Category: இதழ் 89

ப்ரதிலிபியின் கட்டுரைப் போட்டி அறிவுப்பு

Event November - scr (1) (1)

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்.

தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்த முடிவு செய்துள்ளோம்.

ப்ரதிலிபி எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும், தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே எங்களின் நோக்கம்.

மேலதிக விவரங்களுக்கு – www.pratilipi.com

அகம் மின்னிதழ் , அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது.

போட்டி விபரங்கள் :

அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – பதில் காண முயல்வோம்.

ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 14/01/2016.

ஊ) கட்டுரைகளை tamil@pratlipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.

போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தொடர்புக்கு: சங்கரநாராயணன் – 09789316700; பாலாஜி – 09940288001.

படைப்பை அனுப்பி வைக்கவேண்டிய முகவரி

tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com

நம் சமூகம் எதிர்கொள்ளும் அடுத்த முக்கியமான பிரச்னை : சாராயம். / B.R. மகாதேவன்

download (2)

ஏற்கெனவே சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களே இதிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஜமீந்தார் அல்லது மன்னர் போன்ற பெரு முதலாளிகளோ பணக்காரரோ சாராயம் குடித்து வாழ்க்கையை அழித்துக்கொண்டால் நாம் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர்களுடைய அனைத்துத் தேவைகளும் ஏற்கெனவே பூர்த்தியாகிவிட்டிருக்கும். அந்தக் குடிப் பழக்கத்தினால் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் துன்பம் ஏற்படும் என்றாலும் அதற்காக ஓரிரு சொட்டு கண்ணீர் விடலாமே தவிர அதைத்தாண்டி எந்தவொன்றையும் நாம் செய்யத் தேவையில்லை. ஆனால், எளிய மக்களின் குடிப்பழக்கம் அப்படியானதல்ல. ஏற்கெனவே பலவகைகளில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் அவர்களுக்கு இதுவும் சேரும்போது கடலுக்குள் விழுந்து தத்தளிப்பவரின் காலில் பாறாங்கல் கட்டப்படுவதைப் போலாகிவிடுகிறது. ஏற்கெனவே முள் கீரிடம் சுமப்பவரை சிலுவையில் அடிப்பதைப் போன்ற கொடூரம்.

இதற்கான ஒரு தீர்வு : சாராய உற்பத்தியை நிறுத்துவது. ஆனால், அது சாத்தியமே இல்லை. ஒருவகையில் அது அவசியமும் இல்லை. ஏனென்றால், மது என்பது பல்வேறு அடுக்குகளைக் கொண்ட பிரச்னை. வாழ்க்கையை சந்தோஷமாக ஆக்கிக்கொள்ள மனித இனம் கண்டுபிடித்த அருமையான பானம். அளவோடு குடித்தால் அமிர்தம். அளவுக்கு மிஞ்சினால்தான் அது நஞ்சு.

ஒருவர் சமூகத்துக்குத் தன் பங்களிப்பைச் சரிவரச் செய்துவிட்டாலோ, தன் குடும்பத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டாலோ, குடித்துவிட்டுப் பிறருக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாமல் இருந்தாலோ அவர் குடித்து சந்தோஷப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. கண்ணதாசன் மொடாக்குடியர்தான். ஆனால், அவரை யாரும் குறை சொல்ல முடியாது. குடிக்காமல் இருந்திருந்தால் கூடுதல் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாமே என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், அவரோ அது உண்மைதான். ஆனால், நான் குடிக்காமல் இருந்திருந்தால் பாட்டு எதையும் எழுதியிருக்கமுடியாதே என்று சொல்லியிருப்பார். அப்படியானவர்களைப் பார்த்து, நீங்கள் தினமும் நாலு பெக் கூடுதலாகச் சாப்பிடுங்கள்… உங்கள் பாடல்கள்தான் எங்களுக்கு மிக முக்கியம் என்றுதான் நாம் சொல்லவேண்டும்.

மதுவுக்கும் அவருடைய பாடல் திறமைக்கும் இடையிலான தொடர்பை மருத்துவ விஞ்ஞானமோ பாடல் புனைவியலோ எதுவுமே விளக்கிவிடமுடியாதுதான். அவருடைய திரைப்பாடல் மரத்தை மது ஊற்றித்தான் அவர் வளர்த்திருக்க முடியும் என்றில்லை. ஆனால், மதுவின் மீதுதான் நம்பிக்கை வைத்தார். எனவே, அவருடைய பாடல்கள் நமக்குத் தேவை என்பதால் அவருடைய அந்த விளக்க முடியாத நம்பிக்கைக்கு நாமும் ஆதரவாகவே நிற்கலாம்.

ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் கண்ணை மூடினால் ரத்தமும் அறுபட்ட மனித உறுப்புகளும்தான் தெரிகின்றன. என்னால் ஒரு நிமிடம்கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அதில் இருந்து தப்பிக்க எனக்கு மதுவின் துணை தேவை என்று சொல்கிறார் என்றால் அதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தியானம், யோகா என மனதை வேறு வழியில் நிதானப்படுத்த முடியுமா பாருங்கள் என்று லேசாகச் சொல்லலாம். அவரோ மதுதான் தனக்கான ஒரே மருந்து என்று சொல்வாரென்றால், அறுவை சிகிச்சைகளைப் பாதிக்காவண்ணம் குடிக்க அவருக்கு அனுமதி தரலாம்.

ஒரு போர் வீரருக்கும் இந்த விதிவிலக்கு தரலாம். உள்நாட்டில் மக்கள் குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் எல்லையில் ஒரு சில ராணுவத்தினர் எதிரிகளைக் கொன்றுதான் ஆகவேண்டும். கொலைக் கனவுகளில் இருந்து தப்பவும் தோளில் தொங்கும் துப்பாக்கிகள் தொடர்ந்து நினைவுபடுத்தும் மரண பயத்தை வெல்லவும் அவர்களுக்கு மது தேவைப்படலாம். இப்படி சமூகத்தில் சில அவசியமான செயல்கள் நடக்க சிலருக்கு அனுமதி தரலாம்.

சாதாரண மனிதர்களும்கூட மேலே சொன்னதுபோல், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் குடிப்பார் என்றால் சரிபோகட்டும் என்று அனுமதி தந்துவிடலாம். ஆனால், அடித்தட்டு மக்கள், கடினமான, கேவலமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வலியையும் வேதனையையும் மறக்கக் குடிக்கிறேன் என்று சொல்வார்கள் என்றால் அதை நிச்சயம் அனுமதிக்கக்கூடாது. அந்தக் கடினமான, கேவலமான பணிகளில் இருந்து அவர்களுக்கு விடுதலையைத் தேடித் தருவதே சமூகத்தின் இலக்காக இருக்கவேண்டும். அத்தகைய பணிகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளை அமல்படுத்துவது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் கேவலமான, கடினமான பணி துப்புரவுப் பணிதான். இப்போதைய பெரு வெள்ளம் மெட்ரோ சிட்டியில் கொண்டுவந்து குவித்த குப்பை கூளங்களையும் சேறுகளையும்கூட துப்புரவுத் தொழிலாளர்கள் வெறும் கைகளாலும் கால்களாலும்தான் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. உடல் உழைப்பை இழிவாகக் கருதும் வைதிக இந்து சமயத்துக்கு நிகராக பவுத்தமும் சமணமும் இந்தியா முழுவதும் எந்த வன்முறையும் இல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பரவியிருந்திருக்கிறது; பத்தாம் நூற்றாண்டு முதல் இஸ்லாம் வன்முறை மூலம் பரவியிருக்கிறது; சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ ஆதிக்க சக்திகள் அனைத்துவகை தந்திரங்களையும் பயன்படுத்தி அழுத்தமாகக் காலூன்றியிருக்கின்றன; மேலும் சமீப காலங்களாக உலக முதலாளித்துவ சக்திகள் இந்தியச் சந்தையைக் கண் வைத்து இங்கு மூர்க்கத்தனமாக தமது இருப்பை வலுப்படுத்தி வருகின்றன; அதற்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் அவற்றைவிடக் கூடுதலான ஆண்டுகளாக கம்யூனிஸ இடதுசரி சக்திகள் இந்தியாவில் முகாமிட்டிருக்கின்றன.

ஆனால், இந்த அதிகார சக்திகளில் எந்தவொன்றுமே கடைநிலைப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு துரும்பையும் இதுவரை கிள்ளிப்போட்டதில்லை. பார்ப்பனிய, மனுவாத, இந்துத்துவ, ஆரியசக்திகளின் மீதான விமர்சனத்துக்குத் தோதாக இருக்கட்டும் என்று இந்தப் பிரச்னையை விட்டு வைத்திருக்கிறார்களா தெரியவில்லை. தொழில்நுட்ப கருவிகளை இந்தத் தொழிலுக்குப் பயன்படுத்துவதே மிகவும் சரியான, எளிமையான தீர்வாக இருக்கும். அதை யாருமே இதுவரை செய்திருக்கவில்லை. துப்புரவுப் பணியாளர், ஒரு வாரத்துக்குக் குடிக்கச் செலவிடும் காசை வைத்துத் தனக்கான காலுறை, கையுறைகளை வாங்கிவிட முடியுமென்பது வேறு விஷயம். ஆனால், அரசும் சமூகமும் இன்னபிற அதிகார மையங்களும் வேறு பல வசதிகளைச் செய்து தந்திருக்கவேண்டும்.

ஒரு மனிதர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது தனது கைகளையும் கால்களையும் பயன்படுத்தி அடைப்புகளை நீக்குகிறார். சில நேரங்களில் கழிகள் அல்லது இரும்பு குச்சிகளைப் பயன்படுத்தி அடைப்புகளை நீக்கி நீர் வழியைச் சரி செய்கிறார். மின்சாரத்தில் அல்லது சைக்கிள் பெடல் போல் இயக்குவிசை மூலம் ஒரு பிஸ்டனை முன்னும் பின்னும் நகரச் செய்து அதனுடன் ஒரு இரும்பு கம்பியைப் பொருத்திவிட்டால் அடைப்பை அது சரிசெய்துவிடும். சாக்கடைக்குள் இறங்கவேண்டிய அவசியமே இல்லை.

நகரத்தில் இருக்கும் அனைத்து சாக்கடைகளையும் கிராமங்களைப்போல் திறந்த நிலை சாக்கடைகளாக ஆக்கிவிட்டால் அடைப்புகளைச் சரி செய்வது மிகவும் சுலபமே. ஆனால், அப்படித் திறந்த நிலையில் இருந்தால் நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் வாகனங்கள் சாக்கடைக்குள் விழுந்துவிடும் அபாயம் உண்டு. அதோடு திறந்த நிலையில் இருந்தால் கொசு உற்பத்தி முதலான இன்னபிற பிரச்னைகள் வரும். எனவே அதைத் தீர்க்கவேண்டுமென்றால், மூடித்தான் இருக்கவேண்டும். ஆனால், இந்த முடியானது எளிதில் திறந்து மூடப்படும்வகையில் இருக்கவேண்டும். அதாவது திறந்த நிலைச் சாக்கடைகள் போல் அமைத்துவிட்டு அதன் மேல் வரிசையாக எந்த இடத்தில் வேண்டுமானாலும் திறக்க முடியும் வகையில் ஸ்லாப்களை அமைக்கவேண்டும். அந்த ஸ்லாப்களை நடைபாதையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். சாக்கடை அடைத்துக்கொள்ளும்போது அதைத் திறந்து குப்பை கூளங்களை தொரட்டியால் வெளியில் நின்றபடியே எடுத்துபோட்டு சுத்தம் செய்துவிடலாம். இப்படிச் செய்துவிட்டால் துப்புரவுப் பணியாளர்களுக்கு பைலட்களைப்போல் வெண்ணிற உடையையே சீருடையாகத் தந்துவிடலாம்.

அதுபோலவே, இந்தத் தொழிலுக்கு வேறு நபர்களை நியமிப்பதும் நல்ல பலனைத் தரும். குறிப்பாக, சிறைச்சாலைகளில் இருப்பவர்களை இப்படியான அனைத்துவித துப்புரவுப் பணிகளுக்கும் பயன்படுத்தவேண்டும். உண்மையில் இந்த துப்புரவுப் பணி என்பது வேலை அல்ல; தண்டனையே. இப்போது தவறு செய்து சிறையில் இருப்பவர்களுக்கு தோட்டவேலை, தச்சு வேலை என எளிய வேலைகள் தரப்படுகின்றன. அதற்கு பதிலாக இந்த துப்புரவுப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

இந்து மதத் தலைவர்கள், பாதிரியார், இஸ்லாமிய மத குரு என யார் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களுக்கும் கையில் ஒரு துடப்பக்கட்டையும் வாளியும் கொடுக்கலாம். அது அவர்களுடைய மனத்தையும் தூய்மைப்படுத்த உதவும். காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் தமது ஆஸ்ரமங்களில் அனைத்துவகை தூய்மைப்பணிகளையும் அவர்களேதானே செய்தார்கள். மற்றவர்களையும் செய்ய வைத்தார்கள். அனைவரும் இறைவனின் படைப்புகளே… வேலைகளில் உயர்வு தாழ்வு கிடையாது. எந்தத் தொழில் செய்தாலும் இறைவனை அடையமுடியும் என்பது போன்ற உயர் தத்துவங்களுக்கு நடைமுறை வடிவம் கொடுத்ததுபோலவும் இருக்கும்.

அதுபோலவே ஜெயலலிதா, சோனியா, அழகிரி என ஊழல், கொலை போன்றவற்றுக்கு எந்த அரசியல் தலைவர் சிறைத் தண்டனை பெற்றாலும் அவர்களையும் கயிற்றைக் கட்டி சாக்கடைக்குள் இறக்கிவிடலாம். அகவுரவக் கொலைகளில் ஈடுபடும் நபர்களில் ஆரம்பித்து கும்பலாகச் சென்று குடிசைகளைக் கொளுத்துபவர்கள் வரை அனைவரையுமே இந்தத் துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். முற்காலத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னர் எதிரி நாட்டுப் படையினரை கடினமான வேலைகளுக்குப் பயன்படுத்துவது சகஜமாக இருந்திருக்கிறது. பவுத்தர்களாக இருந்த காரணத்தினால்தான் வைதிக இந்துமதம் தலித்களைக் கடினமான கேவலமான பணிகளுக்குத் தள்ளியது என்பதுதான் அயோத்திதாசர் போன்றோரின் நம்பிக்கையும்கூட. எனவே, இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தொழில் நுட்பக் கருவிகளை வாங்க நிறைய செலவாகும். கூடுதல் கால அவகாசமும் எடுக்கும். சிறைதண்டனை பெற்றவர்களை கடைநிலைப் பணிகளுக்குப் பயன்படுத்துவது என்பது வெகு எளிதில் நாளையே ஆரம்பித்துவிட முடியும். இப்படிச் செய்தால் துப்புரவுப் பணியாளர்களைக் குடியில் இருந்து காப்பாற்றிவிட முடியும்.

நமது லட்சியப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தை துப்புரவுப் பணியில் ஈடுபடுபவராக இருப்பார். மாணவர்களுடைய வீடுகளுக்கு நம் ஆசிரியர் சர்ப்ரைஸ் விசிட் அடிக்கும்போது அந்த மாணவனின் தந்தை தெருமுனைச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்துகொண்டிருப்பார். ஆசிரியருடன் வந்த மாணவர்கள் துப்புரவுப் பணியாளரின் மகனைப் பார்த்துக் கேலிசெய்வார்கள். அடுத்த நாள் அவன் வகுப்பறைக்குள் வந்ததுமே அனைவரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு அவனை அவமானப்படுத்துவார்கள். அந்த மாணவன் மிகவும் மனம் சோர்ந்துபோவான். நம் லட்சிய ஆசிரியர் அதைத் தவறென்று கண்டித்து, அந்த வார ப்ராஜெக்டில் சாக்கடைகளை சுத்தம் செய்வதில் தொழில்நுட்பம் என்ற பாடத்தைத் தருவார். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வழிமுறையைச் சொல்வார்கள். அதில் சிறந்த ஒன்றை மாணவர்களே அமல் செய்து சக மாணவனின் அவமானத்தையும் துப்புரவுத் தொழிலாளியின் வேதனையும் போக்குவார்கள். அவரும் அன்றிலிருந்து படிப்படியாகக் குடிப்பதைக் குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி கொடுப்பார்.

அடுத்ததாக, குளிர் பிரதேசங்களுக்குப் பொருந்தக்கூடிய மது வகைகளை வெப்பம் நிறைந்த நம் நாடுகளில் கொடுக்கக்கூடாது. நமது பாரம்பரிய மதுவகைகளான கள்ளு போன்றவற்றுக்கே முக்கியத்துவம் தரவேண்டும். அது உடலுக்கு அதிக தீங்கைத் தராது. மேலும் அது பனை விவசாயத் தொழிலாளிகளுக்கும் நன்மை தரும். பனை மரங்கள் கூடுதலாக வளர்க்கப்பட்டால் பனை வெல்லம், பதநீர், பனையோலை விசிறிகள் இன்னபிற கைவினைப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தை தன்னிறைவு பெறச்செய்யவும் வழி பிறக்கும்.

கடைநிலை மனிதர் குடிப்பதில் தவறில்லை; ஆனால், அவருடைய குடும்பம் அதனால் தள்ளாடும்படியாகிவிடக்கூடாது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் காபி, தேநீர் போல் குடும்பத்தோடு சேர்ந்து பருகும் பானமாக அது இருக்கிறது. மேலும் அவர்கள் குடித்துவிட்டு தெருக்களில் புரள்வது கிடையாது. அளவாகக் குடித்து நிறைவாக வாழ்கிறார்கள். நம் ஊர்களிலும் குடியைத் தடுப்பதற்குப் பதிலாக முறையாகக் குடிக்கக் கற்றுத் தரலாம். முதல்கட்டமாக, நாளொன்றுக்கு ஒருவருக்கு அவரால் நிதானமாக இருக்க முடிந்த அளவுக்கு அதிகமாகக் கொடுக்ககூடாது. ஒவ்வொரு மதுக்கடையிலும் மருத்துவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும். குடிக்க வருபவரின் உடல் நிலையைக் கணக்கில் கொண்டு அவர் எவ்வளவு குடிக்கலாமென்று அனுமதிக்கிறாரோ அந்த அளவு மட்டுமே தரவேண்டும்.

அதையும் மீறி ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடிப்பார் என்றால், அவருடைய குடும்பத்துக்கு அரசு சார்பில் தரப்படும் நலத்திட்டங்களை ரத்து செய்துவிடவேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடிப்பவருடைய ரேஷன் கார்டு முதலில் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவருக்கு அரசு மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்கவேண்டும். அவர் விவசாயியாக இருக்கும்பட்சத்தில் இலவச மின்சாரம், உர மானியம் போன்றவை நிறுத்தப்படும். இப்படியான நடவடிக்கைகள் மூலம் அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிபோல் தோன்றலாம். ஆனால், குடும்பத்தில் ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடிக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அந்தக் குடும்பத்தினருக்கு இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் சரிவர நிறைவேற்றாவிட்டால் அதற்கான தண்டனையை அவர்களும் அனுபவிக்கத்தான் வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பாக அந்தக் குடும்பத்தினருக்கு மூன்று முறை எச்சரிக்கை தரப்படவேண்டும். முதல் எச்சரிக்கை விடப்பட்டதுமே அந்தக் குடும்பத்தினர் காவல்துறை அல்லது மதுக்கடையில் இருக்கும் மருத்துவர் ஆகியோரிடம் முறையிட்டு இனிமேல் குடிக்காமல் தடுத்துவிடவேண்டும். அப்படியான முயற்சிகளை அவர்கள் எடுக்காதபட்சத்திலேயே ரத்து நடவடிக்கைகள் அமலாக்கப்படவேண்டும்.

இவையெல்லாம் குடிக்காமல் இருக்கமுடியாது என்பவர்களுக்குச் செய்யவேண்டிய நடவடிக்கைகள். மிதமாகக் குடிக்கும் ஒருவரைக் குடியில் இருந்து திசை திருப்பும் நடவடிக்கைகளையும் நாம் எடுக்கவேண்டும். பெரிய தீய பழக்கத்தைச் சிறிய தீய பழக்கத்தால் பதிலீடு செய்வது நல்ல தொடக்கமாக இருக்கும். சீட்டு, கேரம், லாட்டரி போன்ற விளையாட்டுகளில் ஒருவருடைய கவனத்தைத் திருப்பலாம். அதோடு ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளுக்கான மைதானங்களையும் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கலாம். இன்று பொதுவாக பள்ளி, கல்லூரிப் பருவத்தோடு ஒருவருடைய வாழ்க்கையின் விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. சுமார் 25 வயதுக்குப் பிறகு பெரும்பாலானோரின் வாழ்க்கையில் விளையாட்டே இல்லாமல் போய்விடுகிறது. அதை மாற்றி ஒவ்வொரு கிராமத்திலும் பேட்மிண்டன், வாலிபால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு வசதி செய்து தரலாம். அந்த கிராமத்தில் இருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் அங்கு தினமும் கூடி விளையாடலாம். சகமனிதர்களிடையே நட்புறவையும் வளர்க்கும். உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். குடி போன்ற பழக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் செய்யும்.

குடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம் இவற்றிலெல்லாம் கிடைக்காது என்று நினைப்பவர்களுக்கு மசாஜ், செக்ஸ் என சில வழிமுறைகளை முன்னெடுக்கலாம். உடல் நோவுகளுக்கு மட்டுமல்லாமல் மன நிம்மதிக்கும்கூட மசாஜ் பெரிதும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் மசாஜ் கலையைக் கற்றுத் தரவேண்டும். எண்ணெய் குளியல்கள், நீராவிக் குளியல்கள், முழு உடலுக்கான மசாஜ்கள் என அனைத்தையும் குடும்பத்தலைவிகள் கற்றுக்கொண்டால் வீடுகளிலேயே அவரவருடைய கணவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரமுடியும். ஆண்களும் இந்த கலையைக் கற்றுக்கொள்வதன் மூலம் தமது வாழ்க்கைத் துணைகளுக்குப் பெரிதும் புத்துணர்ச்சியைத் தரமுடியும். கட்டட வேலை செய்துவிட்டு வரும் கணவருக்கு மனைவி செய்யும் மசாஜ் குடியில் இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக விலக வைக்கும்.

அதுபோல் ஆணும் பெண்ணும் காமம் சார்ந்த பல நுட்பங்களை பழங்கால நூல்களில் இருந்தும் மருத்துவர்களிடமும் கற்றுக்கொள்வதன் மூலம் செக்ஸ் வாழ்க்கையில் அதிக இன்பத்தைப் பெற முடியும். கணவனும் மனைவியும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள என்ன வழி, என்னென்ன உணவுப் பொருட்கள் வீரியத்தைக் கொடுக்கும், செக்ஸ் டாய்ஸ் என குடியில் இருந்து மனதைத் திசை திருப்ப முயற்சி செய்யவேண்டும். மனைவியிடமிருந்து தப்பிக்கத்தான் குடிக்கவே செய்கிறோம்; எனவே எங்களுக்கு மசாஜ், செக்ஸ் போன்றவற்றுக்கு வேறு துணைகள் தேவை என்று சொல்லும் ஆண்கள், தமது மனைவிகளுக்கும் அதே சுதந்தரத்தைத் தருவதன் மூலம் தமது ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். வெளிநாடுகளில் பாலியல் சுதந்தரமென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே இருக்கிறது. அந்த நல்ல விஷயத்தை நாமும் பின்பறலாம்.

சாராயப் பிரச்னையில் எளிய மக்கள் பாதிக்கப்படுவதுபோலவே நாம் அக்கறையுடன் சரி செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் அரசே சாராயக்கடைகளை நடத்துவதுதான். இதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும். இந்த அரசு செய்யும் அனைத்து நல்ல விஷயங்களிலும் சாராயக் காசு கலந்திருக்கிறது என்ற நினைப்பு நுட்பமான நேர்மையாளர்களின் மனதைப் பதறச் செய்யும். இந்த அரசு தன் பொறுப்பில் இருக்கும் ஒரு கோவிலில் இருக்கும் விக்ரஹத்தின் மீது ஊற்றும் அபிஷேக நீர் சாராயமன்றி வேறல்ல. இந்த அரசு கொடுக்கும் அரிசியைச் சமைத்து ஊற்றப்படும் நோன்புக் கஞ்சி என்பது சுண்டக் கஞ்சியேதான். இந்த அரசு கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களின் மீது ஜெயலலிதாவின் திரு உருவப்படத்துக்குப் பதிலாக சாராய பாட்டில் ஸ்டிக்கரை ஒட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தின் அரசு முத்திரையாக இருக்கும் கோபுரம் சின்னத்தை மாற்றிவிட்டு அழகான சாராய பாட்டிலை அரச முத்திரையாக மாற்றினால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் (நம் லட்சியப் பள்ளியில் நடக்கும் மது ஒழிப்பு ஓவியப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெறும் ஓவியங்களாக இவற்றைக் காட்டலாம்).

உண்மையில் அரசு அதில் இருந்து கிடைக்கும் கொழுத்த வருவாய்க்காக சாராயக்கடைகளை எடுத்து நடத்துகிறது. ஆனால், அரசுக்கு வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஏராளமான வழிகள் இருக்கின்றன. அரசின் பொறுப்பில் இருக்கும் துறைகளை எடுத்துக்கொண்டால் மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, சாலை, கல்வி, மருத்துவம், ஊடகம் எனப் பல இருக்கின்றன. இந்தத் துறைகளில் தனியாருக்கும் இடமளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தனியார் துறைகள் அனைத்துமே பெரும் வெற்றிகளை ஈட்டுபவையாகவும் அதே தொழிலைச் செய்யும் அரசு நிறுவனங்கள் தரத்திலும் லாபத்திலும் மிகவும் கீழான நிலையிலும் இருக்கின்றன. அரசுத் துறைகளுக்குக் கூடுதல் நபர்களுக்குச் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தரத்தைப் பேண முடியவில்லை என்ற வாதத்தில் நியாயம் இருக்கிறது. என்றாலும் அரசுத் துறைகளின் வீழ்ச்சிக்கு அது மட்டுமே காரணமில்லை.

தனியார் நிறுவனங்கள் வரி செலுத்துகின்றன என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தரப்படும் இன்னபிற சலுகைகளை ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை. மேலும் தனியார் நிறுவனங்கள் ஈட்டும் லாபமெல்லாம் உண்மையில் அரசுக்கு நேரடியாகவே வரவேண்டியவையும்கூட. குறிப்பாக மருத்துவம், கல்வி, ஊடகம் போன்ற துறைகளில் அரசு மிகவும் மோசமாகச் செயல்படுகின்றன. சன் டிவிக்குக் கிடைக்கும் லாபத்தில் நூறில் ஒரு பங்குகூட தூர்தர்ஷனுக்குக் கிடைப்பதில்லை. கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே தூர்தர்ஷனுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தருபவையாக இருந்தன. இப்போது அவையும் அவர்களுடைய கையைவிட்டுப் போய்விட்டன.

ஒன்று அரசு இந்த நிறுவனங்களை அரசுடமையாக்கிக் கொள்ளலாம். அல்லது அந்த நிறுவனங்களில் இருந்து அல்லது சர்வதேச ஊடக நிர்வாகிகளைத் தமது நிறுவனங்களில் நியமித்து பத்து வருடங்களில் சன் டி.வி.போல் தூர்தர்ஷனை ஆக்கிக் காட்டுங்கள் என்று இலக்கு நிர்ணயிக்கலாம். தமிழக அரசு பசுமாட்டில் இருந்து கிடைக்கும் பாலை உள்ளூர், வெளியூர் முதலாளிகளுக்குக் கொடுத்துவிட்டு சாணியை அள்ளிக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசுக்குச் செய்வதும் அதுவே. இதை முதலில் தடுத்து நிறுத்தி மத்திய மாநில அரசுகளுக்குப் பெருமளவுக்கு நிதி வந்து சேரும் வகையில் சீரமைக்கவேண்டும்.

மருத்துவமனை, கல்வி, ரேஷன் அரிசி, விவசாய மின்சாரம் போன்றவற்றை இலவசமாகத் தருவதால் அந்தந்தத் துறைகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. அந்தத் துறைகளின் தரமும் அதனால் குறைவுபட்டதாக இருக்கிறது. இவற்றுக்கு நியாயமான கட்டணம் விதித்து அவற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு வருவாயையும் பெருக்கிக் கொள்ளலாம். ஐந்து ஏக்கருக்கு மேல் இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது என்று சொல்வதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும்.

தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கவில்லையென்றால் கூடுதல் வரி என்று வேண்டுமானால் சட்டம் இயற்றலாமே தவிர, தமிழில் வைத்தால் வரி விலக்கு என்பது பச்சை அயோக்கியத்தனம். அதிலும் ப்ரீகேஜி, எல்.கேஜி.களிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியை அனுமதிக்கும் ஒரு அரசு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் திரைப்படப் பெயர்களிலும் தமிழை வளர்க்க முயற்சி செய்வது கடைந்தெடுத்த கயவாளித்தனமே.

திரைப்படத்துறை கோடிகளை சம்பாதித்துத் தருவதாக இருக்கிறது. இப்போதைய அரசுகள் தணிக்கைத்துறையை மட்டுமே தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அதற்கு பதிலாக திரைப்படங்களைத் தயாரிக்கும் தொழிலிலும் அரசு கால் பதிக்கலாம். என்.எஃப்.டி.சி. என ஒரு துறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை மறுசீரமைத்து லாபம் கொழிக்கும் துறையாக மாற்றவேண்டும். சன் குழுமம் திமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு விஷயத்தைச் செய்தது. ஒரு திரைப்படத்தின் பெயர் வைப்பதில் ஆரம்பித்து யார் நடிகர்கள், யார் இசையமைப்பாளர், என்ன கதை என எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாமல், பிறரால் எடுத்து முடிக்கப்படும் படங்களை போட்டுப் பார்த்துவிட்டு, வணிக வெற்றி பெரும் என்று தெரிந்தால் தயாரிப்புச் செலவுக்கு மேல் ஒரு சில லட்சங்களைக் கொடுத்து வாங்கி தன் பெயரில் வெளியிட்டு கோடிகளை அள்ளிக் குவித்தார்கள். திரையரங்குகளைக் கைப்பற்றியதன் மூலமும் ஆட்சி அதிகாரம் கையில் இருந்த திமிரிலும் கோடிகளை வெகு சுலபமாகச் சம்பாதித்தார்கள்.

ஒரு பெரிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்கும் அல்லது இயங்க வாய்ப்பு உள்ள சிறிய நிறுவனங்களை தனக்குள் இணைத்துக்கொண்டு லாபத்தைப் பெருக்கிக் கொள்வதென்பது வணிக நோக்கில் ஓரளவுக்கு சரியான செயல்தான். ஆனால், நேர்மையான அரசு இதுபோல் செய்யவேண்டியதில்லை. வெற்றிகரமான நடிகர்கள், படைப்பாளிகள், நல்ல கதை இவற்றைத் தெரிவு செய்து தயாரிப்புக்கு நியாயமான பணத்தைக் கொடுத்து (ரஜினிகாந்துக்கு பிற படங்களில் சம்பளம் ஐம்பது கோடி என்றால் அரசு தயாரிக்கும் படத்தில் மொத்த தயாரிப்புச் செலவில் அல்லது லாபத்தில் 20% என்பதுபோல் தீர்மானிக்கவேண்டும். அதாவது மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது அனைத்து கலைஞர்களும் தமது சம்பளத்தை வெகுவாகக் குறைத்துக்கொள்வதுபோல் அரசின் படங்களில் மட்டுமாவது நியாயமான சம்பளத்தைப் பெற்று நடிக்கவேண்டும்)

கிரிக்கெட் போட்டிகளில் பெரும் தொகை வருவாயாகக் கிடைக்கிறது. ட்வெண்டி ட்வெண்டி, ஒருநாள் தொடர் போன்றவற்றை அரசே தன் கட்டுப்பாட்டில் நடத்தலாம். 20-20 போட்டிகளுக்கு உலகம் முழுவதுமான வீரர்களை வணிக நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்து நடத்துவதற்கு பதிலாக அந்தந்த மாநிலங்களே எடுத்து நடத்தலாம். இன்று ஷாரூக்கான்களும் மல்லையாக்களும் சீனு மாமாக்களும் கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை அரசு தன் கஜானாவுக்கு வரச் செய்யலாம். ரஞ்சி டிராஃபி, புச்சி பாபு போன்ற போட்டிகளை ரகசியமாக ஆளற்ற மைதானங்களில் நடத்திவரும் அரசு லாபம் கொழிக்கும் போட்டிகளை வணிக முதலைகளுக்குத் தாரைவார்த்துவிட்டு ஒதுங்கி நிற்பதில் அர்த்தமே இல்லை. சாராயக்கடை நடத்தி சம்பாதிப்பதைவிட திரைப்படம் எடுத்தும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியும் அதிகப் பணத்தை நாணயமாக, கவுரவமாக சம்பாதிக்க முடியும்.

கனிம வளங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு சல்லிக் காசுக்கு விற்றுவிட்டு அவை உற்பத்தி செய்து தரும் பொருட்களை, சேவைகளை கோடிகளைக் கொடுத்து வாங்கிக்கொள்வதற்கு பதிலாக அரசே அந்தத் துறைகளில் நேரடியாக முதலீடு செய்து நியாயமாகப் பணம் சம்பாதிக்கலாம்.

ஒரு வீட்டுக்கு சூரிய மின்சார கருவிகளைப் பொருத்த தற்போது இரண்டு லட்சம் ஆகிறது என்றால் அரசு அந்தப் பேனல்கள் மற்றும் பேட்டரிகளை பத்தாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும்வகையில் உள்ளூர் விஞ்ஞானிகளைக் கொண்டு தயாரிக்கச் சொல்லவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளமுடிவதோடு அரசின் மின் கிரிடுக்கும் தரமுடியும். இதனால் மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரிப்பதோடு அரசுக்கு வருவாய் அதிகரிக்கவும் செய்யும். காந்தியவாதியான ஹிமேஷ் ஈ-சக்ரா என்ற மின் ராட்டை ஒன்றைத் தயாரித்திருக்கிறார். அதன் மூலம் நூல் நூற்பதோடு சிறிய விளக்கு, ரேடியோ போன்றவற்றை இயக்கமுடியும். இப்போது நூல் நூற்புக்கு பதிலாக அதில் இருந்து கிடைக்கும் சக்தி முழுவதையுமே மின்சாரமாக சேமித்துக்கொள்ள முடிந்தால் டி.வி ஃபேன் போன்றவற்றை இயக்கும் அளவுக்குக்கூட மின்சாரத்தை அதில் இருந்து உற்பத்தி செய்துவிட முடியும். தொலைகாட்சி சீரியல்கள் பார்த்தபடியே பெண்கள் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். ரயிலில், பேருந்துகளில் பல மணி நேரம் வெறுமனே அமர்ந்தபடியே பயணம் செய்பவர்கள் அந்த நேரத்தில் அரை யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட முடியும்.

ஒவ்வொரு தெருவிலும் இதுபோல் சைக்கிள் அல்லது சிறிய காற்றாடிகள் போன்றவற்றை வைத்து சுழற்சி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். உடற்பயிற்சி மையங்களில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவதில் இருந்து வெளி நாடுகளில் மின்சாரம் தயாரித்துக்கொள்கிறார்கள். இவற்றில் கிடைக்கும் மின்சாரம் மிகவும் குறைவாக இருக்கும் என்றாலும் மக்கள் தொகை அதிகமான நம் நாட்டில் ஒருவர் ஒரு வாரத்துக்கு ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்தாலும் கணிசமான அளவை எட்டிவிடும். இப்போது அணு உலைகள் நிறுவ ஆகும் செலவு, அதில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை நாடு முழுவது கொண்டு செல்ல ஆகும் செலவு, அணு உலைப் பாதுகாப்புக்கான செலவு, அணு உலைக் கழிவுகளைப் பராமரிக்க ஆகும் செலவு, விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்புகள் இவற்றை ஒப்பிடும்போது அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வெகு சொற்பமே. எனவே, ஈ-சக்ரா மூலம் கிடைக்கும் மின்சாரம் குறைவாக இருந்தாலும் அதில் அணு உலை போன்ற எந்த செலவும் அபாயமும் கிடையாது என்பதால் அது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.

சாரு நிவேதிதா: தந்திரக் கதை சொல்லலின் ஒரு கோடு / அ.ராமசாமி

download

என் பெயர் சீஸர்.ரோமானியப்பேரரசர் ஜூலியஸ் சீஸர் அல்ல, வெறும் சீஸர். என்னுடைய பயாலாஜிகல் தந்தை பெயர் டைஸன்

.

இப்படித்தொடங்குகிறது போன மாத(டிசம்பர், 2015) உயிர்மையில் வந்து சாருநிவேதிதாவின் கதை. கதையின் தலைப்பு என் பெயர் சீஸர். ஒருவிதத்தில் தன்மைக்கூற்றுக் கதை. கதை எழுதும் சாரு நிவேதிதா நாயாக மாறித் தன் கதையை – நாயின் கதையை- கூறுவதாக வாசிக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கும் கதைகூற்று முறை.

எல்லாக்கவிதைகளும் எல்லாக் கதைகளும் எல்லா நாடகங்களும் ஆசிரியரால்தான் சொல்லப்படுகின்றன என்பது உண்மை. என்றாலும் மூவகைக்கதைசொல்லும் முறைகள் இருக்கின்றன; ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் சாத்தியங்களும் விளைவுகளும் இருக்கின்றன என்பதும் இலக்கியத்திறனாய்வு முன்வைக்கும் சொல்லாடல்கள். ஆங்கிலத்தில் முதலாமிடக் கதைகூறல் இரண்டாமிடக் கதைகூறல், மூன்றாமிடக் கதைகூறல்(First person, Second person, Third person Narrative) என்பதைத் தான் தமிழில் தன்மைக்கூற்று, முன்னிலைக்கூற்று, படர்க்கைக்கூற்று என்று வகைப்படுத்திச் சொல்கிறோம். இப்படிச் சொல்வது ஆங்கிலம் இங்கு அறிமுகமான பின்பு உருவாக்கிக்கொண்டதல்ல. தமிழின் தொன்மை இலக்கியக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியமே உருவாக்கித் தந்துள்ள அறிதல் முறைமை அது. வெளியிலிருந்து வந்ததைத்தான் நாம் பின்பற்றுவோம் என்பது தனிக்கதை.

மூன்றுவகைக் கதைசொல்லலில் படர்க்கைக்கூற்றுக் கதைசொல்லல் நவீன இலக்கியத்தில் அதிகம் வலியுறுத்தப்படும்; விரும்பப்படும் கூற்றுமுறை. படர்க்கைக் கூற்றுமுறை வெளிப்படாக் கதைசொல்லியின் கூற்றுமுறை, கடவுளின் பார்வைக் கூற்றுமுறை என வெவ்வேறு பெயர்களால் விதந்து பேசப்படுவதுண்டு. அந்த விதந்து பேசுதலின் வழியாக ஆசிரியனின் சார்போ, விருப்பமோ வெளிப்படுவதில்லை; நடுநிலை பேணப்படும் என்பது நம்பிக்கை.

என் பெயர் சீஸர்.ரோமானியப்பேரரசர் ஜூலியஸ் சீஸர் அல்ல, வெறும் சீஸர். என்னுடைய பயாலாஜிகல் தந்தை பெயர் டைஸன்.

என ஆரம்பித்துவிட்டு,

எப்படியிருந்தாலும் எங்களுக்கு உங்களைப் போல் மதம் இல்லை. ஆனால் ஜாதி உண்டு.நான் லாப்ரடார் ஜாதி.

எனத் தொடரும் நாயின்கதை ஒரேநேரத்தில் தன்மைக்கூற்றுக் கதையாகவும் படர்க்கைக் கூற்றுக் கதையாகவும் மாறும் தந்திரத்தை கொண்டிருக்கிறது. இதனைத் தந்திரம் என்று சொல்லவேண்டியதில்லை. எல்லா எழுத்தாளர்களும் பின்பற்றும் சாதாரண உத்தி. எழுத்தாளர் தனது பெயரை மறைப்பதற்காக “என் பெயர் ராமசேஷன்” என்றோ, “நான் கருப்பாயி” என்றோ தொடங்குவது ஒரு உத்திதான். இப்படித் தொடங்குவதற்குள் இன்னொரு மனிதரின் குணமும் நெருக்கடிகளும் வெளியும் கதையாக மாறுகின்றன. ஆனால் இங்கே ஒரு விலங்கின் – நாயின் கூற்றாக மாறும்போது நாயின் கதையாகவும், நாயை எழுதும் ஆசிரியரின் கதையாகவும் மாறிவிடுகிறது. அதனைச் செய்யும் எழுத்தாளருக்கு நேரடியான நோக்கத்தைத் தாண்டி வேறுசில நோக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படியொரு நிலையில் அதனைச் சாதாரண உத்தி எனச் சொல்ல முடியாது; தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். இங்கே சீஸர் என்னும் நாயின் விருப்பங்களும், முன்வைப்புகளும் அந்தக் கதையை எழுதிய ஆசிரியரின் விருப்பங்களாகவும், முன்வைப்புகளாகவும் மாறிவிடுவது தவிர்க்கமுடியாத ஒன்று. சாரு நிவேதிதாவின் கதையில் வரும் சீசர் முன்வைக்கும் தகவல்கள் சிலவற்றைக் காணலாம்:

இதைப் படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் நான் ஜாதியை நம்புகிறேன். பரிபூரணமாக நம்புகிறேன். குஜராத்தில் வேறு பெரிய பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போய் ஜாதி பற்றிப் பேசுகிறாயே என்கிறீர்களா? பயம் வேண்டாம்.

இந்தக் கூற்றிலிருந்து இந்த நாய் சாதாரண நாயல்ல. சமகால அரசியலைக் குறிப்பாக இந்தியாவில் தவிர்க்கமுடியாமல் இருக்கும் சமூக நீதி அல்லது இட ஒதுக்கீட்டு அரசியலைத் தனது கோணத்தில் புரிந்து வைத்திருக்கும் நாய் என்று புரிந்துகொள்கிறோம். அதுமட்டுமல்லாமல், அதற்கு ஒரு மனிதன் சூழலால் உருவாக்கப்படுகிறான்; மாறுகிறான் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை; பிறப்பே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதில் கூட நம்பிக்கையிருக்கிறது. அந்நாய் அதற்கு நாய்களின் குடும்பத்திலிருந்து எடுத்துக்காட்டை முன்வைக்காமல், மனிதர்களிலிருந்து – நோபல் பரிசு பெற்ற இந்தியப்பிராமணக்குடும்பத்திலிருந்து- உதாரணத்தை முன்வைக்கிறது.

ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் (சர் சி.வி.ராமன், சந்திரசேகர்) ஒரே துறையில் ( இயற்பியல்) நோபல் வாங்கினார்கள் என்றால் ஜெனெடிக்ஸ் என்பதில் நான் நம்பிக்கை வைப்பதில் தவறு என்ன இருக்கிறது.!

இன்னொரு இடத்தில் மனித அறிவைக் குறித்துக் கடுமையான விமரிசனத்தை வைக்கும்போது அதன் இடம் கேள்விக்கப்பாற்பட்ட பெருவெளியில் பயணம் செய்கிறது. அந்தக் கூற்றைக் கேளுங்கள்:

தர்க்கம் மனிதகுலத்தின் மீது விழுந்த சாபம். விஞ்ஞானம் மனிதனின் அகக்கண்களை மறைக்கும் திரை. இந்த இரண்டினாலும் பீடிக்கப் பட்டிருக்கும் மானுடரே, உங்களுக்கு நாங்கள் சொல்வது புரியாது. நம்பவும் முடியாது. என்றாலும் பொய் பேசுவது எங்கள் இனத்துக்கு உரிய பண்பன்று.

தத்துவம், சமூகவியல், அறிவியல் போன்ற உயர்வான பொருள்கள் பற்றிப்பேசும் அந்த நாய் நடைமுறை வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது தப்பும் தவறுமாகவும் பேசுகிறது. அதற்குத் தெரியாத விசயங்களே இல்லை என்று முடிவு செய்துவிட்டதோ என்னவோ, எல்லாவற்றையும் தெரிந்தவன் என்ற இறுமாப்போடு அள்ளிவிடுகிறது. அப்படி அள்ளிவிடும் தகவலொன்றைக் கேளுங்கள்:

நெட் எல்லாம் பாஸ் பண்ணினால் லாட்டரி. ஐம்பது அறுபது ஆயிரம் அரசு ஊதியம். ஆனால் நெட் பாஸ் பண்ணுவது தேவகௌடா போன்ற அரசியல்வாதிகள் பிரதம மந்திரி ஆனது எப்படியோ அப்படி நடக்கும் ஒரு அபூர்வ விஷயம். 97 மதிப்பெண் வாங்கியிருந்தால்கூட தோல்வியடையும் வாய்ப்பு இருக்கிறது.

கல்லூரிகளில் ஆசிரியராக நியமனம் பெற நெட்தேர்வில் பாஸ் ஆகவேண்டும் என்பது ஓர் அடிப்படைத் தகுதி மட்டுமே என்ற தகவலை அது அறிந்திருக்கவில்லை. கடந்த கால் நூற்றாண்டாக நடத்தப்பெறும் நெட் தேர்வு எழுதித் தேர்வுபெற்ற ஒரு கூட்டம் பத்தாயிரம் சம்பளத்திற்கு இரண்டு ஷிப்ட் வேலை செய்வதை அந்த நாய் அறிந்திருக்கவில்லை. நெட் தேர்வில் வெற்றிபெற்ற பின்னும் லாட்டரி விழாமல் மூனுவேலை சாப்பாட்டுக்கு ‘லாட்டரி’ அடிக்கும் மானிடர்கள் இந்த நாயிடம் வழி கேட்கலாம்; அல்லது நாய் மீது வழக்குப்போடலாம்.

போகிற போக்கில் ஒரு கதையைச் சொல்கிறது அந்த நாய். அக்கதையைச் சொல்லும் முறையிலும் கடைசியில் எழுப்பும் கேள்வியிலும் தானொரு ஆண் நாய் என்பதையும் தனக்குப் பெண்களின் துரோகமும் ஏமாற்றுகளும் நன்கு தெரியும் என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது. கதையை உயிர்மையில் வாசித்துக்கொள்ளுங்கள்; கேள்வியை மட்டும் இங்கே படித்துக்கொள்ளுங்கள்:

நீங்கள் யாரை நம்புவீர்கள்? ஷியாமளாவையா? பிரஸன்னாவையா?

நிச்சயம் சீசரின் சொல்முறையிலிருந்து நிச்சயம் நீங்கள் ஷியாமளாவை நம்பப் போவதில்லை; பிரஸன்னாவைத்தான் நம்புவீர்கள். சந்தேகமே தேவையில்லை. ஏனென்றால் பெண்கள் பற்றிய உண்மையான பார்வை அப்படிப்பட்டது. பொதுப் புத்தியில் இருக்கும் பெண்கள் பற்றிய கருத்தை சாருநிவேதிதா நிலை நிறுத்தவில்லை; அவர் உருவாக்கிய சீசர் தான் நிலைபெறச்செய்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே போல் கதையின் கடைசியில் வாசிக்கப்படும் அன்புவின் கடிதத்திற்குப் பிறகு சீசரின் அப்பாவின் மேல் – வளர்ப்புத் தந்தையின்மேல் இரக்கமும் பரிதாபமும் கொள்வீர்கள். அவரைப்போல ஒரு உன்னத மனிதரைப் புரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்று வருத்தமும் படுவீர்கள். கடிதத்திற்கு முன் அந்த அப்பாவைப் பற்றியொரு குறிப்பை வாசித்துக்கொள்ளுங்கள்;

ஆனால், டாக்டர் அளவுமீறிச் சாப்பிட்டதனால் மட்டும் அல்ல.இவனுடைய அப்பாவுக்கு இந்தப் பிரச்சினை இருந்தது என்றார்.என்னை இந்த உலகத்துக்கு அளித்த நிஜ அப்பாவின் தஸ்தாவெஜுகளிலிருந்து கண்டு பிடித்தாராம். பார்த்தீர்களா ஜெனடிக்ஸ்!

இப்போது கடிதத்தின் கடைசிப் பகுதியிலிருந்து:

இந்தப் பழக்கம் அப்போதிருந்தே எனக்குள் ஒரு பெரிய நோயை ஏற்படுத்திவிட்டது. அதாவது கனவில் நான் நாய்களைத் துரத்திக் கொண்டு ஆரவாரமாக ஓடுவேன். திடீரென என் முன்னால் ஓடும் நாய் என் பிரியத்துக்குரிய ஒருவராக மாறிவிடும். நான் அடிப்பதை நிறுத்திவிட்டு அழத்தொடங்குவேன். ஆனால் மற்றவர்கள் அந்த நபரைப்போட்டுத் துவைத்தெடுப்பார்கள். என் பிரியத்துக்குரியவரை. ஒரு முறை இப்படி என் தம்பி வந்தான். பிறிதொரு நாள் எங்கள் விக்கி. அப்புறம் என் தோழி ஒருத்தி. இப்படியாக அந்தக் கனவு என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. நேற்று அதிகாலையும் அதே கனவு. இந்த முறை கனவில் நாய் உங்கள் உருவிற்கு மாறிவிட்டது.

அன்புடன்

அன்பு.

சொல்லப்படுவது நாயின் கதையா? நாயின் வழியாகத் தான் நம்பும் ஒரு மனிதப் பிம்பத்தின் கதையா? அந்தப் பிம்பம் ஆசிரியரின் விருப்பங்களைச் சுமந்து திரியும் இன்னொரு பிம்பமா? அல்லது ஆசிரியரின் நகலா? என்பதைக் கதையை நுட்பமாக வாசிக்கும்போது உணரமுடியும்.

சாரு நிவேதிதா கைக்கொண்டுள்ள இந்தத் தந்திரக்கூற்று முறையில் சாதனை படைத்த கதைகள் இரண்டை நீங்கள் வாசித்திருக்கக்கூடும். ஒன்று உலக அளவில் அறியப்பெற்ற ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப்பண்ணை. அக்கதையின் பாத்திரங்கள் எல்லாம் விலங்குகளே. சோசலிச அரசு என்பதும் அதிகாரத்தின் கெட்டிதட்டிய வடிவமாகவே மாறிப்போய்விட்டது என்பதைச் சொன்ன புனைகதை. அதேபோலொரு கதையைப் புதுமைப்பித்தனும் எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு. எப்போதும் முடிவிலே இன்பம். அதன் தொடக்கமும் முடிவும் மட்டும் இங்கே:

அது மிகவும் ஆசாரமான முயல் – நாலு வேதம், ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்திருந்தது. திரிகரண சுத்தியாகத் தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் அனுபவித்து வந்தது.

அந்த முயல் எலியட்ஸ் ரோடில் உள்ள ஒரு கலெக்டர் பங்களாவில் வசித்து வந்தது. வெகு காலமாகத் தான் வசிக்கும் இடம் ஒரு கலெக்டரின் பங்களா என்பது அதற்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொண்ட பிற்பாடு அதற்குப் பெருமை சொல்லி முடியாது. வனராஜனான சாக்ஷாத் மிருகேந்திரனே போல அதன் நடையில் மிடுக்கு ஏற்பட்டது. உலகத்தில் தன்னை ஏறெடுத்துப் பார்க்க யாருக்கும் அருகதை இல்லை என நினைக்கவும் ஆரம்பித்து விட்டது அந்த முயல்.

இது தொடக்கம், இனி முடிவு:

முயல்கள் கண்ணுக்குத் தென்படாததைக் கண்டு கலெக்டர் அதிசயப்படவில்லை. தமக்கு எதிராகப் பெரிய சதி நடந்ததும் அவருக்குத் தெரியாது.

புதுமைப்பித்தனின் இந்தக் கதை எழுதப்பெற்ற ஆண்டு . இந்தியாவில் சாதி அமைப்பையும், உயர்தாழ்வையும் தக்கவைத்துச் சொகுசு வாழ்க்கையை நீட்டிக்கப் பிராமணர்கள் செய்யும் முயற்சியை விமரிசிக்க ,’நான்கு வேதமும் ஆறு சாஸ்திரமும் படித்த முயலையும் முயலினியையும் எழுதிக்காட்டினார். அதனோடு நாயொன்றையும் நரியொன்றையும் உருவாக்கிச் சாதிப்பிளவுகளையும் செயல்படும் அதிகார முரண்களையும் கடுமையான விமரிசனத்தோடு பேசியிருப்பார்.

2015 இல் சாரு நிவேதிதா எழுதும் கதை , இந்தியாவின் அதிகாரத்திற்கு வந்துள்ள கட்சியும், அதன் ஆதரவுக்கூட்டமும் இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் என எதையெல்லாம் ஏற்கிறதோ அதையெல்லாம் ஏற்றுப் பேசும் நாயொன்றை உருவாக்கிக் கதைசொல்ல வைத்துள்ளார். அதற்கு சீஸர் என்னும் மேற்கத்தியப் பெயர்கொடுத்தது வெறும் உத்தி அல்ல; தந்திரம்.

என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன் / கே,பாலமுருகன் ( மலேசியா ) நேர்காணல்: குமாரி தீபா

download (6)

என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன்

மலைகள் இதழுக்காக நேர்காணல்: குமாரி தீபா

கேள்வி: உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள முடியுமா?

கே.பாலமுருகன்: நான் ஓர் எழுத்தாளன். ஆசிரியரும்கூட. எனது கே.பாலமுருகன் வலைத்தளத்தில் என்னைப் பற்றி தேவையான அறிமுகம் உண்டு. இப்படி எல்லாம் நேர்காணல்களிலும் என்னைப் பற்றி நான் கிளி பிள்ளை போல ஒப்புவிப்புவதில் சோம்பேறித்தனமாக இருப்பதால் வலைத்தளத்தின் முகவரியை இணைக்கிறேன். (http://bala-balamurugan.blogspot.com/). உங்களையும் சேர்த்து இந்தத் தமிழ்ச்சமூகத்தின் தேடல்கள் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உள்ளது.

கேள்வி: இலக்கியத்தில் அடுத்த திட்டங்கள் ஏதும்?

கே.பாலமுருகன்: கொஞ்சமான சோம்பேறித்தனம் இருக்கிறது. அதனை விரைவில் களைந்தால் மட்டுமே மேலும் தமிழ் இலக்கியத்திற்குச் சில காரியங்களைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். இப்போதைக்குக் களம் இதழை ஒரு தீவிரமான போக்குடன் தொடர்ந்து வருடத்திற்கு நான்கு இதழையாவது கொண்டு வரத் திட்டம் உண்டு. அதனையடுத்து சிறுவர் மர்ம நாவலை பத்து பாகங்களாக எழுதவும் தீர்க்கமான முடிவுண்டு. மற்றதைக் காலம் தீர்மானம் செய்யும். அதிகமான நடவடிக்களைப் போட்டு என்னையே ஏமாற்றிக் கொள்ளாமல், என்னால் செய்ய முடியும் என நம்புகிற இந்த இரு திட்டங்களுடன் இருக்கிறேன்.

கேள்வி: களம் அடுத்த இதழ் வெளிவரவில்லையே, என்னவாயிற்று?

கே.பாலமுருகன்: களம் இதழ் மூன்று நண்பர்களின் முயற்சியில் தொடங்கியதாகும். முதலாவதாக இதில் யாரும் யாருக்கு மேலும் இல்லை. ஆசிரியர், துணை ஆசிரியர் என்ற பதவிகள் எல்லாம் இல்லை. ஆசிரியர் குழு மட்டுமே உண்டு. நான், எழுத்தாளர் அ.பாண்டியன், சு.தினகரன் மூவரும் சேர்ந்து முதல் இதழை வெளியிட்டோம். 1000 பிரதிகளைச் சுலபமாகக் கொண்டு போக முடிந்தது. நாங்கள் நம்பும் இலக்கியத்திற்கான தீவிரத்தை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டு நடுநிலை இதழாகக் கொண்டு வர முயற்சித்தோம். இதனைச் செய்ததற்குக் காரணம் ஜனரஞ்சகமான இலக்கியத்திலிருந்து தீவிர இலக்கியத்தை நோக்கி முன்னகர ஒரு நடுநிலை சூழல் வேண்டும் எனத் தோன்றியது. தமிழ்நாட்டில் சுஜாதாவைப் போல. ஆனால், என்னவோ மனம் அதில் ஒட்டவில்லை. காலம் முழுவதும் தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கவே விரும்பும் மனநிலை மட்டுமே வாய்த்துள்ளதால் களம் இதழை மீண்டும் செம்மைப்படுத்துகிறோம்.

கேள்வி: அப்படியென்றால் அடுத்த களம் இதழ் தயாராகவுள்ளதா?

கே.பாலமுருகன்: களம் இதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். அதற்காக நாட்டில் எழுதி வரும் சில படைப்பாளிகளை அணுகியுள்ளோம். அதற்கான வேலைகள் முடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அநங்கம் சிற்றிதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்ட வந்தபோது மிகுந்த கவனம் கிடைத்தது. சிங்கை மூத்த படைப்பாளி இராமக்.கண்ணபிரான் அவர்களின் பேட்டியும் இடம்பெறவிருக்கின்றது.

கேள்வி: இலக்கியத்தில் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: மிகவும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். சிறுவர் இலக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். தொய்வடைந்துவிட்ட நீரோட்டத்தின் அடைப்புகளை விடுவிக்க முதலில் இந்நாட்டின் சிறுவர்களின் மனங்களில் இலக்கியத்திற்கான தீவிரத்தைக் கூட்ட வேண்டும். அதன் பாய்ச்சல் வருங்காலத்தில் தேக்கங்களை அடித்துச் செல்லும். மேலும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கேட்டால் எதையோ செய்து கிழித்து சாதித்துவிட்ட நினைப்பில் பேசுபவர்களின் ஆர்பாட்டங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வேண்டியதற்கும் படைக்க வேண்டியதற்கும் மத்தியில் இருக்கும் இடைவேளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் கவனம் முழுவதும் நான் கண்காணிக்கும் நிதானத்தின் மீதே இருக்கிறது. ஓர் ஊற்றுக்காகக் காத்திருக்கிறேன்.

கேள்வி: இலக்கிய சர்ச்சைகள் ஏதிலும் மாட்டியதுண்டா?

கே.பாலமுருகன்: இலக்கிய சர்ச்சை என நான் முடிவு செய்யாதவரை மற்றவைகளை நான் அப்படிக் கருதுவதில்லை. இதற்குமுன் நான் சம்பந்தப்பட்ட எந்தச் சர்ச்சைகளும் கடைசியில் இலக்கிய விவாதமாக முடிந்ததில்லை. நாம் சொல்ல வரும் கருத்தின் மீது சிலருக்கு ஏற்படும் முரணே அதனைச் சர்ச்சையாக மாற்றுகிறது. ஆனால், அக்கருத்தின் மீது தனது அறிவதிகாரத்தைச் செலுத்த முனைபவர்களுடன் ஏற்படுவது வாய்ச்சண்டை மட்டுமே. வாய்ச்சண்டைகள் வசைகளுக்கு இடமளித்து சுயப் பகமைகளை மட்டுமே கக்கிச் செல்கின்றன. ஆகையால், இதுவரை எந்த இலக்கிய சர்ச்சைகளிலும் சிக்கியதில்லை. ஆனால், இலக்கியக் குழுக்களால் அதிகம் வசைப்பாடப்பட்டுள்ளேன். இங்கு அதற்குப் பஞ்சமில்லை. அமைதியாக படைப்பூக்கம் பெறுபவர்களைவிட கூச்சலிட்டு தன் பெருமைகளைப் பேசிக் கொள்பவர்களே அதிகம் என்பதால் இலக்கிய சர்ச்சை சாத்தியமா என்பதே சந்தேகம்தான். சுருக்கமாகச் சொல்வதென்றால் தற்போதைய இலக்கிய சண்டை என்பது மாமியார் மருமகள் சண்டையைப் போல மலிவாகிவிட்டது.

கேள்வி: தற்பொழுது மலேசிய இலக்கியத்தின் மீது உங்கள் நிலைபாடு?

கே.பாலமுருகன்: ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் தற்போது எழுதிவரும் இளம் படைப்பாளிகளை உரையாற்றவும் இலக்கியப் பயிற்சி அளிக்கவும் வாய்ப்பை வழங்குவதைக்கூட நான் ஆரோக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கிறேன். இது கல்வி அமைச்சு வரை விரிய வேண்டும். சமூகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்வது கல்வி அமைப்பே. அறிவையும் அனுபவத்தையும் கல்வியின் வழியாகப் பெற முடியும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பாகக் கல்வி அமைச்சுதான் என்றும் கருதப்படுகிறது. கல்வி அமைச்சின் பாடநூல் பகுதியும், கலைத்திட்டப் பிரிவும், தேர்வு வாரியமும் நவீன இலக்கியத்தை உள்வாங்கிக் கொண்டு இலக்கியத்தையும் சிந்தனைத்துறையையும் முன்னெடுத்தால், அப்பொழுதே நான் எதிர்ப்பார்க்கும் மாற்றம் சாத்தியம். அதுவரை சில முயற்சிகள் மட்டுமே பொதுவில் தொடரும். அதற்கான விளைவுகளை இப்பொழுது கணிக்க இயலாது.

கேள்வி: மலேசியத் தமிழ் இலக்கியத்தில் உங்கள் இடம் எது?

கே.பாலமுருகன்: எந்த இடமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதனை எதிர்காலமே முடிவு செய்யும். இப்போதைக்குப் படைக்கிறேன். அதனால் உயிருடன் இருக்கிறேன். என் படைப்புகளினூடாக அலைந்து திரிகிறேன். அது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதை மலேசிய இலக்கியத்தின் ஒரு துரும்பு என்றுகூட சொல்லிக்கொள்ளலாம், பிரச்சனையில்லை.

கேள்வி: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: நான் எதைச் சொல்லி யார் கேட்டுவிடப் போகிறார்கள்? கூச்சலிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதைத்தான் பலர் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். சேர்ந்து இயங்க நான் தயார். யார் மேலும் நின்று கொண்டு சர்வதிகாரம் செய்ய நினைக்கவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என நினைக்கின்ற கணமே குருபீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இருமாப்புக் கொள்ள வைத்துவிடுகிறது. ஆகையால் அதனைத் தவிர்த்து வருகிறேன். என் படைப்புகளின் வழி சமூகத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இது எந்த வகையிலான தாக்கங்களை உருவாக்குகிறது என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

கேள்வி: சிறுகதைகளில் ஆர்வம் அதிகமா அல்லது கவிதையா?

கே.பாலமுருகன்: சிறுகதையே எனது எப்பொழுதுமான தேர்வு. கவிதை மொழியுடன் நான் விளையாட நினைக்கும் போதெல்லாம் எழுதுவது. பலமுறை நான் மொழியிடம் தோல்வி கண்டுள்ளேன். சில சமயங்களில் நல்ல கவிதைகள் தோன்றியதுண்டு. சிறுகதைகளும் அப்படியே. சொல்லத் தகுந்த நல்ல கதைகளும் எழுதியுள்ளேன். விரைவில் எனது சிறுகதை தொகுப்பு ஒன்றைக் கொண்டு வர முயற்சித்து வருகிறேன். இதற்கு முன் வல்லினம் பதிப்பகத்தில் ஒரு சிறுகதை நூலும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் ஒரு நாவலும், சுடர் பதிப்பகம் மூலம் மூன்று நாவல்களும் பிரசுரித்துள்ளேன்.

கேள்வி: மலேசிய சிறுகதை சூழல் பற்றி சொல்ல இயலுமா?

கே.பாலமுருகன்: பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை மட்டும் வைத்துக் கொண்டு மலேசிய சிறுகதை சூழலை விமர்சிக்க இயலாது. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் தீர்மானிக்கவும் படுகிறது. அவை ஒரு காலக்கட்டத்தின் சிறுகதை தொடர்ச்சியை உள்ளடக்கியதாகக் கருத முடியாது. தனித்தனியாகச் சில நல்ல கதைகள் எப்பொழுதும் எழுதப்பட்டே வருகின்றன. தன் வாசிப்பின் ஆழம் பொறுத்தே ஒரு படைப்பாளியின் சிறுகதையின் ஆழமும் நேர்த்திப் பெறுகிறது. மேலும், வாழ்க்கை அனுபவமும் இதில் முக்கியமானதாகக் கருதுகிறேன். கற்பனையைவிட சுய அனுபவங்களே சிறுகதைகளில் எடுப்படுகின்றன எனத் தோன்றுகிறது. அந்தச் சுய அனுபவம் எப்படிச் சமூகத்துடன் உரையாடுகிறது; தன்னைப் பொறுத்திக் கொள்கிறது என்பதும் முக்கியம். அவ்வகையில் நாட்டில் நான் எப்பொழுதும் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்கள் எனக் கருதுவது சு.யுவராஜன், கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், அ.பாண்டியன், மகேந்திரன் நவமணி, மீராவாணி, முனிஸ்வரன் குமார், கங்காதுரை மேலும் சிலர் ஆகும். என் வாசிப்பு நிலையிலேயே இவர்கள் நல்ல சிறுகதைகளைப் படைத்துள்ளார்கள் எனக் கருதுகிறேன். சு.யுவராஜனின் சிறுகதை மொழி எந்தச் சாயலும் இல்லாதது. தன் தீவிரமான வாசிப்பின் வழி அவர் அவருக்கான மொழியைக் கண்டடைந்தார். மனத்திற்கு நெருக்கமாக வந்து கிசுகிசுக்கும் மொழியைப் போன்றது. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். புதிய பார்வை நாளிதழில் தொடர்ந்து மலேசிய சிங்கப்பூர் சிறுகதைகளை அடையாளங்கண்டு கட்டுரை எழுதி வருகிறேன். 24 வாரங்களுக்கு அது தொடரும். இது எதிர்காலத்தில் மலேசிய சிறுகதைகளைப் பற்றி ஒரு மேலோட்டமான பார்வையை உருவாக்கலாம்.

கேள்வி: மலேசியக் கவிதைகளும் இதே நிலைதானா?

கே.பாலமுருகன்: எனக்குப் பிடித்தமான கவிஞர்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். மலேசியாவில் மக்கள் தொகையில் 90% கவிஞர்கள் இருப்பதால் யாரைப் பற்றி சொல்வதென்று தெரியாததால், அமரர் பா.அ.சிவம், யோகி, பூங்குழலி, சு.தினகரன், நவீன், தோழி, மணிமொழி, போன்றவர்களின் கவிதைகளே நான் வாசித்ததில் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. யோகியும் மணிமொழியும் பா.அ.சிவமும் நல்ல கவிதைக்கான ஊற்றுள்ளவர்கள். பா.அ.சிவத்தின் இழப்பு மிகவும் வருத்தமிக்கது. அவருடைய கவிதைகள் பற்றி மௌனம் இதழில் எழுதியிருக்கிறேன். அநங்கம் இதழ் நடத்தியபோது பல கவிதைகளும் அனுப்பியிருக்கிறார். என்னைக் கவர்ந்த கவிஞரில் பா.அ.சிவமே தனித்த இடத்தில் நிலைக்கிறார். மணிமொழி மேலும் தொடர்ந்து கவிதைகள் எழுதினால் தனி கவனத்தைப் பெறுவார் என நினைக்கிறேன். யோகியின் யட்சி கவிதை தொகுப்பிற்காகக் காத்திருக்கிறேன். பூங்குழலியின் கவிதைகள் பற்றி இரண்டுமுறை விமர்சித்து எழுதியிருக்கிறேன். இலங்கை கவிஞர் ரியாஸ் குரானா, சிங்கை கவிஞர் எம்.கே குமார் அவர்களின் கவிதை நூல்களுக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். என் வாசிப்பு நிலையிலிருந்தே மலேசியக் கவிதை முயற்சிகளைக் கவனித்தும் மதிப்பிட்டும் வருகிறேன். இப்பணி மேலும் தொடரும்.

கேள்வி: உங்களை மலேசிய இலக்கிய ஆளுமை எனச் சொல்லலாமா?

கே.பாலமுருகன்: அதையெப்படி நானே சொல்லிக் கொள்வது? காலம்தான் அதற்கும் பதில். ஒருமுறை தொலைப்பேசி உரையாடலில் டாக்டர் மா.சண்முகசிவா நீங்கள் ஆளுமை ஆவதற்கான பயணத்தில் இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். அதனை அப்படியே நம்புகிறேன். அவ்வளவுத்தான்.

கேள்வி: மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களுடன் உங்களுக்கு ஏதும் பகைமையா?

கே.பாலமுருகன்: வேடிக்கையாக இருக்கிறது உங்கள் கேள்வி. நான் யாருடனும் பகைமை பாராட்டுவதில்லை. எனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக் கொள்வேன். பிடிக்கவில்லை என்று விலகிய பின்னரும் தூற்றிக் கொண்டிருந்தால் நஷ்டம் எனக்கில்லை என நம்புவதால் நான் யாரிடமும் பகைமையை வளர்த்துக் கொள்வதில்லை. ரெ.கார்த்திகேசு ஐயாவை நான் மலேசியாவின் மிக முக்கியமான சிறுகதை திறனாய்வாளராக மதிக்கின்றேன். அவருடைய பல கருத்துகளில் எனக்கு முரண்பாடும் உண்டு. ஆனால், இலக்கிய சூழலில் முரண்கள்தானே பலரை முன்னகர்த்தியுள்ளன. அதில் சிக்கல் இல்லை. இன்றளவும் அழைத்தால் என்னுடன் அவர் பேசுவார், காரணம் எங்களுக்கு மத்தியில் எந்தப் பகைமையும் இல்லை.

கேள்வி: நாவல் ஏதும் எழுத திட்டமுண்டா?

கே.பாலமுருகன்: இரண்டு முக்கியமான நாவல்கள் என் மனத்தில் இருக்கின்றன. விரைவில் அதனை எழுதினால் மலேசிய இந்தியர்களின் வாழ்வில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி பதிவு செய்ததாக இருக்கும். அதற்கான சந்தர்ப்பமும் மொழியும் கிட்டும்வரை காத்திருக்கிறேன்.

சுவர்க்கத்தின் பாதை (Road to Heaven) இந்தோனேசியன் : ஆபிதா எல் காலிக்கி (Abidah El Khalieqy) ஆங்கிலம் : ஜான் எச். மெக்கிளின் (John H. McGlynn) தமிழில் ச. ஆறுமுகம்

20130213abidah-el-khalieqy

ஆபிதா எல் காலிக்கி, கிழக்கு ஜாவாவில் ஜோம்பங் நகரில் 1965ல் பிறந்தவர். இளமையிலேயே எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி 1997 ல் வெளிவந்தது. இந்தோனேசிய மொழியில் இதுவரை ஒன்பது நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார். அவரது Perempuan Berkalung Sorban என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. Genijora என்ற நாவல் 2003ல் ஜாகர்த்தா கலைக் கவுன்சில் நடத்திய போட்டியில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தோனேசிய சமூகத்தில் தற்போதும் பலதார மணம், குடும்ப வன்முறை எனப் பலவகையிலும் ஒடுக்கப்படுவதாக, ஆபிதா கருதும் பெண்களின் குரலாகவே, அவரது படைப்புகள் உள்ளன.

*******
என் அம்மா இறந்தபோது, அவளது முகம் மாறியது. நான் தான் அதை முதலில் கவனித்தேன். உறவினர்களும் நண்பர்களும் மரியாதை செலுத்துவதற்காக வந்தபோது, அவர்கள் கண்களில் நான் சந்தேகத்தைக் கண்டேன்; இறந்தது, என் அம்மாதானென யாராலும் நம்பமுடியவில்லை. மூன்று ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்காத என் உடன்பிறந்த சகோதரன் கூட, அவள் பிணத்தைப் பார்த்ததும், இறந்தது, அம்மா அல்ல, அவளது கடைசித் தங்கையான எங்கள் சித்தி என்று அறிவித்தான். அம்மாவுக்குச் சிகிச்சையளித்துக் கவனித்துவந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கூட ஆச்சரியப்பட்டனர்; அவரவர் கண்களை அவர்களாலேயே நம்பமுடியவில்லை.

நான், அந்த அறையின் தொலைவான ஒரு மூலையில் ஒதுங்கி நின்று, இறந்த அம்மாவைப் பார்க்கவந்தவர்களின் முகங்களைக் கவனித்துப் பார்த்தேன். அவர்களில் யார், யார் அம்மாவை உண்மையில் நேசித்தார்கள், யார், யார் நேசிக்கவில்லையென்பதை, உடனடியான அவர்களது முகக்குறிப்பு, எனக்கு எளிதில் காட்டிக்கொடுத்தது. நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவைப் பார்த்த உடனேயே தனது உதடுகளைக் கடித்துக்கொண்ட ஒரே ஆள் – வேறுயாருமில்லை, என் அப்பாவேதான். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

தொலைபேசி ஒன்று எனக்குள் கிணுகிணுத்தது. ‘’அவர் பொறாமைப்படுகிறார், கடுமையான அளவுக்கு, உச்ச கட்டத்திலான பொறாமை.’’ என்று தொடர்பு துண்டித்துக்கொண்ட ஒரு குரல் சொன்னது. முகத்தில் ஒரு தேவதையின் புன்னகையைத் தாங்கியிருந்த அம்மா மிகமிக இளமையாக, இருபது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நாளில் போல, அவளது இளமைத் தோற்றத்திற்குத் திரும்பிவிட்டதாகத் தோன்றினாள்.

‘’இதுதான் என் உண்மையான முகம்,’’ என மென்மையாக இரகசியம் போல் என் காதில் பேசிய அம்மா, ‘’மணநாள் இரவில் புதுமணப்பெண் போல்.’’ என்றாள். அவள் உறுதியாகத் தீர்மானத்தோடு சொன்னாள். ‘’அமைதியான மசூதியைப் பார்த்திருந்த எங்கள் வீட்டில், ஒரு மலைப்பூட்டும் விருந்துடன் தொடங்கி, முடிவில் உடல் முழுவதும் ரணமும் வேதனைமிக்க நினைவுகளுமாகிப்போன ஒரு இரவு.’’

வலியும் வேதனையும் அவளது வாழ்க்கையில் நிரந்தரமாகிப்போனதை நினைவுபடுத்திக்கொண்டு, அவள், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தாள் : ‘’என் முகத்திலிருக்கும் இந்தத் தோற்றம் தான், அவருக்குள் மாளாத பெரும் பொறாமையைக் கிளப்பி, என்னைத் திட்டவும், உதைக்கவும் அந்தத் திருமண இரவில் வன்முறையாக, வலிந்து என்னை ஆக்கிரமித்துக் கொள்ளவும் செய்தது – இதற்கெல்லாம் காரணம், என் வீட்டின் முன்னாலிருந்த மசூதியில் நிகழ்ந்த நடு இரவுத் தொழுகையின் போது நானும் தஹாஜுத் பிரார்த்தனை செய்தேன் என்பது மட்டுமே தான்.’’

என் உணர்வுகள் கட்டுப்பாடின்றி மேலெழும்போதெல்லாம் நான் உணர்கின்ற, மேடை நடுக்கம் போன்ற ஒன்றினை உணர்ந்து, என் உடல் தானாகவே நடுங்கியதைக் கண்டேன். உடல் முழுதும் திடீரென வெப்பம் அதிகமாகி, இரத்த நாளங்களில் ஒரு வேதனையின் ஓட்டத்தை, மார்புக்கூட்டுக்குள் தொடர்ந்த ஒரு உலக்கை இடிப்பினைத் தாங்க முடியாமல் அம்மாவுக்கான என் முதல் கண்ணீரைச் சிந்தினேன்.

குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில், நான் மட்டுமே பெண். அதனால்தானோ, என்னவோ, நாங்கள் ஐந்து பேருமே, பெரும்பணக்காரரான ஹாஜி கமீலின் நான்காவது மனைவியின் ஒரே கருப்பையிலிருந்து உதித்திருந்தாலும், அம்மாவுடன் ஒரு ஒத்த உணர்வினை, நான் மட்டுமே பகிர்ந்துகொண்டேன்.

ஊர்மக்கள் என் அப்பாவைப் பெரும் சொத்துக்காரர் என்றுதான் அழைத்தார்கள். நாங்கள், அவரது குழந்தைகள், அவரது செல்வத்தில் மூழ்கிக் குளித்தோம். ஒரு மனிதனை, அவன் மனைவி மற்றும் குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காத சமூக உணர்வில் மூழ்கடிக்கப்பட்டிருந்தோம். நாங்கள் எல்லோருமே அதிகாரம் பொருந்திய, வலிமையும் ஆண்மையழகும் மிக்கவராகப் புகழ்பெற்ற எங்கள் அப்பாவின் உடைமைகளின் ஒரு பகுதியாகவே எல்லோராலும் கருதப்பட்டோம்.

நான் அப்பாவின் அருகில் சென்றேன். ‘’ வித்தியாசமாக, எதையாவது பார்த்தீர்களா, அப்பா? புருவத்தை ஏன் சுழிக்கிறீர்கள்?’’

‘’ஆமாம், பார்த்தேன், உன் அம்மாவின் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அவளது சுகக்கேடுதான் உடல் தோற்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.’’

அம்மாவுக்கு மூளையில் இரத்தக் கசிவு என்று மருத்துவர் சொன்னார். உறுதியாக அதுதானா, அப்பா? நிறையப் பேர் இரத்தக்கசிவினால் சாகிறார்கள், ஆனால், அதனாலேயே நோயாளியின் தோற்றத் தன்மைகள் மாறுவதாக நான் கேள்விப்பட்டதேயில்லை.’’

‘’யாருக்குத் தெரியும்? உன் அம்மா வித்தியாசமானவள் … சாவில் கூட இப்படியொரு சிரிப்பு, சிரிக்கிறாள்.’’

‘’எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், அம்மாவின் மரணம் பொருத்தமானதாக, துயரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. மரணம் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறதென்றுகூடச் சொல்லலாம். அவளது சிரிப்பைப் பாருங்கள். இப்படி ஒரு அழகான சிரிப்பினை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? திரைப்படங்களில் கூடப் பார்த்ததில்லை.’’

‘’என்ன பேசுகிறாய்? அதுவுமில்லால் உனக்கு என்னதான் தெரியும்? மூக்கு வடிக்கிற குழந்தை, நீ!’’

‘’நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவுக்கு இது ஒரு நல்ல சாவு – எல்லோரும் சொல்வார்களே ஹூஸ்னுல் காத்திமா, அது.’’

‘’உஷ்! போய் ஏதாவது வேலையைப் பாரு; சித்திக்கு உதவி செய்! போ, போ!’’

‘’நான் அம்மா கூடத்தான் இருக்கப் போகிறேன். அவளோடு கூட இருக்கப்போகிற கடைசி வாய்ப்பு, இது. அவளுக்காக, நான் பிரார்த்தனை செய்ய வேண்டும், அப்பா.’’

நோயர் ஊர்தி வந்த போது, எல்லோருமே இன்னும் பரபரப்பானோம்; ஆனால், நான், அம்மாவிடமிருந்து யாரும், என்னைப் பிரிக்க, என் அப்பாவாக இருந்தாலும் கூட, அனுமதிக்கப்போவதில்லை.

‘’நீ ஒரு பெண்; உனக்குப் போதிய பலம் கிடையாது; ஆம்புலன்சில் நான் கூடப் போகிறேன்.’’ என்றார், என் அண்ணன்.

‘’ நல்ல திடமாகத்தான் இருக்கிறேன்,’’ நான் வலியுறுத்தினேன். ‘’அம்மா மருத்துவ மனையிலிருந்த காலமெல்லாம், நான் தான் அவள் பக்கத்திலேயே காத்துக் கிடந்தேன். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். அம்மாவின் நெருக்கத்திலிருப்பதுதான் எனக்கு நிம்மதி.’’

‘’உன் ஒப்பாரியையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது.’’

அழத்தேவையில்லாத காரணங்களுக்கு, ஆண்களும் கூடத்தான் அழுகிறார்கள். அம்மாவின் இறப்புக்காக நான் அழ மாட்டேன். அவள் அவரின் மாளிகைக்குப் போய்ச்சேரும்வரையில் அவளுடனேயே இருந்து, அவளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருப்பேன்.

‘’யாருடைய மாளிகை?’’ வாயை மூடிக்கொண்டிருந்த என் அண்ணன் கேட்டார்.

‘’நல்லது, நிச்சயமாக, அது, நீங்கள் நினைக்கும் இடமல்ல!’’

‘’நீயும் உன் முட்டாள்தனமும்!’’ என முணுமுணுத்தவாறே அகன்று சென்றார்.

‘’என் முட்டாள்தனம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துத் திரட்டினாலும், அதைவிடவும் முட்டாள்தனமானவன் நீ’’ சிரிப்பினை அடக்கிக்கொண்டு, எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன்.

முடிவில், நானும் எனது சித்தியும் தான், நோயர் ஊர்தியில் அம்மாவுடன் சென்றோம். அப்போது இரவாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி சாலை எளிதாக, வசதியாக இருந்தது; யோக்யகார்ட்டாவிலிருந்து ஜோம்பங் சென்று சேர ஐந்து மணி நேரமே ஆனது. பயணத்தின் போது சித்தி, இருக்கையிலேயே தூங்கிவிட்டாள். தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில், நான் பிரார்த்தனை செய்தேன்.

ஒரு கட்டத்தில், என் கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, நடு இரவு பன்னிரண்டு தாண்டி அதிகாலை முப்பது நிமிடமாகியிருந்தது.

‘’ஆமாம்! இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு அதிகாலை பன்னிரண்டு முப்பதுக்குத்(00.30)தான், நான் வீட்டிலிருந்தும் வெளியே வந்தேன்,’’ என்றாள், அம்மா. ‘’அன்று இரவில் மசூதியின் வாசலை மிதிக்கும் தீராத பேராவலினை உணர்ந்தேன். என் இதயம் முழுவதுமாக ரோஜாக்கள் நிறைந்து, என் முகம் எதுவும் அறியாத்தன்மையில் ஒளிவீசியது. அவர் மிஹ்ரபில், நான் மெக்காவின் திசை நோக்கித் தொழுகின்ற இடத்தில் எனக்காகக் காத்திருப்பது போல, விரைந்து செல்ல முயற்சித்தேன். என்னுடைய தாமதத்தை நினைத்து, என்னையே நொந்துகொண்டு, நான் மசூதியின் மாடிப்படிகளில் ஏறினேன். தொழுகையின் போது, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையில் தலையால் அடிபணிந்து வணங்கினேன். ஒன்றின் பின் ஒன்றாக, ஒவ்வொரு முறையும் என் நெற்றி அவரது பார்வையில் தரையைத் தொட்டு வணங்கியது. அப்படியாக எவ்வளவு நேரம் என்னை அர்ப்பணித்திருந்தேனென்று என்னால் சொல்ல இயலாது, ஆனால், அவரோடு செலவழிக்கின்ற நேரத்தை ஒருவர் எத்தனை மணி நேரமெனக் கணக்கிட்டு எண்ணுவதில்லை. ஆனால், நான், அதன் பின்னர், எனது புதிய வீட்டிற்குத் திரும்பி, முன்வாசலில் என் காலை வைத்தேனோ இல்லையோ, அடிவயிற்றில் விழுந்த உதையில் ஒரு நிமிடம் என் மூச்சே நின்றுபோயிற்று – அதுவே முதல் அடி, அதைத் தொடர்ந்து, தீவிரமாக வளர்ந்த வெறுப்பில் கனத்த எத்தனையோ அடிகள்.’’

என் முகம் தொங்கிப்போயிற்று. அம்மாவின் தலைவிதிப் புத்தகத்திலுள்ள அனைத்துப் புனிதங்களையும் தெரிந்துகொண்டதாக நான் நினைத்தேன், ஆனால், என் கண்கள் பனித்து என் அம்மாவின் இரகசியத் தொகுப்புகளின் முழுமை அனைத்துக்குள்ளும் என் பார்வையைச் செலுத்தும் நிலையில் நான் இல்லையென்பதும் தெளிவாகவே புரிந்தது. அம்மா, மிக நெருக்கமானவள், ஆனால், அதே நேரத்தில் மிகத் தொலைவானவளுமாக…….. அவளுடைய இரகசியக் காயத்தை, அதன் வலியை, எல்லோருக்கும் நன்கு தெரிந்த அவளது பொறுமையாலும், எக்கணமும் பொழிகிற வற்றாத அன்பாலும், எவ்வளவு சுத்தமாக மறைத்திருக்கிறாள்!

‘’ உதைப்பதற்கு வசதியாகக் காலை மாற்றிக்கொண்ட உன் அப்பா, ‘’ஏய், நீ மட்டும்தான் உண்மையான முஸ்லிமென்று நினைக்கிறாயா! நீ ஒருத்திதான் விசுவாசமுள்ள ஒரே ஆளென்று நினைக்கிறாயா! நல்லது, கேட்டுக்கொள்! இன்றையிலிருந்து, நான் உனது கணவன். வேறு எவரையும் விட, எனக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடைய உத்திரவுகளுக்குத் தான் கீழ்ப்படியவேண்டும், அதற்கும் மேலாக, வேறு எவருக்குமல்ல. உன்னுடைய விசுவாசம், நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். அதுவும் எனக்கு மட்டுமேதான். புரிந்ததா?’’

‘’நான் மசூதிக்குப் புறப்படும்போது, சீட்டு விளையாடிக்கொண்டிருந்தீர்கள்….’’

‘’வாயை மூடு! ஒரு பொம்பளை, உன்னோடு நான் பேசத் தயாரில்லை!’’

‘’அதனால் நானும் வாயை மூடிக்கொண்டேன்,’’ அம்மா மிக எளிதாகச் சொன்னாள். ‘’அன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு என் வாயை மூடிக்கொண்டேன். பேசுகிற உரிமை உன் அப்பாவுக்கு மட்டும் தான் இருந்தது. மரணக் கூர்முனைக்கத்தியின் கீழான அச்சுறுத்தலில் உறைந்து, இறுக்கமாகி, மவுனமாகிப்போன ஒரு உலகத்தில், வாழ்க்கையின் கனவுகள் கண்ணெதிரே கடந்து செல்வதை, வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊமையாக, நான் இருந்தேன். நான், உன் அப்பாவின் பலிப்பொருள். உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும், ஒவ்வொரு நொடிக்குமான பொருள், ஒரு முன்மாதிரிப் பலியாக எப்படி இருக்கவேண்டுமென்பதான அவரது வார்த்தைகளைக் கேட்டு, மனப்பாடம் செய்வது – இணக்கமான ஒரு சிரித்த முகத்துடன் பலிபீடத்துக்குச் செல்வதுதான். இப்போது, நான் அவருடைய கனவை நிறைவேற்றிவிட்டேன். நான், உன் அப்பாவுடைய தியாகப் பலி; நான் அவருக்காகவே இறந்ததாக எல்லோரும் நினைக்கிறார்கள்.’’

‘’நான், திடீரென்று இப்படிச் சிரிப்பதைப் பார்த்த பிறகுதான், இதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மசூதியிலிருந்து திரும்பிவரும்போது – அவர் என்னை அடிக்கத் தொடங்குவதற்கு முன், என் முகத்திலிருந்ததும் ஒன்றுதானென உணர்ந்திருக்கிறார். அடுத்த இருபதாண்டுகளிலும், அவர் அந்தச் சிரிப்பை, நான் இப்போது என் இதழ்களில் அணிந்திருக்கிறேனே, இதே சிரிப்பினைத்தான் தேடினார்; ஒவ்வொரு இரவிலும், பகலிலும், அவர் அதைத் தேடித்தேடிப் பெரும் ஆசைகொண்டு, அதையே கனவாக்கிக்கொண்டார். ஆனால், அவர் கண்டதெல்லாம் வெறும் கானல்தான்; என் இதழ்கள் தாம் உறைந்த இரத்தத்தால் – அவரது முரட்டு விரல்கள் என் வாயைப்பற்றிக் கீறியதில் கசிந்த இரத்தம் – மூடிக்கிடந்தனவே.’’

அம்மா, மீண்டும் பேசத் தொடங்கும் முன், ஆழ்ந்து ஒரு பெருமூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டார். ‘’இப்போது நேரம் என்ன, தெரியுமா? ஆம். இப்போது காலை பன்னிரண்டு முப்பது. புதுமணப் பெண்ணாக அதைத் தொடர்ந்த முதல் மாதம் முழுவதும், எந்த அளவுக்கு முயன்றாலும், அடக்கமுடியாத, அவரது முன்னிலையில் அவரை அடிபணிந்து, வணங்கித் தொழுகை செய்கின்ற அந்தத் தணியாத பேராவலை உணர்ந்தேன். என்னுடைய ஆவல், எல்லைகள் அனைத்தையும் கடந்தது; என் பிரார்த்தனைகளுக்கும், என்னுடைய அடிபணிந்து, வணங்கல்களுக்குமான அவரது புன்னகையே அந்தத் தீராத பேராவலைப் பெருகச்செய்தது. எங்கள் புதுமண அறையின் ஒரு மூலையிலேயே, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையைத் தலையால் தொட்டு வணங்கி, நம்மைப் படைத்தவருடன் ஒன்றும் தீவிர எண்ணத்தின் இராகத்தில் என் மாலையின் மணிகளை உருட்டினேன்.

‘’ஒரு வேளை, நான், என்னை அறியாமலேயே சத்தமாகப் பெருமூச்சிட்டிருக்கலாம், ஆனால், அந்தப் பெருமூச்சு உன் அப்பாவின் செவிகளைத் துளைத்ததோடு, அவரது நரம்புகள், இதயம், மனம்……. எல்லாவற்றுக்குள்ளும் கொழுந்து விட்டெரிந்த பொறாமையின் தீநாக்குகளால் என் செவிகள் கருகிப்போயின. அப்புறம், அந்த அறையில் அத்தனை குரூரமாக, உறுதியாக, கனமாகத் தொங்கிக்கொண்டிருந்த முதலைத் தோல் கச்சினை நான் எப்படி மறக்க முடியும்! அவர் கச்சினை எடுத்து, உயர்த்தி என் முதுகில் பத்துப் பத்தாக இல்லை, நூற்றுக்கணக்கான முறைகள் விளாசினார். என் அமைதி அவருக்குள் இன்னும் முரட்டுத்தனமாக, பொறாமையின் தீ நாக்குகளை எழுப்பின. நான் மயங்கி விழுந்தேன்; காலைத் தொழுகைக்கான அழைப்பு என் காதுகளில் விழும்வரையில் என் நினைவு திரும்பவேயில்லை.’’

சிறிது நேரம் அம்மா எதுவுமே பேசவில்லை. அவளது கண்கள் தொலைதூரத்து வானத்தில் பதிந்திருக்க, சுவர்க்கத்தின் தேவதைக்கே பொருத்தமான அந்தச் சிரிப்பு அவள் இதழ்களில் மலர்ந்து, முகம் முழுவதும் பரந்தது.

‘’எனக்குத் தெரியும், அப்புறம் என்ன நடந்ததெனத் தெரிந்துகொள்ள விரும்புவாய்,’’ என்ற அம்மா, ‘’ எனக்குப் பைத்தியம் என்று உண்மையிலேயே உன் அப்பா நினைத்திருக்கலாம். ஏன் அப்படி? முடிவில்லாத வலியும் வேதனையும் எனக்குள் எழுந்தாலும், புதுமையான விஷயம் என்னவென்றால், அவர் மீதான என் தணியாப் பேராவல் இன்னும் தீவிரமானதுதான். அது என்னால், பொறுத்துக்கொள்ளமுடியாத அளவுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு மூச்சுக்கும், ஒவ்வொரு நாடித் துடிப்புக்கும், அவரது முகம் என்னை நெருங்கிவந்துகொண்டேயிருந்தது.

அடிக்கடி நினைவுகள் தடுமாறி நான், எளிதில் குழப்பத்துக்காளானேன். சமைத்துக்கொண்டிருக்கும் போது, நான் பொரிக்கும் அத்தனை மீனும் வாணலியில் கரியாகப் போகிற அளவுக்குக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அல்லது, இரவில் ஏதோ கதவு தட்டிய சத்தம் கேட்டது போல, வீட்டின் முன்கதவைத் திறந்து பார்ப்பேன்; ஆனால் அங்கு, எதுவுமே இருக்காது. என் நடத்தையும் செயல்பாடுகளும், நான் சபிக்கப்பட்டவளென உன் அப்பாவை நம்பச்செய்துவிட்டன. ஆவிகள் தாம் என்னைப் பீடித்திருப்பதாக அவர் நினைத்தார்.’’

அம்மாவின் கையைத் தடவித் தட்டிக்கொடுக்கவேண்டுமென நான் நினைத்தேன்; ஆனால், தூக்கக்கலக்கம் என்னை வீழ்த்திவிட்டது.

‘’இப்படியாக இருக்க, அன்றைக்கு உன் அப்பா ஏதோ வியாபார விஷயம் அல்லது வேறு ஏதோ ஒன்றுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பினார். அப்போது காலை ஒன்பது மணி இருக்கும். அதனால், தொழுகைக்கான சுத்தப்படுத்தல் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அவருடன் ஒன்றுவதான என் ஆவலை நிறைவேற்றிக்கொண்டிருந்தேன். என் தொழுகை மிகத் தீவிர ஈடுபாடாகி, நான் ஆழ்ந்த பணிவுடன் அடிபணிந்து, தலைவணங்கியிருந்ததில், உன் அப்பாவின் மகிழுந்து வந்த சப்தம் எனக்குக் கேட்கவில்லை. நான் உண்மையிலேயே அவரைச் சந்திக்கச் செல்வதற்கு முந்தைய எனது, கடைசித் தலைவணங்கல் அதுவாகவே அமைந்துவிட்டது. என் தலையில் விழுந்த அடியில் என்னுடைய திடமற்ற மண்டையோடு பளபளக்கும் கடினப் பீங்கான் தரை ஓடுகளில் மிகுந்த வேகமாக மோதியது; அது திடீரென ஒரு மின்னல் வெடித்தது போல அவ்வளவு கடினமாக இருந்தது; வெறிகொண்ட பார்வையைப் பிரதிபலித்த கண்களுடன் என் தலையைப் பின்னுக்கு இழுத்து என் குரல்வளையைப் பிடித்து இறுக்கிய உன் அப்பாவின் கைகள், நான் மூச்சற்றுத் தரையில் விழும்வரையில் விடவேயில்லை.’’

‘’அப்புறம் என்ன நடந்தது, அம்மா?’’

‘’திடீரென்று, எல்லாமே இருட்டாகிவிட்டது. எங்கும் ஒரே மைக்கறுப்பு! உலகம் முழுவதுமே அமைதியாகிவிட்டது. அதன் பின்னர், வெகுதூரத்தில் கண்ணைப்பறிக்கும் ஒரு ஒளி, மிகுந்த வெளிச்சத்துடன் தோன்றி, நிலைத்த ஒளிப்பாதை ஒன்றை வீசியது. அது – குழந்தையின் கனவில் தோன்றுவதைப் போல – என்னை வரவேற்க வந்துகொண்டிருந்த, ஏழு நிலவுகளின் பிரகாசத்தைக் கொண்ட ஒரு ஒளித்தேர். மந்திரவாதியின் அற்புதம் போன்ற, ஒரு கோடி கவிஞர்களால் கூட விவரிக்கமுடியாத பரவசத்தில் நான் புன்னகைத்தேன். அவரது அரியணைக்கு என்னை இட்டுச் சென்ற தேர் பயணித்த தூரம் அநேகமாக மிகமிகக் குறைந்ததாகத்தான் – எனது திருமண அறையிலிருந்து, இருபது ஆண்டுகளுக்கு முன் நம் வீட்டு முன்புள்ள மசூதிக்குக் கடந்து சென்றேனே அதைவிட அதிக தூரமில்லாமல்தான் – தோன்றியது. அங்குதான், நான் பரிபூரண அன்பினைக் கண்டேன்; அதுவே, என் இதழ்களின் புன்னகையிலும் தெரிகிறது.

‘’உன் அப்பா, அவர் மீது பொறாமை கொள்ளலாமா?’’ அம்மா நயமாகக் கேட்டாள்.

நூறு தேவதைகள் ஒன்றுசேர்ந்து இழுக்க, நோயர் ஊர்தி பறந்துகொண்டேயிருந்தது, நீர் கோர்த்த வானத்தின் கீழான மேகமூட்டத்தில், நான் என் கண்ணீரைக் கழுவ முயற்சித்தேன். பின்னர், அன்பின் ரோஜாக்கள் என் இதயத்தில் பெருமிதத்துடன் இதழ்விரித்தன. என் அம்மா, அன்பின் பெருங்கடல், சுவர்க்கத்தின் மிக அருகில் – உங்கள் ஆன்மாவின் காலடிக்குச் சற்றே கீழாகக் காணப்படுகிறாள். நல்வணக்கம், சென்று வா, அம்மா. அன்பான கடவுளே! உங்கள் நேசக்கரத்தால் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென்.

நன்றி : http://www.wordswithoutborders.org/article/road-to-heaven#ixzz3ujMye0O8

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – பிற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தோனேசியா மற்றும் மலேயாவில் பெண்களும் தொழுகைக்காக, மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இருபது ஆண்டுகளாக முதலைத் தோல் கச்சினால் அடிவாங்கி, கடைசியில் கணவனின் கையாலேயே மரணமடையும் குடும்ப வன்முறையினைப் படித்து முடித்த நேரத்தில், முகமது மீரானின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் முஸ்தபாக்கண்ணு, மனைவி மரியத்தை அடிப்பதற்காகவே, உத்தரத்தில் எப்போதும் வைத்திருந்த அந்தப் பிரம்பு நினைவுக்கு வந்து தொலைந்தது. நல்லவேளையாக, வறுமையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்த புதுமைப்பித்தனின் செல்லம்மாளும் பிரமநாயகம் பிள்ளையும், அவர்களைத் தொடர்ந்து ஆலீஸ் மன்றோவின் கிராண்ட்டும் (மலை மேல் வந்தது, கரடி) ஆறுதலுக்கு வந்தனர்

ச.ஆறுமுகம். 9442944347 arumughompillai@gmail.com

அழகியல் : ஒரு மெய்யியல் பகுப்பாய்வு / ஈழக்கவி

sunset0007-630-jpg_073957

அறிவுப்பூர்வமான பரந்த முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண்ஆய்வே மெய்யியல் (Philosophy) ஆகும். அதாவது, யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் நுணுக்கப் பார்வையைச் செலுத்துவதே மெய்யியல் எனப்படுகின்றது. எனவே தான் மெய்யியலானது அழகியல் உட்பட விஞ்ஞானங்கள் அனைத்துக்குமான பொதுவான முறையியல் அடிப்படைகளைத் தருகின்றது. முறையியல் என்பது விஞ்ஞானப் பூர்வமான அறிவைப் பெறுவதற்குரிய கருவியாகும். புராதன காலம் முதலே அழகியலும் மெய்யியலின் ஒரு பிரிவாகவே வளர்ந்து வந்துள்ளது.

அழகியல் ஆங்கிலத்தில் Aesthetics எனப்படுகின்றது. Aesthetics என்னும் சொல் Aisthetickos என்கின்ற கிரேக்க சொல்லை வேர் சொல்லாகக் கொண்டு உருவானது. கிரேக்க சொல் உணர்திறன், புலனுணர் திறன் (Sense Perception) என்று பொருள்படும். Aesthetics என்னும் சொல்லை முதன்முதலாக பிரடரிக் ஊல்ஃப் என்னும் பிரஞ்சு மெய்யியலாளரின் மாணவரும், ஜெர்மன் தேசத்து கலைக்கொள்கையாளருமான அலக்சாண்டர் பாம்கார்ட்டன் (Alexander Baumgarten; 1714-1762) என்பவரினால் பயன்படுத்தப்பட்டது. அவர் aisthetica என்னும் நூலை எழுதினார். அதன் முதற்பாகம் 1750ல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இந்தச் சொல் விஞ்ஞான அறிவின் ஒரு துறையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படலாயிற்று. இவரது காலப்பகுதியிலிருந்தே எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் அழகியல் என்பது Aesthetics என்ற பெயரினால் வழங்கப்பட்டது. ஆனால், இதை வைத்துக் கொண்டு, விஞ்ஞான ரீதியான அழகியல் பாம்கார்ட்டன் காலத்திலிருந்துதான் தொடங்கியது என்று எந்த விதத்திலும் பொருள் கொண்டுவிடக் கூடாது. அதன் தொடக்கம் நம்மைத் தொன்மை காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது.

அழகியல் குறித்த விசாரணைகள் புராதன கிரேக்க காலத்திலிருந்தே பரீட்சயமானவை. ‘அழகு என்றால் என்ன என்று சொல்வாயா?’ என்றார் சோக்ரட்டீஸ் (469-399 BC). இந்த வினாவுக்கான தேடல் இன்றும் தொடர்கின்றது.

உலகில் காணப்படும் காட்சிகளின் அழகினை உய்த்துணர்தலே, அழகியலுக்கு அடிப்படை என்று பிளேட்டோ (428-347 BC) கருதினார். அழகினை எடுத்துக் காட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரு பொதுவான நல்லியல்பு உள்ளது. மனிதன் அழகுடைய பொருட்களில் ஈடுபட்ட பின் அழகிய அமைப்புகளில் ஈடுபடுகிறான். இந்த நிலைக்குப்பின் மனிதன் அழகு என்னும் கருத்தையே துய்க்கும் நிலையை அடைகிறான். ஒழுங்கும் அமைப்பும் அழகுக்கு அடிப்படையானவை. இக்கருத்துக்களை பிளேட்டோவின் ‘சிம்போசியம்’ என்னும் நூலிற் காணலாம்.

கிரேக்க இலக்கியத்திற் காணப்படும் மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக அமைந்தன. மகிழ்ச்சியை ஒரு பொருளில், எழுத்தில் அல்லது ஒலியில் சித்தரிப்பது கலைஞனின் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய்போல் படைப்பதே கலை ஆகும். இதில் பார்த்துச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுத்தத்துவம் இருத்தல் வேண்டும். இக்கருத்தையே அரிஸ்டோட்டில் (384-322 BC) வற்புறுத்தினார்.

காண்ட் (1724-1804) போன்ற மெய்யியலாளர்கள் பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்திய நிலையில் இருக்கும் பொருள்களே அழகுடையனவாகக் கருதப்படல் வேண்டும் என்றும் கூறினார்கள் (வாழ்வியற் களஞ்சியம் ; தொகுதி ஒன்று ; 1991 : 894).

ஹெகல் (1770-1831) முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லை அதற்குப் பயன்படுத்தப்படும் பொருளில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு முன்னர், காண்ட் கூட ‘அழகியல்’ என்ற சொல்லை ‘புலன் அறிவு’ என்ற வகையிலேயே பயன்படுத்தினார். ஹெகல் அதனை அழகியல் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.

காண்ட் மெய்யியல் பற்றிக் கூறிய பல கருத்துக்கள் அழகியல் வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவர் தன்னுடைய ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற நூலில் கூறும் பல கருத்துக்களை மேலும் தெளிவாக ஆழமான கருத்தோடு ஹெகல் முன்வைக்கின்றார். குறிப்பாக உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்ற காண்ட் உடைய எண்ணக் கருக்களுக்கூடாக ஹெகலும் தனது கருத்தை எடுத்துக் கொண்டார். காண்ட் உடைய அழகியல் பற்றிய கருத்து அகநிலை சார்ந்த அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான அறிவியல் சார்ந்த அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஹெகல் அதனை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் வாத அடிப்படையில் அறிவியலுக்கூடாக வெளிப்படுத்தினார். காண்டின் அகநிலைசார்ந்த உய்த்தறிமுறை ஹெகல் உடைய இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறநிலை சார்ந்த கருத்துவாதமாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளார்ந்த பகுதியாகவே அழகியல் அமைகின்றது.

மார்க்சிய அழகியலின் தோற்றமானது, அழகியல் வரலாற்றிலும், கலை விமர்சனத்திலும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திற்று. மனிதனின் உலகு பற்றிய அழகியல் உணர்திறனைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தொகுத்தளிக்க மார்க்சிய அழகியல் உதவுகிறது. இந்த விதிகள் பூரணமாகவும், முழுக்க விரிவாகவும் கலைகளில் தான் வெளிப்படுகின்றன என்று எடுத்துச் சொல்லும் போது, முதன்மையாக அழகியல் என்பது கலையின் சாராம்சம். கலையின் அடிப்படை விதிகள், கலைப்படைப்பாக்கத்தின் இயல்பு ஆகியவை பற்றிய விஞ்ஞானமாக அமைகின்றது. இவ்வாறு அழகியலைப் புரிந்துகொள்ளுதலின் பல்வகைப்பட்ட வெளிப்பாடுகளின் அனுபவங்களை விஞ்ஞான பூர்வமாகத் தெளிவு படுத்துகிறது. இருத்தலுக்கான போராட்டத்தில் மார்க்சிய அழகியல் தற்போது ஓரு முக்கிய களமாகும்.

மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றிய கோட்பாடுகளைத் தனியாக வகுத்துக் கொடுக்கவில்லை. மார்க்சியத்தின் அடிப்படையான இயக்கவியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டும், மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றி அவ்வப்போது உதிரியாகக் கூறியுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுமே மார்க்சிய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மனித இருப்புக்கு ஓர் அழகியல் பரிமாணம் உண்டு என்றும் இது வரலாற்றுரிதியாக வளர்ச்சி பெறுவது என்றும், மனிதப் புலன்கள் விலங்குகளின் புலன்களிலிருந்து வேறுபட்டு மனிதத்துவம் அடைவது. வான்கோவின் மஞ்சளையும் ஆரஞ்சுப் பழத்தின் மஞ்சளையும் வேறுபடுத்திக் காண்கிற கண், கல்யாணி ராகத்தில் ஓர் அபசுரம் தட்டினால் புரிந்துக் கொள்கிற காது, சுவைப்பதன் மூலமாக ஒவ்வொருவகைத் தேனீரையும், மதுவையும் வேறுபடுத்திக் கொள்கிற நாக்கு, குழந்தையின் மிருதுத் தன்மையையும், பூவின் மென்மையையும், பட்டின் மென்மையையும் தொட்டு உணரும் சருமம், குழப்பமான வாசனைகளிலிருந்து பெட்ரோலின் நெடியை, எரியும் ரப்பரின் நாற்றத்தை, அத்தரின் மணத்தை வெவ்வேறாகச் சொல்லும் மூக்கு. இவை உருவாவது மனிதவயப்படுத்தப் பட்ட இயற்கை மூலமாகவே என்றும் மார்க்ஸ் கண்டடைகிறார். முதலாளித்துவ சமூகத்தின் வரலாற்று, பொருளாதாரச் சுழலில் சிதிலமடைந்த மனிதனை மீண்டும் ஒருமுறை முழுமையானவனாகக் காணும் முயற்சியில் தான், மனித இருப்பில் அழகியல் துறையின் மையமான பங்கை அவர் புரிந்து கொண்டார். மனிதன் ஒரு படைப்பாளி என்பதனாலேயே உலகத்தை அழகுமயமாக்காமல் இருக்க அவனால் முடியாது.

‘புலன்கள் தமது செயல்பாடுகளில் நேரடியான தத்துவஞானிகளாக மாறிவிடுகின்றன. மனிதனின் சுயக் கண்ணோட்டத்திலிருந்து அழகியல் உணர்வு உண்டாகின்றது’ என்று “1844 – பாரீஸ் கையெழுத்துப் படிகள்” நூலில் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் (சச்சிதானந்தன் ; மார்க்ஸிய அழகியல் : ஒரு முன்னுரை ; 1985 : 18,22).

அழகியல் துறைப்பிரச்சினைகள் பற்றி மலையளவு நூல்கள் எழுதப்பட்டுள்ளன; எழுதப்படுகின்றன. ஜர்மனிய அழகியல் வாதிகள் (Aestheticians) தங்களுக்கே உரியவாறு வித்தியாசமான கோணங்களில் அழகியலை ஆராய்ந்துள்ளனர். ஆங்கிலய, பிரான்சிய அழகியல்வாதிகள் தங்களுக்கே உரிய நூறு வித்தியாசமான வழிகளில் இப்பிரச்சினையை அணுகியுள்ளனர். காண்ட், ஷெலிங், ஹெகல், ஷோபனவர், றேபட், ஸ்பென்சர் முதலான முன்னணி மெய்யியலாளர்கள் தமக்குரியதனிப்பட்ட சித்தாந்தங்களை இத்துறையில் தந்திருக்கின்றனர் (பார்க்க, எம்.எஸ்.எம்.அனஸ் ; ‘அழகியல் பற்றி அல்-கஸ்ஸாலி’ ; அல்-அக்ஸா வெள்ளி விழா மலர் ; 1980).

வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அவதானிக்கின்ற பொழுது, அழகியல் என்பது கலைத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலைச்சொல்லாகவே (Technical Term) பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. கலை- இலக்கிய அனுபவங்களின் கோட்பாடு ரீதியான பொதுமைப்பாடே அழகியலாகும். கலை – இலக்கியங்களை விமர்சன ரீதியில் ஆராய்வதற்குரிய சாதனமாக அழகியல் உள்ளது என்று பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா ‘விமர்சன மெய்யியல்’ (1989:23) நூலில் குறிப்பிடுகின்றார்.

தமிழில் அழகியல் என்பது அழகை ஆய்வுப்பொருளாகக் கொண்ட ஓர் கற்கை நெறியாகவே கொள்ளப்படுகின்றது. ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (1992:52) அழகியல் என்பதை “(கலைகளில்) அழகைப் பற்றிய கொள்கை” என்றே சொல்கின்றது. அழகியல் என்பது அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும் ஆகும் என்ற கருத்தே பொதுவாக முன்வைக்கப் படுகின்றது.

அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும்தான் அழகியல் என்று கூறுவது பொருத்தமானது அல்ல. அழகுணர்வையும், அழகியலையும் நாம் பிரித்துப்பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் Aesthetic, Aesthetics உள என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. முதலாவது பெயரடை. இரண்டாவது பெயர். இவை இரண்டுக்கும் நிகரான சொல்லாகவே அழகியல் என்ற சொல் தமிழில் பயன்படுத்தப் படுகின்றது. இது பெயரடையாகவும் பெயராகவும் வழங்குகின்றது.

ஆங்கிலத்தில் Aesthetics என்பது பொதுவாக கலை பற்றிய மெய்யியல் (Philosophy of Art ) என்று வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு தனி ஆய்வுத்துறை ஆகும். கலைபற்றிய எல்லா பிரச்சினைகளையும் இது உள்ளடக்குகின்றது. கலை என்றால் என்ன, கலை எவ்வாறு தோன்றுகின்றது, கலையின் பயன்பாடு என்ன, கலையின் பண்புக்கூறுகள் யாவை போன்ற கலையின் பல்வேறு விடயங்களை இது ஆராய்கின்றது. இவ்வகையில் கலைக்கோட்பாடு (Theory of Art) என்பதும் அழகியல் என்பதும் ஒன்றுதான்.

Aesthetic என்பது கலை அம்சம் அல்லது கலைத்துவம் (Artistic), அழகுணர்வு ( sense of beauty) என்ற பொருளில் வழங்குகின்றது. கலைத்துவமும் அழகுணர்வும் ஒன்றல்ல. அழகுணர்வு என்பது பொதுவானது. நமது அழகு பற்றிய உணர்வினை அது குறிக்கும். கலைத்துவம் என்பது குறிப்பானது. அது கலையோடு சம்பந்தப்பட்டது. கலையின் படைப்பாக்கம் அல்லது செய்நேர்த்தி பற்றியது. கலை இலக்கிய விமர்சனத்தில் இந்த இரண்டாவது பொருளிலேயே அழகியல் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது (விரிவான விளக்கத்துக்காக பார்க்க, எம்.ஏ.நுஃமான் ; ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ ; 1987 : 74 – 83).

அழகியல் என்பது கலை ஏற்படுத்தும் பாதிப்பும் அப்பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் கலைஞன் கையாளும் வழிமுறைகளும் அவை சம்பந்தமான கொள்கைகளும் ஆகும். எனவேதான் அழகியல் கலைக்குரிய ரசனையின் இயல்பைப்பற்றி ஆராய்கின்றது.

(000000000000

வரவேற்பு நாள் / பெஷாரா ( அறிமுகப் படைப்பாளி )

Amazing-Natural-Images-1

சமீபகாலமாக பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றன. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சட்டென தோன்றி மறையும் ஒரு நொடிப்பொழுதினில் வாழ்க்கை புதுப்புது அர்த்தங்களுடன் எதையோ கற்றுத்தருகின்றது. முழுமையாக அதனை புரிந்து கொள்ள முடிகின்றதா இல்லையா துல்லியமாக எதனையும் உறுதியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் உள்ளிருந்து பொங்கும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் ஏதோ ஓர் மாறுதலை உணர வைக்கின்றது.

இன்று காலை விடியல் மிகவும் அழகானதாக இருந்தது. தன்னுள் இருந்து ஊற்றாய் பெருகி வரும் எண்ணங்களை அவ்வப்போது என் கணவர் பகிர்ந்து கொள்வார். அதில் பல அற்புதமான விஷயங்கள் பொதிந்திருக்கும்.

ஒரு கவிதை புத்தகத்திற்கான அறிமுக உரையைப்பற்றி அவர் பேச எத்தனிக்கும்போது மொழியின் உருவாக்கம் முதலில் சப்தத்தில் இருந்துதான் உருவாகியிருக்கும். காலப்போக்கில் சப்தங்கள் மேலும் மேலும் மெருகு ஏறி பின் மொழியாக உருமாற வாய்ப்புகள் எப்படி ஏற்பட்டிருக்கும் என தன் கருத்தை விளக்கிக் கொண்டிருந்தார். வழக்கமான வீட்டு வேலைகளை கைகள் தாமாக செய்தபடியிருந்தாலும் கவனம் அவரின் கூற்றின் மீது பதிந்திருந்ததால் மனம் நிறைவாக இருந்தது.

திருமண வரவேற்பு ஒன்றில் கலந்துகொள்ள நாங்கள் பயணப்பட்டோம். வழியில் சந்தோஷமாக பேசியபடி ஒருவரின் நலத்தை மற்றவர் விசாரித்தபடி பயணிக்கையில் என்னவர் காலையில் தான் பேசிக்கொண்டிருந்த தொன்மத்தின் குரல் குறித்த கருத்துகளை மேலும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இசையும் ஓர் வகை சப்தத்தின் வெளிப்பாடாக அமைந்திருப்பதையும் பிறந்த குழந்தை வளர்கையில் தன் தேவைகளின் உணர்வுகளை சப்தத்தின் வாயிலாக தெரிவிக்கையில் அதன் தாய் அதனை சரியாக புரிந்து கொள்ள முடிகின்றது. எத்துனை சரியான உண்மை இது என மனம் வியந்து கேட்டுக் கொண்டிருந்த போது மற்ற உறவுகளின் பேச்சுடன் வேறு திசையில் கலந்துரையாடல் மாறிவிட்டது.

மூடிய ஜன்னல் கதவுகளில் காற்றின் சப்தம் மோதி அது ஓர் வகையான இசையாக வெளிப்படுவதில் மனம் லயிக்கையில் கண்களில் தென்பட்ட மலைத் தொடர்கள் வித்தியாசமாக தன்னை பதிவு செய்து கொள்வதை உணர முடிந்தது. வெறும் கனத்த பாறைகளும் கற்குவியல்களால் பல வழுக்குப் பாறைகளை சுமந்த மலைகளாக இல்லாமல் உயிரோட்டத்துடன் தம்மை வெளிப்படுத்திக்கொண்டன.

தொடர் மழையின் காரணமாக பச்சை பசேலென்றிருந்தன மலைகள். சில இடங்களில் செதுக்கிய சிற்பங்களைப்போல் காட்சி தந்தன. வறண்டிருந்த ஓரிரு மலைகளும் கண் வழி ஊடுருவி புலன்களுடன் தொடர்ந்து எதையோ தமக்கே உரித்தான மொழியில் பேசிக்கொண்டிருந்தன. என்ன ஒரு ஆச்சரியம் வெளுத்த இளநீல வானமும் காற்றின் வேகமான வருடலையும் தாண்டி மலைகள் மிகவும் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தன.

எத்தகு ஒளிவும் மறைவுமின்றி தம்மை மிகவும் கம்பீரமாக வெளிப்படுத்திக்கொண்ட மலைகளின் மொழியில் ஓர் வசீகரமிருந்ததை மறுக்க முடியாது. மலைகளின் உயிரோட்டத் தன்மை கண்களை அதைவிட்டு நகர விடாமல் உள் மனதை ஈர்த்தபடியிருந்தது மிகவும் அதிசயமான நிகழ்வாக இருந்தது.

கல் பேசுமா, பேசுகிறதே. மனதில் பூக்கும் உற்சாகமும் பயணத்தின் அலுப்பே தெரியாமல் மனம் லயித்திருக்கும் விதமே அதன் மொழியின் சாட்சியாக இருக்கிறது. எத்தனை விதமான வடிவங்களில் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. ஆத்மார்த்தமாக கைகுலுக்கி நம்மிடமிருந்து விடை பெறும் போது நிறைவான மனம் சந்தோஷத்தில் துள்ளுகிறது.

பெஷாரா

30-12-2015.

மஞ்சள் வெயில் ( சிறுகதை ) பிரேமா மகாலிங்கம் (சிங்கப்பூர்)

ld1440

ஆயிரத்து ஐநூற்றி ஐம்பது வெள்ளியை ஆயிரமாவது முறையாக எண்ணிவிட்டு, பணத்தை மஞ்சள் நிற சுருக்குப் பையில் போட்டு முடிந்தான் சுந்தரம். அப்பாவின் படத்துக்குக் கீழே உள்ள சின்ன அலமாரியில் வைத்துப் பத்திரப்படுத்தினான். நாளை அவனுக்குச் சம்பள நாள். சம்பளப் பணத்திலிருந்து நூற்றைம்பது வெள்ளியைச், சேமித்து வைத்திருக்கும் பணத்தோடு சேர்த்தால், அவனின் நீண்ட நாளையக் கனவு மெய்ப்படும். இந்த நினைவே அவனுக்கு இரட்டிப்புப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

கொதிக்கும் சாம்பாரில் தாளித்ததைக் கொட்டிக் கிளறிவிட்டு, கொத்துமல்லியைக் கிள்ளிப் போட்டார் கோவிந்தம்மாள். அவ்வப்போது ரசம் கொதிக்காமல் பார்த்துக்கொண்டே சாதத்தை டப்பாவில் அடைத்தாள். இன்னொரு அடுப்பில் வேகும் ‘சாடின் மீன்’ தீய்ந்திடாமல் தீயைக் குறைத்தாள். சாப்பாடு அடிபிடித்தால் சுந்தரத்திற்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். ஆச்சு, சமையல் முடித்து சாப்பாட்டை டப்பாவில் அடைத்து கூடத்திற்கு வருவதற்குள் கோவிந்தம்மாளுக்கு வேர்த்துவிட்டிருந்தது.

“ஏண்டா, அந்தப் பணம் என்ன குட்டியா போடப்போவுது? இல்ல, கால் முளைச்சு ஓடப்போவுதா? தினமும் எண்ணி எண்ணி நோட்டு தேய்ஞ்சிடப் போகுதுடா…!” கோவிந்தம்மாள் கிண்டலாகக் கூறினாலும் தன் மகனின் பொறுப்பான குணத்தை நினைத்துப் பூரித்தாள்.

“அண்ணா, வேலை முடிஞ்சு வரும்போது என்னோட ‘போனுக்கு ப்ரீபேட் கார்டு’ வாங்கிட்டு வா…” கலைந்த தலையும் கசங்கிய நைட்டியுடனும் வந்தாள் மைதிலி.

“சமீபத்தில்தானே வாங்கிக் கொடுத்தேன், அதுக்குள்ளேவா பேசி தீர்த்துட்டே?”

“போன மாசம் வாங்கினது, ஒவ்வொரு மாசமும் ‘டாப்பப்’ பண்ணனும் தெரியாதா?”

“உனக்கு எதுக்கு போன், படிக்கற வேலையை மட்டும் பாரு…”

“நீ சரியான கஞ்சன், எல்லார்கிட்டேயும் போன் இருக்கு, டீச்சரே ‘வாட்ஸ் அப்ல’தான் தகவல் சொல்லுறாங்க…”

“மைதிலி, காலையிலேயே அவன்கிட்ட என்ன வம்பு, போய் குளி, போ” அம்மா அன்றைய சண்டைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார்.

‘நீ அண்ணா பக்கம்தானே பேசுவே, எனக்காக எப்போ பேசியிருக்கிறே?’ என்று கேட்பதுபோல் மைதிலி பாத்ரூம் கதவை படீர் என்று அறைந்து சாத்தினாள்.

“ஏண்டா, அவ இந்தக் காலத்துப் புள்ள, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா”

“நாம ஒண்ணும் பெரிய பணக்காரவங்க இல்ல, கொஞ்சம் சிக்கனத்தைப் பத்தி உம்மவளுக்குச் சொல்லிக்கொடு, செல்லம் கொடுத்துக் கெடுத்துடாதே”

“சரி சரி, வேலைக்குக் கிளம்பு, இந்தாச் சாப்பாடு, இன்னைக்குச் சாம்பார், ரசம், ‘சாடின் சம்பால்’ வச்சுருக்கிறேன்” என்றபடி சாப்பாடு பொட்டலத்தைத் தூக்கிக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

சுந்தரம் தன் இரு கைகளால் உந்தி உந்தி நகர்ந்து வாசலுக்கு வெளியே வந்தான். அம்மா அவனுக்காக விரித்துத் தயாராக நிறுத்தி வைத்திருந்த சக்கர நாற்காலியின் கைப்பிடியைப் பிடித்து, பலமிழந்த கால்களால் எம்பி ஏறி உட்கார்ந்தான்.

முதல் நாள் இரவு மண் தோய்ந்த சக்கரங்களை அலம்பி விட்டிருந்தான். ‘டெட்டொலும் சவுக்காரமும்’ கொண்டு நாற்காலியை நன்றாகத் துடைத்து வைத்திருந்தான். பழைய நாற்காலியாக இருந்தாலும் சுந்தரத்தின் பராமரிப்பில் அது புதுசுபோல பளபளப்பாக இருந்தது.

கோவிந்தம்மாள் சாப்பாட்டுப் பையை வண்டியின் சைடு கம்பியில் மாட்டிக்கொண்டே “பஸ் ஸ்டாப் வரைக்கும் துணைக்கு வரட்டா” என்றாள் தயங்கியபடி. அவனது தன்னம்பிக்கையை நினைத்து வியந்தாலும், அவன் கைகளை மடக்கி உந்தி உந்தி நகருவதைப் பார்த்து உள்ளுக்குள்ளேயே வெம்பி விம்மியது அவளது பெற்ற மனம்.

“உங்க வேலை என்னவோ அதைமட்டும் பாருங்க, பொம்பள புள்ளயை ஒழுங்கா வளர்க்கத் தெரியல….” என்ற முனகலோடு நகர்ந்தான் சுந்தரம்.

அம்மாவின் பரிதாபப் பார்வை தன் முதுகைத் துளைப்பதை உணர்ந்தான். இருந்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுக்காக யாரும் பரிதாபம் காட்டுவதை என்றும் அவன் விரும்பினதில்லை.

****

நான்கு வயதுவரை எல்லாக் குழந்தைகளையும்போல வளர்ச்சியின் பரிமாணங்கள் சுந்தரத்துக்கும் ஒழுங்காகத்தான் இருந்தன. ஆறு மாதத்தில் குப்புறப்படுத்ததும், எட்டு மாதத்தில் தவழ்ந்ததும், ஒரு வயதில் நடந்ததும் எல்லாம் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான். நான்காம் வயதில் கம்பத்துப் பிள்ளைகளுடன் விளையாடும்போது கீழே விழுந்தவன்தான், பின்னர் எழுந்திருக்கவேயில்லை.

பதற்றத்துடன் தூக்கிக்கொண்டு ‘ஆஸ்பித்திரிக்கு’ ஓடிய பெற்றோர்கள் ‘போலியோ’ என்று சொல்லப்பட அதிர்ந்துதான் போனார்கள். வீட்டுக்குத் திரும்பி வந்த அவனுக்கு, நேற்றுவரை நண்பர்களாக இருந்த சிறார்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து விலகுவது அந்தச் சிறு வயதிலும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலும் நிகழ்வுகளில் பங்கேற்பாளனாக இருந்த அந்தச் சிறுவன் நாளடைவில் முழு நேரப் பார்வையாளனாக மாறிப்போனான்.

சுந்தரம் வளர்ந்து பதின்ம வயதை எட்டியபோது ஒண்ணுக்குப் போகக்கூட அம்மாவின் உதவி தேவைப்பட்டபோது ஏராளமாக வெட்கமாகவும் கூச்சமாகவும் உணர்ந்திருக்கிறான். சில வேளைகளில் கூப்பிடத் தயங்கி, இருந்த இடத்திலேயே ஈரம் பண்ணினதுண்டு.

பத்து குடும்பங்கள் பயன்படுத்தும் பொதுக் கழிவறை இனி தன் மகனுக்கு ஒத்துவராது என்று உணர்ந்த சுந்தரத்தின் தந்தை, அவர்கள் வசித்த கம்போங் வீட்டைத் துறந்து அரசாங்கம் கட்டிக்கொடுத்த இரண்டு அறை குடியிருப்புப் பேட்டைக்கு மாறினார்.

****

பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு மின்தூக்கி ‘பொத்தானை’ அழுத்திவிட்டுக் காத்திருந்தான். நல்லவேளை, இப்பொழுதெல்லாம் அடுக்குமாடி கட்டிடங்களின் எல்லாத் தளங்களிலும் மின்தூக்கி இருப்பதால், சுந்தரம் போல் உள்ளவர்களுக்கு வெளியில் போய் வருவது வசதியாக இருக்கிறது.

அந்தக் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களிலெல்லாம் மின்தூக்கி ஒரு சில மாடிகளில்தான் இருக்கும். அவன் வசிக்கும் ஆறாவது மாடியில் மின் தூக்கி இல்லாத காலங்களில், அவன் சக்கர நாற்காலியின் சக்கரத்தைப் பிடித்துக்கொண்டு அதை ஒவ்வொருபடியாகக் கீழே தள்ளி, தானும் இடுப்பினால் இறங்கி ஐந்தாவது தளத்தில் இருக்கும் மின்தூக்கியைப் பயன்படுத்துவான். சில நேரங்களில் தடுமாறிக் கீழே விழுந்து சிராய்ப்புகள் ஏற்பட்டதுமுண்டு. காயங்களைக் கண்டு அவன் என்றுமே கலங்கியதில்லை. நகர முடியாமல் படுத்தப் படுக்கையாக இருப்பவர்களை நினைத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வான். உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் தைரியமாகவே வளர்ந்தவன்.

கீழிறங்கிய மின்தூக்கி கதவுகள் திறந்தபோது, அங்கே சுந்தரத்தின் அண்டை வீட்டுக்காரர் திரு ரஹ்மானும் அவரது மனைவி மைமுனாவும் நின்றுகொண்டிருந்தனர். திரு ரஹ்மான் அவரது பேரன் ஒஸ்மானை தூக்கி வைத்திருந்தார்

“ஹல்லோ சுந்தரம், அட பாயிக்கா?” என்று மலாய் மொழியில் நலம் விசாரித்தார் திரு ரஹ்மான்.

“பாயி” என்று, தான் நலமாக இருப்பதைப் புன்முறுவலோடு கூறி அவரின் பேரனின் உடல்நிலைப்பற்றி விசாரித்தான் சுந்தரம்.

நான்கு வயது ஒஸ்மான் கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டு அவனது கல்லீரல் செயலிழந்து வருவதைச் சுந்தரம் அறிந்திருந்தான். உப்பிய வயிறு, மஞ்சள் பூத்த பெரிய கண்கள் மற்றும் ‘டுயுப்’ பொருத்திய மூக்கு,
அமாவாசையை நோக்கி நகரும் இளம் பிறையாகத் தாத்தாவின் தோளில் சாய்ந்திருந்தான் ஒஸ்மான்
ஒஸ்மானின் பெயர், ‘மாற்று ஈரல் உறுப்பு தான’ பெயர் பட்டியலில் இருப்பதாகவும் அறுவை சிகிச்சைக்குத் தேவையானப் பணத்துக்கு அவருடைய மகனும் மருமகளும் முயற்சி செய்வதாகவும் கூறினார்.

பேசி விட்டு நகர்ந்த சுந்தரத்துக்கு, அந்தச் சிறுவனை விட, தன் நிலை எவ்வளவோ தேவலை என்று தோன்றியது. பேருந்து நிறுத்தத்தை நோக்கி யோசித்துக்கொண்டே நகர்ந்தான் சுந்தரம்.

வேகமாக நகர்ந்த வண்டியிலிருந்து ‘கிரீச் கிரீச்’ என்று சத்தம் வந்து கொண்டிருந்தது.

“ச்சே! எத்தன தடவை எண்ணெய் போட்டாலும் கொஞ்ச நேரத்துக்குதான் கம்முன்னு இருக்கு, அப்புறம் தன் வேலையைக் காட்ட வேண்டியது. உன்னை என்ன செய்யிறேன்னு பாரு ” எரிச்சலோடு பேருந்து நிறுத்தம் நோக்கி முன்னேறினான்.

அவன் அப்பா உயிரோடு இருந்தபோது அவனுடைய பன்னிரெண்டாவது பிறந்த நாளுக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்தது இந்தச் சக்கரவண்டி. அவனுக்குப் பச்சை நிறம் பிடிக்கும் என்பதற்காக, அவர் பல கடை ஏறி இறங்கி இந்தச் சக்கரவண்டியை வாங்கினதாக அவர் சொல்லி ஞாபகம். அதனாலேயே, அதன் பழமையை மீறியும் அதன் மேல் ஒரு பிடிப்பு அவனுக்கு இருந்தது. நகரும்போது வரும் கிரீச்… கிரீச் சத்தமும், அவ்வப்போது கழன்று போகும் செயினும் அவனுக்கு அவஸ்தையைக் கொடுத்தாலும் அந்தச் சக்கரவண்டி, அவனுக்குப் பிரியமாகத்தான் இருந்தது. இப்போதெல்லாம் புதுப்புது வடிவங்களில், வண்ணங்களில் சக்கர நாற்காலிகள் ஆன்லைனிலும், மருத்துவமனைக் கடைகளிலும் கிடைப்பதுண்டு. கொஞ்ச நாளுக்கு முன்னால் வரை, அந்தப் புது தினுசு நாற்காலிகளுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதது போலதான் அவன் நடந்துகொண்டான். அவற்றைக் கவனித்துப் பார்த்ததும் இல்லை, அவற்றின் மீது அவன் ஆசைப்பட்டதும் இல்லை.

‘பாழாய்ப்போன ‘பஸ்’ ஒண்ணு போச்சுன்னா இன்னொண்ணு வரதுக்கு லேட்டா ஆகும்’ என்று நொந்தவாறே விறு விறுன்னு சக்கரங்களைச் சுழற்றினான்.

உச்ச நேரமாதலால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்து நிலையத்தின் அருகாமையில் உள்ள அவனுக்குப் பிடித்த செண்பகப்பூ மர நிழலில் பேருந்திற்காகக் காத்திருந்தான். மஞ்சள் நிற மலர்கள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தன. அவன் சிறுவனாக அந்த தாம்பனிஸ் வட்டாரத்துக்குக் குடி வந்தபோது சிறு கண்ணாக நடப்பட்ட செடி, இப்போது வளர்ந்து கம்பீரமாக நிற்கிறது.

தூரத்தில் பேருந்து வருவது தெரிந்தது. சுந்தரம் வண்டியை நகர்த்த முற்பட்டான். சக்கரங்களுக்கடியில் சிறுசிறு கற்கள் இருந்ததால் மிகுந்த சிரமப்பட்டு வண்டியை நகற்ற வேண்டியிருந்தது. கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருந்தால் வண்டியோடு விழுந்திருப்பான். நல்லவேளையாக அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் வண்டியைப் பின்னால் உருட்டி கற்களைத் தவிர்த்து முன்னால் சென்றான்.

‘ம்.. நானென்ன உனக்கு இளக்காரமா போயிட்டேன்? சீக்கிரமே உன்ன காராங்கோனிக்கிட்ட தள்ளி விடுறேன் பார்…’ என்று வழியெல்லாம் சக்கரவண்டியைத் திட்டிக்கொண்டே சென்றான்.

மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்கும் நிறுவனமொன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுந்தரம் பணிபுரிகிறான். பணிபுரியும் இடத்தில் உடன் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் போல் இல்லாமல் உடன் பிறந்தவர்களாக இருந்தார்கள். எல்லோரும் அன்பாகப் பழகுபவர்கள்.

குறிப்பாக, திரு வாங், ஒரு மேலாளர்போல இல்லாமல் சக தோழனாய் பயணித்து எல்லோரிடமும் சகஜமாய்ப் பழகும் குணம் உடையவர். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எப்படிப் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று பல தருணங்களில் சுந்தரத்திற்குப் புரியவைத்திருக்கிறார். அப்பாவின் மறைவுக்குப்பின் அந்த இடத்தை நிரப்பியது, திரு வாங்தான்.

அதிகாலையிலேயே அலுவலகம் வந்துவிடும் காதர் பாய், தினமும் லேட்டாகவே வரும் ஆரோக்கியசாமி இப்படி நிறைய நண்பர்கள் வெவ்வேறு கனவுகளோடு அந்த நிறுவனத்தில் அவனோடு பணிபுரிகிறார்கள்

அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்றுமொரு மாற்றுத் திறனாளி ‘கம்ப்யூட்டர் குவீன்’ (கணினி அரசி) என்று செல்லமாக அழைக்கப்படும் அகிலா. இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் தன்னம்பிக்கையோடு தினமும் அலுவலகம் வருவாள். உயர்நிலை பள்ளியில் பயிலும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் மரணத்தை வென்று வந்தவள். சுந்தரத்தின் மின் சக்கர வண்டி வாங்க வேண்டும் என்ற ஆசை விதையை விதைத்தவள் அவள்தான்.

அவள் மின் சக்கர வண்டியில் சர்ரென்று வருவதும் போவதும் சுந்தரத்திற்குப் பனித்தரையில் அவள் சறுக்கி வருவதுபோல இருக்கும். வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவளின் அனுமதியோடு சுந்தரம் அந்த வண்டியில் உட்கார்ந்து ஓட்டிப் பார்த்திருக்கிறான். ஒரு பொத்தானை அழுத்தினால் வண்டி முன்னும், இன்னொரு பொத்தானை அழுத்தினால் பின்னும் என இலகுவாக நகர்ந்தது. வலதுபுறமும் இடதுபுறமும் திரும்புவதற்கும் வசதிகள் இருந்தன. அன்று முதல், இதே மாதிரி ஒரு வண்டி வாங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பணம் சேமிக்கத் தொடங்கினான்.

சுந்தரத்திற்கு அந்த அலுவலகத்தில் மிகவும் பிடித்த இடம் அலுவலக டைனிங் ஹால். மதிய உணவு வேளையில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது அவர்களின் வழக்கம்.

சுந்தரம், அம்மா கட்டிக் கொடுத்த மதிய உணவைப் பிரித்தான். சாம்பாரின் ‘கம கம’ வாசம் அனைவரின் கவனத்தையும் அவன் பக்கம் திருப்பியது.

“சுந்தரம் எங்க வீட்டு வெங்காயக்குழம்பை டேஸ்ட் பண்றியா” என்று அகிலா கேட்டாள். உங்க வீட்டுச் சாப்பாட்டை நானும் ட்ரை பண்ணனும்கிறது அதன் அர்த்தம்.

“அடடா ‘சாடின் சம்பாலா’? அதெப்படி உங்கம்மா கவுச்சி வாடை இல்லாமல் செய்யுறாங்க. போன வாரம் என் பெண்டாட்டி செஞ்சா, வாயிலேயே வைக்க முடியுல” என்று எச்சில் ஊறச் சொன்னான் ஆரோக்கியசாமி.

சாப்பிடும்போது ஒவ்வொருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்ததைப் பரிமாறிக் கொள்வார்கள். அவரவர்கள் குறைகளையும் மன உளைச்சல்களையும் மறந்து, உணவோடு அன்பையும் நட்பையும் பரிமாறிக்கொள்ளும் பரஸ்பரங்கள் நிறைந்த இடமாக ‘டைனிங் ஹால்’ காட்சி அளிக்கும்.

“நாளைச் சம்பள நாள், மறக்காமல் சேமிப்புப் பணத்தை எடுத்து வாருங்கள், உங்கள் கனவு நனவாகும் நாள்” சாப்பிட்டுக்கொண்டே அகிலா சுந்தரத்திற்கு நினைவூட்டினாள்.

“ஆஹா, இனிமேல் சுந்தரம் கார் ஓட்டுவதுபோல மின் சக்கர வண்டியை ஓட்டுவார். பலே… பலே!” ஆரோக்கியசாமி உற்சாகமாகக் கூறினார்.

“வெரி ஹாப்பிலா சுந்தரம்” திரு வாங்கும் அவர்களின் மகிழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

மின் சக்கர வண்டியை ஆன்லைனில் ஆர்டர் செய்யவேண்டும். சுந்தரத்திடம் கடன் அட்டை இல்லாததால் திரு வாங்கின் கடன் அட்டையைப் பயன்படுத்தி வாங்கலாம், அதற்கானப் பணத்தை அவரிடம் செலுத்திவிடலாம் என்ற ஏற்பாட்டுடன் அனைவரும் அவரவர் பிரிவுகளுக்குத் திரும்பினர்.

அந்திச் சூரியன் கீழே இறங்கிக்கொண்டிருந்தான். சுந்தரம் வேலை முடிந்து வீடு திரும்பும்போது, அவன் புளோக்கின் பக்கத்தில் இருந்த திடலில் சிறுவர்கள் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுந்தரம் சிறிது நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுந்தரத்துக்கு அவன் விளையாட்டில் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்ட பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன. மெல்ல வண்டியை நகற்றி நகர ஆரம்பித்தான் அவன். அப்பொழுது, விளையாட்டுத் திடலைத் தள்ளி இளைப்பாறுவதற்காகப் போடப்பட்டிருந்த பெஞ்சில், ஒஸ்மானும் அவனது தந்தையும் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தற்செயலாகப் பார்த்தான்.

சவரம் செய்யப்படாத முகத்தோடு தொள தொள உடையில் ஒஸ்மானை ஒரு கையில் அனைத்து மறுகையில் கைப்பேசியைக் காதோடு அனைத்து யாருடனோ மும்மரமாகப் பேசிக்கொண்டிருந்தார் அவனது தந்தை. ஒஸ்மான், தந்தையின் தோளில் சாய்ந்துகொண்டு, சிறுவர்கள் விளையாடும் பந்தையே வைத்தவிழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கும் இங்கும் ஓடும் பந்தைத் துரத்தி அவனது விழிகளும் நகர்ந்தன. அவனின் மூக்கில் பொருத்தப்பட்ட மெல்லிய ‘டியுப்’ அவன் கன்னத்தோடு ஒட்டி காதுக்குப் பின்னால் ஓடியிருந்தது. கீழிறங்கும் சூரியனின் மஞ்சள் கதிர்கள் அந்த வெள்ளை நிற டியுப்பின் மேல் பட்டு, அது இள மஞ்சள் நிறமாகச் சுந்தரத்தின் கண்களுக்குத் தெரிந்தது.

எதேச்சையாக, சுந்தரம் இருக்கும் பக்கம் திரும்பிய ஒஸ்மான், சுந்தரத்தை அடையாளம் கண்டுகொண்டு, உடனே தன் கையை உயர்த்தி அசைத்தான். சுந்தரமும் மெல்லிய புன்னகையை உதிர்த்தான். வானவில்லின் வளையம்போல் தன் கையை அரை வட்டமாக இரண்டு முறை அசைத்தான். பின் தன் வண்டியின் சக்கரங்களை மெல்ல உருட்டிச் சென்றான்.

மறுநாள் காலை, ஆதவனின் மஞ்சள் கதிர்கள் ஜன்னல் வழியே உடுருவி அந்த அறையை வெளிச்சமாக்கியது. சுந்தரம் எழுந்து, குளித்து, அப்பாவின் படத்துக்கு அகர்பத்தி ஏற்றி மனதாரக் கும்பிட்டான். படத்துக்குக் கீழே உள்ள குட்டி அலமாரியிலிருந்து, மஞ்சள் சுருக்குப் பையை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் வந்தான்.

சுந்தரத்திற்கான மதிய சாப்பாடு, மேஜையில் தயாராக இருந்தது. சுட்ட ரொட்டியுடனும் சூடான தேநீர் கோப்பையுடனும் அமர்ந்திருந்தாள் கோவிந்தம்மாள்.

“பணம் பத்திரம்டா” களைத்துப்போன மகனின் கைகளுக்கு ஓய்வு கிடைக்கப் போகும் மகிழ்ச்சியோடு ஒரு துண்டு ரொட்டியைப் பிட்டு வாயில் போட்டாள்.

சுந்தரம் நேராக அம்மாவிடம் வந்து பணத்தை நீட்டினான்.

“என்கிட்ட ஏண்டா கொடுக்குறே, கொண்டுபோய் சூப்பர்வைசர் வாங்கிட்ட கொடு”

“அம்மா…, இந்தப் பணம் என்னைவிட ஒஸ்மானின் பெற்றோருக்குப் பேருதவியாக இருக்கும். இதை நீங்களே அவங்ககிட்ட கொடுத்துடுங்க” கண்களில் நீர்மல்க தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அம்மாவின் கண்களைச் சந்திக்காமல், மேஜைமீது இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, வாசலை நோக்கி உந்தி உந்தி நகர்ந்தான் சுந்தரம்.

இந்திரன் கவிதைகள்

indran5

பின்னகரும் கவிதை

மண்ணில் புரளும் மஞ்சள் சருகுகள்

மீண்டும் மேல் நோக்கிப் பறந்து

கிளைகளில் சென்று ஒட்டிக் கொள்ள

காய்ந்த மரம் பச்சைப் பசேலென துளிர்த்து கனிகளால் குலுங்க

கனிந்த பழங்கள்

மலர்ந்த பூக்களாய் மலர

பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்தவுடன்

பூக்கள் மொட்டுக்களாய்ச் சுருங்க

மரம்

செடியாய் உருமாற

செடி விதைக்குள் சென்று ஒளிந்தது

வாக்குமூலம்

எனக்குள்ளிருந்து பெருகும் வெளிச்சம்

நிர்மலமான நிழலைச் சுவற்றில் தள்ளுகிறது.

நீ கூச்சப் படுகிறாய்

அது உன் ஜாடையில் இருப்பதாய்.

நான் எனும் எறும்புப் புற்றிலிருந்து

வரிசை வரிசையாய் வெளியேறி வரும் எறும்புகள்

தலையில் சுமந்து வரும் அரிசி மணி வார்த்தைகளின் மீது

உனது கையெழுத்து பொறிக்கப் பட்டிருப்பதாய்க் கவலையுறுகிறாய்.

எனக்குள் உருத்திரிபுகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

நீர்ப் பரப்பின் மீது காற்று வரையும் கோட்டுச் சித்திரங்கள்

தங்கமீனாய் தாமரையாய் கரையோரத் தாழம்பூவாய் அதற்குள் தவழ்ந்து வரும் பாம்பாய்த்

தெரிவதாய்ச் சொல்கிறார்கள் குழந்தைகள்.

படிந்த பாசி விலக்கி தெளிந்த நீரில் தேடுகையில்

ஒரு தலைப்பிரட்டையாய் பாசியில் நழுவி மறைகிறது

என் சொந்த முகம்

நீ மென்ற வார்த்தைகளால் நானும்

நான் மென்ற வார்த்தைகளால் நீயும்

அவரவர்க்கான அந்தப்புரங்களைக் கட்டியெழுப்புகையில் திடீரென உறக்கத்திலிருந்து திகைத்து எழுகிறாய்

என் வார்த்தைகள் உன்னை வேவு பார்ப்பதாய்.

நிலவு காயும் நடு இரவில் நாடு விட்டு நாடு பறக்கும்

வெள்ளிப் பறவைகள் போல்.

பறந்து வரும் மின்னஞ்சல் கேள்விகளுக்கு

உன் விரல் நுனியில் அட்சரங்களாய்க்

காத்திருக்கின்றன பதில்கள்

—-

பனிச் சிற்பம்

ஜன்னலில் கசியும் நிலவொளியில்

நீரில் மிதக்கும்

நிலவின் பிம்பமாய் நீ.

அந்தரங்க அறைக்குள்

கனிந்த கொய்யாப் பழ வாசனையாய்

காமத்தின் நறுமணம்.

.

பின்னிரவில்

குடுகுடுப்பைக்காரனின் உடுக்கை ஒலி

தொலை தூர இசையின் சன்னத் துகள்களாய்

கலைந்த படுக்கை விரிப்பின் மடிப்புகளில் வந்து படிகையில்

நாசித் துவாரங்கள் விடைக்க

என்னை பார்வையால் அணைக்கும்

உன் களைத்த விழிகள் சிந்தும் காதலின் குளிரில்

காலம்

ஒரு பனிக்கட்டிச் சிற்பமாய் சமைந்து நிற்கும்.

விழிகளின்

ரகசிய மொழியில் நான் உன்னை அழைக்க

சயனித்தபடி

உன் கரங்களை மாலையாய்க் கழுத்தில் சூட்டுகையில்

மெலிதாய்ப் பரவும் வெப்பத்தில்

திரவமாய் உருகும் பனிக்கட்டியாய்

காலம்

மீண்டும் சலசலத்துப் பாயத்தொடங்கும்.

காதலின் ஈரத்தில் ஊறிய மானுட விதை

மரகதப் பச்சைத் தளிராய்த் துளிர்க்க

நாளையின் நம்பிக்கை வெளிச்சம்

இருட்டில் புல்லாங் குழலிசையாய்

வான வெளியின் திசைகள் தோறும் பரவ

அதை அருந்தித் திளைக்கும் பறவைகளாய்

நீயும் நானும்..

நிலவும் நட்சத்திரங்களும் வெளிறிப் போய்

பேருந்துகளின் டீசல் மணம்

அதிகாலைக் காற்றில் மெலிதாய் மிதக்கையில்

சோம்பல் முறிக்கும் நகரம்

எனக்குள் மின்சாரம் பாய்ச்சி

படுக்கை விட்டெழுப்பும்

நுரையீரல் முழுவதும்

உன் வாசனைகளை நிரப்பியபடி.

—–

கீழ் வெண்மணி தீ வைக்கப்பட்ட குடிசையின் வெளித்தாழ்ப்பாளைப் போட்டது யார் / B.R. மகாதேவன்

Nellu-Movie-Download-Torrent-5

தஞ்சை மாவட்டத்தின் கீழ் வெண்மணி கிராமத்தில் டிசம்பர் 25, 1968-ல் 44 தலித் மக்கள் தீயில் எரிந்து கருகினர். அதில் 20 பேர் பெண்கள் 19 பேர் குழந்தைகள்!

அரைப்படி நெல் கூடுதலாகக் கேட்டதால் பண்ணையார்கள் 44 கூலித் தொழிலாளிகளைக் கொன்றுவிட்டார்கள்; மேலும் கூலித் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பண்ணையார்களின் நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சேரச் சொன்னார்கள். அப்படிச் செய்யாததால் தீவைத்துக் கொன்றுவிட்டார்கள்.

இவைதான் கம்யூனிஸ்ட் கட்சி பிரதானமாக முன் வைக்கும் சித்திரம்.

உண்மையில் நடந்தது என்ன..?

‘நின்று கெடுத்த நீதி’ என்ற தலைப்பில் மயிலை பாலு எழுதி அலைகள் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தைப் படித்தபோது பல கேள்விகள் எழுந்தன.

அதைப் பார்ப்பதற்கு முன் வேறு சில விஷயங்களை முதலில் சொல்கிறேன். அந்த துயரச் சம்பவத்துக்கு கம்யூனிஸ்ட்கள்தான் காரணம் என்று காந்தியவாதிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அதைப் புரிந்துகொள்ளமுடியும். ஏனென்றால், மேல் ஜாதி மற்றும் மேல் வர்க்க மனிதர்களின் மனத்தில் நல்லெண்ணத்தை வரவைத்து அதன் மூலம் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கவேண்டும் என்பதுதான் காந்திய வழிமுறை. கம்யூனிஸமோ இதற்கு நேர்மாறானது. வன்முறை மூலமே சமத்துவத்தை மலரவைக்க முடியும் என்பது அதன் கோட்பாடு. எனவே, காந்தியவாதிகள் கீழ்வெண்மணி துயரத்துக்கு கம்யூனிஸ்ட்களைக் காரணமாகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், தலித்களையும் உள்ளடக்கிய (?!) பிராமணரல்லாதாரின் ஒரே மீட்பராக முன்வைக்கப்படும் ஈ.வே.ரா. கூட கம்யூனிஸ்ட்களையே விமர்சனம் செய்திருந்தார். அதுகூட ஒருவகையில் எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான். ஏனென்றால், தீ வைத்துக் கொளுத்தியவர்களில் ஒருவர்கூட பிராமணர் இல்லை. எந்தப் பக்கம் திருப்பி வைத்தாலும் வட திசையை மட்டுமே காட்டும் காந்த ஊசிபோல், எந்தப் பிரச்னையென்றாலும் பிராமணர்களையே காரணமாகச் சொல்லும் அவருடைய மூளை தீவைத்து எரிக்கச் சொன்னவர் கோபால கிருஷ்ண நாயுடுகாரு என்பதால் அடக்கிவாசித்துவிட்டிருக்கிறார். இன்னொருவகையில் பார்த்தால், கம்யூனிஸ்ட் தலைமைகளில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்பதால் அவருடைய காந்த ஊசி மூளை துல்லியமாக அவர்களையே சுட்டிக்காட்டியதோ என்னவோ. காந்தியவாதிகளும் ஈ.வே.ராவும் ஒத்துப்போகும் விஷயம் இந்த உலகில் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. அதையும் மீறி இந்த விஷயத்தில் அவர்கள் இரு தரப்பினரும் கம்யூனிஸ்ட்களைக் குற்றம் சாட்டியபோதும் அவர்கள் மேல் குற்றம் இருந்திருக்காது என்றே நினைத்துவந்தேன். ஆனால், இந்தப் புத்தகம் சில விஷயங்களை மறுபரிசீலனை செய்யவைக்கிறது.

முகத்தில் அறைவதுபோல் முதலில் தெரியவரும் விஷயம்: தீயில் கருகி இறந்தவர்களின் குடும்பத் தலைவர்களான கம்யூனிஸ்ட்களில் பெரும்பாலானோர் அந்தக் கலவரத்தில் காயங்களோடும் சிராய்ப்புகளோடும் ஓடித் தப்பிவிட்டிருக்கின்றனர். சுந்தரராமசாமி தன் முதல் நாவலில் ஒரு கம்யூனிஸ்ட்டைப் பற்றிச் சொல்லும்போது இதுபோல் ஓடி ஒளிந்ததாகக் கிண்டல் அடித்திருப்பார். முதலில் படித்தபோது அதை அவருடைய அரசியல் வாக்கியமாகவே நினைத்திருந்தேன். ஆனால், அது நடைமுறையைப் பார்த்துச் சொன்னதுதாகத்தான் இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

இதைவிட இன்னொரு அதிர்ச்சி தரும் விஷயம், இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் வீரைய்யன் என்ற தோழர் தெரிவித்திருக்கும் தகவல். அதாவது, 44 பேர் எரிக்கப்பட்டபோது அந்த வீட்டுக்குள் சிக்கிய ஒரு பெண் தன் குழந்தையைக் கூரை வழியாக வெளியே வீசி எறிந்ததாகவும் சுற்றி நின்று கொக்கரித்துக் கொண்டிருந்த பண்ணையார்களில் ஒருவர் அந்தக் குழந்தையைக் கண்டந்துண்டமாக கத்தியால் வெட்டித் தீயில் மீண்டும் வீசி எறிந்து கொன்றதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சாட்சி சொன்ன அறுபதுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவர்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கவில்லை. தீயில் கருகிய உடல்களைப் பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும் அப்படியான எந்த தகவலையும் தெரிவித்திருக்கவில்லை. கீழ்வெண்மணி தீ வைப்பு பற்றி பதிவு செய்த எந்தச் செய்தித்தாளிலும் இந்தச் சம்பவம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அதனால்தான் நீதிபதி கூட பண்ணையார்களும் அவருடைய ஆட்களும் தீவைத்ததால்தான் இந்த எளிய மக்கள் இறந்துவிட்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அந்தக் குடிசைக்குள் 44 பேர் இருப்பது அவர்களுக்குத் தெரியாது. எல்லா குடிசைகளுக்கும் தீ வைத்ததுபோல் இந்தக் குடிசைக்கும் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். உள்ளே மாட்டிக்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டனர் என்று சொல்லியே பண்ணையார்களையும் அடியாட்களையும் குறைந்த தண்டனையுடன் விடுவித்திருக்கிறார்.

சரி அப்படியானால். வீரைய்யன் ஏன் இப்படிச் சொல்கிறார்? ஏனென்றால், பண்ணையார்கள் தெரிந்தேதான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என்பதை நிரூபித்தாகவேண்டிய நிர்பந்தம் ஓடி ஒளிந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இருக்கிறது. எனவே, இந்தப் புனைவை இந்தப் பதிப்பின் முன்னுரையில் எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். மெள்ள மெள்ள அதுவே வரலாறாகப் பலராலும் பிரதியெடுக்கப்பட்டு ஏதேனும் ஒரு சாட்சியின் குரலாகவும் காலப்போக்கில் பதிவுசெய்யப்படலாம். ’உண்மை வரலாறுகள்’ இப்படித்தானே உருவாக்கப்பட முடியும்.

அடுத்ததாக இந்தப் புத்தகத்தில் இருந்து தெரியவரும் இன்னொரு முக்கியமான விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் தமது எதிரிகளாகக் கருதிய 23 மிராசுதார்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்திருக்கிறார்கள். இதுபோல் மடத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கம்யூனிஸக் கோட்பாட்டின்படி அவர்கள் குற்றவாளிகள்தான். ஆனால், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கோ 44 பேரை தீவைத்துக் கொளுத்தியது தொடர்பானது. சம்பவம் நடந்த அன்று யார் யாரெல்லாம் அதில் ஈடுபட்ட்டர்களோ அவர்களை மட்டுமே சட்டம் (ஒருவேளை) தண்டிக்க முடியும். அப்படியிருக்கும்போது நமது எதிரிகள் எல்லாரையும் தண்டிக்கக் கிடைத்த வாய்ப்பு என்று வழக்கில் கோர்த்துவிட்டால் உண்மைக் குற்றவாளிகள்கூட எளிதில் வழக்கை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவார்கள். இதுதான் நடந்தது.

அடுத்ததாக, இந்தப் புத்தகம் சொல்லும் இன்னொரு முக்கிய விஷயம்: கம்யூனிஸ்ட்கள் வெறுமனே அரைப்படி நெல் கூடுதலாகக் கொடுக்கும்படி கை கட்டி வாய் பொத்தி ஒன்றும் கேட்டிருக்கவில்லை. மிக மோசமான முறையில் அடிதடியில் இறங்கியே கேட்டிருக்கிறார்கள். அந்த சம்பள உயர்வைத் தரமுடியாது என்று மறுத்த பண்ணையார்களுடைய வயல்களில் கம்யூனிஸ்ட்கள் அதிரடியாக இறங்கி அறுவடை செய்துள்ளனர். பக்கத்து ஊரில் இருந்து கூலியட்களை அழைத்து வந்து அறுவடை செய்ய முற்பட்ட பண்ணையார்களை எதிர்த்தும் கூலியாட்களை தடுத்தும் அடித்தும் வந்திருக்கிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கீழ்வெண்மணி கம்யூனிஸ்ட் கிளையின் தலைவரில் ஆரம்பித்து அந்தத் தீவைப்பை நேரில் பார்த்த அந்த கிராமத்து நபர்கள் வரை அனைவருமே எங்கள் ஊரில் கூலிப் பிரச்னையே கிடையாது என்றுதான் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

டிசம்பர் 25 அன்று பக்கத்து ஊரில் இருந்து கூலியாட்கள் (அவர்களில் தலித் சாதியினரும் உண்டு; பிற சாதியினரும் உண்டு) வந்து அறுவடை செய்தபோது, நூறுக்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் கும்பலாக வந்து வேலை முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் அவர்களைச் சந்தித்து மிரட்டியிருக்கின்றனர். அந்தக் கூலித் தொழிலாளிகள் பயந்து ஓடி அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் ஒளிந்துகொண்டபோது அவர்களை வீடு புகுந்து அடித்திருக்கின்றனர். இந்தக் கூலித்தொழிலாளிகளை அழைத்து வந்த மேஸ்திரி பக்கிரிசாமியை தூக்கிச் சென்று, கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு மாமா வேலையா பார்க்கிறாய் என்று சொல்லி அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

தமது அடியாளைக் கொன்றது என்பது தமக்கு விடுக்கப்பட்ட சவால் என்று கோபப்பட்டுத்தான் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவருடைய ஆட்களும் ஆத்திரத்தில் கீழ்வெண்மணிக்குள் புகுந்து கம்யூனிஸ்ட்களைத் தேடிக் கொல்ல வந்திருக்கிறார்கள். அனைத்து கம்யூனிஸ்ட்களும் சிட்டாகப் பறந்துவிட்டிருக்கவே வீடுகளுக்குத் தீவைத்தபடியே கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே போயிருக்கிறார்கள் நாயுடு அன்கோவினர். அப்படித் தீ வைக்கப்பட்ட குடிசைகளில் ஒன்றுதான் 44 பேர் பதுங்கி இருந்த ராமையாவின் குடிசை.

இதில் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அப்படி துப்பாக்கியால் சுடப்பட்ட, அருவாள், கத்திகளால் வெட்டப்பட்ட கம்யூனிஸ்ட்களில் ஒருவர்கூட இறக்கவில்லை. அவர்களுடைய காயங்கள் எல்லாம் ஓரளவுக்கு குணப்படுத்த முடிந்தவையே. அதாவது பண்ணையார்(ள்)கள் கொல்லும் நோக்கில் செய்த செயல்களில் ஒரு கம்யூனிஸ்ட் கூட இறக்கவில்லை. வெறும் குடிசைகளைக் கொளுத்தவேண்டும் என்று செய்த செயலில் 44 அப்பாவிகள் இறந்துவிட்டிருக்கிறார்கள். அதிலும் 23 குடிசைகள் தீவைக்கப்பட்டதில் ராமையாவின் குடிசைக்குள் மட்டுமே ஆட்கள் இருந்திருக்கிறார்கள். வேறு எதிலும் யாரும் ஒளிந்திருக்கவில்லை. பெண்களையும் குழந்தைகளையும் பண்ணையார்கள் திட்டமிட்டு அந்த குடிசைக்குள் பூட்டிப் போட்டுக் கொன்றது உண்மை என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்வோம். அப்படிக் கொலை வெறியில் இருந்தவர்கள், கையில் கிடைத்த கம்யூனிஸ்ட்களை என்னவெல்லாம் செய்திருக்கவேண்டும். ஆனால், கம்யூனிஸ்ட்கள் ஒருவருக்குக் கூட உயிராபத்து ஏற்பட்டிருக்கவே இல்லையே.

ராமையாவின் குடிசை ஆவணப்படத்தில்கூட The (not so) Hindu என்.ராம் இது வெறும் கூலி உயர்வுப் போராட்டம் அல்ல; பல ஆண்டுகளாக நடந்த வீரம் செறிந்த போராட்டத்தின் க்ளைமாக்ஸ் என்பதாகக் குறிப்பிட்டிருந்தார். கம்யூனிஸ்ட்களுக்கும் பண்ணையார்களுக்கும் இடையில் ஆட்கடத்தல், வெட்டுக் குத்து, தீவைப்பு என சர்வ சாதாரணமாக பெரும் வன்முறை இரு தரப்பிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பண்ணையார்களின் எண்ணிக்கையும் பலமும் அதிகம் என்பதால் அவர்களால் செய்யப்பட்ட வன்முறை அதிகம் என்றாலும் கம்யூனிஸ்ட்கள் தம்மிடம் அப்போது எவ்வளவு பலம் இருந்ததோ அதை வைத்து எவ்வளவு வன்முறையில் ஈடுபடமுடியுமோ அதை முழுவதுமாகச் செய்து வந்திருக்கிறார்கள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து ஊர்ஜிதமாகிறது.

அரைப்படி நெல் கூடுதலாகக் கேட்டதற்காகக் கொன்றுவிட்டார்கள் என்பது பொது புத்தியில் பரிதாபத்தைக் கிளர்த்துவதற்கான தந்திரம் மட்டுமே. அது தெரிந்திருந்ததால்தான் காந்தியவாதிகளும் ஈ.வே.ராவும் இந்த இழப்புக்கு கம்யூனிஸ்ட்களே காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். காந்தியவாதிகள் அப்படிச் சொன்னதோடு நிறுத்தவில்லை. மாநில அரசிடம் கடனுதவி பெற்று அந்த பண்ணையார்களில் யாரெல்லாம் நிலத்தை விற்கத் தயாராக இருந்தார்களோ அவர்களிடமிருந்து அந்த நிலத்தை தலித் கூலித் தொழிலாளர்களுக்குக் கடனில் வாங்கிக் கொடுத்தார்கள். ஒரு சில ஆண்டுகளில் அந்த மக்கள் தமது பங்கு கடனை அடைத்து முடித்ததும் அரசு எஞ்சிய தொகையை மானியமாகக் கொடுத்து அந்த நிலத்தை எளிய கூலித்தொழிலாளர்களின் பெயருக்கு பட்டாவே போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அப்படியாக காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர் நூற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் வாங்கித் தந்துவிட்டனர்.

உண்மையில் கோவில் நிலங்கள் முழுவதையும் இந்து சக்திகள் நிலமற்ற கூலித் தொழிலாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கவேண்டும். வினோபாவே பூதான இயக்கம் என்ற ஒன்றை நடத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தலித்களுக்கு கொடுத்தார் (புரட்சியைத் தள்ளிப்போடும் முதலாளித்துவ தந்திரம் என்று சொல்லி எள்ளி நகையாடினர் கம்யூனிஸ்ட்கள்). வினோபாவும் காந்தியவாதிகளும் செய்ததை இந்த சமூகமும் அரசும் இன்னும் பெரிய அளவில் முன்னெடுத்துச் சென்றிருக்கவேண்டும். குறிப்பாக ஏழைகளுக்கு உதவுவது உண்மையான நோக்கமாக இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தச் செயல்பாடுகளுக்கு பேராதரவு தந்திருக்கவேண்டும். ஆனால், அவர்களோ இப்படியான சீர்திருத்த நடவடிக்கைகள் புரட்சியைத் தள்ளிப்போடும் முதலாளித்துவ தந்திரம் என்று எட்டி நின்று எள்ளி நகையாடினார்கள். விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் போனதைத் தொடர்ந்து கடைநிலைச் சாதியினருக்கு நிலம் எளிதில் கிடைக்க வழி பிறந்திருக்கிறது. என்றாலும் அந்தப் பிரிவினருக்கு அந்த நிலம் இப்போதும் பெரும் விடுதலையைத் தருவதாக இருக்கிறது என்பதும் அந்த விடுதலையையும் கம்யூனிஸ்ட்கள் பெற்றுத் தரவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களே.

ஆனால், நிலமற்ற அந்தக் கூலித் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தலித்கள் என்பதால் ஈ.வே.ரா. இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எதையும் காட்டியிருக்கவில்லை. கீழ்வெண்மணி சம்பவம் நடந்தபோது கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்ததோடு ஒதுங்கிக்கொண்டுவிட்டார். ஈவேராவின் உடம்பில் இருந்த கண்றுக்குத் தெரியாத பூணூலின் சில இழைகள் கோபால் கிருஷ்ண நாயுடுகாரு வகையறாக்களை எதிர்க்கவிடாமல் தடுத்திருக்கக்கூடும். எனினும் பிராமணர்களிடமும் கோவில்களிடமும் சிக்கியிருந்த நிலங்களையாவது நிலச் சீர்திருத்தம் மூலம் மீட்டெடுத்து கூலித் தொழிலாளர்களுக்குத் தர முயற்சிகள் எடுத்திருக்கலாம். நம்மளவாளையும் அது பாதிக்கும் என்பதால் சிறுநீர் கலயத்தைத் தூக்கிக்கொண்டு வேறு திசைக்கு ஓடிவிட்டார்.

உண்மையில் தஞ்சைப் பகுதியில் வெகு காலமாகவே பண்ணையார்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வந்திருக்கிறது. நாகப்பட்டனம் தாலுக்காவில் இருந்த கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மேஜைக்குப் பின்னால் அமர்ந்திருந்த கம்யூனிஸ்ட் தலைவர்தான் கீழ்வெண்மணி போன்ற கிராமங்களுக்கான செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்துவந்திருக்கிறார். அவருக்கு தமிழக, தில்லி தலைமைகள் திட்டம் வகுத்துத் தந்திருக்கின்றன. அவர்களுக்கு ரஷ்யாவும் சீனாவும் திட்டம் வகுத்துத் தருகின்றன, கிறிஸ்தவர்களுக்கு போப் திட்டம் வகுத்துத் தருவதைப்போல்!

இந்த தில்லி தலைமைதான் மத்திய அரசு தொழிற்சங்கக் கோரிக்கை ஒன்றுக்காக செப்டம்பர் 1968-ல் ஒரு போராட்டம் நடத்தியது. அதற்கு ஆதரவாக கீழ்வெண்மணி கூலித் தொழிலாளியும் வேலைக்குப் போகாமல் தடுக்கப்பட்டார் (ஆனால், கீழ்வெண்மணி மக்கள் கொல்லப்பட்டபோது எந்த மத்திய தொழிற்சங்கமும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. சொந்த பந்தங்களைப் பறிகொடுத்துத் தவித்த இந்த மக்களுக்குத் தமது ஒரு மணி நேர சம்பளத்தைக் கூடக் கொடுத்து உதவியதாகத் தெரியவில்லை). இப்படியான வேலை நிறுத்தங்களினால் கோபப்பட்ட பண்ணையார்கள், 20 ரூபாய் அபராதம் தந்தால்தான் வேலைக்கு வரமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை அந்தக் கூலித் தொழிலாளர்கள் தமது கையில் இருந்துதான் தரவேண்டியிருந்தது, தில்லி தலைமையோ ரஷ்யாவோ சீனாவோ தரவில்லை. அல்லது ரஷ்ய-சீனப் பணம் கூலித் தொழிலாளிக்கு வந்து சேரவில்லை.

அதன் தொடர்ச்சியாக பண்ணையார்கள் 20 ரூபாய் அபராதம் கட்டியதோடு நிறுத்தினால் போதாது. இந்த கூலித் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படிச் செய்யவில்லையென்றால் ரூ 250 அபராதம் விதிக்கப்படும் என்கிறார்கள். விஷயம் நாகப்பட்டணம் கம்யூனிஸ்ட் தலைவருக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. அவர் மேலிடங்களுக்குத் தெரிவித்து அபராதம் கட்டவேண்டாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. கூலித் தொழிலாளர்கள் அதைச் சென்று பண்ணையார்களிடம் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு விலகாவிட்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் பண்ணையார்கள்.

இப்படியாக கீழ்வெண்மணிக் களம் மெள்ளக் கொதிநிலைக்கு உயர்ந்துகொண்டிருந்த நிலையில் டிசம்பர் 25 அன்று பக்கத்து ஊரில் அறுவடை செய்துவிட்டு வந்தவர்களை அடித்து விரட்டியும் அவர்களை அழைத்து வந்த மேஸ்திரி பக்கிரிசாமியைத் தூக்கிச்சென்று வெட்டிக் கொன்றும் போடுகிறார்கள் கம்யூனிஸ்ட்கள். கீழ்வெண்மணி கிராமத்தின் ஹரிஜன நடுத்தெருவில்தான் பக்கிரிசாமியின் வெட்டுப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் கீழ்வெண்மணிக் குடிசைகளில் விழுந்த முதல் பெரு நெருப்பு. தனது ஆளை வெட்டிக் கொன்ற கம்யூனிஸ்ட்களைக் கொன்று குவிக்கும் நோக்கில்தான் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான கோபால கிருஷ்ண நாயுடு தலைமையில் அடியாட்கள் திரண்டுவந்து வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு எழும் இரண்டு முக்கிய கேள்விகள் : குடிசைகளுக்குத் தீ வைப்பதென்பது சகஜமான வன்முறைச் செயல்பாடாக இருந்துவந்திருக்கும் நிலையில் எதிர்த்துத் தாக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் குடிசைகளை விட்டுத் தப்பித்து ஓடுவதுதானே வழக்கம். இதற்கு முன்னால் நடந்த அனைத்துக் கலவரங்களிலும் அப்படித்தானே செய்திருக்கிறார்கள். இம்முறை மட்டும் ஏன் ஒரே குடிசைக்குள் அனைவரும் ஒளிந்துகொண்டனர்? யார் சொன்னதால் இப்படிச் செய்தனர்?

ராமையாவின் குடிசை வீட்டின் முன்பக்க அறையில் ஒளிந்திருந்த சிலர் கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் அந்த வீட்டை நோக்கி வருவதைப் பார்த்ததும் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து 44 பேரும் ஓடித் தப்பியிருக்கலாமே. ஏன் வீட்டுக்குள் போய் முடங்கினர். தப்பித்து ஓட நேரமும் வலுவும் இல்லை என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்க முடிவெடுத்தனரா..? வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தால் உள்ளே யாரும் இல்லை என்று நினைத்துப் போய்விடுவார்கள்; இல்லையென்றால் அவர்கள் கையில் சிக்கி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று நினைத்து பூட்டிவிட்டுப் போகும்படிச் சொல்லியிருந்தார்களா? அப்படியொன்றும் முந்தைய கலவரங்களில் பாலியல் வன்முறைகள் இருந்திருக்கவில்லையே. சபிக்கப்பட்ட அந்த இரவில் அந்தக் குடிசைக்குள் அவர்கள் ஏன் பதுங்கிக்கொண்டனர். வெளித் தாழ்ப்பாள் எப்படிப் போடப்பட்டது?

இத்தனைக்கும் கீழ்வெண்மணி கம்யூனிஸ்ட் தலைவர் முதல்கொண்டு அந்த கிராமத்தில் இருந்த ஆண்களில் பெரும்பாலானோர் ராமையாவின் குடிசையின் இரு பக்கமும் இருந்த சந்தின் வழியாக ஓடி அவருடைய வீட்டுக்குப் பின் பக்கம் இருந்த வேலியை உடைத்துக்கொண்டு வயல்வெளிக்குப் போய் உயிர் தப்பியிருக்கிறார்கள். அப்படியானால், அந்த 44 பேர் மட்டும் அப்படி ஓடித் தப்பிக்க முயற்சி செய்யாமல் வீட்டுக்குள் ஒளிந்ததன் காரணம் என்ன..? அந்த கிராமத்தில் அந்த இரவில் அங்கு இருந்த சுமார் 400, 500 பேரும் வயல்வெளி, தோப்பு, குட்டை என ஓடித் தப்பித்திருக்கும் நிலையில் இந்த 44 பேர் மட்டும் ஏன் தீ பிடிக்க வாய்ப்பு இருந்த குடிசைக்குள் போய் ஒளிந்தார்கள்? கூரைக்குத் தீவைக்கப்பட்டாலும் தமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தார்களா..?

இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் பற்றி அரசு தரப்பு மருத்துவர் தெரிவித்திருக்கும் அறிக்கையில் அனைவரும் மூச்சு முட்டி இறந்தாகவே தெரிவித்திருக்கிறார்.

எட்டுக்கு ஐந்து நீள அகலம் கொண்ட ஒரு அறைக்கு மேலே இருக்கும் கூரையில் இருந்து வரும் தீயால் நாலைந்து பேரைக்கூடக் கொல்ல முடியாது. அந்த அறைக்குள் மாட்டிக்கொண்டதால் கார்பன் டை ஆக்ஸைடையும் கார்பன் மோனாக்ஸைடுயும் சுவாசித்து மயங்கி விழுந்து மூச்சு முட்டி இறந்திருக்கிறார்கள் (இவ்வளவு சிறிய அறைக்குள் 44 பேர் அடைபட்டுக் கிடந்ததும் ஒருவர் மேல் ஒருவராக இறந்து விழுந்து கிடந்ததும் விளக்கமுடியாத விஷயங்களே) அந்த அறையின் மூன்று பக்கச் சுவர்களுக்கும் நான்காவது பக்கக் கதவுக்கும் அப்பால் ஒரு எட்டு வைக்க முடிந்திருந்தால்கூட அவர்கள் உயிர் தப்பியிருக்க முடியும். அந்த அறையில் ஒரு ஜன்னல் இருந்திருந்தால்கூட அதில் இருந்து கிடைத்த ஆக்ஸிஜனை சுவாசித்துப் பலர் தப்பிக்க முடிந்திருக்கும். ஆனால், உள்ளே மாட்டிக்கொண்டவர்களின் பயமும் மயக்கமும் சேர்ந்து அவர்களை முடக்கிவிட்டிருக்கிறது. யாரேனும் ஒரு கம்யூனிஸ்ட் அவர்களைக் காப்பாற்ற நினைத்திருந்தால் உள்ளே குதித்து அவர் முதுகில் ஒவ்வொருவராக ஏறி எரிந்த மேல் கூரையைத் தள்ளிப் போட்டபடி வெளியேறி இருக்க முடியும். அல்லது அந்த ஒரு கம்யூனிஸ்ட் வெளித் தாழ்ப்பாளைத் திறந்து எளிதில் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இத்தனைக்கும் கலவரம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த கிராமத்துக் கிளையின் கம்யூனிஸ்ட் தலைவரும் வேறு முக்கிய பிரமுகர்களும் ராமையாவின் குடிசைக்கு முன்னால் நின்றுகொண்டு ஏதோ ஒரு விஷயம் குறித்து கலந்துபேசிகொண்டுதான் இருந்திருக்கிறார்கள். பண்ணையார்களின் கையாள் பக்கிரிசாமி கொல்லப்பட்டது அவர்களுக்குத் தெரியும். பண்ணையாரின் ஆட்கள் அடிக்கவருவார்கள் என்பதும் தெரியும். எப்படி ஓடித் தப்பிக்க வேண்டும் என்று கலந்து பேசியவர்கள் ராமையாவின் குடிசைக்குள் ஒளியவிருந்தவர்களைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை? அல்லது அப்படி அந்த மக்கள் அங்கு மடத்தனமாக ஒளிவார்கள் என்பதை அவர்களும் எதிர்பார்த்திருக்கவில்லையா?

அதோடு மொத்தம் இருந்த ஐந்து ஹரிஜனத் தெருக்களில் மூன்றில் இருந்த வீடுகள் மட்டுமே எரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வீடுகளில் பானை, சட்டி நீங்கலாக வேறு எந்தப் பொருளுமே இல்லை. அதாவது நெல் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த பக்கிரிசாமியைக் கொன்றதும் பிற கூலியாட்களை அடித்ததும் தெரியவந்தால் பண்ணையார்கள் அடியாட்களுடன் வந்து வீடுகளை எரிப்பார்கள் என்பதை யூகித்து அந்த ஹரிஜனங்கள் எல்லாரும் தமது வீட்டில் இருந்த சொற்ப முக்கிய பொருட்களை எல்லாம் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இதன் பிறகும் 44 பேர் ஒரே குடிசைக்குள் மாட்டிக்கொண்டு இறக்க இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்கமுடியும். ஒன்று அவர்களை யாரோ சிலர் உள்ளே விரட்டி வெளியே தாழ்ப்பாள் போட்டுத் தீவைத்திருக்கவேண்டும்; அல்லது அவர்கள் உள்ளே இருப்பது தெரியாமல் வெளிப்பக்கம் தவறுதலாக யாரோ பூட்டிவிட்டுச் சென்றிருக்கவேண்டும். ஜனநாயக (ரஞ்சக) விக்கிபீடியாவின் ஆங்கில வெர்ஷனில் பண்ணையார்கள் தீ வைத்தபடி அந்த வீட்டைச் சுற்றி நின்று கொக்கரித்ததாகவும் வெளியே தப்பித்து வந்த ஆறு பேரில் இரண்டுபேரை மறுபடியும் அடித்துத் தீயில் தூக்கிப் போட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் வெர்ஷனில் அந்த சீன் இல்லை.

அவர்களை உள்ளே தள்ளிப் பூட்டித் தீவைத்ததாக சம்பவ இடத்தில் இருந்த, பாதிக்கப்பட்ட எந்த நபரும் சாட்சி சொல்லவில்லையென்பதால் அப்படி நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. அப்படியானால், பிறகு எப்படித்தான் வெளித்தாழ்ப்பாள் போடப்பட்டது? துப்பாக்கியால் சுட்டபடியும் தீப்பந்தம் ஏந்தியபடியும் கூக்குரலிட்டபடி பாய்ந்து வந்த பண்ணையாரின் கும்பலைப் பார்த்ததும் எதிர்த்து நிற்க முடியாது என்று தெரிந்து ஓடிவிட்டிருந்த கம்யூனிஸ்ட்களில் ஒருவர் கூடவா இந்த அப்பாவி மக்களையும் ஓடித் தப்பிக்கும்படிச் சொல்லியிருக்கவில்லை. அல்லது தீப்பந்தங்களுடன் வருபவர்கள் குடிசைக்குத் தீவைத்தால் மாட்டிக்கொண்டு இருந்துவிடுவோமே என்ற அடிப்படை புரிதல் கூடவா அந்த மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இதற்கு முன் நடந்த அத்தனை தீ வைப்புகளிலும் குடிசைகளை விட்டு ஓடித் தப்பிக்கத்தானே செய்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முடிவுகட்ட கூட்டுத் தியாகமா செய்திருக்கிறார்கள்?

தென்பரையிலிருந்து வெண்மணிவரை என்றொரு நூலில் வேறொரு தகவல் இடம்பெற்றிருந்தது. அதாவது கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் தீவைத்தபடியே வந்தபோது கம்யூனிஸ்ட்கள் வயல்வெளிகளுக்கும் வீடுகளின் பின் பகுதிகளுக்கும் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். அப்படி ஓடும்போது, எதிரிகளை பயமுறுத்தும் நோக்கில் ஏ மேலூரானே வேல் கம்பை எடுத்துட்டு வா… ஏ கீழூரானே அருவாளை எடுத்துட்டு வா என்று குரல் எழுப்பியபடியே போயிருக்கிறார்கள். அதாவது கம்யூனிஸ்ட்களும் அடிப்பதற்கு பக்கத்து ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பதுபோல் சத்தம் போட்டால் ஒருவேளை கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் கொஞ்சம் பயந்து விலகக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அப்படிச் செய்தார்களாம். ஒருவேளை அப்படி வெளியூரில் இருந்து வந்தவர்கள் எந்தக் குடிசைக்குள் இருந்தாலும் வெளியே வர முடியாமல் தடுக்கும் வகையில் கோபால கிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் எல்லா வீடுகளுக்கும் வெளியில் தாழ்ப்பாள் போட்டுத் தீவைத்துச் சென்றார்களா? அப்படி எதிர் தரப்பின் ஆயுததாரிகளைக் கொல்லும் நோக்கில் செய்த செயலுக்கு எளிய மக்கள் பலியாகிவிட்டனரா? அல்லது கம்யூனிஸ்ட்கள் தெரிந்தே தமது சொந்தபந்தங்களை அந்தக் குடிசைக்குள் விட்டுவிட்டுச் சென்றனரா..?

இப்படியானதொரு போர்வியூகத்தை நாம் பல இடங்களில் கேட்டிருக்கிறோம்தானே… சதாம் ஹுசேன் மக்கள் அடைக்கலம் புகுந்த மசூதிக்குள் ராணுவ டாங்கிகளைப் பதுக்கி வைத்தார்; வானில் இருந்து டாங்கிகளை அடையாளம் காட்டும் ரேடார்கள் அந்த மசூதிகளை குண்டு வீசித் தாக்கின; அதைக் காட்டி அமெரிக்கப் படைகள் அப்பாவிகளைக் கொல்கின்றன என்று அவர்கள் மேல் பழிபோட்டதைப் பார்த்திருக்கிறோம்.

இலங்கையில் கூட கடைசி கட்ட யுத்தத்தில் மருத்துவமனைக்குள் இருந்தபடி விடுதலைப் புலிகள் சிங்கள விமானங்களைத் தாக்கியிருக்கிறார்கள்; ஏவுகணைகள் வரும் இடத்தைக் குறிவைத்து பதிலுக்கு அவர்கள் வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். அதில் அப்பாவி மக்கள் கொல்லப்படவே நோ ஃபயர் ஜோனுக்குள் இருந்த மருத்துவமனைகளில் குண்டுவீசும் சிங்கள விமானங்கள் என்று அந்த நிகழ்வுகளை உலகுக்குக் காட்டியிருக்கிறார்கள் புலிகள். மருத்துவமனைப் பகுதிக்குள் புலிகள் ஏவுகணைகளைக் கொண்டு வந்த உடனேயே செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. சதாமுக்கும் பிரபாகரனுக்கும் அவர்களுடைய மக்கள் வெறும் பகடைக்காய்களே. கீழ்வெணி மக்கள் யாருடைய பகடைக்காய்களாக இருந்தனர்? ராமையாவின் குடிசை தீ வைக்கப்பட்டதற்கு பண்ணையாரின் கொடூரமா.. எளிய மக்களின் கூட்டுத் தியாகமா.. கம்யூனிஸ்ட்களின் பகடையாட்டமா… அல்லது அது ஒரு விபத்தா… எது காரணம்?

இதில் இன்னொரு சந்தேகமும் வருகிறது. குடிசைக்குள் மாட்டிக்கொண்டவர்கள் உயிர் போகும் தறுவாயில் கூக்குரல் எழுப்பியிருப்பார்கள். அது நிச்சயம் அங்கு இருந்த தீ வைப்பு கும்பலுக்கும், வயல், தோப்பு, புதர்கள், குட்டைகளில் பதுங்கியிருந்த கம்யூனிஸ்ட்களுக்கும் கேட்டிருக்கும். அவர்களில் யாராவது ஒருவர் பாய்ந்து சென்று அந்த வீட்டின் தாழ்ப்பாளைத் திறந்திருக்கலாம். ஆனால், ஒருவரும் செய்யவில்லை. கம்யூனிஸ்ட்கள் உயிர் பயத்தில் தப்பி ஓடியிருக்கிறார்கள். பண்ணையார் கும்பலோ தீ வைத்தபடியே தெருத்தெருவாகப் போய்க்கொண்டே இருந்திருக்கிறது. அந்த ஊர் முழுவதுமே கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்ததால் குடிசைக்குள் மாட்டிக்கொண்டவர்களின் கூக்குரலும் அதோடு கலந்துவிட்டிருக்கிறது. எனவே, ராமையாவின் குடிசைக்குள் 44 பேர் மாட்டிக்கொண்ட விவரம் யாருக்குமே தெரியாமல் போய்விட்டிருக்கிறது. ஒருவேளை பண்ணையார் கும்பலுக்கு சிலர் உள்ளே மாட்டிக்கொண்டிருப்பது தெரிந்திருந்தால் சுற்றி நின்று யாரும் வெளியே வராதபடி கொக்கரித்து நின்றிருப்பார்கள். ஆனால், அந்தக் கொடூர நிகழ்வு பற்றிய பிற்காலப் புனைவெழுத்துகளில் தான் அப்படியான ஒரு காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறதே தவிர நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன கம்யூனிஸ்ட் உட்பட யாரும் அப்படியான ஒரு சம்பவத்தைப் பற்றி எதுவும் சொல்லியிருக்கவில்லை. எனவே, அப்படி ஒன்று நடந்திருக்கவில்லை என்பதே ஊர்ஜிதமாகிறது. ,

இந்தக் கொடூர சம்பவம் நடந்தபோது ஆட்சியில் திமுக இருந்தது. ஈ.வே.ரா.வின் வாரிசுகள் என்பதால் பிராமண வில்லன்கள் இல்லாததால் இந்த விவகாரத்தை வெறும் ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னை போலவே கையாண்டனர். குற்றம் சாட்டப்பட்ட பண்ணையார்கள் உயர் வர்க்கத்தினர். நிலபுலன்கள், கார் பங்களாக்கள் வைத்திருக்கக்கூடியவர்கள்; அவர்கள் நடந்து சென்று தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை என்று 1973-ல் தீர்ப்பு வழங்கப்பட்டதும் தலித்களின் சம்பந்தியான அதே திமுக கருணாநிதியின் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சியோ மூப்பனார் வகையறாவுக்கு ஆதரவாகவே நடந்துகொன்றது. கோபால கிருஷ்ண நாயுடுகாருவே காங்கிரஸ் பிரமுகர்தான். ஏழைப்பங்காளர் எம்.ஜி.ஆரும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.

அதன் பிறகும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக, திமுக கட்சிகளுக்கு காவடி தூக்கியே காலத்தை ஓட்டிவருகின்றன. வெற்றியை ஈட்டித் தரமுடியவில்லையென்றால் எதற்காகப் போரைத் தொடங்கவேண்டும் என்று நிச்சயம் கேட்க முடியாதுதான். ஆனால், தோல்விகளை இந்த அளவுக்கு நேசிப்பார்கள் என்றால் மக்களைப் பணையம் வைத்து இந்த பயங்கர விளையாட்டில் ஏன் ஈடுபடவேண்டும்? கோட்டையைப் பலப்படுத்திய பிறகுதான் போர்க்கொடியைப் பறக்கவிட்டிருக்கவேண்டும் என்று நிச்சயம் சொல்லமுடியாது. சில போர்கள் தொடங்கப்பட்டாகவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எதிரி படையெடுத்து வந்ததும் மக்களை அவர்களிடம் அம்போவென்று விட்டுவிட்டு ஓடுவது கேவலமல்லவா? யானைக்கூட்டம் சிங்கம் புலிகளால் முற்றுகையிடப்பட்டால் குட்டிகளையும் முதிய யானைகளையும் உள்ளே விட்டுவிட்டு ஆண் யானைகள் பாதுகாப்பு வளையத்தை அமைத்துக்கொள்ளும். அந்த யானைகளைக் கொன்ற பிறகே ஒரு புலி குட்டிகளையும் முதியவர்களையும் நெருங்கமுடியும் இங்கோ கம்யூனிஸ்ட்கள் அப்பாவிகளைத் தனியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல என்பதுதான் உண்மை. அதாவது அரசியல் பாடமும் வன்முறைப் பயிற்சியும் பெற்ற கம்யூனிஸ்ட்கள் அல்ல. எளிய தலித் கூலித் தொழிலாளர்களே. அவர்கள் ஊரில் நாட்ட முடிந்த கம்பத்தில் கதிர் அருவாள் கொடி பறந்திருக்கலாம். அவர்களுடைய தோளில் சிறப்பு நிறத் துண்டு போட்டிருந்திருக்கலாம். ஆனால், அடிப்படையில் அவர்கள் இந்து மதத்தின் கடைநிலையில் இருந்த எளிய மனிதர்கள். ஆண்டைகள் 20 ரூபாய் அபராதம் விதித்ததும் கட்டிவிட்டு களத்தில் இறங்கும் எளிய மனிதர்கள். அவர்களைக் கொம்பு சீவிவிட்ட பெருந்தலைவர்கள் எல்லாம் நாகப்பட்டணத்திலும் சென்னையிலும் தில்லியிலும் சொகுசாக தூங்கிக்கொண்டிருந்த அந்த இரவில் இந்த மக்கள் மட்டும் காலனைத் தனியாகச் சந்திக்க வேண்டிவந்தது.

திருமாவளவன் கீழ்வெண்மணிக் கலவரத்தை தலித்கள் மீதான போராகவே சித்திரிக்கிறார். கொல்லப்பட்ட 44 பேரும் தலித்கள் என்பதால் இது கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான வன்முறை அல்ல என்பது அவருடைய வாதம். கம்யூனிஸ்ட்களோ, இறந்தவர்கள் தலித்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு போராட்ட உணர்வை ஊட்டியது கம்யூனிஸ்ட் இயக்கமே என்பதால் அது கம்யூனிஸ்ட் புரட்சியே என்கிறார்கள். கடந்த ஆண்டுவரை டிசம்பர் 25-ல் வீரவணக்கம் செலுத்த இரு தரப்பும் தனித்தனியே வந்துபோவதுதான் வழக்கம். இந்த முறை மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இரு தரப்பும் ஒன்று சேர்ந்து போஸ் கொடுக்கக்கூடும். அல்லது அந்த மேடையிலேயே சண்டையிட்டுப் பிரியவும் கூடும். உண்மையில் அந்த மக்கள் இவர்கள் இருவரையும் தமது பிரதிநிதிகளாகப் பார்க்கவே இல்லை. தீ வைப்பு நடந்தபோது ஆட்சியில் இருந்ததோடு குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சொற்ப தண்டனையுடன் விடுவித்த திமுகவுக்கும் இந்த விஷயத்தில் பெரிதாக எந்த நன்மையும் செய்யாத அதிமுகவுக்குமே ஆதரவு தந்துவருகிறார்கள். ஆண்டைகள் மோசமானவர்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மீட்பர்களாகச் சொல்லிக்கொண்டு வந்த கம்யூனிஸ்ட்கள் அதைவிட மோசமானவர்கள் என்பதை கீழ்வெண்மணி அவர்களுக்குக் காட்டிவிட்டதுபோல.

எதிரிகளை வெல்வதற்கு முன்பாக, யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுடைய ஆதரவைப் பெறுவது அவசியம். இந்த அடிப்படை பலம்கூட இல்லாமல் வெறும் ஊடக ஊடுருவல், அந்நிய நிதி ஆகியவற்றின் மூலம் இயங்குவதிலேயே மனநிறைவடைவது அந்த மக்களுக்கு மட்டுமல்ல கொள்கைக்கும் கட்சிக்கும் சேர்த்து இழைக்கும் மாபெரும் துரோகமே.