Category: இதழ் 97

பேருவுகை கொள்ளும் 5 ஆவது ஆண்டு தொடக்க இதழ் / சிபிச்செல்வன்

10406992_601867773252370_8881455898890951678_n (1)

வணக்கம் நண்பர்களே

மலைகள் இணைய இதழ் இதோ இப்போதுதான் தொடங்கியது போல இருக்கிறது. ஆனால் நான்கு (4 ) ஆண்டுகள் நிறைவுபெற்று இன்று 5 ஆவது ஆண்டு தொடக்க இதழ் வெளிவந்துவிட்டது

இது உங்களைப் போலவே எனக்கும் ஆச்சர்யமானதாகவே இருக்கிறது

ஒவ்வொரு இதழ் வெளிவரும்போதும் அல்லது அந்த இதழைக் கொண்டு வர படைப்புகளைத் திரட்டும்போதும் அதுதான் முதல் இதழ் போன்ற எண்ணத்தோடுதான் செயல்படுகிறேன்
97 இதழ்களைக் கொண்டுவந்துவிட்டேன் என்ற சாதனை நினைப்போ அல்லது மிதப்போ தற்போது என்னிடம் இல்லை
எவ்வளவு பேர்களிடம் படைப்புகளை வாங்கியிருக்கிறோம் அதை வெளியிடாமல் போன தருணங்கள் மிக மிகக்குறைவுதான்

எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை நான் கேட்கும்போதெல்லாம் அவர்களிடம் இருந்தால் உடனே அனுப்பி வைத்தார்கள்
ஒரிருவர் படைப்பை கொடுக்க இயலாமல் வருந்தியதும் உண்டு.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு படைப்பாளியோ அல்லது அவருடைய படைப்போ கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டதாக இருப்பினும் இதழியல் பார்வையில் அவர்களுடைய படைப்புகள் இடம்பெற வேண்டி அவர்களிடம் படைப்புகளை கேட்டு வாங்கியதும் அதனை பிரசுரித்து உரிய அங்கீகாரம் கொடுக்கவும் தவறியதில்லை அல்லது பாரபட்சம் காட்டியதில்லை

அதேபோல மலைகள் தொடங்கும்போது ஒரு குழு மனப்பான்மை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்படவேண்டும் எனத் திட்டமிட்டேன்
இதுவும் சாத்தியமில்லை என பல நண்பர்கள் சொன்னார்கள்.இப்போது இதையும் சாத்தியப்படுத்திவிட்டேன், மலைகள் இதழில் படைப்புகளை வெளியிடுபவர்களை இணைத்து ஒரு கோஷ்டியை உருவாக்கவில்லை. அவர்கள் படைப்புகளை அனுப்பி வைக்கிறார்கள் நான் அதை பிரசுரிக்கிறேன் அதோடு எனக்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிடுகிறது

அவர்களின் படைப்புகளை பிரசுரிப்பதாலேயே எனக்கு ஒரு அதிகாரம் இருப்பதாக நான் நம்பவில்லை அப்படி நம்புகிறவர்களை என் அருகில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் எதுவும் இதுவரையிலும் கிடையாது இனியும் கிடையாது
அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடக்கவும் இல்லை
படைப்புகளை அனுப்புகிறவர்கள் பெரும் உற்சாகத்துடன் அனுப்பி வைக்கிறார்கள் அதேயளவு உற்சாகத்துடன் நானும் பிரசுரம் செய்துள்ளேன்

மலைகள் இணைய இதழ் போல பல இணைய இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் குறிப்பாக மலைகள் இதழைத் தொடங்கிய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கென தனித்தனியாக ப்ளாக்குகள் வைத்திருந்தார்கள்.தற்போது வருகிற இதழ்களில் உரிய நேரத்திற்கு உரிய நாளில் இந்த இதழ்வரை தவறாமல் மலைகள் இதழ் மட்டுமே திட்டமிட்டபடி வெளிவந்துகொண்டிருக்கின்றன

எத்தனை இடர்கள் வந்தபோதும் அதிலிருந்து மலைகள் இதழை கட்டி இழுத்துக்கொண்டு வந்துள்ளேன்
படைப்புகளை கேட்டு முகப்புத்தகத்தில் பதிவுகளைப் போடுவது குறித்து சில நண்பர்கள் சிட்டுக்குருவி லேகியம் விற்பன் எனக் கிண்டல் செய்தபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் அறிவிப்புகளைப் போட்டு படைப்புகளைக் கேட்டு வாங்கி இதழைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்
படைப்புகளை பெரும் மகிழ்வோடு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கும் அத்துணை படைப்பாள நண்பர்களுக்கும் அறிமுகப்படைப்பாளிகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என சொல்வது சம்பிரதாயமான வார்த்தையாக இருப்பினும் அதுதான் உண்மை

இதழ் தொடங்கிய நாளிலிருந்து பல நண்பர்கள் இதழ் வெளிவந்தவுடன் தொலைபேசியில் அழைத்து உற்சாகமாக பேசுவார்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
மலைகள் இதழைப் பற்றிய அறிமுகமாக இரண்டு முறை வெளியிட்ட கல்கி ஆசிரியர் வெங்கடேஷ்க்கும் தி இந்து தமிழ் நாளிதழில் அறிமுகப்படுத்திய அரவிந்தனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்
இதுதவிர மலைகள் இதழை முகப்புத்தகத்தின் வழியாக பல ஆயிரம் பேர்களுக்கு அறிமுகப்படுத்திய இலக்கிய நண்பர்களுக்கும் நன்றிகள்

இன்னும் இரண்டு இதழ்களை கொண்டு வந்துவிட்டால் மூன்றாவது இதழ் 100 ஆவது இதழாக வெளிவரப்போகிறது என்பது உங்களைப்போலவே எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது
இந்த 5 ஆண்டு இதழில் தொடக்க நாளில் பேருவுகை கொள்கிறேன்
நீங்களும் அந்த நிலையை அடைய என் வாழ்த்துகள்

உங்கள்

சிபிச்செல்வன்
ஆசிரியர்
மலைகள் இணைய இதழ்

பாதுகாப்புள்ள ஒரு பெண் ( A Sheltered Woman ) ஆங்கிலம் : யியுன் லி ( YIYUN LI ) சீன – அமெரிக்கர் / தமிழில் / ச. ஆறுமுகம்

download

யியுன் லி பிறப்பால் ஒரு சீனர். 1996ல் பீய்ஜிங் பல்கலையில் இளங்கலைப்பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் அயோவா பல்கலையில் நோய் எதிர்ப்பியலில் 2000ல் முதுகலைப் பட்டமும் 2005ல் அதே பல்கலையின் எழுத்தாளர் பட்டறையில் ஆக்கபூர்வப் படைப்பியல் மற்றும் ஆங்கிலத்தில் எம்.எப்.ஏ. பட்டமும் பெற்றதோடு, 2008லிருந்து கலிபோர்னியா பல்கலையின் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவரது தாய்மொழி மற்றும் பண்பாட்டின் தாக்கத்தில், அவரது இரண்டாவது மொழியான ஆங்கிலத்தில் கதைசொல்லுதலில் ஏற்பட்டுள்ள தனித்துவமும் அமைதியும் கொண்ட, அவரது மிதமான, அடக்கமான நடை, வாசகர்களை, சீனப் பின்னணியிலும் அமெரிக்கப் பின்னணியிலும் உருவாக்கப்பட்ட அவரது சக்திமிக்க, உணர்ச்சிபூர்வமான ஈர்ப்புடைய அவரது பாத்திரப் படைப்புகளின் போராட்டங்களுக்குள் இழுத்துச் செல்வதாக உணரப்படுகிறது. அவரது சிறுகதைகள் கிரந்தா, நியூயார்க்கர் மற்றும் பாரீஸ் ரிவ்யூ இதழ்களில் வெளியாகின்றன. சமூகம் கண்டுகொள்ளாத எளிய மனிதர்களின் துயரங்களைத் தாங்கும் அவரது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் பிந்திய பகுதியில் சீன அரசியல் மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களையும் சித்திரிக்கின்றன. A Thousand Years of Good Prayers (2005), novel The Vagrants (2009), Gold Boy, Emerald Girl: Stories (2010) ஆகிய கதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழாக்கம் செய்யப்படுகின்ற கதை நியூயார்க்கர் 10.03.2014 இதழில் வெளியானது. இக்கதைக்கு இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் இஎப்ஜி சிறுகதை அவார்டு, 2015, 24.04.2015 அன்று அறிவிக்கப்பட்டது. பரிசுத்தொகை £30,000 அதாவது இந்தியப் பணத்தில் ரூ.3021474.16 (முப்பது இலட்சத்து இருபத்தோராயிரத்து நானூற்று எழுபத்து நான்கு ரூபாய் மற்றும் பதினாறு காசுகள் மட்டும்.) உலகில் ஒரு சிறுகதைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்தபட்ச விருதுத் தொகை இதுமட்டுமே.
. ***********

சிறுதூக்கத்திலிருந்து எழுந்தும், கலக்கம் மாறாதிருந்த அந்த முதல் மகப்பேற்றுத் தாய், அவளை எதற்காக அழைத்திருப்பார்கள் என்று ஊகிக்கமுடியாமலேயே மேசை முன் அமர்ந்திருந்தாள். அது எதற்கென்று அவள் ஒருவேளை அறியாமலேயே இருக்கலாமென மீய் பெரியம்மா நினைத்தாள். மேசை மேல் விரிக்கப்பட்டிருந்த சிறு தடுக்கின் மீது மீய் பெரியம்மா, இதற்கு முன்பும் பல முதல் மகப்பேற்றுத் தாய்மார்களுக்குச் சமைத்தது போலவே சமைத்த சோயாமொச்சை – பன்றிக்கால் சூப் நிரம்பிய கிண்ணம் ஒன்று உட்கார்ந்திருந்தது. அவர்கள் பலர் என்றாலும் அது, மிகச் சரியான எண்ணிக்கை எனச் சொல்லமுடியாது. வேலைக்கு அமர்த்துபவர்களின் நேர்முகப் பேட்டியின்போது, மீய் பெரியம்மா எப்போதுமே அவள் பணியாற்றிய குடும்பங்களின் எண்ணிக்கையினை மிகத் துல்லியமாகச் சொல்வாள்: நூற்று இருபத்தாறு, தற்போதய குடும்பத்தாரிடம் நேர்முகப் பேட்டியின்போது, சொன்னது, ஒட்டுமொத்தமாக நூற்று முப்பத்தொரு குழந்தைகள். குடும்பங்களைத் தொடர்புகொள்வதற்கான விவரங்கள், அவள் பணியாற்றிய காலம் தொடர்பான நாள் விவரங்கள், அவர்களின் குழந்தைகளின் பெயர் மற்றும் பிறந்தநாள் விவரங்கள் – அனைத்தும் இருமுறை அலக்கலக்காகக் கிழிந்து நாடா ஒட்டிச் சேர்த்துள்ள கையகல நோட்டுப்புத்தகத்தில் அவள் எழுதியிருந்தாள். அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்னால், இல்லினாய்ஸின் மோலீன் நகரில் ஒரு வாகனக்கூடப் பழையசாமான் விற்பனையில் மீய் பெரியம்மா வாங்கியிருந்தாள். அதன் அட்டை மீதிருந்த உருகத்தொடங்காத உறைபனியில் சூழ்ந்துகிடக்கும் தூய்மையான மெல்லிதழ் ஊதா மற்றும் மஞ்சள்நிறப் பூக்களின் படங்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. அந்த நோட்டுப்புத்தகத்தின் விலையும் அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது: ஐந்து சென்ட். மடியில் பணப்பெட்டியுடன் அமர்ந்திருந்த அந்தக் குழந்தையிடம் வெள்ளி நாணயம் ஒன்றைக் கொடுக்கும்போது, அதுபோல இன்னொரு நோட்டுப் புத்தகம் இருந்தால் வாங்கிக்கொள்வதாகவும், அவன் மீதிச் சில்லறை ஏதும் தரவேண்டியதில்லை என்றும் சொன்னபோது, அந்தப்பையன் திகைத்து, இல்லையென்று சொன்னான். பேராசைதான் அவளை அப்போது அப்படிக் கேட்க வைத்தது; ஆனால், அந்த ஞாபகம் வந்தபோதெல்லாம் – அடுத்தடுத்த நேர்முகப் பேட்டிக்காக, அவள் கைப்பெட்டியைத் திறந்து, அந்த நோட்டுப்புத்தகத்தை எடுத்தபோதெல்லாம் அது நிகழ்ந்தது – மீய்பெரியம்மா தனக்குத் தானே சிரித்துக்கொள்வாள்: ஒன்றை நிரப்புவதற்கே போதிய வாழ்க்கை, வழி இல்லாத போது, அவள் எதற்காக இரண்டுக்கு ஆசைப்பட்டாள்?

அந்த முதல் மகப்பேற்றுத் தாய், கரண்டியைக் கூடத்தொடாமல், ஆவிபறக்கும் சூப்பில் கண்ணீர்த்துளிகள் உருண்டு விழும்போதும் கூட அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ‘’நோவ், நோவ்,’’ என்றாள், மீய்பெரியம்மா. புதிய ஆடும் நாற்காலியில் அமர்ந்தவாறே, அவரையும் அதேநேரத்தில் குழந்தையையும் முன்னும் பின்னுமாகவும் பின்னும் முன்னுமாகவும் கிறீச் சப்தம் நேற்றைவிடக் கண்டுகொள்ள இயலாதவாறு ஆட்டிக்கொண்டிருந்தாள். ஆட்ட மகிழ்ச்சியை யார் அதிகமாக அனுபவிக்கிறார்களென்று எனக்கு வியப்பாக இருக்கிறது, என அவள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்: உடைந்து சிதறும் நாள் வரையில் ஆடிக்கொண்டேயிருக்கவேண்டிய நாற்காலியா, அல்லது வாழ்க்கையே ஆட்டத்திலிருக்கும் நீயா? உங்களில் யார் மரணத்தினை முதலில் சந்திக்கவிருக்கிறீர்கள்? மீய் பெரியம்மா, மிக நல்ல நோக்கங்களுடையவரெனினும், உலகம் தன்னைக் கவனிக்கவில்லையெனில் தமக்குள்ளாக மட்டுமே பேசிக்கொள்ளும் மனிதர்களில் ஒருவராக மாறிப்போனவராக அவர் தன்னை வெகுநாட்களுக்கு முன்பாகவே ஒப்புக்கொடுத்துவிட்டாள். குறைந்தபட்சம், அவரது வாயிலிருந்தும் வார்த்தைகள் வெளிப்பட்டுவிடாதவாறு கவனமாகப் பார்த்துக்கொண்டாள்.

‘’எனக்கு இந்த சூப் பிடிக்கவில்லை’’ என்றாள் அந்தத் தாய். அவளுக்கு நிச்சயமாக ஒரு சீனப்பெயர் இருக்குமென்றாலும், அவள் தன்னை சானல் என்றே அழைக்குமாறு மீய்பெரியம்மாவிடம் கூறியிருந்தாள். என்றாலும், மீய் பெரியம்மா, அவள் பேறு பார்த்த பெண் ஒவ்வொருவரையும் `பேபி அம்மா` என்றும் ஒவ்வொரு கைக்குழந்தையையும் பேபி என்றுமே அழைத்தாள். அந்தவகையில், ஒரு வாடிக்கையாளர் குழுவுக்குப் பதிலாக வருகிற அடுத்தடுத்த குழுக்களுக்கும், அது எளிதாக இருந்தது.

‘’ உனக்குப் பிடிக்கவேண்டுமென்பதற்காக அல்ல, அது.’’ என்றாள், மீய் பெரியம்மா. காலைநேரம் முழுவதுமாகச் சூப் கொதித்து பாலின் வெள்ளை நிறத்திற்கு இறுகியிருந்தது. அவளுக்கென்றால், அவளேகூட, அதைத் தொடமாட்டாள், ஆனால் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகச் சிறந்த உணவு. ‘’நீங்கள் அதைக் குழந்தைக்காகச் சாப்பிடுங்கள்.’’

‘’அவனுக்காக, நான் ஏன் சாப்பிடவேண்டும்?’’ என்றாள், சானல். பிரசவித்து ஐந்து நாட்களேதான் ஆனாலும், அவள் மிகவும் மெலிந்திருந்தாள்.

‘’ ஏன், உண்மையாகவா கேட்கிறீர்கள்?’’ எனச் சிரித்தாள், மீய் பெரியம்மா. ‘’பால் எங்கிருந்து வருகிறதென்று நினைக்கிறீர்கள்?’’

‘’நான் என்ன பசுமாடா?’’

நீ ஒரு பசுமாடாக இருந்தால் கூட பரவாயில்லையே, என நினைத்தாள், மீய் பெரியம்மா. ஆனால், மீய் பெரியம்மாவுக்கு வேறு வழிகளெல்லாம் தெரியுமென்றாலும், அவர் வெறுமனே மென்மையாக மிரட்ட மட்டுமே செய்தார். மீய் பெரியம்மா அதுபற்றிக் கவலைப்படுவதில்லையென்றாலும், பாலூட்டும் தாய்களையும் பிறந்த குழந்தைளையும் கவனித்துப் பார்த்துக்கொள்வதில் அவள் திறமையானவள் என்றுதான் பலரும் அவளை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள்.

அந்த இளம்பெண் குலுங்கி அழத் தொடங்கினாள். இவளைப் போல அம்மாவாக இருக்கத் தகுதியேயில்லாத, ஒரு இழிபிறவி எதனையும் நான் உண்மையில், பார்த்ததேயில்லையென மீய்பெரியம்மா நினைத்தாள்.

அழுகை நின்றதும், ‘’மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறதென நினைக்கிறேன்.’’ என்றாள், சானல்.

ஏதோ ஆடம்பரமான ஒரு வார்த்தையை, இந்த இளம்பெண் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாள்.

என்னுடைய தாத்தா பிறந்த மூன்றாம் நளில் என் கொள்ளுப்பாட்டி தூக்குப்போட்டுச் செத்துப்போனாள். அந்தப்பக்கமாகக் கடந்துபோன ஏதோ ஒரு பேயின் பிடியில் அவள் விழுந்துவிட்டிருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். அது இதுதானோ என்று நினைக்கிறேன்.’’ அவளுடைய ஐ-போனையே கண்ணாடியாகப் பயன்படுத்தி, முகம் பார்த்த சானல் அவளுடைய ஊதியிருந்த புருவங்களை ஒரு விரலால் அமுக்கிப் பார்த்தாள். ‘’அவளுக்கு மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி இருந்தது.’’

மீய் பெரியம்மா ஆட்டுவதை நிறுத்திவிட்டு, குழந்தையைத் தூக்கி மார்போடு சேர்த்தணைத்தாள். உடனேயே அவன் தலை அவள் மார்பில் அசையத் தொடங்கியது. ‘’முட்டாள்தனமாக எதையாவது பேசாதீர்கள்,’’ என அவள் கண்டிப்பும் உறுதியுமாகச் சொன்னாள்.

‘’மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி என்றால் என்ன என்பதை விளக்கினேன், அவ்வளவுதான்.’’

‘’ இப்போது பிரச்சினை, நீங்கள் சாப்பிடாமலிருப்பதுதான். உங்கள் நிலைமையில் யாருமே மகிழ்ச்சியாக இருக்கமுடியாதுதான்.’’

‘’ என் நிலைமையில் யாருமே இருக்க முடியாது’’ என்றாள், சானல் சோகமாக. ‘’நேற்று இரவு எனக்கு என்ன கனவு வந்தது, தெரியுமா?’’

‘’தெரியாது.’’

‘’ஒரு யூகமாகச் சொல்லுங்களேன்.’’

‘’ஒருவர் கண்ட கனவை யூகிப்பது அவப்பேறாகுமென்று எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்,’’ என்றாள், மீய் பெரியம்மா. பேய், பிசாசுகள் தாம் மனித மனங்களுக்குள் எளிதாக நுழைந்து வெளியேறும்.

‘’குழந்தையைக் கழிவறைக்குள் தள்ளி விடுவதாகக் கனவு கண்டேன்.

‘‘ ஓ, முயற்சித்திருந்தாலும் கூட என்னால் அதைக் கண்டுபிடித்திருக்கவே முடியாது.’’

‘’அதுதான் பிரச்சினை. நான் எப்படி வேதனைப்படுகிறேன் என்பது யாருக்கும் தெரியவில்லை.’’ சானல், மீண்டும் அழத் தொடங்கினாள்.

அவளது புதிய அழுகைக்குக் காதுகொடுக்காத மீய் பெரியம்மா, குழந்தையின் கம்பளிக்குக் கீழே முகர்ந்துவிட்டு, ‘’குழந்தையின் அணையாடைத் துணியை மாற்றவேண்டும்.’’ என உரக்கச் சொன்னாள். அவளுக்குத் தெரியும், சிறிது நேரம் போனதும் சானல் எதிர்ப்பேச்சின்றிப் பணிந்துவிடுவாள்: குழந்தையைக் கழிவறைக்குள் வீசிவிடுவதாகச் சொன்னாலும், அம்மா எப்போதும் அம்மாதான்.

மீய் பெரியம்மா, பிறந்த குழந்தைகள் மற்றும் அம்மாக்களின், உடன்வசிக்கும் ஆயாவாகப் பதினோரு ஆண்டுகளாகப் பணிசெய்துவிட்டாள். பிறந்த குழந்தைக்கு ஒரு மாதம் ஆகின்ற நாளில், அந்தக் குடும்பத்தை விட்டும் நகர்ந்துவிடுவதை ஒரு விதியாகவே கொண்டிருந்தாள். அப்படியில்லாமல் தொடர்வது – அப்படியும் மிகச்சில வேளைகளில் நிகழ்ந்ததுண்டு – வேறு வேலைக்கு இடைப்பட்ட நாட்களில், அதுவும் ஒருசில நாட்களுக்கு மேலாகிவிடாது. பல குடும்பங்கள் கூடுதலாக ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்குக் கூட சம்பளம் கொடுக்கத் தயாராக இருப்பார்கள்; சிலர் அதற்கும் மேலாகக் கூட இருக்கச் சொல்வார்கள்; ஆனால், மீய் பெரியம்மா அதனை எப்போதும் மறுத்தே இருக்கிறாள்: அவள் வழக்கமான ஆயாவாக இல்லாமல் முதல்மாத ஆயாவாக, அம்மாவுக்கும் குழந்தைக்குமாக இருவருக்கும் பணிசெய்யவேண்டிய கடமைகள் கொண்டவளாகப் பணியாற்றினாள். எப்போதாவது ஒருமுறை, அவள் பணிசெய்த முந்தைய நபர்கள் அவர்களுடைய இரண்டாவது குழந்தைக்கும் அழைப்பதுண்டு. அவளது கைகளில் தவழ்ந்த பிறந்த குழந்தையை மீண்டும் பார்ப்பதென்பது அவளைத் தூக்கம் இழக்கச் செய்வதாக இருந்தது; வேறுவழியில்லாவிட்டால் மட்டும், பழைய குழந்தை இல்லாததாகவே பாவித்து, அதற்கு அவள் ஒப்புக்கொள்வதுண்டு.

அழுகைப் பெருமூச்சுகளின் இடையே, சானல், அவளது கணவன் ஏன் சில நாட்கள் விடுப்பு போட முடியவில்லையென்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாள். அதற்கு முந்தைய நாள், அவன் ஏதோ ஒரு வேலையென்று சொல்லி ஷென்ஜெனுக்குப் புறப்பட்டுப் போனான். ‘’ குழந்தையோடு என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்ல அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’’

தனியாகவா? மீய் பெரியம்மா கண்களைச் சுருக்கி, குழந்தையின் புருவங்களைப் பார்த்தாள்; இறுக மூடியிருந்த கண்களின் நடுவே இமைகளில் மஞ்சளின் ஒரு துளி தெரிந்தது. உன் அம்மா எனக்கு யாருமே இல்லையென்று சொல்லிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்க, உன் அப்பா கஷ்டப்பட்டு உழைக்கிறார். மகப்பேறு நல்லதில்லையென நினைக்கப்படுகின்ற பாம்பு வருடத்தில் மீய் பெரியம்மாவுக்குக் கொஞ்சம் நிதானமான வேலைதான். இல்லையென்றால் இதைவிடச் சிறந்த இடங்கள் அவளுக்குக் கிடைத்திருக்கும். இந்த இணையர்களைச் சந்தித்தபோதே அவளுக்குப் பிடித்திருக்கவில்லை; பெரும்பாலான மகப்பேற்றுத் பெற்றோர் போலன்றி இருவருமே கவனம் சிதறியவர்களாகத் தோன்றினார்கள். அவளை வேலைக்கு அமர்த்துமுன் மிகச் சில கேள்விகளே கேட்டார்கள். அவர்கள் குழந்தையை முன்பின் தெரியாத ஒரு அந்நியரிடம் ஒப்படைக்கவிருக்கிறார்கள் என்பதை மீய் பெரியம்மா அவர்களுக்கு நினைவூட்ட விரும்பினாள்; ஆனால், அவர்கள் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவளைப்பற்றிப் போதுமான அளவுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பார்களோ? மீய் பெரியம்மா தங்க மெடல் ஆயா எனப் பெயர் பெற்றவளாயிற்றே. அவளது முதலாளிகள் நற்பேறு பெற்றவர்கள்; முதலில் சீனாவிலும், பின்னர் அமெரிக்காவிலும் நல்ல கல்வியைப் பெற்றுப் பின் வளைகுடாப் பகுதியில் பணியாற்றுபவர்கள்: வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், இணைவேந்தர்கள், பொறியாளர்கள் – பிரச்னையே இல்லை, அமெரிக்காவில் பிறக்கும் அவர்களது குழந்தைகளுக்கு அனுபவம் மிக்க ஒரு சீன ஆயா இப்போதும் தேவைப்படுகிறாள். குழந்தைகள் பிறப்பதற்குப் பல மாதங்கள் முன்னரே குடும்பங்கள் மீய் பெரியம்மா முன் வரிசையில் நிற்கின்றன.

துணிமாற்றிச் சுத்தப்படுத்தி, வேறுதுணியில் சுற்றிப் போர்த்தியதும், குழந்தை திருப்தியானதாகத் தோன்றவே, மீய் பெரியம்மா, அவனை மாற்று மேசையில் படுக்கவைத்துவிட்டு, சாளரத்துக்கு வெளியே மகிழ்ச்சியோடு, எப்போதும்போலவே தன்னை மறந்து நோக்கினாள். அசேலியா புதருக்கும் சிலேட் பாதைக்கும் இடையில் ஆம்பல் மலர்களோடு தங்க மீன் வளர்க்கும் செயற்கைத் தடாகம் ஒன்று இருந்தது. அந்தக் கணவன் புறப்பட்டுச் செல்லும் முன், மீய் பெரியம்மாவிடம் மீன்களுக்கு உணவளிக்குமாறும் தண்ணீர் மாற்றுமாறும் கேட்டுக்கொண்டான். செலவினைக் கணக்கிட்டுவிட்டு ஆண்டுக்குப் பதினெட்டாயிரம் காலன் என்று அவன் அவளிடம் தெரிவித்தான். நாள் ஒன்றுக்கு இருபது டாலர் அதிகம் கொடுக்க அவன் தயாராக இருந்ததால்தான் மீய் பெரியம்மா அந்தக் கூடுதல் வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டாள். இல்லாவிட்டால் மறுத்திருப்பாள்.

ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு ஒன்றின் சிலை, கழுத்தினைக் கேள்விக்குறி வடிவில் வளைத்துக்கொண்டு, தண்ணீரில் நின்றது. அந்தச் சிலையைச் செய்த மனிதனைப்பற்றி மீய்பெரியம்மா நினைத்துப் பார்த்தாள். அது ஒரு பெண்ணாகக் கூட இருக்கலாம்தானென்றாலும், அப்படியான ஒரு இயலுமையை, மீய் பெரியம்மா ஒப்புக்கொள்ளக்கூட மறுத்தாள். பயனற்ற ஆனால், கொக்கு போன்ற அழகிய பொருட்களை ஆண்கள் மட்டுமே செய்வதாக நம்புவது அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது. எந்தப் பேய்ப்பெண்ணும் தொடாமல், அவன் தனிமையான ஒரு மனிதனாகவே இருக்கட்டும்.

குழந்தை நெளியத் தொடங்கியது. உன் அம்மா சூப்பினைக் குடித்து முடிப்பதற்கு முன்பே கலாட்டா தொடங்கிவிடாதே என்று மீய் பெரியம்மா இரகசியமாக எச்சரித்தும், அது வீண்தான். கொக்கு திடீரெனச் சிறகினை விரித்து அவசரமில்லாத அழகுடன் பறக்கத் தொடங்க, அதன் ஒற்றைக் கிறீச் ஒலி மீய் பெரியம்மாவை முதலில் திடுக்கிடச் செய்து, பின்னர் வாய்விட்டுச் சிரிக்கவைத்தது. நிச்சயமாக உனக்கு வயதாவது மட்டுமல்ல மறதியும் அதிகமாகிறது: நேற்றைக்கு அந்தச்சிலை அங்கு இருக்கவில்லையே. மீய் பெரியம்மா குழந்தையையும் எடுத்துக்கொண்டு முற்றத்துக்குச் சென்றாள். தங்க மீன்கள் குறைவாகவே இருந்தன என்றாலும் அவற்றில் சிலவாவது கொக்கின் படையெடுப்புக்கு தப்பித்திருந்தன. நஷ்டமானதைப் பற்றிச் சானலிடம் சொல்வதும் ஒன்றுதான், சொல்லாமலிருப்பதும் ஒன்றுதான். மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சிப் பிரச்னை உனக்கு இருப்பதாக நீ கவலைப்படுகிறாய். தங்க மீனை நினைத்துப்பார், ஒரு நாள் சொர்க்கத் தடாகத்தில் நீந்துகிறது, மறுநாளோ கடந்துசெல்லும் கொக்கின் இரைப்பை என்னும் இருள் உலகத்துக்குள் போய்ச் சேருகிறது.

மீய்பெரியம்மா, அவளின் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொரு அம்மாவுக்கும் கைக்குழந்தைக்கும் சில கண்டிப்பான நடைமுறைகள் வேண்டுமென்று நம்பினாள். முதல் வாரத்துக்கு, தாய்க்கு நாளொன்றுக்கு ஆறுமுறை உணவும் இடைப்பட்ட நொறுக்குத் தீனியாக மூன்றுமுறையும் அளித்தாள்; இரண்டாம் வாரத்திலிருந்து நான்கு வேளை உணவும் இருவேளை நொறுக்குத் தீனியுமாகும். பகல் நேரத்தில் குழந்தைக்கு இரண்டு மணி நேரத்துக்கொருமுறையும் இரவு நேரத்தில் மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்கொருமுறையும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் தொட்டில் அவர்களது படுக்கையறையிலிருக்க வேண்டுமா அல்லது குழந்தையறையில் இருக்கவேண்டுமா என்பதைப் பெற்றோர் தீர்மானத்துக்கு விட்டுவிடுகிற மீய் பெரியம்மா அதனை அவளது படுக்கையறையில் மட்டும் அனுமதிப்பதில்லை. இல்லை, அது அவளது வசதிக்காக அல்ல, அவள் அதை அவர்களுக்கு விளக்குவாள்: ஒரே ஒரு மாதத்திற்கு மட்டும் தங்கப்போகிற யாரோ ஒருவரின் அண்மையில் குழந்தை இருக்க வேண்டியதற்கு எந்த அவசியமும் இல்லை.

அடுத்த நாள், ‘’ஆனாலும் இவ்வளவெல்லாம் சாப்பிடுவது முடியாதது. ஆளுக்கு ஆள் வித்தியாசம் உண்டுமா, இல்லையா?’’ என்றாள், சானல், அழுகை குறைந்திருந்த அந்தப் பொழுதில், மார்பில் சுடுநீர்ப் பைகளுடன் சாய்மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள், அவள்: அந்த இளம் பெண்ணின் பால் சுரப்பு குறித்து மீய்பெரியம்மா அவ்வளவு திருப்தியாக இல்லை.

குழந்தையைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்த மீய் பெரியம்மா நினைத்தாள், நான் போன பிறகு நீ விரும்புவதுபோல் வித்தியாசமாக இருந்துகொள்; உன் பையன் நல்லா `கிளுகிளு` என்று வளர்வான். எனக்கென்ன போயிற்று, ஒருதுளிகூடக் கவலைப்படமாட்டேன். ஆனால், எந்தத் தாயையும் எந்தக் குழந்தையையும் இதுவரை என் பிடியிலிருந்து விலகிச்செல்ல விட்டதில்லை. மீய் பெரியம்மா சானலிடம் சொன்னாள்: முதல் மாத ஆயாவை எல்லோரும் எதற்கு அமர்த்துகிறார்களென்றால், எல்லா விஷயங்களும் சரியாக நடக்கவேண்டுமேயென்றுதான், வித்தியாசமாக இருப்பதற்காக அல்ல.

‘’ஆனால், நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டபோது இப்படித்தான் செய்தீர்களா? பந்தயம்கூடக் கட்டுவேன், நீங்கள் அப்படிச் செய்யவில்லை.’’

‘’உண்மையைச் சொல்வதென்றால், நான் அப்படிச் செய்யவில்லைதான். ஆனால், அதற்கான ஒரே காரணம் எனக்குக் குழந்தைகள் இல்லையென்பதுதான்.’’

‘’ஒரு குழந்தை கூடவா?’’

‘’சொந்தக் குழந்தை இருக்கும் ஆயா தான் வேண்டுமென்று நீங்கள் குறிப்பிட்டுக் கேட்கவில்லையே.’’

‘’ஆனால், நீங்கள் ஏன்……..எதற்காக இந்த மாதிரியான வேலையைத் தேர்வுசெய்தீர்கள்?’’

‘’உண்மைதான், எதற்காக. சில நேரங்களில் வேலைதான் உங்களைத் தேர்வுசெய்கிறது.’’ என்றாள், மீய் பெரியம்மா. ஹா, யாருக்குத் தெரியும், அவள் இவ்வளவு திறமையானவளாக இருப்பாளென்று?

‘’அப்படியென்றால், நீங்கள் குழந்தைகளை நேசிக்கவேண்டும்.’’

ஓ, இல்லை, இல்லை, இது, இந்த ஒன்று இல்லையென்றால் அந்த ஒன்று, என்பதுபோல அல்ல அது. ‘’செங்கல் பாவுபவர் அவரது செங்கல்களை நேசிக்கிறாரா, என்ன?’’ மீய் பெரியம்மா கேட்டாள். ‘’பாத்திரம் கழுவும் எந்திரம் பழுதுபார்ப்பவர் பாத்திரம் கழுவும் எந்திரங்களை நேசிக்கிறாரா?’’ அன்று காலையில், சானல் வீட்டில் பழுதாகியிருந்த பாத்திரம் கழுவும் எந்திரத்தைச் சரிசெய்ய ஒரு மனிதன் வந்திருந்தான். அதற்கு அவனுக்கு இருபது நிமிட நேரமே ஆனது, ஆனால், கட்டணமோ, நூறு டாலர், அதாவது மீய் பெரியம்மாவின் ஒரு நாள் முழுதுக்குமான சம்பளம்.

‘’பெரியம்மா, இது சரியான வாதம் இல்லை.’’

‘’என் வேலைக்கு நன்றாக வாதம் செய்யத் தெரிந்திருக்கவேண்டியதில்லை. என்னால் வாதம் செய்ய முடியுமென்றால் உங்கள் கணவரைப் போல் வழக்கறிஞர் ஆகியிருப்பேன், இல்லையா?’’

சானல் மகிழ்ச்சியற்ற ஒரு சிரிப்புச் சத்தத்தை வெளிப்படுத்தினாள். அவள் தனக்குத்தானே கண்டுபிடித்துக்கொண்ட மனத்தளர்ச்சியில் இருந்தாலும், மீய் பெரியம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதில் மற்ற பெரும்பாலானவர்களை விடவும் மகிழ்ச்சி காண்பது போல் தெரிந்தது. மற்றவர்கள் குழந்தைகளைப் பற்றியும் தாய்ப்பாலூட்டுவதைப்பற்றியும் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்களே தவிர, அவள் மீதான அக்கறை சிறிதும் இருக்காது.

மீய் பெரியம்மா, குழந்தையைச் சாய்மெத்தையில், இடம்விட விருப்பமற்ற சானலுக்கு அருகில் கிடத்தினாள். அவள், சானலின் சுடுநீர்ப்பைகளை அகற்றும் முன் கைகளை நன்கு சூடு ஏற்படும்வரை தேய்த்துக்கொண்டே ‘’இப்போது, பால் கொடுப்பதைப்பற்றிப் பார்க்கலாம்.’’ என்றாள். சானல் வலியில் அலறினாள்.

‘’நான் இன்னும் உன்னைத் தொடக்கூட இல்லையே.’’

உன் கண்களைப் பார், திறமையான குழாய்ப் பணியாளரால் கூட இப்படிப்பட்ட பெருக்கினை அடைத்துவிடமுடியாது, என்று சொல்ல நினைத்தாள், மீய்பெரியம்மா.

‘’இந்த இழவுக்கு இனிமேலும் என்னால் பால் கொடுக்க முடியாது.’’ என்றாள், சானல்

என்னது, இழவா? ‘’இவன் உன் மகன்.’’

‘’ அவனுடைய அப்பனுக்கும் தான். அவன் ஏன் இங்கே இருந்து உதவி செய்யக்கூடாது?’’

‘’ஆண்களால் பால் கொடுக்க முடியாது.’’

கண்ணீருக்கிடையிலும் சானல் சிரித்தாள். ‘’இல்லைதான். அவர்களால் முடிகிற ஒரே விஷயம் பணம் சம்பாதிப்பது மட்டும் தான்.’’

‘’ பணம் சம்பாதிக்கிற ஒருவரைக் கண்டுபிடித்தது உன் அதிர்ஷ்டம் தான். எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடிவதில்லை, உனக்குத் தெரியுமா?’’

பைஜாமா கைத்தொங்கலின் உள்பக்கத்தால், சானல், கவனமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள். ‘’பெரியம்மா, நீங்கள் மணமானவரா?’’

‘’ஒரு முறை’’ என்றாள், மீய் பெரியம்மா.

‘’என்ன நடந்தது? நீங்கள் அவரை மண விலக்கு செய்துவிட்டீர்களா?’’

‘’அவர் இறந்துவிட்டார்,’’ என்றாள், மீய் பெரியம்மா. திருமண வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும், அவளது கணவர் அவளது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்திக்கொள்ளமாட்டாரா, என முழுமையாக இல்லையென்றாலும் ஆசைப்பட்டதென்னவோ, உண்மைதான். ஆனால், ஆண்டுகள் பல கடந்துவிட்ட இப்போது, அவரது மரணத்துக்கு, அன்றைய இரவில் அவரைத் தாக்கிய இளையர் குழு இல்லாமல், அவளே பொறுப்பு என்பதுபோல உணர்கிறாள். பணத்தை எடுத்துக்கொண்டு, அவர்கள் போகுமாறு விட்டுத் தொலைத்திருக்கலாமே? தனக்குத்தானே பேசிக் களைப்படையும் போதெல்லாம், அவள், அவரைத் திட்டிக்கொண்டிருக்கிறாள். முப்பத்தைந்து டாலர்களுக்காக ஒரு உயிர், ஐம்பத்திரண்டு வயது ஆவதற்கு மூன்றே மாதங்கள்.

‘’அவர், உங்களைவிட நிரம்பவும் வயதானவரா?’’

‘’வயதானவர்தாம். ஆனால் நிரம்பவும் வயது என்றில்லை.’’

‘’ என் கணவர் என்னைவிட இருபத்தெட்டு வயது அதிகம். பந்தயம் கூடக் கட்டுவேன், நீங்கள் அதை ஊகித்திருக்க மாட்டீர்கள்’’ என்றாள், சானல்.

‘’ஆமாம், நான் யூகிக்கவில்லைதான்.’’

‘’நான் வயதானவளாகத் தெரிகிறேனா அல்லது அவர் இளமையாகத் தெரிகிறாரா?’’

‘’ நீங்கள் இருவரும் நல்ல பொருத்தமான ஜோடியாகத் தான் தெரிகிறீர்கள்.’’

‘’ஆனாலும், எனக்கு முன்பே அவர் இறந்துவிடுவார். சரிதானே? ஆண்களைவிடப் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள், அதிலும் அவர் ஏற்கெனவேயே புறப்படத் தொடங்கிவிட்டார்.

ஆக, நீங்களும் விட்டு விடுதலையாக ஆவலாயிருக்கிறீர்கள். ஒரு விஷயம் சொல்கிறேன், அது மாதிரியான ஆசை ஒன்று நனவாகும்போது மிக மோசமானதாக இருக்கும். ஆனால், அது நிகழ்ந்தால், அதாவது வாழ்க்கை மிகுந்த ஏமாற்றம் தருவதென்பதை நீங்கள் தெரிந்துகொள்ளும்போது : இந்த பூமி ஒன்றும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அருமையான, ஒளிமிக்க இடம் என்பதல்ல; ஆனால், முட்டாள்தனமான ஆசை ஒன்று அறிவற்றதாக நிறைவேறும்போது, அதனை இன்னும் மங்கலாக்குகிறது. ‘’முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்’’ என்றாள், மீய் பெரியம்மா.

‘’நான் உண்மையைத் தானே விளக்கினேன். உங்கள் கணவர் எப்போது இறந்தார்? அது என்ன, மாரடைப்பா?’’

‘’அப்படியும் சொல்லிக்கொள்ளலாம்,’’ என்று சொன்ன மீய் பெரியம்மா, சானல் மீண்டும் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, அவளது சரியாகப் பால் வராத மார்பு ஒன்றைப் பற்றினாள். சானல் திகைத்துப் பின், ஊளையிட்டு அலறினாள். அந்த மார்பினை வலிந்து, பிசைந்து ஒரு கசக்கு கசக்காமல் மீய் பெரியம்மா அவ்வளவு எளிதில் விட்டுவிடவில்லை. அடுத்த மார்பினை அவள் பற்றியபோது, சானல் இன்னும் சத்தமாக அலறினாள்; ஆனாலும், படுத்திருந்த நிலையை மாற்றிக்கொள்ளவில்லை; குழந்தை நசுங்கிவிடுமோ என்ற பயத்திலும் அப்படி இருந்திருக்கலாம்.

பின்னர், மீய் பெரியம்மா சூடான துவாலை ஒன்றினை எடுத்துவந்தாள். ‘’போய்த் தொலை,’’ என்றாள், சானல். ‘’இதற்கு மேல் நீங்கள் ஒன்றும் இங்கு இருக்க வேண்டியதில்லை.’’

‘’சரி, உங்களை யார் பார்த்துக்கொள்வார்கள்?’’

‘’யாரும் என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டாம்.’’ சானல் எழுந்து அவளது உடையின் இடுப்புக் கச்சினை மாட்டிக்கொண்டாள்.

‘’சரி, குழந்தை?’’

‘’அவனுக்குக் கெட்ட நேரம்.’’

சானல் முதுகை நிமிர்த்திக்கொண்டு, படிக்கட்டுக்கு நடந்தாள். மீய் பெரியம்மா குழந்தையை, அதன் எடை ஒரு பொருட்டேயில்லை என்பது போல உணர்ச்சிக் கொந்தளிப்போடு – துயரம், கோபம் அல்லது திகைப்பு – எடுத்தாள். அந்த இளம் பெண்ணின் மீதான மலைப்பினாலும் அப்படி எடுத்திருக்கலாம். அதனால் தான் மீய் பெரியம்மா அவளுக்குள்ளாகவே, சொல்லிக்கொண்டாள்: ஒரு தாய் தன் மகனை அனாதையாக்குகிறாள்.

குழந்தை, பிறந்து ஆறு நாளேயான அந்தக் குழந்தை அதன் தாயின் மார்பிலிருந்தும் பிரிக்கப்பட்டது. மீய் பெரியம்மா என்ற தனியொரு ஆள் மட்டுமே அவனுக்கு உணவு, பராமரிப்பு மற்றும் – அவள் தனக்குத் தானே ஒப்புக்கொள்ளாவிட்டாலும் – அன்பு, என எல்லாவற்றையும் அளிக்கவேண்டியவளாகிவிட்டாள். சானல் அவளது படுக்கை அறையிலேயே தங்கிப் பிற்பகல் முழுதும் சீனத் தொலைக்காட்சி நாடகங்கள் எல்லாவற்றையும் பார்த்தாள். தண்ணீர் குடிப்பதற்காக ஓரிருமுறை அவள் கீழிறங்கி வந்து, அந்த வயதான பெண்ணும் அந்தக் கைக்குழந்தையும் ஏதோ பாவப்பட்ட தூரத்துச் சொந்தங்கள் என்பது போல மீய் பெரியம்மாவிடம் பேசினாள் : அவர்கள் அங்கே தங்கியிருப்பதில் அவளுக்குச் சில வசதிக்குறைவுகள் இருந்தாலும், அவர்களுக்கு விருந்தோம்பவேண்டியதில்லை என்ற ஒரு சிறு ஆறுதல் இருந்தது.

பாத்திரம் கழுவும் எந்திரப் பணியாள் மாலையில் திரும்பினார். மீய் பெரியம்மாவுக்குத் தன் பெயர் பால் என நினைவுபடுத்தினார். அவள் வயதானவள் தானென்றாலும், அவர் பெயரை ஒரேநாளில் மறந்துவிடுவாளா, என அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள். அந்தத் திருட்டுக் கொக்கு பற்றி அவள் அவரிடம் முன்பு சொல்லியபோது, திரும்பி வந்து, அந்தப் பிரச்சினைக்கு ஒரு வழி செய்வதாகக் கூறியிருந்தார்.

தடாகத்தின் மேலாகச் சில கம்பிகளை, பால் முறுக்கிக் கட்டியதைக் கவனித்துக்கொண்டே, ‘’ பறவைக்கு எதுவும் ஆகிவிடாதென்பது நிச்சயம் தானே,’’ எனக் கேட்டாள், மீய் பெரியம்மா.

‘’நீயே கைவைத்துப் பாரேன்,’’ என்றார், பால், மின்கலப் பொத்தான் இணைப்பினைத் தட்டிக்கொண்டே.

மீய் பெரியம்மா குறுக்கும்நெடுக்குமாகப் பின்னியிருந்த கம்பிகளின் மீது உள்ளங்கையை வைத்துப் பார்த்தாள். ‘’எனக்கு ஒன்றும் தெரியவில்லை.’’

‘’நல்லது, நீ எதையாவது உணர்ந்தால், உன் உயிரைச் சிக்கலில் மாட்டிவிடுவதாக இருக்கும். அப்படியென்றால், நீ என்மீது வழக்கு தொடரலாம்.’’

‘’அது சரி, இது எப்படி? வேலைக்காகுமா?’’

‘’உன்னைவிடக் கொக்கு அதிக உணர்வுள்ளதென நம்புவோம்.’’ என்றார், பால். ‘’ஒருவேளை அது வேலைசெய்யவில்லையென்றால், என்னைக் கூப்பிடு. அதற்குத் தனியாகக் கட்டணம் ஒன்றும் கேட்கமாட்டேன்.’’

மீய் பெரியம்மாவுக்கு அப்போதும் சந்தேகம் தீரவில்லை. ஆனால் அவளது துளைக்கும் அமைதி, அவர், தனது கண்டுபிடிப்பை நினைத்துத் தன்னைத்தானே வியந்து, பாராட்டிக் கொள்வதைத் தடுத்துவிடவில்லை. யோசனைக்காரனுக்கு மிகவும் கஷ்டமானதென்று எதுவுமே கிடையாது, என்றார், அவர். அவருடைய கருவிகள் அடங்கிய பையைக் கட்டிவைத்துவிட்டு, அப்படியும் இப்படியுமாக உலவியபோது, அவருக்கு வீட்டுக்கு செல்வதற்கு எந்த அவசரமும் இல்லையென்பதை அவளால் கண்டுகொள்ளமுடிந்தது. அவர் வியட்நாமில் பிறந்து வளர்ந்து, முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்ததாக மீய் பெரியம்மாவிடம் கூறினார். அவரது மனைவி மூன்று வளர்ந்த குழந்தைகளை அவனிடம் விட்டுவிட்டு இறந்துவிட்டாள். அந்த மூவரில் எவரும் அவருக்கு ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக்கொடுக்கவில்லை; அல்லது அதற்கான நம்பிக்கையும் அளிக்கவில்லை. அவரது சகோதரிகள் இரண்டுபேரும் நியூயார்க்கில்தான் வசித்தார்கள். அவர்கள் அவரைவிட இளையவர்கள் என்றாலும் அவரை முந்திக்கொண்டு பாட்டிகளாகிவிட்டார்கள்.

எப்போதுமுள்ள அதே பழைய கதை : அவர்கள் எல்லோரும் எங்கிருந்தோ வந்தார்கள், வழியில் வந்தவர்களுமாக, ஒன்றுகூடிச் சேர்ந்து வாழ்ந்தார்கள். மீய் பெரியம்மாவால் பால் வாழ்க்கையின் இதழ்களைப் பிரித்துப் பார்க்க முடிந்தது : அவரால் உபயோகமாக வேலைசெய்ய முடிகிற நாளெல்லாம் வேலைசெய்வார். பின்னர், அவருடைய குழந்தைகள் எங்காவது வசதியான ஓரிடத்தில் பொறுப்பு ஒப்படைத்துவிட்டு, பிறந்த நாள் மற்றும் விடுமுறைநாட்களில் வந்து பார்த்துச் செல்வார்கள். மீய் பெரியம்மா, அவரைவிட, எந்த அக்குதொக்கும் இல்லாத, தன் நிலைமை எவ்வளவோ மேலானதென நினைத்தாள். பால், புறப்பட்டுச் செல்லும்போது, மீய் பெரியம்மா, குழந்தையின் சின்னக் கையை உயர்த்தி, ‘’பை-பை சொல்லு, பால் தாத்தாவுக்கு பை-பை சொல்லு,’’ என்றாள்.

அவள் திரும்பி, வீட்டைப் பார்த்தாள். சானல், இரண்டாவது தளத்தில், அவளது படுக்கையறைச் சாளரப்பலகை நீட்டத்தில் முற்சாய்ந்து, குனிந்து நின்றுகொண்டிருந்தாள். ‘’அந்த ஆள் என்ன, மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பார்க்கிறானா?’’ எனக் கீழ் நோக்கிக் கேட்டாள்.

‘’அது பறவையை விரட்ட மட்டுமே செய்யும். அதற்கு ஒரு பாடமாக இருக்குமென்கிறார்.’’

‘’எனக்கு மக்களிடம் வெறுப்பாக இருப்பது எது தெரியுமா? ‘உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.’ என்று அவர்கள் சொல்வதுதான். ஆனால், பாடம் கற்பதில் என்ன இருக்கிறது? வாழ்க்கையில் ஒன்றைத் தோற்றுவிட்ட பின் மீண்டும் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பு என எதுவும் கிடையாது.’’

அது அக்டோபர் மாதம், வளைகுடாவின் சாயங்காலக் காற்றில் `சில்`லென்ற குளிர்ச்சி தெரிந்தது. சளி பிடித்துக்கொள்ளப் போகிறதென்று சானலை எச்சரிப்பதைத் தவிர மீய் பெரியம்மாவுக்குச் சொல்லிக்கொள்ள வேறு எதுவும் இல்லை.

‘’யார் கவலைப்படப் போகிறார்கள்?’’

‘’உன் அப்பா, அம்மா கவலைப்படுவார்கள்.’’

சானல், இகழ்ச்சிக் குறிப்பொன்றினைத்தான் வெளிப்படுத்தினாள்.

‘’ ஏன், உன் கணவர் கவலைப்படுவாரே.’’

‘’ஹா, அந்த ஆள், இப்போதுதான், இன்னும் பத்து நாட்களுக்கு அங்கேயே தங்கவேண்டியிருக்கிறதென்று மின்னஞ்சல் அனுப்புகிறான்.’’ என்றாள், சானல். ‘’அவன் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான், தெரியுமா? யாராவது ஒருத்தியோடு அல்லது ஒன்றுக்கும் மேல், பல பெண்களோடு படுத்துக் கிடப்பான்.’’

மீய் பெரியம்மா எந்தப் பதிலும் சொல்லவில்லை. வேலைக்கு அமர்த்தியவர் எவரையும் முதுகுக்குப் பின்னால் பழித்துப் பேசக்கூடாதென்பது அவளது திடமான கொள்கை. அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது, சானல் ஏற்கெனவே வசிப்பறையில் நின்றிருந்தாள், ‘’ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நினைக்கிற மாதிரியான ஆள் இல்லை, அவர்.’’

‘’அவர் எந்த மாதிரியான ஆள் என்று நான் எதுவுமே நினைக்கவில்லை.’’ என்றாள், மீய் பெரியம்மா.

‘’நீங்கள் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட மோசமாகப் பேசவில்லையே,’’ என்றாள், சானல்.

நல்லதாகவும் தான் சொல்லவில்லை.

‘’அவருக்கு ஏற்கெனவே கலியாணம் ஆகி ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.’’

ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் முன்னால், எந்த ஆணாக இருந்தாலும், பிரம்மச்சாரியாகவே இருப்பான் என்று நீ நினைக்கிறாயா? மீய் பெரியம்மா பாலின் எண் குறித்த துண்டுத்தாளினைத் தன் சட்டைப்பைக்குள் வைத்தாள்.

‘’அந்த ஆளென்ன எண் கொடுத்தானா? அவன் உன்னை இழுக்கப் பார்க்கிறானா?’’ என்றாள், சானல்.

‘’அவரா? அவர் இப்போதே பாதிக்கு மேல் பாடையில் ஏறிச் சவப்பெட்டிக்குள் போயாகிவிட்டது.’’

‘’கடைசி மூச்சு வரைக்கும் ஆண்கள் பெண்களைத் துரத்துகிறார்கள். பெரியம்மா, அவனிடம் விழுந்துவிடாதீர்கள். எந்த ஆணும் நம்பத்தகுந்தவனல்ல.’’ என்றாள் சானல்.

மீய் பெரியம்மா பெருமூச்சிட்டாள். ‘’குழந்தையின் அப்பா வீட்டுக்கு வரவில்லையென்றால், மளிகைச் சாமான் வாங்க யார் கடைக்குச் செல்வது?’’

வீட்டின் ஆண்மகன் வீட்டுக்கு வருவதைத் தள்ளிப்போட்டுவிட்டான்; சானல் குழந்தைக்கு எதுவுமே செய்யமாட்டேனென்று மறுத்துவிட்டாள். தன் விதிகளுக்கு மாறாக, மீய் பெரியம்மா குழந்தையின் தொட்டிலைத் தன் படுக்கையறைக்கு மாற்றிக்கொண்டாள்; அவள் விதிகளுக்கு மாறாகவே, இப்போது, மளிகைச்சாமான் வாங்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டாள்.

‘’இந்தக் குழந்தைக்கு நாம் தான் தாத்தா, பாட்டியென்று பார்க்கிறவர்கள் நினைத்துக்கொள்வார்களென்று நினைக்கிறாயா?’’ மகிழுந்தினை இரண்டு எஸ்.யு.விக்களுக்கு நடுவேயுள்ள குறுகிய இடத்துக்குள் அங்குலம், அங்குலமாக நகர்த்திச் செலுத்தியவாறே, பால் கேட்டார்.

‘’ஒருவரும் ஒன்றும் நினைக்கமாட்டார்கள்.’’ என்றாள், மீய் பெரியம்மா. கடைக்கு மகிழுந்தும் ஓட்டிப் பொருட்கள் வாங்கித்தந்தும் உதவி செய்வதற்கு மீய் பெரியம்மா தருவதாகச் சொன்ன பணம் மட்டுமல்லாமல் வேறு காரணமும் இருக்குமா? ‘’நானும் குழந்தையும் மகிழுந்திலேயே இருக்கிறோம்.’’ என்றவாறே, மீய் பெரியம்மா நீளப் பட்டியல் ஒன்றினைப் பாலிடம் நீட்டினாள்.

‘’அப்படியானால், நீ உள்ளே வரப்போவதில்லையா?’’

‘’ பச்ச மண்ணு, பாருங்கள், பிறந்த குழந்தை. குளிர்பெட்டிகளின் காடாக இருக்கும் அந்தக் கடைக்குள் குழந்தையைக் கொண்டுவருவேனென்றா நினைக்கிறீர்கள்?’’

‘’அப்படியென்றால், நீ அவனை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்.’’

யாரிடம்? குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுவந்தால், அவள் திரும்பிப் போவதற்குள், அவன் இந்த உலகத்தைவிட்டே போயிருப்பானோ என்று மீய் பெரியம்மா பயந்தாள். ஆனாலும் அந்தப் பயத்தை அவள் பாலிடம் சொல்லிக்கொள்ளவில்லை. குழந்தையின் அம்மா மகப்பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சியில் அவதிப்படுவதாகவும், குழந்தையைப் பார்த்துக்கொள்கிற சூழ்நிலையில் அவள் இல்லையென்றும் அவருக்குச் சொன்னாள்.

‘’பட்டியலை மட்டும் என்னிடம் தந்திருந்தால் போதுமே,’’ என்றார், பால்.

‘’நீ பணத்தோடு ஓடிவிட்டால்?’’ என நினைத்தாள், அவள். அப்படி நினைப்பது சரியில்லைதான். நம்பிக்கைக்குரிய ஆண்களும் இருக்கிறார்களென்று ஏன், இறந்துவிட்ட அவளது கணவரையும் அவர்களோடு சேர்த்துத்தான் அவளுக்குத் தெரியும்.

வீட்டுக்குத் திரும்பி வரும்போது, கொக்கு மீண்டும் வந்ததா என்று பால் வினவினார். கவனிக்கவில்லையென்று அவள் பதில் சொன்னாள். கொக்கு பாடம் கற்றுக்கொள்வதைப் பார்க்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்குமோ, கிடைக்காதோ என அவள் நினைத்தாள் : இன்னும் இருபத்திரண்டு நாட்களே இருந்தன. கொக்கு வருகிறதோ, இல்லையோ, இன்னும் இருபத்திரண்டு நாட்களில் வேறொரு குடும்பம் அவளைக் கொத்திக்கொண்டு போய்விடும். மீய் பெரியம்மா குழந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவன் மகிழுந்து இருக்கையில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். ‘’உனக்கு என்ன ஆகுமோ?’’ என்றாள், அவள்.

‘’எனக்கா?’’ என்றார், பால்.

‘’உங்களை இல்லை, குழந்தையை.’’

‘’நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவனுக்கு அருமையான வாழ்க்கை கிடைக்கும். என்னைவிட மேலானதாக, உன்னைவிட மேலானதாக. நிச்சயம் கிடைக்கும்.’’

‘’அப்படிச் சொல்வதற்கு என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்,’’ என்றாள், மீய் பெரியம்மா.

‘’கற்பனை செய்ய முடியும். நீ யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள். முடிவேயில்லாமல், ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நல்லதல்ல.’’

‘’இதிலென்ன தப்பு இருக்கிறது? நான் வாடகை கொடுக்கவேண்டியதில்லை. எனக்கான உணவுக்கும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.’’

‘’செலவே செய்யவில்லையென்றால் பணம் சம்பாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நானாவது என் எதிர்காலப் பேரக் குழந்தைளுக்காகச் சம்பாதிக்கிறேன்.’’ என்றார், பால்.

‘’நான் பணத்தை என்ன செய்கிறேன் என்பது உங்ளுக்குத் தேவையில்லாதது. பேசாமல் வழியை ஒழுங்காகப் பார்த்து வண்டியை ஓட்டுங்கள்.’’ என்றாள், மீய் பெரியம்மா.

பால், அபூர்வமான ஒரு அமைதியில் மூழ்கி, அந்த இலகுவழியில் மிகமிக மெதுவாகச் செல்லும் மகிழுந்தாக ஓட்டிச் சென்றார். ஒருவேளை அவர் சரியாகவே அர்த்தப்படுத்தியிருக்கலாம், ஆனால், அதுபோல் நல்ல அர்த்தமுள்ள ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். அதுபோன்ற ஆண்களைக் கஷ்டப்படுத்துகின்ற பெண்களில் அவளும் ஒருத்தியோ? பால் கதை கேட்க விரும்பினால், அவளால் ஒன்றிரண்டைக் கூறி, அவள் அன்பைப்பெறும் அவரது நம்பிக்கையை விரட்டியடிக்க முடியும். ஆனால், அவள் எங்கு, எதிலிருந்து தொடங்க வேண்டும்? காதலிக்கும் நோக்கம் எதுவும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டுவிட்டபின், சீக்கிரமே கல்லறைக்குப் போய்ச்சேர மாட்டானா என அவள் விரும்பிய அந்த மனிதனிலிருந்தா, அல்லது அவளைப் பெற்றெடுக்க வேண்டுமானால், கணவன் வெளியேறவேண்டுமென்று அவளது அம்மா சொல்லி, அதன்பின் அவள் சந்திக்கவேயில்லாத அப்பாவிலிருந்தா? அல்லது, தன் உதிரக் குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டுக் காணாமல் போய், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின், மாளாத நோயால் கணவன் இறக்கும் போது முகத்தை மட்டும் காட்ட வந்த அவளுடைய பாட்டியிலிருந்து தொடங்கினால் ஒருவேளை சரியாக இருக்குமோ? மீய் பெரியம்மாவின் தாத்தா ஒரு வில்லனாக இருந்தாலாவது அவள் காணாமல் போனதில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும்; ஆனால், அவரோ ஒரு அன்பு மனிதனாக, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மனைவி விட்டுச்சென்ற மகளைத் தனியொருவராகவே, என்றாவது ஒருநாள், மனைவி திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில் வளர்த்து ஆளாக்கியிருந்தார்.

மீய் பெரியம்மாவின் பாட்டி ஒன்றும் வெகுதூரம் போய்விடவில்லை; அத்தனை வருடங்களும், அதே கிராமத்தில் வேறொரு மனிதனுடன், பகல் முழுதும் அவன் குடிசைக்குள்ளாகவே ஒளிந்திருந்து இரவில் மட்டும் ஒரு மாற்றத்திற்காகத் தலையை நீட்டி, ஊர்ந்து வந்து, வெளிக் காற்று வாங்கி வாழ்ந்திருக்கிறாள். அத்தனை நாள் மறைந்தே வாழ்ந்தவள், அவளுடைய கணவனின் இறப்பு வரையிலும்கூட அப்படியே இருந்திருக்காமற்போன காரணம் யாருக்கும் புரியவில்லை. கணவனின் கடைசிப் பயணத்தைச் சரிவர நிறைவேற்றிவைப்பது மனைவியின் கடமை என்று அவளே அதற்கு ஒரு விளக்கம் அளித்தாள்.

புதிதாகத் திருமணம் ஆகித் தையற்காரியாக நன்றாக வாழ்ந்ததுடன், அப்பா இறந்ததையும், அம்மா புதிதாக வந்து சேர்ந்துகொண்டதையும் சகஜமாக ஏற்றுக்கொண்ட மீய் பெரியம்மாவின் அம்மா, அடுத்த ஆண்டிலேயே அவளது முதலும் கடைசியுமான ஒரே குழந்தையைக் கருவுற்றிருந்தபோது, அவளது கணவன் வீட்டை விட்டுச் செல்லாவிட்டால், பூச்சிமருந்து குடித்துவிடுவதாகப் பயமுறுத்திக் கணவனை வெளியேற்றினாள்.

மீய் பெரியம்மா இரண்டு புதிரான பெண்களால் வளர்க்கப்பட்டிருந்தாள். கிராமத்தினர் அந்த இரண்டு பெண்களையுமே வெறுத்து ஒதுக்கினர். ஆனால், அந்த இருவரும் குழந்தையை அவர்களில் ஒருவராக வரவேற்றனர். மூடிய கதவுகளுக்குப் பின், அவளுடைய அப்பாவைப்பற்றியும், தாத்தாவைப்பற்றியும் அவளுக்குச் சொன்ன அவர்களின் கண்களில் அவளது குடும்பத்தின் பெரியவர்களைப் பற்றிய பயத்தினையும் மறுப்பினையுந்தான் அவள் கண்டாள்: அவளுடைய தோல்-வெளிறிய பாட்டி, பல ஆண்டுகளாக இருட்டுக்குள்ளேயே பழகி, பகல் வெளிச்சத்துக்குப் பழக்கம் அற்றுப்போய், அவளுடைய இரவுப்பணிகளை, அவளது மகளுக்கும் பேத்திக்குமாகச் சமைப்பது மற்றும் தையல் வேலைகளை நடு இரவிலேயே செய்தாள்; அவளுடைய அம்மா, மிகமிகத் தேவையான அளவுக்கு மட்டுமே உண்டு, சொல்லப்போனால், இறப்பதற்காகவே பட்டினி கிடந்து, அவளது மகள் உண்பதை மட்டும் இமைமூடாது விழிதிறந்து, பார்ப்பதற்குக் களைப்படைந்ததே இல்லை.

அம்மா முதலிலும், பாட்டி பின்னருமாக, அந்த இரண்டு பெண்களும் இறக்கும்வரையில், மீய் பெரியம்மா வீட்டைவிட்டுச் செல்வதுபற்றி யோசிக்கவே இல்லை. அவர்கள் உயிரோடிருக்கும்போது, உலகத்தின் பழிப்புரைகளிலிருந்தும் அவர்களின் தனித்தன்மைகளாலேயே காக்கப்பட்டனர்; மரணத்தின் போது, அவர்களின் வாழிடத்தையும் அவர்களே எடுத்துக்கொண்டுசென்றுவிட்டனர்; மீய் பெரியம்மா அங்கே நங்கூரமிட்டுத் தங்குவதற்கென்று, அவர்கள் எதையும் விட்டுச் சென்றிருக்கவில்லை. நியூயார்க்கின் குயின்ஸிலிருந்த தூரத்துச் சகோதரர் ஒருவரால் ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணச் சம்பந்தம் ஒன்று வந்தபோது, தயக்கம் ஏதுமின்றி ஒப்புக்கொள்ளப்பட்டது: புதிய நாட்டில், அவளது அம்மாவும் பாட்டியும் கதைகளாகவே நின்றுபோனார்கள். மீய் பெரியம்மா அவர்களைப்பற்றி, கணவரிடம் சொல்லவில்லை; அவர் அதை விரும்பியிருக்கவும் மாட்டார்; எப்படியிருந்தாலும் – அந்த முட்டாள்தனமான, நல்ல மனிதர், கடின வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளக் கடினமாக உழைக்கும் ஒரு பெண்ணைத்தான் எதிர்பார்த்திருந்தார். மீய் பெரியம்மா, பாலைப் பார்ப்பதற்காகத் திரும்பினார். அவரும் ஒருவேளை அவளது கணவர், அவளது, தந்தை, தாத்தா, அல்லது மீய் பெரியம்மாவின் தாத்தா இறக்கும்வரை, அவளது பாட்டி உடனிருந்தாளே, அந்த மனிதரிலிருந்தும் மாறுபாடு இல்லாதவரோ என்னவோ: அவர்களது வாழ்க்கையில் வந்த பெண்களால் சிக்கலாக்கப்பட்டிருக்காத சாதாரண வகைப்பட்ட மகிழ்ச்சி ஒன்றினைப் பெற அவர்கள் தகுதியுடையவர்கள்; ஆனால், கிடைக்கப்பெறாமலேயே போனவர்கள்.

‘’உனக்கு, நாளை பிற்பகல் வேலை எதுவுமின்றி இருக்கும் வாய்ப்பு கிடைக்குமென்று நினைக்கிறாயா?’’ சானலின் வீட்டுமுன் மகிழுந்தினை நிறுத்தும் முன் பால் கேட்டார்.

‘’ நாள் முழுவதும் வேலைசெய்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்தானே,’’

‘’இன்று போலவே, குழந்தையையும் எடுத்துக்கொண்டு வரலாம்.’’

‘’எங்கே?’’

ஈஸ்ட்-வெஸ்ட் பிளாசா பூங்காவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலும் ஒரு மனிதனுடன் சதுரங்கம் விளையாடுவதாக, பால், கூறினார். மீய் பெரியம்மா குழந்தையுடன் அங்கே, அருகாகவே ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டுமென்று பால் விரும்பினார்.

மீய் பெரியம்மா சிரித்தாள். ‘’ஏன், அவன் கவனம் சிதறி விளையாட்டில் தோற்கவேண்டுமா?’’

‘’அவனைவிட நான் மேல் என்று அவன் நினைக்கவேண்டும்.’’

எந்தவகையில் மேலென்று? கடனாக அழைத்து வந்த ஒரு தோழி, கடன் வாங்கிய ஒரு பேரனை தள்ளுவண்டியில் தள்ளுவதைக் கொண்டா? ‘’யார் அது?’’

‘’ முக்கியமான எவருமில்லை. அந்த ஆளோடு நான் இருபத்தேழு ஆண்டுகளாகப் பேசுவதில்லை.’’

அவரால் நன்றாகப் பொய் சொல்லக்கூட முடியவில்லை. ‘’உங்கள் தந்திரத்தில் அவன் இப்போதும் விழுந்துவிடுவானென்று நினைக்கிறீர்களா?’’

‘’எனக்குத் தெரியும், அவனை.’’

ஒருவரைத் தெரியுமென்பது – நண்பரோ, பகைவரோ- அவரைத் தன் கண்பார்வையிலிருந்தும் அகலவிடாமல் வைத்துக்கொள்வது போன்றதாவென, பெரியம்மா வியந்தாள். தெரிந்தவராயிருக்கும்போது, எவரொருவரின் சிந்தனைக்குள்ளும் சிறைப்படுபவராக இல்லாமலிருக்க முடியாது. அந்த வகையில் பார்த்தால், அவளுடைய பாட்டியும், அவளுடைய அம்மாவும் நற்பேறுடையவர்களாயிருந்திருக்கிறார்கள்: அவர்களைத் தெரியுமென்று ஒருவர்கூட உரிமை கொண்டாட முடியாது, மீய் பெரியம்மா கூட. அவள் சிறியவளாயிருக்கும்போது, அவர்களைப் புரிந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லையென்று நினைத்தாள்; அவர்கள் எந்தவிதப் புரிந்துகொள்ளலுக்கும் அப்பாற்பட்டவர்களென்றும் பலர் அவளுக்குச் சொல்லியிருந்தார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகு, அவர்கள் பிம்பங்களாகிப் போனார்கள்: அவர்களைத் தெரியாமலேயே இருந்த நிலை, மீய் பெரியம்மாவுக்கும் கூட, அதன்பிறகும் வாழ்க்கையில் வந்த எவரையுமே தெரிந்துகொள்ள வேண்டாத நற்பேறாக வாய்த்தது: அவளது கணவர், நியூயார்க்கிலிருந்து சான்பிரான்சிஸ்கோ வரும்வரையில் எத்தனையோ ஆண்டுகளாக, வேலைசெய்த பல்வேறு சீன உணவுவிடுதிகளில் உடன் பணியாற்றிய சக பணியாளர்கள், அவள் மகப்பேறு பார்த்து, அவளது நோட்டுப் புத்தகத்தில் வெறும் பெயர்ப் பதிவுகளாகிப்போன, அம்மாக்கள், குழந்தைகள். ‘’அது போய்த் தொலையட்டுமென்றுதான் நான் சொல்வேன். இருபத்தேழு ஆண்டுகளாக அப்படியென்ன வன்மம்?’’ என்றாள், மீய் பெரியம்மா, பாலிடம்.

பால் பெருமூச்சிட்டார். ‘’அந்தக் கதையை நான் சொன்னால் புரிந்துகொள்வாய்.’’

‘’தயவுசெய்து, எந்தக் கதையையும் என்னிடம் சொல்லாதீர்கள்.’’ என்றாள், மீய் பெரியம்மா.

மளிகைப் பொருட்கள் அனைத்தையும் பால், குளிர்பெட்டிக்குள் அடுக்கி வைப்பதையும், மீய் பெரியம்மா குழந்தைக்குப் புட்டிப்பால் காய்ச்சிக் கலக்குவதையும் இரண்டாம் தள நிலைப்படியிலிருந்து, சானல் கவனித்துக்கொண்டிருந்தாள். பால் புறப்பட்டுச் சென்ற பிறகு, சானல் கீழ்நோக்கி, அவர்களின் மணநோக்குச் சந்திப்பு எப்படியிருந்ததெனக் கேட்டாள். குழந்தையை மடியில் சாய்த்துப் பிடித்துக்கொண்டு, மீய் பெரியம்மா, ஆடும் நாற்காலியில் அமர்ந்தாள்; குழந்தையின் அம்மா ஒரு தொந்தரவாகிப் போனாலும், குழந்தை உறிஞ்சிச் சாப்பிடுவதைப் பார்க்கும் திருப்தி ஒன்று அவளுக்குக் கிடைப்பதே மகிழ்ச்சிதான்.

சானல் கீழிறங்கி வந்து, சாய்மெத்தையில் அமர்ந்தாள். ‘’நீங்கள் வலையில் விழுந்துவிட்டதைப் பார்த்தேன். மகிழுந்துக்குள் நிரம்ப நேரம் உட்கார்ந்திருந்தீர்களே, ஒரு வயதான கிழவன் அப்படியொரு காந்தக் காதலனாக இருப்பானாவென எனக்குத் தெரியவில்லை.’’

குழந்தையைத் தன் படுக்கையறைக்கு எடுத்துப் போய்விடலாமாவென மீய் பெரியம்மா நினைத்தாள்; ஆனால், இது ஒன்றும் அவள் வீடு இல்லையே, அதுவுமில்லாமல் பேசும் ஆர்வத்திலிருக்கும் சானல் அவளைப் பின்தொடர்ந்து படுக்கையறைக்கும் வருவாளென்று அவளுக்குத் தெரியும்.

அப்போதும், மீய் பெரியம்மா அமைதியாகவே இருந்ததும், சானலின் கணவர் அவளைத் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவரது மகன் இணை ஒன்றின் சாயங்காலப் பிணைப்பினைக் காண்பதற்காகப் போயிருக்கிறான் எனச் சொன்னதாவும் சானல் கூறினாள்.

இந்த நிமிடமே வெளியேறிப் போய்விடவேண்டுமென்று, மீய் பெரியம்மா தனக்குள் சொல்லிக்கொண்டாள்; ஆனால், அவளது உடல் ஆடும் நாற்காலியின் முன்னும் பின்னும், பின்னும் முன்னுமான அசைவின் இதமான ஆட்டத்துக்கு ஆட்பட்டிருந்தது.

‘’கோபமா, பெரியம்மா?’’

‘’உங்கள் கணவர் என்ன சொன்னார்?’’

‘’அவர் நிலைகுலைந்துபோனார்தான். வீட்டுக்கு வராமலிருந்ததனால், அவருக்கு அப்படியானதென்று நான் சொன்னேன்.

இங்கிருந்து புறப்படவிடாமல் உன்னைத் தடுப்பது எது? மீய் பெரியம்மா தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். குழந்தைக்காகத் தங்குவதாக நம்பிக்கொள்ள விரும்புகிறாய், அப்படித்தானே?

‘’அவர் நிலைகுலைந்துபோனதில் நீங்கள் என்மீது மகிழ்ச்சிகொள்ள வேண்டும். அப்படியில்லாவிட்டாலும் குழந்தைக்காகவாவது மகிழ்ச்சி கொள்வீர்கள், இல்லையா?’’ என்றாள், சானல்.

நீங்கள் ஒவ்வொருவரும் மற்ற எல்லோரையும் போலவே, கடந்து சென்றவர்களாகிவிடுவீர்கள் என்பதில்தான், எனக்கு மகிழ்ச்சி.

‘’நீங்கள் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள், பெரியம்மா? மன்னித்துக்கொள்ளுங்கள், என் வலியும் வேதனையும் அப்படி, எனக்கு இங்கே ஒரு தோழி இல்லை, ஆனால், நீங்கள் எனக்கு அன்பானவராக இருக்கிறீர்கள். என்னையும் குழந்தையையும் தயவுசெய்து பார்த்துக்கொள்வீர்களா?’’

‘’நீங்கள் எனக்குச் சம்பளம் தருகிறீர்கள், அதனால் நான் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்.’’ என்றாள், மீய் பெரியம்மா.

‘’இந்த மாதத்திற்குப் பிறகும் இங்கே தங்க முடியுமா?, நான் இரண்டு மடங்கு தருகிறேன்,’’ என்றாள், சானல்.

‘’நான் வழக்கமான ஆயாவாகப் பணிசெய்வதில்லை.’’

‘’நீங்கள் இல்லாமல், நாங்கள் என்னசெய்ய முடியும், பெரியம்மா?’’

இந்த இளம்பெண்ணின் இனிமைக் குரல் உன்னை ஏமாற்ற அனுமதித்துவிடக்கூடாது, மீய் பெரியம்மா தனக்குத்தானே எச்சரிக்கை செய்துகொண்டாள்: நீ ஒன்றும் மாற்று இல்லாதவளல்ல.- அவளுக்காக, அவளது குழந்தைக்காக, யாருக்காகவும். இருந்தாலும், மீய் பெரியம்மா, குழந்தை வளர்வதை – ஒருசில மாதங்களுக்கு, ஒரு ஆண்டுக்கு, இரண்டு ஆண்டுகளுக்குக் கண்ணால் காண இயலுமேயென ஒரு கணம் கற்பனையில் மிதந்தாள். ‘’குழந்தையின் அப்பா எப்போது வருகிறார்?’’

‘’அவர் வரும்போது வரட்டும்.’’

மீய் பெரியம்மா, துவாலை ஒன்றின் முனையால் குழந்தையின் முகத்தைத் துடைத்தார்.

‘’நீங்கள் என்ன நினைக்கிறீர்களென்று எனக்குத் தெரிகிறது – நான் சரியான ஆண்மகனைத் தேர்வுசெய்திருக்கவில்லையென்கிறாற் போல. இதுபோன்ற பொறுப்பற்ற வயதான ஒருவரை நான் ஏன் திருமணம் செய்யவேண்டியிருந்ததென்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?’’

‘’உண்மையைச் சொல்வதெனில், அப்படி எதையும் நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.’’

மீய் பெரியம்மாவின் எதிர்ப்பினைக் கண்டு கொள்ளாமலேயேதான் எல்லாரும் கதைகளைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலும் பாலுடன் சதுரங்கம் விளையாடும் மனிதன் பாலின் மனைவியின் ஊர்க்காரன்; எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பாலின் மனைவியால் `உன்னைவிட நல்ல கணவனாக இருந்திருப்பான்` எனச் சொல்லப்பட்டவன். அவள் அதனை, அவள் கணவனைக் கொட்டிவிடவேண்டுமென்ற உந்துதலில் ஒரே ஒரு முறைதான் சொல்லியிருக்கலாம்; அல்லது முதலில் பெண்கேட்டவனுக்கு ஒப்புதல் சொல்லிவிட்டு, ஆண்டுக்கணக்கில் வறுத்துக்கொண்டிருந்திருக்கலாம். பால் சொல்லவுமில்லை; மீய் பெரியம்மா கேட்கவுமில்லை. அதற்குப் பதிலாக, பால் அவரது தொழிலோடு, அந்த மனிதனின் தொழிலை ஒப்பிட்டார்: உண்மையில் பால் ஒரு தொழில் முனைவோனாக உயர்ந்திருந்தார்; அந்த மனிதன் தொழிலாளியாகவே இருந்துவிட்டான்.

ஒரு பகைவன் காலாகாலத்துக்கும் நெருக்கமாக, ஒரு நண்பனைப் போல இருக்கமுடியும்; ஒரு பகை இரண்டு மனிதர்களை வாழ்க்கை முழுமைக்கும் சகோதரர்களாகவும் உருவாக்க முடியும். ஒவ்வொருவரையும் அந்நியராக மாற்றிவிட முடிகிறவர்கள் பேறுபெற்றவர்கள்தாம், என மீய் பெரியம்மா நினைத்தாள்; ஆனால், அந்த ஒளியினை அவள் பாலுடன் பகிர்ந்துகொள்ளவில்லை. அவர் சொல்வதை அவள் கேட்கவேண்டுமென்றே அவர் விரும்பினார்; அதற்கிணங்கவே, அவளும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

சானல், பல விவரங்களுடன், சில நேரங்களில் மீய் பெரியம்மாவின் கன்னங்கள் சிவக்குமளவுக்கு, நல்ல ஒரு கதை சொல்லுபவளாக இருந்தாள். அவளுடைய கல்லூரித் தோழிகளில் ஒருத்தியுடன் படுத்துறங்கிய, தன்னுடைய அப்பாவைத் தண்டிப்பதற்காகவே, சானல், ஏற்கெனவே திருமணமான ஒரு வயதானவருடன் படுத்துறங்கினாள். அவள் கருத்தரித்தது, அவளுடைய அப்பாவைத் தண்டிப்பதற்கு மட்டுமல்ல, மனைவியை ஏமாற்றிய அந்தக் கணவனையும் தண்டிப்பதற்காகத்தான். ‘’நான் யாரென்று முதலில் அவருக்குத் தெரியாது. கூடப் படுத்துத் தூங்கிவிட்டுக் காசு கொடுத்து அனுப்பிவிடுகிற பெண்களில் ஒருத்தியாக அவர் நினைக்கும்படியாகத்தான் நான் முதலில் கதைசொல்லியிருந்தேன்.’’ என்றாள், சானல். ‘’ஆனால், பின்னால்தான், என்னை மணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லையென்பதை அவர் உணர்ந்தார். அவரது தொழில் முழுவதையும் அழித்துவிடுமளவுக்கு என் அப்பாவுக்கு பெருந்தலை உறவுகள் இருந்தன.’’

அவள் அம்மா என்ன உணர்வாளென்பது பற்றி அவள் நினைத்துப்பார்க்கவில்லையா? மீய் பெரியம்மா கேட்டாள். அவளுக்காக ஏன் கவலைப்படவேண்டும்? எனப் பதில்சொன்னாள், சானல், கணவனின் மனதை ஈர்த்துக்கொள்ளத்தெரியாத ஒரு பெண், அவளுடைய மகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் அல்ல.

மீய் பெரியம்மாவுக்கு அவர்களின் தர்க்கம் புரியவில்லை: சானலின் இழிவான வக்கிரப்போக்கு; பாலின் வளைந்துகொடுக்காத தன்மை. எந்த மாதிரியான உலகத்திலடா வந்து பிறந்திருக்கிறாய், குழந்தாய், என்றாள், மீய் பெரியம்மா. அப்போது நடு இரவு கடந்துவிட்டது. அவளுடைய படுக்கையறை விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. குழந்தைத் தொட்டில் மீதிருந்த கடல்விலங்குப் பொம்மைகளின் இரவு விளக்கின் வெளிச்சம் நீலமும் ஆரஞ்சுமாக குழந்தையின் முகத்தில் நீள்கோடுகளாக விழுந்திருந்தன. மெழுகுத்திரி வெளிச்சத்தில் அவளுடைய அம்மா, அவள் அருகிலிருந்த நேரமொன்றும் இருந்திருக்கும்; அல்லது அவள் பாட்டி இருட்டில் அமர்ந்திருந்திருக்கலாம். அவளுக்கு எந்த மாதிரியான எதிர்காலம் விடியவேண்டுமென அவர்கள் வேண்டியிருப்பார்கள்? அவள் இரண்டு உலகங்களுக்கிடையில் வளர்க்கப்பட்டிருந்தாள்; அவளுடைய அம்மாவும் பாட்டிக்குமான ஒரு உலகம், எல்லோருக்குமான உலகம் மற்றொன்று; ஒவ்வொரு உலகமும் பிறிதிலிருந்தும் அவளை உள்ளிழுத்துப் பாதுகாத்தது; ஒன்றினை இழப்பதென்பது அவளுடைய விருப்பத்திற்கு எதிரானதாக, பிறிதின் நிரந்தரக் குடிமகளாக மாற்றியது.

மீய் பெரியம்மா, தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளாததோடு, அதனாலேயே அவர்களது கணவர்களின் வாழ்க்கையைத் தடம்புரளச் செய்து குழந்தைகளையும் அனாதைகளாக்கிய பெண்களின் குடும்ப வரிசை ஒன்றிலிருந்தும் வந்தவளாக இருந்தாள். மீய் பெரியம்மாவுக்காவது, குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டாமென்கிற அறிவுணர்வு இருந்தது; சில நேரங்களில், இன்றைக்குப் போன்ற தூக்கமற்ற சில இரவுகளில், அவளுக்குப் பிடித்தமான ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாமா என்ற நினைப்புக்கும் இடம்கொடுப்பதுண்டு. உலகம் எவ்வளவு பரந்தது; ஒரு பெண், அவள் விரும்பியபடி ஒரு குழந்தையை வளர்த்துவிடமுடியும்தான்.

குழந்தைகள் – அவற்றில் நூற்று முப்பத்தொன்றும் அவற்றின் பெற்றோரும், நம்பிக்கையிருந்தாலும் எச்சரிக்கையோடிருந்து, மீய் பெரியம்மாவை, அவளிடமிருந்தே காத்துநின்றனர். ஆனால், அவளை இப்போது, யார் காப்பாற்றப் போகிறார்கள்? இந்தக் குழந்தைக்குப் பிற குழந்தைகளைப் போல, பாதுகாப்பு இல்லை; இருந்தாலும் அவள் அவனைப் பாதுகாக்கவேண்டும். யாரிடமிருந்து? அவனுடைய பெற்றோர்களிடமிருந்துதான்; அவனுடைய பெற்றோர்கள் மட்டுமல்ல, அவளுக்கான ஒரு மாதத்திற்குப் பின் அவனது வாழ்க்கை என்னவாகுமோ என நினைக்கத்தொடங்கிய மீய் பெரியம்மாவின் இதயத்திலும் கூடத்தான், அவனுக்கு இடமில்லை.

இப்படி உட்கார்ந்து மண்டையை உடைத்துக்கொள்வதில் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? வேண்டுமானால், பார், சீக்கிரமாகவே, பாலைப் போல ஒரு அலுப்பூட்டும் கிழவனாக, அல்லது சானலைப் போல ஒரு தனிமைப்பட்ட பெண்ணாக, கிடைக்கின்ற ஆட்களிடமெல்லாம் கதை சொல்பவளாக மாறிப்போவாய். உன் அம்மாவைப்பற்றியும், உன் பாட்டியைப்பற்றியும், அவர்களுக்கும் முன்பிருந்த பெண்களைப்பற்றியும் காலமெல்லாம் பேசிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருக்கலாம்; அதில் சிக்கல் என்னவென்றால், உனக்கு அவர்களைப் பற்றித் தெரியாதது தான். ஒரு மனிதரைப்பற்றித் தெரிவதென்பது எப்போதும் நிரந்தரமாக அவருடனேயே தங்கச்செய்கிறது என்றால், தெரியாமலிருப்பதும் அப்படியான ஒரு காரியத்தைத் தான் செய்கிறது: இறப்பு என்பது, இறந்தவர்களைக் கூடவே அழைத்துச் சென்றுவிடுவதில்லை; அவர்கள் இன்னும் ஆழமாக உனக்குள் வேர்விடச்செய்வதாகத் தான் இருக்கிறது.

குழந்தையை எடுத்துக்கொண்டு, வீட்டைவிட்டும் சென்றால், அவளை யாரும் தடுத்துவிடமுடியாது. முடிவில் தூக்கம் என்பது அவள் விருப்பத்துக்கேற்றபடியான ஒன்றாக மாறிப்போன அவளது பாட்டியாக மாறலாம்; குழந்தைக்குச் சத்தான உணவு வேண்டுமென்பதற்காக, தான், சாப்பிடாமலிருந்த அவளுடைய அம்மாவைப் போலவும் மாறலாம். இந்த உலகிலிருந்தும் தப்பியோடும் அகதியாக மாறப்போவதாக நீண்டகாலமாகத் தோன்றும் எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்பு போல் இப்போதெல்லாம் பயமுறுத்துவதில்லை யென்றாலும், இந்தத் தூண்டுதல்கள், இப்போது, அலைஅலையாக அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அவளுக்கு வயதாகிக்கொண்டே போகிறது; ஞாபகமறதி அதிகமாகிறது; இருந்தாலும் அவள் அவளாகவே இருப்பதன் அபாயத்தைப் புரிந்துகொள்கிறாள். அவளது பாட்டி மற்றும் அம்மாவைப் போல, தனக்குள் தானே பேசிக்கொள்ளும் சாதாரண விதிவயப்பட்ட ஒரு பெண் அல்ல. அடுத்த இடத்திற்கு அவள் நகரும்போது, எந்த விதமான இரகசியப் புதிர் அல்லது பாதிப்பினையும் விட்டுச் செல்வதில்லை; அவளைத் தெரிந்துகொண்டதற்காக இந்த உலகத்தில் யாரும் தொல்லைப்படப்போவதில்லை.

••••••••••

தங்க பகோடா / என் பர்மிய நாட்கள் / 6 = நடேசன் ( ஆஸ்திரேலியா )

download

மாலையில் நாங்கள் சென்ற 326 அடி உயரத்துடன் தங்கத்தால் வேயப்பட்ட தங்க பகோடா Shwedagon Pagoda யங்கூனில் முக்கியமானது. இதுவே பர்மாவின் தேசியக் குறியீடாகும். இதற்கு சுவையான வரலாறு உள்ளது.

இந்த பகோடாவை சுற்றிய பிரதேசம் புராதனமான காலத்தில் இருந்த கரையோர மீன்பிடிக் கிராமமே. 2500 வருடங்கள் முன்பாக இரண்டு பர்மிய சகோதரர்கள் வியாபார விடயமாக இந்தியா சென்றபோது புனித அரசமரத்தின கீழ் அமர்ந்திருந்த புத்தரை சந்தித்து அவருக்கு தேன் கேக்கை உணவாக கொடுத்தபோது அதற்கு வெகுமதியாக புத்தர் தனது 8 தலை மயிர்கள் அவர்களுக்கு கொடுத்தார். வரும் வழியில் 4 தலைமயிர்களை வேறு இரு தேசத்து அரசர்களுக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால் மீண்டும் தற்போதைய பகோடா இருக்கும் இடத்தில் வைத்து திறந்தபோது அந்தப் பேழையில் 8 தலைமயிர்களும் இருந்தன. அந்த தலைமயிர்கள் பேழையொன்றில் புதைக்கப்பட்டு அதன்மேல் இந்த பகோடா கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. தகரம் செப்பு ஈயம் பளிங்கு இரும்பு என அடுக்குகளாக பகோடாக்களை உருவாக்கி அதன்மேல் செங்கல்லில் ஆரம்ப பகோடா கட்டப்பட்டது.

இப்பொழுது ஆரம்ப கட்டிடத்தின்மேல் பலஅடுக்குகளாக பின் வந்த அரச வம்சங்களால் உயர்த்தி பகோடா கட்டுப்படது. பிற்காலத்தில் பெண்ணரசியால் (Shi sawbu) தங்கத்தில் வேயப்பட்டுள்ளது. கோபுரத்தின் நுனியில் வைரங்கள் இழைக்கப்பட்டுள்ளது.

தொடர்சியாக தங்கத்தால் இந்த பகோடா வேயப்படுவதால் எவ்வளவு தங்கம் உள்ளது என சொல்லமுடியாது. எனது வாகனச்சாரதி 64 தொன் என்றார். அது சரியாக இருக்கலாம் என விக்கிப்பீடியாவில் இருந்தது.

இதைவிட பல ஐதீகங்கள் இந்த பகோடவை சுற்றி உள்ளது. 8 மயிரில் நான்கு தொலைந்தது. ஆனால் பின்னர் அந்தப் பேழையை திறந்தபோது அந்த 8 மயிர்களும் இருந்தன. அப்பொழுது பல நம்ப முடியாத அதிசய விடயங்கள் நடந்தன எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்த பகோடாவை சுற்றி பிற்காலத்தில் காடு புதராக வளர்ந்து பகோடா மூடப்பட்டபோது அசோக மன்னரால் இந்த இடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்கிறார்கள். இந்துக்களது இராம இராச்சியம் என்பதுபோல் இங்கு பல இடங்களில் அசோகனின் இராச்சியம் வந்து போகிறது. எல்லா நாட்டினருக்கும் ஐதீகங்கள் இதிகாசக் கதைகள் தேவையாக இருக்கிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட நம்பிக்கைகளை வாய்வழியாக வந்த தொன்மங்களால் அல்லது கற்பனை சக்தி நிறைந்தவர்களால் உருவாக்கப்பட்டவை என ஒதுக்கிவிட்டாலும் அதற்கு அப்பாற்பட்டு வரலாறு தெரிந்த காலத்தில் பல விடயங்கள் நடந்தன.

பிற்காலத்தில புவி நடுக்கம் ஏற்பட்டு இந்த பகோடா உடைந்து மீண்டும் கட்டப்பட்டது. இங்குள்ள 30 தொன் மணியை ஆரம்பத்தில் போர்த்துக்கேய கொள்ளையன் ஒருவன் திருடிக் கொண்டு செல்ல முயன்றபோது அது ஆற்றில் விழுந்தது. ஆனால் அதை எடுக்க முடியவில்லை.

பிற்காலத்தில் பிரித்தானியர்கள் 23 தொன் மணியை திருடிக் கொண்டுபோக முனைந்தபோது அந்த மணியும் ஆற்றில் விழுந்தது. பிரித்தானியர் இந்த பகோடாவில் தங்கியிருந்ததுடன் அதன் உச்சியில் தங்களது கொடியை பறக்க விட்டார்கள். பல அட்டுழியங்களை செய்தார்கள். தற்போதைய இஸ்லாமிய பயங்கரவாதிகள்போல் நடந்துகொண்டபோது பிரித்தானிய அரசின் நேரடியான தலையீட்டால் அவை நிறுத்தப்பட்டது.

தொடர்ச்சிய வந்த பர்மிய அரசர்கள் மட்டுமல்ல பிற்காலத்து இராணுவ அரசாங்கமும் இந்த பகோடாவை புதுபித்தது.

பர்மியர்களின் கலாச்சாரம் இந்த பகோடாவுடன் பின்னப்பட்டுள்ளது. கண்டியின் தலதாமாளிகை இலங்கை அரசர்களோடும் மன்னர்களோடும் எப்படி உள்ளதோ அதேபோல் இந்த பகோடா பர்மியர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்த பகோடா புனிதமானது என்பதற்கு மேலாக இது அமைந்துள்ள இந்தப் பிரதேசத்தின் அழகு கண்ணைக் கவருவதுடன் வியப்பை உருவாக்குகிறது. மாலை நேரத்தில் நான் தாஜ்மஹாலைப் பார்த்தபோது ஏற்பட்டதிலும் பார்க்க அதிகமான அழகு இங்குள்ளது எனச் சொல்லவேண்டும். மாலை நேரத்து வானத்தின் பின்னணி நீல வெல்வெட் துணியில் வைக்கப்பட்டிருந்த அழகிய தங்க ஆபரணம்போல் தெரிந்தது.

பிரதான பகோடாவைச் சுற்றி அமைக்கப்பட்ட பொன்னிற 64 தூபிகள் உள்ளது. வெண்பளிங்கில் அமைக்கப்பட்ட தரைத் தளப்பிரதேசம் சுற்றியுள்ள பின்புலத்தில் பார்க்கும்போது இந்தப்பிரதேசம் தேவலோகத்தில் இருந்து செதுக்கி எடுக்கப்பட்டதா என நினைக்கத்தோன்றும். பகோடாவை சுற்றிய பிரதேசத்தில் பிரார்த்தனை செய்யும் பர்மியர்களைப் பார்க்கும்போது மட்டுமே இது நாம் வசிக்கும் புவியில் அமைந்த இடமென நினைக்க வைக்கிறது.

பர்மா ஏழைநாடாக இருந்தபோதும் மிகவும் சுத்தமான நாடு. அதிலும் பகோடா அமைந்த இடங்கள் தொடர்ச்சியாக சுத்தப்படுத்தப்படுகின்றன. நாங்கள் சென்றபோது பல பெண்கள் புல்லால் உருவாக்கப்பட்ட துடைப்பங்களால் பளிங்குத் தரையை சுத்தமாக்குவதை ஒரு பிரார்த்தனையாக வரிசையில் நின்று தேவதைகளின் நடன அசைவு போல் செய்தார்கள். நமது தமிழக இந்துக் கோயில்களிலும் இப்படியான பிரார்த்தனை வடிவம் இருந்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் புதிய சாமியார்களாவது கோயில்களை சுத்தப்படுத்துவதை பிரார்த்தனையாக செய்தால் மேலதிக புண்ணியம் கிடைக்கும் என்றாவது சொல்லக்கூடாதா?

64 தொன் தங்கத்தில் வேயப்பட்ட இந்த பகோடா ஒருவித பொருளாதாரப்பார்வையில் வீண் என யாராவது நினைத்தால் அது தவறு. பர்மாவின் முக்கியமான யாத்திரை இடமாகவும் உல்லாசப்பிரயாணிகளை கவரும் இடமாகவும் அமைந்து அந்நிய செலாவணியை ஈட்ட உதவுகிறது. கடந்த 12 மாதங்களில் 460 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதிக் கட்டணமாக வந்திருப்பதாக உள்ளுர் பத்திரிகையில் செய்தியிருந்தது.

பர்மாவில் அதிகமாக அமைந்திருப்பது பகோடாக்கள்தான். பெரிதும் சிறிதுமாக எங்கும் காணலாம். வெளி நாட்டவர்களுக்கு இது புரிவது கடினமாக இருக்கலாம். சில பகோடாக்கள் பராமரிக்கப்பட்டாலும் பல பராமரிப்பற்றுவிட்டன. யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை இந்துக்களின் கோவில்கள் அதிகம் என நினைத்த எனக்கே இது அதைவிட அதிகமாக இருந்தது வியப்பைக் கொடுத்தது.

பகோடா கட்டுவதை ஜோர்ஜ் ஓவல் தனது பர்மாவில் சிலநாட்கள் (Burmese days ) என்ற நாவலில் எள்ளி நகையாடுவது சுவையானது . அந்த நாவலில் பல கெடுதிகளை செய்யும் வில்லனாக வரும் ஒரு பர்மிய நீதியரசர் ( நான் நினைக்கிறேன் நீதியரசர் ஒருவரை வில்லனாக்கும் துணிவு ஜோர்ஜ் ஓவலுக்கு மாத்திரமே முடியும்) தனது இறுதிகாலத்தில், தனது கெட்டவிடயங்களுக்கு விமோசனமாக பகோடா கட்டிவிடுவதாக நினைத்துக்கொண்டு எந்த தயக்கமும் இல்லாது எல்லாக் கெட்ட விடயங்களையும் செய்கிறார். அதாவது எவ்வளவு பாவம் செய்தாலும் நான் பகோடா ஒன்றைக் கட்டிவிட்டால் அந்த புண்ணியம் இறுதியில் தன்னைக் கழுவி சுத்தமாக்கிவிடும் என்ற எண்ணம். ஆனால் இறுதியில் பகோடாவை முடிப்பதன் முன்பு இறந்துவிடுகிறார். அவரது மனைவி போல் இருந்த ஒரு பெண் அதைத் தொடர்கிறார். ஒரு விதத்தில் பர்மாவின் காணப்பட்ட பகோடாக்கள் பலரது பாவங்களை எடுத்துக் காட்டுவதாக என்னால் நினைக்க முடிந்தது.

யப்பானியர்களும் பிரித்தானியர்களும் குண்டுபோட்டு சண்டையிட்டபோது இந்த பகோடாக்களே மக்களது வாழ்விடங்களாக இருந்தன. முக்கியமாக குகைகளில் அமைந்தவை இதற்கு பயன்படுத்தப்பட்டன.

•••••••

மாக்பெத் அங்கம்-5 / மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

download

அங்கம் -5.

காட்சி-1

இடம்: தன்சினேன் கோட்டையில் ஓர் அறை.

(மருத்துவர் ஒருவரும் அரசியைப் பார்த்துக் கொள்ளும் தாதி ஒருத்தியும் வருகின்றனர்.)

மருத்துவர் : தாதி கடந்த இரண்டு இரவுகள் உன்னுடன் நான் இருக்கிறேன். நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. சொல் எப்போது அரசியார் இரவில் நடக்கத் தொடங்குகிறாள்?

தாதி : அவளுடைய பெருமைக்குரிய கணவர் மாக்பெத் போருக்குச் சென்றதிலிருந்து இவள் இவ்வாறுதான் தனது படுக்கையை விட்டு இரவில் எழுகிறாள்; தனது இரவு அங்கியை அணிந்து கொள்கிறாள்; தனது அலமாரியைத் திறக்கிறாள்; சில காகிதங்களை எடுக்கிறாள்; எழுதுகிறாள்; மடிக்கிறாள்; முத்திரை இடுகிறாள். பிறகு படுத்துக் கொள்கிறாள். இவை எல்லாவற்றையும் தெளிவாகத் தூக்கத்தில் செய்கிறாள்.

மருத்துவர் : இயற்கைக்கு மாறான நடவடிக்கை இது. ஒரே நேரத்தில் தூக்கத்தில் இருந்தபடி விழித்திருப்பது போலச் செயலாற்றுவது. சரி நடப்பது அமர்வது போன்று இல்லாமல் அரசி தூக்கத்தில் எப்போதாவது பேசியதுண்டா?

தாதி : ம் பேசியிருக்கிறாள். அதை உங்களிடம் முடியாது மருத்துவரே.

மருத்துவர் : இது முக்கியம் தாதி. நிச்சயம் இதை நீ என்னிடம் கூறத்தான் வேண்டும்.

தாதி : உங்களிடமோ வேறு ஒருவரிடமும் கூறமுடியாத நிலையில் இருக்கிறேன் மருத்துவரே. அவள் கூறியதற்கு நான் ஒருத்திதான் சாட்சி.

( திருமதி. மாக்பெத் கையில் ஒரு மெழுகுவர்த்தியுடன் வருகிறாள் . )

அதோ பாருங்கள் அவள் வருகிறாள். இதுதான் அவளுடைய நான் சொன்ன தோற்றம். உறுதியாகச் சொல்கிறேன் இப்போது அவள் தூக்கத்தில் இருக்கிறாள். மறைந்திருந்து கவனியுங்கள்.

மருத்துவர் : அவளுக்கு மெழுகுவர்த்தி எப்படிக் கிடைத்தது ?

தாதி : மெழுவர்த்தி எப்போதும் அவள் அருகில் இருக்கவேண்டும் என்பது அரசியின் உத்தரவு.

மருத்துவர் : அவள் கண்கள் விழித்திருக்கின்றன.

தாதி : விழிகள் திறந்தும் புலன் மூடியும் உள்ளன.

மருத்துவர் : என்ன செய்யப் போகிறாள்? பார் அவள் தனது கரங்களை எப்படி தேய்த்துக் கொள்கிறாள்.

தாதி : இது எப்போதும் செய்து கொள்வதுதான். கரங்களில் உள்ள கறையைக் கழுவிக் கொள்வது போல இப்படிதான் பதினைந்து நிமிடங்கள் செய்வாள்.

திருமதி. மாக்பெத் : ச்சை இந்தக் கறை போகவில்லையே !

மருத்துவர் : இதோ அரசி பேசுகிறாள். அவள் என்ன பேசுகிறாள் என்று குறிப்பு எடுத்துக் கொள்கிறேன். பின்னால் எனக்கு இது உதவும்.

திருமதி.மாக்பெத் : ச்சை என்ன இந்தக் கறைபோகமாட்டேன் என்கிறதே. போ சனியனே போய்த்தொலை. சீச்சீ அன்பரே நீங்கள் ஒரு மாவீரர்தானே? பயப்படலாமா? ஒருவரும் நம் மீது பழி போடாதபோது நாம் எதற்காகக் குற்ற உணர்ச்சியுடன் பயந்து சாக வேண்டும் ? யாருக்குத் தெரியும் அந்த கிழவர் உடலில் இவ்வளவு இரத்தம் இருக்கும் என்று ?

தாதி : கேட்டாயா ?

திருமதி. மாக்பெத் : ஃபைஃப் குறுநில மன்னனுக்கு ஒரு துணைவியிருந்தாளே எங்கே அவள்? என்னது ? இந்தக் கரங்களின் கறை போகவே போகாதா? போதும் பிரபு இது போதும். நீங்கள் தொடங்கி வைத்ததுதான் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கிறது பிரபு.

மருத்துவர் : பார் என்ன ஆயிற்றென்று பார். எதை நீ கேட்கக்கூடாதோ அதைக் கேட்கும்படியானது.

தாதி : எதை வெளியில் சொல்லக் கூடாதோ அதனை இவள் கூறுகிறாள். அந்த இறைவனுக்குதான் வெளிச்சம் இவள் மனதில் உள்ள இரகசியம்.

திருமதி.மாக்பெத் : இது என்ன ரத்த வாடை இன்னும் போகமாட்டேன் என்கிறதே. அரபுநாடுகளில் உள்ள அத்தனை வாசனை திரவியங்களைக் கொண்டு கை கழுவினாலும் இந்த ரத்தவாடை போகாது போலிருக்கிறதே .ஐயோ ! ஐயோ ! ஐயோ !

மருத்துவர் : கடவுளே இது என்ன இப்படி ஒரு காட்சி! மனதிற்கு மிகவும் பாரமாக இருக்கிறதே.

தாதி : இவளைப் போல நான் அரசியாக இருந்தால் இத்தனை பலவீனமான மனதுடன் இருக்கமாட்டேன்..

மருத்துவர் : நல்லது. நல்லது. நல்லது..

தாதி : கடவுளே நீதான் வழி விடணும்.

மருத்துவர் : என் மருத்துவத்தில் சந்தித்திராத நோய்வகை இது. தூக்கத்தில் நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் குற்றஉணர்வுடன் தூக்கத்தில் நடப்பவரை சந்திப்பது இதுதான் முதல்முறை.

திருமதி. மாக்பெத் : கைகளை நன்றாகக் கழுவு. உன் இரவு அங்கியை அணிந்துகொள். இப்படி முகம் வெளிறி நிற்காதே. மீண்டும் ஒருமுறை உறுதியாகக் கூறுகிறேன். பாங்கோவைப் புதைத்து விட்டார்கள். தனது கல்லறையை உடைத்துக் கொண்டு அவனால் மீண்டும் வரமுடியாது.

மருத்துவர் : இது நிஜமா?

திருமதி.மாக்பெத் : படுக்கைக்குப் போ படுக்கைக்குப் போ ! யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது. வா வா வா கையைக் கொடு. நடந்தவை நடந்தவையே மாற்ற முடியாது. படுக்கைக்குபோ படுக்கைக்குப் போ.(திருமதி.மாக்பெத் மறைகிறாள். )

மருத்துவர் : இப்போது அரசி படுக்கைக்குச் செல்வாளா?

தாதி : நிச்சயமாக.

மருத்துவர் : தவறான வதந்திகள் உலாவத் தொடங்கிவிட்டன. இயற்கைக்குப் புறம்பான செயல்களே அமானுஷ்ய விஷயங்களில் கொண்டு விடுகின்றன. மூளைக்கோளாறு உள்ளவர்கள் தங்கள் ரகசியங்களைச் செவிகளற்றத் தலையணைகளிடம் சொல்லிப் புலம்புவார்கள். இவளுக்குத் தேவை மருத்துவர் இல்லை. மதபோதகர். ஆண்டவரே எங்களை மன்னியுங்கள் ( தாதியை நோக்கி ) கவனமாகப் பார்த்துக் கொள் தாதி. ஆபத்தான பொருட்களை அவள் கைக்கு எட்டும் இடத்தில் வைக்காதே. எப்போதும் அவள் மீது ஒரு கண் இருக்கட்டும். சரி இரவு வணக்கம். என் மனதை இவள் தடுமாறச் செய்துவிட்டாள். என் விழிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டாள். எதுவென்று தெரிகிறது. ஆனால் வாய் மூடிக் கிடப்பது நல்லது.

தாதி : நல்லது.இரவு வணக்கம்.( மறைகின்றனர்)

திரை.

•••

காட்சி-2

இடம் : தன்சினேன் பகுதியில் ஓர் இடம். மென்டீத், கெய்த்னெஸ் , ஆங்கஸ் , லெனாக்ஸ் மற்றும் சில படைவீரர்கள் கொடியுடன் வருகின்றனர்.

மென்டீத்: ஆங்கிலப்படைகள் வந்து கொண்டிருக்கின்றன. தலைமையேற்றிருப்பது மால்கம் .அவன் சிற்றப்பன் சிவார்ட் மற்றும் மாக்டப். பழிஉணர்வு அவர்களிடம் கொழுந்து விட்டு எரிகிறது. அவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளைக் கேட்டால் கல்லறைப்பிணம் கூட எழுந்து வந்து போரிடும்.

ஆங்கஸ் : நாம் அவர்களை பிர்னாம் காடுகளில் சந்திப்போம். அது வழியாகத்தான் அவர்கள் வருகின்றனர்.

கெய்த்னெஸ் : யாருக்காவது டொனால்பெயின் தனது சகோதரனுடன்தான் இருக்கிறான் என்பது தெரியுமா?

லெனாக்ஸ் : நிச்சயமாக அவன் அங்கே இல்லை. என்னிடம் ஒரு பட்டியல் உள்ளது. மூத்த சிவார்டின் மகன் இருக்கிறான். அவர்களைப்போல இன்னும் நிறையப் பொடிப் பிள்ளைகள் தாடி கூடச் சரியாக முளைக்காமல் இந்தப்போரில் அவனுக்கு எதிராகக் கிளம்பி விட்டனர்.

மென்டீத் : அந்தக் கொடுங்கோலன் என்ன செய்து கொண்டிருக்கிறான் ?

கெய்த்னெஸ் : தன்சினேன் கோட்டையை பலப்படுத்துவதில் அவன் மிகுந்த பிரயத்தனப்படுகிறான். சிலர் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்கின்றனர். அவனால் அதிகம் பாதிக்கப்படாதவர்களில் சிலர் இது அவனுடைய கொடுங்கோபம் என்கின்றனர். ஒன்று மட்டும் உறுதி. அவன் கட்டுக்குள் காரியங்கள் அடங்கவில்லை.

ஆங்கஸ் : அவனுடைய மர்மக்கொலைகளின் குருதி அவன் கையில் படர்ந்திருக்கிறது. அவன் செய்த துரோகத்திற்குப் பழி வாங்க எதிரிகளின் படைகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவன் படைகள் அவன் ஆணைக்குக் கட்டுப்படுகின்றவே அன்றி அன்புக்கு இல்லை. மன்னன் என்ற பட்டம் அரக்கனின் உடையைக் குள்ளன் போட்டுக் கொண்டதைப் போல அவனுக்குச் சற்றும் பொருந்தாமல் இருக்கிறது.

மென்டீத் : அவன் அக உணர்ச்சிகள் அனைத்தும் அவனைக் குற்றம் சாட்டும்போது அவன் புறச் செயல்களுக்கு அவனைக் கோபித்துப் பயன் இல்லை.

கெய்த்னெஸ் : வாருங்கள் அணிவகுத்து முன்னேறுவோம். எங்கு நமது விசுவாசம் மதிக்கப்படுகிறதோ அவர்களுக்குத் துணை நிற்போம். நமது தேசத்தின் அடிமை நோயைக் குணப்படுத்தும் அருமருந்தைத் தேடிச் செல்வோம்.அவருக்காக நமது கடைசிச் சொட்டு இரத்தத்தையும் சிந்த ஆயத்தமாவோம்.

லெனாக்ஸ் : ராஜமலர் மலர்வதற்கும், களைகளைப் பூண்டோடு அடித்துச் செல்லவும் இரத்தம் வெள்ளமெனப் பெருகி ஓடினால்தான் முடியும். வாருங்கள் பிர்னாம் நோக்கி முன்னேறுவோம்.

( அணிவகுத்து மறைகின்றனர். )

திரை.

காட்சி-3.

அரண்மனையின் ஒரு பகுதி.

( மாக்பெத் மருத்துவருடனும், பணியாட்களுடனும் நுழைகிறான்.)

மாக்பெத் : போதும் மேலும் மேலும் போர்ச் செய்திகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள். அவர்கள் பறந்தோடட்டும். தன்சினேன் நோக்கி பிர்னாம் காடுகள் நகர்ந்து வந்தால் ஒழிய நான் அஞ்சப்போவதில்லை. பொடியன் மால்கம் யார் ? அவனும் ஒரு தாயின் கர்பத்திலிருந்து வந்தவன்தானே? மனிதனின் முக்காலமும் உணர்ந்த ஆவிகள் எனக்கு ஏற்கனவே சொல்லி விட்டன, ”மாக்பெத் நீ பயப்படத் தேவையில்லை. பெண் வயிற்றிலிருந்து பிறந்த எந்த மனிதனாலும் உனக்கு அழிவு நேராது என்று. ஓடிப்போய்விடுங்கள் குறுநில மன்னர்களே . ஆங்கிலச் சாப்பாட்டு ராமன்களுடன் ஒன்று சேருங்கள். என் அசைந்தாடும் எண்ணங்களும், நிலை கொண்டுள்ள என் இதயமும் அச்சத்தினால் ஒரு போதும் அசையாது.

( சேவகன் ஒருவன் நுழைகிறான். ) சாத்தான் உன் முகத்தில் கருமையைப் பூசட்டும். ஏன் உன் முகம் இப்படி வெளிறிப்போய்க் கிடக்கிறது ? அச்சம் கொண்ட மடவாத்தினைப் போல ஏன் இப்படி பயந்து கிடக்கிறாய் ?

சேவகன் : மொத்தம் பதினாயிரம் ….

மாக்பெத் : பதினாயிரம் வாத்துக்களா ?

சேவகன் : வீரர்கள்.

மாக்பெத் : போ கோழையே உன் முகத்தைப் பிறாண்டிக் கொண்டு இழந்த நிறத்தைப் பெறு. என்னது வீர்ர்களா? இருக்கட்டுமே ! கோழையே உன் அச்சம் அடுத்தவர் முகங்களில் வெளுப்பாய்ப் படராமல் பார்த்துக்கொள். எந்த நாட்டு வீரர்கள்?

சேவகன் : ஆங்கிலப்படையினர்.

மாக்பெத் : என் முன் நிற்காதே . ஓடிப்போய்விடு. ( சேவகன் மறைகிறான். ) சேட்டன் ( தனது அந்தரங்கக் காரியதரிசியை அழைக்கிறான் ) என் இதயத்தில் நோய் கண்டுள்ளது சேட்டன். இதோ. இந்த யுத்தம் ஒன்று என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அல்லது அரியணையிலிருந்து வீழ்த்தும். ஒரு நீண்ட வாழ்வை வாழ்ந்துவிட்டேன்.ஒரு பழுத்த இலையைப் போல என் வாழ்வு உதிரும் நிலைக்கு வந்துவிட்டது. முதுமையின் அடையாளங்களான கௌரவம், கருணை, பணிவு, கைகோர்க்கும் தோழமை ஆகியவற்றுள் ஒன்று கூட என்னிடம் இல்லை. என் விருப்பத்திற்கு மாறாக எனக்குக் கிடைத்துள்ளவை சாபங்களும், உதட்டளவு கௌரவங்களும், அற்ப ஆயுளும்தான்.

சேட்டன் (வந்தபடி ) கூப்பிட்டீர்களா அரசே? என்ன வேண்டும் சொல்லுங்கள்.

மாக்பெத் : அவர்கள் என்னுடைய எலும்பையும் தசையையும் தாக்கும்வரை போரிடுவேன். கொண்டுவா என் ஆயுதங்களை. என் கவசத்தை

சேட்டன் : உங்களுக்கு அவை தேவையில்லை.

மாக்பெத் : கொடு கவசங்களை அணிந்துகொள்கிறேன். மேலும் குதிரைப்படைகளை ஆயத்தப்படுத்து. வேகமாக அனைவருக்கும் சேதி அனுப்பு. அச்சத்தால் இருப்பவர்களை அழித்துவிடு. என் ஆயுதங்களையும், கவசங்களையும் கொடு. ( மருத்துவரை பார்த்து ) உங்கள் நோயாளி எப்படி இருக்கிறார் மருத்துவரே ?

மறுத்தவர் : நோய் இல்லை அரசே . தீவிர கற்பனைகள் ஓயாது அவரிடம்மனதில் தோன்றி அவர் அமைதியைக் குலைக்கிறது.

மாக்பெத் : சிகிச்சை அளியுங்கள். உங்களைப் போன்ற மருத்துவர்களுக்கு மனதின் ஆழத்தில் உள்ள கவலையை வேருடன் பிடுங்கிக் களைய இயலாதா? மூளைக் கொதிப்புகளை அழித்து எழுத இயலாதா? மாற்று மருந்தின் மூலம் மன வேதனைகளை நெஞ்சிலிருந்து எடுக்க இயலாதா?

மருத்துவர் : அப்படி ஒரு சிகிச்சையை நோயாளிதான் செய்துகொள்ள வேண்டும்..

மாக்பெத் : உங்கள் மருந்துகளை நாய்களுக்குப் போடுங்கள். எனக்கு அவற்றால் ஒரு பயனும் இல்லை. வா சேட்டன் வந்து என் கவசங்களை அணிந்துவிடு .என் ஈட்டியைக் கொடு. அப்படியே அந்த வீரகளை அனுப்பிவிடு. (மருத்துவரிடம் ) மருத்துவரே என்னிடம் இருந்த குறுநில மன்னர்கள் ஓடிவிட்டனர்.(சேட்டனிடம் ) வா சேட்டன் சீக்கிரம்.(மருத்துவரிடம் ) என் தேசத்தின் இரத்தத்தை உங்களால் பரிசோதிக்கமுடியுமானால் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று கண்டுபிடியுங்கள். அதன் கழிவுநீரிளிலிருந்து அதன் நோய் இன்னதென்று கண்டுபிடிக்க முடியுமானால் என் கைத்தட்டல் பரிசாகக் கிடைக்கும்.(சேட்டனிடம் ) இழுத்துப்பிடி சேட்டன். ( மருத்துவரிடம் ) எந்த பேதி மருந்து கொடுத்தால் அது இங்கிருந்து ஆங்கிலேயர்களை விரட்டும் ? அப்படி ஒரு மருந்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மருத்துவர் : மன்னா நீங்கள் போருக்கு ஆயத்தமாகின்றீர்கள் என்பது தெரிகிறது.

மாக்பெத் ( சேட்டனிடம்) கவசத்தை எடுத்துக் கொண்டு என்னுடன் வா. பிர்னாம் காடுகள் தன்சினேன் பகுதிக்குள் வரட்டும் பிறகு நான் சாவிற்கும் என் அழிவிற்கும் அச்சப்படுகிறேன்.

மருத்துவர் ( தனக்குள் ) போதுமடா சாமி. அடுத்தமுறை எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் இந்தத் தன்சினேன் அரண்மனை பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கமாட்டேன்.

( அனைவரும் அகல்கின்றனர் )

திரை.

காட்சி-4.

பிர்னாம் காடுகளின் அருகில் ஒரு பாசறை.

(மால்கம், மூத்த சிவார்ட், அவர் மைந்தன் மாக்டப், மென்டீத், கெய்த்னெஸ், ஆங்கஸ், லெனாக்ஸ், ராஸ் மற்றும் போர்வீரகள் போர்முரசு முழங்கப் போர்க்கொடியுடன் அணிவகுத்துச் செல்கின்றனர் )

மால்கம் : உற்றோர்களே! நேரம் நெருங்கிவிட்டது நமது மாளிகைகளின் படுக்கையறைகளில் அமைதி திரும்ப நேரம் நெருங்கிவிட்டது.

மென்டீத் : அதில் என்ன சந்தேகம் ?

சிவார்ட் : இந்தக் காட்டிற்குப் பெயர் என்ன?

மென்டீத் : பிர்னாம் காடு என்று பெயர்.

மால்கம் : நமது வீரகளிடம் சொல்லி இந்த மரங்களின் கிளைகளை உடைத்து ஒவ்வொருவரும் தங்களை இந்தக் கிளைகளால் மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அப்போதுதான் மாக்பெத்தின் ஒற்றர்களுக்கு வீரர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாமல் போகும். தவறான தகவலே மாக்பெத்தைச் சென்றடையும்.

வீர்கள் : அப்படியே செய்கிறோம்.

சிவார்ட் : கட்டுக்கடங்காத் தன்னம்பிக்கையுடன் மாக்பெத் தன்சினேன் கோட்டைக்குள் இருக்கிறான் என்பதைத் தவிர நமக்கு வேறு தகவல்கள் இல்லை. நமது முற்றுகையை அவனால் தடுக்க முடியாது.

மால்கம் : நாம் முற்றுகையிட வேண்டும் என்பதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான். அவனுடைய வீரர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவனைவிட்டு நீங்குவதில் குறியாக இருக்கிறார்கள். இதயமற்றவர்கள் மட்டுமே அவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.

மாக்டப் : எல்லாம் சரி. ஆனால் நமது இலக்கை அடையும் முன்பு நாம் தீர்மானிக்க எதுவுமில்லை.

சிவார்ட் : நேரம் நெருங்குகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நமக்குச் சொந்தமானது எது பகைமை எது என்பது தெரிந்துவிடும். சும்மா உட்கார்ந்து இன்பக்கனா கண்டு கொண்டிருந்தால் நம்பிக்கை பிறக்கும்; நிஜம்தான். வெற்றிக்குக் கனவு கான்பதுமட்டும் போதாதே. வெற்றிக் கனியைப் பறிக்க வன்முறையே சிறந்த வழி. எனவே நாம் நம் படையுடன் முன்னேறுவோம் .

( வீரர்கள் கைகளில் மரக்கிளைகளுடன் முன்னால் செல்கின்றனர்.)

திரை.

(தொடரும் )

நான் கடவுளின் பத்தாம் அவதாரம் .. ! ( கவிதைகள் ) / ஆனந்தன் ( கோவை )

images (1)

நான் கடவுளின் பத்தாம் அவதாரம் .. !

நான் எழுத்தருளிய வட்டச் சன்னதியில்

ஈராறு நாயன்மார்களின் பிரதிஷ்டை ..!

கிரிவலத்தில்

மும்மூர்த்திகளின் அங்கப்பிரதட்சனம் ..!

கர்ப்ப கிரக இருளில்

மூன்று தீபங்களின் சுடரொளியில்

நேர தரிசனம் .. !

என் திருத்தலத்தின்

நொடிப்பிராத்தனையில்

சுலோகங்கள் இசைக்கும் .. . .

நிமிட அபிசேகத்தில்

பாசுரங்கள் மணக்கும் . . .

மணிப்பூசையில்

ஆலய மணியொலிக்கும்

என் திருப்பாதங்கள் தொழுதே

உங்கள் துயில் எழுப்பம்…

என் தீட்சிதை பெற்றே

உங்கள் உறக்க வைபவம் . . .

என் இருப்பே உங்கள் ஜாதகம் !

என் நகர்தலில் உங்கள் யாத்திரை . .!

என் யாத்திரையில் உங்கள் மார்க்கம் . .!

என் மார்க்கத்தில் உங்கள் முகூர்த்தம். !

என் சுழற்சியின் சூரசம்ஹாரத்தில்

எமகண்டங்கள் ஜனனம் . . !

என் கடப்பின் அளவே

உங்கள் இயங்குதள பதிவுகள் . .!

என் அருள்வாக்கு பெற்றே

நிலம், நீர், காற்றின் பயணங்கள் . . !

எனது கால விக்கரக திருவீதி உலாவில்

சமயத் தேரின் வடம் பிடித்தே

உங்கள் வாழ்க்கைப் பயணம் !

என் அசைவின்றி இயங்காது

உங்கள் லோகம்..

ஏனெனில்

நான் கடவுளின் பத்தாவது அவதாரம் !

••

பகலதிகாரம் . . . .

(1)

ஒரு முத்தத்தை

கொடுத்துவிட்டு

சலனமற்று உறங்குகிறது

இரவு !

நான் பகலாய்

தகித்துக் கொண்டிருக்கிறேன்.

(2)

இரவிற்கு

பகலைப்போல் பொறுமை இல்லை

சட்டென உறங்கி விடுகிறது.

இரவு விழிக்கத் துவங்கிவிட்டால்

உன்மத்தம் பிடித்துவிடுகிறது பகலுக்கு !

(3)

அரிதாரங்கள் பூசி

வெள்ளையும் சொள்ளையுமாய்த் திரிகிறது பகல்

அரணாக்கொடியையும் உதிர்த்து

அம்மணக்கட்டையாய் கிடக்கிறது இரவு..

(4)

பகலின் மறுபக்கம் இரவு

ஆனால் இரவிற்கு ஒரே பக்கம்

அது இரவு மட்டும்தான்.

(5)

என்னதான் வெளிச்சத்தை பீய்ச்சியடித்தாலும்

நிழலாய் பின் தொடர்கிறது

இருள்.

•••

பதவிக் காய்ச்சல் . . . .

ஓட்டுண்ணிக் கிருமிகளால்

காற்றடிக்கும் திசையில் பரவுகிற

கொடிய தொற்று நோய் ..

நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரிவது

இதன் முதல் அறிகுறி !.

நாற்காலிகளைப் பார்த்தால்

அரிப்பெடுப்பது அடுத்த அறிகுறி ! .

உடனடியாக

தன்மான உறுப்புகள் செயலிழந்துவிடும்

இந்த நோய் தொற்று உள்ளவர்களால்

ஓரிடத்தில் நிலையாக இருக்க இயலாது

அடிக்கடி தாவிக் கொண்டே இருப்பார்கள் .

நோயின் தீவிரத்தில்

கண்களிலுள்ள நேர்மை நரம்புகளில் சீழ் பிடிக்கும்

பணப்பார்வை மட்டுமே செயல்படும்.

மனிதாபிமான குழாய்களில்

கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படும்

நிறக்காரணிகள் பலவீணமடைவதால்

அடிக்கடி தோலின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும் !

தோலின் தடிமன் ஒரு செண்டி மீட்டர் அதிகரிக்கும் !

நோய் முற்றும் பொழுது

முதுகுத் தண்டுவடம் முற்றிலும் பாதிக்கப்படும்

தரையைப் பார்த்து வளைந்துவிடும்

நிமிர்த்த இயலாது .. !

இந்தக் காய்ச்சலுக்கு

தடுப்பூசியோ மருந்தோ

கண்டுபிடிக்கப்படவில்லை !

ஆகவே பொதுமக்கள்

இந்த அறிகுறிகள் உள்ளவர்களிடம்

எச்சரிக்கையுடன் இருக்கும்படி

கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .

•••

மின்னிக்காய்களும் மினுக்காட்டான்களும்

தன் கரிசல் தாளுடலில்

ஒரு கிராமத்தை வரைந்தாள்

நனவிலியில் சுயம் கிராமமாகிப் போனாள்

அவள் தனக்குள் ஆழிறங்கி

தன் ஆதிகளைத் தேடத்துவங்கினாள்

ரத்த நாளங்களில் எரிவாயு கசியத்துவங்க

அவள் சருகு ரோமங்கள் கருகும் நெடிதனை

அவள் நாசித்துவாரங்கள் நுகரத்துவங்கின

முதுகெலும்மை சற்று உயர்ந்தி நடுத்தடுப்பாக்கினாள்..

புறமுதுகில் நாற்சாலை விரைந்து கொண்டிருந்தது

மீத்தேனின் நாவுக்கற்றைகள்

மூச்சுகுழலின் பசுந்தணுப்பை குடித்தெறிய

நகரத்து நெடுந்தாளின் தணலில் வீழ்ந்தாள்

மக்கிரிக்கூடை போலிருந்த

தலையின் மூங்கில் தப்பைகள் உரிந்த போது

நடுகற்களும் சுடுபானைகளும்

கரட்டுமேடும் காக்கனத்திக்காடும்

மின்னிக்காய்களும் மினுக்காட்டான்களும்

உண்ணிப்புதர்களும் சக்கரைப்பழ மரங்களும்

மஞ்சாடிக் குருக்களின் கருவிழிகளும்

உருகி தொடையிடுக்குகளில் வழிந்தோடுகிறது.

உழவு மூட்டை போலிருந்த

வயிற்றின் சணல்கள் உதிர்ந்த தருணத்தில்

நெற்கள் பதுங்கிய மதங்கும் .

தாணியங்கள் வழிந்த மொடாவும் ..

மஞ்சள் பூத்த வைக்கோல் போரும் ..

வயலாட்சி புரிந்த

விதைநெல் கோட்டையும் . .

மாடுகளின் உயிர்வாசம் படிந்த

புண்ணாக்குத் தாழியும். .

மனிதம் சுரந்த சேர்ந்து கிணறும் . .

வாழ்க்கைச் சக்கரங்கள் சுழன்ற இட்டேரியும்

அவள் பிட்டத்தில் மிதித்தேறி திசையற்று உருண்டன..

வாழைக்குருத்துகள் போலிருந்த

அவளின் இரண்டு கால்கள் மட்டும்

துடித்துக் கொண்டிருந்தது

தாள்களுக்கு வெளியே.

இப்போது அவள் ஆதியாகியிருந்தாள்..

•••••••

உன்னை நினைவு கூரும் ரயில் நிலையம் வந்துவிட்டது ( கவிதைகள் ) – ஆ.ஜீவானந்தம்

download

லதாதேவியின் கூழாங்கற்கள்

சின்னஞ்சிறிய மூங்கிற்கூடையில்

வண்ண வண்ண கூழாங்கற்களை

அடுக்கி வைத்திருப்பவள் லதாதேவி.

தன் உறவுகள் ஒவ்வொருத்தருக்கும்

ஒரு கூழாங்கல்லை வைத்திருக்கிறாள்.

உறவுகளையே கூழாங்கல்லாக்கி

கூடையில் வைத்திருக்கிறாளெனவும்

சொல்லப்படுவதுண்டு.

பறக்கும் கொக்குகளை வரைந்தபடி

மௌனித்திருக்கும் அவள் மகளும்

நாய்க்குட்டிகள் துரத்தி தெருப்பூனைகள் மிரட்டி

சுவர்பல்லிகளில் அச்சம் கொள்ளும் அவள் மகனும் கூட

மூங்கிற்கூடையில் கூழாங்கல்லாய் உறைந்திருந்தனர்.

அவநம்பிக்கையின் நாரால் ஆனது

அம்மூங்கிற்கூடையென

தத்தளிப்புகளின் வெம்மை கொண்டது

அம்மூங்கிற்கூடையென

நிறைவின்மையின் சுவைகொண்டது

அம்மூங்கிற்கூடையென

சுயநலத்தின் ஒளியால் ஆனது

அம்மூங்கிற்கூடையென

குருதியின் தீரா வன்மமே

அக் கூழாங்கற்களென

முத்தங்களின் அகவலோசையை

தமக்குள் எதிரொளித்திருப்பவை அக்கூழாங்கற்களென

புணர்ச்சியின் வலி புதைந்தவை அக்கூழாங்கற்களென

யோகப்பிரஷ்டர்கள் தீட்டும் முடிவுறா சித்திரமே

அக்கூழாங்கற்களென

கதைகேட்கும் செவிகளில் வதந்திகள்

கிசுகிசுக்கப்படுகின்றன.

தனித்துவம் வாய்ந்தவை

தன் கூழாங்கற்களென

லதாதேவி பெருமிதம் கொண்டாள்.

கூழாங்கற்களின் ராஜ்ஜியத்தில்

மகாராணியென அவள் வாழ்ந்திருந்தாள்

துர்வினைகளுக்கான விமோசனம் இதுவே

ரகசிய பாவங்களுக்கான பரிகாரம் இதுவே

மகத்தான தேடலைக்கொண்ட மாபெரும் பிரார்த்தனை இதுவேயென

எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும்

அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்’

சூரியன் உத்தராயணத்தில்

உதிக்கத்தொடங்கிய ஒரு நாளில்

வலசை பறவைகளின் தடங்கள் ஏந்திய காற்றணுக்கள்

வாசல் வந்து மோதி அலைய

அமாவாசை அமாவாசை போலவும்

பௌர்ணமி பௌர்ணமி போலவும்

இருந்திராத ஒரு பருவக் காலத்தில்

யாருடைய மூங்கிற்கூடையிலோ

தானும் ஒரு கூழாங்கல்லென உறைந்திருப்பதை

அவள் உணர்ந்துக்கொண்ட

இதோ இந்த நள்ளிரவில்தான்

லதாதேவி தற்கொலை செய்துக்கொண்டாள்.

உன்னை நினைவு கூரும் ரயில் நிலையம் வந்துவிட்டது

நான் உன்னை நினைவு கூரும்

ரயில் நிலையம் வந்துவிட்டது.

கூடை நிரம்பிய ஆரஞ்சு பழங்களை

இடுப்பில் சுமந்து செல்கிறாள்

என் தாயொருத்தி.

மழை நின்றிருக்கும் ஜில்லிப்பில்

ஆவி பறக்கும் தேநீர் தம்ளர்களுடன்

விறைகிறான் என் தம்பியொருத்தன்.

கருவுற்றிருக்கும் மகளின் உடல்நலம் குறித்து

அலைபேசியில் பூரிப்பு ததும்ப

விசாரிக்கிறார் என் தந்தையொருத்தர்.

கால்மேல் கால்போட்டமர்ந்து

வெகு சிரத்தையோடு

வாரஇதழ் பக்கங்களை

புரட்டிக் கொண்டிருக்கிறான்

எனது அண்ணன் ஒருவன்.

கிழிந்த கால்சட்டை காற்றில் பறக்க

பாசிமணி படர்ந்த கழுத்துடன்

தேன்மிட்டாய் வாயிலூற

துள்ளியபடி செல்கிறாளே

என் தங்கையொருத்தி.

இதோ என் மகளொருத்திக்கு

புட்டிப் பாலூட்டுகிறாள் தாய்.

தண்ணீர் குழாய்களுக்கு

சற்று தொலைவில்

சிறுநீர் கழித்து விளையாடுகிறான்

என் செல்ல மகனொருவன்.

உச்சிவகிட்டில் சுடரும் குங்குமத்துடன்

கைப்பையில் எதையோ துழாவியபடி

இதழோரம் வழியும் மென்னகை சிந்த

திரும்பி பார்க்கிறாள் எனதொரு அக்கா.

ஆளற்ற வனாந்திரங்கள் தாண்டி

பாதையோர முட்செடிகள் தாண்டி

பசுமை தேங்கிய வயல் பரப்புகள் தாண்டி

கிளிகள் கூடடையும் தென்னை மரங்கள் தாண்டி

உன் சடலம் விட்டுத் தேங்கிய

உதிரக்குழியை உயிர் அதிர நின்று வெறித்தேனே

அந்த குப்பை மேட்டை தாண்டி

நான் உன்னை நினைவு கூரும்

ரயில் நிலையம் வந்துவிட்டது.

எனக்கும் ஒரு மழைநாள் வேண்டும். ( கவிதைகள் ) / ரோஷான் ஏ.ஜிப்ரி (இலங்கை)

images (7)

எனக்கும் ஒரு மழைநாள் வேண்டும்.

**
பூ விழிகளில் நீர் திரள

விம்மியபடி

உன் இதழ் கவிந்த புன்னகையை

ஏந்திச் சென்ற அந்தி

புழுக்கப் பொழுதென பின்னிருளாகி

விடிகிறது நம் காலை

இரும்புப் பறவையுடன் பயணித்த

இரு பத்தாண்டுகள்

ஒற்றைப் புலர்வில்

எப்படிக் கழிந்தது

ஆச்சரியத்தை விதைத்து

காயத்தை அறுவடை செய்கிறது மனசு

அமைதியற்ற புலம் விட்டு

வலி செறிய நகர்ந்து

இனிமையின் சுவை துறந்து

மாயப் பெருங்கடலில் கலந்த

அகதி நதி போல் நான்!

இது வாழ்வென்று சொன்ன

சூனியக் கனவெனில்

ஒரு கனவால்இத்தனை தூரம்

நகர முடியுமாகில்

இன்னொரு கனவோடு

முடிகிறதா வாழ்க்கை?

இவ்விராட்சதக் கனவு

எந்த விலங்கின் சாயலோ??

அனுமானிப்பதற்குள்

மர்மமாய் மறைந்திற்று

இடைவெளிகளில் சாயம்போய்

கரைந்து உறைந்த

கால வண்ணங்களிலிருந்து

எப்படி பிரிப்பது நம் சுய நிறத்தை

உணர்வுகள் இங்கு

மலடுமில்லை,கிழடுமில்லை

ஆயினும்;

ஊனமானது ஏதோ உண்மைதான்

தலைகோதியபடி மனத்துயரை

என் மார்பில் சாய்ந்து

இடியென பரப்புகிறாய்

நம்முடன் அழுது வடித்து

வெளியே கொட்டித்தீர்க்க

ஒரு மழை வேண்டும் போலிருக்கு

இக்கோடையில் எனக்கும்!

*

காலத்தின் தற்கொலைக் குறிப்பு!

*****

உனது வெளியில் உலவும்

இனிய வானம்பாடி நான்

கிள்ளிக்,கிள்ளி பிராண்டு

சுடு,சுடு மாம்பழம் சொல்லிக்கொடு

ஒழி நான் கண்டு பிடிக்கிறேன்

உப்பு மூட்டை சும

பாகனாய் நானுன்மேல் பவனி வர

ஒரு நாளாவது ஆனையாய் ஆகு

புல்வெளி அமரவும்

பூக்களை நுகரவும்

வேலி இருக்கட்டும்

கதவை ஏனும் திறந்து விடு

காற்றை அனுப்பி வை

கடற்கரைக்கு என்னை

அறிமுகப் படுத்த

ஆரேனும் வேண்டும்

ஆ காட்டு என்று நிலாக்காட்டி

உணவூட்டி மறைந்த பாட்டியை

அழைத்து வா இவ் அவைக்கு

திண்ணை என்னும்

சொர்க்க வாசலை

பழையபடி

திருத்தி அமை

இப்போதெல்லாம்

சீரியல்கள் பந்திக்கு

இலை போட வேண்டாம்

சீதேவிகள் பரிமாறட்டும்

பௌர்ணமி பால் சோற்றால்

எனக்கொரு பந்திவை

விஞ்ஞானத்தை விரல் தும்பில்

வை குண்டம்போல் வைத்திருப்பதாய்

பீத்துகிற பேமாளிகளிடம்

அடுத்த வீட்டில் வசிக்கும்

அங்கத்தவர் எத்தனை என்றால்

ஆகாயத்தை வெறிக்கிறார்கள்

அவர்களை மாற்ற அரிதாரம் பூண்

புரிதலற்ற

மனிதர்களுடன் மல்லுக்கு நிற்க

பூமி உனக்கு பொறுமை இருக்கும்

என்னால் அது இயலாது

என் தற்கொலையை பதிவு செய்

ரசனையற்ற மனிதர்களை விட்டும்

நான் காலமாகிறேன்!

**

காயச்சிறகுடன் அலையும் குருவி.

*
நீண்டதொரு வேட்டைக்குப்பின்

விதி வசமாகிறதென்

கெதி

சொல்வனங்களில் தேடியலைந்து

காய சுள்ளி புறக்கும்

கவிதை பறவை நானின்று

அலகுகளின் மொழி நடையில்

அதனாலேயே கட்டுகிறேன்

குருவிக்குரிய கூட்டு அரணாய்

சிறு கூடு

எம கண்டர்களே

இனியேனும்…,

சின்னச்,சின்ன கனவுகளை

சிதைத்து விடாதீர்கள்

அதுதான் என் மனசு

ஆற அமரும் ஆறுதல்மடியும் அதுவே

இன்றில் வசித்தல்

பெரும் பொதியின்

சுமையாகும் களத்தில்

கண்ணிழந்த உலகம்

காலாற்ற விடுவதில்லை

நிறுத்தி வைத்து

நிறுத்து,நிறுத்து கேள்வி கேட்கின்றன

சாத்தியங்களை மீறிட்டு சத்தியங்கள்

எல்லா திசைகளும்

எரிச்சலில் முடிகின்றன

பாதுகாப்புக்குள் தான்

பயப்படவேண்டியாயிற்று

வசைகளால் என் வானத்தை

வழி மறித்தவர்களை

இழப்புகள் தந்து இம்சித்தவர்களை

இரக்கமே இன்றி வஞ்சித்தவர்களை

ஆவேசத்தால் தூற்றியவர்களை

அடி மாடாய் துரத்தியவர்களை

இன்னுமென்

எதிர் பார்ப்புகளின் வேரறுத்து

கொன்றொழிக்க திட்டமிட்ட

கோடாரிக் காம்புகளை

நினைந்தபடி அலையும் குருவி நான்.

*

தன்னால் நிரம்பி வழியும் / நேதாஜிதாசன் ( அறிமுகக் கவிஞர் )

download

தேர்ந்த கதைசொல்லி

புதியதாக கட்டிய வீடு
வீட்டின் சுவர் எல்லாம் கடந்த காலம்
வீட்டின் சன்னல் எல்லாம் எதிர்காலம்
வீட்டின் உள்ளே எல்லாம் நிகழ்காலம்
வெளியில் இருந்து பார்த்தால் வீடு
கண்ணுக்கு தெரியாது
அந்த இடத்தில் அடையாளத்திற்கு
வேப்பமரம் நட்டுவைத்து திரும்பி பார்த்தேன்
பயங்கரமான மரமாக வளர்ந்திருந்தது
யாரை பொறுத்த வரைக்கும் அங்கு வீடு இல்லை
ஆனால் என் கடிகாரத்திடம் கேட்டால் சொல்லும் டிக் டிக் என திகிலுட்டிக்கொண்டே அந்த வீடு கட்டப்பட்ட கதையை
தேர்ந்த கதைசொல்லி என் கடிகாரம்
ஆம்
உன் கடிகாரமும்
உன் கடிகாரத்தை கொடு
என்ன கதை என கேட்போம்
வா நண்பா

*
கேட்டிருக்கவேமாட்டேன்

உணர முடியாத உணர்வு ஒன்றை
உணர்கிறான்
அவனிடம் கடனாக அந்த உணர்வை கேட்டால் உன்னால் முடியாது என்கிறான்
இப்போது உணரவியலாத உணர்வின் ஏக்கத்தில் அமர்ந்திருந்தேன்
இப்படி முன்பே உணர்ந்திருந்தால்
நான் அவனிடம் கேட்டிருக்கவேமாட்டேன்

*

தன்னால் நிரம்பி வழியும்

எப்போதுமே எங்கும் இருக்கும் ஒன்று
எங்கேயும் எப்போதாவது இருக்கும் ஒன்று
இரண்டு எதுவென தெரியவேண்டுமா
எப்போதும் செய்வதை எப்போதாவது செய்
எப்போதாவது செய்வதை
எப்போதும் செய்
தன்னால் நிரம்பி வழியும் கேள்வி

*
வேடம்

பக்தர்கள் வருவதும் போவதுமான
கோவில் அது
நிழல்வெளவால்களின் தலைகீழ் தேசம் அது
மூலவர் யார் என்று பார்த்தால்
பக்தன்
பக்தன் யாரென்று பார்த்தால்
மூலவர்
பூசாரிக்கு கறுநீல வேடம்

*
எப்போது

சாவை இழந்தேன்
வாழ்க்கை
வாழ்க்கையை இழந்தேன்
சாவு
எப்போது இந்த இரண்டையும் களைந்து புதியதொன்றை காண?

•••

அக்கா ( கவிதைகள் ) / வினையன்

images (13)

காணி நிலமதில்
கம்பும்,கேழ்வரகும் பயிரிட்டு
களை பறித்து களைத்திருந்தாள்
கிராமத்து சீதை.

ஏர்க்கலப்பை
காளை மாடு
தார்க்குச்சி சகிதம்
முண்டாசோடு வந்து நின்றான்
விவசாயி இராவணன்.

கலப்பை பிடித்த கையது
களவு செய்ய நீண்டதில்லை

ஊர்ப்பண்ணை இராமனுக்கு
நிச்சயித்திருந்த சீதையை,
கலப்பையிலமர்த்தி
வந்துவிட்டான்.

யானோ உத்தமன்
யாரவன் இராவணன்?

சிற்றோடைக்கு நடுவில்
பாலமமை
காக்கை,குருவிகளை
சுமந்து வரச்சொல் மூங்கில்களை

அனுமனைத் தூதனுப்பு
செருப்பை ஊர்ப்பண்ணையாக்கு
ஞான் போறேன் வனவாசம்.

நோகாமல் நொங்கு தின்னும்
ஊர்ப்பண்ணையை கடவுளாக்கு

தூக்கிச் சென்றவளை
தூக்கத்திலும் சீண்டாதவனை
அசுர,சூத்திரனாக்கு.

டும்…டும்…டும்

வில்லை உடை
ராமா…!!!
மீண்டும்
கரிய இரவொன்றில்.

•••

கருப்பஞ் சருகு வேஞ்சையில்
களிமண் சுவர்க்குடிசையது
அக்கா ஓடியாடி கொலுசு சத்தமிட
முற்றமுமில்லை,கொலுசுமில்லை.

மாமன்கள் வாங்கித் தந்த
கருக மணிகள்
கழுத்தில் வழு வழுக்கும்
ஆயுட்கயிறுகள்.

குளத்தங்கரை குளியல்
கோயில் திருவிழா
காரிய வீடுகளென
அக்காவின் பங்கு அரிது.

வீட்டுத்தோட்டத்தில்
வேப்பம்பழம் பொறுக்கி
பனங்கிழங்கு தோண்டி காசாக்கி
நெல்லுச்சோறு திங்க
சேத்து வச்சு தந்த அக்கா….

அடுக்குமாடிக் கட்டிடத்தில்
கலவை சட்டி தூக்கி
கால் பொத்து கை பொத்து
அயர்ந்து வீடு சேர்கையில்

ஆயிரஞ் சொட்டு கண்ணீர்
இதயத்தில் ஓடுகிறது.

••••••

விற்பனைக்கு அல்ல. / சத்தியப்பிரியன்.

images (16)

டவுன் பஸ் அந்த நகைக் கடைக்கு ஐம்பது அடி முன்பே பயணிகளை இறக்கி விட்டது. லக்ஷ்மி தனது கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த மஞ்சள்பையைக் கைகளில் இறுக்கி வைத்தபடி கீழே இறங்கினாள். அது தீபாவளி சீசன் என்பதால் கூட்ட நெரிசலில் ஜேப்படி நடப்பதற்கு வாய்ய்ப்புகள் அதிகம். அவள் கையில் சுருட்டி வைத்திருக்கும் மஞ்சள்பை அவளுடைய முழு வாழ்வின் கனவு. அதனை அத்தனை எளிதில் பறிகொடுக்க அவள் தயாராக இல்லை.

அந்த நகைக் கடையை இதே வீதியில் கடந்து செல்லும்போது பலமுறை கவனித்திருக்கிறாள். அவள் சமையல் வேலைக்குச் செல்லும் இரண்டு மூன்று வீடுகளில் அந்த வீட்டு மனிதர்கள் அந்தக் கடையின் மகாத்மியத்தைப் பற்றிக் கூறும்போது செவி மடுத்துக் கேட்டிருக்கிறாள்.. மேலும் லக்ஷ்மி வீட்டில் உள்ள தனது ஒரே பொழுதுபோக்கு சாதனமான தொலைக்காட்சி பெட்டியில் தோன்றும் நகைக்கடை விளம்பரங்களில் பார்த்திருக்கிறாள். கைராசி,சேதாரம் போன்றவற்றை விட அவர்களுடைய கடை சேலத்தில் மட்டும் அதுவும் கடைவீதியில் மட்டும் இருப்பது என்னவோ லக்ஷ்மிக்கு அதன் மீது ஒர் அபிமானம் உண்டு.

தனது வாழ்வின் லட்சியமான இரண்டு குடைகளுடன் கூடிய ஒரு நீண்ட நீலக்கல் தொங்க, வெளிப்பகுதி முழுவதும் வேலைப்பாடுடன் சின்ன சின்ன நீல மணிகளால் கோர்க்கப்பட்ட ஒரு ஜோடி அழகிய ஜிமிக்கியை அந்தக் கடையில்தான் வாங்க வேண்டும் என்பது அவளுடைய ஆசை.

“ நாளைக்கு போனஸ் போடப்போறாங்க . என்ன வேணும் லக்ஷ்மி உனக்கு ? “என்றான் ரங்கன் முப்பது வருடங்களுக்கு முன்னால். அப்பாவின் சொற்ப சம்பாதியத்தில் லக்ஷ்மிக்கு குபேரன் மாப்பிள்ளையாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் ரங்கசாமி உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள துடிப்பான கணவன். அழகன். கம்பீரமானவன். அவனுடைய அழகிய சிகை அவன் முன்நெற்றியை மறைக்கும்போது மேலும் அழகாகத் தெரிவான். அப்போது அவள் ஒருசில உலகங்களுக்குச் சொல்லாமல் சென்று வருவாள்.

“ நீலக்கல் வச்ச ரெட்டை குடை ஜிமிக்கி “ என்றாள் ரங்கசாமியின் சிகையை அளைந்தபடி. அவனுடைய தாய் தந்தையர் அவனுடைய இரண்டு சகோதரிகளுடன் ஆறுபேர் கொண்ட மிகச் சிறிய அந்த ஒண்டுக் குடித்தனத்தில் இப்படிச் சிகையை அளைந்து அவனுடன் அவள் பேசுவதற்கு அமையும் சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவு.

“ எத்தனை பவுனில்? “

“ அந்த அளவுல பண்ணனும்னா குறைஞ்சது ஒன்றரை பவுன் வேணும்”

ரங்கசாமி சிரித்தான்.

“எனக்கு போனஸ் வெறும் ஆயிரம் ரூபாய். அப்பா அம்மாகிட்ட கொடுத்தது போக உனக்கு நூறோ இருநூறோ கொடுக்கலாம்னு இருந்தேன். ஏதோ புடைவை கேட்பாய்ன்னு பார்த்தா ஜிமிக்கி கேக்கிறியே . அடுத்த ஜன்மத்தில் பார்க்கலாம் “ என்றான் அவள் இடையைத் தழுவியபடி.

ஒரு சராசரி மானிட வாழ்வில் பொருளாதாரத்திற்கும் தங்கத்தின் விலைகும் நேரடித் தொடர்பு உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் பொதுமக்களின் ஒரு முதலீடாக இருப்பதால் அதன் பயன்பாடு எளிதில் கீழ்தட்டு மக்களைச் சென்றடைவதே இல்லை. ஆனால் லக்ஷ்மியின் கனவு வெறும் பொருளாதாரம் சார்ந்ததில்லை. அவள் அந்த ஜிமிக்கியை ஒரு சாதாரணப் பெண் அதன் அழகியல் தன்மைகளில் எளிதில் கவரப்பட்டு ஆசை கொள்வாளே அதே மாதிரிதான் ஆசைபட்டாள்.

“ எங்கே புடிச்ச இந்த நீலக்கல் வச்ச ரெண்டு குடை ஜிமிக்கியை ? “ என்றான் ரங்கசாமி.

லக்ஷ்மி ஆவலுடன் “ நதியா ஒரு படத்தில் கல்யாணகோலத்தில் வந்து நிப்பா. அப்போ அவ இந்த நீலக்கல் வச்ச ஜிமிக்கி போட்டிருப்பா. அவ முகத்துக்கு அவ்வளோ நல்லா இருக்கும். அன்னிலருந்து எனக்கு அதே மாதிரி ஒரு ஜிமிக்கி வாங்கணும்னு ஆசை “ என்றாள்.

“ சினிமால காட்டுவதெல்லாம் ஒரிஜினல் இல்லை. டூப்ளிகேட்.”

“ நான் ஒரிஜினல்தானே?”

“ ரொம்ப நாள் ஆகும் லக்ஷ்மி “

“ ஆகட்டும் நான் நாளைக்கே வேணும்னு கேக்கலை. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்ப்போம். அப்புறமா வாங்கலாம். ஒருவேளை ஜிமிக்கி வாங்கணும் என்பதால் நம்மோட சேமிக்கும் பழக்கம் மேலும் வலுப்படலாமில்லையா? “ என்றாள்.

download (5)
மறுநாளே அவன் லக்ஷ்மியை தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான். அவள் பெயரில் கணக்கு ஒன்றைத் துவக்கினான். அந்தக் கணக்கில் அவளிடம் கொடுக்கலாம் என்று வைத்திருந்த இருநூறு ரூபாயை போட்டுக் கணக்குப் புத்தகத்தை லக்ஷ்மி கையில் கொடுத்து “ மாசா மாசம் இதில் நம்மால எவ்ளோ சேமிக்க முடியுமோ அதைப் போடுவோம். என்னிக்காவது ஒருநாள் நீ ஆசைப்பட்ட நீலக்கல் ஜிமிக்கி உன் காதில் தொங்கும் சரியா? “ என்றான்.

மறுமாத சம்பளம் ரங்கசாமி வாங்குவதற்குள் லக்ஷ்மியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரட்டி போட்டது போலானது. தொடர்ந்து இரவு ஷிஃப்ட் வேலைக்குப் பனிவிழும் இரவுகளில் சைக்கிளில் அவன் தொழிற்சாலைக்கு ஐந்து கிலோமீட்டர் சென்றதால் சளி என்று கண்டறியப்பட்ட நிமோனியா காய்ச்சல் நெஞ்சில் உறைந்து ரங்கசாமியின் உயிரைக் குடித்தது. அவர்கள் இருவருக்கும் நடுவில் பல தழுவல்களைப் பெற்று ஜொலித்திருக்க வேண்டிய தாம்பத்தியம் ஒரே ஆண்டில் கருகிப் போனது.

ஒரு சராசரி பெண்ணிற்கு நேரும் அவலம் அவளுக்கும் நேர்ந்தது. மேலும் இரண்டு பெண்கள் திருமணமாகாமல் வீட்டில் இருக்கும்போது மகனை நினைவுபடுத்தியபடி மருமகள் இருப்பதை விரும்பாத ரங்கசாமியின் பெற்றோர் அவளை அவளுடைய பிறந்த வீட்டில் கொண்டு விட்டனர். மீண்டும் பிறந்தவீட்டின் இன்னல்களுடன் தனது வாழ்க்கையை ஒரு இளம் கைம்பெண் என்ற பட்டத்தையும் சுமந்து கொண்டு போராடத் தொடங்கினாள். சுயசம்பாத்தியம் இல்லை என்றால் பெண்ணிற்கு மதிப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டபோது வாழ்க்கை ஒரு சவாலாக நின்றது. அவளைப் போன்ற பெண்கள் சுயசம்பாத்தியம் என்று கிளம்பினால் ஒன்று, பற்றுபாத்திரம் தேய்த்து வீட்டை பராமரிக்கும் ஒரு பணிப்பெண்ணாகவோ, அல்லது இரண்டு மூன்று இல்லங்களில் அடுப்படியில் வெந்து சமையல்காரியாகவோதான் செல்ல முடியும் என்பது முகத்தில் அறைந்தது.

லக்ஷ்மி சமையல் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். சமையல் வேலையும் அவளுக்கு அதிகமாகக் கொட்டிக் கொடுத்து விடவில்லை. தனது தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காமல், தன் மீது விழும் பரிதாபப் பார்வைகளையும் தடுக்கமுடியாமல், தனது இளமையையும் காத்துக் கொண்டு, சுடும் அடுப்புடன் மனிதர்களின் சுடுசொற்களையும் தாங்கிக் கொண்டு போராடியதில் தலை நரைத்ததுதான் மிச்சம்.இரண்டு மூன்று இல்லங்களில் சமையல் வேலை செய்து பெற்றுவரும் வரும்படி ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ மட்டும்தான் உறுதுணையாக இருந்தது. உறவுகள் விலகிச் செல்லச் செல்ல ஒண்டுக் குடுத்தனங்களின் அக்கம்பக்கத்தினரே உறவுகள் ஆயினர். முடி நரைத்தாலும் பல வருடங்களுக்கு முன்னர் முளைத்த ஆசை மட்டும் நரைக்கவில்லை. நெஞ்சின் ஒரு மூலையில் அந்த நீலக்கல் தொங்கும் இரட்டைக் குடை ஜிமிக்கி அசைந்து கொண்டே இருந்தது.

லக்ஷ்மி பணம் சேர்க்கத் தொடங்கினாள். கடைகளுக்கு இட்லி செய்து கொடுத்தால் கணிசமாகக் காசு வருகிறது என்று கேள்விப்பட்டுப் பெரிய பெரிய இட்லி குண்டானும் கொடியடுப்பும் கொண்டுவந்து போட்டு விடிகாலையில் நான்குமணிக்கு எழுந்து நூறு இட்லிகள் செய்து கடைகளுக்கு சப்ளை பண்ணத் தொடங்கினாள். தரத்தில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத அவளுடைய உழைப்பிற்குப் பலன் இருந்தது. மளமளவென்று சின்னஞ்சிறு ஓட்டல்களில் அவளுடைய இட்லிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சிரார்தம், சீமந்தம் போன்ற ஒருநாள் சமையல்களுக்குச் சென்றுவரத் தொடங்கினாள். கையில் கொஞ்சம் பணம் சேரத் தொடங்கியது. தனது ஒரே சொத்தான பெயிண்ட் உதிர்ந்த டிரங்க் பெட்டியின் அடியில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு புதைத்து வைத்திருந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தை அந்த வங்கிக்கிளையில் சென்று புதுப்பித்தாள். அவர்கள் கேட்ட ஆதாரங்களையும் புகைப்படங்களையும் அளித்துப் பணம் சேர்க்கத் தொடங்கினாள். தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தின் செயல்முறைகள் அவளை வெருட்டாமல் புரிந்து கொள்ளுதலின் ஆர்வம் காரணமாக எளிதாகவும் வியப்பூட்டுவதகவும் இருந்தது. தனக்குக் கிடைத்த ஒரு தனிமை சந்தர்ப்பத்தில் அவர்கள் கொடுத்த பிளாஸ்டிக் கார்டை தேய்த்து அவள் அந்த இயந்திரத்தை இயக்கிப் பணம் எடுத்தபோது ஒரு சிறுகுழந்தையைப் போலக் கைதட்டிக் குதூகலித்தாள்.

“ இந்த வயசில் நீ ஜிமிக்கி மாட்டிப்பியா ? “ என்றாள் பக்கத்துக் குடித்தனத்தைச் சேர்ந்த ரேவதி. ரேவதிக்கு இவளைப்போல அடுப்பில் அல்லல் படும் அவதி இல்லை. ஒரு மகன் ஒரு மருமகள் பேரன் ஒருவன் என்ற குடும்பம் அவளுடையது என்றாலும் லக்ஷ்மியின் முழு வாழ்க்கையையும் அறிந்த தோழமையுள்ள ஜீவன்.

லக்ஷ்மி கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். போராட்டமும் தனிமையும் அனுபவக் கோடுகளால் முகத்தின் அழகை மறைத்து வயதைக் கூட்ட முற்பட்டாலும், அவன் பற்றி இழுத்த கரங்களின் நினைவிற்காக அந்த ஜிமிக்கியின் மீதான ஆசை மறையவில்லை என்பதை அந்தக் கண்ணாடியில் கண்டுகொண்டாள்.

“ லக்ஷ்மியம்மா உங்க நதியா நடிச்ச படம் டிவியில் போடறான். “ என்று ரேவதியின் மருமகள் நித்தியா கூவினாள். எப்போது டி.வியில் அந்தப்படம் போட்டாலும் தன்னை அழைக்குமாறுக் கூறியிருந்தாள். லக்ஷ்மி அவசரமாக அங்கு சென்றாள்.

நதியாவை மணப்பெண்ணாக அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். நெற்றிச் சுட்டி,காசு மாலை, அங்கி, ஒட்டியாணம் எல்லாம் போட்டுக் கொண்ட நதியா தனது காது தோடுகளைக் கழற்றியபடி “ இந்தத் தோடு எடுப்பா இல்லையே “ என்றதும் அவள் தந்தை ஒரு பேழையை நீட்டுகிறார். நதியா அந்தப் பேழையைத் திறக்க உள்ளே அந்த இரட்டைக் குடை நீல ஜிமிக்கி ஜொலித்தது.

“ இதுவா ? “ என்றாள் ரேவதி.

“ ஆமாம் “ என்றாள் லக்ஷ்மி.

“ லக்ஷ்மி வயசு என்பதை விடு. உனக்கு எதுக்கு லக்ஷ்மி ஜிமிக்கி? “ என்றதும் லக்ஷ்மிக்கு உனக்கு என்ற சொல்லின் பொருள் புரிந்து வலித்தது.

அதனைப் புரிந்து கொண்ட நித்தியா லக்ஷ்மியை கட்டியணைத்து “ எங்க லக்ஷ்மியம்மாவுக்கு என்ன குறை? அந்த ஜிமிக்கி நதியாவை விட லக்ஷ்மியம்மாவுக்குத்தான் இன்னும் நல்லா இருக்கும் “ என்றாள்.

“ ரெண்டு பவுனுக்கு மேல இருக்கும் போலிருக்கே லட்சுமி.? அம்பதாயிரம் ரூபாய்க்கு மேல ஆகாது?

““ கொஞ்சமாவா இந்த நகைக்கடைக்காரனுங்க செய்கூலி சேதாரம் போடறானுங்க? கண்டிப்பா இருக்கும்” என்றாள் நித்தியா.

“ உன்னிடம் அவ்வளவு பணம் இருக்கா லக்ஷ்மி?“ ரேவதி கேட்டாள்.

“ நாலு வருஷமா என்னுடைய உழைப்பு பாங்க் அக்கவுண்ட்ல அம்பதாயிரமா சேர்ந்திருக்கு ரேவதி. “

முதல் நாள் இருபத்தையாயிரமும் மறுநாள் இருபத்தையாயிரமுமாக மொத்தம் ஐம்பதாயிரம் பணத்தைத் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தின் மூலம் எடுத்து ஒரு பழைய பர்சினுள் வைத்துக் கொண்டு அந்தப் பர்சை ஒரு மஞ்சள் பையினில் சுற்றி எடுத்துக் கொண்டு லக்ஷ்மி கூட்டம் மிகுந்த கடை வீதி நோக்கிக் கிளம்பினாள்

உயரமான பளிங்குக் கற்களால் ஆன வாசற்படிகள். பெரிய பெரிய கண்ணாடிக் கதவுகள். ஒவ்வொருமுறையும் அந்தக் கதவுகள் திறந்து மூடப்படும்போது குளிர்காற்று லக்ஷ்மியின் முகத்தைத் தழுவியது.

“ என்னம்மா வேணும் ? ‘ உயரிய ஆடை அணிந்து சென்றவர்களை எவ்வித கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுமதித்த வாயில்காப்போன் இவளைப் பார்த்ததும் அதட்டலாகக் கேள்வி கேட்டான்.

“ ஆ ! ரெண்டு கிலோ கோதுமையும் ஒரு லிட்டர் சமையல் எண்ணையும் வாங்க வந்தேன் “ என்றாள் லக்ஷ்மி விருட்டென்று.

“ நக்கலா? “ என்றான் வாயில்காப்போன்.

“நகைக் கடைக்கு எதுக்கு வருவாங்களாம்? “என்று லக்ஷ்மி உள்ளே நுழைந்தாள்.

“ என்ன வாங்க வந்த? “ என்றான் அவன் ஒருமையில்.

“ சொன்னாத்தான் உள்ள விடுவியா?“ என்றாள் லக்ஷ்மியும் ஒருமையில்.

“ அடிக்கடி வந்தா எது எது எங்க எங்க இருக்கும்னு தெரியும். நீ புதுசுதானே அதான் வளையலா தோடா சங்கிலியா மூக்குத்தியான்னு சொன்னா அந்த இடத்துக்கு அனுப்பி வைப்பேன். உன்னைப் பார்த்த நகை வாங்க வந்தவ மாதிரி தெரியலை அதான் கேட்டேன்.“ என்றான் அவனும் விடாமல்.

“ ஜிமிக்கி பார்க்கணும் “ என்றாள். அதன்பிறகே அவன் உள்ளே ஜிமிக்கி பிரிவிற்கு அனுப்பி வைத்தான்.

அங்கும் உருவு கண்டு எள்ளுதல் நிகழ்ந்தது. அவளை ஒருவரும் அமரச் சொல்லி நிர்பந்திக்கவில்லை. பெரிய பெரிய விளக்குகளின் கண்ணைப் பறிக்கும் ஒளியில் அவள் மேலும் மங்கலாகத் தெரிந்தாள். வசதி படைத்தவர்கள் நாற்காலிகளில் அமர்த்தப்பட்டு உபசரிக்கபட்டதற்கு அவள் வருத்தப்படவில்லை. தன்னிடம் ஒருவார்த்தை கூடப் பேசாமல் முகம் பார்ப்பதைத் தவிர்ப்பதை எப்படி இவர்களால் இவ்வளவு கச்சிதமாகச் செய்ய முடிகிறது என்பது புரியவில்லை. அவள் வெறுத்துப் போய் நுழைவுப்பகுதியில் போடப்பட்டிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தாள்.

“ நகைக்கடைகள் கூடப் பாவப்பட்டவங்களுக்குக் கிடையாது போலிருக்கு “ என்றாள் சற்று வருத்தப்பட்ட குரலில். தான் பேசியது ஒருவருக்கும் கேட்டிருக்காது என்றுதான் நினைத்தாள். ஆனால் அருகில் நடுத்தர வயதில் மிடுக்கான உடை அணிந்து தங்கமுலாம் போட்ட கண்ணாடி அணிந்த ஒரு நடுவயதுக்காரர் “ என்ன சொன்னீங்கம்மா? “ என்றார். அவள் பதறிப் போய்த் திரும்பிப் பார்த்தாள்.

“ பதறாதீங்க. நீங்க என்ன சொன்னீங்களோ அதைத் திருப்பிச் சொல்லுங்க “ என்றார்.

“ பின்னே என்னங்க. நான் வந்து அரைமணி நேரமாச்சு. எனக்கு என்ன வேணும்னு யாரும் கேட்கலை. நானும் மனுஷிதானே? என்னைப் பார்த்தா திருட்டு நகை விக்க வந்தவளை மாதிரியா இருக்கு ? இந்தப் பைக்குள் சுளையா ஐம்பதாயிரம் ரூபாய் வச்சிருக்கேன். “ என்றாள்.

“ என்ன வாங்க வந்தீங்க? ‘

“ ஜிமிக்கி “

“ என்ன மாதிரி மாடல் ? “

“ நீலக்கல் வச்ச இரட்டைக் குடையுடன் கூடிய ஜிமிக்கி “

“ ஏதாவது படம் வச்சிருக்கீங்களா?

“ படமெல்லாம் இல்லை. ஆனா நேத்திக்கு மதியம் நதியா நடிச்சு ஒரு படம் டி.வியில் காட்டினாங்க. அதில் நதியா கல்யாணம் பண்ணிகிறப்போ இந்த ஜிமிக்கி போட்டிருப்பா. ‘

“ஒ அந்தப் படமா? அந்த ஜிமிக்கி இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமாச்சே? இப்ப அந்த மாடல் அவுட் ஆஃப் ஃபாஷன் ஆயிடுச்சேம்மா ? “

லக்ஷ்மிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ இருந்தா பார்க்கணும். இல்லைன்னா வேற கடைக்குப் போக வேண்டியதுதான் “ என்று முனகினாள்.

“ குறிப்பா இந்த ஜிமிக்கிதான் வேணும் அப்படிங்கறதுக்கு ஏதாவது சொந்தக் காரணங்கள் உண்டம்மா? இது உங்க சொந்த விஷயம்னா சொல்ல வேண்டாம் “ என்ற அந்த நடுத்தரவயதுக்காரரின் வினாவுதலில் ஒரு தனிப்பட்ட அக்கறை தெரிந்தது.

“ என் கணவனுக்கும் இந்த ஜிமிக்கிக்கும் ஒரே வயசு. இருபத்தஞ்சு வருஷம். “ என்றாள் லக்ஷ்மி.

அந்த மனிதருக்குத் தூக்கிவாரி போட்டது. அவளுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரிந்துகொள்ள அந்த ஒரு வாசகம் போதுமானதாக இருந்தது என்றாலும் லக்ஷ்மி அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனது கதையை அவரிடம் கூறத் தொடங்கினாள். கேட்டுக் கொண்டிருந்தவருக்கு இரண்டு மூன்று முறை தொண்டை கமறியது.

அந்த நடுத்தரவயதுக்காரர் தனது கைப்பேசியிலிருந்து இணையம் மூலம் ஒரு படத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை அண்மைபடுத்தி லக்ஷ்மியிடம் காட்டினார்.

லக்ஷ்மி முகமெல்லாம் மலர “ இந்த ஜிமிக்கிதான் “ என்றாள்.

“ சுந்தரம் “ வாசலில் இருந்த வாயிற்காப்போனை அழைத்தார்.

“ சொல்லுங்க முதலாளி “ என்று வாயிற்காப்போன் வந்து நின்றான்.

லக்ஷ்மி தனது சேலைத் தலைப்பால் முன்நெற்றியையும், பிடரிப் பகுதியையும் துடைத்துக் கொண்டாள். இத்தனை நேரம் அவள் பேசிக் கொண்டிருந்தது அந்தக் கடைமுதலாளியிடம் என்பது புரிந்தது.

“ நான் சொன்னேன்னு ஆசாரி மாணிக்கத்தைக் கூட்டிகிட்டு வா “ என்றார் அந்தக் கடை முதலாளி.

அந்த நகைக்கடையின் முதன்மை ஆசாரியான மாணிக்கம் என்பவன் உயரிய ஜீன்ஸ் பேண்டும் ஒரு டீ ஷர்டும் அணிந்தபடி இருந்தான்.

“ மாணிக்கம் இதுதான் ஜிமிக்கி ஒன்றின் மாதிரி வடிவம். உன்னுடைய மெயிலுக்கு அனுப்பியிருக்கேன். எவ்வளவு நாளில் செஞ்சு முடிக்க முடியும்னு சொல்லு”

‘ கலை ட்ரான்ஸ்போர்ட் பாஸோட பையன் திருமணத்துக்கு நகைகள் பண்ண ஆர்டர் இருக்கு சார். எப்படியும் ஒருவாரம் ஆகும் ”

“ ஒரு வாரம் ஆகுமாம் லக்ஷ்மியம்மா. பரவாயில்லையா? “

லக்ஷ்மி தனது மஞ்சள் பையைத் திறந்து அதிலிருந்த பர்சிலிருந்து நோட்டுக்களை எண்ணத் தொடங்கினாள்.

“ உங்ககிட்ட பணம் இருக்கு என்பதை எனக்குச் சொல்லவேண்டாம் அம்மா” என்றார் நகைக்கடை முதலாளி தனது தங்கமுலாம் பூசப்பட்ட கண்ணாடியை கழற்றி நாசூக்காகத் துடைத்தபடி.

“ இல்லை அட்வான்ஸ் எதுவும் குடுக்கணுமா? “

“வேண்டாம். இன்னிக்கு வெள்ளிக்கிழமை சரியா அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை வாங்க. உங்க ஜிமிக்கி ரெடியா இருக்கும். இது உங்களுக்குன்னு வடிவமைத்துக் கொடுக்கபோற ஜிமிக்கி. இதுக்கு உங்க கிட்டேயிருந்து ஒரு பைசா கூடச் செய்கூலி சேதாரமா வாங்க மாட்டேன். போதுமா ?.”

“ அது எனக்கு ஏதோ தர்மம் பண்ணுவது போலாயிடாதா? ” என்றாள்.

கடைக்காரர் அதிசயித்துப் போனார்.

“ சரிம்மா, குறைந்த அளவு சேதாரமும் செய்கூலியும் வாங்கிக்கிறேன். சம்மதமா? ” என்று கேட்டுவிட்டுச் சிரித்தார். லக்ஷ்மியும் சம்மதம் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினாள்.

லக்ஷ்மி முதல் நான்கு நாட்கள் ஜிமிக்கியைப் பற்றிய நினைவு இல்லாமல் இருந்தாள். ஓரிரு சமயம் ஒரு சிறுமியைப் போலத் தான் வயதுக்கு மீறிய ஆசைகளில் மூழ்கிக் கிடக்கிறோமா என்று தோன்றியது. இருப்பினும் அந்த ஜிமிக்கியுடன் அவனில்லாமல் கடந்து போன தனது வாழ்க்கையின் போராட்டம் நினைவுக்கு வரும். உடனே தனக்கு அந்த ஜிமிக்கி ஒரு வெற்றியின் அடையாளம் என்று தோன்றும். வாழ்க்கை இதுபோன்ற இலக்குகளை நிர்ணயித்துப் பயணிப்பதில்லை எனினும் பெண்கள் இது போன்ற இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதும், அதனை அடைவதும், அவ்வாறு அடைந்ததை நினைவுகூராமல் கடந்து விடுவதும்தான் வாடிக்கை. லக்ஷ்மிக்கு அப்படி இல்லாமல் தனது அற்ப ஆசையையும் அதனை அடையப் போராட வேண்டியிருந்ததையும் நினைத்துப் பார்க்கச் சந்தர்ப்பம் நேரிட்டிருக்கிறது.

மேலும் அது கல்யாண சீசன் என்பதால் அவளுக்கு நன்கு பரிச்சியப்பட்ட பரிசாரகரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடைய கல்யாண காண்டாரக்ட் ஒன்றிற்குக் கூடமாட ஒத்தாசை செய்யும் பணி வேறு இருந்ததால் அக்கம்பக்கம் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் போனது.

ஐந்தாம் நாள் முழுவதும் அடித்துப் போட்டது போல உறங்கிக் கிடந்தவள் பக்கத்து வீட்டு ரேவதியின் வீட்டில் சப்தமே இல்லையே என்று விசாரிக்கக் கிளம்பினாள்.

“ என்னவோ தெரியல லக்ஷ்மி. என் மகன் முருகேசன் போன வாரம் மூச்சு இழுக்குதுன்னு சொல்லிகிட்டே இருந்தான். நெஞ்சு வலியா இருக்குமோன்னு டாக்டருங்க சந்தேகப்பட்டாங்க. என்னென்னவோ வைத்தியமுறையில சிகிச்சை கொடுத்தாங்க. அவங்க பண்ணின ஒரு டெஸ்ட் அவனுக்கு ஒத்துக்காம போயி ரெண்டு சிறுநீரகமும் பழுதாயிடுச்சாம். ஏதோ டயாலிசிஸ்னு சொல்றாங்களே அது ரெண்டு மூணு வாட்டி பண்ணினா கிட்னி ரெண்டும் தானே செயல்பட ஆரம்பிச்சுடுமாம். கவர்மெண்டு ஆசுபத்திரியில் உடனே செய்ய வசதியில்லையாம். பிரைவேட் ஆசுபத்திரியில் கொறஞ்சது அம்பதாயிரம் ரூபா செலவாகுமாம். நான் அவ்வளவு பணத்துக்கு எங்க போவேன் லக்ஷ்மி? “என்று அரற்றினாள்.

லக்ஷ்மி அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு ஓடினாள். சீரற்ற சுவாசத்துடன் நித்தியாவின் கணவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

நித்தியாவும் இன்னும் கொஞ்சம் புரியும் மொழியில் ரேவதி கூறியதையேதான் மீண்டும் கூறினாள்.

“ இப்பவே உன் புருஷனைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டைக் கவனி. “ என்றாள் லக்ஷ்மி எவ்வித தயக்கமும் இல்லாமல்.

“ மாமி கொறஞ்சது நாப்பதாயிரம் செலவாகுமாம். மருத்துவம் கூட ஏழைகளுக்கு எட்ட முடியாத உயரம் மாமி. ”

“ எட்ட முடியும் “ என்று லக்ஷ்மி தனது மஞ்சள் பையை அவளிடம் நீட்டினாள்.

“ மாமி “ நித்தியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது.

“ இது உங்களோட இருபத்தஞ்சு வருஷக் கனவு மாமி. “

“ ஆனா இது உன்னோட இருபந்தஞ்சு வருஷ நிஜம் நித்தியா. என்னிக்குமே கனவு நிஜமாகும்போது உனக்கும் உன் புருஷனுக்கும் ஒரே வயசுதான் இருக்கணும். உனக்கு அம்பது வயசும் உன் புருஷனுக்கு இருபந்தஞ்சு வயசும் இருக்கக் கூடாது. இது உனக்கு இப்ப புரியாது. இல்லை இல்லை. உனக்கு இது புரியவே வேணாம். வாங்கிக்கோ. எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு டயாலிசிஸ் பண்ணி குணப்படுத்தறியோ அவ்வளவு சீக்கிரம் பண்ணு.“ என்றாள்

அடுத்த மூன்றுநாட்கள் நித்தியாவின் கணவனைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து மாற்று ஏற்பாடாகச் செயற்கைச் சிறுநீரகச் சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று டயாலிசிசில் அவனுடைய சிறுநீரகம் உயிர்ப்பிக்கப்பட்டு நித்தியாவின் மாங்கல்யம் காப்பாற்றப் பட்டது. நித்தியா லக்ஷ்மியின் காலில் விழுந்து அழுதாள்.

‘ கண்டிப்பா அவரும் நானும் எப்பாடு பட்டாவது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்திடறோம். நீங்க கண்டிப்பா அந்த ஜிமிக்கியை போட்டுக்கணும். “ என்றாள்.

“ போடி பைத்தியக்காரி. இப்பவே பாதி முடி எனக்கு நரைச்சாச்சு. நீ எப்பத் திருப்பிக் கொடுக்கிறது நான் எப்ப மாட்டிகிறது. புருஷன்தான் ஒரு பெண்ணுக்கு ஜிமிக்கி. சரியா?. அசடு கண்ணைத் துடச்சிக்க ” என்றாள்.

அதன்பிறகு அவள் அந்தநகைக் கடை இருந்த வீதியின் பக்கம் கூடப் போகவில்லை. ஆர்டர் கொடுத்த நகையை வாங்கவும் இல்லை; வேண்டாம் என்று நிராகரிக்கவும் இல்லை. நேரில் சொல்லாமல் இருக்கிறோமே என்று ஒரு குற்ற உணர்வு மட்டும் இருந்தது.

ஒருநாள் கடைவீதியில் வேறு வேலையாகப் போய்க் கொண்டிருந்தபோது கப்பல் போன்ற கார் ஒன்று அவள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து அந்த நகைக்கடை முதலாளி வெளியில் இறங்கினார். லக்ஷ்மிக்கு குப்பென்று வேர்த்தது. இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவளுக்குச் சங்கடமானது. இதுபோன்ற தருணங்களில் அதிகமாக வாய் விட்டு மாட்டிக் கொள்வதைவிட மௌனமாக இருப்பது நல்லது என்ற வகையில் அவள் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

“ நீங்க வரமுடியாமல் போனதுக்கு உங்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம். அதற்குள் என்னால் தலையிட முடியாது. இருந்தாலும் அந்தக் காரணத்தை அறிஞ்சுக்க விருப்பப்படறேன்.இங்க சொல்றதுக்கு உங்களுக்குக் கஷ்டமா இருந்தா எங்க நகைக் கடைக்கு வந்து சொல்லுங்க. நீங்க அந்த ஜிமிக்கியை வாங்கிக்காமப் போனதுக்கு எனக்குக்கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. “” என்றார்.

லக்ஷ்மி மறுப்பேதும் சொல்லாமல் அவருடைய நகைக்கடைக்குச் சென்றாள். இந்தமுறை வாயில் காப்போன் அவளை ஒன்றும் கேட்காமல் உள்ளே அனுமதித்தான். பணம் வாங்கும் இடத்திற்குப் பின்னால் கண்ணாடிக் கதவுடன் கூடிய அறை இருந்தது. அந்த அறையிலிருந்து வெளியில் வந்த ஒரு சிப்பந்தி லக்ஷ்மியை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். உள்ளே கடையின் முதலாளி ஓர் உயர்தரப் பட்டுக் கம்பளம் போர்த்தியிருந்தாற்போன்று செய்நேர்த்தியுடன் கூடிய ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எதிரில் ஆசாரி என்று அறியப்பட்ட மாணிக்கமும் அமர்ந்திருந்தான். மாணிக்கத்தின் முன்பு ஓர் அழகிய பேழை . மாணிக்கம் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

லக்ஷ்மி அந்தக் கடைக்காரர் சொன்னதும் அவர் முன்பிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவளிடம் தயக்கம் எதுவும் இல்லை. நித்தியாவின் கணவனுக்கு ஏற்பட்ட சீர்குலைவையும் அதற்குதத் தனது மொத்த சேமிப்புப் பணமும் துணை போனது குறித்தும் விவரமாகக் கூறினாள்

“ எனக்கு உங்க கிட்ட சொல்லாம இருக்கோமேன்னு வருத்தம் இருந்தது நிஜம்தான். ஆனா இதைச் சொல்ல இவ்வளவு தூரம் வரணுமான்னு ஒரு சோர்வு. என்னதா மேலோட்டமா நான் தியாகம் பண்ணிட்டதா பீத்திகிட்டாலும் இந்தக் கடையையும் இந்த ஜிமிக்கியையும் பார்க்க நேரிட்டால் உள்ளுக்குள்ள ஒரு புழுக்கம் இருக்கும் இல்லியா? அதைப் பெரிசு படுத்துவானேன்னுதான் வரலை. ”

அந்த நகைக்கடைக்காரர் பேழையைத் திறக்கப் போனார்.

“ ஒருவேளை என்னுடைய செய்கையில் உங்களுக்கு ஓர் அபிமானம் ஏற்பட்டு அதன் மூலமா இந்த ஜிமிக்கையை நீங்க எனக்கு இலவசமா கூடத் தர முன்வந்துட்டா என்ன பண்ணுவதுன்னு ஒரு பயமும் என்னுடன் கூடவே இருந்ததும் ஒரு காரணம் சார். அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கும் என் மேல் வரக்கூடாது. நானும் அப்படி ஒரு நினைப்பை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. இல்லீங்களா? அதனாலதான் வரலை.”

அவளுக்குப் பதில் சொல்ல நகைக்கடை முதலாளிக்கு வார்த்தை எழவில்லை.

“ நான் கிளம்பறேங்க “

சொல்லிவிட்டு லக்ஷ்மி அங்கிருந்து எழுந்து விட்டாள்.

அவளுக்குத் தெரியாமல் அவள் சென்ற திசையைப் பார்த்து நகைக்கடைக்காரர் ஒரு கும்பிடு போட்டார்.

அந்தக் கடையில் நுழைந்ததும் இடதுபுறத்தில் ஒரு நீள கண்ணாடி அறையும் அந்த அறைக்குள் பல பல பிரிவுகளில் அவர்களுடைய பல்வேறு அணிகலன்களைப் பார்வைக்கு வைத்து அதன் கழுத்தில் ஒரு அட்டையைக் கட்டி எடை மற்றும் விலையைக் குறிப்பிட்டிருப்பார்கள்.

நகைக்கடை முதலாளி அந்தப் பேழையிலிருந்து அந்த இரட்டைக் குடை நீலக்கல் பதித்து நீலமணிகளால் கோர்க்கப்பட்டிருந்த அந்த ஜிமிக்கி ஜதையை எடுத்தார். ஓரளவு சித்திரவேலைப்பாடுடன் கூடிய பீடம் ஒன்றை அந்தக் கண்ணாடி சுவர்களுக்குப் பின் வைத்தார். அந்தப்பீடத்தின் மேல் அந்த ஜிமிக்கி ஜதையை வைத்தார். ஒரு சிப்பந்தியிடம் சிறிய வாசகம் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பலகை ஒன்றை கொண்டுவரச் சொன்னார். அந்தப் பிளாஸ்டிக் பலகையை அந்தப் பீடத்தின் முன்பு பார்வையாளர்களும், வாடிக்கையாளர்களும் படிக்கும்வண்ணம் சாய்த்து வைத்தார். வெளியில் வந்து அந்தப் பலகையில் எழுதியிருந்ததை வாசித்தார்.

“ விற்பனைக்கு அல்ல “

—-