Category: இதழ் 78

பள்ளி தொடர்பான சில விஷயங்கள் / அத்தியாயம் 27 / B.R. மகாதேவன்

 

images (1)

 

 

 

 

 

 

 

 

 

பள்ளி தொடர்பான சில விஷயங்களை எடுத்துக் கொள்வோம்.

படிக்க மாட்டேன்னு சொல்லலை… ஸ்கூல் வேண்டாம்னு சொல்றேன் என்பதுதான் நம் குழந்தைகளின் கெஞ்சலாக இருக்கிறது. பள்ளியும் ஆசிரியரும் படங்களும் அந்த அளவுக்கு வேம்பாகக் கசக்கின்றன. இவற்றை எப்படி மாற்றலாம்?

முதலில் பள்ளியை எடுத்துக் கொள்வோம். அவை கிட்டத்தட்ட சிறை போலவே இருக்கின்றன. ஓடியாட விரும்பும் குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார வைப்பதே மிகப் பெரிய வன்முறை. பள்ளியின் தோற்றத்தையே மாற்றவேண்டும். இன்று ப்ரீ கேஜி, யுகேஜி நடத்தும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைக் கவருவதற்காக காம்பௌண்ட் சுவர்களில் கார்ட்டூன் படங்களை வரைந்து வைக்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் வகுப்பறையிலேயே கூட படங்கள் வரைந்தும் ஒட்டியும் வைக்கிறார்கள். இவையெல்லாம் நர்சரிகளுக்குப் போதுமானவையே. இதுகூட ஒரு சில வாரங்களில் குழந்தைகளுக்கு அலுத்துவிடும். சில பள்ளிகளில் பள்ளிக்குள் நுழையும்போதே சாக்லேட், பிஸ்கெட் கொடுத்து வரவேற்கிறார்கள். அந்த சாக்லேட்டுக்காக குழந்தைகள் பள்ளியைச் சில காலம் விரும்புகின்றன. இதை இன்னும் நீட்டிக்க என்ன வழி…

குழந்தைகளுக்கு கார்ட்டூன் கேரக்டர்கள் என்றால் உயிர். அவற்றையே வந்து வகுப்பு எடுக்க வைக்கலாம்! தாரே ஜமீன் பர் படத்தில் அமீர்கான் முதலில் கோமாளிபோல் வேடம் அணிந்துதான் பள்ளிக்கு வருவார். அதுபோல் நமது ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்கி மவுஸ், டொனால்ட் டக், சோட்டா பீம், சக்திமான், லிட்டில் கிருஷ்னா என வேடம் அணிவித்துவிடலாம்.. குழந்தைகளோடு குழந்தைகளாக துள்ளிக் குதித்து பாடம் எடுக்க சில ஆசிரியர்களுக்குத் தயக்கமாக இருக்கும். இந்த உடைகள் அணிந்துகொண்டா முகமே வெளியில் தெரியாது. எனவே எந்த மனக்கூச்சமும் இல்லாமல் துள்ளிக் குதித்து பாடம் எடுக்கலாம். அனைத்து ஆசிரியர்களும் தினமும் ஏதேனும் கார்ட்டூன் உடையை அணிந்துதான் வகுப்புக்குச் செல்லவேண்டும். ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் வந்து பாடம் எடுத்தால் சுவாரசியமாக இருக்கும்.

மாணவர்களுக்குக் கூட அவர்கள் விரும்பும் வகையில் உடை அணிந்து வரும்படிச் சொல்லலாம். இன்று குழந்தைகள் பள்ளிக்கு உற்சாகமாகப் போகும் நாள் அவர்களுடைய பிறந்த நாள் மட்டும்தான். அந்த நாளில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உண்டு. ஒன்று குழந்தைகள் அன்று நண்பர்களுக்கு பரிசுகள், சாக்லேட்கள் கொடுக்க முடியும். இன்னொன்று அன்று புதிய உடை அணியலாம். சீருடைக்கு பதிலாக எந்த உடை வேண்டுமானாலும் அணியலாம் என்று சொல்லும்போது இப்படியான கார்ட்டூன் உடைகளை அணிய அனுமதிக்கலாம். டாக்டராக விரும்பும் குழந்தைகள் பள்ளிக்கு டாக்டர் உடையில் வரலாம். போலீஸாக விரும்பும் குழந்தைகள் பள்ளிக்கு அந்த உடையிலேயே வரலாம்.

குழந்தைகளுக்கு இன்றைய பள்ளிகளில் எது பிடிக்குமோ அதை அதிகப்படுத்தலாம்.

இன்றைய பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பிடித்த ஒரே இடம் விளையாட்டு மைதானம். அப்படியானால், வகுப்புகளை விளையாட்டு மைதானத்தில் நடத்தினால்..! அல்லது ஒவ்வொரு வகுப்புகளையும் விளையாட்டு மைதானம் போல் மாற்றினால்.

திருவண்ணாமலையில் மருதம் பண்ணைப் பள்ளியில் அப்படித்தான் வகுப்பறையை வடிவமைத்திருந்தார்கள். வகுப்பறைக்குள்ளேயே சறுக்கு மரம், டயர் ஊஞ்சல்கள், குகைகள் என வடிவமைத்திருந்தார்கள். அது அருமையான யோசனை. நமது பள்ளியிலும் அதுபோல் செய்யலாம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடம் மிருககாட்சி சாலை. தினமும் குழந்தைகளை மிருக காட்சி சாலைக்கு ழைத்துச் செல்வது கடினம். பள்ளியை மிருக காட்சி சாலையாக ஆக்குவது எளிது. நாய்க்குட்டிகள், மயில்கள், முயல்கள், மான்கள், பசுக்கள், லவ் பேர்ட்ஸ், கோழிகள், மீன்கள் என சாதுவான விலங்குகளை ஒவ்வொரு வகுப்பிலும் வளர்க்கலாம். அவை எதையும் கூண்டுக்குள் அடைக்காமல் முழு பள்ளியிலும் அவை சுதந்தரமாக உலவும்படிச் செய்தால் அருமையாக இருக்கும். பாடம் நடந்துகொண்டிருக்கும்போது ஜன்னல் வழியே ஒரு மான் எட்டிப் பார்த்தால் பாடத்தை நிறுத்திவிட்டு அந்த மானுக்கு உணவுகொடுத்துவிட்டு அதன் பிறகு வகுப்பைத் தொடரலாம். இந்த விலங்குகளை சுந்தந்தரமாக உலவ விட்டால் பாடங்கள் நடத்தவே முடியாது என்று ஒரு நிலைவருமென்றால், தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே இப்படி விளையாட அனுமதிக்கலாம். ஒட்டு மொத்த பள்ளியுமே அந்த ஒரு மணி நேரம் மரண ரகளையில் திளைக்கலாம். விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் பொறுப்பை மாணவர்களிடம் விட்டுவிட்டால், ஒவ்வொரு குழந்தையும் அவற்றுக்கு உணவு கொடுப்பதற்காகவே வெகு சீக்கிரம் ஆர்வத்துடன் பள்ளிக்கு விரைவார்கள். அப்பா அம்மாக்களுக்கு குழந்தைகளை காலையில் எழுப்ப சிரமப்படவே வேண்டியிருக்காது.

டோட்டோசான் நாவலில் ரயில் பெட்டிதான் பள்ளிக்கூடம். நெல் பற்றிய பாடம் என்றால் நேராக வயலுக்கே அழைத்துச் சென்றுவிடுவார் அந்த ஆசிரியர். பெஞ்சுகள், மேஜைகள், கரும்பலகைகள் இவற்றை இடம்பெயர்த்துவிட்டாலே பள்ளிகளுக்கு உயிர் வந்துவிடும்.

ஆசிரியர் மீதான பயத்தைப் போக்குவதற்கு எளிய வழி மிக்ஸட் வகுப்புகள்தான். இன்று சம வயதுக் குழந்தைகள் மட்டுமே ஒரு வகுப்பறையில் இருக்கிறார்கள். ஆசிரியர் என்பவர் அந்தக் குழந்தைகளைவிட சுமார் 20 வயது அதிகமானவராக இருக்கிறார். இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேல் ஒருவித பயம் தான் ஏற்படுகிறது. எட்டு வயது குழந்தை ஐந்து வயதுக் குழந்தைக்கு ஆசிரியராக இருந்தால் எந்தவித பயமும் தயக்கமும் இல்லாமல் கற்றுக் கொள்வார்கள். மேலும் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள சிறந்த வழி அதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதுதான். அப்படியாக நாலைந்து வயது வித்தியாசம் உள்ள குழந்தைகளை ஒரே வகுப்பில் உட்கார வைத்து கற்றுத் தரலாம். ஆசிரியர் என்பவர் அனைத்துக் குழந்தைகளுக்கும் இடையில் ஒருவித ஒருங்கிணைப்பையும் உதவியையும் செய்து தருபவராக இருந்தால் போதும். அவர்தான் அனைத்து பாடங்களையும் சொல்லித்தருவார். ஆனால், மாணவர்களுக்கு எப்போதும் அவரிடமிருந்து மட்டுமே கற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தம் இருக்காது. உலகில் பல இடங்களில் இப்படியான கல்வி அமலில் இருக்கிறது.

நமது திரைப்படத்தின் ஆதார கருதுகோள்களில் ஒன்று மாணவர்கள் ஆசிரியர்களைவிட புத்திசாலிகள்; குழந்தைப் பருவமே படைப்பாக்கம் உச்சத்தில் இருக்கும் காலகட்டம். அதைநாம் சிதைக்கக்கூடாது என்பவைதான்.

இதை எப்படிக் காட்சிப்படுத்தலாம்?.

மேலைநாட்டில் நடந்த விளையாட்டு இது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தார்கள். இருபது பெரிய பந்துகளைக் கொண்டுவந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாணவனின் பெயரை எழுதினார்கள்.. அந்தப் பந்துகளை ஒன்றாகக் கலந்து வகுப்றைக்குள் போட்டுவிட்டு, மாணவர்களையும் அனுப்பி ஒவ்வொருவரும் தனது பெயர் எழுதிய பந்தை எடுக்கச் சொன்னார்கள். முதலில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. பந்துகள் இங்குமங்கும் துள்ளிக் கொண்டிருந்தன. மாணவர்கள் ஒவ்வொரு பந்தாக எடுத்து தமது பெயர் அதில் இல்லை என்றதும் அந்தப் பந்தை வீசி எறிந்துவிட்டு வேறொரு பந்தை எடுக்கப் பாய்ந்தார்கள். சுமார் பத்து நிமிடம் இப்படியே கழிந்தது. ஒரு ஒழுங்கில்லாமல் அனைவரும் ஓடிக் கொண்டிருந்ததால் யாருக்கும் அவர்கள் பெயர் எழுதிய பந்து கிடைக்கவே இல்லை. அப்போது ஒரு மாணவி யோசித்தாள். தன் கையில் இருந்த பந்தில் யார் பெயர் எழுதியிருக்கிறதோ அதை அவள் உரக்க சொன்னாள். அந்தப் பெயரை உடைய மாணவி உடனே தன் கையில் இருந்த பந்தைக் கீழே போட்டுவிட்டு ஓடிவந்து தன்னுடைய பந்தை வாங்கிக் கொண்டாள். அதைப் பார்த்ததும் பக்கத்தில் இருந்த இன்னொரு குழந்தை அதுபோலவே தன் கையில் இருந்த பந்தில் என்ன பெயர் இருந்ததோ அதை உரத்த குரலில் சொன்னாள். அந்தப் பெயரையுடைய குழந்தை தன் கையில் இருந்த பந்தில் இருந்த பெயரை உரக்கச் சொன்னது. அப்படியாக ஒவ்வொரு குழந்தையும் தத்தமது கைகளில் இருந்த பந்தில் என்ன பெயர் எழுதப்பட்டிருந்ததோ அதைச் சொல்லி பந்துகளை அவர்களிடம் ஒப்படைத்தன.. ஓரிரு நிமிடங்களில் அனைவரிடமும் அவர் பெயர் எழுதிய பந்துகள் கிடைத்துவிட்டன.

பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்ற விஷயத்தைப் போதிப்பதற்காக அந்தப் பள்ளியில் அந்த விளையாட்டைக் கண்டுபிடித்ஹ்டார்கள். இதை நாம் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம். முதலில் ஆசிரியர்களுக்கு இந்த போட்டி வைக்கப்படுவதாகக் காட்டலாம். அரை மணி நேரம் ஆனாலும் அவர்களால் முடியாமல் ஓடி ஓடிக் களைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு குழந்தைகளுக்கு இந்தப் போட்டியை வைக்கிறார்கள். நாலைந்து நிமிடங்கள் தடுமாறும் குழந்தைகள் சட்டென்று சரியான வழியைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றுவிடுகின்றன என்று காட்டலாம்.

இதையே நமது படத்தின் தொடக்கக் காட்சியாகவும் வைத்துக் கொள்ளலாம். ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட், புத்தி சாதுரியம், குழந்தைகளே ஆசிரியர்களைவிட புத்திசாலிகள் என பல விஷயங்களை இந்த ஒரே ஒரு காட்சியின் மூலம் காட்டிவிட முடியும்.

 

••••••••••

இலக்கியத்திலிருந்து காணாமல் போனவர்கள் / சிபிச்செல்வன்

 

602784_10200198662103337_515294167_n

 

 

 

 

 

 

 

 

சற்றைக்குமுன்தான் இந்தக் கட்டுரையை எழுத தீர்மானித்தேன். காரணம் சிபி  பக்கங்களை திரும்ப ஒருமுறை புரட்டிப் பார்த்தேன். 2013 இல் நான் எழுதிய கட்டுரைகளை திரும்ப பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சில விஷயங்கள் எனக்குப் புரிந்தது. அப்போது எழுதியவர்களின் பெயர்களில் சில இப்போது காணாமல் போயிருந்தன.

என்ன காரணம் என யோசித்துப் பார்த்தேன். அப்போது தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி தற்போது காணாமல் போவதற்கான காரணம் எதுவாக இருக்கும் என யோசித்ததன் விளைவே இக் கட்டுரை.

கடந்த  முப்பது ஆண்டுகளாக தீவிர இலக்கிய உலகில் திடிரென சில பெயர்கள் கண்களில் தட்டுப்படுவதும் அவர்களின் பெயர்களில் ஒரிரு வருடங்களில் காணாமல் மறைவைதையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் சிலர் தட்டுத்தடுமாறி பல ஸ்டண்ட் வேலைகளை செய்து இலக்கியத்தில் தாங்கள் எழுதுவதுதான் உன்னதம் என காட்டி மிரட்டி புதிய வாசகர்களை அடிமைகள் போல நடத்துவதில் திட்டமிட்டு  இயங்கிவருகிறார்கள். அதையும் பார்த்துக்கொண்டும் ஒரு  கடையிதழ் புன்னகையில் கட்ந்தும் போய்க்கொண்டிருக்கிறேன்

இப்போது சிலர் இலக்கியத்தை முகப்புத்தக வாயிலாக உள்ளே நுழைந்து சில பல கவிதைகளை ( அதுதான் எழுத எளிமையாக இருப்பதாக நம்பி பதிவுகளாக அவர்களின் கவிதைகளை தினசரி போட்டுத்தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக்கே திணறிக்கொண்டிருக்கிறது- வாட்ஸ்அப்பின் வருகையை தாக்குப் பிடிக்க முடியாமல் ) அப்புறம் இவர்கள் எம்மாத்திரம். பல படைப்பாளிகள் முகப்புத்தக நம்பிக்கையிலும் அதன் லைக்குகளிலும் காலத்தையும் ஆசையையும்  தீர்த்துக்கொண்டு இப்போது இலக்கிய உலகிலிருந்து விடைபெற்றுப் போயிருக்கிறார்கள்

இன்னொரு உண்மையும் சொல்ல வேண்டும் . எதையாவது எதிர்பார்த்து இலக்கிய உலகில் நுழைந்துவிட்டு பரிசுகள் அல்லது விருதுக்ள் இப்படி எதையாவது எதிர்பார்த்து நுழைந்துவிட்டு சில பல காலம் கழித்து சிலவற்றை அடைந்த களிப்பிலோ அல்லது அடைய முடியாத களைப்பிலோ இலக்கிய உலகிலிருந்து காணாமல் போய்விடுகிறார்கள்.

உள்ளே நுழையும் போது அட்டகாசமும் அளப்பறைகளும் செய்து வந்தார்வர்கள் , காணாமல் போகிற போது  சப்தமேயில்லாமல்   தொலைந்து போய்விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் இருந்தார்களே இப்போது இவர்களைப் பற்றிய எந்த பதிவு அலலது தடயங்களே இல்லையே என யோசிக்க யாருக்கும் இங்கே நேரமும் அக்கறையும்கூட குறைந்தபட்சமாக கூட கிடையாது . தொலைந்து போனவர்களுக்கும் இதே காரணங்கள் பொருந்தும் எனதான் நினைக்கிறேன்.

இலக்கியம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாதவர்களுக்கானது என்பது வேகமாக பொய்யானதாக மாறிக்கொண்டிருக்கிறது

இதுவும் பிழைப்புவாதத்திற்கானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு தலைமுறை கழித்து இங்கே இலக்கியவாதிகள் என்பவர்களே இருக்க மாட்டடார்களோ என்ற நிலையில்தான் இங்கே இருக்கிற மூத்த படைப்பாளிகள் இளைய படைப்பாளிகளையோ அல்லது சரியான நுட்பமான வாசகர்ளை உருவாக்காமல் தங்களுக்கும் தங்களது எழுத்துக்கும் துதி பாடுகிறவர்களாக அவர்கள் எழுத்துகளையே கொண்டாடுகிறவர்களாக அல்லது அடிமைகளாக அல்லது சினிமாக்காரர்களைப் போல  அடிதடிகளை நிகழ்த்துகிற அடியாட்களாக இப்படி வாசகர்களின் நிலைமையும் எழுத்தாளர்களின் நிலையும் ஏளனத்திற்குரியதாக மாறிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலை மாறாதா என்றால் இப்போதுள்ள சூழல் நிச்சயமாக மாறுவதைப் போலவோ அல்லது அதற்கான சூழல் உருவாகிவரும் என்றோ சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றன.

நலல மூத்த  படைப்பாளிகளின் சிஷ்யர்களாக தங்களை வளர்த்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாள சமூகமே இப்படியான நிலையில் இருக்கிறபோது இது எதுவும்   தெரியாத இளம் சமூகம் வாசகர்களையோ அல்லது சிறந்த படைப்பாளிகளையோ வளர்த்தெடுப்பதற்கான சூழலே நிச்சயமாக இல்லாவே இல்லை என்றோ சொல்லலாம்.

இபபடியான சூழலில் பல இளம் படைப்பாளிகள் வேறு ஏதோ ஒரு ஈர்ப்பில் காணாமல் போய்விடுவதில் ஒன்றும் ஆச்சரியமோ அல்லது அதில் அதிர்ச்சியோ இல்லை என்றுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடிகிறது.

இம்மாதிரியான படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவரும்போதே இவர்கள் இன்னும் சில நாட்களில் காணாமல் போய்விடுவார்கள் என்ற  என் கணிப்பில் பெரும்பாலும் பிழையேற்பட்டதில்லை. அவர்களின் படைப்பு போலியானவை என்பதும்  அதற்கு உடனடி ஈர்ப்பில் சில நூறு லைக்குகள் கிடைத்து அதிலேயே அவர்கள் காணாமல் தொலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சுவடுகள் காலத்தின் மீது படிய ஆரம்பிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

சரி இவ்வளவு பேசுகிற நீ என்ன சாகாத வரம் வாங்கி வந்த உன்னத படைப்பாளியான  என்றால்

என் எழுத்தின் வீர்யமும் எனக்குத் தெரியும்

என் எழுத்தின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்

எனக்கு எந்த விருதின் மீதும் ஆசையில்லை

( நான் ஆசைபட்டாலும் எனக்கு கொடுப்பதற்கு என சாதிக்காரர்கள் யாரும் விருதுகளை அறிவிக்கவில்லை அல்லது என் பத்திரிகையின் சார்பில் நானே விருதுகளை அறிவித்து அதை நானே பெறுகிற எந்த திட்டமும் எனக்கில்லை )

எனக்கு விருது கொடுப்பதால் விருது கொடுப்பவர்களுக்கு என்னால் சல்லி காசு பிரயோஜமில்லை என்பது எனக்குத் தெரிந்ததைப் போலவே எனக்கு கொடுக்காமல் இருப்பவர்களும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்-

இலக்கியம் லாப நட்ட கணக்குகளையோ வரவு செலவுகளையோ அல்லது  திட்டமிட்டு சில பல காரியங்களை நிகழ்த்தினால் சில பல தொலைவு சென்றததும் வேறு சில நல்ல  காரியங்கள் ஆகியவன நடக்கும் என்ற எந்த திட்டமிடலும் இல்லாத ஆட்களே இங்கே இருக்க முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டவர்கள் நீண்டகாலம் இங்கே இருக்கலாம் நண்பர்களே

காணாமல் போனவர்களுககு ஒரு  அஞ்சலி குறிப்பை மொத்தமாக எழுதி ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைவிட இப்போதைக்கு சிறப்பான பணி வேறு எதுவும் இல்லை.

இலக்கியத்தால் உங்களுக்கோ உங்களால் இலக்கியத்திற்கோ ஒரு பிரயோஜமும் இல்லாத நீங்கள் போய் வாருங்கள் நண்பர்களே

இலக்கியம் இன்னும் பல கோடி ஆண்டுகள் உயிர்த்திருக்கட்டும.

அதன் சங்கிலி தொடரில் தீவிரமாக எழுதுகிற படைப்பாளிகள் தாமாகவே முன்வந்து காரியங்களை படைப்பார்கள்.

இதுவரை கானாமல் போனவர்களைப் பற்றி நாமும் யோசிககாமல் இருப்போம்

அது நமக்கும் நல்லது

தமிழ் இலக்கியத்திற்கும் நல்லது.

இன்னும் நிறைய பேர் காணாமல் போய்த் தொலையட்டும

அதனால் இலக்கியம் செழிக்கட்டும்

••••••••

 

 

நாட்டுக்கோழி ( சிறுகதை ) /  ராஜசுந்தரராஜன்

images (22)

 

 

 

 

 

 

 

 

இவன் அந்த சாப்பாட்டுக் கடைக்குள் நுழைந்தபோது கடைமுதலாளி அடுப்பில் நின்றார்.

 

 • மாஸ்டருக்கு என்னாச்சு?

 

 • எல்லார் வீட்லயும் நல்லது கெட்டது வருந்தானே?

 

 • அப்பொ, உங்களுக்கும் வேலை தெரியுமா?

 

 • என்ன இப்படிக் கேட்டுட்டீய? அடிப்படை தெரியாமயா தொழில்ல எறங்குவோம்? இல்லைன்னாலும், நெருப்புல போட்டெடுத்தா பக்குவப் பட்டுறும்லா எல்லாம்?

 

இரண்டு நாள்களுக்கு முந்தி அவருடைய மனைவி, பின்கட்டில், அண்டா குண்டா சட்டி தட்டெல்லாம் கழுவிக்கொண்டு இருந்தார். அந்த வேலைக்கு வரும் கிழவி அன்றைக்கு விடுப்பாம். தெற்கத்தி மனிதர்கள் தொழிலைக் கட்டிக் காப்பாற்றுவதைக் காண வியப்பாக இருந்தது. பெருமையாகவும்.

 

 • ரெண்டு ஆஃப்பாயில் இல்லைன்னா ஒரு டபுள் ஆம்லேட்.

 

 • ஆம்லேட்டே போடுதேன். மத்தது நம்ம கைவாகுக்கு வராது, கேட்டியளா? ஆமா, இந்தாப்ல ஆரையோ ஏத்திக்கிட்டுப் வண்டியில போனாப்ல இருந்திச்சு?

 

 • பார்த்திட்டியளா? ‘அது மாதிரி, ஆனா இல்லை’ன்னு ஒரு சினிமாப் படத்துல சொல்லுவான்ல? அது மாதிரி.

 

அவர் தன் வேலையில் கவனம் கொண்டவர்போல் தலைகவிழ்ந்து, எண்ணெய்ச் சட்டியில் பூரிகளை உப்புவிக்கக் தொடங்கினார். இவன் கைகழுவிக் கொண்டு திரும்பியபோது இரண்டாவது மேசையில் ஓர் அரசியல் பிரமுகர் உட்கார்ந்திருந்தார். தனித்து அவரைக் காண நேர்ந்தது அற்புதமாகத் தோன்றியது. நல்ல மனிதர் என்று கேள்வி. இப்போது ஆட்சியில் இல்லை.

 

 • அண்ணாச்சி, வணக்கம்!

 

 • வணக்கம்!

 

அவருக்கு இவனைத் தெரியாது. இவன் அவரைத் தனியே இருக்கவிட்டு, அடுத்த மேசையில் அமர்ந்தான். ‘அவருக்கு இன்றைக்கு ஒருநாள்தான்; நமக்கு சாகிறவரை ஓட்டல் சாப்பாடுதான்,’ என்று எண்ணிக்கொண்டான். அந்தமட்டில், கவனியுங்கள், இவன் பெருமூச்சு விடவில்லை, முறுவல் கொண்டான்.

 

இவனுக்கு முந்தி அரசியல் பிரமுகர் கவனிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் நீட்டிய ஐந்நூறு ரூபாய்த் தாளுக்கு, முதலாளி இவனிடம்தான் ஐந்து தாள்கள் மாற்று வாங்கிக் கணக்கு முடித்தார்.

 

 • வீட்ல வசதியா சாப்பிடுறவரு பார்த்துக்கிடுங்க. அதான்.

 

 • வீட்ல சாப்டறவருன்னு சொல்லுங்க. வசதியான்னு ஆருக்குத் தெரியும்? எல்லா அரசியல்வாதியளும் அஞ்சப்பர் குஞ்சப்பர்லதானே திரியுதானுவோ?

 

முதலாளி ‘ஜெர்க்’ ஆனதுபோல் ‘பாவ்லா’க் காட்டி, ஒரு முறுவலுமாய்த் திரும்பிப்போய் முட்டைகளை உடைத்தார். ‘முட்டைகள் எல்லாம் கனவுகள்தாமே?’ என்று இவன் யோசித்தான்.

 

முந்தியநாள் மாலை ஒரு திருமண வரவேற்புக்குப் போயிருந்தான். இப்போதெல்லாம் தாலிகட்டுக்கு முதல்நாளே வரவேற்பு விருந்து வைத்துவிடுகிறார்கள். ஆனால் இந்தக் கல்யாணம் கிராமத்தில் நடந்ததினால் நான்கு நாட்கள் தள்ளி நிகழ்த்தப்பட்ட நகரத்து வரவேற்பு அது. மேடையில், பரிசுப் பொருட்கள் பெற்று, அடுத்தடுத்து ஃபோட்டோவுக்கு நின்றுகொடுத்துக் கொண்டிருந்த மணப்பெண் இடைக்கிடையே கொட்டாவி விட்டுக்கொண்டும் இருந்தாள்.

 

அதுகேட்டு, இவனைச் சுமந்துக்கிடந்தவள் சிரித்த சிரிப்பில் இவனுடம்பும் குலுங்கியது. இவன் சொல்லிய பழமொழி இதுதான்: “காணாத கழுதெ கஞ்சியெக் கண்டுச்சாம்; ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சுச்சாம்.”

 

இவனோடு ஒரே கம்பெனியில் ஒருமித்து வேலை பார்த்தவர்களில் பலரும், இவனோடு படித்தவர்களில் சிலரும் அந்த வரவேற்புக்கு வந்திருந்தார்கள். படித்தவர்களில் சீனியர் ஒருவர் இவனை ஒதுங்கக் கட்டினார்.

 

 • அழகர், ஒன்னு கேள்விப்பட்டேன்…

 

 • ஆமா, சீனியர், அது உண்மைதான்: நானும் என் ஒய்ஃபும் தனித்தனியாத்தான் இருக்கோம்.

 

அவர்கள் செவிகளுக்கும் வாய்களுக்கும் இடையில், நல்லவேளை, இசைக்கச்சேரி என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுவந்து குழப்பவில்லை.

 

இன்னொருவன், படித்த காலத்திலும் வகுப்புத் தோழன். பணியிடத்திலும் நண்பன். அவனுடைய மனைவி, அழகரை இலக்குத்தெளிந்து சிரித்துக்கொண்டே அணுகினாள்.

 

 • ஏங்க, அவங்க வரலீங்களா?

 

 • வரலைங்க. அவளும் நானும் இப்ப ஒன்னா இல்ல.

 

 • ஐயோ! என்னாச்சுங்க?

 

 • தனித்தனியா இருக்கோம். எங்களோட எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ்க்கு அதுதான் வசதியா இருக்கு.

 

முறைத்தாள். போய்விட்டாள். முந்தி ஒரே குடியிருப்பில், ஒரு கனவு போன்று, எல்லாரும் ஒன்றாக இருந்ததொரு காலத்தில், ஒருமுறை, அவளிடமிருந்து இதே முறைப்பு ஒன்றை நேரிட்டு இருக்கிறான். அன்று இவன் சொன்ன ஆராய்ச்சி முடிவு இதுதான்: “ஒவ்வொரு பொம்பளையுமே அடுத்தவ புருஷன் காரியக்காரன்; தன் புருஷன்தான் அசடுன்னு நினைக்கிறா. அதனால, தன் புருஷனை ஒக்கிட்டு எடுத்து அடுத்தவள்கள் புருஷன் அளவுக்கு உயர்த்தப் பாடுபடுறா. இந்தப் போராட்டத்தின் இழுபறியால்தான் இந்த உலகமே இயங்குது.”

 

அழகரைச் சுமந்து கிடந்தவளும் அனுபவப் பட்டிருப்பாள் போலும். சிரித்தாள். கூடவே, இவன் தலையைக் கோதினாள். காதுகளையும் கன்னங்களையும் வருடிக்கொடுத்தாள்.

 

 • இதுக்குதான் ஒரு கல்யாணம் காட்சிக்குப் போறதுனா எனக்குச் சங்கடமா இருக்கும். ‘உன் வீட்டுக்காரரெ எங்கே?’ன்னு வர்றவள்லாம் கேட்பா.

 

 • கேட்டுட்டுப் போறாளுவோ, சரிதா. அதுக்கு நாம ஏன் சங்கடப் படணும்? அந்தக் கூட்ஸ் வண்டி வேணாம்ட்டுதானே இந்த எக்ஸ்ப்ரெஸ் வண்டியில கோர்த்து ஓடிக்கிட்டு இருக்கோம்.

 

 • அதுஞ் சரிதான்.

 

அதற்கப்புறம் அவர்களது உடலியக்கம் சீராக இருந்தது. சிறுவயதில் இவன் வரைகிற இயற்கைக்காட்சி ஓவியங்களில், எப்போதுமே, ஒரே மாதிரியான ஒரு மலை வரைச்சல் இடம்பெறும். அவள் மேலுதடு அப்படியொரு தோற்றம் தந்தது. சற்றே தலை தூக்கிப் பார்த்தான். திரைவீழ்ந்த அவள் இமைகளுக்குக் கீழே செருகிய மூன்றாம் பிறையென வெண்விழிக் கீற்றுகள். மீண்டும் முலைமட்டத்துக்கு முகம்தாழ்ந்தான். நாடிமட்டம் உயர்ந்த அவள் முகவெளியில் மேல்வரிசைப் பல்லொழுங்கு தெளியத் திறந்துகொண்ட மாதுளைவாய் மேலுதடு இவனது குழந்தைப் பருவத்து மலைவரைச்சல்.

 

எக்ஸ்ப்ரெஸ் வண்டி வேகம் எடுத்தது.

 

சப்ளையர் கைபட்டுத் தவறி ஒரு பூரி தரையில் விழுந்தது. அதை எடுத்து முதலாளி மீண்டும் எண்ணெய்ச் சட்டியில் இட்டார். அழகர் அதைக் கவனித்தான்.

 

 • அது என்ன அது வைத்தியம்?

 

 • தரையில விழுந்திட்டு இல்லே? கல்லு மண்ணு ஒட்டியிருக்கும்லா? அந்த மண்ணு பிரிஞ்சு இப்ப சட்டியில கீழ போயிறும்.எண்ணெய்யெ அப்பறமா இறுத்து எடுத்துக்கலாம். அதுதான் சொன்னேன்ல, நெருப்புல போட்டெடுத்தா எல்லாம் பக்குவப் பட்டுறும்னு? கொதிக்கிற எண்ணெய்யும் நெருப்புதானே?

 

சற்றைக்கு முன்தான் சரிதாவின் கொதிக்கிற எண்ணெய்யில் தன்னை முக்கி எடுத்தது அழகருக்கு ஞாபகம் வந்தது. முறுவலித்தான்.

 

அப்போது, சரியாக, தன் வீடுபோய்ச் சேர்ந்த சரிதா அலைவிளித்தாள்.

 

 • சாப்ட்டீங்களா?

 

 • ம், முடிஞ்சது.

 

 • என்ன சாப்ட்டீங்க?

 

 • ஒரு டபுள் ஆம்லேட்; ரெண்டு இட்லி.

 

 • ஆம்லேட்டா? இங்கெ நாட்டுக்கோழி முட்டை கிடைக்குது கொண்டுவரட்டா?

 

 • என் வீட்லதான் அடுப்பு இல்லையே?

 

 • எங்கிட்டதான் ரெண்டு சிலிண்டர் இருக்கில்ல? ஒரு சிலிண்டரையும் அடுப்பையும் உங்க வீட்ல கொண்டாந்து போடுறேன். பாலு கீலு வேணும்னாலும் காயவெச்சுக் குடிக்கலாம்ல?

 

 • ஏய், ‘ஆண்டிக்குக் கோவணம் கட்டுன கதை’ ஒன்னு உங்கிட்டச் சொல்லி இருக்கேனா இல்லையா? நாட்டுக்கோழிமுட்டை, அது நீயும் இல்ல; நானும் இல்ல, தெரிஞ்சுக்கோ! அப்படியெல்லாம் ஒரே ருசியில போயிச் சிக்கிக்க முடியாது.அப்பப்போ எது கிடைக்குதோ அதைத் தின்னு காலத்தைக் கடத்தணும், ஆமா.

 

 • உங்ககிட்டப் போயிச் சொன்னேன் பாருங்க!

 

கல்யாண வரவேற்பில் நண்பனின் மனைவி முறைத்தது ஞாபகத்துக்கு வந்தது. கைகழுவிவிட்டு வெளியேறி வீட்டுக்கு வந்தான்.

 

வந்துசேர்ந்த மறுநொடி செல்போன் சிணுங்கியது. மீண்டும் சரிதாவிடமிருந்து.

 

 • எங்க அப்பத்தா செத்துப் போயிடுச்சாம்ங்க.

 

 • ஐயோ! பணம் ஏதும் வேணுமாப்பா?

 

 • அதில்லங்க, என் தம்பி போன்பண்ணி ஊர்ப்பக்கம் வந்துடாத, அவமானமாப் போயிடும்கிறான்.

 

 • என்ன பண்ணப் போறே?

 

அவள் மறுமுனையில் அழுகிறாள்.

 

 • சரிதா, நீ ரெடியாகு. நான் வந்து கூட்டிட்டுப் போறேன்.

 

 • வேணாங்க, பிரச்சனையாயிடும்.

 

 • அதை நான் பார்த்துக்கிறேன். நீ கிளம்பி ரெடியாகு!

 

தன் கல்லூரி சீனியர், முதல்நாள் கல்யாண வரவேற்பில் அவன்மேல் அக்கறை கொண்டொருவர் விசாரித்தார் அல்லவா, இப்போது காவல்துறையின் உயர்பதவி ஒன்றில் உள்ள அவரைத் தொடர்புகொள்கிறான் அழகர்.

 

‘நீயோ சட்டத்துக்குப் புறம்பானதொரு வாழ்க்கையை வாழ்கிறாய்; ஆனால், ஒரு நெருக்கடி என்றதும் சட்டத்துக்குள் போகிறாயே, இது என்ன நியாயம்?’

 

‘தவறித் தரையில் விழுந்த பூரி நான். நாட்டுக்கோழி முட்டைகளை, அருள்கூர்ந்து, அடைகாக்க வையுங்கள்; ஆம்லெட்டுக்கு எடுக்காதீர்கள்!’

 

இவ்வாறு, தனக்குத்தானே வினவியும் விடையிருத்தும் பல திருத்தங்கள் கற்பித்தபடி, குடும்ப உறவுகளில் தலையாய ஓர் அப்பத்தாவுக்கு மரியாதை செலுத்தக் கிளம்பி வெளிப்படுகிறான் அழகர்.

 

 

=:||:=

 

 

 

 

 

 

 

 

மின்னூல் உலகம் / 2 / ( அறிவியல் அறிமுக தொடர் ) / சீனிவாசன் ( லண்டன் )

download (3)

 

 

மின்னூல் உலகம்
===========

இணையத்தின் வளர்ச்சிக்குப்பின், மின்னூல்களின் புதுயுகம் வந்துள்ளது. அச்சு நூல்கள் உருவாக்க ஆகும் காலம், உழைப்பு, பணம், விற்பனைச் சிக்கல்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சி தரும் தீர்வு மின்னூல்கள்.

மின்னூல் படிக்கும் கருவிகள்
———————————–

HTML வடிவில் இணையதளங்களில் உலாவி(Browser) மூலமும் PDF வடிவிலும் கணிணியில் மின்னூல் படித்த காலங்கள் போய், இப்போது மின்னூல்களைப் படிப்பதற்கென்றே சிறப்புக் கருவிகள் உள்ளன. அமேசான் கிண்டில், நூக், சோனி, கோபோ போன்ற பல கருவிகள் சந்தையில் பல்வேறு திரை அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் E-Ink என்ற சிறப்புத் திரை உள்ளது. இது காகிதத்தில் படிப்பது போன்ற இனிமையைத் தருகிறது. டேப்லட், கணிணி, திறன்பேசி போன்றவற்றில் உள்ள LCD திரையானது, ஓரிரு மணிகள் கூட, தொடர்ந்து படிக்கவிடாமல், கண்களுக்கு சோர்வு தருகின்றன. ஆனால் E-Ink திரையானது, அச்சு நூல் தரும் அதே இனிமையைத் தருவதால், பல மணி நேரங்கள் சோர்வின்றிப் படிக்க முடிகிறது.

பேட்டரியை காலி செய்யும் திறன்பேசிகள் போலன்றி, ஒரு இரவு முழு சார்ஜ் செய்தாலே, ஒரு மாதம் முதல் இரு மாதங்களுக்கு தொடர்ந்து செயல்படவல்லவை இந்தக் கருவிகள்.

திறன்பேசிகளிலும் மின்னூல்கள் படிக்கலாம். ஆனால், நம் குரங்கு மனம், சிறிது நேரத்திலேயே அதில் மின்னஞ்சல் பார்க்கவோ, சமூக ஊடக செயலிகளை இயக்கவோ, தூண்டும். நொடிக்கொருமுறை notification வந்து ஆசை காட்டும். மின்னூல் படிக்கும் கருவிகளில், இந்தத் தொல்லை இல்லவே இல்லை. நீங்களும் நூலாசிரியரும் மட்டும்தான். நூல்களில் உலகில் நீங்கள் தடையின்றி உலாவிக் கொண்டிருக்கலாம்.

இந்தக் கருவிகள் பெரும்பாலும் 6 அங்குலத் திரை அளவில் கிடைக்கின்றன. 5 அல்லது 7 அங்குல அளவிலும் சில நாடுகளில் கிடைக்கின்றன. 2GB/4GB கொள்ளளவில் கிடைப்பதால் உங்கள் பாக்கெட்டில் ஒரு நூலகத்தையே கொண்டு செல்லலாம்.

மின்னூல் வகைகள்
———————–

கணிணியில் நாம் படிக்கும் A4 அளவு PDF கோப்புகளை, இந்தக் கருவிகளில் படிக்க இயலாது. இவற்றுக்கென்று சிறப்பு கோப்பு வகைகள் உள்ளன.

mobi

அமேசான் நிறுவனம், தன் கிண்டில் கருவிகளில் படிப்பதற்கேற்ப mobi என்ற புது கோப்பு வகையை அறிமுகம் செய்தது. இது கிண்டில் கருவி/மென்பொருளில் மட்டும் இயங்கும்.

epub

mobiக்கு மாற்றான ஒரு திறந்தமூல வகையான கோப்பு இது. பல HTML கோப்புகளை ஒன்று சேர்த்து zip செய்த வடிவமே இது.

இதை கிண்டில் தவிர பிற கருவிகளான nook, kobo, sony போன்றவை ஆதரிக்கின்றன. ஆன்டிராய்டில் fbreader, ஆப்பிள் கருவிகளில் iBooks, குனு/லினக்ஸ், விண்டோஸில் fbreader, readium.org(chrome plugin) மூலம் எல்லாக் கருவிகளிலும் படிக்கலாம்.
PDFல் இருப்பது போல, இந்தக் கோப்புகளில், பக்கஅளவு ஏதும் இல்லை. 3 அங்குல மொபைல் முதல் மிகப் பெரியகணிணித் திரைகளிலும் படிக்கும் வகையில், திரை அளவிற்கேற்ப தம் நீள, அகலத்தை மாற்றிக் கொள்கின்றன.

மேலும் எழுத்துரு அளவையும் நாம் விரும்பும் வகையில், ஏற்றி இறக்கிப் படிக்கலாம்.

எங்கே மின்னூல் வாங்கலாம்?
————————————

amazon.com, store.kobobooks.com, www.nook.com/gb/store/books, Google Play Books போன்ற தளங்களில் மின்னூல்கள் வாங்கலாம். இவை பெரும்பாலும் DRM என்ற கைவிலங்குடன் வருவதால், நூல்களை அந்தக் கருவிகளில் மட்டுமே படிக்க முடியும். பிறருக்குப் பகிர இயலாது.

இவை தவிர,
http://www.gutenberg.org/
http://archive.org/details/texts
http://openlibrary.org/
போன்ற தளங்களில் பல்லாயிரம் ஆங்கில நூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

 

download (4)

மின்னூல் உருவாக்கம்
————————–

அமேசான் போன்ற மின்னூல் தளங்களில், தினமும் பல்லாயிரம் நூல் ஆசிரியர்கள் தம் மின்னூல்களைத் தாமே உருவாக்கி, வெளியிட்டு வருகின்றனர். உரை ஆவணமாக நூலை எழுதியவுடன், epub, mobi வடிவங்களில் மாற்ற PressBooks.com, Sigil, Calibre போன்ற அட்டகாசமான, இலவச கட்டற்ற மென்பொருட்கள் உள்ளன.

PressBooks.com மூலம் மின்னூல் உருவாக்குவதைத் தமிழில் விளக்கும் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs

தமிழில் மின்னூல்கள்
————————-

கிண்டில், நூக், கோபோ என எந்த ஒரு கருவியும், தமிழை ஆதரிப்பதில்லை. kindle paperwhite ல் மட்டும் ஒரு நகாசு வேலை செய்து தமிழ் mobi கோப்புகளைப் படிக்கலாம்.
விவரங்கள் இங்கே-.
http://freetamilebooks.com/how-to-fix-tamil-in-kindle-paperwhite/

ஆனால் 6 inch PDF கோப்புகளை நாமே உருவாக்கி, மின்னூல் கருவிகளில் படிக்கலாம். LibreOffice, Firefox, k2pdfopt போன்ற கட்டற்ற மென்பொருட்கள் இதற்கு உதவுகின்றன. முழு விவரங்கள் இங்கே – http://freetamilebooks.com/how-to-read-tamil-in-kindle-and-other-ebook-readers/
FreeTamilEbooks.com
——————————–

நாங்கள் ஒரு குழுவாக இயங்கி, தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் எழுதும் வலைப்பதிவுகளைத் தொகுத்து, மின்னூல்களாக மாற்றி, FreeTamilEbooks.com தளத்தில், வெளியிட்டு வருகிறோம்.
DRM கைவிலங்குகள் ஏதும் இன்றி, epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் எல்லாக் கருவிகளிலும் படிக்கும் வகையில் மின்னூல்களை வெளியிடுகிறோம்.

எந்தக் கருவி வாங்கலாம்?
——————————-

மிகவும் சாதாரண E-Ink திரை கொண்ட கருவியே போதும். கிண்டில் ரூ 6000 வரை ஆகலாம். Kindle Paperwhite என்பது, E-Ink திரைதான். ஆனால் இரவில் ஒளிரும் திரை கொண்டது. கும்மிருட்டில் படிக்க விரும்புவோர் இதை வாங்கலாம். Kindle Fire என்பது சாதாரண ஆன்டிராய்டு டேப்லட்தான். இதற்குப் பதில், Apple ipad, Samsung, Nexus டேப்லட்களே மேல். ஆனால் கவனச் சிதறல், குறைந்த பேட்டரியுடனே வாழ வேண்டும்.

புது முயற்சிகள்
——————

Newshunt எனும் நிறுவனம் மொபைல் செயலி உருவாக்கி, பல இந்திய மொழிகளில் குறைந்த விலையில் மின்னூல்களை விற்று வருகிறது. Pratilipi.com இப்போது இணையதளமாக மட்டும் செயல்படுகிறது. விரைவில் செயலியாகவும் வர இருக்கிறது.

இவை தவிர scribd.com, issuu.com போன்ற பல தளங்களும் மின்னூல்களை விற்பனை செய்கின்றன. இவை DRM உடன் வருவதாலும், ஆன்டிராய்டு, ஐஓஎஸ் -இல் மட்டுமே கிடைப்பதாலும், என் போன்ற E-Ink திரைக் காதலர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை.

புதுக் கருவி வாங்கும் முன் ebay.co.in, olx.in போன்ற தளங்களிலும், சென்னை ரிச் தெரு போன்ற சந்தைகளிலும் தேடி, பழைய கருவிகள் கிடைத்தால், வாங்கலாம்.

நண்பரிடம் இரவல் வாங்கியாவது, ஒரு முறை E-Ink திரையில் ஒரு புத்தகம் படித்துப் பாருங்கள். உங்கள் கண்கள் உங்களுக்கு நன்றி சொல்வதை உணர்வீர்கள்.
படங்கள்-
https://pixabay.com/en/kindle-amazon-e-reader-ereader-381242/
Amazon Kindle PDF

உயிர்த்தெழுதல் ( சிறுகதை   ) / குமாரநந்தன்    

 download (4)

 

 

 

 

 

மீண்டும் ஒருமுறை  ரீடயல் பட்டனை அழுத்தினாள். இன்று ஏதோ ஒரு தீவிரம்  கூடியிருந்தது. எப்படியும்  வீட்டில் யாராவது ஒருவர்  அல்லது தன் தம்பியாவது  பேசிவிடுவான் என்று உறுதியாய்  நம்பினாள். ஆனால் ஒரு கண  மௌனத்திற்குப் பிறகு வழக்கம்போல  பெண் ஒருத்தியின் நெகிழ்வான  ஒலிக்குரல் பிரதி தாங்கள்  அழைத்த எண் தற்போது தொடர்பு  கொள்ள இயலாமல் இருப்பதால்  வேறொரு முறை முயற்சிக்கவும்  என்றது. வேறொரு முறையல்ல  பல எண்ணற்ற முறைகள் முயற்சி  செய்துவிட்டாள். மணி ஒலித்து  ஒலித்து ஓய்ந்துவிடுகிறது. மாநிறம் சுருள்முடி கருணை  பொங்கும் பிரகாசமான கண்களும்  கொண்ட தன் தம்பியை அவ்வளவு  குரூரமானவனாக அவளால் இப்போதும்  நினைத்துப் பார்க்க முடியவில்லை. .

தம்பியும் தானும்  அந்தக் கிராமத்தில் இருந்த  இருப்பு இன்னும் பசுமையாக  நேற்று நடந்ததைப் போல  அப்படியே நினைவில் இருக்கிறது. உள்முற்றத்தில் பெய்யும்  மழையின் மகிழ்ச்சி வெய்யிலின்  சோர்வு இரவில் அம்மா  வாழைநாரில் கட்டும் மொட்டு  மல்லியின் மனம் சோளத்தோசையின்  ருசி குறைக்காட்டில் மண்டிக்கிடக்கும்  அருகம்புல்லின் நீர்த்துளிகளின்  புத்துணர்வு இதையெல்லாம்  இப்போது நினைத்து ஏங்குவது  அவளுக்கே நாடகத்தனமாக  இருந்தது. இப்போது ஏன்  இந்த ஞாபகங்கள் தொடர்ந்து  வந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை அந்த சின்ன வயசில்  அப்படியே இருந்திருந்தால்  நன்றாய் இருக்கும் என  நினைக்கிறேனா அல்லது அப்படியான  அவர்கள் தன்னை எப்படியும்  சேர்த்துக் கொள்வார்கள்  என்று நம்புகிறேனா என்று  தன்னையே கேட்டுக் கொண்டாள்.

வாசலில் போட்டிருந்த  கோலத்தின் மீது அவள்  பார்வை பதிந்தது. மஞ்சள்  நிறப் பூக்களும் பச்சை  நிற இலைகளுமாகப் படர்ந்திருந்தது. வாசல் முழுவதும் நெருஞ்சி  படர்ந்திருப்பதைப் போலத்  திடீரென்று தோன்றியது. எழுந்து  போய் வேலைகளைப் பார்க்க  வேண்டும் என தனக்குத்தானே  பணித்துக் கொண்டாள்.

பழைய ஞாபகங்களில்  மும்மரமாக ஏதோ சமையல்  செய்து கொண்டிருக்கும்  போது கனகு மிக நெருக்கமாக  வந்து அமைதியாக நின்றான். அப்போதுதான் அவள் சுயநினைவுக்கு  வந்தாள். அவளுக்கு வெக்கமாக  இருந்தது. என்ன சமைத்துக்  கொண்டிருக்கிறோம் என்பதே  தெரியவில்லை அவள் அப்படி  நடந்து கொள்வது அவளுக்கே  ஆச்சரியமாய் இருந்தது. கனகுவின்  அண்மை அவளுக்கு என்னவோ  போல் கிறக்கமாக இருந்தது. அவன் மெல்ல அவளை அணைத்துக்  கொண்டான். அவள் “நேரமாகலையா”  என்று முணுமுணுத்தாள். அவனுடைய  வாசமும் நிகோட்டின் வாசமும்  சோப்பின் வாசமும் கலந்த  அவள் மனம் கவர்ந்த ஆண்  வாசனை அவளுக்குள் சென்று  நிறைந்தது. அவன் திரும்பிப்  போய் சேரில் உட்கார்ந்து  கொண்டு பேப்பர் பார்க்க  ஆரம்பித்தான்.

கனகுவைக் கண்ட  அந்த இன்பகரமான நாட்கள்  மீண்டும் விறுவிறுப்பாக  அவளக்குள் உயிர்பெற்றன. அந்த உயிர்ப்பு எப்போதும்  மாறாது. எத்தனை ஜென்மத்துக்கும்  மாறாது. அவள் பாகைப் போல  இளக ஆரம்பித்தாள். அதற்கு  மேலும் அவளால் நிற்க  முடியவில்லை. அடுப்பை சிம்மில்  வைத்துவிட்டு ஓடிச் சென்று  பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனின்  கழுத்தைக் கைகளால் வளைத்து  இழுத்து கன்னத்தில் முத்தம்  வைத்தாள். அவன் மகிழ்ந்து  போனவனாக பேப்பரின் அடுத்த  பக்கத்தைத் திருப்பினான். அவள் திரும்பவும் சமையல்  கட்டுக்குள் நுழைந்து  அடுப்பில் இருந்த உருளைக்  கிழங்கு வறுவலைக் கிளற  ஆரம்பித்தாள்.

போன் ஒலித்தது. கனவில் இருந்து விழிப்பவளைப்  போல விழித்தாள். அப்பா  அம்மா தம்பி எல்லாம்  மனதுக்குள் திரும்ப வந்துவிட்டனர். தம்பி அவள் நம்பருக்கு  டயல் செய்துவிட்டு ரிங்  போவதைக் கேட்டுக் கொண்டு  நிற்பதைப் போல ஒரு சித்திரம்  உருவாகி மிக வலிமையாக  தத்ரூபமாக நின்றது.  அவள்  இதயம் திக் திக் கென  அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அடுப்பை அணைத்துவிட்டு  ஓடிப்போய் போனை எடுத்து  ஹலோ என்றாள். ஹலோ என்றது  ஒரு பெண் குரல். அது மஞ்சுவின்  குரல். அவளுக்குள் பிரகாசமாக  எரிந்து கொண்டிருந்த ஏதோ  ஒன்று அணைந்தது. ஆனாலும்  எந்தச் சுவடும் இல்லாமல்  உற்சாகமாக  மஞ்சுவிடம்  பேச ஆரம்பித்தாள்.

போனை வைத்து விட்டுத் திரும்பி கனகைப் பார்த்தபோது அவன் “உங்க வீட்டுக் காரங்ககிட்ட இருந்து போன எதிர்பார்த்து நீ ஏமாந்து போறதை சகிக்க முடியல. ஒரு வருசமா நீ கொஞ்சம் கூட மாறலை” என்றான் ஆச்சரியமாய். “நீயா எதையாவது நினைச்சிக்காத அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல”. என்றாள். “பேசாம வா இன்னைக்கி உங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்”. “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என்றாள். அவள் கண்களில் ஒரு துளி கண்ணீர் திரண்டு நின்றது. சிரித்துக் கொண்டே அதைச் சுண்டி வீசினாள். “இதப் பார் எங்கிட்ட மறைக்க ஏன் இவ்வளவு கஷ்டப்படற.” ‘ஒண்ணும் இல்ல நீ பேசாம போ”

வீட்டை விட்டு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இன்னும் அவர்கள் மேல் வீசிய காற்று கூட இங்கே வரவில்லை. வருவதற்கு முன்பு வரை அவள் ஒருநாள் கூட அம்மாவை வீட்டைப் பிரிந்து இருந்ததில்லை. கல்லூரியில் ஒருமுறை இரண்டு நாள் டூர் போய்விட்டு வந்து வீட்டு நினைவில் காய்ச்சல் வந்தவளாக அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதவள்தான் அவள். இந்தப் பிரிவைத் தீவிரமாக யோசித்தால் உடல் நடுங்கிவிடும் போலப் பயமாக இருந்தது. வீட்டு நினைவுகளை நினைத்துப் பார்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்து வந்தாள். ஆனால் அது ஒரு முடிவற்ற நாடகம் போல அவள் மனதில் திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருந்தது.

அவள் சந்தோசமாக  இருந்தாள். துக்கமாக இருந்தாள். உண்மையில் அவள் சந்தோசமாக  இருக்கிறாளா துக்கமாக  இருக்கிறாளா என்பது அவளுக்கே கண்டுபிடிக்க முடியாததாய் இருந்தது. முகத்தில் துக்கத்தின் சாயல் பல ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும் என யூகிப்பதைப் போல அவ்வளவு சந்தேகமாய் இருந்தது. முகத்தை மனப்பூர்வமான சிரிப்பால் நிறைத்தருந்தாள். தன்னுடைய வீட்டு நினைவுகளை வென்று விட வேண்டும் என்கிற வெறியோடு கனகுவைத் தீவிரமாகக் காதலித்தாள்.

அவளின் சிரிப்பு  முகத்திரைகள் சீக்கிரமே  நைந்து போய்விட்டன அவள்  உடலில் மினுமினுப்பும்  முகத்தில் ஜொலிப்பும்  குறைந்துவிட்டது. அது கனகுவைத்  தவிர வேறு யாருக்கும்  தெரியாததாய் இருந்தது. அவன்  தன் சக்திக்கு முடிந்த  வரை அவளை மனம் கோணாமல்  கவனித்துக் கொண்டுதான்  வருகிறான். எப்போதும் அவளை  உற்சாக மனநிலையிலேயே வைத்திருக்க  வேண்டும் என்பதில் கவனமாய்  ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுத்துப்  பேசுகிறான். அவனுடைய இந்த  செய்கைக்கு நன்றி பாராட்டும்  விதமாக அவளும் எப்போதும்  பூரிப்போடு சிரித்துக்  கொண்டிருக்கிறாள். ஆனால்  அவள் நாடகம் பரிதாபமானதாய்  இருந்தது. ஸ்திரமற்ற ஒற்றை  வேரைப் பற்றிக் கொண்டிருக்கிறாள்  எப்படியும் இது தானாய்  முடிவுக்கு வந்துவிடும்  அவள் முழுமையாக இந்தப்  புதிய வாழ்க்கைக்குள்  விழுந்துவிடுவாள் என அவன்  நம்பிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. பார்ப்பவர் கேட்கும் படியாக அவள் உடல் பாதியாய் இளைத்துப் போனாள். ஒரு நிரந்தரக் களைப்பு அவள் முகத்தில் நங்கூரமிட்டுவிட்டது.. எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது அந்த எல்லை வரைதான் போவாள் என்று இவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளின் இந்த செயல்பாடு எல்லைதாண்டிப் போய்க் கொண்டிருப்பதாக  அவனுக்கு அச்சமாய் இருக்கிறது.

எப்போதும் சம்பிரதாயமாக  இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டுப்  போதும் என்கிறாள் அவளின்  உணவில் அவ்வளவு கசப்பு  எங்கிருந்து வந்து குவிகிறது. ஒரு வாய் எடுத்து வைத்ததும்  முகத்தை சுளித்துக் கொண்டு  கசக்குது என்பாள். பிறகு  சகித்துக் கொண்டு இரண்டு  வாய் தின்பாள். அதற்குமேல்  முடியாது என்பது போல  கையைக் கழுவிக் கொண்டுவிடுகிறாள். தினமும் அவள் தட்டில்  கிடக்கும் உணவை அவன்  வெறித்துப் பார்க்கிறான். உண்மையில் அது கசப்பதைப்  போல இவனுக்கும் தோன்றுகிறது. இந்தப் பிரமையை உடைத்து  குறைந்த பட்சம் தானாவது  வெளியில் வந்துவிட வேண்டும்  என நினைத்தவனாய் அவளின்  தட்டிலிருந்து ஒருவாய்  அள்ளித் தின்றான். பிரமை  அவன் மீது இறுகிக் கவிந்தது. அவனுக்கு மூச்சுத் திணறியது. அவளுடைய உணவு உண்மையிலேயே  கசந்தது அதே நேரம் தன்னுடைய  தட்டில் இருக்கும் உணவு  கசக்கவில்லை. எங்கிருந்து  இந்தக் கசப்பு வந்திருக்கும்  என யோசித்துப் பார்த்தான்  யோசிக்க முடியவில்லை. தன்னுடைய  வாழ்க்கையில் ஒவ்வொரு  நாளும் கவனித்துச் சேர்த்து  வைத்திருந்த அனுபவங்களைக்  கொண்டு கட்டமைத்து வைத்திருந்த  அவன் வரைக்குமான துல்லியமான  உலகம் சிறுவனின் மணல்  வீட்டைப் போல சரிந்து  விழுந்தது. அந்தக் கசப்பு  எங்கிருந்து வந்திருக்கும்?

கனகுக்கு ஒன்று  தெளிவாகப் புரிந்து கொண்டு  வந்தது. அவள் வீட்டு ஞாபகத்தில்  இருந்து வெளியில் வரமுடியாத  ஜீவன். அவர்களுடைய நிராகரிப்பு  அவளைப் பாதித்துவிட்டது. அவர்களை நிரந்தரமாகப்  பிரிந்துவிட்டதாக நினைத்து  ஏங்கிப் போகிறாள். அவனுக்கு  மிகவும் பாவமாய் இருந்தது. என்ன பெண் இவள் பூஞ்சனம்  மாதிரி. அவளைப் பார்க்கும்  போதெல்லாம் நெஞ்சோடு இறுக்கி  அணைத்து எப்போதும் ஆறுதல்  சொல்லிக் கொண்டே இருக்க  வேண்டும் போல அவ்வளவு  பரிதாபமான தோற்றத்தைக்  கொண்டுவிட்டாள்.

பனிக்காலத்தில்  ஒருநாள் நடுஇரவில் அவள்  ஒரு கல்லூரி மாணவியின்  குதூகலத்தோடு கெக்கெலி  கொட்டி சிரித்தாள். வீட்டுக்குள்  காட்டாற்று அருவி கொட்டியதைப்  போல இரவுப் பேரமைதியின்  மீது கொட்டியது அந்த  பிரம்மாண்டமான சிரிப்பு. கனகு தூக்கத்தில் இருந்து  பதறிப் போய் எழுந்தான். படுக்கையில் அவள் தூங்கியபடியே  வாய்விட்டு சிரித்துக்  கொண்டிருந்தாள். நீல விளக்கொளி  நடு இரவு அமைதி என ஒன்றுக்கொன்று  இணைவாய் இருந்த விசயங்களைச் சிதறிக் கலைக்கும் அட்டகாசமான சிரிப்பு. அவளை அசைத்து எழுப்புவதற்காக அவன் கை நீண்டுவிட்டது. ஆனால் அவள் தன்னுடைய வீட்டாரோடு இருப்பதைப் போல கனவு கண்டுகொண்டிருக்கக் கூடும் என யூகித்தவனாய் கைகளைப் பின்னால் இழுத்துக் கொண்டான். சிரித்துக் கொண்டிருந்தவள் திடுக்கென விழித்துக் கொண்டாள். கடத்தப்பட்டு வந்தவள் போல எழுந்து உட்கார்ந்து கொண்டு மிரள மிரள விழித்தாள். கனகுவை அடையாளம் தெரியாதவள் போல ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள். பிறகு அவனைக் கட்டிக் கொண்டு பிரளயம் வந்துவிட்டதைப் போலஅழுதாள். அவன் எதுவும் சொல்லவில்லை மெல்ல அவள் காதருகில் “வீட்டுக்கே போயிடறியா நாம பிரிஞ்சா கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்” என்றான். அவள் அவனை உலுக்கித் தள்ளிவிட்டு அவன் கண்ணத்தில் அறைந்தாள். “நான் வீட்டுக்குப் போறேன்னு உங்கிட்ட சொன்னேனா இப்போ” என்று கத்தினாள்.

இதை இப்படியே  விட முடியாது என கனகுவுக்குள்  எச்சரிக்கை மணி அடிக்க  ஆரம்பித்துவிட்டது. ஏதோ  ஓர் தைரியத்தில் அவள்  வீட்டுக்கே போய்விட்டான். வீடு அமைதியாகவும் ரம்யமாகவும்  இருந்தது. அவள் தம்பியிடம்  அவள் சாயல் இருந்தது. அவனை  நெருங்கிய நண்பன் மாதிரி  பார்த்தான். அவன் அவனுடைய  பார்வையை நிராகரித்துவிட்டான். அவர்கள் யாரும் இந்த  வீட்டிலிருந்து ஒரு ஜீவன்  வெளியேறிவிட்டதற்கான துக்கத்தில்  இருப்பவர்களைப் போல இல்லை. சந்தோசமாகவும் நிறைவாகவும்  அமைதியாகவும் இருப்பவர்களைப்  போல நிதானமாக இருந்தார்கள்.

இவன் மெல்லிய  குரலில் வாணியின் நிலைமை  குறித்து அவளுடைய அப்பாவிடம்  விவரித்தான். அவளுடைய மீள  முடியாப் பாசத்தை பாசத்தால்  ஏற்பட்டுவிட்ட நோயை அவனுக்குத்  தெரிந்த வரையில் விவரித்துச்  சொன்னான். அவள் அப்பா கொஞ்ச  நேரம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு  போரடிப்பதைப் போல முகத்தை  வைத்துக் கொண்டு வலது  கையை உயர்த்திப் போதும்  என சைகை காட்டினார். மூன்று  பேரும் முகத்தில் எந்த  சலனமும் இல்லாமல் அமைதியாக  இருப்பது அவனுக்கு ஆச்சரியமாய்  இருந்தது. “இங்க பாருங்க அவ எங்க மக இல்ல அவள நாங்க அப்பவே மறந்திட்டோம். எங்களுக்கு ஒரு மக இருந்தா அவ செத்துட்டா”. அவனுக்குக் கோபம் பிரவாகமாக சுழித்துக் கொண்டு வருவதை அவனால் பார்க்க முடிந்தது. “உண்மையிலேயே அவ செத்துகிட்டிருக்கா நீங்க என்னவோ இப்படிப் பேசிகிட்டிருக்கீங்க உங்களுக்கு என்ன பிரச்சனை இந்தக் காலத்தில இவ்வளவு பிடிவாதம் எதுக்கு அவளை வந்து ஒரே ஒரு தரம் சும்மா பாத்துட்டாவது வந்திடுங்க” என்றான்.

டேய் என்று ஒரு  குரல் அந்த அறையை இரண்டாக  வெட்டுவது போலக் கேட்டது. விக்கித்துப் போய் தன்  பேச்சை நிறுத்திக் கொண்டான். தன் காதுகளை நம்ப முடியாதவனாய்  சந்தேகத்தோடு திரும்பி  வாணியின் தம்பியைப் பார்த்தான். அவன் கைகளை சொடக்கிட்டு  எந்திரிச்சி வெளிய போ  என்றான். வாழ்க்கையில் அவ்வளவு  பயங்கரமான ஒரு கணத்தை  அவன் சந்தித்ததே இல்லை. சகலமும் மரத்து மறந்து  போனவனாக எழுந்து வந்துவிட்டான்.

தன்னுடைய அப்பா அம்மாவின் ஞாபகம் வந்தது. அவர்கள் கருணை மிக்கவர்களாகவும் பாசம் மிக்கவர்களாகவும் அவனிடம் சந்தேகத்திற்கிடமின்றி நடந்துகொண்டிருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் வீட்டுக்குப் போய் சேர்ந்து கொள்ளலாம் என்று நம்பிக் கொண்டிருந்தவன் இனி அதைத் தொடர முடியுமா என்று கலக்கமாய் இருந்தது. இங்கே போய் பார்த்துவிட்டு வந்ததைப் போல அங்கேயும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட்டால் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று நினைத்தான். வீட்டுக்கு வந்தபின்தான் அவனுக்கு சுய நினைவே வந்தது.

வாணி படுக்கையில்  படுத்திருந்தாள். ஏதோ குமட்ட  வைக்கும் ஒரு வாடை அடித்தது. படுக்கைக்குக் கீழே கதகதவென்று  வாந்தி மாதிரி இருந்தது. கனகுக்கு உடல் முழுக்க  ரத்தம் பாய்ந்தது. வாணி  வாணி என்று கத்திக் கொண்டு  அவள் மூச்சைப் பார்த்தான்  மூச்சு ஓடிக் கொண்டிருந்தது. ஆம்புலன்சுக்குப் போன்  செய்தான். புத்தி பேதலித்துவிடும்  போல இருந்தது. அவன் மிக  ஜாக்ரதையாக தன்னுடைய சுய  உணர்வை ஒரு பலம் கொண்ட  காளையை அடக்குவதைப் போல  போராடிக் கட்டுப்படுத்த  வேண்டியிருந்தது. இந்த சமயத்தில்  தன் வீட்டுக்காவது போன்  செய்யலாமா என்று நினைத்தான். ஆனால் இந்த சமயத்தில்  வாணியின் வீட்டாரைப் போல  இவர்களும் ஏதாவது சொல்லிவிட்டால்  அது தன் சக்தியைக் குழைத்துவிடுமோ  என்று பயந்தான். நல்ல வேலையாக  சம்பாதித்து குடும்பத்தை  நிர்வகித்துக் கொள்ளும்  அளவுக்கு தன்னிடம் ஒரு  வேலை இருப்பது எவ்வளவு  நல்லதாய்ப் போயிற்று என்று  அசுவாசப்பட்டுக் கொண்டான். அதே சமயம் தாங்கள் இருவரும்  என்ன ஒரு பயங்கரமான சூழலால்  சூழப்பட்டிருக்கிறோம் என்று  அச்சத்துடன் நினைத்துப்  பார்த்தான். இவள் எப்படி  இவ்வளவு சுயநலமாக இப்படி  ஒரு முடிவு எடுக்கப்  போயிற்று என்று கோபமாகவும்  வந்தது.

இருவரும் சலித்துப்  போய்விட்டனர். வீட்டுக்கு  வந்தபின் அவள் தான் காதலித்தது  வீட்டை எதிர்த்துக் கல்யாணம்  செய்தது தவறோ என்று யோசிக்க  ஆரம்பித்தாள். அவனுக்கு  இப்படிப் பட்ட ஒருத்தியை  தன்னைவிட தன் குடும்பத்தையே உயிராக நினைப்பவளைக் கல்யாணம் செய்து தானும் வருந்தி அவளையும் வருத்தி மெல்ல மெல்ல காதலைக் கொன்றுவிட்டுக் கையறு நிலையில் நின்று கொண்டிருப்பது தேவையா என்று பட்டது. அம்மாவின் முகத்தைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என திடீரென்று ஏக்கம் வந்தது வீட்டு ஞாபகம் தனக்கும் ஏக்கத்தைத் தரக்கூடியது என்கிறதே அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. தனக்கு மட்டும் வீடு குடும்பம் இல்லையா தான் மட்டும் அதையெல்லாம் தூக்கி வீசிவிட்டு இவளோடு இருக்க வேண்டும். இவள் தன் வீட்டைப் பிரிந்த ஏக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பாள். என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் முகம் எல்லோராலும் கைவிடப்பட்டதைப் போல இருந்தது.

தினமும் அவள்  இரவு படுக்கையில் அழுது  கொண்டிருந்தாள். அவன் ஏன்  என்று கேட்பதில்லை. மௌனமாகப்  படுத்துக் கொள்கிறான். அவனுடைய  மௌனம் அவள் அழுகையை மேலும்  தீவிரப்படுத்தியது. அவன்  அவளை எதுவும் கேட்கக்  கூடாது என்பதில் உறுதியாய்  இருந்தான். ஒருநாள் அவன்  கையைப் பிடித்துக் கொண்டு  “கனகு நான் எல்லாத்தையும் மறந்துட்டு உங்கூட சந்தோசமா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். அது உனக்குப் புரியுதா” என்றாள். அவன் புரியுது என்றான். அவள் அவனைத் தன் பக்கம் திருப்பினாள் “நிஜமாவேதான் கனகு. ஆனா ஏன்னு தெரியலை எங்க வீட்டு நெனப்பு என்னை இப்படிப் பண்ணிகிட்டிருக்கு” என்றாள் ஆச்சரியமாய். அவன் “ஆனா அவங்கள்லாம் சந்தோசமாதான் இருக்காங்க அதை எப்பவாவது நினைச்சிப் பாத்தியா” என்றான். “அதுவும் எனக்குத் தெரியுது எல்லாமே எனக்குத் தெரியுது. ஆனா என்னால முடியல அதுதான் ஏன்னு எனக்குத் தெரியல” என்றாள்.     “உன் மனசுல ஏதோ கோளாறு நீ ஒரு பைத்தியம் வீட்டுப் பைத்தியம் உன்னக் கல்யாணம் பண்ணி வேற எங்காவது ரொம்ப தூரத்தில கொடுத்திருந்தா என்ன பண்ணியிருப்ப” என்றான். அவள் அவனை விசித்திரமாய்ப் பார்த்தாள். “அதுவும் இதுவும் ஒண்ணா  என் கல்யாணத்தப் பத்தி எங்க வீட்ல எவ்வளவு யோசிச்சாங்க தெரியுமா? என்ன ரொம்ப தூரத்தில கட்டிக் கொடுத்திருக்க மாட்டாங்க. வீட்டு சம்மதத்தோட மட்டும் இந்தக் கல்யாணம் நடந்திருந்தா உலகத்திலயே என்னவிட அதிர்ஷ்டசாலி யாரு?” என்றாள். “இப்போ நீ உலகத்திலயே பெரிய துரதிருஷ்ட சாலி அப்படித்தானே” என்றான். அவள் “நீ என் காதலை சந்தேகப்பட ஆரம்பிச்சிட்ட  ஆனா உன்னச் சொல்லியும் குத்தம் இல்ல” என்றாள்

ஒருமுறை மஞ்சுவைப்  பார்த்துவிட்டுத் திரும்பும்  போது ரோட்டில் தம்பியைப்  பார்த்துவிட்டாள். கார்  வாங்கிவிட்டார்கள் போல. காரிலிருந்து இறங்கி நின்று  கொண்டிருந்தான். அவ்வளவு  பிரகாசமாய் இருந்தான். தன்னுடைய  பஞ்சைக் கோலத்தை நினைத்துத்  பதறி ஒடுங்கினாள். என்றாலும்  தன்னை நேருக்கு நேராய்ப்  பார்த்துவிட்ட தம்பி தன்னைப் பார்த்து சிரிப்பான் என்று நம்பினாள். அவன் அவளை ரோட்டில் போகும் யாரோ போல முகத்தில ஒரு நரம்பும் பிரளாமல் பார்த்தான். அவளும் தன்னுடைய சத்தியெல்லாம் திரட்டி அவனை யாரோ போலப் பார்த்துவிட்டு வந்துவிட்டாள்.

கனகு வீட்டுக்கு  வந்தவுடன் அவன் கழுத்தைக்  கட்டிக் கொண்டு விசும்பினாள். “என்னைக் கைவிட்ற மாட்டீங்களே எனக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லை” என்றாள். அவள் குரலில் ஒரு வித்தியாசத்தைப் புரிந்துகொண்டான். வாழவேண்டும் என்கிற ஆசையும் துணிச்சலும் அவள் அழுகைக்குள் ஒளிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். அது எப்போதும் போல இல்லாமல் சிக்கலின்றி எளிமையாய் இருந்தது.

 

குணா கவியழகனின் / விடமேறிய கனவு (திறனாய்வு) /   கோமகன்   

download (2)

 

 

அண்மையில் பாரிஸில் வெளியிடப்பட்ட குணா கவியழகனின் “விடமேறிய கனவு” நாவல் வாசித்தேன் .நாவல் சொல்ல வந்த செய்தி , “இறுதி யுத்தத்தில்  ஓர் போராளி சரணடைந்து அதன் தொடராக ஓமந்தை, செயின் ஜோசெப் படைத்தளம், மெனிக் பார்ம் முகாம்களில் நடைபெற்ற சித்திரவதைகளையும் ,அங்கிருந்த அவனைப் போன்ற சிறைக்கைதிகளின் வாழ்வு நிலை பற்றியும் நாவல் விபரிக்கின்றது. சிறுவயதில் தமிழகத்தைச் சேர்ந்த   ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்த்த “பட்டாம் பூச்சி” (Papillon ) என்ற பிரெஞ் நாவல் இரண்டு முறை படித்திருக்கின்றேன். இது பிரெஞ் நாவலாசிரியரான ஹென்றி ஷாறியே (Henri Charrière) என்பவரால் 1969 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சுயசரிதை நாவலாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியம் ,மானுடத்தின் கௌரவம் என்ற கருவை பட்டாம் பூச்சி அதிகம் பேசியது. மனிதனின் தாக்கு பிடிக்கும் ஆற்றலுக்கும், விடா முயற்சிக்கும், சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்து காட்டாக இந்தக் கதையை அப்பொழுது வாசித்து உணர்ந்தேன்.  பின்னர் இந்த “பட்டாம்பூச்சி”  நாவல், அமெரிக்காவை சேர்ந்த பிறாங்கிளின்  ஜே .ஷஃபைனர் ( Franklin J. Schaffner ) இயக்கி ப்பியோன்” (Papillon ) என்ற ஆங்கிலத்  திரைப்படமாக 1973 ஆண்டு வெளி வந்தது.   அதில், “ஸ்டீவ் மக்வீனும், ஹாஃப்மெனும்” அற்புதமாக நடித்திருப்பார்கள். 

 

1931 -ம் ஆண்டு கொலையொன்றை செய்ததாக கதையின் நாயகன் மீது குற்றம் சாட்டப் பட்டு  ஆயுள் முழுவதும்  சிறையில்  கழிக்க வேண்டும் என்று  தண்டனை வழங்கப்பட்டது . கொலை செய்யவில்லை என்பது நாவலின் நாயகனின் வாதம். ஒன்றல்ல இரண்டல்ல  பதின் மூன்று தடவைகள் சிறை சிறையாக கதையின் நாயகன்  தப்பி கொண்டிருந்தான் . இறுதியில் பிரெஞ் கயானவை சேர்ந்த “இல் து டியாபிள்” (  l’île du Diable ) என்ற  மனித சஞ்சாரமற்ற தீவில் கதையின் நாயகன் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு மரணமாகின்றான்.“பப்பியோன்”  நாவலில் ஓர் சிறை வாழ்க்கையும்  அதன் கொடூரங்களும்  எப்படி இருக்கும் என்று மிகவும் தத்துரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். நான் “விடமேறிய கனவு” நாவலைவாசிக்கும் பொழுது எனது வாசிப்பு மனநிலையில் “பட்டாம் பூச்சி ( பப்பியோன் )”  நாவலின் அரைப்பக்கத்தை தான் நூலாசிரியர் எட்ட முயற்சி செய்திருக்கின்றார் என்பது தெளிவாகியது .நாவலில் தத்துவ மழைகளைக் குறைத்து, சிறை வாழ்வின் அல்லது சித்தரவதை முகாமின் கொடூரங்களை நூலாசிரியர் இன்னும் அதிகமாக விபரித்திருப்பாரேயானால், ஈழத்து போர் இலக்கிய சூழலில் “பப்பியோனை” விட ஓர் படி மேல் சென்று காத்திரமானதோர் இடத்தைப் நூலாசிரியர் பிடித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. 

 

“எணைப்பிறை ( நஞ்சுண்ட காட்டில்)”  இருந்த சொல்லாடலில் நெகிழ்வுத்தன்மையை நான் “விடமேறிய கனவு” வாசிக்கும் பொழுது என்னால் உணர முடியவில்லை. விடமேறிய கனவின் சொல்லாடல்களில் ஒருவிதமான வறட்சித்தன்மைகளே அதிகமாகக் காணப்பட்டன . நாவலின் தொடக்கத்தில் இருந்து நாவலின் நடுப்பகுதி வரை ஒரே தத்துவ மழையாக இருந்தது . அதாவது ஜெயகோவாவின் நூல்களான “காவல் கோபுரம் ” மற்றும் “நம்பிக்கை ஒளி ” போன்று இருந்தது. ஓர் படைப்பாளி தனது படைப்பில் அளவுக்கு அதிகமாக தத்துவங்கள் அல்லது போதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை .அதற்கு “மதபோதகர்கள்”  இருக்கின்றார்கள். இப்படியான அதிக தத்துவ மழைகள் அல்லது போதனைகள் வாசகரின் மனதில் ஒருவிதமான சலிப்புத்தன்மையை உருவாக்குமே ஒழிய வாசகரை நாவலுடன் ஒன்றிணைய விடாது தடுத்து விடும் என்பது எனது அவதானிப்பு ஆகும் .

 

நூலாசிரியர் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்த படியால், நாவலின் புலி எதிர்ப்பு கருத்தியலை மிகவும் நுணுக்கமாக நாவலில் நகர்த்தி இருக்கின்றார் என்றே எண்ண இடமளிக்கின்றது .அதாவது தீவிர தேசியவாதிகளால் தன்னில் “துரோகிப்பட்டம்” விழாமலும், அதே வேளையில் மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் “புலி ஆதரவாளர்” என்ற கருத்து விழாமலும்  தனது கருத்துக்களை நுணுக்கமாக நாவலினூடாக நகர்த்தி இருக்கின்றார். என்னைப்பொறுத்த வரையில் தற்போதுள்ள “குழுமவாதப் போர் இலக்கிய சூழலில்”  இத்தகைய நகர்வு பாராட்டப்பட வேண்டியதொன்று என்றாலும் , மறுதலையாக இந்த வகையான நகர்வு நூலாசிரியரின் நேர்மைத்தன்மையைக்  கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான் பார்த்த அல்லது எனது வாசிப்பு மனநிலையில், ஈழத்துப் போரியல் இலக்கியத் துறையில் இருக்கும் எழுத்தாளர்கள் எல்லோருமே தங்கள் தளங்களை நேர்மையாக வெளிக்காட்டியே தங்கள் படைப்புகளை வாசகர்களுக்குத் தந்தார்கள். அதில் ஆயிரம் விமர்சனங்கள் வாசகர்களுக்கு இருக்கலாம் . அனால் அதில் அவர்களது தளங்களை  தெட்டத் தெளிவாக வாசகர்களுக்கு உணர்த்தியிருந்தார்கள் . ஆனால் விடமேறிய கனவு  நாவலைப் பொறுத்த வரையில் நூலாசிரியர் “நடுவில் வாய்க்கால் வெட்டுவதாகவே”  எண்ண இடமளிக்கின்றது. 

 

ஒரு நாவலுக்கு காலதேசவர்த்தமானங்கள் முக்கியமானது. அதன் அடிப்படியில் இந்த நாவலைப் பார்த்தால் .நாவலின் ஒருசில இடங்களில் நூலாசிரியர் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையில் கதையை கொண்டு சென்று இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. உதாரணமாகக் கதையின் நாயகன்  தனது வாயில் உள்ள கொடுப்புப் பற்களின் அடியிலும், ஆசன வாயிலிலும் சயனைட் குப்பியை தொடர்சியாக மறைத்து வைத்திருந்ததைக் குறிப்பாகச் சொல்லலாம் . சாதரணமாக சயனைட் குப்பி 2 சென்ரி  மீற்ரர் நீளமுள்ளது. உடலின் இந்த இரண்டு பாகத்திலும் ஏற்படுகின்ற உடல் வெப்ப மாற்றங்களினால் இவை இலகுவில் உடையக்கூடிய வாய்புகளே அதிகம் இருக்கின்றன. உதராணமாக போதைவஸ்துக் கடத்துபவர்கள் தங்கள் ஆசனவாயிலில் வைத்துக் கடத்தும் பொழுது உள்ளே ஏற்பட்ட உடல் சூட்டினால்

போதைவஸ்து ஆசனவாயிலின்  உள்ளே வெடித்து பல மரணங்கள் ஏற்பட்டதை நாங்கள் செய்திகளில் படித்திருக்கின்றோம் . அத்துடன் ஆசனவாயிலில் ஓர் பொருளை அடையும் பொழுது குடலின் சுற்றுச் சுருங்கல் முறைகளினாலும், மனிதன் உட்கொண்ட உணவினாலும் அந்தப் பொருள் இருக்கும் இடத்தை விட்டு கீழ் நோக்கி வரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆசனவாயில் ஓர் பொருளை மறைத்து வைத்திருப்பது என்பது ஒருசில மணிநேரங்களுக்கே சாத்தியமானது. ஆனால் நூலாசிரியர் தொடர்ச்சியாக வாயின் பல்லுக்கு அடியிலும், ஆசனவாயிலிலும் சயனைட் குப்பியை வைத்திருப்பதாக சொல்வது உணர்ச்சி பூர்வமாக வாசகரைக் வசப்படுத்துமே ஒழிய உணர்வு பூர்வமாக ஒருபோதுமே அவர்களை வசப்படுத்தாது .அத்துடன் இந்த சயனைட் குப்பி விடயமாக என் மனதிலே தோன்றியது என்னவென்றால் , சமாதான காலங்களின் பின்னர் சர்வதேசத்தின் பூரண ஆசியுடன் பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்தி ஆசியாவிலேயே அதிஉயர் பாதுகாப்புகளைக்  கொண்ட இலங்கை அரசின் இராணுவ சித்திரவதை  முகாம்களின் பாதுகாப்பு நிலைகள் பற்றிய பெரிய கேள்வி ஒன்று இங்கே தொக்கி நிற்கின்றது. இன்றைய காலகட்டங்களில் எந்த இடத்திலுமே , ஒருவர் தனது உடலின் எந்தப்பகுதியிலும் ஓர் பொருளை மறைத்து வைத்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கத்தக்க தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து விட்டன. நூலாசிரியர் “தான் சித்திரவதை முகாம்களில் சயனைட் குப்பியை மறைத்து வைத்திருந்தேன்” என்று சொல்வது வாசகர்களை முட்டாள்களாக்குவதுடன் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயமாகும் .

 

இந்த நாவலின் ஊடாக  நாவலாசிரியர் இலங்கைக்கு வெளியே இருந்த மக்களின் பார்வையில் இருந்த “இலங்கை அரசின்  நலன்புரி முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள் ” என்ற விம்பத்தை உடைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமே .  குணா கவியழகன் விடமேறிய கனவின் மூலம்  தனது இரண்டாவது படைப்பை வாசகர்களாகிய எங்களுக்குத்  தந்திருக்கின்றார். அவர் மேலும் தனது வாசிப்பு மனநிலையை விசாலப்படுத்தி பல இலக்கிய நயமுள்ள காத்திரமான படைப்புகளைக் கொண்டுவருவார் என்பதே என்போன்ற வாசகர்களது  வேணவாவும் நம்பிக்கையும்  ஆகும். இறுதியாக நான் இந்த நாவலை வாசித்து முடித்தபொழுது ஓர் தினக்குறிப்பு படிக்கின்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தியது. 

 

15 ஆடி 2015

•••••

 

காந்தி நினைவுகள் / பாவண்ணன்  

images (20)

மாபெரும் சமூக ஆளுமைகளைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை, அந்த ஆளுமை வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் படம்பிடித்து எழுதியிருக்கிறார்கள். எழுதாதவர்கள் சொற்களால் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் மதிப்புக்குரிய மகாத்மா காந்தியைப்பற்றி எழுதவும் சொல்லவும் அவருடைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரிடமும் ஏராளமான செய்திகள் இருக்கக்கூடும். காந்தியைப்பற்றி அரசியலாளர்களும் சேவையாளர்களும் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உண்டு. அவற்றில் எண்ணற்ற சம்பவங்கள் காணக் கிடைக்கின்றன. ஆயினும், ஒரு சிறுவனின் பார்வையில் காந்தியைப்பற்றி எழுதப்பட்ட பதிவுகள் என்கிற வகையில் நாராயண் தேசாயின் புத்தகம் மிகமுக்கியமானது. பாரதியாரின் வரலாற்றைத் தொகுத்துக்கொள்வதில் தன் பால்யகாலத்து நினைவுகளை மீட்டிமீட்டி எழுதியிருக்கும் யதுகிரி அம்மாளின் பதிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு நாராயண் தேசாயின் பதிவுகளும் மிகமுக்கியமானவை.

நாராயண் தேசாய், காந்தியின் செயலாளராகத் தொண்டாற்றிய மகாதேவ தேசாயின் மகன். மகாதேவ தேசாயைத் தன் மகனைப்போலவே கருதி நடத்தினார் காந்தி. ஆசிரமத்தில் காந்தியின் குடிசைக்கு அருகிலேயே மகாதேவ தேசாயின் குடிசையும் இருந்தது. காந்தியின் சொந்தப் பேரக்குழந்தைகளுடனும் ஆசிரமத்துக் குழந்தைகளுடனும் மற்றொரு குழந்தையாக வளர்ந்தவர் நாராயண் தேசாய். காந்தியால் ’பாப்லா’ என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்ட செல்லக்குழந்தை அவர். பிரார்த்தனைக்கு காந்தி அமரும் சமயத்தில் அவர் மடிமீது அமரும் வாய்ப்பையும் பெற்றவர். அவர் வளரும்வரைக்கும் அந்த இடத்தை அவர் நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, இன்னொரு சிறு குழந்தையையும் மடியில் அமரவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி உருவானபோது, இரண்டு குழந்தைகளையும் காந்தி தன் இரு தொடைகளின்மீது அமரவைத்துக் கொண்டார். காந்தியின் மடியில் அமர்ந்து மழலை பேசிச் சிரித்த பருவம் முதல் பதினேழு பதினெட்டு வயது இளைஞனாகும் வரைக்கும் நாராயண் தேசாய் காந்தியின் கண்ணெதிரில் வளர்ந்த பிள்ளையாகவே இருந்தார். காந்தியை ஒரு தலைவராக அவர் கண்டதைவிட, தன் விளையாட்டுத் தோழனாக, தனக்காகப் பரிந்து பேசக்கூடியவராக, நண்பராக, நடைப்பயிற்சியின்போது தன்னுடைய தோளைப்பற்றி நடக்கும் ஒருவராகவே நாராயண் தேசாய் காண்கிறார்.

ஒருபுறம் சுடுகாடு. இன்னொருபுறம் சிறைச்சாலை. இடையில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் இருந்தது. ஓய்வு அறை, விருந்தினர் கூடம், பிரார்த்தனைக்கூடம், சமையல் கூடம், நோயாளிக்கான தனிப்பகுதி, பிள்ளைகள் கல்வி கற்பதற்கான பகுதி என எல்லாமே அந்த ஆசிரமத்தில் இருந்தன. ஆனால் எல்லாமே தனித்தனிக் குடிசைகள். ஒவ்வொரு இடத்தையும் எப்போதும் தூய்மையாகப் பராமரிக்கவேண்டும் என்பதில் காந்தி கண்டிப்பாக இருந்தார். பெருக்குதல், செடிகளைப் பராமரித்தல், கழிப்பறைகளைப் பராமரித்தல், தண்ணீர் சுமந்துவந்து ஊற்றுதல், கைத்தொழில் பழகுதல், நூல்நூற்றல் என எல்லா வேலைகளிலும் எல்லோரும் பங்கேற்கவேண்டும். இன்று ஒருவர், நாளை ஒருவர் என எல்லா வேலைகளிலும் முறைவைத்து எல்லோரும் செய்யவேண்டும். சாதி, மதம் தொடர்பான எந்த வித்தியாசமும் அங்கே இல்லை. அதை ஏற்றுக்கொள்பவர்களுக்குத்தான் அந்த ஆசிரமத்தில் இடம் வழங்கப்பட்டது.

நேரப்படி செயலாற்றுவது என்பதை ஒரு கண்டிப்பான விதியாகவே ஆசிரமத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்ததை ஒரு சம்பவத்தோடு நினைவுகூர்கிறார் தேசாய். ஆசிரமத்தில் சாப்பாட்டுக்கு முன்பாக மூன்றுமுறை மணி அடிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதன் அடையாளம் முதல் மணி. அந்த ஓசை எழுந்ததுமே, எல்லோரும் அமைதியாகச் சென்று வரிசையில் அமர்ந்துவிடவேண்டும். இரண்டாவது மணி அடிக்கும்போது சமையலறைக் கதவு மூடப்பட்டுவிடும். மூன்றாவது மணி அடிக்கும்போது சாப்பாட்டு மந்திரம் ஒலிக்கத் தொடங்கிவிடும். கதவு மூடப்பட்ட பிறகு யாரும் உள்ளே செல்லமுடியாது. ஒருமுறை சிறுவனான நாராயண் தேசாய் வெளியே இருக்க கதவு மூடப்பட்டு விடுகிறது. அதைத் தொடர்ந்து மந்திரம் சொல்லும் ஓசையும் பரிமாறும் ஓசையும் கேட்கிறது. பசிகொண்ட தேசாய், கதவுக்கு அருகில் சென்று ‘கருணைக்கடலே கதவைத் திறவுங்கள், மங்களகரமான கோவில் கதவைத் திறவுங்கள்’ என்று பாடத் தொடங்கிவிடுகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு விதிவிலக்காக கதவு திறக்கப்பட, தேசாய் உள்ளே நுழைந்துவிடுகிறார்.

தண்டி யாத்திரையை ஆசிரமத்திலிருந்து காந்தியும் தொண்டர்களும் தொடங்கிய கணத்தை நாராயண் தேசாய் குழந்தைமையுடன் நினைவுகூர்வது படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்களைத் தவிர, இன்னும் பல பகுதிகளிலிருந்தும் பலர் புறப்பட்டு வந்து ஆசிரமத்துக்கு வெளியே இரவெல்லாம் காத்திருக்கிறார்கள். அதிகாலை பிரார்த்தனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 79 பேர்களுடன் யாத்திரை புறப்படுகிறது. அவருக்குப் பின்னால் ஆசிரமத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் அஸலாலி என்னும் கிராமம் வரைக்கும் பின்தொடர்ந்து செல்கிறார்கள். முழக்கமிட்டபடி அவர்கள் வெளியேறியதும், தேசாயின் வயதையொத்த சிறுவர்கள் அனைவரும் வரிசையாக கொடிபிடித்தபடி, காந்தி சென்ற திசைக்கு எதிர்த்திசையில், பெரியவர்கள் எழுப்பிய அதே முழக்கங்களை முழங்கியபடி சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு, யாத்திரை செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறார்கள்.

ஒருமுறை சாந்திகுமார் என்பவர், தேசாய் விளையாடுவதற்காக பொம்மைகள் வாங்கி பார்சலில் அனுப்பியிருந்தார். அனைத்தும் வெளிநாட்டுப் பொம்மைகள். பார்சலைப் பிரித்த காந்தி, அவை வெளிநாட்டுப் பொம்மைகள் என்பதால் குழந்தைகளிடம் தராமல் அப்படியே சுருட்டி அலமாரிக்குள் வைத்துவிடுகிறார். குழந்தை தேசாய்க்கு அந்தச் செய்தி எப்படியோ தெரிந்துவிடுகிறது. தனக்கு வந்த பொருளை தன்னிடம் தராமல் இருப்பது அநியாயம் என நினைத்து, காந்தியுடன் மோதும் நோக்கத்துடன் அவரை நெருங்குகிறார். தனக்காக வாதாடுவதற்காக தன் வயதையொத்த சிறுவர்களை அணிதிரட்டிக்கொண்டு செல்கிறார். பொம்மைகள் வந்த செய்தியை அவர் தன்னிடம் மறைப்பார் என அவர் நினைத்துக்கொள்கிறார். ஆனால், காந்தி நேரிடையாக உண்மையையே சொல்கிறார். எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார். ‘அவற்றை எங்களிடம் முதலில் கொடுத்துவிடுங்கள்’ என்று தேசாய் விவாதிக்க முற்படும்போது, அவரை நிறுத்தி சுதேசிப்பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என தேசத்துக்கே போதிக்கிற ஆசிரமத்துக்குள் வாழ்ந்துகொண்டு அயல்நாட்டுப் பொம்மைகளுடன் நாம் எப்படி விளையாட முடியும் என்று கேட்கிறார். நாம் என்னும் சொல்லைப் பயன்படுத்தி குழந்தைகள் அணியில் தன்னையும் சேர்த்துக்கொள்கிறார் காந்தி. அந்தக் கேள்வி சிறுவனைக் கரைத்ததோடு மட்டுமன்றி, சிறுவனின் மனத்தையும் பண்படுத்திவிடுகிறது.

ஆசிரமத்திலேயே இருந்தாலும் காந்தியும் அங்கிருந்த சிறுவர்களும் கடிதத்தொடர்பு வைத்திருக்கிறார்கள். எல்லாத் தேவைகளையும் வெளிப்படையாக கடிதமெழுதி, காந்திக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள் சிறுவர்கள். காந்தி எல்லோருக்கும் ஒன்றிரண்டு சொற்களில் விடையும் எழுதிவிடுகிறார். ஒருவருக்கொருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் பயிற்சியாகவே இது தொடர்ந்து நடைபெறுகிறது. தம்முடைய நீண்ட கடிதங்களுக்கு காந்திஜி எழுதும் ஒற்றைவரிப் பதில்களைக் கண்டு சிறுவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். “பாபுஜி, நாங்கள் அனைவரும் பெரியபெரிய கேள்விகளைக் கேட்கிறோம். நீங்கள் அனைவருக்கும் துண்டுக் காகிதத்தில் ஒன்றிரண்டு சொற்களில் பதில் எழுதுகிறீர்கள். ஆசிரமத்தில் நாங்கள் மனப்பாடம் செய்யும் பகவத்கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் சிறு கேள்விகள் கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஒரு அத்தியாயமே பதிலாகச் சொல்கிறான். நீங்களோ ஏன் இத்தனை சிறிய பதில்களை எழுதுகிறீர்கள்?” என்று ஒருமுறை தேசாய் கேட்கிறார்.  “உன் கேள்வி நன்றாக இருக்கிறது” என்று பாராட்டும் காந்தி தொடர்ந்து “கிருஷ்ணனுக்கு ஒரே ஒரு அர்ஜுனன்தான் இருந்தான், என்னிடமோ உன்னைப்போல பல அர்ஜுனன்கள் இருக்கிறார்களே” என்று விடைகொடுத்தார்.

உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து மது எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்த காந்தி, அப்போராட்டத்தில் பெண்களே பெருமளவில் ஈடுபடும்படி செய்கிறார். பெண்கள் பங்கேற்காத போராட்டாங்களால் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கமுடியாது என்பது அவர் எண்ணம். அதனால் ஆசிரமத்துப் பெண்களையெல்லாம் முதலில் எதிர்ப்புப்போரில் ஈடுபடவைக்கிறார். அதைக் கண்டு ஏனைய குடும்பப்பெண்களும் பங்கேற்கிறார்கள். பல சமயங்களில் போலீஸ்காரர்களின் தடியடிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது. ஆயினும் அவர்களைத் தொடர்ந்து போரிடும்வகையில் எழுச்சியூட்டியபடி இருக்கிறார் காந்தி. ஆசிரமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரரும் கைது செய்யப்படுகிறார்கள். காந்தியும் கஸ்தூரிபாவும் கைதுசெய்யப்படுகிறார்கள். சிறுவர்கள் அனைவரும் அருகிலிருந்த விடுதிக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆசிரமம் காலி செய்யப்பட்டுவிடுகிறது.

காந்திஜி சேவா சங்க ஆண்டுக்கூட்டம் ஒருமுறை பூரிக்கு அருகில் இருந்த டேலாங்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது. பூரியில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்த காலம் அது. ‘எதுவரை இந்தக் கோவில் ஹரிஜனங்களுடைய பிரவேசத்துக்கு திறக்கப்படவில்லையோ அதுவரை இவர் உலகநாதராக இருக்கமுடியாது. ஆனால், கோவிலின் ஆதரவில் வயிறு வளர்க்கும் பண்டா-பூசாரிகளின் நாதராகத்தான் இருக்கமுடியும்’ என்று தெளிவான கருத்தைக் கொண்டிருக்கிறார் காந்தி. காந்தியின் மனைவி கஸ்தூரிபா பூரிக்குச் செல்ல விரும்புகிறார். நாராயண் தேசாயின் தாயாருக்கும் பாட்டிக்கும் கூட அந்த விருப்பமிருக்கிறது. அவர்கள் கடலுக்குச் சென்று குளிக்க விரும்புவதாக நினைத்துக்கொண்டு அனுமதி அளித்துவிடுகிறார் காந்தி. மகாதேவ தேசாயைக் கூப்பிட்டு எல்லோரையும் அழைத்துச் செல்லும்படி சொல்லிவிடுகிறார். அவர்கள் திரும்பிவந்த பிறகுதான்,  அனைவரும் கோவிலுக்குச் சென்றுவந்த செய்தியைப் புரிந்துகொள்கிறார் காந்தி. அது அவரை மிகவும் புண்படுத்திவிடுகிறது. தன் கொள்கைக்கு மாறான ஒரு செயல் தன் அனுமதியோடு நடந்துவிட்டதாக அவர் நினைக்கிறார். மகாதேவ தேசாய்மீது மிகவும் அதிருப்தி கொள்கிறார். தன் கொள்கை தன்னைச் சேர்ந்தவர்களாலேயே சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பதை அவர் துயரமுடன் உணர்கிறார். அவர் காட்டிய கடுமையை மகாதேவ தேசாயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரவெல்லாம் உறக்கமின்றி குடும்பமே அழுகிறது. அதிகாலையில் ஆசிரமத்தைவிட்டு வெளியேறும் முடிவை அவர்கள் எடுக்கும்போது, காந்தி தலையிட்டு, பிழையை உணர்ந்த கணத்திலேயே அது மன்னிக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்லி பிரச்சினையை முடித்துவைக்கிறார்.

காந்தியின் ரயில் பயணத்தின்போது, அவருடன் சேர்ந்து பயணம் செய்த அனுபவங்களை ஒரு அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார் தேசாய். ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நின்றுநின்று செல்கிறது. ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் நூற்றுக்கணக்கில் மக்கள் சூழ்ந்துநின்று காந்தியைப் பார்க்கத் துடிக்கிறார்கள். ஓய்வும் உறக்கமும் இல்லாமல் எல்லா நிலையங்களிலும் அந்தச் சந்திப்பு தொடர்கிறது. மக்களிடம் ஹரிஜன சேவா நிதி திரட்டிச் சேர்க்கிறார் காந்தி. சில்லறைகளும் நோட்டுகளுமாகக் கிடைத்த தொகையை சிறுவனான தேசாய் எண்ணியெண்ணி கணக்குவைத்துக்கொள்கிறார். அந்தத் தொகை, அந்த நிலையத்தின் பெயரில் உடனேயே வரவு வைத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு நிலையத்தில் வசூலான தொகையை எண்ணிக் கணக்கிடுவதற்குள் அடுத்த நிலையம் வந்துவிடுகிறது.

இப்படிப்பட்ட ஒரு பயணத்தில்தான் காந்தியின் மூத்தமகன் ஹரிலால் தன் தாயைத் தேடிவந்து சந்தித்ததைப் பதிவு செய்கிறார் தேசாய். காந்தியை வாழ்த்தி முழக்கமெழுந்துகொண்டிருந்த நிலையத்தில் கஸ்தூரிபாவை வாழ்த்தி ஒற்றைக்குரலில் முழக்கமெழுப்பியபடி வந்த ஹரிலாலின் தோற்றத்தையும் அப்போது நடைபெற்ற உரையாடலையும் விரிவாகவே எழுதியிருக்கிறார். குஷ்டநோயால் பாதிக்கப்பட்ட பரசுரேசாஸ்திரி என்பவரை ஆசிரிமத்தில் தங்கவைத்து, பணிவிடை செய்து குணப்படுத்த காந்தி எடுத்த முயற்சிகள் பற்றியும் விரிவான பதிவை எழுதியிருக்கிறார் தேசாய். ஒவ்வொரு நாளும் தனக்குக் கற்பிக்கப்படும் துளசிதாஸின் ராமாயணக்கதைகளை, அதே நாளின் மாலைப்பொழுதில் கஸ்தூரிபாவுக்குச் சொன்ன அனுபவத்தையும் சாப்பாட்டு  வேளைகளில் தனக்கு வேப்பிலையையும் பூண்டையும் சேர்த்து அரைத்த சட்னியை புன்னகையோடு காந்தி பரிமாறிய விதத்தையும் ஒரு கதையைச் சொல்வதுபோல சொல்கிறார் தேசாய்.

ஒருமுறை ஆசிரமத்துக்கு அருகில் அரசுக்கெதிராக வேறொரு காரணத்துக்காக போராட்டம் நடத்த வந்த குழுவொன்று ஆசிரமத்தில் தங்கிக்கொள்வதற்கு காந்தியிடம் அனுமதி கேட்கிறது.   ஆசிரமத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளமாம் என்றும் சுற்றிப் பார்த்துவிட்டு எந்த இடம் வேண்டும் எனச் சொல்லும்படியும் கேட்டுக்கொள்கிறார். ஆசிரமம் முழுதும் சுற்றிப் பார்த்த அந்தக் குழுவினர், கஸ்தூரிபாவின் குடிசையில் தங்கிக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.  அது சற்றே அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார் காந்தி. கஸ்தூரிபாவிடம் கருத்து கேட்கப்படுகிறது. கஸ்தூரிபா ஏற்றுக்கொள்கிறார். போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியுடன் அந்தக் குடிசையிலேயே தங்கிக்கொள்கிறார்கள். சுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாத காரணத்தால், அவர்கள் அந்தக் குடிசையை ஒழுங்கில்லாமல் வைத்திருக்கிறார்கள். ஒருமுறை தன் புதல்வர்களாக ஏற்றுக்கொண்ட பிறகு, எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் புதல்வர்களாகவே எண்ணி அன்புடன் பணிசெய்வதே தன் கடமை என்ற எண்ணத்துடன் ஒரு கணத்திலும் கசப்பை வெளிப்படுத்தாமல் வாழ்கிறார் பா.

மொழியின் இணைப்புச்சக்தியில் காந்தி ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். கடைசி சிறைவாசத்துக்குப் பிறகு, அவர் உடல்நிலை மிகவும் தளர்ச்சியடைந்துவிடுகிறது. ஒருமுறை அவர் பஞ்சகனியில் தங்கியிருக்கிறார். அவர் நூல் நூற்கும் சமயங்களில் ஒரு மணி நேரம் பத்திரிகை படித்து செய்திகளைச் சொல்லும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் தேசாய். அப்போது காந்தியைச் சந்திக்க வந்த ராதாகிருஷ்ணன், காசி பல்கலைக்கழகத்தில் தன்னிடம் சேர்ந்து படிக்க வரும்படி தேசாயை அழைக்கிறார். சுயராஜ்ஜியம் கிடைக்கும்வரைக்கும் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ந்து படிப்பதில்லை என்று உறுதியெடுத்திருப்பதாகச் சொல்கிறார் தேசாய். அதைத் தொடர்ந்து காந்தியுடனும் ராதாகிருஷ்ணன் இதைப்பற்றி பேசியிருக்கிறார். மறுநாள் பத்திரிகை படிக்க வந்தபோது, பத்திரிகை படிக்கவேண்டாம், முதலில் உன் எதிர்காலத்தைப்பற்றிப் பேசலாம் என்று தேசாயிடம் சொல்கிறார் காந்தி. ‘இதற்கு ஒரு மணி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும். அதைப்பற்றிப் பேச ஐந்து நிமிடம் போதும், முதலில் பத்திரிகைகளைப் படித்துவிடுகிறேன்’ என்று சொன்ன தேசாய் 55 நிமிடம் வரைக்கும் செய்திகளைப் படிக்கிறார். பிறகு உறுதியான குரலில் காந்தியிடம், “வருங்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை நான் முடிவு செய்துவிட்டேன். உங்களுடன் இருப்பவர்களில் பலர் அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பலர் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவ்விருவரிடையேயும் நான் இணைப்புப்பாலமாக வேலை செய்ய விரும்புகிறேன்’ என்று சொல்கிறார். அவர் எடுத்திருக்கும் தீர்மானத்தை காந்தி மனதாரப் பாராட்டுகிறார். அந்தத் தீர்மானம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டுமானால் இரு வேலைகளைச் செய்யவேண்டும் என்று சொல்கிறார் காந்தி. கதரின் கலையை நுட்பமாகக் கற்பது ஒரு வேலை. பாரதத்தின் எல்லா மொழிகளையும் கற்றுத் தேர்வது இன்னொரு வேலை. பாரதத்தைப் புரிந்துகொள்ள இவை அவசியம் என்ற கருத்து அவருக்கு இருந்ததையே இச்சம்பவம் உணர்த்துகிறது.

இரண்டாவது உலகப்போர் அறிவிக்கப்பட்டவுடன், இந்தியரைக் கலந்தாலோசிக்காமலேயே, இந்தியா நேச நாடுகளுடன் இணைந்திருக்கும் என்று அரசு தன்னிச்சையாக அறிவிக்கிறது. நாட்டின் பதினொரு ராஜ்ஜிய மந்திரிசபைகளில் எட்டு ராஜ்ஜியங்களில் காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நேரம் அது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் அவர்களுடன் உரையாடாமல் வெளியிடப்பட்ட அறிவிப்பு, அனைவரையும் கொதித்தெழச் செய்கிறது. காங்கிரஸ் மந்திரிசபைகள் உடனே பதவியை விட்டு விலகிவிடுகிறார்கள். அரசு பலவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. காந்தி தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கிவைக்கிறார். முதல் சத்தியாக்கிரகியாக விநோபாவைத் தேர்ந்தெடுக்கிரார் காந்தி. யுத்த விரோதப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை எதிர்த்ததற்காக அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். சிறைக்குள் தள்ளப்பட்ட காந்தியவாதிகளில் பெரும்பாலானோர் தன் ஆர்வத்துக்குத் தகுந்தபடி படிப்பதிலும் எழுதுவதிலும் நூல்களை மொழிபெயர்ப்பதிலும் தம் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சர்வாதிகாரியாக இருந்த இட்லருக்கு மனம் திறந்த ஒரு கடிதத்தை காந்தி ஒருமுறை எழுதுகிறார். வடமேற்கு எல்லைப்புற அபோடாபாதியின் இருந்தபோது அக்கடிதத்தை எழுத நேர்ந்தது என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் தேசாய். அக்கடிதத்தின் வாசகங்களை காந்தி சொல்லச்சொல்ல, அதைக் குறிப்பு எடுத்துக்கொள்ளும் மகாதேவ தேசாய், தன் மகன் நாராயண் தேசாயிடம் கொடுத்து தட்டச்சு செய்யச் சொல்கிறார். இட்லர் அக்காலத்தில் ஹிம்சைச்சக்தியின் எடுத்துக்காட்டு. காந்தியோ கலப்பில்லாத அஹிம்சையை ஆராதிப்பவர். அசுரனுக்கு ஒப்பாகக் கருதப்படும் மனிதனின் உள்ளத்திலும் சிறிது மனிதத்தன்மை படிந்திருக்கும். அந்தப் பகுதி வரைக்கும் சென்று அவனை நம்மால் மாற்றமுடியும்  என்று நினைக்கிறார் காந்தி. உலகத்தில் உள்ள எந்த மனிதனும் திருத்தப்பட முடியாதவனல்ல என்பது அவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. அதற்குச் சாட்சியாக விளங்குகிறது இக்கடிதம். அக்கடிதம் இப்படிப்பட்ட சூழலில் தட்டச்சு செய்யப்பட்டது என்பதற்கு தேசாயின் வரிகள் சாட்சியாக இருக்கின்றன.

ஆசிரமத்துக்கு வந்து செல்லும் ஏராளமான தியாகிகளை நேருக்குநேர் பார்த்த நினைவுகளை நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் தேசாய். ஜம்னாலாலைப் பற்றிய பதிவு மிகவும் முக்கியமானது. முப்பது வயதுள்ள இளைஞனாக காந்தியின் முன்னால் வந்து நின்று அவருக்காக தன்னையே ஒப்படைத்துவிட்ட ஆளுமை அவர். ’தங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள்ள வந்திருக்கிறேன்’ என்றுதான் அவர் பேசத் தொடங்குகிறார். உற்சாகமடைந்த காந்தியும் அவரிடம் என்ன வேண்டுமெனக் கேட்கிறார். இளைஞன் ‘நீங்கள் என்னை உங்களுடைய சொந்த மகனாகக் கருதி நடத்த வேண்டும்’ என்று கைகுவிக்கிறார். காந்தியும் நெகிழ்ச்சியுடன் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். ‘இதில் நீ அடைவதென்ன, நான் அல்லவோ அடைந்தவன்’ என்று சொன்னபடி தோளில் தட்டியபடி நடந்துபோய் விடுகிறார் காந்தி. அன்றுமுதல் தன் இறுதிமுச்சு அடங்கும்வரைக்கும் ஆசிரமத்துப் பணிகளிலேயே ஈடுபட்டிருந்துவிட்டு, மறைந்துவிடுகிறார். இப்படி தியாக வாழ்வு வாழ்ந்து மறைந்த ப்யாரேலால், கிஷோரிலால் மஷ்ருவாலா, கிருஷ்ணதாஸ் ஜாஜானா போன்ற பலரைப்பற்றிய சின்னச்சின்ன சித்திரங்கள் தேசாயின் நினைவுத்தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.

’இந்தியாவைவிட்டு வெளியேறு’ என்னும் தீர்மானத்தையொட்டி 1942 ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி அன்று காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் உறுதியாகப் பேசுகிறார் காந்தி. அதையொட்டி அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் எழுகிறது. வழக்கமாக நள்ளிரவில் வந்து கைது செய்யும் காவல்துறை, அன்று அதிகாலையில் எழுப்பி கைது ஆணையைக் காட்டுகிறது. அந்த ஆணையில் காந்தியுடன் மீராபென்னும் மகாதேவ தேசாயும் இன்ஸ்பெக்டருடன் செல்லவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கஸ்தூரி பாவும் ப்யாரேலாலும் விருப்பமிருந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம் என்றும் விருப்பமில்லையென்றால் விட்டுவிடலாம் என்றொரு குறிப்பும் காணப்படுகிறது. இது கடைசி சிறைவாசம் என்கிற எண்ணம் எல்லோருடைய ஆழ்மனத்திலும் படர்கிறது. தன் மனைவியின் கருத்தை அறிவதற்காக ’என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்கிறார் காந்தி. அவர் ‘நீங்களே சொல்லுங்கள்’ என்று சொல்லிவிடுகிறார். ‘என்னோடு வருவதற்குப் பதிலாக, நான் பங்கேற்றுப் பேசுவதற்காக இன்று மாலை சிவாஜி பார்க்கில் ஏற்பாடாகியிருக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு, எனக்குப் பதிலாகப் பேச வேண்டும். அதையொட்டி கைது செய்யப்பட்டால், அந்தக் கைதை ஏற்றுக்கொள்ளவேண்டும். நீயே யோசித்து முடிவு செய்.’ என்று சொல்கிறார். கடுமையான மனநெருக்கடிக்கு ஆளாகி நிற்கிறார் பா. இன்னொருமுறை காந்தியைப் பார்க்கமுடியுமா என்ற தவிப்பு ஒருபுறம். அவருடைய தனிவிருப்பத்தை நிறைவேற்றவேண்டுமே என்கிற எண்ணம் மறுபுறம். இறுதியில் சிவாஜி பார்க் கூட்டத்தில் கலந்துகொண்டு தனிப்பட்ட முறையில் கைதாகிறார்.

காந்தியுடன் கைதாகி சிறைக்குச் செல்லவிருக்கிற தன் தந்தையின் துணிமணிகளை மூட்டையாகக் கட்டுவதில் ஈடுபட்டிருக்கும் தேசாயைத் தடுக்கிறார் மகாதேவ தேசாய். நீண்ட காலமாக செய்ய நினைத்துச் செய்யாமலேயே இருக்கும் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பை முடித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறான் மகன். தந்தையோ புன்னகையோடு, அது இந்த முறையும் சாத்தியமல்ல என்று சொல்கிறார். அப்போது, காந்தியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சிறையிலும் ஒருவேளை அவர் உண்ணாநோன்பைத் தொடர்ந்துவிட்டால் அவரைப் பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ளும் கடமையுடன் இருக்கும்போது மனத்தை இலக்கியத்தின்பால் செலுத்தவியலாது என்று சொல்கிறார். காவலரின் வாகனத்தில் ஏறி அமரும்போது ‘இனி நாம் சுதந்திர பாரதத்தில் சந்திப்போம்’ என உற்சாகமுடன் சொன்ன மகனை அணைத்து முத்தமிடுகிறார் தந்தை. அந்தச் சந்திப்பே கடைசிச் சந்திப்பு. அதுவே கடைசி முத்தம். துரதிருஷ்டவசமான அத்தருணத்தை கச்சிதமாகவும் உருக்கமாகவும் எழுதியுள்ளார் தேசாய்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆகாகான் மாளிகைக்குள் சிறைவைக்கப்படுகிறார்கள். துப்பாக்கி ஏந்திய 76 காவலர்கள் இரவும் பகலும் நின்றபடி அந்த மாளிகைச்சிறையைக் காவல் காக்கிறார்கள். மாளிகையின் சுற்றுச்சுவருக்கு அருகில் யாரும் வந்துவிடாதபடி பதினோரு அடி உயரத்துக்கு வேலி எழுப்பப்படுகிறது. சிறைக்குச் சென்ற ஆறு நாட்களிலேயே மகாதேவ தேசாய் மரணமடைந்துவிடுகிறார். தன் மகனைப்போன்ற அவருடைய மரணத்தைக் கண்டு காந்தி மனமுடைந்துவிடுகிறார். மாளிகைத் தோட்ட வளாகத்திலேயே ஓரிடத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது. ஆங்கில அரசு, அந்த மரணச்செய்தியை அவருடைய குடும்பத்துக்குக்கூடத் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட வகையில் காந்தி அவர்களுக்குக் கொடுத்த தந்தியைக்கூட மூன்று மாத தாமதத்துக்குப் பிறகு கொடுக்கிறார்கள். சிறைச்சந்திப்புக்கு எழுதிக் கொடுக்கும் விண்ணப்பங்களைத் தொடர்ந்து நிராகரிக்கிறது அரசு. இறுதியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு தேசாய்க்கும் அவருடைய தாயாருக்கும் சிறைக்குச் சென்று பார்க்க அனுமதி கிடைக்கிறது. அதுவும் கைதிகளாகச் சென்று மட்டுமே பார்க்கமுடியும் என்கிற நிபந்தனையின் கீழ் அந்த அனுமதியை வழங்குகிறது. 21 நாள் கைதிகளாக அவர்கள் சிறைக்குள் செல்கிறார்கள். காந்தியைச் சந்தித்ததும் அவர்கள் அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்குகிறார்கள். காந்தி எதையோ பேச நினைத்து மகாதேவ் என்று தொடங்கி சொற்கள் திரண்டெழாமல் விம்முகிறார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. காந்திஜி கண்ணீர் விட்டதை அன்றுதான் முதன்முதலில் பார்த்ததாக எழுதுகிறார் தேசாய். அழுகை அடங்கியதும் பாதுகாப்பாக வைத்திருந்த மகாதேவ தேசாயின் சாம்பலை அக்குடும்பத்தினரிடம் கொடுக்கிறார் காந்தி. அந்தச் சாம்பலையே திருநீறாக பல நாட்கள் காந்தி பூசி வந்த செய்தியை அறிந்து அவர்கள் மிகவும் நெகிழ்ந்துபோகிறார்கள்.

சிறையில் இருந்த தருணத்தில் விக்டர் ஹியூகோவின் ‘லே மெஸரபிள்’ நாவலின் மொழிபெயர்ப்பைப் படித்து முடிக்கிறார் தேசாய். அதைக் கேட்டு ஆச்சரியமுறுகிறார் காந்தி. நம்பமுடியாதபடி அவரையே உற்றுப் பார்க்கிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தன் மடியில் வந்து அமர்ந்துகொண்ட சிறுவனா இவன் என்பதுபோல இருக்கிறது அந்தப் பார்வை. அவர் நெஞ்சில் தேசாயைப்பற்றிய சித்திரம் அன்புக்குரிய பேரக்குழந்தையின் சித்திரமாகவே நிலைத்துவிடுகிறது. அருகில் வரும்படி தேசாயை அழைத்து, அணைத்து ஆசி வழங்குகிறார். பிறகு அகிம்சையின் பொருளைச் சுருக்கமான சொற்களில் சொல்லி விளங்கவைக்க முயற்சி செய்கிறார். இம்சைச்செயல் புரிபவன், தன்னால் இம்சைக்கு ஆளானவனை நெருங்கி வந்து மனதார மன்னிப்பு கேட்கும் அளவுக்கு மனப்பக்குவம் அடைவதே உண்மையான அகிம்சையின் இலக்கணம் என்று சொல்கிறார்.

குழந்தைப்பருவம் முதல் இளம்பருவம் வரைக்கும் காந்தியின் பிரியத்துக்குரிய பாப்லாவாக, அருகிலேயே வாழ்ந்து பெற்ற அனுபவங்களை அசைபோடும் இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுதியில் இருக்கின்றன. காந்தியைப்பற்றிய நினைவுகளாக மட்டுமன்றி, தேச விடுதலைப் போராட்ட வரலாறாகவும் இந்நினைவுகள் இருபரிமாணங்கள் கொண்டு விளங்குகின்றன. ஜன்மபூமி என்னும் குஜராத்தி இதழில் அறுபதுகளின் நடுப்பகுதியில் நாராயண் தேசாய் இவற்றை ஒரு தொடராக எழுதினார். புத்தகவடிவம் கொண்ட கட்டுரைகளை தொண்ணூறுகளில் நேரிடையாகவே குஜராத்தியிலிருந்து ஹரிஹரி சர்மா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காந்தியுடன் பழகிய, பார்த்த அனுபவங்களை தி.சோ.செள.ராஜன் முதல் திரு.வி.க. வரை ஏராளமானவர்கள் தமிழில் எழுதியுள்ளார்கள். அவ்வரிசையில் ஒரு சிறுகுழந்தையின் பார்வையில் விரிவடையும் நாராயண் தேசாயின் நூலுக்கு முக்கியமான இடமொன்று எப்போதும் இருக்கும். அவருடைய எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஹரிஹரி சர்மா  நம் மனமார்ந்த நன்றிக்குரியவர்.

 

(மகாத்மாவுக்குத் தொண்டு. நாராயண் தேசாய். தமிழாக்கம்: ஹரிஹரி சர்மா. காந்திய  இலக்கியச் சங்கம். மதுரை.)

•••••••

ஒதெல்லோ- ஷேக்ஸ்பியர் / தமிழில் / சத்தியப்பிரியன்.

 

download (1)

 

 

 

 

 

உலகின் முக்கிய திரைப்படங்களுக்கு நேரிடையாகவும் மறைமுகவும் உந்துசக்தியாக இருக்கும் ஷேக்ஸ்பியரின் நாடங்களில் முக்கியமான ஒதெல்லா நாடகத்தை தமிழில் வழங்குவதில் மலைகள் இதழ் பெருமையடைகிறது. நண்பர்கள் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டுகிறேன்

சிபிச்செல்வன்

ஆசிரியர்

 

 

••••
உளவியல் ரீதியான பாத்திரங்களை படைப்பதில் ஷேக்ஸ்பியர் மிகவும் வல்லவர். மேக்பத், ஹம்லட் ,கிங் லியர் நாடக வரிசையில் சற்றும் தரத்தில் குறையாத நாடகம் இந்த ஒதெல்லோ. துறைசார் பொறாமை எவ்வாறு ஒருவனை அழித்து விடும் என்பதை ஒரு சிக்கலான பாத்திரப் படைப்பான இயாகோ என்ற பாத்திரத்தின் மூலம் மிக அற்புதமாக ஷேக்ஸ்பியர் கதை சொல்லியிருப்பார். இனபேதத்தின் அராஜகம் எவ்வாறு தனி மனிதர்களை அழித்து விடுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சந்தேகப்புயல் ஒருவனுடைய வாழ்வை எப்படியெல்லாம் சூறையாடுகிறது என்பதைச் சொல்லும் நாடகம். மதுரைவீரனின் கதை இதனோடு ஒப்புநோக்கத்த்தக்கது. முன்னிலை பாத்திரங்களான கறுப்பின மூர் படைத் தளபதி ஒதெல்லோ அவனது மனைவி டெஸ்டிமோனா இவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இயாகோவின் பாத்திரத்தை ஷேக்ஸ்பியர் செதுக்கியிருப்பார் என்றால் மிகையில்லை.

 

அங்கம்-1

காட்சி-1

இடம் : வெனிஸ் நகரத்தின் வீதி.

காலம்: நள்ளிரவு.

பாத்திரங்கள் :1-இயாகோ என்னும் படைவீரன். பதவி உயர்வுக்காக காத்திருப்பவன்

2-ரோடெரிகோ- இயாகோவின் நண்பன்.

பிரபான்சியோ- கதாநாயகி டெஸ்டிமோனாவின் தந்தை. ஒரு பணக்கார பிரபு. செல்வந்தர். அரசின் உயர்பதவியில் இருப்பவன்.

மற்றும் வேலையாட்கள்.

ரோடெரிகோவும் இயாகோவும் பிரபான்சியோவின் மாளிகை இருக்கும் வீதியில் நடந்து வருகின்றனர்.

ரோடெரிகோ: இயாகோ! என்னிடம் கூட சொல்லவில்லையே நீ? உன் மேல வருதம்தான். இப்படியா பெட்டி எங்கிட்ட இருந்தாலும் சாவி உன்கிட்ட இருப்பது மாதிரி நடந்துக்குவ?

இயாகோ: ஷிட்! நா என்ன சொன்னாலும் நீ கேக்கப்போறதில்ல. சத்தியமா என் மனசில் அப்படி உன்னை விட்டுட்டு ஒருசெயலில் இறங்கனும்கிற நினைப்பெல்லாம் கிடையாது.

ரோடெரிகோ : இல்ல இயாகோ. நீ புலம்பினாய். அவனை உன்னுடைய வெறுப்பெனும் கயிறினால் கட்டப் போவதாக புலம்பினாய்.

இயாகோ : நீ சொல்வதற்கு மாறாக நான் நடந்துகிட்ட அப்புறம் என்னை தூத்து.மூன்று முக்கிய பிரமுகர்கள் என்னை அவனுடைய படையின் தளபதியாக நியமிக்க பரிந்துரைத்தனர். ஆனா அவங்களோட பரிந்துரையை அவன் ஏற்கவில்லை.என்னவோ அவனுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போன்ற மமதை; ஆணவம்; திமிர்.என்னை ஒரேடியாக ஒதுக்கி விட்டான். போய்கேட்டதற்கு தன் அதிகாரியை தான் ஏற்கனவே நியமித்து விட்டதாக கூறினான். அதிலும் அலட்சியமாக.அந்தத் தளபதி யார் தெரியுமா? கேசியோ ! ஆமாம் கேசியோவேதான். ஏட்டுச் சுரைக்காய் , அவனுக்கு என்ன தெரியும் போர் முறைகளை பற்றி? புத்திசாலித்தனமாக ஒரு படை வியூகம் அமைக்கத் தெரியுமா? இவனைவிட ஒரு பெண் போர்முறைகளை நன்கு அறிவாள். இவன் போன்ற புத்தகப்புழுக்களை பாழாய்ப்போன மந்திரிகள் முன்மொழியவில்லை என்றால் இவனுக்கு இப்படி ஒரு பதவி கிடைத்திருக்குமா? சண்டை என்று வந்துவிட்டால் வாய் கிழிய பேசுவான் அவ்வளவுதான். வாளால் ஆகாத பயல். ஆனால் மூருக்கு என் திறமையைப் பற்றி நன்கு தெரியும். தெரிந்திருந்தும் கேசியோ படைத் தளபதி; நான் அவனுக்குக் கீழே கைகட்டி சேவகம். உடம்பெல்லாம் எரிகிறது –ரோடெரிகோ எரிகிறது.

ரோடெரிகோ : எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை இயாகோ. அதிகாரிகளுக்கு வரம்பு உள்ளது.

இயாகோ: உழைப்பின் சாபம் இது. பரிந்துரைக்குத்தான் என்றுமே முன்னுரிமை. திறமைக்கு இல்லை. இப்பொழுது சொல் ரோடெரிகோ நான் ஒதேல்லோவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா?

ரோடெரிகோ : அப்படி என்றால் நானும் அவருக்குக் கீழ்ப்படிய மாட்டேன்.

இயாகோ: அடக்கி வாசி ரோடெரிகோ. என் சந்தர்ப்பத்தை அவன் மேல் பிரயோகிக்கவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் அவனுக்குக் கீழ் பணிகிறேன்.நாம் எப்போதும் எஜமானர்களாக இருக்க முடியாது. எப்போதும் அடிமைகளாகவும் இருக்கமுடியாது. உனக்குத் தெரியும் துரோகிகள் மண்டியிட்டு பணிசெய்யும் அடிமைகள் போல தங்கள் அடிமைத்தனத்திலேயே காலம் முழுவதும் மோகித்திருப்பார்கள். எஜமானர்களின் கழுதையைப் போல காட்சி தருவார்கள்.வெளித்தோற்றத்தில் தமது எஜமானருக்கு நன்றி விசுவாசத்துடன் இருப்பது போல காட்டிக் கொண்டு உள்ளே தமக்குத் தாமே அகங்காரத்துடன் இருப்பார்கள். இவர்களிடம்தான் கொஞ்சம் உயிர்ப்பு இருக்கிறது. ரோடெரிகோ நான் அவர்களைப் போல.நான் இந்த கருப்பு மூரை பின்பற்றமாட்டேன்…..என்னை பின் பற்றுவேன்.சொர்கமே என் நீதி மன்றம். என் புறத்தோற்றம் ஏற்படுத்தும் பிம்பத்தைப் போல நான் காதலுக்கோ கடமைக்கோ கட்டுப்பட்டவன் இல்லை. தோன்றுவது போல் நான் இல்லை.

ரோடெரிகோ : என்ன ஒரு பொன்னான வருங்காலத்தை இந்த முரட்டு இதழ்கள் ஏந்தியுள்ளன.

ரோடெரிகோ : அவளது தந்தையைக் கூப்பிடு. எழுப்பு அந்தக் கிழவனை. அவனை முச்சந்தியில் நிறுத்து. அவன் எவ்வளவு சுத்தமான இடத்தில் வசித்தாலும் அந்த இடத்தை பெருச்சாளிகள் நிறைந்த சாக்கடையாக மாற்று. அவன் சந்தோஷத்தின் சாயத்தை கழுவி ஊற்று.

ரோடெரிகோ : இதோ இங்கேதான் அவள் தந்தையின் இல்லம்.நான் கூப்பாடு போடுகிறேன். இதோ.

இயாகோ : கூவு. கத்து. நரிகளைப் போல ஊளையிடு. இரவின் அமைதியில் உன் கூக்குரல் இந்த நகரத்தில் தீயைப் போல பரவட்டும்.

ரோடெரிகோ : பிரபான்சியோ ஓ பிரபான்சியோ !

இயாகோ:விழித்துக் கொள்ளுங்கள். பிரபான்சியோ. விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு திருடன் வந்த விட்டான். உங்கள் உடைமைகளையும், வீட்டையும் உங்கள் மகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடன்.திருடன்.

-பிரபான்சயொவின் மாளிகையின் முகப்பு விளக்கு எரிகிறது. முதலில் கதவைத் திறந்து பிரபான்சியோ வெளியில் வருகிறார். –

பிரபான்சியோ : என்ன வெளியில் இப்படி ஒரு காட்டுகூச்சல்? யாரப்பா அது ?

ரோடெரிகோ : பிரபுவே தங்கள் குடும்பம் முழுவதும் உள்ளே பத்திரமாக இருக்கிறது இல்லையா?

பிரபான்சியோ : உமக்கு எதற்கப்பா இந்த வீண்கவலை?

இயாகோ( இருளில் நின்றபடி ) : நீங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டீர்கள் பிரபு. கொள்ளையடிக்கபட்டுவிட்டீர்கள். வெட்கம். பெருத்த அவமானம். சீக்கிரம் உங்கள் மேலங்கியை அணிந்து கொள்ளுங்கள் இழந்தது எதுவென . உங்கள் இதயம் அறிந்தால் உடைந்துவிடும். தாங்க முடியாத இழப்பு. உங்கள் ஜீவனில் பாதி திருடு போய்விட்டது. ஒரு கருப்புநிற பொலிகாளை உங்கள் சிவப்புநிறபசுவைத் துரத்துகிறது. விழித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களையும் எழுப்புங்கள். இல்லையென்றால் அந்தக் காளை உங்களை தாத்தாவாக்கிவிட்டு போய்விடும்.விழித்துக் கொள்ளுங்கள் பிரபுவே !

பிரபான்சியோ : உங்களுக்கு என்ன பைத்தியமா?

ரோடெரிகோ : தெளிவுடன்தான் இருக்கிறோம். எங்கள் குரலை உங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?

பிரபான்சியோ : தெரியவில்லை நீங்கள் யார் ?

ரோடெரிகோ : என் பெயர் ரோடெரிகோ.

பிரபான்சியோ : ரொம்ப சந்தோஷம். என் வீட்டு வாசலில் வந்து வீணாக சுற்றி நிற்காதே. நிச்சயம் என் மகளின் விரலில் நீ மோதிரம் அணிவிக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். என் அமைதியை குலைக்க மதுவருந்திவிட்டு கலாட்டா பண்ணலாம்னு நினைக்காதே.

ரோடெரிகோ ஐயோ ஐயோ !

பிரபான்சியோ: என் பதவியும் செல்வாக்கும் தெரியுமல்லவா? போய்விடுங்கள்.

ரோடெரிகோ : கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஐயா !

பிரபான்சியோ : என் வீடு திருடு போயிற்று என்று கூவுகிறீர்களே. நான் தீவில் வசிக்கவில்லை. வெனிஸ் நகரில்தானே வசிக்கிறேன் ?

ரோடெரிகோ : மிகவும் வருத்தப்படுகிறேன் பிரபான்சியோ பிரபு அவர்களே. நல்ல மனதுடனே உங்களை நாடி வந்திருக்கிறேன்.

இயாகோ :சாத்தான் தீண்டும் வரை கடவுளை நினையாத இனத்தைச் சார்ந்தவரா நீங்கள்? உங்களுக்கு உதவி புரிய வந்த எங்களை இப்படி உதறித் தள்ளாதீர்கள். உங்கள் பெண்ணை போயும் போயும் ஒரு அரேபியக் குதிரைக்கு கட்டி வைக்க முயல்கிறீர்களே நியாயமா?

பிரபான்சியோ : என்ன மோசமான ஆட்களப்பா நீங்கள்?

இயாகோ : அப்படியே இருந்துவிட்டு போகிறோம். உங்கள் மகளும் அந்த அரேபியனும் கொஞ்சிக் குலாவுவதை உங்களிடம் சொல்ல வந்தது எங்கள் தவறுதான்.

பிரபான்சியோ : நீ ஒரு சரியான வில்லன்.

ரோடெரிகோ : நீங்கள் ஒரு அதிகாரி.

பிரபான்சியோ : இது பதிலில்லை ரோடெரிகோ. உன்னை நான் நன்கறிவேன்.

ரோடெரிகோ : ஐயா ! இதற்கு நான் பதிலளிக்க தயாராக உள்ளேன். உங்கள் உயிரினும் மேலான பெண் ஒரு படகோட்டியின் உதவியுடன் காமவெறி பிடித்த ஒரு அரேபிய கறுப்பின மூருடன் ஓடிப் போயிருக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியுமானால் மன்னியுங்கள் நாங்கள் உங்களுக்கு தீங்கிழைத்து விட்டோம். மாறாக உங்களுக்கு இந்தச் செய்தி தெரியவில்லை என்றால் உங்களை எச்சரிக்க வந்துள்ளோம். எப்போதும் ஒரு கனவானைப் போல சிந்திக்காதீர்கள். உள்ளே சென்று பாருங்கள். அவள் வீட்டில் இருந்தால் உங்களை இந்த அகாலத்தில் தொந்தரவு செய்ததன் காரணமாக உங்கள் அதிகாரத்தை எங்கள் மேல் கட்டவிழ்த்து விடுங்கள்.

ப்ரபான்சியோ: அபாய எச்சரிக்கை மணியை அடிக்கச் சொல்லுங்கள்.எனக்கு ஒரு விளக்கு எடுத்து வாருங்கள். என் ஆட்களை உடனே எழுப்புங்கள். இந்த விபத்து என் கனவில் வந்ததல்ல. இதன் சாத்தியக்கூறு என்னை பாதிக்கத் தொடங்கிவிட்டது. சீக்கிரம் விளக்கு கொண்டு வாருங்கள்.( உள்ளே போகிறார் ).

இயாகோ: நான் உன்னிடமிருந்து விலகுகிறேன் ரோடெரிகோ .மூரின் கீழ் பலகாலமாக வேலைபார்த்துவிட்டு இப்போது இங்கிருந்தால் அவன் பேரில் குற்றம் சுமத்தப்படும்போது நான் அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டியிருக்கும். என்னதான் அவப்பெயர் ஏற்பட்டாலும் வெனிஸ் நகரம் ஒதேல்லோவை விட்டு கொடுக்காது. சைப்ரஸ் போருக்கு ஆயத்தமாகி நிற்கும் அவன் பின்னால் வெனிஸ் நகரம் கை கட்டி நிற்கிறது.ஒதெல்லோ இல்லாமல் வெனிஸ் இயங்காது. சைப்ரஸ் போர் ஏற்கனவே மூண்டுவிட்டது. ஒதெல்லோவிற்கு மாற்றாக ஒருவனை காட்ட ஆட்சியாளர்களால் தற்சமயம் இயலாது. இந்த மறுக்கமுடியாத உண்மைகளின் காரணமாக அவனை நான் விஷம் போல மனதில் வெறுத்தாலும் சூழ்நிலை காரணமாக அவனுடன் நட்பு பாராட்ட வேண்டியுள்ளது.இதைப் புரிந்து கொள். இது ஒரு நாடகம்தான். நான் சாகிடரி என்ற விடுதிக்கு செல்கிறேன். அவனைத் தேடி வரும் கூட்டத்தை அங்கு அழைத்து வா. அவனுடன் நான் இருப்பேன். ( இயாகோ மறைகிறான் ) .

பிரபான்சியோ( வேலையாட்கள் சூழ கையில் விளக்குடன் வருகிறார். )

பெரிய தீங்கு நேர்ந்து விட்டது. என் நேரம் சரியில்லை ரோடெரிகோ. அவள் சென்று விட்டாள். நீ அவளை எங்கு பார்த்தாய்? ஐயோ மோசம் போய்விட்டாயே பெண்ணே ! அந்த மூருடன் சென்றதை நீ பார்த்தாயா? என்ன ஒரு அதிர்ஷ்டம் கெட்ட தந்தை நான்.நீ பார்த்தது அவள்தான் என்று உன்னால் உறுதியாக கூற முடியுமா ? ஐயோ என்னை இப்படி மோசம் செய்து விட்டாலே. உன்ன்டியம் ஏதாவது கூறினாளா? வேலையாட்களே இன்னும் நான்கைந்து விளக்கை ஏற்றுங்கள். அவர்கள் திருமணம் புரிந்து கொண்டு விட்டார்களா?

ரோடெரிகோ : என்னுடைய நேர்மையான பதில் ஆமாம் என்பதுதான்.

ப்ரபான்சியோ : கடவுளே ! எப்படி அவள் என்னை விட்டு அகன்றாள்? நம்பிக்கை துரோகி. உலகத் தந்தைமார்களே உங்கள் மகள்களின் புறத்தோற்றத்தைக் கொண்டு உங்கள் பெண்களை எடை போடாதீர்கள். பெண்பிள்ளைகளின் இளமையையும் கன்னித்தன்மையையும் கட்டி காப்பாற்ற ஏதாவது மந்திரம் இருக்கிறதா ரோடெரிகோ ? உனக்குத் தெரியுமா?

ரோடெரிகோ : தெரியும்.

பிரபான்சியோ : என் சகோதரனை அழையுங்கள். அவனுக்கு இது தெரியுமா எனக் கேட்போம். ஏதாவது ஒரு வழி. எப்படியாவது அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சென்ற இடம் எங்கே என்று ரோடெரிகோ உனக்குத் தெரியுமா?

ரோடெரிகோ : தெரியும். நீங்கள் துணைக்கு இரண்டு மூன்று கவலாளிகளுடன் அவன்தாள் அவர்கள் இருப்பிடத்தை நான் காட்டுவேன்.

பிரபான்சியோ : உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். வழி காண்பித்த வண்ணம் நீ முன்னால் செல். விசாரிக்கிறேன். என் அதிகாரத்தை பயன்படுத்துகிறேன். ஆயதங்கள் எடுத்து வாருங்கள். நல்ல திறமையான அதிகாரிகளை அழைத்து வாருங்கள். ரோடெரிகோ ! எனக்காக நீ மேற்கொண்டுள்ள சிரமத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

 

காட்சி -2.

வெனிஸ் நகரின் வேறொரு வீதி.

நேரம் : அதே இரவு நேரம்.
பாத்திரங்கள் : ஒதெல்லோ,இயாகோ, மற்றும் வேலையாட்கள் விளக்குகளுடன்.

இயாகோ : போர்களில் நான் கொலை புரிந்திருக்கிறேன். ஆனால் இதுவரையில் ஒரு கொலையை நான் திட்டமிட்டு செய்ததில்லை. வஞ்சகம் என்னிடம் குறைவாக இருப்பதுதான் காரணம். ஏழெட்டுமுறை அந்த ரோடெரிகோவை மார்பில் குத்திக் கொன்றுவிடலாமா என்பதுபோல ஆத்திரம் வருகிறது.

ஒதெல்லோ : நல்ல வேளை. அப்படி எதுவும் நேரவில்லை.

இயாகோ : இல்லை. அவன் என்ன உளறல் உளறினான் தெரியமா? உங்கள் புகழையும் பெருமையையும் எவ்வளவு கேவலமாக பேசினான் தெரியுமா? என்னிடம் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருந்த நற்பண்பு காரணமாக அவன் சொன்னதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். உங்களுடைய திருமணம் அவசரத்திருமணமா? மறுப்புகளை மீறிய திருமணமா? ஏன் சொல்கிறேன் என்றால் கனவான் பிரபான்சியோ மக்களால் நேசிக்கப்படுபவன். அவன் திறமையினால் வெனிஸ் நகரக் கோமகனைக் காட்டிலும் இருமடங்கு வல்லமை படைத்தவன். உங்களை ஒதுக்கி வைத்து விடுவான்.சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்து தனக்கு ஏற்பட்ட பழியை துடைக்க சட்டம் மூலம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பான்.

ஒதெல்லோ : அவரால் முடிந்ததை செய்து கொள்ளட்டும்.அரசுக்கு நான் ஆற்றிய பணிகள் அவருடைய தூற்றல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன் இயாகோ. மன்னர் பரம்பரையில் வந்த என்னை நான் வாங்கிய பட்டங்களே என் எதிர்காலத்திற்கு என்னை இட்டுச் செல்லும். நான் மென்மையான டெஸ்டிமோனாவைக் காதலிக்கிறேன். ஆமாம் இயாகோ. நான் அவளை காதலிக்கிறேன். என் காதல் என்னை கட்டிப் போடாது. என் காதல் என்னுடைய சுதந்திராச் சிறகுகளை பூட்டி வைக்காது. காதல் காலில் பூட்டிய விலங்கு இல்லை இயாகோ. காலில் மாட்டிய சக்கரம். அங்கே பார் விளக்குகளின் ஒளி நெருங்கி வருகிறது. யாரென்று பார்.

இயாகோ : டெஸ்டிமோனாவின் தந்தையும் அவருடைய ஆட்களாக இருக்கக் கூடும்.நீங்கள் உள்ளே செல்லுங்கள்.

ஒதெல்லோ : மாட்டேன். ஏன் மறைந்து கொள்ள வேண்டும்? என் திறமை என் நற்பெயர் , என் ஆத்மா இவை என்னை இந்த உலகிற்கு நல்லமுறையிலேயே இதுவரை சித்தரித்துக் காட்டி வந்துள்ளன. இல்லையா?

இயாகோ : கடவுள் பொதுவாக அப்படித்தான்.

( கேஷியோவும் வேறு சில அதிகாரிகளும் கைகளில் விளக்குடன் வருகின்றனர். )

ஒதெல்லோ : கோமகனின் சேவகர்களே ! எனது படைதளபதிகளே !இரவு வணக்கம். எங்கே இவ்வளவு தூரம் ?

கேசியோ : கோமகன் தங்களுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பியுள்ளார். அதோடு தங்களை இந்த இரவுவேளையில் அவரை வந்து பார்க்கும்படி பணித்துள்ளார்.

ஒதெல்லோ : எதற்காக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

கேசியோ : சைப்ரசிலிருந்து தகவல் ஏதாவது வந்திருக்கும். அவசர நிமித்தம் என்று நினைக்கிறேன்.கப்பல்களில் பத்து பனிரெண்டு தூதுவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஏழெட்டு மந்திரிகள் இரவென்று பாராமல் கோமகனின் அரண்மனையில் கண்விழித்துக் கிடக்கின்றனர். உங்கள் உறைவிடத்தில் நீங்கள் இல்லை என்பதால் உங்களை அழைத்து வர ஆள் அனுப்பியிருக்கிறார்கள்.

ஒதெல்லோ : சற்று பொறுங்கள். உள்ளே சென்று ஒரு நொடியில் வந்து விடுகிறேன்.( செல்கிறான் ).

கேஷியோ : மூத்த அதிகாரி அவர்களே ! இவர் ஏன் இந்த இடத்தில் இருக்கிறார்?

இயாகோ : அது வேறு ஒன்றுமில்லை. ஒரு பெரிய கப்பலை சிறைபிடித்து விட்டார். அதனால். டெஸ்டிமோனாவை மனதில் நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறினான். ) அதை அவர் சட்டபூர்வமாக்கிக் கொண்டால் இனி அவரை பிடிக்க வெனிசில் ஒரு மனிதன் கூட இருக்க முடியாது.

கேஷியோ : புரியவில்லை ஐயா

இயாகோ : அவர் திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

கேஷியோ : யாரை ?

இயாகோ :அவர் மணந்தது யாரை என்றால் …( ஒதெல்லோ வருகிறான். ) வாருங்கள் தளபதி. கிளம்பி விட்டீர்களா?

ஒதெல்லோ : நீங்கள் இல்லாமலா?

கேஷியோ : அடடே ! வேறொரு குழு கூட உங்களைத் தேடுகிறது.

இயாகோ : பிரபான்ஷியோ கெட்டஎண்ணத்துடன் வருகிறார் போலிருக்கிறது. தளபதி எச்சரிக்கை.

( பிரபான்ஷியோ , சில அதிகாரிகள் விளக்கு மற்றும் ஆயுதங்களுடன் வருகிறார்கள். )

ஒதெல்லோ: ஓஹ்ஹோ நில்லுங்கள் அப்படியே .

ரோடெரிகோ : கனவானே ! அதோ அவன்தான் அந்தக் கறுப்பின மூர்.

பிரபான்ஷியோ : பிடியுங்கள் அவனை. அயோக்கியப்பயல்.

( இரு அணியினரும் வாள் உருவி நிற்கின்றனர். )

இயாகோ : வா ரோடெரிகோ வந்து என் வாளுக்கு பதில் சொல்.

ஒதெல்லோ : மின்னும் வாளுக்கு பயிற்சி கொடுங்கள். இல்லையென்றால் கடல் ஈரம் வாளை துருவேற்றி விடும். உயர் அதிகாரி அவர்களே ! நீங்கள் உங்கள் அனுபவத்தால் மதிக்கப்பாட வேண்டியவர் ஆயுதத்தால் அல்ல.

பிரபான்ஷியோ : அயோக்கிய பதரே ! என் பெண்ணை என்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ? நீ அவளுக்கு என்ன சொக்குபொடி போட்டாய்? உன்மேல் பித்து பிடித்து போய்தான் பெரும்பதவியில் இருக்கும் அழகிய செல்வந்தர்களை எல்லாம் விட்டுவிட்டு உன் கருப்பு உருவத்தின் பின்னால் வந்து விட்டாளா.? என்ன மந்திரம் போட்டாய்? என்ன ஏவல் செய்தாய்? உன்னைக் கைது செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. பிடித்து கட்டுங்கள் அவனை.

ஒதெல்லோ : பொறுங்கள். இரு புறமும் அமைதி காக்க வேண்டுகிறேன்.எனக்கு யுத்தம் செய்ய சொல்லித் தரவேண்டாம். என்னை கைது செய்தால் என்ன பண்ணுவீர்கள் ?

பிரபான்ஷியோ : சிறைச்சாலையில் அடைப்போம்.

ஒதெல்லோ : இந்தத் தருணத்தில் உங்கள் கட்டளைக்கு அடிபணிந்து நான் சிறைக்குள் அடைபட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்னுடன் இருப்பவர்கள் எவர் என்று அறிவீர்களா? இந்த இரவு என்னுடன் மந்திராலோசனை நடத்த கோமகன் என்னை கூட்டிவர அழைப்ப்பு விடுத்திருக்கிறார்.

பிரபான்ஷியோ : என்னது கோமகன் உங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறாரா? விட்டு விடுங்கள் அவனை. இவன் கோமகனின் மாளிகைக்கு செல்லட்டும். அங்கு என்போன்ற உயர் அதிகாரிகள் மத்தியில் இவன் அவமானப்படட்டும்.அவர்கள் இவனுடைய அயோக்கியத்தனத்தை புரிந்து கொள்வார்கள். தண்டனை அளிப்பார்கள். இல்லை என்றால் இந்த வெனிஸ் நகரம் இவன் போன்ற அரேபிய கருப்பு மூர்களால் நிரம்பி வழியட்டும்

காட்சி -3

கோமகன் மற்றும் முக்கிய மந்திரிகள், அதிகாரிகள்

கோமகன் : அவர்கள் கொண்டு வந்த செய்தியில் தெளிவில்லை என்பதால் நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

முக்கிய மந்திரி -1 : முறையாகவும் இல்லை. எனக்கு வந்த செய்தியில் நூற்றியேழு கலங்கள் என்றுள்ளது.

முக்கிய மந்திரி -2 என் கடிததிதில் இருநூறு என்றிருக்கிறது. எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பினும் துருக்கிய கப்பல் படை சைப்ரஸ் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி உண்மையானது

கோமகன் : என் அச்சம் கூட கலங்களின் எண்ணிக்கையில் இல்லை கலங்களின் மீதுதான்.

மாலுமி ( வாயிலில் நின்றபடி ) ஐயா உங்களைத்தான் ஐயா!

மு.ம-1 : கப்பல் படையிலிருந்து ஒரு மாலுமி.

( மாலுமி உள்ளே நுழைகிறான் )

கோமகன் : என்ன விஷயம் ?

மாலுமி : கடற்தளபதி ஆங்கெலோ அனுப்பியதால் வந்திருக்கிறேன்.துருக்கியர் ரோடெஸ் தீவை கைப்பற்றுவதில் முனைப்பாக உள்ளனர்

கோமகன் : துருக்கியரிடம் ஏன் இப்படி ஒரு மாற்றம்?

மு.ம-1 : இது நடக்க முடியாத செயல். நம் கவனத்தை திசை திருப்ப இது ஒரு அலங்கார அணிவகுப்பு. அவ்வளவுதான்.துருக்கியருக்கு ரோடெஸ்சை விட சைப்ரஸ் மீதுதான் கவனம் அதிகம். மேலும் சைப்ரஸ் ரோடெஸ்சை போல அத்தனை பெரிய பாதுகாப்பு அரணுக்குள் இருக்கவில்லை. துருக்கியருக்கு சைப்ரசை கைப்பற்றுவது மிகவும் முக்கியம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தன் மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்ளவே துருக்கி ரோடெஸ் தீவை கைப்பற்றியுள்ளது.

கோமகன் : அவர்கள் கண்டிப்பாக ரோடெஸ் மீது படைஎடுத்திருக்க மாட்டார்கள்.

மு.ம-1 : மற்றுமொருவன் செய்தியுடன்.

( இன்னொரு சேதி சொல்லி உள்ளே நுழைகிறான். )

சேதி சொல்லி : ரோடெஸ்சில் மூக்கை நுழைத்த துருக்கியர்களை பலப்படுத்த மேலும் ஒரு கப்பல் படை அதன் துணைக்கு சேர்ந்துள்ளது.

கோமகன் : இந்தப்படையில் மொத்தம் எத்தனை கப்பல்கள்?

சேதி சொல்லி :முப்பதிற்கும் மேல் இருக்கும். கலங்கள் சைப்ரஸ் நோக்கி திரும்புகின்றன. தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான மாண்டனோ என்னும் கப்பல் தளபதி இந்தத் தகவலை அனுப்பியுள்ளார்.

கோமகன் : இனி மாற்று சிந்தனைக்கு இடமில்லை.மர்கஸ் லூசிகொஸ் நகரில் இருக்கிறாரா?

மு.ம:1 : அவர் இப்போது ஃப்லோரன்சில் இருக்கிறார்..

கோமகன் : உடனே அவருக்குத் தகவல் கொடுங்கள்.

மு.ம-1 : இதோ பிரபான்ஷயொவும் மகாதீரன் மூரும் வருகின்றனர்.

–பிரபான்ஷியோ,ஒதெல்லோ , கேஷியோ, இயாகோ மற்றும் ரோடெரிகோ உள்ளே வருகின்றனர்.—

கோமகன் : அதிதீரனே உன்னை இப்போதே அந்த துருக்கியர்களுக்கு எதிராக உன்னை அனுப்ப வேண்டும் ( பிரபான்ஷியோவைப் பார்த்து ) இந்த நேரத்தில் உங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை கனவானே. வாருங்கள் . உங்களுடைய ஆலோசனையும் உதவியும் இந்த இரவிற்கு மிகவும் அவசியம்.

பிரபான்ஷியோ : அதைப் போலவே உங்களுடைய கருணை எனக்கு வேண்டும்.என்னுடைய பதவியோ, அல்லது இந்த நாட்டின் நிலைமையோ,அல்லது இந்த நாட்டின் மீது எனக்குள்ள அக்கறையோ என்னை என் படுக்கையிலிருந்து எழுப்பி இங்கே கொண்டு வரவில்லை. என்னுடைய சொந்தக்கவலை தனது விஸ்தீரணத்தால் மற்ற எல்லா கவலைகளையும் ஒதுக்கி விட்டு தனியாக முன் நிற்கிறது கோமகனே.

கோமகன் : அப்படி என்ன கவலை உங்களுக்கு ?

பிரபான்ஷியோ: ஐயோ என் மகள் என் மகள்.

கோமகனும் மந்திரிகளும் : என்னது உங்கள் மகள் இறந்துவிட்டாளா?

பிரபான்ஷியோ : என்னைப் பொறுத்த வரையில் அவள் இறந்துவிட்டாள். என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டாள். களவாடப்பட்டு விட்டாள்.போலி மருத்துவர்களின் மருந்தினாலும், மாயாவிகளின் மாயத்தினாலும் மோசம் போய்விட்டாள்.மனித இயல்பு தன்னளவில் செயலாற்றல் இல்லாமல் போனாலோ, குருடானாலோ, அல்லது சிந்திக்கும் திறன் அழிந்து போனாலோ அன்றி இப்படி மோசம் போகாது என்று நான் கருதுகிறேன்.

கோமகன்:இந்தக் குற்றத்தைப் புரிந்தவன் என் சொந்த மகனாக இருப்பினும் அவன் மேல் சட்டம் பாயும். இது என் உத்தரவு.

பிரபான்ஷியோ: மிக்க நன்றி கோமகனே ! இந்த கொடுன்செயலைப் புரிந்தவன் உங்களால் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த மூர்தான்.

கோமகனும் மந்திரிகளும் : நாங்கள் இதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

கோமகன் ( ஒதெல்லோவிடம் ) நீ ஏதாவது கூற விரும்புகிறாயா?

ஒதெல்லோ : வல்லமையும் கடுமையும் நிறைந்த என்னுடைய மூத்த அதிகாரிகளே ! மாண்பும் மாட்சிமையும் நிறைந்த என்னுடைய நம்பிக்கைக்கு உரிய தலைவர்களே ! நான் இவருடைய மகளை மணந்து கொண்டேன் என்பது நிச்சயமான மறுக்கப்பட முடியாத உண்மை.இது ஒன்றுதான் நான் செய்த குற்றம். வேறு ஒன்றுமில்லை.எனக்குக் கோர்வையாக பேசத் தெரியாது. ஒரு சிறந்த பேச்சாளனைப் போல பேசும் ஆற்றல் கொண்டவன் கிடையாது. என்னுடைய ஒன்பதாவது பிராயத்திலிருந்து ஆயுதம் ஏந்தியவன் நான். போர்க்களம் புரிந்த எனக்கு இந்த உலக நடவடிக்கை தெரியாது. சாமர்த்தியமாக என் வாதத்தை எடுத்து வைத்துதான் என் கட்சிக்கு வாதாட வேண்டும் என்றால் நான் தோற்றுத்தான் போவேன். உங்கள் அனுமதியுடன் என்னுடைய அலங்காரம் எதுவுமற்ற நேரடியான காதல் கதையை கூற விரும்புகிறேன். அதைக் கேட்ட பின்பாவது என் மீது சுமத்தப்பட்டுள்ள அந்த மாயம் எது அந்த ஏவல் எது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

பிரபான்ஷியோ : அச்சம் மிகுந்தவள். கூச்சம் மிகுந்தவள். தன் அசைவுகளினால் சிவந்து விடும் மென்மையான மேனி கொண்டவள் டெஸ்டிமோனா. அவளுடைய இயல்பான உள்ளுணர்வுகளை விடுத்து இப்படி வயதினாலும், பருவ காலங்களாலும், விருப்பு வெறுப்புகளினாலும் இடைவெளி மிகுந்த, பார்க்கவே பயன்கரத் தோற்றத்துடன் கூடிய ஒருவன் மீதா காதல் கொண்டிருப்பாள் ? டெஸ்டிமோனாவைப் போன்ற ஒரு நளினமான பெண் இயற்கைக்கும், சிந்தித்து அறியும் குணத்திற்கும் எதிராக செயல்பட்டிருப்பதாகக் ஒரு புத்தியில்லாதவன்தான் கூறக் கூடும். மாந்த்ரீகத்திலும் தாந்த்ரீகத்திலும் வல்லவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.உட்கொண்டவுடன் ரத்தத்தில் கலந்து உடனே வேலையைத் தொடங்கும் மாய மருந்து ஒன்றைத்தான் அவன் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

கோமகன் : இதற்கு போதிய நிரூபணங்கள் இல்லை. வெளிப்படையான ஆதாரங்கள் கிடையாது என்பதால் தங்களது குற்றச்சாட்டில் போதிய நம்பகத்தன்மை இல்லை என்றே கருதுகிறேன்.

மு.ம-1 : நீ கூறு ஒதெல்லோ இவர் மகளை கவர்வதற்கு நீ ரகசியமான அல்லது சட்டத்திற்கு புறம்பான வழிகளை பின்பற்றினாயா?

ப்தேல்லோ : இல்லை மந்திரியாரே ! அழைத்து வரச் சொல்லுங்கள் டெஸ்டிமோனாவை. அவளிடம் அவள் தந்தை முன் விசாரியுங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று.. அவள் என்னை பழி சொன்னாலோ குற்றம் கூறினாலோ என்னை என்னுடைய பதவியிலிருந்து நீக்குங்கள். அவ்வளவு ஏன் எனக்கு மரண தண்டனை கூட அளியுங்கள். ஏற்றுக் கொள்ள காத்திருக்கிறேன்.

கோமகன் : டெஸ்டிமோனாவை அழைத்து வாருங்கள்.

ஒதெல்லோ : மூத்தவரே ! ஆட்களை சாகிடரிக்கு அனுப்புங்கள். உங்களுக்குத்தான் அந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும்..

-இயாகோவும் சில காவலாட்களும் அகல்கின்றனர்—

ஒதெல்லோ ( தொடர்ந்தபடி ) அவர்கள் வரும் வரையில் கடவுளிடம் பாவமன்னிப்பிற்கு மன்றாடும் ஒருவனைப் போல என் காதல் கதையை உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன்.

கோமகன் : சொல்லு ஒதெல்லோ கேட்கக் காத்திருக்கிறோம் .

ஒதெல்லோ : டெஸ்டிமோனாவின் தந்தை ஒருகாலத்தில் என்னை நேசித்தவர். என்னை அவருடைய இல்லத்திற்கு பலமுறை உபசரித்திருக்கிறார். நானும் சென்று அளவளாவியிருக்கிறேன். நான் புரிந்த போர்கள், நான் இட்ட முற்றுகைகள், என் எதிர்காலம் என்று எனது ஏற்ற,இறக்கங்களை அவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.எத்தனை போராட்டங்கள் ! மலையிலும்,கடலிலும், பாலைவனங்களிலும் அலைந்த போராட்டங்கள். முற்றுகையின்போது கோட்டை சுவர் இடிந்ததில் காயம் ஏதுமின்றி தப்பிய கதையைக் கூறியிருக்கிறேன். ஒரு முரட்டு எதிரியிடம் மாட்டிக் கொண்டது; அவன் என்னை ஒரு வியாபாரியிடம் விற்றது; நான் என் எஜமானனிடமிருந்து தப்பியோடி வந்தது என்று பல கதைகள். நான் சந்தித்த வினோதமான மனிதர்களைப் பற்றி கூறியிருக்கிறேன். மனிதக் கறி உண்பவர்கள் ; தோள்களுக்குள்ளேயே தலை வளரும் மனிதர்கள் ; காட்டுமிராண்டிகள் இவர்களை பற்றி சொல்லியிருக்கிறேன். காடுகள் , மலைகள், சொர்கத்தை முகரும் மலை உச்சிகள் என்று பல. என் வர்ணனை அவளது ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். வருவாள். சிறிது நேரம் கேட்பாள். பெண் அல்லவா? வீட்டு வேலை பாக்கி இருக்கும்.உள்ளே போய்விடுவாள். வேலையை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக என் கதையைக் கேட்க வந்துவிடுவாள். இளமைக்காலத்தில் நான் சந்தித்த இன்னல்கள் அவளிடம் கண்ணீராகவும் பெருமூச்சுகளாகவும் வெளிப்பட்டன. என் வாழ்வில் நான் சந்தித்த சம்பவங்கள் அதுவரை தான் கேட்டிராத ஒன்று என்பாள். வருத்தம் தருவதாகக் கூறுவாள். எனக்கு ஒரு நண்பன் இருந்து அவனிடம் எந்த மாதிரி தன் கதைகளை அவளிடம் கூறினால் அவள் அவனிடம் காதலில் விழுவாள் என்பதைக் கூறினாள். இது என் காதலை அவள் குறிப்பால் வெளிப்படுத்திய விதமாகும். நான் அவள் காதலில் விழுந்தேன்.நான் சந்திக்க நேர்ந்த இன்னல்களுக்காக அவள் என்னை காதலித்தாள். என் மீது அவள் காட்டிய அக்கறைக்காக நான் அவளைக் காதலித்தேன். ஒருவருக்கொருவர் இடையில் நிகழ்ந்த இந்தப் புரிதல்தான் அவள் தந்தை குற்றம் சாட்டிய பில்லி ஏவல் எல்லாம்.அதோ டெஸ்டிமோனாவே வருகிறாள் . அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

–டெஸ்டிமோனா , இயாகோ மற்றும் காவலர்கள் வருகை –

கோமகன் : ஓ இந்தக்கதை என் மகளைக் கூட உங்கள் மீது காதல் கொள்ள வைத்து விடும் நல்லது பிரபான்ஷியோ இந்த மோசமான தருணத்தை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள். வெற்று கைகளை விட உடைந்த ஆயுதம் ஏந்திய கைகளையே ஆண்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.

பிரபான்ஷியோ : வணங்குகிறேன் கோமகனே இதோ என் மகள் அவள் பேசட்டும்.இவன் காதலில் இவளுக்கும் சரி பங்கு உண்டென்று சொன்னால் நான் இனி எதுவும் சொல்லப்போவதில்லை. அப்படி பழி சொன்னால் என் தலையில் இடி விழட்டும். அம்மா இங்க வா. இப்போது சொல் உன் மரியாதை எந்தப்பக்கம் என்று..

டெஸ்டிமோனா ; என் மதிப்பிற்குரிய தந்தையே ! என்னுடைய கடமை இருகூறாக பிரிந்து கிடக்கிறது. ஒன்று என்னை இதுவரை வளர்த்து ஆளாக்கிய உங்களுக்காக, என் வாழ்வும் கல்வியும் உங்களால் நான் பெற்றது.அதற்காக நான் உங்களுக்கு கட்டுப்பட்டவள்.உங்களை எப்படி விட்டு கொடுப்பது ? கடமை தவறாதவர் நீங்கள்.இதுவரையில் நான் உங்கள் மகள். ஆனால் இதோ இவர் என் கணவர். என் தாய் தனது தகப்பனை விட உங்களுக்கு அதிக கடமை ஆற்றியது போல நான் இந்த மூருக்கு ஆற்றவேன்டாமா சொல்லுங்கள்.

பிரபான்ஷியோ :வந்தனம் பெண்ணே .இனிமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது? இனி உன் கருணை இந்த நாட்டு நலத்தின் மேல் இருக்கட்டும்.இனிமேல் நான் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதை விட தத்து எடுத்துக் கொள்வதுதான் நல்லது.மூர் ! இங்கே வா. நீ ஏற்கனவே எடுத்துக் கொண்டதை நான் திருப்பி உன்னிடம் தருகிறேன். நல்ல வேளை எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் உன்னுடைய இந்த மரியாதைக் குறைவான செயல் மற்ற பிள்ளைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் கொடுங்கோன்மையாக மாறியிருக்கும்.

கோமகன் : உன் வழியிலேயே என் தீர்ப்பை உனக்கு சாதகமாக அளிக்கிறேன் . தீர்வுகள் இறந்தகாலத்தில் இருந்தது என்றால் வருத்தங்கள் தொலைந்தன என்று எண்ணிக்கொள். ஒரு பிரச்சினைக்கு தீர்வில்லாதபோது அதனை நினைத்துப்புலம்புவது வேறு ஒரு பிரச்சினைக்கு வழிவகுக்கும். சந்தர்ப்பம் நமக்கு சொந்தமானவற்றை திருடிச் செல்லும்போது பொறுமை நமது வலியைப் பார்த்து சிரிக்கும். திருடனைப் பார்த்து பறிக்கபட்டவன் சிரிக்கும்போது திருடன் இழந்தவனாகிறான். பறிகொடுத்தவன் மாறாக வருந்தினால் மேலும் பறிகொடுத்தவனாகிறான்.

ப்ரபான்ஷியோ :துருக்கியர்கள் நம்மை சைப்ரஸ்சை விட்டு துரத்தட்டும். அந்த இழப்பின் வலியை சிரித்து ஏற்றுக் கொள்வோம். வருத்தம் இல்லாதவனுக்கே பிறர் வருத்தத்தை கேட்கும் பொறுமை இருக்கும். வருத்தபட்டவனுக்கோ அடுத்தவன் வலியை பொறுமையுடன் கேட்பதோடு தன் வலியைப் பொறுத்துக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். என்ன இருப்பினும் வார்த்தைகள் வார்த்தைகள்தானே ? புண்பட்ட நெஞ்சத்திற்கு வார்த்தைகள் என்றும் மருந்திட்டதில்லை. இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நாட்டு நிலையில் கவனம் செலுத்துங்கள்.

கோமகன் : துருக்கியர்கள் பெரும் கப்பல் படையுடன் சைப்ரசை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஒதெல்லோ உனக்கு அவர்கள் இருக்கும் திசை தெரியும். உனக்கு ஈடு செய்ய திறமையான தளபதிகள் இருந்தாலும் இது போன்ற பொதுமக்களின் விஷயங்களில் மக்களின்ள் குரலுக்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும். பொதுமக்கள் உன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. இந்த உறுதியான ஆவேசமான தருணத்தில் நீ உனது கல்யாணக் கனவுகளை தள்ளி வைப்பது உத்தமம்.

ஒதெல்லோ : அடிபணிவது என் வழமை. போர்க்களம் எனக்கு விரித்த கடுமையான மெத்தையை விடவா என் நெஞ்சம் சயன மஞ்சத்தில் சாயப்போகிறது? கடினமானதை எதிர்கொள்வதே என்னுடைய பழக்கமாகிப் போனது. எனவே துருக்கியர்களுக்கு எதிரான இந்தப் போரை எதிர்கொள்வது எனக்கு கடினமில்லை. தற்சமயம் என் கவலையெல்லாம் என் மனைவிக்கு பத்திரமாக தங்குவதற்கு ஓர் இடமும் அவள் வாழ்க்கை வசதிக்கான ஏற்பாடுகளும்தான்.

கோமகன் : உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அவள் தனது தந்தையுடன் வசிக்கட்டும்.

பிரபான்ஷியோ : எனக்கு அதில் உடன்பாடில்லை

ஒதெல்லோ : எனக்கும்தான்.

டெஸ்டிமோனா :எனக்கும் சம்மதமில்லை. அவர் கண்களில் பட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு என்மேல் எரிச்சல் இருந்துகொண்டிருக்கும். அது வேண்டாம்.வேறு வழி சொல்லுங்கள்.

கோமகன் : சரி உன் வழியைச் சொல் டெஸ்டிமோனா.

டெஸ்டிமோனா: மூர் இருக்கும் இடம்தான் என் வாழ்வின் ஆரம்பம் முடிவு எல்லாம்.நான் எடுத்துள்ள இந்த மூர்க்கத்தனமான முடிவையும் இதனால் என் வாழ்வில் வீசப்போகும் புயலையும் குறித்து இப்போதே நாட்டு மக்களுக்கு முரசறிவியுங்கள். இரும்புத் தூணில் படரும் கொடி தூணின் தன்மைக்குப் பழகிக்கொள்ளும்.என் கண்களுக்குத் தெரிவது மூரின் கம்பீரமே அன்றி கருத்த முகமன்று. நான் இங்கு பாதுகாப்பாக இருந்தால் எந்த வீரத்தையும் கம்பீரத்தையும் நான் காதலித்தேனோ அதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே நான் மூருடன் செல்லவே பிரியப்படுகிறேன்.

ஒதெல்லோ : அவள் விரும்பிய வண்ணமே அனுமதியளியுங்கள். நாவின் சுவை கருதியோ, தாளாத மோகத்தினாலோ நான் இதைச் சொல்லவில்லை.அவளது கருத்திற்கு மதிப்பளியுங்கள்என்று கேட்கிறேன்.என்னிடம் அவள் கொண்டதைப் போலவே நான் உங்களுக்குக் கடமை பட்டுள்ளேன். மன்மதன் என்மீது கணை தொடுப்பான் அதனால் என்னுடைய சிந்தை திரியும் என்று நீங்கள் நம்பினால் என் தலைக்கவசம் பெண்களின் அடுப்படியில் குழம்புக் கிண்ணமாகட்டும். என் மார்பில் உள்ள கவசம் அடுப்படியில் உள்ள தோசைகல்லாகட்டும்.

கோமகன் : அவள் உன்னுடன் வரச் சம்மதிப்பதும் மறுப்பதும் உங்கள் இருவரின் சொந்தப்பிரச்சினை.இப்போது அவசர நிலை. தேவை உடனடி சம்மதம்.

மு.ம-1 : இன்றிரவே நீ கிளம்ப வேண்டும்.

ஒதெல்லோ : முழுச் சம்மதம்.

கோமகன் : நாளைக்காலை ஒன்பது மணிக்கு உன்னை மீண்டும் சந்திக்கிறேன். உன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு அதிகாரியை இங்கு விட்டு செல் ஒதெல்லோ. நாளை எங்களுடைய ஆணைகளையும் அறிக்கைகளையும் அவரிடம்தான் கொடுத்து விடப்போகிறோம்.

ஒதெல்லோ: இதோ நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு அதிகாரியை விட்டு செல்கிறேன்.என் மனைவியையும் அவர்தான் பாதுகாக்க உள்ளார். அவர் மூலமே தகவல் சொல்லி அனுப்புங்கள்.

கோமகன் : நல்லது. அனைவருக்கும் வந்தனம். (பிரபான்ஷியோவைப் பார்த்து ) உண்மையின் ஜொலிப்பு பார்வைக்கு தெரியாது.பிரபான்ஷியோ உன் மருமகன் கரியவன் இல்லை அழகன்.

மு.ம-1 : நல்லது மூர். டெஸ்டிமோனாவிடம் நல்லவிதமாக நடந்து கொள்

பிரபான்ஷியோ : கண்கள் இருப்பதை மறந்து விடாதே மூர். அவள் தந்தையை ஏமாற்றியவள்.

ஒதெல்லோ : அவள் மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கைதான் எங்கள் வாழ்விற்கான அடிப்படை. நேர்மையின் உறைவிடமாகத் திகழும் இயாகோ ! உங்கள் பொறுப்பில் என் கண்மணியை ஒப்படைக்கிறேன்.உங்கள் மனைவி அவளை பார்த்துக் கொள்ளட்டும். வா டெஸ்டிமோனா ! என் காதலை, என் கனவை, என் நிஜத்தை , என் பழக்க வழக்கங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள இன்னும் ஒருமணி நேரம்தான் உள்ளது. காலத்தைப் பணிவோம் வா!.

( ஒதெல்லோவும் டெஸ்டிமோனாவும் அகல்கின்றனர் )

ரோடெரிகோ ; இயாகோ

இயாகோ : என்ன விஷயம் வீரனே ?

ரோடெரிகோ : நான் என்ன செய்யட்டும்?

இயாகோ : நன்றாக போர்த்திக் கொண்டு படு.

ரோடெரிகோ : ஒரேடியா தூங்கிடறேன். பிரச்சினை இல்லை.

இயாகோ : முட்டாள் ! மரணம் உன் கைகளில் இல்லை.தோல்விகளுக்காக இறப்பவன் மனிதன் இல்லை. ரோடெரிகோ என்ற பெயரில் எனக்கொரு நண்பன் இருந்ததையே நான் மறந்து விடுவேன்.

ரோடெரிகோ : புயலை சிறுபடகு எதிர்ப்பதால் என்ன பயன் ? எமனின் மருந்துச்சீட்டில் மரணம் என்பதைத் தவிர வேறு என்ன எழுதியிருக்க முடியம்?

இயாகோ : கஷ்டம். என்னுடைய இருபத்தெட்டு வருட அனுபவத்தில் சாதகம் எது பாதகம் எது என்று என்னால் கண்டுபிடிக்க முடியும். இருப்பினும் தன்னைத் தானே காதலிக்கத் தெரியாத முட்டாளை இப்போதுதான் சந்திக்கிறேன்.தகுதியற்ற ஒரு பெண்ணின் காதலுக்கு என் வாழ்வை முடித்துக் கொல்வதற்கு பதில் ஒரு குரங்காவாவது வாழ்ந்திருப்பேன்.

ரோடெரிகோ : என்ன செய்வது இயாகோ ? காதலிப்பவன் வெட்கப்படலாமா? காதலினால் நான் பெற்ற காயங்களை ஆற்றும் மருந்து என்னிடம் இல்லை. என் இயல்பை மாற்றும் ஆற்றல் என் கண்ணியத்தில் இல்லை.

இயாகோ : ப்ச் ! கண்ணியத்தைப் பற்றி பேசுகிறாய். தேவையற்றது. நாம் எவ்வாறோ நம் கண்ணியமும் அவ்வாறே. நமது மனம் ஒரு பூந்தோட்டம் என்றால் நமது மணஉறுதிதான் தோட்டக்காரன். நம் மணஉறுதிதான் விதைக்கப்படவேண்டியது கண்ணியத்தையா அல்லது சாமர்த்தியங்களையா என்பதை நிச்சயிக்கிறது. . நம் மணஉறுதிதான் நமது தோட்டம் பூத்துக் குலுங்க வேண்டுமா அல்லது தரிசாகப் போகவேண்டுமா என்பதை முடிவு செய்கிறது. மனம் நம் உடலைவிட வலிமையானது. நமது துடிப்பிற்கும் நமது பகுத்தறிவிற்கும் ஒரு சமன் இருக்குமேயானால் மோகமும் நடத்தை கேடும் நம்மை எதுவும் செய்ய முடியாது. காதல் என்ற கனியைக் கொடுக்கும் மோகத்தையும் துடிப்பையும் ஒரு கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதில் அர்த்தம் உள்ளது.

ரோடெரிகோ : உன்னுடன் எனக்கு உடன்பாடில்லை.

இயாகோ : இரத்தத்தின் கொழுப்புதான் காதல். மணஉறுதி அதனைக் கட்டுபடுத்தும். நீரில் மூழ்குவதை குறித்துக் கூறினாய். பூனைகளும் நாய்க்குட்டிகளும்தான் மூழ்கும். ஒரு மனிதனை போல நடந்து கொள்.உன்னை சேர்த்து கட்டு. உன்னுடைய திறமையின் காரணமாகவே நான் உன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டுள்ளேன். உனக்கு உதவ இதுதான் சந்தர்ப்பம். உன் மணிபர்சில் பணம் நிரப்பி கொள். என்னுடன் கிளம்பு. ஒரு பொய்த்தாடியை மாட்டி கொண்டு வேஷம் போட்டு கொண்டு வா. உன் மணிபர்சை நிரப்பிக் கொள்ள மறக்காதே. இன்னும் கொஞ்ச காலத்தில் மூரின் மேலான காதல் டெஸ்டிமோனாவிடம் குறைந்துவிடும். அதைப்போலத்தான் மூருக்கும்- உன் மணிபர்சை நிரப்ப மறக்காதே- ஆவேசமாக தொடங்கும் எல்லா காதலும் ஆவேசத்தில்தான் முடியும். மணிபர்சை நிரப்பு. இந்த மூர்கள் மணஉறுதியற்றவர்கள் உன் மணிபர்சை நிரப்ப மறக்காதே. அவனுக்கு இப்போது இனிக்கும் காதல் இன்னும் சிறிது நாளில் கசக்கத் தொடங்கி விடும்.அவளும் வேறு ஒரு வாலிபனைத் தேடத் தொடங்குவாள். மூருடனான துடிப்பு அடங்கும்போதுதான் தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்வாள்.அந்த நேரம் வேறுஒருவனுக்காக மூரைக் கைகழுவி விடுவாள். எனவே உன் மணிபர்சில் நிறைய பணம் இருக்கட்டும். உன்காதல் நரகம் என்றால் அதற்கு வேறு வழியைத் தேடு மூழ்க வேண்டாம். உன்னால் எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பணம் எடுத்துக் கொள். அலையும் மூருக்கும் , சூது நிரம்பிய டெஸ்டிமோனாவிற்கும் நடுவில் உள்ள ஒழுக்கமும், திருமண பந்தமும் உறுதியில்லை என்றால் என் தந்திரம் அவற்றை குலைத்துவிடும்.அப்போது உன் டெஸ்டிமோனாவை நீ அடையலாம். எனவே பணத்துடன் தயாராக இரு. நீரில் மூழப்போகும் உன் என்னத்திற்கு முடிவு கட்டு. அதைப் பற்றி எண்ணாதே.

ரோடெரிகோ : உன்னை எண்ணும்போது என் நம்பிக்கையின் பக்கம் நிற்பாயா?

இயாகோ: நீ என்னை முழுவதும் நம்பலாம் பணத்தை மட்டும் தயாராக வைத்துக் கொள். ஏற்கனவே பலமுறை சொன்னதுதான் நான் அந்த மூரை அடியோடு வெறுக்கிறேன். இப்போது உனக்கும் அவனை வெறுக்க ஒரு காரணம் கிடைத்து விட்டது. வன்மத்தில் நாம் இருவரும் இணைவோம். உன்னால் அவளை பெண்டாளமுடியும் என்றால் அது உனக்கு மகிழ்ச்சி எனக்கு ஒரு விளையாட்டு. காலத்தின் கர்ப்பத்தில் வெளிவராத பல நிகழ்ச்சிகள் இன்னும் உள்ளன. பணத்தை தயார் பண்ணு. இது குறித்து நாளை மேலும் யோசிப்போம். வருகிறேன்.

ரோடெரிகோ : காலை மீண்டும் எங்கும் சந்திக்கலாம்?

இயகோ : என் விடுதியில்.

ரோடெரிகோ : சீக்கிரம் வந்து விடுகிறேன்.

இயாகோ : இது போதும். போய் வா ரோடெரிகோ. நான் சொன்னது காதில் விழுந்தது இல்லையா?

ரோடெரிகோ : என்ன சொன்னாய்?

இயாகோ : நீரில் மூழ்குவது குறித்த உன் நினைப்பை மாற்று. சரியா?

ரோடெரிகோ : என் நினைவை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். அடுத்து என்னுடைய நிலங்களை விற்று பணமாக்குவதுதான்.

இயாகோ : கிளம்பு. விற்று பணமாக மாற்று. (ரோடெரிகோஅகல்கிறான் )

இந்த முட்டாள் என் பர்சை தொட அனுமதிக்கமாட்டேன். இது போன்ற முட்டாளுடன் என் நன்மைக்கும் கேளிக்கைக்கும் உறவாடும்போது என் மூளையையும் உலக அனுபவத்தையும் உபயோகிப்பேன்.இந்த மூரை நான் வெறுக்கிறேன். என் மனைவியுடன் இவன் படுத்திருக்கிறான் என்றொரு வதந்தி உலவுகிறது. உண்மையா என்று தெரியவில்லை. அது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அதன் சாத்தியத்தை நான் நம்புகிறேன்ஆனால் அவன் என் அலுவலைக் களவாடி விட்டான்.அவன் என்னை நன்றாகவே நடத்துகிறான். இதனை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன் . கேஷியோ நல்லவன். இனி ஆகவேண்டியதை யோசிக்கிறேன்.அவன் இடத்தை பிடிப்பது: என் மண என்னத்தை நிறைவேற்றிக்கொள்வது; இந்த இரண்டு சூழ்ச்சிகளையும் முடிக்கவேண்டும்.சிறிதுகாலம் சென்றபின் கேஷியோ ஒதேல்லோவின் மனைவியுடன் அடிக்கடி நெருக்கமாக இருப்பதாக மூரின் காதுகளில் போட்டு வைப்பேன். கேஷியோவும் சந்தேகப்படும் அளவிற்கு அழகான வடிவானவன்தான். பெண்களை வசியப்படுத்தக் கூடிய தோற்றமுடையவன்தான்.மூர் வெளிப்படையானவன். திறந்த மனமுடையவன்.மனிதர்கள் அவ்வளவு நேர்மையானவர்கள் என்று நம்புகிறான் ஒரு கழுதையைபோல. என் திட்டம் ஏற்கனவே முழுமை பெற்றுவிட்டது. என் வஞ்சக சூழ்ச்சியும். இரகசிய வேலைகளும் அதற்கு மேலும் உரமூட்டவேண்டும்.

அங்கம் ஒன்று நிறைவு பெற்றது.

 

 

 

 

:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 நான்கு கவிதைகள் / நிஷா மன்சூர்  

download

 

 

 

 

1.

வழிப்போக்கனின் சிறகுகளுக்குள்..!!

 

கூழாங்கற்களில் நழுவிச் செல்கிறது 
வழிப்போக்கனின் நதி

படகோட்டி அறிந்திராத நதியின் நுட்பங்களை
மீன்களிடம் கற்றுத்தேர்ந்த வழிப்போக்கனுக்கு
நிலத்தின் வரைபடம் பெருஞ்சுமையே

மூங்கில் உரசலின் இசையை வைத்து
காற்றின் திசையை கணிக்கும் அவன்
கட்டுச்சோற்று மூட்டையை 

எப்போதோ வீசியெறிந்திருந்தான்

ஊன்றுகோல்களும் குறுங்கத்தியும் 
கவசங்களும் பயனற்றுப்போன நேசப்பெருவெளியில்
இன்னும் அன்பின் ஈரம் கசிந்துகொண்டிருக்கிறது

இந்த கணத்தை முழுமையாக வாழ்வதே இலக்கானபின்
செல்லுமிடம் குறித்த கவலைகள்
கழுத்தை நெரிக்கவில்லை

“அணைந்து அணைந்து எடுக்கும் கருணை கொப்புளிக்கும்
அலகிலா அருள் அடை கிடக்கும்”*தலமேகித் 

தன் சிறகுகளில் சொருகிக் கொள்கிறான் சிற்றருவிகளை.

*குணங்குடி மஸ்தான் சாஹிபு அப்பா பாடலின் வரி

 

 

 

2.

துரோகியின் குற்றச்சாட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும் 
உண்மையின் சிறுதுளிக்குள்
மூழ்கி மூர்ச்சையடைகிறாய் நீ
பின் நேர்மையின் தடயங்களைச் சிறு காகிதப் படகாக்கினாய்
பின் இக்கட்டான தருணங்களில் அணிந்திருந்த நம்பிக்கைகளை துடுப்பாக்கினாய்
பின் ஆரம்பகால எதிர்பார்ப்புகளற்ற உழைப்பை

மிதக்கும் ஒரு மரமாக்கிப் படகிலேறினாய்
இது கவிழ்ந்து விடக்கூடாதே என்று 
உன் மனைவியின் கண்ணீரைக்கொண்டு பிரார்த்தித்தாய்
எப்படியாவது கரைசேர வேண்டுமே என்று 
உன் குழந்தைகளின் நம்பிக்கைகளைக் கொண்டு இறைஞ்சினாய்
சலனப்பட்ட தருணங்கள் ஒரு திமிங்கலமாக உருவெடுத்து
மூழ்கடித்துவிடுமோ என்று திகிலுடனே படகைச் செலுத்திக் கொண்டிருக்கிறாய்

இந்த நெருக்கடியில் எடுத்துக்கொண்ட சபதங்களும்
இந்த வழுக்கலில் கற்றுக்கொண்ட பாடங்களும்
இனியாவது புத்தி புகட்டட்டுமென 

காற்றும் கடலும் கரைசேர்க்கட்டும் உன்னை என்றேன்

3.

ஓசையற்ற கொலுசுகளின் துயரம்

மின்னும் மூக்குத்திகளுக்கில்லை
மின்னும் மூக்குத்திகளுக்கில்லை..!!

 

4.

சூரியன் உன் முகத்தில் உதித்தபோது…..!!

 

 

விடியலுக்கு முன்னமே அத்தனை பிரகாசமாய்
ஒளிரத்துவங்கி விடுகிறது உன் முகம்,
இரவின் சோர்வுகளற்று அத்தனை புத்துயிர்ப்பாய்
மலரத்துவங்கி விடுகிறது உன் முகம்.

கலவிக்குப் பிறகான ஒவ்வொரு குளியலிலும் 
ஒரு திரை அகற்றப் படுகிறது.
அது ஒருமைக்கெதிரான இருமையின் திரை,
நான் நீ என்கிற பிரிவினையின் திரை,
அக அழுக்குகளின் தயக்கத்திரை,
கருத்து வேறுபாடுகளின் சலனத்திரை,
அகங்காரமுனைப்பின் மாயத்திரை.

என் அகங்காரம் முற்றிலுமாகக் கரைந்து அழிகிறது,
அல்லது உச்சகட்ட திருப்தி கொள்கிறது.
சமர் புரியும்போதும் சரணடையும்போதும் 

வெற்றியையே கனிந்தளிக்கும் இந்தப் போட்டியில் சலிப்பில்லை,விழுப்புண்களுமில்லை.

மீண்டும் புதிதாகப் பிறக்கிறோம் அல்லது 
இயல்பான நம் குழந்தைமையை நோக்கிப் பயணிக்கிறோம்.
அறிவென்றும் மேதமையென்றும் செல்வமென்றும் பிதற்றும்
அறியாமையிலிருந்து மீண்டெழுகிறோம்.
இவ்வுலகின் சகல இசைக்கருவிகளும் சேர்ந்திசைக்கும்
உன்னத இசையில் நம் சுயத்தைத் தொலைக்கிறோம்
அல்லது மீட்டெடுக்கிறோம்..!!

 

•••••••••••••

 

 

திரைக்கதை சில குறிப்புகள் : அத்தியாயம் 25 / பி.ஆர்.மகாதேவன்

images

 

அடுத்ததாக நமது கல்வி இலக்கின் அடிப்படையில் எந்தெந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது?

சூரியனுக்குக் கீழே மட்டுமல்ல அதற்கு மேலே இருப்பவற்றுக்குக்கூட நாம் தீர்வு சொல்ல முடியும். சொல்லவேண்டும்.

பிரச்னைகளை ஒரு வசதிக்காக பள்ளி சம்பந்தப்பட்டவை, பள்ளிக்கு அப்பாற்பட்டவை அதாவது, சமூகம் சார்ந்தவை என்று இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்வோம்.

பள்ளிக்கூடம் எப்படி இருக்கவேண்டும், ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும், மாணவர்களுக்கு என்ன சுதந்தரங்கள் தரப்படவேண்டும், என்ன பாடங்கள் இருக்கவேண்டும், எப்படிச் சொல்லித் தரப்படவேண்டும், தேர்வுகள் எப்படி நடக்கவேண்டும், மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் தரப்படவேண்டும் இவையெல்லாம் பள்ளி சம்பந்தப்பட்ட பிரச்னைகள்.

தெருவில் விடிந்த பிறகும் எரியும் விளக்குகள் அல்லது இரவுகளில் எரியாத விளக்குகளில் ஆரம்பித்து வானத்தில் ஓஸோன் படலத்தில் விழும் துளைகள் வரை பிற அனைத்துப் பிரச்னைகளும் பள்ளிக்கு அப்பாற்பட்டவை. இரண்டுக்குமான தீர்வுகள்தான் நம் திரைப்படம். அதற்கான திரைக்கதைதான் நாம் எழுதவேண்டும்.

இதற்கு நம் பள்ளி மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?

கிரேட் டிபேட்டர்ஸ் என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடித்தது. அதில் மாணவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துகொண்டு குழந்தைத் தொழிலாளர் பிரச்னை, அஹிம்சை, நிறவெறி என பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிப்பார்கள். நமது பள்ளியில் சொல்யூஷன்.காம் என்ற ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் தமது அனுபவம் சார்ந்து அல்லது கேட்டு, பார்த்து, படித்துத் தெரிந்துகொண்ட பிரச்னைகளை விளக்கிச் சொல்லி அதற்கான தீர்வையும் எழுதவேண்டும். வகுப்பறையில் பிரச்னை தொடர்பான விவாதம் நடக்கும். வாரத்துக்கு ஐந்தாறு வகுப்புகள் இதற்கென்றே ஒதுக்கப்படும். ஒரு வகுப்பு களப்பணிக்கு… இன்னொரு வகுப்பு லைப்ரரி, இணையத்தின் வழி தகவல்களைச் சேகரித்துக் கொள்ள… இன்னொரு வகுப்பு ஆசிரியரிடம் அது தொடர்பாகக் கலந்தாலோசிக்க… இன்னொரு வகுப்பு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணரிடம் கலந்தாலோசிக்க… கடைசி வகுப்பில் மாணவர்கள் கூட்டாகக் கலந்தாலோசித்து தங்கள் கண்டடைதல்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படியாக ஒவ்வொரு வாரத்துக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வு..! என்னென்ன பிரச்னைகள்… என்னென்ன தீர்வுகள்… இதுதான் நமது படம்.

பள்ளிகளில் கொண்டுவரவேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக சீருடை என்ற விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இது எதற்காகப் பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது..? இந்தக் கேள்விக்கு மாணவர்களிடம் இருந்து அவர்களுக்குத் தெரிந்த பதிலை முதலில் கேட்டுக்கொள்ளலாம். அதன் பிறகு ஆசிரியர் சில விஷயங்களைச் சொல்லலாம். மாணவர்கள் இணையத்தில் இருந்து படித்துக் கொள்ளலாம்.

மாணவர்களில் வர்க்கம், சாதி, இனம், மொழி என எந்த வேறுபாடும் பார்க்கக்கூடாது. அனைவருக்கும் சம வாய்ப்பு தரவேண்டும். யாரும் உயர்ந்தவருமல்ல… தாழ்ந்தவருமல்ல என்ற விஷயத்தை உணர்த்தும் வகையில் ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரேவிதச் சீருடை தரப்பட்டிருக்கிறது.

இந்தக் கோணத்தில் இதுசரிதான். ஆனால், ஒரேவித உடை என்பது வேறு அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

ராணுவம், காவல்துறை போன்றவற்றுக்குத்தான் அரசுப் பணிகளில் சீருடை கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை போன்றவற்றுக்கும் சீருடை உண்டு… சில தனியார் நிறுவனங்களிலும் உண்டு. ஆனால், அங்கெல்லாம் கடைநிலை, இடைநிலைப் பணியாளர்களுக்கு மட்டுமே சீருடை உண்டு. அங்கு சீருடை என்பது அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் மனதில் பணிவு, விசுவாசம் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. பள்ளியிலும்கூட இது அப்படித்தான் பயன்படுத்தப்படுகிறது. சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணத்தை வளர்ப்பதற்கு பதிலாக அடங்கிப் போகும் குணத்தை திணிக்கும் நோக்கிலேயே இது மறைமுகமாகப் பய்னபடுத்தப்படுகிறது. எனவே, இந்தக் கோணத்தில் சீருடை என்பது தவறு.

மேலும் சீருடை என்பது தனி மனித படைப்பூக்கத்துக்கு எதிரானது. சமத்துவம் என்பது வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தும் உரிமை என்ற வகையில்தான் சரி… அதைத் தாண்டிப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தனி ஆளுமை. ஒரே சீருடை என்பது அந்தத் தனி ஆளுமைகளைக் கணக்கில் கொள்வதில்லை. அவை ஒரு மனிதனை மந்தையில் இருக்கும் இன்னொரு ஆடு என்ற வகையில் முடக்கப் பார்க்கிறது. இந்தக் கோணத்தில் பார்த்தாலும் சீருடை தவறுதான். ஜே. கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் இந்தக் காரணத்தினால்தான் சீருடை கிடையாது.

ஒரு ஊரில் ஐந்து பள்ளிகள் இருக்கின்றன என்றால் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொருவித சீருடையைப் பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் தனது மாணவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்ற தனி ஆளுமையைக் காட்ட விரும்புகிறார்கள். சீருடை மூலம் சமத்துவத்தைக் கொண்டுவர விரும்பினால் ஒரு மாநிலத்தில் இருக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஒரேவிதமான சீருடையைத்தான் அணிய வேண்டும் என்று சொல்லவேண்டும். அதிகாரத்தின் குறியீடாக அதைப் பயன்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட ஆசிரியர்களும் சீருடை அணிய வேண்டும். இது ஒரு தீர்வு.

அடுத்ததாக பெரும்பாலான மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் திங்கள் ஒரு சீருடை. ஸ்போர்ட்ஸ் நாளில் ஒரு சீருடை… பிற நாட்களில் ஒரு சீருடை என மூன்று சீருடைகள் அணியச் சொல்கிறார்கள். இது தேவையற்ற வீண் செலவு…துணி நிறுவனம், டெய்லர் கடை ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு காசு பார்க்கும் ஏற்பாடுதான் இது. இதையும் நிறுத்தியாக வேண்டும்.

அடுத்ததாக, சீருடைக்குப் பயன்படுத்தப்படும் துணி வகை… இந்தியா/தமிழகம் போன்ற மித வெப்ப நாடுகளுக்கு பருத்தி உடைதான் தான் சிறந்தது. மேலை நாட்டு மோகத்தால் பாலிஸ்டர், டெரிலின் போன்ற உடைகளைப் பயன்படுத்துகிறோம். இது தவறு. பருத்தி/கதர் உடையைப் பயன்படுத்துவது உடலுக்கு மற்றுமல்ல இந்திய விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் நன்மையைத் தரும். முதல் வேலையாக அரசுப் பள்ளிகள், அரசுப் பணிகள் ஆகியவற்றுக்கு கதர் துணியில் தைத்த சீருடைதான் அணியவேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து கூடிய சீக்கிரமே பிற பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தவேண்டும்.

மேலும் ஷூ, சாக்ஸ், டை போன்றவை குளிர் பிரதேச, மேற்கத்திய நாடுகளுக்கு உகந்த உடை… நமது நாட்டுக்கு அது பொருந்தாது. ஆனால், பாரம்பரியப் பெருமை பேசும் இந்து நிறுவனங்கள் கூட தமது பள்ளிகளில் இதே மேற்கத்திய உடையைத்தான் கட்டாயப்படுத்துகின்றன. உண்மையில் இந்த சீருடை, ஷூ, டை, கலாசாரம் கான்வெண்ட்களில் இருந்துதான் ஆரம்பமானது. கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கத்திய அம்சங்களைப் பின்பற்றுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கான நிதி அதற்காகத்தான் தரப்படுகிறது. ஆனால், இந்திய, தமிழ் உணர்வு உடையவர்கள் இந்த விஷயங்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

ஆக, சீருடை என்ற இந்த விஷய தொடர்பாக நமது கதாநாயகர் முன்வைக்கும் விஷயங்கள் என்னவாக இருக்கும்:

கதர் சீருடை, ஷூ-சாக்ஸ், டை கிடையாது… எட்டாம் வகுப்புக்கு மேல் வேட்டி சட்டை, தாவணி, ஆசிரியருக்கும் சீருடை…

நிச்சயமாக இதற்குப் பெரும் எதிர்ப்பு வரும்… ஷூ, சாக்ஸில்தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உயிரே அடங்கியிருக்கிறது. அந்த மேற்கத்திய அம்சங்களை நீங்கள் மறுதலித்தால் இறுதியில் ஆங்கில வழிக் கல்வி என்பதை ஒழிப்பதில்போய் நிற்கும் என்று பயப்படுவார்கள். அரசுப் பள்ளிகளில் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சமே அதுதான். அது போய்விட்டதென்றால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேரவேண்டுமென்று ஒருவர் எதற்காக சிரமப்படவேண்டும். அட்மிஷன் காலங்களில் காம்பவுண்டுக்கு வெளியே எத்தனை பெற்றோர் கால் கடுக்கக் காத்திருக்கிறார்கள் என்பதை வைத்துத்தானே பள்ளியின் வெயிட் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, அவர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதை எப்படி காட்சிப்படுத்துவது?.

நமது ஆசிரியர் அமெரிக்க கல்வியாளர் ஒருவரை அழைத்து வருகிறார். அவர் ஷூ, சாக்ஸ், டை எல்லாம் மேற்கத்தியர்களுக்கு உகந்தது… இந்தியர்களுக்கு அது தேவையில்லை என்று சிறு உரையாற்றுவார். இந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல முன்வரும் மேற்கத்திய கல்வியாளர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று பேச வைத்து பெற்றோரை சம்மதிக்க வைப்பார். காந்தியின் எளிய உடை பற்றி அமெரிக்கர் சொல்லி நாம் கேட்க நேருவது வேதனைக்குரியதுதான். என்றாலும் அப்படியான நிலை வந்துவிட்டதே…

கதர் சீருடையை அரசுப் பள்ளிகளில் கொண்டுவர வேறு என்ன செய்யலாம்..?

கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். இருந்தார். அவர் மாற்று சிந்தனைகளை முன்னெடுக்கக்கூடியவர். நமது பள்ளி மாணவர்கள் அவரைச் சென்று சந்தித்து மனு கொடுப்பதாகவும் அவர் அரசிடம் பேசி கதர் சீருடைக்கு அனுமதி பெறுவதாகவும் காட்சிகளை அமைக்கலாம். அல்லது பருத்தி தொழில், கதர் நெசவாளி இவர்களைப் பற்றிய உணர்வுபூர்வமான ஆவணப்படம் ஒன்றை எடுத்துக் காட்டலாம். ஆடை நிபுணர்கள் இந்திய தட்ப வெப்ப நிலைக்கு கதர் தான் சிறந்தது என்று சொல்வதை காட்சிப்படுத்தலாம். ராஜ் கிரண், ரஜினிகாந்த், கமல் போன்ற பிரபலங்களைச் சென்று சந்தித்து கதர் உடையின் முக்கியத்துவம் பற்றி ஓரிரு நிமிட விளம்பரப்படம் எடுத்து நாடு முழுவதும் கொண்டு செல்லலாம். இப்படியாக மக்களின் சிந்தனையைச் சரியான திசைக்கு நகர்த்தத் தேவையான விஷயங்களைச் செய்து காட்டலாம்.

சமூகம் சார்ந்த பிரச்னைகளில் எதை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் தற்போது இந்து தேசியவாதியின் ஆட்சி நடக்கிறது. இந்துத்துவம் இந்திய அரசியலின் மையத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. இந்துத்துவம் இரண்டு வகைப்படும். இந்து அம்சங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் என்பது ஒருவகை… அனைத்து மதங்களின் நல்ல அம்சங்களையும் அரவணைத்துச் செல்வது இன்னொரு வகை. இன்றைய அரசியலில் முதல் வகை இந்துத்துவத்துக்கே அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று தோன்றுகிறது. இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தியர்களை இந்துக்கள், இந்து அல்லாதவர்கள் என்று பிரிக்குமா..? அப்படியெனில் அதற்கான தீர்வு என்ன..? இந்து அம்சத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் இந்துத்துவத்தின் ஆதார இலக்கு என்ன..? இந்து ராஷ்டிரம் அமைத்தல்… அதன் முதல் செயல் திட்டம் என்ன..? அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல். அந்த பிரதான இலக்கை எடுத்துக்கொள்வோம்.

ராமர் கோவில் – பாபர் மஹால் பிரச்னைக்கு என்ன தீர்வு…?

எனது ஆறு வயது மகனிடம் இதை வேறு கோணத்தில் கேட்டேன். ஒரே இடத்துல ரெண்டு பேரு ஒரு வீடு கட்டணும்னு சொல்றாங்க… என்னடா செய்யலாம் என்றேன்.

கிரவுண்ட் ஃபுளோர்ல ஒருத்தரும் ஃப்ஃர்ஸ்ட் ஃபுளோர்ல ஒருத்தரும் இருந்துக்க வேண்டியதுதானே என்றான்.

இதை ஃபைன் ட்யூன் செய்யலாம். அதாவது, பாபர் மஹாலை இந்துக்கள் புதிதாக தாஜ்மஹால் போல் பளிங்கினால் கட்டித்தரவேண்டும். அந்த மஹாலுக்குக் கீழே புதைக்கப்பட்டிருக்கும் ராமர் கோவிலை முஸ்லிம்கள் அருமையாகப் புனரமைத்துத்தரவேண்டும். பாபர் மஹாலின் மேலே பாரதக்கொடி பட்டொளிவீசிப் பறக்கவேண்டும்.

அப்போதும் முஸ்லிம்களின் மண்டபம் மேலேயும் இந்துக்களின் கோவில் கீழேயும் கிடக்க வேண்டுமா என்று ஒரு பிரச்னை வரும். வேறொரு மாணவர் அதற்கு வேறொரு யோசனை சொல்லலாம்.

ராம ஜென்ம பூமியில் லைட் ஹவுஸ் போல் பிரமாண்ட தூண் ஒன்றை எழுப்பவேண்டும். அதன் மேலே சம உயரத்திலான மூன்று கட்டுமானங்கள். இடப்பக்கம் மசூதி… வலப்பக்கம் கோவில்… நடுவில் கட்டப்படும் கட்டுமானத்தின் நடு பீடத்தில் பிரமாண்ட தேசியக் கொடியைப் பறக்கவிடவேண்டும். பிரமாண்டத் தூண் வழியாக ஏறி மேலே வருபவர்கள் முதலில் இந்தக் கொடியைப் பார்ப்பார்கள். இந்துக்கள் என்றால் வலது பக்கம் போய் ராமரைக் கும்பிடலாம். இஸ்லாமியர் என்றால் இடது பக்கம் போய் மசூதியில் தொழுது கொள்ளலாம். தொலைவில் இருந்து பார்க்கும்போது இந்த கட்டுமானம் சிலுவை வடிவில் இருக்கும். இன்னொரு கோணத்தில் அதுவே திரிசூலம் போலவும் இருக்கும்.

இப்படி அந்த மாணவர் சொல்லும் ஒரு தீர்வின்படி அழகாக கிராஃபிக்ஸில் இப்படி ஒரு கட்டுமானத்தை நாலைந்து நிமிடத்தில் உருவாக்கிவிடமுடியும். நிஜத்தில் நாலைந்து யுகம் ஆனாலும் இதைச் செய்யமுடியாமல் போகக்கூடும். ஏனென்றால், விஷயம் வெறும் ஒரு கோவில், நினைவுக் கட்டடம் சம்பந்தப்பட்டதல்ல… தொழுகையே நடந்திராத, சரித்திர கால மன்னரொருவரின் வெற்றி விழா கொண்டாட்ட மண்டபமானது அந்த மன்னருடைய மதத்தின் இறைவனின் வழிபாட்டு மண்டபமாக, மசூதியாக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. அப்படியாக, இந்தியாவின் எளிய இஸ்லாமியர்கள் அனைவருடைய நம்பிக்கையும் அதனுடன் பிணைந்துவிட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதை தமது ஈகோ பிரச்னையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து அடிப்படைவாதிகளும் ராமர் கோவில் சார்ந்து அதே நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள். இந்து அடிப்படைவாதிகள் சரயு நதிக்கரையில் பிரமாண்ட மசூதி கட்டித்தரத் தயாராக இருக்கிறார்கள். இஸ்லாமியர்களும் வேறொரு இடத்தில் அதைவிட பிரமாண்டகோவில் கட்டித்தரத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இந்துக்கள் கோவில் மட்டுமே வரவேண்டுமென்று சொல்கிறார்கள். கோவில் வராவிட்டாலும் பரவாயில்லை அங்கு இஸ்லாமிய கட்டடம் எதுவும் வரக்கூடாதென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அதேபோல்தான் இஸ்லாமியர்களும் அந்த வளாகத்தில் கோவில் எதுவும் வந்துவிடக்கூடாதென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

இந்தியாவில் சிதிலமடைந்த எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. தொழுகை நடக்காத மசூதிகள் எத்தனையோ இருளடைந்து கிடக்கின்றன. இரு தரப்பு மக்களிலும் கல்வியிலும் வாழ்க்கைத்தரத்திலும் செய்து தரவேண்டிய சீர்திருத்தங்கள் எத்தனையோ இருக்கின்றன. இது வெறும் ஈகோ பிரச்னை மட்டுமே… சிறுபான்மை, பெரும்பான்மைக்கு எந்தெந்த விஷயங்களில் விட்டுக் கொடுக்கவேண்டும். பெரும்பான்மை சிறுபான்மையை எந்த அளவுக்கு அரவணைத்துச் செல்லவேண்டும் என்பதெல்லாம் அந்தந்தப் பிரிவின் எளிய மக்களே தீர்மானிக்க முடியவேண்டும். அடிப்படைவாதிகள் கைகளில் அந்தப் பொறுப்பை விடவே கூடாது. ஈஸ்வர் அல்லா தேரே நாம் என்பதுதான் இரு மதத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் எளிய மக்களின் மனோபாவம். ஒருவேளை இந்துப் பெரும்பான்மையினர் எந்த அளவுக்கு இஸ்லாமிய மத அம்சங்களை ஏற்கத் தயாராக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இஸ்லாமிய எளிய மக்கள் இந்து அம்சங்களை ஏற்கத் தயாராக இல்லாமல் இருக்கக்கூடும். மசூதிக்கும் மந்திரித்துக் கொள்ள இஸ்லாமியரை நாடியும் செல்லும் இந்துக்களின் எண்ணிக்கைக்கு இணையாக இஸ்லாத்தில் இருந்து இந்துக் கோவில்களுக்கோ இந்து நம்பிக்கைகளுக்கோ வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கக்கூடும். அப்படியானவர்களை இந்து என்ற அடையாளத்துக்கு பதிலாக இந்தியா என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைப்பதே நல்லது.

சர்ச்சைக்குரிய இடத்தில் பாரத மாதா ஆலயம் மட்டுமே கட்டிக் கொள்வோம். அந்த இடம் மத மோதலுக்கான அடையாளமாக இருக்கவேண்டாம். இந்திய ஒற்றுமைக்க்கான சின்னமாக ஆகட்டுமென்று ஒரு தீர்வை முன்வைக்க முடியும். இவை எல்லாமே இந்திய சமூகம் கடந்த காலம் தொடர்பான காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டு எதிர்காலத்தை சுமுகமாக வாழத் தேவையான விஷயங்கள்.. திரைப்படம் அந்த திசை நோக்கிய நெடிய பயணத்தின் முதல் காலடியாக இருக்கவேண்டும்.

பிரச்னைகளுக்கான தீர்வுகளை மாணவர்களிடம் கேட்பது சரியா என்ற கேள்வி இங்கு எழக்கூடும். ஒரு சமூகம் எந்த திசையில் நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அதில் இருக்கும் கற்றறிந்த சான்றோரே… பள்ளி என்பது அத்தகைய வழிகாட்டிகளை உருவாக்கும் இடம். அதிலும் மாணவப்பருவம் என்பது எந்தவித அரசியல் திருகல்களுக்கும் மூளைச் சலவைக்கும் ஆட்படாத எளிய மனங்கள் துடிப்புடன் செயல்படும் பருவம். அவர்களுடைய தீர்வுகள் நிச்சயம் சரியாக இருக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு விஷயத்தின் அனைத்து கோணங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். Leave it to Exxperts என்று சொல்வார்கள். கற்றுக் கொண்டு வரும் நிபுணத்துவத்தைவிட இயல்பாக க்ரியேட்டிவாக வரும் நிபுணத்துவம் சிறந்தது. திங்க் அவுட் ஆஃப் பாக்ஸ் என்பது தான் இன்றைய தாரக மந்திரம். காக்கா ஒவ்வொரு கூழாங்கல்லாக் கொண்டுவந்து போட்டுச்சாம்…. தண்ணி மட்டம் உசந்துச்ச்சாம். பானைக்கு கழுத்து வரைக்கும் தண்ணீ வந்ததும் காக்கா மடக் மடக்குன்னு குடிச்சிச்சாம் என்று கதை சொல்லும்போது பேசாம ஒரு எரிய ஸ்ட்ராவை வெச்சி உறிஞ்சிக் குடிச்சிருக்க வேண்டியதுதானே என்று பதில் சொல்லும் குழந்தைகளிடம் நிச்சயம் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

இது தொடர்பாக ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சோப்பு கம்பெனியில் ஒரு பிரச்னை வந்ததாம். அதாவது அந்த கம்பெனியில் அசெம்பிளி லைன் முறையில் சோப்புகள் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. சோப்பு பாளம் பாளமாக ஒரு கன்வேயர் பெல்ட் வழியாக வரும். வேறொரு இடத்தில் அது சோப்புக் கட்டிகளாக வெட்டப்படும். அடுத்த இடத்தில் கம்பெனியின் பெயர் அதில் முத்திரை குத்தப்படும். வேறொரு இடத்தில் சோப்பின் கவர் கன்வேயர் பெல்டில் வரும். அடுத்த இடத்தில் இந்த கவரின் மேல் சோப்பு கட்டி வைக்கப்படும். அடுத்த நிலையில் அந்த கவர் மூடப்பட்டு அட்டைப் பெட்டியில் போய் விழும். இதுதான் அந்த கம்பெனியின் அசெம்பிளி லைன் உறபத்தி முறை. ஒரு சிறிய தவறின் காரணமாக சோப்பு கட்டி வைக்கப்படாமலேயே சில கவர்கள் வெற்று கவராகவே போய் அட்டைப் பெட்டியில் விழத்தொடங்கின. சோப்பு கட்டிக்கான கன்வேயர் பெல்டின் வேகத்தையும் சோப் கவருக்கான கன்வேயர் பெல்டின் வேகத்தையும் எவ்வளவு அட்ஜஸ்ட் செய்தும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை. 200 சோப்புகள் வைக்க முடிந்த அட்டைப் பெட்டியில் சுமார் பத்து பதினைந்து கவர்கள் காலியாகவே இருந்தன. இதனால் கடைகளுக்கு அனுப்பபடும் சோப்புகளின் எண்ணிக்கையில் பிரச்னை வந்தது. கடைக்காரர்கள் பத்து கவர் காலியாக இருந்தால் 15-20 என்று சொல்ல ஆரம்பித்தனர். வருமானமும் குறைய ஆரம்பித்தது. எத்தனையோ தொழில் நுட்ப நிபுணர்கள் வந்து என்னவெல்லாமோ செய்து பார்த்தும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவே முடியவில்லை. கடைசியாக ஒவ்வொரு அட்டைப் பெட்டியையும் தனித்தனியாக சோதித்து காலி சோப்பு கவர்களை வெளியே எடுத்து அதில் சோப்பு கட்டிகளை வைத்து தனியாக பேக் செய்து அனுப்ப வேண்டியிருந்தது.

ஒருநாள் என்ன ஆயிற்று என்றால், காலி கவர்களில் சோப்பு கட்டிகளை போட்டு வைக்கும் கடைநிலைப் பணியாளர் தன் மகளையும் தொழிற்சாலைக்கு அழைத்து வந்திருந்தார். மகள் கன்வேயர் பெல்ட்டில் சோப்பு வருவதையும் துண்டுகளாக வெட்டப்படுவதையும் சோப்பு கவர் வேறொரு பெல்ட் வழியாக வருவதையும் சோப்பு கட்டிகள் அதில் வைக்கப்படுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். அப்பா அட்டைப்பெட்டியில் விழும் வெற்று கவர்களை எடுத்து வெளியே போடும் பணியில் ஈடுபட்டார். சிறிது நேரம் கழிந்ததும் காலி கவர்கள் வந்து சேருவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. நாலைந்து அட்டைப் பெட்டி நிரம்பியதும் ஒரு காலிகவர் கூட வராமல் எல்லா கவர்களிலும் சோப்பு நிரம்பியே வரத்தொடங்கியது. அந்தப் பணியாளருக்கு ஒரே ஆச்சரியம். என்னடா என்று எட்டிப் பார்த்தவர் அங்கு நடப்பதைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கிவிட்டார். சில சோப்பு கவர்கள் சோப்பு கட்டி இல்லாமல் போவதைப் பார்த்ததும் குழந்தைக்கே உரிய குறும்புடன் ப்பூ… என்று ஊதிக் கொண்டிருந்தது. அந்த காலி கவர்கள் எல்லாம் பெல்ட்டில் இருந்து வெளியே விழுந்துகொண்டிருந்தன. அட்டைப் பெட்டிக்கு சோப்பு கட்டிகள் வைக்கப்பட்ட கவர்கள் மட்டுமே போய்ச் சேர்ந்தன. அப்பாவைப் பார்த்ததும் அந்தச் சிறுமி சிரித்தபடியே சொன்னாள், இங்க ஒரு சின்ன ஃபேனை வெச்சு விட்டுட்டா காலி கவர்களை எல்லாம் அது ஊதித்தள்ளிடும். சோப்பு கட்டி வெச்ச கவர் மட்டுமே அட்டைப் பெட்டிக்குப் போகும்… இது கூடத்தெரியலியா என்று சிரித்தபடியே சொன்னாள். எக்ஸ்பர்ட் சொல்யூஷனைவிட இன்னொவேட்டிவ் க்ரியேட்டிவ் அவுட் ஆஃப் பாக்ஸ் சொல்யூஷன் உயர்வானது என்பதைச் சுட்டிக்காட்டும் உதாரணம் இது.

எந்தவொரு பிரச்னைக்குமே எளியதொரு தீர்வு இருக்கும். சிறுவர்கள் இதில் கை தேர்ந்தவர்கள் இதுதான் நமது திரைப்படத்தின் ஆதார அம்சம். நண்பர்கள் படத்திலும் கிட்டத்தட்ட இதுதான் முன்வைக்கப்பட்டிருந்தது. புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பேனாவைப் பயன்படுத்த அமெரிக்கர்கள் சிரமப்பட்டபோது ரஷ்யர்கள் பென்சிலைக் கொண்டு சென்று பிரச்னையைச் சமாளித்தார்கள் என்று ஒரு கதை அந்தப் படத்தில் சொல்லப்பட்டது. படத்தின் ஆதார அம்சமான சமயோஜித புத்தியின் முக்கியத்துவத்தை அது அழகாக விளக்கியது. அறை வாசலில் சிறு நீர் கழித்து ராகிங் செய்த சீனியருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தது, உடல் நிலை சரியில்லாதவரை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல போக்குவரத்து நெரிசல் தடையாக இருந்தபோது ஸ்கூட்டரிலேயே ஆப்பரேஷன் தியேட்டர் வரை கொண்டு சென்றது, சக்ஷன் பைப் மூலம் பிரசவம் பார்த்தது என அந்தப் படம் முழுவதுமே சமயோஜிதமாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை முன்வைப்பதாகவே இருந்தன. நமது திரைப்படத்திலும் அதுபோல் அவுட் ஆஃப் பாக்ஸ் தீர்வுகளையே படத்தின் ஆதார அம்சமாக வைத்துக் கொள்வோம். நாம் இன்னும் கூடுதலாக சமூக பிரச்னைகளை நமது திரைக்கதைக்கான கருவாக எடுத்துக்கொள்வோம். சமூகத்துக்குப் பயன்படாத கல்வியினால் என்ன பயன்?

••••••