Category: கட்டுரை

நெருப்பில் எரிந்த மலர் ( சில்வியா ப்ளாத் ) மணிக் குடுவை / தமிழில் விஜிய பத்மா

அமெரிக்க கவிஞர் மற்றும் நாவலாசிரியர் சில்வியா ப்ளாத் தனது சுய சரிதையான “மணி குடுவை (The Bel Jar) என்ற புதினத்தால் உலகளவில் அறியப்பட்டவர். பெண் விடுதலை சார்ந்த சிந்தனைகளை கொண்ட சில்வியாவிற்கு அவர் சார்ந்த சமூகமும், அவர் சந்தித்த காதலும் அத்தனை ஏற்புடையதாக இல்லை.சில்வியாப்ளாத்1950இல் ஸ்மித் கல்லூரியில் உதவித்தொகை பெற்று கல்வி பயின்ற காலக்கட்டத்தில் அமெரிக்க சமூகம் முற்போக்கு சிந்தனைகளில் மிகவும் பின்தங்கியதாக இருந்தது.இதனால் சில்வியாவிற்குசமூகம் கொடுத்த நெருக்கடிகள் தாங்க இயலாததாக இருந்தது. மேலும் அவரது காதல் வாழ்க்கை மிக கசப்பானதொரு அனுபவமாக மனதில் குழப்பங்களை விளைவிக்கஒருக்கட்டத்தில்மனநிலை பாதிக்கப்பட்டு சில்வியா பிளாத் தன் முகத்தை சமையல் எரிவாயுவில் காண்பித்து தற்கொலைக்கு முயன்றார்.அதன்பின் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் தனது கல்வியை தொடர,1955இல் பட்டம் முடித்தார். பின்னர் பிரிட்டிஷ் கவிஞரான டெட் ஹுகஸைச் சந்தித்த சில்வியா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்வும் தோல்வியிலேயே முடிந்தது.நிறைவில்லாத திருமண வாழ்வுசில்வியாவை உச்சக்கட்ட மனச்சிதைவு நோய்க்கு ஆளாக்கியது.இப்படியானதனது உளவியல் சார்ந்த மனக்குழப்பங்களையும், உணர்வுகளையும்அப்படியே “மணிக்குடுவை“ என்ற நாவலாக எழுதிவிட்டு, ஆறுமாதம் கழித்து 1963ஆம் ஆண்டில் மன உளைச்சல் அதிகரித்து தற்கொலை செய்துகொண்டார்.சில்வியாவின் உண்மைகள் நிரம்பிய இந்நாவல் அமெரிக்காவில் வெளியிடப்படக்கூடாது என்ற சில்வியாவின்தாயின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க அரசு இந்நாவலை 1971ஆம் ஆண்டு வரை தடை செய்திருந்தது.ஆனால் உலகம் முழுவதும் தி பெல் ஜார் (மணிக்குடுவை)நாவல்மிகப்பெரியபாராட்டைப்பெற்றதும் அமெரிக்காஅரசு அந்ததடையை நீக்கியது.

மணிக்குடுவை (தி பெல் ஜார்)நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982ஆம் ஆண்டுவழங்கப்பட்டது.மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இளம் பெண்ணின் மனக்குழப்பங்களையும் வெளிப்படையாக எழுதப்பட்ட தி பெல் ஜார் (மணிக்குடுவை) இதுவரை ஆறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை உள்வாங்கி அதன் உயிர்ப்பின் சாரம் கெடாமல் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமானால், நாமும் நாவலாசிரியரின் பித்து மனநிலைக்கு சென்று புரிந்து கொண்டுதான் மொழிபெயர்க்க இயலும். இதனை மிக அருமையாக ஜீவன் கெடாமல் உயரிய நடையில் மொழிபெயர்த்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் ஜி.விஜயபத்மா. காலதாமதமாக வந்தாலும் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் சில்வியாபிளாத்தின் மணிக்குடுவை எனும் சுயசரிதம் மிக முக்கியமான நாவலாக கவனிக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. புதினத்தை வெளியிடுவதில் நாதன் பதிப்பகம் அகம் மிக மகிழ்கிறது.

அஜயன் பாலா
பதிப்பாசிரியர்.

பல்லக்குத் தூக்கிகளுக்கு வயது 30 / அ.ராமசாமி

1988, டிசம்பர் 31 இல் ஒருநாள் கலைவிழா ஒன்றை நடத்திடத் திட்டமிட்டது மதுரை நிஜநாடக இயக்கம். அதே ஆண்டில் மதுரையில் மூன்று நாள் நவீன நாடக விழா ஒன்றையும் நடத்திய அனுபவம் நிஜநாடக இயக்கத்திற்கு இருந்தது. நாடகவிழாவும் ஒருநாள் கலைவிழாவும் மதுரைக்குப் புதுசு. தமிழ்நாட்டிற்கே புதுசு என்று கூடச் சொல்லலாம். அக்கலைவிழாவிற்குப் பின்புதான் திருவண்ணாமலை தொடங்கித் திருப்பரங்குன்றம், சென்னை எனப் பல இடங்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் (கலைஞர்கள்) சங்கம் கலைவிழாக்களை நடத்தியது.

புரிசை, சுபமங்களா நாடக விழாக்களுக்கும் நிஜநாடக இயக்க நாடகவிழாக்களே முன்னோடி. மைய அரசின் சங்கீத நாடக அகாடெமி நடத்தும் மண்டல நாடக விழாக்களிலும் தேசிய நாடக விழாக்களிலும் கலந்துகொண்டு நாடக விழாக்களைப் பார்த்திருந்த அனுபவத்தோடு பெங்களூர், புதுடெல்லி போன்ற நகரங்களிலும் நடந்த கலைவிழாக்களையும் பார்த்த அனுபவத்தில் ஏற்பாடு செய்யப்பெற்ற விழாக்கள் அவை. அந்த விழாக்களை ஏற்பாடு செய்த காலகட்டத்தில் நான் நிஜநாடக இயக்கத்தின் செயலாளராக இருந்தேன்.

டிசம்பர் 31, ஒருநாள் கலைவிழாவில் மேடை நாடகம், கவிதா நிகழ்வு, நவீன ஓவியர்களின் கண்காட்சி, கிராமப்புற ஆட்டங்கள் எனப் பலவற்றைக் கலந்து தரலாம் என முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் முடிவுசெய்யப்பெற்றன. நிஜநாடக இயக்கத்தின் நாடகங்களோடு அதிகம் செலவில்லாமல் பக்கத்தில் இருக்கும் நாடகக் குழுவின் நாடகங்களைக் கூட இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்யப்பட்து. நிஜநாடக இயக்கத்தில் உறுப்பினராக இல்லாத நண்பர்கள் நான் வாடகைக்கிருந்த வீட்டின் வாசலிலும் மாடியிலும் கூடிப் பேசுவோம். திறனாய்வுப்பார்வை, அரசியல், சினிமா, ஓவியம், எழுத்து எனப் பலவற்றை விவாதிக்கும் அந்த நண்பர்களைக் குழுவாக்கி ஒரு நாடகம் போடலாம்; அதற்காக ஒரு நாடகப் பிரதியைத் தேடலாம் என்ற நோக்கில் பல நாடகங்களைக் குறித்து விவாதித்தோம்.

நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டே இன்னொரு நாடகக் குழுவைத் தொடங்கலாமா? என்றெல்லாம் யோசிக்காமல் அவ்விழாவில் ஒரு நாடகத்தை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகச் சுதேசிகள் என்றொரு நாடகக்குழுவைத் தொடங்கினோம். அக்குழு மேடையேற்றுவதற்காகப் பல நாடகப்பிரதிகள் பரிசீலிக்கப்பட்டன. பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர் என இந்திய நாடகாசிரியர்களோடு பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், எட்வர்ட் ஆல்பி போன்ற இடதுசாரிகளின் நாடகப் பெயர்கள் எங்களால் உச்சரிக்கப்பெற்றது. விவாதிக்கப்பெற்றன. அந்தப் பரிசீலனையின்போது புதியதாகவே நாடகங்கள் எழுதுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

நண்பர்களின் உரையாடல் வட்டத்தில். பல சிறுகதைகள் ‘நாடகீயத் தன்மைகள்’ கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, உதாரணமாகப் பல்லக்குத்தூக்கிகள் கதையின் நாடகீயத்தன்மையை விளக்கிச் சொன்னேன். சொன்னவிதம் நண்பர்களுக்குச் சரியெனப்பட்டதால் என்னையே எழுதும்படி வற்புறுத்தினார்கள்; எழுதினேன். படித்தோம். சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அப்படித்தான் நான் நாடக ஆசிரியரானேன்.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத் தூக்கிகளில் அதைத்தான் செய்தேன்.

பல்லக்குத்தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் ஒன்றைச் சுந்தர ராமசாமியின் கதையில் பார்க்கலாம். அதன் மூலம் வாசகர்களின் வாசிப்புத்தளத்தை முடிவுசெய்யும் கதைசொல்லியின் அதிகாரத்துவத் தன்மை கதைக்குள் ஊடாடும் தன்மையை உணரலாம்.

அதனைக் கண்டறிந்து தூரப்படுத்தியபின், 1990 களின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில குறியீட்டுச் சொற்களை உரையாடலில் சேர்த்தபோது நாடகப்பிரதி முழுமையானது. அத்தோடு நாடகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ ஒருவித முரணிலையை உருவாக்க வேண்டும். பாத்திரங்கள் சார்ந்த முரணென்றால், அது அகமுரணாக அமையும், வெளியிலிருக்கும் ஏதோவொன்றொன்றால் புறமுரணாகத் தோன்றும். நவீன நாடகங்கள் என்ற வகைப்பாட்டில் பெரும்பாலும் புறநிலை முரண்களே முக்கியத்துவம் பெறும். பல்லக்குத் தூக்கிகளின் உரையாடலின் வழி உருவாக்கப்பட்ட அந்த நபர் நாடகத்தில் தோன்றா முரணை உருவாக்குவதன் வழிப் புறநிலை முரணைக் குறியீடாக உருவாக்கிவிடுபவராக ஆக்கப்பட்டார்.

சிறுகதையை எழுதிய சுந்தரராமசாமிக்கு நாடகப் பிரதியை அனுப்பிவைத்து மேடையேற்றத்துக்கு வரும்படி அழைத்தோம். வருவார் என்பதுபோல முதலில் தகவல்கள் வந்தன. ஆனால் “பல்வலி. மேடையேற்றத்திற்கு வர இயலவில்லை” என்று கடிதம் ஒன்றை அனுப்பினார். பின்னர் ஒரு நேர்ப்பேச்சில், சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை; நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பதாகச் சொன்னார். அப்படி ஆக்கப்பட வேண்டும் என்று நினைத்த அவரது நண்பர்கள் நாடகத்தைப் பார்த்துவிட்டு அவரோடு பேசியிருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.

நிஜநாடக இயக்கத்தின் ஒருநாள் கலைவிழாவின்போது குப்தா அரங்கின் நிகழ்வில் பல்லக்குத் தூக்கிகளை மேடையில் நிகழ்த்தவில்லை.

செவ்வகச் சட்டகத்தில் நடித்துக் காட்டும் முறையில் தயாரிக்கவும் இல்லை. தரைத்தளத்தில் மூன்றுபக்கமும் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த வடிவத்தில் நிகழ்த்தப்பெற்றது. குறியீட்டு அர்த்தங்கள் கொண்ட ஆடைகள், நாடகப் பொருட்கள், பல்லக்கின் விதானக்கொடியின் வண்ணம் போன்றனவற்றை இந்திய/ உலக அரசியல் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி விமரிசனம் எழுதினார் இடதுசாரி விமரிசகர் ந.முத்துமோகன். சோவியத் யூனியனில் பெரிஸ்த்ரேய்காவின் அறிமுகம் நடந்த காலகட்டம் அது. மார்க்சீயக் கட்டமைப்புகள் மீதான விமர்சனம் உலகம் முழுவதும் எழுந்து கொண்டிருந்தது.

நாடகத்தில் நடிகர்களாகப் பங்கேற்றவர்களின் பின்னணி, சிறுகதையை எழுதிய சுந்தர ராமசாமியின் அரசியல் ஆகியவற்றோடு சேர்த்து ந.முத்துமோகன் பல்லக்குத் தூக்கிகளை மார்க்சிய எதிர்ப்பு நாடகமாக முன்வைத்தார். ஆனால் அந்தப் பிரதி பல இட துசாரி அமைப்புகளின் மேடையில் பார்வையாளர்களைச் சந்தித்தது என்பது நடைமுறை முரண்.முதல் மேடையேற்றத்தைத் தொடர்ந்து மதுரையின் கல்லூரிகள் சிலவற்றில் சுதேசிகளே நிகழ்த்தியது. சுதேசிகள் நாடகக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சுந்தர் காளியைத் தனது தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிகராக அறிமுகப்படுத்திய ஞாநி அந்த நாடகத்தை முக்கியமான திருப்பமாகப் பயன்படுத்தினார்.

அறந்தை நாராயணனின் கதையைத் தழுவி எடுக்கப்பெற்ற விண்ணிலிருந்து மண்ணுக்கு என்னும் அந்தத் தொடரின் உச்சநிலைக் காட்சியாகப் பல்லக்குத்தூக்கிகள் அமைந்தது. உளவியல் மருத்துவரும் நாடக இயக்குநருமான ருத்ரன் தனது மருத்துவச் செயல்பாட்டின் பகுதியாகப் பல்லக்குத்தூக்கிகளைத் தயாரித்தார். திருவண்ணாமலையில் இயங்கிய இடதுசாரி நாடக குழுவான தீட்சண்யா போன்றனவும் அந்நாடகத்தைத் தயாரித்தது.
நாடகப்பிரதியை அச்சிட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டபோது சுந்தராமசாமி மறுப்பெதுவும் சொல்லவில்லை. மூன்று நாடகங்களைக் கொண்ட நாடகங்கள் விவாதங்கள் நூலின் 25 பிரதிகளை வாங்கிக்கொண்டுபோய் சிங்கப்பூரில் நாடகங்கள் இயக்கும் அவரது நண்பர் இளங்கோவனிடம் வழங்கினார். அவரும் பல்லக்குத்தூக்கிகளை மேடையேற்றினார்.

பாண்டிச்சேரிக்குப் போன பின்பு அங்கு உருவான கூட்டுக்குரல் நாடகக்குழு வழியாகவும் கல்பாக்கம், பாண்டிச்சேரி, கடலூர், தஞ்சாவூர், பண்ருட்டி எனப் பல நகரங்களில் மேடையேற்றியிருக்கிறேன். புதுவை இளவேனில் எடுத்த சுந்தர ராமசாமியின் நிழற்படக் காட்சியை ஒட்டிச் சென்னை அல்லயன்ஸ் ப்ரான்சே அரங்கில் ஒருமுறை நிகழ்த்தப்பெற்றது. அந்த மேடையேற்றத்தைப் பார்க்கவாவது சு.ரா. வருவார் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு (2015) இலங்கையின் விபுலானந்தா அழகியல் கற்கைநெறிப் பள்ளி மாணவர்கள் தங்களின் பாடத்திட்டப் பகுதியாகப் பல்லக்குத் தூக்கிகளை மேடையேற்றியிருக்கிறார்கள். தமிழில் உருவாக்கப்பெற்ற நவீன நாடக ப்பிரதிகளில் அதிகமாக குழுக்களாலும் அதிகமான இயக்குநர்களாலும் மேடையேற்றப் பட்ட நாடகப்பிரதி பல்லக்குத்தூக்கிகள் எனச் சொல்வது மிகையான கூற்றல்ல.

•••

செப்பனிடப்பட்ட களம் ( சேவல் களம் நாவல் ) / பாலகுமார் விஜயராமன்

சேவல் களம்

செப்பனிடப்படும் களம்

நகரத்தின் நெருக்கடி மிகுந்த பகுதியில் எங்கள் வீடு அமைந்திருந்தாலும், அங்கேயும் மொட்டைமாடியை சண்டை சேவல், கோழி வளர்ப்பதற்கெனவே அப்பா ஒதுக்கியிருக்கிறார். பிறந்ததில் இருந்தே, சேவல் கூவும் சத்தத்துடனேயே வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் என்னையோ தம்பிகளையோ சேவல் சண்டை பந்தயங்களுக்கு ஒருநாளும் அப்பா அழைத்துச் சென்றதில்லை. சேவல்கட்டிகள் குறித்த சமூகப்பார்வை காரணமாக, அப்பா மாதிரி நாங்களும் அந்தப்பக்கம் போய்விடுவோமோ என்று அச்சம் கொண்ட அம்மா, நாங்கள் சேவல் சண்டைகளுக்குச் செல்ல தடைவிதித்திருந்தார்.

பால்ய வயதில் வீட்டில் சேவல், கோழி, குஞ்சுகளைப் பராமரிப்பது என்று இருந்தாலும் சண்டையிடும் சேவல் களம் என்பது மட்டும் கனவாகவே இருந்தது. அது ஒழுக்கக்கேடான ஒரு விஷயம் குறித்த ரகசிய ஆசை போலவே மனதில் வளர்ந்துகொண்டே இருந்தது. இருபது வயதுகளின் மத்தியில், ஒரு பார்வையாளனாக தனியாகச் சென்று களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சேவல்களின் ஆக்ரோஷத்தையும், வீரத்தையும் கண்டபின், அதற்குப் பின்புலத்தில் சேவல் வளர்ப்பு மற்றும் சேவல்சண்டைக்கு முன்பான பயிற்சி முறைகளையும் இணைத்துப் பார்த்தபோது, அந்தக்கலையின் சூட்சமும், ஒழுக்கவிதிகளும் பிரமிப்படையச் செய்தது.

பின்பு, ‘ஆடுகளம்’ திரைப்படம் மூலம் சேவல் சண்டைக்குக் கிடைத்த ஊடக வெளிச்சம், சேவல்கட்டிகள் குறித்து பொதுமக்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றம், சேவல் சண்டை நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடை, ஜல்லிக்கட்டு விளையாட்டு போராட்டத்தின் நேர்மறை விளைவாக சேவல் சண்டை போட்டிகளுக்கான தடைவிலக்கம் என்று கடந்த பத்து ஆண்டுகளில் தேடிச் சேகரித்த தரவுகளின் வழியாக ஒரு சேவல்கட்டியின் வாழ்வை பதிவுசெய்ய வேண்டுமென்று விரும்பினேன். நவீன தமிழ் புனைவு இலக்கியத்தில், ம.தவசி எழுதிய ‘சேவல்கட்டு’ நாவல் தான் சேவல்சண்டை குறித்த ஒரே ஆவணமாக இருக்கிறது. அதுவும் கூட சேவல்கள் காலில் கத்தி கட்டி போரிடும் விளையாட்டை மையமாக வைத்த மாய-யதார்த்தப் படைப்பு. சங்ககாலம் தொட்டு, தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றாகத் தொடர்ந்து வரும், வெற்றுக்கால் சேவல் சண்டையையும், தற்கால சேவல்கட்டிகளின் வாழ்வையும் மையமாக வைத்து இப்புனைவை எழுதியிருக்கிறேன். அதே போல, நாவலில் இணை அத்தியாயங்களாக வரும் சுயம்பு ஒருவனின் வாழ்வும் எழுச்சியும் சுவாரஸ்யமான புனைகதையாக இருக்குமென நம்புகிறேன்.

இந்நாவலின் கருத்துருவாக்கம் மனதில் ஓடிக்கொண்டிருந்த காலங்களில், அர்ஷியா சாரிடமும், நேசமித்ரன் அண்ணனுடனும் தனித்தனியே நிறைய கலந்துரையாடி இருக்கின்றேன். இருவரின் எழுத்துமுறையும் உரையாடல் நுணுக்கங்களும் முற்றிலும் வெவ்வேறானவை. ஆனாலும் அவர்கள் இருவரின் உள்ளீடுகளும், தர்க்கரீதியாக நிறைவளிக்கும் படைப்பாக இந்நாவல் உருவாக்கக் காரணமாய் அமைந்தன. அதே போல, பரஸ்பரம் எந்தவித ஈகோவும் இன்றி, ஒருவர் இன்னொருவரின் எழுத்துக்களின் நிறைகுறைகளை வெளிப்படையாகப் பேசிக்கொள்ளும் தன்மையுடையது, நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் எனக்குமான நட்பு. இவர்களோடு, எழுத்துப்பணியிலும் இணையத்திலும் நட்பு பாராட்டும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க அன்பும், நன்றியும்.

சென்ற ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில், கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் முன்னெடுத்து நடத்திய ‘சிறுகதைப் பயிலரங்கு’ என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது. பெருந்தகையாளர்கள் சுகுமாரன், பெருமாள் முருகன், பாவண்ணன், க.மோகன ரங்கன், மதிவாணன், களக்காடு பீர் முகமது, ஸ்ரீனிவாசன் நடராஜன் மற்றும் பயிலரங்கில் கலந்துகொண்ட நண்பர்களுடனான கலந்துரையாடல் புனைவெழுத்து குறித்து எனக்கிருந்த பல மனத்தடைகளை விலக்கியது. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

தனது பரபரப்பான பணி மற்றும் எழுத்துச்சூழல்களுக்கு இடையே, நான் கேட்ட மாத்திரத்தில் மறுப்பேதும் சொல்லாமல், இந்நாவலுக்கு சிறப்பான அணிந்துரையை வழங்கியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்நாவலைச் சிறப்பாக வெளியிடும் பதிப்பாளர் கண்ணன் அவர்களுக்கும், காலச்சுவடு நிறுவனத்தினருக்கும், கலா உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருக்கும், அட்டைப்படத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கும் மணிவண்ணன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பிற்காக, சேவல்சண்டை தொடர்பான புகைப்படங்களைத் தந்து உதவிய தம்பி அமரன் அஜய் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

சேவல் வளர்ப்பு குறித்த நுணுக்கங்களையும், அது தொடர்பான தரவுகளையும் அளித்து உதவிய அப்பா விஜயராமன் அவர்களுக்கும், அவரது உற்ற நண்பரான ஆசிரியர் ஜோஷப் பிரிட்டோ மாமா அவர்களுக்கும் மற்றும் தங்கள் குழந்தைகளைவிட, சேவல்கள்மீது அதிகப் பிரியம் வைத்து வளர்க்கும் சேவல்கட்டிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

வாசிப்பின் சுவையை அறிமுகப்படுத்திய அம்மா மதனவள்ளிக்கும், தங்கை இராஜேஸ்வரிக்கும், எனது எழுத்துக்களின் முதல் வாசகியும், விமர்சகருமான மனைவி சக்திதேவிக்கும், குழந்தைகள் மேகமித்ரா, முத்துமுகுந்தன் இருவருக்கும் தீராத அன்பும், பிரியங்களும்.
மிக முக்கியமாக, பெருந்தகையாளர்கள் பெருமாள் முருகன், நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன், ஜோசப் பிரிட்டோ, பாவண்ணன், சுகுமாரன், க.மோகனரங்கன், ’புத்தகத் தூதன்’ சடகோபன், எஸ்.சுப்பிரமணியன், ஆதவன் தீட்சண்யா, சமயவேல், ஸ்ரீதர் ரங்கராஜ், அருணாச்சலம், அமரன் அஜய், த.ராஜன், என்.ஸ்ரீராம், தமிழ்ப்பிரபா, தேனி விசாகன், லாவண்யா சுந்தரராஜன், “மலைகள்” சிபிச்செல்வன், ’எதிர் வெளியீடு’ அனுஷ், ’நூல்வனம்’ மணிகண்டன், ’பாதரசம்’ சரோலாமா, ’வாசிப்போர் களம்’ தோழர்கள், மற்றும் ‘சேவல்கட்டிகள்’ அனைவருக்கும் மிக்க நன்றி.

சேவல் களம் தயாராக இருக்கிறது. இதனை வாசிக்கவிருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களும், வரவேற்பும். நாவல் குறித்த தங்களின் மேலான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

பாலகுமார் விஜயராமன்
ஓசூர்
18-11-2018

காலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்

* ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமானதல்ல ; ஆரோவில் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானது ஆகும் ; ஆனால் ஆரோவில்லில் வசிக்கவேண்டும் என ஒருவர் விரும்பினால் அவர் தெய்வீக உணர்விற்கு விருப்பத்துடன் தொண்டு செய்பவராக இருக்கவேண்டும்.

* ஆரோவில் முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம், மூப்புறாத இளமை ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கும்.

* ஆரோவில் இறந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையேஒரு பாலமாக இருக்க விழைகிறது ; புற உலக, அக உலகக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியபடி இது துணிவுடன் எதிர்கால நன்முடிவுகளை நோக்கித் துடிப்புடன் முகிழ்த்து எழும்.

* ஆரோவில் மனித குல ஒருமைப்பாட்டிற்கு ஓர் உருவம் கொடுப்பதற்கான உலகியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிகளுக்குரிய நிலையமாக விளங்கும்.

இதுதான் 1968, பிப்ரவரி, 28 ஆம் நாள் ஆரோவில் நகரக் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும்போது ஸ்ரீ அன்னையே (1878 – 1973) வாசித்தளித்த ஆரோவில் சாசனம். 121 நாடுகளில் இருந்தும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எடுத்துவரப்பட்ட பிடிமண்ணைச் சலவைக் கல்லால் தாமரை மொட்டுவடிவில் வடிவமைக்கபட்ட தாழியில் ஒன்றாகப்போட்டு, பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா என்ற இயற்பெயர் உடைய ஸ்ரீ அன்னையால் (ஐ நாவின் யுனெஸ்கோ மற்றும் இந்திய அரசின் நிதி உதவியுடன்) ‘ சர்வதேச ஆன்மீக நகரமாக வளரும் ‘ என்று பிரமாண்டமான நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் புதுச்சேரிக்கு அருகில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆரோவில் ; இப்படித் தமிழ்நாட்டின் தொன்மையான நிலத்தைப் பெரிய பெரிய கனவுவார்த்தைகளாகக் கூறி ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விலையில்லாமலும் அடிமாட்டு விலைக்கும் நிலம் கொடுப்போர்க்கு ஆரோவில்லில் வேலைதரப்படும் என்ற பொய்யான உறுதிமொழிகளாலும் ஆக்ரமிக்கபட்ட பூமிதான் ஆரோவில்.

இன்று தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஓடிவிட்டன ; பொன்விழா கண்டுவிட்ட இந்த நகரம் என்னவாக இருக்கிறது என்பதைப் படைப்பாளிக்கே உரிய கூர்மையான பார்வையோடு புனைவு மொழியில் எடுத்துரைப்பதுதான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஆறாவது நாவலாகிய இந்த ‘ இறந்த காலம்‘. இந்தப் பிரதிக்குள் வாசிப்பு நிகழ்வதற்கு ஆரோவில் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் தேவை என்று கருதியதால்தான் இங்கே அவைத்தரப்பட்டன.

பாரீஸ் பெருநகரில் பிறந்து வளர்ந்தவள் மீரா (27 வயது).தன் தாய் இஸாபெல்லை, அவள் குழந்தையோடு மணம்முடித்துக்கொண்ட வளர்ப்புத் தந்தை லூயிஸ்மேல் பெரிதும் பிரியம் கொண்டவள் மீரா. அத்தகையவரைப் பிரிந்து மற்றொரு ஆடவனோடு வாழப்போகிறேன் என்று முடிவெடுக்கும் அம்மாவின் செய்கையால் மனக்கலக்கத்திற்கு உள்ளாகிறாள் ; இத்தகையக் குடும்பச்சூழல் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், தனக்குள்ளேயே மற்றொரு குரல் அவளுக்குக் கேட்டவண்னம் இருக்கிறது. அது தன்னையும் மீரா என்றே சொல்லுகிறது ; « இறந்தகால நான்களின் தொகுப்பு‘ எனச்சத்தியம் செய்கிறது. சமூகம் கட்டமைத்த போலி ‘நான்’ஐச் சுமந்துகொண்டு உண்மையான நான்-ஐ ஒதுக்கி வாழ்வதாக » அவளுக்குள் மூச்சு விடாமல் தொணதொணக்கிறது.

இப்படியான மனநிலையில்தான் அவள் கையில் « ஆரோவில் » பற்றிய குறிப்புகள் அடங்கிய அட்டை கிடைக்கிறது. (ஆரோவில் பன்னாட்டு மையங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் 23 நாடுகளில் உள்ளன.) உடனே முடிவெடுக்கிறாள் ; 2017, நவம்பர் 18ல் புறப்பட்டுச் சென்னை வந்து ஆரோவில்லில் உள்ள ஆல்பர்ட்-தேவகி வீட்டின் மாடியில் ‘பேயிங் கெஸ்ட்டாகத்’ தங்குகிறாள் ; இத்தகையை மீராவின் பார்வையில் ஆரோவில்லில் நடக்கும் கதை சொல்லப்படுகிறது ; மீராவிற்கு இங்கே அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிக்கா என்ற தோழி கிடைக்கிறாள் ; அவள் மூலம் புதுச்சேரி அரசு ஊழியனான மாதவனும் அவன் குடும்ப உறவுகளும் நட்பாகக் கிடைக்கின்றனர். இப்படியொரு பின்னனியை அமைத்துக்கொண்டு ஆரோவில்லின் நடப்புக்களை விவரிக்கிறார் கதைசொல்லி.

மீரா, ஆரோவில் « சாசனத்தை » வாசித்தபோது தனக்கு ஏற்பட்ட மன உணர்வை இவ்வாறு பதிவு செய்கிறாள் :

« முதன் முறை வாசிக்கிறபோது கடைவிளம்பரமொன்றை வாசிக்கிற மனநிலைதான். தேர்ந்தெடுத்த விரயம் இல்லாத சொற்கள், வாக்கிய அமைப்பு, அவற்றை அச்சடிக்கப் பயன்பட்ட எழுத்துவகை, அவற்றின் அளவீடு அனைத்திலும் விளம்பர உத்திக்குரிய சாதுர்யம் என்றுதான் நினைத்தேன் »

இப்படித் தொடங்குகிறது ஆரோவில் குறித்த மீராவின் விமர்சனம் ; இதேபோல் « மாத்ரி மந்திர் » எனப்படும் அன்னை ஆலயம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஆடம்பரமாக உணர்கிறாள் ; ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆன்மீக சோசலிஸம் என்று வர்ணிக்கப்படும் ஆரோவில்லில் இத்தகைய ஆடம்பரம் வேணுமா எனக் கேட்கிறாள்.

இன்னும் மாதவன் மூலமாக « ஆரோவில் ஒரு நவீனக் காலனித்துவக்குணம் கொண்டது ; தாங்கள் உயர்ந்த இனம் என்றும், அக்கம் பக்கத்திலுள்ள ஏழைத்தமிழர்களைக் காலனிக்காலக்கூலிகள் என்றும் கருதுகிறார்கள் ; அரவிந்தர் ஆஸ்ரமத்தை விரிவாக்கும் ஒரு திட்டம்தான் ஆரோவில் ; அதுவும் பெரிதும் இந்தியர்களால் நிரம்பிக்கிடக்கும் ஆசிரமத்திற்குள் ஐரோப்பியர்களையும் உள்ளே கொண்டுவரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது ஆரோவில்.

உலகமெலாம் ஒரு குடும்பம் எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிப்படையில் சமயமில்லை ; எல்லையில்லை ; பணம் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது ; ஆரோவில்லின் தற்போதைய நிலை என்ன ? பணமில்லாதவர் உள்ளே நுழைய முடியாது என்பதுதானே.

ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மீரா அல்ஃபஸ்ஸாவுமல்ல. « இங்கு வருகிறவர்கள் கர்மயோகிகள் அல்ல ; வாழ்க்கைப்போகிகள். சராசரி மனிதர்கள், தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் ; சில நல்லது நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாதென்றாலும், இந்த விடியல் நகரம்(ஆரோவில் என்றால் உதய நகரம் (அ) விடியல் நகரம் என்று பொருள்) இன்னும் வைகறையைக் கூடக்காணவில்லை » இப்படி நீளுகிறது மாதவனின் பார்வை.

இன்னும் ஆரோவிலியன் யாரும் தங்கள் பெயரில் நிலமோ, வீடோ வாங்கக்கூடாது என்பது விதியாக இருக்கிறது ; ஆனால் பல காட்சிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து வாங்கிய ஏழை முடிவெட்டும் தொழிலாளியின் நிலம், அவர்கள் புத்திப்பேதலித்து வாழ்வையே இழந்து போகும் முறையில் அபகரிக்கப்படுகிறது என்பதும் நாவலில் சித்தரிக்கப்படுகிறது ; மேலும் தனித்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உற்பத்திசெய்து வாணிபம் செழிக்கிறது ; « ஆரோவில் ஒரு பணமற்ற சமூகமாக மலரும் » என்று சொல்லப்பட்ட மொழி என்ன ஆயிற்று ? உலோகத் தொழிற்கூடங்கள், விண்கலத்தில் செல்வோர் உண்ணும் உணவுப்பாசி உற்பத்திசெய்யும் தொழிற்சாலை என்று 140க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ‘சரக்குகள்’ உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இன்னும் கொடுமைகளின் உச்சமாக ஆன்மீக நகரத்தை அசிங்கப்படுத்தும் பாலியல் குற்றங்கள் பிரதியில் பதிவாகியுள்ளன. 70களில் ஹிப்பி நாகரீகம் பிரபலமாக இருந்தபோது அந்தக் கும்பலில் இருந்து கோவா-வில் வந்து தங்கி, பிறகு அங்கிருந்து ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே இங்கே தங்கியிருக்கும் பிரெஞ்சுக்காரர் ‘துய்மோனும்’, மீராவிற்குத்தங்குவதற்கு மாடியில் இடம் அளித்த ஆஸ்திரேலியரும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் லீலைகள் கதைசொல்லியின் மேன்மையான எடுத்துரைப்பு மொழியில் சொல்லப்படுகின்றன. மீராவின் அமெரிக்கத்தோழி ஜெஸிக்காவின் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்தி இருவரும் அவளைப்பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துகின்றனர்.

அதிலிருந்து அன்றைக்குத் தப்பித்த மீராவை, மறுநாள் அதேபோல் மதுவை ஊற்றிக்கொடுத்து ஆல்பர்ட் தனது வீட்டிலேயே பாலியல் வல்லுறவு புரிகிறான். யோகத்தை ஏற்பதற்கு விலக்க வேண்டியவைகளாகஸ்ரீ அன்னையால் முன்மொழியப்பட்ட அரசியல், காமம், புகைப்பிடித்தல், மதுக்குடித்தல் ஆகிய நான்கும் இங்கே முனைமழுங்காமல் மும்முரமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன ; கதைசொல்லியின் வெறும் கற்பனை சார்ந்த புனைவு என்று இவற்றைஎளிதாகச் சொல்லிவிடமுடியாது. 2008, மே, 22இல் இலண்டன் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில், குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆரோவிலியன் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதற்குப் பிறகு இங்கேAuroville Child protection Service தொடங்கப்பட்டது என்பது வரலாற்று நிகழ்வு. எனவே இந்த நாவலில் வரும் மீரா ஓரிடத்தில் சொல்வதுபோல, « இது பாழ் கிணறில்லை என்றாலும் கரையேற இயலாத உறைகிணறு » என்று நினைக்கத் தோன்றுகிறது.

இவ்வாறெல்லாம் படைப்பாளி தனது அலசல் பார்வைவையை முன்வைப்பதின் நோக்கம், வெறுமனே ஒன்றின்மேல் சேற்றை அள்ளி வீசுவது என்று எளிமையாகப் புரிந்துகொள்ளும் விபத்து நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது ; ஆனால் இப்படியான குறிக்கோளுடனும் கனவுகளுடனும் எத்தனையோபேரின் உழைப்பின்மேல் எழுப்பப்பட்ட நகரம் இப்படி ஆனதே என்ற ஆதங்கத்தின் வெடிப்பு இந்த எழுத்து ; கதைசொல்லி ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே புதுச்சேரியில் வாழ்ந்தவர், பின்னர் புதுச்சேரி, ‘ மாவட்ட ஆட்சியர் ‘ அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலைபார்த்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துவந்தவர் ; எனவே இத்தகைய விமர்சனப்பார்வை அவரையும் மீறி அவருக்குள் இருக்கும் படைப்பு மனதிற்குள் இருந்து புறப்பட்டு வருவது.

மேலும் இது ஓர் ஆரோவில் பிரச்சனை மட்டுமல்ல. சமூகவாழ்வின் பிரச்சனையாகத் தீராத நோயாகத் தொடர்கிறது. அதாவது பெரிய பெரிய இலட்சியங்களோடு தொடங்கப்பட்ட மனிதர்களின் இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் இப்படித்தான் சீரழிந்து முடிந்துள்ளன ; பிறகேன், மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட ஒளிமயமான வாழ்வு குறித்த இலட்சியங்கள் ? இந்தக் கேள்விதான் படைப்பாளியை ஆட்டிப்படைக்கிறது ; மேலும் இத்தகைய இலட்சியங்களை விதைப்பவர்கள், இந்த இலட்சியங்களை உண்மையிலேயே பின்பற்றுபவர்களாகக் கூட இருக்கவேண்டாம், குறைந்தது அவர்கள் போதிக்கும் இலட்சியங்கள்மேல் நூறு விழுக்காடு நம்பிக்கைக் கொண்டவர்கள்தானா ? அதனால்தான் வரலாறு முழுக்க இலட்சியங்கள் இப்படிப்படுதோல்வி அடைகின்றனவா ? இப்படித் தூங்க முடியாத முரண் இழுவைக்குள் அடைபட்ட படைப்பு மனம்தான் இந்த எழுத்தை இயக்குகிறதே ஒழிய, சாதாரணமாகச் சேற்றை அள்ளி அடிக்கும் வேலை இல்லை இது .வரலாறு தோறும் படைப்பாளிகள் இப்படித்தான் இயங்கியுள்ளார்கள்.

இந்த இழுபடும் முரண்விசையிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கத்தான் கதைசொல்லி ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார் ; அந்தக் காமுகர் இருவரும் அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றபோது, « குழந்தையைக் கடத்துபவர்கள் » என்று 16 பேர் அடங்கிய கும்பலால் கொல்லப்படுகிறார்கள் . இது, « தான் உயர்ந்த நோக்கோடு தொடங்கிய ஒன்று, இப்படியானதே » என்று கருதிய ஸ்ரீ அன்னையின் அமானுஷ்ய சக்தியால் நிகழ்ந்தது என்பதுபோல வாசகர்கர்கள் கருதும்படி, நாவலை முடிக்கிறார்.

நவீனகால ஆரோவில்லின்கதை சொல்லுவதன் ஊடே, இந்த நாவலில் பிரஞ்சுக் காலக்கட்டத்தில், புதுச்சேரியின் எளிய மக்களை வேரோடு அள்ளிக்கொண்டுபோய் தங்களின் பிறகாலனிய நாடுகளில் ஒன்றான « இந்தோசீனாவில் » கொட்டிய பிரஞ்சுக் காலனியவாதிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் வரலாற்றையும் ஊடுபிரதியாகக் கதைசொல்லிப் பதிவு செய்துள்ளார் ; இது தமிழ் வாசகர்களுக்குப் புதிது.

‘ரெனோன்சியாசியோன்’ (la renonciation) எனப்படும் பிரெஞ்சுக் குடியுரிமை தருகிறோம் என்ற பேரில் கொண்டு சென்று இராணுவத்தில் சிப்பாய்களாக்கிப் பன்றிக்கறியும் நூடூலும் கொடுத்துப் பழக்கி அவர்களின் போரக் களத்தில் அவர்களுக்காகச் சாகடித்து ‘இரத்த வரி’ (l’impôt de sang) வாங்கிய காலனியக் காலஅதிகார மூளையின் தந்திரங்களையெல்லாம் உடைத்துக் காட்டுகிறார் ; தம்பி சதாசிவத்திற்குத்தமக்கை வேதவல்லி எழுதும் மடலில் இந்தோ சீனாவில் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையை « உறியடி வாழ்க்கை» என்கிறார் ; கைகளில் கம்பும், கண்களில் மறைப்பும், கால்களில் தடுமாற்றமுமாக இலக்கின்றி வீசும் கம்பு காற்றில் அலைகிறது » என்கிறார்.

மேலும் « சொந்த மண்ணைப்பிரிந்து வாழும் வாழ்க்கையும் தற்கொலையும் ஒன்றுதான் ; நினைவுகளும் ஏக்கமும் நெஞ்சை இறுக்க , அவற்றின் கைகளை விலக்க விருப்பமின்றி, காலவிரயத்துடன் கூடிய ஒரு புதியவகைத் தற்கொலையை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் » என்கிறார். கதை சொல்லியும் ஒரு புலம்பெயர்ந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதால், அதன் வலியையும் வேதனையையும் உறவுகளின் மடல்வழியாக வாசிக்கத் தரும்போது வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது.

அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும் , ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி என்பதைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்க க் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்.

இந்தோசீனாவில் சிக்கிச் சிதறுண்ட புதுச்சேரி மக்கள் குறித்து ஒரு தனி நாவலே எழுத எண்ணியிருப்பதாக அறிவித்துள்ளார் ; அதை அவர் கட்டாயம் செய்து முடிக்கக் காலம் துணை செய்யவேண்டும். ஏனென்றால் கதை சொல்லலின் உடற்கூறை, அதன் இரத்த நாளங்களின் வெப்பத்தை எல்லாம் அறிந்துகொண்டு மொழிமேல் வினைபுரியும் அற்புதமான கதைசொல்லியாக விளங்குகிறார் ; நன்றாக முழுமையாக விளைவதற்கு முன்பே அறுவடை செய்துகொண்டு வந்து, செயற்கையாகப் பாடம் செய்து ஒன்றுகூட வீணாகாமல் விற்று, நல்ல காசு சம்பாதித்துவிட முடியுமென்கிற சந்தைச் சூழல், தமிழ் க்கலை இலக்கியத்துறையிலும் பரவி அனைத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிற ஒரு நிலையில், இத்தகைய கதை சொல்லிகள் பெரிதும் கொண்டாடப்பட வேண்டுமென விழைகிறேன்.

கதைகட்டுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்கும் கதைமாந்தர் தேர்வும், இவர்களை இணைக்கும் மொழியாடலும் ஒரு சிறிதும் பிசிறு இன்றிக் கச்சிதமாக வந்து விழுகின்றன.எனவே வாசிப்பு அனுபவம் எளிதாகக் கூடி வருகிறது; ஓர் எழுத்தின் வெற்றி என்பது இறுதியில் இதுதானே ! இந்த வெற்றித் தொடரட்டும்.

•••

( சந்தியா பதிப்பக வெளியீடு நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய நாவல்« இறந்த காலம் » குறித்த பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் அணிந்துரை )

தமிழ் நதி / நாகரத்தினம் கிருஷ்ணா ( பிரான்ஸ் )

நாகரத்தினம் கிருஷ்ணா

‘நீரின்றி அமையாது உலகு ‘ என்ற உண்மையை உணர்ந்து, நிலக்குடத்தை நிரப்ப வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும் உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற நதியென்னும் அற நூல். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின் இவ்வினையையே நாம் ஆறு, புனல், நதியென அழகு தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.

பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும் மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம். மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.

காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் » என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம், நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.

பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி, பண்புகளின் கண்ணாடி, கலை இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த மெசொபொத்தோமியா ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு.

இன்றைய மனிதர்கள் நீரைத்தேடி எதற்காக நாம் போக வேண்டும், அது ஆட்சியாளர்கள் உறங்கினாலும், அண்டைமாநிலமும் கைவிரித்தாலும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதவாவிட்டாலும், வானம் கருணைகாட்டும், தன் வாசல்தேடி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். ஆனால் அன்றைக்கு, தன்னைத் தேடி நீர் வராதென்ற நிலையில் தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது. அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிற மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும் வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .

பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி
மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி
தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்
கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !

காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை
தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி
தாணு தெற்பை சிறுபீளை சாடிணை
வெங்கோரை பொருதலை வெள்ளமே !

என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால் நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.

நதியைக் கண்ட தும் நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே தங்கலாயினர். ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ; அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும் என்று நம்பினான், அன்றிலிருந்து நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.

எனவேதான்,

பூவார் சோலை மயில் ஆல
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி !

என்று காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில் இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது.

உழவர் ஓதை, மதகோதை
உடைநீர் ஓதை, தண்பதங்கொள்
விழவரோதை, சிறந்தார்ப்ப
நடந்தாய், வாழி காவேரி !

காவிரிக்கரையில் காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.

உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்
பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை, இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம். அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில் செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்ட தோர் வையை பொருனைநதி-என
மேவியாறு பலஓடத்- திரு
மேனி செழித்த தமிழ்நாடு !

என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும் ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில் இந்த ஐந்து அல்லாது பல நதிகளின் பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.

தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும் நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில் « …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது. அவ்வாறே துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.

‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள
நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘

‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’
என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம், நீர் நிலம் என்பதால்.

ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும் அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.

ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று
ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை எனமாட்டார் இசைந்து.

நல்குடிப்பிறந்தோர், தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும் அடுத்தவர் கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.

தமிழே தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால் மிகையில்லை.

குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான வைகையும் இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும் பின்னிப்பிணைந்தவை. காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.

நீராடல் நீர் விளையாட்டு வேறு என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, « நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும் தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல். நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும் ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு. புதுப்புனல்விளையாட்டில் பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி, நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த கதையை

“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. « கன்னியர் ஆகி நிலவினில் ஆடிக் களித்த தும் இந்நாடே- தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே ! » என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர் விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும் வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய கவலை.

பெஷாராவின் டைரி ( வே பாபுவுக்கு அஞ்சலி ) – பெஷாரா

வே பாபு

பெஷாராவின் டைரி 11.11.2018 10.30 pm

வே பாபுவுக்கு அஞ்சலி

கனவில் நிறைந்த நினைவுகளின் சாரல்

கொடுங்கை இருளின் இமைகள் சாய்ந்து

வாழ்வின் புதுப் பக்கம் திறக்கப்படாமலே மூடிக்கொண்டது

ஒரு சோகம் தன்னை அமைதியில் அமிழ்த்திக்கொண்டது

கவலையுற்ற கணங்கள் சிரமத்திலிருந்து விடுவித்துக்கொண்டன

அன்பில் நிறைந்த இதயம் தன் துடிப்பைக் காற்றில் கரைத்துக்கொண்டது

மலர்களின் வாசத்தில் சுவாசம் கலந்துகொண்டது

இழப்பின் சாயலை முகத்தில் ஏந்தி நட்புறவுகள் திகைத்து நிற்க

மீளா உறக்கத்தில் பயணம் பாதை வகுத்துக்கொண்டது

திடுமென ஒருநாள்போல் உயிர் ஒளிந்துகொண்டாலும்

தீபத்தின் ஒளியாய் சுடர்கிறது இன்று

கனவில் நிறைந்த நினைவுகளின் சாரல்

•••

மனுசங்கடா – வெளி ரங்கராஜன்

மனுசங்கடா

அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.

அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.

அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.

இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.

நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.

எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய்எனபாத்திரங்கள்மிகவும்உயிர்ப்புடன்வெளிப்படுகின்றன.பிணத்தைவீட்டுக்குள்எடுத்துச்சென்றுதாழிட்டுக்கொள்வது,காவல்துறைஅச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது,இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.

இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.

வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.

—–

அரவிந்தனின் சிறுகதைகள் : ஒரு பார்வை மறதியற்ற மனதின் சுமைகள் / இமையம்

தொலைக்காட்சி, இணையம், முகநூல், பிளாக், தினசரி, வார மாத இதழ்கள் மனிதனின் நேரத்தையும் மூளையையும் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய வாழ்க்கையில் எதுவும், எல்லாமும் உடனுக்குடன் என்றாகிவிட்ட நிலையில், எதையும் கேளிக்கையான பொருளாக மாற்றலாம், மாற்ற முடியும் என்ற சமூகச் சூழலில் கதைகளைப் படிப்பது, விவாதிப்பது சாத்தியம்தானா என்ற கேள்விகள் அதிகரித்துவரும் நிலையில் – எல்லாவற்றையும் மீறிக் கதைகள் எழுதப்படுகின்றன. கதைகள் படிக்கப்படுகின்றன. விநோதம்தான். எந்த மாதிரியான கதைகளைப் படிக்கிறோம்?

வார, மாத இதழ்கள் போய் தினசரிகளும் இன்று கதைகளை வெளியிடுகின்றன. வாரத்திற்குத் தமிழ்மொழியில் எத்தனை சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன? மாதத்திற்கு எவ்வளவு? ஆண்டுக்கு? மலைப்பாக இருக்கிறது. மலைமலையாகக் குவிக்கப்படும் கதைகளில் எதைப் படிப்பது, எப்படி படிப்பது, ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கிறது. மலைபோன்று குவியும் இந்தக் கதைகளில் எது நம்மைப் பாதிக்கிறது, எது நம்மை அலைக்கழிக்கிறது, நினைவில் நிற்கும் கதைகள் எவை, மற்றவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாம் விரும்பும் கதை எது என்று பார்த்தால் மலைபோல் குவிந்திருக்கும் கதைகளில் ஒரு கடுகு அளவு தேறும்.

இந்தக் கடுகு அளவுக் கதைகளில்தான் மனித வாழ்வு எதிர்கொள்ளும் அவலங்கள் நேர்மையாகப் பேசப்படுகின்றன. சமூகம் குறித்த உண்மையான அக்கறைகள் இருக்கின்றன. நேர்மையாகவும் உண்மையாகவும் அக்கறையுடனும் இருப்பதால் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கடுகு அளவு கதைகளில் அரவிந்தனின் கதைகளும் இருக்கின்றன.

‘கடைசியாக ஒரு முறை’ தொகுப்பைப் படித்து முடித்தபோது தோன்றியது, அரவிந்தன் கற்பிப்பதற்காக எழுதவில்லை; கற்பதற்காக எழுதியிருக்கிறார் என்று. இலக்கியப் படைப்பின் அடிப்படை கற்பதுதானே. இக்கதைகளில் வாசகர்கள் அவரவர் திறனுக்கேற்பக் கற்றுக்கொள்ள இருக்கிறது. இது எதனால் சாத்தியமாகிறது என்றால் கதையைச் சொன்ன விதம், கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த மொழி, வடிவம், வாழ்க்கையைப் பார்த்த விதம்.

அரவிந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் சென்னை வாசிகள். குறிப்பாகப் பல்லாவரம், சேத்துப்பட்டு, மாம்பலம், குரோம்பேட்டைக்காரர்கள்; நடுத்தரக் குடும்பத்து மனிதர்கள். நகரத்து மனிதர்கள் இயந்திரத்தனமாக இருப்பார்கள் என்பதைப் பொய் என இக்கதைகள் நிரூபிக்கின்றன. நிறையவே காதலிக்கிறார்கள். மனைவியை, குழந்தைகளை, முக்கியமாக நண்பர்களை. மனித உறவுகளைப் பொக்கிஷமாக மனதிற்குள் வைத்திருக்கிறார்கள். அன்பை, நட்பைத் தேவைப்படும் இடங்களில்கூட மறைத்தே வைத்திருக்கிறார்கள். அன்பின் வெளிப்பாடு, மரியாதையின் வெளிப்பாடு மௌனமாக இருக்கிறது. ஒரு சொல் கூடுதலாகப் பேசினால் உறவுகள் உதிர்ந்துவிடும் என்பது மாதிரி இருக்கிறார்கள். நகரம் குறித்த, நகரத்து மனிதர்கள் குறித்த நமது நம்பிக்கைகள் பொய் என்று இக்கதைகள் நிரூபிக்கின்றன. கிராமப்புறங்களில்தான் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள் என்பதெல்லாம் கற்பனை. மாநகரத்து மனிதர்களுக்கும் அதுதான் பெரும் கவலை.

இத்தொகுப்பில் மலையும் மரணமும் முக்கியப் பாத்திரங்களாக இருக்கின்றன. மலையைப் பற்றி, மரணத்தைப் பற்றிச் சொல்வதற்காகவே இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? செத்துக்கொண்டிருக்கிறார்களா? வாழ்ந்தபடியே செத்துக்கொண்டிருக்கிறார்கள், செத்துக்கொண்டே வாழ்கிறார்கள். இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் இக்கதைகள். மரணம்குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். அரவிந்தன் சற்று வித்தியாசமாக மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார். மரணம் எப்போது, யாருக்கு வரும்? அதைப் பற்றி கவலைப்படாதவர்கள் உலகில் உண்டா? வாழ்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளைவிடச் சாகாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள்தான் அதிகம். இயற்கைகுறித்த அறிவு அற்றவர்கள்தான் மனிதர்கள். மரணம்பற்றிய அரவிந்தனின் கதைகளில் ஒரு துளிக் கண்ணீர் சிந்தப்படவில்லை. கண்ணீருக்கு வலிமை உண்டு. அதைவிட அறிவுக்கு.

அரவிந்தனுடைய மனிதர்கள் பேச வேண்டியதைக்கூடப் பேச மாட்டார்கள். சந்தர்ப்பம் வந்தாலும் பேச மாட்டார்கள். பேசுவார்கள். மனதிற்குள். பேசிப்பேசிக் களைத்துப்போய்விடுவார்கள். ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன், ‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் வரும் நந்தினியின் புருஷன், ‘கடைசியாக ஒரு முறை’ கதையில் வரும் சாம்பசிவன், ‘குமிழி’ கதையில் வரும் ஹயக்ரீவன் எல்லாருமே மனதிற்குள்ளேயே பேசி, விவாதித்து, தர்க்கம் செய்து ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள். காரியங்கள் அதன் போக்கில் நடந்துவிடும். நடந்து முடிந்த காரியம், நடக்கிற காரியம், நடக்க இருக்கிற காரியம் எல்லாவற்றையும் பற்றி மனதிற்குள்ளேயே ஆராய்ந்துஆராய்ந்து பார்த்துவிட்டு ஒடுங்கிப்போவார்கள். இவர்கள் மனநோயாளிகளா என்றால் அதுவும் இல்லை. தர்க்கம் செய்கிறவர்கள்.

தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம். நான் இல்லாவிட்டால் வீடு, சொந்தம், உறவு, கணவன், மனைவி, அலுவலகம், நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம். நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் –

இதற்குப் பின்னாலும் மரணம்தான் இருக்கிறது. மலையைப் பார்க்கும்போது, கடலைப் பார்க்கும்போது மனிதனுக்கு ‘தான் ஒன்றுமில்லை’ என்பது ஏன் தோன்ற மறுக்கிறது? சிறுமைப்படாத மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், தான் இல்லாத வீடு, தான் இல்லாத வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. அந்தப் பயத்தில் அலறும் மனதின் அவஸ்தைகள்தான் இக்கதைகள். மறதியற்ற மனதின் சுமைகள்.

‘மயான நகரம்’ அரசியல் கதை. சமூகக் கதை. கடந்த காலக் கதை மட்டுமல்ல, நிகழ்காலக் கதையும்தான். சக்தி ராஜ்ஜியத்தின், பெரும்திரளான மக்கள் கூட்டத்தின் கதை. அதிகாரம், கீழ்ப்படிதல், சுரணையற்ற மக்கள் கூட்டம் ஆகியவற்றின் கதை.

அதிகாரம் என்பது என்ன? அதிகாரத்தை அடைவதற்கு, அதிகாரத்தைக் காப்பாற்றிகொள்வதற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? கவிஞர்கள், சிந்தனாவாதிகள், உயர்குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள், குடிமக்கள் என எல்லாரும் எப்படி அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள், மண்டியிட எப்படி போட்டிபோடுகிறார்கள், மண்டியிடுவதைப் பிறவிப் பயனாக எப்படிக் கருதுகிறார்கள் என்பதுதான் கதை. மர்மம். புதிர்.

நாமே நமக்காக உருவாக்கிய அதிகார அமைப்புகள் எப்படிப்பட்டவை? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது? மண்டியிடுதல் எப்படி நாகரிகமாக, ஒழுக்கமாக, பெருமையாக மாறியது? அதிகாரத்தைத் துறந்த மனம், அதிகாரத்திற்காக விழையாத மனம் யாருக்கு வாய்த்திருக்கிறது? சூழ்ச்சிகள், தந்திரங்கள், கபட நாடகங்கள், துரோகங்கள், கொலைகள், சுரண்டல், வன்முறை இவற்றால் அதிகாரம் உருவாக்கப்படுகிறது. இத்தனையும் நடப்பதால்தான் சக்தி ராஜ்ஜியத்தில் இளவரசன் கொல்லப்பட்டு ரகசியத்தின் கூடாரமாக இருந்த – பிறப்பு விவரம் அறியாத ஓர் இளம்பெண் இளவரசியாக்கப்படுகிறாள். அதிகாரம் வேண்டி எதையும் செய்வார்கள் மனிதர்கள். மனிதர்களுக்கு மட்டும்தான் அதிகாரம் வேண்டியிருக்கிறது. முதலமைச்சர், பிரதமர், கவர்னர், மந்திரி வேண்டியிருக்கிறது. பூனைக்கு, நாய்க்கு, பன்றிக்குப் பிரதமர், முதல்வர் தேவையில்லை. முதல்வர், பிரதமருக்கு அவை பயப்படாது என்பதை ‘மயான நகரம்’ கதையில் பார்க்க முடியும். கதை புதிது. கதை சொன்ன விதம் புதிது. கதை சொல்லத் தேர்ந்தெடுத்த சொற்கள் புதியவை. சின்னச் சின்ன செறிவான வாக்கியங்கள் ஈர்ப்பைத் தருகின்றன.

அரவிந்தனுடைய மனிதர்கள் ஒரு நிலையில் பார்த்தால் மன நோயாளிகள்தான். ஒரு சமயத்தில் ஒருவரைப் பிடித்திருக்கிறது. அதே நபரை மற்றொரு சமயத்தில் பிடிக்காமல் போகிறது. ஏன்? காரணம் தெரியாது. காரணம் இல்லை. நாம் செய்கிற பல காரியங்களும் அப்படித்தான் இருக்கின்றன. தோன்றியது, செய்தேன். காரணம் இல்லை. தெரியாது என்று சொல்கிற மனிதர்கள். அப்படியான ஒரு நபர்தான் ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன். சுயசரிதைத் தன்மைகொண்ட கதை. குற்றவுணர்ச்சியால் பேசப்படும் கதை. கதைசொல்லிக்கும் கே. ராமமூர்த்தி என்ற மனிதருக்குமான கதை. இவன் குழப்பமான பேர்வழி. அவர் அவனுக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறார்.

அவர் திறந்துவிட்ட கதவு ஒன்று புத்தகம். அவன் தன் கஷ்டங்களை, சிரமங்களை, ஏன் மகிழ்ச்சியைக்கூடக் கொட்டித் தீர்க்கிற இடமாக இருக்கிறார் ராமமூர்த்தி. அவரைப் போன்ற மனிதர்களை அடையாளம் காணவும், நட்புறவைப் பேணவும் சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு அப்படி நிகழ்வதில்லை. எல்லாருக்குமே கொட்டித் தீர்ப்பதற்கு மலை போன்று விஷயங்கள் குவிந்திருக்கின்றன. இறக்கிவைக்க, கொட்டித் தீர்க்க. அதற்கான இடம் வேண்டும். இடம் கிடைக்காதவர்கள் பாவப்பட்டவர்கள்.

கதையின் கேள்வி மனித உறவுகள் உண்மையில் மேம்பட்டதுதானா என்பதுதான். இல்லையென்ற பதில் கதைக்குள்ளேயே இருக்கிறது என்று கருதலாம். மனிதர்கள் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை? இருக்க முடிவதில்லை? புனிதர்களைத் தேடி மனித மனம் ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் கல்லின் மீது, மரத்துண்டின் மீது, பாம்புப் புற்றின் மீது, நம்பிக்கைகளின் மீது புனிதத் தன்மையை ஏற்றுகிறது. ‘உருமாற்ற’த்தின் கதைசொல்லிக்கு ராமமூர்த்தி.

பல நேரங்களில் நாம் ஏற்றிவைத்த புனிதங்களே நம்மைப் பார்த்துக் கேலி செய்யும். ‘உருமாற்றம்’ கதையில் நிகழ்வது அதுதான். மனிதர்கள் மாறுகிறார்கள். ஏன், எப்படி, எதனால்? தெரியாது. சூழல், சந்தர்ப்பம். புனிதங்கள் நிறமிழக்கும்போது புனிதத்தை ஏற்றிய மனம் நிஜத்தை ஏற்க மறுக்கிறது. மறுபக்கம் புனிதத்தை ஏற்றியவனும் கயமைத்தனம் கொண்டவன்தான். தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டே கடைசிவரை உட்கார்ந்தே இருக்கிறான். புலம்புவதால் பலன் உண்டா? உருமாற்றம் யாருக்கு? கதைசொல்லிக்கா, ராமமூர்த்திக்கா? மனித மனத்தின் விசித்திரங்களை இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது.

‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் மலைதான் பிரதானப் பாத்திரம். மலை பேசுவதில்லை. எதையும் வெளிப்படுத்துவதில்லை. உணர்ச்சிகளைக் கொட்டுவதில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது. மலை ஒவ்வொரு நிமிடமும் மனிதர்களுக்கு ரகசியமாக ஒன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. நாம்தான் அதைக் கேட்பதில்லை. மனிதன் எவ்வளவு அற்பமானவன். மனைவி, கணவன், நண்பர்கள், குழந்தைகள் என்று இருந்தாலும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததே இல்லை. அப்படி இருப்பதாக நடிக்கிறார்கள். மலை நடிப்பதில்லை.

மனிதர்கள் மாறக்கூடியவர்கள். பிரிந்து போகக்கூடியவர்கள். நந்தினி இறந்துபோகிறாள். அவள் நேற்று மனைவி நந்தினி. இன்று பிணம். எது உண்மை? எது சரி? எது நித்தியம்? எது அநித்தியம்? வாழ்வின் விநோதம் இது. வாழ்வின் பிரம்மாண்டத்தைப் பார்த்துப் பரிதவிக்கும் மனித மனதின் அவஸ்தை இந்தக் கதை. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் மனிதனின் நிலையாமையையும் அழகாகத் தனக்கான மொழியில் அரவிந்தன் எழுதியிருக்கிறார். தற்காலத் தமிழ் படிப்பதற்குச் சுவையாகத்தான் இருக்கிறது.

மரணத்தை முன்னிறுத்திப் பேசும் மற்றொரு கதை ‘கடைசியாக ஒரு முறை’. மரணம் நிகழவில்லை. நிகழ்ந்தால் என்னாகும் என்பதுதான் கதை. விபத்து நடக்கிறது. அந்த விபத்தின் வழியே வாழ்வின் நிஜத்தன்மையை உணர்கிறான் சாம்பசிவன். தனிமனித வாழ்க்கை, குடும்ப, சமூக வாழ்க்கையில் ஒரு மனிதனின் இடம் என்ன? கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் எல்லாருமே கொடுக்கல் வாங்கல் உறவால் பின்னப்பட்டவர்கள். கொடுக்கல் வாங்கலில் சிறு பிசிறு ஏற்பட்டால் அத்தனை உறவுகளும் விரிசல்கள் காண்கின்றன. இந்த விரிசல்களை மேலும் பெரிதாக்குவது போலவே காரியங்கள் நடக்கின்றன. எந்த உறவாக இருந்தாலும் மனிதர்கள் கண்ணாடி போன்றவர்கள். கைதவறினால் கண்ணாடி உடையத்தானே செய்யும்? இதுதான் கதையின் மையம். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி பிணமாகத் தெரிகிறாள். குழந்தைகள் பிணமாகத் தெரிகிறார்கள்.

சற்றுச் சிந்திக்கும் திறனுள்ள, தூக்கத்தில் திடீரென்று விழிப்புக் கொள்ளும் மனிதனுக்குத் தோன்றுவது இது. இன்றைய நவீன குடும்ப அமைப்பு, உறவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் போதனையில்லாமல் சொல்கிறது ‘கடைசியாக ஒரு முறை’ கதை. பவித்ராவுக்குச் சாவு பற்றிய பயம் இல்லை. பவித்ராவுக்கு மட்டுமில்லை, அரவிந்தனுடைய பெண்களில் யாருக்கும் அந்தப் பயம் இல்லை. ஆனால் எல்லா ஆண்களுக்கும் இருக்கிறது. மரண பயத்தில் தூங்காமல் கிடக்கிறார்கள்.

அரவிந்தனின் பாத்திரங்கள் அதிர்ந்து பேசாதவர்கள் மட்டுமல்ல. அன்பைச் சொல்லத் தெரியாதவர்களும்கூட. ஒருவகையில் தங்களுக்குள்ளேயே சுருங்கிப் போனவர்கள். குறிப்பாக ஆண்கள். பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சக்தி ராஜ்ஜியத்தின் ராணி, பவித்ரா, ஸ்ரீமதி என்று. ‘குமிழி’ கதையில் ஸ்ரீமதிதான் பலகாரம் கொடுக்கிறாள். அவனைப் பற்றி வீட்டில் சொல்கிறாள். கல்யாணத்தைத் தைரியமாக எதிர்கொள்கிறாள். அதே மாதிரி தன் குழந்தைக்குக் காதலனின் பெயரை வைக்கும் தைரியம் அவளிடம் உண்டு.

ஹயக்ரீவனுக்கு ஒன்று மட்டும்தான் தெரியும். அது என்னவென்றால் புலம்புவது. ‘குமிழி’ கதையின் நாயகன் மட்டும் இப்படியில்லை. அரவிந்தனுடைய எல்லா ஆண்களுமே அப்படித்தான். கிருஷ்ணா, நந்தினியின் புருஷன், சாம்பசிவன் என்று பலரும் புலம்புகிறவர்கள். ஆண்களின் வீராப்பு, திறமை எல்லாம் மனதிற்குள் புலம்புவதில்தான் இருக்கிறது. ஆண்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள். ‘குமிழி’ காதல் கதை. தமிழ் சினிமாவில் வருவது மாதிரி காதல்ன்னா என்னா தெரியுமா என்று கேட்டு பக்கம்பக்கமாக வசனம் இல்லை. பிரிவு இருக்கிறது. ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. கூடுதலாக ஒரு வார்த்தை இல்லை.

தொகுப்பின் கடைசிக் கதையான ‘தனியாக ஒரு வீடு’ மற்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நடைமுறை வாழ்க்கைச் சிக்கலைப் பேசுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று மனிதனை இயற்கையிடமிருந்து பிரித்துவிட்டன. அதே மாதிரி இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்தும் மாற்றிவிட்டன. விவசாயம் இன்று இழிவான தொழில். அதைச் செய்வதற்கு யாருக்கும் விருப்பமில்லை. கம்ப்யூட்டரின் கான்பிகரேசன் தெரிந்தவனே மேதை. மென்பொருள் தயாரிப்புக் கம்பெனியில் வேலை பார்ப்பவனே மனிதன். எல்லாருக்குமே வெள்ளைக்கார துரைமார்களாக மாற வேண்டும் என்பதே லட்சியம். ஏரி, குளங்கள் மண் மேடாக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய விவசாய நிலங்கள் வீட்டு மனைவிரிவுகளாக மாற்றப்படுகின்றன. எல்லாம் சரி, மனிதர்கள் எதைச் சாப்பிடுவார்கள்? கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களையா? இதுதான் இக்கதையின் கேள்வி. கம்ப்யூட்டர், இணையம், மின்சாரம் ஏன் உடைகூட இல்லாமல் மனிதனால் இருக்க முடியும். உணவு இல்லாமல் இருக்க முடியுமா? இது ஏன் மெத்தப் படித்தவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் அரவிந்தனின் ஆதங்கம். நாகரிகம், வளர்ச்சி என்று நாம் வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிட்டோம்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் உணவுக்கான செலவைவிட ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்கான தண்ணீருக்காகச் செலவிடப்படும் தொகை அதிகம். ஒரு லிட்டர் தண்ணீரின் விலை இருபது ரூபாய். ஒரு லிட்டர் பால் விலை நாற்பது ரூபாய். நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? வாட்டர் பாட்டில் பெருமையின் அடையாளமாக, நாகரிகத்தின் அடையாளமாக மாறியது, மாற்றியது யாருடைய குற்றம்? இதுகுறித்த குற்ற உணர்ச்சி யாரிடம் இருக்கிறது என்ற கவலை அரவிந்தனுக்கு மட்டுமே உரியதல்ல என்று சொல்கிறது ‘தனியாக ஒரு வீடு’ கதை.

எங்கோ கேட்டோம், எங்கோ படித்தோம், இன்னாருடைய சாயல் இருக்கிறது என்றெல்லாம் இல்லாமல் இருப்பது நல்ல படைப்புக்கான அடையாளம். அந்த அடையாளம் இத்தொகுப்பில் இருக்கிறது.

இலக்கியம் என்பது வெறும் கதை அல்ல. படிப்பு. வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கான சொத்து என்று சொல்கிறது அரவிந்தனுடைய ‘கடைசியாக ஒரு முறை’ கதைத் தொகுப்பு.

••••

கடைசியாக ஒரு முறை (சிறுகதைகள்)
அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை ரூ: 100

பாராட்டு பத்திரம் வாசிப்பதல்ல விமர்சனம் – இமையம்

இமையம்

அக்டோபர் 21,2018 – வல்லினம் யாவரும் கூட்டுப் பதிப்பகத்தின் சார்பில் மலேசிய எழுத்தாளர்களின் மூன்று நூல்கள் வெளியிட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மா.சண்முகசிவா எழுதிய சிறுகதை நூலினை வெளியிட்டு எழுத்தாளர் இமையம் பேசியது:

தமிழ்நாட்டில் தற்போது எழுதப்படுகின்ற விமர்சனங்கள் என்பது அரசாங்க ஊழியர் ஒருவர் ஓய்வுப்பெறும்போது ‘பணிநிறைவு பாராட்டு விழா’ பத்திரம் வாசித்து அளிப்பது போல்தான் இருக்கிறது. நூல் வெளியிட்டு விழாவில் பேசப்படும் உரைகள், உரை வீச்சுகள் எல்லாம் புகழ் உரைகளே.

பாராட்டு பத்திரம் வாசிப்பவர் விமர்சகன் அல்ல. பாராட்டுப் பத்திரம் வாசிப்பதை ரசிப்பவன் எழுத்தாளன் அல்ல. படைப்பு குறித்து பேசாமல், படைப்பை எழுதிய எழுத்தாளன் குறித்து பேசுவதை புகழ்வதைதான் விமர்சனம் என்று கூறுகிறார்கள். நவீன நாவல், சிறுகதை, கவிதை என்று பேசுகிறார்கள். ஆனால் நவீன விமர்சனம் குறித்துப் பேசுவதில்லை. நான் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளைப்பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். கதைகளை எழுதிய மா.சுண்முகசிவாவைபற்றி அல்ல. சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள், நவீன எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் எல்லாம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவையே.

மா.சண்முகசிவா ‘சாமி குத்தம்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அரசியல் கதை. சாமிகுத்தம் கதையில் நடக்கும் அரசியல் குறித்துத்தான் தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளுக்கு மேல் பேசப்பட்டிருக்கிறது. அந்த ஒற்றைப் புள்ளியை வைத்துத்தான் தமிழ்நாட்டு அரசியலே நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் விஷயங்கள் கதையாகியிருக்கிறது. ஆனால் இலக்கியமாகவில்லை. மா.சண்முகசிவாவின் சாமிக்குத்தம் கதை இலக்கியமாகியிருக்கிறது.

‘மலேசியா குறித்தும், மலேசிய இலக்கியம் குறித்தும் தமிழக மக்களும், தமிழக வாசகர்களும் வைத்திருக்கும் மனக்கற்பனைக்கு எதிரானதாகவே மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் இருக்கின்றன. மலேசியா என்றாலே இரட்டை கோபுரத்தின் பிரமாண்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால் மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் அந்த இரட்டை கோபுரத்தின் பின்னால் இருக்கும் இருளைக் காட்டுவதாக இருக்கிறது. தொகுப்பில் உள்ள எட்டு கதைகளில் 5 கதைகள் குழந்தைகளைப் பற்றியது.. எல்லாம் சரி தான் என்ற கதை மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அன்பைப் பற்றி சொல்கிறது.

மா.சண்முகசிவாவிற்கு குழந்தைகள் மன உலகமும், சமூக அரசியல், உளவியல் உலகமும் தெளிவாக தெரிந்திருக்கிறது. செய்திகளை, தகவல்களை எப்படி ஒரு கதையாக மாற்றுவது என்ற நுட்பம் தெரிந்திருக்கிறது’

1998ல் வீடும் விழுதுகளும் என்ற சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்து புத்தகங்கள் என்று கொத்தாக வெளியிடுகிற தமிழ்ச்சூழலில் 20ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிடுகிறார் என்பதிலிருந்தே அவர் தனித்துவம் மிக்கவர் என்று தெரியவருகிறது.


சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை. கூச்சல் இல்லை. தன்முனைப்பு இல்லை. எதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை நல்ல தமிழில் தெளிவாக எழுதிருக்கிறார்.

கதாசிரியர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது கதைகளை படிக்கும்போது தெரியும். சமயம் சார்ந்த சடங்குகள் மீது ஓயாமல் கேள்விகளையும், கிண்டல்களையும் வைத்தபடியே இருக்கிறார். தமிழ் மொழியை புதுப்பிக்க வந்தேன். மீட்டெடுக்க வந்தேன். என்னால்தான் நவீன தமிழ் இலக்கியம் செழித்திருக்கிறது என்ற ஆணவப்பேச்செல்லாம் கதையாசிரியரிடம் இல்லை.

’மலேசியாவில் வாழக்கூடிய தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இந்த சிறுகதைகள் நிச்சயமாக உதவும். அதோடு இந்த தொகுப்பை படிக்கும்போது நல்ல சிறுகதைகளைப் படித்த உணர்வு ஏற்படும்.’ என்று தொகுப்பில் உள்ள எட்டு சிறுகதைகள் குறித்தும். விரிவாகப் பேசினார்.

*****

“தளை மீறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்…” – சம்பு.

சம்பு

சம்பு

இதுகாறுமான கெட்டிதட்டிப்போன பத்தாம்பசலித்தனமான சமூக அபிப்ராயங்களின்மீது சம்மட்டி வீசும் தீர்ப்புகளை சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இந்தியா போன்ற பன்முகப்பட்ட கலாச்சாரம் பண்பாட்டு அசைவுகளை உள்ளடக்கிய ஒரு நாட்டில் சரியுந்தவறுமான அரையுங்குறையுமான புரிதல்களுடன் வாழ்கிற மக்கள் திரள் அதிகம்.

நீண்டகாலச் சட்டப் போராட்டங்கள் வழி பெறப்பட்ட இத்தீர்ப்புகள் இன்று சமூகவெளியில் உண்டாக்கியிருக்கும் விளைவுகள் பாரதூரமானவையாகும்.நமது கற்பிக்கப்பட்ட திணிக்கப்பட்ட பிரித்தறிய இயலாமல் வெகுமக்கள் பின்பற்றும் கலாச்சார மற்றும் பண்பாட்டு அரசியல் இதற்குப் பின்புலக் காரணிகளாகும்.இந்தத் தளைகளிலிருந்து ஒரு தனி நபர் சுலபமாக எந்த விதிமீறலையும் நிகழ்த்தவியலாவண்ணம் அவர் மனம் பூஞ்சைச் சிந்தனைகளால் வனையப்பட்டிருக்கிறது.

தனிமனித விருப்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் இந்திய சமூகம் அவ்வளவு சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், பொதுச்சூழல் கலாச்சார மற்றும் மரபார்ந்த நம்பிக்கைகள் என அது விரிவான தளங்களில் பல்லாயிரம் இண்டு இணுக்குகளுடனே கூடிய கருத்துருவாக்கங்களைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து மீளவோ புதிய விடியலை கற்பிதங்கொள்ளவோ அது ஒருபோதுமே தானாக முயல்வதில்லை.கற்பிக்கப்பட்ட பிற்போக்குக் கருத்துகளின் வழிநின்றே எல்லாப் பிரச்சனைகளையும் பண்பாட்டு அசைவுகளையும் அது அணுக முயல்கிறது.

இப் பின்புலத்திதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 3 முக்கியத் தீர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதனை நம்பிக்கை மற்றும் மதப் பின்னணியில் வைத்து எதிர்த்துப் போராடுகிற அரசியல் சாரா தனி அமைப்புகள் மற்றும் ஆதாயத்தின் கனிகளைக் கொய்யக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தச் சமூகத்தை இன்னுமொரு நூற்றாண்டு பின்னோக்கி இழுக்கிற கெடுவேலையை அவ்வளவு குதியாளமிட்டபடி செய்து வருகின்றன.தவிர அதை அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அணுகிக் கொண்டிருக்கின்றன.எவ்வித சிறு நெருடலுமின்றி சட்ட மதிப்புமின்றி மாபாதகமாக இந்தத் தீர்ப்புகளைச் சித்தரித்து அதிலிருந்து இச்சமூக மக்களை மீட்பதற்கான தூதர்களாக தம்மை முன்னிருத்தித் தெருவிலிறங்குகின்றன.

தவிர, கலவையான மனநிலையில் குழம்பிக் கிடக்கிற இம்மக்களைப் பெரிதும் நம்பி அவர்களிடம் உணர்வு ரீதியான தூண்டலை எளிதில் உண்டாக்கி அதன்மூலம் தமக்குத் தேவையான அரசியலதிகாரத்தை வென்றெடுக்கும் மலினமான யுக்தியை சில ஓட்டுக்கட்சிகள் கைக்கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலை இயன்றவரை குரூர யுக்தியுடன் சரியாகப்பயன்படுத்திக் கொண்டு தமது எதிர்காலத்தை அக்கட்சிகள்
திட்டமிடுகின்றன.வேறு எவ்வகையான முற்போக்கு அம்சங்கூடிய மாற்றங்களுக்கு சமூகத்தை தயார்செய்வதை விடவும் சகமனித வெறுப்பை பல்வேறு காரணிகளை முன்வைத்து விதைப்பதன் வழி பெரும்பான்மையான மக்கள் திரளை ஒருங்கிணைக்க முடியுமெனவும் அவைகள் நம்புகின்றன.
சில நேரங்களில் அதில் வெற்றியடையவும் செய்கின்றன.

இவ்வளவு குளறுபடியான ஒரு பின்புலத்தில் இம்மண்ணில்
மக்கள் தாம் விரும்பிய வாழ்வினை சுதந்திரமாக வாழவும் தம் கருத்துக்களை கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் வைத்து உரையாடவும் விவாதிக்கவுமான அரசியல் சாசன உரிமைகளையும்
நாம் பெற்றே இருப்பதையும் ஞாபகங்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஓர் சுதந்திர வழிப்பட்ட சமூகத்திற்கான முன்மொழிதலை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

தீர்ப்பு: 1.

நமது உச்சநீதிமன்றம் IPC 377ல் உள்ள பிரிட்டிஷ் காலத்திய கடும் விதிமுறைகளின் சில ஷரத்துகளை சிறிய அளவு ரத்து செய்து ஓரினச்சேர்க்கையை குற்றவிலக்குடைய நடவடிக்கை என அங்கீகரிக்கிறது.

இதன்படி ஓரினச்சேர்க்கையாளர்கள்,பெண்களிடையே பாலுறவு கொள்பவர்கள் மற்றும் மாறிய பாலினத்தவரிடையே ஒப்புதலுடன் ஏற்படும் தன்பாலின நடவடிக்கைகளுக்கு இந்த ஷரத்தின் கடுமை பொருந்தாதெனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதைக் குற்றவிலக்குடைய ஒன்றாகக் கருதும் 125வது நாடாகத் திகழ்கிறது இந்தியா.எனினும் விலங்குகள் அல்லது சகமனித ஒப்புதலின்றி யாரோடும் மேற்கொள்ளும் பாலியல் செயல்களை IPC377 ,வழமைபோல் கட்டுப்படுத்தவே செய்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் பாலியல் விழைவுகள் கட்டுப்பெட்டித்தனத்துடன் அடக்கிவைக்கப்பட்ட, சந்தர்ப்பங்களில் மோசமாக அத்துமீறுகிற என்ற எதிரெதிர் கோணங்களில்தான் அணுகப்பட்டு வந்திருக்கின்றன. மட்டுமல்லாமல் பால் மாறுபட்ட மனிதர்களைப் புரிந்து கொள்வதில் மொத்த சமூகமே வெகுவாகப் பின் தங்கியிருக்கிறது.

நாம் வாழும் இதே மண்ணில் சில உயிரிகள் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளுடன் ஜீவித்துக் கிடக்கின்றன. ஏந்துவார் கரங்களை தவம்போல் எதிர்பார்த்தே கண்ணீருடன் அவர்தம் காலங்களும் கடந்துபோனதைக் கருத்திற்கொண்டு இத்தீர்ப்பு அவர்களை வெகுவாக ஆறுதல்படுத்துகிறது.

தீர்ப்பு:2

விதிக்கப்பட்ட வாழ்வைக் கொண்டாடும் நிர்ப்பந்தத்தை காலம்காலமாய் பெண்களின்மீது திணித்துவைத்திருக்கிறது நம் சமூகம். அதிலிருந்து சிறிய விடுதலையோ அல்லது சிறு விருப்பமோ ஒன்றும் சட்டக்குற்றமாக கருதவேண்டியதில்லையென அறிவிக்கிறது மற்றொரு தீர்ப்பு.(IPC497).
சநாதானத்தின் வழிவந்த ஆகப்பெரும் ஆகிருதி பொருந்திய நம் மூத்தகுடிகளை விக்கித்துப்போகச் செய்யும் வல்லமை கொண்டதுதான் இந்த அறிவிப்பு. எனினும்,நம் புரிதல்களில் தீமை நேர்ந்துவிடக்கூடாது.

மிக அதிகமாக நையாண்டியுடன் உரையாடல்களிலும் சமூக ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாகவுமிது பார்க்கப்பட்டது.
யாரும் யாரோடு வேண்டுமானாலும் போகலாம் வரலாமென்பதைச் சொல்ல உச்சநீதிமன்றம் எதற்கு?
இந்த நீதிபதிகள் நம் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டுதான் தீர்ப்புகளைச் சொல்கிறார்களா?
தீர்ப்புக் கொடுத்த நீதிபதியின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பிலிருந்தால் மனைவி வரும்போது வந்து சேரட்டும் அதுவரை சற்று தூங்கி எழுந்தால் தேவலையென அவர் நினைப்பாரா?

இந்த நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தலைதூக்கி நிற்கும்போது யார் யாரிடம் ட்ரவுசரைக் கழட்டுவது அல்லது சேலையை அவிழ்ப்பது என்பதுதான் பிரதானப் பிரச்சனயா என்றெல்லாம் வெகுவாக அலசி ஆராயப்பட்டது இந்தத் தீர்ப்புதான்.

ஆனால்,
உண்மையாகவே முறைதவறிய உறவுகளை இத்தீர்ப்பு ஊக்குவிக்கவுமில்லை.தாங்கிப் பிடிக்கவில்லை. ஆனால் அப்படி மட்டுமே பார்க்கும்படி மூளை சுருங்கிய ஆணாதிக்க மனம் கருதுகிறது.

அசந்தர்ப்பமான ஆண் பெண் உறவுகளில் பெண்ணை மட்டும் குற்றவாளியாகக் கருதுகிற சமூகத்தின் குறுகிய புரிதலுக்கும் அபிப்ராயத்துக்கும் இத்தீர்ப்பு முட்டுக்கட்டை போடுகிறது.

பரஸ்பரம் ஆண்/பெண் இருவரும் நற்புரிதலுடன் வாழ்தலின் அவசியத்தையும் ஒழுக்கத்தின் தேவையையும் நிர்ப்பந்திக்கிறது.

பெண்ணை மட்டும் குற்றம் சுமத்தி நிர்ப்பந்திப்பதிலிருந்து விலக்களிப்பதன் மூலம் இந்த உறவிலிருந்து சட்டப்படி ஆண் தப்பித்து வெளியேற இருக்கின்ற வாய்ப்புகளை முற்றிலும் நிராகரிக்கிறது.

எனவே, எல்லோர் வீட்டிலிருந்தும் பெண்களெல்லாம் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி அடுத்தவருடன் போய்விட்டால் என்கிற மலினப்பட்ட சிந்தனையை ஆண்மனம் கற்பிதங்கொள்ள வேண்டியதில்லை.

தீர்ப்பு:3

அணிலும், மானும், குரங்கும்,எருமையும், பசுவும், நாயும்கூட கடவுளை வழிபட பெற்றிருக்கும் உரிமையை சற்றே விரிவுபடுத்தி நமது பெண்களுக்கும் அதையளிக்க முன்வருகிறது இன்னொரு தீர்ப்பு. பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்தும் விதமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபடலாம் என்ற உத்தரவுக்குப் பிறகு சகிக்கவியலாத பிற்போக்கு கருத்துகளும் மோசமான எதிர்வினைகளும் இத்தீர்ப்பின் அசல் நோக்கத்தைத் திசைதிருப்பும் வகையில் சமூக மற்றும் அரசியல் ரீதியான இழிநடவடிக்கைகளாக மாறியிருக்கின்றன.

நம் முன்னோர்கள் எதற்காக சிலவழிமுறைகளைக் கடைப்பிடித்தார்களெனச் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் கீழ்த்தரமான கருத்துக்களை முன்வைத்து அடுத்தடுத்த நகர்வுளுக்குச் சென்றது.

பிஜேபி இதில் அவ்வளவு அப்பட்டமாக தீர்ப்பின் எதிர்பலனை அறுவடை செய்யக் களமிறங்கியது.
கேரள இடது முன்னணி அரசு தீர்ப்பை அமல்படுத்தமுயலும்,ஒரு சமத்துவத்திற்கான புதிய திறப்பாக இதனைப் பார்க்குமென்பது நீதிபதி தீர்ப்பு வாசித்து முடித்தவுடனே பிஜேபி கணக்குப்போட்டு விட்டது.

பார்ப்பனீய மயப்பட்ட சடங்குகளிலிருந்து அப்போதே விதிமீறல்களை நடத்திக்காட்டிய ஸ்ரீ நாராயண குரு,அய்யன்காளி, சட்டாம்பி சுவாமிகள் பாரம்பரியத்தின் வழிவந்த கேரளாவில் இன்றைய ஆளும் அரசு முற்போக்கான இத்தீர்ப்பை செயல்படுத்த முனையுமென்பதை வேறு எவரைக்காட்டிலும் முதலில் பிஜேபி யினர்தான் புரிந்து கொண்டார்கள்.

தவிர, 24*7 காவல்துறை பாதுகாப்புடன் பெண்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்யமுடியாது.நடைமுறைக்கு அவ்வளவாகச் சாத்தியமற்றது என நுணுக்கமாகப் புரிந்துகொண்டதுபோல தமது பிரச்சாரத்தை பிஜேபி அவிழ்த்து விட்டது.

“சபரிமலை இட அமைவு பெண்கள் சென்று வர அவ்வளவு உகந்ததல்ல…” என்ற ரீதியில் பொன்.ராதாகிருஷ்ணன் முனகத் தொடங்கினார்.

இந்தச் சூழலில்தான் 16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிணராயி விஜயன் “சமூக சீர்திருத்த மரபுதான் நம்முடைய மகத்தான மரபு.அதுவே நம் அடிப்படை.. எந்தக் காலகட்டங்களில் எல்லாம் சமூக மாற்றக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அப்போது அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கித்தான் இருக்கிறார்கள்.

இதுவொன்றும் புதிதல்ல…சதிக் கொடுமை,விதவை மறுமணம், சிறுமிகளைக் கிழவர்களுக்கு மணமுடித்தல்,மனிதப்பலி சடங்கு,ஈரத்துணியுடன் மட்டுமே கோவில் நுழைதல், மாதவிடாயின் போது தனித்திருத்தல்,பிரசவத் தீட்டு, சாவுத் தீட்டு,பெண்கள் மார்பு மறைக்கத் தடை,பெண்களுக்குச் சொத்து மறுப்பு,பிராமணர்களிடமிருந்து 64 அடிகள் தள்ளி பறையர் நிற்பது என அனைத்து சமூக கீழ்மைகளிலிருந்தும் நாம் ஓர் மேம்பட்ட சமூகத்தை படைக்கவில்லையா…?”
என்று நம்பிக்கையின் வார்த்தைகளை ஆழமாக விதைத்திருக்கிறார்.

சமத்துவத்தை ஏந்திப்பிடிக்கும் எண்ணம் கொண்ட முற்போக்கு சிந்தனையை முன்மொழிகிற
ஓர் சமூகத்தில் பொதுமக்கள்திரளின் மீது சதா இந்த அரசியல் வயப்பட்ட அல்லது சமூக வயப்பட்ட பிற்போக்குத்தனமான கருதுகோள்களை பழமைவாதிகள் ஏவுகின்றனர்.
புதிய வெளிச்சம் நோக்கி மக்கள் நகர்ந்துபோகும் பாதைகள் திரிந்து குழம்புகிறபடி பாசிச சக்திகள் தீர்ப்புகளை கையிலெடுக்காவண்ணம் தடுக்கவேண்டும்.

ஒரு பொதுச்சமூகத்தின் சாதாரண பிரஜை என்கிற வகையில் ஒரு தனிமனிதர் இந்தத் தீர்ப்புகள் குறித்த விரிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ளவும், இயல்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் நாம் துணை நிற்கவேண்டும். தவிர,என்றென்றைக்கும் சமத்துவ சமூகத்தை கனவுகாணவும் உருவாக்கவுமான நகர்வுகளுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும் பாரபட்சமற்ற உரையாடல்களை மேலும் விரிவான தளங்களில் நாம் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டியிருக்கிறது.

(((((((((((((())))))))))))