Category: இதழ்144

பிரம ஞானம் ( சிறுகதை ) / கல்யாணராமன்

பிரும ஞானம்

எனக்கு வயது முப்பத்தொன்பது. இந்த வயதில் பாரதி செத்துப்போய் விட்டான். இனிமேல்தான் எனக்குக் கல்யாணமாக வேண்டும். நான் ரோஜா நிறத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். எங்கள் குடும்ப முன்னோரில் ஒருவர் திருமலை நாயக்கர் சபையில் வைத்தியராகப் பணி புரிந்தாராம். ராஜவம்சப் பெண் ஒருத்தியை இரண்டாந்தாரமாக மணந்தாராம். அந்த ரத்தம் என்னுள் ஓடுவதால்தான் எனக்கு இந்த நிறமும் வசீகரமும் வாய்த்ததாம். பாரம்பரியப் பெருமையுள்ள ஒரு கல்லூரியில் இளம்வயதிலேயே தத்துவப் பேராசிரியராகி விட்டேன். எனக்குத் தனிவீடு இருக்கிறது. வடகலை சம்பிரதாயத்தில் ஊறிய வயதான பெற்றோர் உள்ளனர்.

எவர் உதவியும் தேவையில்லை. கணினியும் கைப்பேசியும் போதும். இம்மாநகர் முழுதும் சுற்றிவந்துவிடுவேன். ஊபரையும் ஓலாவையும் சுளுவாய்ப் பயன்கொள்வேன். எப்பிகியூரஸ் தொடங்கி ஒஷோ வரை நிறுத்தாமல் பேசுவேன். என் வகுப்பை எந்தப் போக்கிரியும் கட்டடிக்க மாட்டான். இலக்கிய ஆசிரியர்கள் சில சமயம் என் வகுப்பில் அமர்ந்து நான் பாடம் நடத்தும் ஆழத்தைச் செவிமடுப்பர். எந்தச் சாலையைக் கடந்தாலும், எந்தக் கூட்டத்தில் நுழைந்தாலும், கடைக்குள்ளோ வங்கிக்குள்ளோ தடுமாறப் பார்த்தாலும், யாரோ ஒருத்தி ஓடிவந்து கனிவோடு உசாவித் தேவைப்படும் உதவியைச் செய்வாள். ‘கிருஷ்ணராஜா’ என்ற என் பேரைக் கேட்டுத் தெரிந்து கொண்டதும், அந்தக் குமரிகள் எவ்வளவு ஆசையாக ஒலிப்பார்கள் தெரியுமா? என்ன இருந்தும் என்ன? என் அம்மாவுக்குப் பெரிய குறை. திருக்கல்யாண மங்கைக்கும் திருவிடந்தைக்கும் எத்தனை தடவைதான் அவள் அலைவாள்? தாயாருக்குப் புடவை சாத்திச் சாத்தியே நொந்துவிட்டாள்! சாளக்ராமத்தைப் பூஜையில் வைத்து அப்பா செய்யாத பிரார்த்தனையா?நித்திய ஆராதனைதான்; நித்திய மண்டகப்படிதான். எத்தனைபேருக்குக் கேட்காமலேயே இதெல்லாம் குதிர்ந்துவிடுகிறது!

“பத்து வயசிலிருந்து இந்தப் பய இருபது வருஷமா விடாம ஆஞ்சனேய ஸ்வாமிக்கு வட மால சாத்திண்டு வரானில்லியோ? அதனால அந்தக் குரங்கு இவனயும் தன்னப்போலப் பிரம்மச்சாரியா ஆக்கிப்புடுத்தோ என்னவோ! இவம் பொறந்தப்ப எந்தம்பி பிடிவாதமா நான் எவ்வளவோ தடுத்தும் கேக்காம குமரி ஸ்நானம் பண்ணப் போனானே, அந்த ஜலப்பீடதான் இப்படி இவனத் துவச்சுக் காயப்போட்டுடுத்தோ!”என்பார் பெரியப்பா. அவருக்குத் தம்பியைக் குத்துவதில் அவ்வளவு குஷி.

என் ஒருநாள் எப்படிக் கழிகிறது? பன்னிரண்டு மணிக்குப் படுப்பேன். ஆறு மணிக்குள் விழிப்புத் தட்டிவிடும். குளித்துப் பூசைமுடித்துச் சாப்பிட்டுவிட்டுச் சரியாக ஏழுக்கெல்லாம் ஸ்டிக்குடன் கிளம்புவேன். மெதுவாய் நடந்துபோய் ரயில் பிடிப்பேன். மொபைலில் தமிழ் ஆங்கிலச் செய்திகளைப் பத்து நிமிஷம் மேய்வேன்.முகநூலில் கோட் போடுவேன். பஜகோவிந்தம் முணுமுணுப்பேன். கூலிங்கிளாஸ் மாட்டிக்கொள்வேன்.

கல்லூரிக் குமரிகள் நேரம் கேட்கும்போது அவர்கள் முகத்தை உத்தேசமாய்க் கணித்துக் கையை உயர்த்தி ஸ்டைலாய்க் காட்டுவேன். சிரித்துவிட்டு நகர்வார்கள். “இவங்கிட்டதான் நேரம் கேக்கணுமா? ச்சை…. நம்மள எல்லாம் ஒருத்தியும் மதிக்கிறதே கிடையாது. நொண்டி முடம் கூன் குருடுங்களோடதான் இந்த ஒய்யாரிங்க வழிவாளுங்க. இந்தக் காலை நேரம் இப்படியா விடியணும்? என்னவோ போ! சிட்டியிலயே பிறந்து வளந்து படிச்சு வேலை பாத்து என்ன யூஸ்? நம்மள எல்லாம் இங்க எவ சீண்டறா? நமக்குந்தான் இந்தக் கூலிங்கிளாஸ் போட்ட பயலப் போல ப்ளெஸண்ட்டா ஸ்மைல் பண்ணத் தெரியுதா, சொல்லு! ஆபிஸ்ல ஒருத்தி முகங்கொடுத்துப் பேசறாளா….. கண்ணில்லாத சனியனுக்கில்ல அதிர்ஷ்டம் அடிக்குது!” அக்குரல் நீங்காமல் என் காதில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

அந்தக் குரலில்தான் எவ்வளவு வக்கிரம்? இவ்ளோ விஷம் கக்கறானே! இப்போது நான் என்ன செய்யணும்? கோபப்பட்டு அவனை அடிக்கப் பாயணுமா? அடித்தால் எல்லாம் சரியாகி விடுமா? இவன் ஒருவன் என்றால் மல்லுக்கு நிற்கலாம். ஊரைப் பகைத்து எங்கே போய் வாழ? தேங்கிய துக்கம் மனத்தை அழுத்தும்போது, ஒருவழிதான் இருக்கிறது. எப்போதோ அனுபவித்த எளிய சந்தோஷங்களை நினைவுக்குக் கொண்டுவந்து, நிகழின் ரணம் மறக்கவேண்டியதுதான். நேற்று ஒரு ஸ்கூல் பையன் கைப்பிடித்துக் கோவிலுக்கு வெளியே வரும்போது, “அங்கிள்! இந்தாங்க ரோஜாப்பூ. மோந்து பாருங்க!”ன்னானே. எத்தனை அற்புதக் கணம் அது?

எட்டுமணிக்குக் கல்லூரிக்கு முதல் ஆளாய் அட்டென்டென்ஸ் போட்டு விடுவேன். எட்டரைக்குப்பின் பலர் வருவார்கள். ஒருநாளுக்குப் பெரும்பாலும் ரெண்டுமணி நேரம்தான். ஓரிரு நாளில் மட்டும் மூன்று வகுப்பெடுப்பேன். சக பேராசிரியை ஒருத்தி எனக்கும் சேர்த்து மதியச் சாப்பாடு கொண்டுவருவாள். ரிடையராகப் போகிறவள். அப்படியுமே நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். கைம்மாறாகத் தினமும் அவளுக்கு வ்யாக்யானத்துடன் பாசுரம் சொல்வேன். அத்வைதத்தில் சந்தேகம் கேட்க மாணவிகள் வருவார்கள். மாணவர்களையும் கூடவைத்துக்கொண்டு கயிற்றரவை வியப்பேன். ஒருமணியடித்தால் போதும், கிளம்பிவிடுவேன். அரசு நிதி உதவி பெறும் மொழிச் சிறுபான்மைக் கல்லூரி. அம்மொழியிலும் எனக்குப் பழக்கமுண்டு என்பதால், நிர்வாகத்தால் பெரிய இடைஞ்சல்கள் இல்லை.

மாற்றுத்திறனாளிக்கு வேலை தந்த பெருமையிலும் அவர்கள் திளைத்திருந்தார்கள். அதைப் பயன்படுத்திக் குறித்த நேரத்தில் நான் புறப்பட்டுவிடுவேன். நேராகப் பார்வையற்றோர் மையம் செல்வேன். ஒருமணி நேரமிருப்பேன். பின் கணினிப் பயிற்சியகம் போவேன். இளம்பிள்ளைகளிடம் ஆதரவாகப் பேசுவேன். “யாருக்கும் நாம் குறைந்தவர்களில்லை. தனித்திறன் படைத்தோர் நாம். நம்மை யாரும் இங்கே வளர்த்துவிடமாட்டார்கள். நம்மை நாமாகவே வளர்த்துக்கொள்ளவேண்டும்.

நமக்குக் கண்ணில்லாதிருக்கலாம்; கூரிய மூளையுள்ளது. நம் மூளையால் இந்த உலகையே நாம் மாற்றலாம். இது வெற்றுக்கோஷம் இல்லை; நாம் நம்பவேண்டிய உண்மை” என்பேன். மிக உற்சாகமாய்க் கைத்தட்டுவார்கள். எனக்குப் பயம் வரும். துளசியை உண்டு பண்ணின பெருமாள், அதற்கு ஏற்றம் தராமலா போவான்? எனக் கேட்டுக் கொள்வேன். என் குரல் எனக்கே கேட்காது!

மூன்றரைக்குக் கார் வரும். அவள் வருவாள். சமூக சேவகி. பரமேஷே வியந்த பேரழகி. ஒரு கூட்டத்தில் நான் தத்தாத்ரேயர் பற்றிப் பேசியபோது, எனக்குச் சிநேகிதியானாள். ஐம்பதுவயது தொழிலதிபருக்கு வாழ்க்கைப்பட்ட முப்பதுவயதுக்காரி. அவளுக்குப் பணம் ஒரு பொருட்டேயில்லை. பணத்தைச் செலவழித்து என்ன நன்மை செய்வது என்பதில்தான் குழப்பம். என்மீது ஏதோ ஒரு பரிவு. சற்று அதிக வாஞ்சை. அவள் காரில் என்னை ஏற்றிக்கொள்வாள். இரண்டுமணி நேரமாவது அவளோடு ஒவ்வொரு மாலையும் செலவிடுவேன். அதிகபட்சம் ஏதாவது ஹோட்டலுக்குத்தான் போவோம். முந்திரிபக்கோடாவும் காஃபியும் ஆர்டர் கொடுப்பாள்.

அவள் பேசுவதைக் குறுக்கிடாமல் கேட்க வேண்டும். அவளுக்கு எத்தனை லவ் லெட்டரகள் வந்தன? இன்றும் எத்தனை பேர் அவளிடம் வழிகிறார்கள்? அவளை ஏன் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்? அவள் புருஷன் ஏன் பணம் பணம் என்று அலைகிறான்? கவலைகள் தீர்ந்து அவள் வாழ்வில் நிம்மதி என்று வரும்? இவ்வளவையும் விஸ்தாரமாய்ச் சொல்லித் தீர்த்தால்தான் திருப்தி. இது நித்தியப்போக்கு. வாரத்தில் இருநாள் கடற்கரை போவோம். எங்குப்போனாலும் அங்குள்ளோர் விழிகள் எங்களையே மொய்ப்பதாய்ச் சொல்லிச் சிரிப்பாள். எனக்கும் சிரிப்பு வந்துவிடும். என்னோடு அவள் பேசுவதைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படுகிறார்கள் என்பாள்.

அதைக் கேட்கையில் வாழ்ந்த சுகம் தோன்றும்! ஒருநாள் புருஷன் கன்னத்தைக் கடித்தான் என்பாள்; மறுநாள் குடித்துவிட்டுவந்து எட்டியுதைத்தான் என்பாள். எதிர்வீட்டான் இவளையே விழுங்குவது போலப் பார்க்கிறானாம். அதற்காகப் புருஷன் அசிங்கமாய்த் திட்டுகிறானாம். இத்தனை கஷ்டத்திலும் இவளுக்குச் சிரிக்கும் முகமாம். இவள் தோழிக்கு இவள் எப்படி எப்பவும் சந்தோஷமாவே இருக்கான்னு ஆச்சர்யமாம். இவளை அவள் சாகசக்காரி, எதற்கும் துணிந்த கட்டை என்று ஏசுகிறாளாம். “புருஷனப் பிடிக்கலன்னு பிடிச்சவனோட ஓட முடியுதா? இல்ல, எவனயோ நெனச்சு அவனோட படுத்துப் பொரளாமதான் இருக்கறமா? ராஜா! இந்த மாதிரி உன்னோட பேசிக்கிட்டேயிருந்தாப் போதும்.

மீண்டும் நான் கன்னி ஆயிடுவன். ஆனா அது எப்படி முடியும்? சொல்றதப் பொறுமையாக் கேட்கற பாரு. அது போதும் ராஜா. நூறு மனுஷி பலம் வருது எனக்கு” என்பாள். அவள் பாவம் என்று எத்தனை நாள்தான் நான் நினைப்பது? கண்ணில்லை என்பதற்காக என் உணர்ச்சிகளோடு அவள் விளையாடுவதா? “யூ ஆர் நாட் பிளைண்ட். யூ ஆர் டிஃபெரண்ட்லி ஏபிள்ட். சியர் அப் மேன். மைல்ஸ் டூ கோ பிஃபோர் யூ ஸ்லீப்” என்று மேடையில் முழங்கலாம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சர்க்கரையெனப் பெயர் வைத்துவிட்டால் வாழ்க்கை இனிப்பாகிவிடுமா? அதற்காகச் சேர்மனைச் சேர் பெர்சனாக்கியதை எதிர்ப்பாயா? வார்த்தையிலாவது ஒரு மாறுதல் வரட்டுமே கிருஷ்ணா ராஜா! அதைப் பரிகசிப்பதில் உனக்கு எதற்கு இத்தனை வேகம்? நீ மேம்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி என்று நிறுவப் போகிறாயா? கைரேகை வைக்கமாட்டாய். ஸ்டிக்கைத் தரையில் பூவைத் தொடுவது போல் ஓசையில்லாமல் அவ்வளவு மென்மையாய்ப் பதித்து நடப்பாய்.

‘கேன் யூ பிளீஸ் ஹெல்ப் மீ?’ என யாரைப் பார்த்தும் கெஞ்சமாட்டாய். பரிவும் சலுகையும் வேண்டாம் உனக்கு. கூட்டம் போடணும், பேசணும், குரூப் கூடி விவாதிக்கணும், நீ தலைமை தாங்கணும், வழிநடத்தணும், மேலே மேலே முன்போகணும்! இவையெல்லாம் ஆசைகளா, இல்லை உன் பிடிவாதங்களா? கிருஷ்ண ராஜா, உனக்கு என்ன வேண்டும்? இவ்ளோ ஹைப்பர் ஆக்டிவா ஏனிருக்க? எண்ணம் இறந்தநிலை என்கிறானே ஜிட்டு! அதப் பத்தி யோசிச்சிருக்கியா? வேட்கைகளைத் துரத்தியபடி ஓடுவதா உன் வாழ்வு!” இப்படித் தன்னுள் பேசிப் பேசிக் குழப்பம் அதிகப்பட்டதுதான் மிச்சம். இதெல்லாம் மனம் பின்னும் மாயை என்பான் சங்கரன். மாயையைச் சூன்யத்திலிருந்து கடன்வாங்கிப் பெருக்கிக்கொண்டான்.மாயையை உதறினால் பிரும்மம் புலப்பட்டுவிடுமாம். எந்த மாயையை நான் உதறுவது? கடவுளையா காமத்தையா?ராமானுஜனிடம் பெருமாள் இருக்கிறான்; சரணாகதி இருக்கிறது. அநாத்மவாதம் பேசும் புத்தனை நம்பிப் போவதற்குத் தைரியமில்லையே. வேறுவழி? நெடுஞ்சாண்கிடையாகத் தாயார் சந்நிதியில் விழவேண்டியதுதான். அப்பா அப்படித்தானே போதிக்கிறார்?

“கிருஷ்ணா! பேசாம இரு. தாயாரச் சேவி. சதா அவளயே தியானம் பண்ணு. அவ புருஷகார பூதை. தெரியாமலா வலப்பக்கத்த விஷ்ணு தந்திருக்கான்? லக்ஷ்மி, நாராயணீ, பூமாதேவி, பெரிய பிராட்டி, நப்பின்னே, திருவே, என்னப் பெத்த தாயாரேன்னு கண்ல ஜலம் பெருகத் தலமேலக் கைக்கூப்பி நில்லு. உன் பாவம்லாம் ஓடிக் கிரகலக்ஷ்மி கைப்பிடிக்க வருவா. நம்புடா கிருஷ்ணா! பொய்யா சொல்வான் அப்பா!” இந்தப் பேச்செல்லாம் எத்தனை வருஷம் நான் கேட்பது? கற்கண்டு தித்திக்குங்கறதுக்காகக் கற்கண்டயேவா மூணுவேளையும் தின்னமுடியும்?

உடம்புன்னு ஒன்னிருக்கே. அது இவா யாருக்கும் தெரியாதா? எத்தன பெண் பாத்தாச்சு! மொதல் அஞ்சு வருஷம் வடகலையாப் பாத்தோம். அப்பறம் அம்மா தென்கலையோ அய்யரோ எதுன்னாலும் பரவாயில்லன்னா. இப்ப விதவ, விவாகரத்தானவன்னாலும் பிராமணாளாயிருந்தாப் போதுங்கறா. ஆனால் எனக்கு இப்பவும் ஒரு நிபந்தனையிருக்கு. எனக்குக் கண்ணில்லை. ஒத்துக்கறன். அதுக்காகக் கண்ணில்லாதவளதான் நானும் பண்ணிக்கணுமா? என்ன இரக்கமில்லாத உலகம் இது? எவ்வளவு வாய் பேசறானுங்க, கைஒடிய எழுதறானுங்க. ரெண்டு கண்ணில்லாதவங்க ஜோடி சேர்ந்து இன்னும் ஜாஸ்தி கஷ்டப்படணுமா? கல்யாணங்கறது எதுக்கு?

ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசயா இருக்கறதுக்குத்தானே. கண்ணில்லாதவனக் கண்ணுள்ளவ மணக்கறதுதானே நியாயம்? சாதியில்ல மதமில்லம்பானுங்க. ஹோமோ லெஸ்பியன் அரவாணி பத்திப் பரிவாப் பேசுவானுங்க. ஆனா இதுல மட்டும் எல்லாப் பயலும் ஒரே கட்சிதான். அந்த மேரேஜ் மேச்சிங் செண்டர் நடத்தறவ என்ன சொன்னா? “கண்ணில்லன்னா கால் நொண்டி, டமாரச் செவிடு, ஊமை, குருடு, கைமுடம், பாரிச வாயு பீடிச்சதுன்னு எதுன்னாலும் சம்மதம்னு எழுதி வெச்சா சீக்கிரம் நடந்துடும். நார்மல் பொண்ணக் கேட்டின்னா, உன் ஸ்டிக் பிடிக்க எவ எஸ் சொல்வா?”ன்னாளே! அவகிட்ட நான், “நீ என்னை அஃபண்ட் பண்ற. நீ சொல்ற வார்த்தகள இந்த நாகரீகச் சமூகம் இன்னிக்கு பேன் பண்ணியிருக்கு. மாற்றுத் திறனாளின்னு மரியாதயா நீ பேசாட்டி உம்மேல கம்ப்ளெய்ண்ட் கொடுப்பன். ட்ரீட் மீ அஸ் எ ஃபெலோ ஹ்யூமன் பீயிங். ஐ ஆல்ஸோ பிளாங் டூ யுவர் சொசைட்டி”ன்னு ஸ்ட்ரெயிட்டா சொல்லமுடியுமா? இவ்வளவு படிச்சிருந்தும் எவ்வளவு பயமாயிருக்கு! ஏன் நான் இப்பிடிக் கோழையாயிருக்கன்? கோபப் பட்டுட்டா நல்ல மேச் அமையறத அவ தடுத்திடுவான்னா? இல்ல, இது ஒரு பார்வையற்றவனோட அவஸ்த. சுதந்திரத்த சுவாசிக்க முடியாத அச்சம். இது புரியணும்னா நீங்களும் என்னப் போலப் பிறக்கணும். நெவர் எவர். உங்களுக்குப் புரியாது.

இதான் நீங்க ப்ரீச் பண்ற மனுஷத்தனமான்னு கேக்கறன். என் வேல வேணும், என் சம்பளம் வேணும், என் ஜாதி வேணும், என் வீடு வேணும். ஆனால் நான் வேணாம். பார்வையுள்ளவங்களுக்கு ஒரு நீதி, இல்லாதவங்களுக்கு அநீதியா? என்ன மாதிரி ஓர் உலகம் இது!

“கிருஷ்ண ராஜா! நீ யார்? ஏன் இவ்வளவு அற்ப ஜீவியா நீ இருக்க? எதுக்குடா உனக்குக் கல்யாணம்? நீ பாட்டுக்கு இப்ப இருக்கிறது போலவே சுதந்திரமாயிருந்துட்டுப் போய்த்தொலையேன்.என்ன கெட்டுடும்! தாலி கட்டிக் கூடினாத்தானா? அரிப்பெடுக்கறப்பப் போய்வந்தாப் போச்சு. இதுக்கா இவ்ளோ ஆர்ப்பாட்டம்!” இது மேல்மனம். இதை ஆழ்மனம் ஏற்கமறுக்கிறது. அது கனவு காண்கிறது. எறும்பும் உயிரே என்கிறது. நீட்ஷேவின் சூப்பர்மேனைத் தவிடு பொடியாக்கித் தன்னை அதன்மீது நிறுவிக்கொள்கிறது. நான் பலகீனன்தான். ஆனால் என்னிருப்பை அவ்வளவு லேசாய்க் காலிசெய்துவிடமாட்டேன்.

இந்த உலகில் பிற எல்லாவற்றையும் போலக் கல்யாணமும் பண்டமாற்றுத்தானே. ஒரு பெண் எனக்கு அவளைக் கொடுத்தால், நான் அவளுக்கு என்னைத் தருவேன் என்ற கணக்குத்தானே! அன்பா? அது எங்கேயிருக்கிறது? அப்படியே ஒன்றிருந்தாலும் எனக்கெல்லாம் அது எப்படிக் கிடைக்கும்? என் உண்மையும் நேர்மையும் யாருக்கும் வேண்டாமா? எவ்வளவுபேர் அடியுதைபடுகிறார்கள்! எத்தனை சவங்கள் நடமாடுகின்றன! குடும்பம் காவுகொள்ளும் பலிகளுக்குக் கணக்குவழக்குண்டா? பால்சுரண்டலைப் பேசிமுடியுமா? இத்தனைக்கிடையில், ஒரு நல்ல ஆத்மா கூடவா இல்ல என் கைப்பிடிக்கன்னு நீ ஏங்கறதில உள்ள அபத்தம் உனக்கே புரியலயா கிருஷ்ண ராஜா! நோ நோ. அன்று ஜென்னி சொன்னதே உண்மை.

இந்தச் சாதிதான் என் பிரச்னை. அவள்தான் என்னிடம் எத்தனை அன்பாயிருந்தாள்!எனக்குச் சங்கரனை ஹெகலை வாசித்தவள் யார்? அவள் ஸ்கிரைப் எழுதித்தானே கோல்டுமெடல் வாங்கினேன்! பட்டமளிப்பு விழா முடிந்து டைட்டானிக் போயிருந்தோம். படம் முடிந்ததும், ஒரு பெரும் மௌனம் எங்களுக்குள் குடிகொண்டது. அதை மறுநாளே அவள் உடைத்தாள். தயங்கித் தயங்கித் தன்னிஷ்டத்தைச் சொன்னபோது, எவ்வளவு மூர்க்கமாய் நான் அதை மறுத்தேன்?அந்தப் பாவமே இப்படிப் புலம்பச்செய்கிறது. இப்போது எல்லாம் புரிகிறது. ஜென்னிதான் என்னோடில்லை. அதுவும் நல்லதுதான். என் மாதிரி மூர்க்கனுக்கா அந்தப் பவித்திரம் பலியாவது! அம்மா சொல்வது போல் பெருமாள் போடும் கணக்கா தப்பும்?
பதினைந்து வருஷம் தலைகீழாய் நின்று பார்த்துவிட்டோம். எவளும் அமையவில்லை. என்ன மாயம்! அன்று எவ்வளவு பிடிவாதமாயிருந்தாளோ, அதற்கு முற்றெதிராய் அம்மா இன்று திரும்பிவிட்டாள்.

“ராஜா! நாம என்னடா பாவம் பண்ணினோம்? உங்கப்பாவும் நானும் நெருங்கின சொந்தந்தான். அந்தக் காலத்தில இதெல்லாம் யாருடா பாத்தா? எல்லாருந்தான் சொந்தம் போயிடக்கூடாதுன்னு பண்ணிண்டா. அப்படித்தானே நாங்களும் பண்ணிண்டோம்? நீ இப்பிடிப் பிறந்ததுக்கு அதுதான் காரணம்னு மெடிக்கல் சயின்ஸ் சொல்றதன்னு சண்டைக்கு வர்றியேடா! அதுக்காகச் சொல்றன். இந்த மாதிரினு தெரிஞ்சிருந்தா நாங்க இதச் செஞ்சிருப்போமாடா?”

“விடும்மா. ஏதோ வேகத்தில அப்படிக் கேட்டுட்டன்.
ரிசர்ச்சர்ஸ் தினம் புதுசு புதுசா ஏதாவது சொல்றான். காஃபி குடிக்காதங்கறான். அப்பறம் அவனே தப்பில்ல குடிங்கறான். அதப் போய் நீ பெரிசாப் பேசிக்கிட்டு”

“சரிதாண்டா. நீ இப்ப எனக்கு ஆறுதல் சொல்லக் கிளம்பிட்டியா? என்ன சொன்னாலும், ஒருநொடி உள்ளுக்குள்ள சுருக்குன்னு குத்தத்தான் குத்துதுடா. ஆனா இனிம அத மாத்தவா முடியும்?

“ஐயோ அம்மா. இந்தச் சுயஹிம்சயே வேணாம். எனக்காக நீ ஏன் உன்னக் கஷ்டப்படுத்திக்கிற? நான் இப்படியே இருந்துட்டுப்போறன். என்ன நஷ்டம்?”

“என்ன பேச்சுப் பேசறடா? ஒன்னே ஒன்னு பெத்தது இதக் கேக்கத்தானா? இப்போ எனக்கு விஷயம் புரிஞ்சிடுத்துடா. இந்த ஜாதிய நம்பி நாம மோசம் போயிட்டோம். ஒவ்வொருத்தியும் என்ன பேசறான்னு உனக்குத் தெரியுமாடா? வேத்தாளே தேவலாம்னு தோணிப் போச்சுடா.

நம்பளவாளாச்சேன்னு போய்க் கேட்டா பிச்சக்காரிய பாக்கறாப்பல பாத்து மூஞ்சியத் திருப்பிக்கறாளே!”

“ஊரப்பத்தி உனக்கென்ன? அப்பா என்ன சொல்றார்னு பாரு. அவரும் நீயும் சண்ட போடாம இருந்தாப் போதாதா?”

“போனவாரம் நடந்தது உனக்குத் தெரியாதா?மனுஷன் இப்ப ரொம்ப இடிஞ்சு போய்ட்டார்டா. அவர் சிநேகிதர் பொண்ணு எஸ்எஸ்எல்சிதான் படிச்சிருக்கு. பால்ய சிநேகிதர்ங்கற உரிமையில இவர் போய்க் கேட்டிருக்கிறார். அதுக்கும் முப்பத்தஞ்சாச்சேன்னு இவருக்குப் பாவம் ஆதங்கம். அந்த இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் சொன்னதக் கேட்டு இவருக்கு மார்வலி வந்துடுத்துன்னா பாரேன். சமையக்காரனுக்குக் கொடுத்தாலும் கொடுப்பன்.

திருதராஷ்டிரனுக்குத் தர மாட்டேன்னாராம். போடா நாயேன்னு திட்டிப்புட்டு வந்தவர்தான். அதயேதான் திருப்பித் திருப்பிப் பேசறார். இதுங்களுக்கெல்லாம் பாடம் சொல்லித் தரணும். எந்த ஜாதின்னாலும் எனக்கு இஷ்டந்தான்னுட்டார். நானும் தீர யோசிச்சாச்சு. ஏன்? உடையவர் சம்மதமேயிருக்கு இதுக்குங்கிறா படிச்சவா.

அதுக்கும் மேல நமக்கு என்ன வேணும்? உனக்குப் பிடிச்சவளா ஒருத்தியப் பாத்துண்டு வாடா. அவள ஒரு வார்த்த அதிகப்படியா கேட்க மாட்டன். அவ பொங்கிப் போடறத நொட்டுச் சொல்லாமச் சாப்பிடுவன். போதுண்டா போ, இந்த இழவெடுத்த ஜாதிய நாம காப்பாத்தினது!”

அம்மாவா இது? அடடா, எப்படிப் பேசுகிறாள்! இது போதும் எனக்கு. இனிக் கல்யாணமானால் என்ன, ஆகாவிட்டால்தான் என்ன?

•••

அன்பாதவன் கவிதைமுற்றத்தில் சரசமாடும் இணைப்புறா குறித்த சில உரையாடல் பதிவுகள்

கவிஞர் கரிகாலனிடம் வினவினேன்
“இமையத்தின் பெத்தவ கதை படிச்சதில்லைய அன்பாதவன்”
“புத்தமும் கூட புறாக்கள் குறித்து பேசுகிறதே..வாசியுங்க தோழர்” என்றார்
முனைவர் அரங்க மல்லிகா
“அது தர்மபுரி இளவரசன் திவ்யாவின் குறியீடாகுமே”
-புது எழுத்து மனோன்மணி
சுப்ரபாரதிமணியனோ
“உடுமலை சங்கர். கவுசல்யாவின் கலைந்த கனவது” என்றாரே
செங்கோட்டில் பலியான கோகுல்நாத் அல்லவோ அது ” ஆதவன் தீட்சண்யாவின் ஆதங்க பேசி
“சங்க இலக்கியத்தில் புறாக்கள் குறித்த பதிவுண்டா…தேடிச்சொல்கிறேன்”
உத்தரவாதமளித்தார் பேரா சற்குணம்
“புறாக்களை மய்யமாக்கி புதினமெழுதுங்க நண்பரே” வேண்டிக்கொண்டார்
புதிய தோழமை சுகந்தி நாச்சியாள்
புறாக்கள் எனும் படிமங்களால் படைப்பாக்கம் பெருகட்டும் இரா.எட்வினின் வாழ்த்துக்களை முற்றத்து புறாக்கள் உணர்ந்து மகிழ
“அரசியல் புறாக்களில் இல்லை தோழா…நம் பார்வையில் தானே..அறியாதவரா அன்பாதவன்” புதியமாதவியின் உரிமைக்குரல்
கோட்டோவியங்களை அனுப்பி உசுபி விட்டான் மதி தம்பி
உரையாடல் களின் சுர ங்க வாசலைத் திறந்து வைத்தது அறியாமல்
குலவும் புறாக்கள் கொஞ்சலில்
இலாபமாயொருக் கவிதை

••

19.03.18..உடுப்பி

எமிலி டிக்கன்சன் கவிதைகள் : தமிழில் ;தி.இரா.மீனா :

கவிஞர் எமிலி டிக்கன்சன்

அமெரிக்க கவிஞரான எமிலி டிக்கன்சனின் [Emilie Dickinson ] கவிதைகள் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களோடு அமைந் தவை.பெரும்பான்மைக் கவிதைகள் மரணம் ,மரணமின்மை பற்றிய ஆழ மான சிந்தனைகளைப் பிரதிபலிப்பவை .மிகச் சிறிய வரிகளைக் கொண்டு அமைந்திருக்கும் அவருடைய கவிதைகளில் காணப்படும் அதிக அளவு நிறுத்தற் குறியீடுகள் கவிதை உலகிற்குப் புதிதானது;புதுப்பொருள் தருவது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.” வாழ்க்கை, காதல்,மரணம்.இயற்கை,நட்பு என்று அவருடைய கவிதைகளுக்கான பார்வை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. எமிலியின் கவிதைகளுக்கு தலைப்புகள் தேவையில்லை. அவரு டைய வரிகளே தொகுப்புகளாகப் பேசும் தன்மை கொண்டவை” என்று சிறந்த விமர்சகர் எஸ்தர் லொம்பார்டி [ Esther Lombardi ]குறிப்பிடுகிறார்.
நான் இறக்கும் போது ஓர் ஈயின் சலசலப்பைக் கேட்கிறேன்
நான் இறக்கும் போது ஓர் ஈயின் சலசலப்பைக் கேட்கிறேன்
சூறாவளியின் மேலிழுப்புக்கிடையில்
காற்றின் அமைதியைப் போல
அறையின் அமைதி.

சுற்றியிருந்த கண்கள் அழுது வரண்டு
விலகாமல் மூச் திரட்டி
கடைசித் தொடக்கத்திற்கு-
அறையில் சாட்சியாய்—

என் பங்கிற்கானதாக இருக்கிற
ஒதுக்கித் தரகூடிய – என் விருப்பமான
நினைவுச் சின்னத்தை –தந்துவிட்டேன்
அப்போது ஓர் ஈ குறுக்கீடாக

நீலமாக -நிச்சயமின்றி -தடுமாற்ற சலசலப்பு-
ஒளிக்கும் எனக்குமிடையே-
ஜன்னல்கள் தோற்றுப் போக –பிறகு
பார்ப்பதற்கு என்னால் பார்க்க முடியாமல் போனது.

“ நம்பிக்கை “ சிறகுகளுடன் கூடிய சாதனம்
“நம்பிக்கை” என்பது சிறகுகளோடு
ஆத்மாவில் உறைந்திருக்கும் சாதனம்
வார்த்தைகளின்றி சுருதியாய் இசைக்கும்
அது ஒரு நாளும் நிற்காதது.

புயலென்பது கடுந்துயர் தருவது –
வெம்மையை ஏற்படுத்துவது-
சிறுபறவையை குழப்பியதெனினும்
கடுங்காற்றில் அது மிக இனிமையாய் இசைக்கும்.

நான் சில்லிப்பான நிலத்தில் அதைக் கேட்டிருக்கிறேன்-
மிகு பலமான கடலிலும்.
எனினும் -ஒரு போதும் – உச்சநிலையிலும்
என் சிறுதுகளைக்கூட அது கேட்டதில்லை.
அந்த ஆத்மா அவளுடைய சமூகத்தை தேர்ந்தெடுக்கிறது—

அந்த ஆத்மா அவளுடைய சமூகத்தை தேர்ந்தெடுக்கிறது—
பிறகு –கதவுகளை மூடிக் கொள்கிறது-
ஆத்மா தவிர அவளுக்கு வேறு
வெளிப்பாடு இல்லாது போகிறது.

அவளுடைய தாழ்வான கதவை-
கடக்கும் ரதங்களை அவள் நோக்குகிறாள்.
பேரரசன் மண்டியிட்டு அவளுக்காக வந்தானெனினும்
நகர்வின்றி அவள்—

போதிய ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு
தனது கவனிப்பிற்கான அடைப்பான்களை
கல்லாய் மூடிக் கொள்கிறாள்–
எனக்கு அவளைத் தெரியும்.

நீண்ட வேதனைக்குப் பிறகு சம்பிரதாயமான உணர்வு வருகிறது
நீண்ட வலிக்குப் பிறகு சம்பிரதாயமான உணர்வு வருகிறது
சமாதியைப் போல நரம்புகள் சடங்கானதாக இருக்கிறது
தொய்வற்ற இதயம் கேட்கிறது’
ஐயோ! ’வலியை பொறுத்துக் கொண்டவன அவனா? ”
’நேற்றா, அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்பா?’

நிலத்தின் மரப்பாதையில் சுற்றி
அல்லது ஆகாயத்தில்
அல்லது வழக்கத்தில் பொருட்டின்றி
பாதங்கள் இயந்திர கதியில் சுற்றிவருகின்றன
ஒரு படிகத்தின் திருப்தியோடு ,கல்லைப் போல.

எல்லை கடந்து வாழ்ந்திருக்கும்
உறைந்த மனிதர்களாய் ,
பனியை நினைவுகூர்ந்து
முதலில் – குளிர்- பிறகு மதி மயக்கம்- பிறகு கைவிடுதல் என்று
இது கனமான நேரம்

இரவின் பக்கங்கள் – சமயவேல் கவிதைகள்

கவிஞர் சமயவேல்

1
தூங்கும் இரவின்
ஏதோ ஒரு மடிப்பில்
விழித்து விடுகிறேன்

புதிய இடத்தின் புதிய அறை
புலப்பட மறுக்கிறது

இடமும் காலமும்
கரைந்த இருட்டு

ஞாபகச் சுவரைத் தடவிப் பிறாண்டி
கதவைத் தேடும்
சிறுநீரகம்.

அறையின்
தவிப்பு

திடுக்கிட்டெழும்
எவரோ ஒருவர்
விளக்கைப் போட
எல்லாம்
அம்பலமாகிறது.

2

விழித்துப் பார்த்தால்
அறை, அறையல்ல ரயில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது

உயர் படுக்கையிலிருந்து
உடலைச் சுருட்டி மடக்கி
இறங்குகிறேன்

மூன்று படிகள் ஏணி
மூவாயிரம் படிகளாகி
எந்தக் காட்டிலோ
இறங்குகிறது.

பெட்டி முழுவதும்
தூக்கத்தில் அசையும்
விதம் விதமான மனிதர்கள்

எதற்கும் அசையா இருட்டு
ஜன்னலோடு ஓடுகிறது.

3

எங்கிருக்கிறேன்
எந்த இடம்
எந்த ஊர்
மணி என்ன
நிற்கிறதா போகிறதா
ஸ்டேஷனா
எந்த ஸ்டேஷன்
கால் எங்கே
தலை எங்கே
இல்லை தலையணை எங்கே
கண்ணாடி எங்கே
போன் எங்கே
என்ன
என்ன
என்ன

4

தூங்கவும் இல்லை
விழிக்கவும் இல்லை
கூ…….கூ……..
உருண்டு புரண்டு
பறக்கும் மிதக்கும்
உடல்
மிதக்கும் கனவு
கொச முசா
சிக பிகா
ஆடி ஆடிப்
போகிறது
இரவு.

சக்கென்று
நின்று விட்டது

கப்சிப்
பேரமைதி
நின்று கொண்டே இருக்கிறது

யாரோ
இழுத்து வளைத்து
என்ஜின்
மூச்சை நிறுத்தி விட்டார்கள்

உயர் படுக்கையிலிருந்து இறங்கி
கழிப்பறை வருகிறேன்
திறந்தே கிடக்கிறது
கதவு
எதிரில் தர்மபுரி
௦6.௦4.2௦18 அதிகாலை ௦3.5௦
(அர்ஷியா நீங்களா?)

௦௦௦

ஜுனைத்ஹ ஸனி கவிதைகள்

காத்திருத்தல்

காத்திருத்தலின் அதீதம்
வெற்றுப் பார்வைகளில் ஒழுகும்
மணிப் பொழுதுகளைமெய்பட வைக்கிறது
யதேச்சையாகவோ
எவருக்காகவோ
மூக்குக் கண்ணாடியை
அழுந்தத் துடைக்கவேண்டியதிருக்கிறது
கால்காசு பெறாதவனையும்
அருகழைத்துகுசலம் கேட்ட படியோ
வெண்திரள் மேகக் கூட்ட நடுவாய்
ஓர் குட்டி மேகத்தைஉருவமிட்ட படியோ
அடர்ந்து பெருகியபுங்கை மரக்கிளைகளின்
காகங்களை எண்ணிய படியோ
ஒரு ஹாரன்
ஒரு சைரன்
தலைக்கு மேலான ஒரு விமானம்
இன்னும் இது போன்றதொரு
இத்தியாதிக் கூப்பாடுகளின் நடுவே
ஓசையின்றிஎன்னோடு ஒட்டிக் கொண்டு நிற்கிறது
என் காத்திருத்தலும்

முகமூடிவிற்பவன்

பொம்மைகளுக்குள்ளாய்
அமிழ்ந்து விட்டிருந்தஓர் நிஜ உருவத்தின் வழியாய்
தங்களை பறைசாற்றிக் கிடந்தன பொம்மைகள்
அழுக்கடைந்த பழுப்பு நிறவேட்டி சட்டையில்
அவ்வளவு அமானுஷ்யனாகத் தெரியவில்லை
அந்த ஸ்பைடர்மேன்
கரிய தேகமுடைத்தமுகமூடி விற்பவனின்
உடல் மொழி கூறுகளுக்கு
ரஜினி அடங்கிப் போனாலும்
கமல்ஹாசன் ரொம்பவே அவனை இம்சிக்கிறார்
நாயாய்
பேயாய்
நரியாய்
திடீரென்று குரங்காய் மாறி
மனிதப் பரிணாமத்துவத்தைபின்னுக்காய் நகர்த்தியிழுக்கிறான்
அந்தமுகமூடிக்காரன்
எலும்புகள் வெளித்தொங்கும்
அவன் ஏழரை சாண் சரீரத்தில்
இரும்பு மனிதனின் முகமூடி
பெரும் நகையூட்டல்
ஆனாலும் எப்போதுமான நிதர்சனமாய்
காந்தி மற்றும் காமராசர் போன்ற முகமூடிகள்
நடிகர்களுக்குப் பின்னால்
அவனது பெட்டியில்
அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

மழை
இரவுமழையின்வலுத்த
வன்புணர்வுகளிலிருந்து
அதிகாலைபூமி
மீளத்தொடங்கியிருக்கும்தருணம்
திடீரென்றுமேகதூதனின்
சொல்லண்ணாத்துயரங்களோடு
மீண்டும்தன்னைபரிணமிக்கத்தொடங்கியது
கடுஞ்சினத்தாலானசிம்மகர்ஜனைகளின்
கொடுமபாயஆக்ரோஷங்களாய்
தன்முந்தியைக்களைந்து
நிர்வாணித்துநின்றபூமியின்மேனியை
ஆக்ரோஷமாய்மழைபுணரத்தொடங்கும்தருணம்
மேகப்பதாதைகளின்கீழ்
வெட்கிஅமிழ்ந்துகொண்டதுசூரியன்.

பூட்டியவீடு
வலுத்துருண்டபூட்டுதொங்கும்
அந்தபிரம்மாண்டவீட்டைக்கடக்கையிலெல்லாம்
நின்றுபின்கடக்கின்றன
பாதங்களுடனாய்சிந்தனைகளும்
இன்றும்அதேநம்பிக்கையில்
அவ்வீட்டின்மேலாய்கரைந்துகொண்டிக்கின்றன
காகங்கள்
யதார்த்தநம்பிக்கையின்வெளிப்பாடாய்
பிரயாசையொழுக
வெற்றுப்பார்வைகள்வழிஅவ்வீட்டை
உள்வாங்கிக்கொள்கிறான்
ஓர்யாசகன்
இன்றாவதுஇருக்கலாமென
அந்தப்பூட்டைஇன்னுமொருமுறைசோதித்துக்கொள்கிறான்
நித்தமும்ஓர்பால்காரன்
ஏன்எங்கேஎன்னாச்சுஎன்றெல்லாம்
தங்களறியாஅனுமானமொழிகளில்
நித்தமும்உரையாடிக்கொள்கிறார்கள்
அண்டைவீட்டார்கள்
இருக்கும்சுவாரஸ்யங்களோடு
இந்தவீடுமொன்றாய்கூடிப்போனது
என்தெருவாசிகளுக்கு.

***