Category: இதழ்104

ஒரு பந்தயம் ( A Bet ) எபிரேயம் : எட்கர் கெரெட் ( Etgar Keret ) ஆங்கிலம் : மிரியம் ஷ்லேசிங்கர் ( Miriam Shlesinger ) / தமிழில் / ச.ஆறுமுகம்

download (1)

பெண் படைவீரரைக் கொலைசெய்த அரபிக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததென்ற செய்தியை ஒளிபரப்பியதால் பலதரப்பட்ட மக்களும் அது குறித்து விவாதிப்பதற்காக தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்ததாகவும் அதனால் அன்றைய மாலைச்செய்தி இரவு பத்தரை வரையிலும் தொடர்ந்ததாகவும், அதனால் `மூன்லைட்` நிகழ்ச்சியை ஒளிபரப்பமுடியவில்லையென்றும் தொலைக்காட்சியில் அறிவித்தனர். அதனால் அப்பா மிகவும் எரிச்சலடைந்தார்; என் நல்வளர்ச்சிக்காக, அவர் புகைக்கக்கூடாதென்றபோதிலும் அவருடைய நாற்றம் பிடிக்கும் புகைக்குழாயைப் பற்றவைத்தார்.

அவர், என் அம்மாவிடம் அவளும் அவளைப் போன்ற பைத்தியக்காரர்களும், வலதுசாரிகளுக்கு வாக்களித்ததால்தான் பாரசீகர்களெல்லாம் எங்கிருந்து முளைத்தார்களோ, அந்த ஈரானைப்போல நாடு மாறிப்போனதெனக் கூச்சல் போட்டார். இதற்கு நாம் பெரும் விலை கொடுக்கவேண்டியிருக்குமென்பது மட்டுமில்லை; இது நமது அறநெறி சார்ந்த மனத்திண்மையை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டிருக்கிறது – இந்த வார்த்தை நிச்சயமாக எனக்குப் புரியவில்லை – அமெரிக்கர்கள் இதை அவ்வளவு எளிதில் விட்டுவிடவும் போவதில்லை என்றார்.

அடுத்த நாள் வகுப்பில் இதைப்பற்றிப் பேசினார்கள். ஒருவரைத் தூக்கில் போடும்போது அவரது குறி பாலுறவுப்படங்களில் போலக் கடுமையாக விரைத்துக்கொள்ளுமென்றான், சியான் ஷெமெஷ். அதனால் எங்கள் வகுப்பு ஆசிரியை சில்லா, அவனை வகுப்பறையிலிருந்தும் வெளியே துரத்திவிட்டு, மரணதண்டனைத் தீர்ப்பு குறித்த அபிப்பிராயங்கள் என்று வரும்போது, அவையனைத்தும் ஒருங்குசேரும்போது, வாதங்கள் ஒட்டியோ அல்லது எதிராகவோ, எதுவானாலும், அந்த வாதங்கள் எவ்வளவுதான் நல்லவையென்றபோதிலும், அவையெல்லாமே உண்மையில் அவரவர் இதயத்துக்குள் தான் இருக்கின்றன, என்று சொன்னாள்.

அதைத்தொடர்ந்து, மூன்றாம் ஆண்டாக அதே வகுப்பில் இருக்கும் மக்கு சாச்சி, சிரித்துத்தொலைத்தது மட்டுமில்லாமல் ஆமாமாம், எல்லாமே அரபிகளின் இதயத்துக்குள்தாம் இருக்கின்றன, ஆனால், அவர்களது கழுத்தில் கயிற்றை மாட்டித் தூக்கில் போடும்போது எப்படியானாலும் அவர்களின் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுமென்று சொல்லவே, சில்லா அவனையும் வகுப்புக்கு வெளியே துரத்தினாள்.

அதன் பிறகு, இனிமேலும் இதுபோன்ற வெட்டிப்பேச்சை அவள் அனுமதிக்கப்போவதில்லையென்றும் வழக்கமான பாடங்களை மட்டுமே நடத்தப்போவதாகவும் சொல்லிவிட்டு, டன் கணக்கில் வீட்டுப்பாடத்தை எங்கள் தலையில் சுமத்திப் பழிதீர்த்துக்கொண்டாள்.

பள்ளிக்கூடம் முடிந்தபின், ஒருவரைத் தூக்கில்போட்டு, அவர் இறப்பது, மூச்சுமுட்டியா அல்லது கழுத்து முறிவதாலா எனப் பெரிய பையன்கள் மத்தியில் மிகப்பெரிய வாதம் நிகழ்ந்தது. பின்னர், அவர்கள் சாக்லேட் பால் புட்டிகளைப் பந்தயமாக வைத்து, ஒரு பூனையைப் பிடித்து கூடைப்பந்துக்கம்பத்தின் இரும்புவளையத்தில் மாட்டி, தூக்கில் போட, பூனை கடுமையாக அலறி அலறிக் கடைசியில், அதன் கழுத்து உண்மையிலேயே முறிந்துபோனது. ஆனால் மிக்கி, சாக்லேட் பாலுக்கான விலையைக் கொடுக்கவில்லை. அதற்கு அவன், கபி வேண்டுமென்றே கயிற்றை மிகக் கடுமையாக இழுத்துவிட்டானென்றும், இன்னுமொரு பூனையைப் பிடித்துத் தூக்கில்போட்டு, யாருமே தொடாமல் பார்க்கவேண்டுமென்றான்.

அவன் மட்டமான ஒரு கழுதையென்று எல்லோருக்கும் தெரியுமென்பதால், அவனை வற்புறுத்திப் பணத்தைக் கொடுக்கச்செய்தனர். நிஸ்ஸிமும் ஜிவ்வும் சியான் ஷெமெஷைப் பிடித்து மண்டையில் குட்டி, நன்றாகக் கொடுக்கவேண்டுமென்றனர்; ஏனென்றால், பூனையின் குறி விரைத்துப் பெரிதாகவேயில்லையே, அதனால் அவன் ஒரு புழுகுணிப்பயல்.

அந்தவழியாக வந்துகொண்டிருந்த, பள்ளிக்கூடத்திலேயே மிக அழகானவளாக இருக்கக்கூடிய மிச்சல் எங்களைப்பார்த்து, நீங்களெல்லாம் வெறுக்கத்தக்கவர்களென்றும் மிருகங்களைப் போன்றவர்களென்றும் சொன்னாள். நான் ஒரு ஓரமாகச்சென்று வாந்தியெடுத்தேன்; ஆனால், அதற்குக் காரணம் அவளல்ல.

••••••

கல்லான பெண் – மலையாள மொழி சிறுகதை மூலம்: : கே.பி. ஸ்ரீதேவி – ஆங்கிலம் : வசந்தி சங்கரநாராயணன் – தமிழில் : தி.இரா.மீனா

_e0264d0e-643e-11e5-8001-7ca7c7929b44

கே.பி. ஸ்ரீதேவி மலையாள இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கவர். நாவல், சிறுகதை ஆகிய இருதுறைகளிலும்.படைப்புகளை உருவாக்கிய பெருமையுடையவர். யக்ஞம்,சணகல்லு, மூனாம் தலைமுறை, நிர்மலா ஆகியவை இவருடைய நாவல்களில் பிரபலமானவை.நிர்மலா திரைப்படமாக வெளிவந்து சிறந்த கதைக்காகவும்,உரையாடலுக்காகவும் மாநிலஅரசின் விருதையும் பெற்றுள்ளது.குட்டித்திருமேனி மற்றும் காமன்வெல்த் ஆகிய இரண்டும் அவருடைய சிறுகதைத் தொகுப்புகளாகும்.

**

கல்லான பெண்

எப்போது கடைசியாக இந்த வழியில் நான் வந்தேன்? பலகாலங்களுக்கு முன்னாலிருக்கலாம்.

அப்போது அப்பா என்னுடனிருந்தார்.ஆனால் வானம் வழியாகப் பறந்தபோது பூமியின் முழுஅழகு இவ்வளவு விஸ்தாரமாகத் தெரியவில்லை என் முகக் குறிப்பை அறியும் அவர் ஆசிரமமோ அல்லது ஆறோ வரும்போது விமானி யிடம் வேகத்தைக் குறைக்கும்படி அடிக்கடி சொல்வார். முனிவர்கள் யாகக் குழிகளில் ஏற்படுத்தும் நெல்,நெய்,வாசனையை என்னால் சுவாசிக்கமுடியும்.

எப்போது இதெல்லாம் நடந்தது?

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்?அதற்குப் பிறகு அவள் மாறி விட்டாள். அவள் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டது.

அல்லது ,மாறவில்லையா?

காலம் மாறிவிட்டது. ஆனால் அயோத்தி மாறவில்லை.

அவள் மேலே நடந்தாள். பூக்கள் நிறைந்த காடு. மலர்கள் கொட்டிக் கிடந் தன.கம்பளம் கீழே விரிக்கப்பட்டு அது கிளைகளைச் சுற்றித் தொங்குவதைப் போல,பூக்கள் எங்கும் பரவிக்கிடந்தன.பூமழை பெய்ய கிளைகளினூடே சூரியனின் கதிர்கள் பாய்வது போன்ற தோ

வால்மீகிரிஷி தன்தவத்தை முடித்துக் கொள்கிற வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அவள் கேட்டபோது கணவன் இம்முறை எந்த மறுப் பும் சொல்லவில்லை.ரிஷியிடம் தன் வணக்கத்தை தெரிவிக்க மட்டும் சொன் னார்.

பழைய நாட்களில் இதுபோலத் தனியாக அவள் காட்டில் சுற்றித் திரிய அனு மதி கிடைத்திருக்காது.அவளுக்கும் அப்படிச் செய்ய தைரியமிருந்திருக்காது.

ஆனால் இன்று கணவன் அவளைச் சந்தேகப்படவில்லை;அவளுக்கும் பயமு மில்லை.இந்தப் பயணத்திற்காக அவரிடம் அனுமதி கேட்கப் போயிருந்தபோது அவர் தன் கைகளை அவள் தலையில் வைத்து அமைதி உன்னுடன் இருக் கட்டுமென்று ஆசீர்வதித்தார். அவருடைய இந்த மாற்றம் காலத்தின் கட்டா யத்தால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?

ஸ்ரீராமர் வனத்தை அசுரர்களிடமிருந்து மீட்டார்.மனிதர்கள் எதைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை. தன் கடமையை ஒழுங்காகச் செய்ய முடியாத சந்தர்ப்பத்தைத் தவிர வேறு எதற்கும் பயப்படக் கூடாதென்று சொல்லியி ருக்கிறார். மூன்றரை மணி நேரத்தில் கரன், தூஷனன், திரிசிரன் ஆகிய அரக்கர்களை அவர் அழித்ததைக் கண்டு அவள் ஆச்சர்யத்தில் பேசியபோது இதைச் சொன்னார்.

உடல்பலத்தை விட மனபலம் ஆழமானது. ஒருவருக்கு மனபலமிருந்தால் பதின்காயிரம் தீயசக்திகளை ஒன்றரை நிமிடத்தில் கொன்றுவிடலாம்.

ஆலயமணியின் ஒலிபோல இருக்கும் அந்தக் குரலைக் கேட்டுக் கொண்டே யிருக்கலாம்.அவரைப் பார்த்த அந்த நொடியில் தன் நீண்டகாலத் தவம் வீணாகவில்லை என்று அவளுக்குப் புரிந்தது.

அவருடைய மென்மைத் தன்மையில் மூழ்கிப் போனாள்.

“அகல்யா, உன் உண்மையான ஆத்மாவை நான் பார்க்கிறேன். அந்த உலக உறக்கத்திலிருந்து விழித்தெழு”.

ஏன் ஒரு ரிஷி அந்த மாதிரியான சொற்களைச் சொல்லமுடியாதா?”

அவர்கள் அழிவுக்கான சாபக்கலையில் மட்டும் சிறந்த பயிற்சி பெற்றிருப் பதாலா?

அகல்யா ஒரு கணம் நடுங்கினாள்.அவள் எப்படி இரக்கமானவர்களைப் பழிக்க முடியும்?

அவள் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொண்டாள்.

வால்மீகியும் முனிவர்தானே ? சொல்ல முடியாத,விவரிக்க முடியாத பரி வால்தான் அவரும் சக்திவாய்ந்த அந்த சாபத்தைத் தந்தார்?அது அவருடைய தற்காலிக வெளிப்பாடுதானே?

அகல்யா அந்த இடத்திலேயே ஓரிருகணம் நின்றாள்.உண்மையில் அது சாபமில்லை.அது முன்யோசனைப் பார்வைதான்.

அந்த நேரத்திலும் அவர் தியாகத்தின் அடையாளமான சீதையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.உலகத்தின் அவமானங்களிலிருந்தும்,வேறுபாடுக ளிலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கிருந் திருக்கலாம்.அதனால்தான் அவர்..

அகல்யா தன்னிரண்டு கைகளையும் அசைத்துப் பார்த்தாள். உற்சாகத்தில் கைகள் ஆடின.

இது வியப்பளிக்கிறதா?சீதையை நினைத்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பெருமையும் ,உற்சாகமும் வராது?

அகல்யா மேலே நடந்தாள்.காட்டுப் பறவைகளின் அழைப்பு இனிமையாக இருந்தது.

அவளுடைய கடந்தகால வாழ்க்கை மனதைத் திறந்து வெளியே பார்க்க வைத்தது.

பருவமாற்றங்கள்,பார்த்தவையும்,கேட்டவையுமான எல்லாவற்றையும் அவள் உணர்ந்திருக்கிறாள்.

எந்தத் திரையால் மறைக்கப்பட்டாலும் எல்லா பிறப்பும்,இறப்பும் நிர்வாண மாய் விழிகளில்படுவதுதானே?

யார் தயை உடையவர்கள் என்று அவள் கடந்த பல ஆண்டுகளாக ஆச்சர்யப் பட்டிருக்கிறாள்

தனக்கு அந்தவிதமான அனுபவங்களுக்கு வாய்ப்புத் தந்த கணவன்..

அல்லது….?

அகல்யாவின் நினைவில் ஒன்று தெளிவாய் நின்றது.அந்த நேரத்தில் அவள் கௌதமரிஷியின் ஆசிரமத்தில் இயற்கையின் அழகையும், கொடூரத்தையும் அனுபவித்திருக்கிறாள்.

ஒருநாள் தலையைக் குனிந்து வணங்கி நின்றிருந்தபோது மிக அருகிலிருந்து ஓர் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.அந்தக் குரல்கள் பெண்களுடையவை. அவர்கள் பேசும் விதத்திலிருந்து மிதிலையைச் சேர்ந்தவர்களென்று தெரிந் தது. கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தில் மட்டும் கிடைக்கும் லவண்யகம் என்ற அபூர்வமான மலரைப் பறிக்க வந்தவர்கள்.

“ஏன் நம்முடைய இளவரசிக்கு இந்த மலர் மேல் அத்தனை பிரியம்?”என்று இளமையான பெண் கேட்டாள்.

“உனக்குத் தெரியாதா? இந்த மலரை வைத்து பூஜை செய்தால் கணவனின் அன்பு கிடைக்கும். அகல்யாதேவியால் தேவலோகத்திலிருந்து கொண்டு வரப் பட்டது இந்தச் செடி”என்று மற்றொரு பெண் பதில் சொன்னாள்.

“இந்த நாட்களில் இளவரசி மிக அதிகமான நேரம் பூஜை செய்கிறாள்.”

“இது இயற்கைதானே? தசரதனின் மகன் ஸ்ரீராமன் சீதையை மணக்கப் போகிறான் என்று ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகள் சொல்லியதை நீ கேட்கவில்லையா?”

“ஓ! அப்படியா?எத்தனை அதிர்ஷ்டம்.! அவளுக்கு மட்டுமில்லை.இது மிதிலை முழுவதற்குமான அதிர்ஷ்டம்” சொல்லிவிட்டு அவள் கூடையைக் கீழே வைத்து கைகூப்பி வணங்கினாள்.

அதற்குப் பிறகு இளவரசியின் மனம் முழுவதும் ஸ்ரீராமன்தான். அவருடைய வருகைக்காக அவள் காத்திருக்கிறாள”

“நீ இன்னமும் பூக்களைச் சேகரிக்கவில்லையா?”

“வா ,நாம் போகலாம்.இப்போதும் கூட எனக்கு இங்கு நிற்பது வருத்தமாக இருக்கிறது”.

“ஏன்? இந்த அழகான இடத்திலும் நீ ஏன் வருத்தமாக இருக்கிறாய்?”

’அகல்யாதேவி இல்லாமல் இந்த ஆஸ்ரமம் வெறுமையாக இருக்கிறது’.

அதற்குப் பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை.

“ஏன் அகல்யாதேவி அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டாள்?அவள் மிகவும் நற்குணமுடையவள் அல்லவா? என்று சிறிது நேரத்திற்குப் பிறகு இளம்பெண் கேட்டாள்.

“வாயை மூடு. நீ என்ன சொல்கிறாய்?”முதியவளின் குரல் கோபமாகக் கேட்டது.”அகல்யாதேவி கருவிலிருந்து பிறந்தவள் இல்லை என்றாலும் அவள் தயாளத்திற்குப் பெயர் போனவள் .யாருடைய தவறு என்று நமக்கு உண்மையாகவே தெரியுமா?”

“வா,இங்கிருந்து போகலாம்.நாம் பூஜைக்கு வேண்டிய பூக்களைக் கையில் வைத்திருக்கிறோம். நம்முடைய வார்த்தைகளால் ,எண்ணங்களால் அவை புனிதம் இழந்து விடக்கூடாது. ஞாபகம் வைத்துக் கொள்”

அவர்கள் போய் விட்டனர்.

அந்த இரண்டு பெண்களும் பேசியது அவளுக்கு மகிழ்ச்சியளித்தது.தன் கணவ னோடு விரைவில் சேரவேண்டுமென்பதற்காக அகல்யாவால் வளர்க்கப்பட்ட செடியின் பூக்களை வைத்து சீதா பூஜை செய்யும் காட்சி மனதில் நிறைந்தது அதற்குப் பிறகு சீதையின் மூலமாகவே ராமனை அவள் வழிபட்டாள்.கடைசி யாக வரலாறாக கற்பனை செய்திருந்த அந்தக் கணம் வந்தேவிட்டது.

அவன், அந்த பேரழகான மனிதன் அவள் முன்னால் நின்றான். விருப்பு வெறுப்பற்ற நிலையில் நின்று அவளை அந்த உயிரற்றநிலையிலிருந்து விடுவித்தான்.

அந்த நிலையிலும் அவள் பிரார்த்தனை ”தேவி உன் காத்திருப்புக்கு விரை வில் பதில் கிடைக்குமென்பதுதான்’

அகல்யாவிற்கு புதிய வாழ்க்கை தந்தபிறகு ராமன் சீதையின் முன் நின்றான்.

யாருக்கு தயை அதிகம்?அகல்யா நினைத்தாள்.

“அகல்யா, இந்த மாயையான உலகம் பற்றி எதுவும் உனக்குத் தெரியுமா? தெரியாதல்லாவா ? பற்றுகளற்ற தயை எதுவுமில்லாத ரிஷியான கணவனின் சொற்கள்..

அல்லது..

அவள் அதற்குள் காட்டின் எல்லையைக் கடந்து விட்டாள்.

அவள் சுற்றுமுற்றும் எல்லாத் திசைகளிலும் பார்த்தாள்.தமசா கரையினருகே இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டோமா?

தமசா எவ்வளவு அழகாக இருக்கிறது ! நல்ல மனிதர்களின் மனம் போல. அங்கு அவள் சிறிதுநேரம் இருக்கவிரும்பினாள்.

பயமுறுத்தும் ஒரு சத்தம்!

யாரோ அழுது கொண்டிருந்தார்கள்.அவள் அந்த ஆளைத் தேடிப் போனாள். அவள் யாரோ பணிப்பெண். வால்மீகி ஆசிரமத்தில் பணிபுரிபவளாக இருக்க வேண்டும்.அகல்யா அவளருகே போய் அவளை அழைத்தாள்.

“அம்மா!”

குரலைக் கேட்டதும் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அகல்யா வைப் பார்த்தாள்.” இந்த ஆஸ்ரமத்தில் நீங்கள் வருத்தமாக இருப்பதற்கு காரணம் எதுவும் உண்டா?”

“நான் எப்படிச் சொல்வேன்? இந்த உலகமே முடிவுக்கு வரப்போகிறது என்று தோன்றுகிறது” அவள் விம்மிக் கொண்டே சொன்னாள்.

“என்ன விஷயம்?” அகல்யா அவளருகே உட்கார்ந்து சமாதானம் செய்ய முயன்றாள்.

“ஸ்ரீ ராமன் அயோத்தியின் அரசன் தன் கர்ப்பமான மனைவியை கைவிட்டு விட்டாராம் “ரகசியம் போல் சொன்னாள்.

“என்ன?அகல்யா அதிர்ச்சியில் உறைந்தாள்.”நான் கேட்பது உண்மையா?” தொண்டை கட்டியது போல வெளிவர மறுத்தது அவள் குரல்

“ஆமாம்..சிறிது நேரத்திற்கு முன்பு வால்மீகிரிஷி தமசா ஆற்றுக்கு பூஜை செய்ய வந்தாராம். சீதை ஆற்றின்கரையில் வருத்தத்தோடு இருந்தாளாம். வால்மீகி சீதையைப் பாதுகாப்பதாகச் சொல்லியிருக்கிறார்.நான் அவளுக்கு வேண்டிய பழங்களைத் தேடி வந்தேன்”

அவள் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே அகல்யாவின் சோகமான, ஓலக்குரல் வானத்தைப் பிளப்பதுபோல ஊடுருவியது.”அக்னி தன் ஜுவாலை யைக் கைவிட்டுவிட்டது.”

இயற்கை தன்னைக் காப்பவனாலேயே கைவிடப்பட்டுவிட்டது.

இந்தக் கொடூர அனுபவம்..

இந்த அவமானம்..

இந்த வெறுப்பு..

அருகில் நின்று கொண்டிருந்த பணிப்பெண் அகல்யாவின் குரல் தீனமாவதை உணர்ந்தாள்.அவள் அகல்யாவைக் கூப்பிட்டாள்.

எந்த பதிலுமில்லை.

மெதுவாக நகர்ந்து அகல்யாவினருகே போய் தன் கையை அவள் மீது வைத்தாள் .பின்பு பயத்தில் பின்வாங்கினாள்.

’என்ன? இது வெறும் கல்லாலான உருவம்’…

புலம்பல் போல அந்த வார்த்தைகள் தமசாவின் கரைகளில் ஒலித்து, எதி ரொலித்தது.இந்த சப்தத்தைக் கேட்டு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சில பணிப்பெண்கள் ஓடிவந்தனர்.அந்த அழகான உயிரற்ற உருவத்தை கண்ணிமைக்காமல் வெறித்தனர்.

ஆயிரம் கண்களால் பார்த்தபிறகும் ஆசை குறையாமல் அந்த மனிதனை அசத்திய அழகு.

அந்த உருவத்தின் தலையில் அலங்கரிக்கப்பட்ட மீன்வடிவ அச்சிருப்பதை அவர்கள் பார்த்தனர்.

அவள் காலைப் பார்த்தபோது மேல்பகுதியில் ராமனின் கை அடையாளக் குறி இருப்பது தெரிந்தது.

கடைசியாக அவர்கள் தலையை உயர்த்திப் பார்த்தனர்.

அவள் முகம் தனக்கான இயல்பான பொலிவோடிருந்தது.நீண்டகாலத் தவமி ருந்து பெற்ற பொலிவு அது.

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் ”ஓ ! இது கௌதமரின் மனைவி ” அனைவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

வால்மீகியின் ஆஸ்ரமத்தில் ஸ்ரீராமனின் மனைவியான சீதாவோடு சிநேகித மாக இருக்கும் பெண் சொன்னாள்

“ஆமாம்.அகல்யா இப்போது வெறும் கல்தான்” –

———-

இன்லே வாவி ( பர்மிய நாட்கள் 11 ) / நடேசன் ( ஆஸ்திரேலியா )

download

80 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த வாவி சான் மாநிலத்தில் (Shan province) சுற்றியுள்ள மலைகளில் இருந்து உருவாகியது இது கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது. யங்கூனில் இருந்து 660 கிலோமீட்டரில் உள்ள மலைப்பிரதேசமானதால் வெப்பம் குறைந்த இடம். இங்கு உல்லாசப்பிரயாணிகள் அதிகம் வருகிறார்கள். இந்த வாவியின் அருகே பல கிராமங்கள் சிறிய நகரங்கள் உள்ளது. புதிய ஹொட்டேல்கள் கட்டப்பட்டுள்ளது.

நாங்கள் தங்கிய ஹொட்டேல் வாவியின் கரையில் உள்ளது. காலையிலும் மாலையிலும் அந்த வாவியில் நடக்கும் தோற்ற மாற்றங்கள் மிகவும் அழகானவை. வானவில்லின் ஏழு நிறங்களும் தோன்றி கணத்திற்குக் கணம் மாறியபடி சூரியஒளியால் பெரிய நாடகமே நடக்கும். அந்த நாடகத்தில் நடிக்க ஏராளமான பறவைகள் வந்திறங்கும். வாவியில் ஓடும் வள்ளங்கள் அதில் உள்ள மனிதர்களும் பாத்திரமாக மிதப்பார்கள். அறையின் பல்கனியில இருந்தபடி பார்த்தால் தேவலோக இந்திரலோகம் என்பதெல்லாம் எண்ணத் தோன்றும்.

அதிக ஆழமில்லாத வாவியில் சிறிய கட்டுமரத்தில் வலை வீசி மீன் பிடிக்கும் போது கையில் உள்ள துடுப்பை ஒரு காலால் வலிப்பார்கள். இந்தக் காட்சியை பிபிசி தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியத்துடன் நேரில் பார்க்க வேண்டுமென நினைத்தேன். அங்கு சென்றபோது இந்தக் காலால் வலிப்பது அங்குள்ள புத்தகோயிலுடன் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்தேன்.

வாவியின் கரையில் ஒரு அழகான புத்த கோயில் உள்ளது அந்தப் புத்த கோயிலின் நடுவே ஐந்து சந்தனமரத்தால் செய்யப்பட்ட சிலைகள். ஆனால் தற்போது சிலை போலில்லை காரணம் அந்தச் சிலைகளின் மீது தங்க இலைகளைப் பக்தர்கள் ஒட்டுகிறார்கள். அதன் அருகே சென்று பார்த்துக் கொண்டிருந்த என்னிடமும் பர்மியர் ஒருவர் ஐந்து தங்க இலைகளைத் தந்து அந்த புத்தசிலைகளில் ஒட்டச்சொன்னார். நானும் ஒட்டினேன்.

‘கடவுளைப் பூசிப்பவர்கள் மத்தியில் பர்மியர்கள் மட்டுமே தங்கத்தால் புத்தரை பூசிப்பவர்கள் எனநினைக்கிறேன. அது மட்டுமல்ல கிட்டத்தட்ட பத்து அமரிக்க டாலர்கள் மதிப்பான தங்க இலைகளை அறிமுகமில்லாத என்னிடம் தரக்கூடியவர்கள்’ என எமது வழிகாட்டும் பெண்ணிடம் சொன்னேன்
unnamed
‘தங்கம் பர்மா முழுவதும் கிடைக்கும். வீடு கட்ட , கிணறு கிண்ட என நிலத்தைத் தோண்டும் இடமெல்லாம் கிடைக்கும்.
என சாதாரணமாக சொல்லிவிட்டு அதிசயமானகதை ஒன்றை அதாவது நமது பாஷையில் அந்தப் புத்த கோயிலைப் பற்றிய தலவரலாற்றைச் சொன்னாள்

11ம் நூற்றாண்டில் பகானை ஆண்ட மன்னன் இன்லே வந்தபோது அரக்கப் பெண் தனது குழந்தையை வாவித் தண்ணீரில் தவறவிட்டதால் அழுதபடி நின்றான். அதைக் கண்ட மன்னன் மனமிரங்கி இன்லே வாவியின் காவல் தெய்வத்தை மந்திரத்கோலால் அழைத்து, அரக்கப் பெண்ணின் குழந்தையைக் கொண்டு வரும்படி பணித்தான். குழந்தையைப் பெற்ற அந்த அரக்கப்பெண் சந்தனமரக்கட்டையையொன்றை அரசனுக்குப் பரிசளித்தாள். இதைப்பெற்ற அரசன் அதில் ஐந்து புத்தர் சிலைகளைச் செதுக்கி அவற்றை வைத்து இந்த இன்லே வாவியின் அருகே கோயிலை கட்டினான்.

அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் திருவிழாவாக கொண்டாடப்படுவதுடன் இந்த ஐந்து சிலைகளும் தோணியில் வாவிக்குள் படகுகள் மேல் எடுத்து செல்லப்படும் அந்தப் படகுகள் ஒன்றை ஒன்று பிணைத்தபடி செல்லும். படகுகளைச் செலுத்துபவர்கள் காலால் நீரை வலித்தபடி படகை ஓட்டிச் செல்வார்கள்.

1965 ஆண்டு இப்படி படகு ஊர்வலம் சென்றபோது சிலைகளை ஏற்றி முன்சென்ற தோணி நீரில் மூழ்கியது. அந்தத் தோணியில் இருந்தவர்கள் உயிர் பிழைத்ததோடு நான்கு புத்தர்சிலைளும் அன்றே மீட்கப்பட்டது.

வாவியில் மூழ்கிய ஐந்தாவது சிலை தேடியபோது அன்று கிடைக்கவில்லை. தேடிக் களைத்தவர்கள் அடுத்த நாள் தேடுவது என அவர்கள் திரும்பியபோது அந்த ஐந்தாவது புத்தசிலை வாவியின் நீர்ப் பாசிகள் ஒட்டியபடி கோயிலில் இருந்தது.
அடுத்த வருடம் இதேதினத்தில் ஊர்வலத்தை நடத்த முடியாமல் காற்றடித்தடி ,வாவி இருளாக இருந்தபோது ஊரில் உள்ள பெரியவர்கள் கலந்துரையாடி ஐந்தாவது புத்தசிலையை விட்டுவிட்டு மற்றைய நான்கு சிலைகளை மட்டும் ஊர்வலத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தபோது, காலநிலை சீரடைந்துது.
ஐந்தாவது சிலை புத்தருடையது அல்ல வேறு ஒரு புத்தபிக்குவினது என நம்பப்படுகிறது. அன்றில் இருந்து நான்கு சிலைகளை மட்டும் ஊர்வலத்திற்குக் கொண்டு செல்லும் வழமை இன்னும் தொடர்கிறது.

இந்த வாவியில் உள்ள மீன் உருசியானது என்கிறார்கள். இந்த வாயின் பக்கத்தில் பெரிய சந்தையுள்ளது. அங்குச் சந்தையில் மீன்களை வைத்திருந்தார்கள்.

இந்த வாவியின் அடியில் வளரும் பாசி எடுக்கப்பட்டு காய்கறிப் பயிருக்கு உரமாகப் பாவிக்கிறார்கள். இந்தப் பாசிகளை எடுத்து மேடையிட்டு வாவியின் ஒரு பகுதியில் மிதக்கும் தோட்டத்தை அமைத்துப் பயிரிடுகிறார்கள். இங்கு தக்காளி மிகவும் செழிப்பாக வளர்கிறது. மிதக்கும் தோட்டத்தை மூங்கில் கம்பால் கட்டியபடி இந்த விவசாயம் நடைபெறுகிறது.
unnamed (1)
இந்த வாவி பறவைகளின் சொர்க்கம். பல இடங்களில் உள்ளுர் பறவைகளையும் இங்கு பார்க்க முடியும் இவைகளைப் பார்ப்பதற்கு நான் சிலமணி நேரம் செலவழித்தேன்

கைத்தொழிலாகப் பட்டுநெய்தல் வெள்ளி ஆபரணம் செய்தல் சுருட்டு சுற்றுதல் எனப் பல வேலைகள் நடைபெறுகிறது. இங்குதான் தாமரைத்தண்டில் நூலெடுத்து அதைப் பட்டுடன் கலந்து உடை தயாரிப்பதை பார்த்தேன்

இந்த வாவியைச் சுற்றிய பிரதேசத்தில் வாழும் சான் மக்கள் தாய்லாந்தினருக்கு இன வழித் தொடர்புள்ளவர்கள். மொழியும் தாய்லாந்து மொழி போன்றது. இவர்களது நிறம் பர்மியர்களிலும் வெளிர்பானது. இவர்களைத் தவிர பழங்குடியினரும் இந்த வாவியின் அண்டைவாழ்கிறார்கள். அப்படி ஒருவகையினர்தான் கழுத்தை சுற்றி செப்புவளையம் போட்டவர்கள். படுக்கும் போதும் அந்தக் கழுத்து வளையங்கள் இருக்குமென்றார்கள்.

வாவிருகே இருந்த எமதுஅறையில் இருந்து பார்க்கும் போது காலையிலும் மாலையிலும் வாவியில் வந்து மீன்பிடிக்கப் பலவகையான பறவைகள் வருவது பார்க்க முடிந்தது.

இந்த இடம் பர்மாவிற்கு வரும் உல்லாசப்பிரயாணிகள் மத்தியில் மெதுவாக பிரசித்தமடைந்து வருகிறது. வெளிநாட்டு கம்பனிகளின் ஹோட்டேல்கள் கட்டப்படுகின்றன.

இந்த வாவியருகே இருநாட்கள் கழித்தபோது பர்மாப்பயணத்தின் உச்சமான நிலையை அடைந்தேன். பறவைகளையும் வாவியையும் பல நாட்களாக இருந்து சலிப்பில்லாமல் பார்க்க முடியும். நானும் மனைவியும் மீண்டும் வருவதற்கு முடிவு செய்தோம்.

•••

துருக்கியில் ஒரு கோடைவிடுமுறை. I / பொ.கருணாகரமூர்த்தி

800px-Vai_palm_forest

சென்ற ஆண்டில் இவ்வாண்டு கோடையில் துருக்கிக்கு பயணம்போவது என்று குடும்பத்தில் தீர்மானமாகியதும் (மகன்) அச்சுதன் உடனடியாக விமானச்சீட்டுக்கள், ஹொட்டல்கள் எல்லாம் முன்பதிவு செய்துவிட்டிருந்தான். 14ம் தேதி ஜூலைமாதம் பெர்லினிலிருந்து Turkey Airlines மூலம் புறப்பட்டோம். மூன்றரை மணிநேரப்பறப்பு, மாலையில் Izmir ஐச்சென்றடைந்தோம். மாலையாகிவிட்டிருந்தும் அங்கே பெர்லினை விடவும் வெய்யிலாகவும் வெளிச்சமாகவுமிருந்தது, லிபியாவுக்கோ, லெபனானுக்கோ வந்துவிட்டதுபோல் விமானநிலையத்திலிருந்து விரைவுபாதையைத்தொடுக்கும் வீதிமுழுவதும் இருமருங்கிலும் பேரீஞ்சையொத்த ஒரு வகைப் பாமே மரங்கள் வளர்த்துவிடப்பட்டிருந்தன. நாம்போனசமயம் அவை எவற்றிலும் பிஞ்சோ காயோ இல்லாததில் அது என்னவகை மரமெனவும் துணிய முடியவில்லை, துருக்கிக்கு முன்னரே போயிருந்த காருண்யா (மகள்) அவை Phoenix Theophrasti எனப்படும் ஒரு பேரீஞ்சு இனமென்றும் அவை அரபுநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டு அழகுக்காக அங்கே நட்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் இம்மரங்களை Crete என்னுமிடத்தில் ஒரு வனம்போலவே வளர்த்திருக்கிறார்கள் என்றும் விளக்கமளித்தாள்.

Izmir இல் Basmane எனும் இடத்தில் தொடருந்துநிலையத்துக்கு அண்மையில் அமைந்திருந்த Zeybek ஹொட்டலில் தங்கினோம். அது ஒரு 3 நக்ஷதிரவகையான ஹொட்டல்தான், இருந்தும் அறைகளில் மாத்திரமின்றி, அதன் அனைத்துத் தளங்களிலுமுள்ள நடைகளிலும் முடுக்குகளிலும் Air-wick போன்ற சுகந்தமான (Raumdüfte) வாசனைத்திரவியங்கள் தன்னியக்கமாக விசிறியபடி இருந்தன. குளித்துச் சற்றே ஓய்வெடுத்துக்கொண்டு மாலை வெளியே புறப்பட்டோம். என் பழக்கதோஷத்தால் என்னவகையாக மகிழுந்துகள் அங்கே வீதியில் உள்ளன என்பதை அவதானித்தேன். எங்காவது ஒரு Benz, Bmw, Audi, Jaguar இருந்தாலும் கார்ச்சந்தையின் Ford, Hyundai, Renault, Chevrolet, Fiat, Toyota, Mini போன்ற 4வது தர நிலைவண்டிகளே அதிகமும் காணப்பட்டன. ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் எங்குதிரும்பினாலும் A-30, A-40, Somerset, A-50 Cambridge என Austin கார்கள்தான் நிற்கும். அதுபோல் முஸ்லிம்கள் குறிப்பாக வியாபாரிகள் எங்குவாழ்ந்தாலும் Hillman காரைத்தான் விரும்புவார்கள். இலங்கையில் மாறிமாறிவந்த அரசுகளின் கட்டற்ற இறக்குமதிக் கொள்கையால் இப்போது உலகத்திலுள்ள A to Z வண்டிகள் அனைத்துமே ,300 குதிரைவலுவுடைய Hummer உட்பட சூழல்மாசுபடுவது பற்றிய பிரக்ஞையின்றி அமிதமாக வீதியை ஆக்கிரமித்து ஊர்கின்றன. துருக்கிக்காரர்களுக்கும் எங்குவாழ்ந்தாலும் ஏனோ Ford கார்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனாலாயிருக்கலாம் துருக்கியிலும் மேற்சொன்ன 4வது வகை வண்டிகளுடன் செம்பகுதி Ford கார்களும் அதன் பிந்திய வகையுருக்களும் வீதியை ஆக்கிரமித்திருப்பதைக் கண்டேன். நான் ஆர்வமிகுதியால் கார்களை விண்ணாந்தும், கணக்கெடுத்துக்கொண்டுமிருக்க, நீங்கள் இங்கே வந்தும் நாட்டையும் சூழலையும் விடுத்துக் கார்களைப் பார்ப்பதானால் பெர்லினிலேயே நின்றிருக்கலாமேயென காருண்யாவும் ரஞ்ஜினியும் என்னைக் கடிந்தனர்.

அன்றைய நாள், 30 சதமபாகையளவில் இருந்தது. நாங்கள் சாப்பிடப்போயிருந்த உணவகத்தில் அதன் நீண்ட கண்ணாடி ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட்டு அதன் நீளம் முழுவதுக்கும் குளீர்நீரை நுண்திவலைகளாகப்பண்ணி (Fumes) விசிறிக்கொண்டிருந்தார்கள். அதனால் அச்சூழலே குளிர்மையாகி இருந்தது. உள்ளேயும் அதைத்தொட்டுவந்த காற்று சீதளத்தை நிரப்பி ஜிலுஜிலுவென்றிருந்தது. அன்று இரவு ஜெகதாவுக்கு (மகள்) பிறந்தநாளும். இரவு அவ்வுணவகத்திலேயே ஒரு கேக்கை வாங்கி வெட்டிக்கொண்டாடிவிட்டு ஹொட்டலுக்கு வந்து தூங்க முயற்சித்தோம், எங்கள் அனைவரினதும் எடுப்புத்தொலைபேசிகள், வைபர், வாட்ஸ்-அப் எல்லாம் மாறி மாறி அடிக்கத்தொடங்கின.

“ என்ன எப்பிடிச்சுகமாக இருக்கிறியளோ……. அங்கேயெல்லாம் ஏதோ ஆர்மி கிளர்ச்சி பண்ணுதாம் பிரச்சனையாம், கண்டபடி வெளியே போகாதையுங்கோ… போனாலும் பொது இடங்களுக்குப் போகாதையுங்கோ, ஹொட்டலுக்குள்ளேயே இருங்கோ” என்று போன்பேசிய அனைவருமே ஆலோசனை சொன்னார்கள். முகநூலிலும் நிறையப்பேர் அறிவுறுத்தியிருந்தார்கள். அதன்பிறகுதான் அறையிலிருந்த தொலைக்காட்சியை முடுக்கி CNN ஐப்பார்த்தால் கொஞ்சம் Istanbul இல் நடைபெற்ற இராணுவக்கிளர்ச்சி அல்லது சதிபற்றியும், அரசு தன் பொலிஸ் படையின் மூலம் முறியடித்தது பற்றியுமான செய்தியை அறிய முடிந்தது.

DSC_0506
Istanbul ஐ நோக்கிவரும் விமானப்பயணங்கள் அனைத்தையும் கான்சல் செய்வதான செய்திதான் கொஞ்சம் திடுக்காட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து நாங்கள் Izmir இலிருந்து Istanbul ஐ நோக்கிப்புறப்படும் நாளான 17ம் தேதி விமானப்பயணங்கள் சுமுகமாக ஆரம்பமாகின. Istanbul க்குப்புறப்பட இருக்கும் 3 நாட்களிலும் எவ்வெவ்விடங்களுக்கெல்லாம் போகலாம் என்பதைக் கவனமாகத் திட்டமிட்டோம்.

Ephesus என்னுமிடத்திலுள்ள மலையொன்றில் House of Virgin Mary எனும் கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமானியக்கட்டிடக்கலையில் அமைக்கப்பட்ட ஒரு தேவாலயமும் அதோடு இணைந்தாற்போல ஒரு புராதனமான, கல்லினாலான மனையும் உள்ளது. அம்மனையில்த்தான் கன்னி மரியாள் தன் இறுதிக்காலத்தில் வாழ்ந்து மரித்தாரென கத்தோலிக்கர்களால் நம்பப்படுகிறது. நிறைய யாத்திரீகர்களும் அத்தேவாலயத்துக்கு வருகை தருகிறார்கள்.

VirginMary1-RJohn
The house of Virgin Mary (above)

Efes மலையின் அடிவாரத்தில் ரோமர்களால் நிர்மாணிக்கப்பட்ட Efes Antik Sehri எனப்படும் பிரமாண்டமான விளையாட்டரங்கம் (Pavillion) ஒன்று சிதைவுறும் நிலையில் உள்ளது. மைதானத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பார்வையாளர்கள் வெவ்வேறு படிநிலைகளில் அமர்ந்து ரசிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட வெண்கற்களினாலான கல்லாசனங்கள் இன்னும் அங்கே இருப்பதும் அதிசயம்.

இங்கிருந்து பேருந்தில் (district of Balçova) 15 கி.மீ தொலைவிலுள்ள Gumusluk Sahil எனும் இடத்துக்குப்போனால் அங்கும் Izmir மலைத்தொடரின் இன்னொரு அழகான மலைமுடியும் அதன் அடியில் மத்தியதரைக்கடலின் ஒரு பகுதி நகர்ந்து வந்திருப்பதையும் காணலாம். மலைக்கு ஏறுவதற்கு வடவண்டி (கேபிள்கார்) வசதியுண்டு. மலைக்கு மேலே வரும் யாத்திரீகர்களைக் கருத்தில்கொண்டு எண்ணிறந்த அருந்தகங்களும், உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிறில் உணவகங்களில் அவர்களிடம் இறைச்சியையோ மீனையோ தேவையான வெஞ்சனங்களை நாமே வாங்கிக்கொண்டு இஷ்டப்படி கிறில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம். அங்கிருக்கும் சமையல் கலைஞர்கள் எமக்கு உதவுவார்கள். மலையின் இருந்தபடி மத்தியதரைக்கடலில் அஸ்தமிக்கும் சூரியனைக்காண்பது கொள்ளை அழகு.

Basmane என்பது நெடுந்தூரத் தொடருந்துகள், விரைவுத்தொடருந்துகள், சுரங்கத்தொடருந்துகள் எல்லாம் சந்திக்கும் ஒரு பெருஞ்சந்திப்பு. அச்சுதன் எங்களை ஏதோ முன்னரும் அங்கே வாழ்ந்தவன்போல விரைவுத்தொடருந்திலும், சுரங்கத்தொடருந்திலும் மாற்றிமாறி ஏற்றி Selcuk ஐ அடைந்து அங்கிருந்து சிறியரகப்பேருந்தின்மூலம் Pamucak கடற்கரைக்கு அழைத்துச்சென்றான். “ உனக்கு எப்படி இந்த இடங்களின் விபரங்கள் எல்லாம் தெரியும்” என்றதுக்கு “ இரவே அங்கு எப்படிச் செல்லவேண்டுமென்பதை வலையில் பார்த்துவைத்தேன்” என்றான் காசுவலாக. வலையும் பிள்ளைகளும் பலவிஷயங்களில் வெகுதூரம் எம்மைவிட முன்னே நிறிகிறார்கள்.
DSC_0276
Izmir இலே Pamucak என்னுமிடத்தில் அமைந்திருந்த வெண்மணற்கடற்கரையோடு ஆழங்குறைந்த மத்தியதரைக்கடலில் இறங்கி நீந்திமகிழ்ந்தோம். Pamucak கடற்கரையில் நம்மநாட்டின் கசுரைனா கடற்கரையைப்போலவே சவுக்கு மரங்களையும், பூக்கள் நிறைந்த செவ்வரளிமரங்களையும் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ஊருக்குச்சென்றுவிட்ட ஞாபகத்தில் செவ்வரளிப்பூக்களுடன் சேர்ந்து மலர்ந்தார் ரஞ்ஜினி.
Izmir இல் மேலும் உலவியபோது திறந்தவெளி மைதான்ங்களிலும், மாநகராட்சி அரங்கொன்றிலும் ராணுவம் செய்த சதிவேலைக்காக அதைக்கண்டித்து மக்கள் துருக்கியின் செங்கொடியை ஏற்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

கிளர்ச்சிசெய்ததால் ராணுவத்தை மட்டுமல்ல, “தேவையானால் மரணதண்டனை வழங்கும் சட்டத்தை மீளவும் துருக்கியில் கொண்டுவர நேரும்” என்று சொல்லும் Recep Tayyon Erdogan இன் ஆட்சியையுந்தான் மக்களுக்குப்பிடிக்கவில்லை என்பதை மக்களுடன் பேசியதில் உணரமுடிந்தது. Izmir இல் இரவு சுற்றித்திரிந்த நாட்களில் ஏராளம் நாய்களை வீதிகளில் பார்க்கமுடிந்தது. அனைத்தும் பரிச்சயமில்லாதவர்களுக்குப் பயமேற்படுத்துமளவுக்குக் கொழுத்து விளைந்திருந்தன. அநேகமும் அவை கோதுமை, வெண்கலம் நிறங்களிலேயே இருந்தன. தெருவில் திரியும் நாய்களுக்கு உணவகங்களிலும், தனியார் வீடுகளிலும் கரிசனையுடன் உணவளித்துப் போஷிக்கிறார்கள். வீதியோரம் அமைந்திருந்த வீடுகளின் வாசல்களிலும், வியாபார நிலையங்களிலும், வங்கிகளிலுங்கூட நாய்களுக்குப் பாத்திரங்களில் தண்ணீர் விட்டுவைத்திருந்தார்கள். அவை படுத்துறங்குவதற்கு சிலர் கால்மிதிகளையும், படங்குத்துணிகளையும் சாலைகளின் நடைதளத்தில் விரித்துவிட்டிருப்பதையும் கண்டோம்.

•••

அறுந்த நூல் ( அறிமுகப் படைப்பாளி ) // சரளா முருகையன்

images (16)

மழை “ நச நசவென்று “ தூரிக் கொண்டிருந்தது. மேகத்துடன் போராடிக் கொண்டிருந்த சூரியனும் தன் கதிர்களை அதனூடாக அனுப்பிக் கொண்டிருந்தான். அமைதியாக ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையில் அமைந்திருந்த தாழ்வான சமவெளிப்பகுதி. அதிலிருந்த வீடுகளெல்லாம், அவரவர் வசதிக்கேற்ப அமைந்திருந்ததால், ஒழுங்கற்ற வரிசையில் இருந்தன. மழையும், வெயிலும் ஒன்றிணைந்து வந்தும் கூட, பொருட்படுத்தாத கால்நடைகள், அதனதன் இடத்தில் அமர்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தன.

உள்ளூரிலும், வெளியூரிலும் வேலைக்கு சென்றவர்கள் போக, எஞ்சியவர்கள், நூறு நாள் வேலைக்கு சென்றிருக்க, எங்கும் ஒருவித நிசப்தம் சூழ்ந்திருந்தது. இரவின் நட்சத்திரங்கள் போல அத்தனை துல்லியம் வாய்ந்ததல்ல, பகலின் நிசப்தம். ஆனாலும் சலிப்பின் உச்சத்தை துல்லியமாக உணர்த்தக்கூடியது.

அந்த ஊரில் மதிய சமையல் அசாதாரணம் என்பதால், ஒரு வீட்டின் கூரையிலிருந்து மட்டும் கிளம்பிய புகை, நெளிந்து வளைந்து சிரமத்துடன் மேலேறிக் கொண்டிருந்தது. உள்ளே சமையற்கட்டில் சற்றே பூசினாற் போன்ற உடல்வாகுடன், ஒரு பெண் குத்துக்காலிட்டு அடுப்பூதிக் கொண்டிருந்தாள்.

நெற்றியின் வியர்வை வழிந்து துளித்துளியாக அடுப்பில் விழுந்த வண்ணம் இருந்தது. அதைத் துடைக்கவும் தோன்றாமல், விடாமல் ஊதுகுழலில் தன் மூச்சை விட்டுக் கொண்டிருந்தாள். புகை கிளம்பி, கண்களும் நீரைப் பெருக்கினவே தவிர, அடுப்பு எரிந்த பாடாக இல்லை. கண்களில் பொங்கிய நீரால் எரிச்சலுற்றவள், ஊதுகுழலை போட்டு விட்டு, மூக்கை உறிஞ்சிய வண்ணம் அங்கேயே அமர்ந்து விட்டாள். விடாமல் ஊதிக் கொண்டிருந்ததால் மூச்சு வாங்கியது.

மழையில் நனைந்திருந்த விறகு அணைந்து, புகைச்சலையும் கிளப்பியது. பசியைத் தீர்க்கும் உன்னத நிலையை அடைவதற்கு, ஆர்வத்துடன் துடித்துக் கொண்டிருந்த அரிசி, அடங்கிய உலையில் ஊறிக் கொண்டிருந்தது. விறகு எரியாத கடுப்பில் அமர்ந்து கொண்டிருந்தவளுக்கு, எரிவாயு தீர்ந்து போகும் நாட்களில், “ அய்யய்யோ, உலையில வேற அரிசி போட்டுட்டேனே.. நறுக்கரிசி பட்டுடுமே.. “ என்று புலம்பலுடன், அம்மா அலைந்த நாட்கள், நினைவிலாடியது.

மேலும் நினைவுகளுக்கு இடம் கொடாமல் சட்டென்று எழுந்தவள், எங்கிருந்தோ தென்னை மட்டைகளையும், பனை ஓலைகளையும், கொண்டு வந்து போட்டாள். வியர்வையினால் கசங்கியிருந்த முகத்தையும், கழுத்தையும் புடவையின் தலைப்பால் அழுந்த துடைத்து விட்டு, இடுப்பில் சொருகிக் கொண்டாள். அடுப்பிலிருந்த சாம்பலை வெளியே தள்ளியவள், புதிதாக நெருப்பு மூட்டினாள். அளவுக்கதிகமாகவே காய்ந்திருந்த மட்டைகள், திகுதிகுவென எரிய ஆரம்பித்தன. ஊறிக் கிடந்த அரிசி, “ தல புல வென்று “ கும்மாளமிட்டபடி கொதிக்க ஆரம்பித்ததும், அடுத்தடுத்து அணிவகுத்து நின்ற வேலைகள், அவளை இழுத்துக் கொண்டது.

*********************

மழையின் “ நச நசப்பு “ சற்று பின்வாங்கியிருக்க, புழுக்கம் அதிகரித்திருந்தது. மளமளவென சமையலை முடித்துக் கொண்டு, தையல் இயந்திரத்தின் முன்பு அமர்ந்தாள். ” இன்றைக்கு எப்படியும் இதை முடித்தாக வேண்டும் “ என்ற எண்ணத்துடன் இயந்திரத்தை ஓட்டினாள். ஒரு ஓட்டு ஓட்டுவதற்குள் நூல் அறுந்து போனது.

“ ப்ச்.. “ சலித்தபடி, நூலை பிசிறு இல்லாமல் நன்றாகக் கத்தரித்து, ஊசியில் கோர்த்து ஓட்டினாள். மீண்டும் அறுந்தது. ” இன்னைக்கு காலையிலிருந்தே, ஒன்னும் சரியில்லை.. “ முனகியவாறு, அப்படியே வைத்து விட்டு, எழுந்து சென்றாள்.

“ அப்பாவை இன்னும் காணோமே.. “ நினைத்துக் கொண்டே, வாயிலை நோக்கி சென்றவளை, மேசையின் மேல் வீற்றிருந்த புத்தகம் திசை திருப்பியது. அதை கைகளில் எடுத்து, ஆசையாக வருடிக் கொண்டாள். போன முறை, அண்ணன் வந்த போது, அவனிடம் சற்றே யாசித்து பெற்றுக் கொண்ட புத்தகம். ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனால், இன்னும் அதில் ஒரு வரி கூட வாசிக்கவில்லை. தினமும் புத்தகத்தை எடுப்பதும், வருடுவதும் பின்பு வைப்பதுமாகவே இருக்க.. புது புத்தகத்தின் அட்டை மட்டும் பழையதாக தோன்றியது.

இதே முன்பு என்றால், கைகளில் வாங்கிய அடுத்த நொடி அதில் புதைந்து விடுவாள். பசி, தாகமில்லாது, பக்கமிருப்பவர்களின் இருப்பை உணராது, அதை முடித்து விட்டே சுற்றுப்புறம் நோக்குவாள். ஆனால், இன்றைய நிலையில், புத்தகங்களைப் பார்ப்பதே அரிதான செயலாக இருக்கிறது. அவளின் கைகளின் வருடலே, புத்தகங்களுக்கான அவளது ஏக்கத்தை பறைசாற்றியது. தன்னிலை மீறிய ஏக்கத்தின் நிராசையானது, அவளது கன்னங்களில் கண்ணீரை வழிய விட்டது.

“ கௌ..சி.. “ அடித்தொண்டையிலிருந்து எழும்பிய விநோதக் குரலின் அழைப்பில், தன்னுணர்வு பெற்றவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எதிர் புறத்திலிருந்த அறைக்கு சென்றாள்.

” என்னம்மா..? “ கேட்டவாறே உள்ளே நுழைந்தவளின், கண்கள் அம்மாவின் முகத்தில் படிந்தது.

நல்ல வட்டமான உருண்டை முகம். தசைகள் வற்றியதால், நீள் வட்டமாக தோன்றியது. கன்னத்து எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. அடர்த்தியான தலைமுடிகள், படுத்தே கிடப்பதால் சடை பிடித்திருந்தன. வெளுத்துப் போன முகம் சோகையில் தோய்ந்திருந்தது. செயலிழந்து போன, ஒரு பக்கம் மௌனமாக கிடக்க, மற்றொரு கையும் காலும், அலைந்தபடி கிடந்தது.

தாயிடம் சென்றவள், கடைவாயில் ஒழுகியிருந்த எச்சிலை அருகிலிருந்த துண்டினால் துடைத்து விட்டாள். அவரது நெற்றியில் படிந்திருந்த முடிகளை மிருதுவாக ஒதுக்கியவள், அப்போது தான் அவரது கண்களைப் பார்த்தாள். ஒளி குன்றியிருந்த கண்களில் சங்கடம் துல்லியமாக தெரிந்தது. “ ஏன்.. என்னாச்சும்மா “ தாயைப் பார்த்து வினவினாள்.

கண்களின் சங்கடம் முகம் முழுவதும் பரவியதேயொழிய, வேறு எந்த வித பதிலும் அவரிடமிருந்து வரவில்லை. பின்பு தான், அந்த அறையை சூழ்ந்துள்ள ஒருவித கெட்ட நெடியை அவளது நாசி உணர்ந்தது. உடனேயே, அறையின் கதவை தாழிட்டு விட்டு, அம்மாவின் ஆடையை விலக்கிப் பார்த்தாள். அவள், நினைத்தது சரியாகவே இருந்தது. மலம் கழித்திருந்தார்.

சுயமின்றி கிடந்த பொழுதுகளைக் கடந்து, நினைவுகள் வந்த சமீப காலமாகவே, இவ்வாறு தான் நடந்து கொள்கிறார். ஆனாலும், அம்மாவை கோபித்துக் கொள்ள முடியவில்லை. தன்னைத் தான் நொந்து கொள்ள முடிந்தது அவளால். இப்படி பாரமாகி விட்டோமே என்கிற அவருடைய கழிவிரக்கத்தை என்ன முயன்றும், அவளால் போக்க முடியவில்லை. ” அந்த புத்தகத்தை வைச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்த நேரத்துல, அம்மாவை வந்து பார்த்திருக்கலாம்.. “ என்ற குற்ற உணர்வுடன், மௌனமாக சுத்தம் செய்து, அம்மாவின் துணிகளையும் மாற்றி விட்டாள்.

மகளது இத்தகைய செயல்களின் போது, எப்போதும் கண்ணை மூடிக் கொள்ளும் அன்னபூரணி, இன்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து இருபுறமும், கண்ணீர் வழிந்து காதுகளின் பள்ளத்தில் அடைக்கலமாகியது. அவரது கண்களை துடைத்து விட்ட, மகளின் கையைப் பிடித்தவர், தன் வாயருகே கொண்டு சென்று முத்தமிட்டார். எச்சிலுடன் கண்ணீர் கலந்த முத்தம், மகளது உள்ளத்தையும் விம்ம வைத்தது.

காலையிலிருந்து அவளுக்கு ஏற்பட்ட மனக்கிலேசங்கள் எல்லாம் நொடியில் மறைந்து போனது, தாயின் அன்பில். தலையணையை சரியாக வைத்து, தாயை வசதியாக படுக்க வைத்து விட்டு வெளியே வந்தாள்.

உருண்டு விழுந்த பாத்திரத்தின் சத்தம் காதைப் பிளக்க, பின் வாயிலுக்கு விரைந்தாள். மேய்ந்து கொண்டே கதவில்லாத அப்பகுதிக்கு வந்து விட்ட கோழி ஒன்று அங்கிருந்த பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தது. வெளியே எப்படி செல்வது என்று புரியாமல் திருதிருத்த கோழி ஒன்று, இவளைக் கண்டதும், மேலும் படபடத்து அங்கேயே பறந்து பறந்து விழுந்தது. அதை விரட்டியவாறு, வீட்டை சுற்றிக் கொண்டு முன் பக்கத்திற்கு வந்தவள், சற்று தொலைவில் ஒரு பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த தந்தையைக் கண்டு முகம் சுளித்தபடி நின்று விட்டாள்.

தந்தையின் கைகள் அப்பெண்ணைத் தொட்டு தொட்டுப் பேசுவதையும், அப்பெண்ணும் அதற்கு வளைந்து கொடுப்பது போல், குழைந்து நிற்பதையும் காணக் கூசியவளாக, சட்டென்று பின்னால் திரும்பி ஓடினாள். படபடத்த மனதுடன், தென்னை மரத்தினருகில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அப்படியே அமர்ந்தாள்.

தந்தையைப் பற்றிய அனைத்தும் அவரது லீலைகள் உட்பட எல்லாமும் அறிந்தவர் தாய் மட்டுமே. இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள். திருமணத்திற்கு பிறகும் அவரது லீலைகள் தொடர்ந்தாலும், எப்போதும் கணவரிடம் மாறாத அன்பைக் கொண்டிருப்பவர். பெற்ற பிள்ளைகள் கூட கணவருக்கு பின்பு தான். அவருடைய தகாத உறவை நேரடியாகப் பார்த்து விட்ட சமயங்களில் கூட, வெட்கம், மானம் பார்த்துக் கொண்டு விலகி நின்றவரல்ல அம்மா. அந்த இடத்திற்கே சென்று, கதவைத் தட்டி சட்டையைப் பிடித்து இழுத்து வந்து, அவருடன் வாழ்ந்தவர். அப்படியென்ன இருக்கு அவரிடம்..? அம்மாவிடம் கேட்டால் புன்னகைத்து விட்டு, அலட்சியப்படுத்தி விடுவார் கேள்வியை. அந்த அன்பு எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. அப்படிப்பட்ட அன்பு கூட அப்பாவின் மனதில், இத்தனை வருடங்களில், ஒரு கீறலைக் கூட உண்டாக்கவில்லையா..? கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்…

இதுவரை அம்மாவிலிருந்து, சித்தி, பாட்டிகள் வரை தந்தையைப் பற்றிய ஆயிரம் கதைகளை கூறக் கேட்டிருக்கிறாள். ஆனால், இன்று நேரில் பார்த்தவுடன், தன்னையும் அறியாத விதிர்விதிர்ப்பு எழுந்து விட்டது மனதில். அப்படி ஒன்றும் பட்டவர்த்தனமாக இல்லையென்றாலும், உடல்மொழி புரியக் கூடிய வயதில் அல்லவா இருந்து விட்டாள். அம்மாவின் விபத்திற்கு பிறகு, அவிழ்த்து விட்ட மாடாக திரிகிறார், என்ற தாத்தாவின் புலம்பல்களினால் தான், அண்ணனிடமிருந்து அம்மாவுடன் இங்கே வந்தாள். யாருடைய வரவும் அவருடைய நடவடிக்கையை பாதித்ததாக தெரியவில்லை.

ஒருவரின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ளாத வரையில், அவருடனான உறவிலும் உணர்விலும் எந்தவித சிக்கலும் எழாது. மாறாக, அதனை தெரிந்து கொள்ளும் போது, அதுவும் மனதிற்கு நெருங்கியவராக இருக்கும் பட்சத்தில், விளைவுகளின் கனம், மனதை சுக்கு நூறாக உடைத்து விடுகிறது. அத்தகைய தருணங்களை எதிர்கொள்ள தெரியாமல் தடுமாறும் போது தான், பெரும்பாலான உறவுகள் சிக்கலாகி நின்று விடுகிறது.

நதியின் கரைகள் எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றனவோ, அந்த அளவிற்கு நீரின் பரப்பும் விரிந்திருக்கும். அதைப் போல, எத்தகைய உறவுகளில் பிணைந்திருந்தாலும், அவர்கள் தனித்தனி மனிதர்கள் என்ற யதார்த்தம் புரிந்தவர்கள் உறவுகளை விட்டுக் கொடுப்பதில்லை. இதை நன்கு உணர்ந்திருந்த போதும், அவளது மனதில் தந்தையின் செயல்கள் கசப்பையே படிய வைத்தது.

பிள்ளைகளில் ஆண், பெண் என்று வித்தியாசம் பார்ப்பவரல்ல தந்தை. சுதந்திரமும் ஒன்று போல தான் கொடுத்தார். ஆனால், எந்த விசயத்திலும் அம்மாவின் பேச்சே அரங்கேறும். ஆயிரம் சண்டைகள் நடந்தாலும், அம்மாவின் விருப்பப்படியே விட்டுக் கொடுப்பவர் அப்பா.. அதே நேரம், தன் விசயங்களையும் விட்டுக் கொடுக்காதவர். ஒருவேளை, இந்த ஒன்றிற்காகத் தான் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தாரோ..?? அதுவும் அம்மா இப்படி இருக்கும் சமயத்தில் கூட..?? இரயில் என்ஜினை தொடர்ந்து செல்லும் பெட்டி போல எங்கு சென்றாலும், அவர் பின்னாடியே செல்லும் அம்மா, இன்று பாதி வழியிலேயே அறுந்து, தொடர்பில்லாமல் நின்று விட்டார். அதற்காக என்ஜின் நின்று விடவில்லை.. முன்னிலும் அதிவேகமாக செல்கிறது. எல்லோரும் புனிதம் என்று போற்றும் தாம்பத்யத்தின் சக்தி இவ்வளவே தானா..?

“ கிணிங்.. கிணிங்.. “ மனதின் எண்ண அலைகளினால் குமைந்து கொண்டிருந்தவளை, மிதிவண்டியின் மணியோசை கலைத்தது. எழுந்து சென்று பார்த்தாள். தபால்காரர், மிதிவண்டியின் மீது அமர்ந்த வாக்கில் நின்று கொண்டிருந்தார்.

“ மணிவாசகம் யாரும்மா..? “

“ எங்கப்பா தான்.. “ தபாலை கொடுத்து விட்டு, அடுத்த வீட்டுக்கு நகர்ந்தார். வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவள், தாயின் அறையை நோக்கி சென்றாள். கதவைத் திறந்தவளின் காதில் தந்தையின் வார்த்தைகள், விழ எரிச்சலடைந்தாள்.

“ அம்மாடி.. சாப்ட்டியா..? “ என்றவாறு அன்னபூரணியின் கைகளை எடுத்து வைத்துக் கொள்ள முயன்றார். அவரது கைகளிலிருந்து தன் கைகளை உருவிக் கொண்ட அன்னம், அவரைக் கோபமாக பார்த்து விட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“ என்னாச்சும்மா.. அன்னம், இங்க பாரு “ முதலில் வெறும் பசப்பாகத் தெரிந்த வார்த்தைகள், மேலும் மேலும், வளர.. ” இந்த வார்த்தைகள் வெறும் பொய் தானா..? இல்லை நானே அப்படி நினைத்துக் கொள்கிறேனா..? ” என்று குழம்பியபடி நின்று கொண்டிருந்தாள்.

“ ஏ.. போ.. உல்..னை.. பத்தி.. தெழ்..யாது.. எவ்வெ..வ வீட்டு.. “ என்று ஆவேசமாகப் பேச ஆரம்பித்த அன்னபூரணி, இன்னது தான் என்று இல்லாமல், சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் விளாசினார். உணர்வுகளின் வீரியத்தில் உச்சத்திற்கு சென்ற குரலினால், பெரும்பாலான வார்த்தைகள் காற்றில் கலந்தது என்றாலும், அவரது முகபாவம் அதை மொழி பெயர்த்து வீசியது.

அம்மாவின் வார்த்தைகளில் திகைத்துப் போயிருந்தாள் கௌசல்யா. வெகு நாட்களுக்கு பின்னான தாயின் ஆவேசக்குரல். விபத்திற்கு பின் உடல் ஓரளவு குணமானாலும், மனநிலை பிறழ்ந்த நிலை தான். அப்போது அதிகமான கெட்ட வார்த்தைகளை எல்லோர் மேலும் உமிழ்ந்தார். மருத்துவரும், “ இந்த நிலையில் இப்படித்தான் இருப்பார்கள். மெல்ல மெல்ல சரியாகி விடும்.. “ என்று கூறினார்.

அப்போதும், தந்தையின் மேல் தான்.. அதிக வார்த்தைகள் விழும். குரோதத்தில் கொப்புளிக்கும் வார்த்தைகள் நாலா பக்கமும் சிதறினாலும், அது தந்தையை குறித்தே என்பது சர்வ நிச்சயம். அப்போதைய சூழலில் காரணம் விளங்கவில்லை. நாளடைவில் ஆவேசம் குறைந்து இப்போது சாதாரண வார்த்தைகளும் நின்று போயிருந்தது. ஆனால், மீண்டும் அதே ஆவேச வார்த்தைகள்.

அம்மாவின் ஆழ்மனதிற்குள் எப்போதும் அப்பாவைப் பற்றிய அவநம்பிக்கை இருந்திருக்கிறது. அது தான். எந்நிலையிலும் அப்பாவை அவரால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அவர் மீது வார்த்தைகளைக் கொட்டுவதற்கு துடிக்கிறது. பார்க்க முடியாததைக் கூட, யாரும் சொல்லாமலே தெரிந்து கொள்ள முடிகிறது. இருவருக்கிடையிலான பந்தத்தின் தன்மையை ஆராயப் புகுந்து கொண்டிருந்தவளை, தாயின் இருமல் சத்தம் அறைக்குள் இழுத்து வந்தது.

மணிவாசகம் தண்ணீர் கொடுக்க, அதை மூர்க்கத்துடன் தள்ளி விட்டவர், மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க இருமிக் கொண்டிருந்தார். நிலைமை புரிந்தவளாக, உள்ளே சென்றவள், தாயின் தலையை தாங்கிப் பிடித்து, தந்தையிடமிருந்து வாங்கிய நீரை, சிறிது சிறிதாக புகட்டினாள். அவரது ஆவேசம் தணிந்ததில் இருமலும் நின்றது. மகளின் கைகளிலிருந்து தலையை விலக்கிக் கொண்டவர், மறுபுறம் திரும்பி அமைதியாக படுத்துக் கொண்டார்.

தாயின் செய்கையில் தந்தையின் பக்கம் திரும்பியவள், அவரைக் காணாது, நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தாள். வாழ்வின் எல்லை வரை தாயின் நிழலிலேயே இருந்து விடலாம், என்ற அவளது எண்ணத்தைப் பொய்யாக்கியது அவருக்கு நேர்ந்த விபத்து.

அன்னபூரணி- மணிவாசகம் தம்பதியருக்கு… கதிர் என்ற மகனும், கௌசல்யா, கௌரி என்ற மகள்களும்… வாரிசுகள். முதலில் திருமணம் முடிந்திருந்த கௌசல்யா, தன் கணவனது நடத்தையின் காரணமாக, சில ஆண்டுகளில் ஒரு பிள்ளையுடன் நிரந்தரமாக தாய் வீட்டிற்கே வந்து விட்டாள். அடுத்தடுத்து, கதிர், கௌரியின் திருமணங்கள் முடிந்து, அவரவர் வாழ்வில் நிலைத்தனர். கடமைகள் முடித்த நிறைவில், மணிவாசகம் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகும் காலமும் நெருங்கியது.

எஞ்சிய காலத்தை சொந்த பந்தங்கள் நிறைந்த தனது ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர், அன்னபூரணியும் மணிவாசகமும். எத்தனைக் கனவுகள், எத்தனை திட்டங்கள், எத்தனை முன்னேற்பாடுகள், அத்தனையும் பகலவன் முன் பனி போல ஒன்றுமில்லாமல் போனது. மணிவாசகத்தின் பணி நிறைவு விழாவிற்கு ஒரு மாதமிருந்த நிலையில், பயணத்தின் போது வண்டியிலிருந்து தவறி விழுந்த அன்னபூரணியின் மூளையின் ஒரு பகுதி மட்டும் தற்காலிக வேலை நிறுத்தம் செய்து விட்டது.

அன்னபூரணி நிஜமாக இருந்தும் நினைவுகளாகிப் போனார். தாயின் நிழல் மட்டுமே, தனக்கு என்றும் சாசுவதம் என்றிருந்த கௌசல்யாவே, அவருக்கு சர்வமும் என்றாகிப் போனாள். வாழ்வின் திசைகள் இது தான். அது இப்படித்தான் செல்லும் என்று எவராலும், கற்பனையிலும் கணிக்க இயலாது, என்பதை வலிக்க கூறிச் சென்றது காலம்.

******************

“ அம்மா.. அத்தை.. “ என்று பின்னாடியே அலைந்த பிள்ளைகளின் உற்சாகக் குரல்களில் வீடே மகிழ்வில் நிறைந்திருந்தது. ஆளுக்கொரு நினைவு, நினைவுக்கொரு காரணம்… என்று எப்பொழுதும் ஏக்கத்திலாடும் வெறுமையின் நிழல் சூழ்ந்திருந்த வீட்டில் பிள்ளைகளின் வருகை, ஒளியூட்டியது. கதிரும் கௌரியும் அவரவர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்

எப்போதையும் விட இரட்டிப்பு வேலைகள். ஆனாலும், வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் குமிழியிட்ட மனதுடன் வளைய வந்த மகளை, வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அன்னபூரணி. அம்மாவிற்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த கௌரி, அவரது பார்வையை உணர்ந்து கொண்டாள். ஆயினும், “ என்னம்மா..? “ என்று வினவினாள்.

“ அக்கா.. பாவம்.. “ என்றவர், மகளிடமிருந்து நீண்ட கைகளின் உணவை தன் வாய்க்குள் வாங்குவதில் முனைந்தார்

அம்மாவின் வார்த்தைகள் அவளுக்குள்ளும் துயரத்தை கவிழ்த்தது. ஆனால், அதைக் கூறியவரோ, சலனமற்ற முகபாவத்துடன், தன் சக்தியெல்லாம் திரட்டி உணவை மென்று கொண்டிருந்தார். அவரது சிரமம் கண்டவளுக்கு, கண்களில் நீர் துளிர்த்தது.

ஒரு வாய் உணவை மென்று தின்பதற்குள், அவர் படும் பாடுகள் சொல்ல முடியாது. முதலில் மிகுந்த சிரமத்திற்கு ஆளானவர் உணவையே வெறுத்து, உடல் மெலிந்தார். வாயின் சிரமத்தை, வயிற்றுப்பசி வென்றுவிட, எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற நிலையில், அச்சிரமத்தையும் நாளடைவில் பழக்கப்படுத்திக் கொண்டார். வாய்க்குள் வைக்கும் உணவை, ஒரு பக்கமாக தள்ளி பின்பு மென்று விழுங்குவதைக் கண்டவளுக்கு, பழைய அம்மா கண்ணில் தோன்றினார்.

” இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் அம்மா, சுடச்சுட சமையலறையிலேயே சாப்பிட்டு பார்க்கும் அம்மா, போற போக்கில் சாப்பிட்டு செல்லும் அம்மா.. “ என்று நினைவுகள் வரிசைக் கட்டி நிற்க, அடக்கப்பட்ட துயரத்தின் மீறல், சிறு கேவலாக எழும்பி அடங்கியது. தாயும் உண்டு முடித்திருக்க, காலி பாத்திரத்துடன் நகர்ந்த கௌரியும்..

பிள்ளைகளின் தேவைகளை கவனித்துக் கொண்டிருந்தாலும், தங்கையை அறிந்திருந்த கௌசல்யா, அவள் மீதும் ஒரு கண்ணை வைத்திருந்தாள். கௌரியின் முகபாவம், எப்பொழுது வேண்டுமானாலும் அவள் உடைந்து விடுவாள் என்பதை உணர்த்த, அவளை அவசரமாக பின் தொடர்ந்த கௌசல்யாவும்..

“ எங்கடி, இங்க வந்த..? என்ன வேலை இங்க உனக்கு..? “ தந்தையின் எள்ளலான குரலில் திரும்பி வந்தனர்.

“ ம்ம்.. அக்காவை பார்க்க வந்தேன்.. “ முகத்திலறைந்த கேள்விக்கும் தன்மையாகவே பதிலளித்த சித்தியை, “ ஏன் திரும்ப, திரும்ப இங்க வரீங்க.. “ என்பது போல் வருத்தமாக பார்த்த கௌசல்யா, மௌனமாக அங்கிருந்து சென்றாள்.

“ வேலை செய்றதா இருந்தா இந்தப்பக்கம் வாங்க. இல்லைன்னா, அக்கா, மகன்னு உறவு கொண்டாடிக்கிட்டு ஒருத்தரும் இந்தப் பக்கம் வரக்கூடாது.. சோறு திங்குறதுக்கு நாப்பு காட்டிட்டு வந்துருவாளுங்க.. “ திட்டிக் கொண்டே உள்ளே சென்றார்.

தந்தையின் இந்த புதிய பரிமாணம் கண்ட கௌரி, வாசலோடு திரும்பி செல்லும் சித்தியை தடுக்கவும் வாயெழாமல் திகைத்துப் போய் நின்றிருந்தாள்.

********************

வீட்டின் பின்புறம் பத்து, பனிரெண்டு மரங்களைக் கொண்டு அமைந்திருந்த, சிறு தென்னந்தோப்பு. காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. அந்தி நேர அஸ்தமனத்திற்கு, தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த கதிரவன், செந்நிறத்தில் கிரணங்களற்று தனித்திருந்தான்.

பல மணி நேரங்களாக அடக்கி வைத்த துயரமெல்லாம், கிடைத்த தனிமையில் கண்ணீராக வடிய, அக்காவின் மடியை நனைத்துக் கொண்டிருந்தாள் கௌரி. வாழ்வின் கடினப்பாதைகளுக்குப் பழக்கப்பட்டிருந்த கௌசல்யாவைப் போல அத்தனை சீக்கிரம் அவளால் வாழ்வின் திருப்பங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்திற்கு பிறகும் கூட தாயை விட்டு பிரிந்தறியாதவள். அம்மாவின் இந்த நிலைக்குப் பிறகு எல்லாமே மாறியதாக உணர்ந்தவள், ஒன்றும் புரியாமல், தவித்து அக்காவிடம் தஞ்சமடைந்திருந்தாள்.

“ கௌரி, இங்க பாருடா.. இன்னும் எவ்வளவு நேரம், இப்படியே அழுதுக்கிட்டு இருக்கப்போற.. எழுந்திரிடா.. “ என்றவளின் குரல் தழுதழுத்தது. தங்கையின் இடைவிடாத கண்ணீர் அவளையும் சற்று ஆட்டி விட்டது.

“ ஏன்க்கா எல்லாரும் மாறிப்போய்ட்டாங்க.. அண்ணன் கூட என்னைப் பார்க்கவே வரதில்லைக்கா. வீட்டை எப்படி வச்சுக்கணும்.. தம்பிக்கு என்ன கொடுக்கணும்.. ஒன்னுமே தெரியலை. சமையல் கூட நல்லா செய்ய தெரியலைக்கா. எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி இருக்குக்கா.. நான், இங்கேயே வந்துடுறேன். எனக்கு அம்மா வேணும்க்கா.. ப்ளீஸ்க்கா “ என்று கதறியவளை அணைத்துக் கொண்டவள், தவித்து போனாள்.

வாழ்வின் நிதர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் தங்கையை எண்ணி, உள்ளம் பரிதவித்த கௌசல்யா, என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல், அவளது முதுகையே ஆறுதலாக தடவிக் கொண்டிருந்தாள்.

“ இந்தக் கேள்விக்கெல்லாம் எனக்கும் பதில் தெரியாதுடா. இது மாதிரி நிறையக் கேள்விகளை யாருக்கிட்ட கேட்குறதுன்னு தெரியாம, எனக்குள்ளே கேட்டு கேட்டு நான் ஓஞ்சு போய்ட்டேன். யாருமே மாறலை. எல்லாரையும் அம்மா தான் நம்ம கண்ணுல இருந்து மறைச்சுருக்காங்க. அவங்க பார்வையாலயே நம்மளையும் பார்க்க வச்சிருக்காங்க. இப்ப தனியா பார்க்கும் போது தான், எல்லாமே நமக்குத் தெரியுது. அண்ணன் மட்டுமில்ல, அப்பாவும் கூடத்தான்னா.. நீ எப்படி தாங்குவியோ, அதனால எதையும் உங்கிட்ட இப்போதைக்கு சொல்லப் போறதில்லை.. “ என்று உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த கௌசல்யாவும் தங்கையின் ஸ்பரிஸத்தில் உறுதி குலைய, கண்ணீர் வடித்தாள்.

கௌரியின் அக்கா என்ற அழைப்பு மலையேறிப் போய் பலவருடங்கள் ஆகியிருந்தது. அம்மாவிற்கு இப்படி ஆனதிலிருந்து தான் அடிக்கடி இவ்வாறு அழைக்கிறாள். ஏனோ, அவள் ஒவ்வொரு முறை அக்கா, அக்கா என்று அழைக்கும் போதெல்லாம், அம்மாவிற்கான ஏக்கமே அதில் தொனிப்பதாக உணர்ந்திருந்த கௌசல்யா, இப்போதும் அதை உணர்ந்தவளாக நெஞ்சுருகிப் போனாள். மெல்ல மெல்ல, அழுகை அடங்கி சிறிது இயல்புக்கு வந்த கௌரி, அக்காவிடமிருந்து விலகி அமர்ந்தாள்.

” அக்காவின் சிரமங்களுக்கு கொஞ்சமாவது ஆறுதலாக இருந்து விட்டு வரலாம் என்று வந்து விட்டு, அவளிடமே ஆறுதலைத் தேடி அழுதோமே.. அதுவும் ஏதேதோ உளறி வைத்து.. “ என்று சங்கடத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு, அப்பாவின் மாற்றமும் மனதிற்குள் நண்டு போல பிறாண்டியது. ஆனால், கேட்பதற்கு துணிவில்லை. அவள் கேட்டாலும் கௌசல்யா சொல்வதாகவும் இல்லை.

அவரவர் நிலையில் ஏற்பட்ட இழப்பிற்கே அழுது தீராத நிலையில், யாருக்கு யார் ஆறுதல் கூறுவது, என்று மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர். ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்ட கௌசல்யா, தங்கையின் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள். வாய்மொழிகள் தோற்றுப் போகும் சமயங்களில் ஒரு தொடுகை, உள்ளத்து மொழிகளையெல்லாம் உரைத்து விடும். கௌரியும் அதை உணர்ந்து கொண்டாள்.

சமாதானமடைந்த மனங்களுடன் கைகளைக் கோர்த்துக் கொண்ட சகோதரிகள், அம்மாவின் அறைக்குள் நுழைந்தனர்.

“ சே.. எப்படி சொன்னாலும், சில ஜென்மங்களுக்கு உரைக்கவே மாட்டேங்குது “ என்றவாறு வெளியேறிய தந்தையின் குரலில் இருவரது கைகளும் ஒன்றையொன்று அழுத்தமாகப் பற்றிக் கொள்ள அப்படியே நின்று விட்டனர். வார்த்தைகளின் வீரியம் கால்களுக்குத் தளையிட்டிருந்தாலும், பார்வைகள் உள்ளே பாய்ந்து, அம்மாவிடம் அமர்ந்திருந்த சித்தியிடம் பரிதாபத்துடன் நிலைத்தது.

தந்தையின் பேச்சினால், விரிந்திருந்த புன்னகை மறைந்ததில், கன்றிய முகத்துடன் அமர்ந்திருந்த சித்தி எழலானார். அவரைத் தடுக்கும் விதமாக நீண்ட அம்மாவின் கையில், சித்தியின் கழுத்தில் கிடந்த முத்துமணி மாலை சிக்கிக் கொள்ள, நைந்திருந்த நூலில் இணைக்கப்பட்டிருந்த மணிகள் இலகுவாக கழன்று விழுந்தன.

அறுந்த நூல் கழுத்திலிருக்க… அதிலிருந்து விழுந்த மணிகள் நாலாபக்கமும் சிதறி உருண்டதில், மூலைக்கு ஒன்றாக ஓடின.

“ ப்ச்.. நீ வாங்கிக் கொடுத்ததுன்னு, எவ்வளவு பத்திரமா வச்சிருந்தேன். இப்படி நீயே அறுத்துட்டியேக்கா.. “ வருத்தமாகக் கூறிக் கொண்டே சிதறிய மணிகளை சேகரித்தவர், கழுத்தில் தொங்கிய நூலில் கோர்க்க எத்தனித்தார்.

“ விட்டுடேன்.. சித்தி. அதான் அறுந்து போய்டுச்சே “ என்றவாறே உள்ளே வந்த கௌசல்யாவின் வெற்றுக் குரலில்,

அவளை நிமிர்ந்து பார்த்தவர், “ மணியெல்லாம் நல்லா இருக்கே “ விட மனசில்லாமல் இழுத்தார்.

” வெறும் மணி மட்டும் நல்லா இருந்து என்ன பண்றது..? சித்தி நூலு நல்லா இல்லையே. ரொம்ப நைஞ்சு போய்டுச்சு. இனிமே தாங்காது.. வேற நூலு இருந்தா கோர்த்து போட்டுக்கோ.. ” என்றவளது கையை, அப்போது தான் விட்டிருந்த கௌரியின் கை மீண்டும் கலக்கத்துடன் இறுக்கிக் கொண்டது.

மகளது பேச்சில் என்ன உணர்ந்தாரோ, மணிகளை மட்டும் எடுத்துக் கொண்டவர், நூலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டார்.

அந்த நூலையேப் பார்த்துக் கொண்டிருந்த சகோதரிகள் இருவரும், சில நிமிடங்கள் கடந்த பிறகே, பார்வையை விலக்கி அன்னையிடம் சென்றனர்.

இலக்கற்றுத் திரியும் அன்னையின் பார்வை ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்க, கண்கள் பக்கவாட்டில் நீரை சரித்திருந்தது. ஆளுக்கொரு பக்கமாக சென்றவர்கள், அன்னையின் கண்ணீரைத் துடைத்தவாறே, அவரது பார்வை நிலைத்திருந்த இடத்தைக் கண்ட மாத்திரத்தில், அன்னையின் துக்கம் அவர்களையும் பற்றிக் கொண்டது. கணத்துக்கு கணம் பெருகிய துக்கம், மேலும் தாக்குப்பிடிக்கலாகாது என்பது போல், இருவரது விழிகளும் கண்ணீரை சொரிந்தன. விழிகள் நீரைப் பெருக்கினாலும், மூவரது பார்வைகளும் அவ்விடத்தை விட்டு சற்றும் அகலவில்லை.

இவர்களது பார்வை நிலைத்திருந்த இடத்தில் கிடந்த, அந்த அறுந்த நூலோ, ” மூவரது கண்ணீர் விழிகளுக்கு தான், காரணமாகி விட்டோமே.. “ என்ற சுய பச்சாதாபத்தில் தன்னைத்தானே சுருக்கிக் கொண்டு அலங்கோலமாக கிடந்தது..

*************************

Sarala.barathi@gmail.com

”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி / பாலகுமார் ( மதுரை )

images (4)

“Every nation gets the government it deserves.”

Joseph de Maistre

விளிம்பு நிலையிலிருக்கும் ஒரு சாதாரண குடிமகன், அதிகார வர்க்கத்தின் வருகைக்காக விரிக்கப்படும் சிவப்புக் கம்பளத்தின் அடியில் புழுவாக நசுக்கப்படுகிறான். அதன் வலி பொறுக்க மாட்டாமல், மனம் பேதலித்து தன்னையே அதிகாரத்தின் தலைமை பீடமாக உருவகித்துக் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான், ஆட்சி அதிகாரமும் அரசும் தனக்குக் கீழே என்ற கற்பிதத்தில் உலவத் துவங்குகிறான். அவன் செய்யும் கோமாளித்தனங்களுக்கான அரச, அதிகார அமைப்பின் எதிர்வினை தான் “ஜோக்கர்”. “வட்டியும் முதலும்”, “குக்கூ” என மக்களின் இயக்குநர் ராஜூ முருகனின் இரண்டாவது படம்.

சமபலம் கொண்ட இரண்டு நபர்களுக்குள்ளான பகை ஆக்ரோசமான சண்டையாக மாறும். பலம் பொருந்திய ஒருவனுடன் மோதும் பலவீனமானவனோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் இயலாமையை வெளிப்படுத்துவான். தன்னை விட அசுர பலம் கொண்ட மிகப்பெரிய அதிகார அமைப்புடன் மோதும் சாமான்யன் தன்னை கோமாளியாக்கிக் கொண்டு தான் தன் கோபத்தைக் காட்டுவான், தனது கோமாளித்தனங்களின் மூலமே அதிகாரத்தை பதட்டமடையச் செய்வான்.

அந்த வகையில் தனது ஆற்றாமையை, மன்னர் மன்னன் என்னும் சமான்யன் தன்னை “மக்கள் ஜனாதிபதியாக” நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே சட்டங்கள் இயற்றிக் கொண்டு, அரசும் அதிகாரமும் தனக்குக் கீழே இருப்பதாக நம்புகிறான். அது, அவன் சத்துக்கான எதிர்வினை. ஆனால், இடதுசாரி சிந்தனை கொண்டு, மக்களுக்காக தனி மனிதனாக போராடக்கூடிய பொன்னூஞ்சலும், குடியால் கணவனை இழந்து நிற்கும் இசையும் உண்மையான போராளிகள். அவர்கள் ஏன் “மக்கள் ஜனாதிபதி”யின் உதவியாளர்களாக சுருங்கிப் போனார்கள் என்பது விளங்கவில்லை. அது இயக்குநர் தான் சொல்ல விரும்பிய கருத்தை தானே பகடி செய்து கொள்வது போலத் தான் தோன்றுகிறது.

நுகர்வுக் கலாச்சாரம், சுயநலம், உலகமயமாக்கல் என்ற எல்லா மாயைகளுக்குப் பின்னும் இன்றும் வீதியில் இறங்கிப் போராடக்கூடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு (ஓட்டு அரசியலில் அது பிரதிபலிக்கவில்லை என்றாலும், கம்யூனிஸ்ட் தொண்டன் என்றால் காசுக்கு ஆசைப்பட மாட்டான் என்று) பொதுமக்கள் மத்தியில் ஓரளவு மரியாதை இருக்கிறதென்றால் அது கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் இயக்கக் கொள்கைகளின் மீது கொண்டிருக்கக் கூடிய சமரசமற்ற பற்றும், அமைப்பு ரீதியாக ஏற்படுத்தப் பட்டுள்ள ஒழுங்குமுறையுமே காரணம். அத்தகைய போராட்டங்களுக்கு வலுசேர்க்கக்கூடிய காட்சிகளை அமைத்தால் “க்ளிஷே” ஆகிவிடும் என்ற இயக்குநர் நினைத்தாரோ என்னவோ, “ஜோக்கர்” தலைமையேற்று நடத்தும் கவன ஈர்ப்பு கலை நிகழ்ச்சிகளாய் அமைத்து பார்வையாளர்களை வெறும் சிரிப்போடு நகர்ந்து போகச் செய்திருக்கிறார்.

download
ஆரம்ப காட்சிகளில் எங்கெல்லாம் மக்கள் ஜனாதிபதி சென்று உத்தரவு இடுகிறாரோ அங்கே அவரை சமாதானம் செய்து தள்ளிக்கொண்டு செல்ல ஒரு கடைநிலை ஊழியர் வருகிறார், அவ்வளவு தான். அதிகாரத்தில் இருப்பவர், மக்கள் ஜனாதிபதியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அது தான் நிதர்சனம். ஆனால் சமூக வலைதளங்கள் முழுவதிலும் அவருக்கு ஆதரவு பொங்கி வழிவது போலவும், அதனால் புரட்சி வெடிக்கக் காத்திருப்பது போலவும் காட்சிப்படுத்தியிருப்பது, இணையத்தில் இயங்கும் ஐயாயிரத்து சொச்சம் பேர் தனது படத்தை ஓட்டித் தள்ளிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அவர்களையும் தன் பக்கம் கூட்டு சேர்த்துக் கொள்வதற்காக, இணைக்கப்பட்ட காட்சிகள் போலவே தான் தோன்றியது.

ஆனால், நீதித்துறையின் முன் காவல்துறை அடிபணிந்து நிற்பதையும், அந்த கோபத்தை எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காட்டும் வன்மத்தையும் உண்மையாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

அரசின் கடைநிலை ஊழியர் முதல், உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் என சகலரையும் ஊழல் பெருச்சாளிகளாக்கி, கடைக்கோடி சாமான்யன் மட்டும் தூய்மைவாதியாக வாழ்கிறான் என்பது என்ன “இஸம்” என்று தெரியவில்லை. நிஜ உலகில் கழிப்பறைகள் கட்டியதாக கணக்குக் காட்டி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வைபவங்களும் நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால் அங்கே சாமான்யன் வெறும் கோப்பையை மட்டும் பெற்றுக் கொண்டு செல்வதில்லை, அவனது பங்காக ஐநூறோ, ஆயிரமோ பெற்றுக் கொண்டு அந்த ஊழலில் தன்னையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்வது தான் வாடிக்கையாக இருக்கிறது. சமூகத்தை பிரதியெடுக்கும் கலை எல்லா திசைகளிலும் ஒரே துலாக்கோலை பயன்படுத்த வேண்டும் தானே.

படத்தின் பலம், கூர்மையான மற்றும் துணிவான வசனங்கள். ஹெலிகாப்டரை வணங்குவது முதல் அரை மணி நேர உண்ணாவிரதம் வரை சமகால அரசியலை நேரடியாகவே பகடி செய்யும் வசனங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் இறுதிக் காட்சியில், பொன்னூஞ்சல் திரையைப் பார்த்து பேசுவதெல்லாம் சொஞ்சம் மேடை நாடக பாணியில் இருப்பது போலத் தோன்றியது. “நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா !” என்ற வாசகங்களுடன் படம் முடிகிறது.

படம் முடிந்து வெளிவரும் போது, குற்றவுணர்வா அல்லது போதாமையா அல்லது எரிச்சலா என்று வகைப்படுத்த முடியாத ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருந்தது. இயக்குநர் சொல்ல விரும்பிய செய்தி என்னவாயிருக்கும் என்ற குழப்பத்துடனே திரையரங்கை விட்டு வெளியேறினேன். பலருக்கும் இதே போன்ற உணர்வுகள் தோன்றியதோ என்னவோ, சலசலப்புடன் வெளியேறும் கூட்டத்திலிருந்து வந்த குரல்களில், “இதை மறக்கணும்னா அடுத்து கிடாரியோ, தர்மதுரையோ பார்த்தா தான் சரியா வரும்” என்ற வார்த்தைகள் கேட்டன. இது தான், இவ்வளவு தான் இன்றைய சராசரி ரசிகனின் மனநிலை என்பதாகப் புரிந்து கொண்டு வந்தேன்.

••••••••

சொல்லாதே யாரும் கேட்டால் ( கவிதைகள் ) – அன்பாதவன் ( துபாய் )

images (3)

1 இடைத் தேர்தல்
கன்னத்தில் போட்டு மன்னிப்புக் கேட்கிறான்
பரமன்
கை கொட்டி சிரிக்கிறாள் சக்தி

தலை நகரர்கள் நிராகரித்த
கை வீழ்ந்து கிடக்கிறது..வீதியில் கவனிப்பாரின்றி

விலைவாசி ஒசந்து போச்சு சாரே
பொது தேர்தலில் எறநூறு…
இடைத்தேர்தலில் அஞ்சாயிரம்
இடையினங்கள் நிர்யனித்த விலை

காவேரியைப் போலவே புதிராய் அரங்கன்
மீளாத்துக்கமா…நடிக்கிறானா

தாமரையில் இப்போதும் ரத்தக்குஷ்பூ

துலுக்க நாச்சியாரின் காதலனுக்கு
சாதி..பிடித்திருக்கிறது
நல்லவேளை
மதம் பிடிக்கவில்லை..

காய்ந்தே கிடக்காதுடா காவிரி
புதுவெள்ளம் வரும்
வாழிய தமிழர்…வாழிய தமிழகம்
வாழிய பாரத money.திருநாடு

2 சொல்லாதே யாரும் கேட்டால்

உனக்குத்தான் தம்பி இந்த செய்தி
காத்துக்கிடக்கிறது சோற்றுத்தட்டு
காணவில்லை காக்கைகளை

விளக்குமாறு …விபரீத வெற்றி
விளக்குமாறு கேட்டால்…
அதானி..புதானி..ரிலயன்ஸ் குலயன்ஸ்

எளிய ஜனங்களின் மீது துப்பினால் எச்சில்
தொடப்பக்கட்டை பேசும்

அய்நா பொய்நா
தம்பி எங்கே நய்னா

அரங்கா…தூங்காதே
அய்நூரோ ஆயிரமோ வாங்கிட்ட
கள்ள் ஓட்டு போடு
சோழவளநாடு..சோறுடைத்து

சொற்களின்றி துடிக்கிறானொரு மாகவி
சுண்டெலிகளின் குத்தாட்ட நாராசம்

தனுசு சிம்பு…அய்ஸ்வரியா வம்பு
ஒடம்புக்கு நல்லது கம்பு

ஒலகமெல்லாம் எண்ணய்விலை கொற்ஞ்சாலும்
கொற்யாதுடா நம்ம தேசத்துல
கொளுத்துங்கடா…அவுனுவள…
ஓம் காந்தி….
ஹிம்சை அஹிம்சை…
தீர்வெழுதவோ….தீர்ப்பெழுதவோ

3
இந்த முறை முந்தி கொண்டார் ..சைலபதி …
நீங்கள் எழுதியே தமிழன்னை தவம் களைவாள்

மாற்றத்துக்கு தயாராகி விட்டார் மாதொருபாகன்

இன்குலாப். கவிதைகள் மக்களுக்கானதென ஏற்றார்
இன்னொரு நவீனக்கவி

மனஓசை காலம். மறந்து போனதா
மார்க்சியம் தான் இறந்து போனதா

அம்பாள். மெஸ்ஸில் வடகறி
முனியாண்டி விலாசில் தலக்கறி

ஆய்த எழுத்தை ப்படி
காயிதத்தில் வை வெடி

4
என் கவிதைக் காதலி கட்டளய் இட்டாள்
இன்று நீ எழுத வேண்டுமொரு ணவீந கவிதை
தயிர்சோத்துக்கு மோர்மிளகாய் தோதா
தொடைதெரிய ஆடுகிறார் மு.முதல்ல்ல்வர்

ஜின்னும் ரம்மும் இலக்கண ப் பிழையாம்
கீழ்க்கடயின் கோழி வாசம் துளய்க்க
தோட்டாஆள்…பூஊ மலரும்
தலைவன் தொட்டு தொட்டு..பாடுகிறான்
துள்ளி எழுந்தது பாட்டு

வண்ணதாசன்…கலாப்ரியா..பென்ஷன் கவிகள
சக்திஜோதி..மனுஷ்யபு…..கவி மெஷின்களென்றான் தோழன்

குடிகார நவீனக்கவிகள் போதை தெளியுமா
போலிஸ் எழுதும் லத்தி கவியில்

இலக்கண ப்போலி….அப்போது
இலக்கியப் போலிகள் இப்போது

காலி பீர்பாட்டிலால் கவியெழுதுகிறான் மதியழகன் சுப்பையா…
குருதி வழிய….நோபல் பெறுகிறார்…
அன்பாதவர்….

டமில் வால்க

5
எனக்கு இன்னொரு கவித வேனுங்கண்னா
அடம்பிடித்தழுகிறான் மதி
என்னடா இந் நவீனக்கவிஞனுக்கு வந்த சோதனை
விசிலடித்து அழைக்கிறது குக்கர்
நேற்றும் அதற்கு முன்னரும்
ஒளிபரப்பிய பாடல்களால் துன்புறுத்துகிறது செய்யா ட்டீவீ…ல்
சன்னலுக்கு வெளியே மவுனமாய் நிற்கின்ரன
கார்கள்..
குளிக்க சென்ற இல்துணையின்
கைபேசியை பிரித்து மேயுமொரு கறுப்பாடு
நெதமும் ரசம் வை..தொட்டுக்க விசம் வை
அடடா கவித..கவித..
தலித்களுக்கு கவிதை எழுத வராதென்றுளருகிற்து
ஊறுகாய்க்கு வக்கில்லாத குடிகார நாயொன்று
அடிச்சிட்டு குடிக்கவா..குடிச்சிட்டு அடிக்கவா
எரநூறுக்கு ஓட்டு விக்கும்
தமிழ்த்திரு நாடுதன்னை பெற்ற தாயென்று கும்பிடடி..பாப்பா
அடேய்…அம்மான்னா சும்மா இல்லடா
அய்யான்னா புள்ளவோ தொல்லடா
மதமாற்றம் சாத்தியமாம்
சாதி மாற முடியுமா கண்மணி
கேட்கிறான் மதுரை வீரன்
னவீந கவியென ஜல்லியடிக்கும்
ஒய்யாரக்கொண்டயின் தாழம்பூக்களே
வாங்கவே பாக்கலாம்
நீயா நானா..
எலேய் மதி
இந்த கலுத போதுமா
இன்னுங்கொஞ்சம் வேனுமா

*****

கபாலி: வர்க்கப் போராட்டமும் தலித்திய அடையாளங்களும் / கே.பாலமுருகன் ( மலேசியா )

images (1)

தொடர்ச்சியாகச் சமூக வலைத்தளங்களில் கபாலி படத்தைப் பார்க்க வேண்டாம் என வதந்திகளும் செய்திகளும் கடந்த வாரங்களில் பரப்பப்பட்டு வந்தன. கபாலி படத்தை ஏன் பார்க்கக்கூடாது எனத் தீவிரமாக அந்த வதந்திகளை ஆராய்ந்தால் இரண்டு விடயங்கள் தெரிய வருகின்றன.

ரஜினி படம் ரஜினி படத்தைப் போன்ற வழக்கமான பார்மூலாவுடன் இல்லை/ விசில் அடிக்க முடியவில்லை/ ஆர்ப்பரிக்க முடியவில்லையாம்.
சென்னையில் நடந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினி பண உதவி செய்யவில்லையாம்.

முதல் தரப்பிற்கான பதில்:

ரஜினி தன் வயத்திற்கேற்ற நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார். படத்தின் பாதி காட்சியில் சிறையிலிருந்து வெளியேறிய ஒரு குண்டர் கும்பல் தலைவன் தன் குடும்பத்தைத் தேடி அலைகிறார். ஓர் உணர்வு கொந்தளிப்பில் கதை நகர்கிறது. இயக்குனர் ரஞ்சித் மலேசிய அரசியல்-சமூகவில் பிரச்சனையை வர்க்கப் போராட்டமாக மேலோட்டமாகக் காட்ட முயன்றிருக்கிறார். இருப்பினும் இது வழக்கமான ரஜினி பார்மூலாவிலிருந்து மாறுப்பட்டு இருப்பதை ஏன் நாம் வரவேற்கக் கூடாது? நமக்கு விசில் அடிக்கக் காட்சிகள் இல்லை என்றால் அது படத்தின் குற்றமா? ஆனால், உள்ளார்ந்து இப்படத்தின் அரசியலை அணுகினால் மலேசிய வரலாற்று தளத்தை இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய இந்திய தலித்திய அரசியல் கொள்கையை நிறுவுவதற்குப் பாவித்துள்ளார் என்பது தெரிய வரும்.

இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு:

நீங்கள் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்டு படமெடுக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சியான செய்திதான். உங்களது தமிழினத்தின் மீதான அக்கறைக்கு மிக்க நன்றி. ஆனால், இதையொரு மலேசியப் பின்புலம் கொண்ட படமாக எடுக்க நீங்கள் எந்தளவிற்கு முயற்சிகள்/ கள ஆய்வு செய்தீர்கள் எனத் தெரியவில்லை. மைஸ்கில் அறவாரியம் மேற்கொள்ளும் நன்முயற்சிகளைப் படத்தில் இணைத்திருப்பதைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனாலும், மேலும் பல விசயங்களைக் கவனித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அவற்றுள்:

மைஸ்கீல் அறவாரியத்தின் முயற்சிக்குப் பின் இருப்பவர்கள் சமூக ஆர்வளர்கள்; சமூகத்தை நோக்கி தர்க்கப் போராட்டத்தில் செயல்பட்டவர்கள்; அவர்கள் யாவரும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால், கபாலியில் அதுபோன்ற கைவிடப்பட்ட மாணவர்களின்/இளைஞர்களின் மறுவாழ்வு செயல்பாடுகளை ஒரு முன்னாள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்வதைப் போல காட்டியுள்ளீர்கள். (இது உங்கள் கற்பனை)

அடுத்து, மலாயாவின் தொழிற்சங்கத்தின் தலைவரான சமூகப் போராட்டவாதி திரு.ஏ.எஸ்.கணபதி அவர்களை ரஞ்சித் கபாலியில் காட்டியிருக்கிறார் எனப் பலர் சொல்கிறார்கள். ஆனால், மலாயா கண்டடைந்த மிகத் தீவிரமான போராட்டவாதி திரு.கணபதி அவர்கள் எந்தக் குண்டர் கும்பலையும் சார்ந்தவர் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழிலாளிகளின் சம்பள உயர்விற்காகப் போராடிய சுபாஷ் சந்திரபோஸ் காலத்திலேயே மலாயா வந்து மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ‘முன்னணி’ இதழுக்கு ஆசிரியராகப் பணிப்புரிந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எப்படி ஒரு குண்டர் கும்பலில் சேர்ந்து மக்களுக்காப் போராடினார் என எடுத்துக் கொள்ள முடியும்?

அவர் தொழ்ற்சங்கத்தின் வாயிலாக பல எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தவர். ஆக, மலேசியா வந்து எல்லாம் கதையும் கேட்ட இயக்குனர் ரஞ்சித் எல்லாவற்றையும் கலந்து ஒரு கற்பனை ரோபின் ஹூட்டைத் தயாரித்துவிட்டார். அதில், எந்த நிலைத்தன்மைமிக்க அரசியல் வெளிப்பாடும் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. ஒரு வர்க்கப் போராட்டமாக உரத்து ஒலிக்க முடியாமல் போக அரசியல் வரலாற்று பிழைகளையே காரணமாக முன்வைக்க முடிகின்றன.

ஒன்று, கபாலியைத் தொழிற்சங்கப் போரளியாக நிறுவியிருக்கலாம்; ஒரு குண்டர் கும்பலைச் சேர்ந்தவர் ( 00 ) எனக் காட்டியிருக்கத் தேவையில்லை. அப்படிக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர் எனக் காட்ட நேர்ந்தால், இங்கு அப்படி யாரும் அரசியல் ரீதியில் பெரும் வர்க்கப் போராட்டத்தை நடத்தியதும் இல்லை. ஆக, ரஞ்சித் தான் நம்பும் தலித்திய போராட்டத்தை மலேசியாவிலுள்ள வர்க்கப் போராட்டச் சூழலில் பொருத்தி பார்க்க நினைத்துள்ளார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட கதைக்கான மையம் குண்டர் கும்பல். மலேசிய சூழலில் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் எனும் பின்புலத்தை ஆராய்ந்து படமெடுத்திருந்தால் அதற்கான கதைச்சூழல் விள்ம்புநிலைக்கான தளைத்தை நோக்கி நகர்த்தியிருக்கும். வர்க்கப் போராட்ட்த்தின் விளைவுகளில் ஒன்றே மலேசியத் தமிழர்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு குற்றவாளிகளாகவும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களாகவும் மாற்றுகிறது என்கிற உண்மையை வலுவாகச் சொல்லியிருக்கலாம்.

உங்களுடைய மெட்ராஸ் திரைப்படத்தைப் புரியவில்லை எனச் சொன்னவர்களுக்குச் சுவர் ஓர் அதிகாரத்தின் குறியீடாகவும், அதையொரு கௌரவ அரசியலாகப் பாவிக்கும் சூழலையும் மிகத் தெளிவாகப் பாடமாக்கியுள்ளார் எனப் பெருமையாகச் சொல்லியிருந்தேன். ஆனால், ஒரு மலேசியக் குடிமகனாக இப்படத்தை அப்படிப் பெருமைப்படக் கூறமுடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும். நான் ஒரு சினிமா இரசிகன்; என் சுகத்துக்கங்களில் சினிமா கலந்திருக்கிறது என்கிற உரிமையிலேயே இதனைக் கூறுகிறேன். ஒரு நல்லவன்; ஒரு கெட்டவன்; இருவருக்கும் போராட்டம்; கடைசியில் நல்லவன் வெற்றி பெறுவான் என்பதே உங்கள் கதையின் மையநீரோட்டம். அதற்கிடையில் சில நல்ல விசயங்கள் வந்து போவதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

சீனர்களை மட்டுமே எதிரியாகக் காட்டிப் படத்தை முடித்திருக்கிறார் எனப் பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். தோட்டத்துண்டாடலின் போது தமிழர்கள் வாழ்ந்த தோட்டங்களைப் பெரும்பான்மையாக வாங்கியது சீனர்கள்தான் என்பதாலும் அப்பொழுது ‘கொங்சி கெலாப்’ மூலம் குண்டர் கும்பல் உருவாகக் காரணமாக இருந்தவர்களும் அவர்களே என்பதால் இக்கதையில் அவர்களைத் தவிர்க்க முடியவில்லை. வில்லனாக ஒரு சீனர் வருவதற்கும் அதுவே காரணமே தவிர இதுவொரு இனத்துவேசம் எனச் சொல்வதற்கில்லை. வரலாற்றை எப்படி மறுக்க முடியும்? ஆனால், ஒரு சில உண்மைகள் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வசனங்களும் நீக்கப்பட்டுள்ளன. அவற்றின் அரசியலும் நமக்குத் தெரியாமலில்லை.

இரண்டாம் தரப்பிற்கான பதில்:

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு உரிய தொகையைக் கொடுத்து உதவி செய்ய வேண்டியது ரஜினியா அல்லது அரசாங்கமா? ஏன் ரஜினி என்ற ஒரு நடிப்புத் தொழிலாளியிடம் பணத்தை மக்கள் எதிர்ப்பார்க்க வேண்டும்? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உதவுவதும் உதவாததும் அவரவர் மன அமைப்பு/ சூழ்நிலை பொருட்டே. அப்படிப் பார்த்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் கொடுக்காத அனைத்து நடிகர்களையும் பட்டியலிட்டு அவர்களின் படங்களைப் பார்க்கக்கூடாது என முடிவெடுத்திருக்க வேண்டும் அல்லவா? அவர்கள் நடிகர்கள். சினிமா தொழிலாளிகள். பணம் தராத எத்தனையோ துறையைச் சேர்ந்தவர்களும் பணம் புழங்கும் முதலாளிகளும் இருக்க ஏன் கபாலியை எதிர்க்க வேண்டும்?

அப்படியே ரஜினி பணம் இருந்தும் கொடுக்க மனமில்லாதவர் என்றே வைத்துக் கொள்வோம். அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை. ஆனால், கபாலி என்ற படம் ரஜினியின் சொந்த செலவில் உருவான உழைப்பு கிடையாது. ஒலி/ஒளி கலைஞர்கள், இசை கலைஞர்கள், லைட்டிங் தொழிலாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்த்தரகள், அவரவர்களின் குடும்பங்கள் என இப்படி ஒரு சினிமாவை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன. ரஜினி என்கிற தனிமனிதரின் மீதுள்ள வெறுப்பால் யாரைப் பழி வாங்க முற்படுகிறார்கள்? கபாலி என்ற சினிமாவைப் பார்க்காமல் தடை விதித்தால் ரஜினியைப் பழி வாங்கிவிடுவது என அர்த்தமாகிடுமா?

அடுத்ததாக சினிமாவை மக்கள்தாம் வாழ வைக்கிறார்கள். அப்படியிருக்க மக்களிடமிருந்து பெற்ற பணத்தை மக்களுக்கே திரும்பித் தருவதில் ஏன் ரஜினிக்கு மனமில்லை என்கிற தார்மீகமான கேள்வி என்கிற தோரணையில் முன்வைக்கப்படுகிறது. தயாரிப்பாளர் என்பவருக்கே ஒரு படம் முழு உரிமை. அப்படத்தில் நடித்ததற்காக நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. இது கதாநாயகத்துவ சினிமா உலகம். கதாநாயகனை முன்வைத்தே ஒரு படத்தின் வெற்றி நிர்ணயக்கப்படும் சூழல் தமிழ் சினிமாவிலும் கோலோட்சி அடைந்துவிட்டதால் அதிகமான சம்பளத்தைப் பெறும் முதலீட்டு நிறுவனமாகச் சினிமா மாறிவிட்டது. ஆகையால், ரஜினியை மட்டும் சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர் எனப் பட்டியலிட முடியாது. இன்று உருவாகி வந்திருக்கும் சிவக்கார்த்திகேயனுக்கும் மற்ற மூத்த நடிகர்களை விட சமபளம் அதிகம் தான். இது கதாநாயகனை வழிப்படும் சூழல் நிறைந்திருக்கும் காலக்கட்டம். இதற்கு ஒட்டுமொத்தமாக யாரைக் குறை சொல்வது எனத் தேடினால்/ஆராய்ந்தால் மக்கள் திலகம் எம்.எஜ்.ஆர் காலத்திலேயே கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாவைப் பார்க்கும் பழக்கம் உருவாகிவிட்டதை அறிய முடியும். ஆகவே, இத்தகைய சூழலில் தான் நடித்ததற்காகச் சம்பளம் வாங்கும் ரஜினியிடம் மட்டும் அறத்தை/தர்மத்தை எதிர்ப்பார்ப்பது அத்தனை தார்மீகமாகத் தெரியவில்லை. அப்படிப் பார்த்தால் உதவ முன்வராத யாவரையும் குற்றம் சாற்றலாம். ரஜினியை மட்டுமல்ல.

••••••••

அசாத்தியமான சந்தர்ப்பம் ( கவிதை ) / அனார் ( இலங்கை )

1238851_3477674398665_474596477_n

அசாத்தியமான சந்தர்ப்பம்

வான்கோவின் செம்மஞ்சள் வயல்களில்
அலைகிறது வெட்டுக்கிளி

ஏதோ ஒரு அசாத்தியமான சந்தர்ப்பம்
சூனியத்தின் உள்ளரன்களை
தகர்த்து பொடியாக்குகின்றது

அறுவடையான நிலங்களின் மேல்
உருக்கப்படும் செம்புக் குழைவு
கசிந்துருகிட….
நிறக்குடுவைகளில் தழும்புகின்ற
கூர்மையான விதி
தனித் தனியானதாக
வைக்கப்பட்டிருக்கின்றன

கண் இமைகளுக்கிடையில்
ஆழ் நீலச் சிவப்பின் மரணச் சாயலை
நிரந்தரமாகப் பொருத்தினாய்

தெய்வீகத்தால் பயிற்றப்பட்ட
விலங்கைப்போல்
கால் மடித்து அமர்ந்திருப்பவளை
கண்டும் காணாதவாறு
திரும்பிப் போகிறாய்.

கபாலி – கலகம்- கண்ணாமூச்சி அ.பாண்டியன் ( மலேசியா )

download

இது திரைப்பட விமர்சனம் அல்ல. எனக்குத் திரைப்பட விமர்சனம் எழுதுவதில் ஆர்வம் இல்லை. எனவே இது ஒரு கதை விமர்சனம் மட்டுமே என்ற புரிதலோடு கட்டுரையை வாசிக்கலாம்.

கபாலி படத்தின் திரைக்கதை மிக நுணுக்கமானது. இது மிக கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் சில ஆபத்தான கவனக்குறைவுகள் நிகழ்ந்துள்ளன. அடிப்படையில் இக்கதை பாட்டாளி சமூகத்தின் வாழ்க்கை போராட்டங்களைத் தனது மேற்பரப்பிலும் தலித்திய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான குரலை அடித்தளத்திலும் வைத்துள்ளது. ஆயினும் அதன் போராடக் குரலை ஆக்ககரமான அரசியல் வழியிலோ, சமூக போராட்டவழியிலோ வைக்காமல் வன்முறை குண்டர் கும்பலின் குரலாக காட்டுகிறது. கபாலி படம் பல தரப்பினரின் பிழையான புரிதலுக்கும் தவறான கண்ணோட்டத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுவதற்கு அதன் திரைக்கதை அடுக்குகளே காரணம்.

பல்வேறு சமூக பின்னனிகளை ஒரே கோட்டில் வைத்து பேச முயலும் இக்கதையமைப்பு காந்திரமான விமர்சனங்களை எதிர்கொள்வது இயல்புதான் என்று தோன்றுகிறது. இந்த மொத்த அடுக்குகளையும் ரஜினிகாந்த் என்னும் ஆதர்ஷ களைஞனின் மேல் கட்டியிருப்பதால் இப்படம் பொது புத்தி ரசிப்புத் தன்மைக்கும் தீவிர அரசியல் கருத்துகளுக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

இப்படம் தலித்திய எழுச்சியைப் பேச முயலும் படம் என்பது முதல் காட்சியில் ரஜினி வாசிக்கும் புத்தகத்தை கவனப்படுத்திக் காட்டுவதில் இருந்து தெளிவாக புரிகிறது. “My Father Balliah” என்னும் நூல் இந்தியாவில் மேல்தட்டு மக்கள் ஒரு தலித்திய குடும்பத்தின் மேல் செலுத்தும் அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் விவரிக்கும் சுயவரலாற்று நூல் என்பதை அதன் சுறுக்கத்தில் இருந்து அறியமுடிகிறது. அதே போன்று நாயக பாத்திரம் பேசும் பிரபல வசனமும் தலித்திய எழுச்சியை முழங்கும் காட்சியமைப்புதான் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் அவ்வப்போது காட்டப்படும் அம்பேத்கர் படம், கோட் சூட் உடை குறித்த விளக்கம், ரஜினி பேசும் உச்ச கட்ட வசனங்கள் போன்றவை இப்படம் இந்திய தலித்திய போராட்டத்தின் சாரத்தை உள்ளடக்கியிருப்பதை உணர்த்துகின்றன. ரஜினியின் உடையளங்காரத்திற்குத் திரைக்கதையில் முக்கிய இடம் உண்டு. அது அம்பேத்கரின் சாயலை தோற்றுவிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்துள்ளது, ஆனால் அவர் ‘நண்டு கதை’ சொல்லும் காட்சியின் வழி மலேசியாவில் ஒரு காலத்தில் பாட்டாளி தமிழ் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்த எம்.ஜி. பண்டிதனை நினைவு கூற முடிகிறது. எனக்குத் தெரிந்து மலேசியாவில் மேடை தோறும் ‘நண்டு கதை’ சொல்லி பிரபலம் அடைந்தவரும் மலேசியாவில் தமிழர்களின் சாதி அரசியலால் பழிவாங்கப்பட்டவரும் எம்.ஜி.பண்டிதன் ஒருவரே என்பது வரலாறு.

இந்திய சமூக அடுக்குகளுக்குள் கலகத்தை உண்டாக்கும் சாத்தியங்கள் உள்ள இக்கதையின் மைய சாரம் மலேசிய பின்னனியில் படமாக்கப் பட்டுள்ளதுதான் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

மலேசிய சமூகவியலில் நேரடி தலித்தியம் பேசும் சூழல் இல்லாத நிலையில் கதாசிரியர் இங்கு உள்ள பாட்டாளி தமிழர்களின் போராட்டங்களைத் தலித்திய ஒடுக்கு முறையோடு ஒப்புநோக்கி கதை அமைத்திருக்கிறார் என்பது வெளிப்புறமான புரிதலாகும்.

மலேசிய பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் சாதிய சிக்கல் இருந்தாலும் அது முழுமையானது அல்ல. ஆகவே தோட்டத் தொழிலாளர் எதிர்கொண்ட சம்பளப் பிரச்சினை, தோட்டத் துண்டாடல் போன்ற முதலாளியத்துவ சிக்கல்களைத் தலித்திய கண்ணோட்டத்தில் சாடுவது வணிக சினிமாவிற்குத் தேவையான ‘யார் மனதையும் நேரடியாக புண்படுத்தாமல்’ இருக்கும் உத்தி என்றே எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவை தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சட்டை போடாதே , கைகட்டி நில், செருப்பின்றி நட என்று ஒடுக்கி வைத்தது சாதிய இந்தியர்கள்தாமேயன்றி முதலாளி சீனனோ அரசு பதவியில் இருக்கும் மலாய்க்காரனோ அல்ல என்பதை மலேசியத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். உண்மையில் தோட்டப் பாட்டளிகளைச் சாதி அடிப்படையில் நிர்வகிக்கவும் சிறுமை படுத்தவும் ஆங்கிலேயனுக்கும், பின்னர் வந்த பிற இன முதலாளிகளுக்கும் சொல்லிக் கொடுத்து வகுப்பெடுத்தவனே உயர்சாதி இந்தியன்தான் என்பதை மறுக்க முடியாது.

ஆகவே, சாதிய மேட்டிமை மீதான காந்திரத்தை முதலாளியத்துவத்தின் மீது ஏற்றி பேசுவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களைப் பறிக்கும் முயற்சியாகும். அல்லது இந்திய தலித்திய ஒடுக்குமுறையின் அச்சில் மலேசிய தோட்டப்பாட்டாளிகளின் வாழ்க்கையை வைத்துப் பார்க்கும் முயற்சி என்று நாம் சமாதானம் அடையவேண்டியுள்ளது.

ஆயினும் மலேசிய தோட்டப் பாட்டாளித் தமிழர்களை மொத்தமாக தலித்துகள் என்ற பார்வையை ப.ரஞ்சித் வைப்பதாக இருந்தால் அது மிக ஆபத்தானது என்பதையும் கூற வேண்டியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘இந்தலோக்’ என்ற மலாய் நாவல் பள்ளி பாடநூலாக இருக்கக்கூடாது என்று எதிர்த்த தரப்பினரில் பெரும்பான்மையினர் இந்தியாவில் இருந்து மலேசியாவில் குடியேறிய தமிழர்கள் எல்லாருமே பறையர்கள் என்ற நாவலாசிரியரின் கருத்தையே கடுமையாக கருதினர்.

ஆகவே மலேசிய தோட்டபாட்டாளிகள் அனைவரும் தலித் சமூகத்தார் என்றும், தலித் சமுகத்தைச் சேர்ந்த கபாலி அவர்களின் மீட்பராக காட்டப்படுவதும் இயக்குனர் இன்னும் மலேசிய இந்தியர்களின் ‘மனநிலையை’ சரியாக புரிந்துகொள்ளவில்ல என்பதையே காட்டுகிறது.

அடுத்து இக்கதையமைப்பில் காணப்படும் மிக நெருடலான மற்றொரு பகுதி, மலேசியத் தமிழர்களின் குண்டர் கும்பல் கலாச்சாரத்தின் தொடக்கம் குறித்த புனைவு பகுதியாகும். கதைபடி தோட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வெற்றியடையும் ஒருவன் கோலாலம்பூரில் தோட்ட பாட்டாளிகளுக்காகவே போராடிக் கொண்டிருக்கும் ஒரு ‘கேங்குடன்’ இணைந்து தன் போராட்டத்தை விரிவு படுத்துகிறானென்று சொல்லப்படுகிறது. அந்த கேங்கின் தலைவன் தமிழ்நேசன் உணர்ச்சிமிகு போராட்டவாதி என்பதோடு அறத்தின் வழி வாழ்பவர். ஆயினும் அவர் சீனர்களையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமை பெற்றவராகவும் காட்டப் படுகிறது.

மலேசிய தோட்டப்புறங்களில் அடிப்படை உரிமைகளுக்குப் போராடியவர்களில் ‘கபாலிகள்’ பலர் இருந்தனர் என்பது ஏற்புடைய கதையமைப்பே. ஆனால் தமிழ்நேசன் என்னும் கதாப்பாத்திரம் அடிப்படையற்றதாகவும் தோட்டப் பாட்டாளிகளுக்காக போராடிய உண்மை போராட்டவாதிகளை ‘கேங் லீடர்’ என்ற சொல்லாடலின் வழி இழிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஒரு மாஃபியா தலைவனுக்குறிய ஆடம்பரத்துடனும் ஆள்பலத்துடனும் வாழும் தமிழ்நேசன் என்னும் கதாப்பாத்திரம் தோட்டமக்களின் உரிமைக்காக போராடுவதாக காட்டுவதன் வழி, உண்மையில் தோட்ட பாட்டாளிகளுக்காக போராடிய தனி மனிதர்களையும் குழுக்களையும் வன்முறையாளர்களாக, குண்டர் கும்பல் தலைவர்களாக சித்தரிக முயலும் அவலம் நிகழ்ந்துள்ளதை கவனப்படுத்த வேண்டியுள்ளது.

மலேசியாவில் தமிழ்நேசன் போன்றோரும் அவருடன் இணைந்து செயல்பட்ட கபாலி போன்றோரும் இடதுசாரி சிந்தனை கொண்ட தொழிற்சங்கவாதிகள் என்பதுதான் வரலாறு. அவர்கள் ஏழ்மையிலும் பாதுகாப்பு அற்ற சூழலிலும்தான் தங்கள் கடமைகளைச் செய்துள்ளனர். மலேசியாவில் நல்லியல்புகளோடு மக்கள் நலனை முன்னிருத்தி செயல்படும் ஒரு குண்டர் கும்பல் இருந்ததாக கூறுவது புனைவாக இருந்தாலும் அது பாட்டாளி தமிழர்களுக்காக போராடிய மலாயா கணபதி, வீரசேணன் போன்ற நேர்மையான தொழிற்சங்க போராட்டவாதிகளை இழிவுபடுத்தும் செயலாகவே பார்க்கிறேன்.

இவ்விடத்தில் படைப்பு சுதந்திரம் பற்றிய வினா எழலாம் ஒரு படைப்பாளிக்கு புனைவு சுதந்திரம் மிக அவசியமானது. ஆனால் அது வரலாற்றை திரிக்கும் நிலையில் இருக்கக் கூடாது. படைப்புச் சுதந்திரம் என்பது வரலாற்றில் விடுபட்ட இடங்களைத் தன் கற்பனையாற்றலைக் கொண்டு நிரப்புவதாக இருக்கலாம். அல்லது வரலாறின் மாற்று சாத்தியங்களைக் கற்பனையால் உருவகித்துக் காட்டக்கூடியதாக இருக்கலாம். ஆனால் வரலாற்றின் அசல் தன்மையில் மாற்றம் செய்து அதன் நகர்ச்சியை திசை திருப்புவது பெரும் கண்டனத்திற்குரியது. எடுத்துக்காட்டாக, கபாலி திரைக்கதை நிஜ வரலாற்றில் அறுபது ஆண்டுகளில் நடந்து முடிந்த முக்கிய நிகழ்வுகளில் கதைக்கு தேவையானதை மட்டும் தொகுத்தெடுத்து தன் கற்பனை காலவெளியில் அடுக்கிப்பார்க்கிறது. இது ஏற்புடைய படைப்புச் சுதந்திரமாகும். ஆகவே காலப்பிழை நிகழ்ந்துள்ளது என்ற கூற்று தவறாகும். அது படைப்புச் சுதந்திரத்துக்கு உட்பட்டது. ஆனால் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி தன் போராட்டங்களின் போது இரண்டு குண்டர்களைத் தன் பாதுகாப்புக்கு எப்போதும் வைத்திருப்பார் என்று ஒரு புனைவு எழுதப்பட்டால் அது கண்டணத்துக்குறியதாகும். காரணம் அந்தப் புனைவு காந்திய அகிம்சை போராட்டத்தின் மொத்த வடிவத்தையும் சிதைக்கக் கூடியதாகும். அதன் வழி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றையே கேலிக்கூத்தாக்கிவிடும்.

அவ்வகையில், தமிழ்நேசன் என்னும் பாத்திர படைப்பின் மூலமாக, தோட்ட பாட்டாளிகளின் உரிமைக்காக குரல்கொடுத்தவர்களின் வழித்தோன்றல்கள்தான் இன்றைய குண்டர் கும்பலின் தலைவர்கள் என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. அல்லது இன்றைய குண்டர் கும்பல் கலாச்சாரத்திற்கு வித்திட்டவர்கள் அன்று தோட்டப்பாட்டாளி மக்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியவர்களே என்னும் அபத்த கருத்து இக்கதையில் திணிக்கப்பட்டுள்ளது. இக்கூற்றை நாம் வன்மையாக கண்டித்தே ஆகவேண்டியுள்ளது.

மலேசிய வரலாற்றில் குண்டர் கும்பலின் தொடக்கமும் சீன ஈய லம்ப தொழிலாளிகளின் வருகையும் ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். சீனாவில் செயல்பட்ட குண்டர் கும்பல்களின் நீட்சியே மலாயாவிலும் தொடர்ந்தது. ‘ஹை சாங்’, ‘கீ ஹின்’ போன்ற சீன குண்டர் கும்பல்கள் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் மிரட்டலானவை. இந்த குழுக்களிடையே மலாயாவில் பெரும் போர்கள் நிகழ்ந்துள்ளன. ஆங்கிலேய அரசு தன் ராணுவ பலத்தைக் கொண்டு இவர்களை அடக்கியுள்ளது. இந்த குழுக்களிடையே ‘ஓப்பியம்’ போதைப்பொருள் புழக்கம் இருந்தது. (அதை ஆங்கிலேயர்களே புகுத்தி வளர்த்தார்கள் என்பது தனி வரலாறு). அவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான சண்டைகளும் இருந்தன. இங்கே குண்டர் கும்பலின் முன்னோடிகள் சீனர்களே. போதைப்பொருளை வணிகப் பாண்டமாக கையண்டவர்களும் சீனர்களே.

தமிழ்மக்களிடையே ஐம்பதாம் ஆண்டுகளில் குண்டர் கும்பல் என்ற ஒரு அமைப்பு கிடையாது. அடியாட்கள், முரடர்கள், போன்ற வம்பர்கள் மட்டுமே அப்போது இருந்தனர். அவர்கள் செல்வந்தர்களிடமோ ஆங்கிலேய துரைகளிடமோ வேலை பார்த்தனர். அடிதடிகளில் முன்னனி வகித்தனர். ஆனால் தோட்ட துண்டாடல் நிகழ்ந்து தோட்டங்களில் இருந்து 60-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நகரங்களுக்குக் குடி பெயர்ந்த மக்களில் வறுமையும், வலிமையும் துணிவும் உடையவர்கள் மட்டும் சீன குண்டர் குழுக்களில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பணம் சேர்க்க இவர்களைப் பயன்படுத்தினர். நாளடைவில் போதைப்பொருள் கடத்தலும் வினியோகமும் குண்டர் கும்பல்களின் முக்கிய தொழிலானதும் குடும்ப பின்னனி காரணமாகவும் தொழில் வாய்புகள் அற்ற நிலையிலும் இந்திய இளைஞர்கள் தங்களைக் குண்டர் கும்பல்களில் தீவிரமாக இணைத்துக் கொண்டனர். பிறகு அவர்களே கேங்குகளை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்தனர் இந்த வரலாற்றில் தோட்ட மக்களுக்காக போராடியவர்கள் ஒருபோதும் தங்களை ‘கேங்’ என்ற அமைப்புகளில் வைத்துக் கொண்டதில்லை. அல்லது தோட்ட மக்களுக்காக போராடிய கேங்குகள் என்ற ஒன்றும் இருந்ததில்லை. தோட்ட பாட்டாளிகளின் உரிமைப் போராட்டமும் குண்டர் கும்பல் தலைமைப் போராட்டமும் இரு வெவ்வேறு கோடுகளில் நகரும் பிரச்சனைகளாகும். அவற்றை ஒரு கோட்டில் வைத்து இரண்டு போராட்டங்களும் ஒன்றுதான் என்று சித்தரிப்பது அபத்தமாகும்.

அதே போன்று, இன்றைய மலேசியத் தமிழ் சமூகத்தில் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்ட, குற்றவியல் பதிவுகள் உள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வுக்கு முயன்று கொண்டிருக்கும் மைஸ்கீல் கல்லூரியை நகல் செய்யும் புனைவான கல்லூரியை மலேசிய குணடர் கும்பல் ஒன்று நிர்வகிப்பதாக காட்டுவது சமூக ஆர்வளர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.

இந்திய ரசிகர்கள் கபாலி திரைப்படத்தைப் பார்த்த பின்னர் மலேசியாவைப் பற்றிய பல கருத்துகளை மின்னூடகங்களில் பகிர்ந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. ப.ரஞ்சிட் தன் நோக்கத்தை அடைய (தலித்திய எழுட்சியையும் அவர்களின் உரிமைகளையும் பேச) எடுத்துக் கொண்ட முயற்சி பாரட்டத்தக்கது என்றாலும் அதை தொழிற்சங்க இடதுசாரி போராட்டவாதிகளை குண்டர்களாக சித்தரித்துத்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. அப்படி மாற்றி சித்தரிப்பது மிகப்பெரிய பிழை என்றே கூறுவேன். ப.ரஞ்சித்தின் இந்த கலவையான கதையமைப்பு உலக ரசிகர்களுக்கு மலேசிய தமிழர்களைப் பற்றிய எந்த வித புரிதலையும் கொடுத்திருக்காது என்று உறுதியாக கூறலாம். மாறாக குழப்பங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

அதே சமயம் இதுவரை மலேசிய தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி தமிழக மக்கள் என்ன மாதிரியான புரிதலில் இருந்தார்கள் என்பது முக்கிய வினாவாகிறது, இங்குள்ள தமிழர்கள் மிக வசதியாக பிரச்சனைகள் எதுவும் இன்றி வாழ்வதாக அவர்களுக்கு ஒரு சித்திரம் இருந்திருக்கலாம். “தமிழகத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்; மலாயாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்” என்று சி. என். அண்ணாதுரை மலாய சுற்றுப்பயணத்தின் போது சொன்னது போன்ற மேம்போக்கான கருத்துகளை அவர்கள் நம்பியிருக்கலாம்.

மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் இந்நாட்டு கலை, இலக்கிய குழுக்கள் அங்கே வெறுமனே மெப்புக்காக மலேசிய புகழ் பாடுவதும் அவ்வகையில் மலேசிய அரசியல் புகழ் பாடும் படைப்புகளையே மலேசிய இலக்கியம் என்று அறிமுகப்படுத்தி குளிர்காய்வதாலும் மலேசியர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் நிலைகள் குறித்த தெளிவு அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். மலேசிய இலக்கியம் குறித்த அறிமுகம் அவர்களுக்கு மிக மெத்தனமாக சென்று சேர்ந்தது போலவே மலேசிய தமிழர்களின் வாழ்க்கையின் உண்மை நிலையும் அவர்களுக்கு மிக பின் தங்கியே சென்று சேர்ந்திருக்கிறது.

இவற்றோடு, ப.ரஞ்சிட் செய்திருக்கும் தலித்திய எழுச்சி, முதாலாளியத்துவ அடக்குமுறை, சிறுபான்மையினர் வாழ்க்கை போராட்டம், குண்டர் கும்பல் கலாச்சாரம் ஆகியவற்றின் கலவையான படைப்பு மலேசிய மக்களைப் பற்றிய புரிதலை மேலும் சிக்கலாக்கும் என்பதே உண்மை. மலேசிய அடிதட்டு தமிழர்களின் வாழ்க்கைச் சிக்கல், சாதிய அடக்குமுறைக்கு அடங்கியதா அல்லது முதலாளியத்துவத்துக்கு அடிமை பட்டதா அல்லது இன அடிபடைவாத இன்னல்களை எதிர்கொள்கிறதா அல்லது நகரமயமாக்கலில் ஓரங்கட்டப்பட்டதா அல்லது உலகமயமாக்கலில் அன்னியமானதா என்கிற கேள்விகளுக்கு தோராயனமான பதிலைக் கூட இப்படக்கதை கொடுக்கவில்லை.

சஞ்ஜய் குமார் பெருமாள் இயக்கிய மலேசியத் திரைப்படமான ‘ஜெகாட்” குண்டர் கும்பல் வாழ்க்கையையைச் சிறப்பாக காட்டிய பத்து விழுக்காட்டு அசலைத்தான் கபாலி காட்டுகிறது. அதே போல் கே. பாலமுருகனின் ‘ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்” என்கிற குறுநாவல் காட்டும் தோட்டத்துண்டாடலுக்குப் பிறகான தமிழர்களின் வாழ்க்கையும் குண்டர் கும்பல் ஊடுருவலும் காபாலியை விட பல மடங்கு எதார்த்தமானவை. ஆனால இந்த மலேசிய படைப்புகளை எத்தனை (மலேசியர் உட்பட) தமிழர்கள் அறிந்திருப்பர் என்பது கேள்விக்குறிதான்.

எனவே, ப.ரஞ்சிட் மலேசிய பின்புலத்தில் தலையாய நடிகரைக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியதும் இங்குள்ளவர்கள், மலேசியத் தமிழர் வாழ்க்கையின் சிக்கலை உலகம் அறிந்து கொண்டதாக மகிழ்ச்சி கொள்வது பிழையாகும். மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை சிக்கல்களைப் புரிந்து கொள்ளவும் அதில் இருந்து பாடம் பெறவும் நமக்கு அந்நிய கைகள் உதவாது என்பது கபாலி மூலம் நிரூபணம் ஆகியுள்ளதே நிஜம். ஒவ்வொரு கலைஞனுக்கும் தனிப்பட்ட அரசியல் இருக்கும். அதிலும் வெளிநாட்டு அரசியல் நோக்குகள் இங்கு பொருந்தி வரவேண்டிய கட்டாயம் இல்லை. எனவே கவர்ச்சியின் காரணமாக கண்ணாமூச்சி விளையாடும் பிழையான அரசியலில் நாம் சிக்கூண்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

*****