Category: இதழ்145

மஜித் மஜிதியின் நிலா பார்த்தல் ( திரை விமர்சனம் ) : சமயவேல்

மஜித் மஜிதி

மஜித் மஜிதி எனது மனங்கவர்ந்த இயக்குநர். அவரது ‘பரன்’ படத்தைக் கணக்கற்ற முறைகள் பார்த்திருக்கிறேன். அவரது புதிய படம் ‘Beyond the Clouds’ மதுரையில் ஐநாக்ஸில் பார்க்க முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி. படத்திற்குச் செல்வதற்கு முன்பு இணையத்தில் படத்தின் விமர்சனங்களை வாசித்தேன். ஆங்கில விமர்சனங்கள் எல்லாமே இது மும்பையைப் பற்றிய படம் என்றும் வழக்கமான மஜீத் மஜீத்தின் படம் இல்லை என்றும் ஒரே குரலில் எழுதியிருந்தன. அனைவருமே குறைவான மதிப்பெண்களையே அளித்திருந்தார்கள். IMDB மட்டும் 69 மதிப்பெண் அளித்திருந்தது பெரும் ஆறுதல். மும்பையைக் களமாகக் கொண்ட ‘சலாம் பாம்பே!’ ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற முந்தைய திரைப்படங்களின் ஞாபகத்துடனே பலரும் படம் பார்த்திருக்கிறார்கள். ஆனால் “மேகங்களுக்கு அப்பால்” ஒரு முற்றிலும் புதிய வகைத் திரைப்படம். மஜித் மஜிதியின் படங்களின் வழக்கமான தன்மைகளையும் உள்ளடக்கிய ஒரு பரிசோதனைப் படம்.

திரை விமர்சகர் ரோகர் எபர்ட் தளத்தில் மட்டும், “ஆனால் ‘மேகங்களுக்கு அப்பால்’ ஒரு பெருநகர இசைக்கோர்வை அல்ல; குரூரமான ஆனால் வசீகரமான ஒரு சேரிக்கு, முரண்பாட்டுடன் கூடியதொரு காணிக்கை” என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார். அவருமே கதாசிரியர்களின் (மஜித், கஷாணி) பார்வை முழுமையடையாமல் இருக்கிறது எனக் கூறி இரண்டு நட்சத்திரங்கள் (2/4) மட்டுமே வழங்குகிறார்.

ஆனால் படத்தைப் பார்த்த பிறகே புரிந்தது, இவர்கள் எல்லோருமே, படம் முழுக்க ஒரு மறைபிரதிக் கதையாடல் (meta-narrative) இயங்குவதைக் காணத் தவறிவிட்டார்கள் என்பதை. இவர்கள் எவருமே இந்தியாவின் சமகால அரசதிகாரப் போக்கையும் அதன் நுண்ணரசியலையும் அறிய மாட்டார்கள். மஜித் மஜிதி ஒரு அரசியல் படம் கொடுப்பார் என்பது எவரும் எதிர்பாராதது. இது பாம்பே பற்றிய படம் அல்ல. மொத்த இந்தியாவையும் பற்றிய படம். “கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு எங்கள் டிஜிட்டல் இந்தியா அபரிதமாக வளர்ந்துவிட்டது” என நெஞ்சைத் தூக்கிக்கொண்டு அலைபவர்களிடம் “இதுதான் உங்கள் இந்தியா” என கன்னத்தில் அறையும் படம்.

வெற்றுக் கேளிக்கைகளும் மெகா நடனங்களும் காய்கறி மார்க்கெட் சண்டைக் காட்சிகளும் ஸ்பெஷல் எஃபக்ட் வாகனத் துரத்தல்களும் நிரம்பிய மாறா வகைமாதிரிப் (stereotype) படங்களான பாலிவுட் கோலிவுட் திரைப்படங்களைப் பகடி செய்யும் விதத்தில், அப்படங்களின் பாணியில், பெருநகரம் முழுவதும் அலைந்து போதைப் பொருள் விற்கும் இளம் கதாநாயகன், காமத்திபுராவின் மையத்தில் வேடிக்கை பார்ப்பவன், மும்பையின் சந்து பொந்துகளுக்குள்ளும் நுழைந்தோடி காவல்துறைக்கும் பெப்பே காட்டும் அவனது சாகசங்கள் எனத் திரைப்படத்தைத் தொடங்குகிறார். இந்தியப் படங்களின் கண்களைக் கூச வைக்கும் காட்சிகளையும் காதைப் பிளக்கும் சப்தத்தையும் படம் முழுவதும் அங்கங்கே பகடியுடன் கூடிய மறைபிரதியாகவே செருகி வைக்கிறார். .

படம் தொடங்கும் முதல் காட்சியில் இரு திசைகளிலும் வாகனங்கள் விரைந்தோடும் ஒரு மும்பைச் சாலை காட்டப்படுகிறது. அப்படியே நிற்கும் காமிரா சில நிமிடங்களுக்குப் பிறகு கீழிறங்கி, சிமிண்டுக் குழாய்களுக்குள் வாழும் சேரிக் குடும்பங்களைக் காட்டுகிறது. படச்சட்டகம், அடுத்தடுத்து நகரும் இரு பாகங்களால் ஆகியது என்பது முதலிலேயே கூறப்படுகிறது. காமிரா மட்டுமே நகரும் பெருங்காட்சிகள் வழியாக மறைபிரதியும் கதாப்பாத்திரங்கள் உறவாடும் நாடக நிகழ்வுகள் வழியாகத் திறந்த பிரதியும் நகர்கின்றன.

அனில் மேத்தாவின் காமிரா வஞ்சகமில்லாமல் காட்டும் மெஹா காட்சிகளில், மஜிதி தனது அரசியல் செய்தியை வைக்கிறார். உதாரணமாக மும்பை ஜெயில். இந்த ஜெயில் ‘லைஃப் ஈஸ் ஃப்யூட்டிஃபுல்’ படத்தில் வரும், இரண்டாம் உலகப் போரின் நாஜிகளின் வதை முகாம்களை விடவும் கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு சிறை இந்தியாவில் அதுவும் மும்பையில் இருக்கிறது என்பது அனில் மேத்தாவின் காமிரா மூலமே நமக்குத் தெரிய வருகிறது.

கதாநாயகன் அமீர் (இஷான் ஹாட்டர்) போலீசிலிருந்து தப்பித்து ஓடும் மார்க்கெட் பகுதிகள் மற்றும் சந்து பொந்துகள், அழுக்குப் படிந்த தெருக்கள், கட்டிடங்கள், சுற்றுச் சூழல் சீரழிந்து கொண்டிருக்கும் புறநகர்ப் பகுதிகள், பெண்கள் காய்கறிகளைப் போல குவிந்து கிடக்கும் காமாத்திபுரா, அதில் நாலாபுறமும் பெண்கள் கொத்துக்கொத்தாக குழுமி நிற்கும் ஒரு அடுக்குமாடி பிராத்தல், அந்தப் பெரிய தோபி காட் (சலவையகம்). செஞ்சாம்பல் நிறத்தில் விரியும் இந்தக் காட்சிகள் எல்லாம் சேர்ந்து ‘இது தானா இந்தியா’ என நம்மைக் கலக்குகிறது. இதை அனில் மேத்தாவின் காமிரா அற்புதமான முறையில் சுழன்று சுழன்று படமாக்கியிருக்கிறது.

நகர சலவையகத்தில் தியோ ஆஞ்செலோபௌலோஸ் படம் ஒன்றில் வருகிற மாதிரி வரிசை வரிசையாக வெயிலில் காற்றிலாடி உலரும் வெள்ளைத் துணிகளின் நடுவில் அமீரின் அக்கா தாராவுடன் (மாளவிகா மோகனன்) அங்கே வேலை செய்யும் அக்ஷி (கௌதம் கோஷ்) வல்லுறவு கொள்ள முயற்சிப்பதும், அதை எதிர்த்து தாரா ரத்தம் தெறிக்க அவனைத் தாக்குவதும், வெண் துணிகளுக்குப் பின்னால் பொம்மலாட்ட நிழல்களாகக் காட்டப்படுகிறது. உலக செவ்வியல் படக்காட்சிகளை பாலிவுட் காட்சிகளுக்கு அருகருகே வைக்கும் சாகஸ உத்தியே இப்படம் முழுவதும் இயங்குகிறது. அக்ஷி பலத்த காயமடைந்து நினைவிழக்கிறான். போலீஸ் தாராவைக் கைது செய்கிறது. போலீசின் வளையத்துக்குள் வந்துவிட்டாலே, சாமானியப் பிரஜைகள் சகல உரிமைகளும் இழந்த புழு பூச்சிகளாகவும் அடிமைகளாகவும் நடத்தப்படுவது, சிறைக்குள் இருக்கும் தாராவுக்கு அமீர் எதுவும் செய்ய முடியாமல் போவது எல்லாம் மிகையின்றி, கதாநாயக சாகசங்கள் இன்றி, மிக இயல்பாகக் காட்டப்படுகின்றன.

அக்ஷி கண் விழித்து நற்சாட்சியம் அளித்தால் தான் தாரா சிறையிலிருந்து வெளியேற முடியும். அவன் இறந்துவிட்டாலோ தாரா கொலைக் கைதியாகி ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டியதுதான். எனவே அமீர் மருத்துவமனைக்குச் சென்று அக்ஷியைக் கவனித்துக் கொள்கிறான். மருந்துகள் வாங்கித் தருகிறான். இடையிடையே அவனை மிரட்டியும் வைக்கிறான். கௌதம் கோஷ் படுத்துக் கொண்டே கண்களால் மட்டுமே நடிக்க வேண்டியதைச் சரியாகவே செய்கிறார்.

இந்த இடத்தில் மஜித் மஜிதியின் வழக்கமான திரைக்கதை, மருத்துவமனையில் இருக்கும் அக்ஷியைக் காண வரும் தமிழ்க் குடும்ப வடிவில் படத்திற்குள் நுழைகிறது. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதுப் பெண்ணும் ஆணுமே, துயரம் நிரம்பிய அழகியலை அவரது வழக்கமான படங்களில் நிரப்புவது, இந்தப் படத்திலும் நிகழ்கிறது. ஒரு துணிப் பொட்டலத்தை கக்கத்தில் இடுக்கியிருக்கும் இந்தியத் தாய், அவளது பால்முக பதின்ம வயதுப்பெண், ஒரு குட்டிப் பெண்குழந்தை என இக்குடும்பம் பழைய கிராமப்பற இந்தியாவிலிருந்து நேரடியாகப் படத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இந்தக் குடும்பத்தின் மூலம் போதைப்பொருள் மாஃபியாவைச் சேர்ந்த அமீருக்குள் அவனது குழந்தைமை, மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்கத் தொடங்குகிறது. அவனது பருவத்தில் ஏற்பட வேண்டிய பெண்மயக்கம், அந்தச் சிறுபெண்ணின் மேல் ஏற்படுகிறது. ‘பரனி’ல் வரும் ஈரானியப் பெண், இங்கே ஒரு தமிழ்ப் பெண்ணாக மாறியிருக்கிறாள். சிறையிலிருக்கும் அமீரின் அக்கா தாராவின் புறாக்கள் வாழும் சிதிலமடைந்த வீட்டில், மீண்டும் மனித வாழ்க்கை துளிர்க்கிறது. குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து ஒரு வண்ணச் சித்திரத்தை அந்த வீட்டுச் சுவரில் தீட்டுகிறார்கள். அந்தச் சித்திரத்தில் ஒரு அழகிய மனிதக் குடியிருப்பு துளிர்க்கிறது. பிரம்மாண்ட மும்பைக்கு எதிராக இயக்குநர் எழுப்பும் குடியிருப்பே இந்தச் சுவரோவியம்.

இந்தப் படத்தின் இன்னுமொரு முக்கியப் பாத்திரம் தாரா. அந்த வலுவான தைரியம் மிக்க பெண், மாநகரின் பிரம்மாண்ட சலவையகத்தில் துணிக் குவியல்களுக்கு மத்தியில் துணிகளை அயர்ன் செய்து கொண்டிருக்கும் அற்புத ஓவியப் பெண்ணாக அறிமுகமாகிறார். தனித்து வாழும் தாராவும், சத்யஜித் ரேயின் மாணவரான மஜிதியின் கதாப்பாத்திரமே. சிறையில் நோயில் இறந்து கொண்டிருக்கும் சக கைதி ஒருத்தியின் குட்டிப்பையன் ‘சோட்டு’ இவளுடன் சினேகிதமாகிறான். சோட்டு சிறையிலேயே பிறந்து வளர்ந்தவன். சிறைச் சுவர்ப் பொந்து ஒன்றில் வாழும் பெருச்சாளிகளைத் துணிந்து பிடித்து விளையாடும் பையன். சூரியன், சந்திரன், காற்று என்று எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. சோட்டு இந்தியாவின் எதிர்காலப் பிரஜை. அல்லது அவன்தான் நள்ளிரவில் சுதந்திரம் வாங்கியும் கார்ப்பரேட் காலனியத்துக்குள் சிக்கியிருக்கும் இந்தியா.

சோட்டுவின் அம்மா ஒருநாள், கொடூரமாக இருமி இருமி மூச்சுவிட முடியாமல் இறந்து போகிறாள். தாரா அவனது தாயின் இடத்தைப் பெறுகிறாள். இந்தச் சமயத்தில் தான் அக்ஷியின் இறப்புச் செய்தியும் வருகிறது. சோட்டுவின் அம்மாவைப் போலவே இவளும் இறக்கும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது முடிவாகியதும் பித்துப் பிடித்தவளாகக் கூச்சலிடுகிறாள்.

அமீர் எதுவும் செய்ய இயலாமல் சிறையை விட்டு வெளியே வருகிறான். மீண்டும் பாலிவுட் கதை. காமாத்திபுரா ஆட்கள் இவனைத் துரத்துகிறார்கள். சூழலியல் அழிவில் இருக்கும் கடலோரப் புறநகர்ப் பகுதியின் ஒரு பெரும் சேற்றுப் பகுதியில் ஒரு சண்டைக்காட்சியும் இடம் பெறுகிறது.

சோட்டுவுக்கு நிலாவைக் காட்டும் முயற்சியைத் தாரா தொடங்குகிறாள். ஒரு பெண் வார்டருக்கு அவளது மோதிரத்தை லஞ்சமாக வழங்குகிறாள். இரவில் லேசாக வெளிக்கதவைத் திறந்து நிலாவைக் காட்ட வார்டர் சம்மதிக்கிறார். ஆனால் அது ஒரு மழை இரவாக ஆகிவிடுகிறது. மேகங்களுக்கு அப்பால் நிலா ஒளிந்து கொள்கிறது. பூட்டுக்குப் பின்னால் இருந்து மழையைக் காட்டும் காமிரா, மழையைப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டார்கள் என நம்மிடம் பிராது கொடுக்கிறது.

படம் மீண்டும் பாலிவுட்டுக்குத் திரும்புகிறது. அமீர் தப்பித்துவிடுகிறான். எவற்றைப் பற்றியும் கவலை கொள்ள முடியாத இந்தியா, தெருவில் வண்ணமயமாக இரைச்சல் இசையுடன் ஹோலியைக் கொண்டாடுவதுடன் படம் முடிந்துவிடுகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசை இயக்குநருக்கு மிகுந்த ஒத்துழைப்பைத் தருகிறது. மிக அடக்கமாக வரும் செவ்வியல் இசைக் கோர்வைகளும், சப்தம் மிக்க இந்திய நாட்டுப்புற இசையும் மாறி மாறி மஜீதியின் இரட்டைப் பிரதியை வேறுபடுத்த உதவுகிறது. செவ்வியல் இசைக் குறிப்புகளில் நாம் மயங்கிப் போகிறோம். நான் இதுவரை காணாத ஒரு ரகுமானை இந்தப் படத்தில் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

மஜித் மஜிதியின் ரசிகனாக நான், இந்தப் படத்திற்கு 9/1௦ மதிப்பெண் தர விரும்புகிறேன்.

௦௦௦

ரோஷான் ஏ.ஜிப்ரி கவிதை.

பிரியத்தின் தாய்மொழி!

வன்மத்தை புகட்டாத
நேசத்தின் மொழியிலிருந்து
நீ உதிர்த்த சுடும் சொற்கள்
மறுபடியும்
என் தூய்மையில் கறைபடிய
மஞ்சல் காவிக்கு ஒப்பாகிற்று

பாவம் அறியாமல்
உன் பந்தியில் இலையாய் இருக்கும் என்மேல்
பற்றி எரிக்கும்
நெருப்பை
சமைத்துப்போட
எப்படித்தான் உன்னால் முடிகிறதோ?

பிட்டு தேங்காய்ப்பூ என
பிதற்றிவிட்டு
மண்போட்டு பிசைகிற
மார்க்கத்தை
பொறுப்பு வாய்ந்த நீ
எப்படி போதிக்கிறாயோ..?

அன்பு வேர்விடும்
என் பார்வை கிளையிலிருந்து
ஒவ்வொரு முறையும்
ஒட்டாமல் உதிர்கின்றாய் வெற்றிலைகளாய்
ஆயினும்;
உனக்காய் துளிர்க்கின்றன
எனக்குள் புன்னகைப் பூக்கள்

முன்பொருமுறை
விழுந்த இடத்தில் நீ
மீண்டும் பள்ளத்தாக்கில்….,
நான் எழுந்த இடத்திலிருந்தே ஏறிக்கொண்டிருக்கிறேன்
சூரியனுக்கு நிகராய் என் சூட்சுமம்

நீ
சுட்டுப்போட்ட போதும்
சொல்லால்
வெட்டி நட்ட போதும்
உன்னை சபிக்க முடியாதவாறு
சமீபித்தபடி
பிரியத்தின் இனிமைகளுடன்
••

விருட்சம் நினைவுகள் 2 அழகியசிங்கர்

ஞானக்கூத்தன்

1981 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ‘கவனம்’ என்ற சிற்றேடு வெளிவந்தது. இதன் ஆசிரியர் ஞானக்கூத்தன். திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவந்த பத்திரிகை இது. இப் பத்திரிகை குறித்து üகணையாழிý இதழில் அறிவுப்பு வந்தது. இந்த அறிவிப்பைப் பார்த்தவுடன் நான் மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் சென்று இப் பத்திரிகையை வாங்கினேன்.

கவனம் பத்திரிகை இணை ஆசிரியர் ராஜகோபாலன் வீட்டிற்குத்தான் போனேன். அப்போது என்னை யார் என்று அவருக்குத் தெரியாது. அவரை யார் என்று எனக்கும் தெரியாது. அப்போது நான் விருட்சம் என்ற பத்திரிகை ஆரம்பிக்கவில்லை.

கவனம் இதழை நான் வழக்கமாகச் சென்று கொண்டிருக்கும் மின்சார வண்டியில் படித்துக்கொண்டு வந்தேன். அப்போது ஷங்கரலிங்கம் என்ற கவிஞர் என் எதிரில் அமர்ந்திருந்தார். அவர் கேட்டார் : “என்ன பத்திரிகை இது?” என்று.

“கவனம் என்ற பத்திரிகை. ஞானக்கூத்தன் ஆசிரியர்,” என்றேன்.

ஷங்கரலிங்கம் அந்தப் பத்திரிகையைப் பார்க்கக் கேட்டார். கொடுத்தேன்.

ஒரு சிறுபத்திரிகையை இன்னொரு சிறுபத்திரிகையை வாசிக்கும் வாசகர்தான் அறிவார்.

“உங்களுக்கு பிரமிளைத் தெரியுமா?” என்று கேட்டார்.
“கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தெரியாது..அவர்தான் வெங்கட்சாமிநாதனுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பாரே,” என்றேன்.

“அவர் என்னைப் பார்க்க வருவார்.. உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்,” என்றார். அவரிடம் என் அலுவலக முகவரியைக் கொடுத்தேன்.

‘கவனம்’ என்ற பத்திரிகைதான் எனக்கு பிரமிள் என்ற படைப்பாளியை அறிமுகப்படுத்தியது.

பிரமிள் என் அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்தபோது, ‘மேல் நோக்கிய பயணம்,’ என்ற அவருடைய கவிதைப் புத்தகத்தை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார்.

வாங்கிக்கொண்டேன்.

பின் சில தினங்கள் கழித்து வந்தார். இந்த முறை ஷங்கரலிங்கத்துடன் வரவில்லை. அதன்பிறகு இந்த ஷங்கரலிங்கத்தையே நான் பார்க்கவில்லை.

“என் கவிதைகளைப் படித்தீரா?” என்று பிரமிள் கேட்டார்.

மேல் நோக்கிய பயணம் என்ற அந்தக் கவிதைத் தொகுதியில் மேல் நோக்கிய பயணம் என்ற கவிதை ஒரு நீண்ட கவிதை.

அந்த நீண்ட கவிதைû எத்தனை முறை படித்தாலும் என் மனதில் ஏறவில்லை. ஆனால் இன்னொரு கவிதை எனக்குப் பிடித்திருந்தது.

அந்தக் கவிதையின் பெயர், வண்ணத்துப் பூச்சியும் கடலும்.

அந்தக் கவிதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சமுத்திரக் கரையில்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசை மீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

பிரமிளிடம் இந்தக் கவிதை இந்தத் தொகுதியில் எனக்குப் புரிகிறது என்றேன். அதைக் கேட்டு அவருக்கு ஆச்சரியம். üüடேவிட்டுக்கு இந்தக் கவிதை புரியவில்லை என்று சொன்னார்,ýý என்றார்.

“எனக்கு நீண்ட கவிதைதான் புரியவில்லை,” என்றேன்.

“அவருக்கு அதுதான் புரிகிறது,” என்றார் பிரமிள்.

பிரமிளுடன் எனக்கு இப்படித்தான் நட்பு ஏற்பட்டது. அடிக்கடி அவரைச் சந்திப்பதும் பேசுவதுமாக இருந்தது.

என் நண்பர் எஸ் வைத்தியநாதன் என்ற ஒருவர். அவர் மயிலாப்பூரில் இப்போதும் குடி இருக்கிறார். அவர்தான் முதல் முறையாக இலக்கியச் சந்திப்பு ஆண்டுதோறும் நடக்கும் கூட்டத்தில் என்னை ஞானக்கூத்தன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், ராம் மோஹனுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது நான் ஆத்மாநாமை சந்தித்ததில்லை. அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அவருடைய நண்பர்கள் ரகசியமாக அவருக்கு உடம்பு சரியில்லை என்று குறிப்பிட்டார்கள்.

ஞானக்கூத்தன் அவருடைய நண்பர்களை வைத்தியநாதனுடன் கடற்கரையில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பேன். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அமர்ந்துகொண்டு தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றிப் பேசுவோம்.

அந்த நண்பர்களில் சிலருக்கு நான் பிரமிளுடன் பழகுவது தெரியும். üüஅவருடன் ஜாக்கிரதையாகப் பழகுங்கள்,ýý என்று எச்சரிக்கைச் செய்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.

அதனால் நான் பிரமிளை சந்திப்பதைப் பற்றி அவர்களிடம் பேச மாட்டேன். அது தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்குவதாகத் தோன்றும். உண்மையில் பிரமிளை நான் சனிக்கிழமை அன்று, ஜே கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனில் சந்திப்பேன். அங்கு ஜே கேயின் வீடியோவை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம்.

ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் ஞானக்கூத்தன் அவர் நண்பர்களையும் சந்திப்பேன். எனக்கு நல்ல பொழுதுபோக்காகத்தான் இது தோன்றியது. ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்தத் தருணங்களில் நாங்கள் எல்லோரும் என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை. ஒன்று கூட என் கவனத்தில் வரவில்லை.

(இன்னும் வரும்)

லாவண்யா கவிதைகள்

1.அன்பென்று

அன்பென்ற

ஆதி உளி கொண்டு செதுக்குகிறாய்

சிலையாவாய் என்கிறாய்

கழுத்தை வாகாய் வைத்திருக்கிறேன்

சீவி சீவி கூர்மையாக்குகிறாய்

இனியேனும் தெளிவாய் பதிவாவேன் என்கிறாய்

பொத்தி பொத்தி

கைப்பிடிக்குள் வைக்கிறாய்

கனியச் சுவை கூடும் என்கிறாய்

ஆம்

நான் செய்யப்பட்டவள்

ஆயினும்

சிறு அழுத்தம் போதும்

உடைந்து போக

பின்பு காத்திருப்பேன்

சுயம்புவாக.

2.
சிறுகுடை தவிர் வெயில்

ஆயிரம் கரங்களுண்டு உனக்கு

ஆனாலும் அவற்றில் ஒன்று கூட

என்னை அணைத்து கொள்வதில்லை

மண்ணில்

மழையும் புயலும்

உணவும் உயிரும்

உன் தயவாலே

கோட்டை சுவர்கள்

உன்னை தடுப்பதில்லை

கோபுர பரிசுத்தங்கள்

பொருட்டில்லை

நீயொரு பிரம்மாண்டம்

சிறுகுடை போதும்

என்றாலும்

நான் ஒளிந்து கொள்ள

3. கற்புக்கரசி

அவள் பெயர் ஜானகி இல்லை

அவள் மிதிலையில் பிறக்கவில்லை

அயோத்தியில் பஞ்சவடியில் அசோக வனத்தில் மஞ்சம் கொண்டவளில்லை

அவள் கற்பை நிறுவ

மாய மாரீசன்கள் தேவையில்லை

லஷ்மண ரேகைகள் வேண்டாம்

ராமன் கடல் தாண்ட அவசியமில்லை

எத்தனை கலவி நடந்தாலும்

அவள் ரத்தத்தில்

இன்னொரு ரத்தம் கலக்காது

சினை குழாயில் அடைப்பிருக்கலாம்

அல்லது

கற்பின் காவலரணாய்

ஆண்டி ஸ்பேர்ம் ஆண்டி பாடிஸ்(Anti Sperm anti bodies)

வரம் பெற்றவள்

ஆதலினால்

நித்திய கற்புக்கரசி.

4. நாகப்பழம்

வரண்ட நாவல் மரத்தை

கண் வருடி

கடந்திருந்தேன்

மாய மேகங்களை

பரிபூரண பொழிதலை

கோடி யுகங்களுக்கு

நிகழ்த்தச் சொல்லி பணித்தேன்

என் தேவதைகளுக்கு

கருங் கனிகளை

சுவர்ப்பாய் இனிப்பாய் உதிர்த்தது மரம்

சுட்ட பழங்கள்

கூடவே

நீக்க முடியாத மண்துகளும்

உண்ண உண்ண உதடுகளும், நாக்கும்

நிறம் மாறியது

வயிறு புரண்டது கடும் வலியுடன்

விரல் நகங்களில் அதன்விஷமேறியது

மெல்ல மெல்ல

தீண்ட நினைக்கிறேன்

கொல்ல துடிக்கிறேன்

காதலை கருணையாய் மறக்க

கடும் தவம் செய்கிறேன்

தவம் கலைந்து கண் திறக்கிறேன்

துண்டு துண்டாய் வெட்டி விடும்

வெறியோடு மன்னிக்கிறேன்

உயிர் பிழைத்த நிம்மதியோடு

வாழ்ந்துவிடு

இடிவிழுந்து வேர் பிளந்து

இயற்கையாய் செத்து போ.

சிபிச்செல்வன் கவிதை / தினசரி தலைவலி

தினசரி தலைவலி
••

தினசரி தலைவலிக்கிறது
ஒருநாளும் வலிக்காமலிருந்தது இல்லை
என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருப்பதால்தான்
தலைவலிக்கிறது என்கிறாள் அவள்.
யோசிக்காமல் இருக்கவும் என அன்போடு அறிவுரை சொல்கிறாள்.
ஒருநாளும் நான் யோசித்ததில்லை என்பதை அப்படியொரு அப்பட்டமாக ஒப்புக்கொள்ள மனமில்லாததால்
மீண்டுமொருமுறை தலைவலிக்கிறது என்றேன்
அவள் அருகில் வந்து தலையைத் தொட்டு பார்த்து ஆம் இப்படி விண்விண்னென்று வலிக்கிறதேயென்றாள்
ஆம் விண்ணை முட்டுகிற வலிதான் என்று கசப்பான சிரிப்பை உதிர்த்தேன்
அப்போதுதான் அந்த ஆச்சர்ய நொடி நிகழ்ந்தது
தலைக்குமேல் பறந்து போய்
அது
அந்த தலைவலியின்மீது உட்கார்ந்தது
மெல்ல அது இன்னொரு தலையில் அமர்ந்துகொள்வதற்குள்
தலையில்லாதவர்கள் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள்
ஆக
தலைவலி இவ்வாறாக விடைபெற்றது

••
21 / 06 / 2017
பின்னிரவு மிகச் சரியாக 1 மணி

ஈழக்கவி கவிதைகள்

அரூபங்கள்

பிரமாண்ட சுவரில்
வரலாறு வரைந்த
ஒரு அரூப ஓவியம்
ஓவியத்துக்குள் ஒளிரும்
புத்தரின் விழிகளிலிருந்து
வழியும் இரத்தக் கண்ணீரை
சிறுமியின் தலையிலிருந்த
முக்காடு துடைக்க முனைகையில்
முக்காட்டில் படிந்திருந்த
சாம்பல் துகள்கள்
ஓவியத்தை சிதைக்க சிதைக்க
அதற்குள் ஆயிரமாயிரம் அரூபங்கள்
பதறும் உயிர்கள்
சிதறும் மசூதிகள்
எரிக்கப்படும் அங்காடிகள்
நடைபிணமான ஊர்
து- வேஷிகளுக்கு
சோரம் போன
காப்பாளர்கள்
தென்னை மரத்தில்
புல் அறுக்கும் அரசு
அரசும் அவர்களே
என்பதை உணர்த்தும்
அரூபங்கள்

30032018 காலை 9.00 மணிக்கு

தேர்தல் சாம்பல்

வெயில்
பேய் போல
அரச அடுப்பின் கழுத்தை
நெறித்துக் குடித்து
நெருப்பாகிக் கொட்டியது.

தாள முடியாமல்
மழையை வேண்டி
வானத்தைப் பார்த்தேன்;
ஒரு குடில்
கொடிய பசிக்கு
உணவை வேண்டல் போல.

சாம்பலாகி காற்றில்
கரைந்தேன்.

இரவு
ஒரு தேர்தலாகி
சாம்பலைக் கூட்டியெடுத்து
என்னை தூங்க வைத்தது.

இரவெல்லாம்
மழை என்று
சேவல் கூவக்கேட்டு எழுந்தேன்…
வேண்டாத போது
மழை வந்துப்போயிருந்தது;
ஓட்டு வாங்குவோர்
ஊருக்கு வந்து போதல் போல!
12122017 காலை 10.00 மணிக்கு

ஈழக்கவி
ahmnawas@gmail.com

நகரி… ( சிறுகதை ) அரிசங்கர்

“தம்முடு, வண்டி எப்போ வருமா, கேட்டியா” என்று நாராயணசாமியிடம் அவர் கேட்டார்.

அங்கிருந்தவர்கள் அனைவருமே நாரயணசாமியின் உறவினர்கள் தான். சிலரை யாரென்றே நாராயணசாமிக்கு தெரியவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவரின் பேச்சிலுமே தெலுங்கு வாடை இருந்தது. நகரி மதராஸுக்கும், திருப்பதிக்கும் நடுவில் இருந்த ஒரு ஆந்திர கிராமம். தமிழ், தெலுங்கு என் இரண்டு மொழிகளுமே அங்குப் பேச்சுவழக்கில் இருந்தது. இரண்டையுமே கலந்துகட்டியே மக்கள் பேசினார்கள்.

நீண்ட நேரமாக அவர்கள் நகரி ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்கள். மூன்று மணிக்கு வரவேண்டிய ரயில். மணி இப்போது ஐந்தைத் தாண்டியிருந்தது. எப்போது வரும் என அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. அடிக்கடி சென்று ஒருவற்பின் ஒருவராக விசாரித்து வந்தனர். ஒரே தகவலே அனைவருக்கும் சொல்லப்பட்டது. காத்திருப்பதனால் ஏற்படும் எரிச்சல் அனைவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. நாகம்மாளை தவிர.

நாகம்மாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று தான் மிகிழ்ச்சியாக இருந்தாள். இரண்டாவதாக அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை அவளால் நம்பமுடியவில்லை. சற்றுமுன் தான் அவள் கழுத்தில் தாலி ஏறியது. நிறைவேறாமல் போய்விட்டதே என்று இத்தனை நாட்களாய் அவள் நினைத்த அந்த விஷயம் இன்று நடந்துவிட்டது.
அவள் தலை குனிந்தவாறே தன் கண்களால் நோட்டம்விட்டாள். தன் கணவனை காணவேண்டும் போல் இருந்தது. அவர்களுக்கான தனிமை எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாள். எப்போதும் ஒரு கூட்டம் அவளைச் சுற்றியும், அவள் கணவனை சுற்றியும் இருந்து கொண்டே இருந்தது.

நாராயனசாமியின் திருமணம் பற்றிய பேச்சு எழுந்தபோது முதலில் அனைவரின் நினைவுக்கும் வந்த பெயர் நாகம்மாள் தான். ஆனால் வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. அப்போது நாராயணசாமிக்கு 35 வயது, நாகம்மாளுக்கு 17 வயது. ஏறக்குறைய இருபது வயது வித்தியாசம் இருந்தது. மற்றவர்கள் ஒப்புக்கொண்டாலும் நாகம்மாளின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை.

நாராயணசாமி தன் மனைவி வழி உறவு என்பது ஒரு முக்கிய காரணம். சிறு வயதிலிருந்தே நாராயணசாமி வீட்டிற்கு வரும்போதெல்லாம், நாகம்மாளிடம் “உன்னக் கட்டிக்க போறவன் வந்திருக்கான்” என்றே சொல்லி வந்தார்கள். இதனால் நாகம்மாளுக்கு நாராணசாமி மேல் ஒரு ஈர்ப்பு எப்போதுமே இருந்தது. ஆனால் அவள் தந்தையின் இந்த முடிவை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோவிலுக்குச் சென்று தனக்கும் நாராயணசாமிக்குமே திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

நாராயணசாமிக்கும், பச்சையம்மாளுக்கும் திருப்பதி கோவிலில் திருமணம் நடந்தது. பச்சையம்மாளை அனைவருக்குமே பிடித்திருந்தது. பச்சையம்மாளை ஒருவர் குறை சொன்னால் அது நிச்சயம் பொறாமையாக தான் இருக்குமே தவிர பச்சையம்மாளிடம் அப்படி எந்தக் குறையும் இருக்காது என்றுதான் நம்பினார்கள்.

நாராயணசாமி அப்போது மதராஸில் குடிபெயர்ந்திருந்தார். தங்கம் வாங்கி விற்கும் பிரோக்கராக தன் வாழ்க்கையைத் துவங்கியிருந்தார். நாராயணசாமிக்கு திருமணமான சில மாதங்களிலேயே, நாகம்மாளின் தந்தை இறந்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்டு நாராயணசாமியும், பச்சையம்மாளும் வந்திருந்தனர்.

பச்சையம்மாள் எதோ தன் அப்பாவே இறந்தது போல் கதறி அழுதாள். நாகம்மாள் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாகம்மாளுக்கு அவள் ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னாள். அவளுக்கே தோன்றியது, தன்னைவிடப் பச்சையம்மாளே நாராயணசாமியை நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்று. மற்றொரு சமயம் நாகம்மாள் நினைத்துக் கொண்டாள், ஒருவேளை தன் தந்தை சில மாதங்களுக்கு முன் இறந்திருந்தாள் நாம் தான் இப்போது நாராயணசாமிக்கு மனைவியாக இருந்திப்போம் என்று. ஆனால் பச்சையம்மாளை பார்க்கும் போது அவளுக்கு எந்தப் பொறாமையும் ஏற்படவில்லை.

பச்சையம்மாளின் தோற்றம் அப்படி. அவள் தலை கலைந்தோ, சோர்வாகவோ, கோவமாகவோ யாரும் பார்த்ததில்லை. அனைவரின் சோகத்தையும் தனதாகவே நினைக்கக்கூடியவள். பச்சையம்மாளின் இந்தக் குணங்களை பார்த்துத் தான் நாகம்மாளுக்கு அவள் மேல் இருந்த கோவம் கூட மறைந்திருந்தது. அவள் தனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டாள்.

பச்சையம்மாள் மாசமாக இருப்பதால் நகரியில் இருக்கும் தன் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டாள். நாகம்மாளின் வீட்டிலிருந்து பச்சையம்மாளின் வீடு இரண்டு தெரு தள்ளித் தான் இருந்தது. பச்சையம்மாள் வந்த சேதியை கேட்டதும் நாகம்மாள் அவள் வீட்டிற்குச் சென்றாள். இருவரும் முன்னமே உறவினர்கள் தான் என்றாலும் நாகம்மாள் அதிகமாக இங்கு வந்ததில்லை.

நாகம்மாளுக்கு நாராயணசாமி மீது ஒரு ஈர்ப்பு இருந்ததைப் பச்சையம்மாள் அறிந்தே தான் இருந்தாள். ஆனால் பச்சையம்மாள் அவளை ஒரு சிறு பெண்ணாகத் தான் நினைத்தாள். மிச்சமிருந்த நாட்கள் பெரும்பாலும் நாகம்மாள், பச்சையம்மாளுடன் அவளுக்கு உதவியாகவே இருந்தாள். பிரசவநாள் நெருங்கிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது நாராயணசாமி வந்து போவான்.

அவன் முன்பு போல நாகம்மாளிடம் பேசுவதில்லை. அவன் வந்து போகும் வரை அவள் அங்கு போகாமலே இருந்தாள். நாராயணசாமி திரும்ப சென்றதும், நாகம்மாள் பச்சையம்மாள் வீட்டிற்குச் சென்றாள்,

“என்ன ரெண்டு நாளா கானேம்” என்றாள் பச்சையம்மாள்.
நாகம்மாள் பதில் ஏதும் சொல்லாமல் அவள் அருகில் சென்று அமர்ந்து அவளுடன் கீரையை உருவினாள். பச்சையம்மாள் லேசாக சிரித்துக் கொண்டாள்.

“எனக்கு எதுவும் தெரியாதுனா நினைக்கிற நீயி” என்றாள் பச்சையம்மாள்.

நாகம்மாள் அங்கிருந்து புறப்பட எழுந்திருக்க, பச்சையம்மாள் அவள் கையை பிடித்த இழுத்து உட்காரவைத்தாள். இப்போது நாகம்மாள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்து. அவள் தலையை குனிந்தவாறே கீரையை கிள்ளினாள். அதன்பிறகு பச்சையம்மாள் அதைப்பற்றி எதையும் பேசவில்லை.

பச்சையம்மாள் பிரசவத்தில் இறந்துவிட்டாள் என்று எவராலும் நம்பமுடியவில்லை. குழந்தையும் இறந்தே தான் பிறந்தது. அனைவரும் பச்சையம்மாளின் விட்டை நோக்கி விரைந்தனர். ஊரே கூடிவிட்டது. பச்சையம்மாளின் மரணம் ஒரு வீட்டு மரணமாக பார்க்கப்படவில்லை. அது அந்த ஊரில் இருந்த அனைவரின் வீட்டு மரணமாகவே பார்க்கப்பட்டது. நாகம்மாள் மயங்கி மயங்கி விழுந்தாள். அவளால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த மூன்று வருடத்தில் அவளுக்குப் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தது. அவள் நினைவுகளில் நாரயணசாமியை விட பச்சையம்மாளே அதிகம் இருந்தாள். அவள் பச்சையம்மாளின் அன்பில் கரைந்திருந்தாள். அவளைப் போல் ஒருநாளும் தன்னால் நாராயணசாமியை பார்த்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்திருந்தாள்.

பச்சையம்மாள் இறந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது. நாராயணசாமி நகரிக்கு வருவது குறைந்துவிட்டது. அந்த நேரத்தில் நாராயணசாமி, நாகம்மாள் திருமணத்தை பற்றி மீண்டும் பேச்சு வர, இந்த முறை இதை மறுக்கவோ அல்லது எதிர்க்கவே எவரும் இல்லாததால் திருமணம் வேலைகள் வேகமாக நடக்கத் துவங்கியது. ஆனால் நாகம்மாளிடம் முன்பு இருந்த அந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லை. அவளுக்கு எதோ தான் பச்சையம்மாளுக்குத் துரோகம் செய்வது போல ஒரு எண்ணம் தோன்றியது. உடனே அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். கோவிலில் பூப்போட்டு பார்ப்பது என்று. அப்படியே செய்தாள். இவளுக்குச் சாதகமாகவே பூ விழுந்தது.

திருமணத்தை வீட்டிலேயே முடித்துவிட்டார்கள். முன்பு தான் வேண்டிக்கொண்டதை நாகம்மாள் கோவிலுக்கு சென்று நிறைவேற்றினால். மனம் முழுக்க கடவுளுக்கு பதிலாகப் பச்சையம்மாளே நிறைந்திருந்தாள்.

அன்று மதியமே ஊருக்கு புறப்பட முடிவானது. நாகம்மாள், அவள் அம்மா, நாராயணசாமி, அவன் அம்மா மற்றும் சில உறவினர்கள் என் அனைவரும் நகரி ரயில் நிலையத்தை வந்து அடைந்தனர். ரயில் நிலையத்தில் ஆட்கள் யாருமேயில்லை. ஸ்டேஷன் மாஸ்டரே தான் சீட்டு கொடுப்பவர், அவரே தான் கொடியசைப்பவர்.

அனைவருக்கும் சீட்டு கொடுத்துவிட்டு அவர் எழுந்து வெளியே சென்றார். அப்போது நாராயணசாமியின் உறவினர் ஒருவர்,

“என்ன கிளம்பறீங்க, அப்பறம் யாரு கொடிய ஆட்டறது” என்றார்.

ஸ்டேசன் மாஸ்டர் நடந்துகொண்டே “இன்னும் நிறைய நேரம் இருக்கே” என்றார்.

இரண்டு மணிக்கெல்லாம் அவர்கள் வந்துவிட்டிருந்தனர்.
அதற்குள் அருகில் இருந்த ஒரு குண்டு அம்மா, “ரயில் நேரம் கூடவா தெரியாம வருவீங்க, நம்ம ஆளுங்க எதுக்கு தான்” என்று கடைசி வார்த்தையை விழுங்கினார்.

ஸ்டேசன் மாஸ்டர் வேகமாகவும், பதட்டமாகவும் ஓடிவந்தார். வந்துவர் நேராகச் சென்று தன் அறை இழுத்துப்பூட்டினார். நாராயணசாமி அதைப் பார்த்தவுடன் வேகமாகச் சென்று அவரிடம்,

“என்ன மாஸ்டர் எங்க அவசரமா புறப்பட்டீங்க” என்றார்.
அதற்கு மாஸ்டர் பதட்டமாக, “காந்திய சுட்டுபுட்டாங்கலாம், வடக்குல ஒரே கலவரமா. வண்டி எப்போ வரும்னு சொல்ல முடியாது. அது அது அங்கியே நிக்கறதா தகவல். நீங்க எல்லாம் புறப்பட்டு போங்க. இங்க இருக்கிறது தண்டம், எதனா பிரச்சனை வந்தாலும் வரலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றார்.

அங்கிருந்த அனைவரும் ஆளுக்கு ஒருபக்கம் பேச துவங்கினர். திரும்ப வீட்டுக்குப் போகலாம் என்று பலரால் முடிவெடுக்கப்பட்டது. நாகம்மாளுக்கு அதில் விருப்பமில்லை. அப்போது நாகம்மாளின் அத்தை ஒருத்தி,

“திரும்பி போறதா, இன்னா புரிஞ்ச்சிதான் சொல்றியா” என்றாள் தன் கணவனைப் பார்த்து.

அதற்கு அவன் “ பின்ன இங்கயே குந்திகினு இருக்கனுமா, எத்திணி நாளுக்கு காத்துனு இருப்பமே” என்றார்.

“ஊட்டுக்கு திரும்பப் போனா ஊர்ல இன்னா சொல்லுவாங்கோ, நம்ம பொண்ணு ராசி இல்லாதவ, அதான் போன வேகத்துல வந்துட்டானு தான பேசுவாங்க” என்றாள்.
அவள் அப்படி கூறியதும் அதை அங்கிருந்த பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காத்திருந்து போவது என முடிவெடுக்கப்பட்டது. இருந்தவர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்தார்கள். சிலர் கதை பேசினார்கள். சிலர் பீடி குடிக்க ஒதுங்கினார்கள். சிலர் அங்கேயே துண்டை போட்டுத் தூங்க ஆரம்பித்தார்கள்.
நாகம்மாள் சுற்றி ஒரு முறை பார்த்தாள்.

மரங்கள் அவற்றுக்குள் தனியே எதோ பேசிக்கொண்டது. பறவைகள் அவை துணைகளுடன் இருப்பதை கவனித்தாள். தூரத்தில் நாரயணசாமி தன் சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனை முழுக்க கவனித்தாள். அவன் முன்பு போல் இல்லை. அவன் தலை மயிர் கொட்டதுவங்கியிருந்தது. இன்னும் கொஞ்ச நாள் தான் தாங்கும் போல் இருந்தது.

ஆளும் பெருக்க துவங்கியிருந்தான். அவன் இளமையின் கடைசி படியில் இருந்துகொண்டு, முதல் படியில் இருக்கும் நாகம்மாளை துணைக்கு அழைத்துக்கொண்டான். தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டால். தான் நாராயணசாமியை விட உயரமாக இருப்போம் என்றே அவளுக்குத் தோன்றியது. நிறமுன் அவனைவிடக் கொஞ்சம் கூடுதல் தான்.

இருட்டத் துவங்கியிருந்தது. ஸ்டேசன் மாஸ்டர் வந்தார். ரயில் புறப்பட்டு விட்டதாகவும், பதட்டமாக இருப்பதால் கொஞ்சம் மெதுவாகத் தான் வரும் என்றும் கூறிவிட்டு சென்றார்.

கொண்டுவந்திருந்த கல்யாண பலகாரங்களை அனைவரும் கொஞ்சமாக தின்றுவிட்டுப் படுத்துக்கொண்டனர்.
நாகம்மாளும் படுத்துக்கொண்டு ரயில் வரும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். பேச்சு சத்தம் மெல்ல அவள் காதுகளிலிருந்து மறைந்தது. நீண்ட நேரமாக அவளுக்கு ரயில் வரும் ஓசை கேட்டுக்கொண்டேயிருந்தது. அவள் அந்தத் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு ஒளி அவள் முகத்தில் வீசியது.

“வண்டி வந்திருச்சி, வண்டி வந்திருச்சி…” என்று அலறிக்கொண்டு எழுந்தாள். அவள் குரல் கேட்டதும் மற்றவர்களும் வேகமாக எழுந்து அந்தத் திசையை பார்த்தனர். இருள் மட்டுமே அங்கு இருந்தது.

“ஏய், எங்க வண்டி, கனாகன்டியா, பேசாம தூங்கு” என்று அதட்டினால் நாராயணசாமியின் அம்மா.

நாகம்மாள் மீண்டும் அந்தத் திசையை பார்த்தாள் அவள் கண்களுக்கு வண்டி வந்துகொண்டுதான் இருந்தது.

•••

மௌனச்சுழி எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கான இரங்கல் கட்டுரை / பாலகுமார் விஜயராமன்

”என்னவெல்லாமோ ஆக ஆசைப்பட்டு கடைசியில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை.”

எஸ். அர்ஷியா (2017)

ஒரு மனிதன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த உலகத்தை விட்டு விடைபெற்றுக் கொள்ளும் போது, அவன் சூழ்ந்திருந்த உலகம் திடீரென ஒரு நொடி அதிர்ந்து பின் மீண்டும் தன் அச்சில் சுழல் எத்தனிக்கிறது. அவனே ஒரு எழுத்தாளனாக இருக்கும் பட்சத்தில், அவன் சூழ்ந்திருந்த உலகம் போக, அவன் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருந்த இன்னொரு உலகம் அப்படியே உறைந்து போகிறது.

அவன் மனதுக்குள் சூல் கொண்டிருந்த கருக்கள் மூச்சுவிடும் முன்பே அழிந்து போகின்றன. அவன் பாதி எழுதி வைத்திருந்த படைப்புகளுக்குள் இருக்கும் கதைமாந்தர்கள் அதிலிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்தபடி அவற்றிற்குள்ளேயே மடிந்து விடுகிறார்கள். அவன் எழுத நினைத்த விஷயங்கள் எழுத்துக்களாய் கரையேற முடியாமல் என்றென்றைக்குமாய் காற்றில் அலைந்து கொண்டே இருக்கின்றன.

மரணம் பல உண்மைகளைக் கிளர்த்தி வெளிக் கொணர்ந்துவிடும் என்கிறது குரான். இழப்பின் வலியை உணர, ஒருவர் மீதான நமது பிரியத்தை வெளிப்படுத்த, அவரின் மரணம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்பதும் தான் யதார்த்தமான உண்மை. பழகுவதற்கு இனியவரும், தேடிச் சென்று நட்பு பாராட்டும் பெருந்தன்மை மனதுக்குச் சொந்தக்காரரும், இளைய படைப்பாளிகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தவரும், மதுரை மண்னின் மைந்தருமான எழுத்தாளர் அர்ஷியா அவர்கள் கடந்த ஏப்ரல் 7ம் தேதி, திடீர் மாரடைப்பு காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான அர்ஷியா அவர்களின் மனைவி, மற்றும் ஒரே மகள் ஆகியோர் மதுரையில் வசித்து வருகிறார்கள். அர்ஷியா அவர்கள் தன் குடும்பத்தின் மீது தீராத பாசமும், பெண்கள் மீது பெரும் மரியாதையும் கொண்டிருந்தார்.

எழுத்தாளர் அர்ஷியா அவர்கள், ஏழரைப்பங்காளி வகையறா, பொய்கைக்கரைப்பட்டி, அப்பாஸ்பாய் தோப்பு, கரும்பலகை, அதிகாரம், நவம்பர் 8 – 2016, சொட்டாங்கல் என்று ஏழு நாவல்களும், கபரஸ்தான் கதவு, மரணத்தில் மிதக்கும் சொற்கள் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், சரித்திரப் பிழைகள், ஸ்டோரீஸ் என்று இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும், நிழலற்ற பெருவெளி, திப்புசுல்தான், பாலஸ்தீன், பாலைவனப் பூ, மதுரை நாயக்கர்கள் வரலாறு, பட்ஜ் பட்ஜ் படுகொலைகள் என்று ஆறு மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார்.

பத்திரிகையாளராகத் தன் வாழ்வைத் துவங்கியவர், ஆயிரக்கணக்கான புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது படைப்பாற்றல் குறித்த அடையாளச் சிக்கலை வென்றெடுக்க, தன் காலத்திற்குப் பின்னும் தான் தன் எழுத்துகளால் நிலைத்து நிற்க வேண்டும் என்ற உந்துதலினால், பத்திரிகைத் துறையை விட்டு விட்டு, சிறு இடைவெளிக்குப் பின்பு புனைவு எழுத்தாளராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் துவங்கினார். அவரது முதல் நாவலான “ஏழரைப் பங்காளி வகையறா” மதுரையில் வாழும் உருது பேசும் முஸ்லிம்களின் வரலாற்றை செறிவாகத் தொகுத்தளித்த ஆவனம்.

ஒரு வகையில் அது அவரது முன்னோர்களின் கதையும் கூட. ஒரு “தன் வரலாற்றுப் பதிவை” எந்தவித ஆடம்பரமும், வெற்றுப் பெருமைகளும் இன்றி, மனிதர்களின் மேன்மையையும், சூழ்நிலை காரணமாக அவர்கள் செய்கின்ற சிறுமைகளையும் அச்சு அசலாக, எளிமையான மொழியில் பதிவு செய்த விதத்தில், தமிழ் இலக்கிய உலகின் சிறந்த புதினங்களில் ஒன்றாக “ஏழரைப்பங்காளி வகையறா” கருதப்படுகின்றது.

இந்த நாவலைப் போலவே, ரியல் எஸ்டேட் வணிகத்தின் பின்புலத்தைப் பற்றி விரிவாகப் பேசிய “பொய்கைக்கரைப்பட்டி”, ஒரு இடைநிலை அரசு ஆசிரியையின் பணி வாழ்க்கையை தத்ரூபமாய் உடன் இருந்து பார்த்தது போல் விளக்கிய “கரும்பலகை”, காக்கிச்சட்டைகளின் படிநிலை மையங்களைச் சொன்ன “அதிகாரம்”, மதுரை கோரிப்பாளையத்தின் வரலாற்றின் ஊடாக உள்ளூர் அரசியல்வாதிகளின் அன்றாட அரசியலை ஆராய்ந்த “சொட்டாங்கல்” ஆகிய படைப்புகளும் மிக முக்கியமானவை.

மனதில் பெருந்தனக்கார்ர்களாக வாழ்பவர்களுக்கு எவ்வளவு பெரிய தொகையும் சிறு சலனத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதற்கு அர்ஷியா அவர்கள் சிறந்த உதாரணம். புலனாய்வுத்துறை பத்திரிகையாளராக இருந்த போது, கோடிகளால் ஆன பேரங்களை எல்லாம் கண் முன் பார்த்து, அதற்கு மயங்காமல் எந்த சமரசமுமின்றி பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர்.

அதன் பின் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் மனதுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அந்தப் பணியையும் துறந்து விட்டு, இயற்கையோடு இயைந்த தோட்டக்கலை சார் தொழிலை மேற்கொண்டு வந்தார். தன் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் துளியளவு கூட வித்தியாசமின்றி வாழ்ந்தவர் எழுத்தாளர் அர்ஷியா அவர்கள்.

2016 ஆம் ஆண்டு, தேனி முற்போக்குக் கலை இலக்கிய மேடை சார்பாக, எழுத்தாளர் அர்ஷியா அவர்களின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்காக மதுரையில் இருந்து தேனிக்குச் செல்லும் போது தான் அர்ஷியா சார் அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. அதற்கு முன் வாசகனாக அவரை அறிந்திருந்தேனே ஒழிய நேரடியான அறிமுகம் இல்லை. அன்று தேனிக்கு அவரோடு ஒரே வாகனத்தில் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் மூன்று மணி நேரத்திலும், அவரது படைப்புகள் குறித்து, தொடர் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டே வந்தேன்.

அதற்கு மிக விரிவாகவும், தனக்கு மனதில் சரி என்று தோன்றியதை மிகத் தெளிவாகவும் அர்ஷியா சார் கூறிக்கொண்டே வந்தார்.

உண்மையில் ஓர் எழுத்தாளரின் நேர்காணலாய் மனதில் நினைத்துக் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகள் அவை. நிகழ்வு முடிந்து திரும்பி வரும் போது, எழுத்தாளர் வாசகன் என்ற நிலையைத் தாண்டி உற்ற நண்பர்களாக ஆகி இருந்தோம். “நம்ம சாரை நாமே என்ன பேட்டி எடுத்து எழுத?” என்ற அனுக்கத்தில் அந்த உரையாடல் எழுத்தாக்கப்படாமலே போய் விட்டது. அன்றைய தேனி விழாவில், அவரது “மரணத்தில் மிதக்கும் சொற்கள்” சிறுகதைத் தொகுப்பு பற்றி பேசினேன். அதன் பின், கடந்த மூன்று ஆண்டுகளாக, வாரத்திற்கு ஒரு முறையேனும் கட்டாயம் சந்தித்து, குறைந்தது இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருப்போம்.

மனிதர்களை அவரவர் இயல்போடு ஏற்றுக் கொள்கின்ற, புறம் கூறாத இலக்கியவாதியாக வாழ்ந்தவர் அர்ஷியா அவர்கள். இன்று எழுதுகின்ற பலருடைய படைப்புகள் அவரது மேற்பார்வையில் செப்பனிடப்பட்டவையே. தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியை துளி சோர்வின்றி, குறித்த நேரத்தில் செழுமைப்படுத்துவதோடு, தொடர்புக் கண்ணிகள் அறுந்திருக்கும் இடங்கள், தொய்வாய் நகரும் பகுதிகள், வெட்ட வேண்டிய மற்றும் மெருகேற்ற வேண்டிய பகுதிகள் ஆகியவற்றை மிக நேர்மையாக முகத்துக்கு நேராக அதே சமயம் படைப்பாளியின் மனம் கோணாமல் அவரை உற்சாகமூட்டும் வகையில் தெளிவுபடுத்தும் மிகச்சிறந்த எடிட்டராகவும் அவர் செயலாற்றி இருக்கிறார்.

அர்ஷியா அவர்கள் மதுரை மற்றும் சுற்றுப்புற ஊர்களை அங்குலம் அங்குலமாக அளந்து வைத்திருந்தார். மதுரை தொடர்பான எந்தவொரு வரலாற்று நிகழ்வுகளையும் அவர் வரைபடம் போல மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். மதுரையின் சித்திரத்தை தனது புனைவுகளின் பின்புலமாக்குவதில் அவரது நுன்மை வியக்க வைக்கக் கூடியது. அதே போல பயணம் செல்வதிலும் சளைக்காதவர். தன் வாழ்வின் பெரும்பகுதியை பயணத்திலேயே கழிந்திருக்கிறார். எந்த ஊருக்குச் சென்றாலும், பெட்டிக்கடைக்கார்ர்கள், பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், ஆட்டோக்கார்ர்கள் என்று புதியவர்களிடம் உரையாடலைத் துவக்கி அவர்களின் தயக்கத்தைப் போக்கி சகஜமாகப் பேச வைக்கும் கலையில் தேர்ந்தவர்.

கட்டுப்பாடான சமூகத்தில் இருந்து எழுத வந்த ஒருவர், அதிலுள்ள மூடப்பழக்கவழக்கங்களையும், அபத்தங்களையும் கேள்வி கேட்கும் போது இயல்வாழ்வில் நடைமுறைச் சிக்கல்கள் வருவது தவிர்க்க முடியாதது. அதுவும் தன் மகள் பெயரையே தன் புனைப்பெயராகக் கொண்டு எழுதும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து அவரிடம் கேட்டிருக்கிறேன்.

”பலதரப்பட்ட கதைக்களன்களையும் எழுத வேண்டிய சூழ்நிலை வரும் போது, உங்கள் மகள் பெயரில் எழுதுவதால் எப்பொழுதேனும் மனசங்கடங்கள் வந்திருக்கின்றனவா?” என்ற கேள்விக்கு, ”எழுத்தும் வாழ்க்கையும் வெவ்வேறல்ல. பொதுவெளியில் நான் என்ன பேசுகிறோமோ, அது தான் என் எழுத்தும். நேரில் சொல்லக்கூசும் எந்தவொரு விஷயத்தையும் நான் எழுதுவதில்லை, இனியும் எழுதப்போவதில்லை.

அதே போல், என் எழுத்தில் என்னென்ன கேள்விகளை முன்வைக்கிறேனோ, எனது சொந்த வாழ்க்கையிலும் அதைப் பின்பற்றுபவனாகவே இருந்து வருகிறேன். எனவே மகள் பெயரில் எழுதுவது குறித்துப் பெருமிதம் தானே ஒழிய எப்போதும் சங்கடமில்லை.” என்று கூறியிருந்தார்.
இன்று தமிழ் இலக்கிய உலகில், நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக பெரிதும் அறியப்படுகின்ற எழுத்தாளர் அர்ஷியா அவர்கள், புனைவெழுத்து இலக்கியத்துக்குள் நுழையும் முன்பு கண்ட அனுபவமும், களனறிவும் மிகப்பெரியது.

தொன்னூறுகளில், புலனாய்வுத் துறை பத்திரிக்கையாளராக தென்தமிழகத்து அரசியல் செய்திகளை அவர் களத்தில் இருந்து சேகரித்து எழுதியிருக்கிறார். அவரது புனைவுகளில் வரும் பரபரப்பு எழுத்து நடைக்கு, அவரது பத்திரிக்கை அனுபவங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. ஒரு படைப்பில் எங்கே துவங்கி, எப்படி முடிக்க வேண்டும்.

எந்த விஷயங்கள் எந்த கதாபாத்திரத்தின் வாயிலாக விளக்கப்பட வேண்டும் என்ற நுணுக்கங்களை மிகச்சரியாக அறிந்து வைத்திருந்தார். அத்திறமையை அவர் தனது படைப்புகளில் மட்டுமல்ல, தன்னைத் தேடி வரும் பல இளம் படைப்பாளிகளுக்கும் எந்த விதத் தயக்கமும் இன்றி கற்றுக் கொடுத்திருக்கிறார்.
எந்தவொரு எழுத்தாளுமைக்கும், கொஞ்சம் உயரம் சென்றவுடன், தான் கடந்து வந்த அனுபவங்களின் பொருட்டாவது புதியவர்கள் சற்றுப் பணிவுடனும், கொஞ்சம் தள்ளியும் நிற்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுவதுண்டு.

ஆனால் அர்ஷியா அவர்கள் இதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர். புதியவர்களைத் தேடிப் போய் நட்பு வளர்ப்பார். ஒரு முறை அவரிடம் நாம் பேசிவிட்டால், ஓர் எழுத்தாளரிடம் பேசுகிறோம் என்ற தயக்கம் மறைந்து, நாமாகவே அடுத்தமுறை நமது சந்தேகங்களையும், மனம் திறந்த உரையாடல்களையும் அவரோடு நிகழ்த்த முடியும். அப்படி, எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல், எல்லோருக்கும் பொதுவானவராக, ஆனால் உள்ளுக்குள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாகமானவராக மனதில் நிலைத்து நிற்கிறார் அர்ஷியா அவர்கள். இன்று எழுதிக் கொண்டிருக்கின்றவர்களில் குறைந்தது நூறு பேராவது, “என்னுடைய அர்ஷியா” என்று மனதில் அனுக்கமாக நினைத்துக் கொள்ளக் கூடிய அனுபவங்களைத் தந்திருக்கிறார் அவர்.

அரசியல் பத்திரிகை நிருபர், களத்தில் எப்படி செய்திகளை சேகரிக்கிறார், இன்ஃபார்பர் தரும் துப்பு என்ன, காவல்துறையிடம் எப்படி செய்தியைக் கறக்க வேண்டும், அதிலும் பி.சி, ஏட்டு, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.ஜி.பி என்று ஒவ்வொரு நிலையிலும் ஒரு நிருபர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தி, அல்லது வெளிப்படுத்தாமல் எப்படி பேச்சை வளர்க்க வேண்டும், மருத்துவக் கல்லூரி ஊழலைக் கண்டுபிடிக்க மாணவர்களோடு மாணவனாக விடுதியிலேயே தங்கி செய்தி எழுதுவது எப்படி… இன்னும் பல பல சுவாரஸ்யங்களை, ஒரு அரசியல் செய்தியின் நாம் அறியாத மறுபக்கத்தை, களத்திலிருந்து சம்பவங்களை செய்திகளாக்கும் செய்தியாளராகத் தான் ஆற்றிய பணிகளை அசை போட்ட கட்டுரைகளின் தொகுப்பு ”ஸ்டோரீஸ்” என்ற பெயரில் கடந்த ஜனவரி மாத சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது தான் வெளியாகியது.

அடுத்ததாக, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் சட்டதிட்டங்களைத் தாண்டி, முன்னேறும் பெண்ணை மையப்படுத்தி, “கறுப்புக்காய் ராணி” என்னும் ஒரு நாவலை சமீபத்தில் தான் எழுதத் துவங்கியிருந்தார். சமகால அரசியல் நிகழ்வுகளை, மதுரையின் சொல்லப்படாத வரலாற்றை, வைகையின் தோற்றுவாயிருந்து அது செல்லும் வழித்தடமெங்கும் உள்ள கதைகள் புதினங்களாக்க அவர் பல கள ஆய்வுகளையும் செய்து கொண்டிருந்த்தையும் அறிவேன்.

அதற்குள், செழிப்பான ஆற்றுப்படுகையின் கரையில் இருக்கும் பெருவிருட்சத்திலிருந்து உதிரும் வண்ண மலர் ஒன்றைப்போல, நீரோட்டத்தில் சிறிய மௌனச்சுழிப்பொன்றை நிகழ்த்தி விட்டு, இயற்கைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து, நீர்வழித்திசையில் எங்கோ நமக்குப் புலப்படாத வகையில், சென்று இயற்கையோடு கலந்துவிட்டார். அதைக் காலத்தின் அழைப்பாகத் தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆனாலும், மதுரை நகரின் வாழ்வியலையும், விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாடங்களையும், குறிப்பாக முஸ்லிம் சமூக பழக்கவழக்கங்களை அச்சு அசலான உயிரோட்டமுள்ள சித்திரமாகத் தீட்டிக் காட்டும் யதார்த்தம், அர்ஷியா அவர்கள் எழுதிய படைப்புகளில் நிறைந்திருக்கிறது. அயற்சியூட்டாத, இயல்பான மொழிநடையில் எளிய மக்களின் வாழ்வை இலக்கியமாக்கும் சவாலை அழகாகவும் நேர்த்தியுடனும் நிறைவேற்றியவர் எழுத்தாளர் அர்ஷியா.

அவர் நேர்ப்பேச்சில் மென்புன்னகையோடு, தனது கரங்களுக்குள் நம் கரங்களைப் பொதிந்து, தனது உள்ளங்கைகளின் வெப்பத்தை நமக்குள் கட்த்துவதைப் போலவே, அவரது படைப்புகளும் தமிழ் இலக்கிய வாசகர்களோடு என்றென்றும் உள்ளன்போடு பேசிக் கொண்டே தான் இருக்கும்.

******

கைக்குத்து அவலும் வெள்ளரிப் பிஞ்சும். / வண்ணதாசன்

இந்த வீடாகத்தான் இருக்கும் என்று அருணாச்சலத்திற்குத் தோன்றியது

எதற்கும் கேட்டுக்கொள்வோம் என்று சைக்கிளை சாய்த்துக்கொண்டு ‘ அண்ணாச்சி, அண்ணாச்சி’ என்று சத்தம் கொடுத்தான். முருங்கைக் காய் பறித்துக்கொண்டு நின்றவர் கவனிக்கவில்லை. துரட்டிக்கு அகப்படாத காயை ஒரு சலிப்புடன் அடித்ததில் முற்றாத இரண்டு பிஞ்சு தள்ளிப் போய் விழுந்தது. தூரத்தில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்ற பெண் கையில் ஏற்கனவே பறித்த இரண்டு மூன்று காய் இருந்தது. ‘யாரோ கூப்புடுதாங்க’ என்று அதுதான் அவரிடம் சொல்லியது. ‘என்ன வேணும்?’’ என்று அதுவே தெருப் பக்கம் வந்து கேட்டது,. சப்பைக் கால் போல. நான்கு எட்டு வைப்பதற்கே சிரமம் இருந்தது. ‘இங்கன இருந்தே கேக்க வேண்டியது தானே’ என்று சொன்னவர் துரட்டிக் கையோடு அங்கேயே நின்றார்.

‘ஒண்ணும் இல்லை. இந்த சொர்ணம் மேஸ்திரி வீடு எந்தப்பக்கம்?’ என்று கேட்ட சமயம் கொஞ்சம் சிரிக்கிற மாதிரி அருணாச்சலம் முகம் இருந்தது.
‘மேஸ்திரியா? அவங்க எல்லாம் மேற்கே சாலியத் தெருப் பக்கம்லா நாலஞ்சு குடும்பம் இருக்காங்க. முத்தையா டெய்லர் வீடுல்லாம் அங்கனைக்குள்ள தானே இருக்கு’ அந்தப் பெண் முருங்கை இலை வாசமடிக்கும் உள்ப்பக்கம் திரும்பிக் கேட்டது,

‘நான் சொல்லுதது கொத்தனார் மேஸ்திரி. செவல் காரர். மேலச் செவல்] என்று அருணாச்சலம் மேல் விபரம் சொன்னாள். சைக்கிள் ஹேண்டில் பாரில் கிடந்த வாளி முன்னும் பின்னும் ஆடியது. கேரியரில் இருந்த எவர்சில்வர் கேன் மீது ஒரு கை இருந்தது.

’நல்ல வளத்தியா இருப்பாரா?’ மேல்துண்டால் இரண்டு தோள்ப்பட்டை, வலது இடது கக்கத்திற்குப் பக்கம் எல்லாம் சுழட்டி உதிர்ந்துகிடந்த முருங்கை இலையைத் தட்டிவிட்டபடி வெளியே வந்தவர் ,இவனையும் சைக்கிளையும் பார்த்தார்.
‘ஆமா அவருதான் அண்ணாச்சி’ அருணாச்சலம் இன்னும் கொஞ்சம் சிரித்து,’ தெரிஞ்ச மனுஷன். உடம்புக்குச் சரியில்லை. எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ணு தோணுச்சு’ என்றான்.

’ஆளைத் தெரியும். ஆனா எனக்கும் பழக்கம் இல்லை. டி.வி.எஸ் ஃபிஃப்டியிலே போவாரு வருவாரு.
பார்த்திருக்கேன். தொந்தரவு இல்லாத மனுஷன்’ இப்போது பதில் சொல்கிறவர் முகத்திலும் சிரிப்பு வந்திருந்தது.
‘இந்தக் காலத்தில தொந்தரவு இல்லாத மனுஷனை யாருக்கு அடையாளம் தெரியுது?’ அவர் அருணாச்சலத்தைப் பார்த்து மேலும் நெருக்கமாகச் சிரித்தார். வேறு ஆள் ஆகியிருந்தார். முகம், குரல் எல்லாமே மாறியிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி இன்னொரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் ஆட்கள் இப்படி ஆகிவிடுவார்கள் போல என்று அருணாச்சலம் அவர் முகத்தைப் பார்த்தான்.

அருணாச்சலத்திற்கு அவருடைய வெற்றிலைக் காவி ஏறிய பற்களைப் பார்த்ததும் மாட்டுத் தரகு பார்க்கும் அவனுடைய வீரையா மாமா மாதிரி இருந்தது.

அருணாச்சலம் வாய்விட்டே சொல்லிவிட்டான். ‘உங்களைப் பார்த்தா எங்க சொந்தக்காரர் ஒருத்தர் மாதிரியே இருக்கு’ என்றான்.

‘அடேயப்பா. வீடு எங்கே இருக்குண்ணு இன்னும் லெக்குச் சொல்லலை. அதுக்குள்ளேயே சொந்தக்காரன் ஆயிட்டேனா, சந்தோஷம். இருக்கட்டும்.’ என்றவர் வீட்டுவாசலில் இருந்து தெருவில் இறங்கி, அவருக்கு இடது பக்கமாகத் தெருக்கடைசி வரை பார்த்துக்கொண்டு இருந்தார், அருணாச்சலம் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனான், டீ கேன் மீது ஒரு கையும் ஹேண்டில் பாரில் ஒருகையும் இருந்தது.

‘இப்படி நிழலுக்கு வா’ய்யா’ என்று இவனிடம் சொல்லிவிட்டு அவரும் புளிய மரத்தடிக்கு வந்தார். புளியம் பூக்களைக் குனிந்து வெள்ளாட்டுக் குட்டி மேய்ந்துகொண்டு இருந்தது. சக்கடா வண்டிக்கு அடியில் இன்னொன்று படுத்திருந்தது.

‘இங்கேர்ந்து பார்த்தா ஒரு அம்மன் கோவில் தெரியுதுல்லா?’

’ஆமா தெரியும், திரௌபதியம்மங் கோவில். தீக்குழிக்கு வந்திருக்கேன்’’

’அதைத் தாண்டிப் போனா
ஒரு வேதக்கோவில் வரும். அதை ஒட்டி ஒரு பால் வாடி. ‘
‘ஆமா. தெரியும்’

‘அதுக்கு மேற்கே ஒரு முடுக்கு மாதிரித் திரும்பும். கொஞ்சம் எட்டி உள்ளே போகணும். நம்ம ஊரா வேற ஊராண்ணு தோணும். அப்படிச் செடியும் கொடியுமா இருக்கும். வாடகைக்கு இருக்கவன் அவ்வளவு தள்ளிப் போய் வீடு பார்க்க மாட்டான். ஏதாவது சௌகரியமான தொகைக்கு ஒத்திக்கு முடிச்சிருப்பாரு’ என்று அருணாச்சலத்தைப் பார்த்துச் சொன்னார்.

அருணாச்சலத்துக்கு அவர் நிறையப் பேசுவது போலவும் இருந்தது, சொல்கிற தகவல்கள் பிடித்தும் இருந்தது.
‘’நல்லது அண்ணாச்சி. இது போதும். நான் அங்கன போய் மேற்கொண்டு விசாரிச்சுக்கிடுதேன்’ என்று மரியாதைக்குச் சொன்னான்.

‘என்னது இன்னம் சாரிக்கணுமா. நான் கையைப் பிடிச்சு வீட்டு வாசல்லே கொண்டுபோய் விடுகிற மாதிரி விபரம் சொல்லியிருக்கேன். இன்னும் சாரிக்கணுமா?’ அவர் அருணாச்சலத்தின் தோளில் தட்டினார்.

‘டீ ஆகிப் போச்சு. இல்லாட்டா டீ குடிக்கச் சொல்லியிருப்பேன்’ அருணாச்சலம் அவர் கண்களைப் பார்த்தான். அவை அப்படியே வீரையா மாமாவுடையது போலவே இருந்தன,

‘இருக்கட்டும். ஒரு தொள்ளாளி கொண்டாந்த சரக்கு வித்துப் போச்சு. இல்லைண்ணு சொல்கிறதே போதும். கண்டிப்பா இன்னொரு நாளைக்கு எதுத்தாலே நானே வந்து, டீ என்னாச்சுண்ணு கேட்டுக் குடிச்சுக்கிடுதேன்.’ என்று மறுபடியும் அருணாச்சலம் தோளில் கையை வைத்தார்.
‘புள்ள உண்டானவ மாதிரி இங்கே இருந்து இதைத் தள்ளிக்கிட்டே தான் போகணுமா?’ என்றார். ‘இல்லை. இப்போ வெத்துக் கேன் தானே’ என்று சைக்கிளில் குறுக்கு பார் வழியாகக் காலைப் போட்டு அழுத்தினான். வாளி ஆட்டத்தை மட்டுப்படுத்தியபடி அவருக்குக் கையைக் காட்டும் போது, அவர் ‘ பார்த்து, பார்த்து’ என்று சொல்லியபடி திரும்பிக்கொண்டு இருந்தார்.

திரௌபதி அம்மன் கோவிலுக்கு முன்னால் ரோட்டுக்கு நடுவில் குத்துக்கல் இருந்தது. குத்துக்கல் உச்சியில் கல்லில் குழிவாகக் கொத்தி இருப்பார்கள். எண்ணெய் திரி போட்டுச் செவ்வாய் வெள்ளிக்கு விளக்கு ஏற்றுகிறதுண்டு. அருணாச்சலம் சைக்கிளை நிறுத்திக் காலை ஊன்றிக்கொண்டு பிசுபிசுவென்று இருந்த கரியைத் தொட்டு நெற்றியில் வைத்துக் கும்பிட்டான்,

‘யாருடே அது, கும்பிடு பலமாக இருக்கு அம்மங்கோவில் நடை அடைச்ச பொறகு?’ என்று சத்தம் வந்தது. பாலகிருஷ்ணா ரைஸ் மில் பக்கம் பார்த்தான். அதற்கு அடுத்த காடினாவில் இருக்கிற கடை பலவேச மூப்பனாருடையது. குழாய்ப் புட்டுக்கும் சுக்கு வென்னிக்கும் காத்துக் கிடப்பார்கள். பிந்தினால் வித்துப் போகும். அருணாச்சலம் எத்தனையோ தடவை அங்கே சாப்பிட்டு இருக்கிறான். இலைத்துண்டை வீசிவிட்டுச் சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் கோதிக் கழுவும் போது தரை அதிரும். பக்கத்து விறகுக் கடையில் கோடாலி போட்டு எப்போதும் குறைந்தது மூன்று பேராவது உடை விறகு கீறிக்கொண்டு இருப்பார்கள். விறகுக் கடைக்காரர் சம்சாரம் கூட அருணாச்சலத்தின் வீட்டுக்காரிக்குச் சொந்தம் தான்.

‘செந்திலு நல்லா இருக்காளா?’ என்று விசாரிக்கிறது உண்டு.
‘எந்தக் கிழவி டே விறகுக் கடையில நிக்கா இப்போ?’ மறுபடியும் அதே குரல், ஒரு காக்கை குறுக்கே பறப்பது போன்று, அவன் பக்கம் வந்தது. ஏறிட்டுப் பார்த்தால் ரெங்க மாமா அருணாசலத்தைக் கிண்டலாகக் கையை அசைத்துத் தன் பக்கம் கூப்பிட்டார். தலைப்பாகையை அவிழ்த்துத் தோளில் அவர் போட்டுக் கொண்டதும் இன்னார் என்று இனம் தெரிந்தது.

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே, ‘ இங்கே எங்கே மாமா?’ என்று அருணாச்சலம் சிரித்தான். ‘அதை நான் லா உங்கிட்டே கேக்கணும்’ என்று கேட்டவர், உள்ப்பக்கமாகத் திரும்பி, ‘புட்டு இருக்கா, தீந்துட்டுதா?’ என்று கேட்டார். மூப்பனார் இருக்கிறதாகச் சொல்லியிருப்பார் போல. மறுபடியும் அருணாச்சலத்தைப் பார்த்து, ‘ உள்ளே வா. வந்து புட்டு சாப்பிட்டுட்டுப் போ’ என்றார்.

அருணாச்சலம் புட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஆனால் கொஞ்ச நேரம் ரெங்க மாமா பக்கத்தில் இருந்துவிட்டுப் போகவேண்டும் என்று எதனாலோ தோன்றிவிட்டது. இப்படி வழுவழு என்று இருக்கிற மூப்பனார் கடை சாண் அகலப் பெஞ்சில் உட்கார்ந்து பேசுவதற்காகவே இவ்வளவு தூரம் வந்ததாக நினைத்துக்கொண்டான். பத்து முப்பது வருஷத்திற்கு மேலாக இதே கத்திரிப் பூக் கலர் கட்டம் போட்ட துண்டில்தான் ரெங்க மாமா தலைப்பாகை கட்டுகிறார். அது ஒரு அதிசயம் இல்லையா!

மூப்பனார் வெளியே வந்து செருப்பைப் போட்டார். ‘ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க. வந்திருதேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘நம்ம மருமகன் தான்’ இரண்டு அடி வெளியே போய்விட்ட அவருக்கு அறிமுகம் செய்துவிட்டு, ‘அவசரமில்ல. பைய வாரும்’ என்று ரெங்க மாமா சிரித்தார். ரெங்க மாமாவுக்கு எதற்கெடுத்தாலும் ஒரு சிரிப்பு . அருணாச்சலத்துக்கு அந்த முருங்கைமரத்து வீட்டுக்காரரும் அந்தப் பெண்ணுமே ஞாபகமாக இருந்தது. அவனாகவே மாமாவிடம் அதைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தான்.

தான் இப்படிச் சொர்ணம் மேஸ்திரி உடம்புக்குச் சரியில்லாதை விசாரிக்க வந்ததாகவும் சொல்லி, ‘மாமா, வார வழியில அந்த முருங்கை மரத்து வீடு ஒண்ணு இருக்கே அங்கே தான் ஒர்த்தர்க்கிட்டே சாரிச்சுட்டு வாரேன். மானத்தில இருந்து கூப்புட்ட மாதிரி நீங்க கூப்பிடுதிய இப்படி’ என்று சொன்னான்

ஒருத்தரிடம் என்று அருணாச்சலம் சொன்னானே தவிர, அவனுக்கு சாய்ந்து சாய்ந்து நடந்துவந்த அந்தப் பெண்ணுடைய ஞாபகமும் இருந்தது. சொல்லப் போனால் அவளுடைய ஞாபகம் போக, மிச்சமுள்ள இடத்திலேயே அந்த ஒருத்தரை ஓரமாக வைத்திருக்கிறோம் என்று தோன்றியது. வழி விசாரித்தது, அந்தப் பெண் பதில் சொல்லியது, முருங்கைக்காயைப் பொறுக்கிக் கையோடு வைத்தபடி பின்னால் திரும்பிப் பேசியது எல்லாம் போக, முன்னும் பின்னுமாக அந்தப் பெண் அசைவது மட்டும் தெரிந்தது. நவநீத வேளார் சக்கரத்துக்குள் இருந்து ஈரமாக ஒரு ஜாடி மாதிரி அந்தப் பெண் தற்சமயம் திரள்வது எப்படி என்று அவனுக்குத் தெரியவில்லை.

பூவும் பிஞ்சுமாக நிற்கும் ஒரு முருங்கை மரத்துக்குள்ளே இருந்து அவன் வெளியே வருவதாகக் கூடத் தோன்றியது. அருணாச்சலம் எழுந்து வேட்டியை அவிழ்த்துக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தான்.

கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே ரெங்க மாமா, ‘ அவளும் கூட இருந்திருப்பாளே?’ என்றார். ‘ரெண்டு பேரும் தான் முருங்கக் காய் ஆஞ்சுக்கிட்டு இருந்தாங்க” என்றான். ரெங்க மாமா அருணாச்சலம் முகத்தையே பார்த்தார். முகத்தைக் கூட அல்ல. கண்களை. ‘ பொதுப்படையா நான் கேட்டதுக்கு அந்தப் புள்ளை தான் முதல்ல பதில் சொல்லுச்சு. அப்புறம் அவரு சொன்னாரு’. மாமாவின் கண்களைப் பார்த்துக்கொண்ட படியே அருணாச்சலமும் சொன்னான். மாமாவின் கண்கள் முன்னை விடக் குளுகுளு என்று நீர்பூசியிருந்தன.

‘உள்ளே போண்ணு சொல்லியிருக்க மாட்டாரு. ஆனா உள்ளே போயிருக்கும். இல்லையா மருமவனே’
‘அது வீட்டுக்குள்ளே போகலை. நடையில நிண்ணுது. இவரு என் கூடப் பேச்சுக்கொடுத்துக்கிட்டே தெருவுக்கு என்னைக் கூட்டியாந்துட்டாரு. புளிய மரத்தடியிலே நிண்ணுதான் பேசினோம்.

நல்ல மனுஷன்

‘நான் என்ன பொல்லாத மனுஷன் ‘னா சொன்னேன்?’ மாமா கண்கள் சிரிப்பில் மேலும் இளகியிருந்தன. அருணாச்சலம் வெட்கப்பட்டது போல அவர் பார்வையை விட்டு விலகினான். எங்கே பார்ப்பது என்று தெரியவில்லை. எதிர் பெஞ்சின் மேல் இருந்த சுளகில் மொட்டு மொட்டாய் ஈருள்ளி தொலி உரித்துவைக்கப்பட்டிருக்க,. பக்கத்தில் ஒரு பித்தளைத் தம்ளர் சாய்ந்து இவர்கள் இரண்டு பேர் பேசுவதையும் கேட்டுக்கொண்டு இருப்பதாக அருணாச்சலத்திற்கு நினைப்பு.
‘நானும் நல்ல மனுஷன்னுதான் சொல்லுதேன். யாரைக் கேட்டாலும் அப்படித்தான் சொல்லுவாங்க. சொல்லும்படியான ஆள்தான் அவரும்’ தோளில் இதுவரை கிடந்த துண்டை எடுத்து ரெங்க மாமா தலைப்பாகை கட்டியதும் வேறு ஆளாக ஆகியிருந்தார்.

‘அந்தப் பிள்ளைக்கு சிவந்திப்பட்டிக்குப் போற பாதையில வடக்கே. பூக்கட்டுத குடும்பம். கட்டுக் கூலியில சாப்பாடு கழியிறதே பெரிய காரியம். நீ கூட கவனிச்சிருப்பே. காலைக் கொஞ்சம் ஏந்தி ஏந்தித்தான் நடக்கும்.

ஒண்ணு குறைஞ்சா ஒண்ணு கூடும் லா. இதுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே கூடிட்டுது, அது அவன் அப்பன் செய்யுத தகத்துச் சப்பரம் மாதிரி, எந்தத் திக்கில இருந்து பார்த்தாலும் ஜொலிச்சுது. உனக்குத் தெரியாதா மாப்பிளை. ஜொலிக்கும். கண்ணு கூசும். சாமி சப்பரம் மாதிரி நான் வாரேன் நான் வாரேன்னு நாலு பக்கத்துத் தண்டயம் தூக்க எட்டுப் பேர் ஓடியாருவான்.

யாரு தூக்கினான்னு தெரியலை. யாரு தரையில இறக்கிவச்சுட்டுப் போனான்னும் தெரியல. அதோட அப்பன் நாண்டுகிட்டு நிண்ணதோடு சரி.’ ரெங்க மாமா சொல்லச் சொல்ல யாரோ கடகடவென்று சப்பரம் வைக்கிற சகடையைப் பிரகாரத்தில் தள்ளிக்கொண்டு போவது போல இருந்தது.

‘நீ பார்த்தியே அந்த மனுஷன் தான், அந்தக் பக்கமா ஏதோ கொள்முதலுக்குப் போனவன் இரக்கப்பட்டுக் கூட்டிக்கிட்டு வந்து வீட்டோட வச்சுக்கிட்டான். ஏற்கனவே கட்டினவ ஒருத்தி இருக்கா. அவளும் ஒண்ணும் சொல்லலை. இவளும் ஒண்ணும் சொல்லலை. இதுல எல்லாம் சொல்லுததுக்கு என்ன இருக்கு. சொல்லாம இருக்கதுக்குத்தான் எம்புட்டோ இருக்கு’

மாமா சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தவன், ‘இம்புட்டுச் சொல்லுதிய. பின்னே என்னத்துக்கு, உள்ளே போகச் சொல்லியிருப்பாரே, வெளியே வரச் சொல்லி இருப்பாரேண்ணு அழிப்பாங்கதை போட்டு ஆரம்பிக்கணும்” என்று கேட்டான். குரல் சற்று உரத்துவிட்டது.

ரெங்க மாமா சிரித்தார். ‘ நீ அதுக்கு என்னத்துக்கு டே எங்கிட்டே கோவப்படுதே மருமகனே?’ என்று என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டார், மிஞ்சிப் போனா அந்தப் புள்ள கூட நீ சேர்ந்தாப்பில அஞ்சு நிமிஷம் பேசியிருப்பியா/ அதுக்கே உனக்கு இப்பிடி வருது.

நீ என்கிட்டே கோவப்பட்ட மாதிரி அவருகிட்டே எத்தனை பேருக்குக் கோவப்படணும்னு தோணும்.’ ரெங்க மாமா சொல்லச் சொல்ல, அருணாசலத்திற்குத் தன் கைகளை அவரிடமிருந்து உருவிக்கொள்ளவேண்டும் போல இருந்தது.
‘கடைக்காரரை எங்க காணும்? இந்தா வந்திருதேன்னுட்டுப் போனாரு?’ அருணாசலம் வெளியே போய் தெருவைப் பார்த்தான்.

சைக்கிளை யாரோ நகர்த்திச் சுவரோரமாக ஒட்டி நிறுத்தி வைத்திருந்தார்கள். வைக்கோல் வண்டி ஏதாவது போயிருக்க வேண்டும். சைக்கிள் சீட்டில் , தெருவில் எல்லாம் வைக்கோல் துரும்பு சிதறிக்கிடந்தன.
‘சுக்கு வென்னி இருக்கா?’ என்று ரெங்க மாமாவிடம் , தலையில் நார்ப்பெட்டியும் முக்காடுமாக ஒரு பெரிய மனுஷி கேட்டுக்கொண்டு நின்றாள்.

ரெங்க மாமா எழுந்திருந்து போய் ஒரு லோட்டாவில் தண்ணீரைக் கோதிவந்து, ’மொதல்ல இதைக் குடி’ என்று கொடுத்தார். அவள் குடித்துவிட்டு ‘இன்னோரு செம்பு வேணும்’ என்பது போலத் தலையை அசைக்கவும், கடைக்கு உள்ளே வந்த அருணாச்சலம் அதை வாங்கிக்கொண்டு போனான். தண்ணீர் இருந்த செப்பானை வாடை வெக்கையாக முகத்தில் அடித்தது.

‘என்னா வியாபாரம் தாயி?’’ அண்ணாந்து குடித்துக்கொண்டிருந்தவளிடம் மாமா கேட்டார்,
‘கைக்குத்து அவுலும் வெள்ரிப் பிஞ்சும்’
‘ஏ… யப்பா .ரெண்டும் ரெண்டு புதையல் ‘லா” – ரெங்க மாமா அவள் தலையில் இருந்து நார்ப்பெட்டிகளை இறக்கினார். ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு பெட்டிகள்
பெரிய நார்ப்பெட்டியில் அவலும் சின்ன நார்ப்பெட்டியில் வெள்ளரிப் பிஞ்சும் . மாமா ஒரு குத்து அவலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். புளிய இலை போல ஒரு அவல் அவர் வாய்ப்பக்கம் அப்பியபடி.

அருணாச்சலம் கேட்கவே இல்லை. அவனுக்கு முன்னால் இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகள் உள்ள கை நீண்டுகொண்டு இருந்தது.

•••

7 ஆம் ஆண்டு தொடக்க உற்சாக மனநிலை

கடந்த ஆறு ஆண்டுகளாக மிகச் சரியான நேரத்தில் ஒவ்வொரு இதழும் வெளி வந்திருக்கின்றன.

இதற்கே பல போராட்டங்களுடன்தான் இதழ்கள் வெளிவந்தன
இவை தவிர

மலைகள் இதழின் சாதனைகள் என்று பார்க்கிற வகையில் என்ன நடந்துள்ளன என உங்களைப் போலவே நானும் எனக்குள் கேள்விகளை எழுப்பாமல் இல்லை

முரகாமியின் நிறைய படைப்புகளை சிறப்பாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம்

இதற்காக மொழிபெயர்ப்பாளர்கள் ச.ஆறுமுகம் பிள்ளை மற்றும் நண்பர் ஸ்ரீதரன் ரங்கராஜ் மற்றும் பாலகுமார் ஆகியோருக்கு சிறப்பு நன்றி

உலக சிறுகதைகள் கவிதைகள் என ஒரு பரந்துபட்ட வீச்சோடு இயங்கி வந்துள்ள மலைகள் இதழ்

தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஏராளமான அறிமுகப் படைப்பாளிகளை அறிமுகம் செய்திருக்கிறது

அவர்களில் பலர் இப்போது தமிழின் முக்கியப் படைப்பாளிகளாக வலம் வருகிறார்கள்

மற்றபடி

பெரிய சாதனைகளாக எதையும் செய்யவில்லை என்பதை யாரும் சொல்லிதான் தெரியவேண்டும் என்பதில்லை

அதை நோக்கிய ஓட்டமாக

தொடர்ந்து அதே உற்சாகத்தோடு மலைகள் இயங்குவதற்கு திராணியோடு ஓடும்

படைப்பாளிகள் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் வாசக நண்பர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற அதே நம்பிக்கையோடு

வழமைபோல அதே

உற்சாகத்தோடு

அதே அன்போடு

அதே நன்றியுடன்

உங்கள்

சிபிச்செல்வன்
ஆசிரியர்
மலைகள் இணைய இதழ்