. என்ற விளக்கம் கிடைத்தது.

இதேபோல் இலங்கையில் நான் பார்த்த விடயம் ஒன்றுண்டு. ஒரு ஆண்யானையை மட்டும் அங்குள்ள சரணாலயத்தில் கட்டிப் போட்டிருந்தார்கள். அது காலை உதைத்தபடி தும்பிக்கையை தூக்கி பிளறியவாறு நின்றது. அதை விசாரித்தபோது மதம் கொண்டுவிட்டதாக கூறி அதனது நெற்றியின் இருபக்கத்திலும் கறுப்பாக திரவம் வடிவதைக் காட்டினார்கள். மதம் என்பது அதனது இனப்பெருக்க வேட்கையின்போது ரெஸ்ரெஸ்ரோன் ஹோர்மோனால் ஏற்படும் சீற்றம் என்பது தெரிந்தாலும் அதன் அடையாளமே அந்த கறுப்பு திரவம் என்பதை தெரிந்துகொண்டேன்.

பல வருடங்கள் முன்பாக மிருகக்காட்சிசாலையொன்றில் அடைத்து சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருந்த யானை ஒன்று தொடர்ச்சியாக தலையை ஆட்டியபடி நிற்பதை கண்டபோது அந்த யானை ஏதோ ஒருவகையான மன அழுத்தத்தில் அப்படி செய்கிறது என்பது புரிந்தது. உண்மையில் யானைகளின் இடம் காடுகளே. ஆனால் மனிதர்கள் அவைகளை ரோம சாம்ராச்சிய காலத்து அடிமைகளாக சிறைப்பிடித்து வைத்திருப்பதையும் பின்பு அவை அந்த அடிமைத்தனத்தை ஏற்க பழக்கப்படுத்துவதும் தெரிந்தது. ஒரு முறை தாய்லாந்து சென்றபோது யானை சவாரி செய்யும் சந்தர்ப்பத்தை தவிர்த்தேன். காரணம் யானைகளை பழக்கும் முறையை வீடியோவில் பார்த்தபோது பழக்குபவர்கள் யானைகளுக்கு மிகவும் துன்பத்தை கொடுத்தார்கள். யானைகள் கூட்டமாக காட்டில் திரிவன. நிச்சயமாக காட்டில் இயற்கை சூழலில் பல கிலோமீட்டர் ஒவ்வொரு நாளும் நடந்து சந்தோசமாக இருக்கவேண்டியவை. அவ்வாறு சுதந்திரமாக நடமாடும் விலங்குகளை சிறிய இடத்தில் அடைத்தல் சித்திரவதையே.

சம்பேசி ஆபிரிக்காவின் தென்பகுதியில் சாம்பியாவில் உருவாகி பின்னர் மொசாம்பிக்கின் ஊடாக இந்துசமுத்திரத்தில் வந்து கலக்கும் பெரிய நதி. இந்த நதியில் இருந்துதான் பிரசித்திபெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகிறது. அதைப் பார்க்கச் சென்ற ஆபிரிக்க பயணத்தில், எனக்கு கிடைத்;த அரிய அனுபவம் கிட்டியது. மாலை நேரத்தில் ஒரு படகில் சம்பேசி ஆற்றில் போய் கொண்டிருந்தபோது நீலவானத்தில் சிவப்பு கோளமாக மறையும் மாலை சூரியனை படம் எடுப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்பொழுது படகில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு என்னைக் கவர்ந்தது. படகில் பல நாட்டவர்கள் இருந்ததால் பல மொழிகளில் பேசியபடி ஓரே இடத்தைப் பார்த்தார்கள். அந்த அற்புதமான காட்சி பல காலத்திற்கு மனதை விட்டு விலகாது
எமது படகு செல்லும் இடத்திற்கு சிறிது தூரத்தில் சம்பேசி நதி இரண்டாகி சிறிய தீவை உருவாக்கிவிட்டு கடந்து சென்றது. அந்தத் தீவு மிகவும் பசுமையான சோலை. பலவித மரங்களால் நிறைந்து அரைகிலோ மீட்டருக்கு அந்தத் தீவு தெரிந்தது. நதியின் ஓருபக்கம் அடர்ந்த காடு. மற்றைய பகுதி எமது ஹோட்டல் இருந்த விக்டோரியா நகரம்.
காட்டில் இருந்து தீவுக்கு செல்வதற்கு கொம்பன் யானையொன்று நதியில் மெதுவாக இறங்கியது கண்ணுக்குத் தெரிந்தது. பின்பு பல நிமிடம் தண்ணீருக்குள் மறைந்துவிட்டது. ஆனால் பின்பு இடைக்கிடை தும்பிக்கையின் நுனி மட்டும் காற்றையும் தண்ணீரையும் மத்தாப்புபோல் ஊதிவிட்டு மறைந்துவிடும். இப்படியாக நீந்தி அரைக்கிலோமீட்டர் அகலமான நதியைக் கடந்து அந்தத் தீவில் சென்று பச்சைப்புதர்கள் மத்தியில் மறைந்தது. நாம் சென்ற காலம் கோடைகாலம் அந்தத் தீவில் உள்ள பச்சைத்தளைகளைத் தேடி அவை போயிருக்கவேண்டும். யானைகள் நதியில் நீந்தும் என அறிந்தாலும், யானையின் நீந்தும் ஆற்றலைப் பார்க்க முடிந்தது இதுவே முதல் தடவை. அதைவிட தனது நீளமான தும்பிக்கையை மனிதர்கள் மூங்கில் குழாயை பாவித்ததுபோல் பாவித்தது பரவசமான காட்சி.

யானையின் உறுப்புக்களான நீளமான மூக்கு தும்பிக்கையாகவும் மேல் கடவாய் பல் இரண்டும் தந்தமாகவும் மாறுபட்டதால் யானைகள் தனித்தன்மையானவை. தற்பொழுது அந்த வகுப்பை சேர்ந்த எந்த உயிரினமும் இல்லை பரிணாமத்தில் யானைகளின் நேரடியான உறவான வூலி மமுத் 8000 வருடங்களுக்கு முன்பாக அழிந்து விட்டது.
யானைகள் காட்டில் அதிக அளவு எதிரிகள் இல்லாதவை என்பதால் அறுபத்தைந்து வருடங்கள் வாழ்கின்றன. நீண்ட காலம் வாழ்வதால் அவற்றின் நினைவுத்திறன் குரங்குகள் மற்றும் மனிதக் குரங்குகளுக்கு ஒப்பானது. உணவு கிடைக்கும் இடங்கள் ஆபத்தான இடங்கள் வரட்சிகாலங்கள் மற்றும் பருவகாலங்கள் என்பவற்றை அவை நினைத்து வைத்திருப்பது அவற்றின் உயிர் வாழ்;தலுக்கு அத்தியாவசியமாகிறது. இதனது தொடர்ச்சியே நமது நாடுகளில் யானையை துன்புறுத்தியவர்களை அவை பழிவாங்குதலுமாகும்.

தும்பிக்கை

தென்னாபிரிக்க குறுகர் தேசியவனத்தில் முட்கள் கொண்ட அக்காசி மரத்தில் பட்டைகளை உரித்து சாப்பிடுவதைப் பார்த்தேன். முள்ளுகளை தவிர்த்;து சிறிய மலர்களை உண்ணும திறன் உள்ளவை என அறிந்திருந்தாலும் நேரில் பட்டைகளை உரிப்பதை பார்த்தபோது வியப்பாக இருந்தது. நாம் கைகளால் உரித்தால் கூட அவ்வளவு அழகாக உரிக்கமுடியாது. வரட்சியான கோடைகாலத்தில் உணவு குறைந்து போகும் அதனால் இந்த பட்டை உரிப்பு நடக்கிறது. தந்தமும் தும்பிக்கையும் இதற்கு உதவுகிறது
யானைகள் நமக்கு தெரிந்தவரை தனது தும்பிக்கையை இரைதேடவும் எதிரிகளிடம் இருந்து தம்மை பாதுகாக்கவும் உபயோகிக்கின்றன. வட்டமான தசைகளாலான இந்தத் தும்பிக்கை மூக்கும் மேலுதடும் சேர்ந்து உருவாகியது தும்பிக்கையின்; உள்ளே இரண்டு முக்குத்துவாரங்கள் அமைந்துள்ளன. அவை பத்து – பன்னிரண்டு லீட்டர் தண்ணீரை உள்ளடக்கும். ஆயிரத்துக்கு மேற்பட்ட தசைகளால் வட்டவடிவமாகவும் ஸ்பிங்கு போலவும் அமைந்து மிகவும் பலத்தைக் கொடுப்பதோடு, தொடுகைக்கு ஏற்ற நுண்ணுர்வையும் அளிக்கிறது. தும்பிக்கையின் உள்ளேயும் நுனியிலும் உள்ள மயிர்கள் இவற்றிற்கு உதவும். அதேபோல் எப்பொழுதும் முனை ஈரலிப்பாக இருப்பதால் அதிக தூரத்தில் இருந்து மணத்தை மோப்பம் அறிந்துகொள்ளும். இதைவிட தும்பிக்கை சத்தத்தை எழுப்பும் உறுப்பாக தொழில்படுகிறது. தும்பிக்கையை தூக்கி பிளிறும் சத்தம்; நாம் கேட்கக் கூடியது. ஆனால் யானைகள் நாம் கேட்காத 5ர்ண அளவில் குறைந்த சத்தம் எழுப்பி தங்களிடையே தகவல்களைப் பரிமாறும். இதைவிட தும்பிக்கைக்கு சேற்றில் இருந்து தண்ணீரை வடிகட்டுதல் சதுப்பு நிலத்தில் நடக்க முடியுமா என அறிதல் முதலான பல பயன்பாடுகள் உள்ளது.
பற்கள்

கோரைப் பற்களே தந்தங்களாகின்றன. கடiவாயில் உள்ள பற்களே பல்லின் மொத்த அமைப்பாக உள்ளது. வாயில் கடவாய் பற்களே உணவு உண்ண உதவுகிறது. யானைகளின் வாழ்க்கையில் மூன்றுமுறை பற்கள் விழுந்து முளைக்கும். கடினமான மரங்களையும் அவை தின்பதால் கடவாய் பற்கள் தேய்ந்து போகிறது. முளைக்கும் பற்கள் கடைவாயின் உட்புறத்தில் இருந்து வெளியே தள்ளப்படும். மூன்றாவது முறையாக பற்கள் தேயும்போது அவற்றால் உணவு உண்ணமுடியாது.
யானையின் காதுகள்

ஆபிரிக்க யானைக்கு அழகைக் கொடுப்பது அதன் காதுகளே. காதுகள் யானைகளுக்கு மிகவும் முக்கியமானவை. மென்மையான தோல் இருபக்கமும் இருப்பதால் இங்கு ஏராளமான இரத்த குழாய்கள் அமைந்துள்ளன. 20 வீதமான உடல் பரப்பை கொண்டு; இருப்பதாலும் காதின் தோல் மென்மையாக இருப்பதால் உடல் வெப்பத்தை குளிரப் பண்ணும் ஏர்கண்டிசன் கருவியாக தொழில்;படுகிறது. சுளகுபோல் வீசுவதும் அற்காகத்தான். அதிக சூரியஒளியின்போது காதுகள் கருப்புக் கண்ணடிகள்போல கண்ணை மறைத்து பாதுகாக்கிறது.

குருகர் தேசியவனத்தூடாக போகும்போது கூட்டம் கூட்டமாக பாதையில் யானைளை எதிர் கொண்டோம். எமது சாரதி வாகனத்தின் இஞ்சினை அணைத்ததும், அவை வாகனத்தின் அருகாமையில் எதுவித சிரத்தையும் அற்றபடி பார்த்துச் சென்றன. அதனால் அவற்றில் ஆண் பெண் யானைகளை துல்லியமாக அவதானிக்க முடிந்தது. பெண்ணுக்கு பின்கால்களின்; இடையில் யானையின் உடல் பருமனுக்கு பொருந்தாத இரு சிறிய முலைகள் இருந்தன. ஆண்; பெண் இரண்டிற்கும் தந்தம் உள்ளது. இரண்டு வயதில் வளரும் இந்தத் தந்தம் ஒப்பீட்டு அளவில் பெண்ணுக்கு சிறிது மெலிந்த தோற்றம் கொண்டது.

முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவில் பெரியார் தேசிய வனத்தில் ஒரு ஆண் யானையை எதிர் கொண்டோம். அப்போது அது எம்மை நோக்கி வந்தபோது சாரதி ஜீப் எஞ்ஜின் சத்தத்தை அதிகமாங்கினார். யானை எமக்கு எதிரே நின்றபடி தும்பிக்கையை உயர்த்தி காதை சுளகுபோல் வீசி எம்மை நோக்கி பிளிறியது. சத்தத்துடன் வாகனம் முன்னேறியபோது அது பின்வாங்கியது. அந்த யானை எமது வாகனத்தை தனது எதிரியாக நினைத்தது தெரிந்தது. ஆனால் குருகர் தேசியவனத்தில் வாகனத்தை நிறுத்தியதும் எம்மைக் கடந்து அமைதியாக சென்றது. அந்த விதத்தில தென் ஆபிரிக்காவில் மிருகங்களின் மனநிலையை அறிந்து தொழில்படுகிறார்கள் என்பது புரிந்தது. வனவிலங்குகள் பற்றிய அதிகமான விஞ்ஞான ஆராய்வுகள் அங்குள்ள பல்கலைக் கழகங்களில் நடைபெறுகிறது.

யானைகள் குட்டிகளோடு கூட்டமாக பாதையை கடந்து செல்லும் காட்சிகள் அழகானவை. முக்கியமாக கோடைகாலத்தில் அவை நீர்நிலைகளைத் தேடி செல்வதை நாங்கள் சென்றிருந்த கோடைகாலத்தில் அவதானித்தோம்.
—-0—

 

திரைப்படத்தின் ஒன்லைனை எப்படித் தயார் செய்வது..? ( 18 ) / பி.ஆர்.மகாதேவன்

images (13)

 

 

 

 

 

 

ஏதேனும் சுவாரசியமான சம்பவத்தை அடிப்படையாக வைத்தும் திரைக்கதையை எழுதலாம். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமிக்கு பெங்களூருவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது செய்தி. இதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. உணர்ச்சிபூர்வமான கதை இருக்கிறது. அதே நோய்க்கு சிகிச்சை பெற்ற இந்தியச் சிறுமி கதைக்கான கருப்பொருள் அல்ல. வேறு நாட்டைச் சேர்ந்த சிறுமி அதுவும் நமது எதிரி நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி என்றதும் ஒரு மெல்லிய அதிர்ச்சி வருகிறது. இந்த ஆச்சரிய அதிர்ச்சி கதைக்கு மிகவும் அவசியம்.

 

பாகிஸ்தானில் அந்த அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லை. இந்தியாவுக்கு நேராக வர பேருந்தோ விமான போக்குவரத்தோ இல்லையென்பதால், துபாய் போன்ற நாடுகள் வழியாகத்தான் வரவேண்டியிருக்கிறது. இதற்கு அதிக செலவு ஆகும். அதோடு நூர் ஃபாத்திமா என்ற இரண்டு வயது குழந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. சில வருட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகே பேருந்து வசதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

அப்படித் தொடங்கப்பட்ட முதல் பேருந்தில் பயணம் செய்து வந்திருந்தார் நூர் பாத்திமா. ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. பெங்களூரு வந்து சேர்ந்ததும் ஆறு மணி நேர கடின அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தக் குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது. அந்தக் குழந்தைக்கு பெங்களூருவில் ஏகப்பட்ட வரவேற்பு. பள்ளிக் குழந்தைகள் அனைத்தும் மலர் கொத்துகளுடன் பிரார்த்தனைகள் செய்து வாழ்த்து அட்டைகள் அனுப்பிவைத்தனர். ஏராளமான இந்தியர்கள் அந்தக் குழந்தையின் சிகிச்சைக்கு நன்கொடை அனுப்பிவைத்தனர். குழந்தையின் பெற்றோர் இந்தியர்களின் அந்த அன்பைக் கண்டு உருகிப்போனார்கள்.

 

பாகிஸ்தானில் கூட இவ்வளவு அன்பு கிடைத்திருக்காது என்று நெகிழ்ச்சியடைகிறார்கள். கிடைத்த நன்கொடையை வைத்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு உதவ என்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்கு முன்பாக கோவில்களில் பிரார்த்தனை செய்து அனுப்பப்பட்ட குங்குமத்தை இட்டுக்கொள்ள மறுத்த அந்தக் குழந்தையும் பெற்றோரும் விமான நிலையத்தில் புறப்பட்டுச் செல்கையில் உணர்ச்சி மேலிட அந்தக் குங்குமத்தை இட்டுக்கொண்டு நன்றி தெரிவித்தபடியே புறப்பட்டுச் செல்கிறார்கள். இவையெல்லாம் செய்தித்தாள்களில் இருந்து கிடைத்த தகவல்கள். அரசியல்வாதிகளும் ராணுவத்தினரும் பன்னாட்டு ஆயுத நிறுவனங்களும்தான் இரு நாடுகளுக்கிடையே போரைத் தூண்டிவருகிறார்கள். மக்கள் அமைதியாக நட்புணர்வுடன் வாழவே விரும்புகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டும் நிகழ்வு இது. தேச நல்லிணக்கத்தை மட்டுமல்லாமல் மனிதாபிமானத்தையும் உயர்த்திப் பிடிக்கும் நிகழ்வு இது.

 

இந்த நிகழ்வுகளை மட்டுமேவைத்து திரைக்கதை அமைத்தால் அதுகூட உணர்ச்சிமயமான திரைப்படமாக வர வாய்ப்பு உண்டு. அல்லது இந்த நிகழ்வுக்குக் கூடுதல் பரிமாணங்களையும் நாடகீயத்தையும் சேர்த்துப் படமாக்கமுடியும். முதலில் அந்தக் குழந்தை பாகிஸ்தானில் இருந்து வரும் சாதாரணக் குழந்தை என்று நிறுத்திக்கொள்ளாமல், இந்தியாவில் வெடி குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனின் குழந்தை என்று வைத்துக்கொண்டால், படத்தின் கனம் சட்டென்று கூடிவிடும். எதிரி நாடு என்று வெறுமனே சொல்வதைவிட தீவிரவாதியின் மகள் என்று சொல்லும்போது கதை கூர்மையடைகிறது. இன்னும் கதைக்கு கனம் சேர்க்கவேண்டுமென்றால், இந்தியாவில் ஒரு வெடி குண்டு விபத்தில் தன் குழந்தைகளையும் மனைவியையும் பறிகொடுத்த மருத்துவர்தான் இந்த அறுவை சிகிச்சையைச் செய்யவேண்டும். தீவிரவாதியின் மகள் என்பது அந்த மருத்துவருக்கு மட்டுமே தெரியவந்திருக்கிறது. ஆக, கதையின் மைய முடிச்சு பலமாகப் போடப்படுகிறது. ஒரு மருத்துவர் தன் குடும்பத்தைக் கொன்றவனின் குழந்தைக்கு சிகிச்சை தரவேண்டும். அவரால் மட்டுமே அது முடியும்.

 

தன் குடும்பத்தைக் கொன்றவன் மீது கடும் கோபத்தில் இருக்கும் அவருடைய முன்னால் அந்தத் தீவிரவாதியின் குழந்தை உயிர்ப்பிச்சை கேட்டு கிடத்தப்படுகிறது. அந்தக் குழந்தையின் தாய் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு மன்றாடுகிறார். மருத்துவருக்குத் தன் குடும்பத்தினருடன் செலவிட்ட இனிய நாட்கள் மனக்கண்ணில் ஓடுகின்றன. தீவிரவாதியின் வெறிச் சிரிப்பு ஒரு பக்கம் கேட்கிறது. உயிருக்கு ஊசலாடும் குழந்தையின் அபயக்குரல் இன்னொரு பக்கம் கேட்கிறது. அந்த மருத்துவர் என்ன செய்வார்..? ஒரு சிறு நரம்பை மாற்றி வெட்டினால் போதும். யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் பழி தீர்த்துக்கொண்டுவிட முடியும். அப்படிச் செய்வாரா… அல்லது ஒரு லட்சிய மருத்துவராக, தன்னை நாடி வரும் நோயாளியின் வேதனையைப் போக்குவாரா? இந்தியர்களைப் படுகொலை செய்யும் தீவிரவாதிக்கு தக்க தண்டனை கொடுப்பாரா..? இந்தியர்களை நம்பி வந்திருக்கும் குழந்தைக்கு மனிதாபிமானத்துடன் சிகிச்சை செய்துதருவாரா..? இந்த மனத் தடுமாற்றங்களை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியும்.

 

இந்தக் கதையையுமேகூட இன்னும் மேம்படுத்த முடியும். ஒரு தனிநபரின் மனப்போராட்டம் என்பதை இரு நாடுகளின் ஆன்மாவின் தவிப்பு என்று மாற்றினால் படத்தின் வீச்சு கூடும். பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பது தீவிரவாதியின் குழந்தை என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. இப்போது இந்தியர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும். ஒரு தீவிரவாதி செய்த தவறுக்கு அவனுடைய குடும்பத்தினரைப் பழிவாங்கலாமா? சில இஸ்லாமியர்கள்/பாகிஸ்தானியர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையோ பாகிஸ்தானியர்களையோ தண்டிக்கலாமா? இந்தக் கோணத்தில் திரைக்கதையை விரிவாக்க முடியும். இந்தியாவிலும் பெரும்பான்மையினரின் அடிப்படைவாதம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. அந்தக் குழுக்களில் ஒன்று பாகிஸ்தான் தீவிரவாதியின் குழந்தைக்கு இந்தியாவில் சிகிச்சை தரக்கூடாது என்று மருத்துவமனையை முற்றுகையிடுகிறது.

 

இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டு பிரதமருக்கு வாக்குக் கொடுத்துவிட்டதால் அந்தக் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொண்டாகவேண்டிய பொறுப்பில் இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்த எடுத்த ஒரு செயலின் காரணமாக பகை பெரிதாகிவிடும் ஆபத்து ஏற்படுகிறது. எப்பாடுபட்டாவது அந்தக் குழந்தையை குணமாக்கி நல்லபடியாக பாகிஸ்தான் அனுப்பியாகவேண்டும். இந்திய ராணுவம் களத்தில் இறக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு அதி உயர் பாதுகாப்பு தரப்படுகிறது. இந்த நிலையில் அந்தக் குழந்தையைக் கொல்ல சில தேசவிரோத சக்திகள் திட்டமிடுகின்றன. பொதுவாக எப்போதுமே நடக்கும் விஷயம்தான். இரு சமூகங்களுக்கு இடையில் அதிருப்தியும் பகையும் வளர்ந்துவரும் நிலையில் சில சமூக விரோத தேச விரோத சக்திகள் பிரச்னையைப் பெரிதாக்கும் நோக்கில் உள்ளே புகுந்து வன்முறையின் விதையை விதைப்பார்கள். கோத்ராவில் நடந்ததுபோல்… தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பதுபோல்… இந்திரா காந்தி மரணத்தையொட்டி கொள்ளை, கொலையில் ஈடுபட்டதுபோல். தேச விரோத சக்திகள் உள்ளுக்குள் கொந்தளித்துகொண்டிருக்கும் வெறுப்பு ஊற்றின் கல்லை விலக்கி வன்முறையைப் பொங்கிப் பிரவகிக்கச் செய்வார்கள். அதிருப்தியால் காய்ந்து கிடக்கும் சருகுக்கூட்டில் அழிவின் தீப்பொறியைக் கிழித்துப் போடுவார்கள். அதன் பிறகு அது பற்றி எரியத் தொடங்கும்.

 

தேச விரோத சக்திகள் மருத்துவமனைக்குள் இரவில் புகுந்து அந்தக் குழந்தையைக் கொல்ல முயற்சி செய்வார்கள். ராணுவம் அவர்களை முறியடிக்கும். மருத்துவர் ஒரு கட்டத்தில் அந்தத் தீவிரவாதி என் முன்னால் வந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அப்போதுதான் குழந்தையைக் காப்பாற்றுவேன் என்று சொல்வதாகக் காட்டலாம். குழந்தையின் அம்மா தீவிரவாதிக் கணவனுக்கு போன் போட்டு வரச் சொல்லலாம். புறப்பட்டு வருபவரை மத்திய அரசுடன் பிணக்கத்தில் இருக்கும் மாநில அரசு திடீரென்று கைது செய்கிறது. உடனே, தீவிரவாதியின் கூட்டாளிகள் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு அங்கிருக்கும் சுமார் ஐம்பது பேரைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டுகிறார்கள். நிலைமை கை மீறிப் போகிறது. இந்திய அரசு உடனே அமெரிக்காவிடம் முறையிடுகிறது. தீவிரவாதிகளை உடனே கொன்று இந்திய தூதரகத்தினரைக் காப்பாற்றும்படி அமெரிக்கா உத்தரவிடுகிறது. பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்துகிறது. பெங்களூருவில் மருத்துவமனையில் இருக்கும் தீவிரவாதி இந்தியாவில் இருக்கும் சில கூட்டாளிகளின் துணையுடன் அந்த மருத்துவமனையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறான்.

 

மருத்துவரை மிரட்டி அறுவை சிகிச்சை செய்ய வைக்கிறான். ஒரு விமானத்தைக் கொண்டுவர வைத்து சிகிச்சை முடிந்த குழந்தையையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு தப்பிக்கிறான். போவதற்கு முன்பாக மருத்துவமனையை வெடி குண்டு வைத்துத் தகர்க்கிறான். இதையெல்லாம் பார்த்து ஆத்திரமுறும் குழந்தையின் அம்மா அதாவது தீவிரவாதியின் மனைவி அவனுடைய துப்பாக்கியை உருவி அவனை நடுவானில் சுட்டு வீழ்த்துகிறாள். தீவிரவாதியின் உடல் பள்ளி மைதானமொன்றில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியின் கீழே வந்து விழுகிறது. இந்தக் கதைக்கு வேறொரு லட்சியவாத க்ளைமாக்ஸும் வைக்க முடியும். தீவிரவாதிகளுக்கும் இந்திய காவல்துறை/ராணுவத்துக்கும் இடையில் சண்டைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அன்னா ஹசாரே போன்ற ஒரு காந்தியவாதியின் முயற்சியினால் இந்திய பள்ளிக் குழந்தைகள் பாகிஸ்தான் தீவிரவாதியின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக நடத்தப்பட்டு உடல் குணமாகவேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

 

சிகிச்சை தரப்படக்கூடாது என்று மருத்துவர்களைத் தடுக்கும் இந்திய அடிப்படைவாதக் குழுக்களை அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் இப்படி நட்பின் கரம் நீட்டப்படுவதைப் பார்த்து பாகிஸ்தானிய பள்ளி மாணவர்கள், இந்தியத் தூதரகத்தை சிறைப்பிடித்திருக்கும் தீவிரவாதிகள் இந்தியர்களை விடுவித்தாக வேண்டும் இல்லையேல் நாங்கள் சுட்டுக்கொண்டு உயிரைத் தியாகம் செய்வோம் என்று முன்வருகிறார்கள். இஸ்லாத்தின்படி தற்கொலைதான் தவறு… கொலை தவறல்வே என்று ஒவ்வொரு குழந்தையும் இன்னொரு குழந்தையின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தபடி தியாகத்துக்குத் தயாராகின்றன. இரு நாட்டு அடிப்படைவாதக் குழுக்களும் மக்களின் இந்த சாத்விக எதிர்ப்புக்கு அடி பணிந்து ஒதுங்குகிறார்கள். தீவிரவாதியின் குழந்தை நல்லபடியாக சிகிச்சை முடிந்து பாகிஸ்தான் திரும்புகிறது. விமானத்தின் முகப்பில் இந்திய தேசியக் கொடியும் பாகிஸ்தான் கொடியும் பட்டொளிவீசிப் பறக்கின்றன.

••••

உயிர் 3 / தோன்றாத புன்னகை / ஆர்.அபிலாஷ்

images (12)

 

 

 

 

 

 

போன ஜனவரியில் தான் கருணைக் கொலைக்கான அரசாணை வந்தது. குழந்தை இரண்டு வயதில் தான் சிற்சில சொற்களை பேசக் கற்றது. அதுவும் தப்பும் தவறுமாய், குழறியபடி, வாயெல்லாம் சளுவையாய். அவனுக்கு அதுவெல்லாம் பரம சௌந்தர்யமாய் தான் தோன்றியது. பிறருக்கு விநோதமாய் விரூபமாய் இருந்தாலும்.

அவனை அம்மா என்று தான் கூப்பிடும். அதுகூட அவனுக்கு பிடித்திருந்தது. அவன் மடியிலே சதா படுத்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் தூக்கத்தில் இருக்கும் போது அவன் மாரைப் பற்றிக் கூட இழுத்தது. குழந்தைக்கு யார் இதெல்லாம் கற்றுத் தருகிறார்கள்? ஒருமுறை கூட தாய் முலையை சுவைத்திராத குழந்தைக்கு?

அவனுக்கு ஒரு தாத்தா இருந்தார். குழந்தைக்கு அவரைப் போன்ற கெட்டியான புருவம் மற்றும் அகன்ற முகவாய். கிழித்து விட்டாற் போன்ற நீண்ட மெல்லிய உதடுகள். சிரிக்கும் போதும் கண்ணைச் சுருக்கி அழும் போது அவ்வளவு அழகு. பற்கள் சின்னதாய், தலை மயிர்கள் சுருள் சுருளாய், மூக்கு கூர்மையாய் அவனைப் போல. மூக்கின் கீழ் உதட்டுக்கு மேல் ஒரு மச்சம். அது யாரைப் போல என எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை. அவன் குடும்பத்தில் யாருக்கும் அப்படியான உதடு இல்லை. எல்லாருக்கும் தேனீ கொட்டியது போல வீங்கின உதடுகள் தாம். ஆனாலும் ரொம்ப அழகான உதடுகள்.

குழந்தை அவனைப் பார்த்து புன்னகைக்கவே இல்லை. ஒருவேளை தன்னைப் பிடிக்கவில்லையோ என கலங்கினான். உயிரியல் மரபியல் மருத்துவ ஆய்வாளர் விச்சுவிடம் விசாரித்தான்.

விச்சு குழந்தையின் மூளை நரம்புகளில் ஒன்று விழிப்புறவில்லை என்று சொன்னார். “புன்னகை என்பது பல்வேறு நரம்பணு மீன்சாரப் பொறிகளின் பருவடிவம் தானே” என்று அந்தரத்தில் மிதக்கும் பார்வையுடன் கூறினார். அவன் மேலும் மேலும் இது குறித்து விசாரிக்க அவரது அறிவியல்தனமான பதில்கள் அவனுக்குள் நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. விச்சு கடைசியாய் சொன்னார்: “உன் குழந்தைக்கு புன்னகைக்க தோன்றலாம். அது மனதுக்குள் புன்னகைக்கக் கூட செய்யலாம். ஆனால் அதை வெளிப்படுத்த நரம்புகளும் தசைகளும் துணை போக வேண்டும். உன் குழந்தைக்கு அந்த திறன் இல்லை.”. விச்சு அவனுக்காக குழந்தையை சுற்றி இருந்த சிறப்பு பராமரிப்பு கணினிகளில் ஆணை கொடுத்து தேடினார்.

கணினி சில மைக்ரோ நொடிகளில் குழந்தை புன்னகைக்கிறதா இல்லையா என கராறாக சொல்லியது. புன்னகைக்கிறது, ஆனால் உதட்டை அசைக்காமல். அதாவது தூக்கத்தில் எதோ கனவின் போது. “என்ன கனவு அது, சொல்ல முடியுமா?”, அவன் கேட்டான். விச்சு தோளை தளர்த்தி ”ப்ச்” என்றார்.

“அதற்கு அனுமதி இல்லை”.

“ஏன் இல்லை? உங்களால் முடியாதா விச்சு?”

“உனக்கே தெரியுமே கனவுகள் அரசாங்க ரகசிய காப்பக கோப்புகளில் சென்று பதிவாகின்றன. ஒவ்வொருவர் கனவும், குழந்தையில் இருந்து மரணப்படுக்கையில் உள்ளவரின் கனவுகள் வரை. மனிதனின் பிரக்ஞை மனம் மீது அரசுக்கு நம்பிக்கை போய் விட்டது. ரொம்ப புத்திசாலி ஆகி விட்டோம் என பயப்படுகிறது”

“கனவுகள் மட்டும் பொய் சொல்லாதா விச்சு? என்ன முட்டாள்தனம்.”

“கனவில் கால் செண்டிமீட்டர் நிஜம் ஒட்டி இருக்காலமில்லையா? எப்படியும் இதெல்லாம் பழைய கோட்பாடு தான். அரசு இன்னும் விடாப்பிடியாக நம்பிக் கொண்டிருக்கிறது. என்ன பிரஜைகளின் பயங்களை தெரிந்து கொள்ள பயன்படுகிறது தான்.”

“எல்லாருக்கும் தான் பயம் இருக்கிறது. ஒரே மாதிரி பயங்கள் தானே. சாவு பயம், தனித்திருக்க பயம், ரொம்ப நாள் வாழக் கூட பயமாய் தான் இருக்கிறது.”

“அப்படி இல்லை அன்பு. இது இன்னும் நூதனமான உத்தி. போன வாரம் ஒரு ஆய்வில் பங்கெடுக்க மறுத்து விட்டேன். அரைமணியில் பார்சலில் ஒரு சிவப்பு கைக்குட்டை அனுப்பினார்கள். ரத்த சிவப்பாய் பளிச்சென்று. போன இரவில் தான் என் அப்பா கனவில் வந்தார். அவர் வாயில் இருந்து இதே போன்ற ஒரு கைக்குட்டையை பிடுங்கினேன். ரத்தம் சொட்ட சொட்ட சிவப்பு நிறத் துண்டு. பார்சலில் பார்த்ததும் ஒரு நொடி ஜெர்க் ஆகி விட்டேன். அவ்வளவு தான். பயம் எல்லாம் இல்லை. ஒரு நடுக்கம். எலும்பு மஜ்ஜையில் சில்லென்ற ஊசி ஏற்றியது போல் ஒரு அதிர்ச்சி. அரசுக்கு இதெல்லாம் பிரஜைகளுடன் ஆடும் சின்னதொரு விளையாட்டு.”

“சரி அதை விடு. என் குழந்தை புன்னகைக்க மாட்டானா?”

“நீயே புன்னகைத்து எத்தனை நாளாகிறது? ஒரு முறை புன்னகை பார்ப்போம். அநேகமாய் மறந்திருப்பாய். இப்போது நீ புன்னகைத்தால் குசு விடுகிறவரின் காதைத் திருகினால் வரும் முகபாவம் போல் இருக்கும். இது இப்படி இருக்க உன் குழந்தை எதற்கு…?”

“கடிக்காமல் சொல்.”

“கணினியில் காட்டித் தரட்டுமா? அவனது ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்றாற் போன்ற பாவத்தை சித்திரமாக காட்டும் செயலியை இயக்குகிறேன். அப்படியே 4Dயில் நிஜ குழந்தையை விட அப்பட்டமாய். தொட்டுக் கூட பார்க்கலாம். அன்பு நீ புன்னகையை தொட்டுப் பார்த்திருக்கிறாயா? நேற்று ஒரு மெக்சிக்கன்காரி தன் கரு முட்டைகளை சேமிக்க வந்தாள். அவளை 4D இமேஜிங்கில் தடவிப் பார்த்தேன். புன்னகை அப்படியே வழுவழுவென்று…”

“வாயை மூடு. கேட்கப் போகிறான். இத்தனை குழந்தைகள் தூங்கும் இடத்தில் உன் கச்சடா பேச்சை நிறுத்து”, அன்பு செயற்கை கருப்பையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகள் மத்தியில் தன் குழந்தை அருகே முட்டி இட்டு பார்த்தபடி சொன்னான்.

பிறகு எழுந்து வெளியேறினான். அமைதியாய் இருந்த விச்சு சட்டென்று கூவினார். “தோ உனக்கு வலது புறமாய் தூங்குதே பொம்மை மாதிரி அந்த பாப்பா, அது நேற்று காலை சரியா மூன்று நாற்பது ஏழுக்கு சுயமைதுனம் பண்ணினது. கணினிக் கோப்பில் இருக்கிறது பார்க்கிறாயா?”

அன்பு திரும்பி நின்று முறைத்தான். அவர் கண்களுக்குள் கூர்ந்து பார்த்து “நீ…?”

“நொ நொ டோன் வொரி. நான் அப்படிப் பட்டவன் எல்லாம் கிடையாது. நான் ரொம்ப ரொம்ப நார்மல். உன்னை விட நார்மல். ஒரு தகவலுக்காக சொன்னேன். குழந்தைங்களுக்கு அத்தனையும் புரியும் என்று சொல்வதற்காக.”.

விச்சுவுக்கு வயது இருநூறைக் கடந்து விட்டது. இருபது தடவைக்கு மேல் தற்கொலை முயற்சி பண்ணி இரண்டு தடவை கிட்டத்தட்ட வெற்றி அடைந்து விட்டார். ஆனாலும் அவரை கடுமையாக பிரயத்தனித்து காப்பாற்றி விட்டார்கள். அணு அணுவாய் அவர் உடலை திரும்ப ஒன்று சேர்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் கடந்த முறை அவர் பர்க்கர் செய்யும் ஒரு தொழிற்சாலையில் மாட்டிறைச்சியை அரைக்கும் பிரம்மாண்ட எந்திரத்தின் சக்கரங்களுக்கு இடையே குதித்து விட்டார். ஆனாலும் அவரை அச்சு அசலாய் முன்னிருந்த மாதிரியே மீட்டு விட்டார்கள். உடல் மட்டுமல்ல, அதே மனக் கோணல்களுடனும் தான். விச்சுவின் பேரன்களின் பிள்ளைகள் கூட தோன்றி வாழ்ந்து மறைந்து விட்டார்கள். இப்போது அவருக்கு சொந்தம் பந்தம் என பூமியில் யாரும் இல்லை. ஒரு சிறு கண்ணி கூட இல்லாமல் மறைந்து விட்டார்கள். அவரை மட்டும் அரசாங்கம் விடாப்பிடியாய் பாதுகாத்து வைத்திருக்கிறது.