Category: இதழ் 73

பேறு காலம் / நல்ல காலம் / நல்ல நேரம் / சிபிச்செல்வன்

images (18)

 

 

 

 

 

 

 

இன்று   (  09/5/2015   )  என் நண்பர் கோ . ராஜாராம் அமெரிக்காவிலிருந்து ஒரு புத்தக தயாரிப்பு பணிகளுக்காக  தொலைபேசியில் அழைத்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே பேச்சு இலக்கியம் சமூகம் தொலைக்காட்சி இப்படி பல திசைகளில் போய்க்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களாக அந்த உரையாடல் இருந்தது. அவற்றில் என்னுடைய சூழல் அவதானிப்புகள் முக்கியமானதாக இருப்பதாகவும் தமிழ் நாட்டு நிலவரங்கள் எங்களைப் போன்ற தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல்  இருப்பதையும் போல பின்னால் வருகிறவர்களுக்கு இந்த இந்த காலகட்டத்தில் இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை அறிந்து கொள்ள வசதியாகவும் உங்கள் பதிவுகள் இருக்கும் ஆகையால் இவற்றை எழுதுங்கள் என நண்பர் கோ ராஜாராம்  உற்சாகப்படுத்தினார்.

அந்த தையரியத்தில் இதை எழுத தொடங்குகிறேன். எல்லாவற்றையும் எழுத வேண்டுமா என்ற தயக்கத்தினால்தான் பல விஷயங்களை நான் எழுதுவதில்லை. அப்புறம் அது என் வேலையில்லை என்ற ஒரு நினைப்பும் இருந்ததால் எதையும் எழுதவில்லை. ஆனால் இனி நிறைய மாற்றங்களை வரலாறுகளை அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிகளை அது தனிமனிதனிடமும் சமூகத்திடமும் ஏற்படுத்திய நல்ல மாற்றங்களையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் எழுதிப் பார்க்கலாம் என இருக்கிறேன்.

மழை பிறப்பும் பிள்ளை பிறப்பும் மஹாதேவனுக்கும் தெரியாது என ஒரு பழமொழியை நான் சிறுவயதில் கேட்டுள்ளேன். அதற்கு விளக்கமாக மழை வருகிற நேரத்தையும் குழந்தை பிறக்கிற நேரத்தையும் யாராலும் கணித்து சொல்ல முடியாது என்ற அர்த்தத்தையும் கேட்டுருக்கிறேன். ஆனால் இன்று இவை இரண்டும் அறிவியல் வளர்ச்சியால் மிகச் சரியாக கணித்து சொல்ல முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறது வானியல் முன்னறிவுப்புகளும் மருத்துவ உபகரணங்களும்.

நாம் இஙகே கடந்த மூப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள மகப்பேறு காலத்தையும் பற்றி மட்டுமே இங்கே பேசலாம்

அந்தக் காலத்தில் பிள்ளை பிறந்ததும் அந்த நேரத்தை குறித்துக்கொண்டு ஜாதகத்தை எழுதி வைப்பார்கள். இதுதான் பரம்பரை பரம்பரையாக இருந்த வாடிக்கை நிகழ்வுகள். அதாவது குழந்தை பிறந்த உடனே ஒருவர் அந்த நேரத்தை குறித்துக்கொண்டு ஜோதிடரிடம் போய் குழந்தை பிறந்த நேரத்தை சொல்லி பிள்ளையின் ராசி லக்னம் ஆகியவற்றை தெரிந்துகொண்டு ஒரு  ஜாதகத்தையும் எழுதி வைத்துக்கொண்டு  பிள்ளையின் வாழ்நாள் பலன்களை கணித்து வைத்து எழுதி வைப்பர்ர்கள்.

ஆனால் தற்போது இந்த விஷயம் அப்படியே நேர் எதிராக  மாறிவிட்டது. ஆம் . குழந்தைப் பேறுக்காக ஒரு தாய் கர்ப்பம் ஆன காலத்திலிருந்து தொடர்ச்சியாக மாதம் ஒரு முறையோ அல்லது மருத்துவரின் ஆலோசனைபடி குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத்துவரைப் பார்த்து வைத்தியம் செய்து கொள்கிறார்கள்,. மருத்துவரின் ஆலோசனைகளை கவனமாக மேற்கொண்டு பிள்ளைப் பேறுக்கு தயாராகிறார்கள்.

10 ஆவது மாதம் நெருங்கியதும் தாய்  கருவுற்ற நாளை கணக்கில் கொண்டு பிள்ளைப்பேறு நாளையும் தோராயமாக குறித்துவிடுவார் மருத்துவர். அப்படியென்றால் பிள்ளைப் பேறு மஹாதேவனுக்குக்கூட தெரியாது  என்ற பழைய விஷயமாக மாறிவிடும்தானே? மாறாக குழந்தை எப்போது ? எந்த நாளில் ? எந்த நேரத்தில்? பிறக்க வேண்டும் என்பதை ஒரு மருத்துவர் தீர்மானிப்பதில்லை.

பிறகு யார் தீர்மானிக்கிறார்கள்? ஆம் இதை ஒரு ஜோதிடர்தான் தீர்மானிக்கிறார்.

அதாவது குறிப்பிட்ட நாள் குழந்தை பிறந்தால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நொடியில் பிள்ளை பிறந்தால் இந்த நல்ல ராசியில் இந்த நல்ல லக்னத்தில் பிள்ளை  பிறந்தால் பிள்ளை பெரிய ஆளாக ஆளுமை திறமை வாய்ந்தவனாக பெரிய பணக்காரனாக இதுபோன்ற இன்னும் இன்னும் பல பல விஷயங்களை சேர்த்துக்கொண்டே போவார்கள். இவை எல்லாம் கூடிவருகிற ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில் சுபமுகூர்த்த நேரத்தில் பிள்ளை பிறக்க வேண்டும் என்பதை குறித்து கொடுப்பார் அவர்களுடைய குடும்ப ஜோதிடர் அல்லது அவர்களுக்கு பிடித்த ஜோதிடர்.

இந்த நேரத்தில் எனக்கு அல்லது எங்களுக்கு பிள்ளை பிறக்க வேண்டும் என அந்த குடும்பத்தினார் சொல்கிற நாளில் அல்லது நேரத்தில் மருத்துவர் சகல ஏற்பாடுகளையும் ஆபரேஷன் தியேட்டர் மருத்துவ குழாமையும் தயாராக வைத்திருப்பார். செவிலிகளும் தாதிகளும் தயாராக இருப்பார்கள். அக்குறிப்பிட்ட நேரத்தில்  தனாகப்  பிறக்காத குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுப்பார்கள்.

அப்புறமென்ன நல்ல நேரத்தில் பிறந்த அந்த குழந்தையின்  ஜாதகம் சாதகமாக எழுதப்படும் , அக்குழந்தை இந்த தரணியை ஆளும்.

ஜாதகர் குறிப்பிட்ட நேரத்தல் மருத்துவர் பிசியாக இருந்தால் அல்லது அந்த நாளில் அவருடைய பணிநெருக்கடி அதிகமாக இருந்தால் இன்னொரு நல்ல நாளில் அவருடைய கடமையை ஆற்றுவார்.

இப்படி பிள்ளைபெறுவதற்கு நிறைய போட்டிகள் அதிகமான இருப்பதால் மருத்துவரின் பொன்னான நேரம் பணம் கொழிக்கிற நாளாக மாறிவிடும். பேறுகாலத்தின் செலவுகளின் தொகை கணிசமாக கூடிவிடும். பிறகென்ன தினசரியும் நல்ல நேரம் அல்லது அதிர்ஷ்டமான நேரம் வாய்த்துவிடுமா? ஆகையால் மருத்துவர்களின் நேரமும் பொன்னானதாக மாறிவிடுகிறது.

இந்தப் போக்கு சமீப காலமாக பெரும்பாலான மருத்துவமனைகளில் அல்லது எல்லா ஊர்களிலும் இயல்பான விஷயமாக நடக்கிறதாக மாறியிருக்கிறது.

தானாக பிள்ளைப்பேறு இயல்பாக நடக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை தமக்கு வசதியான நேரத்திலும் வசதியான நாளிலும் நடப்பதாக மாற்றியமைத்திருக்கிறது இச் சமூகம்.

விஞ்ஞானத்தை நமது நம்பிக்கைகளின் வசதிக்கேற்ப வளைக்கிறார்கள் மக்கள். அதை தங்களுக்கு சாதகமானதாக மாற்றியமைத்துக்கொண்டார்கள் மருத்துவர்களும்.

நல்ல காலம்  இப்போது மருத்துவர்களுக்குதான்.

 

மலைகள் மூன்றாண்டு நிறைவும் மனஎழுச்சியும் / சிபிச்செல்வன்

315335_563047863717019_954829517_n

 

 

 

 

 

 

மலைகள் மே 3 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே  ஏழு இதழ்களை என்னுடைய வலைப்பக்கத்தில் இலக்கியச்சுற்றம் என்ற பெயரில் தொடங்கி நண்பர்களின் படைப்புகளை வாங்கி வெளியிடுவது என்கிற பரிசோதனையாக நடத்தி அதில் வெற்றிகரமாக என்னால் தொடர்ந்து நடத்த முடியும் என்பது தெரிந்தது. படைப்பாளர்கள் என்மேல் நம்பிக்கை வைத்து படைப்புகளை அனுப்புவார்கள் என்பதும் உறுதியாகத் தெரிந்தது.

கடந்த  மூன்றாண்டுகளாக  ஆங்கில மாதத்தின் 3 ஆம் தேதியும் 18 தேதியும் என இரண்டு இதழ்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 2 ஆம் தேதி நள்ளிரவில் பதிவேற்றமும் 17 தேதி நள்ளிரவிலும் பதிவேற்றம் நடைபெறும் என்பது திட்டம். அதாவது 3 ஆம் தேதியும் 18 தேதி காலையிலும் இதழ்கள் வாசிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது திட்டம்

இதில் ஒரு இதழ்கூட காலதாமதமாக கொண்டு வரக்கூடாது என்பதும் என் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்திற்கு நான்கைந்து முறை தேடையாக கணிணி பழுது ஏற்படல் மற்றும் மெயில் அஞ்சல்களை திறக்க முடியாமல்  சிக்கல்கள் ஏற்பட்டன. இதை என் வீட்டு கணிணி பொறியாளரும் என் மகனுமான  அமுதராஜ் துணையோடு கடந்து வந்தேன். சில சமயங்களில் அவருடைய கணிணியில் கோளாறோ அல்லது பதிவேற்றத்திற்கும் உதவ முடியாத சமயங்களில் அவருடைய கல்லூரி வகுப்புத் தோழர்களின் கணிணிகள் மலைகளின் பதிவேற்றத்திற்கு உதவிகரமாக இருந்தார்கள். அவர்களுக்கும் என் நன்றிகள்

இதற்கிடையில் 2012 ஆம் ஆண்டு முழுவதும் எனக்கு தனிப்பட்ட முறையில் சோதனையான ஆண்டு. ஆம் என் மனைவிக்கு ஹிருதயத்தில் வால்வு கோளாறு ஏற்பட்டு அதற்காக பல ஊர்களில் குறிப்பாக சேலம் கோவை பெங்களூர் மருத்துவமனைகளுக்கு போகவும் வரவும் அங்கேயே தங்கவும் நேரிட்டது. அப்படிப்பட்ட சமயங்களிலும் மலைகள் தடையில்லாமல் வர முடிந்தது என்பது எனக்கே ஆச்சர்யமான விஷயமாகதான் இருக்கிறது.

கடைசியாக பெங்களூர் நாராயணா ஹிருதலாயா மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக என் மனைவிக்கு அட்மிஷன் கிடைத்து அவர் மருத்துமனையில் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்தபோதும் இரண்டு இதழ்கள் வெளி வந்தன. 6 ஆவது மாடியில் அவர் வலிகளுடன் இருந்தபோதும் என் பொருளாதார நெருக்கடிகள் மருத்துவசெலவுகளுக்காக பல லட்சங்களுக்காக போராடிய போதும் கூடவே மலைகள் இதழின் தயாரிப்பிலும்  என் கவனமும் அக்கறையும் இருந்தது. மலைகள் இதழ் உரிய நேரத்துக்கு வரவேண்டுமே என்ற  கவலையும் இருந்தது.

இச்சமயத்தல் பெங்களூர் நண்பர் திருவின் கணிணியில் இரண்டு இதழ்கள் பதிவேற்ற பணிகள் நடந்தேறியது. ஆம் என் மனைவி மருத்துவமனையில் இருதய வால்வு ஆபரேஷனுக்காக போராடிக் கொண்டிருந்த சமயத்தில் நண்பர் திருவின் கணிணி உதவியோடு மலைகளின் இரண்டு இதழ்கள் வெளிவந்தன. பதிவேற்ற நாளில் ஒரு இரவு முழுவதும் மலைகள் இதழை பதிவேற்றயதைப் பார்த்துவிட்டு திரு வியந்தது உண்டு. எப்படி சார் இரவு முழுவதும் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து செல்லாமல் மலைகள் இதழை விடிய விடிய கொண்டு வந்துவிடுகிறிர்கள் எனக் கேட்டார். எனக்கு இதில் ஆச்சர்யமாக ஒன்றும் தெரியவில்லை. காரணம் எனக்கு அந்த மலைகள் இதழ் வெளிவர வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கும். குறிக்கோளாக இருக்கும். இந்த சமயததில் பெங்களூர் நண்பர் திருவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

இவற்றை கடந்த இரண்டு வருடங்களாக எழுத வேண்டும் என நினைக்கவில்லை . எழுதினால் என் சுயபச்சாதாபமாகவோ அல்லது சுய தம்பட்டமாகவோ மாறிவிடுமோ என்ற பயமும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இதை எழுதிக்கொண்டிருக்கிற இந்த விடிகாலை வேளையில் இப்படி பல சிக்கல்களுக்கிடையில் ஒவ்வொரு மலைகள் இதழும் சரியான நேரத்திற்கு கொண்டு வந்ததை நினைத்து எனக்கு இதழின் மேல் இருக்கிற ப்ரியத்தின் வலிமையால் எனக்கேற்பட்ட வலிகளை என்க்கேற்பட்ட தடைகளை கடந்து இன்று நான்காம் ஆண்டில் காலடியெடுத்து வைக்கிற  சமயத்தில் இதை எழுதி பதிய வேண்டும் என ஏதோ தோன்றியது.

மலைகள் இணைய இதழ் தொடங்கிய கால கட்டத்தில் பலரும் சொந்தமாக ப்ளாக்குகள் தொடங்கி நிறைய ப்ளாக் எழுத்தாளர்கள் உதயமாகிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் படைப்புகளை கேட்ட போது தாங்களே தங்கள் ப்ளாக்கில் எழுதிக்கொள்வதாகவும் அதற்கு பல்லாயிரம் வாசகர்கள் இருக்கும்போது தங்களுக்கு எந்த சுயஅடையாளமும் இல்லாத ஒரு பொது வெளியில் எதற்காக எழுத வேண்டும் என்ற கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதற்கு பிறகு பேஸ்புக்கின் எழுச்சி பெரியதாக மாறதொடங்கிய காலத்தில் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை  உடனே எழுதி அதை உடனே பேஸ்புக்கில் போட்டு அதற்கு உடனடியாக பல லைக்குகளை பெற்ற போதையில் பல எழுத்தாளர்களும் இருந்தார்கள்.  பல படைப்பாளிகளிடம் படைப்புகளை கேட்ட போது தங்கள் முகப்புத்தக காலக்கோட்டிலிருந்து எடுத்து மறுபிரசுரம் செய்துகொள்ளும்படியும் சொன்னார்கள். ஆனால் மலைகள் சில விஷயங்களில் உறுதியாக இருந்தது.

அதில் ஒன்று எக்காரணம் கொண்டும் மறுபிரசுரங்களை  கவனமாக தவிர்ப்பது. ஆகவே பிடிவாதமாக அப்படைப்பாளி எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும் சரி அல்லது அது எவ்வளவு முக்கியமான படைப்பாக இருப்பினும் சரி அதை மீண்டும் மறுபிரசுரம் செய்வதை தவிர்த்திருக்கிறது. இன்னும் சிலர் தங்களுடைய ப்ளாக்கிலிருந்து மறு பிரசுரம் செய்யுங்கள் என வலியுறுத்தினார்கள். அதையும் தவிர்த்து மறுஆக்கம் என்பதை மலைகள் வெளியிடாது என்பதிலும் பிடிவாதமாக இருந்தேன்.

இப்படி நிபந்தனைகளை போட்டு படைப்புகளை வாங்கி பல பணிகளை செய்து நான் ஒருவனாகவே மலைகள் இதழின் எல்லாப் பணிகளையும் செய்து வெளியிடுவேன். அதாவது மலைகள் இதழுக்கு வெளியிட எந்த வசதியும் ஆள்வசதி அலுவலக வசதி மற்றும் டெக்னிக்கல் சப்போர்ட், கணிணி பராமரிப்பு வசதி இப்படி இல்லாமல் மலைகள் இதழைப் பற்றிய விளம்பரத்திற்கும் முகப்புத்தக பகுதிகளில் மலைகள் மலைகள் என ஓயாமல் விளம்பரத்தையும் கொஞ்சமும் கூச்சமே படாமல் நான் ஒருவனாகவே செய்தேன்

அதாவது நான் ஒருவனாகவே படைப்புகளை பலரிடமும் கேட்டு வாங்க வேண்டும் . அதை லே அவுட் செய்வது மற்றும் பதிவேற்றம் செய்வது ( எல்லா இதழ்களும் முதல்நாள் முன்னிரவில் தொடங்கி விடிய விடிய பதிவேற்றம் நடைபெற்று அதிகாலையில் பதிவேற்றம் நிறைவுபெறும் ). பதிவேற்றம் நடைபெறும்  தருணங்களிலேயே என் முகப்புத்தக பக்கங்களில் மலைகள் இதழ்களில் வெளிருகிற படைப்புகளின் விளம்பரங்களையும் அறிவித்துவிடுகிற விளம்பர ஏஜென்ட் பணியையும் செய்துவிடுவேன்.

ஓயாமல் சிபிச்செல்வன் மலைகள் மலைகள் எனவே பிதற்றுகிறார் என குறைகளையும் குற்றங்களையும் ஏளனங்களையும் செய்தபோதும் சளைக்காமல் இதை ஒரு வெறியாகவே செய்தேன் என்றே சொல்ல வேண்டும். இப்படி தொடர்ச்சியாக இயங்கியபோது மலைகள் இதழின் தரத்தைப் பார்த்து அதை பரவலாக  சில நண்பர்கள் கொண்டு  செல்லஉதவியைதையும் இந்த இடத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும்.

மலைகள் இதழில் தொடக்க காலத்தில் நண்பர் ஓசூர்  ந.பெரியசாமியும் மற்றும் வேல்கண்ணன் என இப்போது அறியப்படுகிற கண்ணனும் அப்போது பேஸ்புக்கில் பிரபலஸ்தர்கள். அவர்களின் பக்கங்களில் மலைகள்இதழைப் பற்றி எழுதியும் அவர்களின் நண்பர்களிடம் கொண்டு  சேர்த்தார்கள். நான்  மலைகள் இதழைப் பற்றி அறிவிப்புகள் பதிந்தபோது அதை அவர்களின் பக்கங்களில் பகிர்ந்து பல ஆயிரக்கணக்கான அவர்களின் நண்பர்களிடம் பரவலாக்கம் செய்தார்கள். அந்த சமயத்தில் நண்பர் கதிர்பாரதி கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் முகப்புத்தகத்தில் அப்போது பிரபலமாக இருந்தார் அவரும் மலைகள் பரவலாக்கத்தில் உதவியாக இருந்தார்.

இப்படி பிடிவாதமாக படைப்புகளை வாங்கி மலைகள் இதழில் வெளியிட்டால் அப்படைப்பாளிகளில்  ஒரு சிலர்  இதழ் வெளியான காலையிலேயே அவர் படைப்பை அப்படியே முகப்புத்தக பக்கத்தில் வெளியிடுவார் அல்லது அவருடைய ப்ளாக்கில் அதையே பிரசுரம் செய்து முகப்புத்தகத்தில் வெளியிடுவார். அதைப் பார்த்து மனம் சோர்வடையும் .

சில நண்பர்களிடம் இப்படி செய்வது சரியானதாக இருக்காது என்பதை எடுத்துச் சொன்னால் உடனே அதை திருத்திவிடுவார்கள். ஒரிருவர் என் படைப்பு நான் எப்படியும்வெளியிடுவேன் எனவும் பேசுவார்கள். அதை பொறுத்துக்கொள்ளாமல் உடனே மலைகள் இதழில் வெளியிட்ட அவர்களின் பக்கங்களை எடுத்துவிடுவேன் அல்லது அதற்குமேல் அவர்களின் படைப்புகளை மலைகள் இதழில் வெளியிட மாட்டேன்.

இச்சமயத்தில் வெகுஜன இதழ்களில் மலைகள் இதழ் பற்றி இரண்டு முறை அறிமுகப்படுத்தியவர் என் நண்பர் வெங்கடேசன்தான் . ஆம் அவர் கல்கியின் பொறுப்பாசிரியராக இருப்பதால் இரண்டு முறை மலைகைள் இதழ் பற்றிய அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார். ஆழி செந்தில்நாதன் நடத்திய ஆழி மாத இதழில் ஒருமுறை அறிமுகம்  எழுதியிருக்கிறார். கவின்மலர் இந்தியா டுடே ( தமிழ் ) இதழில் ஒருமுறை அறிமுகம் எழுதியிருக்கிறார். திண்ணை இணைய இதழில் நண்பர் கோ. ராஜராம் அறிமுகம் வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள்.

இதுபோலவே மலைகள் இணைய இதழின் வளர்ச்சியைப் பார்த்துவிட்டு நாங்களும் எங்கள் இதழ்களில் எழுதுகிறோம் எனச் சொல்லிவிட்டு மௌனமாக அரசியல் செய்துகொண்டிருக்கிற நண்பர்களுக்கும் என் நன்றிகள்தான். இப்போது மலைகள் இதழை பல்லாயிரம் பேர் படிக்கிறார்கள். உங்கள் மௌனத்திற்கும்  என் நன்றிகள்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய இணைய தளத்தில் மலைகள் இதழை அறிமுகப்டுத்தியதோடு  அவர் கலந்து கொள்கிற பல கூட்டங்களில் வாய்ப்பு வரும்போதெல்லாம் மலைகள் இதழை அறிமுகப்படுத்தி வருகிறார். அவருக்கும் இச்சமயத்தில் என் நன்றிகள்

மலைகள் இதழில் எல்லாத் தரப்பினரும் எழுத வேண்டும் என் நோக்கம் ஒரு அறிவிப்பாகவே அப்போது போட்டிருந்தேன். ஆனால் என் பின்புலத்தில் வேறு யாரோ இருப்பதாக நினைத்து ஒத்துழைக்காத பல படைப்பாள நண்பர்கள் பின்னாட்களில் நான் தனியன் என்பதையும் எனக்கு இலக்கியம்தான் நோக்கம் என்பதையும் புரிந்துகொண்டார்கள். எல்லாத் தரப்பினரும் எழுத வந்துள்ளார்கள்,. எழுதியிருக்கிறார்கள். மலைகள் எந்த குழுவினரையும் சாராதது என்ற அறிவிப்பை இப்போது வரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்.

அதேபோல எனக்கு இதனால் எந்த ஒரு சிறு படைப்பாளியையும்கூட இலக்கிய அடிமையாக அருகே சேர்க்கவில்லை. அப்படி  நடந்துவிடக்கூடர்து என்பதிலும் கவனமாக இருக்கிறேன். படைப்பாளிகள் படைப்பை அனுப்புகிறார்கள். அதை மலைகள் வெளியிடுகிறது. அதற்குமேல் என்னை அவர்கள் புகழ்போற்றி பாடிகளாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்காமல் அவர்களை வெகு தொலைவில் நிறுத்திவிடுகிறேன். இவெற்றிற்கெல்லாம் காரணம் தமிழ்ச் சிற்றிதழ்களில் கடந்த காலங்களிலும் இபபோதும் நடைபெற்று வருகிற குழு மனப்பான்மை  குரு சிஷ்ய மனோபாவம் . முதுகு சொறிந்துவிடுபவர்களாக  படைப்பாளிகளை மாற்றிவிடுகிற சூழல் கற்றுக்கொடுத்த பாடங்கள். அவை மலைகள் எக்காரணத்தைக் கொண்டும் திரும்ப நடைமுறையில் நடத்திவிடக்கூர்து என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது.

இப்படி பல நடைமுறைக்கு சாத்தியமில்லாத குறிக்கோள்களை மலைகள் அறிவித்திருந்தாலும் அதை அடைய விடர்ப்பிடியாக அல்லது பிடிவாதமாக இருந்து பல படைப்பாளிகளையும் அதாவது எதிர் எதிர் முகாம்களில் அல்லது கருத்துகளில் இருப்பவர்களையும் மலைகள் இதழில் எழுத வைத்ததின் வழியாக இப்போது மலைகள் ஒரு பொதுவான இதழாக மாறியுள்ளாதாக வாசகர்களும் படைப்பாளிகளும் நம்புகிறார்கள்.மலைகள் இதழை வாசகர்களும் படைப்பாளிகளும் தங்களுடைய இதழாக  பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் நிச்சயம் நல்ல விஷயமாகதான் பார்க்கிறேன்.

மலைகள் இதழின் வெற்றிநடை தந்த உற்சாகத்தில் மலைகள் பதிப்பகம் தொடங்கி இரண்டு புத்தகங்களை வெளியிட்டு அதற்கும் கிடைத்த பெரும் வரவேற்பு மலைகள் இணைய இதழ் மலைகள் பதிப்பகமாகவும் மாறத் தொடஙகியிருக்கிறது. பல நல்ல புத்தகங்களை பதிப்பிக்க வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இப்படி மலைகள் மலைகள் என ஓயாமல் பேசியும் எழுதியும் வந்திருக்கிறபோதும் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு இலக்கிய பட்டறைகளையும் மலைகள் இரண்டு ஆண்டுகளாக நடத்திவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கவிதை பட்டறை நிகழ்வினை நடத்தியது. இப்போது இன்று ஒரு சிறுகதை பயிலரங்கத்தை நடத்திட திட்டமிட்டு 40 பேருக்கும்மேல் பங்கேற்பளார்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.இதுவும் வெற்றிகரமான நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.

மலைகள் இதழின் மூன்றாண்டு முடிந்து நான்காம் ஆண்டு தொடங்குகிற இத்தருணத்தில் பெரும் மன எழுச்சியோடும் நம்பிக்கையோடும் உற்சாகமாக மலைகள் இதழை நடத்தவேண்டுமென இருக்கிறேன்

நன்றி நண்பர்களே

நன்றி வாசகர்களே

நன்றி படைப்பாள நண்பர்களே

நன்றி என் சக ஆதரவு பத்திரிகையாள நண்பர்களே

உங்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நமஸ்காரங்கள்

உங்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள்

 

உங்கள்

சிபிச்செல்வன்

மலைகள் இணைய இதழின் ஆசிரியர்

 

 

 

திரைப்படத்தின் ஒன்லைனை எப்படித் தயார் செய்வது..?- ( அபூர்வ சகோதரர்கள் 21 ) / பி.ஆர்.மகாதேவன்

download (14)

 

 

 

 

 

 

திரைப்படத்தின் ஒன் லைன் ரெடி. கதைக்குத் தேவையான தகவல்களை திரைப்படங்கள், நாவல்கள், சிறுகதைகள், சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகள், கள ஆய்வு, செய்தித்தாள் ஆகியவற்றின் மூலம் சேகரித்தும் விட்டீர்கள். திரைப்படத்தின் அரசியலையும் தீர்மானித்துவிட்டீர்கள். இனி அடுத்துச் செய்ய வேண்டியது ஒன்லைனை விரிவுபடுத்துவதுதான். உங்கள் கதையின் ஒன் லைனில் நாயகன்(கி) யார் என்பது தீர்மானமாகியிருக்கும். அவருடைய இலக்கு என்ன என்பது முடிவாகியிருக்கும். அதற்குத் தடையாக வருவது எது, யார் (வில்லன்) என்பதும் தீர்மானமாகியிருக்கும்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது நாயகனை அறிமுகம் செய்து கூடவே அவனுடைய இலக்கையும் அறிமுகம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த இலக்குக்கு வில்லன் மூலம் என்னென்ன தடைகள் வருகின்றன. அதை நாயகன் எப்படியெல்லாம் கடக்கிறான். இறுதியில் வெல்கிறான்/தோற்கிறான். அல்லது வில்லன் ஏற்கெனவே செய்த குற்றத்துக்கு நாயகன் எப்படிப் பழிவாங்குகிறான். இவை ஒவ்வொன்றுக்கும் சம்பவங்களைக் கோக்கவேண்டும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது: கேள்விகளால் ஒரு வேள்வி. திரைக்கதையின் ஆதார விதி: புத்திசாலித்தனமான அனைத்துக் கேள்விகளையும் கேளுங்கள். அதைவிட புத்திசாலித்தனமான பதில்களைக் கண்டடையுங்கள்.

அபூர்வ சகோதரர்கள் படத்தை எடுத்துக்கொள்வோம். அப்பாவைக் கொன்றவர்களை நாயகன் அப்பு பழிவாங்குகிறான். இதுதான் ஒன்லைன்.

நாயகனின் அப்பாவைக் கொன்றவர்கள் யார்..?
கொன்ற விஷயம் நாயகனுக்கு எப்போது தெரியவருகிறது?
அதன் பிறகு கொன்றவர்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறான்?
ஒவ்வொருவராக எப்படிக் கொல்கிறான்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் கோக்கத் தொடங்கும்போது திரைக்கதை விரிவடைய ஆரம்பிக்கும்.

நாயகனின் அப்பா நேர்மையான காவல்துறை அதிகாரி. அவரால் கைது செய்யப்படுபவர்கள் அவரைக் கொல்கிறார்கள்.
குள்ளமாக இருப்பதால் யாருக்கும் பிடிக்கவில்லை என்று மனமொடிந்து நாயகன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான். தடுத்து நிறுத்தும் அவனுடைய அம்மா அவன் குள்ளமாகப் பிறந்ததற்கான காரணத்தைச் சொல்கிறார். அதாவது நாயகனின் அப்பாவைக் கொன்றவர்கள் அம்மாவுக்கும் விஷம் கொடுத்ததால்தான் நாயகன் குள்ளமாகப் பிறந்துவிட்டிருக்கிறான்.
இப்போது, அவன் தன் அப்பாவைக் கொன்றவர்களின் புகைப்படத்தை பழைய பேப்பரில் இருந்து கண்டெடுகிறான்.
ஒவ்வொருவராகத் தனியாக வரவழைத்துக் கொல்கிறான்.
அதற்கு முன்பு புன்னகை மன்னன் என்ற படத்தில் குள்ளன் வேடத்தில் ஒரு காட்சியில் நடித்தவர் அந்தக் குள்ளன் கதாபாத்திரத்தைப் பழிவாங்கும் கதைக்குக் கொண்டுவந்ததில்தான் அந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. குள்ளன் என்பதால் பறந்து பறந்து சண்டை போட முடியாது. புத்திசாலித்தனமாகத்தான் பழிவாங்கியாக வேண்டும். இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறைதான் அந்தப் படத்தை தமிழின் மிகச் சிறந்த வணிகத் திரைப்படமாக ஆக்கியிருக்கிறது.

வெறும் குள்ள கதாபாத்திரத்தை மட்டுமே படத்தில் இடம்பெறச் செய்தால் காதல் மன்னனின் ரசிகர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். எனவே, காதலுக்காக இன்னொரு கமலும் படத்தில் கொண்டுவரப்படுகிறார். ரசிகர்களின் காம உணர்வுகளுக்கு வடிகாலாக மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தை படைத்தால் கவுரவமாக இருக்காது என்பதால் குள்ள கதாபாத்திரம் செய்யும் கொலைகளின் பழி எல்லாமே காதல் கமல் மீது விழுவதாக திரைக்கதையை சாமர்த்தியமாகப் பின்னியிருக்கிறார். ஆக காதல் மன்னனாக நடிக்கவும் செய்தாயிற்று. கதையையும் வலுவாக்கியாயிற்று. அந்த வகையில் இந்தப் படம் தமிழ் வணிக இலக்குகளை வெகு துல்லியமாக நிறைவேற்றிய படமாக உருவாகிவிட்டிருக்கிறது.

கைதியின் டைரி படத்திலும் இப்படியான இரண்டாம் நிலை சுவாரசியம் படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். மனைவியைக் கொன்றவர்களை நாயகன் பழிவாங்குகிறான். அதே நேரத்தில் நாயகனின் மகன் காவல்துறை அதிகாரியாக இருக்கிறான். அவன், கொலைகளைத் தடுக்க முன்வருகிறான். ஆக, நாயகனுக்கு எதிராக நாயகனின் மகனே வருகிறான். இது படத்தின் சுவாரசியத்தை மேலும் கூட்டுகிறது. இப்படி இரண்டு என்ஜின்களைச் சேர்ப்பது படத்துக்கு கூடுதல் வேகத்தைத் தரும். ரசிகர்களின் காம உணர்வுகளுக்குத் தீனி போட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களுக்கு இது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

இப்போது இந்த பதில்களைக் கொஞ்சம் விரிவாக்குங்கள்.

உதாரணமாக ஒவ்வொரு நபரையும் குள்ள கமல் எப்படிக் கொல்கிறார் என்பதை படத்தில் இருந்து நினைவுபடுத்திப் பாருங்கள். ஃப்ரான்சிஸ் அன்பரசு ஒரு பாழடைந்த பங்களாவுக்குத் தனியாக வந்து மாட்டிக்கொள்கிறார். அங்கு ஒரு கோலிகுண்டை உருட்டிவிட்டால் அது ஒரு பந்தை உருளச் செய்கிறது. அது எங்கெல்லாமோ ஓடிச்சென்று ஒரு லிவரை விடுவிக்கிறது. அதில் இருந்து ஒரு அம்பு சீறிப் பாய்கிறது. இப்போது அந்த அம்பை குள்ள கதாபாத்திரம் நேரடியாகவே வில்லில் இருந்து பாய்ச்சியிருந்தால் அதில் சுவாரசியமே இருந்திருக்காது. கோலிக்குண்டை உருட்டிவிட்டதும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்க சட்டென்று கடைசி நொடியில் அம்பு பாயும்போது ஒரு அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியம் ஏற்படுகிறது.

இரண்டாவது கொலையை சர்க்கஸில் பணிபுரியும் நாயகன் புலியை வைத்துக் கொல்கிறான். அந்தப் புலியை வேறு யாரும் பார்த்துவிடக்கூடாது. வேறு யாரையும் அது கொல்லவும் கூடாது. இதை எப்படிச் செய்ய? இரண்டாவது வில்லனும் தனியான ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறான். செல்வச் செழிப்பில் இருக்கும் ஒருவர் தனியாக இருக்கும் இடம் எது..? பீச், ஜிம், கோல்ஃப் மைதானம் என பல இடங்கள் இருக்கின்றன. கோல்ஃப் மைதானம் அதற்கான அருமையான வசதியான இடம். அப்படியாக இரண்டாவது கொலை புலியால், கோல்ஃப் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

முன்றாவது கொலையிலும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் இருக்கிறது. சர்க்கஸ் துப்பாக்கி பின் பக்கமாகச் சுடும். வில்லனை நாயகன் துப்பாக்கி முனையில் மிரட்டும்போது யதேச்சையாக கீழே போட்டுவிடுவான். சட்டென்று அதை எடுத்துக்கொள்ளும் வில்லன் டிரிகரை அழுத்தினால் குண்டு பின்பக்கமாகப் பாய்ந்து அவரையே சுட்டுவிடும். அதிர்ச்சி அடைபவர் ஆத்திரத்தில் அதைத் திருப்பிச் சுடுவார். ஆனால், சர்க்கஸ் துப்பாக்கி ஒருமுறைதான் பின்னால் சுடும். அடுத்த முறை லிவரை மாற்றீனால்தான் பின்னால் சுடும். இல்லையென்றால் சாதா துப்பாக்கிபோல் முன்பக்கமாகவே சுடும். வில்லன் இரண்டாவது முறை சுடும்போது அதுவும் வில்லன் மேலே பாய்ந்து அவர் இறந்துவிடுவார்.

நான்காவது கொலையும் இதுபோல் வித்தியாசமாக சிங்கத்தின் பிடியில் வில்லனை வீழ்த்துவதாக இடம்பெறுகிறது.

ஒவ்வொரு கொலை மீதான பழியும் இன்னொரு கமல் மீது விழுகிறது. இது கதையின் இரண்டாம் அடுக்கு. இதற்கான திரைக்கதையை எப்படி எழுதியிருப்பார்கள்? முதல் கொலையில் ப்ரான்சிஸ் அன்பரசு அம்பு பாய்ந்து கொல்லப்படுகிறார். அந்த அம்பில் தம்பி கமலின் கை ரேகை வரவேண்டும். இது எப்படி சாத்தியம். ஃப்ரான்சிஸ் அன்பரசுவின் உடம்பு ஒரு வைக்கோல் லாரியில் போய் விழுகிறது. இரண்டாம் கமல் தன் காதலியுடன் பாட்டுப் பாட போனவர் கார் ரிப்பேர் ஆனதும் காரை ”டோ’ பண்ணிக்கொண்டு அந்த லாரியில் ஏறி வருகிறார். பாட்டு சுவாரசியத்தில் ஃப்ரான்சிஸ் அன்பரசுவின் உடம்பில் பாய்ந்திருக்கும் அம்பை எடுத்து ஆழமாகச் சொருகவும் செய்கிறார். அப்படியாக அவருடைய கை ரேகை அந்த அம்பில் வந்துவிடுகிறது.

அடுத்த கொலை சர்க்கஸ் புலியால் செய்யப்படுகிறது. இதை தம்பி கமலோடு எப்படிக் கோர்ப்பது? இரண்டாம் கமல் புலி வேஷம் போட்டு ஆடினால் முடிந்தது கதை.

மூன்றாவது கொலையில் எப்படி தொடர்பு பெறுகிறார்? மூன்றாவதாகக் கொல்லப்படும் வில்லனின் மகளைத்தான் தம்பி கமல் காதலிக்கிறார். கொலைப் பழி விழுந்து தலைமறைவாக இருப்பவர் காதலியிடம் உண்மையைச் சொல்ல வருகிறார். அந்த நேரத்தில் தான் அண்ணன் கமல் மூன்றாம் வில்லனைக் கொல்லவும் செய்கிறார்.

அப்படியாக, ஒவ்வொரு கொலைக்கான பழியும் தம்பி கமல் மீது விழுகிறது. இதே ஸ்கெலிட்டனை வைத்துக் கொண்டு நீங்கள் வேறு திரைக்கதையை ஒரு பயிற்சியாக எழுதிப் பார்க்கலாம். உதாரணமாக குள்ளன் கமல் சர்க்கஸில் வேலை செய்வதால் ஏதேனும் விலங்கை வைத்துக் கொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இப்போதைய படத்தில் புலியை வைத்து ஒரு கொலை செய்யப்படுகிறது. அதுபோல் வேறு வலிமையான விலங்கு எது..? யானை, கரடி, முதலை என பல விலங்குகள் நினைவுக்கு வரலாம். பீச்சில் முதலையை வைத்துக் கொல்லலாம். ஆனால், அந்தக் கொலையை தம்பி கமலுடன் தொடர்புபடுத்துவது கடினம். மேலும் புலியைப் பழக்குவதுபோல் முதலையைப் பழக்குவது எளிதல்ல. மனிதர்களின் கைக்கு அடக்கமான இன்னொரு அபாயகரமான உயிரினமென்று பார்த்தால் பாம்பு அந்த வேலைக்கு பொருத்தமாக இருக்கும். ஒரு வில்லனுடைய வீட்டுக்கு விஷம் உள்ள பாம்பை பார்சலில் அனுப்பலாம். அதை அவர் வாங்கிப் பிரித்ததும் அது கொத்தி அவர் இறக்கலாம். இந்த பார்சலை தம்பி கமல் கொடுத்ததாக பிறரை நம்பவைத்து அவர்மேல் சந்தேகம் வர வைக்கலாம்.

குள்ளன் என்பதற்குப் பதிலாக கொல்லப்பட்டவரின் ஏழெட்டு வயது மகனே பழிவாங்குவதாக வைத்துக்கொண்டால் இன்னொரு படம் கிடைத்துவிடும்.

நேர்காணல்: கே.பாலமுருகன் ( மலேசியா ) / சு.தினகரன்  

download (13)

 

 

 

 

 

 

 

 

 
நேர்காணல்: தோட்டங்களைவிட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்.

 

கே.பாலமுருகன் எனும் படைப்பாளி மலேசிய தமிழிக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எனும் நாவல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தமிழ் நாவல் போட்டியில் 2007ஆம் ஆண்டில் முதல் பரிசை வென்று தமிழ் இலக்கியச் சூழலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அதோடுமட்டுமல்லாமல் அவருடைய அந்த நாவல், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் முஸ்தப்பா அறவாறியத்தின் வழியாக அவருக்கு ‘கரிகாற் சோழன்’ விருதைப் பெற்றுக் கொடுத்தது. நாவல் பயணத்தில் தனித்து விளங்கும் கே.பாலமுருகனின் அடுத்த இரண்டு குறுநாவல்கள் அடங்கிய ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் தொகுப்பைக் குறித்து அவரிடம் உரையாடப்பட்டது.

கேள்வி: ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் நாவல் எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன?

கே.பாலமுருகன்: நான் எனது 11ஆவது வயது முதல் 15ஆவது வயதுவரை ஆற்றோரக் கம்பத்தில்தான் வாழ்ந்தேன். பின்னர் அந்த ஆற்றோரம் இருந்தவர்களுக்கு ஒரு மலிவு அடுக்குமாடி கட்டித்தரப்பட்டது. நாங்கள் சீனக் கம்பத்திலேயே இருந்துவிட்டோம். என் நண்பர்கள் பெரும்பாலானோர் அடுக்குமாடிக்குப் போய்விட்டதால் வாரத்தில் நான்குமுறை அங்குப் போய் அவர்களுடன்தான் இருப்பேன். சில சமயங்களில் வெள்ளிக்கிழமைகளில் அங்கேயே தங்கிவிடுவேன். அடுக்குமாடி வாழ்க்கை என்பது பல கிராமங்களை/ கம்பங்களைக் கொண்டு வந்து ஒரே இடத்தில் குவிக்கும் ஓர் ஏற்பாடுதான். அங்குத் தனி வீட்டில் வாழ்ந்தவர்கள் இங்கு அடுக்குமாடியில் ஏதோ தடுமாற்றத்துடனும் சுதந்திரம் பறிப்போனவர்கள் போலவும் வாழ்ந்தார்கள். இடம் மாறும்போது மனித வாழ்க்கையின் போக்கும் மாறிவிடுவதாக உணர்ந்தேன். அங்கிருந்து உருவான ஒரு தெறிப்புத்தான் இந்த நாவலுக்கான களம் எனச் சொல்லலாம். பெருநகர் வாழ்க்கைக்குள் நுழைந்து கரைந்து காணாமல் போகும் முன் இதுபோன்ற ஆற்றோரங்களிலும் அடுக்குமாடிகளிலும் புறம்போக்கு நிலங்களிலும் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைக் கொஞ்சமாவது பதிவு செய்ய வேண்டும் என உணர்ந்தே இந்தக் குறுநாவலை எழுதினேன்.

கேள்வி: அந்த ஆப்பே கடை எனும் தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

கே.பாலமுருகன்: தோட்டங்களிலும் கம்பங்களிலும் நகரங்களிலும் இந்த ஆப்பே கடை என்பது நம் வாழ்க்கைக்குள் ஒரு மறக்க முடியாத இடத்தைக் கொண்டிருக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும். 1970களுக்கு மேல் வாழ்ந்த நம் பெற்றோர்களையும் தாத்தா பாட்டிகளையும் கேட்டால் இதுபோன்ற ஆப்பே கடைகளையும் ஆப்பேக்களையும் மறவாமல் நினைவுக்கூர்ந்து சொல்வார்கள். என் தோட்டத்தில் அப்படிப்பட்ட ஓர் ஆப்பே கடை இருந்தது. அங்குத்தான் அப்பாவுடன் சென்று காப்பிக் குடிப்பேன். அதே கடையில் பட்டை சாராயமும் விற்றார்கள். அதற்காகக் கூடும் கூட்டமும் இருந்தது. அந்தப் பதிவை முன்வைத்துதான் ஆப்பே கடையை என் நாவலுக்கான மையமாக மாற்றினேன். நம் இந்திய வாழ்வின் அந்நியமற்ற ஓர் இடம்தான் இந்த ஆப்பே கடை. குண்டர் குழுவில் இருந்த பலர் ஆப்பே கடைகளில் உரையாடல்கள் நடத்துவதும் அது கைக்கலப்பில் முடிந்ததும் உண்டு.

கேள்வி: உங்களின் இந்த நாவல் வன்முறையைக் கதைக்கருவாகக் கொண்டுள்ளதாக அறிகிறேன். அஃது உண்மையா?

கே.பாலமுருகன்: தோட்டத் துண்டால்களுக்குப் பிறகு, வேலை இழப்புக் காரணமாகத் தோட்டங்களிலிருந்து ஓடிவந்து தனக்கான இடம் எது எனத் தெரியாமல் திண்டாடி, கிடைத்த புறம்போக்கு நிலத்தின் நிலையற்ற ஒரு வாழ்வை வாழ்ந்து கழித்த நம் இந்திய வாழ்வில் வன்முறை நுழைக்கப்பட்ட, வன்முறை ஒரு தெறிப்பாக வெளிப்பட்ட கதையைத்தான் இந்த நாவலில் மையப்பொருளாகப் புனைந்துள்ளேன். தோட்டங்களில் இந்தத் திருவிழா சண்டை என்பது மிகவும் பேசப்பட்ட ஒன்றாகும். அதையும் கதையின் ஊடாகச் சொல்லிச் சென்றுள்ளேன். வன்முறை என்பது புறவயமான பிரச்சனையாக இருந்தாலும் அஃது ஒரு சமூகத்திற்குள் ஊறிப்போனதற்கு, இடமற்று நாடோடிகளாக நகர்ந்து கொண்டே இருந்த குறிப்பிட்ட சமூக மனிதர்களின் அகவயத்திலிருந்து கிளம்பி வந்த உணர்வுகளே கார்ணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். வன்முறை உடலைக் காயப்படுத்துவதாக இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட அடையாளமில்லாமல் அலைந்த மனிதப் புறக்கணிப்பின் உச்சத்திலிருந்து வெடித்திருக்கிறது. இதுதான் கண்டுகொள்ளப்படாத மலேசிய இந்திய வாழ்க்கை. அதைத்தான் இந்த நாவலின் கதைப்பொருளாகக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: இதற்கு முந்தைய தமிழ் நாவல்கள் இதைப் பற்றி பேசியதில்லையா?

கே.பாலமுருகன்: இதுவரை வாசித்த மிக முக்கியமான நண்பர்கள், விமர்சகர்கள், இந்தக் குறிப்பிட்ட புறம்போக்கு நிலவியலில் வாழ்ந்த தமிழர்களின் இருண்ட பகுதிகளை முதன்மையாக்கி நாவல்களில் சொல்லப்பட்டதில்லை என்றே குறிப்பிட்டார்கள். நாவல் வெளியீட்டுக்குப் பின்பு பொது வாசிப்பே அதனை முடிவு செய்யும் என நினைக்கிறேன்.

கேள்வி: அப்படியென்றால் உங்கள் நாவலில் இலட்சியவாத கதைப்பாத்திரங்களோ சூப்பர் ஹீரோக்களோ இல்லை எனச் சொல்லலாமா?

கே.பாலமுருகன்: இலக்கியம் எந்த இலட்சியத்தைப் பற்றியும் பேசுவதற்காக இல்லை என்கிறபோது பிறகு இலட்சியவாதங்கள் நிரம்பிய மனிதர்கள் எதற்கு? இலக்கியம் முழுக்க பராபட்சமில்லாமல் நிஜமான வாழ்க்கையைக் காட்டுவதே அதன் முக்கிய பங்காகும். இதுவரை கண்டிறாத இதுவரை கவனிக்கப்படாத இதுவரை சொல்லப்படாத மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் காட்டுவதும் பேசுவதும்தான் இலக்கியம் எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதிலிருந்து வாசகர்கள் தனக்கான கருத்தையும் தனக்கான விமர்சனத்தையும் தனக்கான பார்வையையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். யாருடைய மனத்திலும் தீர்ப்புகளையோ கருத்துகளையோ திணிக்கும் நோக்கம் இலக்கியத்திற்கு இல்லை. எனது நாவலில் எப்பொழுதுமே தோல்விகளும் அவமானங்களும் குற்றங்களும் வலிகளும் போராட்டங்களும் அழுகைகளும் நிரம்பிய சாமான்ய மனிதர்களைத்தான் முன்னிறுத்துகிறேன்.

கேள்வி: உங்கள் நாவல் வெளியீடு எங்கு எப்பொழுது நடைபெறுகிறது?

கே.பாலமுருகன்: வருகின்ற 10ஆம் திகதி மே மாதத்தில் மாலை மணி 2.15க்கு கோலாலம்பூர் சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தனில் என்னுடைய இரு நாவல்களின் வெளியீடும் நடைபெறவுள்ளது. டாக்டர் மா.சண்முகசிவாவின் இலக்கிய உரையோடு, கவிஞர் யோகி, எழுத்தாளர் ந.பச்சைபாலன், திரு,.பி.எம் மூர்த்தி அவர்களின் நூலாய்வுடன், மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனரும் தமிழ் நெஞ்சருமான சி.பசுபதி அவர்களின் தலைமையில் எனது நாவல்கள் வெளியீடு நடைப்பெறவிருக்கிறது. அனைத்து இலக்கிய நண்பர்களும் பொது மக்களும், ஆசிரியர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகையளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி

••••

 

காற்று வெளியிடை ( சி றுகதை ) / வண்ணதாசன்  

download (9)

 

 

 

 

 

 

 

 

’மீன் எடுத்துக்கிட்டு வரட்டுமா மல்லி?’ – ராஜாங்கம் கேட்பதற்கு,

‘அடுத்த சனி ஞாயிறு மதினி, பிள்ளைங்க எல்லாரும் லீவுக்கு வரும். அப்போ எடுத்துக்கிடலாம்’ – மல்லிகா சொல்லிவிட்டாள். அவளே, ; மழை வேறு வரட்டுமா வரட்டுமாண்ணு கேட்டுக்கிட்டு இருக்கு’ என்றாள். குழாயடியில் உட்கார்ந்து அருணாவின் யூனிஃபார்ம் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருக்கிறாள். கொஞ்சம் மழைக்காற்று அடித்ததில், செய்தித் தாள் தரையோடு தரையாகச் சருகி, படுத்திருக்கிற அவன் பக்கம் வந்தது பிடித்திருந்தது. சற்று நேரம் நாற்காலியை வெளியே எடுத்துப் போட்டு உட்கார்ந்திருந்தான்.

எப்போதும் பார்க்கிற வேப்பமரம்தான். இ.பி.காரர்கள் கம்பியில் படுகிறது என்று வெட்டியதில் தாறுமாறாக வளர்ந்திருந்தது நன்றாக இருந்தது. அங்கங்கே தாமிர நிறத் துளிர்ப்பு.. ராஜாங்கத்தை ‘வீட்டில் இருக்காதே. வெளியே போ’ என்று சொன்னது அதன் மினுமினுப்புதான். மறுபடி வேப்பங் கிளையையே பார்த்தான். சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

‘ஏதாவது கடைச் சாமான் வாங்கணுமா?’ – மோட்டார் சைக்கிளைத் தட்டியபடி கேட்கும் போது, மல்லிகா பின்னாலிருந்து வந்தாள். சேலையை இழுத்துவிடவில்லை. வளையல்களை மேலே உயர்த்தி இருந்தாலும் உறை மாதிரி சோப்பு நுரை தங்கி இருந்தது.

‘சொல்ல விட்டுப் போச்சு. தேவராஜ் அண்ணன் பேசுச்சு. உங்க தமிழ் சார் செத்துப் போச்சாம். பேரு கூட ஏதோ சொன்னாரு. ஞாபகத்துக்கு வரலை’ – மல்லிகா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே

‘மகேந்திரன் சாரா?’ – ராஜாங்கம் பதறினான்.

‘அப்படித்தான் ஏதோ சொல்லுச்சு. எதுக்கும் செல் போட்டு வேணும்னா கேட்டுக்குங்க’ – மல்லிகா சிறு ஓட்டமாகப் பின்பக்கம் ஓடினாள். ‘குழாயை மூடாம வந்துட்டேன்’ – குரல் நாக்கைக் கடித்துக்கொண்டு சிரித்தது.

மல்லிகாவுக்குக் கொஞ்சம் வடக்குப் பக்கம். இவ்வளவு காலம் ஆகியும் இந்த ஊர்ப் பேச்சு வரவில்லை. சமயா சமயத்துக்கு, சம்பந்தமே இல்லாமல் இப்படிச் சிரிப்பதும் அப்படித்தான்.

‘கதவைச் சும்மா சாத்திட்டுப் போனால் போதும். அம்மு கொஞ்ச நேரத்தில் விளையாடிட்டு வந்திரும்’ – சத்தத்தில் ஒரு காந்தம் இருந்தது. பைக்கை மறுபடி ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே போய், அப்படியே மல்லிகாவைக் கட்டிக்கொண்டால் என்ன என்று ராஜாங்கத்திற்குத் தோன்றியது. வெளிப்பக்க சன்னல் வழியாகப் பார்த்தால், வீடு முழுவதும் இருட்டு ஒரு புதுவித வெளிச்சத்தைக் கொடுத்து, இரண்டாவது அறையின் தரை பளபளப்பது தெரிந்தது.

மகேந்திரன் சார் வீட்டிலும் இப்படிப் பளபளப்பான தரை உண்டு. அது வாடகை வீடு அல்ல. அவருடைய பூர்வீக வீடுதான். எல்லா இடங்களிலும் ரெட் ஆக்சைட் போட்ட சிவப்புக் கட்டங்களாக இருக்கும். ஒரு தடுக்கு அளவுக்கு மொஸைக் கல்லில் தாமரைப் பூ வடிவம். அநேகமாக எந்த நேரத்தில் போனாலும் மகேந்திரன் சார் வீட்டுப் பட்டாசலில் குத்துவிளக்கு எரியாமல் இராது. விளக்குப் பூசை செய்துகொண்டே, ‘ சார். உள்ளே இருக்காங்க’ என்று சார் வீட்டம்மா சொல்வார்கள்.

ராஜாங்கமும் தேவராஜும் அந்த அம்மாவைப் பார்த்தபடியே உள்ளே போவார்கள். தேவராஜ் அந்த வயதிலேயே வேண்டாதது எல்லாம் பேசுவான். ‘ அமலா மாதிரி இருக்காங்க’ என்று சொன்னான். முகத்தை மட்டும் வைத்துச் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. அவன் அவ்வப்போது இப்படி எதையாவது காதுக்குள் சொல்லிவிடுவான். அதை வெளியிலேயும் சொல்லமுடியாது. மகேந்திரன் சாருக்குப் பிள்ளை இல்லை என்பது ராஜாங்கத்திற்கே தெரியும். அதை தேவராஜ்தான் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த அம்மா பெயர் பானுமதி என்பதை முதலில் தேவராஜ் தான் சொன்னான்.

மகேந்திரன் சார் மேஜையில் ஒரு புத்தகம் இருக்காது. இடது பக்கம் ஒரு கண்ணாடிக் கதவுகள் உள்ள அலமாரி. சார் நாற்காலியில் இருந்து எழுந்திருக்காமல் எட்டி எடுக்கிற மாதிரி, ஜாதிக்காய்ப் பெட்டிப் பலகையில் செய்த ஒரு அடுக்கு. உட்கார்ந்தால் நேரே தெரிகிறதாக ஒரு பாரதியார் படம். சில சமயம் சார் அதையே பார்த்துக்கொண்டு இருப்பார்.

‘சார் அதைப் பார்த்துக்கிட்டே லவ் சீன் பாட்டு எல்லாம் படிப்பார் தெரியுமா?’ – தானே கேட்டது போல தேவராஜ் சொல்வான். அது நிஜமா இல்லையா என்று யாரிடம் போய்க் கேட்கமுடியும்? மகேந்திரன் சார் இன்னொரு படத்தைக் காட்டி, ‘அது யார் தெரியுமா?’ என்று ராஜாங்கத்தைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அவனுக்குத் தெரியவில்லை. பாரதியார் மாதிரியும் இருக்கிறது. இல்லவும் இல்லை.

‘செல்லம்மா” – மகேந்திரன் சார் ஒரு நாடக பாணியில் சொன்னது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் கழித்து அதே படம் தினமணியிலோ தினமலரிலோ ஞாயிறு மலரில் வந்திருந்தது. ராஜாங்கம் அதை வரைந்தான். அதை தேவராஜ் எடுத்துக்கொண்டு போய் மகேந்திரன் சாரிடம், ‘ ராஜாங்கம் வரைஞ்சிருக்கான் சார்’ என்று காட்டினான். சார் அதையே பாத்தபடி இருந்தார். ராஜாங்கத்தைப் பக்கத்தில் வரச் சொல்லி உச்சி முகர்ந்தார். மேஜை டிராயரைத் திறந்து ஆளுக்கு ஒரு புது பென்சில் கொடுத்தார். பாட ஆரம்பித்தார். ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா , நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’ சார் முழுப்பாட்டையும் பாடிக்கொண்டே போனார்.

எங்கே இருந்து வந்தார்களோ தெரியவில்லை. ‘உருப்படியா ஏதாவது சொல்லிக் கொடுக்கப் பாருங்க. ஒழுங்கா இருக்கிறதுகளையும் கெடுத்துராதீங்க’ – நடையில் இருந்து கத்தலாகச் சொன்னவரிடம், ‘மெதுவாப் பேசு பானு’ என்று மகேந்திரன் சார் கெஞ்சுவது போலச் சொன்னார். ‘நீங்க போயிட்டு அப்புறமா வாங்க’ என்று சிரித்து எங்களை அனுப்பினார். ‘உனக்கு நல்லா ட்ராயிங் வருது ராஜாங்கம்’ என்று மறுபடியும் தட்டிக் கொடுத்தார். ‘நல்லா படிங்க என்ன?’ என்று தேவராஜ் பக்கம் பார்த்தார். வெளியே வந்து நடையில் கால் வைத்து இறங்குகையில், தேவராஜ், ‘டேய். சார். அழுகுறார் டா’ என்றான்.

‘அந்தப் படத்தைத் தூக்கித் தெருவில எறிஞ்சிருவேன். பாட்டு என்ன வேண்டிக் கிடக்கு, பாட்டு?’ – பின்னால் கேட்ட சத்தத்திற்குத் திரும்பிப் பாராமல் வந்துவிட்டார்கள் இரண்டு பேரும். ராஜாங்கம் அந்தப் பென்சிலை அப்புறம் சீவக் கூட இல்லை.

மகேந்திரன் சார் தான் பள்ளிக்கூடத்தில் வைத்து ராஜாங்கத்தை ஸ்டாஃப் ரூமுக்கு வரச் சொன்னார். ‘இவன் தான் நான் சொல்லுவம் லா, அந்தப் பையன்’ என்று ட்ராயிங்க் மாஸ்டரிடம் சொன்னார். அவர் இவனுக்கு ட்ராயிங் வகுப்பு எடுப்பதில்லை. எட்டு ஒன்பதுக்கு எடுக்கிறார்.

பக்கத்தில் கூப்பிட்டு, , ’எந்த க்ளாஸ் அய்யா’, ’வீடு எந்தத் தெருவிலே அய்யா’, ‘அப்பா என்ன செய்யுதாங்க அய்யா’ என்று எதற்கு எடுத்தாலும் அய்யா அய்யா என்று பேசுவது ராஜாங்கத்திற்குப் பிடித்திருந்தது. ராஜாங்கம் ரொம்ப மெதுவாகப் பதில் சொன்னான்.

ட்ராயிங் சார் கழுத்துப் பட்டையில் கைக்குட்டையை மடித்து வைத்திருந்தார். சிகரெட் வாசனை அடித்தது. அதோடு சென்ட் வாசம் கலந்திருந்தது. அது சென்ட் இல்லை என்று தேவராஜ் கட்டை விரலை வாய்க்கு உயர்த்திக் காட்டினான். அது மட்டும் இல்லை. மகேந்திரன் சாரும் அவரும் அந்த விஷயத்தில் ரொம்ப நெருக்கம் என்ற தகவலையும் சொன்னான். அவன் சொன்ன இன்னொன்று வேடிக்கையாக இருந்தது. மகேந்திரன் சார் வட்டக் கழுத்து ஜிப்பா போட்டிருக்கிறார் என்றால், மேற்படி விஷயத்துக்காக அவர் புறப்பட்டு விட்டார் என்று அர்த்தமாம். ராஜாங்கத்திற்கு அப்படி எல்லாம் தோன்றவே இல்லை. ஒன்று மட்டும் உண்மை. மகேந்திரன் சார் ஜிப்பா போடுகிறார். ஜிப்பா போட்டிருக்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறார். அவ்வளவுதான்.

ஒரு தடவை ராஜாங்கமும் தேவராஜும் ரத்னா டாக்கீஸில் மாட்டினி ஷோ பர்ர்த்துவிட்டு வந்துகொண்டு இருக்கிறார்கள். அரைப் பரீட்சை லீவுதான் அது. ஜிப்பா போட்டுக்கொண்டு மகேந்திரன் சார் எதிரே வருவதைப் பார்த்து ராஜாங்கத்திற்குப் பயமாக இருந்தது. தேவராஜ் பயப்படாமல், ‘வணக்கம் ஐயா’ என்றான். அவர் கேட்காமலேயே, ‘சினிமா பார்த்துட்டு வாரோம் சார்’ என்றான். அது மட்டும் அல்ல. ‘இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லா இருக்கு சார்’ என்று தேவராஜ் சொல்லும்போது, மகேந்திரன் சார், ‘இங்கே பாருய்யா’ என்று தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு உரக்கச் சிரித்தார். பக்கத்துப் பெட்டிக் கடையின் கீழே உட்கார்ந்து, பித்தளைத் தாம்பாளத்தில் வட்டமாக வெற்றிலையை அடுக்கிக்கொண்டு இருந்தவர் கூட அந்தச் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.;

தெப்பக் குளம் பக்கம் வந்திருப்பார்கள். ராஜாங்கத்தின் தோளை தேவராஜ் இடித்தான். ‘அங்கே பாரு. அங்கே பாரு’ என்று கீழே குனிந்து ரகசியமாகச் சொன்னான்.

சைக்கிளைத் தள்ளியபடி ட்ராயிங் சாரும் நெட்டையாக ஒரு பெண்ணும் வந்துகொண்டு இருந்தார்கள். ‘இது அவரு ஒய்ஃப். கல்லணை ஸ்கூல் டீச்சர்’ – தேவராஜ் சொன்னான்.

ராஜாங்கத்திற்கு அந்த டீச்சரை ரொம்பப் பிடித்திருந்தது. இன்றைக்குத் தான் முதலில் பார்க்கிறான். நிறையத் தடவை பார்த்திருக்கிறது போல இருந்தது. சேலையைக் கட்டியிருக்கிற விதமும் வளர்த்தியும் சதையும் ராஜாங்கத்திற்குப் பெருமாள் அத்தையை ஞாபகப் படுத்தியது. லீவுக்கு களக்காட்டு ஆச்சி வீட்டிற்குப் போகும்போது எல்லாம், பெருமாள் அத்தை ராஜாங்கத்தை முத்தம் கொஞ்சிக்கொண்டே இருப்பாள். ரொம்ப நாளைக்கு அப்புறம் கல்யாணம் ஆகி, கொஞ்சம் புத்திக்குச் சரியில்லாமல் இருந்து செத்துப் போனாள். இப்போது கூட தன்னை அறியாமல் ராஜாங்கத்தின் கைக்கு கன்னத்தில் இருக்கிற எச்சில் நுரையைத் துடைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

இந்த டீச்சரும் அச்சு அசல் அப்படியே இருக்கிறார்கள். ட்ராயிங் சாரை விட உயரமாகத் தெரிந்தது. தலை நிறைய மல்லிகைப் பூ. டீச்சரையே ராஜாங்கம் பார்த்துக்கொண்டு வருகையில் தேவராஜ், ‘டேய். இது மகேந்திரன் சார் சைக்கிள் டா’ என்கிறான். டீச்சர் இந்தப் பக்கம் பார்த்த மாதிரி இருந்தது. இரண்டு பேரில், ராஜாங்கத்தை மட்டும் துண்டாக விலக்கி, ‘இந்தா. இது உனக்கு’ என்று சிரித்ததாக ராஜாங்கம் நினைத்துக் கொண்டான்.

தேவராஜிடம் சொல்லவில்லை. மகேந்திரன் சாரிடம் தான் ட்ராயிங் சார் வீடு எங்கே இருக்கிறது என்று ராஜாங்கம் கேட்டுக்கொண்டான். அவர் சொன்னது படியே, குற்றால ரோடு போய், பர்வதராஜ சிங்க தெருப்பக்கம், தெரு முக்கில் இரண்டு மூன்று சுடலைமாட சாமி பூடம் இருந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் நின்றான். அழிக்கதவு ஓரத்தில் காலிங் பெல் கூட இருந்தது. ராஜாங்கம் ‘சார்’ என்றான்.

‘குருமணி, யாருண்ணு பாரு ப்பா’ – அது ட்ராயிங் சார் குரல்தான்.

மேலே கையை உயர்த்தி ஒரு தாழ்ப்பாளையும் நடுவில் ஒரு கொண்டியையும் அகற்றிக் கதவைத் திறந்த குருமணி டீச்சரிடம் அதே சிரிப்பு இருந்தது. வீட்டில் இருக்கும் போது கூடநேர்த்தியாகச் சேலை கட்டியிருந்தார்கள். ‘பூ வைக்கலையா?’ – ராஜாங்கம் மனதுக்குள் கேட்டுவிட்டான். உடல் கிடுகிடுவென்று நடுங்கியது. பெருமாள் அத்தை கொடுத்த முத்தம் கன்னத்தில் சுட்டது.

‘உங்க ஸ்டூடண்ட் போல’ – அவர் நடந்து போவதையே ராஜாங்கம் பார்த்துக்கொண்டு இருக்கையில், ‘உள்ளே வா அய்யா’ என்று சார் கரகரப்பான குரலில் கூப்பிட்டார். படம் வரைந்திருந்த தாள்களை நீட்டியதும் ‘உட்காரு அய்யா’ என்றார். ராஜாங்கம் குறுக்காகக் கிடந்த மர பெஞ்சில் உட்கார்ந்தான். சன்னலில் இருந்து வருகிற வெளிச்சம் நன்றாகப் படும்படி இருக்கிற சுவரில் இங்கேயும் அந்தப் படம் இருந்தது. பாரதியும் செல்லம்மாவும் இருக்கிற அதே படம். .அவனை அறியாமல் ராஜாங்கத்தின் தலை பாரதியாருடையது போல் லேசாகச் சாய்ந்தது. கைலி கட்டி, மேல் சட்டை போடாமல் ட்ராயிங் சார் உட்கார்ந்திருக்கிற இந்த நாற்காலியில் மகேந்திரன் சார் உட்கார்ந்து பாடுவது போல இருந்தது. பெஞ்சின் விளிம்பை விரல்களால் தடவியபடி ராஜாங்கம் தலையைக் குனிந்து கொண்டான்.

‘குருமணி. தம்பிக்கு ஏதாவது கொண்டு வா’ – ட்ராயிங் சார் சொல்லிய நேரமும் குருமணி டீச்சர் நிலைப்படி இடிக்காமல் கொஞ்சம் குனிந்து, தட்டும் கையுமாக வருவதும் சரியாக இருந்தது. .பெஞ்சில் தட்டை வைப்பதற்கு இடம் நிறைய இருந்ததால் அங்கே வைப்பார்கள் என்றுதான் ராஜாங்கம் நினைத்தான். குருமணி டீச்சர் அவன் கையில் கொடுத்து விட்டுச் சிரித்தார். சுண்டு விரலில் மட்டும் கத்தி மாதிரி நகம் வளர்த்து இருந்தது.

பிறகு எப்படியோ, ராஜாங்கம் மட்டும் குருமணி டீச்சர் வீட்டுக்குப் போனது தேவராஜிற்குத் தெரிந்துவிட்டது. ரொம்பத் திட்டினான். அப்புறம் வேறு மாதிரிப் பேச ஆரம்பித்து விட்டான். மகேந்திரன் சாரையும் குருமணி டீச்சரையும் பற்றி மோசமாகச் சொன்னான். அந்த சமயத்தில் அவன் கை சைகைகள் நன்றாக இல்லை. ‘நம்ம சார் நல்ல ஆளு டா. அந்தப் பொம்பிளை தான் அவரைக் கெடுத்துட்டுது. அது சுத்த மோசம்’ என்றான்.

குருமணி டீச்சர் என்று பெயர் சொல்வதைக் கூட விட்டுவிட்டு ‘அவள், இவள்’ என்றான். ‘கன்யாகுமரி லாட்ஜில் வைத்து இரண்டு பேரையும் போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிட்டுது. சார் ஒய்ஃப் வீட்டு ஆட்கள்தான் கையில காலில விழுந்து, வெளிக்குத் தெரியாம கூட்டிக் கிட்டு வந்தாங்க” என்றான். ஹைஸ்கூல் படிப்பு முடிகிற வரைக்கும் இப்படி ஏதாவது தேவராஜ் சொல்லிக்கொண்டேதான் இருந்தான். ராஜாங்கம் ஒன்றுமே சொல்லாமல் கேட்டுக் கொண்டே இருப்பான். அவனுக்கு மகேந்திரன் சாரைப் பார்த்தாலும் சந்தோஷமாக இருந்தது. ட்ராயிங் சாரைப் பார்த்தாலும் சந்தோஷமாக இருந்தது. குருமணி டீச்சரைப் பார்த்தாலும் அப்படித்தான்.

எது சரி, எது தப்பு என்று அப்போதும் தெரியவில்லை. ராஜாங்கத்திற்கு இப்போதும் தெரியவில்லை. மகேந்திரன் சார் செத்துப் போனதை விட குருமணி டீச்சர் முகமே ஞாபகம் வந்தது. இது வரைக்கும் இல்லாமல் ஒரு தண்ணீர்க்கரை பாசி வாசம் அந்த ஞாபகத்துடன் வருவது போல இருந்தது. ராஜாங்கம் சுற்றிப் பார்த்துக்கொண்டான்.

இன்றைக்குப் போல அன்றைக்கும் இருட்டித்தான் கிடந்தது. ‘அடிக்கிற வெயிலுக்கு ரெண்டு மழை ஓங்கிப் பெய்ஞ்சா நல்லது தான்’ என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்ட முழுப் பரீட்சை லீவு அது. ஏற்கனவே, விட்டுவிட்டு ராஜாங்கம் ட்ராயிங் சார் வீட்டுக்குப் போய் வந்துகொண்டு இருந்தான். அவர் வரையச் சொல்கிற கூம்பு, உருளை, செவ்வகம் எதையும் வரைய ராஜாங்கத்திற்குப் பிடிக்கவில்லை. போவான். உட்காருவான். குருமணி டீச்சர் நடமாடுவதைப் பார்ப்பான்.

அது ஒரு மத்தியானம்.. சிகரெட் குடித்து முடித்தவர், ராஜாங்கத்தைப் பார்த்து, ’உள்ளே போய் ஒரு செம்பில் தண்ணீ எடுத்துக்கிட்டு வா. அரவம் இல்லாமல் போ. டீச்சர் கண்ணு அசந்திருக்கும்’ என்று உலர்ந்த குரலில் சொன்னார். சார் கீழ் உதட்டில் ஒரு சிகரெட் துரும்பு ஒட்டியிருந்தது.

ராஜாங்கம் உள்ளே போனான். பக்கவாட்டு அறைகள் இல்லாத வீடு. இரண்டாவது அறையில் தரையில் ஜமுக்காளம் விரித்து குருமணி டீச்சர் படுத்து இருந்தார். ஒரு கவிழ்ந்த புத்தகம். ஒரு பனையோலை விசிறி. இம்மி கூட விலகாத சேலை. ஒரு செவிலிப் பெண் கட்டுவது போல, ஊதா பார்டர் வைத்த வெளிர் நிறம் அதற்கு. போகும் போதும் கனத்த பித்தளைச் செம்புத் தண்ணீருடன் திரும்பி வரும்போதும் பார்த்த குருமணி டீச்சர், பின்னால் ஒரு கட்டம் வரை திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து கொண்டு இருந்தார். இடையில் ஒரு மாதிரியான ஒரு சொப்பனம் கூட உண்டு. வேலைக்குப் போகும் வரைக்கும், டீச்சர் படுத்திருந்தது ஒரு ஓவியம் போலத் தெரிந்துகொண்டே தான் இருந்தது… கல்யாணத்திற்கு அப்புறம், ஏதோ ஒரு நெருக்கமான தருணத்தில், அவன் அருணா அம்மாவிடம் குருமணி டீச்சரைப் பற்றிச் சொல்லி இருக்கிறான். ‘கிறுக்கு’ என்று மட்டுமே மல்லிகா சொன்னாள்.

ராஜாங்கம் பைக்கைத் தெருவில் இறக்கும் போது வானத்தை ஏறிட்டுப் பார்த்தான். மழை வரலாம். கண்டிப்பாக மழை வரவேண்டும் என விரும்பினான். மழை வந்தால், ஒதுங்காமல் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே போய் குருமணி டீச்சரைப் பார்ப்பது என்பது பொருத்தமானது.

குருமணி டீச்சர் இங்கே தான் தியாகராஜ நகரில் எங்கேயோ இருக்கிறார் என்று தெரியும், குருமணி டீச்சர் பையன் ஹாக்கி விளையாடிவிட்டு வ,உ.சி மைதானம் பக்கம் வரும்போது தற்செயலாகப் பார்த்துப் பேசியிருக்கிறான். அவன் தான் எல்லா விபரமும் சொன்னான். ட்ராயிங் சார் இறந்துவிட்டதாகவும் அவனும் அம்மாவும் மட்டும் தியாகராஜ நகரில் இருப்பதாகவும் விலாசம் சொல்லி வரச் சொல்லியிருந்தான். விலாசம் தற்சமயம் அப்படித் துல்லியமாக நினைவு இல்லை .. ஆனால் குருமணி டீச்சர் வீட்டுக்கு எல்லாம் விலாசம் இருந்தால் தான் போக முடியுமா?

இங்கே ஒரு கடையில் முன்பு முடிவெட்டிக் கொள்வான். அந்தக் கடையையே காணோம். செந்தில் காப்பி கடையின் முன்னால் பைக்கை நிறுத்திய இரண்டாவது நிமிடம் வரை படம் போல விபரம் தந்துவிட்டார்கள். ராஜாங்கத்திற்கு அந்தக் காப்பிப் பொடி வாசனையை ரொம்பப் பிடித்திருந்தது.

தெற்கு வரிசையா வடக்கு வரிசையா என்று பார்த்து, ஏழாவது, எட்டாவது தெரு தாண்டி ஒன்பதாவது தெருவில், ரத்தப் பரிசோதனை நிலையத்திற்குப் பின் புறம், ஒரு தூசி படிந்த சிவப்பு மாருதி ஆம்னி நிற்கும் காலி மனைக்கு அடுத்த வீட்டில் பன்னீர் மரம் இருந்தது. மலை அரளி இருந்தது. கதவைத் திறந்து உள்ளே போனால் முன் புறத்தில் சிறு பறவைகள் கீச்சிட்டு இடம் மாறும் வலைக் கூண்டு.

மகேந்திரன் சார் ஞாபகம் வந்தது. ஒரே ஒரு அழுத்தில் விரலை எடுத்துக் கொண்டான். அழைப்பு மணி எல்லா அறைகளுக்கும் ஒரு பூனைக்குட்டி போலப் போய்க்கொண்டு இருந்தது. கழுத்தில் உதிர்ந்த இலையை அனிச்சையாக எடுத்துப் போட்டபடி, ராஜாங்கம் உள்ளேயே பார்த்து நின்றான்.

நிழல் முன்னால் வர, கண்ணாடி அணிந்தவராக குருமணி டீச்சர் வந்தார்கள். எத்தனை வருடங்களுக்கு அப்புறமும் குருமணி டீச்சர் குருமணி டீச்சராகவே இருந்தார்கள். ராஜாங்கம் வணக்கம் சொன்னான். கதவைத் திறக்கவில்லை.

‘தம்பி இல்லையே’ என்று சிரித்தார்கள்.

‘நான் உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கேன். சாரோட ஸ்டூடண்ட். ராஜாங்கம்.’

டீச்சர் ‘ராஜாங்கம்’ என்று வாய்க்குள் உச்சரித்தார்கள். ஞாபகம் வரவில்லை.

‘ராஜாங்கம். தேவராஜ் ஃப்ரண்ட். டவுண் வீட்டுக்கு வருவோமே’

டீச்சருக்கு ஏதோ ஒன்று ஞாபகம் வந்திருக்கிறது. அது தேவராஜ் என்று சொன்னதாலோ அவர்களுடைய பழைய வீட்டைக் குறிப்பிட்டதாலோ தெரியவில்லை. எங்கோ ஒரு இடத்தில் அவருடைய மனம் சமாதானம் அடைந்திருந்தது. கதவைத் திறக்க முடிவு செய்திருந்தார்கள்.

ராஜாங்கம் முதல் முதல் குருமணி டீச்சர் கதவு திறந்துவிட்ட இடத்திற்குப் போயிருந்தான். நிலைப் படிக்குக் குனிந்து, தட்டில் தின்பண்டம் கொண்டுவந்தது ஞாபகம் வந்தது. இப்போது கேட்க முடிகிற புடவை விசிறலின் சத்தம் அப்போது கேட்டிருக்கவில்லை. அதையும் விட, தண்ணீர் கொண்டு வர உள்ளே போகும் போதும், செம்புடன் திரும்பி வரும் போதும் பார்த்த குருமணி டீச்சர் நிலை அப்படியே முன்னால் வந்தது. தான் வரைந்திருக்க வேண்டிய, இன்னும் வரையாமல் போன ஒரே ஒரு சித்திரம் அதுதான் என்று தோன்றியது.

‘உங்களை நான் வரையணும்னு நினைச்சிருக்கேன் டீச்சர்’ – ராஜாங்கம் சொல்லும் போது, குருமணி டீச்சர் அந்தக் கணத்திலேயே தான் வரையப்பட்டு விட்டது போலச் சிரித்தார். சட்டமிடப் படாத ஒரு கித்தான் போல உலராத வண்னங்களுடன் எதிரே நின்றார்.

ராஜாங்கத்திற்கு என்ன ஆயிற்றோ?

‘உங்க கையைப் பிடிச்சுக்கிடலாமா டீச்சர்?’ என்றான். இப்படிக் கேட்கப்படக் காத்திருந்தது போல, ஒரு கையை அல்ல, இரண்டு கைகளையும் அவர் நீட்டினார். எழுந்து நடனம் இடப் போகிற ஒரு பாவனையில் ராஜாங்கம் அந்த இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு அப்படியே இருந்தான்.

அவனுடைய பார்வை ஒவ்வொரு சுவராக அந்தப் படத்தைத் தேடியது.

‘என்ன தேடுகிறாய்?’ சாருடைய புகைப் படமா?’ – குருமணி டீச்சர் முழுமையாக ராஜாங்கத்தின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.. அவர் எந்த நொடியிலும் அழக்கூடும் படியாக கண்களில் ஈரம் பூசியிருந்தது.

‘இல்லை டீச்சர். அந்த பாரதி படம்’. = ராஜாங்கம் சொல்லி முடிப்பதற்குள்

‘ஓ. அது என் படுக்கை அறையில் இருக்கிறது’ என்று குருமணி டீச்சர் சொன்னார்.

முன்னை விட, அவருடைய விரல்களில் இப்போது கூடுதலாக ஒரு வெது வெதுப்பு வந்திருந்தது.

 

%

 

 

%

 

 

 

அப்பல்லோ (Apollo) – சிமமாண்டா நகோஜி அடிச்சி (நைஜீரியா) – தமிழில் ச. ஆறுமுகம்

 

images (6)

 

 

 

 

 

 

 

 

(நைஜீரிய நாவலாசிரியர் மற்றும் சிறுகதை படைப்பாளரான சிமமாண்டா அடிச்சி, எனுகுவில் 15.09.1977ல் பிறந்தவர். ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு புதிய தலைமுறை வாசகர்களை ஈர்த்துக் கொண்டுவரும் இளம் ஆங்கிலமொழிப் படைப்பாளர் வரிசையில் மிக மிக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரது தந்தை ஜேம்ஸ் நவோயே அடிச்சி, நசுக்கா நகரிலுள்ள நைஜீரியாப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்; தாயார் கிரேஸ் இஃபியோமா அதே பல்கலைக் கழகத்தின் முதல் பெண் பதிவாளராகப் பணியாற்றியவர். இவர்களது குடும்பத்தினரின் முன்னோர் கிராமம் அனம்பரா மாநிலத்தின் அபாவிலுள்ளது. புகழ் பெற்ற பெண்ணியவாதியான சிமமாண்டா அடிச்சி தற்போது அமெரிக்காவிலும் நைஜீரியாவிலுமாக வசிக்கிறார்.

தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் சிறுகதை அப்பல்லோ என்ற தலைப்பிலேயே 13.04.2015 நியூயார்க்கர் ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. ஞானம், ஒளி, கவிதை, மருந்து, கால்நடை, வில்வித்தை, வருபொருள் உரைத்தல் அனைத்துக்கும் கடவுளான கிரேக்க அப்பல்லோவின் கண்கள் கதிரைப் போலச் சிவந்து விளங்குவதால் கானா, நைஜீரியா போன்ற நாடுகளில் கண்கள் சிவந்து எரியும் கண்வலியை அப்பல்லோ எனப் பெயரிட்டிருக்கிறார்கள் போலும்.)

*******

எனுகுவில் இருக்கும் எனது அப்பா, அம்மாவைப் பார்ப்பதற்காகப் பொறுப்புள்ள ஒரு மகனாக, தட்டுமுட்டுச் சாமான்கள் அடைந்து கிடக்கின்ற, பிற்பகலிலேயே இருண்டு விடுகின்ற, அவர்களது வீட்டிற்கு மாதம் இருமுறை போய்க்கொண்டிருந்தேன். பணி ஓய்வும் சும்மாவே உட்கார்ந்திருப்பதும் அவர்களை வீழ்த்திவிட்டது; ஆம், கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருந்தது. எண்பதுகளின் இறுதியை மெதுமெதுவே கடந்துகொண்டிருந்த அவர்கள் இருவருமே உடல் சிறுத்து, கருங்காலி மரத்தின் நிறத்தில் கறுத்து, நிமிர்ந்து நிற்காமல் முன்பக்கமாக வளைந்து குனியவே விரும்பும் முதுகுமாக இருந்தனர். நாளாக, நாளாகக் காலம், அவர்களது தனித்தன்மைகளை ஒன்றுக்குள் ஒன்றாகக் குருதியோடச் செய்து மழுங்கடித்துக் கொன்றுவிட, இருவரும் பெரும்பாலும் ஒன்றுபோலவே, தோன்றினர். வாசனையும் கூட இருவரிடமும் ஒன்று போலவே – ஒருவருக்கொருவர் கைமாற்றிக்கொண்ட விக்ஸ் வேபரப் பச்சை டப்பியிலிருந்து கவனமாக எடுத்து மூக்கு நுனிகளிலும், வலிக்கும் மூட்டுகளிலும் தேய்த்துக் கொண்ட மென்தால் வாசனை எப்போதும் இருந்தது.

நான் உள்ளே நுழையும்போது, அவர்கள் வெளி வராந்தாவில் அமர்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டோ, சாய்மெத்தைக்குள் அமிழ்ந்து அனிமல் பிளானெட் பார்த்துக்கொண்டோ நேரத்தைக் கொல்வதைத் தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்போது புதிதாக எதற்கெடுத்தாலும் ஆச்சரியப்படுகிற மனநிலை ஒன்றைக் கொண்டிருந்தார்கள். ஓநாய்களின் சூழ்ச்சியைக் கண்டு மலைத்தும், மனிதக்குரங்குகளின் அறிவுத்திறமையைக் கண்டு வியந்தும் ஒருவருக்கொருவர் ‘’அடேங்கப்பா! இதைப் பார்த்தியா?’’ என்று கேட்டுக்கொள்கின்றனர். நம்பமுடியாத கதைகளைக் கூட நம்மால் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கான அக்கறையுடன் கேட்டனர். எங்கள் முன்னோர்கள் கிராமமான `அபா`விலிருக்கும் எங்கள் பக்கத்து வீட்டு நோயாளி ஒருவர் உயிருள்ள வெட்டுக்கிளி ஒன்றை வாந்தியெடுத்ததாகவும், இது அவரது கெடுமதி உறவினர்கள், அவருக்கு நஞ்சினை ஊட்டியிருக்கிறார்கள் என்பதற்கு வலுவான ஆதாரம் என்றும் அம்மா ஒருமுறை என்னிடம் சொன்னாள், ‘’அந்த வெட்டுக்கிளியின் படத்தைக்கூட யாரோ காட்டினார்கள்.’’ என்றார், அப்பா. அவர்கள் எப்போதுமே ஒருவர் கதைக்கு அடுத்தவர் முட்டுக் கொடுப்பதாக இருந்தனர். தலைவர் ஒகேக்கேயின் வீட்டு இளம் வேலைக்காரப் பெண் மர்மமான முறையில் இறந்தபோது, அந்தத் தலைவர், அந்தப் பதின்வயதுச் சிறுமியைக் கொன்று, அவளது ஈரலைப் பணம்பண்ணும் சடங்கு1களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக, நகரத்தில் வலம் வந்த கதையை அப்பா என்னிடம் கூறியபோது, அம்மா சொன்னாள், ‘’அவர், அவளுடைய இதயத்தையும் கூட அதற்குப் பயன்படுத்திக்கொண்டதாக எல்லோரும் சொல்கிறார்கள்.’’

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பென்றால், இது போன்ற கதைகளின் முகத்திலேயே என் பெற்றோர் காறி உமிழ்ந்திருப்பார்கள். அரசியல் அறிவியல் பேராசிரியரான என் அம்மா, ‘’சுத்த முட்டாள்த்தனம்’’ எனக் கடுமையாகச் சாடியிருப்பார்; கல்வியியல் பேராசிரியரான என் அப்பாவோ, ‘’த்தூஉ, இதுவெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குக் கூடப் பேசத் தகுதியானதில்லை’’ என்றிருப்பார். அவர்களுக்கேயான பழைய தனித் தன்மைகளையெல்லாம் இழந்துவிட்டு, புனிதத் தீர்த்தம் குடித்ததாலேயே நீரிழிவு நோய் குணமாகிவிட்டதென்று கதை சொல்லும் சாதாரண நைஜீரியர்களைப் போல அவர்கள் மாறியிருப்பது எனக்குப் புதிராகவே இருக்கிறது.

ஆனாலும், அவர்கள் சொல்லும் கதைகளைப் பாதி கேட்டும் கேட்காமலும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தேன். அது ஒரு எளிமையான வெகுளித்தனம்; முதுமையில் ஒரு புதிய குழந்தைமை. கடந்துசெல்லும் காலத்தினூடாகவே அவர்களும் மெதுமெதுவாக வளர்ந்து முதுமைக்கு வந்துவிட்டனர். என்னைக் கண்டதும் அவர்கள் முகத்தில் ஒரு ஒளி தோன்றித் தெரியும். அது மட்டுமல்ல, ‘’எப்போது எங்களுக்குப் பேரக்குழந்தை பெற்றுத்தரப் போகிறாய்? ஒரு பெண்குழந்தையைக் கொண்டுவந்து எப்போது என் கையில் கொடுக்கப்போகிறாய்?’’ போன்ற அவர்களின் வறுத்தெடுக்கும் கேள்விகள் கூட இப்போதெல்லாம் என் நரம்புகளை முன்பு போல இறுக்கமடையச் செய்வதில்லை. ஒவ்வொரு ஞாயிறு பிற்பகலிலும், அரிசிச் சோறும் கறிச்சாறு2மாக ஒரு மதியப் பெருவிருந்துக்குப் பிறகு, அவர்களைப் பிரிந்து செல்கையில், இதுதான் அவர்கள் இருவரையும் ஒருசேர உயிரோடு, நான் கடைசியாகப் பார்ப்பதோ, அடுத்த முறை நான் இங்கு வருவதற்கு முன்னாலேயே, உடனே புறப்பட்டு வருமாறு தொலைபேசிச் செய்தி வந்துவிடுமோ எனப் பயந்திருக்கிறேன். பழங்கால ஏக்கங்களாக என்னுள் நிரம்பும் அந்த நினைவுகள், நான் ஹார்கோர்ட் துறைமுகத்தைச் சென்றடையும் வரை எனக்குள் சுழன்றுகொண்டே இருக்கும். எனக்கும் குடும்பமென்று ஒன்று இருந்தால், அவர்களின் நண்பர்களின் மகன் அல்லது மகள் குறைப்படுவதுபோல் கல்விக்கட்டணம் ஏறுவதுபற்றிக் குறைப்பட்டுக்கொண்டு, வழக்கமான ஒரு ஒழுங்குமுறையாக இப்படி இங்கு வந்துகொண்டிருப்பதை, நான் குறைத்துக் கொள்வேனோ, அது எனக்குத் தெரியவில்லை. இதில் மாற்றம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை.

நவம்பர் மாதத்தில் ஒருமுறை நான் இங்கு வந்திருந்த நேரத்தில், கிழக்குப்பகுதி முழுவதிலுமாக பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளையடிப்பது அதிகமாகிக்கொண்டு வருவதாக அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். திருடர்களுக்கும் தான் கிறித்துமஸ் செலவு இருக்கிறது. ஒனிட்சாவில் ஒரு கூட்டம், சில திருடர்களைப் பிடித்து, அடித்து, அவர்களின் ஆடைகளையெல்லாம் கிழித்து, அவர்களின் கழுத்துகளில் மாலையாக, பழைய டயர்களை மாட்டிப் பெட்ரோலைக் கொண்டுவா, தீப்பெட்டியைக் கொண்டுவா என்று பெரும் ஆர்ப்பாட்டம் செய்தபோது, காவல்படையினர் அங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் கொள்ளைக்காரர்களை மீட்டுச் செல்ல முடிந்ததை அம்மா என்னிடம் கதைகதையாக விவரித்தாள். அம்மா சிறிது நிறுத்திப் பெருமூச்சு வாங்கினாள்; அந்தக் கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கும் கடைசி மாயமந்திர வருணனைக்காக, நான் காத்திருந்தேன். அது, அவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று சேர்ந்ததும், அந்தக் கொள்ளையர்கள், கழுகுகளாக மாறிப் பறந்துசென்றுவிட்டனர் என்பதாகக்கூட இருக்கலாம்.

‘‘உனக்குத் தெரியுமா?’’ என்ற அம்மா தொடர்ந்தாள். ‘’ ஆயுதம் வைத்திருந்த அந்தப் பயங்கரக் கொள்ளைக்காரர்களில் ஒருவன், ராஃபேல், உண்மையில் சொல்லப்போனால், அவன்தான் அந்தக் கூட்டத்துக்கே தலைவனாம்! அவன் சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில், வேலைக்காரப் பையனாக இருந்தான். உனக்கு அவனை நினைவிருக்காதென்று நினைக்கிறேன்.’’

நான் அம்மாவையே உறுத்து நோக்கினேன். ’’ராஃபேல்?’’

‘‘அவன் இப்படியானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவன் அப்போதே சரியாக இல்லைதான்.’’ என்றார், அப்பா.

கதை சொல்லுதலின் இடைவெளிப் பனிமூட்டமாக என் பெற்றோர் நிறுத்திய மவுனத்தில் மூழ்கியிருந்த நான், நினைவுகளின் கூர்முனைத் தாக்குதலில் தத்தளித்துக்கொண்டிருந்தேன்.

அம்மா மீண்டும் சொன்னாள், ‘‘உனக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. அப்போது நீ நிரம்பவும் சின்னப்பிள்ளை, அதிலும் அவனைப்போலப் பல பையன்கள் இருந்திருக்கிறார்களே!’’

ஆனால், எனக்கு நினைவிருக்கிறது. மற்றதெல்லாம் இல்லையென்றாலும் ராஃபேலை நன்கு நினைவிருக்கிறது.

வேலைக்காரப்பையனாக, ராஃபேல் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியபோது முதலில் எதுவுமே மாறிவிடவில்லை. அவன் எல்லோரையும் போல, பக்கத்து கிராமத்திலிருந்து வந்த சாதாரணத் தோற்றமளிக்கும் ஒரு பதின்வயது சிறுவனாகத்தான் தோன்றினான். அவனுக்கு முன்பிருந்த வேலைக்காரப்பையன் ஐஜினஸ் என் அம்மாவை அவமதித்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். ஐஜினசுக்கு முன்பிருந்த ஜான், அவன் வீட்டுக்கு அனுப்பப்படவில்லையென்பது எனக்கு நினைவிருக்கிறது. அவன் பாத்திரம் கழுவும்போது ஒரு சாப்பாட்டுத் தட்டினை உடைத்துவிட்டான்; அம்மாவின் கோபத்துக்குப் பயந்து, அவள் வேலையிலிருந்து வருவதற்கு முன்பாக, அவனாகவே மூட்டை கட்டிக்கொண்டு, ஓடிப் போய்விட்டான். என் அம்மாவை வெறுத்த, எல்லா வேலைக்காரப் பையன்களும் என்னையும் வேண்டா வெறுப்போடேயே நடத்தினர். ‘’தயவுசெய்து வந்து சாப்பிட்டுவிட்டுப் போ, முதலாளியம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாது.’’ என்பார்கள். அம்மா எப்போதுமே அவர்களை, வேலையில் மந்தமாக இருப்பதாக, முட்டாள்த் தனமாக நடந்துகொள்வதாக, செவிடர்கள் எனத் திட்டித் தீர்ப்பாள்; அவளது பெருவிரல் அழைப்புமணியின் சிவப்புப் பொத்தானை அழுத்தி, எழுகின்ற வீட்டை உலுக்கும் மணிச் சப்தம் கூட அவர்கள் மீதான கூச்சல் போல, `விர்`ரென்று காதைத் துளைத்து மரத்துப்போகச் செய்வதாக இருக்கும். அப்பாவுக்கு எதுவும் சேர்க்காமல் வெறுமனாகவும் அம்மாவுக்கு வெங்காயம் சேர்த்தும் முட்டைகளை விதவிதமாகப் பொரிப்பதை, தூசி தட்டித் துடைத்த ருஷ்யப் பொம்மைகளை அதே அலமாரியில் அதே இடத்தில் வைப்பதை அல்லது எனது பள்ளிச் சீருடைகளைத் ஒழுங்காக, சரியாகத் தேய்த்து வைப்பதை எப்போதும் நினைவுவைத்துக் கொள்வதென்பது, அவர்களுக்கு எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும்?

நான், எனது பெற்றோருக்கு, ஒரே பிள்ளை; பிற்காலத்தில் பிறந்த செல்லக் குழந்தை. ‘’நான் உன்னைக் கருக்கொண்ட போது, மாதாந்திரத் தீட்டு என்றே நினைத்துவிட்டேன்.’’ என்றாள் ஒருநாள், அம்மா, என்னிடம். எனக்கு அப்போது எட்டு வயதுதான் இருக்கும்; `மாதாந்திரத் தீட்டு` என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அப்பாவைப் போலவே அம்மாவும் வெடுக்கெனப் பேசுபவளாக, இருந்தாள்; அவர்கள், பிறர் சொல்வதை உடனுக்குடன் புறந்தள்ளிவிடும் இயல்பினராகவே இருந்தனர். அவர்கள் இபதான் பல்கலைக் கழகத்தில் சந்தித்து, இருவரது குடும்ப விருப்பத்துக்கும் எதிராக – அதிகம் படித்தவளென அவர் நினைப்பு, நல்ல வசதியான மாப்பிள்ளை என்பது அவள் தேர்வு – திருமணம் செய்துகொண்டவர்கள்; வாழ்க்கை முழுவதையும், யார் அதிகப் புத்தகம் எழுதி வெளியிடுவது, யார் பூப்பந்தாட்டத்தில் ஜெயிப்பது? வாக்குவாதத்தில் கடைசியாக வெல்வது யாரென ஒருவரோடு ஒருவர் கடுமையாக, உளப்பூர்வமாகப் போட்டி போட்டுக்கொண்டு கழித்தவர்கள். அவர்கள் மாலை நேரங்களில், வீட்டின் முன்னறையில் உட்காராமல், நின்றுகொண்டு, சிலநேரங்களில் மெதுவான உலவுதலாக முன்னும் பின்னுமாக நடந்துகொண்டு, ஏதோ புதியதொரு கருத்தினைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல செய்தித் தாள்களிலிருந்தோ, இதழ்களிலிருந்தோ, ஒருவர் மற்றவருக்கு உரக்க வாசித்துக் காட்டிக்கொண்டிருப்பார்கள், அவர்கள் மேட்டியஸ் ரோஸ்3 அருந்தினர்; அந்த இருண்டநிற, அழகிய புட்டி எப்போதும் அவர்கள் அருகே மேசையில் இருந்து கொண்டேயிருந்தது; அவர்கள் அருந்தி முடித்த சிவப்பு நிற எச்சத்துடன் மங்கலாகத் தெரியும் கண்ணாடிக் கோப்பைகளை மேசையின் மீது அப்படி அப்படியே விட்டுச் சென்றனர். எனது குழந்தைப்பருவ நாட்கள் முழுவதுமே, அவர்கள் என்னோடு பேசும் தருணங்களில், உடனடியாகப் பதில்பேசத் தெரியாமல் விழித்துநின்று வருந்திய நாட்களே அதிகம்.

எனது மற்றொரு கவலை, புத்தகங்கள் மீது நான் அதிகம் ஈர்ப்புகொள்ள முடியாமலிருந்தது பற்றித்தான். வாசிப்பு எனது பெற்றோருக்கு ஏற்படுத்திய கொந்தளிப்பினை அல்லது அவர்களை நேரம் போவதே தெரியாமல் அமிழ்ந்துகிடக்கும் வெற்று உயிரிகளாக மாற்றியதைப் போல, நான் எப்போது வருகிறேன், எப்போது போகிறேன் என்பதைக்கூடக் கவனிக்காத ஒரு நிலையை, எனக்கு அளிக்கவில்லை. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், உணவின் நடுவே வந்துவிழும்– `பிப்4` பற்றி நீ என்ன நினைக்கிறாய்? ஜியுலு5 செய்தது சரிதானா? போன்ற எதிர்பாராத கேள்விகளைச் சமாளிப்பதற்காகவுமே புத்தகங்களை வாசித்தேன். பலநேரங்களில் எங்கள் வீட்டுக்குள்ளேயே நான், வேண்டாத விருந்தாளி போல, தலைகாட்டியிருக்கக்கூடாத அல்லது பொருத்தமற்ற ஒரு நபரோ என உணர்ந்திருக்கிறேன். எனது படுக்கை அறையில் வழிந்து நிறையும் புத்தக அடுக்குகளை வரிசையாக நிறுத்தி, அவற்றுக்குள் பொருந்திச் சேராதவற்றை நடைபாதையிலுமாக அடுக்கி, நான் இருக்கவேண்டிய நிலையில் இல்லையென்பதுபோல, எனது இருப்பு நிலைப்படுத்தப்படாத ஒன்றென எனக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தனர். ஒரு புத்தகத்தைப் பற்றி நான் பேசியபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட பார்வையிலிருந்து அவர்கள் ஏமாற்றமடைந்திருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனாலும் நான் சொன்னதில் தவறில்லையென்றும் ஆனால், அது மிகச் சாதாரணமானதென்றும், அவர்களது அசல் முத்திரை விளங்கித் தோன்றுவதாக இல்லையென்றும் எனக்குத் தெரிந்தது. அவர்களோடு அலுவலர் மகிழ் மன்றத்துக்குச் செல்வதென்பது மிகப்பெரும் சித்திரவதையாக இருந்தது. பூப்பந்து என்னைச் சலிப்படையச் செய்வதாக, இறகுப்பந்து, முடிவற்ற ஒன்றாக, அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர் முழுவதும் முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியிருக்க வேண்டுமென்பது போல எனக்குத் தோன்றியது.

நான் விரும்பியது குங்ஃபூ. `என்டர் த டிராகன்` படத்தைப் பலமுறை பார்த்தேன். அதன் ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம். நான் புரூஸ் லீயாக விழித்தெழ வேண்டுமென விரும்பினேன். எனது கற்பனைக் குடும்பத்தைக் கொன்ற, கற்பனை எதிரிகளை அடித்துத் துவைப்பதாகக் காற்றில் உதைப்பதும் விளாசுவதுமாக இருப்பேன். என்னுடைய மெத்தையைத் தரையில் இழுத்துப் போட்டுப் பரப்பி, இரண்டு கனத்த புத்தகங்கள் (வழக்கமாகக் கனத்த அட்டை கொண்ட கறுப்பு அழகு6 மற்றும் தண்ணீர்க் குழந்தைகள்7 புத்தகங்களாக இருக்கும்) மீது நின்று, புரூஸ் லீயைப் போல `ஹாஆஆஆ` எனக் கத்திக்கொண்டு, மெத்தையில் குதிப்பேன். ஒருநாள் குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ராஃபேல், வாசலில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்; திட்டுவானோ என நினைத்தேன்; காலையில் தான் எனது படுக்கையைத் தட்டி, உதறிச் சீர்படுத்தியிருந்தான்; இப்போது அறை அமளியாகிக் கிடக்கிறது. ஆனால், அவனோ சிரித்து, அவனுடைய மார்பைத் தொட்டு, அதே விரலை, இரத்தத்தைச் சுவைப்பதுபோல வாய்க்குள் வைத்தான். எனக்குப் பிடித்தமான காட்சி. எதிர்பாராத மகிழ்ச்சியின் இன்ப அதிர்ச்சியில் நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘’நான் வேலைபார்த்த ஒரு வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.’’ என்றான், ராஃபேல்.

‘’இங்கே பார்.’’

அவன் சிறிது ஊன்றி நின்று, காலை நேராக நீட்டி, உயர்த்தி, மேலாக எழும்பிக் குதித்து, அவனது மொத்த உடம்புமே திண்ணென ஒரு அழகாக, உதைத்தான். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது; அதுவரையிலும் மற்றொருவருக்குள் என்னை அடையாளங் காண்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லை.

ராஃபேலும் நானும் என்வீட்டுப் பின்பக்கத்தில் உயரமான காங்கிரீட் கழிவுநீர்த் தொட்டி மீதிருந்து புல்தரைக்குக் குதித்துக் குங்ஃபூ பழகிக்கொண்டிருந்தோம். அடிவயிற்றை எக்கிக் கால்களை நீட்டி நிமிர்த்து, விரல்களைத் துல்லியமாக விரித்து விரைக்குமாறு ராஃபேல் எனக்குச் சொன்னான்; எப்படி மூச்சடக்கி, எப்படி மூச்சுவிடவேண்டுமென்று கற்றுக்கொடுத்தான். எனது மூடிய அறைக்குள்ளான முந்தைய முயற்சிகள் அனைத்தும் கருவிலேயே இறந்து பிறந்தனவாக நான் உணர்ந்தேன். இப்போது, வெளியே ராஃபேலுடன், என் கைகளால் காற்றை வெட்டிக் கிழித்தபோது, எனது பயிற்சி உண்மையானதாக, கீழேயிருந்த மெல்லிய புற்களிலிருந்து, மேலே உயர்ந்த வானம் முதல் எல்லைகளேயற்ற இந்த விண்வெளியையும் கூட என்னால் வெற்றிகொள்ளமுடியும் என்பதை உணரவைப்பதாக இருந்தது. இதுவேதான் உண்மையில் நிகழ்ந்தது. ஒருநாள் நானும் கறுப்பு பெல்ட் வாங்கிவிட முடியும். சமையலறை வாசலுக்கு வெளியே உயரமாக ஒரு திறந்த மேடைத் திண்டும் அதிலிருந்து இறங்க ஆறு படிகளும் இருந்தன. அந்த மேடையிலிருந்து அதன் ஆறு படிகளையும் தாண்டிப் பறந்து குதித்து, பறக்கும் நிலையிலேயே உதைக்கும் ஒரு முறையினைச் செய்து பார்க்க விரும்பினேன். ‘’வேண்டாம், அந்த மேடை மிகவும் உயரமானது’’ என்றான் ராஃபேல்.

வார விடுமுறை நாட்களில், அம்மாவும் அப்பாவும் என்னை விட்டுவிட்டு, அலுவலர் மகிழ் மன்றத்துக்குச் சென்றுவிட்டால், நானும் ராஃபேலும் புரூஸ் லீ காணொலிப்படங்களை, ‘’பார், பார், அதை நன்றாகக் கவனித்துப் பார்’’ என ராஃபேல், சுட்டிக்காட்டிப் பரபரத்துச் சொல்லச் சொல்லப் பார்த்துக்கொண்டேயிருப்போம். அந்தப் படங்களை அவனது கண்கொண்டு பார்க்கும்போது, அவை புதிதாகத் தெரிந்தன. நான் வெறுமனே திறமையானவை என்று நினைத்திருந்த சில அசைவுகள், அவன் `கவனித்துப் பார்` என்று சொன்னபோது ஒளிமிக்கதாக மிளிர்ந்தன. உண்மையில் எது முக்கியமானதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவனுடைய அறிவுநுட்பம் அவனது மேனி முழுவதிலுமே எளிதாகப் படர்ந்திருந்தது. சங்கிலிக்கட்டை8 ஆயுதத்தை புரூஸ் லீ சுழற்றும் காட்சிகளை, காணொலி நாடாவைப் பின்பக்கமாகச் சுழலச் செய்து, மீண்டும் ஓடவிட்டுக் கண்கொட்டாமல் பார்த்து, அந்த மரக்கட்டை மற்றும் உலோக ஆயுதம் பலமாகத் தாக்குகின்ற தன்மையை, அவன் உள்வாங்கிக்கொண்டிருப்பான்.

‘’எனக்கும் ஒரு சங்கிலிக்கட்டை வைத்துக்கொள்ளவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது,’’ என்றேன், நான்.

‘’அதைப் பயன்படுத்துவது மிகக் கடினம்,’’ என ராஃபேல் உறுதியாகச் சொன்னான். அப்படியொன்றின் மீது ஆசைப்பட்டதற்காக நான் சிறிது வருத்தப்பட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.

அதற்குப் பின்னர், சில நாட்களிலேயே, ஒருநாள் நான் பள்ளியிலிருந்து திரும்பியபோது, ‘’இங்கே பார்’’ என்றான், ராஃபேல். நிலையடுக்கிலிருந்து சங்கிலிக்கட்டை ஒன்றை – பழைய தரை துடைக்கும் கோலிலிருந்து வெட்டியெடுத்த இரண்டு மரக்கட்டைகளைச் சீவித் தேய்த்து, இழைத்துப் பளபளப்பாக்கி, இரண்டையும் ஒரு கம்பிச் சுருளால் பிணைத்திருந்ததை, வெளியே எடுத்தான். வீட்டு வேலையெல்லாம் செய்து முடித்துவிட்டு, ஒழிந்த நேரத்தில் குறைந்தது ஒரு வாரமாகவாவது அதைச் செய்திருக்கவேண்டும். அதை எப்படிச் சுழற்றுவதென்று எனக்குச் செய்து காட்டினான். அவனது அங்க அசைவுகள் புரூஸ் லீயைப் போலில்லாமல் அலங்கோலமாகத் தோன்றின. சங்கிலிக்கட்டையை எடுத்துச் சுழற்றினேன், ஆனால், அது நேராக எனது மார்பில் தாக்கிவிட்டுத்தான் நின்றது. ராஃபேல் சிரித்தான். ‘’கையில் எடுத்ததும் அப்படியே ஆட்டம் ஆடிவிடலாமென நினைத்தாயா? அதற்கெல்லாம் நிரம்பநாள் பழகவேண்டும்.’’ என்றான், அவன்.

பள்ளியில், வகுப்புகளில் உட்கார்ந்திருக்கும்போது சங்கிலிக் கட்டையின் வழவழப்பான மென்மையை என் உள்ளங்கைகளில் உணர்ந்தேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின், ராஃபேலுடன்தான் எனது உண்மையான வாழ்க்கை தொடங்கியது. நானும் ராஃபேலும் எவ்வளவுக்கு நெருக்கமாக இருந்தோம் என்பதை என் அப்பா,அம்மா கவனிக்கவில்லை. நான் வீட்டுக்கு வெளிப்பக்கமாக, விளையாடத் தொடங்கியிருந்தேன் என்பதாகவும், பின்புறத் தோட்டத்தில் ராஃபேல் களையெடுத்துக்கொண்டோ, தண்ணீர்த் தொட்டியில் பாத்திரம் கழுவிக்கொண்டோ இருந்ததாகவுந்தான் நினைத்திருந்தனர்.

ஒருநாள் பிற்பகலில், கோழி ஒன்றை உரித்து முடித்திருந்த ராஃபேல், புல்வெளியில் தனியாகக் குங்ஃபூ பழகிக்கொண்டிருந்த என்னை இடைமறித்தான். ‘’ம், அடி!’’ என்றான். இருவருக்குமான குங்ஃபூ தொடங்கியது. அவன் வெறுங்கைகளோடு; நான் எனது புதிய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு. அவன் என்னைக் கடுமையாக நெருக்கித் தள்ளினான். சங்கிலிக்கட்டையின் ஒரு முனை அவனது முழங்கையில் தாக்கியதும், வியப்படைந்ததாகத் தோன்றிய அவன், அதைச் சுழற்றும் திறமை எனக்கில்லையென்ற நினைப்பினை விட்டுவிட்டது போல் திருப்தியைக் காட்டினான். நான் மீண்டும் மீண்டுமாகச் சுழற்றினேன். அவன் விளையாட்டாக, தாக்குவதுபோல் ஏமாற்றிப் பொய்யாக உதைத்தான். நேரம் போனதே தெரியவில்லை. முடிவில் இரண்டு பேரும் மூச்சு வாங்கி, இளைத்துக்கொண்டே சிரித்தோம்.; அந்தப் பிற்பகல் மாலையில் அவன் அணிந்திருந்த அரைக்காற்சட்டை அவனுக்கு எவ்வளவு சிறியதாக இருந்ததென்றும், அவனது திண் தசைகள் கால்களோடு எப்படிக் கயிறு, கயிறாக முறுக்கிக் கிடந்தன என்பதும் எனக்கு இப்போதும் நன்கு நினைவிருக்கிறது

வார இறுதி விடுமுறை நாட்களில் நான் பெற்றோருடன் தான் மதிய உணவு சாப்பிட்டேன். நான் எப்போதுமே அவர்களுடைய தேர்வுக்கேள்விகள் என்னை நோக்கித் திருப்பும் முன் தப்பித்துவிடும் கனவுகளோடு, வேகவேகமாக உண்பேன். ஒருநாள் மதிய உணவின்போது, ராஃபேல் வேகவைத்த சேனைக்கிழங்கின் வெள்ளை வட்டுகளைக் கீரைப்படுகையின் மேலாக அடுக்கிப் பரிமாறினான்; பின்னர் கனசதுரங்களாக வெட்டிய அன்னாசியும் பப்பாளியும்.

‘‘காய்கறிகள் கல்,கல்லாக இருக்கின்றன.’’ என்றாள், அம்மா. ‘’நாங்கள் என்ன, புல் மேய்கிற ஆடுகளா?’’ அம்மா அவனை ஏறிட்டு நோக்கிவிட்டுக் கேட்டாள். ‘’உன் கண்ணில் என்னடா, கோளாறு?’’

சமையலறையில் ஏதாவது மோசமான வாடையை அவள் கண்டுவிட்டால், அவள் கேட்பாள், ‘’உங்கள் மூக்கில் என்ன இழவு பெரிதாக அடைத்துக்கொண்டிருக்கிறது?’’ இது, அதைப்போன்ற, வழக்கமான, குத்திக் காயப்படுத்தும் சாடல் இல்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு ஒரு நிமிடம் பிடித்தது. ராஃபேலின் கண்களின் வெண்திரைகள் சிவந்து தோன்றின. வழக்கமற்ற, வேதனைமிக்க சிவப்பு. பூச்சி ஏதோ கண்ணில் விழுந்துவிட்டதென அவன் முனகினான்.

‘’இது அப்பல்லோ மாதிரி இருக்கிறது,’’ என்றார், அப்பா.

அம்மா, நாற்காலியைப் பின்பக்கமாகத் தள்ளிவிட்டு, அவன் முகத்தைக் கூர்ந்து பாத்தாள். ‘’ஆமா! அதேதான். உன் அறைக்குப் போய்விடு. அங்கேயே இரு.’’ என்றாள்.

தட்டுகளை எடுத்துவிட்டுச் சுத்தம் செய்துவிடலாமேயென, ராஃபேல் சிறிது தயங்கினான்

‘‘போய்த் தொலை!’’ ‘’அந்த இழவை எங்களுக்கெல்லாம் கொடுத்துத் தொலைக்கும் முன் போய்ச்சேர்.’’ என்றார், அப்பா.

குழம்பிப் போனவனாகத் தோன்றிய ராஃபேல், மேசையிலிருந்தும் சிறிது விலகினான். அம்மா, அவனை மீண்டும் அழைத்துக் கேட்டாள், ‘’ஏய், இங்கே வா, இதற்கு முன்னால் இது போல வந்திருக்கிறதா?’’

‘’இல்லை, அம்மை.’’

‘’இது, கன்ஜங்க்டிவா9, அதுதான் உன் கண்ணுக்கு மேலாக மூடிப் படர்ந்திருக்கும் படலத்தில் ஏற்பட்டுள்ள தொற்று.’’ என்றாள், அம்மா. அவளது இக்போ10 வார்த்தைகளின் நடுவே ` கன்ஜங்க்டிவா` அழுத்தமாகவும் அபாயமாகவும் ஒலித்தது. அம்மா தொடர்ந்தாள், ‘’உனக்காக மருந்து வாங்கப் போகிறோம். தினமும் மூன்று முறை அதைக் கண்களில் போட்டுக்கொண்டு, உன் அறையிலேயே அடைந்துகொள். முழுவதும் குணமாகும் வரை சமைக்காதே, வெளியேயும் வராதே.’’ பின்னர் என்னிடம் திரும்பி, ‘’ஒகென்வா11, அவன் அருகில் போய்விடாதே, அப்பல்லோ மிக மோசமாகத் தொட்டதும் தொற்றிக்கொள்ளக் கூடியது.’’ என்றாள். பேருக்குச் சொல்வதான அம்மாவின் தொனியிலிருந்து நான், ராஃபேலின் அருகில் போவதற்கு எந்த அவசியமும் இருப்பதாக அவள் கணித்திருக்கவில்லையென்பது தெளிவாகவே தெரிந்தது.

பின்னர், அப்பாவும் அம்மாவும் நகருக்குள்ளிருந்த மருந்தகத்துக்குக் காரில் போய், கண்ணுக்கான ஒரு புட்டி சொட்டு மருந்தோடு வந்தனர். அப்பா அதை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் வேலைக்காரப் பையன்களுக்கென இருந்த குடியிருப்பில் ராஃபேலின் அறைக்கு ஏதோ வேண்டாவெறுப்போடு போருக்குச் செல்பவரைப் போலப் போனார்.

அன்று மாலை, என் பெற்றோருடன் ஓபல்லோ சாலை13யில் இரவு விருந்துக்காக `அகாரா12 (வடை) வாங்கச் சென்றேன்; நாங்கள் திரும்பி வந்தபோது, முன்கதவைத் திறக்கவும், வசிப்பறையின் திரைகளை இழுத்து மூடவும், விளக்குகளை அணைக்கவும் ராஃபேல் இல்லாதது எப்படியோ இருந்தது. அமைதியான சமையலறையில் எங்கள் வீடு, அதன் வாழ்க்கையை இழந்து விட்டது போலத் தோன்றியது. அப்பாவும் அம்மாவும் அவர்களுக்குள்ளாகவே மூழ்கிப்போனதும், நான் பையன்களின் குடியிருப்புக்குப் போய், ராஃபேலின் அறைக்கதவைத் தட்டினேன். அது, சிறிதாகத் திறந்தேயிருந்தது. அவன் மல்லாந்து படுத்திருந்தான். அவனது சிறிய படுக்கை, சுவரினை ஒட்டி நெருக்கித் தள்ளப்பட்டிருந்தது. நான் உள்ளே வந்ததும், திரும்பி வியந்தவன் எழுந்துவிட முயற்சித்தான். அவனுடைய அறைக்குள் இதற்கு முன் நான் போனதேயில்லை. கூரையில் தொங்கிய விளக்கின் வெளிச்சம் மங்கலான நிழல்களைத் தோற்றுவித்திருந்தது.

‘’என்ன, இது?’’ அவன் கேட்டான்.

‘‘ஒன்றுமில்லை. எப்படியிருக்கிறாயென்று பார்க்க வந்தேன்.’’

அவன் தோள்களைக் குலுக்கி, மீண்டும் படுக்கையில் படுத்தான். ‘’இது எப்படி வந்து சேர்ந்ததென்று எனக்குத் தெரியாது. என் பக்கத்தில் வராதே.’’ என்றான்.

ஆனால், நான் அவனை நெருங்கிச் சென்றேன்.

‘‘தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருக்கும்போது எனக்கும் அப்பல்லோ வந்திருந்தது.’’ என்றேன். ‘’சீக்கிரம் போய்விடும், கவலைப்படாதே, இப்போது, இரவுக்குச் சொட்டு மருந்து போட்டாயா?’’

அவன் தோள்களை மட்டும் குலுக்கிவிட்டு, எதுவுமே கூறவில்லை. சொட்டு மருந்துப் புட்டி திறக்கப்படாமலேயே மேசை மேல் இருந்தது.

‘‘இன்னும் போடவே ஆரம்பிக்கவில்லையா?’’ எனக் கேட்டேன், நான்.

‘‘இல்லை.’’

‘’ஏன்?’’

அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ‘’எனக்குப் போடத் தெரியாது. என்னால் முடியவில்லை.’’

ஒரு வான்கோழியைக் கிழித்துக் குடலெடுக்கிற ராஃபேலுக்கு, ஒரு மூட்டை அரிசியை ஒற்றை ஆளாகத் தூக்கிவிடுகிற ராஃபேலுக்குக் கண்ணில் சொட்டு மருந்து இட முடியவில்லை. முதலில் நான் மலைத்து வியப்புற்றேன்; பின்னர் வேடிக்கையாகத் தோன்றியது; அதற்கும் பின்னர் தான் இரக்கமாக உணர்ந்தேன். அவனது அறையைச் சுற்றிப் பார்த்தேன்; அது எவ்வளவு வெறுமையாக இருந்ததென்று அதிர்ச்சியாக இருந்தது. சுவரோடு நெருக்கிப் போடப்பட்டிருந்த ஒரு படுக்கை, நீண்டு ஒடுங்கிய ஒரு மேசை, மூலையில் இருந்த ஒரு சாம்பல் நிறத் தகரப்பெட்டி, அதற்குள் தான் அவனது அனைத்து உடைமைகளும் இருக்குமென்று யூகித்துக் கொண்டேன்.

‘‘உன் கண்ணில் நான் மருந்து போட்டுவிடுகிறேன்.’’ என்று சொல்லிப் புட்டியை எடுத்து அதன் மூடியைத் திருகித் திறந்தேன்.

‘‘என் பக்கத்தில் வராதே,’’ என மீண்டும், மீண்டும் சொன்னான், அவன்.

நான் ஏற்கெனவேயே அவனை நெருங்கிவிட்டிருந்தேன். அவன் மீது குனிந்தேன். அவன் கட்டுப்படுத்த முடியாத பயத்தில் விழிக்கத் தொடங்கினான்.

‘’குங்ஃபூ போல மூச்சு எடு,’’ என்றேன், நான்.

அவன் முகத்தைத் தொட்டு, இடது கண்ணின் கீழ்ப்பக்க இமையை மெதுவாக இழுத்து, சொட்டு மருந்தினை அவன் கண்ணுக்குள் இட்டேன். அடுத்த இமையை நான் மேலும் அழுத்தமாகப் பிடித்திழுக்கவேண்டியிருந்தது; அவ்வளவுக்கு இறுக மூடியிருந்தான், அவன்.

‘‘அவ்வளவுதான்,’’ என்றேன், நான். ‘’மன்னித்துக்கொள்’’ என்றான், அவன்.

அவன் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான்; அவனது முகத்தில் ஏதோ ஒன்று அற்புதமாகச் சுடர்விட்டது. அதற்கு முன்புவரையில், நான் அப்படியொரு போற்றுதலுக்குரிய ஒருவனாக என்னை ஆட்படுத்திக்கொண்டதில்லை; அப்படி உணர்ந்ததுமில்லை. அது எனக்கு அறிவியல் வகுப்பினை, ஒளியை நோக்கிப் பசுமையாகத் துளிர்க்கும் புதிய சோளக்கதிரை நினைவூட்டியது. அவன் எனது கையைத் தொட்டான். நான் எனது அறைக்குச் செல்வதற்காகத் திரும்பினேன்.

‘’பள்ளிக்குச் செல்லும் முன்னால், வந்து பார்க்கிறேன்.’’ என்றேன், நான்.

காலையில் அவனது அறைக்குள் மறைவாக நுழைந்து, கண்ணுக்கு மருந்து போட்டுவிட்டு, மறைவாக வெளியேறி, பள்ளிக்குச் செல்வதற்காக, அப்பாவின் காரில் போய் உட்கார்ந்துவிட்டேன்.

மூன்றாவது நாள், ராஃபேலின் அறை எனக்குப் பரிச்சயம் மிக்கதாக, என்னை வரவேற்பதாக, பொருட்களின் ஆரவாரக் கூச்சல் இல்லாததாக இருந்தது. அவனுக்கு மருந்து போடும்போதுதான், அவனைப்பற்றிய சில விஷயங்களைக் கண்டுகொண்டேன். மேலுதட்டின் மீது கருமை படரத் தொடங்கியிருந்தது; கழுத்துக்கும் தாடைக்கும் நடுவிலிருந்த இடைவெளியில் ஒரு தேமல். நான், அவனது படுக்கையின் விளிம்பில் அமர்ந்திருக்க, இருவரும் `குரங்கின் நிழலுக்குள் பாம்பு` திரைப்படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தப்படத்தைப் பற்றி எத்தனையோ முறை பேசியிருக்கிறோம்; என்றாலும் ஏற்கெனவே பேசிய விஷயங்களை, அப்போது அவனது அறையின் அமைதியில் பேசியபோது இரகசியங்கள் போலத் தோன்றியது. எங்கள் குரல்கள் அநேகமாக, ஓசையடங்கி, மிகத் தாழ்ந்திருந்தன அவனது உடலின் வெப்பம் என் மீதும் வெப்பத்தை ஏற்படுத்தியது.
` பாம்பு` பாணிக்குச் செயல்விளக்கமளிக்க, அவன் எழுந்தான்; பின்னர், இருவரும் சிரித்தோம்; அவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டான்; பின்னர் என்னைப் போக அனுமதித்து, என்னிடமிருந்தும் சிறிது விலகினான்.

‘’இந்த அப்பல்லோ ஒழிந்துவிட்டது,’’ என்றான், அவன்.

அவன் கண்கள் தெளிவாக இருந்தன. அவன் இவ்வளவு சீக்கிரம் குணமாகிவிட்டானேயென்று எனக்குத் தோன்றியது.

ஒரு திறந்த வெளியில் ராஃபேல் மற்றும் புரூஸ் லீயோடு நானும் சேர்ந்து ஒரு சண்டைக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டுகொண்டிருந்தேன். நான் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகும் கண்களைத் திறக்கமுடியவில்லை. கைகளால் இமைகளை விலக்கிப் பிரித்தேன். கண்கள் எரிந்து அரிப்பெடுத்தன. இமைத்துத் திறந்த ஒவ்வொரு முறையும், வெளிறிய நிறத்தில் அருவருப்பான திரவம் சுரந்து இமைமுடிகளை நனைத்து, ஒரு படலமாகப் படிந்தது. கண் இமைகளுக்குள் சூடான வறுத்த மணல் சிக்கிக்கொண்டது போல் உறுத்தியது. என் உடலுக்குள்ளே வெப்பமாகக் கூடாத ஒன்று, வெப்பமாகிக்கொண்டிருப்பதாக நான் பயந்தேன்.

‘’இந்த இழவை எதற்காக என் வீட்டுக்குள் கொண்டுவந்தாய்? ஏன் கொண்டுவந்தாய்?’’ அம்மா, ராஃபேலைத் திட்டினாள். அவளுடைய மகனுக்கு அப்பல்லோவைக் கொடுக்கவேண்டுமென்பதற்காகவே, சதி செய்து, ராஃபேல் போய் அப்பல்லோவைப் பிடித்துக்கொண்டு வந்ததாக அவள் சொல்வது போலிருந்தது. ராஃபேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அம்மா திட்டும்போது, அவன் எந்தப் பதிலும் சொல்வதில்லை. அவள் படிக்கட்டின் உச்சியில் இருந்தாள்; ராபேல் கீழ்மட்டத்தில் நின்றிருந்தான்.

‘‘அறைக்குள்ளிருந்த அவன் எப்படி உனக்கு அப்பல்லோவைக் கொடுத்தான்?’’ அப்பா என்னைக் கேட்டார்.

‘’அது ராஃபேல் இல்லை. என் வகுப்பில் யாரிடமிருந்தோ வந்திருக்குமென்று நினைக்கிறேன்.’’ என்றேன், நான்.

‘‘அது யார்?’’ அம்மா கேட்கிறாளென்று எனக்குப் புரிந்தது. ஆனால், அந்த ஒரு கணத்தில் என் வகுப்புத் தோழர்கள் எல்லோருடைய பெயரையும் நான் மறந்திருந்தேன்.

‘’யார்?’’ அம்மா மீண்டும் கேட்டாள்.

‘’சிடி ஓபி,’’ என்று முதலாவதாக நினைவுக்கு வந்த பெயரைச் சொன்னேன். அவன் எனக்கு முன்வரிசையில் அமர்பவன். அவனிடம் எப்போதும் பழந்துணிகளின் வாடைதான் வீசும்.

‘’தலை வலிக்கிறதா?’’ எனக்கேட்டாள், அம்மா.

‘’ஆமாம்.’’

பனடால்14 எடுத்துவந்து என்னிடம் தந்தார், அப்பா. மருத்துவர் இக்போக்வேக்கு அம்மா தொலைபேசினாள். அப்பாவும் அம்மாவும் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். அப்பா கலக்கிக் கொண்டுவந்த மைலோ15 வை நான் குடிப்பதை அறை வாசலிலேயே நின்று இருவரும் கவனித்தார்கள். நான் விரைவாகக் குடித்து முடித்தேன். நான், மலேரியாவில் விழும் ஒவ்வொரு முறையும், கசக்கும் நாக்குடன் கண்களைத் திறக்கும்போதெல்லாம், அவர்களில் ஒருவர் என் பக்கத்திலேயே ஒரு நாற்காலியைப் போட்டு, அமர்ந்து ஏதாவது ஒரு புத்தகத்தை அமைதியாக வாசித்துக்கொண்டிருப்பதைக் காண்பேன். அவர்களை அந்த இக்கட்டிலிருந்தும் விடுவிப்பதற்காகவாவது, எனக்கு சீக்கிரம் குணமாகக்கூடாதாவென நினைப்பேன். இப்போது, அப்படி ஒரு கைவைத்த நாற்காலியை என் அறைக்குள் இழுத்துக் கொண்டுவந்துவிட மாட்டார்கள் என்று நம்பினேன்.

மருத்துவர் இக்போக்வே வந்து எனது கண்களில் கைமின் விளக்கொளியைப் பாய்ச்சினார். அவரது கிருமிகொல்லி மருந்து (யுடிகோலன்) நாற்றம் நிரம்பவே அதிகமாக இருந்தது. அவர் சென்றபிறகும் கூட மிக மோசமாகக் குமட்டுவதென நான் நினைக்கும் சாராய நாற்றத்தைப் போன்றதான, தலைவலியைக் கொண்டுவருகிற அந்த நாற்றத்தை உணர முடிந்தது. அவர் சென்ற பிறகு என் பெற்றோர் என் படுக்கை அருகிலேயே நோயாளிக்கான புனிதமேசை ஒன்றை – வெள்ளைத் துணி விரித்த ஒரு மேசை, அதன் மீது ஆரஞ்சு லூகோஜேடு15 புட்டி ஒன்று, நீலநிற குளுகோஸ் டப்பா ஒன்று, நெகிழித்தட்டில் புதிதாக உரித்த ஆரஞ்சுச் சுளைகள் – அமைத்தனர். அறைக்குள் அவர்கள் கைவைத்த நாற்காலியைக் கொண்டுவந்துவிடவில்லை; ஆனாலும் எனக்கு அப்பல்லோ இருந்த அந்த வாரம் முழுவதும் அவர்களில் யாராவது ஒருவர் வீட்டிலிருப்பது போல் பார்த்துக்கொண்டனர். என் கண்ணில் மருந்து ஊற்றுவதற்கு அவர்கள் முறைவைத்துக் கொண்டனர்; அம்மாவைவிட அப்பா, அநியாயத்துக்கு மோசமாக, அந்தப் பிசுபிசு திரவம் என் கன்னங்களில் வழியுமாறு ஊற்றினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் மருந்து போடுவதற்காக, அந்தப் புட்டியை என் முகத்துக்கு மேலாகப் பிடித்தபோதும், முதன் முதலாக ராஃபேலுக்கு மருந்து போடும்போது, அவன் கண்களில் தோன்றிய பார்வை என் நினைவுக்கு வந்து, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

அவர்கள், திரைகளை இழுத்து மூடி, எனது அறையை இருட்டாக்கினர். படுத்தே கிடந்ததில் நான் அலுத்துப் போனேன்; ராஃபேலைப் பார்க்க விரும்பினேன். ஆனால், என் நிலைமையை அவன் மோசமாக்கிவிடுவானென்று, அவனை என் அறைப்பக்கமே வரக்கூடாதென, அம்மா தடை விதித்திருந்தாள். அவன் வந்து என்னைப் பார்க்கவேண்டுமென்று நான் விரும்பினேன். ஒரு படுக்கை விரிப்பினை அப்புறப்படுத்துவதாக அல்லது குளியலறைக்கு ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வருவதான பாவனையில் உள்ளே, வந்துவிடலாம் தான். ஆனால், அவன் ஏன் வரவில்லை? அவன் ஒரு பேச்சுக்குக்கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. அவன் வார்த்தை ஒலிகளைக் கேட்டுவிட வேண்டுமென்று முயற்சித்தேன்; ஆனால், சமையலறை தூரத்திலிருந்தது; அதுவுமில்லாமல், என் அம்மாவோடு அவன் பேசும்போது, குரலை மிகவும் தாழ்த்திப் பேசுவான்.

ஒருமுறை கழிவறைக்குச் சென்றுவந்த பின், சமையலறைப் படிக்கட்டில் இறங்க முயற்சித்தேன். ஆனால், படிக்கட்டின் கீழாக அப்பா அங்கும் இங்குமாக உலவிக்கொண்டிருந்தார்.

‘’கேது16?’’ எனக்கேட்டார், அவர். ‘’சரியாகத் தானே இருக்கிறாய்?’’

‘’தண்ணீர் வேண்டும்.’’ என்றேன்.

‘’நான் கொண்டுவந்து தருகிறேன். நீ போய்ப் படுத்துக்கொள்.’’

ஒருவழியாக, என் அப்பாவும் அம்மாவும் ஒன்றாக வெளியே சென்றார்கள். தூங்கிக்கொண்டிருந்த நான், விழித்ததும், வீட்டின் வெறுமையை உணர்ந்தேன். சமையலறைப் படிக்கட்டில் ஓட்டமாக இறங்கினேன். அதுவும் வெறுமையாக இருந்தது. பையன்கள் குடியிருப்புக்குப் போயிருப்பானோ, அவன் பகலில் அங்கே போகக்கூடாதே, இப்போது அம்மா,அப்பா இல்லாததால், அங்கு போயிருப்பானோ என நான் நினைத்தேன். திறந்தவெளி மேடைத் திண்டுக்கு வந்தேன். என் பார்வையில் அவன் படும் முன்பாகவே, அவன் பேச்சுச் சப்தம் என் காதுகளில் விழுந்தது. தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில், ஒரு காலால் மண்ணில் அளைந்துகொண்டு, பக்கத்து வீட்டுப் பேராசிரியர் நவோசுவின் வீட்டு வேலைக்காரி ஜோசபினோடு பேசிக்கொண்டிருந்தான். பேராசிரியர் நவோசு, அவரது பண்ணையிலிருந்து அவ்வப்போது, முட்டைகள் அனுப்புவது வழக்கம். ஆனால், அதற்கான காசு மட்டும் பெற்றுக்கொள்ளவே மாட்டார். ஜோசபின் முட்டை கொண்டுவந்திருப்பாளோ? அவள் உயரமும் சதையுமாக இருந்தாள்; இப்போது, போகச்சொல்லிவிட்ட பிறகும் போக மனமில்லாமல் ஒட்டி, உரசுவது போன்ற மனநிலையில் இருந்ததாகத் தோன்றினாள். அவள் பக்கத்தில் ராஃபேல், வித்தியாசமாக – வளைந்து நெளியும் முதுகும், நடுங்கும் கால்களுமாக நின்றான். அவன் வெட்கத்தில் நின்றான். அவள், அவனுக்குள் அவளை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களைக் காண்பதாக, ஒருவகையான அதிகாரம் செலுத்துவதான நோக்கில் பேசிக்கொண்டிருந்தாள். எனது பகுத்தறிவு மங்கி உய்த்துணர்வினை இழந்தது.

‘’ராஃபேல்,’’ நான் கத்தினேன்.

அவன் திரும்பினான். ‘’ஓ, ஒகென்வா, நீ கீழே வருவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்களா?’’

நான் ஏதோ குழந்தை மாதிரி, நாங்கள் அவனுடைய மங்கலான அறையில் சேர்ந்து, உட்காராதது போலப் பேசினான்.

‘’பசி! எனக்குச் சாப்பாடு எங்கே?’’ அதுதான் முதலில் என் வாயில் வந்தது. ஆனால், அதிகாரத்தைக் காட்டுவதற்காக உரத்துக் கத்தினேன்.

வெகுவாகச் சிரித்துக்கொண்டிருக்கையில், நடுவிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் போல, ஜோசஃபின் முகம் சிறுத்தது. ராஃபேல் என் காதுகளில் விழாதபடி ஏதோ சொன்னான்; ஆனால், அது ஏமாற்றுவதான துரோகத்தின் ரகசியக் குரலாகத் தோன்றியது. அப்பா,அம்மாவின் கார் அப்போது உள்ளே நுழையவும், ராஃபேலும் ஜோசபினும் தூக்கிவாரிப்போட்டது போலாயினர். ஜோசபின் சுற்றுச் சுவருக்கு வெளியே ஓட, ராஃபேல் என்னை நோக்கி வந்தான். அவனது சட்டையின் முன்புறத்தில் சூப்பிலிருந்த தெறித்த பாமாயில் பட்டது போல ஆரஞ்சு நிறத்தில் ஒரு கறை தெரிந்தது. அப்பா,அம்மா மட்டும் வராமலிருந்திருந்தால், நான் அங்கே நிற்பதைப் பொருட்படுத்தாமலேயே, அவன் அப்போதும் தொட்டியின் அருகிலேயே நின்று அவளோடு ரகசியம் பேசிக் கொண்டிருந்திருப்பான்.

‘’உனக்குச் சாப்பிட என்ன வேண்டும்?’’ அவன்தான் கேட்டான்.

‘’ஏன் என்னைப் பார்க்க வரவில்லை?’’

‘’உன் பக்கத்திலேயே வரக்கூடாதென்று அம்மா சொல்லியிருந்தது, உனக்குத் தெரியும் தானே!’’

இதுபோலச் சாதாரண விஷயங்களையெல்லாம், அவன் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்னையுந்தான், அவன் அறைக்குப் போகக் கூடாதென்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும், நான் போய்த் தினமும் அவன் கண்ணுக்கு மருந்து போட்டேனே!

‘’இந்த அப்பல்லோவை எனக்குத் தந்ததே, நீதான்,’’ என்றேன், நான்.

அவன், ‘‘சாரி,’’ என உயிரற்று உதிர்த்தபோது, அவன் கவனம் நிச்சயமாக வேறெங்கேயோ இருந்தது.

அம்மாவின் குரல் கேட்டது. அவர்கள் திரும்பி வந்ததிலும் எனக்குக் கோபம். ராஃபேலுடனான எனது நேரம் குறைக்கப்பட்டுவிட்டது; ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது போலானதொரு உணர்வு எனக்குள் தோன்றியது.

‘’உனக்கு வாழைப்பழம் வேண்டுமா? அல்லது சேனைக்கிழங்கா?’’ என்னைச் சமாதானம் செய்வதற்காக அல்ல, எதுவுமே நடக்காதது போல, அவன் கேட்டான். என் கண்கள் மீண்டும் எரியத் தொடங்கின. அவன் படிகளின் மேல் ஏறி வந்தான். நான் அவனிடமிருந்து விலகுவதாக, விரைந்து மேடைத்திண்டின் விளிம்புக்குச் சென்றுவிட, எனது ரப்பர் செருப்புகள் தடுக்கி, நிலை தடுமாறிக் கீழே விழுந்தேன். குப்புற விழுந்து விடாமல் சமாளித்துக் கை கால்களை ஊன்றி நான்கு காலில் நின்றேன். எனது உடம்பின் கனத்தையே என்னால் தாங்கமுடியவில்லை; அழுகையை அடக்கமுயன்றாலும் அதையும் மீறிக் கண்ணீர் வழிவதை உணர்ந்தேன். அவமானத்தில் குறுகி, நான், அசையாமல் நின்றேன்.

என் பெற்றோர் வந்தனர்.

‘’ஒகென்வா,’’ அப்பா கத்தினார்.

என் கால் மூட்டில் கல் ஒன்று குத்திவிட, நான் தரையிலேயே நின்றேன். ‘’ராஃபேல் என்னைத் தள்ளிவிட்டான்.’’

‘’வாட்?’’ அப்பாவும் அம்மாவும் ஒருசேர, ஆங்கிலத்தில் கேட்டார்கள், ‘’வாட்?’’

நேரம் என்னவோ, இருக்கத்தான் செய்தது. அப்பா, ராஃபேலை நோக்கித் திரும்புவதற்கு முன்பாக, அம்மா, அவனை அடிப்பது போல் பாய்வதற்கு முன்பாக, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உடனே வீட்டுக்குப் போய்ச் சேரென்று கத்துவதற்கு முன்பாக, போதிய நேரம் இருக்கத்தான் செய்தது. நான் பேசியிருக்க முடியும். அந்த அமைதியைக் குலைத்து, இரண்டாக வெட்டிப் பிளந்திருக்க முடியும். அது ஒரு விபத்து எனச் சொல்லியிருக்க முடியும். நான் பொய் சொன்னதைச் சொல்லி, என் பெற்றோரை, இவன் ஏன் இப்படிச் செய்தானென்று ஆச்சரியத்தில் வாய்பிளக்கச் செய்திருக்கலாம்.♦

 

நன்றி : – http://www.newyorker.com/magazine/2015/04/13/apollo

குறிப்பு :-

பணம்பண்ணும் சடங்கு1 – moneymaking ritual – நரபலி கொடுத்தல் போன்றவை
கறிச்சாறு2 – stew காய்கறிகள், அவரை, போன்ற பயறுவகைகள், இறைச்சி, மீன் போன்றவை சேர்த்துச் செய்யப்படும் குழம்பு வகை
மேட்டியஸ் ரோஸ்3 – Mateus Rose போர்ச்சுக்கல் நாட்டு ஒயின்.
பிப்4 – Pip –ஏழு வயது அனாதைச் சிறுவன் வளர்ந்து பெரியவனாகின்ற கதையான, டிக்கன்ஸ் படைத்த `பெரும் எதிர்பார்ப்புகள்` (Great Expectations) நாவலின் கதைசொல்லும் பாத்திரம்.
ஜியுலு5 – Ezeulu – இக்போ மொழி பேசும் ஆப்பிரிக்க (நைஜீரியா) மக்கள் மத்தியில் கிறித்துவம் பரவிய வரலாற்றினை விவரிக்கும் சினுவா அச்செபேயின் `கடவுளின் அம்பு` (Arrow of God) என்ற யதார்த்த நாவலின் மையப் பாத்திரம்.
கறுப்பு அழகு6 – Black Beauty – அன்னா சீவெல் என்பவரால் 1877 ல் எழுதப்பட்ட ஆங்கில நாவல். 5 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்த நாவல் அதிக விற்பனை படைத்துள்ளதோடு, உலகின் அதிகம் படிக்கப்பட்ட நூல்களின் வரிசையில் 58 ஆக இடம் பிடித்துள்ளது. இந்த நாவல் விலங்குகள் நலத்தினைப் பாதுகாக்க வேண்டியது மற்றும் மனிதர்களிடத்தில் அன்பாக நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது.
தண்ணீர்க் குழந்தைகள்7 – The Water-Babies, A Fairy Tale for a Land Baby – 1862 – 63ல் ரெவரெண்ட் சார்லஸ் கிங்ஸ்லி என்பவரால் மேக்மில்லன் இதழில் ஆங்கிலத்தில் தொடராக எழுதப்பட்ட குழந்தைகள் நாவல். இங்கிலாந்தில் இப்போதும் படிக்கப்படும் இந்நாவல் குழந்தைகள் இலக்கியத்தில் அதன் இடத்தினை இன்றளவும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
சங்கிலிக்கட்டை8 – nunchaku (Japanese: “chainsticks” in English) சங்கிலி அல்லது கயிற்றால் பிணைக்கப்பட்ட இரு மரக்கட்டைகள் . இது ஒரு ஜப்பானியப் போராயுதம்.
கன்ஜங்க்டிவா9 – Conjunctiva – இமையையும் விழிக் கோளத்தையும் இணைக்கும் படலம்
இக்போ10_ Igbo – நைஜீரியாவில் பேசப்படும் ஒரு மொழி
ஒகென்வா11 – Okenwa – நைஜீரியாவின் இக்போ மொழியிலுள்ள ஆண்பாற் பெயர்களில் ஒன்று.
அகாரா12 – akara – ஊற வைத்த பீன்ஸ் பயற்றினை அரைத்தெடுத்த மாவோடு, நறுக்கிய வெங்காயம், பொடித்த மிளகு, உப்பு மற்றும் பொடியாக அரிந்த இறால் அல்லது ஏதாவதொரு உயிரிப் புரோட்டீன் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் நைஜீரிய வகை பீன்ஸ்-எறா வடை.
ஓபல்லோ சாலை13 – Obello Road, Nsukka, Enugu, Nigeria – ஓபல்லோ சாலை, நைஜீரியாவின் எனுகு மாநிலத்திலுள்ள நசுக்கா நகரிலுள்ளது.
பனடால்14 – Panadol – வலி மற்றும் காய்ச்சல் குறைக்கும் மருந்தான பாரசெட்டமால் (மெட்டாசின்) என்பதன் கிளாக்சோஸ்மித்க்ளைன் நிறுவனத் தயாரிப்பின் வணிகப்பெயர்.
லூகோஜேடு15 – Lucozade – (Glucozade என்பதிலிருந்து உருவானது.) விளையாட்டு மற்றும் சக்திக்கான பானம்.
கேது16 – Kedu –`என்ன` என்பதற்கான இக்போ மொழிச் சொல்.

மூன்று சீனத்துக் காதல் கவிதைகள் —- தமிழில்: இந்திரன்

images (4)

 

 

 

 

 

 

 

 

 

நான் ஒரு

பாடும் பூ.

உனது மார்பின் மீது பாடிக் கொண்டிருக்கிறேன்.

 

நிலாக்கால வயல்கள் காற்றில் அதிர்வது போல்

நான்

உனது மூச்சுக் காற்றினால்

அதிர்ந்து கொண்டிருக்கிறேன்.

தற்காலிகமாக.

 

தயவு செய்து

உனது விரிக்கப்பட்ட உள்ளங்கைகளில்

என்னை மூடு.

— ஷீ டிங் /1952

பச்சை நாணலும் சிவப்பு மொக்குகளும்

நீளமான இலைகள்

காற்றில் வளைந்தபடி—

நீயும் நானும்

அதே படகில்

ஐந்து ஏரியில் நாணல்களைப் பிடுங்கியபடி.

 

பழத்தோட்டத் தீவிலிருந்து

அதிகாலையில் நாம் புறப்பட்டோம்.

பகல் வரையிலும் தோப்பு மரங்களின் கீழே

நாம் ஓய்வெடுத்தோம்.

 

நீயும் நானும்

நாணல்களைப் பிடுங்கியபடி

இரவு வந்தபோது

ஒரு கைப்பிடியளவு நாணல் கூட

பிடுங்கியிருக்கவில்லை நாம்.

—பெயர் தெரியாத கவிஞன்

வண்ணங்களோடு கூடிய தேசப்படம்

— எல்லைகளற்றது.

கரும்பலகையில் ஒரு சமன்பாடு

— தீர்வுகளற்றது.

பயண்படாத ஒரு ஜோடி தாதுப் பொருள்

— எப்போதும் நீரோடு கலந்ததில்லை.

மொட்டுகள் மலர்வதை நிறுத்தி காத்திருக்கின்றன.

மறையும் சூரியன் மறையாமல்

தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.

என் மனதில் பெரும் கடல் ஒன்று இருந்தாலும் கூட

வெளிவருவது என்னவோ

ஒரு ஜோடி கண்ணீர்த் துளிகள் மட்டுமே.

ஆமாம்,

இந்தப் பாதைகளிலிருந்து

இந்த ஆழங்களிலிருந்து

இது மட்டுமே.

—- ஷீ டிங் /1952

—-

 

 

 

 

கோடையோடு போனவள் (கென்யா நாட்டுச் சிறுகதை) – கூகி வா தியாங்கோ / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

 

 

download (2)

 

 

 

 

 

 

 

ஆசிரியர் பற்றிய குறிப்பு – கூகி வா தியாங்கோ

 

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து உதித்த முதல் தர எழுத்தாளராக கூகி வா தியாங்கோ அறியப்பட்டிருக்கிறார். பல பல்கலைக்கழகங்களில் இலக்கியம் குறித்த பேராசிரியரான இவரது அரசியல் படைப்புக்களின் காரணமாக கென்யாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.

 

இவரால் ஆப்பிரிக்க இலக்கியம், அரசியல் மற்றும் அடிமை வாழ்க்கை முறை குறித்து எழுதப்பட்டவை ஏராளம். அவற்றுக்கிடையில் ‘Homecoming : Essays on African and Caribbean Literature’, ‘Decolonising the Mind : The Politics of Language in African Literature’, ‘Writers in Politics’, ‘Detained : A Writer’s Prison Diary’, ‘Moving the Centre : The Struggle for Cultural Freedoms’ ஆகியவை முக்கியமானவை.

 

‘Weep not Child’, ‘The River Between’, ‘A Grain of Wheat’, ‘Petals of Blood’, ‘Devil on the Cross’, ‘Matigari’ ஆகியவை இவரது நாவல்களாகும். ‘Secret Lives’ இவரது சிறுகதைத் தொகுப்பு. ‘This Time Tomorrow and Other Plays’, ‘The Black Hermit’, ‘The Trial of Dedan Kimathi’, ‘I Will Marry When I Want’, ‘Mother Sing for Me’ ஆகியவை இவரது நாடகத் தொகுப்புகளாகும்.

•••

 

 

 

இறுதியில் அவள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருத்தியென நான் தீர்மானித்தேன். அது இயல்பானதுதான். அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதென எனது தாய் சொன்னதற்கான காரணம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனமான வேலைகளை உண்மையில் இம் மூதாட்டி செய்வதால் அல்ல. அவள் அதிகம் கதைக்க மாட்டாள். எனினும் சில வேளைகளில், அவள் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்தவிதக் காரணங்களுமின்றி அடக்க முடியாதளவு சிரிக்கத் தொடங்குவாள். ஏனைய மனிதர்களுக்குத் தென்படாத ஒன்றைக் காண்பதால்தான் அவள் இவ்வாறு சிரிக்கிறாள் என மக்கள் கதைத்துக் கொண்டனர். சுருக்கங்கள் நிறைந்த முகத்திற்கும், உடைந்து போன சரீரத்துக்கும் சற்றும் பொருத்தமற்ற, பிரகாசமும் உயிர்ப்பும் அவளது விழிகளிலிருந்து வெளிப்பட்டன. அவளது கண்கள் ஏதோவொரு ரகசியத்தைச் சொல்வதாக நான் ஆரம்பத்திலிருந்தே நம்பினேன். அந்த ரகசியம் என்ன? அது எங்கிருக்கிறது? அது அவளுக்குள்ளேயே இருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் அவள் மக்களைப் பார்ப்பது இவ்விதத்திலா? அதுவும் இல்லையாயின் அவள் வாழ்க்கையைக் கழிக்கும் விதம் இதுவா? இதில் ஏதோவொன்றாக இருக்கக் கூடும். அவ்வாறும் இல்லையாயின் இவை எல்லாவற்றினதும் கலவையாக இருக்கக் கூடும்.

ஒரு தடவை நான் எனது கண்டுபிடிப்பை எனது தந்தையிடம் கூறினேன். அவர் என்னைப் பார்த்து மெதுவாகச் சொன்னார்.

“சிலவேளை அவளுக்குள் இருக்கும் துயரமாக இருக்கக் கூடும். அனுதாபமற்ற நெருப்புச் சூரியக் கீற்றுகள் எமது தலைகளில் இறங்கி எம்மைப் பைத்தியங்களாக்கி வெறுமையால் நிறைத்திருக்கிருக்கின்றன.”

அவர் இவ்வாறு சொன்னது ஏனென அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. அவர் எனது கேள்விக்கு விடையளிப்பதற்குப் பதிலாக தனது கருத்தைத்தான் சப்தமாகக் கூறியதாக நான் இன்னும் நம்புகிறேன். எனினும் அவர் கூறியது சரி. அவர் குறிப்பிட்டது வெறுமை பற்றித்தான் எனில் அவரது கருத்து சரியானது.

முழு தேசமுமே வெறுமையால் நிறைந்திருக்கிறது. ‘மரணத்தின்’ வெறுமையால் மலைத் தொடரிலிருந்து மலைத் தொடருக்கு இடையிலான சிறிய விளைநிலங்கள் நிர்வாணமாக உள்ளன. ஒரு காலத்தில் அழகாக இருந்த புதர்கள், எமது பூமியின் சொத்து, எமது பிராந்திய விவசாயிகளின் பெருமை, வரண்டு போய் தூசியால் மூடப்பட்டிருக்கிறது. எமது ஊருக்குக் கீழே இருக்கும் ஒருபோதும் வரண்டு போகாத முகுமோ மரத்தின் இலைகள் உதிர்ந்து அதன் பசிய வர்ணம் காணாமல் போயிருந்தது.

அழிவும் மரணமும் அனேகர் கூறிய எதிர்வுகூறல்களானது. இன்னும் ஏதோவொரு காரணத்தினால் எமது ஊரில் தரித்திருக்கும் வைத்தியர் கூட பலத்தினால் நிறைந்திருந்த போதும், சிலருக்கு அழிவும் மரணமும் குறித்தே அறிவுருத்தினார்.

வானொலியின் கம்பீரக் குரல் – ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியமான செய்தியான, அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்திற்கான காலநிலை எதிர்வு கூறலானது, எல்லோருக்குமே முக்கியமான எதிர்வுகூறலாக ஆனது. ஆமாம். கென்யா வானொலி உத்தியோகத்தர்கள், காலநிலை நிலையத்தின் சேவகர்கள் காலநிலை எதிர்வுகூறலை அறிவிக்கப் பாவிக்கும் அம் மந்திர உபகரணத்தைப் பார்த்தவாறு இருந்தனர். எனினும் எமது ஊரின் பெண்களும் மக்களும் மேகங்களினூடே பார்வையைச் செலுத்திக் காத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் எனது தந்தையின் மனைவிமார் நால்வரும், ஊரின் ஏனைய பெண்களும் பயிர் நிலங்களுக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றமர்ந்து வெறுமனே கதைத்தபடி காலத்தைக் கடத்தினர். எனினும் உண்மையிலேயே கடவுள் மழையைப் பொழியச் செய்யும் உன்னதமான கணம் உதிக்கும் வரை அவர்கள் காத்திருந்தனர். எமது ஊரின் புழுதி படிந்த தெருக்களில் விளையாடிய சிறுவர்கள் விளையாட்டுக்களை நிறுத்தி விட்டு எதிர்பார்ப்புகள் நிறைந்த விழிகளால் பார்த்திருந்தனர்.

அனேக மக்கள் பட்டினியால் வாடினர். ஏனைய அனேக குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் போலன்றி எமது வீட்டில் நாம் அதிஷ்டசாலிகளாக இருந்தோம். ஏனெனில் எனது ஒரு சகோதரன் நைரோபியிலும் இன்னுமொரு சகோதரன் லைமூரிலும் தொழில் புரிந்து கொண்டிருந்தனர்.

மூதாட்டி குறித்து, எனது தந்தை முன்வைத்த கருத்தை ஆழமாக சிந்தித்துப் பார்க்க நான் முனைந்தேன். மாதக் கடைசியில் எனது தாய் சந்தையிலிருந்து கிழங்கும் கோதுமையும் வாங்கி வந்த பின் நான் அவற்றிலிருந்து கொஞ்சம் திருடி, அவற்றையும் எடுத்துக் கொண்டு மாலை நேரம், மூதாட்டி வசித்து வந்த, களிமண்ணால் உருவாக்கப்பட்ட குடிசையைத் தேடிச் சென்றேன். நான் அப் பெண்ணைச் சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் அதுதான். அதன் பிறகு நான் அனேக சந்தர்ப்பங்களில் அங்கு சென்றிருக்கிறேன். ஆனாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி அன்று மாலை சென்ற பயணம் எனது ஞாபகத்தில் தங்கியிருக்கிறது. அவள் இருண்ட மூலையொன்றில் சுருண்டிருந்ததோடு அடுப்பில் விறகுத் துண்டுகள் சில அணைந்து கொண்டிருந்தன. இடையிடையே பற்றியெரியும் நெருப்புத் தணலைக் கொண்டு களிமண் சுவற்றில் அலங்கோலமான உருவங்களை வரைந்தது தீ. அச்சமுற்ற எனக்கு தப்பித்து ஓடிப் போக வேண்டியிருந்தது. எனினும் நான் அவ்வாறு செல்லவில்லை. “பாட்டி” என அவளை அழைத்தேன். ‘பாட்டி’ என அழைக்குமளவுக்கு அவள் வயதானவளாக இருப்பாள் என நான் எண்ணவில்லை. எனினும், அவளுக்கு கிழங்குகளைக் கொடுக்கும் தேவை எனக்கிருந்தது. அவள் கிழங்குகளையும் என்னையும் பார்த்தாள். அவளது விழிகள் பிரகாசித்தன. அத்தோடு முகத்தை நிலம் நோக்கித் திருப்பி அழத் தொடங்கினாள்.

“அவன் திரும்ப வந்திருக்கிறான் என நான் நினைத்தேன்.” அவள் விம்மியபடியே சொன்னாள். இடையில் “கோடை என்னை நாசமாக்கி விட்டது.” எனவும் கூறினாள்.

அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனது தந்தை எனது வருகை குறித்து அறிவாரானால்? அதனால் நான் உடனே குதித்தோடினேன். சிலவேளை அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கக் கூடும்.

ஒரு கிழமைக்குப் பிறகு அவள், அவனைப் பற்றி என்னிடம் கூறினாள். இருண்ட குடிசைக்குள், துயரச் சூழலுக்குள் சிறைப்பட்டு கோடையுடன் அவள் கழித்த கஷ்ட ஜீவனம் குறித்து அவள் குழப்பமும் கலக்கமுமாக விளக்கினாள்.

நான் முன்னர் குறிப்பிட்டதுபோலவே, நாம் அனைவருமே மழையை எதிர்பார்த்து மாதக் கணக்காகக் காத்திருந்தோம். முதல் மழைத் துளி விழுந்ததற்கு முதல் நாள் இரவில் அனைவருமே பழக்கமற்ற தனிமையொன்றையும் களைப்பொன்றையும் உணர்ந்தனர். வீதிகளில் எந்தவொரு ஓசையும் எழவில்லை. தனது ஒரே மகனை பராமரித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு எதுவுமே கேட்கவில்லை. அவள் முக்காலியில் அமர்ந்து அடுப்பருகே வைக்கப்பட்டிருக்கும் சிறிய கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆண் குழந்தையின் இருண்ட முகத்தைப் பார்த்திருந்தாள். அணைந்து கொண்டிருந்த நெருப்புத் தணல் இடைக்கிடையே எரிகையில் இருண்ட முகம் வெண்ணிறம் அடையும் விதம் தென்பட்டது. சுவர்களில் இருண்ட நிழல் விழுந்தது. கட்டிலருகே இருக்கும் தனது ஒரே பாதுகாவலாளியிடம், ஆண் குழந்தை தொடர்ந்து வேடிக்கையாக பல கேள்விகளைக் கேட்டது.

“நான் செத்துப் போய் விடுவேனென நினைக்கிறாயா அம்மா?”

தான் செய்ய வேண்டியதோ சொல்ல வேண்டியதோ என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. எதிர்பார்ப்புகள் நிறைந்த விழிகளால் கடவுளைப் பிரார்த்திப்பதை மட்டுமே அவளால் செய்ய முடிந்தது. எனினும் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் குழந்தையின் வேண்டுகோள் பலம் வாய்ந்தது.

“அம்மா, எனக்கு சாவதற்கு அவசியமில்லை.”

எனினும் தாய், கையறு நிலையில் பார்த்திருந்தாள். தனது சக்தியும் ஆசையும் தன்னிடமிருந்து விலகிப் போய்விட்டதாக அவள் உணர்ந்தாள்.

“ஏதாவது சாப்பிடக் கொடு அம்மா.”

உண்மையிலேயே அவனுக்குத் தெரியாது. அவனுக்கு புரிந்து கொள்ளும் திறனும் இல்லை. அவளிடம் எதுவுமில்லை. கடைசி அவுன்ஸ் மாவும் தீர்ந்து போய் விட்டிருந்தது. அவள் தனது அயலவர்க்கு மேலும் தொந்தரவு கொடுக்காதிருக்கத் தீர்மானித்திருந்தாள். இரண்டு மாதங்களுக்கும் மேலாக அயலவர்கள் அவளுக்கு உதவினர். சிலவேளை தற்பொழுது அவர்களது சேமிப்பும் முடிந்திருக்கக் கூடும். எனினும் ஆண் குழந்தை அவளைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தது. அவன் அனுதாபம் காட்டாது அவளைக் குற்றம் சாட்டினான்.

கணவனில்லாத அவள் என்ன செய்வாள்? அவசரகாலச் சட்டம் அமுலிலிருந்த காலத்திலேயே அவள், அவனை இழந்திருந்தாள். அவன் கொல்லப்பட்டது மாஓ மாஓ இயக்கத்தினாலோ பலம் வாய்ந்த இராணுவத்தினாலோ அல்ல. மதுபான விருந்தொன்றின் போது நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தான். மக்கள் அவ்வாறுதான் சொன்னார்கள். ஏனெனில் அது அந்தளவுக்கு துரித அகால மரணமாக இருந்தது. இப்பொழுது ஆண் குழந்தையைப் பராமரிப்பதற்கு அவன், அவளருகில் இல்லை.

கோடையாலும் பட்டினியாலும் நாற்பதுகளில் அவளது மகன்கள் இருவர் இறந்துபோன தினங்களின் இரவுகளைப் போலன்றி 1961 ஆம் ஆண்டின் இந்த இரவு மிகவும் வித்தியாசமானது. அது மரவள்ளிக் கோடை நிகழ்ந்த சமயம். மரவள்ளிக் கிழங்கிலிருந்து மாவு எடுத்து உணவாகக் கொண்டதனால் அப் பட்டினிக் காலத்துக்கு அந்தப் பெயர் வந்தது. அக் காலத்தில் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள அவளது கணவன் இருந்தான். இப்பொழுது அவள் தனித்திருக்கிறாள். அது அவளுக்கு நிகழ்ந்த பலம் மிக்க அசாதாரணமாகும். அது அக் குடும்பத்துக்கு நிகழ்ந்த அசாதாரணமா? அவள் அவ்வாறு சிந்தித்தாள். மிஷனரி ஆட்கள் பட்டினியிலிருந்து அவளது தாயாரைக் காப்பாற்றியிருக்காவிடில் அவள் ஒருபோதும் பிறந்திருக்க மாட்டாள். அது வெள்ளையர் வருகைக்கு சிறிது காலம் முன்பு நிகழ்ந்தது. தொழில் பஞ்சம் (இங்கிலாந்து பஞ்சம்) மக்கள் முகம் கொடுக்க நேர்ந்த பாரதூரமான பஞ்சமாக இருந்தது. அப் பஞ்சத்தின் போது அவளது தாத்தாவும், பாட்டியும் இறந்து போனதோடு அக் குடும்பத்தில் எஞ்சியது அவள் மாத்திரமே.

ஆண் குழந்தையது குற்றம் சாட்டும் வேண்டுகோளைச் செவிமடுக்கும், அவனது துயர்படிந்த முகத்தைப் பார்க்கும் அவளுக்குள் கோடையால் ஏற்பட்டுள்ள துயரங்கள் தோன்றத் தொடங்கின. இந்த எல்லா துயரங்களும் அவளுக்கு மாத்திரமேதானா? ஏனைய பெண்களுக்கு இல்லாதது ஏன்? அவன், அவளது ஒரே மகன். மிகவும் காலங்கடந்து பெற்ற மகன்.

அவள், குடிசையிலிருந்து வெளியேறி ஊர்த் தலைவரிடம் சென்றாள். எனினும் அவரிடம் எதுவுமில்லை. அத்தோடு அவர் அவளை அடையாளம் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. அவ்வாறில்லையெனில், கோடையால் செய்ய முடிந்தது மரணத்தை அண்மிக்கச் செய்வது மாத்திரமேயென அவர் உணர்ந்திருக்கக் கூடும். அவளது மகனுக்கு அடிக்கடி தோன்றும் வியாதி திரும்பவும் தோன்றியிருக்கக் கூடுமென அவர் நினைத்தார். அவளது எண்ணமும் அதுவாகவே இருந்தது. அவளது மகன் எப்பொழுதுமே ஒரு நோய்க் குழந்தை. எனினும் அவள் அவனை வைத்தியசாலையொன்றுக்கு எடுத்துச் செல்லவில்லை. அறிவுருத்தினாலும் அதைச் செய்ய மாட்டாள். இல்லை. இல்லை. வைத்தியசாலை கூட அவளது குழந்தையைப் பாரமெடுக்காது. எனினும் அவனுக்காக எல்லாவற்றையும் செய்து கொடுக்க அவள் தயாராக இருந்தாள். ஆனால் இப்போது அவனுக்கு மரண எச்சரிக்கையை எடுத்து வந்திருப்பது பட்டினி. கோடையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சலுகை அடிப்படையில் உணவு வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஊர்த் தலைவர் கூறினார். அவள் இது குறித்து முன்னரே அறிந்திராதது ஏன்? அன்றிரவு அவளுக்கு நித்திரை வந்தது. எனினும் சுகமான உறக்கம் அல்ல. உடல் நலக் குறைபாடுடைய குழந்தை இடைவிடாமல் தான் குணமடைவேனா எனக் கேட்டது.

மாவட்டக் காரியாலயத்தின் வரிசையோ மிகவும் நீண்டதாக இருந்தது. அவள், அவளுக்கான உணவுப் பொதியை எடுத்துக் கொண்டு பாரமான இதயத்தோடு நடந்தே வீட்டுக்கு வந்தாள். அவள் குடிசைக்குள் நுழையவில்லை. அவள் குடிசைக்கு வெளியே குந்திக் கொண்டாள். அவளது முழங்கால்களில் சக்தியற்றுப் போயிருந்தது. புதிய புதிய ஆண்களும், பெண்களும் அவளுடன் கதைக்காமலேயே அவளது குடிசைக்குள் சென்றனர். அவளது மகன் அவளை விட்டுச் சென்றிருப்பதையும் மீண்டும் வரமாட்டான் என்பதையும் அவள் அறிந்தாள்.

இந்த எல்லாத் தகவல்களையும் கூறும்பொழுது மூதாட்டி என்னைப் பார்க்கவில்லை. இப்பொழுது அவள் என்னைப் பார்த்தபடி தொடர்ந்து சொல்லிக் கொண்டு போனாள்.

“நான் இப்பொழுது ஒரு வயதான கிழவி. எனது ஒரே மகனது சூரியன் மறைந்து போய்விட்டது. கோடை அவனைக் கொண்டு சென்றது. அதுதான் கடவுளுடைய விருப்பம்.”

அவள் கீழே பார்த்தபடி நெருப்புத் தணலைக் கிளறினாள்.

நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தேன். அவள் இடைக்கிடையே துண்டு துண்டாக அவளது கதையை என்னிடம் கூறினாள். உண்மையிலேயே அது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தியின் கதையல்ல. அன்றிரவு (அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையாக இருக்கக் கூடும்) சில மனிதர்கள் துயரப்பட்டும், வெறுமனேயும் வாழ்க்கையைக் கழிக்கவென பிறந்திருப்பது ஏனோ எனச் சிந்தித்தபடியே வீட்டுக்குச் சென்றேன்.

இரண்டு அல்லது மூன்று கிழமைகளுக்கு முன்புதான் நான் இறுதியாக அவளைக் கண்டேன். எனது ஞாபகங்கள் பலவீனமானவை என்பதால் என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இப்பொழுது மழைக்காலம் ஆரம்பித்திருக்கிறது. ஒரு கிழமையாக மழை பெய்து கொண்டிருக்கிறது. எனினும் அது தூறல் மழை. பெண்கள் நாற்று நடுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்புகள் மலையெனக் குவிகின்றன.

உண்மையிலேயே நேற்றுத்தான் அடைமழை ஆரம்பித்தது. அது நேரகாலத்துடனேயே ஆரம்பித்தது. வருடக்கணக்கில் அவ்வாறானதொரு மழையை நாம் கண்டிருக்கவில்லை. நான் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றேன். வெறுமனேயல்ல. பண முடிப்பொன்றையும் எடுத்துச் சென்றேன். இம் முறை நான் கொண்டு சென்றது கிழங்கோ அவரையோ அல்ல. வற்றாளைக் கிழங்கு. கதவைத் திறந்த எனக்கு வழமை போலவே அவள் மூலையொன்றில் சுருண்டு போயிருந்த விதத்தைக் காணக் கிடைத்தது. அடுப்பில் நெருப்பு அணைந்திருந்தது. எரியும் விளக்கொன்றின் மஞ்சள் நிறச் சுடர் மட்டும் மெலிதாக நடனமாடுவது தென்பட்டது. நான் அவளை அழைத்தேன். அவள் மெதுவாகத் தலையை உயர்த்திப் பார்த்தாள். விளக்கின் ஒளி மூலம் அவள் வெளிறிப் போயிருப்பதை நான் கண்டேன். அவள் மெதுவாக கண்களைத் திறந்தாள். அவற்றில் சாதாரணமாகவே காணக் கூடிய பிரகாசத்துக்குப் பதிலாக ஆயிரம் மடங்கு அதிகமான, புதுமையான பிரகாசம் இருந்தது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருந்தது. அது சோகம் அல்ல. அவள் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த, இவ்வளவு காலமும் கை கூடாதிருந்த ஒன்று கிடைத்த போதில் உண்டாகும் ஆனந்தத்தைப் போன்ற ஒரு மகிழ்ச்சியும் விழிப்பும் அவளது விழிகளில் இருந்தன. அவள் புன்னகைக்க முயற்சித்தாள். எனினும் அப் புன்னகையில் ஏதோ அவலட்சணமும் கொடூரமும் இருந்தது. அவள் வார்த்தைகளை வெளியிட முயற்சித்தாள். அவள் பெற்ற ஆறுதலையும் திருப்தியையும் வெளிப்படுத்துவதே அவளது எதிர்பார்ப்பாக இருந்தது.

“எனக்கு எல்லாமே தென்படுகிறது. அவர்கள் வாசலருகே நான் வரும்வரை காத்திருக்கிறார்கள். ஆகவே நான் போகிறேன்.”

அவள் மீண்டும் சுருண்டு கொண்டாள். இவ்வளவு நேரமும் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்தது. விளக்கு அணைய முன்பு வீட்டின் மூலையொன்றில் நான் கொடுத்த பரிசுப் பொதிகள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். நான் கொடுத்த ஆகாரங்களை அவள் தொட்டிருக்கவேயில்லை. அவை பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. நான் வெளியே வந்தேன்.

மழை விட்டது. தெருவின் இரு புறத்திலும் திறக்கப்பட்ட கதவுகளிடையே நெருப்பு எரியும் அடுப்புக்களைக் காண முடிந்தது. மக்கள் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

எமது வீட்டில் எல்லோருமிருந்தனர். எனது தந்தையும் இருந்தார். எனது தாய் சமையலை முடித்திருந்தார். எனது சகோதர சகோதரிகள் கோடையின் முடிவைப் பற்றியும் மழை பொழிவதைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தனர். எனது தந்தை வழமை போலவே அமைதியாக சிந்தனையில் மூழ்கியிருந்தார். நான் அமைதியாக இருந்தேன். நான் உரையாடலில் கலந்து கொள்ளவில்லை. எனது சிந்தனையெல்லாம் பைத்தியக்காரப் பெண் குறித்தும் அவள் கை வைத்திராத ஆகாரங்கள் குறித்துமிருந்தன. அவளும் கோடையோடும் பட்டினியோடுமே சென்றிருக்கக் கூடுமென எனக்குத் தோன்றியது. அத்தோடு எனது சகோதரனொருவன் பைத்தியக்காரப் பெண் குறித்து அவளது பைத்தியத்தைக் கிண்டலடித்து நகைச்சுவையாக ஏதோ கூறினான்.

நான் எழுந்து கோபத்தோடு அவனைப் பார்த்தேன்.

” ஆமாம். நிஜமாகவே பைத்தியம்தான்….”

நான் உயர்ந்த குரலில் கத்தினேன். எல்லோருமே அச்சமுற்ற விழிகளால் என்னைப் பார்த்தனர். அனைவருமே பயந்து போயிருந்தனர், எனது தந்தையைத் தவிர.

 

**************************************

 

 

 

 

 

ஷஸிகா அமாலி முணசிங்க கவிதைகள் / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Shasika Amali Munasinghe

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1. வழமை போலவே தெருவில் அரசி

தங்கச் சாயம் பூசிய ஆகாயத்தினூடே
தூரத்தே தென்படுகிறது சுவர்க்கம்
ஞாயிறு அந்தியில் நடந்து செல்கிறேன் அரசி
வழமைபோலவே தெருவில்

இடையிடையே பூதங்களின் வடிவெடுத்து வந்துசெல்லும்
மோட்டார் வண்டியன்றி வேறேதுமில்லாதவிடத்து
ஆழ்ந்த தனிமையொன்று வந்து
எனக்கு இணையாக நடந்து செல்லும்
ஆவியொன்றோவென நான் எண்ணும்படியாக

சட சடவென்று மழைத்துளிகள் வீழ்கையில்
சுவனத்திலிருந்து வெளியே வீசப்படுகிறேன்
காற்று நிலத்தில் வீழ்த்தும்
சருகுகளைப் பொறுக்கும் இளைஞனொருவன்
வழிப்பாதையின் ஒரு மூலையில்
அதிர்ச்சியோடு பார்த்தவாறு…
—-

2. எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

மழைக் காலநிலையென்ற போதும்
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
நாங்கள் அமர்ந்திருந்தோம்
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத

கதைத்துக் கொள்ளாத போதிலும்
இதயங்களில் ஒன்றே உள்ள,
கவிதைகள் எழுதிய போதிலும்
வாழ்க்கையை விற்கச் செல்லாத
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்

காலத்தின் தாளத்திற்கேற்ப
மாற்றங்கள் நேராத போதும்
வெளியே உரைக்க முடியாத் துயரம்
உள்ளத்தில் உறைந்த போதும்
வில்லோ மரக் கிளைகள்
காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்
எம் புன்னகை கண்டு திறக்கும்
எம் மாயலோக இல்லம்
—-

3. இக் கணத்தின் யதார்த்தம்

சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே தள்ளி விட்டு
பருத்த ஆண்கள் பேரூந்தில் ஏறுகையில்
தயக்கத்தோடு படியில் தொற்றிக் கொள்கிறேன்
பேரூந்தின் கர்ப்பத்துக்குள்
மெதுமெதுவாகத் தள்ளப்படுகிறேன்

வியர்வையில் தெப்பமாகி
இடைவெளிகளிடையே நகர்த்தப்படுகிறேன்
விழுந்திடாதிருக்க முயற்சிக்கிறேன்
சரிகிறேன் எழுகிறேன்
சூழவும் எதுவும் தென்படாத அதியுச்ச தள்ளுகைகளிடையே
நான் சிந்திக்கிறேன்

‘யார் நான்
கவிதாயினியா
மிக அழகிய இளம்பெண்ணா
அவ்வாறும் இல்லையெனில்
உயர் பதவியேதும் வகிப்பவளா
காதலியா தாயா அன்பான மனைவியொருத்தியா
இதில் எது பொய்யானது
தீயாயெரியும் பேரூந்தொன்றுக்குள் சிறைப்பட்டு
களைப்போடு துயருறும் விலங்கொன்றுதான் நானன்றி
இக் கணத்தில் வேறெவர்?’

யதார்த்தம் என்பது என்ன
பேரூந்திலிருந்து இறங்கி
வீட்டில் காலடி வைக்கும் கணம்
குறித்துக் கனவு காண வேண்டுமா
குளிர்ந்த நீரில் உடல் கழுவி
தேனீரைச் சுவைக்கும் விதம் பற்றிச் சிந்திக்க வேண்டுமா
எனில் யதார்த்தம் எனப்படுவது இக் கணம்தான்
பெரும் காரிருளில் மூழ்கி
இருப்பின் துயரத்தை அனுபவிக்கும் விலங்கொன்றாக மட்டும்
என்னை நானே சந்திக்கும் இக் கணம்
‘நான்’ வீழ்ந்துடைந்து அழிந்துபோகும் இக் கணம்

கவிஞனான போதும்
இடரை அனுபவிப்பது இப் பேரூந்தினுள்ளேதான்
வைத்தியரோ வேறெவராயினுமொருவரோ
பெண்ணோ ஆணோ
தெள்ளத் தெளிவாகத் துயரனுபவிக்கும்
விலங்கொன்றன்றி வேறெவர்
இது இக் கணத்தின் யதார்த்தம்
இக் கணம் துயரத்திலிருந்து தப்பிக்கச் செய்யும்
கதவைக் காணக் கூடிய கணம்

பேரூந்திலிருந்து இறங்கிச் செல்ல முன்பு
வெளிச்சம் என்னை நெருங்கட்டும்
இவ் வாழ்வைப் பிணைத்திருக்கும் கயிறு தளர்ந்து போகட்டும்
—-

4. வாழ்வென்பதன் ஒத்த கருத்து

ஜீவிதத்துக்கென இருக்கும்
ஒத்த கருத்துச் சொல் மரணம்
யாரும் உனக்குக் கற்றுக் கொடுக்காத
நீ தனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய

முடிவற்றது மரணத்தினூடான வாழ்க்கை
அவ்வாறே வாழ்வினூடான மரணமும்
எனில் இரண்டிற்குமிடையே
ஏது வேறுபாடு
ஒத்த கருத்தன்றி
—-

5. இறுதிக் கிரியை

அறியாதிருந்திருக்கிறேன்
இறுதிக் கிரியைக்கு நீங்கள் வந்திருந்ததை

உடல் பருத்த இப் பலா மரங்களை விட்டுச் செல்ல
நானும் நினைத்திருக்கவில்லை

காணவில்லையா
வீட்டுக்கு அப்புறத்திலுள்ள வயல்வெளியை
தலைசாய்த்திருந்தனவல்லவோ நெற்பயிரெல்லாம்
வெட்டப்பட்டு வீட்டில் அடுக்கப்படப் போகும்
காலமும் நெருங்கியிருந்தது எல்லாவற்றுக்கும்

முந்திக் கொண்டோடிய நீரோடையிது
பொங்கிப் பாய்ந்த தண்ணீர்ப் பிரவாகம்
கட்டுப்பட நேர்ந்தது
அருகிருந்த பெருங் கற்பாறையிடம்

இது அவ்வாறுதான் ஆயிற்று

இனி ஐயா,
எவ்வளவு காலத்திற்குப் பிறகு
உங்களைக் காணக் கிடைத்திருக்கிறது
இப்பொழுதும் கவிதைச் சங்கத்தில்
அதிகமான வேலைப் பளுவா

நாமென்றால் ஊரோடு மாரடித்தோம்
அதெல்லாம் ஒரு காலம்தான் – பிறகு
அல்லற்பட நேரவில்லை
நிறைந்து பூரித்துக் கிடந்தது வாழ்க்கை

••••

ஹமீத் ரேசா ரஹீமி கவிதை ( ஈரான் ) / தமிழில் / லாவண்யா

download (1)

 

 

 

 

 

 

 

 

 

ஈரானின் மேற்குப் பகுதியில் 1950ல் பிறந்த ஹமீத் ரேசா ரஹீமி

பெர்ஷிய மொழிக் கிவிஞர், எழுத்தாளர் மற்றும் காலிகிராபர்.

19-வது வயதில் முதல் கவிதைப் புத்தகத்துடன் துவங்கி 12

கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அரசியல், அங்கதம்

இரண்டிலும் திறமை மிக்கவர். 1986ல் இவருடைய எழுத்துக்கள்

அப்போதைய ஈரானிய அரசால் தடைசெய்யப்பட்டதும் தலைமறைவாக

வாழ்ந்தார்.. காலத்தின் ஒரு துண்டு என்ற தலைப்பில் சமீபத்தில்

இவருடைய கவிதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

தற்போது கலிபோர்னியாவில் வசிக்கிறார். அவருடைய கவிதைகளில்

ஒன்று.  தமிழில் லாவண்யா

 

அழிவிற்கு கால்மணி நேரமிருக்கிறது

 

எதற்காகப் பாடுகிறோமென்று

தெரியாத பறவைபோல

எதற்காக வளர்கிறோமென்று

தெரியாத மரம்போல

எதற்காக வீசுகிறோமென்று

தெரியாத காற்றைப்போல

உலகின் எல்லா ந்திகளும்

ஒரு வாணலியில்

ஏன் வரண்டதென்றறியாத மீனைப்போல

நான் வாழ்கிறேன்.

ஒரு பூ அழகென்று

சிலசமயம் நினைக்கிறேன்.

அது தன் ஆசீர்வதிக்கப்பட்ட

மூதாதையரிடம் என்னை அழைத்துச் செல்கிறது.

வானம் அழகென்று

சிலசமயம் நினைக்கிறேன்.

மழைமேகம் ஒன்று

என் மனதின் புராதனத் துயரைக் கழுவ

ஆயத்தமாயிருக்கிறது.

தொலைவிலிருந்து வந்த காற்று

தீராத என் சலிப்பை

பெருக்கித் தள்ள தயாராயிருக்கிறது.

நகரத் தெருக்களின் சுபாவமும்

இந்த தேசமும் அழகானதென்று

சிலசமயம் நினைக்கிறேன்.

ந்திவிட்டு ந்தி தாவும் அலையாய்

என் குழந்தைப் பருவம்

தெருக்களின் இரைச்சல் நடுவில்

சோர்ந்த ஒரு சுவற்றின் முகத்தில்

தீக்குச்சி மனிதனை வரையவும்

ஜன்னல் கண்ணாடியை உடைக்கவும்

திரிந்து கொண்டிருப்பதை

சிலசமயம் நினைக்கிறேன்.

 

அவனுடைய காலடிச்சத்தம்

காதற்பெண்களுக்கு இசையாய் கேட்கும்

அவனுடைய சுவாசத்தில்

வசந்தமும் கவிதையும் மணக்கும்

ஒரு யுவனின் கண்களுக்குள் என்னைப் பார்க்கிறேன்.

சிலசமயம்

ஒரு சிறிய பாதையில்

கைப்பிடியளவு துயரங்களை நினைவுகளை வரலாற்றை

சுமந்துசெல்லும் ஊன்றுகோல் வடிவில்

என்னைக் காண்கிறேன்.

 

ஒரு மூலையில்

கண்ணாடியுடன் பேசிக்கொண்டிருக்கும்

என் சகோதரியைக் காண்கிறேன்.

காற்றிடம் மீண்டும் மீண்டும்

என்னைப் பற்றிக் கேட்கும்

என் அன்னையைப் பார்க்கிறேன்.

ரேஷன் செய்யப்பட்ட சிகரெட்டுகளுக்காக

வரிசையில் காத்திருந்தபோது

புகையாய் மறைந்த என் தந்தையின்

கடைசிநாட்களைக் காண்கிறேன்.

தங்கள் இதயங்களை

எரிகுண்டுகளைப்போல கைகளால் பிழியும்

மக்களைக் காண்கிறேன்

தன் மக்களுக்குப் பயந்து

நிலவின் பின்னால் ஒளியும் கடவுளைப் பார்க்கிறேன்.

குளிர்ந்த ஒரு கோப்பை தேநீரில்

நான் அமிழ்வதைப் பாரத்து

திறமையான உயிர்காப்பாளனின் வேகத்தோடு

மீண்டும் என் மனைவி என்னை மீட்கிறாள்.

 

அழிவிற்கு

கால்மணிநேரமிருக்கிறது.

 

 

 

 

 

 

••••