Category: இதழ்92

பெண்டுலம் நின்றது ( உம்பர்த்தோ எக்கோ ) எம்.ஜி.சுரேஷ்

download (4)

உம்பர்த்தோ எக்கோ இறந்துவிட்டார். இத்தாலியில், மிலான் நகரில் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்த இந்த மனிதர், தனது 84வது வயதில், நேற்று இயற்கை எய்தி இருக்கிறார்.

அவரைப் பற்றிப் பேசும் முன் முன்னோட்டமாகச் சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. அப்போதுதான் இத்தாலிய இலக்கியத்தில் மட்டுமல்லாமல், உலக இலக்கியத்தில் அவர் இடம் என்ன என்பதை நாம் துல்லியப்படுத்திக் கொள்ள முடியும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆந்திரே பிரதான், ஆலன் ராபே க்ரியே போன்ற அவண்ட் கார்ட் கலைஞர்கள் பலரும் ‘நாவல் இறந்து விட்டது’ என்று பிரகடனம் செய்த போது உலகம் திடுக்கிட்டது. ’நாவல் அதன் கலைத்தன்மையை இழந்துவிட்டது. அது வெறும் வணிகப்பண்டமாகிவிட்டது. தொடக்க காலத்தில் இருந்த வடிவத்தை அது மாற்றிக் கொள்ளவே இல்லை எனவே இறந்து விட்டது’ என்று தங்கள் பிரகடனத்துக்கு அவர்கள் காரணம் சொன்னார்கள். இதன் விளைவாகப் பலரும் நாவல் எழுதத் தயங்கினார்கள். லத்தீன் அமெரிக்க எழுத்தாளரும், உலக இலக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவருமான போர்ஹேயும் நாவல் எழுதியதில்லை. சிறுகதைகள் மட்டுமே எழுதினார். போதாக்குறைக்கு ழீன் பால் சார்த்தர் எதிர் நாவல் (anti – novel)பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ஒன்று இறந்த நாவலை உயிர்ப்பிக்க வேண்டும் அல்லது புதுவகை எழுத்தில் நாவல் என்ற வகைமையை உருவாக்க வேண்டும் என்பது எழுத்தாளர்களின் முன் ஒரு பெரும் சவாலாக கால் பரப்பி நின்றது. அந்த சவாலை ஏற்று வெற்றிகரமாக ஒரு நாவலை எழுதினார் ஓருவர். அந்த நாவல் நூறாண்டுக்கால தனிமை வாசம். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய அந்த நாவல் ஒரு புதுவகை நாவலாக இருந்தது. அதிக அளவில் விற்கப்பட்ட புத்தகமாக இருந்தது. நோபல் பரிசும் வென்றது. அந்த வெற்றி பலரது கவனத்தைக் கவர்ந்தது. அப்படிக் கவரப்பட்டவர்களில் ஒருவர்தான் உம்பர்த்தோ எக்கோ.

இதாலியில், பொலோக்னோ பல்கலைக்கழகத்தில் குறியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுர்ந்து கொண்டிருந்த அவர் 1980 ஆம் ஆண்டு ஒரு புது வகை நாவல் எழுதினார். ‘ரோஜாவின் பெயர்’ என்ற பெயரிலான அந்த நாவல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. திரைப்படமாகவும் வந்தது. அது ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியிலான துப்பறியும் நாவல். துப்பறியும் நாவலா? இலக்கியரீதியாக வெற்றியடைந்து விட்டதா… பலரது புருவங்கள் உயர்ந்தன. இன்றளவும் அந்த நாவல் பின் நவீன வேதம் என்று கொண்டாடப்படுகிறது. ஓராண்டுத் தனிமை வாசம் நாவலுக்குப் பின் அதிக பிரதிகள் விற்ற நாவல் என்ற பெயரும் அதற்கு உண்டு. அந்த நாவலின் வெற்றி எக்கோவின் நிம்மதியைக் குலைத்துவிட்டது. மிலான் நகரில் இருந்த அவரது அடுக்குமாடிக் குடியிருப்பின் கதவுகள் சதா தட்டப்பட்டுக் கொண்டே இருந்தன. ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் அவரைத் துரத்தித் துரத்தித் தொல்லை கொடுத்தனர். அவரது அடுத்த நாவல் இது என்று தங்கள் யூகங்களை எழுதினர். எரிச்சலுடன் எக்கோ சொன்னார்: ‘நான் ஒரு புதிய புத்தகத்தை எழுதப் போவது நான் விரும்புவது போலவா அல்லது மற்றவர்கள் எதிர்ப்பார்ப்பது போலவா?

அவரது இரண்டாவது நாவலான ஃபூக்கோவின் பெண்டுலமும் முக்கியமான பிரதி. முதல் நாவல், வடக்கு இதாலியில் இருந்த ஒரு மடாலயத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய புலன் விசாரணையைக் கதைக்கருவாகக் கொண்டது என்றால், அவரது இரண்டாவது நாவல் ‘சதிக்கோட்பாடு’ பற்றியது. பின்பு வந்த அவரது நாவல்கள் ஒவ்வொன்றுமே வித்தியாசமான களங்களில் அமைந்தவை. ’முந்தைய நாள் தீவு’ மூழ்கிய கப்பலிலிருந்து தப்பிய கதாபாத்திரத்தைப் பற்றியது என்றால் ‘எண் பூஜ்யம்’ என்ற நாவல் பத்திரிகைத் துறையில் நிகழும் சதித்திட்டங்கள், மர்மம்,கொலை பற்றியது.

எக்கோவின் கதைகள் எல்லாமே தகவல்களால் நிரம்பியவை. கண்களை மூடிக்கொண்டு எந்த வரியைத் தொட்டாலும், அங்கே ஒரு அரிய தகவல் ஒளிந்திருக்கும். ரோஜாவின் பெயர் என்ற நாவலில் நடக்கும் கொலைகளுக்கான விஷம் ஆராயப்படும் போது அது தொடர்பான பலவிதமான விஷங்களைப் பற்றியும், அந்த விஷங்களின் தொடர்பான மூலிகைகள் பற்றியும் விவரித்திருப்பார் எக்கோ. அத்தனை விஷயங்களை மனிதர் எப்படித்தான் சேகரித்தாரோ என்று நினைக்கையில் மலைப்பு தட்டும். இந்தக் கலையை போர்ஹேயிடமிருந்து எக்கோ சுவீகரித்துக் கொண்டார். போர்ஹேயின் எழுத்துகளில் இந்த பாணியைக் காணலாம். இதை கலைக்களஞ்சிய எழுத்து முறை என்பார்கள். எக்கோ தன் பங்குக்கு ஒரு அறிவியல் கதையும் எழுதி இருக்கிறார். போர்ஹேவை உயரமான மனிதர் என்று வைத்துக் கொண்டால், அவர் தோள்களின் மேல் ஏறி நிற்பவராக எக்கோவைக் குறிப்பிடலாம்.

இலக்கியம் என்பது தீவிரமான, சிடுமூஞ்சித்தனமான மனிதர்களுக்காக எழுதப்படுவது; ஏனெனில், நகைச்சுவை இலக்கியத்துக்கு எதிரானது; சிறந்த இலக்கியம் உயர்கலை, நகைச்சுவை இலக்கியம் தாழ்ந்த கலை’ என்பது போன்ற கட்டுக்கதைகளைத் தகர்த்தவர் எக்கோ. பார்த் முன் வைக்கும் பிரதி தரும் இன்பத்தைத் தன் பிரதிகளில் சாதித்தவர். தனக்கு முன்பு இருந்த நாவல் என்ற புனைகதையின் வரைபடத்தை மாற்றி அமைத்தவர். இத்தாலிய இலக்கியத்திலும் சரி, உலக இலக்கியத்திலும் சரி அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. இன்னொருவரால் ஈடு செய்வதற்கு முடியாத இடம்தான் அது.

##########

இறைச்சி Meat ( சிறுகதை ) / பிரேசிலியன் : செர்ஜியோ டவாரெஸ் / SÉRGIO TAVARES ஆங்கிலம் : ராஃபா லம்பார்டினோ RAFA LOMBARDINO / தமிழில் ச.ஆறுமுகம்

download

செர்ஜியோ டவாரெஸ் பிரேசிலின் ரியோ டி ஜெனிரா மாநிலத்தில் நிட்டெரோய் நகரத்தில் 1978ல் பிறந்தவர். அவர் ஒரு பத்திரிகையாளர், புத்தகத் திறனாய்வாளர் மற்றும் புனைகதைப் படைப்பாளர். அவரது படைப்புகள் பிரேசில் நாளேடுகள் மற்றும் சிற்றிதழ்களில் வெளியாகின்றன. இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அவற்றில் Cavala (“Mackerel,” 2010), ‘’கானாங்கெழுத்தி’’ தொகுதி National Sesc Literary Award தேசிய இலக்கிய விருதினை வென்றுள்ளது. ரியோ டி ஜெனிராவிலுள்ள School of Public Service Foundation (Fesp) என்ற அமைப்பு 2005ல் நிகழ்த்திய இலக்கியப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

பிறந்தநாளை மையக்கருத்தாகக் கொண்டு உலகம் முழுவதும் எண்ணிலடங்காத சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி `பிறந்தநாள் கதைகள்` என்ற பெயரில் ஒரு நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அந்த நூலுக்காகவே ஒரு பிறந்தநாள் கதை எழுதி அத்தொகுப்பில் சேர்த்தார். தற்போது தமிழாக்கம் செய்யப்படுகிற கதையும் பிறந்தநாள் கதைதான் என்றபோதிலும், இக்கதை ஏற்படுத்துகின்ற அதிர்ச்சியிலிருந்து மீண்டுவருவது அத்தனை எளிதல்ல.

*******

ஏனெனில், அது, அவனது பிறந்த நாளாக இருந்தது. `இது வேண்டும், அது வேண்டும்` எனத் தேர்வுசெய்வதற்கான வாய்ப்புக்கே இடமில்லாமலாகிப்போன வாழ்க்கையில் அவன் அப்படியொன்றுக்கு முன்னுரிமை கொடுத்ததற்கான ஒரே காரணம், அதுதான். எந்தப் பொம்மையும் தேவையில்லையென்று அவன் அவனது அப்பாவிடம் சொல்லிவிட்டான்; தினமும் பீன்சும் சோறும், தின்று, தின்று அலுத்துப் போயிருந்தான்; ஏன், சிலநேரம் முட்டைகள் கூடச் சாப்பிட்டிருக்கிறோமே என்று அவனது அப்பா வாதிட முயற்சித்தார். ஆனால், அது எப்போதாவது அபூர்வமாக இடம்பெறுகின்ற ஒன்று : மதியத்துக்கும் சரி, இரவுக்கும் சரி, சோறும் பீன்சும்தான்.

பையன் இறைச்சி கேட்டான். அதுவே அவன் கேட்ட பிறந்தநாள் பரிசு. நல்ல, பெரிய, கட்டித் துண்டாக வாட்டிய இறைச்சி –– வெங்காயமும் இதர பொரிப்புகளும் சேர்ந்த ஸ்டீக். தெருவில் மிட்டாய் விற்கும்போது, அவன் ஒருநாள் அதைப் பார்த்திருந்தான். தோள்வார் காற்சட்டை அணிந்த ஒரு பருத்த மனிதர் சிற்றுண்டி விடுதியின் கண்ணாடிச் சுவற்றுக்குப் பின்புறமாக அதைத் தின்றுகொண்டிருந்தார். அந்தப் பருத்த மனிதர் அதை வெள்ளிக் கரண்டி, கத்தி மற்றும் முட்கரண்டிகளால் ஒவ்வொரு அசைவிலும் திருப்தியை வெளிப்படுத்திக்கொண்டு, சாப்பிட்டார்; இறைச்சித் துண்டினைக் கத்தியால் வெட்டும்போது, அதிலிருந்து வடிந்த செம்பழுப்புநிறக் குழம்புச்சாறு அந்தச் சோற்றுப் படுக்கையின் மீது ஊறிப் படிந்தது. கைக்கும் திறந்த வாய்க்குமாகக் கையசைவுகள் மற்றும் மணிக்கட்டு மூட்டு வளைவுகள்; மெல்லுதல் மற்றும் சுவைத்தலின் இயக்க அசைவுகள்; பையன், கண்களை மூடிக்கொண்டு, எச்சில் ஊறும் நாக்கைச் சுழற்றி, அவனது பருத்த உதடுகளை ஈரமாக்கி, காரத்தின் ஆனந்தச் சுவையை அனுபவித்து, அவனறியாத அந்த அசைவுகளை மெதுவாக மீண்டும் மீண்டுமாகச் செய்து, அவனது அப்பாவிடம் ஒவ்வொரு கணத்தையும் விவரித்துக்கொண்டிருந்தான்.

அதனால்தான், அவன் கூடுதல் நேரம் வேலைசெய்யத் தீர்மானித்தான். பையனுக்காக; மகனின் பிறந்த நாள் பரிசாக வாட்டிய ஒரு இறைச்சித் துண்டு- ஸ்டீக் – கொடுப்பதற்காக. காலை 6.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை அவன் வேலைசெய்யத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. திங்கள் முதல் சனிவரை. பையனின் பிறந்தநாள் முடியும் வரையிலான இரண்டு வாரங்களுக்கு இரு பணி நேரங்களும், அவன் வேலைசெய்கிற மாதிரி, மளிகைக்கடை உரிமையாளர், திருவாளர் நோட்டாவிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக அவன் கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க நினைத்தான்; யாருக்குத் தெரியும், கொஞ்சம் கேக்குகளும் – பிறந்த நாளுக்காகத் தயாரிக்கப்படும் தட்டுக்கேக் வகைகளில் ஒன்று கூட – கிடைக்கலாம். காது மடலில் பென்சில் செருகியிருந்த அந்த வயதான போர்த்துக்கீசியர், அவரது பணியாளின் கன்னத்தில் செல்லமாக இரண்டுமுறை தட்டிவிட்டு, ‘’நல்லது, இந்த ஆடம்பரத்துக்கெல்லாம் பணம் கொடுக்கிற நீ ஒரு நல்ல அப்பா.’’ என்றார்.

அதனால், அது அப்படியானது: அதிகாலை 4.00 மணிக்கு எழுந்து, பல்விளக்கவோ, காப்பி குடிக்கவோ நேரம் இல்லாமல், தொடர்வண்டியைப் பிடிக்க ஓடி, மளிகைக் கடைக்குப் போய், சரக்கு ஊர்திகளிலிருந்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மாவு மூட்டைகள் எல்லாச் சுமைகளையும் வளைந்த முதுகில், அவனது முரட்டுத் தோள்களில் ஏற்றி, கடைக்குள் இறக்கவேண்டும். பொருட்களையெல்லாம் அதனதன் இடத்தில் அடுக்கி வைத்துவிட்டு, தரையைப் பெருக்கிச் சுத்தம்செய்து, முதல் வாடிக்கையாளர்களுக்கு உதவி, அரைப் பவுண்டு வெள்ளைக் காராமணியும், அரைப் பவுண்டு மக்காச்சோளமும் அந்தப் பெண்ணுக்கு எடைபோட்டுவிட்டு, மளிகைப்பொருட்களை சில வீடுகளுக்குக் கால்நடையாகவும் வேறு சில வீடுகளுக்கு மிதிவண்டியிலுமாகக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, ஆறி அவலாகக் குளிர்ந்திருக்கும் சோற்றையும் பீன்சையும் வழக்கமான பாத்திரத்திலிருந்து தின்றுவிட்டு, இது எல்லாவற்றையும் பிற்பகலும் மீண்டுமொருமுறை செய்யவேண்டும். திங்கள் முதல் சனி வரை இப்படியேதான். களைப்பும் சோர்வும் சொல்லமுடியாதபடி அவனை அழுத்தும்போது, எல்லாம், பையனுக்காகத் தானே என்று அவன் நினைத்துக்கொண்டான். ஏனென்றால், அது அவனது பிறந்தநாள். அவ்வளவுதான். அவன் உடம்பு வலிக்கு அப்படியொரு அடி வேண்டியிருந்தது.

இன்று வரைக்கும். அப்பாடா, இன்றுதான் அந்த நாள். வேலைக்குக் கிளம்பும் முன், அவன் படுக்கையறைக்குள் முன் பாதங்களால் நடந்து, பையனின் சுருட்டை முடியில் முத்தமிட்டான். பையன் அவனது ஐந்து சகோதரர்களோடு பாயில் பங்கு போட்டுப் படுத்திருந்தான். மகிழ்ச்சியான பிறந்தநாள், மகனே! அவன் எழுந்து ஓடினான். விரைவிலேயே தூக்கத்தை உதறித் தள்ளிவிட்டு, உணவுப் பாத்திரத்தைக் கால்களில் இடுக்கிக்கொண்டு, தொடர்வண்டியில் அமர்ந்திருந்தான். சுமை இறக்குதல், அந்தந்த இடங்களில் பொறுப்பாக அடுக்கிவைத்தல், பெருக்குதல், உதவுதல், எடையிடுதல், வீடுகளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தல், மதியத்துக்குச் சோறும் பீன்சும். திருவாளர் நோட்டாவ், மீசையில் ஒட்டிக்கொண்டிருந்த ஏதோ ஒன்றை மென்றுகொண்டே, உன்னிடம் சிறிது பேசவேண்டுமென்று சொல்லிக்கொண்டே வந்தபோதுதான், அவன் நான்காவது கரண்டிச் சோற்றினை வாய்க்குள் போட்டான். அவன் தரையில் அமர்ந்திருக்க, அவனது மடியில் டப்பா இருந்தது; வயதான அந்த போர்த்துக்கீசியர், ஏற்கெனவே சொன்னது போலப் பணம் கொடுக்கமுடியாதெனச் சொல்லிக்கொண்டிருந்ததை, ஆறிப்போன சோறும் வாயுமாக, அவன் கவனித்துக்கொண்டிருந்தான். சரக்குதார்களுக்குத் தீர்க்கவேண்டிய கடன், வானளவுக்கு ஏறிவிட்ட தக்காளி விலை, இன்னும் என்னென்னவோ சாக்குப்போக்குகள். அவனால் மேற்கொண்டு சாப்பிடமுடியவில்லை. அவன் கோபத்தின் நெருப்பில் எரிந்துகொண்டிருந்தான். முறிந்துபோன ஒப்பந்தத்திற்காக அல்ல; பையனின் ஏமாற்றத்தின் முன் நிற்கப்போகின்ற கையாகாலாகாத்தனத்திற்காக. கயிற்றுச் சுருணைக்கு விரைந்து நடந்து, கத்தியை எடுத்து காற்சட்டைப்பைக்குள் மறைவாக வைத்தான்.

சுட்டெரிக்கும் கோபம் போய்விடவில்லை. நெருப்பு அவனை எரிக்க, எரிக்க, அவன் கோபத்திற்குத் தூபம் போட்டுக்கொண்டிருந்தான். வேலைநாளின் முடிவில், அந்த வயதான போர்த்துக்கீசியரின் மனைவி எட்டுமணித் தொலைக்காட்சித் தொடர்நாடகம் பார்க்க உள்ளே போனாள். மளிகைக்கடைக்குள் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே தனியாக இருந்தார்கள். திருவாளர் நோட்டாவ் நோட்டுப் புத்தகமும் பென்சிலுமாக, அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, அன்றைய கணக்கைக் கூட்டிக் கழித்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கு மட்டுந்தான் அறை முழுவதுக்குமான வெளிச்சமாக இருந்தது. அவன் நிழலில் மறைந்து, கைநகங்கள் உள்ளங்கையில் அழுந்திப் பதியுமாறு, கத்தியின் கைப்பிடியை இறுக்கிப் பிடித்து உருட்டிக்கொண்டிருந்தான். அவன் கணக்கை முடித்துவிட எண்ணினான்.

உட்கார்ந்திருந்த மேசை விளிம்பின் நீட்சியை உரசிக்கொண்டிருந்த அவன், பையனின் முகத்தின் எடையில் நொறுங்கிக்கொண்டிருந்தான். தீ கொழுந்து விட்டெரிகிறது. படைத்தவனே இல்லாமற்போகும்படி, அவனை அழித்துவிட நினைக்கிறான்; அந்தத் தடித்த கழுத்தை நோக்கி, கத்தியின் கூர்முனையோடு நகர்கிறான். இருந்தாலும், அந்த மனிதரின் அருகில் செல்லச்செல்ல, அவனுடைய ஆறு மகன்களும் அவன் நெஞ்சுக்குள் எழுகின்றனர்; அவன் கைதாகிவிட்டால், அவர்களுக்கு என்னவாகும்? குற்றம் ஒன்றினைச் செய்யும்போது கொல்லப்பட்டுவிட்ட அவனது சகோதரனின் மகன்களுக்கு நேர்ந்த கதிதானே அவர்களுக்கும் ஆகும்: பையன்களும் குற்றவாளிகள் ஆனாகிப்போனார்கள், விடாமல் தொடரும் சுற்று வட்டம். அவன், அவனது குழந்தைகளுக்கும், அதையேதான் விரும்புகிறானா? அவன் கத்தியை மடக்கித் தூரமாக வைத்துவிட்டு, காசாளரைவிட்டும் அகன்றான். மூடியிருந்த இரும்பு உருளைக் கதவிலிருந்த சிறிய வாசல் வழியாக அவன் வெளியே காலெடுத்து வைக்கும்போது, அவனைப் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டான். அவன் தலையைத் திருப்பி, நோக்கியபோது, பத்து ரியால் நோட்டு ஒன்றைக் கண்டான். ‘’எடுத்துக்கொள், இப்போதைக்கு இதுதான் என்னால் கொடுக்கமுடிந்தது. போயி, பையனுக்கு எதாவது வாங்கிக்கொடு.’’

பத்து ரியால்களை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யமுடியும்? தொடர்வண்டிச் சீட்டுக்கும் ஒரு வாய்க் கச்சகா1வுக்கும் போக என்னதான் மிஞ்சிவிடும்? கச்சகா உள்ளே போகாமல், அவனால் முகம் காட்டமுடியாது. வேறு வழியில்லாமல், கழுத்தில் சங்கிலி மாட்டி, இழுக்கப்படும் நாய் தரையோடு தரையாக நகர்வதைப் போல, அவனும் நகர்ந்து செல்கிறான். சந்தைக்குள் நுழைந்து, உருளைக்கிழங்கு, வெங்காயம், துண்டு கேக் பொதி ஒன்று மற்றும் கொஞ்சம் ரொட்டி போண்டாக்கள்2 வாங்குகிறான். கடையில், காட்சிக்காகத் தொங்கவிட்டிருக்கும் இறைச்சித் துண்டுகளைப் பார்க்கிறான்; ஆனால், அவனிடம் ஸ்டீக் வாங்குவதற்கு – இரண்டாம் தர ஸ்டீக் – வாங்குவதற்குக் கூடப் பணம் இல்லை. பையனுக்கு ரொட்டி போண்டா பிடிக்கலாமென அவன் நினைக்கிறான். பையன், நிச்சயமாக, வாழ்க்கையில் ரொட்டி போண்டா சாப்பிட்டேயிருக்கமாட்டான்; புதிதாக எதையாவது கொடுத்து, ஸ்டீக்கின் ருசியை மறக்கச் செய்துவிடலாமென அவன் நம்பினான். அது மட்டுமல்ல; ரொட்டி போண்டாக்களைத் துண்டுகளாக்கி எல்லோருக்குமாகக் கொஞ்சம் அதிகமாகவே பங்குபோட்டுக் கொடுக்கமுடியும். விரைவிலேயே மாறிவிடக்கூடியதென்றாலும் போதையின் மயக்கத்தில், அவன், தொடர்வண்டி நிலையத்துக்கு ஒரு சில அடிகள் தூரத்திலேயே இருந்ததால், அதே நம்பிக்கையைப் பிடித்துத் தொங்கினான். வாகனங்களின் போக்குவரத்து மற்றும் சட்டவிரோத வணிகம் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைபாய்ந்தது. அவனால் பையனுக்காக வேறு எதுவும் செய்யமுடியாமலாகிவிட்டது.

அந்த இடத்திலிருந்தும் சென்றுவிடவேண்டுமென, அவன் ரோட்டைக் கடந்து முடித்த பின்னர் தான், அதனைப் பார்த்தான். முதலில் அது, `ஆண்` என்றே நினைத்தான்; ஆனால், பின்னர் தான் அது `பெண்` என்பதைக் கண்டுகொண்டான். அவன் அதைப் பார்த்தான். இருட்டில் மூழ்கியிருந்த சந்து முன்பாக இருந்த ஒரு குப்பைத் தொட்டியின் பின்னால், கிடந்த பெரிய, பெரிய நெகிழிப்பைகளை ஆர்வமாகக் கிளறிக்கொண்டிருந்தது; அவற்றில் சில, ஏற்கெனவேயே ஆக்ரோஷமாகக் கிழிக்கப்பட்டுச் சின்னாபின்னமாகியிருந்தன. அது ஒரு பெரிய நாய். பெரிய இனங்களின் தன்னிச்சையான, கூட்டுக்கலப்பில், தடித்த ஒரு அங்கி போல அடர்ந்த கறுப்பு முடியைப்பெற்றிருந்த அது, சரியான வளர்ப்பிலிருந்தால், இன்னும் அழகாகத் தோன்றியிருக்கும். அதன் மடி, காம்புகள் உப்பி, அதன் முன்னங்கால்களுக்கும் பின்னங்கால்ளுக்கும் இடைப்பட்ட அடிப்பாகம் ஒரு இளஞ்சிவப்புச் சட்டை போலத் தோன்றியது. ஒரு சில நாட்களுக்கு முன்பே குட்டிகளை ஈன்றிருக்குமெனத் தோன்றியது.

அவன், யாராவது இருக்கிறார்களாவெனச் சுற்றிலும் பார்த்துக்கொள்கிறான்; அதனை எச்சரிக்கையுடனேயே அணுகுகிறான். அது நட்புணர்வுடனேயே தோன்றுகிறது. அவன் பையைத் திறந்து ஒரு ரொட்டி போண்டாவை எடுக்கிறான். அதை நாயை நோக்கி, அதன் மீது பட்டுவிடாமல் கவனமாக எறிகிறான். அந்தப் பெண்நாய் எழுந்து நின்று, ஒரு சில தப்படிகளை நிச்சயமில்லாமலே எடுத்து வைத்து, சுற்றிலுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பின் கடைசியில் அதற்கு அளிக்கப்பட்ட உணவினை முகர்ந்துவிட்டு, ஒரு கடி கடித்துப் பார்க்கிறது. அவன் மீண்டும் மீண்டும் ஒவ்வொன்றாக எறிந்து, கடைசியில் மொத்தத்தையும் அதற்கே கொடுக்கிறான். விருந்தினை நாய் சுவைக்கச் சுவைக்க, அவன் சுற்றுமுற்றும் கவனிக்கிறான். ஒரு நீள் வடிவிலான பெரிய உருட்டுக்கல் ஒன்றைக் காணுகிறான். அவன் அதை எடுத்துக்கொண்டு நாயை நோக்கி அரவமில்லாமல் நகர்கிறான். அந்தப் பெண்நாயின் மிக அருகில் நின்றுகொண்டு, கல்லைத் தலைக்கு மேல் உயர்த்தி, மிகச்சரியாக, நாயின் தலையில் போடுகிறான். நாய் அப்படியே கீழே சாய்கிறது; இரத்தம் பீறிட்டுக் குமிழியிடக் கூக்குரலிடுகிறது. அதன் நாக்கு வெளித்தள்ளி, அதன் நுனி, மூக்கின் மேலாக வளைகிறது. அவன் கல்லை மீண்டும் தூக்கிப் போடும் முன் எதிர்க்க முனைகிறது. பின்னர் அவன் வெங்காயத்தோடு உருளைக்கிழங்கையும் தூர எறிந்துவிட்டு, அந்தக் காலிப்பையையே கையுறையாக்கி, நாயைச் சந்துக்கு உட்தள்ளுகிறான்; கையைச் காற்சட்டைப் பைக்குள் நுழைத்து, கத்தியை எடுத்து, அந்தக் கொஞ்ச வெளிச்சத்திலேயே வேலையைத் தொடங்குகிறான்.

வீட்டில் ஒரு விருந்து நடந்தது. பையன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததை அவன் பார்த்ததேயில்லை. வெங்காயம் மற்றும் இதர பொரிப்புகளோடு அப்படிப் பொரித்து வாட்டிய கனத்த இறைச்சித்துண்டினை அவன் சாப்பிட்டான்; வியப்பில் வாய்பிளந்து நின்றான். ஒருவர் தவறாமல் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்; எப்படிப்பட்ட ஒரு விருந்து! அது மாதிரி ஒன்று இதுவரை நிகழ்ந்ததேயில்லை! மீதி கூட ஆயிற்று! பின்னர் அவர்கள் பாடினார்கள்: இனிய பிறந்த நாள்,’’ தட்டுக்கேக் மீது மெழுகுதிரி ஏற்றவில்லையே என்று கூட நினைத்தார்கள். குடும்பம் மேசையின் முன் கூடியது. பையன் முதல் துண்டினைத் தந்தைக்கு அளித்தான். இறுக்கம் நிறைந்த ஒரு தழுவல், பையனின் உடம்பிலிருந்த மென்மையான எலும்புகள் ஒவ்வொன்றையும் அவன் உணர்ந்தான். மிக்க நன்றி, அப்பா! பையனின் உதடுகளிலிருந்து தந்தையின் காதுக்கு. அவன் பையனிடம், உறுதி அளித்தான்: இறைச்சி சாப்பிடுவதற்காக அடுத்த பிறந்தநாள் வரை காத்திருக்கவேண்டியிருக்காது. மீண்டும் அப்படி நிகழாது.

••••••••

குறிப்புகள் :-

கச்சகா1 – கரும்புச் சாற்றில் தயாரிக்கப்படும் மலிவான வெண்ணிற ரம்.

ரொட்டி போண்டா2 –இரண்டு வட்ட ரொட்டிகளின் நடுவில் இறைச்சித் துண்டுகள் சேர்த்தும் சேர்க்காமலும் காய்கறிகள், மசாலா கலந்த பூரணம் வைத்து தயாரிக்கப்படுவது. ஆங்கிலத்தில் இது hot dogs எனப்படுகிறது.

நன்றி : http://www.brazilianshortstories.com/brazilian-stories/meat

சாப்ளினின் அரசியல் / ஜெஃப்ரி வான்ஸ் மலையாளம் வழி தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

download

திரைப்படத்தில் அரசியல் விஷயங்களையும் தன் அரசியல் பார்வையையும் திணிக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு சாப்ளினின் பொதுவாழ்வு முழுக்க நிலைத்திருந்தது – அவர் அதை எப்போதுமே மறுத்திருந்தார் என்றபோதும். இருபதாம் நூற்றாண்டின் சரித்திரத்தில் அரசியல் கலைஞர்களில் முன்வரிசையில் இடம பிடித்தவர் சாப்ளின்.

தன் திரைப்படங்களில் சமூக விமர்சனங்களோ மெசேஜ்களோ இல்லையென்ற சாப்ளினின் வாதம் அவருடைய ஆரம்பகால திரைப்படங்களைப் பொறுத்தவரை சரியாகவே இருந்தது என்று சொல்லலாம். ‘டவ் அன்டு டயனாமைட்’ (1914), ‘பிஹைன்ட் தி ஸ்க்ரீன்’ (1916) ஆகிய திரைப்படங்களில் தொழிலாளர் போராட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் காண்பிக்கப்படுகின்றன என்றாலும் அவற்றை அவருடைய அரசியல் நிலைப்பாடுகளாகப் பார்க்க முடியாது.சாப்ளினின் அரசியல் சிந்தனைகளின் மெல்லிய நூலிழைகளை அவற்றில் காணமுடியும் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பிற்காலத்தில் வந்த முழுநீளப்படங்களில் நான்கு படங்களாவது அவருடைய வாதத்தை நிராகரிக்கின்றன. தொழிலாளியை இயந்திரத்தின் பாகமாகவே கருதுகின்ற மனிதாபிமானமில்லாத முதலாளித்துவத்துக்கு எதிராக கலகம் செய்யும் ‘மாடர்ன் டைம்ஸ், பாசிசத்தின் பயங்கரத்தைக் குறித்து முன்னறிவிக்கும் ‘தி கிரேட் டிக்டேட்டர்’, முதலாளித்துவத்தின் மினுக்கிய முகத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் குப்பைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திய ‘மெஸ்யோ வெர்தோ’, மெக்கார்த்தியின் கம்யூனிச எதிர்ப்பு எனும் சித்தப்பிரமையை கேலி செய்த ‘எ கிங் இன் நியூயார்க்’ இவை நான்குமே முழுமையான அரசியல் திரைப்படங்கள்தான். மனித சமூகம் முழுக்க ஒன்றுபட வேண்டும் என்றும் அரசியல் ரீதியான இன ரீதியான புவியியல் ரீதியான பாகுபாடுகளை மக்களாட்சியின் சமத்துவத்தால் கீழ்ப்படிய வைக்கவேண்டும் என்றும் விரும்புகிற சாப்ளினின் அரசியல் பார்வையை வார்த்தைகளாலும் காட்சிகளாலும் பதிவு செய்த படங்கள் இவை.

குழந்தைப்பருவத்திலும் வாலிபப் பருவத்திலும் அவர் அனுபவித்த கொடிய வறுமையிலிருந்தும் அனாதைத்தனத்திலிருந்தும்தான் சாப்ளினின் அரசியல் உருவெடுக்கிறது. பனிரெண்டாவது வயதில் அவர் தந்தை இறந்தார் எனினும் வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து எந்த ஆதரவும் கிடைத்திருக்கவில்லை. பசி சகித்து சகித்து பைத்தியமாகிவிட்ட அம்மாவோ நெடுங்காலம் மனநோய் மருத்துவமனையில். சகோதரன் சிட்னியுடன் அனாதை ஆசிரமங்களில்தான் நெடுங்காலம் சாப்ளின் வாழவேண்டியிருந்தது. பிறகு ஊரூராய்த் திரியும் நாடகக் கம்பெனியில் துச்சமான சம்பளத்துக்கு காமெடியனாக வேலை. நாடகக் குழுவின் ஓர் அங்கமாக அமெரிக்காவை அடைந்தபிறகுதான் சாப்ளினிடமிருந்து வறுமை விட்டொழிந்தது. கீஸ்டோன் நிறுவனம் மூலமாக சினிமாவுக்கு வந்த சாப்ளின் வெகு சீக்கிரமாகவே பெரும் மக்கள் ஆதரவுடன் மிக அதிக சம்பளம் பெறும் நட்சத்திரமாக மாறினார். ஆடை அணிகலன்களிலும் பேச்சு நடையிலும் மேல்தட்டு மனிதனின் பாணியை வரித்துக்கொண்டாலும் வறுமையின் ஆழங்களிலிருந்து கரைசேர முடியாமல் உழலும் விளிம்பு நிலை மனிதர்களின் மீதான கரிசனத்தையும் நெருக்கத்தையும் ஒருபோதும் அவர் இழந்ததில்லை. அக்காலத்து சாப்ளின் படங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. அடிமட்ட வர்க்கத்தினரின் துன்பியல் வாழ்க்கைதான் அப்படங்களின் அடிப்படை. அவற்றின் கதாநாயகனான ‘பொறுக்கி’ வாழ்க்கையை ஓட்டுவதற்காக அதிகார வர்க்கத்துடன் நிரந்தர யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமுடையவன். சாப்ளினின் அந்தக் காலத்து ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் தரித்திரர்கள்தான். பொறுக்கியின் போராட்டங்களுக்குள் அவர்கள் சீக்கிரமாகவே ஐக்கியமானார்கள். முதலாளியின் வீங்கிய காலில் பொறுக்கி தெரியாமல் மிதித்தபோது அவர்கள் வெடிச்சிரிப்பு சிரித்தார்கள். கருணையேயில்லாத இமிக்ரேஷன் ஆபிசரின் புட்டத்தில் அவன் ஓங்கி உதைத்தபோது அவர்கள் நிறுத்தாமல் கை தட்டினார்கள். சாப்ளின் படங்களின் அசாதாரணமான ஜனரஞ்சகத்தன்மையோடு கூடவே அவை முன்வைத்த செய்திகளும் மக்கள் இதயங்களைக் கீழடக்கியது.

சாப்ளினின் அரசியல் பார்வையை மேலும் ப்ரோலிட்டேரியனாக பக்குவப்படுத்தியதில் அமெரிக்காவிலிருந்த அவருடைய ஆரம்பகால நண்பர்கள் நால்வரின் பங்கு முக்கியமானது. ஐரிஷ் வம்சாவளியில் வந்த ஜர்னலிஸ்ட் ஃப்ராங்க் ஹாரிஸ், எழுத்தாளரும் ‘தி மாஸ்ஸஸ்’, ‘லிபரேட்டர்’ ஆகிய இடதுசாரி வெளியீடுகளின் ஆசிரியருமான மாக்ஸ் ஈஸ்ட்மேன், எழுத்தாளரும் இன்டலக்சுவலுமான ரோப் வாக்னர், நாவலாசிரியரும் கட்டுரையாளருமான அப்டன் சிங்ளேர் ஆகியோர். நால்வருமே சோஷலிச அனுதாபிகளாகவும் ரஷ்யப் புரட்சி, அடிமை வர்க்கத்தின் விடுதலைக்குச் சாத்தியமான ஒரு யுகப்பிறவியின் துவக்கம் என்று நம்புபவர்களாகவும் இருந்தார்கள்.

1917-ல் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தில் ஏறியதை சாப்ளினும் அவருடைய இடதுசாரி அறிவுஜீவி நண்பர்களும் கொண்டாடியபோது அமெரிக்காவில் பெரும்பான்யானவர்கள் புரட்சியை முதலாளித்துவத்துக்கும் அமெரிக்க தனி நபர் வாதத்துக்கும் எதிரான பயமுறுத்தலாகத்தான் பார்த்தார்கள். 1920-ல் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மிஷேல் பாமர் சிவப்புக்கெதிராக முன்னறிவுப்புச் செய்தார். அதைத் தொடர்ந்து சோவியத் அனுதாபிகள் தேசம் முழுக்க வேட்டையாடப்பட்டார்கள். ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

1922-ல் சாப்ளின் தன் ஸ்டுடியோவில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வில்லியம் ஃபாஸ்ட்டருக்கு விருந்தளித்தார். அத்தோடு முதலிலேயே கண்காணிப்புக் குள்ளாகியிருந்த சாப்ளினின் பேரில் எஃப்.பி.ஐ. ஒரு ஃபைலைத் திறந்தது. பிற்காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்கள் வருகிற ஒரு பெரும் பதிவாக அது வளர்ந்தது.

அதேசமயம் இந்த ப்ரோலிட்டேரியன் அரசியல் முதலாளித்துவத்தின் மதுரங்களை அனுபவிப்பதிலிருந்து சாப்ளினை தடுக்கவில்லை. ஏழைகள் உண்மையானவர்கள் என்றாலும் ஏழ்மையிலேயே தொடர்வதில் எந்த உண்மையுமில்லை என்றும் பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்க்கும்போது எவ்வளவு உணர்வுபூர்வமாகத் தோன்றினாலும் வறுமை என்பது அடிப்படையிலேயே தீமையானது மோசமானது என்று சாப்ளின் அனுபவித்து அறிந்திருந்தார். பொருளாதார சமத்துவமின்மைக்கு அஸ்திவாரம் போட்ட முதலாளித்துவம் தன் பாவ பாரம் தாங்காமல் வெகு சீக்கிரமாகவே தகர்ந்துவிடும் என்று சாப்ளின் நம்பினார். ஆனால் அப்படித் தகர்வதற்கு துணை நிற்கும் செயல்கள் எதுவும் சாப்ளினின் பக்கமிருந்து நிகழவில்லை. அதற்குப் பதிலாக முதலாளித்துவத்தின் பயன்களை அறுவடை செய்து தன்னுடைய தன் குடும்பத்தினுடைய சொத்துக்களைப் பெருக்குவதிலேயே இருந்தது சாப்ளினின் கவனம். எவ்வளவுதான் வெறுக்கத்தக்கதானாலும் ஒரு கொள்கை நிலைநிற்கும்போது அதன் பயன்களை முடிந்தஅளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் நிலைப்பாடு.

மிகுந்த முன்ஜாக்கிரதை உணர்வுடைய ஒரு பிசினஸ்மேனாகாவும் இருந்தார் சாப்ளின். 1929-ல் அமெரிக்காவின் அடித்தளத்தையே தகர்த்த ஸ்டாக் மார்க்கெட் வீழ்ச்சியில் சாப்ளினுக்கு ஒரு பைசாகூட நஷ்டம் ஏற்படவில்லை. வீழ்ச்சியை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட சாப்ளின் அதை புத்திசாலித்தனத்துடன் கையாண்டார். மேஜர் சி.எச். டக்ளஸ் அமெரிக்க பொருளாதார நிலையை விமர்சித்து எழுதிய ‘சோஷியல் கிரெடிட்’என்ற நூலை சாப்ளின் வாசித்திருந்தார். அதில், லாபங்கள் எல்லாமே கூலியில் இருந்துதான் வருகிறது என்றும், அதனால் வேலைவாய்ப்பின்மை என்பது லாபத்தின் நஷ்டம் என்றும் மூலதனத்தின் வீழ்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கருத்து சாப்ளினை மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக 1928ல் அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி நாற்பது லட்சம் பேர் என்ற செய்தி வந்ததுமே தன் பாண்டுகளையும் ஸ்டாக்குகளையும் விற்று பணமாக்கிவிட்டார்.

1931-32 வருடங்களில் நடத்திய உலகப்பயணத்தின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியின் பலநாட்டு முகங்களைக் காண்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. மேற்கத்திய நாடுகள் கம்பளம் விரித்து மூடிய இந்த வீழ்ச்சியின் தாக்குதல்களை குணப்படுத்த ஒரு உலகக் குடிமகன் என்ற முறையிலும் ஒரு கலைஞன் என்ற முறையிலும் எதாவது செய்யவேண்டியது தன் கடமை என்று சாப்ளின் உணர்ந்திருந்தார். இதை நிரூபிக்கும் விதமாகவே அதற்குப் பின் வந்த அவருடைய அறிக்கைகளும் படங்களும் அமைந்திருந்தன. அதீதமான தேசப்பற்றின் அபாயத்தை சாப்லின் தீர்க்கதரிசனம் செய்தார். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் தான் பார்த்த தேசப்பற்று ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் படர்கிறது என்றும் அது இன்னொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் சாப்ளின் முன்னறிவிப்பு செய்தார். வின்ஸ்டன் சர்ச்சில் மட்டுமே சாப்ளின் கூறியதில் நியாயம் இருப்பதை உணர்ந்தவர். 1939 இறுதியில் ஐரோப்பா இரண்டாம் உலகப் போருக்குள் விழுந்தது. பிறகு சாப்ளின் எழுதினார்: ‘‘நான் தேசப்பற்றில்லாதவன் என்று சொல்வது அறிவுபூர்வமான, தரிசனமான காரணங்களால் அல்ல. தேசபக்தி என்ற பெயரில் சகமனிதர்களைக் கொன்றுகுவிப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? அறுபது லட்சம் யூதர்களை ஜெர்மானியர் கொன்றுகுவித்தார்கள். அது ஜெர்மனியில்தானே என்று சிலர் கேட்கிறார்கள். இருக்கலாம். ஆனால் இன வதையென்னும் இருட்டறைகள் எல்லா தேச உடம்புகளிலும் உறங்கிக் கிடக்கின்றன.’’

ஆனால் இந்த அறிக்கைகளையும் பார்வையையும் அமெரிக்க ஆட்சியாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவுக்கு வந்து யாரையும் விட புகழும் பணமும் சம்பாதித்த சாப்ளின் அதுவரையிலும் அமெரிக்கக் குடிமகன் ஆகவில்லை என்ற விஷயத்தை நோக்கி எஃப்.பி.ஐயின் கவனம் திரும்பியது. இவ்வளவு அளித்த அமெரிக்காவிடம் கடமைப்பட்டவராக சாப்ளின் இருக்கவேண்டும் என்ற அபிப்ராயம் எஃப்.பி.ஐ தலைவர் எட்கார் ஹூவருக்கு இருந்தது.

1938-ல் வெளிவந்த ‘மாடர்ன் டைம்ஸ்’ சாப்ளினின் முதல் முழுமையான அரசியல் திரைப்படம் ஆகும். முதலாளித்துவத்தின் மனிதாபிமானமில்லாத் தன்மையைக் குறித்தும் தொழிலாளி வர்க்கத்தின் துன்பங்களைக் குறித்ததுமான ஒரு பதிவாயிருந்தது அது. அது ஆரம்பிப்பதே, ஓட்டிச் செலுத்தப்படும் ஒரு ஆட்டுமந்தையின் காட்சியிலிருந்து பேக்டரி விட்டு வெளியேவரும் தொழிலாளிகளின் காட்சிக்கு டிசால்வ் செய்வதில்தான். இன்னொரு காட்சியில் கன்வெயர் பெல்ட்டின் வேகத்துக்கு ஈடாக நட்டை தருகமுடியாத தொழிலாளி ஒருவனை அந்த பிரமாண்ட இயந்திரம் உள்ளுக்குள் இழுத்து பல்சக்கரங்களுக்கிடையில் கடத்திச் செல்கிறது. பெரும் அளவிலான உற்பத்தி சாத்தியமான இயந்திர யுகத்திலும் தொழிலாளிக்காக குரல் எழுப்புகின்ற மாடர்ன் டைம்ஸ் ஒரு கம்யூனிச திரைப்படம் என்று படம் ரிலீசாவதற்கு முன்னமே செய்திகள் பறந்தன. நாசி ஜெர்மனியும் பாசிச இத்தாலியும் செய்திகளின் அடிப்படையில் படத்தை திரையிட அனுமதி மறுத்தன. ஹிட்லர் சாப்ளினின் எல்லாப் படங்களையும் நிராகரித்தார்.

நாற்பதில் வெளிவந்த ‘த கிரேட் டிக்டேட்டர்’ ஹிட்லரை மேலும் ஆத்திரப்படுத்தியது. இந்தப் படத்தில் சாப்ளின் ஹிட்லரைப் போன்ற உருவமுள்ள ஹிங்கல் என்னும் சர்வாதிகாரியாகவும் ஹிட்லருக்கு இரையான யூதனாகவும் திரையில் தோன்றி ஹிட்லரை வேண்டுமான அளவு கேலி செய்தார். கேலிசெய்வதற்கு மேலாக ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நடமாடும் பச்சையான பாசிசத்தை போர்பயம் காரணமாக பார்க்காததுபோல் பாவிக்கின்ற உலகத்துக்கு ஒரு தாக்கீதாகவும் இந்தப் படம் அமைந்தது. படத்தின் தயாரிப்பு துவங்கிய 38-ல் அமெரிக்காவும் மெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் ஹிட்லரின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ஒரு ஆன்ட்டி-ஹிட்லர் சினிமாவின் வியாபாரத்தைக் குறித்து தயாரிப்பாளர்களான யுனைடட் ஆர்டிஸ்ட் பெரும் குழப்பத்தில் இருந்தது. ஆன்ட்டி-ஹிட்லர் பிரச்சாரம் அடுத்த உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று அமெரிக்கர்கள் பயந்திருந்தது அந்தக் காலத்தில் சாப்ளினுக்குக் கிடைத்த குற்றச்சாட்டுக் கடிதங்களிலிருந்தும் கொலை மிரட்டல்களிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது.

விமர்சகர்கள் எல்லோருமே படத்தின் கடைசிக் காட்சியில் பிரசங்கம் அனாவசியமானது என்றும் படத்தின் கட்டமைப்பை அது குலைத்துவிட்டது என்றும் விமர்சித்தார்கள். சாப்ளின் பார்வையாளர்களை நோக்கி கம்யூனிசத்தின் விரலை சுட்டுகிறார் என்று நியூயார்க் டெய்லி நியூஸ் எழுதியது. ஆனால் ரசிகர்கள் அந்தப் பிரசங்கத்தை மனதார வரவேற்றனர். அதன் வசனத்தை அச்சடித்து விநியோகித்தார்கள். பிரசங்கத்தை திரும்ப நிகழ்த்த பல மேடைகளிலும் அழைக்கப்பட்டார் சாப்ளின். லண்டனில் படம் ரிலீஸ் செய்கையில் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் போர் துவங்கிவிட்டிருந்தது. அதனால் படமும் அந்தப் பிரசங்மும் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது. 41 இறுதியில் அமெரிக்கா போரில் நேரடியாகவே நுழைந்தவுடன் படத்தின் மீதான அமெரிக்க மனோபாவம் இன்னும் வலுப்பெற்றது. 44-ல் பிரான்சின் விடுதலையைத் தொடர்ந்து பிரெஞ்சு மக்கள் பார்ப்பதற்காக ‘டிக்டேட்டரின்’ பிரெஞ்சு மொழியில் டப் செய்யப்பட்ட பிரிண்டுகள் தேவை என்று அனைத்துக்கட்சிகளின் சுப்ரீம் கமேன்டரான ஜெனரல் ஐசன் ஹோவர் சாப்ளினுக்கு நேரடியாகவே கடிதம் எழுதினார்.

ஹிட்லருக்கெதிரான போரில் அமெரிக்காவுக்குத் துணை நின்ற சோவியத் யூனியனுக்கு எதிராக, போர் முடிந்த பிறகு, அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் கடுமையான எதிர்பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டது சாப்ளினை மிகவும் வருத்தமடையச் செய்தது. அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் மொத்தமாக ஏற்பட்டதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு நஷ்டம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருந்தது. அதைக் காணாதது போல் நடிப்பது நீதியல்ல என்று சாப்ளின் கருதினார். அதனால் ‘சோவியத் யூனியன் சகாய சமிதி’ என்ற அமைப்பு சான்பிரான்சிஸ்கோவில் நடத்திய சம்மேளனத்தில் அவர் பங்குகொண்டார். பத்தாயிரக்கணக்கான மக்களின் முன்நின்று ‘தோழர்களே’ என்று விளித்து நடத்திய சொற்பொழிவில் சாப்ளின், தேச மறு உருவாக்கத்தில் சோவியத் யூனியனுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க மக்களைக் கேட்டுக்கொண்டார். ‘‘கம்யூனிஸட்டுகளும் நம்மைப் போன்றவர்கள்தான்.’’ அவர் சொன்னார்: ‘‘கை கால்களை இழந்தால் நம்மைப் போலவே அவர்களும் கஷ்டப்படுவார்கள். நம்மைப் போலவே அவர்களும் இறப்பார்கள்.’’

ஆனால் அவருடைய அரசியல் அறிக்கைகளுக்கான எதிர்வினைகள் அவர் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை. 1947-ல் வெளிவந்த ‘மெஸ்யோ வெர்தோ’ என்ற திரைப்படம் சாப்ளின் எதிரிகளுக்கு, மக்களை அவருக்கு எதிராக திருப்பி விடுவதற்கான சக்திவாய்ந்த ஆயுதமாக அமைந்தது. பணக்காரப் பெண்களை மணந்து கொண்டு அவர்களின் சொத்து கையில் கிடைத்தவுடன் கொலை செய்துவிடும் ஒரு ஆன்ட்டி-ஹீரோ கதாபாத்திரம் வெர்தோ. முதலாளித்துவ நிலைமைகள்தான் தன்னை அப்படி செய்ய வைத்தது என்று வெர்தோ நீதிமன்றத்தில் சொல்கிறான். இது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.‘அமெரிக்கன் லெஜியன்’ என்ற வலதுசாரி அரசியல் அமைப்பு படம் திரையிட்ட தியேட்டர்களில் பிக்கெட்டிங் செய்தது. அவர்களிடம் சாப்ளின் சொன்னார்: ‘‘நான் கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் பாசிசத்துக்கு எதிரான போரில் முன்னணியில் இருந்தது ரஷ்யாதான் என்பதை நான் மறக்க மாட்டேன். அதற்காக அவர்களிடம் நன்றியறிதல் உண்டு எனக்கு. அவர்களை வெறுப்பதன் மூலம் உங்களுக்கு விருப்பப்பட்டவன் ஆக நான் தயாரில்லை.’’

‘மெஸ்யோ வெர்தோ’ வெளிவந்த அதே சமயத்திலேயே, அமெரிக்க சினிமா வர்த்தகத்தில் கம்யூனிசத் தலையீடுகளைக் குறித்து விசாரிக்கும் ‘ஹவுஸ் ஆஃப் அன்அமெரிக்கன் ஆக்டிவிட்டீஸ் கமிட்டி’ செயல்படத் துவங்கியது. விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்பட்ட முதல் பத்தொன்பது பேர்களில் சாப்ளினும் ஒருவர். எஃப் பி ஐயைத் தொடர்ந்து இமிக்ரேஷன் அன்ட் நாச்சுரலைசேஷன் துறையும் சாப்ளினுக்கு எதிராகத் திரும்பியது.

ஐம்பதுகளின் துவக்கத்தில் சாப்ளின் எதிர்ப்பு மனோபாவம் அதன் உச்சத்தை அடைந்திருந்தது. ஒரு புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கு பெற வந்த சாப்ளினின் முகத்தில் ஒருவர் காறித்துப்பிய சம்பவமும் நடந்தது.

52-ல் ‘லைம்லைட்’டின் வோர்ல்ட் பிரீமியரில் பங்குகொள்வதற்காக லண்டனுக்கு புறப்பட்ட சாப்ளினுக்கு துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்பிய உடனே அமெரிக்க அட்டர்னி ஜெனரலிடமிருந்து தந்தித் தகவல் வந்து சேர்ந்தது. சாப்ளினுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பெர்மிட்டை ரத்து செய்யும் உத்தரவு அது.

சாப்ளினின் அரசியல் பார்வையிலிருந்த முக்கியமான பிழையே, தன் கதாபாத்திரமான தேசமில்லாத பொறுக்கியை உலகம் புரிந்துகொண்டு அங்கீகரித்ததைப் போலவே தன்னையும் தேசமில்லாத குடிமகனாக உலகம் ஏற்றுக்கொள்ளும் என்ற தவறான நம்பிக்கைதான்.

அமெரிக்காவுக்கு வெளியேயான வாழ்க்கையிலும் அமெரிக்க மக்களோடு ஒத்துப்போகிற எந்த நடவடிக்கையும் சாப்ளின் தரப்பிலிருந்து உண்டாகவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களை மேலும் ஆத்திரமடைய வைக்கும் விதமாக அவருடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன. 1954-ல் கம்யூனிஸ்ட் சீனாவின் பிரதமர் சௌ என் லாயியை சந்தித்தார். அந்த வருடமே சோவியத் யூனியன் வழங்கிய வோல்டு பீஸ் பிரைசையும் ஏற்றுக்கொண்டார்.

அந்தக் காலத்தில் அவர் தயாரித்த ‘எ கிங் இன் நியூயார்க்’ ஒரே சமயத்தில் சுயசரிதையாகவும் அரசியல் ரீதியானதாகவும் அமைந்திருந்தது. அணுகுண்டுகளை வைத்து குறைந்த செலவில் சக்தி தயாரிக்கத் தன்னால் முடியும் என்ற திட்டத்தோடு அமெரிக்கா வருகின்ற ஒரு வெளிநாட்டு ராஜாவின் கதையினூடே தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அணு ஆயுதங்களைப் பெருக்குவதற்கெதிரான தன்னுடைய அச்சத்தைத்தான் அவர் அதில் கூறினார். படத்தின் இறுதியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகளுக்கு எதிராக விசாரணை நடத்தும் கமிட்டிக்கு முன்பாக ராஜா நிறுத்தப்படுகிறார். விசாரணை பல நாடகீயமான திருப்பங்களுடன் நடக்கிறது. இறுதியில் மிகவும் குழம்பிப்போன ராஜா தெரியாமல் அழுத்திவிடும் ஃபயர் ஹோசினால் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் தண்ணீரில் குளிக்கிறார்கள். அமெரிக்காவில் தன்னை அடக்குமுறை செய்தவர்களிடம் தன் காமெடி மூலம் பதிலடி கொடுத்தார் அவர்.

‘எ கிங் இன் நியூயார்க்’குக்குப் பிறகு சாப்ளினுக்கு அரசியல் மீதான ஈர்ப்பு குறைந்து வந்ததைக் காண முடியும். தன் தொழிலையும் குடும்பத்தையும் பராமரிப்பதிலேயே அவர் கவனம் இருந்தது. 1960-ல் ஒரு நேர்முகத்தில் கூறுகிறார்: ‘‘இறுதியாக அலசிப் பார்த்தால் நான் ஒரு கோமாளிதான். வெறும் கோமாளி மட்டுமே. எந்த ஒரு அரசியல்வாதியையும் விட மிக உயரத்தில் எனக்கு இடம் தந்தது அதுதான்.’’

1971-ல் லைஃப் இதழுக்கு அளித்த பேட்டியில் சாப்ளின் சொன்னார்: ‘‘அமெரிக்கா எனக்குப் பிடிக்கும். எப்போதும் பிடிக்கும். அமெரிக்காவிடம் எனக்கு வெறுப்போ பகைமையோ கிடையாது. நான் வாழ்ந்த காலம் முழுவதும் நீங்களும் வாழ்ந்து பார்த்தால் உங்களுக்கும் புரியும் எல்லா அரசியலும் முட்டாள்தனமானது, சிறுபிள்ளைத்தனமானது என்று” வாழ்க்கையின் பெரும்பகுதியை அரசியல் சிந்தனைகளில் செலவிட்ட ஒரு மனிதரிடமிருந்து இப்படியொரு அறிக்கை கவனிக்கத்தக்கது.

1972 ஏப்ரலில் சாப்ளின் அமெரிக்காவுக்குத் திரும்பச் சென்றார். நியூயார்க் லிங்கன் சென்டர் பிலிம் சொசைட்டியின் விருதும் ஹாலிவுட் மோஷன் பிக்சர் அகாதமியின் ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட்’ விருதும் பெற்றுக்கொள்வதற்காக.

இன்று சாப்ளின் அதிகமாக அறியப்படுவது அவருடைய அரசியல் நிலைப்பாடுகளின் பேரில் அல்ல. அவர் படைத்த பொறுக்கி என்ற விரும்பத்தகுந்த கதாபாத்திரத்தின் பேரில்தான். ஆனாலும் இருபதாம் நூற்றாண்டு கண்ட மிகப் பெரிய அரசியல் கலைஞன் அவர்.

இந்தப் பதவி அவரை நாசத்தின் எல்லையில் தள்ளியது. அதே சமயம் அவருடைய அசாதாரணமான படைப்புகளின் அடியோட்டமாகவும் அது திகழ்ந்தது.

———

நன்றி : ‘சாம்ஸ்காரிக பைத்ருகம்’ மலையாள மாத இதழ்

பாரதி வழி நவீனத்துவ ஒளி / பெருந்தேவி

images (10)

சில வருடங்களுக்கு முன்னர் (2011) பாரதியார் மகாகவியா என்பது குறித்து இணையத்தில் எழுத்தாளர்கள் ஜெயமோகனுக்கும் எம்.டி. முத்துக்குமாரசாமிக்குமிடையே (எம்.டி.எம்) தீவிர விவாதம் நடந்தது. நவீனக் கவிதையின் குணங்கள் என்ன, அதன் அழகியல் என்ன, அந்த அழகியலில் மரபின், தத்துவத்தின் பங்கென்ன, நல்ல கவிதை என்று அடையாளப்படுத்தப்படுவது மொழிபெயர்க்கப்படக்கூடியதா இல்லையா போன்ற பல புள்ளிகளையும் தொட்டுச்சென்ற, பலரும் பங்குபெற்ற விவாதமாக அந்த விவாதம் அமைந்தது. என்னைப்போன்ற வாசகர்கள் இவ்விவாதத்திலிருந்து கற்றவை பல. தமிழ்ச் சூழலில் அரியதொரு அனுபவம் அது. அவ்விவாதத்துக்குச் சற்றே பின்னோக்கிச் செல்வோம். ரசனைவாத அழகியல் என்கிற தன் தரப்படுத்தல் சட்டகத்தில் பாரதி மகாகவியா என்ற கேள்வியை எழுப்பினார் ஜெயமோகன். பாரதியின் கவிதைகள் “பெரும்பாலானவை சம்பிரதாயமானவை, பெரும்பாலும் அப்பட்டமான குரல்கொண்ட பிரச்சாரக் கவிதைகள்” என்பது அவரது மைய வாதமாக இருந்தது. இந்தக் கருத்தைக் கடுமையாக மறுத்த எம்.டி.எம் தரப்படுத்தல்களுக்கும் சந்தைப்பொருளாதாரத்துக்குமான உறவைச் சுட்டிச் சொல்லி, ஜெயமோகனின் ரசனைவாதத் தரப்படுத்தல் எந்தக் கருத்தியல் எந்திரங்கள் சார்ந்தவை என்று கேட்டிருந்தார். ஜெயமோகன் இதுவரை பதில் தராத கேள்வி அது. ரசனைவாதக் கருத்தியலுக்கும் சமூகப் படிநிலை (சாதி, வர்க்க, பால் படிநிலைகள் உட்பட) அதிகாரத்துக்குமான உறவு விமர்சிக்கப்படவேண்டியதும் தொடர்ந்து பரிசீலிக்கப்படவேண்டியதும் ஆகும். இதைச்சுட்டிக் கேள்வி எழுப்பிய எம்.டி.எம், “மகாகவி என்றழைப்பது தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் நவீனத்துவ வாசலை திறப்பதற்கு நம்மளவிலான சிறு முயற்சி,” என்று வாதிட்டார். எம்.டி.எம் தன்னுடைய வாதங்களில் பாரதியின் கவிதைகளின் முக்கியத் தன்மைகளாக, ”தமிழ் கவித்துவ அகத்தின் குரலாக” அவை இருப்பதையும், சங்க இலக்கியம், பக்தி, நாட்டுப்புற மரபுகள் போன்ற “தமிழ் மரபுகளின் பல நீட்சிகள்” பாரதியிடத்தில் சங்கமிப்பதையும் குறிப்பிட்டார்.
என்னுடைய இந்தக் கட்டுரையில் பாரதியின் கவிதைகளில் நவீனக் கரிசனைகளினூடே தமிழிலக்கியப் பரப்பில் முன் எப்போதுமில்லாத விதத்தில் தனித்துவத்தோடு நவீனத் தன்னிலை (modern subject) கட்டமைக்கப்படுகிற விதத்தை அணுகுகிறேன். அதே நேரத்தில், எம்.டி.எம் பாரதியின் அகக் குரலை முன்னிட்டு வைக்கிற சில கருத்துகளிலிருந்து நான் மாறுபடும் இடங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். பாரதி கவிதைகள் பற்றிய முழுமையான ஆய்வு அல்ல இக்கட்டுரை, பாரதியின் கவிதைகளை நோக்கி வாசகர்களை மீண்டும் ஈர்க்கும் ஒரு சின்ன முயற்சி மட்டுமே.

பாரதி விவாதத்தில் ஜெயமோகனோடு எனக்கு உடன்படக்கூடிய இடங்கள் இரண்டு இருந்தன. ஒன்று, பாரதியைத் தமிழ் மரபுக்குள் மட்டும் வைத்து எம்.டி.எம் பார்க்கிறார் என்பதை ஜெயமோகன் விமர்சித்த இடம். ஜெயமோகன் கூறுகிறபடி பாரதியின் காலகட்டத்தில் இந்தியாவில் அறிவுஜீவிகளிடையே செல்வாக்குப் பெற்றிருந்த பிரம்மஞான சபை போன்றவை பரப்பிய நவவேதாந்தம், வங்காளக் காளி உபாசனை போன்றவற்றின் தாக்கம் பாரதியிடம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. பாரதியைத் தமிழ் மரபுக்குள் மட்டுமிருந்து பார்ப்பது, அதாவது சங்கம்-தமிழ் வைணவ பக்தி போன்றவற்றின் நீட்சியான இடத்தில் தமிழுக்கேயான நவீனக்கூறுகளை முதன்முதலில் வெளிக்கொணர்ந்த கவிக்குரலாக மட்டுமே பார்ப்பது குறுகிய பார்வையேயாகும். தவிர, ஐரோப்பிய நவீனப்போக்குகளையும் முதல் உலகப் போர் போன்றவற்றையும் குறிப்பிட்டு எம்.டி.எம் பாரதியை ஐரோப்பிய நவகவி எலியட்டோடு ஒப்புநோக்கிப் பேசுகிறபோது, அதே காலகட்டத்தில் இந்தியாவின் நவீன அறிவார்த்த, கருத்தியல் போக்குகள் பாரதியிடம் பெற்றிருந்த செல்வாக்கை ஏற்றுக்கொள்வதை ஏன் தவிர்க்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது, ”இந்தியா” என்கிற ஒற்றை அடையாளம் தமிழின் சங்கம் முதலான கவிதைப் பாரம்பரியத்தின் தனித்தன்மையை மூழ்கடித்துவிடுமா, நவவேதாந்தம் என்றால் பாரதி பேசுகிற பரம் அல்லது கடவுளை முன்நிறுத்த வேண்டியிருக்குமா என்கிற கவலைகள் ஒருவேளை வரலாம். ஆனால் இவற்றையும் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்ச் செவ்வியல், பக்தி, நாட்டுப்புற மரபுகளோடு, ஐரோப்பியக் காலனியம், புத்தொளி அறிவுமரபு, அறிவியல் தொழிற்புரட்சி, நவீன அரசுருவாக்கம் போன்றவையும் நவவேதாந்தம் உட்பட இந்திய நவீனத் தத்துவப் போக்குகளும் ஊடாடிய பல்நிறப் பெயல் நீர்ப்புலம் தமிழ் நவீன இலக்கியப்புலம் என்று நாம் கொள்வதில் இழக்க ஒன்றுமில்லை, சொல்லப்போனால் இந்த கலப்பு (syncretism) தமிழ் நவீனத்துவத்தைப் பெருமைப்படுத்தக்கூடியதே.

இரண்டாவது, “மகாகவி” என்கிற சொல்லாக்கம். அழகியல் ரசனை விமர்சன அடிப்படையில் கம்பரோடும் ஷேக்ஸ்பியரோடும் ஹோமரோடும் ஒப்பிடுகையில், பாரதியிடம் உயர் கவித்துவம் கிடைக்கும் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவு என்று உள்ளொளி உணர்வில் பாரதி மகாகவி அல்ல என ஜெயமோகன் மறுக்கிறார். ரசனை விமரிசனத்தின் அடிப்படையை சிறிதும் ஏற்காத, அதை விமர்சிக்கும் நானும் “மகாகவி” எனும் அடைமொழியை ஏற்கத் தயங்குவேன். ஜெயமோகன் கூறுவதுபோல அந்த அடைமொழி அவருக்கு மிகையான அடையாளம் என்பதல்ல காரணம். சொல்லப்போனால், பாரதியின் கவிதைகளில் காணப்படும் அபாரமான, புதுமையான நவீனத்துவத் தொடக்கங்களுக்காக அவரை மகாகவி என்று வாசகர்கள் அழைப்பதிலிருக்கும் உணர்ச்சி வேகம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் எப்போதுமே பிரயோகிக்கக்கூடிய அடைமொழியாகவோ அல்லது கவிஞரின் பெயருக்கு மாற்றாகவோ ”மகாகவி”யைப் பயன்படுத்துவது, ஒரு வகையில் தமிழ்க் கவிதையின் நவீனத்துவத் திறப்புகளுக்கு ஒரு தனிநபர் ஆளுமையை மூலமாகக் காண்பதாகிவிடும். ”எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக்குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார்” என்பது எம்.டி.எம் கூறியது. ஆனால் எலியட் “the great poet” என்றே தொடர்ந்து நவீன ஆங்கில இலக்கியச் சொல்லாடல்களில் குறிப்பிடப்படுகிறாரா அல்லது அப்படியான ஒரு பயன்பாடு எலியட்டுக்கு உரித்தான தனிச்சுட்டாக இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும்.

“மகாகவி” என்று தொடர்ந்து அடைமொழியிட்டு அழைக்கும்போது, இந்த அடைமொழிமூலம் வழிபாட்டுத் திருவுருவாகப் பாரதி கட்டமைக்கப்படும்போது, தமிழ் நவீனத்துவம் குறித்து நாம் செய்யவேண்டிய விசாரணைகளிலிருந்து நம் கவனம் அகன்றுவிடும் அபாயமுள்ளது. இன்றும் அரசியல் மேடைகளில் பாரதி முழங்கப்படுவதைப் பார்க்கிறோம். “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்” என்ற வரியை மேற்கோள் காட்டாத கட்சிகள் உண்டா என்ன தமிழகத்தில்? பள்ளி மாறுவேடப்போட்டிகளிலிருந்து திரைப்படப் பாடல்கள், மேடைக்கச்சேரிகள் வரை இடையறாது நினைவுகூர்ந்துப் போற்றப்படுகிறார் மகாகவி, ஆனாலும், எம்.டி.எம் கூற்றுப்படி, பாரதியின் கவிதைகளை நாம் “கட்டவிழ்த்துப் படிக்கவில்லை,” ”ஆத்மார்த்தமாகப் பேசும் அவர் குரலுக்கு செவிமடுக்கத்” தவறிவிட்டோம் என்றால், அதற்கு வழிபாட்டுத் திருவுருவாக அவர் நம்மிடையே எஞ்சிப்போனதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அடுத்ததாக, பாரதி மகாகவி என்கிற வாதத்தை நிறுவ தமிழ் நவீனத்துவத் தன்மையை மொழிபெயர்க்க முடியாத தன்மையாக பாரதி கவிதைகளை முன்வைத்து இவ்வாறு எழுதியிருந்தார் எம்.டி.எம்: “மொழிபெயர்க்க முடியா தன்மை தமிழின் உள் கலாச்சார முகம் நோக்கித் திரும்பி தமிழ் நுண்ணுர்வுகளோடும் தமிழ் பண்பாட்டுக் குழுஉ குறிகளோடும் செறிவாகிவிட்ட தமிழ் நவீனத்துவத்தின் பண்பாகும். இந்த தமிழ் நவீனத்துவ பண்பை தமிழ்க்கவிதைக்கு தீர்மானமாக தீர்க்கமாக உருவாக்கிக்கொடுத்தவர் சுப்பிரமணியபாரதியார் ஆவார். அதனாலேயேதான் அவரை நாம் மகாகவி என்கிறோம்.” இவ்வரிகளில் மொழிபெயர்க்க முடியாத தன்மை என்பதை தமிழுக்கு விசேடமான ஒன்றாகச் சொல்லுகிறார் அவர். தமிழ் என்றில்லை, பொதுவாக மரபு வளமும் இலக்கியத்தொன்மையும் பெற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு என்று வருகிறபோது கவிதை இழப்பது அதிகம் என்பது பலரும் அறிந்த விஷயம். கவிதை, தன்னைப் பொருளாக மட்டுமே மொழிபெயர்த்தலையோ, வேற்று மொழியில் சாராம்சமாக அதைத் தருவதையோ மறுப்பது. சங்கப்பாடல்கள், பக்தி இலக்கியத்திலிருந்து பாரதி, பாரதிக்குப் பிற்பட்ட நவீன இலக்கியம்வரையிலும் கவிதையின் குணாம்சமாக இதைக் கூறமுடியும். சங்கக் கவிதைகளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்போது பட்ட சிக்கல்களை ஏ.கே. ராமானுஜன் கூட எழுதியிருக்கிறார். மரபு வளம் பெற்ற பிற மொழிகளுக்கும் இருக்கக்கூடிய சிக்கல்கள் இவை. தாகூரின் கவிதைகளின் மொழிபெயர்ப்புக் கோளாறுகளும் அவற்றின் விளைவாகச் சமரசத்துக்குள்ளான அவரது கவித்துவமும் ஆய்வுசெய்யப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் தாகூரின் கவிதைகளோ தாகூரோ சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை எனச்சுட்டும் சிசீர்குமார் கோஷ் இவ்வாறெழுதுகிறார்: “எந்த அளவுக்குத் தாகூர் எஞ்சுகிறார்? சப்த அழகு, படிமம், கவியுருவம், மொழி இவற்றின் நுட்பங்கள் மீட்கமுடியாமல் காணாமல் போய்விடுகின்றன. கூற்றுகள் போன்ற இயல்வடிவம் அல்லது கவிதையற்ற அதீதக் கவித்துவமானவை என்பதைவிட நல்ல எதுவும் மிஞ்சியிருப்பதில்லை” (1990, 29). ஆக, மொழிபெயர்க்கவியலாத் தன்மை என்பதைத் தனித்துவம் மிக்க தமிழ் நவீனத்துவ பண்பு என வரையறை செய்வது பொருத்தமாக இல்லை.

தமிழ் நவீனத்துவத்தைப் பொறுத்து பாரதியின் பங்களிப்பை எம்.டி.எம் விளக்கும்போது ”பக்தி மரபுக் கவிஞர்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களின் நிகழ்த்துத்தன்மையினை புறத்திலுள்ள பரம்பொருள் நோக்கிப் பேசும் கவித்துவ குரலின் நிகழ்த்துத்தன்மையாக மாற்றினார்கள் என்றால் பாரதி மீண்டும் அதை அகம் நோக்கிப் பேசுகின்ற நிகழ்த்துத்தன்மையுடைய நவீன குரலாக மீட்டெடுக்கிறார்,” என்கிறார். தொடர்ந்து, பாரதியின் தனித்துவத்தை நிறுவும் வகையில் அவரைத் தாகூரோடும் ஒப்பிட்டிருந்தார்: ”தமிழ் பக்தி மரபின் கவிஞர்கள் பாரதிக்கு கொடுத்த சௌகரியம் தாகூருக்கு இருந்திருக்கவில்லை. இதனாலேயே தாகூரின் கவிதைகளுக்கு உலகளாவிய வாசிப்புத்தன்மை அதிகமானபோது பாரதியின் நவீனத்துவம் தமிழ் நவீனத்துவமாய் தனித்துவம் பெற்றது.” தமிழ் பக்தி இலக்கியத்தின் தனிப்பட்ட தன்மையாக, அதன் நிகழ்த்துத் தன்மையை எம்.டி.எம் முன்வைப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிய பக்தி இலக்கியம் மேற்குப் பகுதிகள், வடநாடு என்றெல்லாம் பயணித்து வங்காளத்திலும் சைதன்யர் மூலமாகப் பதினைந்தாம் நூற்றாண்டில் செறிவுபெற்றது. இதைக் கருதும்போது சங்க இலக்கியத்தின் அகநாடகீயமும் தமிழ் பக்தியின் நிகழ்த்துத் தன்மையும் தமிழகப் பரப்புக்குள் மட்டுமே நின்றிருக்கக்கூடிய வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல முடியும். தாகூரைப் பொறுத்தவரை, சூஃபி ஞானிகளும் பால் நாட்டுப்புறக் கலைஞர்களும் மட்டுமன்றி சைதன்யர், வித்யாபதி, ஜெயதேவர் போன்றவர்களின் பக்தி மரபுகளின் பாதிப்பிருந்தது. இந்த பக்தி மரபுகளை பக்தியின் தமிழகத் தொடக்கத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்க்க முடியுமா? அதேபோல சம்ஸ்கிருதக் காவியக் கவிதைகளை அவற்றின் அலங்காரப் படிமங்களை ஒதுக்கிவைத்து வாசிக்கையில், இந்தக் காவியங்களின் உள்ளீடான கவிதை உணர்ச்சியில் தமிழ் சங்க இலக்கியத்தின் அகநாடகீயத் தன்மையின் தாக்கமிருக்கிற வாய்ப்பை நாம் சிந்திக்கமுடியும். (சங்க இலக்கியத்தின் அகநாடகீயம் சம்ஸ்கிருத வாசிப்பாளர்களுக்கு ஏற்றவகையில் மாற்றம் பெற்றிருக்கலாம் என்பது வேறு விஷயம்.) எடுத்துக்காட்டாக, ஐந்தாம் நூற்றாண்டின் காளிதாசனின் மேகதூதம். மேகதூதத்தைத் தாகூரும் மீள்புனைவு செய்கிறார் இயலாகவும் கவிதையாகவும். காதலியைப் பிரிந்திருக்கும் காதலனின் பிரிவாற்றாமை தாகூரின் மேகதூதத்தொகுப்பில் இழந்துபோன கடந்தகாலப் பண்பாட்டுப் பிரதேசத்துக்கான நினைவேக்கமாக, தவிப்பாக எழுதப்படுகிறது (பார்க்க வாஜ்பேயி 2012): ”இரவு அடர்கிறது / இரவின் தனிமை நெருங்குகிறது / சமவெளி கடந்து காற்று இலக்கின்றி முனகுகிறது / பாதி இரவு உறக்கமின்றி நான் கேட்கிறேன் / யார் நம்மை இவ்வாறு சபித்தது? / ஏன் இந்தப் பிளவு? / ஏன் இத்தனை உயரத்தில் உள்ளது நம் இலக்கு / குலைகையில் நாம் அழுவதற்கா?” இவைபோன்ற தாகூரின் மேகதூத வரிகளின் நாடகீயத்தை, நிகழ்த்துத் தன்மையை தனிப்பட்ட வாசிப்பின்போதுகூட உணரமுடியும் (வாஜ்பேயி, 102).

மேலும், எம்.டி.எம் கூறுகிறபடி தமிழ் பக்தி இலக்கிய நிகழ்த்துத்தன்மை புறத்தே இருக்கும் பரம்பொருளை முன்னிட்டுத்தானா என்றால் அவ்வாறில்லை என்றுதான் பதில் தர வேண்டியிருக்கும். அப்பரின் திருத்தாண்டகம் “மனத்தகத்தான்” என்றே ஈசனைச் சொல்கிறது. “உள்ளம் பெருங்கோயில்” என்று இறையிடத்தை அகமாக்குகிறது திருமூலர் மொழி. “சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்” என இசைக்கிறார் மாணிக்கவாசகர். “உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்துள்” என விவரிக்கிறார் பொய்கையாழ்வார். நம்மாழ்வாரோ “அளிவரு மருளினோடகத்தனன், புறத்தனன்” என்று புறத்தில் மட்டுமன்றி அகத்திலும் உறையும் இறையைப் பாடுகிறார். புறத்தில் மட்டுமே பரம்பொருளை நிறுத்திவைத்துப் பேசும் எம்.டி.எம் “பக்தியின் விசிஷ்டாத்வைதமும் உணர்ச்சி உத்வேகமும் பெற்ற கவிக்குரல்” என்று பாரதியின் கவிக்குரலை விவரிக்கையில் விசிஷ்டாத்வைதத்தைப் போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால் இறை உள்ளுறையும் அந்தர்யாமி நிலை ஆழ்வார் பாசுரங்களின் ஒரு முக்கிய உணர்வு நிலை என்பது அவர் கட்டுரைகளில் விடுபட்டுப்போகிறது. புறம் நோக்கி இறைவனைப் பாடுவதாக மட்டுமல்லாமல் அகத்திலிருக்கும் இறைவனையும் பக்தி இயக்கக் கவிஞர்கள் விளித்துப் பாடுகிறார்கள். பக்தி இலக்கியத்தில் நிகழ்த்துத்தன்மை என்பது புறத்தில் என்பது மட்டுமன்றி அகத்தோடான ஊடாட்டமாகவும்தான் இருக்கிறது, எனவே, “அகம் நோக்கிப் பேசுகின்ற நிகழ்த்துத்தன்மையை மீட்டெடுத்தல்” என்பதை நவீனத்துவத்துக்கான பாரதியின் பங்களிப்பாக, தனித்துவமான நவீனத்துவக்கூறாக எம்.டி.எம் கூறுவது பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அதேநேரத்தில், பக்தி இலக்கியத்துக்கும் பாரதியின் நவீன கவிதைகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஆனால் அந்த வேறுபாடு நிகழ்த்துத்தன்மையை அகம்நோக்கி மீட்டெடுத்தலில் இல்லை, மாறாக பாரதியின் கவிதைமொழி புதுமையான நவீனத் தன்னிலைகளின் பரப்பாக இருக்கிறது. இங்கே ’சுயம்’ (self) என்று சொல்லைப் பயன்படுத்தாமல் ’தன்னிலை’ (subject) என்கிற சொல்லை பயன்படுத்துவதற்குக் காரணமுண்டு. சுயம் எனும்போது ஏற்கெனவே ஒருவருக்கு இருப்பது அது என்பதுபோல பொருள் வருகிறது. மாறாக, மனித சுயம் தன்னாளுகை (autonomy) கொண்டதல்ல என்பதையும், அது சமூகத்தின் பல்வேறு சமூக, வரலாற்று விசைகளால், இந்த விசைகளின் ஊடே உருவாகும் சொல்லாடல்களால் தொடர்ந்து வடிவமைக்கப்படுகிறது என்பதையும் ’தன்னிலை’ என்கிற சொல் குறிக்கிறது. காலனியச் சுதந்திரப் போராட்ட எழுச்சி, ஐரோப்பியக் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், அச்சு ஊடகம், மற்றும் சனநாயகம், குடிமைச் சமூகம், சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட நவீனக் கருத்தாக்கங்கள், கரிசனைகள், செயற்பாடுகள் போன்ற பலவும் உருவாக்கும் நவீனச் சமூகத் தன்னிலைகளுக்கான முதன்மையான இலக்கியக் கலமாக, இடமாக பாரதியின் கவிதைகள் இருக்கின்றன. தமிழ் நவீனத்துவத்தின் செறிவான, சக்திவாய்ந்த தொடக்கப் புள்ளிகளை பாரதியிடத்தில் நாம் காண்பதும் இதனாலேயே.

பாரதியின் ”மனதில் உறுதி வேண்டும்” கவிதையின் அகக் குரலின் தன்மையை டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலத்தின் குரலுக்கு நிகராகக் கூறினார் எம்.டி.எம். இந்த இடத்தில், பாரதியின் நவீன அகக்குரல் எலியட்டோடு எந்த அளவுக்கு ஒப்பிடக்கூடிய ஒன்று என்பதைச் சிந்திக்கலாம். “கடவுள் கைவிட்டுவிட்ட, அமைதியின்மையில் உலக இலக்கியப் பிரதிகளெங்கும் சொற்களை எடுத்து கொலாஜ் ஆக வைக்கும் குரல்” என்று எலியட்-டின் குரல் எம்.டி.எம்-மால் விவரிக்கப்பட்டது. அமைதியில்லாத அகக்குரலை பாரதி கவிதைகளிலும் நாம் எதிர்கொள்கிறோம். ”பேயாயுழலும் சிறுமனம்,” “கொன்றழிக்கும் கவலையெனும் குழி” என்றெல்லாம் பாரதி எழுதுகிறார். என்றாலும், எலியட்டுடைய கவிதையிலிருந்து மாறுபட்ட நவீனத்தன்மையோடு இருக்கிறது பாரதியின் கவிதை.

பாழ்நிலம் கவிதையை எடுத்துக்கொள்வோம். உலகின் வெவ்வேறு பகுதிகளின் கலாச்சாரக்கூறுகளின் துண்டங்களை அங்கங்கே வைத்து இணைக்கப்பட்டிருக்கிற கவிதை இது. எம்.டி.எம் கொலாஜ் என்று கூறுவதும் இதையே என்று புரிந்துகொள்கிறேன். இந்தக் கவிதையின் முடிவில் தத்தா, தயாத்வம், தம்வதா எனும் சம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்ட வரிகளுக்கு அடுத்தவரி சாந்தி, சாந்தி, சாந்தி என்று முடிகிறது. பிரஹதாரண்யக உபநிடதத்தில் பிரஜாபதியின் புதல்வர்கள், தேவர்களும் மனிதர்களும் அசுரர்களும் உலகவாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிற முழுமுதல் ரகசியத்தைக் கூறச்சொல்லிக் கேட்கிறார்கள். பிரஜாபதி, “த” என்கிறார். அந்த ஒரே சொல் தேவர்களுக்குக் கட்டுப்பாட்டோடு இரு (தம்யதா) என்றும் மனிதர்களுக்குக் கொடு (தத்தா) என்றும் அசுரர்களுக்குக் கருணையோடிரு (தயாத்வம்) என்றும் அர்த்தமாகிறது. எலியட்டின் கவிதையில் இந்த மூன்று தொன்மக் கருத்தாக்கங்களும் நவீன மனிதரை முன்னிட்டுப் பொருத்தப்படுகின்றன. எப்படி உலகின் இன்னொரு பகுதியிலிருந்து, ஆசியாவிலிருந்து, எடுக்கப்பட்டத் தொன்மக் கருத்துகள் நவீனக் கவிதையில் இடம்பெறுகின்றன? ஒருவகையில், உலகில் எப்பகுதியிலிருந்தும் கிடைக்கும் மெய்யியலையும் பற்றிக்கொண்டு போர் பயங்கரங்களால், அழிவுகளால் உடைந்துபோயிருக்கிற நவீன மனித அகத்தை துயரோடு எதிர்கொள்ளும் தொனி எலியட்டுடைய கவிதையுடையது எனலாம். உடைந்துபோயிருக்கும் நவீன மனித அகத்தை எதிர்கொள்ளும் முகமாக உபநிடதக் கருத்துகளைக் கொலாஜ் ஆகத் தன் கவிதையில் எடுத்தாளும் எலியட் வேறொன்றும் செய்கிறார். மனிதரை மட்டும் முன்னிறுத்தி உபநிடதநூலில் அக்கருத்துகள் சுட்டும் மனிதரற்ற தேவர், அரக்கர் போன்ற இருப்புகளைப் புறந்தள்ளுகிறார்.

பாரதியின் “மனதில் உறுதி வேண்டும்” எலியட்டின் கவிதையிலிருந்து வேறுபட்ட புதிய கோணத்தைக் கொண்டதாக இருக்கிறது. முக்கியமாக, பாரதியின் கவிதை முன்மொழிகிற நவீனத் தன்னிலை இறை நீக்கம் செய்யப்பட்டதாக இல்லை. உதாரணமாக, பாரதியின் கவிதையின் முடிவில் மூன்றுமுறை வருகிற “ஓம்” மனிதரைச் சுட்டுவதாக மட்டுமே, அல்லது பாழ்நிலம் கவிதையின் கடைசிவரியைப் போல ஒரு மரபுப் படிமத் துண்டின் கொலாஜ் இணைப்பாக மட்டுமே நாம் அர்த்தப்படுத்த முடியாது. இந்து மரபுகளில் ”ஓம்” சப்த வடிவிலிருக்கும் பிரம்மத்துக்கான குறியீடாக அறியப்படுகிறது. இந்து மரபுகளில் இறை அல்லது பிரம்மத்தின் உருவை மனதுக்குள் கொண்டுவர உதவும் தீமூட்டுக் குச்சி என்றும் அது விவரிக்கப்படுகிறது. எனவே “ஓம், ஓம், ஓம்” என்கிற இறுதி வரி நவீனச்சூழலில் அமைதியிழந்த அகத்தின் “கடவுளால் கைவிடப்பட்ட” அகத்தின் அமைதியை நோக்கிய விழைவு என்பதாகச் சொல்லிவிட முடியாது. பாரதியின் கவிதையில் “ஓம்” என்பதன் மீள்கூறல்கள் பிரம்மம் எனப்படும் இறை, எங்கோ என்றில்லாமல் இங்கே என இடங்கொள்கிற சிறப்பானதொரு கவிதைத்தருணம் என்கிற புரிதல் அவசியம்.

ஓர் எளிமையான விளக்கமாக இந்தத் தருணத்தை பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் நடைமுறை வாழ்க்கையை அதனளவில் இயக்கபூர்வமாக அணுகப்பார்த்த நவவேதாந்தத்தின் பாதிப்பு என்று கருதமுடியும். நவவேதாந்தம் பேசிய (குறிப்பாக, ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தரின் வழிமுறையில் வந்தவர்கள்) தங்களை மரபார்ந்த அத்வைதிகள் என்று சொல்லிக்கொண்டாலும், நவவேதாந்தம், சங்கரரின் அத்வைதத்திலிருந்து விலகியது. சங்கரரின் அத்வைதத்தில் இகவுலக வாழ்க்கையில் தொடர்பின்றி முற்றும் ஒதுங்கி நிற்கும் பிரம்மம், நவவேதாந்தத்தில் மனிதருள் செயலூக்கம் கொண்ட உள்ளுறை ஆற்றலாக வடிவம் கொள்கிறது. ஆக, பாரதியின் கவிதைக்குரலான “ஓம்,” நவவேதாந்தம் முன்னிலைப்படுத்திய இத்தகைய ஆற்றலின் ஒலியுருவம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும். மரபார்ந்து “ஓம்” சுட்டுகிற இறையாற்றல், மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும், பெண் விடுதலை வேண்டும் என்று கவிதை நெடுக வரி இறுதிகளில் வரும் “உம்”-மோடு தொடர்புறுத்தப்படுகிறது. இந்த ”உம்” எனும் தொடரொலி, வில்லின் நாணுக்கு முறுக்கேற்றுவதுபோல நவீன மனிதனின் உலகார்ந்தச் செயலூக்க நரம்புகளை முறுக்கேற்றுகிறது.

ஆனால் நவவேதாந்தப் பார்வை இந்தக் கவிதைக்கு என்பதாகக் குறுகிய அளவில் மட்டுமே பொருந்தும். சமூக, பண்பாட்டு, தேச நிலவரங்களின் மாற்றத்தை அவாவி, சக்தி, காளி என்றும் சுதந்திரதேவி, பாரதமாதா என்றும் பருண்மையான, பழைய மற்றும் புதிய தெய்வங்களை அழைத்தும் அரற்றியும் புதிய உலகத்தைச் சமைக்க பாரதி பாடிய மற்ற பல கவிதைகளோடு நாம் தொடர்புகொள்ள இது உதவாது. பல கவிதைகளில் நவவேதாந்தத்தைவிட பக்தி, குறிப்பாக சாக்த, தாந்திரீக மரபுகள் வைணவத்தோடு பாரதியின் மொழியைச் செதுக்கி வடிவமைக்கின்றன. இனிவரும் பகுதியில், விரிவஞ்சி வைணவத்தை விடுத்து, பாரதியின் சில கவிதைகளின் தன்னிலைக் கட்டமைப்பில் சாக்த, தாந்திரீக மரபுகளின் பங்களிப்பை சுருக்கமாக எழுதுகிறேன்.

சாக்த, தாந்திரீக வழிபாட்டுமரபுகள் இயக்கம் கொள்ளும் பாரதியின் கவிதைகளில் நாம் காணும் இந்தத் தன்னிலை, பரம் அல்லது இறையிடமிருந்து விலகி நிற்கும் தன்னிலையல்ல, அது இறையிடமிருந்து அந்நியமானதுமல்ல. பொதுவாக நவீனச் சொல்லாடல்களில், கடவுள் நீக்கப்பட்ட அல்லது கடவுளால் கைவிடப்பட்ட தன்னிலை என்பது முக்கியமானதொரு கருத்தாக்கமாக, நவீனத்தின் உருவாக்கமாகப் பல சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நவீனச் சொல்லாடல்களின் தன்னிலை உருவாக்கத்தில், சுயத்தைப் பற்றிய சுயவிழிப்புணர்வு முதன்மை பெறுகிறது. அதாவது நமக்குத் தலை அல்லது கால் இருப்பதுபோலவே நமக்கான ஒரு சுயம் இருக்கிறது என்கிற விழிப்புணர்வு. கிறித்துவ இறையியல் மரபில் அகஸ்டின்–லிருந்து துவங்கி தத்துவ விசாரணைகளின் ஆய்வுப் பொருளாகியிருக்கிறது மனித சுயம். மறுமலர்ச்சிக் காலகட்டத்திலும் பின்னரும் “தனிநபர்” (individual) எனும் கருத்தாக்கம் வலுப்படுகிறபோது இந்த விசாரணைகளில் இறைநீக்கப் போக்குகள் மேலாண்மை பெறுகின்றன. ஆனால், இந்து மெய்யியல்களில், கடவுள் அப்பாலைத்தன்மையோடு (transcendent) கடந்து மட்டுமின்றி, உள்ளார்ந்தும் (immanent) இருப்பதால், இந்த மெய்யியல்களின் தாக்கமிருக்கிற பாரதி போன்ற கவிஞர்களின் எழுத்தில் தன்னிலை பற்றிப்பேசும்போது இந்த உள்ளார்ந்தத் தன்மையையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பாரதியின் கவிதைகளில் இறை புறத்தே உள்ளதாக, மனிதனின் மற்றமையாக (alterity) மட்டுமே அல்லாமல், மனிதனின் தன்னிலையோடு அடையாளம் கொள்ளுகிறதாகவும், நவீன உலகில் தனக்காகவும் தன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்காகவும் சுயபொறுப்பேற்கும் (self-responsible) மனிதத் தன்னிலையை வலுப்படுத்துவதாகவும் இருக்கிறது.

சாக்த, தாந்திரீக வழிபாடுகளை கருத்தில்கொண்டு இதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம். சாக்த வழிபாட்டை எடுத்துக்கொண்டால் அதில் சக்திக்கும் பக்தருக்குமிடையே பிளவொன்று உள்ளது. தெய்வத்துக்கும் மனிதருக்குமிடையே பொருண்மையாக இருக்கும் மாறாத இறையதிகாரப் படிநிலை அது. இறையிடமிருந்து கீழேயும் தள்ளிநின்றும் வழிபடும் பக்தரை அன்புக்கும் அருளுக்கும் ஏங்கும் குழந்தை அல்லது கருணைக்காக அரசியின் முன் நிற்கும் குடிமகள் அல்லது குடிமகன் என உருவகித்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக, தாந்திரீக உபாசனையில் மனிதர் இறையோடு, இறையாகவே அடையாளப்படுதல் நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, காளியை தாந்திரீக முறையில் உபாசனை செய்யும்போது பக்தர் காளியோடு அடையாளம்பெற்று காளியாகவே மாறிவிடுவது நடக்கிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர் தாந்திரீகச் சாதனையில் ஈடுபட்டிருந்த காலத்தில் அவர் காளியாகவே மாறினார் என்கின்றன அவரைப் பற்றிய புராணங்கள். பாரதியின் கவிதைகளில் தாந்திரீக மரபைச் சார்ந்து இறையாகவே அடையாளப்படுகிறது தன்னிலை; அதேபோல சாக்தத்தை ஒட்டி இறையிடமிருந்து தள்ளி நின்று இறைஞ்சுதலும் நடக்கிறது. பாரதியின் கவிதைகளில் சுயமீட்சிக்காக மட்டும் இறை நாடப்படுவதில்லை என்பதை இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சமூக, பண்பாட்டு, பொருளாதார, தேச, மற்றும் பொதுவான மனிதகுல நலன்களும் இந்த நலன்களையடையத் தடையாக இருக்கும் இடையூறுகளை ஒழித்தலுமே கவிதைகளின் பரந்த இலக்குகளாகின்றன. சில கவிதைகளில் பாரதி பாடும் இறையேகூட நாம் அறிந்திருக்கிற மரபார்ந்த மெய்ப்பொருள் அல்லது பெண் தெய்வம் அல்ல. சுதந்திரதேவி, பாரத தேவி, தமிழ்த் தாய் போல நவீன தெய்வவுருக்களாகத் தோற்றம் கொள்ளுகிறது பெண் இறை.

தாந்திரீக வழிபாட்டுமுறையில் இறையோடு உடலின் ஒவ்வொரு பகுதியும் மனமும் புலன்களும் அறிவும் அடையாளப்படுத்தப்படும். வழிபடும் பரம்பொருள் சக்தி என்றால், சக்தியோடு, தலை, நெற்றி, செவி, நாசி, வாய், கண்டம், கை என ஒவ்வொரு உடல்பகுதியும் புலன்களும் அடையாளப்படுத்தி மனத்தில் சக்தியைக் கொணர்ந்து நிறுத்தும் வழிபாடு அது. மந்திர உச்சாடனமும் இவ்வழிபாட்டில் இன்றியமையாதது. “சக்திக்கு ஆத்மசமர்ப்பணம்” என்கிற பாரதியின் கவிதையொன்றில், இதே வகையில் கவிதைசொல்லியின் உடல்பகுதிகளும் மனமும் புலன்களுக்கும் ஒவ்வொன்றாகக் குறிப்பிடப்பட்டு சக்திக்குக் கருவிகளாகின்றன. அகம், சக்தி, மனம், கருவி போன்ற வார்த்தைகள் மந்திரம்போல திரும்பத் திரும்ப வருகிற கவிதை அது. “கையைச் சக்தி தனக்கே கருவியாக்கு – அது / சாதனைகள் யாவினையுங் கூடும்,” “தோள் சக்தி தனக்கே கருவியாக்கு – அது தாரணியும் மேலுலகந் தாங்கும்” என்பதுபோன்ற வரிகள் அதிலுண்டு. ”அகம் சக்தி தனக்கே உரிமையாக்கு அது / தன்னையொரு சக்தியென்று தேரும் / அகம் சக்தி தனக்கே உரிமையாக்கு” என்கிறபோது அகத்தில் சக்தியைக் கொண்டுவந்து சக்தியாகவே தான் மாறுகிற விழைவு வெளிப்படுகிறது. கவிதையில் முக்தி போன்ற மெய்யியல் கோரிக்கைகளோடு சக்தி பெற்ற சந்ததிகள், தோள்வலு, மாமலையையும் பேர்க்கும் மனம் போன்றவையும் இதில் கோரப்படுகின்றன. பாரதியின் “சக்தி” வசனகவிதையின் சில வரிகளையும் பார்க்கலாம்: “சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும், … இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர்….இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள். … இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன. இப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் நிறைந்திருக்கின்றன. இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது.” இந்தக் கவிதைகளில் “நான்” அல்லது “அகம்” இறை வாழ்கின்ற இடம் மட்டுமேயல்ல (அதாவது திருமூலரின் உள்ளம் பெருங்கோயில் போல அல்ல); இறையோடு ஒன்றாகி, சமமாகி “நானும்” “அகமும்” இறையின் வேகமும் நிறைவும் பொருந்தியதாகிறது. தோள்வலு, திறன், வேகம், வலிமை, சுகம், தெளிவு இவையெல்லாம் புத்துலகை அமைக்கப் பார்க்கிற நவீனத் தன்னிலையின் கூறுகளாக கவிதைகளில் இயைகின்றன. மேலும், பாரதியின் பல கவிதைகளில் சக்தி என பெண் தெய்வம் இடம்பெற்றாலும், ஆண்மை மிக்க, வீரியம் மிக்க உடல்கள் பெரிதும் வியந்தோதப்படுகின்றன. இத்தகைய ஆணுடல்-மைய நவீனத் தன்னிலை உருவாக்கம் தருகிற சிக்கல்கள் தனியாகப் பேசப்பட வேண்டியவை.

“ஏது நிகழினும் ’நமக்கேன்’ என்றிரு / பராசக்தி யுளத்தின்படி உலகம் நிகழும்” என பாரதியின் சில தோத்திரக் கவிதை வரிகள் உள்ளனதாம். எனினும், வேறு சில தோத்திரக் கவிதைவரிகளில், இறைக்கு முன்னிலையில் கூட “நான்” என்பது ஒரு மடிப்புபோல ஆனால் வலுவாக, தெளிவாக வெளிப்படுகிறது. “மண்ணிலார்க்குந் துயரின்றிச் செய்வேன் / வறுமையென்பதை மணிமிசை மாய்ப்பேன் / தானம் வேள்வி தவங்கல்வி யாவும் / தரணிமீதில் நிலைபெறச் செய்வேன் / வானம் மூன்று மழைதரச் செய்வேன் / மாறிலாத வளங்கள் கொடுப்பேன் / மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை / வண்மை யாவும் வழங்குறச் செய்வேன் / ஞானமோங்கி வளர்ந்திடச் செய்வேன்,” என்று தன்மைக் குரலாக உலக மனிதர் நலத்தை அவாவிப் பேசிக்கொண்டு போகிறது ஒரு கவிதை (“ஹே காளீ”); அது இறுதிவரியில் “நான் விரும்பிய காளி தருவாள்” என்று முடிகிறது. “யோகசித்தி வரங்கேட்டல்” என்ற சக்திமேல் பக்தியைப் பேசும் இன்னொரு கவிதை, “விந்தை தோன்றிட இந்நாட்டை- நான் / தொல்லை தீர்ந்துயர்வு கல்வி – வெற்றி / சூழும் வீரமறி வாண்மை. / கூடுந் திரவியத்தின் குவைகள் – திறல் / கொள்ளுங்கோடி வகைத் தொழில்கள் –இவை / நாடும் படிக்குவினை செய்து / இந்த நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் / கலி சாடும் திறனெனக்குத் தருவாய் — / அடி, தாயே … ” என்று காளியைக் கேட்கிறது. நலன்களையெல்லாம் நீ செய் என்று கடவுளிடம் விண்ணப்பம் வைத்துவிட்டு சும்மா இருக்கவில்லை. விரும்பும் நலன்கள் அடையை வினையை மானுடன் நான் செய்கிறேன், செய்திறனை நீ எனக்குத்தா எனக் கோருகிறது. இறை பேசப்பட்டாலும், உலகில் நவீன மனிதரின் செயல்பாட்டுக்கான சுயபொறுப்பு என்பதை ஒரு லயம்போல, நினைவூட்டல்போலத் தொடர்ந்து கவிதைகளில் எதிர்கொள்கிறோம். வேறு கவிதைகளில், ஒரு தளத்தில் இந்தச் சுயபொறுப்பு சமூகம், பண்பாடு குறித்த சுயவிமர்சனமாக வெளிப்படுகிறது (“சூத்திரர்க்கோர் நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி,” “வாய்ச்சொல்லில் வீரரடி,” “ஜாதிச் சண்டை போச்சோ உங்கள் சமயச் சண்டை போச்சோ?” போன்ற வரிகள்); அல்லது இருக்கும் நிலைமை மாற ஏக்கத்தின் தொனியாக உருக்கொள்கிறது (“என்று தணியுமிந்த சுதந்திரத்தாகம்?” போன்றவை). இன்னொரு தளத்தில், சுயபொறுப்பு நடக்க வேண்டிய மக்கள்திரளின் கூட்டுச் செயற்பாடாகப் பரிணமிக்கிறது (“தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” போன்ற வரிகள்).

புத்துலகத்துக்கான விழைவுப் பாதையில் சுயபொறுப்போடு கட்டப்படுகிற தன்னிலை தமிழ் நவீனச் சொல்லாடலில் முக்கியமானதொரு தொடக்கப் புள்ளி. ஓர் ஒப்பீட்டுக்கு “பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்” என்கிற நம்மாழ்வார் பாசுரத்தைப் பாருங்கள். கடல்வண்ணன் எனப்படும் இறைவனுடைய பக்தர்களின் சஞ்சாரத்தால், சாபம் ஒழிந்து, சாவோடு கலி தொலைந்ததென்று ஆழ்வார் பாடுவதற்கும், பாரதியின் கவிதை பொய்மை, அச்சம் போன்றவற்றைச் சுட்டும் கலியைச் சாடும் திறனை இறையிடம் கோருவதற்கும் இடையே தமிழ்க் கவிதை கடந்து வந்திருக்கும் தொலைவை நவீனமென்று புரிந்துகொள்ளலாம். ஜெயமோகன், பாரதி கவிதை மொழியின் நவீனத்தின் தனித்துவத்தை மறுத்தும், பாரதியை முன்னெடுப்பவர்களைக் குற்றஞ்சாட்டியும் “நவீன ஜனநாயகத்தன்மை கொண்ட கவிமொழியை உருவாக்கிய வள்ளலார் முக்கிய முன்னோடி என்கிறார் க.நா.சு,” என்றும் “பாரதியை மிகையாகத் தூக்கிக்கொண்டு முன்னே நிறுத்தும்போது மௌனமாக வள்ளலார் கீழே இறக்கப்படுகிறார்” என்றும் எழுதியிருந்தார். நான் அறிந்தவரை பாரதியின் சில கவிதைகளிலாவது அமைந்திருப்பது போன்ற சுயபொறுப்புச் சாயலோடான நவீனத் தன்னிலை வள்ளலாரின் பாடல்களில் காணப்படுவதில்லை. “இப்பாரில் உடல் ஆவி பொருளும் உன்பாற் / கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே / எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை” (ஆறாம் திருமுறை) என்று “நானை” முழுக்கத் துறக்க விழைகிற வள்ளலாரின் கவிதைக்கும், “நான்” என்பதை வலியுறுத்துகிற பாரதியின் கவிதையுரைப்புக்கும் இடையிலான வேறுபாடு பொருண்மையானது. பெண்விடுதலை, சாதி மறுப்பு, தேசப்பணி, தொழிற்சிறப்பு போன்ற நவீனக் கரிசனைகள் ஊடாடும் பாரதியின் கவிதைப்பரப்பில் சுயபொறுப்போடு இயங்கும் நவீனத் தன்னிலை கட்டமைக்கப்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? “மருவு பெண்ணாசையை மறக்கவே” வேண்டுவதையும் (வள்ளலார்) “பெண் விடுதலையை” வேண்டுவதையும் (பாரதி) சமப்படுத்தாத பார்வை தமிழ் வாசகராகிய நமக்குத்தான் வாய்க்க வேண்டும். “உழலுற்ற வுழவுமுத லுறுதொழி லியற்றிமலம் ஒத்தபல பொருளீட்டி வீண் உறு வயிறு” (வள்ளலார்) என்று வருந்துவதற்கும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்” (பாரதி) என்று பறைசாற்றுவதற்குமான இடைவெளியை உணர்கிற திறந்த மனம் வாய்க்க வேண்டும்.

கடைசியாக, “நான்” உள்-மடிப்பு திட்டவட்டமாகிற வருகிற, அருமையான வாசிப்பனுபவம் தருகிற பாரதியின் கவிதையொன்றைத் தருறேன், சக்தியை நேரடியாக விளிப்பதல்ல இக்கவிதை (“விநாயகர் நான்மணி மாலை”) என்றாலும், கட்டுரை முன்வைக்கிற வாதத்துக்கு அது உதவும்: “பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன் / கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன் / மண்மீதுள்ள மக்கள், பறவைகள் / விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் / யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே / இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே / செய்தல் வேண்டும், தேவ தேவா / ஞானா காசத்து நடுவே நின்று நான் / ‘பூமண்டலத்தில் அன்பும் பொறையும் / விளங்குக; துன்பமும் மிடிமையும் நோவும் / சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் / இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ / திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி / ‘அங்ஙனமே யாகுக’ என்பாய் ஐயனே! / இந்நாள் இப்பொழு தெனக்கிவ் / வரத்தினை அருள்வாய்….” இறையின் திருவடியில் வேண்டுதலை வைக்கிற பாடல் அல்ல இது. ஞான ஆகாசத்தில் மனிதரை உயர்த்தி நிறுத்தி அனைத்துயிர்களுக்கும் நலன்களைக் கோருகிற கவிதை, மனிதரான தன்னுடைய வினையால் புவியில் இடும்பை தீரவேண்டும் என்று கேட்கிற கவிதை, அன்பும் பொறையும் நிலவ, துன்பமும் மிடிமையும் நோவும் சாவும் அகல, பல்லுயிரும் இன்புற்று வாழ இவ்வுலகில் மனிதரின் பொறுப்பை வலியுறுத்துகிற கவிதை இது.

முடிவுரையாக, சங்க இலக்கியம் உள்ளிட்ட தமிழ் மரபுகளின் கூறுகள் மட்டுமன்றி காலனியாதிக்கம் கொணர்ந்த மாற்றங்களோடும், காலனியக் காலகட்டத்தில் தமிழகம் தாண்டியும் கிளர்ந்த தத்துவப் போக்குகளோடும், வைணவ, சாக்த, தாந்திரீக மரபுகளோடும் பல்நிறப்புலப் பெயல்நீராக குதித்தோடுகிறது பாரதியின் கவிதைமொழி. இம்மொழி புதுவகையான சுயபொறுப்போடு கூடிய நவீனத் தன்னிலையைக் கட்டமைக்கிறது. இறை வியந்தோதப்படுகிறபோதும் புதியவுலகத்தை நிர்மாணிக்க வேண்டிய சுயபொறுப்போடு இத்தன்னிலை செயல்படுவதைக் காண்கிறோம். இறை பேசப்படுகிற காரணத்தால் பாரதியின் கவிதைகளை நவீனத்துவத்துக்கு “முந்தையது” என்றோ “எதிரானது” என்றோ, நவீனத்துவம் “குறைபட்டது” என்றோ புரிந்துகொள்ளுதல் நம் போதாமையாகவே இருக்கும். பாரதியின் கவிதைகள் தனித்துவத்தோடு கூடிய நவீனத் தன்னிலையைத் தமிழ் இலக்கியத்துக்குக் கொண்டுவந்திருப்பதால், அத்தோடு இயைகிற நவீனக் கரிசனைகளின் வலுவான முதல் எழுத்தியக்கமாக இருப்பதால் அவர் கவிதைமொழியை நிகரற்ற நவீனத்துவம் என்கிறேன்.

இணையச் சுட்டிகள்

ஜெயமோகனுக்கும் எம்.டி. எம்-முக்கும் பாரதி விவாதம் அவ்விருவரின் பல இணையப் பதிவுகளில் நடந்தது. அந்த விவாதம் நடந்தபோது அது குறித்து இடையீடாக பாரதியின் நவீனத்துவம் பற்றிய என் எண்ணங்களை முன்வைத்து என் வலைப்பூவில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தேன். அவ்வளவாக ஓர்மையில்லாத அப்பதிவைத் திருத்தியும் ஒருசில புதிய கருத்துக்கோணங்களை, தகவல்களைச் சேர்த்தும் சில வாதங்களைச் செழுமைப்படுத்தியும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எம்.டி.எம், ஜெயமோகன் வாதங்கள் இடம்பெற்றிருக்கிற பதிவுகளின் சுட்டிகள் இவை:

ரசனை விமர்சனத்தின் வழி- எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு: http://www.jeyamohan.in/22009#.VhLgXOxViko
ஜெயமோகனுக்கு சில உடனடி எதிர்வினைகள்:
http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_22.html
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்:
http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_09.html
ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ். எலியட்டும்:
http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_9197.html
வாருங்கள் ஜெயமோகன் தேநீர் அருந்தலாம்:
http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/10/blog-post_23.html
எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்:
http://www.jeyamohan.in/21994#.VhMJ5exViko

தமிழ் நூல்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், திருவருட்பா, தேவாரம், திருமந்திரம், திருவாசகம், மற்றும் பாரதியார் கவிதைகள்.

ஆங்கில நூல்கள் மற்றும் கட்டுரைகள்

Ghosh, Sisirkumar. Rabindranath Tagore. Makers of Modern India Literature. New Delhi: Sahitya
Akademy, 1990.
Vajpeyi, Ananya. Righteous Republic: The Political Foundations of Modern India. Harvard
University Press, 2012.

பாயன் லாயி Bayan Layi எல்நாதன் ஜான் (நைஜீரியா ) Elnathan John, Nigeria (Hausa language ) ஆங்கிலம் : ஹௌசா / தமிழில் ச.ஆறுமுகம்

images

எல்நாதன் ஜான்(நைஜீரியா)

(நைஜீரியாவைச் சேர்ந்த எல்நாதன் ஜான் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றவர், முழுநேர எழுத்தாளராக உள்ளார். இவரது படைப்புகள் பெர் கான்ட்ரா, ஜாம் மேகசின், எவர்கிரீன் ரெவ்யூ, சென்டினெல் நைஜீரியா மற்றும் சிமுரெங்காஸ் க்ரானிகல் இதழ்களில் வெளியாகின்றன. நைஜீரிய செய்தித் தாள் ஒன்றில் அரசியல் எள்ளல் கட்டுரைகளும் எழுதிவருகிறார். தற்போது தமிழாக்கம் செய்யப்படும் பாயன் லாயி கதை 2013 ஆம் ஆண்டு கெயின் விருதுக்கான சுருக்கப்பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.)

*****
பாயன் லாயி1யிலுள்ள கூக்கா2 மரத்தின் அடியில் படுக்கும் பையன்கள், அவர்கள் செய்த கொலைகளைப் பற்றியே பெருமைபேசுவார்கள். நான் அதில் சேர்வதில்லை; ஏனென்றால் நான் எந்த மனிதனையும் கொலைசெய்ததில்லை. பாண்டா செய்திருக்கிறானென்றாலும், அவன் அதைப்பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவன் தலையே வெடிப்பதுபோலப் பேசும்போது, அவன் அமைதியாக வீவீ (கஞ்சா) புகைத்துக்கொண்டிருப்பான். கோபெதனிசா3வின் குரல் எப்போதுமே சத்தமாகத்தான் கேட்கும். அவன், கழுத்தை நெரித்துக் கொன்ற ஒருவனைப் பற்றியே, எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். சம்பவம் நிகழ்ந்தபோது, நானும் அவன் கூட இருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் தானென்றாலும் அவன் கதை சொல்லும்போது இடைமறிப்பதில்லை. கோபெதனிசாவும் நானும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு திருடுவதற்காக ஒரு தோட்டத்துக்குள் போயிருந்தபோது, விவசாயி திடீரென்று எங்கள் முன்னால் வந்து தொலைத்துவிட்டான். கையில் மாட்டினால் கொன்றுவிடுவேனென்று சொல்லிக்கொண்டே, அவன் எங்களைத் துரத்தியபோது, மான்களுக்காக வெட்டிவைத்திருந்த புதர்க்குழிப் பொறிக்குள் விழுந்துவிட்டான். கோபெதனிசா அவனைத் தொடக்கூட இல்லை. அங்கேயே நின்று, அவன் உயிருக்குப் போராடித் தத்தளித்துத் தத்தளித்துப் பின் தத்தளிப்பதை நிறுத்தும் வரையில் நாங்கள் கவனித்துக்கொண்டிருந்தோம்.

அந்தச் சாவு குறித்து, கோபெதனிசா சொல்லும் பொய்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை; ஆனால், சிலநேரங்களில் அவனை `வாயை மூடு` எனச் சொல்லி, அவன் வாயிலேயே அறையவேண்டுமெனத் தோன்றுகிறது. கொல்வதைப்பற்றி, அவன் பேசுகின்ற முறை, அவனுக்கு என்னவோ அதற்காகச் சுவர்க்கம் கிடைக்கப்போவதுபோல், அல்லா ஒரு நல்ல இடத்தை அங்கே அவனுக்காகவே ஒதுக்கிவைத்திருப்பது போலவும் தோன்றும். அவன் ஏன் அப்படிப் பேசுகிறானென்று எனக்குத் தெரியும். சிறிய பையன்கள் அவனைப்பார்த்து வாய் பிளக்கவேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிப் பேசுகிறான்; கூடவே, அவர்களைப் பயமுறுத்தவுந்தான். அவனுடைய முகமே தழும்புகளின் மொத்த வரைபடம் தான், அதிலும் தெளிவாகக் கண்ணில் முந்தித் தெரிவது, வலதுபக்கம் வாயிலிருந்து அவன் காதுவரையில் நீளமான கோடுபோலத் தெரியும் வெட்டுத்தழும்புதான். பாண்டாவோடு சண்டை போட்ட நாளில் அது அவனுக்கு எப்படிக் கிடைத்ததென்று அங்கே நீண்டகாலமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். பாண்டாவைத் தெரிந்தவர்கள் யாரும் அவனோடு மோதமாட்டார்கள். அவனோடு வைத்துக்கொண்டால் சாவைத் தேடிக்கொள்வதாகத்தான் அர்த்தம். ‘’ உன் வேலையைப் பார்த்துவிட்டுப் போடா’’ என பாண்டா கத்துமளவுக்கு வாய்ச்சண்டை எதனால் முற்றியதென்று எனக்கு நினைவில்லை. பாண்டா அந்த அளவுக்குக் கத்தினானென்றால் விஷயம் சிறியதல்ல. பதிலாக, யாராலுமே மன்னிக்கவியலாத அவமானமாக, கோபெதனிசா, ‘’உன் அம்மாவின் —-‘’ எனச் சொன்னானென்றால், பாண்டா கொடுத்த வீவீயை அவன் அளவுக்கதிமாகப் புகைத்திருக்கவேண்டும். பாண்டா அவனைவிடப் பெரியவன். வலது கைப் புயத்தில் ஒரு தாயத்தும் கத்தி மற்றும் அம்புகள் தாக்காமல் காப்பாற்றும் மூன்று மந்திரித்த கயிறுகளும் கட்டியிருந்தான். எந்த இரும்பும், அவனைத் துளைக்கமுடியுமென்று தோன்றவில்லை.

பாண்டாவின் அம்மாவை கோபெதனிசா, அவமானப்படுத்திவிட்டதால், பாண்டா கொய்யா மரத்திலிருந்தும் இறங்கி வந்து, அவன் வாயிலேயே குத்தினான். பாண்டா வேறு, கூரான விளிம்புகளுள்ள துருப்பிடித்த மோதிரம் ஒன்றைக் கைவிரலிலேயே அணிந்திருந்தான். கோபெதனிசாவின் வாயில் இரத்தம் வரத்தொடங்கியது. அவன், தரையில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து, பாண்டாவின் முதுகில் அடித்தான். பாண்டா திரும்பிப் பார்த்துவிட்டு, மரத்தை நோக்கி நடந்தான். ஆனால், கோபெதனிசா வெற்றி மிதப்பில் இருந்தான். பாண்டாவைத் தோற்கடிப்பவர் யாராக இருந்தாலும், எங்களுக்கு அவனைக்கண்டு உதறல் தான். நாங்கள் அவனைத்தான் பின்பற்றுவோம். அவன் மீண்டும் ஒரு பலகையை எடுத்து பாண்டாவின் தலையில் அடிக்க முனைந்தபோது, பாண்டா பட்டெனத் திரும்பி, வலதுகையால் அடியைத் தடுத்தான். பலகை இரண்டு துண்டுகளாக முறிந்து விழுந்தது. கோபெதனிசா இரத்தம் ஒழுகும் கைகளோடு பாய்ந்து, பாண்டாவின் தாடையைத் தாக்கினான். பாண்டா அஞ்சிப் பின்வாங்கவில்லை. சண்டையில் யாராவது கொல்லப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டால், அல்லது, உண்மையிலேயே சண்டை நியாயமற்றதாக இருந்தால் தவிர பாயன் லாயியில் யாரும் சண்டையை விலக்கிவிடமாட்டார்கள். சிலநேரங்களில், அல்லா விரும்பாமல், எவரும் இறப்பதில்லையெனக் காரணம் சொல்லி, சண்டையை அப்படியே விட்டுவிடுவதுமுண்டு. பாண்டா, கோபெதனிசாவின் சட்டையைப் பிடித்து இழுத்து, முகத்தில் இரண்டு முறை குத்திவிட்டுப் பின், வலதுகையைத் திருப்பி, அவன் காற்சட்டைப்பைக்குள்ளிருந்த கத்தியை எடுத்தான். கோபெதனிசாவைத் தரையோடு சேர்த்து வலது முழங்கை முட்டியால் அழுத்திக்கொண்டு, அவன் கன்னத்தில் கத்தியால் ஒரு நீண்ட கோட்டினை இழுத்தான்.

பாயன் லாயி தெருக்களில் யாரும் விரோதம் பாராட்டுவதில்லை. கோபெதனிசாவின் முகத்தில் அந்தத் தழும்பு இப்போதும் இருக்கத்தான் செய்கிறது; ஆனாலும் அவன், பாண்டாவின் பின்னால், அவன் சொல்வதைக் கேட்டு, அப்படிக்கப்படியே நடக்கிறான். அல்லாவின் விருப்பப்படிதான் அனைத்தும் நிகழும்போது, ஒருவருக்கொருவர் ஏன் விரோதம் பாராட்டிக்கொள்ளவேண்டும்?

***

எனக்கு பாண்டாவைப் பிடிக்கும்; ஏனென்றால், வீவீ விஷயத்தில் அவன் மிகவும் தாராளம். அவன் சபோன் காரி4க்குச் செல்லும் நாட்களில் இங்கு நடந்தவற்றை நான் அவனுக்குச் சொல்லும் முறை அவனுக்குப் பிடிக்கவில்லையாம். ஒரு கதையை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லையென அவன் சொல்கிறான். ஹர்மாட்டன்5 பருவக்காற்று, புழுதியை வாரி, வீசி, வீசி அடிப்பதைப்போலத் திசைதெரியாமல் நான் பேசுகிறேனாம். எனக்கு நினைவில் வருகிற மாதிரியில் நான் சொல்கிறேன், அவ்வளவுதான். சில சமயங்களில் நீங்களாகத்தான் கதையை விவரித்து, விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கும். அநேகம் கதைகளுக்குள்ளும், விளக்கம், அதுவாகவே புதைந்து கிடக்கின்றது. கதையை அதன் உண்மையிலும், உண்மையான தொடக்கத்திலிருந்து, சொல்வதைத்தவிர, வேறெந்த வகையில், சொன்னால், சுவையாக இருக்கும்?

அது தேர்தல் நேரம். சிறிய கட்சிக்காகச் சுவரொட்டி ஒட்டுவதும் பெரிய கட்சியின் சுவரொட்டிகளைக் கிழிப்பதும் அல்லது நகரத்தில் யாருடைய ஊர்தியையாவது உடைப்பதுமாக, பாண்டா கையில் நல்ல காசு. பணத்தை அவன் எப்போதுமே எல்லோருடனும் பகிர்ந்துகொள்வான்; அதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட எனக்கு அதிகமாகவே கொடுப்பான். பாயன் லாயியின் பெரிய பையன்கள் கூட்டத்தில் நான் தான் மிகச் சிறியவன், பாண்டாதான் மிகப்பெரியவன். ஆனால், அவன் என்னுடைய மிகச்சிறந்த தோழன்.

கடந்த மாதம், அதுதான் ரமலான் மாதமென நினைக்கிறேன், ஒரு பையன் பாயன் லாயியில் திருட முயன்றான். பாயன் லாயியில் திருடுவதற்கு யாரும் துணிந்துவிடமாட்டார்கள். அவன் எப்படியோ, லாதிதி அம்மாவின் கடலை எண்ணெய் டப்பாக்களைக் குறிவைத்து வந்திருக்கிறான். அவளுடைய வீடு ஒரு `பா ஷிகா`; அதாவது ஆண்கள் நுழையக்கூடாத வீடு. அவனைக் கண்டதும் அவள் அலறிவிட்டாள். உடனேயே அவன் ஓடிச்சென்று வேலியைத் தாண்டிக்குதித்தான். திருடர்களைத் துரத்துவது, அதிலும் அவர்கள் பாயன் லாயியைச் சேர்ந்தவர்களில்லையெனத் தெரிந்துவிட்டால், சர்க்கரை சாப்பிடுவது மாதிரி எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சபோன் காரியில் ஒருமுறை இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காலை ஒடித்துக்கொண்டாலும், இங்கே அதிவேகமாக ஓடுபவன் நான்தான். எப்படியோ, கடலை எண்ணெய்த் திருடனை நாங்கள் பிடித்து, அவன் வாழ்நாள் முழுவதற்கும் போதுமென்கிற அளவுக்கு நன்கு கொடுத்தோம். திருடனை அடிக்கும்போது கூரான ஏதாவதொன்றைப் பயன்படுத்துவது எனக்குப் பிடிக்கும். அவனைக் குத்தும்போது, இரத்தம் பீறிட்டுவரவேண்டும்; அதை நான் கண் குளிரப் பார்க்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும். அதனால் அந்தப் பையனை நாங்கள் பிடித்து உட்காரவைத்து, அவன் பெயர் என்னவெனக் கேட்டோம். அவன் இடோவு என்றான். அவன் பொய் சொல்கிறானென்பது எனக்குத் தெரியும். அவன் மூக்கு இக்போ பையனின் மூக்கு போல இருந்தது. அவனுடைய உண்மையான பெயரைக் கேட்டுப் பலமுறை அவன் தலையில் என் நகங்களைப் பாய்ச்சினேன்.

‘’இடோவு! சத்தியமாகச் சொல்கிறேன், என் பெயர் இடோவுதான்,’’ என் நகம் அவன் தசையைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் அலறினான்.

‘’உன்னோட உங்குவா6 எங்கேடா இருக்கிறது?’’ ஒற்றைக் கண் பொட்டையான அச்சிஷுரு அவன் கன்னத்தில் அறைந்து கேட்டான். இந்த ஒற்றைக்கண் பயலுக்கு எப்படி அறையவேண்டுமென்று நன்றாகத் தெரியும்.

‘’சபோன் காரிக்குப் பக்கத்தில்,’’ என்றான், அந்தத் திருடன்.

‘’எங்கேயென்று குறிப்பாகச் சொல்லுடா,’’ என்று கத்தினேன். அவன் அமைதியாக இருந்தான். அவன் கழுத்தில் என் நகத்தைப் பாய்ச்சினேன்.

‘’சபோன் லாயி.’’

அப்படியே எழுந்து ஓடினான் பாருங்கள், வானத்துப் பறவையைப் போல விசுக்கென்று பறந்துவிட்டான். இந்தமுறை அவனை எங்களால் பிடிக்கமுடியவில்லை. அவனை விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டான், பாண்டா. அவன் சபோன் லாயியைப் போய்ச் சேர்ந்திருக்கவில்லை. அன்று மாலையில் ஏதோ ஒரு கழிவுநீர்ச் சாக்கடையில் அவனது உடல் கிடந்திருக்கிறது. அல்லா அவருடைய காரியங்களை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார், பாருங்கள்! நாங்கள் ஒன்றும் அவனை அப்படி அதிகமாக அடித்துவிடவில்லை. இதைவிட மோசமாக யார்யாரையோவெல்லாம் செம்மையாக அடித்திருக்கிறோம், அவர்களெல்லாம் செத்துவிடவில்லை. ஆனால், யார் உயிரோடிருக்கவேண்டும், யார் சாகவேண்டுமென்பதை அல்லா தீர்மானிக்கிறார். நான் இல்லை. நாங்களும் இல்லை. நீங்களும் இல்லை.

சபோன் காரியிலிருந்து புலனாய்வுத்துறையுடன் எங்கள் பகுதிக்குக் காவல் துறை வரவே நாங்கள் ஓடி ஒளியவேண்டியிருந்தது. சிலர் மசூதிக்குள் ஒளிந்துகொண்டார்கள். பாண்டா, அச்சிஷுரு, தாவ்தா, நான் எல்லோரும் பாயன் லாயிக்குப் பின்னால் ஒரு பகுதியாக ஓடும் கடுனா ஆற்றின் குறுக்காக நீந்தி, அக்கரையிலிருந்த வயல்கள், புதர்க்காடுகளில் நெடுநேரம் அலைந்து திரிந்து, பின்னர், ஆற்றைக் கடந்து திரும்பிவருவதற்கு மிகவுமே பிந்திய இரவாகிவிட்டது. பாண்டா, அவனுடைய மந்திரக் கயிறுகளோடு இரவில் ஆற்றில் இறங்குவதில்லை. இரவில் அவனுடைய மந்திரக் கயிறுகள் மீது ஆற்றுத் தண்ணீர் பட்டால் அவன் சக்தியை இழந்துவிடுவானென்று சொல்கிறான். அவற்றைக் கழற்றிவைக்கவும் முடியாதாம்; அப்போதும் அதன் சக்தி மாயமாய் மறைந்துபோகுமாம். .

***

எல்லோரும் தேர்தலைப்பற்றித்தான், நிலைமைகள் எப்படி, எப்படியெல்லாம் மாறக்கூடுமென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடலை எண்ணெய் விற்பதைத்தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத லாதிதி அம்மா கூட, அவள் வீட்டுச் சுவரில் சிறிய கட்சியின் சுவரொட்டியை ஒட்டியிருக்கிறாள்; தேர்தல் பற்றிய செய்திகளைக் கையடக்க வானொலி ஒன்றில் கேட்கிறாள். எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள். சந்தையிலிருக்கும் பெண்கள், வேட்பாளரின் படம் மற்றும் கட்சிச் சின்னம் குறித்த அட்டையை அணிந்திருக்கிறார்கள். பல ஆண்களும் வேட்பாளரைப் போலவே வெள்ளை நிறத்தில் முழுநீள அங்கியும் சிவப்பு நிறத் தொப்பியும் அணிகின்றனர். எனக்கும் அந்த மனிதரைப் பிடித்திருக்கிறது. அவரொன்றும் பெரிய பணக்காரரில்லை தான்; ஆனாலும் நிறையவே உதவிகள், நன்கொடைகள் மற்றும் பிச்சை அளிப்பதோடு, எப்போதெல்லாம் ஊருக்குள் வருகிறாரோ, அப்போதெல்லாம் எல்லோருடனும் மிகச் சாதாரணமாகப் பேசிப் பழகுகிறார். அவர் அந்தச் சிவப்புத் தொப்பியை ஒருபக்கமாக எந்நேரமும் கீழே விழுந்துவிடலாமென்பதைப் போல அணிவதே ஒரு அழகுதான். எனக்கும் பணம் கிடைத்தால், அதைப்போல ஒரு தொப்பி வாங்கிவிடுவேன்; வெள்ளை நிற அங்கியும் கூடத்தான்; ஆனால் வெள்ளையைச் சுத்தமாக வைத்திருப்பது கஷ்டம்; சோப்புக்கு வேறு தனியாகச் செலவாகும். அடித்துச் சுத்தமாகத் துவைத்தாலும், ஆற்றுத் தண்ணீருக்குச் செங்காவி நிறமாகிவிடும். என்னுடைய பழைய குரான் போதகர் மாலம் ஜுனாய்டுவும் வெள்ளையே அணிவதோடு, நபி(ஸல்) அவர்களும் வெள்ளை அணிவதையே விரும்பினாரென்றும் சொல்வார். ஆனால், மாலம் ஜுனாய்டு அவரது துணிகளை, நல்ல தண்ணீரைப் பையன்களிடம் விலைக்கு வாங்கிச் சலவைசெய்யும் டனிமுவிடம் போடுகிறார். ஒருநாள், நானும் இன்ஷா அல்லா, நல்ல தண்ணீரை விலைக்கு வாங்குவதோடு, என் துணிகளை டனிமுவிடம் சலவைக்குப் போட்டு வாங்கி, என்னுடைய வெள்ளை ஆடைகளையெல்லாம் அடுக்கிவைப்பதற்காக ஒரு பெட்டியும் வாங்குவேன். சிறிய கட்சி மட்டும் ஜெயித்துவிட்டால் எல்லாமே நல்லதாகிவிடும். இன்ஷா அல்லா.

எனக்கு ஊர்வலங்கள் பிடிக்கும். சிறிய கட்சியின் ஆட்கள் பாண்டாவை நம்புகிறார்கள்; பாயன் லாயி பையன்களை அவர்கள் கட்சிக்காகத் திரட்டச் சொல்லி, பாண்டாவிடம் பணம் கொடுக்கிறார்கள். சில நாட்களில் ஆளைப் பொறுத்து, அல்லது ஊர்வலத்தைப் பொறுத்து, எங்களுக்கு 150 நைராக்கள் கூடக் கிடைத்துவிடும். அதோடு எங்களுக்குக் குடிக்கவும் சாப்பிடவும் நிறையக் கிடைக்கும்.

பாண்டாவோடு ஊருக்குள் சுற்றிவருவது எனக்குப் பிடிக்கும். எல்லோரும் அவனை மதிக்கிறார்கள். அவனைவிடப் பெரிய பையன்கள் கூட அவனைக் கண்டு பயப்படுகிறார்கள். மாலம் ஜுனாய்டுவின் மதரசாவில் குரான் பயிற்சி முடித்த நேரத்தில் பாண்டா எனக்கு நண்பனானான். நான் மதரசா படிப்பு முடித்ததும், சொகொட்டோவிலுள்ள எனது கிராமத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு மாலம் கூறினார். ஆனால், அப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருந்த அல்ஃபா, என் அப்பா இறந்துவிட்டதாகச் சொன்னான். அவன் அப்பா சொகொட்டோவில் எங்கள் அப்பாவின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறார். அப்பா எதனால் இறந்தாரென்று நான் அவனைக் கேட்கவில்லை; ஏனென்றால், அல்லா என்னை மன்னிப்பாராக, எனக்கு அதில் அவ்வளவாக அக்கறை இல்லை. என் அப்பாவைப் பார்த்து மிகப் பல நாட்களாகிவிட்டது. அவரும் என்னைப் பற்றி எதுவும் விசாரித்ததாகத் தெரியவில்லை. என் அம்மாவும் கிராமத்தைவிட்டுக் கிளம்பிப் போய் சொகொட்டோ நகரத்திலுள்ள ஜுமாஅத் மசூதி அருகில் பிச்சையெடுப்பதாக அல்ஃபா சொன்னான். எனக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கூட அல்ஃபாவுக்குத் தெரியவில்லை. அதனால், சொகொட்டோவுக்குப் போக எனக்கு மனமில்லாவிட்டாலும், மாலம் ஜுனாய்டுவிடம் சொகொட்டோவுக்குத் திரும்பிப் போவதாகக் கூறினேன். அதற்காகும் கட்டணத்தை அவர் தருவார் என்று தான் நினைத்தேன். சொகொட்டோவுக்குப் பெரிய, பெரிய மரங்களின் தடிகள் ஏற்றிச்செல்லும் கனரக ஊர்திகளின் பின்னால் ஏறிச் செல்ல சபோன் காரியிலுள்ள பூங்காவிலிருந்து முந்நூறு நெய்ரா ஆகும். அதற்கு அவர், என் அப்பா கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலும் கூட என்னுடைய குரான் பயிற்சிக் கட்டணமாக தானியம் எதுவும் கொண்டுவரவில்லை என்பதைச் சொல்லிக் காட்டிவிட்டு, எழுபது நெய்ராதான் கொடுத்தார். நான் சொன்னேன், எனது அப்பா இறந்துவிட்டாரென்று. அவர் ஒரு கணம் அமைதியாகிப் பெருமூச்சு விட்டபின் ‘’ இன்னலில்லாஹி வாய்ன்னா இல்லாஹி ரஜியுன்’’ என்று சொல்லிவிட்டு, இடத்தைவிட்டும் அகன்றுசென்றார். உயிரைக் கொடுப்பதும் எடுப்பதும் அல்லாதான் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லையென்றில்லை. அதனை, அவர் பாடம் நடத்தும் அதே உயிரற்ற குரலில் சொன்னவிதம்தான் என்னை வருத்தப்படச் செய்தது. ஆனால், நான் அழவில்லை. அன்று மாலை, நான் ஒரு சிகின் ஷேகெ என்று அல்ஃபா சில பையன்களிடம் சொன்னதைக் கேட்கும்வரையில் அழவில்லை. வேசிவயிற்றுப் பிறப்பு! அவன் எங்கிருந்து அப்படியொரு பேச்சினைக் கேட்டானென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள், மாலம் ஜுனாய்டு கட்டிய திறந்தவெளி மசூதி அருகிலுள்ள கிணற்றங்கரையில்தான் உட்கார்ந்திருந்தனர். அல்ஃபாவின் இடுப்பிலேயே உதைத்தேன். எங்களுக்குள் சண்டை தொடங்கியது. சாதாரணமாகவே, நான் அவனை அடித்துத் துவைத்துவிடுவேன், ஆனால், அன்று இரண்டு பையன்கள் என்னைப் பிடித்துக்கொண்டார்கள்; அதனால், அல்ஃபா என்னைத் தாக்கி, அறைந்து கொண்டேயிருந்தான்; நான் அழுது, அலறிக்கொண்டிருந்தபோது, பாண்டா அந்த வழியாக வந்தான். பாண்டா அல்ஃபாவை ஒரே அடியில் தரையில் சாய்த்து, மற்றொருவனைத் தூக்கி வீசினான். நான் அல்ஃபாவின் மீதேறி என் கை ஓயும்வரையில் அவன் வயிற்றில் குத்தினேன். மற்ற பையன்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். அந்த நாளில்தான், என் வாழ்க்கையில் அதுவரையில் அழாத அழுகைக்கெல்லாம் சேர்த்து அழுதேன். நான் பாண்டாவின் பின்னால் போனேன். அவன் வீவீ தந்தான்; நான் என்னுடைய முதல் வீவீயைப் புகைத்தேன். அதன் சுகம் ஒரு அற்புதமே தான்! கால்கள் கனம் இழந்து, இழந்து, பின்னர் ஒரு கட்டத்தில், கால்களே இல்லாமலாகிவிட்டது போல் உணர்ந்தேன். நான் காற்றில் மிதந்துகொண்டிருந்தேன்; என் இமைகள் கனத்தன; பாண்டாவைவிட, கோபெதனிசா, ஏன், கூக்கா மரத்தடிப் பையன்கள் எல்லோரையும் விடப் பெரியவனாக, அவர்களைவிட வலிமையானவனாக உணர்ந்தேன். இருமாமல் புகைக்கும் என்னுடைய பாணி, அவனுக்குப் பிடிப்பதாக, பாண்டா கூறினான். இப்படித்தான் நாங்கள் நண்பர்களானோம். அவனுடைய அட்டை விரிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்து, அவர்கள் தூங்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றான். அவர்கள் கூக்கா மரத்தின் கீழ் அட்டைகளை விரித்துப் படுத்தனர்; மழைக்காலங்களில் அல்ஹாஜி முகமதுவின் அரிசிக் கடையின் துத்தநாகக் கூரை முகப்பிற்குக் கீழேயுள்ள சிமென்ட் தரைக்கு மாறிக்கொள்வார்கள்.

பாண்டா என்னைப் போல அல்மாஜிரி7 இல்லை. அவன் மற்ற பல பையன்களைப் போலவே சபோன் காரியில் பிறந்தவன்தான்; ஆனால், குரான் பள்ளியில் படிக்கவில்லை. கூக்கா மரத்தடி பையன்களைப் பற்றி மாலம் ஜுனாய்டு எச்சரித்திருந்தார். அவர்கள் ரமலான் அல்லது ஈத் பண்டிகை நாட்களில் மட்டுமே மசூதிக்கு வருகின்றனர்; யான் தாபா8 தடியன்கள்; பாயன் லாயியில் பிரச்சினை செய்வதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. அவர்களுக்கு எங்களைப் போல குரானும் சுனா9வும் தெரியாததோடு, அவர்கள் ஐந்துமுறை தொழுவதோ, நோன்பிருப்பதோ இல்லை. அதனால் நாங்கள் அவர்களை இழிந்தவர்களாகக் கருதினோம். மாலம் சொல்வார், ‘’ ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை தொழாதவன் முஸ்லிமே கிடையாது.’’ இப்போது நானும் கூக்கா மரத்தடிக்கு வந்துவிட்டேன், எனக்குத் தெரிகிறது, தினமும் ஐந்துமுறை தொழவில்லையென்றாலும் அவர்களில் சிலர் அன்பானவர்களாக, நல்லவர்களாக இருக்கின்றனர் – அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறதென்பதை அல்லா அறிவார்.

பாண்டா ஒரு வயதான பையன். அவனுக்கு என்ன வயதாகிறதென்று எனக்குத் தெரியாது, ஆனால் எங்களில் மீசை உள்ளவன் அவன் மட்டும்தான். என்னுடைய வயதை யாராவது கேட்கும்போது எனக்கு வெறுப்பாக இருக்கிறது; ஏனென்றால் எனக்கு என் வயது தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் கிட்டத்தட்டப் பத்து முறை நோன்பு நோற்றிருக்கிறேன் என்பதுதான். நான் அப்படிச் சொல்லும்போது, சிலர் புரிந்துகொள்கிறார்கள்; ஆனால், கடந்த ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது கேட்ட பெண் போலவே, வேறு சிலர் எரிச்சல்படுத்தும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், வாக்காளர் பதிவின் போது, என் வயது பத்தொன்பது என்று சொன்னாலும், பாண்டா கொடுத்த பழைய முழுநீள அங்கியின் கைகளை மடித்துச் சுருட்டிக்கொள்ளவேண்டியிருந்தது. சிறிய கட்சியின் ஆட்கள் தான் அப்படிச் சொல்லிப் பதிவுசெய்யுமாறு, எங்கள் எல்லோருக்கும் தலைக்கு நூறு நெய்ரா கொடுத்தார்கள். பதிவுசெய்யும் அலுவலர்கள் முணுமுணுத்து, மறுத்தாலும் கடைசியில் எப்படியோ பதிவுசெய்துவிட்டார்கள். வாக்காளர் அட்டையில் என் தலை பெரியதாக இருந்ததை, பாண்டாவும் அச்சிஷுருவும் கேலிசெய்துகொண்டே, இருந்தார்கள். அச்சிஷுரு என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை; அவனுக்கு ஒற்றைக் கண்தான்; அப்படியிருக்கையில், அவன் என் தலையைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது. அவன் நிரம்பக் கஞ்சனும்கூட. வீவீயைக்கூட யாருடனும் பகிர்ந்துகொள்ளமாட்டான்.

*******

‘’நாம் தேர்தலுக்காக நிறைய வேலை செய்யவேண்டியிருக்கிறது,’’ என்கிறான், பாண்டா இருமிக்கொண்டே.

தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், நமக்கு 1000 நெய்ரா வீதம் கூடத் தருவதாக சிறிய கட்சி உறுதியளித்திருக்கிறது. நம்மைப் போல வீடற்ற பையன்களுக்காகவும், வீட்டுக்குத் திரும்பிப்போக முடியாதவர்களுக்காகவும் பெற்றோர் இல்லாதவர்களுக்காகவும் தங்குமிடம் ஒன்று கட்டித் தருவதாகவும், அங்கு நாற்காலி செய்வது, அங்கி தொப்பிகள் தைப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்கிறார்கள். பாண்டா இதற்கு முன்னால் இதுபோல் இரத்தம் துப்பி, இருமியதில்லை. அவனுக்கு உடம்பு சரியில்லை என்று நினைக்கிறேன்.

அச்சிஷுரு, பாண்டா, கோபெதனிசாவோடு நானும் சபோன் காரியிலிருந்து வேறு சில பையன்களும் சிறிய கட்சி அலுவலகத்துக்கு தேர்தலில் ஜெயிப்பது குறித்துப் பேசுவதற்காகச் சென்றுகொண்டிருந்தோம். இங்கு யாருமே பெரிய கட்சியை விரும்பவில்லை. அது, ஏனென்றால் நாங்களெல்லாம் அவர்களால் தான் ஏழைகளாயிருக்கிறோம். அவர்களின் ஆட்கள் இங்கே வரத் துணியமாட்டார்கள்; ஏனென்றால் இங்குள்ள மக்கள் அவர்களைத் துரத்திவிடுவார்கள் என்பதுதான்.

பாண்டா இருமிக்கொண்டே, இன்னும் அதிகமாக இரத்தம் துப்புகிறான். எனக்குக் கவலையாக இருக்கிறது. தேர்தலுக்குப் பின், சிறிய கட்சி, பெரிய கட்சியாகும்போது, தலைநகரில் ஏராளமான பூக்களும் மரங்களுமாக இருக்கும் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கச் செலவுசெய்வார்களாக இருக்கலாம். அல்லது அல்லா விரும்பினால், மருத்துவ மனைக்கே அவசியமில்லாமல், அவன் குணமாகிவிடலாம்.

கடைசி மாலைத் தொழுகைக்குப்பின் ஒரு மணிநேரம் ஆகியிருக்கலாம். சிறிய கட்சி ஆளின் சகோதரன் முன்பக்கம் சிறிய கட்சியின் கொடி கட்டிய, திறந்த வெள்ளை டிரக்கில் அப்போதுதான் பாயன் லாயிக்குள் வந்திருந்தான். அவன் பாண்டாவின் பெயரைச் சொல்லிக் கத்தி அழைத்தான். பாண்டா கொய்யா மரத்திலிருந்தும் இறங்கினான்; நான் அவன் பின்னால் போனேன்.

‘’உங்களில் யார் பாண்டா?’’ டிரக்கின் பின்பகுதியில் உட்கார்ந்திருந்த ஒருவன் கேட்டான். அவன் முகத்தை என்னால் பார்க்கமுடியவில்லை.

‘’நான் தான்,’’ என்று பதில்சொன்னான், பாண்டா.

‘’இது, இவன் யாரு?’’

‘’ என்னுடைய நண்பன், நாங்கள் ஒரே இடத்தில் படுக்கிறோம்.’’

‘’என் பெயர் தண்டலா,’’ என்றேன், நான்.

‘’நல்லது. எங்களுக்கு பாண்டா மட்டும்தான் வேண்டும்.’’

எனக்குக் கோபமென்றாலும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

‘’உடன் வந்துவிடுவேன்,’’ வலது கை தாயத்துகளைச் சரிசெய்துகொண்டே, என்னிடம் சொல்கிறான். அவன், அவனுக்குப் பிரச்சினை எதுவுமில்லை என்பதை என்னிடம் தெரிவிக்கும் முறை அதுதான். அவன் டிரக்கின் பின்பக்கம் தாவி ஏறியதும், அவர்கள் கிளம்பிப் போனார்கள்.

***

மசூதியில் தொழுகை அழைப்புக்கான முதல் பாடலை அரபுக் குரலாளர் பாடும்போதுதான் பாண்டா வந்தான். அன்று தேர்தல் நாள். எனக்குத் தெரியும், பையன்களுக்காக பாண்டாவிடம் அவர்கள் நிறையப் பணம் கொடுப்பார்கள். அதனாலேயே, அதீத ஆர்வத்தில் என்னால் தூங்க முடியவில்லை.

‘’உன்னிடம் என்ன சொன்னார்கள்?’’ நான் விசாரித்தேன்.

‘’ஒன்றுமில்லை.’’

‘’ஒன்றுமில்லையென்றால் என்ன அர்த்தம்?’’ நான் எரிச்சலடைந்தேன். ‘’அப்படியென்றால், ஒன்றுமில்லாததற்காகவா உன்னை இரவு முழுவதும் அவர்களோடு வைத்திருந்தார்கள்?’’

பாண்டா எதுவும் சொல்லவில்லை. அவன் நீளமான இரண்டு வீவீ சுருள் பொதிகளை எடுத்து ஒன்றை என்னிடம் நீட்டினான். நாங்கள் அதை ஜம்போ, பெரியது என்போம். சடசடக்கும் நூறு நெய்ரா நோட்டு இரண்டையும் கொடுத்தான். இந்த மாதிரி சடசடக்கும் நோட்டுகளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.

‘’தொழுகைக்குப் பிறகு, மசூதியின் பின்னால் எல்லோரையும் கூட்டி, ஆளுக்கு நூற்றைம்பது கொடுப்போம். பின்னர், அங்கேயே காத்திருப்போம். என்ன செய்யவேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள். வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களுக்குக் கூடுதலாக ஒரு இருநூறு கிடைக்கும். எல்லா அட்டைகளையும் நான் வாங்கி, அவர்கள் அலுவலகத்திற்கு எடுத்துப் போகிறேன்.’’

அட்டைகளை அவர்கள் எதற்குக் கேட்கிறார்களென்று எனக்குப் புரியவில்லை. பெரிய கட்சியைத் தோற்கடிக்க உதவுமாறு கேட்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், எனக்கு அந்தக் கூடுதல் இருநூறு வேண்டும். தேர்தலில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாயன்லாயியிலுள்ள எல்லோருக்கும் அப்படித்தான். சபோன் காரியிலுள்ளவர்களும் சிறிய கட்சியைத் தான் விரும்பினார்கள். அவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இன்ஷா அல்லா!

நாங்கள் வாக்களிக்கப் போவதில்லையென்றாலும் பாயன் லாயிக்கும் சபோன் காரிக்கும் நடுவிலிருந்த வாக்குச் சாவடி நோக்கிச் செல்கிறோம். அன்றைய நாள் மிவும் மெல்ல நகர்வதாகத் தோன்றியது. வெயில் வேறு காலையிலேயே கொளுத்துகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் விரைவில் வந்து, தேர்தல் உடனேயே தொடங்கிவிடுமென்றுதான் நினைக்கிறேன். ஏராளமான பெண்கள் வாக்களிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். சிறிய கட்சி ஆட்கள்தான் எல்லா இடங்களிலும் தெரிகின்றனர். வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் குடிக்கத் தண்ணீரும் ஜோபோ10 சர்பத்தும் கொடுக்கிறார்கள். பெண்களிடம் உப்பு மற்றும் கருவாட்டுப் பொதி ஒன்றும் நெகிழிப்பைகளில் கொடுக்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாகச் சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பெரிய கட்சியின் முகவர் வெள்ளைநிற வெற்றுப் பேருந்து ஒன்றில் வந்து இறங்கியதும் அவர் அணிந்திருந்த கட்சி அடையாளங்களைக் கழற்றுகிறார். தாக்கப்படுவோமோ என்று அவர் பயப்படுவதாக நான் நினைத்தேன். சிறிய கட்சிக்காரர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தும் அவர் புகார் எதுவும் சொல்லவில்லை; சொல்ல நினைத்தாலும் முடியாது; ஏனென்றால், அப்படிச் சொன்னால், அவரை அங்கிருந்த இரண்டு காவல்துறை காவலர்களாலும்கூடக் காப்பாற்றமுடியாதென்பது அவருக்கும் தெரியும்; ஏனென்றால், பெரிய கட்சிக்காக வேலைசெய்யத் தொடங்கும் முன் அவரும் பாயன்லாயியில் இருந்தவர் தான், இப்போது சபோன் காரியில் ஒரு அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவர் அங்கும் கூட எப்போதாவதுதான் தங்குவதாகவும் அதிக நாட்களும் அவருடைய பணம் முழுவதும் போட்டு வைத்திருக்கும் தலைநகரில்தான் இருப்பதாகவும் பாண்டா சொல்கிறான்.

வாக்களிப்பு முடியப்போகிறது. என்னுடைய வீவீ வீரியமும் குறைகிறது; ஆனாலும் காலையில் பாண்டா கொடுத்த ஜம்போ இன்னும்கூட வேலை செய்யத்தான் செய்கிறது. மீண்டும் மீண்டுமாக வழங்கப்பட்ட வெறும் ஜோபோவை மட்டும் குடித்துக் குடித்து அலுத்துவிட்டது, எனக்கு நல்ல பசி. பாண்டாவை எங்கும் காணவில்லை. அவனைத் தேடித் தெரு மூலை திரும்பிய போது, அங்கே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, குனிந்துநின்று இருமிக்கொண்டிருந்தான். நிறையவே இரத்தம் துப்பினான். நன்றாக இருக்கிறாயா என நான் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் தரையில் ஒதுக்கமாக உட்கார்ந்தான். தண்ணீர்ப் பை ஒன்று வாங்கி வந்து கொடுத்தேன். வாயைக் கழுவிக் கொப்புளித்துவிட்டு, சிறிது தண்ணீரைக் குடித்தான்.

‘’இந்தத் தேர்தலில் நாம் ஜெயிப்போம்,’’ என்றான், பாண்டா.

‘’அது சரி, அதை யார் தடுத்துநிறுத்த முடியும்?’’ – நாங்கள், இப்போது உண்மையான அரசியல்வாதிகளைப் போல, கட்சிக்காரர்களைப் போலப் பேசத் தொடங்கிவிட்டோம்.

‘’நமக்காக அந்தத் தங்குமிடத்தை அவர்கள் உண்மையில் கட்டித்தருவார்களா?’’ நான் கேட்டேன்.

‘’அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்கு வேண்டியது, வேலைசெய்யச் சொல்கிற ஒவ்வொரு முறையும் அதற்கான பணத்தைத் தந்துவிடவேண்டும். அவ்வளவுதான், தேர்தலுக்குப் பிறகென்றால், அவர்களை எங்கே பார்க்கப்போகிறாய்?’’

பாண்டா மிகவும் புத்திசாலி. கட்சிக்காரர்கள் செய்வார்கள் என எந்த ஒன்றையும் எதிர்பார்ப்பதை நானும் நிறுத்தவேண்டும். மீதியிருந்த ஜம்போவைப் பற்றவைத்துக்கொண்டே, அவனுக்கும் வேண்டுமா எனக் கேட்கிறேன்.

‘’நீ வரும் முன்புதான் நானும் ஒன்று இழுத்தேன்,’’ என்றான், அவன்.

*****

கோஷங்களும் கூச்சல்களும் கேட்டன. எண்ணிக்கை முடிந்துவிட்டது; நாங்கள் எதிர்பார்த்தது போலவே, இங்கே சிறிய கட்சிதான் வெற்றிபெற்றது. இங்கே பெரிய கட்சிக்கு இருபது வாக்குகளுக்கு மேல் கிடைத்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து, கோஷமிடவும், காலி டப்பாக்களைத் தட்டி, ஆரவாரம் செய்து, ஆடித் தீர்க்கவுமாக எழுந்து சென்றோம்.

***

நான் மிகவும் சீக்கிரமாகவே களைத்துவிட்டேன், ஏனென்றால் நேற்று இரவு முழுவதும் பாண்டாவுக்காகத் தூங்காமல் விழித்துக் காத்திருந்தேன். நான் வேகத்தைக் குறைத்தேன். அப்போதும் உயரத்தில் தான் மிதந்தேன்; என் தலைக்குள் என்னென்னவோ சிந்தனைகள் திடீரென்று தோன்றிச் சுற்றிச்சுற்றி வருகின்றன. குரான் ஆசிரியரை விட்டுவந்த பின்னர் தொழுவதே இல்லையென்றாகிவிட்டது. சபோன் காரியிலுள்ள ஜுமாஅத் மசூதிக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டும் போகிறோம். ஏனென்றால் அங்கே நிறைய ஆட்கள் பிச்சையிடுவதோடு, இலவச உணவும் அதிகம் கொடுக்கிறார்கள். ஆனால் இதயத்து எண்ணங்களை அல்லா தீர்மானிக்கிறார். நாங்கள் பயங்கர மனிதர்கள் இல்லை. நாங்கள் சண்டையிடுகிறோமென்றால், அப்படிச் சண்டையிடவேண்டியிருக்கிறது. சபோன் காரியில் சிறிய கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே நுழைகிறோமென்றால் எங்களுக்குப் பசிக்கிறது. யாராவது இறக்கிறார்களென்றால் நல்லது, அது அல்லாவின் விருப்பம்.

பாண்டா மீண்டும் காணாமல் போகிறான். அதிகாலையில் திரும்பிவந்து, இன்று காலை தொழுகைக்குப்பின் நாம் மீண்டும் வெளியே போகவேண்டியிருக்கிறது என்கிறான்.

‘’தேர்தலில் நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்,’’ என்றான், பாண்டா பயங்கரமாக இருமிக்கொண்டே.

‘’அவர்கள் எண்களில் விளையாடியிருக்கிறார்கள். நாம் வெளியே போய்த்தானாகவேண்டும்.’’

சுற்றிலும் ஒரே கூச்சலாக இருந்தாலும் நான் தூக்கக் கலக்கத்திலிருக்கிறேன். முன்,பின் பழக்கமில்லாத பையன்கள் மசூதிக்குப் பின்னால் நின்று கத்திக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தூங்கினால் போதுமென்றிருக்கிறது. என் வயிறு சிக்கல் செய்கிறது; தலை வலிக்கிறது. இதுபோன்ற நேரத்துக்காகத்தானே எங்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். மற்ற பையன்களைப் போல, இந்த உடைக்கிற, கொளுத்துகிற வேலைக்கெல்லாம் நான் பழக்கமானவனல்ல. கூக்கா மரத்தடியில், கொஞ்சமாவது நெருப்பும் கண்ணாடி உடைப்பும் நிகழாமல் எதுவும் முழுமையாகத் தீருவதில்லை.

‘’இந்தத் தெற்கத்தியான்கள் நம்மை ஏமாற்ற முடியாது, நாம்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். பிறகென்ன, மண்ணாங்கட்டி!’’

கூச்சல் போடுகிற பையனை எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவன் கையில் ஒரு அரிவாள் இருக்கிறது. ‘இங்கே தெற்கத்திக்காரர்கள் யாரும் இல்லையே,’’ என நான் நினைக்கிறேன். ‘’அவன் எதற்காக அரிவாளைத் தூக்கிக்கொண்டு நிற்கிறான்? நம் எல்லோரிடமும் தான் கத்தி இருக்கிறது.’’ என்று நான் கிசுகிசுக்கிறேன். கூட்டம் கொந்தளிக்கிறது. பாண்டா, அவன் தனியொருவனாகவே பார்த்துக்கொள்வான் போலத் தோன்றுகிறான். முன்பொருநாள் சிறிய கட்சி ஆட்கள் வந்த அதே திறந்த கூரை வெள்ளை டிரக் வந்து ஓரமாக நிறுத்தப்பட்டதும் அதனை நோக்கி நடக்கிறான். அவன் குனிந்து டிரக்கினுள் இருந்த யாருடனோ பேசுவதைக் கவனிக்கிறேன். பாண்டா வெறுமனே தலையை மட்டுமே அசைத்துக்கொண்டிருக்க, அவனிடம் அப்படியென்னதான் சொல்லித் தொலைக்கிறார்களென நினைத்துக்கொள்கிறேன். அவனுடைய பழைய பழுப்புநிற ஜலாபியா11வின் இருபுறப் பைகளிலும் கைகளை நுழைத்துக்கொண்டே அவன் திரும்பி வருகிறான்; கூட்டத்துக்கு முன் வந்ததும், அரிவாளை வெறுமனே காற்றில் வீசிக்கொண்டிருந்த பையனின் காதுகளில் ஏதோ இரகசியம் சொல்கிறான். பையன் கூட்டத்தை அமைதியாக இருக்குமாறு கத்தத் தொடங்குகிறான்.

‘’நாம் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறோம்,’’ என்கிறான், அவன். ‘’பாயன் லாயியிலுள்ள பெரிய கட்சிக்குச் சொந்தமான எல்லாவற்றையும் சிதறடிக்கப்போகிறோம்.’’

அந்தப் பையன் யாரென்று பாண்டாவிடம் கேட்க வேண்டும்.

‘’அவர்களின் அலுவலகத்தைக் கொளுத்துங்கள்,’’ என்று கத்துகிறான் கோபெதனிசா.

கூட்டம் கத்திக் கூச்சலிடுகிறது. அவர்களின் அலுவலகத்துக்குள் போய்ப்பார்க்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை. அங்கு நிறையப் பணம் வைத்திருக்கிறார்களாம். நானும் கூட்டத்தோடு சேர்ந்து கத்துகிறேன்.

டிரக்கில் அரிவாள், பட்டாக்கத்தி, குத்தீட்டி மற்றும் சின்னச் சின்ன டப்பாக்களில் பெட்ரோல் எல்லாம் இருக்கின்றன என்கிறான் பாண்டா. அவர்கள் திருடிய வாக்குளைத் திரும்பப்பெற நம் ஒவ்வொருவருக்கும் இருநூறு நெய்ரா கிடைக்கும். இருநூறு என்றால் அருமையானதுதான். ரொட்டியும் பொரித்த மீனும் வாங்கலாம். மீன் சாப்பிட்டு எவ்வளவோ நாளாகிவிட்டது.

நாங்கள், இருநூறு நெய்ரா நோட்டுகளையும், பெட்ரோல், தீப்பெட்டி, அரிவாள்களையும் வாங்கிக்கொள்வதற்காக டிரக் முன்னால் அவசர அவசரமாக அணிவகுத்தோம். பணத்தைக் கொடுத்தவன் எதுவுமே பேசவில்லை. அவன் எங்கள் கண்களை மட்டும் உற்றுநோக்கிவிட்டு, நோட்டுகளை நீட்டிக்கொண்டிருந்தான். சிறிய பையன்களுக்கு ஒரு நூறு மட்டும் கொடுத்தான். அவனை நெருங்கும்போது, சிறுவனாகத் தெரியாமலிருக்க, நான் நெஞ்சை நிமிர்த்தி, விரித்து, நாடியைத் தூக்கி உயர்த்திக்கொண்டு சென்றேன். எனக்கு இருநூறு வேண்டும். அந்த மனிதன் என்னைப் பார்த்துவிட்டு நூறு கொடுப்பதா அல்லது இருநூறு கொடுப்பதா என்று சிறிது யோசித்தான்.

‘’நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம்,’’ பாண்டா என் பின்னாலிருந்து, அந்த மனிதனிடம் சொன்னான்.

அந்த மனிதனுக்குத் திருப்தியில்லை. அவன் ஒரு நூறு நெய்ரா நோட்டினை என்னிடம் நீட்டினான். நான் அதை வாங்கிக்கொண்டு – நான் ஒருபோதும் பணத்தை வேண்டாமென மறுப்பதேயில்லை – டிரக்கின் பின்னாலிருந்து ஒரு அரிவாளை எடுத்துக்கொண்டேன். பாண்டா அந்த மனிதனின் காதில் ஏதோ இரகசியமாகச் சொல்லிப் பின், ஒரு நோட்டினை வாங்கி, என்னிடம் நீட்டினான். அது இன்னொரு நூறு நெய்ரா நோட்டு. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் கண்களிலிருந்த தூக்கமெல்லாம் பறந்துவிட்டது. அதனால்தான் எனக்கு பாண்டாவைப் பிடிக்கிறது. அவன் எனக்காகச் சண்டை போடுகிறான். அவன் ஒரு நல்ல மனிதன். கருப்புநிற நெகிழித்தாள் ஒன்றில் சுருட்டிப் பொதியப்பட்ட ஏதோ ஒன்றை என்னிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னான். என்னுடைய காற்சட்டைகளின் பைகள் பெரியவை. அந்தப் பொதியிலிருப்பது பணம்தான். எவ்வளவென்றுதான் எனக்குத் தெரியாது.

நாங்கள் செய்த முதல் வேலை சந்தையின் முன்புற வாயிலில் நின்ற பெரிய கட்சி வேட்பாளரின் ஆளுயர உருவப்பலகை ஒன்றை எரித்துச் சாம்பலாக்கியது தான். அவரின் முகத்தைத் தீ நாக்குகள் பொசுக்கித் தின்று தீர்த்ததை நான் ரசித்தேன். அது அவரது உண்மையான முகமாக இருக்கக்கூடாதா என்றொரு ஆதங்கமும் எனக்குள் எழுந்தது. பெரிய கட்சியின் அலுவலகம் என் நினைவில் வந்தது. அதைத் தீ வைத்துக் கொளுத்தும் முன் அலுவலகத்துக்குள்ளும் மேசை இழுப்பறைகளிலும் முடிந்ததைச் சுருட்டிக்கொள்ளப் பீறிட்டுக் கிளம்பிய ஆர்வத்தை என்னால் அடக்கமுடியவில்லை.

பெரியகட்சியின் அலுவலகத்துக்கு முதல் ஆளாகப் போய்ச்சேர்ந்தது நான் தான். மற்றவர்கள் என்னைப் பிடித்துவிடுவதுபோல் நெருங்கிவந்தாலும் என் பின்னால்தான் வந்துகொண்டிருந்தார்கள். எல்லோருமே உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்தார்கள்; முதலாவதாக கைநீட்டிப் பணம் வாங்கியிருந்தார்கள்; அடுத்து, பெரிய கட்சியின் மீதான வெறுப்போடு, கேள்விப்பட்ட செய்தியால் பொங்கிய கோபமும் சேர்ந்துகொண்டதுதான், காரணம். வாயிற்கதவினை நாங்கள் நெருக்கித் தள்ளித் தள்ளிக் கடைசியில் அந்தக்கதவு பொருத்தியிருந்த தூண்களையும் தரையோடு தரையாக விழும்வரையில் தள்ளுகிறோம். சோகான் சோஜா என்ற கிழவன்தான் அந்த இடத்துக்குக் காவல். அவன் சில பையன்களோடு போராட முயற்சித்து, ஒரு பையனின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, ஊதலை ஊதுகிறான். இன்னொரு பையன் அவன் வாயிலிருந்து ஊதலைப் பிடுங்குகிறான்.

‘’சோகோன் சோஜா, நீ வயதான கிழவன், உன்னோடு எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் தள்ளிக்கொள், பின்னால் போய் நில். நாங்கள் இதைக் கொளுத்தி முடிக்கிறோம்,’’ என நான் அவனுக்குச் சொல்கிறேன்.

இந்தக் காவலாள் விடாப்பிடியாக இருக்கிறான். அவன் ஒரு ஓய்வுபெற்ற படைவீரன்; எங்களைப் பயமுறுத்தி, விரட்டிவிடலாமென நினைக்கிறான். அவன் அவனுடைய நீளக்கம்பினை எடுத்து ஒரு பையனின் தோளில் அடிக்கிறான். கோபெதனிசா பட்டாக்கத்தியோடு முன்னாகப் பாய்ந்து அந்த வயதான மனிதனின் மார்பிலும் கழுத்திலும் வெட்டுகிறான். அந்தக் கிழவன், பையன்கள் எல்லோருக்கும் தெரிந்தவன் என்பதால் அவனை முதல் ஆளாக அடிக்க யாருமே விரும்பவில்லை. ஆனால், இப்போது அவன் கீழே விழுந்துகிடக்கவே பையன்கள் அவனது உடலைத் தாக்குகிறார்கள். இப்படியான ஒரு வயதான மனிதனைக் கொல்ல நேர்வது துரதிருஷ்டம் என நினைக்கிறேன். ஆனால், அவனாகத்தான் இதை இழுத்துக்கொண்டான். கோபெதனிசா, நிச்சயம் இதைப்பற்றிப் பெருமைபேசப் போகிறான்.

நான் கட்டடத்துக்குள் ஓட, எனக்கு முன்னாலேயே ஒரு பையன் முன்கதவைத் திறந்துவிட்டான். அலுவலகத்தில் கொஞ்சமாவது பணம் இருக்கும்; இல்லையென்றால், காவலாள் ஏன் ஒரு கூட்டத்தையே எதிர்க்கத் துணியப்போகிறானென்பது என் எண்ணம். நாங்கள் எல்லோரும் மேசை நாற்காலிகளை உடைத்து, இழுப்பறைகளைத் தேடிப்பார்த்து, கையிலகப்பட்ட சுவரொட்டி, காகிதங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிந்து, உள்ளே நுழைகிறோம். நாங்கள் ஒவ்வொரு அறையாகப் போகிறோம். எனக்குக் கிடைத்தது, இழுப்பறை ஒன்றிலிருந்த கையடக்க வானொலி ஒன்று மட்டுந்தான். அச்சிஷுருவுக்கு புத்தம் புதிய ஒரு தொழுகைப் பாயும் தொப்பியும் கிடைக்கிறது. எனக்கு மிகப்பெரிய ஏமாற்றந்தான்.

பாண்டா அரை கேலன் பெட்ரோல் டப்பாவைப் பிடித்துக்கொண்டிருக்க, மசூதியின் பின்புறம் கத்தியை வீசி,வீசிப் பேசிக்கொண்டிருந்த பையனும் அப்படியே நின்றுகொண்டிருக்கிறான்.

‘’வெளியே போ, நாங்கள் இந்தக் கட்டடத்தைக் கொளுத்தப் போகிறோம்!’’ என பாண்டா உத்தரவிடுகிறான்.

கையடக்க வானொலியை, நான், எனது காற்சட்டைப் பைக்குள் வைக்க, அது தரையில் விழுகிறது. பையிலிருந்த ஓட்டை பெரியதாகியிருக்கிறது. வானொலியில் ஒரு சிறிய பிடிகயிறு இருந்தது. அதை என் கழுத்தைச் சுற்றிக் கட்டி, வானொலியைத் தொங்கவிட்டு, பட்டாக்கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டேன். பிற பையன்கள் பெரிய கட்சிக்குச் சொந்தமான வேறு பொருட்களைத் தேடி வெளியே செல்லும்போது, பெட்ரோல் ஊற்றிமுடியட்டுமென, நான் தீக்குச்சிகளோடு காத்திருக்கிறேன்.

‘’நிறைய ஊற்று, இன்னும் ஊற்று,’’ என அந்தப் பையனுக்குச் சொல்கிறான், பாண்டா.

‘’இல்லை, இதுவே போதும். இன்னும் நிறைய இடங்களுக்குத் தேவைப்படும். இது பெட்ரோல், மண்ணெண்ணெய் இல்லை.’’

பாண்டா ஒத்துக்கொள்கிறான். அவர்கள் வெளியே வரட்டுமென நான் காத்திருக்கிறேன். தீக்குச்சியை அழுத்தமாகக் கிழித்துப் பொருத்தி வீசுகிறேன். அந்தப் பையன் சொன்னது சரி. சாளரம் வழியாகத் தீ நாக்குகள் சுழன்று குதித்து, கூரைக்குத் தாவும் அழகினை ரசிக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு மூட்டை சோளக் கதிர்களை எரித்துவிட்டேனென்பதற்காக அப்பா என்னைச் செத்துவிடுமளவுக்கு அடித்ததை நினைத்துப் பார்க்கிறேன். அது, மழை, எங்கள் கிராமத்தில் பெய்வதை நிறுத்திக்கொள்வதற்கும், என் அப்பா என்னையும் என் சகோதரர்களில் பலரையும் குரான் பயிற்சிக்கு அனுப்புவதற்கும் முன்பாக நிகழ்ந்தது. என் சகோதரர்கள் இப்போது எங்கிருக்கிறார்களென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம், அல்லது என்னைப் போலவே இங்கேயே தங்கியுமிருக்கலாம்.

எரியும் கட்டடத்திலிருந்து கரிப்புகையில் மூழ்கிய நல்ல தடியான மனிதன் ஒருவன் வெளியேறி, இருமிக்கொண்டும், வழியிலிருந்த பொருட்கள் மீது தடுக்கி விழுந்து தட்டுத்தடுமாறியும், என்னை நோக்கி ஓடிவருகிறான். அவனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. பெரிய கட்சியைச் சேர்ந்தவன்.

‘’துரோகி!’’ ஒரு பையன் கூச்சலிடுகிறான்.

அந்த மனிதன் ஒரு பெண்ணைப் போல, அருவருப்பான டான் டாவ்து12 போல கைகளை உயரத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் நன்றாகக் கொழுத்துப் போயிருக்கிறான்; அதனாலேயே, நான் அவனை வெறுக்கிறேன். அவனது கட்சியை வெறுக்கிறேன்; அவர்கள் எங்களை எப்படியான ஏழைகளாக்கியிருக்கிறார்கள்! அவன் ஒரு கொழுத்த எலியைப் போல ஒளிந்திருந்ததாக, நான் வெறுக்கிறேன். அவன் என் அருகே தட்டுத் தடுமாறியபோது, அவன் கழுத்தின் பின்னால் அடிக்கிறேன். அவன் தலைகுப்புற விழுந்து முனகுகிறான். நான் மீண்டும் அடிக்கிறேன். பட்டாக்கத்தி கூர்மையாக இருக்கிறது. நான் எதிர்பார்த்ததைவிடக் கூர்மையாக, கனமில்லாமல் இருக்கிறது. எங்கிருந்துதான் இது மாதிரிக் கத்திகளை வாங்குகிறார்களோ, தெரியவில்லை! மாலம் ஜுனாய்டுவின் பட்டாக்கத்திகள் மிகவும் கனமானவை, மசூதியின் முன்புறம் அல்லது அவரது வீட்டு முன்பாக களைகளை வெட்டுவது என்றாலே எனக்கு வெறுப்பு!

அந்த மனிதன் அதிகம் அசையவில்லை. பாண்டா கேலனைத் தூக்கி, அவன் மீது பெட்ரோலை ஊற்றுகிறான். தீயைப் பொருத்துமாறு, பாண்டா என்னைப் பார்க்கிறான். நான் அந்த உடலை வெறித்துப் பார்க்கிறேன். பாண்டா தீப்பெட்டியை என்னிடமிருந்து பிடுங்கிக் கொளுத்துகிறான். நெருப்பு அவனது ஆடைகளையும் தசையையும் விழுங்கும் முன் அவனது உடல் சிறிதாக மட்டுமே அசைந்தது. அவன் ஏற்கெனவேயே இறந்துபோயிருந்தான்.

நாங்கள் அங்கிருந்து நகர்ந்தபோது, இந்த எரிப்பது, வெட்டுவது, கிழிப்பது பற்றியெல்லாம் சிறிதுகூட நினைத்துப் பார்க்கவில்லை. இந்தப் பட்டாக்கத்தி சதையை வெட்டிக்கிழிக்கும்போது என் உடலில் ஏற்படும் நடுக்கத்தை நான் விரும்பவில்லை; அதனால் தீவைப்பதில் ஒட்டிக்கொள்வதற்காக பாண்டாவிடமிருந்தும் தீப்பெட்டியை மீண்டும் வாங்கிக்கொள்கிறேன். முதலில் நாங்கள் பெரிய கட்சி ஆட்களுடைய கடைகள், சிறிய கட்சி ஆட்களுடைய கடைகள் எனப் பாகுபடுத்தினோம்; ஆனால் பின்னர், எங்களுக்குப் பசியும் தாகமும் அதிகரித்தபோது, கண்ணில்பட்ட கடை எதுவாயிருந்தாலும் உடைத்து உள்ளே நுழைந்துவிட்டோம்.

பாயன் லாயியைத் தாண்டியும் சென்றபோது, துப்பாக்கிச் சப்தம் கேட்டு, எங்கள் கூட்டம், மேற்கொண்டு நகராமல் நிறுத்தப்படுகிறது. நான் கடைசி, கடைசியாக, மிகவும் பின்னால் நின்று சிறுநீர் கழிக்க ஒதுங்கிநிற்க, கூட்டம் பின்னோக்கி ஓடிவருவதைப் பார்க்கிறேன். இரண்டு காவல்துறை வாகனங்கள் இந்தப் பக்கமாக வந்து வானத்தை நோக்கிச் சுடுகின்றன. அவை நெருங்க, நெருங்க, காவலர்கள் கூட்டத்தை நோக்கிச் சுடத்தொடங்குகின்றனர். முதல் ஆள் கீழே விழுந்ததைப் பார்த்ததும் நான் திரும்பிக்கொண்டு ஓட்டமெடுக்கிறேன். பாண்டா வருகிறானா என்று திரும்பிப் பார்க்கிறேன்; அவன் வரவில்லை. குனிந்து, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருமுகிறான். நான் நிற்கிறேன்.

உயரம் குறைந்த வேலி ஒன்றின் பின்னால் நின்று, ‘’பாண்டா, எழுந்திரு!’’ என்று அலறுகிறேன்.

எல்லோரும் அவனைக்கடந்து ஓடுகிறார்கள். காவலர்கள் தொடர்ந்து சுடுகின்றனர். அவன் எழுந்து தடுமாறி ஓடுகிறான்; மீண்டும் நிற்கிறான். காவலர்கள் நெருங்கிவிட்டனர்; பாண்டா எழுந்து ஓடவேண்டும். நானும் ஓடிவிட நினைக்கிறேன்; அவனுடைய தாயத்துகள் அவனைக் காப்பாற்றுமென்று நினைக்கத்தொடங்குகிறேன். ஆனாலும் ஒரு சிறிது தயங்குகிறேன். அவன் எழுந்து மீண்டும் ஓடத் தொடங்குகிறான். பின்னர், பின்னாலிருந்து யாரோ அடித்தது போலத் தலைகுப்புற விழுகிறான்; மேற்கொண்டு அவன் அசையவில்லை. நான் ஓடுகிறேன். குறுகலான நேர்வழியைத் தவிர்த்துவிட்டு, திறந்தவெளி மசூதியின் குறுக்காக ஓடுகிறேன். மாலம் ஜுனாய்டுவின் மக்காச்சோளத் தோட்டத்தின் குறுக்காக ஓடுகிறேன். பையன்கள் அங்கே ஒளிந்திருக்கிறார்கள். நான் நிற்கவில்லை. கூக்கா மரத்தைத் தாண்டி ஓடுகிறேன். துப்பாக்கிச் சப்தம் கேட்காவிட்டாலும் நான் நிற்கப்போவதில்லை. ஆற்றுக்குள் பாய்ந்து, வயல்களின் குறுக்காக, பாயன் லாயியிலிருந்து வெகு தூரத்துக்கு, வெகுவெகு தூரத்துக்குச் செல்லும்வரையில் நிற்கப்போவதில்லை.

குறிப்புகள்

பாயன் லாயி1 Bayan Layi – இடப்பெயர்
கூக்கா மரம்2 kuka tree – அழுவினி மரம்
கோபெதனிசா3 Gobedanisa – நாளை நிரம்பத்தூரம் என்னும் பொருள் கொண்ட ஆண்பால் பெயர்ச்சொல்
சபோன் காரி4 Sabon Ghari – நகரத்தின் பெயர்
ஹர்மாட்டன்5 Harmattan – ஆப்பிரிக்கக் கண்டத்தில் அட்லாண்டிக் கடலோரம் புழுதி வாரிவீசும் பருவக்காற்றின் பெயர்.
உங்குவா6 unguwa – கூட்டம்.
அல்மாஜிரி7 almajiri – அரபு மொழியிலிருந்து கடன் பெறப்பட்ட ஒரு சொல் – இஸ்லாம் பற்றிய அறிவினைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறிய மாணவர் என்று பொருள்படும். எனினும் நைஜீரியாவின் ஹௌசா மொழியில் அல்மாஜிரி என்ற சொல் குரான் படிக்கிற, வீட்டுக்கு வீடு பிச்சையெடுக்கும் குழந்தை அல்லது பெரியவர்களைக் குறிக்கிறது. மிகவும் இழிவான தொனியிலேயே பயன்படுகிறது.
யான் தாபா8 yan daba – கானோ மற்றும் வடக்கு நைஜீரியாவின் நகர்ப்புற குற்றப் பின்னணிப் போக்கிரிக் கும்பல்கள் யான் தாபா என அழைக்கப்படுகின்றன. இடைநின்ற பள்ளிக் குழந்தைகளும் அல்மாஜிரி நடைமுறையிலிருந்து வருகின்றவர்களுமான இளைஞர்களும்தான் இந்தக் கும்பல்களில் சேர்கின்றனர்.
சுனா9 Sunnah – முகமது நபியின் வாய்மொழிப் போதனைகள்
ஜோபோ10 zobo – உலர்ந்த புளிச்சைக் கீரை இலைகளுடன் இஞ்சி, பூண்டு, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கொதிக்கவைத்து, இறுத்துச் சர்க்கரை, பனிக்கட்டி சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நைஜீரிய சர்பத்.
ஜலாபியா11 jallabiya – கால்வரைக்குமான முழுநீள ஜிப்பா
டான் டாவ்து12 dan daudu – பெண் தோற்றமுள்ள ஆண். ஒன்பது, மாமா என இழிவாகக் குறிக்கும் சொற்களுக்கு இணையான ஹௌசா மொழிச்சொல்.
“Bayan Layi,” in Per Contra (Online, Fall, 2012)

http://www.percontra.net/issues/25/fiction/bayan-layi

அஞ்சல் நிலையம் சார்லஸ் புகோவ்ஸ்கி – தமிழில் – பாலகுமார் விஜயராமன்

download

I

1

ஒரு தவறினால் துவங்கிய நிகழ்வு அது.

கிருஸ்துமஸ் பண்டிகைக் காலம். அந்த சிறுமலையில் அக்காலங்களில் தற்காலிக பணிகளுக்காக அருகிலுள்ள யாரையாவது கூலிக்கு அழைத்துக் கொள்வர் என்பதை ஒரு குடிகாரன் மூலம் அறிந்து கொண்டு அங்கே ஆஜரானேன். அடுத்த நிமிடம், முதுகில் இந்த தோற்பையை சுமந்து கொண்டு ஓய்வாக மலையேறிக் கொண்டிருந்தேன். என்னவொரு மென்மையான வேலை என நினைத்துக் கொண்டேன். உங்களிடம் ஒன்றிரண்டு அஞ்சல் தொகுதிகளை மட்டும் கொடுப்பார்கள். அவற்றை சரியாக விநியோகித்தால், நிரந்தர பணி செய்யும் தபால்காரரோ அல்லது மேற்பார்வையாளரோ மேலும் ஒரு அஞ்சல் தொகுதியைக் கொடுப்பார்கள், நீங்கள் நிதானமாக தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு, கிருஸ்துமஸ் அட்டைகளை அவற்றின் முகவரியிலுள்ள அஞ்சல் பெட்டிகளில் சேர்ப்பித்தால் போதும்.

கிருஸ்துமஸ் பண்டிகைக் காலத்திற்கான தற்கால பணியாளனாக இரண்டாவது நாள் என நினைக்கிறேன், அன்று தான் அந்த பருத்த பெண்மணியை சந்தித்தேன். நான் கடிதங்களை விநியோகித்துக் கொண்டிருக்கையில் அவள் என்னருகே வந்து என்னையே சுற்றிக் கொண்டிருந்தாள். பருத்த என்று ஏன் சொன்னேன் என்றால், அவள் பிருஷ்டம், முலை என உடலில் தேவையான அனைத்துப் பாகங்களிலும் தோதாக பருத்துப் போய் இருந்தாள். முதல் பார்வைக்கு சற்று கிறுக்குத்தனம் பிடித்தவள் போல் தோன்றினாலும், நான் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அவள் உடலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் பேசினாள், பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள். பிறகு தான் தெரிந்தது, தூர தேசத்து தீவொன்றில் அவனது கணவன் ஏதோ அதிகாரியாக பணியாற்றுகிறான் என்றும் இங்கு ஒரு சிறிய வீட்டில் அவள் தனிமையில் தான் இருக்கிறாள் என்றும்.

”அந்த சிறு வீடு எங்கே?” என வினவினேன்

ஒரு துண்டுக்காகிதத்தில் அவள் முகவரியை எழுதினாள்

நான் சொன்னேன், “தானும் தனியாகத் தான் இருக்கிறேன், நான் உன் வீட்டுக்கு வருகிறேன், பிறகு இரவு முழுதும் நாம் பேசிக்கொண்டிருக்கலாம்”

நான் ஒருத்தியுடன் வாழந்தவன் தான், ஆனால் எப்போதோ எங்கோ என்னை விட்டுப் போன பின் நான் தனிமையில் தான் இருந்தேன் இல்லையா. அதுவும் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த பருத்த பிருஷ்டங்களுக்காகவே தான் தனிமையில் தான் வாழ்ந்தேன், சரி தானே !

அவள் அன்று நன்கு ஒத்துழைத்தாள், அவள் படுக்கையில் சிறந்தவள் தான், ஆனால் மூன்று நான்கு இரவுகளுக்குப் பிறகு மற்ற பெண்களைப் போலவே அவளிடமும் எனக்கு நாட்டம் குறைந்து விட்டது. அதன் பின் நான் அவளிடம் செல்லவில்லை.

ஆனால், இந்த தபால்காரன் வேலை.. யாருக்காவது தபால் கொண்டு போய் கொடுக்கவேண்டியது, அப்படியே அவர்களுடன் படுத்து விட்டு வருவது. இந்த நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. கடவுளே … இது தான் எனக்கான வேலை, ஆம் ஆம் ஆம்.

2

நான் எழுத்துத் தேர்வு எழுதினேன், தேர்வானேன், உடல் நலத் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றேன். பிறகென்ன, மாற்றுத் தபால்காரனாக பணியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் சுலபமாகத் தான் இருந்தது. நான் மேற்கு அவொன் நிலையத்திற்கு அனுப்பப்பட்டேன். அங்கு வேலை கிருஸ்துமல் காலத்தியது போன்றே இருந்தது ஆனால் என்ன, யாருடனும் படுக்கைக்குத் தான் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு நாளும் எவளாவது கிடைப்பாள் என்ற எதிர்பார்ப்புடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினேன். ஆனால அங்கு வேலைப்பளு மிகக்குறைவு. எனவே நான் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேலை செய்து ஒப்பேற்றி விட்டு நன்றாக உலாவிக் கொண்டிருந்தேன். அங்கே எனக்கு சீருடை கூட கிடையாது, வெறும் தொப்பி மட்டும் தான். எனவே எனது வழக்கமான உடைகளேயே அணிந்து கொண்டேன். எனக்கு ஆடை வாங்க எல்லாம் எங்கே காசிருந்தது, நான் தான் வந்த பணத்தை எல்லாம் என் பெண் தோழி பெட்டியுடன் சேர்ந்து குடிப்பதிலேயே செலவழித்து விட்டேனே.

பிறகு நான் ஓக்ஃபோர்டு நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டேன்

அங்கு ஜோன்ஸ்டோன் என்ற மேற்பார்வையாளன் இருந்தான், சரியான முரடன். அங்கே வேலைப்பளுவும் அதிகமாகவே இருந்தது. ஜோன்ஸ்டோன் எப்போதும் கருஞ்சிவப்பு சட்டைகளையே அணிவான், அவை அபாயம், இரத்தம் ஆகியவற்றின் குறியீடுகளாம். அங்கே மொத்தம் ஏழு உதவியாளர்கள் இருந்தோம் – டாம் மோட்டோ, நிக் பெலிக்ரினி, ஹெர்மன் ஸ்ட்ரட்ஃபோர்டு, ரோஸே ஆண்டர்ஸன், பாபி ஹான்ஸென், ஹரல்ட் வில்லி மற்றும் நான் ஹென்றி சின்னாஸ்கி. எங்களின் பணி துவக்க நேரம் காலை 5 மணி. அந்த ஏழு பேரில் நான் மட்டுமே குடிப்பழக்கம் உள்ளவனாக இருந்தேன். நான் எப்போதும் நள்ளிரவு வரை குடித்து விட்டு அதிகாலை ஐந்து மணிக்கு அடித்துப் பிடித்துக் கிளம்பி பணிக்கு வந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பேன். நிரந்தரப் பணியாளர்கள் உடல்நலக்குறைவினால் விடுப்பு எடுக்கும் நாட்களில் தான் அவர்களுக்கு மாற்றாக எங்களுக்கு அந்த நாளுக்கான வேலை. நிரந்தரப்பணியாளர் பெரும்பாலும் மழை நாட்களிலோ, வெப்ப அலை அடிக்கும் பொழுதோ அல்லது விடுமுறை நாட்களுக்கு அடுத்த தினம் அஞ்சல் சுமை இரண்டு மடங்காக இருக்கும் போதோ தான் உடல்நலக்குறையென்று விடுப்பு சொல்லுவார்கள்.

அங்கே அஞ்சல் கொண்டு செல்ல வேண்டிய வழித்தடங்கள் ஏறத்தாழ 40 அல்லது 50 இருக்கும், அதை விட அதிகமாகவும் இருக்கலாம். ஒவ்வொரு தடமும் வெவ்வேறானவை, நிச்சயம் உங்களால் நினைவில் கொள்ளவே முடியாது. பாரவண்டியில் அனுப்ப வேண்டிய அஞ்சல் பொதிகளை சுமந்து கொண்டு நீங்கள் எட்டு மணிக்குள்ளாக தயாராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜோன்ஸ்டோனிடம் எந்த சாக்குப்போக்கும் செல்லாது, உதவியாளர்கள் தங்கள் வழித்தடத்தின் என்ன சிரமங்கள் மேற்கொண்டாலும், வேலைப்பளுவில் சரியாக உணவு உட்கொள்ள நேரம் இல்லாவிட்டாலும், ஏன் சாலையில் செத்துச் சுண்ணாம்பாகிக் கிடந்தாலும் கூட ஜோன்ஸ்டோனுக்கு எந்தக் கவலையுமில்லை. சிவப்பு நிற சட்டையில் ஜோன்ஸ்டோன் சக்கர நாற்காலியில் சுழன்றபடி, குறிப்பிட்ட வழித்தடங்களுக்காக உறையிட்டுக் கட்டிய அஞ்சலை அரை மணி நேரம் தாமதமாகத் தான் எங்களிடம் தருவான். ”சின்னஸ்கி, நீ வழித்தடன் 539ஐ எடுத்துக் கொள்!” நாங்கள் அரை மணி நேரம் தாமதமாகத் துவங்கினாலும் குறித்த நேரத்தில் பாரவண்டியில் அஞ்சல் கட்டுளை போட்டுவிட்டு சரியான நேரத்திற்குத் திரும்பி வந்தாக வேண்டும். அது போக வாரத்திற்கு ஒன்றிரண்டு தடவை நாங்கள் இரவுப்பணியும் செய்தாக வேண்டும். ஏற்கனவே நொந்து நூலாகிப் போன நாங்கள் இரவுப்பணியில் சிறு தவறுகள் செய்யும் போது அதற்காகவும் ஜோன்ஸ்டோனிடம் வசவு வாங்க வேண்டும். பாரவண்டிகள் அவ்வளவு வேகமாக செல்லக்கூடியவை அல்ல. அதனால் தாமதமாகும் அஞ்சல் மூட்டைகளை அதற்குரிய வழித்தடங்களுக்கு விநியோகம் செய்வதற்குள் வியர்வையில் குளித்தது போல் ஆகி, முடை நாற்றம் வீசத் துவங்கி விடும். நான் படுத்து எழும் வேலையில் தான் இருந்தான், ஆனால் அதை ஜோன்ஸ்டோன் என்னிடம் செய்து கொண்டிருந்தான்.

******

ரோஜாதான் சாட்சி / ஸ்பானிஷ் மூலம்: León de Greiff / ஆங்கிலத்தில்: Paul Archer / தமிழில்: கனவு திறவோன்

download (9)

(1) ரோஜாதான் சாட்சி
இது காதலில்லையென்றால்
எதுவும் காதலாகாது.
இந்த ரோஜாதான் சாட்சி
உன்னை எனக்கு நீ தந்தது முதல்
அந்த நாளில், எனக்கு ஞாபகமில்லை என்றென்று
(எனக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்)
இந்த ரோஜாதான் சாட்சியானது.

இசைக்கும் இனிப்பு
உன் இதழ்களிலிருந்து வழிந்த்து
அதற்கும் இந்த ரோஜாதான் சாட்சி
உன் காதலின் புன்னகைக்கு
எனக்கிது கனவிலும் எதிர்பாராதது
அதற்கும் இந்த ரோஜாதான் சாட்சி

உன் கண்களில் மூழ்கினேன்
இரவைப் போல ஆழமாக
அதற்கும் இந்த ரோஜாதான் சாட்சி
என் கரங்களுன்னை அழுத்தியனைக்கின்றன
உன் கரங்களின் கூட்டுக்குள்
கதகதப்பாயிருக்கிறேன்
அதற்கும் இந்த ரோஜாதான் சாட்சி
மகிழ்ச்சி விளையாடுமுன்
புத்திளம் இதழ்களில் முத்தம் பதித்தேன்
அதற்கும் இந்த ரோஜாதான் சாட்சி
உன் காதல் வலியினூடாக
என் சந்தோசக் காதலை அரங்கேற்றினேன்
உன்னோடு முதன்முதலாக
அதற்கும் இந்த ரோஜாதான் சாட்சி.

இந்த ரோஜாதான் சாட்சி
இது காதலில்லையென்றால்
எதுவும் காதலாகாது.
இந்த ரோஜாதான் சாட்சி
உன்னை எனக்கு நீ தந்தது முதல்
அந்த நாளில், எனக்கு ஞாபகமில்லை என்றென்று
(எனக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்)
இந்த ரோஜாதான் சாட்சியானது.

(2) இரவு கானம்

உனது உரோமத்தில் இரவின் நறுமணம்
கண்களில் புயலின் அச்சுறுத்தும் வெளிச்சம்
இரவின் சுவையுன் நாவில் நர்த்தணமாடுகிறது
என்னிதயமோ கருமிரவில் ஆணியறையப்பட்டிருக்கிறது

இரவு உன் சிறு கருத்த முகத்திலிருந்தது
உன் கரங்களில் படர்ந்து விரிந்திருந்தது
ஆனாலும் உன் தசைகள் நெருங்கா தூரத்திலிருந்தது
ரோஜா, வெண்ணிலா, இலவங்க வாசனை வீசியது

இரவு உன் பழுப்பான பலவர்ணமொளிரும் கண்களிலிருந்தது
நட்சத்திரங்கள் அதன் வர்ண நுரைகளிலிருந்தது
இரவு உன் பழுப்புக் கண்களை மூடும் போதுமிருந்தது
நிரந்தரமான, நிழலான, மந்திரிக்கும் இரவு

இரவின் இசை உன் காதுகளுக்குள் மறைந்து
மென்மையான முணுமுணுப்பால் தாலாட்டியது
இரவின் முழு இசையும் உன் காதில்,
சத்தத்தில், சிரிப்பில், சிந்தாத கண்ணீரிலிருந்தது

உன் முகத்தில் மறைந்திருக்கும் அமைதியற்ற வேதனை
அங்குமிங்கும் அலைகிறது
உன் அன்பின் இதயத்திலோ இடித்து மின்னும் புயல்
இந்த மந்திர இரவில் வரப்போவதை நானறிவேன்
இரவின் வாசனை உன் நாவில் மிண்டும் அசைகிறது
உன் கரங்கள் என் புருவத்தின் வெளீரிய நிலவாய்.

உன் நகங்கள் என்னைத் துளைக்கின்றன
சுவையான இரவு ஆ! இரவு
வெதுவெதுப்பான என் சிலுவையின் மரத்தில் நான்
****

நிலவொளியில் பிரதிபலித்த முழுமுகம் / சிறகா

images (8)

முகம்

நிலவொளியில் பிரதிபலித்த முழுமுகம்

நீரின் அசைவில் துகள்துகளாகத் தெறிக்கிறது

தொலைத்த முகத்துடன் பார்க்கும் அவள்

பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து

ஒருமுகமாக நின்றாள்.

சுகமான விடியல்

புலரும் காலைப் பொழுது

குளிர்ந்த காற்று

பறவைகளின் பாடல்

உன் காதல்போல்

சுகமான விடியல்.

நதி

கரையோரம் நாணல்

காற்றில் புரள

உபநதிகளுடன் கடலில் கலக்கும்

நதி

முதல் கடிதம்

ஏ வானமே !

உன் தடித்த உதடுகளை முத்தமிட்ட கணத்தில்

நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்

என்னை உயிர்ப்பிக்கவே

நீ மழை பொழிந்து கொண்டுள்ளாய்

பூமியின் முதல் காதல் கடிதம்…

சூழும் வித்தியாசம்

கடல் சூழ்ந்த பாறையில் படிந்திருக்கும் பாசி

கடல் ஆழத்தில் மூழ்கிய சிப்பியில் முத்து

எப்பொழுதும் நீரால் நிரந்தரமாக சூழப்பட்டிருந்தாலும்

பாசிக்கும் முத்துக்கும் இடையில்

வானத்திற்கும் பூமிக்கும் உள்ள பெரும் வித்தியாசம்.

/

மற(றை)க்கப்பட்ட லெனின் சின்னத்தம்பி ( திறனாய்வு ) / கோமகன்

download

தாயகத்தில் குடும்பம் சுற்றம் சூழல் என்று உன்னதமான வாழ்வைக் கொண்ட ஓர் இனக்குழுமம் தங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தின் கோரப்பிடியால் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள விருப்பமின்றிப் புலம்பெயர்கின்றது. அதன் இறுதி இலக்கானது, எதிலி என்ற முத்திரையும், தங்கள் வாழ்நாளில் எண்ணியே பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட வாழ்வியல் கோலங்களையும் இந்த எதிலிகளை எதிர்கொண்டன. வாழ்வியலிலும் சரி சொல்லாடலிலும் சரி மிகவும் கொடுமையான உளவியல் தாக்கத்தைக் கொண்டு வருவது இந்த எதிலி என்ற இருப்பு ஆகும். ஈழத்தவர்களது புலப்பெயர்வையும் அவர்களது வாழ்வியில் விழுமியங்களையிட்டுப் பல படைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வரு கோணத்தில் கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் கொண்டுள்ளன. அந்தவகையில் ஜேர்மனியில் வசிக்கும் ஜீவமுரளியின் “லெனின் சின்னத்தம்பி ” நாவல் உயிர்மெய் வெளியீடாக கடந்த ஆண்டு வெளியாகியது. ஆனாலும் இந்த நாவல் புலம்பெயர் இலக்கிய உலகில் மறக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம்.

பனியும் அதன் வீரியமும் ஐரோப்பா கண்டத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுபவன. அப்பொழுது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற மனஅழுத்தங்கள் சொல்லில் வடிக்கமுடியாதவை. ஒரு சிலர் தம்மைத்தாமே அழித்துக்கொள்வதும் இந்தப்பனிப்பொழிவு நாட்களில்தான். ஓர் இலையுதிர் காலமொன்றின் ஊடாக மெதுமெதுவாக நாவல் விரிகின்றது. ஓர் இலையுதிர் காலமும் பனிப்பொழிவும் , மனித வாழ்க்கையை அதன் போக்கில் வாழவிடாத கடிகாரங்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரு மனிதனை எப்படியெல்லாம் உளவியல் ரீதியாக வாட்டிவதைக்கின்றது என்பதை முதல் பதினைந்து பக்கங்கள் நாவலின் பிரதான கதைசொல்லியாகிய லெனின் சின்னத்தம்பியூடாக சொல்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே லெனின் என்ற பெயர் அடைமொழியாக ஏன் சின்னதம்பிக்கு வந்தது என்ற எதுவித விபரணங்கழும் இல்லாது நாவல் விரிகின்றது. ஆனாலும் லெனின் என்ற சொல்லாடல் ஆனது நாவலின் தொடர்ச்சியில் ஒன்றுமே அறியாது நிறத்தால் மட்டுமே வெள்ளைகளாக இருந்த தொழிலாளர்களுக்கு, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள வேறுபாடுகளையும், வர்க்க சிந்தனைகளையும் சின்னத்தம்பி அங்காங்கே சொல்லியதால் “லெனின்” என்ற அடைமொழிப் பெயரானது மார்க்ஸிய சித்தாந்தங்களுக்கு ஓர் இடுகுறிப்பெயராக வந்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது . அதே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புரைகள் நூலுக்கு இல்லாது தங்களது எழுத்துக்களில் பரிபூரண நம்பிக்கை வைத்து வெளிவந்த படைப்புகளில் லெனின் சின்னத்தம்பியும் அடங்குவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும் .

பின்னர் லெனின் சின்னத்தம்பி நேரடியாக கதைக்களமான உணவகத்துக்கு வருகின்றார். ஓர் உணவகத்தில் உணவுகள் எப்படி எப்படியெல்லாம் தயார்ப்படுத்தப்படுகின்றது. அங்குள்ள அதிகார மட்டங்கள் என்னென்ன. அந்த அதிகாரவர்க்கத்தின் பழக்க வழக்கங்கள் என்ன ? இந்த பழக்கவழக்கங்களுக்க்கு ஏற்றவாறு லெனின் சின்னத்தம்பி எப்படி இசைவாக்கம் பெறுகின்றார் ? என்பதனை நாவலின் பெரும்பகுதி தொடுகின்றது.

நண்பர் ரிஷான் ஷெரீப் தனது துன்புறுத்தல்கள் தொடர்பான திறனாய்வில் இவ்வாறு கூறுகின்றார் ” ஒரு மனிதனை எப்படியெல்லாம் துன்புறுத்தலாம் சொற்களால் வார்த்தைகளால் நடத்தைகளால் செய்கைகளால் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஓர் மனிதனை மிக இலகுவாகத் துன்புறித்திவிடலாம் ஆனால் அந்த துன்புறுத்தலை எல்லோராலும் மிக இலகுவாக தாங்கி விட முடியாது துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனிதனின் உணர்வுகளும் உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை இந்த துன்புருத்தளைச் செய்பவன் சகமனிதனே துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்டுபவனைப் போன்றே ரத்தமும் நரம்புகளும் அவையவங்களை கொண்டவனே இந்த துன்புறுத்துபவனும் அவனுக்கு மட்டும் அந்த மனநிலை எப்படி வாய்கின்றது ? அதிகாரமும் ஆணவமும் பழிவாங்கலும் இந்த துன்புறுத்தலுக்கு மனிதனைத் தூண்டுகின்றன இந்த வகையான துன்புறுத்தல்களை ” சித்திரவதை ” எனப் பொதுப்பெயர் கொண்டு அழைக்கலாம் இந்த சித்திரைவதைகள் இருப்பிடங்கள் வேலையிடங்கள் போன்றவற்றில் சகமனிதர்களால் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன எனினும் இந்த மனித உரிமை மீறலானது எந்தவித கேள்விகளுக்கும் உட்படாதவாறு நடைபெற்று வருகின்றது இந்த நடைமுறையானது ஓர் அதிகார அமைப்புக்கு எதிராக இருப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அடக்கி வைப்பதற்கும் வைப்பதற்கும் இந்தவகையான சித்திரவதைகள் அதிகார வர்க்கத்தால் பிரையோகப்படுத்தப்பட்டு வருகின்றது ” இதையே நூலாசிரியர் லெனின் சின்னத்தம்பி மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார்

லெனின் சின்னத்தம்பியில் ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள உறவு நிலையை நகைச்சுவையாக கைக்கோ என்ற தொழிலாயின் பாடல் மூலம் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்………

“ஜோ ஒரு பட்டன் செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்தார்.

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் என்றான் முதலாளி .

நான் வலக்கையால் வேலை செய்கின்றேன் முதலாளி.

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் .நான் வலக்கையாலும் இடைக்கையாலும் வேலை செய்கின்றேன் முதலாளி ;

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் .நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் வேலைசெய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய். .நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் இடக்காலாலும் வேலை செய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் இடக்காலாலும் குண்டியாலும் வேலை செய்கின்றேன் முதலாளி .”

(பக்கம் 68)

இந்தப்பாடல் வரிகள் நகைச்சுவையாக இருந்தாலும், ஒரு முதலாளி எப்படி ஓர் தொழிலாளியை சக்கையாகப் பிழிகின்றான் என்பது தெளிவாகின்றது. இதைப்படிக்கும் பொழுது பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்பிளின் ஓர் தொழிற்சாலையில் உதிரிப்பாகங்கள் பொருத்தும் வேலையில் தான் படும் கஸ்ரத்தை தனதுபாணியில் நடித்துக்காட்டிய படமே நினைவுக்கு வந்தது .

வேலைத்தலத்தில் கடைநிலை ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளால் எப்படி நிந்திக்கப்பட்டும் பழிவாங்கப்படுகின்ரார்கள் என்பதை பக்கம் 133 இல் நூலாசிரியர் மனதில் தைக்கும் படி சொல்கின்றார்………………….

” லெனின் சின்னத்தம்பி அக்சல் குறுப்பவின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசுவதை எப்பொழுதுமே அவனால் தங்கிக் கொள்ள முடிவதில்லை .அந்த உணர்வு ஒரு பாத்திரம் கழுவும் கடைநிலைத் தொழிலாளி தன்னை எதிர்த்துப் பேசுகின்றான் என்ற அவமரியாதை உணர்விலிருந்து வந்திருக்கலாம் .அல்லது தொழிலாளர்களின் படிநிலைகளில் உயர்வையும் ,தாழ்வையும் கோருகின்ற ஒரு நிர்வாகியப் பார்த்துப் ,பிறப்பால் ஐரோப்பியர் அல்லாத ,கருத்த முடியும்,சாம்பல் நிறத்தோலைகொண்ட ஒருவர் ,வார்த்தைக்கு மறுவார்த்தை பேசுவதென்பது நிந்தனைக்குரிய குற்றமாகவே இருந்திருக்கலாம் .எது எப்படியாயினும் ,இப்படிப்பட்ட நிந்தனைக் குற்றங்களைச் செய்வோர் நிர்வாகிகளாலும் ,முதலாளிகளாலும் தக்க தருணம் பார்த்து பழிவாங்கப்பட்டு வந்தனர் .

(பக்கம் 133)

இந்த இரண்டு பந்திகளும் வாசகர்களை கட்டிப்போட்ட இடங்களாகும்.

18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு உலகம் எங்கும் அடிமைகள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. அன்றைய காலகட்டங்களில் பல அடிமைகள் பொருகாட்சிகளில் கூடுகளில் அடைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு விடப்பட்டு பெரும் முதலாளிகளால் வாங்கப்பட்டார்கள். அதன் பின்னர் மேற்குலகம் அடிமை முறை தங்கள் நாடுகளில் இல்லை என்று மார்தட்டியது. ஆனால் அது வடிகட்டிய சுத்தப்பொய். காலப்போக்கில் அடிமை முறைமையின் வடிவங்கள் மாறின. மேற்குலகில் அந்தந்த நாடுகளில் அதன் மக்கள் செய்யத் தயங்குகின்ற இழி நிலை வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். மேற்குலகு வலு குறைந்த நாடுகளில் போர்களை உருவாக்கி அதன் மூலம் குறைந்த செலவில் விசுவாசமான அடிமைகளை அரசியல் அகதிகள் என்ற போர்வையில் உள்வாங்கியது.

இதனால் மேற்குலகிற்கு இரட்டை இலாபம் கிடைத்தது. ஒன்று சர்வதேசத்தின் முன்பாக தன்னை ஓர் மனிதநேயமுள்ளவனாக காட்டிக்கொள்வதும். இரண்டாவதாக, அதி உயர் விசுவாசமுள்ள அடிமைகள் குறைந்த ஊழியத்தில் கிடைத்ததும் எம்முன்னே வரலாறாக சொல்லி நிற்கின்றது. அதில் ஒருவர் தான் லெனின் சின்னத்தம்பி. அவர் வேலை செய்கின்ற உணவகத்தில் நிறம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அவர் சக தொழிலாளர்களால் நடத்தப்பட விதம் கொடுமையானது.

இந்த இடத்தில் ஓர் கேள்வி எழுவது இயல்பாகின்றது. தான் தீண்டத்தகாதவனாக சக தொழிலாளர்களால் நடத்தப்படும் பொழுது ஓர் ஜெர்மன் பிரஜையாக இருந்தும் அவர்களுடன் சமரசப்போக்குக்கு ஏன் லெனின் சின்னத்தம்பி செல்லவேண்டும் ? அடுத்ததாக இந்த சமரசங்கள் என்பது லெனின் சின்னத்தம்பிக்கு தனது தொழிலில் உள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கின்றது. அதே போல ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கென்றே தொழிலார்கள் சட்டங்களும் தொழில் சங்கங்களும் உள்ளன. தங்களது முதலாளியினால் தாங்கள் ஏமாற்றப்படும் பொழுது இவர்கள் தொழில் சங்கங்களின் உதவியினை ஏன் நாடவில்லை என்றதோர் கேள்வி இயல்பாக எழுகின்றது. தான்பட்ட கடன்களுக்காக தனது நிறுவனத்தை வேண்டுமென்றே நட்டத்தில் இயங்க வைத்து அனைத்து தொழிலார்களையும் நடுத்தெருவில் விட்ட முதலாளிக்கு, லெனின் சின்னத்தம்பி தவிர்ந்த ஏனைய தொழிலார்கள் சட்ட நடவடிக்கை எடுக்காது தொடர்ந்து தங்கள் முதலாளியின் நடவடிக்கைக்கு துணை போனதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாவலில் நூலாசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட வகையில் சம்பவங்களின் விவரணங்களையும் விபரிப்புகளையும் தவிர்த்து இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. உதாரணாமாக உணவுத்தட்டுக்கள் அலங்காரம் செய்யும் முறைகள் மற்றும் சண்டைக்காரனின் பிரோ ( அலுவலகம் ) ஆகியவற்றின் விபரணங்கள் மறுபடியும் மறுபடியும் நாவலில் வந்ததினால் வாசகன் வாசிக்கும் பொழுது ஒருவித சலிப்புத்தன்மை ஏற்பட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது . இவைகளைத் தவிர்த்துப் பார்க்கும் பொழுது லெனின் சின்னத்தம்பி பேசப்படவேண்டிய நாவலாகும் இதன் நூலாசிரியர் மேலும் பலபடைப்புகளை தரவேண்டும் என்பதே வாசகர்களது வேணவா ஆகும் .

**********

பறவை அமர்வு (அறிமுக படைப்பாளி ) ராகவப்ரியன்

images (2)

என்னைப்பார்..யோகம் வரும்

துணி மூட்டையாய்

என்னைச் சுமக்கும் ஒரு கழுதை..

சுருண்டு பின் தொடர்வேன்

ஆற்று படித்துறைவரை

நானும் அதுவென…

துவைத்து உதறும் துணியுடன்

தெறித்து விழும் என் வார்த்தைகளை

உண்ட அதன் கானம்-

ஆற்றின் வெளியெங்கும்

தேவகானமென கேட்கும்….

அப்போதில்

நீண்டு உட்சுருங்கும்

அதன் அடிவயிறு

காகிதப் பசி காட்டும்

ஓர் கவிஞனாய்..

வெளிவராத

என் கவிதைக் காகிதங்களைத் தருவேன்

உண்டு பசியாறும்

பாதிவயிறு..அது..

மீதப் பசிக்காகக் கதறும்..

அந்தக் கதறலில்

அதன் பசியும் என்கவிதையும்

நாராசமென படும்

பசியற்றவர்களின் காதுகளில்….

சலவையற்ற உலர்மண் நாட்களில் …

நான் கட்டிக்கொண்டிருக்கும்

என்வயிற்றின் ஈரத்துணியையும்

என்னையும் சுமக்க

காத்திருக்கும் அது..

சுருண்ட வயிருடன்….

பறவை அமர்வு

பூச்சுதிர்ந்து செங்கல் தெரியும்

இதயச்சுவரின் இடுக்கில் விழுகிறது

காமப் பறவையின் எச்சம்.

துளிர்த்து கிளைபரப்பி விருட்சமாகி

விழுதுகளால் இதயமாளிகையெங்கும்

வலிந்து பற்றிக்கொள்கிறது காமம்.

இதயச் சுவரின் ஒலி

கொங்கண மொழியாகி இருளடைந்து

உரத்தக்குரலெடுத்து

நிர்வாணம் தேடுகிறது.

உடை களைந்த உடல்

விருட்சத்தை வேருடன் பிடுங்க முயன்று

களைத்து வியர்க்கிறது.

வியர்வை உப்பளத்திலிருந்து

வீசும் உப்புக் காற்றில்

உதிர்ந்த விருட்ச இலைகளை

மிதித்து சப்தமிட்டபடி

வேகமெடுத்து இயங்குகிறது இதயம்.

அந்த அதிர்வுகளில் மீண்டும் பூச்சுதிர்ந்து

இன்னொரு செங்கல் வெளித்தெரியும் சுவரில்

காதுமமாகிய காமப்பறவை

மீண்டும் எச்சமிட… சிறகுமூடி…

மௌனமாய் மெள்ள அமர்கிறது.

வண்டிச் சன்னல்

அது ஓடிக்கொண்டிருக்கும்

தொடர் வண்டியின் சன்னலோரம்.

சின்னப்பிள்ளைகளாலும்

சிறந்த கவிஞர்களாலும்

விட்டுக் கொடுக்கமுடியாத இடம்.

எதிரெதிரே இருவரும்.

தூரத்தில் வேகமெடுத்து

பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன

pபடிமக் கவிதைகளும்

பசுமை பிம்பங்களும்..

பயந்து

கீழே பார்த்தால்

உடன் ஓடிவந்து கொண்டிருக்கும்

இன்னொரு வழித்தடம்..

எதிரே பிள்ளை

சமர்த்தாய் கண்மூடித்தூங்கும்..

கவிஞன்

படிமங்களைப்பிடிக்க

சன்னல் வழியிறங்கி

எதிர் தடத்து வண்டியில் சிக்கிச்..

சிதைந்துபோவான்

பயணம்

கவிதைகளோ கதைகளோ கட்டுரைகளோ

இல்லாத புத்தகத்தினுள்ளே பார்வையாகிப்போனது

என் அன்றாடப் பயணம்..

இப்போதெல்லாம்

கால்கள் இல்லாமலும்

ஊர்திகள் இல்லாமலும்

ஏன் உடலே இல்லாமல் கூட

என்னால் பயணிக்கமுடிகிறது.

தந்தையின் விரல் பிடித்து

தத்தித்தத்தி நடந்த பயணத்தில்

நான் விழும் நொடிகளில்

என் அம்மண உடலை

உயரத்தூக்கியெறிந்து

பிடிப்பாராம் அப்பா..

அப்போதெல்லாம்

என் பயணச்சீட்டு

அவரிடம் பத்திரமாய்

இருந்திருக்கவேண்டும்..

இப்போதோ

விழும் வேகத்தில் உடையும்

இதய பாகங்களை அள்ளிக்கொண்டு

மீண்டும் எழுந்து ஓடமுடிகிறது..

ஒரு வேளை

இலக்கற்ற எனது பயணம்

நின்று போகும் நொடியில்

ஒரு கதையாகவோ கட்டுரையாகவோ இல்லை

கவிதையாகவோ

நான் தொடர்ந்து பயணிக்கக்கூடும்….

•••••