Category: இலக்கியம்

லோலாயம் ( சிறுகதை ) – சே. தண்டபாணி தென்றல்

“அந்த சாரு எது கேட்டாலும் தர மாட்டீங்கறாரு?”

இதைச் சொன்ன சிந்துவின் முகத்தில் வெறுப்பும் விரக்தியும் ஒரு சேரக் குடிகொண்டிருந்தது. சிந்து என்றில்லை யார் சென்றாலும் இது நடக்கும் என்பது தெரிந்ததுதான். எல்லாத்துக்கும் காரணம் அந்த தலையாய அயோக்கியன் குமரேசன். நான் பிறந்த வருடத்தில் இருந்து, லேப் அட்டெண்டராக குப்பை கொட்டி வருகிறான் என்பதில் இருந்தே ஏமாற்றுவதில் எவ்வளவு அனுபவமும், கெட்டிக்காரத் தனமும் வாய்ந்தவன் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம்.

எல்லாம் நான் முன்னால் படித்த கல்லூரிப் பேராசிரியர்களைச் சொல்ல வேண்டும்?யுனிவெர்சிட்டி நல்லா இருக்கும் அருண்குமார் . அதிலும் குறிப்பாக ஹச் ஓ டி .. நான் எண்டரன்ஸ் எழுதி கிடைக்கல எல்லா யுனிவெர்சிட்டிய விடவும் இது ரொம்ப நல்லா இருக்கும்.சொன்னவர்களை என்ன சொல்ல பாவம் அவர்கள் இங்கு படித்ததில்லை. நமது ஆசை அல்ல. ஆசிரியரின் கனவு என்று எழுதி முதல் இடம் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். அதுவே எவ்வளவு துரதிஷ்டம் என்பது மெல்ல மெல்லப் புரிந்தது.

இப்போது டி.என்.ஏ பிரித்து எடுத்தல் ப்ராக்டிக்கல். டிப்ஸ் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. பீனால் வேறு, பாதாளத்தில் கிடந்தது. குறைந்தது ஐம்பது மில்லி லிட்டராவது வேண்டும் . அதைதான் வாங்கி வர சிந்துவிடம் சொல்லி இருந்தேன். இருப்பதை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் டிப் வந்தால் அப்படியே விரைவில் முடித்து விடலாம் என்று நான் போட்ட மனக் கணக்கில் தேக்கம் அடைந்தது பின்புதான் தெரிந்தது.

“அருண் அப்படியே டிப் பாக்ஸும் வாங்கீட்டு வாடா? இது ஜீவிதா . அதில்லாம பிப்பெட்ல சரியா எடுக்க முடியல? ம்ம் சரி வேற யாருக்காச்சும் எதாவது தேவைப்படுதா?”
கிடைக்காது என்று தெரிந்தும் வகுப்புத் தலைவன் என்ற முறையில் முன்னின்று கேட்டுக் கொண்டேன். அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் போலும் . யாரும் எதுவும் கேட்கவில்லை. வகுப்புத் தலைவன் என்பதைத் தாண்டி இப்படிக் கேட்கக் காரணம் அந்த கையாலாகாத குமரேசன் தான்.

“தம்பி எல்லாத்தையும் ஒரே வாட்டி டிஸ்கஸ் பண்ணி எழுதீட்டு வாங்க? என்ன பிரக்டிகல் என்ன எக்ஸ்பெரிமென்ட்? தனி தனியா ? கொடுக்க முடியாது.இல்லன மட்டும் இவன் அள்ளி கொடுத்துருவான் பாரு? கிள்ளிக் கொடுகரக்கே ஆயிரத்து எட்டு புலம்பு புலம்புவான்.”
இதற்கு முன்னால் படித்த கல்லூரி இதற்கு முற்றிலும் எதிர் மாறாக இருந்தது. சதீஸ் அண்ணா.தங்கமானவர் பல முறை நோட்டில் எழுதியதே கிடையாது. வேண்டுமென்பதை சொல்லிக்கொண்டு எடுத்துக் கொள்வோம்.

அப்படித்தான் செய்முறைத் தேர்வுக்கு முந்தைய நாள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்க இரவு எட்டு மணி ஆகிவிட்டது, எனக்கே பாவமாகப் போய்விட்டது. சொற்ப சம்பளம் வாங்கும் அவரே அதுவரைக்கும் காத்திருந்தார் . பக்கத்துக்கு லேபில் இருந்த சம்பத் சார்கூடக் காத்திருந்தார்.இங்கு ஐந்து மணியா. தம்பி அருண்
இந்தாங்க சாவி எல்லாத்தையும் பூட்டி சீக்கிரம் சாவியக் கொடுங்க?
ஆமா இங்க ஒரு வெங்காயமும் இல்ல. அப்பறம் எதுக்கு இந்த பாதுகாப்புன்னுதா எனக்கும் தெர்ல. மொதல்ல இந்த குமரேசன் நாயி கெமிக்கல் ரூம்க்கு வர்றதே இல்ல. சதீஸ் அண்ணா அங்க தா உட்காந்துட்டு இருப்பாரு. ஆனா இங்க டேபிள் மட்டும் இருக்கு. குமரேசன் ஆபீஸ்ல ஜம்முனு உட்காந்துக்கரன். ஒரு வேலை அங்கே ஏ.சி இல்லை என்பதால் கூட இருக்கலாம். அடுத்து அந்த நாய் காலைத் தூக்கி யூ டுப் பார்க்க கிடைத்தது ஈ லைப்ரரி. பருவக் கட்டணத்தை எங்களிடம் வாங்குவது இந்தமாதிரி சம்பந்தம் இல்லாதவர்களின் பொழுது போக்கத்தான் என்பதை உணர்கையில் கோபம் என் தலைக்கேறியது .

“நீ வேணாப் பாரு கார்த்தி .. எதுனா பெருசா பண்ணனும் டா ..
உன்னால என்ன பண்ண முடியும்
அடேய் உன் வயசு, அவன் அனுபவம்
எத்தன பசங்களப் பாத்துருப்பான் . எத்தன வில்லத்தனம் பன்னிருப்பான். ஒன்னும் பண்ண முடியாது டா? வேண்ணா”..! நீண்ட நேர யோசனைக்குப் பிறகு கார்த்திக் ராஜா
“இனிமேல் இந்தப்பக்கம் யாரும் வராம தடுக்கலாம்.. அதா என்னால முடிஞ்சது நான் அப்டித்தா வேற பக்கம் போகச் சொல்லிச் சொன்னேன்.இதைய கடைசி விருப்பமா வைக்க சொல்லி சொன்னேன்.நல்ல வேல யாரும் வரல.”

இதைச் சொன்ன கார்த்திக் ராஜா கொஞ்சம் நிம்மதிப் பெரு மூச்சு விட்டன. ஆமால இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு . யோசித்துக் கொண்டே அலுவலகத்தை நோக்கி நடந்தேன்.மாடியில் ஒரு புறம் லேபும், அதற்கு எதிர் புறமாக கெமிக்கல் அறையும் இருப்பது தப்பித் தவறிக் கூட நல்லது என்று சொல்லிவிட முடியாது. கெமிக்கல் அறைக்கு நேர் வழி கிடையாது.துறை அலுவலகம் வழியாக சுற்றித்தான் வர இயலும்.

கிரீச்.. கிரீச் …
கதவைத் திறந்து கொண்டு நுழைந்தேன். வெள்ளாமைக் காட்டை மேய்ந்த எருமை மாதிரி குமரேசன் தின்றுவிட்டும், சக அலுவலக வாசிகளுடன் உரையாடிக் கொண்டும் இருந்தான்.
சார் டிப்ஸ் , அப்புறம் பாக்ஸ். கொஞ்சம் பீனால்.
கொஞ்சம் தயங்கிய பாவணையில் கேட்டேன்.. அவனுக்கே அவனிடம் மட்டும்தான் மரியாதை கொடுக்க பழகியிருந்தோம். முதுகலை சேர்ந்து முதல் தடவை அண்ணா என்று அழைத்ததில் எனக்கும் கார்த்திக்கும் ஒரு சேர ஒரே பதிலை அவன் சொல்லியிருந்ததில் வியப்பேதும் இல்லை..

“தம்பி என்ன அண்ணானு கூப்டற..சார்னு கூப்டு..கொஞ்சம் மிரட்டும் தொனி
ம்ம்..சரிங்க சார் “
இருவருமே ஒரே பதிலைத்தான் கூறியிருக்கிறோம் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது.
“ம்ம் வாங்க அருண் எடுத்து தர்றேன்.. என்னடா எலி திடீர்னு அம்மணத்தோட போகுது” என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போயிற்று.

சில நிமிடங்களிலேயே இரண்டு டிப் பாக்ஸ்கள் என் கைகளை அடைந்தன. கடைசி ரேக்கில் இரண்டு பீனால் பாட்டில்கள் இருந்ததைப் பார்த்தேன். பீனால் மட்டும் இல்ல தம்பி . இரண்டு முழுப் பாட்டில்களை அலமாரிக்குள் மறைத்து விட்டான்.

“தேங்க்ஸ் சார் .
ம்ம் பரவல பா எல்லா உங்களுக்கு தான்..”
வேக வேக மாக நடந்த நான் லேப் நோக்கித் திரும்பும் முன்
“தம்பி ஒரு நிமிஷம்
ம்ம் சொல்லுங்க சார்
என்றி போட்ருங்க அருண் குமார்
ம்ம்ம். சரிங்க சார்..
இந்தாங்க என்ட்ரி நோட் ..”
கடமையில் இம்மியும் தவறாதவன் போன்று காட்டிக் கொண்டான்..யோக்கிய வேஷமிட்ட அயோக்கியன்.
பெறப்பட்டது என்று ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்தை தமிழில் இட்ட வேகத்தில் கிளம்ப எத்தனித்தபோது
தம்பி ஒரு நிமிஷம் அதே கூற்று அதே ஆசாமியிடம் இருந்து வந்தது.
கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கொப்பளிக்க முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு சற்றே திரும்பினேன்.

சார் கிட்ட சைன் வாங்கி கொடுத்துட்டுப் போங்க
நோட்டை வாங்கியவாறே ஹச்.ஒ.டி அறையை நோக்கினேன்.. வழக்கம் போல மடிக்கணினியில் மூழ்கி இருந்தார்.. சிறிது நேரம் கழித்துக் கையசைத்தார்.. உள்ளே சென்றதும் சார் சைன் என்றேன்.
‘ம்ம்’ என்று வாங்கியதும் அறையில் இன்னொரு குரல் கேட்டது.
“சார் இவங்க காட்டன ரீ யூஸ் பண்றதே இல்லிங்க” சார். நான் நுழைகையில் ஏற்பட்ட சிறு சந்தில் இந்த நாய் எப்படி நுழைந்தது என்று தெரியவில்லை. தனக்கான கடியை ஹச்.ஓ.டி மூலம் கடிக்க ஆரம்பித்தது.

அதுவரை சாந்தசொரூபியாக இருந்த துறைத் தலைவர் தைய தக்க என்று குதிக்க ஆரம்பித்தார்.

“என்னப்பா சொல்ற
நான் அமரிக்கால இருந்தப்போ அவங்க காட்டன கருப்பாகுற வரைக்கும் மறுபடி மறுபடி யூஸ் பண்றாங்க தெர்யுமா?” என்றதும் என் மூஞ்சியை ஏறிட்டு நோக்கினார்.
அப்படியே தாங்க சார் டிப்ஸையும் .
அடுத்த கடி குரல் வலையாக இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இருக்கவில்லை.

உடனே நான் சுதாரித்துக் கொண்டு
சார் இப்பதான் முதல் தடவை இந்த வருஷம் சேர்ந்ததுக்கு அப்பறம் வாங்குறோம். இனிமேல் தான் சார் மறுபடியும் பயன்படுத்த முடியும் என்று பெரிய பல்பாக கொடுத்தேன்..

அதை சமாளிக்கும் விதத்தில் நான் உங்கள சொல்லல அருண் குமார் .பொதுவா சொல்றேன். இது குமரேசன் சார்
அதற்குள் அவர் சைன் போட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நோட் என்னிடம் வந்திருந்தது. நானும் கிளம்ப அயத்தமானபோது தற்பெருமையில் ஆய்வே இல்லாமல் பட்டம் வாங்கிய துறைத் தலைவர்,

நாங்கெல்லா படிக்குறப்ப டி.என்.ஏ இருக்கா இல்லையானு பாக்க அகார் தா யூஸ் பண்ணுவோம். அகார் என்பது பதினொன்றாம் வகுப்பில் வளர்தளம் என்று அழகுத் தமிழில் குறிப்பிடப் பட்டிருக்கும். நேராக பதினொன்றாம் வகுப்பிற்கு தாவுவதால் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எசே என்றவரின் மனைவி முதன்முறையாக இதை ஐஸ் கிரீம் தயாரிக்கும் பொது பார்த்து தெரிந்து கொண்டார். மஞ்சள் வர்ண பவுடர். திரவத்தை கட்டியாக்கும் தன்மை கொண்டது.

நாங்கள் இதற்குப் பதிலாக வழக்கம் போல் அகரோஸ் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இதனை மேலும் நிருபிக்கும் வகையில் ஆமாங்க சார் நான் சிங்கபூர்ல இருக்குறப்ப கூட தேய் யூஸ் எ டைனி சிலைட்
அவர்கள் பொதுவாகவே சிக்கனத்தில் கரை கண்டவர்கலாம். அதைதான் சக அறிவியல் விஞ்ஞானியும் நாசுக்காக சூளுரைத்தார். இந்த தெரு நாய் எப்போது நுழைந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை ஓசி காபிக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்திருகக் கூடும்.

வேறு வழியில்லாமல் செயற்கையாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு..

ஓகேங்க சார் என்றேன். இப்படி சிக்கனம் பேசுபவர்கள் ஏனோ பருவக் கட்டணத்தைக் கருத்தில் கொள்வதே இல்லை. தெரியாமல் தான் கேக்குறேன். பணத்திற்கு பதிலாக வர்ண நகலை ஏற்றுக் கொள்வார்களா? அது மட்டும் ஒனத்தியா? சொளையா பதினாறாயிரம் வெறும் ஆறு மாசத்துக்கு
நாங்க சிக்கனமா இருக்கணுமாம்.. யார் வீட்டு மொதல எந்த வீட்டு நாய் திங்கிறது.இதற்கும் மேல் அங்கு நின்றால் கெட்ட வார்த்தையோ? ஓங்கி அறையக் கை நீண்டு விடுமோ? என்ற அச்ச மேலீட்டினால் விடை பெற எண்ணி
தேங்க் யூ சார் என்றேன் .. பாத்து பத்ரமா யூஸ் பண்ணுங்க.. சிக்கனக் கடவுள் மாறியே சீன் போடவேண்டிது. மனதிற்குள் புலம்பியவரே படக் என்று கதவைத் திறந்து கொண்டு விறுவிறுவென்று கிளம்பினேன். பின்னால் வந்த குமரேசைனை ஒரு விநாடி கோபம் சூடிய முகத்தால் முறைத்துவிட்டு லேப் நோக்கிச் சென்றேன்.

அடுத்தநாள் காலை தலையெல்லாம் டிம் என்றிருந்தது. எல்லாரும் பேசுகிறார்கள் எனக்கு மட்டும் கேட்கவில்லை. விடுதியின் அறையில் இருந்து பக்கத்தில் இருக்கும் காட்டிற்குள் நடந்தேன். இன்னும் வகுப்பிற்கு செல்ல ஒரு மணி நேரம் இருக்கிறது. மீண்டும் ஹச் ஓடி.. முதல் ஆண்டின் கடைசி நாள் தனது ஆய்வகத்திற்கு மாணவர்கள் வந்து வேலை செய்யவேண்டும் என்பதற்காக பேசிய பெருமைகள் காதைக் குடைந்தன.

கார்த்திக் ராஜாவிடம் சொன்னால் ..
அப்புடி என்னத்த கிளுச்சுட்டன் ..ஒரு வேல வாங்கித் தர வக்கில்ல
அதுக்குள்ள வேர்ல்ட் பேமஸ் ஆம்..
அவன் சொல்வதும் சரிதான்.

சூரியன் கொஞ்சம் என்னருகில் இருந்தான். கதிர்க் கேசத்தை வருடியவரே ஏதேதோ வந்து போனது. சட்டென ஞாபகம் வர எப்படியும் கிளம்பி டி.என்.ஏ இன்று கிடைத்து விடும் என்கிற நினைப்பில் துறை நோக்கி நடக்கத் துவங்கினேன்.துறை ஒரே பரபரப்பாக இருந்தது. இப்போது தான் நியாபகம் வந்தது நேற்று சிந்து சொன்னதை மறந்து விட்டது. நேராக கெமிக்கல் ரூம் நோக்கி நடந்தேன். அதிசயமாகத் திறந்திருந்தது. பேரதிசயமாக உள்ளே யாரும் இருக்கவில்லை. அவசர அவசரமாக யாராவது வந்துவிடுவார்களோ எனும் நோக்கில் திறந்தேன். இரண்டு பீனால் பாட்டில்களும் காலியாக இருந்தன.

••

நெருப்பில் எரிந்த மலர் ( சில்வியா ப்ளாத் ) மணிக் குடுவை / தமிழில் விஜிய பத்மா

அமெரிக்க கவிஞர் மற்றும் நாவலாசிரியர் சில்வியா ப்ளாத் தனது சுய சரிதையான “மணி குடுவை (The Bel Jar) என்ற புதினத்தால் உலகளவில் அறியப்பட்டவர். பெண் விடுதலை சார்ந்த சிந்தனைகளை கொண்ட சில்வியாவிற்கு அவர் சார்ந்த சமூகமும், அவர் சந்தித்த காதலும் அத்தனை ஏற்புடையதாக இல்லை.சில்வியாப்ளாத்1950இல் ஸ்மித் கல்லூரியில் உதவித்தொகை பெற்று கல்வி பயின்ற காலக்கட்டத்தில் அமெரிக்க சமூகம் முற்போக்கு சிந்தனைகளில் மிகவும் பின்தங்கியதாக இருந்தது.இதனால் சில்வியாவிற்குசமூகம் கொடுத்த நெருக்கடிகள் தாங்க இயலாததாக இருந்தது. மேலும் அவரது காதல் வாழ்க்கை மிக கசப்பானதொரு அனுபவமாக மனதில் குழப்பங்களை விளைவிக்கஒருக்கட்டத்தில்மனநிலை பாதிக்கப்பட்டு சில்வியா பிளாத் தன் முகத்தை சமையல் எரிவாயுவில் காண்பித்து தற்கொலைக்கு முயன்றார்.அதன்பின் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் தனது கல்வியை தொடர,1955இல் பட்டம் முடித்தார். பின்னர் பிரிட்டிஷ் கவிஞரான டெட் ஹுகஸைச் சந்தித்த சில்வியா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்வும் தோல்வியிலேயே முடிந்தது.நிறைவில்லாத திருமண வாழ்வுசில்வியாவை உச்சக்கட்ட மனச்சிதைவு நோய்க்கு ஆளாக்கியது.இப்படியானதனது உளவியல் சார்ந்த மனக்குழப்பங்களையும், உணர்வுகளையும்அப்படியே “மணிக்குடுவை“ என்ற நாவலாக எழுதிவிட்டு, ஆறுமாதம் கழித்து 1963ஆம் ஆண்டில் மன உளைச்சல் அதிகரித்து தற்கொலை செய்துகொண்டார்.சில்வியாவின் உண்மைகள் நிரம்பிய இந்நாவல் அமெரிக்காவில் வெளியிடப்படக்கூடாது என்ற சில்வியாவின்தாயின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க அரசு இந்நாவலை 1971ஆம் ஆண்டு வரை தடை செய்திருந்தது.ஆனால் உலகம் முழுவதும் தி பெல் ஜார் (மணிக்குடுவை)நாவல்மிகப்பெரியபாராட்டைப்பெற்றதும் அமெரிக்காஅரசு அந்ததடையை நீக்கியது.

மணிக்குடுவை (தி பெல் ஜார்)நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982ஆம் ஆண்டுவழங்கப்பட்டது.மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இளம் பெண்ணின் மனக்குழப்பங்களையும் வெளிப்படையாக எழுதப்பட்ட தி பெல் ஜார் (மணிக்குடுவை) இதுவரை ஆறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை உள்வாங்கி அதன் உயிர்ப்பின் சாரம் கெடாமல் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமானால், நாமும் நாவலாசிரியரின் பித்து மனநிலைக்கு சென்று புரிந்து கொண்டுதான் மொழிபெயர்க்க இயலும். இதனை மிக அருமையாக ஜீவன் கெடாமல் உயரிய நடையில் மொழிபெயர்த்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் ஜி.விஜயபத்மா. காலதாமதமாக வந்தாலும் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் சில்வியாபிளாத்தின் மணிக்குடுவை எனும் சுயசரிதம் மிக முக்கியமான நாவலாக கவனிக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. புதினத்தை வெளியிடுவதில் நாதன் பதிப்பகம் அகம் மிக மகிழ்கிறது.

அஜயன் பாலா
பதிப்பாசிரியர்.

பல்லக்குத் தூக்கிகளுக்கு வயது 30 / அ.ராமசாமி

1988, டிசம்பர் 31 இல் ஒருநாள் கலைவிழா ஒன்றை நடத்திடத் திட்டமிட்டது மதுரை நிஜநாடக இயக்கம். அதே ஆண்டில் மதுரையில் மூன்று நாள் நவீன நாடக விழா ஒன்றையும் நடத்திய அனுபவம் நிஜநாடக இயக்கத்திற்கு இருந்தது. நாடகவிழாவும் ஒருநாள் கலைவிழாவும் மதுரைக்குப் புதுசு. தமிழ்நாட்டிற்கே புதுசு என்று கூடச் சொல்லலாம். அக்கலைவிழாவிற்குப் பின்புதான் திருவண்ணாமலை தொடங்கித் திருப்பரங்குன்றம், சென்னை எனப் பல இடங்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் (கலைஞர்கள்) சங்கம் கலைவிழாக்களை நடத்தியது.

புரிசை, சுபமங்களா நாடக விழாக்களுக்கும் நிஜநாடக இயக்க நாடகவிழாக்களே முன்னோடி. மைய அரசின் சங்கீத நாடக அகாடெமி நடத்தும் மண்டல நாடக விழாக்களிலும் தேசிய நாடக விழாக்களிலும் கலந்துகொண்டு நாடக விழாக்களைப் பார்த்திருந்த அனுபவத்தோடு பெங்களூர், புதுடெல்லி போன்ற நகரங்களிலும் நடந்த கலைவிழாக்களையும் பார்த்த அனுபவத்தில் ஏற்பாடு செய்யப்பெற்ற விழாக்கள் அவை. அந்த விழாக்களை ஏற்பாடு செய்த காலகட்டத்தில் நான் நிஜநாடக இயக்கத்தின் செயலாளராக இருந்தேன்.

டிசம்பர் 31, ஒருநாள் கலைவிழாவில் மேடை நாடகம், கவிதா நிகழ்வு, நவீன ஓவியர்களின் கண்காட்சி, கிராமப்புற ஆட்டங்கள் எனப் பலவற்றைக் கலந்து தரலாம் என முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் முடிவுசெய்யப்பெற்றன. நிஜநாடக இயக்கத்தின் நாடகங்களோடு அதிகம் செலவில்லாமல் பக்கத்தில் இருக்கும் நாடகக் குழுவின் நாடகங்களைக் கூட இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்யப்பட்து. நிஜநாடக இயக்கத்தில் உறுப்பினராக இல்லாத நண்பர்கள் நான் வாடகைக்கிருந்த வீட்டின் வாசலிலும் மாடியிலும் கூடிப் பேசுவோம். திறனாய்வுப்பார்வை, அரசியல், சினிமா, ஓவியம், எழுத்து எனப் பலவற்றை விவாதிக்கும் அந்த நண்பர்களைக் குழுவாக்கி ஒரு நாடகம் போடலாம்; அதற்காக ஒரு நாடகப் பிரதியைத் தேடலாம் என்ற நோக்கில் பல நாடகங்களைக் குறித்து விவாதித்தோம்.

நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டே இன்னொரு நாடகக் குழுவைத் தொடங்கலாமா? என்றெல்லாம் யோசிக்காமல் அவ்விழாவில் ஒரு நாடகத்தை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகச் சுதேசிகள் என்றொரு நாடகக்குழுவைத் தொடங்கினோம். அக்குழு மேடையேற்றுவதற்காகப் பல நாடகப்பிரதிகள் பரிசீலிக்கப்பட்டன. பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர் என இந்திய நாடகாசிரியர்களோடு பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், எட்வர்ட் ஆல்பி போன்ற இடதுசாரிகளின் நாடகப் பெயர்கள் எங்களால் உச்சரிக்கப்பெற்றது. விவாதிக்கப்பெற்றன. அந்தப் பரிசீலனையின்போது புதியதாகவே நாடகங்கள் எழுதுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

நண்பர்களின் உரையாடல் வட்டத்தில். பல சிறுகதைகள் ‘நாடகீயத் தன்மைகள்’ கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, உதாரணமாகப் பல்லக்குத்தூக்கிகள் கதையின் நாடகீயத்தன்மையை விளக்கிச் சொன்னேன். சொன்னவிதம் நண்பர்களுக்குச் சரியெனப்பட்டதால் என்னையே எழுதும்படி வற்புறுத்தினார்கள்; எழுதினேன். படித்தோம். சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அப்படித்தான் நான் நாடக ஆசிரியரானேன்.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத் தூக்கிகளில் அதைத்தான் செய்தேன்.

பல்லக்குத்தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் ஒன்றைச் சுந்தர ராமசாமியின் கதையில் பார்க்கலாம். அதன் மூலம் வாசகர்களின் வாசிப்புத்தளத்தை முடிவுசெய்யும் கதைசொல்லியின் அதிகாரத்துவத் தன்மை கதைக்குள் ஊடாடும் தன்மையை உணரலாம்.

அதனைக் கண்டறிந்து தூரப்படுத்தியபின், 1990 களின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில குறியீட்டுச் சொற்களை உரையாடலில் சேர்த்தபோது நாடகப்பிரதி முழுமையானது. அத்தோடு நாடகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ ஒருவித முரணிலையை உருவாக்க வேண்டும். பாத்திரங்கள் சார்ந்த முரணென்றால், அது அகமுரணாக அமையும், வெளியிலிருக்கும் ஏதோவொன்றொன்றால் புறமுரணாகத் தோன்றும். நவீன நாடகங்கள் என்ற வகைப்பாட்டில் பெரும்பாலும் புறநிலை முரண்களே முக்கியத்துவம் பெறும். பல்லக்குத் தூக்கிகளின் உரையாடலின் வழி உருவாக்கப்பட்ட அந்த நபர் நாடகத்தில் தோன்றா முரணை உருவாக்குவதன் வழிப் புறநிலை முரணைக் குறியீடாக உருவாக்கிவிடுபவராக ஆக்கப்பட்டார்.

சிறுகதையை எழுதிய சுந்தரராமசாமிக்கு நாடகப் பிரதியை அனுப்பிவைத்து மேடையேற்றத்துக்கு வரும்படி அழைத்தோம். வருவார் என்பதுபோல முதலில் தகவல்கள் வந்தன. ஆனால் “பல்வலி. மேடையேற்றத்திற்கு வர இயலவில்லை” என்று கடிதம் ஒன்றை அனுப்பினார். பின்னர் ஒரு நேர்ப்பேச்சில், சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை; நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பதாகச் சொன்னார். அப்படி ஆக்கப்பட வேண்டும் என்று நினைத்த அவரது நண்பர்கள் நாடகத்தைப் பார்த்துவிட்டு அவரோடு பேசியிருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.

நிஜநாடக இயக்கத்தின் ஒருநாள் கலைவிழாவின்போது குப்தா அரங்கின் நிகழ்வில் பல்லக்குத் தூக்கிகளை மேடையில் நிகழ்த்தவில்லை.

செவ்வகச் சட்டகத்தில் நடித்துக் காட்டும் முறையில் தயாரிக்கவும் இல்லை. தரைத்தளத்தில் மூன்றுபக்கமும் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த வடிவத்தில் நிகழ்த்தப்பெற்றது. குறியீட்டு அர்த்தங்கள் கொண்ட ஆடைகள், நாடகப் பொருட்கள், பல்லக்கின் விதானக்கொடியின் வண்ணம் போன்றனவற்றை இந்திய/ உலக அரசியல் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி விமரிசனம் எழுதினார் இடதுசாரி விமரிசகர் ந.முத்துமோகன். சோவியத் யூனியனில் பெரிஸ்த்ரேய்காவின் அறிமுகம் நடந்த காலகட்டம் அது. மார்க்சீயக் கட்டமைப்புகள் மீதான விமர்சனம் உலகம் முழுவதும் எழுந்து கொண்டிருந்தது.

நாடகத்தில் நடிகர்களாகப் பங்கேற்றவர்களின் பின்னணி, சிறுகதையை எழுதிய சுந்தர ராமசாமியின் அரசியல் ஆகியவற்றோடு சேர்த்து ந.முத்துமோகன் பல்லக்குத் தூக்கிகளை மார்க்சிய எதிர்ப்பு நாடகமாக முன்வைத்தார். ஆனால் அந்தப் பிரதி பல இட துசாரி அமைப்புகளின் மேடையில் பார்வையாளர்களைச் சந்தித்தது என்பது நடைமுறை முரண்.முதல் மேடையேற்றத்தைத் தொடர்ந்து மதுரையின் கல்லூரிகள் சிலவற்றில் சுதேசிகளே நிகழ்த்தியது. சுதேசிகள் நாடகக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சுந்தர் காளியைத் தனது தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிகராக அறிமுகப்படுத்திய ஞாநி அந்த நாடகத்தை முக்கியமான திருப்பமாகப் பயன்படுத்தினார்.

அறந்தை நாராயணனின் கதையைத் தழுவி எடுக்கப்பெற்ற விண்ணிலிருந்து மண்ணுக்கு என்னும் அந்தத் தொடரின் உச்சநிலைக் காட்சியாகப் பல்லக்குத்தூக்கிகள் அமைந்தது. உளவியல் மருத்துவரும் நாடக இயக்குநருமான ருத்ரன் தனது மருத்துவச் செயல்பாட்டின் பகுதியாகப் பல்லக்குத்தூக்கிகளைத் தயாரித்தார். திருவண்ணாமலையில் இயங்கிய இடதுசாரி நாடக குழுவான தீட்சண்யா போன்றனவும் அந்நாடகத்தைத் தயாரித்தது.
நாடகப்பிரதியை அச்சிட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டபோது சுந்தராமசாமி மறுப்பெதுவும் சொல்லவில்லை. மூன்று நாடகங்களைக் கொண்ட நாடகங்கள் விவாதங்கள் நூலின் 25 பிரதிகளை வாங்கிக்கொண்டுபோய் சிங்கப்பூரில் நாடகங்கள் இயக்கும் அவரது நண்பர் இளங்கோவனிடம் வழங்கினார். அவரும் பல்லக்குத்தூக்கிகளை மேடையேற்றினார்.

பாண்டிச்சேரிக்குப் போன பின்பு அங்கு உருவான கூட்டுக்குரல் நாடகக்குழு வழியாகவும் கல்பாக்கம், பாண்டிச்சேரி, கடலூர், தஞ்சாவூர், பண்ருட்டி எனப் பல நகரங்களில் மேடையேற்றியிருக்கிறேன். புதுவை இளவேனில் எடுத்த சுந்தர ராமசாமியின் நிழற்படக் காட்சியை ஒட்டிச் சென்னை அல்லயன்ஸ் ப்ரான்சே அரங்கில் ஒருமுறை நிகழ்த்தப்பெற்றது. அந்த மேடையேற்றத்தைப் பார்க்கவாவது சு.ரா. வருவார் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு (2015) இலங்கையின் விபுலானந்தா அழகியல் கற்கைநெறிப் பள்ளி மாணவர்கள் தங்களின் பாடத்திட்டப் பகுதியாகப் பல்லக்குத் தூக்கிகளை மேடையேற்றியிருக்கிறார்கள். தமிழில் உருவாக்கப்பெற்ற நவீன நாடக ப்பிரதிகளில் அதிகமாக குழுக்களாலும் அதிகமான இயக்குநர்களாலும் மேடையேற்றப் பட்ட நாடகப்பிரதி பல்லக்குத்தூக்கிகள் எனச் சொல்வது மிகையான கூற்றல்ல.

•••

செப்பனிடப்பட்ட களம் ( சேவல் களம் நாவல் ) / பாலகுமார் விஜயராமன்

சேவல் களம்

செப்பனிடப்படும் களம்

நகரத்தின் நெருக்கடி மிகுந்த பகுதியில் எங்கள் வீடு அமைந்திருந்தாலும், அங்கேயும் மொட்டைமாடியை சண்டை சேவல், கோழி வளர்ப்பதற்கெனவே அப்பா ஒதுக்கியிருக்கிறார். பிறந்ததில் இருந்தே, சேவல் கூவும் சத்தத்துடனேயே வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் என்னையோ தம்பிகளையோ சேவல் சண்டை பந்தயங்களுக்கு ஒருநாளும் அப்பா அழைத்துச் சென்றதில்லை. சேவல்கட்டிகள் குறித்த சமூகப்பார்வை காரணமாக, அப்பா மாதிரி நாங்களும் அந்தப்பக்கம் போய்விடுவோமோ என்று அச்சம் கொண்ட அம்மா, நாங்கள் சேவல் சண்டைகளுக்குச் செல்ல தடைவிதித்திருந்தார்.

பால்ய வயதில் வீட்டில் சேவல், கோழி, குஞ்சுகளைப் பராமரிப்பது என்று இருந்தாலும் சண்டையிடும் சேவல் களம் என்பது மட்டும் கனவாகவே இருந்தது. அது ஒழுக்கக்கேடான ஒரு விஷயம் குறித்த ரகசிய ஆசை போலவே மனதில் வளர்ந்துகொண்டே இருந்தது. இருபது வயதுகளின் மத்தியில், ஒரு பார்வையாளனாக தனியாகச் சென்று களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சேவல்களின் ஆக்ரோஷத்தையும், வீரத்தையும் கண்டபின், அதற்குப் பின்புலத்தில் சேவல் வளர்ப்பு மற்றும் சேவல்சண்டைக்கு முன்பான பயிற்சி முறைகளையும் இணைத்துப் பார்த்தபோது, அந்தக்கலையின் சூட்சமும், ஒழுக்கவிதிகளும் பிரமிப்படையச் செய்தது.

பின்பு, ‘ஆடுகளம்’ திரைப்படம் மூலம் சேவல் சண்டைக்குக் கிடைத்த ஊடக வெளிச்சம், சேவல்கட்டிகள் குறித்து பொதுமக்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றம், சேவல் சண்டை நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடை, ஜல்லிக்கட்டு விளையாட்டு போராட்டத்தின் நேர்மறை விளைவாக சேவல் சண்டை போட்டிகளுக்கான தடைவிலக்கம் என்று கடந்த பத்து ஆண்டுகளில் தேடிச் சேகரித்த தரவுகளின் வழியாக ஒரு சேவல்கட்டியின் வாழ்வை பதிவுசெய்ய வேண்டுமென்று விரும்பினேன். நவீன தமிழ் புனைவு இலக்கியத்தில், ம.தவசி எழுதிய ‘சேவல்கட்டு’ நாவல் தான் சேவல்சண்டை குறித்த ஒரே ஆவணமாக இருக்கிறது. அதுவும் கூட சேவல்கள் காலில் கத்தி கட்டி போரிடும் விளையாட்டை மையமாக வைத்த மாய-யதார்த்தப் படைப்பு. சங்ககாலம் தொட்டு, தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றாகத் தொடர்ந்து வரும், வெற்றுக்கால் சேவல் சண்டையையும், தற்கால சேவல்கட்டிகளின் வாழ்வையும் மையமாக வைத்து இப்புனைவை எழுதியிருக்கிறேன். அதே போல, நாவலில் இணை அத்தியாயங்களாக வரும் சுயம்பு ஒருவனின் வாழ்வும் எழுச்சியும் சுவாரஸ்யமான புனைகதையாக இருக்குமென நம்புகிறேன்.

இந்நாவலின் கருத்துருவாக்கம் மனதில் ஓடிக்கொண்டிருந்த காலங்களில், அர்ஷியா சாரிடமும், நேசமித்ரன் அண்ணனுடனும் தனித்தனியே நிறைய கலந்துரையாடி இருக்கின்றேன். இருவரின் எழுத்துமுறையும் உரையாடல் நுணுக்கங்களும் முற்றிலும் வெவ்வேறானவை. ஆனாலும் அவர்கள் இருவரின் உள்ளீடுகளும், தர்க்கரீதியாக நிறைவளிக்கும் படைப்பாக இந்நாவல் உருவாக்கக் காரணமாய் அமைந்தன. அதே போல, பரஸ்பரம் எந்தவித ஈகோவும் இன்றி, ஒருவர் இன்னொருவரின் எழுத்துக்களின் நிறைகுறைகளை வெளிப்படையாகப் பேசிக்கொள்ளும் தன்மையுடையது, நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் எனக்குமான நட்பு. இவர்களோடு, எழுத்துப்பணியிலும் இணையத்திலும் நட்பு பாராட்டும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க அன்பும், நன்றியும்.

சென்ற ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில், கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் முன்னெடுத்து நடத்திய ‘சிறுகதைப் பயிலரங்கு’ என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது. பெருந்தகையாளர்கள் சுகுமாரன், பெருமாள் முருகன், பாவண்ணன், க.மோகன ரங்கன், மதிவாணன், களக்காடு பீர் முகமது, ஸ்ரீனிவாசன் நடராஜன் மற்றும் பயிலரங்கில் கலந்துகொண்ட நண்பர்களுடனான கலந்துரையாடல் புனைவெழுத்து குறித்து எனக்கிருந்த பல மனத்தடைகளை விலக்கியது. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

தனது பரபரப்பான பணி மற்றும் எழுத்துச்சூழல்களுக்கு இடையே, நான் கேட்ட மாத்திரத்தில் மறுப்பேதும் சொல்லாமல், இந்நாவலுக்கு சிறப்பான அணிந்துரையை வழங்கியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்நாவலைச் சிறப்பாக வெளியிடும் பதிப்பாளர் கண்ணன் அவர்களுக்கும், காலச்சுவடு நிறுவனத்தினருக்கும், கலா உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருக்கும், அட்டைப்படத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கும் மணிவண்ணன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பிற்காக, சேவல்சண்டை தொடர்பான புகைப்படங்களைத் தந்து உதவிய தம்பி அமரன் அஜய் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

சேவல் வளர்ப்பு குறித்த நுணுக்கங்களையும், அது தொடர்பான தரவுகளையும் அளித்து உதவிய அப்பா விஜயராமன் அவர்களுக்கும், அவரது உற்ற நண்பரான ஆசிரியர் ஜோஷப் பிரிட்டோ மாமா அவர்களுக்கும் மற்றும் தங்கள் குழந்தைகளைவிட, சேவல்கள்மீது அதிகப் பிரியம் வைத்து வளர்க்கும் சேவல்கட்டிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

வாசிப்பின் சுவையை அறிமுகப்படுத்திய அம்மா மதனவள்ளிக்கும், தங்கை இராஜேஸ்வரிக்கும், எனது எழுத்துக்களின் முதல் வாசகியும், விமர்சகருமான மனைவி சக்திதேவிக்கும், குழந்தைகள் மேகமித்ரா, முத்துமுகுந்தன் இருவருக்கும் தீராத அன்பும், பிரியங்களும்.
மிக முக்கியமாக, பெருந்தகையாளர்கள் பெருமாள் முருகன், நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன், ஜோசப் பிரிட்டோ, பாவண்ணன், சுகுமாரன், க.மோகனரங்கன், ’புத்தகத் தூதன்’ சடகோபன், எஸ்.சுப்பிரமணியன், ஆதவன் தீட்சண்யா, சமயவேல், ஸ்ரீதர் ரங்கராஜ், அருணாச்சலம், அமரன் அஜய், த.ராஜன், என்.ஸ்ரீராம், தமிழ்ப்பிரபா, தேனி விசாகன், லாவண்யா சுந்தரராஜன், “மலைகள்” சிபிச்செல்வன், ’எதிர் வெளியீடு’ அனுஷ், ’நூல்வனம்’ மணிகண்டன், ’பாதரசம்’ சரோலாமா, ’வாசிப்போர் களம்’ தோழர்கள், மற்றும் ‘சேவல்கட்டிகள்’ அனைவருக்கும் மிக்க நன்றி.

சேவல் களம் தயாராக இருக்கிறது. இதனை வாசிக்கவிருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களும், வரவேற்பும். நாவல் குறித்த தங்களின் மேலான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

பாலகுமார் விஜயராமன்
ஓசூர்
18-11-2018

காலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்

* ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமானதல்ல ; ஆரோவில் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானது ஆகும் ; ஆனால் ஆரோவில்லில் வசிக்கவேண்டும் என ஒருவர் விரும்பினால் அவர் தெய்வீக உணர்விற்கு விருப்பத்துடன் தொண்டு செய்பவராக இருக்கவேண்டும்.

* ஆரோவில் முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம், மூப்புறாத இளமை ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கும்.

* ஆரோவில் இறந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையேஒரு பாலமாக இருக்க விழைகிறது ; புற உலக, அக உலகக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியபடி இது துணிவுடன் எதிர்கால நன்முடிவுகளை நோக்கித் துடிப்புடன் முகிழ்த்து எழும்.

* ஆரோவில் மனித குல ஒருமைப்பாட்டிற்கு ஓர் உருவம் கொடுப்பதற்கான உலகியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிகளுக்குரிய நிலையமாக விளங்கும்.

இதுதான் 1968, பிப்ரவரி, 28 ஆம் நாள் ஆரோவில் நகரக் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும்போது ஸ்ரீ அன்னையே (1878 – 1973) வாசித்தளித்த ஆரோவில் சாசனம். 121 நாடுகளில் இருந்தும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எடுத்துவரப்பட்ட பிடிமண்ணைச் சலவைக் கல்லால் தாமரை மொட்டுவடிவில் வடிவமைக்கபட்ட தாழியில் ஒன்றாகப்போட்டு, பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா என்ற இயற்பெயர் உடைய ஸ்ரீ அன்னையால் (ஐ நாவின் யுனெஸ்கோ மற்றும் இந்திய அரசின் நிதி உதவியுடன்) ‘ சர்வதேச ஆன்மீக நகரமாக வளரும் ‘ என்று பிரமாண்டமான நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் புதுச்சேரிக்கு அருகில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆரோவில் ; இப்படித் தமிழ்நாட்டின் தொன்மையான நிலத்தைப் பெரிய பெரிய கனவுவார்த்தைகளாகக் கூறி ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விலையில்லாமலும் அடிமாட்டு விலைக்கும் நிலம் கொடுப்போர்க்கு ஆரோவில்லில் வேலைதரப்படும் என்ற பொய்யான உறுதிமொழிகளாலும் ஆக்ரமிக்கபட்ட பூமிதான் ஆரோவில்.

இன்று தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஓடிவிட்டன ; பொன்விழா கண்டுவிட்ட இந்த நகரம் என்னவாக இருக்கிறது என்பதைப் படைப்பாளிக்கே உரிய கூர்மையான பார்வையோடு புனைவு மொழியில் எடுத்துரைப்பதுதான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஆறாவது நாவலாகிய இந்த ‘ இறந்த காலம்‘. இந்தப் பிரதிக்குள் வாசிப்பு நிகழ்வதற்கு ஆரோவில் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் தேவை என்று கருதியதால்தான் இங்கே அவைத்தரப்பட்டன.

பாரீஸ் பெருநகரில் பிறந்து வளர்ந்தவள் மீரா (27 வயது).தன் தாய் இஸாபெல்லை, அவள் குழந்தையோடு மணம்முடித்துக்கொண்ட வளர்ப்புத் தந்தை லூயிஸ்மேல் பெரிதும் பிரியம் கொண்டவள் மீரா. அத்தகையவரைப் பிரிந்து மற்றொரு ஆடவனோடு வாழப்போகிறேன் என்று முடிவெடுக்கும் அம்மாவின் செய்கையால் மனக்கலக்கத்திற்கு உள்ளாகிறாள் ; இத்தகையக் குடும்பச்சூழல் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், தனக்குள்ளேயே மற்றொரு குரல் அவளுக்குக் கேட்டவண்னம் இருக்கிறது. அது தன்னையும் மீரா என்றே சொல்லுகிறது ; « இறந்தகால நான்களின் தொகுப்பு‘ எனச்சத்தியம் செய்கிறது. சமூகம் கட்டமைத்த போலி ‘நான்’ஐச் சுமந்துகொண்டு உண்மையான நான்-ஐ ஒதுக்கி வாழ்வதாக » அவளுக்குள் மூச்சு விடாமல் தொணதொணக்கிறது.

இப்படியான மனநிலையில்தான் அவள் கையில் « ஆரோவில் » பற்றிய குறிப்புகள் அடங்கிய அட்டை கிடைக்கிறது. (ஆரோவில் பன்னாட்டு மையங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் 23 நாடுகளில் உள்ளன.) உடனே முடிவெடுக்கிறாள் ; 2017, நவம்பர் 18ல் புறப்பட்டுச் சென்னை வந்து ஆரோவில்லில் உள்ள ஆல்பர்ட்-தேவகி வீட்டின் மாடியில் ‘பேயிங் கெஸ்ட்டாகத்’ தங்குகிறாள் ; இத்தகையை மீராவின் பார்வையில் ஆரோவில்லில் நடக்கும் கதை சொல்லப்படுகிறது ; மீராவிற்கு இங்கே அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிக்கா என்ற தோழி கிடைக்கிறாள் ; அவள் மூலம் புதுச்சேரி அரசு ஊழியனான மாதவனும் அவன் குடும்ப உறவுகளும் நட்பாகக் கிடைக்கின்றனர். இப்படியொரு பின்னனியை அமைத்துக்கொண்டு ஆரோவில்லின் நடப்புக்களை விவரிக்கிறார் கதைசொல்லி.

மீரா, ஆரோவில் « சாசனத்தை » வாசித்தபோது தனக்கு ஏற்பட்ட மன உணர்வை இவ்வாறு பதிவு செய்கிறாள் :

« முதன் முறை வாசிக்கிறபோது கடைவிளம்பரமொன்றை வாசிக்கிற மனநிலைதான். தேர்ந்தெடுத்த விரயம் இல்லாத சொற்கள், வாக்கிய அமைப்பு, அவற்றை அச்சடிக்கப் பயன்பட்ட எழுத்துவகை, அவற்றின் அளவீடு அனைத்திலும் விளம்பர உத்திக்குரிய சாதுர்யம் என்றுதான் நினைத்தேன் »

இப்படித் தொடங்குகிறது ஆரோவில் குறித்த மீராவின் விமர்சனம் ; இதேபோல் « மாத்ரி மந்திர் » எனப்படும் அன்னை ஆலயம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஆடம்பரமாக உணர்கிறாள் ; ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆன்மீக சோசலிஸம் என்று வர்ணிக்கப்படும் ஆரோவில்லில் இத்தகைய ஆடம்பரம் வேணுமா எனக் கேட்கிறாள்.

இன்னும் மாதவன் மூலமாக « ஆரோவில் ஒரு நவீனக் காலனித்துவக்குணம் கொண்டது ; தாங்கள் உயர்ந்த இனம் என்றும், அக்கம் பக்கத்திலுள்ள ஏழைத்தமிழர்களைக் காலனிக்காலக்கூலிகள் என்றும் கருதுகிறார்கள் ; அரவிந்தர் ஆஸ்ரமத்தை விரிவாக்கும் ஒரு திட்டம்தான் ஆரோவில் ; அதுவும் பெரிதும் இந்தியர்களால் நிரம்பிக்கிடக்கும் ஆசிரமத்திற்குள் ஐரோப்பியர்களையும் உள்ளே கொண்டுவரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது ஆரோவில்.

உலகமெலாம் ஒரு குடும்பம் எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிப்படையில் சமயமில்லை ; எல்லையில்லை ; பணம் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது ; ஆரோவில்லின் தற்போதைய நிலை என்ன ? பணமில்லாதவர் உள்ளே நுழைய முடியாது என்பதுதானே.

ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மீரா அல்ஃபஸ்ஸாவுமல்ல. « இங்கு வருகிறவர்கள் கர்மயோகிகள் அல்ல ; வாழ்க்கைப்போகிகள். சராசரி மனிதர்கள், தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் ; சில நல்லது நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாதென்றாலும், இந்த விடியல் நகரம்(ஆரோவில் என்றால் உதய நகரம் (அ) விடியல் நகரம் என்று பொருள்) இன்னும் வைகறையைக் கூடக்காணவில்லை » இப்படி நீளுகிறது மாதவனின் பார்வை.

இன்னும் ஆரோவிலியன் யாரும் தங்கள் பெயரில் நிலமோ, வீடோ வாங்கக்கூடாது என்பது விதியாக இருக்கிறது ; ஆனால் பல காட்சிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து வாங்கிய ஏழை முடிவெட்டும் தொழிலாளியின் நிலம், அவர்கள் புத்திப்பேதலித்து வாழ்வையே இழந்து போகும் முறையில் அபகரிக்கப்படுகிறது என்பதும் நாவலில் சித்தரிக்கப்படுகிறது ; மேலும் தனித்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உற்பத்திசெய்து வாணிபம் செழிக்கிறது ; « ஆரோவில் ஒரு பணமற்ற சமூகமாக மலரும் » என்று சொல்லப்பட்ட மொழி என்ன ஆயிற்று ? உலோகத் தொழிற்கூடங்கள், விண்கலத்தில் செல்வோர் உண்ணும் உணவுப்பாசி உற்பத்திசெய்யும் தொழிற்சாலை என்று 140க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ‘சரக்குகள்’ உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இன்னும் கொடுமைகளின் உச்சமாக ஆன்மீக நகரத்தை அசிங்கப்படுத்தும் பாலியல் குற்றங்கள் பிரதியில் பதிவாகியுள்ளன. 70களில் ஹிப்பி நாகரீகம் பிரபலமாக இருந்தபோது அந்தக் கும்பலில் இருந்து கோவா-வில் வந்து தங்கி, பிறகு அங்கிருந்து ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே இங்கே தங்கியிருக்கும் பிரெஞ்சுக்காரர் ‘துய்மோனும்’, மீராவிற்குத்தங்குவதற்கு மாடியில் இடம் அளித்த ஆஸ்திரேலியரும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் லீலைகள் கதைசொல்லியின் மேன்மையான எடுத்துரைப்பு மொழியில் சொல்லப்படுகின்றன. மீராவின் அமெரிக்கத்தோழி ஜெஸிக்காவின் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்தி இருவரும் அவளைப்பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துகின்றனர்.

அதிலிருந்து அன்றைக்குத் தப்பித்த மீராவை, மறுநாள் அதேபோல் மதுவை ஊற்றிக்கொடுத்து ஆல்பர்ட் தனது வீட்டிலேயே பாலியல் வல்லுறவு புரிகிறான். யோகத்தை ஏற்பதற்கு விலக்க வேண்டியவைகளாகஸ்ரீ அன்னையால் முன்மொழியப்பட்ட அரசியல், காமம், புகைப்பிடித்தல், மதுக்குடித்தல் ஆகிய நான்கும் இங்கே முனைமழுங்காமல் மும்முரமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன ; கதைசொல்லியின் வெறும் கற்பனை சார்ந்த புனைவு என்று இவற்றைஎளிதாகச் சொல்லிவிடமுடியாது. 2008, மே, 22இல் இலண்டன் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில், குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆரோவிலியன் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதற்குப் பிறகு இங்கேAuroville Child protection Service தொடங்கப்பட்டது என்பது வரலாற்று நிகழ்வு. எனவே இந்த நாவலில் வரும் மீரா ஓரிடத்தில் சொல்வதுபோல, « இது பாழ் கிணறில்லை என்றாலும் கரையேற இயலாத உறைகிணறு » என்று நினைக்கத் தோன்றுகிறது.

இவ்வாறெல்லாம் படைப்பாளி தனது அலசல் பார்வைவையை முன்வைப்பதின் நோக்கம், வெறுமனே ஒன்றின்மேல் சேற்றை அள்ளி வீசுவது என்று எளிமையாகப் புரிந்துகொள்ளும் விபத்து நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது ; ஆனால் இப்படியான குறிக்கோளுடனும் கனவுகளுடனும் எத்தனையோபேரின் உழைப்பின்மேல் எழுப்பப்பட்ட நகரம் இப்படி ஆனதே என்ற ஆதங்கத்தின் வெடிப்பு இந்த எழுத்து ; கதைசொல்லி ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே புதுச்சேரியில் வாழ்ந்தவர், பின்னர் புதுச்சேரி, ‘ மாவட்ட ஆட்சியர் ‘ அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலைபார்த்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துவந்தவர் ; எனவே இத்தகைய விமர்சனப்பார்வை அவரையும் மீறி அவருக்குள் இருக்கும் படைப்பு மனதிற்குள் இருந்து புறப்பட்டு வருவது.

மேலும் இது ஓர் ஆரோவில் பிரச்சனை மட்டுமல்ல. சமூகவாழ்வின் பிரச்சனையாகத் தீராத நோயாகத் தொடர்கிறது. அதாவது பெரிய பெரிய இலட்சியங்களோடு தொடங்கப்பட்ட மனிதர்களின் இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் இப்படித்தான் சீரழிந்து முடிந்துள்ளன ; பிறகேன், மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட ஒளிமயமான வாழ்வு குறித்த இலட்சியங்கள் ? இந்தக் கேள்விதான் படைப்பாளியை ஆட்டிப்படைக்கிறது ; மேலும் இத்தகைய இலட்சியங்களை விதைப்பவர்கள், இந்த இலட்சியங்களை உண்மையிலேயே பின்பற்றுபவர்களாகக் கூட இருக்கவேண்டாம், குறைந்தது அவர்கள் போதிக்கும் இலட்சியங்கள்மேல் நூறு விழுக்காடு நம்பிக்கைக் கொண்டவர்கள்தானா ? அதனால்தான் வரலாறு முழுக்க இலட்சியங்கள் இப்படிப்படுதோல்வி அடைகின்றனவா ? இப்படித் தூங்க முடியாத முரண் இழுவைக்குள் அடைபட்ட படைப்பு மனம்தான் இந்த எழுத்தை இயக்குகிறதே ஒழிய, சாதாரணமாகச் சேற்றை அள்ளி அடிக்கும் வேலை இல்லை இது .வரலாறு தோறும் படைப்பாளிகள் இப்படித்தான் இயங்கியுள்ளார்கள்.

இந்த இழுபடும் முரண்விசையிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கத்தான் கதைசொல்லி ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார் ; அந்தக் காமுகர் இருவரும் அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றபோது, « குழந்தையைக் கடத்துபவர்கள் » என்று 16 பேர் அடங்கிய கும்பலால் கொல்லப்படுகிறார்கள் . இது, « தான் உயர்ந்த நோக்கோடு தொடங்கிய ஒன்று, இப்படியானதே » என்று கருதிய ஸ்ரீ அன்னையின் அமானுஷ்ய சக்தியால் நிகழ்ந்தது என்பதுபோல வாசகர்கர்கள் கருதும்படி, நாவலை முடிக்கிறார்.

நவீனகால ஆரோவில்லின்கதை சொல்லுவதன் ஊடே, இந்த நாவலில் பிரஞ்சுக் காலக்கட்டத்தில், புதுச்சேரியின் எளிய மக்களை வேரோடு அள்ளிக்கொண்டுபோய் தங்களின் பிறகாலனிய நாடுகளில் ஒன்றான « இந்தோசீனாவில் » கொட்டிய பிரஞ்சுக் காலனியவாதிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் வரலாற்றையும் ஊடுபிரதியாகக் கதைசொல்லிப் பதிவு செய்துள்ளார் ; இது தமிழ் வாசகர்களுக்குப் புதிது.

‘ரெனோன்சியாசியோன்’ (la renonciation) எனப்படும் பிரெஞ்சுக் குடியுரிமை தருகிறோம் என்ற பேரில் கொண்டு சென்று இராணுவத்தில் சிப்பாய்களாக்கிப் பன்றிக்கறியும் நூடூலும் கொடுத்துப் பழக்கி அவர்களின் போரக் களத்தில் அவர்களுக்காகச் சாகடித்து ‘இரத்த வரி’ (l’impôt de sang) வாங்கிய காலனியக் காலஅதிகார மூளையின் தந்திரங்களையெல்லாம் உடைத்துக் காட்டுகிறார் ; தம்பி சதாசிவத்திற்குத்தமக்கை வேதவல்லி எழுதும் மடலில் இந்தோ சீனாவில் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையை « உறியடி வாழ்க்கை» என்கிறார் ; கைகளில் கம்பும், கண்களில் மறைப்பும், கால்களில் தடுமாற்றமுமாக இலக்கின்றி வீசும் கம்பு காற்றில் அலைகிறது » என்கிறார்.

மேலும் « சொந்த மண்ணைப்பிரிந்து வாழும் வாழ்க்கையும் தற்கொலையும் ஒன்றுதான் ; நினைவுகளும் ஏக்கமும் நெஞ்சை இறுக்க , அவற்றின் கைகளை விலக்க விருப்பமின்றி, காலவிரயத்துடன் கூடிய ஒரு புதியவகைத் தற்கொலையை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் » என்கிறார். கதை சொல்லியும் ஒரு புலம்பெயர்ந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதால், அதன் வலியையும் வேதனையையும் உறவுகளின் மடல்வழியாக வாசிக்கத் தரும்போது வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது.

அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும் , ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி என்பதைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்க க் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்.

இந்தோசீனாவில் சிக்கிச் சிதறுண்ட புதுச்சேரி மக்கள் குறித்து ஒரு தனி நாவலே எழுத எண்ணியிருப்பதாக அறிவித்துள்ளார் ; அதை அவர் கட்டாயம் செய்து முடிக்கக் காலம் துணை செய்யவேண்டும். ஏனென்றால் கதை சொல்லலின் உடற்கூறை, அதன் இரத்த நாளங்களின் வெப்பத்தை எல்லாம் அறிந்துகொண்டு மொழிமேல் வினைபுரியும் அற்புதமான கதைசொல்லியாக விளங்குகிறார் ; நன்றாக முழுமையாக விளைவதற்கு முன்பே அறுவடை செய்துகொண்டு வந்து, செயற்கையாகப் பாடம் செய்து ஒன்றுகூட வீணாகாமல் விற்று, நல்ல காசு சம்பாதித்துவிட முடியுமென்கிற சந்தைச் சூழல், தமிழ் க்கலை இலக்கியத்துறையிலும் பரவி அனைத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிற ஒரு நிலையில், இத்தகைய கதை சொல்லிகள் பெரிதும் கொண்டாடப்பட வேண்டுமென விழைகிறேன்.

கதைகட்டுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்கும் கதைமாந்தர் தேர்வும், இவர்களை இணைக்கும் மொழியாடலும் ஒரு சிறிதும் பிசிறு இன்றிக் கச்சிதமாக வந்து விழுகின்றன.எனவே வாசிப்பு அனுபவம் எளிதாகக் கூடி வருகிறது; ஓர் எழுத்தின் வெற்றி என்பது இறுதியில் இதுதானே ! இந்த வெற்றித் தொடரட்டும்.

•••

( சந்தியா பதிப்பக வெளியீடு நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய நாவல்« இறந்த காலம் » குறித்த பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் அணிந்துரை )

அலையும் அலைநிமித்தமும் ( கவிதைகள் ) / தமிழ் உதயா ( லண்டன் )

அலையும் அலைநிமித்தமும்

உள்ளிருந்து
என் துடிப்புக் கேள்
நினைவில் படரும்
மலைக்கணத்தின் ஊற்று
கண்மூடித்தனமாக
எங்கே தேடுகிறாய்
அலை நிமித்தமும் கடல்
அழகுறுவதே அதன் வலி
வியாபித்திருக்கிற
நெருப்பின் அடுப்பிலிருந்து
அணைத்துடைத்துப் பாய்ந்து
உள்ளார்ந்து கனிகிறது உயிரின்களிம்பு
என்ன அபத்தம் இது

0

நீல முட்டைகளோடு வானம்
இரு சிறகெடுத்துப் பறக்கிறது
சில மகிழம்பூக்களை
முகர்ந்து குடித்த
காற்று மலர்ந்திருக்கிறது
குடை விரிந்த காளானின்
கடலடிச் சலனத்தின் நொடியில்
பூமி கருவுறுகிறது
நதி விட்டேகிய துயரக் கணத்தில்
கடல் உபாதையில்
பெரு வீச்செடுத்து அழுகிறது
கனவுகளின் அந்திமத்தில்படுத்துறங்கும்
மாயச்சுழலின்வாசல்
எப்போதும் திறந்திருக்கிறது
நிலவுதிர்ந்துநீரில் மூழ்க
சில நட்சத்திரங்களோடு
இவ்விரவு நடுங்குகிறது
நெருஞ்சிக்காட்டில் துளிர்விடும்
பனித்துளியை உடைத்து
உயிரில் கட்டித் தொங்க விடு
அணைத்திருப்பது
சூரியனின் பெருங்கை என்பது
தவறில்லைத்தானே

0

எனதருகே
கதிர்கள் உருக்கொள்கின்றன
மெழுகைப் போல் உருகும்
ஒத்திசைவோடு
கேட்காத ஒலிகள் உங்களிடம்
அகப்படவேயில்லை
சங்கீர்த்தனமான வக்கிரம்
சற்றே சாதூரியமாக
விலகிப் போகிறது
பற்றி எரியும் வயல்வெளியில்
வெறுமைப்பட்டதை
பரவசப்பட்ட எவரேனும்
ஆரத்தழுவிவியப்பதற்கேதுமில்லை
உயிர்த்தெழும் வான்வெளியில்
களிப்பெய்துகின்றன
ஆளண்டாவின் சிறகுச் சாரல்கள்
குளிர்ச்சியிலும்
மூர்ச்சையடைகிறேன்
அதற்கு முன் கணத்தில்
உதடுகளை பொருத்தினேன்
கனிவின் பெருங்கடலின்
இரண்டு காதுகளில்
அது உலகைத் திறந்திருக்கிறது
மலர்ந்து சிரித்தவாறே
உதிர்ந்திருந்தன
மூலம் அறிந்த நித்தியப் பூக்கள்
உதிர்தல் ஒரு பொருட்டல்லபூக்களுக்கு

0

பாறையினின்று கனியும் கடல்
தன்னகத்தே
ஆகர்ஷித்துக்கொள்ள
அது பொதிந்து வைத்திருக்கின்ற
ரகசிய சாகசங்களின்
வெதுவெதுப்பில்
ஆழ்ந்தமிழ்கிறேன்
அகமுணரும் தளிர்த்தியசெம்மையில்
காரிருளைப் பிளந்தெறியும்
மனதின் மையத்தில்
முகமுணராத
நாடோடியின் வேட்கையுடன்
வாயருகே நுழைந்துசெவிமடுத்தன
நகர மறுத்த பூஞ்சொற்கள்
மனிதர்கள் பயணிக்கும் இவ்வுலகு
எப்போதும் தம்முள் இசைக்கிறது
திறந்து தம்மையே வாசிக்கத்தவறுகிறது
நாட்கள் அன்பின் கேலியோடு
கண் விழிக்கிறது
நெருப்பின் விரல்களில்
சிறகடிக்கும்ஆற்றல் மிக்க
தீண்டப்படாத முத்தமொன்றும்
உணர்ச்சி நுரை ததும்பும்
ஆறு கிழித்த இரு நிலங்களும்

0

கண்களைச் சாத்தி
இருளை மூடுகிறாய்
வகிர்ந்த ஒளிக்கற்றையில்
நான் வைரமெனஉயிர்த்திருப்பேன்
சட்டென்று விரியும்தனிப்பாதையில்
ஜீவிதத்தின் புறக்கணிப்புகள்
தேவையாயிருக்கிறது
அவை மழைப்பாதையின்
இரு தனித்த தண்டவாளங்களென
பிரிந்தே பயணிக்கின்றன
பனி உருகும்
சிகரங்களைப் போல
உன் மனதுள் ஒதுங்கி
சலனத்துள் உறைகிறது
மலையிரவின் காலம்

0
கூடிப் பிரியும் வேளை
உயிரடங்கிய கைகளுக்குள்
அழகேறிக் குளிர்த்திக் கொள்ளும்
இருள் முறுகி
விடிகாலையின் ஸ்பரிசத்தில்
இழையோடும் நின் அரூபம்
கொத்திக் கொத்தி உறையும்
கணங்களில்
நகரத் துவங்கும் வீதிகளில்
கடல்களை இடம்பெயர்த்த
சாத்தான்களின்வனம்
உதிர்ந்த சிறகுகளில்
உதிர்த்த பூக்களில்
கைதாகிய காற்றின்விடுதலையில்
வன்மம் தெறிக்கவில்லை
மரத்துப் போன இருளின்தீராப்பசிக்கு
மடிநுகரப் பரசளிக்கிறது
முதல் தோட்டத்தில்
என்னை விட்டுச் செல்கிறேன்
உவர்க்கும் கனிகளிலிருந்து
வெண்ணிற ஒளி வழிகிறது
இப்பிரபஞ்சத்தைத் துளைகளிட்ட
நதியின் பாடலாய்

••

தங்கபாலு கவிதைகள்

பருவத்துள் நுழைவது
சிக்னலை கடப்பது போல
நிகழ்ந்து விடுகிறது

சிகப்பு எரியவும்
மேலே எண்திரையில்
அறுபதிலிருந்து ஒவ்வொன்றாக
எண்ணிக்கை குறைகிறது

பச்சை எரியவும்
அடுத்த பருவம்

ஆயுளும் பருவமும்
ஒன்றேதான்

அணிவகுத்து நிற்கும்
வாகனங்களில் எங்கு நிற்கிறோம்
நாம்

சிகப்புக்கும்
பச்சைக்கும் நடுவில்
கொஞ்சம் உள்ளது வாழ்வு

***

மலைப்பிரதேசத்தில்
மிதக்கும் நீர்குமிழ்கள்
தன்னுள்ளும்
வனம் கொண்டுள்ளது

இருப்பை கேலிசெய்யும்
மெலிசான
அதன் உயிர்கண்ணி
அவ்வளவு அர்த்தத்துடன்
அவ்வளவு அழகுடன்

குமிழ் வனத்தில்
பழங்கொத்தி ஏமாறும் பறவை

திரும்பத்திரும்ப
அலைகிறது மற்றொரு
வனம் பின்னும்

ரோஷான் ஏ.ஜிப்ரி-கவிதைகள் (இலங்கை)

கதவுகளற்ற சிறை.

யாரோ தயார் செய்த வீட்டை
உரிமம் ஆக்கிவிட்டான் ஒருவன்
இப்போது இரவு,பகலென
அவனது பூட்டு தொங்குகிறது
வீட்டின் கழுத்தில்
சாவி அவனாலேயே கையாளப்படுகிறது
சத்தப் படாமல் சாத்தவும்
சத்தத்துடன் திறக்கவும்
அவனுக்கே முடியுமாகிறது

அவனது நிறம்,அவனது கூரை,
அவனது தரை என வீடு
அவனுக்குள்ளேயே அடங்கி விடுகிறது

வெளியில் இருப்பவர்களுக்கு
அழகான வீட்டுள்ளிருந்து புகையும் எதையும் பார்க்க முடிவதில்லை.
தீ பரவாமல் இருக்கட்டும் என்ற
தீர்மானத்தோடு

ஒவ்வொரு கல்லையும் செதுக்கி
வீட்டை கட்டியவன்
தெருவுக்கு வெளியேறுகிறான்
கதவுகளற்ற சிறையில் தள்ளப்பட்ட கைதியாய்!

நீ கேட்க மறந்த கதைகளும்,
வலிகளும்.

என் வாழ்நிலத்தின்
அதி பயங்கரங்களை
நீ அறிந்திருக்கிறாய்
ஆனால்:என்றைக்கும் அவைபற்றி
கேட்க விளைந்ததில்லை…,
அதைச் சொல்வதென்றால்
உன் பங்களிப்பின்
உச்ச நிலை துரோகங்களிலொன்று

மேற் பூச்சுகளிலான படாடோபங்களின்
கதவுகளுக்குப் பின்னால்
மதி மயங்கியாகிற்று உன் இருப்பு

உனது பிடிமானங்களை தக்க வைப்பதில்
பெரும் சிரத்தை எடுக்கிறாய்
ஆதலால்
நெரிபட்ட என் குரலின் தொனி
உன் மனசின் சுவர்களை வந்தடைய
சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது

நீ முன்பெல்லாம் சொல்லித்திரிந்த
அநியாய பொய்களோடு இதுவும் ஒன்றாய்

சமீபித்த நெருக்குதல்களை
விபரிப்பதென்றால்
மிக மோசமான வலிகள் அவை…
கொந்தளித்து,நுரைத்துத் ததும்பி
அலையெனப் பீறி கடலாய்
விரிந்து கிடக்கின்றன மனவெளியெங்கும்.

எல்லைகளை மீறியபடி தினமும்
இடியை இறக்கி விடுபவர்களுக்கு தெரியாது
மலையாய் இருக்கும் என் ஆளுமை

அவர்களிடம் எத்திவை
நெருப்பை காய்ச்சியவாறு
பூகம்பங்களை சமைத்துக் கொண்டிருக்கும்
பூமியால் தீராப் பசிக்கு
விருந்தளிப்பது பெரும்
விடயம் இல்லையென்று!

அது சரி……,
ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்:
அருகிலிருந்தும் மௌனித்தவாறு
எதையுமே அறிந்திராதவனாய்
கண்கள் குருடாகவும்,
செவிகள் மலடாகவும்,
மனசை பாறையாகவும் வைத்திருக்க
எப்படி முடிந்ததுன்னால் பிறப்பே?!

அலையும் நிழல்.

நிழல் என்னுடன் அலைகிறது
முகமூடிகளை மறைத்து வைத்து வாழும் என்னால்
நிழலை ஒழித்துவைக்க முடியவில்லை.

எனது நிழலை
வேறொருவன் பின் தொடர்கிறான்
நான் இப்போது என்ன செய்யலாம்?
வழியை அவனிடம் விட்டுவிட்டு விடைபெறுவதை தவிர
வேறு மார்க்கம் எனக்கில்லை.

இப்படித்தான் முன்பொருநாள் அப்பா என்னிடம் நான் நிழலுடன் பயணிக்கும் இந்த பாதையை விட்டுச்சென்றார்
இந்த நிழல் இப்படித்தான்
ஒருவரை உட்கார வைத்தபின் ஒழிந்து கொள்கிறது
நடமாடும் வரைதான் நிழல் நிஜம் எல்லாம்
இப்போது இறுதியாக என்னிடம் ஒரு முகம் உள்ளது அதற்கொரு முகமூடி இல்லை!

•••

முதல் தகவல் அறிக்கை ( சிறுகதை ) / ரமேஷ் கண்ணன்

அக்டோபர் மாதம் 10 ந் தேதி சண்முகத்திற்கு மறக்கவே முடியாத ஓர் நாளாகிப் போனது.அதிகாலையில் நல்ல தண்ணீர் வரும்.சண்முகம் குடியிருந்தது காம்பவுண்டு வீடு. ஆறு குடும்பமுமே வாடகைக்குத் தான் குடியிருக்கிறார்கள்.நகரத்தின் மையப்பகுதி என்பதால் பல மொழிகள் பேசும் குடும்பங்கள் வசிக்கிறார்கள்.அதனாலேயே வட்டாரத்தில் அதனைப் பாரத விலாஸ் வீடு என்றே சொல்லுவார்களாம்.

பெரிய சண்டை சத்தம் இல்லாதது போலவே ஒட்டுதலும் பெரிதாய் இருக்காது.ஒரு அரை செ.மீ சிரிப்பு அ சிலர் குனிந்தோ ,பராக்கு பார்த்தபடியோ தவிர்த்து விடுவார்கள்.

மரக்கதவைத் திறந்து கம்பிக்கிராதிக் கதவை இழுத்து சண்முகம் வெளியே வருகையில் அதிர்ந்து போனான்.படுக்கையறை சன்னலுக்கு அருகே நிறுத்தியிருந்த ஸ்பெலண்டர் பைக்கைக் காணவில்லை.கை கால்கள் உதற ஆரம்பித்து விட்டன.வார்த்தைகள்குழறின.மேலெழும்பவில்லை.
அய்யைய்யோ வண்டியைக் காணோம் என உரக்கக் கத்தி விட்டான்.அன்னலெட்சுமி உள்ளேயிருந்து என்னங்க மாமாவெனப் பதறியபடி வந்தவள் கையில் வைத்திருந்த சில்வர் பானையைக் கீழே போட்டாள்.அதுவொரு சத்தம் கொடுத்து சுழன்று நின்றது.இருவரும் சுதாரித்து உணர்வுகளைத் தேக்கி வைக்கத் துவங்கினர்.அடிபைப்பில் யாரோ கிஷ்ஷு கிஷ்ஷீ எனத் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தார்கள்.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்ன என்னாச்சுவெனக் கேட்டபடி வந்தனர்.அவர்களுக்கு விஷயத்தை அன்னலட்சுமி சொல்லிக்கொண்டிருந்தாள்.

இதுவரைக்கும் இப்படி நடந்ததேயில்லை என யாரோ ஒருத்தர் சொல்கையில் அவனுக்கு என்னவோ போலானது.

சண்முகம் பக்கத்து ஊரிலிருந்த குமார் அண்ணனுக்கு போன் அடித்தான்.அதற்கு முன்பு வாசற்பக்கமாக ஓடிச்சென்று பார்த்தான்.குமார் அண்ணன் எஸ்.பி ஆபீஸிலிருக்கும் சோமு அண்ணனின் நம்பரைக் கொடுத்து பேசச்சொன்னார்.சோமு அண்ணன் உடனே நூறுக்கு போன் அடித்துத் தகவலைச் சொல்லுங்கள்.உடனடியாக ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ரிப்போர்ட் பண்ணுங்க.நான் ஸ்டேஷனுக்கு பதினோரு மணிக்கு நேரா வர்றேன் என்றார்.

ரயில்வே பணிபுரியும் சுரேஷ் சார் சட்டையை மாட்டியபடி வாங்க ஸ்டேஷனுக்கு போவோமெனக் கூப்பிட்டார்.அன்னம் ; மாமா வண்டி போனாப் போகுது விடுங்க ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயின்ட் பண்ணிட்டு வந்திருங்க.நம்ம தலையெழுத்து எனும் போது அவளது கண்களில் நீர்முட்டிக்கொண்டு நின்றது கன்னங்கள் உப்பியபடி அழத் தயாரானாள்.பிள்ளை புரண்டு படுத்தான்.அவனிடம் இப்போதைக்கு ஏதும் சொல்லாத நா வந்ததும் மெதுவாப் பாத்துக்குவோம் என்றவாறே வெளியேறினான்.அவள் பர்ஸை ஓடிவந்து கொடுத்து விட்டுச்சென்றாள்.

சண்முகத்தை மணமுடித்த அன்னத்திற்கு அவன் டூ வீலரில் ஊரைச்சுற்றிக்காட்டியதைத் தவிர வேறு பெரிதாய் சந்தோஷமில்லை.திருமணமான சமயத்தில் டிவிஎஸ் சேம்ப் தான் வைத்திருந்தான்.அப்புறம் அவளின் வற்புறுத்தலால் அவளுடைய நகைகளை அடகு வைத்து இந்த வண்டியை வாங்கினான்.ஆர்.டி.ஓ ஆபிஸுக்கு அருகிலேயே உள்ள கருப்பணசாமி கோவிலில் சாவியை வைத்து சாமி கும்பிட்டு எலுமிச்சை ,மாலை பூசை செய்து எடுத்த வண்டி.ஒரு முறை கூட இடையில் மக்கர் செய்ததே இல்லை.ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன.சிங்கிள் ஹேண்ட் சார் வண்டியை நல்லா மெயிண்டைன் பண்றீங்க என்பான் மெக்கானிக் கடைப்பையன்.இந்த வண்டியை ஓட்டியே தான் கியருக்குப் பழகினான் சண்முகம்.

உக்காருங்க சார் என்றார் சுரேஷ்.உங்களுக்கு வேறு சிரமம் என்றான் சண்முகம். சார் இந்த மாதிரி நேரத்தில தான் ஒருத்தருக்கொருத்தர் உதவி என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்தார்.பின்னாலே உட்கார்ந்து கொண்டான் சண்முகம். இப்படி அமர்ந்து இருப்பதே அவனுக்கு அழுகையைக் கூட்டி வந்தது.

பல்லைக்கடித்துக்கொண்டு சமாளித்தான்.சுரேஷ் பேசியது எதுவுமே காதில் விழவில்லை.

அதே இடத்தில் நின்ற நான்கு டூ வீலரில் தன்னுடையது மட்டும் காணாமல் போனதை நினைத்து அழுகையாய் வந்தது. ஸ்டேஷன் வாசலில் எட்டத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் நுழைந்தனர்.ஸ்டேஷன் முன்பு போடப்பட பந்தலில் குளுமையாய் இருந்தது.அதிகாலை நேரம் பரபரப்பு ஏதுமில்லை.வயர்லெஸ் கருவிகளில் தொடர்ச்சியாக குரல்கள் மாறி மாறி ஒலித்தபடி இருந்தன.

நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு சீருடைக்காரரிடம் வணக்கம் சொன்னார்கள்.சொல்லுங்க என்ன விஷயம் என்றார்.சுரேஷ், டூவீலர் தொலைந்து போன விபரத்தைச் சொன்னவுடன் திரும்பி

சண்முகத்தைப் பார்த்து வண்டியைப் பூட்டாம வச்சிருப்பீங்க.

ஏதும் லோன் கட்டாம விட்டுட்டீங்களா

பைனான்ஸ்காரன் தூக்கியிருப்பான்

இல்ல சார்

வண்டியை லாக் பண்ணி தான் சார் நிறுத்தியிருந்தேன்.லோன் போட்டு வாங்கலை சார். ஃபுல் கேஷ் சார்ன்னு சொல்லியவன் உதட்டைக்கடித்துக் கொண்டான்

சரி பேப்பர்ஸ் இருக்கா ஆர்.சி.புக் இன்ஸ்யூரன்ஸ்லாம்

இருக்கு சார் என்றான் சண்முகம்

நாங்க சொல்றத, நீங்க கேக்குறதே இல்லையே.நிறைய பேர் வண்டியைப் பூட்டாம சாவியோடையே நிப்பாட்டியிருப்பாங்க.

சரி நீங்க எப்ப பாத்தீங்க வண்டி இல்லாதத?

காலையில அஞ்சு மணியிருக்கும் சார்.

உடனே நூறுக்கு போன் அடிச்சேன் சார்ன்னு சொன்னவுடன் நிமிர்ந்தவர் இதெல்லாம் யார் சொன்னா உனக்குன்னுற மாதிரி பார்த்தார்.

சார் எஸ்பி ஆபீஸ்ல அண்ணன் வேலை பாக்குறாரு சோமுன்னு .அவருதான் சொன்னாரு நூறுக்கு போன் அடிக்க. காலையில 11.00 மணிக்கு ஸ்டேஷனுக்கு வர்றேன்னு சொன்னாரு சார்.

அவரின் முகம் மாறியது. காம்பவுண்டு கேட் கிடையாது பூட்டு கிடையாது செயின் போட்டு லாக் பண்ண மாட்டீங்க.இப்ப வண்டியைக் காணோம் இவரத் தெரியும் அவரத் தெரியும்னு வந்திருவீங்க.

சரி சரி எப்படி வந்தீங்க ஸ்டேஷனுக்கு என்றார்.

சண்முகம் சுரேஷை காண்பித்து சார் வண்டிலன்னதும்

பக்கத்தில இருக்க எல்லா டூ வீலர் ஸ்டேண்டுலயும் போயி பாருங்க உங்களுக்கு அதிர்ஷடமிருந்தா கிடைக்கும். பாத்துட்டு இருந்தா உடனே தகவல் சொல்லுங்க ன்னார்.

அடுத்து வர்றப்ப பேப்பர்ஸும் கொண்டு வாங்க ன்னார்.

சண்முகம் போற வழியில் வர்ற எல்லா ஸ்பெளன்டரையும் பாத்துகிட்டே வந்தான்.தட்டுப்படலை.

நாலு டூவீலர் ஸ்டாண்டுகளிலும் பார்த்தாகி விட்டது. காலை வெயில் உரைக்கத்துவங்கி விட்டது. ஸ்டேஷன்ல தகவலைச் சொல்லிட்டு திரும்புறப்போ. வாங்க டீ சாப்பிடுவோமென வற்புறுத்தி சுரேஷ் வாங்கி கொடுத்தார்.

ஒரு பொருளைத் தொலைப்பது மாதிரியான கொடுமை என்னவென மெல்ல மெல்ல சண்முகத்திற்கு தெரிய ஆரம்பித்தது.

வீட்டிற்குத் திரும்பியவன் பையனைப் பள்ளியில் விடவேண்டும்.தெரிந்த ஆட்டோக்காரரை வரவைத்து போய்விட்டுவிட்டுத் திரும்பினான்.போக வர முந்நூறு ரூபாய்.

அலுவலகத்துக்கு லீவு சொல்லி விட்டு குளித்து கிளம்பினான்.சுரேஷ் நான் வரவா என்றதற்கு வேணாம் அண்ணன் வருவார் சார் என்றான்.

ஸ்டேஷனுக்கு எட்டத்தில் உள்ள டீக்கடையில் காத்திருந்தான் மணி பதினொன்றரையாகி விட்டது. சிறிது யோசித்தபடி சோமு அண்ணனுக்கு போன் செய்தான்.அவர் தம்பி இந்தா நானே கூப்பிடுறேன்னு போனைக் கட் செய்தார்.மணி ஒன்றாகி விட்டது. பொறுத்துப்பார்த்த சண்முகம் மீண்டும் போன் அடித்தான்.தம்பி இங்கே கொஞ்சம் முக்கியமான வேலை. கணேஷ்னு நுண்ணறிவு பிரிவு எஸ் ஐ இருப்பார்.அவர்ட்ட பேசிட்டேன்.உறுதியாய் எப்ஐஆர் போட்டு வாங்கிடலாம்.அவரைப்பாத்து நான் சொன்னேன்னு சொல்லுங்க.ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரும் ஃபிரண்டு தான்.நீங்க போய் இப்ப கணேஷ் சாரைப் பாருங்கன்னார்.

மெல்லத் தயங்கி உள்ளே நுழைகையில் காலை போல இல்லை ஸ்டேஷன்.ஆட்கள் வருவதும் போவதுமாய் விசாரணை அதட்டல் சத்தங்கள்.சின்னச் சின்ன தடுப்பறைகள். என்ன கேஸ்டூவீலர்

ஏரியா எது

வெயிட் பண்ணுங்க

இன்ஸ்பெக்டர் வர மூணு மணியாகுமென்றார் முன்னறையில் இருந்தவர்.வயர்லெஸ் ஒலியும் இடையே வரும் பிரத்யேக ஓசையையும் காதுகள் பழகி விட்டன.பசி வயிற்றைக் கிள்ளியது.

சார் இங்க கணேஷ்னு நுண்ணறிவு பிரிவு எஸ்ஐ இருக்காராமே அவர இப்ப பாக்காலாமா எனத் தயங்கியபடியே கேட்டான் சண்முகம். ஓ !அவரா வெளியில தான இருந்தார் நீங்க பாக்கலையா இல்ல சார் அவரை நான் பார்த்தது இல்லை சோமுன்னு.

இதோ, இவர் தான் கணேஷ் எனக் கைகாட்டிய திசையில் சிவில் டிரஸ்ஸில் இருந்தார்.நல்ல உயரம். சார் சோமு அண்ணன்.

ஓ நீங்க தானா ஆமா போன் பண்ணாரு என்ன சார் செயின் லாக் லாம் போடலையா.சரி இன்ஸ்பெக்டர் மூணு மணிக்கு வருவார் .வெயிட் பண்ணுங்க. நானும் இருக்கேன் பேசிருவோம்னார்.

வெளியே வந்து டீ ,வடையை சாப்பிட்ட பின்பு காதடைத்துக் கிடந்தது கொஞ்சம் ஆசுவாசமானது.

டீக்கடைக்காரர் என்ன மேட்டர் சார் ன்னார்.

எரிச்சலோடு சொன்னான் சண்முகம்.

மெல்ல அவன் வதங்கிக்கொண்டிருந்தான்.

அன்னத்திற்கு போன் செய்தான்.மாமா காலைலயும் சாப்பிடல எங்க இருக்கீங்க அவுக வந்தாங்களா எனக்கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தாள்.

சரி நான் சாப்பிட்டேன்.அண்ணே வரல ஆனா பேசிட்டாக இன்ஸ்பெக்டருக்காக வெயிட் பண்றேன்.தம்பிய நீ போய் கூப்பிட்டு வந்துடு.ஆட்டோ வந்துடும்.ரூபாய் நான் அப்புறம் தர்றேன்னு சொல்லிடு.இப்ப நான் அதுக்குத்தான் போன் பண்ணேன்.அம்மா பேசுனாங்க ஏதும் மனசில போட்டு வருத்தப்படாதீக.தலைக்கு வந்தது தலப்பாயோடு போச்சின்னு நெனைச்சிக்குங்க என்றார்கள் என்றாள் அன்னம்.சரி நான் போனை வச்சிடுறேன் என்றான் சண்முகம்.

கணேஷ் சார் வண்டியை எடுத்து ஸ்டேஷனை விட்டு வெளியேறுகையில் கண்களில் படுமாறு போய் நின்றான்.அவர் இவனைப் பார்த்து கையசைத்துக் காத்திருங்கள் என்று சொன்னது அவனுக்கொரு நம்பிக்கை அளித்தது.

அவர் சென்ற சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஜீப் வந்து நின்றது.சண்முகம், கணேஷ் சார் வரும்வரை காத்திருப்பதா என்று யோசித்தபடியே உள்ளே சென்று விட்டான்.

நம்ம தாலிய அறுக்குறாய்ங்க

நாளைக்கு செலவு ஃபுல்லா நம்மது தானாம்.

சொல்லும் போதே சண்முகத்தைப் பார்த்து என்ன விஷயம் ன்னார்

சார் ……. சோமு ………. எஸ் பி ஆபீஸ்

ஓ !அந்த டூ வீலரா !வெயிட் பண்ணுங்க

இப்ப நானும் சாப்பிட்டுட்டு எஸ் பி ஆபீஸ் போகனும் .ஒண்ணு பண்ணுங்க நீங்க போயிட்டு ஏழு மணிக்கு வந்துடுங்க என்றார்.

இதற்காகவே காத்திருந்தது போல கண்களில் படுபவருக்கெல்லாம் வணக்கம் சொல்லியபடி ஸ்டேஷனை விட்டு வெளியேறினான்.

அன்னத்தையும் இவனுக்கு உடனே பாக்கனும் போல இருந்தது.

சண்முகம் பொடிநடையாய் நடக்க ஆரம்பித்தான்.

வீடு திரும்பிய சண்முகம் வண்டி நிறுத்திய இடத்தில் அப்படியே திக்பிரமை பிடித்தவன் போல நின்றான்.

குடிவந்த புதிதில் பந்தல் கம்பி வாங்கி சுவரில் அறைந்து செயினால் கட்டி வண்டியைப் பூட்டியிருந்தால் தொலையாமல் இருந்திருக்குமோ என்று எண்ணினான்.இனி யோசித்து என்ன செய்ய போனது போனது தானென யோசிக்கையில் அன்னம் யதேச்சையாக வந்தவள்

என்ன மாமா வாசலிலே நின்னுக்கிட்டு

வாங்க திரும்பத்திரும்ப சொல்றேன் அதையே யோசனை பண்ணி வருத்தப்படாதீங்க.என்ன சொன்னார் இன்ஸ்பெக்டர்? ஏழு மணிக்கு வரச்சொல்லியிருக்கார்.

சரி சோமு மாமா போன் பண்ணுனாங்க பணம் எதுவும் கொடுக்க வேணாம்.தம்பி வந்தா சொல்லிருமான்னார்.

ஓஹோ சரி என்றவன் பிள்ளை அசந்து தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.பொறாமையாக இருந்தது. குழந்தையாக இருந்து விட்டால் எந்த இழப்பையும் பொருட்டின்றி நகர்த்தி விடலாமே என நினைத்துக்கொண்டான்.சாப்பிட்டீங்களா என்றான்.

சாப்பிட்டோம் நாங்க.புளிக்குழம்பு அப்பளம் பொரிச்சேன் எனத் தட்டையெடுத்து வைத்தாள் அன்னம்.

மணி ஆறாகி விட்டிருந்தது.

கணேஷ் சார் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வந்தன.வண்டி இன்சூரென்ஸ் அமௌன்ட் 25,000 காட்டுது. இப்ப நீங்க எப் ஐ ஆர் போட்டு வாங்கிய பின்பு எங்களுக்கு கண்டுபிடிக்க குறிப்பிட்ட காலக்கெடு இருக்கும்.அப்புறம் கண்டுபிடிக்க முடியலைன்னு ஓர் சர்டிபிகேட் கொடுக்கனும்.அதக் கோர்ட்டில ப்ரொடியூஸ் பண்ணனும். இன்சூரென்ஸ் காரங்க விஷிட் பண்ணி செக் செய்வாங்க.அந்த ஃபைல் இன்சூரென்ஸ் அதிகாரி சரிபார்த்து அமௌன்ட் ஷேங்க்சன் பண்ணுவாங்க.

குறைஞ்சது ஆறு மாசமாகும்.இடையில இடையில நாங்க கூப்பிடுறப்ப ஸ்டேஷன் வரவேண்டியிருக்கும்.

அரை தூக்கத்தில் நினைவு எங்கெங்கோ ஓடியபடி இருந்தது. மணி ஆறே முக்கால் ஆனது.விருட்டென எழுந்திருத்த சண்முகம் மெக்கானிக் ஜாபருக்கு ஃபோன் செய்தான்.

பாய் பழைய டிவிஎஸ் சேம்ப் ஏதாவது செகண்ட் ஹேண்ட் வந்தா சொல்லுங்க ஆறாயிரம் ரூபாய்க்குள்ள வர்ற மாதிரி.

ஏன் சார் என்றதற்கு விஷயத்தை சொன்னான் சண்முகம்

வருத்தப்பட்ட ஜாபர் அவசியம் பாய் உங்களுக்கு முடிச்சி தர்றேன்.

இப்போதைக்கு நம்மகிட்ட ஸ்பேர் வண்டி ஒண்ணுயிருக்கு.

கடைப்பையன்ட்ட கொடுத்து விடுறேன்.ஒண்ணும் கவலைப்படாதீங்க சார் என்று சொல்லி போனை வைத்தான்.

சண்முகத்தின் கண்களில் நீர் தளும்பிக்கொண்டிருந்தது.

மணி ஏழைத் தாண்டி விட்டது. சண்முகம் ஸ்பேர் வண்டிக்காகக் காத்திருந்தான்.

ஒரு வேரைப் பிடித்தபடி ( சிறுகதை ) / வண்ணதாசன்.

வண்ணதாசன்.

பொதுவாகப் பத்திரிக்கை வைக்கிறவர்கள் காலையில் தான் வருவார்கள். அதுவும் ஆழ்வாரப்பன் வீட்டில் இருக்கிறாரா, அவரது புல்லட், அல்லது பெரிய வண்டி , ஜீப் நிற்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் வருவார்கள். இப்படி விளக்கு வைத்த பிறகு மேல வீட்டுப் பெரிய பிச்சம்மாவும் சின்னப் பிச்சம்மாவும் ஒன்றாக நடந்து வருவது காசியம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதுவும் இன்றைக்குக் கார்த்திகை மாதப் பிறப்பு. காசியம்மா வீட்டுத் தலை வாசலில் இரண்டு விளக்குகளை ஏற்றியிருந்தாள். இரண்டும் யானை விளக்குகள். பர்மாவில் இருந்தோ ரங்கூனில் இருந்தோ அவளுடைய அம்மா வழி மூதாதை யாரோ கொண்டு வந்தது. சதைப்பற்று இல்லாமல் யானைகள் உயரமாக இருக்கும். அதன் மேல் ஒரு அம்பாரி. அம்பாரியின் உச்சிப் பகுதியில் விளக்குக் குழிவு. திரியை நன்றாக நுனியில் கனியவிட்டு, கோபிப் பொட்டு வைத்தது போல சுடர் ஒளிர ஆரம்பித்த சமயம் இரண்டு பேரும் தூரத்தில் வருவது தெரிந்தது.

மேல வீட்டில் எல்லோருடைய பெயரும் பிச்சை என்றே ஆரம்பிக்கும். பெரிய பிச்சம்மா பெயர் பிச்சை பார்வதி. சின்னப் பிச்சம்மா பெயர் பிச்சை லச்சுமி. ஆனால் ஊரில் எல்லோரும் கூப்பிடுவது பெரிய பிச்சம்மா, சின்னப் பிச்சம்மா தான். அனேகமாக காசியம்மா ஒருத்தி மட்டுமே அவர்களைப் பார்வதி அக்கா, லட்சுமி அக்கா என்று கூப்பிட்டிருப்பாள். காசியம்மா வெளியூர்க்காரி. என்பது முக்கியமான காரணம்.

ஆழ்வாரப்பன் இவ்வளவு தூரம் அசலில் பெண் எடுப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே படித்து முன்னிலைக்கு வந்து வடக்கே காலேஜில் வேலை பார்க்கும் மூத்தவனுக்கு போலீஸ் கமிஷனர் வீட்டில் படித்த பெண்ணாகப் பார்த்துவிட்டார்கள்.. அப்பாவோடு ஊரோடு இருந்து தென்னந்தோப்பையும் விவசாயத்தையும் பார்த்துவந்த, கர்லா சுற்றி, கசரத் எடுத்து ஆள் பீமன் போல இருக்கிற, தோப்புக்காரரின் இளைய மகன் இப்படி மரப்பாச்சி பொம்மை போல ஒருத்தியைக் கட்டிக்கொள்வான் என்று எப்படித் தெரியும்? சொல்லப் போனால், மேல வீட்டுக்காரருக்கும் தோப்புக்காரர் வீட்டுக்கும் அந்தக் கல்யாணத்திற்கு அப்புறம் போக்குவரத்து சுமூகமாக இல்லாமல் போய்விட்டது. நல்லது கெட்டதில் பெயருக்குத் தலையைக் காட்டுவதோடு சரி.

மேல வீட்டுக்காரர் தன் மூத்த மகளை கம்மாய்ப்பட்டியில் ஒரு பெருங்கொண்ட விவசாயக் குடும்பத்தில் கட்டிக்கொடுத்தார். எட்டாம் கிளாசுக்கு மேல் படிப்பு வராத சின்னவள் பிச்சை லச்சுமியை வீம்புக்குப் பக்கத்து கல்லாங்கல் டவுண் முன்னாள் எம்.எல்.ஏ மகனுக்குக் கட்டிக் கொடுத்தார். அந்தப் பையன் வக்கீலுக்குப் படித்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ரோடு காண்ட்ராக்டில் நல்ல சம்பாத்தியம். என்றாலும் சின்னப் பிச்சம்மா மழைக்கும் வெயிலுக்கும் மேலவீட்டில் தான் இருக்கிறாள். காசியம்மா கல்யாணம் ஆழ்வாரப்பனுக்கு வாழ்க்கைப்பட்டு இந்த ஊருக்கு வந்ததும் முதலில் பார்க்கவந்த சிலரில் பிச்சை லச்சுமியும் ஒருத்தி.

காசியம்மாவுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்றைக்குப் பொசுபொசு என்று தூரல் விழுந்தபடி இருந்தது. இந்த வீட்டில் இருந்த அம்பாசிடர் கார் போக, காசியம்மா வீட்டில் இருந்து தனிக்குடித்தனச் சாமான்கள் ஏற்றிவந்த ஒரு வேனும் அரை பாடி வண்டியும் தெருவில் நின்றன. பழுத்த வாழைத் தார்க் குலைகள் சாத்திவைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் கதவில் கழற்றிப் போட்ட வதகல் பூமாலைகள். ஒரு பச்சைப்பசேல் என்ற புல் வெளியை சதா மாடுகள் குனிந்து குனிந்து மேய்ந்தபடியே இருப்பது போல உண்டான வாசனையைக் காசியம்மாவுக்குப் பிடித்திருந்தது.

ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்திருந்த காசியம்மாவின் பக்கத்தில் சின்னப் பிச்சம்மா வந்து உட்கார்ந்தாள். ரொம்பப் பக்கத்தில் அவ்வளவு நெருக்கி உட்கார அவசியமில்லை. நிறைய இடமிருந்தாலும் சின்னப் பிச்சம்மா அப்படித்தான் அமர்ந்தாள். புதுச் சேலையாக இருக்கவேண்டும். கரும்புத் தோகை விளிம்பு போல அது காசியம்மாவின் தோலை உரசியது.

காசியம்மா கையை அவள் தன்னுடைய கையில் எடுத்து பூப் போல மடியில் வைத்துக்கொண்டாள். அவளுடைய அடிவயிற்றுக்கும் கீழே என்று சொல்ல வேண்டும். வெது வெதுப்பு இன்னும் இருக்கிறது. அப்படி ஒரு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. அவள் எழுந்து போனாள். யாரோ கூட, ‘என்ன வேணும்?’ என்று அவளிடம் கேட்டார்கள். ஒன்றும் சொல்லாமல், விளக்குக்கு முன்னால் இருக்கும் தாம்பாளத்தில் இருந்து சந்தனக் கும்பாவை எடுத்துவந்து காசியம்மாவின் இரண்டு கன்னங்களிலும் சந்தனம் வைத்தாள், முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை இழுவினாள். அடிக்கழுத்தில் பூசினாள். மார்பில் கைபட்ட மாதிரித்தான் இருந்தது. காசியம்மாவுக்குக் கூசியது. சின்னப் பிச்சம்மா சிரித்தாள். அவளுடைய பருத்த உதடுகள் நடுங்கின. கண்கள் நிரம்பியிருந்தன.

‘ஆழ்வார் செஞ்சா சரியாத்தான் இருக்கும்ணு நினைச்சேன். சரியாத்தான் இருக்கு’ என்று காசியம்மாளிடம் சொன்னாள். விரல்களைக் குவித்து முத்திக்கொண்டாள். காசியம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இவள்? ஆழ்வாரப்பன் என்கிற தன்னுடைய கணவனை ரொம்ப இயல்பாக ‘ஆழ்வார்’ என்று சொல்கிறாள்.

காசியம்மா அவளையே பார்த்தாள். கையும் காலும் உறுதியாக இருந்தன. முடி அவ்வளவு அடர்த்தி. நடுவகிடு எடுத்து, ஒரு மாதிரிக் காது ஓரம் வளைத்து மூடியிருந்தாள். இரண்டு முழங்கைகளிலும் ஃபேன் காற்றில் நலுங்கும் அளவுக்குப் பூனை முடி. காசியம்மாவுக்குக் கொஞ்சம் பொடிக் கண்கள். அவளுக்குப் பருமனாக இருந்தன. கன்ன எலும்பு துருத்தி, சிரிக்கும் போது திரளாமல் சதையைத் தோலோடு இழுத்துக் கட்டின. உயரமும் ஜாஸ்திதான். நிலைப்படியில் குனிந்து தான் வீட்டுக்குள் அவள் வர, போக வேண்டியதிருக்கலாம்.

‘என்ன பார்க்கே? நானும் ஆழ்வாரும் பால்வாடியில இருந்து ஒண்ணாப் படிச்சோம்’ அவள் சிரித்தாள். அவள் சிரிக்கும் போது மீண்டும் கன்ன எலும்பு துருத்தியது. அவளுக்குச் சட்டென்று அந்த முகத்தின் அடையாளம் பிடிபட்டது. வாய்விட்டுச் சொல்லியே விட்டாள். ‘உங்களைப் பார்த்தால் அச்சு அசல் என்.டி.ராமாராவ் செகண்ட் ஒய்ஃப் சிவபார்வதி மாதிரி இருக்கு’ என்றாள். சின்னப் பிச்சம்மாளுக்கு என்.டி. ராமாராவ் யார் என்று தெரியவில்லை. அப்புறம் சிவபார்வதி எப்படித் தெரிந்திருக்கும்? மேலும் காசியம்மாவுக்கு அது சிவபார்வதியா, லட்சுமி பார்வதியா என்று சந்தேகம் வேறு வந்துவிட்டது.

அதற்குப் பின், இதோ இப்படிக் கார்த்திகை மாதப் பிறப்பு அன்றைக்கு விளக்கேற்றும் நேரத்தில் பெரிய பிச்சம்மாவுடன் அவள் வருகிறது வரை, காசியம்மா எத்தனையோ தடவை பார்த்திருக்கிறாள். ஒவ்வொரு தடவையும் அவளுக்கு அந்த சிவ பார்வதி சாயல் ஞாபகம் வராது இருந்ததே இல்லை. அக்காள், தங்கை இரண்டு பேரும் ஒன்று போலச் சேலை எடுத்துக் கட்டியிருக்கிறார்கள். அகல அகலக் கட்டம் போட்ட, பல வர்ணங்கள் நேர்த்தியாகக் கலந்திருந்த சேலை. காசியம்மாவுக்கு இப்போது நாற்பத்தைந்து நாற்பத்தாறு இருக்கும் எனில் பிச்சை லச்சுமிக்கு ஒன்றிரண்டு கூடுதலாக இருக்கலாம். அவளுடைய அக்காவுக்கு ஐம்பது இருக்கக் கூடும். இரண்டு பேரும் பின் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார்கள்.

முன்பு உடையார் கோவில் கொடைக்குப் பொங்கல் இடும்போதும் அப்படித்தான் கட்டியிருந்தார்கள். தெரு முழுவதும் கோலம் போட்டு வாசல் முன் பொங்கல் பானை வைத்து பிச்சை லட்சுமி பனை ஓலையை அடுப்புக்கட்டிக்குள் தள்ளிவிட்டுக்கொண்டு இருந்தாள். இரண்டு வெங்கலப் பானைகள். ஒன்றில் கழுத்து தாண்டி விளிம்பு வரை தளதள என்று வட்ட நுரை அலம்பியது. எரிந்த ஓலையின் சாம்பல் அவ்வப்போது படிந்து அதன் கொதிநிலை தீர்மானித்த ஒரு நுண் கணத்தில் அது தேர்ந்துகொண்ட ஒரு திறப்பில் பொங்கி வழிந்தது.

பிச்சை லச்சுமி குலவையிட்டபடியே நடந்துபோய்க்கொண்டு இருந்த காசியம்மாவைப் பார்த்தாள். குலவையை நிறுத்தாமல், ஒரு வெங்கலக் கரண்டியால் பானையைத் துளாவியபடியே, பக்கத்தில் இருந்த சருவச் சட்டியில் கோதி ஊற்றும் போதும் சிரித்தாள்.

ஒரு காகமும் அதன் பின் இன்னொரு காகமும் பறந்து போனதன் நிழல் கடக்கக் காத்திருந்து, சின்னவள் நகர்ந்துவந்து காசியம்மா கையைப் பிடித்துக் கொண்டு, ‘ நீ வாரது தெரிஞ்சதும் பால் எப்படிப் பொங்குச்சு பாரு’ என்று சிரித்தாள்.

ஒவ்வொரு முறை இப்படிக் கையைப் பிடித்துக்கொண்டு சொல்லும் போதும் அவள் சிரித்துக்கொண்டா, அழுதுகொண்டா சொல்கிறாள் என்பதை யாராலும் தீர்மானிக்க முடிவதில்லை. கண்கள் ஈரம் பூசிப் பளபளப்பதை வைத்து என்ன முடிவுக்கு வந்துவிட முடிகிறது?
எப்போதும் ஊரின் கடைசியில் அடிவாரத்தில் இருக்கும் கருணா அணை தண்ணீர் பெருகித்தான் கிடக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் வெவ்வேறு கூர்முனைகளுடன் மலைத் தொடர்ச்சி தண்ணீருக்குள் அமிழ, அணை மட்டம் மலை ஏறுவது போல, நீலமாகவும் கருநீலமாகவும் அருவம் கொள்ளும்.அந்த வருடம் மழை கொஞ்சம் அதிகம். மலைக்கு அந்தப் பக்கம் பெய்தது அனைத்தும் கால் காலாக இறங்கி வழிந்து அணையின் கொள்ளளவு தாண்டிவிட்டது. எச்சரிக்கைக் கொடி நாட்டிவிட்டார்கள். மதகுகள் திறக்கப் பட்டு புகைப்படலமாக நீர் சீறிக்கொண்டு போனது.

ஊரே திரண்டு போய்ப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எல்லோர்க்கும் நாள் குறித்துச் சொல்கிற புளியமரத்து விட்டு வள்ளுவர் அன்று நிறையக் குடித்திருந்தார். பச்சைத் தலைப்பாகை கட்டிக்கொண்டு, ஒன்று மாற்றி ஒன்று ஏதோ நிறுத்தாமல் பாடிக்கொண்டே இருந்தார். கிழியவே கிழியாத குருத்து வாழையிலை பற்றிய ஒரு பகுதியை அவர் பாடும் சமயம் விவசாயம் செய்கிறவர்கள் எல்லோரும் செண்ட்ராயன் கோவில் இருக்கும் திக்கைப் பார்த்து, தலைக்குமேல் கை உயர்த்திக் கும்பிட்டார்கள். காசியம்மாவை பைக்கில் கொண்டுவந்து விட்டுவிட்டு ஆழ்வாரப்பன் தென்னந்தோப்புக்குப் போயிருந்தான்.

காசியம்மாவுக்கு மலையின் கருநீலமும் கருணா அணைத் தண்ணீரின் ஊதாத் தகடும் என்னவோ செய்தன. அவள் யாருடனும் அல்லாமல் தனியாகப் போய் நின்று பார்த்தாள். ஏழு எட்டு எண்ணம் உள்ள ஒரு யானைக் குடும்பம் அடிவாரத்தில் ஒரு முடிச்சுப் போல நகர்ந்துக்கொண்டு இருந்தது. சேலைத் தலைப்பைத் தோளின் வழியாக வலக்கழுத்துக்குச் சுற்றி முன்னால் கொண்டுபோய் நுனியைப் பல்லால் கடித்தபடி அப்படியே நின்றாள். அசையாது கிடந்த நீர் ஒரு ஊதா நிலம் போல அவளுக்குத்தெரிந்தது. தன்னால் அதன் மேல் நடந்து விட முடியும் என்று தோன்றியது.

அப்போது அவளைப் பின்னால் இருந்து யாரோ கட்டிப் பிடித்தார்கள். காசியம்மாவின் வயிற்றின் மேல் கைகளை இறுக்கினார்கள். உச்சித் தலையில் முகவாய் நாடியால் அழுத்தினார்கள்.

அடுக்கடுக்கடுக்காகச் சிரித்தார்கள். ‘ஆழ்வார் உன்னைத் தனியா விட்டுட்டு எங்கே போனான்?’ என்று கேட்டபடியே காசியம்மாவின் முதுகோடு அப்பியிருந்த தன்னை உரித்து எடுத்துக்கொண்டு பிச்சை லச்சுமி முன்னால் வந்து, மறுபடியும் காசியம்மாவின் கைகளை எடுத்துத் தன்னிடம் வைத்துக்கொண்டாள். சின்னப் பிச்சம்மாவின் கைகள் ஏன் அவ்வளவு சூடாக இருந்தன? தண்ணீர் இல்லாமல் வெகு நேரம் அடுப்பில் இருந்த செப்புப் பானையின் வாசம் போல, இந்த இடத்தில் எப்படி அந்த வாசனை உண்டாயிற்று?

இன்னொரு தடவை இப்படித்தான் வினோதமாக ஒன்றைச் சொன்னாள். காசியம்மாவுக்கு அதைக் கேட்கும் போது பிச்சை லச்சுமிக்கு ஏதாவது கிறுக்குப் பிடித்திருக்கிறதா என்று தோன்றியது. அவர்கள் இருக்கும் மேலவீட்டின் முன்னால் ஒரு நூறு வயது அரசமரம் நிற்கிறது.

அது மேல வீட்டின் தபசில் சொத்தின் எந்த எல்கைகளுக்கும் வராது என்றாலும், மேல வீட்டுக்காரர்கள் அது அவர்களுக்கு மட்டும் பாத்தியமான மரம் என்றே சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

அதிலும் பிச்சை லச்சுமியின் அப்பா சுத்த மோசம். ‘இந்த மரம் நிற்கிற இடம் மட்டும் இல்லை. அது வேர் போகிற இடம் வரைக்கும், தெற்குத் தெரு கடைசி முடிய எங்க குடும்ப குலசாமி சொத்தாக்கும்’ என்று சண்டைக்கு நிற்பார்.

சின்னப் பிச்சம்மாள் சண்டைக்கு எல்லாம் வரவில்லை. ஒரு சொப்பனம் போல ஒன்றைச் சொன்னாள். பகல் முழுவதும் யாரோ அரசமர உச்சியில் இருந்து விடாமல் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே இருந்தார்களாம். ஊர் முழுவதுக்கும் அது யார் என்று தெரியவில்லை. அவளுக்குத் தெரியும். அது ஆழ்வார் தானாம்.
வெளியே சொல்லாமல் இருந்துவிட்டாள்.

அன்றைக்கு இரவே பூமிக்கு அடியில் இருக்கிற ஒரு வேர் வழியாக அவள் காசியம்மா வீட்டுக்குப் பாதாள மார்க்கமாகவே வந்து சேர்ந்துவிட்டாள். பார்த்தால் ஆழ்வார் நன்கு அசந்து தூங்குகிறானாம். எத்தனை மயிர்க்கால் உண்டோ அத்தனையிலும் வியர்வை பூத்திருக்கிறது. பிச்சம்மாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அந்த நேரம் பார்த்துக் காசியம்மா குளித்த தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஒரு துண்டை மட்டும் கட்டியபடி வருகிறாளாம்.

இவள் யாருக்கும் தெரியாமல் வந்தது போலவே, சத்தம் காட்டாமல், பூமிக்கு அடியில் வேர்கள் வழியாக மேல வீட்டில் போய்ப் படுத்துக்கொண்டாளாம். இவ்வளவையும் சொல்லிவிட்டு, ‘இதையெல்லாம் போய் ஆழ்வார் கிட்டே சொல்லிக்கிட்டு இருக்காதே ‘ என்று முடிக்கும் அவளைப் பார்க்க காசியம்மாவுக்குப் பாவமாக இருந்தது.

இப்படிப் பார்க்கிற நேரம் எல்லாம் எதையாவது சொல்கிற அவள் இன்றைக்கு என்ன சொல்லப் போகிறாளோ என்று அசையாமல் நடுங்காமல் நின்று நிலைத்து நிதானமாக எரிந்துகொண்டு இருந்த யானை விளக்குகளையே காசியம்மா பார்த்துக்கொண்டு இருந்தாள். இரண்டு யானைகளும் அப்படியே பெரிய உருவமாக வளர்ந்து , தன்னுடைய வீட்டை நோக்கி வந்துகொண்டு இருக்கும் பெரிய பிச்சம்மா, சின்னப் பிச்சம்மா இருவரையும் அம்பாரியில் ஏற்றிக்கொண்டு வரட்டும் என்று விரும்பினாள். அந்த வெண்கல யானைகளின் மஞ்சள் நிறமும் சுடரின் ஒளிர் நிறமும் அந்த இரு பெண்களின் பாத மட்டத்தில் தரையோடு தரையாய்ப் பெருகிக் கிடந்தன. அவர்கள் அவர்களை அறியாது அந்தத் தடத்தில் நடந்துவந்தபடி இருந்தார்கள்.

சின்னப் பிச்சம்மாவுடைய மருதாணி இட்ட கையில் ஒரு தாம்பாளம் இருந்தது. பழங்கள், குங்குமச் செப்பு எல்லாம் இருந்தன. செதுக்குவதற்கு முந்திய பாறையை கல்தச்சன் புரட்டி வருவது போல ஒரு உறைந்த புன்னகை முகத்தில் இருந்தது. அவளின் மூத்த சகோதரி பிச்சைப் பார்வதி சிரித்தாள். அவள் போட்டிருந்த வெற்றிலை அப்படிச் சிவந்திருந்தது. கீற்றுப் போன்ற உதடுகள், ஒரு பாடகியுடையதைப் போல் பிரிந்தன. சின்னப் பிச்சம்மா வலது பக்க மூக்குத்தி எனில், இவள் இடது பக்க மூக்குத்தி இட்டிருந்தாள். அகன்ற நாசித் துவாரத்தில் திருக்கும் சுரையும் தெரிந்தன.

‘உங்க வீட்டுக்குத்தான் தாயி’ என்று பெரிய பிச்சம்மாள் கும்பிட்டாள். ஒரு கனத்த புஜங்கள் உள்ள சிலை ஆகம சாஸ்திரப்படி வணங்குவது போல அந்தத் தோற்றம் இருட்டின் வசந்த மண்டப வரிசையில் இருந்து முன்னால் நகர்ந்துவந்து காசியம்மா முன்னால் நின்றது. அவளுடைய கையில் உச்ச வேனல் காலத்தில் மொட்டுவைத்த மல்லிகைப் பூ பந்து ஒன்று எப்படி வந்தது என்று தெரியவில்லை. காசியம்மாவிடம் அதை நீட்டினாள். கீழ்க் குரலில் ‘மகராசியா இரு’ என்றும் சொன்னாள்.

பிச்சை லச்சுமி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தாம்பாளத்துடன் வந்தபடி இருந்தாள். இப்போதுதான் முதல் முறையாக இந்த வீட்டுக்குள் வருகிறாள் என்பதாக அவளுடைய பார்வை சுவர்களின் உயரத்தின் மீதும், மர வேலைப்பாடுகளின் நெளிவுச் செதுக்கல்கள் மேலும் ஏறி ஏறிச் சருகின.
‘பொண்ணு கொடுக்கல, எடுக்கலைங்கிற கோவத்தில எங்க அய்யா ஆழ்வாரப்பன் புதுசா கட்டின இந்த வீட்டுப் பால் காய்ச்சுக்கு எங்க யாரையும் வர விடலை. இப்போ தான் வாரோம்’ என்று சொன்ன பெரிய பிச்சம்மா, கண்ணைக் காட்ட, சின்னவள் ஆளுயரமாக நின்ற அன்னவிளக்குகளின் பக்கம் இருந்த சாமிபடங்களின் முன்னால் தாம்பாளத்தை வைத்தாள்.

நடுவில் வயிறு எக்கி ஒட்டின கோலத்தில் சம்மணம் போட்டு, உடல் முழுவதும் திருநீறு பூசி, தாடி மீசையுடன் ஒல்லியாக உட்கார்ந்திருந்த பனையடிச் சித்தரின் வரைபடம் இருந்தது. அதற்கு இடமும் வலமும் ஆழ்வாரப்பனின் தந்தையாரான, தோப்புக்காரர் என்றும் பிரசிடெண்ட் பண்ணையார் என்றும் அழைக்கப்பட்ட பெரியவரின் படமும் அவரின் சம்சாரத்தின் படமும் இருந்தது. அவர் தலைப்பாகை கட்டி இருந்தார். அந்த அம்மாள் காது வளர்த்திருந்தாள். இரண்டு படங்களிலும் கதர்மாலை முறுக்கில்லாமல் கிடந்தது.

அடுக்களைக்குள் இருந்து வந்த சோலையம்மாள் வந்திருந்த இருவரையும் வணங்கினாள், செம்பில் இருந்து வெங்கல டம்ளர்களில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள். அன்ன விளக்குகளில் திரியிட்டுக் குளிரக் குளிர எண்ணெய் வார்த்தாள். ஒரு பத்திக்கட்டு, தீப்பெட்டியைக் குலுக்கிப் பார்த்து வைத்துவிட்டு ஓரமாக நின்றாள். காசியம்மா போய் விளக்கேற்றி, பத்தி கொளுத்திச் சாமி கும்பிட்டாள். பெரிய பிச்சம்மாவும் சின்னவளும் பக்கத்தில் நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். காசியம்மா கொடுத்த உலர் முந்திரிப் பழங்களை வாயில் ஒதுக்கிக்கொள்ள அவர்களுக்கு விருப்பமாக இருந்தது..

‘கொழுந்தன் இருக்கும் போது வந்திருக்கணும். என்னமோ ஒரு கூச்சம். யார் காலத்திலோ ஈரத்தரையில வேப்பஞ்சுள்ளியை வச்சுக் கீச்சின கோடுதான். ஒரு எட்டு எடுத்து வச்சிருந்தா எப்பவோ தாண்டி இருக்கலாம். எல்லாம் பரம்பரை பரம்பரையா ஆம்பள ராச்சியம். துணிஞ்சு எங்களால தாண்ட முடியலை. அதுக்கு இப்பதான் வாய்ச்சிருக்கு’ என்று பெரிய பிச்சம்மா சொல்லிக்கொண்டே போய் நிறுத்த, முதல் உளி விழுந்து முதல் சில்லுப் பெயர்ந்தது போல சின்னப் பிச்சம்மா ஆரம்பித்தாள்.

‘கல்லாங்கல் பக்கம் மூனா விலக்குக்குக் கிழக்கே வீடு கட்டிப் பால் காய்ச்சு வச்சிருக்கு. ஆழ்வார், நீ எல்லாரும் வந்திரணும்’ என்று பத்திரிக்கையை மேலே வைத்துத் தாம்ம்பாளத்தை அவள் காசியம்மாவிடம் நீட்டினாள். ‘கணவதி ஓமத்துக்கே வந்திரணும்’ என்று எப்போதும் போல காசியம்மாவின் கையைத் தூக்கித் தன் கைகளில் வைத்துக்கொண்டாள்.

‘கண்டிப்பா வந்திருதோம். நல்லா இருங்க லச்சுமி அக்கா’ என்று காசியம்மா சொன்னதும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். மேலும் மேலும் இறுகிக்கொண்டே போனது அணைப்பு. காசியம்மாவின் முதுகைத் தடவி விட்டாள். இடுப்பை, பின் சதையை எல்லாம் உள்ளங்கை நீவிக்கொண்டே போனது. அவளைவிட உயரமான பிச்சை லச்சுமியின் நெஞ்சுப் பகுதி சேலை மொடமொடப்போடு முகத்தில் அமுங்கியது. பிச்சை லச்சுமி மூசு மூசு என்று அழ ஆரம்பித்து இருந்தாள்.

எதற்கு அழுகிறாள் என்று காசியம்மாவுக்குத் தெரியவில்லை. ‘உனக்கும் எனக்கும் பெரிய வயசு வித்தியாசம் இருக்காது. ரெண்டு பிள்ளை பெத்த நீ எப்படி இருக்கே. நான் எப்படி இருக்கேன் பாரு? சமைஞ்ச பிள்ள மாதிரி அப்படியே இருக்கே. என்னைப் பாரு . எல்லாம் தொங்கிப் போச்சு. நரைச்சுப் போச்சு’ என்று சொல்லிக்கொண்டே மேலும் அழ, அழ காசியம்மா, ‘ஒண்ணும் இல்ல. ஒண்ணும் இல்ல’ என்று எட்டின இடத்தில் அவளைத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

சின்னப் பிச்சம்மா மெதுவாகக் கூடப் பேசவில்லை. தன்னுடைய அக்கா இருப்பதையோ, அல்லது தண்ணீர் கொடுத்த செம்பும் கையுமாக அடுக்களைப் பக்கம் சோலையம்மா நிற்பதையோ பொருட்படுத்தாமல். அல்லது அவளும் காசியம்மாவும் மட்டுமே இந்த உலகத்தில் இருப்பது போலப் பேச்சைத் தொடர்ந்தாள். ஒன்றும் புரியாமல் அல்லது அவரவர்களுக்குப் புரிந்த வகையில் உணர்ந்து, பெரிய பிச்சம்மாவும் சோலையும் விலகி நின்று காசியம்மா முகத்தையே பார்த்தார்கள்.

‘நீ நல்லா இருக்கிறியா காசி? சந்தோஷமா இருக்கியா? ஆழ்வார் உன்னை நல்லா வச்சுக்கிடுதானா?’ என்று கேட்கக் கேட்க, காசியம்மா முன்னிலும் நிதானமாக அவளைத் தட்டிக்கொடுத்தபடி,’நல்லா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன்’ என்றாள். கேட்கக் கூடாதைக் கேட்டுவிட்டது போல, பெரிய பிச்சம்மா காசியம்மாவிடம் மன்னிப்புக் கேட்பது போன்ற பாவனையில் கும்பிட்டுக்கொண்டே நின்றாள். அதைவிடவும், காசியம்மா அணைப்பில் இருந்து பெயர்த்து எடுப்பது போல பிச்சை லட்சுமியின் தோளைப் பற்றி அப்புறப்படுத்தவும் முயன்றாள்.
அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருவரும் சிறிய இடைவெளியுடன் தனித்தனியாக நிற்கையில், காசியம்மாவுக்கு மிகுந்த ஆசுவாசமாக இருந்தது. அவளுக்கு சின்னப் பிச்சம்மாவைக் கூட்டிக் கொண்டு போய் அவர்களுடைய படுக்கை அறையைக் காட்டலாமா என்று தோன்றிற்று.

தரைவழியாக, ஒரு வேரைப் பிடித்தபடி பாதாள மார்க்கமாகச் சென்று மேல வீட்டு அரச மரத்தின் உச்சியில் இருந்து ஒருவன் வாசிக்கும் புல்லாங் குழல் இசையால் அந்த அறை நிரம்பியிருப்பதை அவள் கேட்க ஆரம்பித்திருந்தாள்.
%