Category: கட்டுரை

வாழ்வின் பரமபதம் சரவணன் சந்திரன் எழுதிய “சுபிட்ச முருகன்” புதினம் குறித்து – பாலகுமார் விஜயராமன்

தனக்குப் பிடிப்பதை, எந்தத் தடையையும் மீறி நிறைவேற்றுக் கொள்கின்ற ஒருத்தி, தனக்குரியவனின் ஒரு சுடுசொல்லைத் தாங்க முடியாமல் தன்னைப் பொசுக்கிக் கொள்கிறாள். அபாண்டமாய் மாண்ட அவள் அரூப ராஜநாகமாய் மாறி, தன் வாழ்வை வீழ்த்திய தன் மாமனின் குடும்பத்தை அழிப்பது ஒரு கண்ணி.

வாழ்ந்துகெட்ட குடும்பத்தில் இருந்து, மேலெழுந்து வரும் ஒருவன், தன் பால்யத்தின் நினைவுகளோடும், தொன்மத்தின் மீதுள்ள ஆழ்ந்த ஒட்டுதலோடு அதே நேரம் அதிலிருந்து விலகி ஓடும் எத்தனிப்போடும் அலைவுற்று, இறுதியில் மீண்டு தன் வாழ்வுக்கான மொட்டெடுக்க முனையும் ஒரு கண்ணி.

நிகழ்வாழ்வின் சுயத்தைத் தொலைத்து, துறவறத்தில் விட்டேர்த்தியாய வெறுமையைக் குடித்து, கசப்பேறி வன்சொற்களாய் உமிழும் எச்சலில் இருந்து, சுற்றியிருப்பவர்களுக்கான சுபிட்சத்தை அருளும் அஞ்ஞானவாசியின் இருப்பும் மறைவும் ஒரு கண்ணி.

இப்படி, கதைசொல்லியின் உள்ளொடுங்கிய மனப்பிரவாகத்தின் மூலமாகவும், பாவங்களுக்குள்ளும் அவற்றிற்கு உண்டான தண்டனைகளுக்குள்ளும் தன்னைத் தானே புதைத்துக் கொள்ளவும், ஒரு மொட்டெடுப்பின் மூலம் உள்ளிருந்து முட்டித் தள்ளி வெளிவரத் துடிக்கும் எத்தனத்தையும், மேல்சொன்ன கண்ணிகளின் சரடாகக் கோர்த்து புனையப் பட்டிருக்கிறது சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்”.

சரவணன் சந்திரனின் கதை சொல்லிகள், சட்டகத்துக்குள் அளந்து வைத்திருக்கும் கதை சொல்லல் முறையிலிருந்து மாறுபட்ட வகையில் கட்டத்துக்கு வெளியே இருந்து தம் அகத்தின் சாகச உணர்வையும், அதன் களிப்பையும், பின் அதனூடாக உண்டாகும் குற்றவுணர்ச்சியின் மூலம் தம்மை சுருக்கிக் கொள்வதையும், பின் அரூபத்தில் இருந்து நீளும் ஒரு கையைப் பற்றிக் கொண்டு அந்தக் குற்றவுணர்வில் இருந்து மீண்டு எழும் மீட்சி என்பதாகவும் உருவாகி இருப்பவர்கள்.

அவரது இதுவரையான புதினங்களில் இதே குணவார்ப்புள்ள நாயகன் தான் கதைசொல்லியாக இருப்பான். ஆனால் முந்தைய புதினங்களில், வாசிப்புக்கு பெருந்தடையாய் இருந்தது, அத்தியாயங்களுக்கு இடையேயான தொடர்ச்சியின்மை. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியாய் தொக்கி நிற்பது போலவே தோன்றும். ஒரு அத்தியாயத்தில் ஒரு பாத்திரத்தைப் பற்றிய அறிமுகம், அப்பாத்திரத்திற்கு கதைசொல்லியுடனான உறவு அல்லது தொடர்பு, அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் ஒரு சம்பவம். அதோடு அந்த அத்தியாயம் முடியும்.

ஒரு அத்தியாயத்தின் நிகழ்வுகள், கதையோட்டத்திற்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்துகின்றன அல்லது அது புதினத்தை எப்படி நகர்த்துகிறது என்பதில் சில குழப்பங்கள் இருந்தன. ஆனால் ”சுபிட்ச முருகனில்” அந்த தொடர்பின்மை மறைந்து, கண்ணிகளை புனைவுச் சரடில் இணைக்கும் லாவகம் வாய்த்திருக்கிறது.

சுபிட்ச முருகனின் முதல் மூன்று அத்தியாயங்கள், இளங்கா என்னும் இளம்பெண்ணின் தனித்தன்மையான வாழ்வையும், சாவையும், அடர்த்தியான விவரிப்புகள் மூலமும் பேசுகிறது. அவள் கதைசொல்லியின் மனதுக்குள் தொன்மமாய் பதிந்து, தனது வீழ்ச்சிக்குக் காரணமானவர்களை அலைக்கழித்து பலிவாங்கிய துர்நிகழ்வுகள் அவனைக் கொடுங்கனவாய்த் துரத்த, அதில் அவன் வீழ்கிறானா இல்லை விதியின் இந்த சாபத்தில் இருந்து அவளே அவனை விடுக்கிறாளா அல்லது அவளையும் தாண்டி அவன் தான் கண்டுணரும் தரிசனங்கள் மூலம் இறுதியில் மொட்டெடுக்கிறானா என்ற கேள்விகளை முன்வைத்து, புதினத்திற்கு மிகப்பலமான அஸ்திவாரம் நட்டு வைக்கப்படுகின்றது.

ஆனால் புதினத்தின் இந்த பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் இரண்டாம் பகுதி மிகப் பலவீனமாக எழுந்திருப்பது துரதிர்ஷ்டம். ஒரு புனைவின் போக்கு, நம் மனம் நினைக்கின்றபடி தான் செல்லவேண்டும் என்று நினைத்து வாசிப்பது அபத்தம், ஆனால் முதல் மூன்று அத்தியாங்களில் கட்டமைக்கப்பட்ட இளங்கா என்னும் பெண்ணின் பிம்பம் அப்படியே நட்டாற்றில் ஆதரவின்றி விடப்பட்டு, அதன் பின்னான அத்தியாயங்கள் கதைசொல்லி தன் அகம் சார்ந்த பிரச்சனைகளின் புலம்பலையும், தன் இயலாமையையும், தன் வாழ்க்கை முறை மாற்றத்தையும் அன்றாடம் எழுதிச் செல்லும் டைரிக்குறிப்பைப் போன்று சுருங்கி விடுகின்றன. உண்மையில், இப்புதினத்தின் மையப்பகுதி, இளங்காவுக்கும், கதைசொல்லிக்குமான பரமபத விளையாட்டாகவும், சமராகவும், போராட்டமாகவும் அமைந்திருந்தால் முன் அத்தியாயங்களின் அடர்த்தி, புதினம் முழுக்கப் பரவியிருக்குமோ என்று தோன்றுகிறது.

இளங்கா தன் மாமனின் குடும்பத்தை புல்பூண்டு இன்றி பஸ்பமாக்கும் ரௌத்திரத்தில் தனக்குப் பிரியமான ஐந்து வயது சிறுவனை மட்டும் தன் நஞ்சின் வீரியத்தில் இருந்து காப்பது என்ற பதைபதைப்போடு அவனை நெருங்குவதும், ஆனால் கதைசொல்லிக்கு இளங்கா என்பவள் தன் குடும்பத்தை கருவறுக்க வந்த யட்சியா அல்லது தன் மீதிருக்கும் சாபத்தின் வினையை அறுக்க வந்த கன்னிமார் தெய்வமா என்ற கலக்கத்துடனும் இதே கதையை இன்னொரு கோணத்தில் யோசித்து, புனைவின் திசையை மாற்றிப் பார்க்கையில் “சுபிட்ச முருகன்” இன்னும் செழுமையான சித்திரமாகத் துலக்கமாகிறது.

மாறாக, முன்பு நன்கு கட்டமைக்கப்பட்ட இளங்கா என்ற ஒருத்தியின் பிம்பமே மறந்து போய், கதைசொல்லி, தன் இயலாமையையும், எச்சில் சாமியின் இடத்தில் அல்லறும் படிமங்களும் மீண்டும் மீண்டும் வரும் போது, புதினத்தின் இரண்டாம் பகுதி தனியான வேறு காட்சியாக, வெறும் புலம்பலாக தோற்றம் கொள்ள வைக்கின்றது.

வாழ்வின் ஒன்றின் மீதான மோகம், அதனை அடையத்துடிக்கையில் நிகழும் வேட்கை, பின் பிடித்தது தரும் சலிப்பு அல்லது பிடித்தது கைநழுவிப் போகையில் எழும் குரோதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது புதினத்தின் முதல் பகுதி. சாகச மனம் கொண்ட ஒருவன் உச்சத்திலிருந்து அதளபாதாளம் நோக்கி விழுகையில் தோன்றும் ரோகம், அதன் மூலம் தனக்குள் சிற்றெரும்மாக ஊறல் எடுக்கும் கழிவிரக்கம், அதனூடே கிடந்து உழலுதல், அந்த பாதாளத்திலிருந்து மேலெழுந்து வர முடியாமல் மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே தன்னைச் சுருக்கி சுருக்கி சுற்றியுலவும் வட்ட எல்லை ஆகியவை இரண்டாம் பகுதி.

பின் தன் கீழ்நிலையிலிருந்து தன்முனைப்போடோ அல்லது மேலிருந்து நீளும் ஒரு ஒளிக்கற்றையைத் தொடர்ந்தோ வான் நோக்கி ஏகி, மொட்டெடுத்து, போகம் பெருக எழும் முயற்சி முடிவுப் பகுதி. இப்படி மோகத்தில், துவங்கி, ரோகத்திலிருந்து மீண்டு போகம் பெருகி வரும் படைப்பாக வந்திருக்கிறது “சுபிட்ச முருகன்”.

உண்மையில், இந்த புதினத்தை வாசிக்க எடுக்கும் போது, இணையத்தில் இப்புத்தகம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்புகளினாலும், வாசிக்க நேர்ந்த நான்கைந்து விமர்சனக் குறிப்புகளினாலும், இருவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றின. ஒன்று, “சரவணன் சந்திரன் பெயர்சொல்லக்கூடிய தனது முதல் நாவலை எழுதிவிட்டார்” என்ற நம்பிக்கை.

இன்னொன்று, “இந்த தெர்மாக்கோலைத் தான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தீங்களா” என்ற பரவை முனியம்மாவின் வசனம். புதினத்தை வாசித்து முடிக்கையில் இவற்றில் எந்த எண்ணம், நிலைபெறப்போகிறது என்று எந்த யோசனையும், முன்முடிவுகளின்றியே வாசிக்கத் துவங்கினேன். ஆனால் ஒற்றை வரியில் வீசிச் செல்லும் வெற்று விமர்சனச் சொற்களைத் தாண்டி, இந்த புதினத்தின் முதல் சில அத்தியாயங்கள் ஏற்படுத்திய அதிர்வு நாவலை முடித்த பின்பும் நிலைத்திருக்கிறது. பின் வந்த அத்தியாயங்கள், முதல் சில அத்தியாயங்களுக்கு நியாயம் சேர்க்கத் தவறியிருந்தாலும், முடிவில், கரும்பானை உடைத்து பெருமழை பொழிந்து மனம் நிறைக்கும் சுபிட்ச முருகனின் அருளால், இப்புதினம் தனக்கான இடத்தைத் தக்க வைக்கிறது.

எழுத்தாளர் சரவணன் சந்திரன் அவர்களுக்கும், புத்தகத்தை வெளிட்ட “டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்தினருக்கும் வாழ்த்துகள்.

****

சுபிட்ச முருகன் (நாவல்)

சரவணன் சந்திரன்

டிஸ்கவரி புக் பேலஸ்

பக்கங்கள்: 127

விலை: ரூ. 150

***

மலையெங்கும் பூக்கும் மலர் அய்யனார் விஸ்வநாத் எழுதிய “ஓரிதழ்ப்பூ” புதினம் குறித்து – பாலகுமார் விஜயராமன்

ஒரு தாமரை மொக்கை விரிக்கும் போது, பூவின் இதழ்கள் ஒவ்வொரு அடுக்காக மலர்வது போல, ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதினம் தன்னைத் தானே அழகாக விரித்துக் கொள்கிறது, அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள “ஓரிதழ்ப்பூ” புதினம். சமீபத்தில் கோவில்கள், மாளிகைகள் போன்ற புராதானச் சின்னங்களை 360 பாகை கோணத்தில் சுற்றிச் சுழற்றிக் காட்டும் காணொளிகளைப் பார்த்திருப்போம். இப்புதினத்திலும், ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் மேலோட்டமாகச் சொல்லப்படும் ஒரு காட்சி, அதில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு கதாபாத்திரத்தின் பார்வையில் வேறு ஒரு கோணத்தில் சொல்லப்படும் போது, ஒரே நிகழ்வின் பல்வேறு அடுக்குகளை கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. இந்த யுக்தி மேம்போக்காகச் சொல்லப்பட்டிருந்தால், சொன்ன விஷயத்தையே மீண்டும் சொல்வது போல, வாசிக்கையில் அலுப்புத் தட்டி இருந்திருக்கும். ஆனால் அய்யனாரின் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையினால், ஒரே நிகழ்வின் பல படிமங்கள், உயிரோட்டமான முப்பரிமான நிகழ்வுகளாக உயிர்பெறுகின்றன.

ஓரிதழ்ப்பூ என்று கருத்தாக்கத்தை யதார்த்தம், புனைவு, மீபுனைவு என்று பல்வேறு தளங்களில் பரவவிட்டு, சுழற்சியான ஒரு புனைவுப் பின்னல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புள்ளிமான் உடலில் மனித முகம் கொண்டவன் கனவில் வரும் சித்திரம், தாலிகட்ட அருகில் அமர்ந்திருப்பவனுக்கு நரிமுகம் போன்ற தோற்றம் எழுவது, அகத்தியரும், ரமணருக்குமான உரையாடல் போன்றவற்றோடு திருவண்ணாமலை என்ற ஊரின் வரைபடமும் அதில் வாழும் மனிதர்களைப் பற்றியதுமாக, உள்ளும் வெளியுமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது.

ஓரிதழ்ப்பூ என்பது என்ன என்பதற்கான தேடலில் துவங்கும் புதினம், அதனை மாமுனிவர் கண்டுணரும் இடத்தில் முடிந்து விடுவது போலத் தோன்றினாலும், அது ரவியின் மனதில் அச்சுறுத்தும் அக்கினிப் பிழம்பாக தொடர்ந்தபடியே இருக்கிறது. மாய யதார்த்தத் தளத்தில், மாமுனிவர் உலவுவது போல தொடங்கும் சரடு, அவரைத் தேடி அவரது மனைவி வரும்போது, அவர் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மனப்பிறழ்வு என்ற இணைப்பில் சரியாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சங்கமேஸ்வரன் தொடர்பான அங்கையுடைய நினைவுகள், சங்கமேஸ்வரன் மற்றும் மலர்க்கொடி இடையேயான நிகழ்வுகள் அனைத்தும் நிகழில் கலந்த மாய யதார்த்தக் காட்சிகளே.

மலர் சங்கமேஸ்வரனை அடர்கானகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுவது எல்லாம் மீபுனைவுத் தளத்தில் சொல்லப்பட்டு, அவன் அவளைக் கூட்டிச் செல்கையில் அவள் அணிந்திருந்த நைட்டியோடு டூவீலரில் ஏறிச் செல்கிறாள் எனும் போது திடீரென அக்காட்சி மீபுனைவல்ல ஒரு யதார்த்த நிகழ்வு என்று வாசிக்கும் மனம் அலைவுறுகிறது. இத்தகைய இடறல் புதினத்தின் பல பகுதிகளில் வருகிறது. அய்யனார் இதனை பிரஞ்கையோடு விரும்பியே செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. புனைவுக்கும், யதார்த்தத்துக்குமான இந்த அலைச்சல் தான் புதினத்தை அடர்த்தியாக்கவும் செய்கிறது.

தான் கனவில் கண்ட மானின் நினைவிலேயே மூழ்கியிருக்கும் அங்கை, கையாலாகாத தனது கணவனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனியாளாய் அவனையும் வைத்துக் காப்பாற்றும் துர்கா, கானகத்துக்குள் மறைந்து போகும் மலர், தன்னிடம் வந்து தஞ்சமடைபவனை அவன் வாழ்க்கைக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, வெளியுலகில் சுதந்திரமாய்ப் பறக்க நினைக்கும் அமுதா, இந்த நான்கு பெண்களையும் மையமாகக் கொண்டதே “ஓரிதழ்ப்பூ”. இவர்களை நெருங்க அஞ்சுகிறவர்களாக, இவர்களிடம் சரணாகதி அடைந்தவர்களாக, இவர்களுக்குள் பிரபஞ்சத்தின் பேருண்மையை உணர்ந்து தெளிபவர்களாக, இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வேட்கை மிகுந்தவர்களாக, இவர்களை நினைத்து உள்ளுக்குள் மருகுபவர்களாக இப்படி இவர்களின் வாழ்வை ஒட்டியவர்களாகவே இப்புதினத்தில் வரும் ஆண்கள் இருக்கிறது.

ஆண்களின் பராக்கிரமங்கள் மற்றும் வீழ்ச்சி, அதற்குப் பின்னிருக்கும் பெண்கள் எனும் ஆண்மய புனைவுகள் மத்தியில், ” ஓரிதழ்ப்பூ”வின் ஆண்கள், பெண்களின் பகடைகளாகவே சுழற்றப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வும் தாழ்வும் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன. சொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரின் நிகழ்வாழ்வும் கூட இப்படி பெண்களை மையப்படுத்தியதாகவே இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புனைவு மற்றும் யதார்த்தக் களங்களில் பயனித்தாலும், புதினத்தின் எழுத்துநடை, மிக எளிமையானதாகவே இருக்கிறது. தீவிர வாசகர்களுக்கு இது ஒரு குறையாகவும், அதேநேரம் சுவாரஸ்மான வாசிப்புக்குத் துணையாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் முக்கோணக் கதைகளில் ”ஓரிதழ்ப்பூ” இரண்டாவது என்று அய்யனார் குறிப்பிட்டிருக்கிறார். முதல் பகுதியான “இருபது வெள்ளைக்காரர்கள்” இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் வாசிக்க வேண்டும். அடுத்து வரவிருக்கும் மூன்றாவது பகுதிக்காகவும் காத்திருக்கிறேன். எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கும், இதனை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******

ஓரிதழ்ப்பூ (நாவல்)

அய்யனார் விஸ்வநாத்

கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள்: 166

விலை: ரூ. 150

******

முள்ளிக்காட்டு மர்மம் ! / மிஹாத்.

தர்க்கங்களுக்குப் புறம்பான அனுபவங்கள் ஏற்படுத்துகின்ற பரவசங்கள் பற்றி முள்ளிக் காட்டுக் குகையின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பார்க்காதவருக்கு நமது பூர்வீகம் இலகுவில் புரிந்து விடப் போவதில்லை. வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரிக்கும் எல்லையாக முள்ளிக்காடு உள்ளது. நான் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது எமது உயிரியல் ஆசிரியர் இக் குகை பற்றி அதிகம் சொல்லியிருக்கிறார். உலகின் மிக அரிதான தாவர இனங்களும் பறவை இனங்களும் அந்த மலைக்காட்டுச் சூழலுக்குள் வாழ்வதாகக் கூறினார். அங்கிருந்துதான் நமது நாகரிகம் தோன்றியதாகவும் கூறினார். இந்தக் குகைப் பிரதேசத்திற்கு நாங்கள் பயணித்த அனுபவங்கள் சுகமானவை.

முள்ளிக்காடானது எண்ணூறு சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்டது. முள்ளிக்காட்டு மலையின் அடியிலிருந்து ஏழு கிலோ மீற்றர் ஆரை கொண்ட சுற்று வட்டாரத்தில்தான் அரிய வகைத் தாவர இனங்களைக் கொண்ட காடு இருக்கிறது. இங்கு ஆயிரத்து அறுநூற்றி ஐம்பத்தேழு வகைத் தாவர இனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இவற்றுள் சாகியமேத்தி, தறுவாக்கோதி, சிம்புடுவட்டா, சீகிலமுண்டம், தனிதுங்கா, தம்பரமேகா போன்ற உலர் வலயப் பெரும் மரங்களும் சிறுஞ்சிப்புட்டா, தூமேகராளி, துறுஞ்சிக்கையா, துறுத்தியா குறூமி போன்ற புதர்ச் செடிகளும் அடங்கும். மேம்புடுசிங்கான், பூணான்போதி, போண்டுமாவராளி போன்ற படரும் கொடி வகைகளும் இங்கு உள்ளன.

சாகியமேத்தி எனும் பெரும் விருட்சம் அறுபது அடி உயரமும் பனிரெண்டு அடிச் சுற்றுவட்டமும் கொண்ட அளவிற்கு வளரக் கூடியது. இதன் இலைகள் அவரை இனத் தாவரங்களின் இலைபோல இருக்கும். தண்டு முழுவதும் இரண்டு அல்லது மூன்று அங்குலக் கனத்திற்குப் பட்டைகள் இருக்கும். இங்குள்ள ஏனைய பெரும் மரங்களும் இது போன்ற பல்வேறு தனித்துவ அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. அதிகளவான உலர்ந்த காலநிலையை இப்பிரதேசம் கொண்டிருப்பதனால் இங்குள்ள மரங்களும் ஒரு விதமான உலர்ந்த வெளிப்புறத் தண்டுகளுடன் தோற்றமளிக்கும். புற்களும் புதர்ச் செடி கொடி வகைகளும் கடும் வரட்சிக் காலங்களில் கருகிய நிலையில் காணப்படும். பெரும் விருட்சங்கள் இக்காலத்தில் இலைகளை உலர்த்திக் கொள்ளும்.

முள்ளிக்காட்டுக் குகையும் அதனைச் சூழ்ந்துள்ள பெரும் காட்டு வளமும் உலகின் மனிதாபிமான மனசாட்சியின் முன்பு அறிமுகமாகாமலேயே போய்விட்டது. இந்தக் காடு சூழலியல் ஆராய்ச்சிக்குள் அலசப்பட்ட அளவிற்கு இதன் அரசியல் வகிபாகமானது வரலாற்றில் கணிக்கப்படாமல் போனது துரதிஸ்டம்தான்.

சூழலியல் ஆராய்ச்சி அறிக்கைகளின்படி இந்தக் காடு நான்கு வகையான தாவரப் படைகளினால் சூழப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவை தரைப்படலம், புதர்ச் செடிப்படலம், உள்ளகத் தாவர முகட்டுப் படலம், தான்தோன்றி விதானப் படலம் என்பதாக அறிய முடிகிறது.

இவற்றில் தான்தோன்றி விதானப் படலத்தினை உலர் வலயப் பெரும் காடுகளுக்குரிய சிறப்பம்சமாக ஆராய்ச்சியாளர்கள் வரையறுக்கிறார்கள். தரைப்படலமும் புதர்ச் செடிப்படலமும் எப்போதும் நிழலின் இருள் நிறைந்ததாகவே இருக்கும். இதன் மீது சூரிய வெளிச்சமானது அதிகளவில் படுவதில்லை. அதனால் தரையானது அதிக நாட்களுக்குக் குளிர்மை நிறைந்ததாகவே இருக்கும்.

இந்தப் புதர்ச் செடிப் படலத்தில் பல வகையான உலர் வலயத்துச் செடிகள் செழித்து வளர்கின்றன. இங்கு வளரும் துருத்தியா குறூமியானது அன்னாசி வகைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவற்றின் கனமான மெழுகு போன்ற இலைகள் ஒரு ஜாடியைப் போல குவிந்து இருப்பதனால் மழை நீரைத் தேக்கி வைக்கக் கூடியவையாய் உள்ளன. இவற்றில் சில வகைச் செடிகள் ஏழு போத்தல்களுக்கும் அதிகமான கொள்ளளவு நீரைத் தேக்கி வைக்கக் கூடியவை. இதனால் இங்கு ஒருவித ஒன்றிய உயிரினச் செயல்பாடு உண்டாகிறது. அதாவது சில தவளை இனங்களும் பூச்சியினங்களும் இத் தாவரத்தினை தங்குமிடமாகக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு புதர்ச் செடியான துறுஞ்சிக்கையாவானது கள்ளிச்செடி இனம் ஆனபோதும் இதன் இலைகள் மெல்லியதாகவே இருக்கிறது. பூச்சிகளைக் கவர்ந்துண்ணும் இத்தாவரத்தின் அழகிய மலரில் முதிர்ச்சியடைகின்ற விதைகள் காற்றினாலும் விலங்குகள் மூலமும் பரம்பலடைகின்றன.

இங்கு உள்ள விதானப் படலமானது முள்ளிக்காட்டின் கூரை போலவே இருக்கிறது. மலைக்கு நெருக்கமான வலயத்தில் காணப்படும் விதானத்தை உருவாக்கியிருக்கும் மரங்கள் சற்று மென்மையானவை. தறுவாக்கோதி, சிம்புடுவட்டா போன்ற இம்மரங்களின் இலைகள் முட்டை வடிவில் அமைந்தவை. விதான வலயத்தின் சுற்று வட்டாரங்களில் மிதமிஞ்சிய தாவர உணவு வகைகள் அளவின்றிக் கிடைப்பதனால் இங்கு அதிகளவான பூச்சியினங்கள் வாழ்கின்றன. அதனால் இப்பூச்சியினங்களை உண்ணும் பாம்புகள், மரத்தவளைகள் போன்ற உயிரினங்களுக்கும் இங்கு குறைவில்லை.

உள்ளகத் தாவர முகட்டுப் படலத்தில் ஓரளவு சூரிய வெளிச்சம் இருப்பதனால் இங்குள்ள தாவரங்கள் வேகமாக வளரும் தன்மையைக் கொண்டுள்ளன. மேம்புடுசிங்கன், பூணாப்போதி போன்ற செடிகள் பனிரெண்டு அடி உயரம் வரை வளரக் கூடியவை. இங்கு ஈர அணுங்குகளும் செந்நிறக் கண்கள் கொண்ட மரத்தவளைகளும் புளுட்டுக் குரங்குகளும் வாழ்கின்றன. ஈர அணுங்குகளின் கொழுப்பை உருக்கிப் பெறும் எண்ணெய்யை மனிதர்களின் ஆண் குறியில் பூசினால் அதிக நேரம் கலவியில் ஈடுபட முடியும் எனும் நம்பிக்கை இங்குள்ள மக்கள் மத்தியில் நிலவுவதனால் இந்த விலங்கினம் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால் இன்று இக்காட்டில் மிகக் குறைவான அளவிலேயே ஈர அணுங்குகள் உள்ளன.

விதானப் படலத்திற்கு மேலாக வளரும் தான்தோன்றிப் படலமானது முள்ளிக்காட்டின் வடமேல் பகுதியிலேயே அதிகம் உள்ளது. மிகவும் குறைந்த அளவிலான பெரிய மரங்களே இதில் அடங்குகின்றன. நாற்பத்தைந்து தொடக்கம் ஐம்பத்தைந்து யார் நீளம் வரை இவை வளர்கின்றன. சில மரங்கள் இந்த அளவையும் விட உயரமாகவும் வளர்ந்திருக்கின்றன. சாகியமேத்தி போன்ற மரங்கள் இந்த வலயத்தில்தான் உள்ளன. இந்த மரங்களுக்கு சிறந்த வெப்பநிலையும் கடும் காற்றும் வசதியானவை. இங்கு கழுகுகள், வண்ணத்துப் பூச்சிகள், வௌவால்கள் மற்றும் குரங்குகள் போன்றவை அதிகம் வாழ்கின்றன.

செப்டம்பர் மாதத்திலிருந்து ஜனவரி வரை இங்கு அதிக மழைவீழ்ச்சி இருக்கும். இக்காலங்களில் இந்தப் பிரதேசம் எழில் மிக்க பசுமை வனமாகக் காட்சியளிக்கும். காட்டு வெள்ளம் இவ்வனப் பிரதேசத்தை ஊடறுத்துச் சென்று பண்ணையாற்றில் கலந்து நரியோடை வழியாக கடலில் சேரும். இக்காட்சியினை முள்ளிக்காட்டு மலையின் உச்சியிலிருந்து பார்க்கும்போது பரந்த நீரில் நாமும் ஒரு கல்லில் மிதந்து கொண்டிருப்பது போலிருக்கும். கண்ணுக்கெட்டிய தூரத்தில் குமுறிக் கொண்டிருக்கும் நீலக்கடல் தட்டையான திரையின் கரையில் நெழியும் ஓவியம் போலிருக்கும். கண்களை நிறைக்கும் இந்த இரட்டிப்புப் பேரானந்தம் எல்லோருக்கும் கிடைப்பதற்கரிய அனுபவம்தான்.

மாரிகாலத்தில் பறவைகள் இங்கு வருவதேயில்லை. சாதாரணமாகக் காகங்களும் சில வகைக் குருவியினங்களும் மீன்கொத்திகளும் மட்டுமே மாரிகாலத்தில் பறந்து திரிய முடியாமல் மரக்கிளைகளில் ஒதுங்கியபடியிருக்கும்.

மழை காலத்தில் முள்ளிக்காட்டு மலையில் ஏறுவது சிரமம். மலை முழுவதும் பாசி படர்ந்து எங்கும் கடும் பச்சை நிறமாகக் காட்சியளிக்கும். அது கடுமையாக வழுக்குவதனால் மழைக்காலத்தில் யாரும் ஏற முயற்சிப்பதில்லை. அசட்டுத் தீவிரம் நிறைந்தவர்களுக்கு அதுவொரு பொருட்டல்ல. மலையின் அடிப்பாகத்தைச் சுற்றியிருக்கும் தரையில் மாரிகாலத்தில் தண்ணீர் தேங்குவதனால் இந்தப்பகுதி சதுப்பு நிலம் போல மாறி விடும். அதனால் மாரிகாலத்தில் மலையடிவாரத்தை நெருங்குவது ஒரு வீரதீரச் செயல்தான். பொதுவாக இங்கு விஜயம் செய்ய கோடைகாலமே சிறந்ததென ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

இயற்கையைப் பலரும் அழிக்கும் இக்காலத்தில் பூமி வெப்பமடைவதனாலும் மனிதர்களின் அத்துமீறல்களினாலும் இயற்கை வளமான தாவரங்களும் விலங்குகளும் அழிந்து வருகின்றன. முள்ளிக்காட்டினைச் சூழ்ந்துள்ள வனப்பகுதிகள் காலநிலை மாற்றத்தினாலும் ஆட்சியாளர்களினாலும் ஆயுததாரிகளினாலும் பல்வேறு நியாயங்களின் அடிப்படையில் அழிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நடவடிக்கைகள் இந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களுக்கு பல்வேறு வகையான சுற்றுச் சூழல் பாதிப்புகளை உருவாக்கியது. இங்குள்ள மக்களின் நல்வாழ்வினுள் நிலவிய பேரமைதியை ஆதிக்கத் தரப்புகளின் செயலானது சீர்குலைக்காமல் இருக்கவில்லை.

முள்ளிக்காட்டு வலயத்து மக்கள் கரையோரங்களை அண்டியே வாழ்வதனால் இயற்கைச் சூழல் மீதான அழிப்பும் காலநிலை மாற்றங்களும் இங்கிருந்த இயல்பு வாழ்வில் பாதிப்புகளை உருவாக்கியது. இதனால் விலங்குகளினதும் தாவரங்களினதும் சீரான உயிரியல் பல்தன்மையானது நெருக்கடி மிக்கதாய் மாறியது. மனித அத்துமீறல்களால் இங்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவைகளை அதிகாரத் தரப்புகள் உணராமல் இருப்பதானது அவர்களின் இயற்கை விரோத நிலைப்பாட்டையே காண்பிக்கிறது.

ஆனாலும் சுயாதீனமான சுற்றுச் சூழல் தொண்டுப் பணியாளர்கள் இதில் அக்கறை செலுத்தி வருவது ஓரளவு திருப்தியளிக்கிறது. இந்தத் தொண்டுப் பணியாளர்கள் கிரமமாக இக்காட்டின் புவியியல் தன்மையையும் தாவர வகைமைகளையும் இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவையினங்களையும் தமது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து அவற்றின் இயல்பான தன்மைகளைப் பாதுகாக்க முயற்சியெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் முள்ளிக்காட்டு வனப் பகுதிக்குள் அவதானித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள பறவை இனங்கள் 363. இவற்றில் 143 வகைப் பறவை இனங்கள் இந்தப் பிராந்தியத்துக்குரிய பூர்வீகச் சான்றுகளைக் கொண்டவை. 119 வகைப் பறவை இனங்கள் பங்களாதேஷ், பப்புவாநியூகினி, அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வருபவை. இடம்பெயர்ந்து வரும் இப்பறவை இனங்கள் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் முட்டையிட்டு அடைகாத்து, குஞ்சு பொரித்து சிறிது காலத்தின் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு புதிய சந்ததிகளுடன் திரும்பிச் செல்கின்றன. இங்கு அவதானிக்கப்பட்டுள்ள 101 வகையான பறவை இனங்கள் நிரந்தரமாகத் தங்குமிடமற்ற அலைவுக்குரியவையாகும்.

பறவைகளின் ஆராய்ச்சிகளுக்காகவே தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட தயானந்த அதுரலியவின் Green heaven in danger எனும் ஆராய்ச்சிக் குறிப்புகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் காலநிலை மாற்றங்களினாலும் போர் அனர்த்தங்களினாலும் முள்ளிக்காட்டு வனப்பகுதியில் அருகி விட்ட பறவை இனங்களின் பட்டியல் இது.

* வள்ளிக்கோழி – பழுப்பு நிறத்தில் கறுப்பு நிறப் புள்ளிகளும் வெள்ளைப் புள்ளிகளும் கொண்ட பறவையினம். குறுகிய தூரத்திற்கு மட்டும் பறக்கக் கூடியது. பற்றைகளுக்குள் கூடு கட்டி வாழும்.

* காட்டுச்செங்காடை – இறக்கைகளில் சிவப்பும் மஞ்சளும் கலந்திருக்கும். உடலின் கீழ்ப்பாகம் கறுப்பாக இருக்கும். சீகிலமுண்டம், தம்பரமேகா போன்ற மரங்களில் மட்டுமே தங்கி வாழும்.

* மோகினிப்புறா – இறக்கைகளும் நெஞ்சுப்பகுதியும் சாம்பல் நிறமாக இருந்த போதும் கழுத்தும் தலைப்பாகமும் மஞ்சள் நிறத்திலிருக்கும். சொண்டு சற்று நீண்டிருக்கும்.

* பச்சைக்கன்னி – பச்சைத் தலையும் மஞ்சள் வயிற்றுப்புறமும் கொண்ட கொக்கு வகையினம். ஓடைகளிலுள்ள மீன்களையும் புழுக்களையும் தின்று வாழும்.

* சிறுஞ்சிக்கிளி – வண்ணமயமான கிளியினம். பச்சை, சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கொண்ட பறவை. சிம்புடுவட்டா மரங்களிலுள்ள பொந்துகளில் வாழும்.

* நீலநாரை – பச்சையும் சாம்பல் நிறமும் தலையில் இருக்கும். நீல நிற இறக்கையில் மஞ்சள் புள்ளிகள் தென்படும். நீண்ட சிறகுகளைக் கொண்டது.

* தும்பிக்குருவி – கரும்பச்சை உடலும் சிவப்புத் தலையும் வயிற்றில் வெள்ளை நிறமும் கொண்ட சிறிய பறவையினம். அடர்ந்த பற்றைகளாய் உள்ள செடிகளுக்குள் கூடு கட்டி வாழும்.

* முடுக்குஆந்தை – மேற்புற இறக்கைகள் கறுப்பாக இருக்கும். வயிற்றுப்புறம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். செந்நிறக் கண்களைக் கொண்டது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை புராதன முள்ளிக்காட்டு நகரம் எண்பது வீதமான காடுகளால் சூழப்பட்டதாகவே இருந்திருக்கிறது. மெமூனாவின் ஆட்சிக் காலம் தவிர்த்து இப்பிரதேசத்தை இறுதியாக ஆண்ட மன்னனின் காலம் வரைக்கும் இப்பிரதேசத்தின் இயற்கைப் பல்வகைத் தன்மையும் மக்களுக்கிடையிலான சௌஜன்ய நிலையும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்தப் பெரும் நிலப்பரப்பை ஐரோப்பியரின் துணையுடன் பெரும்பான்மையினர் கைப்பற்றியதன் பின்னர்தான் அனைத்தும் உருக்குலையத் தொடங்கியது. அந்த ஆட்சி நிருவாகங்களில் ஏற்பட்ட பாரபட்சங்கள் சிறுபான்மையினரை மிகுந்த வெறுப்புக்குள்ளாக்கியது. இதன் மூலம் உருவான உள்நாட்டுப் போரினாலும் அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெற்ற சுற்றுச் சூழல் கொள்ளைகளினாலும் முள்ளிக்காடு கடும் பாதிப்புக்குள்ளானது. தற்போது இங்குள்ள காடானது பதினைந்து வீதமாகி அழியும் நிலையில் இருக்கிறது.

ஆயுதமேந்திய இரண்டு விதமான ஆதிக்கத் தரப்புகளினாலும் காவலரண்களுக்காகவும் கட்டட நிர்மாணங்களுக்காகவும் பெரும்பகுதிக் காடுகள் அழிக்கப்பட்டன. காவலரண் என்ற போர்வையில் திருட்டு மர வியாபாரமும் பிரமாண்டமாக இடம்பெற்றதனால் வனப்பு மிக்க முள்ளிக்காடு தனது அடர்ந்த பசுமையை இழந்தது.

அதேபோன்று இராணுவத்தின் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏராளமான விருட்சங்களும் கொடிகளும் பற்றைகளும் கனரக இயந்திரங்களினால் நிர்மூலமாக்கி தீயிட்டு எரிக்கப்பட்டது. ஆனாலும் விமானக் குண்டு வீச்சுகளின் மூலம்தான் மிக அதிகமான மரங்கள் அழிந்தன.

முள்ளிக் காட்டுக்கு மக்கள் மத்தியில் இன்னொரு பெயருமுண்டு. அது மெமூனா மலைக்காடு என்பதாகும். இந்தப் பெயர் வரக் காரணம் ஏன் என்பது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆனாலும் பல்வேறு வகையான வாய்வழிக் கதைகளும் சில வரலாற்று ஆதாரங்களும் இருப்பதாக இப்பிரதேச மக்கள் நம்புகிறார்கள். ஆப்பிரஹாமின் எழுனூற்றைம்பதாவது பரம்பரையில் வந்த மெமூனா எனும் பௌராணிகப் பெண்ணரசி கிழக்காசியாவுக்கான மதம் பரப்பும் பயணத்தில் இந்தக் கடல் வழியாக வந்தபோது தனது மரக்கலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இங்கு ஒதுங்க வேண்டியேற்பட்டது.

நீண்ட காலம் இங்கு தங்கிய மெமூனா இங்கிருந்த சுதேசிப் பெண்களைத் தனது சூட்சுமமான பௌராணிகப் போதனைகள் மூலம் விரைவாக மதமாற்றம் செய்தாள். இது அவளது ராணித்தந்திரத்தின் முதல் அணுகுமுறையாகும். மதம் மாறிய பெண்கள் மூலமாக தனது ஒவ்வொரு காரியங்களுக்குமான பொறிகளை விதைத்தாள்.

ஆண்களை மதம் மாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காததினால் அடுத்த கட்டமாக மதம் மாறிய பெண்களின் கட்டளைகளுக்கு இணங்க மறுத்த ஆண்களுக்கு கலவி தடை செய்யப்பட்டது. இதன்போது பெரும் கலவிப் பஞ்சம் ஏற்பட்டது. பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையில் விரிசல்கள் உண்டாகியது. இது வேறொரு உறவுப் பாரம்பரியத்தை உருவாக்கத் துணைபோனது. அங்கு ஒருபாலுறவு தழைத்தோங்கத் தொடங்கின. பிறப்பு வீதம் குறைந்து போனதால் நாளடைவில் மக்களின் தொகையில் வீழ்ச்சியேற்படும் அபாயம் உருவானது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தாள் மெமூனா.

அப்போது கடும் பெண்ணுடல் பசியில் அலைந்த ஆண்களைப் பார்த்து அவள் ஒரு அறைகூவல் விடுத்தாள். தனது கொள்கைகளை முதலில் ஏற்றுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தனது எழில் மிகு மேனியைக் கலவிக் களிப்புக்கென பகிர விரும்புவதாக அறிவித்தாள். அந்தத் தருணத்தில் அங்கிருந்த ஆண்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு மதம் மாறிக் கலவி கொள்ள ஆயத்தமாகினர்.

இக்காலப் பகுதியில் மெமூனாவின் தந்திரத்தினால் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மதம் மாறினர். இதன் பின்னர் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு விட அவர்கள் அனைவரும் தம்மை ஆளும் பொறுப்பை மெமூனாவிடம் ஒப்படைத்தனர்.

மதத்தினை ஒரு சுரண்டல் கருவியாகவும், கலவியை அங்கிருந்த மக்களை அடிமைப் படுத்தும் சாதனமாகவும் பயன்படுத்திய மெமூனாவின் திட்டம் வெற்றி பெற்றது. இதனால் முள்ளிக்காட்டின் வளங்கள் முழுவதையும் சுரண்டிக் கொள்ளையிடும் அதிகாரம் அவளிடம் வந்து சேர்ந்தது. பின்னர் அவளது தூர தேசத்திலிருந்து வளங்களைக் கொள்ளையிடும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இங்கிருந்த வளங்களைச் சட்டபூர்வமாக அவர்கள் தமது சொந்த நாட்டிற்குக் கொண்டு செல்லத் தொடங்கினர்.

முள்ளிக்காட்டை ராசதானியாகக் கொண்டு மெமூனா நெடுங்காலம் ஆட்சி செய்தாள். அவளது அரியணையின் மாளிகையே இன்று மெமூனா மலைக்காடு என அழைக்கப்படுகிறது.

மெமூனாவின் ஆட்சிக் காலத்தில் நிலவிய பல்வேறு நிகழ்வுகளும் இங்குள்ள மலைக்குகையில் சிற்பங்களாகவும் கல்வெட்டுகளாகவும் குகையோவியங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் இங்கிருந்த மக்களின் தொன்மையான பண்பாட்டுச் சாரங்களை அறிந்து கொள்ளலாம். இதிலுள்ள மொழியின் மூல அம்சங்களை ஆய்வு செய்து பெறப்பட்ட நேர்த்தியான நவீன மொழிபெயர்ப்புகள் சில :

* உடலின் பரவசங்களில் இருந்துதான் ஆன்மீகம் முளைக்கிறது. சமயங்களின் குறுகலான சட்டகங்களுக்குள் உடலை அடைக்க முடியாது.

* தியானமும் அமைதியும் சடங்குகளில் இல்லை. மனங்கள் லயித்து அவயவங்கள் மருவினால் முக்தியின் முடிவைக் காணலாம்.

* தின்ற உணவு மலம் ஆவது போல பண்பாடுகளும் கலாசாரங்களும் முடிவில் நாற்றமெடுப்பவைதான்.

* எதுவும் நிரந்தரமில்லை, நம்பிக்கைகளைப் போல.

இது போன்ற பலநூறான தொன்மை ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வெளியுலகத்திற்கு இன்னும் தெரியப்படுத்தப்படாமல் இந்தக் காட்டின் குகைகளில் இருக்கிறது. இவை வெளிப்படுத்தப்பட்டால் இங்குள்ள மக்களின் பண்டைய நாகரிகம் உலகத்திற்கும் தெரிந்து விடும். இவர்கள் தனித்துவமான வரலாறுகளைக் கொண்ட தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும் எனும் உண்மையை மறைக்க விரும்பிய பெரும்பான்மை ஆதிக்கத் தரப்புகள் தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் இப்பிரதேசத்தைக் கைப்பற்றினர்.

தமது அதிகாரத்திற்கு இசைவான வழிகளில் புதிய வரலாறுகளை வடிவமைக்கத் தொடங்கினர். இப்பிராந்திய மக்களின் அரசியல் உரிமைகளையும் வாழ்வியல் உரிமைகளையும் படிப்படியாகப் பறிக்க முயன்றனர். தமது பூரண இறைமையை நிலைநாட்டுவதன் மூலம் ஒரு காலத்தில் மதம் மாறிய தமது மூதாதையர்களின் தற்காலச் சந்ததிகளை மீண்டும் தமது பக்கம் கொண்டு போகலாம் என அவர்கள் எண்ணினர். இங்கிருந்த சுதேச சமூகம் யோனி வழியில் மதம் மாறியதைச் சகித்துக் கொள்ள முடியாத பிந்திய நாகரிக ஆதிக்கத் தரப்புகள் அது பற்றிய வரலாற்றுச் சான்றுகளை அழிக்க நினைத்தனர். அதற்குப் போரை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.

•••

ஆசீர்வாதத்தின் வண்ணம் ( ஆசீர்வாதர் ரங் ) – சாளை பஷீர்

“ பிரம்மாவின் மகன், அப்துல் கனியின் மகன் இருவரும் கழுத்தை கட்டிக் கொண்டு நதி நீரில் விளையாடுவோம். இது ஹிந்து நதி இல்லையா ! பிரம்மா எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்று பார்க்கிறேன்! அவரே நேரில் வந்து ‘ இந்த நதியில் உன் மகன் நீராடக் கூடாது, இது ஹிந்து நதி ‘ என்று சொல்கிறாரா, பார்க்கிறேன்….”

“இப்போது அவளுடைய பார்வை ஹஸினாவின் நெற்றிக் குங்குமத்தின் மீது சென்றது. ஒரு முஸ்லிம் பெண்ணின் நெற்றிப் பொட்டு. தன்னுடைய முதல் ஆசீர்வாதத்தின் சின்னம். அவள் தன் நடுங்கும் உதடுகளை ஹஸீனாவின் நெற்றிப் பொட்டின் மீது பதித்தாள்!…. “

—- ’ஆசீர்வாதத்தின் வண்ணம் ‘

‘ நீலகண்ட பறவையை தேடி ‘ புதினத்தின் அஸாமிய நீட்சி என்று கூட ‘ஆசீர்வாதத்தின் வண்ணம்’ புதினத்தை சொல்லலாம் . நாட்டு பிரிவினையின் வேர்களில் ஊறிக் கிடக்கும் நச்சை உரித்து போடும் எழுத்து.

இணைந்தெழும் காலையும் கதிரவனும் போல ஹிந்துக்களும் முஸ்லிம்களும் விரவி பிணைந்திருக்கும் வாழ்க்கையற்ற பெங்காலையும் அஸாமையும் ஏன் முழு இந்தியாவையும் நினைத்து கூட பார்க்க முடியாது.

வன்மத்துடன் வெட்டி பிளக்கப்பட்ட தாய் மண்ணின் காயங்களின் வேர்களில் உள்ளோடிய வெறுப்பின் நச்சு படிமங்கள் சிதையாமல் அப்படியே அழுந்திக் கிடக்கின்றன. திறப்பு தேடி மண்ணில் விழும் புத்தன் விதைகளை தன் அழுகிய விரல்களின் கூர் நகங்களால் துளைத்திடும் ஒரு கொடுந்தருணத்திற்காக அவை காத்துக் கிடக்கின்றன.

இந்த புதை கிடங்கின் நச்சு தேக்கமானது அரசியல் சமூக அறிவுத்தள செயல்பாடுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இவைகள் செய்யத் தவறிய பெரும்பணியை இலக்கியத்தின் வழியாக படைப்பு மனதின் வழியாக செய்திருக்கிறார் அருண் சர்மா. இதற்கு மலையை ஒத்த மனம் தேவை.

பிரம்மபுத்ரா நதியில் பயணிக்கும் மன்ஸூர், தற்செயலாக ஒரு நிலப்பரப்பை கண்டடைகின்றான். பிரம்மபுத்ரா நதியின் கிளை நதியான குரயீ நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கின்றது அந்த புதிய நிலப்பரப்பு. அவனுடன் பல முஸ்லிம்களும் அந்த பூமியில் குடியேறுகின்றனர். அந்த நிலத்தை கொத்தி திருத்தி வளங்கொழிக்கும் ஒன்றாக மாற்றுகின்றனர். பின்னர் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக நேபாளிகளும் குடியேறுகின்றனர்.

அந்த புதிய நிலப்பரப்பிற்கு குரயீகுடி என்று பெயரிடப்படுகின்றது. இதனருகிலேயே அமைந்திருக்கும் இன்னொரு கிராமமான ஸோனாரூச்சுக் கிராமத்தில் ஏற்கனவே ஆட்கள் வசித்து வருகின்றனர்.

ஸோனாரூச்சுக்கில் கஜேன் என்கிற ஹிந்து இளைஞனும் அவனது வயதான பாட்டியும் வசித்து வருகின்றனர். கஜேனுக்கு தாயுமில்லை தந்தையுமில்லை. பாட்டியோ பழஞ் சடங்குகளில் ஆழ்ந்த பற்றுள்ளவள். வாட்டசாட்டமான கஜேன் காணாமல் போன தனது தந்தையைப்போலவே துணிச்சலானவன். கண் முன்னே நடக்கும் அநீதியை உடல் வலுவுடன் தட்டிக் கேட்பவன்.

ஸோனாரூச்சுக் கிராமத்தின் தலைவரான கர்க்கீ, அனைத்து போக்கிரித்தனங்களையும் உடைய ஆசாமி. அவருக்கு அதே போல துர் நடத்தைகளுடைய யாதவ் பௌரா, மோத்தி மிஸ்த்திரி , தீன் துத்திராம் போன்ற ஆட்களும் இயல்பான கூட்டாக அமைகின்றனர். துர்நடத்தையுடன் கூடவே கள்ளும் விற்கும் மோத்தி மிஸ்த்திரியின் மனைவியுடன் யாதவ் பௌரா பகிரங்கமாக முறையற்ற தொடர்பபையும் பேணி வருகின்றான்.

கிராமத்திற்கு பொதுவான குளத்தை கர்க்கீ தனது செல்வாக்கினாலும் வலிமையினாலும் அபகரிக்கின்றார். அதை கஜேன் தட்டிக் கேட்கின்றான். அன்றிலிருந்து கிராமத்தின் தீய கூட்டணியினருக்கும் கஜேனுக்கும் இடையிலான உறவு வெளியில் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் உள்ளுக்குள் முறுகிக் கொண்டே செல்கின்றது

மீன் பிடிப்பதற்காக குரயீகுடி கிராமத்திற்கு வழமையாக கஜேன் செல்லுமிடத்தில் மன்ஸூரும் அவனது குடும்பத்தினரும் நட்பாகின்றனர். ஒரு நாள், காலில் காயம்பட்ட மன்ஸூரின் மகளான சிறுமி ஹஸீனாவை கஜேன் தனது வீட்டில் தங்க வைக்கின்றான். முஸ்லிம்கள் விஷயத்தில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் கஜேனின் பாட்டிக்கு இது ஒவ்வாமையை அளித்தாலும் மனதின் ஆழத்தில் சிறுமி ஹஸீனாவின் மீதான பாசமும் நேசமும் துளிர் விடுகின்றது. தீண்டாமையை மென்மையாக கடைபிடித்துக் கொண்டே ஹஸீனாவிடம் அன்புமும் செலுத்தி வருகின்றாள் பாட்டி.

இதற்கிடையே இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் இருண்ட கரங்கள் குரயீ குடீ, ஸோனாரூச்சுக் கிராமங்களையும் எட்டுகின்றது.

குரயீகுடியும் குரயீ நதியும் அவர்களது உள்ளங்களிலும் உணர்விலும் இரண்டற கலந்த நிலையில் முஸ்லிம் லீக் போதகர்களின் பாக்கிஸ்தான் கோரிக்கையை குரயீகுடி முஸ்லிம்கள் திடமாக நிராகரித்து விடுகின்றனர். தங்களது வேர்கள் எங்கயோ இல்லை. அவை ஊன்றியிருப்பது தங்களது கால்களுக்கு கீழேதான் என்பதை அவர்களின் ஆன்மாவின் உள்ளுறை குரல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் ஸோனாரூச்சுக் கிராமத்திலோ பிரிவினையின் வெறுப்பானது தனது கூட்டாளிகளை சரியாக இனங்கண்டு கொண்டது. கர்க் கும்பலானது வீர் சாவர்க்கர், கோல்வல்கர், ஆர்.எஸ்.எஸ் ஆகியோரின் வெறுப்பு போதனைகளின் பால் மனங்கொள்வதுடன், அவர்களே அதன் பாத்திரங்களாகவும் பரப்புரையாளர்களாகவும் மாறி விடுகின்றனர்

ஊர் குளத்தை வளைத்து வாயில் போட்ட கிராமத்தலைவர் கர்க்கிற்கும் அவரது கும்பலுக்கும் நீண்ட நாட்களாக குரயீகுடி கிராமத்தின் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கின்றது. பிரிவினையின் கரிய நிழலானது இந்த இரு கிராமங்களையும் தீண்டியவுடன் குரயீகுடியை நாட்டுப்பற்றின் பெயரால் கைப்பற்ற கர்க் விழைகின்றார். அதை அவரின் வாயும் உறுதிப்படுத்துகின்றது. கஜனோ, இந்த அநீதியை நடந்தேற விட மாட்டேன் என ஆக்கிரமிப்பாளர்களின் முகத்திற்கு நேராகவே அறைகூவல் விடுக்கின்றான்.

இதற்கிடையில் கர்க், யாதவ் பௌரா கும்பலானது குரயீகுடி கிராமத்தை தீக்கிரையாக்குகின்றது. நேபாளிகளின் வீடுகளைத் தவிர அனைத்து முஸ்லிம்களின் குடிசைகளும் தீய்ந்தழிந்து விடுகின்றன. நெருப்பின் கருக்கும் கரங்களுக்கு தப்பிய முஸ்லிம்கள் அனைவரும் வெட்டிக் கொல்லப்பட்டு ஆற்றில் போடப்படுகின்றனர். அவர்களின் நகையும் பணமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. இதனை கேள்விப்பட்ட கஜேன் கையாலாகாமல் உன்மத்தங்கொள்கின்றான். கொலைத்தாண்டவத்தின் குற்றவாளிகளை வாளின் மூலம் தண்டிக்க விழைகின்றான். மனதின் கொந்தளிப்பு அடங்கியதும் வாளேந்தியதின் தவறை உணர்ந்து வருந்துகின்றான்.

குரயீகுடி கிராமத்தை கொளுத்திய கொலையாளிகளை சிறையிலடைக்காமல் வெறுமனே நிற்கின்றது காவல்துறை.

கொலையாளிகளை மிரட்டியது, அவர்களின் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் நடந்தது, மோத்தி மிஸ்த்திரியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது என மூன்று பொய் வழக்குகளில் கஜேனை விரைந்து சிறைபிடித்து வதைக்கின்றது காவல்துறை.

வழக்கு விசாரணைக்கு வரும்போது, இரண்டு வழக்குகளில் ஒன்றில் விடுதலையும் மற்றொன்றில் சிறிய தண்டத்தொகையுமாக தீர்ப்பாகின்றது. பாலியல் வன்கொடுமை வழக்கில் மோத்தி மிஸ்த்திரியின் மனைவி, கஜேன் மீதான குற்றச்சாட்டை உறுதியாக மறுத்து விட்டாள். வழக்கறிஞரின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பணியாமல் , கஜேன் மிகவும் நல்லவன் என நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை பதிவு செய்தாள். எனவே இவ்வழக்கிலும் கஜேனுக்கு விடுதலை கிடைத்துவிட்டது .வெளிவரும் கஜேன் ஓய்ந்திருக்கவில்லை. தொடர்ந்து வெறுப்பு அணிக்கு எதிராக இயங்குகின்றான்.

குரயீகுடியில் மன்ஸூரும் அவனது மனைவியும் கொல்லப்பட்டு விட்டனர். மன்ஸூரின் மகளாகிய ஹஸீனா, கஜேனின் வீட்டில் அடைக்கலம் புகுகின்றாள். முழு ஆதுரத்துடன் அவளை தன் மெலிந்த கரங்களில் பொதிந்து கொள்கின்றாள் பாட்டி..

குரயீகுடி அழித்தொழிப்பின் ஒரே நேர் சாட்சியான ஹஸீனாவையும் வெறுப்பு மனிதர்கள் குறி வைக்கின்றனர். அவள் தற்சமயம் சிறுமி இல்லை. அவளை தனது வீட்டில் வைத்து தொடர்ந்து பாதுகாப்பதில் உள்ள பலமுனை நெருக்கடிகளை பற்றி சிந்தித்ததில் அவளுக்கு மணமுடித்து வைப்பதுதான் ஒரே பாதுகாப்பு என தீர்மானிக்கின்றான் கஜேன். குரயீகுடியில் ஒரு முஸ்லிம் கூட உயிருடன் எஞ்சியிருக்கவில்லை. தொலைவான இடத்தில் போய் தேடியதிலும் பொருத்தமான வரன் அமையவில்லை.

யாரோ தெரியாத ஒருவரிடம் ஹஸீனாவை திருமணம் என்ர பெயரில் தள்ளி விடுவதை விட தானே முஸ்லிமாகி அவளை மணந்து கொண்டால் என்ன ? என்ற கோணத்திலும் சிந்திக்கின்றான் கஜேன். அப்படி மதம் தழுவி அவளை திருமணம் செய்து கொள்ளலாம்.என்ற தன் விருப்பத்தை பாட்டியிடம் தெரிவித்தான். அவளோ அதைக்கேட்டு அருவருப்படைகின்றாள்.

சரி, கடைசியாக ஒரு வழி, ஹஸீனாவை ஹிந்துவாக மதமாற்றினால் ஒரு ஹிந்து இளைஞனை கட்டி வைக்கலாம்தானே? என்று புதியதாக மனதில் கஜேனுக்கு தோன்றுகிறது. ஹிந்து மத விற்பன்னர்கள் இருவரிடம் போய் சம்மதம் கேட்கின்றான். அவர்களோ அதற்கு வழியில்லை என மறுத்து விடுகின்றனர்.

நீதியின் பக்கம் எப்போதும் சார்ந்திருக்கும் அவனுடைய மனதானது ஹஸீனாவின் உயிரையும் மானத்தையும் எதைக் கொடுத்தாவது காப்பாற்றியே தீருவது என்ற தீர்க்கமான முடிவிற்கு வருகிறது. கஜேன் அப்துல் கனியாகின்றான்.

முஸ்லிம்கள் விஷயத்தில் விலகல் மன நிலை கொண்ட பாட்டிக்கு இந்த மதமாற்ற, திருமண நிகழ்வுகள் நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் பேரனையும் அவனது மனைவி ஹஸீனாவையும் வெறுக்க அவளால் இயலவில்லை.

தங்களுக்கு எதிரான சிறு முணுமுணுப்பையும் தேய்த்து நசுக்கும் வெறுப்புக்கும்பல் மோத்தி மிஸ்த்திரியின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை. வெளிப்பார்வைக்கு அறம் பிறழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் உள்ளுக்குள் அறத்தின் நீதியின் மீதான பிடியை தனது ஆன்மாவின் மையத்துடன் பிணைத்து வைத்திருந்த அவளை அவளது கணவன் மோத்தி மிஸ்த்திரியே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்று விடுகின்றான். இவ்வழக்கு காவல்துறையினரால் தற்கொலை என பதியப்படுகின்றது.

மாபாதக தேசபக்த வெறுப்புக் கும்பலுக்கு கஜேன் ஒரு தொடர் தடங்கலாகவே இருக்கின்றான் என்றவுடன் ஓர் இரவின் மறைவில் அவனையும் அழித்தொழித்து விடுகின்றனர். பேரனின் கொலையானது பாட்டியின் மனதிற்குள் ஒட்டியிருந்த முஸ்லிம் விலகலை முற்றிலுமாக துடைத்தெறிந்து விடுகின்றது.

‘ஆசீர்வாதத்தின் வண்ணம்’ புதினத்தில், வாழ்வின் வண்ணமிகு முரண்கள் சேர்க்கைகளுக்கிடையே வெறுப்பாற்றின் பெரு ஓட்டத்திற்கிடையே வாழ்க்கை தளிரானது தீய்க்கப்பட இயலாத சாசுவத மென்னிதழ்களுடன் தாரகையைப்போல இளம் நகையுடன் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது

புரோகிதர், அவரின் இளம் விதவை மகள், மருத்துவர், விடுதலைப்போராளி & வழக்கறிஞர் & நீதிபதி என கதையின் கிளையோட்டங்களில் வாழ்வின் எண்ணற்ற சொல்லி முடியாத தருணங்கள் அமர்ந்திருக்கின்றன. சிற்பங்களுக்குரிய உள்செதுக்கலாக நிற்கின்றன. அந்த செதுக்கல்களின் வளைவும் நெளிவும் நிமிர்வும் புது புது விரிவுகளுக்காக காத்திருக்கும் புழைகள். வாசகர்கள் உள்தேடல் விரிவுகளுக்கான தாவு தளங்கள்.

சாஹித்ய அகாதமி விருது பெற்ற இந்த புதினத்தின் ஆசிரியரான அருண் சர்மா பிராமண சமூத்தில் பிறந்து வளர்ந்தவர். அகில இந்திய வானொலியில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். கல்விப்புலம் சார்ந்தும் சிறப்பாக இயங்கியுள்ளார். சாதிய, வகுப்பு ஓர்மை, மேட்டிமை, அரசு ஊழியர்களுக்கே உரிய எண்ணெய் படல குணம் போன்றவற்றையெல்லாம் மிக நேர்மையாக தன் படைப்பில் கடந்திருக்கின்றார் ஆசிரியர்.

கஜேனின் பாட்டி தன் முதிர்ந்து கனிந்த வயதின் படையலாக ஹஸீனாவின் துளிர் கரங்களில் உவந்தளித்த தேங்காய், சோளப்பொரி, பொரியுருண்டை, வெல்ல அவல், லட்டு, இனிப்பு அதிரசத்திற்காக மனமும் வாயும் ஏங்குகின்றது.

***

ஆசீர்வாதத்தின் வண்ணம் ( ஆசீர்வாதர் ரங் )

அஸாமி மொழி புதினத்தின் தமிழாக்கம்

ஆசிரியர் : அருண் சர்மா

விலை ரூ.225/=

வெளியீடு: சாஹித்ய அகாதமி, தொலைபேசி: 044 24311741, 24354815

88888888888
&&&

Shalai_basheer@yahoo.com

விருட்சம் நினைவுகள் 10 – அழகியசிங்கர்

சிறு பத்திரிகையோடு தொலைந்து போன எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சிறு பத்திரிகையுடன் தொலைந்து போகாத எழுத்தாளர்களும் உண்டு.

அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதியவர்கள் பெரிய பத்திரிகைகக்கு மட்டும் மாறுபவர்களாகப் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

சுஜாதா, பாலகுமாரன் சிறுபத்திரிகையில் எழுதியவர்கள். சுஜாதாவின் ஒரு கதை தனிமை கொண்டு முதன் முதலில் நகுலன் தயாரித்த குருஷேத்ரம் இலக்கியத் தொகுப்பில் வெளிவந்தது.

க.நா.சுவுடன் ஒரு கட்டுரை வாங்கிப் போட வேண்டுமென்று நினைத்து மைலாப்பூரில் உள்ள க நா சு வீட்டிற்குச் சென்று பார்த்தேன். அவர் உடனே எழுதி வைத்த ஒரு கட்டுரையைக் கொடுத்தார்.

அந்தக் கட்டுரையின் பெயர் புதுக்கவிதையின் எல்லைகள் என்று. விருட்சத்திற்காக க நா சு கொடுத்த அக் கட்டுரையை இப்போது எடுத்துப் படிக்கிறேன். அதை ஏன் பிரசுரம் செய்யாமல் விட்டுவிட்டேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். இரண்டாவது இதழிலிருந்து கோபிகிருஷ்ணன் விலகினாலும், மற்றவர்களுடன் சேர்ந்து படைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன். அதில் க நா சு கட்டுரையையே மற்றவர்கள் வேண்டாம் என்றார்கள்.

ஞானக்கூத்தனுக்கு அக் கட்டுரை விருட்சத்தில் பிரசுரம் ஆகவில்லை என்பதில் வருத்தம். அதன்பின் அவர் அக் கட்டுரையை ழவின் கடைகி இதழான 28 ல் பிரசுரம் செய்தார். இது சிறு பத்திரிகையில் பெரிய பிரச்சினை. பலர் சேர்ந்து முடிவெடுக்கும்போது பல நல்ல படைப்புகளை நாம் விட்டுவிட வேண்டும்.

ஒன்றிரண்டு இதழ்களுக்குப் பிறகு விருட்சம் என் பொறுப்பில் வரத் துவங்கியது. இன்று தனி மனிதனாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்.

அக் கட்டுரையில், ‘புதுக்கவிதை என்று சொல்லும்போது ஷண்முகசுப்பையால, நகுலன், ஞானக்கூத்தன், இவர்களோடு மயன் (நான்) ஏற்படுத்தித் தந்த ஒரு மரபு சோதனைக்கட்டத்தைத் தாண்டி கவிதை என்கிற கட்டத்தை எட்டி விட்டது,’ என்கிறார்.

இதை அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற ரீதியில் நாங்கள் யோசித்து இக் கட்டுரையைப் போடக்கூடாது என்று முடிவெடுத்தோம்.

இதை ஞானக்கூத்தனிடம் தெரிவித்தபோது, அவருக்கு என் மீது கோபம். அவர் கட்டுரையில் அவருடைய கருத்தைத் தெரிவிக்கிறார். அதைப் பிரசுரம் செய்யாமல் விடுவது தவறு,ý உண்மையில் இந்தத் தவற்றை நான் செய்திதக்கக் கூடாது. க.நா.சு எவ்வளவு பெரிய எழுத்தாளர். . ஆனால் என் தவற்றை ழ பத்திரிகையில் பிரசுரம் செய்ததிலிருந்து சரி செய்து விட்டார்.

ஒரு துயரமான நிகழ்ச்சி நடக்காமலில்லை. க நா சு அந்தத் தருணத்தில் தில்லியில் இறந்து போனதுதான் அந்தத் துயரமான நிகழ்ச்சி. இந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யாமல் போய்விட்டேனே என்ற வருத்தத்துடன் க நா சு ஓவியத்தை வெளியிட்டு 3வது இதழ் விருட்சம் கொண்டு வந்தேன்.

க நா சு தன் கட்டுரையில் ஒரு இடத்தில், ‘பிச்சமூர்த்தி, கண்ணதாஸன் இருவரும் விஷய எல்லைகளைப் பழைய அளவில் ஏற்றக்கொண்டதாலேயே கவிதை என்று செய்தாலும் அவர்களுக்குக் கவிதை கை வரவில்லை என்று சொல்ல வேண்டும்,’ என்று குறிப்பிடுகிறார்.

என்றெல்லாம் க நா சு எழுதியிருப்பதால், அக் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும், க நா சு என்ற மூத்த எழுத்தாளர் கொடுத்த ஒரு கட்டுரையைப் பிரசுரம் செய்யாமல் விட்டது தவறு என்று இப்போதும் உணருகிறேன். அதை நிவர்த்திச் செய்யும் விதமாக ழ பத்திரிகையில் வெளிவந்ததை மீள் பிரசுரமாக விருட்சம் இதழில் வெளிவந்ததை இப்போது திரும்பவும் பிரசுரம் செய்யலாமென்று நினைக்கிறேன். இதோ 107வது இதழ் விருட்சத்தில் பிரசுரம் செய்ய உள்ளேன்.

(இன்னும் வரும்)

கலைஞரின் மதம்! – கோவி.லெனின்

”அவர் ஏன் இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லவில்லை. முஸ்லிம்களின் ரம்ஜான் மாதத்து இஃப்தார் நோன்பில் கலந்துகொள்கிறாரே, கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கெடுக்கிறாரே, வெளிநாட்டு மதங்களை ஆதரிப்பவர், இந்து மதத்திற்கு மட்டும் விரோதியாக செயல்படுவதுதான் பகுத்தறிவா?”

-கலைஞர் உயிருடன் இருந்தபோதும், இப்போதும் அவரை நோக்கி எழுப்பப்படுகின்ற கேள்வி இது. அதற்கான விடை மிகவும் எளிமையானது.

இஸ்லாமும், கிறிஸ்தவமும் அந்நிய நாட்டு வந்த மதங்களாக இருக்கலாம். ஆனால் அந்த மதங்களைச் சார்ந்த அப்துல்லாவும் ஆபிரகாமும் தமிழ்நாட்டுக்காரர்கள். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுபவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாக இருக்கலாம். ஆனால், அந்தப் பண்டிகையை முன்னிறுத்தும் இந்து மதம் என்பது இந்த மண்ணுக்கு அந்நியமானது. அதற்காக சொல்லப்படும் புராணக் கதை என்பது தமிழ் பண்பாட்டுக்கு விரோதமானது. இதைத்தான் கலைஞர் சொல்லாமல் சொன்னார், ரம்ஜான்-கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதன் மூலமாகவும், தீபாவளி உள்ளிட்ட இந்துப் பண்டிகைகளுக்கு அமைதியாக இருந்ததன் மூலமாகவும்!

பெரியாரின் குருகுலத்தில் அவர் பெற்ற பயிற்சி இது. திராவிட இன அடையாளம் தொடர்பான ஆய்வுகளின் விளைவு. இந்து மத புராண கதாபாத்திரங்கள் பேசுகின்ற நுட்பமான அரசியலை, பொதுமக்களின் முன் வெளிப்படையாகப் போட்டு உடைத்தவர் பெரியார். அதனை அழகு தமிழில் பண்டிதரும் பாமரரும் உணரும்படி செய்தவர் அண்ணா. அரசியல்களத்தின் சவால்களுக்கிடையிலும் அதனைக் கடைப்பிடித்தவர் கலைஞர்.

இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இராம லீலா கொண்டாடப்பட்ட நேரத்தில், தமிழ்நாட்டில் இராவண லீலா என்ற எதிர்க்குரலுடன் புதிய விழா நடத்திக் காட்டியவர் பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத்திற்குத் தலைமையேற்ற மணியம்மையார். அரசியல்-பண்பாட்டுத் தளங்களில் அது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால், டெல்லியில் இராமலீலா கொண்டாடப்படும் இன்றைய சூழலிலும் பக்கத்தில் உள்ள மத்தியபிரதேசம், ஜார்கண்டு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இராவணனைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது பல ஆண்டுகளாக அவர்கள் கடைப்பிடிக்கும் பண்பாடு. இராவணன் எங்கள் மன்னன்-மண்ணின் மைந்தன்-எங்கள் ஊர் மருமகன் என்ற பல கோணங்களில் அந்தப் பழங்குடி இனத்தவர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மீது அரசியல் வெளிச்சம் படாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

முன்தோன்றிய மூத்த குடி என்ற பெருமை கொண்ட தமிழ்ப் பண்பாட்டிற்கும் இராவணன் மன்னன்தான். அவர்களின் பாட்டன்தான். அவன் திராவிட இனத்தவன் என்பதால் அரக்கனாக, அசுரனாக சித்தரிக்கின்ற ஆரியப் பண்பாட்டு படையெடுப்புக்கான எதிர்வினையே திராவிட இயக்கம் அளித்த மாற்றுப் படைப்புகளாக புலவர் குழந்தையின் இராவண காவியம், அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம், ’தென்திசையைப் பார்க்கின்றேன்’ எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய இராவணன் பற்றிய கவிதை ஆகியவற்றின் தொடர்ச்சியாகக் கலைஞர் படைத்திட்டார் ‘தென்னவன் காதை’

இருண்டுவிட்ட தென்புலத்தில் ஏற்றிவிட்ட விளக்குபோல

எழுந்து நின்றான் இலங்கை வேந்தன்

…… …… ….

…… …… ….

திசையெட்டும் புகழ் சேர்த்த

தென்னிலங்கை கோமான், திராவிடரின் மூதாதை!

பழந்தமிழின்பால் பற்றுதலை வைத்த நம் பாட்டன்

கண்ணுக்குள் பாவை போல இலங்கைத் தீவு

கருவிழிதான் ஆழ்கடல்கள்.

இமைக்கதவு உண்டே எழில் விழியைக் காப்பதற்கு

அப்படித்தான்-இலங்கைக்கு இராவணன்.

-எனச் சொல்லோவியம் தீட்டுகிறார் கலைஞர்.

இராமருக்கு கோவில் கட்டுவோம் என்பதையே கொள்கையாகக் கொண்டோருக்கும், இராவணன் எங்கள் மூதாதை என்போருக்கும் நடப்பது வெறும் அரசியல் போட்டியல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் ஆரிய-திராவிட பண்பாட்டுப் போர். ஆயுதம் ஏந்தாமல் அதனை வெற்றிகரமாக நிகழ்த்தியவர் கலைஞர். அதனை அவரது அரசியல்-இன எதிரிகள் சரியாகப் புரிந்துகொண்டதால்தான், இந்து மத விரோதியாகவே கலைஞரை சித்திரித்தார்கள்.

நரகாசுரனைக் கொன்றதை மகிழ்வுடன் கொண்டாடும் தீபாவளிக்கும், புத்தரின் சிந்தனைகள் பரவாமல் தடுக்க வாதாபியிலிருந்து தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிள்ளையாரின் சதுர்த்திக்கும், பழந்ததமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளை ஆற்று நீரில் வீசச் செய்து பண்பாட்டுப் பேரழிவை உண்டாக்கிய சரஸ்வதி பூசைக்கும் வாழ்த்து சொல்லாதவர்தான் கலைஞர். ஆனால், இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் ‘இந்து’க்கள் போலவே, புராணக் கதையின் அடிப்படையில் ஓணம் திருநாளைக் கொண்டாடும் கேரள மாநில இந்துக்களுக்கு வாழ்த்துச் சொன்னதுடன், அந்தத் திருநாளுக்குத் தமிழ்நாட்டிலும் விடுமுறை வழங்கினார் கலைஞர்.

புராணத்தின்படி, மூன்றடி நிலம் கேட்டு வந்த வாமனன், விஸ்வரூபம் என்கிற பேருரு எடுத்து, வானுக்கும் பூமிக்குமாக இரண்டு அடியை அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்காக திராவிட மன்னன் மாவலி (மகாபலி) சக்கரவர்த்தியின் தலையில் கால்வைத்து அவனை மண்ணோடு மண்ணாகப் புதைத்துக் கொல்கிறான். அந்த திராவிட மன்னன் ஆண்டுக்கொரு முறை தங்கள் வீடு தேடி வருவதாகக் கருதி பூக்கோலமிட்டு, பெருவிருந்து படைக்கிறார்கள் மக்கள்.

நரகாசுரனைக் கொன்றதைக் கோலாகலமாகக் கொண்டாடும் இந்துக்களுக்கு கலைஞர் வாழ்த்துச் சொல்லவில்லைதான். ஆனால், மாவலியை மகிழ்வுடன் வரவேற்கின்ற இந்துக்களுக்கு வாழ்த்துச் சொன்னார். அதுதான் வருணாசிரம-சனாதனத்தின் ஆணிவேரை ஆட்டுகின்ற அரசியல். அந்த நுட்பமான அரசியலை கலைஞரைச் சார்ந்தவர்கள்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கலைஞரின் எதிரிகள் தெளிவாகப் புரிந்து கொண்ட காரணத்தால்தான், அவரை ‘இந்து மத விரோதி’ என முன்னிறுத்தினார்கள்.

கலைஞர் என்பவர் திராவிட இன அடையாள மீட்புப் போராளி. தமிழ்ப் பண்பாட்டின் காவல் அரண். வசவு சொற்களுக்காக அவர் வருத்தப்பட்டு முடங்கி விடுபவரல்லர். வம்புச் சண்டைக்கு வருபவர்களைத் தெம்புடன் எதிர்கொண்டு, தன் இலக்கு நோக்கியப் பயணத்தைத் தெளிவாக நடத்தியவர். தன்னை சந்திக்க வந்த இந்து முன்னணி இராமகோபாலன் பகவத் கீதையை பரிசாக அளித்த வேகத்தில் அவருக்கு ஆசிரியர் கி.வீரமணியின் கீதையின் மறுபக்கம் நூலை பதில்பரிசாக கொடுத்தாரே அதுதான் கலைஞரின் அடையாளம்.

கீதையும் அதன் சாரமும் எங்களுக்கானவையல்ல. எங்களுக்குத் திருக்குறள் இருக்கிறது எனக் குறளோவியம் தீட்டினார். எங்களுக்கு சிலப்பதிகாரம் இருக்கிறது என பூம்புகார் படைத்தார். எங்களுக்கு சங்கத்தமிழ் இருக்கிறது, தொல்காப்பியம் இருக்கிறது என பழந்தமிழ் இலக்கிய-இலக்கணங்களைப் புது நடையில் எடுத்துரைத்தார் கலைஞர்.

ஒன்றை நிராகரிக்கும்போது இன்னொன்றை மாற்றாக வைக்க வேண்டியது இயற்கையின் விதி. அதனால்தான் இந்து மத புராணங்களின் அடிப்படையிலான பண்டிகைகள் திராவிட இனத்திற்கும்-தமிழ்ப் பண்பாட்டிற்கும் எதிரானது என்று சொன்ன பெரியார், தமிழர் திருநாளாகப் பொங்கலை முன்வைத்தார். அத்தனை இந்துக்களும் கொண்டாடுகின்ற பண்டிகைதானே அது! அதை ஏன் இன்றுவரை இந்துத்வா சக்திகளால் தங்கள் திருநாளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதில் இருக்கிறது பெரியார் முன்வைத்த மாற்றுப் பண்பாடு. அரசியல் காரணங்களுக்காக எதிர்காலத்தில் இந்துத்வாவும் பொங்கல் திருநாளுக்குள் புகுந்திட முனைந்தால் அதுவும்கூட திராவிட இயக்கத்தின் பண்பாட்டு வெற்றியாகவே அமையும்.

தீபாவளி மலர்களை பல நாளேடுகளும் வெளியிட்டு வந்த சூழலில், ’அவாள் ஏடுகளுக்கு சவால்’ எனப் பொங்கல் மலரை வெளியிட்டது கலைஞரின் முரசொலி. பிள்ளையார் சதுர்த்தி-சரஸ்வதி பூசை-தீபாவளி இந்த மூன்றுக்கும் வாழ்த்து சொல்லாத கலைஞர்தான், தமிழர் திருநாளாம் பொங்கலை 3 நாளும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, அரசு அலுவலகங்களையும் மின்னொளியால் கோலாகலமாக்கினார். அதன் அருமை புரியாதவர்கள், அடுத்த வந்த ஆட்சியாளர்கள் காழ்ப்புணர்வினாலும் ஆரியப் பண்பாட்டின் வழி வந்தவர்கள் என்பதாலும் சித்திரையே தமிழ் வருஷப் பிறப்பு என்றாக்கினார்கள். ஆனாலும், இன்றளவும் தையா-சித்திரையா என்ற பட்டிமன்றம் பண்பாட்டுத் தளத்தில் நடக்கிறது என்றால் அதுதான் கலைஞரின் வெற்றி.

அவர் பிறப்பால்-சான்றிதழால் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்திய அரசியல் சட்டம் அப்படித்தான் குறிப்பிடச் செய்கிறது. ஆனால் நினைப்பால்-செய்கையால் அவர் திராவிடர்-தமிழர். இந்து மதத்தின் விரோதியல்ல. தன்னையும் தன்னைப்போன்ற கோடிக்கணக்கான சூத்திர-பஞ்சம மக்களையும் காலங்காலமாக ஒடுக்கி வைத்த வருணாசிரம-சனாதனத்தின் விரோதி. அரசியல் வழியாகப் பெற்ற வாய்ப்புகளால் அதன் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்த சமத்துவபுரத்தார்.

சாதி மறுப்பு சுய மரியாதை – கலைஞர் – சல்மா

கலைஞர் எனும் மனிதரை அவரது அளப்பரிய சாதனைகளை பற்றி பேச நினைக்கும் போதெல்லாம் மனதின் ஓரத்தில் ஒரு விதமான சோகமும், பிரமிப்பும் ஒரே சமயத்தில் தோன்றாமல் போனதில்லை. காரணம் அந்த மனிதனுடைய இழப்பை இன்னும் ஏற்க மறுக்கும் .மனம். கூடவே அவரை பற்றி விலக மறுக்கும் பிரமிப்பு.

நாம் ஒரு தலைவனை கொண்டாடுவதும் பிரமிப்பதும் நமது அரசியல் சார்புகுட்பட்டது. ஆனால் அதே அரசியல் தலைவன் மக்களது மனதினில் வைத்து கொண்டாடபடுவதன் பின்னணியில் இயங்கும் நன்றி யுணர்வு மிக முக்கியமானது.
தலைவன் மக்களுக்கு பணியாற்றுவது சட்டங்களை இயற்றுவது கடமை .அதற்கான நன்றி உணர்வு தேவைதானா என்று கேட்டோமேன்றால் நிச்சயமாக தேவை இல்லை என்று சொல்லலாம், ஆனால் அதையும் தாண்டி தனது வாழ்வின் மாற்றத்திற்கு சமூக மாற்றத்திற்கு வித்திட்ட ஒரு மனிதனை தலைவனை மக்கள் கொண்டாடாமல் இருப்பது சாத்தியமும் இல்லை அல்லவா..

அப்படிதான் தலைவர் கலைஞர் குறித்து மக்களுடைய உணர்வு நிலைப்பாடு இன்று ஓங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன்.

இன்று அவர் இல்லை என்று ஆகி ஒரு மாதத்தை கடந்து விட்டோம். காலம் எதற்காகவும் நிற்பதில்லை..ஆனால் அவரில்லை என்கிற இந்த தருணத்தில் தான் அவரை பற்றியும் அவரது சாதனைகள் குறித்தும் பேச துவங்கியிருக்கிறது இந்த சமூகம்…

அவர் தனது வாழ்நாளெல்லாம் எதாவது ஒரு வகையில் சமூகத்தினை சமநிலைபடுதுவதர்கான முயற்சிகளை செய்வதற்கான செயல்திட்டங்களை யோசித்தபடியே இருந்தார்.

ஏற்ற தாழ்வுகளை களைவதற்கான அதீத கனவுகளை தனது இதயத்தில் பெரும் கனலாய் வைத்திருந்தார்..அவரது ஒட்டுமொத்த ஆட்சிகளமும் ஆட்சிகாலமும் சமூக நீதிக்கான பயணத்தின் நீட்சிதானே அன்றி வேறாக இல்லை.

இன்றைக்கு மத்திய அரசு வீடுகள் தோறும் மின்சாரம் என்று இலக்கை அறிவித்த போது தமிழ்நாட்டில் எப்போதோ முப்பது வருடங்களுக்கு முன்னால் அத்திட்டத்தை அவர் செயல்படுத்தி முடித்திருந்தார்

அதே போல விவசாயிகளது வாழ்க்கை அழிந்து விடக்கூடாது என்பதற்காக இலவச மின்சாரம் தந்தார்…குடிசை மாற்று வாரிய வீடுகளை உருவாக்கினார். உழைக்கும் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த உழவர் சந்தைகளை உருவாக்கினார்`…தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் `சமூக உயர்வுக்கான அத்தனை சாத்தியங்களையும் நிகழ்த்தி காட்டினார்.

பசியெனும் உணர்வினை படியரிசி வழங்கி இல்லாமல் செய்தார்..

கல்வியை அனைவருமனதாக மாற்றினார். பெண் கல்விக்கு திருமண உதவித்தொகை என்று ஒரு இலக்கை வைத்து கல்வி தந்தார் சமசீர் கல்விக்கு தானே வித்திட்டார். ஒரே சமூகம் ஒரே கல்வி ,ஏற்ற தாழ்வுக்கு அப்பாற்பட்டு அதனை செயலபாட்டில் கொண்டு வந்தார். முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கும் எண்ணற்ற கல்லூரிகளை, துவக்கியதும் அவரே, தகவல் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து தொழில் துறைகளில் மாபெரும்
இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்.

சாதி மறுப்பு சுய மரியாதை திருமணத்தில் துவங்கி அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதாக மாபெரும் சமூக மாற்றத்தை உருவாக்கினார்.

அவரை பற்றி சொல்வதென்பது நிச்சயமாக இந்த இனத்தை இந்த மொழியை இந்த மாநிலத்தை இந்த வளர்ச்சியை நாம் பெற்றிருக்கும் சுயமரியாதையை பற்றி பெசுவதகதான் இருக்குமே தவிர வேறொன்றாக இருக்க முடியாது. தந்தை பெரியாரின் அறிஞர் அண்ணாவின் தம்பியாக , அவர்களது சிந்தனைக்கு செயல் வடிவம் தந்தவராக அவர் இருந்தார்.. உழைத்தார். அதற்காக தன் வாழ்வையே அர்பணித்தார். எண்பதாண்டு கால உழைப்பென்பது மிக நீண்டதொரு காலம்..

தலைவர்கள் எப்போதும் சில சமரசங்களோடு தங்களது பயணத்தை தொடர்வார்கள் காரணம் பதவியில் இருப்பது என்பது அவர்களுக்கு வடலடுக்கொடுக்கவியலாத்தொரு
விசயம் . ஆனால் தலைவர் கலைஞர் அவரது காலம் முழுக்க சமரசங்களற்ற கொள்கை உறுதியை பேணனார். தனது பதவிக்கு ஆபத்தெனும் போது கூட அவர் பதவியினை இழந்தாரே தவிர தனது கொள்கையில் விட்டுத்தந்தவரல்ல.
வரலாற்றில் அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்க அதுவே மிக முக்கிய காரணம்.

அவரது நினைவிடத்திற்கு சில முறை சென்றேன் . அவரது அன்புக்குரிய அண்ணனோடு அவரது பயணத்தை இணைத்து இன்று முடித்துக்கொண்டவராக
ஓய்வு கொண்டிருக்கிற அவரது நினைவிடத்தை காண்பதற்காக ஆயரமாயிரம் மக்கள் வந்தபடி இருக்கிறார்கள்.
தங்களது தலை எழுத்தை தனது சட்டங்களால் மாற்றித்தந்த அந்த தலைவரை காண்பதாகவே அவர்கள் எட்ணிக்கொள்கிறார்கள் வணங்கிச்செல்கிறார்கள் . கலங்கி நிற்கும் எனக்கு மனம் துக்கத்தால் நிறைகிற அதே சமயம்
பெருமித்த்தால் கர்வத்தால் நிரம்புகிறது மனம் . அத்தனை பேரின் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மாபெரும் தலைவரை நான் பார்த்தருந்திருக்கிறேன்.

அப்படிப்பட்டதொரு தலைவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் அவரை சந்தித்தோம், பேசினோம் எனும் மாபெரும் பெருமிதம் அது.

அந்த தலைவன இந்த இயக்கத்தின் வீழாத நம்பிகையை எங்களிடம் உண்டாக்கி இருக்கிறார்.. அவரது நம்பிக்கையின் வழி நடந்து அவரை எப்போதும் நினைவூட்டிக்கொள்ளும் இந்த இனமும் , மக்களும்…

காளிமுத்து மெஸ் (1987) ( நடைவழி சித்திரங்கள் ) / சரவணகணேசன் ( ஆட்டையாம்பட்டி )

கோவையின் முகப்பான ஹோப் காலேஜிலிருந்து கோவையை இரண்டாக பிரித்துச் செல்லும் நேர்கோடான அவிநாசி சாலை கடைசியில் முட்டிக் கொள்ள முடியாது எழுந்திருக்கும் மேம்பாலத்திற்கு முன் இடது பக்கம் இருக்கும் தண்டுமாரி அம்மன் கோவிலை ஒட்டிய சந்துக்குள் நுழைந்தீர்களேயானால் வழி நெடுகிலும் நிறைய மின்சாதனக் கடைகள் இருக்கும். அவைகள் இருக்கிற தெருவை ஒட்டி இடது கைப்பக்கமாக செல்லும் எநத ஒரு சந்திலும் பயணித்துப் போனீர்களே ஆனால் ஒரு முட்டு சந்து வரும். அந்த சந்தின் முடிவில் வர்ணமற்ற மர முக்காலியின் மீது ஒரு நீர் நிறைந்த நெகிளி வாளியும் ஒரு டம்ளரும் இருந்தால் அது தான் காளி முத்து மெஸ். இப்படி சிஎஸ்ஐ சர்ச் எதிர் கனரா வங்கி வழியாக சென்றால் நாய் கடிக்கும் என்று பலகையைப் பார்த்து பயப்படாமல் கீழே எழுதியதையும் சேர்த்து வாசிக்க வேண்டும். ஒற்றைத் தலை வலிக்கும் சித்த மருந்துகள் கிடைக்கும் என சின்னதாக எழுதியிருக்கும் வழியில் தொடர்ந்து சென்றால்; அதுவும் இந்த காளிமுத்து மெஸ்சில் உங்களைக் கொண்டு சேர்க்கும்.

அந்த மெஸ் உரிமையாளர் பெயர் காளிமுத்து. சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. மனைவி மகளோடு தான் வசித்து வந்த வீட்டில் அந்த சிறிய மெஸ்சை நடத்தி வந்தார். வீட்டின் முன் அறையில் இரண்டு டேபிள்¸ 8 சேர்களும் இருக்கும். உணவுப் ;பொருட்கள் வைக்க ஒரு டேபிள். அதன் மீது டம்ளர்களும்¸ கரண்டிகளும் அடுக்காமல் இருக்கும். அவருக்கு 40 வயது இருக்கலாம். ஒல்லியான தேகம். கண் கண்ணாடி. கொஞ்சம் தடித்த தொங்கிய மீசை. சுறுசுறுப்பான மனிதர். ஒரே மகன் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தான். அப்போது அதிமுக கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தது. திரு.காளிமுத்து அமைச்சராக இருந்தார். எனவே அந்த உணவகத்தை அமைச்சர் மெஸ் என நகைப்புக்காக அழைத்தவர்களும் உண்டு.

எல்லா நாட்களும் அந்த உணவகத்தில் நாங்கள் சாப்பிடப் போக மாட்டோம். பெரும் பாலும் எங்கள் அலுவலகம் பாதி நாட்கள் இயங்கும் சனிக்கிழமை நாட்களில் மதியம் வேலை நேரத்தைத் தாண்டியும் வேலை இருக்குமானால் சாப்பிடச் செல்வோம். நான்¸ நாகராஜ்¸ இரத்தினமூர்த்தி¸ செல்வராஜ்¸ சம்பத¸ பாலு; என ஒரு கூட்டமாகச்; செல்வோம். அ;ப்போது முழு சாப்பாடு ரூ15 லிருந்து ரூ20 இருந்திருக்கும்.

நண்பர்களில் இரத்தினமூர்த்தியைப் பற்றி சொல்லியே தீர வேண்டும். இரத்தினமூர்த்தியின் சொந்த ஊர் இராமநாதபுரம். மதுரை வழக்குத் தமிழில் நகைச்சுவையாக ஆனால் கண்னியமாக பேசுவான். கொங்குத் தமிழ் பேசும் கூட்டத்தின் நடுவில் அவனின் மதுரைத் தமிழ் கேட்பதற்கு சுகமாக இருக்கும். எனவே வெளியில் சாப்பிட செல்லும் நாட்களினல் அவனில்லாமல் நாங்கள் செல்லமாட்டோம்.

அந்த உணவகத்தில் வார நாட்களில் பெரும்பாலும் சைவ உணவே தான் இருக்கும். சாப்பாடு¸ சாம்பார்¸ ரசம்¸ பொரியல் எனும்படியான சாதாரண முழுச் சாப்பாடு கிடைக்கும். முட்டை ஆம்லெட் எல்லா நாட்களும் கிடைக்கும். புதன் கிழமை மட்டும் ஆட்டிறைச்சி குழம்பு மற்றும் வருவல். ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை.

வாங்க சார் வாங்க சார் என அன்போடு வரவேற்பார். உணவு தயாரானதை உறுதிப்படுத்தும் விதமாக எந்த வாசனையும் சாப்பிடும் அறையில் இருக்காது. ஆனால் அவரோ எல்லாம் ரெடி உட்காருங்க என உட்காரவைத்து இலையைப் போட்டு தண்ணீர் வைப்பார். இதில் 5 நிமிடம் போயிறும். சார் ஏதாவது ஸ்பெசல் அயிட்டம் என இழுப்பார்.

உடனே ரத்தினமூர்த்தி சார் சில்லி கோபி ஒரு பிளேட் கிடைக்குமா?.. என்பான்

சார் அதெல்லாம் இல்லைங்க சார் எனச் n;சால்லிவிட்டு சாருக்கு எப்பவும் கிண்டல் மெல்ல நகைப்பார்

அப்பறம் ஏன் சார் ஸ்பெசல்ங்கிறேங்க. சரி இலையைப் போட்டாச்சு சாப்பாடு போடுங்க..

இதோ.. ஆயிருச்சு சார்..

எப்படியும் பத்து நிமிடம் ஆயிடும். கொதிக்க கொதிக்க சாப்பாட்டை எடுத்து வரும் போது தான் சாம்பாருக்கு தாளிச்சு விடும் சத்தம் கேட்டும். சாம்பார் இலைக்கு வந்ததும் ஐந்து நிமிடம் அனைவரும் மௌனமாக இருப்போம். அந்த அறையில் மெதுவாக ஓடும் மின்விசிறியில் உணவு கொஞ்சம் ஆறும் வரை.. அதற்குள் மெஸ் ஓனர் ஆர்டர் பிடிப்பார். சார் எல்லாருக்கும் ஆம்லெட் சொல்லாமா என்பார். என்ன கணேஷ் உங்களுக்கு ஆம்லெட் வேணாம்தானே.. என சொல்லிட்டு சார் பச்சை மிளகா கம்மியா 4 ஆம்லெட் போடுங்க என்பான் ரத்தினமூர்த்தி.

லைனுக்கு 4 ஆம்லெட் எனச் சொன்ன பிறகு தான் ஆம்லெட்டுக்கு பெரிய வெங்காயம் அறியும் சத்தம் துல்லியமாகக் கேட்கும். எல்லாரும் தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஆம்லெட் வாசனை வருமே ஒழிய இலைக்கு வர தாமதம் ஆகும். ரத்தின மூர்த்தி நகைச்சுவையாக சார் ஆம்லெட்டை கேன்சல் பண்ண வாய்ப்பிருக்கா என்பான்.

சார் ஆம்லெட் ஆயிருச்சு. எடுத்துட்டு வர்றதுதான் பாக்கி என ஓடுவார் காளிமுத்து. பாவம் அந்த அரைக்கல் சுவரைத் தாண்டி அவருடைய மகள் ஒருத்திதான் ஆம்லெட் வேலையைப் பாத்திருப்பாள். ஒரு ஆள் உட்கார்ந்து சமைக்கும் அளவுக்கே உள்ள சமையல் அறை அது. பாத்திரங்கள் கழுவ அதே போல் இடம் இருக்கும் இன்னொரு அறையில் அவர் மனைவி நின்று கொண்டிருப்பார்.

மணக்க மணக்க ஆம்லெட் இலையில் விழும். சாப்பிட்டு விட்டு கையை வெளியில் வைத்திருக்கும் வாளியில் கழுவிக் கொள்வதற்குள் பணம் வாங்குவதற்காய் தலையை சொரிந்து கொண்டு காளிமுத்து நிற்பார். பெரும் பாலும் உணவுப்பணம் போக தர வேண்டிய மீதியை அடுத்த சனிக்கிழமை கழித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கும். ஒரு புதன் கிழமை அவர் மெஸ்சில் கறிச் சோறும் சாப்பிட்டு பார்த்தோம். சுவையாகத் தான் இருந்தது. ஆனாலும் ரத்தின மூர்த்திக்கு சாப்பிட்ட பின் லேசாக வயிற்று வலி வர அவனே அவரிடம் கேட்டான்.

சார் சாதத்திலே வேகும் போது எதாவது சுண்ணாம்பு சேர்ப்பிங்களா.. நிறத்துக்காக

அப்படியெல்லம் இல்லைங்க சார் என்றார். ஆனாலும் வயிற்று வலி தொடர்ந்தது. மெஸ்சுக்கு வருவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் தான். சாப்பிடுகிற வயது உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாகத் தான் சாப்பிடுவார்கள். சுண்ணாம்பு சேர்த்தால் சாப்பிடும் அளவு குறைந்து கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு டும் என ஆகிவிடும். சாப்பிட்ட திருப்தி ஆகிவிடும்¸ ஆனால் சாதம் மெஸ்சுக்கு மீதம் ஆகும். பிழைப்புக்காக ஊரு விட்டு ஊரு வந்து¸ அறைக்கு வாடகையைக் கொடு;த்து. மெஸ்சை நடத்தி மூன்று பேர் வயிறு கழுவ தொழிலில் ஏதாவது குளறு படி செய்தாகத் தான் வேண்டும்.

ரத்தினமூர்த்தி கேட்டானே ஒழிய வழக்கம் போல் சாப்பிடுவது என்றால் காளிமுத்து மெஸ் தான். (கணேஷ் இங்கனையாவது கேட்கலாம்¸ பெரிய ஹோட்டலில் கேட்க முடியுமா¸ ஏழை¸ பாளை எதையோ செஞ்சு பொளைக்கறாங்க. டாக்டர் வேணாம்னு சொல்லறவரை சாப்பிடுவோம்). குறை இருந்தாலும வீட்டுச் சமையலின் சுவை மதியத்திற்கு 20 – 30 சாப்பாட்டை ஓட வைத்தது. எத்தனை பேர் சாப்பிட்டாலும்¸ ஓரே சமையத்தில் நிறைய வேலை வந்தாலும் ஒற்றை ஆளாகவே காளிமுத்து சமாளிப்பார். மனைவியையோ.. மகளையோ.. பரிமாற துணைக்கு அழைக்க மாட்டார். உணவகத்திற்கான பொருட்களை வாங்கி வருவது¸ கனிவுடன் பறிமாறி¸ கணக்குப் பார்த்து பணம் பெறுவது எல்லாம் அவர் வேலை தான். மனைவி¸ மகளின் பெயரைச் சொல்லி அழைத்தது இல்லை. அதிக பட்சம் பேபி ரெண்டு ஆம்லெட் என்ற அடைமொழி மட்டுமே கேட்டிருக்கிறோம்.

டாஸ்மார்க் இல்லாத காலம் அது. ஆனாலும் அந்த மெஸ் ஓனர் பந்தையச் சாலையின் இந்தப்பக்கம் இருந்த ஒரு பாரின் வாசலில் சில முறை அவரைப் பார்த்திருக்கிறேன். பார்க்காதது போல வந்திருக்கிறேன். வாரத்தின் அலுப்பைப் போக்க அந்த பார் அவருக்கு உதவியிருக்கலாம். வாடிக்கையாளர்கள் யாராவது பார்ப்பதற்கு முன் தன் கோட்டாவை வாங்கிக் கொண்டு வீ;ட்டிற்கு கிளம்பி விடுவார்.

பிறகு அலுவலகத்தில் அவரவர் திருமணமாகி செட்டிலாகி விட்டோம்.

————————–

கோவையில் 2003-ல் இருந்த போது நானும் மனைவியும் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் பந்தயச் சாலையில் சிறிது நேரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படி ஒரு ஞாயிறு நடந்து கொண்டிருந்த போது எதிரே ஒருவர் மெல்லிய தேகத்துடன் ரே பார்ன் கருப்புக் கண்ணாடியுடன் மேற்குப் பக்கம் வேகமாக நடந்து எங்களைக் கடந்து சென்றார். அவரின் உருவ அமைப்பு என் மனதில் சில ஞாபகங்களைக் கிளர¸ மூளை உடனே மனத்திரையில் அவரின் முகத்தை கோட்டோவியமாக வரையத் துவங்கியது. அடுத்த வட்ட நடையில் அவர் தென்பட்டால் அவரைக் கேட்டு விடுவது எனத் தயாராக இருந்தேன். அடுத்த 20 நிமிடங்களில் அவர் எதிரே நடந்து வந்தார்.

சார் நீங்க காளிமுத்து மெஸ் ஓனர்.. இழுத்தேன்.

சார் சார் நான் தான். நல்லாயிருக்கீங்களா.. சார்.; பையன் வெளிநாட்டிலே வேலை பார்க்குறான் சார். பொண்ணை கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டேன். நானும்¸ பொண்ணாட்டியும் சார். இப்ப காந்திபுரத்திலே இருக்குகிறோம். அன்னமிட்ட கையால் என் கையைப் பிடித்துக் கொண்டு பேசினார்.

சந்தோசம் சார்.. நல்லா இருங்க.. பார்க்கலாம் என நான் வலது கையை உயர்த்தி அவரை விஷ் பண்ணினேன். என்னை விட்டு நகர்ந்த அவர் உடனே திரும்பி சார் அந்த தம்பி ரத்தினமூர்த்தி எப்படியிருக்கார் சார்.. கேட்டேன்னு சொல்லுங்க.. நகர்ந்து மறைந்தார். எத்தனை ஆண்டுகள்.. எத்தனை வாடிக்கையாளர்கள். ஆனாலும் ரத்தினமூர்த்தியை அவர் மறக்க வில்லை. உணவிலே இருந்த குறையைக் கண்டு கொண்டும்¸ ஒரு குடும்பத்தின் பிழைப்பு என்பதால் அதை பெரிது படுத்தாமல் தொடர்ந்து வாடிக்கையாளராக இருந்த ரத்தினமூர்த்தியை அவர் மறக்காது இருந்தது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.

காவி பயங்கரவாதிகளும் கலாச்சார போராளிகளும் – இமையம்

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி என்று ஆட்சிக்கு வந்ததோ அதிலிருந்து அறிவுத்துறையினர் மீது தாக்குதல் கொடுப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்க்கட்சிகளிடம்கூட பா.ஜ.க பயப்படுவதில்லை. ஆனால் அறிவுத்துறையினரைக் கண்டு அதிகம் அஞ்சுகிறது. தன்னுடைய அச்சத்தை போக்க அது கொலை செய்யவும் தயங்குவதில்லை. கோவிந் பன்சாரே, கல்பூர்கி போன்ற எழுத்தாளர்களை சுட்டுக்கொன்றது. கெளரி லங்கேஷ் என்ற பத்திரிக்கையாளரையும் சுட்டுக்கொன்றது. காவி பயங்கரவாத்தின் உச்ச செயல்பாடுகள் இவை.

கோவிந் பன்சாரேவும் கல்பூர்கியும் சுட்டுக்கொல்லப்பட்ட போது இந்தியாவில் இருக்கிற எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். சிலர் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தனர். அப்போதும் பா.ஜ.க. திருந்தவில்லை. தங்களுடைய பயங்கரவாத செயலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், குறிப்பாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியளார்கள் என்றால் அவர்களை தீர்த்துகட்டுவது, தற்கொலைக்கு தூண்டுவது என்று செயல்படுகிறது பா.ஜ.க. அறிவு செயல்பாட்டின் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதின் மூலம் தன்னுடைய கொடூர முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது. தனிமனிதர்களை மட்டுமல்ல, கூட்டமாக கொல்லவும் தயங்காது என்பதற்கு குஜராத் கலவரமும் கோத்ரா ரயில் சம்பவங்களே உதாரணங்களாக இருக்கிறது. இரண்டு கலவரங்களும் மோடி முதல்வராக இருந்தபோதுதான் நடந்தது. குஜராத்தின் கலவரத்தை இந்தியா முழுவதும் பரப்பிவருகிறார் மோடி.

தமிழகத்தில் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கிய வன்முறை வெறிச்செயல்களையும், தனிமனித தாக்குதல்களையும் அறிவோம். பெருமாள்முருகனுக்கு நடத்திய கொடூரங்களைவிட பல மடங்கு கொடூரங்களை இப்போது மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்படுத்திவருகிறது.

மனுஷ்ய புத்திரனின் ‘ஊழியின் நடனம்’ கவிதையை நான் பலமுறை படித்துப்பார்த்தேன். கவிதையில் பெண்களை இழிவு செய்யும் விதத்திலோ மத உணர்வை தூண்டும் விதத்திலோ, மத உணர்வுக்கு எதிரான விதத்திலோ கவிதையில் எதுவும் இல்லை. கவிதையை கவிதையாக படிக்கவேண்டும். உள்நோக்கத்தோடு படிக்கக்கூடாது. அப்படிப் படித்தால் கவிதைக்குறிய நுட்பம் தெரியாது.

கவிதையின் மையம், கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்ப்பட்ட இழப்பு குறித்து மட்டுமே பேசுகிறது. பூமியை நம் எப்போதும் தாயாகவும், பெண்ணாகவும்தான் பார்ப்பதற்கு பழக்கப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் ஊழியின் நடனம் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. பாரத மாதா என்று நாம் சொல்லத்தானே செய்கிறோம். இந்தியாவில் எந்த மூலையில் இயற்கை பேரிடர் ஏற்பட்டிருந்தாலும் தேவி என்பதற்குப் பதிலாக பாரத மாதா என்று போட்டு மனுஷ்ய புத்திரன் கவிதை எழுதிருப்பார்.

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீரழவை தாங்கிக்கொள்ளாமல் எழுதபட்ட கவிதை. வேறுவிதமான கற்பித்தால்களுக்காக எழுதப்பட்டதல்ல ஊழியின் நடனம் எந்த ஒரு எழுத்தாளனும் சமுகத்தில் கலவரத்தைத் தூண்டுவதற்காக கவிதை, கதை எழுதவில்லை. இந்த எளிய உண்மைகூட பா.ஜ.க.வினருக்கு ஏன் புரியமாட்டேன்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஊழியின் நடனம் கவிதை கலவரத்தை தூண்டும்விதமாக இல்லை. கவிதைக்குறித்த ஹெச்.ராஜாவின் பதிவுதான் கலவரத்தை தூண்டும்விதமாக இருக்கிறது.

மனுஷ்ய புத்திரனின் கவிதையில் குற்றம் இருக்கும் பட்சத்தில் அதை சட்டரீதியாகத்தான் அணுகவேண்டுமே ஒழிய, ஊர்ஊராக வழக்குப் பதிவு செய்யசொல்வது, ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்ப சொல்வதும்; அனுப்புவதும் தொலைபேசியில் ஆபாசமாக பேச செய்வது, மிரட்டல் விடுவது நாகரீகமான செயல் ஆல்ல. பெண்களை இழிவுப்படுத்துகிறது, மத உணர்வை புண்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்களை தராமல் கெட்டவார்த்தையில் திட்டுவது நாகரீகமா?

30 ஆண்டுகளாக எழுதி கொண்டிருக்கிற மனுஷ்யபுத்திரன் எந்த ஒரு இடத்திலும் அவர் தன்னை மத அடையாளத்தோடு பொருத்திக்கொண்டதில்லை. மதவாதத்திற்கு எதிராக மத பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் இதுவரை எழுதி இருக்கிறார். பேசியிருக்கிறார்.

இந்துமதத்திற்கும் அதனுடைய கோவில்களுக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவது பா.ஜ.க.வினரே. காஷ்மீரில் இந்து மதக் கோவிலுக்குள் வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றது யார்?. காஞ்சிபுரம் கோவிலுக்குள் வந்த பெண்களுடன் உறவு கொண்டதும் அதை வீடியோவாக பதிவு செய்ததும் யார்?

மனுஷ்ய புத்திரனின் கவிதை கேரளாவில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி, துயரத்தை பேசுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் ஐயப்பன் கோவிலில் பெண்களை நுழைவதற்கு அனுமதித்ததால்தான் இவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்ப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். மாட்டு இறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் கன மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது என்று பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் கூறியிருக்கிறார்.

உண்மையில் யார் மீது வழக்குப்போட வேண்டும்? ஐயப்பனின் கோபத்தால்தான் இவ்வளவு மழை பெய்திருக்கிறது என்று சொல்கிற பாரதிய ஜனதா கட்சிதான் மத்தியில் ஆள்கிறது. அதனுடைய கட்டுப்பாட்டிளுள்ள இந்தியா வானிலை அய்வு மையம் கனமழை பெய்யும் என்று அறிவித்தது. பா.ஜ.க. மற்றும் அதன் கிளை அமைப்புகளில் உள்ளவர்கள் தொடர்ந்து அறிவியல் உண்மைகளுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கே ஆச்சரியமாக இல்லையா?

பத்மாவதி திரைபடம் எடுத்த இயக்குநரின் கையை வெட்டுங்கள் என்று சொல்வதும், அந்த படத்தில் நடித்த நடிகையின் மூக்கை அறுப்பேன் என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

பா.ஜ.க.வினரும் அதனுடைய கிளை அமைப்பினரும் எந்த நூற்றாண்டில் இருக்கின்றனர். எழுத்தாளர்களையும் , கவிஞர்களையும் கொன்றுவிட்டு பா.ஜ.க. எந்த மாதிரியான சமுகத்தை ஆள விரும்புகிறது. மாயாஜால, மந்திர தந்திர , புராண, இதிகாச கட்டுகதைகளை மட்டுமே அது இலக்கியமாக நம்பிக்கொண்டிருகிறது. நவீன இலக்கியம், நவீன கவிதையின் இயல்பு அறியாமல் பா.ஜ.க. நடந்துகொள்வது, அவர்கள் நடைமுறை சமூகத்தில் வாழவில்லை என்பதையே காட்டுகிறது. ராமனுடைய காலத்திலேயே இந்தியாவில் கணினி பயன்பாட்டில் இருந்தது என்று பா.ஜ.க. மந்திரி சொன்னது வேடிக்கையானது

மனுஷ்ய புத்திரனுக்கு இரவும் பகலும் எந்தெந்த விதத்தில் தொந்தரவு தரமுடியுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் தொந்தரவு தந்துகொண்டிருக்கிறார்கள். சமுகத்தில் யாரையும்விடவும் எழுத்தாளன்தான் மேம்பட்டவன், முக்கியமானவன். எழுத்தாளனை, கலைஞனை புறக்கணிக்கிற, அவமானப்படுத்துகிற எந்த சமுகமும் கலச்சார ரீதியாக, அறிவு ரீதியாக மேம்பட்ட சமூமமாக இருக்க முடியாது. இன்று மனுஷ்ய புத்திரனுக்கு நேர்ந்திருக்கிற அவலம், அச்சுறுத்தல், நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்; நிகழலாம். அதை அனுமதிக்க முடியாது. காவி பயங்கரவாதத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.

கடைசியாக வரவர ராவ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற கைதுகள் பா.ஜ.க.வினரின் பயத்தையே காட்டுகிறது.

தவறாக பேசுவது, தவறாக புரிந்துகொள்வது; வன்முறைகளை தூண்டிவிடுவது, பா.ஜ.க.வுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை ஆண்டி – இந்தியன் என்று சொல்லி முத்திரை குத்துவது, ஹெச்.ராஜாவின் அரசியல் செயல்பாடாக இருக்கிறது. அவரது அரசியல் ஆரோக்கியமான அரசியலாக தெரியவில்லை. இழிவான அரசியலாகவே தெரிகிறது.

பா.ஜ.க.வும் அதனுடைய கிளை அமைப்புகளும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீதான தாக்குதலை மனுஷ்ய புத்திரன் விஷயத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது. கருத்துரிமையை பறிக்கவும், ஒடுக்கவும் நினைப்பது ஜனநாயக நாட்டில் நல்லதல்ல. பா.ஜ.க. வுக்கும் நல்லதல்ல.

எச்.ராஜாவும். அவர் சார்ந்திருக்கிற பா.ஜ.க. அதனுடைய கிளை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுஷ்யபுத்திரனின் ஊழியின் நடனம்-கவிதையை மீண்டும் படிக்க வேண்டுகிறேன்.

••••

விருட்சம் நினைவுகள் = 9 / அழகியசிங்கர்

சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.

விதிவிலக்காக ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் அதிலிருந்து தப்பிப்பார்கள்.

கசடதபற இதழில் எழுதி எத்தனையோ எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்களா என்ன ஆனார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. பத்திரிகையில் எழுதுவதோடு சரி அதன்பின் அவருடைய படைப்புகள் புத்தகமாக வர வாய்ப்பில்லாமல் போய்விடும்.

ஏன் இப்படி நடக்கிறது? எழுதுபவர்களுக்கு அவர்களுடைய படைப்புகள் வெளிவந்த பிறகு அவர்களுடைய படைப்பு மனநிலை வேறு திக்கை நோக்கிப் போய்விடுகிறதா? அதனால் அவர்கள் தொடர்ந்து எழுதாமல் போய்விடுகிறார்களா?

இப்படி எத்தனையோ படைப்பாளிகளை நாம் தவற விட்டிருக்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

பொதுவாக சிறுபத்திரிகைகள் நடத்துபவர்கள் ஒரு வங்கியிலோ அரசாங்கத்திலேயோ பணி புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய உபரி நேரத்தில்தான் கை காசு செலவழித்து பத்திரிகைக் கொண்டு வருவார்கள். இப்படிப் பத்திரிகைகளைக் கொண்டு வருபவர்கள் தங்கள் கைவசம் எந்தப் பத்திரிகையையும் வைத்துக்கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும். இதைத் தவிர்க்க முடியாது. மேலும் அவர்களுடைய பத்திரிகைகளை இலவசமாகவே எல்லோருக்கும் அனுப்புவார்கள். சிறு பத்திரிகைகளைப் பொருட்படுத்தாத எத்தனையோ பேர்களுக்கு அந்தப் பத்திரிகைகள் போய்ச் சேரும்.

கசடதபற 24வது இதழில் (செப்டம்பர் 1972) வெளிவந்த ஜரதுஷ்டன் என்பவரின் கவிதையை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

பரிணாமம் என்பது கவிதையின் பெயர்.

நாலு வயதில்
நர்ஸரிக் கவிதையும்
பின்னர் சில நாள்
ஆத்திச் சூடியும்
கோனார் நோட்ஸில்
கம்பனும் கபிலனும்
படித்துக் குழம்பி
பாட்டு எழுத
பேப்பரும் பென்ஸிலும்
எடுத்த வேளை
குட்டிச் சுவராய்
போவாய் நீயென
பெற்றதுகளிடம்
பாட்டுக் கேட்டேன்.

யார் இந்த ஜரதுஷ்டரன். அவர் இப்போது எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா இல்லையா? இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லை. இவருடைய கவிதைகள் இதுமாதியான கசடதபற இதழக்களிலேயே நின்று போய் விட்டது.

பொன் விஜயன் என்ற ஒரு நண்பர். அவர் ஆரம்பித்த பத்திரிகையின் பெயர் புதிய நம்பிக்கை. எப்படியோ கொண்டு வந்து விடுவார். இப்போது அவரும் இல்லை. அந்தப் பத்திரிகையும் இல்லை.

வீட்டிலேயே அச்சுக் கோர்க்கும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு பத்திரிகைக் கொண்டு வருவார். உண்மையில் அச்சுக் கோர்ப்பவர்களுக்கு வாரம் வாரம் கூலி கொடுக்கச் சிரமப்படுவார். பொருளாதாரத்தில் அச்சுக் கோர்ப்பவர்கள் பொன்விஜயனைவிட பரவாயில்லை ரகத்தில் இருப்பார்கள்.

சரி ஒரு சிறுபத்திரிகை நடத்த ஒருவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும். யார் சிறுபத்திரிகை நடத்துவது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில். எந்தத் தகுதியும் இருக்க வேண்டாம் என்பதுதான். யாருக்குத் திறமை இருக்கிறதோ அவர்கள் பத்திரிகைகள் நடத்தலாம். ஆனால் எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் வாசகர்கள் வேண்டும். வாசகர்கள் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை.

(இன்னும் வரும்)