Category: கவிதை

பி.கே. சிவகுமார் கவிதைகள்

தூசி படிந்த புகைப்படச் சட்டகம் மாதிரி
புகைக் கருமை மடிந்த சமையலறை புகைபோக்கி மாதிரி
உன் சுவாசக் குழாய்களை அடைக்கும்
துயர நினைவுகளின் சுமை
கடந்த காலத்தை ஆராய்வது
நிகழ்கால பொழுதுபோக்கு
நான் மட்டும் காரணமில்லை என்றாலும்
குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உனக்கும்
குற்றமென்ன எனக் கேட்க எனக்கும்
அலுக்காத பிராதுகள் தொடர்கிறபோது
உன் ஆரோக்கியத்துக்காகவாவது
தூசி படிந்த புகைப்படச் சட்டகத்தையும்
புகை மடிந்த புகைபோக்கியையும்
கழட்டிவீசி விடேன் எனச் சொல்வது எனக்கும்
கழட்டி வீசுவது என முடிவெடுப்பது உனக்கும்
கடினமாக இல்லாத போதும்
ஒன்றும் செய்யாமல் இருந்துகொண்டு
இருவருக்குமிடையில்
பிரிகிற பாதையில்
இருக்கிற மரங்களின்
நிழல்களையும் கவனியாதவர்களாகி விட்டோம்

ஜனவரி 7, 2019

*****

இந்தப் ப்ரியத்தை
ஒருநாள்
குதறத்தான் போகிறேன்
அதனால் வேண்டாம்

அதனால் என்ன?
குதறுகிற வரை
ப்ரியம் வைப்போம்

குதறிய பிறகு?

பதிலுக்கு
நானும் குதறுவேன்

அப்புறம்?

மறுபடியும்
புதிதாய்ப்
ப்ரியம் வைக்கத் தொடங்கலாம்

எத்தனை முறை
இப்படிச் செய்ய முடியும்?

காயங்களுக்குப்
ப்ரியமே மருந்தாகிற வரை

குதறுவதை
நிறுத்தச் சொல்ல மாட்டாயா?

மாட்டேன்

ஏன்?

ப்ரியத்தில்
நாம்
நம்மையும்தானே
குதறிக் கொள்கிறோம்

– பிப்ரவரி 16, 2019

*****

பனிப்பொழிவில் உறையும்
கோடைக்காய்ச்சலில் சுடும்
போர்வை போர்த்திய பிறகு குளிரும்
உடைகள் களைந்த பின் எரியும்
சமநிலைகளைப் பராமரிக்க முடியுமா
உபகரணங்களால் எப்போதும்
கோடைக்காலத்தில் எறும்புகள்
குளிர்காலத்தில் கொசுக்கள்
எப்போதும் சிலந்திகள்
வாரமொருமுறை குடிக்கும்
தொட்டிச் செடிகள் வானம் பார்க்காமல்
வெப்பச் சமநிலை ஒளியும்
இயற்கை ரசாயன உரமும் திகட்டி
வளர்ச்சியை நிறுத்திக் கொண்ட
கறிவேறிப்பிலை காத்திருக்கிறது
பூஜையறையில் கடவுள் கண் திறக்க
மைக்ரோ ஓவனின் முனகலுக்கு
அமைதி காக்கும் கேஸ் அடுப்புகள்
தானியங்கி விளக்குகள் எரியும்
அணையும் நேரம் காட்டி
பின்னிரவுகளில் விழித்திருக்கும் தொலைகாட்சி
விழிக்கும்போது வருவது இரவு
தூங்கும்போது தெரிவது பகல்
சன்னல் மரத்துக் குஞ்சுகள்
கூட்டை விட்டுப் பறந்து விட்டன
தேடலும் பதட்டமும் இல்லாத
பறவைக்குப் பொழுதுபோக
மண்புழுக்கள் விளையாட்டுத் துணை
நிலாவற்ற இரவுகளின் துணைக்கு
கூட்டுக்குள் வெளிச்சம் கொணரும்
மின்மினிப் பூச்சிகளின் சுடர்
ஈரப்பதமும் வெக்கையும்
வியர்வையாய் வழியும் மண்ணில்
மழை பொய்த்த வானத்தின் கீழே
தண்ணீர்க் கஷ்டம் இருப்பதே தெரியாமல்
பூத்துக் குலுங்குகிறது ஓர் அக்னிக் கொன்றை
அதனடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
சிறுவர்கள்
பூக்கள் போர்த்திய உடல்களுடன்
எங்கிருந்து கொண்டு
எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

மார்ச் 10, 2019

*****

நீராகத் திரளுமொன்றை
விரும்பிய பாத்திரத்தில் நிரப்பலாம்
பாட்டிலில் குடிக்க நிறைக்கலாம்
நீராடி மகிழப் பயன்படுத்தலாம்
விருந்துண்ட வாய் கழுவ
கொப்பளித்து எச்சிலாய்த் துப்பலாம்
கொடுக்கப்படுகிற ஆணைகளேற்று
விருப்பப்படி மாறுவதற்காகவே
பிறந்ததொன்று
உன் கைகளில்
அமுதமாகும் சாக்கடையாகும்
ஆட்சேபணையின்றி

ஆயிரம் விளையாட்டுகள்
இப்படி
ஆடுவதை விட்டுவிட்டுக்
கல்லைத் தூக்கி
உள்ளே போட்டுக்
கரை என்று சொன்னால்
என்ன செய்யும்
கடல் என்றாலும்

மார்ச் 12, 2019

*****

நகுலனுக்கு சுசிலா
கலாப்ரியாவுக்கு சசி
கல்யாண்ஜிக்கு அபிதா
கண்டராதித்தனுக்கு நித்யா
வரி துலக்கி
பெயர் மாற்றி
தன்னழகி
முகம் பார்க்கும் வாசகர்
முணுமுணுக்கிறார்
பெயரில் என்ன இருக்கிறது

ஜனவரி 7, 2019

*****

அன்பாதவன் கவிதைகள்

கூட்டம் பிரிந்ததா..

எதுவாயினும்
களைத்துக் கனைக்கும் புரவிக்கு
தாகம் தீர்க்க நீர் கொடுத்து வினவலாம்:

எதன் பொருட்டு திரியுது
நெடுஞ்சாலையில் இப் புரவி..

பரி பாஷைத் தெரிந்தவரெவரேனுமுண்டா…?!

@

விறைத்த குறியோடு
வெளிக்கி ருப்பவன் காதுகளில்
இயர்போன்
முதுகுக்குப் பின் பன்றி

@

பெண்ணியக் கதை

#

அவர் சொன்னார்:
இன்று குளிக்காதே

அவர் சொன்னார்:இன்று சமைக்காதே
வெளியே உண்ணலாம்

அவர் சொன்னார்:இன்று கொளுத்த வேணாம்
எடுத்து வைத்த பழைய குப்பை நகைத்தெனைப் பார்த்து

அவர் சொன்னார்: பொங்கவேண்டாமின்று
என்ன பொங்கல் பெரிய பொங்கல்

நல்ல வெல்லம் ஏலக்காய் முந்திரி பச்சரிசி

பால் பானை யெல்லாம் பரிகசித்தன என் முகம் பார்த்து

எப்படியாவது
ஒரு பெண்ணியக் கதையோ
கவிதை யோ எழுதோனும்

தலைப்பு சொல்லுங்க.. நட்பூஸ்

••

கனவுகளைக் கட்டுடைத்தல் ( கவிதைகள் ) / நர்மதா குப்புசாமி

நர்மதா குப்புசாமி


படிமம் 1

பனிபடர்ந்த நிலையத்தில்

ஏறவோ இறங்கவோ கதவுகளற்ற

இரயில் பெட்டியில்

புகைச்சித்திரமாய் நீ அமர்ந்திருக்கிறாய்.

நடைமேடையில் பதற்றத்துடன் நான்

நிலைத்த உனது பார்வையில்

எனையும் கடந்து

காலத்தை ஊடுருவுகிறாய்.

நானோ உதிர்ந்த இலையின்

பரிமாணத்தில் அளைந்தபடி

தொடர்கிறேன் உன்னை

இரயில் விரைகிறது.

இருவருக்குமான இடைவெளியில்

பச்சையமற்ற தாவரங்களாய்

ஞாபகங்கள் துவள்கின்றன.


படிமம் 2

பொட்டல்வெளி , இருள் மசி பூசிய

பாதையில் ஈர நதியின் மினுமினுப்பு

பேரிரைச்சலின் அதிர்வும்

பேரமைதியின் உறைவும்

ஒருங்கே ஒழுகும்

ஓட்டைக் குடமாய் காலம்

கூகை போல இருண்மையைக் கிழித்து

உன் பறத்தல் இரா வானமெங்கும்

இழுக்கிறாய் உன் போக்கில் எனை

நீண்டுகிடக்கிறது சாம்பல் நிற சர்ப்பமென

இரவின் வெளி.

வெளிச்சப்புள்ளிகளின் துவக்கக் கோட்டில்

மிகத்துல்லியமாய்

புகையாகக் கலக்கிறாய் மேகத்துணுக்குகளில்.

பாதைதிரும்புகிறேன் தனியாய் மறுபடியும்.

படிமம் 3

எனக்கான ஏகாந்தவெளியில்

ஒளி நிரம்பிய உனதிருப்பு .

உயிர்திரவம் ததும்பும்

தீர்ந்துவிடாத அதே புன்னகையுடன்

எனக்கான மன்னிப்புகளை

கையளிக்கிறாய் தேவதையைப் போல் .

காற்றையே சிறகாய் அணிந்த

ஒரு பறவைக்கு

உனது சாயல்கள் .

யாக்கையில் உவர்ப்பாய்

படிந்துக் கிடக்கின்றன

கதைக்கவேண்டிய கனவுத்துகள்கள் .

நீர்மை கோர்த்த நினைவுமணிகள்

புலரியின் மடியில் பனித்திவலையாய்

படர்ந்து மிதக்கின்றன.

உனக்கான ஒரு கவிதையை

எப்போதும்

அந்தத் துளியிலிருந்தே

துவங்கச் சொல்கிறாய்.

•••

எட்டு கவிதைகைள் – பி.கே. சிவகுமார் ( அமெரிக்கா )

பி.கே. சிவகுமார்தனிமரத்துக்குத்
தன்னிழல் போதும்
தன்னிழல் துணையல்ல
தன்னிருப்பின் அடையாளம்
தனக்காகத்தான் நிற்கிறது
வேருண்டு கனியுண்டு என்பது
கிளிகள் அறிந்த ரகசியம்
கிளிகள் தேடியமரும் நேரம்
தோப்பாகிறது தனிமரம் என்பது
இரண்டுமே அறியாதவை
தன்னைக் குடைவிரிக்கும் தனிமரத்தில்
எப்போதோ அமரும் கிளிகளைத்
தொலைவிலிருந்து பார்க்கிறீர்கள்
ஆச்சரியத்துடன்
அசைக்கிற இலையிசையில்
துய்க்கிற தனிமரத்துக்கு
மொட்டை மாடியில் நின்று
வேடிக்கை பார்க்கிற
தனிமரத்தின் மேல்
ஏன்
ஒருமுறை கூட
கிளிகள் அமர்வதில்லையென்ற
அனுதாபத்துடன் அது
உங்களைப் பார்க்கிறது

*****

தனிமரமாக நிற்கிறவர்
விரைவில்
ஒன்று
வீணையாகிறார்
அல்லது
விறகாகிறார்
அப்போது அறிகிறார்
வீணைக்கும் விறகுக்கும்
வித்தியாசம் இல்லை

****

தனிமரத்துக்குத் துணை
கிளைகளில் தலைவிரித்தாடும் பேய்கள்
முதல் பேய் குடியேறியபோது பயமாக இருந்தது
போகப் போகப் பழகிவிட்டது
பேய்களுக்கிடையே
எல்லைப் பிரச்னை எழும்போதெல்லாம்
ஜாக்கிரதையாக எத்தரப்பும் எடுப்பதில்லை அது
எந்தப் பேய் எந்நேரத்தில்
கோடாலி எடுக்குமோ என்ற கவலையுண்டு
இரவுகளில் காற்றின் வருடலை
பேய்களின் அன்பென எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டது
எப்போதும் ஒரு பேய்
பூர்வீக
வாழ்க்கையையோ
காதலையோ
துரோகத்தையோ
சொல்லிப் புலம்பிக் கொண்டே இருக்கிறது
அலுக்காமல் ஆறுதல் சொல்வதே
அமைதிக்கு வழியென அறிந்தது கொண்டது மரம்
சீக்கிரமே
பேய்களின் பிரச்னைகள் கேட்டுக் கேட்டு
தன் பிரச்னைகள் மறந்தது தனிமரம்
ராஜா மாதிரி தனியாக நிற்கும்
மரத்துக்கென்ன பிரச்னை எனக் கேட்டுக்
கிண்டல் செய்தன பேய்கள்
பேய்கள்
அறையும்போதும் உலுக்கும்போதும்
நடுங்கியது மரம்
அவை அணைத்துக் கொள்ளும்
அரிதான சந்தர்ப்பத்துக்கு ஏக்கப்பட ஆரம்பித்தது
நெருப்பும் பனியும் கலந்து இறுக்கும்
பேய்களின் அணைப்பு பிடித்துப் போனது
நான் நீ யெனத் தனக்காகப் பேய்கள்
போட்டியிட வேண்டுமென்ற
கிளுகிளுப்புக் கனவு மட்டும்
இன்றுவரை நிறைவேறவில்லை
தனிமரத்துக்கு
ஒரு பேய் உடனிருந்தால்
அடுத்த பேய் வழிவிடும் நாகரீகம்
கொண்டிருந்தது பேய்ச்சமூகம்
ஆளில்லா வீடுகளில் பேய்கள்
அடைக்கலமாகும் புயல் மழையில்
தனியாக நிற்கும்போது மட்டும்
இப்போதெல்லாம்
பயப்படுகிறது தனிமரம்

*****

தனிமரத்தைப் பற்றி
அதன்
நிழலைப் பற்றி
வேர்களைப் பற்றி
கனிகளைப் பற்றி
எப்போதேனும்
வந்தமரும் கிளிகள் பற்றி
இசைக்கிற அதனிலைகள் பற்றி
எழுதுகிறேன்
அதன் பட்டைகளில் படர்ந்து நிறைந்து
அருவருக்கச் செய்யும்
கம்பளிப் பூச்சிகள் பற்றி
ஏன் எழுதுவதில்லை என்கிறாய்

மருந்தடித்துக் கொல்லப்படாமல் இருந்தால்
வண்ணத்துப் பூச்சிகளாய்
அவை மாறுவதை யெழுதக்
காத்திருக்கிறேன் கண்ணே

*****

தனிமரமென்று எதுவுமில்லை
என்றறிந்தது தனிமரம்
என்றெழுதிய கவிஞருக்கு
வந்த வாசகர் கடிதத்தில்

“அட பைத்தியக்காரா
சீக்கிரம் கிளம்பி வா
அடுத்த குழி பட்டுவிட்டது

இப்படிக்கு
தனிமரமென உணர்ந்த தோப்பு”

என்று எழுதியிருந்தது

*****

தலையில்
மரத்துடன் நடந்து கொண்டிருந்த
நண்பரைப் பார்த்தேன்
என்ன இது என்றேன்
நல்ல இடம் தேடிக் கடைசியில்
தலையில் நட்டுக் கொண்டதாகச் சொன்னார்

மரம் என்ன சொல்கிறது என்றேன்
அதற்கென்ன குறைச்சல்
தனக்குத்தான் சுமையென்றார்
சுகமான சுமையென்றும்
சொல்லத் தவறவில்லை

எனக்கென்னவோ
அவர் பார்க்காதபடிக்கு
மரம்
நமட்டுச் சிரிப்பு செய்ததாய்த் தோன்றியது

அடுத்த மரம் நட
எங்கே போவீர்கள் என்றேன்
இதைவிட நல்ல மரமென்றால்
இதைப் பிடுங்கி எறிந்து விட
வேண்டியதுதான் என்றார்

ஐயோ அப்போ தலை என்றேன்

ஒவ்வொரு மரமும்
ஒரு தலையுடன் வருகிறதே என்றார்

தலையுடன் வரும் மரங்களா என்றேன்
ஒன்றுமில்லாமல் வருவதற்கு
மரத்துடன் வருகிற தலை மேல்தானே என்றார்

மரத்துக்குக்
காபி குடிக்கிற நேரமாகிவிட்டது
என்றபடியே கிளம்பிப் போனவருடன்
பேசிவிட்டுத் திரும்பும்போது கவனித்தேன்
அவர் கவிதைக்கான வரிகளை
அவர் மரம்
அவர் காதில் சொல்லுவதை

என் தலை வலிக்கத் தொட்டுப் பார்த்தேன்
மரத்துக்குத் தோண்டிய குழி தெரிந்தது

*****

பெருவழியில் எதிர்ப்படும்
தனிமரத்தைப் பார்க்கும்போது
நட்டவர் யாரென்று கேட்க வேண்டாம்
வளர்த்தவர் யாரென்று கேட்க வேண்டாம்
துணைக்கு யாரென்று கேட்க வேண்டாம்
பதிலறிந்து
மாறப்போவது ஒன்றுமில்லை
கேள்விக்குறி போல் நிற்கும்
தனிமரம் சொல்ல வருவது
கேள்விகளின் அபத்தத்தைத் தான்

*****

காலை எழுந்தபோது
நேற்று பார்த்த
தனிமரம் இல்லை
என்னாயிற்று என்றேன்
அதன் பொந்தில் வசித்த பாம்பிடம்
அதோ போகிறார் பார்
அவர்தான் வெட்டினார் என்றது
அவரைக் கேட்டேன்
நின்று கொண்டே இருப்பது அலுத்துக்
கொஞ்ச நேரம் மனிதர் போல்
கால் நீட்டிப் படுக்க ஆசைப்பட்டது
அதனால் வெட்டினேன் என்றார்
அவர் போன பிறகு பாம்பு சொன்னது
அவர் பொய் சொல்கிறார்
நின்று கொண்டே புணர்கிற குறை தவிர
தனிமரத்துக்குக் குறை எதுவும் இல்லை
நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்
ம்ம்ம்ம்
நீ என்ன சொன்னாய் என்றேன்
எப்படிப் புணர்ந்தால் என்ன
புணர்வதும் புணரப்படுவதும் தான் முக்கியம்
மரமென்ன சொன்னது என்றேன்
புணர்ச்சி போதும்
உணர்ச்சிகளே தேவையென்றது
அப்புறம் என்றேன்
அப்புறமென்ன
அதோ போனாரே
அந்த மனிதரைக் காதலித்தது

*****

நா.வே.அருள் கவிதை

கடலின் புனைபெயர்

அந்தி மஞ்சள் வெயிலில்

புதரோரம்

பின்னி நடனமிடும் நாகமும் சாரையும்

உடல் திமிர்ந்தும் பிளந்தும்

ஈருயிரில் வழியும்

தீரா இம்சையின் துவம்ச நதி

காமத்தில் பழுத்த கடும்பசி மின்னல்கள்

பளீர் பளீரெனக்

கண்களில் மின்னும்

ஷணநேரக் கவ்வலுக்காய்க்

காத்துக்கிடக்கின்றன

கண்களின் இமைகள்

ஒன்றிற்குள் ஒன்றாய்ப்

புணர்ந்து உள்புகும்

ஓசையிடும் இதயங்கள்.

காதலின் முகத்துவாரத்தில்

நாவின் சுவர்களில்

சொற்களின் சாவிகள் தொங்குகின்றன.

முயக்கமோ

மௌனத்தை யாசிக்கும்.

என்றென்றைக்குமான கால வெளியில்

ஈருயிர் துடித்துவிழும்

இன்பத்தின் சாகரத்தில்.

கரங்களின் ஆரத்தழுவுதலில்

கட்டுக்குள் அடங்கவில்லை கடல்.

காமத்தின் கழிமுகத்தில்

உதட்டுக் கூரையில் ஒளிந்திருக்கின்றன

முத்தத்தின் திறவுகோல்கள்.

இருள் தினவெடுத்த சூரியனும்

ஆசை தின்று தீர்த்த அமாவாசை நிலவும்

முயங்கிப் புணர்ந்து மூச்சிறைக்க

மர்மங்கள் அவிழ்ந்துகொள்கின்றன.

காதலுக்கும் காமத்துக்கும்

ஏதொரு விகிதாச்சாரம்?

ஏதிங்கு ஆச்சாரம்?

••••

சோலைமாயவன் கவிதைகள்

கேள்விகளால் வடிவமைத்த ஆடைகளில் வரிசையாக தைத்து
இருக்கிறார்கள் பட்டன்களை
நாம் திறக்கும் பட்டன்கள்
ஒருபொழுதும் திருப்திபடுத்தியதில்லை
கேள்வியின் குகையில் பின்தொடர்ந்து
நுழைந்துதால்-அது
சிறுநூறு குகைகளை காட்டி பம்மாத்துச்செய்கிறது
எல்லோரிடமும் ஒரு கேள்வியும்
எல்லோரிடமும் ஒரு பட்டனுமும் இருக்கத்தான் செய்கின்றது
இரயில் தண்டவாளம் போல
ஆடையும் பட்டனையும் தொலைத்த பொழுதொன்றில்
என் தலைக்கும் மேல் இருந்து ஆகாயம்
அவ்வளவே…..
~~

எவ்வளவு எவ்வளவு
உயர்ந்த சிலையிலிருந்து
வெளியேறுகிறதுபசியின் வாதை
நெகிழிகளிலான் சிலையை செதுக்கியிருந்தால்
தேசத்தின் தாய்மடி உயிர்த்திருக்கும்
இரும்புசத்தற்ற குழந்தைகள் பிறக்கும்
இந்தேசத்தில் தான்
வானவளவு சிலையை நிறுவுகிறார்கள்
இரும்புகளால்..
இருள் கவிழ்ந்திருந்திருக்கும்
இவ்விரவில்
உங்களில் ரசனைகள் குமட்டுகிறது
பலகோடிகளால் ஆடையை நெய்யும்
உங்கள் அதிகாரத்திற்கு தெரியாது
தெருவெங்கும் அலையும்
ஏழைகளின் கண்ணீர்
இறங்கி வந்து பாருங்கள்
உங்கள் ஆட்சியின் கரும்புள்ளி
சிலையை….

~~

நாளுக்குநாள்
கடைகள் முளைக்கின்றன
நாளுக்குநாள்
வாகனங்கள்பெருகுகின்றன
நாளுக்கு நாள்
மக்கள்நெருக்கம் கூடுகின்றன
நாளுக்குநாள்
விபத்துகள் அதிகரிக்கின்றன
நாளுக்கு நாள்
இவ்வூர் விரிந்து போகுகின்றன
நாளுக்கு நாள்
குற்றச் செயல்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன
மாநகரத்திற்கு
குடிபெயர்ந்த பின்
நாளுக்கு நாள்
உறக்கத்தில் துரத்துக்கிறது
யானைகள் பிச்சையெடுக்கும் கனவொன்று

~~

எங்கள் ஊருக்கு வெயில் என்று பெயர்

அதிசயமாய் பெய்த மழையில் முளைத்தை புல்லுகளை
ஆடு மாடுகளோடு மேயும்
வெயில்

கூரையில்அடைக்காக்கும் அவ்வெயில்
இரவெல்லாம் நட்சத்திரங்களை முட்டையிடும்

வெயிலுக்கு தாகம் தீர்க்க முடியாத
வருத்தத்தில்
பசித்த குழந்தையின் வயிறென
வற்றிக்கிடக்கிடக்கின்றன
எங்கள் ஊரின் கிணறு குளம் குட்டைகள்

எங்கள் ஊரில்
பேருந்துநிறுத்தம் இரண்டு
நியாய விலை கடை இரண்டு
பால்வாடி இரண்டு
ஏன்
செத்தால் புதைக்கும் சுடுகாடு இரண்டு
வஞ்சனையில்லாம் படரும்
வெயில் மட்டும் ஓன்று

எங்கள் ஊரின் சிறப்பு கேட்கும்
நண்பர்களுக்கு
எங்களின் ஊரின் பெயர் வெயில்…

~~

கோமாரி நோயால்
மாடுசெத்துப்போச்சினு
மூச்சிரைக்க ஓடி வந்து சொன்னார் மாமா
ஞாயிற்றுக்கிழமையின் வாசம் உடம்பெங்கும் பரவியது
எறவானத்துல சொருகி வச்சிருந்த
சூரி கத்தியால்
தலை
குடல்
கொழுப்பு
ஈரல்
கறியென தனித்தனிய பிரிச்சி எடுத்து
எல்லாத்தையும் கலந்துக்கட்டி கூறுப்போட்டோம்
கடையெழுவள்ளல்களில் வாரிசென வாரி வாரி
கொடுத்துக்கொண்டிருந்தார்
பின்னால் ஓரமாக
அத்தை அழுதுகொண்டிருந்திச்சி
அதுக்கு எங்க அம்மா பேரு வைச்சிருந்தேன் மருமவனே

~~

கைகளிலிருந்து களவாடப்படுகிறது காணிநிலம்
உள்ளங்கைகளால் பிசைந்த சோறு விரல்களின் இடுக்குக்களின் வழிய
பிதுங்குகிறது
அதிகாரத்தின் துஷ்பிரயோகம்
பறவைகளின் பசியை நசுக்கிய
கனரக வாகனங்கள் மேல் தேசியக்கொடி
யாருக்காக அழுவான்
முதுகெலும்பு வேரானவன்
மாட்டுப்பொங்கல் விழா ருசிக்காது
பாம்பு பூரானைப் பார்க்க முடியாது
பறவைகளின் கீச்சொலிகள் ஒலிக்காது
வழி தவறி வரும் மானுக்கு தாகம் தீர்க்கமுடியாது
நடுராத்திரியில் வயலில் இருந்து நிலா பார்க்கும் அபூர்வம் நிகழாது
தொலைந்த காலமொன்றில்
எங்கள் அப்பனுக்கு காடொன்றிருந்தன
கதைகள் ஊரெங்கும் சுற்றித்திரியும்
விரைந்து செல்லும் மகிழுந்து கண்ணாடியின் மீது
பறவையின் எச்சமாக
கண்ணீர் காய்ந்துகிடக்கும்……..

••

பொடிப்பொடி பொடி கவிதைகள் பத்து – லக்ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணன்

ஏராளம் ஈசல்கள் வந்து நிறைகின்றன
அதற்குத் தக்க பல்லிகள்
எல்லா ஈசல்களும் ஒரு ஈசல் தான் என்பது போல
தொட்டு நக்கி
எல்லா பல்லிகளும்
சுவரிலிருந்து காணாமற் போகின்றன
நாங்கள் அத்தனை பல்லியும் ஒரே பல்லி தான் என்பது போல

2

அடித்துப் பெய்கிறது பேய்மழை
அனைத்தும் நிறைகிறது
ஊற்றின் தாய்மடி நிறைகிறது
ஊருணி நிறைகிறது
எண்ணங்கள் நனைகிறது
அடுத்து எறும்புப் புற்றுக்குள்
காலடி எடுத்து நனைக்கையில்
மொத்த மழையையும்
தடுத்து நிறுத்துகிறது
சிறிய எறும்பு
புற்றின் வாயிலில்

3

அசுரர்கள் எப்படி அசுரர்கள் ஆனார்களோ
அப்படியே
தேவர்களும் தேவர்கள் ஆகிறார்கள்
அனுபவம் கிளர்ந்து
அடிக்க அடிக்க அசுரனாகிக் கொண்டே இருக்கிறான் அசுரன்
வலிக்க வலிக்க தேவனாகிக் கொண்டேயிருக்கிறான் தேவன்

4

நானொரு கைப்பிடியளவு சாம்பல் பேசுகிறேன்
வாழ்க்கையென்பது தித்திக்க தித்திக்க தேன் .
நானொரு துளி தேன் பேசுகிறேன்
கைப்பிடியளவு சாம்பலின்
வயிற்றுக்குள்
எவ்வளவு ருசி

5

கடைசியாகத் திரும்பிய பல்லியிடம்
நான் கேட்டேன்
இப்போது நீங்கள் எடுத்துக் கொண்ட ஈசல்களையெல்லாம்
எவ்வளவு நாட்களாக வைத்துச் சாப்பிடுவீர்கள்
வயிற்றுக்குள் ?

அடுத்த முறை இவர்கள்
வருவது வரைக்கும்
பதில் சொல்லிற்று
பல்லி
அவ்வளவு பசிப்பதில்லை
பசி

6

விவாதம் தானே
இப்படியும் வாதாடலாம்
அப்படியும் வாதாடலாம்
மத்தியிலும் வாதாடலாம்
உங்கள்
வசதியைப் பொறுத்து

மற்றபடி
அதில் ஒன்றும் இல்லை

7

முரண்பட்டுக் கொண்டே
இருப்பவன்
கூரிய கத்தியால்
தன்னை அறுக்கத் தொடங்குகிறான்
கத்திக்கு அவனை அறுப்பது
பிடித்துப் போகிறது
இப்படி மொத்த உடலையும்
யார் தான் ஈர ஈரமாகத்
தின்னத் தருவார்கள் தானமாக
என

8

தன்னை எளிமையாக்கிக் கொண்டிருப்பவனிடம்
முளைக்கக் கீறி
எத்தனிக்கின்றன தானியங்கள்
கடுமையாக்கிக் கொண்டிருப்பவனிடம்
கணந்தோறும்
இறக்கின்றன பறவைகள்

9

எடுத்துக் கொடுக்குந்தோறும்
எதுவுமே குறைவதில்லை
பரிமாறப்படாதவிடத்தே
பதுங்கி நிற்கிறது
விஷம்

10

எனது துயரத்தைப் பாருங்கள்
என்று பொதுவில்
தனது புண்ணை எடுத்து காண்பிப்பவளின்
தோளில் இரண்டு விதவையர்
ஏறி அமர்ந்து கொள்கிறார்கள்
அவளோ பாவம்
ஆசையின் தேவதைகள் என
அவர்களை
நினைத்து விடுகிறாள்

•••

ஜெயாபுதீன்( கவிதைகள் ) கோவை

திரும்புதல்
************

வெள்ளைநிற ஓவியமொன்றை~
வரையத் தொடங்குகிறான்

******

சட்டமிட்ட தாளிலிருக்கும்
நிறங்களைத்~
திரும்பவும் மைக்கூடுகளில்
ஏற்றத் தொடங்குபவனின்
பெயர்தானென்ன.?

******

வண்ணம் பூசுவதால்
தூரிகையாகிறவன்~
நிறங்களைக் கழுவும்போது
என்னவாக இருப்பான்.?

******

வானத்தைக் கழுவுகிறான்~
நீலந்தொலைத்த
வெள்ளையாகிறது ஆகாயம்.

******

ஒற்றைத்துளிக் கறுப்பு மையைத்
திரும்பப் பெறுகையில்~
மைக்கூடு திரும்புகின்றன
வலசைப் பறவைகள்.

******

நீலச் சாயக்குப்பிக்குள் நதியையும்~

பச்சை மைக்கூட்டுக்குள் வனத்தையும்~

திரும்பவும் நுழைக்கிறான்.

******

வெள்ளைநிற ஓவியத்தை
வரைந்து முடிக்கிறவனின்
பால்யம்~

அவனைத் திரும்பவும் அழைத்துக்கொள்கிறது~~

தனக்குள்ளேயே.

***

தமிழ் உதயா கவிதைகள் ( லண்டன் )

விலங்குடைந்த கைதி

00

ரயில்
பறவையைப் போல
ஷ்டேஷனில் நின்றுவிட்டு பறக்கிறது
அருகே சணல் பூக்களின் கணகணப்பு
மறுகரையில் உப்பரிகையில்
பாகம் பிரிந்த ஏரிப்பரபரப்பு
வரைபடத்தில் நிலமற்ற தேசத்தின் உதிர்சிறகு
முன்னமே கிளறி ஆறிய
நெஞ்சின் நிழலில் அயர்ந்துறங்குகிறேன்
ஆலமரமெல்லாம்
அரசமரமாகிக் கொண்டிருந்தது
சந்தடியின்றி யாரோ
ஒருவர் பதனமாகிக் கொண்டிருந்தார்
பள்ளத்து மேட்டில் போகப்போக
என் ஊர் குறுகுகிறது
முகடுகளிடையே
மலைகள் அவிழ்கின்றன
காக்கைகள் உயிரொலிக்கின்றன
அலை தன் நுனியிலேறிப் பாடுகிறது
அவ்வளவே
கடல் தணிவதில்லை
எனக்கு இப்போது ஒரு படகு வேண்டும்

00

எனது இரத்தம் உறைய ஆரம்பித்திருந்தது
அதன் துடிக்கும் வலிமையை
அவர்கள் உற்றுக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்

இழந்துபோன மேகம்
மீண்டும் மழையை உற்பவித்துக் கொண்டிருக்க
கடிகார மனிதர்களின்
நொடிப்பூச்சிகள் தாகமாயிருந்தன

இடையிலுள்ள உயிர் நலிதங்கள்
கொடுக்கத் தெரிந்த கைகளை
விலங்கு பூட்டி நசிக்கிறது
அவர்கள் உதடுகள் ஒட்டாது
நீர் மேல் மிதக்கும்
தாமரை இலைகளாயின

கழிப்பறையில் இரு நீர்க்குழாய்கள்
பருகவும் கழுவவும்
பங்குபோட்டு அமர்ந்திருக்க
பாவ மன்னிப்பு கேட்டுக் கொ‌ண்டிரு‌க்கு‌ம்

யேசுபிரான் ஐரோப்பாச்சந்தில்
சிலுவையைத் தாங்கிக் கொண்டிருந்தார்

வேலை தேடிப் போன இடத்தில்
என்னைத் தேடிக் கொண்டிருந்தேன்
உற்றுக் கவனியுங்கள்
நானும் மனிதன் என்பது
அப்பட்டமாகத் தெரிந்து விடும்

00

மலை உச்சியை அண்ணாந்து பார்க்க
பள்ளத்தாக்கில் நுழைந்து வெளியேறினேன்
அதன் எதிரொலி மௌனமாயிருந்தது
சற்றே விலகி வீட்டின் வாசலில் அமர்ந்தேன்
நிசப்தம் நிசப்தமற்றும்
அசைவும் அசைவின்மையும்
எனைப் பார்த்து முறுவலிக்கின்றன
பலவர்ணப் பூச்சிகளை
அனுப்பி வைத்திருக்கும்
நீங்களாவது சொல்லுங்களேன்
முன்னொரு காலத்தின் கதையை
ஆறு சலசலக்க
தூங்க மறுக்கிறது உதிரிச்சிறகு

00

சிறைச்சாலைகள் இங்கிருக்கவில்லை
கடலுமல்லாத கரையுமல்லாத நிலம்
நழுவ விடப்பட்ட தோணி
அமைதியாய் இருக்கும் பாறை
அதில் கட்டப்பட்ட
நிரந்தரமல்லாத
நூற்றுக்கணக்கான வீடுகள்
சின்னஞ்சிறு பூட்டுகள்
சின்னஞ்சிறு திறப்புகள்
தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கு
எரிய ஆரம்பிக்கும் உலகம்
அவ்வப்போது பறக்கத் தடுக்கும் நிசப்தம்
பொழிந்து சிந்திய மழைத்துளியாய்
தெறித்துக் கொண்டிருந்தேன்
பின் தொடர்ந்து
ஏகப்பட்ட தவளைகள்
ஏகப்பட்ட ஈசல்கள்

00

துயரமும் அவலமுமான பின்னணியில்
உயிர் தேடியலையும் பறவை
கிளைகளைக் கூடென அறிகிறது
அது அமரவும் உறங்கவும்

சலசலக்கும் கணங்களில்

புத்தன் சாலையில்
நிஷ்டையில் இருக்கிறான்
சின்னஞ்சிறு
தோட்டங்களிலும்
பெரிய மயானங்களிலும்
புழுவைப்போல துடிதுடிக்கும்
மனிதர்களை நுகர்ந்து
காற்று பீதியடைகிறது
நிகழ்ந்து கொண்டிருக்கிற

சுவாரஸ்யமான மனிதச் சிதைவுகள்
அவர்களைக் கூறுபோடுகின்றன
துயரமும் அவலமுமான அப்பின்னணி

சிலர் பலருக்கு வாய்ப்பாயிருக்கிறது
அப்பறவையின் நிழலிலும்
சிறகுகள் பறக்க முனைகின்றன
இப்போது நிஷ்டையில் இருந்த புத்தன்

என் மரணத்தறுவாயில்

தெருவைக் கடந்து கொண்டிருந்தான்

00

எவ்வளவு தூரம் என்றால் என்ன
இருப்பு நிலைக்கும்
அதன் இல்லாமைக்கும்
இடையே ஒரேயொரு கணம்

தொடங்கும் போது துலங்கும் எதுவும்
முடியும் போது பார்வையற்ற கண்களின்
கனவு விம்பங்கள் ஆகின்றன

துண்டு துண்டான அவர்களின்

விம்பங்களை ஒட்ட வைத்து
என்னை அடையாளம் காண வைக்கிறேன்

இதுவரை அந்த நிச்சய கணத்தில்
சாத்தியமாகாத நான்
வேறொருவராக இருக்க வேண்டும்

00

பூச்சிய வெப்பநிலைக்கு குறைந்த
நாட்கள் தவிர
என் ஒற்றை ஜன்னல்
பூட்டப்படுவதே இல்லை

சிறுகச் சிந்திய ஜன்னல்வழி
உருகி வழிகிறது
ஒரு துண்டு பூமியில்
வானளவு மழை

பெருந்தெருவைப்போல
வாசலற்றுத் திறந்தே இருக்கிறது
இதயத்தின் நான்கு அறைகளும்
எனது ஐந்தாவதும்

யாரும் வராத
யாரும் வந்து திரும்பாத
அறைகளின் கதவுகள்
ஒருபோதும் துருவேறுவதில்லை
மசகிடப்படுவதுமில்லை
உங்களுக்கும் தெரிந்தது தானே

00

வெகு சுலபமில்லை
நமக்குள் நுழைவதைத் தவிர்த்து
நம்மை அறிவதை விடுத்து
அவர்களைப் பெற்றுக் கொள்வது

யார் திண்ணையிலும்
அமர மறுத்த மைனாக்கள்
மதில் மேல் குந்தி அருகில்
சின்ன மரமொன்றைத் தூக்கிச்சென்றது

அவர்கள் பறவைத் தீன்களை
விற்றுக்கொண்டிருந்தார்கள்
இன்னும் பூனைக்கும் நாய்க்கும்

நான் மைனாவைக் கொத்திக்
கொத்தித் தின்றுகொண்டிருந்தேன்

••

அந்தரவாசல்..! ( கவிதை ) / நிஷாமன்சூர்

இரு பிடிவாதங்களுக்கு மத்தியில்
நேசத்துடன் வாழ்வது
அல்லது சுயமின்றிச் சார்ந்திருப்பது

இரு விட்டுக் கொடுத்தல்களுக்கு மத்தியில்
பிடிவாதமாக வாழ்வது
அல்லது தன்முனைப்புடன் இயங்குவது

இரு அநீதிகளுக்கு மத்தியில்
நீதத்துக்காகப் போராடுவது
அல்லது விட்டு வெளியேறித் துயர்நீங்குவது

இரு அதிகார பீடங்களுக்கு மத்தியில்
நசுங்கிச் சிதைவது
அல்லது எளியோர் கை ஊன்றுகோலாவது

கோலங்களை அல்ல குணங்களை கவனியென்கிறது
அறிவின் தீட்சண்யம்
மனசு சொல்வதை மறுக்காமல் கேளென்கிறது
ஞானத்தின் சூட்சுமம்

••

*வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக்
காட்டிற் புகலாமோ கண்ணே ரகுமானே.

*குணங்குடி மஸ்தான் சாஹிபு அப்பா பாடல் வரிகள்…