Category: இதழ்153

காளிமுத்து மெஸ் (1987) ( நடைவழி சித்திரங்கள் ) / சரவணகணேசன் ( ஆட்டையாம்பட்டி )

கோவையின் முகப்பான ஹோப் காலேஜிலிருந்து கோவையை இரண்டாக பிரித்துச் செல்லும் நேர்கோடான அவிநாசி சாலை கடைசியில் முட்டிக் கொள்ள முடியாது எழுந்திருக்கும் மேம்பாலத்திற்கு முன் இடது பக்கம் இருக்கும் தண்டுமாரி அம்மன் கோவிலை ஒட்டிய சந்துக்குள் நுழைந்தீர்களேயானால் வழி நெடுகிலும் நிறைய மின்சாதனக் கடைகள் இருக்கும். அவைகள் இருக்கிற தெருவை ஒட்டி இடது கைப்பக்கமாக செல்லும் எநத ஒரு சந்திலும் பயணித்துப் போனீர்களே ஆனால் ஒரு முட்டு சந்து வரும். அந்த சந்தின் முடிவில் வர்ணமற்ற மர முக்காலியின் மீது ஒரு நீர் நிறைந்த நெகிளி வாளியும் ஒரு டம்ளரும் இருந்தால் அது தான் காளி முத்து மெஸ். இப்படி சிஎஸ்ஐ சர்ச் எதிர் கனரா வங்கி வழியாக சென்றால் நாய் கடிக்கும் என்று பலகையைப் பார்த்து பயப்படாமல் கீழே எழுதியதையும் சேர்த்து வாசிக்க வேண்டும். ஒற்றைத் தலை வலிக்கும் சித்த மருந்துகள் கிடைக்கும் என சின்னதாக எழுதியிருக்கும் வழியில் தொடர்ந்து சென்றால்; அதுவும் இந்த காளிமுத்து மெஸ்சில் உங்களைக் கொண்டு சேர்க்கும்.

அந்த மெஸ் உரிமையாளர் பெயர் காளிமுத்து. சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. மனைவி மகளோடு தான் வசித்து வந்த வீட்டில் அந்த சிறிய மெஸ்சை நடத்தி வந்தார். வீட்டின் முன் அறையில் இரண்டு டேபிள்¸ 8 சேர்களும் இருக்கும். உணவுப் ;பொருட்கள் வைக்க ஒரு டேபிள். அதன் மீது டம்ளர்களும்¸ கரண்டிகளும் அடுக்காமல் இருக்கும். அவருக்கு 40 வயது இருக்கலாம். ஒல்லியான தேகம். கண் கண்ணாடி. கொஞ்சம் தடித்த தொங்கிய மீசை. சுறுசுறுப்பான மனிதர். ஒரே மகன் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தான். அப்போது அதிமுக கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தது. திரு.காளிமுத்து அமைச்சராக இருந்தார். எனவே அந்த உணவகத்தை அமைச்சர் மெஸ் என நகைப்புக்காக அழைத்தவர்களும் உண்டு.

எல்லா நாட்களும் அந்த உணவகத்தில் நாங்கள் சாப்பிடப் போக மாட்டோம். பெரும் பாலும் எங்கள் அலுவலகம் பாதி நாட்கள் இயங்கும் சனிக்கிழமை நாட்களில் மதியம் வேலை நேரத்தைத் தாண்டியும் வேலை இருக்குமானால் சாப்பிடச் செல்வோம். நான்¸ நாகராஜ்¸ இரத்தினமூர்த்தி¸ செல்வராஜ்¸ சம்பத¸ பாலு; என ஒரு கூட்டமாகச்; செல்வோம். அ;ப்போது முழு சாப்பாடு ரூ15 லிருந்து ரூ20 இருந்திருக்கும்.

நண்பர்களில் இரத்தினமூர்த்தியைப் பற்றி சொல்லியே தீர வேண்டும். இரத்தினமூர்த்தியின் சொந்த ஊர் இராமநாதபுரம். மதுரை வழக்குத் தமிழில் நகைச்சுவையாக ஆனால் கண்னியமாக பேசுவான். கொங்குத் தமிழ் பேசும் கூட்டத்தின் நடுவில் அவனின் மதுரைத் தமிழ் கேட்பதற்கு சுகமாக இருக்கும். எனவே வெளியில் சாப்பிட செல்லும் நாட்களினல் அவனில்லாமல் நாங்கள் செல்லமாட்டோம்.

அந்த உணவகத்தில் வார நாட்களில் பெரும்பாலும் சைவ உணவே தான் இருக்கும். சாப்பாடு¸ சாம்பார்¸ ரசம்¸ பொரியல் எனும்படியான சாதாரண முழுச் சாப்பாடு கிடைக்கும். முட்டை ஆம்லெட் எல்லா நாட்களும் கிடைக்கும். புதன் கிழமை மட்டும் ஆட்டிறைச்சி குழம்பு மற்றும் வருவல். ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை.

வாங்க சார் வாங்க சார் என அன்போடு வரவேற்பார். உணவு தயாரானதை உறுதிப்படுத்தும் விதமாக எந்த வாசனையும் சாப்பிடும் அறையில் இருக்காது. ஆனால் அவரோ எல்லாம் ரெடி உட்காருங்க என உட்காரவைத்து இலையைப் போட்டு தண்ணீர் வைப்பார். இதில் 5 நிமிடம் போயிறும். சார் ஏதாவது ஸ்பெசல் அயிட்டம் என இழுப்பார்.

உடனே ரத்தினமூர்த்தி சார் சில்லி கோபி ஒரு பிளேட் கிடைக்குமா?.. என்பான்

சார் அதெல்லாம் இல்லைங்க சார் எனச் n;சால்லிவிட்டு சாருக்கு எப்பவும் கிண்டல் மெல்ல நகைப்பார்

அப்பறம் ஏன் சார் ஸ்பெசல்ங்கிறேங்க. சரி இலையைப் போட்டாச்சு சாப்பாடு போடுங்க..

இதோ.. ஆயிருச்சு சார்..

எப்படியும் பத்து நிமிடம் ஆயிடும். கொதிக்க கொதிக்க சாப்பாட்டை எடுத்து வரும் போது தான் சாம்பாருக்கு தாளிச்சு விடும் சத்தம் கேட்டும். சாம்பார் இலைக்கு வந்ததும் ஐந்து நிமிடம் அனைவரும் மௌனமாக இருப்போம். அந்த அறையில் மெதுவாக ஓடும் மின்விசிறியில் உணவு கொஞ்சம் ஆறும் வரை.. அதற்குள் மெஸ் ஓனர் ஆர்டர் பிடிப்பார். சார் எல்லாருக்கும் ஆம்லெட் சொல்லாமா என்பார். என்ன கணேஷ் உங்களுக்கு ஆம்லெட் வேணாம்தானே.. என சொல்லிட்டு சார் பச்சை மிளகா கம்மியா 4 ஆம்லெட் போடுங்க என்பான் ரத்தினமூர்த்தி.

லைனுக்கு 4 ஆம்லெட் எனச் சொன்ன பிறகு தான் ஆம்லெட்டுக்கு பெரிய வெங்காயம் அறியும் சத்தம் துல்லியமாகக் கேட்கும். எல்லாரும் தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஆம்லெட் வாசனை வருமே ஒழிய இலைக்கு வர தாமதம் ஆகும். ரத்தின மூர்த்தி நகைச்சுவையாக சார் ஆம்லெட்டை கேன்சல் பண்ண வாய்ப்பிருக்கா என்பான்.

சார் ஆம்லெட் ஆயிருச்சு. எடுத்துட்டு வர்றதுதான் பாக்கி என ஓடுவார் காளிமுத்து. பாவம் அந்த அரைக்கல் சுவரைத் தாண்டி அவருடைய மகள் ஒருத்திதான் ஆம்லெட் வேலையைப் பாத்திருப்பாள். ஒரு ஆள் உட்கார்ந்து சமைக்கும் அளவுக்கே உள்ள சமையல் அறை அது. பாத்திரங்கள் கழுவ அதே போல் இடம் இருக்கும் இன்னொரு அறையில் அவர் மனைவி நின்று கொண்டிருப்பார்.

மணக்க மணக்க ஆம்லெட் இலையில் விழும். சாப்பிட்டு விட்டு கையை வெளியில் வைத்திருக்கும் வாளியில் கழுவிக் கொள்வதற்குள் பணம் வாங்குவதற்காய் தலையை சொரிந்து கொண்டு காளிமுத்து நிற்பார். பெரும் பாலும் உணவுப்பணம் போக தர வேண்டிய மீதியை அடுத்த சனிக்கிழமை கழித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கும். ஒரு புதன் கிழமை அவர் மெஸ்சில் கறிச் சோறும் சாப்பிட்டு பார்த்தோம். சுவையாகத் தான் இருந்தது. ஆனாலும் ரத்தின மூர்த்திக்கு சாப்பிட்ட பின் லேசாக வயிற்று வலி வர அவனே அவரிடம் கேட்டான்.

சார் சாதத்திலே வேகும் போது எதாவது சுண்ணாம்பு சேர்ப்பிங்களா.. நிறத்துக்காக

அப்படியெல்லம் இல்லைங்க சார் என்றார். ஆனாலும் வயிற்று வலி தொடர்ந்தது. மெஸ்சுக்கு வருவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் தான். சாப்பிடுகிற வயது உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாகத் தான் சாப்பிடுவார்கள். சுண்ணாம்பு சேர்த்தால் சாப்பிடும் அளவு குறைந்து கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு டும் என ஆகிவிடும். சாப்பிட்ட திருப்தி ஆகிவிடும்¸ ஆனால் சாதம் மெஸ்சுக்கு மீதம் ஆகும். பிழைப்புக்காக ஊரு விட்டு ஊரு வந்து¸ அறைக்கு வாடகையைக் கொடு;த்து. மெஸ்சை நடத்தி மூன்று பேர் வயிறு கழுவ தொழிலில் ஏதாவது குளறு படி செய்தாகத் தான் வேண்டும்.

ரத்தினமூர்த்தி கேட்டானே ஒழிய வழக்கம் போல் சாப்பிடுவது என்றால் காளிமுத்து மெஸ் தான். (கணேஷ் இங்கனையாவது கேட்கலாம்¸ பெரிய ஹோட்டலில் கேட்க முடியுமா¸ ஏழை¸ பாளை எதையோ செஞ்சு பொளைக்கறாங்க. டாக்டர் வேணாம்னு சொல்லறவரை சாப்பிடுவோம்). குறை இருந்தாலும வீட்டுச் சமையலின் சுவை மதியத்திற்கு 20 – 30 சாப்பாட்டை ஓட வைத்தது. எத்தனை பேர் சாப்பிட்டாலும்¸ ஓரே சமையத்தில் நிறைய வேலை வந்தாலும் ஒற்றை ஆளாகவே காளிமுத்து சமாளிப்பார். மனைவியையோ.. மகளையோ.. பரிமாற துணைக்கு அழைக்க மாட்டார். உணவகத்திற்கான பொருட்களை வாங்கி வருவது¸ கனிவுடன் பறிமாறி¸ கணக்குப் பார்த்து பணம் பெறுவது எல்லாம் அவர் வேலை தான். மனைவி¸ மகளின் பெயரைச் சொல்லி அழைத்தது இல்லை. அதிக பட்சம் பேபி ரெண்டு ஆம்லெட் என்ற அடைமொழி மட்டுமே கேட்டிருக்கிறோம்.

டாஸ்மார்க் இல்லாத காலம் அது. ஆனாலும் அந்த மெஸ் ஓனர் பந்தையச் சாலையின் இந்தப்பக்கம் இருந்த ஒரு பாரின் வாசலில் சில முறை அவரைப் பார்த்திருக்கிறேன். பார்க்காதது போல வந்திருக்கிறேன். வாரத்தின் அலுப்பைப் போக்க அந்த பார் அவருக்கு உதவியிருக்கலாம். வாடிக்கையாளர்கள் யாராவது பார்ப்பதற்கு முன் தன் கோட்டாவை வாங்கிக் கொண்டு வீ;ட்டிற்கு கிளம்பி விடுவார்.

பிறகு அலுவலகத்தில் அவரவர் திருமணமாகி செட்டிலாகி விட்டோம்.

————————–

கோவையில் 2003-ல் இருந்த போது நானும் மனைவியும் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் பந்தயச் சாலையில் சிறிது நேரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படி ஒரு ஞாயிறு நடந்து கொண்டிருந்த போது எதிரே ஒருவர் மெல்லிய தேகத்துடன் ரே பார்ன் கருப்புக் கண்ணாடியுடன் மேற்குப் பக்கம் வேகமாக நடந்து எங்களைக் கடந்து சென்றார். அவரின் உருவ அமைப்பு என் மனதில் சில ஞாபகங்களைக் கிளர¸ மூளை உடனே மனத்திரையில் அவரின் முகத்தை கோட்டோவியமாக வரையத் துவங்கியது. அடுத்த வட்ட நடையில் அவர் தென்பட்டால் அவரைக் கேட்டு விடுவது எனத் தயாராக இருந்தேன். அடுத்த 20 நிமிடங்களில் அவர் எதிரே நடந்து வந்தார்.

சார் நீங்க காளிமுத்து மெஸ் ஓனர்.. இழுத்தேன்.

சார் சார் நான் தான். நல்லாயிருக்கீங்களா.. சார்.; பையன் வெளிநாட்டிலே வேலை பார்க்குறான் சார். பொண்ணை கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டேன். நானும்¸ பொண்ணாட்டியும் சார். இப்ப காந்திபுரத்திலே இருக்குகிறோம். அன்னமிட்ட கையால் என் கையைப் பிடித்துக் கொண்டு பேசினார்.

சந்தோசம் சார்.. நல்லா இருங்க.. பார்க்கலாம் என நான் வலது கையை உயர்த்தி அவரை விஷ் பண்ணினேன். என்னை விட்டு நகர்ந்த அவர் உடனே திரும்பி சார் அந்த தம்பி ரத்தினமூர்த்தி எப்படியிருக்கார் சார்.. கேட்டேன்னு சொல்லுங்க.. நகர்ந்து மறைந்தார். எத்தனை ஆண்டுகள்.. எத்தனை வாடிக்கையாளர்கள். ஆனாலும் ரத்தினமூர்த்தியை அவர் மறக்க வில்லை. உணவிலே இருந்த குறையைக் கண்டு கொண்டும்¸ ஒரு குடும்பத்தின் பிழைப்பு என்பதால் அதை பெரிது படுத்தாமல் தொடர்ந்து வாடிக்கையாளராக இருந்த ரத்தினமூர்த்தியை அவர் மறக்காது இருந்தது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.

கருப்பன் கவிதைகள் ( பின் நவீன கவிதைகள் )

கருப்பன் கவிதைகள்
( பின் நவீன கவிதைகள் )

•••

முட்டைகோஸ் 3
மூணு கிலோ
கத்திரிக்காய் கால்கிலோ
வெண்டைக்காய் ஊசிப் போனது
பேரிக்காய்
பெருங்காயம்
வெங்காயம்
போ
போ
டூபாக்கூர்

புடலங்காய் கூட்டு
ஆமைவடை
புட்டு
டூபுக்கு

•••
ஏலக்காய்
முந்திரி
பனைகிழங்கு
ஆமணக்கு
கொட்டமுத்து
ஆனைமுத்து
யானை விட்டை
போட்ட
குதிரை முட்ட
போ
போ
பொறுக்கிப் பயலே
எங்க தேடுகிறாய்
உன் கவிதை
ரசனையை
•••
3
உன் வழக்கமான காதல் கதையல்ல இது
கூட்டுக் குடும்ப வாழ்வுமல்ல
மைக்ரோ குடும்பமும் அல்ல
உறவுகளில்லா உறவுமில்லை
ஆனால்
உறவு கொள்ளவே சார்ந்திப்போம்
இணைவோம்
இதற்குப்பெயர்
லிவிங்டுகெதர் அல்ல
பின் நவீன காதல் என்பது இதன் மற்றொரு பெயர்
உன் பழைய காதலை கடாசி எறி
குப்பையில்
அதன் கெட்ட நாற்றம் மூக்கைப் பிடிக்கிறது
•••

காவி பயங்கரவாதிகளும் கலாச்சார போராளிகளும் – இமையம்

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி என்று ஆட்சிக்கு வந்ததோ அதிலிருந்து அறிவுத்துறையினர் மீது தாக்குதல் கொடுப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்க்கட்சிகளிடம்கூட பா.ஜ.க பயப்படுவதில்லை. ஆனால் அறிவுத்துறையினரைக் கண்டு அதிகம் அஞ்சுகிறது. தன்னுடைய அச்சத்தை போக்க அது கொலை செய்யவும் தயங்குவதில்லை. கோவிந் பன்சாரே, கல்பூர்கி போன்ற எழுத்தாளர்களை சுட்டுக்கொன்றது. கெளரி லங்கேஷ் என்ற பத்திரிக்கையாளரையும் சுட்டுக்கொன்றது. காவி பயங்கரவாத்தின் உச்ச செயல்பாடுகள் இவை.

கோவிந் பன்சாரேவும் கல்பூர்கியும் சுட்டுக்கொல்லப்பட்ட போது இந்தியாவில் இருக்கிற எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். சிலர் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தனர். அப்போதும் பா.ஜ.க. திருந்தவில்லை. தங்களுடைய பயங்கரவாத செயலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், குறிப்பாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியளார்கள் என்றால் அவர்களை தீர்த்துகட்டுவது, தற்கொலைக்கு தூண்டுவது என்று செயல்படுகிறது பா.ஜ.க. அறிவு செயல்பாட்டின் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதின் மூலம் தன்னுடைய கொடூர முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது. தனிமனிதர்களை மட்டுமல்ல, கூட்டமாக கொல்லவும் தயங்காது என்பதற்கு குஜராத் கலவரமும் கோத்ரா ரயில் சம்பவங்களே உதாரணங்களாக இருக்கிறது. இரண்டு கலவரங்களும் மோடி முதல்வராக இருந்தபோதுதான் நடந்தது. குஜராத்தின் கலவரத்தை இந்தியா முழுவதும் பரப்பிவருகிறார் மோடி.

தமிழகத்தில் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கிய வன்முறை வெறிச்செயல்களையும், தனிமனித தாக்குதல்களையும் அறிவோம். பெருமாள்முருகனுக்கு நடத்திய கொடூரங்களைவிட பல மடங்கு கொடூரங்களை இப்போது மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்படுத்திவருகிறது.

மனுஷ்ய புத்திரனின் ‘ஊழியின் நடனம்’ கவிதையை நான் பலமுறை படித்துப்பார்த்தேன். கவிதையில் பெண்களை இழிவு செய்யும் விதத்திலோ மத உணர்வை தூண்டும் விதத்திலோ, மத உணர்வுக்கு எதிரான விதத்திலோ கவிதையில் எதுவும் இல்லை. கவிதையை கவிதையாக படிக்கவேண்டும். உள்நோக்கத்தோடு படிக்கக்கூடாது. அப்படிப் படித்தால் கவிதைக்குறிய நுட்பம் தெரியாது.

கவிதையின் மையம், கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்ப்பட்ட இழப்பு குறித்து மட்டுமே பேசுகிறது. பூமியை நம் எப்போதும் தாயாகவும், பெண்ணாகவும்தான் பார்ப்பதற்கு பழக்கப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் ஊழியின் நடனம் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. பாரத மாதா என்று நாம் சொல்லத்தானே செய்கிறோம். இந்தியாவில் எந்த மூலையில் இயற்கை பேரிடர் ஏற்பட்டிருந்தாலும் தேவி என்பதற்குப் பதிலாக பாரத மாதா என்று போட்டு மனுஷ்ய புத்திரன் கவிதை எழுதிருப்பார்.

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீரழவை தாங்கிக்கொள்ளாமல் எழுதபட்ட கவிதை. வேறுவிதமான கற்பித்தால்களுக்காக எழுதப்பட்டதல்ல ஊழியின் நடனம் எந்த ஒரு எழுத்தாளனும் சமுகத்தில் கலவரத்தைத் தூண்டுவதற்காக கவிதை, கதை எழுதவில்லை. இந்த எளிய உண்மைகூட பா.ஜ.க.வினருக்கு ஏன் புரியமாட்டேன்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஊழியின் நடனம் கவிதை கலவரத்தை தூண்டும்விதமாக இல்லை. கவிதைக்குறித்த ஹெச்.ராஜாவின் பதிவுதான் கலவரத்தை தூண்டும்விதமாக இருக்கிறது.

மனுஷ்ய புத்திரனின் கவிதையில் குற்றம் இருக்கும் பட்சத்தில் அதை சட்டரீதியாகத்தான் அணுகவேண்டுமே ஒழிய, ஊர்ஊராக வழக்குப் பதிவு செய்யசொல்வது, ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்ப சொல்வதும்; அனுப்புவதும் தொலைபேசியில் ஆபாசமாக பேச செய்வது, மிரட்டல் விடுவது நாகரீகமான செயல் ஆல்ல. பெண்களை இழிவுப்படுத்துகிறது, மத உணர்வை புண்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்களை தராமல் கெட்டவார்த்தையில் திட்டுவது நாகரீகமா?

30 ஆண்டுகளாக எழுதி கொண்டிருக்கிற மனுஷ்யபுத்திரன் எந்த ஒரு இடத்திலும் அவர் தன்னை மத அடையாளத்தோடு பொருத்திக்கொண்டதில்லை. மதவாதத்திற்கு எதிராக மத பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் இதுவரை எழுதி இருக்கிறார். பேசியிருக்கிறார்.

இந்துமதத்திற்கும் அதனுடைய கோவில்களுக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவது பா.ஜ.க.வினரே. காஷ்மீரில் இந்து மதக் கோவிலுக்குள் வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றது யார்?. காஞ்சிபுரம் கோவிலுக்குள் வந்த பெண்களுடன் உறவு கொண்டதும் அதை வீடியோவாக பதிவு செய்ததும் யார்?

மனுஷ்ய புத்திரனின் கவிதை கேரளாவில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி, துயரத்தை பேசுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் ஐயப்பன் கோவிலில் பெண்களை நுழைவதற்கு அனுமதித்ததால்தான் இவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்ப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். மாட்டு இறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் கன மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது என்று பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் கூறியிருக்கிறார்.

உண்மையில் யார் மீது வழக்குப்போட வேண்டும்? ஐயப்பனின் கோபத்தால்தான் இவ்வளவு மழை பெய்திருக்கிறது என்று சொல்கிற பாரதிய ஜனதா கட்சிதான் மத்தியில் ஆள்கிறது. அதனுடைய கட்டுப்பாட்டிளுள்ள இந்தியா வானிலை அய்வு மையம் கனமழை பெய்யும் என்று அறிவித்தது. பா.ஜ.க. மற்றும் அதன் கிளை அமைப்புகளில் உள்ளவர்கள் தொடர்ந்து அறிவியல் உண்மைகளுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கே ஆச்சரியமாக இல்லையா?

பத்மாவதி திரைபடம் எடுத்த இயக்குநரின் கையை வெட்டுங்கள் என்று சொல்வதும், அந்த படத்தில் நடித்த நடிகையின் மூக்கை அறுப்பேன் என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

பா.ஜ.க.வினரும் அதனுடைய கிளை அமைப்பினரும் எந்த நூற்றாண்டில் இருக்கின்றனர். எழுத்தாளர்களையும் , கவிஞர்களையும் கொன்றுவிட்டு பா.ஜ.க. எந்த மாதிரியான சமுகத்தை ஆள விரும்புகிறது. மாயாஜால, மந்திர தந்திர , புராண, இதிகாச கட்டுகதைகளை மட்டுமே அது இலக்கியமாக நம்பிக்கொண்டிருகிறது. நவீன இலக்கியம், நவீன கவிதையின் இயல்பு அறியாமல் பா.ஜ.க. நடந்துகொள்வது, அவர்கள் நடைமுறை சமூகத்தில் வாழவில்லை என்பதையே காட்டுகிறது. ராமனுடைய காலத்திலேயே இந்தியாவில் கணினி பயன்பாட்டில் இருந்தது என்று பா.ஜ.க. மந்திரி சொன்னது வேடிக்கையானது

மனுஷ்ய புத்திரனுக்கு இரவும் பகலும் எந்தெந்த விதத்தில் தொந்தரவு தரமுடியுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் தொந்தரவு தந்துகொண்டிருக்கிறார்கள். சமுகத்தில் யாரையும்விடவும் எழுத்தாளன்தான் மேம்பட்டவன், முக்கியமானவன். எழுத்தாளனை, கலைஞனை புறக்கணிக்கிற, அவமானப்படுத்துகிற எந்த சமுகமும் கலச்சார ரீதியாக, அறிவு ரீதியாக மேம்பட்ட சமூமமாக இருக்க முடியாது. இன்று மனுஷ்ய புத்திரனுக்கு நேர்ந்திருக்கிற அவலம், அச்சுறுத்தல், நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்; நிகழலாம். அதை அனுமதிக்க முடியாது. காவி பயங்கரவாதத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.

கடைசியாக வரவர ராவ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற கைதுகள் பா.ஜ.க.வினரின் பயத்தையே காட்டுகிறது.

தவறாக பேசுவது, தவறாக புரிந்துகொள்வது; வன்முறைகளை தூண்டிவிடுவது, பா.ஜ.க.வுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை ஆண்டி – இந்தியன் என்று சொல்லி முத்திரை குத்துவது, ஹெச்.ராஜாவின் அரசியல் செயல்பாடாக இருக்கிறது. அவரது அரசியல் ஆரோக்கியமான அரசியலாக தெரியவில்லை. இழிவான அரசியலாகவே தெரிகிறது.

பா.ஜ.க.வும் அதனுடைய கிளை அமைப்புகளும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீதான தாக்குதலை மனுஷ்ய புத்திரன் விஷயத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது. கருத்துரிமையை பறிக்கவும், ஒடுக்கவும் நினைப்பது ஜனநாயக நாட்டில் நல்லதல்ல. பா.ஜ.க. வுக்கும் நல்லதல்ல.

எச்.ராஜாவும். அவர் சார்ந்திருக்கிற பா.ஜ.க. அதனுடைய கிளை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுஷ்யபுத்திரனின் ஊழியின் நடனம்-கவிதையை மீண்டும் படிக்க வேண்டுகிறேன்.

••••

எதிரொலி ( கவிதைகள் ) / தமிழ் உதயா ( லண்டன் )

01

நான் செங்கல்
சுட்டுக் கொண்டிருந்தேன்
அவன் மெழுகுவர்த்தி
செய்து கொண்டிருக்கிறான்
முகங்களில்
சொற்களில்
சுழல் காந்தவழிகளில்
எவனோ விபரிக்கும் நம்மில்
நாம் விடைபெற்றுக் கொள்ள
நமக்குத் தெரியாது
யாரோ ஒருவன் தீர்க்கதரிசி ஆகிறான்
யாரோ ஒருவன் நீதிமான் ஆகிறான்.
இன்று சனிக்கிழமை
எல்லோருக்கும் விடுமுறையாக இருக்கலாம்
என் சந்ததியை ஆளாக்க
நான் பயணப்பட்டுத்தான்
ஆக வேண்டும்

00

பயணத்தின் வழி சேமித்திருக்கிறேன்
நீலமடர்ந்த கடல்
நெடிதுயர்ந்த மலை
அதற்கும் அப்பால் பெயர்ந்து
பறக்கும் ராசாளிப்பறவை
ஆதரவாய் பின் மௌனமாய்
சடையுதிர்த்த மரம்
கிண்ணங்களில் ஏந்தி எடுத்த பிஞ்சுச்சூரியன்
கிடுகு வேய்ந்திருந்த முகங்கள்
சொட்டும் பனித்துளி
கொஞ்சமாய் செவ்வரத்தம் பூந்தளிர்

அத்தனையையும்
இப்போது வரைந்து கொண்டிருந்தேன்
நிறமற்றுப்போன தடாகத்தில்
அம்மா நீலநிறச்சேலையில்
எனக்கொரு தூளி கட்டியிருந்தாள்
என் மகளுக்காக
என்னைக் காணாமல் தேடுகிறேன்.

00

உன் கடிதத்திடம்
ஒரு சிறு சிறகின்
மயில்ப்பீலி நிறச் சருகிருந்தது
உன் பற்றுகோல்களுக்கான கண்களால்
நான் பார்க்கிறேன்
கசடுகள் உருகி ஓட
மீள்கணங்களின் அகராதியில்
பாஷையில் ஊடுருவி
ஒரு மரம் போல்
உருக்குலையாது இருந்திருக்கலாம்
கடல் சிரித்துக் கொண்டே இருக்கிறது
பச்சிலை ஓணானின் பிராணனை இழுத்து
ஒரு நிலாவுக்காக காத்திருந்தேன்
அவ்வேளையில்
பூடகமாக ஒளிப்புழுதியைக்
கிளப்பியபடி நீ வந்தாய்
கரைய மறுத்த நேற்றைய கனவில்
முங்கி எழும்பிய கடற்சங்கு முகத்தில்
அர்த்தம் மிதக்கிறது

00

மாஞ்சோலையிலும்
தென்னந்தோப்புகளிலும்
மர்மப் புத்தன்களுக்காக
போதி மரங்கள் விளைந்திருக்கின்றன

செவியுறா உட்சுடரும் பொன்னொளியில்
எம் நிலத்தில்
தொடை எலும்புகளும் விலாக்கூடுகளும்
உருகி ஒழுகிய தலையோடுகளும்
தளம் பாவும்

பூமி எனும் இக்காற்று
நுழைத்த போதைப்பந்தில்
மனிதர்களால் மட்டுமே
எத்தப்பட்ட எலும்புச் சீசாக்களில்
சேமிக்கப்பட்டதெல்லாம் இரத்தம்
வெறும் பச்சை இரத்தம்

இரு கைகளாலும் நிலத்தைக் கிளறி
நாங்கள் நட்டு வைத்த
எங்கள் பிஞ்சுகளின் குருத்துக்கண்கள்
செவ்விதழ்கள் கொழுந்துடல்கள்
எல்லாம் நினைவன்றி

கஞ்சாச்செடி நட்டு
தீபச்சுடராய் திரட்டி
மீதமுள்ள குழந்தைகளையும்
கரும்புகையின் கந்தக நெடிக்குள்
மண் தின்று செரிக்க மானுடத்துயருக்குள்
உருக்கமான பாடல் ஒன்றைப் புனையவோ நான் ?

00

முன் எப்போதும் பார்த்தேயிராத
அரூப இரயில் ஒன்று
என் வழக்கமான வழித்தடத்தை
கடந்து போகிறது
எப்போதும் நிச்சயமற்ற
பாதைகளின் வழி பயணிக்கும் நான்
அந்த இரயிலை
பிடித்திருக்க வேண்டும்
அது ஒரு பனித்துளி போல
தூரத்தில் உடைந்து மறைகிறது
பழுத்த முந்திரிகளில்
துருத்திக் கொண்டிருக்கும்
விதைகளைப் போல
நினைவுகள் முன் நீள்கின்றன
பறவைகள் மீது பூக்களின் மீது
கந்தகத் தந்திகளை
மீட்டியபடி கிடக்கிறது
அந்த மகரயாழ்
ஆனாலும்
எண்ணற்ற சிகரெட் தழும்புகளும்
காலி மதுப்புட்டிகளுமாய்
காத்துக் கிடக்கிறது
அந்த பேர்மிங்ஹாம்
இரயில் நிலையம்
முன் திட்டமிடல் ஏதுமின்றி.
இருந்தும் நீள்துயிலகன்று

வீழ்ந்தும் எழுந்தும் பறந்தும்

மகரந்தத்துகள் ஞாபகமுளைவிட
நிறைகிறது நேற்றைய மனக்குளம்

00.

அரைப்பைத்திய ருசி மிகுந்த
வைன் குவளைகளை
ஒவ்வொன்றாய் சேகரித்தேன்
அதில்
நிகழ்காலத்தை உடைத்து
எதிர்காலக் கண்ணாடியை வனைந்து
என் விசித்திர அறைக்குள் பொருத்தினேன்
இருள் மூலைகளை
சில கடல்களால் நிறைத்து
ஒளியுறச் செதுக்கினேன்
எதுவாயினும்
எவ்வாறெனினும்
ஏதுமற்றும் துடிக்கும் நாடிச்சுனையில்
கொஞ்சம் வெங்கோடை
கொஞ்சம் பசுந்தரை
கொஞ்சம் வழிந்த அமுதம்
கொஞ்சம் கொய்தவிடம்.
துர்க்கனவுடன்
எதிர்மாடத்தில் இருப்பவன்
தன்னைத் தீட்டிக்கொண்டு
என் கதவுகளை உடைக்கக்கூடும்
பெருமரங்கள்
வனாந்திரங்களில் சேகரமாயிருக்கின்றன
மலைக்கணமொன்றைப் பற்றி
முளைதகவுள்ள விதையொன்றை
உதிர்த்து விடவும் கூடும்
ஆனாலும் பார்
பறந்த பருத்திச்செடி ஒன்றில்
ஊதாப்பூவின் காத்திருப்பில்
வெண்ணிறத்துப் பூவானேன் நான்

00

வெகு நேர்த்தியாக
வெகு வசீகரமாக
விலைமதிப்பற்ற உயிர்களை
மிக விலைமதிப்புமிக்க
துப்பாக்கிகளுள் பொருத்துகிறீர்கள்
அது பாய்வதற்கு முன்
செப்பனிடப்பட்டிருக்கிறது
தூசு தட்டிச் சத்தம்
எழுப்பப்பட்டிருக்கிறது
மிகப் பத்திரமாக விலாக்கூடுகளில்
செருகப்பட்டிருக்கிறது
குழல்களில் இரத்த நெடி பிசுபிசுக்கிறது
பொசுக்கும் மணம் நாசி தின்கிறது
குடிசைகளில் காளியப்பன்களின்
உயிர்கள் சூறையாடப் பட்டிருக்கலாம்
குழந்தைகள் உருக்கு ஆலைகளில்
நையப் புடைத்திருக்கலாம்
சூனியத் துணுக்குகளால்
பெண்களின் குரல்வளைகளை
ஈரல் குலைகளை பிடுங்கி
ஏவுகணைகள் தயாரித்திருக்கலாம்
தீப்பொறி கக்கும்
டிஜிட்டல் கண்களைக் கொய்திருக்கலாம்
ஆனாலும் துர்ப்பாக்கியமான
அத்துப்பாக்கிகள்
ஹிட்லர்களுடையது என்றே
பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன
அக்கிட்லர்களது கோட்டைகளைத் தகர்க்க
ஒரு பிரபாகரம்
இக்கணமே முளைகட்ட வேண்டும்.

00

இடையறாத இருகணங்களுக்குள்
ஒரு சிறு சலனம்
சமன்குலைவை ஏற்படுத்திவிடுகிறது

எதிர்காலம் வசீகரிக்கிறது
இதோ அருகில் இருக்கிறது
என் முகம்

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அக்குழந்தையின் கண்கள்
பனிப்பதைத் தான் செய்கின்றன

ரகசியங்களைக் கவிழ்த்து வைத்து
ஒரு மரத்தை எப்புறம் பார்த்தும்
வரலாற்றை அறிய முடிவதில்லை

கடலடியில் கிடக்கும்
கூர்மையற்ற பாறையும்
உரசியதும் கிழிக்கத்தான் செய்கிறது

எண்ணங்களுக்கு மொழியேது
எந்த மொழியில் மொழிபெயர்ப்பது
உங்கள் எண்ணங்களால்
மொழிபெயர்த்துப் பாருங்கள்

•••

நேற்றைய மதியம் ( குறுங்கதை ) / ந.பெரியசாமி

விடியல்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. மகிழ்வு, சோம்பல், துயரம், எரிச்சலென வெவ்வேறு விதமான உணர்வுகளோடுதான் பிறக்கிறது. துவக்க உணர்வே அந்நாளின் தன்மையை தீர்மானிப்பதாகவும் இருந்துவிடுகிறது. நினைவுகளோடு என்னையும் கிளறியவாறு எழுந்தவன், அப்பா இன்னைக்கு குளிக்கமாட்டேன். முகம் மட்டும் கழுவிக்கொண்டு பள்ளிக்கு போகிறேன் என்றான். சரியென தலையாட்டினேன். வற்புறுத்தினால் என்ன நிகழும் என்பதை ஏற்கனவே உணர்த்தி இருப்பதால் அவன் போக்கிலேயே விட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து நான் குளிக்கிறேன் நீதான் குளிப்பாட்டி விடனும் என்றபடி குளியலறைக்குச் சென்றான்.

அவன் மனசு மாறுவதற்குள் சீக்கிரம் குளிப்பாட்டி விடு என்ற இணையாளிடம் சிரிப்பைக் கொடுத்து அவனை குளிப்பாட்டிவிட தொடங்கினேன். இன்று வழக்கமான துறுதுறுப்பு அவனிடம் இல்லாதிருக்க, என்னாச்சுடா சோர்வா இருக்கே, வகுப்பில் யாராவது திட்டினார்களாவென்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லைப்பா, நேற்றைய மதியத்தை பள்ளியிலேயே விட்டு வந்துட்டேன், அது அங்கேயே இருக்க வேண்டும் என சாமிகிட்ட வேண்டிக்கொண்டிருக்கிறேன் என்றான்.

காலங்கள் குறித்து பேசி, அது கடந்தகால நிகழ்வு இன்று எப்படி இருக்கும் என சமாதானப்படுத்தினேன். சாமியால்கூட கொண்டுவர முடியாதாப்பாவென்றான். யாராலும் கொண்டுவர முடியாது, ஆனால் ஒருவரால் முடியும் என்றேன். யாருப்பா அவரு, சாமியவிட பெரியவரா என்றவனிடம், சிரித்தவாறு நினைவுகளால் கொண்டுவர முடியும் என்றேன். சரி அப்படியென்ன நேற்றைய மதியத்தில் விஷேசம்?

இதற்காகவே காத்திருந்தாற்போல் மிகுந்த துள்ளலோடு எங்க மேக்ஸ் மிஸ் நேற்றுதான்பா நல்லா சத்தமா சிரிச்சாங்க, அப்ப எங்க நாலாம் வகுப்பறைக்கு அணில்வேறு வந்தது என்றான்.

)0(

விருட்சம் நினைவுகள் = 9 / அழகியசிங்கர்

சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.

விதிவிலக்காக ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் அதிலிருந்து தப்பிப்பார்கள்.

கசடதபற இதழில் எழுதி எத்தனையோ எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்களா என்ன ஆனார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. பத்திரிகையில் எழுதுவதோடு சரி அதன்பின் அவருடைய படைப்புகள் புத்தகமாக வர வாய்ப்பில்லாமல் போய்விடும்.

ஏன் இப்படி நடக்கிறது? எழுதுபவர்களுக்கு அவர்களுடைய படைப்புகள் வெளிவந்த பிறகு அவர்களுடைய படைப்பு மனநிலை வேறு திக்கை நோக்கிப் போய்விடுகிறதா? அதனால் அவர்கள் தொடர்ந்து எழுதாமல் போய்விடுகிறார்களா?

இப்படி எத்தனையோ படைப்பாளிகளை நாம் தவற விட்டிருக்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

பொதுவாக சிறுபத்திரிகைகள் நடத்துபவர்கள் ஒரு வங்கியிலோ அரசாங்கத்திலேயோ பணி புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய உபரி நேரத்தில்தான் கை காசு செலவழித்து பத்திரிகைக் கொண்டு வருவார்கள். இப்படிப் பத்திரிகைகளைக் கொண்டு வருபவர்கள் தங்கள் கைவசம் எந்தப் பத்திரிகையையும் வைத்துக்கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும். இதைத் தவிர்க்க முடியாது. மேலும் அவர்களுடைய பத்திரிகைகளை இலவசமாகவே எல்லோருக்கும் அனுப்புவார்கள். சிறு பத்திரிகைகளைப் பொருட்படுத்தாத எத்தனையோ பேர்களுக்கு அந்தப் பத்திரிகைகள் போய்ச் சேரும்.

கசடதபற 24வது இதழில் (செப்டம்பர் 1972) வெளிவந்த ஜரதுஷ்டன் என்பவரின் கவிதையை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

பரிணாமம் என்பது கவிதையின் பெயர்.

நாலு வயதில்
நர்ஸரிக் கவிதையும்
பின்னர் சில நாள்
ஆத்திச் சூடியும்
கோனார் நோட்ஸில்
கம்பனும் கபிலனும்
படித்துக் குழம்பி
பாட்டு எழுத
பேப்பரும் பென்ஸிலும்
எடுத்த வேளை
குட்டிச் சுவராய்
போவாய் நீயென
பெற்றதுகளிடம்
பாட்டுக் கேட்டேன்.

யார் இந்த ஜரதுஷ்டரன். அவர் இப்போது எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா இல்லையா? இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லை. இவருடைய கவிதைகள் இதுமாதியான கசடதபற இதழக்களிலேயே நின்று போய் விட்டது.

பொன் விஜயன் என்ற ஒரு நண்பர். அவர் ஆரம்பித்த பத்திரிகையின் பெயர் புதிய நம்பிக்கை. எப்படியோ கொண்டு வந்து விடுவார். இப்போது அவரும் இல்லை. அந்தப் பத்திரிகையும் இல்லை.

வீட்டிலேயே அச்சுக் கோர்க்கும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு பத்திரிகைக் கொண்டு வருவார். உண்மையில் அச்சுக் கோர்ப்பவர்களுக்கு வாரம் வாரம் கூலி கொடுக்கச் சிரமப்படுவார். பொருளாதாரத்தில் அச்சுக் கோர்ப்பவர்கள் பொன்விஜயனைவிட பரவாயில்லை ரகத்தில் இருப்பார்கள்.

சரி ஒரு சிறுபத்திரிகை நடத்த ஒருவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும். யார் சிறுபத்திரிகை நடத்துவது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில். எந்தத் தகுதியும் இருக்க வேண்டாம் என்பதுதான். யாருக்குத் திறமை இருக்கிறதோ அவர்கள் பத்திரிகைகள் நடத்தலாம். ஆனால் எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் வாசகர்கள் வேண்டும். வாசகர்கள் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை.

(இன்னும் வரும்)

வண்டி சாலை ( கவிதை ) / ந.பெரியசாமி

*
வாசனை மிதக்கும்
நெல்லித் தோப்பில்
சடைச்சடையாய் காய்ப்பு.
நிலம் புசித்து மீந்தவை
சூரியனுக்கு படையலாக…
ஊடு பயிர்களை மிதித்திடாது
அவ்வை வந்தாள்
தீராத் தாகமென்றபடி.
விரும்பும் மரத்தில்
விரும்பியதை உண்ண பணித்தேன்.
மறுத்து கை நீட்டினாள்
வேலி ஓரம் நீண்டிருந்த பனைகளை நோக்கி.
குடுவை ததும்ப குடித்திட்ட
அவளின் கண்களில்
குளம் தழும்ப அதிர்ந்தேன்.

நெஞ்சறைந்து
ஒப்பாரியிட்டாள்.

•••

இருண்ட கனவுகளுக்குள் அலையும் குமாரநந்தனின் கதைகள் / சமயவேல்

குமாரநந்தனின் கதைகள் பலவும் கனவுப் பிரதேசங்களில் முளையிட்டு வளர்கின்றன. சில அமானுஷயப் பகுதிகளிலும் தமிழ் சித்த மரபையொத்த ஆன்மீகத் தேடலிலும், புழுத்துளை போன்ற வினோத அறிவியல் புலத்திலும் அலைகின்றன. எனினும் அவை சக மனிதர்களின் சமகால வாழ்வின் புதிர்களையும் சிக்கல்களையும் வலியையும் சமயங்களில் சிற்சில ஆனந்தங்களையும் தொட்டுச் செல்வதால் வாசிப்புக்கான ஒரு ஈர்ப்பை உண்டாக்கிவிடுகின்றன. தெரிந்த வாழ்க்கை எனினும் குமாரநந்தன் அவருக்கே உரிய வித்தியாசமான கோணங்களில் பிரத்யேகமான ஒரு ஜன்னல் வழியே ஒவ்வொரு கதையையும் நமக்கு காண்பித்துச் செல்வது ஒரு புதுவகை வாசிப்பனுபவத்தை நமக்குத் தருகிறது.

இயல்பான யதார்த்தங்களை எழுதினாலும் அவை சிறப்பான கதைகளாக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தொகுப்பில் இரண்டு கதைகள் இருக்கின்றன. முதல் கதை “தீராத திருநாள்”

ஒரு திருவிழா உணவகத்தில் தற்காலிக புரோட்டா மாஸ்டர் ஜம்பு ஓய்வே இல்லாமல் வேலை பார்க்கிறான். மூன்று முறை பத்து கிலோ மாவு பிசைந்து வீசியதில் கை ஓய்ந்துவிட்டது. “மாஸ்டர் மளமளன்னு ஆர்டர்ங்களைப் போட்டுவிடுங்க. கஸ்டமர்ங்க காத்திருக்காங்க பாருங்க என்றான். இவன் எதுவும் பேசவில்லை. எதிர்த்துப்பேசும் மனநிலையையெல்லாம் அவன் இளைஞன் ஆகும் முன்பே கடந்து விட்டான்.” என்று எழுதுகிறார். மிகுந்த அலுப்புடனும் வெறுப்புடனும் வேலை செய்யும் ஜம்புவின் மனநிலை சாயந்திரத்திற்கு மேல் மாறுகிறது. வெயில் குறைந்துவிட்டது. “புதுச்சேலை கட்டிய பெண்கள், மாவிளக்கும் பொங்கலுமாய் போய்க் கொண்டிருந்தார்கள்….வழக்கமான தன்மை கொஞ்சங் கொஞ்சமாய் மறைந்து அசாதாரணமான நாளாய்” அது மாறுகிறது. பிறகு அது ஒரு சமகால கோவில் திருவிழா இரவாக மாறுகிறது.

“பொழுது சாய்ந்து இருளும் ஒளியுமாக இருக்கும் சமயத்தில் அக்கினி குண்ட ஊர்வலம் வந்தது. பம்பை சத்தம் அவனது உடலுக்குள் புகுந்து பாம்பு போல நெளிந்தது. ஆச்சரியமூட்டும் வகையில் அவனுக்குள் உற்சாகம் குமிழியிட்டது. எதற்காக இப்படி உற்சாகம் வருகிறது என தன்னையே வியப்பாய் கேட்டுக் கொண்டான். “ இது தான் தீராத திருநாட்களின், இந்தச் சிறுகதையின் மையமாக இருக்கிறது. சிறுதெய்வத் திருவிழாக்களின் மூலம் நம் எல்லாருக்குள்ளும் உறங்கிக் கிடக்கும் ஆதிமனிதனின் தொல்லிசைக் கலாச்சார சடங்குப் படிவுகளை மீட்கும் ஒரு எத்தனிப்பு நடக்கிறது. ஓர் இனக்குழுவாக மனிதன் கூடி வாழ்ந்ததின் எச்சங்களை, திருநாள் கூடுகைகள் மீட்க முயல்கின்றன. ஆனால் பின்காலனிய சமகால வாழ்வில் சாதி, அரசியல் கட்சி, மதம் முதலான எண்ணற்ற முரண்பாடுகளால் பிளவுண்டு கிடக்கும் மனிதநிலை, இந்தத் திருநாட்களைக் கூடக் கொண்டாட விடாமல் கலவரம், கொலை, வெட்டுக்குத்து என சீரழிந்து போகிறது. வண்டி வண்டியாக போலீசார்கள் குவிய மக்களின் ஆதிக்கனவுக் கொண்டாட்டம் கொடூரமாக சிதைக்கப்படுகிறது. இவர்களின் பிரதிநிதியாக புரோட்டா மாஸ்டர் ஜம்பு இந்த சிதைவிற்குள் சிக்கி சின்னாபின்னமாகி ஓடுகிற பஸ்ஸில் ஏறி தப்பித்து விடுகிறார். கதாசிரியர் எங்கும் தனது தலையைக் காண்பிக்காமல் வெகு இயல்பாக ஒரு சிறந்த கதையை எழுதிவிடுகிறார்.

மற்றொரு வனத்தில்

தீராத திருநாள் கதை போலவே, இக்கதையும் இயல்பான யதார்த்த வாழ்வின் ஒரு துண்டுப் பகுதியைக் காட்டும் கதையாக இருக்கிறது. இக்கதை இரண்டு ஆண்களுக்கிடையிலும், பள்ளிப்பருவ மகள் உட்பட்ட இதர குடும்ப உறுப்பினர்களிடமும் உறவுச் சிதைவில் சிக்கிக் கொண்ட சமகாலப் பெண்ணியக் கதையாகவும் இருக்கிறது.

கலா என்றொரு பெண் இந்த வீட்டிலும் இல்லாமல் அந்த வீட்டிலும் இல்லாமல் அம்மா வீட்டிலும் இல்லாமல் அந்தரத்தில் அலைகிறாள். பள்ளிப் பருவ மகளை அம்மா வீட்டில் விட்டுவிட்டு குணா என்னும் பஸ் டிரைவர் வீட்டில் இருக்கிறாள். இருவரும் உறவில் இருப்பது புரிகிறது. மகளைப் பார்க்க குணா ஓட்டும் பஸ்சிலேயே ஏறி அம்மா வீட்டுக்குப் போவதில் கதை தொடங்குகிறது. மோகன் என்னும் அவளது கணவன் அம்மா வீட்டுக்கு வருகிறான். “ரெண்டு வருஷம் ஓடிப் போச்சி இன்னைக்கு ஒரு முடிவு செஞ்சாகனும் வர்றாளாமா இல்லையாமா?” என்று கத்துவதிலிருந்து, இரண்டு ஆண்டுகளாக இவள் குணாவுடன் வாழ்ந்து வருவதை யூகிக்க முடிகிறது. மோகனுடன் போக மறுக்கிறாள். “இப்படி எல்லாம் பண்ணா மட்டும் டைவர்சுல கையெழுத்துப் போடுவேன்னு நினைக்காத” என மிரட்டி அவளை அடிகிறான். அம்மா தடுக்க அவன் வெறிபிடித்தவனாக வெளியேறிப் போகிறான். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் மகளிடம் பொய் சொல்லி சமாளிக்கிறாள்.

குணா வீட்டில் அவனும் சுரேஷ் என்னும் வளர்ந்த கல்லூரியில் படிக்கும் மகனும் இருக்கிறார்கள். கலாவை அந்த வீட்டுக்குள் ஏற்றுக் கொள்ள முடியாத இளைஞனாக சுரேஷ் இருக்கிறான். டூட்டி முடிந்து வீட்டுக்கு வரும் குணாவுடன் நடக்கும் ஒரு உரையாடல் மூலம் அவனும் ஒரு வழக்கமான ஆண்தான் என்று கலாவுக்குப் புரிகிறது. இவ்வளவு பிரச்னைக்கிடையிலும் “மோகன் எப்பக் கிளம்பினான்” என்று கேட்கிறான். “அவரு வந்துட்டு அப்பவே கிளம்பிட்டார்” எனப் பதில் சொகிறாள் கலா. அவன் ஒரு “அபத்தமான நிம்மதி கொள்கிறான்” என்று எழுதுகிறார். திடீரென மகள் பாட்டியுடன் அங்கே வருகிறாள். அந்த வீட்டின் சூழலைப் பார்த்து அவளுக்கு ஏதோ புரிந்துவிடுகிறது. ‘பாட்டி கிளம்பு’ எனக் கிளம்பிப் போகிறாள். கலா குழம்பி நிற்கிறாள். அப்போது கதவு தட்டப்படுகிறது. அது ஒருவேளை மோகனாக இருக்குமோ எனப் பித்துப் பிடித்தவளாக நிற்கிறாள். தாறு மாறான ஆணாதிக்க, குடும்பச் சூழல்களில் தனெக்கென ஒரு வாழ்வைத் தேர்வு செய்ய முடியாத பெண்களின் அநாதரவற்ற நிலையில் கதை உறைந்துவிடுகிறது.

வீடு பற்றிய கதைகள்

இந்தத் தொகுப்பில் வீடு பற்றிய மூன்று கதைகள் அடுத்தடுத்து இருக்கின்றன. பைத்தியக்காரனின் வீடு கதையில் கதை சொல்லியின் வீட்டுக்குப் பக்கத்தில் சம்பு என்பவன் குடிவருகிறான். ‘அவன் ஒரு நோயைப் போல” இவனைப் பற்றிக் கொள்கிறான். கைவல்ய நவநீதத்திலிருந்து ஜேகே, ஓஷோ வரை பலவகை ஆன்மீகப் புத்தகங்களை வாசிப்பவனாக சம்பு இருக்கிறான். ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங் எல்லாம் வாசிக்கிறான். வீட்டில் தியானம் செய்கிறான். மோகனூர் ஆற்றுக்கு அவனோடு சேர்ந்து செல்கிறான். ஆளே மாறிவிடுகிறான். “நான் வாலைச் சித்தரின் மறுபிறவி என்றான். நான்கு வருடத்தில் நான் முக்தி அடைந்துவிடுவேன் என்றான்…..” பிறகு சம்புவின் மீதான ஈர்ப்பு திடீரெனக் குறைந்து வழக்கம் போல வாழ்க்கையைக் கவனிக்க ஆரம்பிக்கிறான். கதையின் இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வீட்டுக்கு அவனது அண்ணன் மகன் வினோத் வருகிறான். அவன் சைக்காலஜி படித்தவன். அவனிடம் சம்பு பற்றிப் பேசுகிறான். அவனை அழைத்துக் கொண்டு சம்புவைப் பார்க்கப் போகிறார்கள். அவனோ தியானத்தில் உட்கார்ந்திருக்கிறான். வினோத் கூறுகிறான்: “சில பேர் இப்படித்தான் தங்களைக் கடவுள் அவதாரம் இல்லாட்டி ஞானி அந்த மாதிரி நினைச்சுக்குவாங்க. மத்தவங்களைவிட விசேசமானவங்க வித்தியாசமானவங்கன்னு நினைச்சுக்குவாங்க. தியானம் பண்றேன்னு மணிக் கணக்கா உக்காந்திருப்பாங்க. கொஞ்சம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா சரியாப் போயிடும்”. இவ்வாறு அவன் எல்லாவற்றையும் உளவியல் கண் கொண்டே பார்க்கிறான். கடைசியில் இது மனதின் ஏமாற்று வேலை என்று வருகிறார். “பிரச்னை சுலக்சனாவிடமா இல்லை என்னிடமா இல்லை இவனிடமா இல்லை சம்புவிடமா அல்லது இவன் சொல்கிற மாதிரி எல்லா மனிதர்களிடமுமா” என்னும் பூதாகரமான கேள்வியை கதைசொல்லிக்கும் வாசகனுக்கும் கொடுத்துவிடுகிறார். பாவண்ணன், இவரது ‘பூமியெங்கும் பூரணியின் நிழல்’ தொகுப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கும் குறிப்பில் “மனதின் ஆழத்தை அறிய முயற்சி செய்யும் படைப்புகள் அனைத்தும் மகத்தானவையே. அவ்வரிசையில் ஒருவராக குமாரநந்தன் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்” என்று எழுதுகிறார். குமாரநந்தன் இந்தப் புதிய தொகுப்பில் மனதின் ஆழத்தை அறிய முயற்சி செய்யும் பல கதைகளை எழுதியிருக்கிறார்.

வீடு பற்றிய அடுத்த கதை ‘நிழல் படர்ந்த வீடு’ ஈர்ப்பையும் விலகலையும் சம அளவில் பெற்றிருந்த, பன்னீர்மரப் பின்னணியோடு கூடிய ஒரு வீட்டுக்குப் புவனா குடியேறுகிறாள். கல்யாணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் ‘வீட்டை மாற்றிப் பார்’ என்று பலரும் கூறியதால் வீட்டை மாற்றுகிறாள். மயானம் அருகில் இருந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் சின்ன வயதில் இருந்தே அவளுக்குப் பேய் பிசாசுகளின் மீது நம்பிக்கை கிடையாது. புதிய வீட்டில் ஏதோ ஒரு அசாதாரண உணர்வு ஏற்பட்டாலும் ‘எல்லாவற்றுக்கும் மனசு தான் காரணம்’ என்று அதை அவள் புறக்கணித்து விடுகிறாள். லாரிக்குப் போன கணவன் வீடு வருகிறான். அமானுஷ்யச் சுழலில் சிக்கிக் கொள்கிறான். புவனாவிடம் கொள்ளும் உறவின் முடிவில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மயங்கிச் சரிகிறான். இந்தக் கதை பேய் பிசாசுக் கருத்துக்களை ஆதரிப்பது போலவே எழுதப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு கதையை ஏன் எழுதவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை இது உண்மைக்கதை என்றும் கூறலாம். உண்மையாக இருப்பினும் அதை எழுதுவதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு படைப்பாளியிடமே உள்ளது.

வீடு பற்றிய கதைகளில் மூன்றாவது கதையான “மறைந்து போன நாளைத் தேடி” ஒரு முக்கியமான கதையாக இருக்கிறது. இக்கதையும் ஒரு கனவில் தொடங்குகிறது. இறந்து போன அப்பா கனவில் வந்து இவனை அதட்டுவதாகக் கனவு வருகிறது. அந்தக் கனவைத் துரத்திக் கொண்டு போக எத்தனிக்கிறான். கனவுக்குள்ளும் நனவுக்குள்ளும் புகுந்து புகுந்து ஒருவகையான பரவசத்துடன் கதை எழுதப்படுகிறது. கதை கனவுக்குள் நடக்கிறதா அல்லது நனவிலும் தொடர்கிறதா என அனுமானிக்க முடியாதவாறு ஒரு கனவு நடை குமாரநந்தனுக்கு வாய்க்கிறது. முதலில் கனவில், அந்த வீடு, சிறுவர்களாகயிருந்த சந்திரனும் பூபதியும் விளையாடித் திரிந்த தெரு எல்லாம் வருகிறது. அப்பா சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைகிறார். “கம்பிக் கதவைப் படாரென்று தள்ளிக்கொண்டு கூச்சலிட்டபடி சந்திரனும் பூபதியும் ஓடிவந்து அப்பாவைக் கட்டிக் கொள்கிறார்கள்….சந்திரா இன்னும் சின்னப்பிள்ளையா நீ? நீ மட்டும் சொன்னா கேக்குறாப்புல தெரியல் எனக்கு. குரலுயர்த்தி கோபமில்லாமல் அதட்டுகிறார்.” கனவு கலைந்து பறந்து விட்டது. இந்தக் கனவு அவனுக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளை கதையில் வாசிக்க வேண்டும். அப்போதுதான் அதை நாமும் உள்வாங்க முடியும். சாப்பிடும் போது அம்மாவிடம் கூறுகிறான். பிறகு அந்த வீட்டையே தேடிப் போகிறான். பலவற்றையும் நினைத்துக் கொண்டே பஸ்ஸில் செல்கிறான். பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகே சுய நினைவுக்கு வருகிறான். அங்கே எல்லாம் மாறிப் போயிருக்கிறது. பாதாமி மரத்தையும் அதன் அடியில் இருந்த குதிரைவண்டிகள் லாயமும் மறைந்து விளம்பரங்களால் மூடப்பட்ட ஒரு பயணிகள் நிழற்குடை இருக்கிறது. நடக்கிறான். தினசரி மார்க்கட் காணாமல் ஆகிவிட்டது. புளிய மரத்தைக் காணோம். மூக்குத்திக்காரர் கடையைக் காணோம். அப்பா நோயுற்றதையும் அவர் இறந்த நாளையும் நினைத்துக் கொள்கிறான். “சந்திரன் நின்றுவிட்டான். மனசுக்குள் சவ வண்டி போய்க்கொண்டே இருந்தது” என்று எழுதுகிறார். கனவிலும் கனவை ஒத்த பழைய வாழ்விலும் இருந்த அந்த வீடும் தெருவும் கலைந்துவிட வேண்டாம் என்று திரும்பி நடப்பதோடு கதை முடிந்துவிடுகிறது. மிக நேர்த்தியாக எழுதப்பட்ட இந்தக் கதை எனக்குப் பெரும் நிறைவைக் கொடுத்தது.

இறந்த காலத்தின் வெய்யில்

இந்தக் கதை அறிவியல் புலத்திலும் கனவுப் பிரதேசத்திலும் ஒருசேர இயங்குகிறது. காலத் தடுமாற்றத்தில் இயங்கும் ஒருவருக்கு நிகழ் காலம் என்பது திடீர் திடீரென கடந்த காலமாகவும் வருங்காலமகவும் மாறிவிடுகிறது. வியாழக்கிழமையில் தூங்கப் போனவன் சனிக்கிழமையில் விழிக்கிறான். வெள்ளிக்கிழமை காணாமல் போகிறது. குளிர் காலத்திலிருந்து அதற்கு முந்தைய கோடை காலத்திற்குள் வந்து அல்லல்படுகிறான். ஜடவுலகில் காலத்திற்கு ஒரு திசை உண்டு என்னும் அறிவியல் கோட்பாடு இருக்கிறது. புழுத்துளைகள் (wormholes) எனப்படும் காலத்துளைகள் வழியாக ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு தாவிச் செல்லும் சாத்தியங்கள் உண்டு. தஞ்சை பெரிய கோவிலில் இப்படியான ஒரு புழுத்துளை இருப்பதாக ஒரு குறிப்பும் இருக்கிறது. ஒரு புழுத்துளையையாவது கண்டுபிடிக்க இந்தக் கதாபாத்திரம் முயற்சி செய்கிறது. ஆனால் “இந்த சூனியம் பிடித்த நாட்கள் எந்தக் காலத்தில் இருந்துதான் வருகின்றன என்று குழம்பினான். என் வாழ்க்கை இரண்டாகப் பிளந்து கொண்டதா…? ஒரு பைத்தியக் காரனுக்கு நிகரான பட்டத்தோடுதான் மீதி வாழ்க்கையா?” என எழுதுகிறார். கடைசியில் ஒரு மனநல மருத்தவரிடம் செல்கிறான். மருத்துவர் இவன் சொல்வதற்கு சரியான ஆதாரம் இல்லாததால் நம்ப மறுக்கிறார். “உலகத்தில் நடக்காத ஒரு கற்பனையான விஷயம் தனக்கு நடந்துட்டதா நம்புறதும் ஒரு மனநோய்தான். கவலைப்படாதீங்க கொஞ்சம் கொஞ்சமாக சரி பண்ணிடலாம்.” என்று மருத்துவர் கூறுகிறார். கோபத்துடன் வெளியேறுகிறான். இதற்குப் பிறகு இந்தக் கதையைக் கையாளப் போதுமான அறிவியல் புனைவுகளின் படைப்பூக்கம் இல்லாததால் கதை மீண்டும் ஒரு சுற்று காலமாற்றம், மருத்துவரை மீண்டும் சந்தித்தல், அவரும் ‘கனவில் தானே உன்னை சந்தித்தேன். உனக்கெப்படித் தெரியும்’ என்று கூறுவதுமாக சிதறிப் போகிறது. எனினும் காலத் தடுமாற்றம், காலப்பயணம், திடவுலகில் காலத்தின் திசை என்று இது ஒரு பரிசோதனைக் கதையாக இருக்கிறது. இன்னும் ஆழமான அறிவியல் புனைவுகளை இவரால் எழுத முடியும் என்னும் நம்பிக்கையை இந்தக் கதை நமக்கு அளிக்கிறது.

நோய்

கவித்துவத்துடன், ஆன்மீகத்தையும் (அண்மையில் இந்தியாவில் தப்பும் தவறுமாகப் பயன்படுத்தப்படும் சொல்) இணைத்து அற்புதமான நடையில் எழுதப்பட்ட சிறுகதை இது. ஒரு சிறிய விபத்தில் தலையில் ஏற்பட்ட அடியால் முற்றிலும் தன்னியல்பு மாறிய கோபி என்னும் ரௌடியின் கதை. “ பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று மும்மலங்களைக் கடந்து திரிகரண சுத்தியடைந்த யோகியைப் போல நிர்மலமாய் இருந்தான். அவனது புன்னகை அன்பில் தோய்ந்த மனதின் நறுமணமாய் இருந்தது….அன்பினால் பாரித்துப் போய்விட்ட மனதை அவனால் சுமக்க முடியவில்லை.” என கோபிக்கு ஏற்பட்ட மாற்றம் பற்றி உருக்கமாக எழுதுகிறார். கோபியின் எதிரி ராஜி எதிரில் வருகிறான். ஒரு முறை ஏதோ ஒரு தகராறில் கோபி கத்தியால் ராஜியின் வயிற்றில் கீறிய சம்பவம் இருவர் மனதிலும் மறக்க முடியாமல் இருக்கிறது. கோபிக்கு ஏற்பட்ட மாற்றத்தை அறிந்திருந்த ராஜி கோபியைத் தாக்குகிறான். அவன் சிரித்துக் கொண்டே அடிகளை வாங்கிக் கொள்கிறான். “அடித்தலும் அடிவாங்குதலுமாய்ப் பூரணமாய் நடந்து கொண்டிருக்கும் அந்த நிகழ்வு மிகவும் ஒத்திசைந்து காலகாலமாய் முடிவு செய்யப்பட்ட ஒன்றைப் போலத் தீவிரமாய் நடந்து கொண்டிருந்தது.” காவலர்கள் வந்து அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

அதற்குப் பிறகும் அவன் அப்படியே சிரித்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவனோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சுமதியால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கனகசபை என்று ஒருவன் அவனைக் கொல்ல அலைவதை அவள் அறிவாள். சுமதி இரண்டு வீட்டையும் இழந்தவள் என்ற குறிப்பும் கதைக்குள் இருக்கிறது. எப்படியாவது கோபியை பழைய நிலைக்கு மாற்ற சுமதி பெரும் முயற்சி செய்கிறாள். கோவிலுக்குப் போய் வாக்குக் கேட்கிறாள். வாக்கு சொல்லும் கோகிலா வீட்டுக்கே வந்து பூஜைகள் செய்கிறாள். கோபியும் கோகிலாவும் பார்த்துக் கொள்வதை “இரண்டு வெவ்வேறு சக்திகளின் மோதல் போல இருக்கிறது” என்று எழதுகிறார். “அவ்வளவு ரத்தத்துக்கு நடுவே கோபியின் முகத்தில் அந்தப் புன்னகை கொஞ்சம் கூட மாறாமல் இருந்தது” எனக் கதையை முடிக்கிறார். மூளையில் குடியிருக்கும் மிருகம் அழிக்கப்பட்ட திட சித்தத்தையே நான் ஆன்மிகம் என்று கருதுகிறேன். சடங்குகள் நிறைந்த, கருணையே இல்லாத வைதீகத்துக்கும் அசல் ஆன்மீகத்துக்கும் இடையில் காலம் காலமாக நடக்கும் யுத்தம் இன்றும் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தான் இதை ஒரு முக்கியமான கதையாகக் கருதுகிறேன்.

துவரைச் செடி

இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. ஏரிக்கரையில் இருக்கும் அத்தி மரத்தில் ஒரு மோகினிப் பெண் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்கிறான் விநாயகம். “மெல்லிய பச்சை பிடித்த செம்புநிறக் கண்களால் சுற்றிலும் பார்த்தாள். அவளது அழகு ஒரு அணு விளைவைப் போல அங்கிருந்தவர்களைத் தாக்கியது. ஒரு பறவையைப் போல அங்கிருந்து குதித்தாள்…அத்தி மரத்து சிட்டுக்குருவிகள் அனைத்தும் வானத்தில் வலப்புறமாக ஒரு வட்டம் அடித்துவிட்டு மீண்டும் அமர்ந்தன. ஒரு வினாடியில் நடந்த அந்த நிகழ்வு….” என ஒரு அமானுஷ்ய மாய யதார்த்தக் கதையாக எழுதப்படுகிறது. பாட்டி சொன்ன கதைகளில், அந்த ஏரிக்கு நீராட வந்த தேவதைகளில் ஒருத்தியாக இருக்கலாம் என்றும் ஏரியில் நீராடும் போது தன்னுடைய மோதிரத்தைத் தொலைத்த தேவதையாக இருக்கலாம் என்றும் எழுதுகிறார். ஊரே கூடிவிடுகிறது. தேவதையைப் பார்வதி வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். பார்வதி சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை அவள் சாப்பிட மறுக்கிறாள்.

காலையில் எழுந்து பார்த்த போது அவளின் காலடித்தடம் கூட இல்லாது காணாமல் போய்விடுகிறாள். அந்தப் பெண் பார்வதியின் கனவில் வந்து தெளிவாகப் பேசுகிறாள். “அம்மா நான் அனாதையாயிட்டேன். என்னோடவங்க எல்லாம் என்னைக் கைவிட்டுட்டாங்க எனக்கு உன்னை விட்டாப் போக்கிடம் இல்ல எனக்கு ஆதரவு தருவியா என்றாள்… இதோ உன் கொல்லைப்புறம் ஓரமா நான் ஒரு துவரைச் செடியா முளைச்சி நின்னுக்கவா என்றாள். ” காலையில் பார்த்தால் “அங்கே வாழைக் கன்றுகளுக்கு மத்தியில் ஒரு துவரைச் செடி இரண்டு விதையிலைகளை நீட்டிக்கொண்டு முளைத்து நின்றது.” என்று கதை முடிகிறது. வெவ்வேறு விதமான அர்த்தங்களைத் தரக்கூடிய கவிதை போலக் கதை அமைந்துவிடுகிறது. கதையின் தொடக்கத்தில் கூறப்படும் “வானில் ஒரு மர்மப் பொருள் தென்பட்டதாக நாசா விண்வெளிக் கழகம் செய்தி வெளியிட்டது” என்னும் பகுதியை விட்டுவிட்டுக் கூட இந்தக் கதையை வாசிக்கலாம். துவரைச் செடி என்பதே ஒரு பெரிய அதிசயம் தான். ஒரு சிறிய மரம் அளவுக்கு நாலாபுறமும் பல நூறு பூகளோடும் காய்களோடும் வட்டமாக கிளைவீசி வளரும் துவரைச் செடியின் அழகே ஒரு விந்தையான தேவதையின் அழகு போன்றதுதான். இன்று நாம் தேவதைகளையும் தொலைத்துவிட்டோம். துவரைச் செடிகளையும் தொலைத்துவிட்டோம். பெண்ணின் பெருந்துயரைச் சொல்லும் ஒரு கதையாகவே நான் இந்தக் கதையைப் புரிந்து கொள்கிறேன். இதற்கு முன்பு நாம் வாசித்த “மற்றொரு வனத்தில்” கதையில் நாம் சந்தித்த கலாவாகவும் அநாதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ஓராயிரம் கலாக்களாகவும் அந்தத் தேவதை தெரிகிறாள்.

இந்த வித்தியாசமான குமாரநந்தனின் கதையுலகத்தில் நீங்களும் பயணிக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையம் கேட்டுக் கொள்கிறேன். பெரும் ஊடகங்களின் இழுப்பில் எழுத்தாளன் ஒருபோதும் சிக்கக் கூடாது என்றும் அறிவியல் கதைகளின் பக்கம் முயற்சி செய்யலாம் என்றும் குமாரநந்தனை இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை அளித்த காலச்சுவடு மற்றும் புனைவு அமைப்புகளுக்கு எனது நன்றிகள்.

—–

( 31.08.2018 அன்று மதுரையில் நடந்த காலச்சுவடு புத்தக வெளியீட்டு விழாவில் குமாரநந்தனின் “நகரப் பாடகன்” சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசியதின் விரிவான கட்டுரை. )

—-

லிடியா டவிஸ் குறுங்கதைகள் / தமிழில் : சமயவேல்

கவிஞர் சமயவேல்

lydia davis

தலை, இதயம்

தலை அழுகிறது.

இதயத்திற்கு உதவ தலை முயற்சிக்கிறது.

தலை இதயத்திடம் சொல்கிறது இது எப்படி, மீண்டும்:

நீ நேசிப்பவர்களை நீ இழந்துவிடுவாய். அவர்கள் எல்லோரும் போய்விடுவார்கள்.

ஆனால் பூமியும் கூடப் போய்விடும், ஏதோ ஒருநாள். பிறகு, இதயம் ஆறுதலாக உணர்கிறது.

ஆனால் தலையின் சொற்கள் இதயத்தின் காதுகளில் நெடுங்காலம் அங்கேயே இருப்பதில்லை.

இதயத்திற்கு இது மிகவும் புதியது.

அவைகள் திரும்ப எனக்கு வேண்டும், இதயம் சொல்கிறது.

இதயத்திடம் இருப்பதெல்லாம் தலை மட்டுமே.

தலையே, உதவு. இதயத்திற்கு உதவு.

குழப்பத்தின் உதாரணங்கள்

1

எனது ஹோட்டல் அறையை ஒட்டி இருக்கும் குளியலறையின் தரை மேல் நான் உட்கார்ந்திருக்கிறேன். அனேகமாக விடிந்துவிட்டது மேலும் குடிப்பதற்கு என்னிடம் மிக அதிகமாக இருந்திருந்தது, அதனால் குறிப்பிட்ட எளிய விஷயங்களும் என்னை ஆழமாக ஆச்சர்யப்படுத்தியது. அல்லது அவைகள் எளிமையானவை அல்ல. ஹோட்டல் மிக அமைதியாக இருக்கிறது. எனக்கு முன்னால் டைல்ஸ்கள் மேல் உள்ள எனது பாதங்களை நான் பார்க்கிறேன் மேலும் யோசிக்கிறேன்: அவை அவளது பாதங்கள். நான் எழுந்து நின்று கண்ணாடியில் பார்க்கிறேன் மேலும் யோசிக்கிறேன்: அங்கு அவள் இருக்கிறாள். அவள் உன்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

பிறகு நான் புரிந்துகொண்டேன் மேலும் என்னிடமே கூறுகிறேன்: இது உனக்கு வெளியில் இருந்தால் நீ அவள் என்று கூற வேண்டும். உனது பாதம் அங்கு அதிகம் இருந்தால், அது உன்னிடமிருந்து அங்கே வெளியில் இருக்கிறது, அது அவளது பாதம். கண்ணாடியில், உனது முகத்தைப் போன்ற ஏதோ ஒன்றைப் பார்க்கிறாய். அது அவளது முகம்.

02

ஒரு சிறிய மின்சாரத் துண்டிப்பில், எனது சொந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது போல நான் உணர்கிறேன் மேலும் நான் சிந்திக்க இயலாமல் ஆகியது. மின்சாரத் துண்டிப்பு நான் செய்திருந்த எனது வேலையை மட்டும் அழிக்கவில்லை ஆனால் எனது சொந்த ஞாபகத்தின் ஒரு பகுதியையும் அழித்திருக்கிறது என நான் அஞ்சுகிறேன்.

04

அங்கு அவனது வலது கால் எனது வலது கால் மேல், எனது இடது கால் அவனது வலது கால் மேல், அவனது இடது கை எனது முதுகுக்கு அடியில், எனது வலது கை அவனது தலையைச் சுற்றி, எனது வலது கை அவனது வலது கைக்குக் குறுக்காக, மேலும் எனது வலது கை அவனது இடது நெற்றிப்பொட்டைத் வருடிக் கொண்டிருந்தது. இப்பொழுது எந்த உடம்பின் எந்தப் பாகம் என்னுடையது மேலும் எந்தப் பாகம் அவனுடையது என்பதைக் கூறுவது கடினமாக ஆகிறது.

நான் அவனது தலையை உரசுகிறேன் என்னுடையதின் மேல் அழுந்தியிருப்பதால், அவனது மயிரிழைகள் அவனது மண்டையோடு மேல் உரசுவதை நான் கேட்கிறேன் எனது சொந்த மயிரிழைகள் எனது சொந்த மண்டையோட்டின் மேல் உராய்வது போல, இப்பொழுது நான் அவனது காதுகளைக் கொண்டு தான் கேட்பதைப் போல, மேலும் அவனது தலைக்கு உட்புறம் இருந்து.

05

நான் போகும் போது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துச் செல்ல தீர்மானித்திருந்தேன். நான் களைப்புடன் இருக்கிறேன் மேலும் அது ஒரு சிறிய புத்தகம் என்றாலும் அதை நான் எப்படிக் கொண்டு போவேன் என்று யோசிக்க முடியவில்லை. போவதற்கு முன்பு நான் அதை வாசிக்கிறேன், மேலும் வாசித்தேன்:

அவள் எனக்குக் கொடுத்த மங்கிய பித்தளைக்குள் வார்க்கப்பட்ட டஜன் கணக்கிலான பூக்களுடன் கூடிய புராதன வளையல். இப்பொழுது நான் நினைக்கிறேன் நான் வெளியே செல்லும் போது எனது மணிக்கட்டைச் சுற்றி நான் புத்தகத்தையும் அணிந்து கொள்ள முடியும் என்று.

இவளது அம்மாவின் அம்மா

1

அங்கு இவள் அன்பானவளாக இருக்கும் நேரங்கள் உண்டு, ஆனால் அங்கு இவள் அன்பானவளாக இல்லாமல் இருக்கும் நேரங்களும் உண்டு, அவனிடம் அல்லது அவர்கள் எல்லாரிடமும் இவள் கொடுமையாகவும் இரக்கமற்றும் இருக்கும் போது, மேலும் அது அப்போது இவளுக்குள் இருக்கும் இவளது அம்மாவின் விசித்திரமான ஆவி என்பதை இவள் அறிந்திருந்தாள்.

அங்கு இவளது அம்மா அன்பானவளாக இருந்த நேரங்கள் உண்டு, ஆனால் இவளிடம் அல்லது அவர்கள் எல்லாரிடமும் அவள் கொடுமையாகவும் இரக்கமற்றும் இருந்த நேரங்களும் அங்கு இருந்தன, மேலும் அது அப்போது இவளது அம்மாவுக்குள் இருந்த இவளது அம்மாவுடைய அம்மாவின் விசித்திரமான ஆவி என்பதை அவள் அறிந்திருந்தாள். இவளது அம்மா கூறினாள், சில சமயங்களில் இவளது அம்மாவின் அம்மா அன்பானவளாக இருந்து வந்தாள், அவளை அல்லது அவர்கள் எல்லாரையும் பரிகாசம் செய்தாள், ஆனால் அவளும் கூட கொடுமையாகவும் இரக்கமற்றும் இருந்து வந்தாள். மேலும் அவளை அல்லது அவர்கள் எல்லாரையும் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டினாள்.

2

இவளது அம்மாவின் அம்மா, இரவில், பின்னிரவில், அழுவதும் அவளது கணவரை மன்றாடுவதும் வழக்கமாக இருந்தது. இதை இவளது அம்மா, இன்னும் ஒரு இளம்பெண், படுக்கையில் இருப்பவள் கேட்டுக் கொண்டிருந்தாள். இவளது அம்மா, அவள் பெரியவளாகிய போது, அழவும் அவளது கணவரை மன்றாடவும் இல்லை, அல்லது படுக்கையில் படுத்துக் கொண்டு கேட்கக் கூடிய இடத்தில் அவளது மகள் இல்லை. பின்னாளில் அவளது மகள், இவள் பெரியவளாகிய போது, இவளது அம்மாவின் அம்மாவைப் போல இரவில், பின்னிரவில் அழுதாளா, இவளது கணவரைக் கெஞ்சி மன்றாடினாளா இல்லையா என்று. இவளது அம்மாவால் தெரிந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவளால் கேட்க முடியாது.

000

காதல்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒருவனின் மேல் ஒரு பெண் காதல் கொண்டாள். அவனது கோட்டுகளைத் துவைப்பது, அவனது மைக்கூடைத் துடைத்து வைப்பது, அவனது தந்த சீப்பை அழுக்கெடுப்பது எல்லாம் அவளுக்குப் போதவில்லை: அவனது புதைகுழி மேல் ஒரு வீட்டைக் கட்டவும் இரவுக்கு மேல் இரவு ஈர நிலவறையில் அவனோடு உட்கார்ந்திருக்கவும் வேண்டி இருந்தது.

உருமாற்றம்

அது சாத்தியம் இல்லை, எனினும் அது நிகழ்ந்தது; மேலும் திடீரென இல்லை, ஆனால் மிக மெதுவாக, ஒரு அதிசயம் அல்ல, ஆனால் ஒரு மிக இயற்கையான விஷயம், அது சாத்தியமற்றது எனினும். எங்கள் நகரத்தில் உள்ள ஒரு பெண் ஒரு கல்லாக மாறிவிட்டாள். ஆனால் அதற்கு முன்பும் கூட அவள் ஒரு சாதாரணமான பெண்ணாக இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை: அவள் ஒரு மரமாக இருந்தாள். இப்பொழுது ஒரு மரம் காற்றில் அசைகிறது. ஆனால் செப்டம்பர் முடிவதற்கு அருகில் ஏதோ ஒருசமயம், இனிமேலும் அவள் காற்றில் அசையாமல் இருக்கத் தொடங்கினாள். பல வாரங்களுக்கு அவள் கொஞ்சம் கொஞ்சம் அசைந்தாள். பிறகு அவள் அசையவே இல்லை. அவளது இலைகள் விழுந்த போது அவை திடீரென, மேலும் பயங்கர சப்தத்துடன் விழுந்தன.

அவை கூழாங்கற்கள் மீது மோதின மேலும் சில சமயங்களில் உடைந்து சிதறின மேலும் சில சமயங்களில் முழுமையாக இருந்தன. அவை விழுந்த இடத்தில் அங்கு ஒரு தீப்பொறி இருந்திருக்கும் மேலும் அவைகளுக்குப் அருகில் கொஞ்சமாக ஒரு வெள்ளைப் பொடி கிடந்தது. மக்கள், நானில்லை எனினும், அவளது இலைகளை சேகரித்தார்கள் மேலும் அவற்றை அடுப்பங்கரை மாடத்தில் போட்டு வைத்தார்கள். ஒவ்வொரு அடுப்பங்கரை மாடத்திலும் கல் இலைகள் கொண்ட ஒரு நகரம் அங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பிறகு அவள் சாம்பல் நிறத்தில் மாறினாள்: முதலில் நாங்கள் அதை ஒரு ஒளியென்று நினைத்தோம்.

சுருக்கம் விழுந்த நெற்றிகளோடு, எங்களில் இருபது பேர் ஒரே நேரத்தில் ஒரு வட்டமாக அவளைச் சுற்றி நின்று எங்கள் கண்களுக்கு நிழலூட்டுவோம், தாழ்த்தப்பட்ட எங்கள் தாடைகள்–மேலும் எங்களிடையே நாங்கள் கொண்டிருந்த ஒரு சில பற்கள், பார்ப்பதற்கான ஏதோ ஒன்றாக அது இருந்தது—மேலும் அது, அந்த நாளின் நேரம் அல்லது மாறிக்கொண்டிருக்கும் பருவம் அவளை சாம்பல் நிறத்தில் காணுமாறு செய்துவிட்டது என்று கூறினோம். ஆனால் விரைவில் அது தெளிவாகிவிட்டது, இப்பொழுது இவள் வெறும் சாம்பல் நிறம், அதே தான், இனிமேல் இவள் பெண்ணில்லை என்றும் இப்பொழுது இவள் வெறும் ஒரு மரம் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒத்துக் கொண்ட அதே வழியில்.

ஆனால் ஒரு மரம் என்பது ஒரு விஷயம் மேலும் ஒரு கல் என்பது இன்னொரு விஷயம். சாத்தியமற்ற விஷயங்களில் கூட, நீங்கள் ஒத்துக்கொள்ளக் கூடியதற்கும் இங்கு ஒரு எல்லை இருக்கிறது.

௦௦௦

டார்வின் கொன்ற சிறுவன் ஆர்த்ரா கே எஸ். (1st year Mass Media Communication) தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

ஆர்த்ரா கே எஸ்.

ஸ்ரீபதி பத்மநாபா

( ‘This preservation of favourable variations and rejection of injurious variations ,I call

Natural selection ,or the Survival of the fittest ‘-Charles Darwin)

ஆஜானுபாகு எழுந்தபோது குறுபாகு கண்களிரண்டையும் இறுக்கி மூடிப் படுத்துக்கொண்டிருந்தான்.

’நேரமாச்சு’ ஆஜானுபாகு அவனைத் தொட்டு எழுப்பினான். குறுபாகு எழுந்திருக்கும் எண்ணமில்லாமல் ஒதுங்கிப் படுத்தான். முந்தைய நாள் இரவு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. குறுபாகு கண் திறந்தான். விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்கள் பள்ளிக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.

அவர்கள் யூனிஃபார்முக்குள் நுழைந்தார்கள். ஆஜானுபாகு குறுபாகுவின் கையைப் பிடித்து வேகமாக நடந்தான். பள்ளிப் பேருந்து காத்து நின்றது. இருவரும் இருக்கைக்குப் பின்புறமுள்ள கம்பியைப் பிடித்து ஒதுங்கி நிற்பார்கள். தலையை நிமிர்த்தி எட்டிப் பார்த்து சாலையில் பாயும் வண்டிகளை எண்ணுவார்கள். இருவரில் யாருக்கு அதிக எண்ணிக்கை வருகிறதோ அவனுக்கு வெற்றி. இப்படியாக நாட்கள் பள்ளியிலும் பள்ளிப் பேருந்திலும் படுக்கையிலும் தீர்ந்துகொண்டிருக்கின்றன.

இப்படியிருக்கையில் ஆஜானுபாகுவின் கைகள் நீளமாகத் துவங்கின. கால்களும் கூட . குறுபாகு ஆச்சரியப்பட்டான்.

ஒருமுறை டீச்சர் சொல்லியிருந்தார்கள். செல்கள்தான் வளர்ச்சியின் அடிப்படைப் புள்ளி என்று. குறுபாகு ஆஜானுபாகுவிடம் கேட்டான். ”கைகளும் கால்களும் எப்படி வளருது?”

’செல்கள் பிரிந்து வளரும்போது” – ஆஜானுபாகு சொன்னான்.

ஆஜானுபாகுவின் செல்கள் வேகமாகப் பிரிந்து வளர்ந்து நீண்டு வருகின்றன என்று குறுபாகுவுக்குத் தோன்றியது. என் செல்கள் வளர்வதற்கு மறந்துபோய்விட்டன போலும். அவற்றுக்கு நினைவு வரும்போது நானும் ஆஜானுபாகுவைப் போலப் பெரியவனாக வளர்வேன் என்று குறுபாகு எண்ணினான்.

பெயர்கள் ஆங்கில எழுத்து வரிசையில் அடுக்கி வைத்த பதிவேட்டில் ஆஜானுபாகுவும் குறுபாகுவும் அடுத்தடுத்து இருந்தார்கள்.

ஒரு நாள் அசெம்ப்ளியில் வரிசையாய் நிற்கும்போது PET டீச்சர் வந்து ஆஜானுபாகுவின் முன்னால் ஒரு கை தூரத்தில் நின்றிருந்த குறுபாகுவை முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார். உயரத்தின் ஆரோகண வரிசையில் அசெம்ப்ளி மறு உருவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டேயிருந்தது. அப்படியாக 760 நாட்கள் முடிந்தபோது குறுபாகு வரிசையின் முதல் ஆளாய் நின்றான். ஆஜானுபாகுவுக்கு வரிசையின் கடைசிக்கு பதவி உயர்வு கிடைத்தது.

ஒன்பதாம் வகுப்பு வந்தபோது ஆஜானுபாகு குறுபாகுவைவிட இரண்டு மடங்கு உயரமாகி இருந்தான். இரண்டு விகிதங்களில் இரண்டு உயரங்களில் ஒரே சாயலுள்ள இரண்டு முகங்கள்.

அன்று முதல்தான் ஏகப்பட்ட கண்கள் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை குறுபாகு புரிந்துகொண்டான். பள்ளிக்கூடத்திலும் வெளியேயும் கண்களின் எண்ணிக்கை பெருகியது. உருண்ட கண்கள், சிறிய சீனக் கண் உள்ளவர்கள்… சிலர் தனக்கு மட்டும் புன்சிரிப்பை அளித்துப் போவது போல குறுபாகுவுக்குத் தோன்றியது.

ஒன்பதாம் வகுப்பில் வைத்துத்தான் நிறைய தியரிகளையும் விதிகளையும் கேள்விப்படத் துவங்கினார்கள். அது மட்டுமல்லாது, ஒன்பதாம் வகுப்பை அடையும்போது குழந்தைகள் பெரியவர்களாகிறார்கள் என்கிற ஒரு பொதுவான எண்ணமும் வந்துசேர்கிறது.

ஆதார் கார்டில் உள்ள பெயருக்கு அப்பால் பலப்பல பெயர்களில் அறியப்படுவர்கள்தான் ஆசிரியர்கள். காலங்களினூடே பெயர்கள் மாறி மாறி வருகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் ‘STD’ ஆகிறார் பயாலஜி மேடம். ‘STD’ என்றால் ‘ஸ்டாண்டேர்ட்’.

பள்ளியின் மிக அழகான பெண். உயரமும் உடம்பும் சரி அளவில். கோதுமை நிறம். ’பயாலஜி கற்றுத்தர மிகத் தகுதியானவர்’ – மாணவர்கள் ரகசியமாகக் கூறிக்கொண்டார்கள். முன்பு அவரை சாண்டல் சோப்பின் விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள் என்றும் அவர் போகவில்லை என்பதும் கதைகளில் ஒன்று. நல்லதாகத்தான் போயிற்று, போயிருந்தால் பெரிய நடிகையாகி இருப்பார். பெரிய ரசிகர் கூட்ட்த்திடையே மூச்சு முட்டியிருப்பார்…. அதிர்ஷ்டவசமாக அப்படியெல்லாம் நிகழவில்லை. தன் முன்னால் அடங்கி அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு உயிர்களைப் பற்றிய அறிவியல் கற்றுக்கொடுப்பதுதான் அவர் தன்னில் கண்ட கடமை. பரிணாம சித்தாந்தகளையும் உடலின் ரகசியங்களையும் கற்றுக்கொடுக்கிறார் அவர்.

வகுப்பில் எல்லோருக்கும் பயாலஜியிடம் ஒரு காதல் இருக்கிறது. குறுபாகுவுக்கும் ஸ்டேண்டர்ட் மேடத்திடம் காதலும் அதற்கு மேல் மரியாதையும் உண்டு. அதற்குப் பின்னால் ஆஜானுபாகு மட்டும் அறிகிற ஒரு கதையும் இருக்கிறது. அதை ஆஜானுபாகு இவ்வாறு நினைவுகூர்கிறான்:

’சுதந்திரத்தைக் கொண்டாடுகிற ஒரு ஆகஸ்ட் 15 அன்று மிட்டாயை நாவில் இனிக்கவைத்து கொடிகளை எண்ணி நடக்கிறபோதுதான் பள்ளி வாகனம் எங்களை ஏற்றிக்கொள்ளாமல் போய்விட்டதை அறிகிறோம். சுதந்திரமாக தனியார் பேருந்தில் ஏறிவிட்டோம். இடம் இல்லை. பயங்கரக் கூட்டம். நான் கையை நீட்டி மேல் கம்பியைப் பிடித்துக்கொண்டேன். குறுபாகு என்னைப் பிடித்துக்கொண்டான். பேருந்தின் ஆட்ட்த்திலும் நெரிசலிலும் சிக்கித் தவிக்கும் குறுபாகுவை அந்தப் பேருந்தில் இருந்த ஸ்டேண்டேர்ட் டீச்சர் பார்த்து, கை தொட்டு அழைத்து, மடியில் அமர்த்திக்கொண்டார். குறுபாகு மூச்சுகூட விடாமல் அசையாமல் 5 நிமிடங்கள் அவர் மடியில் குறுகி அமர்ந்திருந்தான், பாவம்.’

அந்தக் கதை இப்படி முடிகிறது.

அன்று இரவு குறுபாகு உறக்கம் வரும்வரை யோசித்தான்.

‘எதற்காக ஸ்டேண்டேர்ட் என்னை மடியில் உட்கார வைத்தார்? ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பையன் மடியில் உட்காரலாமா? அப்படியானால் ஆஜானுபாகுவை ஏன் அமர்த்தவில்லை?’

குறுபாகு அன்றும் உறங்கவில்லை. உறங்காத குழந்தையைப் போல ஓங்கி அழுது யாரையும் எழுப்பாமல், ஆஜானுபாகுவின் அருகில் கண்கள் திறந்து படுத்திருந்தான்.

அன்று அவன் தன் குறையில் இருக்கிற வசதிகளைப் பற்றிப் புரிந்துகொண்டான்.

அப்படியிருக்கும்போதுதான் டார்வின் அரங்கத்தில் நுழைகிறார். பயாலஜி வகுப்பில்தான் சார்லஸ் டார்வின் என்கிற அறிவியல் அறிஞரைப் பற்றி குறுபாகு முதன்முதலில் கேள்விப்படுகிறான். (Survival of the fittest). இயற்கையில் தகுதி உள்ளவை நிலைநிற்கும் என்றும் மற்றவை இருப்பிற்கான போராட்டத்தின் முடிவில் வம்சம் இழந்து போகுமென்றும் அவர் சொல்கிறார். இன்று நம்மைச் சுற்றி இருக்கும் உயிர்களெல்லாம் இருப்பிற்கான போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்தான்.

குறுபாகு ஆஜானுபாகுவிடம் கேட்டான் – பூமியில் நிலைநிற்பவை எல்லாம் பூமியை வென்றவர்களா? இல்லை. மனிதன் எல்லாவற்றையும் எளிமைப்படுத்திவிட்டான். ஹோமோசாப்பியன்ஸ் என்கிற உயிர்த் தொகுதி, இயற்கையின், தெரிந்தெடுப்பதற்கான குத்தகை உரிமையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. மனிதன் எல்லோருக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறான். மனிதன் பெரிய மனசுக்காரன். நோயாளியும் ஆரோக்கியவானும், புத்தி உள்ளவனும் இல்லாதவனும், திறனாளிகளும் மாற்றுத் திறனாளிகளும், குள்ளனும் குள்ளமல்லாதவனும் பூமியில் வாழலாம். மனிதனின் விதிகள் இயற்கையின் விதிகளை வென்றுவிட்டது.

ஆஜானுபாகு ஸ்மாலும்(S) மீடியமும்(M) லார்ஜும்(L) கடந்து எக்ஸ்ட்ரா லார்ஜுக்குள்(XL) நுழைந்துவிட்டான். குறுபாகு தன் கைகளைப் பார்த்தான். அவை நீளமாவதே இல்லை. ஆஜானுபாகுவின் செல்களைப் போலப் பிரிந்து வளர்வதில்லை. தன் செல்கள் பிரியவும் வளரவும் மறந்துபோய் விட்டன.

துணிக் கம்பெனிகள் கைவிட்டுவிட்ட தன் உடலின் நிர்வாணத்தை மறைக்க, டெய்லர்கள் வம்ச நாசம் அடைந்துவிட்ட இந்த ஊரில், குழந்தைகளின் உடைகளைத்தான் அவன் அணிய வேண்டியிருக்கிறது. பல நிறங்களிலும் டிசைன்களிலும் உருவாக்கப்பட்ட துணிகள் குறுபாகுவின் உடலில் அந்நியப்பட்டுக் கிடந்தன.

குறுபாகு ஆஜானுபாகுவைப் பார்த்தான். ஒரே பாத்திரத்தில் உண்டாக்கப்பட்டவர்கள். ஒரே நேரத்தில் பூமிக்கு வந்தவர்கள். ஒரே மாதிரி வளர்ந்தவர்கள்.

குறுபாகுவுக்கு தன்னை மடியில் அமரவைத்த டீச்சரிடமும் ஸிம்பதி அளித்த கண்களிடமும் வளராத செல்களிடமும்…. அப்புறம், மனிதன் தோற்கடித்த இயற்கையிடமும் இறுதியாய் டார்வினடமும் கோபம் வந்தது.

ஆஜானுபாகு உறங்கிக்கொண்டிருந்தான். குறுபாகு உறங்கவில்லை. கண்களில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டு வருவதை உணர்ந்தான். ஒரூ நீண்ட கனவிற்கான உள் அழைப்பு வந்தது. அங்கே குறுபாகு தனியாக இருந்தான். காட்டின் நடுவில், இருளில், இரண்டு கண்கள் ஒளிர்கின்றன. ஒரு செந்நாய் கூர்மையான பற்களைக் காட்டியபடி நின்றுகொண்டிருக்கிறது. குறுபாகு ஆஜானுபாகுவைத் தேடினான். யாரும் இல்லை. குறுபாகு பயப்படவில்லை. அழவில்லை. செந்நாயுடன் போரிட்டான். கூர்மையான கல்லை எடுத்துக் குத்தினான். உருளைக் கல்லெடுத்து எறிந்தான். செந்நாய் மயக்கமுற்றுக் கீழே விழுந்தது. குறுபாகு ஓடினான்… திரும்பிப் பார்க்காமல் பயத்தை மறைத்துக் கொண்டு ஓடினான். எங்கேயும் யாரும் இல்லை. காடு தீரும் வரை ஓடினான்.

தான் நிர்வாணமாயிருப்பதை அறிந்து காட்டின் முடிவில் தளர்ந்து போய் அமர்ந்தான். இதற்கு அப்பால் நகரம்தான். அங்கே யாரும் தன்னைத் தாக்க வரமாட்டார்கள். குறுபாகு நிர்வாணத்தை மறந்து நகரத்தை நோக்கி நடந்தான்.

நகரம் அவனுக்கு முன்னால் வரிசையாய்க் காத்திருக்கிறது. ஆஜானுபாகுவைப் போல உயரமாக, பெரிதாக உள்ளவர்கள் அவனுடைய குறுகிய கைகளையும் மெலிந்த கால்களையும் அவமதிப்புடன் உற்றுப் பார்க்கிறார்கள். STD மேடத்தைப் போன்ற ஒரு பெண்மணி கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களில் ஒரு ஆள் திடீரென்று ஓடி வந்து குறுபாகுவைப் பிடித்து ஒரு மரப்பலகையில் படுக்க வைத்தான். அவர் குறுபாகுவின் கைகளையும் கால்களையும் பிடித்து இழுத்து நீட்டத் துவங்கினார். குறுபாகு வலியால் துடித்து உரக்க அழுதான். யாரோ குறுபாகுவின் வளர்ச்சி குன்றிய குறியைப் பிடித்து அழுத்தினார்கள். குறுபாகு ஓங்கி அலறினான். அவர்களின் கூர்மையான பற்கள் அவனுடைய மிருதுவான தோலில் அழுந்தி இறங்கின. குறுபாகு தான் வெற்றிபெற்றுவிட்டதாகக் கூச்சலிடவில்லை.

அடுத்த நாள் காலையில் இரண்டு சுவர் எழுத்துகளுக்குக் கீழே இரண்டு பேர் கிடந்தார்கள்.

இரண்டு சித்தாந்தங்கள் தீப்பிடித்து எரிந்தன. வலுவுள்ளவன் வாழ்கிறான் (survival of the fittest). வலுவில்லாதவன் மரணமடைகிறான் (death of an unfit).

டார்வின் மேல் வழக்குத் தொடரப்பட்ட்து. பல பயங்கரமான சம்பவங்களுக்கு பின்னணியாக இருப்பது டார்வினின் சித்தாந்தம்தான் என்று கூறப்பட்டது. கல்வித்திட்டத்திலிருந்து டார்வினின் பரிணாமக் கொள்கை நீக்கம் செய்யப்பட்டது. ஆதியிலே வார்த்தை இருந்தது என்றும் அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது என்றும் அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்றும் அருளிச் செய்யப்பட்டது.

ஆஜானுபாகு உறக்கத்திலிருந்து எழுந்தான். இன்று திங்கட்கிழமை.

****