Category: கட்டுரை

கட்டுரை முதல் நேர்காணல்: மரத்தில் மறைந்த மாமத யானை அ.ராமசாமி

 

முதல் நேர்காணல்: மரத்தில் மறைந்த மாமத யானை

 

அ.ராமசாமி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முதல் நேர்காணலிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. அதனைத் தவறு விட்டதன் பின்னணியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற எனது லட்சியம் இருந்தது.

 

இப்படி நான் நினைத்துக்கொண்டிருப்பதை ’நிறைவேறாத செயலுக்கான கற்பனை வடிவம்’ என்பது போல அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்த அந்த வார்த்தைகள் உறுதி செய்து கொண்டிருந்தன.”அன்னைக்கி ஒரு 20 ஆயிரம் பொரட்ட முடியாமப் போச்சேப்பா.. பொரட்டிக் கட்டியிருந்தா கலைக்டரா ஆயிருப்பே..இல்ல” இந்த வார்த்தைகளை எனக்கு ஆறுதலாகச் சொல்வதாக அவர் நினைத்தாலும் அவரதுஇயலாமையும் அதில் இருப்பதாக அவர் நினைத்தார். 1983 இல் அரசாங்க வேலையைத் தவற விட்டது தொடங்கி 1989 இல் இன்னொரு அரசாங்க வேலையைக் கைப்பற்றுவது வரை – நூறு தடவையாவது- சொல்லி இருப்பார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் அரசாங்கச் சம்பளம் வாங்கும் வேலையில் சேர்ந்த பின்பு தான் அந்த புலம்பலை நிறுத்தினார்.

 

எங்கள் ஊர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து ஆளுங்கட்சியின் கிளைக் கழகச் செயலாளர் ஆனவர் அவர். 20 ஆயிரம் ரூபாயைப் புரட்டி எம் எல் ஏ விடம் கொடுத்தால் அந்த வேலை கிடைத்திருக்கும்’ என்று அவருக்குத் தெரியும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் போன்ற கச்சடாக்கள் இல்லாத கண்டக்டர், டிரைவர், வாட்ச்மேன், சத்துணவுப் பணியாளர், ஆயா, சமையல்காரர் போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்குப் பலபேரிடம்பணம் வாங்கி எம் எல் ஏ விடம் கொடுத்து வேலை வாங்கிக் கொடுத்த அனுபவம் அவருக்கு உண்டு. சின்ன வேலைகள் என்றால் எம் எல் ஏ வோடு முடிந்து போகும்; பெரிய வேலைகள் என்றால் மேலிடம் வரை பங்கு போயாக வேண்டும் என்ற அரசியல் நிர்வாகம் அவருக்குத் தெரியாததல்ல. அரசு நிர்வாகத்தை அரசியல் நிர்வாகமாக மாற்றிய ஆட்சியின் மூன்றாவது கட்டத்தில் அரசியல் கட்சிகளின் கிளைக்கழக நிர்வாகிகள் எல்லோரும் அதை அறிந்து வைத்திருந்தார்கள். அரசுப் பணிகள் மட்டுமல்லாமல் கூட்டுறவுச் சங்கங்கள், போக்குவரத்துக் கழகங்கள், மானியத்தோடு கூடிய வங்கிக் கடன்கள் என அரசு நிர்வாகங்களின் முகங்கள் அரசியல் நிர்வாக அடையாளத்தோடு மாறிச் சிதையத் தொடங்கிய காலம் அது. .

 

சொந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, சொந்தத் தம்பிக்கு நல்ல வேலை வாங்கித் தருவது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முக்கியம் என நினைத்து எம்.எல்.ஏ.விடம் பேசி விட்டு வந்திருந்தார். மொத்தம் தர வேண்டிய தொகை 50 ஆயிரம் ரூபாயை உடனே தர வேண்டியதில்லை எனவும் , மேலிடத்துக்குப் போக வேண்டிய 20 ஆயிரத்தை முதலில் கட்டி விட்டால் வேலையை உறுதி செய்து விடலாம் என்று எம் எல் ஏ. சொன்னதாகச் சொல்லி அந்தப் பணத்தைத் திரட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டார்.  எம்.எல்.ஏ.வுக்குத் தர வேண்டிய 20 ஆயிரத்தை வேலைக்குச் சேர்ந்தபிறகு கொடுத்தால் போதும் என்று சலுகை காட்டியிருப்பதைக் கட்சிக்காகத் தான் ஆற்றிய பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதினார், முதலில் கட்ட வேண்டிய 20 ஆயிரத்தைத் தயார் செய்து விட்டு, அடுத்து நேர்காணல் செய்பவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் போய்ச் சேர வேண்டிய 10 ஆயிரத்தைத் தயார் செய்ய வேண்டும் என்று சொல்லி வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைக்கும் திட்டங்களை முன் வைத்தார்.

 

திருமணம் ஆகி ஆறுமாதத்திற்குள் மனைவியின் நகைகளை அடகுக்கடைக்கு அனுப்பும் யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை. பங்கு பிரித்துத் தனித் தனிக் குடும்பங்களாக ஆன பின்பு மதினிமார்களின் நகையைக் கேட்பது சரியாக இருக்காது என்றும் சொன்னேன். அவர் ஒத்துக் கொள்ளவில்ல. கடைசியில் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்த்த போது குடும்ப நகைகள் எல்லாவற்றையும் அடகு வைத்தாலும் 50 ஆயிரம் தேறாது என்பது புரிய வந்தது. நகைகளை விற்றால் மட்டுமே 50 ஆயிரம் தேறும். நகைகளை விற்கும் யோசனைக்கு வீட்டில் ஒருவர் கூடச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது தெரியும். நகைகள் விவசாயக் குடும்பத்தின் முக்கியமான கையிருப்பு. ஆடி மாதம் நாற்றுப் பாவிவிட்டு அஞ்சு பவுன் நகையை அடகு வைத்தால் ஐப்பசியில் திருப்பிக் கொள்ளலாம். பணம் திரட்டும் திட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, “தகுதிக்கும் திறமைக்கும் இன்னும் வாய்ப்பிருக்கிறது” என்ற நம்பிக்கையில் முதல் நேர்காணலைச் சந்தித்தேன்.

 

தமிழக அரசின் அரசினர் தோட்ட வளாகம் ஒன்றில் நடந்த நேர்காணலில் நான் அதிக நேரம் காத்திருக்கவில்லை. உள்ளே போன போது கொஞ்சம் திகைப்பாக இருந்தது. அரைவட்ட வடிவில் போடப்பட்ட மேஜைத் தளத்திற்குப் பின்னால் முதியவர்களுக்கான அடையாளங்களோடும், உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பதற்கான மிடுக்கோடும் அமர்ந்திருப்பவர்கள் எத்தனை பேர் என எண்ணிப் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் கேள்விகள் கேட்பார்களோ என்ற பயம் இருந்ததால் அவ்வளவு பதில்களுக்கு எங்கே போவது என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் கேட்ட கேள்வி தென்மேற்குப் பருவக்காற்று பற்றி இருந்தது. எங்கள் ஊருக்குக் கேரளத்திலிருந்து வீசும் தென்மேற்குப் பருவக்காற்று மழை தருவதில் தொடங்கி, பள்ளிப் புத்தகத்தில் பூகோளப் பாடத்தில்ப் டித்ததையெல்லாம் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே போதும் என்று அவரே நிறுத்தி விட்டார். இன்னொருவர் ” நத்தம் புறம்போக்கு என்றால் என்ன? “ என்று கேட்டது முதலில் எனக்குப் புரியவில்லை. அவரே திரும்பவும் நத்தம் பொறம்போக்கு என்று பேச்சுத்தமிழில் சொன்னபோது புரிந்தது. அந்தக் கேள்விக்கும் எங்களூரில் இருக்கும் புறம்போக்கு நிலங்களைப் பற்றிப் பேசு விளக்கினேன். அவருக்கு எனது பதில் பிடித்ததால் நிலங்களைப் பற்றிக் கூடுதல் கேள்விகளைக் கேட்க நினைத்தார். ஆனால் அதற்குள் இடது ஓரத்தில் உட்கார்ந்திருந்த வழுக்கைத் தலையர் தலையைத் தடவியபடி. ”மரத்தில் மறைந்தது மாமத யானை” இதை விளக்க முடியுமா எனக் கேட்டார்.

 

இந்த வரி திருமூலரின் திருமந்திரத்தில் வருகிறது எனச் சொல்லிவிட்டு

மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே

என்று இரண்டு வரிகளையும் சொன்னேன். முதுகலையில் மனப்பாடம் செய்திருந்த கொஞ்சப் பாடல் வரிகளில் இவையும் அடக்கம். திரும்பவும் விளக்க முடியுமா? என்று கேட்டார். நான் திருதிருவென்று முழித்தேன். அவரே, “ கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயை கண்டால் கல்லைக் காணோம்” என்ற பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார். ’கேள்விப் பட்டிருக்கேன்;நல்லாத் தெரியும்’ என்றேன், ”இந்தப் பழமொழிக்கும் அந்தப் பாடல் வரிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை யோசிச்சுக்கிட்டே போங்க” என்று சொல்லி அனுப்பினார்.

 

அந்த நேர்காணலில் தேர்வாகி இருந்தால், அண்ணன் சொன்னமாதிரி மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் உட்காரா விட்டாலும் அதற்குச் சமமான துறை அதிகாரியாக ஆகும் வாய்ப்பு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டவர் ”அளிப்பு செய்யப்பட்ட இ.ஆ.ப.” வாக ஆகித் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் ஆனது நடந்து முடிந்து விட்டது. அந்த நேர்காணல் இரண்டாவது நிலை அரசுப் பதவிகளான துணைத் தாசில்தார், தொழிலாளர் நல அதிகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் போன்றவற்றிற்காக நடத்தப்பட்ட நேர்காணல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வு அவ்வளவொன்றும் கடினமாக இருக்கவில்லை. அடுத்தடுத்து எழுதிய வங்கித் தேர்வும் காப்பீட்டு நிறுவனத்தேர்வும் கூட அதைவிடக் கடினமாக இருந்தன.. கடினமான தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் வாங்கினால் தான் நேர்காணலுக்கு அழைக்கப்படும் வாய்ப்புண்டு என நண்பர்கள் சொன்னார்கள். அரசுப் பணியில் நிறையப் பேருக்கு நல்ல மதிப்பெண்கள் வரும்படி தேர்வுகளை அமைப்பது வேண்டியவர்களுக்கு வேலையை கொடுக்க வசதியான ஏற்பாடு என்று கருத்து அதன் வழி உருவாக்கப்படும் துணைக் கருத்து.

 

நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் வந்தவுடன் எம்.எல்.ஏ.வைப் பார்க்கலாம் என்று சொன்ன அண்ணனின் பேச்சைத் திட்டவட்டமாக மறுக்காமல் அவரோடு போனபோது எனது மனத்திற்குள் ஓடிய எண்ணங்கள் பலவிதமானவை. லஞ்சம் கொடுத்து வேலை வாங்க நினைப்பவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் அவற்றில் ஒன்று. லஞ்சம் கொடுக்கப் பணம் இருந்தாலும் அதை யாரிடம் கொடுத்தால் வேலை உறுதியாகக் கிடைக்கும்.ப்பது;  யார் வழியாகக் கொடுக்கலாம்; அப்படிக் கொடுத்து விட்டால் வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துத் தான் போனேன்.

 

எம்.எல்.ஏ,.பேசியதிலிருந்து அண்ணனுக்கு அவரோடு உள்ள உறவு புரிந்தது. ஆட்சிக்கு வரும் கட்சிகள் இந்திய ஜனநாயகத்தை பயன்படுத்தும் உத்திகளில் ஒன்றும் புரிந்தது. பொறுப்பாகப் பாடம் நடத்தும் ஒரு ஆசிரியரைப் போலத் தெளிவாக விசயங்களை எடுத்து வைத்தார். ”இதெல்லாம் ஒங்க அண்ணாட்சிக்காகத் தான் தம்பி; வேறொரு ஆளா இருந்தா தொகையும் கூடியிருக்கும். நடைமுறையும் வேறெயா இருக்கும். அவரு நம்ம கட்சிக்காரரு.கார்டெக் காமிச்சா தலைவரே இறங்கிடுவாரு. ஆனா அப்படி நினைச்சுக்கிட்டு கையெ வீசிக்கிட்டு போய் நிக்க முடியாதே. சாமியப்பாக்கிறதுக்கு முன்னாடி அர்ச்சனைத் தட்டு வாங்கிற மாதிரி 20 ஆயிரத்தக் கட்டிட்டுத் தலைவரெப் பார்த்துட்டோம்னா காரியம் முடிஞ்சுடுச்சுன்னு அர்த்தடம்.” அவர் பேசியதிலிருந்து அரசுகளின் பார்முலா ஓரளவு புரிந்தது.

 

இதற்கு முன்பு இருந்த அரசு உருவாக்கப்படும் வேலை இடங்களில் 25 சதவீதத்தைத் தகுதியுள்ளவர்களுக்குக் கிடைக்கும்படி விட்டு விடுமாம். 75 சதவீதத்தைப் பரிந்துரைக்காக எடுத்துக் கொண்டு விடுமாம். அதில் 25 சதவீத வேலைகளைக் கட்சிக்காரர்கள்,கட்சிக்காரர்களின் வீட்டுப் பிள்ளைகள் எனக் காசு வாங்காமல் ஒதுக்கித் தருவார்களாம். மீதமுள்ள 50 சதவீதப் பணியிடங்களுக்கு லஞ்சத்தின் அளவை இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ப முடிவு செய்து விடுவார்கள். முடிவு செய்யப்பட்ட தொகையில் செம்பாதி தலைமைக்குப் போய்ச் சேர வேண்டும். அப்படிச் சேர்வதற்கான வழிமுறைகள் தெரிந்த கட்சிக்காரர்களை அணுகிப் பணத்தைக் கொடுத்து விட்டால் வேலையை உறுதி செய்து வாங்கிக் கொடுத்து விடுவார்கள். வேலைக்குச் சேர்ந்து அஞ்சு வருசத்திலெ கொடுத்த காச எடுத்துரலாம் என்றும் சொன்னார். முதல் போட்டு வியாபாரம் ஆரம்பிக்கிற மாதிரி தான் தம்பி என்றும் சொன்னதோடு தங்கள் கட்சியின் புதிய சூத்திரத்தையும் சொன்னார்.

 

முந்திய ஆட்சியின் சூத்திரம் 25 + 25+ 50 , எங்க தலைவர் அதை 50+25+25 என மாற்றியதன் மூலம் தனது செல்வாக்கை நிலைநாட்டியிருக்கிறார் எனச் சொல்லிப் புரிய வைத்தார். பாதிக்குப் பாதி தகுதி அடிப்படையிலெ வேலை கிடைச்சா நல்ல கருத்து உருவாகும்னு புரிஞ்சுக்கிட்டதுதான் எங்க தலைவரோட வெற்றி எனச் சொல்லித் தனக்குத் தானே ரசித்து கொண்டார். அரசுப் பணிகளைப் பிரித்துக் கொடுக்கும் சூத்திரங்களின் வழி உருவாக்கப்படும் கருத்துக்கள் மிக முக்கியம் என அரசியல்வாதிகள் கருதியதுதான் ஜனநாயகத்தின் பலமாகவும், பலவீனமாகவும் மாறி விட்டது என அப்போது எனக்குத் தோன்றவில்லை; சில வருடங்களுக்குப் பிறகு அது புரிந்தது. தகுதி அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் மூலம் இந்த அரசு நேர்மையான அரசு என்ற கருத்துப் பரப்பபடுமாம்.

 

கட்சிக்காரர்களுக்குத் தரப்படும் சலுகை மூலம் கட்சிக்காரர்களிடம் நன்மதிப்பைப் பெற்று மேலும் மேலும் கட்சியில் ஆட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் உத்தி நிலை பெறுமாம். தகுதியும் இல்லாமல், கட்சிக்காகவும் உழைக்காமல், பணத்தை வைத்து வேலையை வாங்கி விடலாம் என நம்புபவர்களிடம் லஞ்சத்தை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் அடுத்த தேர்தல் செலவுக்குப் பிரச்சினையில்லாமல் போவதோடு கட்சிக்காரர்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று நிகழ்கால அரசியல் நம்பிக்கையோடு செயல்படுகிறது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அரசுப் பணியில் பின்பற்றப் பட்ட இந்தச் சூத்திரம் தான் தொண்ணூறுகளில் எல்லா வகையான அரசு நிர்வாகத்துக்குமான சூத்திரங்களாக மாறி இருக்கின்றன.

 

 

லஞ்சம் கொடுத்துப் பதவியை வாங்கலாம்; பதவியைப் பிடித்தால் லஞ்சம் வாங்கலாம். லஞ்சத்தில் மறைந்திருப்பது பதவி; பதவிக்குள் மறைந்திருப்பது லஞ்சம். மூலதனத்திற்குள் மறைந்திருப்பது லாபமும்கமிஷனும்; கமிஷனால் கிடைப்பது ஒப்பந்தமும் மூலதனமும்

என்பதெல்லாம் முதல் நேர்காணலின் போது புரியாதவைகளாக இருந்தன. புரிந்திருந்தால் லஞ்சத்தைப் பார்த்தால் நன்கொடையைக் காணோம்; நன்கொடையாகப் பார்த்தால் லஞ்சத்தைக் காணோம் என்று நிகழ்காலப் பொருத்தத்தோடு விளக்கம் சொல்லி வேலையை பெற்றிருக்க முடியும். தகுதி அடிப்படையில் கிடைத்திருக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது முதல் ஜனநாயக அரசுகளுக்கு எதிரான கருத்துக்களையே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

 

வேலை கிடைக்காமல் போன முதல் நேர்காணலைப் போல வேலை கிடைத்த நேர்காணல்களுக்குப் பின்னாலும் சுவாரசியமான சங்கதிகள் உண்டு. இன்னொரு முறை சொல்லலாம். இப்போது மரத்தில் மறைந்த மாமத யானையைத் தேடிப் போகலாம்.

*

கட்டுரை கே.பாலமுருகன் நகர் வாழ்வின் தீர்க்கமுடியாத தேக்கம்

நகர் வாழ்வின் தீர்க்கமுடியாத தேக்கம்

கே.பாலமுருகன்

 

 

 

 

 

 

 

ஒரு நகர் மனிதனின் உடலும் நினைவுகளும் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன? தேகம் பொருளாதார அலைவரிசையில் சிக்கிக் கொண்டு இயந்திரத்தனமான நகர்விற்கு ஆளாகிக்கொண்டிருக்க, மனமும் நினைவுகளும் பால்யக்கால நிலப்பரப்பின் மீதிருக்கும் கடந்துவிட்ட வாழ்வைச் சுமந்து கொண்டிருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தின் நகர் வாழ்வோடு ஒரு தனிமனிதன் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாத ஒரு சமரசம்தான் அவனுக்குள் தேங்கிக்கிடக்கும் தோட்டப்புற வாழ்வின் நினைவுகள். நகர் மனிதன் புதியதாகக் கற்றுக்கொண்டிருக்கும் உடல்மொழியென்பது நகரம் அவனுக்களித்திருக்கும் தற்காலிக பாவனை மட்டுமே. மனதின் மையம் முழுக்க அவனுடைய முந்தைய தலைமுறையின் பதிவுகள் அழுத்தமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

 

மலேசியாவின் மிக முக்கியமான கேலி சித்திர ஓவியரான காஷிம்(kassim) அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட “satu kampung satu pekan” (ஒரு நகரமும் ஒரு கம்பமும்) எனும் கேலி சித்திரக் கதை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. கம்பத்தில் வசித்த இரு நண்பர்கள், நகரத்திற்குக் குடிப்பெயர்ந்த பிறகு அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் நகர வாழ்வின் மீது வெறுப்பும், கிண்டலும், கேலிப் பார்வையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காஷிம் மலேசியாவின் மேலாண்மை சமூகத்தின் நகர் வாழ்வின் மீது இருக்கக்கூடிய மனநிலையை வெளிப்படுத்தும்விதமாகவே அந்தப் படைப்பை வழங்கியுள்ளார்.

 

மலேசியா போன்ற பன்முகக் கலாச்சார வாழ்வைப் பிரதிபலிக்கும் நாட்டில் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் ஒன்று போலவே தங்களின் கடந்தகால வாழ்வை மீட்டுணருக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என அனைத்து இனங்களிலும் ஒரு சிறு கூட்டம் சிறுப்பான்மை வாழ்வை ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பது இன்றைய நகரத்தின் ஒட்டுமொத்தமான முகம். தோட்டப்புறங்களிலிருந்து குடிப்பெயர்ந்து பல காரணங்களுக்காக நகரத்தை நோக்கி பயணம் செய்து, அங்கொரு வாழ்வை அமைத்துக்கொண்ட இந்தியர்களின் பிரக்ஞை இன்னமும் தனது கடந்தகால தோட்டப்புற வாழ்வையே மீட்டுணர்ந்த நிலையில் விழித்துக்கொண்டிருக்கிறது.

 

இலக்கிய படைப்புகளின் மூலம் மீட்டுணர்தல்

 

மலேசியாவின் முக்கியமான மூத்த நாவலாசிரியர் அ.ரெங்கசாமியின் அனைத்து நாவல்களும் காலனியக் காலக்கட்டத்தையும் போருக்கு முந்தைய பிந்தைய சமூக அமைப்பையும் ஆராய்ந்து தகவல்களாகவும் புனைவாகவும் தரக்கூடிய விதத்திலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக நினைவுச்சின்னம், லங்காட் நதிக்கரை, இமையத்தியாகம் போன்ற நாவல்கள் கடந்தக்கால வாழ்வை மீட்டுணர்ந்து ஆவணப்படுத்துவதாகவே எழுதப்பட்டுள்ளன.

 

80 வயதை நெருங்கியிருக்கும் அ.ரெங்கசாமியின் நினைவு மிகவும் பசுமையாக தோட்டப்புற வாழ்வையும் அதன் வரலாற்றையும் மீள்பதிவு செய்வதாக மீண்டும் மீண்டும் எழுதப்படுவது அந்த வாழ்க்கை இன்றைய நகர் மனிதர்களுக்குள் ஒரு தேக்கமாக நிலைத்துவிட்டதையே சுட்டிக்காட்டுகின்றன. அந்தத் தேக்கங்களுக்கான ஒரு விடுதலை புள்ளித்தான் இது போன்ற இலக்கியப் படைப்புகள். நகர் மனிதர்களான சு.யுவராஜன், ஏ.தேவராஜன், கோ.புண்ணியவான் போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் தொடர்ந்து தோட்டப்புற வாழ்வையும் அந்த முந்தைய தலைமுறையின் மனநிலைகளையும் சொல்லும் சிறுகதைகளை அதிகமாக எழுதியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து கவிஞர் பா.அ.சிவம் தோட்ட வாழ்க்கை குறித்தான மீந்திருக்கும் நினைவுகளைக் கவிதைகளாகப் படைத்து சமூகத்தில் சில கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நகர் மனிதர்கள் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து தனது சமூகத்தின் கடந்த வாழ்வை மீட்டுண்ர்வதோடு அதைக் கலை படைப்பாக்கி பிற மனிதர்களையும் பாதிக்கவே முயன்று வருகிறார்கள்.

 

கரிகாற் சோழன் விருது கிடைத்த எனது நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ முழுக்கவும் தோட்டப்புறத்தை விட்டு புலம்பெயர்ந்து நகரத்தை எதிர்க்கொள்ள முடியாமல் சிதைந்துபோகும் ஒரு தொழிலாளி குடும்பத்தின் கதையையே சொல்கின்றன. தொடர்ந்து இது போன்ற படைப்புகளின் மூலம் எழுத்தாளர்கள் மீட்டுக்கொண்டு வர நினைப்பது தோட்டப்புற வாழ்க்கையைத்தான். அவர்கள் இழந்த அந்த வாழ்க்கையிலிருந்து ஒரு உன்னதமான கலையை அவர்களால் பிடுங்கி அதைப் படைப்பாக்க முடிகிறது. கடந்தகால வாழ்வின் மீது படிந்துகிடக்கும் எளிமையான விசயம் என்பதே அதைத் தொடர்ந்து மீள்பதிவு செய்யவும் மீட்டுணரவும் செய்யக்கூடிய வாய்ப்புகள்தான்.

 

ஒரு சமூகத்தின் பகைமையும் இழப்பும்

 

மலேசியாவில் முதன் முறையாக கெடா மாநிலத்திலுள்ள சுங்கை லாலாங் எனும் பகுதியில்தான் மலிவு வீடு கட்டப்பட்டது. சுங்கை லாலாங் கடாரத்திலுள்ள அதிகமாக வளர்ச்சியடையாத ஒரு வட்டாரமாகும். அந்த மலிவு வீடுகள் கட்டப்பட்ட பகுதியை “பண்டார் பாரு”(புதிய நகரம்) எனச் சொல்வார்கள். கடாரத்திலுள்ள முக்கியமான சில தோட்டப்புறங்களிருந்து பலர் இங்குக் கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டார்கள். 4 விதமான தோட்டத்து மக்களுக்கு இந்த மலிவு வீடுகள் வழங்கப்பட்டு தோட்டப்புறங்களைக் காலியாக்கினார்கள். இதனைச் செய்தது இந்திய தோட்டப்புறங்களை வாங்கிக் குவித்த சீன முதலாளிகள். செண்ட்ரோல், ரூசா, கிம் சேங் எனும் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதியிலிருந்து பல குடும்பங்கள் பண்டார் பாரு மலிவு வீடு பகுதிக்குப் புலம் பெயர்ந்து புதிய சமூகமாக உருவானார்கள்.

 

இந்தச் சமூக உருவாக்கம், பிற்காலத்தில் சுங்கை லாலாங் வட்டாரத்தைக் குண்டர் கும்பல் பிரச்சனைகளின் மையப்பகுதியாக மாற்றியமைத்தது. மூன்று தோட்டப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெரியவர்களுக்கு மத்தியிலிருந்த பகைமை ஒரே இடத்தில் அவர்கள் சேர்ந்தபோது மிகப்பெரிய கும்பல் சண்டைகளையும் பழி வாங்குதலையும் வளர்த்துவிட்டன. வெவ்வேறான தோட்டப்புறங்களைச் சேர்ந்த அந்த மனிதர்களின் முன்னால் பகைமையை அங்கு வைத்துத் தீர்த்துக்கொண்டதன் விளைவாகக் கலவரங்கள் ஆங்காங்கே உருவாகத் துவங்கின. மலிவு வீடுகளுக்குக் குடிப்பெயர்ந்து வந்தவர்கள் இங்கு உருவாகியிருக்கும் கலவரங்களையும் குண்டர் கும்பல் சண்டையையும் எண்ணி, மீண்டும் தோட்டங்களுக்கே சென்றுவிடலாம் என ஏங்கத் துவங்கினர். தனித்து வாழ்வதில் இருக்கும் முக்கியத்துவங்களைப் புலம்பல்களாகப் பிரச்சாரம் செய்தனர்.

 

நாளடைவில் இது போன்ற சூழல் அங்குள்ள மனிதர்களைச் சுய ஒடுக்குதலுக்கு ஆளாக்கியது. தம்மை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டு சக மனிதர்களிடமிருந்து ஒதுங்கி வாழ ஆரம்பித்தனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அங்குள்ள அனைத்து மனிதர்களும் தனி தனி தீவுகளாகினர் என்றே சொல்லலாம். சமீபத்திய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட அவர்களுக்கு அங்கு உருவாகியிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வின் மீது எந்த ஆர்வமும் இல்லை. இந்தப் பிரச்சனையைப் பற்றி மேலும் விவாதிக்கும்போது நமக்கு கிடைக்கும் முக்கியமான பதில், மலேசியாவிற்கு உழைக்கும் வர்க்கமாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் ஆங்காங்கே தனித்தனி பிரிவுகளில் கூலிகளாக அமர்த்தப்பட்டார்கள். தனக்களிக்கப்பட்ட நியாயமற்ற வாழ்வின் மீது உருவான கசப்பும் அவ்வப்போதும் ஒட்டுமொத்தமாகவும் எதிர்க்கொண்ட சர்வதிகாரத்தின் மீதான அச்சமும் பதற்றமும் ஒரு கட்டத்திற்கு மேற்பட்டு சிந்திக்க முடியாத குருரமான மனநிலைகளுக்கு அவர்களைப் பலியாக்கியன.

 

நகர் வாழ்வின் போராட்டம்

 

சுங்கைப்பட்டாணி நகரத்தில் 1980களுக்குப் பிறகு வேலைக்காகக் குடிப்பெயர்ந்து வந்தவர்கள் பெரும்பாலும் ஸ்காபரோ 2, 4, கெமாஸ் போன்ற தோட்டப்புறங்களிலிருந்து வந்தவர்கள். மேலும் புக்கிட் லெம்பு தோட்டங்களிலிருந்து சீன முதலாளிகளின் அடக்குமுறை தாங்காமல் சுங்கைப்பட்டாணி சிறு நகரத்திற்கு வந்து சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் ஆகும். ஏறக்குறைய 1980களில் சுங்கைப்பட்டாணி( கடாரத்தில் உள்ள ஒரு சிறு நகரம்) நகரம் முழுக்கவும் பரவியிருக்கும் தொழிற்சாலைக்குப் பலர் வேலைக்கு வந்து சேர்ந்தனர். ஷார்ப்(sharp roxy) எனப்படும் தொழிட்நுட்ப உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மட்டும் 1980களில் வேலைக்கு வந்து சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 400ஐயும் தாண்டியிருப்பதாகக் கேட்டறிந்தேன்.

 

சிறு சிறு கூட்டமாக நகரத்தின் தொழிற்சாலைகளுக்கும் கடைகளுக்கும் வேலைக்காக வந்து கொண்டிருந்த தமிழர்கள் நகரத்தையொட்டிய கம்பங்களிலும் மலிவு வீடு குடியிருப்புகளிலும் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். பொருள்மையமாகவும் தொழில்நுட்ப பாதிப்புகளினால் நடுத்தர வர்க்கத்தின் மாயையாகவும் மாறிக்கொண்டிருந்த சுங்கைப்பட்டாணி தோட்டங்களிருந்து வந்து சேர்ந்து தமிழர்களுக்கு மெல்ல மெல்ல போராட்டமான வாழ்வை உருவாக்கிக் கொடுத்தது. பொருள்களின் விலையேற்றமும் வேலை வாய்ப்புக்காகப் போராடும் நிலையும் தோட்டங்களில் அடிமைகளாக இருந்த அவர்களுக்கு பிடிமானமற்றதாகி போனது. தொடர்ந்து ஒரு பதற்றமான மனநிலையில் சிறுக சிறுக சிதைந்து போகத் துவங்கினார்கள்.

 

அவரவர் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்வதிலும் பாதுகாத்துக்கொள்வதிலும் தமிழர்களுக்கு மத்தியில் ஒரு தீவிரத்தன்மை உண்டானது. அந்தத் தீவிரத்தன்மை அவர்களைச் சுயநலவாதிகளாக மாற்றியது. இப்படியொரு செயற்கையான மனநிலைக்கு ஆளான தமிழர்கள் ஒருவர் மீது ஒருவர் புற்றிசல்கள் போல எண்ணிக்கையற்ற வெறுப்புகளையும் காழ்ப்புகளையும் வெளிப்படுத்திக்கொண்டு தனிமைப்பட்டுப் போனார்கள். தோட்டப்புறங்களில் சுரண்டப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் சகப் பாட்டாளிகளின் மீது அன்பும் அக்கறையும் தோழமையும் நிரம்பிய ஒரு நெருக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் நகர் போராட்டம் அவர்களைக் குரூரமானவர்களாக மாற்றியமைத்தது.

 

நகரத்தின் மலிவான பகுதியை நுகர்ந்து தம்மைச் சமரசப்படுத்திக்கொண்டு ஒரு மீதமான வாழ்வை வாழ்ந்து கடந்த அத்தனை அடித்தட்டு மக்களும் திரும்ப திரும்ப தனக்கு காலனிய ஆதிக்கத்தில் தரப்பட்ட வாழ்வை நோக்கியே ஏங்கித் தவித்தார்கள். உலகத்தின் எல்லாம் நிலப்பரப்பும் அடிமைப்படுத்தப்பட்டவன் அடிமைப்படுத்தியவன் எனும் இரண்டே சமூகத்தைக் கொண்டிருந்தது போல தமிழர்களின் புலம் பெயர்ந்த வாழ்வும் நிலமும் அமைந்திருந்தது. பெருநகரத்தின் சிதைவுண்ட வாழ்வைவிட அதிகாரத்தைச் சமாளித்துக்கொண்டு நகர்த்தும் ஒடுக்கப்பட்ட வாழ்வே பரவாயில்லை என்கிற ஒரு வெறுப்புநிலைக்கு நகர் வாழ்வு அவர்களைப் பாதித்திருந்தது.

 

இன்றும் நகரத்திலுள்ள முதியவர்களைக் கேட்டால், அவர்கள் தன்னுடைய தோட்ட வாழ்க்கை மீட்டுணர்ந்து சிலாகிப்பதை உணரலாம். கடந்தகால நிலப்பரப்பில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது மிகவும் சாதரணமான வாழ்வாக இருப்பினும் அதில் அடர்த்தியான மனித நெருக்கமும் திருப்தியும் நாட்டுப்புறத்தன்மையும் இருந்தமையால் மனிதர்கள் அதையே நேசிப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான நிலையாகக் கருதுகிறேன். அதிகார வர்க்கம் கொடுத்த அடிமைத்தன வாழ்வையே மீண்டும் மீண்டும் மனம் ஏங்கித் தவிப்பதென்பது உலகின் எல்லாம் பகுதிகளும் தமிழர்களை நீக்கியே வந்தது என்பதற்கான ஆதாரம்.

 

•••

கட்டுரை – எச்.பீர்முஹம்மது – உதுமானியபேரரசும் குர்துகளும்

உதுமானியபேரரசும்  குர்துகளும்

எச்.பீர்முஹம்மது

 

 

 

 

 

 

உலக வரலாற்றில் இடைக்கட்டத்தில் உதுமானிய பேரரசு மிகப்பெரும் வல்லரசாக திகழ்ந்தது. வரலாற்றில் அவ்வாறான வல்லரசாக திகழ்ந்தவை மூன்று. ஒன்று துருக்கிய உதுமானிய பேரரசு, இரண்டாவது முகலாய பேரரசு, மூன்றாவது ஈரானின் சபாவித் வம்சம் .மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரும் சமூக, கலாசார மற்றும் அரசியல் மாற்றங்கள் அவர்களின் காலகட்டத்தில் தான் நடந்தேறியது. உலகின் பேரரசின் வரலாற்றிலே மிக அதிக காலமாக சுமார் 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்த உதுமானிய பேரரசின் வரலாறு மிக நீண்டது. நீண்ட எல்லையை, நீண்ட காலத்தை உட்கொண்ட வரலாறு அதற்குண்டு. அதாவது உலகின் மிகப்பெரும் பகுதிகளை, இருகண்டங்களை உதுமானிய பேரரசு ஆண்டது.  ரோம் முதல் ஹங்கேரி வரை, போலந்து முதல் எமன், யரித்திரியா வரை, அல்ஜீரியா முதல் அசர்பைஜான் வரை , அதாவது தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதி, மேற்கு ஆசியா முதல் வட ஆப்ரிக்கா வரை இதன் எல்லைகள் நீண்டிருந்தன. இதில் 29 மாகாணங்கள் மற்றும் ஏராளமான வரி செலுத்தும் சிற்றரசுகள் அடங்கியிருந்தன. இவற்றுள் பல பிந்தைய கட்டத்தில் பேரரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இவற்றுள் சுயாட்சி பெற்ற மாகாண அரசுகளும் உண்டு. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புலை தங்கள் தலைநகராக கொண்டு மத்திய தரைக்கடல் பகுதியின் பெரும் பரப்பை ஆண்ட உதுமானிய பேரரசு கிழக்கிற்கும் மேற்குலகத்திற்கும் இடையே கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் உறவு கொண்டிருந்தது.

உதுமானிய பேரரசின் வேர் காசி வம்ச அரசோடு தொடர்பு கொண்டது. கி.பி 1300 ல் அனதோலிய பிராந்தியமானது செல்யூஜ் வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. அவர்களின் முடிவுக்கு பிறகு அந்த பிராந்தியமானது பல பகுதிகளாக பிரிக்க்பட்டது . இது காசிமேத் என்றழைக்கப்பட்டது. அனதோலியா பிராந்தியத்தின் ஒரு பகுதியை காசிமேத் அரசரான உஸ்மான் ஆட்கொண்டார். அந்த கட்டத்தில் பைசாண்டிய பேரரசு மிக பலவீனப்பட்டு காசிமேத்களிடம் தங்களின் பல பிரதேசங்களை இழந்தது. இந்நிலையில் இடைக்கால துருக்கிய கதையான உஸ்மானின் கனவு குறிப்பிட்டது போல் இளம் துருக்கிய அரசனான உஸ்மான் மூன்று கண்டங்களையும், மத்திய கிழக்கு பகுதி முழுவதையும் தன் அதிகார பரப்பாக்கிக் கொண்டார். அந்த பேரரசிற்கு உலகின் பாரம்பரிய ஜீவநதிகளான நைல், யூப்ரடீஸ், டைக்ரீஸ், தனூபி போன்றவை ஆகப்பெரும் வளமிக்க எல்லைகளாக இருந்தன. அவை நான்கு திசைகளிலிருந்தும் பாய்ந்து உதுமானிய பேரரசை வளமாக்கின. மேலும் அதன் வலுமிக்க அரண்களாக காகஸ், டாரஸ், பல்கான், அட்லஸ் ஆகிய பெரும் மலைத்தொடர்கள் இருந்தன. இதன் தொடர்ச்சியில் முதலாம் உஸ்மான் பைஸாண்டிய பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இவரின் காலமானது துருக்கியின் சீர்திருத்தங்களின் தொடக்க காலம். சமூக, பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் செய்யப்பட்டன. இவரின் காலத்திற்கு பிறகு அவரின் மகனான ஒர்கான் அதிகாரத்திற்கு வந்தார்.இவர் தன் அதிகார எல்லையை கிழக்கு மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து பல்கான் வரை நீட்டித்தார்.  இவர் பர்ஸா நகரை கைப்பற்றி பின்னர் அதனை தன் தலைநகராக்கிக்கொண்டார். ஒர்கான் தன் பேரரசை மேலும் வளப்படுத்தினார். இவரின் காலத்தில் தான் கட்டிடக்கலையில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டன. துருக்கிய கட்டடக்கலை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் நுட்ப தாட்பங்கள் பரிணமிந்து சென்றன.

உதுமானிய பேரரசின் ஐரோப்பிய நுழைவின் முக்கியகட்டம் என்பது 1389 ஆம் ஆண்டு கொசாவா பகுதியை கைப்பற்றிய நிகழ்வு . இது செர்பிய ஆளுகையை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் சிலுவைப்போர்களின் உச்சகட்டமாக  1396 ல் நடந்த நிகோபலஸ் போரில் உதுமானிய அரசின் ஐரோப்பா நோக்கிய பரவலை பைஸாண்டிய அரசால் தடுக்க முடியவில்லை. அக்காலத்தில் பால்கன் பிரதேசத்தில் உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டை யாராலும் தடுக்க முடியவில்லை. பின்னர் ஆட்சி, அதிகார கட்டத்தின் தொடர்ச்சியில் 1402-1413 ல் துருக்கியில் பெரும் உள்நாட்டு கலகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உதுமானிய பேரரசு சிதைந்தது. இதனை தொடர்ந்து ஒன்றாம் மெஹ்மூத்  உதுமானிய பேரரசை மறுநிர்மாணம் செய்தார். இந்நிலையில் உதுமானிய பேரரசிற்கு பிராந்திய, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக பல சவால்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியில் 1512 ல் ஒன்றாம் சலீம் உதுமானிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார். வரலாற்றில் உதுமானிய பேரரசை விரிவாக்கி, அதற்கு சரியான வல்லரசு அடையாளத்தை கொடுத்தவர் சலீம். இவர் காலகட்டத்தில் தான் பேரரசு மிகப்பெரும் இராணுவ பலத்தைப்பெற்றது. 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு மிகப்பெரும் சவாலாக  சலீம் இருந்தார். அரசியல் மற்றும் பொருளாதார பலம் இவர்காலத்திய பேரரசிற்கு மிகப்பெரும் வீச்சாக இருந்தது. மேலும் அரபுலக வரலாற்றில் அதன் முழுப்பிராந்தியமும் இவரின் கட்டுப்பாட்டில் வந்தது. குறிப்பாக 1512 -1517  ல் எகிப்திய பகுதி முழுவதையும் கைப்பற்றினார். மேலும் இதே காலகட்டத்தில் சிரியா, சவூதியின் ஹிஜாஸ் பாலைவனம் முழுவதும் இவர் கட்டுப்பாட்டில் வந்தது.  இவ்வாறாக அரபுலகின் இதயப்பகுதிகள் உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு , அதன் மூலம் உதுமானிய பேரரசு இஸ்லாமிய உலகின் அதிகாரபூர்வ நபராக மாற்றம்  பெற்றது.

குர்துகளின் வாழ்வியலில், அவர்களின் இயக்கத்தில் உதுமானிய பேரரசு மிகப்பெரும் எதிர்கொள்ளலாக இருந்தது. துருக்கிய குர்துகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டத்திலும் முதலாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம் வரையிலும் மிகப்பெரும் இனக்கொடுமைகளுக்கு உள்ளானார்கள். துருக்கிய குர்துகளின் தேசிய இனப்போராட்டத்தின் மிக முக்கிய பேரினவாதம் என்பது உதுமானிய பேரரசை  மையம் கொண்டதாக இருந்தது. சுல்தான் மஹ்மூத் இதன் கதாநாயகராக  இருந்தார். அவரின் காலகட்டம் குர்துகளின் வாழ்வில் மிகப்பெரும் துக்ககரமானதாக இருந்தது.குர்துக்களின் வாழ்க்கை நீரோட்டம் வற்றிப்போன நதியாக தொடர்ச்சியற்று சென்றது. பின்னர் சுல்தான் அப்துல் ஹமீத் அதிகாரத்திற்கு வந்தார். அவரின் காலகட்டத்தில் தான் துருக்கி ரஷ்யா போர் ஏற்பட்டது. அந்த கட்டத்தில் ஏராளமான துருக்கிய குர்துகள் அங்கிருந்து புலம்பெயர நேரிட்டது. ஆக உலக வரலாற்றில் உதுமானிய பேரரசு குர்துகள் தங்களின் சுயநிர்ணய உரிமையை கோருவதற்கான மிகப்பெரும் காரணமாக விளங்கியது.

கட்டுரை – எச்.பீர்முகம்மது – யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் நதிக்கரை நாகரீகங்களின் தோற்றமும் பரிணாமமும் – குர்திஷ் தலைவர் ஒசலானின் சிந்தனைகளிலிருந்து

 

 

யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் நதிக்கரை நாகரீகங்களின் தோற்றமும் பரிணாமமும்குர்திஷ் தலைவர் ஒசலானின் சிந்தனைகளிலிருந்து

 

-எச்.பீர்முஹம்மது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மனித இன வரலாற்றில் நதிக்கரைகள் முக்கியமானவை. அதுவும் பாரம்பரிய நதிகள் வரலாற்றில் மிக மிக உயிரோட்டமானவை. அவை வரலாற்று அறிவின் அடிப்படையில் நாகரீகங்களின் பிறப்பிடமாக , அவற்றை செழுமையாக்கிய, அதன் போக்கை தீர்மானித்த ஒன்றாக, அதன் சிறந்த தொடர்பு ஊடகங்களாக நதிகள் இருந்திருக்கின்றன. இந்நிலையில் வரலாற்று கால ஈராக்கின், சுமேரியா நாகரீகத்தை தோற்றுவித்த பாரம்பரிய நதிகள் யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் இன்றும் தொடர் வரலாற்று சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. ஒசலான் தன் நாகரீகங்களின் வேர்கள் (Roots of Civilization)என்னும் நூலில் இதைப்பற்றி விரிவாக ஆராய்ந்தார். ஈராக்கின் இரு மலைத்தொடர்களின் நடுவே பெரும் நீரோட்டமாக அமைந்திருக்கும் இந்த பாரம்பரிய நதிகள் ஒரு வரலாற்றுக்குறிப்பின் படி முதல் நாகரீகமாக அறியப்படுகிறது. இதன் முதல் கட்ட வளர்ச்சிப்போக்கு என்பது சிக்கலான அரசியல் கட்டமைப்பை கொண்டிருந்து மனித குல வரலாற்றின் மிகப்பெரும் திருப்பு முனையாக இருக்கிறது. நாம் வரலாற்றில் அறிந்திர முடியாத ஒன்றின் வெளிப்பாடாக இவற்றின் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கிறது. மேலும் சுமேரியர்கள் மற்றும் அவர்களின் அரசை பற்றி அறிய வேண்டுமானால் நாம் நடப்பு காலம் பற்றியும், நம்மைப்பற்றியும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம் மிக எளிமையானதே. வரலாற்று ஆய்வுகள் மற்றும் வரலாற்றை வரலாறாக பதிவு செய்தல் இவற்றின் நாம் மிகப்பெரும் பலவீனமாக இருக்கிறோம். அப்படிப்பட்ட பலவீனமே நம்மை வரலாற்றறிவை உட்கிரகிக்க தடையாக இருக்கிறது. ஒருவேளை இந்த இருநதிகள் தோற்றுவித்த சுமேரிய நாகரீகம் தான் உலகின் முதல் நாகரீகமாக கூட இருக்கலாம். அவை நம் கலாசார நினைவிலிருந்து எவ்வித வரலாற்று கேள்விகளுமற்று தூரமாகி போய்விட்டன. இந்நிலையில் சுமேரியர்கள் நம் காலத்தின் நேற்றாக இருக்கிறார்கள். அவ்வகையில் அவர்கள் நமக்கு, நம் கலாசாரத்திற்கு மிக நெருக்கமாக இருக்கின்றனர் என்றார் ஒசலான்.

 

 

 

முந்தைய வரலாற்று தரவுகளின் படி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை யூப்ரடீஸ் நதிப்பகுதியில் இருந்திருக்கின்றன. இது நவகற்காலத்தை பிரதிபலித்தது. உணவு உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு கிராமப்புற வாழ்க்கையை நோக்கி அவர்களை நகர்த்தியது. கிராமம் அதன் சரியான வடிவத்தில் உருவான இடம் இது தான். இது மெசபடோமிய நாகரீகத்தின் வாழ்வியல் காட்சி படிமம்.இவை பத்தாயிரம் ஆண்டுகள் முந்தைய வரலாற்றை உடையவை. இப்பிராந்தியத்தின் அல்லது இதனோடு தொடர்புடைய பிராந்தியங்களின் நாகரீக கூறுகள் பல மண்ணுக்குள் புதைந்து விட்டன. அவையும் நவ கற்காலத்தை சார்ந்தவை தான். அவற்றுள் வரலாற்றுக்கால குர்து பிரதேசமும் ஒன்று. இந்த புதைபாடுகளுக்குள் கிழக்கு அரேபிய பிரதேசமும் மாட்டிக்கொண்டது. அவற்றின் கலாசார புதுமைகள் தான் பிந்தைய கட்டத்தில் தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இவைகளின் சமூக விரிவாக்கம் கிமு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கிமு 4 ஆம் நூற்றாண்டு வரையிலான பொருளாயத அடிப்படைகளை கொண்டது. இந்த கலாசாரங்கள் பாரம்பரிய, வளமான யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீடிஸ் நதிக்கரையால் வளர்க்கப்பட்டவை. மெசபடோமியாவின் நவ கற்கால சமூகங்கள் தங்கள் நாகரீகத்தை உயர்த்துவதற்கான பல்வேறு விதமான செயல்பாடுகளில் இறங்கின. ஓவிய கவிதைகள், செம்மறி ஆட்டுத்தோலை வைத்து ஆடை நெய்தல்,தானியங்களை அரைத்தல், கோடறி மற்றும் உழுவதற்கான கலப்பையை உருவாக்குதல், செங்கல் சூளை, உலைகள், புனித தலங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறுவிதமான பணிகளில் இறங்கின. அவர்களின் மத நம்பிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. வித்தியாசமான குறியீடுகள், பெண் தெய்வ வழிபாடு போன்றவை தொடர்ந்திருந்தன. ஆக மெசபடோமியாவுடன் தொடர்புடைய பகுதிகள் “வரலாற்றின் விடியல்” என்று நம்பப்படுகின்றன.

 

 

 

உபய்த் மற்றும் உர்க் சமூகங்கள் அதாவது கிமு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரை மத்திய கிழக்கின் ஒரு பகுதியை ஆட்சி செய்த உபய்த் சமூகம் சதுப்பு நிலங்களில் பயிர் செய்து அதிக மகசூலை ஈட்டியது.பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் எவ்வித காத்திருப்பும் இல்லாமல் உடனடியாக விளைநிலங்களுக்கு போய் சேர்ந்தது. இம்மாதிரியான சாதனைகளால் வரலாற்றாசிரியர்கள் சுமேரியாவை “வரலாறு சுமேரியாவிலிருந்து பிறந்தது ” என்பதாக குறிப்புணர்த்துகிறார்கள். ஆக நாகரீகத்தை நாம் பலவிதமான வழிகளிலும் வரையறுக்கலாம். அதில் முக்கியமான குணாதிசயம் என்பது மனித உழைப்பு. அன்றைய உடனடி தேவைகளுக்கான உற்பத்தி போக மற்றவை உபரியாக பராமரிக்கப்பட்டன. அவை ஒரு குழுவால் மேலாண்மை செய்யப்பட்டன. இவ்வாறான உற்பத்தி பரிமாற்றம் மனித உறவுகளை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் அவை சொத்து என்பதன் வடிவத்தையும் தோற்றுவித்தன. இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி அக்கால நாகரீக மனிதனை பல்வேறுவிதமான கட்டிடங்கள், தொழில் மையங்கள் போன்றவற்றை தோற்றுவிக்க செய்தன. இவை அரசு என்பதன் அதிகார வடிவத்தை நோக்கி நகர்ந்தன. அரசானது மக்கள் மனதில் சமூக மேலாண்மையை ஏற்படுத்தியது. அதனோடு அரசியல் அதிகாரத்தனத்திற்கு முக்கிய கூறாக மாறியது. அடிமை உழைப்பு அன்றைய கட்டத்தில் மிகப்பெரும் உற்பத்திக்கருவியாக இருந்தது. அந்த கருவியானது சமூகத்திற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்வதுடன், உபரியாகும் பொருட்களை சேமிக்கவும் கற்றிருந்தது. மற்றொரு நிலையில் சுமேரிய சமூகத்தில் ஒழுக்கம், அறம் மற்றும் ஆன்மா குறித்த கருத்தாக்கங்கள் பரவி கிளைத்தன. இவை அந்த சமூகத்தை வேறொரு கட்டத்திற்கு நகர்த்தின. பல பெண் தெய்வங்கள் உருவாக்கப்பட்டன. அவை பிந்தைய கட்டத்தில் தெய்வீக அந்தஸ்தை  பெற்றது.

 

 

 

ஆரம்பகால மெசபடோமிய நாகரீகத்தை பொறுத்தவரை , வரலாற்று வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பானது க்யூனிபாம் என்ற உயர்தர எழுத்துவகைகளை கண்டறிந்தது. கணிதம், வானவியல் மற்றும் நாட்காட்டி போன்றவற்றை கண்டறிந்தது ஆகியவற்றை குறிப்பிடலாம். இம்மாதிரியான செயல்பாடுகள் மூலம் சுமேரியர்கள் தங்களை உயர்த்திக்கொணடார்கள். பிந்தைய காலகட்டத்தில் மெசபடோமியா நாகரீகம் நகர வாழ்க்கையில் நெடியோடு மாறியது. பல கைவினைப்பாடுகள், மையப்படுத்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மாறியது. தொன்மம் சார்ந்த கவிதைகள், பாடல்கள், இசை போன்றவைகள் அவர்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தின. அடிப்படையில் இது நாகரீக சமூகத்தின் குறிப்பான தோற்றத்திற்கு தொடக்கம் குறிக்கிறது. மெசபடோமிய, சுமேரிய நாகரீகங்களின் அறிவுத்துறை சார்ந்த வரலாறுகள் பல அழிக்கப்பட்டு விட்டன.  அவற்றின் எச்சங்கள் மட்டுமே தற்போது நிலவுகின்றன. மேலும் கிரீக் மற்றும் ரோம நாகரீகங்கள் சுமேரிய நாகரீகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்கான ஆதாரங்கள் வரலாற்றிலிருந்து மறைந்தோடி விட்டன. சமூகமயமாக்கல் செயல்முறை தொடங்கிய போது அவை தங்களை ஒருங்கிணைப்பதற்கான பிரக்ஞையை அடைந்தது. மனிதனின் தோற்றம் தொடங்கி அவனின் மூளையானது குறிப்பிட்ட நிலைக்கு வளர்ச்சி அடைந்த போது, அது தன்னை வளப்படுத்துவதற்காக சில கருவிகளை பயன்படுத்த தொடங்கியது. பின்னர் குழுக்களிடையே தொடர்புறுதல் பேச்சு வடிவத்தில் அசைவியக்கமாக ஆரம்பித்தது. அன்றைய நாகரீக மனித சமூகத்தின் முதல் புரட்சியே வாழ்வு பற்றிய உன்னதத்தை, வெளிப்பாட்டை அறிந்து கொண்ட நிகழ்வு தான் என்கிறார் ஒசலான். இந்த சமூக வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய, அதாவது நாகரீகங்களின்  தோற்றத்திற்கு முந்தையதுமாகும். ஆதிகால பாலியல்முறை, மிருகமுறை, திருமண உறவு முறை, குடும்ப அமைப்பு, தந்தைவழி சமூகம், பல்தெய்வ வழிபாட்டு முறை, ஒரிறை வழிபாடு, பூசாரி முறை, தீர்க்க தரிசனம் போன்றவை மனித இனத்தை குறிப்பிட சமூக ஒழுங்கிற்கு உள்ளாக்கி, அவனை உயிரியல் ரீதியான வேட்கையிலிருந்து விடுவிப்பதற்கான ஒன்றாக இருந்தது. மேலும் அதற்கான கலாசார விதிமுறையாகவும் இருந்தது.  இதன் தொடர்ச்சியில் சடங்குள், வழிபாடுகள்,பலிகள் ஆகியவை அவனின் சமூக பலத்தை வெளிப்படுத்துவதற்கான கூறுகளாகவும் இருந்தன. இம்மாதிரியான செயல்முறைகள், நடத்தைகள் ஆதிமனிதனை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்தி அவனுக்கு சரியான , தெளிவான வடிவத்தைக்கொடுத்தன. மேற்கண்ட முறைகள் தான் அவனுக்கான கலாசார பாரம்பரியத்தை தோற்றுவித்தன. அதோடு நாகரீகத்தின் சரியான தோற்றப்பாடாகவும் இருந்தன.

 

 

நவகற்காலத்தில் விவசாய புரட்சியானது வர்க்க சமூக வெளிப்பாட்டின் இரண்டாம் கட்டமாகும். இதன் பொருளாதய, அறிவு சார் நடவடிக்கையானது பிந்தைய தொழில் புரட்சி காலம் வரைக்கும் நீடித்தது. இதன் முக்கிய கூறான விவசாய கட்டமைப்பு சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் நீடித்தது. முதலாவதாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பின் மூலம் பெறப்படும் பொருட்கள் உலகம் முழுவதிற்குமான மூலப்பொருட்களின் அடிப்படையை தோற்றுவித்தது. மேலும் தாதுக்களின் சுரண்டலையும் ஆரம்பித்து வைத்தது. இரண்டாவதாக நம்மின் பல கருத்துருக்கள், மொழி வெளிப்பாடுகள் போன்றவை இச்செயல்பாடுகளின் தாக்கமே. மேலும் ஐரோப்பா அல்லாத சமூகங்கள், மத்திய கிழக்கு சமூகங்கள் ஆகியவை குறிப்பிட்ட கட்டத்தில் தன்னம்பிக்கையை பெறுகின்றன. மேலும் தற்கால அரசியல் வாழ்க்கைக்கு தேவையான  படிப்பினையை அவை வரலாற்றிலிருந்து பெறுகின்றன.மேலும் சுமேரிய நாகரீகத்தின் அல்லது சமூகத்தின் முக்கிய கூறாக பாலியல் பேதம் இருக்கிறது. பெண் அந்த நவ கற்கால யுகத்தில் உற்பத்தி சக்தியாக மிக முக்கிய பாத்திரம் வகித்தாள். விவசாயமும், மிருகங்களின் வீட்டுமயமாக்கலும் அவள் இல்லாமல் பரிணாமமடையவில்லை. நிலையான குடும்ப வாழ்க்கை முறையானது , குழந்தை வளர்ப்பு முறையோடு சம்பந்தப்பட்டு பெண்ணின் தேவை சார்ந்ததாக இருந்தது. மண்பாண்டம் செய்தல், நெசவுத்தொழில், தானியங்கள் அரைத்தல் போன்றவை மையச்செயல்பாடுகளாக இருந்தன. உறவு முறைகள் பெண்வழி அல்லது தாய்வழி சமூக அமைப்பு முறையில் இருந்தன. மேலும் சுமேரியர்கள் மத ரீதியான பல குறியீடுகளை கண்டறிந்தனர். மேலும் பெண் கடவுள்கள் அவர்களின் வாழ்வியலில் பெரும் தாக்கத்தை செலுத்தினர். மேலும் கோவில்களில் ஆண் பூசாரிகளுக்கு இணையாக பெண் பூசாரிகளும் இருந்தனர். ஆனால் குடும்பத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தனர். ஆனால் அதே நேரத்தில் சுமேரிய/மெசபடோமிய சமூகத்தில் பெண்களின் இடம் வீழ்ந்து விடவில்லை. பிந்தைய தொடர்ச்சியில் சுமேரியர்களால் திருமணம் நிறுவனப்படுத்தலுக்கு உள்ளானது. திருமணத்தை நிறுவனமயமாக்கிய உலகின் முதல் நாகரீகம் சுமேரிய நாகரீகமே. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நவகற்காலத்தில் நாகரீக சமூகம் அதற்கான சொந்த விதிமுறைகளுடன் கூடிய நகரமயமாக்கலை தேர்ந்தெடுத்தது. இதன் தொடர்ச்சி தான் அரசு என்பதன் உருவாக்கம். மனித சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மறு கட்டமைப்புக்கு உள்ளானது. அதாவது பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்ட படிநிலை சமூகம் தோற்றுவிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட அரசு என்பது உருவானது.  நடைமுறை வாழ்க்கையானது மிகப்பெரிய மற்றும் சிக்கலான சமூக சூழலில் புதிய மனச்சித்திரத்தை தோற்றுவித்து புதிய நிறுவனங்களுக்கான தேவையை வலியுறுத்தியது. எழுத்து செயல்பாடு, பொருட்களை கணக்கிடுதல், காலநிலை மதிப்பீடு, மருத்துவம், கல்வி போன்ற துறைகள் சார்ந்து சிந்திப்பதற்கான தேவையை சுமேரிய சமூகம் தொடர்ந்திருந்தது.

 

 

நாகரீக சமூகத்தின் மிகப்பெரும் குணாதிசயமாக இருந்த சிந்தனையும், செயல்பாடும் சுமேரிய, மெசபடோமிய நாகரீகங்களில் இயங்கியல் அடிப்படையில் இருந்தது. அவர்கள் வானத்தை அனு என்றும், பூமியை என்கி என்றும் அழைத்தனர். அது ஆண், பெண் என்ற இருமையுடன் உவமைப்படுத்தப்பட்டது.  என்கி ஆணோடு உவமைப்படுத்தப்பட்டது. அனு பெண்ணோடு தொடர்புபடுத்தப்பட்டது. இவை இரண்டின் புணர்தலில் உலகம் இயங்குகிறது என்பதை சுமேரியா, மெசபடோமிய மற்றும் பாபிலோனிய சமூகங்கள் நம்பின. மேலும் கிமு இரண்டாயிரம் நூற்றாண்டில் பெண் தெய்வ வழிபாடு மற்றும் இது சம்பந்தமான தொன்ம சொல்லாடல்கள் அனைத்தும்  படிப்படியாக மதிப்பிழக்க தொடங்கின. இந்த காலகட்டத்தில் தான் சமூகத்தின் மேலடுக்கில் ஆண் மையப்படத்தொடங்கினான். பெண்கள் தங்கள் சமூக அந்தஸ்தை இழக்கத்தொடங்கினர். அன்றைய நாகரீக சமூகம் மிகப்பெரும் கருத்தியல் மற்றும் அறவியல் மாற்றத்திற்கு உள்ளானது. இது தான் சுமேரிய, மெசபடோமிய, பாபிலோனிய நாகரீக சமூகத்தில் மிக முக்கிய காலகட்டம் என்கிறார் ஒசலான்.

 

 

ஒசலானின் சிந்தனைகளை பொறுத்தவரை அவர் பேரரசு மற்றும் காலனியம் அன்றைய நாகரீக சமூகங்களில் எவ்வாறு உருவானது என்பதைப்பற்றி விரிவாக ஆராய்ந்தார். சுமேரிய சமூகம் முழுவதையும் வெற்றிக்கொண்டு அவற்றை மையப்படுத்தப்பட்ட அக்காடிய அரசுடன் இணைத்தவர் சார்கன். சார்கன் பாபிலோனியாவின் மையப்பகுதியில் தன் ஏகாதிபத்திய அரசிற்கான தலைநகரை அமைத்தார். அது அப்பிரதேசத்தின் எல்லாவற்றையும் உள்வாங்கி கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. மேலும் அப்பிரதேச மக்களின் சொத்துக்கள், உடைமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன. அதனை எதிர்த்த பலர் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சார்கன் படிப்படியாக  தன் அரச எல்லைகளை பரந்து பாயும் நீரோட்டமாக விரிவுபடுத்தத்தொடங்கினார். அவரின் நோக்கம் தன் அரச எல்லை என்பது உலகின் நான்கு மூலையாக இருக்க வேண்டும் என்பதே. ஆக சுமேரிய நாகரீகமானது சார்கானின் செயல்பாடு காரணமாக பல இனங்களை உள்ளடக்கிய, ஏகாதிபத்தியமாக மாறத்தொடங்கியது. சுமேரிய நாகரீகத்தின் இந்த மாறுபாடானது உலகின் மற்ற நாகரீகங்களின் தோற்றப்பாட்டிற்கு காரணமானது.இந்நிலையில் சார்கனின் அக்காடிய அரசானது  கிமு 2350 முதல் 2250 வரை நூறு ஆண்டுகாலம் நீண்டது. கிமு 2000 ஆம் ஆண்டில் சுமேரிய அரசானது அமோரிய இனக்குழுக்களின் தொடர்ந்த தாக்குதல் காரணமாக பாதிப்புக்குள்ளானது. ஒரு கட்டத்தில் அமோரிய அரசனான ஹமுராபி தலைமையிலான படைகள் சுமேரிய பகுதிகளை கைப்பற்றியது. இதனால் சுமேரிய நாகரீகம் மற்றும் கலாசாரம் முழுவதும் அதன் கட்டுப்பாட்டில் வந்தது. பாபிலோனியாவை தன் தலைமையிடமாக கொண்ட ஹமுராபி சுமேரியாவின் எல்லாவித அதிகாரங்களையும் கையிலெடுத்துக்கொண்டார். மேலும் சுமேரிய மொழிக்கு பதிலாக அக்காடிய மொழி ஆட்சி மொழியானது. மேலும் அக்காடிய மொழியின் வேர் என்பது அசிரிய மற்றும் சால்டிய மொழிகளாகும். மேலும் அக்காடிய மொழி மெசபடோமியாவான இன்றைய ஈராக்கில் பேசப்பட்டு வருகிறது.

 

 

ஹமுராபியின் பாபிலோனியாவானது சுமேரியாவின் சகல வித கலாசார கூறுகளையும் உள்வாங்க தொடங்கியது. இதன்காரணமாக அதன் மூளையும் சகலவித உறுப்புகளுமாக பாபிலோனிய கலாசாரம் மாறியது. மேலும் அதன் முழு மொழிவளங்களும் பாபிலோனியாவாக மாறியது. அதன் இறையியல் மற்றும் இலக்கிய கோட்பாடுகள் அனைத்தும் பாபிலோனியாவாக மாறியது. இது உலக வரலாற்றின் பக்கங்கள் முழுவதும் நிறைந்தும் காலத்தொடர்ச்சியாக மாறியது. மேலும் அக்காலத்தில் கணிதம் மற்றும் வானவியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் பல அசிரிய அரசுகளால் இது வளர்த்தெடுக்கப்பட்டது. மேலும் பிந்தைய பல ஏகாதிபத்திய அரசுகள் சுமேரிய நாகரீகத்தை நாசம் செய்தன. இவற்றின் கருத்தியல் மற்றும் கலாசார பங்களிப்புகள் மட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கிமு முதலாம் நூற்றாண்டில் சுமேரியாவானது தன் மொழி உட்பட அனைத்தையும் இழந்தது. அதன் பரிணாமம் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இவ்வாறாக சுமேரிய நாகரீகம் உலக வரலாற்றில் பெருந்தாக்கத்தை செலுத்திய ஒன்றாக கிமு 4000 முதல் கிமு 2000 வரை தொடர்ந்தது. உலகின் வேறு எந்த நாகரீகமும் வரலாற்றில் இந்த அளவுக்கு மனித இனத்தின் மீது அதிக தாக்கத்தை செலுத்தவில்லை. மேலும் வேறு எந்த நாகரீகமும் சுமேரியா மாதிரி அடிமை சமூகத்தையும், அதன் மேல் கட்டுமான வடிவத்தையும் தோற்றுவிக்கவில்லை. வரலாற்றின் முன் சுவட்டில் சுமேரிய அதற்கான ஒட்டுமொத்த கருத்தியல், கலாசாரம், சமூக மற்றும் பொருளாதார கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது. இது வரலாறு நமக்கு தரும் சிறந்த பாடமாகும்.

***

கட்டுரை நாகரத்தினம் கிருஷ்ணா மேடையேற்றப்படாத ஒரு விவாதம்

மேடையேற்றப்படாத ஒரு விவாதம்.

நாகரத்தினம் கிருஷ்ணா

எழுத்தாளனை அடையாளப்படுத்துதெது படைப்பா, கொள்கைத்தேர்வா?  -ஒரு பிரெஞ்சு படைப்புலக அண்மைக்கால சர்ச்சை

Polémique என்ற பிரெஞ்சு சொல்லுக்கு மூலம் கிரேக்கமொழி: பட்டிமன்றம், தருக்கம், வாய்ச்சண்டை, சொற்போர், வாதம் கொஞ்சம் கதவைத் திறந்தால் அனல் வாதம், புனல்வாதமெனஅவ்வளவையும் சேர்த்துக்கொள்ளலாம். பக்கவாதம் இதிலடங்காதது.  ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்/பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்கிறது மணிமேகலை. இலக்கியசர்ச்சைக்கும் இப்படியொரு விதியை வைக்கலாம். ‘சர்ச்சை’ மேடையேற்றப்படாத ஒரு விவாதம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதிய விதிமுறைக்குள் அதுவும் வரக்கூடியது.பெரும்பாலும் அரைவேக்காட்டுத்தனமாகவிருக்கிற இன்றைய பட்டிமன்றங்களை நாம் கணக்கிற்கொள்ளகூடாது. அங்கே வைக்கப்படும் வாதம், மறுப்பு அனைத்தும் கொடுக்கப்பட்டகாலக்கெடுவிற்குள் மேடையேற்றப்படும் நாடகம் -பம்மாத்துகள் -பாசாங்குகள். போலியான குரல்கள் ‘சர்ச்சைக்குள்’ ஒலிக்காதென்பது ஆறுதலான செய்தி. பொதுவாகக் கலகக்குரல்கள்அல்லது எதிர்ப்புக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக நம்புகிறார்கள், கோபத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கிறார்கள். சர்ச்சையின் முடிவில் தங்கள்எழுப்பும் வினாவிற்கு தெளிவான விடைகிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருக்கிறது. தமிழ்மண்ணில் பாங்கறிந்து சர்ச்சையில் இறங்குகிறார்களோ இல்லையோபிரெஞ்சு மண்ணில் மணிமேகலையில் கூறப்பட்டுள்ள விதியை நன்கு உள்வாங்கிக்கொண்டு சர்ச்சையில் இறங்குவதாகவே நினைக்கிறேன்.

இனம், மொழி, நாடு என உழைத்த மக்களை நினைவு கூர்வதென்பது இன்றைக்கு ஒரு சடங்காகவே மாறிவிட்டது. பிரான்சு நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடம் தோறும் அவ்வருடத்தில்யார் யாரையெல்லாம் நினைவு கூர்தல்வேண்டும், அரசு சார்பில் செய்யப்படவேண்டியவையென்ன என்பது பற்றி அது தொடர்பான அமைச்சும் அதிகாரிகளும், இதற்கென நியமிக்கப்பட்டிருந்தகுழுவினரும் கலந்து பேசுவர். 2011ம் ஆண்டும் அப்படி கலந்து பேசிய பின் பட்டியலொன்றை தயார் செய்தனர். அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுள் செலின் என்று அழைக்கபடும் லூயிஸ்·பெர்டினாண் செலின் (Louis-Ferdinand Céline) என்பவரும் ஒருவர். நவீன இலக்கியத்தைக்குறித்த விவாதமோ, கலந்துரையாடலோ பகுப்பாய்வோ நடைபெற்றாகவேண்டுமெனில் செலின்தவிர்க்க முடியாத நபர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இருவர்: ஒருவர் மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust), மற்றவர் செலின். Journey to the End of the Night மிக முக்கியமானதொரு படைப்பு. சொற்களை அதிகம் விரயம் செய்யக்கூடாதென்பவர். கொச்சை சொற்களை படைப்புகளில் கணிசமாகக்கையாண்டு அப்படியொரு முறைமைக்கு வழிகோலியவர். பிரெஞ்சு இலக்கியம் ஒரு தேர்ந்த படைப்பாளியென்கிற வகையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது.  செலின் இறந்து (1961ம்ஆண்டு ஜூலையில் இறந்திருந்தார்)  ஐம்பதாவது நினைவஞ்சலியென்பதால் அதனை ஓர் அரசுவிழாவாக, மிகச்சிறந்த முறையில் கொண்டாடவும் திட்டமிட்டார்கள். அரசுவிழாபொறுப்பாளராக தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டார். புகழஞ்சலி மலரும் தயாரானது. மலருக்கு முன்னுரை வழங்கியவர் ‘அலென் கொர்பன்’ என்ற வரலாற்றிஞர்.மலருக்கு நாட்டின் கலை, இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சரால் அக்கறையுடன் எழுதப்பட்ட அணிந்துரையும் இடம்பெற்றது. ஆசியருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையிற் சில பக்கங்கள்ஒதுக்கப்பட்டன. செலின் படைப்புளில் அதிக ஈடுபாடுகொண்டவரும், விற்பன்னருமான ஹாரி கொதார் (Henri godard) எழுதிய வரிகள் வியப்பில் ஆழ்த்துபவை. வழக்கமான புகழஞ்சலிக்குரியசொற்கள் அங்கில்லை, வேறு தொனியிலிருந்தன. சில ஐயப்பாடுகளை எழுப்பின:

“செலினுக்கு விழா எடுக்கத்தான் வேண்டுமா?பிரெஞ்சு இலக்கியத்திற்கு அவரளித்துள்ள பங்களிப்பை மறுக்கவியலாத அதேவேளை கேள்விக்குச் சாதகமானதொரு பதிலைத் தருவதற்குத்தயங்க வேண்டியவர்களாகவுள்ளோம். நினைவாஞ்சலி கூடாதென்பதற்கு காரணங்கள் தெளிவாக உள்ளன. யூதர்கள்மீது தீராத வெறுப்பையும் கசப்பையும் வைத்திருந்தார். ப்ரூஸ்டுடன்பிரெஞ்சிலக்கிய வெளியை பகிர்ந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்த்திய சாதனைகளும் மறக்ககூடியல்ல” என்றெழுதி சர்ச்சையை ஹாரிகொதார் துவக்கி வைத்தாரெனலாம்.

ஹாரி கொதார் உபயோகித்த சொற்களை இரண்டாவது முறையாக வாசிப்பீர்களெனில், ‘செலினை’ ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில், அவரை ஒருஇனவெறியாளராக தயக்கமின்றி அவர்  சுட்டுவதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு செலினைப்பற்றி கூடுதலாக சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். 1930களின்இறுதியில் இனவெறியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் செலின் ஈடுபட்டாரென்ற செய்தியை இங்கே கோடிட்டுக்காட்டினால் செலின் என்றஎழுத்தாளனுக்குள்ள எதிர்ப்புகளை புரிந்துகொள்ளக்கூடும்.  “யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட எனக்குத் தயக்கங்களில்லை; யூதர்களின் முதல் எதிரியாக என்னைக் காட்டிக்கொள்வதில்பெருமிதம் அடைகிறேன்”, என்று வெளிப்படையாகவே தெரிவித்தவர் செலின். பிரான்சு நாட்டை ஜெர்மன் ஆக்ரமித்திருந்தபோது பிரான்சிலிருந்த நாஜி அபிமானிகள் நடத்திய இதழுக்குத்தொடர்ந்து எழுதிவந்தார். அப்பத்திகளில் யூதர்களின் இருத்தலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். செலின் யார் என்பது ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹாரி கொதார் எழுப்பிய ஐயங்களைக் கையிலெடுத்துக்கோண்டு செர்ழ் கிளார்பெல்டு (Serge Klarsfeld) கிளர்ந்தெழுந்தார். கிளார்பெல்டு வழக்கறிஞர், எழுத்தாளர், அவரது படைப்புகள்முற்றுமுதலாக நாஜிகளுக்கு எதிரானது. பிரெஞ்சு மொழியில் நாஜிகளைப்பற்றிய கொடூரமான பிம்பத்தை உரிய சாட்சியங்களுடன் கட்டமைத்திருக்கிறார். தம் பெற்றோர்களைகொலைமுகாமில் பலிகொடுத்தவர். எல்லாவற்றிர்க்கும் மேலாக நாஜிகளின் வதை முகாம்களிலிருந்தும், கொலைமுகாம்களிலிருந்தும் உயிர் பிழைத்தவர்களைக்கொண்டு ஏற்படுத்தியஅமைப்பொன்றின் தற்போதைய தலைவர்.

செர்ழ் கிளார்பெல்டு இதற்கெனவே காத்திருந்திருந்ததுபோல அரசாங்கத்தின் முடிவினை உடனடியாகக் கண்டித்தார்: “யூதர்களை தமது ஊத்தைபிடித்த எழுத்துக்களால் கண்டித்து எழுதியன்பலனாக பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட காரணமாகவிருந்த படைப்பாளரொருவரின் (செலின்) ஐம்பதாவது இறப்பு ஆண்டைக் கொண்டாடுவது அவருக்கு நாம் செலுத்தும்மரியாதையென்ற நினைப்பே அவமானத்திற்குரியது. செலினைக் கொண்டாடுகிறபோது அப்பாவி யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் வயது பேதமின்றி வதைமுகாம்களுக்கும், கொலைகிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதும், அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே உயிர்பிழைத்தார்கள் என்பதும் நினைவுக்கு வரக்கூடுமேயண்றி செலினுடைய படைப்புகள் வாராது,எனவே உடனடியாக அமைச்சர் செய்யவேண்டியது 2011ம் ஆண்டு கொண்டாட்டப் பட்டியலிலிருந்து செலினை நீக்குவதாகும்”, என்பது போல அவரது அறிக்கை இருந்தது. இவ்வறிக்கை Le Figaro, Le nouvel Observateur போன்ற பிரெஞ்சு இதழ்களின் இணைய தளங்களிலும் இடம்பெற்றது.

அமைச்சரின் எதிர்வினை என்னவாக இருக்கும், என்பதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி அகாதமியைசேர்ந்த மொழியிலறிஞர் பிரெடெரிக் வித்து (Frளூdளூric Vitoux),என்பவரின் கூற்றும்அலட்சியப்படுத்தக்கூடியல்ல: “இங்கே பிரச்சினை செலின் என்ற படைப்பாளியல்ல ‘கொண்டாட்டம்’ என்கிற  சொல்லே. அவரது 50வது நினைவஞ்சலி ஆண்டை ஏதோ செலினுக்குஇப்போதுதான் மகுடம் சூட்டப்போவதுபோல நினைத்துக்கொண்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றுவரையிலும் அவருக்குள்ள இடம் உறுதியாகவே இருக்கிறது. இந்த ஆண்டில்அவரது எழுத்துக்களை மீண்டும் நினைவஞ்சலி என்ற பெயரில் மறு வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கமுடியும். அவருடைய களங்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பகுதியைக்கூடசார்பற்ற விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கலாம்.” என்றார் அவர். இதற்கு ஆதரவாகவும் மறுதலிக்கும் வகையிலும் கருத்துகள் குவிந்தன.

இந்தப்பிரச்சினையில் இன்னொன்றையும் விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாஜிகளின் பேரழிவுக்குள்ளான இனம் யூதரினம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதற்கானநீதி வழங்கப்படவேண்டியதுதான், வழங்கியும் விட்டார்கள். ஆனால் அதையே காரணமாக வைத்து எதிர் தரப்பினரின் குரல்வளையை இவர்கள் இன்னும் எத்தனைகாலத்திற்குநெறித்துக்கொண்டிருக்கப்போகிறார்கள். இன்றைய தேதியில் உலப்பொருளாதாரமும் அரசியலும் இந்த இனத்தின் கையில்தான் உள்ளது. பிரெஞ்சு கலை இலக்கிய பண்பாட்டுத்துறைஅமைச்சர் செலின் நினைவுதினத்தை அனுசரிப்பது தொடர்பாக என்ன முடிவு எடுத்திருப்பாரென நினைக்கிறீர்கள்? பிரான்சு நாட்டின் அதிபர் ஒரு யூதர், பிரதமர் யூதர், அமைச்சர்களில்பாதிக்குமேல் யூதர்கள். எதிர்கட்சி தலைவர் ஒரு யூதர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள்கூட யூதர்களாக இருக்கலாம். இந்நிலையில் முடிவு நீங்கள் நினைப்பதுபோலத்தான் அமைந்தது. செலினை யூதரின துரோகியாகப்பாவித்து அரசு அவருக்கான விழாவை பட்டியலிலிருந்து நீக்கியது. எனக்கு ஒரு படைப்பாளியை படைப்பை மட்டுமேவைத்து பார்க்கவேண்டும். படைப்பில் ஒன்றிரண்டு யூத எதிர்ப்புக்கூட இருந்துபோகட்டுமே அதனாலென்ன? சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறநாட்டில் அதற்குவாய்ப்பில்லையானால் எப்படி?

—–

ஒருபிந்தைய – பின்நவீனநிகழ்வு – (Post-Post modern event) -எம்.ஜி.சுரேஷ்- கண்ணுக்குத் தெரியாத கண்காட்சி

ஒருபிந்தையபின்நவீனநிகழ்வு

(Post-Post modern event)

எம்.ஜி.சுரேஷ்

 

 


கண்ணுக்குத் தெரியாத கண்காட்சி

லண்டனில் இருக்கும் ஹேவர்ட் காலரியில் அது நடந்தது. பார்வையாளர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள்.

அங்கே ஒரு பிந்தைய பின் நவீன நிகழ்வு (Post-Post modern event) அரங்கேறிக் கொண்டிருந்ததை அவர்களில் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை.

படங்கள் இல்லாத திரைச்சீலைகள்; இல்லாமல இருந்து கொண்டிருந்த சிற்பங்கள்; கண்ணுக்குத் தெரியாத புதிர்ப்பாதைகள்; அதேசமயம், மோதிக் கொண்ட்தற்கு அடையாளமாக ஒலி எழுப்பும் சுவர்கள். படுகொலைகளை உணர்த்தும் புகை மணடலங்கள் என்று ஐம்பது கலை ஆக்கங்கள் அங்கே பார்வைக்கு (?) வைக்கப்பட்டிருந்தன.

அங்கே வந்திருந்த பார்வையாளர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். இதில் ஏதோ மோசடி இருக்குமோ என்று சந்தேகித்தார்கள். அந்தக் கண்காட்சியைப் பார்ப்பதற்கு டிக்கட் வேறு விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு பார்க்க வந்திருந்த ஒரு பத்திரிகையாளர், ‘இந்தக் கண்ணால் காண முடியாத கண்காட்சியை, கண்ணால் பார்க்க முடியாத மனிதர்கள், கண்ணால் பார்க்க முடியாத பணத்தைக் கொண்டு டிக்கட் வாங்கிதான் பார்க்க வரவேண்டும்’ என்றாராம். ‘இது ஒரு ஜோக்காக இருக்குமோ?’ என்பது இன்னொரு பார்வையாளரின் சந்தேகம். இந்தக் கண்காட்சியை நிகழ்த்திய பிரைனார்டு, டெலியா கேரி ஆகியோர் இந்த விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுக்கால கலை வரலாற்றை அணிவகுக்க வைத்து விட்ட பெருமிதம் அவர்களின் முகத்தில் நிலவியது.

கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டமாதிரி அலைந்து கொண்டிருந்த பார்வையாளர்களை ஒரு ஓவியம் வரவேற்றது. அந்த ஓவியத்தில் சட்டகம் இருந்தது. சட்டமிடப்பட்ட ஓர் வெள்ளைக்காகிதம் இருந்த்து. அந்தக் காகித்த்தில் ஓவியம் எதுவும் வரையப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சிறு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. ’கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் 1000 மணி நேரம் உற்றுப்பார்க்கப்பட்ட ஓவியம் இது’ என்று அந்தக் குறிப்பு கூறியது. இதே ரீதியில் தான் அங்கே பல ஓவியங்கள், சிற்பங்கள், கலை ஆக்கங்கள் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை யாரோ அநாமதேயங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. புகழ் பெற்ற கலைஞர்களான க்ளைன், ஆண்டி வார்ஹோல், யோகோ உனோ, மாரிசோ கேட்லன் போன்றவர்களால் ஆக்கப்பட்டவை.

’இது நகைச்சுவை விளையாட்டல்ல; இது வரை எப்போதும் நீங்கள் கண்டிராத கண்காட்சி இது’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹேவர்ட் காலரியின் இயக்குநரான ரால்ஃப் ருகோஃப். உண்மைதான். அங்கே உலகில் உள்ள பொருட்களைப் பற்றிய கலை ஆக்கங்கள் பிரதானப் படுத்தப்படவில்லை. மாறாக அவற்றைப் பற்றிய கற்பனை உணர்வை பார்வையாளனின் மனத்தில் தட்டி எழுப்பியது. அந்த அளவில் அது ஒரு புதுமையான கண்காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒரு கலைக் கண்காட்சி மட்டுமல்ல; ஒரு எதிர் கலைக் கண்காட்சி என்றும் சொல்ல முடியும். இது போன்ற நிகழ்வுகள் ந்டை பெறுவது இதுவே முதல் தடவை அல்ல. 1917 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓவியரான மார்சல் டுசாம்ப் ஒரு சிறுநீர் கழிக்கும் பீங்கானை ‘நீரூற்று’ என்று தலைப்பிட்டு ஓவியக் கண்காட்சியில் வைத்தபோதே இது போன்ற நிகழ்வுகளுக்கு அடித்தளம் இடப்பட்டு விட்ட்து. அவர் மோனலிசாவுக்கு மீசை வரைந்து காட்டினார். ‘கலை கலை என்று கதைத்தது போதும், இதுதானய்யா கலை உலகம்’ என்று அவர் சொல்லாமல் சொன்னார்.

1914 முதல் 1918 வரை நடந்த போர் அறிவார்ந்த கலாச்சார சமூக அமைப்பை திவாலாக்கிக் காட்டியது. மதம், பகுத்தறிவு, மனித விழுமியங்கள் யாவும் நாகரிகமடைந்த நாடுகளால் கேள்வி கேட்கப்படாமல் கசாப்புக் கடைக்கு அனுப்பப்பட்டன. இந்த அபத்தம் அறிவு ஜீவிகளின் கோபத்தைத் தூண்டியது. எனவே, அவர்கள் கலைக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரும் அபத்தங்கள்; இருத்தலின் நிச்சயமின்மை; எரிச்சலூட்டும் போலித்தன்ங்கள்; இவற்றின் மீதான கோபம்; அந்தக் கோபத்தின் விளைவான எதிர் வினை என்பதாக இந்த எதிர் கலை ஓவியங்களையும் சிற்பங்களையும் கருத வேண்டும்.

1915 ஆம் ஆண்டுன் ருஷ்யரான காஸிமீர் மாலேவிச் ஒரு சதுரத்தை வரைந்தார். அந்தச் சதுரத்தினுள் எந்த விவரணையும் இல்லை. ‘இது வெறும் சதுரம் மட்டும் அல்ல; பல ஓவியங்களை அது தன்னுள் சூல் கொண்டிருக்கிறது’ என்றார். அவரது பாணி சுப்ரீமாடிசம் என்று அழைக்கப்பட்டது. மாலேவிச்சின் அந்த சதுரத்துக்கு இணையாகவே ஹேவர்ட் காலரியில் வைக்கப்பட்ட ஓவியம் இல்லாத ஓவியத் திரைச்சீலையைக் குறிப்பிடலாம். ஆனால், மாலேவிச் சொன்ன காரணம் வேறு; இந்த ஓவியர் சொல்லும் காரணம் வேறு. இந்த ஓவியர் நமது யுகத்தின் வெறுமையை உருவகித்துக் காட்டுகிறார் என்பது முக்கியமானது.

 

 

 

 

 

 

 

 

தெரசா மார்கோரி என்ற ஓவியர் காட்சிக்கு வைத்த பொருள் அதிர வைப்பது. மெக்சிகோவில் நடந்த ஈவிரக்கற்ற ஒரு படுகொலையை அவர் காட்சிப்படுத்தி இருக்கிறார். அவர் அவற்றைப் படங்களாகவோ, புகைப்படங்களாகவோ காட்சிப்படுத்தவில்லை. படங்கள் பார்வையாளனைத் தொடாமல் போகக்கூடும். பார்வையாளனை அந்த மெக்சிக பயங்கரம் பாதித்தே தீரவேண்டும். என்ன செய்வது? அந்த கொலை செய்யப்பட்ட உடல்கள் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த போது அவற்றைக் கழுவி அந்த நீரைச் சேகரித்தார். அந்தச் சேகரிக்கப்பட்ட நீரை ஒரு நீராவி இயந்திரத்தின் மூலம் பனிப்படலங்களாக அந்த அறையில் உலவ விட்டார். ’இந்தக் கலைப் படைப்பை நீங்கள் உங்கள் கண்களால் பார்க்க முடியாவிட்டால் என்ன, உங்கள் தோல்களால் உணர்ந்துதான் பாருங்களேன்’ என்கிறார் ருகோஃப். சரியானதுதானே? பிக்காஸோ தனது ஓவியங்கள் கண்களால் பார்க்கப்படுவதற்காக வரையப்படவில்லை; தலையால் பார்ப்பதற்காக வரையப்பட்டவை என்றார். தெரசாவோ தோல்களால் உணர்ந்து பார்க்குமாறு சொல்கிறார். ஏன் பார்க்கக்கூடாது?

பின் நவீனத்துவம் தோன்றி ஐம்பதாண்டுகள் கழிந்து விட்டன. பின் நவீனத்துவம் எல்லாத்துறைகளையும் கொட்டிக் கவிழ்த்த்து. ஓவியத்துறையையும், அது விட்டு வைக்கவில்லை. ஓவியம் என்பது பொதுவாக நகலெடுக்கும் காரியமாகத்தான் இருந்து வந்தது. இம்ப்ரஷனிசம் அந்த வேலையை நிராகரித்தது. ஓவியத்தை மறைபொருள் (abstract)  தன்மை கொண்ட்தாக மாற்றியது. பின் நவீனத்துவமோ இரண்டின் கூறுகளையும் ஒன்றிணைத்தது. நவீன ஓவியம் யதார்த்தத்தின் பிரதிநிதித்துவத்தை மறை பொருளாக்கியது. பின் நவீனத்துவமோ யதார்த்தத்தையும், பிரதிநிதித்துவத்தையும் ஒன்றின் மீது ஒன்றாக கவியுமாறு (overlap)  செய்தது.

டாடாயிசத்தின் டு சாம்ப் முதல் பாப் ஆர்ட்டின் ராபர்ட் ராஸ்சன்பர்க் வரை அனைவரும் வரைந்த ஓவியங்கள் யாவும் வெகுஜன ஓவியத்துக்கு எதிரானவையாகவே இருந்தன. அந்த அளவில் இந்த ஹேவர்ட் காலரி ஓவியங்களும் அவற்றுடன் ஒத்துப் போகின்றன. தவிரவும், அவற்றின் நீட்சியாகவும் இருக்கின்றன. இந்தக் கண்காட்சி முன் வைக்கும் ‘கண்ணுக்குத் தெரியாத’ என்ற கருத்துருவில் ஒரு உருவகம் இருக்கிறது. அது ஒரு அரசியல் சார்ந்த உருவகம். நமது யுகத்தில் ‘அதிகாரம் மேற்கொள்ளும் தகவல் மறைப்பு’, ‘அரசியல் எதிரிகளைக் காணாமல் போகுமாறு செய்தல்’’சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களைக் கண்டும் காணாமல் இருப்பது’ போன்ற தடித்த தோல்தனங்களை எதிர்க்கும் கலகக் குரல் இங்கு ஒலிப்பதை நாம் உணரமுடியும். அதுவே இந்தக் கண்காட்சியை பின் நவீனத்துவத்தின் நீட்சியாக்க் காட்டுகிறது. ஒரு பிந்தைய பின் நவீன நிகழ்வாக ஆக்கிக் காட்டுகிறது.

 

.*

கட்டுரை – காலத்தை பின்னோக்கும் நிழல் -சிரிய கவிஞர் நிசார் ஹப்பானி ஓர் அறிமுகம் எச். பீர்முஹம்மது

காலத்தை பின்னோக்கும் நிழல்சிரிய கவிஞர் நிசார் ஹப்பானி ஓர் அறிமுகம்

 

எச். பீர்முஹம்மது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எப்பொழுதுமே பின்னோக்கும் நிழலுக்கு தனித்தன்மை உண்டு. எல்லாவித வாழ்வனுபவங்களும் ஒரே புள்ளியில் ஒன்று சேர வைத்து அடையாளத்தை நிறுவும் தன்மை அதற்குண்டு. வளைந்து நெளிந்து செல்லும் கடல். அதன் ஆர்ப்பரிக்கும் ஓசை தொடர்ச்சியாக/ முடிவற்றதாக ஒலித்து கொண்டிருக்கிறது. பறவையின் கண் மாதிரி காட்சி வெளிக்குள் அது சிறு துண்டாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு தீவுக்குள்ளும் ஒவ்வொரு தனித்த / தனித்தன்மையற்ற அடையாளங்கள் சிதறி கிடக்கின்றன. அதன் விளிம்பிற்குள் நிற்கும் போது நமக்குள்ளிருந்து அரூப ஒலி எழுகிறது. கவிதையின் வெளிப்பாடு/ அதன் இயங்கு தளம் குறித்து பல மாதிரியான கருத்துக்கள் ஒவ்வொரு இடங்களிலும், தளங்களிலும் இருந்து கொண்டே கொண்டிருக்கின்றன. எல்லாவித வெளியும் வெளிப்படுத்தும் வாழ்வனுபவங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சலனங்களின் வெளிப்பாடாக கவிதை உருவாகும்போது கவிஞன் தனக்கான அடையாளத்தை பெறுகிறான். ஒவ்வொரு சூழலுமே ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நம்மை அழைத்து செல்கின்றன. அதன் புரியாத மர்மங்கள்/ ரகசியங்கள்/ உள் வாய்ப்புகள் கலாச்சாரம் தாண்டிய பிரதியை அர்த்தம் கொள்ள செய்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பிரதிகளை மாறுபட்ட சூழலில் ஒருவித ஊடாட்டத்தோடு கவனிக்க வேண்டியதிருக்கிறது.

 

மத்தியகிழக்கின் முக்கிய பிராந்தியமான சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்ஸில் 1923/ மார்ச் 21 ஆம் நாள் பிறந்தார் ஹப்பானி. அவரின் பிறப்பு என்பதே எழுத்தின் வாசனையோடுதான் துவங்கியது. சர்வாதிகார அரசின் பல்வேறு வித நெருக்கடிகள்/ அச்சுறுத்துதல்கள்/ திணிப்புகள் இருந்தும் ஒரு எதிர் அதிகார வாதியாக இறுதிவரை இருந்தார் ஹப்பானி. இவரின் முதல் கவிதை தொகுப்பு 1944 இல் ‘கரிய கூந்தல் பெண் என்னிடத்தில் சொல்லியிருந்தாள் ‘ என்னும் தலைப்பில் வெளியாயிற்று. சக பெண்ணின் ஒருவழி உரையாடலாக அமைந்தது அக் கவிதை. டமாஸ்கஸ் பல்கலை கழகத்தில் சட்டக்கல்வியை முடித்த அவர் கெய்ரோ/ அஸ்காரா/ மத்ரித்/ லண்டன்/ பீஜிஸ்/ பீரட் போன்ற இடங்களில் அரசு பணிகளில் பணியாற்றினர். அவரின் எழுத்து வாழ்க்கையின் காலம் சர்வாதிகாரத்தின் உச்சத்தை அனுபவிக்க கூடியதாக இருந்தது. சிரிய மன்னரின் சர்வாதிகாரம் அவருக்கான எழுத்தின் போக்கை தீர்மானித்தது. ஒரு தடவை அவரின் கவிதை பின்வருமாறு அமைந்தது.

 

‘என் ஆடைகள் கிழிக்கப்படுகின்றன

 

உன் நாயின் நகங்களால்

 

கிழிப்பதற்கு அனுமதித்தார்கள்.

 

உன் உளவாளிகள்

 

ஒவ்வொரு நாளும் தட்டினார்கள்

 

உன் படையாட்கள் என்னை

 

தின்றார்கள் காலணியை கூட

 

நீ இருதடவை

 

உன்னை இழந்தாய். ‘

 

சர்வாதிகாரத்தின் வலிப்பு ஹப்பானியிடத்தில் கலக்குரலாக அமைந்தது. எவ்வித துயரங்களும் கலைஞனிடத்தில் ஏதாவதொரு விதத்தில் பாதிக்கதான் செய்கின்றன. 1967 இல் அரபு – இஸ்ரேல் போர் ஏற்பட்ட போது ஹப்பானி லண்டனில் இருந்தார். அங்கிருந்து தீவிரமான குரலை அவரால் கொடுக்க முடிந்தது. கடலுக்குள் நுழைகிறேன் என்ற தலைப்பில் ஒரு கவிதை அதற்கான குரலாக அமைந்தது.

 

சாலையில் இருபதாண்டாக தனித்து

 

இன்னும் அது வரையப்படவில்லை

 

நான் வெற்றி கொள்வேன் சில நேரங்களில்

 

இருபதாண்டாக புத்தக காதலில்

 

இன்னும் முதல் பக்கத்தில் நான்.

 

1954 இல் வெளியான ‘ஒரு முலையின் குழந்தைத்தனம் ‘ அரபு இலக்கியத்தின் மரபுத்தன்மையை உடைத்தெறிந்தது. ஒரு பெண்ணின் இயல்பான வெளிப்பாட்டை வெளிக்கொண்டதாக அமைந்தது அத்தொகுப்பு.

 

ஹப்பானி தன்னுடைய கவிதைகள் மூலம் ஓர் அரபு தேசியவாதியாக அறியப்படுகிறார். அவருடைய கட்டுரைகள்/ பிற எழுத்துக்கள் எல்லாம் அரசியல் தன்மை சர்ந்தவை. சில நேரங்களில் அவருடைய எழுத்துக்கள் பெண்ணிய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றாக இருந்தது. சமூகம் ‘பெண் ‘ என்ற குறியீட்டை சித்தரிக்கும் நிலை மிதந்து செல்லும் அதன் உடல் எல்லாம் ஹப்பானி கவிதையின் படிமங்களானது. ‘வார்த்தைகளுடன் வரைகிறேன் ‘ என்ற கவிதை பெண்ணின் மீதான குறியீட்டு வன்முறையை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு விதமான உணர்ச்சிகள்/ பாவனைகள்/ சலனங்கள்/ துடிப்புகள் எல்லாம் வெவ்வேறு பிரதிகளை வரைந்து கொள்கின்றன. ஹப்பானியின் ஆரம்ப கால கவிதைகள் சற்று புரட்சித்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பிந்தைய கால கவிதைகள் கவித்துவதன்மையுடன் இருந்தன. அவரின் சொந்த மண் பற்றிய கவிதைகளும் மிகுந்த வரவேற்பை பெற்றன. இருந்தாலும் தன் சொந்த மண் மீதான அவரின் விமர்சனம் குறைவாகவே இருந்தது. வாழ்நாளில் ஹப்பானி இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரின் இரண்டாம் மனைவி பாக்தாத்தில் ஆசிரியையாக பணிபுரிந்தார். அவரின் கவிதைகள் மீது ஏற்பட்ட அளப்பரிய காதலே அவர் காதலித்து இரண்டாம் திருமணம் செய்ய காரணம். அவர் மனைவி ஈராக்கில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஈரானிய கொரில்லாக்களால் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார். ஹப்பானி வாழ்நாளில் மொத்தம் பதினான்கு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அரபி செய்தி இதழான அல்-ஹயாத்தில் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டார். 1998-ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

 

சிரிய கவிஞர் யூசுப் கார்க்கவுட்லி அவரை பற்றிச் சொல்லும்போது ‘ஹப்பானி நம் வாழ்விற்கும்/ வெளிக்கும் அவசியமானவர் ‘ என்றார். எகிப்திய நாவலாசிரியரான மோனாஹெல்மி ‘அவரின் வலியத்தனம் அவரின் இயல்பான திறமையில் இருந்து வெளிவந்து அழகிய வார்த்தைகளை உருப்படுத்தியது. வெறும் சாதாரண நடவடிக்கைகளாக இல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே, மேலும் ஆள்வோருக்கும்/ ஆளப்படுவோருக்கும் இடையே ஒடுக்குவோருக்கும்/ ஒடுக்கப்படுவோருக்கும் இடையே தூண்டலாக அமைந்தது ‘ என்றார்.

 

காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்ட ஹப்பானியின் நிழல் நம்மை மேற்காசிய இலக்கிய உலகுக்கு அழைத்து செல்கிறது. எல்லா நிழல்களும் தன் காலத்தை தாண்ட முடிவதில்லை. வெவ்வேறு விதமான வாசிப்பிற்குள்ளிருந்து நாம் நமக்கான பிரதியை தேர்ந்தெடுத்து கொள்வது அவசியம். வாசிப்பின் சுழிப்பானது ஒற்றை பரிணாமத்தை அடைய முயலக் கூடாது. எல்லா வாசிப்புகளிலும் ஹப்பானியின் கவிதைகளானது நம் பிரதிக்கு வார்த்தைகளை வரைகிறது.

 

 

*

கவிதைகள் – பெரியசாமி கவிதைகள்

ந.பெரியசாமி கவிதைகள்

அந்தி சிரித்தது

நீண்ட நாளைக்குப் பின்
என்னுடன் மதிய உணவை முடித்து
உறங்கியபடி இருந்த அந்தியை
சிறிது டீயோடு எழுப்பி
போகலையா நேரமாச்சென்றேன்
அலுப்பாகத்தான் இருக்கு
ஓய்வு கொள்ளட்டுமா
கற்றலின் பளு கூடிட
களைப்புறும் குழந்தைகள்
வேலையின் தாகமடங்காது
தவித்திடுவர் மக்கள்
சுகிக்கும் சிலரின் ரசணை
பொசுங்கிப்போகும்
சில ஜீவராசிகள் செத்துத் தொலைக்கும்
பாவம் மதியமும்
நீடித்திருக்க தவிப்புறும்
ஏற்படவிருக்கும் குழப்பங்களைத் தவிர்க்க
செல்லத்தான் வேண்டுமென
புறப்பட்ட தருணத்தில் அந்தி
கேட்டுச் சிரித்தது
எனை இன்னும் சேர்க்கவில்லைதானே
எச்சாதி சங்கத்திலுமென…
*
மது ஊறிய உதடுகள்

இரு பொழுதுகளுக்கிடையேயென
மங்கிய நேரத்தில் தனித்திருந்து
மொழியை அறிந்து கொண்டிருக்கையில்
திடுமென முகம் புதைத்து
இதழ் வலிக்கத் திணிக்கும்
அவளின் முத்தத்திற்கு இணையானதுதான்
முடிவின்மையோடு தொடரும்
நண்பர்களிடையேயான உரையாடலின்போது
மனம் குளிர விழும் சொற்களுக்காக
அவன் கொடுக்கும் முத்தமும்…
-இசைக்கு…
*
0
மல்லாந்து கிடக்கும்
பட்டாம்பூச்சியை நினைவூட்டி
அழகும் மணமும் ததும்பும்
பிளவுகளுக்கு
தன்னுள் விழும் விதைகளை
வைத்துக் கொள்ள தெரிவதில்லை
விதையாகவே…
*
0
பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ…
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக் கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக…

கட்டுரை – கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம் – எச்.பீர்முஹம்மது

கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றதுஅரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்

–     எச்.பீர்முஹம்மது

வெப்பத்தை தணிக்க மறுக்கிற சூரியனின் ஒளிக்கீற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு ஒட்டகங்கள் அதன் போக்கில் செல்கின்றன. திடீரென சூழ்ந்து கொள்ளும் புகை மாதிரி மணல் துகள்கள் ஒட்டகங்களை சூழ்ந்து கொள்கின்றன. அவை கடந்த தூரம் ஆரவாரமற்ற தெருக்களின் கூட்டுத்தொகையாக இருந்தது. அதன் ஒவ்வொரு அடியும் கவிதைக்கான வார்த்தையை வரைந்து விட்டுச் சென்றது. ஒட்டகம் கோதி விட்ட ஒவ்வொரு மணல் கூட்டமும் கடல் அலையை மறு உருவாக்கம் செய்தது.

அரபு இலக்கியத்தின் வேர் என்பது இனக்குழு சமூகத்தின் வாழ்நிலையோடு இணைந்தது. அவர்கள் தினசரி செயல் நிகழ்வுகள், மற்ற இனத்தாருடனான போர் மற்றும் உணவு தேடல் இவற்றுடன் நிகழ்கிறது. அரபு இலக்கியம் சுமார் நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஹாசிதா என்ற செய்யுள் முறையாக அறியப்படுகிறது.அம்ருல் கைஸ், அன்தாரா, மற்றும் சுகைர் ஆகியோர் இந்த வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். இவர்களின் படைப்புகள் அக்காலகட்டத்து பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலோடு இயைந்திருந்தது.ஒரு சூழலில் இவர்கள் அக்காலத்து வரலாற்றாசிரியர்களாக, தொன்மங்களின் சார்பியலாளர்களாக, மொழியில் புதிய சொற்களை உருவாக்கும் வல்லுநர்களாக இருந்தனர். அதன் பிறகு அரபுச்சூழலில் இஸ்லாம் வந்து விடுகிறது. அது குர் ஆன் என்ற புதிய மொழி வடிவத்திற்கு வழி திறந்தது.ஏழாம் நூற்றாண்டு குர் ஆனின் வருகையானது அரபு செய்யுள் வடிவத்திற்கு புதிய வடிவத்தை கொடுத்தது. அதன் நீண்ட வசனங்கள் அரபு கவிதை உருவாக்கத்திற்கான வாசலை தள்ளி விட்டது. அதன் பிறகான உமய்யத் ஆட்சியில் தான் அரபு கவிதை நவ வடிவத்திற்கு திரும்பியது. அல் அஹ்தால் மற்றும் அல் பர்சாக் மற்றும் அபு நிவாஸ் ஆகியோர் அதற்கு உயிர் கொடுத்தார்கள். இவர்களில் அபுநிவாஸ் பரவலாக அறியப்பட்ட உருவமாக இருக்கிறார். அரபு இலக்கியத்திற்கான தீர்க்கமான வடிவத்தை கொணர்ந்தவர். தன்னுடைய கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படையான விதியொழுங்குகளை மீறியவர். குறிப்பாக குடித்தல் , ஓரின சேர்க்கை மற்றும் சுய இன்பம் குறித்து அதிகம் எழுதியவர். இதற்காக அன்றைய கலீபாவான ஹாரூன் அல் ரஷீதால் நாடு கடத்தப்பட்டார் கலீபாவின் மரணத்திற்கு பின்னர் அபு நிவாஸ் ஈராக்கிற்கு திரும்பினார். அடுத்த கலீபாவான அல் அமீன் தன் தந்தையை போல் மரபான அடிப்படையாளராக இல்லாமல் வித்தியாச மனோபாவத்தில் இருந்தார். இவரின் உதவியோடு அபு நிவாஸ் தொடர்ந்துஎழுதினார். இது அவரை அக்காலகட்டத்தின் தரிசியாக மாற்றியது. அன்றைய காலகட்டத்தில் அரபு மொழியானது விஞ்ஞானம் மற்றும் தத்துவ துறைக்கான முன்னோக்கு ஊர்தியாக இருந்தது. கிரேக்க, பஹ்லவி , லத்தீன் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இருந்து ஏராளமான இலக்கியங்கள் அரபு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. இதன் நீட்சியில் அரபு மொழியானது உலக கலாசாரங்களுடான பரிமாற்ற ஊடகமாக மாறியது. இஸ்லாத்தோடு மட்டுமே குறுக்கப்பட்டு வந்த அரபு மொழி எல்லா திசைகளிலும் வேர் பதிக்க தொடங்கியது. இந்த காலகட்டத்தில் இப்னுல் முஹக்கா முக்கியமானவர். அவர் சமஸ்கிருதத்திலிருந்து புராண கதைகளை அரபு மொழிக்கு மாற்றம் செய்தார். சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளுக்கும் அரபி போன்ற செமிட்டிக் மொழிகளுக்கும் இடையே அநேக ஒத்த நிலை கூறுகள் உண்டு. இதுவே மொழிபெயர்ப்பிற்கான தூண்டலாக மாறியதென கருதலாம்.

இருபதாம் நூற்றாண்டு முந்தைய காலகட்டத்தில் அரபு கவிதையானது சரியாக பரிணமிக்காத வடிவ ஒழுங்கை கொண்டிருந்தது. உலகின் மொழிகள் எல்லாவற்றிலுமான கவிதைளின் தொடக்கமான ஓலி நயம் மற்றும் சொற்களின் சீரான பயணம், சொற்களை விரித்து செல்லுதல் ஆகிய அம்சங்கள் அரபிக்கவிதையிலும் நிரம்பியிருந்தன. புறாவின் சப்தம் மாதிரியான தொனி கவிதைகளை ஆக்கிரமித்திருந்தது. அது சஜ் என அறியப்பட்டிருந்தது. அல் கரிரி, அல் முத்னபி மற்றும் ஒமர் இப்னு அல் பாரிதா ஆகியோர் இந்த வரைக்கோட்டிற்குள் வந்தார்கள்.அரபு , பார்சி மற்றும் உருது கவிதைகளின் மற்றுமொரு வடிவம் கஸல். இதனை இஸ்லாமின் அனுபூத மரபான சூபிகள் வளர்த்தார்கள். ரூமி, ராபியத்துல் அதவியா, கல்லாஜ் மன்சூர், அபு யஸ்திதுல் அல் பிஸ்தாமி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். மனம் என்ற சுய பிம்ப நிலையிலிருந்து காதல் என்ற லெளகீக பிம்பத்தோடு ஓர் உரையாடலாக அவர்கள் இதனை மாற்றினர். கஸல் என்ற இந்த வடிவம் இன்று இசைத்துறையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வருகிறது.( தமிழில் காதலர் தினம் என்ற திரைப்படத்தின் பாடல்கள் இதனை உள்வாங்கி கொண்டு வெளிவந்ததாகும்). அரபு இலக்கியத்தின் ஒளியூட்ட அம்சம் என்பது ஆயிரத்தோர் இரவுகள் கதையாகும். (Thousand and one nights).இது அரபு மற்றும் பாரசீகர்கள் இடையேயான வாணிப உறவுகளின் பிரதிபலிப்பாகும். அநேகமாக உலக மொழிகள் எல்லாவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அரபு இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகார வடிவமாக இது மாறியது. தபரி, இப்னு கல்தூன், இப்னு பதூதா மற்றும் இப்னு அதிர் ஆகியோர் இக்காலகட்டத்து அரபி எழுத்தாளர்கள். இவர்களில் இப்னு கல்தூன் அக்காலகட்டத்து சிறந்த வரலாற்றாசிரியராக இருந்தார்.

அரபு கவிதையானது 13 ஆம் நூற்றாண்டில் பாரசீக மற்றும் துருக்கி இலக்கியங்களின் எழுச்சி காரணமாக பின்னடைய தொடங்கியது. இதன் பிறகு ஆறு நூற்றாண்டுகள் இடைவெளியில் 19 ஆம் நூற்றாண்டில் மீண்டும் எழத் தொடங்கியது. கடல் அலைகளின் நீட்சி மாதிரி நவ செவ்வியல் வடிவத்தை கொண்டதாக பரிணமிக்க தொடங்கியது. இதில் அக்காலகட்டத்து மேற்கத்திய இலக்கிய கோட்பாடுகளின் தாக்கமும் உண்டு. செய்த் அகில், அமீன் ரைஹான், ஜிப்ரான் கலீல் மற்றும் அல் சவ்கி போன்றவர்களின் கவிதைகள் ரொமாண்டிசம், சிம்பாலிசம் போன்றவற்றின் பிரதிபலிப்பாக இருந்தன. மேற்கின் நவீனத்துவ படைப்பாளிகளான வில்லியம் வேர்ஸ்ட் வர்த், ஷெல்லி, எஸ்ரா பவுண்ட், ராபர்ட் லோயல் மற்றும் எலியட் ஆகியோர்களை உள்வாங்கி கொண்ட ஒன்றாக அன்றைய அரபு படைப்பாளிகளின் படைப்புகள் இருந்தன. வெற்று உணர்ச்சிகளை மீறி கவிதைகளில் சுருங்கு தன்மையும், அநாமதேயமும் உருக்கொண்டன.

அமீன் ரைஹான் அரபு கவிதைகளை இக்கட்டத்தில் தாராள,வடிவ ஒழுங்கற்ற முறைக்கு உட்படுத்தினார். லெபனானில் பிறந்த அவர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து அமெரிக்க அரபு இலக்கிய ஓருங்கிணைவை ஏற்படுத்தினார். முதன் முதலாக ஆங்கிலத்தில் எழுதிய அரபு எழுத்தாளர் இவரே. இதே காலகட்டத்தில் தான் அரபு வெளியில் சிறுகதையும், நாவலும் அறிமுகமானது. இது மேற்கின் சாயலாக இருந்தது. முதல் நாவலாக முஹம்மது ஹ¥சைன் கைகலின் ஷைனப் வெளிவந்தது. அதன் பிறகு முஹம்மது தாஹிரின் அத்ரா தென்சவி வெளிவந்தது. ஆங்கிலத்தில் அமீன் ரைஹான் Book of Khalid என்ற நாவலை வெளியிட்டார்.இவை இரண்டும் அரபுலகில் நாவல் வடிவத்தின் சலனமாக இருந்தன. குடும்பம் என்ற நிறுவனத்தின் அன்றாட அசைவுகள் அதன் செயல் ஒழுங்குகள், அரசியல் மற்றும் சமூக சிக்கல்கள், சுய வாழ்வின் நெருக்கடிகள் இவற்றை கதையம்சமாக கொண்டு நாவலுக்கு நிரல் கோட்டை அவர்கள் வரைந்தார்கள். இரு முறை பாய முடியாத நதியின் சலனமாக அவை தொடர்ச்சியாக பரிணமித்தன. யஹ்யாஹக்கி, சோனல்லா இப்ராஹிம், அப்துல் ரஹ்மான் அல் முனீப், எலியாஸ்கெளரி, நாசர் இப்ராஹிம், காலித் உவைஸ், மஹ்மூத் சுகைர் மற்றும் நகுப் மஹ்பூஸ் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டு அரபு நாவல், சிறுகதை மரபில் முக்கியமானவர்கள். இவர்களில் அப்துல் ரஹ்மான் அல் முனீப் மற்றும் நகீப் மஹ்பூஸ் ஆகியோர் தன் நாவல்கள் மூலம் மேற்குலகின் கவனத்தை ஈர்த்தார்கள். நகுப் மஹ்பூஸின் மிடாக் குறுக்கு தெரு ( Midaq alley) என்ற நாவல் நோபல் பரிசை அவருக்கு அளித்தது. அரபுலகில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் இவரே. கெய்ரோ நகரின் மிடாக் குறுக்கு தெருவின் கற்பனா வெளியில் பயணித்து அதை நெடித்தடுக்கும் கதை வெளியாக அது அமைந்தது. இவரை தொடர்ந்து தான் இலக்கிய வெளியில் மேற்கின் கவனம் அரபுலகின் மீது திரும்பியது.இவரின் மற்றொரு நாவல் சர்க்கரை தெரு. மேலும் அப்துல் ரஹ்மான் அல் முனிப்பின் உப்பு நகரம் (Cities of Salt) நாவல் மிகுந்த கவனம் பெற்ற ஒன்றாகும்.சவூதி பாலைவனத்தின் ஓரு மூலையில் எண்ணெய் கண்டெடுக்கப்பட்ட பிறகான ஒரு பதூயீன் பழங்குடி குடும்பத்தின் இடப்பெயர்வை பற்றிய கதை அது. சவூதியும் அமெரிக்காவும் எண்ணெய் சுரண்டலில் எவ்வாறு கைகோர்த்தன அதன் காலனிய அரசியல் ஆகியவற்றை சக வாழ்வின் சித்தரிப்போடு ஒத்ததிர்வு கொண்ட ஆழமான உணர்ச்சியோடு ஊர்ந்து செல்லும் நாவல் இது. அரச விரோத நாவல் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி அரசாங்கத்தினால் இது சிறிது காலம் தடை செய்யப்பட்டது. மேலும் சில அரபு நாடுகள் இதனை தடை செய்தன.

சமகால அரபு கவிஞர்களில் மஹ்மூத் தர்வீஸ், அதோனிஸ், ஜுமானா ஹத்தாத், ஹிசாம் ஹத்தாத், நசிக் அல் மலாய்க்கா, சாதி யூசுப், ஹசன் சக்தான், அப்துல் வஹ்ஹாப் அல் பைத்தி ஆகியோர் முக்கியமானவர்கள்.இவர்களில் மஹ்மூத் தர்வீஸ் முன் வரிசையில் வருகிறார். பாலஸ்தீன் கவிஞரான இவரின் மறதிக்கான நினைவுகள், துரதிஷ்டவசமாக இது சொர்க்கம் மற்றும் ஆதாமின் இரு தோட்டங்கள் ஆகியவை பலராலும் கவனம் பெற்ற தொகுப்புகளாகும். மறதிக்கான நினைவுகள் தொகுப்பில் கடந்து செல்லும் வார்த்தைகளுக்கு இடையே பயணிப்பவர்கள் என்ற கவிதை புலம் பெயரும் மனிதர்களின் உணர்வு நிலையை வெளிப்படுத்துவதாகும்.

ஆகவே கடந்து செல்லும் நிலம்,

கடந்து செல்லும் கடல், அதன் கரை

கோதுமை, உப்பு, நம் காயங்கள்

வார்த்தை நம்மை கடந்து செல்கிறது.”

பாலஸ்தீனியராக இருந்து கொண்டு புலம் பெயர்தலுக்கு உள்ளான இவரின் வாழ்நிலை நெருக்கடிகள் அவருக்கு இம்மாதிரியான படிம உணர்வை வெளிப்படுத்துகிறது. இவரை தொடர்ந்து அதோனிஸ் அரங்கில் வருகிறார். சிரியாவில் பிறந்த அதோனிஸ் நெருக்கடிகள் காரணமாக லெபனானுக்கு புலம் பெயர்ந்தவர். வாழ்வின் நெருக்கடிகள், புலம் பெயர் வாழ்வால் உருவாகும் மன இடைவெளி இவற்றை தன் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். இரவு மற்றும் பகலின் பக்கங்கள் , கடல் மட்டுமே உறங்க முடிந்திருந்தால், ரோஜாவுக்கும் சாம்பலுக்கும் இடையேயான காலம் ஆகியவை முக்கிய தொகுப்புகள். அடுத்த நிலையில் ஈராக்கிய கவிஞரான நாசிக் அல் மலாய்க்கா முக்கியமானவர். ஈராக்கின் இலக்கிய பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த மலாய்க்காவின் கவிதை வெளி தனித்துவமானது.

இவரின் “கடல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் போது” தொகுப்பானது அரபு மற்றும் ஐரோப்பா முழுவதான கவனம் குறித்தது. வாழ்க்கையின் இயல்பான அந்நியப்பாடுகள் அது உருவாக்கும் தவிப்புகள் ஆகியவற்றை இவரது கவிதைகள் மொழிப்படுத்தின. சிறுகதை மற்றும் நாவல்களில் பாலஸ்தீனிய நாவலாசிரியரான எலியாஸ் கெளரி தனக்கான தனித்துவத்தை கொண்டிருக்கிறார்.அவரின் முதல் நாவல் வட்டத்தின் உறவுகள் மீது என்ற பெயரில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்தது. இலக்கிய படைப்பு என்பதை மனித ஆன்மாவின் பிரதிபலிப்பாகவும் , வாழ்க்கை முறையின் தோற்றமாகவும் காண்கிறார். படைப்பாளி ஒரு விதத்தில் சமூகத்தின் அலகாக இருக்கிறான். அது அவனின் வாழ்க்கை முறையியலும் கூட. பின் காலனிய சிந்தனையாளரான எட்வர்ட் செய்த்தின் நெருங்கிய நண்பராகவும் எலியாஸ் கெளரி இருந்தார். நடப்பு அரபு இலக்கியத்தின் தோற்ற பாவனை மற்றும் வெளிச்ச தெளிப்பாக எலியாஸ் கெளரி இருக்கிறார்.

அரபு இலக்கியத்தின் மற்றொரு பங்களிப்பு நாடகமாகும். பல்வேறு நாடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நிலைபாட்டை காட்சிப்படுத்துபவை. மனிதனின் எல்லாவித நெருக்கடிகளும் அதிலுண்டு. இவர்களில் எகிப்திய நாடகாசிரியரான லெனின் எல் ரெம்லே முக்கியமானவர்.அகஸ்தோபோவால் மாற்று அரங்கினை முன் வைப்பதற்கு முன்பே தன்னுடைய நாட்டில் அதனை செயல்படுத்தி காட்டியவர். இவரின் “அவர்கள் கழுதையை சுடுகிறார்கள்” “எல்லாம் நல்லது என்று நம்புவோம்”, “ஆதாமும் ஏவாளும்” “நமக்கு ஒரு சித்திரம் தேவை” போன்ற நாடகங்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியவை. சில நேரங்களில் எகிப்திய அரசாங்கம் இவரின் நாடகங்களை தடை செய்திருக்கிறது. மார்க்சியத்தின் மீது தாக்கமுற்ற இவர் தன் பெயரோடு லெனின் என்ற பகுதியை சேர்த்து கொண்டார். தாராளமயமாக்கல் எகிப்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பல்வேறு தருணங்களில் காட்சிப்படுத்தினார். அரபு கலாசாரம் எவ்வாறு அறிவு நிலை தேக்கமாக இருக்கிறது என்பதை திரை விலகல் காட்சிப்படுத்தியது. சராசரி அரபு மனிதன் இழந்து விட்ட ஒன்றை அடைவது எப்படி என்பதை வெளிப்படுத்தியும் காட்சிகள் இருந்தன. இவருடைய நாடகங்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

அரபு இலக்கியத்தை பொறுத்தவரை அதன் வரை கோடுகள் மிகவும் தெளிவானவை. அதிர்வுகள் நிரம்பியவை. மனித வாழ்வின் எல்லாவித சலனங்களும் அதிலுண்டு. சூபியின் ஆழ்மன தேடல் மற்றும் உள்முக போராட்டம் , சக மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவனின் இடப்பெயர்வு ஆகிய எல்லா புள்ளிகளாலும் அதன் கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. ஹமதானி தொடங்கி நகுப் மஹ்பூஸ் மற்றும் எதிப் அத்னான் வரைக்கும் அது பரிணமித்து இருக்கிறது. இஸ்லாத்துக்கு முந்தைய அரேபிய பழங்குடி மக்களின் வாழ்க்கை சித்திரமாக தொடங்கிய அரபு இலக்கிய வெளி நேர்கோட்டில் நகர்ந்து இன்னொரு உலகை நோக்கி நெறிபடுகிறது. இன்று 100 க்கும் மேற்பட்ட நாவல்கள் , கவிதை தொகுப்புகள், நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் மூலம் ஐரோப்பாவின் மிகுந்த கவனத்துக்கும் அரபு இலக்கியம் உட்பட்டிருக்கிறது. பாலைவனத்தின் ஒரு வழித்தடத்தில் ஒட்டகங்கள் அணிவகுத்து செல்லும் போது வார்த்தைகள் மணல் வெளியிலிருந்து அதன் வயிற்றின் மீது படர்ந்து செறிகின்றன.

கட்டுரை – ஆறாவடு – சிபிச்செல்வன்

ஆறா வடு

சிபிச்செல்வன்

இந்த நாவலை இதுவரை யாரும்  எழுத்தில்,எழுதிய விமர்சனங்கள் வழியாக அல்லது மதிப்புரை வழியாக நல்ல நாவல் படியுங்கள் எனப் பரிந்துரைக்கவில்லை. இந்த நாவல் ஆசிரியரின் பெயரும் ( சயந்தன் ) தமிழ் இலக்கிய உலகத்தில் பரிச்சயமானதும் இல்லை. ஆனால் கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டு புத்தகச் சந்தைக்கு இந்தப் புத்தகம் வந்தபோதே அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த நாவலைப் பற்றிய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாள நண்பர்களிடையே ஒரு நல்ல நாவல் வந்திருப்பதாக மெல்லிய குரலில் கிசுகிசுப்புகள் ஒலிக்க ஆரம்பித்திருந்தன.

இப்போது அது உண்மைதான் என்பதை இந்த நாவலை வாசித்தபின் உறுதியாகிருக்கிறது.

.

மோசமான எத்தனையோ புத்தகங்களுக்கு எவ்வளவோ விளம்பரங்கள். வேண்டியவர்களின் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள். பெரிய பெரிய ஜாம்பவான்கள் மூலம் விமர்சனங்கள் , மதிப்புரைகள், ஊர் ஊராக வெளியிட்டு விழாக்கள், அறிமுக கூட்டங்கள்,வெற்றி விழாக்கள். ஆகியவற்றை எவ்வளவோ திட்டுமிட்டு நடத்தினாலும் அந்தப் புத்தகங்கள் கொஞ்சம் நாள் கழித்து தன் உயிரை விட்டு விடும். வாசகர்களிடம் போலி என்பதைத் தன் பல்லை இளித்துக் கொண்டு பரிதாபமாக நிற்கும். இவை எல்லாம் கடந்த காலங்களில் தமிழ் இலக்கிய சூழலில் பரவலாக எழுத்தாளர்களும் வாசகர்களும் கண்டுணர்ந்த காட்சிகள்தான்.

ஆறா வடு என்ற இந்த நாவல் இலங்கை தமிழர்களின் சமீப கால நிஜமான வரலாறு. நீங்கள் தொடர்ச்சியாகச் செய்தித்தாள் தொலைக்காட்சி ஊடகங்களைக் கவனித்து வருபவர் என்றால் இந்த நாவலில் வருகிற பல சம்பவங்களை அதில் வாசித்தும், தொலைக்காட்சி என்றால் காட்சிகளாகப் பார்த்தும் இருக்கலாம். கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கி அவ்வாறு நான் இலங்கை விவகாரங்களைச் செய்தி தாள்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும், பின்னால் இணையத்தின் வழியாகவும் அறிந்துகொண்ட விஷயங்களும், இலங்கை நண்பர்கள் நேரில் சொன்ன பல விஷயங்களும்தான் இந்த நாவலின் பல சம்பவங்களை நினைவூட்டுகின்றன.

நாவல் 1987 இல் தொடங்குவதாக இருந்தாலும் உண்மையில் இலங்கையில் இனப் போர் தொடங்கும் போதே இந்த நாவலின் பக்கங்கள், சம்பவங்கள் தொடங்கிவிட்டன. அதேபோல இந்த நாவலின் இறுதி சம்பவங்கள் 2003ஆம் ஆண்டுகளின் இறுதியில் முடிந்துவிட்டதாக நிறைவு பெற்றிருந்தாலும் இன்றுவரை இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் இந்த நாவலை முற்றும் போட்டு நிறைவுபெற்றதாகக் கருத முடியாத சூழலையே ஞாபகப்படுத்துகிறது. ( 87 தொடங்கி 2003 வரையான இரண்டு அமைதி காலங்களுக்கு  இடையே இந்த நாவலின் கதை நகர்கிறது என்கிறார் நாவலாசிரியர் சயந்தன் தன் முன்னுரையில் ).

இலங்கையின் நாவல் என்கிறபோது போர்ச்சூழல் இல்லாமல் இருந்தால் அது வெறும் புனைவாகத்தானே இருக்கும். இந்த நாவல் வெறும் புனைவு அல்ல. அது வாழும் வரலாறு என்று பதியப்பட்டிருக்கிறது இந்த நாவலில். உண்மையின் தகிப்பினை நாவலின் எல்லாப் பக்கங்களிலும் சுடுகின்றன.

நாவலின் மைய ஓட்டத்தில் ஒரு கதாபாத்திரம் அதன் வாழ்வின் போராட்டங்கள் என்று வழக்கம்போல இருந்தாலும், உண்மையில் அப்படியில்லாமல் நாவலின் எல்லாப் பக்கங்களிலும் போரின் குரூர முகங்களில் வழியும் இரத்தங்களின் சாட்சி படிப்போர் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது.

இந்திய அமைதிப் படை இலங்கையில் இறங்கியபோது அவர்கள் தங்களுக்கு அமைதி கிடைத்து விட்டதாக நம்பினார்கள் எனவும்  அதன்பின் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியும் குறைந்தும் இருந்தாலும் நாவலின் கடைசிப் பக்கங்கள் வரை சுபம்போட முடியாததற்குக் காரணம் இது உண்மை வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதால்தான்.

இயக்கத்திற்குப் பொடியன்களை ஆள் சேர்க்கும் விதங்கள், அதன் கட்டாயங்கள்,அதாவது சூழலின் நிர்ப்பந்தங்கள், இராணுவத்தின் சோதனை முயற்சிகளின் போது பலரை எந்தக் கருணையும் இல்லாமல் டொப் டொப்பென்று சுட்டுத்தள்ளுவது, பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் வல்லுறவு கொள்வது,வேண்டாத இயக்கங்களின் ஆட்களோடு சண்டை  போடுவது,அவர்களைப் போட்டு தள்ளுவது,நிஜமான போரின் சூழலை விவரிக்கும் காட்சிகள். இப்படி நாவலின் எந்தப் பக்கத்திலும்  ஷெல்களின் வெடிச் சத்தம், பீரங்கிகளின் குண்டு முழக்கங்கள் என இரத்தம் நம் முகத்தில் தெறித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

நாவலின் எந்தப் பக்கத்தை வாசிக்கும்போதும் இரக்க குணம் கொண்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தபடியேதான்  இருக்கும். பல சமயங்களில் பல பக்கங்களை வாசிக்க முடியாத அளவிற்கு உண்மையின் குரூரம் முகத்திலும் இதயத்திலும் அறைந்துகொண்டேதான் உள்ளது. கொஞ்சம் இதயம் பலவீனமானவர்கள் இந்த நாவலை வாசிப்பதை நிச்சயம் தவிர்த்து விடலாம். இது இந்த நாவலைப் பற்றிய மோசமான விமர்சனமில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்..

இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்கள் அங்கே போய் செட்டிலாவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியயிருக்கிறது என்பதையும் இந்த நாவலின் தொடக்கத்தில் கதாநாயகன் இத்தாலிக்கு நீர்கொழும்பிலிருந்து தப்பி கள்ளத்தோணியில் புறப்படுவதாகத்தான் நாவல் தொடங்குகிறது. ஆனாலும் அது அவ்வளவு எளிதல்ல என்பதைதான் இந்த நாவலின் சம்பவங்கள், தினசரி வாழ்வின் நடைமுறை சம்பவங்களின் வகைமாதிரிக்குச் சான்றாக விளங்குகிறது.

கள்ளத்தோணியில் பாஸ்போட் இல்லாமல், விசா இல்லாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் தப்பிப் போகிறார்கள். எவ்வளவோ பணம் செலவழித்து அங்கே போனாலும், போய்ச் சேர முடியாமல்கூட கடைசி நிமிடசோதனைகளின் போது மாட்டிக் கொண்டு சிறைபட்டவர்களும் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் சோகமான, துயரமான நிகழ்ச்சிகளும் ஏராளம்..

சேனல் 4இல் இலங்கை போரின் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டும், அதைப் பற்றிய பரபரப்பான பேச்சுகளும் , கட்டுரைகளும், விவாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்தச் சந்தர்பப்பத்தில் இந்த நாவலை வாசிக்கிறவர்களுக்கு எத்தனையோ இசைப்பிரியாக்களின் பாலியல் வல்லுறவுகள் தினசரி நிகழ்கிற துயரமான சூழல்தான் இலங்கையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும், மீண்டும் மீண்டும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் , . ஆட்களும் நிகழ்வுகளும், வருடங்களும்தான் வேறு வேறு. மற்றபடி அவற்றின் சாரம் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் சமூகத்தின் இயல்பு வாழ்க்கையே. இலங்கை தமிழர்களின் மொத்த துயரங்களின் அடையாளங்கள்தான் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் எதிரொலிக்கின்றது.

192 பக்கங்களிலும் சோகம்,போரின் ஏதாவது ஒரு வடிவம் என்பதாகத்தான் நிகழ்வுகள் அமைந்துள்ளன. எங்காவது ஒரு சிறு சந்தோஷம் என்பது கொஞ்சமும் நிகழவில்லை அல்லது அப்படிப்பட்ட காட்சிகள் மருந்துக்குக்கூடத் தென்படவில்லை. அப்படிதான் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை இருக்கிறது. அப்படியில்லாமல் போலியான புனைவைச் சாரமாக கொள்ளததால்தான் இந்த நாவல் தன் வீர்யத்தை வாசக நெஞ்சங்களில் பெரும் வன்முறை செலுத்தி தன் இடத்தைக்கோரி பெற்றுக் கொண்டிருக்கிறது

தமிழ் நாவல்களைத் தேடித் தேடி வாசிப்பவர்கள் இந்த ஆறா வடு நாவலை அவசியம் படிக்க வேண்டுகிறேன். இலக்கியத்தின் சாரமும் இருக்கிறது. இலங்கையின் சமீப கால வன்முறை வரலாறும் இருக்கிறது. இதனால்தான்  நல்ல நாவல்களின் வரிசையில் தனக்கான இடத்தை யாரின் சிபாரிசும் இல்லாமல் தானே தேடிக்கொண்டிருக்கிறது. எந்தக் கூச்சலுக்கு மத்தியிலும், எந்த வெடிச் சத்தங்களுக்கு மத்தியிலும் தன் இருப்பை நிறுவிக்கொண்டுள்ள இந்த ஆறாவடு நாவலை, இலக்கியத்தை நேசிக்கறவர்களும், இலங்கை தமிழர்களை நேசிக்கறவர்களும் அவசியம் படிக்க வேண்டுகிறேன். வாசித்து முடித்தபின் இந்த என் முடிவை யாரும் முன்தீர்மானமிக்கது எனச் சந்தேகம் கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதியாகவும் நிச்சயமாகவும் சொல்ல முடியும்.

.

( ஆறா வடு / சயந்தன் / நாவல் / தமிழினி பதிப்பகம் / பக்கங்கள் 192 / விலை ரூபாய் 120 )

••