Category: இதழ் 96

நன்றி அறிதல் / சிபிச்செல்வன்

download (3)

வணக்கம் நண்பர்களே

மலைகள் 96 ஆவது இதழ் இன்று பதிவேற்றம் பெற்றிருக்கிறது. இந்தத் தருணத்தில் மலைகள் இதழில் பங்கேற்ற படைப்பாளிகள் மொழிபெயர்ப்பாளர்கள் வாசகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றி சொல்வது சம்பிராதயமானது அல்ல. நீங்கள் அனைவரும் கொடுத்துவரும் உற்சாகமான வரவேற்பு என்பது உண்மையில் என்னை மேலும் பெரும் பரவசத்துடன் மலைகள்இதழைக் கொண்டு வர வைக்கிறது

கடந்த நான்கைந்து இதழ்களுக்கு முன் எழுத்தாளர் வண்ணதாசன் கதை வெளியிட்ட போது மலைகள் இதழ் பெரியளவில் வாசகர்களின் வருகையால் டிராபிக் ஜாம் ஆனாதால் இரண்டு நாள் இயங்கவில்லை என்பது உண்மையில் உங்களுக்கு கிடைத்த வெற்றி என்பதாகவே கருதுகிறேன்

சரி சிபிச்செல்வன் என்கிற மலைகள் ஆசிரியனின் பணி என்னவெனில் உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிடுகிற ஒரு இணைப்பு பாலம் அவ்வளவுதான்.
மலைகள் இதழ் 100 ஆவது இதழை நோக்கி பயணிக்கிறது என்பதை பலராலும் ஏற்றுக்கொள்ள இயலாமல் கேலியும் கிண்டலும் செய்வதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சிலர் வெளிப்படையாக தங்களது நிலையைத் தெரிவித்தாலும் பலர் தங்களின் வட்டத்தில் கொதித்துக்கொண்டிருப்பதையும் அறிவேன்.

இந்த மலைகள் இதழ் இலக்கியத்திற்காக வருகிற இதழ். இதில் தனிப்பட்ட என் விருப்பு வெறுப்புகளை சுமந்து வருவதில்லை என்பதையும் இதழ் தொடக்கத்தில் மலைகள் குழு என ஒன்று உருவாகாமல் பார்த்துக்கொள்வேன் என நான் சொன்னபோது பலரும் நம்பவில்லை . ஆனால் அதை உண்மையாக்க நான் தொடர்ந்து இயங்கிபடி இருப்பதை பார்ப்பவர்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள்

அதேபோல இந்திய எழுத்தாளர்கள் என குறிப்பிட்ட வட்டத்திற்குள் ( தமிழக எழுத்தாளர்கள் ) இயங்காமல் பல வெளிநாடுகளில் இருந்து இயங்குகிற எழுத்தாளர்களின் படைப்புகளையும் மலைகள் தொடர்ந்து வெளியிடுகிறது. குறிப்பாக இலங்கை , மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலிருந்தும் பல எழுத்தாள நண்பர்கள் தங்களது பங்களிப்பை உற்சாகமாக வழங்கி தங்களது ஆதரவை இலக்கியத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்
இவர்களை தொடர்புகொள்ள இணையம் ஒரு காரணம். அவர்களின் நட்பைப் பேண முகப்புத்தகமும் இ மெயிலும் எளிதாக்கியிருக்கின்றன.

இந்த நண்பர்களுக்கும் மலைகள் தன்னுடைய சிறப்பான வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறது
மலைகள் இதழில் தங்களுடைய பங்களிப்பாக மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வழங்கி உற்சாகப்படுத்தி வரும் நண்பர்க ஆறுமுகப் பிள்ளை மற்றும் ஸ்ரீதர் ரங்கராஜன் மற்றும் பாலகுமார் மற்றும் சத்தியப்ரியன் ஆகியோருக்கும் இங்கே தனியாக நன்றி சொல்வது வெறும் வார்த்தைகள் அல்ல . அல்லது மரபானதும் அல்ல. அவர்கள் மலைகளின் செழுமைக்கு தஙகளது உத்வேகமான பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்

இங்கே புதியவர்களுக்கும் பெரிய எழுத்தாளர்களுக்கும் ஒரே மாதிரியான அங்கீகாரம்தான் கொடுக்கப்படுகிறது.
எல்லா விஷயங்களிலும் என்னோடு ஒத்துழைக்கிற நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
உங்களின் ஒத்துழைப்போடு மலைகள் இன்னும் பல சாதனைகளை செய்யும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்

நன்றி

உங்கள்

சிபிச்செல்வன்

ஆசிரியர்

மலைகள் இணைய இதழ்

••••••

குறிப்பு
மலைகள் 100 ஆவது இதழுக்கு உங்களின் சிறந்த படைப்பாக்கங்களை உடனே அனுப்ப முயல வேண்டுகிறேன்

பொத்ரியார், யார்? ( விவாதம் / எம்.ஜி. சுரேஷ்

download

‘நமது யுகத்தில் உண்மை இறந்து விட்டது; நாம் உண்மையின் நகல்களுடன் வாழ்கிறோம்’ என்று அவர் அறிவித்த போது அனைவரும் அதிர்ந்தனர். அதன் பிறகு அவர் சர்ச்சைக்குரிய மனிதராகத் தோற்றம் தந்தார்.

அவரைப் பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்!

‘அவர் பின் நவீனத்துவத்தின் மதகுரு’

‘இல்லை, அவர் பின் நவீனத்துவத்தின் எதிரி’

‘அவர் ஒரு சமூகவியலாளர்’

‘இல்லை, இல்லை அவர் அதற்கு எதிராக இயங்கியவர்’

இப்படியெல்லாம் பலரையும் பலவிதமான அபிப்ராயங்களுடன் அலைய வைத்தவர் அவர்.அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அனைவரையும் தவிக்க வைத்தவர்.

யார் அந்த நூதன மனிதர்?

அவர் ஒரு ஃபிரெஞ்சுக்காரர். பெயர்:ழீன் பொத்ரியார்.

அவர் எந்தச் சிந்தனைப் பள்ளிக்கும் உரியவர் அல்ல; எவ்விதக் கல்வித்துறைக்கும் உரிமை கொண்டாடியவரும் அல்ல. மிகப்பெரிய சர்ச்சைக்குரிய, எந்தக் குழுவின் முத்திரையும் தன் மீது விழுந்து விடாமல் தனித்திருந்த,அதே சமயம் ஃபிரான்சின் முன்னணி வரிசைச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவராக வைத்து மதிக்கப்படுபவர் அவர்.

ழீன் பொத்ரியார் ஜூலை மாதம் 1929ம் ஆண்டு வடகிழக்கு ஃபிரான்சில் உள்ள ரெய்ம்ஸில் பிறந்தார். அவரது குடும்பம் கிராமத்திலிருந்து நகரத்துக்குப் பெயர்ந்த விவசாயிகளின் குடும்பம். பொத்ரியாரின் தாத்தாவும் பாட்டியும் விவசாயிகள். அடுத்த தலைமுறையான அப்பாவும் அம்மாவும் அரசு ஊழியர்கள். சிறுவனாக இருந்த பொத்ரியார் தன் ஆரம்பக் கல்வியை லைஸீயில் படித்தார். பின்னர் சிறு இடைவெளிக்குப் பின்னர் உயர்கல்வி கற்க பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவர் குடும்பத்தில் முதன் முதலாகப் பல்கலைக்கழகம் வரை சென்று படித்தவர் இவரே. ஃபிரான்சில் உள்ள சோர்போன் பலகலைக்கழகத்தில் ஜெர்மன் மொழி பயின்றார். 1960ம் ஆண்டு வாக்கில் பொத்ரியாருக்கு ஃபிரெஞ்சு சிந்தனையாளர்களான லெஃபெவர் மற்றும் ரொலாண்ட் பார்த் ஆகியோரின் நட்பு கிடைத்தது.லெஃபெவர் பொத்ரியாரை சமூகவியல் படிக்குமாறு தூண்டினார். அதுவரை கல்வித்துறையின் எந்தப் பிரிவின் மீதும் ஆர்வம் இல்லாமல் இருந்த பொத்ரியார் சமூகவியலைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அதில் தனது ஆய்வையும் முடித்தார்.

ஒரு பள்ளியில் சாதாரண ஜெர்மன் மொழி கற்பிக்கும் ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் துவக்கிய அவர், பாரிஸில் உள்ள நாண்டியரில் உதவிப் பேராசிரியராக உயர்ந்தார். 1986ம் ஆண்டு பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சமூகப் பொருளாதாரக் கல்வித்துறையில் சேர்ந்தார். அதன் பிறகான அவரது பிற்கால வாழ்க்கை தான்தோன்றியாக இருந்தது. அவரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மன்றாடி அழைத்தன. அந்த அழைப்புகளையெல்லாம் புறக்கணித்தார். அது ஒரு புதிர். 1986ல் சோர்போன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேடு ஒன்றைச் சமர்ப்பித்துவிட்டு அடுத்த ஆண்டே தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். இது இன்னொரு புதிர். அதன் பிறகு தொடர்ந்து புத்தகங்கள் எழுத ஆரம்பித்தார். பின்பு திடீரென்று புத்தகங்கள் எழுதுவதிலிருந்து விலகி புகைப்படங்களை எடுத்துத்தள்ளினார். தத்துவவாதியான இவர் புகைப்படங்கள் எடுப்பது; புகைப்படக்கண்காட்சி நடத்துவது; புகைப்படங்கள் பற்றிப் புத்தகங்கள் எழுதுவது என்று தனது வாழ்க்கையைச் செலவிட்டார். இப்படி இவர் வாழ்க்கை ஒரு வித திட்டமிடப்படாத தன்மையுடன் இருந்தது. இதுவே மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

தொடக்கத்தில் பொத்ரியார் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். பீட்டர் வெய்ஸ், பெர்டோல்ட் ப்ரெக்ட், வில்ஹெல்ம் முஹல்மான் போன்றோரின் புத்தகங்களை ஜெர்மன் மொழியிலிருந்து ஃபிரெஞ்சு மொழியில் பெயர்த்தார். சில காலம் புத்தக மதிப்புரைகள் எழுதினார்.

பொத்ரியாரின் சமகாலத்தில் இயங்கியவர்களாக தெலூஸ், லியோதார், கிறிஸ்தேவா, ஃபூக்கோ, தெரிதா, லக்கான் ஆகியோரைச் சொல்லலாம்.இவர்களில் பலர் அப்போது அமைப்பியலிலிருந்து விலகி பின் அமைப்பியல்வாதிகளாக உருவாகிக் கொண்டிருந்தார்கள். பொத்ரியாரோ அவசரப்பட்டுப் பின்-அமைப்பியலை ஆரத்தழுவிக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக முந்தைய வரவான சசூரின் அமைப்பியல் மீதே பொத்ரியாரின் கவனம் சென்றது.

சசூர் கண்டடைந்த அமைப்பியலின்படி அர்த்தம் என்பது ‘வித்தியாசப்படுதலில்’ இருக்கிறது. அதாவது யானை, பூனை, பானை போன்ற சொற்களில் உள்ள முதல் எழுத்து வித்தியாசப்படுவதால் அச்சொல்லுக்கான அர்த்தம் பெறப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்களுக்கு அர்த்தம் ஏதும் இல்லை; ஆனால் போக்குவரத்து சிக்னல்களில் அடுத்தடுத்து வைத்து அமைக்கப்படும் போது அவற்றுக்கு நில், கவனி, புறப்படு போன்ற அர்த்தங்கள் பெறப்படுகின்றன. அமைப்பியலின் போதாமை என்னவென்றால் அது எல்லவாற்றையும் அஃறிணையாகப் பார்த்தது. ஒரு சொல்லுக்கான அர்த்தம் என்பது அதில் இல்லை. ஒரு சொல்லின் அர்த்தத்தை உருவாக்க இருவர் தேவை. ஒருவர் பேசுபவர்; இன்னொருவர் புரிந்து கொள்பவர். இந்த இரண்டு பேரைப் பற்றி அமைப்பியல் கண்டுகொள்ளவில்லை. அமைப்பியலின் இத்தகைய போதாமை காரணமாக அதன் மீது போர் தொடுத்தவர்கள் பின் அமைப்பியல்வாதிகளாக உருவானார்கள். ஃபூக்கோ, தெரிதா, கிறிஸ்தேவா போன்றோர் வேறு விதமான அணுகுமுறையில் இயங்கினார்கள். பொத்ரியாரின் அணுகுமுறை வேறுவிதமாக இருந்தது.

சசூரின் அமைப்பியல் கோட்பாடு சொல்வது போல் அர்த்தம் என்பது ‘வித்தியாசத்தில்’ இல்லை. ‘வராமை’(ஆப்சென்ஸ்)யில் இருக்கிறது, என்றார் பொத்ரியார். அதாவது, யானை என்பது யானையாக இருப்பதற்குக் காரணம் அந்த யானை என்ற சொல் யானை என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துவதால் அல்ல. பானை, பூனை போன்றவற்றை அது கூறாமல் இருப்பதுதான். எனவே, அர்த்தம் என்பது ‘இருப்பதில்’ இல்லை; ‘வராமை’யின் அடிப்படையில் இருக்கிறது. தவிரவும், அர்த்தம் என்பது சுயமேற்கோள்களால் ஆனது. பொருட்கள், பொருட்களின் படிமங்கள், சொற்கள், குறிகள் ஆகியவை அர்த்தம் என்ற வலைப்பின்னலில் இருப்பிடம் கொண்டிருக்கின்றன என்பது பொத்ரியாரின் கருத்து. இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே அவர் தனது கோட்பாட்டை உருவாக்கினார். பொத்ரியாரைப் பெரிதும் பாதித்த நூல், லெஃபேவர் எழுதிய, ‘அன்றாட வாழ்க்கை மீதான திறனாய்வு’ என்பதாகும். அந்த நூலில் மார்க்ஸ் தொழிற்சாலை சார்ந்து முன் வைக்கும் ‘அந்நியமாதல்’ தன்மை எப்படி தொழிற்சாலைக்கும் அப்பால் விரிந்து வியாபித்து நிற்கிறது என்று விளக்கியிருந்தார். இந்த நூல் பொத்ரியாரின் மனத்தில் ஒரு வித உள்ளொளி பாய்ச்சியது.மேலும், அப்போது நடந்து கொண்டிருந்த அல்ஜீரியப் போரை இடது சாரிகள் எதிர்த்தது பொத்ரியாரின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் விளைவாக அவருக்கு அரசியல் பால் ஆர்வம் வந்து சேர்ந்தது. போதாக்குறைக்கு ஃபிரெஞ்சு அறிவுஜீவியான ழீன் பால் சார்த்தரின் நட்பு வேறு கிடைத்தது. சொல்ல்வும் வேண்டுமா? சாதாரண கல்லூரிப்பேராசிரியராக இருந்த பொத்ரியார் என்ற மனிதர் இந்த நூற்றாண்டின் மகத்தான சிந்தனையாளராக உருவாக இந்தப் பின்னணிகள்தான் காரணமாக இருந்தன.

2

1960 களில் ஃபிரான்ஸ் பிரசவ வலியை அனுபவித்துக் கொண்டிருந்தது. நவீனமயமாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, ஏகபோக முத்லாளியம் ஆகியற்றின் புணர்ச்சியின் விளைவாக ஒரு புதிய ஃபிரான்ஸை பழைய ஃபிரான்ஸ் சூல் கொண்டிருந்தது. அந்தப் புதிய ஃபிரான்ஸின் பெயர் நுகர்வோர் சமூகம்.

யார் இந்த புதிய சமூகம்?

மரபார்ந்த மார்க்ஸீயத்துக்கு இப்படி ஒரு புதிய சமூகத்தின் விதைகள் பரவி ஒரு புது வித மகரந்தச் சேர்க்கை நிகழக்கூடும் என்று தெரிந்திருக்குமா? வாய்ப்பே இல்லை. ஏனெனில், மார்க்ஸ் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நவீனமயமாக்கல், முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியம் போன்றவை குறித்து மட்டுமே சிந்தித்தார். தொழிற்சாலை ஒரு தொழிலாளியை எவ்விதம் அந்நியமாக்குகிறது என்பது பற்றி மட்டுமே கவனம் செலுத்தினார். ‘முதலாளித்துவம் தனிமனிதனின் தனிப்பட்ட ஆற்றல்களை அடக்கி வைக்கிறது. ஒரு தொழிலாளி என்பவன் தான் பணி புரியும் தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்துக்குப் பயன்படும் ஒரு சிறு மனிதத்துண்டமாகக் குறுக்கப்ப்டுகிறான். மனிதன் மற்றும் அவன் உழைப்பு ஆகியவற்றின் சாராம்சத்தை பணம் அந்நியமாக்கிவிடுகிறது’ என்றார் கார்ல் மார்கஸ். மேலும், கார்ல் மார்க்ஸ் உற்பத்திக்கு தந்த கவனத்தை நுகர்வோருக்குத் தரவில்லை என்பது முக்கியமானது. இந்த விஷயத்தில் லெஃபேவர் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். ‘கட்டுப்படுத்தப்பட்ட நுகர்ச்சியை கையில் வைத்துக்கொண்டு நம்மை ஆளும் அதிகார அமைப்பின் கீழுள்ள சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதிலிருந்து நம்மை விடுவிக்க ஒரு புரட்சி தேவை. அது மார்க்ஸ் சொல்லும் புரட்சி போன்றதல்ல. நாம் நமது அன்றாட வாழ்க்கை மூலம் அடையக் கூடிய புரட்சி அது’ என்றார் அவர். இந்தச் சிந்தனை பொத்ரியாரைச் சிந்திக்க வைத்தது. பொத்ரியார் லெஃபேவரின் நண்பர் மட்டுமல்ல. சார்த்தரின் நண்பரும் கூட. அவரது ‘லெ டெம்ப்ஸ் மாடர்ன்ஸ்’ இதழில் பல கட்டுரைகள் எழுதியும் இருக்கிறார். சார்த்தரின் கொள்கைகளான ‘அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவுஜீவி’ மற்றும் ‘மார்க்ஸீயத்துடனான சுதந்திரமான உரையாடல்’ ஆகியவற்றில் பொத்ரியாருக்கு உடன்பாடு இருந்தது.

‘நவீன சமூகம் தனது உறுப்பினர்களிடையே நம்பகத்தன்மைய்ற்ற உறவுகளையே உற்பத்தி செய்கிறது’ என்று புகார் எழுப்பிய பொத்ரியார் இதிலிருந்து விடுபட வேண்டுமானால், ’வாழ்க்கையில், வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் வாயிலாகச் சேகரிக்கப்படும் தத்துவார்த்த ஞானத்தின் மூலம் மட்டுமே அது சாத்தியம்’என்று பதிலும் சொன்னார்.

கார்ல மார்க்ஸ் வர்க்க முரண்பாடுகள் பற்றிப் பேசுகையில், ’பொருளாதார ஆய்வின் மூலம், உற்பத்தி செய்யப்பட்ட சரக்குக்கும், அதன் தொடர்பாக நிலவும் வர்க்க முரண்பாடுகள் குறித்தும் அடையாள்ப் படுத்த முடியும்’ என்றார்.

பொத்ரியாரின் சிந்தனை வேறு மாதிரி இருந்தது.

‘ஒரு சரக்கு உற்பத்தி செய்யப்பட்ட பின் அதன் இலக்கு முதலாளியோ அல்லது தொழிலாளியோ அல்ல. அந்தச் சரக்கு நுகர்பவனுக்குரியது.அவனைக் குறி வைத்தே சரக்கு உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, சமூக ஒழுங்கின் அடிப்படை உற்பத்தியில் இல்லை; நுகர்வில்தான் இருக்கிறது’ என்ற ரீதியில் சிந்தித்த பொத்ரியார் தனது முதல் இலக்காக,’மக்கள் கூட்டத்தின் நுகர்வு’ பற்றிய திறனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்.

அத்தகைய ஆய்வை எப்படி மேற்கொள்ளலாம். அதற்கான கருவியாக எதைக் கொள்வது?

அத்தகைய ஆய்வுக்கான கருவியாக அமைப்பியல் பயன்படும் என்று அவருக்குத் தோன்றியது. மனிதன் வாழ்க்கையால் உருவாக்கப்பட்டவன் அல்ல; மொழியால் உருவாக்கப்பட்டவன் என்று அமைப்பியல் சொல்கிறது. எல்லாமே குறிகள் சார்ந்தவை. நுகர்வு பற்றிய ஆய்வுக்கு இந்த அணுகுமுறை பயன்படும் என்று அவர் முடிவுக்கு வந்தார். மனிதன் வாழ்க்கையால் உருவாக்கப்படுவதாக இது வரை வந்திருக்கும் சாத்திரங்கள் சொல்கின்றன. ஆனால் அமைப்பியல் மட்டுமே மனிதன் மொழியால் உருவாக்கப்பட்டவன் என்கிறது. அத்தகைய அமைப்பியல் மூலம் மட்டுமே தனது ஆய்வை வெளிப்படுத்த முடியும் என்று அவர் முடிவு செய்தார்.

1968ம் ஆண்டு ஃபிரான்ஸ் கொந்தளித்தது. அந்த ஆண்டில் மே முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ஃபிரான்ஸில் 10 மில்லியன் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதில் மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அதற்குச் சற்று முன்னதாக – அப்போது ஃபிரான்ஸில் இருந்த – முற்போக்கு எழுத்தாளர்களும், கலைஞர்ளும் ஒன்று சேர்ந்து தங்களை ‘தருணவாதிகள்’(சிச்சுவேசனிஸ்ட்ஸ்} என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இத் தருணவாதிகள் நவீனத்துவத்தின் மீதான போர் தொடுத்தார்கள். கலாசாரம் என்பது செத்த உடல்; அரசியல் என்பது ஒரு கண்காட்சி; ஊடகம் என்பது அளவான உண்மைகளை மட்டும் வெளியிடும் சாதனம் இவற்றைக் கையில் வைத்திருக்கும் எல்லா அதிகார அமைப்புகளையும் தூக்கி எறிய வேண்டும் என்று அவர்கள் பிரகடனம் செய்தார்கள். இத்தருணவாதிகள் மாணவர்களின் எழுச்சிக்குக் காரணமாக இருந்தார்கள். தருணவாதிகளில் ஒருவரான கை எர்னஸ்ட் டிபோர் அப்போது வளர்ந்து கொண்டிருந்த நுகர்வோர் சமூகத்தை ‘கண்கொள்ளாக்காட்சியை எதிர் கொள்ளும் சமூகம்’ என்று விமர்சித்தார். மூலதனம் மூலதனமாக மட்டும் பெருகவில்லை. அது பிம்பங்களாகவும் பெருகுகிறது.அந்தப் பிம்பங்கள் கால்பந்தாட்டப் போட்டிகள், ஓவியக்கண்காட்சிகள், தொலைக்காட்சிப்பெட்டி விளம்பரங்கள் என நீள்கின்றன. இவையே கண்கொள்ளாக்காட்சிகள் எனலாம். இக்கண்கொள்ளாக்காட்சிகளை தொலைக்காட்சிப் பெட்டி வினியோகிக்கிறது. இவை பிம்பங்களின் தொகுப்பு மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே உற்பத்தி செய்யப்படும் புதிய உறவுகளும் கூட.

ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்ட மே 1968 புரட்சி விரைவிலேயே சத்தமின்றி அட்ங்கியது. பொத்ரியார் இதை நம்பிக்கையின்மையுடன் பார்க்கவில்லை. இதை ’சூழலின் அடக்குமுறை’ என்றார். ’நுகர்வு நிகழ்த்தும் கண்கொள்ளாக்காட்சி’ என்பது சமூகத்தைத் தன்னுள் இணைத்துக் கொள்வதுடன் அதனைச் சுதந்திரமின்றி கட்டுக்குள் கொண்டு வருகிறது என்றும் சொன்னார். பொருட்களை உற்பத்தி செய்வதும் அவற்றை விற்பனை செய்வதும் ஒரு புதிய எல்லைக்குள் முதலாளித்துவத்தைப் பிரவேசிக்கச் செய்திருக்கிறது. அது ஒரு புதிய சமூகத்தை உற்பத்தி செய்திருக்கிறது. அதன் பெயர் ‘பணம் புழங்கும் சமூகம்’ (அஃப்ளுயண்ட் சொஸைடி) என்று அறிவித்தார் பொத்ரியார். அதைத் தொடர்ந்து அவரது வேலைத்திட்டம் உருவானது. பிற சிந்தனையாளர்கள் அமைப்பியலைக கடந்து பின் அமைப்பியலை நோக்கிப் பயணம் செய்த போது பொத்ரியார் அமைப்பியலை அடிப்படையாக வைத்தே தனது கருத்தியலை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொத்ரியாரின் முதல் புத்தகம் 1968ம் ஆண்டு வெளி வந்தது. அதன் தலைப்பு, ’பொருட்களால் ஆன அமைப்பு’ (தி சிஸ்டம் ஆஃப் ஆப்ஜெக்ட்ஸ்).இந்த நூலில் பொத்ரியார் பொருட்கள் என்று குறிப்பிடுவது பண்டங்களையே. முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் பண்டங்களையும் அந்தப் பண்டங்களால் ஆன அமைப்பு எவ்விதம் ஒரு குறிகளால் ஆன அமைப்பாக மாறுகிறது என்பது பற்றி அதில் விவரித்திருந்தார். உற்பத்தி செய்யப்பட்ட பண்டம் எவ்விதம் ஒரு தொழிலாளியை அன்னியமாக்குகிறது என்பது பற்றி மார்க்ஸீயம் பேசுகிறது. பொத்ரியாரோ பண்டங்கள் குறிகளாக மாறும் போது எவ்விதம் ஒரு சமூகம் அன்னியாதலைச் சந்திக்கிறது என்பது குறித்து விவரித்தார். அவரது இரண்டாவது நூலான, ‘நுகர்வோர் சமூகம்’ (1970) என்ற பிரதியில், ஒரு பணம் புழங்கும் சமூகத்தில் உற்பத்தியை விட நுகர்வுதான் மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது என்று விவாதித்தார். இதன் மூலம் பொத்ரியார் நவீனத்துவத்துவத்தின் பரிணாம வளர்ச்சி பின் நவீனத்துவ நிலவரமாக எப்படி மாறுகிறது என்னும் உரையாடலைத் துவக்கி வைத்தார்.

பொத்ரியாரின் முதல் இரண்டு புத்தகங்களும் முதலாளித்துவ சமுதாயம் பற்றி சுயசிந்தனையுடன் எழுதப்பட்ட புத்தகங்கள் எனலாம். சமூகவியலில் ஒரு முக்கியமான ஆய்வை முன் வைக்கின்றன.

3

பொத்ரியாரின் முதல் இரண்டு நூல்களும் விமர்சனரீதியில் அமைப்பியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இருந்தன. இரண்டுமே சிந்தனையில் சுயத்தன்மை கொண்டிருந்த போதிலும், வெளிப்படுத்தப்பட்ட பாணியில் லெஃபேவர் மற்றும் பார்த் ஆகியோரின் பாதிப்புடன் இருந்தன. லெஃபேவரின் மார்க்ஸியத்தின் மீதான விமர்சனப் பார்வை மற்றும் பார்த்தின் மொழியியல் சார்ந்த குறியியல் விமர்சனம் ஆகியவற்றின் தாக்கம் பொத்ரியாரின் மேல் இருந்ததுதான் இதற்குக் காரணம். பின்னாளில் அவர் எழுதிய நூல்க்ளில் அத்தகைய பாதிப்புகள் ஏதுமின்றி விலகி நின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

அவரது இரண்டு நூல்களில் மார்க்ஸீயம் மற்றும் அல்தூஸரியத்துக்கு எதிராக ஒரு முக்கியமான கருத்தை வைக்கிறார். வர்க்கபேதமுள்ள் ஒரு சமூகத்தில் நுகர்வுத்தன்மையானது பணப்புழக்கத்தின் மூலம் எந்த அளவுக்கு வர்க்கப் பிளவை மீறிய ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது என்பதை அவர் விளக்குகிறார்.

மனிதனை விலங்கிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதே ‘உழைப்பு’ என்பது கார்ல் மார்க்ஸின் சிந்தனை. இது உழைப்பை விதந்தோதும் சிந்தனை. பொத்ரியாரோ இதை வேறு விதமாகப் பார்க்கிறார். ‘உழைப்பு என்பது ஒரு குறி(sign). அது உழைப்புக்கு பயன் மதிப்பு (use value) என்ற அர்த்தத்தைத் தருகிறது. இந்த அர்த்தம் மனித விழுமியங்க:ளினூடே ஊடுருவிச் செல்கிறது.

உற்பத்தி என்பது பொருளாதாரம் சார்ந்த விஷயம் அல்ல. அது உழைக்கும் மனிதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயம். உழைப்பாளியை விதந்தோதும்போது உழைப்பு என்பது ஒரு அறமாக மாறிவிடுகிறது.

கூலி ஏறலாம், இறங்கலாம். முதலாளிக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. உழைப்பை ஒரு அறமாகத் தொழிலாளி கைக்கொள்ளும் வரை அவருக்கு ஏது கவலை? தொழிற்சங்கங்கள் கூலிக்கான பேரம் பேசுகின்றன. அவை முதலாளிக்கும் தொழிலாளிக்கும் மத்தியில் நிகழும் செயல்களுக்கு உடந்தையாக இருக்கின்றன. இதன் மூலம் அவை சுரண்டல் மற்றும் விடுவிப்பு ஆகிய குறிகளை அந்தரத்தில் வைக்கின்றன.

வேலை நிறுத்தம் என்பது ஒரு வன்முறை. மூலதனத்தின் வன்முறைக்கு எதிரான வன்முறை. மூலதனம் ஈட்டும் உபரி மதிப்பை, அதாவது, லாபத்தைத் தொழிலாளர்கள் பறித்துக் கொள்ளும் வன்முறை.

‘நமது யுகத்தில் பொருள் உற்பத்தி நுகர்வைத் தூண்டவில்லை. நுகர்வுத்தன்மைதான் பொருள் உற்பத்தியைத் தூண்டுகிறது.’ என்ற தனது புதிய சிந்தனையை பொத்ரியார் முன் வைத்தார்.

4

மார்க்ஸுடன் முரண்பட்ட பொத்ரியார் அடுத்ததாக முரண்பட்டது பின் நவீனத்துவவாதிகளில் ஒருவரான மிஷல் ஃபூக்கோவுடன் என்பது முக்கியமானது.

1977ல் பொத்ரியார் ஒரு கட்டுரையை எழுதினார். அதன் தலைப்பு: ‘ஃபூக்கோவை மறப்போம்’. இந்தக் கட்டுரை பல பின் நவீனத்துவ சிந்தனையாளர்களின் புருவங்களை உயர்த்தியது. அது வரை பொத்ரியாரை பின் நவீனத்துவவாதிகளில் ஒருவராக மதித்து வந்த பலரும் குழப்பத்துக்குள்ளானார்கள். அவர் பின் நவீனத்துவவாதியா அல்லது அவர்களின் எதிரியா?

ஃபூக்கோவின் முக்கியமான பங்களிப்பு ‘உரையாடல்’ (discourse) என்பதாகும். அவர் தனது நூல்களில் அதிகாரத்தின் உரையாடல் குறித்தே பேசுகிறார். அவருடைய பாலுறவு வரலாறு என்ற நூலில், ‘அதிகாரம் பாலுறவு சார்ந்த உரையாடல்களைத் தடை செய்யவில்லை. மாறாக, அவற்றை உற்பத்தி செய்கிறது’ என்று எழுதினார். பொத்ரியார் அதை நிராகரித்தார்.

‘உடலுறவின்போது, அதிகாரம் என்பது ஒரு உடல் இன்னொரு உடலின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த ஆதிக்கத்தை ஃபூக்கோ, அதிகாரத்தின் உரையாடல் என்கிறார். அதுவே, அதிகாரத்தின் உண்மையும், யதார்த்தமும் ஆகும்’ என்கிறார். ஆனால். உண்மை வேறு. நவீனத்துவம் பல மரணங்களைச் சந்தித்திருக்கிறது. உண்மையின் மரணம், மனிதனின் மரணம், ஆசிரியனின் மரணம் போன்ற மரணங்கள் அவை. மனிதன் மரணமடைந்துவிட்ட போது அவனுடைய பாலுறவு செயல்பாடு மட்டும் எப்படி உயிருடன் இருக்கும்? அதிகாரத்தின் நுண்ணரசியலை ஆய்வு செய்த ஃபூக்கோ இந்த விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்.’

‘செக்ஸ் என்பது ஒரு உற்பத்தி. அந்த உற்பத்தி ஒரு உரையாடல். என்று கருதும் ஃபூக்கோ, உடல் என்பது பாலுறவு மற்றும் உற்பத்திக்கான மாதிரி என்று வரையறுக்கிறார். ஆனால், செக்ஸும் உடலும் சந்தை மதிப்புக்கு உட்பட்ட உந்து சக்தியின் விளைவாக இருக்கின்றன என்பதைப் பற்றி ஃபூக்கோ யோசிக்கவே இல்லை.’ என்பது பொத்ரியாரின் விமர்சனம்.

5

பெண்ணியம் என்பது பின் நவீனத்துவம் வளர்த்தெடுத்த விஷயங்களில் ஒன்று. அதன் வேர்கள் நவீனத்துவத்திலிருந்து புறப்படுகின்றன என்றபோதிலும், பின் நவீனத்துவம்தான் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. நவீனத்துவவாதியான சிமோன் தி புவா வின் ‘இரண்டாவது பாலினம், நவீன பெண்ணியத்துக்கு ஆதாரமாக இருக்கிறது என்றால், ஜூலியா கிறிஸ்தேவா, லியூ இரிகாரே, ஹெலன் சிசு, ஜுடித் பட்லர் போன்ற பின் நவீன பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்கள். பின் நவீனவாதிகளில் ஒருவரான பொத்ரியார் பெண்ணியவாதிகளின் கருத்தியல்கள் மேல் தாக்குதல் நடத்தினார் என்பது விசித்திரமானது.

அதிகாரம் இயங்கும்போது, அது நிகழ்த்தும் உரையாடலும், நடைமுறைகளும் எப்படி ஒன்றோடொன்று முறுக்கிக் கொள்கின்றன என்பதுபற்றி ஆராய்ந்தவர் ஃபூக்கோ. பல விஷயங்களை அதிகாரத்தின் உரையாடலாகக் கண்டடைந்த ஃபூக்கோ பாலுறவையும் அதே பெட்டியில் போட்டு அடைத்தது தவறு. அதிகாரத்தின் பேரலகான அரசதிகாரமாக இருந்தாலும் சரி, அதிகாரம் நுண்ணலகாக இயங்கும் குடும்பம் என்ற நிறுவனமாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம அதிகாரத்தின் உரையாடல் என்பது சாத்தியமே. ஆனால், செக்ஸில் அதிகாரம் எப்படி செயல்படமுடியும்?

பாலுறவைப் பொறுத்தவரை அதிகாரம் என்பது யாரிடமும் இல்லை. அங்கே ஆதிக்கம் செலுத்துபவரும் இல்லை. ஆதிக்கம் செலுத்தப்படும் ஒடுக்கப்பட்டவர்களும் இல்லை. வன்புணர்ச்சி மட்டும் விதிவிலக்கு. உண்மை என்னவென்றால், பெண்ணியவாதிகளும், பெண்ணியத்தின் ஆர்வலர்களான ஃபூக்கோ போன்றவர்களும் செக்ஸ்-ஐ ஒரு மூலதனமாக்கிவிட்டார்கள் (sex capital). அது ஆண் – பெண் என்னும் வித்தியாசத்தை அடிப்படையாக வைத்து, பெண் தன்மையை ஒரு தனித்த பொருளாக உருவாக்கம் செய்கிறது. இது ஆண் X பெண் என்னும் இரட்டை எதிர்நிலையை (binary opposite) நீர்த்துப் போகச் செய்கிறது. தவிரவும், செக்ஸ் புரட்சி, அதாவது, சுதந்திரமான செக்ஸ் விருப்பம், ஆண் – பெண் சமத்துவம் ஆகியவை குறியீடுகளாக (abstracted sign) மாறிவிடுகின்றன.

செக்ஸை அடக்கி வைப்பது என்பது செக்ஸின் மூலம் அடக்கி வைப்பதாக உருமாற்றம் கொள்கிறது. பெண்ணியம் என்பது செக்ஸைப் பொருத்தவரை ஆணாதிக்கம் முன் வைக்கும் லிங்கமையக் கோட்பாட்டின் (Phallic values) ஆதிக்கத்தின் விளைவாக இருக்கிறது. பெண் விடுதலை என்பது ஆண்பாலுக்குரிய தன்மைகளை ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது. உளவியல் பகுப்பாய்வு என்பதும் இந்தச் சதித் திட்டத்துக்கு கூட்டாக இருக்கிறது. பெண்ணியவாதிகள் செக்ஸின் உண்மையையும், ஆழத்தையும், அதை ஒரு அர்த்தமாகவும், கண்ணுக்கெட்டும் தூரத்தில் வைத்துப் பார்க்கும்படியான விஷயமாகவும் செய்கிறார்கள்.

புகழ் பெற்ற பின் நவீன பெண்ணியவாதியான லியூஸ் இரிகாரே முன் வைக்கும், ‘பெண் பால் என்ற வித்தியாசத்தைக் கொண்டாடுவோம்’ என்ற கோஷத்தை பொத்ரியார் விமர்சித்தார். ‘கவர்ச்சிகாட்டி இணங்கவைக்கும்’ கோட்பாட்டை அதற்கு பதிலாக வைத்தார். ‘பெண் உடல் கொண்டாட்டத்துக்குரியது. அதற்கு ஒரு ஆணின் உடல் தேவை இல்லை.’ என்பது இரிகாரேயின் வாதம். ‘கவர்ச்சிகாட்டி இணங்க வைக்கும் (seduction) செயல் வெட்கக் கேடானது. அது பெண்ணின் உடலை செயற்கையாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. அசலான ஒரு பெண்ணின் இருத்தலை முறை பிறழச் செய்கிறது. என்பது பெண்ணியவாதிகளின் கொள்கை. எனவே, பெண்ணியவாதிகள் ‘இணங்க வைக்கும்’ செயலை எதிர்க்கிறார்கள். பொத்ரியார் இதற்கு எதிராகச் சிந்திக்கிறார்.

கவர்ச்சி காட்டி இணங்கவைக்கும் செயலானது ஒரு பொருளுக்கும்(subject), இன்னொரு பொருளுக்கும் (object) இடையில் நிகழும் தோற்றங்களால் ஆன விளையாட்டு.. பொருட்கள் தங்கள் தோற்றங்களை வைத்து, கவர்ச்சி காட்டி இணங்க வைக்கின்றன. நாம் அந்தக் கவர்ச்சி காட்டும் ரகசியத் தன்மையால் மகிழ்ச்சிக்கு உள்ளாகிறோம். அந்த மகிழ்ச்சி நாம் நம்பும் உண்மை, அர்த்தம், அதிகாரம் ஆகியவற்றுக்கு விடப்படும் சவாலாக இருக்கிறது. கவர்ச்சி காட்டி இணங்க வைக்கும் விளையாட்டு என்பது இரு பாலருக்கும் பொது’ என்கிறார் பொத்ரியார். இந்த விளையாட்டில் இரு பாலரும் தப்பிக்க இயலாதபடி கட்டுண்டு இருக்கிறார்கள். இதற்கு பெண்ணியவாதிகள் எதிர்ப்பு காட்டினார்கள். “பொத்ரியார் இணங்கவைக்கும் கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கிறார். இதன் மூலம் ஆண் மையவாதத்தை ஆதரிக்கிறார். இதனால் இவர் ஆண்களுக்குப் பெண்களைப் பிடித்துதரும் தரகராக (pimp) மாறி இருக்கிறார் என்று பொத்ரியாரைத் தாக்கினார்கள். பொதரியார் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. தொடர்ந்து தன் பாதையிலேயே போய்க்கொண்டிருந்தார். பொத்ரியார் எப்போதும் தன் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை. எதற்கும் அஞ்சியதும் இல்லை.

அதீத உண்மை (hyper real) என்ற தனது கொள்கையை நிறுவுவதற்காக, ‘வளைகுடாப் போரே நடக்கவில்லை. அது புகைப்படங்களாலும், திரைப்படங்களாலும் உருவாக்கப்பட்ட அதீத உண்மை’ என்று சொல்லும் அளவுக்கு உறுதியான மனம் கொண்டவர் அவர். பெண்ணியத்தில் மட்டும் தன் கொள்கையை எப்படி அவரால் மாற்றிக் கொள்ள முடியும்?

நாயகன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி நிகழும்.. கதாநாயகனான, வயதான வேலு நாயக்கரைப் போலீஸ் கைது செய்ய வந்து நிற்கும். அப்போது, வேலு நாயக்கரின் பேரன், ஒரு ஆறு வயதுச்சிறுவன், தாத்தாவிடம் கேட்பான்: ‘தாத்தா, நீங்க நல்லவரா, கெட்டவரா?’ அதே போல் பொத்ரியாருக்கு ஒரு பேத்தி இருந்திருந்தால் அவள் அவரிடம் கேட்டிருக்கக்கூடும்: ‘தாத்தா, நீங்க பின் நவீனத்துவவாதியா அல்லது அதற்கு எதிர் வாதியா? என்று.

##########

குளிர்ப்பதன அறைக்குள்… சிறுகதை – வா.மு.கோமு

images (4)

1

லாமார்ட்டின் ஒரு கோட்டர் எடுத்துக் கொண்டு பாருக்குள் செல்லும் அவனை உங்களுக்கு யாரென இப்போது தெரியாது தான். அவன் தான் இந்த கதை மாதிரியான ஒன்றை நகர்த்திச் செல்பவனாக இருக்க வேணும். சாப்பிட என்ன சார் வோணும்? என்று இரண்டு பேர் வந்து அவனைக் கேட்டார்கள். காதில் பேனா செறுகியிருந்தவனை அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது. கண்டதீம் கடீதீம் கொண்டா போ! என்று சொல்லி விட்டு போய் சுத்தமாய் துடைக்கப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்தான். இவன் கேட்ட கண்டதீம் கடீதும் டேபிளுக்கு வந்து சேர்ந்தது. பொகை ரெண்டு கொண்டா! என்றான். பாக்கெட்டிலிருந்தே ரெண்டு சிகரெட் எடுத்து கூடவே தீப்பெட்டியும் வைத்துச் சென்றான் காதில் பேனா செறுகியவன்.

‘மீனு கிடைக்குமா?’ என்றான் அவனை திரும்பக் கூப்பிட்டு. அது சாயந்திரம் தான் சார் கிடைக்கும், என்றவனைப் போகச் சொல்லி விட்டு நிதானமாய் டம்ளரில் ஊற்றி தண்ணீர் கலந்து ஒரு ரவுண்டு வீசினான். காலி வயிறு என்பதால் முதல் ரவுண்டு கிர்ர்ர்ர் என்றிருந்தது. அதே போதும் என்று தான் எப்போதும் இருக்கும். ஆனால் இவன் தன்னை சாமார்த்தியசாலி என்றே நினைத்துக் கொள்கிறானே! போக மேலே ஊற்ற ஊற்ற போதை அந்த அளவை விட குறைந்து விடுகிறதே!

கொறிப்பதற்கு சுண்டல், குச்சிக் கிழங்கு என்றிருந்தது. எல்லாமே சூடாய். எடுத்து வாய் நிறையப் போட்டு மென்று தின்றான். அரை கட்டிங் என்கிறபோது இரண்டு தட்டுகளையும் காலி செய்து விட்டு சிகரெட் ஒன்றை பற்றிக் கொண்டான். மறுக்கா சாப்பிட என்ன சொல்றதுங்க சார்? என்றவனிடம், நீ என்னை சார் போடாதே! எனக்கு வெக்கமா இருக்குது! வெக்கமா இருந்தா எப்பயும் நான் வாந்தி பண்ணிடுவேன் பாத்துக்க! என்றான். அவனோ, ஐயோ! என்றான். ’ஐயோன்னு தனியா சொன்னா தப்பு. ஐய்யய்யோன்னு சேர்த்தி சொல்லணும். என்ன புரிஞ்சுதா? ஆம்லெட போட்டு கொண்டா!’ என்றான். ’முட்டை மசால் கொண்டு வரவா? சூப்பரா இருக்கும்!’ என்றான் அவன். அது வந்து சேர்ந்தது. இவன் காலி செய்து விட்டு கர்ச்சீப் எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.

அவன் கணக்கை சொன்னான். இவன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து கொடுத்து விட்டு, ’இங்கே லாட்ஜ் எங்க இருக்கு?’ என்றான். சப்ளையரே பாக்கெட்டிலிருந்து ஒரு கார்டு எடுத்துக் கொடுத்தான். ’எல்லா வசதியும் இருக்குங்க சார்! மேற்படி கூட! என் பேரைச் சொல்லுங்க போயி! காரியம் கச்சிதமா முடியும்!’ என்றான். ’உனக்கொரு முத்தம் கொடுத்துக்கட்டா?’ என்றான் இவன். அவன் புன்னகைத்தான். ’சரி தண்ணி போட்டிருக்கான்னு தெரிஞ்சா ரூம் தர மாட்டாங்களா? மிஸ்டர் குப்புசாமி?’ என்றான்.

அவனோ அப்படியெல்லாம் இல்லைங்க சார். இப்ப எங்க சார் லாட்ஜ்கள்ல கூட்டம் நிரம்பி வழியுது? வீதிக்கு வீதி லாட்ஜுக பெருத்துப்போச்சு! அழகழகா ரூம் கட்டி சும்மா போட்டிருக்காங்க சார். கும்புடு போட்டு கூப்பிட்டு படுக்க வச்சிக்குவாங்க! நீங்க இந்த வடக்கெ போற வீதியில போங்க சார். கடேசில இருக்கும் லாட்ஜ். ஒரே வார்த்தையில குப்புசாமி சொல்லி வுட்டான்னு சொல்லுங்க! மறு பேச்சே பேச மாட்டாங்க!’ என்றான். ‘ஓ! உனக்கும் கமிசன் வந்துடுமா?’ என்றதற்கும் சிரித்தான் அவன்.’ நல்லாயிரு!’ என்று அவன் கையில் இருபது ரூபாய் கொடுத்து வெளியேறினான்.

குப்புசாமி சொன்ன லாட்ஜ் பார்க்க அப்படியொன்றும் மோசமில்லாமல் இருந்தது. அவனிடம் அதிகமாய் ரிசப்சனில் கேள்விகள் கேட்காமல் அறை ஒதுக்கித் தந்தார்கள். அலைபேசி எண்ணையும் பழனிச்சாமி என்கிற தன் பெயரையும் அந்த பேரேட்டில் எழுதி கையெழுத்து போட்டு விட்டு அவரைப் பார்த்து புன்னகைத்தான். அவரும் புன்னகைத்தார். ‘இங்க ஏதாவது பிஸ்னஸ் விசயமா வந்தீங்களா? எவ்ளோ நாள் தங்குறீங்க?’ என்றார் அவர். ‘ஆமாங்! வாழ்க்கை பிஸ்னஸ். என்னோட வருங்கால மனைவி வருவாங்க! அவங்க கூட எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்? எங்கே கல்யாணம் பண்ணிக்கலாம்? அப்படின்னு பேசணும். அவங்க வந்து என் பெயரைக் கேட்டா, ரூம் நெம்பர் சொல்லி அனுப்புங்க ப்ளீஸ்!’ என்றான்.

இவனை 202-ம் எண் அறைக்கு அழைத்து வந்தவன் இவன் வயதையே ஒத்திருந்தான். அறைக்குள் முதலாக நுழைந்த அவன் ஏசியை போட்டு விட்டு குடிநீர் ஜக்கை கையில் எடுத்துக் கொண்டான். ‘எதாச்சிம் வாங்கி வரவா சார்?’ என்றான். அவனிடம் ஒரு அரை லாமார்டின், தண்ணீர்கேன், கொறிக்க என்று வாங்கி வரச் சொன்னான். ’வேற எதாச்சிம் சார்?’ கண்ணடித்துக் கேட்டான். ’கேரளாக்காரி யாராச்சிம் இருக்காங்களா?’ என்றான். ’ஓமனக்குட்டி இருக்கு சார். அவ நர்ஸா இங்க குழந்தைகள் மருத்துவமனையில வேலை பாக்கிறா!’, என்றான் அவன்.

இவனுக்கு போரடித்தது. ’அவ எங்கியோ வேலை பாத்துக்கட்டும்.. அதற்கு? நான் அதையெல்லாம் கேட்டனா? என்னை வேலை பாப்பாளா? அதச் சொல்லு!’, என்றான். ’சார் மொதல்லயே போட்டுடு வந்துட்டீங்க போல?’ கைபெருவிரலை சூப்புவது மாதிரி காட்டி சிரித்தான் சினேக பாவமாய் அவன். ‘ஆமா.. பஸ்ஸ்டாண்டுல டாய்லெட்ல வீச்சு போட்டுட்டு தான் வந்தேன்’ என்றான்.

‘சார் நான் அதைச் சொல்லலை.. தப்பா நினைச்சிக்காதீங்க! கிறுக்கு வெள்ளம் குடிச்சுட்டு வந்துட்டிங்கன்னு சொன்னேன்! மன்னிச்சுக்கோங்க! பைசா கொடுத்தீங்கன்னா வாங்கிட்டு மளார்னு வந்துடுவேன். ஓமனா இங்க 315-ல தான் இருக்கா! 202-க்கு போகச் சொல்லிட்டு ஐட்டங்களை வாங்க போயிடறேன் சார்’ என்றவன் கையில் ஆயிரம் ரூபாய் தாளை திணித்தான். அவன் அறையை விட்டு வெளியேறினான்.

நிதானமாக இவன் பாத்ரூம் சென்று பிறந்த மேனிக் குளியல் ஒன்று போட்டான். அப்படியே டவலால் துடைத்துக் கொண்டே வந்து இடுப்பில் சுற்றிக் கொண்டு படுக்கையில் விழுந்தான். படுத்துக் கொண்டே ரிமோட்டால் டிவியை ஆன் செய்தான். ஏற்கனவே அது பாடல்களை மட்டுமே ஒளிபரப்பும் சேனல் ஒன்றில் நின்றிருந்தது.

அதில் காதுவரை வாயை வைத்திருந்த பெண்ணொருத்தி காதுவரை சிரித்தாள். ‘மொக்க ஜோக் ஒன்னு சொன்னீங்க பழனிச்சாமி! அதுக்காக உங்களுக்கு ஸ்பெசலா ஒரு பாட்டு வருது கேட்டுட்டே இருங்க!’ கொஞ்சம் முன்னாலே ஆன் செய்திருந்தால் எந்தூரு பழனிச்சாமி அவன்? என்று தெரிந்திருக்கலாமென நினைத்தான். ஒரு பாசம் தான். அதாவது பஜாஜ் எம்மைடியில் சாலையில் செல்பவன் அதிசயமாய் எதிர்க்கே இன்னொரு பஜாஜ் எம்மைடி வருகையில் காதலோடு பார்ப்பது மாதிரி.

‘அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன் ஆட்டம் நிலைக்காது ஞானப் பெண்ணே! துனபத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே!’ ‘ஆட்டம் நிலைக்காதுடா!’ சத்தமாய் கூறி விட்டு அடுத்த சேனலுக்கு தாவினான். ஜாக்கிஜான் படம் எதோ ஓடிக் கொண்டிருந்தது அங்கு. ‘இல்ல.. நா.. வந்து.. அப்பிடி’ என்று விட்டு விட்டு ஜாக்கி தமிழ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அழைப்பு ஒலி கேட்கவே, கம் இன்! என்றான்.

உள்ளே ஓமனக்குட்டி புத்தம் புது பீஸாக நுழைந்தாள். கேரளபாணி வெள்ளைச் சேலை. ஜிகினா பார்டர் வைத்தது. சிவந்த நிற முகத்தில் சந்தனமிட்டிருந்தாள். சிரித்தபடி அறைக்குள் வந்தவளுக்கு தெத்துப்பல் அழகாக இருந்தது. ஒருவேளை பாடகியாக சென்றிருக்க வேண்டியவள் மருத்துவமனை தாதியாகி விட்டாளோ! அவள் குரல் அப்படித்தான் இருந்தது. நீ சும்மார்றா மோனே தினேஷா!, என்றான் அவனைப் பார்த்தே! அவள் அழகாய்ச் சிரித்து அவன் படுக்கை மீதமர்ந்தாள்.

‘சேட்டா நிங்களுக்கு லாலேட்டன்னா கொள்ள இஸ்டமோ?’ என்றாள். ’அப்படியெல்லா ஒன்னுமில்ல! நாலஞ்சண்ணம் அவரோட படங்களை பாத்திருக்கேன். ஆமா மம்முட்டி, லாலேட்டன் இவிங்களூக்கெல்லாம் வயசே ஆவாதா? நான் சின்னப்பையனா இருந்தாப்ல புடிச்சி அப்பிடியே இருக்காங்களே!’ என்றதற்கும் அழகாய் சிரித்தாள். ‘பின்ன!’ என்றவள் அவன் தொடையின் மீது கையை வைத்தாள். சீக்கிரமாய் காரியம் பார்த்து விட்டு நேராக மருத்துவமனை டூட்டிக்கி செல்பவள் போலிருந்தாள் அவள்.

அவனுக்கு அது பிடித்தமானதாய் இல்லை. போக தொகை வேறு இன்னும் பேசப்படவில்லை. தெத்துப்பல்காரிக்கு தொகை எவ்வளவாக இருக்கும்? என்று யோசித்தான் அவன். அவள் கையை திடீரென எடுத்துக் கொண்டாள் அழைப்பு மணி ஒலிக்கையில். அவளே, கமின்! என்றாள். உள்ளே பை ஒன்றோடு ரூம்பாய் வந்தான். வாங்கி வந்த பொருள்களை எல்லாம் டேபிளில் வைத்தான். காலியான பையை கையில் சுருட்டிக் கொண்டு, ‘சார்’ என்றான். ‘பீடி வெச்சிருக்கியா? எனக்கு இப்ப ஒரு பத்தாம் நெம்பர் பீடி வழிக்கணும்’ என்றான். ‘சார் இது ஏசி ரூம் சார். இங்கெ சிகரெட் பீடி குடிக்கக்கூடாது!’ என்றான்.

‘உன் கிட்ட இருக்கான்னு தான் கேட்டேன்’ என்றான் படுத்திருந்தபடி.

‘இருக்குங்க சார்’

‘எவ்ளோ இருக்கும்? ஒரு கட்டு இருக்குமா?’

‘நாலு பீடி குடிச்சிட்டேன் சார்’

‘சரி அதை டேபிள்ல வச்சிட்டு போயி நீ புது கட்டு வாங்கிக்கோ! நான் சரக்கு கொஞ்சம் அடிச்சுட்டு ஓடிப் போயி பாத்ரூம்ல நின்னு நாலு இழுப்பு இழுத்துக்கறேன்’ என்றதும் அவன் பாக்கெட்டிலிருந்து பீடிக்கட்டை எடுத்து டேபிளில் வைத்தான்.

‘சார், உங்க பணம் மிச்சம் டேபிள்ல வெச்சிருக்கேன் சார், பொருள்கள் வாங்குனது போக’

‘நீ சரக்கு போடுவியா? துளி துளி ஆளாளுக்கு சியர்ஸ் போட்டுட்டு ஊத்துவமா?’

‘சார் நான் நைட்டு, டூட்டி முடிஞ்சு போறப்ப வேணா அடிச்சுக்கிறேன் சார். இப்ப வேண்டாம்’

‘ஓமனக்குட்டி உனக்கு?’ என்றான். அவளோ, ‘ஐயொடா!’ என்றாள்.

‘தண்ணி போடாத பிள்ளையெல்லாம் இங்கெதுக்கு தொழிலுக்கு வருது.. உம் பேரென்ன?’ என்று அவனிடம் கேட்டான்.

‘எம்பேரு அழகரிங்க சார். இது குடிக்காதுங்க சார்.’

‘அப்ப நைட்டு கள்ளு மட்டும் குடிக்குமா ஓமனக்குட்டி? இல்ல வொய்னு. வோட்கா இப்படி எதாச்சிம்?’

‘சார் என்னை தாட்டி உட்டுட்டு காரியத்தை பாருங்க சார்’

‘அப்ப நான் ஜவ் போடறேன்னு சொல்றயா?’

‘இல்லங்க சார், அப்படியில்லங்க! பக்கத்துல பக்கத்து மாநிலத்தையே வச்சுட்டு சாப்பிடாம என்கூடப் போயி கடலை வறுத்துட்டு இருக்கீங்கன்னு சொன்னேன் சார்’

‘சரி ஓமனக்குட்டிக்கு நான் பைசா எவ்ளோ கொடுக்கணும்?’

‘எனக்கு தெரியாதுங்க சார். அதுகிட்டயே பேசிக்கங்க! ஏ சொல்லு ஓமனா! சார் கேக்குறாருல்ல’

‘ஒன் டே ஃபுல்லுன்னா ஃபைவ் தவ்சன் சார். நைட்டு நைன் தேர்ட்டிக்கி நான் கிளம்பிடுவேன்.’

‘ஃபோர் தவ்சன் பைவ் ஹண்ட்ரட்டை திருப்பிக் கொடுத்துட்டா?’

‘சார் அதெல்லாம் அனுசரிச்சுக்கும் குட்டி. டூட்டி இன்னிக்கி பகல்ல இருக்கு சார் இதுக்கு. நான் தான் சார் பெரிய கையின்னு சொல்லி இருக்க வெச்சிட்டேன்’

‘பெரிய கையா? இல்லையே என்னுதும் உன்னோட கை மாதிரி சின்னதா தான இருக்குது!.. சாரிம்மா! உனக்கு அவ்ளோ கட்டாதுன்னு உனக்கே தெரியும்! அழகிரி தம்பி, குட்டிய நீ பத்திரமா கூட்டிட்டு போயிரு!’

’சார்! வேணா ஒரு மணி நேரம் இருந்துட்டு போகட்டும். கையில ஒரு ஐநூறு குடுத்து தாட்டி உட்டுடுங்க!’

‘அப்ப ஓமனக்குட்டி நீ தேங்காய் உறிப்பியா?’

‘தேங்காயோ? ஐயோடா.. ? அப்படின்னா எந்தா சாரெ?’

‘ஐயொடா! அழகிரி தம்பி.. கூட்டிட்டு ஓடுடா இதை! ஒரு பேரெழவும் தெரியாததை கொணாந்து உட்டுட்டு ஏண்டா என்னை இம்சிக்கிறே? அந்த போனை எடு.. டேபிள் மேல கிடக்கும் பாரு!’ அழகிரி டேபிளில் கிடந்த இவன் போனை எடுத்து கையில் கொடுத்தான். ஓமனக்குட்டி மீண்டும் அவன் கால்களில் கை வைத்தாள். இவன் அலைபேசியில் அழைத்தான் சித்ராவை.

‘எங்க தாண்டி இருக்கே நீ?’

‘இப்பத்தான் ஈரோடு வந்து இறங்கினேன். பார்த்தா ஒடனே உங்க போனு! உங்குளுக்கு நூறாயிசு!’

‘எனக்கு நூறாயிசு கிடக்கட்டும்டி. இங்க ஓமனக்குட்டி அஞ்சாயிரம் கேட்டுட்டு உக்காந்திருக்காடி!’

‘ஓமனக்குட்டியா? அவ எவொ? எம்பட சக்காளத்தி? குடுங்க அவ கிட்ட போனை!’ இவன் ஓமனக்குட்டியிடம் “பறெ’ என்று அலைபேசியை நீட்டினான். பேச்சு பயங்கரமாய் இருக்கும் போலிருந்தது! இவன் எழுந்து போய் டம்ளரில் சரக்கு ஊற்றி தண்ணீர் கலந்தான். அழகிரி சிரித்தவாறு ஒரு தட்டில் சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து சிப்ஸ்களை கொட்டி வைத்தான். ‘என்ன சார், சும்மா வரச் சொல்லிட்டு விளையாடிட்டீங்க? நீங்க ஏற்கனவே ஆளு சொல்லிட்டீங்களா?’ என்றான்.

‘அட அழகிரி! அவ ஆள் இல்லடா! நான் கட்டிக்கப்போறவ! நாளை கழிச்சி எனக்கும் அவளுக்கும் கல்யாணம். அவளுக்கு சேலை துணிமணி எல்லாம் போயி எடுக்கணும். அவ திருப்பி எனக்கு பேண்ட்டு சரட்டெல்லாம் எடுத்துக் கொடுப்பா! அவ வர்றதுக்குள்ள எதோ கேரள ஆசையில கேட்டேன்! மளார்னு தேங்காயெல்லாம் உறிக்க தெரியாதுன்னா நான் என்னா பண்டுவேன் சொல்லு!’ என்றான்.

‘தேங்கா உறிக்கறதுன்னா என்னா சார்?’

‘அப்படின்னா அரை கட்டிங் போடு அவளையே கத்துத்தரச் சொல்றேன்’ என்றதும், ‘சார்!’ என்று கும்பிடு போட்டான்.

‘டூ வீலர் இருக்கா?’

‘இருக்குங்க சார் என்னுதெ!’

‘போயி அதுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வேணும்னாலும் அடிச்சுக்கோ! நீலகலர் சுடிதாரோட தோள்ல அதே கலர்ல பேக் மாட்டீட்டு ஒரு பொண்ணு பஸ்ஸ்டேண்டுல நிற்கும். மூஞ்சீல பவுடரெல்லாம் நிறைய அப்பியிருப்பா! என் போனை வாங்கிட்டு போ குட்டிகிட்ட! அதான் அவ நெம்பர்! கண்டுபிடிச்சு மளார்னு கூட்டிட்டு வா! ஓடு!’ என்றான். ஓமனக்குட்டி வியர்த்து விறுவிறுத்துப் போய் பேயடித்தது போல அமர்ந்திருந்தாள். போனை அப்போதே அணைத்து படுக்கையில் வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு அழகிரி கிளம்பினான்.

‘ஆரானு ஆக் குட்டி?’

‘அம்மிணி நீ இங்க இருக்காதே! இப்ப சித்ரா இங்க வருவா! வந்தாள்னா நீ நேரா பரலோகம் தான்! உன்னோட பகவதி அம்மே கூட காப்பாத்தாது! கிளம்பு கிளம்பு!’ என்றதும் ஓமனக்குட்டி படபடப்புடன் எழுந்து கதவுக்கருகாமையில் கிடந்த மிதியடிகளை அவசரமாய் தொட்டுக் கொண்டு வெளியேறினாள். இவனுக்கு சிரிப்பாய் இருந்தது. டிவியில் சப்தமே இல்லாமல் ஜாக்கி பாய்ந்து பாய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார் ஏழு நபர்களுடன். சப்தமில்லாமல் ஊமைப்படம் பார்ப்பது சிறப்பானதாய் அவனுக்குத் தோன்றியது.

ரெண்டு மடக்கு அடித்துக் கொண்டு ஜாக்கியை நோக்கி டம்ளரை நீட்டினான் அவன். ‘ஜாக்கியின் நன்மைக்காக!’ என்று சொல்லி குடித்து முடித்து விட்டு சிப்ஸ் எடுத்துக் கொறித்தான். திடீரென அவனுக்கு சில்லி சிக்கன் சாப்பிட வேண்டுமெனத் தோன்றிற்று. இந்த நேரத்தில் கண்டிப்பாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. போக சித்ரா வேறு அதை அள்ளிப் பூசுவாள்.

சித்ராவை எத்தனை நாள் தான் இருட்டில் கூட்டிப் போய் அழகைக் காணாமல் அவசரமாய் தண்டால் எடுப்பது? சித்ராவுக்கென முழு அழகு இருப்பது இரவு நேரத்தில் எங்கே தெரிகிறது? போக பூச்சி பொட்டு வந்து நொட்டி விடுமென பயம் இவனுக்கு எப்போதும் இருக்கும்! வேறு வழியெதுவும் அங்கே ஊரில் இல்லை! பின் அந்த கிராமத்தில் என்ன தான் செய்வது? செல்லும் சமயமெல்லாம் போதையின் குருட்டு தைரியத்திலேயே அவளுக்காக நடுநிசியிலும் சென்று கொண்டிருந்தான் பல சமயங்களில்.

ஒருநாள் மிதப்பில் இருந்த இரவில் பாறை மீது படுத்துக் கிடந்த விரியனை மிதித்து விட்டான். அது குழந்தை போல சப்தமிட்டபடி நழுவிச் சென்றது. பக்கத்தில் இவன் பின்னேயே வந்து கொண்டிருந்த சித்ரா, ‘பாம்பா?’ என்றாள் சாதாரணமாய். அன்று எவ்வளவோ முயற்சித்தும் இவனால் அவளோடு சந்தோசமாய் இருக்க முடியவில்லை.

பின்பாக அவள் தான் இப்படி ஒரு யோசனையை சொன்னவள். மெத்தை மீது கிடக்க வேணும்! கொஞ்சமாய் குளிர் காற்று வீச வேண்டும்! அள்ளி அணைக்க வேணும்! ஆகாசத்தில் பறக்க வேணும்! அப்படியே சாப்பிட வேணும்! காடு, பாறை என்று எத்தனை நாள் ஓட்டுவது? பகலில் பக்கம் பார்த்துப் பேசு! இரவினில் அதையும் பேசாதே! அதை சொல்வது சுலபம். ஆனால் செயலில் மிக தந்திரக்காரி சித்ரா!

2.

அறைக்கதவு திறக்க அழகிரி முன்பாக உள்ளே வந்தான். பின்பாக வந்த சித்ரா, ‘எங்கே அவ? தாட்டி உட்டுட்டீங்களா?’ என்றாள். போக புஸ் புஸ் என பாம்பு சீறுவது போல நின்றாள். ‘நீ வந்தா கொன்னு போடுவீனு சொன்னேன்டி! ஓடிட்டா!’ என்று சொல்லிச் சிரித்தான்.

‘உங்குளுக்கு சிரிப்பா இருக்குது? இங்க அவவளுக்கில்ல தெரியும்! இதென்ன காத்தால புடிச்சி குடியாட்டமா இருக்குதே! ஏற்கனவே ஒடம்பு செரியில்ல காச்சல் அது இதுன்னு பொலம்புறீங்க.. இது எதுக்கு? இத போட்டா தான் நல்லா படமெடுத்து ஆடலாம்னா?’

‘தம்பி அழகிரி, சில்லி சிக்கன் கிடைக்குமா இப்ப?’

‘வாங்கிக்கலாம் சார்! இப்பவே வேணுங்களா?’

‘அட இப்ப சாப்புடறுக்கு தான் வாங்கியாறச் சொல்றேன். என்ன நீயி!’

‘தோ சார்’ என்று கிளம்பினான் அழகிரி. அவன் சென்ற மறு நிமிசமே பாய்ந்து எழுந்து சித்ராவைக் கட்டிக் கொண்டான். ‘நான் இன்னிக்கி தீந்தனாட்ட இருக்குதே! பெசாசு எதுக்கு இப்புடி போச்சு நசுக்குறே? ஐயோ உடு! வலிக்குதுல்லொ!’ என்றவள் உதடுகளை பேச விடாமல் அடைத்துக் கொண்டான் தன் வாயால்.

பின்பாக அவனைத் தள்ளி விட்டாள் சித்ரா. திடீரென முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு போய் சேரில் அமர்ந்து மீண்டும் சரக்கு பாட்டிலைத் திறந்து டம்ளரில் ஊற்றினான். ‘என்னுமோ காணாததைக் கண்டமாரி தான் பூந்து வெளையாடப் பாக்குறது! கோவத்துக்கு ஒன்னும் கொறச்சலே இல்ல!’ படுக்கையில் பாய்ந்து சாய்ந்தாள் சித்ரா. போக முழுப் படுக்கையிலும் உருண்டாள். சின்னப்பிள்ளை கணக்காய் உருண்டு விளையாடினாள். இவன் டம்ளரை கையிலெடுத்து அடுத்த ரவுண்டு ஊற்றினான். உருண்டு முடித்தவள் இவனை நோக்கி கைகளை நீட்டி, ‘வாடா’ என்றாள். இவன் டிவி பார்க்கத் துவங்கினான்.

‘ரொம்ப கோவிச்சுக்கப்புடாது ஆமா!’ என்றாள். இவன் எழுந்து பாத்ரூம் சென்று வந்தான். போக பாத்ரூம் செல்கையில் பயங்கரமாய் எரிச்சலாகவும் மஞ்சளாகவும் போயிற்று. வெய்யல் இன்று அதிகம் தான். இத்தனை குடித்தும் இப்படி போகிறதே! என்றே எண்ணிக் கொண்டான்.

‘ஏண்டி தள்ளி வுட்டே எருமெ!’ என்றான் திடீரென அவளைப் பார்த்து கோபமாய். அவளுக்கே பயமாய் இருந்தது அப்போது. ஐயோ இதென்ன வம்பு? என்று நினைத்து எழுந்தாள் படுக்கையிலிருந்து. கிட்டே சென்று அவன் கைப்பிடித்து, ’சாரிப்பா!’ என்றாள். ’கையி என்னா ஏசி ரூம்லயும் உனக்கு இப்பிடி சுடுது? உனக்கு என்னாச்சு? காச்சலா!?’ என்றாள்.

‘நீ ஆசைப்பட்டீன்னு தான்டி நான் இங்க வந்து ரூம் புக் பண்ணுனேன்! ஏன்டி தள்ளி வுட்டே?’ திடீரென அவன் கண்கள் சிவந்து விட்டதை பார்த்தாள். ஆள் கொஞ்சம் படபடப்புடன் இருப்பதைக் கண்டாள்.

‘உனக்கு புடிக்கலைன்னா ஏன்டி பஸ் ஏறி வந்தே? ஊர்லயே கிடந்திருக்க வேண்டிது தானே!’

‘எதுக்கு இப்ப சத்தம் போடறீங்க என்னை? புடிக்கலைன்னு யாராச்சிம் இங்க வருவாங்களா? லூசு!’

‘ஆமான்டி, நான் லூசு தான்!’

‘ஐயோ பக்கத்து ரூம்ல யாராச்சிம் இருக்கப் போறாங்க! இப்ப நான் என்ன பண்ணனும் சொல்லுங்க!’ என்றபோது மீண்டும் அழைப்பொலி கேட்டது. ‘அழகிரி வா’ என்றான். உள்ளே வந்தவன் பார்சலை வைத்து விட்டு, ‘எதாச்சிம் வேணும்னா கூப்பிடுங்க சார் ரிசப்சன் நெம்பருக்கு!’ என்று சொல்லி விட்டுச் சென்றான். இவள் எழுந்து போய் கதவை உள்புறமாக தாழிட்டு வந்து அமர்ந்தாள்.

‘என்ன பண்ணனும் நான் சொல்லுங்க! தயவு செஞ்சு சத்தம் போடாதீங்க!’ என்றாள். இவன் எதுவும் பேசாமல் டம்ளரை கையிலெடுத்துக் கொண்டான். அவனுக்கே சிரமமாய் இருந்தது. தேவையில்லாமல் தான் அவளிடம் கோபித்துக் கொண்டோமென நினைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு நிஜமாகவே காய்ச்சல் வந்திருந்தது மாதிரி தான் இருந்தது. ஒருவேளை அறையின் குளிர்ப்பதனம் ஒத்துக் கொள்ளவிலையோ? என்று நினைத்தான்.

திடீரென ஞாபகம் வந்தவள் போல, ‘நான் மறந்துட்டேன்! ஐயா அதனால தான் உர்ருன்னு இருக்காரா?’ என்று எழுந்து தன் உடைகளை களைய ஆரம்பித்தாள். இவன், ‘வேண்டாம்டி!’ என்றான். இருந்தும் உள்ளுக்குள் சின்ன ஆசை இருந்தது அவனுக்கு. கண்களை இரு கைகளாலும் மூடிக் கொண்டான். ‘வேண்டாம்டி! எனக்கு இருந்த மூடெல்லாம் போயிடுச்சு! வேண்டாம்!’ என்றான்.

பின்பாக அவள் அவனருகில் வந்து அவன் கைகளை அகற்றினாள். தன் வயிற்றைக் கொண்டு வந்து அவன் முகத்தில் திணித்தாள். அவனுக்கு காய்ச்சல் இருப்பதை அப்போது தான் அவள் உணர்ந்தாள். ‘டாக்டர் கிட்ட போய் ஒரு ஊசியாச்சும் குத்திட்டு வாங்க!’ என்றாள். ‘இவ்ளோ மப்புல போனா டாக்டர் முடுக்கி உட்டுருவாரு’ என்றான். ‘சரி வாங்க’ என்று அவன் கையைப் பிடித்து தூக்க முயற்சித்தாள். இவனாக எழுந்து அவள் கைப்பிடித்துச் செல்ல படுக்கையில் சென்று அவள் அருகாமையில் விழுந்தான். அவளை முழுதாகப் பார்த்தான். ‘பன்னி அங்கென்ன பார்வெ உனக்கு? அசிங்கம்!’ என்றாள். திடீரென அவன் எழுந்து கொண்டான்.

அறையைச் சுற்றிலும் நோட்டமிட்டான். கண்ணை தேய்த்துக் கொண்டு எல்லா இடங்களிலும் பார்த்தான். சந்தேகப்பட்ட இடமெல்லாம் போய் நின்று என்னவெனப் பார்த்தான். ‘என்ன பாக்கறீங்க?’ என்றாள் அவள். டிவியை அணைத்தான். இருந்தும் அவனுக்கு அவளை கட்டிக் கொள்ள எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தது. ‘என்னடா பாக்கே? சொல்லேண்டா! வாடா!’ என்றாள் அவள் குரலில் ஏற்றம் வைத்து. ‘என்னெப் பாருடா திரும்பி!’ என்றாள்.

திடீரென இவள் பக்கமாய் திரும்பியவன் பதை பதைப்புடன் படுக்கையிலிருந்த போர்வையை எடுத்து விரித்து அவளைப் போர்த்தினான். இனிப் பிரச்சனை இருக்காது என்று நம்பியவன் போர்வைக்குள் நுழைந்தான். இருந்தும் அது காட்டில் அவளுடன் கிடந்த உணர்வையே அவனுக்கு கொண்டு வந்தது. அவனுக்கு மீண்டும் அந்த நினைப்பே செயல்பட விடாமல் செய்தது.

‘என்னாச்சுடா? உனக்கு இன்னிக்கி?’ என்றாள் அவள். இவன் எழுந்து போய் சேரில் அமர்ந்தான். அவள் போர்வையை மீண்டும் விலக்க முயற்சிக்கையில், ‘போர்வையை எடுத்துடாதேடி’ என்றான். ‘ஏன்?’ என்றாள் அவள். ’இந்த அறையில எங்காச்சிம் கேமரா செட் பண்ணி வச்சிருப்பாங்கடி! நாம எதாச்சிம் பண்ணுனோம்னா முழுசா எடுத்துடும். அப்புறம் நெட்டுல போட்டு ஈரோடு லேடி ஸ்கேண்டல்னு போட்டுடுவானுக!’ என்றான். ‘போட்டுட்டு போச்சாறனுக வாங்க நீங்க! ச்சை! எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா! லூசு மாதிரி பேசிட்டு! வாடா!’ என்றாள்.

‘உலகம் பூராவும் உன்னைப் பாப்பாங்கடி! சொன்னா மண்டையில எறுதா ஒன்னா!’

‘பாத்துட்டுப் போச்சாறாங்கன்னு தான சொல்றேன்! லூசு இப்ப வரப்போறியா இல்லியா?’ என்றாள் சப்தமாய்!

‘ஏன்டி நீ இப்ப கத்துறே? ஈரோடு லேடி வாண்ட் டு ஃபக் ஹிஸ் ஃப்ரண்ட்டுனு டைட்டில் போட்டுடுவானுகடி!’

‘அடக் கருமமே!’ என்று எழுந்தாள் அவள்.

அவளாக தன் துணிமணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அணிந்து கொண்டாள் வேக வேகமாக. இவன் எதுவும் சொல்லவில்லை. எல்லா ஐட்டங்களையும் அணிந்து விட்டு பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வெளி வந்தாள். படுக்கையில் இருந்த போர்வையை எடுத்து துடைத்துக் கொண்டு தன் கைப்பையிலிருந்து கொஞ்சம் பவுடரை எடுத்துப் பூசிக் கொண்டாள். ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொண்டு, தன் மிதியடிகளை நோக்கிச் சென்றாள்.

‘ஏன்டி? உனக்கென்ன வந்துச்சு இப்போ?’ என்றான்.

‘எனக்கு ஒன்னும் வரலை! இனிமே என்னை நீங்க எப்பவும் கூப்பிடாதீங்க! கூப்பிட்டாலும் போனை எடுக்க மாட்டேன்!’ என்று சொல்லி கதவை நீக்கி வெளியேறினாள். இவன் அடுத்த ரவுண்டு சரக்கு ஊற்றினான். ரிசப்சனுக்கு அழைத்து அழகிரியை வரச் சொன்னான். அழகிரி பறந்தடித்து வந்தான் அறைக்கு. வந்தவனை அப்படி பெட்டில் அமரச் சொன்னான். அவனோ தயங்கினான்.

‘அட உக்காரு அழகிரி! சும்மா இப்பத்தான்’

‘என்ன சார் ஆச்சி? அவங்க வேகமாப் போறாங்க?’

‘போயிட்டுப் போறா அழகிரி. பெண்புத்தி முன் புத்தின்னு சொல்லுவாங்க தானே! அதான். ஒரு மனுசன் எந்த நிலையில இருக்கான்றதையே புரிஞ்சிக்காத பொண்ணெல்லாம் ஒரு பொண்ணா? சொல்லு!’

‘எனக்கு ஒன்னும் புரியல சார், அவங்களை தான் கட்டிக்குவேன்னு சொன்னீங்க!’

‘கட்டிக்கலாம்னு காலை வரை நினைச்சிருந்தேன் அழகிரி. ஆனா அவ தோதுப்பட மாட்டா!’

‘ரொம்ப நாள் லவ்வா சார்! லவ்வர் முன்னாடி உக்காந்து குடிச்சா எந்த லவ்வருக்கு சார் கோபம் வராம இருக்கும்?’

‘அட ஆமால்ல! பாய்ண்ட் சரிதான் அழகிரி. ஆனா எனக்கு இங்க அவளோட இருக்க பயமயிடுச்சு அழகிரி!’

‘பயமா? என்ன சார் சொல்றீங்க? உங்களுக்கென்ன பயம் இங்கே?’

‘பாலியல் வெப்சைட்டுகள்ல நிறைய தமிழ்நாட்டு பொண்ணுக, கேரளப் பொண்ணுக, ஆந்திரா பொண்ணுகன்னு டைட்டில் போட்டு இருக்குதுக!’

‘ஆமாங்க சார்! என் செல்போன்லயும் நிறைய இருக்குது! ஓ! நீங்க இங்க கேமரா வெச்சுருப்பாங்கன்னு பயந்துட்டீங்களா? அந்த சாமியாரு ஒருத்தருக்கு தெரியாம வீடியோ வந்த மாதிரி! அடப்பாவத்தெ! அப்படியெல்லாம் இங்க ஒன்னும் இல்ல சார்! வேணும்னா போயி அந்த கண்ணாடியை தொட்டுப்பாருங்க!’

‘கண்ணாடியில என்ன இருக்கு?’

‘அதை தொட்டீங்கன்னா சாதாரணமா தொடறாப்ல இருந்தா ஒன்னுமில்ல இங்கேன்னு அர்த்தம் சார். கொஞ்சம் மாற்றமா தண்ணிக்குள்ள கையி போறாப்டி தோணுச்சுன்னா நிச்சயமா இருக்குன்னு அர்த்தம் சார்.’

’ஓ! அதும்வேற அப்படியா?’

‘ஆமாங்க சார், அப்படியில்லீன்னா இந்த ரூம்ல எல்லா லைட்டுகளையும் ஆப் பண்ணிட்டு உங்க செல்போன்ல சுத்தியும் வீடியோ எடுத்து ஓட விட்டுப்பாருங்க! அதுல சிகப்பா சின்னதா லைட்டு தெரிஞ்சா மாதிரி இருந்தா கேமரா இருக்குன்னு அர்த்தம் சார்!’

‘ஓ! அது எனக்கு தெரியாது! அதனால நான் பயந்து போயிட்டேன் அழகிரி. அவ கோவிச்சுட்டு போயிட்டா! நாம் ரூமை காலி பண்ணலாம்னு இருக்கேன் அழகிரி!’

‘ஏன் சார்? இப்பத்தான் வந்தீங்க.. அதுக்குள்ள காலி பண்றேன்னு சொல்றிங்க? நல்லா தூங்கி எந்திரிச்சு நைட்டு வேணா கிளம்புங்க சார். போதையில ஏன் கிளம்பாட்டி! வேணும்னா நான் முத்தழகியை வரச் சொல்றேன். அதுக்கு நீங்களா பாத்து எது குடுத்தாலும் வாங்கிக்கும். இங்க தான் ரூம் சுத்தம் பண்ணுறது, கூட்டுறதுன்னு இருக்குது. புருசன் குடிகாரனாப் போயிட்டானு சொல்லிச் சொல்லி அழுவும் சார்’

‘அழுவுமா ஐயோ!’

‘அது என் கிட்ட சொல்லி அழும் சார். லாட்ஜ் மேனேஜருக்கே கூட அது இந்த மாரி பண்ணுற விசயம் தெரியாதுங்க சார். வரச் சொல்லவா!’

‘வேண்டாம் அழகிரி! இந்த சரக்கை நீ குடிச்சுக்கோ நைட்டு போறப்ப! சில்லியை சாப்பிடு!’

‘நீங்க சாப்பிடுங்க சார் ரெண்டு பீசாச்சும்! நான் சாப்புடுறேன்’

‘சரி நாம சாப்பிடுவோம்’ என்றவன் சில்லியை எடுத்துக் கடித்தான். வாந்தி வரும் போல இருந்தது அவனுக்கு. ஆனாலும் அப்படி தெரியவில்லை. எழுந்து போய் பாத்ரூமில் முகம் கழுவி விட்டு வந்தான். தன் உடைகளை எடுத்து அணிந்து கொண்டான்.

‘நான் புறப்படுறேன் அழகிரி, நீ மெதுவா சாப்டுட்டு வா! நான் கீழாற போயி ரிசப்சன்ல கணக்கை முடிச்சுக்குறேன். அந்த அமெளண்ட்டை எடுத்துக்கோ நீயே!’ சொல்லி விட்டு படிகளில் இறங்கினான். ரிசப்சனில் வந்து நின்றான். ‘சார் வெளிய போயிட்டு வர்றீங்களா?’ என்றார் முன்பாக இவனை அனுமதித்தவர். ‘இல்ல நான் கிளம்புறேன். அவ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீன்னு போயிட்டா! என்னா வாழ்க்கை சார் இது? நினைச்சுது ஒன்னும் நடக்கவே மாட்டீங்குது! நெனப்பு தான் ஆனையை முத்தமிட ஹைட்டு பத்தலீன்னு எலி சங்கடப்பட்டாப்ல!’ அவர் பாக்கித் தொகையை கையில் கொடுத்து அனுப்பினார். ‘பாத்துப் போங்க சார்’ என்று வேறு சொன்னார். கையை அசைத்து விட்டு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தான்.

000

முகநூல் பதிவுகள் குறித்து சில சொற்களும் யோகியின் – யட்சி – கவிதை தொகுப்பு குறித்த விமர்சனமும். – எழுத்தாளர் – இமையம்.

download

கவிஞர்கள் நிறைந்திருக்கிற இந்த இடத்தில், கவிதை எழுதாத, கவிதைத் தொகுப்பு வெளியிடாத நான் கவிதைத் தொகுப்புப்பற்றி பேசுவது சரியா? அதுவும் நவீனக் கவிதைகள் பற்றி? பெண் சார்ந்த உணர்வுகளை, வலிகளை ஒரு பெண்ணால்தான் உணரமுடியும். எழுத முடியும் என்று பேசப்படுகிற சூழலில், ஒரு பெண் எழுதிய கவிதைகள்பற்றி ஒரு ஆண், அதாவது நான் பேசுவது அவ்வளவு பொருத்தமா? என் பேச்சுக்கோ, எழுத்துக்கோ, நவீன பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மத்தியில் அவ்வளவு மரியாதை இல்லை என்றே கருதுகிறேன்.
பெண் உணர்வுகளைப்பற்றி ஒரு பெண்ணால்தான் எழுத முடியும் என்று சொன்னால் ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளைப்பற்றி ஐந்து வயது, பத்து வயது குழந்தைகள்தான் எழுத வேண்டும். ஒரு பிணத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு பிணம்தான் கதை எழுத வேண்டும். தலித்களின் வாழ்வுகுறித்து தலித்தான் எழுதவேண்டும். எழுதப் படிக்க தெரியாதவர்கள் தங்களைப்பற்றிய கதைகளை எப்படி எழுதுவார்கள்? இதுபோன்ற சில கேள்விகளை கேட்டால் நான் பெண்ணிய விரோதியாக்கப்படுவேன். நிஜமான எழுத்தாளன் சாதிய பிற்போக்குத்தனத்திற்கு, மதவாதத்துக்கு, மூடநம்பிக்கைகளுக்கு, சமூகத்தின் அத்தனை இழிவுகளுக்கும் எதிரானவன்.

என்னுடைய எழுத்தைவிட நான்தான் முக்கியம், நான் சொல்வதுதான் சரி, அதுதான் இறுதி உண்மை. அந்த உண்மைக்கு மாற்று இல்லை என்று கருத்து சுதந்திரம் பேசுகிற சூழல். காலம். முகநூலில் போடப்படுகிற ஸ்டேடஸ்களையே கவிதை என்று கொண்டாடுகிற சூழல், காலம். கவிதைக்கும், கருத்துக்கும் இடைவெளியின்றிபோன, உரைநடைக்கும், கவிதைக்குமான இடைவெளி குறைந்து போன, எது கவிதை? எது கருத்து? எது ஸ்டேட்டஸ் என்று கண்டுபிடிக்கமுடியாமல் குழம்பிப்போய் நிற்கிற சூழலில், காலத்தில் நான் யோகியின் கவிதை தொகுப்புப்பற்றிப் பேச வேண்டும்.

தமிழ்க்கவிதையின் வளர்ச்சி, தமிழ்மொழியின், கல்வியின், அறிவின் வளர்ச்சி முகநூலில் எழுதப்படுகிற துணுக்குகளால் ஏற்படாது. கவிதை எழுதுவதும், கவிதையை வாசகனிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் இன்று எளிதாகியிருக்கிறது. ஆனால் வாசகனின் மனதில் ஒரு கவிதையை நிலைநிறுத்துவது மட்டும் சிரமமாகியிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கவிஞர் பத்துக்கும் மேற்பட்ட கருத்து போடுகிறார். பத்து போட்டோ போடுகிறார். பத்து கவிதையும் போடுகிறார். எதுஎதற்கோ நூறு லைக்கும் போடுகிறார். வாசகரின் மனதில் நிற்பது கவிஞரின் கவிதை அல்ல, கருத்து அல்ல. போட்டோ மட்டுமே.

கவிதை என்ற வடிவத்தில் சொல்வதற்கு அனுபவங்களும், விசயங்களும் இருந்தால் மட்டும் போதுமா? அனுபவத்தையும், விசயத்தையும் சொல்வதற்கு உயிருள்ள சொற்கள் வேண்டாமா? உயிருள்ள கவிதையை எழுத, உயிருள்ள சொற்கள் வேண்டும். உயிரற்ற சொற்களால் எழுதப்படும் கவிதையும் உயிரற்றதுதான். உயிருள்ள சொற்களால் எழுதப்படுவதே கவிதை, அப்படி எழுதுகிறவரே கவிஞர். நல்லக் கவிதைகளை எழுதுவதைவிடவும் முக்கியமானது, நல்ல கவிதைகளைப் படிப்பது. நல்ல கவிதைகளைப் படிக்காதபோது, நல்லக் கவிதைகளை எழுத முடியாது.

எலினா ஃபெர்ரான்டெ என்பவர் இதுவரை ஏழு நாவல்களை எழுதியுள்ளார். கால்நூற்றாண்டு காலமாக மேற்குலக இலக்கிய அதிசயமாக கருதப்பட்டுவருபவர். எலினா என்பவர் யார், அவருடைய உண்மையான பெயர் என்ன, வயது என்ன, அவரது பிறப்பு, வாழ்க்கை எதுவுமே தெரியாது. அவருடைய ஒரு புகைப்படம்கூட இதுவரை வெளியாகவிலலை. ‘நியூயார்க் டைம்ஸ், பாரிஸ் ரிவ்யூ’ ஆகிய பத்திரிக்கைகளில் அவருடைய நேர்காணல்கள் வந்துள்ளன. எல்லா நேர்காணல்களும் ஈ.மெயில்கள் மூலமே வெளிவந்ததுள்ளன. இத்தாலிய பெண் எழுத்தாளர் என்பதைத்தவிர அவரைப்பற்றிய வேறு தகவல்கள் அறியக்கிடைக்கவில்லை. அவருடைய ஏழு நாவல்களுமே உலகமெங்கும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. நாம் எப்படி இருக்கிறோம்?

***
download (2)

யோகியினுடைய ‘யட்சி’ கவிதைத் தொகுப்பில் வடிவ ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் முழுமை பெற்ற பல கவிதைகள் இருக்கின்றன. நான் வரைபவனின் மனைவி, என் மரணத்தை சம்பவிக்க, என்னிடம் பல கதவுகள் இருந்தன? என் காலையில், என் கருவறை, என் அன்பே மூன்றாவது முறையாக, யட்சி, கால்கள், இன்று யட்சிகளின் திருவிழா, யட்சியின் இசை, நாட்குறிப்பு காதல் போன்றவற்றை நல்ல கவிதைகள் என்று சொல்ல முடியும். கவிதைகளாக மலர்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களை கொண்ட பல கவிதைகளும் – தொகுப்பில் இருக்கின்றன.
யோகி பிரம்மாண்டங்கள்பற்றி, அதீதங்கள், அதித உன்னதங்களைப்பற்றி, கோட்பாடுகளை முன்வைத்து பெரியபெரிய சொற்களைப் போட்டு தன்னுடைய கவிதைகளை எழுதவில்லை. அன்றாட வாழ்வில் நடக்கும் சின்னச்சின்ன விசயங்கள், மனதை கறுக்கும் விசயங்களைப்பற்றிதான் எழுதியிருக்கிறார். அன்பை பகிர்வதிலும், பெறுவதிலும் இருக்கிற சிக்கல்கள், அன்புக்கான ஏக்கம், சக மனிதர்களால் ஏற்படுத்தப்படும், வெளிப்படுத்த முடியாத மனதின் காயங்கள், கருவறையின் வலிமை, கருவறையின் வெற்றிடம் தரும் கண்ணீர், மனதின் அலைக்கழிப்பு, வலியை சுமப்பது, வலியை கடந்து போவது எப்படி என்று மனதின் காயங்களின் வலியை சொல்வதுதான் யோகியினுடைய கவிதைகளின் மையமாக இருக்கிறது.

நான் வரைபவனின் மனைவி – கவிதை முக்கியமானது. வரைபவனின் மனைவிக்கு பெயர் – வரைபவனின் மனைவிதான். அவளுக்குப் பெயர் இல்லை. கருப்பு, சிவப்பு, உயரம், குட்டை என்று எந்த அடையாளமுமில்லை. வரைபவனின் மனைவிக்கு மட்டும்தான் இந்த நிலையா? ஆசிரியரின் மனைவி, கிளர்க்கின் மனைவி, மருத்துவரின் மனைவி, மேனேஜரின் மனைவி, டெய்லரின் மனைவி, டிரைவரின் மனைவி – இப்படி பல மனைவிகள். உலகம் முழுவதும் மகளாக, மனைவியாக, அம்மாக்களாக இருக்கிறார்கள். பெயர்களாகக்கூட இல்லை. அடையாளங்களாக இல்லை. பெண்ணாக இல்லை. இந்த அடையாளமற்ற தன்மை நமது பண்பாட்டால், கலாச்சாரத்தால், சடங்குகளால், சாமிகளால், கோவில்களால், புராண இதிகாச கதைகளால் ஏற்பட்டது. உருவாக்கப்பட்டது. அடையாளம் வேண்டும் என்றால், இருக்கிற அடையாளத்தை துறக்க வேண்டும். அதற்கு நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, கோவிலை, சாமியை, சடங்கை துறக்க வேண்டும் என்பதுதான் யோகியினுடைய கவிதை தரும் செய்தி. நான் வரைபவனின் மனைவி கவிதையைப் போலவே நாட்குறிப்பு காதல் – கவிதையும் முக்கியமானது. மனித மனதின் வேறொரு முகத்தை இக்கவிதை காட்டுகிறது. நல்ல கவிதை. இது அனுபவத்தைத் தந்தது என்று சொல்ல முடியாது. கவிஞரின் காயத்தை, கண்ணீரை, வலியை, துயரத்தை, கைவிடப்பட்டதின் வலியை சொல்கிறது என்று சொல்லலாம். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையைப்பற்றியும் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.
யோகி தன்னுடைய நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த நெருப்பை – கவிதைகளாக எழுதி ‘யட்சி’ என்ற தொகுப்பாக தந்திருக்கிறார். வாசகனுடைய யூகங்களையும், அனுமானங்களையும் தாண்டி தனக்குள் பல புதிர்களை, ரகசியங்களை யோகியின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. யோகியின் கவிதைகளை படித்து முடித்தபோது, அவர் எனக்கு கவிஞராகத்தான் தெரிந்தார். பெண் கவிஞராக அல்ல. ஒரு கவிஞராக யோகி போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அந்த தூரம் மிக அருகில் இல்லை.
சங்ககால கவிதைகள், பக்தி இலக்கியம், காப்பியம் சித்தர் பாடல்களும் மற்றுமுள்ளவையும் பல நூற்றாண்டுகள் கடந்தும் எப்படி இன்னும் உயிரோடு இருக்கின்றன என்பதை அறியும்போது, கற்கும்போது யோகியும் கவிஞராக இருப்பார். நல்ல கவிதைகளை எழுதுவார் என நம்பலாம்.
*********

நல்ல வெளிச்சமுள்ள, தூய்மையான ஒரு இடம் (A Clean, Well-Lighted Place) ஆங்கிலம் : எர்னஸ்ட் ஹெமிங்வே (ERNEST HEMINGWAY) தமிழில் ச.ஆறுமுகம்

download (8)

அப்போதே இரவு மிகவும் பிந்திவிட்டிருந்தது. மின்விளக்குக்கு நேர் எதிரில் மர இலைகளின் நிழலில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான கிழவரைத் தவிர மற்ற எல்லோரும் சிற்றுணவகத்தை விட்டுச் சென்றிருந்தனர். பகல் நேரத்தில் தெரு முழுதும் தூசியாகப் பறந்தது; ஆனால், இரவுப் பனியில் தூசியெல்லாம் அடங்கியிருந்தது. அந்த வயதான கிழவருக்குக் காது கேட்காதென்பதாலும், இரவு அமைதியாக இருப்பதன் மாறுபாட்டை அவர் உணர்ந்ததாலும் அந்தப் பிந்திய நேரத்திலும், அவர் அங்கே உட்கார்ந்திருக்க விரும்பினார். உள்ளேயிருந்த பரிமாறும் பணியாட்கள் இரண்டு பேருக்கும் அந்தக் கிழவர் கொஞ்சம் போதையாகியிருந்தது தெரிந்தது. நல்ல வாடிக்கையாளரான அவர் அதிகம் போதையேறினால், பணம் கொடுக்காமலேயே போய்விடுவாரென்பதும் அவர்களுக்குத் தெரியுமென்பதால் அவர்மீது ஒரு கண்வைத்துக் கவனித்திருந்தனர்.

‘’கடந்த வாரம் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்,’’ என்றான், பரிமாறும் பணியாள் ஒருவன்.

‘’ஏன்?’’

‘’அவருக்கு விரக்தி, நம்பிக்கையிழந்துபோன நிலை.’’

‘’எதைப்பற்றி?’’

‘’எதைப்பற்றியுமில்லை.’’

‘’எதைப்பற்றியுமில்லையென்று உனக்கு எப்படித் தெரியும்?’’

’’அவரிடம் நிறையப் பணம் இருக்கிறது.’’

அவர்கள் இருவரும் உணவக வாயிலுக்கு அருகில் சுவரை ஒட்டியிருந்த மேசையில் அமர்ந்து, காற்றில் இலேசாக அசைந்த மர இலைகளின் நிழலில் அமர்ந்திருந்த கிழவரைத் தவிர மற்ற மேசைகளெல்லாம் காலியாகக் கிடந்த மாடியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தெருவில் இளநங்கை ஒருவளும் படைவீரன் ஒருவனும் நடந்து சென்றனர். தெருவிளக்கின் வெளிச்சம் அவனது தோள்பட்டைப் பித்தளை எண்கள் மீது விழுந்து ஒளிர்ந்தது. அந்தப் பெண் தலைக்கு மூடாக்கு எதுவும் அணியாமல் அவன் அருகாகவே விரைந்தாள்.

‘’ காவலர்கள் அவனைப் பிடித்துக்கொள்வார்கள்,’’ என்றான், பணியாட்களில் ஒருவன்.

‘’ அவன் நினைத்தது கிடைத்துவிட்டால், இதுவெல்லாம் அவனுக்கு ஒரு விஷயமாகுமா?’’

‘’அவன் இப்போது இந்தத் தெருவைவிட்டுப் போய்விட்டாலே நல்லது. காவலர்கள் அவனைப் பிடித்துவிடுவார்கள்; ஐந்து நிமிடத்துக்கு முன்னால் தான் இப்படிப் போனார்கள்.’’

நிழலில் அமர்ந்திருந்த கிழவர் கண்ணாடிக் கோப்பையைச் சிறு வட்டத்தட்டில் தேய்த்தார். இளம் பணியாள் அவரிடம் போனான்.

‘’உங்களுக்கு என்ன வேண்டும்?’’

கிழவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார்; ‘’இன்னொரு பிராந்தி’’ என்றார்.

‘’நீங்கள் போதையாகிவிடுவீர்கள்,’’ என்றான், பணியாள். கிழவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். பணியாள் விலகிச் சென்றான்.

‘’இரவு முழுவதும் இருந்து கழுத்தறுக்கப் போகிறான், கிழவன்,’’ என்றான், சக பணியாளிடம். ‘’இப்போதே நான் தூங்கித்தான் விழுகிறேன். மூன்று மணிக்கு முன்னால் நான் படுக்கைக்குப் போக முடியவே போவதில்லை. அந்த ஆள் கடந்த வாரமே செத்துத் தொலைத்திருக்கலாம்.’’

பணியாள் பிராந்திப் புட்டியையும், உணவகத்தின் உட்பக்கமாக இருந்த வழங்குமிடத்திலிருந்து இன்னொரு சிறு வட்டத்தட்டினையும் எடுத்துக் கொண்டு கிழவரின் மேசைக்கு விரைந்தான். வட்டத்தட்டினை வைத்துவிட்டு பிராந்தியைக் கண்ணாடிக் கோப்பை நிரம்பும்வரை ஊற்றினான்.

‘’போன வாரமே செத்துத் தொலைந்திருக்கவேண்டியதுதானே,’’ என்றான், அந்தக் காது கேளாத மனிதரிடம். கிழவர் ஒற்றை விரலை அசைத்துக் காட்டி ‘’இன்னும் கொஞ்சம்,’’ என்றார். கண்ணாடிக் கோப்பை நிரம்பிப் பக்கவாட்டில் வழிந்து அடுக்கியிருந்த வட்டத்தட்டுகளின் மேலாக முதலாவதாக இருந்த தட்டில் சென்று சேருமளவுக்கு பணியாள், பிராந்தியை ஊற்றினான். ‘’நன்றி’’ என்றார், கிழவர். பணியாள் புட்டியை மீண்டும் உணவகத்துக்குள் எடுத்துச் சென்றான். மீண்டும் மேசையில் போய் சக பணியாளுடன் அமர்ந்தான்.

‘’இப்போது அவன் நல்ல போதை,’’ என்றான், அவன்.

‘’எல்லா இரவிலும் அவர் போதைதான்.’’

‘’அவன் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான்?’’

‘’எனக்கு எப்படித் தெரியும்?’’

‘’அதை அவன் எப்படித்தான் செய்தான்?’’

‘’கயிறு மாட்டிக்கொண்டு தொங்கினார்.’’

‘’கயிற்றை அறுத்துக் காப்பாற்றியது யார்?’’

‘’அவரது உடன்பிறந்தார் மகள்.’’

‘’அவள் ஏன் அப்படிச் செய்தாள்?’’

‘’அவருடைய ஆன்மாவுக்காகத் தான்.’’

‘’அவனிடம் எவ்வளவு இருக்கும்?’’

‘’நிறைய வைத்திருக்கிறார்.’’

‘’அவனுக்குக் கண்டிப்பாக ஒரு எண்பது வயது இருக்கும்.’’

‘’எப்படியானாலும் அவருக்கு எண்பது வயது என்றுதான் நானும் சொல்லியாகவேண்டும்.’’

‘’அவன் வீட்டுக்குப் போய்த் தொலையவேண்டும். மூன்று மணிக்கு முன்னால் நான் படுத்ததேயில்லை. படுக்கப் போவதற்கு என்ன மாதிரியான ஒரு நேரம் அது?’’

‘’அவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் இங்கேயே இருக்கிறார்.’’

‘’அவன் தனியாள். நான் தனியாள் கிடையாது. படுக்கையில் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் ஒரு மனைவி இருக்கிறாள்.’’

‘அவருக்கும் மனைவி இருந்தாள், ஒரு காலத்தில்.’’

‘’இப்போது அவனுக்கு மனைவி இருந்தாலும் அது அவனுக்கு நன்றாக இருக்கப்போவதில்லை.’’

‘’அப்படிச் சொல்லமுடியாது, நீ. மனைவியோடு அவர் நன்றாக இருப்பாராக இருக்கலாம். அவரது உடன்பிறந்தார் மகள் அவரைப் பார்த்துக்கொள்கிறாள். அவள் தான் அவரைக் கீழே இறக்கிக் காப்பாற்றினாளென்று நீதான் சொன்னாய்.’’

‘’எனக்குத் தெரியும்.’’ ‘’அந்தக் கிழட்டு வயதுக்கு நான் இருக்கக்கூடாது. கிழடு என்பதே ஒரு அசிங்கம்தான்.’’

‘’ எல்லோரும் , எப்போதும் அப்படியென்று சொல்லமுடியாது. இந்தக் கிழவர் சுத்தமாக இருக்கிறார். இப்போதுங்கூட, இந்தப் போதையிலும் சிந்தாமல் குடிக்கிறார், அவரைப் பாரேன்.’’

‘’நான் அவனைப் பார்க்கமாட்டேன். எனக்கு வேண்டவும் வேண்டாம். அந்த மனிதன் வீட்டுக்குப் போய்த் தொலைந்தால், அதுவே எனக்குப் போதும். வேலை செய்பவர்களைப்பற்றி அவன் சிறிதுகூட நினைத்தும் பார்ப்பதில்லை.’’

கிழவர் அவரது கண்ணாடிக்கோப்பையிலிருந்தும் கண்களை உயர்த்தி நேர் எதிரில் பார்த்துப் பின் பரிமாறும் பணியாட்களைப் பார்த்தார்.

அவரது கண்ணாடிக்கோப்பையைச் சுட்டிக்கொண்டே. ‘’இன்னுமொரு பிராந்தி’’ என்றார், கிழவர். வீட்டுக்குச் செல்லத் துடித்துக்கொண்டிருந்த பணியாள் அங்கு வந்தான்.

‘’முடிந்துவிட்டது.’’ என்றான், அவன். குடிகாரர்களிடம் அல்லது வெளிநாட்டுக்காரர்களிடம் பேசும்போது மந்தமான மனிதர்கள் இலக்கணப் பேச்சை விட்டுவிடுவார்களே, அதுபோல அவன் பேசினான். ‘’இன்று இரவுக்கு அவ்வளவுதான். இதற்குமேல் கிடையாது. இப்போது முடித்துக்கொள்.’’

‘’இன்னொன்று,’’ என்றார், கிழவர்.

‘’கிடைக்காது. முடிந்துவிட்டது.’’ மேசை விளிம்பினை ஒரு துண்டினால் துடைத்த பணியாள் தலையை அசைத்து மறுத்தான்.

கிழவர் எழுந்து நின்று, வட்டத்தட்டுகளை மெதுவாக எண்ணிப்பார்த்த பின்னர், தோல் காசுப்பை ஒன்றினைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து, மதுவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, அரை பெசெட்டோவை அன்பளிப்பாக மேசையில் வைத்தார். கிழவர் கீழே இறங்கித் தெருவுக்குச் செல்வதை, மிகவும் வயதான கிழவரான அவர் நிதானமின்றி, ஆனால் கண்ணியத்துடன் செல்வதை அந்தப் பணியாள் கவனித்துக்கொண்டிருந்தான்.

“நீ ஏன், அவரை இன்னும் உட்கார்ந்து, குடிக்கவிடாமல், செய்துவிட்டாய்?” என அவசரமில்லாத பணியாள் கேட்டான். உருளைக்கதவுகளை அவர்கள் இழுத்துப் பூட்டிக்கொண்டிருந்தனர். “இன்னும் இரண்டரை கூட ஆகவில்லை.”

“நான் வீட்டுக்குப் போய்த் தூங்கவேண்டும்.”

“ஒரு மணி நேரத்தில் என்னவாகி விடும்?”

“அது அவனைவிட எனக்கு அதிகம்.”

“ஒரு மணி நேரம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.”

“நீயும் ஒரு கிழவன் போலவே பேசுகிறாய். அவன் ஒரு புட்டியை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் குடிக்கவேண்டியதுதானே?”

“அது இது மாதிரி இருக்காது.”

“ஆமாம், இருக்காதுதான்.” ஒத்துக்கொண்டான், மனைவியுள்ள பணியாள். அவன் நியாயமற்றவனாக இல்லை; அவசரத்தில் இருந்தான்; அவ்வளவுதான்.

”அப்புறம், நீ? வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே வீட்டுக்குச் செல்கிறாயே, உனக்குப் பயமாக இல்லையா?”

“என்னை அவமானப்படுத்தப் பார்க்கிறாயா?”

”அட இல்லையப்பா, சும்மா கேலியாகத்தான்.”

”இல்லை.” அவசரத்திலிருந்த பணியாள் உலோக உருளைக் கதவுகளை இழுத்து மூடி முடித்து எழுந்தவாறே சொன்னான். “எனக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது. தன்னம்பிக்கையென்றாலே நான்தான்.”

”உனக்கு இளமை, தன்னம்பிக்கையோடு ஒரு வேலையும் இருக்கிறது. உனக்கு எல்லாமே இருக்கிறது.” என்றான் வயதான பணியாள்.

“சரி, உனக்கு மட்டும் என்ன குறை?”

“எல்லாம் தான்; ஆனால், வேலை.”

”எனக்கு இருக்கிற எல்லாமே உனக்கும் இருக்கிறது.”

“இல்லை, எனக்குத் தன்னம்பிக்கை இருந்ததேயில்லை. நான் இப்போது இளமையாகவும் இல்லை.”

“வா, வா. முட்டாள்தனமாகப் பேசுவதை விட்டுவிட்டு முதலில் பூட்டைப் போடு.”

“சிற்றுணவகத்தில் மிகப் பிந்தியநேரத்திலும் தங்கியிருக்க விரும்புபவர்களைச் சேர்ந்தவன், நான்.” என்றான், வயதான பணியாள். “படுக்கைக்குப் போக விரும்பாதவர்களோடு சேர்ந்தவன். இரவுக்கு ஒரு விளக்கு தேவைப்படுபவர்களோடு சேர்ந்தவன்.”

“நான் வீட்டுக்குப் போய்த் தூங்கவேண்டும்.”

”நாம் இருவரும் வெவ்வேறு ரகம்.” என்றான், வயதான பணியாள். அவன் இப்போது வீட்டுக்குச் செல்வதற்கான உடையிலிருந்தான். “இளமையும் தன்னம்பிக்கையும் மிக அழகான விஷயங்களேயென்றாலும் அது மட்டுமேயல்ல பிரச்னை. ஒவ்வொரு நாள் இரவிலும் கபேயை மூடுவதற்கு நான் ஏன் சுணங்குகிறேனென்றால், கபே தேவைப்படுபவர்கள் யாராவது இருப்பார்கள் என்பதுதான்.”

“அட என்னப்பா, அதுதான், இரவு முழுவதற்கும் போட்காஸ் (மதுக்கடைகள்) திறந்திருக்கின்றனவே.”

“உனக்குப் புரியவில்லை. இது தூய்மையும் மகிழ்ச்சியானதுமான ஒரு கபே. நல்ல வெளிச்சமுள்ளது. வெளிச்சம் மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், அங்கங்கே இலைகளின் நிழல் வேறு விழுகிறது.”

“நல்லிரவு,” என்றான், இளம் பணியாள்.

“நல்லிரவு,” என்றான், மற்றவன். மின்விளக்கை நிறுத்திவிட்டு, உரையாடலைத் தொடர்ந்து, தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கிய அவன், வெளிச்சம் முக்கியமானதுதான்; இருந்தாலும் இடம் தூய்மையாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கவேண்டியதும் அவசியம். உங்களுக்கு இசை தேவையில்லை. நிச்சயமாக இசை தேவையில்லை. இந்த மாதிரி நேரத்தில் எல்லாமே, எல்லாமே தான் இருந்தாலும் ஒரு மதுவகத்தின் வாயிலில் நீங்கள் கண்ணியத்துடன் நிற்கமுடியுமா? அவன் எதற்குப் பயப்படுகிறான்? அது அச்சமுமில்லை, திகிலுமில்லை; அது, ஒரு ஒன்றுமில்லாததென்று அவனுக்கு நன்றாகத் தெரியும்தான், அது மொத்தத்திலுமே ஒரு ஒன்றுமில்லாத விஷயம், ஏன், மனிதனேகூட ஒன்றுமில்லாத விஷயம்தான். வெளிச்சம் தேவை, அவ்வளவுதான், அதோடு கொஞ்சம் சுத்தமும் ஒரு ஒழுங்கும் வேண்டும். சிலர் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்றாலும் அதை உணர்வதேயில்லை; ஆனால் அவனுக்குத் தெரியும். இது எல்லாமே மொத்தத்தில் எதுவுமே இல்லை, ஏனென்றால், ஒன்றுமில்லைக்குள் ஒன்றுமில்லை. எதுவுமில்லாத எங்கள் ஏதுமில்லாமையே, ஏதுமில்லாமைக்குள்ளிருப்பதைப் போலவே எதுவுமில்லாமலிருக்கும், எதுவுமில்லாமையே தங்கள் நாமமாகவும் தங்கள் ராஜ்யமாகவுமிருக்கட்டும். இந்த ஒன்றுமில்லாமையை, எங்கள் அன்றாட ஒன்றுமில்லாமையையும் ஒன்றுமில்லாத எங்களின் ஒன்றுமில்லாமையை, எங்கள் ஒன்றுமில்லாமையை நாங்கள் ஒன்றுமில்லாமலாக்குவது போலவும் ஒன்றுமில்லாமை எங்களை ஒன்றுமில்லாதவர்களாக்குவது போலின்றி எங்களுக்கு அளியுங்கள்; ஆனால், ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களுக்கு அளியுங்கள்; எதுவுமேயில்லாத ஒன்றுமில்லாமை. ஒன்றுமில்லாமை, முழுக்க முழுக்க ஒன்றுமில்லாமை, தங்களோடிருக்கும் ஒன்றுமில்லாமை வாழ்க! அவன் ஒளிரும் நீராவி அழுத்தக் காபி எந்திரத்துடனுள்ள ஒரு மதுவகத்தின் முன்னால் போய் நின்றான்.

“உனக்கு என்ன வேண்டும்?” எனக்கேட்ட மதுவக ஆள் பின்பக்கமாகத் திரும்பிப்பார்த்தான்.

“ஒன்றுமில்லை.”

“சரிதான், இன்னொரு பைத்தியம்,” எனச் சொல்லிவிட்டுத் திரும்பிக்கொண்டான், மதுவக ஆள்.

“சிறிய தம்ளர் ஒன்று.” என்றான், பணியாள்.

மதுவக ஆள் ஊற்றிக்கொடுத்தான்.

“வெளிச்சம் மிகவும் பளிச்சென்று, மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால், மதுவகம் அந்த அளவுக்குப் பளபளப்பாக இல்லையே,” என்றான், பணியாள்.

மதுவக ஆள், அவனை ஏறிட்டுப் பார்த்தான்; ஆனால், பதிலெதுவும் சொல்லவில்லை. பேசுகிற நேரமா அது, ஏற்கெனவேயே மிகவும் பிந்திய இரவாகிவிட்டது.

“உனக்கு இன்னொரு தம்ளர் வேண்டும், ம்?” எனக் கேட்டான், மதுவக ஆள்.

“இல்லை, வேண்டாம், நன்றி,” என்றுவிட்டு, வெளியே வந்தான், பணியாள். மதுவகங்களையும் மதுக்கடைகளையும் அவன் வெறுத்தான். அதுவே, ஒரு நல்ல வெளிச்சமுள்ள தூய்மையான சிற்றுணவக(கபே)மென்றால் விஷயமே வேறாக இருக்கும். மேற்கொண்டு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவன், இப்போது, அவனுடைய வீட்டிலுள்ள அவனது அறைக்குப் போவான். அவனது படுக்கையில் விழுந்து, கடைசியில், வெயில் வந்தபிறகு நல்ல, பகல்வெளிச்சத்தில் தூங்குவான். இதுவெல்லாம், என்ன, தூக்கம் பிடிக்காத இன்சோம்னியாவாக இருக்குமென அவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். நிறையப் பேருக்கு அது இருக்கலாமாகயிருக்கும்.

••••••••

வெயில் கவிதைகள் / ஈழக்கவி

images

தண்ணியை பத்தவைக்கும் வெயில்

வெயில்
தண்ணியை பத்தவைக்கும்
பகல் நேரம்
நதிக்கரை ஓரமாய் நடந்தேன்
கொதி நீராவி
என்னை கருவாட்டுக் கொழம்பாக்கியது

ஆற்று நீரை அருந்திய
ஆடு நெருப்பாய் உருகியது

பெருங் கருங்கற்பாறைகள்
வெடித்துச்சிதறின

கொடூர நச்சுநெருப்பைக் கொட்டித்திரியும்
நாகமாய் சூரியன்

அந்த பிரமாண்டசிலை
மௌத்திருந்தது

மனம் நொந்து
சுடுவெயிலில் வெந்து
நடக்கிறேன்
வானத்தில் பறக்கின்ற
ஒரு கழுகின் நிழலுடன்
உருக்குலைந்த பறவையொன்றின்
இறகுகளும் என் முன்னால் சிதறின
யுத்த நெருப்பில் பத்தி முடிந்த
ஒரு கிராமம் முன்னால் வந்து நின்றது

24032016 பகல் 1.30 மணிக்கு

மின்சார வெயில்

நிழலுக்கு வியர்த்தது
பட்சிகளின் இறகுகளில் நெருப்பு
மின்சார வெயில்
மரங்களில் ஊடுருவி
காற்றை எரிக்கிறது
நாக்கை வெளியில் நீட்டிய
தாகப்பேயாக
பூமி தவிக்கிறது
மயானத்துக்குள் ஒரு பூ
மழையை வேண்டி தவமிருக்கிறது

13032016 பகல் 1.10 மணிக்கு

நெருப்புப் பகல்
இரவு
இதுவரையில் பார்த்திருந்த அதிசயங்களை
படிக்கத் தொடங்கிய பரிதி
அந்த அதிசயங்களின் வெப்பத்தால்
நெருப்பென வெடிக்கிறது
பகலில்

08042016 இரவு 11.50 மணிக்கு

காதலியின் திடீர்வருகை

மறைந்ததிருந்த காதலி
நீண்ட நாட்களின் பின்
என் முற்றத்திற்கு வந்தாள்
வரமுன் வழமைப்போலவே
அவளின் விழிகளின் வெளிச்சம்
என்னிதயத்தை கிள்ளிச் சென்றது
எரிச்சலில் யாரோ ஒருவன்
நெருப்பாகி வெடித்தான்
என்வீட்டு வெள்ளை ஆடு
இவ்வளவு ரம்மியமாய்
பாடியதை இதற்கு முன்னர்
என் செவிகள் ருசித்ததில்லை
மேக அரியாசனத்திலிருந்து
மெல்ல இறங்கி
அழகு அரசியென
ஆடி அசைந்து ஓடிவந்தாள்
கலையம்சத்தோடு ஆடிளான்
ரொம்ப வேகமாய் ஆடினாள்
ஆடல்கலைக்கு இவள்தான் மூலமா
அவளின் சொற்கள்
முத்தக்குமிழிகளென உடைந்து வழிந்தன
இலைகளில் கவிதை எழுதியவள்
நதிகளில் சொற்களை குவித்து
மீண்டும் மறைந்துப் போனாள்
நதிகளில் குவிந்துள்ள கவிச்சொற்களை
மேகத்துக்குள்
வெயில் கணணியின் உதவியோடு
பதிகை செய்கின்றேன்
இன்னுமொரு மழைக்காக

01042016 மாலை 5 மணிக்கு

அவன் கதை , அவள் கதை- சமூகத்தின் கதை – எங் கதெ (நாவல்) இமையம் / விமர்சனம் : கவிஞர் சக்திஜோதி

download (7)

எழுத்தாளர் இமையத்தின் “எங் கதெ “ சொல்லப்பட்ட கதைக்குள் சொல்லப்படாத மௌனத்தை உணர்த்துகிறது.
ஆதியில் இருந்த தாய்வழிச் சமூகம் பாதியில் ஆணாதிக்கத்தின் தாக்கத்துக்கு உட்படுகிறது . குடும்பம் என்பது ஆண் தலைமையேற்று நடத்துகிற நிறுவனமாகிறது . குடும்பம் என்பது நிறுவனம் என்று ஆகிவிட்ட பிறகு குடும்பத்தின் மைய இழையான அன்பு , பாசம் , காதல் போன்ற உணர்வுகள் விலைபேசப்படுகிற விஷயமாக மாறிவிட்டது. இந்த இடத்தில் தான் பெண் உடல் என்பது அவளுக்குத் தெரிந்தும் விலை பேசப்படுகிறது , அவளுக்குத் தெரியாமலும் விலை பேசப்படுகிறது . பெண் என்பவள் உற்பத்தி சக்தி என்பதை மறக்கடிக்கப்படுகிறாள் . பெண்ணுக்கு அவளுக்கான தேர்வு மறுக்கப்படுகிறது . தனித்து செயல்படுவது என்பதோ அவளுக்கு பிடித்த வகையில் ஒரு ஆணைத் தேர்வு செய்வது என்பதோ இயலாதது ஆகி அவள் வாழ்வில் , சூழலில் குறுக்கிடுகிற ஆணின் விருப்பத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டியவளாகிறாள் . ஒரு பெண், தன் உடலை தானே சொந்தம் கொண்டாட முடியாத சூழல் இருப்பதையே இந்தக் கதை பேசுகிறது .
இன்றைக்கு ஒரு பெண் யாரையேனும் சார்ந்து இல்லாமல் வெளியே வர இயலாது. ஒரு பெண் தன்னுடைய மேலதிகாரியை அனுசரித்து கொள்ளவேண்டிய சூழல் தான் இருக்கிறது . அவளுக்கு தேவையான அடிப்படையான வெளிவேலைகளைச் செய்ய யாரோ ஒரு ஆணைச் சார்ந்து தான் இருக்கிறாள் .

download (6)

இந்தக் கதை , ஆணை மையப்படுத்தி ஆணின் இடத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது . கதையை நிகழ்த்துகிற விநாயகம் சொல்வது போல, இது அவனுடைய கதை மட்டுமல்ல , கமலாவின் கதையும் தான் . கமலா இல்லாமல் இந்தக் கதையே இல்லை . ஆனால் கமலாவின் இடத்திலிருந்து இந்தக் கதை சொல்லப்படவில்லை . விநாயகம் தான் கதையைத் தொடங்குகிறான் , கதையை அல்ல, அது ஒரு விளையாட்டு . சொற்களை இணைத்துக் கோர்த்தும் , கலைத்தும் விளையாடுகிற சொல்விளையாட்டு . கமலாவின் வாழ்வின் கணங்களின் மீது அவனே இந்த விளையாட்டைத் தொடங்கினான் , அவள் தொடங்கவில்லை. “சாவுற வெளையாட்டு” இது , இந்த விளையாட்டில் அவனைச் சேர்த்துக்க மாட்டேன் என்று அவள் சொன்னாள் எனவும் விநாயகம் சொல்கிறான் . பத்து ஆண்டுகள் அவளோடு ஆடிய ஆட்டத்தை அவனே முடிக்கிறான் .
இந்த விளையாட்டைத் தொடங்கிய இடமும் முடிந்த இடமும் கமலா என்கிற பெண் தன்னைப் பற்றி பேசவேயில்லை .மேலும் இந்தக் கதை முழுக்கவே கமலா தனக்காகப் பேசியது என்பது மிகச் சொற்பமான வார்த்தைகளே . ஆனால் அதுவே அநேகமான பெண்களுக்கானவை . கணவனைப் பிரிந்து தனித்து வாழுகிற பெண்கள் , கணவனை இழந்து தனித்து வாழ நேர்கிற பெண்கள் , ஆண் துணை ஏதுமின்றி தனியே தன்னுடைய வாழ்வைக் கட்டமைத்துக் கொள்கிற பெண்கள் என எல்லோருக்குமாக சேர்த்து பேசிவிடுகிறாள். “
ஒரு பெண்ணை நெருங்கி பழகும் பொழுது “ அவகிட்ட பேசினது , பழகினது மலையத் தாண்டி குதிச்சாப்புல தான் “ என்றும் “காஞ்சி கிடந்த மாட்டுக்கு வஞ்சனையில்லாம கமலா புல்லுக்கட்டு போட்டா , அதுவும் முழுசா ஒம்போது வருஷம் “என்றும் சொல்கிற விநாயகம் தான் “விரியன் பாம்புகிட்ட இருக்கிற விசத்துக்கு அதுவா பொறுப்பு “ என்றும் சொல்கிறான். “வாங்க மேடம், போங்க மேடம் “என்று தொடங்கி மெல்ல மெல்ல அவளின் மனம் வசப்பட்டவுடன் “வா , போ “என்றாகி உடலும் வசப்பட்டவுடன் “வாடி, போடி “ என்றானது விநாயகம் என்கிற ஒருவனுக்கு அல்ல . இந்தச் சூழலில் இருக்கிற பெரும்பான்மையான ஆண்களுக்குப் பொருந்துகிற ஒன்று .

“சாதியில அவ மேல் சாதி, நாம ஒரு படி கீழ தான்,” என்று பேசப்படுகிற இடம் கதையின் போக்கில் சற்று வேறுபட்ட திசை எடுக்கிறது . போலவே யார் யாருக்கு என்னவகையான பைத்தியம் என்று பேசப்படுகிற பகுதியில் பள்ளிக்கூட மாணவி திரைப்பட நடிகரை நினைத்துக்கொண்டு தனக்குத் தானே தாலி கட்டிக்கொள்வது பற்றி பேசுகிற இடமும் முக்கியமானது .

“நான் இறங்கிய ஆற்றுக்கு மறு கரையில்லை” என்றும் கிணத்துல குதிச்சா தப்பிக்கலாம் , கடல்ல குதிச்சா தப்பிக்க முடியுமா “ என்றும் சொல்கிற விநாயகம், கொலை செய்வது மற்றும் தற்கொலை செய்வது என முடிவு செய்தவுடன் பெண் உடல் பற்றி வேறு திசையில் சிந்திக்கிறான் . அதன் பிறகு பெண் உடலை அவன் கொண்டாடவும் இல்லை , இழிவு செய்யவும் இல்லை . மறுகரை ஏறிவிடுகிறான் .
. “கட்டுனவன் எங்கூட இருந்தா நான் ஏன் ஒங்கிட்டயெல்லாம் தேவிடியா பட்டம் வாங்கப்போறேன் “ என்று கமலா சொல்வது ஒரு பெண்ணுக்கு கணவன் கட்டாயம் கூட இருக்க வேண்டும் எனவும் அவன் தான் அவள் உடலுக்கும் நற்பெயருக்கும் பாதுகாப்பு என்பதாகவே அமைகிறது . கணவன் என்கிறவன் அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் ஆண் என்பவன் பெண்ணின் வாழ்வில் அவள் உடலின் மீது அதிகாரம் செய்து கொண்டிருப்பதையே இந்தக் கதை முழுக்க வருகிற வேறு வேறு மனிதர்களின் வழியாக கதை உணர்த்துகிறது.

எழுத்தாளர் இமையத்தின் “எங் கதெ “ , எந்த விதமான அலங்காரங்களும், பகட்டும், புரியாத சொல்லாடல்களும் அற்று எளிமையான முறையில் சாமானியனின் மொழியில் எழுதப்பட்டுள்ளது . அம்பலவாணனின் பேச்சு ஆணின் மனதைச் சொல்வதில் அதன் மொழியோடு சேர்த்து மிக முக்கியமானது . உரையாடல்கள் அனைத்தும் வழக்கு மொழியில் இருப்பதால் கதையின் உயிர்ப்புத் தன்மை மிக இயல்பாகக் கூடிவருகிறது .

••••••••

அய்யப்பமாதவன் ( நேர்காணல் ) / ரமாசுரேஷ் ( சிங்கப்பூர் )

unnamed

சமீபத்தில் சிங்கை வந்திருந்த கவிஞர்.அய்யப்பமாதவன் அவர்களை நேர்காணல் செய்யும் வாப்புக்கிட்டியது. லீசா பேச்சாளர் மன்ற மாதாந்திர கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார். தான் பார்த்து, ரசித்த, அனுபவத்தை தன் கற்பனையோடு கலந்து அழகியளாலும், கவித்துவத்தாலும் கவிதைகளால் வியக்க வைத்துக்கொண்டிருக்கும் கவிஞர் மிகவும் இயல்பாகவும், இனிமையாகவும் பேசினார். இந்த பிரபஞ்சத்தில் அனைத்து சம்பவங்களும் வலியோடு பிறப்பதும் இல்லை, மகிழ்வோடு முடிவதும் இல்லை என்ற எதார்த்தத்தை அவர் கவிதைகளில் மட்டும் அல்ல, உரையாடலிலும் வாசர்களுக்கு உணர்த்தினார். சந்தித்த அனைத்து வாசகர்களையும் புகைப்படம் எடுத்து, அதை அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிவைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்பான மனிதர். எழுத்தை ஆள்பவன், தன்னையும் ஆள கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு இனங்க, கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதிலளித்தார்.

தங்களை எழுத தூண்டியது வாசிப்பா? அல்லது தங்களுக்குள் துடித்துக்கொண்டிருக்கும் படிமமா?

எனக்குள் இருந்த படிமங்களைக் காட்டிக்கொடுத்தது வாசிப்புதான். என் நண்பர்கள் செழியன், மீராவின் மகன் கதிர் இவர்களோடு சேர்ந்து நிறைய வாசிக்கத் துவங்கினேன். நேரம் போவதுக்கூட தெரியாமல் விவாதிப்போம். அப்போது ஜப்பானிய மொழியிலிருந்து பேராசிரியர் வீ.உண்ணாமலை அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. எளிமையான முதல் இரண்டு வரியில் நம்மை உள்ளே இழுத்துச்செல்லும் ஹைக்கூ, வலிமையான பொருளுடைய மூன்றாவது வரியில் நம்மை அப்படியே புரட்டிப்போட்டு விடும். அத்தகைய கவிதைகளை வாசிக்க, வாசிக்க நாமும் எழுத வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால், ஹைக்கூவின் மற்ற இலக்கணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு மூன்று வரிகளில் எழுதினால் போதுமென்ற எழுத துவங்கினேன். பின்புதான் புரிந்துக்கொண்டேன் நாம் எழுதுவது வெறும் மூன்றுவரிக் கவிதைகள்தான். அவை, ஹைக்கூவே அல்ல, பொய்க்கூ என்பதை. இங்கு ஹைக்கூ என்ற போர்வையில் எழுதப்படும் கவிதைகள், ஹைக்கூ கவிதைகளல்ல என்பது உலகமறிந்த விசயம்.

தங்களுடைய கவிதைகளில் எதை முதன்மைப்படுத்த அல்லது கவனப்படுத்த விழைகிறீர்கள்?

இல்லை! நான் என் கவிதைகளை முதன்மைப்படுத்தவோ அல்லது ஈர்க்கவோ கவிதை எழுதுவது கிடையாது. என்னை எது ஈர்த்ததோ, எது ஆட்கொண்டதோ அதை அப்படியே கவிதையாக கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த உலகில் மிக அருமையான தருணம் ஒரு பூ மலர்வதுதான். பலநாட்கள் பூக்களின் அருகே தவமிருந்திருக்கேன். அப்பொழுதெல்லாம் என் கைகளில் கேமிரா கிடையாது. வாங்கும் அளவிற்கு வசதியும் கிடையாது. ஆனால், என் உணர்வுகளை என்னிடமிருந்து வெளிக்கொண்டுவர என் கவிதைகள் இருந்தன, அதை மட்டுமே முதன்மைப்படுத்த விழைகிறேன்.

புரிந்த மொழியில், புரியாத தன்மையில் சொல்வதுதான் நவீன கவிதையா? ஒரு வாசகன் நவீன கவிதையை எவ்வாறு அடையாளம் கண்டு அணுகுவது?

இன்று நவீன கவிதைகளைப்பற்றி வாசகர்களிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது. அதற்கு காரணம், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கவிஞர்கள். நீங்கள் சொல்வதுபோல் மொழியின் இறுக்கத்தோடு கவிதை எழுதுபவர்களும் இருக்கிறார்கள். அது அவர்களது பாணி. உங்களுக்கு அது புரியாதபட்சத்தில் அதைத் தூக்கியெறிந்துவிடுங்கள். அதற்காக ஒட்டுமொத்த நவீன கவிதையை நிராகரிக்க வேண்டியதில்லை. எத்தனையோ அருமையான நவீன கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். நீங்கள் அவற்றைக் கண்டடைவது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். ‘ஆத்மாநாம்’ தமிழ் நவீன கவிதையில் மிக முக்கியமானவர். அவரது எளிமையை வேறு எந்த நவீன கவிதைகளிலும் காணவே முடியாது. முதலில் நீங்களெல்லாம் ஆத்மாநாமை வாசியுங்கள். அவருடைய முழுத்தொகுப்பைக் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

ஒரு கவிதை அது மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்தக் கவிதை வாசகனின் முதல் வாசிப்பிலேயே புரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அக்கவிதை வாசகனை உள்ளிழுத்து மறு வாசிப்புக்கு தூண்டவேண்டும். அப்படி உங்களை தூண்டாத, புரியாத கவிதைகளைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கவிதையில் ஒன்றை சொல்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்…

அழகெல்லாம் உதிர்கிறது உதிர்கிறது கொன்றை மரக்கிளைகள் தீட்டிய கோலமது நிலமெல்லாம் விழியெல்லாம் மஞ்சள்

ஓயாத காற்று ஓயாத உதிர்வு தீராத ஓவியம்

மரமெல்லாம் பூக்கள் நடனமிடும் கிளைகளிலிருந்து உதிர உதிர மஞ்சள் ஒளிர்கிற நிலம்

நிழல் தரும் மரங்கள் இலையுதிர்க்கும் பூ உதிர்க்கும் காய் உதிர்க்கும் பழம் உதிர்க்கும் உதிர்ப்பதற்கென்றுதான் மரம்

உதிர்த்தபின் உதிர்ப்பதற்கு ஒன்றுமில்லாத மரங்கள் உதிக்கவே துளிர்க்கும்

பூக்கும் காய்க்கும் கனியும்

நானோ உயிரின் உதிர்விற்குபின் மண்ணில் கலப்பேன் கொன்றையின் கீழிருந்து மேலெழுவேன் மஞ்சள் பூவாக மஞ்சள் பூவாக

உலகின் கண்களுக்கு விருந்தாவேன்

இக்கவிதையை முதல் முறை வாசிக்கும்போது ஏதோ ஒன்றை உணர்த்தினால் இரண்டாவது முறை வாசித்து பாருங்கள் புரிதல் ஏற்பட்டு பல உணர்வுகளை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

என் இயல்பிலிருந்துதான் கவிதைகளை எழுதுகிறேன். எளிமையாக்குகிறேனென்று வலிந்து எழுதி வீரியமிழக்கச் செய்வதில்லை.

புரிந்தால் மட்டுமே கவிதையாகிவிடாது. சாதாரண எளிய கவிதைகூட புரியவில்லையென்றால், புரிந்துகொள்வதற்கான மனநிலையை வாசகர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

என் கவிதைகள் கரடு முரடானவை அல்ல. மறுவாசிப்பிலேயே புரிந்துவிடும். மேலும் எளிமைப்படுத்துங்கள் என்றால் மாட்டேன். என் எண்ணம் குவிமையமாகும் பொழுது உருவாகும் உணர்ச்சிகளுக்கு சொற்களால் உருவம் கொடுக்கிறேன்.

இன்று நிறைய கவிஞர்கள் நல்ல கவிதைகள் படைக்கின்றனர். அவர்களின் கவிதைகளை தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். செல்மா ப்ரியதர்ஸன், யவனிகாஸ்ரீராம், கண்டராதித்தன், பழனிவேள், பாலை நிலவன், லட்சுமி மணிவண்ணன், சங்கர் ராமசுப்பிரமணியன். ஸ்ரீநேசன், ராணிதிலக், நேசமித்திரன், பெண் கவிஞர்களில் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, தென்றல், உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, போன்றோரின் கவிதைகள் வாசிப்பிற்கு உகந்ததாக இருக்கின்றன. புதிதாக நிறைய கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களில் இசை, இளங்கோ கிருஷ்ணன், நரன், வெயில், மண்குதிரை, ஊர்சுலா, நிலாரசிகன், விஸ்வநாதன் கணேசன் கவிதைக்காரன் இளங்கோ, சசிகலா பாபு, கனிமொழி ஜி, அகிலா புகழ், கிருத்திகா தாஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையப் பேர் ஆர்வத்துடன் எழுத வந்திருக்கின்றனர். ஞாபகத்திற்கு வந்த பெயர்களையேக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு கவிஞன் சொல் வளத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? ஏதேனும் யுக்தி வைத்திருக்கிறீர்களா? (நிறைய கவிதைகள் படிக்க வேண்டும் என்பதை தவிர)

நான் யுக்திகளையும் கையாளுவதில்லை. சொல் வளத்தைவிட கவித்துவம்தான் முக்கியம். ஒரு கவிதையில் சொற்கள் அதிகம் தெரியவேண்டியதில்லை. மொழியென்பது உடலாலானது, கவித்துவம் உயிரைப்போன்றது. நமக்குள் இருக்கும் கவித்துவத்தையும், அழகியலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சம்பவத்தை காட்சியாக பார்க்காமல், அதன் பின்புலம், சுற்றுச்சூழல் இவற்றோடு நம் கவித்துவ பார்வையில் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அப் பார்வையை ஒரு கவிஞனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றுக்கொடுக்கவும் முடியாது. அது இயல்பாகவே இருக்கும் உண்மையான கவிஞனுக்கு.

ஒரு கவிதைக்கும், புகைப்படத்துக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கு என்று நினைக்கிறீர்கள்?

ஒற்றுமையென்பது ஒன்றுதான் கவித்துவ உணர்வு மேலெழுவது. எனக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்த ஒன்று. ஆரம்ப காலக்கட்டங்களில் என்னிடம் புகைப்பட கருவி இல்லை. நான் பார்த்து ரசித்த காட்சிகளை என் கவிதைகளில் எழுதிப் பார்த்தேன். இப்பொழுது புகைப்படத்தோடு, கவிதைகளை எழுதுகிறேன்.

ஏதாவதொரு நிகழ்வு உங்கள் ஆள் மனதை தாக்கி, அதை பற்றிக் கவிதை எழுதியப்பின், அந்த உணர்வை முழுமையாக கவிதையில் வார்த்தைகளால் கொண்டு வரமுடியவில்லை என்று உங்களுக்கு தோன்றியுள்ளதா? அப்படி நடக்கும் போது என்ன செய்வீர்கள்?

எனக்கு அதுபோல் நடந்ததில்லை.
எழுதியவற்றைச் சரியாக வந்துவிட்டதா? என்ற உணர்வு எனக்கு வருவதே இல்லை. முழுமையான கவிதையை நான் எழுதிவிட்டேனா? அல்லது எழுதிவிடுவேனா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது.

அந்த ஒரு நல்ல கவிதைக்கெனத்தான் கவிதை எழுதுவதை விட்டுவிடவில்லை. ஒரு நல்ல கவிதைக்கு முன் எழுதப்படும் கவிதைகள் அந்த ஒரு நல்ல கவிதைக்கான பயிற்சியாகவும் இருக்கலாம்.

சமீபத்தில் தங்களை பாதித்த, வியக்க வைத்த படைப்பு?

“ஞாபக சீதா” எனும் கவிதை நூல், நண்பன் கவிஞன் ஷங்கரராம சுப்ரமணியன் எழுதியது. அவனின் கவிதைகள் என்னை வியக்க வைத்தன.

வெற்றிப்பெற்ற தங்களுடைய படைப்புகள் அதிகம் பேசப்படவில்லையே என்ற ஆதங்கம் உண்டா?

ஆதங்கம் ஒரு போதுமில்லை. படிக்கப்படாத கவிதைகள் புத்துணர்ச்சியுடன் எப்போதுமிருக்கும்.

ஒரு படைப்பாளியாக இந்த வாழ்க்கை நிறைவளிக்கிறதா?

சக மனிதர்களிடமிருந்து படைப்பாளி எப்போதுமே வேறுபடுகிறான். அவனால் வேலை, சாப்பாடு, தூக்கமென்று சதவிகித அடிப்படையில் சராசரியாக இயங்கமுடியாது. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே எனக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றன. ஒரு படைப்பாளியாக இருப்பது மகிழ்வெனினும், நிறைவென்ற ஒன்றில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

தங்களுடைய கவிதைகள் வாசகர்களை ஈர்க்க துவங்கிய தருணங்களை பற்றி
அதுதான் கவிஞன் ஆனதற்கான உண்மையான உணர்ச்சி மிகு கணங்கள்
அதைவிடவும் வேறெந்த விருதும் எனக்குத் தேவையில்லை!

கவிஞன் சிறுகதை எழுத நேரும்போது ஏற்படும் பிரச்சனைகள் ?

கதை கவிதை நடையில் வரும். அது ஒன்றும் குற்றமில்லை. என்னுடைய சிறுகதை தொகுப்பு ” தானாய் நிரம்பும் கிணற்றடி”. முதற்தொகுப்பு என்பதால் கவிஞனின் தலையீடு இருக்கும். எனக்குள்ளிருக்கும் கவிஞன் எங்கேயும் எப்போதும் அனிச்சையாக வெளிப்பட்டுவிடுகிறான். வண்ணதாசன் கதைகளில் ஒரு கவிதைத் தன்மையிருக்கும். கவிஞனுக்குண்டான மனநிலையிலிருந்துதான் கதைகளை எழுதுவாரோ எனத் தோன்றும். நான் இன்னும் நிறைய கதைகள் எழுதவேண்டும். அப்போதுதான் என் கதையிலிருந்து கவிஞன் வெளியேறுவானென்று நினைக்கிறேன்.

தங்களை ஈர்த்த ஜப்பானிய கவிதைகளை ஒருசில

பாழடைந்த கோயில்
மணியின் மீது உறங்குகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி !

வீழ்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறதா
ஓ… வண்ணத்துப்பூச்சி !

அதிகாலை வெள்ளைப்பனியில்
காணாமல் போயின
வெள்ளை நாரைகள் !

பெண் படைப்பாளிகள், அதிகம் பெண்ணியம் பற்றியும் தங்களின் பிரச்சனைகளை பற்றியுமான புலம்பல்களே அவர்களின் படைப்புகளில் உள்ளது என்ற குற்றசாட்டு உள்ளதே அதைப்பற்றி தங்களின் கருத்து?

உண்மைதான் அதை மீறியும் பெண் படைப்புகள் உருவாக வேண்டும். பெண்ணியம் பேசுவது, எழுதுவது, புலம்புவது இலக்கியமாகாது ஒரு போதும். இப்பொழுது நிறைய பெண் படைப்பாளிகள், நல்ல படைப்புகளை தருகின்றனர். அப்படிப்பட்ட படைப்புகளை கண்டு நான் வியந்திருக்கேன்.

சிங்கப்பூர், மலேசிய கவிஞர்கள் பற்றி தங்களுடைய கருத்து?
கவிஞர்களில் என்ன இந்திய, சிங்கப்பூர், மலேசியா? என்னை பொறுத்தவரை கவிஞனுக்கு ஒரே அடையாளம் கவிதை மட்டும்தான். சிங்கப்பூர் நண்பர்களின் கவிதைத் தொகுப்புகளை வாசிக்க தொடங்கியிருக்கேன்.

தங்களுடைய வாழக்கை லட்சியம் சினிமா பற்றி?

உண்மைதான் என் வாழ்க்கை, லட்சியம் சினிமாதான். அத்தருணத்திற்காக காத்திருக்கேன். விரைவில் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். சினிமாவில் என் கதை புதிதாக இருக்காது. ஆனால், நான் சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். கவித்துவமும், அழகியலும் ததும்பும்.

சினிமாவிற்கு பாட்டெழுத மாட்டேன் என்று சொல்லும் நீங்கள் தங்களுடைய படத்திற்கு பாட்டேழுதுவிற்களா?

மாட்டேன்! கண்டிப்பாக எழுதமாட்டேன். யார் படமாக இருந்தால் என்ன? அது சினிமாதான்.

கடைசியாக…. வாசகனுக்கும், படைப்பாளிக்குமான உறவு?

வாசகன் யாரென்று தெரியாமல்தான் ஒரு படைப்பாளி தன் படைப்புகளைப் படைக்கிறான். படிப்பவனைப் பற்றிய அக்கறையோ பொறுப்போ இன்றித்தான் ஒரு படைப்பு உருவாகிறது. அப்படி அவசியமும் இல்லை. ஆனால் படைப்பு படிப்பவனைப் போய்ச் சேருமென்பது உத்திரவாதமில்லை. அது படைப்பாளனின் எழுத்தின் தரம் சம்பந்தப்பட்டது. வாசகனை ஈர்த்தலென்பது ஒரு படைப்பாளியின் தார்மீகக் கடமை கிடையாது. அதுவே அதுவாக நடக்கும்பட்சத்தில்தான் அது அற்புதமானதாகிறது.

ஒரு வாசகன், எழுத்து ஈர்க்கும்பட்சத்தில் படைப்பாளியின் அடையாளமற்று வாசிக்கப் பழகுதல் நன்று.

••••••••

ஒப்பனை முகங்கள் (சிறுகதை ) / மு.கோபி சரபோஜி ( சிங்கப்பூர் )

download (11)

சவுக்குக் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்தச் சார மேடையின் மீது நின்று கொண்டு ஒவ்வொரு செங்கலாய் கொத்தனார் வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். அறுபது வயதைக் கடந்து விட்ட அவருக்கு அது ஒன்றும் அற்புதமான, வியக்கத்தக்க காட்சியல்ல. ஆனால், செங்கல்களாலும், சிமெண்ட் கலவையாலும் எழுந்து வரும் அந்தக் கட்டத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் அவருக்குள் ஒரு ஆத்ம திருப்தியை அளித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர்கள் கிளம்பிய பின் இரவு நேரக் காவலுக்காக கட்டிடத்திற்கு வரும் பெரியவரை எதிர்பார்த்து இருக்கையில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தார்

ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த இராமலிங்கத்திற்கு மனைவியின் ஊரான இந்தக் கிராமமும், இங்கிருக்கும் உறவினர்களும் கற்றுக் கொடுத்த விசயங்கள் அவரின் வாழ்நாளில் மறக்க முடியாதவைகள்.

தங்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளும் ஆண்பிள்ளைகள் என்பதாலோ என்னவோ சொத்துகள் வாங்குவதிலும், நகைகள், பாத்திரங்கள் சேர்ப்பதிலும் அவரும், அவர் மனைவியும் அக்கறை காட்டாததைப் போலவே தங்களுக்கென சொந்த வீடு கட்டிக் கொள்வதிலும் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால், ஒரு துயரமான நிகழ்வின் தொடர்ச்சி தனக்கென ஒரு சொந்த வீடு இல்லாததை அவர் உணரும் படிச் செய்து விட்டது.

தன் சட்டையைத் தானே கழற்றி எறிந்து புதுப்பித்துக் கொள்ளும் சர்ப்பம் போல வருடங்களில் தன்னைப் புதுப்பித்துக் கொண்ட காலத்தோடு ஒட்டி வளர்ந்திருந்த பிள்ளைகளில் மூத்தவன் டிப்ளமோ முடித்து விட்டு வேலைத் தேடலில் இருந்தான். படிப்பும் அதன் மூலம் கிடைக்கும் வேலையும் பிள்ளைகளைக் காப்பற்றி விடும் என்பது இராமலிங்கத்தின் சித்தாந்தம்.

பள்ளிக்கூட வேலை சம்பந்தமாக பக்கத்து ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்தவர் தன் வீட்டைச் சுற்றித் தெருவில் குடியிருப்பவர்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடந்து விட்டதோ? என்று நினைத்தார். இத்தனை வருடங்களில் விசும்பிக் கூட பார்த்திராத தன் மனைவி பெருங்குரலெடுத்து அழும் சப்தமும் அவரின் காதுகளை நிரப்பியது. வழிப்பறித் திருடர்கள் பிரச்சனை தீவிரமாக இருந்த சமயம் என்பதால் கழுத்தில் போட்டிருந்த நகை எதையும் பறி கொடுத்து விட்டாளோ? என்று சந்தேகப்பட்டவர் பெரிதாகப் பதறவில்லை. அதற்காக ஏன் இப்படித் தெருவைக் கூட்டி வைத்து அழுது கொண்டிருக்கிறாள்? என்று மட்டுமே நினைத்தார். ஒரு மின்னல் வெட்டாய் வெட்டி மறைந்த எண்ணத்தோடு வாசலில் நின்ற கூட்டத்தை விலக்கிக் கொண்டு நுழைய முயன்றவரை வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அவரின் நண்பர் உள்ளே போக விடாமல் தடுத்து ”பதற வேண்டாம்” என்று சொன்னதில் இருந்த பதற்றம் நினைத்ததற்கு மாறாய் ஏதோ நடந்திருக்கிறது என்று நினைக்கச் செய்தது.

போர்வையில் போர்த்திய படி மாடியில் இருந்து சிலர் எதையோ தூக்கி வருவதைக் கண்டதும் அவருக்கு விசயம் பிடிபடத் தொடங்கியது.

”அவனுக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டே முன்னோக்கி வந்தவரைக் கண்டதும் ”நம்மள விட்டுட்டு போயிட்டாங்க” என்று தலையில் அடித்துக் கொண்ட மனைவியைப் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர்.

”நேற்று அவனோடு பேசிக் கொண்டிருந்து விட்டுத் தானே சென்றேன். அதற்குள் என்னவாயிற்று? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சனை? அவ்வளவு கோழை இல்லையே அவன்!” என வார்த்தைகளை வெளியிடாமல் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அருகில் சென்று மகனைப் பார்க்க இயலாதவராய் அங்கேயே சரிந்து அமர்ந்தார்.

பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளையை பிணவறைக்குள் அனுப்பி விட்டு இறப்பிற்கான காரணமறியா காரணத்தைத் தனக்குள்ளேயே நினைத்து, நினைத்து எதுவும் பிடிபடாமல் வெறுமையோடு அங்கிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்தவரிடம், ”தம்பி….எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி வீட்டிற்கு எடுத்துப் போக வேண்டாம். நேரே காட்டுக்குக் கொண்டு போகலாம்” என உறவினர் ஒருவர் கூற பாடையில் போகும் மகனின் பின்னால் ஒரு நடைப் பிணமாய் சென்று நெருப்புக்குத் தின்னக் கொடுத்து விட்டு வீடு திரும்பியவர் இரண்டு தினங்களாகத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.

உறவுகளைப் பிடித்திருந்த துக்கம் மெல்ல அகல அவரவர் பழைய வாழ்க்கைக்குக் கிளம்ப ஆயத்தமாயினர். இறப்பின் துயரை முழுமையாக உணர முடியாத வயதில் துக்கம் விசாரிக்க வருபவர்களின் முகத்தையும், அம்மாவின் அழுகையையும் பார்த்து அழுது கொண்டிருக்கும் மற்ற பிள்ளைகளைக் கவனிப்பதற்காகவாது அந்தத் துயரில் இருந்து மெல்ல மீள வேண்டும் என நினைத்தார்.

அழுது, அழுது கண்ணீர் வற்றி, விழிகள் சுருங்கி உரித்துப் போட்ட வாழை மட்டையாய் தரையில் சுருண்டு கிடந்த மனைவியின் அருகில் சென்று மெல்லத் தொட்டார். அந்தத் தொடுதலில் இருந்த புரிதலை, கணவனின் எண்ணத்தை அறிந்தவளாய் எழுந்து முகம் கழுவி காப்பியைத் தயார் செய்தவள் பிள்ளைகளோடும், சில உறவுகளோடும் கூடத்தில் அமர்ந்திருந்த கணவனிடம் கொடுத்த கையோடு, ”ஏங்க………நாம இந்த ஊரை விட்டுட்டு வேற எங்கேயாவது போயிடலாமா?” என்றாள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் “படிப்பெல்லாம் சம்பாதிக்கிறவனுக்கு. சம்பாதிக்கிற புருசனை கவனித்துக் கொண்டு குடும்பத்தை நடத்துறவளுக்கு கொணம் தான் முக்கியம்” என்ற கொள்கையோடு வளர்க்கப்பட்டவளைப் போல எழுத்தின் அடிச்சுவடு கூட அறியாது இருந்தவளோடு திருமணம் முடிந்த சில தினங்களிலேயே தான் வேலை செய்து கொண்டிருந்த ஊருக்குக் குடி வந்தார்.

தான் பிறந்த ஊரும், புகுந்த ஊரும் அங்கிருந்து மூன்று மணிநேரத்தில் போய் வரக் கூடிய தொலைவிலே இருந்த போதும் அவைகளோடு அவர் கொண்டிருந்த உறவு கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் தான் இருந்தது.

இங்கு வந்த இத்தனை ஆண்டுகளில் அவள் ஒரு தடவை கூட இப்படிக் கேட்டதில்லை. அவளுக்குப் பிடித்த ஊராகவே அது இருந்தது. இப்போது திடீரென இப்படிக் கேட்கிறாள் என்றால் அதை அலட்சியப் படுத்தி விடக்கூடாது என நினைத்தார்.

நினைத்தாரேயொழிய எங்கே போவது? என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை. ”எங்கே போறது?” என்று மனைவியிடமே திருப்பிக் கேட்க, ”எங்க அம்மா வீட்டிற்குப் போகலாங்க”.

”அக்கா, தங்கச்சி, சொந்த பந்தம்னு நாழு சனம் வந்து போனா அவளுக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும். அதுனால அவ கொஞ்ச நாளைக்கு ஊருல வந்து இருக்கட்டும்னு” அருகில் இருந்த அவளின் அம்மாவும், மற்றவர்களும் சொல்ல அவரும் சம்மதித்தார்.

அடுத்த சில தினங்களில் மனைவியின் ஊருக்குக் குடும்பத்தை இடம் மாற்றினார். தன் பெற்றோரோடு இருந்தாலும் தனி சமையல் செய்து கொள்ளப் போவதாகவும், ”அதுதான் சரியாக இருக்கும்” என்றும் மனைவி அழுத்தமாய் சொன்ன விதம் அவருக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

எட்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் ”வெளிநாட்டில் இருக்கும் தன் தம்பிக்கு திருமணம் பேசி முடித்திருப்பதால் நாம் வீட்டைக் காலி செய்து கொடுக்க வேண்டுமாம்” என மனைவி சொன்னதைக் கேட்டதும் நிற்கதியற்ற நிலைக்காகத் தன்னைத் தானே நொந்து கொண்டவர், ”யார் காலி செய்யச் சொன்னா?” என்றார்.

கண்கள் பனிக்க, ”எங்க அப்பாவும், அம்மாவும் தான்”

”காலி செய்து கொடுத்துடலாம். ஆனால் பிள்ளைகள் படிப்பு பாதிலேயே நின்று விடுமே. அதுவும் சின்னவன் பத்தாவது படிக்கிறான். இடையில் போனால் வேறு பள்ளிக்கூடத்துல சேர்க்க முடியாது. அதுனால அவனுக்குப் படிப்பு முடியிற வரைக்கும் இருப்பதற்குக் கேட்டுப் பாரேன்”.

பெத்த பிள்ளையை பெத்தவங்களிடமே பிச்சை கேட்கச் சொல்வதைப் போல தன் மனைவியை கேட்கச் சொன்னதை நினைத்து இரவெல்லாம் உறக்கம் கொள்ளாமல் படுக்கையில் புரண்டபடியே கிடந்தவரிடம் ”சும்மா போட்டு மனசை அலட்டிக்காதீங்க. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் போய் கேட்க வேணாம். இப்போதைக்கு இங்கேயே வாடகைக்கு ஒரு வீடு பார்த்துப் போயிடலாம். தம்பிக்கு கல்யாணம் முடிந்ததும் என் பங்குச் சொத்தாக வரும் மனையில் ஒரு வீட்டைப் போட்டுக்கலாம்” என்றாள்.

அது தான் கெளரவமாகவும் இருக்கும் என நினைத்தவர் விடிந்ததும் வழக்கமாகச் செல்லும் டீ கடைக்குச் சென்று அங்கு வந்த உறவினர்களிடமும், நண்பர்களிடம் தனக்கு வாடகைக்கு ஒரு வீடு வேண்டியிருப்பதாகச் சொன்ன போது ”அரண்மனை மாதிரி மாமனார் வீடு இருக்கும் போது எதுக்கு வாடகைக்கு வீடு தேடுறீங்க? என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்குப் பதில் சொல்லிச் சமாளிப்பதே சங்கட்டமாக இருந்தது.

சொல்லி வைத்தவர்களிடம் இருந்து சாதகமான பதில் இல்லாததோடு சிலர் சொல்லத் தயங்கிய விதமும் சரியெனப் படாததால் தானே நேரடியாக விசாரித்து வீடு தேடுவது என முடிவு செய்தார். நெசவு ஆசிரியருக்குச் சொந்தமான வீடு காலியாக இருப்பதை அறிந்ததும் அவரைச் சந்தித்துக் கேட்டார்.

அண்ணே………தப்பா எடுத்துக்காதீங்க. உங்களிடம் மத்தவங்க சொல்ல சங்கடப்பட்டிருக்கலாம். நீங்களே நேரில் கேட்டு வந்துட்டதால சொல்றேன்.

”உங்க மாமனாரும், உங்க சகலையும் உங்களுக்கு வாடகைக்கு வீடு தரக் கூடாதுன்னு கூப்பிட்டுச் சொல்லிட்டாங்க. பல வருசமா தாயா, புள்ளையா நாங்க இங்கின பழகிட்டோம். உங்க குடும்பத்துக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல? சொந்த மகளுக்கே வீடு தரக்கூடாதுன்னு அவரு சொல்லுறப்ப நாங்க அவங்கள முறிக்க முடியாதுண்ணே” என்றார்.

வாழ்க்கை மனிதர்களை வைத்து நடத்தும் பாடம் எப்பொழுதுமே இயல்பாய் இருப்பதில்லை. சமயங்களில் அது புலப்படாத சில திகிலையும் சேர்த்தே அடையாளப்படுத்துகிறது. அதிர்ந்து பேசிப் பழகியிராத தன் மனைவி மீது அவளைப் பெற்றவர்களுக்கு அப்படி என்ன கோபம்? அவர்களோடு சகலையும் சேர்ந்து கொள்ள என்ன காரணம்? கேள்விகள் மட்டுமே மனதில் நிற்க, “நன்றி தம்பி” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

சில நாட்களுக்குப் பின் அதற்கான விடைகள் அவருக்குக் கிடைத்தது. வீட்டைக் காலி செய்யச் சொன்ன போது ஏற்பட்ட பிரச்சனையில், “மகனைப் பறி கொடுத்துட்டு வந்து நிக்கிற என்னைய உடனே வீட்டைக் காலி பண்ணச் சொன்னா எங்கே போவேன்? நான் காலி பண்ணனும்னா எனக்கான பங்கைப் பிரிச்சுக் கொடுங்க. அதுல ஒரு வீட்டை கட்டிக்கிட்டுப் போயிடுறேன். இல்லைன்னா என் கையெழுத்து வாங்காம உங்க இரண்டாவது மக புருசன் பேருல சொத்து எழுதிக் கொடுத்திருக்கிறதுக்கும் சேர்த்து கோர்ட்டுல கேஸைப் போட்டு எல்லோரையும் தெருவுல கொண்டாந்து நிப்பாட்டிடுவேன்” என தன் மனைவி சொன்னதன் எதிரொலி தான் என்பதை அறிந்த போது அவருக்கே ”சீ” என்றாகிப் போனது.

அடுத்த இரு மாதங்களில் மகனின் பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து விட வீட்டைக் காலி செய்த நாளன்று ”கடைசி, கடைசின்னு பொறந்த மன்ணுல கூட நிக்க முடியாம போச்சே” என கண்கலங்கிய படித் தன்னைப் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் தவிர மற்ற எல்லோரிடமும் வீடு தேடிப் போய் தன் மனைவி சொல்லி விட்டு வந்ததைப் பார்த்தவர் எப்படியும் ஒரு சொந்த வீட்டைக் கட்டி விட வேண்டும் என்று நினைத்தார்.

தான் வேலை செய்து கொண்டிருக்கும் ஊரே இனி தனக்குச் சொந்த ஊர் என முடிவு செய்தவர் அங்கேயே இடம் வாங்கி வீடு கட்டும் வேலையையும் ஆரம்பித்தார். ”வீட்டைக் கட்டிப்பார்” என்ற பழமொழி போல் வீடு கட்டுவது ஒன்றும் அவருக்குப் பெரிய விசயமாக இருக்கவில்லை. பணம் இருந்தால் அதுவே காரியத்தை நடத்தி விடாதா என்ன?

சில மாதங்களிலேயே உயிர் பெற்று நின்ற சொந்த வீட்டிற்குள் நுழைந்த பின் எதார்த்தமான பேச்சின் போது ”என்ன வாழ்க்கை இது? இருந்தும் இல்லாதவங்க மாதிரி ஒரு சொந்த, பந்தமில்லாம தனியா வந்து இங்கின உட்கார்ந்திருக்கோம். நாம தான் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு விலகி நின்னுட்டோம். பிள்ளைகளுக்காது கிடைக்கும்னு பார்த்தேன். இது தான் சொந்த வீடுன்னு ஆனதுகப்புறம் அதுக்கும் இப்ப வழியில்லாம போயிடுச்சு” என்று அங்கலாய்த்துக் கொண்ட மனைவியிடம் “உங்க ஊரில் குடியிருந்தால் மட்டும் பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைத்து விடுமாக்கும்?” என்றார் சற்றே எரிச்சலுடன்.

”ஏங்க கிடைக்காது? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க. என்னைப் பெத்தவங்களும், என் கூடப் பொறந்தவங்களும் தான் உறவா? இருபது வருசமா அங்கே வாழ்ந்திருக்கேன். அந்த ஊரே உறவுங்க”. கட்டியவனுக்காக தன் விருப்பங்களை எல்லாம் புதைத்துக் கொண்டவள் இப்போதும் கூட பிள்ளைகளின் மீதான அக்கறையாகவே தன் ஆசையையும், எண்ணத்தையும் சொல்வது அவருக்கு வியப்பாகத் தான் இருந்தது.

உறவுகளைப் புறந்தள்ளி எந்த ஊரை விட்டு வெளியேறினாரோ அதே ஊருக்குள் மனைவியின் விருப்பம் என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் காலடி எடுத்து வைத்தவருக்கு உறவல்லாத ஒருவர் உதவினார். குளமும், கோயிலும் சூழ அவரிடம் விற்பனைக்கு இருந்த ஒரு இடத்தை வாங்கி வீட்டைக் கட்டும் வேலையையும் ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாளும் கட்டிட வேலைக்காக வரும் பணியாளர்களோடு தானும் வந்திருந்து அவர்களோடு அமர்ந்து, பேசி வீட்டை வார்த்தெடுப்பதில் அவருக்கு ஒரு ஆனந்தம் இருந்தது. கடந்த கால நினைவுகளோடு கலந்திருந்தவரை இரவு நேரக் காவலுக்கு கட்டிடத்தில் உறங்க வந்த பெரியவரின் குரல் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.

”என்னப்பு பலத்த யோசனை? ஒன் மனசப் போல வீடும் நல்லா வரும்யா. ஊருல பிள்ளைக காத்துக்கிட்டு இருக்கப் போகுதுக. கால காலத்துல கிளம்பிப் போ”. என்றார்.

அடுத்த நான்கு மாதத்தில் மார்பிளும், மரமுமாய் வீடு எழுந்து நின்றது. குடிபுகுதலை பத்திரிக்கை அடித்துச் சிறப்பாகச் செய்யலாம் என்ற பிள்ளைகளின் விருப்பத்திற்கு மறுப்புச் சொன்னவர் மனைவியை அழைத்து, “உன் ஊரில் யாரை எல்லாம் அழைக்க விரும்புகிறாயோ அவர்கள் எல்லோரின் வீட்டிற்கும் சென்று சொல்லி விட்டு வா. அது போதும்” என்றார்.

எதிர்பார்த்ததற்கும் அதிகமான உறவினர்கள் வந்திருந்தனர், அத்தனை முகங்களிலும் ஒரு ஏமாற்றுத்தனம் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. அழைத்து விட்டார்கள் என்பதற்காக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி இவர்களால் படியேறி வர முடிகிறது? என்று நினைத்துக் கொண்டவர் தன் விருப்பம் நிறைவேறிய மகிழ்வோடு தனக்கும், தன் குடும்பத்திற்கும் உதவாது, உதாசீனம் செய்த உறவுகள் சூழ இருக்கும் மனைவியின் சந்தோச முகத்தைப் பார்ப்பதற்காக சமையலறைப் பக்கமாக வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

”உங்களுக்கு மட்டும் தான் தெரியுமாக்கும்? என் சொந்தக்காரனுகளைப் பற்றி இன்னைக்குப் படியேறி வந்திருக்கிற அத்தனை பேரும் தங்களின் உண்மையான முகத்தை ஒப்பனை செய்து கொண்டு வந்திருக்கும் கூட்டம். இவர்களைக் கவனிக்கிறதை விட்டுட்டு வேற வேலை இருந்தா போய் பாருங்க” எனச் சொல்லாமல் சொல்வதைப் போல வந்திருந்தவர்களைக் கவனிப்பதில் பெரிதாக அக்கறை காட்டாமல் “ஏங்க துணி ஊற வைக்கப் போறேன். காலையில நீங்க போட்டிருந்த வெள்ளைச் சட்டை வாழைக் கறையா இருந்துச்சு. அதை எடுத்துக் கொடுங்க” என்ற படியே தன் வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

——

ஹனலே விரிகுடா ஹருகி முரகாமி – தமிழில் – ஸ்ரீதர்ரங்கராஜ்

download

சாச்சி தன் 19வயது மகனை, ஹனலே விரிகுடாவில் நீர்ச்சறுக்கு விளையாடும்போது அவனைத் தாக்கிய ஒரு பெரிய சுறாமீனிடம் இழந்திருந்தாள். முறையாகச் சொன்னால், சுறா அவனைக் கொல்லவில்லை. தனியாக, கரையிலிருந்து தள்ளியிருக்கும்போது அவ்விலங்கு அவன் வலதுகாலைப்பிய்த்து எடுத்ததில் பயந்து மூழ்கிப்போனான். எனவே, நீரில் மூழ்கியதே இறப்புக்குக்காரணம். சுறா நீர்ச்சறுக்குப் பலகையையும் இரண்டாக உடைத்திருந்தது. சுறாக்கள் மனிதமாமிசத்தை விரும்பி உண்பதில்லை. பெரும்பாலும் முதல்கடியிலேயே அவை ஏமாற்றமடைந்து நீந்திவிலகிவிடும். அதனால்தான் நிறைய சம்பவங்களில் ஒரு கையோ அல்லது காலோ இழந்தாலும் பயப்படாமல் இருந்தால் உயிர்பிழைக்கிறார்கள். இருந்தாலும் சாச்சியின் மகன் மாரடைப்புக்கு உள்ளாகி அதிகமாகத் தண்ணீரையும் விழுங்கி மூழ்கியிருந்தான்.

ஹனாலுலுவில் உள்ள ஜப்பானியத் தூதரகத்திலிருந்து தகவல் வந்தபோது, சாச்சி அதிர்ச்சியில் கீழே விழுந்தாள். தலைக்குள் எல்லாம் வெறுமையாகி எதையும் யோசிக்க முடியவில்லை. வெறுமனே அமர்ந்தபடி சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். எவ்வளவுநேரம் கடந்தது என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் ஒரு விமான நிறுவனத்திற்கு தொலைபேசியில் அழைத்து ஹவாய்க்கு முன்பதிவு செய்யுமளவு தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். தூதரக அதிகாரி உடலை அடையாளம் காண்பதற்கு அவள் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு நல்லது என்று அழுத்திச் சொல்லியிருந்தான். அது அவளுடைய மகனாக இல்லாமல் இருக்க இன்னமும் சாத்தியம் இருக்கிறது.

விடுமுறைக்காலம் என்பதால் அந்தநாளும் அதற்கடுத்த நாளும் அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அவள் அழைத்த அத்தனை விமான நிறுவனங்களிலும் இதே பதில்தான் கிடைத்தது, ஆனால் அவள் சூழ்நிலையைச் சொன்னதும் யுனைடெட் நிறுவன முன்பதிவாளர், “எவ்வளவு சீக்கிரம் விமான நிலையத்திற்கு வரமுடியுமோ வாருங்கள், எப்படியாவது ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம்.” என்றார். சிறுபையில் துணிகளை எடுத்துக்கொண்டு நரிதா விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தாள், தலைமைப்பொறுப்பில் இருந்த பெண் அவளிடம் முதல்வகுப்புக்கான பயணச்சீட்டைக் கொடுத்தாள். “இதுதான் இருக்கிறது, ஆனால் இரண்டாம் வகுப்புக்கான தொகையைக் கொடுத்தால் போதும்.” என்றாள். “இது உங்களுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கும். தாங்கிக் கொள்ளுங்கள்.” சாச்சி அவள் உதவியதற்காக நன்றி தெரிவித்தாள்.

ஹனாலுலு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், தான் கவலையில் ஜப்பானியத் தூதரகத்துக்குத் தன் வருகை நேரத்தைத் தெரிவிக்கவில்லை என்று உணர்ந்தாள். ஒரு தூதரக அதிகாரி அவளோடு க்வாய் வரை வருவதாக இருந்தது. இனி அதற்காகக் காத்திருப்பதைக் காட்டிலும் தனியாகப் பயணத்தைத் தொடர்வதுமேல் என்று முடிவுசெய்தாள். அங்கே சென்றால் எல்லாம் தானாக நடக்கும். க்வாய் லிஹ்யூ விமானநிலையத்தை அடைந்தபோது இன்னமும் மதியம் ஆகவில்லை. ஒரு வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு நேராக அருகிலிருந்த காவல்நிலையத்திற்குச் சென்றாள். அங்கே, தான் டோக்கியோவிலிருந்து வருவதையும், தன்மகன் ஹனலே விரிகுடாவில் சுறாவினால் தாக்கப்பட்டு இறந்த தகவலைக்கேட்டு வந்திருப்பதாகவும் கூறினாள். கண்ணாடியணிந்த, தலைநரைக்கத் துவங்கியிருந்த ஒரு அதிகாரி, குளிர்பதனக்கிடங்கு போலிருந்த பிணவறைக்கு அவளை அழைத்துச்சென்று ஒருகால் பிய்த்தெடுக்கப்பட்ட நிலையிலிருந்த அவளது மகனின் உடலைக் காட்டினார். வலது முழங்காலுக்கு மேலுள்ள பகுதிவரை காணாமல்போய், அந்த இடத்திலிருந்து கொடூரமாக ஒரு எலும்பு நீட்டிக்கொண்டிருந்தது. அது அவள் மகன்தான் – இனி சந்தேகத்திற்கு இடமில்லை. அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை; ஆழ்ந்து தூங்கும்போது எப்படியிருப்பானோ அப்படியே இருந்தான். அவன் இறந்துவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. யாரோ அவனை இப்படி வைத்திருக்கிறார்கள், தோளைப்பிடித்து பலமாக உலுக்கினால் எப்போதும் காலையில் எழுந்து அவளைக் குறைசொல்வதுபோல இப்போதும் சொல்லுவான் என்பது போலிருந்தது.

மற்றொரு அறையில், சாச்சி அது அவள் மகன்தான் என்று உறுதிப்படுத்த கோப்புகளில் கையெழுத்திட்டாள். காவலதிகாரி மகன்குறித்து அடுத்து என்ன செய்யப்போகிறாள் என்று கேட்டார். “எனக்குத் தெரியவில்லை, பொதுவாக எல்லோரும் என்ன செய்வார்கள்?” என்று கேட்டாள். பொதுவாக இங்கேயே எரித்துவிட்டு சாம்பலை எடுத்துச்செல்வார்கள் என்றார். உடலை ஜப்பானுக்கு எடுத்துச் செல்லலாம் ஆனால் அதற்கான ஏற்பாடுகளும் சிரமம், மேலும் நிறைய செலவாகும். இன்னொரு சாத்தியம் உடலை இங்கேயே க்வாய்-ல் புதைப்பது.

“தயவு செய்து அவனை எரித்துவிடுங்கள்,” என்றாள். “சாம்பலை டோக்கியோவிற்கு எடுத்துச் செல்வேன்”. எதுஎப்படியோ மகன் இறந்துவிட்டான், இனி சாம்பலென்ன, எலும்பென்ன அல்லது உடலென்ன? எல்லாம் ஒன்றுதான். உடலை எரிப்பதற்காகக் கையெழுத்திட்டாள், எவ்வளவு செலவாகும் என்று சொன்னார்கள்.

“என்னிடம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைதான் இருக்கிறது,” என்றாள். ”பரவாயில்லை,” என்றார். ‘இதோ இங்கே என் மகனை எரிப்பதற்காக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டையில் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறேன்’ என்று நினைத்தாள். அவள் மகன் சுறாவினால் தாக்கப்பட்டு இறந்துவிட்டான் என்பதை எப்படி நம்பமுடியவில்லையோ அதுபோல இதையும் உண்மையென்று அவளால் நம்பமுடியவில்லை. மறுநாள் காலை உடல் எரிக்கப்பட்டுவிடும் என்றார் அக்காவலதிகாரி.

கோப்புகளைச் சரிபார்க்கும்போது “உங்கள் ஆங்கிலம் சிறப்பாக இருக்கிறது,” என்றார் அந்த அதிகாரி. அவர் ஒரு ஜப்பானிய-அமெரிக்கர், பெயர் சகாடா.

“இளவயதில் அமெரிக்காவில் இருந்தேன்.” என்றாள்.

“அதில் ஆச்சரியமில்லை,” என்றார். பிறகு அவள் மகனுடைய பொருட்களை ஒப்படைத்தார்: ஆடைகள், கடவுச்சீட்டு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு, பணப்பை, இசை கேட்புக்கருவி, பத்திரிக்கைகள், கண்ணாடி, சவரப்பொருட்கள். அனைத்தும் ஒரு சிறுபைக்குள் அடங்கிவிட்டன. சாச்சி அந்தப்பொருட்களைப் பெற்றுக்கொண்டதாக எழுதிக்கொடுத்தாள்.

“உங்களுக்கு வேறு குழந்தைகள் உண்டா?” என்று கேட்டார்.

“இல்லை அவன் என் ஒரே மகன்.”

“உங்கள் கணவரால் வரமுடியவில்லையோ?”

”என் கணவர் இறந்து வெகுகாலமாயிற்று.”

காவலதிகாரி பெருமூச்சு விட்டார். “கேட்கவே சங்கடமாக இருக்கிறது. உங்களுக்கு வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள்.”

“என் மகன் இறந்த இடத்திற்கு எப்படிப் போகவேண்டும் என்று சொன்னால் உதவியாக இருக்கும். அவன் தங்கிய இடத்திற்கும் போகவேண்டும். அவன் தங்கிய விடுதியில் பணம் செலுத்தவேண்டியிருக்கலாம். அப்புறம் ஹனாலுலுவில் உள்ள ஜப்பானியத் தூதரகத்திற்குப் பேசவேண்டும். உங்கள் தொலைபேசியை உபயோகிக்கலாமா?”

ஒருவரைபடத்தில் அவள் மகன் நீர்ச்சறுக்கிக் கொண்டிருந்த இடத்தைக் குறித்துக்காட்டினார், அவள் மகன் தங்கியிருந்த விடுதியையும் காண்பித்தார். அன்று இரவு அதிகாரி பரிந்துரைத்த லிஹ்யூவிலுள்ள ஒரு சிறிய விடுதியில் தங்கிக்கொண்டாள்.

சாச்சி காவல்நிலையத்தைவிட்டுக் கிளம்பும்போது, சகாடா என்ற அந்த நடுத்தரவயது அதிகாரி அவளிடம் சொன்னார், “உங்களிடம் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. இந்த க்வாய் தீவில் இயற்கை அவ்வப்போது மனித உயிர்களை எடுத்துக்கொள்ளும். இது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள், ஆனால் சிலசமயம், இது முரட்டுத்தனமாகவும் ஆபத்தானதாகவும் மாறும். நாங்கள் இங்கே அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் மகனுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்காக அனுதாபப்படுகிறேன். ஆனால் இச்சம்பவம் எங்கள் தீவைப்பற்றிய வெறுப்பை உங்கள் மனதில் வளர்க்காது என்று நம்புகிறேன். நான் இதைச்சொல்லும்போது, இவ்வளவு விஷயங்களைக் கடந்துவந்த உங்களுக்கு அது சுயநலம் என்று தோன்றலாம், ஆனால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன். என் இதயத்திலிருந்து.”

சாச்சி தலையசைத்து ஏற்றுக்கொண்டாள்.

“உங்களுக்குத் தெரியுமா, என் சகோதரனும் 1944ல் நடந்த போரில் இறந்தான். ஜெர்மனி எல்லையருகே பெல்ஜியத்தில். அவன் 442வது படைப்பிரிவில் இருந்தான், அது முழுக்க முழுக்க ஜப்பானிய-அமெரிக்க வீரர்களால் ஆனது. அவர்கள் அங்கே நாஜிக்களால் சூழப்பட்ட டெக்சாஸ் படைப்பிரிவை மீட்கச்சென்றிருந்தபோது நேரடித்தாக்குதலுக்கு ஆளானதில் அவன் இறந்தான். அவனுடைய அடையாளச்சங்கிலியும் பனியில் சிதறிக்கிடந்த சில சதைப்பகுதிகளையும் தவிர வேறெதுவும் மிஞ்சவில்லை. என் அம்மாவிற்கு அவன்மேல் மிகுந்த அன்பு, அதன்பிறகு அவள் வேறொரு ஆளாய் மாறிப்போனாள் என்று சொன்னார்கள். நான் அப்போது சிறுவன், எனவே அவளுடைய மாற்றத்திற்குப் பிறகுதான் எனக்கு அவளைத் தெரியும். அதைப்பற்றி யோசித்தாலே வேதனைதான்.”

சகாடா தலையை உலுக்கியபடி தொடர்ந்தார்:

“என்னதான் ‘புனிதமான காரணங்கள்’ இருந்தாலும், மனிதர்கள் போரில் இறப்பது இரண்டு பக்கமும் உள்ள கோபத்தினாலும் வெறுப்பாலும்தான். ஆனால் இயற்கைக்கு சார்புகள் கிடையாது. இது உங்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடிய சம்பவம், ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள்: உங்கள் மகன் இயற்கையின் சுழற்சிக்குத் திரும்பிவிட்டான்; அதற்குக் ‘காரணங்கள்’, கோபம் அல்லது வெறுப்பு என்று எதுவுமில்லை.”

*

மறுநாள் தீவின் வடக்குப் பகுதியிலிருந்த ஹனலே விரிகுடா பகுதிக்கு வண்டியை ஓட்டிச்செல்லும்போது, தகனம் முடிந்து, மகனுடைய சாம்பலை ஒரு அலுமினியக் குடுவையில் வைத்திருந்தாள். லிஹ்யூ காவல்நிலையத்திலிருந்து ஒருமணிநேரப் பயணம். தீவிலுள்ள மரங்களனைத்தும் சிலவருடங்கள் முன்பு தாக்கிய புயலினால் உருக்குலைந்திருந்தன. பல மரவீடுகள் கூரையற்று இருப்பதைப் பார்க்கமுடிந்தது. சில மலைகள் கூட புயலினால் உருமாற்றமடைந்த தடத்துடன் இருந்தன. இயற்கை இச்சூழலில் சீற்றத்தோடு இருக்கிறது.

ஹனலேயின் சுறுசுறுப்பற்ற சிறுநகரத்தின் வழியாகச்சென்று நீர்ச்சறுக்கு விளையாடும் பகுதிக்கு, அவள் மகன் சுறாவால் தாக்கப்பட்ட இடத்தை அடைந்தாள். அருகிலுள்ள வாகன நிறுத்தகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, கடற்கரையில் அமர்ந்து நீர்ச்சறுக்கு வீரர்கள் – மொத்தத்தில் ஐந்துபேர் இருக்கலாம் – அலைகளில் விளையாடுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். நீர்ச்சறுக்குப் பலகையைத் தழுவியபடி கரையிலிருந்து தொலைவுக்கு மிதந்துசென்று, வேகமான ஒரு அலைக்காகக் காத்திருந்து, அது உருவானதும் தங்கள் பலகையில் ஏறி கிட்டத்தட்ட கரைக்கு அருகில் வந்தனர். அலைகளின் வேகம் குறைந்தால் சமநிலை குலைந்து விழுந்தனர். பிறகு மீண்டும் பலகையை எடுத்துக்கொண்டு எதிர்வரும் அலையினடியில் நுழைந்து, கைகளால் துடுப்பிட்டபடி கடலுக்குள் சென்று, மீண்டும் மறுபடி முதலிலிருந்து ஆரம்பம். சாச்சியால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு சுறாக்களைப் பற்றிய பயமில்லையா? அல்லது சிலநாட்களுக்கு முன் இதே இடத்தில் அவள் மகன் சுறாவினால் கொல்லப்பட்டான் என்று கேள்விப்படவில்லையா?

சாச்சி வெகுநேரம் அங்கே அமர்ந்து, இக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மனதைக் குறிப்பிட்ட ஒருவிஷயத்தில் நிறுத்திவைக்க முடியவில்லை. கனமான அந்தக் கடந்தகாலம் கரைந்துவிட்டது, எதிர்காலம் எங்கோ தொலைதூர இருளில் கிடக்கிறது. இரண்டு காலங்களும் இப்போது அவளுடன் எந்தத் தொடர்பும் இல்லாது இருந்தன. தற்சமயம் தொடர்ந்து நிகழ்காலத்தை நகர்த்தியபடி அமர்ந்திருந்தாள், கண்கள் இயந்திரத்தனமாய் எதிரில் ஒரே காட்சிபோல் தென்படும் அலைகளையும் நீர்ச்சறுக்கு விளையாடுபவர்களையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன. திடீரென்று அவளுக்குத் தோன்றியது: இப்போது எல்லாவற்றையும் விட முக்கியமாக எனக்கு இதைக்கடக்கக் காலம்தான் தேவைப்படுகிறது.

பிறகு மகன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றாள், சீர் செய்யப்படாத தோட்டத்துடன் கூடிய சிறிய பராமரிக்கப்படாத இடம். மேற்சட்டை அணிந்திராத நீண்ட தலைமுடியுடன் கூடிய இரண்டு வெள்ளையர்கள் காடாத்துணியிலான சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பியர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களின் கால்களுக்கு அருகே மண்டியிருந்த களைச்செடிகளில் பச்சைநிற ‘ரோலிங் ராக்’ காலிப்புட்டிகள் நிறையக் கிடந்தன. ஒருவன் பொன்நிற முடியுடையவன், மற்றவனுக்குக் கருப்புநிறத் தலைமுடி. இதைத்தவிர இருவருக்கும் ஒரேமாதிரியான முகச்சாயல், உடற்கட்டு, ஒரேமாதிரியான அலங்காரப் பச்சைகள் இரண்டு கைகளிலும் இருந்தன. நாய்க்கழிவின் நாற்றத்தோடு காற்றில் மரிஜுவானாவின் தடமும் இருந்தது. அவர்களை நெருங்கியதும் சந்தேகத்தோடு அவளைப் பார்த்தனர்.

“என் மகன் இங்கே தங்கியிருந்தான்,” என்றாள். “மூன்று நாட்களுக்கு முன் சுறாவினால் கொல்லப்பட்டுவிட்டான்.” இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “நீங்கள் குறிப்பிடுவது டகாஷியைத்தானே?”

“ஆமாம்.” என்றாள் சாச்சி. “டகாஷிதாயேதான்.”

”அவன் ஒரு அற்புதமான இளைஞன்.” என்றான் பொன்நிறத் தலையுடையவன். “இது மிகவும் மோசமானது.”

கருநிற முடியுடையவன் தொய்வான குரலில் விளக்கினான், “அன்று காலை, இங்கே… வளைகுடாவில் கொஞ்சம் அதிகமாக ஆமைகள் தென்பட்டன. சுறாக்களும் ஆமைகளைத் தேடி வந்தன. ஆனால், அவர்கள் பொதுவாக நீர்ச்சறுக்குபவர்களை ஒன்றும் செய்வதில்லை பாருங்கள். அவர்களோடு எங்களுக்கு ஒரு இணக்கம் உண்டு. ஆனால், ஏனென்று தெரியவில்லை, ஒருவேளை சுறாக்கள் எல்லா மாதிரியும் இருக்கும் என்று நினைக்கிறேன்…”

சாச்சி, தான் டகாஷியின் கட்டணத்தைச் செலுத்த வந்திருப்பதாகக் கூறினாள். அவனுடைய அறைக்கான கட்டணம் செலுத்தப்படாமல் இருக்கும் என்று யூகித்தாள்.

பொன்நிற முடியுள்ளவன் முகஞ்சுளித்துத் தன் கையில் உள்ள புட்டியை காற்றில் ஆட்டினான். “இல்லை பெண்மணி, உங்களுக்குப் புரியவில்லை. இந்த விடுதியில் நீர்ச்சறுக்கு வீரர்கள் மட்டுமே தங்குவார்கள், பொதுவாக அவர்களிடம் பணம் இருக்காது. எனவே இங்கே தங்கவேண்டும் என்றால் முன்னாலேயே பணம் செலுத்தியாகவேண்டும். எனவே ‘தரவேண்டிய பாக்கி’ என்று எதுவுமில்லை.”

இப்போது கருநிற முடியுள்ளவன் பேசினான், “பெண்மணி, டகாஷியின் நீர்ச்சறுக்குப் பலகையை உங்களோடு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா என்று சொல்லுங்கள்? நாசமாய்ப்போன சுறா அதை இரண்டாகப் பிளந்துவிட்டது, கிழித்தெறிந்தது போல. அது ஒரு பழைய டிக் ப்ரூவர் பலகை. காவலர்கள் அதை எடுத்துச் செல்லவில்லை. நான் நினைக்கிறேன், அது அங்கேதான் எங்கேயோ…”

சாச்சி வேண்டாமென்று தலையசைத்தாள். அவள் அப்பலகையைப் பார்க்க விரும்பவில்லை.

“இது உண்மையிலேயே மிகவும் மோசமானது,” என்றான் பொன்நிற முடியுள்ளவன் மறுபடி, என்னவோ அது மட்டுமே அவனால் யோசிக்க முடிந்த வெளிப்பாடு என்பதுபோல.

“அவன் ஒரு நல்ல இளைஞன்,” என்றான் கருநிற முடியுள்ளவன். “உண்மையில் நல்லவன். அற்புதமான .நீர்ச்சறுக்கு வீரனும் கூட. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது, முதல்நாள் இரவு எங்களோடுதான் இருந்தான், டக்கீலா குடித்தான்.”

சாச்சி ஹனலேயில் ஒருவாரம் தங்கினாள். இருப்பதிலேயே கண்ணியமான விடுதியைத் தேர்ந்து வாடகைக்கு எடுத்து எளிமையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டாள். எது எப்படியோ ஜப்பானுக்குத் திரும்புவதற்குள் அவள் மீண்டும் பழைய ஆளாக வேண்டும். ஒரு வினைல் நாற்காலி, குளிர் கண்ணாடி, ஒரு தொப்பி மற்றும் வெயிலுக்கான க்ரீம் ஆகியவற்றை வாங்கி, தினமும் கடற்கரையில் அமர்ந்து நீர்ச்சறுக்குபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். யாரோ வானத்திலிருந்து நீர்நிரம்பிய குவளையைக் கவிழ்த்து விட்டாற்போல் தினமும் சிலமுறை மழை கனத்துப் பெய்தது. க்வாய்யின் வடக்குக் கடற்கரைப் பகுதியின் இலையுதிர்காலப் பருவநிலை நிலையற்றது. மழை கொட்ட ஆரம்பித்ததும் தன்னுடைய வண்டிக்குள் அமர்ந்து மழையைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, மழைவிட்டதும் மறுபடி கடற்கரையில் அமர்ந்து கடலைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

*

சாச்சி ஒவ்வொரு வருடமும் இந்தப் பருவத்தில் ஹனலேவுக்கு வரத்தொடங்கினாள். மகனின் இறந்தநாளுக்குச் சிலநாட்கள் முன்பு வந்து மூன்றுவாரங்கள் தங்கி, கடற்கரையில் நீர்ச்சறுக்கு வீரர்களைப் பார்த்தபடி ஒரு வினைல் நாற்காலியில் அமர்ந்திருப்பாள். தினமும், ஒவ்வொருநாளும் அவள் செய்வது அது மட்டும்தான். இது 10 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் தங்குவது ஒரே விடுதியில், புத்தகத்தை வாசித்தபடி சாப்பிடுவது ஒரே உணவகத்தில். அவளுடைய வருகைகள் ஒரேமாதிரியான அமைவுக்குள் வந்தவுடன், அவளுடைய சொந்த விஷயங்கள் பற்றிப் பேசிக்கொள்ளச் சிலர் அமைந்தார்கள். அந்தச்சிறு நகரத்திலுள்ள பெரும்பாலானோருக்கு அவளைப் பார்த்தவுடன் அடையாளம் தெரியும். அவள் எல்லோராலும் ஜப்பானியத் தாய் எனவும் அருகேதான் அவள் மகன் சுறாவினால் கொல்லப்பட்டானென்றும் அறியப்பட்டாள்.

ஒருநாள், அளவில் மிகப்பெரியதான வாடகை வண்டியொன்றினை மாற்றிக்கொண்டு லிஹூ விமானநிலையத்திலிருந்து வரும்போது, சாச்சி, காப்பா நகரத்தில், பயணத்துக்காக வண்டிகளை நிறுத்தக் கேட்டுக்கொண்டிருந்த இரு ஜப்பானிய இளைஞர்களைப் பார்த்தாள். ஓனோ குடும்ப உணவகத்துக்கு வெளியில் தோளில் விளையாட்டுப் பொருட்களுக்கான பைகளோடு நின்று, நம்பிக்கையிலிருந்து வெகுதொலைவில் இருந்தபடி எதிர்வரும் வாகனங்களுக்குக் கட்டைவிரலைக் காட்டிக்கொண்டிருந்தனர். ஒருவனுக்கு ஒல்லியான உயரமான உடல்வாகு, மற்றொருவனுக்கு குட்டையான உறுதியான உடலமைப்பு. இருவருமே தோள்பட்டைவரை முடிவளர்த்து அதற்கு துருச்சிவப்பில் சாயமடித்திருந்தனர், மங்கலான டி-ஷர்ட்டுகள், தொளதொளவென அரைக்கால் சட்டை, காலில் சாதாரண செருப்பு. சாச்சி அவர்களைக் கடந்து சென்றாலும் மனதை மாற்றிக்கொண்டு திரும்பி வந்தாள்.

கண்ணாடியைக் கீழிறக்கி, அவர்களிடத்தில் ஜப்பானிய மொழியில் கேட்டாள், “எங்கே போக வேண்டும்?”

“ஹேய், நீங்கள் ஜப்பானிய மொழி பேசுகிறீர்கள்?” என்றான் உயரமானவன்.

”உண்மைதான், நான் ஜப்பானியள், நீங்கள் எதுவரை செல்ல வேண்டும்?”

“ஹனலே என்கிற இடம்வரை,” என்றான் உயரமானவன்.

“லிஃப்ட் வேண்டுமா? நானும் அங்கேதான் சென்றுகொண்டிருக்கிறேன்.”

“அற்புதம்! நாங்கள் நம்பிக்கொண்டிருந்தபடியே ஆனது!” என்றான் குட்டையானவன்.

இருவரும் தங்களது பைகளை வண்டியின் பின்பகுதியில் வைத்துவிட்டு சாச்சியின் நியான் வண்டியின் பின்னிருக்கையில் ஏறிக்கொண்டனர்.

“ஒருநிமிடம்,” என்றாள். “நீங்கள் இருவரும் பின்னால் ஏறிக்கொள்ள முடியாது. இது ஒன்றும் வாடகை வண்டியல்ல, ஒருவர் முன்னால் அமர்வதுதான் மரியாதையான பாங்கு.”

இருவரும் பேசி உயரமானவன் முன்னால் அமர்வதென்று முடிவானது, விரைவாக அவன் சாச்சிக்கு அருகில் வந்து இருக்கும் இடத்திற்குள் தன் நீண்ட கால்களை மடக்கிக்கொண்டு அமர்ந்தான். “என்ன மாதிரியான வண்டி இது?”என்றான்.

“இது டாட்ஜ் நியான். க்ரிஸ்லர் நிறுவனத்தின் வாகனம்,” என்றாள் சாச்சி.

“ஹ்ம்ம், ஆக அமெரிக்காவிலும் ஒடுங்கிய சிறியகார்கள் உண்டோ? என் சகோதரியின் கரோலாவிலேயே இன்னும் அதிகமான இடம் இருக்குமே.”

“சரிதான், எல்லா அமெரிக்கர்களும் பெரிய கெடில்லாக் காரிலேயே வலம் வருவார்களா என்ன?”

“உண்மைதான், ஆனால் இது உண்மையிலேயே மிகச்சிறியது.”

”உனக்குப் பிடிக்கவில்லையென்றால் இங்கேயே இறங்கிக் கொள்ளலாம்.” என்றாள் சாச்சி.

“ஓ…ஓ… நான் அந்த அர்த்த்த்தில் சொல்லவில்லை.” என்றான். “இது எவ்வளவு சிறிய கார் என்று ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்கக் கார்கள் எல்லாம் அளவில் பெரியவை என்று நினைத்திருந்தேன்.”

“இருக்கட்டும், ஹனலேவுக்கு எதற்காகப் போகிறாய்?” சாச்சி வண்டியைச் செலுத்திக்கொண்டே கேட்டாள்.

“ஹ்ம்ம், நீர்ச்சறுக்கு ஒரு காரணம்.”

”உங்கள் பலகைகள் எங்கே?”

“அதை அங்கே வாங்கிக் கொள்ளலாம்,” என்றான் குட்டையானவன்.

“ஆமாம், அதை ஜப்பானிலிருந்து சுமந்துகொண்டு வருவதென்பது தொந்திரவான விஷயம். அங்கே உபயோகப்படுத்தப்பட்ட பழைய பலகைகள் மலிவான விலைக்குக் கிடைக்கும் என்று கேள்விப்பட்டோம்.” என்றான் உயரமானவன்.

“நீங்கள் எப்படி மேடம்? நீங்களும் இங்கே விடுமுறைக்காக வந்தீர்களா?”

“ம்-ம்ம்”

“தனியாகவா?”

”தனியாகத்தான்,” என்றாள் சாச்சி மெதுவாக.

“நீங்கள் ஒன்றும் புகழ்மிக்க பழைய நீர்ச்சறுக்கு வீர்ர்களில் ஒருவரில்லையே?”

“விளையாடாதே!” என்றாள் சாச்சி. “அது இருக்கட்டும், ஹனலேவில் தங்க இடம் இருக்கிறதா?”

“அதெல்லாம் இல்லை, அங்கே போனதும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தோம்,” என்றான் உயரமானவன்.

“ஆமாம், தேவைப்பட்டால் கடற்கரையிலேயே படுத்துக்கொண்டுவிடலாம் என்று உத்தேசித்துள்ளோம்,” என்றான் குட்டையானவன். “அதுபோக, எங்களிடம் பணம் கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது.”

சாச்சி மறுப்பாகத் தலையசைத்தாள். “வடக்கு கடற்கரையில் வருடத்தின் இந்த சமயத்தில் இரவில் குளிர் அதிகம் – அறைக்குள்ளேயே கம்பளியாடை அணியவேண்டிவரும். வெளியில் படுத்தால் நோய்வாய்ப்படுவீர்கள்.”

“ஹவாய்யில் எப்போதும் கோடைகாலமில்லையா?” உயரமானவன் கேட்டான்.

“ஹவாய் அங்கே மேலே வடக்குக்கோளப் பகுதியில் உள்ளது. அதற்கு நான்கு பருவநிலைகள். கோடை வெப்பமாக இருக்கும், குளிர்காலம் குளிராகவும் இருக்கலாம்.”

“அப்படியென்றால் தலைக்குமேல் கூரை இருப்பது நல்லது,” என்றான் குட்டையானவன்.

“மேடம், ஒரு இடம்தேட நீங்கள் எங்களுக்கு உதவமுடியுமா?” என்றான் உயரமானவன். “எங்களிடம் ஆங்கிலம் என்பது கிட்டத்தட்ட இல்லாதமாதிரிதான்.”

“ஆமாம்,” என்றான் குட்டையானவன். “ஹவாய்யில் எங்கேயும் ஜப்பானிய மொழியில் பேசலாம் என்று கேள்விப்பட்டோம், ஆனால் இதுவரை அது எங்களுக்கு உதவவில்லை.”

“நிச்சயமாக அப்படியில்லை!” என்றாள் சாச்சி பொறுமையின்றி. “ஜப்பானிய மொழி உதவக்கூடிய ஒரே இடம் ஒவாஹு, அதிலும் வாக்கிகி கடற்கரையின் ஒரு பகுதியில் மட்டும்தான். ஏனென்றால் அங்கேதான் லூயிஸ் வூட்டன் பைகளையும் சேனல் 5-ஐயும் விரும்பும் ஜப்பானிய சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள், எனவே ஜப்பானிய மொழி பேசக்கூடியவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். ஹயாத் மற்றும் ஷெரட்டனில் அதுதான் நடக்கிறது. ஆனால் அந்த ஹோட்டல்களுக்கு வெளியே, ஆங்கிலம் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும். மேலும், இது அமெரிக்கா. நீங்கள் இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல் க்வாய்க்கு வந்தீர்களா?”

“எனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது. என் அம்மா ஹவாய்யில் எல்லோரும் ஜப்பானியமொழி பேசுவார்கள் என்றார்.”

சாச்சி முனகினாள்.

“எது எப்படியோ, இருப்பதிலேயே ஆகமலிவான ஒரு விடுதியில் தங்கலாம்,” என்றான் குட்டையானவன். “நான் முன்பே சொன்னது போல எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை.”

“ஹனலேவுக்குப் புதிதாக வருபவர்கள் மலிவான விடுதிகளில் தங்குவதில்லை,” என்று சாச்சி எச்சரித்தாள். “அது ஆபத்தாக அமையலாம்.”

“ஏன் அப்படி?” என்றான் உயரமானவன்.

“முக்கியமாக போதைப்பொருட்கள்,” என்றாள் சாச்சி. “அந்த நீர்ச்சறுக்கு வீர்ர்களில் சிலர் மோசமானவர்கள். மரிஜுவானா என்றால் பரவாயில்லை, ஆனால் ஐஸ் என்றால் கவனமாக இருங்கள்.”

“ஐஸ்? அப்படியென்றால் என்ன? கேள்விப்பட்டதே இல்லையே,” என்றான் உயரமானவன்.

“உங்கள் இருவருக்குமே விவரம் போதாது, சரிதானே? நீங்கள்தான் அவர்களுக்கு ஏற்ற சரியான இரைகள். ஐஸ் என்பது கடுமையான போதைவஸ்து, அது ஹவாய்யில் எங்கும் கிடைக்கக் கூடியது. சரியாகத் தெரியாது, அது ஏதோ படிகமாக்கப்பட்ட நரம்பூக்கி. மலிவானது, உபயோகிக்க எளிதானது, உங்களை நன்றாக உணரவைக்கும், ஆனால் அதில் மாட்டிக் கொண்டீர்களேயானால் சாகவும் நேரலாம்.”

“பயங்கரம்,” என்றான் உயரமானவன்.

“அப்படியென்றால் மரிஜுவானா உபயோகிப்பது நல்லது என்கிறீர்களா?” என்றான் குட்டையானவன்.

”நல்லதா என்று எனக்குத் தெரியாது, குறைந்தபட்சம் அது உன்னைக் கொல்லாது. புகையிலை போலல்ல. மூளையைக் கொஞ்சம் பாதிக்கும், ஆனால் உங்களுக்கு அந்த வித்தியாசம் தெரியப்போவதில்லை.”

“ஹேய், இது ரொம்பவும் அதிகம்.” என்றான் குட்டையானவன்.

“நீங்கள் இந்த பூமர் குழு என்பார்களே அதைச் சேர்ந்தவரா?” என்று கேட்டான் உயரமானவன்.

“நீ சொல்வது…”

”அதேதான், பேபி-பூம் ஜெனரேஷன்1 என்று சொல்வார்களே, அதன் உறுப்பினர்.”

“நான் எதிலும் ‘உறுப்பினர்’ இல்லை, நான், நான் மட்டுமே. தயவுசெய்து என்னை எந்தக்குழுவிலும் இணைத்துப் பேசவேண்டாம்.”

“அதேதான்! நீங்கள் ஒரு பூமர்தான்.” என்றான் குட்டையானவன். “நீங்கள் உடனே எல்லாவற்றையும் முக்கியமாக எடுத்துக்கொண்டு பேசுகிறீர்கள். என் அம்மாவைப் போலவே.”

”அதேபோல உன் மதிப்பிற்குரிய அம்மாவோடும் என்னைச் சேர்க்க வேண்டாம்,” என்றாள் சாச்சி. “உங்கள் நல்லதுக்காகச் சொல்கிறேன். ஹனலேவில் நல்ல இடத்தில் தங்குங்கள். சம்பவங்கள் நிறைய… சிலசமயம் கொலைகூட நடந்துள்ளது.”

“உண்மையில் வெளியில் சொல்லப்படுவது போல அது அமைதியான சொர்க்கமெல்லாம் இல்லை போல.” என்றான் குட்டையானவன்.

“இல்லைதான்.” சாச்சி ஆமோதித்தாள். “எல்விஸ்சின்2 காலமெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது.”

“அது என்னவென்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை,” என்றான் உயரமானவன், “ஆனால் எல்விஸ் காஸ்டெல்லோ3 கிழவராகிவிட்டார் என்பது மட்டும் தெரியும்.”

சாச்சி அதன்பின் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினாள்.

சாச்சி தான் தங்கியிருந்த விடுதி மேலாளரிடம் பேசி, அவர்களுக்கு ஓர் அறையை ஏற்பாடு செய்தாள். அவள் அறிமுகப்படுத்தியதால் வாரத்திற்கான வாடகையில் தள்ளுபடி கிடைத்த்து, ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்திருந்ததைவிட அது அதிகமானது.

“வாய்ப்பேயில்லை” என்றான் உயரமானவன். “அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை.”

“ஒன்றுமேயில்லை என்பதற்கு அடுத்த நிலையில் இருக்கிறோம்.” என்றான் குட்டையானவன்.

“அவசரத்துக்கென்று ஏதாவது வைத்திருப்பீர்களே,” சாச்சி வற்புறுத்தினாள்.

உயரமானவன் காதுமடலைச் சொறிந்தபடி, “உண்டுதான், என்னிடம் டைனெர்ஸ் க்ளப்பின் குடும்பக் கடனட்டை உள்ளது, ஆனால் அப்பா உண்மையான நேர்மையான அவசரத்தேவை வந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். ஒருமுறை ஆரம்பித்தால் நிறுத்தமாட்டேன் என்று அவருக்குப் பயம். அவசரமான விஷயம் தவிர வேறெதற்கும் உபயோகித்தால், ஜப்பான் போனதும் கழுத்தைப் பிடிப்பார்.”

“முட்டாள்தனமாகப் பேசாதே,” என்றாள் சாச்சி. “இதுதான் உண்மையான அவசரம். நீங்கள் உயிரோடு இருக்க நினைத்தால், அந்த அட்டையை இப்போதே வெளியில் எடு. இல்லையென்றால் கடைசியில் போலீஸ் உன்னை உள்ளேதள்ளும், அங்கே எவனாவது வாட்டசாட்டமான ஹவாய்க்காரன் உன்னை அந்த ராத்திரிக்கு பெண்தோழியாக்கிக் கொள்வான். ஒருவேளை, உனக்கு அந்த மாதிரியான சமாச்சாரங்கள் பிடித்திருக்கலாம் என்பது தனிக்கதை, ஆனால் ரொம்ப வலிக்கும்.”

உயரமானவன் உடனே தன் பணப்பையிலிருந்து அட்டையை வெளியிலெடுத்து மேலாளரிடம் கொடுத்தான். சாச்சி அவர்களுக்காக, உபயோகித்த மலிவான சறுக்குப் பலகைகள் எங்கே கிடைக்குமென அவரிடம் விசாரித்தாள். அவர் ஒரு இடத்தைச் சொல்லி, “நீங்கள் கிளம்பும்போது அவர்களே மீண்டும் உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள்.” என்றார். அவர்கள் தங்கள் பையை அறையில் வைத்துவிட்டு அந்தக் கடைக்கு விரைந்தனர்.

அடுத்தநாள் சாச்சி கடற்கரையில் அமர்ந்து, வழக்கம்போல் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவ்விரு ஜப்பானிய இளைஞர்களும் அங்கேவந்து நீர்ச்சறுக்க ஆரம்பித்தனர். தரையில் உதவியற்று நின்றிருந்ததற்கு மாறாக, நீரில் அவர்களின் திறமை அபாரமானதாக இருந்தது. பலமான அலையைக் கண்டுகொண்டதும் விரைந்து அதில் ஏறி, கரையை நோக்கித் தங்கள் பலகையை நேர்த்தியாகவும் முழுக்கட்டுப்பாடுடனும் செலுத்தினர். இடைநிறுத்தாமல் பல மணிநேரங்களுக்கு இதைத் தொடர்ந்தனர். அவ்வாறு அலைகளில் சறுக்கும்போது உண்மையான உயிர்ப்புடன் இருந்தனர்: கண்கள் ஒளிர, தன்னம்பிக்கையோடு இருந்தனர். நேற்றிருந்த பயத்தின் சாயல் கூட இல்லை. சொந்த ஊரில் பலநாட்களைப் படிக்காமல் நீரில்தான் செலவிட்டிருக்க வேண்டும் – இறந்த அவளின் மகனைப் போலவே.

*
உயர்நிலைப்பள்ளியில் இருந்தபோதுதான் சாச்சி பியானோ வாசிக்க ஆரம்பித்தாள் – சற்று தாமதமான ஆரம்பம்தான். அதற்குமுன் அக்கருவியை அவள் தொட்டதுகூட இல்லை. வகுப்பு முடிந்ததும் இசைக்கருவிகள் அறையில் உள்ள பியானோவை அவ்வப்போது வாசிக்க முயற்சித்து சீக்கிரமாக அவளாகவே நன்கு வாசிக்கக் கற்றுக்கொண்டுவிட்டாள். சுருதி குறித்த துல்லியமான அறிவும், வழக்கத்தைவிடச் சிறந்த காதுகளும் கொண்டவள் என்பது தெரிந்தது. ஓர் இசையை ஒருமுறை கேட்டதும் அதை அவளால் வாசிக்க முடிந்தது. அந்த இசைக்கான சரியான கம்பி எது என்று அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் சொல்லித்தராமலேயே விரல்களை இயல்பாக நகர்த்தக் கற்றுக்கொண்டாள். உண்மையில் அவளுக்கு இயற்கையாக அந்தப் பிறவிஞானம் இருந்தது.

இளம் இசையாசிரியர் ஒருவர் அவள் வாசிப்பதைக் கேட்டு ரசித்து, சில அடிப்படையான விரல் நகர்வுகளில் உள்ல தவறுகளைச் சரிசெய்தார். “நீ அப்படியும் வாசிக்கலாம், ஆனால் இதுபோல வாசிக்கும்போது உனக்கு வேகம் கிடைக்கும்,” என்று வாசித்துக் காண்பித்தார். உடனே அதைப் புரிந்துகொண்டாள். ஜாஸ் இசைவிரும்பியான அவ்வாசிரியர் பள்ளி முடிந்ததும் ஜாஸ் இசையின் சூத்திரங்களை அவளுக்குக் கற்பித்தார்: நாண் உருவாக்கம், சுரங்களின் படிவரிசை பற்றிய அறிவு, மிதிகட்டையின் பயன்பாடு, மேம்படுத்துதலின் கருத்தாக்கம். அத்தனையையும் பேராவலோடு வாங்கிக்கொண்டாள். தன்னிடமிருந்த இசைத்தட்டுகளை அவளுக்குக் கேட்கக் கொடுத்தார்: ரெட் கார்லண்ட், பில் ஈவன்ஸ், வின்ட்டன் கெல்லி. எல்லாவற்றையும் தவறில்லாமல் வாசிக்க முடியும்வரை மீண்டும் மீண்டும் கேட்பாள். ஒருமுறை பிடிகிட்டியதும் அப்படியான போலச்செய்தல்கள் அவளுக்குச் சுலபமாகின. இசையின் சத்தமும் இசைவும் நேரடியாக வேறு படியெடுத்தல்களின் துணையின்றி அவள் விரல்களில் இறங்கின. ”உனக்கு உண்மையிலேயே திறமையிருக்கிறது,” என்றார் அவள் ஆசிரியர். “நீ கடினமாக உழைத்தால், நீ ஒரு மேதையாகலாம்.”

ஆனால் சாச்சிக்கு அவர்மேல் நம்பிக்கையில்லை. அவளால் செய்ய முடிந்த்தெல்லாம் போலச்செய்தல்களே, அவளுடைய இசையை அவளால் உருவாக்க முடியவில்லை. திடீரென வாசிக்கச் சொன்னால் என்ன வாசிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. எதையேனும் மேம்படுத்துகிறேன் என்று ஆரம்பித்தாளெனில் ஏற்கெனவே உள்ள வேறு யாருடைய இசையிலேயோ போய் முடியும். இசையை வாசிப்பதும் பெரிய தடைக்கல்லாக இருந்தது. விளக்கமான இசைக்குறிப்புகள் அவள்முன் வைக்கப்பட்டால், மூச்சுவிடக்கூட அவளால் முடியவில்லை. கேட்டதை வாசிப்பதென்பதே அவளுக்கு மிகச்சுலபமான ஒன்றாக இருந்தது. அவள் நினைத்தாள்: இல்லை, என்னால் ஒருநாளும் மேதையாக முடியாது.

அதற்குப் பதிலாக சமையற்கலை படிப்பதென்று முடிவெடுத்தாள். அதில் ஆர்வம் இருந்தது என்றெல்லாம் இல்லை, அவள் அப்பாவுக்குச் சொந்தமாக உணவுவிடுதியொன்று இருந்தது, அவளும் குறிப்பாக இன்னதுதான் செய்யவேண்டும் என்று நினைக்கததால், அப்பாவுக்கு அடுத்து தான் வியாபாரத்தை நடத்தலாமே என்று நினைத்தாள். சிகாகோவிலுள்ள தொழில்முறை சமையற்கலைப் பள்ளிக்குச்சென்று படித்தாள். சிகாகோ ஒன்றும் அதன் சிறந்த சமையற்கலைக்குப் பெயர்பெற்ற இடமல்ல, ஆனால் குடும்பத்தினருக்கு அங்கே உறவுகள் இருந்தன, அவர்கள் அவளுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டனர்.

உடன்பயின்றவர் மூலம் நகரத்திலிருந்த ஒரு பியானோ மதுக்கூடத்தின் அறிமுகம் கிடைத்தது, சீக்கிரமே அவள் அங்கே வாசிக்க ஆரம்பித்துவிட்டாள். முதலில் செலவுக்குப் பணம் தரும் பகுதிநேர வேலையாகவே அதை நினைத்தாள். வீட்டிலிருந்து அனுப்பும் பணத்தை வைத்து வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, இந்த மேலதிகப் பணம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மதுக்கூடத்தின் முதலாளிக்கு இவள் எந்தவகை இசையானாலும் வாசித்துவிடும் விதம் பிடித்துவிட்டது. ஒரு பாட்டை ஒருமுறை கேட்டுவிட்டால் மறக்க மாட்டாள், அவள் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பரவாயில்லை, யாராவது லேசாக முணுமுணுத்தால் போதும், உடனே வாசித்துவிடுவாள். பெரிய அழகியில்லை என்றாலும் கவரும்படியான அம்சங்கள் அவளிடம் இருந்தன, அவள் அங்கே இருப்பது அந்த மதுக்கூடத்திற்கு மேலும் மேலும் ஆட்களைக் கொண்டுவந்தது. அவளுக்கென்று அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் பணமும் அதிகரித்துக்கொண்டே போனது. இறுதியில் அவள் வகுப்புக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டாள். பன்றிக்கறியை அலங்கரிப்பது, பாறைபோல் இறுகிய வெண்ணைக்கட்டியைச் சீவுவது, அல்லது பொரிக்கும் பாத்திரத்தினைக் கழுவுவதைவிடவும் – பியானோவுக்கு எதிரே அமர்ந்திருப்பது சுலபமாகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருந்தது.

அதனால்தான், அவள் மகன் நீர்ச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டு நிச்சயமாகப் பள்ளிப்படிப்பைக் கைவிடப்போகிறான் என்று தெரிந்து சாச்சி அதைத் தடுக்கவில்லை. அவன் வயதில் நானும் இதைத்தானே செய்தேன். அவனைக் குற்றம் சொல்ல முடியாது. அநேகமாக இது ரத்தத்தில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள்.

அம்மதுக்கூடத்தில் அவள் வாசித்தது ஒன்றரையாண்டுகள். அவளின் ஆங்கிலம் மேம்பட்டது, நல்ல தொகையொன்றைச் சேமித்துக்கொண்டாள், அவளுக்கு ஒரு ஆண் துணை கிடைத்தது – நடிகனாக விரும்பிய அழகான ஆப்பிரிக்க – அமெரிக்க இளைஞன். (சாச்சி அவனைப் பின்நாட்களில் ஒரு துணைக்கதாபாத்திரத்தில் டை-ஹார்ட் 2 படத்தில் கண்டுகொள்வாள்.) ஒருநாள், எதிர்பார்த்ததுபோலவே, நெஞ்சில் அடையாள வில்லையுடன் குடிநுழைவு அதிகாரி ஒருவர் மதுக்கூடத்திற்குள் நுழைந்தார். நிச்சயமாக அவள் சற்று அதிகமாகவே எல்லோராலும் அறியப்பட்டுவிட்டாள். அவர் அவளின் கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்தவுடன் சட்டவிரோதமாக வேலைபார்த்த குற்றத்திற்காக அங்கேயே அவளைக் கைது செய்தார். சிலநாட்கள் கழித்து அவள் நரிதா செல்லும் ஒரு ஜம்போஜெட் விமானத்தில் இருந்தாள் – பயணச்சீட்டுக்கான பணத்தை அவள் தனது சேமிப்பிலிருந்து கொடுக்கவேண்டியிருந்தது. அவளின் அமெரிக்க வாழ்க்கை இப்படியாக நிறைவுக்கு வந்தது.

மீண்டும் டோக்கியோவில், சாச்சி தனக்குமுன் வாழ்வில் இருந்த சாத்தியங்களை யோசித்துக் கொண்டிருந்தாள், ஆனால் பியானோ வாசிப்பதைத் தவிர வேறு எதுவும் அவளுக்கு ஒத்துவரும் என்று தோன்றவில்லை. அவளுக்கான வாய்ப்புகள், இசைக்குறிப்பைப் படிக்கத் தெரியாததால் குறைந்துவிட்டன, ஆனால் காதால் கேட்டு வாசிக்கும் அவளுடைய திறமையை அங்கீகரிக்கும் இடங்களும் இருந்தன – உணவகங்கள், இரவு விடுதிகள் மற்றும் மதுக்கூடங்கள். அவளால் இருக்கும் இடத்துக்குத் தகுந்தாற்போலவும் வாடிக்கையாளர்களின் வகையை வைத்தும் அல்லது அவர்களால் விரும்பிக்கேட்கப்படும் இசையையும் அளிக்க முடிந்தது. அவள் ஒரு சிறந்த “இசைப் பச்சோந்தி”யாக இருக்கவேண்டும், ஆனால் அவளுக்கு வாழ்க்கையில் ஏதும் குறைகளில்லை.

24 வயதில் திருமணம் செய்துகொண்டாள், இரண்டு வருடம் கழித்து ஒரு மகன் பிறந்தான். கணவன் ஒரு ஜாஸ் கித்தார் கலைஞன், சாச்சியைவிட ஒருவயது இளையவன். அவனது வருமானம் என்பது கிட்டத்தட்ட இல்லாதது போலத்தான். போதைக்கு அடிமை, பெண்களோடு சுற்றித் திரிபவன். பெரும்பாலும் வெளியில்தான் இருப்பான், வீட்டுக்கு வந்தான் என்றால், முரட்டுத்தனமாக நடந்து கொள்வான். முதலில் எல்லோரும் அத்திருமணத்தை எதிர்த்தனர், பிறகு எல்லோரும் அவனை விவாகரத்து செய்துவிடும்படி சாச்சியை நச்சரித்தனர். முரடன் என்றாலும் சாச்சியின் கணவனிடம் அசலான ஒரு திறமை இருந்தது, ஜாஸ் உலகத்தில் அவன் முன்னேறிக் கொண்டிருக்கும் நட்சத்திரமாக இருந்தான். அநேகமாக அதுதான் முதல் காரணமாக சாச்சிக்கு அவனிடத்தில் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கும். ஆனால் அத்திருமணம் ஐந்தாண்டுகள் மட்டுமே நிலைத்தது. ஒருநாள் இரவு இன்னொரு பெண்ணின் அறையில் இருக்கும்போது மாரடைப்பு உண்டாகி, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் நிர்வாணமாக இறந்துபோனான். அநேகமாக மிதமிஞ்சிய போதைப்பொருளினால் இருக்கலாம்.

கணவன் இறந்த சிறிது நாட்களிலேயே, சாச்சி தனக்கென ஒரு சிறிய பியானோ மதுக்கூடத்தை நாகரீகமான ரோப்போங்கி குடியிருப்புப் பகுதியில் திறந்தாள். அவளிடம் கொஞ்சம் பணம் இருந்தது, கணவனுக்குத் தெரியாமல் அவன் பெயரில் ஒரு காப்பீட்டிற்குப் பணம் செலுத்தியிருந்தாள் அதுவும் கிடைத்தது, எப்படியோ ஒரு வங்கிக் கடனையும் பெற்றுவிட்டாள். அவ்வங்கியின் கிளை மேலாளர், சாச்சி இசைத்துக்கொண்டிருந்த மதுக்கூடத்திற்குத் தொடர் வாடிக்கையாளராக இருந்தது உதவியது. உபயோகித்த பெரிய பியானோ ஒன்றை வாங்கி வைத்தாள், பியானோ வடிவிலேயே சேவை முகப்பையும் அமைத்தாள். வியாபரம் நன்கு நடக்க, மிக அதிகமான சம்பளம் கொடுத்து தகுதியுள்ள மதுவிற்பனை செய்பவர்-மேலாளர் ஆகியோரை இன்னொரு மதுக்கூடத்திலிருந்து அழைத்து வந்தாள். வாடிக்கையாளர்களின் விருப்பங்களைக் கேட்டு ஒவ்வொரு இரவிலும் வாசித்தாள், அவர்களோடு சேர்ந்து பாடினாள். மீன்குடுவையொன்று அன்பளிப்பிற்காக பியானோவின் மேல் இருந்தது. அப்பகுதியிலுள்ள மற்ற இசைக்குழுக்களில் உள்ள இசைக்கலைஞர்கள் அவ்வப்போது அங்கே வந்து ஒன்றிரண்டு பாடலுக்கு வாசித்துவிட்டுச் சென்றனர். சீக்கிரமே அம்மதுக்கூடத்திற்கென தொடர் வாடிக்கையாளர்கள் உருவாகினர், சாச்சி எதிர்பார்த்ததைவிட வியாபாரம் நன்றாகவே நடந்தது. அவளால் இப்போது தன் கடன்களைச் சரியாகத் திருப்பிச்செலுத்தவும் முடிந்தது. திருமணவாழ்க்கையை அறிந்து அதனால் மனம் நொந்திருந்த்தால், அவள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் அவ்வப்போது ஆண் நண்பர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள், எனவே அது அவளுக்கு எல்லாவகையிலும் ஏற்றதாக இருந்தது. காலங்கள் கடக்க, அவள் மகன் வளர்ந்து, நீர்ச்சறுக்குபவனாகி க்வாயிலுள்ள ஹனலேவுக்குப் போகவிரும்புவதாகக் கூறினான். முதலில் அவளுக்கு அந்த யோசனை பிடிக்கவில்லை, ஆனால் அவனோடு வாதிட்டுச் சோர்ந்துபோய் விருப்பமில்லாது செலவுக்குப் பணத்தைக் கொடுத்தாள். நீண்டநேர வாய்ச்சண்டை எப்போதுமே அவளுக்கானதல்ல. ஆக அது அப்படியாக நடந்தது, நல்ல உயரமான அலைக்காக அவன் காத்திருந்தபோது, அவள் மகன் ஆமைகளைத் தேடிவந்த சுறாவினால் தாக்கப்பட்டு, தன் குறுகிய 19வருட வாழ்வை முடித்துக்கொண்டான்.

சாச்சி, மகன் இறந்ததும் முன்பைவிடக் கடினமாக உழைத்தாள். வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு என இடைவெளியே இல்லாமல் முதல் வருடம் முழுக்க வாசித்தாள். இலையுதிர்கால முடிவில் மூன்றுவார விடுப்பு எடுத்துக்கொண்டு, யுனைட்டெட் விமானச்சேவையில் முதல்வகுப்புக்கான பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு க்வாய்க்குச் சென்றாள். அவள் இல்லாதபோது இன்னொருவர் பியானோ இசைத்தார்.

*
சிலசமயம் ஹனலேவிலும் சாச்சி வாசிப்பதுண்டு. அங்கே ஓர் உணவு விடுதியில் மட்டும் சிறியவகை க்ராண்ட் பியானோ உண்டு, ஒல்லியான உயரமான ஐம்பதுகளின் நடுவில் இருக்கும் ஒருவர், ரொம்பவும் சிரமமில்லாத “பாலி ஹாய்” மற்றும் “ப்ளூ ஹவாய்” போன்ற பாடல்களை வாசிப்பார். ஒரு பியானோ வாசிப்பவராக அவரிடம் தனித்தன்மை ஏதுமில்லை, ஆனால் அவரின் இனிமையான சுபாவம் பியானோவின் வழி வெளிப்பட்டது. சாச்சி அவரோடு நட்பாகி அவருக்குப் பதிலாக அவ்வப்போது வாசித்தாள். அதையொரு பொழுதுபோக்காகவே செய்தாள், அவ்வுணவு விடுதி அதற்காக அவளுக்கு சம்பளம் ஏதும் தரவில்லை, ஆனால் அதன் உரிமையாளர் ஒயினும் பாஸ்தாவும் தந்து உபசரிப்பார். அவ்வப்போது அதன் விசைகளைத் தொட்டுகொள்வது நன்றாக இருந்தது: அவளை லேசாக்கியது. இது திறமை குறித்த கேள்வியாக அல்லது இந்தச் செயலால் என்ன பயன் என்றெல்லாம் இல்லை. இதைப்போலவே தனது மகனும் அலைகளில் சறுக்கும்போது நினைத்திருப்பான் என்று நினைத்துக்கொள்வாள்.

நேர்மையாகச் சொல்வதானால், சாச்சிக்கு உண்மையில் தன் மகனைப் பிடிக்கவில்லை. அவன் மீது அன்பு இருந்தது – இந்த உலகத்திலேயே அவளுக்கு முக்கியமானவன் அவன்தான் – ஆனால் ஒரு தனிமனிதனாக அவனை நேசிப்பதில் சிரமம் இருந்தது, இந்தப் புரிதலுக்கு அவளை இட்டுச்செல்ல அவளுக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. அவர்கள் ஒரே ரத்தமாக மட்டும் இல்லாதிருந்தால் அவனோடு எந்தவித உறவுக்கும் சாத்தியமே இல்லை. சுயநலமானவன், எதிலும் கவனம் கிடையாது, எதையும் உருப்படியாகச் செய்து முடித்ததில்லை. அவனோடு எதைப்பற்றியும் கருத்தார்ந்து உரையாட முடிந்ததே இல்லை; உடனே ஏதாவது போலியான காரணத்தைச்சொல்லி அதுபோன்ற உரையாடல்களைத் தவிர்த்து விடுவான். படிப்பதென்பது எப்போதோ ஒருமுறைதான், எனவே தேர்வு முடிவுகள் மோசமாகவே இருந்தன. எதிலாவது ஒரு முயற்சி செய்தானென்றால் அது நீர்ச்சறுக்கில்தான், அதையும் எவ்வளவு நாள் தொடர்ந்திருப்பான் என்பதில் எவ்வித உறுதியும் தரமுடியாது. அழகான முகம், நண்பிகளுக்குக் குறைவே இருந்ததில்லை, ஆனால் ஒருத்தியிடமிருந்து என்ன மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தவுடன், ஒரு பழைய பொம்மையைத் தூக்கியெறிவதுபோல அவளைக் கைவிட்டுவிடுவான். ஒருவேளை நான்தான் அவனைக் கெடுத்துவிட்டேனோ என்று சாச்சி நினைத்தாள். ஒருவேளை செலவுக்கு அதிகமாகப் பணம் கொடுத்துவிட்டேன். ஒருவேளை நான் அவனிடத்தில் இன்னமும் கண்டிப்போடு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவனிடத்தில் கண்டிப்பாக இருப்பதென்றால் என்ன செய்திருக்கவேண்டும் என்ற யோசனைகள் ஏதும் அவளிடத்தில் இல்லை. வேலை அவளைப் பரபரப்பாக வைத்திருந்தது, மேலும் அவளுக்கு சிறுவர்கள் குறித்து – அவர்களின் மனோநிலை அல்லது உடல் பற்றி – ஏதும் தெரிந்திருக்கவில்லை.

*
ஒருமாலை சாச்சி அந்த உணவகத்தில் இசைத்துக் கொண்டிருந்தபோது அந்த இரு நீர்ச்சறுக்கு இளைஞர்கள் அங்கே வந்தனர். அது அவர்கள் ஹனலேவுக்கு வந்த ஆறாம் நாள். உடல் முழுவதும் பழுப்பு நிறமேறி இருந்தது, பார்வையில் தன்நம்பிக்கை கூடியிருந்தது.

“ஹேய், நீங்கள் பியானோ வாசிக்கிறீர்கள்!” குட்டையானவன் ஆச்சரியப்பட்டான்.

“நன்றாகவும் வாசிக்கிறீர்கள், ஒரு தொழில்முறை வாசிப்பவர் போல.” என்று உயரமானவனும் சேர்ந்துகொண்டான்.

“நான் மகிழ்ச்சிக்காக வாசிப்பவள்,” என்றாள்.

”பீ’ஸ்4 -ன் பாடல்கள் ஏதாவது வாசிக்கத் தெரியுமா?”

“இல்லை, எனக்கு ஜே-பாப்5 தான். நன்றி” என்றாள் சாச்சி. “ஒரு நிமிடம், உங்களிடம் பணமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரியான இடத்தில் சாப்பிடும் அளவு பணம் இருக்கிறதா?”

“நிச்சயமாக, நான்தான் டைனெர்ஸ் க்ளப் அட்டை வைத்திருக்கிறேனே!” உயரமானவன் அறிவித்தான்.

”ஆமாம், அவசரத் தேவைகளுக்காக…”

“ஓஹ், அதைப்பற்றிக் கவலையில்லை. கிழவர் சொன்னது சரிதான். ஒருமுறை உபயோகித்தால் அதுவே பழக்கமாகிவிடுகிறது.”

”உண்மைதான், ஆக, இப்போது அது சுலபமாகத் தெரிகிறது.” என்றாள் சாச்சி.

“உங்களுக்கு இரவுணவு வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தோம்.” என்றான் குட்டையானவன், “உங்கலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக. நீங்கள் எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறீர்கள். மேலும் நாளை மறுநாள் நாங்கள் வீட்டுக்குக் கிளம்புகிறோம்.”

”ஆமாம்,” என்றான் உயரமானவன். “இப்போது எப்படி? உங்களுக்காக ஒயின் வாங்கித்தர முடியும். எங்கள் செலவு!”

“நான் ஏற்கெனவே இரவுணவை முடித்தாயிற்று,” தன் சிவப்புஒயின் நிறைந்த கோப்பையை உயர்த்தியபடி சாச்சி சொன்னாள். “இது உணவகத்திலிருந்து எனக்குத் தரப்படுவது. இருந்தாலும், உங்கள் நன்றியை ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது.”

அப்போது பெரிய உருவம் கொண்ட வெள்ளைக்காரன் கையில் விஸ்கிக் கோப்பையுடன் அவர்கள் இருக்கும் மேசைக்கருகில் வந்து நின்றான். 40ஐ நெருங்குபவன், முடியை ஒட்டக் கத்தரித்திருந்தான். கைகள் சிறிய தந்திக்கம்பத்தை ஒத்திருந்தன, ஒன்றில் பெரிய ட்ராகனின் உருவம் “USMC” என்ற எழுத்திற்கு மேலே பச்சை குத்தப்பட்டிருந்தது. அதன் மங்கிய நிறத்தைவைத்து அது சில வருடங்களுக்கு முன்பாகக் குத்தப்பட்டது என்று சொல்லலாம்.

”ஹேய், சிறிய பெண்ணே, நீ பியானோ வாசித்தது எனக்குப் பிடித்திருந்தது.”

சாச்சி அவனை நிமிர்ந்து பார்த்து, “நன்றி” என்றாள்.

”நீ ஜப்பானா?”

“நிச்சயமாக.”

“நான் ஒருமுறை ஜப்பான் போயிருக்கிறேன். வெகுநாள் முன்பு. இரண்டு வருடங்கள் இவாகுனியில் தங்கியிருந்தேன். வெகுநாள் முன்பு.”

“அப்படியா, உனக்கு ஒன்று தெரியுமா? நான் ஒருமுறை சிகாகோவில் இரண்டு வருடம் இருந்திருக்கிறேன். வெகுநாள் முன்பு. இரண்டுக்கும் சரியாகப் போயிற்று.”

அம்மனிதன் சிறிதுநேரம் இதைப்பற்றி யோசித்து, அவள் நகைச்சுவையாகப் பேசுகிறாள் என்று முடிவு செய்து, புன்னகைத்தான்.

“எனக்காக ஏதாவது வாசியேன். சந்தோஷமான ஏதாவது. பாபி டேரின் உடைய ‘Beyond the Sea’ தெரியுமா? நான் அதைப்பாட விரும்புகிறேன்.”

“நான் இங்கே வேலை செய்யவில்லை,” என்றாள் சாச்சி. “மேலும் இப்போது இவ்விரு இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அதோ அங்கே ஒல்லியான ஒரு ஆள் பியானோ அருகில் உட்கார்ந்திருக்கிறார் தெரிகிறதா? அவர்தான் இங்கே பியானோ வாசிப்பவர். அநேகமாக உங்கள் விருப்பத்தை அங்கே சொல்லவேண்டும். அப்புறம் அவருக்கு அன்பளிப்புத் தர மறந்து விடாதீர்கள்.”

அவன் மறுப்பாகத் தலையசத்தான். “அந்தப்பயலுக்கு அலுப்பான விஷயங்களைத் தவிர வேறேதுவும் வாசிக்கத் தெரியாது. நான் சந்தோஷமான எதையாவது – நீ வாசித்துக் கேட்கவேண்டும். அதனால் உனக்குப் பத்து டாலர் கிடைக்கும்.”

“500 கொடுத்தாலும் செய்யமாட்டேன்.”

“ஓ, அப்படியா விஷயம்.”

“அப்படித்தான்.” என்றாள் சாச்சி.

“அப்படியென்றால், ஒரு விஷயத்திற்குப் பதில் சொல்லமுடியுமா? ஏன் ஜப்பானியராகிய நீங்கள் உங்கள் மண்ணைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடவில்லை? நாங்கள் ஏன் எங்கள் குண்டியைத் தூக்கிக்கொண்டு இவாகுனிக்கு வந்து உங்களைக் காப்பாற்ற வேண்டும்?”

“அதனால் நான் வாயை மூடிக்கொண்டு வாசிக்கவேண்டுமோ?”

“அதேதான்,” என்றான். அங்கிருந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தான். “இவர்கள் இருவரையும் பாரேன் – ஜப்பானிய நீர்ச்சறுக்கிக் குண்டிகள். எதற்காக இவ்வளவு தூரம் ஹவாய்க்கு வருகிறீர்கள்? நாங்களெல்லாம் ஈராக்கில்-”

“உன்னிடம் ஒரு கேள்வி,” சாச்சி அவனை இடைமறித்தாள். “நீ இங்கே வந்ததிலிருந்து கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”

”தாராளமாக. கேளேன்.”

கழுத்தைத் திருப்பி, அவனை நேருக்குநேர் பார்த்தாள். “இவ்வளவு நேரமாக யோசித்துக்கொண்டே இருந்தேன். உன்னைப்போல ஒருவன் எப்படி உருவாகிறான். நீ இப்படியே பிறந்தாயா, அல்லது மிகமோசமான ஏதாவதொன்று நடந்து உன்னை இப்படி ஆக்கிவிட்டதா? இதில் எதுவென்று நீ நினைக்கிறாய்?” என்றாள்.

அவன் ஒரு கணம் யோசித்து பின் தன் கையிலிருந்த விஸ்கிக் கோப்பையை மேசையில் அறைந்தபடி வைத்தான். “இங்கே பார், பெண்ணே-”

விடுதியின் உரிமையாளர் இவன் குரலை உயர்த்தியதைக் கேட்டு உடனே வந்தார். அவர் உருவத்தில் சிறியவர், ஆனால் அந்த ராணுவவீரனின் கனத்த கைகளைப் பற்றிக் கூட்டிச்சென்றார். நிச்சயமாக அவர்கள் இருவரும் நண்பர்கள், போகும்போது அசிங்கமாக இரண்டொரு வார்த்தை பேசியது தவிர எந்த எதிர்ப்பும் அவன் தெரிவிக்கவில்லை.

உரிமையாளர் சீக்கிரமே திரும்பிவந்து சாச்சியிடம் மன்னிப்புக் கோரினார்.

“வழக்கத்தில் அவன் மோசமானவனல்ல, ஆனால் மது அவனை மாற்றி விடுகிறது. கவலை வேண்டாம். நான் அவனைக் கவனித்துக் கொள்வேன், உங்களுக்கு ஏதாவது தருவிக்கிறேன். இப்படியொரு சம்பவம் நடந்தது என்பதை மறந்துவிடுங்கள்.”

“பரவாயில்லை,” என்றாள் சாச்சி. “இதுபோன்ற விஷயங்கள் பழகிவிட்டன.”

“அந்த ஆள் என்ன சொன்னார்?” என்றான் குட்டையானவன்.

“ஆமாம், எனக்கும் ஒன்றுமே புரியவில்லை,” என்றான் உயரமானவன், “ஜப்பானிய என்பது மட்டும் புரிந்தது.”

“அது ஒன்றுமில்லை,” என்றாள் சாச்சி. “கண்டுகொள்ளாதே. ஹனலேவில் நன்றாகப் பொழுதைக் கழித்தீர்களா? நன்றாக நீர்ச்சறுக்கு விளையாடினீர்கள் என்று நினைக்கிறேன்.”

“அற்ப்ப்ப்புதம்!” என்றான் குட்டையானவன்.

”அருமை,” என்றான் உயரமானவன். “விளையாட்டாகச் சொல்லவில்லை. உண்மையில் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.”

“அது நல்ல விஷயம்,” என்றாள் சாச்சி. “முடியும்போது எல்லா மகிழ்ச்சியையும் அனுபவித்து விடுங்கள். சீக்கிரமே நீங்கள் செலுத்தவேண்டிய தொகைக்கான பில் உங்களிடம் வந்து சேரும்.”

“சிக்கலெதுவும் இல்லை,” என்றான் உயரமானவன். “என்னிடம் இந்த அட்டை இருக்கிறது.”

“அப்படிச் சொல்,” என்றாள் சாச்சி தலையசைத்துக்கொண்டு. “உனக்கு எல்லாம் சுலபம்தான்.”

“நீங்கள் வித்தியாசமாக நினைக்கவில்லை என்றால், உங்களிடம் ஒன்று கேட்கவேண்டுமென்று நினைத்தேன்.” என்றான் குட்டையானவன்.

“எதைப்பற்றி?”

”எப்போதாவது இங்கேஒரு ஒற்றைக்கால் ஜப்பானிய நீர்ச்சறுக்குபவனைப் பார்த்திருக்கிறீர்களா?”

“ஒற்றைக்காலில் நீர்ச்சறுக்குபவனா?” சாச்சி அவனைக் கண்களைக்குறுக்கி நேருக்குநேர் பார்த்தாள். “இல்லை, பார்த்ததில்லை.”

“அவனை இரண்டுமுறை பார்த்தோம். கடற்கரையில் எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் டிக் ப்ரூவர் பலகை இருந்தது, கால் இதற்குமேல் இல்லை,” என்று முட்டிக்கு சில அங்குலங்கள் மேலே விரலால் கோடு வரைந்து காண்பித்தான். “வெட்டி எடுத்தது போல இருந்தது. நாங்கள் நீரிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அவனைக் காணவில்லை. அவனிடம் பேசவேண்டுமென்று நினைத்தோம், எனவே அவனைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம், ஆனால் அவன் எங்கேயும் இல்லை. அநேகமாக எங்கள் வயதுதான் இருகும் அவனுக்கு.”

“எந்தக் கால் இல்லை? வலதா அல்லது இடதா?” சாச்சி கேட்டாள்.

குட்டியானவன் ஒரு கணம் யோசித்து, “நிச்சயமாக வலதுகால் என்று என்னால் சில்லமுடியும். சரிதானே?” என்றான்.

“ஆமாம், உறுதியாக. வலது கால்தான்,” என்றான் உயரமானவன்.

”ம்ம்ம்,” என்றபடி சாச்சி ஒரு மிடறு ஒயினை அருந்தி வாயை ஈரப்படுத்திக் கொண்டாள். அவளால் அவள் இதயம் துடிப்பதைக் கேட்கமுடிந்தது. ”ஜப்பானியன் என்று உறுதியாகத் தெரியுமா? ஜப்பானிய – அமெரிக்கன் இல்லையா?”

“நிச்சயமாக இல்லை,” என்றான் உயரமானவன். “பார்த்தவுடன் வித்தியாசம் தெரியுமே. இந்த நீர்ச்சறுக்கு வீரன் ஜப்பானியன்தான். நம்மைப்போல.”

சாச்சி அழுத்தமாகத் தன் கீழுதட்டைக் கடித்தாள், சிறிதுநேரம் அவர்களை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். பிறகு வறண்ட குரலில், “விநோதம்தான். இதுவொரு சிறிய நகரம், இதைப்போல ஒற்றைக்கால் நீர்ச்சறுக்குபவன் ஒருவனை நீங்கள் விரும்பினாலும் பார்க்காமல் தவிர்க்க முடியாது.”

“உண்மைதான்,” என்றான் குட்டையானவன். “இது விநோதமானது என்று எனக்கும் தெரியும். இதைப்போல ஒருவன் இருந்தால் அடிபட்ட விரலைப்போலத் தனித்துத் தெரிவான்தான். ஆனால் அவன் அங்கே இருந்தான், என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நாங்கள் இருவருமே பார்த்தோம்.”

உயரமானவன் சாச்சியைப் பார்த்துச் சொன்னான், “நீங்கள் எப்போதும் கடற்கரையில் அமர்ந்திருப்பீர்கள், இல்லையா? அவன் அங்கேதான் ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்தான், நீங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி. ஒரு மரத்தில் சாய்ந்து நிற்பது போல நின்று எங்களையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். சிறுமேசைகளுக்குப் பக்கத்தில் நிறைய இரவமரங்கள்6 இருக்கும் இடத்தில்.”

சாச்சி அமைதியாக ஒயினை விழுங்கினாள்.

குட்டையானவன் தொடர்ந்தான்: “எப்படி அவனால் பலகையில் ஒற்றைக்காலில் நிற்கமுடியும்? ரெண்டு கால்களாலேயே கடினம் அது.”

அதன்பிறகு சாச்சி ஒவ்வொருநாளும், காலையிலிருந்து மாலைவரை, ஹனலேயின் நீண்ட கடற்கரையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தாள், ஆனால் எங்குமே அந்த ஒற்றைக்கால நீர்ச்சறுக்குபவனைப் பார்க்க முடியவில்லை. உள்ளூர் நீர்ச்சறுக்குபவர்களைக் கேட்டுப்பார்த்தாள், “ஒற்றைக்காலோடு இருக்கும் ஜப்பானிய நீர்ச்சறுக்குபவனைப் பார்த்தீர்களா?” ஆனால் எல்லோருமே அவளை விநோதமாகப் பார்த்து மறுப்பாகத் தலையசைத்தனர். ஒற்றைக்கால் ஜப்பானிய நீர்ச்சறுக்குபவனா? அப்படியான ஒருவிஷயத்தைப் பார்த்ததே இல்லை. பார்த்திருந்தால் கண்டிப்பாக நினைவிருக்கும். தனியாகத் தெரிவான். ஆனால் ஒருவனால் எப்படி ஒற்றைக்காலில் நீர்ச்சறுக்க முடியும்?

ஜப்பானுக்குக் கிளம்புமுன் இரவு, பெட்டிகளைத் தயார்செய்துவிட்டு படுக்கைக்குச் சென்றாள். சுவர்ப்பல்லியின் சத்தம் அலைகளின் சத்தத்தோடு சேர்ந்து ஒலித்தது. சீக்கிரமே தலையணை நனைந்திருப்பதை உணர்ந்தாள்: அவள் அழுதுகொண்டிருந்தாள். ஏன் என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை? என்று வியந்தாள். ஏன் அந்த இரு நீர்ச்சறுக்குபவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிகிறான் – எவ்வகையிலும் அவர்கள் உறவில்லை – எனக்குத் தெரியவில்லையே? இது நியாயமேயில்லை! பிணவறையிலிருந்த தன் மகனின் முகத்தை நினைவுக்குக் கொண்டுவந்தாள். அதுமட்டும் சாத்தியம் என்று இருந்தால், அவன் விழிக்கும்வரை தோள்களைப் பிடித்து உலுக்குவாள், அவன் விழித்ததும் சத்தம் போடுவாள் – ஏனென்று சொல்! நீயெப்படி இவ்வாறு செய்யலாம்?

தேம்பும் ஒலியை அடக்க வெகுநேரம் ஈரமான தலையணையில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்ப்பதற்கான தகுதிதான் எனக்கில்லையா? தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள், ஆனால் அவள் கேள்விக்கான பதில் அவளிடமில்லை. ஒரேயொரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது, இனி என்னவென்றாலும் என்ன செய்தாகிலும் இந்தத்தீவை அவள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்த மிருதுவாய்ப் பேசிய ஜப்பானிய-அமெரிக்க அதிகாரி சொன்னது போல, இந்தத் தீவில் உள்ள விஷயங்களை அவை இருக்கும் விதத்தில் அவள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவை இருக்கும் விதமாக: நியாயம்-நியாயமில்லை, தகுதியுள்ளது-தகுதியற்றது, என்பதெல்லாம் தேவையில்லை. அடுத்தநாள் காலை சாச்சி ஆரோக்கியமான மத்திமவயதுப் பெண்ணாக எழுந்தாள். தன் வண்டியின் பின்னிருக்கையில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஹனலே விரிகுடாவை விட்டுப் புறப்பட்டாள்.
*
ஜப்பானுக்குத் திரும்பி எட்டுமாதங்கள் இருக்கும், டோக்கியோவில் எதிர்பாரா விதமாக குட்டையானவனைச் சந்தித்தாள். மழைக்கு ஒதுங்கி, ரப்போங்கி பாதாளரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஸ்டார்பக்ஸ் கடையில் காஃபி அருந்திக் கொண்டிருந்தாள். அவன் அருகிலுள்ள மேசையில் அமர்ந்திருந்தான். நாகரிகமாக உடையுடுத்தியிருந்தான், கசங்கலில்லாத ரால்ஃப் லாரென் நிறுவனத்தின் சட்டை, புதியவகைப் பருத்தியாலான காற்சட்டை, உடன் ஒரு ஒல்லியான அழகான அம்சங்கள் நிறைந்த பெண்.

“என்ன ஒரு தற்செயல்!” என்று அதிசயித்தவாறு பெரிய புன்னகையுடன் அவள் மேசையை அணுகினான்.

“எப்படியிருக்கிறாய்?” என்று விசாரித்தாள். “உன்முடி எவ்வளவு குட்டையாகிவிட்டது பாரேன்!”

“நான் இப்போது கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியேறப்போகிறேன்.”

“நம்பமுடியவில்லை! நீயா?”

“ம்ம்- நான் அந்த அளவில் கட்டுப்பாட்டில்தான் இருந்க்கிறேன்,” என்றான். அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

“நீர்ச்சறுக்குவதை விட்டுவிட்டாயா?”

“அவ்வப்போது வார இறுதியில் உண்டு. ஆனால் முன்புபோல இல்லை: வேலைதேடும் பருவமிது.”

“அந்தக் கொத்தவரங்காய் என்ன ஆனான்?”

“அவனுக்குச் சுலபம். வேலைதேட வேண்டிய கவலை இல்லை. அவன் அப்பா அகசாகா பகுதியில் பெரிய மேற்கத்திய அடுமனை ஒன்றை வைத்திருக்கிறார், வியாபாரத்தைக் கவனிப்பதானால் BMW வாங்கித்தருவதாகச் சொல்கிறார். அவன் கொடுத்துவைத்தவன்!”

சாச்சி வெளியே பார்வையைச் செலுத்தினாள். கோடைமழை வீதிகளைக் கருமையாக்கியிருந்தது. போக்குவரத்து நகராமல் நிற்க, பொறுமையில்லாத ஒரு வாடகை வண்டிக்காரன் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தான்.

“அவள் உன் பெண் தோழியா?”

”ம்ம்-ம்ம்ம்…அப்படித்தான் நினைக்கிறேன். அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான் தலையைச் சொறிந்தபடி.

“அழகான பெண். உனக்குச் சற்று அதிகம்தான். அநேகமாக நீ விரும்புவதைத் தரமாட்டாள்.”

அவன் கண்கள் அகல விரிந்தன. “ஓ…! இன்னமும் மனதில் பட்டதை அப்படியே சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்வது சரிதான். எனக்கான நல்ல அறிவுரை ஏதேனும் உண்டா? விஷயங்கள் கைகூட, அதாவது…”

“ஒரு பெண்ணிடம் நெருங்க மூன்று விஷயங்களே உண்டு: ஒன்று, வாயை மூடிக்கொண்டு அவள் என்ன சொல்லவருகிறாளோ அதைக்கேள்; இரண்டு, அவள் உடுத்தியிருப்பது உனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்; அப்புறம் மூன்று, அவளுக்கு நல்ல உணவுகளை வாங்கிக்கொடு. சுலபமானது, சரியா? இதெல்லாம் செய்தும் எதுவும் நடக்கவில்லை என்றால், அவளைக் கைவிட்டுவிடுவது நல்லது.”

”கேட்கவே நன்றாக இருக்கிறது. எளிமையானது நடைமுறைக்கு உகந்தது. இதை எழுதிக்கொண்டால் வித்தியாசமாக நினைக்க மாட்டீர்களே?”

”நிச்சயமாக இல்லை. ஆனால், இதை உன்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாதா என்கிறாயா என்ன?”

“முடியாது, நான் கோழி மாதிரி: மூன்றடி வைத்ததும் மண்டையிலிருப்பது மறைந்துவிடும். எனவே நான் எல்லாவற்றையும் எழுதிவைத்துக் கொள்வேன். ஐன்ஸ்டீன் இப்படிச் செய்வாரென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“ஓ, ஐன்ஸ்டீன்.”

”மறதிக்காரனாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை,” என்றான். “சில விஷயங்களை மறந்துவிடுவதுதான் எனக்குப் பிடிப்பதில்லை.”

“விருப்பம்போலச் செய்,” என்றாள் சாச்சி.

அவன் ஒரு சிறிய நோட்டுப்புத்தகத்தை எடுத்து அவள் சொன்னதை எழுதிக் கொண்டான்.

“நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல அறிவுரைகள் சொல்கிறீர்கள். மறுபடியும் நன்றி.”

“இது உனக்கு உதவும் என்று நம்புகிறேன்.”

”என்னாலான முயற்சியைச் செய்வேன்,” என்றபடித் தன் மேசைக்குச் செல்ல எழுந்தான். சிலவினாடிகள் யோசனைக்குப்பின், கையை நீட்டினான். “உங்களுக்கும்,” என்றான். “உங்களாலான முயற்சியைச் செய்யுங்கள்.”

சாச்சி அவன் கையைப்பற்றினாள். “ஹனலே விரிகுடாவில் நீ சுறாக்களால் தின்னப்படவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.”

“என்ன, அங்கே சுறாக்கள் உண்டா? உண்மையாகவா?”

”ப்ச்ஸ்ஸ், உண்மையாகத்தான்.”

*
சாச்சி ஒவ்வொரு இரவிலும் விசைப்பலகையினருகில் அமர்கிறாள், கைகள் அநிச்சையாக நகர்கின்றன, வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல். பியானோவின் ஒலிமட்டுமே அவள் மனதைக் கடக்கும் – ஒருவழியில் உள்ளே நுழைந்து மறுவழியாக வெளியேறும். இசைக்காதபோது இலையுதிர்காலத்தின் முடிவில் ஹனலேவில் கழித்த மூன்றுவாரங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பாள். கரைநோக்கி வரும் அலைகளின் ஒலியையும் இரவமரங்களின் ஓசையையும் நினைப்பாள். தடக்காற்று7 நகர்த்திச் செல்லும் மேகங்கள், கடலைக் கடக்கும் அண்டரண்டப் பறவைகள், அவற்றின் நீண்ட இறக்கைகளின் நீட்சி. மேலும் நிச்சயமாக அவளுக்காக அங்கே காத்திருப்பதைப் பற்றியும் நினைத்துக்கொள்வாள். இப்போதைக்கு அவள் சிந்தனையில் இவைமட்டுமே இருக்கின்றன. ஹனலே விரிகுடா.

*

1. Baby boom generation – இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிறந்த குழந்தைகள். 1946 முதல் 1964 வரை பிறந்தவர்கள். மக்கள் தொகை திடீரென அதிகரித்தபோது பிறந்த குழந்தைகள் என்பதால் இப்பெயர்.

2. எல்விஸ் ப்ரெஸ்லி – அமெரிக்கப் பாடகர் (1935 – 1977).

3. எல்விஸ் காஸ்டெல்லோ- இங்கிலாந்து இசைக்கலைஞர், 1970-களுக்குப் பின் பிரபலமானவர்.

4. B’z – 80-களில் பிரபலமான ஜப்பானிய ராக் இசைக்குழு.

5. J-pop – 1960-களில் இருந்த ஜப்பானிய பாப் இசைக்குழு.

6. இரவமரம் – Iron tree (இருள் மரம், இரும்பு மரம்)

7. தடக்காற்று – Trade wind ( வர்த்தகக் காற்று) – பூமத்திய ரேகைக்கு மேலே அல்லது கீழே,
கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்று.)

***********